பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி

பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. !

முதலாவது பாகம் - புது வெள்ளம்


முதலாவது அத்தியாயம்
ஆடித்திருநாள்




ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வௌியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

                    "வடவாறு பொங்கி வருது 
                    
                    வந்து பாருங்கள், பள்ளியரே! 
                    
                    வெள்ளாறு விரைந்து வருது 
                    
                    வேடிக்கை பாருங்கள், தோழியரே!
                    
                    காவேரி புரண்டு வருது காண
                    
                    வாருங்கள், பாங்கியரே!" 
                    
                    

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.

ஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது "ஆ! ஆ!" என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

குதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கவனித்தாள். "தம்பி! வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய்! குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!" என்றாள்.

உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒருகணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இளமங்கைமார்கள் பலரும் அவனைச் சூழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன? அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா? அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்!

ஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள், வெண்சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.

ஏரிக்கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்தப் படகுகளிலே ஒரு படகு எல்லாவற்றுக்கும் முன்னதாக விரைந்து வந்து ஏரிக்கரை வடக்கு நோக்கித் திரும்பும் மூலையை அடைந்தது. அந்தப் படகில் கூரிய பிரகாசமான வேல்களை ஏந்திய ஆஜானுபாகுவான வீரர்கள் பலர் இருந்தார்கள்.

அவர்களில் சிலர் ஏரிக்கரையில் குதித்திறங்கி அங்கே இருந்த ஜனங்களைப் பார்த்துப் "போங்கள்! போங்கள்!" என்று விரட்டினார்கள். அவர்கள் அதிகமாக விரட்டுவதற்கு இடம் வையாமல் ஜனங்களும் அவரவர்களுடைய பாத்திரங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு விரைந்து கரையேறத் தொடங்கினார்கள்.

வந்தியதேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை, இந்த வீரர்கள் யார்? பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்களோ?

ஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். "ஐயா! இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள்? அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை? எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள்? மக்களும் எதற்காக விரைகிறார்கள்?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"தம்பி! உனக்குத் தெரியவில்லையா, என்ன? அதோ அந்தப் படகுகளின் நடுப் படகில் ஒரு கொடி பறக்கிறதே! அதில் என்ன எழுதியிருக்கிறது, பார்!" என்றார் பெரியவர்.

"பனைமரம் போல் தோன்றுகிறது."

"பனைமரந்தான்! பனைமரக் கொடி பழுவேட்டரையர் கொடி என்று உனக்குத் தெரியாதா?"

"மகாவீரர் பழுவேட்டரையரா வருகிறார்?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்ட குரலில் கேட்டான்.

"அப்படிதான் இருக்க வேண்டும்; பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வரமுடியும்?" என்றார் பெரியவர்.

வல்லவரையனுடைய கண்கள் அளவிலா வியப்பினால் விரிந்து படகுகள் வந்த திசையை நோக்கின. பழுவேட்டரையரைப் பற்றி வல்லவரையன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். யார்தான் கேள்விப்படாமலிருக்க முடியும்? தெற்கே ஈழநாட்டிலிருந்து வடக்கே கலிங்க நாடு வரையில் அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் என்பவர்களுடைய பெயர்கள் பிரசித்தமாயிருந்தன. உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையில் உள்ள பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப் புகழ்பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை - கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் இவை காரணமாகவும் பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புகள் எல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.

இப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகித்து வந்தார். அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி; தான்யாதிகாரி; தனபண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி இறை விதித்து வசூலிக்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், "இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்?" என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாகச் சோழ சாம்ராஜ்யத்தில் இப்போது வலிமை மிக்கவர் பழுவேட்டரையர்தான்.

அத்தகைய மகா வீரரும் அளவிலா வலிமையும் அதிகாரமும் படைத்தவருமான, பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் பொங்கியது. ஆனால் அதே சமயத்தில், காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் தன்னிடம் அந்தரங்கமாகச் சொன்ன செய்தி அவனுக்கு நினைவு வந்தது.

"வந்தியத்தேவா! நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!"

சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசரும் வடதிசைச் சைன்யத்தின் மகாதண்ட நாயகருமான ஆதித்த கரிகாலர் இவ்விதம் சொல்லியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் நடந்து கொள்ள வேண்டியவிதங்களைப் பற்றியும் படித்துப் படித்துக் கூறியிருந்தார். இவையெல்லாம் நினைவு வரவே, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வல்லவரையன் அடக்கிக் கொண்டான். குதிரையைத் தட்டிவிட்டு வேகமாகச் செல்ல முயன்றான். என்ன தட்டி விட்டாலும் களைப்புற்றிருந்த அந்தக் குதிரை மெதுவாகவே சென்றது. இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கிவிட்டு நாளைக் காலையில் புறப்படும்போது வேறு நல்ல குதிரை சம்பாதித்துக் கொண்டே கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.
 

பக்க தலைப்பு



இரண்டாம் அத்தியாயம்
ஆழ்வார்க்கடியான் நம்பி




ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?

ஆகா! பழையாறை நகர்! சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட பழையாறை! அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா? சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா? அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி, குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான்.

ஆனால் வழியில் தடை எதுவும் நேராமல் இருக்க வேண்டும். எந்தத் தடை நேர்ந்தால்தான் என்ன? கையிலே வேல் இருக்கிறது. இடையில் தொங்கிய உறையிலே வாள் இருக்கிறது; மார்பிலே கவசம் இருக்கிறது; நெஞ்சிலே உரமிருக்கிறது. ஆனால் மகாதண்ட நாயகர், இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது? அதுவரை பொறுமையுடன் இருந்தே தீர வேண்டும்.

ஆதவன் மறைவதற்குள் கடம்பூரை அடைய வேண்டும் என்ற கருத்துடன் சென்று கொண்டிருந்த வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கெல்லாம் வீர நாராயணபுர விண்ணகரக் கோயிலை நெருங்கினான்.

அன்று ஆடித் திருமஞ்சனத் திருவிழாவும் சேர்ந்திருந்தபடியால் கோயிலைச் சுற்றியுள்ள மரத் தோப்புகளில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது.

பலாச் சுளைகளும் வாழைப் பழங்களும் கரும்புக் கழிகளும் பலவகைத் தின்பண்டங்களும் விற்பவர்கள் ஆங்காங்கே கடை வைத்திருந்தார்கள். பெண்கள் தலையில் சூடிக் கொள்ளும் மலர்களையும், தேவ பூஜைக்குரிய தாமரை மொட்டுக்கள் முதலியவற்றையும் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். தேங்காய், இளநீர், அகில், சந்தனம், வெற்றிலை, வெல்லம், அவல், பொரி முதலியவற்றைச் சிலர் குப்பல் குப்பலாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேடிக்கை விநோதங்கள் நடந்து கொண்டிருந்தன.ஜோசியர்கள், ரேகை சாஸ்திரத்தில் வல்லவர்கள், குறி சொல்லுகிறவர்கள், விஷக்கடிக்கு மந்திரிப்பவர்கள், இவர்களுக்கும் அங்கே குறையில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்ற வந்தியத்தேவன் ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும் அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தான். என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு ஆவல் பீறிக் கொண்டு எழுந்தது. அந்த ஆவலை அடக்கிக் கொள்ள அவனால் முடியவில்லை. கூட்டத்துக்கு வௌியில் சாலை ஓரமாகக் குதிரையை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான். குதிரையை அங்கேயே நிற்கும்படி தட்டிக் கொடுத்துச் சமிக்ஞையால் சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே போனான்.

அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். பிறகு என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைக் கவனித்தான்.

வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்வபுண்டரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும் குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார். இன்னொருவர் தமது மேனியெல்லாம் பட்டை பட்டையாய்த் திருநீறு அணிந்திருந்த சிவபக்தர். மூன்றாவது மனிதர் காவி வஸ்திரம் தரித்துத் தலையையும் முண்டனம் செய்து கொண்டிருந்தார். அவர் வைஷ்ணவரும் அல்ல, சைவரும் அல்ல, இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது.

சைவர் சொன்னார்: "ஓ, ஆழ்வார்க்கடியான் நம்பியே! இதற்கு விடை சொல்லும்! சிவபெருமானுடைய முடியைக் காண்பதற்குப் பிரம்மாவும், அடியைக் காண்பதற்குத் திருமாலும் முயன்றார்களா, இல்லையா? முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா? அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார்?"

இதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான்நம்பி தன் கைத் தடியை ஆட்டிக் கொண்டு, " சரிதான் காணும்! வீர சைவ பாததூளி பட்டரே! நிறுத்தும் உம் பேச்சை! இலங்கை அரசனாகிய தசகண்ட ராவணனுக்கு உம்முடைய சிவன் வரங்கள் கொடுத்தாரே? அந்த வரங்கள் எல்லாம் எங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடுபொடியாகப் போகவில்லையா? அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார்?" என்று கேட்டான்.

இந்தச் சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: "நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள். பக்திக்கு மேலே ஞானமார்க்கம் இருக்கிறது. ஞானத்துக்கு மேலே ஞாஸம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைந்து விட்டால் சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. சர்வம் பிரம்மமயம் ஜகத். ஸரீ சங்கர பகவத் பாதாச்சாரியார் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...."

இச்சமயம் ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு, "சரிதான் காணும், நிறுத்தும்! உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷதங்களுக்கும் பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?

                    'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் 
                    
                    பஜ கோவிந்தம் மூடமதே!' 
                    
                    

என்று மூன்று வாட்டி சொன்னார். உம்மைப் போன்ற மௌடீகர்களைப் பார்த்துத்தான் 'மூடமதே!' என்று சங்கராச்சாரியார் சொன்னார்!" எனக் கூறியதும், அந்தக் கூட்டத்தில் 'ஆஹா' காரமும், பரிகாசச் சிரிப்பும் கரகோஷமும் கலந்து எழுந்தன.

ஆனால் சந்நியாசி சும்மா இருக்கவில்லை. "அடே! முன்குடுமி நம்பி! நான் 'மூடமதி' என்று நீ சொன்னது சரிதான் ஏனென்றால், உன் கையில் வெறுந்தடியை வைத்துக் கொண்டிருக்கும் நீ வெறுந்தடியன் ஆகிறாய். உன்னைப் போன்ற வெறுந்தடியனோடு பேச வந்தது என்னுடைய மூடமதியினால்தானே?" என்றார்.

"ஓய் சுவாமிகளே! என் கையில் வைத்திருப்பது வெறுந்தடியல்ல. வேண்டிய சமயத்தில் உம்முடைய மொட்டை மண்டையை உடைக்கும் சக்தி உடையதுங் காணும்!" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் 'ஓஹோ!' என்று ஆர்ப்பரித்தனர்.

அப்போது அத்வைத சுவாமிகள், "அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவாய்!" என்றார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி, "இதோ எல்லோரும் பாருங்கள்! பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்!" என்று தடியைச் சுழற்றிக் கொண்டு சுவாமிகளை நெருங்கினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு ஒரு கணம் அந்த முன் குடுமி நம்பியின் கைத்தடியை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு அவனை அந்தத் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தலாமா என்று தோன்றியது.

ஆனால் திடீரென்று சுவாமியாரைக் காணோம்! கூட்டத்தில் புகுந்து அவர் மறைந்து விட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவ கோஷ்டியார் மேலும் ஆர்ப்பரித்தார்கள்.

ஆழ்வார்க்கடியான் வீரசைவருடைய பக்கமாகத் திரும்பி, "ஓய் பாத தூளி பட்டரே! நீர் என்ன சொல்லுகிறீர்? மேலும் வாதம் செய்ய விரும்புகிறீரா? அல்லது சுவாமியாரைப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா?" என்றான்.

"நானா? ஒருநாளும் நான் அந்த வாய் வேதாந்தியைப் போல் ஓட்டம் எடுக்க மாட்டேன். என்னையும் உம்முடைய கண்ணன் என்று நினைத்தீரோ? கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன்தானே உம்முடைய கண்ணன்!..." என்று பாததூளிபட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். "ஏன் காணும்? உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் அடிபட்டதை மறந்து விட்டீரோ?" என்று கேட்டுக் கொண்டு கைத்தடியை வீசிக் கொண்டு வீர சைவர் அருகில் நெருங்கினான்.

ஆழ்வார்க்கடியான் நல்ல குண்டாதி குண்டன். வீரசைவராகிய பாததூளிபட்டரோ சற்று மெலிந்த மனிதர்.

மேற்கூறிய இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.

அவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, "எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழநாட்டுக்குப் போவதுதானே? அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே?" என்றான்.

நம்பி சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து, "இவன் யாரடா நியாயம் சொல்ல வந்தவன்!" என்றான்.

கூட்டத்திலே இருந்தவர்களில் சிலருக்கு, வந்தியத்தேவனுடைய வீரத் தோற்றமும் அவனுடைய அழகிய முகவிலாசமும் பிடித்திருந்தன.

"தம்பி! நீ சொல்லு! இந்தச் சண்டைக்காரர்களுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லு! உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!" என்று அவர்கள் சொன்னார்கள்.

"எனக்குத் தெரிந்த நியாயத்தைச் சொல்கிறேன். சிவபெருமானும் நாராயணமூர்த்தியும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் சிநேகமாகவும் சுமுகமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்த நம்பியும் பட்டரும் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வல்லவரையன் கூறியதைக் கேட்டு, அக்கூட்டத்தில் பலரும் நகைத்தார்கள்.

அப்போது வீரசைவபட்டர், "இந்தப் பிள்ளை அறிவாளியாகவே தோன்றுகிறான். ஆனால் வேடிக்கைப் பேச்சினால் மட்டும் விவாதம் தீர்ந்துவிடுமா? சிவபெருமான் திருமாலை விடப் பெரிய தெய்வமா, இல்லையா என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும்!" என்றார்.

"சிவனும் பெரிய தெய்வந்தான்; திருமாலும் பெரிய தெய்வந்தான் இருவரும் சமமான தெய்வங்கள். யாரை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள் சண்டை எதற்கு?" என்றான் வல்லவரையன்.

"அது எப்படிச் சொல்லலாம்? சிவனும் விஷ்ணுவும் சமமான தெய்வங்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் அதட்டிக் கேட்டான்.

"ஆதாரமா? இதோ சொல்கிறேன்! நேற்று மாலை வைகுண்டத்துக்குப் போயிருந்தேன். அதே சமயத்தில் பரமசிவனும் அங்கே வந்திருந்தார். இருவரும் சம ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்..."

"அட பிள்ளாய்! பரிகாசமா செய்கிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.

கூட்டத்தினர், "சொல்லு, தம்பி! சொல்லு!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

"அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இருந்தார்கள். அதோடு விடாமல் சிவனையும் திருமாலையும் நேரிலேயே கேட்டு விட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள், தெரியுமா? 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள்!" என்று கூறிய வல்லவரையன், மூடியிருந்த தனது வலக்கையைத் திறந்து காட்டினான். அதற்குள்ளே ஒரு பிடி மண் இருந்தது அதை வீசி உதறினான்.

கூட்டத்திலிருந்தவர்களில் பலர் அப்போது பெரும் உற்சாகங்கொண்டு தலைக்குத் தலை தரையிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து, நம்பியின் தலையிலும் பட்டர் தலையிலும் வீசி எறிய ஆரம்பித்தார்கள். இந்தத் தூராக்ரகச் செயலைச் சிலர் தடுக்க முயன்றார்கள்.

"அடே! தூர்த்தர்களா? நாஸ்திகர்களா?" என்று சொல்லிக் கொண்டு ஆழ்வார்க்கடியான் தன் கைத் தடியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் பிரவேசித்தான்.

ஒரு பெரிய கலவரமும் அடிதடி சண்டையும் அப்போது அங்கே நிகழும் போலிருந்தன. நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

"சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழ நாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!" என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.

இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக் கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த அலங்கரித்த யானையின் மீது ஆஜானுபாகுவான கரிய திருமேனியர் ஒருவர் வீற்றிருந்தார். மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.

கூட்டத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சாலையின் இருபுறத்திலும் வந்து நின்றது போல் வல்லவரையனும் வந்து நின்று பார்த்தான். யானை மீது இருந்தவர் தான் பழுவேட்டரையர் என்பதை ஊகித்துக் கொண்டான்.

யானைக்குப் பின்னால் பட்டுத் திரையினால் மூடப்பட்ட சிவிகை ஒன்று வந்தது. அதற்குள் இருப்பது யாரோ என்று வல்லவரையன் சிந்திப்பதற்குள்ளே, செக்கச் சிவந்த நிறத்துடன் வளையல்களும் கங்கணங்களும் அணிந்த ஒரு கரம் சிவிகைக்குள்ளேயிருந்து வௌிப்பட்டுப் பல்லக்கின் பட்டுத் திரையைச் சிறிது விலகியது. மேகத்தினால் மூடப்பட்டிருந்த பூரண சந்திரன் மேகத் திரை விலகியதும் பளீரென்று ஒளி வீசுவது போல் சிவிகைக்குள்ளே காந்திமயமான ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.

பெண் குலத்தின் அழகைக் கண்டு களிக்கும் கண்கள் வல்லவரையனுக்கு உண்டு என்றாலும், அந்தப் பெண்ணின் முகம் பிரகாசமான பூரண சந்திரனையொத்த பொன் முகமாயிருந்தாலும் எக்காரணத்தினாலோ வல்லவரையனுக்கு அம்முகத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றவில்லை. இனந்தெரியாத பயமும் அருவருப்பும் ஏற்பட்டன.

அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் கண்கள் வல்லவரையனுக்கு அருகில் உற்று நோக்கின. மறுகணம் ஒரு பீதிகரமான பெண் குரலில் 'கிறீச்' என்ற கூச்சல் கேட்டது உடனே சிவிகையின் பட்டுத் திரை முன்போல் மூடிக் கொண்டது.

வல்லவரையன் தன் அக்கம் பக்கத்தில் நோக்கினான். தனக்கு அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது 'கிறீச்'சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக் கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடியாத விகாரத்தை அடைந்து கோர வடிவமாக மாறியிருப்பதையும் பார்த்தான். வல்லவரையனுடைய உள்ளத்தில் காரணம் விளங்காத திகைப்பும் அருவருப்பும் ஏற்பட்டன.

 

பக்க தலைப்பு



மூன்றாம் அத்தியாயம்
விண்ணகரக் கோயில்




சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.

பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.

"அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன்.

"குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன்.

"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன்.

"அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது!

"இது பொல்லாத குதிரையடா! இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்! பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்!" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.

ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.

"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன்.

"தாண்டவராயா! உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக் குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.

"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.

"குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதை தானடா!" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்!.

குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது.

இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.

"பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை! என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக் காட்டினான்.

வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப் போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

புளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது.'ஏன் என்னை விட்டுப் பிரிந்து சென்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்?' என்று அந்த வாயில்லாப் பிராணி குறைகூறுவது போல் அதன் களைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தலானான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப் பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, "இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டு வந்தாய், தம்பி! எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது?" என்றார்கள்.

"இந்தப் பிள்ளை என்ன செய்வான்? குதிரைதான் என்ன செய்யும்? அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்?" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.

ஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக் கொண்டு நின்றான். "இதேதடா சனியன்? இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே!" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.

"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"நானா? கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக் கொண்டு போய் அப்புறம் தென் மேற்குப் பக்கம் போவேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அதையெல்லாம் நான் கேட்கவில்லை இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்."

"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?"

"ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது.."

"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்?"

"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்."

"மெய்யாகவா?" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வௌியிட்டான்.

"மெய்யாகத்தான்! அது உனக்குத் தெரியாதா, என்ன? யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம், எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்."

வந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவருடைய முரட்டுப் பரிவாரங்களுடன் ஏற்பட்ட அனுபவம் இன்னும் அவனுக்குக் கசந்து கொண்டிருந்தது.

"தம்பி! எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.

"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்க முடியும்? இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்."

"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ!"

"எதற்காக? அங்கே யாராவது வீரசைவர் வருகிறாரா? சிவன் பெரிய தெய்வமா? திருமால் பெரிய தெய்வமா? என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா?"

"இல்லை, இல்லை சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!
"அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?"

"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது."

வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.

"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை, சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும், நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது."

"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்று போகவில்லையென்று சொல்லு!"

"ஒருவகையில் அழைப்பு இருக்கிறது, சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்."

"இவ்வளவுதானா? அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாத்தான் இருக்கும்!"

இருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அந்தக் கேள்வியையே நானும் திருப்பிக் கேட்கலாம்; நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? உன் வழியே போவதுதானே?"

"வழி தெரியாத குற்றத்தினால் தான். நம்பி! நீ எங்கே போகிறாய்? ஒருவேலை கடம்பூருக்குத்தானா?"

"இல்லை; நீதான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது என்று சொல்லிவிட்டாயே? நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்."

"வீரநாராயணப் பெருமாள் சந்நிதிக்குத்தானே?"

"ஆம்."

"நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்."

"ஒருவேளை விஷ்ணு ஆலயத்துக்கு நீ வர மாட்டாயோ என்று பார்த்தேன். பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கே ஈசுவர முனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வருகிறார் அவர் பெரிய மகான்."

"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஓரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?"

"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம்.ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது; அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி! ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா?"

"கேட்டதில்லை."

"கேட்காதே! அதைக் காதினாலேயே கேட்காதே!"

"ஏன் அவ்வளவு வைஷம்யம்?"

"வைஷம்யமும் இல்லை; விரோதமும் இல்லை; உன்னுடைய நன்மைக்குச் சொன்னேன். ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால், அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய்!"

"உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா? பாடுவாயா?"

"சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். பெருமாள் சந்நிதியில் பாடப் போகிறேன் வேணுமானால் கேட்டுக் கொள்! இதோ கோவிலும் வந்து விட்டது!" இதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்துவிட்டார்கள்.

விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.

அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-

                    "பொலிக பொலிக பொலிக 
                    
                        போயிற்று வல்லுயிர்ச்சாபம் 
                    
                    நலியும் நரகமும் நைந்த 
                    
                        நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை 
                    
                    கலியும் கெடும் கண்டு கொள்மின் 
                    
                        கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் 
                    
                    மலியப் புகுந்து இசைபாடி 
                    
                        ஆடி உழி தரக் கண்டோம்! 
                    
                    கண்டோம் கண்டோம் கண்டோம் 
                    
                        கண்ணுக் கினியன கண்டோம்! 
                    
                    தொண்டீர் எல்லீரும் வாரீர்! 
                    
                         தொழுது தொழுது நின்றார்த்தும்! 
                    
                    வண்டார் தண்ணந் துழாயான் 
                    
                         மாதவன் பூதங்கள் மண்மேல் 
                    
                    பண்டான் பாடிநின்றாடிப் 
                    
                         பரந்து திரிகின்றனவே!" 
                    
                    


இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டு வந்தான்.அவனுக்குக் கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் மாறியது. 'இவன் பரம பக்தன்!' என்று எண்ணிக் கொண்டான்.

வந்தியத்தேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை இன்னும் சிலரும் கேட்டார்கள். கோவில் முதலிமார்கள் கேட்டார்கள்; அர்ச்சகர் ஈசுவரபட்டரும் கண்ணில் நீர் மல்கி நின்று கேட்டார். அவருக்கு அருகில் நின்று கொண்டு அவருடைய இளம் புதல்வன் பால்மணம் மாறாப் பாலகன் ஒருவன் கேட்டிருந்தான்.

ஆழ்வார்க்கடியான் பத்துப் பாசுரங்களைப் பாடிவிட்டு,

                    "கலி வயல் தென்னன் குருகூர்க் 
                    
                         காரி மாறன் சடகோபன் 
                    
                    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும்
                    
                         உள்ளத்தை மாசறுக்குமே" 
                    
                    

என்று பாசுரத்தை முடித்தான்.

கேட்டிருந்த பட்டரின் குமாரனாகிய பாலகன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஐயா! குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே? அவ்வளவும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அடியேன் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை, சில பத்துக்கள் தான் எனக்குத் தெரியும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"தெரிந்தவரையில் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேணும்" என்றார் ஈசுவரமுனிகள்.

பின்னால், இந்த ஊர் பல பெருமைகளை அடையப் போகிறது. பால் வடியும் முகத்தில் தேஜஸ் பொலிய நின்று நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்ட பாலகன் வளர்ந்து, நாதமுனிகள் என்ற திருநாமத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரையில் முதலாவது ஆச்சாரியார் ஆகப் போகிறார். குருகூர் என்னும் ஆழ்வார் திருநகருக்குச் சென்று 'வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின்' ஆயிரம் பாசுரங்களையும் தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.

நாதமுனிகளின் பேரராக அவதரிக்கப்போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.

இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸரீ ராமானுஜரே ஒரு நாள் வரபோகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப்போகிறார்கள்.

இந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.

பெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வௌியில் வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நம்பிகளே! தாங்கள் இத்தகைய பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று. ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்" என்றான்.

"மன்னித்து விடுகிறேன்; தம்பி! ஆனால் இப்போது எனக்கு ஒரு உதவி செய்வாயா, சொல்லு!"

"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே? நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே?"

"இது வேறு விஷயம்; ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்."

"யாரிடம்?"

"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்!"

"நம்பிகளே! என்னை யார் என்று நினைத்தீர்கள்? இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன்? தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்..."

"தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா!"

வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.

 

பக்க தலைப்பு



நாலாம் அத்தியாயம்
கடம்பூர் மாளிகை




இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வௌிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ஒருபக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.

தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்_டுகொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்? குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.

வல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, "இதுதான் உங்கள் ஊர் வழக்கமா? வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது....?" என்றான்.

"நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய்? எந்த ஊர்? என்றான் வாசற்காவலன்."

"என் ஊரும் பேருமா கேட்கிறாய்? வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள்! என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்! தெரிந்ததா?" என்றான்.

"இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே?" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.

"நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது! இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை!" என்றான் காவலர் தலைவன்.

ஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், "அடே! நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா!" என்றான்.

இன்னொருவன் "கழுதை என்று சொல்லடா" என்றான்.

"கழுதை மேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா!" என்றான் மற்றொருவன்.

வல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன.

அவன் மனதிற்குள், "என்னத்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா? இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.

"குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்!" என்றான். தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.

குதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக் கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.

இதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால், தடால் என்று சாத்தப்பட்டன. "பிடி! பிடி!" என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து 'கிளாங்' 'கிளாங்' என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு 'டடம்!' 'டடம்!' என்று முழங்கிற்று.

வந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, "கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!" என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.

அச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, "அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!" என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"எஜமான்! யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்!" என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.

"கந்தமாறா! நீ போய்க் கலவரம் என்னவென்று பார்!" - இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.

அவனும் அவனைச் சுற்றி நின்ற வீரர்களும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.

"இங்கே என்ன ஆர்ப்பாட்டம்?" என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.

"வல்லவா, என் அருமை நண்பா! உண்மையாகவே நீதானா?" என்று உணர்ச்சி ததும்பக் கூவிக் கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.

"கந்தமாறா! நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது" என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக்காட்டினான்.

அவர்களைப் பார்த்து, "சீ! முட்டாள்களே! போங்களடா! உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்!" என்றான் கந்தமாறன்.

கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு? ஆம், காதல் என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதை விட அதிகமான துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரே ஆனந்தமயமான இதயப் பரவசந்தான்.

போகிற போக்கில், வல்லவரையன், "கந்தமாறா! இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது? இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக?" என்றான்.

"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாக சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்த போது, 'பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்க வேண்டும்; அவரைப் பார்க்க வேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்' என்று சொல்வாயே? அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம்!" என்றான் கந்தமாறன்.

பிறகு, விருந்தாளிகள் அமர்ந்திருந்த மாளிகை மேல் மாடத்துக்கு வல்லவரையனைக் கந்தமாறன் அழைத்துச் சென்றான். முதலில் தன் தந்தையாகிய சம்புவரையரிடம் கொண்டு போய் நிறுத்தி, "அப்பா! என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே? அவன் இவன்தான்!" என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினான். வரையர் அவ்வளவாக மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றவில்லை.

"அப்படியா? கீழே அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தவன் இவன்தானா?" என்று கேட்டார்.

"கலவரத்துக்குக் காரணம் என் தோழன் அல்ல; வாசல் காப்பதற்கு நாம் அமர்த்தியிருக்கும் மூடர்கள்!" என்றான் கந்தமாறவேள்.

"இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை!" என்றார் சம்புவரையர்.

கந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று; மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், "மாமா! இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன், வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒருநாள் நீயே எண்ணிப் பார்த்துக் கொள்' என்று நான் சொல்லுவேன்" என்றான்.

பழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், "அப்படியா, தம்பி! நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ? அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு? 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா?" என்ற சந்தேகமோ?" என்றார்.

தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

வந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வௌியில் காட்டிக் கொள்ளாமல், "ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்?" என்று பணிவுடன் சொன்னான்.

"நல்ல மறுமொழி; கெட்டிக்காரப் பிள்ளை!: என்றார் பழுவேட்டரையர்.

இந்தமட்டில் பிழைத்தோம் என்று வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து வௌியேறினார்கள். அப்போது சம்புவரையர் தமது மகனை அழைத்துக் காதோடு, "உன் தோழனுக்குச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்" என்றார். மாறவேள் கோபத்துடன் தலையை அசைத்து விட்டுப் போனான்.

பிறகு மாறவேள் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்து சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் செய்தான். அவளுக்குப் பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

'தங்கச்சி'யைப் பற்றி மாறவேள் பல தடவை சொன்னதில் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தான் வந்தியத்தேவன். இப்போது ஒருவாறு ஏமாற்றமே அடைந்தான்.

அந்தப் பெண்களின் கூட்டத்திலே பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த மாது யாராக இருக்கலாம் என்பதை அறிய வந்தியத்தேவனுடைய கண்கள் தேடி அலைந்தன.

 

பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
குரவைக் கூத்து




அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வௌியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், "கந்தமாறா! கந்தமாறா!" என்று அழைத்தது. "அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத்தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.

தன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்கு வெட்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது. கந்தமாறன் வௌியே வந்ததும் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு, "வா! எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்!" என்று சொல்லி இழுத்துக் கொண்டு போனான்.

கடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள், பண்டக சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக் கொண்டு சென்றான்.

இடையில் வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான்.

"உன்னைப் பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக் குறித்து அவர்கள் சிரிக்கவில்லை..."

"பின்னே எதற்காகச் சிரித்தார்களாம்?"

"பழுவேட்டரையர் இருக்கிறார் அல்லவா? இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிதாக ஒரு இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார். மூடுபல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல், அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறாராம்! அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு! அவள் சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள்! பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா?"

"கேள்விப்பட்டிருக்கிறேன் ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா! பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது?"

"இரண்டு ஆண்டுக்குள்ளேதான் இருக்கும்; மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர் விட்டு வைப்பதில்லையாம்! எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா! ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும்?"

"காரணம் அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா? பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே! பெண் உலகமே இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள். ஆகையால் அவளை இவர்களுக்குப் பிடிக்கவில்லை! அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள்!..."

"அடே! இது என்ன விந்தை! உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித் தெரியும்? அவளை நீ பார்த்திருக்கிறாயா, என்ன? எங்கே, எப்படிப் பார்த்தாய்? பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல!..."

"கந்தமாறா! இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல அது உனக்கு தெரியும். மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீரநாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சாலை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே? அது உண்மையா?"

"ஆம், நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் அதனால் என்ன?..."

"அதனால் என்ன? ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன் வேறொன்றுமில்லை...!"

கந்தமாறன் இலேசாகச் சிரித்துவிட்டு, "இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினோம். சுத்த வீரனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம்! ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம்!" என்றான். பிறகு, "வேறு என்னமோ சொல்ல வந்தாய்; அதற்குள் பேச்சு மாறி விட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது?" என்றான்.

"கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடா மீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருந்தபோது, அடுத்தாற்போல், ஒரு மூடுபல்லக்கு வந்தது. மூடுபல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும், முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன! அவ்வளவுதான், நான் பார்த்ததெல்லாம்! நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று ஊகிக்கிறேன்.

"வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். ஆண் பிள்ளை எவனும் அந்தப் பழுவூர் இளையராணியைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விநாடி நேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தாயல்லவா? பார்த்த வரையில் அவள் எந்த தேசத்திலே பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா?" என்று கந்தமாறன் கேட்டான்.

"அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போது, அவள் ஒருவேளை காஷ்மீர தேசத்துப் பெண்ணாயிருக்கலாம்; அல்லது கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை அரபு தேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதலாவது இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்!"

அச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆகியவை சேர்ந்து சப்தித்தன.

"இது என்ன முழக்கம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"குரவைக் கூத்து நடக்கப் போகிறது! அதற்கு ஆரம்ப முழக்கம் இது! நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா? அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா?"

ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. "குரவைக் கூத்து நான் பார்த்ததேயில்லை; கட்டாயம் பார்க்க வேண்டும்" என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக்கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று. மேடைக்கு முன்னால் சபை கூடவும் தொடங்கி விட்டது.

சுற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிலும் சூழ்ந்த இடத்தில், வெண் மணல் விரித்த விசாலமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போலும், மயிலைப் போலும், அன்னத்தைப் போலும், சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். செந்நெல்லை வறுத்த வெள்ளிய பொரிகள், மஞ்சள் கலந்த தினையரிசிகள், பலநிற மலர்கள், குன்றி மணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழகுபடுத்தியிருந்தார்கள். குத்துவிளக்குகளுடன் தீவர்த்திகளும் சேர்ந்து எரிந்து இருளை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில் புகையுடன் தீவர்த்திப் புகையும் சேர்ந்து, மூடுபனியைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து அவரவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக முழக்கினார்கள். மலர் மணம், அகில் மணம், வாத்திய முழக்கம் எல்லாமாகச் சேர்ந்து வந்தியத்தேவனுடைய தலைசுற்றும்படி செய்தன.

முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். தேவலோகத்துக் கன்னியர் பலர் முருகனை மணந்து கொள்ளத் தவங்கிடந்து வருகையில், அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலவனுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறிகொள்ளச் செய்தன.

                    "பசியும் பிணியும் பகையும் அழிக! 
                    
                    மழையும் வளமும் தனமும் பெருக!" 
                    
                    

என்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.

பின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த இரத்த நிறமுள்ள செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.

முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது. மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக் கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான்; தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதிகுதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.

பிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசுர கணங்கள் தவிடுபொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கைவேலைக் கீழே போட்டான்.

இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்று விட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. "சந்நதம் வந்து விட்டது" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, " வேலா! முருகா! தேவசேநாபதி! கந்தா! சூரசம்ஹாரா! அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டான்.

"கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சந்நதம் வந்தவன் கூவினான்.

"மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?" என்று பூசாரி கேட்டான்.

"மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!..." என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான்.

"என்ன பலி வேண்டும்?" என்று பூசாரி கேட்டான்.

"கேட்டால் கொடுப்பீர்களா?" என்றான் வெறியாடியவன்.

"கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்! என்றான் பூசாரி.

"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!" என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்.

மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.

சம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.

பூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம் போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.

சபை மௌனமாகக் கலைந்தது; வௌியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது.

இத்தனை நேரம் பார்த்துக் கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகியிருந்த வந்தியத்தேவன், நரிகள் ஊளையிடும் சப்தம் வந்த திசையை நோக்கினான். அங்கே, அம்மாளிகையின் வௌிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான்! ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை! அத்தகைய வீண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமடைந்தான். இதுவரை அனுபவித்து அறியாத வேறு பலவகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன.

 

பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
நடுநிசிக் கூட்டம்




குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.

பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார். தான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.

சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.

அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டும் 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.

இவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.

"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்?" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தௌிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.

மனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.

"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு. மற்ற விருந்தாளிகளைக் கவனித்துவிட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்" என்று கந்தமாறன் சொல்லி விட்டுப் போனான்.

படுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மிக விரைவில் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன்? மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத, அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன.

எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன! ஊளையிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன. மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.

நரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வௌிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. "வந்தாயா? வா!" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.

"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன? எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர்? உண்மையைச் சொல்" என்று பூசாரி கேட்டான்.

"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ!" என்றான் பூசாரி.

திடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமாள் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக் கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், "கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை! ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது! அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது!

இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக் கொண்டான். கனவு கலைந்தது; கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.

அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை தான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்!... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா? தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா?

வல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.

மாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான்? அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்த போது, மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள், தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்க வேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக் குரல் வந்ததைக் கேட்டு, வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வௌிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வௌிச்சம் தந்தது.

அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவுக் கூர்மையாக கவனித்து கொண்டு வருகிறான். ஆழ்வார்க்கடியான் மிகப் பொல்லாத கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை. அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது.அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்! கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது! அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். "இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை!" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வௌிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். "படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்?" என்றால் என்ன விடை சொல்லுவது? கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா! அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்தக் கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும்! காலையில் கந்தமாறனைக் கேட்டால், எல்லாம் தெரிந்துவிடுகிறது.

அச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடுபல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ! இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா? அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வௌியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ? அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே? கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்து கொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூடத் தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ? ஆகா! இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார்! இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார்! அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை! வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும்! ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும்? அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம்! அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும்! இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.

இப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே? அவன் எங்கே படுத்திருக்கிறான்? நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக் கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வௌியே அனுப்பக் கூடாது. ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்..."

இதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதிசெய்து கொண்டான்.

வடதிசை மாதண்ட நாயகர் யார்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் ?

அச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.

"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு!" என்றான் கந்தமாறன்.

"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது; ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன்.நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வௌியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.

 

பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
சிரிப்பும் கொதிப்பும்




அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?

இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும்? ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.

இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.

"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.

"ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.

"ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா! என்றார் ஒருவர்.

பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: "ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்..."

"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.

"உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை.."

"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.

"ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்..."

இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.

சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வௌியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.

"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.

"நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்!..."

"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்.."

"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களையும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பபாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து, கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்லை.."

"பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா?"

"ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று."

"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.

"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்."

"வாழ்க பழுவேட்டரையர்!", "வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!", "வாழ்க அவர் வீரம்!" என்னும் கோஷங்கள் எழுந்தன.

"இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம்! ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்.."

"விந்தை! விந்தை!", "இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!", "இப்படிக் கேட்டதே இல்லை!" என்ற குரல்கள் எழுந்தன.

"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!"

இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், "படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!" என்றார்.

"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்."

"ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா?"

"சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்!' என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை! இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை! இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும்? அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்து விடுகிறேன்..."

"கூடாது! கூடாது! பழுவூர்த்தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்" என்றார் சம்புவரையர்.

"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார் பழுவூர் மன்னர்.

 

பக்க தலைப்பு



எட்டாம் அத்தியாயம்
பல்லக்கில் யார்?




சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தௌிவாக விழவில்லை.

சம்புவரையர் உரத்த குரலில், " பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது" என்றான்.

"எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!" என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.

"இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வௌிச்சத்திற்கு வரட்டும்!" என்றார் பழுவேட்டரையர்.

"ஆமாம்; நான் தான் இதோ வௌிச்சத்துக்கு வந்து விட்டேன்.

"என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்."

"அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தௌிய விரும்புகிறேன்!" என்றார் வணங்காமுடியார்.

"அது என்ன? எப்படி? விவரம் சொல்ல வேணும்?"

"பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்..."

இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், "வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்..." என்றார்.

"சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?"

"ஒரு தவறும் இல்லை!" என்று பல குரல்கள் எழுந்தன.

"மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்....ஆனால்..."

"ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!"

"புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்."

இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.

சம்புவரையர் குதித்து எழுந்து, "சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!" என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.

"நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!" என்றார் பழுவேட்டரையர்.

பிறகு, "வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை..."

"அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?"

இவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று. பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.

அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: "சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா? அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?"

"இருக்கிறது, இருக்கிறது பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது!" என்று பல குரல்கள் கூவின.

"மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன். மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன். இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்!" என்றார் வணங்காமுடி முனையரையர்.

"வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன். நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன். ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம். சுந்தர சோழ மகாராஜா நீடூழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும்.ஆனால் ஒருவேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்து விட்டால், அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்."

"அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம். தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை."

"அது சரியல்ல, ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வௌியிட வேண்டும். சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்ததேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள். அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை. அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங் காளைப் பருவம் எய்தியிருந்தார். எனவே ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத் தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம். அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை. ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார். நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனை கேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார். இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது. இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார்? கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார் அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் - சுந்தர சோழரின் புதல்வர் - காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம்? குலமுறை என்ன? மனு நீதி என்ன? தமிழகத்தின் பழைமையான மரபு என்ன? மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்..."

"மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை" என்றார் சம்புவரையர்.

"என் அபிப்பிராயமும் அதுவே", "என் கருத்தும் அதுவே" என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.

"உங்கள் அபிப்பிராயம்தான் என் அபிப்பிராயமும். மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது. ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா? உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா? இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா?" என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.

கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சம்புவரையர், "அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தௌிவுபடுத்த வேண்டும். இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன? அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா? கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம். இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம். அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம். தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்."

"சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள். இதைத் தௌிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு. முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்" என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார். "செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்... "

"ஆஹா!" "அப்படியா?" என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.

"ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும்? அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார். சிவ பக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது. இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது, அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தால், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன்வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்.."

"இதற்கு அத்தாட்சி என்ன?"

"உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன். அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா?"

பல குரல்கள் "இருக்கிறோம்! இருக்கிறோம்!" என்று ஒலித்தன.

"யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே?"

"இல்லை! இல்லை!"

"அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டு வருகிறேன். வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்!" என்று கூறிக் கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார். கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.

"இளவரசே! பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு வௌியே எழுந்தருள வேண்டும். தங்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!" என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.

மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன் வண்ணமான கரம். முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான். ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான். அடுத்த கணம் பூரண சந்திரனையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது. மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வௌியே வந்து புன்னகை புரிந்து நின்றது.ஆகா! கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர்! பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம்? தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர் மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான். அந்த இடத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது ஆகையால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.

இதற்குள் கீழே, "மதுராந்தகத்தேவர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! வெற்றி வேல்! வீரவேல்!" என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின. கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான். இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணி, தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக் கொண்டான்.

 

பக்க தலைப்பு



ஒன்பதாம்அத்தியாயம்
வழிநடைப் பேச்சு




பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. "இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!

அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா?

அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வௌிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வௌிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வௌிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?

சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது?

சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.

ஆனால் நியாயா நியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.

"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.

வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.

"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்" என்றான் கந்தமாறன்.

"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.

"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."

"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"

"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."

"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு.."

"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!.." என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். "வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!" என்றான்.

"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.

ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது."

கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.

"ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"

"மணிமேகலை!"

"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்.."

கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.

"இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!"

"அவ்விதம் நான் சொன்னது உண்மை தான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"

வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வௌிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!

"ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்..."

"எதிர்பார்த்தாயா அது எப்படி?"

"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்? எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்."

"நண்பா! போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வௌிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!"

"கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?"

"அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வௌியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு!.."

"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!"

"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்..."

"இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?"

"ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்லுவது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!"

"சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.

ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஹோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.

தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.

கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.

"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.

"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தமாறன்.

"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.

"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!"

"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?"

இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.

கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.

படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.

ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.

கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.

வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், "விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்!" என்றார்.

ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.

ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.

 

பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
குடந்தை சோதிடர்




குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?

பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?

கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!

பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்குத்தான் அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வௌியேறி அறியாத அரசகுலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.

நல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா இது என்ன அருமையான காட்சி? அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது?

சித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்? அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்? அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார்? இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்? அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி; ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்; ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது? அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது? நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே! மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன? படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:-

                    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, 
                    
                        மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் 
                    
                    கருங்கயற்கண் விழித்து ஒல்கி 
                    
                        நடந்தாய் வாழி! காவேரி ! 
                    
                    
                    
                    கருங்கயற்கண் விழித்து ஒல்கி 
                    
                        நடந்த எல்லாம் நின்கணவன் 
                    
                    திருந்து செங்கோல் வளையாமை 
                    
                        அறிந்தேன் வாழி காவேரி !
                    
                    
                    
                    பூவர் சோலை மயிலாடப் 
                    
                        புரிந்து குயில்கள் இசைபாடக் 
                    
                    காமர் மாலை அருகசைய 
                    
                        நடந்தாய் வாழி காவேரி ! 
                    
                    
                    
                    காமர் மாலை அருகசைய 
                    
                         நடந்த வெல்லாம், நின் கணவன் 
                    
                    நாம வேலின் திறங்கண்டே 
                    
                         அறிந்தேன் வாழி! காவேரி! 
                    
                    


இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும்! அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா! பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன? பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை! பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை!

படகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவௌி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது. இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள்; அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப் பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நௌிந்து செல்லும் காவேரி.

வாசகர்களை மேலும் சந்தேக ஆராய்ச்சி நிலையில் விட்டு வைக்காமல் இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி. இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண். பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள். இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.

இந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள். குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, "நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து விடுகிறோம்!" என்றாள். அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள். குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள்.இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.

கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது. "வானதி! ரதத்தில் ஏறிக்கொள்!" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து. வானதி ஏறியதும் தானும் ஏறி கொண்டாள் ரதம் வேகமாய்ச் சென்றது.

"அக்கா! நாம் எங்கே போகிறோம்? எனக்குச் சொல்லலாமா?" என்று வானதி கேட்டாள்.

"சொல்லாமல் என்ன? குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்!" என்றாள் குந்தவை.

"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா? என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக?"

"வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!"

"அக்கா! தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம் திரும்பி விடுவோம்!"

"இல்லையடி, அம்மா, இல்லை! உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை; என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்."

"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்."

"எனக்குக் கலியாணம் ஆகுமா? அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்."

"அக்கா!இதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன்! தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்? தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்! இமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா? ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே! தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!"

"வானதி நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது. எந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக வேண்டி வருமல்லவா? எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி! வேறு நாட்டுக்குப் போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..."

"அது ஒரு தடையாகாது; தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான். இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்."

"ஆகா! எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய்? அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா?"

"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்?"

"அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வானதி! ஔவையாரைப் பார்! அவள் என்றும் கன்னி அழியாத கவீசுவரியாகப் பல காலம் ஜீவித்திருக்கவில்லையா?"

"ஔவையார் இளம் பிராயத்திலேயே கடவுளின் வரத்தினால் கிழவியாகப் போனவள் தாங்கள் அதைப்போல் ஆகவில்லையே?"

"சரி அப்படிக் கலியாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழ நாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன். அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது. என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான். இங்கேயே சோழ நாட்டிலேயே இருந்து விடுவான்..."

"அக்கா! அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே?"

"ஒரு நாளும் போக மாட்டேன் சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்."

"இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி அடைந்தது."

"அது என்னடி?"

"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீர வேண்டும். உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை."

"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்?"

"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா!"

"அடியே! எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று?"

"தங்களை போலவா நான்?"

"அடி கள்ளி! எனக்கு எல்லாம் தெரியும். என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய்? உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது? உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது எனறா நினைத்தாய்?"

"அக்கா! அக்கா! நான் அவ்வளவு மடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?"

"பனித்துளி சிறியது தான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதோ, இல்லையோ?"

வானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், "அப்படியா சொல்கிறீர்கள்! பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா?" என்றாள். பிறகு திடீரென்று மனச் சோர்வு வந்து விட்டது. "பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப்பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது.வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது!"

"அது தவறு, வானதி! பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கண்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வௌியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா?"

"அக்கா! இதெல்லாம் என்னைத் தேற்றுவதற்காகச் சொல்கிறீர்கள்."

"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு. இத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே? அதனால்தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்."

"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்?" என்று கூறி வானதி பெருமூச்செறிந்தாள்.

குடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது. ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது.

வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.

"பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும்! வரவேணும்! இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்!" என்றார்.

"சோதிடரே! இந்த வேளையில் தங்களைத் தேடிக் கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா?" என்றாள் குந்தவை.

"வரமாட்டார்கள், தாயே! இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை. உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள். இப்போது தங்களுடைய திருத் தந்தை சுந்தரச் சோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது. எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்?" என்றார் சோதிடர்.

"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்!"

"இல்லை, பெருமாட்டி! இல்லவே இல்லை! நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன்தான் சொல்லுவான்! உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்!" என்று ஜோசியர் சமத்காரமாகப் பேசினார்.

ரதசாரதியைப் பார்த்துக் குந்தவை, "ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை!" என்றாள்.

பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.

சோதிடர் தம் சீடனைப் பார்த்து, "அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!" என்று எச்சரித்தார்.

அரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன. குத்துவிளக்கு எரிந்தது, அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன. ராசிச் சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச்சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.

பெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.

"அம்மணி! வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்!" என்றார்.

"ஜோசியரே! அதையும் தங்கள் ஜோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் குந்தவை.

"ஆகட்டும் தாயே!" என்று கூறிச் ஜோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.

பிறகு கண்ணைத் திறந்து பார்த்து, "கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள். அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது உண்மைதானா?" என்றார்.

"ஆஹா! பிரமாதம்! உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது? ஆம் ஜோசியரே! இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள். வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள். என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள். நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. அடிக்கடி சோர்ந்து போகிறாள்.பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள். இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை..."

"தாயே! கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர்? இவருடைய பெயர் வானதி தானே?" என்றார் ஜோதிடர்.

"ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!"

"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!" என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார். பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.

 

பக்க தலைப்பு

இரண்டாம் பாகம் - சுழற்காற்று



முதலாவது அத்தியாயம்
பூங்குழலி




அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது.கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது.காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள் அசையவில்லை. நாலா பக்கமும் நிசப்தம் நிலவியது.செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும் இடத்தைநோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.

கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது, கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர் இளம் பெண் இருந்தாள். அவள ைப் பார்த்ததும் சேந்தன் அமுதன் தன் மாமன் மகளைக் குறித்து வர்ணனை செய்தது நமக்கு நினைவு வருகிறது. ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?

பூங்குழகு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.

                        "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? 
                    
                        நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? 
                    
                        காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே! 
                    
                        வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே 
                    
                        வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க 
                    
                        மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்? 
                    
                        வாரிதியும் 
                    
                    
                    
                    
                    
                    டங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும் 
                    
                        காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?" 
                    
                    


அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது.

பூங்குழலி கானத்தை நிறுத்தினாள். படகின் துடுப்பை நாலு தடவை வலித்தாள். படகு கரை அருகில் வந்து சேர்ந்தது. பூங்குழலி படகிலிருந்து துள்ளிக் குதித்துக் கரையில் இறங்கினாள். படகைக் கரையில் இழுத்து போட்டாள். கரையில் சில கட்டு மரங்கள் கும்பலாகக் கிடந்தன. அவற்றின்மிது படகு சாய்ந்து நிற்கும்படி தூக்கி நிறுத்தினாள். சாய்ந்து நின்ற படகில் தானும் சாய்ந்து கொண்டு ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள்.

அதோ கலங்கரை விளக்கின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகி விட்டது. தீ ஜுவாலைவிட்டு எரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்கும். கடலில் செல்லும் மரக்கலங்களுக்கு அது 'அருகில் நெருங்க வேண்டாம்!' என்று எச்சரித்துக் கொண்டிருக்கும். கோடிக்கரை ஓரத்தில் கடலில் ஆழமே கிடையாது. கட்டு மரங்களும், சிறிய படகுகளும்தான் அந்தப் பகுதியில் கரை ஓரமாக அணுகி வரலாம்.மரக்கலமும் நாவாயும் நெருங்கி வந்தால் தரைதட்டி மணலில் புதைந்து விடும். வேகமாகத் தரையில் மோதினால் கப்பல் பிளந்து உடைந்தும் போய்விடும். ஆதலின், கோடிக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமான உதவியைச் செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் குட்டை மரங்கள் அ ர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர், கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸரீ சுந்தர மூர்த்தி நாயனார் இந்தக் கோடிக் கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார்.

"அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியே இருந்தீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!" என்று மனமுருகிப் பாடினார்.

                        "கதிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
                    
                           குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ? 
                    
                         கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் 
                    
                           அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?" 
                    
                    
                    
                        "மத்தம் மலிசூழ் மறைக்காடதன் றென்பால் 
                    
                           பத்தர் பலர் பாடவிருந்த பரமா! 
                    
                        கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா 
                    
                           எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!" 
                    
                    


ஸரீசுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டுப் போன இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கோடிக்கரைக் குழகர் அதே நிலையில்தான் இருந்தார்.(ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்கும் கோடிக்கரைக் குழகர் அதே தனிமை நிலையில்தான் இருந்து வருகிறார்!) சுற்றிலும் இன்னும் கொஞ்சம் காடுகள் மண்டிப் போயிருந்தன. அக்காடுகளில் மரப் பொந்துகளில் ஆந்தைகளும் கூகைகளும் குழறின.பார்ப்பதற்குப் பயங்கரமான வேடுவர்கள் சிலர்தான் காட்டின் மத்தியில் ஆங்காங்கு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார்கள்.


ஆம்; ஒரே வித்தியாசம் இருந்தது. ஸரீ சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்திருந்த ோது கலங்கரை விளக்கம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதற் பராந்தகரின் காலத்திலேதான் அது கட்டப்பட்டது. கலங்கரை விளக்கத்தில் பணிசெய்வோருக்கென்று சில ஓட்டு வீடுகள் அதைச் சுற்றிச் கட்டப்பட்டன. கோடிக்கரைச் குழகர் கோயிலில் பூஜை செய்யும் பட்டரும் அங்கே வந்து குடியேறினார்.

பூங்குழலி கடற்கரை ஓரத்தில் படகின்மீது சாய்ந்த வண்ணம் நாற்புறமும் பார்த்தாள். கலங்கரை விளக்கத்தைப் பார்த்து அந்தப் பக்கம் போகலாமா என்று யோசித்தாள். பிறகு குழகர் கோயிலின் கோபுரகலசத்தை நோக்கினாள்.அச்சமயம் கோயிலில் சேமங்கலம் அடிக்கும் ஓசை கேட்கவே, பூங்குழலி ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அதற்குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? கோவிலுக்குப் போகலாம்! பட்டரைத் தேவாரம் பாடச் சொல்லிக் கேட்கலாம். பிறகு பிரசாதமும் வாங்கிக் கொண்டு வரலாம்.

இப்படி முடிவு செய்துகொண்டு பூங்குழலி கோயில் இருந்த திசையை நோக்கி நடந்தாள். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டும் நடந்தாள். வழியில் மான் கூட்டம் ஒன்றைக் கண்டாள்.மான்கள் மணல் வௌியைத் தாண்டிக் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஏழெட்டுப் பெரிய மான்களோடு ஒரு சிறிய மான் குட்டியும் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. மான் கூட்டத்தைப் பார்த்ததும் பூங்குழலிக்கு உற்சாகம் உண்டாயிற்று. அவற்றைப் பிடிக்கப் போவதுபோல் தொடர்ந்து குதித்து ஓடினாள். ஆனால் என்னதான் விரைவாக ஓடினாலும் மான்களோடு போட்டியிட முடியுமா? மான் கூட்டம் பூங்குழலியை முந்திக் கொண்டது.

முன்னால் சென்ற மான்கள் ஓரிடத்தில் நாலு கால்களையும் தூக்கி வானத்தில் பறப்பது போல் நீண்ட தூரம் தாவிக் குதித்தன. அங்கே புதை சேற்றுக் குழி இருக்கிறதென்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். பெரிய மான்கள் எல்லாம் அக்குழியை ஒர ே தாண்டலில் தாண்டி அப்பால் பத்திரமாய் இறங்கிவிட்டன. ஆனால் மான்குட்டியினால் முழுவதும் தாண்ட முடியவில்லை. அக்கரை ஓரமாக அதன் பின்னங்கால்கள் சேற்றுக் குழியில் அகப்பட்டுக் கொண்டன. முன்னங்கால்களைக் கரையில் ஊன்றி மான் குட்டி ஆன மட்டும் கரை ஏற முயன்றது. ஆனால் அதன் பின்னங்கால்கள் சேற்றில் மேலும் மேலும் புதைந்து கொண்டிருந்தன. தாய் மான் கரையில் நின்று குட்டியின் நிலையைக் கவலையுடன் நோக்கியது. அதனால் தன் குட்டிக்கு உதவி எதுவும் செய்ய முடியவில்லை.

இதையெல்லாம் ஒரு நொடியில் பார்த்து அறிந்து கொண்ட பூங்குழலி அந்தப் புதை சேற்றுக் குழி எங்கே முடிகிறது என்பதைக் கண்டு தெரிந்து கொண்டாள்.புதைகுழி ஓரமாக ஓடிச் சென்று கெட்டியான இடத்தின் வழியாகக் கடந்து எதிர்ப்புறத்தில் மான் குட்டி சேற்றில் அகப்படுக் கொண்டு தவித்த இடத்தை அணுகினாள். தாய் மான் முதலில் அவளைக் கண்டு மிரண்டது. பூங்குழலிக்கு மானின் பாஷை தெரியும் போலும்! மிருதுவான குரலில் அவள் ஏதோ சொல்லவும் தாய் மான் பயம் நீங்கி நின்றது.பூங்குழலி புதை சேற்றுக் குழியின் கரை ஓரத்தில் முன்னங்கால்களை மடித்து உட்கார்ந்து, கைகளை நீட்டி மான் குட்டியைப் பற்றிப் பலமாக இழுத்துக் கரையேற்றினாள்.சில விநாடி நேரம் அந்த மான்குட்டியின் உடம்பு வெடவெட வென்று நடுங்கிக் கொண்டிருந்தது.தாய் மான் அதனருகில் நின்று முகர்ந்து பார்த்துத் தைரியம் கூறியது போலும்! அவ்வளவுதான்! அடுத்த விநாடி தாயும், குட்டியும் மீண்டும் பாய்ந்தோடின.

"சீ! கொஞ்சமும் நன்றியில்லாத மிருக ஜன்மங்கள்!" என்று பூங்குழலி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். "ஆனால் மனிதர்களைவிட இந்த மான்கள் மட்டமாய்ப் போய்விட்டவில்லை!" என்று அவளே தேறுதலும் சொல்லிக் கொண்டாள்.

பிறகு மறுபடியும் குழகர் ஆலயத்தை நோக்கி நடந்தா ்.

மணல் வௌியைத் தாண்டியதும் மரஞ் செடிகள் அடர்ந்த காட்டு வழியில் போக வேண்டியிருந்தது. மேட்டில் ஏறியும், பள்ளத்தில் இறங்கியும் போக வேண்டியிருந்தது. அந்தக் காட்டை இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். அங்கே கற்பாறைகளினால் அமைந்த மலைகளோ, குன்றுகளோ இல்லை. ஒரே மணல் வௌிதான். ஆங்காங்கு மணல் மேடிட்டு, மணல் மேட்டின்மீது செடிகளும், மரங்களும் முளைத்ததினால் கெட்டிப்பட்டுக் குன்றுகளாகவே மாறிப் போயிருந்தன.குன்றுகளுக்குப் பக்கத்தில் பள்ளங்களும் இருந்தன.அத்தகைய காட்டில் வழி கண்டுபிடித்துப் போவது எளிய காரியமன்று. வெகுதூரம் நடந்துவிட்டது போலத் தோன்றும்; ஆனால் திரும்பத் திரும்பப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருப்போம்!

பூங்குழலி அந்தக் காட்டு வழியில் புகுந்து அதி விரைவாக நடந்து ஆலயத்தினருகே வந்து சேர்ந்தாள். கோவிலுக்கு வௌியிலும், உட்பிரகாரத்திலும் கொன்னை, பன்னீர் முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்து மலர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தன. பூங்குழலி ஆலயத்துக்குள் போனாள்.பட்டர் அவளைப் பார்த்து முகமலர்ந்தார். அந்தக் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவோர் அருமை. ஆதலின் அருமையாக வருகிறவரைப் பார்த்துப் பட்டர் மகிழ்வது இயல்புதானே?

தேங்காய் மூடியும், பிரசாதமும் கொண்டு வந்து பட்டர் கொடுத்தார். "அம்மா கொஞ்சம் காத்திருக்கிறாயா? நானும் இதோ சந்நிதியைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன்!" என்றார். இருட்டிய பிறகு அந்தக் காட்டு வழியில் செல்வது கொஞ்சம் சிரமமான காரியந்தான். ஆனால் வழிகாட்டுவதற்குப் பூங்குழலி இருந்தால் கவலையே கிடையாது.

"இருக்கிறேன், ஐயா! எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. மெதுவாகக் கோயில் கைங்கரியங்களை முடித்துக்கொண்டு புறப்படுங்கள்!" என்று பூங்குழலி கூறிவி ட்டுக் கோயில் பிரகாரத்துக்கு வந்தாள். மரக்கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு பிரகாரத்தின் மதில் சுவரின் மேல் தாவி ஏறினாள். மதில் மூலையில் நந்தி பகவானுடைய பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலைமீது சிறிது சாய்ந்த வண்ணம் மதில்மீது காலை நீட்டிப் படுத்தாள். தேங்காய் மூடியைப் பல்லினால் சுரண்டிச் சாப்பிடத் தொடங்கினாள்.


நாலாபுறமும் இருள் சூழ்ந்து வரும் விசித்திரத்தைப் பூங்குழலி பார்த்துக் கொண்டேயிருக்கையில், குதிரையின் காலடிச் சத்தத்தைக் கேட்டாள். சத்தம் வந்த வழியே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைக் காலடியின் சத்தம் அவளுடைய உள்ளத்தில் ஏதேதோ பழைய ஞாபகங்களை எழுப்பி அவளைக் கனவு லோகத்துக்குக் கொண்டு போயிற்று. எங்கிருந்தோ இனந் தெரியாத ஒரு துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. வருகிறது யாராயிருக்கக்கூடும்? யாராயிருந்தால் நமக்கு என்ன கவலை? கொஞ்ச காலமாகப் புது ஆட்கள் வருகிறதும் போகிறதும் அதிகமாய்த் தானிருக்கிறது. இராஜாங்க காரியமாக வருகிறார்களாம்; போகிறார்களாம். நேற்றைக்குக் கூட இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே அருவருப்பாயிருந்தது. அண்ணனைப் படகு வலிக்கச் சொல்லி ஈழத்துக்குச் சென்றார்கள். பணமும் நிறையக் கொடுத்தார்கள். அவர்களுடைய பணத்திலே இடி விழட்டும்! யாருக்குப் பணம் வேண்டும்! பணத்தை வைத்துக் கொண்டு இந்த நடுக் காட்டில் என்ன செய்வது? ஆனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பணம் என்றால் ஒரே ஆசை. எதற்கோ தெரியவில்லை! சேர்த்துச் சேர்த்துப் புதைத்து வைக்கிறார்கள்.

குதிரைக்காலடிச் சத்தம் இதோ அருகில் நெருங்கி வருகிறது. ஒரு குதிரை அல்ல; இரண்டு குதிரைகள் வருவதுபோலத் தோன்றுகிறது. இதோ அவை தென்படுகின்றன. பள்ளத்திலிருந்து மெள்ள மெள்ள மேட்டில் ஏறி வருகின்றன. ெடுந்தூரம் பிரயாணம் செய்து களைத்துப் போன குதிரைகள். ஒவ்வொரு குதிரை மீதும் ஒரு ஆள் வருகிறான். முதலில் வருகிற குதிரை மேல் வருகிறவன் வாலிபப் பிராயத்தவன். பார்க்க இலட்சணமாக இருக்கிறான்; வாட்டச்சாட்டமாகவும் இருக்கிறான் முகத்தில் கம்பீரம் இருக்கிறது. ஆனால் அவளுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருக்கும் அந்த இன்னொரு முகத்தின் அழகும், கம்பீரமும் எங்கே? இவனுடைய முகம் எங்கே? பார்க்கப் போனால் இவனுடைய முகம் மரப்பொந்தில் இருக்கும் ஆந்தை முகம் மாதிரியல்லவா சப்பட்டையாயிருக்கிறது?

குதிரைமேல் வந்த இருவரில் முதலில் வந்தவன் நமது பழைய நண்பனாகிய வல்லவரையன் வந்தியத்தேவன்தான்.பின்னால் வந்தவன் வைத்தியருடைய மகன். இருவரும் பழையாறையிலிருந்து இங்கே வந்து சேர்வதற்குள் இளைத்துக் களைத்துச் சோர்வுற்றுப் போயிருக்கிறார்கள். ஆயினும் வந்தியத்தேவனுடைய முகம், கோயில் மதில்மேல் காலை நீட்டிச் சாய்ந்து கொண்டிருந்த பூங்குழலியைக் கண்டதும் சிறிது மலர்ந்தது. அவள் தன்னுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு இயற்கையான உற்சாகமே பிறந்து விட்டது. அவனும் குதிரையே நிறுத்தி விட்டு அவளுடைய முகத்தை ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கலானான். தன் முகத்தை மரப்பொந்திலுள்ள ஆந்தையின் முகத்தோடு அவள் ஒப்பிடுகிறாள் என்று மட்டும் அவன் அறிந்திருந்தால் அவ்வளவு உற்சாகப்பட்டிருக்க முடியாது தான். ஒரு மனத்திலுள்ளதை இன்னொருவர் முழுதும் அறிய முடியாமலிருப்பது எவ்வளவு அநுகூலமாயிருக்கிறது?

குதிரைமேல் வந்தவன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை பூங்குழலி அறிந்தாள். கையில் தான் தேங்காய் மூடிவைத்துக்கொண்டு பல்லினால் சுரண்டித் தின்று கொண்டிருப்பதையும் நினைத்தாள். உடனே எங்கிரு ந்தோ ஒரு நாண உணர்ச்சி வந்து அவளைப் பற்றிக் கொண்டது. பிராகார மதில் சுவரிலிருந்து வௌியே வெண் மணலில் குதித்தாள். மதில்சுவர் ஓரமாக ஓடத் தொடங்கினாள்.

அதைப் பார்த்த உடனே வந்தியத்தேவனுக்கும் குதிரை மேலிருந்து குதிக்கத் தோன்றியது. குதித்துப் பூங்குழலியைப் பின்தொடர்ந்து பிடிப்பதற்கு ஓட வேண்டும் என்று தோன்றியது. அவ்வாறே அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான். இந்த அர்த்தமற்ற செயலின் காரண காரியங்களை யார் கண்டுபிடித்துச் சொல்ல முடியும்? ஆயிரம் பதினாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மனித குலத்தின் பரம்பரை இயற்கைதான் பூங்குழலியை ஓடச் செய்தது என்றும், அதுவே வந்தியத்தேவனைத் துரத்திப் பிடிக்கச் செய்தது என்றும் சொல்ல வேண்டியதுதான்.

 

பக்க தலைப்பு



இரண்டாம்அத்தியாயம்
சேற்றுப் பள்ளம்




காட்டிலும் மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வந்தியத்தேவன் ஓடினான். ஒருசமயம் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். மறு கணத்தில் மறைந்தாள். இனி அவளைப் பிடிக்க முடியாது என்று தோன்றியபோது மறுபடியும் கண்ணுக்குப் புலப்பட்டாள். மாய மாரீசனைத் தொடர்ந்து இராமர் சென்ற கதை வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. ஆனால் இவள் மாயமும் அல்ல; மாரீசனும் அல்ல இவளுடைய கால்களிலே மானின் வேகம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அம்மம்மா! என்ன விரைவாக ஓடுகிறாள்? 'எதற்காக இவளைத் தொடர்ந்து ஓடுகிறோம், இது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று எண்ணினான். உடனே அதற்கு ஒரு காரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன் சிநேகம் செய்து கொண்டால் வந் காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரை விளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வரும்போதே அவர்களுக்குக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும் கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக ஏற்பட்டதே தவிர வழி அகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியை வந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப் போல் பிடிபடாமல் ஒடுகிறாளே? இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான்? ஆனால் ஓட்டப் பந்தயத்தில் கூட ஒரு பெண்ணுக்குத் தோற்பது என்றால், அதுவும் மனத்துக்கு உகந்ததாயில்லை...

ஆ! அதோ திறந்தவௌி வந்துவிட்டது. சற்றுத் தூரத்தில் நீலக்கடல் தெரிகிறது. விரிந்து பரந்து அமைதி குடிகொண்ட அந்தக் கடலின் தோற்றம் என்ன அழகாயிருக்கிறது! அதோ கலங்கரை விளக்கமும் தெரிகிறது. அதன் உச்சியில் இப்போது ஜோதி கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் செந்நிறக் கதிர்கள் நாலா பக்கமும் பரவி விழுந்து விசித்திர ஜால வித்தைகள் புரிகின்றன.

இந்த இடத்தில் இந்தப் பெண்ணைப் பின்தொடர்வதை விட்டுவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிப் போகலாமா? கூடாது!கூடாது! இந்தத் திறந்த வௌியில் இவளை ஓடிப் பிடிப்பது சுலபம். இங்கே அவ்வளவு மணலாகக் கூட இல்லை. கால் மணலில் புதையவில்லை. பூமியில் புல் முளைத்துக் கெட்டிப் பட்டிருக்கிறது. சில இடங்களில் சேறு காய்ந்து பொறுக்குப் படர்ந்திருக்கிறது. இங்கேயெல்லாம் தடங்கலின்றி ஓடலாம். அந்தப் பெண்ணை இலகுவாய்ப் பிடித்துவிடலாம்! மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள்? எவ்வளவு ஓடினாலும் முடி வில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும்! ஒருவேளை இந்த விந்தையான பெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ! அடடா! குதிரையிலேயே ஏறி வராமற் போனோமே? அப்படி வந்திருந்தால் இந்தத் திறந்த வௌியில் ஒரு நொடியில் இவளைப் பிடித்து விடலாமே?

அதோ அவள் சற்றுத் தயங்கி நிற்கிறாள். நேரே கடலே நோக்கி ஓடாமல் வலதுபக்கமாகத் திரும்பி ஓடுகிறாள்! தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்ட காட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான்! இத்தனை நேரம் ஓடியதும் வீண்! வந்தியத்தேவனுடைய கால்களும் அச்சமயம் கெஞ்ச ஆரம்பித்து விட்டது...

மீண்டும் அவளுடைய மனத்தை மாற்றிக் கொண்டு விட்டாள் போலும்! காட்டுக்குள் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள் போலும்! பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரை விளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்து விடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து "பெண்ணே! ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய்? உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!" என்று சொன்னால், எத்தனை அதிசயம் அடைவாள்! சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன? ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது!...

வந்தியத்தேவன் மனத்திற்குள் தீர்மானித்தபடி தன் தேகத்தில் மிச்சமிருந்த வலிமையையெல்லாம் உபயோகித்துப் பாய்ந்து ஓடினான். திரும்பி ஓடிவந்து கொண்டிருந்த அவளை நாலே பாய்ச்சலில் பிடித்துவிடலாம் என்பதுதான் அவனுடைய உத்தேசம். திடீரென்று "ஐயோ!" என்றான். தனக்கு என்ன நேர்ந்து விட்டது என்பது முதலில் அவனுக்கே தெரியவி ்லை. பிறகு புலப்படத் தொடங்கியது. அவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது!

அடாடா! இந்த இடம் நம்மை எப்படி ஏமாற்றி விட்டது? மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்து பொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதை சேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூட அப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில் முழுதுமே முழுகி மறைந்து விடுமாம்! அத்தகைய புதைகுழிதானோ இது? அப்படித் தான் தோன்றுகிறது. முழங்காலும் மறைந்து விட்டதே! மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ? விரைவில் தொடை வரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே! யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதை சேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா! ஐயோ! இதுவா நமது முடிவு? நாம் கண்ட எத்தனை எத்தனையோ பகற் கனவுகள் எல்லாம் இதிலேயே புதைந்து விட வேண்டியதுதானா? இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமான பெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு.தப்புதவதற்கு வேறு வழியில்லை.ஒரு பெருங்கூச்சல் போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், 'ஐயோ! நான் செத்தேன்! சேற்றில் முழுகிச் சாகிறேன். எனக்குக் கைகொடுத்து உதவி செய்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா?" என்று கத்தினான்.

அந்தக் கூக்குரல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவனுக்கு நேர் எதிரே சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பூங்குழலி நின்றாள். ஒரு கணம் தயங்கினாள். வந்தியத்தேவனுடைய அபாயமான நிலையைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.

மறுகணம் அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகு உபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டு தடவை வலித்தாள். அடாடா! இது என்ன அதிசயம்? அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல் அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது? மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா! அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை! தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே!

கரை ஏறியதும் வந்தியத் தேவன் கலகலவென்று சிரித்தான். அவனுடைய கால்கள் மட்டும் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தன.

"என்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விட்டதாக உனக்கு எண்ணம் போலிருக்கிறது! நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ?" என்றான்.

"பின் எதற்காக அப்படி 'ஐயோ! ஐயோ!' என்று கத்தினாய்?" என்று பூங்குழலி கேட்டாள்.

"உன்னை ஓடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தான்!"

"அப்படியானால் மறுபடியும் உன்னைக் குழியிலேயே தள்ளி விடுகிறேன். உன் சாமர்த்தியத்தினால் நீயே கரை ஏறிக்கொள்!" என்று பூங்குழலி சொல்லித் தள்ள யத்தனித்தாள்.

"ஐயையோ!" என்று வந்தியத்தேவன் விலகி நின்று கொண்டான்.

"எதற்காக அலறுகிறாய்?"

"உயிருக்காகப் பயப்படவில்லை; சேற்றுக்குத்தான் பயப்படுகிறேன்! ஏற்கெனவே தொடை வரைக்கும் சேறா ிவிட்டது!"

பூங்குழலியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"அதோ கடல் இருக்கிறது! போய் சேற்றை அலம்பிச் சுத்தம் செய்துகொள்!" என்றாள்.

"நீ கொஞ்சம் முன்னால் சென்று வழிகாட்ட வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன். இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள் சேற்றுப் பள்ளத்தைச் சுற்றிக் கொண்டு சென்றார்கள்.

"என்னைக் கண்டதும் எதற்காக அப்படி விழுந்தடித்து ஓடினாய்? என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"இல்லை; பேய்பிசாசு என்று எண்ணவில்லை. ஆந்தை என்று எண்ணினேன். உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சி மாதிரியே இருக்கிறது!" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

வந்தியத்தேவனுக்குத் தன் தோற்றத்தைக் குறித்துக் கர்வம் அதிகம். ஆகையால் அவனை ஆந்தை மூஞ்சி என்று சொன்னது அவனுக்கு மிக்க கோபத்தை உண்டாக்கிற்று.

"உன்னுடைய குரங்கு முகத்துக்கு என்னுடைய ஆந்தை முகம் குறைந்து போய்விட்டதாக்கும்!" என்று முணு முணுத்தான்.

"என்ன சொன்னாய்?"

"ஒன்றுமில்லை. என்னைக் கண்டு எதற்காக அப்படி ஓடினாய் என்று கேட்டேன்."

"நீ எதற்காக அப்படி என்னைத் துரத்தித் கொண்டு வந்தாய்?"
"கலங்கரை விளக்கத்துக்கு வழி கேட்பதற்காக உன்னைத் துரத்திக் கொண்டு வந்தேன்..."

"அதோ தெரிகிறதே விளக்கு! என்னை வழி கேட்பானேன்?"

"காட்டுக்குள் புகுந்த பிறகு தெரியவில்லை. அதனாலே தான்! நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய்?"

"ஆண் பிள்ளைகள் மிகப் பொல்லாதவர்கள். ஆண் பிள்ளைகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பத்திலை!"

"சேந்தன் அமுதனைக்கூடவா?" என்றான் வல்லவரையன் கொஞ்சம் மெல்லிய குரலில்.

"யாரைச் சொன்னாய்?"

"தஞ்சாவூர் சேந்தன் அமுதனைச் சொன்னேன்."

"அவனைப் பற்றி உனக்கு ன்ன தெரியும்?"

"அவன் உன் அருமைக் காதலன் என்று தெரியும்."
"என்ன? என்ன?"

உன் பெயர் பூங்குழலி தானே?"

"என் பெயர் பூங்குழலிதான். சேந்தன் அமுதனைப் பற்றி என்ன சொன்னாய்? அவன் என்..."

"அவன் உன் காதலன் என்றேன்."

பூங்குழலி கலீர் என்று நகைத்தாள். "அப்படி யார் உனக்குச் சொன்னது?" என்றாள்.

"வேறு யார் சொல்வார்கள்? சேந்தன் அமுதன் தான் சொன்னான்".

"தஞ்சாவூர் வெகு தூரத்தில் இருக்கிறது. அதனாலே தான் அப்படிச் சொல்லித்தப்பித்துக் கொண்டான்!"

"இல்லாவிட்டால்...?"

"இங்கே என் முன்னால் சொல்லியிருந்தால் அந்தச் சேற்றுக் குழியில் தூக்கிப் போட்டிருப்பேன்."

"அதனால் என்ன? சேற்றை அலம்பிக்கொள்ளக் கடலில் ஏராளமாய்த் தண்ணீர் இருக்கிறதே!"

"நீ விழுந்த புதை சேற்றுக்குழியில் மாடு, குதிரை எல்லாம் முழுகிச் செத்திருக்கின்றன. யானையைக் கூட அது விழுங்கி விடும்!"

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனை அந்தப் படுகுழி கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துக் கொண்டான். இவள் மட்டும் வந்து கரையேற்றியிராவிட்டால், இத்தனை நேரம்... அதை நினைத்தபோது அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

"சேந்தன் அமுதன் என்னைப்பற்றி இன்னும் என்ன சொன்னான்?" என்று பூங்குழலி கேட்டாள்.

" நீ அவனுடைய மாமன் மகள் என்று சொன்னான். உன்னைப் போன்ற அழகி தேவலோகத்திலே கூடக் கிடையாது என்று சொன்னான்..."

"தேவலோகத்துக்கு அவன் நேரிலே போய்ப் பார்த்திருப்பான் போலிருக்கிறது இன்னும்?..."

"நீ நன்றாகப் பாடுவாய் என்று சொன்னான். நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்தி விட்டுப்பாட்டைக் கேட்குமாம்! அது உண்மைதானா?"

"நீயே அதைத் தெரிந்துகொள்! இதோ! கடலும் வந்து விட்டது!..." இருவரும் கடற்கரை யோரமாக வந்து நின்றார கள்.

 

பக்க தலைப்பு



மூன்றாம் அத்தியாயம்
சித்தப் பிரமை




வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போலப் பவனி வந்து கொண்டிருந்தான். காற்றின் வேகம் அதிகமாயிருந்தது. கடல் குமுறியது; வெள்ளலைக் கைகளை நீட்டிக் கரையில் நின்றவர்களைத் தன்பால் இழுக்க முயன்றது.

"ஏன் நிற்கிறாய்? சீக்கிரம் சேற்றைக் கழுவிக் கொள்! வீட்டுக்கு உடனே போக வேண்டும். இல்லாவிட்டால் இன்று எனக்குச் சோறு கிடைக்காது. அண்ணி சோற்றுப் பானையைக் கவிழ்த்து விடுவாள்!" என்றாள் பூங்குழலி.

"இங்கே கடலின் ஆழம் அதிகமா?" என்று வந்தியத் தேவன் கேட்டான்.

"உன்னைப்போல் பயங்கொள்ளியை நான் பார்த்ததேயில்லை. இங்கே வெகுத்தூரத்துக்கு ஆழமே கிடையாது. அரைக்காத தூரம் கடலில் போனாலும் இடுப்பளவு தண்ணீர் தான் இருக்கும். ஆகையினாலே தான் ஒவ்வொரு நாள் இரவும் கலங்கரை விளக்கு எரிய வேண்டியிருக்கிறது!"

வந்தியத்தேவன் தயங்கித்தயங்கி தண்ணீரில் இறங்கினான். சேற்றைக் கழுவிக் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு கரை ஏறினான். சற்றுத் தூரத்தில் வைத்தியருடைய மகன் குதிரை மேலேறி வருவதைக் கண்டான்.வந்தியத்தேவனுடைய குதிரையும் பக்கத்தில் வந்தது. "ஐயையோ! குதிரை சேற்றில் இறங்கி விடப் போகிறதே!" என்றான் வந்தியத்தேவன்.

"இறங்காது; மனிதர்களைவிடக் குதிரைகளுக்கு விவேகம் அதிகம்!" என்றாள் பூங்குழலி.

"ஆனால் ஒரு குதிரையின் பேரில் மனிதன் இருக்கிறானே? அவள் என் குதிரையையும் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறானே?"

"அது கொஞ்சம் அபாயந்தான்! ஓடிப்போய் எச்சரிக்கை செய்!"
"நில்லு! நில்லு!" என்று கூச்சலிட்டுக் கொண்டே வந்தியத்தேவன் ஓடிப்போய்த் தடுத்து நிறுத்தினான் .

பூங்குழலியும் சற்று நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள். மூவரும் கலங்கரை விளக்கத்தை நோக்கி நடந்தார்கள். "நீ குதிரையில் ஏறிக்கொள்ளலாமே?" என்றாள் பூங்குழலி.

"இல்லை; உன்னுடன் நடந்தே வருகிறேன்."

பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்ததைப் போல் குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சற்று இலேசாகக் கனைத்தது. "உன்னை என் குதிரைக்குப் பிடித்துவிட்டது! இது மிக்க நல்லது."

"என்ன விதத்தில் நல்லது?"

"நான் இலங்கைக்குப் போகவேண்டும். இந்தக் குதிரையை உன்னிடம் ஒப்புவித்து விட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன்.பார்த்துக் கொள்கிறாயா?"

"ஓ! பார்த்துக் கொள்கிறேன். எல்லா மிருகங்களும் என்னிடம் சீக்கிரம் சிநேகமாகிவிடும். மனிதர்களுக்கு மட்டுந்தான் என்னைக் கண்டால் பிடிக்காது."

"என் அப்படிச் சொல்கிறாய்? சேந்தன் அமுதன் உன்பேரில்..."

"எனக்கும் மிருகங்களின் பேரில்தான் பிரியம்; மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது!"

"மனிதர்கள் அப்படி என்ன உனக்குச் செய்து விட்டார்கள்?"

"மனிதர்கள் பொல்லாதவர்கள். பொய்யும் புனை சுருட்டுமே அவர்களுக்கு வேலை!"

"எல்லோரையும் சேர்த்து அப்படிச் சொல்லிவிடக் கூடாது. சேந்தன் அமுதன் நல்லவன். இதோவருகிறானே, வைத்தியர் மகன், இவன் ரொம்ப நல்லவன்..."

"நீ எப்படி?"

"நானும் நல்லவன்தான். என் பெருமையை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது அல்லவா?"

"நீங்கள் இருவரும் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?"

"சக்கரவர்த்திக்கு உடம்பு குணம் இல்லை அல்லவா? அவருடைய நோயைக் குணப்படுத்தச் சிலமூலிகைகள் வேண்டியிருக்கின்றன.இந்தக் காட்டில் அபூர்வ மூலிகைகள் இருக்கின்றனவாமே? அதற்காகத் தான் வைத்தியர் மகனும், நான ம் வந்திருக்கிறோம்..."

"சற்று முன் இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொன்னாயே?"

"இங்கே கிடைக்காத மூலிகைகளைஇலங்கையிலிருந்து கொண்டுவர வேண்டும். இலங்கையில் அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி பர்வதம் இன்னமும் இருக்கிறதாமே?"

"ஆமாம், இருக்கிறது. அதனாலேதான் அங்கே ஆயிரக் கணக்கான ஜனங்கள் விஷக்காய்ச்சலில் இப்போது செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்..."

"அதுவும் அப்படியா? எனக்குத் தெரியாதே? எங்களை அனுப்பிய அரண்மனை வைத்தியருக்கும் அது தெரியாது..."

"ஆண்பிள்ளைகளைப் போல் பொய் சொல்லுகிறவர்களை நான் கண்டதேயில்லை. இரண்டு நாளைக்கு முன் இரண்டு பேர் இங்கே வந்தார்கள். அவர்களும் இப்படித்தான் ஏதோ பொய் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது கொஞ்சம் நம்பக் கூடிய பொய்யாக இருந்தது."

"அவர்கள் யார்? என்ன பொய் சொன்னார்கள்?"

"அவர்கள் தங்களை யாரோ மந்திரவாதி அனுப்பியதாகச் சொல்லிக் கொண்டார்கள். சக்கரவர்த்திக்கு ரட்சை கட்டுவதற்காகப் புலி நகமும், யானைவால் ரோமமும் வேண்டும் என்றும், அதற்காக இலங்கை போவதாகவும் சொன்னார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு என் அண்ணன் படகோட்டிக் கொண்டு இலங்கைக்குப் போயிருக்கிறான்..."

"ஓ! "ஓ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன். அவனுக்கு ரவிதாசன் என்னும் பயங்கரமந்திரவாதியின் நினைவு வந்தது. இரவில் படுத்திருந்த பாழும் மண்டபத்தில் அடைந்த பயங்கர அநுபவமும் நினைவுக்கு வந்தது.

'கடவுளே! இந்த மாதிரி காரியங்களிலெல்லாம் ஏன் சிக்கிக் கொண்டோம்? போர்க்களத்தில் நேருக்கு நேர் பகைவனுடன் நின்று போர் புரிய வேண்டும்! அப்போது நம் வீரத்தையும், தீரத்தையும் காட்ட வேண்டும்.இந்த மாதிரி தந்திர மந்திர சூழ்ச்சிகளில் எதற்காக அகப்பட்டுக் கொண்டோம்?'

'நமக்கு முன்னாலேயே இலங்கைக்குப் படகில் சென்றி ருப்பவர்கள் யாராயிருக்கக் கூடும்! இந்தப் பெண்ணை எவ்வளவு தூரம் நம்பலாம்? இவளும் ஒருவேளை அந்தச் சதிகாரக் கூட்டத்தில் சேர்ந்தவளாயிருக்கக் கூடுமோ!... இராது, இராது! இவள் கள்ளங்கபடம் அற்ற பெண். இவளை எப்படியாவது சிநேகிதம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.'

"பூங்குழலி! உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். சற்று முன் மூலிகை கொண்டு போக நான் வந்திருப்பதாகச் சொன்னேனே, அது பொய்தான்! மிக முக்கியமான இரகசியமான காரியத்துக்காக நான் இலங்கைக்குப் போகிறேன்.அதை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்."

"வேண்டாம்! முக்கியமான இரகசியமான காரியங்களைப் பெண்களிடம் சொல்லக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்..."

"சாதாரணப் பெண்களைப்பற்றித்தான் அப்படிச் சொல்லுவார்கள். உன்னிடம் இரகசியத்தைக் கூறினால் அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது." "நான் சாதாரணப் பெண் இல்லையென்று உனக்கு எப்படித் தெரிந்தது? என்னை நீ பார்த்து ஒரு நாழிகைகூட ஆகவில்லையே."

"பூங்குழலி! உன்னை அந்தக் கோவிலில் மதிலின்மீது முதன்முதலில் பார்த்த உடனேயே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. உன்னை ஒன்று கேட்கிறேன். அதற்கு உண்மையாக மறுமொழி சொல்கிறாயா?"


"கேட்டுப் பார்!"

"சேந்தன்அமுதன் உன்னுடைய காதலன் அல்ல என்பது நிஜமா? அவனை நீ மணந்து கொள்ளப் போவதில்லையா?"

"எதற்காகக் கேட்கிறாய்?"

"சேந்தன்அமுதன் என் சிநேகிதன், அவனுக்கு எதிராக ஒன்றும் நான் செய்யக் கூடாது. ஆனால் அவன் உன் காதலன் இல்லையென்றால்..."


"சொல்லு! ஏன் தயங்குகிறாய்!"

"அந்த ஸ்தானத்துக்கு நான் விண்ணப்பம் போடலாம் என்று பார்க்கிறேன். பூங்குழலி! காதலைப்பற்றி நீ குறைவாகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் காதலைக் காட்டிலும் தெய்வீகமான சக்தி வேறு ஒன்றும் கிட யாது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் எல்லோரும் கடவுளைக் காதலனாகக் கொண்டு பாடியிருக்கிறார்கள். தொல்காப்பியரும், வள்ளுவரும், மற்றும் தமிழ்ப் பெரும் புலவர்களும் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். காளிதாஸன் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறான். பிருந்தாவனத்தில் கண்ணன் கோபியரின் காதலுக்கு வசப்பட்டான்..."

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை நன்றாய்க் கேட்டு மனத்தில் வாங்கிக் கொள்ளும்!"

"அது என்ன?"

"எனக்கும் உம்மைக் கண்டால் பிடித்துத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன் வந்தவர்களைப் பார்த்ததும் உண்டான வெறுப்பு உம்மிடம் உண்டாகவில்லை..."

"ஓ! ஓ! நான் யோகசாலிதான்!"

"ஆனால் காதல், கீதல் என்ற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம்!"

"ஏன்? ஏன்?"

"சேந்தன் அமுதன் என் காதலன் இல்லை. ஆனால் எனக்கு வேறு காதலர்கள் இருக்கிறார்கள்..."

"அடடா! அடடா! வேறு காதலர்களா? யார்? எத்தனை பேர்?"

"இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அவர்களை உமக்குக் காட்டுவேன். நீரே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!" இப்படிச் சொல்லிவிட்டுப் பூங்குழலி 'ஹாஹாஹா' என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு வந்தியத்தேவனுடைய நெஞ்சை என்னமோ செய்தது. 'பாவம் இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமை போலும்! நம்முடைய காரியத்துக்கு இவள் மூலமாக எந்தவித உதவியையும் எதிர்பார்ப்பது வீண்! இவளிடம் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நலம்."

கலங்கரை விளக்கின் அருகிலிருந்த வீட்டை அவர்கள் நெருங்கினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒரு பெரியவரும், வயது முதிர்ந்த ஸ்திரீயும் வௌியே வந்தனர். பூங்குழலியையும், மற்ற இருவரையும், குதிரைகளையும் பார்த்துவிட்டுப் பெரியவர் திகைத்து நின்றார்.

"பூங்குழலி! இவர்கள் யார்? எங்கே இவர்களைப் பி ித்தாய்?" என்று கேட்டார்.

"நான் இவர்களைப் பிடிக்கவில்லை. அப்பா! இவர்கள்தான் என்னைப் பிடித்தார்கள்!" என்றாள் பூங்குழலி.

"எல்லாம் ஒன்றுதான்.'பொழுது போவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிடு' என்று சொன்னால் நீ கேட்பதில்லை. முந்தாநாள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்தாய். இன்றைக்கு இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய். இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?"

"சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை கொண்டு போவதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள், அப்பா!"

"ஏன் ஐயா, இந்தப் பெண் சொல்லுவது உண்மை தானா?" என்று அந்தப் பெரியவர் வந்தியத்தேவனைப் பார்த்துக் கேட்டார்.

"ஆம், பெரியவரே! இதோ சீட்டு!" என்று சொல்லி, வந்தியத்தேவன் இடையில் கட்டியிருந்த துணிச்சுருளிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்தான்.

அதே சமயத்தில் இன்னொரு ஓலை தரையில் விழுந்தது. அதை அவசரமாகக் குனிந்து எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். "பெரிய மூடன் நான்! ஒரு தடவை காரியம் கெட்டும் புத்தி வரவில்லை!" என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டான்.

பெரியவர் அந்த ஓலையை வாங்கிக் கொண்டார். கலங்கரை விளக்கின் வௌிச்சத்தில் அதைக் கவனமாகப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. தமது மனையாளை நோக்கி, "இளைய பிராட்டி ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறாள்.இவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். உள்ளே சென்று உன் மருமகளிடம் சொல்லு! சோற்றுப் பானையைக் கவிழ்த்து உருட்டிவிடப் போகிறாள்!" என்றார்.

 

பக்க தலைப்பு



நான்காம்அத்தியாயம்
நள்ளிரவில்




இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச் சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். திய ாகவிடங்கக் கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார். "இந்தக் கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு. அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்?" என்றார்.

"அந்த மனிதர்கள் யார்? அவர்கள் ஒருமாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே?"

"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது.அப்படியும் நான் என் மகனைப் போகச் சொல்லியிருக்கமாட்டேன். ஆனால் என் மருமகள் மிகப் பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டுப் புருஷனைப் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்..."

"இது என்ன ஐயா, வேடிக்கை? வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா?" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், "மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விருயம்!" என்றான்.

"அப்பனே! நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்குச் சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன்..." என்று தயங்கினார்.

வந்தியத்தேவன் அப்போது சேந்தன்அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.

"தங்கள் மகனால் பேச முடியாதா?" என்றான்.

"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் பெரியவர்.
சேந்தன்அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன் அவரிடம் கூறினான்."ஆகா! அந்த ஆள் நீதானா? உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது. உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே?"

"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது".

"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது."

"பெரியவரே! தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டு போகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்."

"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால் இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே!"

"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே?"

"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்..."

"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்..."

"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது.கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டிவரும்."

"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காக இங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்."

"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார்! அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தால்..."

"நான் என்ன செய்ய வேண்டும்? பெரியவரே, சொன்னால் க ்டாயம் செய்கிறேன்" என்றான் வந்தியத்தேவன்.

"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ளத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்!"

"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்"

'வேண்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்று சொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம் நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்!" இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.

அவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன் முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.

திடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்து மூடியிருந்த கண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்து வௌியேறிச் சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்று கண்டான்.கலங்கரை விளக்கின் வௌிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது.ஆ! அவள் பூங்குழலிதான்! சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே? "நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா! என் காதலர்களைக் காட்டுகிறேன்!" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போது நினைத்தோம்? இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே? எங்கே போகிறாள்? காதலனையோ, காதலர்களையோ பார்க்கப் போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவா ளா? 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா? இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும்! அல்லது ஒரு வேளை...எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது? நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும்! அதிலிருந்து இவளைக் காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா?

வந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்துக் கொண்டே போனான். சாயங்கலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது.அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை.ஆகையால் பூங்குழலியை அவன் பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.

கலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம்வரை வெட்ட வௌியாக இருந்தது. ஆகையால் பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான்.ஆனால் அது சாத்தியப்படவில்லை. இவன் வேகமாய் நடக்க நடக்க அவளுடைய நடைவேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

திறந்த வௌியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன் பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டைச் சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது. அந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள்.வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும் சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்லவேளை!" என்று தைரியம் கொ ்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.

