பதிற்றுப்பத்து விளக்க உரை 1


சங்க கால நூல்கள்

Back

பதிற்றுப்பத்து
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 1



பதிற்றுப்பத்து மூலமும் - உரையும்
2. முன்னுரை


    கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

சங்கத் தொகை நூல்கள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமென வகையால் இரண்டாகியும் விரியால் பதினெட்டாகியும் நிலவுவனவாகும். இவற்றுள் பதிற்றுப்பத்தென்பது எட்டுத் தொகையுள் ஒன்றாகும். இது பப்பத்தாக அமைந்த பத்துக்கள் பத்துகொண்டதென்றும், நூறு பாட்டுக்கள் கொண்டதென்றும் பதிற்றுப்பத்து எனப்படும் பெயராலே அறியலாம். இதன் ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரவேந்தனைப் பற்றி வேறு வேறு ஆசிரியன்மார்களால் பாடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியன்மார்களும் சேரவேந்தர்களும் ஒருகாலத்தவராகவும் வேறு வேறு காலத்தவராகவும் கருதப்படுகின்றனர். பதிற்றுப்பத்தென்னும் பெயர் இப்பாட்டுக்களைப் பப்பத்தாக எடுத்துத் தொகுத்தோரால் இடப்பெற்ற பெயராதல் வேண்டும்.

எட்டுத் தொகையுள் காணப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டனுள், புறப்பொருள் வகையில் அமைந்தவை பதிற்றுப்பத்தும், புறநானூறும் என்ற இரண்டுமாகும். இவையிரண்டும், ஏனையவற்றுள் நற்றிணை கலித்தொகையென்ற இரண்டு மொழிந்த பிற யாவும் காலஞ்சென்ற பெரும் புலவர் டாக்டர் . திரு.உ.வே. சாமிநாதையரவர்களால் பல ஆண்டுகட்கு முன்பே பல ஏடுகளின் துணைகொண்டு ஆராய்ந்து செவ்விய முறையில் வெளியிடப்பெற்றுள்ளன. அவற்றுள் பதிற்றுப்பத்து 1904-ஆம் ஆண்டில் முதன்முதலாக அச்சிடப்பெற்று வெளியாயிற்று. இவ்வாறு தமிழகத்துத் தமிழரது இலக்கியப் பழஞ் செல்வமாய், பல நூற்றாண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் நன்மக்களது நாகரிகப் பண்பாடுகளை யுணர்த்தும் நல்விளக்கமாய்த் திகழும் இந்தத் தொகை நூல்களைச் செம்மையுற ஆராய்ந்து இன்றும் என்றும் தமிழ் பயில்வோர் அனைவரும் ஒருமுகமாகப் பாரட்டிப் பரவத்தக்க வகையில் வெளியிடுவதாகிய அரிய தமிழ்ப்பணி புரிந்த டாக்டர்.திரு.அய்யரவர்கட்குத் தமிழுலகு பெரிதும் கடமைப்பட்டுளது.

திரு. அய்யரவர்கள் முதன்முதலாக வெளியிட்டபோதே இதற்குப் பண்டைச் சான்றோர் ஒருவர் எழுதிய உரையும் அவர்க்கு உடன் கிடைத்தமையின், முதன் வெளியீட்டிலே பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் என வெளியிட்டு, இதனை அறிஞர் கண்டு பொருளறிந்து இன்புறும் வாயிலையும் உத வியது பெரிதும் போற்றத்தக்கதாகும். "இவ்வுரை இல்லையாயின், இந்நூற்பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது" என அவர்களே உரைத்திருப்பது காண்க. ஏடுகளில் உரைகாரர் பெயர் குறிக்கப்படாமையின் அவர் இன்னாரென்று அறிவது இயலாதாயிற்று. ஆயினும் அவர் நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் காலத்துக்குப் பிற்பட்டவ ரென்பது ஒருதலை. பதிற் றுப்பத்தின் உரையில், சில்லேராள ரென்றவிடத்துச் "சின்மை யைச் சின்னூல் என்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க" (பதிற். 76; 11) என்றவிடத்து உரைகாரரால் சின்னூல் எனப் படுவது குணவீர பண்டிதர் எழுதிய நேமிநாத மென்னும் இலக்கண நூலுக்குப் பெயர்.

இவ்வண்ணம் பாட்டும் உரையுமாகக் கிடைக்கும் இப்பதிற் றுப்பத்து, முதற் பத்தும் பத்தாம் பத்தும் இன்றி இடைநின்ற எட்டுப் பத்துக்களே கொண்டுள்ளது. கிடைக்கும் ஏடுகள் பலவற்றினும் முதற் பத்தும் இறுதிப்பத்தும் காணப்படவில்லை. பாட்டும் உரையும் கொண்ட ஏடொன்றில், ஒன்பதாம் பத்தின் இறுதியில், "பதிற்றுப்பத்து மூலமும் உரையும் முடிந்தது; சுப மஸ்து" என்று காணப்படுகிறது. மூலமேயுள்ள ஏடுகளும் ஒன் பதாம் பத்தோடே முடிகின்றன. இவ்வாறே தொடக்கமும் இரண்டாம் பத்தையே கொண்டு பல ஏடுகளும் உள்ளன. இதனால் நெடுநாட்களுக்குமுன்பே, இதன் முதற் பத்தும் பத்தாம் பத்தும் மறைந்தன எனக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இனி, கிடைத்துள்ள ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்று காணப்படுகிறது. அது, பாடப்பட்ட சேரவேந்தனுடைய மெய்க் கீர்த்திபோல் நின்று பாடினோர், பாடப்பட்டோர், பாடிய பாட்டு, பாடிப்பெற்ற பரிசில், பாடப்பட்ட வேந்தனுடைய ஆட்சிக் காலம் என்ற இவற்றைக் கூறுகிறது. அப்பதிகங்கள், தாம் உட் கொண்டுநிற்கும் பாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் அவ்வப் பாட்டி னுட் காணப்படும் சொற்றொட ரொன்ராற் பெயர் குறித்துள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், அப்பாட்டிற்குத் துறை, வண் ணம், தூக்கு, பெயர் என்ற யிவை வகுக்கப் பெற்றுள்ளன. இப்பெயர்களே பதிகத்திலும் தொகுத்துக் காட்டப்படுகின்றன. மேலும் இப்பதிகங்கள் உரையுள்ள ஏடுகளிற்றான் காணப்படு கின்றன. பழையவுரை இப்பதிகங்கட்கும் உரை குறித்துள்ளது.

ஆனால், இப்பதிகங்கள் உரையில்லாத மூலப்பகுதியே யுள்ள ஏடுகளில் இல்லை. மூலமேயுள்ள ஏடுகளில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் முதலியன குறிக்கப் பெற்றும், ஒவ்வொரு பத்தியின் இறுதியிலும் பாடினோர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும், “இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு முற்றும்” என்றாற்போலக் குறிக்கப் பெற்றும் உள்ளன. இக் குறிப்புகளை நோக்குமிடத்து, பதிற்றுப்பத்துப் பாட்டுகளைத் தொகுத்தோரால் வண்ணம், தூக்கு, துறை, பெயர் முதலியன வகுக்கப் பெற்றிருக்கலாமென்றும், அவர்க்குப்பின் வந்த சான் றோர் ஒருவரால் பதிகங்கள் பாடிச் சேர்க்கப்பெற்றிருக்கலா மென்றும் கருதுதற்கு இடமுண்டாகிறது. டாக்டர் திரு அய்ய ரவர்களும், “ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயரென்பவைகள் உரையில்லாத மூலப் பிரதிகளிலெல்லாம் இருத்தலின், அவை உரையாசிரியரால் எழுதப்பட்டன வல்ல வென்றும் பதிகங்கள் உரைப் பிரதி களில் மட்டும் காணப்படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரிய ரல்லரென்றும் தெரிகின்றன. ஆசிரியர் நச்சினார்க் கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத் தாளப் பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியவை யென்று தோற்றுகிறன்து” என்று கூறுவது நோக் கத்தக்கது.

சுமார் பதினைந்து ஆண்டுகட்குமுன் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்வோர் சிலருக்கு இப்பதிற் றுப்பத்தினைக் கற்பிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டா யிற்று. அக்காலத்தே அவர்கட்கு இதனைக் கற்பித்து வருகையில், இதற்கொரு விரிவுரை யிருப்பின் நலமாகுமெனும் எண்ணமுண் டாக, என் நண்பர் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்தின் ஏடுகள் இரண்டு பெற்று அச்சுப்படியையும் அவற்றையும் ஒப்பு நோக்கு வது முதற்கண் செயற்பாலதென உணர்ந்து செய்ததில் சில பாட வேறுபாடுகளும், சில பாடங்களிற் கானப்பட்ட ஐயங்கட்குத் தெளிவும் கிடைத்தன. பின்னர் இவ்வுரைப்பணியை மேற் கொண்டு செய்து வருங்கால், திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியரும் என் வணக்கத்திற்குரிய ஆசிரியருமாகிய கரந்தைக் கவியரசு திரு. R. வேங்கடாசலம் பிள்ளை யவர்கள் தாம் எழுதி வைத்திருந்த உரையினையும் தந்து உதவினார்கள். யான் எழுதி வைத்திருந்த உரையை நாவலர் திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் பார்வையிட்டு இப்போது வெளியாகி யிருக்கும் இந்த முறையைக் காட்டி இவ்வகையில் இவ்வுரையை யமைக்குமாறு தெரிவித்தார்கள்.

இவ்வுரையின் அமைதியை நேரிற் கண்டு ஊக்கியதோடு விரைய அச்சிடுவது நலமென்று தெருட்டிய எங்கள் அரும்பெறல் ஆசிரியர் திரு. ந. மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள், இதன் பதி கங்கள் ஆராய்ச்சிக்கு இடமாக வுள்ளனவாதலால், அவற்றிற்கு உரை வேண்டாவெனப் பணித்தமையின், இந்நூற்கண் பதிகங் கட்கு உரை யெழுதப்படவில்லை. மேலும், இதன் முதற் பத்து கிடைக்காமையின், இதற்கு முன்னணியில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று இருந்திருக்கு மென்றும், "எரியெள்ளுவன்ன நிறத்தன்" எனத் தொடங்குவதும், தொல்காப்பியப் பொருளதி கார வுரையில் உரைகாரராற் காட்டப்படுவதுமாகிய பாட்டை இப்பதிகத்தின் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரை யெழுதுமாறும் அவர்கள் உரைத்தார்கள். உரை முழுதும் அச்சாகி வெளிவரும் இந்நாளில் அவர்கள் இல்லாமை என் மனத்தை வருத்துகிறது.

இனி, இந்நூலின் பதிகங்களுக்கு உரை யெழுதப்படாமை யால், இவற்றின் கருத்து விளங்க ஒரு கோவைப்படுத்தி வரலாற்று முறையில் ஒரு கட்டுரை யெழுதிச் சேர்ப்பது நலமென இவ்வுரை யைக் கண்ட அறிஞர் கூறினர். இவ் வரலாற்றுத் துறையில் யான் அறிந்த நாண்முதல் உழைத்துப் பெரும்பயன் தமிழுலகிற் களித்து வருபவர் என் அரும்பெறல் நண்பர் திரு. T. V. சதாசிவப் பண்டாரத்தா ரவர்களாதலால், அவர்களை இதனைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டேன். அவர்களும் தமக்குள்ள அலுவல்கட் கிடையே உடல் வலியின்மையும் பொருட் படுத்தாது பதிகப் பகுதிபற்றிய சிறந்த ஆராய்ச்சி யுரையினை வழங்கி யுள்ளனர். அவர்கட்கு என் மனங்கெழுமிய நன்றி யுரியதாகின்றது.

இனி, யான் எழுதிய உரையை யானே ஆராய்ந்து நலந் தீங்கு காண்பதென்பது சிறிது அருமையாக இருந்தமையின், உரை கண்ட என்னைப்போலவே பல ஆண்டுகள் வித்துவான் தேர்வுக்குச் செல்வோர்க்கு இதனைக் கற்பிக்கும் பணி மேற்கொண்டு கூர்த்த‌ புலமையால் சிறந்து நிற்கும் என் அரிய நண்பர் திரு. க. வெள்ளை வாரண ரவர்களை உரை பற்றியதொரு கட்டுரை தருமாறு கேட் டுக்கொண்டேன். அதனை மறாது ஏற்று அழகிய கட்டுரை தந்த அவர்கட்கும் என் மானமார்ந்த நன்றி யுரியதாகின்றது.

பல்லவர், சோழர், பாண்டியர் என்ற இவ் வேந்தர்களைப் பற்றிய வரலாறுகளேனும் ஓரளவில் மக்கள் அறிந்து கோடற் கேற்ற வகையில் நூல்வடிவில் வெளியாகி இருக்கின்றன; பண்டைநாளைச் சேர மன்னர்களைப்பற்றிய வரலாற்றினைச் செவ்வே அறிந்து கோடற்கு வேண்டும் கருவிகளாகச் சங்கத் தொகை நூல்கட்கு வேறாக யாதும் கிடைத்திலது. இடைக் காலக் கல் வெட்டுக்கள் பண்டைச் சங்க காலத்துச் சேரர் வரலாற் றுக்குத் துணை செய்வனவாக இல்லை. சேரநாட்டு மொழியும் நடையும் ஒழுகலாறும் பலவேறு மக்கள் கூட்டுறவால் வேறுபட் டொழிந்தமை இதற்குக் காரணமாம்; ஆயினும், இன்றைய கேரள நாட்டின் பண்டைய வரலாற்றினை ஆராய்ந்தறிதற்கு வேண்டும் கருவிகளும் கிடைத்தில; கிடைக்கச் செய்தாருமில்லை. அதனால் இவ்வுரைக்கண் தெளிவிக்கப்படும் வரலாற்றுக் குறிப்புக் கள் முடிந்த முடிபாகக் கோடற்கு இடமில்லை யென்பது தெளி வாம். வேறு ஆராய்ச்சிகளால் விளக்கமாகுங்காறும், இவற்றை மேற்கோடல் தக்கது. இம்முயற்சிக்குத் துணைசெய்த நண்பரும், 1941-ல் வடவார்க்காட்டில் ஜில்லாக் கல்வித் தலைவராக இருந்தவரு மான திரு. இராமன் மேனன் அவர்கட்கு என் நன்றி யுரியதாகும்.

இவ்வுரை யெழுதி முடிக்கப்பெற்றது சில பல ஆண்டுகட்கு முன்பேயெனினும், இரண்டாவது உலகப்போர் காரணமாக, அச்சேற்றி வெளியிடுவதென்பது அரிய செயலாயிற்று. அந் நெருக்கடி இப்போதும் தீர்ந்து பண்டுபோல் ஒழிந்திலதாயினும், இத்தகைய சீரிய செந்தமிழ்நூல் வெளியீடுகளில் சலியாது உழைத்துத் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெருந்தொண்டு புரிந்து சிறக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். இவ்வுரையினை வெளியிடச் சமைந்தது குறித்துப் பொது வாக, அதற்கும், சிறப்பாக அதனைப் பலவகை உயர் பணிகளில் ஈடுபடுத்தி அவ்வாற்றால் அஃது உலவாப் பெரும்புகழ் உண்மைத் தமிழ் நிலையமாகத் திகழச்செய்து மேம்படும் கழகச் செயல் முறைத் தலைவர், திரு. வ. சுப்பையாப்பிள்ளை யவர்கட்கும் தமி ழகத்தின் சார்பில் என் உளம் நிறைந்தெழும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இங்கே குறித்த திருவாளர்களே யன்றி, வேறு வகையில் துணைசெய்த பலர்க்கும் என் நன்றியைச் செலுத்தும் கடமை யுடையேன்.

பல்வகையிலும் குறைபாடுடையனாகிய என்னை, என் அரு மைத் தமிழன்னைக்குத் தொண்டனாக்கி ஆட்கொண்டருளும் எந்தை, தில்லை மன்றில் நின்று திருவருட் கூத்தியற்றும் ஆடலரசன் திருவடிப் போதுகளை மனமொழி மெய்களாற் பரவி யமைகின்றேன்.

அண்ணாமலை நகர்
31-3-1949         ஔவை. சு. துரைசாமி.
---------------------


3.பதிற்றுப்பத்து உரையில் எடுத்தாண்ட நூல்கள்


    தொல்காப்பியம் சொல்லதிகாரம் (தொல். சொல்.)
    தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியல் (தொல்.சொல். வேற்.மயங்.) தொல்காப்பியம் சொல்லதிகாரம் இடையியல் (தொல்.சொல். இடை)
    தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல்(தொல். சொல். எச்ச)
    தொல்காப்பியம் பொருளதிகாரம் (தொல். பொ.)
    தொல்காப்பியம் புறத்திணையியல் (தொல். புறத்.)
    தொல்காப்பியம் களவியல் (தொல். கள.)
    தொல்காப்பியம் கற்பியல் (தொல். கற்.)
    தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் (தொல். மெய்.)
    தொல்காப்பியம் உவமவியல் (தொல்.உவம.)
    தொல்காப்பியம் செய்யுளியல் (தொல். செய்.)
    தொல்காப்பியம் மரபியல்(தொல். மரபு.)
    நற்றிணை (நற்.)
    குறுந்தொகை (குறுந்.)
    ஐங்குறு நூறு (ஐங்.)
    பதிற்றுப்பத்து (பதிற்.)
    பரிபாடல் (பரி.)
    கலித்தொகை (கலி.)
    அகநானூறு (அகம்.)
    புறநானூறு (புறம்.)
    திருமுருகாற்றுப்படை (முருகு.)
    பொருநராற்றுப்படை (பொருந.)
    சிறு பாணாற்றுப்படை (சிறுபாண்.)
    பெரும் பாணாற்றுப்படை (பெரும் பாண்.)
    நெடுநல் வாடை (நெடுநல்.)
    பட்டினப்பாலை (பட்டி.)
    மலைபடு கடாம் (மலைபடு.)
    முல்லைப்பாட்டு (முல்லை.)
    மதுரைக் காஞ்சி (மதுரை.)
    சிலப்பதிகாரம் (சிலப்.)
    மணிமேகலை (மணி.)
    உதயணன் பெருங்கதை (பெருங்.)
    சீவக சிந்தாமணி (சீவக.)
    திருக்குறள் (குறள்.)
    திருஞானசம்பந்தர் தேவாரம் (ஞானசம்.)
    திருக்கழுமல மும்மணிக்கோவை (திருக்கழு. மும்.)
    பொன்வண்ணத்தந்தாதி (பொன்.)
    களவழி நாற்பது (கள.)
    இனியவை நாற்பது (இனி.40)
    பழமொழி நானூறு (பழ.)
    புறப்பொருள் வெண்பாமாலை (பு. வெ. மா.)
    அம்சதேவர் - மிருகபக்ஷி சாத்திரம்.

    South Indian Inscriptions Volumes (S.I.I. Vol.)
    Annual Report on the South Indian Inscriptions, Madras. (A.R.)
    Proceedings and transactions of the third Oriental Conference, Madras. 1924.


4. பதிற்றுப்பத்து : உரை நலம்.

[திரு. க. வெள்ளைவாரணார்,
தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.]

செந்தமிழ் மொழியின் தீஞ்சுவையினை இனிது விளக்குவன வாகிய சங்க இலக்கியங்களுள் ஒன்றாய்த் திகழ்வது பதிற் றுப்பத்து என்னும் இத் தொகை நூல். ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் சேரநாட்டை ஆட்சிபுரிந்த சேரமன்னர் பதின் மரையும் புலவர் பதின்மர் பத்துப்பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுதி யாதலின் இது பதிற்றுப்பத்து எனப் பெயர்பெறுவ தாயிற்று. இத்தொகையிலுள்ள எல்லாப் பாடல்களும் சேரவேந் தர்களின் கல்வித்திறம், மனத்திண்மை, புகழ்நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பெருமிதப்பண்புகளையும், படைவன்மை, போர்த் திறம், பொருள்செயல்வகை, குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறத்தினையும் நயம்பெற விளக்கும் நற்பனுவல்களாம். இவை யாவும் புறநானூற்றுப் பாடல்களைப் போன்று புறத்திணையைப் பொருளாகக்கொண்டு பாடப்பெற்றனவாகும்.

சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் தாம் பெறுதற்குரிய பரிசிற் பொருளையே பெரிதென நம்பித் தகுதியில்லாதாரைப் பாடும் இயல்பினரல்லர். தமக்கு இயல்பா யமைந்த புலமைத்திறத்தி னையோ, அன்றித் தாம் பரிசில்பெற விரும்பிய தலைவனையோ அவனால் அளிக்கப்படும் பரிசிற்பொருளையோ கருதாமல், தம்மாற் பாடுதற்குரிய நல்லியல்பாக அத்தலைவன்பால் அமைந்துள்ள ஒழுக லாறு ஒன்றையே தம் பாடலுக்குரிய நற்பொருளாகக் கொண் டிருந்தார்கள். அக்காலத் தலைமக்களும் இத்தகைய புலவர்களால் நன்கு மதிக்கப்பெறும் சிறப்பினையே வாழ்க்கையில் தாம் பெறு தற்குரிய நற்பேறாகப் பெரிதும் விரும்பினார்கள். ஆகவே இங்ங னம் புலவராற் பாடப்பெறும் நற்பண்புகளை ஆளுதற்றன்மை யாகிய தகுதி சங்ககாலத் தலைமக்கள்பால் நன்கு அமைவதாயிற்று.

குடும்பவாழ்விலே மேற்கொள்ளுதற்கு உரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல் வாழ்விலே மேற்கொள்ளு தற்கு உரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகை யொழுகலாறாகிய புறவொழுக்கங்களும் ஆகிய இவற்றை, அடிப்படையாகக் கொண்டல்லது ஒருவர் ஒருவரைப் பாடுதல் என்பது இயலாத செயலாகும். புறத்திணை ஏழனுள் வெட்சிமுதல் காஞ்சி யீறாகச் சொல்லப்பட்ட அறுவகை யொழுக லாறுகளும், தலைமகனுடைய அன்பின் வழிப்பட்ட பெருமிதப் பண்புகளை யடிப்படையாகக் கொண்டு அவன்பால் தோற்றும் வினைநிகழ்ச்சிகளைக் குறிப்பனவாகும். புறத்திணையுள் ஏழாவ தாகச் சொல்லப்படும் பாடாண் என்பது புலவரது பாடுதல்வினை யையோ அவராற் பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பலரும் பாடிப் போற்றுதலை விரும்பிய தலைமகனொருவன் தன்னுடைய அறிவு திரு ஆற்றல் ஈகை என்பவற்றை ஆளுதற் றன்மையாகிய ஒழுகலாற்றினைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலை மகனது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற் றென்பது ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

வெட்சி முதல் காஞ்சி யீறாகிய அறுவகை யொழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வனவாகும். பாடாண்திணையிலோ பாடுதல் வினை புலவர்பாலும் அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ்செயல் கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய அறுவகை யொழுகலாறுகளும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக் களனாகக் கொண்டு அவன்பால் தோற்றும் தனிநிலைத் திணைகளாம். பாடாண் திணையோ, தலைமகன்பால் நிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு தோற்றும் சார்பு நிலைத்திணையாகும். எனவே போர்மறவர்பால் அமைவன வாகிய வெட்சி முதலிய அறுவகைப் புறத்திணைகளினும், குற்றமற்ற மனைவாழ்க்கையாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த், தலைமகனுடைய கல்வி, தறுகண், இசைமை, கொடை யெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணை யென்பது நன்கு புலனாம். பாடாண் திணை யல்லாத பிற திணைகளும் புலவராற் பாடப்படு வனவே யெனினும், புலவராற் பாடப் பெறுதல் வேண்டும் என் னும் மனக்குறிப்பின்றி, ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் வெட்சி முதலிய திணைகளின் பாற்படுவன என்றும், அச்செயல்களைக் கரு வாகக்கொண்டு புலவன் பாடும்போது அவற்றால் உளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவன்பால் தோற்றும் உயர்ந்த உள்ளக்குறிப்பு பாடாண்திணை யென்றும் வேறு பிரித் தறிதல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும், உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் நிலையில், ஆற்றல்மிக்க போர்த்துறையிலும் அன்பின் வழிப்பட்ட மனைவாழ்க்கை யிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையினையே பாடாண்திணை என ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் இனிது விளக்கியுள்ளார்.

சேரவேந்தர்களின் ஆற்றல் மிக்க ஒழுகலாறுகளைப் புலவர்கள் தம் பாடற்குரிய பொருளாகக் கொண்டு பாராட்டும் முறையில் இப்பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும் அமைந்துள்ளன. ஆகவே இத்தொகையின்கண் அமைந்த நூறு பாடல்களும் பாடாண்திணை என்ற ஒரு திணையையே பொருளாகக்கொண்டு பாடப்பெற்றன எனக் கொள்ளலாம். "பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண் திணையே ஆயிற்று" (தொல்.புறம்.25, உரை) எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இவ்வுண்மையினை வலி யுறுத்தல் காணலாம். இப்பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பாடலுக்கும் திணையமைதி கூறாது, துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றை மட்டுமே குறித்துச்செல்லுதற்கு இதுவே காரணமாதல் வேண்டும்.

இத்தொகையிற் சேரமன்னர்களைப் பற்றிய பாடல்களே தொகுக்கப்பெற்றுள்ளன. ஒரு குடியிற் பிறந்த வேந்தர் பலரைக் குறித்துத் தொடர்ச்சியாகப் புலவர்பலர் பாடிய செய்யுட்கள் கால முறை தவறாது இத் தொகையொன்றிலேதான் காணப்படுகின் றன. இந்நூல் சங்ககாலச் சேரவேந்தர் வரலாற்றைத் தொடர்ந்து எழுதுதற்குப் பெரிதுந் துணைபுரிவதாகும். இத்தொகையினைப் போன்று சோழர் பாண்டியர் என்பவர்களைப்பற்றிய பாடல்களைத் தொகுத்த வேறு தொகைநூல்களும் இருந்திருத்தல் கூடும் என எண்ண வேண்டியுளது. அத்தகைய தொகைநூல் எதுவும் இக் காலத்திற் கிடைக்கவில்லை. சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரையும் பாராட்டுங் கருத்துடன் மூவேந்தருள் ஒவ் வொரு குடியினர்க்கும் தொள்ளாயிரம் தொள்ளாயிரம் புகழ்ப் பாடல்க ளமைய இடைக்காலத்தே அமைந்த நூல் முத்தொள்ளா யிரம் என்பதாகும். இதிலிருந்து மேற்கோள்களாக எடுத்தாளப் பெற்ற ஒருசில செய்யுட்களைத் தவிர ஏனைய இக்காலத்திற் கிடைத் தில. தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவாக அமைந்த முத் தொள்ளாயிரத்தைப் போலாது சேரமரபினர்க்கே சிறப்புரிமை யுடையதா யமைந்த பதிற்றுப்பத்து என்னுந் தொகைநூல் சேர மன்னர்களின் ஆட்சிமுறை வரலாற்றுச்செய்திகளை நன்குணர்ந்த சேரநாட் டறிஞ ரொருவரால் தொகுக்கப்பெற் றிருத்தல்கூடும்.

பதிற்றுப்பத்துக்குப் பழைய தோர் உரை யுளது. அப் பழையவுரை இல்லாவிட்டால் இத் தொகையிலுள்ள பாடல்களுக்குப் பொருள் காணுதல் என்பது எளிதின் இயலாத தொன்றாம். பழையவுரையினை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமுந் தெரிந்து கொள்ள இயலவில்லை. அவ்வுரையில் சின்னூல் என்னும் ஒரு நூற் பெயர் காணப்படுவது கொண்டு அப்பெயரால் வழங்கப்படும் நேமிநாத நூலை இயற்றிய குணவீரபண்டிதர்க்குப் பின்னர் இவ் வுரையாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என இந்நூலை முதன்முதற் பதிப்பித்த மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் கருதுகின்றார்கள். இவ்வுரையாசிரியர் இந்நூலிலுள்ள அருஞ்சொற்களுக்கும் தொடர் களுக்கும் பொருள் கூறியும் சொன்முடிபு பொருண்முடிபு காட்டி யும், ஒவ்வொரு பாடலுக்கு முரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றின் அமைதியைப் புலப்படுத்தியும் இடை யிடையே பாட்டின் சுவைநலங்களைச் சுருக்கமாக விளக்கியும் இலக்கணக் குறிப்புக்கள் தந்தும் இறுதியில் கருத்துரைத்தும் பாடல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகளைச் சிறிது புலப்படுத்தியும் இந்நூற் பொருளைத் தெளிவுபடுத்துகின்றார். அன்றியும் ஒவ் வொரு பத்தின் இறுதியிலும் அதனாற் பாடப்பெற்ற சேரமன்ன ரது செயல்முறைகளையும் அவரைப் பாடிய புலவர் பெற்ற வரிசை யினையும் குறித்துப் பாடப்பெற்ற பதிகத்தை அமைத்து அப்பதி கங்களுக்கும் விளக்கந் தருகின்றார். இவ்வுரை, புறநானூற்றுரை யினைப் போன்று பொழிப்புரையாகவோ, சிலப்பதிகார அரும்பத வுரை போன்று சுருக்கமாகவோ அமையாது, இடைப்பட்டதாக வுளது. அரும்பதங்களுக்கு உரை கூறுவதுடன் இன்றியமையாத இடங்களுக்குப் பொருள்விளக்கமும் தந்து செய்யுளில் அமைந்த தொடர்களை முடித்துக்காட்டும் நிலையில் இப்பழையவுரை யமைந் துளது. போதிய அளவு தமிழ்நூற் பயிர்ச்சி யுடையார்க்கு அரிய சொற்பொருள்களையும் சொன்முடிபு பொருண்முடிபுகளையும் சுருக்கமாகத் தெளிவிக்கும் நிலையில் அமைந்ததே இப்பழையவுரை யாகும். சுருங்கக் கூறுவோமானால் பதிற்றுப்பத்தினைப் பாடஞ் சொல்லும் ஆசிரியர்களுக்குப் பொருளுணர்ச்சிக்கு வேண்டும் வழி துறைகளை நன்றாக வகுத்துக் கொடுப்பது இப்பழையவுரை யென லாம். பதிற்றுப்பத்து மூலத்தைக் கருத்தூன்றி யுணர்தற்கு வேண் டும் நூற்பயிற்சியுடையவர்களே இப்பழையவுரையின் நுட்பத்தினை யுணர்ந்துரைக்கும் திட்பமுடையோ ராவர்.

இப் பழையவுரையின் துணைகொண்டு பதிற்றுப்பத்தினைப் படித்துணரும் வன்மையில்லாதார் சிலர் இந்நூற்பொருளை யாரா யத் தொடங்கித் தம் மனம்போனவாறு எழுதிய பிழையுரைகள், பலவாம். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காட்டுதும்: ‘சேரர் வஞ்சி’ என்னும் நூலுடையார் ஐந்தாம்பத்தின் முதற்பாடலில் “தெவ்வர் மிளகெறி யுலக்கையின் இருந்தலை யிடித்து” என வருந்தொடர்க்குப் பகைவேந்தர் தலைகளை உலக்கையினாற் குற்றப்பட்ட மிளகினைப் போலச் சிதறும்படி செய்து" எனப் பொருள்கொள்ள அறியாது மிளகைக் குற்றும் உலக்கையினையே படையாகக் கொண்டு பகைவேந்தர் தலைகளைத் தாக்கி எனப் பொருந்தாவுரை கூறினர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் நல்லிசைப்புலமை மெல்லியலார் ஆறாம் பத்தினாற் பாடிய பொழுது அவர்தம் புலமைத்திறத்தை நன் குணர்ந்த அவ்வேந்தன் அவ்வம்மையார்க்கு அணிகலன்களுக்காக ஒன்பது காப் பொன்னும் நூறாயிரங் காணமும் பரிசிலாகத் தந்து அப் புலவர்பெருமாட்டியாரைத் தன்னருகே அவைக்களப் புலவ ராக அமர்த்திக்கொண்டான் என்னும் செய்தியை ஆறாம்பத்தின் பதிகம் கூறுகின்றது. "பாடிப் பெற்ற பரிசில் கலனணிக வென்று ஒன்பது காப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்துப் பக்கத்துக் கொண்டான் அக்கோ" எனவரும் பதிகத்தொடரால் இவ்வுண்மை புலனாம். இதனைத் தெளிவாக வுணரும் வாய்ப்பில் லாத அவ்வரலாற்றாசிரியர் இங்குக் காட்டிய 'பக்கத்துக் கொண் டான்' என்பதற்குச் சேரமன்னன் காக்கைபாடினியார் என்னும் புலவரைத் தனக்குரிய மனைவியாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் எனப் பொருந்தாத செய்தியினை ஏற்றி யுரைக் கின்றார். சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் தூய வுள்ளத்திறனை யும் அவர்களை நன்குமதித்துப் போற்றிய செந்தமிழ் வள்ளல்களின் மனத்தூய்மையினையும் தெளிவாக அறிந்துகொள்ளும் நூற்பயிற்சி யின்றி வரம்பற்ற தம் காலஇயல்புகளை எண்ணித் தம் மனம்போன வாறு பொருள்காண முயலுதல் நேரிதன்று. இத்தகைய பிழை பாடுகளுக் கெல்லாம் காரணம், சங்கஇலக்கியங்களின் பொருள் நலங்களை இக்காலத்தில் சாதாரண நூற்பயிற்சி யுடையாரும் தெளிந்துகொள்ளும் முறையில் அமைந்த விிவுரை யில்லாத குறையே யாகும்.

பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும், சேரவேந்தர்கள் அவ் வப்பொழுது நிகழ்த்திய கடற்போர் முதலிய வரலாற்றுச் செய்தி களையும், அவற்றைச் சிறப்பித்துப் பாடக் கருதிய புலவர்கள் தம் உள்ளத்திற் கருதிய எண்ணங்களையும், அவ்வெண்ணங்களைத் தேனினு மினிய செந்தமிழ்ப்பாடல்களால் அரசனுக்குணர்த்துந் திறங்களையும் தம் அகத்துக்கொண்டு விளங்குகின்றன. இப்பாடல் களின் சுவைநலங்களைத் தமிழ்மாணவர் யாவரும் தெளிவாக உணர்ந்து மகிழும் நிலையில் இந்நூலுக்கு விளக்கமும் விரிவு முடைய தாகப் புதியவுரை யொன்று எழுதப்பெறல் வேண்டும் என்னும் நினைவு திருவாளர் ஔவை. துரைசாமி பிள்ளை யவர்கள் உள் ளத்திற் கருக்கொண்டு திகழ்வதாயிற்று. எண்ணிய எண்ணி யாங்குத் திருத்தமாகச் செய்து முடிக்கவல்ல திரு. பிள்ளை யவர்கள் தமிழ்தழீஇய தம் புலமைத்திறத்தால் பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்ப் பனுவலுக்கு அமிழ்தென விளங்கும் அழகிய இவ்விரிவுரையினை இயுற்றி யுதவியுள்ளார்கள். இவ்வுரை இக் காலத்திற் சங்கஇலக்கியங்களைப் பயில விரும்பும் யாவர்க்கும் வழி காட்டியாய் விளங்கும் நற்றிறம் வாய்ந்ததாகும். இவ்வுரையின் இயல்பினை ஒருசிறிது உற்று நோக்குவோ மானால் திரு. பிள்ளை யவர்கள் இத்துறையில் மேற்கொண்ட பேருழைப்பும், அவ்வுழைப் பின் பயனாக அவர்களால் விளக்கப்பெற்ற அரிய கருத்துக்களும் நன்கு புலனாம். இவ்வுரை பதிற்றுப்பத்துப் பாடல்களின் பொருள்நயங்களை விரிவாக விளக்குவதுடன் அப்பாடல்களுக்குப் பழைய வுரையாசிரியர் எழுதியுள்ள நுட்பங்களையும் இனிது விளக் கிச்செல்லுகின்றது. அம்முறையினால் இது பழையவுரையின் விளக்கமாகவும் விளங்குகின்றது. எனினும் பழைய வுரையாசிரியர் கருத்துக்களை அப்படியே பின்பற்றிச் செல்லாமல் பதிற்றுப் பத்துப் பாடல்களைத் தனிமுறையிற் சிந்தித்துணர்ந்து வரலாற்று முறைக் கேற்ப இவ்வுரையாசிரியர் தரும் புதியவிளக்கங்கள் பெரி தும் பாராட்டத்தகுவனவாம்.

இரண்டாம்பத்தின் முதற்பாடலில் உள்ள ”கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுக் கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும், ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” என்னும் தொடர்க்குப் பழைய உரையாசிரியர் கூறிய நயம் அப்பாடலைப் பாடிய குமட் டூர்க் கண்ணனார் கருத்துக்கு ஒத்தது தானா என ஐயுறவேண்டி யுளது. “முருக்கமரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள் பகற்பொழுதில் தாம் மேய்ந்த நரத்தம்புற்களையும் அவை வளர்தற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற் கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும் ஆரியர் நிறைந்து வாழும் இமயம் என்றது, இமயமலையின் இயற்கை வளங்களை விளக் குவதல்லது அவ்வளங்களைத் துய்த்து இனிதுறையும் கவரிமான் களுக்கும் அங்கு வாழும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பிப்ப தன்றாம். இவ்வுண்மையினை நன்குணர்ந்த திரு. பிள்ளையவர்கள் இத் தொடரை இமயமலையின் தன்மை நவிற்சியாகக் கொண்டு உரைகூறிய திறம் (பக்கம் 10-11) நோக்கத்தகுவதாம். இத் தொகையிலுள்ள பாடல்களை இயற்றிய சங்கப்புலவர்களுக்கும் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய பழைய வுரையாசிரியர்க்கும் இடையே பிற நாட்டார் நுழைவினாலும் அவர்தம் மொழி வழக்கு முதலிய வேற்றுமைகளாலும் தமிழகம் அடைந்த அரசியல் சமுதாய நினைவு மாற்றங்கள் பலவாகும். இவ்வாறு காலவேறுபாடுகளால் தோன்றும் மாற்றங்களுக்குக் கட்டுப்படாதவர் யாரு மிருக்கமுடியாது. தொல்காப்பியம், பத் துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் என்பவற்றுக்கு உரை யெழுதிப் போந்த ஆசிரியப்பெருமக்கள் யாவரும் இக்காலவேறு பாடுகளில் ஓரளவு சிக்குண்டவர்களே என்னும் உண்மையை யுளத்துட் கொண்டு பதிற்றுப்பத்தின் பழையவுரையினை நன் காராய்ந்து திரு. பிள்ளையவர்கள் இப்புதிய விரிவுரையினை இயற்றி யுள்ள திறம் இவ்வுரை முழுதையும் கருத்தூன்றிப் படிப்பார்க்கு இனிது விளங்கும்.

இனி, இப்பழையவுரையினை அடிப்படையாகக் கொண்டு இக் காலத்தார் எழுதிய குறிப்புக்கள் சில பதிற்றிப்பத்துப் பாடல் களுக்கும் பழையவுரைக்கும் மாறாக நூல்பயிலும் மாணவர் உள் ளத்தை மருட்டும் நிலையில் உள்ளன.

தம்முடன் போர்செய்வார் தோல்வியுற்று நிலத்தே விழும்படி வாளாற் பொருது அவர்தம் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் பேராற்றல் படைத்த வீரர்களை யுடைய பகைவேந்தர் தலைநடுங்கி வணங்க அவர்தம் காவல்மரமாகிய கடம்பினை வேந்தர் பெருமா னாகிய நெடுஞ்சேரலாதன் அடியோடு வெட்டி வீழ்த்துகின்றான். அம்மன்னனது போர்த்திறத்தை நேரிற்கண்டு மகிழ்ந்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் "வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக், கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே" எனச் சேரலாதனைப் பாராட்டிப் போற்று கின்றார். இங்கே சேரலாதனுக்குப் பகைவராகிய கடம்பரது பேராற்றலை மிகுத்துக் கூறும் வாயிலாக அக்கடம்பரை வென் றடக்கிய சேரலாதனது பேராற்றலைப் புலப்படுத்துதல் புலவர் கருத்தாகலின் 'வயவர் வீழ வாளரில் மயக்கி இடங்கவர் கடும்பின் அரசு' என அக்கடம்பரை சிறப்பித்தார். இங்ஙனம் பகைவரை மாட்சிமைப்படுத்திக் கூறுமுகத்தால் அவர்களை வென்றடக்கிய தம் வேந்தனது வெற்றியை விளக்கும் முறை


    "நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்" (49)

எனவும்,

    "நிலந்தப விடூஉம் ஏணிப்புலம் படர்ந்து
    படுகண் முரசம் நடுவட் சிலைப்பத்
    தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
    ஏவல் வியங்கொண்டு இளையரொ டெழுதரும் ஒவ்வார்" (54)

எனவும் வரும் தொடர்களால் நன்கு விளங்கும். இம்மரபினை யுளத்துட்கொண்டு 'இடங்கவர் கடும்பின் அரசு' என்ற தொடர்க்கு "மாற்றாரது இடத்தைக் கவர்ந்துகொள்ள வல்ல ஆற்றல் மிக்க வீரத்தினை யுடைய பகை வேந்தர் எனப் பொருள் கூறுவதே நேரியமுறையாகும். இதற்குமாறாக இத்தொடர்க்கு " தனக்குரிய இடத்தைக் கவர்ந்த மந்திரி முதலிய சுற்றத்தை யுடைய பகையரசர்" எனப் பொருள் கூறிய இக்காலத்தார் குறிப்புரை, நெடுஞ்சேரலாதனது நாட்டைக் கடம்பர் முதன்முதல் படையெடுத்துப் பிடித்தன ரெனவும் அதன்பின்னரே சேரலாதன் அவரொடு போர்செய்து வென்றனன் எனவும் பொருள் கொள் ளும் நிலையில் அமைந்துள்ளது. இமைய மளவும் படை யெடுத்துச் சென்று, ஆரியரை வணக்கிய பெரும்புகழ் படைத்த வேந்தர் பெருமானாகிய சேரலாதன், கடம்பர் என்பார் தந் நாட்டிற் படை யெடுத்து இடங்களைக் கவர்ந்து கொள்ளும்படிக் கருத்தின்றி யிருந்தான் எனத் தவறான பொருள் படும்படி எழுதப்பட்ட இக் காலக் குறிப்புரையின் பொருந்தாமையினை யுணர்ந்த திரு. பிள்ளை யவர்கள் வரலாற்றுமுறைக்கு மாறுபடாதவகையில் இத்தொ டர்க்ரு உரைகூறியதிறம் (பக்.12-13) வியக்கத்தக்கதாம்.

திரு பிள்ளையவர்கள் தமது விரிவுரையில் பாடல்தோறும் பதசாரம் கூறும் முறை பரிமேலழகர், நச்சினார்க்கினியர் என்னும் பழைய வுரையாசிரியர்களின் உரை நயங்களை யெல்லாம் நினைவு கூரச் செய்கின்றது. பாட்டின் பெயர்க் காரணம் கூறுங்கால் பழையவுரையாசிரியர் கருத்தைப் பின்பற்றி இவர்கள் கூறும் விளக்கம் மிகவும் தெளிவுடையதாகும்.

16-ஆம், பாடல் துயிலின்பாயல் என்னும் பெயருடைய தாகும். இப்பாடலில் நெடுஞ்சேரலாதனது மார்பினை அவனை விரும்பிய மகளிர்க்குப் பாய லெனச் சிறப்பித்தமையால் இதற்குத் துயிலின் பாய லென்று பெயராயிற்று எனப் பழையவுரையாசி ரியர் கூறினர். 'திருஞெம ரகலத்துத் துயிலின் பாயல்' என்ப தற்குத் திரு, பிள்ளையவர்கள் கூறிய மற்றொரு நயம் பெரிதும் சுவைதருவ தொன்றாம். நெடுஞ்சேரலாதனது மார்பு திருமகள் வீற்றிருக்கும் சிறப்புடைய தென்பது, 'திருஞெமரகலம்' என்ப தனால் விளக்கப்பெற்றது. அங்ஙனம் திருமகள் விரும்பி வீற்றி ருக்கும் செரலாதனது மார்பினை அவன் காதன்மகளிர்க்குப் பாயல் எனப் புலவர் சிறப்பிக்கின்றார். பிறளொருத்தி தன் கணவன் மார்பினைத் தோய்ந்தவழி அதனை வெறுத்துப் புலந்து போதலே குலமகளிர் இயல்பு. சேரலாதனை விரும்பிய மகளிர், அவன் மார்பில் திருமகள் என்னும் மற்றொருத்தி பிரியா துறை தலைக் கண்டும் அவனுடன் புலவரது அத்திருமகளின் இருப்பு ஆள் வினையிற் சிறந்த தம் தணவனாகிய சேரலாதனுக்கு அழகென்று தெளிந்து தம்முடைய சால்பினால் திரு வீற்றிருக்கும் அவன் மார்பிற் சார்ந்து பெறும் துயிலினையே மேன்மேலும் விரும்புகின் றார்கள். அவர்தம் காதற்சிறப்பினைக் கூறுதல்பற்றி இப்பாடல் துயிலின்பாயல் எனப் பெயர்பெறுவதாயிற்று என இவ்வாசிரியர் கூறும் மற்றொருநயம் (பக். 43) அறிஞர்கள் படித்து இன்புறுதற் குரியதாகும்.

பாட்டுடைத் தலைவனுடைய பண்புகளுடன் அவனைப் பாடிய புலவரது உள்ளத்துணர்ச்சிகளையும் விரித்துரைக்கும் முறையில் இவ்வுரை அமைந்துளது. 19-ஆம் பாடல் பகைமேற் சென்ற சேரலாதனை நோக்கி அவனை இன்றியமையாப் பெருங்காதல ளாகிய கோப்பெருந்தேவியின் பிரிவாற்றாமையை எடுத்துரைத்து அவனுள்ளத்தில் அன்புடைமையைக் கிளர்ந்தெழச் செய்த இயல் பினையும் சேரலாதனது போரினால் பகைவர் நாடழிந்த துன்ப நிலையை எடுத்துரைக்கு முகத்தால் அவன் மனத்தில் பகைவர்கள்பால் அருளுணர்வினைத் தோற்றுவிக்கும் இயல்பினையும் இனிது புலப் படுத்துவதாம். இப்பாடலுக்கு அமைந்த விரிவுரை ஆசிரியர் குமட்டூர்க்கண்ணனாரின் உள்ளத்திற் பொங்கி யெழுந்த அருளுணர் வினை நன்கு தெருட்டுவதாகும். (பக்கம் 51-59)

20-ஆம் பாடலில் சேரலாதனைப் பெற்ற தாய் வயிறு விளங்கு வாளாக எனப் புலவர் வாழ்த்தியதன் நுட்பம் நன்கு விளக்கப் பட்டுள்ளது. (பக்கம் 65-66) இப்பாட்டில் 'வயிறு பசிகூர ஈயலன்' எனவருந் தொடர்க்குத் "தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்" எனக் குறிப்புரை வரைந்தாரும் உளர். ஈயலன் என்னும் சொல் ஈதலைச் செய்யான் எனப் பொருள்தருவ தன்றி ஈயாமல் இரான் எனப் பொருள் தருதல் கூடாது. வயிறு பசிகூர ஈயலன் என்பதற்கு வயிற்றிற் பசித்தீ மிக்கெழும்படி ஈதலைச் செய்யான் என்பதே நேர்பொருளாகும். வயிற்றிற் பசி மிக்கு எழுமாறு ஈதல் என்றது இரவலர்க்குக் குறையக் கொடுத்தலை; குறையக் கொடுத்தலைச் செய்யான் என எதிர்மறைமுகத்தாற் கூறவே இரவலர் பசி தணிய நிறையக் கொடுப்பன் என வற்புறுத்தவாறாயிற்று. "நிறையக் கொடுக்கு மாறு தோன்ற 'வயிறு பசிகூர ஈயலன்' என்றான்" என இவ் விரிவுரையாசிரியர் கூறும் விளக்கம் இத்தொடரின் பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம்.

22-ஆம் பாடலில் கயிறு குறுமுகவை என்பதற்கு இவ்விரி வுரையாசிரியர் கூறும் விளக்கம் (பக். 83-84) இதுகாறும் பிறராற் சொல்லப்படாத புதுமையும் தெளிவும் உடையதாகும்.

நான்காம் பத்தினாற் பாடப் பெற்ற அரசன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் ஆவான். அவன் அப்பெயருடையனாய் விளங்குதற்குத் தன் பகைவனாகிய நன்னன் கவர்ந்து கொண்ட நிலப்பகுதியை வென்று கோடல் கருதி அவன் அக்காலத்துச் செய்த சூளுறவின்படி களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் புனைந்து கொண்டமையே காரணம் என இவர்கள் கூறிய பெயர்க்காரணம் வரலாற்று நிகழ்ச்சிக்குப் பெரிதும் பொருத்த முடையதாகும். (பக்கம் 67)

43-ஆம் பாடலில் "கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம் தென்னங் குமரியொடு வடதிசை யெல்லையாக வென மாறிக் கூட்டுக" எனவரும் பழையவுரைப்பகுதி ஏடெழுதுவோரது கருத்தின்மையால் பிழைபடப் பிறழ்ந்துளது. அப்பகுதி " கல் லோங்கு நெடுவரையாகிய வடதிசை இமயம் தென்னங்குமரியொடு எல்லையாக என மாறிக் கூட்டுக" என்றிருத்தல் வேண்டும். இமயமும் தென்னங்குமரியும் வடதிசைக் கெல்லையாதல் ஒருவாற் றானும் பொருந்தா தென்பதும் இமயம் வடதிசை யெல்லையாகவும் குமரி தென்னெல்லை யாகவும் கொள்ளுதலே பொருத்தமுடையத் தென்பதும் கருதிய இவ்விரிவுரை யாசிரியர் அக்கருத்திற்கேற்பத் தம் புதியவுரையை அமைத்துக்கொண்டமை இவண் குறிப்பிடத் தருவதாம்.

இப்பாட்டில் 'கண்டி துண்கோல்' என்பது 'கண்டிர ணுண் கோல் ' என்றிருத்தல் வேண்டும். 'கண்திரன் வேய்' ( பெருங் கதை 1-46-168) எனவருந் தொடர் இப்பாடத்தின் இயல்பினைப் புலப்படுத்துவதாகும். இப்பாட்டில்வந்த ஏறாஏணியாகிய கோக் காலியின் இயல்பினை நன்கு புலப்படுத்துகின்றது இவ்விரிவுரையாசிரியராகிய திரு பிள்ளையவர்கள் பழைய யுரையாசிரியர் உரையுடன் தம் கருத்திற்பட்ட புதியவுரையினையும் ஒப்புநோக்கத் தருவது, நூல் நயங்காணும் இவர்தம் நுட்பத்தினை இனிது விளக்குவதாம். (பக். 215-216)

45ஆம் பாடலில் 'கடல்மறுத்திசினோர்' என்பதனை விளக்க வந்த பழைய வுரையாசிரியர் " கடல் மறுத்தல் என்றது, கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு அரி தென்பதனை மறுத்தலை" எனத் தம் மதிநுட்பத்தாற் சிறப்புடைய பொருள் கூறினார். இப் பொருள் 'அரியவென் றாகாத இல்லை' (குறள்-527) எனவருந் திருவள்ளுவர் வாய்மொழியை நினைவிற்கொண்டு எழுதப்பெற்ற தாகும். ' கடல் மறுத்திகினோர்' என்பதற்குக் ' கடலிற் புக்கு ஒரு தொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர்' எனப் பொருள் கூறினாரும் உளர். கடலிற் புக்கு ஒருதொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர் நின்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் எனச் செங்குட்டுவனைப் பழிக்கும் நிலையில் பரணர் என்னும் புலவர் பெருமான் அவ்வேந்தனைப் பாடியிருக்க மாட் டார் என்பதனை இப்பாடலைப் படிப்போர் நன்குணர்வர்.'கடல் மறுத்திசினோர்' என்பதற்குக் 'கடலிடத்தே எதிர்ந்த பகைவரை எதிர்த்துப் பொருதழித்த வேந்தர்' என யாவரும் எளிதின் உண ரும்படி இவ்வாசிரியர் கூறிய உரைவேறுபாடு எற்றுக்கொள்ளத் தகுவதேயாகும். இவ்வாறே "கரைவாய்ப்பகுதி" (பக்.223) 'வடுவடு நுண்ணுயிர்' (பக். 246) என்பவற்றுக்குக் கூறிய விளக் கங்கள் அறிந்துகொள்ளுதற் குரியனவாம்.

இவ்விரிவுரை பாடற் பொருளை விளக்குவதுடன் அதன் பழைய வுரைக்குறிப்பினை விளக்குதற் குரிய சிறந்ததோர் விளக்க வுரை யாகவுந் திகழ்கின்றது என்பதனை முன்பே கூறினேன். ஒவ்வொரு பாட்டின் உரைப்பகுதியிலும் பழைய வுரையாசிரியர் கூறிய வுரைக்குறிப்புக்களை எடுத்துக்காட்டி விளக்கிச் சொல்லும் முறை இவ்வுண்மையினை வலியுறுத்துவதாம்.

சங்கத் தொகைநூல்களுக்கு விரிவுரை யெழுதுவோர் பதிப் புக்களிற் காணப்படும் பிழைகளை யுணர்ந்து அந்நூல்களின் உண்மையான பாடத்தைத் தெரிந்துகொள்ளுங் கடமையுடைய ராவர். இக்கடமையினை நன்குணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் பதிற்றுப்பத்தின் ஏட்டுச் சுவடிகளையும் அச்சிடப் பெற்ற சுவடி யையும் ஒப்புநோக்கிச் சில பாடவேறுபாடுகளைத் தெரிந்துகொண் டுர்கள்.

55-ஆம் பாடலில், "பெய்து புறந்தந்து பொங்கலாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றா லியரோ பெரும" என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர்க்கு "பெருமையை யுடை யாய், மழையைப் பெய்து உலகத்தைக் காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப் போலப் பொங்கி யெழுதலைச் செய்து மலையைச் சேர்ந்த வெளுத்த மேகத்தைப் போலச் செல்லாதொழியாதாக" என இக்காலத்தில் எழுதப்பெற்ற குறிப்புரை காணப்படுகின்றது. இக்குறிப்புரையில் உள்ளவாறு "நின் வாழ்நாள் வெளுத்த மேகத்தைப்போலச் செல்லா தொழியாதாக" என இருமுறை எதிர்மறுத் துரைத்தால் "நின் வாழ்நாள் வெண்மழை போலச் சென்று ஒழிக" என்னும் வைதற்பொருள் தோன்றுவதன்றி வாழ்த்துதற் பொருள் தோன்றுமா றில்லை. இப்பகுதிக்குப் பொருள் கூற வந்த பழைய வுரையாசிரியர் "வெண்மழை போலச் சென்றா லியர் என்றது, அம்மழை பெய்து புறந்தருங் கூற்றை யொத்து, அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை ஒவ்வாது ஒழிக என்றவாறு" என விளக்கந் தருகின்றார். எனவே மழையின் இயல்பாகிய புரத்தல் தொழிலும் அம்மழை பெய்தபின் வெண்மேக மாகிக் கழிதல் தொழிலும் ஆகிய இரண்டினுள் மழை இவ்வுலக வுயிர்களைப் புறந்தருதல் போன்று நீ இவ்வுலகமக்களைப் பாதுகாத்தல் வேண்டும் என‌ ஒன்றினை ஒத்தும், அம்மழை வெண் மேக மாகிக் கழிவது போன்று நின் வாழ்நாள் கழிதலாகாது என‌ ஒன்றை ஒவ்வாமலும் சேரலாதனுக்கு உவமைகூறி வாழ்த்தினமை இப்பழைய வுரைக்குறிப்பால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். ஆனால் 'சென்றாலியரோ' என்னும் பாடம் இப்பொருட்கு நேர் முரணாகக் காணப்படுகின்றது. இப்பாடத்தின் பொருந்தாமை யினை யுணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் ஏடுகளை ஒப்பு நோக்கிச் 'சென்றறா லியரோ' எனத் திருத்தமான பாடத்தினை உணர்ந்து வெளியிட்டமை பெரிதும் பாராட்டத் தகுவதொன்றாம். சென் றறாலியர் என்னுந் தொடரினைச் சென்று அறாலியர் என இரண்டு சொல்லாகப் பிரித்து, சென்று என்பதனை "வேண்டுவ அள‌வை யுள் யாண்டு பல கழிய மழைபோலப் பெய்து புறந்தந்து சென்று" எனவும்,அறாலியர் என்பதனைப் "பொங்கலாடி விண்டுச் சேர்ந்த‌ வெண்மழை போல அறாலியர்" எனவுந் தனித்தனி இயைத்து உரைக்கும்வழிப் பழைய உரையாசிரியர் கருத்து இனிது புலனாதல் காண்க.

56-ஆம் பாடலில் "வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்து இலங்கும் பூணன், பொலங்குடி யுழிஞையன்" என்னுந் தொடரி லுள்ள வினைக்குறிப்பு முற்றுக்களை எச்சப் பொருள‌வாகக்கொண்டு இவ்வாசிரியர் கூறும் உரை நுட்பம் நச்சினார்க்கினியர் உரைகளில் இடைவிடாது பயின்ற தெளிவினைப் புலப்படுத்துகின்றது.

56-ஆம் பாடல் 'வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி' என்னும் பெயருடையதாகும். வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது, பகைவேந்தர் தங்கள் மெய்யை ( உடம்பை) மறந்து சேரலாத‌ னோடு எதிர்த்து நின்று பொருது மடிந்தமை காரணமாக அதன் காரியத்தால் சேரலாதனுக்கு வந்து எய்திய வெற்றி வாழ்வாகும் எனவும், மறந்த வாழ்வு என்னும் தொடரில் காரணப் பொருட் டாகிய 'மறந்த' என்னும் பெயரெச்சம் வாழ்வு என்னும் காரியப் பெயர்கொண்டு முடிந்ததெனவும் பழைய வுரையாசிரியர் பாட் டின் பெயர்க்காரணங் கூறினார். இவ்வுரையாசிரியர் "வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி" என்பதற்குப் "பகைமையாற் போர் மேற்கொண்டு வந்து பொருத வேந்தர் தம்முடம்பைத் துறந்து சென்று துறக்கத்தே பெறும் வாழ்வு" எனப் பொருள்கூறிப், பகைவேந்தர் யாக்கை நிலையாமையை நன்குணர்ந்து தம் உடம்பை மறந்து என்றும் நிலைத்த புகழை விரும்பி இறக்க அதனால் அவர்க் குளதாகும் துறக்க வாழ்வினைச் சிறப்பித்துரைத்தலால் இப்பாடல் வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி என்னும் பெயருடையதாயிற்று எனப் பெயர்க்காரணமுங் கூறினார். பகை வேந்தர் தமக்குரிய பருவுடம்பை மறந்து போர் செய்தலால் அவர் பெறுந் துறக்க வாழ்வினைமெய்ம் மறந்த வாழ்ச்சி என்றார் என்னும் இவ்வுரை "நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும், வித்தகர்க் கல்லால் அரிது" எனவருந் திருக்குறட்குப் பரிமேழலகர் எழுதிய உரைப் பொருளை யுளங்கொண்டு எழுதிய அருமை யுடையதாகும். மக்கள் தம் புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்புக்கு உண்டா கும் வறுமையை "ஆக்கமாகுங் கேடு" எனவும் புகழுடம்பு நிலை பெறப் பூதவுடம்பு இறத்தலை "உளதாகுஞ் சாக்காடு" எனவும், கூறி இவ்வாறு நிலையாதவற்றால் நிலையுடையன எய்துவார் சதுரப் பாடுடைய ராகலின் அன்னோரை "வித்தகர்" என மேற்காட்டிய குறளில் தெயவப்புலவர் அறிவுறுத்தின ரெனவும் உரையாசிரியர் பரிமேழலகர் நன்கு விளக்கியுள்ளார். இந்நுட்ப மனைத்தும் 'வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்ச்சி' என்னும் ஒரு தொடரிற் புல னாதல்கொண்டு இப்பாடல் இதனாற் பெயர்பெற்றது என இவ்வுரை யாசிரியர் கூறும் காரணம் அறிஞர்களாற் பாராட்டத்தகும் சிறப் புடையதாம்.

70-ஆம் பாடலில் 'உடை நிலை நல்லமர்' என்ற தொடர்க்குப் பகையரசருடைய நிலையாகிய நல்ல போர்' என்ற பொருள் பிற் காலக் குறிப்புரையிற் காணப்படுகின்றது. இத்தொடர்க்கு 'என் றும் தமக்கே யுடைமாகப்பெற்ற நல்ல போர்' எனப் பொருள் கூறி, "போருடற்றுதலும் அதன்கண் வெற்றி பெறுதலும் தமக்கு நிலையாகக் கொண்டு சிறக்கும் வேந்தரென்பார் பகைவேந்தரைக் கடுஞ்சினவேந்தரென்றும் உடைநிலை நல்லமர் என்றும் கூறினார்" என விரிவுரையாசிரியர் தரும் விளக்கம் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது.

71-ஆம் பாடலில் 'அருவியாம்பல்' என்பதற்கு நிறைந்த பூக்களாகிய ஆம்பல்' எனப் பொருள் கூறினர். இப்பொருளுக்கு ஆர்வீ என்பது, அருவீ எனத் திரிந்து பின் அருவி எனக் குறு கிற்று எனக் கூறிக் கலித்தொகை 22-ஆம் பாடலில் ஆர்ந்து என்னுஞ்சொல் அருந்து எனத் திரிந்து நின்றதனை மேற்கோளாகக் காட்டி யுள்ளமை இவர்தம் பழைய உரைநூற் பயிற்சியினைத் தெளிவு படுத்துகின்றது.

73-ஆம் பாடலில் "உரவோர் எண்ணினும் மடவோ ரெண் ணினும்" என்னுந் தொடர்க்குப் பிறர் கூறுமாறு இரண்டாம் உருபு விரித்து உரைகூறிய இவ்வாசிரியர் " இனி உரவோர்தாம் எண்ணினும் மடவோர்தாம் எண்ணினும் இரு திறத்தோரும் நின் னையே உவமமாகக்கொண்டுரைப்பர் என்றுமாம்" என மற்றோ ருரையினையும் குறித்துள்ளமை இவண் கருதத்தகுவதொன்றாம்.

சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையின் உயர்வற வுயர்ந்த தலைமைப் பண்பினை எடுத்துரைக்க விரும்பிய அரிசில்கிழார், அவ் வேந்தர் பெருமான் அறிவிற்சிறந்த சான்றோராலும் நிரம்பிய கல்வி யில்லாத ஏனை மக்களாலும் நன்கறியப்பட்ட பெருமையுடையான் என விளக்குவார்,

    "உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
    பிறர்க்கு நீ வாயி னல்லது
    பிறர் உவமமாகா ஒரு பெரு வேந்தே"

என அம்மன்னனை முன்னிலையாக்கிப் போற்றினார். உண்மை யாகவே ஒருவன் யாவராலும் பாராட்டத்தகும் சிறப்புடையவனாக விளங்குவா னானால் அவனது பெருமை உலகிலுள்ள கற்றார் கல்லா தார் ஆகிய எல்லா மக்களுக்கும் நன்கு புலனாதல் வேண்டும். ஞாயிற்றால் மக்களுக்கு விளையும் நன்மை அதன் இயல்பினை நன்கு ஆராய்ந்துணரும் அறிவியல் நூலோருக்கும் நிரம்பிய கல்வியில் லாத ஏனை மக்களுக்கும் ஒப்ப விளங்குதலைக் காணுகின்றோம். அதுபோலவே உலகில் அறிவாற்றல் முதலியவற்றால் சிறந்து விளங்கும் பெரியோனொருவனது பெருமை யாவருள்ளத்திலும் நிலைபெற்றிருக்கு மென்பது பெறுதும். "ஆற்றலுடையார்க்கு எடுத்துக் காட்டுதற்குரிய உவமையினைப் பேரறிஞர் ஆராய்ந்து தேடினாலும் ஏனை மக்கள் ஆராய்ந்து தேடினாலும் நின்னையே உவமையாக எடுத்துக் கூறுவதல்லது நினக்குப் பிறரை உவமை யாக எடுத்துக்காட்ட இயலாதபடி உயர்வற விளங்கும் பெரு மானே" என அரிசில்கிழார் பெருஞ்சேரலிரும்பொறையின் தனக்குவமையில்லாத தகைமையை நன்கு விளக்கினார். இங்ஙனம் பொருள் கூறுங்கால் ' உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணி னும்' என்பதன்கண் எண்ணுதற்கு வினைமுதல் உரவோரும் மட வோரும் எனக் கொள்ளுதல் வேண்டும்.

இங்ஙனமே விரிவுரையிற் காணப்படும் பொருட்சிறப்பினை யெல்லாம் விரித் தெழுதப்புகின் பெருகுமென்றஞ்சி இவ்வளவில் அமைகின்றேன். கற்றோர் உள்ளத்தைக் கவரவல்ல பதிற்றுப் பத்து என்னும் விழுமிய நூலுக்கு இங்ஙனம் சுவைநலங் கெவும் விரிவுரையெழுதி யுதவிய திரு. ஔவை. துரைசாமிப்பிள்ளை யவர் களைத் தமிழகம் நன்குணரும். ஆங்கிலப் பயிற்சியுடன் நிரம்பிய தமிழ்நூற் புலமையும் பண்டைத் தமிழிலக்கியச்சுவை நலன்களை உரைவாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் யாவரும் உணரச் செய்தல் வேண்டுமென்னும் பேரார்வத்தால் இடைவிடா துழைக் கும் நன்முயற்சியும் இனிது வாய்க்கப்பெற்ற திரு.பிள்ளையவர்கள் தம் புலமைத்திறத்தால் தமிழகத்திற்குப் பெருந்தொண்டு செய்து வருகின்றார்கள். இவர்கள் பண்டைத் தமிழ்நூல்களுக்கு உரை காணும் முறையிற் பெருந்தொண்டு புரிந்த உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய செந்தமிழ்ச் சான்றோர்களின் உரைத்திறங்களை யெல்லாம் நன்குணர்ந்து செறிவும் தெளிவும் அமைந்த இனிய செந்தமிழ் நடையில் பழந்தமிழ் நூல்களுக்கு விரிவுரை காணும் மேதக வுடையராய் விளங்குதல் இவர்களால் இயற்றப்பெற்ற இப்பதிற்றுப் பத்தின் விரிவுரையினால் நன்கு புலனாகின்றது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றுக்கு இன்சுவை கெழும இவர்களியற்றிய விரிவுரை தமிழறிஞர்களாற் பெரிதும் பாராட்டப் பெறும் சிறப்புடையதாகும். மணிமேகலைக்கு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய விரிவுரைப் பகுதியில் எஞ்சிய காதைகளுக்கு இவர்கள் இயற்றிய உரைப்பகுதி இவர்களது பரந்த நூற்பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழி யுஞ் சொல்வன்மையும், செய்யுட்களின் திறனாய்ந்து தெளியும் இலக்கிய ஆராய்ச்சி முறையும் தொன்னூற் புலமையும் நன்கு நிரம்பப்பெற்ற திரு. ஔவை. துரைசாமிப்பிள்ளை யவர்கள் பதிற்றுப்பத்துக்குச் சிறந்ததொரு விரிவுரையினை இயற்றி யுதவி யது காலத்திற்கேற்ற தமிழ்த்தொண்டாகும். பண்டைத் தமிழ் நூற்பொருளை யெல்லாம் இக்காலத் தமிழ்மக்கள் நன்குணர்ந்து சிறந்த புலமைபெற்று விளங்குதல் வேண்டுமென்னும் பேரார்வத் துடன் அவற்றை அரிதின்முயன்று தேடி நன்முறையில் ஆராய்ந்து விளக்கந் தந்து அச்சிட்டுதவிய புலமைப்பெரியார், தென்கலைச் செல்வர், பெரும்பேராசிரியர் உ.வே.சாமிநாத ஐயரவர்களாவர். அவர்கள் முதன்முதலாக இப் பதிற்றுப்பத்தினைப் பழையவுரை யுடன் வெளியிடாதிருந்தால் இத்தகைய புலமைச் செல்வத்தை நம்மனோர் எளிதிற்பெற்று மகிழ்த லியலாது. பதிற்றுப்பத்துக் குச் சிறந்ததொரு விரிவுரையினைப் பெற்று மகிழும் இந்நிலையில் பெரும் பேராசிரியராகிய ஐயரவர்களின் செந்தமிழ்த் தொண்டினை நினைந்து உளமாரப் போற்றுதல் நம் கடனாகும். வாழ்க செந் தமிழ். வாழியர் தமிழ்த் தொண்டர்கள்.
----------------------


5. பதிற்றுப்பத்தைப் பாடிய சான்றோர் வரலாறு.


பதிற்றுப்பத்தைப் பாடிய சான்றோர்களுள் முதற் பத்தையும் பத்தாம் பத்தையும் பாடினோர் ஒழிய, ஏனை இடைநின்ற எட்டுப் பத்துக்கட்கும் உரிய சான்றோர் எண்மர் பெயர்களும் கிடைத்துள்ளன. அவர்கள், முறையே குமட்டூர்க்கண்ணனார், பாலைக்கோதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கை பாடினியார், நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங் குன்றூர்கிழார் என்போராவர். இவர்கள் வரலாறு வருமாறு.

குமட்டூர்க்கண்ணனார்:
இவர் பெயரிலுள்ள குமட்டூர் என் பது இவரது ஊர்: கண்ணனார் என்பது இவரது இயற் பெயர். இவர் இந்நூலின் இராண்டாம்பத்தின்கண் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைப் பாடியுள்ளார். இமயவரம்பனைப் பாடி, உம்பற் காடு என்ற பகுதியில் ஐஞ்ஞூறு ஊர்களைப் பிரமதாயமாகவும், அவனது தென்னாட்டு வருவாயுள்பாகமும் பெற்றாரென இரண் டாம்பத்தின் பதிகம் கூறுகிறது.

குமட்டூர் என்னும் பெயரையுடைய வூர்கள் நம் நாட்டில் இப் போது காணப்படவில்லை.கல்வெட்டுக் காலங்களில் இருந்து பின் மறைந்துபோன வூர்கள் பல உண்டு. ஆதலால், அவற்றை நோக்கு மிடத்துக் குமட்டூரெனப் பெயரிய வூர்கள் இரண்டு கல்வெட்டுக் களிற் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, குண்டூர் சில்லா வின், தலைநகரான குண்டூர். அங்குள்ள கல்வெட்டொன்று (A.R.No 83 of 1917) அதனை, ஓங்கேரு மார்க்கத்திலுள்ள குமட்டூரு என்று குறிக்கிறது. அது சகம் 1080-ஆம் ஆண்டில் (கி.பி.1158) தோன்றியதாகும். மற்றொன்று புதுக்கோட்டை யைச் சேர்ந்த சித்தன்னவாசல் என்னுமிடத்திற் காணப்படும் கல்வெட்டு. இச் சித்தன்னவாசல் கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகவோ, மூன்றாம் நூற்றாண்டாகவோ கல்வெட்டராய்ச்சியாளர் கருதுகின்றனர். (P.S.Ins.No. 1) இஃது அசோகபிராமி யெழுத்தாக எண்ணப்படுகிறது.தமிழ்த் தொடரொன்று அசோகபிராமி யெழுத்தில் எழுதப்பட்டுளதென வும், இவ்வழக்காறு மதுரை திருநெல்வேலி சில்லாக்களில் வழங் கியதெனவும் எடுத்தோதி, இதனை அரிதின் முயன்று படித்துப் பொருள் உண்மைகண்ட கல்வெட்டுத்துறைத் தலைவர் திரு. K.V.சுப்பிரமணிய அய்யரவர்கள், இக்கல்வெட்டு, "யோமி நாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப் போச்சில் இளையார் செய்த அதிட்டானம்" என நிற்கிறதெனவும் **கூறி யுள்ளார். யோமிநாடு என்பது ஒய்மாநாடென்பதன் திரிபெனக் காணப்படவே, இக்கல்வெட்டு, ஒய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந் தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்" எனப் படிக்கப்படுவதாயிற்று. குண்டூர்க் கல் வெட்டையும் சித்தன்னவாசற் கல்வெட்டையும் நோக்குமிடத்துக் கண்ணனாரது குமட்டூர் ஒய்மாநாட்டுக் குமட்டூ ராமெனக் கருதுதற் கேற்ற வாய்ப்புடைத்தாகிறது. ஈதனுக்கு என்பது யாதனுக்கு என்பதன் பிராமியெழுத்தா லுண்டாகும் திரிபெனக் கொள்வ தாயின், ஒய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தானான காவிதியாத னுக்கு, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கோ, அவன் தந்தை உதியன் சேரலாதனுக்கோ, தானைத்தலைமை வகையிலோ வேறு வகையிலோ தொடர்பிருந்திருக்குமெனக் கோடற்கு இடமுண் டாகிறது. இவ்வகையில் ஒய்மாநாட்டுக் குமட்டூர் இரண்டாயிர மாண்டுகட்கு முன்பே விளங்கியிருந்த தொன்மைநல முடைய தென்று தெளியலாம்.
-------
** Proceedings and Transactions of the Third Oriental Conference, Madras. Dec. 22nd to 24th 1924. Page 296 and following pages and 280.