எப்படித் திடீரென்று மறைந்திருப்பாள்? இது என்ன மாயமா, மந்திரமா? அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ? ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்று தோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில் அவள் போயிருக்க முடியாது. போயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில் காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டில் ஏறுவதற்கு, ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக் என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வௌிச்சமும் வரவில்லை.மாலைப் பிறை முன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது.மினு மினுத்த நட்சத்திரங்களின் வௌிச்சத்திலே வழியையும் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன. ஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே, என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது? விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்தது பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா! இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோம்? கையில் வேலைக்கூட எடுத்து வரவி ்லையே?

அது என்ன சலசலப்புச் சத்தம்? அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன? அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும்? வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி! சரி! இங்கே என்ன நமக்கு வேலை? எதற்காக இங்கு வந்தோம்? - என்ன அறிவீனம்? உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்!

இறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-

"அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் விம்முவதேன்?..."

வந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல் வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள். பூங்குழலிதான் பாடியது, அவள்தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரசிக மகாசபையாக நினைத்துக் கொண்டு பாடினாள் போலும்!

நட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம் விசிறிபோல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடைய குரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனைத் தன்வயமிழக்கச் செய்தன. அவனுடைய கால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.

பூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவு என்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது.அதையொட்டி விரிந்த கடல் பரந து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்து சென்றது."வந்து விட்டாயா? திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்..."

"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்து வந்துவிட்டாய்! திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா! உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவு கஷ்டமாய்ப் போய் விட்டது?"

"எதற்காகத் தொடர்ந்து வந்தாய்?"

"நல்ல கேள்வி! நீதானே வரச் சொன்னாய்? மறந்து விட்டாயா?"

"எதற்காக வரச் சொன்னேன்? உனக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவு இல்லாமல் என்ன? உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!"

"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!" என்றாள் பூங்குழலி.


 

பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
நடுக்கடலில்




வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வௌிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.

ஒரு பிரம்மாண்டமான கரிய இரு ் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான்.திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வௌியே வந்தது. மூடும் போது மறைந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலேகூட இல்லை. அவன் பின்னால் "ஹா ஹா ஹா!" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது.திரும்பிப் பார்த்தான்.

பூங்குழலிதான்! வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. "பார்த்தாயா என் காதலர்களை?" என்று பூங்குழலி கேட்டாள். "இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்," என்றாள்.

இந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா? - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வௌிவரப்போராடிக் கொண்டிருந்தது. அது என்ன? இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு ஒரு விஷயந்தான்.

"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு ோட்டியிட முடியுமா?" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது.ஆ! கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...

கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வௌியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...

இப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.

"பெண்ணே! உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள். இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா? வீட்டுக்குப் போகலாம், வா!" என்றான். அதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள். 'இது என்ன தொல்லை?' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான். "பெண்ணே! நாம் போகலாமா?" என்று மீண்டும் கேட்டான். விம்மல் நிற்கவில்லை. வந்தியத்தேவனுக்கு அலுத்துப் போய்விட்டது.

"சரி; உன் இஷ்டம் போல் செய்! எனக்குத் தூக்கம் வர கிறது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான். பூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.

வந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.

இருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். 'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது? கடலைக் கடப்பதாவது?- ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே? ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்துகொள்ளப் பார்க்கலாமா?"

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்..

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும்என்று சொல்கிறார்களே!"

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."

"நீ என்ன சொல்லுகிறாய்?"

" நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்."

சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

பிறகு பூங்குழலி, "சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே?" என்றாள்.

'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.

"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே! எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டான்.

அதற்கு மறுமொழி ச ல்லாமல், "சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாள் பூங்குழலி.

"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம்.நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா?"

"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்?" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.

"பெண்ணே! எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன? யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை?"

"ஏன் கவலை இல்லை? நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா?"

'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும்.இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'

"ஏன் பேசாமலிருக்கிறாய்?அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்?" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.

"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்."

"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா?"

"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?"

"முன்னே அப்படிச் சொன்னார்:இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே?"

"அவர் சொன்னால் போதுமா? பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?"

"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே?"

"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது."

"சுந ்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்?"

"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது..."

"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்?"

"முன்னமேயே சொன்னேனே.நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்."

"என்னை எதற்காக அழைக்கிறாய்? ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா?"

"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே?"

"அவன் போனால் என்ன? உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா?"

"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது..."

"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா! துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது!"

"திசை தெரிய வேண்டும் அல்லவா? நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...?"

"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள்! அதற்கு நான் என்ன செய்யட்டும்!"

கலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.

இரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத்தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.

தூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த ிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது.எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன? அது என்ன? ஆ! பூங்குழலியின் பாட்டு! சேந்தன்அமுதன் சொல்லியிருந்தான் அல்லவா? "பெண்ணே! உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா?" என்றான் வந்தியத்தேவன்.

"என்ன சொன்னாய்?" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.

ஆகா! அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா?

"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்."

"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்?"

"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்..."

பூங்குழலி உடனே தன்மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள்.கத்தி பிடித்த கையை ஓங்கினாள். "இதோ பார்! அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன!" என்றாள்.


 

பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
மறைந்த மண்டபம்




மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரிய வௌிச்சமா அல்லது கலங்கரை விளக்கின் ஓளியா என்று தௌிவதற்குச் சி றிது நேரம் பிடித்தது. முதல்நாள் இரவு அனுபவங்களில் எது உண்மை, எது கனவு என்று எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு ஓரே குழப்பமாயிருந்தது. வீட்டிலே பெரியவரின் மனைவியும், அவருடைய மருமகளும் மட்டுமே இருந்தார்கள். பெரியவர் குழகர் கோயிலுக்குப் புஜ்ப கைங்கரியம் செய்வதற்காகப் போயிருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.பூங்குழலியைப் பற்றி அவர்களிடம் விசாரிக்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. அவர்கள் அளித்த காலை உணவை அருந்திவிட்டுச் சுற்றுமுற்றும் கண்களைச் செலுத்தித் தேடிப் பார்த்தான். பூங்குழலி எங்கும் அகப்படவில்லை. ஆலயத்துக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனான். அங்கே அவள் தந்தை இருந்தார். கோயிலைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து பூஜைக்குரிய புஷ்பங்களைக் கொய்து கொண்டிருந்தார். மலர்களைத் தொடுத்து மாலையாக்குவதற்குச் சில நாள் பூங்குழலி வருவதுண்டு என்றும், ஆனால் இன்றைக்கு வரவில்லையென்றும் கூறினார்.


"எங்கேயாவது காட்டில் மான்களைக் துரத்திக் கொண்டிருப்பாள். அல்லது கடற்கரையோடு திரிந்து கொண்டிருப்பாள். அவளைத் தேடிப்பிடித்துக் கேட்டுப் பார்!" என்றார்.

"தம்பி! ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு. அவள் பொல்லாதவள். தப்பர்த்தம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் எதாவது சொல்லிவிடாதே.காவியங்களில் படித்திருப்பதை நினைத்துக்கொண்டு சிருங்காரரசத்தில் இறங்கிவிடாதே! உடனே பத்திரகாளியாக மாறி விடுவாள். அப்புறம் உன் உயிர் உன்னுடையது அல்ல!" என்று எச்சரிக்கை செய்தார் பெரியவர்.

முதல்நாள் கனவை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் உடல் சிலிர்த்தான். பிறகு காட்டிற்குள் பூங்குழலியைத் தேடிக்கொண்டு போனான். காட்டிலே எங்கே என்று தேடுவது? சிறிது நேரத்துக்கெல்லாம் அவனுக்கு அலுத்துப் போய்விட்டது.காட்டிலிருந்து வௌியேறினால் ப தும் என்று ஆகிவிட்டது. வௌியேறிய பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையோடு நீண்ட தூரம் அலைந்தும் பலன் ஒன்றும் இல்லை. பூங்குழலியைக் காணவில்லை. "எப்படியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள் அல்லவா? அங்குப் பார்த்துக் கொள்ளலாம்!" என்று திரும்பினாள். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அலையும் ஆட்டமும் அதிகமில்லாமல் அமைதியாக இருந்த அந்தக்கடலில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. இந்தப் பக்கத்தில் கடலில் ஆழம் அதிகம் இல்லையென்று முன்னமே கேள்விப்பட்டதுண்டு. முதல்நாள் மாலையில் பூங்குழலியும் சொல்லியிருக்கிறாள். பின்னே, இறங்கிக் குளிப்பதற்கு என்ன தடை? கடல் விஜயத்தில் அவனுக்கிருந்த பயத்தைப் போக்கிக் கொள்வதும் அவசியம். படகிலும், கப்பலிலும் ஏறிப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. கடலைக் கண்டு பயப்பட்டால் முடியுமா? அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டே ஆகவேண்டும்.

இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சுருள் துணியையும் கத்தியையும் எடுத்துக் கடற்கரையில் வைத்துவிட்டுக் கடலில் இறங்கினான். மெள்ள மெள்ள ஜாக்கிரதையாகக் காலை வைத்து நடந்தான். போகப் போக முழங்கால் அளவு ஜலத்துக்கு மேல் இல்லை. சிறிய அலைகள் வந்து மோதிய போது ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. அதற்கு மேலே இல்லை."அழகான சமுத்திரம் இது!அமிழ்ந்து குளிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே இன்னும் மேலே சென்றான்.

'அடேடே! ஆழம் இல்லை என்று எண்ணிக் கொண்டே கரையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோமே? திடீரென்று கடல் பொங்கினால்? அலைகள் பெரிதாகி மோதினால்?" இந்த எண்ணம் தோன்றிக் கரைப்பக்கம் திரும்பிப் பார்த்தான்.

'அதிக தூரம் கரையிலிருந்து வந்து விட்டது என்னமோ உண்மைதான்! ஆனால் அப்படியொன்றும் கடல ் திடீரென்று பொங்கி விடாது!... ஓகோ! அதோ பூங்குழலி வருகிறாளே! கரையேறி அவளைப் பிடித்துக் கொள்ளவேண்டும். பிடித்துக் கொண்டு நயமான வார்த்தைகளினால் மறுபடி கேட்க வேண்டும். அவளும் நம்மைப் பார்த்து விட்டுத்தான் வருகிறாள் போலிருக்கிறது! நாம் இருக்கும் திசையை நோக்கியே வருகிறாள்! ஏதோ நம்மைப் பார்த்து சமிக்ஞைகூடச் செய்கிறாளே!...'

ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து அவள் என்ன பார்க்கிறாள். என்னத்தை எடுக்கிறாள்? நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள்? பெண்ணே! அதை எடுக்காதே! அது என்னுடையது... நாம் சொல்வது அவள் காதில் விழவேயில்லை! இந்தக் கடல் அலைகளின் இரைச்சல்!

'இதோ நம் குரல் அவளுக்குக் கேட்டுவிட்டது! நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள்! பூங்குழலி! அது என்னுடையது! எடுக்காதே!...' 'இந்தா! சொன்னால் கேட்க மாட்டாயா? உன் உடைமை போல் கையில் எடுத்துக் கொண்டு நீ பாட்டுக்குப் போகிறாயே, நில் நில்!...' வந்தியத்தேவன் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தான்! ஒரு தடவை பூங்குழலி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு அவளும் ஓடத் தொடங்கினாள். வீடும் கலங்கரை விளக்கமும் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாகக் காட்டை நோக்கி ஓடினாள்! 'ஆகா! இவள் துஷ்டப் பெண்! துஷ்டப் பெண்ணா? அல்லது வெறும் பைத்தியமா? இந்தப் பைத்தியத்தினிடமிருந்து நமது அரைச்சுருளை எப்படியும் வாங்கியாக வேண்டுமே...?'

இரண்டு தடவை கடலில் இடறி விழுந்து ஒருவாய் உப்புத் தண்ணீரும் குடித்துவிட்டு வந்தியத்தேவன் மெதுவாக கரையேறினான். பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடினான். ஓட ஓட, அவளுடைய ஓட்டத்தின் வேகம் அதிகமாயிற்று. சற்றுத் தூரத்தில் ஐம்பது அறுபது மான்களின் கூட்டம் ஒன்று ஓடியது.

'மான்கள் மிரண்டு, பாய்ந்து ஓடுவது - தாவித்தாவிக் குதித்து ஓடுவது என்ன அழகான காட்சி! ன்? இதோ இந்தப் பெண் குதித்துக் குதித்து ஓடுகிறாளே? இதுவும் அந்த மான்களின் ஓட்டத்தைவிட அழகில் குறைவாயில்லை! இம்மாதிரி இயற்கையாகவும் யதேச்சையாகவும் வாழும் பெண்களின் அழகே அழகுதான்!... ஆனால் இதையெல்லாம் அவளிடம் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும்! பெரியவர்தான் எச்சரித்திருக்கிறாரே?... இருந்தாலும், இவள் எதற்காக இப்படி வீம்பு பிடித்துக் கொண்டு ஓடுகிறாள்! காட்டில் புகுந்துவிட்டால் அப்புறம் அவளைக் கண்டுபிடிப்பது எப்படி?... இதோ காட்டிற்குள் புகுந்தே விட்டாள். காரியம் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது. நம்மைப் போன்ற மௌடீகன் உலகிலேயே வேறு யாரும் இருக்க முடியாது!... குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை திரும்பி வருமா?'

வந்தியத்தேவனும் சிறிது நேரத்தில் காட்டிற்குள் புகுந்தான். அங்குமிங்கும் அலைந்தான். அவசரத்தினாலும் பரபரப்பினாலும் செடிகளைச் சரியாக விலக்கி விட்டுக் கொண்டு நடக்காமல் உடம்பெல்லாம் முட்களால் கீறிக் கொண்டான். "பூங்குழலி பூங்குழலி!" என்று கூச்சல்லிட்டான். பிறகு, "மரமே! பூங்குழலியைக் கண்டாயோ?", "காக்காய்! பூங்குழலியைக் கண்டாயோ?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.

'இது எது? நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே!' - என்று அவன் நினைக்கத் தொடங்கிய சமயத்தில், திடீரென்று மரத்தின் மேலிருந்து ஏதோ விழுந்தது! ஆ! அவனுடைய அரைத் துணிச் சுருள்தான்! மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம் பத்திரமாயிருந்தன!

"பணம் பத்திரமாயிருக்கிறதா?" என்று ஒரு குரல் மேலேயிருந்து வந்தது. வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். பூங்குழலி மரக்கிளையில் உட்கார்ந்திருந்தாள்.

வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தி ால், "உன்னைப் போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.

"உன்னைப்போன்ற ஆந்தையை நான் பார்த்ததில்லை அம்மம்மா! என்ன முழிமுழித்தாய்?" என்றாள் பூங்குழலி.

"எதற்காக இப்படி என்னை அலைக்கழித்தாய்? உனக்குப் பணம் வேண்டுமென்றால்...'

"சீச்சீ! உன் பணம் இங்கே யாருக்கு வேண்டும்?"

"அப்படியானால், எதற்காக இதைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாய்?"

"அவ்விதம் நான் செய்திராவிட்டால் நீ காட்டுக்குள் வந்திருக்க மாட்டாய். எங்கள் வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாய்!"

"போயிருந்தால் என்ன?"

"இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் தேரியும்!"

"என்ன தெரியும்?"

"பத்துப் பதினைந்து குதிரைகள் தெரியும்! வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும்!"

அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து அவள் கூறுவது உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள விரும்பி வந்தியத்தேவன் மரத்தின் மேல் ஏறினான். ஏறுவதற்கு முன் அரைச்சுற்றுச் சுருளைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். ஒருவேளை இவள் மரத்தின் மேலிருந்து அதைத் தவறிப் போட்டிருக்கலாம். இப்போது மறுபடியும் அதை அபகரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறாளோ, என்னமோ யார் கண்டது?

மரத்தின் மேலேறிக் கலங்கரை விளக்கின் பக்கம் நோக்கினான். 'ஆம் பூங்குழலி கூறியதும் உண்மைதான்' அங்கே பத்துப் பதினைந்து குதிரைகள் நின்றன. குதிரைகள் மீது வாள்களும், வேல்களும் பிடித்த வீரர்கள் இருந்தார்கள்.

'அவர்கள் யாராக இருக்கும்?...நம்மைப் பிடிப்பதற்கு வந்த பழுவேட்டரையரின் ஆட்கள்தான்! வேறு யாராயிருக்க முடியும்?' பூங்குழலி தன்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினாள். எதற்காக? என்ன நோக்கம் பற்றி? - இன்னும் சில விஷயங்களும் தௌிவாகவில்லை!

இருவரும் மரத்திலிருந்து கீழே இறங்கினார்கள். " ூங்குழலி என்னைப் பேராபத்திலிருந்து காப்பாற்றினாய். உனக்கு மிக மிக நன்றி!" என்றான் வந்தியத்தேவன்.

"வெறும் பொய்! ஆண்பிள்ளைகளுக்கு நன்றிகூட உண்டா?" என்றாள் பூங்குழலி.

"எல்லாம் ஆண்பிள்ளைகளையும் போல் என்னையும் எண்ணி விடாதே!"

"நீ எல்லோரையும் போல் இல்லை; ஒரு தனி மாதிரிதான்?

"பெண்ணே! உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?"

"தாராளமாகக் கேட்கலாம்; மறுமொழி கூறுவது என் இஷ்டம்."

"என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏன் எண்ணினாய்? என் பேரில் திடீரென்று தயவு பிறக்கக் காரணம் என்ன?" பூங்குழலி சும்மா இருந்தாள்.

அவள் சிறிது திகைத்துப் போனாள் என்பது முகத்திலிருந்து தெரிந்தது. அப்புறம் யோசித்துப் பார்த்து, "அசடுகளைக் கண்டால் எனக்கு எப்போதும் கொஞ்சம் பரிதாபம் உண்டு" என்றாள்.

"சந்தோஷம்; இந்த வீரர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்தாய்?"

"உன்னைப் பார்த்தால் தெரியவில்லையா? - நீ தப்பி ஓடி ஓளிந்து கொள்ள வந்திருக்கிறவன் என்று நேற்றைக்கே ஊகித்தேன். இன்றைக்குக் காலையில் உன் சிநேகிதன். வைத்தியர் மகன் - மூலமாக அது ஊர்ஜிதமாயிற்று."

"அவன் என்ன உளறினான்?"

"காலையில் எழுந்ததும் காட்டிலே மூலிகை தேட வேண்டும் என்றான்.நான் அழைத்துப் போவதாகச் சொல்லி இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். என்னிடத்தில் காதல் புரிய ஆரம்பித்தான். 'உன்னுடைய சிநேகிதன் உன்னை முந்திக் கொண்டு விட்டானே?' என்று சொன்னேன்..."

"என்ன சொன்னாய்?"

"கொஞ்சம் பொறு; கேட்டுக் கொண்டு வா! நீ என்னிடம் காதல் புரியத் தொடங்கிவிட்டதாகச் சொன்னேன். அப்போதுதான் உன் பேரில் அவனுடைய சந்தேகத்தை வௌியிட்டான். ஏதோ இராஜ தண்டனைக்குப் பயந்து நீ ஓடித் தப்பி வந்திருக்கிறாய் என்று அவனுக்கு வழியில் பல காரணங்களால் சந்தேகம் தோன்றியதாம்! 'அப்படிப் ட்டவனை நம்பி அநியாயமாய்க் கெட்டுப் போகாதே! என்னைக் கலியாணம் செய்து கொள்!' என்றான்.

'ரொம்ப அவசரப்படுகிறாயே? பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?" என்றேன்.

'பழந்தமிழ் மரபையொட்டிக் களவு மணம் புரிந்து கொள்வோம்!" என்று உன் அழகான சிநேகிதன் சொன்னான்.

"எப்படியிருக்கிறது கதை?"

"அட சண்டாளப் பாவி!" என்று கத்தினாள் வந்தியத்தேவன்.

"இதற்குள்ளே குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. நான் மரத்தின்மேல் ஏறிப் பார்க்கச் சொன்னேன். மரத்தின் மேலே நின்று பார்த்தபோது அவனுடைய கால்கள் வெட வெட வென்று நடுங்கியதை நினைத்தால் இப்போதும் எனக்குச் சிரிப்பு வருகிறது" என்று சொல்லி விட்டுப் பூங்குழலி சிரித்தாள்.

"விளையாட்டு இருக்கட்டும்; அப்புறம் என்ன நடந்தது?"

"அவன் மரத்தின் மேலேயிருந்து இறங்கி வந்தான். 'பார்த்தாயா? நான் சொன்னது சரியாகப் போயிற்று.அவனைப் பிடிப்பதற்கான் இராஜ சேவகர்கள் வந்திருக்கிறார்கள்!'என்றான்.

'அப்படியானால் அவனுடன் வந்த உன்னையும் பிடிப்பார்கள் அல்லவா? நீ ஓடி எங்கேயாவது ஒளிந்து கொள்!' என்றேன். 'அப்படித்தான் செய்ய வேண்டும்' என்றான். என்னை விட்டுப் பிரிந்து சென்றான்.நான் எதிர்பார்த்தபடியே நடந்தது..."

"என்ன? என்ன நடந்தது?"

"ஓடி ஒளிந்து கொள்வதாக என்னிடம் சொல்லி விட்டு நேரே அந்தக் குதிரைக்காரர்கள் இருந்த திசையை நோக்கிப் போய் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான்..."

"ஐயோ! பாவம்!"

"அதிகமாகப் பரிதாபப்பட்டு விடாதே! கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்!"

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

'குறையும் கேள்! நீயே தெரிந்துகொள்வாய்! அவர்களிடம் நேரே போனான். அவர்கள் இவனை அதிசயத்துடன் பார்த்தார்கள். உற்று உற்றுப் பார்த்து ஒருவரோடொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். 'நீங்கள் யார்?'என்று இவன் கேட்டான்.

'ந ாங்கள் வேட்டைக்காரர்கள்! மான் வேட்டையாட வந்திருக்கிறோம்' என்று அவர்களில் ஒருவன் சொன்னான்.

'இல்லை நீங்கள் என்ன வேட்டையாட வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்' என்றான் இவன்.

அவர்கள் இன்னும் வியப்படைந்து இவனைத் தூண்டி விட்டார்கள்.

'வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுவீர்களா?' என்று கேட்டான்.

அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். இவன் அவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுப் பக்கம் போனான்...

"துரோகி, சண்டாளன்!..."

"அவர்கள் போன பிறகு நான் உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். நீ கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தாய்..."

"என்னிடம் அங்கேயே இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை! இந்தத் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு ஏன் ஓடி வந்தாய்?"

"இல்லாவிட்டால், நீ அவ்வளவு வேகமாக ஓடி வந்திருப்பாயா? அந்த வேட்டைக்காரர்களை ஒருகை பார்க்கிறேன் என்று அவர்களைத் தேடிப் போயிருந்தாலும் போயிருப்பாய்! என் பேச்சையே ஒருவேளை நம்பியிருக்கமாட்டாய். இவ்வளவையும் சொல்லி உன்னை என்னுடன் வரும்படி செய்வதற்குள் அவர்கள் உன்னை ஒருவேளை பார்த்திருப்பார்கள்..."

'ஆகா! இந்தப் பெண்ணையா நாம் பைத்தியக்காரி என்று எண்ணினோம்' என்று வந்தியத்தேவன் நினைத்து வெட்கம் அடைந்தான். 'இவளிடம் பூரண நம்பிக்கை வைத்தேயாக வேண்டும். இவளுடைய உதவி இல்லாவிட்டால் நாம் கடலைக் கடந்து இலங்கை செல்ல முடியாது. இவ்வளவு தூரம் வந்ததும் வீணாகும். பழுவேட்டரையர்களிடம் திரும்ப அகப்பட்டுக் கொள்ளவும் நேரலாம்."

"பெண்ணே! நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய் என்பதைச் சொல்லி முடியாது. மிச்ச உதவியையும் நீதான் செய்யவேண்டும்..."

"என்ன செய்யவேண்டும் என்கிறாய்?" எ ்று கேட்டாள்.

"என் சிநேகிதனுடைய இலட்சணத்தைப் பார்த்து விட்டாய் அல்லவா? அவனை நம்பிப் பயன் இல்லையென்று தெரிந்து கொண்டாய் அல்லவா? நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும்!" பூங்குழலி மௌனமாயிருந்தாள்.

"நான் தப்புக் காரியம் எதுவும் செய்யக்கூடியவன் அல்ல என்று உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா? பெண்ணே! இலங்கைக்கு மிக முக்கியமான காரியமாக நான் உடனே போய்த்தீர வேண்டும். இந்த உதவி எனக்கு நீ அவசியம் செய்தேயாக வேண்டும்..."

"செய்தால் எனக்கு என்ன தருவாய்?" என்று பூங்குழலிகேட்டாள். அவளுடைய முகத்தில் முதன் முதலாக நாணத்தின் அறிகுறி தென்பட்டது. கன்னங்கள் குழிந்தன;அவளுடைய முகத்தின் அழகு பன்மடங்கு அதிகமாகிச் சுடர்விட்டு ஒளிர்ந்தது.

முதலாவது நாள் இரவு கண்ட கனவில் இதே மாதிரி அவள் கேட்டது வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. அதே வார்த்தைகள் மறுபடியும் அவன் நாவில் வருவதற்குத் துடித்தன. பல்லினால் நாவைக் கடித்துக் கொண்டு அந்த வார்த்தை வராமல் நிறுத்தினான்.

"பெண்ணே! இந்த உதவி நீ எனக்குச் செய்தால் உயிர் உள்ள அளவும் மறக்க மாட்டேன்; என்றென்றும் நன்றி செலுத்துவேன்.உனக்கு நான் இதற்குப் பிரதியாகச் செய்யக்கூடியது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏதாவது செய்யும்படி சொன்னால், கட்டாயம் செய்வேன்!"

பூங்குழலி சிந்தனையில் ஆழ்ந்தாள். சொல்ல எண்ணியதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியதைப் போல் காணப்பட்டது.

"என்னால் உனக்கு ஆகக்கூடியா பிரதி உதவி ஏதேனும் இருந்தால் சொல்! நிச்சயம் செய்கிறேன்..."

"இது சத்தியமான வார்த்தைதானா?"

"சத்தியம்! சத்தியம்!"

"அப்படியானால், சமயம் வரும்போது சொல்லுகிறேன். அப்போது மற்ந்துவிட மாட்டாயே?"

"ஒரு நாளும் மறக்கமாட்டேன். நீ எப்போது பிரதி உதவி க ட்பாய் என்று காத்திருப்பேன்."
பூங்குழலி மீண்டும் சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

"சரி, என்னுடன் வா! இந்தக் காட்டில் ஓரிடத்துக்கு உன்னை நான் அழைத்துப் போகிறேன். அங்கே இன்று பொழுது சாயும் வரையில் நீர் இருக்க வேண்டும். பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்..."

"அதைப் பற்றிக் கவலை இல்லை! காலையில் உன் அண்ணி பழைய சோறு போட்டாள். அவளுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவதற்காகவே அதிகமாகச் சாப்பிட்டேன். இனி இராத்திரி வரையில் சாப்பாடு தேவையில்லை..."

இராத்திரி கூடச் சாப்பாடு கிடைக்கிறதோ, என்னமோ? கையில் கொஞ்சம் எடுத்துவரப் பார்க்கிறேன். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும்! இருட்டிய பிறகு நான் திரும்ப வந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் 'குக்கூ குக்கூ' என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா?"

"நன்றாய்க் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிராவிட்டாலும் உன் குரலைத் தெரிந்து கொள்வேன்."

"நான் குரல் கொடுத்ததும் நீ அவ்விடத்திலிருந்து வௌி வர வேண்டும். இருட்டி ஒரு ஜாமத்திற்குள் படகில் ஏறி நாம் புறப்பட்டுவிட வேண்டும்."

"குயிலின் குரல் எப்போது வரும் என்று காத்திருப்பேன்."

காட்டின் மத்தியில் மணல் மேடு இட்டிருந்த ஓரிடத்துக்குப் பூங்குழலி வந்தியத்தேவனை அழைத்துப் போனாள். மேட்டின் மறு பக்கத்தில் மரஞ் செடி கொடிகள் மற்ற இடத்தைவிட அதிக நெருக்கமாயிருந்தன. அவற்றை லாவகமாகக் கையினால் விலக்கிக்கொண்டு ஒரு மரத்தின் வழியாகப் பள்ளத்தில் இறங்கினாள். வந்தியத்தேவனும் அவளைப் பின்பற்றி இறங்கினான். அங்கே ஒரு பழைய மண்டபத்தின் மேல் விளிம்பு காணப்பட்டது. இன்னும் உற்றுப் பார்த்ததில் இருளடைந்த மண்டபத்தின் இரு தூண்கள் தெரிந்தன. இவை எல்லாவற்றையும் மரங்களும் செடி கொடிகளும் மறைந்திருந்தன. எந ்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்த மண்டபம் அங்கே இருப்பது தெரியவே தெரியாது.

"இந்த மண்டபத்தில் ஒரு சிறுத்தை குடியிருந்தது. அது போனபிறகு நான் இதில் இருக்கிறேன். என்னுடைய சொந்தத் தனி வீடாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்களைக் காணப்பிடிக்காத போது இவ்விடத்துக்கு நான் வந்துவிடுவது வழக்கம். சட்டியில் தண்ணீர் இருக்கிறது. இன்று பகலெல்லாம் இங்கேயே இரு! நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல் நடந்தாலும் நீ வௌியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம்!" என்று பூங்குழலி கூறினாள்.

"இருட்டிய பிறகும் இங்கேயே இருக்கச் சொல்கிறாயா? காட்டுமிருகம், புலி, சிறுத்தை ஏதாவது வந்தால்?..." என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"புலி சிறுத்தை இங்கே ஒன்றும் இப்போது இல்லை. வந்தால் நரியும், காட்டுப் பன்றியும் வரும்.நரிக்கும் பன்றிக்கும் பயப்படமாட்டாயே!"

"பயம் ஒன்றுமில்லை. இருட்டில் வந்து மேலே விழுந்தால் என்ன செய்வது? கையில் வேல்கூட இல்லை.வீட்டில் வைத்து விட்டேன்."

"இந்தா! இந்த ஆயுதத்தை வைத்துக்கொள்!" என்று பூங்குழலி மண்டபத்தில் கிடந்த ஓர் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்தாள். அது ஒரு விசித்திரமான ஆயுதம். இருபுறமும் வாள் போல் கூர் கூரான முட்கள் இருந்தன.முட்கள் இரும்பைவிடக் கெட்டியாயிருந்தன. இந்திரனுடைய வஜ்ராயுதம் இப்படித்தான் இருக்கும் போலும்!

"இது என்ன ஆயுதம்? எதனால் செய்தது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இது ஒரு மீனின் வால்! இந்த மண்டபத்தில் குடியிருந்த சிறுத்தை என் மீது பாய வந்தபோது இதனால் அடித்துத்தான் அதைக் கொன்றேன்!" என்றாள் பூங்குழலி.


 

பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
"சமுத்திர குமா ரி"




அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திரய சுபாவத்தைப் பற்றி எண்ணுவதில் சென்றது.என்ன அதிசயமான பெண்? எவ்வளவு இனிய சரளமான பெயர்? ஆனால் சுபாவம் எவ்வளவு கடுமையானது? 'கடுமை' மட்டுந்தானா? அதில் இனிமையும் கலந்து தானிருந்தது! சிறுத்தையை அடித்துக் கொன்ற காரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள்? இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள் மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன்? இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்க வேண்டுமே! கசப்பான சம்பவமோ, அல்லது இனிப்பான சம்பவந்தானோ! இரண்டினாலும் இப்படி ஒரு பெண் உன்மத்தம் பிடித்தவள் ஆகியிருக்கக் கூடும்! அல்லது ஒன்றுமே காரணமில்லாமல், பிறவியிலேயே இத்தகைய இயற்கையுடன் பிறந்தவளோ? இவளுடைய பெற்றோர்களின் இயற்கையில் விசேஷம் ஒன்றையும் காணவில்லையே? இனிய, சாந்த சுபாவம் படைத்தவர்களாயிருக்கிறார்களே!... குணம் எப்படியாவது இருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன? பழுவூர் ஆட்களிடம் நாம் பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே? இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறாளே? இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ?... ஒருநாளும் இல்லை. ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன? நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறாள்? பின்னால் கூறுவதாகக் கூறியிருக்கிறாளே? அது என்னவாயிருக்கும்?...'

இவ்வாறு வந்தியத்தேவன் சிந்தனை செய்து கொண்டிருந்த சமயங்களில், பூங்குழலி கூறியிருந்தது போலவே, அவனைச் சுற்றி நாலபுறங்களிலும் அடிக்கடி அமளிதுமளிப்பட்டது . குதிரைகளின் ஓட்டம், மனிதர்களின் அட்டகாசம், சிறிய வன ஜந்துக்களின் பயம் நிறைந்த கூச்சல், பறவைகள் கிறீச்சிடுதல் - இவ்வளவும் சேர்ந்து சில சமயம் ஒரே அமர்க்களமாயிருந்தது. அடுத்தாற்போல் அமைதி குடிகொண்டு நிசப்தமாயுமிருந்தது. அமர்க்களப்பட்டதெல்லாம் தன்னைச் தேடிப் பிடிப்பதற்காகத்தான் என்று வந்தியத்தேவன் உணர்ந்தான். வைத்தியரின் மகன் செய்த துரோகமும் அவனுடைய மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது!

'நிர்மூடன்! பூங்குழலியிடம் அதற்குள் மையல் கொண்டு விட்டதாக அவனுக்கு எண்ணம் போலும்! சிறிய குட்டையில் உள்ள தண்ணீர் வடவா முகாக்கினியின் மீது காதல் கொண்டது போலத் தான்! பெண் சிங்கத்தை ஒரு சுண்டெலி கல்யாணம் செய்து கொள்ள எண்ணிய கதைதான்! ஆனாலும் அவனுடைய அறிவீனத்தை இந்தப் பெண் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு விட்டாள்! அவனுடைய மனத்தில் எவ்விதம் பொறாமைக் கனலை மூட்டிவிட்டாள்?... அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே! பெண்மையின் சக்தி அபாரமானதுதான்!"

'வந்தியத்தேவா! ஒன்று மட்டும் நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! நீ உன்னை வெகு கெட்டிக்காரன் என்று எண்ணியிருந்தாய்! தந்திர மந்திர சாமர்த்தியங்களில் உனக்கு இணையாரும் இல்லை என்று இறுமாந்திருந்தாய்! ஆனால் இந்த நாகரிகமறியாத காட்டு மிராண்டிப் பெண் உன்னைத் தோற்கடித்து விட்டாள்! கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த உன்னை இந்த மறைந்த மண்டபத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவள் கையாண்ட யுக்தியை என்னவென்று சொல்வது? அப்படி அவள் உன் அரைச் சுற்றுச் சுருளை எடுத்துக்கொண்டு ஓடியிராவிட்டால், இத்தனை நேரம் என்ன ஆகியிருக்கும்? புழுவூர் ஆட்களிடம் நீ சிக்கியிருப்பாய்! காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்கும்!... ஆம் இனி எப்போதும் இம்மாதிரி அஜாக்கிரதையாக இருந்துவிடக் க ூடாது.'

மேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. கோடிக்கரையில் இது ஓர் அற்புதமான காட்சி. அதுவரை தெற்கு நோக்கி வரும் கடற்கரை அந்த முனையில் நேர்கோணமாக மேற்கு நோக்கித் திரும்பிச் செல்கிறது. ஆதலின் கோடிக்கரையில் மேடான இடத்திலிருந்து பார்த்தால் கிழக்கு - மேற்கு - தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் பரந்திருக்கக் காணலாம். சிற்சில மாதங்களில் சூரிய சந்திரர்கள் கிழக்குக் கடலில் ஜோதிமயமாக உதயமாவதையும் பார்க்கலாம். மேற்கே கடலைத் தங்கமயமாகச் செய்து கொண்டு முழுகி மறைவதையும் காணலாம். வந்தியத்தேவனுக்கு மண்டபத்தை மூடியிருந்த மணல்திட்டின் மேல் ஏறிச் சூரியன் கடலில் மறையும் காட்சியைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று.அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.

நாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறைந்த மண்டபத்தில் முன்னமே குடி கொண்டிருந்த இருள் பன்மடங்கு கரியதாயிற்று. வந்தியத்தேவனால் அங்கே மேலும் இருக்க முடியவில்லை.வௌியேறி வந்தான். மண்டபத்தை மூடிய மணல் திட்டின் மீது நின்றான். வெகுதூரத்தில் கலங்கரை விளக்கின் ஒளி தெரிந்தது. வானத்தில் வைரமணிகள் சுடர்விட்டு ஜொலித்தன. காட்டில் பல விசித்திரமான ஒலிகள் உண்டாயின. பகலில் வனப்பிரதேசத்தில் கேட்கும் ஒலிகளுக்கும் இரவில் கேட்கும் ஒலிகளுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. இரவில் கேட்கும் ஒலிகள் மர்மம் நிறைந்து உள்ளத்தில் பீதியையும் உடலிலே சிலிர்ப்பையும் உண்டாக்கின. பகலில் எதிரே புலியைப் பார்த்தாலும் மனம் பதறுவதில்லை; பயமும் உண்டாவதில்லை. இரவில் ஒரு புதரில் சின்னஞ்சிறு எலி ஓடினாலும் உள்ளம் திடுக்கிடுகிறது!

இதோ குயிலின் குரல். 'குக்கூ!','குக்கூ!' அந்தக் குரல் தேவகானத்தைப் போல் வந்தியத்தேவன் காதில் ஒலித்தது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான். பூங்கு ழலி அங்கு நின்றாள். 'சத்தம் செய்யாமல் என்னுடன் வா' என்று சமிக்ஞை செய்தாள். அங்கிருந்து கடற்கரை வெகு சமீபம் என்று தெரிய வந்தது.

கடற்கரையில் படகு ஆயத்தமாயிருந்தது. அதில் பாய் மரமும் பாயும் அதைக் கட்டும் கயிறும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படகிலிருந்து இரண்டு கழிகள் நீட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கழிகளின் முனையில் ஒரு பெரிய மரக்கட்டை பொருத்திக் கட்டப்பட்டிருந்தது. படகைக் கடலில் இறக்குவதற்கு வந்தியத்தேவன் உதவி செய்யப்போனான். 'நீ சும்மா இரு!' என்று பூங்குழலி சமிக்ஞை செய்தாள். படகை லாவகமாகத் தள்ளிக் கடலில் இறக்கினாள்.

சிறிதும் சத்தமின்றிக் கடலில் அப்படகு இறங்கியது.

வந்தியத்தேவன் படகில் ஏறிக்கொள்ள யத்தனித்தான். "உஷ்! சற்றுப் பொறு! கொஞ்ச தூரம் போன பிறகு நீ ஏறிக்கொள்ளலாம்!" என்று பூங்குழலி மெல்லிய குரலில் கூறிவிட்டுப் படகைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனாள்.

வந்தியத்தேவன் தானும் உதவி செய்ய எண்ணிப் படகைத் தள்ளினான். படகு நின்று விட்டது.

"நீ சும்மா வந்தால் போதும்!" என்றாள் பூங்குழலி.

கரை ஓரத்தில் அலை மோதும் இடத்தைக் தாண்டிய பிறகு "இனிமேல் படகில் ஏறிக்கொள்ளலாம்!" என்று சொல்லி, அவள் முதலில் ஏறிக் கொண்டாள். வந்தியத்தேவனும் தாவி ஏறினான். அப்போது படகு அதிகமாக ஆடியது. அந்த ஆட்டத்தில் வந்தியத்தேவன் கடலில் விழுந்து விடுவான் போலத் தோன்றியது; சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தான். ஆயினும் அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

"இனிமேல் ஏதாவது பேசலாம் அல்லவா?" என்று கேட்டான்.

"நன்றாகப் பேசலாம். உனக்கு நடுக்கம் நீங்கியிருந்தால்பேசலாம்!" என்றாள் பூங்குழலி.

"நடுக்கமா? யாருக்கு நடுக்கம்? அதெல்லாம் ஒன்றுமில்லை."

"ஒன்றுமில்லாவிட்டால் சரி!"

"பாய்மரம் கட்ட வேண்டாம ?"

"பாய்மரம் கட்டினால் கரையில் உள்ளவர்கள் ஒருவேளை நம்மைப் பார்த்துவிடுவார்கள். ஓடி வந்து பிடித்துக் கொள்வார்கள்."

"இனி அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடுகிறேன். நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்!" என்று வந்தியத்தேவன் தன் வீரப்பிரதாபத்தைச் சொல்லத் தொடங்கினான்.

"இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டு போய் மோதும். நடுநிசிக்கு மேல் காற்றுத் திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்!" என்று பூங்குழலி கூறினாள்.

"ஓ உனக்கு இதெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்கிறது;அதனாலேதான் உன்னை அழைத்துப் போகும்படி உன் தந்தை சொன்னார்."

"என் தந்தையா? யாரைச் சொல்லுகிறாய்?"

"உன் தகப்பனாரைத்தான் சொல்லுகிறேன். கலங்கரை விளக்கின் தியாகவிடங்கக்கரையரைச் சொல்லுகிறேன்."

"கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை. கடலில் இறங்கிவிட்டால்..."

"தகப்பனார் கூட மாறிப் போய்விடுவாரா, என்ன?"

"ஆமாம்; இங்கே சமுத்திர ராஜன்தான் என் தகப்பனார்.என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திரகுமாரி. உனக்கு யாரும் சொல்லவில்லையா?"

"சொல்லவில்லை! அது என்ன விசித்திரமான பெயர்?"

"சக்கரவர்த்தியின் இளைய குமாரனைப் 'பொன்னியின் செல்வன்' என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா! அது போலத்தான்!" இதைக் கேட்டதும் வந்தியத்தேவன் தனது அரைச் சுற்றுச் சுருளைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

அதைக் கவனித்த பூங்குழலி, "பத்திரமாக இருக்கிறதல்லவா?" என்று கேட்டாள்.

"எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"உன் அரைச் சுருளில் வைத்திருக்கும் பொருளைப் பற்றித்தான்."

வந்தியத்தேவனுடைய மனத்தில் "சொரேல்" என்றது. ஒரு சிறிய சந்தேகம் ஜனித்தது. அவனுடன் பேசிக்கொண்டே பூங்குழலி துடுப்பை வலித்துக்கொண் ிருந்தாள். படகு போய்க் கொண்டிருந்தது.

"இலங்கைத் தீவுக்கு நாம் எப்போது போய்ச் சேரலாம்?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"இரண்டு பேராகத் துடுப்பு வலித்தால் பொழுது விடியும் சமயம் போய்ச் சேரலாம், காற்று நமக்கு உதவியாக இருந்தால்!"

"நானும் துடுப்பு வலிக்கிறேன்; உன்னைத் தனியாக விட்டுவிடுவேனா?"

வந்தியத்தேவன் தன் அருகிலிருந்த துடுப்பைப் பிடித்து வலித்தான். ஆ! படகு வலிப்பது இலேசான வேலையன்று. மிகவும் கடினமான வேலை. படகு 'விர்' என்று சுழன்று அடியோடு நின்று விட்டது.

"இது என்ன? நீ துடுப்பை வலித்தால் படகு போகிறது; நான் தொட்டவுடனே நின்றுவிட்டதே!"

"நான் சமுத்திரகுமாரியல்லவா? அதனாலேதான்! நீ சும்மா இருந்தால் போதும்! உன்னை எப்படியாவது இலங்கையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன்; சரிதானே?"

வந்தியத்தேவன் சிறிது வெட்கமுற்றான். சற்று நேரம் சும்மா இருந்தான்! சுற்றுமுற்றும் பார்த்தபோது, படகிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கழிகளும் கட்டைகளும் அவன் கண்களில் பட்டன.

"இந்தக் கட்டை என்னத்திற்கு?" என்று கேட்டான்.

"படகு அதிகம் ஆடாமல் இருப்பதற்காக."

"இதைக் காட்டிலும் படகு அதிகம் ஆடுமா என்ன? இப்போவேதான் வேண்டிய ஆட்டம் ஆடுகிறதே? எனக்குத் தலை சுற்றும் போலிருக்கிறது."

"இது ஒரு ஆட்டமா? ஐப்பசி, கார்த்திகையில் வாடைக் காற்று அடிக்கும் போதல்லவா பார்க்க வேண்டும்?"

கரையிலிருந்து பார்த்தால் கடல் அமைதியாகத் தகடு போல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் உண்மையில் அவ்விதம் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். நுரையில்லாத அலைகள் எழும்பி விழுந்துகொண்டு தானிருந்தன. அவை அப்படகைத் தொட்டில் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டிருந்தன.

"பெருங்காற்று அடிக்கும்போது இந்தக் காட்டை என்ன ஆகும்?"

"எவ்வளவு பெரிய ாற்று என்பதைப் பொறுத்தது. சாதாரணமாய்ப் பெருங்காற்று அடித்தாலும் இந்தக் கட்டை படகைக் கவிழாமல் நிறுத்தி வைக்கும். ஒருவேளை சுழிக்காற்று அடித்து, படகு கவிழ்ந்து விட்டால் இந்தக் கட்டையைப் படகிலிருந்து அவிழ்த்து விட்டுவிடாமல், அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்புவதற்குப் பார்க்கலாம்.

"ஐயோ! காற்றில் படகு கவிழ்ந்துவிடுமா, என்ன?"

"சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?

"சுழிக்காற்று என்றால் என்ன?"

"இதுகூடத் தெரியாதா?ஒரு பக்கமிருந்து அடிக்கும் காற்றும், இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும் காற்றும் மோதிக் கொண்டால் சுழிக்காற்று ஏற்படும். இங்கே தை, மாசி மாதங்களில் 'கொண்டல் காற்று' அடிக்கும்.அப்போது அபாயமே இல்லை. சுலபமாகத் கோடிக் கரைக்கும் இலங்கைக்கும் போய் வரலாம். 'இரவுக்கிரவே போய்விட்டுத் திரும்பலாம்.வைகாசியிலிருந்து 'சோழகக் காற்று' அடிக்கும். சோழகக் காற்றில் இங்கிருந்து இலங்கை போவது கொஞ்சம் சிரமம். இப்போது சோழகக் காற்றுக்கும் வாடைக்காற்றுக்கும் இடையில் உள்ள காலம். கடலில் சில சமயம் காற்றும், காற்றும் மோதிக்கொள்ளும். மத்தினால் தயிர் கடைவதுபோல் காற்று கடலைக் கடையும். மலை போன்ற அலைகள் எழும்பி விழும். கடலில் பிரம்மாண்டமான பள்ளங்கள் தென்படும். அப்பள்ளங்களில் தண்ணீர் கரகரவென்று சுழலும். அந்தச் சுழலில் படகு அகப்பட்டுக் கொண்டால் அரோகராதான்."

வந்தியத்தேவனுக்குத் திடீரென்று மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அத்துடன் ஒரு சந்தேகமும் உதித்தது. "ஐயோ! நான் வரவில்லை! என்னைக் கரையிலே கொண்டு போய் விட்டுவிடு!" என்று கத்தினான்.

"என்ன உளறுகிறாய்? பேசாமலிரு! பயமாயிருந்தால் கண்ணை மூடிக்கொள். இல்லாவிட்டால் படுத்த ங்கு!" வந்தியத்தேவனுடைய சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது.

"நீ பெரிய மோசக்காரி! என்னைக் கடலில் மூழ்க அடிப்பதற்காக அழைத்துப் போகிறாய். நான் தூங்கினால் உன் காரியம் மிகவும் சுலபமாகும் என்று பார்க்கிறாய்!"

"இது என்ன பைத்தியம்?"

"எனக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை! படகைத் திருப்புகிறாயா, இல்லையா? திருப்பாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்!"

"தாராளமாய்க் குதி! ஆனால் குதிப்பதற்கு முன்னால் பொன்னியின் செல்வனுக்கு நீ எடுத்துப் போகும் ஓலையை என்னிடம் கொடுத்துவிடு!"

"ஓ! அந்த ஓலையைப் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது?"

"உன் இடுப்பில் சுற்றியிருக்கும் சுருளை அவிழ்த்துப் பார்த்ததில் தெரிந்தது. நீ யார், எதற்காக இலங்கை போகிறாய் என்று தெரிந்து கொள்ளாமல் உனக்குப் படகு தள்ளச் சம்மதித்திருப்பேனா? காலையில் மரத்தின் மேல் உட்கார்ந்து உன் அரைச் சுருளை அவிழ்த்து ஓலையைப் பார்த்தேன்..."

"மோசக்காரி! உன்னை நம்பி வந்துவிட்டேனே! படகைத் திருப்புகிறாயா, மாட்டாயா?"

வந்தியத்தேவனுடைய திகிலும், வெறியும் பன்மடங்கு ஆயின. "படகைத் திருப்பு! படகைத் திருப்பு!" என்று அலறினான்.

"நான் மட்டும் இளைய பிராட்டி குந்தவையாக இருந்திருந்தால் இவ்வளவு முக்கியமான ஓலையை உன்னைப் போன்ற சஞ்சல புத்திக்காரனிடம் கொடுத்து அனுப்பியிருக்க மாட்டேன்!" என்றாள் பூங்குழலி.

"ஓகோ! ஓலை கொடுத்தது யார் என்று கூட உனக்குத் தெரிந்திருக்கிறதே! நீ வஞ்சகி என்பதில் சந்தேகமில்லை. படகைத் திருப்புகிறாயா? கடலில் குதிக்கட்டுமா?"

"குதி! தாராளமாய்க் குதி!" என்றாள் பூங்குழலி.

வெறி கொண்ட வந்தியத்தேவன் தொப்பென்று கடலில் குதித்தான். கரையோரத்தில் இருந்ததுபோல் தண்ணீர் கொஞ்சமாக இருக்குமென்று எண்ணிக் குதித்தான். அதற்குள்ளே படகு நீச்சுநிலை கொள்ளா ஆழமான கடலுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறியவில்லை. கடலில் குதித்த பிறகுதான் அதை அறிந்தான். அறிந்த பிறகு அலறித் தத்தளித்தான்.

இதற்குள் வந்தியத்தேவன் ஓரளவு நீந்தத் தெரிந்து கொண்டிருந்தான்.ஆனால் தண்ணீரைக் கண்டால் அவனுக்கு இயற்கையாக ஏற்படும் பயம், கை கால்களின் தெம்பைக் குறைத்தது. ஆற்றிலே குளத்திலே என்றால், பக்கத்தில் உள்ள கரையைப் பார்த்துத் தைரியம் கொள்ள இடமிருந்தது; இதுவோ மாகடல். நாலாபுறமும் எங்கே பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயம். கடலில் அங்கே இலேசான அலைதான். எனினும் ஒரு சமயம் அவனை மேலே கொண்டு வந்தது, இன்னொரு சமயம் பள்ளத்தில் தள்ளியது. மேலே வந்தபோது படகு கண்ணுக்குத் தெரிந்தது. 'ஓ' என்று கத்தினான். பள்ளத்தில் விழுந்த போது படகு கண்ணுக்குத் தெரியவில்லை. சுற்றிலும் இருண்ட தண்ணீரின் சுவர் மட்டுமே தெரிந்தது.'ஓ' என்று அலறும் சக்தியைக் கூட அவனுடைய நா இழந்துவிட்டது. மூன்றாவது முறை கடல் அலை அவனை மேலே கொண்டு வந்தபோது படகு முன்னைவிடத் தூரத்துக்குப் போய்விட்டதாகத் தோன்றியது.'அவ்வளவு தான் கடலில் முழுகிச் சாகப் போகிறோம்' என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டாகிவிட்டது! நாம் முழுகுவது மட்டுமில்லை; நம்முடைய அரைக்கச்சும் அதில் உள்ள ஓலையும் முழுகப் போகின்றன! குந்தவை தேவியின் முகம் அவன் மனக் கண்ணின் முன்னால் வந்தது.

"இப்படி செய்து விட்டாயே?" என்று கேட்பது போல் இருந்தது. "ஆகா! என்னவெல்லாம் கனவு கண்டோம்? என்னவெல்லாம் மனக் கோட்டை கட்டினோம்? வாணர் குலத்துப் பழைய அரசு திரும்ப வந்து, இரத்தின கசிதமான சிங்காதனத்தில் பக்கத்தில் இளைய பிராட்டியுடன் வீற்றிருக்கப் போவதாக எண்ணினோமே? அவ்வளவும் பாழாகி விட்டது! இந்தப் பாவிப்பெண் கெடுத்துவிட்டாள்! இவள் ஒரு பெண் அல்ல; பெண் உருக்கொண்ட பேய்! பழுவேட்டரையர்களைச் சேர்ந்தவள . இல்லை, அந்த மோகினிப்பிசாசு நந்தினியைச் சேர்ந்தவள். நாம் கடலில் முழுகிச் செத்தாலும் பாதகமில்லை. இந்தப் பெண் பேய் மட்டும் இப்போது நம்மிடம் சிக்கினால் இவள் கழுத்தை நெறித்து... சீச்சீ! இது என்ன எண்ணம்! சாகும் போது நல்ல விஷயமாக எண்ணிக் கொள்வோம்! கடவுளை நினைப்போம்! உமாபதி! பரமேசுவரா! பழனி ஆண்டவா! பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே!...குந்தவை தேவி! மன்னிக்கவும் ஒப்புக்கொண்ட காரியத்தை முடிக்காமல் போகிறேன்... அதோ படகு தெரிகிறது. அந்தப் பெண் மட்டும் இப்போது கையில் சிக்கினால்!'

வந்தியத்தேவன் கடலில் குதித்துச் சிறிது நேரம் வரையில் பூங்குழலி அலட்சியமாகவே இருந்தாள். தட்டுத்தடுமாறி நீந்தி வந்து படகில் தொத்திக் கொள்வான் என்று நினைத்தாள். 'கொஞ்சம் திண்டாடட்டும்' என்ற எண்ணத்துடனே படகுக்கும் அவனுக்கும் இருந்த தூரத்தை அதிகமாக்கினாள்.விரைவில் அவள் எண்ணியது தவறு என்று தெரிந்து விட்டது. 'இவனுக்கு நன்றாக நீந்தத் தெரியவில்லை; அதோடு பீதியும் அடைந்து விட்டான்; 'ஆ!,' 'ஓ!' என்று அவன் அலறுவது விளையாட்டுக்கு அன்று; உண்மையான பயத்தினாலேதான். இன்னும் சற்றுப் போனால் உப்புத்தண்ணீரைக் குடிக்கத் தொடங்கி விடுவான்! முழுகியும் போய்விடுவான். பிறகு அவனுடைய உடலைக் கண்டுபிடிக்கவும் முடியாது. சேச்சே! தவறு அல்லவா செய்து விட்டோம்? விளையாட்டு விபரீதமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே! அக்கரை போகும் வரையில் நாம் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய இரகசியம் நமக்குத் தெரியும் என்று காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குள்ளே அவசரப்பட்டு விட்டோம். ஆனாலும் இந்த முரடன் இப்படிச் செய்வான் என்று யாருக்குத் தெரியும்? தண்ணீரைக் கண்டு இவன் இப்படி பயப்படுவான் என்று யார் கண்டது?'

அலையின் உச்சியில் வந்தியத்தேவன் அடுத்த தடவை தெர ந்த போது, பூங்குழலி படகை அவனை நோக்கிச் செலுத்தினாள். ஒரு நொடிப் பொழுதில் படகு அவனுக்கருகில் நெருங்கி விட்டது. "வா!வா. வந்து ஏறிக்கொள்!" என்றாள். ஆனால் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. விழுந்தாலும் படகைத் பிடித்து ஏறிக்கொள்ளப் போகிறவனாகத் தெரியவில்லை. கேட்கும் சக்தியோடும் பார்க்கும் சக்தியையும் இழந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அலறும் சக்தி மட்டும் இருந்தது. ஒரு கையை மேலே தூக்கி, தலையை மேலாக நிமிர்த்தி, 'ஓ' என்று ஒரு கணம் அலறினான். சகல நம்பிக்கையையும் இழந்து முழுகிச் சாகப் போகிறவனுடைய ஓலக்குரல் அது என்பதை பூங்குழலி அறிந்தாள். அவன் தலையை நிமிர்த்தியபோது பிறைச் சந்திரனின் மங்கிய நிலா வௌிச்சத்தில் அவன் முகம் ஒரு கணம் தெரிந்தது. வெறி முற்றிய பைத்தியக்காரனின் முகந்தான் அது! அவனாக வந்து படகில் ஏறிக் கொள்வான் என்று நினைப்பது வீண்!... நாம்தான் அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றியாக வேண்டும்! நல்ல சங்கடத்தை நாமாக வரவழைத்துக் கொண்டோம்! 'பெண்புத்தி பின்புத்தி' என்று சொல்லுகிறார்களே, அது சரிதான்!'

உடனே பூங்குழலி மிகப் பரபரப்புடன் சில காரியங்களைச் செய்தாள். படகில் கிடந்த பாய்மரம் கட்டுவதற்கான கயிற்றின் ஒரு முனையைப் படகிலிருந்து நீண்டிருந்த கட்டையில் சேர்த்துக் கட்டினாள். இன்னொரு முனையைத் தன் இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்; கடலில் குதித்தாள். வெகு லாவகமாகக் கைகளை வீசிப்போட்டு நீந்திக்கொண்டு போனாள். வந்தியத்தேவன் அருகில் சென்றாள்.கையினால் தாவிப் பிடிக்கக் கூடிய தூரத்தில் நின்று கொண்டாள்.

வந்தியத்தேவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான கொலை வெறி தாண்டவமாடியது. பூங்குழலியின் உள்ளம் அதிவேகமாக இயங்கியது. நீந்தத் தெரியாதவர்களும் கை சளைத்த த் தண்ணீரில் முழுகப் போகிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தங்களைக் காப்பாற்றுவதற்காக யாராவது வந்தால், அப்படி வருகிறவர்களின் தோளையோ கழுத்தையோ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள். காப்பாற்ற வருகிறவர்களும் நீந்த முடியாமல் செய்து விடுவார்கள்; உயிரின் மேலுள்ள ஆசையானது அச்சமயம் அவர்களுக்கு ஒரு யானையின் பலத்தை அளித்துவிடும். காப்பாற்ற வருகிறவர்களை இறுக்கிப் பிடித்துத் தண்ணீரில் அமுக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய பயங்கர ராட்சதப் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் முடியாது; நீந்தவும் முடியாது.இரண்டு பேருமாகச் சேர்ந்து கடலுக்கு அடியில் போகவேண்டியதுதான்!

இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த பூங்குழலி மின்னல் வேகத்தில் சிந்தனை செய்தாள்; ஒரு தீர்மானம் செய்து கொண்டாள். உயிருக்கு மன்றாடித் தத்தளித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை மேலும் சிறிது நெருங்கினாள். அவனுடைய தலைப்பக்கமாக வந்தாள். ஒரு கையினால் நீந்திக்கொண்டு இன்னொரு கையை இறுக மூடி ஓங்கினாள். வந்தியத்தேவனுடைய முகத்தை நோக்கிப் பலமாக ஒரு குத்துக் குத்தினாள். மூக்குக்கும் நெற்றிக்கும் நடுவில் அந்தக் குத்து விழுந்தது.படகு வலித்து வலித்துக் கெட்டிப்பட்டிருந்த அவளுடைய கையினால் குத்திய குத்து வஜ்ராயுதம் தாக்கியது போல் வந்தியத்தேவனைத் தாக்கியது. அவனுடைய தலை ஆயிரமாயிரம் சுக்கலாயிற்று. அவனுடைய கண்கள் பதினாயிரம் துணுக்குகள் ஆயின. ஒவ்வொரு கண் துணுக்கிற்கு முன்னாலும் ஒரு லட்சம் மின்பொறிகள் ஜொலித்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு மின்பொறியிலும் சமுத்திரகுமாரியின் முகம் தோன்றி 'ஹா ஹா ஹா ஹா' என்று பேய்ச்சிரிப்புச் சிரித்தது. ஆயிரம், பதினாயிரம், லட்சம் பேய்களின் அகோரமான சிரிப்பின் ஒல யில் அவன் காது செவிடுபட்டது. அப்புறம் அவனுக்குக் காதும் கேட்கவில்லை; கண்ணும் தெரியவில்லை! நினைவும் இல்லை! முடிவில்லாத இருள்! எல்லையில்லாத மௌனம்!


 

பக்க தலைப்பு



எட்டாம் அத்தியாயம்
பூதத் தீவு




வானமாதேவி இருக்கிறாளே, அவள் புத்தி விசாலத்தில் மனித குலத்தை ஒத்தவள்தான் போலும்! பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்லவிட்டு விடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும் லட்சதீபம் ஏற்றி அந்தப் பரஞ்சோதியைத் தேடுகிறார்கள்.

வானமா தேவியும் அத்தகைய புத்திசாலித்தனமான காரியத்தைத் தினந்தோறும் செய்கிறாள்! ஜோதிமயமான சூரிய பகவானைத் தன் வசத்திலிருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள்.பிறகு தன் நாதனைக் காணவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டாகிவிடுகிறது. லட்சதீபம் ஏற்றிச் சூரியனைத் தேடுகிறாள்! லட்ச தீபம் மட்டுமா ஏற்றுகிறாள்? கோடானு கோடி தூங்கா விளக்குகளை ஏற்றி இரவெல்லாம் அவளும் தூங்காமல் சூரியனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்!

வந்தியத்தேவன் தனக்கு உணர்வு வந்து கண்ணைத் திறந்து பார்த்தபோது, தன் கண்முன்னே பல்லாயிரம் தீபச் சுடர்கள் மின்னுவதைக் கண்டான்; எந்தக் கோவிலிலே இவ்வளவு அலங்காரமாக லட்சதீபம் ஏற்றியிருக்கிறார்கள் என்று வியந்தான். பின்னர், அவை தீபங்கள் அல்லவென்றும் வானத்தில் சுடர்விடும் நட்சத்திரங்கள் என்றும் உணர்ந்தான். படகில் தான் அண்ணாந்து படுத்திருப்பதையும் தன் இடுப்பைச் சுற்றி ஈரத்துணியின் மீது கயிறு ஒன்று கட்டியிருப்பதையும் அறிந்தான். ஜிலுஜிலுவென்று குளிர்ந்த காற்று அவன் உடல் மீது பட்டு அவனுக்கு எல்லையற்ற சுகத்தையும் அமைதியையும் அளித்தது. அமைதியான கடலில் எழுந்த ஓங்கார ந ாதம் அவன் உள்ளத்தில் அபூர்வமான சாந்தியை உண்டாக்கியது.

அந்த நாதத்தினிடையே ஒரு கீதமும் கேட்டது. அது என்ன கீதம்? அதை அவன் இதற்கு முன் எங்கே, எப்பொழுது கேட்டிருக்கிறான்?

                        "வாரிதியும் அடங்கி நிற்க மாருதமும் தவழ்ந்து வர 
                    
                        காரிகையென் உள்ளந்தனிலே காற்று சுழன் றடிப்பதுமேன்? 
                    
                        அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?" 
                    
                    


ஆகா! அந்த விசித்திரமான பெண்! பூங்குழலி! சற்று நிமிர்ந்து உட்கார்ந்து எதிரே பார்த்தான். ஆம், அவள்தான்! படகுதள்ளிக் கொண்டிருக்கிறாள்! அந்தச் சோக கீதத்தைப் பாடிக்கொண்டு படகு வலிக்கிறாள்! காரிருளிலே ஒரு மின்னல் மின்னிப் பல பொருள்களை ஒருநொடிப் பொழுதில் காட்டிவிடுவது போல முன்னிரவில் நடந்ததெல்லாம் வந்தியத் தேவனுக்குப் பளிச்சென்று ஞாபகம் வந்தது. அதாவது, அவன் கடலில் தத்தளித்தபோது பூங்குழலியும் கடலில் குதித்து அவனை நோக்கி வந்தது வரையிலேதான். பிறகு நடந்தது ஒன்றும் அவனுக்கு நினைவில் இல்லை. தன்னை அந்தப் பெண் காப்பாற்றிப் படகில் ஏற்றியிருக்க வேண்டும்.படகு அசையும்போதுதான் மீண்டும் கடலில் விழுந்து விடாமலிருப்பதற்காக இடுப்பில் கயிற்றைச் சுற்றிப் படகின் குறுக்குக் கட்டையில் சேர்த்துக் கட்டியிருக்கிறாள். கயிறு உடம்பின் தோலில் பட்டு வலிக்காதபடி அரை ஆடையின் மீது சுற்றிக் கட்டியிருக்கிறாள். இடுப்புத்துணியைச் சுற்றியிருந்த அரைச் சுருளை வந்தியத்தேவன் தொட்டுப் பார்த்துக் கொண்டன். பணமும் ஓலையும் பத்திரமாயிருக்கக் கண்டான்.

'ஆகா! இந்தப் பெண்மீது தான் சந்தேகங் கொண்டது எவ்வளவு பெரிய தவறு! வேறு விதமான துர்நோக்கம் இவளுக்கு இருந்தால் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லையே? கை சளைத்து உணர்விழந்த தன்னைக் கடலிலிருந்து படகில் ஏற்றுவதற்கு இவள் எவ்வளவு கஷ்டப்பட் டிருக்க வேண்டும்? எப்படித்தான் தன்னந் தனியாகச் செய்தாளோ? அபூர்வமான நங்கை இவள்!"

'இதோ அவள் எழுந்திருக்கிறாளே, ஏன்? தான் விழித்து விட்டதைப் பார்த்து விட்டுத்தான் தன்னை நெருங்கி வருகிறாளோ? வந்து என்ன செய்யப் போகிறாள்? இல்லை! இல்லை! வேறு ஏதோ செய்கிறாள். ஆகா! பாய்மரத்தில் பாயைக் கட்டப் போகிறாள்! எவ்வளவு கடினமான வேலை! அதுவும் தன்னந்தனியாகச் செய்வது?' "பூங்குழலி! பூங்குழலி!"

"ஓகோ! விழித்துக் கொண்டு விட்டாயா?"

"என் கட்டை அவிழ்த்து விடு! நானும் உனக்கு உதவி செய்கிறேன்."

"நீ சும்மா இருந்தால் போதும்.அதுவே பெரிய உதவி. கயிற்றை அவிழ்க்க வேண்டுமென்றால் நீயே அவிழ்த்துக் கொள்ளலாம்.ஆனால் மறுபடியும் கடலில் குதித்துவிடாதே!"

வந்தியத்தேவன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுக்கொண்டான். பூங்குழலி பாய் மரத்தைத் தூக்கி நிறுத்தினாள். அதில் பாயை விரித்துப் பறக்க விட்டாள்! படகு இப்போது உல்லாசமாகச் சென்றது; விரைவாகவும் சென்றது.

"சமுத்திரகுமாரி!"

"ஏன்?"

"தாகமாயிருக்கிறது!"

"உப்புத்தண்ணீர் குடித்திருக்கிறாய் அல்லவா? தாகமெடுக்காமல் என்ன செய்யும்?"

சுரைக் குடுக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு சமுத்திரகுமாரி வந்தியத்தேவன் அருகில் வந்தாள்.

"உனக்குச் சாப்பாடு கூடக் கொண்டு வந்தேன். நீ கடலில் குதித்த போது அதுவும் விழுந்துவிட்டது! நல்ல வேளையாக இந்தச் சுரைக் குடுக்கை தப்பிப் பிழைத்தது." இப்படிச் சொல்லிக் கொண்டே சுரைக் குடுக்கையை மூடியிருந்த தக்கையை எடுத்து விட்டுக் கொடுத்தாள். வந்தியத்தேவன் அதை வாங்கித் தண்ணீர் குடித்தான்.

தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "உன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டு விட்டேன்; அதற்காக வருத்தப்படுகிறேன்" என்றான்.

"அது ஒன்றும் பாதமில் ை. நீ யாரோ? நான் யாரோ? பொழுது விடிந்தால் பிரிந்துவிடப் போகிறோம்."

"இப்போது நேரம் என்ன?"

"வானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள். சப்த ரிஷிமண்டலத்தைப் பார்!" என்றாள் பூங்குழலி.

வந்தியத்தேவன் வட திசையில் அடிவானத்தைப் பார்த்தான். அவன் படகு ஏறும்போது பார்த்ததற்கு இப்போது சப்த ரிஷிகள் இடம் மாறிப் பாதி வட்டம் வந்திருந்தார்கள். அந்த அருந்ததி நட்சத்திரம் வசிஷ்டருடன் எப்படி ஓட்டிக் கொண்டே வருகிறது! அதிசயந்தான்! துருவ நட்சத்திரம் மட்டும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. வானவௌியும் மூலைக் கடலும் சேரும் அந்த இடத்தில் துருவ நட்சத்திரம் யுக யுகமாக நிலைத்து நின்று வருகிறது! எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டு வருகிறது. துருவ நட்சத்திரம்! அதை யாருக்கோ உதாரணமாகச் சொன்னார்களே? யார் சொன்னது? யாரைச் சொன்னது? ஞாபகம் வருகிறது; குடந்தை சோதிடர் சொன்னார். இளவரசர் அருள்மொழிவர்மருக்கு வடதுருவத்தை உதாரணமாகச் சொன்னார். இளவரசரைப் பார்க்கும் பேறு நமக்கு உண்மையிலேயே கிடைக்கப் போகிறதா? இந்தப் பெண்ணின் உதவியினால் கிடைக்க போகிறதா?

பூங்குழலி தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். "நேரம் என்னவென்று தெரிந்ததா? மூன்றாம் ஜாமத்தில் பாதி நடக்கிறது. காற்றுத் திரும்பி விட்டது. பொழுது விடிய நாகத்தீவுக்குப் போய்விடுவோம்" என்றாள்.

"நாகத் தீவா?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.

"ஆமாம்; இலங்கையின் வடபகுதி ஓரத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நாகத் தீவு. அதில் இறங்கினால் மறுபடியும் கடலைக் கடக்கும் அவசியமில்லாமல் கரை வழியாகவே இலங்கைத் தீவை அடைந்து விடலாம்..."

"என்னை இறக்கிவிட்ட பிறகு நீ என்ன செய்வாய்?..."

"என்னை பற்றி உனக்கு என்ன கவலை?" என்றாள் பூங்க ுழலி.

"எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தாய் அல்லவா? உன்னிடம் நான் நன்றி செலுத்த வேண்டாமா? என்னிடம் ஏதோ பிரதி உபகாரம் கேட்கப் போவதாகச் சொன்னாயே, அது என்ன?" என்றான்.

"அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டு விட்டேன். உன்னிடம் ஒன்றும் நான் கேட்கப் போவதில்லை. நீ நன்றி இல்லாதவன்."

அவள் அவ்விதம் குற்றம் சாட்டுவதற்குக் காரணம் உண்டு என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு தடவை அரைச்சுருளைத் தடவிப் பார்த்துக்கொண்டு ஓலை இருக்கிறது என்று உறுதி பெற்றான்.

"சமுத்திரகுமாரி! நேற்று முன் இரவில் உன்னைச் சந்தேகித்து நடந்து கொண்டதை நினைத்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதற்காக என்னை மன்னித்துவிடு!"

"ஆகட்டும்; நீயும் அதை மறந்துவிடு! நடக்க வேண்டியதைப் பற்றி யோசி! இலங்கையில் உன்னை நான் இறக்கிவிட்ட பிறகு என்ன செய்வாய்? இளவரசர் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?"

"இந்தக் கடலைக் கடப்பதற்கு எனக்கு உதவி செய்த கடவுள் அதற்கும் உதவி செய்வார்!"

"கடவுளிடம் உனக்கு மிக்க நம்பிக்கை போலிருக்கிறது. நம்மைப் போன்ற அற்ப மனிதர்களின் காரியங்களில் கடவுள் சிரத்தை கொள்கிறார் என்று நினைக்கிறாயா?"

"அவ்வளவு தூரம் நான் தத்துவ விசாரணை செய்ததில்லை. ஏதாவது கஷ்டமோ, அபாயமோ நேர்ந்தால் கடவுளைப் பிரார்த்திப்பேன். கடவுளும் சமயத்தில் உதவி செய்வார். இந்தக் கடலில் எனக்குப் படகு தள்ளுவதற்காகக் கடவுள் உன்னை அனுப்பி வைத்தார் அல்லவா?"

"அவ்வளவு கர்வம் உனக்கு வேண்டாம். நான் உனக்காகப் படகு தள்ள வரவில்லை.என்னை உனக்கு உதவி செய்யும்படி கடவுள் கனவிலே சொல்லி அனுப்பவும் இல்லை..."

"பின் எதற்காக நேற்று என்னைத் தப்புவித்தாய்? எதற்காக இப்போது படகு தள்ளிக்கொண்டு வருகிறாய்!"

"அதைப்பற்றி நீ கேட்க வேண்டாம். அது என் ொந்த விஷயம்."

வந்தியத்தேவன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய கர்வங் கொண்ட உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. தன்னுடைய வீர சௌந்தரிய வடிவழகைக் கண்டு தன் பேரில் இப்பெண் மோகங்கொண்டு விட்டாளோ என்று நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவளுடைய பேச்சும் நடவடிக்கைகளும் அம்மாதிரி எண்ண இடம் தரவில்லை. வேறு ஏதோ மர்மமான காரணம் இருக்கிறது. இவளுடைய வாயைப் பிடுங்கி அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

"ஒரு விஷயத்தை நினைத்தால் கொஞ்சம் எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது..." என்றான்.

"அது என்ன? உனக்குக் கூடவா கவலையாயிருக்கிறது?"

"இலங்கையில் காடும் மலையும் அதிகம் என்று சொல்லுகிறார்கள்."

"இலங்கையில் பாதிக்கு மேலே காடும் மலையுந்தான்."

"காட்டு மிருகங்கள் அங்கே அதிகம் என்று சொல்கிறார்கள்"

"காட்டு யானைகள் மந்தை மந்தையாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். சில சமயம் காடுகளுக்கு வௌியிலும் யானைக் கூட்டம் வந்துவிடும்."
"இலங்கையில் உள்ளவர்கள் காட்டுமிராண்டி மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."

"அது முழுப் பொய்."

"அப்படியானால் சரி; நீ சொன்னால் உண்மையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட காட்டுப் பிரதேசத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்."

"அது ஒன்றும் கஷ்டமில்லையென்று சற்று முன் சொன்னாயே?"

"ஆமாம்; சொன்னேன். சூரியன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியுமென்று முதலில் நினைத்தேன்."

"இப்போது ஏன் வேறு விதமாக நினைக்கிறாய்?"

"சூரியனை மேகங்கள் மறைந்திருக்கலாம்; அல்லது கடலுக்கடியில் சென்றிருக்கலாம்."

"இந்தச் சூரியனை எந்த மேகமும், கடலும் மறைந்து விட முடியாது. பொன்னியின் செல்வரை மறைக்க முயலும் மேகம ும் ஒளி பெறும்; கடலும் ஜொலிக்கும்!"

இளவரசரைப் பற்றிப் பேசும்போது இவளுடைய உற்சாகம் எப்படிப் பொங்குகிறது? சோழநாட்டுப் பிரஜைகள் பலரையும் போல இந்தப் பெண்ணும் அவரைத் தெய்வமாகக் கருதுகிறாள்! அருள்மொழி வர்மரிடம் அப்படிப்பட்ட வசீகர சக்தி என்ன இருக்கும்?- இவ்விதம் மனத்தில் எண்ணிக்கொண்டு,"அப்படியானால் இலங்கையில் இளவரசரைத் கண்டு பிடிப்பது கஷ்டமில்லையென்றா சொல்கிறாய்?" என்றான். "

சோழ சைன்யம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனால், இளவரசர் இருக்கும் இடம் தானே தெரிகிறது."

"அது எப்படி? இலங்கையில் பாதி அளவு சோழ சைன்யம் பரவி இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே"?

"ஆமாம்; மாதோட்டத்திலிருந்து புலஸ்திய நகரம் வரையில் சோழர் படை பரவியிருக்கிறது என்றுதான் நானும் கேள்விப் பட்டேன்..."

"பின்னே? அவ்வளவு பெரிய பிரதேசத்தில் இளவரசர் எங்கே இருக்கிறாரோ? காட்டு வழிகளில் தேடிச்சென்று அவரைக் கண்டுபிடிக்க அதிக நாள் ஆகலாம். இந்த ஓலையை உடனே அவரிடம் நான் சேர்ப்பித்தாக வேண்டும். நீ தான் ஓலையைப் பார்த்துவிட்டாயே? எவ்வளவு அவசரம் என்று உனக்குத் தெரிந்திருக்குமே?"

சமுத்திர குமாரி இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்.

"இளவரசர் இருக்குமிடம் நிச்சயமாகத் தெரிந்தால் வீண் அலைச்சல் அலையாமல் அவர் இருக்குமிடத்துக்கு நேரே போய்விடலாம்" என்றான் வந்தியத்தேவன்.

"அதற்கு ஒரு வழி இருக்கிறது" என்றாள் பூங்குழலி.

"இருக்கும் என்று நம்பித்தான் உன்னைக் கேட்டேன்."

"காலையில் நாகத் தீவில் உன்னை இறக்கி விடுவதாகச் சொன்னேன் அல்லவா?"

"ஆமாம்!"

"நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது."

"தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே!"

"பயப்படாதே! ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்தபகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாரம். அதனால் போதத் தீவு என்று பெயர் வந்தது."

பின்னால் அது 'பூதத் தீவு' என்று ஆகி விட்டதாகும்."

"ஆமாம்! 'பூதத் தீவு' என்றபெயரைக் கேட்டே உன்னைப்போல் பலர் பயங்கரமடைந்தார்கள். பிறகு அந்தத் தீவுக்குச் சாதாரணமாக யாரும் போவதில்லை. பூதத்துக்குப் பயப்படாதவர்கள்தான் போவார்கள்."

"அதாதவது உன்னைப் போன்ற தைரியசாலிகள். கொள்ளிவாய்ப் பிசாசுக்குப் பயப்படாதவள் அல்லவா நீ? சரி; பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய்?"

"பூதத்தீவின் கரையில் ஒரு நாழிகை நேரம் நீ தாமதித்தால் பொன்னியின் செல்வர் இப்போது இலங்கையில் எங்கே இருக்கிறார் என்று விசாரித்துச் சொல்வேன்..."

"பூதத் தீவில் யாரை விசாரிப்பாய்...?"

"பூதத் தீவில் ஒரு பூதம் இருக்கிறது. அதை விசாரிப்பேன்.."

"அந்தப் பூதத்தை எனக்கும் காட்டுவாயல்லவா?"

"அதுதான் முடியாது. நீ என்னைத் தொடர்ந்து தீவுக்குள் வரக்கூடாது. கரையில் படகைப் பார்த்துக்கொண்டு காத்திருப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்தால் நான் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்வேன்."

"சரி, அப்படியே ஆகட்டும்!" என்றான் வல்லவரையன்.

காற்று சுகமாக அடித்தது. பாய் மரத்தின் உதவியினால் படகுவிர்ரென்று கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. கடலின் ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது. வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. விழிப்பு நிலையிலிருந்து உறக்க நிலைக்கு இலேசாக நழுவிச் சென்றான்.


 

பக்க தலைப்பு



ஓன்பதாம்அத்தியாயம்
"இது இலங்கை!"




மறுபடியும் வந்தியத்தேவ ் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது.

வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம்காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப்பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும்அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன.மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

"ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்று பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக் கொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப் பட்டு வர கிறார்கள்" என்றாள் பூங்குழலி.

"யாரை அசுரர்கள் என்று சொல்லுகிறாய்?" என்றான்.

"உன்னைப் போல் யுத்தமே தொழிலாகக் கொண்டவர்களைத்தான்."

"பொன்னியின் செல்வர் கூடவா?"

"அவரைப் பற்றி என்னை எதற்காகக் கேட்கிறாய்?"

"இளவரசரைப் பற்றி விசாரித்துச் சொல்வதாகக் கூறினாயே?"

"அவர் இருக்கக்கூடிய இடத்தை விசாரித்துச் சொல்வதாகச் கூறினேன். அவர் மனிதரா, அசுரரா, தேவரா என்று கண்டுபிடித்துச் கூறுவதாகச் சொல்லவில்லையே?"

படகு தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்தது. கடல் நடுவே கேட்கும் ஓங்காரத் தொனிக்குப் பதிலாகக் கடல் அலைகள் கரையிலே மோதும்போது உண்டாகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

"என்ன சொல்கிறாய்? எதிரே தெரிகிறதே, அதுதான் பூதத்தீவு, வலப்புறத்தில் உள்ளது நாகத்தீவு. எங்கே போகட்டும் நாகத் தீவிலேயே உன்னைக் கொண்டுபோய் இறக்கி விட்டு விடட்டுமா? விசாரித்துக்கொண்டு போகிறாயா?"

"இல்லை; பூதத் தீவுக்கே போகலாம். கொஞ்ச நேரம் தாமதமானாலும் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு போவதுதான் நல்லது."

"அப்படியானால் சரி; நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி ஞாபகம் இருக்கட்டும்!"

சிறிய தீவின் கரையில் வந்து படகு நின்றது.படகைப் பார்த்துக்கொள்ளும்படி வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டுப் பூங்குழலி அந்த மரகதத் தீவிற்குள்ளே சென்றாள். வந்தியத்தேவன் அவள் சென்ற திக்கைப் பார்த்தான்.பச்சை மரங்களுக்கிடையில்அவள் விரைவில் மறைந்து விட்டாள்.

போதத் தீவு, மக்களின் வாக்கில் மருவிப் பூதத்தீவாக மாறியது பற்றி வந்தியத்தேவன் முதலில் சிந்தித்தான். பிறகு அத்தீவுக்குள்ளே இப்போது குடியிருக்கும் பூதம் எப்படிப்பட்ட பூதமாயிருக்கும் என்று எண்ணமிட்டான்.பின்னர் இந்த அதிசயமான பெண்ணின் உள்ளத்தில் மறைந்திருக்க ம் மர்மம் என்னவாயிருக்கும் என்று வியந்தான். பூங்குழலி கூறியபடி ஒரு நாழிகைக்குள் திரும்பி வந்தாள். படகில் ஏறிக்கொண்டு வந்தியத்தேவனையும் ஏறிக்கொள்ளச் சொன்னாள். நாகத்தீவை நோக்கிப் படகு சென்றது.

"விசாரித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிந்ததா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்காக மாதோட்டத்துக்கு வந்திருக்கிறாராம். நேற்றைக்கு இளவரசரும் மாதோட்டத்துக்கு வந்திருக்க வேண்டும். எத்தனைநாள் மாதோட்டத்தில் இருப்பார் என்று தெரியாது. நீ அங்கே போய்த் தெரிந்து கொள்ளலாம்" என்றாள் பூங்குழலி.

"மாதோட்டம் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கும்?"

"ஐந்து, ஆறு காத தூரம் இருக்கும். வழியெல்லாம் ஒரே காடு. கோடிக்கரைக் காடு மாதிரி இருக்கும் என்று நினைக்காதே. வானை எட்டும் மரங்கள் அடர்ந்தகாடு. பட்டப்பகலில் சில இடங்களில் இருட்டாக இருக்கும். யானைக் கூட்டங்களும், வேறு துஷ்ட மிருகங்களும் உண்டு. நீ ஜாக்கிரதையாகப் போய்ச் சேரவேண்டும்.

"காட்டில் வழி காட்டுவதற்கு உன்னைப்போல் ஒரு கெட்டிக்காரப் பெண்மட்டுமிருந்தால்...?" என்று வல்லவரையன் பெரு மூச்சு விட்டான்.
"அப்போது நீ ஒருவன் என்னத்திற்காக! ஓலையை என்னிடம் கொடுத்துவிடு! நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன்... இல்லை முடியாது! ஏதோ பைத்தியக்காரியைப் போலப் பேசுகிறேன். என்னால் முடியவே முடியாது. இளைய பிராட்டியிடம் ஒப்புக் கொண்டு வந்தாயல்லவா? அதை நீதான் செய்து முடிக்கவேண்டும்!" என்றாள்.

"ஆகட்டும் பூங்குழலி! நான் செய்துமுடிப்பேன். இன்னொருவர் கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கமாட்டேன். நீ இவ்வளவு உதவி செய்தனையே? அதுவே போதும்!"

படகு நாகத்வீபத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. பூங்குழலியின் கைகள் து ுப்பை வழக்கம்போல் வலித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவளுடைய உள்ளம் வேறு எங்கேயோ கனவுலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பது முகத்திலிருந்து தெரிந்தது.

"சமுத்திர குமாரி!" என்று வந்தியத்தேவன் அழைக்கவும், அவள் திடுக்கிட்டு இவ்வுலகத்துக்கு வந்தாள்.

"ஏன் கூப்பிட்டாய்?" என்று கேட்டாள்.

"ஏதோ என்னிடம் பிரதி உபகாரத்தை எதிர் பார்ப்பதாகச் சொன்னாயே? அதை இப்போது சொன்னால்தான் சொன்னது. இதோ கரை நெருங்கி வருகிறது."

பூங்குழலி உடனே மறுதளிக்கவில்லை; சிந்திப்பதாகத் தோன்றியது. ஆகையால் வந்தியத்தேவன் தைரியம் கொண்டு மேலும் கூறினான்.
"நீ எனக்குச் செய்த உதவி மிகப்பெரியது. எனக்கு மட்டும் நீ உதவவில்லை; சோழ சாம்ராஜ்யத்துக்கே உதவி புரிந்திருக்கிறாய். சோழ சக்கரவர்த்தியின் குலத்துக்கு மாபெரும் உதவி புரிந்திருக்கிறாய். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்யாவிட்டால் என் மனம் நிம்மதியடையாது" என்றான்.

"இதையெல்லாம் நீ உண்மையாகச் சொல்லுகிறாயா? அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா?"

"சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்."

"அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா?"

"ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்."

"உன்னுடைய சத்தியத்தையும் ஆணையையும் நம்பி நான் சொல்லவில்லை. பொய் சொல்லும் வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா? உன்னை முதன்முதலாவது பார்த்தவுடனேயே நீ நல்லவன் என்று எனக்குத் தோன்றியது. ஆகையினால் சொல்லுகிறேன்..."

"முதலில் தோன்றிய எண்ணந்தான் எப்போதும் மேலானது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்."

"பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது 'சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?' என்று கேள். "ஞாபகம் இருக்கிறது" என்று அவர் சொன்னால், 'அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்' என்று கூறு!"

"பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?' - இவ்வாறு வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான்.

வௌிப்படையாக, "இதைச் சொல்லத்தானா, இவ்வளவு தயங்கினாய்? என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகிறேன்! அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன்!..." என்றான்.

"ஐயையோ! அவர் கேட்காவிட்டால் நீயாக ஒன்றும் சொல்லவேண்டாம்!"

"அதெல்லாம் முடியாது; சொல்லித்தான் தீருவேன்."

"என்ன சொல்லுவாய்?"

"நடந்தது நடந்தபடிதான் சொல்லுவேன். 'இளவரசே! பொன்னியின் செல்வரே! சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது!" என்று சொல்லுவேன், சரிதானே?"

"இதுவரை சொன்னது சரிதான். மேலும் ஏதாவது சேர்த்த க் கொண்டுவிடாதே! இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே!"

"சேச்சே! என்னை முழுப் பைத்தியம் என்று நினைத்தாயா?"

"இளவரசர் அதற்கு ஏதேனும் மறுமொழி சொன்னால், அதை உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும். கூட்டியோ, குறைத்தோ சொல்லக் கூடாது."

"உன்னைப் மறுபடி நான் எங்கே பார்ப்பது?"

"என்னைப் பார்ப்பதில் என்ன கஷ்டம்? கோடிக் கரையிலோ இந்தப் பூதத் தீவிலோ, அல்லது இரண்டுக்கும் மத்தியில் படகிலோ இருப்பேன்."

"ஊருக்குத் திரும்பும்போது இந்த வழியாக வந்தால் பூதத் தீவில் நீ இருக்கிறாயா என்று பார்க்கட்டுமா?"

"தீவுக்குள்ளே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ வரக்கூடாது; வந்தால் விபரீதமாகும். இந்தப் படகு கடலோரத்தில் இருக்கிறதா என்று பார்!இருந்தால், ஏதாவது ஓர் அடையாளம் வைத்துக் கொண்டு சத்தம் செய்! நான் நேற்றுக் குயில் மாதிரி கூவினேனே, அந்த மாதிரி நீ கூவ முடியுமா?..."

"குயில் மாதிரி கூவ முடியாது? ஆனால் மயில் மாதிரி சத்தம் செய்வேன்.இதைக்கேள்!"

வந்தேயத்தேவன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மயில் கத்துவது போன்ற அகோரமான குரலில் கத்திக் காட்டினான்.அதைக் கேட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள். படகு நாகத் தீவின் கரையை அணுகியது. இருவரும் படகிலிருந்து இறங்கினார்கள். வந்தியத்தேவன் கரையில் ஏறி விடை பெற்றுக்கொண்டான். பூங்குழலி படகைத் திருப்பினாள். வந்தியத்தேவன் சபலத்துடன் திரும்பிப் பார்த்தான். "உன்னுடன் வருகிறேன்" என்று சொல்லி, அவளும் வரமாட்டாளா? என்ற ஆசை அவன் மனத்தில் இன்னமும் கொஞ்சம் இருந்தது. ஆனால் பூங்குழலி அவனைக் கவனிக்கவேயில்லை. அதற்குள் அவள் கனவுலோகத்தில் சஞ்சரிக்கப் போய்விட்டாள் என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது.


 

பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
அநிருத்தப் பிரமராயர்




இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான் நம்பியைக் கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டு விட்டோம். அதற்காக நேயர்களிடமும், நம்பியிடமும் மன்னிப்புக் கோருகிறோம். முக்கியமாக நம்பியின் மன்னிப்பை இப்போது நாம் கோரியே தீரவேண்டும். ஏனெனில் ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அவனுடைய கைத்தடியோ தலைக்கு மேலே சுழன்றுகொண்டிருக்கிறது. அவனைச் சுற்றி ஆதி சைவர்களும், வீர சைவர்களும் பலர் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டம் பலமாக இருப்பதால், ஆழ்வார்க்கடியானுடைய கதி யாதாகுமோ என்று நமக்குக் கொஞ்சம் கவலையாகவுமிருக்கிறது. எனினும் நம்பியின் நரசிம்மாவதாரத் தோற்றமும், அவனுடைய கைத்தடி சுழலும் வேகமும் அந்தக் கவலையைப் போக்குகின்றன.

வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான் பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயு வேக மனோ வேகமாகத் தென்திசையை நோக்கிச் சென்றான். வழியில் எங்கும் அவன் சைவ வைஷ்ணவச் சண்டையில் இறங்கவில்லை.காரியத்துக்குத் குந்தகம் வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான். மதுரையில் சிறிது நேரம் தங்கினான். அங்கு அவன் அறிய விரும்பிய செய்தியை விசாரித்து அறிந்து கொண்டு இராமேசுவரத்துக்குப் புறப்பட்டான். வந்தியத்தேவன் பூங்குழலியின் படகில் சென்று இலங்கைத் தீவில் இறங்கிய அதே நாள் மாலையில் ஆழ்வார்க்கடியான் நம்பி இராமேசுவரம் வந்து சேர்ந்துவிட்டான்.

அந்த ் புண்ணிய பூமியை மிதித்த உடனே ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் அத்தனை நாளும் அடங்கிக் கிடந்த வைஷ்ணவ ஆர்வம் கரையை உடைத்துக்கொண்டு பொங்கி விட்டது. இராமேசுவரத் தீவில் எங்கெங்கும் மொய்த்துக் கொண்டிருந்த வீர சைவ பட்டர்கள் அந்த ஆர்வத்துக்குத் தூபம் போட்டுவிட்டார்கள். அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று பற்பல தீர்த்தங்களிலும் ஸ்நானம் பண்ணி வைப்பதும், ஆலயத்தில்- மூர்த்தி தரிசனம் செய்து வைப்பதும், அந்தந்தத் தீர்த்தம்- மூர்த்தி விசேஷங்களை எடுத்துச் சொல்வதுமே அவர்களுடைய அலுவல்கள். எனவே, புதிய யாத்ரீகர்களைக் கண்டதும் பட்டர்கள் பலர் சென்று சூழ்ந்து கொள்வார்கள். அவ்விதமே ஆழ்வார்க்கடியானையும் சுற்றி மொய்த்துக் கொண்டார்கள்.

"அப்பனே! வா! வா! இந்த ஸ்தலத்திலுள்ள அறுபத்து நான்கு தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து உன் தேகத்தில் தரித்திருக்கும் வைஷ்ணவப் பாஷாண்டமத சின்னங்களைக் கழுவித் துடைத்துக் கொள்! இராமரின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய ஸ்தலம் அல்லவா இது? வைஷ்ணவ பாஷாண்ட மதசின்னங்களை நீ அணிந்ததினால் ஏற்பட்ட பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம்!" என்று ஒரு பட்டர் விந்நியாசமாகப் பேசினார்.

இன்னொருவர் குறுக்கிட்டு, 'இராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம் ஆஞ்சநேய தீர்த்தம், சுக்ரீவதீர்த்தம் இப்படி அறுபத்து நாலு தீர்த்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அந்தந்த தீர்த்தத்தில் தலை மூழ்கி அவரவர்களுடைய தோஷத்தைப் போக்கிக் கொண்டார்கள். நீ என்னுடன் முதலில் ஆஞ்சநேய தீர்த்தத்துக்கு வா! வைஷ்ணவ சின்ன தோஷத்துக்குச் சரியான சங்கல்பம் பண்ணி வைக்கிறேன்!" என்றார்.

மற்றொரு பட்டர் "அப்பனே! இவர்கள் சொல்வதைக் கேளாதே! இராமர் இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள் வதற்காகச் சமுத்திர மணலைப் பிடித்து வைத்துச் சிவலிங்கமாக்கிப் பூஜித்த இடத்துக்கு உன்னை நேராக அழைத்துப் போகிறேன்" என்றார்.

ஆழ்வார்க்கடியான் கண்ணில் தீப்பொறி பறக்க எல்லாரையும் ஒரு தடவை விழித்துப் பார்த்து, "நிறுத்துங்கள் உங்கள் அபத்தப் பேச்சை! முதலில் நீங்கள் சொன்ன தீர்த்தங்களினால் உங்களுடைய நாவை அலம்பி உங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்!" என்றான்.

"ஓஹோ! இராமன், லக்ஷ்மணன் என்றெல்லாம் சொன்னதனால் எங்களுக்குப் பாவம் வந்திருக்கும் என்று நினைக்கிறாயா? அப்படி ஒன்றுமில்லை. இந்த க்ஷேத்திரத்துக்குப் பெயரே இராமேச்சுவரம்; இராமர் ஈசுவரனாகிய சிவபெருமானைப் பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட இடம். அத்துடன் இராமர் என்ற பெயரில் இருந்த தோஷமும் போய்விட்டது!" என்றார் ஒரு வீர சைவ பட்டர்.

"ஓ அஞ்ஞான சிரோன்மணிகளே! ஏன் இப்படித் தலைக்குத் தலை உளறுகிறீர்கள்? இந்த ஸ்தலப் பெயரின் அர்த்தம் இன்னதென்பதையே நீங்கள் தெரிந்துகொண்ட பாடில்லை!"

"நீதான் சொல்லேன், பார்ப்போம்!"

"பிரம்மாவினுடைய ஒரு தலையைப் பறித்ததினால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட்டது. திருமாலின் பூரண அவதாரமாகிய இராமபிரானுடைய பாதம் பட்டுப் புனிதமான இந்த இடத்துக்குச் சிவன் வந்து அந்தப் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார். இராமரை ஈசுவரன் பூஜித்த இடமானபடியால் இராமேசுவரம் என்ற பெயர் ஏற்பட்டது! தெரிந்து கொண்டீர்களா, மூடசிகாமணி பட்டர்களே!" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜித்தான்.

"யாரடா! அவன் எங்களை மூட சிகாமணிகள் என்பது? அடே தடியா! நீ என்ன தலையில் கொம்பு முளைத்தவனா?" என்று ஒரு பட்டர் சீறினார்.

"இல்லை, ஐயா, பட்டரே! என் தலையிலே கொம்பு முளைக்கவில்லை; கையிலேதான் இந்தக் கொம்பு இருக்கிறது! என்னை யார் என்று கேட்டீர் அ ல்லவா? சொல்லுகிறேன். திருக்குருகூரில் அவதரித்து, வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் அடியார்க்கு அடியான்!மற்றவர்கள் மண்டையில் நையப்புடைக்கும் கைத்தடியான்!" என்று தடியைத் தூக்கிக் காட்டினான்.

"ஆழ்வார்க்கடியார்க் கடியானே! நீ ஏன் உன் தலையில் முன்புறத்தில் குடுமி வைத்திருக்கிறாய்? அதையும் மழுங்கச் சிரைத்து விட்டாயானால், உன் மண்டையில் உள்ளும், புறமும் ஒன்றாயிருக்கும்!" என்றார் ஒரு சைவர்.

"பட்டர்களே! இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்திலே வந்து என் முன் குடுமியை எடுத்து விடுவதாகவே எண்ணியிருந்தேன். அதற்குள் நீங்கள் ஞாபகப்படுத்தினீர்கள்!..."

"அடே! நாவிதர் தெருவுக்குச் சென்று ஒருநாவிதனை அழைத்து வாருங்களடா! கத்தியை நன்றாய்த் தீட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள்! இவனுடைய சிகையை ஆணி வேரோடு களைந்தெறியச் சொல்லலாம்!" என்றார் ஒரு பட்டர்.

"இதற்கு நாவிதனைக் கூப்பிடுவானேன்? நாமே அந்தக் கைங்கர்யம் செய்து விடலாமே? நல்ல கூர்மையான கத்தியாகக் கொண்டு வாருங்கள்!" என்றார் இன்னொரு சைவர்.

"கொஞ்சம் பொறுங்கள்; இன்னும் ஒரு விஷயம் பாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் என் தலை முழுவதும் சிகை அடர்த்தியாக இருந்தது.ஒரு சைவனுடைய மண்டையை உடைத்து விட்டு என் சிகையிலிருந்து ஒரு ரோமத்தை வாங்கிவிடுவதென்று விரதம் எடுத்துக்கொண்டேன். அதன்படி முக்காலே அரைக்கால்வாசி சிகை தீர்ந்து விட்டது. இந்த ஊரில் என் முழுவிரதத்தையும் நிறைவேற்றிக் கடலில் ஒரு முழுக்குப் போடப் போகிறேன். எங்கே, ஒவ்வொருவராக உங்களுடைய மண்டையைக் காட்டுங்கள். பார்க்கலாம்!" என்று ஆழ்வார்க்கடியான் கைத்தடியை ஓங்கினான்.

"அடடே! இந்த வைஷ்ணவன் என்ன துடுக்காகப் பேசுகிறான்?" என்று சொன்னார் ஒருவர்.

"எங்கள் எல்லாருடைய மண்டையையும் உடைத்து விடுவாயா? உன்னால் முடிய மா?" என்று கூறினார் இன்னொருவர்.

"முடியாமலா முக்காலே அரைக்கால் பங்கு சிகையை எடுத்து விட்டிருக்கிறேன்?" என்று கூறி ஆழ்வார்க்கடியான் தடியை வேகமாகச் சுழற்றத் தொடங்கினான்.

"அடியுங்கள்! பிடியுங்கள்! கட்டுங்கள்! வெட்டுங்கள்!" என்று தலைக்குத் தலை கத்தினார்களே தவிர, அக்கூட்டத்தில் யாரும் ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நெருங்கவில்லை. அச்சமயம் வெகு சமீபத்தில் எழுந்த ஒரு கோஷம் அவர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது.
"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!"

எல்லோரும் திகைத்துப் போய்க் கோஜம் வந்த திசையை நோக்கினார்கள். ஆழ்வார்க்கடியான் எல்லாரிலும் அதிகமாகத் திகைத்துத் தனது கைத் தடியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு பார்த்தான். அவர்கள் நின்று சண்டையிட்ட இடம், இராமேசுவரக் கோயில் மதிலின் ஓரமான ஒரு முடுக்கு. அந்த முடுக்குத் திரும்பியதும் எதிரே விரிந்து பரந்தகடல். அக்கடலின் காட்சியோ கண்கொள்ளாத அற்புதக் காட்சியாயிருந்தது.பெரிய பெரிய மரக்கலங்கள், நாவாய்கள், சிறிய கப்பல்கள், படகுகள், ஓடங்கள், வள்ளங்கள், வத்தைகள், கட்டுமரங்கள் ஆகியவை நெடுகிலும் வரிசை வரிசையாகக் கண்ணுக் கெட்டிய தூரம் காணப்பட்டன. பாய்மரங்களிலிருந்து படபடவென்று காற்றில் அடித்துக்கொண்டு பறந்த வெண்ணிறப் பாய்கள், கடலையும் வானத்தையும் தூரத்திலே திட்டுத் திட்டாகத் தோன்றிய பல தீவுகளையும் பெரும்பாலும் மறைத்துக் கொண்டிருந்தன.

மேலே சொன்னவாறு கட்டியங் கூறிக்கொண்டு காவல் வீரர்கள் முன்னும் பின்னும் தொடர, சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற முதன் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயர் ராஜ கம்பீரத்துடன் ஒரு படகில் வந்து கொண்டிருந்தார். கரையில், கோ ில் மதில் ஓரமாக நடந்து கொண்டிருந்த சச்சரவை அவர் கவனித்தார். கூட்டத்தின் நடுவில் கக்கத்தில் தடியுடன் பரம சாதுவைப்போல் நின்ற ஆழ்வார்க்கடியானைக் கையினால் சமிக்ஞை செய்து அருகில் அழைத்தார். ஆழ்வார்க்கடியான் பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு கடற்கரையோரம் சென்று நின்றான்.

"திருமலை! இது என்ன தெருக்கூத்து?" என்றார் அநிருத்தர்.

"குருவே! எல்லாம் கபட நாடக சூத்திரதாரியான அந்தக் கண்ணனின் திருக்கூத்துத்தான்! என் கண்களில் காண்பதை நான் நம்புவதா, இல்லையா என்றே தெரியவில்லை. நான் காண்பது கனவா? அல்லது எல்லாம் வெறும் மாயையா?..."

"திருமலை! உன்னைப் பரம வைஷ்ணவன் என்று நினைத்தேன். எப்போது பிரபஞ்சத்தை மித்தை என்று சொல்லும் மாயாவாதியானாய்?"

"குருவே!பரம வைஷ்ணவ பரம்பரையில் அவதரித்த தாங்கள் சைவ சமயி ஆகும்போது நான் என் மாயவாதி ஆகக் கூடாது? என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு ஸரீ சங்கர பகவத் பாதாச்சாரியாரின் அடியார்க்கடியான் ஆகிவிடுகிறேன்..."

"பொறு! பொறு! நான் சைவ சமயி ஆனதாக யார் சொன்னது?" "தங்கள் திருமேனியில் உள்ள சின்னங்கள் சொல்லுகின்றன!"
"ஆகா! திருமலை! நீ இன்னும் முன்போலவே இருக்கிறாய் புறச்சின்னங்களுக்கே முக்கியம் கொடுக்கிறாய்! நெற்றியில் இடுகிற சந்தனத்தைச் சாய்த்து இட்டால் என்ன? நிமிர்ந்து இட்டால் என்ன?"

"குருவே! நான் ஒன்றும் அறியாதவன்; எது முக்கியம், எது அமுக்கியம் என்று தெரியாதவன். தாங்கள்தான் என்னைத் தௌிவித்து ஆட்கொள்ள வேண்டும்."

"எல்லாம் தௌிவிக்கிறேன். நான் தங்கும் இடத்துக்கு வந்து சேர்! அதோ! கடலில் ஒரு சிறிய தீவு தெரிகிறது பார்த்தாயா? அங்கேயுள்ள மண்டபத்துக்கு வா."

"குருவே! இதோ இந்தச் சண்டைக்காரச் சைவர்கள் என்னை வரவிடவேண்டுமே?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிக் கையினால் அவர்களைச் ச ட்டிக் காட்டினான். அதுவரை சும்மாயிருந்த வீர சைவர்கள் உடனே நெருங்கி வந்தார்கள்.
"பிரம்மாதி ராஜரே! இந்த வைஷ்ணவன் எங்கள் மண்டைகளை உடைத்து விடுவானாம்! இவனை தக்கபடி தண்டிக்கவேண்டும்!" என்று ஒருவர் ஆரம்பித்தார். மற்றவர்கள் தலைக்குத் தலை பேசலானார்கள்.

"இவனுக்குத் தண்டனை நான் கொடுக்கிறேன். நீங்கள் போகலாம்" என்றார் அநிருத்தர்.
இதனால் அவர்கள் திருப்தி அடையவில்லை.

"நாங்களே இவனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாதா? இவனுடைய முன் குடுமியைச் சிரைத்து, இவனுடைய ஊர்த்வ சின்னங்களையெல்லாம் அழித்து, இவனைக் கிணற்றில் போட்டு முழுக்காட்டி..." என்று அடுக்கினார் ஒருவர்.

"என்ன சொன்னீர்கள்?" என்று ஆழ்வார்க்கடியான் கண்களில் தீ எழத் திரும்பி நோக்கினான்.

அநிருத்தப் பிரம்மராஜர் அப்போது, "பட்டர் மணிகளே! இவன் பெரிய முரடன். இவனைத் தண்டிக்க உங்களால் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

பிறகு தம்மைத் தொடர்ந்து வந்த படகில் இருந்த அகப் பரிவார வீரர்களைப் பார்த்து, "உங்களின் எட்டுப்பேர் இறங்கி இவனை நம் இடத்துக்குக் கொண்டு வாருங்கள்!" என்றார். அவ்வளவுதான். மறுகணம் வீரர்கள் எட்டுப் பேர் கரையில் குதித்தார்கள்; ஆழ்வார்க்கடியானைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். படகு மேலே சென்றது. படை வீரர்கள் புடைசூழ ஆழ்வார்க்கடியானும் போனான். பட்டர்களும் மற்றவர்களும் அந்த வைஷ்ணவனுடைய முரட்டுத்தனத்தைக் குறித்துப் பலவாறு பேசிக்கொண்டு கலைந்து போனார்கள்.


 

பக்க தலைப்பு

மூன்றாம் பாகம் - கொலை வாள்



முதலாவது அத்தியாயம்
கோடிக்கரையில்




கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. "கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி" என்பது போல, அந்தச் சுழிக்காற்றுப் போன வழியெங்கும் பற்பல பயங்கர நாசவேலைகளைக் காணும்படி இருந்தது. கோடிக்கரையிலிருந்து காவேரிப் பூம்பட்டினம் வரையில் சோழநாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும் படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக் காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக் கரைப்பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் ப ூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!

சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். பல்லக்கும் பின்தொடர்ந்து வந்தது. ஆனால் இம்முறை அந்தப் பல்லக்கில் அமர்ந்து இளையராணி நந்தினிதேவியே பிரயாணம் செய்தாள். "மதுராந்தகத் தேவரை அந்தரங்கமாக அழைத்துப்போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.மேலும் சில சமயம் இளைய ராணியையும் உடன் அழைத்துப் போனால்தானே மறுபடி அவசிய நேரும் போது மதுராந்தரகரை அழைத்துபோக அந்தப் பல்லக்கு வாகனம் உபயோகமாயிருக்கும்?" இவ்வாறு நந்தினி கூறியதைப் பழுவேட்டரையர் உற்சாகமாக ஒப்புக்கொண்டார். காமாந்தகாரத்தில் மூழ்கியிருந்த அக்கிழவருக்குத் தம்முடன் அந்தப் புவனசுந்தரியை அழைத்துப் போவதில் ஆர்வம் இருப்பது இயல்புதானே?

சுழிக்காற்றுக்கு முன்னால் அவர்கள் நாகைப்பட்டினத்துக்கு வந்திருந்தார்கள். அங்கே தனாதிகாரி தமது உத்தியோகக் கடமைகளை முதலில் நிறைவேற்றினார்.

நாகைப்பட்டினம் அப்போது தமிழகத்தின் முக்கியத் துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாயிருந்தது. வௌிநாடுகளிலிருந்து எத்தனை எத்தனையோ பொருள்கள் பெரிய பெரிய மரக்கலங்களில் வந்து அத்துறைமுகத்தில் இறங்கிக் கொண்டிருந்தன. அப்பொருள்களை ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் ஏற்றிக் கொண்டு வந்து கரையில் சேர்த்தன. கரையிலிருந் ு மாற்றுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு போய் மரக்கலங்களில் சேர்த்தன. இவற்றுக்கெல்லாம் சுங்க திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் சரிவர வேலை செய்கிறார்களா என்பதை மேற்பார்வை பார்ப்பது சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரின் உரிமையும், கடமையும் அல்லவா?

அந்த வேலை பூர்த்தியான பிறகு பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்தில் புகழ் பெற்றிருந்த சூடாமணி புத்த விஹாரத்துக்கும் விஜயம் செய்தார். பிக்ஷூக்கள் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்தனர். புத்தவிஹாரத்துக்குத் தேவை ஏதேனும் உண்டா, பிக்ஷூகளுக்குக் குறைகள் ஏதேனும் உண்டா என்று தனாதிகாரி விசாரித்தார். ஒன்றும் இல்லையென்று பிக்ஷூக்கள் கூறி, சுந்தர சோழ மன்னருக்குத் தங்கள் நன்றியையும் தெரிவித்தார்கள்.

சில நாளைக்கு முன் இந்த விஹாரத்தைச் சேர்ந்த பிக்ஷூக்கள் இருவர் தஞ்சைக்குச் சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். புத்தசங்கத்தின் சார்பாகச் சுந்தரசோழர் விரைவில் நோய் நீங்கிக் குணம் அடையவேண்டும் என்ற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.அப்போது அவர்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் புத்த தர்மத்துக்குச் செய்துவரும் தொண்டுகளைக் குறித்துத் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கும்படியாக இளவரசர் கட்டளையிட்டு நிறைவேற்றியும் வருவது இலங்கையில் உள்ள புத்த பிக்ஷூக்களின் மகா சங்கத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

"சக்கரவர்த்திப் பெருமானே! இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியும் நாங்கள் கேள்விப்படுகிறோம். இலங்கையின் பழமையான சிம்மாசனத்தைத் தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி ிடலாம் என்று பிக்ஷூக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம்! அவ்விதம் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்! இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்!" என்றார்கள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் ஓர் அபூர்வமான யோசனை உதயமாயிற்று. பிக்ஷூக்கள் சென்ற பிறகு அதைச் சுந்தர சோழச் சக்கரவர்த்தியிடமும் தெரிவித்தார். "மூன்று உலகும் ஆளும் இறைவா! தங்கள் அதிகாரம் எட்டுத்திசையிலும் பரவி நிலைபெற்றிருக்கிறது. இந்தப் பரந்த பூமண்டத்தில் தங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் தங்கள் திருப்புதல்வர்கள் இருவர் மட்டும் இதற்கு விலக்காயிருக்கின்றனர். அவர்களுக்குத் துர்ப்புத்தி புகட்டும் சிலர் சோழ மகாராஜ்யத்தில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். ஆதித்த கரிகாலர் தங்கள் விருப்பத்தின்படி இங்கு வருவதற்கு மறுத்து தங்களைக் காஞ்சிக்கு வரும்படி ஓலை அனுப்புகிறார். அவருக்கு இவ்வாறு துர்புத்தி புகட்டுகிறவர் வேறு யாரும் இல்லை; தங்கள் மாமனாரான திருக்கோவலூர் மலையமான்தான். அவ்வாறே ஈழ நாட்டிலிருந்து தங்கள் இளம் புதல்வரைத் தருவிக்கும் படியாகத் தாங்கள் பன்முறை சொல்லிவிட்டீர்கள். நானும் ஆள் அனுப்பி அலுத்து விட்டேன். நமது ஆட்கள் இளவரசரைச் சந்திக்காத படியும் நம் ஓலை இளவரசரைச் சேராதபடியும் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளான் செய்துகொண்டு வருகிறான். இல்லாவிடில், தங்கள் அருமைப் புதல்வர் தங்கள் விருப்பந் தெரிந்த பிறகும் இத்தனைகாலம் வராமல் தாமதிப்பாரா? இந்நிலைமையில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் கட்டளையிட்டால் அதைத் தெரிவிக்கிறேன்" என்றார் பழுவேட்டரையர்.

சக்கரவர்த்தி சம்மதம் கொடுத்ததின்பேரில் தனாதிகாரி தெரிவித்த ார். "இலங்கைச் சிம்மாதனத்தைக் கவர்ந்து முடி சூட்டிக்கொள்ளச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து அனுப்புவோம். அத்தகைய கட்டளையைப் பூதி விக்கிரமகேசரி தடை செய்ய முடியாது. அன்றியும், இளவரசரிடம் நேரில் எப்படியேனும் கட்டளையைச் சேர்ப்பிக்கச் செய்துவிட்டால் இளவரசர் கட்டாயம் வந்தே தீருவார்!"

இதைக் கேட்ட சுந்தர சோழர் புன்னகை புரிந்தார். விசித்திரமான யோசனைதான்; ஆயினும் ஏன் கையாண்டு பார்க்கக் கூடாது? பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சக்கரவர்த்தியின் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார். ஆகையால் தம் அந்தரங்க அன்புக்குரிய இளங்கோவிடம் இராஜ்யத்தைப் பற்றித் தம் மனோரதத்தை வௌியிட விரும்பினார். மதுராந்தகனுக்கே தஞ்சாவூர் இராஜ்யத்தை அளிக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை அறிந்தால் அருள்மொழிவர்மன் மறுவார்த்தையே பேசாமல் அதை ஒப்புக்கொள்வான். பின்னர் அவன் மூலமாக ஆதித்த கரிகாலனுடைய மனத்தை மாற்றுவதும் எளிதாயிருக்கும்.

இவ்வாறு சிந்தித்துத் தனாதிகாரியின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்தார். அதன் பேரில்தான் அருள்மொழிவர்மரைச் சிறைப்படுத்தி வரும்படி கட்டளை அனுப்பப்பட்டது. இளவரசருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையும் மரக்கலத் தலைவனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.

மேற்கூறிய கட்டளையுடன் இருமரக்கலங்கள் ஈழநாட்டுச் சென்ற பிறகு, பெரிய பழுவேட்டரையர் சிறிது மனக்கவலை கொண்டார். இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்தது விட்டால் தனக்கு பெரும் பழி ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகையால் தாமே நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேரே சென்றிருந்து, இளவரசரைத் க்கபடி வரவேற்றுத் தமது சொந்தப் பொறுப்பில் அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு வர விரும்பினார்.

இந்த யோசனைக்கு இன்னும் சில உபகாரணங்களும் இருந்தன. இளவரசர் தஞ்சைக்கு வந்து சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு முன்னால் செம்பியன்மாதேவியோ, குந்தவையோ அவரைப் பார்க்கும்படி விடக்கூடாது. அந்தப் பெண்கள் இருவரும் இளவரசர் மீது மிக்க செல்வாக்கு உள்ளவர்கள்; பழுவேட்டரையரை வெறுப்பவர்கள். ஆகையால் இளவரசரிடம் ஏதாவது சொல்லி அவர் மனத்தைக் கெடுத்து விடுவார்கள். தக்க சமயம் வருவதற்குள், அதாவது சுந்தரசோழர் மரணம் அடைவதற்குள், ஏடாகூடமாக ஏதேனும் நடந்து, காரியங்கள் கெட்டுப் போகலாம்.

அன்றியும், பொக்கிஷ நிலவறையில் சுரங்க வழிக்காவலன் பின்னாலிருந்து தாக்கி வீழத்தப்பட்டதிலிருந்து தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது யாராயிருக்கும்? தஞ்சைக் கோட்டைக் காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல வீரனாயிருக்குமா? அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் அல்லவா?

சின்னப் பழுவேட்டரையர் கூறுகிறபடி நந்தினியைப் பார்க்க அடிக்கடி வரும் மந்திரவாதிக்கு இதில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அதையும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இளைய பிராட்டி குந்தவை தேவிதான் வந்தியதேவனை ஓலையுடன் இளவரசர் அருள்மொழிவர்மரிடம் அனுப்பியிருக்கிறாள் என்னும் செய்தியும் தனாதிகாரியின் மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. வந்தியத்தேவன் மூலம் என்ன செய்தி அனுப்பியிருப்பாள்? தாமும் சம்புவரையர் முதலியவர்களும் சோழ சிம்மாசனத்தைப் பற்றி முடிவு செய்துள்ள யோசனையைப் பற்றி அந்தப் பெண் பாம்புக்குச் செய்தி எட்டியிருக்குமோ? அதைப ்பற்றி ஏதேனும் அவள் எழுதி அனுப்பியிருப்பாளோ?

எப்படியிருந்த போதிலும் இளவரசர் சோழநாட்டின் கரையில் இறங்கியதும், தாம் அவரை முதலில் சந்திப்பதுதான் நல்லது. வந்தியதேவனையும் இளவரசருடன் சிறைபடுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பதால் அவனையும் முதலில் தாம் பார்த்தாக வேண்டும். அவனுக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு தூரம் தெரியும் என்பதையும் கண்டு பிடித்தாக வேண்டும்.

இப்படியெல்லாம் யோசித்துப் பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்துக்குப் போய்க் காத்திருக்கத் தீர்மானித்தார். அவருக்கு இருந்த காரணங்களைக் காட்டிலும் அதிகமாகவே நந்தினிதேவிக்கு இருந்தன. வந்தியத்தேவனை மறுபடி பார்க்கவும் குந்தவை அவனிடம் என்ன ஓலை கொடுத்து அனுப்பினாள் என்பதை அறிந்து கொள்ளவும் நந்தினி மிக்க ஆவலாயிருந்தாள். மந்திரவாதி ரவிதாஸன் போன காரியம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்று அறியவும் ஆர்வம் கொண்டிருந்தாள். ஆகையால் நாகைப்பட்டினத்துக்குத் தானும் வருவதாகக் கூறினாள். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? கிழவர் உடனே அதற்கு இசைந்தார். கடலில் கரையோரமாக உல்லாசப் படகில் ஏறி நந்தினியுடன் ஆனந்தப் பிரயாணம் செய்வது பற்றி அவர் மனோராஜ்யம் செய்யலானார். அவர் உள்ளத்தையும் உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் ஆசை கொண்டார்.

பழுவேட்டரையரும், நந்தினியும் நாகைப்பட்டினத்திலிருந்தபோதுதான் சுழற் காற்று அடித்தது. காற்றின் உக்கிர லீலைகளை நந்தினி வெகுவாக அநுபவித்தாள். கடற்கரையோரத்தில் தென்னை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி விழுவதைப் பார்த்துக் களித்தாள். ஆனால் கடலில் உல்லாசப் படகில் ஆனந்த யாத்திரை செய்யலாம் என்னும் பழுவேட்டரையரின் மனோராஜ்யம் நிறைவேறவில்லை.

சுழிக்காற்று அல லோலகல்லோலப்படுதி விட்டுப்போன பிறகு, கடலிலே கப்பல்களுக்கும் படகுகளுக்கும் சேதம் உண்டா என்பதைப் பற்றிப் பழுவேட்டரையர் விசாரித்து அறிந்தார். கரையோரத்தில் அனைவரும் சுழிக்காற்று வரப்போவதை அறிந்து ஜாக்கிரதையாயிருந்த படியால் அதிகச்சேதம் ஏற்படவில்லையென்று தெரிந்தது. ஆனால் நடுக்கடலில், ஈழத்துக்கும் கோடிக்கரைக்கும் நடுவில், இரு கப்பல்கள் தத்தளித்ததாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்து முழுகியதாகவும் கட்டு மரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வலைஞர்கள் சிலர் கூறினார்கள். இது பழுவேட்டரையருக்கு மிக்க கவலையை உண்டாக்கிற்று. அந்த இரண்டு மரக்கலங்களும் இளவரசரைச் சிறைப்பிடித்து வந்த கப்பல்களாயிருக்கலாம் அல்லவா? அப்படியானால் இளவரசரின் கதி யாதாகியிருக்குமோ? இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் தனக்குப் பெரும் பழி ஏற்படுமே? சோழ நாட்டு மக்களின் எல்லையற்ற அன்பைக் கவர்ந்தவராயிற்றே, அருள்மொழிவர்மர். மக்களுக்கு அவரைப் பற்றி என்ன சொல்வது? சக்கரவர்த்திக்குத்தான் என்ன சமாதானத்தைக் சொல்வது? - நிச்சயமான செய்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவல் அவருக்கு உண்டாயிற்று. கோடிக்கரைக்குப் போனால் ஒருவேளை விவரம் தெரியலாம்.மூழ்கிய கப்பலை நன்றாய்ப் பார்த்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். மூழ்கிய கப்பலிலிருந்து தப்பியவர்கள் யாரேனும் கரை சேர்ந்திருக்கவும் கூடும். ஆம்; உடனே கோடிக்கரைக்குப் போக வேண்டியதுதான்!

இந்த எண்ணத்தை நந்தினியிடம் வௌியிட்டதும் அவள் ஆர்வத்துடன் அதை ஒப்புக்கொண்டாள். "கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேளிவிப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்றாள் நந்தினி.

நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரைக்கு இரண்டு வழிகள் உண்டு. கடற்கரையோரமாகச் சென்ற கால்வாய் வழியாகப் படகில் ஏறிப் போகலாம். அல்லது சாலை வழியாகவும் போகலாம். பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அதிகமாயிருந்தபடியால் சாலை வழியாகவே போனார்கள். மேலும் நந்தினி கால்வாய் வழியை விரும்பவும் இல்லை. கால்வாயில் படகில் போனால் பழுவேட்டரையர் தம் காதல் புராணத்தைத் தொடங்கிவிடுவார் என்று நந்தினி அஞ்சியது ஒரு காரணம். அது மட்டும் அன்று, சாலை வழியாகச் சென்றால் கடற்கரையோரத்தில் வந்து ஒதுங்கும் கட்டுமரக்காரர்களையும் படகோட்டிகளையும் விசாரித்துக்கொண்டு போகலாம் அல்லவா?

வழியில் அப்படி விசாரித்ததில் புதிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. நடுக்கடலில் சுழிக்காற்றுப் பலமாக அடித்த சமயம் கப்பல் ஒன்று தீப்பட்டு எரிந்ததைப் பார்த்ததாக மட்டும் இன்னும் சிலரும் கூறினார்கள். கோடிக்கரையை அடைந்ததும் கலங்கரை விளக்கத்தின் காவலர் தியாக விடங்கர் தமது எளிய வீட்டைப் பழுவேட்டரையர் தம்பதிகளுக்காக ஒழித்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். கோடிக்கரையில் தங்குவதற்கு வேறு மாட மாளிகை கிடையாது. எனினும் நந்தினி அதை மறுத்துவிட்டாள். கலங்கரை விளக்கிற்கு அருகில் கூடாரம் போட்டுக்கொண்டு தங்க விரும்புவதாகக் கூறினாள்.

அவ்வாறே கூடாரங்கள் அடிக்கப்பட்டன. சற்றுத் தூரத்தில் ஆங்காங்கு பழுவூர்ப் பரிவாரங்களுக்கும் கூடாரங்கள் போடப்பட்டன. கூடாரங்கள் அடித்து முடித்தவுடனே கடலில் ஒரு பெரிய மரக்கலம் காணப்பட்டது. அது கரையோரமாக எவ்வளவு தூரம் வரலாமோ அவ்வளவு தூரத்தில் வந்து நின்றது.

அதைக் கண்டதும், பழுவேட்டரையரின் பரபரப்பு மிகுந்தது. கப்பலின் பாய்மரங்கள் சின்னாப்பின்னமாகியிருந்ததிலிருந்து அது சுழிக்காற்றில் அகப்பட்டிருக் க வேண்டுமென்று தௌிவாயிற்று. அதில் இருப்பவர்கள் யார்? ஒரு வேளை இளவரசராயிருக்கலாமோ? புலிக்கொடி காணப்படாததில் வியப்பில்லை. சுழிக்காற்றில் அது பிய்த்து எறியப்பட்டிருக்கலாம் அல்லவா?

கப்பலண்டை போய்த் தகவல் தெரிந்து கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர் அங்கிருந்து ஒரு படகை அனுப்பி வைத்தார். கப்பலிலிருந்தவர்கள் படகுக்காகக் காத்திருந்ததாகத் தோன்றியது. உடனே இருவர் கப்பலிலிருந்து படகில் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் பார்த்திபேந்திர பல்லவன்.

வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக மரக்கலத்திலிருந்து படகில் இறங்கிச் சென்ற இளவரசர் அருள்மொழிவர்மர் திரும்பக் கப்பலுக்கு வரவேயில்லை அல்லவா? இதனால் பார்த்திபேந்திரன் எல்லையற்ற கவலைக்கு உள்ளாகித் தத்தளித்தான். காற்று அடங்கிப் பொழுந்து விடிந்தபிறகு அங்குமிங்கும் கப்பலைச் செலுத்தித் தேடினான். படகில் இளவரசருடன் இறங்கியவர்களில் ஒருவன் மட்டும் குற்றுயிராக அகப்பட்டான். அவன் வந்தியத்தேவனை இளவரசர் மிக்க தீரத்துடன் காப்பாற்றிய பிறகு படகுக்கு நேர்ந்த கதியைச் சொன்னான். இதனால் பார்த்திபேந்திரனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று. ஒருவேளை கோடிக்கரை சென்று உயிருடன் ஒதுங்கியிருக்கக் கூடாதா என்ற ஆசை ஒரு பக்கத்தில் கிடந்து அடித்துக்கொண்டது.

ஆகவே கோடிக்கரை சென்று விசாரிப்பதென்று தீர்மானித்தான். அதற்காகவே கப்பலை அங்கே கொண்டுவந்து நிறுத்தச் செய்தான். படகில் இறங்கிய பிறகு கரையை நோக்கிப் போக ஆரம்பித்ததும் பெரிய பழுவேட்டரையர் தம் இளைய ராணி சகிதமாக அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டான். இது அவனுக்கு மிக்க எரிச்சலை மூட்டியது.

பழுவூர் இளையராணி நந்தினியைப்பற்றி ஆதித்தகரிகாலர் கூறியவையும் நினைவுக்கு வந்தன. அவ்விதம் அந்த மகாவீரரின் உள்ளத்தைக் ொள்ளைகொண்டு அவரைப் பித்துப் பிடிக்க அடித்த மோகனாங்கி எப்படியிருப்பாள் என்று பார்க்கும் சபலமும் அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு மூலையில் எழுந்தது. அந்த விருப்பம் விரைவில் வளர்நது கொழுந்துவிடத் தொடங்கியது. ஒருவேளை அவளைப் பார்க்க முடியாமற் போய் விடுமோ என்ற கவலையும் உண்டாகிவிட்டது.

ஆனால் அந்தக் கவலை நீடித்திருக்கவில்லை. படகிலிருந்து கரையில் இறங்கியதும் நேரே பழுவேட்டரையரின் கூடாரத்துக்குப் பார்த்திபேந்திரனை அழைத்துப் போனார்கள்.கூடாரத்தின் வாசலில் பழுவேட்டரையர் கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.ஆஜானுபாகுவான அந்த வீராதி வீரரைக் 'கிழவர்' என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்திபேந்திரன் எண்ணினான். அவன் பார்த்திருக்கும் எத்தனையோ இளம் பிராய வாலிபர்களைக் காட்டிலும் அவர் தேகக்கட்டும், மனோதிடமும் வாய்ந்த புருஷ சிங்கமாகக் காட்சி அளித்தார்.

இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து மங்கை ஒருத்தி வௌிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல அந்தப் பொன் வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். நெடிது வளர்ந்து உரம்பெற்ற தேக்கு மரத்தின் பேரில் படர்ந்திருக்கும் அழகிய பூங்கொடியைப் போல் அவள் பழுவேட்டரையருக்கு முன்னால் வந்து நின்றாள். அந்தப் புவன மோகினியைக்கண்டு திகைத்து நின்ற பார்த்திபேந்திரன் பேரில் தனது வேல் விழிகளைச் செலுத்திய வண்ணமாக அவள், "நாதா! இந்த வீர புருஷர் யார்? இவரை நான் இதுவரையில் பார்த்ததில்லையே?" என்று சொன்னாள். பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன.
 

பக்க தலைப்பு



இரண்டாம அத்தியாயம்
மோக வலை




வயது முதிர்ந்த பிறகு இளம் பெண்ணை மணந்து கொள்வோர் எப்போதும் சந்தேகம் என்னும் மாயா உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அன்னியர்கள் யாரைக் கண்டாலும் இயற்கையான அருவருப்பு ஏற்படுகிறது. பழுவேட்டரையருக்கு இத்தகைய அருவருப்பு ஏற்பட அதிகக் காரணம் இருந்தது. நந்தினி தமக்கு முன்னால் வந்து நின்று பேசத் தொடங்கியதை அவர் சிறிதும் விரும்பவில்லை. அதே சமயத்தில் நந்தினியைக் கடிந்து கொள்ளவும் அவரால் முடியவில்லை.

எனவே நந்தினி கேட்ட கேள்விக்கு மறுமொழியாக, "ராணி! இந்த உலகத்தில் நமக்குத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எல்லாரையும் நாம் பார்த்து அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால் நமக்கு நஷ்டமும் இல்லை!" என்றார்.

இதைக்கேட்ட பார்த்திபேந்திரன், "ஐயா! சோழநாட்டின் பொக்கிஷ மன்னரின் பட்டமகிஷிக்கு என்னைத் தெரியாததினால் நஷ்டம் ஒன்றுமில்லை; நஷ்டம் எனக்குத்தான். ஆகையால் என்னை நானே தெரிவித்துக் கொள்கிறேன், அம்மணி! என்னைப் பார்த்திபேந்திரப் பல்லவன் என்று அழைப்பார்கள்!" என்று சொன்னான்.

"ஓ! அப்படியா? தங்கள் பெயரை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றாள் நந்தினி.

"பார்த்திபேந்திரா! ஏன் விருதுகளை விட்டுவிட்டுப் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டாய்? இவ்வளவு தன்னடக்கமும், பணிவும் எப்போது ஏற்பட்டன? நந்தினி! இவன் வெறும் பார்த்திபேந்திரன் அல்ல. வேங்கையும் கலிங்கமும் வென்று வீரபாண்டியன் தலைகொண்ட பார்த்திபேந்திரப் பல்லவன்!" என்று பழுவேட்டரையர் பரிகாசக்குரலில் கூறினார்.

நந்தினியின் முகம் ஒரு கண நேரம் புயல் குமுறும் வானத்தைப்போல் இருண்டது. அவளுடைய இரு கண்களிலிருந்தும் இரு மின்னல்கள் தோன்றி ஒளி வீசி உடனே மறைந்தன. அடுத்த கணம் அவள் கலகலவென்று சிரித்தாள்.

"ஐயா! வ ரபாண்டியன் தலைகொண்ட பெருமையான பட்டத்தை எத்தனை பேர் சூட்டிக் கொள்கிறார்கள்! அதற்கு ஏதேனும் கணக்கு உண்டா?" என்று கேட்டாள்.

"அம்மணி! தனாதிகாரி என் பேரில் உள்ள அபிமானத்தினால் அவ்விதம் கூறினார். உண்மையில் அந்த விருதுக்கு நான் உரியவன் அல்ல. வீரபாண்டியன் தலைகொண்ட பெருமை ஆதித்த கரிகாலர் ஒருவருக்கே உரியது!"

"அது ஏன் அப்பா, அவ்விதம் சொல்கிறாய்? செத்த பாம்பை அடித்த பெருமையில் உனக்குக் கொஞ்சமும் பங்கு வேண்டாமா!" என்று பழுவேட்டரையர் பரிகாசக் குரலில் கேட்டுவிட்டுக் குறுஞ்சிரிப்புச் சிரித்தார்.

"இல்லை, அரசே! இல்லை! ஆதித்த கரிகாலர் செத்த பாம்பைக் கொல்லவில்லை. அவர் வாளை ஓங்கியபோது வீரபாண்டியன் முழு உயிர் உள்ள பாம்பாகத்தான் இருந்தான். அவன் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்து மோகினியை ஒத்த ஒரு மங்கை முன்னால் வந்து நின்று கை கூப்பிக் கெஞ்சினாள். வாளை ஓங்கியவன் நானாக இருந்தால், உடனே அவ்வாளை தூரவீசி எறிந்திருப்பேன். வீரபாண்டியன் பிழைத்துப் போயிருப்பான்!" என்று பார்த்திபேந்திரன் பழுவேட்டரையருக்குப் பதில் சொன்னான். ஆனால் அவனுடைய கண்களோ நந்தியின் முகத்தை கூர்ந்து நோக்கின.

நந்தினி, பேச்சு அபாயகரமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பழுவேட்டரையரைத் திரும்பிப் பார்த்து,

"நாதா! அந்தப் பழைய கதை இப்போது ஏதற்கு? இவர் இங்கு வந்த காரியம் என்னவென்று விசாரிக்கலாமே!" என்றாள்.

உடனே பழுவேட்டரையரும், "ஆம் தம்பி! பழைய கதை வேண்டாம்! உன் கதையைச் சொல்! காஞ்சியிலிருந்து எப்போது புறப்பட்டாய்? எங்கே பிரயாணம்? இங்கு இறங்கி வந்த காரணம் என்ன?" என்று கேட்டார்.

நந்தினியைப் பார்த்ததால் மதிமயங்கிப் போயிருந்த பார்த்திபேந்திரனும் தான் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தான்.

"ஐயா! என்னை மன்னிக்க வேண்டு ம்! ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டேன். மிக முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். சோழ நாட்டையே துயரக் கடலில் மூழ்கச் செய்யக்கூடிய பயங்கரமான செய்தி - ஈழத்திலிருந்து என்னுடன் இந்தக் கப்பலில் புறப்பட்டு வந்த இளவரசர் அருள் மொழிவர்மர், சுழற்காற்று அடித்த சமயம் கடலில் குதித்து விட்டார். அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வேளை இங்கே வந்து ஒதுங்கினாரோ என்று பார்ப்பதற்கு வந்தேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.

அவன் கூறி முடிப்பதற்குள், "ஆகா! என்ன சொன்னாய்?" என்று பழுவேட்டரையர் அலறினார். சுழற் காற்றினால் வேருடன் பறிக்கப்பட்ட நெடுமரத்தைப் போல் தரையில் வீழ்ந்தார்.

அவரைத் தாங்கி எடுப்பதற்காகப் பார்த்திபேந்திரன் பாய்ந்து சென்றான். நந்தினி குறுக்கே நின்று அவன் நீட்டிய கையைப் பற்றி அகற்றினாள். பழுவேட்டரையரின் அருகில் தான் உட்கார்ந்து அவருடைய தலையைத் தன் மடியின்மீது எடுத்து வைத்துக் கொண்டாள். "தண்ணீர்! தண்ணீர்! என்று கத்தினாள்.

கூடாரத்திலிருந்து சேடிப்பெண் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் சில வீரர்களும், கலங்கரை விளக்கக் காவலரும், அவர் குடும்பத்தாரும் ஓடி வந்தார்கள் நந்தினி மிக்க கம்பீரத்துடன் அவர்களையெல்லாம் அப்பால் நிற்கும்படி ஏவினாள். பழுவேட்டரையரின் முகத்தில் தண்ணீர் தௌித்தாள். "நாதா! நாதா!" என்று கொஞ்சம் குரலில் அழைத்தாள். சில நிமிடங்களுக்கெல்லாம் கிழவரின் கண்கள் திறந்தன. உடனே நினைவும் வந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தார்.

"நந்தினி! சற்று முன் என் காதில் விழுந்தது உண்மையா? இந்தப் பல்லவன் என்ன சொன்னான்? பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் சொன்னான் அல்லவா? அந்த வீரகுமாரன் சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோது இந்தக் கைகளால் அவனை தூக்கித் த ோளில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தேன். இதே கைகளினால்தான் அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வரும்படியான கட்டளையில் முத்திரை வைத்தேன். ஐயோ! சோழ நாடு என்னைப் பற்றி என்ன நினைக்கும்?" என்று பழுவேட்டரையர் தலையில் அடித்துக் கொண்டார். வயிரம் பாய்ந்த அந்த வீரக் கிழவர் அவ்விதம் மனம் கலங்கிப் புலம்பியதை அதுவரையில் நந்தினி பார்த்ததில்லை; யாருமே கண்டதில்லை.

"நாதா! பதறாதீர்கள்! இவர் இன்னும் செய்தி முழுதும் சொல்லவில்லையே? முழுதும் கேட்டுவிட்டு மேலே செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது நலம் அல்லவா?" என்றாள் நந்தினி.

"ஆமாம், நீ சொல்வது சரிதான்.பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து சொல்கிறாயா? பசித்திருக்கும் புலியுடன் விளையாடாதே? ஜாக்கிரதை!" என்று அக்கிழவர் கண்களில் கனல் எழும்படி நோக்கிக் கர்ஜித்தார்.

"ஐயா! மன்னிக்க வேண்டும்! இளவரசர் இறந்து விட்டார் என்று நான் சொல்லவில்லை. அவ்வளவு பயங்கரமான நஷ்டம் இத்தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் என்று என்னாலும் நம்ப முடியவில்லை. சுழற்காற்று உக்கிர நிலையை அடைந்திருந்தபோது அவர் என் கப்பலிலிருந்து கடலில் குதித்தார் என்று தான் சொன்னேன். கடவுள் அருளால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். இந்தக் கடற்கரையிலே வந்து ஒதுங்கியிருக்கலாம். அந்த ஆசையுடன் பார்ப்பதற்கு இங்கே வந்தேன்..."

"சுழற்காற்று அடித்தபோது கடலில் குதித்தாரா! எதற்காக? ஏன் குதித்தார்? உன்னுடைய கப்பலில் அவர் ஏன் ஏறினார்? அவர் குதித்தபோது, நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று பழுவூர் அரசர் படபடப்புடன் கேட்டார்.

நந்தினி குறுக்கிட்டு, "ஐயா! இவர் இலங்கைக்கு எதற்குப் போனார் என்பதிலிருந து விவரமாகச் சொல்லட்டும்!" என்றாள்.

"ஆமாம்! உள்ளது உள்ளபடியே சொல்லு! உண்மையைச் சொல்லாவிட்டால் நீ உயிருடன் தப்பமுடியாது! உன்னை..." என்று பழுவேட்டரையர் பற்களை நற நறவென்று கடித்தார்.

"அரசே! உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லி எனக்குக் பழக்கம் இல்லை. நான் பொய் சொல்ல நினைத்தாலும் என் நாக்குச் சொல்லாது. கேளுங்கள்! தாங்களும், கடம்பூர் சம்புவரையரும், மற்றும் பலரும் சோழகுலத்துக்கு விரோதமாகச் சதி செய்கிறீர்கள் என்று காஞ்சி நகருக்குச் செய்தி எட்டியது."

"பொய்! பொய்! முற்றிலும் பொய்!"

"செய்தி பொய்யாக இருக்கட்டும்! அதுவே நான் வேண்டுவது. காஞ்சிக்கு எட்டிய செய்தியையே நான் கூறினேன். அதன் பேரில் திருக்கோவலூர் மலையமானும், ஆதித்த கரிகாலரும் என்னை ஈழத்துக்கு அனுப்பினார்கள். அருள்மொழிவர்மரைக் கையோடு அழைத்து வரும்படி அனுப்பினார்கள்...."

இவ்வாறு ஆரம்பித்துப் பார்த்திபேந்திரன், தான் இலங்கை சேர்ந்தது முதலாவது நடந்ததையெல்லாம், தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறினான்.

கதை முடிந்ததும் பழுவேட்டரையர், "கடவுளே! சோழ நாட்டுக்குப் பெருங்கேடு வந்துவிட்டது! இந்தப் பாவியினால் தான் வந்தது! இளவரசரைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படி நான் அல்லவோ கட்டளை போட்டேன்? நான் அல்லவோ மரக்கலங்களை அனுப்பினேன்?" என்று கதறினார்.

"அரசே! தங்கள் குற்றம் ஒன்றும் இல்லை; தாங்கள் கட்டளை பிறப்பித்திராவிட்டாலும், இந்த மனிதருடைய கப்பலில் இளவரசர் ஏறிக் காஞ்சிக்குப் பயணமாகியிருப்பார் அல்லவா? வீணாக நொந்து கொள்ள வேண்டாம். நம்முடைய செயல்களுக்கு மேலே விதியின் செயல் ஒன்று இருக்கிறது. மேலும்..."

நந்தினி இவ்விடத்தில் உரத்துப் பேசுவதைச் சட்டென்று நிறுத்திப் பழுவேட்டரையரின் காதோடு ஏதோ சொன்னாள்.

பழுவேட்டரையரின் முகம் சிற து மலர்ச்சி அடைந்தது. "ஆமாம் - ஆமாம்! அது எனக்குத் தோன்றாமல் போயிற்று!" என்றார்.

பிறகு பார்த்திபேந்திரனைப் பார்த்து, "பல்லவா! உன் கப்பலுக்குப் போய் நான் பரிசோதித்துவிட்டு வரப்போகிறேன். அதுவரை நீ இங்கேயே இருக்கவேண்டும்! தப்பிச் செல்ல முயல வேண்டாம். ஓட முயற்சி செய்தால் உடனே வேல் எறிந்து கொல்லும்படி என் வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் போகப்போகிறேன். ஜாக்கிரதை! முதுகிலே காயத்துடன் சாகாதே! உன்பரம்பரை, வீரபரம்பரை!" என்றார்.

"வந்தனம், ஐயா! தப்பித்து ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. அத்தகைய எண்ணமிருந்தால் உங்கள் வீரர்கள் யாராலும் தடுக்கவும் முடியாது. முதுகிலே காயம்படும் உத்தேசமும் எனக்கு இல்லை!" என்றான் பல்லவன்.

"அரசே! இவரைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம். நானே பார்த்துக் கொள்ளுகிறேன். தப்பியோடப் பார்த்தால், இதோ இந்தக் கத்தி உடனே இவர் மார்பில் பாயும்! நீங்கள் நிம்மதியாகப் போய்க் கப்பலைச் சோதித்துவிட்டு வாருங்கள். மாலுமிகளையும் விசாரியுங்கள், இவர் கூறிய தெல்லாம் உண்மைதானா என்று" - இவ்விதம் நந்தினி கூறிக் கொண்டே இடுப்பிலிருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்தாள்.

"ராணி! உனக்கு ஏன் இந்தப் பொறுப்பு? நீ கூடாரத்துக்குள் போயிரு! அல்லது தியாகவிடங்கரின் வீட்டில் போய் இரு.இவனை நம் வீரர்களே கவனித்துக் கொள்வார்கள். அல்லது இவனையும் நான் என்னோடு கப்பலுக்கு அழைத்துப் போகிறேன்...."

"நான் வரவில்லை ஐயா! நான் தங்களுடன் வந்தால் தங்களுக்கு மறுபடியும் சந்தேகமாகத்தானிருக்கும். மாலுமிகள் எனக்காகச் சாட்சி சொல்லிவிட்டதாய் நினைப்பீர்கள். நான் இவ்விடத்தைவிட்டு நகரமாட்டேன். தாங்கள் கவலையின்றிப் போய்வாருங்கள்!"

"நாதா! தாங்கள் கப்பலிருந்து திரும்பி வரும் வரையில் நானும் இங்கேயேதான் இருக்கப் போகி ேன். இங்கிருந்தபடி தங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்!" என்றாள் நந்தினி.

பிறகு பழுவேட்டரையரின் காதோடு, "இவன் இங்கே ஏதேனும் துப்பறிய வந்திருக்கிறானோ, என்னமோ, யார் கண்டது? மேலும் இளவரசரைப்பற்றிய செய்தி தாங்கள் திரும்பி வரும் வரையில் யாருக்கும் தெரியக்கூடாது" என்றாள்.

பழுவேட்டரையர் தலையை அசைத்துவிட்டுப் படகில் ஏறினார். படகு மரக்கலத்தை நோக்கிச் சென்றது.
படகு சிறிது தூரம் போகும்வரையில் நந்தினி படகையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் பார்த்திபேந்திரன் கண்கொட்டாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள். பார்த்திபேந்திரன் வெட்கித் தலைகுனிவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் தேன் மலரைப் பார்த்து விட்ட வண்டு அப்பால் திரும்புமா?

நந்தினி கூரிய சிறிய கத்தியை எடுத்து மறுபடி காட்டி, "ஜாக்கிரதை! தப்பி ஓடப் பார்க்கவேண்டாம்!" என்றாள்.

"தேவி! கத்தியைக் காட்டி பயமுறுத்துவானேன்? தப்பியாவது ஓடவாவது! வலையில் அகப்பட்ட மீன் எவ்விதம் தப்பி ஓடும்? தாங்கள் விரித்த வலையில் அகப்பட்டு..."

"என்ன, ஐயா, சொல்கிறீர்? என்னை வலைஞர் குலப்பெண் என்று சொல்கிறீரா? இது பழுவூர் அரசர் காதில் விழுந்தால்..."

"அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை தேவி! ஆனால் மீன் பிடிக்கும் வலையை நான் குறிப்பிடவும் இல்லை. தங்களுடைய வேல்விழிகள் விரிக்கும் மோக வலையைச் சொல்கிறேன்..."

"சீச்சீ! என்ன தைரியம் உமக்கு? வலைஞர் குலப்பெண் என்றாலும் பாதகமில்லை. ஆடவர்களுக்கு மோகவலை விரிக்கும் கனிகை என்றா என்னைச் சொல்கிறீர்?"

"மன்னிக்கவேண்டும்! அப்படிப்பட்ட அபவாதத்தையும் நான் சொல்லவில்லை. தாங்கள் வேண்டுமென்று வலை விரிக்க வேண்டுமா, என்ன? சிலந்திப்பூச்சி வலை நெய்வது ஈக்களைப பிடிப்பதற்காகவா? அது தான் வசிப்பதற்காக வலை பின்னுகிறது. ஈக்கள் தாமாகப் போய் அவ்வலையில் விழுகின்றன..."

"என்னைச் சிலந்திப் பூச்சி என்றா சொல்கிறீர்? அவ்வளவு பயங்கரமாக இருக்கிறனோ நான்?"

"தவறு! தவறு! நான் தீபத்தைச் சொல்லியிருக்க வேண்டும். தீபம் எரிவது விட்டில் பூச்சிகளுக்காக அல்ல. தீபம் எரிந்து தன்னைச் சுற்றிலும் ஒளி வீசி ஜோதி மயமாகச் செய்கிறது! அசட்டு விட்டில் பூச்சிகள் அதைக் கனி என்று நினைத்துக் கொண்டு சென்று விழுந்து மாய்கின்றன...."

"ஒரு சிறிய காற்று குப் என்று அடித்தால் தீபம் அணைந்து விடுகிறது. வாயினால் ஊதிக்கூட அணைத்துவிடலாம். தீபத்தின் சக்தி அவ்வளவுதான்!"

"தீபம் அணைந்துவிடும்; ஆனால் பூரணசந்திரனை யார் அணைக்க முடியும்? பூரணசந்திரன் சமுத்திர ராஜனுக்காக உதயமாகவில்லை. இயற்கை நியதியின்படி சந்திரன் உதயமாகிறது அதன் குளிர்ந்த நிலா ஒளியை வானமும் பூமியும் மகிழும்படி பரப்புகிறது. ஆனால் பேதைக் கடலைப் பாருங்கள்! பூரண சந்திரனைக் கண்டு கடல் எதற்காக அப்படிக் கொந்தளிக்க வேண்டும்? எட்டாத பழத்துக்கு ஏன் கொட்டாவி விட்டுத் தவிக்க வேண்டும்?"

"பல்லவ குல மன்னர்களின் கவிதா ரசனையைப் பற்றியும் கற்பனைத் திறனைப்பற்றியும் ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறேன் அவையெல்லாம் உண்மையென்பதாக இப்போதுதான் உணர்கிறேன்."

"புராணங்களிலும், காவியங்களிலும் நான் படித்ததையும் கேட்டதையும் நேற்றுவரை நம்பவில்லை; இன்றைக்குத்தான் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது."

"எதைப்பற்றிச் சொல்கிறீர்கள்?"

"பெண் உருவங் கொண்டவர்கள் சிலர் வானத்தையும் பூமியையும் தங்கள் காலடியில் போட்டுக்கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று கேட்டிருக்கிறேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த அசுரர்கள், அமுதபானம் செய்ய வேண்டிய சமயத்தில் ம கினியினால் ஏமாந்து போனார்கள். சுந்தோப சுந்தர்கள் ஒரு பெண் நிமித்தமாக அடித்துக்கொண்டு செத்தார்கள். மேனகையினால் விசுவாமித்திரர் தவங் கெட்டது. கோவலன் மாதவியின் மோக வலையில் விழுந்து கிடந்தான். தசரதர் கைகேயிக்காக ராமனைக் காட்டுக்கு அனுப்பினார். எகிப்து நாட்டு ராணியின் காரணமாக மகத்தான ரோம சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது..."

"போதும் ஐயா! போதும்! இந்த உதாரணங்களையெல்லாம் எதற்காகச் சொல்கிறீர்கள்?"

"தெரியவில்லையா, தேவி! யாருக்கு உதாரணமாகச் சொல்கிறேன் என்று உண்மையாகத் தெரியவில்லையா?"

"எனக்கு உதாரணமாகச் சொல்கிறதாயிருந்தால், அதைப் போல் பெரிய தவறு நீ வேறு செய்ய முடியாது."

"தவறு ஒன்றுமில்லை. அவர்களுடைய சக்தியைக் காட்டிலும் தங்கள் சக்தி குறைந்தது அன்று."

"உம்முடைய வாய்மொழியே உமக்கு விரோதமாயிருக்கிறது."

"எப்படி, தேவி?"

"பழுவூர் அரசரை நான் வேண்டுமென்றுதான் கப்பலுக்கு அனுப்பினேன், உம்மிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்பதற்காக."

"தங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டுதான் நானும் அவருடன் போகாமல் இங்கேயே தங்கினேன்."

"வீரபாண்டியனை ஒரு பெண் காப்பாற்ற முயன்றாள் என்றும் ஆதித்த கரிகாலன் அதைப் பொருட்படுத்தவில்லையென்றும் நீர் சொன்னீர் அல்லவா?"

"ஆம் சொன்னேன்."

"காப்பாற்ற முயன்ற பேதைப்பெண் யார் என்று தெரியுமா?"

"இப்போது பழுவூர் அரண்மனையின் ஜோதியாக விளங்கும் இளைய ராணி நந்தினி தேவிதான்."

"நீர் சற்றுமுன் வர்ணித்தபடி எனக்கு அவ்வளவு சக்தி இருந்தால் நான் காப்பாற்ற விரும்பிய மனிதரின் உயிரைக் காப்பாற்றி இருக்க மாட்டேனா? அது ஏன் என்னால் முடியாமல் போயிற்று?"

"இரத்த வெறிகொண்டிருந்த ஆதித்த கரிகாலன் அச்சமயம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லைதான். ஆனால் அதற்குப் பிறகு ூன்று வருஷமாக அவர் எத்தகைய சித்திரவதையை அனுபவித்து வருகிறார் என்பதை நான் அறிவேன்."

"உமக்கு எப்படித் தெரியும், ஐயா? உம்மிடம் சொன்னாரா?"

"மூன்று வருஷமாய் மனத்திலே வைத்துக்கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உள்ளத்தை ஏதோ ஒரு துன்பம் அரித்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அறிந்திருந்தேன். பத்து நாளைக்கு முன்பு, நான் ஈழத்துக்குப் புறப்பட்டதற்கு முதலாவது நாள்தான்,- மனத்தைத் திறந்து என்னிடம் சொன்னார். அது முதல்..."

"அது முதலாவது என்ன?"

"பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனத்திலும் குடிகொண்டு விட்டது!"

"ஆதித்த கரிகாலரின் நிலையில் நீர் இருந்திருந்தால் நான் கேட்டுக் கொண்டதற்காக வீரபாண்டியரை உயிரோடு விட்டிருப்பீர் என்று சொன்னது நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது."

"அது உண்மைதானா?"

"சத்தியம், தேவி! தாங்கள் சோதித்துப் பார்க்கலாம்."

"ஐயா! என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?"

"தங்கள் தங்கக் குரலில் எதைச் சொன்னாலும் என் செவிகள் இன்பம் அடையும்; உள்ளம் பூரிக்கும்."

"நீர் என்னைச் சோதிப்பதற்காகவே இப்படிப் பேசுகிறீர் என்று சந்தேகிக்கிறேன். நான் விரிக்கும் மோக வலையைப்பற்றிப் பேசி, நீர் எனக்கு வலை விரிக்கப் பார்க்கிறீர்.என்னுடைய அந்தரங்கத்தை அறிந்து கொள்ள முயல்கிறீர்."

பார்த்திபேந்திரன் திடுக்கிட்டுப் போனான். ஆரம்பத்தில் அவன் பேச ஆரம்பித்தபோது அந்த எண்ணத்தோடுதான் ஆரம்பித்தான். பிறகு அதை மறந்துவிட்டான். கபடமாக ஆரம்பித்த பேச்சு அவனை மோகக்கடலில் உண்மையாகவே தள்ளிவிட்டது. முதலில் அப்படி எண்ணியது குறித்து அவன் வெட்கப்பட்டான். அதை வௌியில் காட்டிக்கொள்ளாமல், "தேவி! அவ்விதம் தங்களை சோதித்து ஒற்றன் வேலை செய் நான் பிரயத்தனப்படும் பட்சத்தில் என் தலையில் இடி விழட்டும்!" என்றான். "ஐயோ! அப்படி சொல்லாதீர்" என்று நந்தினி அலறினாள்.

"ஏன், தேவி! ஏன்?"

"உங்கள் பெரிய இளவரசரிடமிருந்து வந்தானே, இன்னொருவன், அவன் பெயர் என்ன?..."

"வந்தியத்தேவனா!"

"ஆம் அவன்தான் என்னிடம் மிகத் தந்திரமாக ஒற்று அறிந்து போக முயன்றான். தாங்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் தலையில் இடி விழுந்தே விட்டது போலிருக்கிறதே!"

"துரதிருஷ்டவசமாக அவன் தலையில் இடி விழவில்லையே! அவன் நின்ற கப்பலில் அல்லவா விழுந்தது? அதனால் அவனுக்கு வந்த ஆபத்து, சின்ன இளவரசரையும் அல்லவா பிடித்து விட்டது?"

"பாவம்! பழையாறை இளைய பிராட்டியை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. அவள் இந்த உலகில் மிகவும் பிரியம் வைத்திருந்த இருவர் ஏககாலத்தில் மாண்டு போனார்கள்! என்ன துரதிர்ஷ்டம்!"

"தேவி! இரண்டு பேர்கள் யார்?"

"நீர் சொன்ன இரண்டு பேருந்தான்! இளையபிராட்டிக்குத் தம்பியின் மீது தனி வாஞ்சை உண்டு அல்லவா?"

"அது உலகம் அறிந்தது. அவருடைய பிரியத்துக்குப் பாத்திரமான இன்னொருவர்...?"

"ஏன் உங்கள் பெரிய இளவரசர் அனுப்பிய தூதன் தான்."

"வந்தியத்தேவனையா சொல்கிறீர்கள்?"

"அவனைத்தான்!"

"சீச்சீ! சோழ சாம்ராஜ்யத்தையே ஆட்டுவிக்கும் சக்தி வாய்ந்த பழையாறை இளையபிராட்டி அற்பனும், தற்பெருமைக்காரனும், அதிகப்பிரசங்கியுமான அந்த வாலிபன் மீது..."

"ஆம்; அந்த வாலிபன் மீது மோகம் கொண்டாள். அதனாலே தான் அவனைப் பழுவேட்டரையரின் தண்டனையிலிருந்து தப்புவித்ததற்காக ஓலை கொடுத்து இலங்கைக்கு அனுப்பினாள்.பாவம்! இந்தக் கிழவர் இளவரசரின் துர்க்கதிக்குத் தாமே காரணம் என்று துடியாய்த் துடிக்கிறார், உண்மையில் அதற்கு இளையபிராட்டிதான் காரணம். அவள் ஓலை கொடுத்து அனுப்பாதிருந்தால்..."

"உண்மை, உண்மை! இந்த விபரீதம் எல்லாம் ஏற்பட்டிராது."

"என் கணவர் கப்பலிலிருந்து திரும்பி வந்ததும் இந்த உண்மையை அவருக்கு நீர் எடுத்துச் சொல்லவேண்டும். சொன்னால், என்னுடைய நன்றிக்குப் பாத்திரமாவீர்!"

"அம்மணி தங்களுடைய நன்றிக்குப் பாத்திரமாக இது ஒன்றுதானா வழி? வேறு எனக்குத் தாங்கள் இடக்கூடிய பணிகள் இல்லையா?"

"ஐயா! ஒரு பேதைப் பெண்ணின் நன்றிக்குப் பாத்திரமாக எத்தனையோ நூறு வழிகள் உண்டு."

"அவற்றில் இன்னும் இரண்டொன்றைச் சொல்லுங்கள். ஆதித்த கரிகாலருக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அதை அவர் கைசேர விட்டுவிட்டார். விட்டு விட்டு அப்புறம் இரவு பகலாகத் துடிதுடிக்கிறார். நான் ஒரு நாளும் அத்தகைய தவற்றைச் செய்யமாட்டேன்!"

"இது சத்தியமா, ஐயா? ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அவள் எது சொன்னாலும் செய்யக்கூடிய மனிதரா நீங்கள்?"

"எந்தப் பெண் என்பதைப் பொறுத்தது. தேவி! நேற்றுவரைக்கும் நான் பார்த்திருக்கும் எந்தப் பெண்ணின் விருப்பத்துக்காகவும் எதுவும் செய்திருக்கமாட்டேன்! சொன்னால் சிரித்திருப்பேன். இன்று அப்படியல்ல! தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால், போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்...!"

இவ்விதம் பார்த்திபேந்திரன் வெறி கொண்டவனைப்போல் கூறியபோ ு அவனுடைய உடம்பு தலையிலிருந்து கால்வரையில் நடுநடுங்கியது. அவனுடைய வாயிலிருந்து வந்த சொற்கள் குழறின; உதடுகள் துடித்தன; பற்கள் கடித்தன; ரோமங்கள் குத்திட்டு நின்றன; மூச்சு விடும் சத்தம் கொல்லன் உலைச் சத்தத்தைப் போலக் கேட்டது. பார்த்திபேந்திரனுடைய இந்த மாறுதல் நேயர்களுக்கு வியப்பை அளிக்கும். ஏன்! அவனிடமே, "நீ இப்படி ஆவாய்" என்று முதலாவது நாள் யாராவது சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்கமாட்டான். பிற்காலத்தில் நினைத்துப் பார்த்தால் அவனுக்கேகூட வியப்பளிக்கக்கூடிய காரியந்தான்.

ஆனால் இது பார்த்திபேந்திரனைப் பற்றிய அதிசயம் மட்டும் அல்ல; மனித இயற்கையைப் பற்றிய இரசியம்.

எத்தனையோ மேதாவிகள் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள்.

இதற்கு மாறாக, நெடுங்காலமாய்த் தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள்.

பார்த்திபேந்திரனுடைய ஆவேச மொழிகளைக் கேட்டுவந்த நந்தினி, "போதும் ஐயா! போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்" என்றாள்.
 

பக்க தலைப்பு



மூன்றாம் அத்தியாயம்
ஆந்தையின் குரல்




நந்தினி கடலை நோக்கினாள்.பழுவேட்டரையர் எறிச்சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.

நந்தினி பெருமூச்சு விட்டாள். அது பார்த்திபேந்திரனுடைய நெஞ்சில் புயலாக அடித்தது. "தேவி! சொல்லுங்கள். நான் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள். தங்களுக்கும் எனக்கும் உகந்தது என்று பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு எது உகந்ததோ அதுதான் எனக்கும் உகந்தது!" என்றான் பல்லவ வீரன்.

அவன் மனத்தில் விசித்திரமான எண்ணங்கள் எல்லாம் அந்நேரத்தில் உதித்தன. இந்தப் பெண் அந்தக்கொடிய கிழவனிடம் அகப்பட்டுக்கொண்டு கூண்டுக் கிளியைப்போல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காட்டுப் பூனையிடமிருந்து இவளை ஏன் விடுதலை செய்யக்கூடாது? இவள் மட்டும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கட்டும்! அவனை அக்கப்பலிலேயே சிறைப்படுத்திக் கண்காணாத தேசத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடச் செய்யலாம்! சண்டாளன்! புதல்வியும், பேத்தியுமாக இருப்பதற்குரிய இளம் பிராயமுடைய பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள எப்படி இவன் மனந் துணிந்தது?...

நந்தினி இன்னமும் படகையும், கப்பலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். படகிலிருந்து பழுவேட்டரையர் கப்பலில் ஏறுவதைப் பார்த்தாள். "நல்லவேளை! பத்திரமாக ஏறிவிட்டார்! எவ்வளவு வீரராயிருந்தாலும் வயதாகிவிட்டதல்லவா? படகிலிருந்து கப்பலில் ஏறும்போது தடுமாறாமல் இருக்கவேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருந்தது!" என்றாள்.

பல்லவன் ஏமாற்றமடைந்தான்! 'கிழவனிடம் இவளுக்கு இவ்வளவு பரிவு ஏன்? படகிலிருந்து அவன் கடலில் விழுந்து இறந்தால்தான் என்ன? நாட்டுக்கும் க்ஷேமம்; இவளுக்கும் விடுதலை! எதற்காக இவ்வளவ பரிவு காட்டுகிறாள்?'

"கிழவருக்குச் சோழ குலத்தாரிடம் எவ்வளவு அபிமானம் என்பது இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது. இளவரசருக்கு ஆபத்து என்றதும் எப்படித் துடிதுடித்துப் போய் விட்டார்? ஐயா! இளவரசர் தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் அல்லவா? இறந்துதான் போயிருக்கவேண்டும் என்பது நிச்சயம் இல்லையே?" என்றாள் நந்தினி.

"நிச்சயம் இல்லை; ஆனால் அப்பேர்ப்பட்ட சுழற் காற்றில் கடலில் குதித்தவர் பிழைத்திருப்பது அசாத்தியம்! விதியின் போக்குக்கு நாம் என்ன செய்யமுடியும்?" என்றான் பல்லவன்.

"இதற்கு விதி காரணம் இல்லை; அந்தப் பழையாறை ராட்சஸியின் பேராசைதான் காரணம். தங்களுக்குத் தெரியுமா, ஐயா? குந்தவை தேவிக்குச் சோதிடத்திலும் ரேகை சாஸ்திரத்திலும் அபார நம்பிக்கை. தம்பியின் ஜாதகத்தையும், கைரேகையையும் பார்த்து வைத்துக்கொண்டு அவன் மூன்று உலகையும் ஆளும் சக்கரவர்த்தியாகப் போகிறான் என்று நம்பிக்கை வைத்திருந்தாள். ஐயோ! பாவம்! அந்த அருமைத் தம்பிக்கு இந்த கதி நேர்ந்தது என்று அறியும்போது அவள் எவ்வளவு கஷ்டம் அடைவாள்? அச்சமயம் நான் அவள்கூட இருந்து ஆறுதல் சொல்லவேண்டும் போலிருக்கிறது!"

இவ்விதம் கூறிய நந்தினியின் குரலில் குதூகலம் தொனித்தது. பல்லவன் ஒருகணம் ஆச்சரியப்பட்டுப் போனான். பிறகு தன் செவிகளில்தான் கோளாறு என்று தீர்மானித்துக் கொண்டான்.

"ராணி தாங்கள் எதற்காக ஆறுதல் சொல்லவேண்டும்? அவளுடைய பேராசையினால் நேர்ந்துவிட்ட விபரீதம்தானே இது? அதற்காக அவள் கஷ்டப்பட வேண்டியதுதான்..."

"அது எப்படி ஐயா? அவள் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் துளித்தால், நெஞ்சு பதறுகிறவர்கள் சோழ நாட்டில் ஆயிரம் பதினாயிரம்பேர் இருக்கிறார்கள். அவள் சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வி மூன்று உலகிலும் ஈடு இணையற்ற அழகி!"

"நானும் ஒர ு சமயம் அவ்வாறுதான் நினைத்திருந்தேன்! அதாவது, தங்களைப் பார்ப்பதற்கு முன்னால்!"

"என்னைப் பார்த்தபிறகு என்ன நினைக்கிறீர்கள்?"

"குந்தவை தேவியின் அழகு தங்கள் பாதச் சுண்டு விரலின் அழகுக்கு இணையாகாது என்றுதான்."

"இப்போது இப்படித்தான் சொல்வீர்கள். நாளைக்கு அவளைப் பார்த்தால் நான் ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறேன் என்பதையே மறந்துவிடுவீர்கள்!"

"ஒருநாளும் மாட்டேன். தேவி! என்னைச் சோதனை செய்து பாருங்கள் என்றுதான் சொல்லுகிறேனே? தங்கள் கட்டளை இன்னதென்று இக்கணமே தெரிவியுங்கள்."

"கட்டளையிடும் பாத்தியதை எனக்குக் கிடையாது. ஐயா! விண்ணப்பம் செய்து கொள்கிறேன். பெரிய பழுவேட்டரையரை நான் மணந்த பிறகு சோழ நாட்டில் பிளவும், குழப்பமும் ஏற்பட்டிருப்பதாகச் சிலர் அவதூறு சொல்கிறார்கள். அது பொய் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். அதற்குத்தான் தங்கள் உதவியை நாடுகிறேன்."

பார்த்திபேந்திரன் சிறிது ஏமாற்றம் அடைந்தான். நந்தினி, அவளுக்காக ஏதோ ஒரு கஷ்டமான காரியத்தில் தன்னை ஏவுவாள் என்று எண்ணியிருந்தான். அதை நிறைவேற்றி அவளை மகிழ்விக்க ஆர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவள் இராஜ்ய காரியத்தைப் பற்றி எதுவோ சொல்லுகிறாள்!

"சொல்லுங்கள். ராணி! தங்கள் விருப்பம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள்!" என்றான்.

"ஐயா! சோழநாட்டில் அமைதி ஏற்படாமல் தடுத்து வந்தவள் இளைய பிராட்டி. அவளுடைய அகம்பாவத்தினால் சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தர அதிகாரிகளையும் கோபங்கொள்ளச் செய்தாள். தம்பி அருள்மொழிவர்மனை எப்படியாவது இந்தச் சோழநாட்டுச் சிம்மாசனத்தில் ஏற்றி விடவேண்டும் என்று அவளுக்கு ஆசை. இதனால் சமரசம் ஏற்படாமல் தடுத்து வந்தாள். இப்போது அந்தக் காரணம் போய்விட்டது. இனிமேல் சமரசம் செய்து வைப்பது சுலபம். கேளுங்கள், ஐயா ! தாங்கள்தான் சொன்னீர்களே! மந்திரிகளும், மற்றப் பெருந்தர அதிகாரிகளும் சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட விரும்புகிறார்கள். சக்கரவர்த்தியும் அதற்கு இணங்கிவிட்டார்."

"அப்படியா, தேவி!"

"ஆம், ஐயா! இல்லாவிடில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பாரா? ஆனாலும் அது சரியல்ல என்பது என் கருத்து. சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற்கு இடம் இருக்கிறது. வெள்ளாற்றுக்கு வடக்கேயுள்ள ராஜ்யத்தை ஆதித்த கரிகாலருக்கு என்றும், தெற்கேயுள்ள பகுதியை மதுராந்தகருக்கு என்றும் பிரித்துக் கொள்ளலாமே? தங்கள் முன்னோர்கள், பல்லவ மகாசக்கரவர்த்திகள், தொண்டை மண்டலத்தை ஆள்வதுடன் திருப்தி அடைய வில்லையா? பூர்வீகச் சோழ மன்னர்கள் இரண்டு வெள்ளாற்றுக்கும் இடையே உள்ள ராஜ்யத்துடன் திருப்தி அடையவில்லையா?"

"தேவி இதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்லுகிறீர்கள் எந்தச் சாம்ராஜ்யம் எப்படிப் போனால் எனக்கு என்ன? யார் எந்த ராஜ்யத்தை ஆண்டால் எனக்கு என்ன?.. "

"ஐயா! தாங்கள் ஆதித்த கரிகாலரிடம் உண்மை விசுவாசம் உள்ள சிநேகிதர் என்று எண்ணினேன்."

"பிறருக்கு விசுவாசமாயிருந்து, பிறருடைய புகழுக்காகப் போராடி, பிறருடைய நன்மைக்காக உழைத்து, - இத்தனை நாளும் கழித்தாகிவிட்டது. இனிமேல் எனக்காக நான் வாழ விரும்புகிறேன். ராணி! இதைக் கேளுங்கள்! நான் எதற்காக இவ்வுலகில் பிறந்தேன். எதற்காக உயிரோடிருக்கிறேன் என்று பலதடவை நான் சிந்தித்ததுண்டு. என் முன்னோர்களாகிய பல்லவ சக்கரவர்த்திகள் பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்டார்கள். மாமல்லபுரத்தைப் போன்ற சொப்பன உலகங்களைச் சிருஷ்டித்தார்கள். அவர்களுடைய பெருமையை என் காலத்தில் மீண்டும் நிலைநாட்டப் பிறந்திருக்கிறனோ என்று நான் எண்ணியதுண்டு. ஆனால் அதில் என் மனம் ஈடுபடவில்லை: ாஜ்யங்களைச் சிருஷ்டிப்பதில் உற்சாகம் கொள்ளவில்லை: சோழ குலத்தின் பெருமைக்கு உழைப்பதிலேயே திருப்தி அடைந்தேன். ஆதித்த கரிகாலரின் சிநேகத்தில் மகிழ்ந்தேன். இப்படியே என் வாழ்நாளைக் கழித்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். இன்றைக்குத்தான் என் கண்கள் திறந்தன; சற்று முன்னாலே தான் நான் பிறந்தது எதற்காக என்று தெரிந்தது. அதோ கேளுங்கள்! அந்தக் கடல் அலைகளின் குரல் என் உள்ளத்தின் குரலை 'ஆம் ஆம்' என்று ஆமோதிக்கிறது. அதோ காட்டில் வாழும் பறவைகள் எல்லாம் 'சரி, சரி' என்று கூவுகின்றன. தேவி! சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கு போடுவது பற்றி என்னிடம் சொல்லவேண்டாம். வேறு ஏதாவது சொல்லுங்கள்! கடல்களுக்குப்பால் உள்ள பவழத் தீவிலிருந்து விலை மதிக்க முடியாத பவழங்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். ஆழ்கடலின் அடியிலிருந்து முத்துக்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். மேருமலையின் உச்சிச் சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேகமண்டலத்துக்கு மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆரம் தொடுத்துத் தங்கள் கழுத்தில் போடச் சொல்லுங்கள். பூரணச் சந்திரனைக் கொண்டுவந்து தங்களுடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்!"

"போதும், ஐயா, போதும்! என்னை ஏற்கனவே அந்தப் பழையாறைப் பிராட்டி 'பைத்தியம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். உண்மையாகவே எனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடாதீர்கள்!" என்றாள் நந்தினி.

பார்த்திபேந்திரன் சிறிது வெட்கம் அடைந்தான். "பைத்தியம் பிடித்திருப்பது எனக்குத்தான்; மன்னியுங்கள். தங்களுடைய விருப்பத்தை முதலில் தெரிவியுங்கள்!" என்றான்.

"சோழ நாடெங்கும் - தமிழகமெங்கும் - எனக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத்தா ் தங்கள் உதவியை நாடுகிறேன். நான் இந்தக் கிழவரை மணந்ததின் காரணமாகச் சோழ குலத்துக்கே கேடு வந்துவிட்டதென்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களாம். மதுராந்தகத்தேவரை இராஜ்ய ஆசை கொள்ளச் செய்தது நான்தான் என்று சொல்லுகிறார்களாம். சோழ நாட்டுச் சிற்றரசர்களை அவர் பக்கம் திருப்பியதும் நான்தான் என்றும் சொல்கிறார்களாம். இந்த அவப்பெயருடன் இறந்து போவதற்கு நான் விரும்பவில்லை...!"

"இறந்து போவதைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவதற்காகவா?"

"பல்லவ குமாரா! தங்களுக்கு ரேகை சாஸ்திரம் தெரியுமா? ரேகை சாஷ்திரத்தில் தங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று நந்தினி சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டாள்.

பார்த்திபேந்திரன் அதற்கு நேர் மறுமொழி சொல்லாமல் "எங்கே? கையைக் காட்டுங்கள்!" என்றான்.

நந்தினி வலது கையை நீட்டினாள். அதைப் பார்த்திபேந்திரன் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, "ஆச்சரியமான ரேகைகள். இம்மாதிரி காண்பதே அபூர்வம்! அந்தக் கையையும் சிறிது காட்டுங்கள்!" என்றான்.

நந்தினி இன்னொரு கையையும் நீட்டினாள். பல்லவன் அதையும் பார்த்துவிட்டு, "தேவி! இதற்கு முன் யாராவது தங்கள் கரங்களின் அதிசயமான ரேகைகளைப் பார்த்துவிட்டு ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?" என்று கேட்டான்.

"ஆம்! பழையாறை இளைய பிராட்டி ஒரு தடவை என் கையைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்..."

"என்ன சொன்னாள்?"

"நான் அற்பாயுளில் சாவேன் என்று சொன்னாள்."

"அது உண்மைதான்!" என்றான் பார்த்திபேந்திரன்.

"ஐயா! நீங்களுமா அப்படிச் சொல்லுகிறீர்கள்?"

"ஆனால் அவள் அரைகுறையாக சாஸ்திரம் படித்தவள் என்று தெரிகிறது. இந்தக் கைரேகையில் ஒன்று அற்பாயுளைக் குறிப்பது உண்மைதான்; ஆனால் மற்றொரு ரேகை அந்தக் கண்டத்தைக் கடந்து புனர் ஜன்மம் ஏற்படும் என றும் கூறுகிறது. அந்தப் புனர்ஜன்மத்துக்குப் பிறகு கடல் கடந்த பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்யும் பாக்கியம் உண்டு என்றும் மன்னாதி மன்னர்களுக்குக் கிட்டாத ஆனந்த வாழ்க்கை வெகுகாலம் உண்டு என்றும் கூறுகிறது. இவ்வளவும் தற்செயலாகக் கடற்கரையில் சந்தித்த ஒரு யௌவன புருஷனுடைய உண்மை அன்பினால் கிடைக்கும் என்று தெரிகிறது தங்களுடைய சின்னஞ் சிறு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தன் உயிரையே அர்ப்பணம் செய்வான் என்று ரேகைகள் மிகத்தௌிவாகச் சொல்லுகின்றன..."

இவ்விதம் கூறிக்கொண்டே பார்த்திபேந்திரன் சட்டென்று நந்தினியின் விரிந்த இரு கரங்களையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

நந்தினி கைகளை உதறி விடுவித்துக்கொண்டு, "சீச்சீ ! இது என்ன காரியம் செய்தீர்?" என்றாள்.

"மன்னியுங்கள்! இவை தங்கள் கரங்கள் என்பதை மறந்து விட்டேன். இரண்டு செந்தாமரை மலர்கள் என்று எண்ணிக் கொண்டேன்" என்றான்.

"பழுவேட்டரையர் பார்த்திருந்தால் உம்மை ஈட்டி முனையில் கழுவேற்றிருப்பார்!"

"தேவி! தங்களுக்காகக் கொடுப்பதற்கு எனக்கு இருப்பது ஓர் உயிர்தானே என்று கவலைப்படுகிறேன்..."

"அந்த ஓர் உயிரையும் இப்படிக் கொடுப்பானேன்? இந்த அநாதைப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காகக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருங்கள்!"

"என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்!"

"சோழ சாம்ராஜ்யம் தாயாதிக் கலகத்தினால் பாழாகி விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். அதற்குத் தங்களுடைய உதவி வேண்டும்.

"எப்படி?"

"தங்கள் சிநேகிதர் கரிகாலரைக் கடம்பூர் சம்புவரையர் வீட்டுக்கு அழைத்து வாருங்கள். சம்புவரையருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளை ஆதித்த கரிகாலருக்கு மணம் செய்து விட்டால் என் மனோரதம் பூர்த்தியாகும்."

"இந்த அற்பக் காரியத்துக்குத்தானா இவ்வளவு ீடிகை? ஆதித்த கரிகாலரை அவசியம் கடம்பூருக்குக் கொண்டுவந்து சேர்க்கிறேன். அப்புறம்?"

"ஆதித்த கரிகாலருக்குச் சம்புவரையர் மகளைக் கலியாணம் செய்து வைத்துவிட்டால் கலகம் பாதி தீர்ந்து விட்ட்டதாகும். சோழ சாம்ராஜ்யத்தில் மதுராந்தகருக்குத் தென்பாதியும் கரிகாலருக்கு வடபாதியும் என்று பிரித்துக் கொடுத்துவிட்டால் கலகம் முழுதும் தீர்ந்ததாகும்."

"பின்னர்?..."

"எனக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் போய்விடும். பிறகு என் தலைவிதியை நானே நிறைவேற்றிக் கொள்வேன். நடுக்கடலில் விழுந்து உயிரை விடுவேன்..."

"நான் பின் தொடர்ந்து வந்து தங்களைக் காப்பாற்றுவேன். நம் இருவருடைய புனர் ஜன்மம் ஆரம்பமாகும். கடல்களைக் கடந்துதூரதேசங்களுக்குச் செல்வோம். அங்கே தங்களுக்காக ஒரு மாபெரும் ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்.

"ஐயா! இப்படியெல்லாம் பேசவேண்டாம். தென் தமிழ் நாட்டுப் பத்தினிப் பெண்களின் மரபில் வந்தவள் நான். பழுவேட்டரையரின் தர்ம பத்தினி..."

"தேவி! என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கிழவரை எதற்காக மணந்து கொண்டீர்கள்? இவர் பேரில் காதல் உண்டா? அல்லது இவருடைய பலாத்காரத்திற்காகவா?"

நந்தினி பெருமூச்சு விட்டாள். அவளுடைய கண் விழிகள் மேல் நோக்கிச் சென்றன. ஏதோ, பழைய துயரமான ஞாபகங்களில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள் என்று தோன்றியது.

"பாவம்! கிழவர் பேரில் பழி சொல்ல வேண்டாம். மனதார இஷ்டப்பட்டுத்தான் இவரை மணந்தேன்."

"ஏன்? எதற்காக? இவரிடம் அப்படி என்ன கண்டீர்கள்?"

"இவரிடம் ஒன்றும் காணவில்லை. அரண்மனை வாழ்வுக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டு நானாகவே இவரை மணந்தேன்."

"என்னால் நம்பமுடியவில்லை!"

"நம்ப முடியாதுதான்.ஆனாலும் அது உண்மை. சின்னஞ் சிறு பிராயத்திலிருந்து என்னை ஒருத்தி ஏழை என்றும், அனாதையெ ்றும் ஏளனம் செய்து வந்தாள். அரச குலத்துப் பிள்ளைகளுடன் விளையாடும் உரிமைக்கூடக் கிடையாது என்று சொல்லி வந்தாள். அந்த அவமதிப்பைப் பொறுக்க முடியாமல் இந்தத் தவற்றைச் செய்தேன்."

"தேவி! அப்படித் தங்களை அவமதித்த பெண் பேய் யார்?"

"தெரியவில்லையா, ஊகிக்க முடியவில்லையா?"

"இளைய பிராட்டி குந்தவைதானே?"

"ஆமாம்."

"அவளுக்கு ஒரு நாள் நான் புத்தி புகட்டியே தீர்வேன்."

"கடவுளே அவளுக்குத் தண்டனை அளித்துவிட்டார்! அருமைத் தம்பியும், ஆருயிர் காதலனும் ஒரே போக்கில் போய் விட்டார்கள்.இப்போது அவளுடைய நிலையை நினைத்தால் எனக்கு அநுதாபமாயிருக்கிறது."

"இந்தத் தண்டனை அந்த அகம்பாவக்காரிக்குப் போதவே போதாது."

"சற்று முன் நான் தங்களை வேண்டிக்கொண்ட காரியத்துக்கு உதவி செய்தால் அவளுடைய தண்டனை பூர்த்தியாகும். சோழ சாம்ராஜ்யத்திற்குத் தனி நாயகியாக இருக்க வேண்டும் என்ற அவள் ஆசை மண்ணோடு மண்ணாகும்."

"தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். பரிசு என்ன தருவீர்கள்?"

"எது கேட்டாலும் தருவேன். தமிழ்ப் பெண்குலத்தின் மரபுக்கு மாறுபடாத எதைக் கேட்டாலும் தருகிறேன்..."

"ராணி மேலை நாடுகளில் ஒரு புதிய சமயம் தோன்றியிருக்கிறதாம். அரபுதேசம், பாக்தாத் தேசம், பாரஷீகம் முதலிய தேசங்களில் அது பரவியிருக்கிறதாம். அந்தச் சமயக் கோட்பாட்டின்படி கல்யாணமான தம்பதிகள் விரும்பினால் பிரிந்து விடலாம். அதற்குச் சடங்கு உண்டாம். ஸ்திரீகள்கூட வேறு கல்யாணம் செய்து கொள்ளலாமாம்.

"ஆம், நானும் அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன்."

"நாம் அந்த நாடுகளுக்குப் போய்விடுவோம். அந்தச் சமயக் கோட்பாட்டில் சேர்ந்துவிடுவோம்..."

"அப்படியெல்லாம் சில சமயம் நானும் பற்கனவு காண்பதுண்டு. ஆனால் நடக்கக்கூடிய காரியமா?"

"தேவி! ஏன் நடக்காது? அவச யம் நடக்கும். தாங்கள் மட்டும் சம்மதித்தால் நடக்கும். தங்களுடன் கப்பல் ஏறிக் கடல் கடந்து செல்வேன். தூரதேசங்களில் இறங்குவேன். இந்தக் கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் பெரியதொரு ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன். நவரத்தின கசிதமான சிங்காதனத்தில் தங்களை ஏற்றி வைப்பேன்! தங்களுடைய சிரஸில் பார்த்தோர் கண் கூசும்படியான மணிமகுடத்தைச் சூட்டுவேன். இதற்காகவே நான் பிறந்திருக்கிறேன்; இதற்காகவே இவ்வளவு போர்க்களங்களிலும் சாகாமல் உயிரோடு இருந்து வருகிறேன்..."

"ஐயா! அதோ என் கணவர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். படகு கரையை நெருங்கிவிட்டது. அமைதி அடையுங்கள். மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக் கொள்ளலாம்..."

"பிறகு எப்போது தேவி?"

"எங்களுடன் தஞ்சாவூருக்கு வாருங்கள்! விருந்தாளியாக வர அழைப்புக் கிடைக்காவிட்டால் சிறையாளியாகவாவது வாருங்கள்!"

"தங்களுடைய அழைப்பே எனக்குப் போதும்" என்றான் பார்த்திபேந்திரன்.

பழுவேட்டரையர் ஏறி வந்த படகு கரையை அடைந்தது. கிழவர் படகிலிருந்து இறங்கி ஆங்காரமே உருவெடுத்தவர் போல் வந்தார்.

நந்தினியும், பார்த்திபேந்திரனும் எழுந்து நின்றார்கள். அவர்களைப் பழுவேட்டரையர் பார்த்த பார்வையில் அனல் பொறி கிளம்பிற்று. பாவம்! அத்தனை நேரம் அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தாலே கிழவருக்குக் கோபமாயிருந்தது. அதை வௌியிடுவதற்கும் வழியில்லை. ஆகையால் உள்ளத்தில் கோபம் மேலும் கொதித்துப் பொங்கியது.

"நாதா! கப்பலை நன்கு சோதித்தீர்களா? மாலுமிகளை நன்றாய் விசாரித்தீர்களா? இவர் கூறியதெல்லாம் உண்மைதானா?" என்று நந்தினி கொஞ்சம் குதலை மொழியில் கேட்டாள். அந்தக் குரல் பழுவூர் அரசரைக் கொஞ்சம் சாந்தப் படுத்தியது.

"ஆம், ராணி! இவன் கூறியதெல்லாம் உண்மையென்று தெரிந்தது? சோ நாட்டின் தவப்புதல்வன், சோழகுலத்தின் செல்வக்குமரன், - தமிழகத்தின் கண்ணின் மணியான இளவரசன், - போய்விட்டான்!" என்று கூறிப் பல்லவனைத் திரும்பிப் பார்த்து, "அதற்குக் காரணமானவன் இதோ நிற்கும் கொலை பாதக சண்டாளன்தான்!" என்று கர்ஜித்தார்.

"ஐயா! அதற்குக் காரணம் நான் அல்ல; என் பேரில் பழி போடாதீர்கள்! இளவரசரைக் கடல் கொண்டதற்குக் காரணம் சோழ நாட்டையே ஆட்டுவிக்கும் பெண் உருக் கொண்ட மோகினிப் பிசாசு!" என்றான் பார்த்திபேந்திரன்.

கிழவரின் கோபம் இப்போது அணை கடந்த வெள்ளமாயிற்று. நந்தினியைப் பற்றித்தான் அவன் அவ்வாறு சொன்னதாக எண்ணினார்.

"அடபாவி! என்ன சொன்னாய்?" என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த ஈட்டியைச் சட்டென்று குனிந்து எடுத்தார் பார்த்திபேந்திரனைக் குறி வைத்து ஓங்கினார்.

நந்தினி அவருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். "நாதா! இது என்ன காரியம்! எத்தனையோ பகைவர்களைக் கொன்ற தங்கள் வெற்றிவேல் இந்த விருந்தாளியின் இரத்தத்தினால் கறைபடலாமா?" என்றாள்.

"ராணி! இவனா விருந்தாளி! சற்று முன்னால் உன்னைப்பற்றி இவன் கூறியதை நீ கேட்கவில்லையா?" என்றார் கிழவர். கோபத்தினால் அவர் குரல் குழறிச் சொற்கள் தடுமாறின.

"அவர் என்னைப்பற்றியா சொன்னார்? நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படியானால் என் கையிலுள்ள கத்தியினாலேயே பழி வாங்குவேன். தங்களுக்குச் சிரமம் தரமாட்டேன்!" என்றாள் நந்தினி.

"ஐயா! நான் என்ன பைத்தியமா, பழுவூர் இளையராணியைப் பற்றி அவ்விதம் சொல்வதற்கு? பழையாறையில் உள்ள மோகினிப் பிசாசைப் பற்றியல்லவா சொன்னேன்? இளைய பிராட்டி குந்தவை வந்தியத்தேவன் என்ற வாலிபனிடம் இரசிய ஓலை கொடுத்து இளவரசருக்கு அனுப்பினாள். அந்த முரட்டு வாலிபனைக் காப்பாற்றுவதற்காக அல்லவோ நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் இளவரசர் அ ைகடலில் குதித்தார்? ஆகையால் இளவரசரின் மரணத்துக்குக் குந்தவை காரணம் என்று சொன்னேன்" என்றான் பார்த்திபேந்திரன்.

பழுவேட்டரையர் தம் அவசர புத்தியைக் குறித்துச் சிறிது வெட்கம் அடைந்தார். அதை வௌியில் காட்டிக் கொள்ளாமல் "வெறுமனே மூடி மறைக்கப் பார்க்காதே! இளவரசரின் அகால மரணத்துக்கு நீயும் பொறுப்பாளிதான். அத்தகைய சுழல் காற்று அடித்த சமயத்தில் அவர் கப்பலிலிருந்து படகில் இறங்குவதற்கு நீ எப்படிச் சம்மதித்தாய்? தொலைந்து போ! என் கண் முன்னால் நிற்காதே!" என்றார்.

நந்தினி குறுக்கிட்டு, "நாதா! இவரையும் தஞ்சாவூர் அழைத்துப் போவது நல்லதல்லவா? நடந்தது நடந்தபடி இவரே சக்கரவர்த்தியிடம் தெரிவிப்பது நலம் அல்லவா? இல்லாவிட்டால், ஏற்கனவே நம் பேரில் குற்றம் சொல்லக் காத்திருப்பவர்கள் இதையும் சேர்த்துக் கொள்வார்களே? நாம்தான் இளவரசரைக் கடலில் மூழ்கடித்து விட்டோம் என்று கூடக் கூசாமல் பழி சொல்வார்களே!" என்றாள்.

"சொன்னால் சொல்லட்டும்! அதற்கெல்லாம் நான் அஞ்சியவன் அல்ல. சொல்கிறவன் நாக்கைத் துண்டிக்கச் செய்வேன். ஆனால் இவன் நம்மோடு வருவதும் ஒரு காரியத்துக்கு நல்லதுதான். பார்த்திபேந்திரா! ஏன் அங்குமிங்கும் பார்த்து விழிக்கிறாய்? தப்பி ஓடலாம் என்று பார்க்கிறாயா?" என்று கூறிச் சற்றுத் தூரத்தில் நின்ற வீரர்களைக் கைகாட்டி அழைத்தார். நாலு பேர் விரைந்து வந்தார்கள்.

"இவனைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று கட்டளையிட்டார். வீரர்கள் நாலுபேரும் பார்த்திபேந்திரனை நெருங்கினார்கள். அருகில் நெருங்கி வரும் வரையில் அவன் சும்மாயிருந்தான். பிறகு ஒரு நொடிப்பொழுதில் தன் கைவரிசையைக் காண்பித்தான். நாலு வீரர்களும் நாலு பக்கம் போய் விழுந்தார்கள்.

"ஐயா! என்னைக் கட்டித் தளையிடுவதாயிருந்தால் மற்றவர்களை அனுப்ப வேண்டாம . வீராதி வீரரும் முப்பத்தாறு போர்க்களங்களில் அறுபத்து நாலு காயங்களை அடைந்த வருமான பெரிய பழுவேட்டரையர் கையினால் கட்டுப்படுவதற்கு நான் சித்தமாயிருக்கிறேன். மற்றவர்களை என் அருகிலும் நெருங்க விடமாட்டேன்!" என்றான்.