இனி, ஒய்மாநாடென்பது தென்னார்க்காடு சில்லாவில் திண்டி வனம் தாலூகாவையும் செங்கற்பட்டுச் சில்லாவின் மதுராந்தகந் தாலுகாவின் தென்பகுதியையும் தன்கண் கொண்டு விளங்கிய தொன்மை நாடாகும். இந்த ஒய்மாநாடு இடைக்காலப் பல்லவ சோழ பாண்டியர் காலத்தேயுமன்றிச் சங்ககாலத்திலும் சிறப்புற் றிருந்த தென்பது, ஒய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை பாடிச் சிறப் பித்தலால் தெளிவாகிறது. இந்நாட்டிற் காணப்படும் ஊர்களுள் குமட்டூர் என்று பெயரியதோர் ஊர் காணப்படவில்லை. ஆயினும் திண்டிவனத்துக்கு மேற்கில் முட்டூரென்றோர் ஊருளது. பண் டைய குமட்டூரே இப்போது முட்டூரெனச் சிதைந்து வழங்குவ தாயிற்றெனக் கொள்ளின், இரண்டாம்பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் தொண்டைநாட்டு ஒய்மாநாட்டைச் சேர்ந்த சான்றோர் என்பது தேற்றம். இவர்க்கு இமயவரம்பன் நல்கிய ஊர்களைப் பிரமதாயமெனப் பதிகம் கூறுதலால், அவற்றைப்பெற்ற கண்ண னார் பார்ப்பனரென்பது விளங்குகின்றது.

இரண்டாம் பத்துக்குரிய நெடுஞ்சேரலாதன், இமயவரம்ப னாய் விளங்கிய திறத்தை, "பேரிசை இமயம் தென்னங்குமரியொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து" (பதிற்.11) என்று கூறி வற்புறுத்துகின்றார். கடற்றீவு ஒன்றிலிருந்து போந்து குறும்புசெய்து வாழ்ந்த கடம்பர் என்பவர்களை, நெடுஞ் சேரலாதன் கலஞ் செலுத்திச்சென்று பொருது அவர்களை வென்று மேம்பட்ட நலத்தை முருகன் கடலகம் புகுந்து சூரனைவென்று வாகைசூடி விளங்கிய விளக்கத்தோடு உவமித்துக் கூறுவது படிப் போர்க்கு மிக்க இன்பம் தருவதாகும். இமயவரம்பன் மனைவியின் கற்பு நலத்தைப் புகழ்ந்து, "ஆறிய கற்பின் அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின், சுடர் நுதல் அசை நடை" எனவும், "பெருஞ் சால் பொடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுத லரிவை" யென்வும் பாராட்டுவர். சேரலாதன் கொடையை, "மாரி பொய்க்குவ தாயினும், சேரலாதன் பொய்யலன்" எனவும், "எமர்க்கும் பிறர்க் கும் யாவராயினும், பரிசின் மாக்கள் வல்லாராயினும், கொடைக் கட னமர்ந்த கோடா நெஞ்சினன்" எனவும், "எழிலிதலையா தா யினும், வயிறு பசிகூர ஈயல" னெனவும் போற்றிப் புகழ்வர். இவையும் இவைபோல்வன பிறவும் இவருடைய புலமை நலத்தைப் புலப்படுத்திக் கற்போர்க்கு அறிவின்பம் நல்கும் அமைதி யுடை யனவாகும். இவ்விரண்டாம் பத்தின் வேறாக இவர் பாடின வாக வேறே பாட்டுக்கள் கிடைத்தில.

பாலைக்கோதமனார்:
கோதமனார் என்னும் பெயரையுடைய இச் சான்றோர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடும் செந்தமிழ்ச் சிறப்புடையராவர். ஆதலால் இவர் பாலைக்கோதமனார் எனச் சான்றோராற் குறிக்கப்படுகின்றார். இவர் இமயவரம்பன் தம்பி யான பல்யானைச் செல்கெழு குட்டுவனை இந்நூலில் மூன்றாம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். இவ்வாறு சிறப்பித்தத னால் வேந்தன் மகிழ்ந்து அவர் வேண்டியதனை வழங்கச் சமைந் திருந்தான். அப்போழ்து, அவர் வேந்தனை வேண்டி, "யானும் என் சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித் துத் துறக்கத்தைத் தருக" என்றார். சேரவேந்தன் அவர் விரும் பிய வண்ணமே வேள்வி பல செய்து, "நீ விழையும் துறக்கத்தின் கண் நீடுவாழ்க" என வுதவினான். இச்செய்தியைப் பழமொழி பாடிய முன்றுறையரையனார் குறிப்பாக "தொடுத்த பெரும்புல வன் சொற்குறை தீர, அடுத்துத்தா என்றாற்கு வாழியரோ" (பழ. 316) என்றாராக, அதன் பழையவுரைகாரர் இக் கோதம னார் வரலாறு காட்டி விளக்கியுள்ளார். கோதமனார் ஒரு பார்ப் பனர் என்பது, அவர் யானும் என* பார்ப்பனியும் துறக்கம் புக வேண்டும் எனக் கூறினாரெனப்படுவதால் தெளிவாகிறது.இவர் பாடியதாகப் புறத்தில் ஒரு பாட்டுக் காணப்படுகிறது. ஆதன் கண் தருமபுத்திரனை அவர் பாடினாரெனக் குறிக்கப்பெற்றுளது. பல்யானைச் செல்கெழு குட்டுவனை அவர் புறப்பாட்டில் அறவோன் மகனே எனப் பாராட்டினாராக, பிற்காலத்தோர் அதனைத் தரும புத்திரன் என வடமொழிப்படுத்திப் பாண்டவனான தருமபுத்திர னைப் பாடியதெனப் பிறழக் கொண்டுவிட்டனரெனக் கோடல் வேண்டும். இப்புறப்பாட்டு இறுதியில் பாலைக்கோதமனார் பாடியதென்றே ஏட்டிற் காணப்படுகிறது. ஆதலால் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக்கோதமனாரே இப்புறப்பாட்டையும் பாடி யவராதல் தேற்றமாம். இவர் பெயர் சில ஏடுகளில் கோதமனா ரெனக் காணப்படுவது கொண்டு திரு. ரா. இராகவையங்காரவர் கள், "இவ்வாசிரியன் வேறாதல் காட்டவே பாலையென்னும் அடை யடுத்துப் பாலைக்கௌதமனாரென இவர் பெயரே புனைந்து விளங்கிய பெரியாரும் இத்தமிழ்நாட்டில் உண்டு; இப் பாலைக்கௌதமனார் இறப்பப் பிந்தியவராவர்" (தமிழ் வர. பக்.245) என்று கூறுகின் றார். ஆனால் டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள், பாலைக் கோதமனாரே கோதமனாரெனச் சில ஏடுகளில் குறிக்கப்பெற்றன ரெனவும், பதிற்றுப்பத்து மூன்றாம்பத்துப் பாடியவரும் "விழுக் கடிப் பறைந்த" (புறம் 366) எனத் தொடங்கும் புறப்பாட்டைப் பாடியவரும் ஒருவரேயெனவும் கருதுகின்றார்.

இப்பாலைக்கோதமனார், பெருங்காஞ்சி பாடுவதில் சிறந்த நாநலம் வாய்ந்தவ-ரென்பதை அவர் பாடிய புறப்பாட்டு இனிது விளக்குகிறது. பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாராட்டுங்கால் அவன் குடிவரவினை, "பிறர் பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையில் அறிவினர் செவ்விதின் நடந்து தம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள், மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய, ஊழியுய்த்த வுரவோரும்பல்" எனப் பாராட்டி யிருப் பதும், அவனை வாழ்த்துமிடத்து, அவன் மனைவியின் பெருமாண் பினை விதந்தோதி, "வேயுறழ் பணைத்தோள் இவளோடு, ஆயிர வெள்ளம் வாழிய பலவே" என வாழ்த்துவதும், "சொற்பெயர் நாட்டம் கேள்விநெஞ்சமென், றைந்துடன் போற்றி" யெனவும், "சினனே காமங் கழிகண் ணோட்டம், அச்சம் பொய்ச்சொல் அன்பு மிகவுடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து, அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" எனவும், "ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல், ஈதலேற்றலென் றாறுபுரிந் தொழுகும், அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி' யெனவும் தொகுத்துக் கூறும் சிறப்பும் பாலைக்-கோதமனாருடைய பரந்த கேளவிச் சிறந்த புலமையைப் பாரித்துரைக்கும் பண்பினவாகும்.

காப்பியாற்றுக்காப்பியனார்:
இவர் காப்பியாறு என்னும் ஊரினர்; காப்பியன் என்னும் பெயரினர். பண்டைக்காலத்தும் இடைக்காலத்தும் நம் தமிழகத்தில் காப்பியன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர். காப்பியஞ் சேந்தனார், தொல்காப் பியனார், எனப் பண்டும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் (S.I.I. Vol. V No.660) என இடைக்காலத்தும் காணப்படுவது காண்க. காப்பியன் என்போர் பலர் இருந்தமைபற்றி, அவரின் வேறுபடுத்தவே இவர் ஊரோடு சேர்த்துக் காப்பியாற்றுக்காப்பி யனார் எனச் சான்றோர் வழங்கினர். இக்காப்பியாறு என்னும் ஊர் இன்னநாட்டில் உள்ளதெனக் காண முடியவில்லை. காப்பியன் என்னும் பெயருடையார் மழநாட்டைச்சார்ந்த பகுதிகளில் காணப் படுதலால்,இக்காப்பியாறென்னும் ஊர் மழநாட்டிலோ கொங்கு நாட்டிலோ இருந்திருக்கலாம்; தென்னார்க்காடு வட்டத்து விழுப் புரப் பகுதியில் காப்பியாமூர் என்னுமோர் ஊருளது; அஃது இப்போது கப்பியாமூர் என வழங்குகிறது. தஞ்சை வட்டத்து மாயவரப் பகுதியில் காப்பியக்குடி யென்றோர் ஊருளது. காப் பியஞ் சேந்தனார் எனப்படும் சான்றோரொருவர் நற்றிணைபாடிய ஆசிரியரிடையே காணப்படுகின்றார். அவர் இக்காப்பியனா ருடைய மகனாராவர்: ஆனதுபற்றி அவர் காப்பியஞ் சேத்தனார் எனப்படுகின்றார். காப்பியாற்றுக்காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனை, இந்நூல் நான்காம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல் காலத்தில் அவனோடு மாறுபட்டு நின்றவர் நெடுமிட லஞ்சி, நன்னன் முதலியோராவர். அவருள் நன்னன், நார்முடிச் சேரல் இளையனாய் இருந்தபோதோ, அவனுடைய முன்னோர் காலத்தோ சேரநாட்டின் ஒருபகுதியைத் தான் கவர்ந்துகொண் டானாக, நார்முடிச்சேரல் அரசுகட்டி லேறியதும் கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தே நன்னனோடு பொருது வென்றி கொண்டு விளங்கினான். அதனைக்கண்ட காப்பியனார் ‘பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீவாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச்சேரல்” என்று பாராட்டியுள்ளார். நெடுமிட லஞ்சியின் வலிகெடப் பொருதழித்து, அவனது “பிழையாவிளையுள் நாடகப்படுத்து” விளங்கினன் எனச் சிறப்பித் துள்ளார். நார்முடிச்சேரலின் நார்முடிநலத்தை, “அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச், சிலம்பி கோலிய வலங்கற் போர்வை யின், இலங்குமணி மிடைந்த பசும்பொற்படலத், தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” யெனச் சொல்லோவியஞ் செய்துகாட்டுகின்றார். அச்சேரலின் குணநலம் கூறுவாராய், “ஆன்றவிந்தடங்கிய செயிர்தீர் செம்மால்” எனவும், ”துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்,” “தொன்னிலைச் சிறப்பின் நின்னிலை வாழ்நர்க்குக், கோடற வைத்த கோடாக் கொள்கையும்” உடையனெனவும், “தாவி னெஞ்சத்துப் பாத்தூண் தொகுத்த ஆண்மை" யுடையனெனவும் பலவகையாற் பாராட்டி, அவன் மனைவியின் மாண்பினை, " விசும்பு வழங்கு மகளி ருள்ளும் சிறந்த, செம்மீன் அனையள்" என எடுத்தோதி, அவனு டைய வென்றிச்சிறப்பும் கொடைச்சிறப்பும் நவில்தொறும் இன் பஞ் சுரக்கப்பாடி, "உலகத்தோரே பலர்மன் செல்வர். எல்லா ருள்ளும் நின்நல்லிசை மிகுமே" என்றும், அவன் தனக்கென வாழாப் பெருந்தகையாதலை மிக வியந்து, "தாவில் நெஞ்சத்துப், பகுத்தூண் தொகுத்த ஆண்மைப், பிறர்க்கென வாழ்திநீ" யென வும் "நன்று பெரிதுடையையால் நீயே, வெந்திறல் வேந்தே யிவ் வுலகத்தோர்க்கே" யெனவும் பாராட்டிக் கூறுவன பன்முறையும் படித்து இன்புறத் தகுவனவாகும். சேரநாட்டவர் திருமாலை வழி படுந் திறம் இவரால் மிக்க விளக்கமாகக் குறிக்கப்படுகிறது.

பரணர்:
ஆசிரியர் பரணர் சங்ககாலச் சான்றோர் கூட்டத் துட் சிறப்புடையோருள் ஒருவர். இவர் பாடிய பாட்டுக்கள் மிகப் பல சங்க இலக்கியங்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மாமூலனார் முதலிய சான்றோர்போலத் தம் காலத்தும் தம் முடைய முன்னோர் காலத்தும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டிப் பண்டைத் தமிழ்நாட்டு வரலாற்றறிவு வழங்கும் பெருந்தகை இப்பரணராவர். இவருடைய புலமை நலமும் வள மும் ஈண்டுக் கூறலுறின், அதுவே ஒரு செவ்விய நூலாகும் பெருமை யுடையதாகும். இந்நூலின்கண் இவர் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனை ஐந்தாம்பத்தாற் பாடிச் சிறப்பித் துள்ளார். இதன் பதிகம், இச் செங்குட்டுவனே வடவரை வென்று கண்ணகியாருக்குக் கற்கொணர்ந்த சேரன் செங்குட்டு வன் என்று கூறுகிறது; இப்பத்தின்கண் அச்செய்தியொன்றும் குறிக்கப்படாமைகொண்டு, திரு.கா.சு.பிள்ளை முதலியோர், இக்கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் சிலப்பதிகாரச் செங் குட்டுவனுக்கு முன்னோனாவன் என்பர். இவன் காலத்தே மேனாட்டவரான யவனரும் பிறரும் கடல் வழியாகக் கலஞ் செலுத்திப் போந்து கடற்குறும்பு செய்து வந்தாராக, இச் செங்குட்டுவன் வேலேந்திய வீரர் பலருடன் கடற்படைகொண்டு கலத்திற்சென்று, கடற்குறும்பு செய்த பகைவ ரனைவரையும் வேரோடு கெடுத்து வென்று சிறந்தான்.. அதனால் இவன் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் எனப்படுவானாயினன். இதனைப் பரணர், நேரிற்கண்டு பெரிதும் உவந்து இப்பத்தினைப் பாடியுள் ளார். இதன்கண் இவன் கடல்பிறக் கோட்டிய செய்தியைப் பல பாட்டுக்களில் எடுத்தோதி இன்புறுகின்றார். "இனி யாருளரோ நின் முன்னுமில்லை, மழைகொளக் குறையாது புனல் புக நிறையாது, விலங்கு வளிகடவும் துளங்கிருங் கமஞ்சூல், வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு, முழங்கு திரைப்பனிக் கடன் மறுத்திசினோரே” என்பதனால், பரணர் செங்குட்டுவன் கடல்பிறக் கோட்டிய செய்தியை மிக வியந்து கூறுதலை நன்கு காணலாம். இவன் முன்னோருள் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற்குள் கலஞ்செலுத்திச் சென்று கடம்ப ரென்பாரை வென்றதும், “சினமிகுதானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாயோட்டிய வவ்வழிப், பிறகலம் செல்கலாது” (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் கூறுவதும் நோக்கின் கடலிற் கலஞ் செலுத்திச் சென்று பகைவரொடு கடற்போருடற்றி வெற்றி மேம்படுந் திறம் சேரவேந்தர்பால் சிறந்து விளங்குவது காணப்படும். இக்குட்டுவன் காலத்தே கோயம்புத்தூருக் கண்மையிலுள்ள பேரூர்க் கருகிலோடும் காஞ்சியாற்றின் கரையில் செல்வமக்கள் வேனிற்காலத்தில் பொழில்களில் தங்கி இன்புறும் பெருஞ் சிறப்பை, “பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, மேவரு சுற்றமொடு உண்டினிது நுகரும் தீம்புன லாயமாடும், காஞ்சியம் பெருந்துறை” யென்று பாராட்டிக் கூறுகின்றார். செங்குட்டுவன் பெருங் கல்வியுடையன் என்பதை, “தொலையாக் கற்ப நின்நிலை கண்டிகுமே” எனவும், அவனுடைய மென்மைப் பண்பும் ஆண்மைச் சிறப்பும் விளங்க, “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை” எனவும் சிறப்பித்துள்ளார். செங்குட்டுவன் நிலத்தே தன்னை யெதிர்த்த மோகூர் மன்னன் முதலாயினோரை வென்றதை, “வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து, மொய் வளஞ் செருக்கி பொசிந்துவரும் மோகூர், வலம்படு குழூஉநிலை யதிரமண்டி......படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து” சிறந்தான் என்பர். அவன் உலகு புரக்கும் நலத்தை, “உலகம் புரைஇச், செங்குணக் கொழுகும் கலுழி மலிர்நிறைக், காவிரி யன்றியும், பூவிரி புனலொரு மூன்றுடன்கூடிய கூடல்அனையை” என எடுத்தோதுவர். செங்குட்டுவனுடைய அறச்செயல் நலமும் மறச்செயல் மாண்பும் இவர் பாட்டுக்களில் தொடக்கமுதல் இறுதிவரை இன்பம் ஊற்றெழப் பாடப்பட்டுள்ளன.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்:
செள்ளை யென்பது இப்புலவர் பெருமாட்டியின் இயற்பெயர். செந்தமிழ்ப் புலமையாற் பெற்ற சிறப்புக்குறித்து இவர் பெயர், முன்னும் பின்னும் சிறப்புணர்த்தும் இடைச்சொற்கள் சேர்ந்து நச்செள்ளையாரென வழங்குவதாயிற்று. ஒருகால், விருந்துவரக் கரைந்த காக்கையைக் காதலன் பிரிவால் வேறுபட்டு வருந்தும் தலைமகளொருத்தி கூற்றில்வைத்து இவர் ஒரு பாட்டைப் பாடினர். அப்பாட்டுக் குறுந்தொகையுள் சான்றோரால் கோக்கப்பட்டுளது. அப்பாட்டின் நலங்கண்டு வியந்த செந்தமிழ்ச்சான்றோர் நச்செள்ளையாரைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப் பாராட்டுவாராயினர். அதுமுதல் அவரும் காக்கைபாடினியார் நச்செள்ளையாரென வழங் கப் பெறுகின்றனர். பண்டைநாளில் மகளிர்க்குச் செள்ளை யெனப் பெயரிடுவது வழக்கமென்பதனை ”வேண்மாள் அந்துவஞ் செள்ளை” என இந்நூலின் ஒன்பதாம்பத்தின் பதிகம் கூறுவதனால் இனிது தெளிவாம். காக்கைபாடினியார் இந்நூல் ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் பாட்டையேற்று மகிழ்ந்த சேரலாதன் அவர்க்கு அணிகல னுக்கென ஒன்பது காப்பொன்னும், நூறாயிரம் பொற்காசும் வழங் கியதோடு, தன் அரசவைப் புலவராகத் தன்பக்கத்தே இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். நச்செள்ளையாரும் அவன் பக்கத்தே யிருந்து அமைச்சியற் புலமைநடத்தி வந்தார். ஒருகால் சேரலாதன், மகளிர் ஆடல்பாடல்களில் பெரிதும் ஈடுபாடுடையனாய் இருப்பது கண்டார். பேரீடுபாடு அரசியற்கு ஊறு விளைவிக்கும் என்பதுகண்ட நச்செள்ளையார், “சுடர்நுதல் மடநோக்கின் வாணகை இலங்கெயிற், றமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர், பாடல்சான்று நீடினை யுறைதலின், வெள்வேலண்ணல் மெல்லியன் போன்மென, உள்ளுவர் கொல்லோ நின் உணரா தோரே” யென்று தெருட்டினர். ஒருகால் சேரலாதன் மகளி ராடும் துணங்கை கண்டுஇன்புற்று வந்தானாக , உடனிருந்துகண்ட அவன் மனைவி அவன்பால் ஊடல்கொண்டு பிணங்கலுற்றாள் அப் பிணத்தின்கண் அரசமாதேவி தன் கையிலிருந்த சிறிய செங்கு வளைப்பூவை அவன்மேல் எறிதற்கு ஓங்கினாள். அவள் கையகத் திருக்கும் பேறுபெற்ற குவளைமலர் தன் மேனியிற்பட்டு வாடுதல் காணப்பொறானாய் அதனைத் தன் கையிற்றருமாறு அவளை இரந்து கேட்கவும், அவள் சினந் தணிதலின்றி, “நீ எமக்கு யாரையோ?” எனச் சொல்லிப் பெயர்ந்து போயினள். வளவிய இளமைநலஞ் சிறந்த சேரலாதன், அவளது சிலப்பாற்றுந்துறையில் மிக்க மெல்லி யனாய் நடந்துகொண்டது காக்கைபாடினியாரால் தேனூறுஞ் சொற்களால் இப் பத்தின்கண் அழகுறப் பாடப்பட்டுளது. ஒருகால் இச் சேரலாதன் இரவலர்பால் கொண்டிருக்கும் அருட் பெருக்கைக் கண்டார் காக்கைபாடினியார்; அவனது மனைவாழ் வையும், அவர் நன்கறிந்திருந்தார்; அதனால், அவர் மனத்தெழுந்த வியப்பு, “இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை, ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும், இரவலர் புன்கண் அஞ்சும், புரவெதிர் கொள்வன்” என்று ஒரு பாட்டைப் பாடுவித்தது. சேரலாதன், ”உலகம் தாங்கிய மேம்படு கற்பு" உடையனெனவும், "ஒல்லார்யானை காணின், நில்லாத்தானை இறை கிழ" வோன் எனவும் பொய்படு பறியா வயங்கு செந்நாவின், எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை, ஏந்தெழிலாகத்துச் சான் றோர் மெய்ம்மறை, வான வரம்பன்" எனவும் அவனுடைய கல்வி, ஆண்மை முதலியவற்றைப் பாராட்டும் இவர், தமது ஆராமை யால், "ஏனையதூஉம், உயர்நிலை யுலகத்துச் செல்லாது இவண் நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ" என வாழ்த்து வது மிக்க இறும்பூது பயக்கின்றது. இவையும் இவைபோலும் பிற நலங்களும் இப்பத்தின்கண் நிறைந்துள்ளன.

கபிலர்:
சங்கத் தொகைநூல்களிற் காணப்படும் சான்றோர் களுள் சான்றோர் பரவும் சால்புமிக்கவருட் கபிலர் சிறந்தவராவர். இவர் இந்நூலில் ஏழாம்பத்தால் செல்வக் கடுங்கோவாழியாதனைச் சிறப்பித்துள்ளார். "யானே பரிசிலன் மன்னும் அந்தணன்" எனத் தாமே தம்மை அந்தணனென்று கூறுவதும், மாறோக்கத்து நப்பசலையார் "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்பதும் நோக்கு வார், இவர் அந்தணரில் தலையாய அந்தணரென விழைவர். இவர் பறம்புநாட்டு வாதவூரிற் பிறந்தவர். வாதவூர்க் கல்வெட்டுக்களே அதனைத் "தென் பறம்புநாட்டுத் திருவாதவூர்" என்று குறிக் கின்றன. இந்நாட்டு வேந்தனான வேள்பாரிக்குக் கபிலர் உயிர்த் துணைவராவர். அவன் இறந்தபின் அவன் மகளிரைக் கபிலர் தன் மக்களாகக் கொண்டுசென்று திருக்கோவலூரில் மலையமான் மக்க ளுக்கு மணம் புரிவித்த செய்தி உலகறிந்ததொன்று. திருக்கோவ லூர்க் கல்வெட்டொன்று, "மொய்வைத்தியலு முத்தமிழ் நான் மைத், தெய்வக்கவிதைச் செஞ்சொற் கபிலன், மூரிவண்டடக்கைப் பாரிதன் னடைக்கலப், பெண்ணைமலையர்க் குதவிப்பெண்ணை, அலைபுனலழுவத் தந்தரிக்ஷ‌‌ஞ்செல, மினல்புகு விசும்பின் வீடுபே றெண்ணிக், கனல்புகுங் கபிலர்க்கல்லது" (S.I.I Vol VII No. 863) என்று கூறுகிறது. இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றொழிய ஏனை யெல்லாவற்றினும் பல பாட்டுக்கள் உண்டு. பதினெண் கீழ்க்கணக்கென்பனவற்றுள் ஒன்றான இன்னா நாற்பதென்பதும் கபிலர் பாடியதெனப்படுகிறது. இவர் வரலாறு, புலமைத்திறம் முதலிய நலங்களைக் காலஞ்சென்ற திரு.ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் மிக அழகாக எழுதி வெளியிட்டிருக்கின்றனர். வேறு சில அறிஞர்களும் எழுதியுள் ளனர்; ஆதலால் இங்கே கபிலரைப்பற்றி மேலும் கூறுவது மிகை. இந்நூலின் ஏழாம்பத்தில் கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதனைத் தாம் பாடிவந்ததற்குக் காரணம் கூறுவார், "மலர்ந்த மார்பின் மாவண்பாரி, முழவு மண்புலர இரவலர் இனைய, வாராச் சேட் புலம்படர்ந்தான் அளிக்கென, இரக்குவாரேன் எஞ்சிக்கூறேன்," என மொழிந்து, "ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும்நின், நல்லிசைதர வந்திசினே" என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில், செல்வக் கடுங்கோவின் பகை கடிந்து விளங்கும் பண்பினை வியந்து, "மாயிரு விசும்பின் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார், உறுமுரண் சிதைத்தநின் நோன்றாள் வாழ்த்திக் காண்குவந்திசின்" என்று பாடுகின்றார். சேரமானது சிறப்பு அவன் தேவியின் கற்பு மாண்பால் கவின்மிகும் குறிப்பை, "காமர்கடவுளு மாளுங்கற்பின், சேணாறுநறுநுதல் சேயிழைகணவ" என்று சிறப்பிக்கின்றார். நேரிமலையில் காந்தட்பூ மலர்ந்திருப்ப, அது கடவுள் விரும்பும் பூ வாதலின் அதனை மொய்த்தலாகாது எனக் கருதி நீங்கற்குரிய வண்டு நீங்காது அதன்கட் படிந்து தேனுண்டவழிச் சிறகுபறத்தற் கியலாது வருந்துமென இவர் கூறுவது. "சுரும்பு மூசாச் சுடர்ப் பூங்காந்தள்" எனவரும் திருமுருகாற்றுப்படையை நினைப்பித்து இன்புறுத்துவதாகும், செல்வக்கடுங்கோவின் ஆட்சிநலத்தைக் கூறவிரும்பிய கபிலர், வேந்தே நின்முன்னோர் இந்நாட்டைச் சிறப்புற ஆண்டனர் என்ப; அவர்கள் அவ்வாறு மேம்பட்டதற்குக் காரணம் அவர்கள் நின்னைப்போல் அசைவில்லாத கொள்கை யுடையராய் இருந்தமையே என்பா ராய், "கொற்ற வேந்தே, நின் போல் அசைவில் கொள்கையாராகலின் அசையாது, ஆண்டோர் மன்ற இம் மண்கெழுஞாலம், நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணிய, பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்புமெய்யகலப் பெயல்புர வெதிர, நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்கு கதிர்த் திகிரி முந்திசினோரே" என்று பாராட்டியுள்ளார். முடிவில் அவனை வாழ்த்தலுற்ற கபிலர், வேந்தே, வேள்வியால் கடவுள் அருத்தினை, கேள்வியால் உயர்நிலை யுலகத்து ஐயரை இன்புறுத்தினை, புதல்வரால் முதியரைப்பேணித் தொல்கடன் இறுத்தனை; ஆகவே, "அயிரை நெடுவரைபோலத் தொலையாதாக நீ வாழும் நாளே" என வாழ்த்துகின்றார். இவ்வாறே இவர் கூறும் இயற்கை நலங்களையும் பிறவற்றையும் கூறின் பெருகும்.

அரிசில்கிழார்:
இச் சான்றோரது இயற்பெயர் தெரிந்திலது, அரிசில் என்பது சோழநாட்டு ஊர்களுள் ஒன்று, இவ்வூரருகே காவிரியினின்றும் பிரிந்துசென்ற ஒரு கிளை அரிசிலாறு என வழுங்குவதாயிற்று, இச் சான்றோர் இவ்வூர்க்கு உரியராய் கிழார் என்ற சிறப்புப்பெற்று வாழ்ந்ததோடு நல்லைசைப்புலமை சிறந்து விளங்கினார்; ஆயினும், சான்றோர் இவர் இயற்பெயரை விடுத்து அரிசில்கிழார் என்ற சிறப்புப்பெயரையே பெரிதெடுத்து வழங்கினமையின், நாளடைவில் இயற்பெயர் மறைந்துபோயிற்று. இப்போது அரிசில் என்ற ஊரும் மறைந்துபோயிற்று. போகவே, இச் சான்றோரது அரிசிலூரை, திருச்சிமாவட்டத்து அரியிலூராகவும், மைசூர்நாட்டு அரிசிக்கரையாகவும் கொள்ளலாமோ என ஆராய்ச்சியாளர் மயங்கலுற்றனர். பூஞ்சாற்றூர் என்பது சோழ நாட்டிற் சங்க காலத்திருந்ததோரூர்; அஃது இடைக்காலச் சோழர் காலத்தும் இருந்தமை கல்வெட்டுக்களால் (A.R. 256 of 1926) தெரிகிறது; இப்போது அது மறைந்துவிட்டது. இவ்வாறே அரிசில்கிழாரது அரிசிலூரும் மறைந்ததெனக் கோடல்வேண்டும். அரிசில்கிழார் வையாவிக்கோப் பெரும்பேகனையும், அதியமான் எழினியையும் பாடியுள்ளார். இந்நூலில் எட்டாம்பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைச் சிறப்பித் துள்ளார். இவ்விரும்பொறையையும் இவன் காலத்தே இவனைப் பகைத்துக்கெட்ட வேந்தர்களையும் சீர்தூக்கிப் பார்த்த அரிசில் கிழார், இரும்பொறைபால் அறிவும் ஆண்மையும் கைவண்மையும் மிக்குற்றிருப்பது காணுகின்றார்; பகைவர்பால் சூழ்ச்சித்தெளி வும், வினைத்திட்பமும் பொருள்படைகளாற் பெருமையும் இல்லா மையைத் தெரிந்தறிகின்றார். அதனால் அவர்கள் படைகோள் அஞ்சாமல் சூழாது துணிந்து போருடற்றி உயிர்க்கேடும் பொருட் கேடும் உண்டாக்குதலை யறிகின்றார்; போரில் இரும்பொறையின் ஆண்மைத்தீ மடங்கற்றீயினைப்போல் அடங்காது பெருகுதலைக் கண்டு "மடங்கற்றீயின் அனையை, சினங்கெழு குருசில் நின்உடற் றிசினோர்க்கே" என்று பாடுகின்றார். பகைவேந்தர் பகைமை நீங்கி இரும்பொறையின் சொல்வழி நில்லாராயின் நாடு எய்தும் கேடு நினைந்து, "பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய, வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின்வழிப்படாரா யின்,... பாடல் சான்ற வைப்பின், நாடுடனாடல் யாவண தவர்க்கே" என்று தெரிவிக்கின்றார். பகைவர் அறிவுத்துறையில் தெளிவில ராதலை, இனி, இரும்பொறையே தெளிந்து வேண்டுவன செய்தல் வேண்டும் என்னும் கருத்தினராய், "உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி, அறிந்தனை யருளாயாயின், யாரிவண் நெடுந்தகைவாழு மோரே" யென இயம்புகின்றார். போர்தொடுக்கும் பகைவேந்த ரது அறியாமைக்கு இரங்கி, அவர்பாற் சென்று, பொறைய னுடைய "வளனும் ஆண்மையும் கைவண்மையும், மாந்தர் அள விறந்தன" எனப் பன்னாள் சென்று தெரிவிக்கின்றார்; அவ்வழி யும் தேறாதாரை, வேறு பிற சான்றோரை விடுத்துத் தெரிவிக்கின் றார்; அவ்வழியும் அவர் தெளிகின்றிலர்; அதுகண்டு வருந்தி, "ஆங்கும் மதிமருளக் காண்குவல், யாங்குரைப்பேனென வருந்து வல் யானே" எனச்சொல்லி வருந்துகின்றார். இரும்பொறைபால் அவர்க்காகப் பரிந்து, "நின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து, நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின், பண்பு நன்கறியார் மடம்பெருமையின்" எனப் பேசுகின்றார். இவ்வாறு அவன் வண்மை மிகுதிகண்டு பரிந்து பேசிய அரிசில்கிழார் அவனது அறிவு நலத்தை யுணர்ந்து, அதனால் அவன் செயல்களைப் பாராட்டி, " கேள்விகேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப" எனவும், சால்பும் செம்மையும் உளப்படப்பிறவும், காவற்கமைந்த அரசு துறை போகிய, வீறுசால் புதல்வற் பெற்றனை" யெனவும் புகழ் கின்றார். கேள்வியாலும் ஒடியாப் படிவத்தாலும் இரும்பொறை யெய்திய உயர்வை, படிவந்தாஙகும் மனத்திட்பமில்லாத நரை மூதாளனைத் தெருட்டி நன்னெறிப்படுத்திய செயலில்வைத்து, முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூதாளனை, வண்மையும் மாண்பும் வளனுமெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமையானே" என விளக்குகின்றார். இவ்வாறே இவர் இரும்பொறையின் படைப் பெருமை கூறலும், தகடூர் நூறியது கூறலும், செருவிலும் இரவலர் நடுவிலும் பிறவிடத்தும் இரும்பொறை யிருக்கும் இயல்பு நிலை கூற லும் பிறவும் படிக்குந்தோறும் இன்பம் சுரக்கும் பண்பினவாகும்.

பெருங்குன்றூர்க்கிழார்:
பெருங்குன்றூர் எனப் பெயர் கொண்ட வூர்கள் தமிழ் நாட்டிற் பல உள்ளன; அதனால் இச் சான்றோரது பெருங்குன்றூர் இன்ன நாட்டதென அறுதியிட்டுக் கூறுவது இயலாதாயிற்று. மலைபடுகடாம் பாடிய ஆசிரியரது பெருங்குன்றூர், இப்பெருங்குன்றூர்கிழாரது ஊரின் வேறுபட்ட தென்றற்குப் போலும், அவரூரை இரணியமுட்டத்துப் பெருங் குன்றூர் எனச் சான்றோர் தெரிந்து மொழிந்தனர். வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப் பாடிய சான் றோருள் இவரும் ஒருவராவர். இவர் பாடியனவாகப் பல பாட் டுக்கள் ஏனைத் தொகைநூல்களிலும் உள்ளன. இந்நூல் ஒன்ப தாம் பத்தால் இவர் குடக்கோ இருஞ்சேர லிரும்பொறையைச் சிறப்பித்துள்ளார். இருஞ்சேர லிரும்பொறையை இவர் "நிலந்தரு திருவின் நெடியோய்" என்று கூறுவதனால், இரும்பொறை தன் நாட்டு மக்கட்கெனத் தன் நாட்டை விரிவுபடுத்தினனென்று அறியலாம். இவ்வேந்தன் போர்வேட்கை மிக்கு நாளும் போர் புரிவதிலும், அதன் வாயிலாக வந்து தொகும் பொருளைப் பாடி வருவோர்க்கு வரையாது வழங்குவதிலும் சிறந்தவன்; "பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வ"மும், "செற்றோர், கொலக் கொலக் குறையாத் தானை" யும் உடையவன்; களிறும் தேரும் புடைவர, தானை மறவர் படைதாங்கிவர, இவன் போர்க்குச் செல்லும் செலவு, பகைவேந்தர்க்கு இன்னாதாயினும், நடுநின்று காண்போர்க்கு இனிய காட்சியாம் என்பார், " கொல்களிறு மிடைந்த பல்தோற் றொழுதியொடு, நெடுந்தேர் நெடுங்கொடி அவிர் வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது நிற்காணு மோர்க்கே" எனப் புகழ்ந்து பாடுகின்றார். நாளும் போரே விரும்பும் அவன் உள்ளத்தில், அருளும் அறமும் நன்கு நிலவி அப்போர் வேட்கையைச் சிறிது மாற்றுதல் வேண்டுமென ஒருகால் பெருங்குன்றூர் கிழார் விரும்பினார். அதனால் அவன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்று, "வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்" என எடுத்தோதி, அவன் நெஞ்சத்தில் அவனைப் பிரிந்து மனையுறையும் அவன் காதலியின் காதல் நினைவைத் தோற்றுவிக்கும் கருத்தினராய், அவளுடைய உருநலங்களை எடுத்துரைத்து, "பெருந்தகைக் கமர்ந்த மென்சொல் திருமுகத்து, மாணிழை யரிவை, காணிய வொருநாள்,பூண்கமாள நின்புரவி நெடுந்தேர்" என்று இயம்புகின்றார். இவ்வகையால் வேந்தனது போர்வேட்கை மாறிக் காதலிபாற் செல்வது பெருங்குன்றூர்கிழாரது கருத்தை முற்று விக்கின்றது. ஒருகால் இவ்விளஞ்சேரல் இரும்பொறை சோழ வேந்தன் ஒருவன்பால் மாறாச் சினங்கொண்டான். அதனால் தன் தானைத்தலைவரை நோக்கி, "உடனே விரைந்து சென்று பொருது சோழனைக் கைப்பற்றிக் கொணர்ந்து என்முன்னே நிறுத்துக" வெனப் பணித்தான். பணியேற்றுச் சென்ற சேரர் படைக்கு நிற்றலாற்றாமல் சோழன் படைமறவர் தாம் ஏந்திய வேலைப் போர்க்களத்தே எறிந்தவிட்டோடினர்; அக்காலத்து, இளஞ்சேர லிரும்பொறை பணித்த பணியை, "ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், முத்தைத் தம்மென இட்ட வெள்வேல்" என்றும், கபிலரென்னும் புலவர் பெருமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிச் சிறப்பித்தபோது அவன் அவர்க்கு வழங்கிய வூர்களினும், சோழர் படையிட்ட வெள்வேல் பல என்பார் "நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்பெற்ற ஊரினும் பல" என்றும் குறித்துரைப்பது பெருங்குன் றூர்கிழாரது புலமை நலத்தைச் சிறப்பிக்கின்றது. பிறிதொருகால், அவர் இளஞ்சேர லிரும்பொறையை முதற்கண் கேள்வியுற்றபோது தம் மனத்தெழுந்த கருத்தும், நேரில் அவனைக் கண்டபோது எழுந்த கருத்தும் இவையென எடுத்தோதுவதும், பொறையனது மென்மைப் பண்பை விளக்கற்கு வானியாற்று நீரை எடுத்துக் காட்டுவதும், அவன் பெரு வளங்கொண்டு வருநர்க்கு வரையாது வழங்குதலைத் தெரித்தற்குப் "புனல்மலி பேரியாற்றை" யெடுத்தோதுவதும், மகளிர் நடுவண் விளங்கும் வீற்றினை, "மாகஞ்சுடர மாவிசம் புகக்கும், ஞாயிறு போல விளங்குதி" யென்பதும், அவனை வாழ்த்துங்கால், "நின்னாள் திங்கள் அனையவாக திங்கள் யாண்டோரனையவாக யாண்டே, ஊழியனையவாக வூழி, வெள்ளவரம்பினவாக” என வாழ்த்துவதும், "ஈரமுடைமையின் நிரோரனையை, அளப்ப*ருமையின் இரு விசும்பனையை, கொளக் குறைபாடாமையின் முந்நீரனையை" யெனப் பாராட்டுவதும் பிறவும் கற்பார்க்குக் கழிபோரின்பம் தரும் கட்டுரை நலம் வாயந்தனவாகும்.


6. பதிற்றுப்பத்தும் பதிகங்களும்


ஆசிரியர்: திரு.T.V.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்,
ஆராய்ச்சி விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சிப் பகுதியில் விரிவுரையாளராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர். ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதி வந்தார்கள். ஒப்பற்ற சங்க நூற் பயிற்சியும் நுண்மாண் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பாராட்டப்பெறும் அவர்களது பேருரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்த போது, அவ்வுரை விரைவில் வெளியிடப்பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித்துணர்ந்துகொள்ளலாம் என்று எண்ணினேன். அதற்கேற்ப, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றலைவரும் என்னுடைய நண்பருமாகிய திருவாளர் வ.சுப்பையாப்பிள்ளை யவர்கள் அந்நூலைப் பிள்ளை யவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றினார்கள். இந்நிலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித்துறையில் அளவளாவிக்கொண்டும், புதிய புதிய உண்மைகளை ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும் என் நண்பர் திரு.பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதிகங்களைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறினார்கள். அதனை யேற்றுக்கொண்ட யான் அடியிற்காணும் கட்டுரையை எழுதியுள்ளேன்.

சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப்புடையனவாகும். அவை பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ் வேந்தர், குறுநில மன்னர், பிற தலைவர்கள், புலவர் பெருமக்கள், நல்லிசைப்புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலையினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து, அவை தமிழ்நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக்கோடாகக் கொண்டெழுந்த அவ்விரு நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகைநூல். ஒவ்வொரு பத்தும், பத்துப்பாடல்களைத் தன்னகத்துக்கொண்டது.இந் நூலின் முதற்பத்தும் இறுதிப்பத்தும் இக்காலத்தில் கிடைக்கா மையின் இதனை இன்னார் வேண்ட இன்ன புலவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும் அவன் அருஞ் செயல்கள் இன்ன என்பதும் அவனைப் பத்துப்பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும் அப்பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப்பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரைநடைப் பகுதி யில் அப்பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சி புரிந்த யாண்டின் தொகையும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒவ்வொருபத்தின் இறுதியிலுள்ள பதிகமும் உரைநடைப் பகுதி யும் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒருதலை. பதிற்றுப்பத்தினைத் தொகுத்துதவிய புலவர் பெருந்தொகை, பதிகங் களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருந்திருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்ளோர் அறிந்துகொள்வது இயலாததாகும்.

இனி, பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழமன்னர்கள் தம் கல்வெட்டுக்களின் தொடக்கத் தில் வரைந்துள்ள மெய்க்கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன என லாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங் கியவன் முதல் இராசராச சோழன் ஆவன். அந்நிகழ்ச்சியும் அவ் வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கிபி 993ல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே, மெய்க்கீர்த்தியைப் பின்பற் றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப்பெற்றிருந்தால் அவை கிபி பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும். ஆனால் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ளன. கலவெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ்வேறுபாட்டை நுணுகி யாராயுமிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டுபண்ணியவை, பதிற் றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் "காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன்" என்று தன்னைக் கூறிக்கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே கிபி 989 முதல் சேரநாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேர மன்னர்களின் வீரச் செயல் களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித்தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக்கொள்கை உறுதி யெய்துமாயின் கிபி பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே பதிகங்கள் இயற்றப்பெற்றுப் பதிற்றுப் பத்தும் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம்.

பதிற்றுப்பத்தில் இக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங்கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும்பொறை மரபினர் ஆகிய இரு சேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதி களிலிருந்து அரசாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ் விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப் பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட்டுடைத் தலை வர்கள் என்பது உணரற்பாலதாகும். அவ்வெண்மருள் இமயவரம் பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங் காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டு வன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக் கடுங்கோவாழியாதன், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, இளஞ்சேர லிரும்பொறை ஆகிய மூவ ரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ்சேரலுடைய மகன் என்பது பதிகத்தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக்காத முதல்பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதி யஞ்சேரலின்மீது பாடப்பட்டதா யிருத்தல்வேண்டும். மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம் பத்தின் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாத னுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல், அவன் புதல்வர் இருவர், அவன் பேரன்மார் மூவர் ஆகிய அறுவர்மீதும் பாடப்பெற்றவை எனலாம்.

ஏழாம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோவாழியாதன் என் பான், அந்துவஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எட்டாம் பத்தின் தலைவன் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை என் பவன் செல்வக்கடுங்கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என்போன் பெருஞ் சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எனவே, இறுதியிலுள்ள மூன்று பத்துக்களும் செல்வக்கடுங்கோவாழியாதன், அவன் புதல் வன், அவன் பேரன் ஆகிய மூவர் மீதும் பாடப்பட்டவையாகும். இதுபோது கிடைக்காத இறுதிப்பத்து, யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறையின்மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன் றாகும்.

இனி, அச் சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெருமக் கட்கு வழங்கியுள்ள பரிசில்களை நோக்குவாம்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க்கண்ணனார்க்கு உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென்னாட்டு வருவாயுள் சில ஆண்டுகள் வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலங்களே பிரமதாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும் பட்ட விருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.

செல்வக் கடுங்கோவாழியாதன், கபிலர்க்குச் சிறுபுறமாக நூறாயிரம் பொற்காசும், நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடுகளையும் வழங்கினான். அவ்வேந்த னுடைய பேரன் இளஞ்சேர லிரும்பொறையைப் பாடிய பெருங் குன்றூர்கிழார்,'உவலைக்கூராக் கவலையினெஞ்சின் - நனவிற் பாடிய நல்லிசைக் - கபிலன்பெற்ற வூரினும் பலவே' என்று பதிற் றுப்பத்தின் எண்பத்தைந்தாம் பாடலில் கூறி யிருத்தலால், புலவர் பெருமானாகிய கபிலர் சேரநாட்டில் பிரமதேயமாகப் பெற்ற வூர்கள் பலவாதல் தெள்ளிது. ஒரே காலப்பகுதியில் சேரநாட்டி லிருந்த இவ்விரு வேந்தர்களின் பெருங் கொடைத்திறம் யாவர்க் கும் இறும்பூதளிக்கும் இயல்பினதாகும்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பாலைக் கௌதமனார் விரும்பியவாறு பத்துப் பெருவேள்விகள் செய்வித்து அப்புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான். இவ்வரச னுடைய தமையன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள், தாம் பாடிய சிலப் பதிகாரத்தில் 'நான்ம,றையாளன் செய்யுட்கொண்டு-மேனிலை யுலகம் விடுத்தோனாயினும்' என்ற அடிகளில் இந்நிகழ்ச்சையைக் குறித்திருத்தல் காணலாம். இவ்வேந்தன் இறுதியில் துறவுபூண்டு காடு போந்;தனன் என்பர்.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியற்றுக்காப்பிய னார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான். இவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் வழங்கினான். இவர் களுள் பின்னோன், மேல்கடற் கரையிலிருந்த தொண்டியைத் தலை நகராகக்கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சி புரிந்த னன் என்று தெரிகிறது.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக்குட்பட்ட உம்பற்காட்டு வருவாயையும் தன் மகன் குட்டு வன் சேரலையும் கொடுத்தனன். இவன் தன் புதல்வன் அப்புலவர் பெருமான்பால் கற்றுவல்லனாதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும்.

தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கி னான். அப்புலவர் பிரான் அரியணையை ஏற்றுக்கொள்ளாமல், "நீ அரசு வீற்றிருந்தாளுக" என்று கூறி இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர்.

இளஞ்சேர லிரும்பொறை, பெருங்குன்ழறூர்கிழார்க்கு முப் பத்தீராயிரம் பொற்காசும், அவர் அறியாமல் ஊரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210 211-ம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப் பாடிய பெருங்குன்றூர்க்கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங்கொடாமல் அனுப்பிவிட்டான் என்பதும் அது பற்றி அவர் மனம் வருந்திச்செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய ஊரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங் கையினராக இவ்வேந்;தன் அனுப்பியிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரைநடைப் பகுதியால் உறுதி யெய்துதல் அறியத்தக்கது.

இதுகாறும் கூறியவாற்றால், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர்களின் வரையா வண்மையும் அன்னோர் புலவர் பெருமக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலனாதல் காண்க.

இனி,மேலே குறிப்பிட்ட சேர மன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள்விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலைநாட்டில் இக்காலத்தும் செவி வழிச் செய்தியாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் குமட்டூர்க்கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறூர்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன் பால் பரணர் வருவாய் பெற்றதும் ஆகிய உம்பற்காடு, பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியக்கிடக்கின்றது. அன்றியும், சேரநாட்டிலுள்ளனவாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலானவற்றால் உணரக்கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, கண்ணன்நாடு, காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க் கண்ணனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமக்களுக்கும் மலைநாட்டிற்கும் ஏற்பட்டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க.

இனி, பதிற்றுப்பத்திள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப்பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப் பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலுங் காணப்படும் பொருள் நயம் பொருந்திய அருந்தொடர்களா யிருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ள சில அருந் தொடர்களைத் தம் பெயர்களாக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்களுள் தொடித்தலை விழுத்தண்டினார், இரும்பிடர்த்தலையார், கழைதின்யானையார், குப்பைக்கோழியார், அணிலாடுமுன்றிலார், கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் பாடல்களில் காணப்படும் அருந் தொடர்கள் அன்னோரின் இயற்பெயர்களை மறக்கும்படி செய்துவிட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள் வளமிக்க அருந் தொடர்களைக்கொண்ட பதிற்றுப் பத்துத் பாடல்களுக்கு அத்தொடர்களையே பெயர்களாக அமைத் திருப்பது மிகப் பொருத்தமுடையதேயாம். ஆனால், பிற்காலத் தில் அவ்வழக்கம் மாறிவிட்டது என்பது சமயச்சார்பில் தோன்றிய பதிகங்களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது.

பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களில் 'வேளாவிக்கோமான் பதுமன் தேவி' என்றும், ஆறாம் பதிகத்தில் 'வேளாவிக்கோமான் தேவி' என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமான் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்க தொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்ன வன் மாதேவி, பஞ்சவன் மாதேவி எனவும், சேரன்மகள் சேரன் மாதேவி வானவன் மாதேவி எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழ மன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும்.

தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொரு ளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப் பத்துப் பதிகங்களின் தொடராலும் சோழ மன்னர் கல்வெட்டுக் களாலும் இனிது புலனாம்.

இதுகாறும் கூறியவற்றால் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவன வாகும் என்பதும், அப்பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல் வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் வரைதற்கு ஓர் ஏதுவாக இருந் திருத்தல் கூடும் என்பதும், சேர மன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளே யாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்தற்குரிய சான்றுகள் கல் வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக்காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க.


7. பதிற்றுப்பத்திற் கண்ட சேரர் மரபு முறை

----------------------

1. உதியஞ்சேரல்
|----------------------------------------------------|
இமயவரம்பன் பல்யானைச்
நெடுஞ்சேரலாதன் பதி. II செல்கெழுகுட்டுவன் பதி III | -------- ------------------------------------------------------------------------------ | | |
களங்காய்க்கண்ணி கடல்பிறக்கோட்டிய ஆடுகோட்பாட்டுச்
நார்முடிச்சேரல் பதி.IV செங்குட்டுவன் பதி.V சேரலாதன் பதி. VI


2. அந்துவஞ்சேர லிரும்பொறை.

செல்வக்கடுங்கோவாழியாதன் பதி.VII
|
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதி.VIII.
|
இளஞ்சேரல் இரும்பொறை பதி.IX

குறிப்பு:

i. பதிற்றுப்பத்திற் காணப்படும் சேரர் உதியஞ்சேரல் வழியினரும், இரும்பொறை வழியினரும் என இரு வழியினர்.

ii. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மக்களுள், கடல் பிறக்கோட்டிய ;செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதற் குச் சோழன் மணக்கிள்ளி மகள்பால் தோன்றியவன்; மற்றையோர் வேளாவிக்கோமான் மகள் வயிற்றிற் பிறந்தோராவர்.
----------------------------


திருச்சிற்றம்பலம்.

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய
பதிற்றுப்பத்து : மூலமும் விளக்க உரையும்

8. கடவுள் வாழ்த்து


    எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க்
    கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார்
    எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள்
    காடமர்ந் தாடிய வாடல னீடிப்
    புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
    வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற்
    சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவாய்
    ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரும்
    இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
    மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய
    சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்
    கடவுட் குயர்கமா வலனே.

திணை: பாடாண்டிணை.
துறை: கடவுள் வாழ்த்து.
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.

உரை: எரி எள்ளு அன்ன நிறத்தன் - செருப்பை இகழ்ந் தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையனாய்; விரி இணர் கொன்றை யம் பைந்தார் அகலத்தன் - விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றைப் பூவால் தொடுக்கப்பட்ட பசிய மாலையணிந்த மார் பினை யுடையனாய்; பொன்றார் எயில் எரி யூட்டிய வில்லன் - கெடாத அவுணருடைய எயில் மூன்றும் வெந்தழியுமாறு தீக்கொளுவி யழித்த வில்லை யுடையனாய்; பயில் இருள காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - செறிந்த இருளில் சுடுகாட்டை விரும்பி அவ் விடத்தே நின்று ஆடிய திருக்கூத்தை யுடையனாய்; நீடிய புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்ட முதுகின்புறத்தே வீழ்ந்து அதனை மறைத்த தாழ்ந்த சடையை யுடையனாய்; வெண் மணி குறங்கு அறைந்து ஆ்ர்க்கும் விழவினன் - வெள்ளிய மணிகள் குறங்கின் (துடையின்) புடையே இயக்கப்பெற்று ஒலிக்கும் விழாவினை யுடையனாய்; நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுண்ணிய நூலாற் கட்டப்பட்ட துடியினை மாறி யொலிக்கும் விரலை யுடையனாய்; இரண்டு உருவாய் ஈரணி பெற்ற எழிற் றகையன் - ஆணும் பெண்ணுமாகிய இருவகை யுருவும் ஓருருவிற் பெற்று அவ்விருவகை யுருவுக் கேற்பத் தோடுங் குழையுமாகிய இருவகை யணிகளாற் பொலிந்த அழகை யுடையனாய்; ஏரும இளம் பிறை சேர்ந்த நுதலன் - வளர்கின்ற இளம்பிறைத் திங்கள் தங்கிய நுதலை யுடையனாய்; களங் கனி மாறேற்கும் பண்பின் மறு மிடற்றன் - நிறத்தால் களங்கனிதான் நிகரொவ்வாமையை யேற்றுக்கொள்ளும் கருநிறத்தால் கறையுற்ற திருக்கழுத்தை யுடையனாய்; தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கட வுட்கு - தெளிந்த ஒளியையுடைய மூவிலை வேலேந்திய ஒளிவிட்டு விட்டுத் திகழும் வேறு பல படைகளையுடைய காலக் கடவுளாகிய இறைவனுக்கு; உயர்க மாவலன் - மிக்குயர்க வென்றி எ-று.

நிறத்தனும் அகலத்தனும் வில்லனும், ஆடலனும் சடையனும் விழவினனும் விரலனும் எழிற்றகையனும் நுதலனும் மிடற்றனுமாகிய காலக் கடவுட்கு வலன் உயர்க; அதனால் எல்லா வுயிர்களும் இன்புறுக என்பது கருத்து. சடையன், நுதலன், மிடற்றன், அகலத்தன், விரலன், வில்லன், நிறத்தன், எழிற்றகையன், ஆடலன், விழவினனாகிய காலக் கடவுள் என வரற்பாலது செய்யுளாகலின் முறைபிறழ்ந்து வந்தது.

எரிபோலும் நிறமுடையனாயினும், தண்ணிய அருளொளி திகழ நிற்றலின், "எரி எள்ளு வன்ன நிறத்தன்" என்றார்; சான்றோரும், "கழுமல மமர் எரியுரு நிற இறைவன்" (ஞானசம். 19:3) என்றார். "காமர்வண்ண மார்பில் தாரும் கொன்றை" (புறம். 12) எனப் பிறாண்டுக் கூறினமையின் ஈண்டு, "கொன்றையம் பைந்தா ரகலத்தன்" என் றொழிந்தார். வேறு எவராலும் எவ்வகையாலும் அழியாதவராய்த் திரிந் தமையின், திரிபுரத் தவுணரைப் "பொன்றார்" என்றும், அவரது மூன்றாகிய மதிலை எரிமுகப் பேரம்பு கொண்டு எரித் தழித்தது விளங்க, "எயிலெரி யூட்டிய வில்லன்" என்றும் கூறினார்; "திரிபுரம் தீமடுத்" தென் றார் நல்லந்துவனார். "மரம்பயில் கடிமிளை" (புறம் 21) என்புழிப்போலப் பயிலுதல் செறிதல் மேற்று. இறைவன் இருளில் ஆடுவதை, "நள்ளிரு ளில் நட்டம் பயின்றாடும் நாதனே" என மணிவாசகனார் உரைத் தருளுவர். எல்லா வுலகும் அழிந் தொடுங்குங்கால் இறைவ னொருவனே தனித்துநின்று ஆடுமிடம் சுடுகாடாதலின், "காடமர்ந் தாடிய ஆடலன்" என்றார். இக் குறிப்பே இறைவன் வெண்ணீறணியும் நிலையால் விளக்க முறுவதெனச் சான்றோர் கூறுப. புறம்புதை சடையன், தாழ்ந்த சடையன் என இயையும். வெண்மணி, முத்துமணி; பளிக்குமணியுமாம். இனி, இருகுறங்கிலும் பக்கத்தே கட்டப்பெறும் வெள்ளிய இம்ணிகள் ஆடுந்தோறும் இனிய ஓசை செய்தலின், " வெண்மணி குறங்கறைந் தார்க்கும்" என்றார். வாராற் கட்டப்படாது நுண்ணிய நூல்களாற் கட்டப்படும் சிறப்புக்குறித்துத் துடியை "நுண்ணூற் சிரந்தை" யெனச் சிறப்பித்தார். சிரற்பறவையின் சிறகு அசைவது போலத் துடிகொட்டு மிடத்துக் கைவிரல்களசைய விளங்கும் இசைநலம் தோன்றத் துடி, சிரந்தை யெனப்பட்டது. நிரல் நிரந்தென வருதல் போலச் சிரல் சிரந் தென நின்று சிரந்தை யெனப் பெயராயிற்று; பிறந்து சிறந்தவிடத்தைப் "பிறந்தை" (பரிபா.11 உரை) என்பது போலச் சிரலினது செய்கை நிகழிடம் சிரந்தை யென அமைந்த தெனக் கொள்க. இரட்டுதல், மாறி யொலித்தல். ஒருபாற் பெண்ணுருவாதலின், "இரண்டுருவாய்" என்றும் அதற்கேற்பத் தோடுங் குழையு மணிதலின், " ஈரணி பெற்ற எழிற் றகையன்" என்றும் கூறினார். ஈரணி பெற்ற எழிற்றகைமையைச் சேரமான்பெருமாள், "வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே, கலந்தான் வலநீறிடஞ் சாந்தெரி வலம் பந்திடமென், பலந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழியிடம், சலந்தாழ் சடைவலந் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே" (பொன்.65) என்பது காண்க. ஏர்தல், எழுதல்; ஈண்டு வளர்தல் குறித்துநின்றது. பண்பு, நிறத்தின்மேற்று. சூலம், மூவிலை வேல். உயிர்கள் செய்யும் வினைக்குரிய பயனைக் காலமறிந் தூட்டும் கடவுளாதல் விளங்கக் "காலக் கடவுள்" என்றார். தொல்காப்பியனார், "பால்வரை தெய்வம்" என்றதும் இக்கருத்தே பற்றியென அறிக. உயர்கமா; மா, அசைநிலை.

இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகியிருக்கும் தொகைநூலிற் காணப்பட்டிலது. ஆயினும், புறத்திணை யுரையில் நச்சினார்க்கினியரால் கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக்காட்டப்படும் இப்பாட்டு, பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாட்டாக இரு்ககலாமென அறிஞர் பலரும் கருது கின்றனர். ஆதலின், ஈண்டுக் கடவுள் வாழ்த்தாகக்கொண்டு உரை கூறப்பட்டது. மேலும், ஏனைத் தொகைநூல் பலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனா ராதலால், இப்பாட்டும் அவர் பாடியதாக இருக்கலா மெனப் பலரும் எண்ணு கின்றனர். இதனைப் பாடியவர் பதிற்றுப்பத்து ஆசிரியர்களுள் ஒருவ ராதலுங் கூடும்.


9. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை
ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து


    ** பதிகம்

    மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
    இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
    வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்
    அமைவர லருவி யிமையம் விற்பொறித்
    திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
    தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு
    பேரிசை மரபி னாரியர் வணக்கி
    நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
    அருவிலை நன்கலம் விரமொடு கொண்டு
    பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
    அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
    இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்

------------------
** இப்பதிகமும், ஏனைப் பத்துக்களிற் காணப்படும் பதிகங்களும் பதிற்றுப்பத்து மூலம் மட்டில் உள்ள ஏடுகளிற் காணப்படவில்லை. பழையவுரையொடு கூடிய ஏடுகளிற்றான் காணப்படுகின்றன.

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம், புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன்- இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.
----------------

நூல்

முதற்பத்து

(கிடைத்திலது)

இரண்டாம் பத்து

பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்; பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
2.1. புண்ணுமிழ் குருதி
11

    வரைமருள் புணரி வான்பிசி ருடைய
    வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
    நளியிரும் பரம்பின் மாக்கடன் முன்னி
    அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்1
    சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
    5
    கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
    செவ்வா யெஃகம் விலங்குந* ரறுப்ப
    வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்
    மணிநிற விருங்கழி நீர்நிறம்2 பெயர்ந்து
    மனாலக் கலவை போல வரண்3 கொன்று
    10
    முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை
    பலர்மொசிந் தோம்பிய வலர்பூங் கடம்பின்4
    கடியுடை முழுமுத றுமிய வேஎய்5
    வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
    நாரரி நறவி னார மார்பிற்
    15
    போராடு தானைச்6 சேர லாத
    மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்
    வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
    பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்தநின்
    பலர்புகழ் செல்வ மினி துகண் டிகுமே
    20
    கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
    பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
    ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
    தென்னங் குமரியொ டாயிடை
    மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே7
    25

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்: ஒழுகு வண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: புண்ணுமிழ் குருதி.
-----------
1.ஏமம் புணர் காக்கும் - பாடம் 2. நீனிறம் - பாடம். 3 போலரண் - பாடம்
4. திரள்பூங் கடம்பின் - பாடம் 5. வோஒய் - பாடம் 6. வேலீண்டு தானை -பாடம்.
7. மதந் தபக் கடந்தே - பாடம்

திணை, பாடாண்டிணை. "பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே." (தொல். பொ. 80) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில், ஆசிரியர் பதிற்றுப் பத்தினுள் வஞ்சிப்பொருளும் வாகைப்பொருளும் வந்த பாடாண் பாட்டுககள் சில காட்டி, "இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின், பாடாண்டிணையே யாயிற்று" என்று கூறியிருக் கின்றனர். அதனாற்றான் இப்பாட்டுகட்குத் துறையும் வண்ணமும் தூககும் பெயரும் வகுத்தோர் திணை கூறிற்றிலர் போலும். அல்லதூஉம், இறந்தொழிந்த முதற்பத்தின் முதற்பாட்டில் திணைகாட்டிப் பின்னர் எனையிடங்களிற் கூறிக்கொள்ளுமாறு விடுத்தனர் போலும்.

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு; அஃதாவது, "வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇ" (பொ. 82) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர், "செந்துறையாவது, விகாரவகை யான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகி னுள் இற்கைவகைான் இயன்ற மக்களைப் பாடுதல்; இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்" என்பது காண்க. பாடாணென்பது, "பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையை யுணர்த்தினமையின், வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" யென்பர் நச்சினார்க்கினியர்.

தூக்கு: செந்தூக்கு; அஃதாவது ஆசிரியப்பா. "ஈற்றய லடியே யாசிரிய மருங்கின், தோற்ற முச்சீர்த் தாகுமென்ப" என்றதற் கேற்ப, ஈண்டும் எருத்தடி முச்சீரினை யுடைமையின், இதுவும் ஆசிரியப்பாவாகிய செந்தூக்காயிற்று. "வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" (பொ. 383) என்ற நூற்பாவுரையில் ஆசிரியர் பேராசிரியர், செ்ந்தூக் கென்பதற்கு "ஆசிரிய வடி" யென்றே பொருள் கூறியுள்ளார். இந்நூற்குத் தூக்கு வகுத்தோர், வேற்றடி விரவாது பாட்டு முழுதும் அளவடியா னியன்ற வழிச் செந்தூக்கென்றும், வஞ்சியடி முதலியன விரவிவரின் செந்தூக்கும் வஞ்சித்தூக்கு மென்றும் கூறுவர். தூக்கு என்பது செய்யுள் அடிவரை யறை கொண்டு பாக்களைத் துணிப்பது. அதாவது பாவகையுள் இன்ன பாவெனத் துணித்துக் கூறுவதென வறிக.

வண்ணம்: ஒழுகு வண்ணம். இது வண்ணவகை இருபதினுள் ஒன்று. இது, முடியாதது போன்று முடிந்து நிற்றலும், முடிந்தது போன்று முடியாது நிற்றலுமாகிய அகப்பாட்டுப் புறப்பாட்டு வண்ணங்கள் போலாது, ஒழுகிய வோசையாற் செல்வது. "ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும்" (பொ.538) என ஆசிரியர் கூறுதல் காண்க.

"வண்ண மென்பது சந்த வேறுபாடு" என்றும் "யாப்புப் பொருள் நோக்கிய வாறுபோல இது பொருள் நோக்காது ஓசையே கோடலானும், அடியிறந்து கோடலானும் யாப்பெனப் படாது" என்றும் பேராசிரியர் விளக்குதலால்,இது செய்யுள் வகையு ளடங்கா தெனவும், எனவே ஒரு செய்யுளில் ஒன்றே யன்றிப் பல வண்ணங்களும் வருமெனவு மறிக.

பெயர்: இப் பாட்டிற்குப் பெயர் "புண்ணுமிழ் குருதி" யென்பது, "அரு நிறந் திறந்த (அடி 8) என முன் வ்த அடைச் சிறப்பானும்,

"மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவை போல" எனப் பின் வந்த அடைச் சிறப்பானும் இதற்குப் 'புண்ணுமிழ் குருதி' யென்று பெயராயிற்றெனப் பழைய வுரைகாரர் இப்பெயர்க்குக் காரணம் காட்டு கின்றார்.

1-6, வரை மருள்..........களிறூர்ந் தாங்கு

உரை: வரை மருள் புணரி - மலைபோல் எழும் அலைகள்; வான் பிசிர் உடைய - வெள்ளிய சிறு துளிகளாக வுடையுமாறு,* வளி பாய்ந்து அட்ட - காற்றுப் போந்து அலைக்கப்பட்ட; துளங்கு இரும் சமம் சூல் - ஓலிட்டலையும் நிறைந்த நீரும்; நளி யிரும் பரப்பின் - மிக்க பெரிய இடப்பரப்புமுடைய; மாக் கடல் முன்னி - கரிய கடற்குட் சென்று; அணங்கு உடை அவுணர் - பிறரை வருத்துதலை யியல்பாகவுடைய அவுணர்கள்; ஏமம் புணர்க்கும் - அரணாக நின்று பாதுகாவலைச் செய்யும்; சூருடை முழுமுதல் தடிந்த - சூரவன் மாவினுடைய மாமரத்தினை வேருடன் வெட்டிக் குறைத்த; பேரிசை கடுஞ்சின விறல்வேள் - மிக்க புகழும் கடிய சினமும் விறலுமுடைய செவ்வேள்; களிறு ஊர்ந் தாங்கு - பிணிமுக மென்னும் யானை யிவர்ந்து சிறப்பயர்ந்தது போல,

"பிசிருடைய, பிசிராகவுடைய வென்றவா" றென்பர் பழைய வுரைகாரர்.

புணரி, அலை; "குடகடல், வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைக்கும்" (புறம். 31) என வருதல் காண்க, பிசிர் சிறுதுளி, "வெண் டலைக் குரூஉப்பிசி ருடைய" (பதிற்.42) எனப் பிறாண்டும் வரும். "நளியிரும் பரப்பின் மாக்கடல்" எனக் கடலின் பெருமையும் பரப்பும் கூறுதலின், அத்தகைய கடல் துளங்குதற்கு ஏதுக் கூறுவார், "வளிபாய்ந் தட்ட" என்றும், அதன் விளைவாக "வரைமருள் புணரி வான்பிசிர் உடைய" என்றும் கூறினார். முகிற்கூட்டம் படிந்து முகத்தலால் குறை வதும். யாறுகளாலும் மழையாலும் புனல் வருதலால் மிகுவது மின்றி, எஞ்ஞான்றும் நிறைந்திருத்தலின், "கமஞ்சூல் மாக்கடல்" என்றார். கமஞ்சூல், நிறைந்த நீர்; சூல் போறலால் சூலெனப்பட்டதென்பர் பழைய வுரைகாரர். "மழைகொளக் குறையாது புனல்புக மிகாது, கரைபொரு திரங்கும் முந்நீர்" (மதுரை.424-5) என்று பிறரும் கூறுதல் காண்க. பிறர்க்குத் துன்பம் செயதலையே யியல்பாகவுடையராதலின், "அணங் குடை யவுணர்" என்றார். சூரன் ஒம்பிய மாமரம், "அவுணர் தம் முடனே யெதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்தது (முருகு.59,60, நச்.) பற்றி, அதனை யவன் அவுணர்க்கு ஏமமாகப் புணர்த்து ஓம்பினா னென வறிக. சூருடை முழுமுதல் என்றது, சூரவன்மாத் தனக் கரணாக வுடைய மாவின் முழுமுதல் எ-று; இனி, சூரவன்மாத்தான் ஓர் மாவாய் நின்றா னென்று புராண முண்டாயின், சூரனாதற் றன்மையுடைய மாவின்
முதலென்றவாறு-ப-ரை. செவ்வேளது கடுஞ்சினம் அவுணரது மாவின் முழுமுதல் தடிதற்குத் துணையாய் அவுணரல்லாத ஏனை நல்லோர்க்கு நலம் பயந்தமையின், "பேரிசைக் கடுஞ்சின விறல்வேள்" என்று சிறப்பித்தார். "அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர், மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்" (முருகு. 59-61) என நக்கீரனார் கூறுதல் காண்க. முருகன் கடற்குட் புகுந்து, அவுணர் சூழ வாழ்ந்த சூரவன்மாவை யழித்த செய்தியை நக்கீரனாரும், "பார்முதிர் பனிக்கடல் கலங்க வுள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்" (முருகு. 45-6) என்று கூறதலாலு மறிக. முருகவேள் பிணிமுக மென்னும் களிறூர்தலை முருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியா ரெழுதிய வுரையாலு மறிக.

மாக்கடல் முன்னி முழுமுதல் தடிந்த விறல்வேள் களிறூர்ந்தாங்கு, "யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த" என இயைத் துக் கொள்க.

7-16. செவ்வாய் ................................ சேரலாத.