பழுவேட்டரையர் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "நீ வீர பல்லவ குலத்தில் பிறந்த வீரன், சந்தேகமில்லை. எங்களுடன் தஞ்சாவூருக்கு வந்துவிட்டுப் போகச் சம்மதம் என்றால் சொல், உன்னைக் கட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார்.

"அதுதான் என் விருப்பம்; சக்கரவர்த்தியை நேரில் பார்த்து, நடந்தது நடந்தபடி சொல்ல விரும்புகிறேன். என் பேரிலும் வீண் பழி ஏற்படக் கூடாதல்லவா?" என்றான் பார்த்திபேந்திரன்.

"அப்படியானால், உடனே புறப்படுவோம்" என்றார் பழுவேட்டரையர். அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த காட்டிலிருந்த ஆந்தை ஒன்று கூவும் சப்தம் கேட்டது. நந்தினி சப்தம் வந்த திக்கை நோக்கினாள். அதனால் அவள் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை மற்ற இருவரும் கவனிக்கவில்லை.

"இந்தக் கோடிக்கரைக் காடு மிக விசித்திரமானது. இங்கே பட்டப்பகலிலேயே கோட்டான் கூவுகிறதே!" என்றான் பார்த்திபேந்திரன்.இன்னும் இரண்டு தடவை அதே மாதிரி ஆந்தையின் குரல் கேட்டது.

நந்தினி திரும்பிப் பார்த்து, "உடனே புறப்பட வேண்டியது தானா? இன்னும் ஒருநாள் இங்கே இருந்து பார்ப்பது நல்லதல்லவா? இளவரசர் ஏதாவது கட்டையைப் பிடித்துக் கொண்டு கரையில் வந்து ஒதுங்கக் கூடும் அல்லவா?" என்றாள்.

"பார்த்திபேந்திரா! இளையராணியின் மதிநுட்பத்தைப் பார்த்தாயா? நமக்கு இது தோன்றாமல் போயிற்றே? ஆம்; இன்னும் ஒருநாள் இங்கே இருக்க வேண்டியதுதான்; இருப்பது மட்டும் போதாது. கடற்கரை நெடுகிலும் ஆட்களை நிறுத்தி வைக்கவேண்டும்; தேடிப் பார்க்கவும் சொல்ல ேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.

"எனக்கு ஆட்சேபமில்லை, ஐயா! ஆனால் இளவரசர் இனி அகப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சுழற் காற்று அடித்தபோது கடலின் கொந்தளிப்பைப் பார்த்திருந்தால் தாங்களும் என்னைப் போலவே நிராசை கொள்வீர்கள்" என்றான் பார்த்திபேந்திரன்.

எனினும் கிழவர் கேட்கவில்லை. கடற்கரை நெடுகிலும் ஒரு காத தூரத்துக்குத் தம் ஆட்களைப் பரவலாக நிறுத்தி வைத்தார். அவரும் அமைதியின்றிக் கடற்கரை ஓரமாக அலைந்து திரிந்தார்.
 

பக்க தலைப்பு



நான்காம்அத்தியாயம்
தாழைப் புதர்




நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர உயரம் அலைகள் எழும்பி விழுந்தன என்று கற்பனை செய்வதே கடினமான காரியம்.

படகில் இளவரசர் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் இருந்தனர். பூங்குழலியின் கையில் துடுப்பு இருந்தது. ஆனால் அதை அவள் விசையாகப் போடவில்லை. வந்தியத்தேவனுக்கும் இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் பேச்சில் கவனமாக இருந்தார்கள். படகு விரைவாகப் போக வேண்டுமென்று ஆவல் கொண்டவர்களாகத் தோன்றவில்லை.

படகும், கோடிக்கரை சேர்ந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பது பற்றித்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இளவரசர் தஞ்சாவூருக்குப் போகக்கூடாது என்றும், பழையாறைக்கு வரவேண்டும் என்றும் வந்தியத்தேவன் வாதிட்டுக் கொண்டிருந்தான். அதற்குப் பல காரணங்களை அவன் எடுத்துச் சொன்னான்.

"தங்கள் சகோதரி தங்களை மிக அவசர காரியமாகப் பார்க்க விரும்புகிறார். தங்களைக் கையோடு அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்து வந்திருக்கிறேன். அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்" என் று மன்றாடினான்.

"உன் வாக்கை நிறைவேற்றுவதற்காக என் தந்தையின் கட்டளையை மீறச் சொல்கிறாயா?" என்று இளவரசர் கோபமாகக் கேட்டார்.

"அது தங்கள் தந்தையின் கட்டளையில்லை; பழுவேட்டரையரின் கட்டளையல்லவா?" என்றான் வந்தியத்தேவன்.

அதோடு இன்னொன்றும் சொன்னான். "சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கப் போயிருந்தாலும் சுதந்திரமாகப் பார்க்கப் போவது நல்லதா, பழுவேட்டரையர்களின் சிறையாளியாகப் பார்க்கப் போவது நல்லதா? நான் சொல்கிறேன், கேளுங்கள். தங்களைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி பரவ வேண்டியதுதான். சோழ நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு எழுந்து வந்துவிடுவார்கள். தங்களுடைய அருமைத் தாய்நாடு ஒரு பயங்கர ரணகளமாகி விடும் அது நல்லதா என்று எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்ட கேடு சோழ நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்றுதான் கடவுளே அந்தச் சுழற்காற்றை ஏவி விட்டிருக்க வேண்டும். கடவுளின் விருப்பத்துக்கு விரோதமாகத் தாங்கள் சோழ நாட்டில் கலவரத்தை உண்டாக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

அவ்வளவு நேரமும் அவன் சொல்லி வந்த வாதங்களுக்குள் இது இளவரசரின் மனத்தை ஓரளவு மாற்றியது. தம்மைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், சோழநாட்டில் கலவரம் உண்டாவது சாத்தியந்தான். மக்களுக்குத் தம்மிடம் உள்ள அபிமானம் எவ்வளவு மகத்தானது என்பது அவருக்கு ஒருவாறு தெரிந்துதானிருந்தது. ஆகையால் இளவரசர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, "அப்படியே உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் முடிவு செய்தாலும் அது எப்படிச் சாத்தியம்? கோடிக்கரையில் பழுவேட்டரையர்களின் ஆட்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?" என்று கேட்டார்.

"அதற்கு உதவி செய ய இந்த ஓடக்காரப் பெண் இருக்கிறாள். கரையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் அவர்கள் கண்களில் படாமல் கோடிக்கரைக் காட்டுக்குள் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவாள். பூங்குழலி! நான் கூறியது காதில் விழுந்ததா? அவ்விதம் செய்ய முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

பூங்குழலி அப்போது ஏழாவது சொர்க்கலோகத்தில் இருந்தாள். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றிப் படகிலேற்றி அழைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு எல்லையில்லாத உள்ளக் களிப்பை அளித்திருந்தது.

கோடிக்கரை சேர்ந்ததும் அவரைப் பிரியவேண்டுமே என்ற எண்ணம் இடையிடையே வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமானால் அதைக் காட்டிலும் அவள் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்?

"கோடிக்கரைக்குக் கொஞ்சம் மேற்கே தள்ளிப் படகைக் கொண்டுபோனால் இருபுறமும் காடு அடர்ந்த கால்வாய் ஒன்று இருக்கிறது. அதன் வழியாகப் படகைவிட்டுக் கொண்டு போகலாம். இருபுறமும் அங்கே சதுப்புநிலம். சுலபமாக யாரும் வரமுடியாது!" என்று பூங்குழலி சொன்னாள்.

"எங்களை அங்கே விட்டுவிட்டு நீ கோடிக்கரை போய்த் தகவல் விசாரித்துக் கொண்டு வர முடியும் அல்லவா?"

"முடியும்; படகை ஒருவரும் பார்க்கமுடியாதபடி நிறுத்துவதற்கு எத்தனையோ இடம் இருக்கிறது."

"இளவரசே! கேட்டீர்களா!" என்றான் வந்தியத்தேவன்.

"கேட்டேன், அப்பா! என்னுடைய தாய் நாட்டில் என்னைத் திருடனைப்போல் பிரவேசிக்கச் சொல்லுகிறாய். திருடனைப்போல் ஒளிந்திருக்கச் சொல்லுகிறாய்." என்றார்.

படகில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு இளவரசர், "சமுத்திரகுமாரி! ஏன் படகை அடியோடு நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார்.

பூங்குழலி வந்தியத்தேவனைப் பார்த்துவிட்டுத் துடுப்பை வலி ்க ஆரம்பித்தாள்.

"பாவம்! இந்தப் பெண் எத்தனை நேரம் தனியாகத் துடுப்பு வலிப்பாள்? நான் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறேன். இங்கே கொடு அம்மா, துடுப்பை!" என்றான் வந்தியத்தேவன்.

அவனுடைய எண்ணத்தை அறிந்த இளவரசர் புன்னகை புரிந்தார்.

"நண்பனே! உன்னுடைய சூழ்ச்சிகள் எல்லாம் வீண்தான். நான் பழையாறைக்கும் போகப் போகிறதில்லை. தஞ்சாவூரையும் பார்க்கப் போகிறதில்லை. கடவுள் என்னைக் கைலாசத்துக்கே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருக்கிறது!" என்றார்.

வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைந்து இளவரசரை உற்றுப் பார்த்தார்கள்.அவர் உடம்பு நடுங்கத் தொடங்கியிருப்பதைக் கண்டார்கள்.

வந்தியத்தேவன் அவர் அருகில் சென்று, "ஐயா! இது என்ன? தங்கள் உடம்பு ஏன் நடுங்குகிறது?" என்று கேட்டான்.

"இது குளிர் காய்ச்சல், அப்பனே! இலங்கையில் இந்தக் காய்ச்சல் அதிகம் பரவியிருக்கிறது என்று சொன்னேனே, ஞாபகம் இல்லையா? இந்தச் சுரம் வந்தவர்கள் பிழைப்பது அரிது!" என்று சொன்னார் இளவரசர். கடல் நடுவில் கப்பலின் பாய்மரம் இடிவிழுந்து பற்றிக் கொண்ட போதுகூட, வந்தியத்தேவன் அவ்வளவு கலக்கம் அடையவில்லை. இளவரசரின் வார்த்தைகள் அவ்வளவாக அவனை இப்போது கதிகலங்கச் செய்துவிட்டன.

பூங்குழலியின் கையிலிருந்து துடுப்புத் தானாக நழுவிட்டது. உடம்பில் ஜீவசக்தி அடியோடு மங்கிவிட்டது. கண்களில் மட்டுமே உயிரின் ஒளி தோன்றியது. அந்தக் கண்களினால் இளவரசரை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

இளவரசரின் உடல் நடுக்கம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கித் தூக்கிப்போட ஆரம்பித்தது. "ஐயா! நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்! ஒன்றும் புரியவில்லையே? படகை எங்கே கொண்டு போகட்டும்? பூங்குழலி! கோடிக்கரையில் வைத்தியர் இருக்கிறார் அ ்லவா?" என்று வந்தியத்தேவன் பதறினான்.

பூங்குழலியோ பேசாமடந்தை ஆகியிருந்தாள். இளவரசர் திடீரென்று குதித்து எழுந்தார். நடுங்கிக் கொண்டிருந்த அவர் உடம்பு இப்பொழுது நிற்க முடியாமல் தள்ளாடியது.

"என்னை என் தமக்கையிடம் கொண்டு போங்கள்! என்னை உடனே இளைய பிராட்டியிடம் கொண்டு போங்கள்!" என்ற வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து குளறலாக வௌிவந்தன. இதைக்கேட்ட வந்தியத்தேவன் குதூகலம் அடைந்தான். அந்தக் குதூகலத்தில் இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

நடுக்கத்துடன் ஆடிக்கொண்டு நின்ற இளவரசர் அடுத்த கணத்தில், "அக்கா! இதோ வருகிறேன்! உன்னைப் பார்க்க இதோ வருகிறேன்! யார் தடுத்தாலும் இனிமேல் கேட்கமாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கடலில் பாயப் போனார்.

நல்லவேளையாக வந்தியத்தேவன் அப்போது நிலைமை இன்னதென்பதை உணர்ந்தான். இளவரசர் சுரத்தின் வேகத்தினால் சுய உணர்வு இழந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். கடலில் பாயப் போனவரைச் சட்டென்று பிடித்து நிறுத்தினான்.

ஏற்கெனவே மிக்க பலசாலியான இளவரசர், இப்போது சுரத்தின் வேகத்தினால் பன்மடங்கு அதிக பலம் பெற்றிருந்தார். வந்தியத்தேவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொள்ள முயன்றார். தன்னால் மட்டும் அவரைத் தடுக்க முடியாது என்பதை வந்தியத்தேவன் கண்டு, "பூங்குழலி! பூங்குழலி! சீக்கிரம் ஓடி வா!" என்று அலறினான்.

செயலற்று நின்ற பூங்குழலி உயிர் பெற்றாள். ஒரு பாய்ச்சல் பாய்ந்து இளவரசர் அருகில் வந்து அவரைக் கடலில் விழமால் தடுப்பதற்காக ஒரு கரத்தைப் பற்றினாள். சுர வேகத்தினால் இளவரசர் பெற்றிருந்த மதயானையின் பலம் உடனே மாயமாய்ப் போய்விட்டது. சின்னஞ்சிறு குழந்தையைப் போல் ஆனார்.

"அக்கா! நீ சொல்கிறபடியே பேசாமல் படுத்திருக்கிறேன். என் பேரில் வரு த்தப்படாதே அக்கா! நீ ஒருத்தி இல்லாவிடில் என்னுடைய கதி என்ன?" என்று இளவரசர் கூறிவிட்டு விம்மினார்.

வந்தியத்தேவனும், பூங்குழலியும் இளவரசரை மெதுவாகப் படகில் படுக்க வைத்தார்கள்.

அதன் பிறகு பொன்னியின் செல்வர் சும்மா படுத்திருந்தார். அவருடைய கண்கள் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவருடைய வாயிலிருந்து ஏதேதோ வார்த்தைகள் குழறிக் குழறி வந்து கொண்டிருந்தன. சிலவற்றுக்குப் பொருள் விளங்கின. பெரும்பாலும் சம்பந்தமற்ற வார்த்தைகளாகத் தோன்றின.

இளவரசரிடம் ஆலோசனை கேட்பதில் பயனில்லை என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். இந்த மிகப் பயங்கரமான ஆபத்திலிருந்து பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புத் தன் தலையில் சுமந்திருக்கிறது என்பதையும் அறிந்தான். ஆனால் புத்திசாலியான இந்தப் பெண் ஒருத்தி இருக்கிறாள். இளவரசரைப் பாதுகாப்பதில் தன்னைப் போலவே இவளும் கவலை கொண்டவள்தான்.பின்னர், எத்தனையோ அபாயங்களிலிருந்து தன்னைத் தப்புவித்த கடவுளின் கருணையும் இருக்கவே இருக்கிறது.

"பூங்குழலி! படகை இனிமேல் வேகமாகச் செலுத்திக் கொண்டு போக வேண்டியதுதானே?" என்றான் வந்தியத்தேவன். பூங்குழலியின் கரங்கள் இழந்திருந்த வலிமையைப் மீண்டும் பெற்றன. படகு துரிதமாகச் சென்றது.

வந்தியத்தேவன் இளவரசரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அவர் சுர வேகத்தில் கடலில் குதித்து விட்டால் என்ன செய்வது என்பதை நினைத்தபோதே அவன் கதி கலங்கியது. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதே சமயத்தில் மேலே செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்தது.

"பெண்ணே! உனக்கு என்ன தோன்றுகிறது! நாம் துணிந்து கோடிக்கரைக்கே போய் விடலமா? இளவரசரைப் பாதுகா ்பதற்கு உன் குடும்பத்தார் உதவி செய்வார்கள் அல்லவா?" என்று கேட்டான்.

"ஐயா! இந்தக் காலத்தில் யாரை நம்பலாம். யாரை நம்பக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? என் தமையன் மனைவி ஒருத்தி இருக்கிறாள். அவள் பணத்தாசை பிடித்தவள். என் தந்தைக்குப் படி அளப்பவர்கள் பழுவேட்டரையர்கள்!" என்றாள் பூங்குழலி.

"மேலும், தங்களைப் பிடிக்க வந்த பழுவூர் ஆட்கள் இன்னும் கோடிக்கரையில் தங்கியிருக்கலாம். இளவரசரின் வரவை எதிர்பார்த்து மேலும் புதிய ஆட்களும் வந்திருக்கலாம்!" என்று தொடர்ந்து கூறினாள்.

அவளுடைய முன் யோசனையைக் குறித்து வந்தியத்தேவன் வியப்படைந்தான். இந்த இக்கட்டான சமயத்தில் தனக்கு அவளுடைய உதவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.

"அப்படியானால், நேரே கோடிக் கரைக்குப் போவது அபாயம் என்று நீயும் எண்ணுகிறாயா?" என்றான்.

"அதோ பாருங்கள்!" என்று சுட்டிக் காட்டினாள் பூங்குழலி.

அவள் சுட்டிக்காட்டிய திசையில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது அதற்கு அப்பால் கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சியும் தெரிந்தது.

"ஆகா! பெரிய மரக்கலம் ஒன்று நிற்கிறதே! அது யாருடைய கப்பலோ என்னமோ! ஒரு வேளை பார்த்திபேந்திரனுடைய கப்பலாயிருக்கலாம். அப்படியிருக்குமானால், இந்த நிலையில் இளவரசரைக் காஞ்சிக்கு அழைத்துப் போவதே நல்லதல்லவா?"

"பழுவேட்டரையரின் கப்பலாகவும் இருக்கலாம், ஐயா! கப்பலுக்குப் பின்னால் ஏதாவது தெரிகிறதா!"

"கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிகிறது!"

"அதில் ஏதாவது வித்தியாசமாய்க் காணப்படுகிறதா!"

"எனக்கு ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லையே."

"எனக்குத் தெரிகிறது; அதன் உச்சியில் கூட்டமாக மனிதர்கள் நின்று கடலை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது."

"அங்கிருந்து பார்ப்பவர்களு க்கு இந்தப் படகு தெரியுமா?"

"தெரியாது. இன்னும் கொஞ்சம் கரையை நெருங்கினால் தெரியும்."

"எல்லாவற்றுக்கும் நாம் முன் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. நீ முன்னம் சொன்னாயே, கோடிக்கரைக்கு மேற்கே கால்வாய் ஒன்று இருக்கிறதென்று? அங்கேயே படகை விடலாமா?"

"அப்படித்தான் செய்ய வேண்டும். இருட்டுகிற சமயத்துக்கு அங்கே போய்ச் சேரலாம். ஐயா! நீங்கள் ஒரு நாள் இருண்ட மண்டபத்தில் ஒளிந்திருந்தீர்களே? அதற்கு வெகு சமீபம் வரையில் அந்தக் கால்வாய் வருகிறது.இளவரசருடன் தாங்கள் சற்று நேரம் அங்கே தாமதித்தால் நான் போய் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு விரைவில் வந்து சேருகிறேன்."

"கால்வாய் அங்கேயே நின்று விடுகிறதா, பூங்குழலி! மேலும் எங்கேயாவது போகிறதா?"

"கோடிக்கரையிலிருந்து நாகைப்பட்டினம் வரையில் அந்தக் கால்வாய் போகிறது" என்றாள் பூங்குழலி.

இந்தச் சமயத்தில் பொன்னியின் செல்வர் சுரவேகத்தில் தனக்குத்தானே பேசிக்கொண்டது கொஞ்சம் உரத்த சப்தத்துடன் கேட்டது.

"ஆமாம். அக்கா, ஆமாம்! நாகைப்பட்டினத்துப் புத்த பிக்ஷுக்கள் சொன்னதாகக் கூறினாயே? அதன் படியே நடந்தது. அநுராதபுரத்தில் புத்த பிக்ஷுக்களின் மகா சங்கத்தார் எனக்கு இலங்கைச் சிங்காதனத்தையும், கிரீடத்தையும் அளிக்க முன் வந்தார்கள். நான்தான் மறுத்து விட்டேன், அக்கா! இராஜ்யத்தில் எனக்கு ஆசையில்லாதபடியால்தான் மறுதளித்தேன். நீ வேறு எது சொன்னாலும் கேட்கிறேன். இராஜ்யம் ஆளும் தொல்லை மட்டும் எனக்கு வேண்டாம்! அதைக் காட்டிலும் கடலில் படகு விட்டுக்கொண்டு எவ்வளவு ஆனந்தமாயிருக்கலாம். கேள், அக்கா! கோடிக் கரையில் ஓடக்காரப் பெண் ஒருத்தி இருக்கிறாள்..."

இதைக் கேட்ட பூங்குழலியின் உடம்பெல்லாம் புளங்காங்கிதமடைந்தது.வந்தியத்தேவனுக்கோ ஆத்திரம் வந்தது. மேலே என்ன ச ல்லப் போகிறாரோ என்று கேட்க இருவரும் அடங்கா ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று இந்த இடத்தில் இளவரசருக்குச் சுய உணர்வு கொஞ்சம் வந்ததாகத் தோன்றியது.

சுற்று முற்றும் விழித்துப் பார்த்துவிட்டு, "இன்னும் கோடிக்கரை வரவில்லையா?" என்று ஈன சுரத்தில் கேட்டார் இளவரசர்.

வந்தியத்தேவன், "அதோ கரை தெரிகிறது!" என்றான்.இளவரசரிடம் யோசனை கேட்கலாமா, வேண்டாமா என்று அவன் யோசிப்பதற்குள் மீண்டும் இளவரசர் நினைவை இழந்து சுரப்பிராந்தி உலகத்துக்குப் போய்விட்டார்.

இளவரசர், கடைசியாக 'ஓடக்காரப்பெண்'ணைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் பூங்குழலியின் மனத்தில் எண்ண அலைகளை எழுப்பி விட்டிருந்தன. வந்தியத்தேவனையும், இளவரசரையும் பார்ப்பதற்கே அவளுக்குச் கூச்சமாயிருந்தது. ஆகையால் படகு சென்ற திசையையே பார்த்த வண்ணம் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தாள். அதுகாறும் கப்பல் நின்ற இடத்தை நோக்கிச் சென்ற படகு இப்போது திசை திரும்பித் தென் மேற்குப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தது.

இருட்டுகிற நேரத்தில் கடலிலிருந்து பூமிக்குள் குடைந்து சென்ற கால்வாயின் உள்ளே பிரவேசித்தது. பூங்குழலி கூறியது போலவே அங்கே இருபுறமும் கரைகள் உயர்ந்த மேடாக இருந்தன. அந்த மேட்டுக் கரைகளில் மரங்கள் அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்தன.

படகைக் கரையோரமாக நிறுத்திவிட்டுப் பூங்குழலி மெல்லிய குரலில், "ஐயா சற்றுப் படகைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுக் கரையில் இறங்கினாள். கரையில் வளர்ந்திருந்த உயரமான ஒரு மரத்தின் மேல் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு அவசரமாக இறங்கி வந்தாள். "நல்லவேளை! இங்கே வந்தோம். கடற்கரையோரமாகச் சுமார் ஒரு காத தூரத்துக்கு ஆட்கள் நின்று காவல் புரிகிறார்கள். கலங்கரை விளக்கின் அருகில் ஒரு ூட்டமும் கோஷமுமாக இருக்கிறது!" என்றாள்.

"யாராயிருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா?" என்று வந்தியத்தேவன் ஆவலுடன் கேட்டான்.

"நன்றாய்த் தெரியவில்லை, ஆனால் பழுவேட்டரையரின் ஆட்களாய்த்தான் இருக்கவேண்டும். வேறு யாராயிருக்க முடியும்? எப்படியிருந்தாலும், நான் சொன்ன இடத்துக்கு முதலில் போய்ச் சேருவோம். இரவு இரண்டாம் ஜாமத்துக்குள் நான் என் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் நிச்சயமாய்த் தெரிந்து கொண்டு வருகிறேன்" என்றாள்.

"பெண்ணே! உன்னை யாராவது பார்த்து விட்டால், என்ன செய்கிறது? உனக்கு ஏதேனும் இச்சமயம் நேர்ந்துவிட்டால், எங்கள் கதி அதோகதி தான்!" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயா! என் உயிரைப் பற்றி இத்தனை நாளும் நான் இலட்சியம் செய்ததில்லை. இன்றைக்குத்தான் கவலை பிறந்திருக்கிறது. இளவரசருக்கு அபாயம் நீங்கும் வரையில் என் உயிருக்கு ஒன்றும் வராது!" என்றாள் பூங்குழலி.

படகு கால்வாய்க்குள் மெள்ளச் மெள்ளச் சென்றது. சப்தம் சிறிதும் வௌியில் கேளாதபடி மிக மெதுவாகப் பூங்குழலி துடுப்பு வலித்தாள்.

கால்வாயின் இருபுறமும் இருள் சூழ்ந்திருந்தது கரை ஓரமாக உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கரிய நிழல்கள் கால்வாயில் விழுந்து அதன் கரிய நீரை மேலும் கரியதாக்கின.

வானத்திலிருந்து விண்மீன்கள் எட்டிப் பார்த்தன. வந்தியத்தேவனைப் போலவே நட்சத்திரங்களும் மிகுந்த கவலையுடன் அப்படகின் போக்கைக் கவனித்ததாகத் தோன்றியது.

நீரில் பிரதிபலித்த நட்சத்திரங்கள், கரையிலிருந்த மரங்கள் காற்றில் ஆடிய போது அவற்றின் நிழலும் ஆடியபடியால், அடிக்கடி சலனமடைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளத்தின் சஞ்சலத்தை அவை சரியாகவே பிரதிபலித்தன.

ஒரு யுகம்போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் படகு கால்வாயில் சென்ற பிறகு, பூங்க ுழலி படகைக் கரையோரமாக நிறுத்தினாள்.

பூங்குழலி கால்வாயின் கரைமீதேறிக் காட்டு வழியில் புகுந்து சென்றாள். அதாவது அவளுடைய உடம்பு சென்று கொண்டிருந்தது; அவளுடைய உயிர் கால்வாயில் விட்டிருந்த படகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அந்த முன்னிருட்டி நேரத்தில் முட்செடிகள், மேடு பள்ளங்கள், காட்டு ஜந்துக்கள் ஒன்றையும் இலட்சியம் செய்யாமல் அதிவிரைவாக நடந்து சென்றாள். தடைகள் இல்லாத இடங்களில் ஓடவும் செய்தாள். நேரே கோடிக்கரைக் குழகர் கோயிலைக் குறி வைத்துக்கொண்டு போனாள். அவள் கோயில் வாசலை அடைந்ததற்கும், குருக்கள் சுவாமி சந்நிதியின் கதவைப் பூட்டுவதற்கும் சரியாக இருந்தது.

அக்கம் பக்கம் பார்த்து, வேறு யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பிய குருக்கள் எதிரில் போய் நின்றாள். குருக்கள் அவளை அந்த நேரத்தில் பார்த்துச் சிறிது வியப்படைந்தார். அவளுடைய சுபாவத்தை நன்கு அறிந்தவராயிருந்தும் கூடக் கொஞ்சம் திடுக்கிட்டுத் திகைத்துப் போய் விட்டார்.

"நீயா, பூங்குழலி! வேறு யாரோ என்று பார்த்தேன். கோடிக்கரை முழுதும்தான் ஒரே அமர்க்களப்படுகிறதே; எங்கே அம்மா, உன்னைக் கொஞ்ச நாளாகக் காணோம்? இவ்வளவு தடபுடலிலும் உன்னைப்பற்றித் தகவல் இல்லையே என்று இன்று சாயங்காலம் கூட யோசித்தேன்" என்றார்.

"வௌியூருக்குப் போயிருந்தேன்.சுவாமி! ஏதோ அமர்க்களமாயிருக்கிறதேயென்றுதான் உங்களிடம் விசாரிக்கலாம் என்று வந்தேன். கடற்கரையெல்லாம் நிற்பவர்கள் யார்?" என்று பூங்குழலி கேட்டாள்.

"உனக்கு ஒன்றுமே தெரியாதா? வீட்டுப் பக்கம் போக வில்லையா?"

"வீட்டுப் பக்கம் போனேன். அங்கே யார்யாரோ கூட்டமாயிருக்கவே திரும்பிவிட்டேன்.புது மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது என்றுதான் உங்களுக்குத தெரியுமே? வந்திருப்பவர்கள் யார்?"

"பெரிய பழுவேட்டரையர் வந்திருக்கிறார்.அவருடைய இளையராணி வந்திருக்கிறாள். அவர்களுடைய பரிவாரங்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் காஞ்சிபுரத்துப் பார்த்திபேந்திர பல்லவனாம்! அவனும் வந்திருக்கிறான். வெறுமனே வரவில்லை, பயங்கரமான செய்தியுடன் வந்திருக்கிறான். உனக்கு அதுகூடத் தெரியாதா, பூங்குழலி?"

"அது என்ன பயங்கரமான செய்தி? எனக்கு ஒன்றுமே தெரியாதே?"

"அந்தப் பாவியினுடைய கப்பலில் இளவரசர் பொன்னியின் செல்வரும் வந்தாராம். வழியில் சுழற்காற்று அடித்ததாம். யாரையோ காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்து விட்டாராம்! பிறகு அகப்படவேயில்லையாம்! ஒருவேளை இந்தக் கடற்கரையில் வந்து ஒதுங்குவாரோ என்று பார்ப்பதற்காகத்தான் பழுவேட்டரையரின் ஆட்கள் கோடிக்கரையெங்கும் அலைகிறார்கள். ஏன் அவருடைய இளையராணி கூட அலைகிறாள். சற்று முன்னால் இங்கேகூட அந்த அம்மாள் வந்திருக்கிறாள். பூங்குழலி! பழுவூர் இளையராணியைப் பற்றி ஜனங்கள் என்னவெல்லாமோ பேசிக்கொள்கிறார்கள். அதெல்லாம் சுத்தத் தவறு! நம் இளவரசருக்கு நேர்ந்த கதியைக் குறித்து அந்த அம்மாள் எப்படித் துடிதுடிக்கிறாள் தெரியுமா?"

"அப்படியா குருக்களய்யா? பழுவூர் ராணியின் நல்ல குணத்தைப் பற்றித் தாங்கள் சொல்வது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் இங்கே எதற்காக அந்த ராணி வந்தாளாம்?"

"இளவரசர் எப்படியாவது உயிரோடு அகப்படவேண்டும் என்று குழகரைப் பிரார்த்தித்துக் கொள்வதற்காக வந்தாளாம். உன்னைப் போல் எல்லோரும் கல்நெஞ்சு படைத்தவர்களாயிருக்கிறார்களா? இளவரசரைப் பற்றிய பயங்கரச் செய்தி கேட்டுக்கூட நீ துளிக்கூடக் கலங்கவில்லையே?

"நாம் கலங்கி என்ன பயன் சுவாமி? எல்லாம் விதியின்படி நடக்கும் என்று நீங்களே எத்தனையோ தடவை சொல்லி ிருக்கிறீர்களே அது போனால் போகட்டும். அவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருக்கும்போது நான் என் வீட்டுக்குப் போக விரும்பவில்லை. கையிலே வைத்திருக்கும் பிரஸாதத்தை என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள். நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டுக் கோவிலிலேயே இருந்து விடுகிறேன்."

"நீ ஒரு தனிப்பிறவிதான், பூங்குழலி! பெரிய மனிதர்கள் வந்தால் எல்லோரும் அவர்களைப் போய்ப் பார்க்கவும், பழக்கம் செய்து கொள்ளவும் விரும்புவார்கள். உனக்கு வேற்று மனிதகளையே பிடிப்பதில்லை. அதிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரே பயம். பெரிய மனிதர்கள் என்றால் உன்னைக் கடித்து விழுங்கி விடுவார்களா? எதற்காக இந்தக் காட்டில் தனியாக இருக்க வேண்டும்?"

"குருக்களய்யா! பிரஸாதத்தைக் கொடுக்க உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் வேண்டாம். என்னை வீணில் திட்டாதீர்கள்!"

"சிவ சிவா! உன்னை ஏன் நான் திட்டுகிறேன்? இந்தப் பிரஸாதம் உன் பசிக்குப் போதாதே என்று பார்த்தேன். தாராளமாய் வாங்கிக்கொள்!" என்று அர்ச்சகர் துணியில் கட்டிவைத்திருந்த சுவாமிப் பிரஸாதத்தைக் கொடுத்தார்.

மூட்டையை வாங்கிப் பூங்குழலி பிரித்துப் பார்த்துவிட்டு, "என் பசிக்கு இது போதாதுதான்! அவ்வளவு பெரியசுவாமிக்கு இவ்வளவு குறைவாக நைவேத்தியம் வைக்கிறீர்களே! இது நியாயமா, சுவாமி! போனால் போகட்டும்; அந்தக் கெண்டியில் என்ன இருக்கிறது? குடிக்கிற ஜலமா?"

"இல்லை, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால்! குழந்தைக்காக எடுத்துக்கொண்டு போகிறேன்."

"இன்றைக்கு நானே உங்கள் குழந்தையாயிருக்கிறேன். அதையும் கொடுத்துவிட்டுப் போங்கள் உங்களுக்குப் புண்ணியம் உண்டு."

"நல்ல பெண் அம்மா, நீ! போகட்டும், கெண்டியையாவது பத்திரமாய் வைத்திரு!"

இவ்விதம் சொல்லிக் குருக்கள் கெண்டியையும் பூங்குழலியிடம் கொடுத்தார். அச்சமயம் தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தையின் குரல் கேட்டது.

பூங்குழலி சிறிது திகைத்து, "ஐயா! அது என்ன சப்தம்?" என்று கேட்டாள்.

"தெரியவில்லையா, அம்மா! கோட்டான் கூவுகிறது. இந்தக் கோடிக்கரைக் காட்டில் கோட்டானுக்கா பஞ்சம்!" என்று சொன்னார் குருக்கள்.

மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.

"ஆமாம்; கோட்டான் குரல் மாதிரிதான் இருக்கிறது!" என்றான் பூங்குழலி.

"உன்னை ஒரு கோட்டானும் ஒன்றும் செய்யாது. கோயில் பிரகாரக் கதவைத் தாளிட்டுக் கொண்டு படுத்துக்கொள், அம்மா!" என்று சொல்லிவிட்டுக் குருக்கள் நடையைக் கட்டினார்.

குருக்கள் மறைந்ததும், பூங்குழலியும் புறப்பட்டாள். பிரஸாதத்தை மடியில் கட்டிக்கொண்டு, கெண்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். கோட்டானின் குரல் கேட்ட திசையை நோக்கிச் சென்றாள். கொஞ்ச தூரம் போனதும், ஒரு குறுகிய வாய்க்கால் குறுக்கிட்டது. அதன் இருபுறமும் தாழம்பூப் புதர்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன.

அந்த வாய்க்காலின் கரையைப் பிடித்துக்கொண்டே பூங்குழலி நடந்தாள். தாழம்பூச் செடிகளின் முட்கள் சில சமயம் குத்தின. அதை அவள் பொருட்படுத்தவில்லை.

தாழம்பூக்கள் வெடித்து மலர்ந்து நறுமணத்தைப் பரப்பின. அந்த மணம் மற்றவர்களைப் போதை கொள்ளச் செய்திருக்கும். ஆனால் பூங்குழலிக்கு அந்த ஞாபகம் கூட வரவில்லை.

கரையோடு காலடிச் சப்தம் கேளாதபடி மெள்ளமெள்ள நடந்து போனாள். அவள் செவிகள் வெகு கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தன. காட்டுப் பிரதேசத்தில் இரவில் எத்தனையோ விதவிதமான சப்தங்கள் கேட்கும் அல்லவா? அவையெல்லாம் அவளுடைய கவனத்தைக் கவரவில்லை.

பின்னர், அவள் என்ன சப்தத்தைத்தான் எதிர் பார்த்தாள். இதோ!...இருவர் மெல்லிய குரலில் பேசும் சப்தம் கேட்டது. ஒன்று ஆண்குரல், இன்னொன்று பெண்ணின் குரல். ப ங்குழலி நன்றாக மறைந்து நின்று கொண்டாள். அவர்கள் பேசுவது இன்னதென்பதைக் கவனமாக உற்றுக் காதுகொடுத்துக் கேட்டாள்.

"மந்திரவாதி! இளவரசர் கடலில் விழுந்து இறந்து விட்டதாகத்தான் உன்னைப்போல் எல்லாரும் நம்புகிறார்கள். பழுவேட்டரையரும் உருகி மாய்கிறார். ஆனால் நான் நம்பவில்லை!" என்று அந்தப் பெண்குரல் கூறியது.
 

பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
ராக்கம்மாள்




பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிதுநேரம் தனியாக இருந்தாள். கடல் அலைகளைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"ராணி அம்மா!" என்று குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். கலங்கரை விளக்கின் காவலர் தியாக விடங்கரின் மருமகள் அங்கே நின்றாள்.

"நீ யார்?" என்று நந்தினி கேட்டாள்.

"என் பெயர் ராக்கம்மாள்!"

"எங்கே வந்தாய்?"

இதற்கு மறுமொழி சொல்லாமல் ராக்கம்மாள் நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"என்னடி பார்க்கிறாய்? என் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?"

ராக்கம்மாள் திடுக்கிட்டு, "மன்னிக்க வேண்டும், அம்மா தங்களை பார்த்ததும் இன்னொரு முகம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது" என்றாள்.

"என்னடி உளறுகிறாய்? எது எப்படி இருக்க முடியாது?"

"அந்த ஊமை வெறியளுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது."

"அவள் யார் ஊமை?"

"ஈழத்தில் ஒருத்தி இருக்கிறாள்! என் மாமனாருக்குப் பெரியப்பன் மகள். சில சமயம் இங்கேயும் வருவாள்."

"அவளுக்கும் எனக்கும் என்ன?"

"அதுதான் சொன்னேனே, உறவு ஒன்றும் இருக்க முடியாது என்று."

"பின் ஏன் என்னைப் பார்த்ததும் அவளுடைய ஞாபகம் வந்தது?" < BR>
"என் கண்களின் கோளாறுதான். தங்கள் முகம்..."

"அவள் முகம் மாதிரி இருந்ததா?"

"முதலில் அப்படித் தோன்றியது."

"ராக்கம்மா! இப்போது அந்த ஊமை இங்கே இருக்கிறாளா?"

"இல்லை, அம்மா! அபூர்வமாக எப்போதாவது வருவாள்."

"மறுபடியும் வரும்போது என்னிடம் அழைத்து வருகிறாயா?"

"எதற்காக, ராணி அம்மா?"

"என் முகம் மாதிரி முகமுடையவளைப் பார்க்க விரும்புகிறேன்."

"அதுதான் என் கண்களின் பிரமை என்று சொன்னேனே?"

"எதனால் அப்படி நிச்சயமாகச் சொல்கிறாய்?"

"ராணி! தாங்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்தானே?"

"ஆமாம்; நீ?"

"நானும் பாண்டிய நாட்டாள். சற்று முன் நான் சொன்ன ஊமை, சோழ நாட்டவள். ஆகையால்.."

"இருந்தாலும் பாதகமில்லை; உன்னைப் போல் இன்னும் சிலரும் அவளைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவளை என்னிடம் அழைத்து வருகிறாயா? அழைத்து வந்தால் உனக்கு வேண்டிய பொருள் தருவேன்."

"ராணி! அவளை அழைத்து வருவது சுழற்காற்றை அழைத்து வருவது போலத்தான். இருந்த இடத்தில் அவள் இருக்கமாட்டாள். பிறர் சொல்லுவதையும் கேட்கமாட்டாள். வெறிபிடித்தவள் என்று சொன்னேனே?"

"சரி! நீ எதற்காக இப்போது வந்தாய்? அதையாவது சொல்!"

"ராணி! சில நாளைக்கு முன்பு இரண்டு பேர் இங்கே வந்தார்கள். தங்கள் பெயரைச் சொன்னார்கள்."

"என் பெயரை ஏன் சொன்னார்கள்?"

"தங்கள் காரியத்துக்காக அவசரமாக இலங்கைக்குப் போக வேண்டும் என்றார்கள். என் புருஷனை அவர்களுக்குப் படகோட்ட அனுப்பி வைத்தேன்."

"திரும்பி வந்து விட்டானா?"

"வரவில்லை. அதுதான் கவலையாயிருக்கிறது, அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்..."

"ஒன்றும் நேராது கவலைப்படாதே! அப்படி ஏதாவது நேரிட்டிருந்தால் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். படகிலே போன மனிதர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?"

"அவர்கள் தி ரும்பி வந்துவிட்டார்கள். சற்றுமுன் ஆந்தையின் குரல் கேட்டதே! அதைக் கவனிக்கவில்லையா?"

"கவனித்தேன். அதனால் என்ன?"

"அது மந்திரவாதியின் குரல் என்று தெரிந்து கொள்ள வில்லையா?"

"உனக்கு எப்படி அது தெரியும், நீ மந்திரவாதியைச் சேர்ந்தவளா?"

"ஆமாம், ராணி!" என்று சொல்லிவிட்டு, ராக்கம்மாள் கையினால் கோலம் போட்டுக் காட்டினாள்.

நந்தினி அவளை வியப்புடன்உற்றுப் பார்த்துவிட்டு "இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.

"மந்திரவாதி தங்களைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்."

"என்னை வந்து பார்ப்பதுதானே? எதற்காக காத்திருக்க வேண்டும்?"

"இப்போது இங்கு வந்த பல்லவனை மந்திரவாதி சந்திக்க விரும்பவில்லை. ஈழத்தில் அவனை பார்த்தாராம். தங்கள் கணவரைப் பார்க்கவும் விரும்பவில்லை."

"மந்திரவாதியை நீ பார்த்தாயா?"

"சற்றுமுன் ஆந்தைக் குரல் கேட்டுப் போயிருந்தேன். தங்களை அழைத்து வரும்படி சொன்னார். குழகர் கோயிலுக்கருகில் ஓடைக் கரையில் ஒளிந்திருப்பதாகச் சொன்னார். வருகிறீர்களா ராணி?"

"அது எப்படி நான் போக முடியும்?"

"குழகர் கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகலாம்."

"நல்ல யோசனைதான்; வேறு துணை வேண்டாமா?"

"அவசியமில்லை! வேண்டுமானால் சேந்தன் அமுதனைத் துணைக்கு அழைத்துப் போகலாம்."

"அவன் யார்?"

"தஞ்சவூர் ஊமையின் மகன்!"

"சிவ சிவா! எத்தனை ஊமைகள்?"

"இந்த குடும்பம் சாபக்கேடு அடைந்த குடும்பம். சிலர் பிறவி ஊமைகள். சிலர் வாயிருந்தும் ஊமைகள். என் புருஷன் அப்படி அருமையாகத்தான் பேசுவார். நான்தான் பேசவேண்டாம் என்று திட்டம் செய்திருக்கிறேன்."

"இலங்கை ஊமைக்கு மக்கள் உண்டா? உனக்குத் தெரியுமா?"

"ஒரு தடவை இரட்டைக் குழந்தைகள் பெற்றாளாம். குழந்தைகள் என ன ஆயின என்று ஒருவருக்கும் தெரியவில்லை. நானும் அந்த இரகசியத்தைத் தெரிந்துகொள்ள எத்தனையோ நாளாக முயன்று வருகிறேன் இதுவரை பலிக்கவில்லை."

"தஞ்சாவூர்க்காரன் இங்கே எதற்காக வந்திருக்கிறான்?"

"அவனுடைய மாமன் மகள் பூங்குழலியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் இல்லை. அதனால் காத்திருக்கிறான்."

"அவள் எங்கே போய் விட்டாள்?"

"நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன். மந்திரவாதியை என் புருஷன் படகில் ஏற்றிக்கொண்டு போனதற்கு மறுநாள் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்களைப் பிடிப்பதற்காகப் பழுவூர் ஆட்களும் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவனை என் நாத்தி படகில் ஏற்றிக்கொண்டு இரவுக்கிரவே இலங்கைக்குப் போனாள்."

"அவளுக்குப் படகுவிடத் தெரியுமா?"

"படகு விடுவதே அவளுக்கு வேலை. படகு விடாத நேரங்களில் கோடிக்கரைக் காடுகளில் சுற்றி அலைவாள். இந்தக் காட்டில் அவளுக்குத் தெரியாத மூலைமுடுக்கு ஒன்றும் கிடையாது."

"அவள் இன்னும் திரும்பி வரவில்லையென்றால், அதைக் கொண்டு நீ என்ன ஊகிக்கிறாய்?"

"யாரோ கடலில் முழுகிப் போய் விட்டதாக இவர்கள் அலறி அடித்துக் கொள்கிறார்களே, அது நிச்சயமல்லவென்று சொல்கிறேன். பூங்குழலி வந்து பிறகு அது நிச்சயமாகும்."

"அந்தப் பெண்ணும் முழுகியிருக்கலாம் அல்லவா?"

"அவள் முழுகமாட்டாள். கடல் அவளுக்குத் தொட்டில். மேலும்..."

"மேலும், என்ன?"

"சற்று முன்னால் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகு தூரத்தில் ஒரு படகு வருவதுபோல் தோன்றியது..."

"அப்புறம்?"

"அப்புறம் அது கரைக்கு வரவில்லை."

"என்ன ஆகியிருக்கும்?"

"இங்கே கடற்கரை ஓரத்தில் கூட்டமாயிருப்பதைப் பார்த்து விட்டு வேறு சதுப்பு நிலக் கால்வாயில் படகு விட்டுக் கொண்டு போயிருக்கக் கூடும்."

"அது கூடச் சாத்தியமா?"

"பூங்குழலிக்குச் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. தஞ்சாவூர்க்காரனும் என்னுடன் உச்சிக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் அப்படியே தோன்றியதாம்."

"சரி; எப்படியாவது இருக்கட்டும்; நாம் இப்போது குழகர் கோவிலுக்குப் போகலாம், வா!"

"துணைக்குச் சேந்தன் அமுதனைக் கூப்பிடட்டுமா?"

"வேண்டாம்! அவன் அவனுடைய மாமன் மகளைத் தேடட்டும். நாம் அதற்குக் குறுக்கே நிற்க வேண்டாம்.

இருவரும் குழகர் கோவிலை நோக்கிப் புறப்பட்டார்கள். பூங்குழலியைப் போலவே ராக்கம்மாளுக்கும் கோடிக்கரையின் புதைசேற்றுக் குழிகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது.நந்தினிக்கு ஜாக்கிரதையாக வழிகாட்டி அழைத்துக் கொண்டு போனாள்.

இருவரும் குழகர் ஆலயத்தை அடைந்தார்கள். கோவில் பட்டர் அவர்களைக் கண்டு வியப்படைந்தார். "ராணி! இது என்ன, இந்த நேரத்தில் தனியாக வந்தீர்கள்? பரிவாரங்கள் இல்லாமல்? முன்னாலேயே எனக்குச் சொல்லியனுப்பி இருக்கக்கூடாதா? தங்களை வரவேற்க ஆயத்தமாக இருந்திருப்பேன்?" என்றார்.

"அதற்கெல்லாம் இதுதானா சமயம்? பட்டரே! சோழ நாட்டுக்குப் பெரும் விபத்து நேர்ந்திருக்கிறதே! சோழ நாட்டு மக்களின் கண்ணின் மணியான இளவரசரைக் கடல் கொண்டு விட்டதாகச் சொல்கிறார்களே? இளவரசரைக் காப்பாற்றி அருளும்படி குழகரிடம் முறையிட்டுக் கொள்வதற்காக வந்தேன்." என்றாள் நந்தினி.

"அப்படியெல்லாம் ஒன்றும் நேராது. தாயே! தாங்கள் கவலைப்பட வேண்டாம். நம் பொன்னியின் செல்வருக்குச் சமுத்திர ராஜனால் ஆபத்து ஒன்றும் நேராது!" என்றார் குருக்கள்.

"எதனால் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள், பட்டரே?"

"இளவரசர் பிறந்த நட்சத்திரமும், லக்கினமும் அப்படி, அம்மா! உலகமாளப் பிறந்தவரைக் கடல் கொண்டு விடுமா? தாங்கள் வருத்தப்படாதீர்கள் ! குழகரைப் பிராத்தித்துக் கொள்ளுங்கள். அவசியம் இளவரசரைக் காப்பாற்றுவார்" என்றார் பட்டர்.

இவ்வாறு கூறிவிட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்து, திருநீறும் கொடுத்தார். "அம்மணி! தாங்கள் இவ்வளவு மேலான நிலைமையில் இருப்பது குறித்து மிக்க சந்தோஷம்!" என்றார்.

"என்னை உங்களுக்கு முன்னமே தெரியுமா, பட்டரே?"

"தெரியும் ராணி! பழையாறையில் பார்த்திருக்கிறேன். வைகைக் கரைக்கோவிலிலும்பார்த்திருக்கிறேன். தங்கள் தமையன், திருமலை, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?"

"ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருக்கிறான். அவனை நான் பார்த்து வெகு காலமாயிற்று."

"அவனுக்குக்கூட அதைப்பற்றிக் குறைதான், அம்மா! தாங்கள் பழுவூர் ராணியான பிறகு அவனைப் பார்க்கவேயில்லையென்று வருத்தப்பட்டான்."

"அதற்கென்ன செய்யலாம், ஐயா! நான் புகுந்த இடத்தில் எல்லாம் பரம சைவர்கள். அவனோ வீர வைஷ்ணவன். 'ஆழ்வார்க்கடியான்' என்று பட்டப் பெயர் வைத்துக்கொண்டு, சைவர்களோடு சண்டை போட்டுக்கொண்டு திரிகிறான்.அவனை எப்படி நான் சேர்ப்பது? புகுந்த வீட்டாரின் மனங்கோணாமல் நான் நடந்து கொள்ள வேண்டாமா?"

"உண்மை தாயே, உண்மை! தங்கள் பதியின் மனங் கோணாமல் நடப்பதுதான் முக்கியமானது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும்!"

பட்டரிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

"தனியாகப் போகிறீர்களே? சற்றுப் பொறுத்தால் நானும் வந்துவிடுவேன்."

"வேண்டாம் ஐயா! எங்களுக்காக அவசரப்பட வேண்டாம். இந்தப் பெண்ணுக்கு இந்தப் பக்கமெல்லாம் நன்றாய்த் தெரிகிறது. அதோடு இன்றைக்குத்தான் கோடிக்கரை முழுதும் அமளிதுமளிப்படுகிறதே! பயம் ஒன்றுமில்லை. நாங்கள் போகிறோம்" என்றாள் நந்தினி.

இரு பெண்களும் ஆலயத்துக்கு வௌியில் ந்தார்கள். பட்டர் கண்பார்வையிலிருந்து மறைந்ததும், ராக்கம்மாள் நந்தியினின் கையைப் பிடித்து ஆலயத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்துக்கெல்லாம் தாழைப் புதர்கள் செறிந்த ஓடைக்கரையை அடைந்தார்கள். நட்சத்திர ஒளியின் உதவியைக் கொண்டு ஓடைக் கரையோடு நடந்தார்கள்.
 

பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
பூங்குழலியின் திகில்




தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது.

இளவரசரைக் கடல் கொண்டது என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று நந்தினி கூறியதற்கு மந்திரவாதி "ராணி! என் பேச்சில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கையிருப்பதில்லை. எதனால் இப்போது அவநம்பிக்கைப் படுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"இளவரசரின் ஜாதக பலத்தைப் பற்றி நீ கேட்டதில்லையா? சற்று முன்னால்கூடக் குழகர்கோவில் பட்டர் அதைப் பற்றிச் சொன்னார்."

"பைத்தியக்காரத்தனம். கிரஹங்கள், நட்சத்திரங்களின் சக்தியைக் காட்டிலும் என்னுடைய மந்திரசக்தி வலியது.அமைதி குடி கொண்டிருந்த கடலில் நான் மந்திரம் ஜபித்துச் சுழற்காற்றை வருவித்தேன் என்பது தங்களுக்குத் தெரியுமா? முதலில் அந்தக் காஞ்சிநகர் ஒற்றனும் அதை நம்பவில்லை. பிற்பாடு கடலில் முழுகி உயிரை விடும்போது, கட்டாயம் நம்பியிருப்பான்!"

"அவன் கடலில் மூழ்கி இறந்ததை நீ பார்த்தாயா?"

"நான் பார்க்காவிட்டால் என்ன? அவன் இருந்த கப்பல் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்தேன்."

"தீப்பிடித்த கப்பலிலிருந்து அவனைத் தப்புவிக்க இளவரசர் கடலில் குதித்துப் போனாராமே?"

"போனவர் திரும்பி வந்தாரா?"

"திரும்பி ் பல்லவனுடைய கப்பலுக்கு வரவில்லை..."

"பின்னே என்ன? இரண்டு பகைவர்களும் ஒரே நாளில் பலியாவதற்காகவே வந்தியத்தேவனை உயிரோடு விட்டுவிட்டு வந்தேன். "

"நீ என்னதான் சொன்னாலும், என் மனம் நம்பவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் உயிரோடிருப்பதாக என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகிறது. பூங்குழலியை உனக்குத் தெரியுமா?"

"நன்றாய்த் தெரியும். இலங்கையில் அவள் எங்களுக்குத் தொல்லையாயிருந்தாள். அவளும் சுழற்காற்றில் போயிருக்கலாம்."

"அதுதான் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு படகு தூரத்தில் வந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ராக்கம்மாள் பார்த்தாளாம். திடீரென்று அது மறைந்தது விட்டதாம். படகில் இரண்டு மூன்று பேர் இருந்ததாகத் தோன்றியதாம்."

"அப்படியானால் தாங்கள் கிழவரை அழைத்து கொண்டு உடனே நடையைக் கட்டுங்கள். நான் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்."

"நாங்கள் இருந்தால் என்ன?"

"கிழவர் இருந்தால் இளவரசருக்கு இராஜ மரியாதைகள் செய்து அழைத்துக்கொண்டு போகப் பார்ப்பார். காரியமெல்லாம் கெட்டுப் போகும்."

"மந்திரவாதி! நானும்தான் கேட்கிறேன். அவர்கள் இறக்க வேண்டிய அவசியம் என்ன? மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட எல்லாரும் சம்மதித்து விட்டால்..."

"அம்மணி! பெண்புத்தியைக் காட்டிவிட வேண்டாம். காஞ்சி ஒற்றனுக்கு நம் இரகசியம் எல்லாம் தெரியும். அவன் இளவரசரிடமும், சொல்லியிருப்பான். பொழுது விடிவதற்குள் நீங்கள் புறப்பட்டுச் சொல்லுங்கள். ராக்கம்மா! பூங்குழலி அவர்களை அழைத்து வந்தால் காட்டில் எங்கே வைத்திருப்பாள்?"

"மறைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதுதான் அவளுடைய அந்தரங்க வாசஸ்தலம். காஞ்சி ஒற்றனை அதிலேதான் ஒரு பகல் முழுவதும் மறைத்து வைத்திருந்தாள். பிறகு அதை நான் கண்டு பிடித்தேன்."

"நல்லது; ந்த மறைந்த மண்டபம் இருக்குமிடம் எனக்கும் தெரியும். அங்கே போய்க் காத்திருக்கிறேன். ராணி! சக்கரவர்த்தி எப்படியிருக்கிறார்? ஏதாவது செய்தி உண்டா?"

"எந்தச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கேட்கிறாய்?"

"நோயாளி சுந்தர சோழனைச் 'சக்கரவர்த்தி' என்று இந்த வாய் ஒரு நாளும் சொல்லாது. நமது சக்கரவர்த்தியைப் பற்றித் தான் கேட்கிறேன்."

"சௌக்கியமாயிருப்பதாகப் பத்து நாளைக்கு முன்பு செய்தி கிடைத்தது. ஆகா! எத்தனை நாள் ஆயிற்றுப் பார்த்து...?"

"சரி,சரி! சீக்கிரம் புறப்படுங்கள். அந்த முட்டாள் பல்லவன் என்ன செய்யப் போகிறானாம்."

"அவனையும் தஞ்சைக்கு அழைத்துப் போகிறோம்."

"அவனிடம் ஜாக்கிரதையாயிருங்கள்."

"அவனைப் பற்றிக் கவலையில்லை. நான் காலால் இட்டதை அவன் தலையால் செய்யக் காத்திருக்கிறான்!"

"இருந்தாலும், ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. காஞ்சி ஒற்றன் வந்தியத்தேவனிடம் தாங்கள் கொஞ்சம் ஏமாந்து போனீர்கள் அல்லவா?"

"அது உண்மைதான்; அதனாலேயே அவனை உயிரோடு மறுபடியும் பார்க்க விரும்புகிறேன்."

"அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்கள், ராணி!"

இவ்வாறு பேசிக்கொண்டே, அவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள் என்று தெரிந்தது. பூங்குழலி தன்னை அவர்கள் பார்க்காத வண்ணம் இன்னும் நன்றாய்ப் புதரில் மறைந்து கொண்டாள். நல்ல வேளையாக, அவள் இருந்த பக்கம் அவர்கள் வரவில்லை. வேறு திசையாகச் சென்று விட்டார்கள்.

பூங்குழலி தற்செயலாக ஒட்டுக்கேட்ட விஷயங்கள் அவளுக்குப் பெருந்திகிலை உண்டு பண்ணிவிட்டன. பொன்னியின் செல்வரை எத்தனைவித அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிய போது அவளுடைய கைகால்கள் நடுங்கின; கண்கள் இருண்டன; தொண்டை வறண்டது; உள்ளம் குழம்பியது. தான் விட்டுவிட்டு வந்த படகை உடனே போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மட் ும் வலியதாக முன் நின்றது; படகை விட்டு வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள்.

இளவரசர் கொடிய விஷ சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவரைச் சிறைப்படுத்திப் போவதற்குப் பழுவேட்டரையர் காத்திருந்தார். அவரைக் கொன்று விடுவதற்குக் கொலையாளிகள் காத்திருந்தனர். அவர்களுக்குத் துணையாக இந்தப் பெண்ணுருக் கொண்ட மோகினிப் பிசாசு இருந்தது. பார்த்திபேந்திரனும் அவளுடைய மாய வலையில் விழுந்து விட்டான். இளவரசரைத் தான் அழைத்துச் சென்று பத்திரமாய் வைத்திருக்கலாம் என்று எண்ணிய மறைந்த மண்டபம் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இவ்வளவு அபாயங்களிலிருந்தும் இளவரசரைப் பாதுகாக்கும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாகப் பூங்குழலி உணர்ந்தாள். ஆகையினாலேயே அவளுடைய மூளை குழம்பிற்று. இதுகாறும் அவளுடைய வாழ்நாளில் என்றுமில்லாத ஓர் அநுபவம் நேர்ந்தது. அதாவது காட்டில் வழி தவறி விட்டோமோ என்ற பீதி உண்டாயிற்று.

சுற்றிச் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருக்கிறோமோ' என்ற எண்ணம் தோன்றியது. அப்படிச் சுற்றிவரும்போது இளவரசரின் எதிரிகள் யாரேனும் எதிர்ப்பட்டு விட்டால் என்ன செய்வது? அவர்களுக்கு என்ன சமாதனம் சொல்வது? எப்படி அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வது?...'

இல்லை, இல்லை! சரியான வழியிலேதான் வந்திருக்கிறோம். இதோ கால்வாய் தெரிகிறது. படகை விட்டு வந்த இடம் அதோ அந்த மூலையில் இருக்கிறது. பூங்குழலி அவ்விடத்தை நோக்கிப் பாய்ந்து ஓடினாள்.அவளுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில், அவள் விட்டிருந்த இடத்தில் படகைக் காணவில்லை! ஐயோ! படகு எங்கே போயிருக்கும்?

ஒருவேளை தான் இல்லாத சமயத்தில் பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கேயே வந்திருப்பார்களோ! வந்து இளவரசரையும் வந்தியத்தேவனையும் சிற ப்படுத்திக் கொண்டு போயிருப்பார்களோ? அப்படி நடந்திருந்தால் கூடப் பாதகமில்லை. அதை விடப் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? வந்தியத்தேவன் இளவரசரைத் தூக்கிக் கொண்டு மறைந்த மண்டபத்தை தேடிப் போயிருப்பானோ? அப்படியானால் அங்கே கொலைஞர்கள் காத்திருப்பார்களோ? அடடா! என்ன தவறு செய்து விட்டோம்?...

அந்த மறைந்த மண்டபத்துக்கு உடனே போய்ப் பார்க்க வேண்டுமென்ற பரபரப்பு பூங்குழலியின் மனத்தில் குடி கொண்டது. காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள். மறுபடியும் அந்தப் பழைய சந்தேகம்: வழி தவறி விட்டோமோ என்ற சந்தேகம். சுற்றிச் சுற்றி வருகிறோமோ என்ற மயக்கம்.'

அது என்ன? ஐயோ! அது என்ன? ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்? ஒரு வேளை அந்தப் பயங்கர மந்திரவாதி தானா? அப்படியானால் ஏன் பயப்படவேண்டும்? இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்துக்கொண்டால் போயிற்று! யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக ஓட வேண்டும்?...

இல்லை, இல்லை! ஓட வேண்டியதுதான். இச்சமயம் யாருடனும் சண்டை பிடிக்கும் சமயம் அன்று. கையில் வலிவு இல்லை. கத்தியும் குறி தவறிப் போகும். உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு இத்தருணம் ஏதேனும் நேர்ந்தால் இளவரசருடைய கதியாதாகும்? முன்னமே அந்த வந்தியத்தேவன் எச்சரித்தானே? உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொண்டு வருவதாகச் சொன்னோமே? அதை நிறைவேற்ற வேண்டியதுதான்?'

பூங்குழலி மேலும் மேலும் நெருக்கமான காட்டில் புகுந்து ஓடினாள். ஆனால் துரத்தி வந்தவன் மேலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். பூங்குழலி போன வழியில் மரங்களிலிருந்த பட்சிகள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடின. வளைகளிலிருந்து நரிகள் கிளம்பி ஓடின. தூங்கிய கா ்டுப் பன்றிகள் விழித்தெழுந்து விழுந்தடித்து ஓடின. மான் ஒன்று விர்ரென்று பாய்ந்துவந்து அவள் மேலேயே இடித்துப் புடைத்துக்கொண்டு ஓடியது. இவ்வளவுக்கும் மத்தியில் பின்னால் தொடர்ந்து வந்தவன் விட்டபாடாக இல்லை. அவனுடைய காலடிச் சத்தமும் அவன் ஓடியதால் பெருமூச்சு விடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தன.

பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக மாறியது. வருகிறவன் யாராயிருந்தாலும் அவனை ஒருகை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தாள்.
 

பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
காட்டில் எழுந்த கீதம்




பூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.
"பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை அணிந்தவனே!" அந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.

"அத்தான்! நீதானா?"

"ஆமாம்! பூங்குழலி!"

"எங்கே இருக்கிறாய்? இப்படி வா!"

"இதோ வந்துவிட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.

"நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?"

"பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய்? எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்!!"

"ப டுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்!"

"நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்!

"பித்தா! பிறைசூடி
பெருமானே அருளாளா!"

"போதும், அத்தான்! கொஞ்சம் பாட்டை நிறுத்து!"

"அப்படியானால் நீ பாடுகிறாயா?" - இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், "பூங்குழலி! உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான்.உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷனை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்றான்.

பிறகு மீண்டும், உரத்த குரலில், "என்ன சொல்லுகிறாய்! நீ பாடுகிறாயா? நான் பாடட்டுமா? சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா?" என்று இரைந்தான்.

"இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே!" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:

              "பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! 
              
              அறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை 
              
              மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும் 
              
              உறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே!" 
              
              

இவ்விதம் பாடிவிட்டு மெல்லிய குரலில், "அமுதா! நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.

"பூங்குழலி! கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் க றினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்."

"ஐயோ! என்ன தவறு செய்துவிட்டீர்கள்! படகு என்ன ஆயிற்று!"

"படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம்! - ஏன் பூங்குழலி! பாட்டை ஏன் நிறுத்திவிட்டாய்! மிச்சத்தையும் பாடு!" என்று பிற்பகுதியை உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.

"மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு பாடல் உண்டே! உனக்கு அது நினைவிருக்கிறதா?- நினைவிருந்தால் பாடு!"

"ஓ! நினைவிருக்கிறது!" என்று சேந்தன் அமுதன் இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:

              "கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல் 
              
              குடிதானயலே இருந்தால் குற்றமாமோ? 
              
              கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் 
              
              அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே!" 
              
              

பாட்டு முடிந்தவுடனே பூங்குழலி, "அத்தான்! என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா? பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"நாம் இங்கே நின்ற பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?"

பூங்குழலி இரைந்து, "தெரியாமல் என்ன? நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே? இதோ கேள்!

              காடேன் மிகவால் இது காரிகை யஞ்சக் 
              
              கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற 
              
              வேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் 
              
              கோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே! 
              
              

பார்த்தாயா! அமுதா! சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் சத்தமிடுகிறார்கள்.சற்றுமுன் அத்தகை குரல் ஒன்று கேட்டேன். அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரியுமா?" இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, "எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு!" என்றாள்.

பின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள்.

"அப்படியே ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது! தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே? இதை எங்கே கற்றுக் கொண்டாய்?" என்று அமுதன் கேட்டான்.

"மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா!"

"உனக்கு மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன?"

"ஏதோ கொஞ்சம் தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் பார்க்கிறாயா?"

"எப்படிப் பரீட்சிக்கிறது?"

"இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்!" இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து வௌியே வந்தான். "ஹா ஹா ஹா!" என்று சிரித்துக் கொண்டே வந்தான்.

"பெண்ணே! அப்படியா சமாசாரம்? உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா?" என்று கேட்டான்.

"அட பாதகா! நீதானா?"

"பெண்ணே! நான் யார், என்று உனக்குத் தெரியுமா?"

"இலங்கையில் இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ! அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்!"

"அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? நீ பார்த் ாயா?"

"இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு வந்தேன். துரோகி! உன் மந்திரத்தில் இடி விழ!"

"பெண்ணே! என்னை ஏமாற்றப் பார்க்காதே! என்னுடைய மந்திரத்திற்குப் பதில் மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா?"

"ஐயோ! அது எப்படி உனக்குத் தெரிந்தது?"

"இந்த ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் தெரிந்து கொள்வேன்."

"அப்படியானால் என்னை எதற்காகக் கேட்கிறாய்?"

"உன்னைப் பரிசோதிப்பதற்காகக் கேட்கிறேன்! அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்!" என்றான் ரவிதாஸன்.

அவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி ஜொலித்தன.

"என்ன? உண்மையைச் சொல்கிறாயா, மாட்டாயா! ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷட்! - இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் போகிறேன்."

பூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய குரலில், "நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து நிறுத்தப்பார்!" என்றாள்.

மந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், "என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் இருக்குமிட்டத்தைக் காட்டி விடுகிறேன்!" என்று கூறினாள்.

"என்னுடன் வா! காட்டுகிறேன்!" என்று சொல்லி விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி நடந்தாள்.

மந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த முயன்றான். பூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் அமுதன ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் தொடர்ந்து ஓடினான்.

பூங்குழலி மானைப்போல் விரைந்து பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைப் பிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் முடிகிற காரியமாயில்லை.

மந்திரவாதி அவளைத் துரத்துவதை விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் அவளைத் துரத்தினான்.

இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து ஓடிவந்து கொண்டிருந்தான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் வரவில்லை.

பூங்குழலி ஒரு மேட்டின்மீது ஏறி நின்றாள்.அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, "அதோ பார் என் காதலர்களை!" என்றாள்.

அவள் சுட்டிக்காட்டிய திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் சிலிர்த்தது.

"மந்திரவாதி! உனக்கு மந்திரம் தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு ஒரு மந்திரம் போடு பார்க்கலாம்! இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன!" என்றாள். ரவிதாஸ்னுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

"பெண்ணே! என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா!" என்று கர்ஜித்தான்.

"உன்னை எதற்காக நான் ஏமாற்ற வேண்டும்?"

"இளவரசரும் வல்லவரையனும் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து அடிக்க வில்லையா?"

"அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்?"

"இளவரசர் இறந்தது உண்மைதானா? ஆணையிட்டுச் சொல்வாயா?"

"ஆணை எதற்கு! அதோ ஆகாசத்தைப் பார்!" ரவிதாஸன் வானத்தை நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.

"வால் நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் தெரியாதா? அப்படியே நடந்துவிட்டது!" என்றாள் பூங்குழலி.

"பெண்ணே! அப்படியானால் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் எனக்குத் தாகம் எடுத்து விட்டது!...?"

பூங்குழலி திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் அறிவை இழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

சிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிகவேகமாக அவளைத் துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. அவளுகு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் ாயப் பார்த்தான்; ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து விட்டது? அவை ஏன் இப்பொழுது நகரவில்லை? அவை ஏன் சில்லிட்டிருக்கின்றன?

இது என்ன? உள்ளங்காலிலிருந்து சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே? இல்லை, இல்லை! கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன!

ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.ஒவ்வொரு அணுவாக, ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் புதைந்து கொண்டிருந்தன.

ரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வௌிவர முயன்றான். கால்களை உதவி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய பிரயத்தனம் பலன் தரவில்லை.

கீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்தது அவனைப் பற்றி இழுப்பது போலத் தோன்றியது.

பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.

"மந்திரவாதி! என்ன விழிக்கிறாய்? பூதத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்டாயா? மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே?" என்றாள்.

மந்திரவாதி ஒரு பக்கம் பீதியானாலும் மறுபக்கம் கோபத்தினாலும் நடு நடுங்கினான்.

"அடி பாவி! உன் வேலையா இது?" என்று கையை நெறித்தான்.

"என் கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா? அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள்!" என்றாள்.

ரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, "பெண்ணே! சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு!" என்றான்.

பூங்குழலி 'ஹா ஹா ஹா' என்று சிரித்தாள். "உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது! உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளை யெல்லாம் கூப்பிடு!" என்றாள்.

ரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் சேற்றில் புதைந் ு போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் சிவப்புத் தணல் ஒளியை வீசின.

கைகளை நீட்டிப் புதை சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வௌிவரப் பிரயத்தனம் செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் முடியவில்லை.

"பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு! என்னைக் காப்பாற்று!" என்று ஓலமிட்டான்.

இதற்குள் அங்கே சேந்தன் அமுதன் வந்து சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி புலப்பட்டது.

பூங்குழலி அவனைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.

"ஐயோ! இவனை இப்படியே விட்டுவிட்டா போகிறது!"

"ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க வேண்டுமென்கிறாயா!"

"இல்லை, இல்லை! இவனை இப்படியே விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் கரையேற்றி விட்டுப் போகலாம்."

"அத்தான்! இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்."

"அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் காப்பாற்றிவிட்டுப் போகலாம்."

"அப்படியானால் உனது மேல் துண்டைக் கொடு" என்றாள் பூங்குழலி.

அமுதன் தன் மேல் துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி காட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.

"மந்திரவாதி! இதோ பார்! இந்தத் துண்டின் முன்னையைப் பிடித்துக் கொண்டிரு! அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிர ு. நீயாகக் கரையேற முயலாதே! பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள்!' என்றாள்.

"ஐயோ! இரவெல்லாம் இப்படியே கழிக்க வேண்டுமா? என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு!"

பூங்குழலி அவன் கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் தொடங்கினாள்.அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்தக் குரல் மறைந்த பிறகு, "அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக?" என்று பூங்குழலி கேட்டாள்.

"பாதாளச் சிறை அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன்பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசையாயிருந்தது..."

"பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய்! இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது."

"ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹ ரத்துக்குப் புத்த பிக்ஷூக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்."

"நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?"

"கால்வாய் வழியாகத்தான்!"

"கால்வாய் வழியாக எப்படிப் போவது? படகைத் தொலைத்து விட்டீர்களே?"

"படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது? திரும்ப எடுத்து விட்டால் போகிறது!"

"அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே!"

"வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது."

பூங்குழலிக்குப் புல்லரிததது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம்! கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில்! வழியில் அபாயம் ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.

இருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.

"யார் அங்கே?" என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.

"நான்தான் சேந்தன்!"

"இன்னும் யார்?"

"என் மாமன் மகள்!" வந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.

"வேறு யாரும் இல்லையே?"

"இல்லை, ஏன் சந்தேகம்?"

"மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று நினைத்து வௌியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் தோன்றியது."

"அப்புறம்?"

"அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக அதை மந்திரவாதி யும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை நீங்கள் பார்த்தீர்கள்?"

"பார்த்தோம்."

"அவனை என்ன செய்தீர்கள்?"

"நான் ஒன்றும் செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக்குழியில் இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்!"

"இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே!"

"ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்."

"அதைக் கேட்டதும் இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. 'யார் பாடுகிறது?" என்று கேட்டார். 'ஓடக்காரப் பெண்' என்றேன். பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்."

பூங்குழலிக்கு மீண்டும் மெய்சிலிர்த்தது.

"இவள் பாட்டு மட்டுந்தானா பாடினாள்? ஆந்தை போலவும் கத்தினாளே!"

"அதுவும் என் காதில் விழுந்தது.காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் - அத்தானும், மாமன் மகளும் - வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்..."

"இது என்ன வீண் பேச்சு?" என்றாள் பூங்குழலி.

"வேறு என்ன செய்வது? இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன்.

"இல்லை; பொழுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்."

அச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் கேட்டது. சேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திருப்பதும், அவனைச் சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் தென்பட்டன.

வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள், பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.
கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது.

கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.

இளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் "தாகமாயிருக்கிறது!" என்றார்.

பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊறிறினாள்.

சிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், "பூங்குழலி, நீ தானா? சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத் தோன்றியது" என்றார்.

 

பக்க தலைப்பு



எட்டாம் அத்தியாயம்
"ஐயோ! பிசாசு!"




கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் பொழிந்தன். ஏன்? பூங்குழலியின் மேனி நரம்புகளே யாழின் நரம்புகளாக்கித் தெய்வ கானம் இசைத்தன. இளவரசரின் கனிவு செறிந்த மொழிகள் அவளுக்கு அத்தகைய போதையை அளித்தன.

"இளவரசே! நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம்!" என்றாள்.

"நீ தேவலோக கன்னிகையில்லையென்றால், நான் நம்பி விடுவேனோ? வருணனின் திருப்புதல்வி அல்லவா நீ? சமுத்திரகுமாரி! எத்தனை தடவை எனக்கு நீ உயிர் அளித்திருக்கிறாய்? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்றார் இளவரசர்.

"ஐயா! இன்னும் ஒரு பகலும், ஒரு இரவும் தங்களுடன் இருக்க இந்த ஏழையை அனுமதிக்க வேண்டும்" என்றாள் பூங்குழ ி.

"அது எப்படி முடியும்? உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே" என்றார் இளவரசர்.

"இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது."

"யாரிடமிருந்து?"

"இளைய பிராட்டியிடமிருந்துதான்!"

"அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?"

"என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி."

"ஆஹா! என் தமக்கையின் மனம் மாறி விட்டதா? எனக்கு முடிசூட்டும் ஆசை அகன்று விட்டதா? வெகு காலமாக எனக்குப் புத்த சங்கத்தில் சேரவேண்டும் என்ற ஆசை உண்டு. புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷூ ஆவேன். தூர தூர தேசங்களுக்கு யாத்திரை செய்வேன்; சாவகம் - கடாரம் - மாயிருடிங்கம் - மாபப்பாளம் - சீனம்! ஆஹா என்னுடைய பாக்கியமே பாக்கியம்; பூங்குழலி! வா, போகலாம்!" என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.

அவருக்கு இன்னும் முழுநினைவு வரவில்லை, சுரவேகத்திலேயே பேசுகிறார் என்று பூங்குழலி சந்தேகித்தாள். அதே சமயத்தில் தூரத்தில் ஓலமிடும் குரல் ஒன்று கேட்டது.

இளவரசர் திடுக்கிட்டு நின்று, "பூங்குழலி! அது என்ன?" என்றார்.

"ஆந்தை கத்துகிறது ஐயா!" என்றாள்.

"இல்லை! அது மனிதக் குரல்! ஏதோ பெரும் அபாயத்தில் சிக்கியவனின் அபயக்குரல்! அவனைக் காப்பாற்றிவிட்டுப் போகலாம்.புத்த சங்கத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு புண்ணியகாரியம் செய்யலாம்!!" என்று இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் பாய்ந்து ஓட முயன்றார். அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.

படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இள வரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.

கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள். வந்தியத்தேவன், "பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!" என்று சொன்னான்.

அவனுடைய குரல் தழுதழுத்தது. நிலாக் கிரணம் அவன் முகத்தில் விழுந்தபோது கண்களில் முத்துத் துளிகள் ஒளிவீசித் திகழ்ந்தன.

"கோடிக்கரைக் காடு தாண்டிய பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?" என்றான் சேந்தன் அமுதன்.

"வேண்டாம். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். குழகர் கோயில் பிராகாரதில் சற்று நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் பொழுது விடிவதற்குள் எழுந்து புறப்படுகிறேன். இல்லாவிடில் நாளைக்குப் பிரயாணம் செய்ய முடியாது! வழியில் எவ்வளவு தடங்கல்களோ!" என்றான் வந்தியத்தேவன்.

பூங்குழலி அத்தனை நேரமும் தன் மடியில் பத்திரப் படுத்தி வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள். "இந்தா! குழகர் கோயில் பிரசாதம். இதை சாப்பிட்டு விட்டுத் தூங்கு!" என்றாள்.

"நீங்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே, உங்களுக்கு வேண்டாமா?"

"கோடிக்கரையிலிருந்து காத தூரம் கால்வாயில் போய் விட்டால் எத்தனையோ கிராமங்கள். நானாவது சேந்தனாவது போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வருவோம். உன் விஷயம் அப்படியல்ல. நீ ஒருவர் கண்ணிலும் படாமல் பழையாறை போய்ச் சேர வேண ்டும் அல்லவா?"

"படகில் இளவரசர் இருக்கிறார் என்பதை நீங்களும் மறந்து விடக்கூடாது."

"இந்தப் படகில் இருப்பவர் இளவரசர் என்று யார் நம்புவார்கள்? அதைப்பற்றிக் கவலைப்படாதே! எங்கள் பொறுப்பு. இந்த ஓட்டைப் படகை யாரும் கவனிக்க மாட்டார்கள்."

"சரி, அப்படியானால் இங்கேயே நான் இறங்கிக் கொள்கிறேன்."

அச்சமயம் மறுபடியும் அந்த ஓலக்குரல் கேட்டது. "ஆ! அது என்ன?" என்று இளவரசர் கேட்டுவிட்டு மறுபடியும் உணர்வை இழந்தார். பூங்குழலி எழுந்து நின்றாள்.

"முடியாது; என்னால் முடியாது, இளவரசருக்குத் தெரிந்தால் என்னை மன்னிக்க மாட்டார். இன்னும் கொஞ்ச நேரம் படகில் இரு. அந்த மந்திரவாதியைச் சேற்றிலிருந்து எடுத்து விட்டுவிட்டு வருகிறேன். இங்கிருந்து அந்த இடம் கிட்டத்தான் இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கால்வாயின் கரையில் குதித்தாள்.

"அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். அந்தப் பாதகனிடம் உன்னைத் தனியாக விடமாட்டேன்" என்றான் சேந்தன் அமுதன்.

"இல்லை, அமுதா! நீ படகில் இரு! இளவரசரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் பூங்குழலியுடன் போய் வருகிறேன். எனக்கும் அந்த மந்திரவாதியைப் பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலியைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடினான் வந்தியத்தேவன்.

பூங்குழலியின் மனக்கண் முன்னால் மந்திரவாதி மார்பளவு சேற்றில் புதைந்திருக்க, அவனைச் சுற்றி நரிகள் நின்று அவனைப் பிடுங்கித் தின்னப் பார்க்கும் பயங்கரக் காட்சி தோன்றிக் கொண்டிருந்தது. அதற்கிடையே இளவரசர் அவளைப் பார்த்து "பெண்ணே நீ கொலை பாதகி!" என்று குற்றம் சாட்டும் காட்சியும் தோன்றியது! இந்தக் காட்சிகள் அவளுடைய கால்களுக்கு மிக்க விரைவைக் கொடுத்தன. மந்திரவாதியை அமிழ்த்திய சேற்றுப் பள்ளத்தை தி விரைவில் நெருங்கினாள். அங்கே மந்திரவாதியைக் காணாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.

பின் தொடர்ந்து வந்த வந்தியத்தேவன், அவள் பக்கம் நெருங்கியதும் அவள் தயங்கி நிற்பதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

"வேறு ஒரு சேற்றுப் பள்ளமாயிருக்கலாம். கோடிக்கரையில் எத்தனையோ பள்ளங்கள் உண்டு அல்லவா? நீ மறந்து போயிருப்பாய்!" என்றான்.

புதரில் ஒரு முனை கட்டியிருந்த சேந்தன் அமுதனின் மேல் துண்டைப் பூங்குழலி சுட்டிக் காட்டினாள். பாவம்! அவளால் பேச முடியவில்லை.

"சேற்றில் அமிழ்ந்திருப்பான் என்று நினைக்கிறாயா? இல்லை, இல்லை! ரவிதாஸனை அப்படியெல்லாம் கொன்று விட முடியுமா? அவனுக்கு நூறு உயிர் ஆயிற்றே? தப்பிப் போயிருப்பான்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் புதரில் கட்டப்பட்டிருந்த துண்டை அவிழ்த்து எடுத்துக் கொண்டான். பூங்குழலிக்கு ஆறுதலாக அவ்விதம் சொன்னானே தவிர, அவன் மனத்திற்குள், ரவிதாஸன் மாண்டு தான் போயிருப்பான்; அவனுக்கு இந்தக் கோர மரணம் வேண்டியதுதான்!' என்ற எண்ணமும் தோன்றியது.

இருவரும் அங்கே மேலும் நிற்பதில் பயனில்லை என்பதை ஒருங்கே உணர்ந்தார்கள்.மீண்டும் கால்வாயை நோக்கி நடந்தார்கள். கால்வாயின் கரைகளை அங்கே இருபுறமும் மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு நின்று இரு உருவங்கள் எட்டிப் பார்த்தது தெரிந்தது.

அவற்றில் ஒன்று ஆண் உருவம்; இன்னொன்று பெண் உருவம்.

"அதோ!" என்று பூங்குழலி சுட்டிக் காட்டினாள்."

"ஆமாம்; அவர்கள் யார் என்று தெரிகிறதா?"

"மந்திரவாதி ஒருவன்! இன்னொருத்தி என் அண்ணன் மனைவி எனக்கு முன்னால் அவள் வந்து மந்திரவாதியை விடுவித்திருக்கிறாள்."

"நல்லதாய்ப் போயிற்று."

"நல்லது ஒன்றுமில்லை. கால்வாயில் படகு வருவதை அவர்கள் உற்று ் பார்க்கிறார்களே?"

அச்சமயம் இரண்டு உருவங்களில் ஒன்று திரும்பி இவர்கள் வரும் திசையைப் பார்த்தது. உடனே இரண்டு உருவங்களும் புதர்களும் அடியில் மறைந்து விட்டன."ஐயோ! அவர்கள் நம்மையும் பார்த்து விட்டார்கள்!"

"பேசாமல் என்னுடன் வா! நான் ஒரு யுக்தி செய்கிறேன். நான் என்ன சொன்னாலும் ஆச்சரியப் படாதே! என்னை ஒட்டியே பேசு!" என்றான் வந்தியத்தேவன்.

இருவரும் மேற்கூறிய உருவங்கள் நின்ற இடத்துக்குச் சமீபமாகப் போனார்கள். அந்த இடத்தைக் கடந்து சிறிது அப்பால் சென்று கால்வாயின் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். பின்னால் புதரில் மறைந்திருந்தவர்களுக்குத் தங்கள் பேச்சு நன்றாய்க் கேட்கும் என்று வந்தியத்தேவன் நிச்சயப் படுத்திக் கொண்டான்.

"பூங்குழலி! இதோ பார்! ஏன் கவலைப்படுகிறாய்? மந்திரவாதி செத்து ஒழிந்து போனான். போனதே க்ஷேமம்" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயோ! என்ன பயங்கரமான சாவு!" என்றாள் பூங்குழலி.

"கொலை செய்தது செய்துவிட்டு, இது என்ன பரிதாபம்?"

"ஐயோ! நானா கொலை செய்தேன்?"

"பின்னே அவன் சேற்றில் விழச் செய்தது யார்? நீ தானே? திடீரென்று அப்புறம் உனக்குப் பச்சாத்தாபம் வந்துவிட்டது. தப்புவிக்கலாம் என்று வந்தாய்! அதற்குள் அவனை சேறு விழுங்கிவிட்டது. தப்புவிக்கத்தான் வந்தாயோ, அல்லது செத்துப் போய் விட்டானா என்று பார்ப்பதற்குத்தான் வந்தாயோ. யார் கண்டது?"

"உன்னை யார் என்னைத் தொடர்ந்து வரச் சொன்னது?"

"வந்ததினால்தானே நீ செய்த கொலையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது? அடி கொலை பாதகி!"

"நானா கொலை பாதகி!"

"ஆம், நீ கொலை பாதகிதான்! நான் மட்டும் யோக்கியன் என்று சொல்கிறேனோ? அதுவும் இல்லை. நான் இளவரசரைக் கடலில் முழுக அடித்துக் கொன்றேன். நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றாய். அதற்கும் இதற்க ும் சரியாகப் போய் விட்டது. நான் செய்த கொலையைப் பற்றி நீ வௌியில் சொல்லாமலிருந்தால், நீ செய்த கொலையைப் பற்றி நானும் யாரிடத்திலும் சொல்லவில்லை!"

"இளவரசரைக் கொன்றவன் நீதானா? சற்றுமுன் அவரைப் பார்க்கவேயில்லை என்று சொன்னாயே?"

"வேண்டுமென்றுதான் அப்படிச் சொன்னேன். இனிமேல் அப்படி உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் கூறியதை ஒப்புக் கொள்வாயா, மாட்டாயா?"

"மாட்டேன் என்று மறுத்தால்?"

"உடனே நந்தினி தேவியிடம் போய் நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றதைக் கூறுவேன்.நான் செய்த கொலைக்குச் சாட்சியம் இல்லை; உன் கொலைக்குச் சாட்சியம் உண்டு..."

"நந்தினி என்னை என்ன செய்துவிடுவாள்?"

"வேறொன்றும் செய்யமாட்டாள். உன்னைப் பூமியில் கழுத்து வரையில் புதைத்து யானையின் காலினால் இடறும்படி செய்வாள்!"

"ஐயோ! என்ன பயங்கரம்!"

"வேண்டாம் என்றால், நான் கூறுகிறபடி செய்வதாக ஒப்புக்கொள்."

"என்ன செய்ய வேண்டும்?"

"அதோ உன் அத்தான் கொண்டு வருகிறானே, அந்தப் படகில் ஏறிக் கொள். இரண்டு பெரும் நேரே இலங்கைக்குப் போய்விட வேண்டும். அங்கே போய் உன் இளவரசரை நினைத்து அழுதுகொண்டிரு!"

"எதற்காக நான் இலங்கை போகவேண்டும்? இங்கேயே இருந்தால் உனக்கு என்ன?"

"ஆ! நீ போய் பழுவேட்டரையரிடம் என்னை பற்றிச் சொல்லிவிட்டால்! அவருக்கு என்ன இருந்தாலும் இளவரசர் பேரில் அபிமானம் உண்டு. என்னைப் பழி வாங்கப் பார்ப்பார்; எனக்கு இந்த உலகில் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது."

"அட பாவி! இளவரசரை நீ ஏன் கொன்றாய்! அதையாவது சொல்லிவிடு!"

"சொன்னால் என்ன? நன்றாகச் சொல்லுகிறேன். இளவரசரும் அவருடைய தமக்கையும் சேர்ந்து, ஆதித்த கரிகாலரின் இராஜ்யத்தைப் பறிப்பதற்குச் சதி செய்தார்கள். ஆதித்த கரிகாலர் என்னுடைய எஜமானர். அவருடைய விரோதி என்ன ுடைய விரோதி. அதனால்தான் இளவரசரைக் கொன்றேன். தெரிந்ததா?"

"இந்த மகாபாவத்துக்கு நீ தண்டனை அநுபவிப்பாய்."

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொன்னபடி நீ செய்யப்போகிறாயா, இல்லையா?"

"செய்யாவிட்டால் வேறு வழி என்ன? அதோ படகு வருகிறது, போய் ஏறிக் கொள்கிறேன்."

"இதோ பார்! நன்றாய்க் கேட்டுக் கொள். படகில் ஏறியதும் நேரே கடலை நோக்கிச் செல்ல வேண்டும்.கோடிக்கரைப் பக்கம் திரும்பினாயோ, உன் கதி அதோ கதிதான்! இங்கேயே இருந்து நான் உங்கள் படகைப் பார்த்துக் கொண்டிருப்பேன். படகு கடலை அடைந்த பிறகுதான் இங்கிருந்து நகருவேன்."

"சரி சரி! இங்கேயே இரு! உன்னை நூறு நரிகள் பிடுங்கித் தின்னட்டும்!"

வந்தியத்தேவன் செய்த சமிக்ஞையைப் பார்த்து விட்டுப் பூங்குழலி அங்கிருந்து விரைந்து போய்ப் படகில் ஏறிக் கொண்டாள். படகு மேலே சென்றது. வந்தியத்தேவன் அவளிடம் கூறியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான். அரை நாழிகை சென்றது. படகு கால்வாயில் வெகு தூரம் வரை சென்று மறைந்தது.

திடீரென்று வந்தியத்தேவனுக்குப் பின்னால் 'ஹா ஹா ஹா' என்று ஒரு பயங்கரச் சிரிப்பு கேட்டது.

வந்தியத்தேவன் திடுக்கிட்டவன் போலப் பாசாங்கு செய்து, சட்டென்று எழுந்து நின்று பார்த்தான்.

மந்திரவாதி புதர்களுக்கு மத்தியில் எழுந்து நின்று பேய் சிரிப்பது போலப் பயங்கரமாய்ச் சிரித்தான்.

"ஐயோ! பிசாசு" என்று அலறிக்கொண்டு வந்தியத்தேவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

 

பக்க தலைப்பு



ஒன்பதாம் அத்தியாயம்
ஓடத்தில்மூவர்




பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி முத்தம் க டுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். "மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் போய்வா!" என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றது.

உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் இரவு பிரிந்து சென்றதும் உலகம் மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. "ஆகா; விடுதலை!" என்று ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.

கீழ்வானத்தில் பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் "நிற்கட்டுமா? போகட்டுமா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

ஓடையில் படகு மெள்ள மெள்ளச் சென்று கொண்டிருந்தது. பட்சிகளின் கோஷ்டி கானத்தோடு துடுப்பு தண்ணீரைத் தள்ளும் சலசல சப்தமும் பூங்குழலியின் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு கிளையில் வெடித்த இரண்டு அழகிய நீலநிற மொட்டுக்கள் ஒருங்கே மலர்ந்தது போல் அவளுடைய கண்ணிமைகள் திறந்தன. எதிரே இளவரசரின் பொன்முகம் தோன்றியது. இன்னும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கந்தானா? அல்லது சுரவேகத்தில் இன்னமும் உணர்ச்சியற்றிருக்கிறாரா? தெரியவில்லை. எனினும் அவருடைய திருமுகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கிறது!

அப்பால் சேந்தன் அமுதன் துடுப்புத் தள்ளிக் கொண்டிருந்தான்.

"பூங்குழலி! ஏன் அதற்குள் விழித்துக் கொண்டாய்? இ ்னும் சற்று நேரம் தூங்குவதுதானே?" என்றான்.

பூங்குழலி புன்னகை பூத்தாள். முகத்திலிருந்த இதழ்களிலே மட்டும் அவள் புன்னகை செய்யவில்லை. அவளுடைய திருமேனி முழுதும் குறுநகை பூத்தது.

காட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவள் பூங்குழலி. ஆயினும் பட்சிகளின் கானமும், வண்டுகளின் கீதமும் இவ்வளவு இனிமையாக அவளுடைய செவிகளில் என்றைக்கும் தொனித்ததில்லை.

"அத்தான்! உதய ராகத்தில் ஒரு பாட்டுப் பாடு!" என்றாள் பூங்குழலி.

"நீ இருக்குமிடத்தில் நான் வாயைத் திறப்பேனா? நீ தான் பாடு!" என்றான் சேந்தன் அமுதன்.

"இராத்திரி இருளடர்ந்த காட்டில் பாடினாயே?"

"காரிய நிமித்தமாகப் பாடினேன். இப்போது நீ பாடு!"

"எனக்கும் பாட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் இளவரசருக்குத் தொந்தரவாயிருக்கு மல்லவா?"

"எனக்குத் தொந்தரவு ஒன்றுமில்லை. இரண்டு பேரும் சேர்ந்து பாடுங்கள்!" என்றார் அருள்மொழிவர்மர்.

பூங்குழலி வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.

"படகு எங்கே போகிறது?" என்று இளவரசர் கேட்டார்.

"நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்திற்கு" என்றாள் பூங்குழலி.

"அப்படியானால் இராத்திரி நான் கண்டது கேட்டதெல்லாம் கனவல்லவா? உண்மைதானா?"

"ஆம், ஐயா! இதோ இவர்தான் தங்கள் தமக்கையாரிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்."

"இளையபிராட்டி கூறியதையெல்லாம் விவரமாகச் சொல்லு, அமுதா! என்னைப் புத்த சங்கத்தில் சேர்ந்து விடும்படிதானே என் தமக்கை சொல்லி அனுப்பினார்?"

இதற்கு என்ன விடை சொல்வதென்று அமுதன் தயங்கிய போது, குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் திடுக்கிட்டார்கள்.

இளவரசரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை.

"என் நண்பன் எங்கே? வாணர் குலத்து வீரன்?"என்று இளவரசர் கேட்டார். கேட்டுவிட்டுக் கண்கள் மூடிக் கொண்டார்.

சிறிது நேரத்துக்குள் குதிரைமீது வந்தியத்தேவன் தோன்றினான்.

படகு நின்றது.

வந்தியத்தேவன் குதிரைமீதிருந்து இறங்கி வந்தான்.

"ஒன்றும் விசேஷமில்லை. நீங்கள் பத்திரமாயிருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன்.இனி அபாயம் ஒன்றுமில்லை" என்றான் வந்தியத்தேவன்.

"மந்திரவாதி?" என்று பூங்குழலி கேட்டாள்.

"இந்தப் படகில் இளவரசர் இருக்கிறார் என்ற சந்தேகமே அவனுக்கில்லை. நான் கூறியதை அவன் அப்படியே நம்பி விட்டான்!"

"அவனைப் பார்த்தயா?"

"பார்த்தேன். ஆனால் அவனுடைய பிசாசைப் பார்த்ததாக பயந்து பாசாங்கு செய்தேன்."

"உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவனை நான் பார்த்ததேயில்லை."

"பொய் என்று சொல்லாதே! கற்பனா சக்தி என்று சொல்லு. இளவரசர் எப்படியிருக்கிறார்?"

"நடுநடுவே விழித்துக்கொண்டு இரண்டு வார்த்தை சொல்கிறார்; அப்புறம் நினைவு இழந்து விடுகிறார்."

"இந்தச் சுரமே அப்படித்தான்."

"எத்தனை நாளைக்கு இருக்கும்?"

"சில சமயம் ஒரு மாதம்கூட இருக்கும். சூடாமணி விஹாரத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள். பிக்ஷூக்கள் வைத்தியம் செய்தால், இரண்டு வாரத்தில் குணப்படுத்தி விடுவார்கள். ஜாக்கிரதை, பூங்குழலி! உன்னை நம்பித்தான் இளவரசரை ஒப்படைத்து விட்டுப் போகிறேன். உன் அத்தான் எங்கேயாவது கோவில் கோபுரத்தைக் கண்டால், தேவராம் பாடிக்கொண்டு சுவாமி தரிசனத்துக்குப் போய் விடுவான்!"

சேந்தன்அமுதன், "உன்னோடு பழகிய பிறகு அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். சிவ கைங்கரியம் செய்யும் ஆசைகூட எனக்குக் குறைந்துவிட்டது!" என்றான்.

"என்னால் குறைந்துவிட்டதா? அல்லது இந்தப் பெண்ணினாலா? உண்மையைச் சொல்!"

சேந்தன்அமுதன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் "குதிரையை நான சொன்ன இடத்தில் கண்டு பிடித்தாயா?" என்று கேட்டான்.

"குதிரை என்னைக் கண்டுபிடித்தது. இது நான் உன்னிடம் தஞ்சையில் விட்டு வந்த குதிரை அல்லவா?"

"ஆமாம்."

"இருட்டில் இது அடர்ந்த காட்டுக்குள்ளே என்னைப் பார்த்துவிட்டுக் கனைத்தது. அராபியர்களிடம் நான் அகப்பட்டுக் கொண்டதில் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன், அமுதா! குதிரைகளை வெறுங்காலோடு ஓடச்செய்வது பாவம்.குளம்புக்கு அடியில் இரும்புக் கவசம் அடித்து ஓட்டவேண்டும்.முதன் முதலில் நான் பார்க்கும் கொல்லுப்பட்டறையில் இதன் குளம்புக்குக் கவசம் அடிக்கச் சொல்லப்போகிறேன். சரி, சரி! அதையெல்லாம் பற்றிப் பேச நேரமில்லை. மறுபடியும் உங்களையும் இளவரசரையும் பார்ப்பேனோ என்னமோ, தெரியாது. இளவரசர் மறுபடி விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்."

வந்தியத்தேவன் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போனான். விரைவில் இவர்களுடைய பார்வையிலிருந்து அவன் மறைந்தான்.

இருபுறமும் தாழம்புதர்கள் அடர்ந்திருந்த ஓடைக் காலின் வழியாகப் படகு போய்க் கொண்டிருந்தது. பொன்னிறத் தாழம்பூக்களும், தந்த வர்ண வெண் தாழம்பூக்களும் இருபக்கமும் செறிந்து கிடந்தன.அவற்றின் நறுமணம் போதையை உண்டாக்கிற்று. சில இடங்களில் ஓடைக் கரையில் புன்னை மரங்கள் வளர்ந்திருந்தன. சில இடங்களில் கடம்ப மரங்களும் இருந்தன. முத்துநிறப் புன்னை மலர்களும், குங்கும வர்ணக் கடம்ப மலர்களும் ஓடைக் கரைகளில் சொரிந்து கிடந்தன.

பூலோகத்திலிருந்து புண்ணியசாலிகள் சொர்க்கத்திற்குப் போகும் பாதை ஒன்று இருந்தால், அது இப்படித்தான் இருக்கும் என்று பூங்குழலிக்குத் தோன்றியது.

இடையிடையே கிராமம் தென்பட்ட இ டத்தில் சேந்தன் அமுதன் சென்று இளவரசருக்குப் பாலும், பூங்குழலிக்கு உணவும் வாங்கிக் கொண்டு வந்தான்.

இளவரசர் கண்விழித்த போதெல்லாம் பூங்குழலி சற்று விலகி நின்றாள். நேருக்கு நேர் அவரைப் பார்க்க முடியாமல் அங்குமிங்கும் பார்த்தாள். அவர் உணர்விழந்திருந்த நேரங்களில் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சேந்தனுடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தாள். சிலசமயம் இரண்டு பேரும் சேர்ந்து பாடிக் களித்தார்கள்.

சேந்தன் அமுதன் உணவு தேடிக் கிராமங்களுக்குச் சென்ற சமயங்களில் பூங்குழலி இளவரசரின் நெற்றியைத் தடவிக் கொடுத்தும், தலையைக் கோதிவிட்டும் பணிவிடை செய்தாள். அப்போதெல்லாம் அவள் உள்ளம் பொங்கி, உடல் சிலிர்த்து, பரவச நிலையிலிருந்தாள். இம்மாதிரி அவள் எத்தனை எத்தனையோ பூர்வ ஜன்மங்களில் அவருக்குப் பணிவிடை செய்தது போன்ற உணர்வு தோன்றியது.உருவமில்லாத ஆயிரமாயிரம் நினைவுகள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு அவளுடைய உள்ளத்தில் கும்பல் கும்பலாகப் புகுந்து வௌியேறிக் கொண்டிருந்தன.

ஒரு பகலும் ஓர் இரவும் அவர்கள் அந்த ஓடைக்கால் வழியாகப் படகில் சென்றார்கள். பூங்குழலியும், சேந்தனும் முறை போட்டுக்கொண்டு அவ்வப்போது சிறிது நேரம் கண்ணயர்ந்தார்கள். கண்ணயர்ந்த நேரத்தில் உருவந் தெரியாத இன்பக் கனவுகள் பலவற்றைப் பூங்குழலி கண்டாள்.

மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு நாகைப் பட்டினத்தை அடைந்தது. நாகைப் பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

அச்சமயம் அந்தப் புகழ்பெற்ற சூ ாமணி விஹாரத்தில் ஏதோ குழப்பம் நேர்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. விஹாரத்தின் வாசலில் ஜனக்கூட்டத்தின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. பிக்ஷூக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

படகிலிருந்து மூவரும் கரையில் இறங்கினார்கள். சேந்தன் அமுதன் தான் விஹாரத்துக்குச் சென்று, குழப்பத்தின் காரணம் என்னவென்று தெரிந்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான்.

 

பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
சூடாமணி விஹாரம்




பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து இறங்கின.

ஸரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,
"காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!" என்று வர்ணித்தார். கடல் நாகைக் காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
"நம்பிதாம ம் அந்நாட் போய்நாகைக் காரோணம் பாடி
அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா" ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

நாகைப் பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்!

நாகைப் பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அந்நகரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன.

"பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்" என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.

அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.

மலாய் நாடு என்று இந்நாளில் நாம் குறிப்பிடும் தீபகற்பம் அக்காலத்தில் ஸரீ விஜய நாடு என்னும் பெயரால் பிரசித்தி பெற்றிருந்தது. அந்த நாட்டில் ஒரு முக்கிய நகரம் கடாரம். அந்த மாநகரைத் தலைநகராக வைத்துக்கொண்டு நாலா திசையிலும் பரவியிருந்த மாபெரும் ஸரீ விஜய சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார். அந்த வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணி வர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான். அவ்வரசன் "இராஜ தந்திரங்களில் நிபுணன்; ஞானத்தில் சூர குருவான பிரகஸ்பதியை ஒத்தவன்; அறிவாளிகளான தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றவன்; இரவலருக்குக் கற்பகத் தருவாய் விளங்கினான்" என்று ஆணை மங்கலச் செப்பேடுகள் வியந்து புகழ்ந்து கூறுகின்றன.

அத்தகைய பேரரசனி ் மகன் மாற விஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக "மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான்" என்றும் அச்செப்பேடுகள் கூறுகின்றன.

கடாரத்து அரசனாகிய மாற விஜயோத்துங்கன் நாகைப் பட்டினத்துக்கு வந்து புத்த விஹாரத்தைக் கட்டுவானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். சோழ வளநாட்டுடன் நீடித்த வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த அயல் நாடுகளில் ஒன்று ஸரீ விஜய நாடு. அந்நாட்டுப் பிரஜைகள் பலர் நாகைப்பட்டினத்துக்கு வந்து நிரந்தரமாகவே குடியேறி இருந்தனர்.வேறு பல அடிக்கடி வந்து திரும்பினர். கடாரத்து அரசனும், அவனுடைய குடிகளும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் புத்தரை வழிபடுவதற்கு வசதியாயிருக்கட்டும் என்றுதான் அம்மன்னன் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தைக் கட்டினான். புத்த மதத்தின் தாயகம் பாரத தேசமாயிற்றே என்ற காரணமும் அவன் மனத்தில் இருந்திருக்கலாம்.

தமிழகத்து மன்னர்கள் எக்காலத்திலும் சமய சமரசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், ஆகையால் அவர்கள் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டுவதற்கு அநுமதி கொடுத்தார்கள். அநுமதி கொடுத்தது மட்டுமா? அவ்வப்போது அந்தப் புத்தர் கோயிலுக்கு நிவந்தங்களும், இறையிலி நிலங்களும் அளித்து உதவினார்கள். (இந்தக் கதை நடந்த காலத்திற்குப் பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்; இந்த நில தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் - செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான்.இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் என்ற கூறப்படுகின்றன. மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள். ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையினால் இச்செப்பேடுகளை 'லெயிடன் சாஸனம்' என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)

விஜயாலய சோழரின் காலத்திலிருந்து சோழ மன்னர்கள் சிவபக்தியில் திளைத்தவர்களாயிருந்தனர். ஆதித்த சோழரும், பராந்தக சோழரும், கண்டராதித்தரும் சைவப் பற்று மிக்கவர்கள். பற்பல சிவலாயத் திருப்பணிகள் செய்வித்தார்கள். எனினும் அவர்கள் பிற மதங்களைத் துவேஷிக்கவில்லை, தங்கள் இராஜ்யத்தில் வாழும் பிரஜைகள் எந்தெந்த மத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களையும் அவர்களுடைய மதங்களையும் நடுநிலைமை தவறாமல் பராமதித்தார்கள். சுந்தர சோழ சக்கரவர்த்தி தமது முன்னோர்களைக் காட்டிலும் சில படிகள் முன் சென்றார். புத்தப் பள்ளிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளித்தார். இதனால் சோழ சாம்ராஜ்யத்தில் அச்சமயம் வாழ்ந்திருந்த பௌத்தர்கள் அனைவரும் மிக்க உற்சாகம் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அருள்மொழிவர்மர் இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பிக்கும்படி ஏற்பாடு செய்தது அவர்களுடைய உற்சாகத்தை மேலும் அதிகமாக்கியிருந்தது.

அப்படியெல்லாமிருக்க, இன்று அந்தப் பெயர் பெற்ற சூடாமணி விஹாரத்தில் நேர்ந்த குழப்பத்துக்குக் காரணம் என்ன? பிக்ஷூக்கள் நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் பரபரப்பாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? சூடாமணி விஹாரத்தின் வாசற்புரத்தில் என்ன அவ்வளவு இரைச்சலும் கூச்சலும்? - நல்லது நாமும் ச ந்தன் அமுதனைப் பின்பற்றிச் சென்று பார்ப்போம்.

சேந்தன் அமுதனும், மற்ற இருவரும் கால்வாயின் வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு சூடாமணி விஹாரத்தின் உட்பகுதிக்கே வந்து விட்டதாகச் சொன்னோம். அங்கே ஒருவரையும் காணாமையால் சேந்தன் அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் வந்த காரியத்தை அவர்கள் மறந்து விட்டதாகத் தோன்றியது. சைத்யத்தில் ஏறுவதற்குரிய படிகளில் புத்த பிக்ஷூக்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிக் கீழே நின்றவன் ஒருவன் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைச் சேந்தன் அமுதன் கண்டான். பிக்ஷூக்கள் சிலருடைய கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் பார்த்தான். கீழே நின்ற பக்தர்களில் பலர் வழக்கப்படி "சாது! சாது!" என்று கோஷிப்பதற்குப் பதிலாக, "ஆஹா!", "அடாடா!" "ஐயோ!" என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான்.

அருகில் நெருங்கிச் சென்று சிறிது நேரம் கேட்ட பின்னர் விஷயம் இன்னதென்று தெரிந்தது. பிக்ஷூக்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் பார்த்திபேந்திரனுடைய கப்பலிலே இருந்த மாலுமிகளில் ஒருவன். கப்பல் முதலாவது நாள் இரவு நாகைப்பட்டினத்துக்கு வந்துவிட்டது. மாலுமிகள் கரையில் இறங்கியதுமே இளவரசரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்தியைச் சிலரிடம் சொல்ல, அது நகரமெல்லாம் பரவி விட்டது. அச்செய்தி உண்மைதானா என்று அறிய அதிகாலையில் அம்மாலுமிகளில் ஒருவனைச் சூடாமணி விஹாரத்தின் பிரதம பிக்ஷூ அழைத்து வரச் செ ய்தார். அவன் தான் அறிந்ததை அறிந்தபடி கூறினான், "சுழற்காற்று அடித்த போது இளவரசர் கடலிலே குதித்தவர் திரும்பி வரவேயில்லை" என்று துயரக் குரலிலே சொன்னான்.

அப்போது அக்கூட்டத்திலே விம்மி அழும் குரல்கள் பல எழுந்தன.

பிரதம பிக்ஷூவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகித் தாரை தாரையாக வழிந்தது.

அவர் குனிந்த தலை நிமிராமல் படிகளில் ஏறிச் சென்று சைத்தியத்தைத் தாண்டி விஹாரத்துக்குள் பிரவேசித்தார். மற்ற பிக்ஷூக்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். சேந்தன் அமுதனும் அவர்களோடு வந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை.

பிரதம பிக்ஷூ மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்:- "புத்த பகவானின் கருணை இப்படியா இருந்தது? பற்பல மனக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேனே? சக்கரவர்த்தியைப் பார்க்கச் சமீபத்திலே தஞ்சாவூருக்குப் போயிருந்தேன் பாருங்கள்! அச்சமயம் இலங்கையில் அருள்மொழிவர்மரின் அற்புதச் செயல்களைப்பற்றிக் கூறினேன். அதையெல்லாம் இளைய பிராட்டி குந்தவை தேவியும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு என்னைத் தனியாக வரவழைத்து இந்த விஹாரத்தையொட்டி ஆதுரசாலை ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அதற்குத் தேவையான நிபந்தங்கள் அளிப்பதாகவும் கூறினார். அது மட்டுமா? ஆச்சாரியாரே! நாட்டில் பலவாறு பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை இளவரசர் சூடாமணி விஹாரத்தில் சில நாள் விருந்தாளியாக இருக்கும்படி நேரும். அவரை வைத்துப் பாதுகாக்க முடியுமா?' என்று குந்தவை பிராட்டி கேட்டார்.'தேவி! அத்தகைய பேறு எங்களுக்குக் கிடைத்தால் கண்ணை இமை காப்பதுபோல் வைத்துப் பாதுகாப்போம்' என்று கூறினேன். என்ன பயன்! இளவரசரா கடலில் முழுகினார்? இந்த நாட்டிலுள்ள நல்லவர்களின் மனோரதமெல்லாம் முழுகிவிட்டது! சோழ சாம்ராஜ்யமே முழுகி ிட்டது. சமுத்திர ராஜன் இவ்வளவு பெருங்கொடுமையைச் செய்ய எப்படித் துணிந்தான்? அக்கொடியவனைக் கேட்பார் இல்லையா?"

மற்ற பிக்ஷூக்கள் அனைவரும் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினார்கள்.

தலைமைப் பிக்ஷூ பேசி நிறுத்தியதும் சிறிது நேரம் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது.

சேந்தன் அமுதன் அதுதான் சமயம் என்று புத்த பிக்ஷூக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக யத்தனித்தான். உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். "இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?" என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

"ஐயா அடியேன் பெயர் சேந்தன் அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்கள் தலைவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!" என்றான்.

"சொல், சொல்!" என்றார்கள் பலர்.

அவனுடைய தயக்கத்தைப் பார்த்துவிட்டு ஆச்சாரியர், "இவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியம் ஒன்றுமில்லை; சொல்" என்றார்.

"ஐயா! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!"

"அது யார் நோயாளி? என்ன நோய்? எங்கே விட்டிருக்கிறாய்?"

"விஹாரத்தில் நடுமுற்றத்தில் விட்டிருக்கிறேன்...."

"எப்படி அங்கே வந்தாய்?"

"கால்வாய் வழியாக, நோயாளியைப் படகில் கொண்டு வந்தேன். நடுக்கும் குளிர்க்காய்ச்சல் - தாங்கள் உடனே...."

"பகவானே! நடுக்கும் சுரம் தொற்றும் நோய் ஆயிற்றே! இங்கே ஏன் அந்த நோயாளியை அழைத்து வந்தாய்? அதிலும் நல்ல சமயம் பார்த்து..."

"ஆச்சாரிய! அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தினர் என்று இதுகாறும் நினைத்திருந்தேன். இப்போது இல்லை என்று தெரிகிறது..."

"அது ஏன் அப்படிக் கூறுகிறாய்?"

"அசோக ஸ்தம்பம் ஒன்றை நான் காஞ்சிக்கு அருகில் பார்த்தேன். அதில் நோயாளிக்குச் சிகிச்சை செய்வதை முதன்மையான தர்மமாகச் சொல்லியிருக்கிறது. நீங்களோ இப்படி விரட்டி அடிக்கிறீர்கள்!" என்றான் அமுதன்.

ஆச்சாரிய பிக்ஷூ மற்றவ ்களைப் பார்த்து "கொஞ்சம் பொறுங்கள்; நான் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு, "வா! அப்பனே" என்று அமுதனை அழைத்துக் கொண்டு சென்றார்.

விஹாரத்தின் நடு முற்றத்தில் கால்வாய்க்கு அருகில் ஒரு யுவனும், யுவதியும் இருப்பதைப் பார்த்துப் பிக்ஷூ திடுக்கிட்டார். "இது என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இந்த விஹாரத்துக்குள் ஸ்திரீகளே வரக்கூடாதே! பிக்ஷூணிகளுக்குக் கூட வேறு தனி மடம் அல்லவா கட்டியிருக்கிறது?"

அருகில் போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷூ திகைத்துப் போனார் என்று சொன்னால் போதாது! வியப்பினாலும் களிப்பினாலும் அவரால் சிறிது நேரம் பேச முடியவில்லை.

சந்தேக நிவர்த்திக்காக, "இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?" என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.

இது இளவரசர் காதில் விழுந்தது. "இல்லை, ஆச்சாரியரே இல்லை. நான் இளவரசனுமில்லை ஒன்றுமில்லை. இந்தப் பெண்ணும் இந்த பிள்ளையுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். நான் ஒரு ஓடக்காரன். சற்றுமுன் இந்தப் பெண்ணைப் பார்த்து, 'பெண்ணே! என்னை மணம் புரிந்து கொள்வாயா? இருவரும் படகில் ஏறித் தூரதேசங்களுக்குப் போகலாம்' என்றேன். "இவள் ஏதேதோ பிதற்றினாள். நான் உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவனாம்! ஏழை வலைஞர் குலப் பெண்ணாகிய இவள் என்னை மணந்து கொள்ள மாட்டாளாம். நான் சுகமாயிருந்தால் இவளுக்குப் போதுமாம்.வருங்காலத்தில் என்னுடைய மகத்தான வெற்றிகளைக் கேட்டு இவள் மகிழப் போகிறாளாம். எப்படியிருக்கிறது கதை? உண்மையில் எனக்குச் சித்தப்பிரமையா? இவளுக்கா?"

சேந்தன்அமுதன் ஆச்சாரிய பிக்ஷூவின் காதோடு ஏதோ கூறினான். அதற்கு முன்னாலேயே இளவரசர், சுரவேகத்தினால் நினைவிழந்த நிலையில் பேசுகிறார் என்பதை பிக்ஷூ உணர்ந்த ருந்தார். குந்தவை தேவி தம்மிடம் இளவரசருக்கு அடைக்கலம் தரும்படி கேட்டிருந்ததும், அவருக்கு நினைவு வந்தது.

மற்ற பிக்ஷூக்களைப் பார்த்து அவர், "இந்தப் பிள்ளைக்கு விரு சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வௌியில் அனுப்பினால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். இலங்கையில் எத்தனையோ ஆயிரம் பேர் சுரத்தினால் இறந்து போனார்கள். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!" என்றார்.

உடனே தலைமைப் பிக்ஷூ இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். சேந்தன்அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.

இதோ, இன்னும் சில விநாடி நேரத்தில் படிக்கட்டு முழுவதும் ஏறிவிடுவார்கள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பார்கள். பிறகு கதவு சாத்தியாகிவிடும், சாத்தினால் சாத்தியதுதான். அப்புறம் அவரைப் பார்க்க முடியாது.'

பூங்குழலி எதிர்பார்த்தபடியே நடந்தது. மாடிப்படி ஏறியதும் கதவு திறந்தது. சேந்தன் அமுதனை மட்டும் வௌியில் நிறுத்தித் தலைமைப் பிக்ஷூ ஏதோ கூறினார். பிறகு திறந்த கதவு வழியாக எல்லாரும் பிரவேசித்தார்கள்.

கதவு படார் என்று சாத்திக்கொண்டது. அது பூங்குழலியின் இதயமாகிய கதவையே அடைப்பது போலிருந்தது.

இனி இந்தப் பிறவியில் இளவரசரைப் பார்க்கலாம் என்ற நிச்சயமில்லை. அடுத்த ஜனமத்திலாவது அத்தகைய பாக்கிய தனக்குக் கிடைக்குமா? - இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே இளவரசர் மறைவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் பூங்குழலி.

 

பக்க தலைப்பு

நான்காம் பாகம் - மணிமகுடம்


 






திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும்ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக்கரையில் இருக்கிறது. சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின்அருகிலேதான் இருக்கிறது. இந்த இரண்டு ஷேத்திரங்களுக்கும் மத்தியில் தொண்டை நாட்டிலிருந்து நடுநாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில் அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடிலநதியைக் கடக்கும் துறை எப்போதும் கலகலவென்று இருக்கும். நதிக் கரையில் உள்ள மரங்களில் பறவைகளின்குரல்களும், அவை இறகை அடித்துக்கொள்ளும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும். பிரயாணிகள் அங்கேவண்டிகளிலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டுக் கட்டுச் சாதம் உண்பார்கள். உண்ணும்போது அவர்கள்விளையாட்டாக வானில் எறியும் சோற்றைக் காக்கைகள் வந்து அப்படியே கொத்திக் கொண்டு போகும். இவற்றையெல்லாம் பார்க்கும் இளம் சிறார்கள் கை தட்டி ஆரவாரித்தும், 'ஆஹூ' என்று வியப்பொலிகள்செய்தும், கலகலவென்று சிரித்தும், தங்கள் குதூகலத்தை வௌியிடுவார்கள்.

ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம்போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம் அருந்துவதற்காகத் தங்கியபிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும்படியான ஒருபெரும் ஆரவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டுப் பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில் சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகுயானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின் முழக்கம் தௌிவாகக் கேட்டது.

"பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர், வீரபாண்டியன் தலைகொண்டகோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலாதிபதி,வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்தகரிகால சோழ மகாராஜா வருகிறார்! பராக்!"

இடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக் கரையேறினார்கள். அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில் நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள்.

கட்டியக்காரர்கள், எக்காளம் ஊதுவோர், பரிச்சின்னம் ஏந்துவர் ஆகியவர்கள் முதலில் வந்துதண்ணீர்த் துறையை அடைந்தார்கள். பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம், ஒன்றாகவந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்தபோதே ஜனங்கள் அவர்களைச் சுட்டிக் காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். "நடுவில்உள்ள குதிரை மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர்! பொற் கிரீடத்தைப் பார்த்தவுடனேதெரியவில்லையா? வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது!" என்றான் ஒருவன்.

"இந்தக் கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே? கரிகால்வளவன் அணிந்திருந்த மணிமகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும்? அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள்கூசும்படி ஜொலிக்குமாம்!" என்றான் இன்னொருவன்.

"அது கரிகால்வளவன் கிரீடம் அல்ல தம்பி! அப்படிச் சம்பிரதாயமாகச் சொல்வதுதான். பராந்தக சக்கரவர்த்தியின் சோழர் அணிந்திருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை!" என்றான் மற்றொருவன்.

"சுந்தர சோழரின் வாழ்நாளை இப்படித்தான் சில காலமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சிரஞ்சீவியாயிருப்பார் என்று தோன்றுகிறது!" என்றான் முதலில் பேசியவன்.

"நன்றாயிருக்கட்டும், அவர் உயிரோடிருக்கும் வரையில் நாடு நகரமெல்லாம் குழப்பமில்லாமலிருக்கும்!"

"அப்படியும் சொல்வதற்கில்லை; பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் செய்தி வந்ததிலிருந்து, சோழ நாடெங்கும் ஒரே அல்லோல கல்லோலமாயிருக்கிறதாம். எப்போது சண்டை மூளுமோ என்று அங்கிருந்து வந்தவர்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள்."

"யாருக்கும் யாருக்கும் சண்டை? எதற்காகச் சண்டை?"

"பழுவேட்டரையர்களுக்கும், கொடும்பாளூர் வேளாளருக்கும் சண்டை மூளும் என் சொல்கிறார்கள். அப்படியொன்றும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள்கூடுகிறார்களாம். ஆதித்த கரிகாலரும் அங்கேதான் போகிறாராம்."

"குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன; இரைந்து பேசாதீர்கள்!" என்று ஒருவன் எச்சரித்துவிட்டு, "இளவரசர் ஆதித்த கரிகாலரின் முகம் எவ்வளவு வாட்டமடைந்திருக்கிறது பார்த்தாயா?" என்று கேட்டான்.

"அவர் முகம் வாட்டமடைந்தில்லாமல் எப்படியிருக்கும்? ஆதித்த கரிகாலருக்குத் தம்பியின் பேரில் பிராணன். அப்படிப்பட்ட தம்பியைப் பற்றித் தகவல் தெரியவில்லையென்றால் தமையனுக்கு வருத்தமாயிராதா?தந்தையோ நடமாட்டமில்லாமலிருக்கிறார்!"

"இதெல்லாம் உலகத்தில் இயற்கை, தம்பி! இளவரசருடைய முகவாட்டத்துக்குக் காரணம் இவையெல்லாம் அல்ல. இரட்டை மண்டலத்தார் மீது படையெடுத்துப் போக வேண்டும் என்று கரிகாலருக்கு ஆசை; அது கைகூடவில்லையே என்றுதான் கவலை!"

"அது ஏன் கைகூடவில்லை? யார் இவரைப் படையெடுத்துப் போக வேண்டாம் என்று தடுக்கிறார்கள்?"

"வேறு யார்? பழுவேட்டரையர்கள் தான்! படையெடுப்புக்கு வேண்டிய தளவாட சாமக்கிரியைகள் கொடுக்கமறுக்கிறார்களாம்!"

"ஏதேதோ இல்லாத காரணங்களையெல்லாம் கற்பித்துச் சொல்லுகிறார்கள். உண்மைக் காரணம் உங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை" என்றான் ஒருவன்.
"எல்லாம் தெரிந்தவனே! உண்மைக் காரணத்தை நீதான் சொல்லேன்!" என்று இன்னொருவன் கேட்டான்.

"ஆதித்த கரிகாலர் யாரோ ஒரு பாண்டிய நாட்டுப் பெண் மீது காதல் கொண்டிருந்தாராம். இளவரசர் வடபெண்ணைப் போருக்குச் சென்றிருந்த போது, பெரிய பழுவேட்டரையர் அப்பெண்ணை மணந்துகொண்டுவிட்டாராம்.அவள்தான் இப்போது பழுவூர் இளையராணியாக விளங்கிச் சோழநாட்டில் சர்வாதிகாரம்செலுத்துகிறாள். அதிலிருந்து ஆதித்த கரிகாலின் மனமே பேதலித்துப் போய்விட்டதாம்!"

"இருக்கலாம்; இருக்கலாம்? உலகத்தில் எல்லாச் சண்டைகளுக்கும் யாராவது ஒரு பெண்தான் காரணமாயிருப்பாள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?"

"எந்தப் பெரியவர்கள், தம்பி, அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? சுத்தப்பைத்தியக்காரத்தனம்! இளவரசர் ஒரு பெண்ணை விரும்பினார் என்றால், அவள் போய் ஒரு அறுபது வயதுக்கிழவனை மணந்து கொள்ளுவாளா? சொல்லுகிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி இல்லையா?"

"அப்படியானால் ஆதித்த கரிகாலருக்கு இன்னும் கலியாணமாகாமலிருப்பானேன்? நீர்தான் சொல்லுமே?"

"சும்மா இருங்கள்! இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். இளவரசருக்கு வலது புறத்தில் வருகின்றவன்தான்பார்த்திபேந்திர பல்லவன் போலிருக்கிறது. இடது புறத்தில் வருகின்றவன் யார்? வாணர் குலத்து வந்தியத்தேவனா?"

"இல்லை; இல்லை! கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தமாறன். ஓலை கொடுத்து அனுப்பினால்இளவரசர் ஒருவேளை வரமாட்டார் என்று சம்புவரையர் தம் மகனையே அவரை அழைத்துவர அனுப்பியிருக்கிறார்."

"இதிலிருந்து ஏதோ விஷயம் மிக முக்கியமானது என்று தெரிகிறது."

"அந்த முக்கியமான விஷயம் இராஜரீக சம்பந்தமானதாகவும் இருக்கலாம். ஆதித்த கரிகாலருக்குத் திருமணம் ஆகாதிருக்கும் வரையில் சிற்றரசர்கள் அவரை வலை போட்டுப் பிடிக்க முயன்று கொண்டுதானிருப்பார்கள். முதன் முதலில் அவரை மணந்து கொள்ளும் பெண் சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காதனத்தில் அமரும் பாக்கியம் பெறுவாள் அல்லவா?"

மேற்கண்டவாறெல்லாம் கெடில நதிக்கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜனங்கள்பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று குதிரைகளும் வந்து தண்ணீர்க் கரையோரம் நின்றன.

குதிரைகளுக்குப் பின்னால் வந்த ரதம் சற்று அப்பல், அரச மரத்தடியில் நின்றது. அந்த ரதத்தில் எண்பது பிராயமான வீரக் கிழவர் திருக்கோவலூர் மலையமான் இருந்தார். தண்ணீர்க் கரை ஓரத்தில் குதிரைமேலிருந்த வண்ணம் ஆதித்த கரிகாலன் திரும்பி அவரைப் பார்த்தான்.
 

பக்க தலைப்பு



இரண்டாம் அத்தியாயம்
பாட்டனும் பேரனும்




பின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர் வீற்றிருந்த ரதத்தின் அருகில் சென்றான்.

"குழந்தாய்! கரிகாலா! நான் இவ்விடத்தில் உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கோவலூர் போக எண்ணுகிறேன். போவதற்கு முன்னால் உன்னிடம் சில முக்கிய விஷயங்கள் சொல்ல வேண்டும். சற்றுக் குதிரையிலிருந்து இறங்கி அந்த அரச மரத்தடியிலுள்ள மேடைக்கு வா!" என்றார்.

"அப்படியே ஆகட்டும், தாத்தா!" என்று ஆதித்த கரிகாலன் குதிரையிலிருந்து கீழே குதித்தான்.

கிழவரும் ரதத்திலிருந்து இறங்கினார்.

இருவரும் அரசமரத்தடி மேடைக்குச் சென்றார்கள்.

அப்போது பார்த்திபேந்திரன், கந்தமாறனைப் பார்த்து, "நல்ல வேளையாய்ப் போயிற்று. இந்தக் கிழவர் விடேன் தொடேன் என்று நம்முடன் நெடுகிலும் வந்து விடுவாரோ எனப் பயந்து கொண்டிருந்தேன்" என்றான்.

"அப்படித் தொடர்ந்து வந்தால் இவரை வெள்ளாற்றின் பிரவாகத்தில் தள்ளி முழுக அடித்து விடுவது என்று நான் எண்ணியிருந்தேன்!" என்றான் கந்தமாறன்.

இருவரும் தங்கள் பேச்சில் தாங்களே சிரித்து மகிழ்ந்தார்கள்.

ஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான்சொல்லலுற்றார்:-

"ஆதித்தா! இன்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நீ பிறந்தாய்! திருக்கோவலூரில் என்னுடைய அரண்மனையிலேதான் பிறந்தாய்! அச்சமயம் நடந்த கொண்டாட்டங்கள் நேற்றுநடந்தது போல் எனக்கு ஞாபகமிருக்கின்றன. உன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும், என்னுடைய குடியைச் சேர்ந்தவர்களும், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்ந்த சிற்றரசர்கள் பலரும் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்ந்த வீரர்கள் முப்பதினாயிரம் பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நடந்த விருந்தின் விமரிசையைச் சொல்லி முடியாது. உன் தந்தையின் பட்டாபிஷேக வைபவத்தின்போது கூட அத்தகைய விருந்துகளும் கோலாகலங்களும் நடைபெறவில்லை. என் பொக்கிஷத்தில் என் முன்னோர்கள் காலத்திலிருந்து நூறு வருஷங்களாகச் சேர்த்து வைத்திருந்த பொருள் அவ்வளவும் அந்த மூன்று நாள்கொண்டாட்டத்தில் தீர்ந்து போய் விட்டது!

அச்சமயம் உன்னுடைய கொள்ளுப் பாட்டனாராகிய பராந்தக சக்கரவர்த்தியே திருக்கோவலூருக்கு வந்திருந்தார். உன் பெரிய பாட்டனார் கண்டராதித்தரும், உன் தந்தை சுந்தர சோழரும் வந்திருந்தார்கள். ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் அவர்கள் அனைவரும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சோழ குலத்தை விளங்க வைப்பதற்கு நீ பிறந்து விட்டாய் என்று குதூகலம் அடைந்தார்கள். உன் பாட்டனின் மூத்த தமையன்மார்களுக்கு அதுவரையில் சந்ததியில்லை. அரிஞ்சயனுக்கும் உன் தகப்பன் ஒரே மகனாக விளங்கினான். அவன் உன் பிராயத்தில் மன்மதனையொத்த அழகுடன் விளங்கினான், சோழ குலத்திலோ அல்லது தமிழகத்துச் சிற்றரசர் வம்சத்திலோ அவ்வளவு அழகுடைய பிள்ளையை யாரும் அதற்கு முன் கண்டதில்லை. இதனால் உன் தந்தைக்குச் சில சங்கடங்களும் நேர்ந்தன. குடும்பத்தார் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளையாக இருந்தான். அரண்மனைப் பெண்டிர்கள் அவனுக்குப் பெண் வேடம் போட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள். 'இவன் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால்?' என்று பேசிப்பேசிபூரித்தார்கள். உன் தந்தைக்குத் தங்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு இலங்கை முதலாவது விந்திய பர்வதம் வரையில் உள்ள மன்னாதி மன்னர்களும், சிற்றரசர்களும் தவம் கிடந்தார்கள். அர்ச்சுனனையும் மன்மதனையும் நிகர்த்த அழகன் அவன் என்பதுடன் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்ற எண்ணத்தினாலும் அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள். உன் தந்தையை மருமகனாகப் பெறும்பேறு கடைசியில் எனக்குக் கிடைத்தது.

"எங்கள் வம்சத்தில் நாங்கள் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் மேனி அழகுக்குப் பெயர் போனவர்கள் அல்ல. ஆண் பிள்ளைகள் உடம்பில் எத்தனைகெத்தனை போர்க் காயங்களைப் பெறுகிறோமோ அவ்வளவுக்கு அழகுடையவர்களாக எண்ணிக் கொள்வோம். எங்கள் குலத்துப் பெண்களுக்குக் கற்பும், குணமும் தான் அழகும், ஆபரணமும். உன் தந்தைக்கு என் மகளைக் கலியாணம் செய்வதென்று தீர்மானித்தபோது, மலையமானாடு முழுதும் அல்லோல கல்லோலப்பட்டது. அவ்வளவுக்குத் தமிழகத்துச் சிற்றரசர்கள் எல்லாரும் அசூயை கொண்டார்கள்; அதை நான் பொருட்படுத்தவில்லை. மூன்று உலகம் பிரமிக்கும்படியாக உன் பெற்றோர்களின் திருமணம் தஞ்சையில் நடந்தது.என்றாலும் அப்போது நடந்த கொண்டாட்டத்தைக் காட்டிலும் நீ பிறந்த போது திருக்கோவலூரில் நடந்த கொண்டாட்டந்தான் அதிகக் குதூகலமாயிருந்தது. உனக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றிக் குதூகலமான சர்ச்சை நடந்தது. சிலர் உன் குலத்து முன்னோரில் மிகப் புகழ் பெற்ற கரிகால் வளவன் பெயரை இடவேண்டும் என்றார்கள். நானும் இன்னும் சிலரும் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்தியர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். கடைசியில் இரண்டையும் சேர்த்து 'ஆதித்த கரிகாலன்' என்று உனக்கு நாமகரணம் செய்தார்கள்.

அதோ பார்! ஆதித்தா! திருநாவலூரின் கோவில் சிகரம் தெரிகிறது. நம்பி ஆரூரர் சுந்தரமூர்த்தி அடிகள் பிறந்த ஸ்தலம் அது. அங்கே, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்ய சோழர் முகாம் செய்திருந்தார். கதைகளிலும், காவியங்களிலும் வரும் எத்தனையோ வீரர்களைப் பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன். இந்த வீரத் தமிழகத்தில் எவ்வளவோ வீரர்களைப் பார்த்துமிருக்கிறேன். ஆனால் இராஜாதித்யரைப் போன்ற இன்னொரு வீரரைப் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. போர்க்களத்தில் அவர் போர் செய்வதைப் பார்த்தவர்கள் யாராயிருந்தாலும், அப்படித்தான் சொல்லுவார்கள்.

ஒரு மாபெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடநாட்டின் மீது படையெடுத்துச் செல்ல அவர்இங்கே ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இரட்டை மண்டலத்து அரசனாகிய கன்னரதேவனை முறியடித்து,மானியகேடம் என்னும் அவனுடைய தலைநகரைத் தரைமட்டமாக்க வேண்டும் என்று அவர் உறுதி கொண்டிருந்தார். முன்னொரு காலத்தில் பல்லவ குலத்து மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி நகரை அழித்தது போல், மானியகேடநகரை அடியோடு அழித்தால்தான் இரட்டை மண்டலத்தாரின் கொட்டம் அடங்கும், என்றும் தானும்மாமல்லரைப்போல் புகழ் பெறலாம் என்றும் இராஜாதித்யர் எண்ணினார். அதற்கு வேண்டிய மாபெரும்சைன்யத்தைத் திரட்டுவதென்றால் இலேசான காரியமா? மாமல்லர் ஏழு வருஷ காலம் படை திரட்டியதாகச்சொல்லுவார்கள். அவ்வளவு காலம் தனக்கு வேண்டியதில்லையென்றும் மூன்று அல்லது நாலு ஆண்டுகள் போதும் என்றும் இராஜாதித்யர் கூறினார். படை திரட்டிச் சேர்ப்பதற்கும், திரட்டிய படைகளுக்குப் போர்ப் பயிற்சிதருவதற்கும், தகுந்த பிரதேசம் இந்தக் கெடிலம் ஆற்றுக்கும் தென்பெண்ணை நதிக்கும் இடைப்பட்ட நாடுதான் என்று தேர்ந்தெடுத்தார்.

ஆதித்தா! அந்த நாளில் இந்த இரு நதிகளுக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை நீ பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களோ, உயிர் உள்ள வரையில் அதை மறக்கமாட்டார்கள். திருநாவலூரில் இராஜாதித்யர் முப்பதினாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்தார். பெண்ணைஆற்றங்கரையில் முடியூரில் சேர நாட்டுச் சிற்றரசன் வெள்ளன் குமரன் இருபதினாயிரம் வீரர்களுடன் முகாம்செய்திருந்தான். உன் பாட்டன் அரிஞ்சயன் என்னுடன் திருக்கோவலூரில் இருந்தான். நானும், அரிஞ்சயனும்ஐம்பதினாயிரம் வீரர்களை ஆயத்தம் செய்தோம். இன்னும் கொடும்பாளூர்ப் பெரிய வேளான், இன்று சோழநாட்டுக்குச் சனியனாக முளைத்திருக்கும் பழுவேட்டரையன், கடம்பூர் சம்புவரையன், இந்தத் திருமுனைப்பாடிநாட்டின் சிற்றரசனாக முனையதரையன், மழநாட்டு மழவரையன், குன்றத்தூர்க் கிழான், வைதும்பராயன்முதலியவர்கள் தத்தம் படைகளுடன் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் தங்கியிருந்தார்கள். யானைப்படைகளும், குதிரைப் படைகளும் தெரிந்த கைக்கோளரின் மூன்று கைப் படைகளும் இங்கே முகாம் போட்டிருந்தன.இப்படித் தங்கியிருந்த படைகளுக்குள்ளே அடிக்கடி பயிற்சிப் போர்கள் நடக்கும். யானைகளோடு யானைகள்மோதும்போது பூகம்பம் வந்து விட்டதாகத் தோன்றும். குதிரைப் படைகளின் அணிவகுப்புகள் வேல் பிடித்தவீரர்களுடன் பாய்ந்து செல்லுங்கால் எழும் சத்தம் பிரளய கால சமுத்திரம் பொங்கிவருவது போலிருக்கும். வீரர்கள் வில்லுகளிலிருந்து அம்புகள் விட்டுப் பழகிக் கொள்ளும்போது அந்தச் சரமாரியினால் வானமேமறைந்துவிடும். எதிரிப் படைகளைத் தாக்குவதற்காக ஆயிரமாயிரம் வீரர்கள் 'நாவலோ நாவல்' என்றுஏககாலத்தில் கர்ஜித்துக் கொண்டு கிளம்பிப் பாயும் போது உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாகவேதோன்றும். இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்குத் திரள் திரளாக ஜனங்கள் வருவார்கள்.

இந்தத் திருமுனைப்படி நாட்டிலும் நடு நாட்டிலும் உள்ள ஜனங்கள் மிக நல்லவர்கள் அதோடு வீரம்மிகுந்தவர்கள். இங்கே படை திரண்டிருந்தபோது அவர்களுடைய விவசாயத்துக்குப் பெரும் குந்தகங்கள் நேர்ந்தன.அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இத்தகைய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவேஇராஜாதித்யர் இந்த இரண்டு நாட்டிலும் பல ஏரிகள் தோண்டுவித்தார். கொள்ளிடத்திலிருந்து புதிய ஆறுவெட்டிக் கொண்டு வந்து வீர நாராயணபுரத்து ஏரியில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்தார். ஆதித்தா! அந்தஏரியின் வளத்தினால் பெருநன்மை அடைந்தவன் கடம்பூர் சம்புவரையன். அவன் அன்றைக்கு இராஜாதித்யரின்அடிபணிந்து நின்ற நிலையையும் இன்று அடைந்திருக்கும் செல்வச் செருக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்குப்பெரு வியப்பு உண்டாகிறது!.."

ஆதித்த கரிகாலன் குறுக்கிட்டு, "தாத்தா! சம்புவரையர் செருக்கைப் பற்றித் தங்களுக்கு என்னகவலை? தக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தக் கெடிலக் கரையில் திரட்டியமாபெரும் சைனியம் எப்போது இங்கிருந்து புறப்பட்டது? அவ்வளவு முன்னேற்பாடுகள் செய்திருந்தும், என் பெரியபாட்டனார் அவ்வளவு பெரிய மகா வீரராயிருந்தும், ஏன் நம் படைகள் தக்கோலத்தில் தோல்வியுற்றன?தாங்களும் அந்தப் போரில் கலந்து போரிட்டவர் அல்லவா? ஆகையால் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பீர்களே?" என்றான்.

"ஆம், நானும் அந்தப் போர்க்களத்தில் இருந்தேன் அதைப் பற்றித்தான் உனக்குச் சொல்லப் போகிறேன்."

"இராஜாதித்யர் இங்கே பல வகைப் படைகள் திரட்டித் தூர தேசங்களுக்குச் சென்று போர்செய்வதற்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அல்லவா? சில காரணங்களினால் உத்தேசித்திருந்தகாலத்துக்குள் அவர் புறப்பட முடியவில்லை. இலங்கையில் மறுபடியும் போர் மூண்டதாகச் செய்தி வந்தது.அதைவெற்றிகரமாக முடிப்பதற்கு மேலும் படைகள் அனுப்ப வேண்டியிருந்தது. தெற்கே ஒரு பகைவனை வைத்துக் கொண்டுவடக்கே நெடுந்தூரம் சோழ நாட்டின் முக்கிய சேனா வீரர்களும், தளபதிகளும் போவதைச் சக்கரவர்த்திவிரும்பவில்லை. 'இலங்கைப் போர் முடிந்ததாகச் செய்தி வந்த பிறகு புறப்படலாம்' என்று கூறி வந்தார். இராஜாதித்யரும் தந்தையின் வார்த்தையைத் தட்ட முடியாமல் பொறுமையுடன் காத்திருந்தார். ஆனால்பகைவர்கள் அவ்விதம் காத்திருக்க இணங்கவில்லை. இரட்டை மண்டலச் சக்கரவர்த்தி கன்னரதேவனும் அதேசமயத்தில் சோழ நாட்டின் மீது படை எடுப்பதற்காகப் பெரிய சைன்யம் சேர்த்துக் கொண்டு வந்தான். அந்தமாபெரும் சைன்யத்துடன் அவன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான். கங்க நாட்டு மன்னன் பூதுகனும், தன்பெரும் படையுடன் கன்னரதேவனோடு சேர்ந்து கொண்டான். வட கடலும் தென் கடலும் ஒன்று சேர்ந்தாற்போல்இரட்டை மண்டல சைன்யமும், கங்க நாட்டுப் பூதுகன் சைன்யமும் சேர்ந்து ஒரு மகா சமுத்திரமாகி முன்னேறிவந்தது. அந்தச் சமுத்திரத்தில் யானைகளாகிய திமிங்கிலங்கள் ஆயிரக்கணக்கிலும் குதிரைகளாகிய மகரமீன்கள் பதினாயிரக்கணக்கிலும் இருந்தன. பிரளய காலத்தில் ஏழு கடலும் சேர்ந்து பொங்குவது போல்பொங்கி முன்னேறி வந்த அந்தச் சேனா சமுத்திரம் தென்னாட்டை அடியோடு மூழ்க அடித்துவிடும் என்றுதோன்றியது. அந்தச் சைன்யத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முன்னால் வாயுவேகமனோவேகமாக ஓடிவந்து அறிவித்த நம் ஒற்றர்கள் அவ்வாறு சொன்னார்கள்.

ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதே என்று பராந்தக சக்கரவர்த்தி கூறினார். நம்முடையசைன்யங்களைத் தொலைதூரம் பிரயாணம் செய்யப் பண்ணி, பிரயாணக் களைப்புடன் பகைவர்களின் நாட்டில்எதிரி சைன்யத்துடன் போர் புரியச் ச ெய்வதைக் காட்டிலும் எதிரி சைன்யங்களை நமது நாட்டுக்குச் சமீபமாகஇழுத்து அவர்களை நாலாபுறமும் மடக்கி, அதம் செய்வதுதான் நல்ல போர் முறை என்று சக்கரவர்த்தி கூறினார்.எதிரி சைன்யம் வடவேங்கடம் வரை நெருங்கி விட்டதென்று தெரிந்த பிறகுதான் பிரயாணப்படுவதற்குஅனுமதி கொடுத்தார்.

அனுமதி கிடைத்ததோ, இல்லையோ, இராஜாதித்யர் புறப்பட்டு விட்டார். மூன்று லட்சம்காலாள் வீரர்களும், ஐம்பதினாயிரம் குதிரை வீரர்களும், பதினாயிரம் போர் யானைகளும், இரண்டாயிரம்ரதங்களும், முந்நூற்றிருபது தளபதிகளும், முப்பத்திரண்டு சிற்றரசர்களும் அப்பெரும் சைன்யத்தில் சேர்ந்துசென்றார்கள். அவர்களில் ஒருவனாகச் செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. ஆனால் உயிர் பிழைத்துத்திரும்பி வந்த துர்பாக்கியசாலியும் ஆனேன்.

மூன்று நாள் பிரயாணத்துக்குப் பிறகு காஞ்சிக்கு வடக்கே இரண்டு காத தூரத்தில் தக்கோலம் என்னும் இடத்தில் நம் படைகளும் எதிரி படைகளும் போர்க்களத்தில் சந்தித்தன!

ஆதித்தா! புராணங்களில் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த யுத்தம் பற்றிக்கேட்டிருக்கிறோம். இராமராவண யுத்தம், பாண்டவர் - கௌரவர் யுத்தம் பற்றியும் அறிந்திருக்கிறோம். தக்கோலத்தில் நடந்த கோரயுத்தத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த யுத்தங்கள் எல்லாம் அற்பமானவை என்றேசொல்லுவார்கள். நம்முடைய படைகளைக் காட்டிலும் எதிரிகளின் படைகள் சுமார் இரண்டு மடங்குஅதிகமாயிருந்தன. ஐந்து லட்சம் வீரர்களும் முப்பதினாயிரம் போர் யானைகளும் அச்சைன்யத்தில்இருந்ததாகத் தெரிகிறது. இருந்தால் என்ன? உன்னுடைய பெரிய பாட்டனார் இராஜாதித்யரைப் போன்றசேனாதிபதி அந்தச் சைன்யத்தில் இல்லை. ஆகையால் வீர லஷ்மியும் ஜயலஷ்மியும் நம்முடையபக்கத்திலேயே இருந்து வருவதாகத் தோன்றியது.

பத்து நாள் வரையில் யுத்தம் நடந்தது. இரு பக்கத்திலும் இறந்து போன வீரர்களைக் கணக்குஎடுப்பது அசாத்தியமாயிற்று. போர்க்களங்களில் கரிய குன்றுகளைப் போல் யானைகள் இறந்து விழுந்துகிடந்தன. இரு பக்கத்திலும் சேதம் அதிகமாயிருந்தாலும், எதிரிகளின் கட்சியே விரைவில்பலவீனமடைந்தது. இதற்குக் காரணம் என்னவென்பதை எதிரிகள் கண்டு கொண்டார்கள். புலிக் கொடியைக்கம்பீரமாகப் பறக்க விட்டுக் கொண்டு இராஜாதித்யரின் யானை போகுமிடமெல்லாம் ஜயலஷ்மியும்தொடர்ந்து போகிறாள் என்பதை அறிந்து கொண்டார்கள். எங்கெங்கே நமது படையில் சோர்வுஏற்படுகிறதாகத் தென்பட்டதோ, அங்கங்கே இராஜாதித்யரின் யானை போய்ச் சேர்ந்தது. அந்த யானையையும்அதன் மீது வீற்றிருந்த வீர புருஷரையும் பார்த்ததும் நம் வீரர்கள் சோர்வு நீங்கி மும்மடங்கு பலம் பெற்றுஎதிரிகளைத் தாக்கினார்கள். இதையெல்லாம் பத்து நாளும் கவனித்து வந்த பகைவர்கள் ஒரு படுபாதகமானசூழ்ச்சி செய்தார்கள். அது சூழ்ச்சி என்று பின்னால்தான் தெரியவந்தது. சூழ்ச்சி செய்தவனும் அதைநிறைவேற்றி வைத்தவனும் கங்க மன்னன் பூதுகன் தான். திடீரென்று அந்தப் பாதகன் தன் யானையின் மீதுசமாதானக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு 'சரணம்சரணம்!' என்று கூறிக் கொண்டு வந்தான். அச்சமயம் இராஜாதித்யரே சமீபத்தில் இருந்தார். புலிக்கொடி பறந்த அவருடைய யானையின் அம்பாரியைப் பார்த்த பின்னரே பூதுகன் அவ்வாறு செய்திருக்க வேண்டும். மகாவீரராகிய இராஜாதித்யர் இவ்வாறு ஒரு பகை மன்னன் 'சரணாகதி' என்று சொல்லிக் கொண்டு வருவதைப்பார்த்ததும் மனம் இளகி விட்டார். இரட்டை மண்டலச் சக்கரவர்த்தியே போரை நிறுத்த, சமாதானம்கோருகிறாரா அல்லது அவரைப் பிரிந்து பூதுகன் மட்டும் நம்முடன் சேர வருகிறான என்று தெரிந்து கொள்ளவிரும்பினார். ஆகையால் சங்கநாதம் செய்து தன்னைச் சுற்றி நின்ற மெய்க்காப்பாளரை விலகச் செய்தார். பூதுகன் ஏறியிருந்த யானையைத் தாம் ஏறியிருந்த யானைக்கு அருகில் வரும்படி சமிக்ஞை செய்தார். பூதுகன்இராஜாதித்யரின் அருகில் வரும் வரையில் கைகூப்பிய வண்ணம் வந்தான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர்பெருகியதையும் இராஜாதித்யர் பார்த்தார். இதனால் அவருடைய மனம் இன்னும் இளகிவிட்டது.

'தொழுகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து'
என்னும் தமிழ்நாட்டுப் பெரும் புலவரின் வாக்கு அச்சமயம் இராஜாதித்யரின் ஞாபகத்தில் இருக்கவில்லை. கண்ணீரைக் கண்டு கரைந்து விட்டார். இன்னும் சமீபமாகப் பூதுகனை வரவிட்டு, 'என்ன சேதி?' என்று கேட்டார். அதற்கு அவன் கூறிய மறுமொழி இராஜாதித்யரை அருவருப்புக் கொள்ளும்படி செய்தது. இரட்டை மண்டலப் படைகளுக்குத் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து விட்டால் சரணாகதி அடைந்துவிடும்படி கன்னர தேவனிடம் தான் கூறியதாயும், அவன் அதை மறுத்து விட்டபடியால் தான் மட்டும் தனியே பிரிந்து வந்து சரணாகதி அடையத் தீர்மானித்ததாகவும் பூதுகன் கூறினான். இதைக் கேட்டதும் இராஜாதித்யர் அவனைக் கடுமையாக நிந்தித்தார்.

அத்தகைய நீசனைத் தாம் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும், திரும்பிப்போகும்படியும் கூறிக் கொண்டிருக்கும்போதே, பூதுகன் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் அந்தப் பயங்கரமானவஞ்சகச் செயலைப் புரிந்து விட்டான். மறைவாய் வைத்திருந்த வில்லையும், அம்பையும் எடுத்து வில்லில்நாணேற்றி அம்பைப் பூட்டி எய்து விட்டான். அந்தக் கொடிய விஷம் தோய்ந்த அம்பு எதிர்பாராத சமயத்தில்இராஜாதித்யரின் மார்பில் பாய்ந்ததும் அவர் சாய்ந்தார். இப்படிப்பட்ட வஞ்சனையை யாரும் எதிர்பார்க்கவில்லையாதலால் சுற்றிலும் நின்ற வீரர்கள் என்ன நேர்ந்தது என்பதையே சிறிது நேரம்தெரிந்து கொள்ளவில்லை. இராஜாதித்யர் பூதுகனைத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டது மட்டும் அவர்கள்காதில் விழுந்தது. உடனே பூதுகன் தன் யானையை விரட்டி அடித்துக் கொண்டு ஓடிப் போனான்!

இராஜாதித்யர் யானை மேலிருந்தபடியே மரணமடைந்தார் என்ற செய்தி பரவியதும் நமதுபடையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. அந்தமாபெரும் துயரத்தினால் யுத்தத்தையே மறந்து விட்டார்கள். சிற்றரசர்கள், தளபதிகள், படை வீரர்கள்எல்லாருமே செயல் இழந்து புலம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த நிலைமையில் பகைவர்களின் கை ஓங்கிவிட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சிறிது நேரத்துக்கெல்லாம் நமது சைனியம் பின் வாங்க வேண்டியஅவசியம் ஏற்பட்டு விட்டது. ஓடுகிறவர்களைத் துரத்துவது எல்லாருக்குமே எளிதுதானே? அப்படி ஓடிவந்தவர்களில் நானும் ஒருவன்தான்! இந்தக் கெடில நதிக்கரை வரையிலே கூடப் பகைவர்களின் சைனியம் வந்துவிட்டது.இங்கே வந்த பிறகுதான் நாங்கள் சுய உணர்வு பெற்றுத் திரும்பி நின்றோம். பகைவர்களைத்தடுத்து நிறுத்தினோம். நான் திருக்கோவலூரிலிருந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு போய் மேற்கேமலை நாட்டில் இருக்கும் என்னுடைய கோட்டையில் விட்டேன். அந்த மலைச்சாரலிலேயே படைகளைத்திரட்டினேன். இந்தக் கெடில நதி வரையில் வந்து விட்ட பகைவர்களை அவ்வப்போது தாக்கிக் கொண்டுவந்தேன்.ஆயினும் அப்போது வந்த பகைவர்கள் பல வருஷ காலம் இந்தப் பகுதியை விட்டுப் போகவில்லை. அங்குமிங்கும் தங்கித் தொல்லை கொடுத்துக் கொண்டுதானிருந்தார்கள். காஞ்சி நகர் அவர்கள் வசத்திலேதான் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ வீரபாண்டியனை ுறியடித்த பிறகு இந்தப் பக்கம் வந்துதான்காஞ்சி நகரை மீட்டாய்..."

ஆதித்த கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு, "தாத்தா! இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிந்ததுதான்!ஆனால் தக்கோலப் போரைப் பற்றியும் இராஜாதித்யர் வரலாற்றையும் எத்தனை தடவை கேட்டாலும் எனக்குஅலுப்பதில்லை. இப்போது இராஜாதித்யரைப் பற்றி எனக்கு எதற்காக நினைப்பூட்டினீர்கள்? அதைச்சொல்லுங்கள்!" என்றான்.

"குழந்தாய்! உன் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் சோழ சாம்ராஜ்யத்தை இலங்கை முதலாவது கங்கைநதி வரையில் விஸ்தரிக்க ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேறாமலே உயிர் நீத்தார். அவரைப் போன்ற மகாவீரன் என் பேரன் ஆதித்த கரிகாலன் என்று நாடு நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறது. அவர் சாதிக்க நினைத்த காரியத்தை நீ சாதிக்கப் போகிறாய் என்று இத்தமிழகமெங்கும் ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இராஜாதித்யரைப் போல் நீயும் வஞ்சத்திற்கு ஏமாந்து போகக்கூடாதுஎன்பதற்காகவே அவருடைய வரலாற்றை உனக்கு நினைவூட்டினேன்..."

"தாத்தா! என் பெரிய பாட்டனார் போர்க்களத்தில் பகைவர்களின் வஞ்சனையினால் உயிரைஇழந்தார். அதை இப்போது எனக்கு எதற்காக நினைவூட்டுகிறீர்கள்? நான் போர்க்களத்துக்குப்போகவில்லையே? என்னை வஞ்சிக்கக் கூடிய பகைவர்களின் மத்தியிலும் போகவில்லையே? என் தந்தையின்அத்யந்த நண்பர்களையல்லவா பார்க்கப் போகிறேன்? அவர்கள் என்னை எந்த விதத்தில், எதற்காக வஞ்சிக்கப்போகிறார்கள்?" என்றான் ஆதித்த கரிகாலன்.

"கேள், கரிகாலா! எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கொடிய ஆயுதம் இருக்கக்கூடும் என்று கூறிய திருவள்ளுவர் பெருமான், வௌிப்பகையைக் காட்டிலும் உட்பகை கொடியது என்றும் கூறியிருக்கிறார்.

'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு' வாளைப் போல வௌிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயம் வேண்டியதில்லை. சிநேகிதர்களைப் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குழந்தாய்! கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில் இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம் சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும் உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையானநோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப் பெண் கொடுப்பதற்குஇந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்தச் சம்புவரையன் மகள் தான்வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும் மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிரித்துக்கொடுத்துச் சமாதானம் செய்விக்கப் போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூதுஇருக்குமோ, சூழ்ச்சி இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனேதிருக்கோவலூருக்குச் சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்துவெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு!..."

இச்சமயம் ஆதித்த கரிகாலனுடைய கவனம் தன் பக்கம் இல்லை என்பதையும் வேறு பக்கம்திரும்பியிருக்கிறதென்பதையும் மலையமான் கண்டார். "தாத்தா! அதோ பாருங்கள்!" என்று ஆதித்தகரிகாலன் கலக்கத்துடன் கூறிய வார்த்தைகளை அந்த வீரக் கிழவர் கேட்டு, அந்தத் திசையை உற்றுநோக்கினார்.
 

பக்க தலைப்பு< /a>



மூன்றாம் அத்தியாயம்
பருந்தும்புறாவும்




ஆதித்த கரிகாலன் சுட்டிக்காடிய திசையில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்று இருந்தது. அது கல்வேலையினால் ஆன மண்டபம். வழிப்போக்கர்கள் வெய்யிலிலும் மழையிலும் தங்குவதற்காக யாரோ தர்மவான்அதைக் கட்டியிருக்க வேண்டும். அந்த மண்டபம் வெய்யிலிலும் மழையிலும் வெகு காலம் அடிப்பட்டு முதுமையின்அறிகுறிகளை காட்டிக் கொண்டிருந்தது, மண்டபத்தின் முனைகளில் சிற்ப வேலைப்பாடு உடைய உருவங்கள் சிலகாணப்பட்டன. அவை இன்னவை என்று கிழவராகிய மலையமானுக்குத் தெரியவில்லை.

"பார்த்தீர்களா, தாத்தா!" என்றான் ஆதித்த கரிகாலன்.

"குழந்தாய்! அந்த மண்டபத்தைத்தானே சொல்லுகிறாய்? அதில் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே? மண்டபமும் வெறுமையாகத்தான் இருக்கிறது, அதில் யாரும் இருப்பதாகக் காணவில்லையே!" என்றார்.

"தாத்தா! உங்களுக்கு வயதாகிவிட்டது என்று இப்போது தான் எனக்கு நன்றாய்த் தெரிகிறது. அதனால் கண் பார்வை குன்றியிருக்கிறது. அதோ பாருங்கள்! ஒரு பெரிய இராஜாளி! எத்தனை பெரியது?அதன் சிறகுகள் எவ்வளவு விசாலம்? கொடுமை! கொடுமை! அது தன் கால்களில் ஒரு சின்னஞ்சிறு புறாவைப்பிடித்துக் கொண்டிருக்கிறதே; தெரியவில்லையா? இராஜாளியின் கூரிய நகங்கள் கிழித்துப் புறாவின்இரத்தம் சிந்துகிறதே, தெரியவில்லையா? கடவுளே, இது என்ன விந்தை! அதோ இன்னொரு புறாவைப்பாருங்கள், தாத்தா! அந்தப் பயங்கரமான இராஜாளியின் அருகில் வட்டமிடுகிறது! அது இராஜாளியிடம்எப்படிக் கெஞ்சுகிறது? இராஜாளியின் கால்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் புறா அதனுடைய காதலனாகஇருக்க வேண்டும்! காதலனுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும்படி அது கெஞ்சுகிறது! தாத்தா! அந்தப் புறாகெஞ்சுகிறதா? அல்லது இராஜாளியிடம் சண்டைக்குப் போகிறதா? இ கை அடித்துக் கொள்வதைப் பார்த்தால்சண்டைக்குப் போவதாகவே தோன்றுகிறது. கடவுளே! அந்தப் பெண் புறாவுக்கு என்ன தைரியம் பாருங்கள்!இராஜாளியுடன் சண்டைக்குப் போகிறது! காதலனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பயங்கரராட்சதனுடன் போராடப் போகிறது! தாத்தா! இராஜாளி மனம் இரங்கும் என்று நினைக்கிறீர்களா?இரங்காது! இரங்காது! ஒருநாளும் இரங்காது! இம்மாதிரி எத்தனையோ புறாக்களை அது கொன்று தின்றுகொழுத்துக் கிடக்கிறது! சண்டாள இராஜாளியே! இதோ உன்னைக் கொன்று போடுகிறேன்!" என்று கூறிக்கொண்டே ஆதித்த கரிகாலன் பக்கத்தில் கிடந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து வீசி எறிந்தான். அந்தக்கூழாங்கல் மண்டபத்தை நோக்கிச் சென்று அதன் ஒரு முனையில் பட்டுவிட்டுக் கீழே விழுந்தது.

ஆதித்த கரிகாலன், "ராட்சதனே! உனக்கு நன்றாய் வேண்டும்!" என்று சொல்லிவிட்டு, இடி இடிஎன்று பயங்கரமாகச் சிரித்தான்.

பேரப் பிள்ளையின் சித்த சுவாதீனத்தைப் பற்றி ஏற்கனவே கிழவருக்குச் சிறிது சந்தேகம் இருந்தது அது இப்போது இன்னும் அதிகமாயிற்று.

"தாத்தா! ஏன் என்னை இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்? மண்டபத்தின் அருகில் போய்ப் பாருங்கள்" என்றான் கரிகாலன்.

அவ்விதமே மலையமான் மண்டபத்தைச் சற்று நெருங்கிச் சென்று கரிகாலனின் கல் விழுந்த இடத்தைஉற்றுப் பார்த்தார். அங்கே ஒரு சிற்பம் காணப்பட்டது. அந்தச் சிற்பத்தில் இராஜாளி ஒன்று தன் கால்நகங்களில் ஒரு புறாவைக் கொத்தித் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், இன்னொரு புறா அந்த இராஜாளியுடன்பாயப் போவது போலவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மலையமான் திரும்பி வந்து, "குழந்தாய்! எனக்கு வயதாகி விட்டது என்பது உண்மைதான்! கண் பார்வை முன் போல் துல்லியமாக இல்லை. அருகில் சென்று உற்றுப் பார்த்த பிறகு தான் தெரிந்தது நல்ல சிற்ப வேலை!" என்றார்.

"நல்ல சிற்ப வேலையா? சிற்ப அற்புதம் என்று சொல்லுங்கள் தாத்தா! மகேந்திரவர்மர் -மாமல்லர் காலத்துச் சிற்ப சக்கரவர்த்தி யாரோ ஒருவன் இதையும் செய்திருக்க வேண்டும். முதலில்பார்த்ததும் உண்மையாகவே நடப்பது போலவே எனக்குத் தோன்றிவிட்டது!" என்றான் கரிகாலன்.

"ஆதித்தா! அற்புதம் அந்தக் கல்லிலே மட்டும் இல்லை! உன் கண்ணிலும் இருக்கிறது; உன் மனத்திற்குள்ளேயும் இருக்கிறது. இந்த வழியாக எவ்வளவோ பிரயாணிகள் தினந்தோறும் போகிறார்கள். அவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தச் சிற்ப அற்புதத்தைக் கவனித்துக் கூட இருக்க மாட்டார்கள். மற்றும் பலர் பார்த்தும் பார்க்காதது போலவே போய்விடுவார்கள். உன்னைப் போல் ஒரு சிலர் தான் ஒரு சிற்பத்தைப் பார்த்து இவ்வளவு ஆச்சரியப்படுவார்கள்!..."

"நான் ஆச்சரியப்படவில்லை, தாத்தா! கோபப்படுகிறேன். அந்த சிற்பத்தை இப்போதேஇடித்துத் தள்ளிவிட வேண்டுமென்று எனக்கு ஆத்திரம் உண்டாகிறது. இவ்வளவு கொடூரமான சிற்பத்தைஅமைத்தவனை அதிகமாகப் புகழ்ந்து பாராட்டுவது கூட எனக்குப் பிடிக்கவில்லை!"

"கரிகாலா! இது என்ன விந்தை? உன்னுடைய வைர நெஞ்சு எப்போது இவ்வளவு இளக்கம் கொடுத்தது? இராஜாளி புறாவைக் கொன்று தின்பது அதனுடைய இயற்கை. சிங்கராஜா ஆட்டினிடம் இரக்கம் கொள்ள ஆரம்பித்தால் அது சிங்கராஜா அல்ல; அதுவும் ஆடாகத்தான் போய்விடும். சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிய ஆசைப்படுகிறவர்கள் பகைவர்களையும் சதிகாரர்களையும் கொன்றுதான் ஆக வேண்டும். சக்கரவர்த்தியாயிருந்து உலகை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவர்கள் பகையரசர்களைக் கொன்றுதான் தீரவேண்டும். இராஜாளி புறாவைக் கொல்லாவிட்டால், அது இராஜாளியாயிருக்க முடியுமா? இதைப் பற்றி ஏன் உனக்கு இவ்வளவு கலக்கம்?" என்றார் மலையமான்.

"தாத் ா! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் அந்தப் பெண் புறா அப்படித் தவிப்பதைப்பார்த்த பிறகு இராஜாளிக்கு இரக்கம் வர வேண்டாமா? பெண்ணுக்கு இரங்கி ஆணை விடுதலை செய்யவேண்டாமா? ஐயா! நீங்களே சொல்லுங்கள், உங்கள் பகைவன் ஒருவனை நீங்கள் கொல்லப் போகும் சமயத்தில்அவனுடைய காதலி குறுக்கே வந்து புருஷனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டால் என்ன செய்வீர்கள்? அப்போது உங்கள்மனம் இரங்காமலிருக்குமா..?" என்று கரிகாலன் கேட்டான்.

"அப்படி ஒரு பெண் குறுக்கே வந்தால் அவளை என் இடது காலினால் உதைத்துவிட்டு என் பகைவனைக்கொல்லுவேன். கரிகாலா! அதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. பகைவர்கள் 'தொழுத கையினில்' ஆயுதம்வைத்திருப்பார்கள் என்றும், அவர்கள் 'அழுத கண்ணீரிலும்' ஆயுதம் மறைந்திருக்கும் என்றும் வள்ளுவர்கூறியிருக்கிறார். ஆண்களின் கண்ணீரைக் காட்டிலும் பெண்களின் கண்ணீர் அபாயமானது. ஏனெனில்,பெண்களின் கண்ணீருக்கு இளகச் செய்யும் சக்தி அதிகம் உண்டு. அப்படி மனத்தை இளகவிட்டு விடுகிறவனால்இவ்வுலகில் பெரிய காரியம் எதையும் செய்ய முடியாது அவன் பெண்களிலும் கேடு கெட்டவனாவான்!"

"தாத்தா! இது என்ன? பெண்களைப் பற்றி ஏன் நீங்கள் இவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்கள்? பெண்களைப் பற்றிக் குறைவாய்ப் பேசுவது என் தாயாரையும் குறைவுபடுத்துவதாகாதா?"

"குழந்தாய்! கேள்! உன் தாயாரிடம் நான் வைத்திருந்த அன்புக்கு இந்த உலகத்தில் இணை ஒன்றுமேஇல்லை. எனக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். பீமனையும், அர்ச்சுனனையும் ஒத்த வீரர்களாய்வளர்ந்தார்கள். அவ்வளவு பேரையும் யுத்தகளத்தில் பலி கொடுத்துவிட்டேன். அவர்கள் இறந்த செய்திவந்தபோதெல்லாம் நான் வருத்தப்படவில்லை. ஆனால் உன் தாயாரை மணம் செய்து கொடுத்து அனுப்பிவைத்தபோது அவள் சாம்ராஜ்ய சிங்காதனத்தில் அமரப் போகிறாள் என்று தெரிந்திருந்தும் என் மனம் அடைந்தவேதனையைச் சொல்லி முடியாது. ஆனால் அந்த வேதனையை வௌிப்படையாகக் காட்டிக் கொண்டேனா? இல்லை!அவளிடந்தான் வௌியிட்டேனா? அதுவும் இல்லை. உன் தாயை மணம் செய்து கொடுப்பதற்கு முதலாவது நாள் அவளைத்தனியாக அழைத்து என்ன சொன்னேன்? கேள், கரிகாலா! 'மகளே! மாநிலம் புரக்கப் போகும் மன்னனை நீமணந்து கொள்ளப் போகிறாய்! அதற்காகவும் நீ கர்வம் அடையாதே! அவ்வளவு புகழ் வாய்ந்த கணவனை மணந்துகொள்வதினால் உனக்குக் கஷ்டந்தான் அதிகமாயிருக்கும். உன் அரண்மனையில் பணி செய்யும் பணிப் பெண்கள்பலரும் உன்னைக் காட்டிலும் சந்தோஷமாயிருப்பார்கள். துக்கப்படுவதற்கும் வேதனைப்படுவதற்கும் உன்னை நீஆயத்தம் செய்து கொள். உனக்குக் குழந்தைகள் பிறக்காவிட்டால் உன் புருஷன் வேறு ஸ்திரீகளை கட்டாயம்மணந்து கொள்வான். அதை நினைத்து நீ வேதனைப்படக் கூடாது. உனக்கு மக்கள் பிறந்தால் அவர்களை வீரமக்களாய் நீ வளர்க்க வேண்டும். அவர்கள் போர்க்களத்தில் உயிர் விட்டதாகச் செய்தி வந்தால் ஒருசொட்டுக் கண்ணீர் கூட விடக்கூடாது. உன் கணவன் சந்தோஷமாயிருந்தால் நீயும் சந்தோஷமாயிரு! உன்புருஷன் துக்கப்பட்டால் நீ அவனைச் சந்தோஷப்படுத்தப் பார்! உன் பதி நோய்ப்பட்டால் நீ அவனுக்குப்பணிவிடை செய்! உன் கணவன் இறந்தால் நீயும் உடன்கட்டை ஏறிவிடு! உன் நெஞ்சில் உதிரம் கொட்டினாலும்உன் கண்களில் மட்டும் கண்ணீர் சொட்டக் கூடாது! மலையமான் வம்சத்தில் பெண்களுடைய குலாச்சாரம் இது!'என்று இவ்விதம் உன் அன்னைக்குப் புத்திமதி கூறினேன். அம்மாதிரியே உன் அன்னை இன்று வரை நடந்துவருகிறாள்; நடத்தி வருகிறாள். கரிகாலா! உன்னையும் உன் சகோதரனையும் இணையில்லாத வீரர்களாகவளர்த்து வந்திருக்கிறாள். உன் தந்தை நோய்ப்பட்ட பின்னர் இரவு பகல் அவர் பக்கத்திலிருந்து அவளேஎல்லாப் பணி ிடைகளையும் செய்து வருகிறாள். உன் அன்னையை என் மகளாகப் பெற்றதைநினைக்கும்போதெல்லாம் என் தோள்கள் பூரிக்கின்றன!" என்றார் மலையமான்.

"தாத்தா! என் தாயை நினைக்கும்போதெல்லாம் நான் அடையும் பெருமிதத்துக்கும் அளவில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன் சொல்லுங்கள்! என் தந்தையின் கொடிய பகைவன் ஒருவன் அவரைக் கொல்லுவதற்குக்கத்தியை ஓங்கிக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். என் தாயார் அப்பொழுது என்ன செய்வாள்?முன்னால் நின்று கண்ணீர் பெருக்கிக் கணவனைக் காப்பாற்றும்படி அப்பகைவனை வேண்டிக் கொள்வாளா?முக்கியமாக, அப்படி வருகிற பகைவன் என் அன்னைக்குத் தெரிந்தவனாகவும் இருந்து விட்டால்..."

"குழந்தாய்! உன் தாயார் ஒரு நாளும் அப்படிப் பகைவனிடம் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டாள். மலையமான் மகள் அவ்விதம் ஒருகாலும் தான் பிறந்த குலத்தையும், புகுந்த குலத்தையும் அவமானப்படுத்தமாட்டாள்.அவளுடைய புருஷனுடைய பகைவனைத் தனக்கும் கொடிய பகைவனாகவே கருதுவாள். பகைவன் முன்னால்கைகூப்பமாட்டாள்; கண்ணீரும் விடமாட்டாள், கணவன் உயிர் துறந்தால் உடனே அவன் மீது விழுந்து தானும்உயிரை விடுவாள்! அல்லது மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு உயிரோடிருப்பாள்; பகைவனைப் பழிக்குப்பழி வாங்குவதற்காக மட்டுமே உயிரை வைத்துக் கொண்டிருப்பாள்!"

இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு, "தாத்தா! நான் போய்வரவா?" என்றான்.

"அவசியம் போகத்தான் வேண்டுமா?"

"அதைப்பற்றி இன்னும் என்ன சந்தேகம், தாத்தா! பாதி வழிக்கு மேலே வந்தாகிவிட்டதே?"

"ஆம், பாதி வழிக்கு மேல் வந்தாகிவிட்டது நானும் முதலில் உன்னைப் போக வேண்டாம் என்றேன்;அப்புறம் போகும்படி சொன்னேன். உன் தம்பியைப் பற்றிய செய்தி கேட்ட பிறகு நீ போவதே நல்லது என்று தீர்மானித்தேன். அருள்மொழிவர்மன் இற ்திருப்பான் என்று நான் நம்பவில்லை..."

"நானும் நம்பவில்லை..."

"உன் தந்தையின் இளம் பிராயத்தில் சில காலம் அவர் இருக்குமிடம் தெரியாமலிருந்தது. அதுபோல் அருள்மொழியும் ஏதேனும் ஒரு தீவில் ஒதுங்கியிருப்பான். சில நாளைக்கெல்லாம் வந்து சேர்வான்என்றே நம்புகிறேன்! ஆனாலும் அச்செய்தி சோழ நாடெங்கும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது என்றுஅறிகிறேன். உன் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். இச்சமயம் அவர்கள் பக்கத்தில் இருந்து நீஆறுதல் சொல்லுவது அவசியம்; அப்படிப் போகும்போது பழுவேட்டரையர்களின் விரோதியாகப் போவதைக்காட்டிலும், சிநேகமாய்ப் போவது நல்லது. ஆகையினால்தான் நீ சம்புவரையர் அழைப்புக்கு இணங்கிப்போவதற்குச் சம்மதித்தேன். அவன் வேண்டுமென்றே என்னை அழைக்கவில்லை. அழைத்திருந்தால் நானும்வந்திருப்பேன்.

"தாத்தா! எனக்காக அவ்வளவு தூரம் நீங்கள் பயப்படுகிறீர்களா? என்னை அவ்வளவுகையினாலாகாதவன் என்று எண்ணி விட்டீர்களா?" என்று கேட்டான் கரிகாலன்.

"இல்லை, தம்பி! இல்லை! நீ எத்தகைய வீராதி வீரன் என்பது எனக்குத் தெரியாதா? கொடிய ஆயுதங்களைத் தரித்த பதினாயிரம் பகைவர்களின் நடுவில் நான் உன்னைத் தன்னந்தனியாக நம்பி அனுப்புவேன். ஆனால் கண்ணீர் பெருக்கி உன் மனத்தைக் கலங்கச் செய்யக் கூடிய ஒரு பெண்ணின் முன்னால் உன்னைத் தனியாக அனுப்புவதற்கு மட்டும் பயப்படுகிறேன்."

"சம்புவரையர் மகள் அப்படியெல்லாம் ஜாலவித்தையில் தேர்ந்தவள் என்று நான் கேள்விப்படவில்லை,தாத்தா! ஆண் மக்கள் முன்னால் வருவதற்கே அஞ்சக்கூடிய பெண்ணாம் அவள்; கந்தமாறன் சொல்லியிருக்கிறான். நானும் அப்படியெல்லாம் அவசரப்பட்டுத் தாய் தந்தையர் சம்மதம் இல்லாமல் ஒரு காரியத்தை செய்துவிடமாட்டேன். உங்களுடைய பழங்குடியில் பிறந்த இரண்டு பெண கள் இன்னும் மணமாகாமல் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.."

"ஆதித்தா, அதைப் பற்றிச் சிந்தனையே எனக்கு இல்லை. என் முத்த மகனுடைய பெண்கள் இரண்டுபேர் திருமணப் பிராயம் வந்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களை உன் கழுத்தில் கட்டும் எண்ணம்எனக்குச் சிறிதும் இல்லை. ஏற்கெனவே சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலரும் என் மீது பொறாமையும்,பகைமையும் கொண்டிருக்கிறார்கள். இதுவும் வேறு சேர்ந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. அதற்குப்பதிலாகச் சம்புவரையர் மகளையே நீ கட்டிக் கொண்டால் நான் ஒருவாறு திருப்தி அடைவேன். எனக்கோவயது அதிகமாகி விட்டது; உடல் தளர்ந்து விட்டது. சில சமயம் உள்ளமும் நெகிழ்ந்துவிடுகிறது. மறுபடியும் என் அருமைப் பேரனைக் காணமாட்டேனோ, இதுதான் உன்னை நான் பார்ப்பது கடைசி முறையோஎன்றெல்லாம் சில சமயம் எண்ணிக் கொள்கிறேன். இனிமேல் என்னால் உனக்கு உதவி எதுவும் இல்லை. புதியசிநேகிதர்கள் சிலர் உனக்கு அவசியம் வேண்டும். உன் விஷயத்தில் சிரத்தை கொள்ளக் கூடியவர்கள்வேண்டும்.ஆகையால் சம்புவரையர் மகளை நீ மணந்து கொண்டால் நான் உண்மையில் மகிழ்ச்சியே அடைவேன்."

"தாத்தா! உங்கள் மகிழ்ச்சிக்காகக் கூட அதை நான் செய்ய முடியாது. சம்புவரையர் மாளிகைக்குநான் விருந்தாளியாகப் போவது அவருடைய சிநேகத்தை விரும்பியும் அல்ல; அவர் மகளை மணம் புரியவும்அல்ல. நீங்கள் அதுபற்றி நிம்மதியாயிருக்கலாம்."

"அப்படியானால் எதற்காகப் போகிறாய், குழந்தாய்! என்னிடம் உண்மையைச் சொல்லக் கூடாதா? உன்னுடைய நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் சில வார்த்தைகள் அவ்வப்போது என் காதில் விழுந்தன.பெரிய பழுவேட்டரையன் அறுபது வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டானே, அந்த மோகினிப் பிசாசு உனக்கு ஓலை அனுப்பியிருக்கிறாள் என்று ், அதனாலேதான் நீ கடம்பூர் வரச் சம்மதித்தாய் என்றும் அவர்கள் பேசிக் கொண்டார்கள் அது உண்மையா?"

"ஆம் தாத்தா! அது உண்மைதான்!" என்றான் ஆதித்த கரிகாலன்.

"கடவுளே! இது என்ன காலம்? கரிகாலா! நான் சொல்வதைக் கேள். நீ பிறந்த சோழ குலம்இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையாக வந்த பெருமை பெற்ற குலம். உன்னுடைய மூதாதைகள் சிலர்உலகத்தை ஒரு குடையில் ஆண்ட சக்கரவர்த்திகளாயிருந்திருக்கிறார்கள். சில சமயம் உறையூரையும் அதன்சுற்றுப்புறத்தையும் மட்டும் ஆண்ட குறுநில மன்னர்களாயிருந்திருக்கிறார்கள். சிலர் ஏகபத்தினி விரதம்கொண்டு இராமபிரானைப் போல இருந்ததுண்டு. சிலர் பல தாரங்களை மணம் செய்து கொண்டு வீரப்புதல்வர்கள் பலரை ஈன்றதுண்டு. சிலர் சிவபக்தர்கள்; சிலர் திருமாலின் பக்தர்கள். சிலர்'சாமியுமில்லை; பூதமுமில்லை' என்று சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும் தங்கள் நடத்தையில்களங்கமுண்டாகுமாறு நடந்ததில்லை. பிறன் மனை விழைந்ததில்லை. குழந்தாய்! கன்னிப்பெண்களாயிருப்பவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் மணந்து கொள். உன் பாட்டனின் தந்தை - புகழ்பெற்ற பராந்தகச் சக்கரவர்த்தி, ஏழு பெண்களை மணந்து கொண்டார், அவரைப் போல் நீயும் மணந்துகொள். ஆனால் பெரிய பழுவேட்டரையனை மணந்து கொண்ட மாயமோகினியைக் கண்ணெடுத்தும் பாராதே!"

"மன்னிக்க வேண்டும் தாத்தா! அந்த மாதிரி குற்றம் ஒன்றும் நான் செய்யமாட்டேன். சோழகுலத்துக்கும் மலையமான் குலத்துக்கும் களங்கம் உண்டு பண்ண மாட்டேன்!"

"அப்படியானால் அவள் அழைப்புக்காக ஏன் போகிறாய்? குழந்தாய்?"

"உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டே போகிறேன். அவளுக்கு ஒரு சமயம் நான் ஒரு பெரிய தீங்கு செய்தேன். அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்" என்றான் கரிகாலன்.

"இது என்ன வார்த்தை? ஒரு ப ெண்ணிடம் நீ மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாவது? என் காதினால்கேட்கச் சகிக்க வில்லையே?" என்றார் மலையமான்.

ஆதித்த கரிகாலன் சிறிது நேரம் தலைகுனிந்த வண்ணமாக இருந்தான். பிறகு மனத்தைத்திடப்படுத்திக் கொண்டு, பாட்டனாரிடம் பழைய வரலாற்றை ஒருவாறு கூறினான். வீரபாண்டியனைத் தான்தேடிச் சென்று அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்ததையும், நந்தினி குறுக்கிட்டு உயிர்ப்பிச்சைகேட்டதையும், தான் அதைக் கேட்காமல் ஆத்திரப்பட்டு அவனைக் கொன்றதையும் அதுமுதலாவது தன் மனம்நிம்மதியில்லாமல் அலைப்புறுவதையும் பற்றி விவரமாகக் கூறினான்.

"அந்த ஞாபகம் என்னை ஓயாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாத்தா! அவளை ஒரு தடவைபார்த்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவளும் போனதையெல்லாம்மறந்துவிடத் தயாராகியிருப்பதாகக் காண்கிறது. இராஜ்யத்தில் குழப்பம் விளையாமல் பார்த்துக்கொள்வதிலும் சிரத்தைக் கொண்டிருக்கிறாள். அதற்காகவே என்னை அழைத்திருக்கிறாள். போகும்காரியத்தை முடித்துக் கொண்டு வெகு சீக்கிரமாகவே காஞ்சிக்குத் திரும்பி விடுவேன், தாத்தா! திரும்பிவந்ததும் என் தம்பியைக் கண்டு பிடித்துக் கொண்டு வருவதற்காகக் கப்பல் ஏறிப் புறப்படுவேன்" என்றான் ஆதித்தகரிகாலன்.
கிழவர் மலையமான் ஒரு பெருமூச்சுவிட்டு, "இதுவரையில் விளங்காமலிருந்த பல விஷயங்கள்இப்போது எனக்கு விளங்குகின்றன. இன்று வரை மர்மமாக இருந்த பல காரியங்கள் அர்த்தமாகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது என்பது நிச்சயந்தான்!" என்றார்.
 

பக்க தலைப்பு



நான்காம்அத்தியாயம்
ஐயனார் கோவில்




கெடில நதிக் கரையில் பாட்டனும் பேரனும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில்கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திர க்கானாட்டுமுள்ளூர் என்னும் ஊரில் பழைய நண்பர்களானஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் ஒரு விநோதமான காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில்வட காவேரியாகிய கொள்ளிடமும் தென் காவேரியைப் போலவே புண்ணிய நதியாகக் கருதப்பட்டு வந்தது. துலா மாதத்தில் தினந்தோறும் கானாட்டுமுள்ளூர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் ரிடபாரூடராகக்கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளி ஸ்நானத்துக்கு வந்துள்ள பக்தர்களுக்குச் சேவை தருவது வழக்கம். மத்தியானவேளையில் ஒவ்வொரு நாளும் உற்சவமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பக்தர்கள்திரண்டு வருவார்கள். விஷ்ணு கோயில் அந்த ஊரில் சிறிதாக இருப்பினும் அந்தக் கோயிலிலிருந்தும்பகவான் கருட வாகனத்தில் ஆரோகணித்துக் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளுவார்.

இவ்விதம் துலா மாதத்தில் வட காவேரியில் ஸ்நானம் செய்வதற்காக வந்து கூடியிருந்தஜனக்கூட்டத்தினிடையே ஆழ்வார்க்கடியான் ஒரு நாவல் கிளையை மண்ணில் நட்டு வைத்து கொண்டு, "நாவலோநாவல்! நாவலோ நாவல்! இந்த நாவலத் தீவில் வைஷ்ணவ சமயமே மேலான சமயம் என்று நிலைநாட்டுவதற்குவாதப் போர் புரிய வந்துள்ளேன். சைவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், காபாலிகர்கள், காளாமுகர்கள்,புத்தர்கள், சமணர்கள் யார் வேணுமானாலும் வாதப் போர் புரிய வரலாம். அவர்கள் வெற்றி பெற்றால்அவர்களை என் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வலம் வருவேன், அவர்கள் தோற்றால்இடுப்புத் துணியைத் தவிர மற்றதையெல்லாம் இங்கே கொடுத்து விட்டுப் போக வேணும்! நாவலோ நாவல்" என்றுகத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ருத்திராட்ச மாலைகள், மகர கண்டிகள், கமண்டலங்கள்,குண்டலங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், பொற்காசுகள் ஆகியவை குவிந்து கிடந்தன. இவற்றிலிருந்து வெகுநேரம வாதமிட்டுப் பலரை வாதப் போரில் வென்றிருக்க வேண்டும் என்பது தௌிவாயிருந்தது. அவனுக்குப்பக்கத்தில் கடம்பமரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு வந்தியத்தேவன் கையில் உருவிய கத்தியுடன் நின்றுகொண்டிருந்தான். இப்போது அவனுடைய அரையில் உடுத்திய ஒரு துணியும், கையில் ஒரு கத்தியும் மட்டும் தான்இருந்தன. அவனுடைய தோற்றத்திலிருந்து ஆழ்வார்கடியான் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கப்பார்த்தவர்களை அவன் கத்தியை வீசிப் பயமுறுத்தி அனுப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தச்சமயத்தில் கூட்டமாகவும், கோஷித்துக் கொண்டும் வந்த சைவர் கூட்டம் ஒன்றைப் பார்த்து அவன் கூறியமொழிகளிலிருந்தும் அது வௌியாயிற்று.

"எச்சரிக்கை! நியாயமாக வாதப் போர் செய்வோர் செய்யலாம். அத்துமீறி இந்த வைஷ்ணவன்மீது யாராவது கையை வைத்தால் இந்த வாளுக்கு இரையாவார்கள்!" என்று கூறியதுடன், கத்தியையும் இரு முறைசுழற்றினான். கோபத்துடன் வந்த சைவர்கள் சாந்தமடைந்தார்கள். அவர்களில் ஒருவர், "ஓ வைஷ்ணவனே!ஏதோ நீ இன்றைக்கு வாதத்தில் ஜெயித்து விட்டதாக எண்ணிக் கர்வம் கொள்ளாதே! திருநாரையூருக்குப்போ! அங்கே உன்னை வாதில் வென்று புறமுதுகிட்டு ஓடச் செய்யக்கூடிய நம்பியாண்டார் நம்பி இருக்கிறார்!"என்றார்.

"உங்கள் திருநாரையூர் நம்பியைத் திருநாராயணபுரத்து அனந்த பட்டரிடம் வந்து வாதமிடச்சொல்லுங்கள்! அங்கே நானும் ஒருவேளை இருந்தாலும் இருப்பேன்!" என்று கூறினான் ஆழ்வார்க்கடியான்.

பலமுறை அவன் "நாவலோ நாவல்!" என்று கூவியும் யாரும் புதிதாக வாதமிட வரவில்லை. எனவே, நாவல் கிளையை எடுத்துவிட்டுச் சங்கு சக்கரம் பொறித்த வெற்றிக் கொடியை ஆழ்வார்க்கடியான்நட்டான்.பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவர்கள் சிலர் உடனே அருகில்வந்து அவனைத் தூக ்கித் தோளில் வைத்துக்கொண்டு,

              "நாராயணனே நம் தெய்வம்! 	நாமெல்லாரும் துதி செய்வம்!" 

என்று பாடிக் கொண்டு கூத்தாடினார்கள். பிறகு அவர்கள், "வீர வைஷ்ணவனே! எங்கள் இல்லத்துக்குவந்து அமுது செய்து அருள வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். "அங்ஙனமே ஆகுக!" என்று ஆழ்வார்க்கடியான்கம்பீரமாகக் கூறிவிட்டு வந்தியத்தேவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். இருவரும் புளியோதரை,திருக்கண்ணமுது, ததியோன்னம் ஆகியவற்றை வயிறு முட்டும்படி ஒரு கை பார்த்தார்கள். ஆழ்வார்க்கடியான் தான்வாதப் பேரில் சம்பாதித்த பொருள்களில் அங்கவஸ்திரமாக அணியக்கூடிய பீதாம்பரம் ஒன்றை மட்டும்வந்தியத்தேவனிடம் கொடுத்து விட்டு மற்றவற்றை ஸரீ வைஷ்ணவர்களிடம் கொடுத்து அவற்றின் பெறுமானத்துக்குப்பொற்கழஞ்சுகள் பெற்றுக் கொண்டான். வைஷ்ணவ சமயத்தின் மேன்மையை நிலைநாட்டிக் கொண்டு வடக்கேஹரித்வாரம் வரையில் போக வேண்டியிருப்பதால் தனக்குப் பொற்காசுகள் தேவை என்பதாக அவன் தெரிவித்துக்கொண்டான். ஸரீவைஷ்ணவர்களும் மனமுவந்து பொருள்களின் பெறுமானத்துக்கு அதிகமாகவே பொற்காசுகள்கொடுத்தார்கள். பெற்றுக் கொண்டு ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் பிற்பகலில் கடம்பூரை நோக்கிப்பிரயாணமானார்கள்.

கொள்ளிடத்தில் அப்போது பெருவெள்ளம் போய்க் கொண்டிருந்தபடியால் அவர்கள் ஏறிவந்தகுதிரைகளைக் கொண்டு வரமுடியவில்லை. அவர்கள் நதியைக் கடந்த ஓடத்தில் ஜனங்கள் அதிகமாகஏறியிருந்தபடியால், படகு கரையை அடையும் சமயத்தில் கவிழ்ந்துவிட்டது. மற்றவர்களைப் போல்வந்தியத்தேவனும் ஆற்று வெள்ளத்தில் விழுந்து நீந்திக் கரை சேர வேண்டியதாயிற்று. அச்சமயம் அத்தனைகாலமாக எத்தனையோ நெருக்கடியான நிகழ்ச்சிகளிலும் வந்தியத்தேவன் காப்பாற்றிக் கொண்டு வந்தஅவனுடைய அரைக்கச்சச் சுர ுளும் அதில் அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த இலச்சினைகளும், இளையபிராட்டிதந்த ஓலையுங்கூட நதி வெள்ளத்தில் போய்விட்டன. அவற்றுடன் இருந்த பொன் நாணயங்களும் போய்விட்டன. புதிய குதிரைகள் வாங்குவதற்குப் பணம் சேகரிப்பதற்காவே மேற்கூறிய யுக்தியை அவர்கள் கையாண்டார்கள். யுக்தி பலித்துக் கொஞ்சம் பணமும் கிடைத்தது. ஆனால் அந்த கிராமாந்தரப் பகுதிகளில் குதிரை எங்கும்விலைக்குக் கிடைக்காது என்றும் தெரிந்தது. கடம்பூர் கிராமத்தில் வாரம் ஒருநாள் நடைபெறும் சந்தையில்ஒருவேளை குதிரைகள் விற்பனைக்கு வரலாம்; இல்லாவிடில் திருப்பாதிரிப்புலியூர் சென்று வாங்க வேண்டும்.