உரை: செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப - கூரிய வாயினையுடைய வாட்படையானது எதிர்த்துக் குறுக்கிட்டு நிற்கும் பகைவரை யறுக்க; அருநிறம் திறந்த புண் உமிழ் குருதி யின் - அவரது அரிய மார்பு பிளத்தலாலுண்டாகிய புண்ணினின் றொழுகும் உதிரத்தால்; இருங்கழி மணிநிற நீர் - பெரிய கழி யிடத்து நீலமணி போலும் நீர்; நிறம் பெயர்ந்து - நிறம் மாறி; மனாலக் கலவை போல - குங்குமக் குழம்பினை நிகர்க்க; அரண் கொன்று - பகைவர் அரணங்களை யழித்து; முரண்மிகு சிறப்பின் - வலி மிகுந்து விளங்கும் சிறப்பினால்; உயர்ந்த ஊக்கலை - உயர்ந்த மனவெழுச்சி யுடையையாய்; பலர் மொசிந்து ஓம்பிய - பகைவர் தாம் பலராய்க் கூடிநின்று காத்த; அலர் பூங்கடம்பின் - மலர்ந்த பூக்களையுடைய கடப்ப மரத்தினை; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - காவலமைந்த அடியோடு தடிந் தொழிக்குமாறு வீரரை யேவி; வென்று எறி முழங்கு பணை செய்த-போரை வென்று அறையும் முழங்குகின்ற முரசினைச் செய்துகொண்ட; வெல் போர் - வெல்லும் போரினையும்; நார் அரி நறவின் - நாரால் வடிக்கப்பட்ட கள்ளினையும்; ஆர மார்பின் - ஆர் மணிந்த மார் பினையும்; போர் அடு தானை - அஞ்சாது நின்று அறப்போர் புரியும் தானையினையுமுடைய; சேரலாத - சேரலாதனே,-

மணிநிற நீரும் புண்ணுமிழ் குருதியும் கலந்தவழி இங்குலிகக் கலவையை நிகர்க்கு மென்பதே சிறப்பாயினும், குருதி மேன்மேலும் பெருகிப் பாய்தலின், அதன் செந்நிறமே மிகுவது கருதியே பழைய வுரைகாரரும் மனால மென்றது, குங்குமம் என்றார். இங்குலிகத்தைக் கூறுலும் குற்றமன்மையின். " சாதிங்குலிக மென்பாரு முளர்" என்றார்.

அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி, இங்குலிக லிறுவரை போன் றினக்களி றிடைமிடைந்த, குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதி இங்குலிக வருலிபோன் றெவ்வாயுந் தோன்றினவே" (சீவக. 2239) என்று கூறினர் பிறரும். நிறம், மார்பு, வெலற்கருமை பற்றி வீரர் மார்பு "அருநிற" மெனப்பட்டது.

"அரணாவது, மலையுங் காடும் நீரு மல்லாத அகநாட்டுட் செய்த அரு மதில்; அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து, இடங்கர் முதலியன உள்ளுடைத் தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் எய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து, எழுவும் சீப்பு முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும் பிற வெந்திரங்களும் பொருந்த வியற்றப்பட்டதாம்" என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியார். ஒருகால் அழித்தவழி இவை மீட்டும் முன்னைய வலிபெறாத வகையில் அழித்தல் வேண்டுதலின், கொலைவாய் பாட்டால், "அரண் கொன்று" எனவும், அச்செயலால் வேந்தர்க்கு மறமும் மானமும் மிகுதலின் "முரண்மிகு சிறப்பின்" எனவும், தன்னைத் தாக்க வருவோர் ஊக்க மழிக்குங் கருத்தால் இயற்றப்பட்ட இவ்வரணைக் கொல்லுந்தோறும் வேந்தர்க்கு ஊக்கம் கிளர்ந்தெழுதலால், "உயர்ந்த வூக்கலை" யெனவும் கூறினார். "உறுபகை யூக்க மழிப்ப தரண்" (குறள். 744) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. ஊக்கம், ஊக்க லென நின்றது. இவ் வூக்க மிகுதியால் கடல் கடந்துசென்று பலர் கூடிக்காத்த பகைவர் காவல் மரமாகிய கடம்பின் முழுமுதல் தடிந்து வென்றெறி முரசு செய்து கொண்டது கூற லுறுகின்றா ராதலின், ஊக்கலை யென முற்றெச்சமாக மொழிந்தாரென வறிக மொசிதல், மொய்த்தல், உவமைக்கண், செவ்வேள் மாக்கடல் முன்னி மாமுதல் தடிந்தது கூறவே, நெடுஞ்சேரலாதன் முந்நீர்க்குட் சென்று கடம் பெறிந்தா னென்பது இனிது விளக்க மெய்திற்று. கடம்பெறிந்து முரசு செய்துகொண்டதனை, "சால்பெருந் தானைச் சேர லாதன், மால் கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு" (அகம். 127, 147) என மாமூலரும், "துளங்குபிசி ருடைய மாக்கடல் நீக்கிக், கடம் பறுத் தியற்றிய வியன்பணை" (பதிற், 17), "எங்கோ, இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேரலாதன்" (பதிற்.20) என இவ்வாசிரியரும் கூறி யிருத்தல் காண்க. சேரலாதன் செய்த போர் பலவும் அவற்கு வெற்றியே பயந்தமை தோன்ற, "வெல்போர்" என்றும், அவன் ஆணைவழி நின்று அறப்போ ருடற்றும் இயல்புகுறித்து, "போரடுதானை" யென்றும் சிறப் பித்தார்.

17-25. மார்புமலி..........கடந்தே

உரை: கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான் கள்; நரந்தம் பரந்து இலங்கு அருவியொடு கனவும்-பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும், அவை வளர்ந்திருக்கும் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற் கண்டு மகிழும்; ஆரியர் துவன்றிய-ஆரியர் நிறைந்து வாழும்; பேரிசை இமயம் தென்னம் குமரியொடு ஆயிடை; -பெரிய புகழையுடைய இமயம் தெற்கின் கண் ணுள்ள குமரி யாகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாட்டி லுள்ள; மன் மீக்கூறுநர்-மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின்; மறம் தபக் கடந்து-ம,றம் கெட்டழியுமாறு வஞ்சியாது பொருது வென்று; மார்பு மலி பைந்தார்-மாரபிற் கிடக்கும் பசிய மாலை; ஓடையொடு விளங்கும்-ஓடை யளவும் தாழ்ந்து அதனோடு விளங்கும்; வலன் உயர் மருப்பின்-வெற்றியா லுயர்ந்த மருப்பினையுடைய; பழிதீர் யானை-குற்றமில்லாத யானையின் ; பொலன் அணி யெருத்தம் மேல்கொண்டு பொலிந்த- பொன்னரிமாலை யணிந்த பிடரின்மேல் ஏறியிருந்து சிறக்கும்; நின் பலர் புகழ் செல்வம்-நின்னுடைய பலரும் புகழும் செல்வச் சிறப்பினை; இனிது கண்டிகும்-யாம் இனிது காண்கின்றோம், நீ வாழ்க என்றவாறு.

கவரிமானும் நரந்தம் புல்லும் இமயமலைச்சாரலில் மிகுதியாக வுண்மையின் இவற்றை விதந்தோதினார். "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுனை பருகி யயல, தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதுசை யதுவே வான்றோ யிமயம்" (புறம் 132) என்று ஏணிச்சேரி முடமோசியாரும் கூறுவர்.

மேல்கொண்டு பொலிந்த நின் செல்வம் என முடிக்க. கவிர்ததை சிலம்பிற் றுஞ்சு மென்றது, ஆண்டுறையும் ஆரிய ராணையானே முருக் கென்னும் முள்ளுடை மரமும் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா" (குறள் 969) என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயி்ர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக்கவிர் ததைந்த சிலம்பின்கண்ணே இனிதாக வுறங்கு மென்றும்,அருவியொடு நரந்தம் கனவு மென்றது, அவ்வாரிய ராணையானே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற் காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினும் காணும் என்றும், குமரியொடு என்னும் ஒடு எண்ணொடு; ஆயிடை யென்றது, இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடை என்றும், அவ்வென்னும் வகரவீற்றுப்பெயர் ஆயிடை யென முடிந்தது என்றும், மன்னென்றதனை அரசென்றது போல அஃறிணைப் பெயராக்கி, அம் மன்களில் மூக்கூறு மெனக் கொள்க என்றும் கூறுவர் பழையவுரைகாரர்.

இனி, நெடுஞ்சேரலாதன் இமயம்வரை தன் புகழைப் பரப்பி, ஆங்கே மறம் செருக்கிய ஆரிய மன்னரை வென்று மேம்பட்டா னாதலின் "ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம், தென்னங் குமரியொ டாயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே" யென்றார். "ஆரிய ரலறத் தாக்கிப் பேரிசைத், தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்" (அகம் 396)) என ஆசிரியர் பரணரும், "வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பெறிந் திமயத்து" முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து" (அகம் 127) என ஆசிரியர் மாமூலனாரும், கூறியிருத்தல் காண்க. இவ் விருவகை வெற்றிகளுள், இமயத்தில் விற்பொறித்து ஆரியமன்னரை வென்று பெற்ற வெற்றி பழமைத்தாயினமையின், அதனைக் குறிப்பா யுணர்த்தி, கடம்பர்பால் பெற்ற வெற்றியினை விரியக் கூறினா ரென வறிக. அரசு என்பது உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லாதலின், அதுபோலவே, மன்னென்பதும் உயர்திணைப் பொருட்டாகிய "அஃறிணைப் பெயராக்கி" மீக்கூறு மென்பதனோடு முடிக்க வெனப் பழைய வுரைகாரர் கூறினர்; "உயர்திணை மருங்கின் நிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்" (தொல். சொல். 56) என்பது விதி. மறந்தபக் கடந்து (25) முழங்குபணை செய்த (14) என மாறிக் கூட்டுக. இங்ஙனம் மாறாது எருத்த மேல்கொண்டு (16) என்னும் வினையொடு மாறி முடிப்பாரு முளர் என்பது பழையவுரை. ஆரிய மன்னரை மறந் தபக் கடந்த செய்திக்குப் பின்பே கடம்பெறிந்து முரசு செய்த செய்தி நிகழ்தலின், எவ்வழிக் கூட்டினும் பொருள் நலம் குன்றாமை யறிக.

சேரலாத (16) கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு (6) யானை (18) யெருத்த மேல்கொண்டு பொலிந்த நின் (19) பலர்புகழ் செல்வம் கண்டிகும் (20) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் வெற்றிச் செல்வச்சிறப்புக் கூறியவா றாயிற் றென்பது பழையவுரை. செவ்வேள் கடல் புகுந்து சூருடை முழுமுதல் தடிந்து யானையெருத்தம் மேல்கொண்டு பொலிந்ததும், ஆரியமன்னர் மறந்தபக் கடந்ததும் கூறியது அவன் வெற்றிச் சிறப்பு; "நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகும்" என்பது செல்வச்சிறப்பு.
----------------

2.2. மறம்வீங்கு பல்புகழ்

12

    வயவர் வீழ வாளரின் மயக்கி
    இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக்
    கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே
    தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர்
    அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்*
    தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு
    5
    முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது
    மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ்
    கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டோறும்
    காண்டல் விருப்பொடு கமழுங் குளவி
    10
    வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை 1
    அண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங்
    கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
    வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கல்
    தொல்பசி யுழந்த பழங்கண் வீழ
    15
    எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை
    மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
    நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி
    நீர்ப்படு பருந்தி னீர்ஞ்சிற கன்ன
    நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
    20
    நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
    வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
    வசையின் மகளிர் வயங்கிழை யணிய
    அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
    நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே.
    25

--------
* சோலைப்பிறமான் - பாடம்
1 ரிழைய வாடுநடை-பாடம்

இதுவுமது.

பெயர்: மறம்வீங்கு பல்புகழ்.

1-3. வயவர்.............வேந்தே.

உரை: வயவர் வீழ-வீரர்கள் தோற்று நிலத்தே விழு மாறு; வாள் அரில் மயக்கி-வாட்போரைச் செய்து; இடம் கவர் கடும்பின்-அவர்தம் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத் தாரையுடைய; அரசு தலை பனிப்ப-அரசர்கள் தலைநடுங்கி வணங்க; கடம்பு முதல் தடிந்த-அவர்தம் காவல்மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டி யழித்த; கடும்சின வேந்தே- மிக்க சினத்தையுடைய சேரவேந்தே-;

வயவர், வலிமைப் பொருட்டாய உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயர். எனவே, இவர் தமது வலியாற் பல போர்களைச்செய்து வெற்றி பெற்ற வீறுடைய ராதல் பெற்றாம். ஆகவே, இத்தகையாருடன் போருடற்றுவதே ஆண்மைக்குச் சிறப்பாதல் பற்றி, "வயவர் வீழ வாளரில் மயக்கி" என எடுத்தோதினார். இருதிறத்து வீரரும் தம் வாட்படை யால் தம் தொழிற்றிறந் தோன்றப் பொருதலின், அப்போரை "வாளரில்" என்றார்; "வாள்மயங்கு கடுந்தார்" (பதிற் 36) எனப் பிறரும் கூறுதல் காண்க. "இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப" (புறம். 8) எழுந்த தம் வேந்தர்க்குத் துணையாய் மண்ணசை யெஞ்சா மனமாண்புடைய ராதல் தோன்ற,

"இடங்கவர் கடும்பின்" என்றும், தாம் கருதும் இடம் கவர்ந்தபின் னல்லது மடங்கா மறமுடைய அக் கடும்பு சூழ விருந்தும் நின் வலிமிகுதி யுணர்ந்து உளம் தளர்ந்து உடல் நடுங்கின ரென்பார், "அரசுதலை பனிப்ப" என்றும், அவர் அன்னராக, நீ அவர்தம் காவல் மரத்தைக் கடிந்தனை யென்பார், "கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே் என்றும் கூறினார். கடம்புமுதல் தடிந்த பின்பும் ஆறாது முரசுசெய் தெறிந்த காலத்தே தணிந்தமையின், "கடுஞ்சின வேந்தே" என அவன் சினமிகுதியைச் சிறப்பித்தார். இடங்கவர் கடும்பு என்ப தற்குத் "தனக்குரிய இடத்தைக் கவர்ந்த கடும்பு" என்று கூறுவாரு முளர்; சேரநாட்டினுட் கடம்பர் போந்து நாடு கவர்ந்துகொண்டதாக வரலாறு ஒன்றும் இன்மையின், அப்பொருள் சிறக்குமாறில்லை.

4-9 தாரணி...............இனிது.

உரை: தார் அணி எருத்தின் - பிடரிமயிர் பொருந்திய கழுத்தினையும்; வாரல் வள் உகிர் - நீண்ட கூரிய நகங்களையு முடைய; அரிமான் வழங்கும் சாரல் - சிங்கவேறு உலாவும் மலைச் சரிவிலே; பிறமான் - பிற விலங்குகளின்; தோடு கொள் இன நிரை - இனமினமாய்த் தொகுதிகொண்டிருக்கும் கூட்டம்; நெஞ்சு அதிர்ந்தாங்கு - நெஞ்சு நடுக்குற்று ஒடுங்கி யுறைவது போல; முரசு முழங்கு நெடுநகர் - முரசுகள் முழங்கும் தம் அரண்மனைக்குள்ளேயிருக்கும்; மாதிரம் அரசு துயிலீயாது - நாற்றிசையிலும் வாழும் அரசர் நெஞ்சு துணுக்குற்றுக் கண் ணுறங்காமல்; பனிக்கும் - நடுங்கச்செய்யும்; நின் மறம் வீங்கு பல் புகழ் - நின் வீரத்தால் மிக்கு விரிந்து பலதுறையால் வரும் புகழ்; கேட்டற்கு இனிது - கேட்டற்கு எமக்கு இனிதா யிருந்தது:-

தார்,பிடரி மயிர், கிளியினது கழுத்தின் பிடரிபோல் நீண்டு ஒழுகும் கீற்றுக்களையும் இவ்வியைபுபற்றித் தார் என்ப; "செந்தார்ப் பசுங்கிளி யார்" (சீவக 1036) என்று தேவர் கூறுதல் காண்க. வாரல்: அல், சாரியை. தோடு, தொகுதி. பிற விலங்குகள் தோடுகொள் இனநிரைய வாயினும், அரிமான் வழங்குவதுபற்றி நெஞ்சதிர்ந்து ஒடுங்கியுறைவது போல என்ற உவமத்தால் ஆரியரை யலறத் தாக்கியும் கடற்குட் சென்று கடம்பெறிந்தும் செருமேம்பட்டு வரும் சேரலாதனது புகழ் கேட்கும் நாற்றிசை வேந்தரும் அஞ்சி நடுங்கித் தத்தம் நெடுநகர்க்கண் கண்ணுறக்க மின்றிக் கையற்றுக் கிடந்தமை பெற்றாம்.

(ப-ரை.) துயிலீயாது என்றது, துயில் ஈயாது என்று கொண்டு, மாதிரத் தரசர், மண்ணசையால் சேரலாதன் எப்போது தம்மேல் வருவானோ என்றஞ்சித் தம் கண்கட்கு உறக்கம் நல்காது, திசைநோக்கி நெஞ்சு நடுங்கிக் கிடக்கச் செய்தது நின் புகழ் என வுரைப்பினுமாம். செல்லிட மெல்லாம் தன் மறம் துணையாகப் பெரும்புகழ் எய்தினமையின், "மறம் வீங்கு புகழ்" என்றும், அதுதானும் வெட்சி முதலாகப் பல்வேறு வகையாற் பெறப்படுதலின், "பல்புகழ்" என்றும், பலவாயினும் மறப்புகழ் என்ற ஒரு பயனையே விளைவித்தமையின், "இனிது" என ஒருமை முடிபு கொடுத்தும் கூறினார்.

(ப-ரை) கல்வி, செல்வம் முதலியவற்றா லெய்தும் பல்புகழ் மறமொன்றினாலே இச் சேரலாதன் பெறுதலின், "மறம் வீங்கு பல்புகழ்" என்று இதற்குப் பெயராயிற் றென்பார் பழையவுரைகாரர். "அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழ்" என்றும், "இச் சிறப்பானே இதற்கு மறம்வீங்கு பல்புக ழென்று பெயராயிற்" றென்றும் கூறினார்.

9-14. நின்செல்வம்........ஒக்கல்.

உரை: நின் செல்வம் கேட்டொறும்-நின் செல்வத்தைக் கேள்விப்படுந்தொறும்; காண்டல் விருப்பொடு-நின்னைக் காண் டல்வேண்டுமென் றுந்திய விருப்பத்தால்; வாடாப் பைம்மயிர்- உதிராத பசிய மயிரினையும்; இளைய -இளமைத்தன்மைக் கொத்த ஆடு நடை-அசைந்த, நடையினையு முடைய; அண்ணல் மழ களிறு-பெருமைபொருந்திய இளங்களிற்றினை மொய்க்கும்; அரி ஞிமிறு-வண்டு ஞிமிறு முதலியவற்றை; கமழும் குளவி- மணங்கமழும் காட்டு மல்லிகையால்; ஓப்பும்-ஓட்டுகின்ற; கன்று புணர் பிடிய-கன்றோடு கூடிய பிடிகளையுடைய; குன்று பல நீந்தி வந்து-குன்றங்கள் பலவற்றைக் கடந்து வந்து; அவண் இறுத்த இரும் பே ரொக்கல்-தங்குதற்குரிய அவ்விடத்தே தங்கிய கரிய பெரிய என் சுற்றத்தார்,-

செல்வத்தைப் புகழொடு கூட்டிப் பின் அதனையே வருவித்தலினும், அதனையே கேட்டொறும் என்பதற்கு முடிபாக வருவித்தல் சிறப்பாதல் பற்றி வேறு கொள்ளப்பட்டது; மறம்வீங்கு பல்புகழைக் கேட்குந் தோறும் செல்வமிகுதி தானே பெறப்படுதலின், அதனைக் கேட்டொறும் காண்டல் வேண்டு மென்ற விருப்பெழுந்து என் சுற்றத்தைத் துரப்ப தாயிற் றென்றார். பகைப்புலத்து வென்று பெறும் செல்வம் இரவலர்க்கு வழங்கப்படுதலின், மறப்புகழ் கேட்ட இரவலர்க்குக் காண்டல் வேட்கை கிளர்ந்தெழுத லியல்பாதலின், "கேட்டொறும் காண்டல் விருப்பொடு" என்றார். களிற்றின் இளமைச் செவ்வி இனிது தோன்ற, மயிர் வாடாமையும் அசைநடையும் விதந்து, "வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை" யென்றும், காமச்செவ்வி தோன்ற, "அண்ணல் மழகளிறு" என்றும் கூறினார். இக்களிற்றின்பா லொழுகும் மதநீரை யுண்டற்கு மொய்க்கும் வண்டினத்தை, "அரிஞிமிறு" என்றார். அரி, வண்டு. "அரிக்கண மொலிக்கும்" (முருகு. 76) என வருதல் காண்க. ஞிமிறு வண்டின்வகை. அரிஞிமி றென்றே கொண்டு, கோடுகளையுடைய வண் டெனினு மமையும். இவ் வண்டினத்தை, காதலன்புடைய கன்றைத் தழீஇச் செல்லுமிடத்தும் களிற்றின்பா லுள்ள கழிகாதலால், குளவியைப் பிடுங்கி அதனை யோப்பு மென்பார், ”கமழும் குளவி யரிஞிமி றோப்பும்” என்றார். குளவியாலென ஆலுருபு விகாரத்தாற் றொக்கது. குளவியை யிடைய குன்றென்று கூறுதலு முண்டு. பாணர் முதலிய இரவலர் அரசன்பால் வந்தவிடத்து, அவரனைவரும் ஒருபுறத்தே தங்க, அவருள் தலைவனாவான் முதற்கட் சென்று அரசன் செவ்வி யறியும் இயல்பு தோன்ற, "குன்றுபல நீந்தி வந்தவண் இறுத்த ஒக்கல்" என்றும், வறுமைத் துயராலும் வழிநடை வருத்தத்தாலும் மேனி வாடிக் கரிந் திருத்தல் பற்றியும், பலராதல் பற்றியும், "இரும்பே ரொக்கல்" என்றும் கூறினார்.

15-25. தொல்பசி..........மகிழ்வே.

உரை: தொல் பசி யுழந்த பழங்கண் வீழ -(என்னுடைய அவ்வொக்கல்) நெடுநாட்களாகப் பசியால் வருந்திய வருத்தம் கெட; எஃகு போழ்ந்து அறுத்த - அரிவாளாற் பிளந்து அறுக்கப் பட்ட; வால் நிணக் கொழுங்குறை - வெள்ளிதாகிய ஊனினது கொழுவிய இறைச்சியும்; மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு - ஆட்டிறைச்சி பெய்து சமைத்த வெண்ணெல்லின் வெண்மையான சோறும்; நனையமை கள்ளின் தேறலொடு - மலரரும்பு பெய்து பக்குவம் செய்யப்பட்ட கட்டெளிவுடனே; மாந்தி - உண்டு; நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகு அன்ன - மழை யால் நனைந்த பருந்தினுடைய ஈரிய சிறகை யொப்பக் கிழிந்த; நிலம் தின் சிதாஅர் - மண்படிந்து மாசேறிய கந்தையாகிய உடையை; களைந்த பின்றை - நீக்கிய பின்பு; நூலாக் கலிங்கம் - நூற்கப்படாத நூலாகிய பட்டா லியன்ற ஆடை தந்து; வால் அரைக் கொளீஇ - வாலிதாக அரையில் உடுத்துக்கொண்டு; வணர் இருங் கதுப்பின் - (தம்மில்) கடை குழன்ற கூந்தலையும்; வாங்கு அமை மென் றோள் - வளைந்த மூங்கில்போலும் தோள் களையு முடைய; வசை யில் மகளிர் - குற்றமில்லாத மகளிர்; வயங்கு இழை அணிய - விளங்குகின்ற அணிகளை அணிந்து கொள்ளவே; அமர்பு - நின்னை மிக விரும்பி; மெய் ஆர்த்த சுற்ற மொடு - நின் மெய்யோடு ஆர்க்கப்பட்டாற்போற் சூழவிருக்கும் நின் சுற்றத்தாருடன்; நின் பெருங் கலி மகிழ்வு - வீற்றிருக்கும் நினது பெரிய திருவோலக்க வின்பம்; நுகர்தற்கு இனிது - கண்டு மகிழ்தற்கு இனிதாக வுளது எ-று.

என் ஒக்கலுற்ற வறுமைத்துன்பம் பன்னெடு நாட்களுக்கு முன்னர்த் தோன்றி வருத்துவ தென்றற்கு, "தொல்பசி யுழந்த பழங்கண்" என்றும், அஃ தினித் தோன்றாவாறு கெட்ட தென்பார், "வீழ" என்றும், அதன் வீழ்ச்சி நிலை கூறலுற்று, வானிணக் கொழுங்குறையும், வெண்சோறும், கட்டெளிவும் உண்டதும் கூறினார். மை யூன், ஆட்டிறைச்சி. "மையூன் மொசித்த வொக்கல்" (புறம் 96) என்றார் பிறரும். சோற்றோடு ஊன் கலந்து அட்டுண்டல் பண்டை வழக்கு; "நெய் குய்ய வூனவின்ற, பல சோற்றான் இன்சுவைய" (புறம் 382) என்று சான்றோர் கூறுதல் காண்க. நனையமை கள்ளின் தேறலாவது, தேனை மூங்கிலிடத்தே பெய்து, அதனுள் இஞ்சிப்பூ முதலியவற்றை யிட்டுப் பக்குவம் செய்து தெளிவித்துக்கொள்ளும் கட்டெளிவு. "தேறுகள் நறவுண்டார்" (கலி 147) என்றும், "நீடமை விளைந்த தேக்கட் டேறல்" என்றும் சான்றோர் உரைப்பது காண்க. மண்மாசு படிந்து கிழிந்து கந்தையாகிய வுடைக்கு நனைந்த பருந்தின் சிறகு நிகராதலை,"கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன, பாறிய சிதாஅரேன்" (புறம் 150) என ஆசிரியர் வன்பரணரும் கூறுகின்றனர். பட்டு, கையால் நூற்கப்படாமை பற்றி, நூலாநூல் எனப்பட்டது. நூலாநூற் கலிங்க மென்பது நூலாக்கலிங்க மெனத் தொக்குமுடிதல் தமிழ்மர பன்மையின், அதன் பொருந்தாமை கண்டே பழையவுரைகாரர், "தொகுத்துக் கூறினா னென்பாரு முளர்" என்றார். கலிங்க மெனவே, அது நூலா னியறல் பெறப்படுதலாலும், நூற்றல் வினை நூற*கே யுரிய தாகையாலும் சினைவினை ஒற்றுமைபற்றி முதன்மே னிற்றல் மரபாதலாலும் பழையவுரைகாரர் கூறுவது சிறப்புடைத் தாத லறிக. ஒக்கலர் பொதுவாக வூணும் உடையும் கொண்டு இன்புற்றாராக, அவருள் மகளிர் அவற்றின்மேலும் ஒளி விளங்கும் இழைகளைப் பெற்றுச் சிற்ந்தன ரென்பார், "மகளிர் வயங்கிழை யணிய" என்றும், அவற்றைப் பெறற் கமைந்த அவருடைய உருநலத்தை "வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோ" ளென்றும், கற்புநலத்தை, "வசையில் மகளிர்" என்றும் கூறினார்.மாண்புடைய மகளிர்க்கு ஆடையும் அணியும் இன்றியமையா தன வாதலின், "வயங்கிழை யணிய" எனப் பிரித்தோதினார். நின் மறம் வீங்கு பல்புகழ் கேட்டோருள் பகைவர்க்குப் பனிப்பும் நட்டோர்க் குக் களிப்பும் பயக்கும் பான்மைத்தாக, நின் பெருங்கலி மகிழ்வு, எத் திறத்தோர்க்கும் இன்பம் பயப்பதென்பார், "நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே"யென்றார். உண்ண வுணவும் உடுக்க வுடையும் குறைவறப் பெறுதலின், "அமர்பு நுகர்தற் கினிது" என்றார். செல் வுழிச் செல்லும் மெய்ந்நிழல் போல, அரசன் மெய்யினைச் சூழ்வருதலின், "மெய்யார்த்த சுற்றமொடு" என்றார். சுற்றம், அமைச்சர், தானைத் தலைவர் முதலாயினார். அவர் வழிநின்று அரசு புரிதலின், ஒடு, உயர்பின் வழித்தாய ஒருவினையொடு.

வேந்தே (3) நின்மறம் வீங்கு பல்புகழ் (8) கேட்டற் கினிது(9); பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிது(25) என வினைமுடிவு செய்க. புகழையும் செல்வத்தையும் பிரித்து நிறுத்தி, இனி தின்பதனைத் தனித் தனிக் கூட்டி முடிக்கும் கருத்தினராதலின், பழையவுரைகார், "வேந்தே, நின் செல்வம் புகழ் கேட்டற் கினிது; நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிதென வினைமுடிவு செய்க வென்றார்.

"இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஒலக்க வினோதச் சிறப்பும் உடன்கூறியவா றாயிற்று" என்பது பழையவுரை. நின் மறம்வீங்கு பல்புகழ் என்றது வென்றிச் சிறப்பு; பெருங்கலி மகிழ்வு ஒலக்க வினோதச் சிறப்பு என அறிக.
-------------------

2.3. பூத்த நெய்தல்

13

    தொறுத்தவய1 லாரல்பிறழ்நவும்
    ஏறுபொருதசெறு வுழா துவித்துநவும்
    கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
    இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும்
    கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
    5
    வளைதலை மூதா வாம்ப லார்நவும்
    ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
    புனல்வாயிற் பூம்பொய்கைப்
    பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
    நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
    10
    கூற்றடூஉ நின்ற யாக்கை போல
    நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
    விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
    திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
    கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
    15
    வூரிய2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
    தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
    உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து)
    உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
    காடே கடவுண் மேன புறவே
    20
    ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
    ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
    கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்3
    குடிபுறந் தருநர் பார மோம்பி
    அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
    25
    மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
    நோயொடு பசியிகந் தொரீஇப்
    பூத்தன்று பெருமகநீ காத்த நாடே.


-------------
1 தொறுத்தகு நீள்வயல் - பாடம்.     2 வூறிய - பாடம்.     3 குடிபுறந்தாரா - பாடம்.

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்: பூத்த நெய்தல்.

1-10. தொறுத்தவயல்......................நாடு.

உரை: தொறுத்த வயல் - ஆனிரைகள் புல் மேயும் கொல்லைகள்; ஆரல் பிறழ்நவும் - ஆரல்மீன் பிறழ்ந்துலாவும் நீர் நிரம்பிய வயல்களாயினவும்; ஏறு பொருத செறு - பன்றிகள் தம்முடைய மருப்புகளாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம்; உழாது வித்துநவும் - ஏரான் உழுதலை வேண்டாது காலாற் குழப்பி விதை விதைக்கும் வயல்களாயினவும்; கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் - கரும்புநிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தல்; இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவும் - பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டத்தைப் பிறவிடத்திற்கு மேய்ச்சல்வேண்டி்ச் செல்லாவாறு தடுக்கும் வயல்களாயினவும்; கலி கெழு துணங்கை ஆடிய மருஙகின் - இளையமகளிர் கூடி ஒலிமிக்க துணங்கைக்கூத் தயரும் இடங்கள்; வளை தலை மூதா - வளைந்த தலையையுடைய முதிய ஆக்கள்; ஆம்பல் ஆர்நவும் - அவர் தழையுடையினின் றுதிர்ந்த ஆம்பலை மேயும் இடங்களாயினவும்; ஒலி தெங்கின் - தழைத்த தென்னைகளும்; இமிழ் மருதின் - புள்ளினம் கூடியொலிக்கும் மருதமரங்களும்; புனல் வாயிற் பூம் பொய்கை - கால்வாய்களை யுடைய பூம்பொய்கைகளு முடைமையால்; பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் - புலவர் பாடும் புகழ்பெற்ற செல்வம்பொருந்திய வூர்களையுடைய; நாடு - நாடானது.-

புல்லும் தழையும நிறைந்து ஆனிரைகட்கு மேய்கொல்லையாக இருந்தவை, நெல் விளையும் நன்செய்களாயின வென்பார், "தொறுத்த வயல் ஆரல் பிறழ்கவு" மென்றும், கிழங்கு தேர்ந்துண்ணும் இயல்பின வாகலின், கேழற்பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டி நிலத்தை யுழுது விடுவதால் உழவர் ஏரான் உழுதல் வேண்டாவாயின வென்றற்கு, "ஏறு பொருத செறு உழாது வித்துநவும்" என்றும் கூறினார்; "கடுங்கட் கேழ லுழுத பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாது வித்திய பரூஉக்குரற் சிறுதினை" (புறம் 168) என வருதல் காண்க. "பன்றி புல்வாய் உழையே கவரி, என்றிவை நான்கு மேறெனற் குரிய" (தொல் பொரு 593) என்றதனால் பன்றி ஏறெனப்பட்டது. இதனாற் காடழிந்து நாடாகிய முறை தெரிவித்தாராயிற்று. இனி, ஏறு பொருத செறு உழாது வித்துந என்பதற்கு, ஏறுகள் தம்முட் பொருதமையி னாலே வயல் சேறுபட்டு உழவேண்டாதன வாயின வென்றுரைத்து, "பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின், காரேறு பொருத கண்ணகன் செறுவின் உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர், முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவின்" (பெரும்பாண் 209-12) என்பதனைக் காட்டலு மொன்று. கரும்புநிற்கும் பாத்தியில் நீர் இடையறா திருத்தலின், நெய்தல் உளதாயிற்று.; அது தேன்மிக்குத் தன்னை மேயும் எருமை யினத்த வேறிடம் செல்லாவாறு பிணித்தலின், "எருமையின் நிரை தடுக்குநவும் " என்றார். "கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல், சுரும்பு பசி களையும் பெரும்புன லூர" (ஐங்.65) எனப்பிறர் கூறுவது இக் கருத்தோ டொருபுடையொத்தல் காண்க. கரும்புநடு பாத்தியிற் கலித்த நெய்தல், தன்பால் நிறைந்துள்ள நறுவிய தேனின் சுவையொடு பொருந்திய இரையாகி, அருகு நிற்கும் கரும்பினை நாடாவாறு செய்யு முகத்தால் அக் கரும்பினைக் காக்கும் இயற்கையழகு விளங்கத் தெரிக்கும் சிறப்பினைப் பாராட்டி, இப்பாட்டினைப் "பூத்த நெய்தல்" என்றனர். பழையவுரைகாரரும், "இச்சிறப்பானே பூத்தநெய்தலென்று பெயராயிற்" றென்றார். இளையமகளிர் இடையில் ஆம்பற்றழை யுடுத்து, கண்ணியும் மாலையும் அவ்வாம்பலே தொடுத்தணிந்து விளையாட்டயர்பவாதலின், அவர் துணங்கையாடி விளையாடுமிடம் ஆம்பல் மிடைந்து கிடத்தலால், "துணங்கையாடிய மருங்கின், வளைதலை மூதா ஆம்ப லார்நவும்" என்றார். கலிகெழு துணங்கை யென்றதனால் வாச்சிய வொலியே யன்றி, இளைய மகளிர் விளையாட்டொலியும் பெற்றாம். "அளிய தாமே சிறுவெள் ளாம் பல்...இளைய மாகத் தழையா யினவே" (புறம். 248) என்பதும் இதனை வலியுறுத்தும். முதுமை யெய்தியவழி மக்களும் விலங்கும் தலைசாய்தல் இயல்பாதலின், "வளைதலை மூதா" என்றார். இதுகாறும், முல்லையும் குறிஞ்சியுமாயவை நல்வளம் நல்கும் மருதவயலாகி மாண்புற்று விளங்கும் திறங்கூறிய ஆசிரியர், அதன்கண் நிற்கும் மரவகையும் நீர்நலமும் கூற லுற்று, "ஒலி தெங்கின் இமிழ் மருதின்" என்றும், "புனல் வாயிற் பூம் பொய்கை" யென்றும் கூறினார். இமிழ் மருதெனவே, இமிழ்தற் குரிய வினைமுதல் வருவிக்கப்பட்டது. பொய்கைக்கண்ணுள்ள நீர் சென்று வயல்களிற் பாய்ந்து பயன் விளைக்கும் வாயிலாதலின், கால் வாயைப் "புனல் வாயில்" என்றார். "வயலமர் கழனி வாயிற் பொய்கை" (புறம் 354) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வாறு நீர்வளம் மிகுந்து செல்வம் சிறத்தலால் புலவர்பாடும் புகழ் பெறுவதாயயிற் றென்பார். "பாடல்சான்ற பயங்கெழு வைப்பின் நாடு" என்றார். வைப்பு, ஊர்கள்.

இவ்வண்ணம் கவின்மிக்கு விளங்கும் நாடு சேரலாதனைப் பகைத் தமையா லெய்தும் அழிவினை இனிக் கூறுகின்றார்.

10-19. நாடுகவினழிய.....பாழாயினவே.

உரை: நாடுகவின் அழிய - (மேற்கூறிய) நாடுகள் தம் அழகு கெடுமாறு; நாமம் தோற்றி - அந்நாட்டிடத்து உயிர்கட்கு அச்சத்தைத் தோற்றுவித்து; நீ சிவந்து இறுத்த - நீ வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகையிட்டதனால்; கூற்று அடூஉ நின்ற யாக்கை போல - கூற்றுவனால் அடப்படும் யாக்கை புல்லெனத் தோன்றிப் பொலிவழிவது போல; நீர் அழிபாக்கம் - தம் நீர்மை யழிந்த பேரூர்கள்; விரிபூங் கரும்பின் கழனி - விரிந்த பூவையுடைய கரும்பு விளையுங் கழனிகள்; புல்லென-புல்லென்று தோன்ற; திரிகாய் விடத்தரொடு-முறுக்கியதுபோலும் காயை யுடைய விடத்தேரை மரங்களுடன்; கார் உடை போகி-கரிய உடையென்னும் மரங்கள் நெடிது வளர்ந்தோங்க; கவைத் தலைப் பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க-கவைத்த தலைமயிரினையுடைய பேய்மகள் கழுதினை யூர்ந்து திரிய; ஊரிய நெருஞ்சி-பரந்த நெருஞ்சிமுள் மிகுந்து; நீறாடு பறந்தலைத் தாது எரு மறுத்த- நீறுபட்ட போர்க்களத்தின் புழுதிபடிந்து பொலிவிழந்த; கலி யழி மன்றத்து- மக்களும் மாவும் செய்யும் ஆரவாரம் இல்லையாயழிந்த ஊர் மன்றத்தின்கண்; ஊக்குநர் உள்ளம் அழிய-செல்லுமாறு கருதுவோர் மனவெழுச்சி அச்சத்தால் அழிய; உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் பாழாயின-கருதிச் செல்வோருடைய மன வலியைக் கெடுத்து உடல் நடுங்கச் செய்யும் பாழிடங்களாயின:-

நாடுகவினழிய, தோற்றி, இறுத்த, நீரழிபாக்கம், கழனி, விடத்த ரொடு சாருடை போகி, பேய்மகள் இயங்க, நெருஞ்சி மன்றத்தின்கண் ஊக்குநர் உள்ளம் அழிய, உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் பாழாயின என வினை முடிவு செய்க. உடைபோக வென்பது போகி யென நின்றது. நாடுகவி னழிதற்குப் போர்வினை ஒரு காரணமாயினும், நாட்டு மக்கள் மனத்தே அச்சம் பிறப்பித்து, உள்ளத்திட்பத்தைச் சிதைத்தல் பெருங் காரணமாதலை விளக்குவார் "நாமம் தோற்றி" என்றார். இஃது அண்மையில், மேனாட்டுச் சருமானியர் (Germans) செய்த போர்ச் சூழ்ச்சிகளுள் தலையாயதாக விருந்ததை நாம் கண்டோம். சேரலாதன் பெருவெகுட்சியுடன் தன் பெரும்படைகொண்டு தங்கியதனால், நாட்டு மக்கள் அஞ்சி யலமந்து நீங்கினாராக, பேரூர்கள் காவலின்மையின் தம் செல்வநலமும் சிறப்பும் குன்றின வென்பார், "நீரழிபாக்க" மென்றும், நாள் செல்லச்செல்ல அவற்றின் பொலிவும் தேய்ந்து பாழாயிற் றென் பார், "கூற்றடுஉ நின்ற யாக்கை போல விருபூங் கரும்பின் கழனி புல்லென" என்றும் கூறினார். "நீர்முற்றி மதில்பொரூஉம் பகை யல்லால், நேராதார், போர்முற்றென் றறியாத புரிசைசூழ் புனலூர" (கலி 67) என்பதை யுட்கொண்டு, "நீரழிபாக்க மென்றது, வெள்ளத் தான் அழிவுபடி னல்லது பகைவரான் அழியாத பாக்கம் என்றவாறு" என்றும், கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீ சிவந்து எனக் கூட்டி, "இனிக் கூற்றுவனை யட்டுநின்ற யாக்கையையுடையா னொருவன் உள னாயினும், அவனைப்போல நீ சிவந்து என்றுரைப்பாரு முளர்" என்றும் கூறுவர் பழையவுரைகாரர். இறுத்த என்னும் பெயரெச்சம் கார ணப்பொருட்டு. விடத்தர், விடத்தேரை யென்னும் மரம். உடை, ஒருவகை முள்மரம். கருநிறத்தாதலின், "காருடை" யெனப்பட்டது. போகுதல், உயர்தல். பாழிடத்தே கழுதும் பேயும் வாழு மென்ப வாதலின், "பேய்மகள் கழிதூர்ந் தியங்க" என்றார். பேய்மகளின் தலைமயிர் காய்ந்து செம்பட்டையாய் இருபிளவாய் நிமிர்ந்து நிற்றலின், "கவைத்தலைப் பேய்மகள்" என்றார். இன்றும் தலைமயிர் எண்ணெயும் நீரும் படாது நெடுநாள் விட்டவிடத்து, நுனி பிளவுபடுதல் கண்கூடு; ஆகவே, தலையென்பது ஆகுபெயராதல் காண்க. ஊர்தல், பரத்தல். "பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை" (கலி.99) என்றாற்போல. பறந்தலை, போர்க்களம். போர் வீரர் தம்முட் கலந்து போருடற்று மிடத்து, அக்களம் புழுதிமிக்கு நீறாதலின், "நீறாடு பறந்தலை" யென்றும், ஊர்ப்புறத்தே போர் நிகழ்தலின், ஆண்டெழும் புழுதி சென்று மன்றத் திற் படிந்து மாசு படுத்துதலால், "நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து" என்றும் கூறினார். தாது எரு, நுண்ணிய புழுதி. மறு, குற்றம், அழுக்கு. மறுத்த, மறுவினையுடைத்தாகிய என்றவாறு. மாவும் மாக்களும் வழங்குதலின்றிப் பாழ்பட்ட மன்றத்திற்குட் செல்ல ஒருவர் விரும்பின், அவ்ர உள்ளம் எழாவகை அச்சம் தோன்றி அதனை அழிவித்த லின், "உள்ளம் அழிய" என்றும், ஒருகால் துணிந்து செல்லக் கருதின், அவர்தம் மனத்திட்பம் சிதைந்து கெடுதலின், "ஊக்குநர் மிடல் தபுத்து" என்றும் கூறினார். தபுத்தல்வினை பனிக்கும் என்பதனோடு இயைய வேண்டிப் பழையவுரைகாரர், "தபுத் தென்பதனைத் தபுக்க வெனத் திரிக்க" என்றும், "மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழென்றது, அம்மன்றிலே போதற்கு உள்ளம் அழியச்செய்தே பின்னும் தம் கரும வேட்கையாற் போக மேற்கொண்டவ ருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்கு தற்குக் காரணமாகிய பாழ் என்றவா" றென்றும் கூறுவர்.

20-28. காடே ............. காத்தநாடே

உரை: பெரும-பெருமானே; காடு கடவுள் மேன- காடுகள் முனிவர் விரும்பி வாழும் இடமாக;புறவு-முல்லைக் கொல்லைகள்; ஒள்ளிழை மகளிரொடு ள்ளர் மேன-ஒள்ளிய இழையணிந்த மகளிரொடு மள்ளர்கள் உறையும் இடமாக; ஆறு- காடும் புறவுமல்லாத பெருவழியானது; அவ் வனைத்து-அவற் றைப்போலச் செல்வோர் இனிது செல்லும் இயல்பிற்றாக; அன்றி யும்-இவை யல்லாமலும்; ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ-நிலத்தே விளையும் எண்வகைக் கூலங்களையும் விற்கும் வணிகர் குடியைப் பேணி; குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி-குடி மக்களைப் பாதுகாக்ககும் காணியாளர் சுற்றத்தைச் சிறப்புற வோம்பி; அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது-செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால்; மழை வேண்டு புலத்து மாரி நிற்ப-வேண்டும் புலங்களில் வேண்டுங்காலத்து மழை பொழியாநிற்க; நீ காத்த நாடு-நீ காத்தோம்பும் நாடு; நோயொடு பசி யிகந்து ஒரீஇ-நோயும் பசியும் இல்லையாக நீங்கி; பூத்தன்று- பல்வளமும் நிரம்பியுள்ளது. எ-று.

உலகியல் நெறி நில்லாது கடவுள் நெறி நிற்றலின், முனிவர் கடவு ளெனப்பட்டனர்; " தொன்முது கடவுட் பின்னர் மேய" (மதுரை.41) என்றாற்போல. அரசன் கோல் செவ்விதாயவழி மாதவர் நோன்பு இனிதியலுதல் பற்றி, "காடு கடவுள் மேன," என்றுமா, புறவங்களில் மள்ளர் மகளிரொடு இயங்கினும் அவர்தம் கற்புக்கெடுவ தின்மையின், "புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன" என்றும் கூறினார். மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி லின்றால்" (மணி. 22: 208-9) என்று சாத்தனார் கூறுதல் காண்க. போரின்மை யின் மள்ளர் புறவங்களில் தொழில் செய்கின்றனரென வறிக. புறவுக ளாவன: வரகு, சோளம், துவரை முதலிய கூலங்கள் விளையும் கொல்லை கள்; ஈண்டுச் சிறுசிறு காடுகளும் உண்டு; ஆங்கு இடையர் தம் ஆனிரை களை மேய்ப்பர்; காட்டிடத்தே முனிவரரும் புறவங்களில் மள்ளரும் இருத்தலின் வழிச்செல்வோர்க்கு ஆறலை கள்வராலும், பிற விலங்குக ளாலும் இடையூ றின்மையின், அவ்வந்நிலதது வழிச்செல்லும் பெரு வழிகள் இனியவாயின வென்பார், "ஆறே அவ்வனைத்து" என்றார். அவ்வென்னும் சுட்டு, காட்டையும் புறவையும் சுட்டிநின்றது. "காடே கடவுள் மேன என்றது, நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களான எ-று. ; புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது, சிறுகாடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகளாயின எ-று.ஆறே அவ்வனைத் தென்றது, காடும் புறவுமல்லாத பெருவழிகளும் ஆறலை கள்வரும் பிற இடையூறுமின்றி, முன் சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி, ஆறலை கள்வரின்றிக் கூலம்பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் கூலம் பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர் பாரத்தை ஓம்பி மழைவேண்டிய புலத்து மாரி நிற்ப வென்றும் கூலம் பகர்நர் குடி புறந்தருதலை ஆற்றின் தொழிலாகவும்,குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழையின் தொழிலாகவும் கூட்டியுரைப்பாரு முளர்" என்பது பழைய வுரை. இந்நாட்டில் கூலம் விளைப்போரும் விற்போரும் பெரும்பாலராத லின், இவரை விதந்து "கூலம் பகர்நர்" என்றும், "குடிபுறந் தருநர்" என் றும் அவரவர் தொழின்மேல் வைத்துரைத்தார். குடிபுறந்தருநர்: உழுவிப் போரும், குடிகள் உழுவோருமாவர்; குடிபுறந்தருவாரின் கீழ்க் குடிகள் மிகப் பலராய் அவரைச் சுற்றி வாழ்தலின், அச்சுற்றத்தைக் "குடிபுறந் தருநர் பாரம்" என்றார்; "பகடுபுறந் தருநர் பார மோம்பி" (புறம்35) என்று பிறரும் கூறுதல் காண்க. பண்டம் விளைப்போரும் அதனைப் பிற நாடுகட்குக் கொண்டுசென்று மாறுவோரும் நாட்டின் நல்வாழ்விற் குத் துணைவராதலைத் தேர்ந்து நடாத்தும் அரசியற்சிறப்பு இப்பாட்டால் வெளிப்படுமாறு காண்க. செவ்வாயும் வெள்ளியும் சேர்ந்தால் மழை பெய்யா தென்பவாகலின், "அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது" என்றார். செங்கோல் கோடின் இக்கோள்கள் நிலைதிரியு மென்ப; திரியின் நோயும் பசியு முளவாமாதலின், "நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடு" என்றார்.

பெரும, ஆரல் பிறழ்நவும் உழாது வித்துநவும், எருமைநிரை தடுக்குநவும், ஆம்பலார்நவும், தெங்கும் மருதும் பொய்கையும், வைப்பு முடைய நாடுகள், நின்னைப் பகைத்தமையின், நீ சிவந்த நீரழிபாக்கம் கழனி புல்லென, காருடை போக, பேய்மகள் இயங்க, உள்ளுநர் பனிக்கும் பாழாயின;நீ காத்தநாடு,காடு கடவுள் மேன வாக,புறவு, மள்ளர் மேன வாக,ஆறு,அவ்வனைத்தாக,கூலம் பகர்நர் குடிபுறந் தராக்*,குடிபுறந்தருநர் பாரம் ஓம்பி,வெள்ளி யோடாவகைப் பசியிகந்து ஒரீஇப் பூத்தன்று என இயையும்.

கூற்றடூஉ நின்ற யாக்கை போல, நாடுகவி னழிய, நாமம் தோற்றி, நீ சிவந் திறுத்த நீரழிபாக்கங்கள், கழனி புல்லெனக், காருடை போக, கழுதூர்ந் தியங்க,பாழாயின; நீ காத்த நாட்டிற் காடு கடவுளால் மேவப் பட்டன; அந்நாட்டுப் புறவுகள் மள்ளரால் மேவப்பட்டன; அந்நாட்டு ஆறு அவ்வனைத்தாயிற்று; அன்றியும், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக், குடிபுறந் தருநர் பார மோம்பி, நீ காத்தநாடு மழைவேண்டு புலத்து மாரி நிற்ப,நோயொடு பசியிகந் தொருவப் பூத்தது எனக் கூட்டி வினைமுடிவு செய்க வென்பர் பழையவுரைகாரர்.

இதன்கண் பகைவர் நாடழிவு கூறுமுகத்தால் சேரலாதனது வெற்றிச் சிறப்பும்,தன்னாடு காத்தல் கூறுமாற்றால் அரசியற் சிறப்பும் கூறப்பட்டமையின், "இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும், தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று" என்பர்.

தொறுத்த வய லாரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு வுழாது வித்து நவும் என்பனவும், "ஒலிதெங்கி னிமிழ் மருதின், புனல்வாயிற் பூம் பொய்கை யென்பனவுமாகிய நான்கும், வஞ்சியடியும், ஏனைய அளவடியு மாதலின், இப்பாட்டு வஞ்சித்தூக்கும் செந்தூக்குமாயிற்று. "ஆசிரிய நடைத்தே வஞ்சி" (தொல் செய் 107) என்றலின், ஆசிரியப் பாட்டின் கண் வஞ்சித்தூக்கு வந்ததென வறிக. பிறாண்டும் இவ்வாறு வருவன வற்றை அமைத்துக்கொள்க..


2.4. சான்றோர் மெய்ம்மறை

14

    நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
    அளப்பரியையே
    நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
    ஐந்தொருங்கு1 புணர்ந்த விளக்கத் தனையை
    போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
    5
    துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை
    அக்குர னனைய கைவண் மையையே
    அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
    போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
    கூற்று வெகுண்டுவரினு மாற்று2மாற் றலையே
    10
    எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
    நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை3
    வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
    வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்4
    ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ
    15
    பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
    படையே ருழவ பாடினி வேந்தே
    இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
    கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
    முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
    20
    கெடாஅ நல்லிசை நிலைஇத்
    தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே.

--------------
1 வந்தொருங்கு-பாடம். 2 வரினும்பாற்று-பாடம்
3 மேமறை-பாடம் 4 வண்டுபடு துப்பின்-பாடம்

துறை: செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணமும், சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: சான்றோர் மெய்ம்மறை.

1-4 நிலநீர்.............விளக்கத்தனையை.

உறை: நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்-நிலமும் நீரும் காற்றும் விசும்பும் என்ற நான்கினையும் போல; அளப் பரியை- நீ பெருமையளந்து காண்டற்கு அரியை யாவாய்; நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்-நாண் மீன்களும் கோள் களும் திங்களும் ஞாயிறும் மிக்க நெருப்பும் என்ற; ஐந்து ஒருங்கு புணர்ந்த-ஐந்தும் ஒருஙகுகூடினாற் பிறக்கும்; விளக் கத்து அனையை-ஒளிபோலும் ஒளியுடையையாவாய்,-

அளத்தற்கரிய பெருமையுடையவாகலின், நில முதலியவற்றைக் கூறினார்; "இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு, அவையளந் தறியினும் அளத்தற் கரியை;" (புறம் 20) என்று பிறரும் கூறுதல் காண்க. இதன் கண்ணும் தீயொழிந்த ஏனைப் பூதங்கள் எண்ணப்பட்டிருப்பதும், "அளந் தறியினும்" என்றதனால் அளத்தற்கருமை பெறப்படுவதும் அறிக. தீ ஒளிப்பொருளாதலின், அதனை நாள் கோள் முதலியவற்றோடு கூட்டினார். பழையவுரைகாரர், பூதங்கள் ஐந்தையு மெண்ணாது தீயை யொழித்தது மேல்விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின்றவற்றோடு கூட்டவேண்டி யென்பது; ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகு கேது வென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஏழினும் சிறப்புப்பற்றிவேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிறென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஐந்தையு மென்பது" என்பது ஈண்டு நோக்கத்தக்கது. நிலம் நீரினும், நீர் நெருப்பினும், நெருப்பு வளியினும், வளி விசும்பினும் ஒடுங்குமாகலின், அம்முறையே பற்றி,"நிலநீர் வளியொடு விசும்" பென்றார். நாளும் கோளும் திங்களும் இரவுப்பொழுதில் தோன்றித் தண்ணியவொளி செய்வன வாகலினாலும், வெம்மையும் மிக்க வொளியுமுடைய ஞாயிற்றை யடுத்திருத்தலாலும், "ஞாயிறு கனையழல்" என்று சேரக் கூறினார். ஐந்துமென்ற வும்மை விகாரத்தால் தொக்கது. நாள் கோள் முதலிய ஐந்தும் ஒருங்கு கூடியவழிப் பிறக்கும் ஒளியைப்போலும் ஒளி யென்றது, சேரலாதனது நல்லொளி எல்லா நிலத்தினும் சென்று பரவி ஆட்சி புரிதலைக் குறி்து என்க.

5-7 போர்தலை.............கைவண்மையையே

உரை: போர்-போர் செய்வதில்; தலைமிகுத்த ஈரைம் பதின்மரொடு- மிக்க மேம்பாடுற்ற நூற்றுவருடன்; துப்புத் துறை போகிய-துணைவலியாகும் நெறியில் சடைபோகிய; துணி வுடை ஆண்மை-அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய; அக்குரன் அனைய-அக்குர னென்பானைப்போல; கைவண்மையை- வள்ளன்மை யுடையைாவாய்-

பாண்டவர் ஐவரொடு மலைந்த பேராண்மையையுடைய நூற்றுவரது மறச்சிறப்பை இவ்வாசிரியர், "போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு" என்றாற்போல, "நிலந்தலைக்கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மர்" (புறம். 2) என முரஞ்சியூர் முடிநாகனாரும், "மறந்தலைக் கொண்ட நூற்றுவர்" (கலி 52) எனக் கபிலரும் கூறியுள்ளார். போர்த்திறம் பலவற்றின்கண்ணும் நூற்றுவர்க்குத் துணைவலியாந் துறை யில் எஞ்சாது ஒழுகினமையின், "துப்புத்துறை போகிய" என்றும், துணிவில்வழி ஆண்மை சிறவாமையின், "துணிவுடை யாண்மை" யென்றும்,வள்ளன்மையில் மிக்க மேம்பட்டோனாதலின், அதனை யுயர்த்தும் கூறினார்.துப்பு,துணை; "துன்பத்துள் துப்பாயார்"(குறள், 106) என்புழிப்போல. "அக்குரன், பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களு ளொருவனுமாகிய அக்குரன்போலும்; கர்ண னென்று நினைத்தற்கு மிடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை" யென்று டாக்டர் திரு உ.வே.சாமிநாதையர் கூறுவர்.

8-10. அமர்கடந்து........ஆற்றலையே

உரை: அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்-போரில் வஞ்சனையின்றிப் பொருது சிறந்த தும்பைப் பகைவருடைய; போர் பீடு அழித்த-போரினையும் அவர்தம் பெருமையினையும் அழித்தொழித்த; செருப்புகல் முன்ப-அத்தகைய போரை விரும்பும் வலியையுடையோய்; கூற்று வெகுண்டு வரினும்- கூற்றுவனே சினங்கொண்டு பொர வந்தாலும்; மாற்றும் ஆற்றலை- நீ அவனைப் பிறக்கிட் டோடச் செய்யும் ஆற்றலை யுடையை யாவாய்-

வெட்சி, கரந்தை முதலாகப் பல்வகைப் போர்களைச் செந்நெறியிற் பொருது சிறந்தோரே, பகைவர் அதிரப்பொரும் தும்பைப்போர் செய்ய முற்படுபவாதலின், அவரைத் "தும்பைப் பகைவ" ரென்பவர், "அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்" என்று சிறப்பித்தார். அவர் செய்யும் போரும், அப்போரால் அவர் பெற்றிருக்கும் பீடும் உயர்ந்தன வாதலின், அவற்றை யழித்த பெரும்போரைச் செய்தலின், "தும்பைப் பகைவர் போர் பீடழித்த முன்ப" என்றும், அம் முன்பினால் மேலும் போர்விரும்பும் அவன் மறப்பண்பை, செருப்புகல் முன்ப" என்றும் வியந்துரைத்தார்; "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" (புறம்.31) எனவும், "செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி" (முருகு.67) எனவும் சான்றோர் போர்வேட்கையைப் புகழ்ந்தோதுதல் காண்க. முன்னிற்பார் இலலாத முரணுடைமைபற்றி "முன்பன்" என்ப போலும். உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கிக் கூறுபடுக்கும் முறைமை யும் அத் தொழிற்கென வேண்டும் வன்மையும் விரகும் இறப்ப வுடைமை யின், கூற்றுவனை வேறல் எத்திறத்தோர்க்கும் கூடாத செயலாயினும், அவனையும் வென்று முதுகிட்டோடச் செய்யும் மொய்ம்புடையாயென்றது, சேரலாதனது ஒப்புயர்வற்ற ஆற்றலைப் புலப்படுத்தற்கென வறிக. "பகையெனிற் கூற்றம் வரினும் தொலையான்" (கலி.43) எனக் கபிலர் கூறுதல் காண்க. மாற்றுதல், மார்பு காட்டி வருவானை முதுகு காட்டி யோடுமாறு செய்தல்.

11-12 எழுமுடி........சான்றோர் மெய்ம்மறை.

உரௌ: எழுமுடி கெழீஇய-அரசர் எழுவரது முடிப் பொன்னாற் செய்யப்பட்ட ஆரமணிந்த; திருஞெமர் அகலத்து- திருமகள் விரும்பியுறையும் பரந்த மார்பினையும்; நோன்புரித் தடக்கை-வன்மை பொருந்திய பெரிய கையினையு முடைய; சான்றோர் மெய்ம்மறை-வீரர்கட்குக் கவசம் போல்பவனே-

முடி, முடிப்பொன்னாலியன்ற ஆரத்துக்காதலின் ஆகுபெயர். பகை வரை வென்று அவர் முடிப்பொன்னால் ஆரமும் வீரகண்டையும் பிறவும் செய்து கோடலும், காவல் மரத்தால் முரசு முதலியன செய்து கோடலும், அவர் நாட்டிற் பெற்ற பெருவளத்தைப் பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கலும் பண்டை வேந்தர் மரபு. சேரவேந்தர் பகை யரசர் எழுவர் திருமுடிப் பொன்னால் ஆரம் செய்துகொண்ட செய்தி யைக் காப்பியாற்றுக் காப்பியனார் "எழுமுடி கெழீஇய திருஞெம ரக லத்து..........தார்மிகு மைந்தி னார்முடிச்சேரல்" (பதிற்.40) என்றும் பரணர், "எழுமுடி மார்பின் எய்திய சேரல்" பதிற்.45) என்றும் இளங்கோவடிகள் "எழுமுடி மார்பநீ ஏந்திய திகிரி(சிலப். 28:169) என்றும் கூறுதல் காண்க. "எழுமுடி யென்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழு முடியானும் செய்ததோ ராரமாம்" என்பது பழையவுரை

"நீயே...... அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய, வல்லாளனை வயவேந்தே" (புறம்.40) என்பதனால், முடிப் பொன்னால் கழல்செய்து கோடலை யறியலாம். நோன்மை, வன்மை. அறப்போர் புரியும் ஆண்மையும் தறுகண்மையுமுடைய வீரரை, சான்றோர் என்றல் தமிழ் மரபாதலின், அவர்கட்குத் தலைவனும் முன்னணி வீரனு மாதலின், "சான்றோர் மெய்ம்மறை" யென்றார். இச் சான்றோரைத் தாக்கும் பகைவர் இவனைத் தாக்கி வென்றாலல்லது அவர்பாற் சேற லாகாமை தோன்ற "மெய்ம்மறை" யெனச் சிறப்பித்தார். இவ்வியை பால் அவர்கட்கு மெய்ம்மறைக்கும் கவசம்போறலின் இவ்வாறு கூறிய தென்க. "ஈண்டுச் சான்றோ ரென்றது போரில் அமைதியுடைய வீரரை; மெய்ம்மறை - மெய்புகு கருவி; மெய்ம்மறை யென்றது அச் சான்றோர்க்கு மெய்புகு கருவி போலப் போரிற் புக்கால் வலியாய் முன் னிற்றலின்; இச் சிறப்பு நோக்கி இதற்கு (இப் பாட்டிற்கு) 'சான்றோர் மெய்ம்மறை' என்று பெயராயிற்று" என்பர் பழைய வுரைகாரரும் என அறிக.

13-15 வானுறை...................கணவ

உரை: வான் உறை மகளிர் இகல் கொள்ளும் - விண்ணுல கத்து மகளிர் தம் நலத்தால் தனக்கு நிகராதல் வேண்டித் தம்முள் முற்பட்டு இகலும்; நலன் - மெய்ந்நலமும்; வயங்கு இழை கரந்த - விளங்குகின்ற தலைக்கலனால் மறைப்புண்ட; வண்டு படு கதுப்பின் - வண்டு மொய்க்கும் கூந்தலும்; ஈர் ஓதி ஒடுங்கு கொடுங் குழை - மண்ணுதலால் நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய செவியிடத்தே பெய்த வளைந்த குழையும் உடையளாகிய தேவிக்கு; கணவ - கணவனே, -

"மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத், தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் அணிகொளக், கொடுங்குழைக் கமர்த்த நோக்கின்" (பதிற். 81) என்று பிறரும் கூறுதல் காண்க.

கதுப்பும் குழையும் எண்ணப்படுதற் கேற்ப, வானுறை மகளிர் இகல் கொள்ளும் நலனும் என மாறிக் கூட்டுக. கொள்ளும் நலன், கொள்ளு தற் கேதுவாகிய நலன் என்க. அரசமாதேவியின் மெய்ந்நலம் கண்டு அதனோடு தம் நலமும் நிகராமென்பது கருதி வானவர் மகளிர் தம்மிற் கூடிப் பிணங்குதல் தோன்ற, "இகல் கொள்ளும்" என்றார். மானுட மகளிரொடு தம்மை நிகர்ப்பித்துக் காணவேண்டாத வானுறை மகளிர், இதுபோது அச்செயலை மேற்கொண்டு பண்பில்லன செய்தலின், அதற் கேதுக் கூறுவாராய், இகல்கொள்ளு மென்றாரென வறிக. பண்பில்லன செய்தலாவது, "அழகிற்கு அவளை யொப்பேன் யானே யானே என்று தங்களில் மாறுகொள்"ளுவது. இகலென்பது "பகலென்னும் பண் பின்மை பாரிக்கும்" (குறள். 851) என்று சான்றோர் கூறுதல் காண்க. தலைக்கூந்தலை மண்ணிச் சீரிய தலைக்கலன்களை யணிந்ததனால், கதுப்பு, வண்டு மூசுதலாலன்றித் தோன்றாமையின், 'வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்" என்றார். கூந்தலுக்கு நெய்யணிந்து நன்கு மண்ணுதல் செய்தவழி, அது செவியின் பின்னே ஒடுங்கிச் சுருண்டமைதலின், "ஈரோதி ஒடுங்கு கொடுங்குழை" யென்றார். தன் பின்னே ஓதியை ஒடுக்கி நிற்கும் செவி குழையால் விளக்கமுறுதலின், அதனையே விதந்து "கொடுங்குழை" யென்றார். ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை, அன் மொழித்தொகை. கதுப்பு மண்ணிய வழிச் சுருண்டு செவியின் புறத்தே ஒடுங்குமாறு தோன்றப் பழைய வுரைகாரர், "சுருள்" என்று உரைத்தவா றறிக.

16-17. பல்களிற்று........வேந்தே

உரை: பல் களிற்றூத் தொழுதியொடு - பலவாகிய யானைக் கூட்டத்தோடு வெல் கொடி நுடங்கும் - வெல்லுகின்ற கொடி யுயர்ந்து அசையும்; படை ஏர் உழவ - படையினை ஏராகக் கொண்டு பகைவர் படையாகிய புலத்தை யுழுகின்ற உழவனே; பாடினி வேந்தே - பாண் மகளுக்கு வேண்டும் பரிசு வழங்கும் வேந்தனே எ-று.

தொழுதி, தொகுதி. "இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு" (பதிற். 42) எனப் பிறரும் கூறுதல் காண்க. "வில்லே ருழவ, சொல்லே ருழவ" என்பன போல, சேரலாதனைப் "படையே ருழவ" என்கின்றார். பாடினி பாடும் பாட்டுக்கு மகிழ்ந்து அவட்கு இழை முதலாயின வழங்கி, அவளுடைய இசைப்புலமையைச் சிறப்பித்து ஆதரித்தலின், "பாடினி வேந்தே" என்றார்.

18-22. இலங்குமணி........உடனே

உரை: இலங்கு மணி மிடைந்த பொலங்கலம் - விளங்கு கின்ற மணிகள் செறிந்த பொன்னாற் செய்யப்பட்ட கலங்களைப் பூண்டு; திகிரி - அரசியலாகிய ஆணையைச் செலுத்தி; கடல் அக வரைப்பின் - கடல் சூழ்ந்த நிலவுலகத்தே; இப்பொழில் முழு தாண்ட - இத் தமிழகத்தை முழுதும் ஆண்ட; நின் முன் திணை முதல்வர் போல - நின் குலத்து முன்னோர்களைப் போல; நின்று - நிலைபெற இருந்து; இவ் வுலகமொடு - இவ்வுலகின் கண்; கெடாஅ நல் இசை நிலைஇ - அழியாத நல்ல புகழை நிறுவி; உடனே - அதனுடனே; நீ தவாஅலியர் - நீ மெலிவின்றி வாழ்வாயாக எ-று.

பொலங்கலத்தையும் திகிரியையு முடையராய்ப் பொழில் முழு தாண்ட என்று இயைத்தலு மொன்று. திகிரி, அரசாணை. அஃது இனிதுருளுதற்கு இடமாய் நிழல் செய்தலின், கொற்றக் குடையைத் "திகிரி" யென்றா ரென்றும், திகிரி யென்றதற்கு ஏற்பச் சாதியடை யாகப் பொலங்கலம் என்று விசேடித்தா ரென்றும் கூறுவர். உலக முழுதாண்ட நின் முன்னோர் தம் ஆட்சி நலத்தாலும் வெற்றிச் சிறப்பாலும் இறவாப் புகழ்படைத்து நிலைபெற்றதுபோல, நீயும் நிலைபெறுக வென வாழ்த்துவது கருத்தாகலின், "தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே" என்றார். புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு நல்கூர்தலும் இறத்தலும் உண்மையின், அவை யிலவாய் நிலைபெறுக என்றற்குத் "தவாஅலியரோ" என்றா ரென வுணர்க. தவல், வறுமை நோய் முதலிய வற்றால் மெலிதல்; "தவலும் கெடலும் நணித்து" (குறள் 156) எனபதற்குப் பரிமேலழகர் கூறும் உரை காண்க.

சான்றோர் மெய்ம்மறை, கொடுங்குழை கணவ, உழவ, வேந்தே, அளப்பரியை; விளக்கத்தனையை; கைவண்மையை; ஆற்றலை; அதனால் நீ முதல்வர் போல நல்லிசை நிலைஇ, தவாஅலியரோ என முடிக்க.

"நிலமுதற் பூதம் நான்கும் போலப் பெருமை யளத்த லரியை; நாண்மீன் முதல் ஐந்தையும் விளக்கத்தால் ஒப்ப; கைவண்மையால் அக்குரன் என்பவனை யொப்பை; அன்றி, முன்ப, நின் வலியிருக்கும்படி சொல்லின் கூற்று வெகுண்டு வரினும் அதனையும் மாற்றும் வலியுடையை; ஆதலால் சான்றோர் மெய்ம்மறை, கொடுங்குழை கணவ, படையே ருழவ, பாடினி வேந்தே, நின்குடி முன்திணை முதல்வர்போல நின்று நல்லிசையை நிலைப்பித்து இவ்வுலகத்தோடுகூடக் கெடா தொழிவாயாக என வினை முடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று" என்பர் பழையவுரை காரர்.

இப்பாட்டின்கண், ஒழுகுவண்ணமே யன்றிச் சொற்சீர் வண்ணமும் பயிலுதலின், அதனை விளக்கலுற்ற பழையவுரை, "அளப்பரியையே யெனச் சொற்சீரடி வந்தமையாற் சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீ ரென்றது, அளவடியிற் குறைந்தும் வஞ்சியோசையன்றி அகவ லோசையாயும் வரும் அடியினை" என்று கூறுகின்றது.

இதனை வாழ்த்தியலென்ப ரென்றும், பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டெனறும் ஆசிரியர் நச்சினார்க்கினியர், "வழங்கியன் மருங்கின்" (தொல். பொ 82) என்ற நூற்பாவுரையிற் காட்டிக் கூறுவர்.
-------------

2.5. நிரைய வெள்ளம்.

15

    யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
    முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
    மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
    நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
    பரந்தாடு கழங்கழி1 மன்மருங் கறுப்பக்
    5
    கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
    அழல்கவர் மருங்தி னுருவறக் கெடுத்துத்
    தொல்கவி னழிந்த2 கண்ணகன் வைப்பின்
    வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
    பீரிவர்பு பரந்த3 நீரறு நிறைமுதற்
    10
    சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
    புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
    புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
    அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
    பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
    15
    கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
    வளம்பல நிகழ்தறா நனந்தலை நன்னாட்டு
    விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
    கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
    சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின்
    20
    வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
    தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின்
    போர்வல் யானைச் சேர லாத
    நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென
    உண்டுரை மாறிய மழலை நாவின்
    25
    மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
    வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
    செய்த மேவ4 லமர்ந்த சுற்றமோடு
    ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும்
    பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி
    30
    நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர்
    மேயின ருறையும் பலர்புகழ் பண்பின்
    நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய
    யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென்
    மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா
    35
    தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்
    புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
    ஏம மாகிய சீர்கெழு விழவின்
    நெடியோ னன்ன நல்லிசை
    ஒடியோ மைந்தநின் பண்புபல நயந்தே.
    40

------------
1 கழங்குவழி - பாடம்; 2 கவினிழிந்த-பாடம்.
3 பீர்வாய் பரந்த- பாடம் ; 4 செய்தன மேவல்-பாடம்.