கடம்பூருக்குப் போவதா, வேண்டாமா என்பது பற்றி அந்த நண்பர்களுக்குள் விவாதம் நடந்தது. அதில் உள்ள சாதக பாதகங்களைப் பற்றி விவாதித்தார்கள். கடம்பூரில் ஆதித்த கரிகாலரின் வருகையைப்பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தாலும் கிடைக்கலாம். காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டாரா, எந்தவழியாக வருகிறார் என்று ஏதேனும் தகவல் தெரிந்தால் நல்லது அல்லவா? ஆனால் கடம்பூரில்தெரிந்தவர்களின் கண்ணில் படக் கூடாது. கந்தமாறனைச் சந்திக்க நேர்ந்து விட்டால் ஆபத்தாய்ப்போய்விடும். ஒருவேளை பழுவேட்டரையரின் பரிவாரங்கள் இதற்குள் வந்திருந்தால், அதுவும் தொல்லைத்தான்!

"வைஷ்ணவனே! உனக்குத்தான் இரவில் சுவர் ஏறிக் குதிக்கத் தெரியுமே? சம்புவரையர் குதிரைலாயத்திலிருந்து இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து விடலாமே?" என்றான் வந்தியத்தேவன்.

"நான் சுவர் ஏறிக் குதிப்பேன் ஆனால் குதிரைகளுக்குச் சுவர் ஏறிக் குதிக்கத் தெரியவேண்டுமே?" என்றான் வைஷ்ணவன்.

"பழுவூர்ப் பரிவாரங்கள் அங்கே வந்திருந்தால், இரண்டு குதிரைகளை அடித்துக் கொண்டு போகலாம். அவர்கள் முன்னொரு சமயம் கடம்பூரில் என்னுட ய குதிரையை விரட்டியடித்தார்கள் அல்லவா? அதற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்", என்றான் வாணர் குல வீரன்.

சில மாதங்களுக்கு முன்பு கடம்பூரில் அவர்கள் சந்தித்தது பற்றியும் அன்று இரவு நடந்த அபூர்வசம்பவங்களைப் பற்றியும் வழி நெடுகப் பேசிக் கொண்டு வந்தார்கள். இருவரும் சூரியன் அஸ்தமிக்கும்சமயத்துக்குக் கடம்பூரை அடைந்தார்கள். கடம்பூர் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமர்க்களப்பட்டுக்கொண்டுதானிருந்தது. அரண்மனையும் கோட்டை வாசலும் கொடிகளாலும் தோரணங்களாலும் தொங்கல்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கோட்டை வாசலிலும் சரி, மதிள் சுவரைச் சுற்றியும் சரி,முன்னை விடக் காவல் பலமாக இருந்தது. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் வருகிறார் என்றால் கேட்கவேண்டுமா? அதே சமயத்தில் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரும் ராணியுடன் வரப் போகிறார். இரண்டுபேருடைய பரிவாரங்களும் வருவார்கள். சில நாளைக்கு ஊர் தடபுடல் பட்டுக்கொண்டுதானிருக்கும்.

இதையெல்லாம் பற்றிக் கடம்பூர்க் கடைத்தெருவில் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்ததை இரு நண்பர்களும்கேட்டார்கள். ஜனங்கள் பேச்சிலிருந்து இரு சாராரும் இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஆதித்த கரிகாலரை அழைத்து வரக் காஞ்சிக்கே புறப்பட்டுப் போயிருக்கிறான்என்றும் தெரிந்தது. இந்தப் பரபரப்பான பேச்சுக்களுக்கிடையில் சிலர் 'கடல் கொண்டு விட்ட இளவரசன்அருள்மொழிவர்மனைப் பற்றியும் மெல்லிய குரலில் பேசினார்கள். அவ்வளவு பெரிய துக்க சம்பவம்நடந்திருக்கும் போது இங்கே விருந்துகளுக்கும் களியாட்டங்களுக்கும் ஏற்பாடு நடந்து வருவது பலருக்குப்பிடிக்கவில்லை என்பது ஜாடைமாடையாக அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்தது.

ஆழ்வார்க்கடியானும், வந்தி த்தேவனும் இந்தப் பேச்சுகளையெல்லாம் காது கொடுத்துக் கேளாதவர்கள்போல் கேட்டுக் கொண்டு ஊரைத் தாண்டிப் போனார்கள். ஊருக்குள் எங்கேயும் இரவு தங்க அவர்கள்விரும்பவில்லை. ஊருக்கு அப்பால் சமீபத்தில் எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது சத்திரம் சாவடிஇல்லாமலா போகும்? அப்படியில்லாவிட்டால், இரவு வீரநாராயணபுரத்துக்குப் போய்த் தங்கி விடுவது நல்லது.அங்கேயுள்ள பெரிய பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் நிம்மதியாகப் படுத்து உறங்கலாம். முதன் நாள் இரவு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஓர் இரவு நல்ல தூக்கம் அவர்களுக்கு அவசியமாயிருந்தது. கடம்பூரைத் தாண்டிச் சாலையோடு சிறிது தூரம் சென்றதும் அடர்த்தியான மூங்கில் காடு ஒன்றும் அதற்குள்ஐயனார் கோவில் ஒன்றும் தெரிந்தன. "வைஷ்ணவரே! இனிமேல் என்னால் நடக்க முடியாது. இரவு இந்தக்கோயிலில் படுத்திருக்கலாம். யார் கண்ணிலும் படாமலிருப்பதற்கு இது நல்ல இடம்!" என்றான்வந்தியத்தேவன்.

"அப்பனே! நீ சொல்வது தவறு இம்மாதிரி இடங்களுக்கு நம்மைப்போல் இன்னும் யாராவது வந்துசேர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படி வருகிறவர்கள் குதிரைகளுடன் வந்தவர்களானால் ரொம்ப நல்லது" என்றான் வந்தியத்தேவன்.

"இந்த மூங்கில் காட்டுக்குள் எந்தக் குதிரையும் நுழைய முடியாது. மனிதர்கள் நுழைந்து செல்வதே கடினமான காரியம் ஆயிற்றே!"

"எங்கேயாவது ஒற்றையடிப் பாதை ஒன்று இல்லாமற் போகாது. கோயில் பூசாரி வரக்கூடிய வழியேனும்இருந்துதானே ஆகவேண்டும்?"

இருவரும் அடர்த்தியாக மண்டிக் கிடந்த மூங்கில் புதர்களைச் சுற்றிச் சுற்றி வந்து, கடைசியாகக்குறுகலான ஒற்றையடிப் பாதை ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதன் வழியாக உடம்பில் முட்கள் கீறாமல் நடந்துபோவது மிகவும் பிரயா ையாக இருந்தது. இவ்விதம் சிறிது தூரம் சென்ற பிறகு கொஞ்சம் இடைவௌிகாணப்பட்டது. அதில் சிறிய ஐயனார் கோவில் இருந்தது. கோவிலுக்கு எதிரே பலி பீடமும்அதையொட்டி மண்ணினால் செய்து காளவாயில் சுடப்பட்ட யானைகளும் குதிரைகளும் வரிசையாகவைக்கப்பட்டிருந்தன. ஐயனாருக்கு வேண்டுதல் செய்து கொள்ளும் பக்தர்கள் இவ்விதம் மண்ணினால் செய்தகுதிரைகளும் யானைகளும் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.

அவற்றை பார்த்ததும் வந்தியத்தேவன், "குதிரைகளைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோமே?ஐயனாரைக் கேட்டு இரண்டு குதிரைகள் வாங்கிக் கொள்ளலாமே?" என்றான்.

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்ற பழமொழி தெரியாதா!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவனே! எங்கள் ஐயனார் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கேட்ட வரத்தை உடனே கொடுக்கக்கூடியவர், உங்கள் விஷ்ணுவைப் போல் பக்தர்களைத் தவிக்கவிட்டுப் பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருப்பவர் அல்ல!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால் இந்த மண் குதிரைகளுக்கு உயிர் கொடுத்தாலும் கொடுப்பார் என்று சொல்லு!ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. பணம் மிச்சம்!"

"உண்மையான பக்தி இருந்தால், மண் குதிரைகளும் உயிர் பெறும்! பார்க்கப் போனால் நம்முடைய உடம்புகள் மட்டும் என்ன? பிரம்மதேவன் மண்ணினால் செய்து உயிர் கொடுத்ததுதானே?"

"நன்கு சொன்னாய், தம்பி! இந்த உடம்பு மண்ணினால் செய்த உடம்பு என்பதை மறந்துவிடுகிறோம். அதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் திருமண்ணைக் குழைத்து நெற்றியிலும், உடம்பிலும் இட்டுக் கொள்ளும்படி வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்!"

வந்தியத்தேவன் "உஷ்!" என்று சொல்லி, ஆழ்வார்க்கடியானுடைய கையைப் பிடித்துக் கொண்டு,இன்னொரு கையினால் எதிரே சுட்டிக் காட்டினான். சூ ியன் அஸ்தமித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டது. நாலாபுறமும் இருண்ட மூங்கில் தோப்புக்குள் சூழ்ந்திருந்த அச்சிறிய இடைவௌியில் மிக மங்கலாகத் தெரிந்தவௌிச்சத்தில் ஐயனாருடைய வாகனங்கள் உயிர் பெற்று அசைவதாகத் தோன்றின. ஒரு யானையும், ஒருகுதிரையும் இடம் பெயர்ந்து நகர்ந்தன. கண்ணால் கண்ட இந்த அற்புதத்தை நம்புவதா, இல்லையா என்றுதெரியாமல் வந்தியத்தேவன் சிறிது நேரம் திகைத்து நின்றான். ஆனாலும் ஐயனாருடைய அற்புத சக்தியைஆழ்வார்க்கடியானுக்கு உடனே உணர்த்திவிடக் கூடிய சந்தர்ப்பத்தை இழக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. "வைஷ்ணவரே! பார்த்தீரா?" என்று அவன் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் அவனுடைய கையை இறுக்கிப்பிடித்து, உதட்டில் விரல் வைத்துச் சமிக்ஞை காட்டி, பேச்சை நிறுத்தினான். பின்னர், இறுக்கிப் பிடித்தகையினால் வந்தியத்தேவனைப் பற்றியவாறு அவனை இழுத்துக் கொண்டு அந்த மூங்கில் புதருக்குப் பின்னால் சென்று நன்றாக மறைந்து நின்றான்.

குதிரையும் யானையும் அசைந்து சிறிது விலகிக் கொடுத்தன அல்லவா? அப்படி விலகிக் கொடுத்துஇடைவௌி ஏற்பட்ட இடத்தில் ஒரு மனிதனுடைய தலை மட்டும் தெரிந்தது. அந்தத் தலை அப்பாலும் இப்பாலும்திரும்பி நாலுபுறமும் பார்த்தது.ஐயனாருடைய பலிபீடத்துக்கு பக்கத்தில் இம்மாதிரி ஒரு தலை மட்டும்தோன்றி நாலா புறமும் சுழன்று விழித்த காட்சி மிகப் பயங்கரமாயிருந்தது. எவ்வளவோ பயங்கரங்களைப்பார்த்திருந்த வந்தியத்தேவனுடைய மெய் சிலிர்த்தது; ஆனால் தன்னைப் பிடித்திருந்த ஆழ்வார்க்கடியான் கைசிறிதும் நடுக்கமுறாமலும் தளராமலும் இருந்ததை அறிந்து வந்தியத்தேவன் நெஞ்சுறுதி கொண்டான்.

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தத் தலை எழும்பி மேலே வந்தது. ஒரு மனிதனுடையமார்பு வரையில் தெரிந்தது. பிறகு அம்ம ிதன் முழுமையான உருவத்துடன் கிளம்பி மேலே வந்தான். அம்மனிதன் வௌி வந்த இடத்தில் ஒரு சிறிய பிளவு, கரிய, இருள் சூழ்ந்த பாதாள பிலத்துவாரத்தைப்போல, பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டிருந்தது. சற்று உற்றுப் பார்த்த பின்னர் அந்த மனிதன் யார்என்பதும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. கடம்பூர் மாளிகையில் பணியாளனாக இருந்துகொண்டேரவிதாஸனுடைய சதிக் கும்பலிலும் சேர்ந்திருந்த இடும்பன்காரிதான் அவன்.

இதை இருவரும் ஏக காலத்தில் அறிந்து கொண்டதும் ஒருவரையொருவர் பார்த்துத் தங்கள் வியப்பைச்சமிக்ஞையினாலேயே தெரிவித்துக் கொண்டார்கள். இடும்பன்காரி திறந்திருந்த துவாரத்தை அப்படியேவிட்டு விட்டு, மறுபடியும் ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஐயனார் கோவிலை நோக்கி நடந்தான். கோவில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். சிறிது நேரத்துக்கெல்லாம் கோயிலுக்குள்ளேயிருந்துமுணுக்கு முணுக்கு என்று வௌிச்சம் தெரிந்தது, கோயிலுக்குள் விளக்கேற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்கள்.

"தம்பி! இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று முணுமுணுக்கும் குரலில் அடியான் கேட்டான்.

"ஐயனார் சக்தியுள்ள தெய்வம் என்று நினைக்கிறேன்; குதிரைக்கு உயிர் வந்ததைப் பார்க்கவில்லையா?"என்றான் வந்தியத்தேவன்.

"அது சரி! இப்போது வந்தானே, அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"அவன் ஐயனார் கோவில் பூசாரி போலிருக்கிறது நாமும் போய்ச் சுவாமி தரிசனம் செய்யலாமா?"

"கொஞ்சம் பொறு! இன்னும் யாராவது சுவாமி தரிசனத்துக்கு வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளலாம்."

"இன்னும் யாரேனும் வருவார்கள் என்று நினைக்கிறீர்களா?"

"பின் எதற்காக இவன் விளக்குப் போடுகிறான்?"

"பூசாரி கோவிலுக்கு விளக்குப் போடுவதில் ஆச்சரியம் என்ன?"

"தம்பி! அவன் யார் என்று தெரியவில்லையா?"

"நன்றாய்த் தெரிகிறது, கொள்ளிடத்தின் தென் கரையில் எனக்குக் குதிரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தானே? அந்த இடும்பன்காரி இவன்தான்! இப்போதும் இவனிடம் குதிரை கேட்கலாம் என்று பார்க்கிறேன்.."

"நல்ல யோசனை செய்தாய்."

"உமக்குப் பிடிக்கவில்லையா?"

"இடும்பன்காரி உனக்குக் குதிரை வாங்கிக் கொடுத்தவன் மட்டும் அல்ல; ரவிதாஸன் கூட்டத்தைச் சேர்ந்தவன்."

"அப்படியானால் இன்னொரு நல்ல யோசனை தோன்றுகிறது."

"என்ன? என்ன?"

"இடும்பன்காரி ஐயனார் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அவன் எங்கிருந்து வந்துமுளைத்தான் என்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டு வரலாம் என்று எண்ணுகிறேன்."

"அது எப்படி முடியும்?"

"அவன் வௌியே வந்த துவாரத்தில் நான் உள்ளே போக முடியாதா?"

"முடியலாம், ஆனால் அதில் உள்ள அபாயங்கள்..."

"அபாயம் இல்லாத காரியம் எது?"

"அப்புறம் உன் இஷ்டம்?"

"வைஷ்ணவரே! நீங்கள் இங்கேயிருந்து என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருங்கள்..."

"அதற்கென்ன கஷ்டம்? நான் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுரங்க வழி எங்கே போகும்என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?"

"தோன்றுகிறது சுவாமி, தோன்றுகிறது! அது சரிதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அதை நீ எதற்காகத் தெரிந்து கொள்ள வேணும்?"

"ஏதேனும் ஒரு சமயத்தில் உபயோகப்படலாம். யார் கண்டது?"

அச்சமயம் சற்றுத் தூரத்தில் வேறு பேச்சுக் குரல்கள் கேட்டன.

"தாமதிப்பதற்கு நேரமில்லை வைஷ்ணவரே! நான் திரும்பி வருகிற வரையில் இங்கேயே இருப்பீர் அல்லவா? அல்லது சுக்கிரீவன் வாலிக்குச் செய்தது போல் செய்துவிடுவீரா!"

"உயிர் உள்ள வரையில் இங்கேயே இருக்கிறேன் ஆனால் நீ திரும்பி வருவது என்ன நிச்சயம்?"

"உயிர் இருந்தால் நானு ம் திரும்பி வருவேன்..."

இவ்விதம் சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் நாலே பாய்ச்சலில் துவாரம் தெரிந்த இடத்தைநோக்கி ஓடினான். அதற்குள் இறங்கினான், மறு கணமே அந்த இருண்ட பள்ளத்தில் மறைந்தான். பிலத்துவாரம்அவனை அப்படியே விழுங்கி விட்டதாகத் தோன்றியது.

கோயிலுக்குள் சென்றிருந்த இடும்பன்காரி வௌியே வந்து சுற்று முற்றும் பார்த்தான், திறந்திருந்த துவாரம் கண்ணில் பட்டது. உடனே அவ்விடம் சென்று பலி பீடத்துக்குப் பக்கத்தில் நாட்டப்பட்டிருந்த சூலாயுதத்தைச் சுழற்றித் திருகினான்.

இடம் பெயர்ந்து அகன்றிருந்த யானையும் குதிரையும் மறுபடியும் நெருங்கி வந்தன. துவாரம்அடைப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது! இந்தக் காரியத்தைச் செய்துவிட்டு இடும்பன்காரிமறுபடியும் வாசற்படியண்டை வந்தான். அதே சமயத்தில் ரவிதாஸன், சோமன் சாம்பவன் முதலியவர்களும் வேறுதிசையிலிருந்து வந்து சேர்ந்தார்கள். ஆழ்வார்க்கடியான் மூங்கில் காட்டுக்குப் பின்னால் இன்னும் நன்றாகமறைந்து கொண்டான். கோவில் வாசற்படி மேல் ரவிதாஸன் உட்கார்ந்து கொண்டான். மற்றவர்கள் அவன் எதிரேதரையில் அமர்ந்தார்கள்.

"தோழர்களே! நாம் கைக் கொண்ட விரதம் நிறைவேறும் சமயம் நெருங்கிவிட்டது!" என்றான்ரவிதாஸன்.

"இவ்வாறுதான் ஆறு மாதமாக 'நெருங்கிவிட்டது' 'நெருங்கிவிட்டது' என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்" என்றான் ஒருவன்.

"ஆம், அதில் தவறு ஒன்றுமில்லை; ஆறு மாதமாகவே அந்த நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தது. விரல்விட்டு எண்ணக் கூடிய நாள் கணக்கில் நெருங்கி விட்டது. ஆதித்த கரிகாலன் காஞ்சியை விட்டுக் கிளம்பிவிட்டான் என்ற செய்தி வந்திருக்கிறது. திருகோவலூர்க் கிழவன் அவனைத் தடுத்து நிறுத்தச் செய்த பிரயத்தனம் பலிக்கவில்லையாம்!"

"வழியில் வேறு யார வது தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?"

"ஆதித்த கரிகாலன் முன் வைத்த காலைப் பின் வைக்கிறவன் அல்ல, இனி யார் தடுத்தாலும் கேட்க மாட்டான்..."

"அவனுடைய சகோதரி சொல்லி அனுப்பிய செய்தி போய்ச் சேர்ந்தால்..."

"அது எப்படிப் போய்ச் சேரமுடியும்? செய்தி கொண்டு போன வாலிபனைத்தான் காட்டில் கட்டிப் போட்டு விட்டு வந்தோமே?"

"அழகுதான்! அவனை இன்று காலையில் கொள்ளிடத்தின் வடகரையிலே பார்த்தேன். அவனோடு நமது இன்னொரு பகைவனும் சேர்ந்திருக்கிறான்."

"அது யார்?"

"போலி வைஷ்ணவ வேஷதாரி!"

"அப்படியானால் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது தான். அவர்கள் ஆதித்த கரிகாலனைச் சந்திக்காமல் தடுக்கப் பார்க்க வேண்டும்.

"தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இருக்கிறது. கையில் அகப்பட்டவனை அங்கே ஒருவழியாகத் தீர்த்திருக்கலாம். ராணி எதற்காக அவனை உயிரோடு விடச் சொன்னாள் என்று தெரியவில்லை...."

"தோழர்களே! எனக்கும் அது அப்போது புரியாமல்தான் இருந்தது. அப்புறம் தெரிந்துகொண்டேன்; ராணி என்னையும் மிஞ்சிவிட்டாள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். மிக முக்கியமான ஒருநோக்கத்துடன் தான் வந்தியத்தேவனை உயிரோடு விடச் சொன்னாள் ராணி. அதை நீங்கள் இப்போதுதெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வந்தியத்தேவனைப் பற்றிக் கவலை வேண்டாம். ஆனால் அந்தவைஷ்ணவனைக் கண்டால் சிறிதும் தயங்காமல் உயிரை வாங்கிவிட்டு மறு காரியம் பாருங்கள்..." என்றான்ரவிதாஸன்.
 

பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
பயங்கர நிலவறை




பிலத் துவாரத்துக்குள் நுழைந்த வந்தியத்தேவன் சில படிகள் இறங்கிச் சென்றான்.பிறகு சமதரையாக இருந்தது; மிக மிக இலேசாக வௌிச்சம் தெரிந்தது. பத்துப் பதினைந்து அடி சென்றான். ஏதோ வண்டிச் சக்கரம் சுற் ுவது போல் ஒரு சத்தம் கேட்டது. திடீரென்று இருள் வந்து கவிந்து அவனைவிழுங்கி கொண்டது. சம்பந்தமில்லாத காரியத்தில் தலையிடக் கூடாது என்று பல முறை தீர்மானித்துக்கொண்டதை எண்ணினான். 'நாம் புறப்பட்ட காரியம் என்ன? எவ்வளவு முக்கியமானது? அதை விடுத்து இப்போது இந்தப் பாதாளச் சுரங்க வழியில் பிரவேசித்தோமே? இது எங்கே கொண்டு போய்ச் சேர்க்குமோ? என்னமோ! அங்கே என்னென்ன வகை அபாயங்கள் காத்திருக்குமோ? என்ன அறிவீனமான காரியத்தில் இறங்கினோம். நம்முடைய அவசர புத்தி நம்மை விட்டு எப்போது போகப் போகிறது?' இந்த எண்ணங்கள் அவன் கால்களின் வேகத்தைக் குறைத்தன. திரும்பிப் போய்விடலாம் என்று எண்ணி, வந்த வழியே திரும்பினான்; படிகள் தட்டுப்பட்டன. ஆனால் மேலே துவாரத்தைக் காணவில்லை; தடவித் தடவிப் பார்த்தான் பயனில்லை. யாரோ மேலிருந்து துவாரத்தை மூடியிருக்க வேண்டும். வந்தியத்தேவனுக்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. மேலும் பரபரப்புடன், மூடப்பட்ட துவாரத்தைத் திறப்பதற்கு முயன்றான். இதற்குள், எங்கேயோ வெகு வெகு தூரத்தில், யாரோ பேசும் குரல் கேட்பது போலிருந்தது; வேறு வேறு குரல்கள் கேட்டன. ஒரு வேளை அவன் எங்கிருந்து பிலத்துவாரத்தில் பிரவேசித்தானோ, அந்த ஐயனார் கோவில் வாசலில் மனிதர்கள் பேசும் குரலாகவும் இருக்கலாம். இடும்பன்காரி யாரையோ எதிர்பார்த்துத்தானே விளக்குப் போட்டான்? அவர்கள் வந்திருக்கலாம், இது உண்மையாகுமானால் அவன் அச்சமயம் பிலத்துவாரத்தைத் திறக்க வழி கண்டுபிடித்து வௌியேறுதல் பெருந்தவறாக முடியலாம். அவர்கள் எத்தனை நேரம் அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களோ தெரியாது. இடும்பன்காரியின் கூட்டாளிகளான ரவிதாஸன் முதலிய சதிகாரர்களானால் நெடுநேரம் பேசிக் கொண்டிருக்ககூடும். அவர்கள் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள ? என்ன பேசுகிறார்கள்? என்ன சதி செய்கிறார்கள்?இதையெல்லாம் அந்த வீரவைஷ்ணவன் கவனித்துக் கொண்டிருப்பான். நாம் இங்கே மூச்சு முட்டும்படி, உடம்பில் வியர்த்துக் கொட்டும்படி நின்று காத்திருப்பதைக் காட்டிலும், மேலே கொஞ்ச தூரம் போய்ப் பார்ப்பதேநல்லது. துணிந்து இறங்கியது இறங்கியாகிவிட்டது, இந்தச் சுரங்க வழி எங்கேதான் போகிறது என்பதைக்கண்டுபிடிப்பது மேல் அல்லவா?..."

இவ்வாறு முடிவு கட்டிக்கொண்டு வந்தியத்தேவன் பின் வைத்த காலை மறுபடி முன் வைத்து நடந்துசெல்லத் தொடங்கினான். கீழே சமதரை என்றாலும் முண்டும் முரடுமாக இருந்தது. பாறையைக் குடைந்து எடுத்துஅந்தப் பாதாள வழியை அமைத்திருக்க வேண்டும். அந்த வழி எங்கே போய்ச் சேரும் என்பது அவன் மனத்தில்ஓர் உத்தேசம் தோன்றியிருந்தது. அநேகமாக அது கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குள் போய் முடியவேண்டும்.அந்த மாளிகையில் எங்கே போய் முடிகிறதோ என்னமோ! ஒருவேளை பொக்கிஷ அறையில்முடியலாம் அல்லது அரண்மனைப் பெண்டிர்கள் வாசம் செய்யும் அந்தப்புரத்தில் முடியலாம். அரசர்களும்சிற்றரசர்களும் வசிக்கும் அரண்மனைகளிலிருந்து அத்தகைய சுரங்கப்பாதைகள் இருக்கும் என்பது அவன் அறிந்தவிஷயந்தான். ஏதாவது பேரபாயம் நேரும் காலங்களில் அரண்மனையிலிருந்து ஓடித் தப்பிக்க வேண்டியசந்தர்ப்பம் நேர்ந்தால், அத்தகைய பாதைகளை உபயோகிப்பார்கள். அரண்மனைப் பெண்டிரை அப்புறப்படுத்துவதுஅவசியமாதலால் அத்தகைய பாதைகள் அந்தப்புரத்தில் சாதாரணமாக முடிவதுண்டு. முக்கியமானபொக்கிஷங்களை எடுத்துக் கொண்டு போவதும் அவசியமாதலால், பொக்கிஷ நிலவறை மூலமாகவும் அந்தவழிகள் போவது வழக்கம். இந்த வழி எங்கே போய் முடிகிறதோ, என்னமோ? இடும்பன்காரி இவ்வழியாகவந்து வௌியேறியிருப்பதால், அநேகமாகப் பொக்கிஷ அறையில் தான் போய் முட யும். பெரியபழுவேட்டரையரின் பொக்கிஷங்களை அவர் அறியாமல் இளைய ராணி மூலம் இச்சதிகாரர்கள் சூறையிடுவதுபோல், சம்புவரையரின் பொக்கிஷத்தையும் கொள்ளையிடத் திட்டம் போட்டிருக்கிறார்கள் போலும்! ஆதித்தகரிகாலரும் மற்றவர்களும் விருந்தாளிகளாக வரவிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவர்கள் இம்மாதிரிகாரியத்தில் பிரவேசிப்பதன் காரணம் என்ன? ஒருவேளை வேறு நோக்கம் ஏதேனும் இருக்க முடியுமா?திருப்புறம்பயம் பள்ளிப்படைக் காட்டில் பார்த்ததும் கேட்டதும் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தன. பழுவூர்ராணியிடம் இருந்த மீன் அடையாளம் பொறித்த நீண்ட வாள் அவன் மனக்கண் முன்னே வந்து ஒரு கணம்ஜொலித்தது. வந்தியத்தேவனுக்கு உடம்பு சிலிர்த்தது. பொக்கிஷத்தைக் கொள்ளையிடுவதைக் காட்டிலும்இன்னும் பயங்கரமான நோக்கம் இவர்கள் வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம், இந்த வழி எங்கேபோகிறதென்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டால் அவர்களுடைய கொடிய நோக்கம் நிறைவேறாமல்தடுப்பதற்குப் பயன்பட்டாலும் படலாம்.

சுரங்க வழியில் நடக்க ஆரம்பித்துச் சில நிமஷ நேரந்தான் உண்மையில் ஆயிற்று; ஆனாலும்இருண்ட வழியாயிருந்தபடியால் நெடுநேரமாகத் தோன்றியது. காற்றுப் போக்கு இல்லாதபடியால் மூச்சுத்திணறியது; மேலும் வியர்த்துக் கொட்டியது. ஐயனார் கோவிலிலிருந்து கடம்பூர் மாளிகை எவ்வளவு தூரம்என்று எண்ணியபோது அவனுக்கு முதலில் மலைப்பாயிருந்தது ஆனால் மறுபடியும் யோசித்தான். மாளிகையின் முன்வாசலிலிருந்து வளைந்தும் சுற்றியும் சென்ற தெருக்களின் வழியாகவும், பின்னர் காட்டுப் பாதைகளின்வழியாகவும் வந்தபடியால் அவ்வளவு தூரமாகத் தெரிந்தது. அரண்மனையின் பின் பகுதியிலிருந்துநேர்வழியாக வந்தால் ஐயனார் கோவில் அவ்வளவு தூரத்தில் இராது. வில்லிலிருந்து அம்பு விட்டால் ப ய்விழக் கூடிய தூரந்தான் இருக்கும். அது உண்மையானால், இதற்குள் அரண்மனை வௌி மதிைலை அவன் நெருங்கி வந்திருக்க வேண்டுமே....

ஆம்; அப்படித்தான், மேலே எங்கிருந்தோ திடீரென்று வந்தியத்தேவன் மேல் குளிர்ந்த காற்றுகுப்பென்று அடித்தது. வியர்த்து விறுவிறுத்து மூர்ச்சையடையும் நிலைக்கு வந்திருந்த வந்தியத்தேவனுக்கு அந்தக்காற்று புத்துயிர் தந்தது. அண்ணாந்து பார்த்தான்; உயரத்தில் வெகு தூரத்தில் சிறிது வௌிச்சம்தெரிந்தது. பேச்சுக் குரல்களும் கேட்டன. மதில்சுவரின் மேல் ஆங்காங்கு வீரர்கள் இருந்து காவல்புரிவதற்காக அமைத்த கொத்தளங்களில் அது ஒன்றாக இருக்க வேண்டும். அதன் வழியாகச் சுரங்கப் பாதையில்காற்றுப் புகுவதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் காற்றுத்தான் புகலாமே தவிர, மனிதர்கள் கீழேஇறங்குவதற்கோ மேலே ஏறுவதற்கோ அங்கே வசதி ஒன்றுமில்லையென்பதையும் வந்தியத்தேவன் கண்டான்.

கடம்பூர் அரண்மனைக்குள் புகுந்தாகிவிட்டதென்ற எண்ணமும் மேலிருந்து வந்து அவன் மீது அடித்தகுளர்ிந்த காற்றும் அவனுக்குப் புத்துயிரை அளித்துப் புதிய உற்சாகத்தை உண்டு பண்ணின. சுரங்கப்பாதை போய்ச்சேரும் இடம் இனி சமீபத்திலே தான் இருக்கும். அது பொக்கிஷ நிலவறையாயிருக்குமா? பெரியபழுவேட்டரையரைப் போல் சம்புவரையரும் ஏராளமான முத்தும், பவளமும், ரத்தினமும், வைரமும், தங்கநாணயங்களும் சேர்த்து வைத்திருப்பாரா? அங்கே பார்த்தது போல் இங்கேயும் அந்த ஐசுவரியக்குவியல்களுக்கிடையில் செத்த மனிதனின் எலும்புக்கூடு கிடக்குமா? தங்க நாணயங்களின் பேரில் சிலந்திவலை கட்டியிருக்குமா?

இம்மாதிரி எண்ணிக் கொண்டே போன வந்தியத்தேவன் காலில் ஏதோ தட்டுப்பட்டுத்திடுக்கிட்டான். அப்புறம் அது படிக்கட்டு என்று தெரிந்து தைரியம் அடைந்தான். ஆம்; அந் ப் படிக்கட்டில்ஏறியானதும் பொக்கிஷ நிலவறையைக் காணப் போவது நிச்சயம். இல்லாவிட்டால், பெண்கள் வசிக்கும்அந்தப்புரமாயிருக்கலாம், அப்படியானால் தன்பாடு ஆபத்து தான்! ஆ! கந்தமாறன் தங்கை மணிமேகலை! அந்தகருநிறத்து அழகி அங்கே இருப்பாள்! ஒரு சமயம் அவளை மணந்து கொள்ளும் யோசனை தனக்கு இருந்ததைநினைத்தபோது வந்தியத்தேவன் புன்னகை பூத்தான். அந்தப் புன்னகையைப் பார்த்து மகிழ அங்கு யாரும்இல்லைதான்! ஒருவேளை அந்தப்புரத்து மாதர் அலங்கோலமாக இருக்கும் சமயத்தில் திடீரென்று அவர்களிடையேதான் தோன்றினால்! இதை நினைக்க அவனுக்குச் சிரிப்பே வந்துவிட்டது.

சிரித்த மறுகணமே, அவனுடைய உடம்பின் ரத்தம் உறைந்து இதயத்துடிப்பு நின்று, கண் விழிகள்பிதுங்கும்படியான பயங்கரத் தோற்றத்தை அவன் கண்டான். படிக்கட்டில் ஏறினான் அல்லவா? மேல் படியில் கால்வைத்ததும், இனி ஏறுவதற்குப் படியில்லையென்று உணர்ந்து நாம் எங்கே வந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளச் சுற்றுமுற்றும் பார்த்தான். நூறு நூறு கொள்ளிக் கண்கள் அவனை உற்றுப் பார்த்தன. அந்தக் கண்கள்எல்லாம் பயங்கரமான காட்டு மிருகங்களின் கண்கள்! முதலில் ஏற்பட்ட பீதியில், வந்த வழியேதிரும்பிவிட யத்தனித்தான். ஆனால் பின்னால் வழியைக் காணோம். மேற்படியில் அவன் கால் வைத்ததும்பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. சுரங்க வழி தானாக மூடிக் கொண்டு விட்டது போலும்! ஆனால் இது என்னகோர பயங்கரம்? இவ்வளவு காட்டு மிருகங்களும் தனக்காக இங்கே காத்திருக்கின்றனவே! வேங்கைப் புலிகள்,சிறுத்தைகள், சிங்கங்கள், கரடிகள், காட்டு எருமைகள், ஓநாய்கள், நரிகள், காண்டாமிருகங்கள்! அதோஇரண்டு யானைகள்! எல்லாம் தன் மீது பாய்வதற்கல்லவா ஆயத்தமாக இருக்கின்றன? ஏன் இன்னும் பாயவில்லை?அதோ, அவ்வளவு பிரம்மாண்டமான பருந்து! ஐயோ! அந்த ராட்சத ஆந் ை! ஆள் விழுங்கி வௌவால்! தான்காண்பது கனவா? அல்லது..இது என்ன? இங்கே ஒரு முதலை கிடக்கிறதே? வாயைப் பிளந்து கொண்டு கோரமானபற்களைக் காட்டிக் கொண்டு கிடக்கிறதே? முதலை தண்ணீரில் அல்லவா இருக்கும்? இது வெறுந்தரையல்லவா?காட்டு மிருகங்களுக்கு மத்தியில் இந்த முதலை எப்படி வந்தது?...

"அம்மா! பிழைத்தேன்!" என்று வாய்விட்டுக் கூறினான் வந்தியத்தேவன். தன்னைச் சூழ்ந்திருந்தஅந்த மிருகங்கள் எல்லாம் உயிர் உள்ள மிருகங்கள் அல்லவென்பதை உணர்ந்தான். சம்புவரையர் குலத்தார்வேட்டைப் பிரியர்கள் என்று கந்தமாறன் கூறியிருந்தது நினைவு வந்தது. அந்த வம்சத்தினர் வேட்டையாடிக்கொன்ற மிருகங்களில் சிலவற்றின் தோலைப் பதன்படுத்தி, உள்ளே பஞ்சும் வைக்கோலும் அடைத்து உயிர்விலங்குகளைப் போல் வைத்திருக்கும் வேட்டை மண்டபம் ஒன்று அந்த மாளிகையில் உண்டு என்று கந்தமாறன்கூறியதும் நினைவு வந்தது. அந்த வேட்டை மண்டபத்துள் இப்போது தான் வந்திருப்பதை வந்தியத்தேவன் அறிந்துகொண்டான். ஆயினும் முதலில் ஏற்பட்ட பீதியினால் உண்டான உடம்பு நடுக்கம் நிற்பதற்கு சிறிது நேரம்ஆயிற்று.

பின்னர் ஒவ்வொரு மிருகமாக அருகில் சென்று பார்த்தான். தொட்டுப் பார்த்தான், அசைத்துப்பார்த்தான், மிதித்தும் பார்த்தான். அந்த மிருகங்களுக்கு உயிர் இல்லை என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டான். பின்னர், என்ன செய்வதென்று யோசித்தான். வந்த வழி தானாக மூடிக் கொண்டு விட்டது. அதை மறுபடியும் கண்டுபிடித்துக் கொண்டு வந்த வழியே செல்வதா? அல்லது இந்த பயங்கர மண்டபம் கடம்பூர்மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதா? வேறு எந்த அறைக்குள்ளேனும் இங்கிருந்துவழி போகிறதா என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குவதா? சுவர்களில் எங்கேயாவது கதவு இருக்கிறதாஎன்று பார த்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான். வௌிப்படையாகத் தெரியும் கதவு ஒன்றும் இல்லை. சுவர்களையெல்லாம் தொட்டுப் பார்த்துக் கொண்டும் தட்டிப் பார்த்துக் கொண்டும் வந்தான் ஒன்றும் பயன்படவில்லை.நேரமாக ஆக வந்தியத்தேவனுக்குக் கோபம் அதிகமாகி வந்தது. 'இந்த அநாவசியமான காரியத்தில்பிரவேசித்து இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே' என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சுவர்களின்ஓரமாகச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஒரு யானையின் முகம் துதிக்கையுடனும் தந்தங்களுடனும்சுவரோடு சேர்த்துப் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான்.

"நாசமாய்ப் போன யானையே! நீ நகர்ந்து கொடுத்தல்லவா என்னை இந்தச் சிறைச்சாலைக்குள்கொண்டு சேர்த்தாய்?" என்று அந்த யானையை நோக்கித் திட்டினான். யானை பேசாதிருந்தது. உயிர் உள்ளயானையே பேசாது. உயிரில்லாத நாரும் உமியும் அடைத்த யானை என்ன செய்யும்? துதிக்கையைக் கூடஆட்டாமல் சும்மா இருந்தது.

"என்ன நான் கேட்கிறேன், பேசாமல் இருக்கிறாய்?" என்று சொல்லிக்கொண்டேவந்தியத்தேவன் யானையின் தந்தங்களைப் பிடித்துக் கொண்டு ஒரு திருகு திருகினான். அடுத்த வினாடியில்அந்த மாயாஜாலம் நடந்தது.

தந்தத்தைத் திருகியதும், சுவரோடு ஒட்டியிருந்த யானையின் காது அசைந்தது. அசைந்ததுமட்டுமல்ல மடங்கி நகர்ந்து கொடுத்தது. அங்கே சுவரில் ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அடங்காவியப்புடன் வந்தியத்தேவன் அந்தத் துவாரத்துக்கு அருகில் முகத்தை நீட்டி எட்டிப் பார்த்தான்.

பார்த்த இடத்தில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அது ஓர் இளம் பெண்ணின் முகம்; கரியநிறத்து அழகிய பெண்ணின் முகம். அந்த முகத்திலிருந்த பெரிய கண்கள் இரண்டும் விரிந்துவிழித்துக்கொண்டிருந்தன, ஆச்சரியம்! ஆச்சரியம்! அந்தப் பெண்ணின் முகத்துக்கு அருகில் ந்தியத்தேவன்தன்னுடைய முகத்தையும் கண்டான். ஒரு பெண்ணுக்கு அவள் காதலன் முத்தம் கொடுக்க எத்தனித்தால் எப்படி முகத்தைஅருகில் கொண்டு போவானோ அந்த நிலையில் வந்தியத்தேவன் தன் முகத்தையும் அந்தப் பெண்ணின் முகத்தையும்பார்த்தான். ஏற்கெனவே அகன்று விழித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் கண்கள் இப்போது இன்னும் அகலமாகவிரிந்து, சொல்ல முடியாத வியப்பைக் காட்டின. வியப்புடன் சிறிது பயமும் அப்பார்வையில்பிரதிபலித்தது. ஒரு கணம் அந்தப் பெண் முகம் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தது. அடுத்த கணம் அவள் தன்செக்கச் சிவந்த இதழ்களைக் குவித்துக் "கூ...!" என்று சத்தமிட்டாள்.

வந்தியத்தேவனைத் திடீரென்று திகில் பற்றிக் கொண்டது. அந்தத் திகிலில் யானைத்தந்தத்திலிருந்து தன்னுடைய கைகளை எடுத்தான்.

அடுத்த கணத்தில் யானை யானையாகவும், சுவர் சுவராகவும் நின்றது.

தூவாரத்தையும் காணோம், பெண்ணையும் காணோம்.

சில் வண்டுகள் ரீங்காரம் போல் காதைத் துளைத்த 'கூ' என்ற அந்தப் பெண்ணின் குரலும் கேட்கவில்லை.

வந்தியத்தேவனுடைய நெஞ்சு படபடப்பு அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று.

தான் கண்ட தோற்றத்தைப் பற்றி அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
 

பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
மணிமேகலை




சம்புவரையரின் செல்வப் புதல்வியான மணிமேகலை குதூகலம் நிறைந்த பெண். தந்தையும் தாயும்தமையன் கந்தமாறனும் அவளைக் குழந்தைப் பிராயம் முதலாவது அன்பும் ஆதரவுமாய்ப் பேணி வளர்த்து வந்தார்கள். சம்புவரையரின் அரண்மனையில் அவள் கொடுங்கோல் அரசியாக விளங்கி வந்தாள். அவள் இட்டதேமாளிகைக்குள் சட்டமாக நடந்து வந்தது. சில காலத்துக்கு முன்பு வரையில் மணிமேகலையின் வாழ்க்கை ஆட்டமும்பாட்டமும் களியாட்டமுமாகக் கழிந்து வந்தது. நாலைந து மாதத்துக்கு முன்னால் அவளுடைய வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு தடங்கல் ஏற்பட்டது. அவளது விருப்பத்துக்கு விரோதமான காரியத்தை அவள் செய்ய வேண்டும்என்று வீட்டுப் பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்கள். 'பிடிவாதம் உதவாது' என்ற பாடத்தைவீட்டுப் பெரியவர்களுக்கு மணிமேகலை எவ்வளவுதான் உபதேசித்தும் பயன் தராது போலிருந்தது.

இரண்டு மூன்று வருஷமாகக் கந்தமாறன் போர்க்களங்களிலிருந்து திரும்பி வீட்டுக்குவரும்போதெல்லாம் அவனுடைய சிநேகிதன் வல்லவரையனைப் பற்றி அவளிடம் கூறுவான். அவனுடைய வீர தீரசாமர்த்தியங்களைப் பற்றியும், புத்தி சாதுர்யத்தைப் பற்றியும் வானளாவப் புகழ்வான். அழகில் மன்மதன்என்றும், வீரத்தில் அர்ச்சுனன் என்றும், யுக்தியில் கிருஷ்ண பகவான் என்றும் வியந்து வர்ணிப்பான். "அவன்தான் உனக்குச் சரியான கணவன். துஷ்டத்தனத்தை அடக்கி உன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவன்"என்பான். இதையெல்லாம் அடிக்கடி கேட்க வேண்டுமென்று மணிமேகலைக்கு ஆசையாயிருக்கும். அதே சமயத்தில்வௌிப்படையாகக் கந்தமாறன் மீது அவள் எரிந்து விழுவாள்; அவனுடன் சண்டை பிடிப்பாள்.

"இப்படி வெறுமனே சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே? ஒருநாள் அழைத்துக் கொண்டு தான்வாயேன்! அவன் சாமர்த்தியத்தைப் பார்த்துவிடுகிறேன்" என்பாள்.

"ஆகட்டும்; ஆகட்டும்!" என்று கந்தமாறன் கறுவிக் கொண்டிருப்பான்.

மணிமேகலையும் ஒருவாறு வல்லவரையன் வந்தியத்தேவனைக் கற்பனைக் கண்ணால் கண்டு,மானஸ உலகில் அவனோடு பேசிப் பழகி, சிரித்து விளையாடி, சண்டை போட்டுச் சமாதானம் செய்து,இப்படியெல்லாம் பகற்கனவு காண்பதில் காலம் போக்கி வந்தாள். அவளுடைய அந்தரங்கத் தோழிகளிடம் சிலசமயம் தன் தமையனுடைய சிநேகிதனான வாணர் குல வீரனைப் பற்றிப் பேசி மகிழ்ந்தும் வந்தாள். இத் கைய இனிய பகற்கனவுகளுக்கு நாலு மாதங்களுக்கு முன்னால் எதிர்பாராத ஓர் இடையூறு நேர்ந்தது.

கந்தமாறன் வேறு ஸ்வரத்தில் பேச ஆரம்பித்தான். "வீடு வாசலும் பதவியும் அந்தஸ்தும் அற்றஅந்த அநாதைப் பையனை மறந்து விடு!" என்று கூறலானான். தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் அவளை ஏற்றிவைக்கத் தீர்மானித்திருப்பதாக ஆசை காட்டினான். பின்னர் ஒருநாள், தௌிவாகவே விஷயத்தைச் சொல்லிவிட்டான். ஏற்கனவே சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்தவனான மதுராந்தகனுக்கு இவளையும் மணம்புரிந்து கொடுக்கப் போவதாகவும் கூறினான். மதுராந்தகன் தான் அடுத்த சக்கரவர்த்தியாகப் போகிறான்என்று ஜாடைமாடையாகச் சொன்னான். மதுராந்தகனை மணந்தால் மூன்று உலகங்களுக்கும் மணிமேகலைசக்கரவர்த்தினியாக விளங்குவாள் என்றும், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் ஒருவேளை சாம்ராஜ்யம்ஆளும் பேறு பெறுவான் என்றும் கூறினான். இதற்கெல்லாம் அவளுடைய பெற்றோர்களும் ஒத்துப் பாடினார்கள்.

ஆனால் மணிமேகலைக்கு இந்தப் பேச்சு ஒன்றும் பிடிக்கவில்லை, வந்தியத்தேவனைப் பற்றிக் கேட்டுக்கேட்டு அவள் மனம் அவனிடம் ஈடுபட்டிருந்தது. அதுமட்டுமல்ல மதுராந்தகன் வீரமற்றவன் என்றும்,போர்க்களத்தையே பார்த்து அறியாதவன் என்றும், நேற்று வரை உடம்பெல்லாம் விபூதி பூசி ருத்திராட்சம்அணிந்து சாமியார் ஆகப் போவதாகச் சொல்லி வந்தவன் என்றும் அறிந்திருந்தாள். போதாதற்கு ஏற்கெனவேஅவனுக்கு ஒரு கலியாணம் ஆகியிருந்தது. தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களோ மிகவும் கர்வக்காரிகள். தங்களுக்குத்தான் நாகரிகம் தெரியும் என்று எண்ணி மற்ற ஊர்க்காரர்களை அலட்சியம் செய்கிறவர்கள்,இதையெல்லாம் எண்ணி மணிமேகலை மிக்க எரிச்சல் கொண்டாள். தஞ்சாவூர்ச் சிம்மாசனம்கிடைப்பதாயிருந்தாலும் சரி, தேவலோகத்துத் தேவேந்திரனுடைய சிம மாசனமே கிடைப்பதாயிருந்தாலும்சரி, மதுராந்தகனை மணந்து கொள்ள முடியாது என்று அடம்பிடித்தாள்.

அப்புறம் இன்னொரு செய்தி தெரிய வந்தபோது அவளுடைய மன உறுதி வலுவடைந்தது. பெரியபழுவேட்டரையர் கடம்பூருக்கு வந்திருந்தபோது பின்னோடு இளையராணி நந்தினியும் வந்திருந்ததாகச்சொன்னார்கள். ஆனால் அவள் அந்தப்புரத்துக்குள்ளேயே வரவில்லை. கடம்பூர் அரண்மனைப் பெண்களைப்பார்க்கவும் இல்லை. இது முதலில் வியப்பை அளித்தது. அரண்மனைப் பெண்டிர் அதைப் பற்றி பரிகாசமாகவும்நிந்தனையாகவும் பேசிக் கொண்டார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிந்தது. மூடுபல்லக்கில்இளையராணி வரவில்லையென்றும் மதுராந்தகன் வந்திருந்தான் என்றும் அறிந்தபோது மணிமேகலையின் அருவருப்புஅதிகமாயிற்று. "சீச்சீ! இப்படிப் பயந்து கொண்டு மூடுபல்லக்கில் பெண் வேஷம் தரித்துக் கொண்டுவருகிறவனையா நான் மணவாளனாக வரிப்பேன்? ஒருநாளும் இல்லை!" என்று மணிமேகலை உறுதியடைந்தாள்.

மதுராந்தகன் மூடுபல்லக்கில் அரண்மனைக்கு வந்திருந்த அதே சமயம் கந்தமாறனின் சிநேகிதன்வந்தியத்தேவனும் வந்திருந்தான். அவன் அந்தப்புரத்துக்கு வந்து சற்று நேரம்தான் இருந்தான். எங்கிருந்தோஅப்போது மணிமேகலைக்கு அளவிலாத நாணம் வந்து பற்றிக் கொண்டது. மற்றப் பெண்களின் பின்னாலேயேநின்றாள். வந்தியத்தேவனை நேருக்கு நேர், முகத்துக்கு முகம், நன்றாகப் பார்க்கக் கூடவில்லை. ஆயினும்மற்றவர்களுக்குப் பின்னால் அரை குறையாகப் பார்த்த அவனுடைய களை பொருந்திய, புன்னகை ததும்பிய முகம்அவள் உள்ளத்தில் பதிந்து விட்டது. அவனுடைய குரலும் அவன் பேசிய சில வார்த்தைகளும் அவளுடையஞாபகத்தில் நிலைத்துவிட்டன.

ஆகையால் மறுபடியும் தமையன் கந்தமாறனுடன் மணிமேகலை முடிவில்லா விவாதம் தொடங்கினாள். முக்கண் படைத்த சி வபெருமானே வந்து சொன்னாலும் தான் மதுராந்தகனை ஒரு காலும் மணக்க முடியாது என்றாள்.

வந்தியத்தேவனைச் சிறிது நேரமே பார்த்திருந்த போதிலும் அவனிடம் தன் அந்தரங்கம் சென்று விட்டதையும் அவள் குறிப்பாக உணர்த்தினாள்.

கந்தமாறனுக்கு இது அளவில்லாத கோபத்தை உண்டாக்கிற்று. முதலில் நல்ல வார்த்தையாகச் சொல்லிப் பார்த்தான் பயன்படவில்லை. பின்னர், "வந்தியத்தேவன் என் சிநேகிதன் அல்ல; என் பரம விரோதி. என்னைப் பின்னாலிருந்து முதுகில் குத்திக் கொல்லப் பார்த்தவன்; அவனை நீ மணந்து கொள்வதாயிருந்தால் உன்னையும் அவனையும் சேர்த்துக் கொன்று விடுவேன்!" என்றான். முதுகில் ஏற்பட்டிருந்த கத்திக் காயத்தைக் காட்டினான். பழுவூர் இளையராணியின் பரிவான சிகிச்சையினால் உயிர் பிழைத்து எழுந்ததையும் கூறினான்.

"என் பேரில் உனக்கு எள்ளத்தனை விசுவாசமாவது இருந்தால், வந்தியத்தேவனை மறந்து விடு!" என்றான்.

இதைக் கேட்டப் பிறகு மணிமேகலையின் மனம் உண்மையில் மாறிவிட்டது. கந்தமாறனிடம் அவள்மிக்க பிரியம் வைத்திருந்தாள். அவனைக் கொல்ல முயற்சி செய்த பகைவனைத் தான் மணந்து கொள்வதுஇயலாத காரியந்தான். ஆகையால் வந்தியத்தேவனை மறக்க முயன்றாள். ஆயினும் இலேசில் முடிகிறகாரியமாயில்லை, அடிக்கடி, எதிர்பாராத சமயங்களில், அவனுடைய புன்னகை ததும்பிய முகம் அவள்மனக்கண்ணின் முன்பு வந்து கொண்டிருந்தது. பகற் கனவுகளிலும் வந்தது, இராத்திரியில் கண்ட கனவுகளிலும்வந்தது!

இதனாலெல்லாம் சில மாத காலமாக மணிமேகலை அவளுக்கு இயற்கையான குதூகலத்தைஇழந்திருந்தாள். சோகமும் சோர்வும் அவளைப் பீடித்தன. கலியாணப் பருவம் வந்துவிட்டது தான் இதற்குக்காரணம் என்று முதியோர் நினைத்தார்கள். பிராயமொத்த தோழிகள் அவளை அது குறித்துப் பரிகாசம்செய்தார்கள். வேடிக்கை விளையாட்ட கள் மூலம் அவளை உற்சாகப்படுத்த தோழிமார்கள் முயன்றார்கள் அதுஒன்றும் பலிக்கவில்லை.

மறுபடியும் சென்ற சில நாளாக மணிமேகலை சிறிது உற்சாகம் கொள்ளத் தொடங்கியிருந்தாள். மதுராந்தகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்கும் எண்ணத்தை அவள் பெற்றோர்களும் தமையன் கந்தமாறனும்கைவிட்டதை அறிந்ததில் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும் பட்டத்துஇளவரசருமான ஆதித்த கரிகாலருக்கு மணிமேகலையைக் கொடுப்பது பற்றி அவர்கள் ஜாடைமாடையாகப்பேசியது அவள் காதில் விழுந்தது.

ஆதித்த கரிகாலரின் வீர, தீர பராக்கிரமங்களைப் பற்றி அறியாதவர்கள், ஆண்களிலோ,பெண்களிலோ தமிழகத்தில் யாரும் இல்லை. அவர் ஏதோ காரணத்தினால் மணம் புரிந்து கொள்ள மறுத்துவருகிறார் என்பதையும் அறிந்திருந்தார்கள். அப்படிப் பட்டவரை மணந்து கொள்வது என்றால், அது கனவிலும்கருத முடியாத பாக்கியம் அல்லவா? இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதிலும் எத்தனை ராஜகுலப் பெண்கள் அந்தப் பேறு பெறுவதற்காகத் தவம் கிடக்கிறார்கள்; இதையெல்லாம் எண்ணி மணிமேகலை ஒருவாறு உற்சாகம்கொண்டாள்.

காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலரும், தஞ்சாவூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரும் கடம்பூர்மாளிகைக்கு விருந்தாளிகளாக வரப்போகும் செய்தி அவளுக்கு மீண்டும் பழைய மாதிரி குதூகலத்தைஅளித்தது. இந்தத் தடவை பழுவேட்டரையர் தம் இளையராணியையும் அழைத்து வருகிறார். நந்தினிதேவி தன்தமையன் உயிரைக் காப்பாற்றியவள். அவளுடைய அழகையும் குணத்தையும் அறிவாற்றலையும் பற்றி மணிமேகலைகந்தமாறனிடமிருந்து ரொம்பவும் கேள்விப்பட்டிருந்தாள். இந்தப் புதிய கலியாணப் பேச்சுக்குக்காரணமானவளே பழுவூர் இளையராணி தான் என்றும் கந்தமாறன் சொல்லியிருந்தான். அவள் கடம்பூர்அரண்மனையில் இருக்கும்போது அவளைத் தக ்கபடி உபசரிப்பதில் மணிமேகலை முன்னால் நிற்க வேண்டும் என்றும்சொல்லியிருந்தான்.மணிமேகலையின் உள்ளமும் அதற்குத்தக்க பரிபக்குவம் அடைந்திருந்தது. பழுவூர்ராணியிடம் நல்லபடியாக சிநேகம் செய்து கொண்டு அவளுடைய பழக்கத்தினால் தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களைநாகரிகத்தில் தோற்கடிக்கக் கூடியவளாகத் தான் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

ஆதலின் ஒருவார காலமாக மணிமேகலை ஒரே உற்சாகத்தில் மூழ்கியிருந்ததுடன், பரபரப்புடன்அரண்மனையில் அங்குமிங்கும் ஓடி விருந்தாளிகளுக்கு வேண்டிய வசதிகளை மேற்பார்வை செய்வதில்ஈடுபட்டிருந்தாள். முக்கியமாகப் பழுவூர் இளையராணிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரண்மனைப் பகுதியில் சகலவசதிகளும் ஏற்படுத்தி வைப்பதில் அவள் கவனம் செலுத்தினாள். தமையன் வேறு சொல்லியிருந்தான் அல்லவா?ஆகையால் அரண்மனைப் பணியாளர்களை வறுத்து எடுத்து விட்டாள். அவளுடைய தோழிகளையும் வதைத்துவிட்டாள். பழுவூர் ராணி தங்கப் போகும் அறையில் ஒவ்வொரு பொருளையும் முப்பது தடவை பெயர்த்து எடுத்துவெவ்வேறு இடத்தில் வைக்கும்படி வற்புறுத்தினாள்.

இளவரசர் ஆதித்த கரிகாலர் தம்முடைய சிநேகிதர்களுடன் தங்கப் போகும் அறைகளையும் அடிக்கடிப்போய்ப் பார்த்து வந்தாள். யாரோ பார்த்திபேந்திரன் என்பவன் அவருடன் வரப் போகிறானாம். அவன்எப்படிப்பட்டவனோ, என்னமோ? இந்தக் காலத்தில் யார் எவ்விதம் மாறுவார்கள் என்று யார் கண்டது? தன்தமையனுடைய சிநேகிதனாயிருந்த வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலரின் பரிவாரத்தைச் சேர்ந்தவன்தான்!அவன் மட்டும் இத்தகைய சிநேகத் துரோகியாக மாறாதிருந்தால், இப்போது அவனும் வந்து கலந்து கொள்வான்அல்லவா? ஆம்! எவ்வளவுதான் மணிமேகலை வேறு பரபரப்பான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்தச்சிநேகத் துரோகியை அடியோடு மறக் முடியவில்லை!

பழுவூர் ராணி அன்று இரவே அநேகமாக வந்து விடுவாள் என்று சொன்னார்கள். ஆகையால்கடைசியாக நந்தினியின் அறை அலங்காரத்தை மணிமேகலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். அப்போதுபழுவூர் ராணிக்காகச் சுவர் ஓரமாகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் எதிரில்வந்தாள்.தன்னுடைய முகத்தை அதில் பார்த்துக் கொண்டாள். சிறிது நேரம் நிதானமாகவே பார்த்தாள். அப்படியொன்றும் தன் முகம் அழகில் குறைந்ததல்ல என்று தனக்குத்தானே முடிவு செய்து திருப்தி அடைந்தாள். கண்ணாடியை விட்டுப் போக எண்ணிய போது, அதில் இன்னொரு முகமும் தெரிந்தது. அது தன் முகத்தின் வெகுஅருகில் வந்து கன்னத்தோடு கன்னம் ஒட்டும் நிலைக்கு வந்து விட்டது.அவள் கனவில் அடிக்கடி தோன்றித்தொல்லை செய்து கொண்டிருந்த வாணர் குல வீரனின் முகந்தான் அது. அவளை அறியாமல் அவளுடைய வாய்குவிந்து, 'கூகூ!' என்று சத்தமிட்டது.

அடுத்த கணம் கண்ணாடியில் அவள் முகம் மட்டுந்தான் தெரிந்தது மற்றொரு முகம் மறைந்துவிட்டது.
 

பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
வாலில்லாக் குரங்கு




மணிமேகலை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். தான் சற்று முன் கண்ட தோற்றம் வெறும்பிரமைதானா? அல்லது கனவில் கண்ட தோற்றமா? கனவாக இருந்தால் தான் தூங்கிக் கொண்டல்லவா இருக்கவேண்டும்? தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டாள்; இல்லை, தான் தூங்கவில்லை. பழுவூர்இளையராணிக்காக ஆயத்தமாயிருக்கும் அந்தப்புர அறை அல்லவா இது? பளிங்குக் கண்ணாடியில் தன் முகம் இதோநன்றாகத் தெரிகிறது. அதோ குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கண்ணாடிக்கு எதிரே சுவரை உற்றுப்பார்த்தாள். அங்கே ஓர் இரகசிய வாசல் இருப்பது அவளுக்குத் தெரியும். அதை வௌியிலிருந்தும்திறக்கலாம்; உள்ளிருந்தும் திறக்கலாம். மணிமேகலை அந்த இடத்தில் சுவர் ஓரமாக நின்று காதைச்சுவரோடு ஒட்டி வைத்து உற்றுக் கேட்டாள். அவ்விடத்தில் சுவரோடு சுவராக இருந்த இரகசியக் கதவுமரத்தினால் ஆனதுதான். ஆகையால் உள்ளே வேட்டை மண்டபத்தில் ஏதோ ஓசைப் பட்டது போல் கேட்டது.

மணிமேகலை மெதுவாக இரகசியக் கதவை திறந்தாள். வேட்டை மண்டபத்தில் எட்டிப் பார்த்தாள்.அந்த மண்டபத்தின் பெரும் பகுதியில் இருள் சூழ்ந்திருந்தது. ஒரு மூலையில் சிறிய அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று அச்சிறிய விளக்கின் ஒளி மங்கிற்று, அடுத்த கணம் முன் போல்பிரகாசித்தது. ஏதோ ஓர் உருவம் அவ்விளக்கின் முன்புறமாகக் குறுக்கே சென்றது போலிருந்தது. அக்காரணத்தினால்தான் விளக்கு ஒரு கணம் மறைந்து அடுத்த கணம் பிரகாசித்திருக்க வேண்டும். அப்படிவிளக்கை ஒரு கணம் மறைத்த உருவம் அதன் முகம் - தான் சற்று முன் கண்ணாடியில் கண்ட முகம்தானா? அல்லதுஇதுவும் தன் சித்தக் கோளாறுதானா?

மணிமேகலை எட்டிப் பார்த்தபடியே கையைத் தட்டினாள், "யார் அங்கே?" என்று மெல்லிய குரலில்கேட்டாள். பதிலுக்கு ஒரு கனைப்புக் குரல் கேட்டது. வௌவால் ஒன்று தான் மேல் கூரையில் தொங்கியஇடத்திலிருந்து கிளம்பி 'ஜிவ்'வென்று பறந்து போய், கூரையில் இன்னொரு இடத்தைப் பற்றிக் கொண்டுதொங்கிற்று. மறுபடியும் மிக மிக இலேசான இருமல் சத்தம்.

மணிமேகலை அவ்வாசற்படியில் நின்றபடியே, "அடியே சந்திரமதி!" என்று உரத்த குரலில் கூறினாள்.

"ஏன் அம்மா!" என்று பதில் வந்தது.

"கை விளக்கை எடுத்துக் கொண்டு உடனே இங்கு வா!" என்றாள் மணிமேகலை.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பணிப்பெண் கையில் விளக்குடன் வந்தாள். "இங்கேதான் விளக்குநன்றாக எரிகிறதே? எதற்கு அம்மா, விளக்கு?"

"வேட்டை மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்க்க வே ்டும். ஏதோ ஓசை கேட்டது."

"வௌவால் இறகை அடித்துக் கொண்டிருக்கும், அம்மா! வேறு என்ன இருக்கப் போகிறது?"

"இல்லையடி! சற்று முன் இந்தப் பளிங்குக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்றுஎன் முகத்துக்குப் பக்கத்தில் இன்னொரு முகம் தெரிந்ததடி!"

"அந்த முகம் எப்படி இருந்தது? மன்மதன் முகம் போல் இருந்ததா? அர்ச்சுனன் முகம் போல் இருந்ததா?" என்று கூறிவிட்டுப் பணிப்பெண் சிரித்தாள்.

"என்னடி, சந்திரமதி! பரிகாசமா செய்கிறாய்?"

"இல்லை, அம்மா இல்லை! நீங்கள் அடிக்கடி கனவில் காண்பதாகச் சொன்னீர்களே? அவர்தான்இப்போது கண்ணாடியில் தோன்றினாரோ?"

"ஆமாண்டி, சந்திரமதி! ஆனால் ரொம்ப ரொம்ப நிஜம் போலிருந்தது."

"எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தான் ஒரு சமயம் சித்தப்பிரமை பிடிக்கும். உங்களுக்கும்இன்னும் இரண்டொரு நாள் தான் அப்படி இருக்கும். நாளைக்குக் காஞ்சியிலிருந்து வரும் இளவரசரைப் பார்த்துவிட்டீர்களானால், அந்தப் பழைய முகம் அடியோடு மறந்து போய்விடும்."

"அது இருக்கட்டுமடி! இப்போது இந்த வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்க்கலாம், வா!"

"வீண் வேலை, அம்மா! வேட்டை மண்டபத்தில் ஒரே தூசியும் தும்புமாக இருக்கும் சேலை வீணாய்ப் போய்விடும்!"

"போனால் போகட்டுமடி!"

"இருமலும் தும்மலும் வரும். நாளைக்கு எல்லோரும் வரும் சமயத்தில்..."

"சும்மா வரட்டும், வேட்டை மண்டபத்தை இப்போது சோதித்துப் பார்த்தேயாக வேண்டும்; விளக்கை அசைத்து அணைத்து விடாமல் எடுத்து வா!"

இவ்விதம் கூறிக் கொண்டே மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் பிரவேசித்தாள். தோழியும்விளக்குடன் அவளைத் தொடர்ந்து வந்தாள்.

இருவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். சந்திரமதி கையிலிருந்த தீபத்துக்கு மேலாக நோக்கி உயிர் அற்ற மிருகங்களை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தாள். மணிமேகலையோ சில சமயம் தரையிலும் பார்த்தாள். தரையில் படிந்திருந்த புழுதியில் அங்குமிங்கும் கால் சுவடுகள் இருந்ததைக் கவனித்துக் கொண்டாள்.

"அம்மா, அதோ!" என்றாள் சந்திரமதி,

"என்னடி இப்படிப் பதறுகிறாய்?"

"அதோ அந்த வாலில்லாக் குரங்கு அசைந்தது போலிருந்தது!"

"உன்னைப் பார்த்து அது தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தியதாக்கும்?"

"என்ன அம்மா, என்னைக் கேலி செய்கிறீர்களே?"

"நான் பிரமைபிடித்து அலைகிறேன் என்று நீ மட்டும் என்னைப் பரிகாசம் செய்யவில்லையா?"

"ஒருவேளை உங்கள் கண்ணாடியில் தெரிந்த முகம் அந்தக் குரங்கின் முகம்தானோ என்னமோ! நாம் வந்த வாசலுக்கு நேரே இருக்கிறது, பாருங்கள்! குரங்கு மறுபடியும் அசைகிறது!"

"சீச்சீ! உன் விளக்கின் நிழலடி! விளக்கின் நிழல் அசையும் போது அப்படிக் குரங்கு அசைவதுபோலத் தெரிகிறது வா போகலாம்! இங்கே ஒருவரையும் காணோம்!"

"அப்படியானால் அந்தக் குரங்கு முகம்தான் கண்ணாடியில் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அதோ மேலே உட்கார்ந்திருக்கிறதே, அந்த ஆந்தையின் முகமாக இருக்கலாம். அது நம்மைப் பார்த்து எப்படி விழிக்கிறது பாருங்கள்!"

"என்னை ஏன் சேர்த்துக்கொள்கிறாய்? உன் அழகைப் பார்த்துச் சொக்கிப் போய்த்தான் அந்த ஆந்தை அப்படிக் கண்கொட்டாமல் பார்க்கிறது!"

"பின்னே, தங்களைக் கண்ணாடியில் எட்டிப் பார்த்த முகம் யாருடைய முகமாயிருக்கும்?"

"அடியே! எனக்குத் தான் சித்தப்பிரமை என்று நீ முடிவு கட்டி விட்டாயே? என் கனவில் அடிக்கடிதோன்றும் முகம் கண்ணாடியிலும் தோன்றியிருக்கலாம். அந்தச் சுந்தர முகத்தைப் பார்த்த கண்ணால் இந்தக்குரங்கையும் ஆந்தையையும் பார்க்க வேண்டி வந்ததே என்று எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, வாடி, போகலாம்!கண்ணாடியில ் இன்னொரு தடவை அந்த முகம் தெரியுமா என்று பார்க்கிறேன்!"

இரண்டு பெண்களும் மறுபடியும் வந்த வழியே புகுந்து அந்தப்புற அறைக்குள்ளே போனார்கள்.

வாலில்லாக் குரங்குக்குப் பின்னாலிருந்து வந்தியத்தேவன் வௌியில் வந்தான். இரண்டு மூன்றுதடவை தும்மி மூக்கில் புகுந்திருந்த தூசி துப்பைகளைப் போக்கிக் கொண்டான்.

தன்னை அவ்வளவு நன்றாக மறைத்திருந்த வாலில்லாக் குரங்குக்குத் தனது நன்றியைச் செலுத்தினான்.

"ஏ குரங்கே! நீ வாழ்க! அந்தப் பணிப்பெண் என் முகத்தை உன் முகத்தோடு ஒப்பிட்டாள். அப்போது எனக்குக் கோபமாய்த்தான் இருந்தது. வௌியில் வந்து விடலாமா என்று கூட எண்ணினேன், நல்ல வேளையாய்ப் போயிற்று மனத்தை அடக்கிக் கொண்டேன். நீ மட்டும் இங்கே ஆள் உயரத்துக்கு நின்றிராவிட்டால் என் கதி என்ன ஆயிருக்கும்? அந்தப் பெண்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பேன்! குரங்கே! நீ நன்றாயிருக்க வேணும்!"

இப்படிச் சொல்லி முடிக்கும்போதே, அந்தப் பெண்களிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தாலும் அப்படிஒன்றும் விபரீதமாகப் போயிராது என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது. அவர்கள் யார் என்பதைமுன்னமே ஊகித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் பேசிய வார்த்தைகள் யாவும் அவன் காதில் நன்றாய் விழுந்தன. அதிலும் மணிமேகலை உரத்த குரலில் கணீர் என்று பேசினாள். கனவில் கண்ட முகத்தைப் பற்றியும் கண்ணாடியில் பார்த்த முகத்தைப் பற்றியும் அவள் ஏதோ பேசினாளே, அது என்ன? பழைய சம்பவங்கள் அவனுக்கு நினைவு வந்தன. கந்தமாறன் அடிக்கடி இவளிடம் தன்னைப் பற்றி பேசியிருப்பதாகச் சொல்லியிருக்கிறான். முன் தடவை இந்த மாளிகைக்கு வந்திருந்தபோது அவளை அரைகுறையாகப் பார்த்துச் சென்றதும், கந்தமாறன் அவளை வேறு பெரிய இடத்தில் மணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னதும் ஞாபகத்துக்கு வந் ன. இந்தப் பேதைப் பெண் ஒருவேளை அவளுடைய மனத்தை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாளா, என்ன...?

அதைப்பற்றி யோசிப்பதற்கு இப்போது நேரம் இல்லை; வௌியேறும் வழியைப் பார்க்க வேண்டும். யானைத் தந்தப் பிடியுள்ள வழி அந்தப்புரத்துக்குள் போகிறது. ஆகையால் அது தனக்குப் பயன்படாது. தான்வந்த வழியைத்தான் தேடிப் பிடிக்க வேண்டும். இரகசிய வழிகளின் கதவுகளை உள்ளேயிருந்து திறப்பதற்கும்வௌியிலிருந்து திறப்பதற்கும் வெவ்வேறு முறைகள் உண்டு என்பது அவனுக்குத் தெரிந்ததே. திறப்பது எப்படிஎன்று கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கலாம். ஆனால் இரகசிய வழி எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் அல்லவாதிறப்பதற்கு வழி கண்டுபிடிக்கலாம்? சுவரை எவ்வளவு உற்று உற்றுப் பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை;வௌிச்சமும் போதவில்லை. தான் புகுந்த இடத்துக்குப் பக்கத்தில் முதலை ஒன்று கிடந்தது என்பது அவன்நினைவுக்கு வந்தது. அங்கே போய் அருகிலுள்ள சுவர்ப் பகுதியையெல்லாம் தடவிப் பார்த்தால், ஒருவேளைவௌியேறும் வழி புலப்படலாம்.

இவ்வாறு நினைத்து முதலைக்கு அருகில் சென்று சுற்றுப் பக்கத்துச் சுவரையெல்லாம் தடவி தடவிப்பார்த்தான் ஒன்றும் பயன்படவில்லை. நேரமாக ஆகக் கவலை அதிகரித்து வந்தது. இது என்ன தொல்லை?நன்றாக இந்தச் சிறைச்சாலையில் அகப்பட்டுக் கொண்டோமே? கடவுளே! அந்தப்புரத்துக்குள் புகுவதைத் தவிரவேறு வழி இல்லை போலிருக்கிறதே! அப்படி அந்தப்புரத்துக்குள் புகுந்தால் அதில் எத்தனை அபாயங்கள்!ஒருவேளை மணிமேகலை தன்னிடம் அனுதாபம் காட்டலாம். ஆயினும் தான் அவளிடம் இங்கே இப்படிஇரகசியமாக வந்ததற்கு என்ன காரணம் சொல்வது? "உன்னிடம் கொண்ட காதலினால் வந்தேன்!" என்றுசொல்லலாமா? அது எவ்வளவு கொடூரமான பொய்யாயிருக்கும்? துணிந்து அத்தகைய பொய் சொன்னாலும் அவள்நம்புவாளா? மணிமே கலை மட்டும் தனியாய் இருப்பாள் என்பது என்ன நிச்சயம்? மற்றப் பெண்பிள்ளைகளுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டால்? சம்புவரையர் அறிந்தால் கட்டாயம் தன்னைக் கொன்றேபோடுவார்?

மறுபடியும் வந்தியத்தேவனுடைய கவனம் தரையில் கிடந்த முதலையின் மீது சென்றது. அதன்பேரில் அவனுக்குக் கோபமும் வந்தது. "முதலையே! எதற்காக இப்படி வாயைப் பிளந்து கொண்டேஇருக்கிறாய்!" என்று சொல்லிக் கொண்டே அதை ஓங்கி ஒரு உதை உதைத்தான். உதைத்த போது முதலைகொஞ்சம் நகர்ந்தது. அதே சமயத்தில் சுவர் ஓரமாகத் தரையில் ஒரு சிறிய பிளவு தெரிந்தது! "ஆகா!நீதானா வழியை அடைத்துக் கொண்டிருக்கிறாய்? முட்டாள் முதலையே! முன்னாலேயே சொல்வதற்கு என்ன?" என்றுசொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் குனிந்து முதலையைப் பிடித்து நகர்த்தினான். முதலை நகர நகரச் சுவர்ஓரத்தில் துவாரம் பெரிதாகி வந்தது கீழே படிகளும் தெரிந்தன.
 

பக்க தலைப்பு



*எட்டாம் அத்தியாயம்
இருட்டில் இரு கரங்கள்




கடம்பூர் அரண்மனை இரகசிய வழிகளின் வாசல்கள் எவ்வளவு சாமர்த்தியமாகஅமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி வந்தியத்தேவன் வியந்தான். அரை குறையாக அவற்றைக் குறித்துஅறிந்தவன், அவசரமாக இறங்கவோ ஏறவோ முயற்சித்தால் அபாயம் நேரலாம். பாதிப் படிகளில்இறங்கும்போது முதலை நகர்ந்து விட்டால் சுவர் இடுக்கில் அகப்பட்டுக் கொண்டு திண்டாட வேண்டியதாகும்.

முதலை அசையாமல் நிற்கிறதா என்று நிதானித்துப் பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் துவாரத்தண்டைவந்து கீழே கால் வைக்கப் போனான். ஆ! அது என்ன? பில வழியில் காலடி சத்தம் கேட்கிறதே!வருகிறது யார்? ஒருவேளை ஆழ்வார்க்கடியானாயிருக்குமோ? தன்னைத் தேடி வருகிறானோ? அவன் இங்கு வந்துசேராமல் தடுத்து விடுவதே நல்லது. இல்லை இல்லை, வருகிறவன் ஒருவன் இல் ை. ஐந்தாறு பேர் வருவதுபோல காலடிச் சத்தம் கேட்கிறது. அப்படியானால் இடும்பன்காரியும் அவனுடைய கூட்டாளிகளுமாயிருக்கலாம். வந்தியத்தேவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று மறுபடியும் வாலில்லாக் குரங்கின் பின்னால் மறைந்துகொண்டான். ஆகா! இரகசிய வழியைத் திறந்து வைத்து விட்டு வந்து விட்டோமே? அதனால் ஏதேனும்சந்தேகம் ஏற்படுமா? இல்லை, இல்லை! நாம் வரும்போது அந்த வழி திறந்துதானிருந்தது. நாம் மேற்படியில்ஏறிய பிறகு தான் வழி மூடிக் கொண்டது! ஆகையால் திறந்திருப்பதே நல்லதாய்ப் போயிற்று. அதோதுவாரத்தின் வழியாகத் தலை ஒன்று தெரிகிறது. இடும்பன்காரியின் தலைதான்! இதோ மேற்படியில் ஒருகாலை வைத்து நின்று சுற்று முற்றும் அவன் பார்க்கிறான். ஒரு கால் மட்டும் கீழே இருக்கிறது. துவாரம்தானாக மூடிக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு அப்படி அவன் ஒரு காலைக் கீழ்ப் படியில் வைத்துக்கொண்டிருக்கிறான் போலும்!

அடேடே! இந்தப் பக்கத்தில் என்ன வௌிச்சம்! சுவரில் யானை முகம் இருந்த இடத்தை விட்டுப்பெயர்கிறதே! அந்தப்புர வழி புலப்படுகிறதே! அந்த வாசல் வழியாக வருகிறது யார்? அதோமணிமேகலையல்லவா தானே கையில் விளக்கு ஏந்திக் கொண்டு வருகிறாள்!

இடும்பன்காரி ஒரே பாய்ச்சலில் மேலேறி வருகிறான்; அவன் வந்த வழி மூடிக்கொள்கிறது. இடும்பன்காரி தன் தலைப்பாகைத் துணியை எடுத்துக் கொண்டு அருகிலேயிருந்த புலியின் மேலுள்ள தூசை அவசரமாகத் தட்டத் தொடங்குகிறான்! இந்நாடகத்தின் முடிவுதான் என்ன?

மணிமேகலை கை விளக்கைத் தூக்கிப் பிடித்து நாலு புறமும் பார்த்தாள். இடும்பன்காரியின் மீதுஅவள் பார்வை விழுந்ததும் அவனை அதிசயத்துடன் நோக்கினாள்.

இடும்பன்காரி தூசி தட்டுவதை நிறுத்திவிட்டுப் பதிலுக்கு மணிமேகலையை வியப்புடன் பார்த்தான்.

"தாயே! இது என்ன? இ ்த வேளையில் இங்கு எதற்காக வந்தது?" என்றான்.

"இடும்பா; நீதானா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று மணிமேகலை வினவினாள்.

"அம்மா! நாளை வருகிற விருந்தாளிகளை இந்த வேட்டை மண்டபத்துக்கு அழைத்து வந்து காட்ட வேண்டியிருக்குமல்லவா? அதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். சின்ன எஜமான் காஞ்சிக்குப் போகும்போது அவ்விதம் கட்டளை இட்டுச் சென்றார்கள்."

"ஆம், இடும்பா! இந்த அரண்மனையிலேயே சின்ன எஜமானுக்கு உன்னிடமும், என்னிடமுந்தான்நம்பிக்கை. பழுவூர் ராணியம்மாள் தங்கப்போகிற அறையில் ஏற்பாடு சரியாயிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது இங்கே என்னமோ சத்தம் கேட்டது. நீயாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்,வேறு யாருக்கு இந்த அரண்மனையின் இரகசிய வழிகள் தெரியும்? எத்தனை நேரமாக நீ இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறாய்?'

"ஒரு நாழிகைக்கு மேலே இருக்கும், தாயே! இன்னும் ஒரு நாழிகை வேலை இருக்கிறது. தாங்கள் தனியாகவா இங்கே வந்தீர்கள் அந்த வாயாடிப் பெண் சந்திரமதி எங்கே?"

"ஏதோ சத்தம் கேட்கிறது என்று நான் அவளைப் போய்த் தந்தையை அழைத்து வரச் சொன்னேன். நீதானே இங்கு இருக்கிறாய்? நான் போய் அவளைத் தடுத்து நிறுத்தி விடுகிறேன்."

இவ்விதம் சொல்லிக் கொண்டே மணிமேகலை விளக்கைத் தூக்கிப் பிடித்து இடும்பன்காரியின் முகமாறுதலைக் கவனித்தாள். அடுத்தாற் போல், வாலில்லாக் குரங்கை நோக்கினாள். முன்னொரு தடவைஅசைந்தது போல், அது அசைந்ததையும் பார்த்துக் கொண்டாள்.

"ஆம், தாயே! எஜமானுக்கு இன்று எவ்வளவோ அலுவல், தாங்கள் போய் அவரைக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன்" என்றான் இடும்பன்காரி.

மணிமேகலை மறுபடியும் வந்த வழியே உள் ே போனாள் இரகசியக் கதவு மூடிக் கொண்டது.

இடும்பன்காரி யானை முகத்தினருகில் சென்று சற்று நேரம் சுவரண்டை காது கொடுத்து உற்றுக்கேட்டான். அடுத்த அறையில் சத்தம் ஒன்றும் இல்லை என்று நிச்சயம் அடைந்த பிறகு திரும்பி வந்தான். பிலத்துவாரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு இடுப்பு வரை கீழே படிகளில் இறங்கி நின்று கொண்டான்.

பிலத்துவாரத்தின் உட்புறமிருந்து ஆந்தையின் குரல் கேட்டது. பதிலுக்கு இடும்பன்காரி ஆந்தைக் குரல் ஒன்று கொடுத்தான்.

பில வழியில் ஆட்கள் நடந்து வரும் சத்தம் கேட்டது.

பின்னர் காரியங்கள் வெகு துரிதமாக நடைபெற்றன.

வௌவால் ஒன்று சடசடவென்று சிறகை அடித்துக் கொண்டு பறந்தது.

இடும்பன்காரி அதைப் பார்த்தான்.

பின்னாலிருந்து அவன் பேரில் வாலில்லாக் குரங்கு தடால் என்று விழுந்தது.

அது திடீரென்று விழுந்த வேகத்தினால் இடும்பன்காரியின் முழங்கால்கள் மடிந்து அவன் தடுமாறினான்.

அதனால் இன்னும் இரண்டு படிகள் அவன் கீழே இறங்க வேண்டியதாயிற்று.

தன் பேரில் விழுந்தது இன்னதென்று முதலில் இடும்பன்காரிக்குத் தெரியாமையால் அவன் உளறி அடித்துக் கொண்டு கைகளை வீசி உதறினான்.

பிறகு, உயிரற்ற வாலில்லாக் குரங்கு எப்படியோ தவறித் தன் பேரில் விழுந்திருக்கிறது என்று தெரிந்தது. மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டு அதைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான்.

இதற்குள் உயிருள்ள மனிதனுடைய கரங்கள் போன்ற இரண்டு கரங்கள் மேலேயிருந்து துவாரத்துக்குள்வந்து அவனை இன்னும் கீழே தள்ளி அமுக்கியது.

இடும்பன்காரியினால் அதை நம்பவே முடியவில்லை ஒரு கணம் அவனைப் பெரும் பீதி பிடித்துக் கொண்டது.

மறுபடியும் மேலும் கீழும் பார்த்தான்.

வாலில்லாக் குரங்கு தலை கீழாகத் துவார வழியில் இறங்கியிருப்பதைய ும், அதன் பாதி உடம்பு வரையில் கீழே வந்த பிறகு துவாரக் கதவு நெருங்கி வந்திருப்பதையும் கவனித்தான்.

இரண்டு மனிதக் கரங்களாகத் தோன்றியவை தன்னுடைய மனப் பிராந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டான்.

இதற்குள் பிலத்துவாரத்தில் வந்தவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள். முன்னால் வந்த ரவிதாஸன்,"அப்பனே! என்ன இது ? எதற்காக இப்படி உளறி அடித்துக் கொண்டு அலறினாய்? அபாயம் ஏதேனும் உண்டா?நாங்கள் திரும்பிப் போகவா?" என்று கேட்டான்.

"வேண்டாம், வேண்டாம்! அபாயம் ஒன்றுமில்லை. பிலத்துவாரக் கதவை திறக்கும்போது, இந்த ராட்சதக் குரங்கு எப்படியோ இடம் பெயர்ந்து என் தலையில் விழுந்து விட்டது! ஒரு கணம் நானும் பீதி அடைந்து விட்டேன். இப்போது இந்தக் குரங்கு மேலேயும் போகாமல் கீழேயும் வராமல் வழியை அடைத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்; இந்தக் குரங்கை அகற்றி வழியைச் சரிப்படுத்திவிடுகிறேன்" என்றான் இடும்பன்காரி.

தடுமாறி விழுந்த இடும்பன்காரியை மேலேயிருந்து அமுக்கித் தள்ளிய கரங்கள் யாருடைய கரங்கள்என்பதை நேயர்கள் ஊகித்திருப்பார்கள். வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டம் இச்சந்தர்ப்பத்திலும் அவன் பக்கம்இருந்தது.சரியான சமயத்தில் அவனுக்குச் சரியான யுக்தி தோன்றியது. இடும்பன்காரி பிலத்துவராத்தின்படிகளில் நின்றபடி வௌவாலைப் பார்த்த தருணத்தில் அவன் தலை மீது வாலில்லாக் குரங்கைத் தள்ளினான். பிறகு அவன் தன்னுடைய முகத்தைப் பார்க்க முடியாதபடி நின்று கொண்டு கைகளினால் அவனைப் பிடித்துக் கீழேஅமுக்கினான். அதன் பின்னர் வாலில்லாக் குரங்கையும் தலைகீழாகத் துவாரத்தினுள் தள்ளினான். கடைசியாக, முதலையையும் நகர்த்தி விட்டான்.

இவ்வளவையும் சில கண நேரத்தில் செய்து முடித்துவிட்டு வந்தியத்தேவன் யானை ம ுகத்தண்டைஓடினான்.யானைத் தந்தங்களைப் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தித் திருப்பினான்.

சுவரில் வழி உண்டாயிற்று ஆனால் மணிமேகலை உள்ளிருந்து வந்தது போன்ற விசாலமான வழி அல்ல. வட்ட வடிவமான குறுகலான வழி; அது கதவுக்குள் கதவாயிருக்கலாம். முழுக் கதவையும் திறப்பது எப்படி என்று யோசிக்க அது சமயம் அல்ல. அதற்குள் சதிகாரக் கூட்டம் வேட்டை மண்டபத்துக்குள் புகுந்து விடலாம் பிறகு தான் தப்புவது துர்லபமாகிவிடும்.

ஆகவே, திறந்த வழி குறுகலான வழியாக இருந்தாலும் அதற்குள் புகுந்து விடவேண்டியதுதான்.

தீர்மானித்தபடியே காரியத்தில் நிறைவேற்றத் துணிந்து, அந்த வட்ட வடிவமான துவாரத்தில் வந்தியத்தேவன் புகுந்தான். அவனுடைய தலையும் கைகளும் பாதி உடம்பும் உள்ளே வந்து விட்டன. மிச்சம் பாதி உடம்பு உள்ளே புகுந்து பிரயாசையாயிருந்தது. கைகளினால் தாவிப் பிடித்துக் கொள்ள ஒன்றும் அகப்படவில்லை. இச்சமயத்தில் உள்ளேயிருந்த தீபம் அணைந்து இருள் சூழ்ந்தது.

வந்தியத்தேவன் அபயம் கேட்கும் குரலில், "சந்திரமதி! சந்திரமதி! என்னைக் காப்பாற்று!"என்றான்.

கலகலவென்று சிரிக்கும் பெண்ணின் குரல் கேட்டது.

"சந்திரமதி! நீ இங்கே இருந்து கொண்டுதானா வேடிக்கை பார்க்கிறாய்? இது நன்றாயிருக்கிறதா?"

அதற்கு பதிலாக மறுபடியும் சிரிப்பு; அதைத் தொடர்ந்து "நீ இப்படி அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாக நுழைவது மட்டும் நன்றாயிருக்கிறதா?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

அது மணிமேகலையின் குரல் என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். ஆயினும் வேண்டுமென்றே"சந்திரமதி! நீ வரச் சொன்னதினால்தானே வந்தேன்! பின்னால் ஆட்கள் வருகிறார்கள் சீக்கிரம் என்னைஎடுத்து விடு இல்லாவிட்டால் விபரீதம் வரும்!" என்றான்.

"சந்திரமதி இவ்வளவு கெட்ட க்காரியா? இருக்கட்டும் உனக்கும் அவளுக்கு சேர்த்துப் புத்தி கற்பிக்கிறேன்!"

"ஓஹோ! தாங்கள் இளவரசி மணிமேகலையா? அம்மணி! இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னித்துக் காப்பாற்றி விடுங்கள்! இனி மேல் இம்மாதிரி தப்புக் காரியம் செய்ய மாட்டேன்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு!" என்று கெஞ்சினான் வந்தியத்தேவன்.

இருளில் இரு மெல்லிய கரங்கள் வந்தியத்தேவனுடைய தோள்களைப் பிடித்துத் தாங்கி மெள்ளக்கீழே தரையில் இறக்கிவிட்டன சுவரில் தோன்றிய துவாரம் மூடிக் கொண்டது.

"இளவரசி! உங்களுக்கு அனந்த கோடி வந்தனம்!" என்றான்.

"கொஞ்சம் பொறு! நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு வந்தனம் செலுத்து!"

"தாங்கள் என்னை என்ன செய்தாலும் சரிதான்! கொலைக்காரர்களிடமிருந்து என்னைத் தப்புவித்தீர்களே, அதுவே போதும்! அந்த அரக்கர் கைகளினால் சாவதைக் காட்டிலும் தங்களுடைய மணிக்கரத்தினால் சாகும்படி நேர்ந்தால் அது என்னுடைய பாக்கியம்தான்!"

"அடே அப்பா! பெரிய வீராதி வீரனாயிருக்கிறாயே? அப்படி உன்னைத் தேடி வரும் கொலைக்காரர்கள் யார்? கொஞ்சம் பொறு முதலில் விளக்கு ஏற்றி உன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கிறேன்!"

"அம்மணி! என் முகத்தை மறுபடியும் பார்க்க வேண்டுமா? தாங்கள் கண்ணாடியில் பார்த்துக்கொண்டபோது பின்னால் நின்று பார்த்த குரங்கு முகந்தான் என் முகம்! சந்திரமதி வர்ணித்தாளே?" என்றான்வந்தியத்தேவன்.

இருட்டில் சிரிப்பின் ஒலியும், கை வளைகள் குலுங்கும் ஓசையும் கேட்டன. வந்தியத்தேவன் அந்தஅறைக்குள் தலையை நீட்டியபோது அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை மணிமேகலை மூடிவிட்டாள். அதனால் இருட்டாயிற்று; இப்போது அதன் மூடியை அகற்றியதும் தீபம் சுடர்விட்டு ஒளிர்ந்தது. அதன் ஒளியில்வந்தியத்தேவனுடைய ுகத்தைப் பார்த்த வண்ணம் மணிமேகலை மெய்மறந்து நின்றாள்.

பக்கத்து வேட்டை மண்டபத்திற்குள் தடதடவென்று பலர் பிரவேசிக்கும் சத்தம் அச்சமயம் கேட்டது.
 

பக்க தலைப்பு



ஒன்பதாம்அத்தியாயம்
நாய் குரைத்தது!




மணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள்.

வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம் என்ன சொல்லி விட்டு எப்படி தப்பிச் செல்வது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.
இச்சமயம் எங்கேயோ தூரத்திலிருந்து ஒரு குரல் "அம்மா! என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டது.

"இல்லையடி, உன் வேலையைப் பார்!" என்றாள் மணிமேகலை உடனே அவளுடைய திகைப்பு நீங்கியது.

சற்று முன் வந்தியத்தேவன் புகுந்து வந்த துவாரத்தின் அருகில் சென்று உட்பக்கத்துத் தாளையிட்டாள்.பின்னர் வந்தியத்தேவனுக்குச் சமிக்ஞை காட்டி அந்த அறையிலேயே சற்றுத் தூரமாக அழைத்துச் சென்றாள். சட்டென்று திரும்பி நின்று "ஐயா! உண்மையைச் சொல்லும்! சந்திரமதி உம்மை அழைத்ததாகக் கூறினீரே,அது நிஜமா?" என்று கேட்டாள்.

"ஆம், அம்மணி!"

"எப்போது, எங்கே பார்த்து உம்மை அழைத்தாள்?"

"சற்று முன்னால்தான்! அடுத்த அறையில் நான் குரங்கின் பின்னால் மறைந்து நின்றபோது நீங்கள்இருவரும் வந்து பார்த்துவிட்டுத் திரும்பினீர்கள். நீங்கள் திரும்பிய பிறகு அவள் என்னைப் பார்த்து,'குரங்கே! நீ என்னுடைய அறைக்கு வந்து இருக்கிறாயா? வேண்டாத சமயத்தில் வருகிறவர்களைப் பயமுறுத்திஅனுப்பச் சௌகரியமாயிருக்கும்!' என்றாள். அது தங்கள் காதில் விழவில்லை போலிருக்கிறது!"

மணிமேகலை இளநகை புரிந்தவண்ணமாக "காதில் விழுந்திருந்தால் அவளைச் சும்மா விட்டிருப்பேனா?"என்றாள்.

"இளவரசி! தங்கள் தோழி பேரில் கோபிப்ப ில் பயன் என்ன? என் முகமும் வாலில்லாக்குரங்கின் முகமும் ஒன்று போலிருந்தால் அதற்குச் சந்திரமதி என்ன செய்வாள்?"

"உமது முகத்துக்கும் வாலில்லாக் குரங்கின் முகத்துக்கும் வெகு தூரம்!"

"குரங்கின் முகத்துக்கும் அதற்கு மேலே தொங்கிய ஆந்தையின் முகத்துக்கும் உள்ள தூரம் போலிருக்கிறது."

"உமது முகம் குரங்கு முகமும் அல்ல; ஆந்தை முகமும் அல்ல. ஆனால், குரங்கின் சேஷ்டையெல்லாம் உம்மிடம் இருக்கிறது. சில சமயம் ஆந்தையைப் போலவும் விழிக்கிறீர்! சற்று முன்னால் இதோ இந்தக் கண்ணாடியில் எட்டிப் பார்த்து விழித்தது நீர் தானே?"

"ஆம், இளவரசி, நான்தான்!"

"எதற்காக, உடனே பின்வாங்கிக் கதவைச் சாத்திக் கொண்டீர்?"

"இந்தக் கண்ணாடியில் என் முகத்துக்கு அருகில் ஒரு தேவ கன்னிகையின் முகம் போலத் தெரிந்தது. அந்த தேவ கன்னிகை என் முகத்தைப் பார்த்துப் பயந்து கொள்ளப் போகிறாளே என்று நான் பிடித்திருந்தயானைத் தந்தத்திலிருந்து கையை எடுத்தேன் கதவு தானாகச் சாத்திக் கொண்டது."

"அந்தத் தேவ கன்னிகை யார் என்பது உங்களுக்கு தெரியுமா?"

"அந்த க்ஷணம் எனக்குத் தெரியவில்லை பிறகு நினைத்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்."

"என்ன தெரிந்து கொண்டீர்?"

"நான் பார்த்தது தேவ கன்னிகை அல்ல; தேவகன்னிகைகள் ஓடி வந்து அடிபணிவதற்குரிய மணிமேகலாதேவி! கடம்பூர் சம்புவரையரின் செல்வக் குமாரி என்று தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆருயிர் நண்பன் கந்தமாறனுடைய அருமைத் தங்கை என்பதும் நினைவுக்கு வந்தது."

மணிமேகலையின் புருவங்கள் நெறித்தன. ஏளனமும் கோபமும் கலந்த புன்சிரிப்புடன், "அப்படியா?என் தமையன் கந்தமாறன் தங்களுடைய ஆருயிர் நண்பனா?" என்றாள்.

"அதில் என்ன சந்தேகம், இளவரசி! நாலு மாதங்களுக்கு முன்னால் நான் இங்கு ஒருநாள் வந்திருந்தது நினைவில் ையா? அந்தப்புரத்துக்குகூட வந்து தாய்மார்களுக்கு வணக்கம் செலுத்தினேனே! அது ஞாபகம் இல்லையா!"

"நன்றாய் ஞாபகம் இருக்கிறது. அதற்குள் மறந்து விடுமா? அந்த வல்லவரையர் வந்தியத்தேவர் என்னும் வாணர் குலத்து இளவரசர் தாங்கள்தானா?"

"ஆம் இளவரசி! தங்குவதற்கு அரண்மனையும் ஆளுவதற்கு இராஜ்யமும் இல்லாமல் 'அரையன்' என்றகுலப்பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழை நான் தான்! ஒரு காலத்தில் தங்கள் தமையன்என்னிடம் தங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லியதுண்டு. ஒரு காலத்தில் நானும் கந்தமாறனும் வடபெண்ணைநதிக்கரையில் காவல் செய்து கொண்டிருந்தபோது, தங்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். நானும் ஏதேதோகனவு கண்டு கொண்டிருந்தேன் பிறகு அந்த எண்ணத்தை மறந்து விட்டேன்."

மணிமேகலையின் உள்ளத்தில் ஓர் அதிசயமான எண்ணம் தோன்றியது. இவன் தன்னைக் குத்திக்கொல்ல முயன்றதாகக் கந்தமாறன் கூறினான். அது எதற்காக இருக்கும்? ஒருவேளை தன்னைப் பற்றியதாகவேஇருக்குமோ? தன்னை இவனுக்கு மணம் செய்து கொடுக்க போவதில்லை என்று சொன்னதற்காகக் கந்தமாறனுடன்சண்டையிட்டிருப்பானோ? இந்த எண்ணம் அவள் உள்ளத்தில் இன்பப் புயலை உண்டாக்கியது.

அதை அவள் கோபப் புயலாக மாற்றிக் கொண்டாள்.

"ஐயா! பழைய கதையெல்லாம் இப்போது வேண்டாம். இந்த அரண்மனையில் நீர் கள்ளத்தனமாகப்புகுந்ததின் காரணத்தைச் சொல்லும்; இல்லாவிடில் உடனே என் தோழியை அழைத்துத் தந்தைக்குச் சொல்லிஅனுப்பவேணும்" என்றாள்.

"இளவரசி! நான் இங்கு வந்த காரணத்தை முன்பே சொன்னேனே! சில கொலைகாரர்கள் என்னைக் கொல்லுவதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தபோது பூமியில் ஒரு துவாரம் தெரிந்தது. அது ஏதோ இரகசியப் பாதை என்று அறிந்து கொண்டேன். அதன் வழியாக ஓடித் தப்பிக்கலாம் என்று வ ்தபோது, அந்த வழி இங்கே கொண்டு வந்து சேர்த்தது!"

"ஐயா! சுத்த வீரர் என்றால் உமக்கே தகும். நானும் எத்தனையோ அஸகாய சூரர்களைப் பற்றிக்கேட்டிருக்கிறேன். ஆனால் உம்மைப்போல் ஓட்டத்தில் சூரனைப் பற்றிக் கேட்டதில்லை. உத்தரகுமாரன்உம்மிடம் பிச்சை வாங்க வேண்டியது தான்!"

வந்தியத்தேவன் மனத்தில் சுரீர் என்றது. தான் அசட்டுப் பெண் என்று நினைத்த மணிமேகலை இப்படித்தன்னைக் குத்திக் காட்டும்படி ஆகிவிட்டதல்லவா?

"தேவி! அவர்கள் ஏழெட்டுப் பேர்! நான் ஒருவன். அவர்கள் ஆயுதபாணிகள் என்னிடம் ஆயுதமே இல்லை. என்னுடைய அருமை வேல் கொள்ளிடத்து வெள்ளத்தில் போய் விட்டது."

"ரொம்ப நல்லது! அந்தப் படுபாதக வேல், சிநேகிதனைப் பின்னாலிருந்து குத்திக் கொல்லும்வேல் ஆற்றோடு போனதே நல்லது!"

வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது அவன் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் மணிமேகலை, "உண்மையைக் கூறிவிடும் கொலைக்காரர்களிடம் தப்புவதற்காக ஓடிவந்தீரா? கொலை செய்வதற்காக இங்கு வந்தீரா?" என்று கேட்டாள்.

வந்தியத்தேவன் தீயில் காலை வைத்தவனைப் போல் துடித்து " சிவசிவா! நாராயணா! நான்யாரை கொலை செய்வதற்காக இங்கே வரவேணும்? என் ஆருயிர் சிநேகிதரின் அருமைத் தங்கையையா?எதற்காக?" என்றான்.

"நான் என்ன கண்டேன்? 'அருமை சிநேகிதன்' என்று வாய்கூசாமல் பொய் சொல்கிறீரே? அப்பேர்ப்பட்ட அருமை சிநேகிதனின் பின்னாலிருந்து முதுகிலே குத்திக் கொல்லுவதற்கு நீர் முயலவில்லையா? அது எதற்காகவோ, அதே காரணத்துக்காக, இங்கே யாரையேனும் கொலை செய்வதற்கு நீர் வந்திருக்கலாம்."

"கடவுளே! இது என்ன வீண் பழி? நானா கந்தமாறனின் முதுகில் குத்தினேன்? அப்படிப்பட்டகாரியத்தைச் செய்வதற்கு முன்னால் என் கையை வெட்டிக் கொண்டிருப்பேனே? இளவரசி! இத்தகைய படுபாதகமானபொய்யைத் தங்களிடம் ார் கூறினார்கள்?"

"என் அண்ணனே கூறினான். வேறு யாராவது கூறியிருந்தால் நான் நம்பியே இருக்க மாட்டேன்."

"கந்தமாறனா இப்படிக் கூறினான்? அப்படியானால் நான் உண்மையில் துர்ப்பாக்கியசாலிதான்!யாரோ அவனை முதுகிலே குத்தித் தஞ்சாவூர் மதில் சுவருக்கு அருகில் போட்டிருந்தார்கள். மூர்ச்சையாகிக்கிடந்த அவனை நான் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் குடிசையில் சேர்த்துக் காப்பாற்றினேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதியா இது? இளவரசி! எதற்காக அவனை நான் கொல்ல முயன்றேனாம்?ஏதாவது காரணம் சொன்னானா?"

"சொன்னான், சொன்னான்! நீர் என் அழகைப் பழித்து, அவலட்சணம் பிடித்தவள் என்று இகழ்ந்தீராம்.தஞ்சாவூர்ப் பெண்கள் என்னைவிட அழகிகள் என்று சொன்னீராம். அதனால் கந்தமாறன் கோபங்கொண்டு உம்மை நன்றாய்ப் புடைத்தானாம். நேருக்கு நேர் சண்டையிடக் கையினாலாகாமல் பின்னாலிருந்து குத்தி விட்டீராம்! இதெல்லாம் உண்மையா, இல்லையா?"

"பொய்! பொய்! பயங்கரமான பொய்; தங்களை அவலட்சணம் என்று சொல்வதற்கு முன்னால், என்நாக்கையே துண்டித்துக் கொண்டிருப்பேனே! கந்தமாறன் அல்லவா அவனுடைய சகோதரியை நான் மறந்துவிடவேண்டும் என்று வற்புறுத்தினான்?"

"எதற்காக?'

"இராஜ்யம் ஆளும் பேரரசர்கள் தங்களை மணந்து கொள்ளக் காத்திருப்பதால் தங்களை நான் மறந்துவிட வேண்டுமென்று வற்புறுத்தினான்."

"நீரும் அடியோடு என்னை மறந்து விட்டீராக்கும்!"

"என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. ஆனால் அது முதலாவது தங்களை என் அருமைச் சகோதரியாகக்கருதத் தொடங்கினேன். இளவரசி! உடனே கந்தமாறனிடம் என்னை அழைத்துப் போங்கள்! அல்லது அவனைஇங்கே அழையுங்கள். ஏன் இத்தகைய பெரும் பொய்யை அவன் சொன்னான் என்றாவது தெரிந்து கொள்கிறேன்,அல்லது உண்மையிலேயே அவன் அப்படி எண்ணிக் கொண்டிருந்தால், அந்த த் தப்பெண்ணத்தைப் போக்குகிறேன்."

"தஞ்சாவூரில் ஆரம்பித்த காரியத்தை இங்கே பூர்த்தி செய்து விடலாம் என்று வந்தீராக்கும்..."

"அப்படி என்றால்..."

"அங்கே அவனைக் கொல்ல முயன்றீர் அந்த முயற்சி பலிக்கவில்லை..."

"கடவுளே! கந்தமாறனைக் கொல்லுவதற்கு அவனுடைய அரண்மனையைத் தேடியா வருவேன்!"

"இரகசிய வழியாக வந்தது வேறு எதற்காக?"

"அதோ, உற்றுக் கேளுங்கள்! என்னைக் கொல்ல வந்தவர்கள் அடுத்த அறையில் இன்னும்இருக்கிறார்கள். அவர்கள் நடமாடும் சத்தமும் பேசும் குரல்களும் கேட்கவில்லையா?"

"அவர்கள் எதற்காக உம்மைக் கொல்ல வரவேணும்?"

"அவர்களைப் பார்த்தால் மந்திரவாதிகள் போலிருக்கிறது. ஒருவேளை நரபலி கொடுக்கும் கூட்டமாயிருக்கலாம்."

"சகல இலட்சணங்களும் பொருந்திய ராஜகுமாரனாகிய உம்மை அதற்காகப் பிடித்தார்கள் போலிருக்கிறது.." என்று கூறி மணிமேகலை சிரித்தாள்.

"அதுதான் எனக்கும் அதிசயமாயிருக்கிறது; இந்த ஆந்தை விழி விழிக்கும் குரங்கு மூஞ்சிக்காரனைஅவர்கள் எதற்காகப் பிடிக்க வந்தார்கள் என்று தெரியவில்லை. உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு ஒருசந்தேகம் உதிக்கிறது. ஒருவேளை என் நண்பன் கந்தமாறனே இப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருப்பானோ என்று. அவனிடம் உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள்! ஒன்று அவனுடைய தப்பபிப்பிராயத்தைப் போக்கிக்கொள்ளட்டும்; இல்லாவிட்டால் என்னை அவன் கையினாலேயே கொன்றுவிடட்டும். கொலைக்காரர்களைஎதற்காக ஏவ வேண்டும்? அம்மணி! உடனே கந்தமாறனை அழைத்து விடுங்கள்!"

"ஐயா! அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கந்தமாறன் ஊரில் இல்லை."

"எங்கே போயிருக்கிறான்?"

"காஞ்சிக்குக் கரிகாலரை அழைத்து வரப் போயிருக்கிறான். நாளை இரவு எல்லாரும் இங்கு வந்துவிடுவார்கள்; அதுவரையில் நீர்..."

"அதுவரையில் என்னை இங்கேயே இருக்கச் சொ ்கிறீர்களா? அது நியாயமல்ல!"

"இங்கே இருக்கச் சொல்லவில்லை இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் இங்கே பழுவூர் இளையராணிவந்து விடுவாள். பிறகு ஈ காக்காய் இங்கே வர முடியாது. பழுவேட்டரையர் எப்பேர்ப்பட்டவர் என்பதுஉமக்குத் தெரிந்திருக்கும். அவர் உம்மை இங்கே கண்டால் உடனே கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிடச்செய்வார்! ஆ! அக்கிழவருக்குத்தான் பெண்டாட்டியின் பேரில் எவ்வளவு ஆசை!" என்று சொல்லி மணிமேகலைசிரித்தாள்.

வந்தியத்தேவன் முன் தடவை பழுவேட்டரையர் வந்த போது நடந்ததையெல்லாம் நினைத்துக்கொண்டான்.

"அப்படியா? பழுவேட்டரையருக்குப் பழுவூர் ராணி பேரில் ரொம்ப ரொம்ப ஆசையா?" என்றுகேட்டான்.

"அது நாடு நகரம் எல்லாம் தெரிந்த விஷயம் ஆயிற்றே! போன தடவை, எட்டு மாதங்களுக்குமுன்னால் இங்கே ஒரு தடவை அவர்கள் வந்திருந்தார்கள். பழுவூர் ராணி அந்தப்புரத்துக்கு வரக் கூடக் கிழவர்விடவில்லை! அப்படிக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கிறார். இந்தத் தடவை சில நாள் இங்கே இருக்கப்போகிறார்களாம். பழுவூர் ராணிக்குத் தனி அந்தப்புரம் வேண்டுமென்று ஒரே தடபுடல். இந்தத் தடவையாவதுஎங்களையெல்லாம் பார்க்கப் போகிறாளோ - பார்ப்பதற்குக் கிழவர் விடப் போகிறாரோ, தெரியவில்லை."

"அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்யட்டும்?"

"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் - ஆ! ஒரு யோசனை தோன்றுகிறது. என் தமையன் கந்தமாறனுடைய தனி ஆயுத அறை ஒன்று இந்த மாளிகையில் இருக்கிறது. அதில் உம்மைக் கொண்டு விடுகிறேன். நாளை சாயங்காலம் கந்தமாறன் வந்து விடுவான் அதுவரையில் அங்கேயே இரும். நீர் சொல்வதின் உண்மை, பொய்யைக் கந்தமாறனிடம் நேரில் நிரூபித்து விடலாம்..."

"இளவரசி! அது முறையன்று! மிகவும் ஆபத்தான காரியம்!"

"என்ன ஆபத்து?"

"அங்கே நான் எப்படி வ ந்து சேர்ந்தேன் என்று கந்தமாறன் கேட்டால் என்ன பதில் சொல்லுவது?"

"உள்ளது உள்ளபடி சொல்லுகிறது."

"உள்ளது உள்ளபடி நான் இப்போது சொன்னதை நீங்களே நம்பவில்லையே? அடுத்த அறையில் என்னைத் தேடி வந்த ஆட்கள் இருக்கும் போதே?"

"ஐயா! அதை இப்போதே சோதித்து விடுகிறேன்."

"என்ன சோதிக்கப் போகிறீர்கள்?"

"அடுத்த அறைக்குள் சென்று அந்த மனிதர்களைப் பார்த்து விசாரிக்கப் போகிறேன். அவர்கள் உம்மைக்கொல்ல வந்தவர்களா? அல்லது நீர் அழைத்து வந்தவர்களா என்று தெரிந்து கொண்டு வருகிறேன்."

"ஐயோ! அவர்கள் பொல்லாத துஷ்டர்கள் தாங்கள் அவர்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டால்..."

"என் அரண்மனையில் யார் என்னை என்ன செய்ய முடியும்? இதோ பாருங்கள்!" என்று கூறி மணிமேகலை யாருக்கும் தெரியாமல் தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய மடக்குக் கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"யாரும் என்கிட்ட வரமுடியாது. அப்படி ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால் நீர்தான் சூராதி சூரர்இங்கே இருக்கிறீரே!"

"அம்மணி! என்னிடம் தற்சமயம் ஆயுதம் ஒன்றுமில்லை."

"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நீர் கேட்டதில்லையா? உமது பெயரே வல்லவரையர் ஆயிற்றே? ஆயுதம் கையில் இருந்தால் பெண்பிள்ளைகள் கூடச் சண்டை போடுவார்கள். ஆண்பிள்ளைகள் எதற்கு? உமக்கு வீண் கவலை வேண்டாம். அங்கே ஒரு அறையில் தூசு தட்டிக் கொண்டிருந்தவன் எங்கள் அரண்மனை வேலைக்காரன்தான்.மற்றவர்களை அவன்தான் இட்டு வந்திருக்க வேண்டும். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன். கதவுக்கு அருகில் நிற்க வேண்டாம். அதோ அந்த மரக்களஞ்சியத்துக்கு அருகில் போய் சிறிது மறைந்து நில்லுங்கள்!"

இவ்விதம் சொல்லிக் கொண்டே மணிமே லை வேட்டை அறைக்குப் போகும் வாசற் பக்கம் சென்றுஅதன் கதவைத் திறக்க முயன்றாள்.

வந்தியத்தேவன் அவசரமாக நடந்து மரக்களஞ்சியத்தின் அருகில் சென்று மறைந்து நின்றான்.

மரக்களஞ்சியத்தின் கதவுகள் திறந்திருந்தன அதற்குள்ளே தற்செயலாகப் பார்த்தான். அது தானியம் கொட்டும் களஞ்சியம் அல்லவென்று தெரிந்தது. அறைக்குள்ளே படிப்படியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு படியிலும் யாழ், வீணை, மத்தளம், தாளம் முதலிய இசைக்கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே சிறிது அண்ணாந்து பார்த்தான் படிகள் மேற்கூரை வரையில் போவதாகத் தெரிந்தது.

இதற்குள் மணிமேகலை வேட்டை மண்டபத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தாள்.

அவளுடைய தைரியத்தை வந்தியத்தேவன் வியந்தான். அதே சமயத்தில் மணிமேகலைக்கு ஆபத்துஒன்றும் நேருவதற்கில்லை என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

இதற்குள் அந்த அறையின் இன்னொரு பக்கத்திலிருந்து கதவு திறந்தது. "அம்மா! அம்மா!" என்று கூவிக் கொண்டே சந்திரமதி உள்ளே வந்தாள்.

வந்தியத்தேவன் திடுக்கிட்டான் அவள் தன்னைப் பார்த்து விடாமலிருப்பதற்காக இசைக்கருவி களஞ்சியத்துக்குள்நுழைந்தான்.

"அம்மா! அம்மா! தஞ்சாவூர்க்காரர்கள் கோட்டை வாசலில் வந்து விட்டார்களாம். மகாராணி உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார்கள்!" என்று கத்திக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிரில் திறந்திருந்த வேட்டை மண்டபக் கதவை நோக்கிப் போனாள்.

கதவின் அருகில் நின்று பார்த்தால் வந்தியத்தேவன் களஞ்சியத்துக்குள் இருப்பது தெரிந்துபோய்விடும். ஆகையால் அவன் விரைவாகச் சில படிகள் மேலே ஏறினான்.

ஒரு வீணையின் மீது அவன் முழங்கால் இடித்து அது சப்தித்தது.

வந்தியத்தேவன் பீதி அடைந்து மேலும் சில படிகள் ஏறினான். அவன் தல ை களஞ்சியத்தின் மேற்பலகையில் முட்டியது. என்ன விந்தை? அந்த மேற்பலகை வந்தியத்தேவனுடைய மண்டைமுட்டியபோது சிறிது மேலே சென்றது.

ஏதோ சந்தேகம் தோன்றி வந்தியத்தேவன் அப்பலகையைக் கைகளினால் நெம்பித் தூக்கினான். அது நன்றாய் மேலே போனதுடன், திறந்த இடத்தின் மூலமாக வௌிச்சம் வந்தது. தூரத்தில் சலசலவென்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களும் தெரிந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளம் உற்சாகத்தினால் துள்ளியது.

பலகையை நன்றாக நகர்த்திவிட்டு மேலே ஏறினான். மாளிகையின் மேல் மச்சில் ஒருபகுதிக்குத் தான் வந்திருப்பதைக் கண்டான். அதிலும் அந்தப் பகுதி முன்னொரு நாள் அவன் சுகமாகக் காற்றுவாங்கிக் கொண்டு படுத்திருந்த பகுதிதான். பெரிய தூண்களின் மறைவில் நின்று சிற்றரசர்களின் கொடியசதியாலோசனையைப் பற்றித் தெரிந்து கொண்ட அதே இடந்தான்.

பலகையைத் தள்ளி முன்போல் மூடினான். மூடிய பிறகு, கூரையிலிருந்து அப்படி ஒரு வழி இருக்கிறதென்று கண்டுபிடிப்பது சுலபமல்லவென்பதை உணர்ந்தான். அதைப் பற்றி இப்போது யோசிக்கவும் அதிசயப்படவும் அவகாசம் இல்லை. அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைப் பார்க்க வேணும்.

இத்தனை நேரமும் தனக்கு உதவி செய்த அதிர்ஷ்ட தேவதை இனியும் உதவிசெய்யாமலா இருக்கப் போகிறது?

வந்தியத்தேவன் நாலா புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கு நோக்கினாலும் கொடிகளும்தோரணங்களும் பறந்து அந்த அரண்மனைப் பிரதேசம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அடடா!இராஜோபசாரம் என்பது இதுதான் போலும்.

வந்தியத்தேவன் அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்தான், சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். மேல் மச்சில் எங்கும் மனித சஞ்சாரமே இல்லை. அந்த வரையில் நம் அதிர்ஷ்டந்தான் பிறகு கொஞ்சம் விரைவாகவே நடந்தான்.

முன்னொரு தடவை அவன் படுத்திருந்த நிலா மாடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்துபார்த்தபோது அரண்மனையின் வௌிமதிளும் மதிள்களுக்கும் மாளிகைக்கும் நடுவிலிருந்த முற்றமும், குரவைக்கூத்து நடந்த இடமும், சதியாலோசனை நடந்த இடமும் காணப்பட்டன. அதற்குக் காரணம் கண்டுபிடிப்பது அவ்வளவுகடினமான காரியமாயில்லை. அரண்மனையின் முன் வாசலில் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் வௌிச்சம் தந்தன. மேள தாளங்கள் பேரிகை முழக்கங்களுடன் மனிதர்களின்வாழ்த்தொலிகளும் கலந்து பேரொலியாகக் கிளம்பியது. பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அரண்மனைவாசலை நெருங்கி வந்து விட்டபடியால், அவர்களை வரவேற்பதற்காக எல்லாரும் அங்கே போயிருக்கிறார்கள். அதனாலேதான் இங்கேயெல்லாம் ஜனசஞ்சாரம் இல்லை. ஆகா! உண்மையில் அதிர்ஷ்ட தேவதை வந்தியத்தேவன்பக்கத்தில் இருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. தப்பிச் செல்வதற்கு எவ்வளவு அருமையான சந்தர்ப்பம்; அரைநாழிகைக்கு முன்னாலும் இத்தகைய சமயம் கிடைத்திராது. அரை நாழிகை பின்னால் வந்தாலும் இம்மாதிரிவசதி கிட்டியிராது.

சதியாலோசனை நடந்த இடத்துக்குச் சமீபமாக வந்து, வந்தியத்தேவன் இன்னொரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தான்; ஒருவருமில்லை. கீழே குனிந்து பார்த்தான் அங்கேயும் யாரும் இல்லை.எதிரில் மதிள்சுவரைப் பார்த்தான் அங்கேயும் யாரும்...ஆ! இது என்ன? மதில் மேல் கிளைகளுக்கு நடுவில் ஒரு முகம்!ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிகிறதே!... சீச்சீ! வீண்பிரமை! முன்னொரு தடவைஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிந்த இடம் அது! ஆகையால் அவன் மனம் அவனை அப்படிஏமாற்றிவிட்டது! அதுவும் ஒரு நல்லதற்குத்தான். மதில் மேல் ஏறிக் குதித்துத் தாண்டுவதற்கு அதுதான்சரியான இடம். அ ை அவனுடைய உள் மனம் சுட்டிக்காட்டி ஞாபகப்படுத்தியிருக்கிறது. வரவேற்பு முடிந்துவாசலில் நிற்கும் கூட்டம் உள்ளே வருவதற்குள் அவன் தப்பித்துக் செல்லவேண்டும். முற்றத்தில் எப்படி இறங்குவது?ஆ! இதோ ஒரு வழி! இங்கே முற்றத்தில் ஒரு கொட்டகை போட்டிருக்கிறது. குரவைக்கூத்துக்காகப்போட்டிருக்கும் கொட்டகை போலும். கொட்டகைக்காகப் புதைத்திருந்த மூங்கில் மரம் ஒன்று நெடிதுயர்ந்து மேல்மச்சு வரையில் வந்திருந்தது. வந்தியத்தேவன் அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு சரசரவென்று கீழேஇறங்கினான். மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. மச்சின் மேலே, தான் சற்று முன் நின்றஇடத்தில் கிண்கிணிச் சத்தம் கேட்டது. ஆகா! மணிமேகலை தன்னைத் தேடி வந்தாள் போலும்! பொல்லாதபெண்! இச்சமயம் அவளிடம் அகப்பட்டுக் கொண்டால் நம்பாடு தீர்ந்தது.

முற்றத்தின் திறந்த வௌியை ஒரே ஓட்டமாக ஓடி வந்தியத்தேவன் கடந்தான், மதில் சுவர்ஓரமாக நின்று திரும்பிப் பார்த்தான், மச்சின் மீது ஒரு பெண் உருவம் தெரிந்தது. மணிமேகலையோ,சந்திரமதியோ தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் முற்றத்தை ஓடிக் கடந்ததைப் பார்த்திருக்கவேண்டும் நல்லவேளையாகக் கூச்சல் போடவில்லை. அவள் யாராயிருந்தாலும் நன்றாயிருக்கட்டும்! மகராஜியாயிருக்கட்டும்!

இவ்விதம் மனதிற்குள் வாழ்த்திக் கொண்டே மதில் சுவர் ஓரமாக வந்தியத்தேவன் விரைந்துநடந்தான். மதில் மேல் ஆழ்வார்க்கடியானுடைய முகம் தெரிந்த இடம் வந்துவிட்டது. அங்கே சுவரில் ஏறுவதுஎப்படி? இவ்வளவு உயரமாயிருக்கிறதே! சுவரில் பிடித்துக் கொள்வதற்கு மேடு பள்ளம் ஒன்றுமே இல்லையே?கடவுளே!..இதோ ஒரு உபாயம்! குரவைக்கூத்துக் கொட்டகைக்காகக் கொணர்ந்த மூங்கில் கழிகள் சில சற்றுத்தூரத்தில் கிடந்தன; அவை மிஞ்சிப் போனவை போலும். ஒரே பாய் ்சலாகப் பாய்ந்து அந்தக் கழிகளில்ஒன்றை எடுத்து வந்தான். மதிலின் பேரில் சாய்த்து வைத்தான். கழியின் உயரத்துக்கும் மதிலின்உயரத்துக்கும் சரியாக இருந்தது. ஆனால் கழி சுவரில் நிலைத்து நிற்க வேண்டுமே? ஏறும்போது நழுவிவிட்டால்?.. நழுவி விட்டால் கீழே விழ வேண்டியதுதான்! அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு சும்மாஇருந்து என்ன பயன்?

கழியை இரண்டொரு தடவை அழுத்திப் பார்த்துவிட்டு, அதன் வழியாக ஏறத் தொடங்கினான். பாதி சுவர் ஏறியபோது கழி நழுவத் தொடங்கியது. 'தொலைந்தோம்! கீழே விழுந்தால் எலும்புநொறுங்கிவிடும்!' என்று எண்ணுவதற்குள், கழி, மறுபடியும் உறுதியாக நின்றது. மேலேயிருந்து ஒரு கரம்அதைப் பிடித்துக் கொண்டது போல் தோன்றியது! 'நமக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் பாக்கி!' என்றுஎண்ணிக் கொண்டு வந்தியத்தேவன் மேலே ஏறினான். மதில் சுவரின் மேல் முனையை அவன் பிடித்துக்கொண்டதும் கழி நழுவிக் கீழே விழுந்தது. அது விழுந்த சத்தம் இடி முழக்கம் போல் அவன் காதில்விழுந்தது. நல்ல வேளை! கோட்டை வாசலில் ஆரவாரம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது. ஆகையால்யார் காதிலும் விழுந்திராது! ஆனால், எதிரே அந்தப்புர மேல் மாடத்தில் நின்ற பெண்! அவள் காதில்விழுந்திருக்கும்.

மதில் மேல் தாவி ஏறி நின்றபடி மறுபடி ஒரு தடவை வந்தியத்தேவன் அந்தப் பக்கம்திரும்பிப் பார்த்தான். இன்னமும் அப்பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்!

வந்தியத்தேவனுடைய கிறுக்குக் குணம் அவனை விட்டுப் போகவில்லை! 'போய் வருகிறேன்!' என்றுசொல்கிற பாவனையாகக் கையை ஆட்டிவிட்டு, மதிலின் அப்புறத்தில் இறங்கத் தொடங்கினான். இறங்குவதில்அவ்வளவு கஷ்டம் இல்லை. ஏனெனில் மதில் சுவரின் வௌிப்புறம் உட்புறத்தைப் போல் மட்டமாக இல்லை. சில மேடு பள்ளங்கள் இருந்தன. பக்கத்திலிருந்த மரங்களின் கிளைகள் சில சுவரின் மீது மோதிஉராய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் உதவி கொண்டு சரசரவெனக் கீழே இறங்கினான். மணிமேகலையைத்தான் ஏமாற்றி விட்டு வந்தது பற்றி நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பின்எதிரொலியைப் போல் இன்னொரு சிரிப்பு எங்கிருந்தோ வந்தது. வந்தியத்தேவனுடைய இரத்தம் அவனுடையஉடம்பில் உறைந்து போயிற்று. கைகள் நடுங்கின கீழே குதிப்பதற்காகப் பார்த்தான். நாய் ஒன்று அவன்மீது பாயக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மேலே ஏறுவதைப் பற்றி இனி யோசிப்பதற்கே இல்லை?கீழே குதித்துத்தான் ஆகவேண்டும். குதித்தால், இந்த நாயின் வாயில் ஒரு பிடி சதையையாவது கொடுத்துத்தீரவேண்டும். சற்று முன் கேட்டது சிரிப்புச் சத்தமா? அல்லது நாய் குரைத்த சத்தமா? பக்கத்தில் யாராவதுமறைந்து நின்று நாயை ஏவி விட்டிருக்கிறார்களா?.. மேலே ஏறுவதில் அபாயம் அதிகமா? கீழேகுதிப்பதில் அபாயம் அதிகமா? வந்தியத்தேவனுடைய உள்ளம் ஊசலாடியது! அவனுடைய கால்களும், எழும்பிஎழும்பிக் குதித்த நாயின் வாயில் அகப்படாமல் இருப்பதற்காக ஊசலாடின.
 

பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
மனித வேட்டை




வந்தியத்தேவன் நாயின் வாயில் அகப்படாமல் தரையில் குதிக்கப் பார்ப்பதா, அல்லது மறுபடியும்மதில் சுவரின் மேல் ஏறுவதா என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில்பக்கத்திலிருந்த மரங்களின் மறைவில் யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்றும் கூர்மையாகக் கவனித்தான். ஒரு மரத்தின் மறைவில் வெள்ளைத் துணி தெரிவது போலிருந்தது. சற்று முன் நாயின் குரைப்புச் சத்தத்தோடுமனிதனின் சிரிப்புக் குரல் கலந்து கேட்டது நினைவுக்கு வந்தது. மனிதர் யாராவது உண்மையில்மறைந்திருந்தால்? ஒரு மனிதனோ? பல மனிதர்களோ? அதைத் தெரிந்து கொள்ளாமல் குதிப்பதுபெருந்தவறாக முடியும். நாயின் வாயிலிருந்து தப்பினாலும் மனிதர்களின் கையில் அகப்படும்படிநேரிடலாம். அரண்மனையின் மேல் மாடத்திலிருந்து பார்க்கும் போது ஆழ்வார்க்கடியானுடைய முகம் மதில்சுவர் மேல் தெரிவது போலத் தோன்றியது. அந்த வைஷ்ணவன்தான் ஐயனார் கோவிலில் காத்துக் காத்துப்பார்த்து அலுத்துப் போய் இங்கு வந்து நாயை ஏவிவிட்டு வேடிக்கை செய்கிறானா, என்ன? எல்லாவற்றுக்கும்கூப்பிட்டுப் பார்த்தால் போகிறது, "வைஷ்ணவரே! வைஷ்ணவரே! இது என்ன வேடிக்கை?" என்றான். மறுபடியும்ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது; அது ஆழ்வார்க்கடியான் குரல் அல்ல. ஆகையால் திரும்ப மதில் மேல் ஏறிஅரண்மனைக்குள் இறங்குவதுதான் சரி. பெரிய பழுவேட்டரையரின் வரவேற்பு தடபுடல்களில் எப்படியாவதுதப்பித்துக் கொள்ளலாம் அல்லது சுரங்கவழி இருக்கவே இருக்கிறது. மணிமேகலையிடம் மீண்டும் கொஞ்சம்கெஞ்சு மணியம் செய்தாற் போகிறது. இல்லாவிடில் பழுவூர் இளைய ராணியின் தயவையே சம்பாதித்துக்கொள்ள வேண்டியதுதான். இதுவரை தன்னைக் காட்டிக் கொடுக்காதவள் இப்போது மட்டும் காட்டிக் கொடுத்துவிடுவாளா?..

வந்தியத்தேவன் இறங்கிய வழியில் மறுபடி மேலே ஏறத் தொடங்கினான். நாய் இன்னும் உயரமாகஎழும்பிக் குதித்துக் குரைத்தது.

மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது.

மரத்தின் மறைவிலிருந்து ஒரு உருவம் வௌியே வந்தது அதன் கையில் ஒரு வேல் இருந்தது.

அவன் தேவராளான் என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.

தேவராளான் வந்தியத்தேவன் சுவரில் தொங்கிய இடத்திற்கு அருகில் வந்தான்.

"அப்பனே! உன் உயிர் வெகு கெட்டி!" என்றான்.

"அதுதான் தெரிந்திருக்கிறதே! ஏன் மறுபடியும் என்னிடம் வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இந்தத் தடவை நீ தப்ப முடியாது!" என்று கூறித் தேவராளன் தன் கையிலிருந்த வேலை வந்தியத்தேவனை நோக்கிக் குறி பார்த்தான்.

வந்தியத்தேவன் தன்னுடைய ஆபத்தான நிலையை உணர்ந்து கொண்டான். பாதிச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பவன் கீழேயிருந்து வேலினால் குத்தப் பார்ப்பவனுடன் எப்படிச் சண்டையிட முடியும்? குதித்துத் தப்பப் பார்க்கலாம் என்றால், வேட்டை நாய் ஒன்று மேலே பாயக் காத்துக் கொண்டிருக்கிறது.

"தேவராளா, ஜாக்கிரதை! உங்கள் எஜமானி பழுவூர் ராணியின் கட்டளையை ஞாபகப்படுத்திக்கொள்! என்னை ஒன்றும் செய்யவேண்டாம் என்று உங்களுக்கு ராணி சொல்லி இருக்கவில்லையா!"

தேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "பழுவூர் ராணி என் எஜமானி அல்ல! எந்த ஊர் ராணியும் என் எஜமானி அல்ல. பத்திரகாளி துர்க்கா பரமேசுவரிதான் என்னுடைய எஜமானி!" என்றான்.

"என் குலதெய்வமும் துர்க்காபரமேசுவரிதான்! அவளுடைய அருளினால்தான் நடுக்கடலில் எரிகிற கப்பலிலிருந்து தப்பித்து வந்தேன். என்னைத் தொட்டாயானால் துர்க்கை உன்னை அதம் செய்து விடுவாள்!" என்றான் வந்தியத்தேவன்.

"நீ துர்க்கையின் பக்தன் என்பது உண்மையானால், இப்பொழுது எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்.அப்போதுதான் உன்னைக் கொல்லாமல் விடுவேன்!" என்றான் தேவராளன்.

"என்ன செய்ய வேண்டும்? - முதலில் உன்னுடைய நாயை அப்பால் போகச் சொல்லு!"

"இந்தப் பக்கம் ஒரு வீர வைஷ்ணவன் வந்தான். அவனைத் தேடிப் பிடிப்பதற்கு நீ ஒத்தாசை செய்தால் உன்னைச் சும்மா விட்டு விடுகிறேன்."

"எதற்காக அவனைப் பிடிக்க வேண்டும்?" என்றான் வந்தியத்தேவன்.

"துர்க்காதேவிக்கு ஒரு வீர வைஷ்ணவனைப் பலி கொடுப்பதாக நான் சபதம் செய்திருக்கிறேன் அதற்காகத்தான்!" என்றான் தேவராளன்.

இந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் மதில் சுவரில் பிடித்துத் தொங்கிக் கொணிருந்த சிறியசெடி வேரோடு பெயர்ந்து வர ஆரம்பித்தது.

வேலின் முனையில் சிக்காமல் எப்படி தேவராளன் கழுத்தின் மேல் குதிப்பது என்று வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டே "அந்த வீர வைஷ்ணவன் என் அருமைச் சிநேகிதன். அவனுக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்யமாட்டேன். அவனுக்குப் பதிலாக என்னையே பலி கொடுத்து விடு!" என்றான்.

"அப்படியானால் இந்த வேலுக்கு இப்போதே இரையாகி விடு!" என்று தேவராளன் வேலைத் தூக்கி வந்தியத்தேவன் மீது குறி பார்த்தான்.

வந்தியத்தேவன் செடியை விட்டு விட்டு வேலின் முனைக்கு அடியில் அதைத் தாவிப் பிடித்துக்கொண்டு கீழே குதித்தான். குதித்த வேகத்தில் தரையில் மல்லாந்து விழுந்தான். தேவராளன் அந்தஅதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு வேலைத் தூக்கினான்.

அந்தச் சமயத்தில் பின்னாலிருந்து ஓர் உருவம் ஓடிவந்து தன் கையிலிருந்த தடியினால் தேவராளன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டது.

தேவராளன் வந்தியத்தேவன் பேரில் பொத்தென்று விழுந்தான்.

நாய் தன் எஜமானைத் தாக்கியவன் பேரில் பாய்ந்தது. ஆழ்வார்க்கடியான் அதற்கும்சித்தமாயிருந்தான்.தன்னுடைய மேல் துணியை விரித்து நாயின் தலை மீது போட்டான். நாய் சிலவினாடி நேரத்துக்குக் கண் தெரியாத குருடாயிருந்தது. அச்சமயம் சுருக்குப் போட்டுத் தயாராக வைத்திருந்தகாட்டுக் கொடியை அதன் கழுத்தில் எறிந்து வைஷ்ணவன் நாயை ஒரு மரத்தோடு சேர்த்துப் பலமாகக் கட்டினான்.

இதற்குள் வந்தியத்தேவன் தேவராளனைத் தன் மேலிருந்து தூக்கித் தள்ளிவிட்டு எழுந்தான்.

தேவராளன் வைஷ்ணவனுடைய ஒரே அடியில் நினைவு இழந்து மூர்ச்சையாகிக் கிடந்தான். இருவரும் இன்னும் சில காட்டுக் கொடிகளைப் பிடுங்கி அவனுடைய கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டார்கள்.

பிறகு வந்தியத்தேவன் வேலையும், ஆழார்க்கடியான் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

சம்புவரையர் மாளிகையின் வாசற் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் நெடுந் தூரத்துக்குக்காடு மண்டிக் கிடந்தது. அதற்குள்ளே புகுந்து விட்டால் வௌியில் வருவது கஷ்டம். ஆகையால்வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மதில் சுவர் ஓரமாகவே விரைந்து சென்றார்கள். விரைந்துநடக்கும்போதே ஆழ்வார்க்கடியான் "நீ புத்திசாலி என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்றுஇப்போதே தெரிந்தது" என்றான்.

"அவசரப்பட்டுச் சுரங்க வழியில் புகுந்ததைச் சொல்கிறீரா? அதன் மூலமாக எவ்வளவு பயங்கரமான மர்மங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன் தெரியுமா?" என்றான் வந்தியத்தேவன்.

"அது ஒரு புறம் இருக்கட்டும் 'வைஷ்ணவனைக் கண்டுபிடிப்பதற்கு ஒத்தாசை செய்கிறாயா? என்றுதேவராளன் கேட்டதும் 'ஆகட்டும்' என்று சொல்லித் தொலைப்பதற்கு என்ன? வீணாக ஏன் அபாயத்துக்கு உள்ளாகவேண்டும்?" என்றான் வைஷ்ணவன்.

"எல்லாம் சகவாச தோஷந்தான்!" என்றான் வந்தியத்தேவன்.

"யாருடைய சகவாசத்தைச் சொல்கிறாய்? இத்தனை தவறு செய்யும்படி நான் உனக்கு ஒருநாளும் சொன்னதாகநினைக்கவில்லையே?"

"உம்மைச் சொல்லவில்லை ஐயா! பொன்னியின் செல்வரைச் சொல்லுகிறேன். அவரைப் பார்த்துப் பழகிய பிறகு, பொய் சொல்லுவதற்கு உள்ளம் இடம் கொடுக்கவில்லை..."

"உயிர் தப்புவதற்காகக் கூடவா? அவ்வளவு சத்திய சந்தனாகி விட்டாயா?"

"அது மட்டுமல்ல, நீர் எங்கேயோ பக்கத்தில் மறைந்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நான் உம்மைப் பிடித்துக்கொடுக்கிறேன் என்று தேவராளனிடம் சொல்வதை நீர் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை என்று நம்பி விட்டால்!இந்த ஆபத்துச் சமயத்தில் எனக்கு உதவி செய்ய வந்திருப்பீரா?"

"அப்பனே! உன் அறிவுக் கூர்மை அபாரம்! சந்தேகமில்லை. உண்மையில், தேவராளன் கேட்ட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று கேட்க நான் மிகுந்த ஆவலாய்த் தான் இருந்தேன்!"

"பார்த்தீரா? நீர் ஒரு சந்தேகப் பிராணி என்று நான் கருதியது சரியாய்ப் போயிற்று. அதைத் தவிர, எப்பேர்ப்பட்ட நன்மை வருவதாயிருந்தாலும் வாய் வார்த்தைக்குக்கூடச் சிநேகத் துரோகமாகஎதுவும் நான் சொல்லும் வழக்கமில்லை. ஆனால் நீர் 'அய்யனார் கோவிலில் காத்திருக்கிறேன்' என்றுசொல்லிவிட்டு இங்கு வந்தது எப்படி? சுரங்க வழியில் நான் திரும்பி வந்திருந்தால் உம்மைக் காணாமல்திண்டாடியிருப்பேனே?" என்றான் வந்தியத்தேவன்.

"சுரங்க வழியில் நீ திரும்பி வந்திருந்தால் உயிரோடு வந்திருப்பது சந்தேகந்தான். நீ சுரங்க வழியில் புகுந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சதிகாரர்கள் அதில் புகுந்தார்கள். நீ புத்திசாலியாகையால் நிச்சயம் வேறு வழியாகத்தான் வருவாய், அநேகமாக இங்கே சுவர் ஏறிக் குதித்து வரக்கூடும் என்று எண்ணினேன்."

"அவ்வாறு எண்ணிக் கொண்டா இவ்விடத்துக்கு வந்தீர்?"

"அது மட்டுமல்ல சுரங்கப் பாதையில் புகுந்த சதிகாரர்கள் தேவராளனை மட்டும் வௌியில்காவலுக்கு வைத்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது அய்யனார் கோவிலில் யாரும்இல்லாமலிருக்க வேண்டாமா? அதற்காக ஏதோ சமிக்ஞை சொல்லிவிட்டுப் புகுந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அது எனக்குத் தெரியாது; எல்லாரும் சுரங்கத்துக்குள் புகுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். நீ உள்ளேபோய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாயே என்று வேறு கவலையாயிருந்தது. சுரங்கப் பாதையை வௌியிலிருந்துதிறப்பதற்கு என்ன உபாயம் என்று தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். ஆகையால் பலி பீடத்தின் அருகில்சென்று அதைத் திருப்ப முயன்று கொண்டிருந்தேன். காலடிச் சத்தம் கேடடுத் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தேன். தேவராளன் கையில் வேலுடன் வந்து கொண்டிருந்தான். என்னைக் கண்ட இடத்தில் கொன்று விடச்சதிகாரக் கூட்டத்தார் வெகு நாளைக்கு முன்பே தீர்மானித்திருந்தார்கள்; அது எனக்குத் தெரியும். என்கையிலோ ஆயுதம் இல்லை, ஆகையால் ஓட்டம் பிடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தேவராளனும்தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அடர்ந்த காடாக இருந்தபடியால் அவனால் என்னைப் பிடிக்கமுடியவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு என்னை அவன் தொடர்ந்து வரவில்லை என்று தோன்றியது. வேட்டையைக் கைவிட்டுவிட்டான் என்று எண்ணிக் காட்டிலிருந்து இனி ராஜபாட்டைக்குப் போய்விடலாம் என்று உத்தேசித்தேன். சற்றுத் தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. அதில் ஒரு சிறிய விளக்குமினுக்கு மினுக்கு என்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குடிசையில் இராஜபாட்டைக்கு வழி கேட்கலாம்என்று நினைத்து அதை அணுகினேன். சற்றுத் தூரத்திலிருந்து உற்றுப் பார்த்தேன்; நல்ல வேளையாய்ப்போயிற்று. குடிசை வாசலில் தேவராளன் நின்று கொண்டிருந்தான். ஒரு பெண் பிள்ளையும், ஒரு நாயும் அவன்அருகில் நின்றார்கள். தேவராளன் பெண் பிள்ளையிடம் ஏதோ சொல்லிவிட்டு நாயை அழைத்துக் கொண்டுமறுபடியும் புறப்பட்டான். நாய் நான் நின்ற திசையை நோக்கிக் குரைத்தது ஆகவே அபாயம் இன்னும்அதிகமாயிற்று. இராஜபாட்டைக்குப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டு காட்டு வழியிலேயே புகுந்து ஓடிவந்தேன்.நாய் அடிக்கடி குரைத்துக் கொண்டு வந்தபடியால் அவர்கள் எங்கே வருகிறார்கள் என்பதை நான்ஊகிக்க முடிந்தது. ஓடி வந்து கொண்டிருக்கும் போதே மூளையும் வேலை செய்து கொண்டிருந்தது. இரவு முழுவதும்காட்டில் சுற்றிக் கொண்டிருப்பது அசாத்தியம். எப்படியும் அவர்கள் வந்து பிடித்து விடுவார்கள். கையில் வேலுடன் கூடிய தேவராளனையும் வாயில் பல்லுடன் கூடிய வேட்டை நாயையும் ஏக காலத்தில் சமாளிப்பது சுலபம்அல்ல. அச்சமயத்தில் இப்பெரிய மாளிகையின் மதில் சுவர் தெரிந்தது. மதிலில் ஏறி உள்ளேகுதித்துவிட்டால் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன், அப்படியே ஏறிவிட்டேன். அச்சமயம் நீ அரண்மனை மேல் மாடத்தில் ஓடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன், நீ மதில் ஏறி வௌியேகுதிப்பதற்குத்தான் ஓடி வருகிறாய் என்று தெரிந்து கொண்டு மறுபடியும் கீழே குதித்தேன். நாம் இரண்டுபேருமாகச் சேர்ந்து தேவராளனையும் அவனுடைய நாயையும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதற்குள் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே பக்கத்திலிருந்த மரத்தின் மேலே ஏறிக் கொண்டேன். நாயும்தேவராளனும் நான் ஏறி இருந்த மரத்தை அணுகித்தான் வந்தார்கள். அதற்குள் நீ மதில் சுவரிலிருந்துஇறங்கியது தேவராளரின் கண்ணில் பட்டது போலும். நாயையும் அழைத்துக் கொண்டு நீ இறங்குமிடத்தைநெருங்கினான் பிறகு நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்..."

"வைஷ்ணவரே! விதியின் வலிமையைப் பற்றி உமது அபிப்ராயம் என்ன?" என்று வந்தியத்தேவன்கேட்டான்.

"இது என்ன கேள்வி? திடீரென்று விதியின் பேரில் உன்னுடைய எண்ணம் போனது, ஏன்?"

"ஒவ்வொருவனும் பிறக்கும் போதே 'இன்னாருக்கு இன்னபடி' என்று பிரம்மதேவன் தலையில் எழுதி விடுவதாகச் சொல்கிறார்களே, அதை நீர் நம்புகிறீரா, இல்லையா?"

"இல்லை! எனக்கு விதியில் நம்பிக்கையில்லை விதியை முழுதும் நம்புவதாயிருந்தால், பரந்தாமனிடம் பக்தி செய்து உய்யலாம் என்பதற்குப் பொருள் இல்லாமற் போய்விடும் அல்லவா? ஆழ்வார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்..."

"ஆழ்வார்கள் எதையாவது சொல்லியிருக்கட்டும் எனக்கு விதியில் பூரண நம்பிக்கைஉண்டாகி யிருக்கிறது. விதியின்படியே தான் எல்லாம் நடக்கும் என்று கருதுகிறேன். இல்லாமற் போனால்இன்றைக்கு நான் தப்பித்துக் கொண்டு வந்திருக்க முடியாது..."

"அப்பனே! விதியினால் நீ தப்பித்து வரவில்லை மதியின் உதவியினால் தப்பித்து வந்தாய்.."

"இல்லவே இல்லை; என் மதி என்னை ஆழம் தெரியாத அபாயத்தில் கொண்டு போய்ச் சேர்ந்தது; விதி என்னை அதிலிருந்து கரையேற்றியது!"

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காட்டைக் கடந்து வந்துவிட்டார்கள். கடம்பூர்அரண்மனையின் முன் வாசல் அங்கிருந்து தெரிந்தது. அங்கு ஒரே அல்லோலகல்லோலமாக இருந்ததும் தெரிந்தது.பழுவேட்டரையரின் யானை, குதிரை, பரிவாரங்கள் வௌியிலிருந்து வாசலை நெருங்கி வந்துகொண்டிருந்தன. அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரண்மனை வாசலில் சம்புவரையரும் அவருடையபரிவாரங்களும் வரவேற்பதற்குக் காத்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் இரவைப் பகலாக்கிக்கொண்டிருந்தன. பேரிகைகள், முரசுகள், கொம்புகள், தாரைகள், தப்பட்டைகள் ஒன்று சேர்ந்து முழங்கின.

ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து இழுத்து, "வா! போகலாம்; யாராவதுநம்மைப் பார்த்து விடப் போகிறார்கள்!" என்றான்.

"இந்தப் பக்கம் ஒருவரும் பார்க்கமாட்டார்கள்; பார்த்தாலும் என்னுடைய விதி என்னைக் காப்பாற்றும். பெரிய பழுவேட்டரையர் யானை மீது வந்து இறங்கும் காட்சியைப் பார்க்க வேண்டாமா?"

"அது மட்டுந்தானா?"

"பழுவூர் ராணி நந்தினி அவருடன் யானை மீதில் வந்து இறங்குகிறாளா, அல்லது மூடுபல்லக்கில் வருகிறாளா என்று பார்க்கவும் விரும்புகிறேன்..."

"தம்பி! விதி எப்போதும் உனக்கு அனுகூலமாக இருக்கும் என்று எண்ணாதே. ஒரு மாயமோகினியின் உருவத்தில் வந்து உன்னைக் குடை கவிழ்த்தாலும் கவிழ்த்துவிடும்."

"அப்படியெல்லாம் மயங்கி விடுகிறவன் நான் அல்ல வைஷ்ணவரே! அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்!"

கம்பீரமான யானை வந்து அரண்மனை வாசலில் நின்றது. அதன் மேலிருந்து பெரிய பழுவேட்டரையர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து பழுவூர் இளையராணியும் இறங்கினாள்.

"ஓ! இந்தத் தடவை இளையராணி மூடுபல்லக்கில் வரவில்லை. பகிரங்கமாகவே அழைத்து வந்திருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அதைத் தெரிந்து கொள்ளத் தான் விரும்பினேன் இனி போகலாம்" என்று வந்தியத்தேவன் பின்னால் சென்றான்.

ஆனால் இப்போது ஆழ்வார்க்கடியான் பின் செல்வதற்கு அவ்வளவு அவசரப்படவில்லை,மேலும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். பழுவூர் இளையராணி நந்தினியைக் கண்கொட்டாமல்பார்த்துக் கொண்டிருந்தான்.

தற்செயலாகவோ, அல்லது அவனுடைய மனோ சக்தியினால் இழுக்கப்பட்டுத்தானோ என்னவோ நந்தினி அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

ஆழ்வார்க்கடியானுடைய முகம் இருண்ட மரங்களின் மத்தியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக்கூர்ந்து கவனித்தாள்.

அவள் முகத்தில் உடனே பீதியின் சாயல் பரவிற்று.

இளையராணியின் முகமாறுதலைப் பெரிய பழுவேட்டரையர் கவனித்தார்.

அவள் பார்த்த திசையை அவரும் ஒரு தடவை கூர்ந்து நோக்கினார். இரண்டு உருவங்கள் நெருங்கி வளர்ந்திருந்த மரங்களின் இருண்ட நிழலில் மறைந்து கொண்டிருந்தன.

உடனே சம்புவரையரின் காதோடு ஏதோ சொன்னார்.

சம்புவரையர் தம்முடைய வீரர்களில் இருவருக்கு ஏதோ கட்டளையிட்டார்.

பழுவேட்டரையரும் இளையராணியும் அமோகமான வாத்திய கோஷங்களுக்கிடையில் அரண்மனை வாசல் வழியாக உள்ளே பிரவேசித்தார்கள்.

அதே சமயத்தில் இரண்டு குதிரை வீரர்கள் அரண்மனை மதிளைச் சுற்றியிருந்த காட்டிற்குள்பிரவேசித்தார்கள்.

குதிரைகளை காட்டுக்குள் அவர்கள் கஷ்டத்துடன் செலுத்திக் கொண்டு போனார்கள்.

வெகு தூரம் சென்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்டக் காட்டைக் கடந்து அப்புறத்தில்சமவௌியாக இருந்த திறந்த மைதானத்தண்டை வந்து விட்டார்கள்.

"அண்ணே! காட்டில் ஒருவரும் இல்லை கிழவரின் மனப்பிராந்திதான்!" என்றான் அவர்களில் ஒருவன்.

அச்சமயம் நாய் ஒன்று அவர்களுக்கெதிரே ஊளையிட்டுக் கொண்டு வந்தது. "தம்பி! நாய் எப்போதுஊளையிடும் தெரியுமா?" என்று மற்றவன் கேட்டான்.

"யாராவது செத்துப் போனால் உளையிடும்!" என்றான் முதலில் பேசியவன்.

"பேய் பிசாசு வேதாளம் முதலியவைகளைக் கண்டாலும் உளையிடும்!" என்றான் இன்னொருவன்.

"உன்னைப் பார்த்துத்தான் பிசாசு என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ, என்னமோ?"

"இல்லை, தம்பி! உன்னை வேதாளம் என்று எண்ணிக் கொண்டு விட்டது!"

இச்சமயத்தில் அவர்களுடைய தலைக்கு மேலே பயங்கரமான பேய்ச் சிரிப்பைக் கேட்டு இருவரும்திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தார்கள்.

இரண்டு பேரின் தலைக்கு மேலேயும் இரண்டு மரக்கிளைகளில் இரண்டு வேதாளங்கள் உட்கார்ந்திருந்தன!

இரண்டு வேதாளங்களும் அந்த இரண்டு வீரர்களின் கன்னத்திலும் பளீர் என்று அறைந்து, கழுத்தைப் பிடித்து நெட்டிக் கீழே தள்ளின!

பிறகு, அந்தப் பொல்லாத வேதாளங்கள் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு காட்டைக் கடந்து மைதானத்தில் விரைந்து சென்றன!
 

பக்க தலைப்பு

ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்

 


முதல் அத்தியாயம்
மூன்று குரல்கள்




நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப் பட்ட குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார்.

ஆயினும், தமது ஆர்வத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு தமக்கையாரிடமிருந்து செய்தி வந்த பின்னர்தான் தஞ்சைக்குப் புறப்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார். பொழுது போவது என்னமோ மிகவும் கஷ்டமாக இருந்தது.புத்த பிக்ஷுக்கள் தினந்தோறும் நடத்திய ஆராதனைகளிலும், பூஜைகளிலும் கலந்துகொண்டு சிறிது நேரத்தைப் போக்கினார்.

சூடாமணி விஹாரத தின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த அருமையான சித்திரக் காட்சிகளைப் பார்ப்பதில் சிறிது நேரம் சென்றது. பிக்ஷுக்களுடன், முக்கியமாகச் சூடாமணி விஹாரத்தின் ஆச்சாரிய பிக்ஷுவுடன் சம்பாஷிப்பதிலே கழிந்த பொழுது அவருக்கு உற்சாகத்தை அளித்தது. ஏனெனில் சூடாமணி விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு கீழ்த்திசைக்கடலுக்கு அப்பாலுள்ள பற்பல நாடுகளிலே வெகுகாலம் யாத்திரை செய்தவர். சீன தேசத்திலிருந்து சாவகத் தீவு வரையில் பல ஊர்களுக்கும் சென்று வந்தவர். அந்தந்த நாடுகளைப் பற்றியும் அவற்றிலுள்ள நகரங்களைப் பற்றியும் ஆங்காங்கு வசித்த மக்களைப் பற்றியும் அவர் நன்கு எடுத்துக்கூற வல்லவராயிருந்தார்.

சீன தேசத்துக்குத் தெற்கே கடல் சூழ்ந்த பல நாடுகள் அந்நாளில் ஸரீ விஜயம் என்னும் சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. அருமண நாடு, காம்போஜ தேசம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், மாபப்பாளம், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தாமரலிங்கம், இலாமுரி தேசம் முதலிய பல நாடுகளும் நகரங்களும் ஸரீ விஜய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டோ, நேசப்பான்மையுடனோ இருந்து வந்தன.இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாகக் கடாரம் என்னும் மாநகரம் இணையற்ற சீர் சிறப்புகளுடனும் செல்வ வளத்துடனும் விளங்கி வந்தது.

அந்த நாடு நகரங்களைப்பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷுவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார்.அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார். பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பு செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றிக் கூறினார். பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத்திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர, சங்கீத நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார். இராமாயணம், மகாபாரதம், முதலிய இதிகாசங்களும், விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருமால் ஆகிய தெய்வங்களும், புத்த தர்மமும் அந்த தேசத்து மக்களின் உள்ளங்களில் கலந்து கொண்டிருப்பதையும், ஒன்றோடொன்று பிரித்து உணர முடியாதவர்களாக அந்நாட்டு மக்கள் எல்லாத் தெய்வங்களையும் வணங்கி வருவதையும் எடுத்துச் சொன்னார். தமிழ் மொழியின் தந்தையாகிய அகஸ்திய முனிவருக்கு அந்த நாடுகளில் விசேஷ மரியாதை உண்டு என்பதையும் அம்முனிவருக்குப் பல கோயில்கள் கட்டியிருப்பதையும் கூறினார்.

இதையெல்லாம் திரும்பத் திரும்ப அருள்மொழிவர்மர் கேட்டுத் தெரிந்து, மனத்திலும் பதிய வைத்துக்கொண்டார். அந்தந்த தேசங்களுக்குத் தரை வழியான மார்க்கங்களையும், கடல் வழியான மார்க்கங்களையும் இளவரசர் நன்கு விசாரித்து அறிந்தார். வழியில் உள்ள அபாயங்கள் என்ன, வசதிகள் என்ன என்பதையும் கேட்டு அறிந்தார்.

"சுவாமி! அந்த நாடுகளில் மறுபடியும் தாங்கள் யாத்திரை செய்யும்படியாக நேரிடுமோ?" என்று வினவினார்.

"புத்த பகவானுடைய சித்தம்போல் நடக்கும், இளவரசே! எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றார் பிக்ஷு.

"நானும் தங்களுடன் வரலாம் என்ற ஆசையினால்தான்."

"நான் உலகத்தைத் துறந்த சந்நியாசி; தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரர். தாங்களும், நானும் சேர்ந்து யாத்திரை செய்வது எப்படி? தங்களைச் சிலநாள் இந்த விஹாரத்தில் வைத்துக் காப்பாற்றும் பொறுப்பே எனக குப் பெரும் பாரமாயிருக்கிறது. எப்போது, என்ன நேருமோ என்று நெஞ்சு `திக், திக்' என்று அடித்துக் கொள்கிறது..."

"சுவாமி! அந்தப் பாரத்தை உடனே நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். இந்தக் கணமே இங்கிருந்து..."

"இளவரசே! ஒன்று நினைத்து ஒன்றைச் சொல்லிவிட்டேன். தங்களை இங்கு வைத்துக் கொண்டிருப்பது பாரமாயிருந்தாலும், அதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். தங்கள் தந்தையாகிய சக்கரவர்த்தியும், தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஆயிரத்தில் ஒரு பங்குக்குக் கூட இப்போது நாங்கள் செய்வது ஈடாகாது. தாங்கள் புத்த தர்மத்துக்குச் செய்திருக்கும் உதவிதான் அற்ப சொற்பமானதா? அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் செப்பனிடச் செய்த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா? அதற்கெல்லாம் இணையான பிரதி உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுக்கள் முன் வந்தார்கள். இளவரசே! அதை ஏன் மறுத்தீர்கள்? இலங்கையின் சுதந்திரச் சிங்காதனத்தில் தாங்கள் ஏறியிருந்தால், நூறு நூறு கப்பல்களில் ஏராளமான பரிவாரங்களுடனே, கீழ்த்திசை நாடுகளுக்குத் தாங்கள் போய் வரலாமே? இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே?" என்றார் ஆச்சரிய பிக்ஷசூ.

"குருதேவரே! இலங்கை ராஜகுலத்தின் சரித்திரத்தைக் கூறும் `மகா வம்சம்' என்னும் கிரந்தத்தைத் தாங்கள் படித்ததுண்டா?" என்று இளவரசர் கேட்டார்.

"ஐயா! இது என்ன கேள்வி? `மகா வம்சம்' படிக்காமல் நான் இந்தச் சூடாமணி விஹாரத்தின் தலைவனாக ஆகியிருக்க முடியுமா?"

"மன்னிக்க வேண்டும். `மகா வம்சம் படித்ததுண்டா?' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் பட க்கத் தெரியுமா என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த `மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா? மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், சித்தப்பன்மார்கள், மாமன்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே! இப்படிப்பட்ட கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று `மகா வம்சம்' கூறுகிறதல்லவா?"

"அம். ஆம்! அத்தகைய தீச்செயல்களுக்கு அவரவர்கள் அடைந்த தண்டனைகளையும் கூறுகிறது. அந்த உதாரணங்களைக் காட்டி மக்களைத் தர்ம மார்க்கத்தில் நடக்கும்படி `மகா வம்சம்' உபதேசிக்கிறது. அதை மறந்து விட வேண்டாம்! `மகா வம்சம்' புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல்!" என்று ஆச்சாரிய பிக்ஷசூ பரபரப்புடன் கூறினார்.

"சுவாமி, `மகா வம்சம்' என்ற நூலை நான் குறை சொல்லவில்லை. இராஜ்யாதிகார ஆசை எப்படி மனிதர்களை அரக்கர்களிலும் கொடியவர்களாக்கி விடுகிறது என்பதைப் பற்றித்தான் சொன்னேன். அத்தகைய கொடும் பாவங்களினால் களங்கமடைந்த இலங்கைச் சிம்மாதனத்தை நான் மறுதளித்தது தவறாகுமா?"

"மகா புத்திமான்களான புத்த சங்கத்தார் அதனாலேதான் இலங்கை அரச வம்சத்தையே மாற்ற விரும்பினார்கள். தங்களை முதல்வராகக் கொண்டு, புதிய வம்சம் தொடங்கட்டும் என்று எண்ணினார்கள். தாங்கள் அதை மறுத்தது தவறுதான். இலங்கைச் சிம்மாதனத்தில் வீற்றிருந்து அசோக வர்த்தனரைப் போல் உலகமெல்லாம் புத்த தர்மத்தைப் பரப்பிப் பாதுகாக் ும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்தது..."

"குருதேவரே! பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட அசோக வர்த்தனர் எங்கே? இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே? உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன்?"

"இளவரசே! அவ்விதம் சொல்ல வேண்டாம். தங்களிடம் மறைந்து கிடக்கும் மகா சக்தியைத் தாங்கள் அறியவில்லை. தாங்கள் மட்டும் புத்த தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டால் அசோகரைப் போல் புகழ் பெறுவீர்கள்..."

"என் உள்ளத்தில் இளம்பிராயத்திலிருந்து விநாயகரும் முருகனும், பார்வதியும், பரமேசுவரனும், நந்தியும் பிருங்கியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டல்லவா புத்த தர்மத்திற்கு இடங் கொடுக்கவேண்டும்? குருதேவரே! அடியேனை மன்னியுங்கள்! தங்களுடனே நான் யாத்திரை வருகிறேன் என்று சொன்னபோது, புத்த தர்மத்தில் சேர்ந்து விடுவதாக எண்ணிச் சொல்லவில்லை. கடல்களைச் கடந்து தூர தேசங்களுக்குப் போய்ப் பார்க்கும் ஆசையினால் தங்களுடன் வருவதாகச் சொன்னேன்! ஆனாலும் மறுபடி யோசிக்கும்போது..."

"இளவரசே! தங்கள் வார்த்தையை நான் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனாலும் புத்த தர்மத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாமற் போகவில்லை. புத்த பகவானுடைய பூர்வ ஜன்மம் ஒன்றில் அவர் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்திருந்தார். புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தமது சதையை அவர் அரிந்து கொடுத்தார். அந்த சிபியின் வம்சத்திலே பிறந்தவர் சோழ குலத்தினர். ஆகையினாலே தான் உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்குச் `செம்பியன்' என்ற பட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தாங்கள் மறந்து விடவேண்டாம்."

` றக்கவில்லை. குருதேவரே! மறந்தாலும் என் உடம்பில் ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை.ஒரு பக்கத்தில் சிபிச் சக்கரவர்த்தியும், மனு நீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், எலும்பிலேயும் கலந்திருந்தது, `பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய நலன்களைத் தியாகம் செய்!' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்தது `கையில் கத்தியை எடு! நாலவகைச் சைனியத்தைத் திரட்டு! நாலு திசையிலும் படை எடுத்துப் போ! கடல் கடந்து போ! சோழ ராஜ்யத்தை விஸ்தரித்து உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்!' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு `ஆலயத் திருப்பணி செய்! பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு! மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி!'என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே! அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது.கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றார் பொன்னியின் செல்வர்.

இதைக் கேட்ட பிக்ஷுவின் முகம் மிக்க மலர்ச்சியடைந்து விளங்கியது. "இளவரசே! பௌத்த மதத்தைப் பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும்?" என்றார்.

"அதோ அந்தச் சுவர்கள ல் காணப்படும் சித்திரக் காட்சிகளை விளக்கிச் சொல்லுங்கள். அங்கே ஓர் இராஜ குமாரர் இரவில் எழுந்து போகப் பிரயத்தனப் படுவது போல் ஒரு சித்திரம் இருக்கிறதே? அது என்ன? அவர் அருகில் படுத்திருக்கும் பெண்மணி யார்? தொட்டிலில் தூங்கும் குழந்தை யார்? அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை குடிகொண்ட தோற்றம் ஏன்?" என்று இளவரசர் கேட்டார்.

"ஐயா! புத்த பகவான் இளம் பிராயத்தில் தங்களைப் போல் இராஜ குலத்தில் பிறந்த இளவரசராக இருந்தார். யசோதரை என்னும் நிகரற்ற அழகு வாய்ந்த மங்கையை மணந்திருந்தார். அவர்களுக்கு ஒரு செல்வப் புதல்வன் பிறந்திருந்தான். தகப்பனார் இராஜ்ய பாரத்தை அவரிடம் ஒப்புவிக்கச் சித்தமாயிருந்தார்.அந்தச் சமயத்தில் சித்தார்த்தர் உலகில் மக்கட் குலம் அனுபவிக்கும் துன்பங்களைப் போக்குவதற்கு வழி கண்டுபிடிக்க விரும்பினார். இதற்காக அருமை மனைவியையும் செல்வக் குழந்தையையும் இராஜ்யத்தையும் விட்டுப் போகத் தீர்மானித்தார். அவர் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப்படும் காட்சி தான் அது. இளவரசே! இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா?"

"ஆம், ஆம்! பலமுறை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சித்தரத்தில் பார்க்கும்போது மனதில் பதிவதுபோல், வாயினால் கேட்ட வரலாறு பதியவில்லை. தூங்குகின்ற யசோதரையை எழுப்பி `சித்தார்த்தர் உன்னை விட்டுப் போகிறார்! அவரைத் தடுத்து நிறுத்து!' என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. சரி; அடுத்த சித்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!"

புத்த பகவானுடைய வரலாற்றைக் குறிப்பிட்ட மற்றச் சித்திரங்களையும் ஒவ்வொன்றாக ஆச்சாரிய பிக்ஷசூ எடுத்து விளக்கி வந்தார். அருள்மொழிவர்மர் புத்த தர்மத்தைத் தழுவினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஆசை பிக்ஷுவின் இதய அந்தரங்கத்தில் இருக்கத்தான் இரு ந்தது.ஆகையால் மிக்க ஆர்வத்துடனே சித்தார்த்தருடைய சரித்திரத்தைச் சொல்லி வந்தார்.கடைசியில் சித்தார்த்தர் போதி விருட்சத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஞான ஒளி பெறும் சித்திரத்துக்கு வந்தார். அந்தச் சித்திரத்தைச் குறித்து அவர் சொன்ன பிறகு பொன்னியின் செல்வர், "குருதேவா! தங்கள் கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா?" என்று கேட்டார்.

"இளவரசே! நான் ஐம்புலன்களை வென்று மனத்தை அடக்கவும் பயின்றவன். தங்கள் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்" என்றார் பிக்ஷு.

`"போதி விருட்சத்தின் அடியில் வீற்றிருந்தபோது சித்தார்த்தர் ஞான ஒளி பெற்றார் என்பதை நான் நம்பவில்லை."

ஐம்புலன்களையும் உள்ளத்தையும் அடக்கியவாரயிருந்த போதிலும் பிக்ஷுவின் முகம் சுருங்கியது.

"இளவரசே! மகா போதி விருட்சத்தின் ஒரு கிளை அசோக வர்த்தனரின் காலத்தில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கிளை, வேர் விட்டு வளர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் பட்டுப் போகாமல் அநுராதபுரத்தில் விசாலமாகப் படர்ந்து விளங்கி வருகிறது. அந்தப் புனித விருட்சத்தைத் தாங்களே அனுராதபுரத்தில் பார்த்திருப்பீர்கள். பின்னர், `நம்பவில்லை' என்று ஏன் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"குருதேவரே! போதி விருட்சமே இல்லையென்று நான் சொல்லவில்லை. அதனடியில் அமர்ந்து சித்தார்த்தர் தவம் செய்ததையும் மறுக்கவில்லை. அங்கே தான் அவர் ஞான ஒளி பெற்றார் என்பதைத்தான் மறுத்துக் கூறுகிறேன். என்றைய தினம் சித்தார்த்தர் மக்களுடைய துன்பத்தைத் துடைக்க வழி காண்பதற்காகக் கட்டிய மனைவியையும், பெற்ற மகனையும் உரிமையுள்ள இராஜ்யத்தையும் தியாகம் செய்து நள்ளிரவில் புறப்பட்டாரோ, அப்போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லுகிறேன். அதைக் காட்டிலும் ஓர் அற்புதமான செயலை நான் எந்த வரலாற்றிலும் கேட்டதில்லை. இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். பரதர் தம் தமையனிடம் கொண்ட பக்தியினால், `இராஜ்யம் வேண்டாம்' என்றார். அரிச்சந்திர மகாராஜா தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, இராஜ்யத்தைத் துறந்தார். சிபிச் சக்கரவர்த்தியும் புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து விட்ட காரணத்தினால், தம் உடலை அறுத்துக் கொடுத்தார். ஆனால் சித்தார்த்தர் யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை; யாரையும் திருப்தி செய்ய விரும்பவில்லை. மனித குலத்தின் துன்பத்தைப் போக்க வழி கண்டுபிடிக்கும் பொருட்டுத் தாமாகவே எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டுப் புறப்பட்டார். புத்த பகவான் போதி விருட்சத்தின் அடியில் ஞான ஒளி பெற்ற பிறகு, இதைக் காட்டிலும் அற்புதமான செயல் ஏதேனும் செய்த துண்டா? ஆகையால் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா?"

இவ்விதம் பொன்னியின் செல்வர் கூறிய மொழிகள் ஆச்சாரிய பிக்ஷுவின் செவிகளில் அமுதத் துளிகளைப் போல் விழுந்தன. "ஐயா! தாங்கள் கூறுவதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆயினும் போதி விருட்சத்தினடியிலேதான் மக்களின் துன்பங்களைப் போக்கும் வழி இன்னதென்பது புத்த பகவானுக்கு உதயமாயிற்று. அதிலிருந்துதான் மக்களுக்குப் பகவான் போதனை செய்யத் தொடங்கினார்."

"சுவாமி! புத்த பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். நானும் அவருடைய செயலைப் பின்பற்ற விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்த , என்னை வேதனைப் படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா? அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்!" என்றார் இளவரசர்.

"இளவரசே! தங்களை யொத்த சீடனைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.ஆனால் அதற்கு வேண்டிய தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை.இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது தாங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்." என்றார் பிக்ஷு.

"தங்கள் தகுதியைப்பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தைரியத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அது என்ன?"

"ஆமாம்.தைரியமும் இல்லைதான்! இரண்டு தினங்களாக இந்த நாகைப்பட்டினத்தில் ஒரு வதந்தி பரவிக்கொண்டு வருகிறது. அதை யார் கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் இந்த விஹாரத்தில் இருப்பதாகவும், தங்களைப் புத்த பிக்ஷுவாக்க நாங்கள் முயன்று வருவதாகவும் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களாம். இதனால் அநேகர் கோபங்கொண்டிருக்கிறார்களாம். இந்த விஹாரத்தின் மீது மக்கள் படை எடுத்து வந்து உண்மையை அறியவேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்களாம்!"


"ஆகா! இது என்ன பைத்தியக்காரத்தனம்? நான் புத்த மதத்தில் சேர்வதுபற்றி ஊரில் உள்ளவர்களுக்கு என்ன கவலை? நான் காவித்துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் கூட ஆகவில்லையே? மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த முடியாதே?" என்றார் இளவரசர்.

`ஐயா! ஜனங்களுக்குத் தங்கள் மீது கோபம் எதுவும் இல்லை. தங்களை ஏமாற்றிப் புத்த பிக்ஷுவாக்க முயல்வதாக எங்கள் பேரிலே தான் கோபம். வெறும் வதந்தியே இப்படிப் பட்ட கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. உண்மையாகவே நடந்துவிட்டால் என்ன ஆகும்? இந்த வி ாரத்தையே ஜனங்கள் தரை மட்டமாக்கி விடுவார்கள். ஏதோ தங்களுடைய தந்தையின் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். தினந்தோறும். "போதியந் திருநிழர் புனித நிற் பரவுதும் மேதகு நந்தி புரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே!" எனப் பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்த நல்ல நிலைமையைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனாலேதான் `தைரியமில்லை' என்று சொன்னேன்" என்றார் பிக்ஷு.

அவர் கூறி வாய் மூடுவதற்குள்ளே அந்தப் புத்த விஹாரத்தின் வாசற்புறத்தில் மக்கள் பலரின் குரல்கள் திரண்டு ஒருமித்து எழும் பேரோசை கேட்கத் தொடங்கியது. பிக்ஷு அதைச் செவி கொடுத்துச் சிறிது நேரம் கேட்டுவிட்டு, "இளவரசே! நான் கூறியது உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை! புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும்!" என்றார்.

சூடாமணி விஹாரத்தின் சுற்றுப் புறங்களில் ஆயிரக் கணக்கான மக்களின் கூக்குரல் ஒலி கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டு வந்தது.
 

பக்க தலைப்பு



இரண்டாம் அத்தியாயம்
வந்தான் முருகய்யன்!




சூடாமணி விஹாரத்துக்கு வௌியே கடல் பொங்கும் போது எழும் ஓசையைப் போல் மக்களின் இரைச்சல் ஒலி பெருகிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் ஆசாரிய பிக்ஷுவும், அருள்மொழிவர்மரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் புத்த விஹாரமும், அதில் உள்ள பிக்ஷுகளும் தம்மால் இந்தப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியிருப்பதை எண்ணி இளவரசர் மிகவும் மனக்கலக்கம் அடைந்தார். "சுவாமி என்னால் உங்களுக்கு இந்தத் தொல்லை உண்டானதைப் பற்றி வருத்தப்படுகிறேன்" என்றார்.

"இளவரசே! தங்கள் காரணமாக இதுபோல் நூறு மடங்கு தொல்லை நேர்ந ்தாலும், நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இது ஒரு கைம்மாறாகுமா?" என்றார் பிக்ஷு.

"அதுமட்டும் அல்ல. இம்மாதிரி ஒளிவு மறைவாகக் காரியம் செய்வது எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நான் இங்கு இருந்து கொண்டே எதற்காக `இல்லை' என்று சொல்ல வேண்டும்? சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும்? தங்களுடைய பரிவான சிகிச்சையினால் எனக்கு உடம்பும், நன்றாகக் குணமாகிவிட்டது. இப்போதே வௌியேறிச் சென்று ஜனங்களிடம் நான் இன்னான் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் எனக்கு அடைக்கலம் அளித்துச் சிகிச்சை செய்து என் உயிரையும் காப்பாற்றினீர்கள் என்பதை மக்களிடம் அறிவிக்கிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு என் காரணமாக எந்த வித அபகீர்த்தியும் ஏற்படக் கூடாது" என்றார் இளவரசர்.

"ஐயா! இதில் சத்தியத்துக்கு விரோதமான காரியம் எதுவும் இல்லை. தங்களுடைய எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இந்த நாகைப்பட்டினத்தில் அவர்கள் சென்ற இரண்டு நாளாகப் பரப்பி உள்ள வதந்தியிலிருந்தே அது நிச்சயமாகிறது.அப்படியிருக்க தாங்கள் இங்கே இருப்பதைத் தெரிவியாமல் வைத்திருப்பதில் தவறு என்ன? அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்லையா? அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா?" என்று பிக்ஷசூ கேட்டார்.

"குருதேவரே! தங்கள் அறிவுத்திறனும், விவாதத்திறனும் அபாரமானவை யென்பதை அறிவேன். தங்களுடன் தர்க்கம் செய்து என்னால் வெல்ல முடியாது. ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்; பஞ் பாண்டவர்கள் மறைந்திருக்க வேண்டியது. அவர்கள் ஏற்றுக்கொண்ட `சூள்' காரணமாக அவசியமாயிருந்தது.எனக்கு அப்படி அவசியம் ஒன்றும் இல்லை. என் விரோதிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். எனக்கு அப்படிப்பட்ட விரோதிகள் யார்? எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும்? எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வௌியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும்.மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே? அதில் யாருக்கு என்ன நஷ்டம்?"

"இளவரசே! தாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. தங்களுடைய நிலைமையில் நானும் அவ்விதமே எண்ணி நடந்து கொள்வேன். ஆனால் அதற்குத் தடையாக நிற்பது, தங்கள் திருச்சகோதரி குந்தவைப் பிராட்டிக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிதான். பழையாறை இளைய பிராட்டியைப் போன்ற அறிவிற் சிறந்த மாதரசி சோழ குலத்தில் தோன்றியதில்லையென்று தாங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். வேறு எந்த இராஜ குலத்திலும் தோன்றியதில்லை என்பது என் கருத்து. அவர் தாம் செய்தி அனுப்பும் வரையில் தங்களை இங்கே வைத்துப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முக்கியமான காரணம் இன்றி அவர் அவ்விதம் சொல்லியிருக்கமாட்டார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு விரோதமாகச் சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலர் சதி செய்வதாக நாடெல்லாம் பேச்சாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிலர் இரகசியச் சதி வேலை செய்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கூட்டதாருக்கு இந்தப் புத்த விஹாரத்திலுள்ள நாங்கள் உதவி செய்கிறோமோ என்று எண்ணித்தான் ஜனங்கள் ஆத ்திரம் அடைந்து வாசலில் வந்து கூடியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தாங்கள் வௌியேறி, மக்களின் முன்னிலையில் தங்களை வௌிப்படுத்திக் கொள்வது உசிதமான காரியமா? யோசியுங்கள்! அதைக் காட்டிலும் தங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களுக்கெல்லாம் ஏதேனும் சங்கடம் நேர்ந்தால் நேரட்டுமே?... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை!..."

இவ்வாறு தலைமைப் பிக்ஷு சொல்லிக் கொண்டிருந்த போது இன்னொரு இளம் சந்நியாசி அங்கே பரபரப்புடன் வந்தார். "சுவாமி! நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று `இளவரசரைப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். `இளவரசர் இங்கே இல்லை' என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. `நாங்களே விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது!" என்றார்.

"அவர்களுக்கு நாம் என்ன வழி சொல்ல முடியும்? புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு!" என்றார் தலைமைப் பிக்ஷு.

இளவரசர் அப்போது "குருதேவரே! எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கருணை கூர்ந்து கேட்க வேண்டும். தங்கள் சீடர்கள் நான் இங்கே இல்லை என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இனி நான் ஜனங்களின் முன்னிலையில் போய் நின்றால், தங்கள்சீடர்களின் வாக்கைப் பொய்யாக்கியதாகும். அதனால் ஒரு வேளை ஜனங்களின் மூர்க்காவேசம் அதிகமானாலும் ஆகலாம்" என்றார்.

"நிச்சயமாய் ஆகியே தீரும். அதன் பலனை நாங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்" என்றார் பிக்ஷசூ.

"அதைக் காட்டிலும் தங்கள் சீடர்களுடைய வாக்கை நான் மெய்யாக்கி விடுகிறேன்..."

"இளவரசே! தங்களால்கூட அது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். இவர்கள் சொன்னது சொன்னதுதானே? அதை எப்படி இனி மெய்யாக்க முடியும்?"

"அதற்கு வழியிருக்கிறது. ஜனங்கள் இந்த விஹாரத்துக்குள் புகுவதற்குள்ளே நான் இங்கிருந்து போய் விடலாம் அல்லவா?"

"ஆகா! எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தகைய பாவச் செயலை நாங்கள் செய்ய வேண்டுமா? தங்களை வௌியேற்ற வேண்டுமா?"

"குருதேவரே! இதில் பாவமும் இல்லை. பழியும் இல்லை. இங்கிருந்து அரைக்காத தூரத்தில் ஆனை மங்கலத்தில் சோழ மாளிகை இருக்கிறது. அன்றைக்கு என் சகோதரியைப் பார்க்கச் சென்றபடி, இப்போதும் உடனே கால்வாய் வழியே அங்கே போய் விடுகிறேன். பிறகு சௌகரியமான போது திரும்பி வந்து விட்டால் போகிறது!" என்று சொன்னார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷுவுக்கு இளவரசர் கூறிய அந்த யோசனை பிடித்திருந்ததாகத் தோன்றியது.

"ஆம், ஆம்! அப்படிச் செய்தால் தங்களை உடனே வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், விஹாரத்திலிருந்து வௌியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் அல்லவா? அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே?" என்றார்.

"குருதேவரே! அதற்கு ஓர் உபாயம் செய்ய முடியும். கூட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவன் விஹாரத்திற்குள் வந்து தேடிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுவோம்" என்றார் இளம் பிக்ஷு.

"ஒருவன் வந்து பார்த்தால் போதாதா? அவன் வௌியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா?" என்றார் குரு.

"அவனை இங்கே கொஞ்சம் தாமதப்படுத்தி வைத்திருந்தால், அதற்குள் இருட்டிவிடும். இளவரசர் வௌியேறச் சௌகரியமாகயிருக்கும். அது மட்டுமல்ல, சீக்கிரத்தில் ஒரு பெரும் புயல் அடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. இங்கிருந்து பார்க்கும்போதே கடல் அலைகள் மலைபோல் எழ கின்றன. கடலின் ஆரவாரமும் அதிகமாகி வருகிறது. புத்த பகவானுடைய கருணை அப்படி இருக்கிறதோ, என்னமோ? பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ!" என்று கூறினார் இளம் பிக்ஷு.

"அப்படியெல்லாம் சொல்லவேண்டாம். நம்முடைய சங்கடம் தீருவதற்காகக் கடல் கொந்தளித்துப் பெரும் புயல் வர வேண்டுமா?" என்றார் குரு.

"சுவாமி! தங்கள் சீடர் சொல்லும் வழியை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. உள்ளே ஒரு தனி மனிதன் மட்டும் வந்தால், ஒருவேளை அவனிடம் நான் பேசி அவன் மனத்தை மாற்றுவது சாத்தியமாகலாம்" என்றார் இளவரசர்.

"அந்த யோசனையும் என் மனத்தில் இருக்கிறது. இரண்டும் தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். படகோட்டியின் மனையாள் பெருங்கூச்சல் போட்டாள்...!"

"ஆகா! அப்படிப்பட்ட படகோட்டி யார்? அவன் பெயர் என்னவென்று தெரியுமா?" என்றார் இளவரசர்.

"ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்..."

"அவன் எனக்கு நன்கு தெரிந்தவன். என் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டான். அவனை ஏன் என்னிடம் அழைத்து வரவில்லை...?"

"அவன் பெண்டாட்டியினால் நமது இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்று எண்ணினோம். இப்போது அவனும் அவன் மனையாளும் மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள்..."

"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. படகோட்டி முருகய்யனை மெதுவாக இங்கே அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு திரும்பி வந்து, அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ ாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்!" என்றார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷு, "இளவரசரே! இந்தக் காலத்தில் யாரையும் பூரணமாக நம்பி விடுவதற்கில்லை. இந்தப் படகோட்டியும், அவனது மனையாளுந்தான் இரண்டு நாளாக இந்தப் பட்டினத்தில் தங்களைப் பற்றிய வதந்தியைப் பரப்பியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்."

"அப்படியேயிருந்தாலும் அதனால் பாதகமில்லை. எப்படியும் யாரேனும் ஒருவனை விகாரத்துக்குள் அழைத்து வரவேண்டும் அல்லவா? அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள்!" என்றார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷுவின் சம்மதத்துடன், இளைய பிக்ஷு வௌியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பிக்ஷு இளவரசே! என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வௌியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன்.என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது!" என்று சொல்லி விட்டு வௌியே சென்றார்.
 

பக்க தலைப்பு



மூன்றாம் அத்தியாயம்
கடல் பொங்கியது!




விஹாரத்துக்கு வௌியே ஆச்சாரிய பிக்ஷு கண்ட காட்சி அவருக்குக் கதி கலக்கம் உண்டாக்குவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும் அவர்கள் போட்ட கூச்சலும் அவர்கள் ஆவேசங் கொண்டவர்கள் என்பதைக் காட்டின. அந்த ஆவேசத்தைக் குரோத வெறியாகச் செய்வது மிக எளிதான காரியம். பலர் கைகளில் வாள், வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

இன்னும் சிலரின் கையில் கடப பாரைகள் இருந்தன. பிக்ஷுக்கள் வழிக்கு வராவிட்டால் விஹாரத்தையே இடித்துத் தரைமட்டமாக்கி விடுவது என்று அவர்கள் உத்தேசித்திருந்தனர் போலும். அதற்கு வேண்டிய காரணம் இல்லாமலும் போகவில்லை. பராந்தகச் சக்கரவர்த்தியின் காலம் முதல் அடிக்கடி சோழ நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் யுத்தம் நடந்து வந்தது. சோழநாட்டு வீரர் பலர் இலங்கைப் போரில் மடிந்திருந்தார்கள். ஏதாவது ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், அதைச் சேர்ந்த மற்றவையும் பிடிக்காமல் போவது மக்களின் இயல்பு அல்லவா? இலங்கைப் போர்கள் காரணமாகச் சோழ மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரம் அத்தீவில் வியாபகமாயிருந்த பௌத்த மதத்தின் மேலும் ஓரளவு திரும்பியிருந்தது. ஏதாவது ஒரு சிறிய காரணம் ஏற்பட்டால் போதும். தமிழகத்தில் மிஞ்சியிருந்த பௌத்த விஹாரங்கள் மீதும் அவற்றில் வாழ்ந்த பிக்ஷசூக்கள் மீதும் பழி தீர்த்துக்கொள்ளப் பாமர மக்கள் சித்தமாயிருந்தார்கள்.

அத்தகைய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டு விட்டதாக ஆச்சாரிய பிக்ஷு கருதினார். யாரோ தீயநோக்கம் கொண்டவர்கள் இவ்விதம் பாமர மக்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள். புத்த பகவானுடைய கருணையினாலேதான் இந்தப் பேராபத்திலிருந்து மீள வேண்டும்!... ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் அந்த ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் முன்னை விட அதிகமாயிற்று.

"பொன்னியின் செல்வரைக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் விஹாரத்தை இடித்துத் தரை மட்டமாக்கி விடுவோம்" என்பவை போன்ற மொழிகள் ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான குரோதம் நிறைந்த குரல்களிலிருந்து வௌியாகிச் சமுத்திர கோருத்தைப் போல் கேட்டது. அதே சமயத்தில் கடலின் பேரோசையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை ஆச்சாரிய பிக்ஷு கவனித்துக் கொண்டார். இளம் பிக்ஷு கூறியது உண்மைதான். அளவிலாத வேகம் பொருந்திய கொடும்ப யல். கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதி சீக்கிரத்தில் புயல் கரையைத் தாக்கப்போகிறது, இந்த மக்களால் ஏற்படும் அபாயத்துக்குப் பிழைத்தாலும், புயலின் கொடுமையிலிருந்து விஹாரம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற கவலை பிக்ஷுவுக்கு ஏற்பட்டது.

இதற்குள் வாலிப பிக்ஷு கையமர்த்திச் சமிக்ஞை செய்து ஆத்திரம் கொண்ட மக்களின் கூட்டத்தில் சிறிது இரைச்சல் அடங்கும்படி செய்திருந்தார். "மகா ஜனங்களே! எங்கள் தலைவரை அழைத்து வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது அல்லவா? உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள்! அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும்! திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! இது உங்களுக்குச் சம்மதந்தானே? உங்களில் யார் என்னுடன் விஹாரத்துக்குள் வருகிறீர்கள்?" என்று வினவினார்.

"கூட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் "நான் வருகிறேன்" "நான் வருகிறேன்" என்று கூச்சலிட்டார்கள். இளம் பிக்ஷு மறுபடியும் கையமர்த்தி, "எல்லோரும் சேர்ந்து கூச்சலிடுவதினால் என்ன பயன்? யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும்!" என்றார்.

கூட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டு ஒவ்வொரு தடவையும் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ராக்கம்மாள், "இதோ நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்று கூவினாள்.

படகோட்டியைப் பார்த்து இளம் பிக்ஷு, "அப்பனே! இவள் கூறுவது சரியா?" என்று கேட்டா ்.

முருகய்யன் "சுவாமி! இவள் கூறுவது முழுவதும் சரியல்ல. இவள் இளவரசரைச் சமீபத்தில் பார்க்கவில்லை. நான் சென்ற ஒரு மாதத்துக்குள்ளே ஈழநாட்டில் பொன்னியின் செல்வரைப் பார்த்தது உண்மை.நான் அறியாமல் அவருக்குச் செய்த அபகாரத்துக்காகக் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அவர் கருணையுடன் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தது, நேற்று நடந்தது போல் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அவரை நான் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்" என்று சொன்னான்.

"அப்படியானால் நீதான் இந்த வேலைக்குத் தகுதியானவன். உன் மனையாள் சொல்வதிலும் அவ்வளவு தவறு கிடையாது. நீ பார்த்தது இவள் பார்த்தது போலத்தான் என்று எண்ணிச் சொல்லியிருக்கிறாள். இப்போதும் நீ விஹாரத்துக்குள் தேடிப் பார்த்து விட்டு வந்து சொன்னால் இவள் ஒப்புக்கொள்வாள். பிக்ஷுக்கள் தவம் செய்யும் புத்த விஹாரத்துக்குள் பெண் பிள்ளைகளை விடுகிறதில்லையென்பது உன் மனையாளுக்குத் தெரிந்து தானிருக்கும். ஆகையால், நீ வா இங்கே!" என்று இளம் பிக்ஷு கூறினார்.

பிறகு விஹாரத்தின் முன் வாசற் படிகளில் இறங்கிச் சென்று முருகய்யனுடைய ஒரு கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு மறுபடியும் படிகளில் ஏறினார்.

மக்களைப் பார்த்து, "இதோ இந்தப் படகோட்டி முருகய்யன் சமீபத்தில் இளவரசரைப் பார்த்திருக்கிறானாம். இவனை உள்ளே அழைத்துப் போகிறேன். விஹாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து சொல்வான். உங்கள் எல்லோருக்கும் இது சம்மதந்தானே!" என்றார்.

மக்களின் கூட்டத்திலிருந்து சம்மதக்குரல் அவ்வளவு வேகத்துடன் வரவில்லை. சிலர் "சம்மதம் என்று முணுமுணுத்தார்கள். மற்றவர்கள் ஒருவரோடொருவர் "இதில் ஏதாவது மோசம் இருக்குமோ?" என்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரகசியம் பேசிய குரல்கள் சேர்ந்து கடலின் இரைச்சலுடன் போட்டியிட்டன.

இளம் பிக்ஷு அதைக் கவனித்து விட்டு, பெரிய குரலில் "மகா ஜனங்களே! இதோ எங்கள் ஆச்சாரியரும் வந்திருக்கிறார்.உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டியது இருந்தால் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த மனிதனை நான் அழைத்துப் போய் விஹாரத்தைச் சுற்றிக் காண்பித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிப் படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு சென்றார். கம்பீரமான தோற்றத்துடனும் சாந்தம் குடி கொண்ட முகத்துடனும் பொலிந்த ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் மக்களின் மனத்தில் சிறிது பயபக்தி உண்டாயிற்று. அவரிடம் அதிகப் பிரசங்கமான கேள்வி எதுவும் கேட்பதற்கு யாரும் துணிவு கொள்ளவில்லை.