துறை: செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிரைய வெள்ளம்

உரை: மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி - மேகம் தவழ்ந்து தங்கும் மதிற்சுவர்களையும் அதனை யடுத்த காவற் காடுகளையும் அழித்து; நிரை களிறு ஒழுகிய - வரிசையாகக் களிறுகள் செல்லும்; நிரைய வெள்ளம் - பகைவர்க்கு நிரயத் துன்பத்தைத் தரும் நின் படை வெள்ளமானது; பரந்து - நாற் றிசையும் பரந்து செனறு; ஆடு கழங்கு அழிமன் - தாம் ஆடிக் காணும் கழங்கால் உள்ளமழிந்து அகநகர்க்கண்ணே மடிந்துறை யும் மன்னருடைய; மருங்கு அறுப்ப - சுற்றமாகிய தானையினைக் கெடுக்க; வேண்டு புலத்து யாண்டு தலைப் பெயர இறுத்து - நீ அழிக்கக் கருதிய நாட்டில் ஓர் யாண்டு கழியு மளவும் தங்கி; முனை எரி பரப்பிய - போர்முனைப்பட்ட வூர்களில் தீப்பரவக் கொளுத்தி யழிக்க வெழுந்த; துன்னருஞ் சீற்ற மொடு - நெருங்கு தற்கரிய சினத்துடன்; கால் பொர - காற்று மோதுதலால்; கொடிவிடு குரூஉப் புகை பிசிர - கொடிவிட்டெழும் நிறமமைந்த புகை பிசிராக வுடைந்து கெட; அழல் கவர் மருங்கின் - இட்ட தீப்பட்டு வெந்தழிந்த இடங்களைப்போல; உரு வறக் கெடுத்து- அத் தீப் பரவாத விடங்களைத் தம் முருக்குலைய நீ அழித்தலால்; தொல் கவின் அழிந்த - பழைய அழகிய நிலை யழிந்த; கண்ணகன் வைப்பின் - இடமகன்ற ஊர்களையும்,-

நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப, சீற்றமொடு நீ உருவறக் கெடுத்தலால் தொல் கவின் அழிந்த வைப்பின் எனக் கூட்டுக. பகை மேற் செல்வோர் போர்வினை செய்தற்குரிய காலமும் இடமும் வாய்ப்ப வெய்துங்காறும் இறுத்தல் வேண்டுதலாலும், அதற்குரிய காலமும் ஓர் யாண் டாதலாலும், "யாண்டுதலைப் பெயர வேண்டு புலத் திறுத்து" என்றார். (மதுரைக் 150) "வேந்துறு தொழிலே யாண்டின தகமே" (தொல் கற் 48) என்பது விதி. மேல்வந்தபோதே அடிபணியாது நெடிது தங்குமாறு இகல் விளைத்தமையால், அதற் கேதுவாய பகைவர் வலியழிப்பான் முனையிடத்தே எரியிட்டுக் கொளுத்தி மாறாச் சினம் சிறந்து விளங்குதலின், சேரலாதனை, "முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு" நின்றானென்றும், தீயிடாது பொருதழித்த இடங்கள் தீயால் அழிவுற்ற இடங்கள் போல உருக்குலைந் தழிந்தன என்பார், "அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்து" என்றும் கூறினார். மருங் கின் என்புழி இன்னுருபு ஒப்புப்பொருட்டு. செய்தெ னெச்சம் காரணப் பொருட்டு. மரம் ஈண்டுக் காவற்காடு; மதிற்கதவின் பின்னே கிடந்து அதற்கு வன்மைதரும் கணையமரம் எனினுமாம். களிறுகள் நிரை நிரை யாகச் செல்லும் இயல்பினவாதலின், “நிரைகளி” றென்றும், அவை எண்ணிறந்தனவாய் வெள்ளம்போல் பரந்து சேறலின், “நிரைகளி றொழுகிய வெள்ளம்” என்றும், இவ் யானைப் படையோடு கூடிய பெருந் தானை பகைவர்க்கு நிரயத் துன்பம் போலும் துன்பத்தைச் செய்யும் இயல்பிற்றாதல் தோன்ற, நிரைய வெள்ளமென்றும் கூறினார் “விரவுக் கொடி யடுக்கத்து நிரையத் தானையொடு” (சிலப். 26: 37) எனச் சான்றோர் கூறுதல் காண்க. “நிரையவெள்ள மென்றது, பகைவர்க்கு நிரையபாலரைப்போலும் படைவெள்ள மென்றவாறு; நிரைய மென்றது, நிரையத்து வாழ்வாரை; இச் சிறப்பானே இதற்கு (இப் பாட்டிற்கு) நிரையவெள்ளமென்று பெயராயிற்” றெனப் பழையவுரை கூறுகிறது.

“யானையுடைய படை காண்டல்முன் னினிதே” (இனி,40 : 5) என்பவாகலின், யானைப்படை விசேடித்துரைக்கப்பட்டது, அரணிடத்தே இவற் கஞ்சி மடிந்துறையும் பகை மன்னர் வெற்றியெய்துவது காண்பா ராய்க் கழங்கிட்டு நோக்கித் தமக்கு அது வாராமை யறிந்து ஊக்க மழிந்திருத்தல் தோன்ற, “ஆடுகழங் கழிமன்” என்றார். இனி, “எல்லா மெண்ணின் இடுகழங்கு தபுந” (பதிற். 32) என்பதுகொண்டு, எண் ணிறந்த தானைவீரரையுடைய கூட்டம் என்றற்கு, “ஆடுகழங் கழிமன் மருங்கு” என்றா ரெனினுமாம். மருங்கு; சுற்றம்; ஈண்டுத் தானைவீரர் மேற்று. நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப, இவன் தீயிட்டும் படை செலுத்தியும் அழித்த செய்தியை, “உருவறக் கெடுத்து” என்றார். காற்று மோதுதலால் தீயானது நாற்றிசையும் பரந்து எரிதலின், எழு கின்ற புகை எங்கணும் பரவி நுண்ணிய பிசிராய்க் கெட்டு மறைய, எரியு மிடம் கரிந்து உருவழிந்து சிதைதல் கூறியது, காடு உருவறக் கெட் டழிதல் புலப்படுத்தற்கு. இஃது எரிபாந்தெடுத்தல்.

9-15 வெண்பூ…………………...வந்திசினே

உரை: வெண்பூ வேளையொடு - வெள்ளிய பூக்களையுடைய வேளைக் கொடியும்; பைஞ்சுரை கலித்து - பசிய சுரைக் கொடியும் தழைத்து வளர; பீர் இவர்பு பரந்த - பீர்க்கங் கோடியேறிப் படர்ந்த; நீரறு நிறை முதல் - நீரற்ற உழுசால்களில்; முதல் சிதை சிவந்த காந்தள் - வேரோடு காய்ந்தழித்த சிவந்த காந்தள் நிறைந்து; புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் - புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும்; புல்லிலை மூதில் வைப்பின் - பனையோலை வேய்ந்த பாழ்வீடுகளே யுள்ள வூர்களையுடைய; புலஞ் சிதை அரம்பின் - பகைப்புலங்களை யழிக்கும் நின் மற மாண்பினை; அறியாமையால் மறந்து - தம் மறியாமையாலே நினையாது; நின் துப்பெதிர்ந்த பகைவர் - நின் பகைமையை யேறட்டுக்கொண்ட பகைவருடைய; நாடும் கண்டு வந்திசின் - நாடுகளையும் பார்த்து இங்கே வந்தேன் எ - று

புல்லிலை மூதில் வைப்பின் நாடு, நின் பகைவர் நாடு என இயைக்க. இவ்வைப்பின்கண் வாழ்வோர் நீங்கிவிட்டமையின், வீடுகள் பாழ்படுத லால், அவற்றில் வேளையும் சுரையும் தழைத்து வளர, கூரையில் பீர்க்கங் கொடி ஏறிப் படர்ந்திருக்க, உழுதொழித்த சால்களில் மழை பெய்த போது முளைத்து மலர்ந்த காந்தள் நீரற்றமையின் வேரோடு புலர்ந்தமை கூறுவார், நீரறு நிறைமுதல் சிதைசிவந்த காந்தள்" என்றார். வேளைப்பூ வெள்ளிதாதலை, "வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய, விரவு மொழிக் கட்டூர்" (பதிற்90) என்று பிறரும் கூறுதல் காண்க. "நீரறு நிறைமுதற் சிவந்த காந்தள்" என்பதற்கு, நீர் அற்றுப் புலர்ந்தமை யின், வளர்ச்சி நிறைந்த அடிமுதல் வாடிச் சிவந்த காந்தள் என்றுரைத்து, நிறைமுதல் உடையதாயினும், நீரறுதலால் தாங்காது சிதைந்தமை தோன்ற, "நிறைமுதற் சிவந்த காந்தள் முதல்சிதை மூதில்" என்றும், செங் காந்தள்; என்னாது சிவந்த காந்த ளென்றதனால், முதல்நிறை வுற்ற போழ்து சிவப்பேறிய காந்தளென்றும் கூறுதலுமுண்டு. ஆள் வழக் கற்ற இல்லங்களைக் கூறியவர், இனி, இம்மையில் இசையும், மறுமையிற் றுறக்க வின்பமும் விரும்பும் மறவர்போலாது ஆறலைத்தொழுகும் கொடு வினை மாக்களுறையும் இல்லங்களைக் கூறலுற்று, அவரைப் ”புலவுலில் லுழவிற் புல் லா" ளென்றும், தீவினையாற் கொள்ளும்பொருள் வாழ்விற்கு நலம் பயவாமையால், அவர்தம் இல்லங்கள் இலம்பாட்டிற் குறையுளாய்ப் புல்லிலை வேயப்பட்டுள்ளன வென்பார், “புல்லிலை வைப்பு” என்றும் கூறினார். பழையவுரைகாரர்,”புல்லிலை வைப்பென்றது, புல்லிய இலைக ளாலே வேயப்பட்ட ஊரெனறவாறு்; இதனை நூலாக் கலிங்கம் (பதிற்.12) என்றது போலக் கொள்க" என்றும், "புல்லா ளென்றது, புல்லிய தொழிலையுடைய ஆறலை கள்வரை" யென்றும் கூறுவர்.

இவ்விருவகை வைப்பினையுமுடைய நாடு பகைவர் நாடென்றும், அவர் சேரலாதன் தன்னைப் பகைத்தார் புலங்களில் செய்யும் அரம்பின் திறத்தை யறியின் அடிவணங்கி அவன் அருள்நாடி யிருப்ப ரென்றற்கு, "அறியாமையால் மறந்து" என்றும், அம்மறதியின் பயனே இக் கே டென் றும் கூறினாராயிற்று. அரம்பு செய்தல், துன்புறுத்தல். அரம்பு செய் தலைப் பகைவர்க் கேற்றி, அச்செயலால் "நின் துப்பு அறியாமையால் மறந்து எதிர்ந்து" கெட்டனர் என்றலு மொன்று. துப்பு, பகைமை; "துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்" (புறம் 380)

16-24. கடலவும்.........சேரலாத

உரை: கடலவும் - கடல்படு பொருளும்; கல்லவும் - மலை படு பொருளும்;யாற்றவும்-ஆறு பாயும் முலலை மருதம் என்ற நிலங்களி லுண்டாகும் பொருளும்; பிறவும் - வேறுநாட்டுப் பொருள்களுமாகிய; வளம் பல நிகழ் தரும் - வளம் பலவும் பெறப்படும்; நனந்தலை நன்னாட்டு - அகன்ற நலல நாட்டிலுள்ள; விழவு அறுபு அறியா - இடையறாத விழாக்களைச் செய்யும்; முழவு இமிழ் மூதூர் - முழவு முழஙகும் மூதூர்களில்; கொடி நிழற் பட்ட - பலவகைக் கொடிகளின் நிழலிலே யிருக்கும்; பொன்னுடை நியமத்து - பொன்னை மிகவுடைய கடை வீதிகளிலே; சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின்-சிறப்புப்பெற்ற வெற்றியும் கொடையும் தெரிவிக்கும் முரசு முழங்கும்; வயவர் வலிமிக்க வீரர்களுக்கு; வேந்தே-அரசே; பரிசிலர் வெறுக்கை- பரிசிலருடைய செல்வமாயுள்ளோனே; தார் அணிந்து-மாலை யணிந்து; எழிலிய-உயர்ந்த; தொடி சிதை மருப்பின்-பூண் கெட்ட கோட்டினையுடைய; போர்வல் யானை-போரில் வல்ல யானைகளையுடைய; சேரலாத-நெடுஞ்சேரலாதனே எ-று

நானிலத்துப் படும் பொருளனைத்தும் கூறலுற்றுக் கடலால் நெய்த லும், கல்லால் குறிஞ்சியும் கூறினமையின் ஏனை முல்லை மருதங்களை "யாற்றவும்" என்றதனாற் பெறவைத்தார். இவை யனைத்தும் தன் னாட்டிற் படுவனவாதலின், வேறுநாடுகளிலிருந்து வந்திருப்பனவற்றைப் "பிறவும்" என்றதனால் தழீஇக்கொண்டார். கடவுளர்க்கு விழாவும் மக்கட்குத் திருண விழாவும் இடையறாது நிகழ்தலின், "விழவறு பறியா முழவுமிழ் மூதூர்" என்றா். பொன்னும் பொருளும் நிறைந்திருத்த லால் "பொன்னுடை நியமத்து" என்றார்; "திருவீற் றிருந்த தீதுதீர் நியமம்" (முருகு.70) என்று நக்கீரனார் கூறுதல் காண்க. இக் கடைத் தெருக்களில் வெற்றி குறித்தும், விழாக்குறித்தும் கள், ஊன் முதலியன விற்பது குறித்தும் பல்வகைக் கொடிகள் எடுக்கப்படுவது உணர்த்துவார், "கொடி நிழற்பட்ட நியமத்து" என்றார்; "ஓவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச், சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி, வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள, நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி, புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி, கள்ளின் களிநவில் கொடி யொடு நன்பல, பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப், பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க" (மதுரை 365-74) என்று பிறரும் கூறுதல் காண்க. வீரர் தாம் போரிலே பெற்ற வெற்றியும், ஆங்குப் பெற்ற பொருளை இரவலர்க்கு வழங்கும் கொடையும் தெரிவிப்பாராய் முரசு முழக்குதலின், "சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின் வயவர்" என்றார். இனிப் பழையவுரைகாரர், "சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின் வயவ ரென்றது, வெற்றிப் புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற முரசினையுடைய வீர ரென்றவா" றென்பர். கலிமகிழ், வெற்றி குறி்துக் கொடை வழங்கும் ஆரவாரத்தோடு கூடிய பெருஞ் சிறப்பு; விழாவுமாம். வயவர்க்கு வேண்டுஞ் சிறப்பளித்து நன்கு ஓம்பு வதனால, "வயவர் வேந்தே" என்றார். பரிசிலர்க்குப் பெருஞ்செல்வம் நல்கி இன்புறுத்துவதுபற்றிப் "பரிசிலர் வெறுக்கை" யென்றார். எழில், உயர்ச்சி. "அம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து" (புறம்.68) என்புழிப்போல. ஈண்டு எழிலிய என்பதற்கு, அழகிய என்று புற நானூற் றுரைகாரர் கூறுவர். உயர்ச்சி யென்பதே சிறப்புடைத்தாத லறிக.பகைவர் மதிற்கதவினைக் குத்திப் பிளத்தலால் பூண் சிதைந்து நுனி மழுகிய கோட்டினை யுடைமையால், "தொடிசிதை மருப்பின் போர்வல் யானை" என்றார்; கடிமதிற் கதவம் பாய்தலின் தொடி பிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை" (அகம்.24) என ஆவூர் மூலங்கிழார் ஓதுதல் காண்க.

24-34 நீவாழியர்................மருண்டனென்

உரை: வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை - பகை முதலியவற்றால் மனம் துன்புறுவதின்றிப் பல நலமும் பெருகிய வாழ்க்கையினையும்; ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை - உண்மையே யுரைத்துப் புலனைந்து மடங்கிய ஒழுக்கத்தினையும்; நிரைய மொரீஇய வேட்கை - நிரய மெய்தாவகையால் நல்வினை செய்து நீங்கிய அறவேட்கையுமுடைய; புரையோர் - பெரியோர்; செய்த - தாம் செய்யும் நல்லறங்களையே; மேவல் அமர்ந்த சுற்ற மோடு- தாமும் விரும்பிச்செய்து சூழ்ந்திருக்கும் சுற்றத்தா ருடன்; பதி பிழைப்பறியாது - வாழ்பதி யிழுக்கும் குற்றமறி யாது; துய்ததல் எய்தி - நுகர்தற்குரியவற்றை இனிது நுகர்ந்து; மேயினர் உறையும் - விரும்பி வாழும்; பலர் புகழ் பண்பின் நீ- பலரும் புகழும் பண்பினையுடைய நீ; புறந்தருதலின் - காத் தோம்புதலால்; நோய் இகந்து ஒரீஇய - நோய் சிறிது மின்றாகிய; யாணர் நன்னாடும் - புது வருவாயினையுடைய நல்ல நாட்டையும்; உண்டு உரை மாறிய மழலை நாவின் - உண்ணத் தகுவனவற்றை நிரம்ப வுண்டதனால் நாத்தடித்துக் குழறும் மழலை நாவினால்; மென்சொற் கலப் பையர் - மெல்லிய சொற்களை வழங்கும் யாழ் முதலிய கருவிகளைப் பெய்த பையினையுடைய இயவர்; இவ்வுலகத் தோர்க்கு நீ வாழியர் என - இவ்வுலகத்தோர் பொருட்டு நீ வாழ்வாயாக என்று; திருந்து தொடை வாழ்த்த - குற்றமில்லாத யாழிசைத்து வாழ்த்த; கண்டு - என் இரு கண்களாலும் கண்டு; மதி மருண்டனென் - மதிமயங்கிப் போயினேன் எ-று

வாழ்க்கையினையும், கொள்கையினையும், வேட்கையினையும் உடைய புரையோர், சுற்றமொடு, பதிபிழைப் பறியாது, துய்த்தல் எய்தி, உறையும் நாடு, நீ புறந்தருதலின், ஒரீஇய நன்னாடு என இயைத்து, இந்நாட்டினை, கலப் பையர் திருந்து தொடை வாழ்த்தக் கண்டு மதிமருண்டனென் என முடிக்க. இவன் வாழ்வு உயர்ந்தோர் தாழ்ந்தோர் செல்வர் இரவலர் முதலிய பலர்க்கும் நலம் பயத்தலின், "நீ வாழியர் இவ்வுலகத் தோர்க்கு என" இயவர் வாழ்த்தின ரென வறிக., உண்ணத்தகுவன வாவன சோறும், ஊனும், கள்ளு முதலாயின. உண்டதன் பயனாக உரை குழறுதலின், ஈண்டுக் கள்ளே சிறப்பாகக் கொள்ளப்படும்; "உண்டு மகிழ் தட்ட மழலை நாவின், பழஞ் செருக்காளர் தழங்கு குரல்" (மதுரைக். 668-9) என்று மாங்குடி மருதனார் கூறுதல் காண்க. கலப்பை, யாழ் முதலிய இசைக்கருவிகளை யிட்டுவைக்கும் பை; "காவி னெங் கலனே சுருக்கினெங் கலப்பை" (புறம் 206) என வருதல் காண்க; "வாங்குபு தகைத்த கலப்பையர்"(பதிற். 23) எனப் பிறாண்டும் வரும். தொடை, யாழ் நரம்பு; "தேஎந்தீந் தொடைச் சீறியாழ்ப் பாண" (புறம்70) என்றாற் போல; ஈண்டு ஆகுபெயராய் யாழ்மேல தாயிற்று. பகை, பசி, பிணி முதலியவற்றால் வாழ்வோர் துன்புறுதலின்மை தோன்ற, "வெய்துற வறியாது நந்திய வாழ்க்கை" யென்றார். நந்துதல், பெருகுதல்.

இனி, இவன் நாட்டில் பெரியோர் மேயினர் உறைதற்குக் காரணங் கூறுவார், அவர்தம் வாழ்க்கையும் கொள்கையும் வேட்கையும் விதந் தோதினார். வெய்துறவைப் பயக்கும் பகை யச்சம் வறுமைத் துன்பங் கள் எஞ்ஞான்றும் இலவாதலின், அவர் அவற்றை யறிந்தில ரென்பார் "வெய்துற வறியாது" என்றும், எனவே அவர் அறிந்தன இம்மையிற் புகழ் பயக்கும் மெய்ம்மையும், மறுமையில் இன்பம் பயக்கும் அற வுணர்வுமே யென்பார், "ஒன்று மொழிந் தடங்கிய கொள்கை" யென்றும், "நிரையம் ஒரீஇய வேட்கை" யென்றும் கூறினார். "பொய்யாமை யன்ன புகழில்லை" (குறள் 296) என்றதனால் ஒன்று மொழிதல் புகழ் பயக்குமாறறிக. அடங்கிய கொள்கை யுடையார்க்கு இவ்வுலக வின்பத் தில் வேட்கை யின்மையின், உயர்நிலை யுலகத்து இன்ப வேட்கையும் அதற்குரிய தவவொழுக்கமும் அவர்பால் உளவாதல் கண்டு, "அடங்கிய கொள்கை"யும், "நிரைய மொரீஇய வேட்கை"யும் உடையோ ரெனச் சிறப்பித்தார் என வறிக. கொள்கை, ஒழுக்கம்; "குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்" (குறள் 1019) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, அவர் வாழும் இயல்பு கூறுவார் அவருடைய சுற்றத்தார் அவர் செய்த வற்றையே தாமும் விரும்பிச் செய்து, அச் செய்வினைக்கண் சிறந்த இன்பமும் புகழும் எய்துதலால் அவர்பால் அயரா அன்புற்றுச் சூழ்ந் திருந்தன ரென்றற்கு, "செய்த மேவ லமர்ந்த சுற்றமொடு" என்றார். செய்தன என்பது செய்த என அன்பெறாது நின்றது. "செய்த மேவ லமர்ந்த சுற்றமோ" டென்றது, மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையரென் னிளையரும்" என்பதையும், "ஒன்று மொழிந் தடங்கிய கொள்கை" யினையுடைய பெரியோ ரென்றது, "ஆன் றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்" என்பதையும், "பதிபிழைப் பறியாது மேயின ருறையும்" என்றது, "வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்" (புற 191) என்பதையும் சுட்டிநிற்பது காண்க. பகை, பசி, பிணி முதலிய காரணங்களால் மக்கள் தாம் வாழும் நாட்டைவிட்டு வேறு நாடுகட்குச் செல்லும் பண்பு, அவர்தம் நாட்டிற்குக் குற்றமாதலின், அத்தகைய குற்றம் இச் சேரலாத னோம்பும் நாட்டிடத்தே யின்மையின், "பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி" யென்றார். "பதியெழு வறியாப் பழங்குடி" (சிலப் 1:15) என்று அடிகளும் கூறுதல் காண்க. "நாடென்ப நாடா வளத்தன" என்றதும் இக்கருத்தே பற்றியதென அறிக. பதியெழு வறியாமை உயர்குடிக்குப் பண்பாதலின், எழுதலைக் குற்றமாக்கி, ஈண்டு ஆசிரியர், "பதி பிழைப்பு" என்றாரென வறிக. பதியெழு வறியாமைக்கு ஏது துய்ப்பன யாவையும் குறைவின்றிப் பெறுவதாதலின், அதனைத் "துய்த்த லெய்தி" யென்று குறித்தார்.

பகைவர் நாட்டையும் நின்னுடைய யாணர் நன்னாட்டையும் கண்ட போது, அப்பகைவர் அறியாமை காரணமாக அவர் நாடெய்திய சிறுமை யும், நீ புறந்தருதலால் நோயிகந் தொரீஇய நின்னாட்டின் பெருமையும் ஆக்கமும் எனக்குப் பெருவியப்புப் பயந்தன வென்பார் "மதிமருண்டனென்" எனறார். இஃது இருநாட்டிடத்தும் கண்ட சிறுமை பெருமை பொருளாகப் பிறந்த மருட்கை. "புதுமை பெருமை சிறுமை யாக்க மொடு, மதிமை சாலா மருட்கை நான்கே" (தொல்.மெய். 7) என்று ஆசிரியர் கூறுதல் காண்க."நீ வாழியர் இவ்வுலகத் தோர்க்கெனத் திருந்துதொடை வாழ்த்த என முடித்து, இவ்வுலகத்தோர் ஓக்கத்தின் பொருட்டு நீ வாழ்வாயாக வெனச் சொலலித் திருந்திய நரப்புத் தொடை யினையுடைய யாழொடு வாழ்த்த வென உரைக்க" என்றும், "செய்த மேவ லமர்ந்த சுற்ற மென்றது, சுற்றத் தலைவர் செய்த காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை மேவுதலையுடைய அத் தலைவரொடு மனம் பொருந்தின சுற்ற மென்றவா" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்

35-40 மண்ணுடை.........நயந்தே

உரை: மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு-மண்ணுல கத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு; எஞ்சாது ஈத்து-குறை வறக் கொடுத்து; கை தண்டா-கை யோய்தலில்லாத; கைகடுந் துப்பின்-கொடையும் மிக்க வன்மையு முடைமையால்; புரை வயின் புரைவயின்-அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த குடிகட்கு; பெரிய நல்கி-பெருமையுடைய பொருள்களை வழங்கி; ஏமமாகிய சீ்ர் கெழு விழவின்- இன்பம் தரும் சிறப்போடு பொருந்திய விழாவினையுடைய; நெடியோன் அன்ன-திருமாலைப் போன்ற; நல் இசை ஒடியா-நல்ல புகழ் குன்றாத; மைந்த-வலியினை யுடையோய்; நின் பண்பு பல நயந்து-நின்னுடைய பல்வகைப் பண்புகளையும் காண விரும்பியே மேற்கூறிய இரு நாடுகளையும் கண்டு மதிமருண்டேன் எ-று.

மண், மண்ணணு. மண்ணணு செறிந்திருத்தல்பற்றி, "மண்ணுடை ஞால மென்பது வழக்கு; "மண்டிணிந்த நிலனும்" (புறம்.2) என்று பிறரும் கூறுப. எஞ்சாது ஈத்து என்பதற்குத் தனக்கென ஒன்றும் கருதாது அனைத்தையும் ஈத்து என்றும் கூறுவர். எப்போதும் ஈதல் தோன்றக் " கைதண்டா" என்றார். கை, கொடை. கைக்கு ஈகையே துப்பா மென்றற்குக் "கைகடுந் துப்பின்" என்றார். புரை,உயர் குடிகள். அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த குடிமக்களை ஓம்புதல அரசியலாதலின், அவரைப் பேணும் செயலை, "புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி" என்றார். "புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி யென்றது,உயர்ந்த தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து" என்றவா றென்பர் பழையவுரைகாரர். நெடியோன், திருமால். "உரைசால் சிறப்பின் நெடியோன்" (சிலப். 22:60) என வருதல் காண்க. காத்தலால் உண்டாகும் புகழைக் கட்டுரைத் தலின், திருமாலை யுவமித்தார். "புகழொத் தீயே இகழுக ரடுநனை" (புறம்.56) என்று சான்றோர் கூறுதல் காண்க. பண்பு, அவரவர் தகுதி யறிந் தொழுகும் நலம்.

முடிபு: நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன்; அதுவேயன்றி, வேந்தே, வெறுக்கை, சேரலாத, நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய நின் நாடும் கண்டு மதிமருண்டேன்; இவை யிரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும் காண நயந்த நயப்பாகும் என முடிபு செய்க. இதனால் அவன் வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.


2.6. முகிலின் பாயல்

16

    கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி
    நாடுகண் டன்ன கணை துஞ்சு விலங்கல்
    துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள்
    பூணா வையவி தூக்கிய மதில
    நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லுபு
    5
    ஏன மாகிய நுனைமுரி மருப்பின்
    கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
    மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை
    நீடினை யாகலிற் காண்குவந் திசினே
    ஆறிய கற்பி னடங்கிய சாயல்
    10
    ஊடினு மினிய கூறு மின்னகை
    அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
    சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
    பாய லுய்யுமோ தோன்ற றாவின்று
    திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
    15
    வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
    எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
    புரையோ ருண்கட் டுயிலின் பாயல்
    பாலும் கொளாலும் வல்லோய்நின்
    சாயன் மார்பு நனியலைத் தன்றே.
    20

துறை: செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: துயிலின் பாயல்


1-9 கோடு...............வந்திசினே

உரை: கோடு உறழ்ந்து எடுத்த-மலைச் சிகரங்களுடன் மாறாட எடுத்த; கொடுங்கண் இஞ்சி-வளைந்த இடத்தையுடைய புற மதிலும்;நாடுகண் டன்ன-அகன்ற நாட்டைக் கண்டாற் போலப் பேரிடத்தை அகத்தே கொண்ட; கணை துஞ்சு விலங்கல்- அம்புக்கட்டுகள் பொருந்திய இடை மதிலும்; துஞ்சு மரக்குழாம் துவன்றி-கதவிடத்தே கிடக்கும் கணையமரங்கள் பல செறிந்து; புனிற்றுமகள் பூணா ஐயவி- இளமகள் அரைத்துப் பூசிக் கொள்ளும் ஐயவியாகிய வெண் சிறு கடுகல்லாத ஐயவித் துலா மரங்கள்; தூக்கிய மதில-நாலவிடப்பட்ட மதிலினுடைய; நல் எழில் நெடும் புதவு-நல்ல அழகிய நெடிய கதவுகளை; முருக்கிக் கொல்லுபு-தாக்கிச் சிதைத்தலால்; நுனை முரி மருப் பின்- நுனி முரிந்து குறுகிய மருப்பினை யுடையவாதலால்;ஏனம் ஆகிய-பன்றியைப் போலத் தோன்றும்; கடாஅம் வார்ந்து- மதம் சொரிந்து; கடும் சினம் பொத்தி-மிக்க சினம் கொண்டு; மரம் கொல்-கணையமரம் காவல்மரம் முதலியவற்றை யழிக்கும்; மழ களிறு முழங்கும் பாசறை-இளங் களிறுகள் பிளிறும் பாசறைக்கண்ணே; நீடினை யாகலின்-நெடிது தங்கிவிட்டா யாதலின்; காண்கு வந்திசின்-நின்னைக் காண்டற்கு வந்தேன் எ-று

கோடு, மலையுச்சி, மலையுள்ள விடத்தே அம்மலையே அரணாதலின், அஃதில்லாதவிடத்து மலையினும் உயர்ச்சியும் திண்மையு முடைத்தாக வெடுத்த அரண் என்றற்கு "கோடுறழ்ந் தெடுத்த" என்றும், அதுவும் வளைந்து வளைந்து கிடத்தலின், "கொடுங்கண் இஞ்சி" யென்றும் கூறினார். "கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சியென்றது, மலை யுள்ள இடங்களிலே அம்மலைதானே மதிலாகவும், மலையில்லாத இடங் களில் மதிலே யரணாகவும் இவ்வாறு மலையோடு மாறாட எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதில்" என்பர் பழையவுரைகாரர்.; அவரே "கோடு புரந் தெடுத்த" என்ற பாடமொன்று உளதாதல் கண்டு, "கோடுபுரந் தெடுத்த என்பது பாடமாயின், மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்க எடுத்த" என்று உரைக்க எனபர். கொடுமை, வளைவு. கண், இடம். உறழ்ந்து, உறழ வெனத் திரிக்க. அடைமதிற்பட்டவழி அகத் தோர் யாதொரு குறைவுமின்றித் தமக்கு வேண்டுவன அமைத்தும் விளைத்தும் கோடற்குரிய இடப்பரப்பு வேண்டியிருத்தலின்,"நாடுகண் டன்ன விலங்கல்" என்றும் புறத்தார் அணுகாவாறு தடுத்தற்குரிய கணை முதலிய படையும் எந்திரப் பொறிகளும் பொருந்தியிருப்பது தோன்ற "கணைதுஞ்சு விலங்கல்" என்றும், புறமதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலைபோல் நிற்றலின், "விலங்கல்" என்றும் கூறினார். ஆசிரியர் திருவள்ளுவனாரும், "சிறுகாப்பிற் பேரிடத்ததாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண்" என்றும், "கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார், நிலைக்கெளிதாம் நீர தரண்" (குறள்744,745) என்றும் கூறுதல் காண்க. "நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்றது, நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத்தே வளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையால் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற அப்புக்கட்டுகள் தங்கும் மலைபோன்ற இடைமதில்" என்றும், "இனி, இடையில் விலங்க லென்றதனை மாற்றார் படையை விலங்குதலையுடைய என்றாக்கி, முன்னின்ற கொடுங்கண் இஞ்சி யென்ற தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதி லென்றதனை ஆகுபெயரான் ஊர்க்குப் பெயராக்கி நாடுகண்டன்ன வூர் என மாறியுரைப்பாரு முளர்" என்றும் பழையவுரை கூறுகிறது. மாறியுரைப்பவர் கூற்றுப்படி, இப் பகுதி "கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி, கணைதுஞ்சு விலங்கல், துஞ்சு மரக்குழாம் துவன்றிப் புனிற்றுமகள் பூணா ஐயவி தூக்கிய, நாடு கண் டன்ன மதில நல்லெழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு" என வரும். இதன் பொருள் மலையொடு மாறாட வெடுத்த வளைந்த இடத்தை யுடைய மதில்களையும், கணைமரங்கொண்டு மாற்றாரை விலங்குதலை யுடைய, அப்புக்கூடுகள் நிறைந்த, இளமகளிர் பூணாத ஐயவித்துலாம் தொங்கவிடப்பட்ட மதிற்கதவுகளையு முடைய, நாடுகண்டாற்போன்ற ஊர்களினுடைய நல்ல உயர்ந்த நெடிய கதவுகளைத் தாக்கி என வரும். மதில் வாயிற் கதவுகளில் சேர நாட்டிலிருக்கும் கணைய மரங்களின் பன்மை குறித்து, "துஞ்சுமரக் குழாம்" என்றார். துவன்றி யென்னும் வினையெச்சம் மதில வென்புழி மதிலிடத்தவாகிய வென விரியும் ஆக்க வினை கொண்டது. புனிற்றுமகள் பூணா வையவி யென்றது, வெளிப் படையாய் ஐயவித் துலாம் என்னும் பொறியைக் குறித்துநின்றது. "ஐயவி யப்பிய நெய்யணி முச்சி" (முருகு ) என்பவாகலின், "புனிற்று மகள் பூணா வையவி" எனச் சிறப்பித்தார். உயரிய மணிகள் இழைத்த நெடிதுயர்ந்த கத வென்றற்கு "எழில் நெடும் புதவு" என்றார். இத்துணை வலிய கதவினைத் தாக்கி மருப்பு முரிதலின் வடிவின் சிறுமை, நீளம் முதலியவற்றால் பன்றி மருப்பை நிகர்த்தல் கொண்டு, "முருக்கிக் கொல்லுபு ஏனமாகிய" என்றும், அங்ஙன மாதற்கு நாணாது மறஞ் செருக்கிச் சினம் மிகுந்து ஏனை மரங்களைச் சா்ய்த்தலின், "மழகளிறு" என்றும், பெருங்குர லெடுத்துப் பிளிறுதலால் "முழங்கும்" என்றும் கூறினார். வினைமுடித்து இன்ன பருவத்தே வருவலெனத் தன் மனை விக்குக் குறித்த பருவம் வந்தும் மீளலுறாது பாசறைக்கண்ணே தங்கினா னாதலின், சேரலாதனை, "நீடினையாகலின் காண்கு வந்திசின்" என்றார். காண்கு, தன்மை வினைமுற்று. இது வந்திசி னென்னும் வினைகொண்டு முடிந்தது. "அவற்றுள், செய்கென் கிளவி, வினையொடு முடியினும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்" (தொல். சொல். 204) என்பது விதி.

10-13. ஆறிய.............உரியள்

உரை: ஆறிய கற்பின்-ஆறிய கற்பும்; அடங்கிய சாயல்- அடக்கம் பொருந்திய மென்மையும்; ஊடினும் இனிய கூறும் இன் நகை - ஊடற்காலத்தும் இன்மொழியே பகரும் இனிய முறுவலும்; அமிர்து பொதி துவர்வாய் - அமுதம் நிரம்பிய சிவந்த வாயும்; அமர்த்த நோக்கின் - அமர்த்த கண்களையும்; சுடர் நுதல் - ஒளி விளங்கும் நெற்றியும்; அசை நடை - அசைந்த நடையுமுடைய நின் தேவி; உள்ளலும் உரியள் - நின்னை நினைத்து வருந்துதற்கும் உரியளாவாள் எ-று.

சீறுதற்குரிய காரண முள்வழியும் சீற்றமுறாது தணிந்தொழுகும் அறக் கற்புடையா ளென்றற்கு, "ஆறிய கற்பின்" என்றும், மென்மையும் அடக்கத்தாற் சிறப்புறுதலின், "அடங்கிய சாயல்" என்றும் கூறினார். அடக்க மில்வழி, மென்மை, வன்மையாகிச் சீறிய கற்பாதற் கேதுவா மென்பது கருத்து. ஊடற்காலத்தே புறத்தே வெம்மையும் அகத்தே தண்மையு முடைய சொற்களே மொழிபவாயினும், நின் தேவிபால் அக் காலத்தே அவை யிருபாலும் இனிமைப் பண்பே யுடையவாம் என்பார், "ஊடினும் இனிய கூறும் இன்னகை" யென்றார். துவர்வாயின் வாலெயி றூறும் நீர் அமிழ்துபோல் மகிழ்செய்வ தென்றற்கு "அமிர்து பொதி துவர்வாய்" என்றும், உள்ளத்து வேட்கையை ஒளிப்பின்றிக் காட்டுவன வென்றற்கு, "அமர்த்த கண்" என்றும், அழிவில் கூட்டத்து அயரா வின்பம் செறிதலால் "சுடர் நுதல்" என்றும், பூங்கொம்பு நடை கற்ப தென நடக்கும் அழகு தோன்ற, "அசை நடை" யென்றும் கூறினார். பிறரும், "அடங்கிய கொள்கை, ஆறிய கற்பின் தேறிய நல்லிசை, வண் டார் கூந்தல்" (பதிற். 90) என்பது காண்க. வினையே ஆடவர்க் குயிராதலின், அவர் அதன்மேற் சென்றவழி, அவர் தெளித்துச் செல்லும் சொல்லைத் தேறியிருத்தல் தனக்குரிய அறமாயினும், அவரை நினைத்தற் குரிய குறிப்புத் தோன்றியவழி, "வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக" (ஐங். 6) என்றாற்போல வேட்ட நெஞ்சினளாதலேயன்றி, குறித்த பருவம் கழியப் பிரிந்த கணவன் வாராது நீட்டிப்பின் வருந்து தற்கும் உரியளாம் என்னும் இயைபுபற்றி, "உள்ளலும் உரியள்" என்றார். இனி, "உள்ளலும் உரிய ளென்றது, யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்கவென்ற நின் னேவல் பூண்டு நின்னை யுள்ளாதிருத்தலே யன்றி நீ குறித்த நாளுக்கு மேலே நீட்டித்தாயாகலின் நின்னை நினைத்து வருந்துதலும் உரியள்" என்பர் பழையவுரைகாரர்.

14-20. பாயல்......யலைத்தன்றே

உரை: தோன்றல் - சேரர் குடித் தோன்றலே; திரு மணி பொருத - அழகிய மணிகள் இழைத்த; தாவின்று திகழ்விடு பசும்பொன் பூண் - ஒட்டற்று விளங்கும் பசிய பொன்னாலாகிய பூணாரம்; வயங்கு கதிர் வயிரமொடு - விளங்குகின்ற கதிர்களை யுடைய வயிர மணிகளுடன்; உறழ்ந்து - மாறுபட்டு; சுடர் வர - ஒளிவிட்டு விளங்க; புரையோர் - கற்பால் உயர்ந்த நின் காதல் மகளிர்; எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - அரசர் எழுவர் முடிப்பொன்னாற் செய்த ஆர மணிந்த திருவீற்றிருந்த விரிந்த நின் மார்பாகிய; உண்கண் துயில் இன் பாயல் - மை தீட்டிய கண்கள் உறங்குதற்கினிநய பாயலிடத்தை; பாலும் - வினைமேற் செல்லுமிடத்து நீக்குதலும்; கொளாலும் - மனைவயின் இருக்குங்காலத்து நீக்காது கோடலும்; வல்லோய் - வல்லவனே; நின் சாயல் மார்பு - நினது மென்மையமைந்த மார்பு; நனி அலைத்தன்று - அவளது உள்ளத்தை வருத்துகின்ற தாதலால்; பாயல் உய்யுமோ - படுக்கைக்கண் கிடந்து வருந்தும் வருத்தத்தி னின்றும் உய்வாளோ; உய்யாளாதலால் விரைந்து சென்று அடைக எ-று.

தோன்றல், வல்லோய், அசைநடை (13) நின் மார்பு நனி யலைத் தன்றாதலால் பாயல் உய்யுமோ என இயைக்க. பசும்பொன்பூண் வயிர மொடு உறழ்ந்து சுடர் வர அகலத்துப் பெறும் பாயல் என இயையும். திருமணி, மாணிக்கமணி. திருமணியிழைத்த பொற்பூணும் வயிரமாலை யும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒளி செய்தலால், "திருமணி பொருத திகழ்விடு பசும்பொற் பூண்வயங்கு கதிர் வயிரமொடு உறழ்ந்து சுடர்வர" என்றார். இவ் வணிகளை மகளிர்க் கேற்றுக.

இனிப் பழையவுரைகாரர், மணியினையும் வயிரத்தையும் பொற் பூணுக்கே ஏற்றி, ”தாவின்று திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் என்றது, வலியில்லையானபடியாலே அழகிய மணிகளோடு பொருத ஒளிவிடுகின்ற பசும்பொன் என்றவாறு" என்றும், "பூண் பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து சுடர்வர வெனக் கூட்டி, பூணான பசும்பொன் தன்னிடை யழுத்தின வயிரங்களொடு மாறுபட்டு விளங்க என வுரைக்க" என்றும் கூறுவர்.

பசும்பொன்னைத் தாவின்று திகழ்விடு பசும்பொன்னெனச் சிறப் பித்தது, அது மணிகளோடு பொரத்தக்க ஒளிபெறுதற் கென்பார், "ஈண்டுத் தா வென்றது வலி;பொன்னுக்கு வலியாவது உரனுடைமை; இன்றென்பதனை இன்றாக வெனத் திரித்து இன்றாகையா லெனக் கொள்க என்றது,ஒளியையுடைய மணிகளோடு பொரவற்றாம்படி ஒட் டற்ற ஒளியையுடைய பசும்பொன் என்றவாறு" என்பர் பழையவுரை காரர். பொன், தன் வலியிழந்து மென்மை யெய்தியவழி மெருகுற்று, ஒளிபெருகும் நலம் உடைமைபற்றி, "ஓட்டற்ற ஒளியையுடைய பொன்" னென்று உரைத்தா ரென வறிக. ஓட்டற்ற பொன் நன்றாதலை, "தாவில் நன்பொன்" (அகம். 212) என்று சான்றோர் கூறுதல் காண்க.

உரிமை மகளிர் பலராதல்பற்றி, "புரையோர்" எனப் பன்மையாற் கூறினார். புரை, உயர்ச்சி; அஃதாவது கற்பாலுளதாகும் சிறப்பு. ஞெமர்தல், விரிதல். "இலம்படு புலவர் ஏற்றகை ஞெமரப்,பொலஞ் சொரி வழுதி" (பரி 10) என்று சான்றோர் கூறுதல் காண்க.

காமக்கலப்பிற் களிக்கும் மகளிர் தம் கணவனது விரிந்த மார்பின் கட் கிடந்து உறங்குவதைப் பெரிதும் விரும்புவராதலின், "அகலத்து உண்கண் துயிலின் பாயல்" என்றார். "நாடன் மலர்ந்த மார்பிற் பாயல், துஞ்சிய வெய்யள்" (ஐங் 205) என்று சான்றோர் கூறுமாற்றா லறிக.


வினைமேற்செலலுமிடத்து மகளிரை யுடன்கொண்டு சேறல் மர பன்மையின், அக்காலையில் அவர்பாற் சென்ற உள்ளத்தை அரிதின் மீட்டு மேற்கோண்ட வினைமேற் செலுத்தவேண்டி யிருத்தல்பற்றி யும், வினைமுடித்துப் போந்தவழி, மேற்செய் வினைக்கண் உள்ளம் சென்ற வழியும் அம் மகளிர்க்குக் கூட்டம் இடையறவின்றி யெய்த நல்கும் இயல்புபற்றியும், "பாலும் கொளாலும் வல்லோய்" என்றார். "இனித் தன் சாயல் மார்பிற் பாயல் மாற்றி....செல்லும் என்னும்" (அகம் 210) என்று பிறரும் கூறினார். பழையவுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதலை, "பாலும, கொளாலும் வல்லோய் என்றது, அவ்வகலப் பாயலை வேற்றுப் புலத்து வினையில்வழி நின்மகளிர்க்கு நுகரக் கொடுத் தற்கு நின்னிடத்து நின்று பகுத்தலையும், வினையுள்வழி அம் மகளிர் பால் நின்றும் வாங்கிக்கோடலையும் வல்லோய் என்றவாறு" என் பதனா லறிக.

திருஞெமரகலத்துப் பாயல் என்பதற்குப் பழையவுரைகாரர், "அகலப் பாயல் என இருபெயரொட்டாக்கி, அத்தை அல்வழிச் சாரியை யென்க; துயில் இனிய பாடல் என வுரைக்க" என்றும் "அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான், இதற்கு, துயிலின் பாயல் என்று பெயராயிற்று" என்றும் கூறுவர். அகலத்தைப் பாயலெனச் சிறப்பித்தல் "மலர்ந்த மார்பிற் பாயல்" "சாயல்மார்பிற் பாயல்" எனப் பயில வழங்கும் வழக்கால் அறிக. இனி, திருவீற்றிருக்கும் அவன் மார் பிடத்தே, அதுகுறித்துப் புலவாது, தம் புரையால், திருவின் இருப்பு ஆள்வினை யாடவர்க்கு அழகென்று தேறி, அம்மார்பிற் கிடந்து பெறும் பாயலே இனிதாம் எனக் கருதி விழையப்படும் சிறப்பு நோக்கித் "துயிலின் பாயல்" என்று பெயராயிற்றெனினும் ஆம். துயில்வார்க்கு ஊற்றின் பம் பயந்து மென்மையுற்று நிலவுவதால், அவன் மார்பினைச் "சாயல் மார்பு" என்றார். ஊரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சா யற்றே" (ஐங்.14) என்றும், "யாம் முயங்குதொறு முயங்குதொறு முயங்க முகந்து கொண், டடக்குவ மன்றோ தோழி,...நாடன் சாயல் மார்பே:" (அகம் 328) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

பாசறைக்கண் நீ நீடினையாதலின், நின்னைக் காணவநதேன்; நின் தேவியாகிய அசைநடை, நின்னை நினைத்தலும் உரியள். தோன்றல் வல்லோய், நின் மார்பு நனி யலைக்கின்றதாதலால், அவள் பாயல் உள் ளாள்; ஆதலால், நீ விரைந்து சென்று அவளை அடைக என வினைமுடிவு செய்துகொள்க. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம்.

இதனாற் சொல்லியது: அவன் வெற்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.


2.7. வலம்படு வியன்பணை.

17

    புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே
    பெரிய தப்புந ராயினும் பகைவர்
    பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலின்
    துளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக்
    கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
    5
    ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
    கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர்
    அரணங் காணாது மாதிரந் துழைஇய
    நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென
    ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
    10
    அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
    கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின்
    விசும்புதோய் வெண்குடை நுவலும்
    பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.

இதுவுமது.
பெயர்: வலம்படு வியன்பணை.

4-7 துளங்குபிசிர்....இயவர்

உரை: துளங்கு பிசிர் உடைய - அலைகின்ற அலைகள் சிறு சிறு திவலையாக வுடையும்படி; மாக்கடல் நீக்கி - கரிய கடலைக் கடந்து சென்று; கடம்பு அறுத்து - ஆங்கே யிருந்துகொண்டு குறும்புசெய்து திரிந்த பகைவரது காவல்மரமாகிய கடம்பினை வெட்டி வீழ்த்து; இயற்றிய வலம்படு வியன்பணை - அதனால் செய்யப்பட்ட வெற்றிதரும் பெரிய முரசுக்கு; ஆடுநர் - பகை வரை வெல்லும் போர் வீரர்; பெயர்ந்து வந்து - திரும்பப் போந்து; அரும்பலி தூஉய் - அரிய பலியினையிட்டுப் பரவ; கடிப்புக்கண் உறூஉம் - கடிப்பினைக்கொண்டு அம்முரசின் கண் ணில் அறைந்து முழக்கும்; தொடித் தோள் இயவர் - தொடி யணிந்த தோளையுடைய இயவர்கள்;

துளங்குதல், அசைதல். துளங்குதலை இடையறலின்றியுடைய அலையைத் துளங்கு என்றது ஆகுபெயர்; "வரைமருள் புணரி வான்பிசி ருடைய" (11) என்று பிறாண்டும் கூறினர். கடலை யரணாகக்கொண் டிருந்த பகைவராதலின், அது கடந்துசென்று அவரைத் தாக்கிய சிறப்பை, "மாக்கடல் நீக்கி" என்றார். பகைவர்க்கு அரணாயிருந்த நிலை யினைக் கெடுத்து அவரை அண்மிச்சென்று தாக்குதற்கு நெறியாயினது பற்றி "நீக்கி" யென்றுமாம். மாக்கடல், பெருங்கட லென்றுமாம். அக் கடம்பர் கடலை யரணாகக்கொண்டிருந்தனை, "இருமுந்நீர்த் துருத்தி யுள் முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுதல் தடிந்த நெடுஞ்சேர லாதன் (20) என்று பிறாண்டுக் கூறுதல் காண்க. அக் கடம்பினைத் தடிந்து முரசு செய்துகொண்ட செய்தியைச் "சால்பெருந் தானைச் சேர லாதன்' மாக்கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு" (அகம். 347) என்று பிறரும் கூறுவர். பகைவரைப் பொருதழித்துப் பெற்ற வெற்றிக்குறியாகச் செய்த பெருமுரசாதலால், "வலம்படு வியன் பணை" யென்றார். இனிப் பழையவுரைகாரர், "வலம்படு வியன்பணை யென்றது போர் செய்து வருந்தாமற் பகைவர் வெருவியோட முழக்கி அரசனுக்கு வெற்றி தன்பாலே படநின்ற முரச மென்றவாறு; இச் சிறப்பானே இதற்கு (இப்பாட்டிற்கு) வலம்படு வியன்பணை யென்று பெயராயிற்று" என்பர். "வலன் இலங்கு முரசின் வாய்வாள் வளவன்" (புறம். *90) என்று பிறரும் கூறுதல் காண்க. பகைவர்க்குக் காவலா யிருந்தது போய்த் தமக்கு முரசாய் வெற்றி முழக்கம் செய்து தன்னை யோம்பிய அப் பகைவர் அஞ்சி யோடச்செய்வது பற்றி, "வலம்படு வியன் பணை யென இதற்குப் பெயராயிற்றெனக் கோடல் சீரிதாம்.

ஆடுநர், வெற்றி பயக்கும் போர் வீரர். போரிடத்தே தாம் பெற்ற வென்றி குறித்து அவர்கள் பலிதூவி முரசினை வழிபடுதல் மரபாதலின், "ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்" என்றார். தூவ என்பது தூஉய் என நின்றது. "பெயர்ந்து வந்து" எனவே, அவர் சேரலாதனுடன் சென்று பொருது பகைவரை யழித்தவ ரென்பது பெற்றாம். "ஆடுநர் என்றது வினையெச்சமுற்று வினைத் திரிசொல்" என்று பழையவுரை கூறும். கூறவே, இயவர் ஆடுநராய்ப் பலிதூஉய்க் கடிப்புக் கண்ணுறுவர் என்று அவ்வுரைகாரர் கருதுமாறு பெற்றாம். இயவர் பெயர்ந்துவந்து பலிதூஉய் ஆடுவாராய்க் கடிப்புகொண்டு முழக்குவரென்று கொள்க.

மறி யறுத்து அதன் குருதியில் செந்தினை கலந்து பூத்தூவிப் பரவுப வாதலின், "அரும்பலி தூஉய்" என்றார். "உருவச் செந்தினை குருதி யொடு தூஉய் மண்ணுறு முரசம் கண்பெயர்த்து" (பதிற். 19) என்றும், "பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும், திண்பிணி முரசம்" (பு.வெ. மா. 98) என்றும் வருதல் காண்க. இயவர், இயம் இயம்புபவர். முரசு முழக்குவோரை வள்ளுவர் என்பவாதலின், இவ் வியவரை வள்ளுவ ரென்று கொள்வாரு முளர்.

8-14. அரணம்...........வேந்தே

உரை: ஞாயிறு புகன்ற - ஞாயிறு பகையாகிய இருளைக் கெடுப்பான் விரும்பிச் செல்லும்; தீது தீர் சிறப்பின் - குற்ற மில்லாத சிறப்பினையும்; அமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇ- நீர் நிரம்பக்கொண்டு திரண்டெழும் முகிற் கணம் பரவுமாறு; கடுங்கால் கொட்கும் - மிக்க காற்று நிலவும்; நன் பெரும் பரப் பின் - நல்ல பெரிய பரப்பினையுமுடைய; விசும்பு தோய் வெண்குடை, -வானளாவி நிழல் செய்யும் நின் வெண்குடையைச் சுட்டி; அரணம் காணாது மாதிரம் துழைஇய-அரணாவது ஒன்றனையும் காணாது அதுகுறித்துத் திக்கனைத்தும் தேடி யலையும்; நனந்தலைப் பைஞ்ஞிலம்-விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்து வாழும் மக்களெல்லாம்; இந்நிழல் வருக என நுவலும்-இக் குடை நிழற்கண்ணே வருவார்களாக என்று சொல்லிப் பரவுதற் கேதுவாகிய; பசும் பூண் மார்ப-பசிய பூணணிந்த மார்பினை யுடையோய்; பாடினி வேந்தே-பாடினிக்கு அவள் வரிசை யறிந்து சிறப்பிக்கும் அரசே எ-று

பகைவராகிய இருளைக் கெடுத்தற்கு விரும்பி, அவர் நேர்படும் போர்க்குச் செல்வதுபற்றி அவர்களைப் "போரெனிற் புகலும் மறவர்" (புறம் 31) என்பதுபோல, இருள் கெடுப்பான் ஞாயிறு விரும்பிச் செல்லும் விசும்பினை, "ஞாயிறு புகன்ற விசும்பு" என்றார். ஞாயிறு புகன் றெழுதலால், தன்கட்படிந்த இருள் நீங்கி விளக்க முறுதலால், "தீதுசீர் சிறப்பின் விசும்பு" என்றார். "மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு" (பதிற் 88) என்று பிறரும் கூறுதல் காண்க. அமிழ்து, மழை நீர்; "வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென் றுணரற் பாற்று" (குறள் 11) என்றார் திருவள்ளுவர். தலைஇய என்பது தலைஇ எனத் திரிந்தது. கொட்குதல்-சுழன்று மோதுதல். மழைக் கணம் பரவி அமிழ்து பொழிதற்கிடம் தருதல்பற்றி, "நல்விசும்பு" என்றும், ஞாயிறும் திங்களும் இயங்கி முறையே பகலினும் இரவினும் நல்லொளி செய்து உலகுயிர்களை யோம்புதற் கிடமாகும் பெருமை யுடைமையின் "பெரும் பரப்பின் விசும்பு" என்றும் கூறினார்.

அமிழ்து திகழ் கணமழை நிலவும் விசும்பிடத்தே தோயும் வெண் குடை யென்றது, வெண்குடை நீழலும் அமிழ்த நீழல் என்றற்கு,; "முழு மதிக் குடையின் அமுதுபொதி நீழல்,எழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்" (தொல்.பொ. 81. நச். மேற்) என வருதல் காண்க.

பகைவர் நாட்டு மக்கள் இவ் வேந்தனுக்கு அஞ்சித் தமக்கு அரணாவா ரைப் பெறாமையால் உலகமுற்றும் சுற்றி யலைந்து வருந்துதல் கண்டு இரங்கி அவர்கட்குப் புகல் கூறுமாற்றால் "அரணம் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக விந்நிழல்" என இயவர் கூறுவா ராயினர். பைந்நிலம், பைஞ்ஞிலம் என வந்தது மரூஉ. "நுவலும்" என்பது நுவறற்குக் காரணமாகிய சேரலாதனது மார்பென்னும் பெயர் கொண்டது. "நுவலும் மார்ப வென முடிக்க; இஃது ஏதுப்பெயர்" என்பர் பழையவுரைகாரர். "இஃது" என்றது, மார்ப என்னும் பெயரை யென்க. வெண்குடை நுவலும் என்றது,"வெண்குடையின் அருட் சிறப்பைச் சொல்லும் என்றவாறு" என்பது பழையவுரை.

1-3 புரைவது..........யாதலின்

உரை: பகைவர்பெரிய தப்புந ராயினும்-நின் பகைவ ராயினும் பொறுத்தற்கரிய பெரும் பிழை செய்தாராயினும் பணிந்து திறை பகரக் கொள்ளுநை-அப் பிழையினை யுணர்ந்து வருந்தி நின்பால் அடைந்து பணிந்து நின்று திறை செலுத்த அவரைப் பொறுத்து அவர் செலுத்தும் அத்திறையினை ஏற்றருளு கின்றாய்; ஆதலின்-ஆதலால்; புரைவது நினைப்பின் -நின் அருட்கு ஒப்பாவ தொன்றனை ஆராய்ந்து காணலுறின்; புரை வதோ இன்று-உயர்வும் ஒப்பும் உடைய தொன்றும் இல்லை எ-று.

உவமமும் பொருளும் ஒத்திருத்தல் வேண்டி, நின் னருளாட்சிக்கு ஒப்பதொன்று மின்மையின், உயர்ந்ததேனும் உளதோ வென நன்கு ஆராய்ந்து காணவேண்டி யிருக்கின்ற தென்பார், "புரைவது நினைப்பின்" என்றும், அவ்வாறு கண்டவழி உயர்ந்ததால் ஒப்பதாதல் இல்லை யென் பது துணியப்பட்ட தென்றற்கு, "புரைவதோ வின்றே" என்றும் கூறினார். ஓகாரம், தெரிநிலை. ஏகாரம், தேற்றம். "புரைவதோ இன்றே" என்றது மேற்கோள்; இனி, இதனைச் சாதித்தற்குக் காட்டும் ஏது, "பெரிய தப்புந ராயினும் பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை யாதலின்" என்பது. இஃது உடம்பொடு புணர்த்தலாய், புரைவது நினைத்தலை வற்புறுத்தி நிற்பது காண்க. தப்புநராயினும் என்றது தப்பாமை தோன்ற நின்றது. பகைவர் வாளாது பணிந்தவழி அவர்பால் பகைமையின்மை விளங்காமையின், "பணிந்து திறை பகர" என்றார். பணிதல் மெய்யின் வினை; பகர்தல் வாயின் வினை. மனத்தின் பான்மை சொல்லாலும் செயலாலும் புலப்படுதலால், அவ் விரண்டனையும் எடுத்தோதினார். பகர்தல், ஒ்ன்று கொடு்த்து ஒன்று வாங்குதல்; ஆகவே, பகைவர் திறை கொடுத்து அருள் பெறுமாறு பெற்றாம்; திறை பெறாது அருளுதல் கழிகண்ணோட்ட மென்னும் குற்றமா மென வறிக. பகைவர்பால் செலுத்தும் நின் அருட் பெருமைக்கு அவர்தம் உயிரல்லது திறை ஆற்றாதாயினும், அருள்செய்தற்பொருட்டு, திறை கொள்வா யாயினை யென்பார், "கொள்ளுநை" யென்றார். கொள்ளுநை, அடுகை விடுநை(புறம் 36) என்றாற்போல்வதோர் முற்றுவினைத் திரிசொல்.

வலம்படு வியன்பணையை ஆடுநர் பலிதூஉய்ப் பரவ, கடிப்புக் கண் ணுறும் இயவர், பைஞ்ஞிலம் வருக இந் நிழ லென வெண்குடை நுவலும் மார்ப, வேந்தே, பகைவர் பணிந்து திறை பகரக் கொ்ளுநை யாதலின், புரைவது நினைப்பின் புரைவதோ இன்று என வினைமுடிவு செய்க.

"இதனாற் சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று."

2.8. கூந்தல்.....விறலியர்.

18

    உண்மின் கள்ளே யடுமின் சோறே
    எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே
    வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
    இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்
    ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல்
    5
    கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே
    பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்
    மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி
    மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
    தண்ணிய லெழிலி தலையாது மாறி
    10
    மாரி பொய்க்குவ தாயினும்
    சேர லாதன் பொய்யல னசையே.

துறை : இயன்மொழி வாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : கூந்தல் விறலியர்.

1-2.உண்மின்......புழுக்கே

உரை: கள் உண்மின் - கள்ளை யுண்பீராக; சோறு அடு மின் - சோற்றைச் சமைப்பீராக; திற்றி எறிக - தின்னப்படும் ஊன் கறியை அறுப்பீராக; புழுக்கு ஏற்றுமின் - புழுக்குதற் குரிய கறிவகைகளை உலையில் ஏற்றுவீர்களாக;-

பருகுதற்குரியதாகலின் கள்ளைப் பொதுவினை வாய்ப்பாட்டால் "உண்மின் கள்ளே" என்று பரிசுபெற்ற பாண னொருவன் தன் சுற்றத் தார்க்கும் பாடன் மகளிர்க்கும் கூறுகின்றான். சோறு, நெற்சோறு. திற்றி, தின்றற்குரிய இறைச்சி; நன்கு மென்று தின்னப்படுவதுபற்றித் திற்றி யெனப்பட்டது போலும். புழுக்கப்படுவது புழுக்காயிற்று.

தான் பெற்ற பெருவளத்தைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லாற் கூறாது தன் ஈகையால் உணர்த்தக் கருதிய பாணர் தலைவன், வந் தோர்க்குச் சோறு சமைத்தற்குள் பசியால் தளர்வோர்க்குக் கள்ளை வழங்கி யுண்பித்தலின், "உண்மின் கள்ளே" என்றும், விரையச் சமைத்தல் வேண்டி, "அடுமின் சோறே" யென்றும் கூறினான். சோற்றுணவுக்குத் துணையாகத் திற்றியும் புழுக்கலும் இடக் கருதி, அவற்றுள் திற்றி சிறந்தமையின் "எறிக திற்றி" யென்றும், "ஏற்றுக புழுக்கே" யென்றும் உரைத்தான்.

3-6. வருநர்க்கு...... அடுப்பே

உரை: இருள் வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால் - இருண்டு கடை குழன்று தழைத்து முடி யவிழ்ந்து ஐவகையாய் முடிக்கப்படும் கூந்தலையும், ஏந்து கோட்டு அல்குல் - உயர்ந்த பக்கத்தையுடைய அல்குலையும்; முகிழ் நகை - முகிழ்த்த நகையினையும்; மடவரல் - இளமையினையுமுடைய; கூந்தல் விறலியர் வரிசை பெறும் தகுதி சான்ற விறலிகளே; வருநர்க்கு வரையாது- மேலும் வருவோர்க்கு வரையாது வழங்குதற்பொருட்டு; பொலங் கலம் தெளிர்ப்ப - நீவிர் அணிந்துள்ள பொற்றொடிகள் ஒலிக்க; அடுப்பு வழங்குக - உண்டற் குரியவற்றைப் பெருகச் சமைப்பீர்களாக;-

தம்முடைய ஆடல் பாடல்களால் அரசனான சேரலாதன்பால் வரிசைபெற்ற மகளிராதலின், அவருடைய கூந்தல் முதலியவற்றை விதந்தோதிச் சிறப்பித்தான். கூந்தல் விறலியராதலின், அவர் கூந்த லையே முதற்கண் எடுத்து, "இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்" என்று கூறினான். வரிசைக்கு வருந்தும் பரிசில் மாக்களாயினும், தம் பால் வருநர்பால் அவ்வாறு வரிசைநோக்காமை தோன்ற, "வருநர்க்கு வரையாது" என்றும், வேந்தன்பால் பரிசாகப் பெற்றமையின், "பொலங் கலம் தெளிர்ப்ப" என்றும் உரைத்தான். அடுப்பு வழங்குக என்றது, இடையற வின்றிச் சமைத்தவண்ணமே இருக்க என்றவாறு. "வானின் றுலகம் வழங்கி வருதலால்" (குறள் 11) என்புழிப்போல, வழங்குதல் இடையறாது நிகழ்தற்பொருட்டு. வருநர்க்கு வரையாது வழங்குக அடுப்பே என முடிக்க. பழையவுரைகாரரும், "வரையாமல் எனத் திரித்து வரையா தொழியும்படி யெனக் கொள்க" என்பர். தெளிர்ப்ப வென்னும் வினையெச்சம் வழங்குக என்னும் வினைகொண்டது.

இக் கூந்தல் மகளிர் வரிசைக் குரியரே யன்றிச் சமைத்தற் குரிய ரல்ல ரென்றும், சோறு மிக வேண்டியிருத்தல் தோன்ற, அவரையும் சமைக்க வேண்டுகின்றா னென்றும் கூறுவார், பழையவுரைகாரர்., "வந்தார்க்குச் சோறு கடிதின் உதவுதற்பொருட்டு அடுப்புத்தொழிற் குரியரல்லாத வரிசை மகளிரும் அடுப்புத்தொழிலிலே வழங்குக என்ற வாறு" என்றும், எனவே, அடுப்புத் தொழிற் குரியரல்லாத கூந்தல் விறலியரை அத்தொழிற்கண் விடுக்கும் சிறப்பினால், இப்பாட்டு இப்பெயர் பெறுவதாயிற் றென்பார் " இச் சிறப்பானே இதற்குக் "கூந்தல் விறலியர்" என்று பெயராயிற் " றென்றும் கூறினார். "புரியவிழ் ஐம்பால்" என்பத னைக் கூந்தற்கே யேற்றி, "ஐம்பாற் கூந்தல் என மாறிக் கூட்டுக" என்று கூறி, "இனி மாறாது கூந்தல் விறலிய ரென்பதை ஒருபெயராக வுரைப்பி னும் அமையும்" என்று உரைப்பர். ஐம்பாற் கூந்த லென்றற்கு, ஐம்பா லாக முடிக்கப்படும் கூந்தல் என்று உரைத்துக்கொள்க.

7-12 பெற்றது......நசையே

உரை: பெற்றது உதவுமின் - உணவு பல உதவுவதேயன்றி நீவிர் பெற்ற செல்வத்தையும் வந்தோர்க்கு உதவுவீர்களாக; தப்பு இன்று - அவ்வாறு செய்வதால் குறை வொன்றும் இல்லை யாம்; மண்ணுடை ஞாலம் - மண் திணிந்த நிலவுலகத்தை; புரவு எதிர்கொண்ட தண்ணியல் எழிலி - காப்பதை மேற்கொண்ட தண்ணிய இயல்பினையுடைய முகில்கள்; தலையாது மாறி – மழை பெய்தலைத் தலைப்படாது மாறி; மன் உயிர் அழிய - நிலைபெற்ற உயிர்கள் நீரின்மையால் அழிவெய்துமாறு; பல யாண்டு துளக்கி- பல ஆண்டுகள்காறும் வருத்தி; மாரி பொய்க்கினும் - மழையைப் பெய்யாது பொய்த்தாலும்; சேரலாதன் - இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்; பின்னும் நசை பொய்யலன் - பின்னும் நீர் அவன் பால் செல்லின் நும் விருப்பம் பழுதாகாவண்ணம் வேண்டிய வற்றை நிரம்ப நல்குவன் எ-று

பெற்றதைப் பிறர்க்குப் பெருக வழங்கின், தம்பால் பொருளழிவும் இன்மையும் உளவாமென்று மனம் தளராமை குறித்து, " பெற்றது உதவு மின்" என்றும், அவ்வுதவி குற்றமாகா தென்றற்குத் "தப்பின்று" என்றும், அதற்குக் காரணம் கூறுவானாய்ச் சேரலாதனது கொடைமடம் கூறலுற்று, "மாரி பொய்க்கவ தாயினும், சேரலாதன் பொய்யலன் நசையே" யென்றும் கூறினான்.

ஞாலத் துயிர்கட்கு வேண்டும் உணவுப்பொருள் விளைதற்குரிய நிலப்பகுதியாதலின், அதனை, "மண்ணுடை ஞாலம்" என்றும் கைம்மாறு கருதாது மன்னுயிர்களைக் காத்தலே கடப்பாடாக் கொண்டமையின், "புரவெதிர் கொண்ட எழிலி" யென்றும், இருதிணைப் பொருளையும் குளிர்ப்பிக்கும் இயல்பு பற்றித் "தண்ணியல் எழிலி" யென்றும், உயிர்கள் நிலைபேறுடையவாயினும மழையின்றேல் அழியும் என்றற்கு "மன்னுயி ரழிய" என்றும், அவ்வழிவுக்கு மழையின்மை பல யாண்டுகள் நிலவ வேண்டுமாதலின், "யாண்டு பல துளக்கி" யென்றும் கூறினார்.

அறம்புரி செங்கோலனாகிய சேரலாதன் நாட்டில் மழை பொய்க்குவ தின்மை தோன்ற, "பொய்க்குவ தாயினும்" என்றும், நச்சி யடைந்தோர் நசை பழுதாகாது நச்சியவாறே நல்கும் நலம் தோன்ற, "நசை பொய் யலன்" என்றும் கூறினார்.

பாண் மக்கள், கள் உண்மின், அடுமின், எறிக, ஏற்றுமின், கூந்தல் விறலியர் அடு்ப்பு வழங்குக, பெற்றது உதவுமின்; தப்பின்று; சேர லாதன், மாரி பொய்க்குவதாயினும், பின்னும் நசை பொய்யலன் என்று வினைமுடிவு செய்க.

சேரலாதனது கொடைச் சிறப்பையே எடுத்தோதினமையின், இஃது இயன்மொழி வாழ்த்தாயிற்று. அடிபிறழாது அளவடியா னியன்ற நேரிசை யாசிரியப்பா வாகலின், ஒழுகுவண்ணமும் செந்தூக்கு மாயிற்று.


2.9. வளனறு பைதிரம்.

19

    கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
    கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப
    ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர்
    திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப
    செங்கள விருப்பொடு கூல முற்றிய
    5
    உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
    மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
    கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
    வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து
    அவ்வினை மேவலை யாகலின்
    10
    எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற
    அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
    கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
    நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்
    கியார்கொ லளியை
    15
    இனந்தோ டகல வூருட னெழுந்து
    நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
    வாழ்த லீயா வளனறு பைதிரம்
    அன்ன வாயின பழனந் தோறும்
    அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
    20
    நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப
    அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
    தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
    இன்றோ வன்றோ தொன்றோர் காலை
    நல்லம னளிய தாமெனச் சொல்லிக்
    25
    காணுநர் கைபுடைத் திரங்க
    மாணா மாட்சிய மாண்டன பலவே.

துறை: பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வளனறு பைதிரம்

1-10. கொள்ளை.............மேவலை.

உரை: கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர் - பகைப்புலத் தைச் சூறை யாடுதலாற் பெற்ற உணவும் மேற்செலவையே விரும் பும் கால்களுமுடைய கூளிப் படையினர்; கல்லுடை நெடு நெறி போழ்ந்து - கற்கள் பொருந்திய நெடிய வழிகளை வெட்டி; சுரன் அறுப்ப - சுரத்தில் அகன்ற வழிகளைச் செய் தமைக்க; ஒண் பொறிக் கழற்கால் மாறா வயவர் - ஒள்ளிய பொறிகளையுடைய கழலணிந்த அடி முன் வைத்தது பின்னே பெயர்த் தறியாத போர் மறவர்; திண் பிணி எஃகம் - திண்ணிதாய்க் காம்பொடு செறிக்கப்பெற்ற வாட்படையை; புலி யுறை கழிப்ப - புலித் தோலாற் செய்த உறையினின்றும் எடுத்து வினைக்குரியவாகச் செம்மை செய்ய; செங்கள விருப்பொடு - சிவந்த போர்க்களத்தே புகும் விருப்பத்தால்; கூலம் முற்றிய உருவச் செந்தினை - கூலங்க ளுள் ஒன்றாக நிரம்பிய நிறம் பொருந்திய செந்தினையை; குருதி யொடு தூஉய் - குருதி யொடு கலந்து தூவிப் பலியிட்டு; மண்ணுறு முரசம் கண் பெயர்த்து - நீராடி வார்க் கட்டமைந்த முரசத்தின் கண்ணில் குருதி பூசி; கடிப்புடை வலத்தர் - வலக் கையில் கடிப் பினை யேந்தி; இயவர் - முரசு முழக்கும் வீரர்; தொடித் தோள் ஓச்சி - தொடியணிந்த தம் தோளோச்சிப் புடைத்து முரசினை முழக்க; வம்பு களை வறியாச் சுற்றமொடு - கைச் சரடுகளை நீக்குத லில்லாத போர் வீரருடன்; அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து; அவ் வினை மேவலை - செய்து முற்றிய அப் போரினையே மேலும் விரும்பி யுறைகின்றாய் எ-று

பகைப் புலத்தே சென்று சூறை யாடிப் பெற்ற பொருள்களைக் கொண்டு உண்பன வுண்டு வாழும் இயல்பின ரென்றற்கு, "கொள்ளை வல்சி" யென்றும், தம்மைப் பின்னே தொடர்ந்துவரும் தானைக்கு நெறி யமைக்கும் தொழிலால் யாண்டும் தங்காது மேற்சென்றுகொண்டே யிருப்பதால், "கவர்காற் கூளியர்" என்றும் கூறினார். "கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர், கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்" (புறம் 23) என்று பிறரும் கூறுவர். எனவே, இக் கூளிப் படை யினர்க்குப் பகைப்புலத்தைச் சூறையாடுவதும் நெறி சமைத்தலும் தொழிலாதல் பெற்றாம். சூறையாடுவது கூறவே, நெறி சமைக்க வரும் தம்மை, யெதிர்த்துப் போருடற்ற வரும் பகைவரை யெதிர்த் தடர்த்தலும் பெறப்படும். "கவர்வு விருப்பாகும்" (தொல். சொல்.362) என்பதனால், கவர்தல் விருப்பமாயிற்று. பழையவுரையும், "செலவை விரும்பின கால்" என்று கூறுகின்றது. கொள்ளை வல்சி யுடையார்க்கு மேன்மேலும் அதன்பால் விருப்ப முண்டாதல் பற்றிக் கவர்கால் என்றா ரென்றுமாம். கல்லும் முள்ளும் நிறைந்த நாடு கடந்து செல்லும் தானைக்கு முன்னே செல்லும் இக் கூளிப்படை, அத் தானை வருந்தாது விரைந்து சேறற்கு நல்ல நெறியினை யமைக்கின்ற தென்பார்,

"கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரன் அறுப்ப" என்றார். கல்லுடை நெறி மேடும் பள்ளமுமாய் நேராகச் செல்வதற்கு அமையாமையின், நெறி நேர்மையும் சமமும் பொருந்துதல் வேண்டி, பள்ளத்தை நிரப்பி மேட்டினை வெட்டி யமைக்கும் செயலை, "கல்லுடை நெடுநெறி போழ்ந்து" என்றும், இந்நெறி செலவரிதாகிய சுரத்தினை ஊடறுத்துச் செல்வது பற்றி," சுரன் அறுப்ப" என்றும் கூறினார். "முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறை" (அகம்.281) என வரும் பாட்டு இச் செயலை விளக்குதல் காண்க. இப்பாட்டில் வடுகர் விரவிய படையில் மோரியர் கூளிப் படை யினராய்த் தொழில் செய்வது காண்க. இக் கூளிப்படை இக்காலத்தே பயனீயர்( Pioneers) என்றும், சாப்பர் மைனர் (Sappers and Miners) என்றும் வழங்கும்.

"ஒண்பொறிக் கழற்கால்" என்றதனால், வீரரணியும் கழல் ஒள்ளிய அருப்புத் தொழிலுடைமை பெற்றாம். கழல், வீரரணியும் காலணி. இனிப் பழையவுரைகாரர், "ஒண்பொறிக் கழற்கால்" (பதிற்.34) என்ற பாட்டில், "ஒண்பொறிக் கழற்கா லென்றது, தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய கழற்கால் என்றவாறு" என்று கூறுவர். இத் தொடரினும் "வளனறு பைதிரம்" என்றது சீரிதாக இருத்தல் பற்றி, இதனால் இப்பாட்டிற்குப் பெயர் குறித்திலர் போலும். முன் வைத்த காலைப் பின் வைத்தலையும் தோல்வியாகக் கருதும் மானமுடைய ரென்பது பட, "கழல் மாறா வயவர்" என்றார். காம்பி னின்றும் எளிதிற் கழலாவாறு அதன்கண் திணித்து வலிய பூணிட் டிருத்தல் பற்றி, திண்பிணி யெஃகம் என்றும், அதனைப் புலித்தோலாற் செய்த உறையிலிட்டு வைத்தல் தோன்ற, "புலியுறை கழிப்ப" என்றும் கூறினார். வினைக்குரிமை செய்தலாவது செவ்வையாய்த் தீட்டி நெய் பூசி வைத்தல். இதனைப் பழையவுரைகாரர் "கடைவன கடைந்தும் அல்லன வாய் கீறியும் போர்க்குரியவாம்படி பண்" ணுதல் என்பர். "புலி யுறை கழித்த புலவுவா யெஃகம்" (பதிற்.24) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனி, இவ் வெஃகத்தை வேலென்று கொள்ளினு மமையு மாயினும் வாள் எனக் கோடல் சிறப்புடைத்தாத லறிக.

போர்க்களத்தே அறப்போருடற்றிப் பெறும் புகழ் விருப்பால் அதனை நாடிச் செல்லும் வீரர், முதற்கண் தம் வென்றி முரசிற்கு வார்க் கட்டினைச் செவ்விதாக அமைத்துச் செந்தினையும் குருதியும் பலியாகத் தூவி, குருதியால் அதன் கண்ணைத் துடைத்துக் கடிப்பி கொண்டு முழக்கும் மரபுபற்றி, "செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசம் கண்பெயர்த்து, இயவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோன் ஓச்ச" யென்றார். கூல வகைகளுள் தினையும் ஒன்றா யமைய, "கூலம் முற்றிய உருவச் செந்தினை" என்றார். போரிற் பட்டு விழும் உயிர்களின் குருதி யால் போர்க்களம் சிவப்பது பற்றி, " செங்களம்" என்றார். போரெனிற் புகலும் மறவராதல் தோன்ற. "செங்கள விருப்பொடு" என்றா ரெனவறிக. ஒடு, ஆனுருபின் பொருட்டு. வழிபடுதற்கு முன் முரசத்தை நீராட்டுவது மரபாதலால், "மண்ணுறு முரச" மெனல் வேண்டிற்று.

இனி, சேரலாதனது செயலைக் கூறுவார், தன்னொடு சூழ விருக்கும் போர் வீரர் கணந்தோறும் போரை யெதிர்நோக்கித் தம் கையிலிட்ட சரடுகளை நீக்காது மனமெழுந்து நிற்ப, அவன் அவர் மனநிலையிற் குறை வின்றி, அம்புகளை யாராய்ந்து தெரிந்துகொண்டும் போர்வினைக் குரிய வற்றைச் சூழ்ந்துகொண்டும் இருத்தலின், "வம்பு களைவறியாச் சுற்ற மொடு அம்பு தெறிந்து அவ்வினை மேவலை" என்றார். வம்பு, கைச்சரடு; ஏந்திய படை கை வியர்த்தலால் நெகிழாமைப்பொருட்டு அணிவது. மேவல், விரும்பல்.

இனி, கூலம் முற்றிய வென்றதற்குப் பழையவுரைக்காரர், "பண்ட மாக முற்றிய வென்றவாறு" என்றும், "பலிக்குரிய பண்டங்கள் குறை வறக் கூடின வென்பாரு முளர்" என்றும் கூறுவர். அவ்வினை, செய்து முற்றிய அப் போர் வினை.

கூளியர் சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்ச, நீ அம்பு தெரிந்து அவ்வினை மேவலை யென்று முடித்துக்கொள்க. பிரிநிலை யேகாரம் விகாரத்தால் தொக்கது.

10-15, ஆகலின்..........அளியை

உரை: ஆகலின் - நீ அவ்வாறு வினைமேவிய உள்ளத்தா னாதலால்; எல்லு நனி இருந்து - பகலில் நின் பிரிவைப் பெரிதும் ஆற்றி யிருந்து; எல்லி - இரவின்கண்; அரிது பெறு பாயல் - அரிதாகப் பெறுகின்ற உறக்கத்தினால்; கனவினுள் பெற்ற - கன வின்கண் தானுற்ற; சிறு மகிழான் - சிறு மகிழ்ச்சி யேதுவாக; உறையும் - உயிர் தாங்கி மனைக்கண்ணே யுறையும்; பெருஞ் சால்பு - பெரிய சால்பும்; ஒடுங்கிய நாணு மலி யாக்கை - உடல் சுருங்கியதனால் எழும் அலரால் நாணம் நிறைந்த உடம்பும்; வாணுதல் அரிவைக்கு - ஒளி பொருந்திய நுதலுமுடைய அரிவை யாகிய நின் மனைவிபால்; யார் கொல் - நினைவு கொள்ளாமையால் நீ யாராயினை; அளியை - நீ அளிக்கத் தக்காய் எ-று.

மெய்யால் வீரரொடு கலந்து அம்புகளை யாராய்தலும், மனத்தால், அவ் வம்புகொண்டு செய்யும் போர் வினையை விரும்புதலும் செய்தொழு குதலால், நின்பால் நின்னையின்றி யமையாக் காதலுற்றிருக்கும் மனைவி யைப்பற்றிய எண்ணம் சிறிதும் எழுந்தில தென அவன் ஆண்மையை ஒருபுடை வியந்து கூறுவார்போல், "வம்புகள் வறியாச் சுற்றமொடு அம்புதெரிந் தவ்வினை மேவலை யாகலின்" என்றார். வினைமேற் செல்லும் ஆடவர் அவ்வினை முடிந்துழி யல்லது தம் காதல் வாழ்வை நினையாமை அவர்கட்குச் சிறப்பாதலின், அதனை யெடுத் தோதினார். ஆயினும், ஈண்டு எடுத்த வினை முற்றிய பின்னும் மீளக் கருதாது அவ்வினையே மேவியிருப்பது பற்றி அவனுள்ளத்தை ஆசிரியர் மாற்றக் கருதுகின்றா ரென வறிக.

வினை முடித்தற்கு வேண்டும் மறம், அது முடிந்தபின் வேண்டாமை யின், அதனை மாற்றி அன்பும் அருளும் உள்ளத்தே நிலவுவித்தல் அற வோர் கடனாதலாலும், அவற்றிற்கு வாயில் இல்லிருந்து நுகரும் இன்பமும் ஆண்டிருந்து புரியும் அறமு மாதலாலும், இல்லாள்கண் பெறும் இன்பத் திடத்தே அவற்கு நினைவு செல்லவேண்டி அவளது பிரிவாற்றாமையைப் பாரித் துரைக்கின்றார்.

பகற்போதின்கண் அவன் வற்புறுத்திப் போந்த காலத்தையும் தெளிந்துரைத்த சொற்களையும் தேறி, உடனுறையும் தோழியர் கூட்ட மும் பிறவும் கண்டு ஒருவாறு ஆற்றி யிருத்தல் தோன்ற, "எல்லு நனி யிருந்து" என்றார். எல், பகல், எல்லி. இரவு. ஆற்றியிருத்தற்கு வேண்டும் வன்மையினைப் பெரிதும் பெய்துகொண்டிருத்தலின், "நனி யிருந்து" என்றல் வேண்டிற்று. எல்லி அரிது பெறு பாயல், கனவினுள் பெற்ற சிறுமகிழான் என இயைக்க. "காலை ய‌ரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மல‌ரும்" மாண்புடைய காதற் காமம், இரவுப் போதில் அவளை வருத்துதலால் உறக்கம் மிகுதியும் இலளாயினாள் என்பார், "எல்லி அரிது பெறு பாயல்" என்றார். அரிது பெறு பாயல், சிறுதுயில். இது கண்டுயில் மறுத்தல். அரிது பெற்ற பாயலின்கண், நின்னைக் கனவிற் காண்டலால் உண்டாகும் சிற்றின்பமே அவள் உயிர் வாழ்தற்குத் துணையாயிற்று; அதுதானும் இலதாயின் அவள் உயிர் வாழாள் என் பார், "கனவினுள் பெற்ற சிறுமகிழான் உறையும்" என்றார். "நனவினால் நல்காதவரைக் கனவினாற், காண்டலி னுண்டென் னுயிர்" (குறள். 1213) எனச் சான்றோர் கூறுதல், கனவிற் பெற்ற‌ சிறுமகிழ் உயிர் உள‌ தாதற்குச் சான்றாதல் காண்க. உம்மை, இசைநிறை.

இனிப் பழையவுரைகாரர், "எல்லுநனி யிருந் தென்றது, பகற் பொழுதின்கண்ணே ஒரு வினோதமும் இன்றி நெடுக வருந்தி யிருந் தென்றவாறு" என்றும், "பெற்ற மகிழ் என முடிக்க" என்றும், "அரிது பெறுதலைப் பாயன்மே லேற்றுக; ஈண்டுப் பாயல் உறக்கம்" என்றும் கூறுவர்.

கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் பொறையும் நிறையும் பிறவும் நிறைந்திருத்தல் பற்றி, "பெருஞ்சால்பு" என்றும், அதனால் நின் பிரிவா லுளதாகிய வருத்தத்தைத் தன் சால்பினால் ஆற்றியிருந்தாளாயினும், உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கித் தோன்றுதலால், "ஒடுங்கிய‌ நாணுமலி யாக்கை" யென்றும் கூறினார். காதலன் தன்னை யன்பின்றி மறந்தா னென்று தன் மெலிவு காண்பவர் கூறும் அலர்க்கு நாணி ஒடுங்கி யிருக்குமாறும் தோன்ற, "நாணுமலி யாக்கை" யென்றார். இது புறஞ் சொல் மாணா நிலைமை. நுதல் பசந்திருத்தலைக் குறிப்பு மொழியால் "வாணுதல்" என்றார். இவை யனைத்தும் அரசிபால் நிகழ்ந்த அழிவில் கூட்டத் தவன் பிரிவாற்றாமை.

இவ்வாறு அரிவையாவாள் நின்னையின்றி யமையாப் பெருங்காதல ளாக, நீயோ அவளை நினைத்தலின்றி வினைமேவிய வுள்ளமுடைய னாதலின், நினக்கு அவள்பாலுற்ற அன்புத்தொடர்பு இனிது விளங்கிற்றன்று என் பார், "அரிவைக்கு யார்கொல்" என்றும், இது மிக்க அளிக்கத்தக்க நிலை யாம் என்றற்கு, "அளியை" என்றும் இசைக்கின்றார்.

இவ்வண்ணம் சேரலாதனது உள்ளத்து அன்பு நிலையை எழுப்பியவர் அவனது அருணிலையைப் பகைவர் நாட்டழிவு வகையினை விரியக் கூறிக் கிளர்ந் தெழுவிக்கின்றார்.

16-19 இனந்தோ டகல..........அன்னவாயின.

உரை: ஊர் உடன் எழுந்து - நின் பகைவர் நாட்டு ஊரவ ரெல்லாம் அச்சத்தால் கூட்டமாய்த் திரண்டெழுந்து ஓடி விடுவ தால்; இனம் தோடு அகல - அவர் ஓம்பிய ஆனினங்கள் தொகுதி தொகுதியாய் வேறு வேறு திசைகளில் பரந்தோட; நாஞ்சில் கடிந்து - உழு கலப்பை முதலியவற்றை அவர் எறிந்துவிட் டொழிந்தமையின்; நிலம் கண் வாட - நிலங்கள் விளைநலம் கெட் டழிய; நீ வாழ்தல் ஈயா - ஒருவரும் இருந்து வாழ்தற்குரிய வாய்ப்பினை நீ நின் போர் வினையால் நல்காமையால்; வளன் அறு பைதிரம் - வளப்பம் அழிந்த நின் பகைவர் நாடுகள்; அன்ன வாயின - அவ்வியல்பினை யடைவன வாயின காண் எ-று

எழுந்தமை இனம் அகலுதற்கும்,கடிந்தமை வாடுதற்கும் காரண மாயின. இனங்களின் உண்மையும், நிலங்களின் விளை நலமும், நாட்டின் வளத்துக்கும் மக்கள் வாழ்விற்கும் காரணமாதலால், நீ செய்யும் போர் வினை அவற்றைச் சிதைத்து மக்களை அல்லலுறுத்திற் றென்பார், "நீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின" என்றார். எழுந்து கடிந்தென்னும் செய்தனெச்சங்கள் காரணப்பொருட்டு. அகல, வாட, ஈயா வளனறு பைதிரம் அன்ன வாயின எனக் கூட்டி முடிக்க. இனிப் பழையவுரைகாரர், "ஊரெழுந் தென்னும் முதல் வினையை வழுவமைதி யால் இனந்தோ டகல வென்னும் அதன் சினை வினையொடு முடிக்க" என்றும் "தோடகலக் கண்வாட அன்ன வாயின என முடிக்க" என்றும் "நீ வாழ்த லீயா வென்றது , நீ பண்டு போலே குடியேறுக என்று வாழ்வு கொடாத என்றவாறு" என்றும் உரைப்பர். மேலும், அவர், "வாழ்த லீயா என்ற அடைச்சிறப்பானே இதற்கு வளனறு பைதிர மென்று பெயராயிற்" றென்பர்.

19-27 பழனந்தோறும்.....பலவே.

உரை: பழனந் தோறும் - நீர் நிலைகளி லெல்லாம்; அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து - நெருப்புப்போன்ற தாமரை களும் ஆம்பல்களும் மலர; நெல்லின் செறுவின் - நெல் விளையும் இனிய வயல்களில்; நெய்தல் பூப்ப - நெய்தல்கள் மலர; அரிநர் கொய் வாள் மடங்க - விளைந்த நெல்லை யரியுமிடத்துத் தொழுவ ரது அரிவாள் வாய் மடங்கவும்; அறைநர் தீம் பிழி எந்திரம் - கரும்பு வெட்டுவோருடைய அதனை யாட்டிச் சாறுபிழியும் எந்தி ரம்; பத்தல் வருந்த - கருப்பஞ்சாறு விழும் கூன்வாய் வளையவும்; இன்றோ அன்றோ தொன்றோர் காலை நல்ல மன் - இன்று நேற் றன்று தொன்றுதொட்டே இவ் வளங்களால் இந் நாடுகள் நல்லன வாய் இருந்தனவே; என - என்று; சொல்லி - வாயாற் சொல்லி; காணுநர் கைபுடைத்து இரங்க - இப்போது காண்போர் கை கொட்டிப் பிசைந்து வருந்த; பல மாண்டன - பலவகையாலும் மாட்சிமை யுற்றிருந்த இந் நாடுகள்; மாணா மாட்சிய - கெட் டழிந்த தன்மையை யுடையவாயின எ-று.

"வளனறு பைதிரம் அன்ன வாயின" எனத் தாம் கண்ட காட்சி யைப் பொதுவகையாற் பட்டாங்குக் கூறிய ஆசிரியர், கண்டார்மேல் வைத்து, அவற்றின் வாழ்தற்குரிய வளங்களின் இயல்பைச் சிறப்பு வகையாற் கூறுகின்றார். முதற்கண் நீர் வளத்தைச் சிறப்பிப்பார், தாமரையும் ஆம்பலும் செவ்வி தவறாது மலர்ந்தன என்றற்கு "அழன் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து" என்றார். ஒடு, எண்ணொடு. நில வளம் நெல்லாலும் கருமபாலும் அழகு பெறுதலின், அவற்றை "அரிநர் கொய்வாள் மடங்க அறைநர் தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த" என்றார். அரிவாள் மடங்க என்றது, நெற்பயிரின் சிறப்பும், எந்திரம் பத்தல் வருந்த என்றது, கரும்பின் சிறப்பும் உணர நின்றன. அரிநர், நெல் லறுப்போர். அறைநர் - கரும்பு வெட்டி எந்திரத்திட்டு அறைப்பவர். நெல்லின் நலம் வியந்து, அதனை விளைவிக்கும் நிலத்தை, "இன் செறு" என்றார். மலர, மலர்ந்தென நின்றது. நெல் வயலில் நீர் இடையறாமை யின் நெய்தல் பூப்பதாயிற்று இன்றோ அன்றோ என்புழி, ஓகாரம் அசைநிலை.பத்தல், எந்திரத்திலுள்ள சாறு விழும் தூம்பு. சாற்றின் மிகுதி தோன்ற, "வருந்த" என்றார்.

"கொய்வாள் மடங்க வென்றது, நெற் றாளின் பருமையாலே கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடிய என்றவாறு" என்றும், "எந்திர மென்னும் முத லெழுவாயை வழுவமைதியாற் பத்தல் வருந்த வென்னும் அதன் சினை வினையோடு முடிக்க" என்றும் "பத்தல் வருந்த என்றது பலகாலும் சாறோடி நனைந்து சாத" லென்றும் பழையவுரை காரர் கூறுவர்.

பண்டு பல்வளத்தாலும் மாட்சியுற்றிருந்தவை இன்று அம்மாட்சி யழிந்தன வின வருந்திக் கூறுதலின், "மாணா மாட்சிய" யென்றார். பண்டு பலவாய் மாண்ட மாட்சி பெற்றிருந்தமை தோன்ற, "மாண்டன பலவே" யென்றும், அம் மாட்சி இப்போது மாணாமையின், "மாணா மாட்சிய" என்றும் கூறல் வேண்டிற்று. மாண்ட மாட்சி, செய்த செயல் என்பது போல்வது. இதன் மறுதலை, செய்யாச் செயல்போல மாணா மாட்சி யென்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர், மாண்ட மாட்சியுடையவை இன்று சேரனது போர் வினையால் மாணாமாட்சி யெய்தின; அவை இப்போதும் மாண்புறுத்தவழி, மாண்ட மாட்சியவாம் போலும் என்று ஐய முறாவாறு, "மாணா மாட்சிய மாண்டன" என்று கொண்டு, "மாட்சிமைப்படத் திருத்தினும் மாட்சிமைப்படாத அழகை யுடைய வாய்ப் பின்னைத் திருந்தாத வளவே யன்றி யுரு மாய்ந்தன வென்றவாறு" என்றும், "மாணாதவற்றை மாட்சிய வென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த் தோன்றிக்கிடந்த பண்புபற்றி யெனக் கொள்க" என்றும், ”மாட்சிய வென்பது வினையெச்சமுற்று" என்றும் கூறுவர். எனவே, மாண்டன என்பது மாளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த வினை முற்றாதல் அவர் கருத்தாதல் காண்க. இனி, அவரே, "இனி மாணா மாட்சிய வென்பதற்கு மாணாமைக்குக் காரணமாகிய பெருக்கு முதலாய வற்றின் மாட்சிய வென்பாரு முளர்" என்று பிறர் கூறுவதையும் எடுத் தோதுகின்றார்.

இதுகாறும் கூறியவாற்றால், ஆசிரியர் சேரலாதன் வினை செய்யும் இடன் அடைந்து, ஆங்கு எடுத்த வினை முற்றியும் மீளக் கருதாமை கண்டு, "அரசே, கூளியர் *சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்சத் தான் சுற்றமொடு அம்பு தெரிந்து அவ் வினையே மேவலை யாகலின், (10) எல்லு நனியிருந்து, எல்லி அரிதுபெற பாயற்கண் கனவி னுள் பெற்ற சிறுமகிழான் உறையும் அரிவைக்கு நீ யார்கொல், அளியை (15)" என்று கூறி வினை மேவிய அவன் மறத்தை இல்லுறையும் மனைவி யின் காதல் நிலை காட்டி மாற்றி அன்பு தோற்றுவித்து,"நீ வாழ்த்த லீயா வளனறு பைதிரம் அன்னவாயின (19); பலவாய் மாண்டன வாகிய அப் பைதிரங்கள், பழனந்தோறும் தாமரையும் ஆம்பலும் மலர, செறுவில் நெய்தல் பூப்ப, அரிநர் வாள் மடங்க, தொன்றோர் காலை நல்லமன் அளிய (25) எனக் காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய வாயின காண்" (27) என்றுரைத்து, அவன் உள்ளத்தே அருள் தோற்றுவித்து அமையுமாறு பெறுகின்றாம்.

இனி, பல (27) வாகிய நீவாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின (19) வை மாணா மாட்சியவாய் மாண்டன எனக் கூட்டி முடித்த பழையவுரைகாரர், "பைதிர மென்னு மெழுவாய்க்கு மாண்டன வென் பது பயனிலை; அன்னவாயின வென்னும் பெயரும் இடையே யொரு பயனெனப்படும்" என்றும், "அன்ன வாயின மாணா மாட்சிய மாண்டன வென்றது, பைதிரங்கள் ஊருட னெழுதல் முதலாய வறுமையையுடைய அளவாய் நின்றன்; பின் அவ்வளவி னன்றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன; பின் அவ்வளவுமன்றி ஊரும் வயலும் தெரியாத படி உருவம் மாய்ந்தன என்றவாறு" என்றும் கூறுவர்.

இனி இப்பாட்டினை ஆசிரியர் கூற்றாக்காது, பாசறைக்குத் தூது சென்ற பாண னொருவன் கூற்றாக்கி, "நீ அவ்வினை மேவலையா யிருந் தாய்; நீ வினையை மேவுகின்றபடியால் கனவினுள் உறையும் நின் னரி வைக்கு நீ யார்கொல்; நீ அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ அழிக்க என்று அழிந்த நாடுகள் அழிந்து அற்றால் வரிவலெனின், ஆம், அழிக்க அழிந்து நீ பின் வாழ்த லீயாத பைதிரம் காணுநர்
கைபுடைத் திரங்க மாணா மாட்சியவாய் மாண்டன; அதனால் அது குறையன்று; நின் னன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடி தெழுக என வினை முடிவு செய்க" என்றும், "இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று" என்றும் கூறுவர்.

பாசறைக்கட் சென்று தேவியின் பிரிவாற்றாமை கூறி, இனி அவள் பாற்சென்று அமைதலே வேண்டுவ தென்பதுபட நின்றமையின், இது பரிசிற் றுறையாயிற்று.

பெரும்பான்மையும் ஒழுகுவண்ணமமும், "அவ்வினை மேவலை யாக லின்" எனவும், "யார்கொ லளியை" யெனவும் சொற்சீர் வந்தமையின் சொற்சீர் வண்ணமும் இப் பாட்டில் உளவாயின.
-------

2.10. அட்டுமலர் மார்பன்

20

    நுங்கோ யாரென வினவி னெங்கோ
    இருமுந்நீர்த் துருத்தியுள்
    முரணியோர்த் தலைச்சென்று
    கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின்
    நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
    5
    வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
    மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
    கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
    நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
    கனவினும்,
    10
    ஒன்னார் தேய வோங்கி நடந்து
    படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
    கடாஅ யானைக் கணநிரை யலற
    வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
    புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
    15
    விரியுளை மாவுங் களிறுந் தேரும்
    வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
    கடிமிளைக் குண்டு கிடங்கின்
    நெடுமதி னிலைஞாயில்
    அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
    20
    அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்
    எமர்க்கும் பிற‌ர்க்கும் யாவ ராயினும்
    பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
    கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
    மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்
    25
    தண்ணிய லெழிலி தலையா தாயினும்
    வயிறுபசி கூர வீயலன்
    வயிறுமா சிலீஇயரவ னீன்ற தாயே.

துறை: இயன்மொழி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: அட்டுமலர் மார்பன்

1-5 நுங்கோ........கண்ணி.

உரை: நுங்கோ யார் என வினவின்-உங்கட்கு இறைவன் யார் என்று வினவுவீராயின்; எங்கோ-எங்கட்கு இறைவ னாவான்; இரு முந்நீர்த் துருத்தியுள்- கரிய கடலிலுள்ள தீவில் வாழ்ந்த; முரணியோர்த் தலைச் சென்று-பகைவரை யழித்தல் வேண்டி யவர் வாழ்ந்த தீவுக்குச் சென்று; கடம்பு முதல் தடிந்த- அவர் தம் காவல் மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தி அவரையும் வென்றழித்த; கடுஞ்சின முன்பின்-மிக்க சினமும் மெய்வன்மையுமுடைய; நெடுஞ் சேரலாதன்-நெடுஞ்சேரலாத னாவான்; அவன் கண்ணி வாழ்க-அவன் சூடிய கண்ணி வாழ்வ தாக எ-று.

கோ என்றது, ஈண்டுப் புரப்போர் மேற்று. சேரலாதன்பாற் சென்று பெருவளம் பெற்று வரும் தம்மைக், கண்டோர் வியந்து நோக்கு வதன் குறிப்பறிந்து கூறுதலின், "நுங்கோ யாரென வினவின்" என்றார். பிசிராந்தையாரும் இவ்வண்ணமே கோப்பெருஞ்சோழனைச் சிறப்பித் துரைக்கும் கருத்தால், "நுங்கோ யாரென வினவின் எங்கோ...கோழி யோனே கோப்பெருஞ்சோழன்" (புறம் 212) என்று கூறுதல் காண்க. துருத்தி, நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலப்பகுதி. இத்தகைய பகுதி ஆற்றின் இடையிலும் கடலினிடையிலும் உண்டு. இக் கடம்பர் கடலிடத்தே யுள்ள தீவிலிருந்துகொண்டு பகைமை விளைத்து வந்தமை தோன்ற, "இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்" என்றார். பெரும் படையுடன் அவர் உறையும் தீவுக்கே சென்று மண்டி அவர் குடிமுழுதும் அழியப் பொருதமை விளங்க, "தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரலாதன்" என்றார். இனி, தலைச்சென் றென்பதற்கு அழித்தென்பது பொருளாமாறு, "முரணியோரை யென விரியும் இரண் டாவதனைத் தலைச்சென் றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது முடிவிலே சென்றென்பது பொருளாக்கி,அதற்குப் போந்த பொருள் முடிவு செயலாக்கி அதனொடு முடிக்க" என்பர் பழையவுரைகாரர். அரசரையோ செல்வரையோ நேரிற் சென்று காணி னும், பிறாண்டுப் பெயர் கூறினும் வாழ்த்தும் மரபினால் கண்ணி முதலியன வாழ்க என்றல் இயல்பாதலால்,"வாழ்க அவன் கண்ணி" என்றார்; இஃது அவன் நீடு வாழ்க என்னும் குறிப்பிற்று.

6-10 வாய்ப்பறி யலனே..............கனவினும்

உரை: மாற்றார் தே எத்து மாறிய வினை-பகைப்புலத்தே தனக்கு மாறாக அவராற் செய்யப்படும் பகை வினைகள்; வெயில் துகள் அனைத்தும்-வெயிலிடத்தே காணப்படும் மிகச் சிறிய அணுவளவும்; வாய்ப்பு அறியலன்-தன் வினைத்திறத்தால் அவர் கட்குப் பயன்படுதலை யறியான்; கண்ணின் உவந்து-தன் கண் ணெதிரே நட்டார்போலத் தோன்றி; நெஞ்சு அவிழ்பு அறியா- தம் நெஞ்சு மலர்ந்து அன்பு செய்யாத; நண்ணார் தேஎத்தும்- உட்பகை கொண்ட பகைவரிடத்தேயும்; கனவினும்-கனவின் கண்ணும்; பொய்ப் பறியலன்-பொய் கூறுதலை யறியான் எ-று

மாறிய வினை யெனவே, பகைவர் செய்யும் பகைவினை யென்பது பெற்றாம். மாற்றார் தம் நிலத்தே பகைவர்க் கஞ்சி வஞ்சனையும் சூதும் கலந்த சூழ்ச்சிகள் பல செய்தற்கும், அவை தப்பின்றி வாய்ப்பதற்கும் போதிய இடனுண்மையின், "மாற்றார் தேஎத்து மாறிய வினை" யென்றார். ஒற்றாலும் உரைசான்ற நூலாலும் அவர் செய்யும் சூழ்ச்சி யனைத்தும் முன்னுணர்ந்து அவற்றை யறவே சிதைத்தற்குரிய வினைகளை நாடி வாய்ப்பச் செய்தலால், அவர்தம் மாறிய வினைகள் அவர்கட்குப் பயன் படாமையின், "வெயிற்றுக ளனைத்தும் வாய்ப் பறியலன்" என்றார். வாய்ப்பு, மெய்யாய்ப் பயன்படுதல்; அனைத்து, அளவின் மேற்று. வெயிற் றுக ளனைத்தும் என்றது எள்ளளவும் என்னும் வழக்குப்போல்வது.

இனி, மாறியவினை யென்பதற்குப் பகைவர்க்கு மாறாகத் தான் செய்யும் சூழ்ச்சிகளை யென்றும், வாய்ப் பறியலன் யென்பதனோடு கன வினும் என்பதைக் கூட்டிக் கனவிலும் வாய் வெருவிப் புலப்படுத்துவா னல்லன் என்றும் கூறுவர்; பறிதல், வெளியாதல். இது வினைமேற் கொண்டா ரனைவர்க்கும் இருத்தற்குரிய பண்பாதலால், இதனை யெடுத் தோதுவதில் சிறப்பின்மை யறிக. இனி, மாறிய வினை யென்றது, பின் வாங்குதலென்றும்,வாய்ப் பென்றது பொருந்துத லென்றும் கூறுவர்; இதனாலும் பொருள் சிறவாமை யறிக.

"முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சர்" (குறள். 824) என்றற்கு, "கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார்" என்றார். அவர்க்கு அஞ்சி யொழுகு மிடத்துப் பொய்த்தல் ஓராற்றால் நன்றாயி னும், அதனையும் கனவிலும் நெடுஞ்சேரலாதன் செய்வதிலன் என்றற்கு, "கனவினும் பொய்ப்பறி யலனே" யென்றார். இந்த "நண்ணார்" தொடர்பு கனவினும் இன்னாதாதலின், கனவினும் என்றார். "கனவினும் இன்னாது மன்னோ" (குறள். 819) என்று சான்றோர் கூறுதல் காண்க. "மிகச் செய்து தம் மெள்ளுவாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று"(குறள். 829) என்பதனால்,பொய்த்தல் நன்றாதல் உணர்க.

11-21 ஒன்னார்.........மார்பன்

உரை: ஒன்னார் தேய-பகைவர் கண்டு அஞ்சி உளம் குலைய; ஓங்கி நடந்து-பெருமிதத்துடன் நடந்து; படியோர்த் தேய்த்து-பகைவரை யழித்து; வடி மணி இரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற-வடித்த ஓசையினைச் செய்யும் மணி யொலிக்கும் மதத்தையுடைய கூட்டமாகிய யானைப்படை ஆற்றாது பிளிறிக்கொண்டு ஓட்; வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து- அகன்ற பெரிய பரப்பினையுடைய பகைவரது பெரிய நிலத்தை வென்று கடந்து; புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ-இயற்புலவர் போந்து பாடிப் பரவ அவர்கட்கு வேண்டுவன நல்கி ஓங்கிய புகழை நிலைநாட்டி; வயிரியர் கண்ணுளர்க்கு-வயிரியர் கண் ணுளர் என்ற இருவகைக் கூத்தர்க்கும்; விரியுளை மாவும் களிறும் தேரும்-விரிந்த தலையாட்ட மணிந்த குதிரைகளையும் களிறுகளை யும் தேர்களையும்; ஓம்பாது வீசி-தனக்கென்று கருதாமல் மிகுதியாய் நல்கி; கடி மிளை-காவற்காடும்; குண்டு கிடங்கின்- ஆழ்ந்த கிடங்கும்; நெடு மதில்-நெடிய மதிலும்; நிலை ஞாயில்- நிலைபெற்ற ஞாயிலும்; அம்புடை ஆர் எயில் உள் அழித்து- அப்புக்கட் டுடைமையால் கடத்தற்கரிய அகமதிலுமுடைய அக நகரை யழித்து; அடாஅ அடு புகை யுண்ட-ஊர் சுடு புகை படிந்த; அட்டு மலர் மார்பன்-பகைவரை யட்ட செருக்கினால் விரிந்த மார்பினை யுடையன் எ-று

ஓங்கி நடந்து, மாநிலம் கடந்து, ஓங்கு புகழ் நிறீஇ, ஓம்பாது வீசி உண்ட மலர் மார்பன் என இயைத்துக்கொள்க. தேய்த்து,இரட்டும் கணநிரை யலற என இயைக்க வயிரியர், கூத்தர். கண்ணுளர், சாந்திக் கூத்தாடுபவர்; ஞாயில், மதிலுச்சி. எந்திர வில்லும் ஏப்புழையும் உடைமைபற்றி, "அம்புடை யாரெயில்" எனப்பட்டது. அடாஅ அடு புகை, ஊர் சுடு புகைக்கு வெளிப்படை.

எதிர்நின்று பொரும் பகை மன்னர், தம் ஆற்றலிழந்து கெடுதலால், அவர் நாணும் உட்கு மெய்த, அரியேறு போல நடந்தேகும் பெரு மிதத்தை, "ஒன்னார் தேய வோங்கி நடந்து" என்று சிறப்பித்தார். இகழ்வார் முன் ஏறுபோற் பீடுநடை கோடல் ஆடவர்க்கு இயல்பு. படியோர், பகைவர். "படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை" (மலை படு. 423) என்றார் பிறரும். வடிமணி, வடித்துச் செய்த மணி யென்றும் கூறுப. யானைக் கணம் என்றொழியாது நிரை யென்றதனால், யானைப்படை யாயிற்று. யானைப்படை யுடையவே ஏனைய படைகள் அழிந்தமை சொல்லவேண்டா வாயிற்று.

இவ்வண்ணம் நால்வகைப் படையும் கெடுத்து விரிந்து கிடக்கும் நாட்டைக் கடந்து சென்று தலைநகரை யடைந்து பொருது அதனுட் சேறல்வேண்டி யிருத்தல்பற்றி, "வியலிரும் பரப்பின் மாநிலம் கடந்து" என்றார். வியலிரும் பரப்புடையதாயினும், அதனை வஞ்சனையின்றிப் பொருது கடந்தமை தோன்ற, பரப்பை விசேடித்துக் "கடந்து" என்றார். இவ்வாறு செய்யும் அறப்போர் இயற்புலவர்க்கு மிக்க இன்பமும் அன்பு முண்டாக்குதலின், அவர் அச் செயலைப் பாட்டிடை வைத்துப் பாராட்டு வது பற்றி, "புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ" என்றார். ஏனைப் புகழ் கள் எல்லாவற்றினும் புலவர் பாடும் புகழ் பொன்றா நிலைமைத் தாதலால், அதனை வியந் தோதினார். அப் புலவர் வியந்து புகழும் பாட்டுக்களைப் பாணரும் கூத்தரும் முறையே பாடி யாடுதலின், அவர்க்கு அவன் வழங்கும் திறத்தை, "விரியுளை மாவும் களிறும் தேரும் ஓம்பாது வீசி" என்றார். "ஓம்பாது வீசி" யென்றதனால், அவை பகைப்புலத்தே கவர்ந் தமை பெற்றாம். "மன்றம் போந்து மறுகுசிறை பாடும், வயிரிய மாக்கள்" (பதிற். 23) என்று பிறரும் கூறுதல் காண்க. கண்ணுளர், கூத்தர்; "கலம்பெறு கண்ணுள ரொக்கல் தலைவ" (மலைபடு. 50) என வருதல் காண்க. கண்ணுளர் சாந்திக் கூத்தாடுபவரென்றும் அடியார்க்கு நல் லார் உரைப்பர். (சிலப். 5: 49 உரை.) அஃதாவது, கடுஞ்சின முன் பினால் அரும்போருடற்றி வென்றி யெய்தும் வேந்தர்க்கு அச்சினம் தணிதற்கு அவற்குரிய இன்பம் பொருளாக ஆடும் கூத்து. "சாந்திக் கூத்தே தலைவ னின்பம், ஏந்திநின் றாடிய ஈரிரு நடமவை, சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம், என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்" என வரும். வினோதக் கூத்தும் ஈண்டைக்குப் பொருந்துமாயினும், சிறப்புப்பற்றி, சாந்திக் கூத்தாடுவோரை விதந்தோதினார். இவர் மதங்க ரென்றும் கூறப்படுவர்.

இவர்கட்கு மாவும் களிறும் தேரும் வழங்குதற்கும், "கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சின" னென்று கூறுதற்குரிய கொடைக்கும் வேறுபாடு காட்டலுற்ற பழையவுரைகாரர், "மேலே கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன் என்று கொடை கூறுகின்றான், ஈண்டு ஓம்பாது வீசி என்று கொடை கூறியதற்குக் காத்தற்குச் சென்றவிடைக் கொண்டவற்றைக் களம் பாடச் சென்றார்க்குக் கொடுக்கும் கொடை யென வுரைக்க" என்பர்.

இனி, பகைவர் தலைநகரை யடைந்து செய்யும் போர்த்திறம் கூறு வார், காவற்காட்டை யழித்து, கிடங்கினைக் கடந்து மதின்மேலேறி எயிலிடத்தே பொருது, அகநகர்க்குட் புகுந்து ஆண் டெதிர்ந்த வீரரை யழித்து எரியிட்டுச் சூறையாடினா னென்பார், "கடிமிளைக் குண்டு கிடங் கின், நெடுமதி னிலைஞாயில், அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட, அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்" என்றார். மிளை முதலியவற்றின் நலம் கூறியது, அவற்றாற் பயனின்மை தோன்ற நின்றது. "அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின், உயர்ந் தோங்கிய நிரைப் புதவின், நெடுமதி னிரைஞாயி, லம்புமி ழயிலருப்பந், தண்டாது தலைச் சென்று, கொண்டு நீங்கிய விழுச்சிறப்பு" (மதுரை. 64-9) என்று பிறரும் கூறுதல் காண்க.

உள்ளழித் துண்ட மலர் மார்பன் என்பதற்கு, எயிலை யழித்து அகநகரைக் கைக்கொண் டல்லது உணவு கொள்வதில்லை யென வஞ் சினம் செய்து அவ்வாறு அழித்தபின் உணவு உண்ட மலர் மார்பன் என்று கூறலுமாம். இதனை, "இன் றினிது நுகர்ந்தன மாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக், கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்" (பதிற். 58) என்பதனா லுணர்க. அகநகரை யெரித்தலால் எழும் புகை தன் மார்பிடத்தே பரவ, முன்னின்று வினை யாற்றுவதால், "அடாஅ அடுபுகை யட்டுமலர் மார்பன்" என்றார். அட்டென்னும் வினையெச்சம், மலர்த லென்னும் வினைகொண்டது.

21-23 எமர்க்கும்................ நெஞ்சினன்

உரை: எமர்க்கும் பிறர்க்கும் பரிசின் மாக்கள் யாவராயி னும், எம்மைச் சேர்ந்த பாணர்க்கும், பிற பொருநர் கூத்தர் புலவராகிய பிறர்க்கும் இவரின் வேறாகிய பரிசிலர் யாவராயினும்; வல்லா ராயினும் - தாம் பரிசு பெறற்குரிய கலையில் வன்மையில‌ ராயினும்; கொடைக் கடன் அமர்ந்த - எல்லார்க்கும் கொடுப் பதைக் கடமையாக விரும்பிய; கோடா நெஞ்சினன் - செம்மை திறம்பாத நெஞ்சினை உடையவன் எ-று

கூற்று நிகழ்த்துவோன் பாண னாதலால், எமர்க்கு மென்றது, அவனைச் சேர்ந்த பாணர்க்காயிற்று; ஆசிரியர் கூற்றாயின், அவரைச் சேர்ந்த புலவர் பெரு மக்களைக் கொள்க. பொருநர், கூத்தர் முதலாயி னாரைப் பிறர் என்றான். புலவர் பாணர் விறலியர் பொருநர் கூத்தர் எனப் பல‌ரும் பல் வேறு வகையில் பரிசில் பெறற் குரிய ராதலின், அவ‌ ரவர் வரிசை ய‌றிந்து கொடுத்தலை விரும்பினவன் என்றற்கு. "பரிசின் மாக்கள் யாவ ராயினும்" என்றான். வன்மையின்றி அதனைப் பெறும் பயிற்சிநிலைக்கண்ணே யிருப்பார்க்கும் கொடுக்கும் சிறப்பை வியந்து, "வல்லா ராயினும்" என்றான். வன்மையிலார்க்கு வழங்கின், அவர் மேலும் அத்துறையில் வன்மை பெறற்கு ஊக்கம் மிகுவ ரென்ற கருத் தால் வழங்குகின்றா னென்பார், "கோடா நெஞ்சினன்" என்றார். வல்லார் என்றற்கு ஒரு கல்வியும் மாட்டார் என்று பொருள்கொண்டு அவர்க்குக் கொடை புரிதல் இல்லை யென்பதுப‌ட நிற்றல் தோன்ற, "வல்லா ராயினு மென்ற வும்மை எதிர்மறை" யென்று பழையவுரைகாரர் கூறுவர்.

இனி அப் பழையவுரைகாரர்," எமர்க்கும் பிறர்க்கும் என நின்ற‌ வற்றைக் கொடைக்கட னமர்ந்த வென்பதனோடு முடித்து, எமர்க் கென்றது தன் பாணராகிய எமர்க் கென்றும், பிறர்க் கென்றது தன் பாணரல்லாத பிறர்க் கென்றும் உரைக்க" என்றும், "பரிசின் மாக்கள் யாவாராயினும் வல்லாராயினும் எனக் கூட்டிப் பரிசின் மாக்கள் என்ற‌ தற்கு முன் சொன்ன எமர்க்கும் பிறர்க்கு மெனப்பட்டாரையே ஆக்கி, யாவராயினு மென்றதற்குக் கண்டார் மதிக்கப்படும் தோற்ற மில ராயினும் எனவும், வல்லா ராயினு மென்றதற்கு ஒரு கல்வி மாட்டா ராயினு மெனவு முரைக்க; யாவ ராயினு மென்ற வும்மை இழிவு சிறப்பு" என்றும் கூறுவர்.

24-27. மன்னுயிர்.............தாயே

உரை: தண் இயல் எழிலி - குளிர்ப்பினைச் செய்யும் மழை முகில்; மன்னுயிர் அழிய - நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு; பல யாண்டு மாறி - பல யாண்டுகள் பெய்து குளிர்ப்பிக்கும் செயலின் நீங்கி; தலையா தாயினும் - மழையினைப் பெய்யா தொழியு மாயினும்; வயிறு பசி கூர ஈயலன் - தன்னை யடைந்தார்க்கு வயிற்றிற் பசித் தீ மிக் கெழுமாறு குறைபடக் கொடுத்தல் இலன், பசித் தீத் தலைகாட்டாவாறு நிரம்பக் கொடுப்ப னாதலால்; அவன் ஈன்ற தாய் - அவனைப் பெற்ற தாய்; வயிறு மாசு இலீஇயர் - வயிறு குற்றமின்றி விளங்குவாளாக எ-று.

தண்ணிய லெழிலி என்றவிடத்துத் தண்ணென்றதைப் பெயர்ப் படுத்துத் தட்பத்தைச் செய்யும் என முடிக்க; தண்ணிய இயல்பினை யுடைய எழிலி எனினுமாம். சில யாண்டு மாறினாலே, உயிர்கள் உட லோடு கூடியிருத்த லமையா தாகலின், "யாண்டு பல மாறி" யென்றது, உயிர்கள் தாம் நின்ற உடலின் நீங்காது நிற்றலும், இறந்தவை மீளத் தோன்றுதலும் முற்றவும் இலவா மென்றற்கு; உயிர்த்தொகை குன்று மென்றற்கு, "மன்னுயிர் அழிய" என்றும் கூறினார். மாறுதல், பெய்து குளிர்ப்பித்தலைச் செய்யாது நீங்குதல்; நாட்டில் வெப்பம் மிகுவித்தல். ஒருகால் அடங்கியிருக்கும் வயிற்றுத் தீ சிறிது கொடுத்தவழி மிக்கெழுந்து வருத்துமாதலின், நிறையக் கொடுக்குமாறு தோன்ற, "வயிறுபசி கூர ஈயலன்" என்றான். தலை யாதாயினும் என்புழி, உம்மை யெதிர்மறை.

இனி, ஓம்பாது வீசி யென்றும், கொடைக்கட னமர்ந்த என்றும் இருமுறை கூறியதனோ டமையாது, வயிறு பசிகூர ஈயலன் என மூன்றா முறையும் கொடையினை விதந்து கூறியதற்குக் காரணம் கூறலுற்ற பழையவுரைகாரர், "மூன்றாவதும் கொடை கூறியதற்கு, மழை பெய்யா விளைவில் காலைத் தன் பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள் பசித்து வருந் தாமல், வேண்டும் பொழுதுகளிலே வேண்டுவன கொடுக்கும் என்றும் ஓர் கொடைநிலையாக வுரைக்க" என்று கூறுவர்.

தாயர் தம் வயிற்றிற் பிறந்த மக்களால் தகாதன நிகழ்ந்தவழி, தம் வயிற்றை நொந்து கொள்ளலும், சான்றோர் அம் மக்களின் செயலால் விளையும் நலந் தீங்கு கண்டு தாயர் வயிற்றை வியத்தலும் பழித்தலும் பண்டை மரபு; அதுபற்றி, ஈண்டு, ஏனோர் வயிற்றுப் பசி தீர்த்துக் குளிர்ப்பிக்கும் சேரலாதனது நலங் கண்டு வியந்து கூறலுற்றோன், அவனை யீன்ற தாய் வயிற்றைச் சிறப்பித்து, "வயிறு மாசிலீஇய ரவன் ஈன்ற தாயே" என்றான். தன் மகன், போர்க்களத்தே, எறிந்த வேல் யானையோடு ஒழிய, வெறுங் கையொடு மனைக்குப் போந்தானாகக் கண்டு மனம் நொந்து, "புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் , அதன் முகத் தொழிய நீ போந்தனையே, எம்மில் செய்யா அரும்பழி செய்த, கல்லாக் காளை நின் னீன்ற வயிறே" (புறத் 1406) என்றும், போரிடை வீழ்ந்து புகழ் பெற்றது கண்டு, "ஈன்ற வயிறோ விதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே" (புற 86) என்றும் தாயர் கூறுதல் காண்க. மகட்கொடை பொருளாகப் போர் நிகழக் கண்ட சான்றோர், அம் மகளை மரம்படு சிறுதீப் போவ, அணங்காயினள் தான்பிறந்த வூர்க்கே" (புறம் 349) என்போர், அவளைப்பெற்ற தாயை நொந்து, "குவளை யுண்கண் இவளைத் தாயே, ஈனா ளாயின் நன்றுமன்" (புறம் 348) என்றும், "அறனிலள் மன்ற தானே....பகைவளர்த் திருந்தவிப் பண் பில் தாயே" (புறம் 336) என்றும் கூறுதல் காண்க.

நுங்கோ யாரென வினவின், எங்கோ சேரலாதன்; அவன் கண்ணி வாழ்க, அவன் பகைவர் மாறிய வினை வாய்ப்பறியலன், பொய்ப் பறி யலன், அட்டு மலர் மார்பன், கோடா நெஞ்சினன், வயிறுபசி கூர ஈயலன், அதனால், அவனை யீன்ற தாய் வயிறு மாசிலீஇயர் என இயைத்து முடித்துக்கொள்க.

"இதனாற் சொல்லியது அவன்றன் செல்வப் பொலிவு கண்டு, நீ யாருடைய பாணன் என்று வினவியாற்கு, யான் இன்னாருடையே னென்று சொல்லி முடிக்க, அவன் குணங்கள் இன்ன எனக் கூறிப் பின் அவனை வாழ்த்தி முடித்தவா றாயிற்று" என்பது பழையவுரை.

----------------------

ஆசிரியர் பாலைக் கௌதமனார் பாடிய‌
மூன்றாம் பத்து

பதிகம்


    இமைய வரம்பன் றம்பி யமைவர‌
    உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ
    அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு
    மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
    கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக்
    கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
    இருகட னீருமொருபக லாடி
    அயிரை பரைஇ யாற்றல்சால் முன்போ
    டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி
    நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த‌
    பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்

பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப்பட்டு. அவைதாம், அடு நெய்யாவுதி, கயிறுகுறு முகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி, கானுணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி, தொடர்ந்த குவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்ற வாயம். இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில், நீர் வேண்டியது கொண்மின் னென, யானும் என் பார்ப்ப‌னியும் சுவர்க்கம் புகல் வேண்டும் என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.

இமயவரம்பன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருபத் தையாண்டு வீற்றிருந்தான்.


3.1. அடுநெய் யாவுதி

21

    சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
    றைந்துடன் போற்றி யவை துணையாக
    எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
    காலை யன்ன சீர்சால் வாய்மொழி
    உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
    5
    கொண்ட தீயின் சுடரெழு தோறும்
    விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி
    வருநர் வரையார் வார வேண்டி
    விருந்துகண் மாறா துணீஇய பாசவர்
    ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை
    10
    குய்யிடு தோறு மாறா தார்ப்பக்
    கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
    அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி
    இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து
    நிலைபெறு கடவுளும் விழைத‌கப் பேணி
    15
    ஆர்வள‌ம் பழுநிய வையந்தீர் சிறப்பின்
    மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
    போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து
    நன்கலந் தரூஉ மண்படு மார்ப‌
    முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
    20
    புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்
    கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்
    மிதியற் செருப்பிற் பூழியர் கோவே
    குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை
    பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு
    25
    நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
    பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச்
    சீருடை தேஎத்த முனைகெட விலங்கிய‌
    நேருயர் நெடுவரை யயிரைப் பொருந‌
    யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து
    30
    நோயின் மாந்தர்க் கூழி யாக‌
    மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு
    கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல்
    ஒரீஇயன போல விரவுமலர் நின்று
    திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்
    35
    அலங்கிய காந்த ளிலங்குநீ ரழுவத்து
    வேயுறழ் பணைத்தோ ளிவளோ
    டாயிர வெள்ளம் வாழிய பலவே.

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: அடுநெய் யாவுதி.

1-7 சொல்................ஆவுதி

உரை: எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை - பிற வுயிர் கட்குத் தீங்கு நினையாமல் விளக்கமுற்ற கொள்கையாலும்; காலை யன்ன சீர்சால் வாய் மொழி - ஞாயிறு போலத் தப்பாத வாய்மை யுரையாலும்; உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - உட்குப் பொருந்திய முறைமையினையுடைய முனிவர்களைப் பரவுதற்காக; சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்ற ஐந்துடன் போற்றி - சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் சோதிடமும் வேதமும் ஆகமமும் என்ற ஐந்தினையும் ஒருங்கே கற்று; அவை துணையாக - அவற்றா லெய்திய புலமையைத் துணையாகக்கொண்டு; கொண்ட தீயின் சுடர் எழு தோறும் - எடுத்த வேள்வித் தீயின் கண் சுடர் எழுந்தோறும்; விரும்பு மெய் பரந்த - உள்ளத் தெழுந்த‌ விருப்பம் மெய்யின் கண் பரந்து வெளிப்படுதற்குக் காரணமான; பெரும் பெயர் ஆவுதி - பெரிய பொருளைப் பயக்கும் ஆவுதிப் புகையும் எ-று

உறுநோய் தாங்கல், பிற வுயிர்கட்குத் தீங்கு நினையாமை எனத் தவத்திற் குரு வென்று கூறிய இரண்டனுள், பிறவுயிர்க்குத் தீங்கு நினையாமை யுளதாகியவழி உறு நோய் தாங்கலாகிய ஏனையது தானே கைகூடுதலின், "எவ்வஞ் சூழாமை" யொன்றையே எடுத் தோதினார். எவ்வுயிர்க்கும் எவ்வம் நினையாதாரை மன்னுயி ரெல்லாம் கைகூப்பித் தொழு மென்ப வாகலின், அத் தொழுதகு ஒழுக்கத்தை "விளங்கிய‌ கொள்கை" யென்றார். "குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின்" (குறள் 1019) என்பதனால் கொள்கை ஒழுக்கமாதல் காண்க. ஞாயிறு, நாட் காலையில் தோன்றி இருணீக்கி யொளி நல்குவது பற்றிக் காலை யெனப்பட்டது.

ஞாயிற்றின் வாய்மை யுணர்த்துவது அது செய்யும் காலமாதல் பற்றிக் காலையை வாய்மைக்கு உவமையாக்கி, "காலை யன்ன சீர்சால் வாய் மொழி" யென்றார். "வாய்மை யன்ன வைகல்" ( கலி. 35) என்று பிறரும் கூறுப. "பொய்யாமை யன்ன புகழில்லை" ( குறள். 296) என்பதுபற்றி வாய்மொழி "சீர்சால் வாய்மொழி" யெனப்பட்டது. சொல்லும் செயலும் வாய்மை தெளிதற்குக் கருவியா மாயினும். சொல் சிறந்தமைபற்றி, வாய்மை யென்னாது "வாய்மொழி" யெனல் வேண் டிற்று. காலை யன்ன வாய்மொழி யென்றதற்குப் பழைய வுரைகாரர், "ஆதித்தனைப் போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி" யென் றும், "மொழியா னென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினு மமையும்" என்றும் கூறுவர்.

எவ்வம் சூழாக் கொள்கையும் காலை யன்ன வாய்மையும் உடைய‌ ராதலின், ஏனையோ ருள்ளத்தே அவரைக் கண்டவழி உட்குத் தோன்றுத‌ லால் முனிவரை, "உருகெழு மரபின் கடவுள்" என்றார். பொறி புலன்களின் செயலெல்லையைக் கடந்தமைபற்றி மக்கட் பிறப்பினராகிய முனிவர் கடவுளெனப் பட்டனர் என்றுமாம்; "முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால், இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய, அக் கடவுள் மற்றக் கடவுள்" ( கலி. 93) என முனிவர் கடவுளாகக் கூறப்படுமாறு காண்க. பேணிய ரென்னும் வினையெச்சம் கொண்ட‌ வென்னும் வினைகொண்டது.

சொல், சொல்லிலக்கணம். பெயர் - பொருள்; எனவே பொரு ளிலக்கணமாயிற்று. பழையவுரைகாரரும், "பெயர், பொருளிலக்கணம் சொல்லும் நூல்; 'பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய' ( பதிற்.90) என இத் தொகையுண் மேலே வநதமையால் பெயரென்பது பொருளாம்" என்பர். நாட்டம், சோதிடம். கேள்வி - வேதம்; வேதம் எழுதப் படாது வழிவழியாய்க் கேட்கப்படும் முறைமை யுடையதாகலின், கேள்வி யெனப்பட்டது. நெஞ்சம், ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றக் கற்றுண‌ர்வதால் உளதாகும் பயன் இறைவன் றாளை வணங்குத லென்ப‌ வாதலானும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுத‌ற்குரிய‌ ஞானமும் வீடு பேறும் பெறுவிக்கும் சிறப்புடைய அருணூலாதல்பற்றி, ஆகமத்தை "நெஞ்ச" மென்றார். செவி முதலிய அறி கருவிகளால் உணரப்படும் உலகியற் பொருள்களின் பொய்ம்மை யுணர்ந்து கழித்த‌ வழி யுளதாய் நிற்கும் ஞானப் பொருள் நெஞ்சால் உய்த்துணரப்படுவ‌ தன்றிப் பிறிதோராற்றால் அறியப்படுவ தன்மையின், நெஞ்சினை அந் நெறிக்கட் செலுத்தி ஞானக்காட்சி பெறுவிக்கும் சிறப்புடைமைபற்றி, ஆகமத்தை நெஞ்சமென்றா ரென்றுமாம்.இனிப் பழையவுரைகாரர், "நெஞ்ச‌ மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய‌ நெஞ்சினை" யென்பர்; ஏனைச் சொல் பெயர் முதலியன போல நெஞ்சம் நூற்காகாது வேறாயின், ஐந்தென்னும் தொகை பெறுதல் பொருந்தா தாதலால் அது பொருளன்மை யுணர்க. அவை, சொல் முதலிய ஐந்தன் அறிவு. வேதம் முதலியவற்றின் அறிவு பொது அறிவும், ஆகம வ‌றிவு உண்மை யறிவுமாம் எனத் தேர்ந்து கொள்க. "ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க" ( திருவா. சிவபு. 4 ) என‌ மணிவாசகர் கூறுதல் காண்க. முனிவர் கடன் கேள்வியொடு பயின்ற வேள்வியால் இறுக்கப் படு மென்ப வாகலின், கடவுட் பேணியர் கொண்ட தீ யென்றும், இத் தீயினை யோம்புதற்கு மேலே கூறிய சொல் முதலிய வைந்தன் கேள்வியும் துணையா மென்பது பற்றி அவை துணையாகக் கொண்ட தீ யென்றும் கூறினார்; "வேள்வியால் கடவு ளருத்தினை கேள்வியின், உய‌ர்நிலை யுலகத் தைய ரின்பு றுத்தினை" (பதிற். 70) என்று பிறரும் கூறுதல் காண்க. வேள்வித் தீ சுடர் விட்டெழுங்கால், அதனைக் கடவுளர் விரும்பியேற்று வேட்கும் தம் கருத்து நிறைவிப்ப ரென்ற விருப்பந் தோன்றி உள்ளத்தே உவகை மிகுவிப்ப, அது மெய்யின்கண் வெளிப்பட்டு நிற்குமாறு தோன்ற, "விரும்பு மெய் பரந்த" என்றார். விருப்பு, விரும்பென மெலிந்தது; பழையவுரைகாரர், "விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது" என்றார். ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுப வென்னும் நூற்றுணிபு பற்றி, "பெரும்பெய ராவுதி" யென்றார். ஆவுதி வடசொற் சிதைவு.

8-13 வருந‌ர்..................ஆவுதி

உரை:வருநர் வரையார் வார வேண்டி - தம்பால் வரு வோர் வரைவின்றி யுண்ண வேண்டி; விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் - விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டு வணிகர்; ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை - ஊனை வெட்டும் மணைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி; குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனாது ஆர்ப்ப - வேக வைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலி போல அமையாது ஒலிக்க‌; செழு நகர் நாப்பண் - செழுமையுடைய மனையின் கண்ணே; அடும் மை எழுந்த அடு நெய் ஆவுதி - அடுதலாற் புகை யெழுந்த அடி சிலின்கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப் புகையும் எ- று

என்றது, விருந்தாய் வந்தார் உண்ணுங்கால் அவர்க்குப் புகை யெழ‌ இட்ட அடிசிற் சோற்றில் பெய்யப்படும் நெய்யாகிய ஆவுதி என்றவாறாம். அடு நெய், அடிசில் நெய். இஃது உருக்கிப் பெய்யப்படுதலின் அடு நெய் யெனப்பட்டது.

பாசவ‌ராவார் ஆட்டு வாணிகர். இவர்பால் வாணிபம் குறித்துப் பலர் நெடுந் தொலைவிலிருந்தும் வருதலின், அவரை விருந்தேற் றோம்பலும் இவர்க்குக் கடனாதலால், விருந் துண்பிக்குமிடத்து அவர்கள் தாம் இடுவனவற்றை நிரம்ப வுண்டல் வேண்டி விருந்தோம்ப‌ற் கின்றி யமையாத அன்பு மிக வுடைய‌ ரென்பது தோன்ற, "வருநர் வரையார் வாரவேண்டி விருந்து கண் மாறாது" என்றார். வார்தல், சேரக் கொள்ளுதல். அகத்தெழும் அன்பு அவ்வளவில் அமையாது முகத்தினும் சொல்லினும் இனிது விளங்கித் திகழ வேண்டுதலின், "விருந்துகண் மாறாது" என்றார். தம்மை நோக்கி வரும் விருந்தினர் குழைந்து வேறிடம் பெயர்ந்து செல்லாதபடி முகத்தால் இனியராய் வரவேற்கும் சிறப்புத் தோன்றக் "கண்மாறாது" என்றா ரென்றும், விருந்துகண் மாறாது உணீஇய வென்பதைக் கண் மாறாது விருந்தினர் உணீஇய வென வியைத்து, வேறிடம் மாறிச் செல்லாது தம்மிடமே நின்று தமது விருந்துணவை யுண்டற்பொருட்டு என்றும் உரைப்பினு மமையும். உணீஇய லென்பது பிற வினைப் பொருளில் வந்த பெயரெச்சம். ஊனம், இறைச்சி கொத்தும் குறடு என்பது பழையவுரை. ஊனை வைத்துக் கொத்தித் துண்டிப்பதற்கு அடிக்கட்டையாய்ப் பயன்படும் மர மணையை "ஊனம்" என்று வழங்குப. "ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை" யென்றதனால், இக் குறைகள் சோற்றோடு ஒருங்கு பெய்து சமைக்கப் படுமென்பது விளங்கும். துவையும் கறியும் பலவகைய வாதலின், "குய்யிடு தோறும்" என்றார். மை, புகை; அடிசிற்கண் அடு நெய்யைப் பெய்தவுடன் புகை யெழும் விரைவு தோன்ற, எழுந்த வென இறந்தகால‌த்தாற் கூறினார். கொழுங்குறை குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனா தார்ப்ப, அடும் மை யெழுந்த ஆவுதி யென வியையும். பழையவுரைகாரர், "கடலொலி கொண்டு ஆர்ப்ப வெனக் கூட்டி, "ஆர்ப்ப வெழுந்த வென முடிக்க" என்று கூறி, "கடலொலி கொண்ட‌ வென்பது பாடமாயின், கடலொலி கொண்டநக‌ர் என்க" என்பர். விருந்தோம்பலும் வேள்வியெனப்படு மாதலின், அதுகுறித்து அடும் நெய்யும் ஆவுதி யெனப்பட்டது; "இனைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின், துணைத்துணை வேள்விப் பயன்" ( குறள். 87) என்று சான்றோர் கூறுதல் காண்க. விருந்தினரை யுண்பிப்பதற்குச் சமைக்கப் படும் உணவின்கட் பெய்யப்படும் நெய்யை அடுநெய் யாவுதி யெனச் சிறப்பித்த நலத்தால் இப்பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவ‌ தாயிற்று. இனி, பழையவுரைகாரர், "அடு நெய்யை யாவுதி யென்றது விருந்துபுறந் தருதலையும் ஒரு வேள்வியாக்கி, ஆள்வினை வேள்வி யென்று ஒரு துறையாக நூலுட் கூறலான் என்ப‌து" என்றும். "இச் சிறப்பானே இதற்கு அடுநெய் யாவுதி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.

14-19 இரண்டுடன் ............... மார்ப‌

உரை: இரண்டுடன் கமழும் நாற்றமொடு - பெரும் பெய‌ ராவுதி அடு நெய் யாவுதி யென்ற இருவகை ஆவுதிப் புகை கமழும் நறிய புகை மணத்தால்; வானத்து நிலைபெறு கடவுளும் விழை தக - வானுலகத்தில் நிலை பெற்ற கடவுளர் தாமும் விருப்பம் கொள்ள; ஆர் வளம் பழுநிய ஐயந் தீர் சிறப்பின் - குறையாத‌ வளம் நிறைந்த சிறப்பினையும்; மாரியங் கள்ளின் - மழைபோல் சொரியப்படும் கள்ளினையும்; போர்வல் யானை - போரிலே வல்ல‌ யானையினையும்; போர்ப்புறு முரசம் கறங்க - ஏற்றுரிவை போர்த்த‌ போர் முரசம் முழங்க; ஆர்ப்புச் சிறந்து - ஆரவாரம் மிக்குச் சென்று; நன் கலம் பேணித் தரூஉம் மண்படு மார்ப - பகைவர் திறையாகத் தரும் நன்கலங்களைப் பேணிக் கொணரும் மண் பட்ட மார்பையும் உடையவனே எ-று

இரண்டும் உடன்கமழும் நாற்றத்தால் கடவுளும் விழைதக, வளம் பழுநிய சிறப்பினையும்,கள்ளினையும்,யானையினையும் மண்படு மார்பினையு முடையோய் என இயையும். நாற்றமொடு என்பதில், ஒடு ஆனுருபின் பொருட்டு. நாற்றம், நறுமணம். "ஆவுதி யென்ற விரண்டனையும் அவற்றானாய புகைமேற் கொள்க. கடவுளும் விழைதக வென்றது, கடவுளரும் இவ்வாறு நாம் அறஞ்செய்யப் பெறின், அழகிது என்று அது விரும்ப வென்றவா" றென்று பழையவுரைகாரர் கூறுவர். பேணி யென்பதனை, நன்கலம் பேணித் தரூஉம் எனக் கூட்டிக் கொள்க. இனி, பழையவுரைகாரர், "பேணி யென்றது முன் சொன்ன கேள்வி யால் தேவர்களையும், பின்பு அதனோடு ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய் வரும் மக்களையும் பேணி யென்றவாறு" என்றும், "அதனைத் திரித்துப் பேணப் பழுநிய வென முடிக்க" வென்றும் கூறுவர். வேள்விக்கண் ணெழும் நாற்றத்தை வானுலகத்துத் தேவர் விரும்புவ ரென்ப வாதலின், இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக" என்றார்; பிறரும், "வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவினோரும்" (புறம். 62) என்பது காண்க. ஆர்வளம் பழுநிய சிறப்பாவது, "கொடுக்கக் கொடுக்கக் குறை படாத நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த சிறப்பு" என்பது பழைய வுரை. ஆர்வளம் நிறைந்தவழி அதனாற் பிறக்கும் சிறப்பின்கண் ஐயம் பிறவாமையின், "ஐயந்தீர் சிறப்பு" என்றார். கள்ளிற் போர்வல் யானை எனற்பாலது ஒற்று மெலிந்து "கள்ளின் போர்வல் யானை" என நின்றது. மண்படு மார்பம்--நறுஞ் சாந்தால் புனையப்பட்ட மார்பு;"மகளிராய்ந்த, மோட்டுவெண் முத்தமின்னு முகிழ்முலை யுழுது சாந்த‌ம், கோட்டும‌ன் கொண்ட‌ மார்ப‌ம்" (சீவக. 2303) என்று பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், "மண்படு மார்ப வென்றது பகைவர் மண் ணெல்லாம் படுகின்ற மார்ப" என்பர்.

19-24. முல்லை.........மெய்ம்மறை

உரை: முல்லைக் கண்ணி - முல்லைப் பூவால் தொடுக்கப் பட்ட கண்ணி யணிந்த; பல்லான் கோவலர் - பலவாகிய ஆனிரை களையுடைய கோவலர்; புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பி - புல்லை நிறையவுடைய விரிந்த புலத்தில் அந் நிரை பலவற்றையும் மேயவிட்டு; கல் உயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் - கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணியைப் பெறு கின்ற; மிதியற் செருப்பின் பூழியர் கோவே - மிதியாகிய செருப் பல்லாத செருப்பென்னும் மலையையுடைய பூழி நாட்டவர்க்கு வேந்தே; குவியற் கண்ணி மழவர் மெய்ம் மறை - பலவகைப் போர்க்கண்ணி யெல்லாம் குவியச் சூடிய மழவர்க்குக் கவசம் போன்றவனே எ-று.

ஆயர் முல்லைக்கண்ணி சூடுப வாதலின் "முல்லைக்கண்ணிப் பல் லான் கோவலர்" என்றார்; "புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர், முல்லை யொருகாழும் கண்ணியும்" (கலி. 115) என்று பிறரும் கூறுவர். ஆயரினத்திற் புல்லினத்தாயர், கோவினத்தாயர், கோட்டினத்தாயர் எனப் பல ருண்மையின், ஈண்டு இவர் கோவினத்தாய ரென்பதுபடப் "பல்லான் கோவலர்" என்றார். ஆ பலவாதலின், அவை நன்கு மேய்தற் குரிய புலம் என்றற்குப் "புல்லுடை வியன்புலம்" என்றார். ஆக்கள் தமக்கு வேண்டிய புல்லை நிரம்பப் பெறு மெனவே, அவற்றையுடைய ஆயர் பெறுவன கதிர்மணி யென்றும், அம் மணிகளும் கடத்திடைப் பெறப்படுகின்றனவென்றும் கூறினார். "கல்லிற் பிறக்கும் கதிர்மணி" (7) என்பது நான்மணிக்கடிகை. மிதியல் செருப்பு, மிதியாகிய செருப்பல்லாத மலையாகிய செருப்பு; எனவே, செருப்பென்னும் மலை யென்றவாறாம். "செருப்பென்பது ஒரு மலை; மிதிய லென்பது அடை; மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக வுரைக்க" என்றும், குவியற்கண்ணி யென்னும் தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்த" தென்றும், "மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்லுவாரு முள" ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். பூழியர், பூழி நாட்டவர். இப் பூழி நாடும் சேரர்க் குரித் தென்பது "பூழியர் கோவே பொலந்தார்ப் பொறைய" (பதிற். 84) என்று பிறரும் கூறுமாற்றா லறியலாம். வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை எனப் போர்க்கண்ணி பல வாதலால், அவற்றை யணியும் மழவரை, "குவியற் கண்ணி மழவர்" என்றார். பழையவுரைகாரர். "குவியற் கண்ணி யென்றதற்கு வெட்சி முதல் வாகை யீறாய போர்க்கண்ணி யெல்லாம் குவிதலையுடைய கண்ணி யென்க" என்பர். மழவர் ஒருவகை வீரர். இவர் குதிரைப்படைக் குரியராய்ப் போருடற்றும் சிறப்புடையரென மாமூலனார், "வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழல், உருவக் குதிரை மழவர்" (அகம். 2) என்றும், "கறுத்தோர், தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி, வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்" (அகம். 187) என்றும் கூறுகின்றார்.

25-29. பல்பயம்.........பொருந

உரை: பல் பயந் தழீஇய - பல்வகைப் பயன்களை நல்கும் காடு பொருந்திய; பயங்கெழு நெடுங் கோட்டு - தானும் நல்ல பயன் தருவதாகிய நெடிய உச்சியினையுடைய; நீர் அறல் மருங்கு வழிப்படா - நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுத லில்லாத; பாகுடிப் பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சா - சேய்மையிலிருந்தே நுனித்து நோக்கும் கொக்கின் பரிவேட்டத் துக்கு அஞ்சுத லில்லாத; சீருடைத் தேஎத்த முனைகெட விலங் கிய - புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போருடற்றா வாறு குறுக்கிட்டுக் கிடக்கும்; அயிரை - அயிரை யென்னும்; நேருயர் நெடு வரைப் பொருந - நேரிதாய் உயர்ந்த நெடிய மலைக்குத் தலைவனே எ-று.