ஆச்சாரிய பிக்ஷு சற்று நேரம் அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அவர்களுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் தெரிந்த கடலையும் நோக்கினார். "மகா ஜனங்களே! நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவரும் அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த தர்மத்துக்கும், புத்த பிக்ஷசூக்களுக்கும் அவர் அத்தகைய மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் இட ந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா? இளவரசருக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும்.அவரைக் கடல் கொண்ட செய்தி பொய்யாயிருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தோம். உங்களையெல்லாம் விடப் பொன்னியின் செல்வரிடம் நாங்கள் அன்புடையவர்களாயிருப்பதற்குக் காரணங்கள் உண்டு..."

இச்சமயத்தில் கூட்டத்தில் ஒருவன் குறுக்கிட்டு, "அதனாலே தான் எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. உங்களுடைய அன்பு அபரிமிதமாகப் போய் எங்கள் இளவரசரின் தலையை மொட்டையடித்துக் காவித்துணி கொடுத்துப் பிக்ஷுவாக்கி விடுவீர்களோ என்று பயப்படுகிறோம்!" என்றான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலர் இதைக் கேட்டதும் கலீர் என்ற கேலிச் சிரிப்பு சிரித்தார்கள்.

ஆச்சாரிய பிக்ஷுவுக்கு எப்படியோ அச்சமயம் ஒருவித ஆவேசம் ஏற்பட்டு விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதற்கு ஒரே ஒரு நிச்சயமான வழிமட்டும் உண்டு என்பதை அவர் உள்ளம் உணர்த்தியது. உடனே முன் பின் யோசியாமல் தம் உள்ளத்தில் தோன்றியதைப் பின்வரும் மொழிகளில் சபதமாக வௌியிட்டார். "சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி தான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித்துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்யமாட்டேன்.அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்ம சரணங்களின் மீது ஆணையாகச ் சபதம் செய்கிறேன்! புத்தம் கச்சாமி! தர்மம் கச்சாமி! சங்கம் கச்சாமி!"

இடிமுழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. ஆச்சாரிய பிக்ஷு தொடர்ந்து கூறினார்:- "சோழ நாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் குறித்து நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பது இயல்புதான். பொன்னியின் செல்வரைக் குறித்த கவலை இப்போது உங்களுக்குத் தீர்ந்து போயிருக்கலாம். இனிமேல் உங்கள் குடும்பம், வீடு, வாசலைப் பற்றிச் சிறிது கவலை கொள்ளுங்கள். மகா ஜனங்களே! இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள்!" ஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிக்ஷு கூறியபடியே அவர்களுடைய வாழ்க்கையில் என்றுமே காணாத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். அதிசயமான காட்சி மட்டுமன்று, பயங்கரமான காட்சியுந்தான்.

கடலானது பொங்கி மேலுயர்ந்து வானத்தில் மேலே மேலே வந்து கொண்டிருந்த கரிய கொண்டல்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கரிய நிறத் தண்ணீர் மலையானது நின்ற இடத்தில் நிற்கவில்லை. மேலே மேலே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது அந்த மலையானது அவர்கள் இருக்குமிடம் வரையில் வந்தால், அவர்கள் மட்டுமல்ல. சூடாமணி விஹாரமே மூழ்கிப் போவது திண்ணம் என்று தோன்றுகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் பிரமித்து நின்றது, ஆச்சாரிய பிக்ஷு மறுபடியும், "அதோ, நீங்கள் எல்லாரும் வசிக்கும் நாகைப்பட்டினத்தைப் பாருங்கள்!" என்ற ு சொன்னார்.

நாகைப்பட்டினம் நகரம் சூடாமணி விஹாரத்துக்குச் சிறிது வடதிசையில் அமைந்திருந்தது. வெகு தூரத்துக்கு வெகு தூரம் பரவியிருந்தது. கடற்கரையை யடுத்துப் பண்டக சாலைகள், சுங்கம் வாங்கும் கட்டிடங்கள் முதலியவை இருந்தன. அவற்றுக்கு அப்பால் ஜனங்கள் வசிக்கும் வீடுகள் ஆரம்பமாகிக் கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் சுமார் அரைக் காத தூரத்துக்கு மேலே பரவியிருந்தன.

கடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக் கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது. கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல் தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன. படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.

"மகா ஜனங்களே! ஒரு காலத்தில் காவிரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அம்மாதிரியான விபத்து நமது நாகைப்பட்டினத்துக்கு வராமல் புத்த பகவான் காப்பாற்றுவாராக! ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்!" என்று ஆச்சாரிய பிக்ஷு தழதழத்த குரலில் கூவினார்.

இதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டமானது கடல் அலை போலவே விரைந்து, நகரத்தை நோக்கி நகரலாயிற்று. முன்னணியில் நின்றவர்கள் ஓடத் தொடங்கினார்கள். பின்னால் நின்றவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். முதலில் கூட்டமாக நகர்ந்தார்கள். பிறகு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சில நிமிட நேரத்திற்குள் சற்று முன்னால் பெரும் ஜனத்திரள் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாகக் காட்சி அளித்த ு.

படகோட்டி முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் மட்டும் நின்ற இடத்திலேயே நின்று "என் புருஷன்!" "என் புருஷன்!" என்று கத்தினாள்.

"தாயே! உன் புருஷனுக்கும், ஒன்றும் ஆபத்து நேராது. பத்திரமாகத் திரும்பி வந்து சேருவான். நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்!" என்றார் பிக்ஷு.

"இல்லை, இல்லை! என் புருஷனை விட்டு விட்டு, நான் எப்படிப் போவேன்? நான் கோவிலுக்குள் வருகிறேன்" என்றாள் ராக்கம்மாள்.

"கூடாது அம்மா! கூடாது! புத்த சந்நியாசிகள் வசிக்கும் விஹாரத்துக்குள் பெண்பிள்ளைகள் வரக்கூடாது! உனக்குத் தெரியாதா?" என்றார் பிக்ஷு.

இச்சமயத்தில் அந்த மாபெரும் ஜனக் கூட்டத்திலே ஓடாமல், பின் தங்கி நின்று கொண்டிருந்த மனிதன் ஒருவன் ராக்கம்மாளை அணுகி வந்தான். அவள் காதோடு ஏதோ சொன்னான். அவளுடைய கரத்தைப் பிடித்துக் கரகரவென்று இழுத்தான். அவள் அவனுடன் வேண்டா வெறுப்புடன் போகத் தொடங்கினாள்.

"ஆகா, இந்த மனிதன் யார்? இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு?" என்று எண்ணிய வண்ணம் ஆச்சாரிய பிக்ஷசூ விஹாரத்துக்குள் சென்றார். பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார். முருகய்யன் இதற்குள் அதிசயமெல்லாம் நீங்கப் பெற்றவனாய் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

"முருகா! இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்" என்று இளவரசர் கூறினார்.

`ஆச்சார்ய பிக்ஷு, "இளவரசே! இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஜனக்கூட்டம் கலைந்துவிட்டது. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்" என்று சொன்னார்.

பின்னர், வௌியில் நடந்தவற்றைச் சில வார்த்தைகளில் கூறினார். "சுவாமி! ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே! நான் எதற்காகப் போகவேண்டும்?" என்றார் இளவரசர்.

"அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் எ ்பது என்ன நிச்சயம்? மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா? அதை நிறைவேற்றி அருள வேண்டும்!" என்றார் பிக்ஷு.

உண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வௌியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.

இளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, "நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன்.புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள். சமுத்திர ராஜனின் கோபத்திலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றலாமோ காப்பாற்றுங்கள்! நான் வயதானவன். இங்கேயே இருந்து மாலை நேரத்துப் பூஜையைக் கவனித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதைக் ேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவருடைய முகத்தைச் சுற்றி அபூர்வமான ஜோதி ஒன்று பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது.
 

பக்க தலைப்பு



நான்காம்அத்தியாயம்
நந்தி முழுகியது




படகு கால்வாயில் போய்க் கொண்டிருந்த போது இளவரசர் நிமிஷத்துக்கு நிமிஷம் கால்வாயின் நீர்மட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. முருகய்யன் அதைச் செலுத்துவதற்கு வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தான்.புயலின் வேகமும் வினாடிக்கு வினாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. இருபுறமும் மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்து கொண்டிருந்தன.

நந்தி மண்டபத்தை நெருங்கிப் படகு வந்தது. இளவரசர் அந்த மண்டபத்தைப் பார்த்தார். நந்தியின் தலைக்கு மேலே தண்ணீர் வந்திருந்தது. இதிலிருந்து நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்திருந்தது என்று நன்கு தெரிய வந்தது.

"முருகய்யா! படகைச் சிறிது நிறுத்து" என்று இளவரசர் கூறினார்.

முருகய்யன் படகை நிறுத்தினான். ஆனால் அதன் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.

இளவரசர் படகிலிருந்து தாவிக் குதித்து நந்தி மண்டபத்தில் இறங்கினார். பின்னர் அதன் அருகில் விழுந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு மண்டபத்தின் மேல் சிகரத்தின் மீது ஏறினார். அங்கேயிருந்து சுற்று முற்றும் பார்த்தார். கால்வாய்க்குக் கீழ்ப்புறம் முழுதும் ஒரே ஜலப்பிரளயமாக இருந்தது. தென்னந்தோப்பில் பாதி மரங்களுக்கு மேல் அதற்குள் விழுந்து விட்டிரு ்தன. இடைவௌி வழியாகப் பார்த்தபோது, கடல் பொங்கி அந்தத் தென்னந் தோப்பின் முனைவரையில் வந்து விட்டதாகத் தெரிந்தது.

வடக்கே, சூடாமணி விஹாரம் இருந்த திசையை அருள்மொழிவர்மர் நோக்கினார். விஹாரத்தின் வௌிப் படிக்கட்டுகள் வரையில் கடல் பொங்கிப் பரவியிருந்தது தெரிந்தது. பொன்னியின் செல்வருடைய மனத்தில் அப்போது ஓர் எண்ணம் உதயமாயிற்று. அது அவருடைய உடல் முழுதும் சிலிர்க்கும்படி செய்தது.

"முருகய்யா! படகைத் திருப்பிக்கொண்டு போ! விஹாரத்தை நோக்கி விடு!" என்றார் இளவரசர்.

அதிகமாகப் பேசிப் பழக்கமில்லாதவனும், இளவரசரிடம் அளவிறந்த பக்தி கொண்டவனுமான தியாகவிடங்கரின் மகன் ஏன் என்றுகூடக் கேளாமல் படகைத் திருப்பிச் சூடாமணி விஹாரத்தை நோக்கிச் செலுத்தினான். வரும்போது ஆன நேரத்தைக் காட்டிலும் போகும் போது சிறிது குறைவாகவே நேரமாயிற்று. ஆனால் இளவரசருக்கோ ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்து கொண்டிருந்தது.

படகு விஹாரத்தை அடைந்த போது பொங்கி வந்த கடல் ஏறக்குறைய விஹாரம் முழுவதையும் சூழ்ந்து கொண்டிருந்தது. நீர் மட்டம் மேலே ஏறிக் கொண்டுமிருந்தது. ஈழநாட்டிலுள்ள விஹாரங்களைப் போல் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம் அக்காலத்தில் அவ்வளவு கம்பீரமாகவோ உயரமாகவோ அமைந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் தண்ணீர் மேலே ஏறினால் விஹாரத்தின் மண்டப சிகரம்கூட முழுகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

இளவரசர் படகிலிருந்து தாவித் தண்ணீரில் முழுகாமலிருந்த ஒருமண்டபத்தின் மேல் தளத்தில் குதித்தார். அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார். விஹாரத்தின் அடித்தளத்துக்கு அவர் போகாமல் மேல் மாடங்களில் ஒவ்வொரு பகுதியாகத் தேடிக் கொண்டு வந்தார். மேல் மாடங்களிலேயே சில இடங்களில் மார்பு அளவு தண்ணீரில் அவர் புகுந்து செல்ல வேண்டியதாயிருந்தது.

ேலும் மேலும் ஏமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கௌதமபுத்தரின் உருவச் சிலை அமைந்திருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தச் சிலையின் மார்பு அளவுக்குத் தண்ணீர் ஏறியிருந்தது. அங்கே இளவரசர் நின்று சுற்று முற்றும் பார்த்தார். தண்ணீரில் குனிந்தும் பார்த்தார். அவருடைய வாயிலிருந்து எழுந்த மகிழ்ச்சியும் வியப்பும் கலந்த `ஆஹா!' ஒலி அவர் தேடி வந்ததை அடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக இருந்தது.

ஆம்; புத்தர் சிலையின் அடியில் தண்ணீருக்குள்ளே பகவானுடைய பத்ம சரணங்கள் இரண்டையும் இறுகக் கட்டிக் கொண்டு ஆச்சாரிய பிக்ஷு உட்கார்ந்து கொண்டிருந்தார். பொன்னியின் செல்வர் தண்ணீரில் முழுகிப் பிக்ஷுவின் கரங்கள் இரண்டையும் சிலையிலிருந்து பலவந்தமாக விடுவித்து விட்டு அவரைத் தூக்கி எடுத்தார். தண்ணீருக்குள்ளே பிக்ஷுவைத் தூக்குவது இலேசாக இருந்தது.தண்ணீருக்கு வௌியே வந்த பிறகு அவ்வளவு இலேசாக இல்லை. ஆஜானுபாகுவும், நல்ல பலிஷ்டருமான அந்த பிக்ஷசூவின் உடல் கனம் இளவரசரைத் திணறச் செய்தது.

"முருகய்யா! முருகய்யா!" என்று குரல் கொடுத்தார். "இதோ வந்தேன்!" என்று சொல்லிக் கொண்டே முருகய்யன் படகைக் கொண்டு வந்தான். பொன்னியின் செல்வர் ஆச்சாரிய பிக்ஷுவைத் தூக்கிக் கொண்டு படகை நோக்கி விரைந்து சென்றார். அவருடைய கால்கள் தடுமாறின.
 

பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
தாயைப் பிரிந்த கன்று




இளவரசர் புத்த பிக்ஷுவையும் தூக்கிக்கொண்டு முருகய்யன் கொண்டு வந்து நிறுத்திய படகிலே குதித்தார். அவர் குதித்த வேகத்தில் அந்தச் சிறிய படகு பேயாட்டம் ஆடியது. ஒரு கணம் கவிழ்ந்து விடும் போலவும் இருந்தது. முருகய்யன் மிகப் பிரயத்தனப் பட்டுப் படகு கவிழாமல் காப்பாற்றினான்.

"முருகையா! இனிமேல் படகைவிடு! ஆனைம ங்கலம் அரண்மனைக்கு விடு!" என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகையன் படகைச் செலுத்தத் தொடங்கினான். சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து இளவரசர் வியந்தார். அவனுக்குச் சற்று உதவி செய்யலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் புத்த பிக்ஷுவைப் பிடித்திருந்த பிடியை விட்டுவிடத் தயங்கினார். அதற்கு ஏற்றாற்போல், திடீரென்று பிக்ஷு இளவரசருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்தார். அச்சமயம் படகு புத்த பகவானின் சிலையின் அருகே போய்க் கொண்டிருந்தது. இப்போது கடல் வெள்ளம் அச்சிலையின் கண்கள் வரை ஏறியிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் சிலையே முழுகிவிடும் என்பதில் ஐயமில்லை.

இளவரசர் பிக்ஷுவை இறுகப் பிடித்துக் கொண்டார். பார்ப்பதற்கு மிக மென்மையான தேகம் உடையவராகக் காணப்பட்ட இளவரசரின் கரங்களில் எவ்வளவு வலிமை இருந்தது என்பதை அறிந்து பிக்ஷு வியந்தார் என்பதை அவருடைய முகத் தோற்றம் காட்டியது. நெஞ்சிலே உரம் இருந்தால், உடலிலும் வலிமை உண்டாகும் போலும்! இத்தனைக்கும் பலநாள் சுரத்தினால் மெலிந்திருந்த உடம்பு!

புத்தரின் சிலையைத் தாண்டிப் படகு போயிற்று. முழுகிக் கொண்டிருந்த அச்சிலையைப் பிக்ஷு பார்த் ுக் கொண்டேயிருந்தார். சிலை விரைவில் மறைந்தது. பிக்ஷசூவின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது."இளவரசே! என்ன காரியம் செய்தீர்?" என்றார் பிக்ஷு.

அவருடைய உதடுகளின் அசைவிலிருந்து என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட இளவரசர் பிக்ஷுவின் காதில் அருகில் குனிந்து, "சுவாமி! அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்க வேண்டும்? என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்?" என்றார்.

"இளவரசே! இந்த விஹாரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இங்கே இருந்து வருகிறது. மகானாகிய தர்மபாத முனிவரின் காலத்திலே கூட இருந்தது. வீர சைவர்களான பல்லவ சக்கரவர்த்திகள் இதை அழிக்காமல் விட்டு வைத்தார்கள். அப்படிப்பட்ட புராதன விஹாரம் என் காலத்தில், என் கண் முன்னால் முழுகிவிட்டது. செங்கல் திருப்பணியினாலான இந்த விஹாரம் இந்தக் கடல் வெள்ளத்துக்குத் தப்ப முடியாது! வெள்ளம் வடிந்த பிறகு சில குட்டிச் சுவர்களே மிச்சமிருக்கும்! விஹாரம் போன பிறகு நான் மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும்?" என்றார் பிக்ஷு.

"விஹாரம் இடிந்து அழிந்தால், மறுபடியும் திருப்பணி செய்து கட்டிக்கொள்ளலாம். புத்த பகவானுடைய சித்தமிருந்தால் நானே திரும்பவும் கட்டிக் கொடுப்பேன். தாங்கள் போய்விட்டால் என்னால் தங்களைத் திருப்பிக் கொண்டு வர முடியாதே?" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

கடலும் புயலும் சேர்ந்து போட்ட இரைச்சலினால் அவர்களால் மேலும் தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. மற்றும், சுற்றுபுறங்களில் நாலபுறத்திலும் அவர்கள் கண்ட கோரக் காட்சிகள் அவர்களைப் பேச முடியாதபடி செய்துவிட்டன.

முறிந்த பய்மரங்களுடனே பெரிய பெரிய நாவாய்களும், சின்னஞ் சிறு மீன் பிடிக்கும் படகுகளும் கடற் பக்கத்திலிருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றில் பல கரை தட்டியும , கட்டிடங்களின் மேல் மோதியும், பேயாட்டம் ஆடிய மரங்களின் மீது இடித்துக் கொண்டும், சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தன. பெருங்காற்றில் வீடுகளின் கூரைகள் அப்படியே பிய்த்துக் கொண்டு பறந்து சென்று வெள்ளத்தில் விழுந்தன. வேறு சில கூரைகள் மிதந்து கொண்டிருந்தன.அவற்றில் சிலவற்றில் மனிதர்கள் மிகுந்த சிரமத்துடன் தொத்திக் கொண்டிருந்தார்கள். ஓவென்று அவர்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பெரிய பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.முறிந்த மரங்களில் சில மிதந்து மிதந்து சென்றன. மிதந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு சில மனிதர்கள் உயிர் தப்ப முயன்றார்கள். ஆடுமாடுகள் வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. இத்தகைய கோரமான காட்சிகளைப் பார்த்துப் பார்த்து இளவரசரும் பிக்ஷசூவும் மனங் கசிந்தார்கள். அந்த நிலைமையில் தங்களால் ஒன்றும் உதவி செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியது.

முருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை மங்கலம் அரண்மனை இருந்தது.

வழி நடுவில் இருந்த நந்தி மண்டபத்தின் அருகில் படகு வந்த போது, நந்தி முழுதும் முழுகியிருந்தது மட்டுமல்லாமல் மேல் மண்டபத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் சென்றது. மண்டபத்துக்கு அப்பால் நாலாபுறமும் பரவி இருந்த தென்னந் தோப்புகளில் முக்கால்வாசி மரங்கள் காற்றினால் முறிந்து விழுந்த விட்டன. மிஞ்சியிருந்த மரங்களின் உச்சியில் மட்டைகள் ஆடியது தலைவிரி கோலமாகப் பேய்கள் ஆடுவது போலவே இருந்தது. அவற்றில் சில மட்டைகள் காற்றினால் பிய்க்கப்பட்டு வெகு தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தன.

நந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி ஒன்று எப்படியோ வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக் கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கன்று `அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று கொண்டிருந்தவர்களின் காதில் இலேசாக விழுந்தது."ஐயோ! பாவம்! தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ!" என்று இளவரசர் எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன் பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது விழுந்திருக்கும்.

மரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தில் மேலே தாவி வந்தது. முன்னமே நடுங்கிக் கொண்டிருந்த கன்றுகுட்டி அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது.

இளவரசர் இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக் கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும், "ஆகா" என்று சத்தமிட்டுப் பிக்ஷுவைப் பிடித்துக் கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு அக்கணமே வெள்ளத்தில் குதித்தார்.

படகோட்டி முருகய்யன் துடுப்பைப் படகில் போட்டு விட்டு இளவரசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் பார்த்துவிட்டு "வ ிடு!" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான் ஆசையினால் தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக் கொண்டிருக்க பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்த்து முதலில் கன்றுகுட்டியைப் படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் உதவியினால் ஆச்சாரிய பிக்ஷசூ படகில் ஏறிக் கொண்டார்.

இத்தனை நேரம் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டி ஒரு ஆட்டம் ஆடியதும், கால் தடுமாறித் தொப்பென்று விழுந்தது. நல்ல வேளையாக, படகின் உட்புறத்திலே தான் விழுந்தது. பிக்ஷு அதன் அருகில் உட்கார்ந்தார். கன்றின் தலையைத் தம் மடிமீது எடுத்து வைத்துக்கொண்டு அதைத் தடவிக் கொடுக்கத் தொடங்கினார்.

"குருதேவரே! சற்று முன்னால் சூடாமணி விஹாரத்தில் புத்த பகவானின் சரணங்களைப் பிடித்துக் கொண்டு பிராணத் தியாகம் செய்யப் பார்த்தீர்களே? அப்படித் தாங்கள் செய்திருந்தால், இந்த வாயில்லா ஜீவனை இப்போது காப்பாற்றியிருக்க முடியுமா?" என்று இளவரசர் கேட்டார்.

"ஐயா நான் செய்ய இருந்த குற்றத்தைச் செய்யாமல் தடுத்தீர்கள். அதற்காக நன்றியுடையேன். ஆம், இந்தக் கன்றின் உயிரைக் காப்பாற்றியது என் மனதுக்கு நிம்மதியளிக்கிறது. சூடாமணி விஹாரம் இடிந்து தகர்ந்து போய்விட்டால் கூட இனி அவ்வளவு கவலைப்பட மாட்டேன்" என்றார் பிக்ஷு.

"ஆச்சாரியரே! ஒரு கன்றின் உயிரைக் காப்பாற்றியதனாலே எப்படி மன நிம்மதி பெறுகிறீர்கள்? இன்று இந்தப் புயலினால் எவ்வளவு ஜீவன்கள் கஷ்டப்படுகின்றன? எவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், கஷ்டப்படுகிறார்கள்? எத்தனை வாயில்லா ஜீவன்கள் ஆடு மாடுகள், குதிரைகள், பறவைகள், உயிரை இழக்க நேரிடும்? இந்தத் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரம் என்ன?" என்று கேட்டார் இளவரசர்.

"ஐயா! நம்மால் இயன்றதைத்தான் நாம் செய்யலாம். அதற்கு மேல் நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இயற்கை உற்பாதங்களைத் தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. புயற்காற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமா? பெருமழையைத் தடுக்க முடியுமா? அல்லது மழை பெய்யும்படி செய்யத்தான் முடியுமா? கடல் பொங்கி வரும்போது அதை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியுமா? ஆகா! கடல்களுக்கு அப்பால் உள்ள கீழைத் தேசங்களில் எரிமலை நெருப்பைக் கக்குவதையும், பூகம்பம் நேர்ந்து பூமி பிளப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் நாம் என்ன செய்யலாம்? நம் கண் முன்னால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் ஜீவனுக்கு உதவி செய்யத்தான் நம்மால் முடியும்!"

"குருதேவரே! இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன? புயற்காற்றும் பூகம்புமும் ஏன் நிகழ்கின்றன? கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன? அவற்றினால் மக்களும், மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார்? நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால் கடவுளால் கூட முடியாதா? கடவுள் ஏன் இத்தகைய உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்?" என்று இளவரசர் கேட்டார்.

"பொன்னியின் செல்வ! தாங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்த பகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே இறங்கவில்லை. ` பிறருக்கு உதவி செய்யுங்கள். பிறருடைய கஷ்டங்களைப் போக்க முயலுங்கள், அந்த முயற்சியிலே தான் உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்!' என்று புத்த பகவான் போதித்தார்" என்று பிக்ஷு கூறினார்.

படகு நந்தி மண்டபத்திலிருந்து மேற்குத் திசையில் திரும்பி, ஆனை மங்கலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சற்று முன் பிக்ஷு வௌியிட்ட புத்த சமயக் கொள்கையோடு தமது முன்னோர்களின் சமயக் கொள்கையே அவர் மனத்துள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்தார். பிறருக்கு உதவி செய்யும் கடமையைச் சைவ, வைஷ்ணவ சமயங்களும் வற்புறுத்துகின்றன. `பரோபகாரம் இதம் சரீரம்' என்ற மகா வாக்கியமும் இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கடவுளிடம் நம்பிக்கை வைத்துப் பக்தி செய்யும் கடமையையும் நம் முன்னோர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். கடவுளைச் சம்ஹார மூர்த்தியான ருத்திரனாகவும், கருணாமூர்த்தியான மகா விஷ்ணுவாகவும் உருவங் கொடுத்துப் போற்றியிருக்கிறார்கள். கடவுளுக்கு ஜகன்மாதா உருவம் கொடுத்து ஒரே சமயத்தில் அன்பே வடிவான உமாதேவியாகவும், கோர பயங்கர ரணபத்திர காளியாக இருக்கமுடியுமா? ஏன் இருக்க முடியாது? பெற்ற குழந்தையை ஒரு சமயம் தாயார் அன்புடன் கட்டித் தழுவிக் கொஞ்சுகிறாள். இன்னொரு சமயம் கோபித்துக் கொண்டு அடிக்கவும் செய்கிறாள். ஏன் அடிக்கிறாள் என்பது சில சமயம் குழந்தைக்குப் புரிவதில்லை. ஆனால் அடிக்கும் தாயாருக்குத் தான் பெற்ற குழந்தையிடம் அன்பு இல்லை என்று சொல்ல முடியுமா?...

இருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லையென்பதை படகில் வந்தவர்கள் கண்டார்கள். அரண்மனைக்கருகில் அமைந்தி ுந்த அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை நிறுத்தினான்.

அதுவரைக்கும் இயற்கையும் படகில் சென்றவர்களிடம் ஓவளவு கருணை செய்தது. பெரும் புயல் அடித்துக் கடல் பொங்கி வந்தாலும், பெருமழை மட்டும் பெய்யத் தொடங்கவில்லை. சிறு தூற்றலோடு நின்றிருந்தது.

படகு அரண்மனை ஓரத்தில் வந்து நின்ற பிறகுதான் பெருமழை பிடித்துக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது. ஆனைமங்கலத்து அரண்மனைக் காவலன் அரண்மனையின் முன் வாசலில் கையில் ஒரு தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றான். சுற்றுப் புறங்களிலிருந்து அன்றிரவு அடைக்கலம் புகுவதற்காக ஓடி வந்திருந்த ஜனங்களோடு அவன் பேசிக் கொண்டிருந்தான்.படகு ஒன்று வந்து படித்துறையில் நின்றதைக் கண்டதும் காவலன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். பொன்னியின் செல்வரின் திருமுகம் அவன் கண்ணில் பட்டது. உடனே மற்றதையெல்லாம் மறந்து விட்டுப் படித்துறையை நோக்கி ஓட்டமாக ஓடினான்.

இதற்குள் படகிலிருந்து இளவரசரும், ஆச்சாரிய பிக்ஷுவும் படிக்கட்டில் இறங்கினார்கள். கன்றை மெள்ளப் பிடித்துக் கரையில் இறக்கி விட்டார்கள். காவலன் இளவரசரின் காலில் விழப்போனான். அவர் அவனைப் பிடித்துத் தடுத்தார். காவலன் கையிலிருந்த தீவர்த்தி கால்வாயில் விழுந்து ஒரு கணம் சுடர் விட்டு எரிந்து விட்டு மறைந்தது.

"இளவரசே! சூடாமணி விஹாரத்தைப் பற்றி நானே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! தாங்கள் இங்கே வந்து விட்டது மிகவும் நல்லதாய்ப் போயிற்று" என்றான் காவலன்.

"நான் சூடாமணி விஹாரத்தில் இருப்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியும், ஐயா! இளைய பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசியும் வந்திருந்தபோது தெரிந்துகொண்டேன். யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இளைய பிராட்டி பணித்துவிட்டுச் சென்றார்."

"அதை இன்னமும் நீ நிறைவேற்றத்தான வேண்டும். மாளிகை வாசலில் கூடியிருப்பவர்கள் யார்?"

"கடற்கரையோரத்துக் கிராமங்களில் கடல் புகுந்து விட்டதால் ஓடி வந்தவர்கள். இரவு தங்குவதற்கு இடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் தாங்கள் வந்தீர்கள், அவர்களை விரட்டி விடுகிறேன்..."

"வேண்டாம்! வேண்டாம்! அவர்கள் எல்லோருக்கும் இருக்கவும் படுக்கவும் இடங்கொடு உணவுப் பொருள்கள் இருக்கு வரையில் சமையல் செய்து சாப்பிடவும் கொடு. ஆனால் என்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம். உன் தீவர்த்தி கால்வாயில் விழுந்து அணைந்ததும் நல்லதாய்ப் போயிற்று. எங்களை வேறு வழியாக அரண்மனை மேன்மாடத்துக்கு அழைத்துக்கொண்டு போ!" என்றார் இளவரசர்.

அவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு பெருமழையும் சேர்ந்து `சோ' என்று கொட்டத் தொடங்கியதும் சரியாயிருந்தன.
 

பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
முருகய்யன் அழுதான்!




தஞ்சை நகருக்கு அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் முறிந்து விழுந்த அதே தினத்தில், வீர நாராயண ஏரியில் காற்று அடித்துக் கரையோரமிருந்த படகு நகர்ந்துபோன அதே நேரத்தில், நாகைப் பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே சென்ற அத்தியாயங்களில் கூறினோம் என்பதை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அன்றிரவு முழுயுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. அவரவர்களும் உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் இயலாத காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் நாகைப்பட்டினத்தின் வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை உதவி புரிந்து வந்தார்கள். அதே இரவில் ஆச்சாரிய பிக்ஷுவும் பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் கண விழித்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கடும் புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள் எவளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் கவலைப்பட்டார்கள்.

அரண்மனை மணியக்காரனை இளவரசர் அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு இருக்கிறது என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் விசாரித்தார். களஞ்சியங்கள் நிறையத் தானியம் இருந்ததென்று தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின் ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த பொற்காசுகள் பன்னிரெண்டு செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது.

"குருதேவரே! புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் செய்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு, உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் அவ்வளவையும் வீடு இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்!" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"அது எப்படி நியாயமாகும்? தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய பாட்டியார், செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக செலவு செய்யலாமா? அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா?" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.

"ஆச்சாரியரே! என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் சொல்லிக்கொள்வேன். இப்பொழுது இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன். வருங்காலத்தில் என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ நாடெங்கும் நூறு நூறு சிவாலயங்களை எழுப்பிக் கொடுப்பேன்; பெரிய ப ரிய கோபுரங்களை அமைப்பேன். இந்த மாதிரி கடல் பொங்கி வந்தாலும் முழுக அடிக்கமுடியாத உயரமுள்ள ஸ்தூபிகளை எழுப்புவேன். தஞ்சை மாநகரில் தக்ஷிண மேரு என்று சொல்லும் படி விண்ணையளாவும் உயரம் பொருந்திய கோபுரத்துடன் பெரியதொரு கோயிலைக் கட்டுவேன்! ஐயா! இன்று முழுகிப்போன சூடாமணி விஹாரம் மண்ணோடு மண்ணாய்ப் போனாலும் கவலைப்பட வேண்டாம். அதற்கு அருகாமையில் கல்லினால் திருப்பணி செய்து பிரளயம் வந்தாலும் அசைக்க முடியாத பெரிய சூடாமணி விஹாரத்தை எழுப்பிக் கொடுப்பேன்!" என்று இளவரசர் ஆவேசம் ததும்பக் கூறினார்.

"பொன்னியின் செல்வ! வருங்காலத்தைப் பற்றித் தாங்கள் இத்தனை உற்சாகத்துடன் பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது!" என்றார் பிக்ஷு.

"ஆம், ஆம், இந்த உலகில் நான் ஜீவித்திருந்து ஏதோ பெரிய காரியங்கள் செய்ய வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். ஆகையினாலேயே என் உயிருக்கு நேர்ந்த எத்தனையோ அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இன்றைக்குப் கூடப் பாருங்கள். இந்த முருகய்யன் எப்படியோ நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான். இல்லாவிடில் தாங்களும், நானும் சூடாமணி விஹாரத்துக்குள்ளேயே இருந்திருப்போம். கடல் பொங்கி வந்து இவ்வளவு சீக்கிரத்தில் விஹாரத்தை முழுக அடித்துவிடும் என்று எண்ணியிருக்க மாட்டோம்."

"அது உண்மைதான். ஐந்நூறு ஆண்டுகளாக நடவாத சம்பவம் இன்று பிற்பகலில் ஒரே முகூர்த்த நேரத்தில் நடந்துவிடும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? கருணைக் கடலாகிய புத்த பகவான் பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். தங்கள் மூலம் என் அற்பமான உயிரையும் காத்தருளினார். தாங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தை நான் பூரணமாக ஒத்துக் கொள்கிறேன். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துச் செலவு செய்தால் தனா ிகாரி பெரிய பழுவேட்டரையர் கோபங்கொள்வார். ஆலயத் திருப்பணிக்காக விநியோகிப்பதைக் குறித்து தங்கள் திருப்பாட்டியார் கோபித்துக்கொள்ள மாட்டார். அவ்விதம் தாங்கள் செய்வது உசிதமானது. ஆனால், இந்த மகத்தான புண்ணிய காரியத்தைத் தாங்களே முன்னின்று நடத்துவது அல்லவோ பொருத்தமாயிருக்கும்? இந்த ஏழைச் சந்நியாசி அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க முடியாது!..."

"குருதேவரே! நான் முன்னின்று நடத்தினால் என்னை வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும்.பாண்டவர்களின் அக்ஞாத வாசத்தைப் பற்றித் தாங்கள் கூறியது என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. நமது செந்தமிழ் நாட்டுப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் நினைவுக்கு வந்தது.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்
தீமை இலாத சொல்லல்" என்றும்,

`பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்'
என்றும் தமிழ் மறை கூறுகிறதல்லவா? என்னை நான் இச்சமயம் ஜனங்களுக்கு வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பமும் கலகமும் விளையலாம் என்று அறிவிற் சிறந்த என் தமைக்கையார் கருதுகிறார். நான் மறைந்திருப்பதனால் யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. ஆகையால் புயலின் கொடுமையினால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் மக்களுக்குத் தாங்கள்தான் அரண்மனையில் உள்ள பொருளைக் கொண்டு உதவி புரிய வேண்டும்" என்றார் இளவரசர்.

"பொன்னியின் செல்வ! என் மனம் எதனாலோ மாறிவிட்டது. தங்களை வௌியிட்டுக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய இதுவே சரியான தருணம் என்று என் மனத்தில் உதித்திருக்கிறது. அதுவே புத்த பகவானுடைய சித்தம் என்று கருதுகிறேன்" என்றார் பிக்ஷு.

இச்சமயம் யாரோ விம்மும் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். முருகய்யன் ஒரு மூலையில் உட்கார்ந்து முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம் ி விம்மி அழுதுகொண்டிருந்தான். இளவரசர் அவனிடம் சென்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார். "முருகய்யா! இது என்ன? ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

"என் மனையாள்... என் மனையாள்..." என்று தடுமாற்றத்துடன் கூறி முருகய்யன் மேலும் விம்மினான்.

"ஆமாம், ஆமாம்! உன் மனைவியை நாங்கள் அடியோடு மறந்து விட்டோம். அவள் இன்றிரவு புயலிலும் மழையிலும் என்ன ஆனாளோ என்று உனக்குக் கவலை இருப்பது இயல்புதான். ஆயினும் இந்த நள்ளிரவு நேரத்தில் செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. பொழுது விடிந்ததும் உன் மனையாளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்" என்றார் இளவரசர்.

"ஐயா அதற்காக நான் வருந்தவில்லை. அவளுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்திராது.இதைப்போல் எத்தனையோ பயங்கரமான புயலையும், வெள்ளத்தையும் அவள் சமாளித்திருக்கிறாள்!" என்றான் முருகய்யன்.

"பின் எதற்காக அழுகிறாய்?" என்று இளவரசர் கேட்டார்.

படகோட்டி தட்டுத் தடுமாறிப் பின்வரும் விவரங்களைக் கூறினான்:- "அவளைப் பற்றி நாள் என்னென்னமோ சந்தேகப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். அவள்தான் என்னை வற்புறுத்திக் கோடிக் கரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருக்கக்கூடும் என்று அவள் தான் சொன்னாள். அவளுடைய கட்டாயத்துக்காகவே நான் வந்தேன். தங்களுக்கு ஏதோ தீங்கு செய்ய நினைக்கிறாளோ என்று கூடப் பயந்தேன். அது எவ்வளவு பிசகு என்று இப்போது தெரிந்தது. சற்று முன்னால் தாங்கள் இந்த படகோட்டி ஏழையைக் குறித்துப் பாராட்டிப் பேசினீர்கள். கடவுள் என் மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினீர்கள். ஆனால் என்னை இந்தக் காரியத்துக்கு தூண்டியவள் என் மனையாள். அவளைப் பற்றிச் சந்தேகித்தோமே என்று நினைத்தபோது என்னை மீறி அழுகை வந்து விட்டது!"

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இளவரச ் பொன்னியின் செல்வரின் உள்ளத்தில் வேறொரு ஐயம் இப்போது உதித்தது."அப்பனே! உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறுதான். ஆனால் அவளுக்கு நான் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

"என் அத்தையும், என் தங்கை பூங்குழலியும் நாகைப் பட்டினத்துக்குப் படகில் புறப்பட்டார்கள். அதிலிருந்து என் மனையாள் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள்."

"எந்த அத்தை?" இளவரசர் பரபரப்புடன் கேட்டார்.

"ஐயா, ஈழத்தீவில் தங்களைப் பலமுறை அபாயங்களிலிருந்து காப்பாற்றிய ஊமை அத்தைதான்."

"ஆகா! அவர்கள் இப்போது எங்கே? உன் அத்தையும் பூங்குழலியும் என்ன ஆனார்கள்? இங்கே புறப்பட்டு வந்தார்கள் என்று கூறினாயே?"

"ஆம்; புறப்பட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் பிரயாணம் தடைப்பட்டு விட்டது!" என்று சொல்லிவிட்டு மேலும் முருகய்யன் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

பொன்னியின் செல்வர் மிக்க கவலை அடைந்து அவனைச் சமாதானப்படுத்தி விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஈழத்து அரசியை யாரோ மூர்க்கர்கள் பல வந்தமாகப் பிடித்துக்கொண்டு போனதை அறிந்ததும் இளவரசருக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. அவர்களை ராக்கம்மாள் தடுக்கப் பார்த்தாள் என்றும், அதற்காக அவளை அடித்து மரத்தில் சேர்த்து வைத்துக் கட்டி விட்டுப் போனார்கள் என்றும் அறிந்தபோது ராக்கம்மாளின் பேரில் ஏற்பட்டிருந்த ஐயம் நீங்கி விட்டது. இளவரசருக்கு அவள் பேரில் இப்போது மதிப்பும் அபிமானமும் வளர்ந்தன.

"குருதேவரே! கேட்டீர்களா! இந்த உலகத்தில் நான் போற்றும் தெய்வம் ஒன்று உண்டு என்றால், ஈழத்தரசியாகிய மந்தாகினி தேவிதான்.அந்த ஊமை மாதரசிக்கு எந்தவிதமான தீங்கும் செய்தவர்களை நான் மன்னிக்க முடியாது. பழுவேட்டரையர்கள் என்னைச் சிறைப்படுத்தக் கட்டளை பிறப்பித்தது குறித்த ு நான் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. ஆனால் ஊமை ராணிக்கு ஏதேனும் அவர்கள் தீங்கு செய்திருந்தால், ஒருநாளும் என்னால் பொறுக்க முடியாது. பழுவேட்டரையர் குலத்தை அடியோடு அழித்து விட்டு மறு காரியம் பார்ப்பேன். என்னைப் பெற்ற அன்னையும், என் சொந்தத் தந்தையும் ஈழத்து அரசிக்குத் தீங்கு செய்திருந்தாலும், அவர்களை என்னால் மன்னிக்க முடியாது. குருதேவரே! நாளைக்கே நான் தஞ்சாவூருக்குப் பிரயாணப்படப் போகிறேன். வியாபாரியைப் போல் வேடம் பூண்டு இந்த படகோட்டி முருகய்யனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பப் போகிறேன். ஈழத்தரசியைப் பற்றி அறிந்து கொண்டாலன்றி என் மனம் இனி நிம்மதி அடையாது! ஆச்சாரியரே! புயலினால் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கைங்கரியத்தைத் தாங்கள்தான் நடத்த வேண்டும். தங்கள் பெயரால் நடத்தப் பிரியப்படாவிட்டால் `ஈழத்து நாச்சியார் அறச்சாலை' என்று வைத்து நடத்துங்கள். "ஈழத்தரசி புத்த மதத்தில் பற்றுக் கொண்டவர் என்பது தங்களுக்குத் தெரியுமோ? என்னமோ? `பூதத்தீவு' என்று மக்கள் அழைக்கும் போதத் தீவில் உள்ள புத்த பிக்ஷுக்களின் மடத்திலேதான் அவர் சாதாரணமாக வசிப்பது வழக்கம்!" என்றார் இளவரசர்.

புத்த பிக்ஷுவும் இதற்கு மாறு சொல்லாமல் ஒப்புக் கொண்டார்.

மறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன.நாகைப் பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்து கொண்டிருந்தான். புயலினாலும் வெள்ளத் ினாலும் நேர்ந்திருந்த அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள். இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் வேறு யாரும் இல்லை. முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் தான். இளவரசரும், முருகய்யனும் அவள் நின்ற இடத்துக்கு அருகில் வரும் வரையில் அவள் பொறுமையோடு காத்திருந்தாள். திடீரென்று வௌிப்புறப்பட்டு ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை வைத்துச் சமிக்ஞை செய்தான். `உஷ், உஷ்' என்று எச்சரித்தான். ஒன்றும் பயன்படவில்லை.

"சக்கரவர்த்தித் திருமகனே! வீராதி வீரனே! பொன்னியின் செல்வா! சோழ நாட்டின் தவப் புதல்வா! சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா? என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன!" என்று கூச்சலிட்டாள். வீதியில் அச்சமயம் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின.
 

பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
மக்கள் குதூகலம்




ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே "பெண்ணே! என்ன உளறுகிறாய்?உனக்குப் பைத்தியமா?" என்றான்.

"எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம். உன் அப்பனுக்குப் பைத்தியம். உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை? ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா? சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேர த்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா? அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய்?" என்றான் ராக்கம்மாள்.

இளவரசர் இப்போது குறுக்கிட்டு, "பெண்ணே! நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்! உன்னோடு அழைத்துக்கொண்டு போ! வீண் கூச்சல் போடாதே!" என்றார்.

இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிருத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.

அப்போது ராக்கம்மாள் இன்னும் உரத்த குரலில், "ஆ! தெய்வமே! இது என்ன பொன்னியின் செல்வருக்குச் சித்தப் பிரமையா? கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா? அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா? அல்லது - ஐயையோ! அப்படியும் இருக்குமா? தாங்கள் இறந்துபோய் தங்கள் திருமேனியில் எவனேனும் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன் வந்து புகுந்திருக்கிறானா? அப்படியெல்லாம் இருக்க முடியாது! கோமகனே! நன்றாக யோசித்துப் பாருங்கள்! தாங்கள் வியாபாரி அல்ல. சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருப்புதல்வர். உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் பிறந்தவர். சந்தேகமிருந்தால் தங்கள் உள்ளங்கைகளைக் கவனமாகப் பாருங்கள். சங்கு சக்கர ரேகைகள் இருக்கும்!" என்று கத்தினாள்.

உடனே இளவரசர் அருள்மொழிவர்மர் தம் இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டார். "பெண்ணே! நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா!" என்று சொல்லிவிட்டு, முருகய்யன ப் பார்த்து, "இது என்ன தொல்லை? இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா?" என்று கேட்டார்.

முருகய்யன் தன் மனைவியின் அருகில் வந்து காதோடு, "ராக்கம்மா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்! பேசாமலிரு! இளவரசர் யாருக்கும் தெரியாமல் வியாபாரி வேருத்தில் தஞ்சாவூர் போக விரும்புகிறார்!" என்றான்.

"அடபாவி மகனே! இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா? புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே? அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய்! ஐயையோ! என்ன குற்றம் செய்துவிட்டேன்! ஆசை மிகுதியால் உளறிவிட்டேனே! பாவிப் பழுவேட்டரையர்கள் தங்களைச் சிறைப்படுத்திப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே! இளவரசே! ஆனாலும் நீங்கள் அஞ்சவேண்டாம். பழுவேட்டரையர்கள் தங்கள் திருமேனியில் ஓர் அணுவுக்கும் தீங்கு செய்யமுடியாது. என்னைப் போலும், என் கணவனைப் போலும் லட்ச லட்சம் பேர்கள் தங்கள் கட்சியில் நின்று தங்களைப் பாதுகாக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்!" என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, "நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா? உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா? அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள்! என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள்!" என்று அலறினாள்.

அதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், "பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்று ஒரு பெரிய கோருத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார்.

அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து "கோமகனே! தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வௌிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்!" என்று கூறினார்.

இளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். "ஐயா! தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்!" என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. "கூடாது கூடாது! இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்" என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல். அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் "கூடவே கூடாது! இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்!" என்று கூச்சலிட்டன.

எண் பேராயத்தின் தலைவர் அப்போது "கோமகனே! என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா? எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வ ண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா? நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது! நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது!" என்று சொன்னார்.

அதைக் கேட்ட இளவரசர் "ஐயா! தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை!" என்றார்.

"ஆகா! இதெல்லாம் முன்னரே எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே! இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே! தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும்!" என்றார் எண்பேராயத்தின் தலைவர்.

"ஆமாம், ஆமாம்! என்று பதினாயிரக்கணக்கான மக்களின் குரல்கள் எதிரொலி செய்தன.

"இளவரசே! இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள்? தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக் கே கொண்டுவிட்டு வருகிறோம்" என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

இளவரசர் யோசித்தார். `காரியம் என்னவோ கெட்டுப் போய் விட்டது. இரகசியம் வௌியாகிவிட்டது.ராக்கம்மாள் மூடத்தனமாகக் கூச்சலிட்டு வௌிப்படுத்திவிட்டாள். மூடத் தனத்தினால் வௌிப்படுத்தினாளா?... அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா? எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப் படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா! நான் இச்சமயம் என்னை வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே? அது எவ்வளவு உண்மையான வார்த்தை? என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான்! தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே? உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும்?...'

இவ்வாறு பொன்னியின் செல்வர் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஜனக்கூட்டம் மேலும் அதிகமாகி வருவதைக் கண்டார். அவர்களுடைய குதூகலமும் வளர்ந்து வருவதை அறிந்தார். புயலின் கொடுமைகளையும், புயலினால் விளைந்த சேதங்களையும் மக்கள் அடியோடு மறந்து விட்டதாகத் தோன்றியது. எங்கிருந்தோ, யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன.

அரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்த ன் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, "ஐயா! இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?" என்றார்.

இளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. குதூகலத்தை வௌிப்படுத்தும் வளிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆங்காங்கே வீதிகளில் கத்தி விளையாட்டு, கழி விளையாட்டு, குரவைக் கூத்து முதலியவை ஆரம்பமாயின. ஜனங்களையும் அவர்களுடைய குதூகல விளையாட்டுக்களையும் கடந்துகொண்டு நாகைப்பட்டினத்துச் சோழ மாளிகைக்குச் செல்வது பெரிதும் கஷ்டமாயிற்று. எப்படியோ கடைசியில் போய்ச் சேர்ந்தார்கள்.

மாளிகைக்குள் இளவரசர் சிறிது நேரம் கூடத் தங்கி இளைப்பாற முடியவில்லை. ஏனெனில், அவர் வௌிப்பட்ட செய்தி அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் பரவிவிட்டது. ஜனங்கள் திரள் திரளாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.

இளவரசரும் அடிக்கடி வௌியில் வந்து ஜனக்கூட்டத்தினிடையே சென்று அவர்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டார்.புயலினால் விளைந்த கஷ்ட நஷ்டங்களைப் பற்றி அனுதாபத்துடன் விசாரித்தார். தாம் தஞ்சாவூருக்குப் போனவுடனே ஜனங்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.அதைப்பற்றி ஜனங்கள் அவ்வளவு உற்சாகமடையவில்லை என்பதையும் கண்டு கொண்டார்.

ஜனங்கள் ஒருவரோடொருவர் "பழுவேட்டரையர்களின் அதிகாரத்துக்கு முடிவு ஏற்படுமா?" என்று பேசிக்க ண்டதும் அவர் காதில் விழுந்து. சக்கரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும், அடுத்தபடி சிம்மாதனத்துக்கு வரக்கூடியவரைப் பற்றியும் அடக்கமான குரலில், ஆனால் இளவரசர் காதில் விழும்படியாகப் பலரும் பேசினார்கள்.

இதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன.இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. புயலினால் நஷ்டமானது போக நகரில் எஞ்சியிருந்த தானியங்கள் எல்லாம் வந்து குவிந்தன. கறிகாய்களைப் பற்றியோ கவலையே இல்லை. விழுந்த வாழை மரங்களின் வாழைக்காய்க் குலைகளையும், விழுந்த தென்னை மரங்களின் தென்னை குலைகளையும் கொண்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து தயாரித்து விடலாமே?

விருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது.முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.

இளவரசர் வௌித் தோற்றத்துக்குப் புன்னகை பூத்த முகத்துடன் பொலிந்தார். அவர் உள்ளத்திலோ பெருங்கவலை குடிகொண்டிருந்தது. பெற்ற தாயைக் காட்டிலும் பதின்மடங்கு அவருடைய அன்பைக் கவர்ந்திருந்த ஈழத்து ராணியின் கதியைப் பற்றி அறிந்து கொள்ள அவர் உள்ளம் துடி துடித்தது. முருகய்யன் மனைவியிடம் இன்னும் சிறிது விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அவளோ ஜனக் கூட்டத்தில் மறைந்துவிட்டாள். முருகய்யன் மட்டும் முண்டியடித்துக் கொண்டு இளவரசரைத் தொடர்ந்து சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவன் மனைவி ராக்கம்மாள் என்ன ஆனாள் என்பது அவனுக்கும் தெரியவில்லை.

மற்றொரு பக்கத்தில் இளவரசரை வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாகத்தான் இராஜ்யத்தைக் கைப்பற்ற விரும்புவதாய் முன்னமேயே பழுவேட்டரையர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜனங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அவர்கள் கூற்று உண்மை என்று ஏற்பட்டு விடலாம் அல்லவா?

எப்படியாவது இந்த நகர மாந்தர்களின் அன்புச் சுழலிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இளவரசருக்குத் தோன்றிவிட்டது. இந்த நிலைமையில் அவர் சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜனங்களிடம் விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் இளவரசர் கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, ஜனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஐம்பெருங் குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து நின்றார்கள். முன்னேற்பாட்டின்படி நிகழ்ந்தது போல், சில நிமிட நேரம் பேரிகை முரசு, எக்காளம் முதலிய நூறு நூறு வாத்தியங்கள் கடலொலியையும் அடக்கிக்கொண்டு ஒலித்தன. சட்டென்று அவ்வளவு வாத்தியங்களும் நின்றபோது, அப்பெருங்கூட்டத்தின் நிசப்தம் நிலவியது. அச்சமயத்தில் நகர தலைவர்களில் முதியவராகக் காணப்பட்ட ஒருவர் மாளிகை முன் வாசலில் இருந்த நிலா மேடை மீது ஏறி நின்று கொண்டு கம்பீரமான குரலில் கூறினார்.

"பொன்னியின் செல்வ! ஒரு விண்ணப்பம். நாகை நகரையும் அக்கம் பக்கத்துக் கிராமங களையும் சேர்ந்த ஜனங்களின் சார்பாக ஒரு கோரிக்கை. சக்கரவர்த்தியின் உடல் நிலையைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலை கொண்டிருக்கிறோம். அதைப் போலவே நாங்கள் கேள்விப்படும் இன்னொரு செய்தியும் எங்களுக்குக் கவலை தருகிறது. பழுவேட்டரையர்களும், பல சிற்றரசர்களும் சேர்ந்து சக்கரவர்த்திக்குப் பிறகு மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். மதுராந்தகத்தேவர் இன்று வரையில் போர்க்களம் சென்று அறியாதவர். அவர் பட்டத்துக்கு வந்தால் உண்மையில் பழுவேட்டரையர்கள்தான் இராஜ்யம் ஆளுவார்கள். சிற்றரசர்கள் வைத்ததே சட்டமாயிருக்கும். இளவரசர் ஆதித்த கரிகாலர் மூன்று ஆண்டு காலமாகச் சோழ நாட்டுக்கு வரவேயில்லை. அதற்கு ஏதோதோ காரணங்கள் சொல்கிறார்கள். அவருக்கு மகுடம் சூட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அடுத்தபடி நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார்? சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்... மக்களே! நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா?" என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; "ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே!" என்று பதினாயிரம் குரல்கள் கூறின. அதைத் தொடர்ந்து கோஷித்தன. இவ்வளவு கோஷங்களும் சேர்ந்து உருத்தெரியாத ஒரு பெரும் இரைச்சலாகக் கேட்டது.

மறுமொழி சொல்வதற்காக இளவரசரின் உதடுகள் அசையத் தொடங்கியது, ஏதோ மந்திர சக்தியினால் கட்டுண்டு அடங்கியது போல் அந்தப் பேரிரைச்சல் அடங்கியது. "ஐயா! நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அ ன்பை நீங்கள் காட்டும் விதம் முறையாக இல்லையே? என் அருமைத் தந்தை- சுந்தர சோழ சக்ரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. "சக்கரவர்த்தி நீடுழி வாழ வேண்டும்' என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும்.சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன்?"

நகரத் தலைவர்களின் முதல் தலைவரான முதியவர் இளவரசரின் இக்கேள்விக்குச் சரியான விடை வைத்திருக்கிறார். "பொன்னியின் செல்வ! சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா? அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார்?" என்றார்.

"ஆம், ஆம்! ஆகையால், இப்போதும் அடுத்த பட்டத்துக்கு உரியவரைப் பற்றிச் சக்கரவர்த்திதானே தீர்மானிக்க வேண்டும்? நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே!" என்றார் இளவரசர்.

"பொன்னியின் செல்வ! சக்கரவர்த்திக்குத்தான் அந்த உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறோம். சக்கரவர்த்தி சுயேச்சையாக முடிவு செய்யக் கூடியவராயிருந்தால் அது சரியாகும். தற்போது சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக் கோட்டைக்குள் சிறைப்படுத்தி அல்லவோ வைத்திருக்கிறார்கள். இளவரசே! இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிர்ஷ்ட வசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும்!"

பெரியவர் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை உண்டாக்கின. இத்தனை நாளும் அவர் அறிந்திராத வேதனையும் பீதியும் ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது போலவும் அதைத் தடுக்கமுடியாத தூரத்தில் தாம் இருப்பது போலவும் ஒரு பிரமை உண்டாயிற்று. ஈழத்து ராணியை யாரோ மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போன விவரமும் நினைவுக்கு வந்தது. இனி ஒரு கணமும் தாமதியாமல் தஞ்சை போய்ச் சேர வேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடி நேரத்தில் இளவரசர் தாம் செய்யவேண்டியது இன்னதென்று தீர்மானித்துக் கொண்டார். இவர்களுடன் வாதமிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. பிரயாணப்படுவதுதான் தாமதமாகும்.இப்போது இவர்கள் பேச்சை ஒப்புக் கொண்டதாகச் சொல்லிப் பிரயாணப் பட்டு விட்டால், வழியில் போகப் போக வேறு உபாயங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

"ஐயா! உங்களுடைய விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. சக்கரவர்த்தியைப் பற்றித் தாங்கள் கூறியது அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற என் கவலையை அதிகரித்து விட்டது. நான் உடனே புறப்பட வேண்டும். நீங்களும் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்பினால் தாராளமாக என்னுடன் வாருங்கள். பட்டத்து உரிமையைப் பற்றிச் சக்கரவர்த்தி என்ன சொல்லுகிறாரோ, அதைக் கேட்டு நாம் அனைவரும் நடந்து கொள்வோ ்!" என்றார்.

சிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது.
 

பக்க தலைப்பு



எட்டாம் அத்தியாயம்
படகில் பழுவேட்டரையர்




புயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.

வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் போனார்.

திருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத காரியம்.

பெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவ ும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு நோக்கி இழுத்தது.புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது.

பழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். அவள் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாவே அவருக்குத் தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் அவருடைய வாய், "சரி சரி! அப்படியே செய்வோம்" என்று கூறிவிடும். சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் விரும்புவதில்லை.

இப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி வேதனை தந்தது.

கந்தமாறன், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் ஆகிய மூவர் மீதும் அவர் குரோதம் கொள்வதற்குக் காரணங்கள் இருந்தன. பொக்கிரு நிலவறையில் நள்ளிரவில் தாமும் நந்தினியும் போய்க்கொண்டிருந்த போது, கந்தமாறன் எதிர்ப்பட்டு, நந்தி ியை "தங்கள் மகள்" என்று குறிப்பிட்டது அவர் நெஞ்சத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டது போல் பதிந்திருந்தது. அப்போது உண்டான குரோதத்தில் அவனைக் கொன்று விடும்படியாகவே காவலனுக்கு இரகசியக் கட்டளையிட்டு விட்டார். பின்னால் அதைப் பற்றி வருந்தினார். எப்படியோ கந்தமாறன் பிழைத்துவிட்டான். அவன் எப்படிப் பிழைத்தான், நிலவறைக் காவலன் எப்படி மாண்டான், என்னும் விவரத்தை இன்னமும் அவரால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு கந்தமாறன் தம் அரண்மனையிலேயே சிலநாள் இருந்ததையும், நந்தினி அவனுக்குச் சிரத்தையுடன் பணிவிடை செய்ததையும் அவரால் மறக்க முடியவில்லை.

பிறகு வந்தியத்தேவனும் கடம்பூரில் இருக்கிறான். முதன் முதலில் அந்த அதிகப்பிரசங்கி வாலிபனைப் பார்த்ததுமே அவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூரில் சக்கரவர்த்தியிடம் தனியாக ஏதோ எச்சரிக்கை செய்ய விரும்பியதையும் தஞ்சைக் கோட்டையிலிருந்து ஒருவரும் அறியாமல் தப்பி ஓடியதையும் அறிந்தபோது அவருடைய வெறுப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர் அவன் தப்பிச் சென்றதற்கு நந்தினி உதவி செய்திருக்கலாம் என்று குறிப்பாகச் சொன்னதையும் அவர் மறக்கவில்லை. அது ஒரு நாளும் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் குந்தவை பிராட்டிக்கும், இளவரசர் அருள்மொழிக்கும் அந்தரங்கத் தூதன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் அவனுக்கும் நந்தினிக்கும் தொடர்பு ஏதும் இருக்கமுடியாது. ஆனாலும், அவனையும் நந்தினியையும் சேர்த்து எண்ணிப் பார்த்த போதெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் இரும்பு இதயத்தில் அனல் வீசிற்று.

பிறகு ஆதித்த கரிகாலர் இருக்கவே இருக்கிறார். அவர் முன் ஒரு சமயம் ஒரு கோவில் பட்டரின் மகளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினார் என்பதும், அவர்தான் நந் தினி என்பதும், அவர் காதுக்கு எட்டியிருந்தது. அவர்கள் இப்போது சந்தித்திருக்கிறார்கள். எதற்காக? ஒன்று நிச்சயம், ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் துரோகத்தைச் செய்ததில்லை. கரிகாலனும் பெண்கள் விஷயமான நடத்தையில் மாசு மறுவற்றவன்.

ஆனால் நந்தினி? அவளைத் தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து வந்திருப்பது சரிதானா? அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா? அவளுடைய பூர்வோத்தரமே இன்னும் அவருக்குச் சரி வரத் தெரியாது. அவருடைய சகோதரன் காலாந்தக் கண்டன் அவனைப் பற்றிச் சொல்லாமற் சொல்லிப் பலமுறை எச்சரித்திருக்கிறான்.

`தம்பி கூறியதே சரியாகப் போய் விடுமோ? நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா? ஆகா! கதைகளில் சொல்லுகிறார்களே! அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் உண்மையிலேயே உலகத்தில் உண்டா? அவர்களில் ஒருத்தி நந்தினியா?'..

இப்படி எண்ணியபோது பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் குரோதக் கனல் கொழுந்து விட்டது என்றால், அதே சமயத்தில் நந்தினியின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தீயும் ஜுவாலை வீசியது. இவற்றினால் உண்டான வேதனையை மறப்பதற்காகப் பழுவேட்டரையர் தம் தலையை ஆட்டிக் கொண்டு, தொண்டையையும் கனைத்துக் கொண்டார். பத்துப் பேருக்கு மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவுதான் அவர் தமது பெரிய தடக்கைகளினால் நெற்றியில் அடித்துக்கொள்ளாமல் தடை செய்தது. அவரை அறியாமல் பெரிய நெடு மூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன.

படகின் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு, "எல்லா உண்மைகளையும் இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து கொண்டு விடுகிறேன்! இத வரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை!" என்று சங்கல்பம் செய்து கொண்டார்.
 

பக்க தலைப்பு



ஒன்பதாம்அத்தியாயம்
கரை உடைந்தது!




பழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அகப்பட்டுக் கொண்டதன் காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை அணுகியது. "இனிக் கவலை இல்லை" என்று எல்லாரும் பெரு மூச்சு விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே மோதியது. படகு `தடால்' என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள்.

மற்றவர்கள் எல்லாரும் படகு கவிழ்ந்தால் தப்பிப் பிழைப்பது பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்களாதலால், அவ்வாறு உண்மையில் நிகழ்ந்து விட்டதும், அந்த அபாயத்திலிருந்து சமாளிப்பதற்கு ஓரளவு ஆயத்தமாயிருந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து விட்டிர ுந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் பழுவேட்டரையர் வேறு சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை.

உடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.

இவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண் டு அக்கிழவர் தட்டுத் தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார். அவரைச் சுற்றிலும் கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம்! குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா?...

புயல் அப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. நூறாயிரம் பேய்கள் சேர்ந்து சத்தமிடுவது போன்ற பேரோசை காதைச் செவிடுபடச் சேய்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது.

`எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும்? அதில் தங்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் மேலே நடையைத் தொடங்க வேண்டும்' என்று முடிவு கட்டிக் கொண்டு, தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு நடந்து சென்றார்.

நதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தா ். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை. மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான்.

`ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை! கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதி வேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான்! அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா? கால் தரையில் பாவவில்லையே? கைக்குப் பிடி எதுவும் அகப்படவில்லை? மூச்சுத் திணறுகிறதே? கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலிருக்கிறதே? காது செவிபடுகிறதே! துர்க்கா பரமேசுவரி! தேவி! நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா? அடிபாவி நந்தினி! உன்னால் எனக்கு நேர்ந்த கதியைப் பார்! ஐயோ! பாவம்! உன்னை அந்த துர்த்தர்கள் மத்தியில் விட்டு விட்டு வந்தேனே? சீச்சீ! உன் அழகைக் கண்டு மயங்கி, உன் நிலையைக் கண்டு இரங்கி, உன்னை மணந்து கொண்டதில் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன்? கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித ் திண்டாடிச் சாகப் போகிறேனே! அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை! என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை! எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன்! என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது! அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும்! நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன!...' சில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற எத்தனையோ எண்ணங்கள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்!...

தடார் என்று தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ - பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயனத்தனப்பட்டார். இறுக அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது! தேவி! உன் கருணையே கருணை! என்னுடைய அமைதியற்ற மண்ணுலக வாழ்வை முடித்து விண்ணுலகில் உன்னுடைய சந்நிதானத்துக்கே அழைத்துக் கொண்டாய் போலும்!...

இல்லை, இல்லை! இது விண்ணுலகம் இல்லை. மண்ணுலகத்திலுள்ள அம்மன் கோவில். எதிரே தரிசனம் அளிப்பது அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம்.அம்மனுக்கு அருகில் முணுக் முணுக்கென்று ிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.அதன் வௌிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது! வௌியிலே இன்னும் `சோ' என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை! அது ஒரு நல்ல சகுனமோ? துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ? எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது? ஜகன் மாதாவின் கருணையே கருணை! தமது பக்தியெல்லாம், தாம் செய்த பூசனை எல்லாம் வீண் போகவில்லை.

கிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றார். அவர் உடம்பு நடுகியது. வெகு நேரம் வெள்ளத்திலேயே கிடந்த படியால் உடம்பு சில்லிட்டு நடுங்குவது இயல்புதான் அன்றோ? அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார்.தமது ஈரத் துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் துணியை அரையில் உடுத்திக் கொண்டார்.

அம்மன் சந்நிதியில் உடைந்த தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் பிரசாதங்கள் - எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். தேவிக்குப் பூஜை செய்வதற்காக வந்த பூசாரியும், பிரார்த்தனைக்காரர்களும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிப் போயிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அப்படி ஓடினார்கள்? புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா? அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்கள்? எதுவாயிருந்தாலும் சரி. தாம் செய்த புண்ணியந்தான்! துர்க்கா பரமேசுவரி தம்மை உடைப்பு வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது மட்டுமல்ல. தம்முடைய பசி தீருவதற்குப் பிரசாதமும் வைத் ுக் கொண்டு காத்திருக்கிறாள்.

இன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. உடைப்பு வெள்ளம் இந்தச் சிறிய கோவிலை ஒட்டித்தான் பாய்ந்து செல்ல வேண்டும்.அதனால் கோவிலுக்கே ஆபத்து வரலாம். கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் குழி பறித்துக் கொண்டிருக்கும். அஷ்திவாரத்தையே தகர்த்தாலும் தகர்த்துவிடும். ஆயினும் இன்று இரவுக்குள்ளே அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. அவ்விதம் நேர்வதாயிருந்தாலும் சரிதான். இன்றிரவு இந்தக் கோவிலை விட்டுப் போவதற்கில்லை. உடம்பில் தெம்பு இல்லை; உள்ளத்திலும் சக்தி இல்லை...

பயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். அங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார்.
 

பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
கண் திறந்தது!




முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப் படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவுற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார்.வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின.ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். `அடே, பழுவேட்டரையா! நீயும் உன் குலத்தாரும் தலை முறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையா ் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஷி! உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார்! இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்...!" இவ்விதம் எச்சரித்துவிட்டுத் தேவி திரும்பிச் சென்று விக்கிரகத்துக்குள் புகுந்து கலந்து விட்டாள்...!

பழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். அவர் உடம்பு கிடுகிடென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாம் கண்டது கனவுதான் என்று நம்புவது அவருக்குச் சற்றுச் சிரமமாகவே இருந்தது.ஆயினும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

பொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. `சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வௌி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.

கொள்ளிடத்தின் உடைப்பு இதற்குள் மிகப் பெரிதாகப் போயிருந்தது. நதி வெள்ளத்தில் ஏறக்குறையப் பாதி அந்த உடைப்பின் வழியாகக் குபு குபுவென்று பாய்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது.

மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப் ட்டது.

அது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப் படைக்கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.

அந்தப் பள்ளிப்படை உள்ள இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடத்த மாபெரும் யுத்தம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் சோழர் குலத்துக்கு உதவியாகத் தமது முன்னோர்கள் செய்த வீர சாகஷச் செயல்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அப்படிப் பட்ட தமது பழம் பெருங்குலத்துக்கு இந்த நந்தினியினால் உண்மையிலேயே அவக்கேடு நேர்ந்துவிடுமோ? துர்க்கா பரமேசுவரி தனது கனவிலே தோன்றிக் கூறியதில் ஏதேனும் உண்மை இருந்தாலும் இருக்குமோ...?

எப்படியிருந்தாலும் இனி சர்வ ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நந்தினியின் அந்தரங்கம் என்னவென்பதையும் கண்டுபிடித்தேயாக வேண்டும். முதலில், இங்கிருந்து சென்ற பிறகல்லவா, மற்றக் காரியங்கள்? திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். ஆனால் வெள்ளத்தைக் கடந்து திருப்புறம்பியம் கிராமத்துக்குப் போவது எப்படி?

இந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே! இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே? இதை எப்படித் தாண்டிச் செல்வது?

உடைப்பு வெள்ளம் கோவிலைச் சுற்றிக் கீழே கீழே தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருப்பது திண்ணம்.கோவில் எப்போது விழுமோ தெரியாது! துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வௌியேறுவது எப்படி? உடைப்பு வ ள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது.

நல்லவேளை, வேறொரு வழி இருக்கிறது. கோவிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த வேப்பமரம் ஒன்று இருந்தது. புயற்காற்றிலே விழாமல் அது எப்படியோ தப்பிப் பிழைத்தது. ஆனால் கோவிலைச் சுற்றித் துள்ளிச் சென்று கொண்டிருந்த உடைப்பு வெள்ளம் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் சுழியிட்டுக் குழி பறித்துக் கொண்டிருந்ததால், கோவில் விழுவதற்கு முன்னால், அந்த மரம் விழுவது நிச்சயம். மரம் விழுந்தால் அநேகமாக மேற்குத் திசையிலுள்ள காட்டுப் பிரதேசத்துக்கு ஒரு பாலத்தைப் போல் அது விழக் கூடும். இல்லாவிட்டாலும், வெள்ளம் மரத்தை அடித்துக் கொண்டு போய், எங்கேயாவது கரையோரத்தில் சேர்க்கும். மரம் விழுந்தவுடனே அதன் மேல் தொத்தி ஏறிக் கொண்டால், ஒருவாறு அங்கிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

அதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான்.தேவியின் கருணையினால் இன்னும் ஒருநாள் பசியாறுவதற்கும் பிரசாதம் மிச்சமிருக்கிறது. மரம் விழும் வரையில், அல்லது வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது?

அவசரப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. நம்மால் இவ்வுலகில் இன்னும் ஏதோ பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருப்பதனாலேதான், தேவி ஜகன்மாதா, நம்மை வெள்ளத்தில் சாகாமல் காப்பாற்றியிருக்கிறாள். ஆதலின் மேலே நடக்க வேண்டியதற்கும், துர்க்கா பரமேசுவரியே வழி காட்டுவாள் அல்லவா? அன்று பகல் சென்றது.இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது.

தூவானமும் விட்டுவிட்டது. ஆனால் துர்க்கா தேவியின் கோயிலில் அகப்பட்டுக் கொண்ட பழுவேட்டரையருக்கு மட்டும் விடுதலை கிட்டவி ல்லை. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது. ஆனால் உடைப்பு வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. கோயிலைச் சுற்றிச் சென்ற வெள்ளம் குறையவில்லை. ஆழம் என்னமோ அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அளந்து பார்ப்பது எப்படி? அல்லது அந்த உடைப்பு வெள்ளத்தில் இறங்கி நீந்திச் செல்லுவது பற்றித்தான் நினைத்துப் பார்க்கவும் முடியுமா?


கடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பழுவேட்டரையர் எதிர்பார்த்தபடி கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரமும் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். இரவிலே புறப்பட்டு அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எப்படி வழி கண்டு பிடித்துப் போவது என்பது பற்றிச் சிறிது தயங்கினார். சில கண நேரத்துக்குமேல் அந்தத் தயக்கம் நீடித்திருக்கவில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து, தம்மை அந்தப் பேராபத்திலிருந்து காத்தருளிய துர்க்கா பரமேசுவரிக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சந்நிதியை நெருங்கினார். சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்தார்.

அச்சமயத்தில் அவர் உடம்பு சிலிர்க்கும்படியான குரல் ஒன்று கேட்டது. முதலில் துர்க்கையம்மன் தான் பேசுகிறாளோ என்று தோன்றியது. பிறகு, இல்லை, குரல் வௌியில் சிறிது தூரத்துக்கு அப்பாலிருந்து வருகிறது என்று தௌிவடைந்தார். "மந்திரவாதி! மந்திரவாதி!" என்று கூப்பிட்டது அந்தக் குரல். பிறகு மறுபடியும் "ரவிதாசா! ரவிதாசா!" என்று கூவியது. முன் எப்பொழுதோ கேட்ட குரல் போலத் தோன்றியது.

பழுவேட்டரையர் எழுந்து முன் மண்டபத்துக்கு வந்தார். தூண் மறைவில் நின்று குரல் வந்த இடத்தை நோக்கினார். உடைப்பு வெள்ளத்துக்கு அப்பால், விழுந்த வ ப்பமரத்தின் நுனிப் பகுதிக்கு அருகில் ஓர் உருவம் நின்று கொண்டிருக்கக் கண்டார். "மந்திரவாதி! மந்திரவாதி!" என்னும் கூக்குரல், அவருக்குத் தம் சகோதரன் முன்னொரு சமயம் கூறியவற்றை ஞாபகப்படுத்துகிறது. துர்க்காதேவியின் கருணையினால் தாம் அதுவரை அறிந்திராத மர்மத்தை அறிந்து கொள்ளப் போகிறோமோ என்ற எண்ணம் உதித்தது. ஆதலின் அசையாமல் நின்றார்.

அக்கரையில் நின்ற உருவம், விழுந்த வேப்ப மரத்தின் வழியாக உடைப்பு வெள்ளத்தைக் கடந்து வரத் தொடங்கியதைப் பார்த்தார். தம் வாணாளில் அதுவரை செய்திராத ஓர் அதிசயமான காரியத்தைப் பழுவேட்டரையர் அப்போது செய்தார். கோவில் முன் மண்டபத்தில் சட்டென்று படுத்துக் கொண்டார். தூங்குவது போலப் பாசாங்கு செய்தார்.

ரவிதாசன் என்னும் மந்திரவாதியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவரை அவ்வளவாகப் பற்றிக் கொண்டது. அவன் நந்தினியைப் பார்ப்பதற்காகச் சில சமயம் அவர் அரண்மனைக்கு வந்த மந்திரவாதியாகவே இருக்கவேண்டும். அவனுக்கும் நந்தினிக்கும் உள்ள தொடர்பு உண்மையில் எத்தகையது? அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார்? எதற்காகத் தேடுகிறான்? இதையெல்லாம் தெரிந்துகொண்டால், ஒருவேளை நந்தினி தம்மை உண்மையிலேயே வஞ்சித்து வருகிறாளா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லவா? ரவிதாசன் மட்டும் அவரிடம் சிக்கிக் கொண்டால், அவனிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை என்று மனத்தில் உறுதி கொண்டார்.

தூங்குவது போல் பாசாங்கு செய்தவரின் அருகில் அந்த மனிதன் வந்தான். மீண்டும் "ரவிதாசா! ரவிதாசா!" என்று கூப்பிட்டான்.

ஆகா! இந்தக் குரல்? கடம்பூர் மாளிகையில் முன்னொரு தடவை வேலனாட்டம் ஆடிக் குறி சொன்னானே, அந்தத் தேவராளன் குரல் போல் அல்லவா இருக்கிறது? இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்ம யைச் சொல்லும்படி செய்யலாமா? வேண்டாம்? இன்னும் சற்றுப் பொறுப்போம். இவன் மூலமாக மந்திரவாதி ரவிதாசனைப் பிடிப்பதல்லவா முக்கியமான காரியம்?

"மந்திரவாதி! சூரியன் அஸ்தமிப்பதற்குள்ளேயே தூங்கிவிட்டாயா? அல்லது செத்துத் தொலைந்து போய்விட்டாயா?" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் அசையாமல் கிடந்தார். பின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய அந்த நேரத்தில், மங்கலான வௌிச்சத்தில், தேவராளன் (ஆமாம், அவனேதான்!) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் "ஊ ஊ!" `ஓ!ஓ!' `ஆ!ஆ!" என்று ஊளையிட்ட வண்ணம் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்!

பழுவேட்டரையர் கண்ணைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்து பார்ப்பதற்குள்ளே அவன் கோயிலுக்கு முன்னாலிருந்த பலிபீடத் திறந்த மண்டபத்தை இரண்டு எட்டில் தாண்டிச் சென்று, வேப்ப மரப் பாலத்தின் மீது வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்ப்பதற்குக்கூட ஒரு கணமும் நில்லாமல் அதிவிரைவாக அம்மரத்தின் மீது ஓட்டமும் தாவலுமாகச் சென்று, அக்கரையை அடைந்தான். மறுகணம் புதர்களும் மரங்களும் அடர்ந்த காட்டில் மறைந்துவிட்டான். பழுவேட்டரையர் அவன் மிரண்டு தாவி ஓடுவதைக் கண்கொட்டா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். காட்டில் அவன் மறைந்ததும், சமயம் நேர்ந்தபோது அவனைப் பிடிக்காமல் தாம் விட்டுவிட்டது தவறோ என்ற ஐயம் அவரைப் பற்றிக் கொண்டது. உடனே, அவரும் குதித்து எழுந்து ஓடினார். தேவராளனைப் போல் அவ்வளவு வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் தாவி ் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது.

அக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தார். சேற்றில் புதிதாகக் காலடிகள் பதிந்திருந்தது தெரிந்தது.அந்த வழியிலேதான் தேவராளன் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மேலே விரைவாக நடந்தார். அது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன. புயலிலும் மழையிலும் அடிபட்டுக் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்த காட்டில் வாழும் ஜீவராசிகள் கணக்கற்றவை மழை நின்றதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவித்துக் குரல் கொடுத்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரித்தன.

ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. அன்றிரவு முழுவதும் அந்தக் காட்டில் அலைந்து திரியும்படி நேர்ந்தாலும் அந்தத் தேவராளனையும், அவன் தேடிப் போகும் மந்திரவாதி ரவிதாசனையும் பிடித்தே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டு, காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வௌிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வௌிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்த படியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுத்தின் வௌிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.

அந்த வௌிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். வௌிச்சத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வௌிச் ம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வௌிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப் படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார். ஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தௌிவாகக் கேட்டது.

"மந்திரவாதி! உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்!" என்றான் தேவராளன்.

மந்திரவாதி ரவிதாசன் கடகட வென்று சிரித்தான்.

"யமன் என்னிடம் ஏன் வருகிறான்? சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளையதினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்!" என்றான் மந்திரவாதி. அச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.
 

பக்க தலைப்பு


 

 



முடிவுரை


நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.முன்றரை, ஆண்டுகாலம் "
பொன்னியின் செல்வன்" கதையை தொடர்ந்து படித்துவந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும் அன்பையும் போற்றி வணங்குகிறேன். கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப் பெயர்கள் சிலருக்குப் பெரிதும் தலைவேதனை தருவதாகத் தெரிகிறது. போகப் போக, அந்த தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக்கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர்கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்ரவத்துடன் படித்ததில்லையென்று சொல்லும் நிலைமைவெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.

கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம்பெருக்கு தினத்தில் பரமக்குடியிலிருந்து பலநண்பர்கள் கையெழுத்திட்டுப் "பொன்னியின் செல்வன்" கதைக்குத் தங்கள் பாராட்டுதல்களைத்தெரிவித்தார்கள். " பொன்னியின் செல்வன்" முதலாவது அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீரநாரயண ஏரிக்கரையில் தொடங்குகிறது அல்லவா?

பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாராட்டுதல்களை யெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந் தமிழ் நாட்டின் சரித்திரத்திற்குரிய பெருமையாகவே கருதினேன்.உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு தமிழர்கள் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரத்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டும் செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டுவருகின்றன. வரலாற்று ஆராய்சியாளர்அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதிபகுதியாக நிர்மாணித்து வருகிறார்கள்.

சரித்திரத்தின் எந்த ஒருகாலப் பகுதியைப் பற்றியும் பரிபூரணமாகவும் ஐயந்திரிபுக்கு இடமின்றி வரலாறு எழுதப்பட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நீடித்து அரசுபுரிந்த பல்லவ சக்கரவர்த்திகளின் வரலாறு ஓரளவு ஆராயப்பட்டிருக்கிறது. அந்த இருநூறு ஆண்டுகளைப்பற்றிய சரித்திர வரலாற்று விவரங்கள் நன்கு தெரிய வந்திருக்கின்றன

பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முன்னூறு ஆண்டுபுகழுடன் விளங்கிய விஜயாலய சோழ பரம்பரையின் காலத்து நிகழ்சிகளும் ஓரளவு ஆராயப்படடிருக்கின்றன. இக்காலத்து நிகழ்சிகளைப் பற்றித் திட்டமாக நிர்ணயிக்கமுடியாதபடி பல ஐயப்பாடுகள் தோன்ற இடமிருகிறது. ஆயினும், சில சம்பவங்கள் மறுக்கமுடியாத தகுந்த ஆதாரங்களுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எல்லாம் மிகமுக்கியமானது, தமிழகத்து இயைற்ற பெருமையை அளிக்கக்கூடியது, உலக சரத்திரத் திலேலே ஒப்பற்ற சம்பவம் என்று கொண்டாடுவதற்கு தகுதியானது ஒன்று உண்டு.சுந்தர சோழரின் இரண்டாவது திருக் குமாரனாகிய அருள்மொழி வர்மன், (பிற்காலத்த்ில் இராஜராஜசோழன் என்றுபுகழ்பெற்ற பேரரசன்) இளம் பிராயத்தில் தாம் எளிதில் பெற்றிருக்கக்கூடிய சோழ சாம்ராஜ்ஜியத்தை வேண்டாம் என மறுத்து, உத்தமசோழனுக்கு பட்டம் கட்டி வைத்தான்.

" சுந்தர சோழருக்குப்பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்வனே சோழ சிங்காதனம் ஏறி அரசாளவேண்டும் என்று சோழநாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழி வர்மன் தன்பெரிய பாட்டனாகிய கண்டாரித்ததனுடைய புதல்வனும் தனக்குச் சிறியதகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தம சோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டிவைத்தான் " என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் அறுதியிட்டு உறுதிகூறுகின்றன.

இந்த நிகழ்சியை மற்றும் பல செப்பேடுகளும் கல்ெவெட்டுகளும் அந்தக் காலத்தில் அறிஞர் பலரால் ஏழுதப் பட்ட நூலல்களும் உறுதிப்படுத்துகின்றன. அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக்கொள்ள வேண்டுமென்று இராஜ்ஜியத்தின் மக்கள் விரும்பினார்கள்; உற்றார் உறவினர் விரும்பினார்கள்; அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள். இவ்வாறு எல்லாவித ஆதரவும் அநுகூலங்களும் அருள்மொழி வர்மனுக்கு இருந்தும், அவன் சாம்ராஜ்ஜயத்தை உத்தமசோழனுக்கு அளித்து பட்டம் கட்டுவித்தான். உலக சரித்திரத்திலும் காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும்பெருஞ் செயலைக் காண்பதரிது.

அசோக சக்கரவர்த்தி கலிங்க நாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, இனி யுத்தம் வேண்டாம் என்று முடிவு செய்ததைத் தான் அருள்மொழிவர்மன் தியாகத்திற்கு இணையாக கூறலாம். " பொன்னியின் செல்வன்" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஓப்பற்ற தியாகமேயாகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொணடிருக்கின்றன. அதனாலேயே இக்கயைின் ஐந்தாவது பகுதிக்கு 'தியாக சிகரம்' என்று பெயர் தரப்பட்டது.

இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையை படித்துவந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். யாராவது அதை உணரவில்லை யென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே கூறவேண்டும் அந்தக் குறையை கதையாசிரியர் தாழ்மையுடன் ஓப்புக்கொண்டு நேயர்களிடம் மன்னிப்பு கோர வேண்டியதுதான்.

"பொன்னியின் செல்வன்" கதை வெளியாகி வந்த போதெல்லாம் நேயர்கள் ஓப்பற்ற ஆர்வம் காட்டிவந்தார்கள்.பலர் பாராட்டி கடிதங்கள் எழுதி உற்சாகப் படித்திவந்தார்கள். நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களில் அப்போதெல்லாம் கருத்து வேற்றுமையே காணப்படவில்லை. கதை முடிவடைந்த பிறகும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன. இக் கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையின் முடிவைப் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தை குறை கூறியிருக்கிறார்கள். சட்டென்று முடித்துவிட்டதாகவும் பல கதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே கதையை முடித்துவிட்டதற்காகவும் வருந்தியிருக்கிறார்கள். காராசாரமாகக் கண்டனங்கள் எழுதியவர்களும் உண்டு.

கண்டனமாகவும் குறைசொல்லியும் எழுதியிருப்பவர்கள் அனைவரும் கதையை இன்னும் வளர்த்தி எழுதி யிருக்கலாம் என்றே அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை எண்ணி ஒருவாறு திருப்த்தி அடைகிறேன். முன்றரையாண்டு தொடர்ந்து வெளியாகி வந்த கதையைக்குறித்து அலுப்பு அடைந்து " எப்போது முடிக்கப்போகிறீர்?" என்று கேளாமல், " ஏன் இப்படி திடுதிப்தெப்பென்று முடித்து விட்டீர் ? ஏன்மேல்மேலும் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாது " என்று நேயர்கள் கேட்பது ஒருவாறு மகிழ்ச்சி யடைவதற்குரிய நிலைமைதான். ஆயினும் நேயர்களின் ஒருபகுதியினரை திருப்தி செய்யமுடியாமற் போனது பற்றி வருந்துகிறேன்.

"பொன்னியின் செல்வன்" கதையை இப்போது முடித்திருப்பதற்கு இரண்டு முக்ிய காரணங்கள் உண்டு.

1) முன்னமே குறிப்பிட்துபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன்கையில் கிடைத்த மகா சாம்ராஜ்ஜியத்தை தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்த பெரு நிகழ்ச்சிக்குப்பிறகு கதையை வளர்த்திக்கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல், 'கிளைமேக்ஸு' க்குப்பிறகு 'ஆண்டி கிளைமேக்ஸு' க்குப்போவதாக முடியும். நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதாக குறைசொன்னாலும் , இந்த கதை மேலும் வளர்ந்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாக குறைபட நேரிடும். " எப்போது முடிக்கப்போகிறீர்?" என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.

2) பொதுவாக 'நாவல்கள்' எழுதுவதற்கும், முக்கியமாக 'சரித்திர நவீனங்கள்' எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்படடிருக்கவில்லை. (அப்படி இருந்தால் அவற்றை நான் படித்தில்லை) ஒவ்வொரு ஆசிரியிரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்.

ஆயினும், முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை இருந்து தீருகிறது. முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லோருக்கும் கதையாசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்து கொண்டபிறகோ, அல்லது கதாநாயகன் தூக்குமேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ கதையில் வரும் பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம். கலியாணம் செய்து கொண்ட தம்பதிகள் பிள்ளைகுட்டி பேரர்களை பெற்று நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றும், மற்றக் கதாபாத்திரங்களில் நல்லவர்கள் எல்லோரும் சுகமடைந்தார்கள் என்றும், கெட்டவர்கள் எல்லோரும் பலகஷ்டங்கள் பட்டு செத்தொழிந்தார்கள் அல்லது தக்க தண்டனை அடைந்தார்கள் என்றும் கூறிக்கதையை திருப்திகரமாக முடிக்கலாம்.

சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும்ஆகாது. சரத்திரக்கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள்; வெற்றியோ, தோல்வியோ சுகமோ துக்கமோ அடைவார்கள். அவற்றைக்குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா? அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றி மட்டும் சொல்வதுதான் உசிதமாகுமா? கதையை எந்தக்காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன். ஆனால் இது பல நேயர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதைக் காண்கிறேன்.

பல நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களை கேள்வி பதில் ரூபத்தில் இதோ கோவைப்படுத்தித் தந்திருக்கிறேன்.:-
1) வந்தியத்தேவர் இளவரசி குந்தவைப்பிராட்டியாரை மணந்தாரா?
2) கோட்டைத்தளபதி சின்னபழுவேட்டரையர் என்ன ஆனார்?
3) வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்ன செய்தான்?
4) பொன்னியின் செல்வரின் பிரயாணம் என்ன வாயிற்று?
5) பழைய மதுராந்தகரும் சின்னபழுவேட்டரையரின் மகளும் என்ன ஆனார்கள்?
6) நந்தினியினால் முடிசூட்டப்பட்ட இளம்பாண்டியனைப்பற்றிய விவரம் ஏன்ன?
7) நந்தினியின் கதி என்ன?
8) வானதி விஷயமாக குடந்தை சோதிடர் கூறியவை பலித்தனவா?
9) ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்?

மேற்கூறிய கேள்விகள் பலவற்றுக்குப் பதில் தமிழ்நாட்டு சரிதிரம் படித்தவர்கள் தாங்களே அறிந்து கொள்வார்கள். ஆயினும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பொருட்டு எல்லாவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.

1. மேலும் பல இடையூறுகளைத்தாண்டிய பிறகு குந்தவையும் வந்தியத்தேவனும் மணம்செய்து கொள்கிறார்கள். இருவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தில் மிக மதிக்கப்படுகிறார்கள. தஞ்சை பெரிய கோவிலில உள்ள கல்வெட்டு ஒன்றில் " இராஜராஜதேவனின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகக் குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டு விளங்குகிறது.

2. இரும்பு மனிதராகிய சின்னப்பழுவேட்டரையர் உயிர்பிழைத்துப் பல கஷ்டங்களை அநுபவித்த பிறகு ஊருக்குத் திரும்பி வருகிறார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு பல அரிய சேவைகள் செய்கிறார்.

3. வீர வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் தனது ஒற்றறியும் வேலையை மேலும் நடத்திக்கொண்டிருக்கிறான்.

4. பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனுடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற்கொள்ளைக்காரர்களை அடக்கிச் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள வெளிநாடுகளில் நிலை நாட்டுகிறார். உத்தமசோழ ருக்கு பட்டம்கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் இறந்தததும், பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜராஜ சோழன்' என்ற பட்டத்துடன் நீண்ட காலம் சோழசாம்ராஜ்ஜியத்தை ஆளுகிறார்.

5. பழைய மதுராந்தகன் ஆபத்துதுவிகளின் தூண்டுதலாலும், ஈழமன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டியநட்டைக் கவர்ந்து முடிசூட்டிக்கொள்ள முயலுகிறான்.அவனுடைய முயற்சி பெரிதும் பலம் பெறுகிறது.. இராஜராஜசோழன் பட்டத்திற்கு வந்த பிறகு அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை போரில் வெல்கிறார். அவன் வீரசொர்க்கம் எய்துகிறான்.

6. திருப்புறம்பயம் காட்டில் முடி சூட்டப்பட்ட இளம் பாண்டியனும் இராஜ்ஜயத்திற்கு உரிமை கொண்டாடுகிறான். அவன் போர்களத்திலிருந்து தப்பிச்சென்று மறுபடியும் நாட்டைப்பெற சதிசெய்கிறான்.இவன் பிற்காலத்தில் இராஜேந்திரச் சோழனால் முறியடிக்கப்படுகிறான்.

7. நந்தினி அமரபுஜங்கன் இந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் இராஜராஜசோழர் அவளைச் சந்திக்கிறார். அவரிடம் தன்பிறப்பை பற்றிய உண்மையைக்கூறிவிட்டுஇறக்கிறாள்.

8. குடந்தை ஜோதிடரின் கூற்றுக்கள் வானதியின் விஷயத்தில் பலிக்கின்றன.(சோதிடர் சாஸ்திரம் பார்த்துச்சொன்னாரா? ஊகித்துச்சொன்னாரா? நாம் அறியோம்.) வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்டசோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் பகழ்பெறுகிறான். ஆனால் வானதி தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டு உயிர்துறக்கிறாள். இராஜராஜனுடன் சோழ சிங்காதனம் ஏறுகிறவள் 'உலகமகாதேவி' என்னும் திருநாமங்கொண்ட இன்னொரு ராணியாவாள்.

9. ஆபத்துதவிகள் பாண்டிய இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டுவருகிறார்கள்.நந்தினி உயிரோடு இருந்தவரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரணத்தைப் பற்றி விசாரிக்கப்படவில்லை. நந்தினியின் மரணத்திற்குப் பிறகு இராஜராஜசோழன் ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளை கைப்பற்றி தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களை பறிமுதலாவது செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நேயர்கள் அவ்வளவாக கவலைப்படாத இன்னும் சில கதாபாத்திரங்களைப்பற்றிய விவரங்களையும் கூறிவிடுகிறேன்.

சுந்தரசோழர் காஞ்சி பொன்மாளிகையில் மூன்று ஆண்டுகாலம் வசித்துவிட்டுஅங்கேயே உயிர்துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சியத் தேவர்' என்று பெயர் பெறுகிறார். அவருடைய அருமை மனைவி வானமாதேவி, - மலையமானுடைய மகள் - அவருடன் உடன்கட்டை ஏறிச்சொர்க்கம் அடைகிறாள்.

பார்த்திபேந்திரன் குந்தவை தன்னை நிராகரித்துவிட்ட கோபத்தினால் காஞ்சியில் சுதந்திர இராஜ்ஜயத்தை நிறுத்தப் பார்க்கிறான். அதில் தோல்விகண்டு சக்தியில்லாமல் மாண்டுபோகிறான்.

கந்தமாறன் பாலாற்றின் வடமேற்கில் புதிய மாளிகைக் கட்டிக்கொண்டு சோழசாம்ராஜ்ஜயத்திற்கு தொண்டுசெய்து வாழ்கிறான். அவனுக்குப் பின்னால் சம்புவரையர் குலம் மிகப் பிரசித்தி அடைகிறது.

நேயர்களைத்திருப்தி படுத்துவதற்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவையெல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திரக் கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

உத்தமசோழனுக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன். இராஜேந்தரன், இராஜாதிராஜன், வீர ராஜேந்திரன் குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் " பொன்னியின் செல்வன்" கதையைப் போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக்கூடியவை.

இந்தக் கதையின் ஆசிரியரைக்காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டபல மகோந்நதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அமரர் கல்கி

 

பக்க தலைப்பு

 


பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III