பல் பய மென்றது, மலையைத் தழுவிக் கிடக்கும் காடுபடு பொருள். பயங்கெழு வெனப் பின்னர்க் கூறியது மலைபடு பொருள். நீரறல், இரு பெயரொட்டு. நெடுங்கோட்டு, நேருயர் நெடுவரை அயிரை, நீர் அறல் மருங்கு வழிப்படா, பரிவேட் பஞ்சா அயிரை, முனைகெட விலங்கிய அயிரை என இயையும். அறல் மருங்கு வழிப்படா அயிரை யெனவும், கொக்கின் பரிவேட் பஞ்சா அயிரை எனவும் நின்று மீனன்மை காட்டி நிற்கும் இத் தொடர்கள், அயிரை மலைக்கு வெளிப்படை. நீரோடுங்கால் அயிரை மீன் அதனை எதிர்த் தேறிச் செல்லும் இயல்பிற் றாகலின் அதனை விலக்கற்கு, "நீரறல் மருங்கு வழிப்படா" வென்றும்,அம் மீன் கூர்த்த பார்வையினையுடைய கொக்கிற்கு அஞ்சுவது குறித்துப் "பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா" என்றும் கூறினார். பரிவேட்பு- விரைந்து குத்தும் கடுமை. இம் மீனைப் பரதவர் அசரை யென்பர். இது பெரும்பான்மையும் நீர் மட்டத்துக்குச் சிறிது உள்ளேயே உலவுவது. அந்நிலையிற் சிறிது பிறழ்ந்தவழி இம் மீன் கொக்கின் பார்வையிற் படுத லின், அது ஞெரேலெனப் பாய்ந்து கவர்தலின், கொக்கின் பரிவேட்புக் கஞ்சுவதாயிற்று. பிறரும், "தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண் பறை, நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்" (குறுந். 166) என்பது காண்க. கடலிடத்தே யன்றிச் சிறுசிறு நீர் நிலைகளிலும் பழனங்களிலும் இது வாழ்வதுண்டு. ; "அயிரை பரந்த வந்தண் பழனம்" (குறுந். 178) எனவருமாறு காண்க. பிறாண்டும், *"அயிரைக் கொழுமீ னார்கைய... வெண்குருகு" (பதிற். 29) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. பாகுடிப் பார்வல், சேய்மையி னின்றே நுனித்துக் காணும் பார்வை. "பரிவேட் பஞ்சா வயிரை யென்று வெளிப்படை கூறுகின்றா னாதலின், அதற்கேற்ப நீரறல் மருங்கு வழிப்படா வென்ற பெயரெச்ச மறையே பாடமாதல் வேண்டும்; இனிப் படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்துக்கு நீரற்ற விடத்தில் தான் படாத படியாலே கொக்கின் பரி வேட்புக் கஞ்சா அயிரை யென வுரைக்க" என்பர் பழையவுரைகாரர். பாகுடி யென்பது நாட்டு மக்கள் செலுத்திய வரி வகைகளுள் ஒன்றாக விக்கிரம சிங்கபுரக் கல் வெட்டால் (A.R. No. 297-1916)) தெரி கிறது. கூர்மை போலும் என்றார் உ.வே, சாமிநாதையர்.

பல் பயந் தழீஇய நாடாதலின் இதனைத் தம் வயமாக்கிக்கோடலை விரும்பிப் போதரும் பகைவேந்தர் போர் செய்து எளிதில் மேல் வாரா வாறு குறுக்கே அரண்போல நின்று விலக்கிய நெடுமலை யென்றற்கு "முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை" யென்றார்.

30-9 யாண்டு.........பலவே

உரை: பிழைப் பறியாது யாண்டு பய மழை சுரந்து- பெய்யாது பொய்த்தலின்றி யாண்டு தோறும் மழை பெய்து பயன் விளைத்தலால்; மாந்தர்க்கு நோயில் ஊழி யாக-மாந் தர்க்கு யாண்டுகள் நோயில்லாத காலமாய்க் கழிய; மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு-ம‌ண்ணுத‌ல் செய்யாவிட‌த்தும் ந‌றும‌ண‌மே கொண்டு;கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல்- மண்ணிய வழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்;ஒரீஇயின போல-பொய்கையில் நாளத்தின் நீங்கியன போல; இரவு மலர் நின்று-இரவுப் போதிலும் மலர்ந்து நின்று; திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்-அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும்; அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து-அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர் யாற்றின் கரை யிடத்தே நின்ற; வேயுறழ் பணைத்தோள் இவளோடு-மூங்கிலை நிகர்க்கும் பெரிய தோளையுமுடைய இவளுடன் கூடி நின்று; பல ஆயிர வெள்ளம் வாழிய-பல்லாயிர வெள்ளம் வாழாவாயாக எ-று.

மழை பிழைப்பறியாது பயன் சுரத்தலால் நாடு வசியும் வளனும் சிறந்து பசியும் பிணியும் முற்றவும் இல்லையாதல் ஒருதலையாகலின், "பயமழை சுரந்து நோயில் மாந்தர்க் கூழியாக" என்றார். மாந்தர்க்கு நோயில் ஊழியாக வென மாறிக் கூட்டுக. மண்ணாக் காலத்தும் தேவி யின் கூந்தல் நறுமணமே கமழ்வ தென்றற்கு "மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு" என்றார்; "அரிவை கூந்தலின் நறியவு முளவோ" (குறுந் 2) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலன் நாடு காவற்கும் வினை செய்தற்கும் பிரிந்தவழிக் கற்புடை மகளிர் தம்மை யொப்பனை செய்துகொள்ளா ராகலின், "மண்ணா வாயின்" என்றார். மண்ணாவாயி னும் என்னும் உம்மை தொக்கது. மண்ணுதல், ஒப்பனை செய்தல். கார்மல ரென்றார், முல்லை கார்காலத்து மலரும் இயல்பிற்றாதலால், மண்ணியகூந்தல் அகிலும் ஆரமும் முதலிய பல விரைப் பொருளின் மணம் கொண்டு கமழு மாயினும், தேவியின் கூந்தல் சிறப்புடைய முல்லை யணிந்து அதன் நறுமணமே சிறக்கு மென்பது தோன்ற, "கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்" என்றார். "கமழகில் ஆரநாறு மறல்போற் கூந்தல்" (குறுந். 286) என்பது காண்க. மண்ணாக்கால் நறுமணமும் மண்ணியக்கால் முலை மணமும் என்றது, தேவியின் கற்புச் சிறப் புணர்த்திநின்றது. பொய்கையி லென்பது அவாய்நிலை; எனவே இது தாமரையாயிற்று. பொய்கையில் இரவுப்போதிலும் கூம்புதலின்றி விரிந்து திகழ்வதொரு தாமரைப்பூ வுளதேல் அது நிகர்க்கும் கண்ணெண் றதனால், இஃது இல்பொரு ளுவமை. இனிப் பழையவுரைகாரரும், "ஒரீஇயின போல வென்பதற்குப் பொய்கை யென வருவித்துப் பொய் கையை யொருவினபோல என வுரைக்; இனி மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயின போல வென்பாரு முளர். இரவு மலர் நின்றென்பது பொய்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற் றென்றவா" றென்பர். பொய்கையில் நீங்கியன போல முகத்தே அலமரும் என்றது, பொய்கைக்கண்ணே நாளத்தின் நீங்கி நீர்மேல் அலமரும் பூப்போல முகத்திடத்தே கண் அலமரும் என்க. பெருமை, ,கண்ணிற் கிலக்கணமாகலின், "பெருமதர் மழைக்கண்" என்று சிறப் பித்தார்.

நீரழுவம், ஆழ்ந்த நீருள்ள யாறு. காந்தள் இலங்கும் யாறு எனவே, யாற்றின் இரு கரையும் எய்தும்; அவ்விடத்தே நின்ற வேய் என்றது, அதன் குளிர்ச்சியைச் சிறப்பித்தவாறு. "நீரழுவத்துவே யென்றது, ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தே யிருக்கும் தோள் என்றற் கென்க" என்பர் பழையவுரைகாரர். காந்தளையுடன் கூறியது, தோளிற்கு வேய் போலக் கைக்குக் காந்தள் உவமநலஞ் சிறந்த தென் றற்கு. வாழ்க்கைத் துணையாதலால், அரசற்கு வாழ்வு வேண்டி வாழ்த்தலுற்ற ஆசிரியர், "இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே" என்றார். பல வென்பதை ஆயிரத்தோடு மாறிக் கூட்டுக. வெள்ளம், ஒரு பேரெண்.

விளங்கிய கொள்கையும் வாய்மொழியுமுடைய கடவுளரைப் பேணற் கெடுத்த ஆவுதிப் புகையும், பாசவர் விருந்து கண்மாறா துண்பித்தற் கெடுத்த அடு நெய் யாவுதிப் புகையுமாகிய இரண்டுடன் கமழும் நாற்றத் தால், வானத்துக் கடவுளரும் விழைதக, வளம் பழுனிய சிறப்பினை யும், கள்ளினையும் யானையினையுமுடைய, நன்கலம் பேணித் தரூஉம் மண்படு மார்பினையு முடையோய், கோவலர் பல்லாக்களை வியன்புலம் பரப்பிக் கடத்திடை யுயர்மணி பெறூஉம் செருப்புமலை நிற்கும் பூழி நாட்டவர் கோவே, மழவர் மெய்ம் மறை, அயிரைப் பொருந, மழை பிழைப்பறியாது பயம் சுரந்து, மாந்தர்க்கு நோயி லூழியாக, கூந்தலையும் மழைக் கண்ணையும் பணைத் தோளையுமுடைய இவளோடு கூடிப் பல ஆயிர வெள்ளம் வாழ்வாயாக வென வாழ்த்தியவாறாம். இனிப் பழைய வுரைகாரர், "பூழியர் கோவே, மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருந, பய மழை சுரந்து மாந்தர்க்கு நோயில் ஊழி யுண்டாக, இவளோடே பல ஆயிர வெள்ளம் வாழிய ரெனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.

இனி, "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" (தொல் பொ. 75) என்ற சூத்திரத்து, "ஐவகை மரபின் அரசர் பக்கமும்" என்பதற்கு, இப்பாட்டினைக் காட்டி, இதன்கண் அரசன் "ஓதியவாறும் வேட்ட வாறும் காண்க." என்றும், "வழக்கொடு சிவணிய வகைமை யான" (பொ. 86) என்ற சூத்திர வுரையில், "மிதியற் செருப்பிற் பூழியர் கோவே....அயிரைப் பொருந" என்ற இது "மலை யடுத்தது" என்றும், நச்சினார்க்கினியர் கூறுவர்.

மண்படு மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என அரசன் சிறப்பும், "மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு, கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்" என்பது முதலாகத் தேவியின் சிறப்பும் பாடி, "ஆயிர வெள்ளம் வாழிய பலவே" யென வாழ்த்தலின், இது செந் துறைப் பாடாண் பாட்டாயிற்று.
-----------------------

3.2. கயிறுகுறு மிகவை.

22

    சினனே காமங் கழிகண் ணோட்டம்
    அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
    தெறல் கடுமையொடு பிறவு மிவ்வுலகத்
    தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந்
    தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
    5
    கடலுங் கானமும் பலபய முதவப்
    பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
    மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
    அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
    மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
    10
    ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
    பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
    1சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
    கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
    ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
    15
    வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
    உளைப் பொலிந்த மா
    இழைப் பொலிந்த களிறு
    வம்பு பரந்த தேர்
    அமர்க் கெதிர்த்த புகன் மறவரொடு
    20
    துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
    ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த
    வில்லிசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
    கடிமிளைக் குண்டு கிடங்கின்
    நெடுமதில் நிரைப் பதணத்
    25
    தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
    பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
    போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
    நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும்
    ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
    30
    நாடுகெழு தண்பணை சீறினை யாதலின்
    குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
    பாயிரு ள‌க‌ற்றும் ப‌ய‌ங்கெழு ப‌ண்பின்
    ஞாயிறு கோடா ந‌ன்ப‌க லமைய‌த்து
    க‌வ‌லை வெண்ண‌ரி கூஉமுறை ப‌யிற்றிக்
    35
    க‌ழ‌ல்க‌ட் கூகை குழ‌றுகுர‌ற் பாணிக்
    க‌ருங்க‌ட் பேய்ம‌க‌ள் வ‌ழ‌ங்கும்
    பெரும்பா ழாகுமன் ன‌ளிய‌ தாமே.

துறை: வ‌ஞ்சித்துறைப் பாடாண்பாட்டு,
வ‌ண்ண‌ம்: ஒழுகுவ‌ண்ண‌மும் சொற்சீர் வ‌ண்ண‌மும்.
தூக்கு: செந்தூக்கும் வ‌ஞ்சித்தூக்கும்.
பெய‌ர்: க‌யிறுகுறு முக‌வை.

1-11 சின‌னே........உம்ப‌ல்

உரை:சின‌ன் காம‌ம் க‌ழி க‌ண்ணோட்ட‌ம் -கையிக‌ந்த சினமும் கையிக‌ந்த காமமும் கையிக‌ந்த‌ க‌ண்ணோட்ட‌மும்; அச்ச‌ம் பொய்ச் சொல் அன்பு மிக வுடைமை- ப‌கைவ‌ர்க்கு மிக அஞ்சுத‌லும் வாய்மையின் ப‌டாத‌ பொய் சொல்லுத‌லும் தொட‌ர் புடையார்பால் அள‌விற‌ந்த‌ அன்புடைமையும்; தெற‌ல் க‌டுமை யொடு பிற‌வும் - கையிக‌ந்த தண்ட‌ஞ் செய்த‌லும் இவைபோல்வ‌ன‌ பிற‌வும்;இவ்வுல‌கத்து அற‌ம் தெரி திகிரிக்கு - இவ்வுல‌க‌த்தே அற‌ம‌றிந்து செய்யும் அர‌சுமுறை ந‌ட‌த்த‌ற்கு; வ‌ழிய‌டை யாகும் தீது-இடையீடாய்த் தீது விளைவிப்ப‌ன‌வ‌ற்றை; சேண் இக‌ந்து- த‌ன்னாட்டின் க‌ண் இல்லையாக்கி;ந‌ன்று மிக‌ப் புரிந்து- அற‌த்தையே மிகுதியும் செய்து; மாக்க‌ள் - த‌ன்னாட்டில் வாழ்ப‌வ‌ர்; பிற‌ர் பிற‌ர் ந‌லியாது- த‌ம்முட் பிற‌ரைத் துன்புறுத்தாம‌லும்; வேற்றுப் பொருள் வெஃகாது-பிற‌ர்க் குரித்தாய்த் த‌ம‌க்கு இயைபில்லாத‌ பொருளை விழையாம‌லும்;மையில் அறிவின‌ர் செவ்விதின் ந‌ட‌ந்து-குற்ற‌மில்லாத‌ அறிவுடைய‌ராய்ச் செம்மை நெறிக்க‌ண் வழுவுத‌‌லின்றி; த‌ம் அம‌ர் துணைப் பிரியாது - த‌ம்பால் அன்பு செய்து வாழும் வாழ்க்கைத் துணைவியைப் பிரியாம‌ல்; பாத்து உண்டு - ப‌ல‌ருக்குப் ப‌குத்த‌ளித்துத் தாமும் உண்டு இனிது வாழ‌;மூத்த‌ யாக்கை யொடு பிணியின்று க‌ழிய‌- வெறிதே மூத்த‌ ய‌க்கையும் நோயும் இல‌ராய் மிக்கு நில‌வ‌; க‌ட‌லும் கானமும் ப‌ல் ப‌ய‌ம் உத‌வ‌ - க‌ட‌லும் காடும் த‌ம்மிட‌த்தே யுண் டாகும் பொருள் ப‌ல‌வும் உத‌வ‌; ஊழி உய்த்த‌ உரவோர் உம்ப‌ல் - அர‌சிய‌லை முறையே செலுத்திய‌ பேர‌ர‌ச‌ர் வ‌ழித் தோன்ற‌லே எ-று.

கழி கண்ணோட்டம் என்புழி, நின்ற கழி யென்னும் உரிச்சொல் ஏனைச் சினம் காமம் என்பவற்றோடும் சென்றியையும், அன்புமிக வுடைமை யென்றதற்கேற்ப, மிக்க அச்சமும், வாய்மையிடத்த தாகாத பொய்ம்மையும் எனக் கொள்க. ஏகாரம் எண்ணுக் குறித் தியல்வது. கழிய வென்பது, கழி யென்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினை யெச்சம். தீது சேணிகந்து, நன்று புரிந்து, மாக்கள் மையில் அறிவின ராய் நடந்து பாத்துண்டு பிணியின்று கழிய, கடலும் காடும் பயம் உதவ, ஊழி யுய்த்த உரவோர் உம்பல் என இயையும். திகிரி யுருட்டிச் செங்கோ லோச்சும் வேந்தர் செய்வதும் தவிர்வதும் தேர்ந்து, தவிர் வதனைத் தவிர்த்தவழிச் செய்வது செய்தது போலச் செம்மை பயத்தலின், தீதினை முதற்கட் கூறினார். நன்றாற்றலிற் றாழ்க்கினும் தீது களைதலே வேண்டுவ தென்பதை,"நல்லது செய்த லாற்றீ ராயினும், அல்லது செய்த லோம்புமி னதுதான், எல்லாரு முவப்ப தன்றியும், நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே" (புறம் 195) என்று சான்றோர் கூறுதல் காண்க. வினைசெய்தற்கண் சினமும் அரசர்க்கு ஓரளவு வேண்டுதலின், விலக் குண்பது கழிசினமே யென்க. வேந்தனைச் "சினங்கெழு குரிசில்" (பதிற் 72) என்றும், "சினங்கெழு வேந்தர்" (புறம் 72) என்றும் சான்றோர் கூறுதலால், சினமும் ஓரளவு வேண்டியிருத்தல் துணியப் படும். உயிர்த் தோற்றத்துக்கும் அன்பும் அருளும் மன்னிய இன்ப வாழ்விற்கும் அளவுட்பட்ட காமம் இன்றியமையாமையின் கழி காமமே தீதென வறிக. "காமஞ் சான்ற கடைக்கோட் காலை...சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" (தொல் பொ. 192) என்றும், "எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது, தானமர்ந்து வரூஉ மேவற் றாகு" மென்றும், "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்,அறத்துவழிப் படூஉம்" (புறம் 31) என்பதனால் அறத்தின் இம்மைப் பயன்கள் நற்பொருளும் நற்காமமுமாம் என்றும் சான்றோர் ஓதுவது காண்க. எனவே, அறத் துக்குத் துணையும் பயனுமாகிய அளவுட்பட்ட காமத்தை விடுத்து அள விறந்து செல்லும் கழிகாமமே நூலோரால் யாண்டும் விலக்கப்பட்ட தென் றறிக. குற்றம் செய்தோரை மேன்மேலு மூக்கு மாகலின், கழி கண்ணோட்டமும் தீதெனப்பட்டது. சின முதலிய மூன்றும் உள்ளத்தே யுருத் தெழுவன வாதலின், ஓரினமாக்கப்பட்டன. "காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான், பேணாமை பேணப் படும்" (குறள் 866) என்பதனால், கழி சினமும் கழி காமமும் விலக்கப்படுவன காண்க.

அச்சம் உள்ளத்தைச் சிதைத்து மெய்யினும் வாயினும் விளங்கத் தோன்றலின், சின முதலியவற்றைச் சாரவைத்து, உள்ளத்தே யில்லா ததைக் கூறுவதாகிய சொன்மே னிற்கும் பொய்ச் சொல்லை அச்சத்தின் பின் வைத்தார். இவ்விரண்டையும் ஓரினப்படுத்தியது சொல்லோ டியைபுண்மை கருதி யென்க. அச்சமே கூழ் களதாசாரம்." (குறள் 1075) என்றும், "அச்ச முடையார்க் கரணில்லை" (குறள் 534) என்றும் சான்றோர் விலக்கினமையாலும், கொலைக் கடுத்த நிலையிற் றங்கும் குற்றம் பொய் கூறுதலாலும் இவ்விரண்டும் விலக்குண்ப வாயின. "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று" (குறள் 323) என்பதனால் கொலைக்கடுத்த நிலையிற் றங்குவது பொய் கூற லென்பது உணர்க. அரசாட்சியின்கண் பகைவரது பகைமைக்கு ஓரளவு அஞ்சுதலும், வினைக்குரியாரைத் தேர்ந்து தெளிதற்கண் புரை தீர்ந்த பொய்ம்மையும் வேண்டியிருத்தலின், மிக அஞ்சுதலும், வாய்மைப் பாற் படாத பொய் கூறுதலையும் விலக்கினார். "அஞ்சக கேள்போற் பகைவர் தொடர்பு" என்றும், "உட்பகை யஞ்சித் தற்காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்" (குறள். 882, 883) என்றும் வருவன வற்றால் அச்சம் ஓரளவு வேண்டி யிருத்தலும், இல்வழி "வகையறிந்து தற்காத்தல்" இலனாய் வேந்தன் கெடுதலும் பயனா மென்க. "அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்" என்பதும், "மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம், பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம், குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி, மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்ப மல்லது தொழுதக வில்" (சிலப். வஞ். 25-100-104) லெனச் சேரமான் செங்குட்டுவன் அஞ்சிக் கூறுவனவும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். வாய்மையிற் றீராத பொய்ச் சொல்லும் அரசியல் வினைக்கு வேண்டு மென்பதை "அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின், றிறந்தெரிந்து தேறப் படும்" (501) என்று திருவள்ளுவனார் தெரிவிப்பதனா லறிக.

கழி கண்ணோட்டம்போல் அன்பு மிகவுடைமையும் தீதா மாகலின், நட்டோரை யளிக்குமிடத்து இதன் பயப்பாடு கண்டு விலக்கினார். அன்பு தொடர்புடையார் மேலும், கண்ணோட்டம் தன்னொடு பயின்றார் மேலும் செல்வன. அன்பு மிகவுடையனாயவழி, அன்பு செய்யப்பட்டார் "கொளப் பட்டே மென் றெண்ணிக் கொள்ளாதன" செய்து வேந்தனது கொற்றம் சிதைப்ப ராதலின், அன்பு மிக வுடைமை தீதாய் விலக்கப்படுவ தாயிற்று. சச்சந்தன் கட்டியங்காரன்பால் அன்பு மிக வுடையனாய், "எனக் குயி ரென்னப்பட்டான் என்னலாற் பிறரை யில்லான்," என்று தன் னரசினை அவன்பால் வைத்துக் கெட்ட திறத்தைச் சீவகசிந்தாமணி தெரிவிப்பது காண்க.

தெறலாவது, நெறி திறம்பியும் பகைத்தும் கொடுமை செய்து குற்றப்பட்டார்கண் வேந்தன் செய்ய வேண்டுவது. அத் தெறலின் கடுமையாவது குற்றத்தின் மிக்க தண்டம். இது கையிகந்த தண்ட மென்றும் வழங்கும். கையிகந்த தண்டம், "வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்" (குறள். 567) என்ப. குற்றங் காணுமிடத்து, "மெய்கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத் தக வொறுத்"தலும், ஒறுக்குமிடத்தும், "கடிதோச்சி மெல்ல" வெறிதலும் வேண்டு மென்பது அரசியன் முறை. இனிப் பழையவுரைகாரர், "அச்சம் பகைவர்க் கஞ்சுதல்" என்றும் "அன்பு பொருண்மே லன்பு" என்றும் கூறுவர்.

"பிறவும்" என்றது, இக் கூறியவை போல அரசர்க் காகா வென ஆன்றோரால் விலக்கப்பட்டன வெல்லாம் எஞ்சாமல் தழுவுதற்கு; அவற் றைத் திருக்குறள் முதலிய அற நூல்களுட் காண்க. இக் குற்றங்களை யுடையதாயின் அரசனீதி செல்லாது கெட்டழியும் என்பார், "அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது" என்றார். தீ தென்பதனை ஒவ்வொன் றிற்கும் தனித்தனிக் கூட்டுக. "கால்பார் கோத்து ஞாலத் தியக்கும், காவற் சாகா டுகைப்போன் மாணின், ஊறின் றாகி யாறினிது படுமே,

உய்த்தல் தேற்றா னாயென் வைகலும், பகைக்கூ ழள்ளற்பட்டு, மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே் " (புறம் 185) என்று பிறரும் கூறுதல் காண்க. அறம் திரி திகிரி-அறம் நிற்றற்பொருட்டு ஆராய்ந்து செலுத்தப்படும் அரசு முறை. வழி யடைப்பதை, "வழியடை" யென்றார்.

கழிசினம் முதலிய குற்றமும் பிறவுமாகிய தீது தம் அரசியலிலும், அது நிலவும் நாட்டிலும், அறவே இல்லையாகப் போக்கினமை தோன்ற, "சேணிகந்து" என்றார். என் றென்பது எஞ்சிநின்றது. தீது நீங்குவது நன்றே யென்றாலும,, தாமும் அறம் பலவும் செய்தன ரென்பார் "நன்று மிகப் புரிந்து" என்றார். மிகப் புரிந்தது, அதுநோக்கி நாட்டில் வாழ் பவர் தம் செம்மை நெறி கடவாது நிற்றற்கென வுணர்க. சினம் முதலியன மிக்கவழித் தீது பயத்தற் போல மிகச் செய்தவழி மிக்க நலம் பயத்தலின, "நன்று மிகப் புரிந்து" என்றெடுத் தோதினார்.

கடற்பயன் முத்தும் மணியும் பவளமு முதலாயின. கானம் உதவும் பயன் காடுபடு பொருள் பலவுமாம். தீதுசே ணீங்க நன்று மிகப் புரிந்து நிலவும் அரசியலால் கடலும் கானமும் பயன் பலவும் உதவுவன வாயின வென்றற்கு "கடலும் கானமும் பலபயம் உதவ" என்றார்.

கடலும் கானமு மொழிந்த நாட்டிடத்து நலம் கூறுதலுற்ற ஆசிரியர் நாட்டு மக்களின் செயல் நலம் காட்டுவாராய், "பிறர் பிறர் நலியாது" என்பது முதலியன கூறினார். நன்று மிகப் புரியும் அரசியல் நலத்தால் நாட்டில் வளம் மிகுதலின், செல்வக் களிப்பால் மையலுற்றுப் பிறர் பிறரை வருத்தியும், பிறர்க்குரிய பொருளை வெஃகியும் நெறி பிறழும் ஏனை நாட்டவர் போலாது, தெளிந்த அறிவும் செவ்விய நடையு மேற்கொண்டு இன்புற் றொழுகின ரென்றற்கு, "பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது, மையி லறிவினர் செவ்விதி னடந்து" என்றார். நலியாமைக் கேது வெஃகாமையும், அதற் கேது மையில் அறிவுடைமையுமா மெனக கொள்க. அறிவுடைமை சொல்லானும் செய லானும் வெளிப்படுமாயினும, சொல்லினும் செயல் சிறந்து தோன்றலின் அதன்மேல் வைத்துச் "செவ்விதின் நடந்து" என்றார்,.

ஓதல், தூது, ஆள்வினை, நாடுகாவல், பொருள் என்ற இவை குறித் துப் பிரிவதல்லது தம்மை விரும்பி யுறையும் துணைவியராய மகளிரை அன்பு கண்ணறப் பிரிதல் அந் நாட்டவர்பால் இல்லை யென்பதற்கு "தம் அமர்துணைப் பிரியாது" என்றார். பரத்தையிற் பிரிவு இவ் வாசிரியர் காலத்தே பிரிவாகக் கருதப்படுவ தன்றென் றுணர்க. "ஓதல் பகையே தூதிவை பிரிவே" (தொல் அகத் 25) என ஆசிரியர் தொல்காப்பிய னாரும் பரத்தையிற் பிரிவை இவற்றோடு கூறாமை யறிக. பொருண்மிக வுடைமையின், பொருள் வயிற் பிரிவும், பகை யின்மையின், தூதிற்பிரிவு ஆள்வினைப் பிரிவு நாடுகாவற் பிரிவு முதலியனவும், மையி லறிவின ராதலின், ஓதற் பிரிவும் இல்லா தொழிதலின் "பிரியாது" என்றார். இன்ப வொழுக்கத்துக் காமஞ் சிறப்பது குறித்துப் பரத்தையிற் பிரிதல் பிரிவாகாதாயினும், அதுதானும் செய்தில ரென்றற்கு, "தம் அமர் துணைப் பிரியாது" என வற்புறுத்தினார்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் இல்வாழ்வார் யாவர்க்கும் தலையாய‌ கடனாதலின் "பாத்துண்" டென்றார். உண்ண வென்பது உண்டெனத் திரிந்துநின்றது. இசையாகிய பயனின்றிக் கொன்னே மூத்து விளியும் யாக்கை யென்றற்கு மூத்த யாக்கை யென வாளாது கூறினார். "இசை யிலா யாக்கை" (குறள். 231) என்று சான்றோர் கூறுவது காண்க. பிணியிலா வாழ்க்கை, வாழ்விற் பெறும் பேறுகளுள் சிறந்த பேறாதலின் "பிணியின்றிக் கழிய" வென்றார்; "நோயின் றியன்ற யாக்கையர்" (முருகு. 143) என ந‌க்கீரனார் பிணியிலா வுடம்பைப் பாராட்டி யுரைப்பது காண்க. இத்தகைய சிறப்புடைய மக்களை "மாக்கள்" என்றார், இன்பமும் துன்பமும் விரவிய வாழ்க்கையில், இன்பமல்லது காணாமையின். இனி மக்க ளெனற்பாலது விகாரத்தால் நீண்ட தெனக் கோடலுமொன்று. இவ் வாழ்க்கை இத்துணைச் சிறப்புற்று விளங்குதற் கேது கோடா அரசியலே யென வ‌றிக."யாண்டு பலவாகியும் நரை யில்லை யாலோ" என்று வினவிய சான்றோர்க்கு, ஆசிரியர் பிசிராந்தையார் "வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்" (புறம். 191) என்றது ஈண்டுக் கருதத் தக்கது.

இங்ஙனம் சீரிய முறையில் அரசு முறை நடாத்துவோர்க்கு இன்றி யமையாது வேண்டப்படுவது சிறந்த அறிவு காரணமாகப் பிறக்கும் மனத்திண்மை யாதலின், அதனை யுடையோர் என்றற்கு "ஊழி யுய்த்த‌ உரவோர்" என்றார். உம்பல், வழித்தோன்றல். உரவோர் ஊழி யுய்த்த நலத்தால், கடலும் கானமும் பல்பயம் உதவ‌லும், நாட்டு மக்கள் இசையின்றிக் கொன்னே மூத்து விளிதல் பிணியுடைய‌ராதல் இன்றி மேம்படுதலு முளவாயின என்பார் "பல் பயம் உதவ" என்றும், "மூத்த‌ யாக்கையொடு பிணியின்றிக் கழிய" வென்றும் பிரித்துக் கூறினார்.

12-16. பொன்செய்.............தோன்றல்

உரை: பொன் செய் கணிச்சி - இரும்பினாற் செய்த‌ கோடரியால்; திண் பிணி யுடைத்து - திண்ணிய வன்னிலத்தை யுடைத்துத் தோண்டப்பட்டபடியால்; சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல் - சிதறுண்டு சிறிதே யூறிய நீர் பொருந்திய கிணறு களில்; கயிறு குறு முகவை - நீண்ட கயிறு கட்டிச் சேந்தப் படும் குறுகிய முகவைகளை; மூயின மொய்க்கும் - நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும்; ஆ கெழு கொங்கர் நாடு அகப் படுத்த - ஆனிரைகளையுடைய கொங்கரது நாட்டை வென்று தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட; வேல் கெழு தானை வெருவரு தோன்றல் - வேலேந்திய தானையால் பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே எ-று

பொன் னென்றது ஈண்டு இரும்பினை. இரும்பைக் கரும்பொன் என்றும் வழங்குப. கருங்கல் நிறைந்த வலிய நிலமாதல் பற்றி, வன் னிலத்தைத் "திண்பிணி" யென்றார். மண்ணுங் கருங்கற் பாறைகளும் கொண்டு இறுகப் பிணித்தது போறலின், வன்னிலம் பிணி யெனப்பட்ட‌தெனினு மமையும். இந்நிலத்தை நீர் வேண்டி யகழுமிடத்து, கற்பாறை கள் ஒழுங்கின்றிப் பல்லாறாக உடைந்து சிதறி நீர் மிக வூறும் வாய்ப் பின்றி யிருப்பது தோன்ற, "சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தல்" என்றும், நீர் வாயாதவழி பத்தலிடத்தே முகவைகள் உளவாகா வாதலின், "நீர் வாய்ப் பத்த"லென்றும் கூறினார். சிரறுதல், ஒழுங்கின்றிச் சிதறுதல். "சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பு" (கலி 88) என்றாற் போலச் சிரறுதல் வேறாத லென்றுமாம். வேறாதல், பிளந்து வேறாதல். "சிரறுதல் சிதறுத" லென்றும், "சிலவூறிய வென்றது பல்லூற் றொழியச் சில்லூற் றாக வூறிய வென்றவா" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். "கணிச்சி யிற் குழித்த கூவல் நண்ணி, ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல்" (நற் 240) என்பதனால், பத்தல் உட்கிண றென்றும் கொள்ளப்படும். மேலே அகலமாக அகழ்வது கூவ லென்றும், அதனுள்ளே குறுகிய வாயுடைத்தாய் ஆழமாய்த் தோண்டப்படுவது பத்த லென்றும் கொள்க. இப் பத்ததலைப் பிள்ளைக் கிணறு என்றும் கொங்கு நாட்டவர் கூறுப. முகவை, நீர் முகக்கும் கருவி; இது மரத்தாற் செய்யப்படுவது. நீரின் சின்மை குறித்தும் நீரும் மிக்க ஆழத்திலிருப்பது பற்றியும் குறுமுகவை கொள்ளப்பட்டது. பத்தல் இயல்பாகவே மிக ஆழ்ந்திருப்பதுடன் நாடோறும் சுரண்டுதலால் அவ் வாழம் மிகுந்தவண்ண மிருப்பதால், நீண்ட கயிறுகொண்டு முகத்த லல்லது இறங்கி முகந்து கோடல் கூடாமையின் கயிறு குறு முகவை யென்றதற்கு, நீண்ட கயிறு கொண்டு நீர் சேந்தப்படும் குறு முகவை யெனப் பொருள்கூறப்பட்டது. முகவை யைக்; குறு முகவை யெனவே, கயிற்றையும் நீண்ட கயிறெனக் கோடல் வேண்டிற் றென்றுமாம். குறுமை, சிறுமை குறித்து நின்றது. நீர் கிடைத்த லருமையால் வேட்கை கொண்டலையும் ஆனிரைகள், முகவை களைக்கண்ட மாத்திரையே அவற்றின் குறுமையும் நீரின்மையும் நோக் காது மொய்க்கின்றன வென்பார், "மூயின மொய்க்கும்" என்றார். அவ்வாறு மொய்ப்பனவற்றிற்குக் கொங்கர் நீர் முகந் துண்பிப்ப ரென்ற கருத்தால் முகவைகள் கயிற்றோடே கட்டிவைக்கப் பெற்றுள்ளன வென் பது இதனாற் பெறப்படும். இப் பொருட்சிறப்புப்பற்றி, இப்பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவ தாயிற் றென வறிக.

இனிப் பழையவுரைகாரர் "தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை யென்றவா"றென்றும், "இச் சிறப்பானே இதற்குக் கயிறுகுறு முகவை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். ஏன்றது நீர் முகப்பது கருதியிடப்பட்ட முகவை நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் என்றும், இவ்வாறு கூறிய சிறப்புக் கருதியே இப் பாட்டு இத் தொடராற் பெயரெய்திற் றென்றும் கூறியவாறாம்.

இனி, கொங்கர் என்பவர் கொங்கு நா்டவர்; இவரை "ஒளிறுவாட் கொங்கர்" (குறுந் 393) என்றும் "ஈர்ம்படைக் கொங்கர்" (பதிற்73) என்றும் சான்றோர் கூறுதலால், இவர் படைவன்மையாற் புலவர் பாடும் புகழ் பெற்றவ ரென்பது விளங்கும். இவர் வாழும் நாட்டின் பெரும் பகுதி மென்புல வைப்பின் நீர்நா டன்மையின், இவர்பால் ஆனிரை
வளர்க்கும் தொழில் மிக்குநின்றது. அதனால் இவரை "ஆ கெழு கொங்கர்" என்றார். "கொங்கர் படுமணி யாயம் நீர்க்கு நிமிர்ந்து செல் லும், சேதா வெடுத்த செந்நிலப் பெருந்துகள்" (அகம் 79) என்று பெறரும் கூறுதல் காண்க. இவரது கொங்குநாடு சேரநாட்டைச் சேர விருத்தலின், பலகாலும் சேரர் இவர்களை வென்று இவர் நாட்டைத் தம் நாட்டொடு அகப்படுத்திக் கொண்டுள்ளனர். அதுபற்றியே சேரமன்னர் கள், "நாரரி நறவின் கொங்கர் கோ" (பதிற் 87) என்றும், "கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோ" (பதிற் 90) என்றும் பாராட்டப்படுவர். இக் கொங்குநாட்டைத் தாம் கோடல் வேண்டிச் சோழ வேந்தரும் பாண்டி வேந்தரும் போருடற்றறி யிருக்கின்றனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் கொங்கரை வென்ற திறத்தை, "மைந்த ராடிய மயங்கு பெருந் தானைக், கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே" (புறம் 373) என்றும், பசும்பூண் பாண்டியன் வென்ற செய்தியை, "வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபலதந்த பசும்பூண் பாண்டியன்" (அகம் 253) என்றும் சான்றோர் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு முடிவேந்தரே யன்றிக் குறுநில மன்னரும் இக் கொங்கரை வென்று கொள்ள முயன்றுள்ளனர். ஆஅய் அண்டிர னென்பான் இம் முயற்சியி லீடுபட்ட திறத்தை, "கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றை" (புறம் 130) என்று சான்றோர் குறிப்பது காண்க. முடிவேந்தர் மூவர்க் கும் குறுமன்னர்க்கும் விழைவு தோற்றுவித்துப் போருடற்றுதற் கேது வாகிய நலம் பல வுடைய கொங்கர், எக்காலத்தும் போரை யெதிர்நோக்கி, அதற்கேற்ப போர்ப்பயிற்சி யுடையரா யிருந்தமையின், அவரை முற்றவும் வென்று கோடல் அரிதென்பது தமிழக முழுதும் அறிந்த செய்தி யாயிற்று. ஆகவே, அக் கொங்கரை வென்று அவர் தம் நாட்டை யகப் படுத்தற்குக் துணைசெய்த தானையை, "வேல்கெழு தானை" யென் றும்,இச் சேரமான் பல் யானைச் செல்கெழு குட்டுவன் அத் தானையை யுடைய னாதலால், ஏனை வேந்தர்க்கு இவன்பால் அச்சமுண்டாயிற் றென்பார், "வெருவரு தோன்றல்" என்றும் கூறினார்.

கணிச்சியால் திண்பிணி யுடைத்துச் செய்த பத்தற் கரைகளில் மூயினவாய் மொய்க்கும் ஆகெழு கொங்கர்நாடு அகப்படுத்த வேல்கெழு தானையால் வெருவரு தோன்றல் என இயைத்து முடிக்க.

17-27 உளை.....குட்டுவ.

உரை: உளைப் பொலிந்த மா-தலையாட்டத்தை யணிந்து விளங்கும் குதிரைகளும்; இழைப் பொலிந்த களிறு-இழை யணிந்து விளங்கும் யானைகளும்; வம்பு பரந்த தேர்-தேர்ச் சீலைகளால் விரிந்து தோன்றும் தேர்களும்.; அமர்க் கெதிர்ந்த புகல் மறவரொடு-போருடற்றற் கென முற்பட்ட போரை விரும்பும் வீரர்களுமாகிய நால்வகைப் படையுடன் சென்று; மலர் அகன் பறந்தலை-பரந்தகன்ற செண்டு வெளியின் எதிரே நிற்கும்; துஞ்சு மரம் துவன்றிய ஓங்கு நிலை வாயில்-கணையமரம் செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே; தூங்குபு தகைத்த-தூங்குமாறு கட்டிய; வில் விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி-வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய விழுமிய சிறப்புடைய ஐயவித் துலாமும்; கடி மிளை- காவற் காடும்; குண்டு கிடங்கின்-ஆழ்ந்த கிடங்கும்; நெடு மதில் நிரைப் பதணத்து-நெடிய மதிலிடத்தே நிரல்பட வமைத்த பதண மும் உடைமைால்; அண்ணல் அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த-பகைவருடைய தலைமையும் பெருமையும் பொருந்திய உயர்ந்த அகப்பா வென்னும் அரணை யெறிந்து வென்றி கொண் டதனால்; பொன் புனை உழிஞை-பொன்னாற் செய்த உழிஞை மாலை சூடிய; வெல் போர்க் குட்டுவ-வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே எ-று.

மாவும் களிறும் தேரும் மறவரும் என்ற நாற்படையுடன் சென்று பறந்தலை கடந்து அகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவன் என இயையும். ஒடு, எண்ணொடு. உளை, தலையாட்டம்; குதிரையின் இரு செவிகட்கு மிடையே நெற்றியிற் கிடந்து அழகு செய்வது. உளை யென்பது பிடரி மயிருககும் பெயராய் வழங்கும்; "விரியுளைக் கலிமான் தேரொடு வந்த விருந்து" (கலி 75) என்பதன் உரை காண்க. இழை யென்றது பொன்னரி மாலையும் ஓடையும் கிம்புரியும் பிறவுமாயினும், சிறப்புடைய பொன்னரி மாலையே ஈண்டு இழையெனப்பட்டது. இவாவாறு குதிரைக்கு உளையும் களிற்றுக்கு இழையும் அழகு செய்தல் பற்றி, "உளைப் பொலிந்தமா இழைப் பொலிந்த களிறு" எனச் சிறப்பித்தார். வம்பு, தேர்ச்சீலை. அமர்க்கெதிர்ந்த வழியும் , ஆடவர்க்கு அவ் வமரின்பால் உள்ளம் செல்லாதாயின், உயிர் காத்த லொன்றே பொருளாகக் கொண்டு மறம் வாடுவராதலால், "அமர்க் கெதிர்ந்த" வென்றதனோ டமையாது "புகல் மறவரொடு" என்றார். ஒடு, உயர்பின் வழிவந்த ஒருவினை யொடு. அமரெனின் அதனை ஆர்வத்தோடு ஏற்று ஆற்றுதற்குச் செல்லும் அவரது விரைவு தோன்ற, "எதிர்ந்த" வென இறந்தகாலத்தாற் கூறினார்.

இனி, குட்டுவன் அகப்பாவை யெறிந்த செய்தி கூறலுற்ற ஆசிரியர், அதன் அமைதியினைத் தெரித்து மொழிகின்றார். அகமதிலைப் பற்றச் செல்வோர் அதன் எதிரேயுள்ள செண்டு வெளியில் காத்தூன்றும் பகை வீரரை வென்றுகொண் டேக வேண்டுதலின் அங்கே போர் நிகழ்வது கண்டு, அதன் பரப்பும் விளஙக, "மலரகன் பறந்தலை" யென்றார். மல ரகல் என்பது மீமிசை போல ஒருபொருள்மேல் நின்றது. கோயி லிடத்தே யுள்ள முரசு முழங்கும் முற்றம் போல அகமதிலின் புறத்தே அதற்கு முற்றமாய் மூலப் படையிருந்து போர் முரசு முழக்கும் வெளிலைச் செண்டுவெளி யென்ப. செண்டாட்டயரும் இடமாதலின் இதனைச் செண்டு வெளி யென்பது வழக்கு. அகமதிலைக் கொள்வோரும் காப் போரும் கலந்து போர் செய்தலின், இதனையும் பறந்தலை யென்றா ரென வறிக. இவ் வெளி அகமதிற்கும் புறமதிற்கும் இடையே அகழியை யணைந்து கிடக்கும் வெளியிடம்.

துஞ்சுமரம், கணையமரம். "துஞ்சு மரக்குழாம் துவன்றி" (பதிற். 16) என்புழியும், "மதில் வாயிலில் தூங்கும் கணையமரம்" என்பர் பழைய வுரைகாரர். இதனைக் கழுக்கோ லென்றும் கூறுப. யானையும் தேரும் வருத்தமின்றிச் செல்லுமாறு அகற்சியும் உயர்ச்சியுமுடைய வாயி லென் றற்கு "ஓங்கு நிலை வாயில்" என்றார். ஐயவித் துலாம்,. மதிலிடத்தே நிறுத்த‌ப்ப‌டும் ஒருவ‌கைப் போர் பொறி. இத‌னை வாயிலிட‌த்தே தூங்குமாறு கட்டி, கதவை முருக்கிப் புகும் களிறுகளை இதனால் தாக்குவ ரென்பது தோன்ற, "வாயில் தூங்குபு தகைத்த ஐயவி" யென்றார். மேலும், இதனைப் பகைவர்மேல் விசையம்பு செலுத்தும் விற்பொறியோடு பொருந்த வைத்திருப்ப ரென்றற்கு; "வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி" யென்று கூறினார். னிப் பழையவுரைகாரர், "தூங்குபு வென்பதனைத் தூங்க வெனத் திரித்துக் காலவழுவமைதி யெனக் கொள்க" வென்றும், "தகைத்தல், கட்டுத" லென்றும் கூறுவர். விசைவில் லென மாறி யியைக்க. தானே வளைந்து அம்புகளைச் சொரியும் விசையையுடைய வில். விசை வில்லாகிய பொறி யென வுணர்க. இனி, "வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி" யென்பதறகு விசையையுடைய வில்லாற் செலுத்தப்படும் வலிய அம்புகளாலும் வீழ்க்க மாட்டாமையால், விசைவலி யழிந்து வில் கெடுமாறு பண்ணிய விழுச்சீர் ஐயவித் துலாம் என்றுரைப்பினு மமையும். விசையையுடைய வில்லாலும் துளை யுருவ எய்ய முடியாத மிக்க கனத்தையுடைய "ஐயவித் துலாம்" என்பர் பழையவுரைகாரர். அவ்வாறு கொள்ளுமிடத்து மாட்டிய வென்ப தற்கு மாள்வித்த வென்பது பொருளாகக் கொள்க.

மிளை, காடு. கரந்திருந்து தாக்கும் மறவரும் பல்வகைப் பொறி களும் உடைய காடாதலின், "கடிமிளை" யென்றும் இடங்கரும் கராமும் முதலையும் சுறவும் பிறவும் இனிது வாழ்தற்கேற்ற ஆழமுடைமைபற்றிக் "குண்டுகிடங்" கென்றும் விதந்தோதினார். கவணும் கூடையும் தூண்டி லும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் சென்றெறி சிரலும் நூற்றுவரைக் கொல்லியும்,தள்ளி வெட்டியும், அரிநூலும், பிறவும் கொண்டு, ஏனை வீரரால் காவல் வேண்டப்படாத நொச்சி மதில் "நிரைப்பதணம்" எனப்பட்டது. அகப்பா வென்பது சீரிய அரணமைந்த தோரிடமாகும். இஃது உம்பற்காட்டைச் சேர்ந்தது. குட்டுவன் உம்பற் காட்டை வென்று கொண்ட காலத்து இங்கே யிருந்து, தன்னை யெதிர்த்த பகைவரை வென்று இதனைத் தனக்குரித்தாகக்கொண்டான். இதுபற்றியே "அண் ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த குட்டுவ" என்றார். இவனது இச் செயலையே "மிகப்பெருந் தானையொடு இருஞ்செரு வோட்டி, அகப்பா வெறிந்த அருந் திறல்" (சிலப் 28,143-4) என இளங்கோ வடிகளும் கூறினர். ஐயவித் துலாம் முதலிய பொறிகளாலும், மிளை கிடங்கு, மதில், பதணம் முதலியவற்றாலும் தலைமை யமைந்ததுபற்றி, "அண்ணல்" என்றும், புறத்தோரால் எளிதில் தோண்டப்படாத அடி யகலமும், ஏணிக் கெட்டாத வுயரமும், பற்றற்காகக் காவற்பெருமையும் உடைமைபற்றிப் "பெருங்கோட் டகப்பா" வென்றும் சிறப்பித்தார். இவை அகப்பாவின் அருமை தோன்ற நின்றனவாயினும் குட்டுவனுடைய போர் நலமும் வன்மையும் விளக்குதல் காண்க. பெருங்கோட் டகப்பா வென்பதனால், இதனை மலைமே லரணாகக் கொள்ளற்கும் இடமுண்டு.

குட்டுவற் குரித்தாகிய இவ் வகப்பா பிற்காலத்தே செம்பியனொருவனால் இவனிடமிருந்து வென்று கொள்ளப்பட்டதாக மாமூலனார், “குட்டுவன் அகப்பா வழிய நூறிச் செம்பியன், பகற்றீ வேட்ட ஞாட்பு”(நற்.14) என்று குறிக்கின்றார்.

“சுற்றம ரொழிய வென்று கைக்கொண்டு, முற்றிய முதிர்” (தொல். பொ. 68) வாகிய உழிஞைப்போ ராதலால், இவனது உழிஞை “பொன் புனை யுழிஞை” யெனப்படுவதாயிற்று. பொன்னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றுமாம். உழிஞையைக் கொற்றா னென்றும், அது குட்ட நாட்டார் வழக்கென்றும் புறநானூற் றுரைகாரர் (புறம். 50) கூறுவர். இஃது ஒருவகைக் கொடி; “நெடுங்கொடி யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று சான்றோர் கூறுப. இது பொற் கொற்றான், கருங் கொற்றான்,
முடக்கொற்றான் எனப் பலவகைப்படும். இவற்றுள் பொற்கொற்றா னென்பதே உழிஞை யென்று சிறப்பிக்கப்படுவது. இதன் தளிரும் பூவும் பொன்னிறமுடைய வாதலால், “பொலங்குழை யுழிஞை” (புறம். 50) என்பர். பொன்புனை யுழிஞை யென ஈண்டுக் கூறியது பொன்னாற் செய்யப்பட்ட தென்றற்கு.

முழுமுத லரணம் முற்றலும் கோடலும் செய்யும் வேந்தருள், மதில் கொள்வோரும் காப்போரும் என வரும் இருவரில், முற்றிய புறத்தோரை வென்று பெறும் வெற்றியினும், காத்துநின்ற அகத்தோரை வென்று பெறும் வெற்றியே சிறந்ததாதலின், “வெல்போர் குட்டுவ” வென்றார்.

28-38. போர்த்து............தாமே

உரை: போர்த் தெறிந்த பறையால் புனல் செறுக்குநரும்- தோல் போர்த்துள்ள பறையை யெறிந்து உழவரை வருவித்தமிக்கு வரும் புனலை யடைப்பவரும்; நீர்த் தரு பூசலின் அம்பு அழிக்குநரும் - நீர் விளையாட்டின்கண் எழும் ஆரவாரத்தால்
அம்பும் வில்லும் கொண்டு விற்பயிற்சி செய்வாரது ஆரவாரத்தை யடக்குபவரும்; ஒலித்தலை விழாவின் மலியும் – பேராரவாரத்தை யுடைய பல விழாக்களிலே திரண்டு கூடி மகிழும்; யாணர் நாடுதண் பணை - புதுமையினை யுடைய பகைவர் நாட்டு மருத நிலங்கள்; சீறினை யாதலின் - அப் பகைவர்பால் நீ சினங்கொண்டனை யாத லால்; குட திசை மாய்ந்து குண முதல் தோன்றி – மாலையில் மேற்றிசையின் மறைந்து காலையில் கீழ்த்திசையி லெழுந்து தோன்றி; பா யிருள் அகற்றும் - தான் மறைந்து தோன்றுதற்
கிடையே நிலவுலகிற் பரந்த இருளைப் போக்கும்; பயம் கெழு பண்பின் - பயன் பொருந்திய பண்பினையுடைய ஞாயிறு கோடா நன்பக லமையத்து - ஞாயிறு ஒருபக்கமும் சாயாமல் நிற்கும் உச்சிப்போதாகிய நண்பகற் காலத்தே; கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றி - பசியால் வருந்துதலையுடைய குறு நரிகள்
முழவொலி போல ஊளையிட்டுக் கூவுதலை முறையே செய்ய; கழல்கண் கூகை குழறு குரல் பாணி - பிதுங்கியன போன்ற கண்களையுடைய கோட்டான்கள் செய்யும் குழறு குரலின் தாளத்துக் கேற்ப; கருங்கண் பேய் மகள் வழங்கும் - பெரிய கண்களை
யுடைய பேய் மகள் கூத்தாடும்; பெரும் பாழாகும் – பெரிய பாழ்நிலமாய் விடும்; தாம் அளிய - அவைதாம் அளிக்கத்தக்கன எ-று.

புதுப்புனல் மிக்குக் கரையையுடைத்துப் பெருகி வருங்கால், உடைமடையைக் கட்டுதற்குப் பறையை யறைந்து கடையரைத் தருவித்துத் தொகுத்தல் பண்டையோர் மரபாதலால், "போர்த்தெறிந்த பறையால் புனல் செறுக்குநரும்" என்றார். புனலடைக்கும் குறிப்பைத் தன்னோசையால் தெரிவித்தற்குப் பறையே யேற்ற தாதலால் அதனை விதந்தோதினார்; "ஓர்த்த திசைக்கும் பறை" (கலி.12) எனச் சான்றோர் கூறுவது காண்க. "போர்த்தெரிந்த பறை" யென்றதனால், பழைய
தோலை நீக்கிப் புதுத்தோல் போர்த்து முழங்கினமை பெற்றாம். நீர்த்தரு பூசல் - நீர் விளையாட்டின்கண் எழும் ஆரவாரம். அம்பு, ஆகுபெயரால் அம்பும் வில்லும் கொண்டு விற்பயிற்சி செய்வாரின் பூசலுக்காயிற்று. புனல் செருக்குநரும், புனல் விளையாட் டயர்வாரும் தம்மில் ஒருங்குகூடி மகிழ்தற்கு இடம் கூறுவார், "ஒலித்தலை விழாவின் மலியு" மென்றார். புனல் செறுக்குநர் உழவ ரென்றும், புனல் விளையாட் டயர்வோர்
உழுவிப்போரும் ஏனைச் செல்வருமென்றும் கொள்க. இருதிறத்தோரும் வேற்றுமையின்றிக் கூடி மகிழும் இடம் விழாவாயிற்று. இனி, "நீர்த்தரு
பூசலினம் பழிக்குநரும்" என்றுகொண்டு, நீர் விளையாட் டயர்வார் வில்லும் அம்பும் கொண்டு போருடற்றும் மன்னர்போலத் தம்முள் அணிவகுத்து நின்று சிவிறி கொண்டு நீரெறிந்து பொரும் விளையாட்டில் ஒருதிறத்தார் மறுதிறத்தாரைப் பழிப்பவரும் என்றும், நீர் கொணரும் ஆரவாரத்தின் கண் விரையக்கூடிச் செய்வன செய்யாதாரைத் தெழித்தும் உரப்பியும் வினைசெய்விப்போரும் என்றும் உரைத்தலு முண்டு. பறையினை யெடுத்து மொழிந்தாரேனும் ஏனைப் பம்பை முதலிய பிற இசைக் கருவிகளும் கொள்ளப்படும்; " தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம், முழங்குதீம்
புனலகம் முரிய மொய்த்தவே" ( சீவக.40) என்று சான்றோ ரோதுதல் காண்க. நாளும் புதுமை விருப்பமுடைய ராதலின், "யாணர் நாடு" என்றார்; "நாளும் புதுவோர் மேவலன்" ( பொருள் ) எனத் தொல்காப்பியனார் கூறுவது காண்க. யாணர், புதுமை. ஆகுபெயரால் புது வருவா யெனினு மமையும்.

"நாடுகெழு தண்பணை பெரும்பா ழாகுமன்" என்பதனால், அந்நாடு பகைவர்நா டாயிற்று. அது பாழாகு மென ஆசிரியர் இரங்கிக் கூறுதற் கேது, குட்டுவன் அப் பகைவர்பால் கொண்ட பகைமை காரணமாகப் பிறந்த செற்ற மாதலின், "சீறினை யாதலின்" என்றார். நாடு பாழாகு மென்னாது, "தண்பணை" யெனச் சிறப்புறக் கூறியது, ஏனை நாடுகளை நோக்கச் சேரநாட்டில் தண்பணை அரிதென்றும், அஃது
அழியற்பால தன்றென்றும், அரசரது பகைமை அவர் நாட்டை யழிக்கின்றதென்றும் ஆசிரியர் உள்ளக்குறிப்பைப் புலப்படுத்துகிறது. மாய்தல், மறைதல். ஞாயிறு குடபான் மறைந்ததும், உலகில் இருள் பரந்து பயன்படும் வினை நிகழாவாறு மறைத்து விடுதலாலும், கீழ்பால் ஞாயிறு தோன்றித் தன் வெயி லொளியை உமிழ்தலுறின், வினை பலவும் இனிது நிகழ்தலாற் பயனுறுவித்தலாலும் ஞாயிற்றை, "பயங்கெழு பண்பின் ஞாயிறு" என்றார். இக் காலத்திலும் ஆராய்ச்சியாளர் ஞாயிற்றின் பயன்களை மிக விரித்துக் கூறுவர். இனி பயங்கெழு பண்பின் ஞாயிறு என்றோதி, அது குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியதனால், அம் மாய்தலும் பாயிருள் பரவுதலும் பயன் குறித்து நிகழ்வனவே யென்பதும் கருத்தாகக் கொள்க. பகற்காலத்தே வினைவழி யுழந்தோயும் உயிர்கட்கு தன் மறைவால் இரவுப்போ தெய்துவித்து உறக்க
மென்னும் உயிர் மருந்தால் ஓய்வகற்றி யூக்கம் கிளர்வித்தலின் ஞாயிற்றின் மறைவும் பயனுடைத்தாதல் உணரப்படும். இவ்வாறு கொண்டுரை யாக்கால் குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியது சொற்பல்குத லென்னும் குற்றமா மென வறிக.

ஒருமருங்கும் சாயாமல் வான நடுவே ஞாயிறு நிற்ப, அதன் ஒளிக் கதிர் செவ்வே யொழுக விளங்கும் நண்பகற் போதினை, "ஞாயிறு கோடா நன்பகல்" என்றார். தனக்கு வேண்டும் இரையை முயன்று தேடும் மதுகையில்லாத குறுநரி பசிப்பிணியாற் கவலை யெய்தும் இயல்பிற்றாதலின் "கவலை வெண்ணரி" என்றும் அந்நரியும் தனித்தின்றிப் பலவாய்க் கூடி யாமத்திற் கொருமுறைக் கூவுதல் என்ற முறைமைப்படியே கூவும் என்றற்கு :கூஉமுறை பயிற்றி" என்றும் கூறினார். பயிற்றி என்பதனைப் பயிற்ற வெனத் திரிக்க. வெண்மை, நிறஞ் சுட்டாது குறுமையும் வலியின்மையும் சுட்டிநின்றது. செவ்விய அறிவிலாரை வெள்ளறிவினர் என்பது போல. கண்கள் பிதுங்கி வெளிவருவது போறலின் "கழல்கட் கூகை" என்றார். நக்கீரரும் "கழல்கட் கூகை"
(முருகு. 49) என்பர். வெண்ணரி முறை பயிற்றி முழவுபோல கூவும் கூக்குரற் கேற்பக் கூகை குழறுதலால் அதன் குரல் தாளங் கொட்டுவது போல வுளதென்பார், "குழறு குரல் பாணிக்கு" என்றார். நரியின் குரல் முழவு போலு மென்பதனை, "வெவ்வா யோரி முழவாக" (சீவக. 309) என்பதனா லறிக. நரியின் முழவோசையும் கூகையின்
குரற் பாணியும் கேட்டதும் பேய்மகள் கூத்தாடுகின்றா ளென்பார், "கருங்கட் பேய்மகள் வழங்கும்" என்றார். கருங்கண் பெரியகண். பழையவுரைகாரர் கொடியகண்ணென்பர். அவர் "வழங்குதல் ஆடுதல்" என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட கருத்தே "வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல, பேஎய்
மகளிர் பிணந் தழூஉப் பற்றி, விளரூன் தின்ற வெம்புலான் மெய்யர், களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி" (புறம் 359) என்று பிறரும் கூறுதல் காண்க.

மருதத் தண்பணைக்கண் நண்பகற் போதில் வெண்ணரி கூவுதலும் கூகை குழறுதலும் பேய்மகள் ஆடுதலும் நிகழா வாகலின், பாழ்பட்ட நிலத்திற் குரிமை கூறுவார், "பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன்" னென்றார்; "சிறுவெள் ளென்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்,பகலுங் கூவு மகலுள்" (புறம்.362) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பெரும்பாழாகுமன் என்றது,
மீளவும் பண்படுத்திச் சீர் செய்யலாகாமை தோன்றநின்றது. மன், இரக்கப்பொருட்டு. விரைவில் பாழ்பட விருப்பது நினைந்து கூறுதலின், "அளிய" என்றார். தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றதாம்.

தீது சேணிகந்து, நன்றுமிகப் புரிந்து மக்கள் பிணியின்று கழிய, ஊழி யுய்த்த உரவோ ரும்பல், கொங்கர் நாடு அடிப்படுத்த வெல்கெழுதானைத் தோன்றல், அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவ, நீ நாடுகெழு தண்பணை சீறினை யாதலின், இனி அவை பேய்மகள் வழங்கும் பெரும்பாழாகும்; அவை அளிய என்பதாம்; பழையவுரைகாரர், "உரவோ ரும்பல், தோன்றல், குட்டுவ, நீ சீறினையாதலின், நாடுகெழு தண்பணை அளிய தாம் பெரும்பாழாகும் எனக்
கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.

"இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று."

சீறினை யாதலின் நாடுகெழு தண்பணை பாழாகு மென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. உளைப் பொலிந்த மா வென்பது முதலாய நான்கடிகளும் கடிமிளை யென்பது முதலாய இரண்டடிகளும் வஞ்சியடியாகலின் வஞ்சித் தூக்கும், ஏனைய நேரடியாகலின் செந்தூக்கு மாகலின, இதற்குத் தூக்கு வகுத்தோர் செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் என்றார். புகலென அடி
யிடையும் ஒடு வென அடியின் இறுதியும் வந்தன கூன்.
--------------

3.3. ததைந்த காஞ்சி

23

    அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
    சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
    நிலம் பைதற்ற புலங்கெடு காலையும்
    வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
    மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
    5
    வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
    பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
    நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
    சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
    போர‌டு தானைப் பொலந்தார்க் குட்டுவ
    10
    நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
    வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து
    பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
    தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும்
    விண்ணுயர் வைப்பின காடா யினநின்
    15
    மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
    போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
    மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
    மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
    முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
    20
    நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
    கழனி வாயிற் பழனப் படப்பை
    அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
    குறாஅது மலர்ந்த வாம்பல்
    அறாஅயா ணரவ ரகன்றலை நாடே.
    5
    துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
    வண்ணம்: ஒழுகுவண்ணம்.
    தூக்கு: செந்தூக்கு.
    பெயர்: ததைந்த காஞ்சி.


1-10. அலந்தலை...............குட்டுவ.

உரை: அலந்தலை உன்னத்து அங்கவடு பொருந்தி-இலை யில்லாமல் உலர்ந்த தலையினையுடைய உன்ன மரத்தின் சிறுசிறு கிளைகளைப் பொருந்தி யிருந்து; சிதடி கரைய-சிள்வீ டென்னும் வண்டுகள் ஒலிக்க; பெரு வறம் கூர்ந்து- பெரிய வற்கடம் மிகுத லால் நிலம் பசுமையற்ற; புலம் கெடு காலையும்-வயல்கள் உலர்ந்து கெட்ட காலத்தும்; கலம் வாங்குபு தகைத்த பையர்-இசைக் கருவிகளைத் தொகுத்துக் கட்டிய பையினை யுடையராய்; மன்றம் போந்து-ஊர் மன்றத்தை யடைந்து; ஆங்கண் மறுகு சிறை பாடும் வயிரிய மாக்கள்- அவ்விடத்தே தம் இசைக் கருவிகளைச் செம்மையுறப் பண்ணி ஊரிடத்து மறுகுகளின் சிறைக்கண்ணே நின்றுபாடும் கூத்தரும் பாணருமாகிய பரிசிலர்கள்; கடும் பசி நீங்க உண்டு மலிந்து-தமது மிக்க பசி நீங்குமாறு உண்பன வுண்டமைந்து; பொன்செய் புனை யிழை யொலிப்ப-பரிசிலாகப் பெற்ற பொன்னாற் செய்யப்பட்ட அழகிய இழைகள் ஒலிக்கு மாறு; நெஞ்சு மலி உவகையர் பெரிது உவந்து ஆட-நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய் மிகவும் மகிழ்ந்து கூத்தாட; சிறு மகிழானும்-தான் நறவு சிறிதே யுண்டு அதனாற் பிறந்த சிறு மகிழ்ச்சி யெய்திய போதும்; பெருங் கலம் வீசும்-பெரு விலையினையுடைய அணிகலன்களை வழங்கும்; போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ-போரிலே வெல்லுகின்ற தானையினையும் பொன்னாற் செய்த மாலையினையுமுடைய குட்டுவனே எ-று.

தழங்கு குரல், தழங்குரல் என வருதல் போல, அலந்த தலை அலந்தலை யென வந்தது; "அலந்தலை யிரத்தி" (புறம். 325) என்றும், "அலந்தலை வேலம்" (பதிற். 39) என இந்நூலுள்ளும் வருதல் காண்க. பழையவுரைகாரரும், "அலந்தலை யெனல் விகாரம்" என்பர். பல்லாறாகக் கிளையும் கவடும் கொண்டு, கணுக்கடோறும் பொருக்கும் குழியும் பெற்றுப் பல்வகைப் பூச்சிகள் பொருந்தி யிருத்தற்கேற்ற அமைதியுடைய தாதலால், "உன்னத்து அங்கவடு பொருந்திச் சிதடி" கரைவதாயிற்றென்க. சிள் வீடு கறங்கும் ஓசை வண்டிசைபோல் இன்பந் தருவதன்மையின், "சிதடி கரைய" என்றார். சிதடி-சிள்வீ டென்னும் வண்டு. பெருவற மெனவே சிற்றுயிரும் உணவு பெறாது வருந்தும் கால மென்பது பெற்றாம். கூர்ந் தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. நிலம் பைதற்ற காலை யென் றொழியாது புலங் கெடு காலை யென்றது, மழை யின்மையால் வற முண்டாக நிலம் பசுமையற்றதேயன்றி, நிலத்திடத்தே கிணறுகள் எடுத்து நீர் இறைத்து உழவு செய்வார்க்கும் கிணறுகள் நீர் வற்றி விடுதலால் புலங்களும் திண்மையுறக் காய்ந்து உழவுக் கமையா வாயின என்பது உணர்த்துதற்கு.

வாங்குதல், சேரத் தொகுத்துக் கொள்ளுதல்; "கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்" (கலி. 134) என்றாற் போல. வழிநடை எளிதி லமைவது குறித்து எல்லா இசைக் கலங்களையும் பைக்குள்வைத்துக் கட்டிச் சுமந்து செல்ப வாதலால், "வாங்குபு தகைத்த கலப்பையர்" என்றார். இசைக் கருவிகளை இவ் வயிரியர் சுமந்து செல்லும் திறத்தை ஆசிரியர் பரணர், "வணரமை நல்யா ழிளையர் பொறுப்ப, பண்ணமை முழவும் பதலையும் பிறவும், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்" (பதிற், 41) என்பது காண்க. வயிரிய மாக்கள், கூத்தர். இக் கூத்தர் முதற்கண் ஊர் மன்றத்தை யடைந்து தம் இசைக் கருவியை யிசைத்துத் தம் வரவு தெரிவித்தல் மரபாதலின், "மன்றம் போந்து" என்றும், பின்பு நெடிய மாடங்கள் நிற்கும் மறுகுகளில் உள்ள சிறைகளிற் புகுந்து நின்று பாடுபவாகலின், "மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள்" என்றும் குறித்தார். சிறை, மாடங்களின் முற்றத்தே தாழ விட்டிருக்கும் முகப்பிடம். இதன் இருமருங்கும் சிறை யெனப்படும் அதனை யொட்டிப் புறந்திண்ணையிருக்கும். "மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக், கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும், அகலவன்" (பதிற்.43) எனப் பிறரும் கூறுவது காண்க. மறுகு சிறை யென்பது இசைத் துறையுள் ஒன்று போலும் எனக் கருதுவாரு முளர். பழுமரம் நாடிச் செல்லும் பறவை போலச் செல்வரை நாடிச் சென்று அவர் தரும் செல்வத்தைப் பெற்று அமைந்திருப்பதை விடுத்துத் தாம் பெற்றதனைப் பெறார்க்கும் பகுத்தளித்துப் பிற்றைநாளிற் றமது நிலையை நினையாது வாழ்பவ ராதலால், இவர்பால் பசியுண்மை இயல்பாயினும் நிலம் பைதற்ற புலங்கெடு காலை யாதலின் கடும் பசி நிற்பதாயிற்று.அது நின்ற காலத்தும், இவர்கள் பசி நீக்க மொன்றையே கருதுவதன்றிப் பொருளீட்டம் கருதாமை தோன்றக் "கடும்பசி நீங்க" என்றும், அப் பசிநிலை யறிந்து குட்டுவன் பேருணவு இனிதளித்தலால், "உண்டு மலிந்து" என்றும், "பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய" ரென்றும் கூறினர். பெரிதுவந்து நெஞ்சுமலி உவகையராய் ஆட என இயையும். உவகையராய் ஆடுகின்ற ரெனவே முன்னைய பசித் துன்பத்தை மறந்ததே யன்றி, வரும் நாள் எய்தவிருக்கும் இன்மையை நினையாமையும், அப்போதைய பசித் துன்பம் நீங்கப் பெற்று மகிழ்ந்தமையும் பெற்றாம். குட்டுவன் பசி நீங்கப் பேருணவு தந்ததோடு உயர்ந்த அணிகலங்களும் நல்கினா னென்பார், "பொன்செய் புனையிழை யொலிப்ப" என்பதனாற் குறித்தார்.

பாணர் முதலியோர்க்குச் செய்யும் விருந்தின்கண் அவர்கட்குக் கள் வழங்க, வேந்தன் களிப்பில்லாத நறவினை யுண்பன்; அதனை யுண்ட சிறுகளிப்பினால் பெருங்கலம் நல்குகின்றா னென்பார், "சிறுமகிழானும் பெருங்கலம் வீசும் குட்டுவ" என்றார். வேந்ன் உடனுண்ணும் இயல்பை, "தெண்கள் வறிகூட் டரிய லிரவலர்த் தடுப்ப, தான்தர வுண்ட நனை நறவு மகிழ்ந்து" (பதிற். 43) என்றும், "நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே, தொலையா நல்லிசை விளங்கு மலையன், மகிழா தீத்த விழையணி நெடுந்தேர், பயன்கெழு முள்ளூர் மீமிசைப், பட்ட மாரி யுறையினும் பலவே" (புறம். 123) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக. சிறுமகிழ், சிறு உண்டாட்டுச் சிறப்பென்றுமாம்.

புலங்கெடு காலையும், சிறுமகிழானும் என நின்ற உம்மை சிறப்பு. எனவே, பெருங்கலம் நல்காமைக்குரிய காலமும் காரணமும் உளவாகிய வழியும் அவற்றை நோக்காது, அடைந்தார் பசித் துன்பம நீக்கும் பண்பு இச் சேரமான்பால் சிறந்து நிற்றல் இதனால் தெரிவித்தா ராயிற்று.

18-25. மருதிமிழ்ந் தோங்கிய..............நாடே

உரை: மருது இமிழ்ந் தோங்கிய-மருத மரங்கள் தம்பால் பல புள்ளினம் தங்கி யொலிக்க வோங்கி நிற்கும்; நளி இரும் பரப்பின்- செறிவினையுடைய பெரிய பரப்பிடமாகிய; மணல் மலி பெருந் துறை-மணல் மிக்க பெருந்துறைக்கண்; ததைந்த காஞ்சியொடு- சிதைந்த காஞ்சி மரங்களுடன்; முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடை கரை-முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த நெருப்புப் போலத் தோன்றும் அடைகரையில்; நந்து நாரை யொடு செவ்வரி உகளும்-சங்குகளும் நாரைகளும் செவ்விய வரிகளையுடைய நாரையினத்துப் புள்ளினங்களும் உலவும்; கழனி வாயில் பழனப் படப்பை- கழனிகட்கு வாயிலாக வுள்ள பொய்கையைச் சார்ந்த விளை நிலத்தில்; அழல் மருள் பூவின் தாமரை-நெருப்புப்போலும் பூவினையுடைய தாமரையும்; வளை மகள் குறாது மலர்ந்த ஆம்பல்-வளையணிந்த விளையாட்டு மகளிர் பறிக்காமையால் தானே மலர்ந்த ஆம்பலும்; அறாஅ யாணர்-நீங்காத புது வருவாயுமுடைய; அவர் அகன்றலை நாடு-அப் பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ-று.

பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய அடைகரையில் நாரையொடு செவ்வரி உகளும் படப்பைக்கண் தாமரையும் ஆம்பலும் அறாயாணருமுடைய அவர் அகன்றலை நாடு காடாயின எனக் கூட்டி முடிக்க. பகைவரது நாடு மருதவளஞ் சான்ற மாண்புடைய நாடு என்பது, "மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்" என்பதனாற் பெறப்படும். கிளி முதலிய புள்ளும் வண்டினமும் இனிதிருந்து மகிழும் நன்மரம் என்றற்கு, "மருதிமிழ்ந்" தென்றார். சிறப்புடைய மருதினைக் கூறினமையின், ஏனை மரவும் தெங்கும் பிறவும் கொள்ளப்படும். இவற்றாற் செறிவும் இடப்பரப்பும் ஒருங்குடைமை தோன்ற, "நளியிரும் பரப்பெனச் சிறப்பித்துரைத்தார். பரப்பினையுடைய பெருந்துறை யென்னுமாம். முன்னைய முடிபிற்கு இன்னென்பது சாரியை. பெருந்துறைப் பரப்பில் நிற்பனவும் நிகழ்வனவும் கூறி, அதன் நில வியல்பை மணல் மிக்க துறையென்று கூறினார்.

மாவும் மாக்களும் வழங்குதலால் பூ முதலியனவின்றி மணலே விளங்கித் தோன்றுமாறு நாட்டுவார் "மணல்மலி பெருந்துறை"யென்றார். காஞ்சியும் முருக்கமரம் போலத் தாழ நின்று மாலை போலப் பூக்கும் இயல்பிற் றாதலின், அதன் பூவும் தளிரும் விளையாட்டு இள மகளிரால் பறிக்கப்படுதலால் "ததைந்த காஞ்சி" யென்றும், முருக்கம்பூ அவ்வாறு கொள்ளப்படுவ தன்மையின், அது வீழ்ந்து கிடக்குமாறு தோன்ற, "முருக்குத்தாழ் பொழிலிய நெருப்புறழ் அடைகரை" யென்றும் கூறினார். ததைதல், சிதைதல்; "அருஞ்சமந் ததைய நூறி" (புறம். 18) என்றாற்போல. பழையவுரைகாரர், "ததைந்த காஞ்சி யென்றது, விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவு பட்டுக் கிடக்கின்ற காஞ்சி யென்றவா" றென்றும் "இச் சிறப்பானே இதற்குத் ததைந்த காஞ்சி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். அடைகரை துறை யன்மையின், அங்கே முருக்கின்கிளை தாழ்ந்து பூக்களைச் சொரிதலால், அப் பூக்களே பரந்து கிடத்தலாலும் அவற்றின் நிறம் நெருப்புப்போன் றிருத்தலாலும், "நெருப்புறழ் அடைகரை" யென்றும், முருக்க மரங்கள் மிக வோங்கி வளராது தாழ நின்று கிளை பரந்து நெருப்பெனப் பூத்துள்ள பூக்களைச் சொரிதலால் அடைகரை நீரும் நெருப்பும் தம்முள் உறழ்ந்து காட்சி வழங்குவது போறலின், "முருக்குத்தாழ் பொழிலிய நெருப்புற ழடைகரை" யென்றும் குறித்தார். முருக்கம்பூ நெருப்புப்போல்வ தென்பதனைப் பிறரும், "பொங்கழல் முருக்கி னொண்குரன் மாந்திச், சிதர் சிதர்ந்துகுத்த செவ்வி" (அகம், 277) என்பர். நீர் இடையறாமையின் தமக்கு வேண்டும் இரையை நிரம்பப் பெறுதலின், ஆக்கமுறும் நாரை யினத்துடன் செவ்வரியென்னும் நாரை யினமும் கலந்துறையும் என்பார், "நந்து நாரையொடு செவ்வரி யுகளும்" என்றார்; " பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை" (புறம், 351) என்பதனால், செவ்வரி நாரையாதல் காண்க.

பழனம் கழனிக்கு வாயில் போறலின்,"கழனிவாயிற் பழனம்" என்றார்; "வயலமர் கழனிவாயிற் பொய்கை" (புறம். 354) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழனத்தின் வாயிலாகக் கழனிக்கு நீர் பாய்தலின் இவ்வாறு கூறினா ரென்றுமாம். பழனத்தைச் சார்ந்த படப்பைக்கண் தாமரை மிக்கிருத்தல் தொன்றப் "பழனப் படப்பை யழன் மருள் தாமரை" யென்றார். படப்பை, பழனத்தைச் சார்ந்த தோட்டக்கால், படப்பையில் மலர்ந்த தாமரைப் பூவைப் பறித்துத் தலையிற் சூடி அதன் நாளத்தை வளையாக அணிந்து மகளிர் விளையாடுப வாகலின், அவ்வாறு விளையாடும் இளமகளை "வளைமகள்" என்றும், அவள் பழனத்தில் மலர்ந்த ஆம்பலைப் பறிக்க மாட்டாது விடுப்ப, அது தானே மலரும் என்பார் " குறாது மலர்ந்த ஆம்பல்" என்றும் கூறினார். விளையாடும் பருவத்து இளமகளிரை "வளையவ" ரென்பது பண்டையோர் வழக்கு; "வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள" (கலி.26) என்றவிடத்து, வளையவர் என்றதற்கு நச்சினார்க்கினியர் "வளையினையுடைய இளையோர்" என்றுரைப்பது காண்க. இவ் வளைமகள் குறுதற் கெட்டு மளவி லிருப்பின், நீரிடத்தே அதனை மலரவிடாது பறித்திருப்பள் என்றவாறு. பழையவுரைகாரரும், "வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பல் என்றது, விளையாட்டு மகளிர் குறுதற் கெட்டாமையாலே மலர்ந்த ஆம்பல் என்றவாறு" என்பர். இன் புது நலங்கள் இடையறாத நாடுகள் என்றற்கு "அறாஅ யாணர்" என்றார்.

இனி, அவர் நாட்டு இளையவர் மலர்ந்த தாமரையைப் பயன் கொண்டு குவிந்த ஆம்பலை வாளாது விடுவ ரென்றது,செல்வத்திற் சிறந்தாரைப் பயன்கொண்டு மெலிந்தாரைப் புறக்கணித்தனர்; அதுவும் அவர் நாட் டழிவுக்குக் காரணமா மென்பது கூறியதாகக் கொள்க. வளையோர் மலர்ந்த தாமரையை பயன்கொண்டது போல, இந்நாட்டரசராகிய பகை வேந்தர் நின்னை வணங்கிப் பயன் கொள்ளாது, மகளிர் தமக்கெட்டாத ஆம்பலைக் குறாது விட்டது போலத் தமக் கெய்தலாகாத வென்றியை யெய்த முயன்று கெடடனர் என வேறோ ரேதுக் காட்டி நின்ற தெனினுமாம்.

11-17.நின்னயந்து................ஒராலின்

உரை: நின் மைந்து மலி பெரும்புகழ் அறியார் - நினது வலியால் நிறைந்த புகழ் நிலையை யறியாராய்; போர் எதிர்வேந்தர் - நின்னொடு பொருதலை யேற்று எதிர்நின் றழிந்த பகைவேந்தர்; தார் அழிந்து ஒராலின் - நின் தூசிப் படைக் குடைந்து ஓடுதலால்; வழங்குநர் அற்றெனப் புல் மருங்கு கெடத் தூர்ந்து - மக்கள் போக்கு வரவற்றபடியால் புல் நிறைந்து சிற்றிடமு மின்றி முட்செடிகள் மண்டித் தூர்ந்து; பெருங் கவின் இழந்த - தமது பெரிய அழகை யிழந்த; ஆற்ற - வழிகளை யுடையவாய்; விண்ணுயர் வைப்பின - வானளாவ உயர்ந்த நெடுநிலை மாடங்கள் பொருந்திய வூர்கள்; அண்ணல் மரையா ஏறு புணர்ந் துறையும் காடாயின - பெரிய காட்டுப் பசுக்கள் ஏறுகளுடன் கூடி யுறையும் காடுகளாயின; நின் நயந்து வருவேம் கண்டனம் - நின்னைக் காண்டலை விரும்பி வரும் யாங்கள் அவற்றைக் கண்டேம் எ-று.

அகன்றலை நாடுகள், பெருங்கவின் இழந்த ஆற்றவாய்க் காடுகளாயின வென்க. மைந்து - வலிமை. மைந்துடையார்க்கே போர்ப்புகழ் மிக வுண்டாகுமாதலின்,"மைந்துமலி பெரும்புகழ்" என்றும், இதனை முன் பறிந்தாரேல் பகைவர் போரில் எதிர்தலைக் கருதியிரார் என்பார், "அறியார் மலைந்த போரெதிர் வேந்தர்" என்றும் கூறினார். நின்னுடைய அகப்படையும் மூலப்படையும் காணாது தூசிப் படையினை யெதிர்ந்த அளவிலே ஆற்றாது உடைந்தமையின், "தாரழிந் தொராலின்" என்றார். தார் என்புழி நான்கனுருபு தொக்கது. இனி,தாரென்றது பகைவரது தூசிப்படையாக்கி, பகைவர் தமது தூசிப்படை யழிந்து உடைந் தோடினமையின் என்றுரைப்பினு மமையும். தாரழிந் தொராலின் என்றதற்கு, தாரும் குடையும் முரசும் பிறவும் இழந்தன ரெனக் கோடலுமொன்று. எனவே, நின்னுடைய மைந்து மலி பெரும் புகழ் அறியாது பகைவர் செய்த குற்றம் அவர்கட்கு இக் கேட்டைப் பயந்ததோடு அவர் நாட்டையும் பாழ்படுத்திற் றென்பார், "அவர் அகன்றலை நாடு காடாயின" என்று இரங்கிக் கூறினார்.

அறாஅ யாணரால் பண்பட்டு, சிறந்த வளஞ் சுரந்த நாடுகள் இற்றைப் போதில் மக்கள் அனைவரும் வேறுநாடுகட் ககன்றமையின் வழக் கொழிந்தன வென்பார் "வழங்குந ரற்றென" என்றும், அதனால் வழிகள் ஒதுக் கிடமின்றி யாண்டும் புல்லும் முட்புதலும் செறிந்து எம் மருங்கும் மூடிக் கொண்டன வென்பார், "புல்மிக்கு மருங்கு கெடத் தூர்ந்து" என்றும் குறித்தார். "பெருங்கவின் இழந்த ஆற்ற" எனவே, முன்பு அவ் வழியிடங்கள் முழுதும் நறும் புனலும் தண்ணிழலும் பொருந்தியழகுடையவா யிருந்தன வென்றும், புல் மிக்குள்ள விடம் நெல் மிக்கும், வழங்குந ரற்ற வழி எனவே, இடையறவின்றி மக்கள் வழங்கும் வழக்கு மிகுந்தும் விளங்கினவென்றும் கொள்ளப்படும். கணவரொடு கூடிக் கற்புக் கடம்பூண்ட மகளிர் இருந்த அவ் விடங்களிலே ஏற்றொடு கூடிய மரையா இனி துறையாநிற்கு மென்பார், "ஏறுபுணர்ந் தண்ணல் மரையா அமர்ந்தினி துறையும்" என்றார்; மரையா, காட்டுப்பசு; "மலைத்தலை வந்த மரையான் கதழ் விடை" (மலைபடு.331) என்றாற்போல. இனி, மான் பிணையென்று கொள்வாரு முண்டு. வானளாவ வுயர்ந்த நெடுநிலை மாடங்கள் நின்ற அந் நாடுகள் இப்போது காடாயின வென்றலின், "விண்ணுயர் வைப்பின காடாயின" என்றார். இனிப் பழையவுரைகாரர், "விண்ணுயர் வைப்பின காடென்றது, மரங்கள் விண்ணிலே செல்ல வோங்கி நிற்கும் காடுகளாயின வென்றவா" றென்பர்.

இதுகாறுங் கூறியது பெருவறங் கூர்ந்து புலங்கெடு காலையும் வயிரிய மாக்கள் உண்டு மலிந்தாடப் பெருங்கலம் வீசும் குட்டுவ, காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய அடைகரைக்கண் நாரையும் செவ்வரியும் உகளும் படப்பையில் தாமரையும் வளைமகள் குறாது மலர்ந்த ஆம்பலும் அறாயாணருமுடைய அகன்றலை நாடுகள் பெருங்கவின் இழந்த ஆற்றவாய் காடாயின; அவற்றை நின் நயந்து வருவேம் கண்டனம் என்பதாம். இனி, பழையவுரைகாரர்,"குட்டுவ, போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின், அவர் அகன்றலை நாடு காடாயின; அதனை நின் னயந்து வருவேம் கண்டனம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்

"இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் நாடு காடாயின வென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடா ணாயிற்று"


3.4. சீர்சால் வெள்ளி.

24.
    நெடுவயி னொளிறு மின்னுப் பரந்தாங்குப்
    புலியுறை கழித்த புலவுவா யெஃகம்
    ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி
    ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற்
    பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ
    5
    ஒதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்
    ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
    அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
    ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று
    நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
    10
    திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
    குலையிழி பறியாச் சாபத்து வயவர்
    அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
    இடாஅ வேணி யியலறைக் குருசில்
    நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும்
    15
    அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்
    வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
    உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
    குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
    றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்
    20
    எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
    கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
    வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
    வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
    பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
    25
    கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
    மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
    கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
    காரெதிர் பருவ மறப்பினும்
    பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.
    30

துறை: இயன்மொழி வாழ்த்து.
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: சீர்சால் வெள்ளி,

1-5. நெடுவயின்.............தலைவ.

உரை: நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந் தாங்கு-நெடிய விசும்பின்கண் விளங்குகின்ற மின்னல் பரந்தாற் போல; புலியுறை கழித்த புலவு வாய் எஃகம்-புலித்தோலாற் செய்த உறையினின்றும் வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி-நாளும் போரை விரும்பும் வீரர் தம் வலக் கையில் விளங்க வேந்தி; ஆர் அரண் கடந்த தார்-பகைவருடைய அரிய அரண்களை யழித் தேகும் தமது தூசிப் படையால்; அருந் தகைப்பின்-கடத்தற்கரிய பகைவரது அணிநிலையுட் பாய்ந்து; பீடு கொள் மாலைப் பெரும்படைத் தலைவ-வென்றி கொள்ளும் இயல்பினையுடைய பெரிய தானைக்குத் தலைவனே எ-று

நிலத்தினும் கடலினும் நெடுமையும் பரப்பு முடைமைபற்றி விசும்பு "நெடுவயி" னெனப்பட்டது. இது நெடிதாகிய இடத்தையுடைய விசும்பென விரிதலின், அன்மொழித்தொகையாய் விசும்பிற்குப் பெயராயிற்று. புலியுறையினின்றும் கழித்த எஃகம், முகிலிடைத் தோன்றும் மின்னுப் போறலின், "நெடுவயின் மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த எஃகம்" என்றார். வாள்வாய்ப் பட்டாரது ஊன் படிந்து புலவு நாற்றம் நாறுதலின், "புலவுவா யெஃகம்" எனப்பட்டது. படைவீரர் போரே விரும்பும் புகற்சியினராய் நாளும் அதன்மேற் சென்ற உள்ளத்தாற் சிறந்து நிற்குமாறு தோன்ற "மேவல் ஆடவர்" என்றார். ஏவ லாடவரெனக் கொண்டு வேந்தனது ஏவல்வழி நிற்கும் வீரரென் றுரைப்பினுமாம்; "புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப" (புறம். 68) என்பதனால் வீரர் ஏவல்வழி நிற்குமாறு பெறப்படும். போர், என்பது அவாய்நிலை. இடக்கையில் தோலை யேந்துதலின் "வாளை வல னுயர்த் தேந்தி" யெனல் வேண்டிற்று. புலித்தோலாற் செய்யப்பட்டதனைப் புலியுறை யென்றார்.

இனி, தார்ப்படையின் வன்மை கூறுவார், பல்வகைப் பொறியாலும் காத்து நிற்கும் வயவராலும் நெருங்குதற்கரிய அரண் பலவும் வருத்த மின்றி எளிதிற் கடக்கும் வன்மையுடைய தென்றற்கு, "ஆரரண் கடந்ததார்" என்றார். தார், தூசிப்படை. இதனைத் தாங்கிப் பின்னே அணியுற்று வரும் படை தானை யெனப்படும்.; "தார்தாங்கிச் செல்வது தானை" (குறள் 767) எனச் சான்றோர் விளக்குவது காண்க. போர்க்கருவிகளான வில், வேல், வாள் முதலியனவே யன்றி, படையினது அணி வகுப்பும் நிலையும் வன்மை நல்குவன வாதலின், அச் சிறப்பை விதந்து "அருந் தகைப்பில்" என்றும் அதன் உட்புகுந்து பொருது கலக்கிச் சிதைத்து வென்றி காண்பதே வீரர்க்கு மிக்க வீறு தருவதாதலின், "அருந்தகைப்பிற் பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ" என்றும் கூறினார். மாற்றாரது அருந்தகைப்புட் புகுந்து கலக்கக் கருதுவோர் முன்பாகக் களிற்றினைச் செலுத்தி இடமகல் வித்து, அதன் வழியே நுழைந்து தாக்குவ ரென்ப; இதனைக் "களிறு சென்ற கள னகற்றவும் களனகற்றிய வியலாங்கண், ஒளிறிலைய வெஃகேந்தி, அரைசுபட வமருழக்கி" (புறம் 26) என்பதனா லறிக. இன்னோ ரன்ன அருஞ்செயல் வழிப்படும் பீடே வீரர் தம் நடுகல்லினும் பிறங்குவதா மென் றறிக. "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடுமெழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" (அகம். 67) என்புழி "நல்லமர்" என்றது இதனையும் உட்கொண்டு நிற்றலை யுணர்க. இத்தகைய பீடு பெறுதல் நின் படைக்கு இயல்பா யமைந்துள தென்பார், " பீடுகொள் பெரும்படை" யென்னாது, "பீடுகொள் மாலைப் பெரும்படை" யென்றார். மாலையென்ற அடைநலத்தால், பெருமை, படையினது மிகுதி மேற்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர் "தாரருந் தகைப்பின் பீடுகொள்மாலைப் பெரும்படை யென்றது, தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்றார்
படை வகுப்பிலே வென்றி செய்து பெருமை கொள்ளும் இயல்பை யுடைய அணியாய் நிற்கும் பெரும்படை யென்றவா" றென்பர். படையெனவே, அணிநிலையும் தொகை மிகுதியும் கருவிப் பெருமையும் வினைத் தூய்மையும் பிறவும் அகப்படுதல் காண்க.

இப் பெரும் படையை இதன் பெருமைப் பண்பு குன்றாத வகையில் வைத்தாளுந் திறன் தலைமைப் பண்பு முற்றும் நிரம்ப வுடையார்க் கன்றி யின்மையின் பல்யானைச் செல்கழு குட்டுவனைப் "பெரும்படைத் தலைவ" என்றார். திருவள்ளுவனாரும், "நிலைமக்கள் சால வுடைத்தெனினும், தானை, தலைமக்கள் இல்வழி இல்" (குறள் 770) என்பது காண்க

மேலும் குட்டுவனை, பெரும்படை வேந்தே யென்னாது "தலைவ" என்றதனால், அவன் படையினை யேவி யிராதே அதற்குத் தானே முன்னின்று தலைமை தாங்கிப் பொருது பீடு கொள்ளும் செயலுடைய னென்பதும் உய்த்துணரப்படும்.

6-11. ஓதல்...........கணவ

உரை: ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந் தொழுகும்-மறை யோதுதல், வேள்வி வேட்டல், அவை யிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க் கொன் றீதல், தமக் கொருவர் கொடுத்ததை யேற்றல் என்ற தொழி லாறும் செய்தொழுகும்; அறம்புரி அந்தணர்- அறநூற் பயனை விரும்பும் அந்தணர்களை; வழிமொழிந் தொழுகி-வழிபட்டொழுகி; ஞாலம் நின் வழி யொழுக- அதனால் உல;கத்தவர் நின்னை வழிபட்டு நிற்ப; பாடல் சான்று- புலவர் பாடும் புகழ் நிறைந்து; நாடு உடன் விளங்கும்-நிலமுழுதும் பரந்து விளங்கும்; நாடா நல்லிசை-விளங்கிய நல்ல புகழையும்; திருந்திய இயல்மொழி-அறக் கேள்வியால் திருந்திய இனிய இயல்பிற் றிரியாத மொழியினையுடைய; திருந்திழை கணவ-திருந்திய இழையணிந்தவட்குக் கணவனே எ-று.

ஓதுவித்தலும் வேட்பித்தலும் அந்தணர்க்குரிய தொழில் ஆறனுள் அடங்குவன வாதலின், "அவை பிறர்ச் செய்தல்" என்றார். செய்தல், பிறவினைப்பொருட்டு. செய்தல், செய்வித்தல் என்ற வினைவகைகளும் செய்தல் வகை நான்கினையும் முன்னும் பின்னும் கூறலின், இடையே செய்வித்தல் வகை இரண்டனையும் ஒன்றாய்த் தொகுத்துரைத்தார், சொற் சுருங்குதல் குறித்து. பழையவுரைகாரர், " அவை பிறர்ச் செய்தல் என் புழிப் பிறரை யென விரியும் இரண்டாவதனை, அவை செய்தல் என நின்ற செய்த லென்னும் தொழுலாற் போந்த பொருளால் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனொடு முடிக்க" என்றார். என்று என்பதனை எல்லாவற்றோடும் ஒட்டுக. ஆறென்புழி முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இவ் வாறு தொழிலையும் வழிவழியாக வருத்தமின்றிக் கற்றுப் பயின்று வருதலின் அந்தணரை "ஆறுபுரிந் தொழுகும் அந்தணர்" என்ற ஆசிரியர், அவர் தம் உள்ளத்தே அற நூல்களின் முடிபொருளையே விரும்பாநிற்கின்றன ரென்பார். "அறம்புரி யந்தணர்" என்றார்; அறம் அற நூல்களில் முடிபொருண்மேற்று. அது வேத முதலிய நூல்களாற் கற்றுணரப்படாது இறைவனால் உணர்த்தப்படுவது. "ஆறறி யந்தணர்க் கருமறை பல பகர்ந்து" (கலி. கடவுள்) என்றும் "ஒருமுகம், எஞ்சிய பொருள்களை யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே" (முருகு. 96-8) என்றும் சான்றோர் கூறுவது காண்க. சைவ நூல்களும், வேத முதலியவற்றின் ஞானம் கீழ்ப்பட்டதாகிய பாச ஞானம் என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது.



உலகியற் பொருளையும் அதற்குரிய அறநெறிகளையும் உள்ளவாறுணர்த்தும் உரவோராதலின் அந்தணர் வழிமொழிந் தொழுகுதல் அரசர்க்குக் கடனாதல் பற்றி, "அந்தணர் வழிமொழிந் தொழுக" வென்றார். அவ் வொழுக்கத்தாற் பயன் இது வென்பார், "ஞாலம் நின் வழி யொழுக" என்றும், அதனால் நாடு நாடா வளம் படைத்து நல்லோர் பாராட்டும் நலம் பெறுதலின் "பாடல் சான்று" என்றும் கூறினார். நாட்டின் புகழ் நாட்டின் அரசற்குச் சேறலின், அரசன்மேலேற்றிச் "சான்று" என்றார். இக் குட்டுவனைப் பாடப் போந்த கௌதமனார், "உருத்துவரு மலிர் நிறை" யென்ற பாட்டினை நாடு வாழ்த்தாகவே பாடியிருப்பது காண்க. அவன் புகழ் பரவாத இடம் நாட்டில் ஒரு சிறு பகுதியு மின்மையின் "நாடுடன் விளங்கும் நல்லிசை" யென்றார். இசைக்கு நன்மை, அழியாமை. நல்லிசைக் குரிய குணஞ் செயல்கள் அவன்பால் நன்கு விளங்கித் தோன்றலின், "நாடா நல்லிசை" யென்றார். விளக்கமில்வழியே நாடுதல் வேண்டுதலின், நாடாமை விளக்கமாயிற்று.இனி, நாடாது செய்தாரை நாடியடைதலும் நாடிச்செய்தாரை இனிது நாடாமையும் புகழ்க்கு இயல்பாதலின், "நாடா நல்லிசை" யென்றா ரென்றுமாம்.

அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகும் ஒழுக்கத்தின் பயன் அவன் சொல்லின்கண் அமைந்து கிடத்தலின் "திருந்திய இயன்மொழி" என்றார். சொல்லிற் றோன்றும் குற்றங்கள் இன்றி இனிமைப் பண்பே பொருந்திய மொழி இயல்மொழி. இனி திருந்திய இயல்மொழி யென்பதற்குப் பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்தியமொழி யென்றும் கூறுவர். திருந்திழை யென்னும் அன்மொழித்தொகை அரசமா தேவிக்குப் பெயராயிற்று.

12-4. குலையிழிபு..........குருசில்

உரை: குலை இழிபு அறியாச் சாபத்துக் களைவு அறியா அம்பு வயவர்-நாண் களைதலறியாத வில்லையும் கையினின்று களைதலில்லாத அம்பையுமுடைய வீரரது; தூங்கு துளங்கிருக்கை- போர் வேட்கையால் விரையும் குறிப்பொடு செறிந்திருக்கும் இருக்கையும்; இடாஅ ஏணி இயல் அறை-வன்மைக் கெல்லையாகிய எல்லா நலங்களும் பொருந்த வியன்ற பாசறையுமுடைய; குருசில்-வேந்தே எ-று.

வில்லை வளைத்துப் பிணித்து நிற்கும் நாணினது நிலை குலை யெனப் பட்டது; "வில்குலை யறுத்துக் கோலின்வாரா வெல்போர் வேந்தர்" (பதிற். 79) எனப் பிறாண்டும் வருதல் காண்க. களை வறியா அம்பென வியைத்து, சாபத்தையும் அம்பையுமுடைய வயவ ரென்றும், வயவரது இருக்கை யென்றும் இயைக்க. இருக்கையும் பாசறையுமுடைய குருசில் என முடிக்க. இன் பொழுது போருண்டாமென் றறியாதே எப் பொழுதும் நாணியேற்றியே கிடக்கும் வில்லென்றற்கு "குலையிழி பறியாச் சாபம்" என்பது பழையவுரை. குலை யிழிபறியாச் சாபமேந்திய வழி, அதற்கேற்ப அம்புகளும் கையகலாது செவ்வே யிருத்தல் வேண்டுமாகலின், "அம்பு களை வறியா" என்றார். பழையவுரைகாரரும், "அம்புகளை வறியா வென்றது, போர் வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைத லறியா வென்றவா" றென்பர்.

போர் நிகழ்ச்சியை யெதிர் நோக்குதலால் உள்ளம் பரபரப்பும் துடிப்பும் கொண்டு விரையும் வீரர் சோம்பி ஓரிடத்தே குழீஇயிருக்கவு மாட்டாது, அரசன் ஏவாமையின் போர்க்குச் செல்லவுமாட்டாது இருக்கும் அவர்தம் இருப்பினை "தூங்கு துளங் கிருக்கை" யென்றார். "புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" (புறம். 68) என்பதனாலும் இப் பொருண்மை யுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், "தூங்கு துளங்கிருக்கை யென்றது, படை இடம் படாது செறிந்து துளங்குகின்ற இருப்பு என்றவா" றென்பர்

இடாஅஏணி என்றது, எல்லையாகிய பொருட்கு வெளிப்படை. இனி, ஏணிக் குருசில் என இயைத்து, போர் வன்மைக் கெல்லையாகிய குருசில் என்றுரைப்பினுமாம். "கற்றோர்க்குத்தாம் வரம்பாகிய தலைமையர் (முருகு 133-4) என்றாற் போல. இடாஅ ஏணியாவது "அளவிடப்படாத எல்லை" என்று பழையவுரை கூறும். பழையவுரைகாரர், "பாசறை அறை யெனத் தலைக் குறைந்த" தென்றும், "இயலென்றது பாசறைக்குள்ள இயல்" பென்றும் கூறுவர். பாசறைக்குரிய நலங்கள், புரிசையும் இருக்கையும் அரணும் மெய் காப்பாளரும் காலக்கணக்கரும் உழையரும் நன்கமைந்த நலங்கள். "காட்ட இடுமுட் பரிசை யே முறவளைஇப், படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" (முல்லை 26-8) எனப் புரிசையும் "நற்போர் ஓடா வல்வில் தூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை" (39-40) என இருக்கையும், "பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து, வாங்கு வில்லரணம்" (41-3) என அரணமும், "துகில் முடித்துப் போர்த்த தூங்க லோங்கு நடைப் பெருமூதாளர்" (53-4) என மெய் காப்பாளரும் "பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" (55) எனக் காலக் கணக்கரும் "உடம்பி னுரைக்கு முரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழைய ராக" (65-6) என உழையரும் பாசறைக்கு நலங்களாக ஆசிரியர் நப்பூதனார் கூறுதல் காண்க.

15-17. நீர் நிலம்........கண்டிகுமே

உரை: நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் அளந்து கடை அறியினும்-நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் விசும்புமாகிய ஐந்தனையும் அளந்து முடிவு காணினும்; அளப்பரும்
குரையை- அறிவு முதலியவற்றால் அளந்து எல்லை காண்பதற்கரியை யாவாய்; நின் வளம் வீங்கு பெருக்கம்-நின்னுடைய செல்வம் பெருகிய நலத்தை; இனிது கண்டிகும்-யாங்கள் இனிது கண்டறிந்தோம் எ-று.

நிலமுதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலக மென்பதைக் கண்ட பண்டைத் தமிழ் நன்மக்கள், நில முதலிய ஒவ்வொன்றின் அளவையும் அளந்து காண முயன்று அளத்தற் கரியவை யெனத் துணிந்தனராதலின், அளப்பரிய பிற பொருள்கட்கு அவற்றை உவமயாக எடுத்தோதுவதை மரபாகக் கொண்டனர்.; அதனால் குட்டுவனுடைய அறிவு, ஆண்மை பொருள் முதலியவற்றாலாகிய பெருமையைச் சிறப்பித்து, "அளப்பருங் குரையை" என்றார். பிறரும் "நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே" (பதிற். 14) என்றும், "நிலத்தினும் பெரிதேவானினு முயர்ந்தன்று, நீரினுமா ரளவின்றே" (குறுய். 3) என்றும் கூறுதல் காண்க. கடை, முடிவு, நிலம் நீர் தீ வளி விசும் பென்றல் முறையாயினும் செய்யுளாதலின் பிறழ்ந்துநின்றன. அறியினும் என்புழி உம்மை எதிர்மறை. குரை, அசைநிலை.

குட்டுவனுடைய செல்வம் முதலிய நலங்கள் நாளும் பெருகுதலால், "வளம் வீங்கு பெருக்க" மாயிற்று. அளத்தற் கரியனாயினும், காட்சிக் கெளிமையும் இனிமையு முடையனாதல் பற்றி, " இனிது கண்டிகும்" என்றும், அவ் வெளிமை யொன்றே அவனது பெருநலத்தை வெளிப் படுத்தலின், "வளம் வீங்கு பெருக்கம்" என்றும் கூறினார்.; "பணியுமா மென்றும் பெருமை" (குறள். 978) என்று சான்றோர் கூறுதல் காண்க. வளம் வீங்கு பெருக்க மெனத் தொகுத்தது மேலே விரிக்கப்படுகிறது.

18-30. உண்மரும்.................வளனே

உரை: வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர் வர - விளங்குகின்ற கதிர் வான மெங்கும் பரந்து திகழ; வடக்கு வறிது இறைஞ்சிய சீர் சால் வெள்ளி-வடதிசைக்கண் சிறிதே சாய்ந்து தோன்றும் சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்; பயங்கெழு பொழுதொடு அநியம் நிற்ப -பயன் பொருந்திய ஏனை நாண் மீன்களுடனே தனக்குரிய நாளிலே நிற்க; கலிழும் கருவி யொடு நீரைச் சொரியும் மழைத் தொகுதியுடன்; கையுற வணங்கி- பக்கவானத்திற் றாழ்ந்து; மன்னுயிர் புரைஇய-மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி; வலன் ஏர்பு இரங்கும்-வலமாக எழுந்து முழங்கும்; கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை- கீழ்க்காற்றுக் கொணரும் தண்ணிய மழைத் துளியால் நிறைந்த சூல் கொண்ட கருமுகிற் கூட்டம்; கார் எதிர் பருவம் மறப்பினும்- கார்காலத்து மழைப் பெயலைப் பெய்யாது மறந்தவழியும்; தொடிமழுகிய உலக்கை வயின் தோறு- பூண் தேய்ந்த உலக்கையிருக்கும் இடங்கடோறும்; அடைச் சேம்பு எழுந்த ஆடுறு மடாவின்-அடையினையுடைய சேம்பு போன்ற சோறு சமைக்கும் பெரும் பானையும்; எஃகுறச் சிவந்த ஊனத்து-கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால் ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக் கட்டையும்; கண்டு-பார்த்த துணையானே; யாவரும் மதி மருளும்-யாவரும் அறிவு மயங்குதற்குக் காரணமான; உண்மரும் தின்மரும்-உண்பாரும் தின்பாருமாய் வரும் பலரையும்; வரைவுகோள் அறியாது-வரைந்து கொள்வ தின்றாமாறு வழங்கிய வழியும்; வாடாச் சொன்றி-குறையாத சோற்றால்; பேரா யாணர்த்து-நீங்காத புதுமையினை யுடைத்து; நின் வளன் வாழ்க- இதற்குக் காரணமாகிய நின் செல்வம் வாழ்வதாக எ-று.

இடையற லின்றிச் சமைத்தற்கு வேண்டும் அரிசியைக் குற்றிக் குற்றித் தேய்ந் தொழிந்தமை தோன்றக் "குரைத்தொடி மழுகிய உலக்கை" கூறப்பட்டது. குற்றுந்தொறும் ஓசை யெழுப்புவதுபற்றித் தொடி, குரைத்தொடி யெனப்பட்ட தென்றுமாம். உலையிடும் அரிசியைத் தீட்டிக் கோடற்பொருட்டு அட்டிற் சாலைக்கண் மர வுரலும் தொடியிட்ட வுலக்கையும் உளவாதலின், "உலக்கை வயின்றோறும்" என்றார். இலையோடு கூடிய சேம்பு போல அகன்ற வாயையுடைய தாதலால் சோறு சமைக்கும் மடாவினை "அடைச்சேம் பெழுந்த ஆடுறுமடா" வென்றார். சேம்பின் அடி மடாவின் அடிப்பகுதிக்கும் அதன் இலை அகன்ற வாய்க்கும் உவமம். இதுபோலும் வடிவில் இக் காலத்தும் சோறு சமைக்கும் மண் மிடாக்கள் நாட்டுப்புறங்களிற் காணப் படுகின்றன. எழுந்த, உவமப்பொருட்டு. இம் மடாக்களை நேரிற் கண்டறியாதார் தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர். மடா, மிடா வெனவும் வரும்.

இக்காலத்தவர் முடா வென வழங்குவர். சிவந்த நிறமுடைய வூனைக் கொத்திச் சோற்றோடு கலந்து சமைப்பவாதலின் மடாவொடு ஊனமும் உடன்காணப்படுகின்றன. "கோழூன் குறைக் கொழு வல்சி" (மதுரை. 141) என்பதனுரையில் "ஊனைக்கூட இட்டு ஆக்குதலின் கொழுவல்சி" யென்றார் என நச்சினார்க்கினியர் உரைப்பது காண்க. ஊனம், ஊனைக் கொத்துதற்குக் கொள்ளும் அடிமணையாகிய மரக்கட்டை; ஊனைக் கொத்துதலால் அதன் குருதி படிந்து சிவந்து தோன்றுதலால் "எஃகுறச் சிவந்த வூனத்" தென்றார். இவற்றைக் காணுமிடத்து இவற்றால் ஆக்கப்படும் சோறும் ஊனும் என்ற இவற்றின் மிகுதி, காண்பார் கருத்திற் றோன்றி, அவர் தம் அறிவை மயக்குதலின், யாவரும் கண்டு மதிமருளுவ ரென்றார். "யாவரும்" என்றார், சமைக்கும் மடையர்க்கும் மதிமருட்சி பயக்கும் பெருமை யுணத்தர்க்கு. இவற்றை முறையே உண்ணவும் தின்னவும் வருவாரை வரையா தேற்று வழங்குதலின், குறைவுண்டாகாவாறு இடையறாது சமையல் நிகழ்ந்த வண்ணமிருத்தலின், "உண்மரும் தின்மரும் வரைகோ ளறியாது வாடாச் சொன்றி" யென்றார். அறியா தென்புழி வழக்கவும் என ஒருசொற் பெய்து கொள்க. இனி, வரைகோ ளறியாது ஆடுறு மடாவென வியைத்து, இத்துணைய ரென வெல்லை யறியப்படாது பன்முறையும் சமைத்துக் கொட்டுதலைப் பொருந்திய மடாவென் றுரைப்பினுமமையும். ஏனைக் கோளினும் நாளினும் வெள்ளி மிக்க வொளியுடைய தாதலால், "வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர்வரு" மென்றார். நேர்கிழக்கில் தோன்றுவதின்றிச் சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்குதலின், வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி யென்றும், அது மழை வளந் தரும் கோள்களிற் றலைமை பெற்றதாதலின், சீர்சால் வெள்ளி யென்றும், தலைமை பெற்றதாயினும் ஏனைக் கோள்களும் கூடி யிருந்தாலன்றி மழை வளம் சிறவாமை தோன்ற, "பயங்கெழு பொழிதொடு ஆநியம் நிற்ப" என்றும் சிறப்புற மொழிந்தார். நாளாவது நாண்மீன் கூட்டம். பொழுது ஆகுபெயர். ஆநியம் மழை பெய்தற்குரிய நல்ல நாள். "பயங்கெழு வெள்ளி ஆநிய நிற்ப" (பதிற். 69) எனப் பிறரும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், "வறிது வடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதா டாநிய நிற்ப வென்றது, சிறிது வடக் கிறைஞ்சின புகழா னமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே தான் நிற்கும் நாளிலே நிற்க வென்றவாறு" என்றும் "பொழுதென்றது அதற்கு அடியாகிய கோளை" யென்றும், வறிது வடக்கிறைஞ்சிய வென்னும் அடைச்சிறப்பான் இதற்குச் (இப் பாட்டிற்குச்) சீர்சால் வெள்ளி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.

மழை பொழியும் முகிற்கூட்டம் பக்க வானத்தே கால் வீழ்த்துப் பெய்தல் இயல்பாதலால், "கையுற வணங்கி" என்றார். கை, பக்கம். மன் மிகுதி குறித்து நின்றது. ஞாயிறுபோல முகிற் கூட்டமும் வலமாக எழுதல் பற்றி, "வலனேர் பிரங்கும் " என்றார். கீழ்க் காற்றாற் கொணரப்படும் மழைமுகில் பெய்யாது பொய்த்தல் அரிதெனற்கு "காரெதிர் பருவம் மறப்பினும்" என்றார். ஒருகால் அது மறப்பினும் இச் சேரமான் வழங்கும் சோறு குன்றா தென்பது இதனால் வற்புறுத்தவாறு.

இதுகாறும் கூறியது, பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ, திருந்திழை கணவ, இயலறைக் குருசில், நீர் முதலிய ஐந்தினையும் அளந்து முடி வறினும் பெருமை யளத்தற் கரியை; நின் வளன் வீங்கு பெருக்கம் இனிது கண்டேம்; மழை காரெதிர் பருவம் மறப்பினும் நின் வாடாச் சொன்றி பேராயாணர்த்து; நின் வளன் வாழ்க என்பதாம். பழைய வுரைகாரர், "பெரும்படைத் தலைவ, திருந்திழைகணவ, குருசில், நீர் நில முதலைந்தினையம் அளந்து முடி வறினும் பெருமை யளந்தறிதற் கரியை; நின் செல்வ மிக்க பெருமை இனிது கண்டேம்; அஃது எவ்வாறு இருந்த தென்னின் வாடாச் சொன்றி மழை காரெதிர் பருவம் மறப்பினும் பேராயாணர்த்து; அப்பெற்றிப்பட்ட நின் வளம் வாழ்க வென வினைமுடிபு செய்க" என்பர்

நேர் கிழக்கே நில்லாது சிறிது வடக்கண் ஒதுங்கித் தோன்றிய சீர்சால் வெள்ளியை "வறிது வடக் கிறைஞ்சிய" என அடைகொடுத்து, சீர் மாசு பட்டார் வடக்கிருப்பாராக, வடக்கொதுங்கிய வெள்ளியை வடக் கிறைஞ்சிய வென்றதன் மாசின்மை தோன்றச் "சீர்சால் வெள்ளி" யென்றும், வறிது வடக் கிறைஞ்சிய வென்றும் கூறிய சிறப்பால், இப் பாட்டு இவ்வாறு பெயர் பெறுவதாயிற் றென்றறிக. சீர்மாசு பட்டதனால் கோப்பெருஞ் சோழனும் சேரலாதனும் வடக்கிருந்தமை யறிக.

இதனாற் சொல்லியது அவன் பெருமையும் கொடைச்சிறப்பும் கூறி வாழ்த்திய-வாறாயிற்று.


3.5. கானுணங்கு கடுநெறி

25
    மாவா டியபுல நாஞ்சி லாடா
    கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
    இனம்பரந்த புலம் வளப்பரப் பறியா
    நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
    நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா
    5
    கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
    பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
    ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
    முனையகன் பெரும்பா ழாக மன்னிய
    உருமுழற் பிரங்கு முரசிற் பெருமலை
    10
    வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
    கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
    நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்.
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்: கானுணங்கு நடுநெறி.

10-13 உருமுழற்பு..................நாடே

உரை: உரும் உறழ்பு இரங்கும் முரசின்-இடிபோல முழங்கும் முரசத்தொடு; பெரு மலை வரையிழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க-பெரிய மலையின் பக்கத்தே இழியும் அருவி போல் விளங்கும் துகிற் கொடிகள் அசைய; கடும்பரி கதழ் சிறகு அசைப்ப-விரைந்த செலவாகிய சிறகுகளையுடைய குதிரையாகிய புள் பறந்தோட; நீ நெடுந் தேர் ஓட்டிய-நீ நின் நெடிய தேர்களைச் செலுத்திய; பிறர் அகன்றலை நாடு-பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ-று.

முரசின் முழக்கிற்கு இடி முழக்கை யுவமங் கூறல் மரபு; "படுமழை யுருமின் இரங்கு முரசு" (புற. 350) என்று ஏனைச் சான்றோரும் கூறுதல் காண்க. முரசின் என்புழி ஒடு வுருபை விரித்து முரசினொடு தேர் ஓட்டிய என இயைக்க. பழைய வுரைகாரரும், முரசினொடு என ஒடு விரித்து அதனைத் தேரோட்டிய என்பதனோடு முடிக்க" என்பர்
இனி, இன்றென்றதனை அல்வழிச் சாரியையாக்கி, முழங்கா வென ஒருசொல் வருவித்து, முரசு முழங்க, கொடி நுடங்க, சிறகசைப்ப தேரோட்டிய என இயைத்து முடிப்பினுமாம். தேரிற் கட்டிய துகிற்கொடிக்கு, பெருமலை வரையிழி அருவியை யுவமங் கூறினாராதலின், அதற்கேற்பத் தேரை "நெடுந்தேர்" என்றார். குதிரையின் செலவினைச் சிற கென்றமையின், அஃது ஆகுபெயராய்ப் புள்ளுக்காய்க் குதிரைக் குவமையாயிற்று. "புள்ளியற் கலிமா" (ஐங். 486) எனச் சான்றோர் கூறுவது காண்க. அகைதல், மிகுதல்: ஈண்டுச் செலவின் கடுமை மிகுதிமேற்று. பழையவுரைகாரர், "செலவின் கடுமை யாற்றல் தோன்ற பறவையாகக் கூறுவான், உபசார வழக்குப்பற்றிச் சிறகு அகைப்ப வென்றான்." என்பர். பணிந்து திறை பகர்ந்து நட்புப் பெற் றொழியாது
இகலி முரண்கொண்டு பொருதழிந்தமையின் பகைவரைப் "பிறர்" என்றார்.

1-9. மாவாடிய....மன்னிய.

உரை: மா ஆடிய புலம் நாஞ்சில் ஆடா-நின் குதிரைப் படை சென்று பொருத வயல்கள் கலப்பைகள் சென்று உழக் கூடாதனவாய் அழிந்தன; கடாஅஞ் சென்னிய யானையினம் பரந்த புலம்-மதஞ் சொரியும் தலையும் கடுத்த பார்வையுமுடைய யானைப்படை பரந்து நின்று பொருத வயல்கள்; வளம் பரப்பு அறியா- வளம் மிகப் பயத்தல் இலவா யழிந்தன; நின் படைஞர் சேர்ந்த மன்றம்-நின் காலாட்படைகள் நின்று பொருத ஊர் மன்றங்கள்; கழுதை போகி (பாழாயின)-கழுதை யேர் பூட்டிப் பாழ் செய்யப்பட்டன; நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா-நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வா ரின்மையான் கதவு முதலிய காப்பு வைக்கப் படா தழிந்தன; கடுங்கால் ஒற்றலின்-மிக்க காற்றெழுந்து மோதுதலால்; சுடர் சிறந் துருத்து-சுடர்விட் டெழுந்து மிக்குற்று வெதுப்ப; பசும் பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்- பசிய பொறிகளையுடைய ஒள்ளிய காட்டுத் தீ பரந்த பக்கத்தொடு கூடிய; ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி-காட்டுக் கோழி யுலவும் காடுகள் தீய்ந்து போன கடிய வழிகளும்; முனைபகன் பெரும் பாழாக மன்னிய-ஆறலைப் போர் தங்கி வழிச் செல்வோரை வருத்தும் முனையிடமுமாகிய அகன்ற பெரிய பாழிடங்களாய் அழிவுற்றன. எ-று.

போகியென்னும் வினையெச்சத்தைப் பாழாயின வென ஒருசொல் வருவித்து முடிக்க. மருங்கினோடு கூடிய கடு நெறியினையும் முனையினையுமுடைய அகன் பெரும் பாழ் என வியையும். படைக் குதிரைகள் பந்தி பந்தியாய்ச் சென்று வலமும் இடமும் சுழன்று பொருதலால் வயல்கள் உழவர் ஏரால் உழுது பயன் கொள்ளா வகையிற் பாழ்பட்டன வென்பார் "நாஞ்சில் ஆடா" என்றார். ஆடல் முன்னது பொருதலும் பின்னது உழுதலுமாம். யானைகளின் காலடியால் மென்புலமாகிய வயல் அழுந்தி வன்னிலமாய் வளம் பயக்கும் பானமை சிதைந்து போதலால், யானையினம் பரந்தபுலம் வளம்பரப் பறியா" என்றார். சென்னிய வென்னும் பெயரெச்சக்குறிப்பு யானை யென்னும் பெயர்கொண்டது. கடாச்சென்னி, கடாஞ் சென்னிய வென மெலிந்தது: பழையவுரை "கடாச்சென்னி யென்னு மொற்று மெலிந்த" தென்று கூறுகிறது. நாடு வயல் நாஞ்சி லாடா, புலம் பரப்பறியா என்பன கண்ணன் கை முறிந்தான் கண்ணொந்தான் என்றாற்போலச் சினைவினை முதன்மேனின்றன. படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி" யென்றதனால், படை வீரர் ஊரிடத்து மன்றங்களிற் சென்று தங்கி, ஆண்டுத் தம்மை யெதிர்த்த பகை வீரரை வென்று அம் மன்றங்களையும் கழுதை யேர் பூட்டி யுழுது பாழ் செய்து விட்டன ரென்பது பெற்றாம். இது பண்டையோர் மரபாதல், "வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்" (புறம் 15) என்று பிற சான்றோர் கூறுதலாலும் அறியப்படும்.

பகைவருடைய பெரிய காவலமைந்த நகரிகள் பகைவர்க் கஞ்சி வாழ்வோர் வேறு புலம் நோக்கிச் சென் றொழிந்தமையின், காவலும் கவினு மிழந்து கெட்டன வென்றற்கு, "நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா" வென்றார். வையா, செயப்பாட்டு வினைப்பொருட்டு. தோட்டி, கதவு; "நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி" (மதுரை. 663) என்றாற் போல. மதிலாகிய யானைக்குக் கதவு தோட்டி போறலின், தோட்டி யென்ப. மதிலைக் காத்தற்கு வலிய காவலாதலால், தோட்டி காவற்பொருளுந் தருவதாயிற்று. "ஆரெயில் தோட்டி வௌவினை" (பதிற். 71) என இந்நூலுள்ளும் வருதல் காண்க. தம்மைப் புரப்போர் போரில் அழிந்தமையின், நகர்க்கண் வாழ்வோர் அங்கேயிராது வேற்றிடம் போய்விடுவர்; "வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட" (பதிற். 49) எனப் பிறரும் உரைப்பர்.

இவ்வண்ணம் நின் பகைவர் நாட்டின் பெரும்பகுதி யழிவுற்றதாக, ஏனைக்காடும், காடு சார்ந்த நிலமும் மழையின்மையாலும் பெருங் காற்றெழுந்து மோதுதலாலும் தீப்பிறந்து சுடர்விட்டெரிய நில முற்றும் வெந்து கரிந்து கிடக்கின்ற தென்பார்," கடுங்கா லொற்றலின் சூடர்சிறந் துருத்துப் பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்" என்றார். பிசிர், தீப்பொறி. ஆடுதல், பரந்தடுதல். இவ் விடங்களில் ஏனைப் புள்ளும் மாவும் வழங்குதல் அருகினமையின், காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன வென்றற்கு, "ஆண்டலை வழங்கும்" என்றார். கடுங் காற்றால் தீ சிறந்து காட்டைச் சுட்டழித்தமையின், கரிந்து கெட்ட கடிய செறிகளிடத்தே கள்வர் தங்கி அரசு காவலின்மையால் ஆறு செல்வோரை யழிக்கும் பெரும் பாழாயின வென்பார்; "முனையகன் பெரும் பாழாக, மன்னிய" என்றார்.; "அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக், கைப் பொருள் வௌவுங் களவோர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்" (பெரும். 39-41) என்பதனால் அரசு காவலுள்வழி, முனையகன் பெரும் பாழாதல் இன்மை யறிக. இவ்வாறு காட்டுத் தீயால் வெந்து கிடக்கும் நிலத்திற் செல்லும் வழியைக் கானுணங்கு கடுநெறி யென்றும், நிற்க நிழலும் தண்ணென்ற மண்ணுமின்றிச் செல்வோர்க்கு அச்சமும் துன்பமுமே பயக்குமாறு தோன்ற நெறியைக் கானுணங்கு கடுநெறி யென மிகுத்துரைத்தலின், இப் பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர் "கானுணங்கு கடுநெறி யென்றது, மழையின்மையாற் கானம் தீய்தந் கடிய வழி யென்றவா" றென்றும், இச் சிறப்பானே இதற்குக் கானுணங்கு கடுநெறி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.

இதுகாறுங் கூறியது, நீ தேரோட்டிச் சென்றதனால், பிறர் அகன்றலை நாடுகள், நாஞ்சிலாடா, வளம் பரப்பறியா, எயில் தோட்டி வையா, கடுநெறி பெரும்பாழாக மன்னிய வென்பதாம். பழையவுரை காரர், " நீ தேரோட்டிய பிறர் நாடு அழிந்தவாறு சொல்லின், நாடு நின் மா வழங்கின வயல் பின்பு கலப்பை வழங்கா; நின் யானையினம் பரந்த வயல் பின் செல்வம் பரத்தலை யறியா, நின் படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையா லுழப்பட, நீ உடன்ற அரசர்தம் நகரிகள் பின்பு தமக்கு அரணாகக் காவலாரை வைக்கப்படா; இவ்வாறு அழிந்தபடியே யன்றிச் சில்லிடங்கள் கடுங்கா லொற்றலின், அழலாடிய மருங்கினையுடைய கானுணங்கு கடுநெறியினையும் முனைகளையுமுடைய அகன்ற பெரும் பாழாக நின்றன வெனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்

இதன் கண் தேரும் கொடியும் முரசும் விதந்தோதி, மாவாலும் களிற்றாலும் படை வீரராலும் பகைவர் நாடுகள் அழிந்த திறத்தை விளக்கிக் கூறுதலின், அடுத்தூர்ந் தட்ட கொற்றமாயிற்று. இவ்வாறு பல துறையும் விரவிவரத் தொடுத்தமையின், இப் பாட்டு வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. "தேரொட்டிய பிறர் நாடு இவ்வாறு அழிந்த தென எடுத்துச் சிலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்" றென்பது பழையவுரை. "மாவாடிய வென்பது முதலாக மூன்றும் வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று. நின் படைஞர் எனவும், நீ யெனவும் அடிமுதற்கட் சீரும் அசையும் கூனாய் வந்தன"

இப் பாட்டினாற் சொல்லியது: சேரமானது வென்றிச் சிறப்பென்பது கூறியவாறாயிற்று.

3.6. காடுறு கடுநெறி.

26
    தேஎர் பரந்தபுல மேஎர் பரவா
    களி றாடியபுல நாஞ்சி லாடா
    மத்து ரறியமனை இன்னிய மிமிழா
    ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின்
    நோகோ யானே நோதக வருமே
    5
    பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று.
    வலமின் றம்ம காலையது பண்பெனக்
    கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
    மெலிவுடை நெஞ்சினர் சிறுமைகூரப்
    பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
    10
    காடுறு கடுநெறி யாக மன்னிய
    முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
    உரும்பில் கூற்றத் தன்னநின்
    திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

இதுவுமது.

1-5. தேஎர்....................வருமே

உரை: தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா- தேர்கள் செல்லுதலாற் சேறுபட்ட வயல்கள் பின்னர் ஏர்கள் சென்றுலவி உழுதலை வேண்டா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா- பன்றிகள் உழுத கொல்லைகள் கலப்பையால் உழப்படுதலை வேண்டா; மத்து உரறிய மனை இன்னியம் இமிழா- தயிர் கடையும் மத்தின் ஒலி முழங்கும் ஆய்ச்சியர் மனைகள் இனிய வாச்சியங்களின் முழக்கிசை கேட்கப்படா; ஆங்கு-அவ்விடத்தை; பண்டு நற்கு அறியுநர்-முன்பு நன்றாகக் கண்டறிந்தவர்; செழு வளம் நினைப்பின்- அப் போதிருந்த செழுமையான வளத்தை இப் போது நினைப்பா ராயின்; நோதக வரும் நினைக்கும் நெஞ்சு நோவத்தக்க வருத்த முண்டாகும்; யான் நோகு- யானும் அதனை நினைத்து வருந்தா நிற்கின்றேன் எ-று.

பகைவர் நாடழிந்தது கண்டு, அவ் வழிவின் மிகுதியைப் புலப்படுத்தற்கு அவற்றின் பண்டைய நிலையினையும் உடன்குறிக்கின்றார். அந் நாட்டவர் பலரும் செல்வராதலின், அவர் தேர்கள் வயலிடத்தே செல்லின், அவை பின்பு ஏரால் உழப்படுதலை வேண்டாதே சேறுபட்டு வித்திப் பயன்கொள்ளற் குரிய பண்பாட்டினை யெய்தும் என்பார், " தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா" என்றார். ஏஎர், மென்புலமாகிய நன்செய்களை யுழும் கலப்பை. "தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா வென்றது, ஒருகால் தேர் பரந்த வயல் அத் தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர் பரவா என்றவா" றென்பர் பழையவுரைகாரர். இது மென்புல வைப்பின் நலம் கூறிற்று. புன்செய்களாகிய கொல்லைகளைப் பன்றிகள் உழுது பண்படுத்தி விடுதலின், அவையும் முற்கூறிய நன்செய்களைப் போலவே கலப்பைகளைக்கொண்டு உழவேண்டாவாம் என்பார், " களிறாடியபுல நாஞ்சி லாடா" வென்றார். " கடுங்கட் கேழ லுழுத பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை" (புறம், 168) எனப் பிறரும் கூறுதல் காண்க. களி றென்றது ஈண்டு ஆண் பன்றியினை; "வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்" என்ற ஆசிரியர், " கேழற் கண்ணும் கடிவரை யின்றே" (தொல். மரபு. 34--5) என்றலின், ஆண் பன்றி களிறெனப் பட்டது. கொல்லையில் தானே முளைத்திருக்கும் கோரையின் கிழங்கை யுண்டற்குப் பன்றிகள் நிலத்தைக் கிளருதல் பற்றி, "களிறாடிய புலம்" என்றார்; "கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பு" (ஐங். 270) என்று பிறரும் கூறுவர். பழைய வுரைகாரர், "களிறாடிய புலம் நாஞ்சிலாடா வென்றது, பன்றிக ளுழுத கொல்லைத் தறை அவை உழுத மாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்பை வழங்கா வென்றவா" றென்பர். மென்புலம் உழுவதை ஏர் என்றும், வன்புல முழுவதை நாஞ்சில் என்றும் வழங்குப.

இக் கொல்லைகளைச் சார்ந்துள்ள ஆயர் மனைகளின் வளம் விளம்புவார், ஆங்குப் பால் வளம் சிறந்திருத்தலால் மனைதோறும் தயிர் கடைபவரின் மத்தொலியே பெரிதும் முழங்குதலால், அம் முழக்கினை விஞ்ச மாட்டாது ஆண்டுளதாகும் மங்கல முழவு முதலியவற்றின் இசை யொலி கேட்போர் செவிப்புலத்தை யெட்டா தொழியு மென்பார், "மத்து ரறியமனை யின்னிய மிமிழா" என்றார். "மத்தொலிக்கின்ற மனைகள் அம்மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களின் ஒலி கிளரா" என்று பழையவுரைகாரர் கூறுவர்.

அந் நாடுகளின் வள மிகுதியைப் பொதுவாக அறிந்தோரினும் சிறப்பாக அறிந்தோர்க்கே அவ் வளத்தின் கேடு இனிது விளங்கும் என்பது பற்றி, "ஆங்குப் பண்டு நற்கறியுநர்" என்றும், அவர் கண்ட மாத்திரையே அழிவு மிகுதியாற் செயலற்றுப் போவராதலின், " நினைப்பின்" என்றும், நினைக்கலுற்றவழி, பண்டு கண்ட வளத்தின் மிகுதி அவர் நினைவில் தோன்று மாதலின். " செழுவளம் நினைப்பின்" என்றும், அதனால் அவர் நெஞ்சு நொந்து வருந்துவ தொருதலையாதலால், "நோதக வருமே" யென்றும் கூறினார். நன்கு, நற்கென விகாரமாயிற்று; "அது நற் கறிந்தனை யாயின்" (புறம். 121) என்றாற் போல. நன்கு அறிந்தோருள் தாமும் ஒருவராதல் தோன்ற, "நோகோ யானே" யென்றார். ஓகாரம், அசைநிலை. நோகு, தன்மை வினைமுற்று.

இவ்வாற்றால் பகைவர் நாட் டழிவின் பொதுவியல்பு கூறினார் இனி, அதன் இயல்பைச் சிறப்புறக் கூறுகின்றார்.

6-14. பெயல்மழை.............நாடே

உரை: முருகு உடன்று கறுத்த கவியழி மூதூர்- முருகவேள் வெகுண்டு பொரு தழித்தலால் செல்வக் களிப்பிழந்த மூதூர்களைப் போல; உருமபில் கூற்றத் தன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய நாடு- பிறரால் நலிவுறுதல் இல்லாத கூற்றினை யொத்த நின்னுடைய திருந்திய தொழிலையுடைய வீரர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகள்; பெயல் மழை புரவின்றாகி- காலத்திற் பெய்தலையுடைய மழை பெய்யாமற் பொய்த்தமையால்; வெய் துற்று- வெயிலது வெம்மை மிகுதலால்; வலம் இன்று- நாடு நலம் பயப்ப தின்றாயிற்று; காலையது பண்பு என-இஃது அல்லற்காலத்தது பண்பா மெனச்சொல்லி; கண்பனி மலிர் நிறை தாங்கி- பனித்த கண்ணில் நீர் நிரம்பத் தாங்கி; மெலிவுடை நெஞ்சினர் - வலியழிந்த மனமுடையரான பகைப் புலத்து மக்கள்; கை புடையூஉ-செயலறுதி தோன்றத் தம் கையைப் புடைத்து; சிறுமை கூர- வருத்த மெய்த; பீர் இவர் வேலிப் பாழ்மனை- பீர்க்கின் கொடி படர்ந்த வேலி சூழ்ந்த பாழ்மனைகளும்; நெருஞ்சிக் காடுறு கடு நெறியாக மன்னிய- நெருஞ்சி முட்கள் காடுபோல் செறிந்த வழிகளுமாக நிலைபெற்றன எ-று.

உரிய காலத்தில் மழையினைப் பெய்து உலகத்துயிர்களைப் புரத்தற் குரிய மழை பெய்யாது பொய்த்தமையின், "பெயல் மழை புரவின் றாகி"யென்றும், அதனால் வெயிலது வெம்மை மிக்கு உயிர்கட்கு வருத்தம் மிகுவித்தல் இயல்பாதலின், "வெய்துற்று" என்றும் கூறினார். செய்தெனெச்சங்கள் காரணப்பொருள. இந்நிலையில் செய்வோர் செய்வினைப் பயன் பெறுதல் இல்லை யாதலால், "வலமின்" றென்றும், அவர்தம் வருத்தமிகுதி தோன்ற,"அம்ம" வென்றும் குறித்தார். நாடழிந்து விளை பொருளின்றிக் கெட்டு வெம்மை மிக்கதற்குச் சேரனையாதல், அவன் வயவரையாதல், தம் நாட்டு வேந்தரை யாதல் பிறரையாதல் நோவாது காலத்தை நொந்து, "காலையது பண்பெனக் கண்பனி மலிர் நிறை தாங்கிக் கைபுடையூஉ" வருந்தினர் என்றார். ஊழையும் உப் பக்கம் காணும் உரனுடைய ரல்ல ரென்றதற்கு, " மெலிவுடை நெஞ்சினர்" என்றும், அதனால் அவரெய்துவது சிறுமையே யென்பது விளங்க, "சிறுமைகூர்" என்றும் கூறினார். எனவே, சேரனது சீற்றத்தையும் அவனுடைய வீரரது ஊற்றத்தையும் முன்னே தெரிந்து புகலடையாத சிறுமையும் அதற் கின்றியமையாத உரனின்மையும் ஓராற்றால் உணர்த்தினா ராயிற்று. நெஞ்சில் திண்மையிலதாகவே, எய்துவது சிறுமை யாயிற்று. இனி, காலையது பண்பென்புழிக் காலை ஞாயி றென்றும் அதன் பண்பு வெம்மை யென்றும் கொண்டு,காலையது பண்பு வெய் துற்றென இயைந்து ஞாயிற்றின் வெம்மையால் வெயின் மிகுந்து என்பாரு முளர். கட்பனி யெனற்பாலது கண்பனி யென நின்றது. கை புடையூஉ வென்றது கையாறு.

நாடு முற்றும் வயவர் பொருதழித்துக் கொண்டமையின், நாடுகள் மனை பாழ்பட்டுப் பீர் படர்ந்த வேலியும் நெருஞ்சி செறிந்த கடு வழிகளும் உடையவாயின என்பார், "பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக" என்றார்;"முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து மனைபாழ் பட்ட மரைசேர் மன்றம்" (அகம்.373) எனப் பிறரும் கூறுதல் காண்க.பாழ் மனைகளில் பீரும் நெருஞ்சியும் அறுகும் பிறவும் மிடைந்திருக்கு மென்பது இன்றும் காணக்கூடியது. மக்கள் வழங்குத லின்மையின், நெருஞ்சியும் பிறவும் காடுபோற் செறிதலால் வழிகள் சிறுகிக் கப்பணம் பரந்த கல்லதர் போலச் செல்வார்க்கு வருத்தம் பயத்தலின் "நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக" என்றும், அதனைத் தாம் வரும்போது கண்டு போந்தமை தோன்ற "மன்னிய" வென்றும் கூறினார். "மன்னிய" வென்றதனால் மீளவும் நாடாதல் அருமை தோன்றிற்று.

முருகன் சூரனைச்சினந்து சென்று அவனிருந்த மூதூரைச் செறுத்த காலத்தே அவன் இனத்தவரது உயிர் குடித்த கூற்றுவனைப் போல நீ சினந்து சென்று போருடற்றிய காலத்தே பகைவரை நின் வயவர் கொன்று குவித்தன ரென்பார், "முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் (போல) உரும்பில் கூற்றத் தன்னநின் வயவர் சீறிய நாடே" யென்றார். முருகு, முருகன்; "முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போல" (நற். 82) என்றாற் போல. மூதூர் போல நாடுகள் மன்னிய என முடிக்க. "மூதூர் போலவென உவமவுருவு விரித்து அதனை வயவர் சீறிய என்னும் வினையொடு முடிக்க;இனி,போதும் என விரித்து வயவர் சீரிய நாடெனலும் ஒன்று; இனி, மூதூர்க் கூற்ற மெனக் கூட்டிக் கூற்றுவன் கொடுமை மிகுதி கூறலு மொன்" றென்பர் பழையவுரைகாரர்.

முருகன் சூரனைச் சினந் துடற்றிய போரால் அச் சூரனது மூதூர் கலியழிந்து மாறிய செய்தி உலகறிந்த தாதலின், "கலியழி மூதூர்" என்று எடுத்தோதி, அச் சூரனாலும் பிறரெவராலும் நலிவு படாத வன்முயுடைமைபற்றிக் கூற்றுவனை, "உரும்பில் கூற்ற" மென்றும் குறித்தார். நாட்டிற்கு மூதூரும் வயவர்குக் கூற்றமும் உவமம் கூறலின், கூற்றுவனை யேவல் கொள்ளும் சேரனது வலிமிகுதி குறிப்பால் உணர்த்தினாராயிற்று. "உரும்பில் கூற்றென்பது பிறிதொன்றால் நலிவுபட்டு மனக் கொதிப்பில்லாத கூற்ற மென்றவாறு; உருப்பென்னும் ஒற்று மெலிந்து நின்றது" என்பர் பழையவுரைகாரர். படையழிந்து மாறினார்மேலும் மகளிர் மேலும் பிற பொரற்காகாதார்மேலும் படை யெடாச் சீர்மை யுடைமைபற்றி வயவரைத் "திருந்துதொழில் வயவர்" என்றார். சீறிய- சீறிய வதனால் அழிந்த வெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது.

காடு நிலந் தெரியாவண்ணம் பசுந் தழையும் முள்ளும் மண்டிமாவும் மாக்களும் இனிது வழங்காவாறு வருத்தம் செய்வது போல, நெருஞ்சியும் பச்சிலையும் முள்ளும் மண்டி மக்கள் இனிது நடந்து செல்ல வொண்ணாதபடி வருத்தும் இயல்பு கொண்டுள்ள திறத்தினை விதந்தோதிய சிறப்பால் இப் பாட்டிற்குக் "காடுறு கடுநெறி" யென்பது பெயராயிற்று. "நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக் காடெனக் கூறிய அடைச்சிறப்பால் இதற்குக் காடுறு கடுநெறி யென்று பெயராயிற்று" என்பர் பழையவுரைகாரர்.

இதுகாறும் கூறியது வேந்தே நீ சீறிய காடுகள் மக்கள் கண்பனி மலிர் நிறைதாங்கி, வலமின் றம்ம, காலையது பண்பெனக் கைபுடையூஉ மெலிவுடை நெஞ்சினராய்ச் சிறுமை கூர, நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய; பண்டு அறியுந‌ர் அவற்றின் செழுவளம் நினைப்பின், தேர்பரந்த புலம் ஏர்பரவா நலமும், களிறாடிய புலம் நாஞ்சி லாடா நலமும் மத்து ரறியமனை இன்னியம் இமிழா நலமும் நெஞ்சிற் றோன்றி நோதக வரும். யான் நோகு என்பதாம். இனிப் பழையவுரைகாரர் "நின் வயவர் சீறிய நாடு அவ் வயவர் சீறுதற்கு முன்பு இருக்கும்படி சொல்லின்,தேர்பரந்த புலம் ஏர் பரவா,களிறாடிய புலம் நாஞ்சிலாடா, மத்து ரறியமனை இன்னியம் இமிழா, அவ்வாறு வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை யுடைத்தாகாநின்றது; அதன் செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர் நினைப்பின் நோதக வரும்; நோவேன் யான் என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க" வென்பர்.

இதன்கண் நின் வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்த தென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று; தேர் பரந்த என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று; ஆங்கு என்பது அடிமுதற் கூன். "சீர்கூ னாதல் நேரடிக் குரித்தே" (தொல். செய். 69) என்பவாகலின், நேரடி முதற்கண் வந்தது.

இப் பாட்டால் சேரனது வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

3.7. தொடர்ந்த குவளை.

27.
    சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
    தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
    அலர்ந்த வாம்ப லகமடி வையர்
    சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
    அரிய லார்கைய ரினிதுகூ டியவர்
    5
    துறைநணி மருத மேறித் தெறுமார்
    எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
    பழனக் காவிற் பசுமயி லாலும்
    பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்
    நெய்தன் மரபி னிரைகட் செறுவின்
    10
    வல்வா யுருளி கதுமென மண்ட
    அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
    நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்து
    சாகாட் டாளர் கம்பலை யல்லது
    பூச லறியா நன்னாட்
    15
    டியாண ரறாஅக் காமரு கவினே.

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: தொடர்ந்த குவளை


உரை: எல் வளை மகளிர்-விளங்குகின்ற வளையினை யணிந்த இள மகளிர்; தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி- இடையறவின்றித் தொடர்ந்து மலரும் குவளையின் முழுப் பூவைச் சேர்த்து; அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்- ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையே அகப்படத் தொடுத்த தழையினை யுடுத்து; சுரியல் அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர் கையர்- சுரிந்த தலைமயிரிற் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணி யணிந்து கள்ளுண்ணும் இயல்பினரான; இனிது கூடு இயவர்-இசை இனிது கூட விசைக்கும் இயவர் தங்கியிருக்கும்; துறை நணி மருதம் ஏறி-நீர்த்துறைக்கண் ணிற்கும் மருத மரத்தின்மேல் ஏறி; தெறுமார்-நெற்கதிர்களை மேயும் புட்களை யோப்புதற்காக; தெள் விளி இசைப்பின்-தெளிந்த தம் விளிக்குரலை யெடுத்து இசைப்பாராயின்; பழனக் காவில் பசு மயில் ஆலும் (கம்பலையும்) -வயலருகே யுள்ள பொழில்களில் தங்கும் பசிய மயில்கள் அம் மகளி ரிசைக் கொப்ப ஆடுதலா லெழும் ஆரவாரமும்; பொய்கை வாயில் புனல் பொரு புதவின்-பொய்கையின் வாயிலிடத்தே யமைந்து புனலால் தாக்கப்படும் கதவின் கசி கால்களிற் பூக்கும்; நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்- நெய்தற் பூவை யூதும் முறைமையினை யுடையவாய் நிரை நிரையா யிரைத் துச் செல்லும் வண்டினம் நிறைந்த நன்செய்ப் புலத்திற்செல்லும்; வல் வாய் உருளி-பண்டியின் வலிய வாயையுடைய உருளையானது; அள்ளற் பட்டுக் கதுமென மண்ட- சேற்றின்கண் இறங்கிச் சட்டென அழுந்தி விடுதலால்; சாகாட்டாளர்-அப் பண்டியைச் செலுத்துவோர்; துள்ளுபு துரப்ப-துள்ளி யுரப்பி எருதுகளைச் செலுத்த; நல் லெருது முயலும் அளறு போகு விழுமத்துக் கம்பலை யல்லது- நல்லெருதுகள் முயன்று ஈர்த்துச் சேற்றினின்று கழிந் தேகும் வருத்தத்திடைப் பிறக்கும் ஆர வாரமு மல்லது; பூசல் அறியா நன்னாட்டு - வேறே போராரவாரம் கேட்டறியாத நல்ல நாட்டின்; யாணர் அறாஅக் காமரு கவின்- புது வருவாய் குன்றாத விருப்பம் பொருந்திய அழகானது; நீ சிவந்தனை நோக்கலின்-நீ வெகுண்டு சீறிப் பார்த்ததனால்; மன்ற சிதைந்தது-தெளிவாகச் சிதைந் தழிவதாயிற்று; காண் எ-று.

எல்வளைமகளிர் மடிவையராய்த் தெறுமார் மருத மேறி இசைப்பின் என இயைக்க. ஆண்டு முழுதும் தொடர்ந்து மலரும் இயல்பிற் றாதலின், குவளையைத் "தொடர்ந்த குவளை" யென்றார். இனி, குவளையின் தூநெறிகள் சாம்பி யுதிர்ந்தவழிப் புதியன தொடுத்து இடையறவின்றி யஃது இருக்குமாறு செய்தலின் இவ்வாறு கூறினா ரென்றும், தொடுப் போர் தொடர்புறுத்தத் தொடரும் குவளையைத் தொடர்ந்த குவளை யென்றா ரென்றும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், "ஆண்டுகள் தோறும் இட்டு ஆக்க வேண்டாது தொண்டு (பண்டு) இட்டதே யீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும்" என்றும், "இச் சிறப்பானே இதற்குத் தொடர்ந்த குவளை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். புறவித ழொடித்த முழுப்பூவைத் தூநெறி யென்றார். குவளை, செங்கழு நீருமாம். குவளையும் ஆம்பலும் பைந்ழையும் விரவித் தொடுக்கப்படும் தழை யுடையில் ஆம்பற் பூவை இடையிட்டு ஏனையவற்றை அதனைச் சூழத் தொடுத்த தழை யுடை ஈண்டு "ஆம்ப லக மடிவை" யெனப் பட்டது. இவ்வாறன்றிப் பல்வகைப் பூக்களையும் வண்ணம் மாறுபடத் தொடுக்கப்படுவது பகைத் தழை யெனப்பட்டது; இருவகையும் ஒருங்கமையத் தொடுப்பது முண்டு. அதனை "அம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்" (அகம். 226) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, டாக்டர் உ.வே.சாமிநாதைய ரவர்கள் "அலர்ந்த வாம்ப லம்பகை மடிவையர்" என்று பாடங் கொள்ளினும் பொருந்து மெனக் கூறுவர்; குவளையும் ஆம்பலும் பிறவும் விரவித் தொடுக்கப்படுதலின், "குவளைத் தூநெறி யடைச்சி, அலர்ந்த ஆம்பல் அகம்படத் தொடுத்த மடிவையர்" என்றார். அடைச்சி யென்னும் வினையெச்சத்தை அகம் என்புழித் தொக்குநின்ற வினையொடு முடிக்க. குவளையும் தழையுடைக்கண் விரவித் தொடுக்கப்படுதலை, "குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்" (புறம் 116) என்று சான்றோர் கூறுதலா லறிக. இனி, குவளைத் தூநெறியைக் கூந்தலில் அடைச்சி யென்று கொண்டு பொருள் கூறுவாருமுளர்.

இயவர் தம் சென்னியிற் கண்ணி சூடலும் கள்ளுண்டலும் உடையராதலின், "சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி அரியலார் கையர்" என்றார். தலைமயிர் சுருண்டிருத்தல்பற்றிச்; "சுரியலஞ் சென்னி" யென்றும், பொற்பூவாற் செய்யப்பட்ட கண்ணி யன்றென்பதற்குப் "பூஞ்செய் கண்ணி" யென்றும் கிளந் தோதினார். இசையைக் கேள்வியொடு (சுருதி) கூட்டிக் கேட்டார்க்கு இன்ப முண்டாகப் பாடுதலின், "இனிது கூடியவர்" என்றார். இவர் உழவரினத்து இயவர். இவர், தாம் நீர்த்துறையிடத்து நிற்கும் பொழிலகத்தே யுறைபவராதலின்,அத் துறை "இயவர் துறை" எனக் கிழமை கூறப்பட்டது.

நெற்கதிரை மேயும் மயிலினத்தை இவ் விளமகளிர் ஓப்பியவழி, அவை சென்று துறை யருகிருக்கும் மருத மரத்தில் தங்குதலின், இவர்கள் அம் மருதத்தி லேறி அவற்றை யோப்புவா ராயினர். "செந்நெலுண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளி ரோப்பலின் பறந்தெழுந்து, துறைநணி மருதத் திறுக்கு மூதூர்": (புறம். 344) என்று பிறரும் கூறுவர். வளையணிந்த மகளி ரெனவே இளையராதல் பெற்றாம். கவணும் தட்டையும் பிறவும் கொண்டு புட்களை யோப்பும் திறம் இலராதலின், இம் மகளிர் தம் குரலெடுத்து விளித்தும் இசைத்தும் பாடினரென்றும், அப் பாட்டிசைதானும் இயவரது இயவொலி போறல் கண்ட மயில், அவ் வொலிக் கேற்ப ஆடுதல் செய்ததே யன்றி, நீங்கிற் றன்று; அதனைக் காண்போர் செய்யும் ஆரவாரத்தை, "பழனக் காவில் பசுமயிலாலும் கம்பலை" யென்றார். இனி, பழையவுரைகாரர் "மகளிர் தெறுமார் இசைப்பின், காவிற் பசு மயில் ஆலும் என்றது, வயலிற் புகுந்து உழக்காதிருத்தற்பொருட்டு அவ்வயற் புள் ளோப்பும் உழவர் மகளிர், அதனைக் கடிய வேண்டித் தெள் விளி யெடுப்பின், இயவர் இயங்களின் ஒலி கேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின் ஒலியாகக் கருதி மயில் ஆலு மென்றவாறு" என்பர். மயில் ஆலும் கம்பலை, அளறு போகும் விழுமத்துக் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு என இயையும்.

பொய்கையிடத்து மிக்க நீர் கழிவது குறித்துச் செய்துள்ள வழியினை, " வாயில்" என்றும், மிக்குற்று விரைந்து நீங்கும் நீரைத் தடுத்தற் பொருட்டு அவ் வாயிலில் நிறுத்த கதவு நீரால் தாக்குண்டு எதிர்த்து நிற்கும் இயைபு தோன்ற, "புனல்பொரு புதவின்" என்றும், அதன்வழிப் பொசிந்தோடு நீரால் மருங்குள்ள வயல்களிலும் கால்களிலும் நெய்தல்கள் நிரம்பப் பூத்திருத்தலால் அவற்றின் தாதூதி முரலுதல் கள்ளுண் வண்டிற்கு முறைமையாயிற் றென்பர், "நெய்தல் மரபின் நிரை கள்" என்றார். வயலின்கண் எழும் கம்பலையைக் கூறுவார், வண்டினம் கூட்டம் கூட்டமாய் நிரைத்துச் சென்று தேனை யுண்டல் பற்றி, அவற்றை "நிரைகள்" ளென்றார். இனி, இரவெல்லாம் தாமரை முதலிய பூக்களில் துஞ்சிய வண்டினம், விடியலில் எழுந்து போந்து தேனுண்ணுமாறு மலரும் மரபிற்றாகிய நெய்தலின் புதுத்தேனை நாடியுண்டலை மரபாக வுடைமைபற்றி, வண்டினத்தை இவ்வாறு கூறினா ரெனினும் அமையும். "வைகறை மலரும் நெய்தல்" (ஐங். 188) எனப் பிறரும் கூறுப. பழையவுரைகாரர், "நெய்தல் மரபின் நிரைகட் செறு என்றது, இடையறாது பூக்கும் மரபினையும் வண்டினையுமுடைய செறு" என்றும் கள்ளென்பது வண்டென்றும் கூறுவர்

வண்டு மூசும் செறுவின்கட் புக்கதும் சாகாட்டின் ஆழி, சட்டெனச் சேற்றிற் புதைந்து விடுதலால், "கதுமென மண்ட" என்றார். எனவே, செறுவும் ஆழ வுழப்பட்டுச் சேறு மிகப் பொருந்தியிருத்தல் பெற்றாம். அவ்வாறு ஆழ்தற்கேற்ற திண்மையும் வன்மையும் ஆழிக்கு உண்மை தோன்ற "வல்வா யுருளி" என்றார். உருளி, ஆழி, உருளியானது அள்ளற்பட்டுக் கதுமென மண்டலும், சாகாட்டினை யீர்த் தேகும் எருது மாட்டாமையால் திருகலிட்டு மயங்குதலால், அம் மயக்கந் தீர்தற் பொருட்டுச் சாகாட்டாளர் துள்ளிக் குதித்துப் பேரிரைச்சலிட்டு அவ் வெருதுகளை யூக்கித் தூண்டுதலின் "துள்ளுபு துரப்ப" என்றும், மாட்டாது மடங்கிப் படுக்கும் ஏனை வலியில்லாத எருதுகளைப் போலாது தம் வன்மை முழுதும் செலுத்தி மூக்கொற்றியும் தாளூன்றியும் அள்ளற் சேற்றினின்றும் நீங்க வலிக்கும் முயற்சி நலமுடைமையின், "நல்லெருது" என்றும், அளற்றின் நீங்கிக் கழியப் போகுமிடத்துச் சிறிது தாழ்ப்பினும் முன்போல் ஆழப் புதையுமென்பது கருதிப் பேராரவாரம் செய்தூக்கிச் செலுத்தலால், "அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை" என்றும் கூறினார். கம்பலை நிகழ்தற்கு விழுமம் இடமாயினும், நிகழ்த்துவோர் இவரென்றற்க்குச் சாகாட்டாளரை யெடுத் தோதினார். விழுமம், துன்பம். "அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே" (மதுரை. 259-60) என்று பிற சான்றோரும் கூறுதல்
காண்க.

அந் நன்னாட்டில் மக்களிடையே பகையும் நொதுமலும் அச்சமும் இன்மையின், அவை காரணமாகப் பிறக்கும் போர்ப்பூசல் இல்லை யென்பார், "சாகாட்டாளர் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு" என்றார். இறந்ததுதழுவிய வெச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. இன்ன நன்னாட்டில் நாளும் புது வருவாய் நிலவுவதால் எந்நிலத்தவரும் விரும்பும் ஏற்றமும் அழகும் இதன்பால் உளவாயின என்பார், " யாணர் அறாஅக்காமரு கவின்" என்றும், தன்னைத் தெறுமார் மகளி ரெடுத்த தெள்விளி கேட்டு ஆலும் பசு மயில்போல, இந் நாட்டவர் நின் போர்ப் பூசல் கேட்டுப் பணிந்து திறை செலுத்தி, அருள் பெறாது கெட்டன ரென்பார், "சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்" என்றும் கூறினார். "சிவந்தனை நோக்கலின்" என்றது குட்டுவனது சினத்தின் கடுமை தோற்றி நின்றது. பகைவர் நாட்டழிவின் மிகுதிநோக்கி, "சிதைந்தது மன்ற" என்றார். "துள்ளுபு துரப்ப வென்றது, சாகாட்டாளர் துள்ளித் துரக்கையாலே என்றும், அளறு போகு...வருத்த மென்றும்" பழையவுரைகாரர் கூறுவர்.

இதுகாறும் கூறியது, பழனக் காவில் பசு மயில் ஆலும் கம்பலையே யன்றிச் செறுவின்கட் சாகாட்டாளர் கம்பலையு மல்லது வேறு பூசலறியாத நன்னாட்டுக் காமரு கவின், நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது மன்ற என்பதாம். பழையவுரையும், "நன்னாட்டுக் கவின் நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது என வினைமுடிவு செய்க" என்றது. வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப், பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் (தொல். பொ. 82) என்பதனால் இஃது அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண்பாட்டாய்ச் செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று.

இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
--------------------

3.8. உருத்துவரு மலிர்நிறை.


28
    திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
    பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
    உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
    கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
    இளையினிது தந்து விளைவுமுட் டுறாது
    5
    புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
    விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
    கோடை நீடக் குன்றம் புல்லென
    அருவி யற்ற பெருவிறற் காலையும்
    நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
    10
    சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
    உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்
    செந்நீர்ப் பூச லல்லது
    வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே.

துறை: நாடு வாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: உருத்துவரு மலிர்நிறை.

உரை: கோடை நீட - வேனிற்காலம் நீட்டித்தலால்; குன்றம் புல்லென - குன்றுகள் பொலிவிழந்து தோன்ற; அருவி அற்ற பெரு வறற் காலையும் - அருவிகள் நீர் வற்றி யுலர்ந்த பெரிய வறட்சிக் காலத்தும்; கரை நிவந்து இழி தரு நனந்தலைப் பேரியாற்று - கரை யளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந் திழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும்; சீருடை வியன் புலம் - சிறப்புப்பொருந்திய அகன்ற புலத்தில்; விடு நிலக் கரம்பை விடரளை நிறைய - விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு நிலத்தில் உண்டாகிய வெடிப்புக்களில் நீர் நிறைந்து தேக்குமாறு; வாய் பரந்து மிகீஇயர் - இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டி; உவலை சூடி - தழைகளைச் சுமந்து; உருத்துவரும் மலிர் நிறை - சினமுற்று வருவது போல ஒலிட்டு மிக்குவரும் பேரியாற்று வெள்ளத்தின்; செந்நீர்ப் பூசல் அல்லது - சிவந்த நீரின் ஆரவார மல்லது; நின் அகன்றலை நாடு வெம்மை அரிது - நினது அகன்ற இடத்தையுடைய நாட்டிடத்தே வேறே உயிர்கட்குக் கொடுமை செய்யும் போர்ப் பூசல் என்பது இல்லை; (இதற்குக் காரணந்தான் யாதோ வெனின்) பெரு விறல் பகைவர் - மிக்க வலிபடைத்த பகைவருடைய; பைங்கண் யானைப் புணர் நிரை துமிய - பசிய கண்ணையுடைய யானை கலந்த படை வரிசை கெடுமாறு; உரம் துரந் தெறிந்த - தமது வலியைச் செலுத்தி யெறிந்த; கறை யடிக் கழற்கால் கடுமா மறவர் - குருதிக் கறை படிந்த கழற் காலும் கடுமாப்போலும் விரைந்த செலவுமுடைய வீரர்; கதழ் தொடை மறப்ப - மிக்க விசையுடன் செலுத்தும் தமது விற்றொழிலை மறக்கும்படியாக; இளை இனிது தந்து- காவற் றொழிலை இனிது செய்து; விளைவு முட்டுறாது - விளை நலம் குன்றாதாக; புலம்பா வுறையுள் தொழில் - அவ் வீரர் தமக்குரியவரைப் பிரிந்துறைதலின்றி அவரோடு கூடி இனிதிருக்கும் செயலை; ஆற்றிலின் - நீ நின் நாடுகாத்தற் றொழிலால் எய்து விக்கின்றா யாகலான்; திரு வுடைத்து - நினது நாடு மிக்க திருவினை யுடைத்து எ-று.

நின் அகன்றலை நாடு, செந்நீர்ப் பூச வல்லது வெம்மை யரிது; அதற்குக் காரண மென்னையெனின், நீ தொழி லாற்றலின்; நின்னாடு திருவுடைத்து என இயையும். அம்ம, உரையசை. அருமை, இன்மை குறித்துநின்றது.

வேந்தர்க்குப் பெருமை தருவது அவருடைய அறிவு ஆண்மை பொருள்களே யன்றிப் படையுமாதலின், அப்படைப் பெருமை தோன்ற, "பெருவிரற் பகைவர் பைங்கண் யானைப் புணர் நிரை" யென்றார். "யானை யுடைய படை காண்டல்முன் னினிதே" (இனியது 40) எந்பது பற்றி யானைப்படை விதந்து கூறப்பட்டது. யானைகள் இயல்பாகவே தம்மில் ஒருங்கே அணிவகுத்துச் செல்லும் இயல்பின வாதலின், அவற்றைப் "புணர்நிரை" யென்றார். அப் படையினைப் பொருது சிதைப்ப தென்பது மிக்க வன்மை யுடையார்க்கே இயலுவதா மென்பது எய்த, "துமிய" என்றும், துமிக்கு மிடத்தும், வீரர் தமது வன்மை முழுதும் செலுத்திப் பொருவர் என்பார், " உரம் துரந்து எறிந்த" என்றும் கூறினார். வில் வீரரது வென்றி மாண்பு அவரது அகன்றுயர்ந்த மார்பின் வன்மையைப் பொறுத்திருத்தலால் உரத்தை யெடுத் தோதினா ரென்றுமாம். துமிந்தவற்றின் குருதி வெள்ளத்தில் நின்ரு பொருதலால், அவருடைய காலடி குருதிக்கறை படிதலின் "கறையடி" யெனப்பட்டது. பழையவுரைகாரரும் " கறையடி யென்றது குருதிக் கறையினையுடைய அடியென்றவா" ரென்பர். கடுமா, விரைந்த செல்லும் இயல்பினவாகிய விலங்குகள். கடுமாப் போலும் விரைந்து செல்லும் இயல்பில்வழி யானைப் போரில் வென்றி பெறல் அரிதாதலின், "கடுமா மறவர்" என்றார்; "கடுமாப் பார்க்கும் கல்லா வொருவன்" ( புறம்.189) என்புழிப் போல, இனி, கடுமாவைக் குதிரை யென்று கொண்டு, கடுமா மறவ ரென்றது, குதிரைமேல் வீரரை யெனக் கூறுவாரு முண்டு.

இவ்வாறு போர் கிடைத்தவழிப் பேராண்மை காட்டிப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் அது கிடையாமல் மடிந்திருக்கும் திறம் கூறலுற்று, மிக்க விரைவொடு செல்லும் அம்பு தொடுக்கும் விற்றிறத்தை அவர் மறந்தனர் என்பார் "கதழ் தொடை மறப்ப" என்றும், அதற்குக் காரணம் குட்டுவன் நாடு காவலை நன்கு ஆற்றியதும் வேண்டும் பொருள் இனிது விளைந்ததுமே யென்பார், "இளை யினிது தந்" தென்றும், "விளைவு முட்டுறாது" என்றும் கூறினார். பழைய வுரைகாரரும், "மறவர் கதழ் தொடை மறப்ப் இளை யினிது தந்து என்றது, நின் வீரர் போரில்லாமையால் விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும்படி நாடு காவலை இனிதாகத் தந்தென்றவா" றென்பர். இளை, காவல். முட்டுறாது என்றது முட்டுறாதாக என்றவாறு; "விளைவில் முட்டுறாமல் எனத் திரிக்க" வென்பர் பழையவுரைகாரர். இவ்வாற்றால் வினைவயிற் பிரிவும் பொருள்வயிற் பிரிவும் ஆண்மக்கள்பால் இன்மையின், மனைவாழ்க்கையில் தனித்திருந்து வருந்தும் பிரிவு இலாதாதலின், "புலம்பா வுறையுள் தொழில்" உளதாயிற்று. இதற் கேதுவாய அரசாட்சி நலத்தை யாப்புற வுணர்த்தற்பொருட்டு, "இளையினி தந்" தென்றதனையே "நீ ஆற்றலின்" என்று மீட்டும் கூறினார்.

இனி, அவன் காவற் சிறப்பைக் கட்டுரைக்கலுற்ற ஆசிரியர், நீர் நலத்தை விரித் தோதுமாற்றால் விளக்குகின்றார். மாரிக்கண் உண்ட நீரைக் கோடைக்கண் அருவி வாயிலாக வுமிழும் வாய்ப்பினையுடைய குன்றம், அக் கோடை நீட எங்கும் பெருவறங் கூருமிடத்து, உயர்ச்சியால் குளிர்ந்து பசுந்தழை போர்த்து அழகு திகழ விளங்கும் பொலி விழந்து புல்லென் றாதலின், "கோடை நீடக் குன்றம் புல்லென" என்றும், எனவே, அக்காலத்து அருவிகளும் நீர் வற்றி விடுதலின், "அருவி யற்ற பெருவறற் காலையும்" என்றும் கூறினார். பழையவுரைகாரர், கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி அருவியற்ற காலையும் எனக் கூட்டி யுரைக்க வென்பர். இக்காலத்தும் குட்டுவன் நாட்டில் பேரியாறு கரை புரண்டோடும் மிக்க நீருடையதா மென்பார், "நிவந்து கரை யிழிதரும் நனந்தலைப் பேரியாறு" என்றார். யாற்றுநீர் பாயும் பக்கத்தே கிடப்பது விளைபுலத்துக்குச் சிறப்பாதல் பற்றி, "சீருடை வியன்புல" மென்றார்.

கோடையிலும் மிக்க நீர் பெருகு மென்றலின், அது பாயுமிடத்துக் கோடையால் உலர்ந்து வெடித்துக் கரம்பாய்க் கிடக்கும் புலங்களெல்லாம் அவ் வெடிப்பு நிறைய நீர் நிரம்பித் தேக்கும் என்பார், "விடுநிலக் கரம்பை விடரளை நிறைய" என்றார். நீர் இனிது ஏறமாட்டாமையின் வேளாண்மைக்குப் பயன்படாது புல் வகை வளர்ந்து விலங்குகள் மேயுமாறு விடப்பட்ட கரம்பு நிலத்தை “விடுநிலக் கரம்பை” என்றார். வேளாண்மைக்குப் பயன்படாக் கரம்பாயினும், விலங்குகள் மேய்தற்குப் பயன்படுதல் குறிக்கற்பாற்று. இதனால், ஏறமாட்டாத மேட்டுப் பாங்கரினும் நீரேறி நிரம்புமாறு கோடையிலும் பேரியாறு நீர் பெருகிப் பாயுமென்பது கருத்தாயிற்று. "கரம்பை விடரளை நிறைய வென்றது, முன்பு நீரேறாத காம்பை வயல்களில் கமர்வாய் நீர் நிறைய வென்றவா" றென்பர் பழையவுரைகாரர்.

வேறே பொருவா ரின்மையின் குட்டுவன் நாட்டொடு போர் செய்தற் கெழுந்தது போலப் பேரியாற்று நீர் வருகிற தென்பார், "வாய் பரந்து மிகீஇயர்" என்றார். வாய் பரந்து மிகீஇயர் உரு்துக் கரை யிழிதரும் நனந்தலைப் பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர் என மாறிக் கூட்டுக என்பர் பழையவைரைகாரர். வாய், இடம். யாற்றுநீர் எவ்வாயும் பரந்து மிகுதல் வேண்டிப் பெருகிற் றென்றவாறாம். பெருகி மிக்கு வரும் செம்புனல் பொருவது குறித்துவரும் மள்ளர்போல வருகிற தென்பார், "உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை" யென்றார். உவலை, தழைகள். கண்ணியும் மாலையும் சூடி வரும் மள்ளர் போல வெள்ளம் உவலை சூடிவந்த தென்பதாம்; இளங்கோவடிகள் இப் பேரியாற்று நீரைக் கூறலுற்றவிடத்து, "கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை, நாகந் திலக நறுங்கா ழார, முதிர்பூம் பரப்பி னொழுகுபுன லொளித்து, மதுகரஞிமிறொடு வண்டினம் பாட, நெடியோன் மார்பி லாரம் போன்று, பெருமலை விலங்கிய பேரியாறு" (சிலப். 25: 17-22) என்பது காண்க. இனிப் பழையவுரைகாரர், "உவலை சூடி யுருத்துவரு மலிர் நிறை யென்றது, தழைகளைச் சூடித் தோற்றிவரும் வெள்ள மென்றவா" றென்றும், "தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர் வேட்டு வருவாரைப்போலு மென்று கூறிய இச் சிறப்பானே இதற்கு உருத்துவரு மலிர்நிறை யென்று பெயராயிற்று" என்றும் கூறுவர்.

மலிர் நிறை கலங்கிச் சிவந்து தோன்றலின், புதுநீர்ப் பெருக்கைச் செந்நீர் என்றும், அதுதானும் மடைகளை யுடைத்துக் கெடுக்காவண்ணம் மடை யமைத்துச் செறுத்தும், காலிற் போக்கியும் வயலிடைப் பரப்பியும் உழவர் செய்யும் பூசல் மிக்கு நிற்றலின், "செந்நீர்ப் பூசல்" என்றும் அப் பெருக்கின் தண்மையால் மழையின்மை காரணமாகப் பிறந்த வெயில் வெம்மையும் பிறவும் நின்னுடைய பரந்த நாட்டிடத்துக் காண்ப தரிது என்பது தோன்ற, செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிது நின் னகன்றலை நாடென்றும், இவ்வாற்றால் சேரனது நாடு ஏனை நாட்டவர் யாவரும் நயத்தற்குரிய வளம் வாய்ந்திருக்கிற தென்பார், " திருவுடைத் தம்ம" வென்றும் கூறினார்.

இதனால் அவன் நாடுகாத்தற் சிறப்புக் கூறியவாறாயிற்று.

இதுகாறும் கூறியது, மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா வுறையுள் தொழில் நீ ஆற்றலின், பெருவறற் காலையும், விடரளை நிறைய, புலம் வாய் பரந்து மிகீஇயர் உருத்துவரு பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர்ப் பூசலல்லது நின் அகன்றலை நாடு வெம்மை யரிது; இவ்வகையால் நின் நாடு திருவுடைத்து என்பதாம்; இனிப் பழையவுரைகாரர், "பெருவறற் காலையும் நின் னகன்றலை நாடு புலம்பா வுறையுட் டொழில் நீ ஆற்றலின் திருவுடைத்து எனக்கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.

இப்பாட்டு முற்றும் சேரன் தனது நாடு காக்கும் சிறப்பே கூறி நிற்றலின், இது நாடு வாழ்தாயிற்று.
----------------------

3.9. வெண்கை மகளிர்.

29
    அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
    வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
    முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
    தடந்தா ணாரை யிரிய வயிரைக்
    கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
    5
    வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
    அழியா விழவி னிழியாத் திவவின்
    வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
    மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
    அதன்கண் வைப்பி னாடும னளிய
    10
    விரவுவேறு கோலமொடு குருதி வேட்ட
    மயிர்புதை மாக்கண் கடிய கழற
    அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
    பெரும்பல் யானைக் குட்டுவன்
    வரம்பி றானை பரவா வூங்கே.
    15

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: வெண்கை மகளிர்

உரை: வேறு விரவு கூலமொடு - வேறு வேறாக விரவிய பல கூலங்களுடன்; குருதி வேட்ட மயிர் புதை மாக்கண் - குருதிப் பலி யூட்டிய வட்டமான மயிர் மறையும்படியாகப் போர்த்த கரிய கண்ணமைந்த முழவானது; கடிய கழற - சேணிடத்தே யிருந்து கேட்டார்க்கு அச்ச முண்டாகுமாறு முழங்க; அமர் கோள் நேர் இகந்து - பகைவர் போரில் நேர்படுதலை யஞ்சாது முன்னேறிச் சென்று; ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன்- அவரது அரிய மதிலைக் கடக்கும் பெரிய பல யானைகளையுடைய குட்டுவனுடைய; வரம்பில் தானை பரவா வூங்கு - எல்லையில்லாத தானைகள் சென்று பரந்தழிப்பதன் முன்னே; அவ லெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி - அவலிடித்த உலக்கையை வாழை மரத்தில் சார்த்தி விட்டு; வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் - வளையணிந்த இள மகளிர் வள்ளையினது பூவைப் பறிக்கும்; முடந்தை நெல்லின் விளை வயல் - விளைந்து தலைசாய்ந்து கிடக்கும் நெல் வயலிடத்தே; பரந்த தடந்தாள் நாரை இரிய - பரந்து நின்றுமேயும் பெரிய கால்களையுடைய நாரைகள் அவ் வயல்களினின்றும் நீங்க; அயிரைக் கொழுமீன் ஆர்கைய - அயிரையாகிய கொழுவிய மீன்களை யுண்பவையான கொக்கு முதலிய குருகுகள்; மரந்தொறும் குழாஅலின் - வயலருகே நிற்கும் மரங்கள்தோறும் கூடியிருத்தலால்; வெண்கை மகளிர் வெண் குருகு ஒப்பும் - வளை யணியாத மிக்க இளம் பெண்கள் வெள்ளிய சிறு பறவைகளை யோப்பித் திரியும்; அழியா விழவின் - இடையறாத விழாக்களை யுடைமையால்; இழியாத் திவவின் வயிரிய மாக்கள்-குறற மில்லாத திவவு யாழினையுடைய வயிரியர்; பண்ணமத் தெழீஇ- அவ் வியாழைப் பண்ணொடு பொருந்த வெழுப்பி; மன்றம் நண்ணி-ஊர் மன்றத்தை யடைந்து; மறுகு சிறை பாடும்- மறுகுகளின் சிறைக்கண்ணே நின்று பாடிச் செல்லும்; அகன்கண் வைப்பின் நாடு-அகன்ற இடத்தையுடைய ஊர்கள் பொருந்திய நாடுகளா யிருந்தன; அளிய மன்-இப்பொழுது அவை அழிந்து கண்டார் இரங்கத்தக்க நிலையை யடைந்தன, காண் எ-று

நெற்கதிரைப் பிசைந்தெடுத்த பசிய நெல்லைக் குற்றி அவலெடுப்பது விளையாடும் பருவத்து இளமகளிர்க்கு இன்றும் இயல்பாயிருத்தலின், அவலெறிந்த வுலக்கையை விதந்தோதினார். நெல் வயலருகே வாழைகள் நிற்றலின், அவற்றைச் சார்ந்தவிடத்தில் விளையாடும் மகளிர் அவலெறிந்த வுலக்கையை வாழைமரத்திற் சார்த்திவிட்டு வயற்குட் புகுந்து ஆங்கு மலர்ந்திருக்கும் வள்ளைப்பூவைப் பறிக்கும் செயலை, "அவலெறிந்த வுலக்கை வாழை சேர்த்தி, வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்" என்றார். "வளைக்கை மகளிர்" எனவே, விளையாடும் பருவத்து இளமகளிர் என்பது பெறப்படும். நென்மணியின் கனத்தைத் தாங்கமாட்டாது தாள் சாய்ந்து வளைந்து கிடக்கும் நெல்லை, "முடந்தை நெல்" என்றார். மடம் உடையாளை மடந்தை யெனல் போல. "முடந்தை நெல்லின் கழையமல் கழனி" (பதிற். 32) என்று பிறரும் கூறுதல் காண்க. நெல்விளையும் வயலில் நீர் இடையறாது நிற்றலின் பல்வகை மீன்களும் வாழ்தல்பற்றி, அவற்றைக் கவர்ந் துண்பது குறித்து நாரை முதலிய குருகுகள் வயல் முழுதும் பரந்து நின்று மேயுமாறு தன்ற, "விளைவயற் பரந்த தடந்தாள் நாரை" யென்றார். மகளிர் வள்ளை கொய்தற்காக வயற்குட் புக்கதும், நாரை யினம் அஞ்சி நீங்குதலின், "நாரை பிரிய" என்றும், வாய்த்தலையினும் வரம்புகளினும் நின்று அயிரை முதலிய மீன்களை யுண்ணும் கொக்கும் புதாவும் உள்ளலும் பிறவும் அருகே நிற்கும் மருதினும் மாவினும் காஞ்சியினும் குழீஇயிருத்தலின், "அயிரைக் கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்" என்றார் குழுவலின் எனற்பாலது "குழாஅலின்" என வந்தது. ஏனைய அன்னங்களும் நீர்க்கோழிகளு மாகியவற்றை வளையணியும் பருவத்தரல்லாத மிக்க இளைய மகளிர் துரத்தி யோப்புவ ரென்பார், "வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்" என்றார். கொய்யு மென்னும் பெயரெச்சம் வயலென்னும் பெயர்கொண்டது. வெண்குரு கோப்பும் நாடு, மறுகு சிறைபாடும் நாடு என இயையும். வெண்கை, வளை யணியாத கை; வெறிதாய இடத்தை வெளில் என்பது போல, வளை யணியாத வெறுங்கை வெண்கை யெனப்பட்டது. வெறிதாய இள மகளிரின் மென்கையை "வெண்கை" யென்றும், அதனையுடைய சிறு மகளிரை "வெண்கை மகளிர்" என்றும் சிறப்பித்ததனால், இப் பாட்டு வெண்கை மகளிர் எனப் பெயர் பெறுவதாயிற்று. பழையவுரைகாரர், வெண்கை யென்றதற்கு, "வெண் சங் கணிந்த கை யென்பாரு முளர்" ; இனி, அடுகை முதலாகிய தொழில் செய்யாத கை யென்பாரு முளர்" என்றும்,"முடந்தை நெல் லென்றது கதிர்க் கனத்தாலே வளைந்து முடமான நெல் லென்றவாறு; முடந்தை யென்பது பெயர்த்திரிசொல்; இனிப் பழ வழக்கென்பது மொன்று" என்றும் கூறுவர்.

நாடோறும் மண விழாவும் பிறவிழாவும் இடையறவின்றி நிகழ்தலால், "அழியா விழ" வென்றார். திவவையுடைய யாழ் திவவு எனப்பட்டது; ஆகுபெயர். பழையவுரைகாரரும் இவ்வாறே கூறுவர். யாழிற்கு இழிவு செயற்பாட்டிலும் இசை நயத்திலும் குற்றமுடைமை யாதலின், குற்றமில்லாத யாழை "இழியாத் திவவு" என்றார். விழாக் காலத்து வழங்கப்படும் சோற்றை நச்சி வயிரியர் கூட்டம் நிறைந்திருக்குமாறு தோன்ற, விழாவினை விதந்து வயிரிய மாக்களின் உண்மையை யெடுத்தோதினார். "பேரூர்ச், சாறுகழி வழிநாள் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந" (பொருந. 1-3) என முடத் தாமக் கண்ணியார் மொழிவதனால் இவ்வுண்மை துணியப்படும். இவர்கள், மன்றம் புகுந்து யாழைப் பண்ணமைத்து இசையை யெழுப்பி, மறுகுகளின் சிறையிடத்தே நின்று பாடுதலின், "பண்ணமைத்தெழீஇ, மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்" என்றார்.

நல்ல பரப்பும் செறிந்த வூர்களுமுடைய நாடாதல் தோன்ற, "அகன்கண் வைப்பின் நாடு" என்றார். வைப்பு, ஊர். அச் சிறப்பழிந்து, காண்போ ருள்ளத்தே இரக்கம் தோன்றத்தக்க பாழ்நிலை யெய்திற் றென்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை.

பலவேறு கூலங்களைக் கொண்டு முரசிற்குக் குருதிப் பலியூட்டி வழிபட்டுப் போர் முழக்கம் செய்வது மரபாதலால், விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மாக்கண்" என்றார். கண்ணையுடைய முரசு "கண்" ணெனப்பட்டது. கொல்லேற் றுரிவையின் மயிர் சீவாது அகத்தே அம் மயிர் மறையும்படியாகப் போர்த்த முரசு என்றற்கு, "மயிர் புதை மாக்கண்" என்றார். முரசின் முழக்கம், கேட்கும் பகைவர் உள்ளத்தே அச்சம் பயந்து, பணிந்து திறை பகராதவழிக் கொன்று குவிப்பேனெனும் வேந்தனது குறிப்பை வெளிப்படுத்தலின், "கடிய கழற" என்றார். இவ்வாறு கழறவும் கேளாது போர் நேரும் பகைவர் செய்யும் போரினைப் பொருள் செய்யாது எளிதில் மலைந்து அவர்தம் காவல் மிக்க அரணைக் கைப்பற்றலின், "அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும்" என்றும், அவ்வாறு கைப்பற்றும் குட்டுவனது தானைப் பெருமையை, "பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பில் தானை" யென்றும் கூறினார். எனவே, பகைவர் தானை வரம்புடைய தென்றும், அதுவே அப்பகைவரழிவுக்கு ஏதுவாயிற் றென்றும் உணர்த்தியவாறாம். பரந்து சென்று பகைவரை வென்று அவர்தம் வளம் சிறந்த நாட்டை யழித்த தென்பார், "பரவா வூங்" கென்றும், பரவியபின், அந்நாடு அழிவுற்றுக் கிடக்கும் நிலையைக் கூற நினைக்கின், உள்ளத்தே அந்நாட்ட தழிவு அளியைப் பிறப்பித்துச் சொல்லெழாவாறு செய்தலின், "அளியமன்" என்றும் கூறினார்.

இதுகாறும் கூறியது, வளைக்கை மகளிர் அவலெறிந்த உலக்கையை வாழையிற் சேர்த்தி, வள்ளைப் பூவைக் கொய்யும் நெல்வயற்கண், பரந்துமேயும் நாரை யிரிய, கொழுமீ னார்கைய மரந்தொறும் குழாஅலின், வெண்கை மகளிர் வெண்குரு கோப்புவதும், வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்றம் நண்ணி மறுகு சிறை பாடுவதுமாகிய அகன்கண் வைப்பின் நாடுகளாய் இருந்தன, மாக்கண் கடிய கழற, ஆரெயில் கடக்கும் குட்டுவன் தானை பரவா வூங்கு; இப்போது அளிய மன் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், குட்டுவன் வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக்கின்ற இந் நாடுகள், குட்டுவன் வரம்பில் தானை பரவா வூங்கு முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த நாரையிரிய, வெண்கை மகளிர் வெண்குரு கோப்புதலை யுடைய வாய், அழியாத விழவினையும், இழியாத திவவினையு முடையவாய், வயிரிய மாக்கள் எழீஇ, மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும், இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய அகன்கண் வைப்பின் நாடு இப் பெற்றியெல்லா மிழந்து கண்டார்க்கு அளித்தலையுடைய என வினைமுடிவு செய்க" என்பர்.

இதனால் குட்டுவனது வென்றிச் சிறப்பு கூறியவாறாயிற்று.

வரம்பில் தானை பரவா வூங்கென எடுத்துச் செலவினை மேலிட்டுக்
கூறினமையால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
---------

3.10. புகன்ற வாயம்

30
    மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
    பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
    வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
    அல்குறு கான லோங்குமண லடைகரை
    5
    தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
    இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்
    தண்கடற் படப்பை மென்பா லனவும்
    காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
    செங்கோட் டாமா னூனொடு காட்ட
    10
    மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
    பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
    குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
    கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
    தரிகா லவித்துப் பலபூ விழவிற்
    15
    றேம்பாய் மருத முதல்படக் கொன்று
    வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
    பலசூழ் பதப்பர் பரியவெள் ளத்துச்
    சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
    முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்
    20
    செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
    ஏன லுழவர் வரகுமீ திட்ட
    கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
    மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
    புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
    25
    பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
    அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்
    டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும்
    விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
    பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
    30
    கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க
    முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
    கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
    தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்
    உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டம்
    35
    கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
    நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
    எறும்பு மூசா விறும்பூது மரபிற்
    கடுங்கட் காக்கையொடு பருந்திருந் தார
    ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
    40
    பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
    உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
    பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
    கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே.

துறை: பெருஞ்சோற்று நிலை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: புகன்ற வாயம்.

1-8. இணர்ததை......................பாலனவும்

உரை: இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை பூங்கொத்துக்கள் கொய்யப்பட்டுச் சிதறிக் கிடக்கும் ஞாழல்கள் நின்ற கரை பொருந்திய பெரிய நீர்த்துறை யாகிய; மா இதழ் நெய்தல் - கரிய இதழ்களையுடைய நெய்தலின்; பாசடை மணிக்கலததன்ன பனிக் கழி - பசிய இலைகள் நிறைந்த நீலமணியாற் செய்த கலம்போன்ற குளிர்ந்த கழிக்கண்; துழைஇ – மீன் வேட்ட மாடி; புன்னை வாலிணர்ப் படுசினை - புன்னையின் வாலிய இணர் செறிந்த கிளைகளிடத்தே; குருகு இறை கொள்ளும்- மீனுண் குருகுகள் தங்கும்; அல்குறு கானல் ஒங்கு மணல் அடைகரை- மக்கள் சென்று தங்குதற்குரிய கானற்சோலையின் உயர்ந்த மணலடைந்த கரையில்; தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல- தாழ்ந்திருக்கும் அடும்பங் கொடியை யலைத்த திரையால் ஒதுக்கப்பட்ட சங்கு கிடந் தொலிக்க; இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்-விளங்குகின்ற கடல் முத்துடனே நீண்ட பவளக் கொடிகளை அங்கு வாழ்வோர் எடுத்துக் கொள்ளும்; தண் கடற் படப்பை மென்பா லனவும்-குளிர்ந்த கடற்பாங்கான நெய்தல் நிலமும் எ-று.

ஞாழற் பூக்களை வளை யணிந்த மகளிர் விருப்பத்தோடு கொய் தணிந்து கொள்ப வாதலின், இணர் கொய்யப்பட்டுச் சிதைவுற்றுத் தோன்றுவது பற்றி, " இணர் ததை ஞாழல்" என்றார். மகளிர் கூடி விளையாட்டயரும் பெருமையுடைமை தோன்ற, "பெருந்துறை" யென்றும், அதன் கரைக்கண்ணே ஞாழல் நிற்குமாறு விளங்க, " ஞாழல் கரைகெழு பெருந்துறை" யென்றும் கூறினார். பெருந்துறையாகிய பனிக்கழியென இயையும். நெய்தற்பூ நீலமணி போல்வதாகலின், அது நிறைந்த பனிக்கழியை "மணிக்கலத் தன்ன நெய்தற் பாசடைப் பனிக்கழி" யென்றார். பழையவுரைகாரரும், "மணிக்கலமென்றது நீல மணியாலே செய்த பாத்திர" மென்றும், "மணிக்கலத் தன்ன கழி யெனக் கூட்டி, நெய்தற்பூவின் கருமையானும், அதன் பாசடைக் கருமையானும் மணிக் கலம் போன்ற கழியென வுரைக்க" வென்று கூறுவர்.

கழியிடத்தே மீன் தேடி யுண்டு பசி தீர்ந்த குருகுகள் பூவுந் தளிரும் செறிந்து குளிர்ந்த நிழல் பரப்பி நிற்கும் புன்னைக் கிளையில் தங்கி யினிதிருக்கு மென்பார் " பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்" என்றும், ஏனை மாவும் மக்களும் இனிது தங்குதற்கும் இஃது இனிய இடமாம் என்பார், "அல்குறு கானல்" என்றும் சுட்டினார். இதனாற் பயன், இந்நிலத்து வாழ்வார் தம் முயற்சி பழுதுறாது வேண்டுவன பெற்று இனிதிருக்குமாறு தெரி*ப்பதாவது.

கடற் கானற்சோலை, ஓங்கு மணலடை கரைக்கண் உள தென்பது விளங்க, "கானல் ஓங்கு மணலடை கரை" யெனப்பட்டது. அக் கரையிடத்தே தாழ வளர்ந்திருக்கும் அடும்பினை யலைத்துவரும் திரைகள் கடலகத் திருந்து வளைகளைக் கொணர்ந் தெறிதலின், அவற்றின் முழக்கமும் கானலிடத்தே யுளதாயிற்றென்பார், "தாழடும்பு மலைந்த புணரிவளைஞரல" வென்றார். தனது வரவுகண்டு தாழ்ந்த அடும்பினை மலைந்த திரையாதலின், தன்னகத்தே வாழ்ந்த சங்கு அலற கரையிடத்தே அதனை எறிவதாயிற் றென ஒரு நயந் தோன்றுமாறு காண்க. "கான லென்றது தன்னிடத்து வந்து இரை கொள்ளுதற்குக் குருகு தங்கி வாழும் கான" லென்றும், "புணரி வளை ஞரல வென்றது, கடல் கொண்டு வந்த சங்கு திரையிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய் வருந்திக் கதற வன்றவா" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வளை யலறக் கேட்டு ஓடிப்போந்து அதன் முத்தை யெடுப்பவர் அவ் வளையுடனே யெறியப்படும் பவளத்தையும் எடுத்துக்கொள்வ ரென்பார், "இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்" என்றார். முத்தெடுக்க வந்தவர், அதனோடு பவளமும் எளிதிற் கொள்வரென இதனால் கடல் வளம் கூறியவாறு. எடுப்பாரது வினை, இடத்தின்மேனின்றது; இனி, எடுக்குமென்பது செயப்படுவினைப் பொருளதெனினும் அமையும். பழைய வுரைகாரர் "முத்தமொடு வார்துகி ரெடுக்கு மென்றது, கரை நின் றோரில் வளைநரவக் கேட்டார் அம் முத்தெடுக்க வென்று வந்து முத்தை யன்றி அதனோடு பவளத்தையும் எடுக்கும் என்றவா" றென்பர். குறிஞ்சி முல்லைகளை வன்பா லென்றும், மருத நெய்தல்களை மென்பா லென்றும் வழங்குப வாதலின், இந் நெய்தற்பகுதியை "தண்கடற் படப்பை மென் பாலன" என்றார். இது நெய்தல் கூறிற்று.

9-13. காந்தளங்...............வைப்பும்.

உரை: காந்தளங் கண்ணிக் கொலை வில் வேட்டுவர் - காந்தட் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் கொலை புரியும் வில்லினையுமுடைய வேட்டுவர் கொணர்ந்த; செங்கோட்டு ஆமான் ஊனோடு - செவ்விய கொம்பினையுடைய ஆ மாவின் இறைச்சியுடனே; காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு - காட்டிடத்து வாழ்வனவாகிய வலியுடைய களிற்றி யானையின் கோட்டைப் பெற்றுக்கொண்டு; பிழி நொடை கொடுக்கும் - அவற்றின் விலைக் கீடாக வடித்த கள்ளைக் கொடுக்கும்; பொன்னுடை நியமத்து - பொன்னையுடைய கடைத்தெரு வமைந்த; குன்று தலை மணந்த புன்புல வைப்பும் - குன்றுகள் நெருங்கியுள்ள புன்புலமாகிய நிலப்பகுதியிலுள்ள வூர்களும் எ-று.

இப் புன்புல வைப்புக் குறிஞ்சியைச் சார்ந்து கிடத்தலானும், பூக்கள் வந்த நிலத்தின் பயத்த வாதலானும் "காந்தளங் கண்ணி" கூறப்பட்டது. இனி, குறவராதலின், அவர்க் கேற்ப இதனைக் கூறினா ரெனினுமாம். வேட்டுவர் தாம் வேட்டமாடிய ஆமானின் ஊனும் வேழத்தின் வெண் கோடும் கொணர்ந்தமையின் அவற்றைச் சேரக் கூறினார். வேட்டத்தின் அருமைப்பாடு தோன்ற, "செங்கோட் டாமா" னென்றும், "மதனுடை வேழ" மென்றும் சிறப்பித்தார். ஊனின் சுவையும் வெண் கோட்டின் வன்மையும் தோன்ற இவ்வாறு கூறின ரென்பாரு முளர்.

இனி, இப் புன்புல வைப்பின் செல்வச்சிறப்புக் கூறுவார், இங்கேயுள்ள கடைத்தெருவைப் "பொன்னுடை நியமம்" என்றும், இங்குள்ளார் வேட்டுவர்க்குப் பொன்னைத் தந்து அவர் கொணரும் ஊனும் வேழ வெண் கோடும் பெறுதலே யன்றி, அவ் வேட்டுவர் விரும்பும் தேறலை விலைப்பொருளாகத் தருகின்றன ரென்றற்கு, "பொன்னுடை நியமத்துப் பிழி கொடை கொடுக்கும்" என்றார். "பொன்னுடை நியம" மென்றது, பொன்னைக் கொடுத்து வேண்டுவன பெறுந் திறம் சுட்டி நிற்கிறது; உயிர்க்கொலை புரியும் வேட்டுவ ராதலின், பெறுதற்கரிய பொன்னுடைய நியமம் புக்கும் பொன்னைப் பெறாது வடித்த கள்ளினையே விரும்புவா ராயினர் என அவரது செயற்புன்மையை யுணர்த்தியவாறாகக் கோடலுமொன்று. இது முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த புன்புல வைப்பின்இயல்பு கூறிற்று. புன்புல வைப்பில் வாழ்வார் வினை அவ் வைப்பின்மேனின்றது.

14-21. காலமன்றியும்................பழனப்பாலும்.

உரை: தேம்பாய் மருதம் முதல் படக் கொன்று - தேன் பாயும் மருத மரத்தை அடியோடே சாய்த்து; வெண்டலைச் செம் புனல் பரந்து - வெள்ளிய நுரை சுமந்து வரும் சிவந்த புது வெள்ளம் பரந்து வர; மிகுக்கும் வாய் பல சூழ் பதப்பர் – அது மிக்கு வரும் இடங்களில் அணையாக இடப்படும் பல வைக்கோற் புரிகள் சூழக் கட்டிய மணற் கரிசைகள்; பரிய - கரைந்து கெட, வெள்ளத்துச் சிறை கொள் பூசலிற் புகன்ற ஆயம் - அவ் வெள்ளத்தை அணையிட்டுத் தடுப்பார் செய்யும் ஆரவாரத்தில் விருப்புற்ற மக்கட் கூட்டம்; முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் - முழவு முழங்கும் பழைதாகிய வூரிடத்து நிகழும் திரு விழாக் கண்டு மீண்டு செல்லும்; செழும் பல் வைப்பின் - செழுமையான பலவாகிய ஊர்களையும்; கால மன்றியும - காலமல்லாத காலத்தும்; கரும்பறுத்து ஒழியாது அரி கால் அவித்து - விளைந்து முதிர்ந்த கரும்பினை யறுத்திக்கொள்வதோ டொழியாது அதன் அரி காலையும் அகழ்ந்து சிதைத்து; பல பூ விழவின் - அவ்விடத்தே மலரும் பல்வகைப் பூக்களைக்கொண்டு எடுக்கும் விழா வினையுமுடைய; பழனப் பாலும் - மருத நிலப் பகுதியும் எ-று

பல பூ விழவினையும், செழும் பல் வைப்பினையுமுடைய பழனப் பாலும் என இயையும். பழையவுரைகாரர், "பல பூ விழவினையுடைய வைப்பு எனக் கூட்டுக" வென்பர்.

"நீர் வளம் இடையறாமையின், காலமல்லாத காலத்தும் கரும்பு முற்றி விளைவதும் அறுக்கப்படுவதும் உண்டென்பார், "காலமன்றியும் கரும் பறுத் தொழியாது" என்றார். கரும்பறுத்த அரி காலும் விளைந்து முற்றுதலினாலும், கரும்பின் பாத்தியில் பல்வகைப் பூக்கள் மலர்தலினாலும், அப்பூக்களின் பன்மை மிகுவது குறித்து, அரி காலை முற்றவும் சிதைத்தன ரென்பார், "அரிகா லவித்து" என்றார். அவித்து என்னும் வினையெச்சத்தைப் பல பூக்கொண்டெடுக்கும் விழலின் எனத் தொக்கு நிற்கும் எடுக்கும் என்னும் வினையொடு முடிக்க. கரும்பின் பாத்தியிற் பல்வகைப் பூக்களும் மலரு மென்பதை, "வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின், பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின்று" (புறம் 386) என்று பிறரும் கூறுதலாலறிக. பல்வகைப் பூக்களைக்கொண்டெடுக்கும் விழா இந்திர விழா வென வறிக. "இந்திர விழவிற் பூவி னன்ன" (ஐங். 62) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இவ் விழா மென்புலத்தவர்க் குரியது.

நிரம்பப் பூத்துத் தேன் சொரிய நின்ற மருத மரம் என்பார், "தேம் பாய் மருத" மென்றும், வந்த வெள்ளம் அதனை அடியோடே சாய்த்துக் கெடுத்த தென்றற்கு "முதல்படக் கொன்று" என்றும் கூறினார். புதுப்புனல் செந்நிறங் கொண்டு நுரைத்து வருமாதலின், அவ்வியல்பு தோன்ற, "வெண்டலைச் செம்புனல்" என்றார். பரந் தென் புழி வர என ஒரு சொல் வருவிக்க. பழையவுரைகாரர் "புனல் பரந் தென்றதனைப் பரக்க வெனத் திரிக்க" வென்பர். வாய் மிகுக்கும் என்பதனை மிகுக்கும் வாய் என மாறுக. நீர்ப்பெருக்கின் வேகத்தால் ஆழமாக அறுக்கப்பட்ட இடங்களில் அப் பெருக்கைத் தடுத்து அணையிடுவார் வைக்கோற் பிரிகளைக்கொண்டு மணற்கோட்டை யமைத்து அணையாக நிறுத்துப வாதலின், அவற்றைப் "பல சூழ் பதப்பர்" என்றார். பழையவுரைகாரரும் "பலசூழ் பதப்ப ரென்றது, பல பிரியாலும் சூழப்பட்ட மணற்கோட்டை யென்றவா" றென்பர். இக் கோட்டையைக் கரிசை யென்றலும் வழக்கு. இம் மணற் கரிசைகளையும் இச் செம்புனல் கரைத் தொழித்தலின் மக்கட் கூட்டம் பேராரவாரத்துடன் மிக வுயரமும் திண்மையும் அமைந்த அணைசெய் தமைத்து நீரைத் தடுத்து வென்றி கண்ட இன்பத்தால் அதனை மேலும் விரும்பிப் பலராய்க் கூடி அணையை மிதித்து வன்மை செய்து மகிழும் நலம் இனிது விளங்க "சிறைகொள் பூசலிற் புகன்ற ஆயம்" என்றார். பெரும்படை திரண்டு வரும் பகைவர் தானைப் பெருக்கை எதிரூன்றி நின்று தடுத்துப் பற்றிச் சிறை செய்து வென்றி பெற்று மகிழும் தானை வீரர் கூட்டம் மேலும் அச் செயலையே விரும்புதல் போல, நீர்ப் பெருக்கைச் சிறை செய்யும் மக்கட் கூட்டத்தைச் சிறப்பித்துக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்குப் புகன்ற வாயம் என்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், "புகன்ற ஆய மென்றது, முன்பு மணலணைக்கு நில்லாத பெருவெள்ளத்தினை அணைசெய்து முடித்த விருப்பத்தையுடைய ஆய மென்றவா" றென்றும், "இச் சிறப்புப்பற்றி இதற்குப் புகன்ற வாயமென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.

வெண்டலைச் செம்புனலை அணை நிறுவிச் சிறை செய்து மகிழ்ந்த மக்கட் கூட்டம், நாட்டின் மூதூர்க்கண் நிகழும் திருவிழாவுக்குச் சென்று அதனைக் கண்டு திரும்புங்கால், மூதூர்க் காட்சியும் திருவிழாச் சிறப்பும் பேசிக்கொண்டு ஆரவாரத்தோடு பெயர்தலின், அதனையும் இதனோடியைத்து, மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் " என்றார். மூதூர் என்பது பெரிய வூர்; வைப்பு, சீறூர்கள். சீறூரவர் பேரூர்களில் நிகழும் விழாக் காணச் செல்வது மரபு.

22-5. ஏனலுழவர்................வைப்பும்

உரை: ஏனல் உழவர் - தினைக் கொல்லையை யுழுது பயிர் செய்யும் குன்றவர்; வரகு மீதிட்ட - வரகினது வைக்கோலை மேலே வேயப்பட்ட; கான்மிகு குளவிய அன்பு சேர் இருக்கை மணமிக்க காட்டு மல்லிகை வளரும் அன்பு பொருந்திய மனைகளில்; மென்றினை நுவணை முறை முறை பகுக்கும் - மெல்லிய தினைமாவை வரும் விருந்தினர்க்கு முறை முறையாக அளித்துண்ணும்; புன்புலம் தழீஇய புறவணி வைப்பும்-புன்செய் நிலங்களைத் தழுவிக் கிடக்கும் முல்லை நிலத்தை யணித்தாகவுடைய குறிஞ்சிப் பகுதியும் எ-று.

மருத நிலத் துழவர்க்கு நெல்போலக் குறிஞ்சி நிலத்தவர்க்குத்தினையே சிறந்ததாகலின், அவர்களை "ஏன லுழவர்" என்றும், அவர் இருக்கும் வீடுகட்கு வரகின் வைக்கோலைக் கூரையாக வேய்வதும், மனைகளில் காட்டு மல்லிகை வளர்ப்பதும் இயல்பாதலின், "வரகு மீதிட்ட கான்மிகு குளவிய இருக்கை" யென்றும் கூறினார். கான், மணம். வில்லும் அம்பும் கொண்டு விலங்குகளை வேட்டையாடும் வன்கண்மை யுடையாராயினும், குன்றவருடைய மனைகளில் அன்பும் அறமும் குன்றாது பொருந்தியிருக்கும் திறத்தை, "அன்புசேர் இருக்கை" யென்றார். இனி, இதனை வன்புசேர் இருக்கை யென்று கொள்ளின், குன்றில் வாழும் விலங்குகளாலும் பிறவற்றாலும் சிதைவுறாத வன்மை பொருந்திய இருக்கை யென்று கொள்க. தினை நுவணை-தினைமா; இது தன்னை யுண்டாரை வேறெதுவும் உண்ண விரும்பாதவாறு பண்ணும் சுவையும் கருப்புக் கட்டியைப் பொடிசெய்து கொழித்தெடுத்த நுண்ணிய பூழி போலும் தோற்றமும் உடைய தென்பார், "விசையங் கொழித்த பூழியன்ன, உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை" (மலைபடு. 444-5) என்று சான்றோர் கூறுதல்காண்க. என லுழவர் தம் அன்பு சேர் இருக்கைக் கண்ணிருந்து ஆற்றும் மனையறம் கூறுவார், வரும் விருந்தினர்க்கு அவர் தகுதி யறிந்து முறை பிறழாமல் தினைமாவைப் பகுத் துண்பர் என்றற்கு," மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்" என்றார். புன்புலம், புன்செய். புறவு, முல்லைக்காடு. வைப்பென்றது, ஈண்டு வைப்புக்களையுடைய நிலப்பகுதி குறித்து நின்றது. இது குறிஞ்சியின் இயல்பு கூறிற்று.

26-29. பல்பூஞ்................பிறவும்.

உரை: பல்பூஞ் செம்மற் காடு-பல்வகைப் பூக்களும் உதி்ர்ந்து வாடிக் கிடத்தலையுடைய காடுகள்; பயம் மாறி-பயன்படும் தன்மை திரிந்து; அரக்கத்தன்ன நுண்மணற் கோடு கொண்டு-செவ்வரக்குப் போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மட்குன்றுகளைக் கொண்டு; ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்-ஒள்ளிய நுதலையுடைய மகளிர் காலிற் செருப்பணிந்து திரியும்; விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்-வானுற வோங்கிய மரங்கள் செறிந்த காடும் காடு சார்ந்த பகுதியும் எ-று

காடு பயமாறி, அரக்கத் தன்ன கோடு கொண்டு, மகளிர் திரியும் கடற்ற என்றும், விண்ணுயர்ந் தோங்கிய கடற்ற என்றும் இயையும். முல்லைக் காடுகள் தழையும் பூவும் உதிர்ந்து வெறு நிலமே தோன்ற நிற்கும் காட்சியை, "காடு பய மாறி" யென்றார். தழை முதலியனவின்றி நிற்கும் கோடும் அரக்குப்போற் சிவந்து நுண்மணல் பரந்து தோன்றுதலின், அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு" என்றும், அந்நிலத்தே இயங்கும் மகளிர் காலிற் செருப்பணிந்து இருப்பதை இன்றும் காணலாமாதலின், "மகளிர் கழலொடு மறுகும்" என்றும் கூறினார். கழல், ஈண்டுச் செருப்பு. "கழலிற் செந்தாமரை யடிகள் புல்லி" (சீவக 1648) என்புழிக் கழல் என்றதற்கு, நச்சினார்க்கினியர் செருப்பெனப் பொருள் கூறியிருப்பது காண்க. இனிக் கழலென்றது, கழற்சிக்காய் என்றும் கூறுப. இனிப் பழையவுரைகாரர், மணற்கோடு கொண்டென்றது, மணற்கோட்டைக் கழலாடுதற் கிடமாகக்கொண் டென்றவாறென்றும், இனிக் கழலென்றதனைக் கழலையுடைய தலைமகன் காலாக்கி அக் காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போ மென்பாரு முளரென்றும் கூறுவர். விண்ணுயர்ந் தோங்கிய கடறென்றது, வானளாவ வுயர்ந்த மரங்கள் செறிந்த காட்டை யுணர்த்திநின்றது. காட்டின் பயமாறிய பகுதியும் பயம் பொருந்திய பகுதியும், அக்காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லைப் புறவு முற்றும் அகப்பட "கடற்றவும் பிறவும்" என்றார். "பிறவு மென்றது அவ்வா றொரு நிலமாகச் சொல்லப்படாத பல நிலப் பண்புமுடைய இடங்களு மென்றவா" றென்று பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும் கூறிய நிலப்பகுதிகளி லெல்லாம் அங்கு வாழ்வோர் வினையை அவற்றின்மேலேற்றிக் கூறியதற்குப் பழையவுரைகாரர், "முன்பு எண்ணி நின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து வாழ்வார் மேலனவாகக் கொள்க" என்று கூறுகின்றார்.

30-39.பணைகெழு.............பருந்திருந்தார.

உரை: பணை கெழு வேந்தரும் வேளிரும் - முரசினையுடைய முடியுடைய வேந்தரும் குறுநில மன்னரும்; ஒன்று மொழிந்து - தம்முட்கூடி ஒரு காரியமே செய்வதாகத் துணிந்து; கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க - கடலிடத்தும் காட்டிடத் தவுமாகிய அரண்களைக் கொண்டும் வலியிலராய் நடுக்க மெய்துமாறு; முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிர - மாறுபாடு மிக்க போரினைப் புலப்படுத்தும் முரசினது கடிய முழக்கமானது சென்று விசும்பக மெல்லாம் எதிரொலித்து முழங்க; கடுஞ் சினம் கடாஅய் - மறவர்பால் மிக்க சினத்தை யெழுப்பி; முழங்கும் மந்திரத்து. முழங்குகின்ற மந்திர வொலியால்; அருந் திறல் மரபின் கடவுட் பேணியர் - அரிய திறல் படைத்த முறைமை யினையுடைய முரசுறை கடவுளை வழிபடுவானாய்; உயர்ந்தோன் ஏந்திய அரும பெறல் பிண்டம் - வழிபாட்டினைச் செய்வோனாகிய உயர்ந்தோன் படைத்த பெறுதற்கரிய பலியினை; கருங்கண் பேய் மகள் கைபுடையூஉ நடுங்க - பெரிய கண்களையுடைய பேய்மகள் தீண்டுதற் கஞ்சிக் கைகளைப் புடைத்துக்கொண்டு நடுங்க; நெய்த்தோர் தூய நிறை மகிழ் இரும் பலி - குருதி தூவிய நிறைந்த கள்ளொடு கூடிய பெரிய அப் பலியானது; எறும்பு மூசா இறும்பூது மரபின் - எறும்பும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடைத்தாகவும்; கருங்கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர - தூவப்பட்ட அப் பலியினைக் கரிய கண்களையுடைய காக்கையுடனே பருந்துகள் இருந்துண்ணுமாறு எ-று.

இது வெற்றி வாய்த்தற்பொருட்டு முரசுறை கடவுட்குப் பரவுக் கடன் ஆற்றும் திறம் கூறுகிறது. முரசுடைச் செல்வராதலின், முடி வேந்தரைப் "பணைகெழு வேந்தர்" என்றார். அவர் பாண்டியரும் சோழருமெனக் கொள்க. வேளி ரென்றது, அவ்விருவர்க்கும் துணையாய் வரும் குறுநில மன்னரை என்க. அவருள் ஒருவர் கருதியதே ஏனை யாவரும் துணிந் தொழுகின ரென்றற்கு "ஒன்று மொழிந்" தென்றார். பழைய வுரைகாரர், "ஒன்றுமொழிந் தென்றது, ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து சொல்லி யென்றவா" றென்பர். பாண்டி வேந்தர்க்கு மூன்று பக்கத்திற் கடல் அரணாகவும், சோழர்க்குக் கிழக்கிற் கடலரணாகவும், ஏனைப் பகுதிகளில் காடு அரணாகவும் இருந்தமையின், "கடலவும், காட்டவும் அரண்" என்றும், கடலும் காடும் பேரரண்களாக விருப்பவும், அவ் வாற்றாலும் மனத்திண்மை பெறாது நெஞ்சுகலங்கி யஞ்சின ரென்பது தோன்ற, "அரண் வலியார் நடுங்க" என்றும் கூறினார்.

சேரனது போர்வன்மை குறித்துரைத்துக்கும் முரசு முழக்கினை "முரண்மிகு கடுங்குரல்" என்றும், அம் முழக்கம் வானத்தே சென்று எதிரொலித் ததிர்வது விளங்க,"விசும்படைபு அதிர" என்றும் விதந்தோதினார். இது முரசுறை கடவுட்குப் பலியிடுவோர் செய்யும் முரசு முழக்காகும்.

முரசுறை கடவுட்குப் பலியிட்டு மந்திரம் கூறுவோன் அதனை யோதுதற்குரிய உயர்வுடைய னாதலின் அவனை "உயர்ந்தோன்" என்றும், முரசுறையும் கடவுளின் வெற்றி பயக்கும் சிறப்பினை, "அருந்திறல் மரபின் கடவுள்" என்றும், அவ் வழிபாட்டிடத்தே யோதப்படும் மந்திரம், மானதம், மந்தம், உரை யென்ற மூவகையுள் உரையால் முழக்கியோதப்படும் வகையினைச் சார்ந்த தாதலின், "முழங்கு மந்திரம்" என்றும், அம் மந்திர முழக்கம், கேட்கும் வீர ருள்ளத்தே பகைவர்பால் மிக்க சினத்தை யெழுப்பும் இயல்பிற் றென்பார் போல, "கடுஞ்சினங் கடாஅய், முழங்கும் மந்திர" மென்றும் கூறினார். மந்திரத் தென்புழி, ஆனுருபு தொக்கது. மந்திரத்தால் கடவுட்குப் பரவுக் கடனாற்றும் உயர்ந்தோன், அக் கடவுட்காக்கிய பலியினைப் பிறர் பெறற்காகா தென்பார், "அரும்பெறற் பிண்டம்" என்றும், அது குருதி விரவிக் கள்ளுடனே கொடுக்கப்படுமாறு தோன்ற, "நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பவி" யென்றும், அதனால், பேய்மகள் அதனைப் பெறமாட்டாமையின், அஞ்சி நடுங்கின ளென்பார், "கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க" வென்றும் அப் பலியினை முரசுறை கடவுள் என்று கொண்டதற்குச் சான்றாக, எறும்பும் அதனை மூசாதென்றும் கூறினார். இஃதொரு வியப் பாகலின், "இறும்பூது மரபின்" என்றார். பேய் மகளும் எறும்பும் பெறலாகாப் பெருமை யுடைத்தாயினும், இப் பலி காக்கைக்கும் பருந்திற்கும் இடப்படும் என்பார்,"கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார" என்றார். காக்கையை ஒடுக்கொடுத் துயர்த்தியது, அது பருந்துபோல் தனித் துண்ணாது தன்னினத்தை யழைத்து அவற்றோ டிருந்துண்ணும் உயர் செய்கை யுடையதாதலால் என அறிக. இப் பகுதிக்கண், "முழங்கு மந்திர மென்றது, முழங்க வுச்சரிக்கப்படும் மந்திர மென்றவா" றென்றும், "மந்திரத்தா னென வுருபு விரித்து அதனைப் பேணிய ரென்பதனோடு முடிக்க" வென்றும், "கடவு ளென்றது முரசுறை கடவுளை" யென்றும், "கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க, உயர்ந்தோனேந்திய அரும்பெறற் பிண்டம், எறும்பு மூசா விறும்பூது மரபின், நெய்த்தோர் தூய நிறைமகி ழிரும்பலி, கருங்கட் காக்கையொடு பருந் திருந் தார வெனக் கூட்டுக" வென்றும்,"இறும்போது மரபிற் பலியென மாறிக் கூட்டுக"வென்றும்,"பேய்களும் எறும்புகளும் அஞ்சிச் செல்லாத பலிகளைக் காக்கையொடு பருந்திருந் தார வென்றது, அம் முரசுறை கடவுள் தன் னாணையால் தன் பலிகளை மேல் தன்னருளாலே போர் வென்றி விளைவது அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் இருந்து ஆர வென்றவா" றென்றும், "இவ்விடத்துக்குப் பிறவாறு கூட்டி யுரைப்பாரு முள" ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். "கடுஞ்சினங் கடாஅய் என்ற எச்சத்தைப் பழையவுரைகாரர், எறியும் (வரி. 43) முரசு என்பதனோடு முடிப்பர்.

40-44. ஓடா...........முரசே.

உரை: கடுஞ்சின வேந்தே-மிக்க சினமுடைய வேந்தே; ஓடாப் பூட்கை-பகைவர்க்குப் பிறக்கிடாத மேற்கோளும்; ஒண்பொறிக் கழற்கால்-ஒள்ளிய பொறிகள் பொறித்த கழலணிந்த அடியுமுடைய; பெருஞ் சமம் ததைந்த-பெரிய போரிடத்தே பகைவர் செய்யும் போரினைச் சிதைத்துக் கெடுத்த; செருப்புகல் மறவர;-போர்த் தொழிலை விரும்பும் வீரர்; நிலன் அதிர்க்கும் உருமுக் குரலொடு-நிலத்தை யதிரப்பண்ணும் இடி போலும் தம் குரலுடனே; கொளை புணர்ந்து-இசை விருந்திற் கலந்து; பெருஞ் சோறு உகுத்தற்கு-சோற்றுணவாகிய பெரிய விருந்துண்பித்தற்காக; நின் தழங்கு குரல் முரசு எறியும்-நினது முழங்குகின்ற கொடை முரசம் எறியப்படுகின்றது எ-று.

பெருஞ் சமம் ததைந்த செருவைப் புகலும் மறவ ரெனப் புகழ்கின்றாராகலின், அதற்குரிய அவர்தம் பண்பினை "ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்" என்பதனால் உணர்த்தினார். பொறி, தொழிற்பாடு. தாங்கள் செய்த போர்த்தொழிலின் வெற்றித் திறத்தைக் கழலில் பொறித்தலும் மரபாதலின், அப் பொறிகளை ஈண்டு ஒண்பொறி யென்றா ரெனினு மமையும். "ஒண்பொறிக் கழற்கால்" (பதிற். 34) என்பதற்குப் பழையவுரைகாரர் கூறுவதனால், இம் மரபுண்மை அறியப்படும். உருமு நிலன் அதிர்க்கும் குரல் என்பதனை, நில னதிர்க்கும் உருமுக் குரல் என மாறுக. பழையவுரைகாரர்,"மறவர் குரலெனக் கூட்டுக" வென்றும், "ஆகுபெயரான் உருமு நில னதிர்க்கும் குரலோடு ஒத்த மறவர் குரலை உருமு நில னதிர்க்கும் குரல் என்றானாகக் கொள்க" வென்பர். மறவர் குரலுக்கு உருமுக்குரலை யுவமம் கூறியது, அவரது முரண்மிகு மறத்தைக் குறித்துநின்றது. பெருஞ் சமம் ததைத்த வீரர்க்கு இசை விருந்தும் பெருஞ்சோற்று விருந்தும் செய்தல் வேந்தர்க்கு இயல் பாதலின், அவ்வியல்புபற்றி, எறியப்படும் முரசினை ஈண்டு எடுத்தோதினார். இப் பெருஞ்சோற்று நிலை, "முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல், பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை" (அகம்.233) என்பதனாலும், "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை" (தொல். பொ.63) என ஆசிரியர் கூறுதலாலும் உணரப்படும். இக் கருத்தே கொண்ட நச்சினார்க்கினியரும் இப் பாட்டினைப் பெருஞ்சோற்று நிலைத் துறைக்கு உதாரணமாகக் காட்டுகின்றார்.

இதுகாறும் கூறியது, மென்பாலனவும், புன்புல வைப்பும், பழனப் பாலும், புறவணி வைப்பும், கடற்றவும் பிறவுமாகிய ஐவகை நிலத்து மக்களும், அந் நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து அரண் வலியாராய் நடுங்குமாறு, கடுங் குரல் விசும் படைந்ததிர, பேய்மகள் கைபுடைத்து நடுங்க, கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திரத்தான் உயர்ந்தோ னேந்திய பிண்டமாகிய, எறும்பு மூசா இறும் பூது சான்ற மரபினையுடைய, நெய்த்தோர் கலந்த நிறைமகி ழிரும்பலியைக் காக்கையொடு பருந்திருந் தார, செருப்புகல் மறவர் குரலெடுத்துப் பாடும் இசை விருந்தோடு பெருஞ்சோற்று விருந் துண்பித்தற்கு, வேந்தே, நின் தழங்கு குரல் முரசு எறியப்படுகிறது என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "மென்பால் முதலாகக் கடறீறாக எண்ணப்பட்ட ஐவகை நிலத்து மக்களும் பிறவும், அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து, அரண் வலியாதே நடுங்காநிற்கும்படி, கடுங் குரல் விசும்படைந் ததிரும்படி, கடுஞ் சினத்தைக் கடாவிப் பேய்மகள் கை புடையூஉ நடுங்க, உயர்ந்தோ னேந்திய பிண்டத்தினையும், எறும்பு மூசா மரபின் நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலியினையும் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தாரா நிற்க, செருப்புகல் மறவரது குரலோடே கோட்பாடு பொருந்திப் பெருஞ்சோறு உகுத்தற்கு எறியப்படாநின்றது நின் முரசென வினைமுடிவு செய்க" வென்பர்.

இதனால் சேரனது வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

வேந்தரும் வேளிரும் அஞ்சி நடுங்க, முரசிற்குப் பலியிட்டு, பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்குவது குறித்து நின் முரசு முழங்குகிறதெனப் பல் யானைச் செல்குழு குட்டுவன், தன் வீரர்க்கு வழங்கும் பெருஞ் சோற்றுப் பெருவிருந்து இப் பாட்டின்கட் பொருளாக இருத்தலின், இது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாயிற்று.

மூன்றாம் பத்து மூலமும் உரையும் முற்றும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III