புறநானூறு உரை 2


சங்க கால நூல்கள்

Back

புறநானூறு
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 2



புற நானூறு - பாகம் 2 (61-130)
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் .


Source:
புறநானூறு(1 -200 பாட்டுகள்)
மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழப்பேராசிரியர்
சித்தாந்த கலாநிதிஔவை சு துரைசாமிப் பிள்ளை அவர்கள்
எழுதியவிளக்க வுரையுடன்

திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்
திருநெல்வேலி - 6 --- சென்னை - 1
1960.
கழக வெளியீடு - 438
ஔவையார்குப்பம் சுந்தரம் துரைசாமிப் பிள்ளை (1903)
© THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,
Ed 1 Mar 1947
Reprints: Sep 1952, April 1956, July 1960.
-----------

61. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

சோழன் நலங்கிள்ளியின் மைந்தன் சேட்சென்னி யென்பவனாகும். இவன் சிறந்த வீரன். இவன் இலவந்திகைப் பள்ளியில் இருந்து உயிர் துறந்தமைபற்றி இவ்வாறு கூறப்படுகின்றான். இவ்வேந்தனை யணுகியிருந்து அவனால் சிறப்பிக்கப்பட்டவராதலின், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் நாட்டு இயல்புகளையும் இவனுடைய விறலையும் விரித்துக் கூறுகின்றார். ஒருகால் இவனது வெற்றி நலத்தைச் சிலர் வினவினாராக, அவர்கட்கு இப்பாட்டால் இக் குமரனார், இச் சென்னியைப் பகைப்போர் உளராயின், "அவர்க்கு எய்தக்கடவ துன்பத்தை யவர்தாமே யறிகுவர்; அவனொடு வழுவின்றிப் பொருதவர் வாழக் கண்டதில்லை; அவனது அருள் பெற்றோர் வருந்தக் கண்டது மில்லை" என்று அறிவுறுத்தினார். இவன் காலத்தே, சேரநாட்டைக் குட்டுவன் கோதை ஆட்சி புரிந்தான். இவனுக்குச் சிறிது முன்னோ பின்னோ குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் சோழநாட்டையாண்டான். சோழர் படைத்தலைவன் ஏனாதி திருக்கிள்ளி யென்பான், இவன் காலத்தும் சிறப்புற்று விளங்கினான்.

    கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
    சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும்
    மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட
    பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்
    புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக         5
    விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
    நீடுகதிர்க் கழனி சூடுதடு மாறும்
    வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர்
    தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர்
    குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து         10
    செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
    வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
    எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி
    சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனில்
    தாமறி குவர்தமக் குறுதி யாமவன்         15
    எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர்
    வாழக் கண்டன்று மிலமே தாழாது
    திருந்தடி பொருந்த வல்லோர்
    வருந்தக் காண்ட லதனினு மிலமே.        (61)

திணை: வாகை. துறை: அசரவாகை. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

உரை: கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் - கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையுமுடைய கடைசியர்; சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - சிறிய மாட்சிமையுடைய நெய்தலை யாம்பலுடனே களையும்; மலங்கு மிளிர் செறுவின் - மலங்கு பிறழ்கின்ற செய்யின்கண்ணே; தளம்பு தடிந்திட்ட - தளம்பு துணித்திடப்பட்ட; பழன வாளைப் பரூஉக் கண் துணியல் - பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை; புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறையாக - புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு; விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி - விலாப்புடைப் பக்கம் விம்ம வுண்டு; நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் - நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடு மிட மறியாது தடுமாறும்; வன் கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் - வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்; தெங்கு படுவியன் பழம் முனையின் - தெங்கு தரும் பெரிய பழத்தை வெறுப்பின்; தந்தையர் குறைக்கண் நெடும்போ ரேறி - தந்தையருடைய தலை குவியாமல் இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய போரின்கண்ணே யேறி; விசைத் தெழுந்து - உகைத் தெழுந்து; செழுங்கோள் பெண்ணைப் பழம் தொட முயலும் - வளவிய கோட் புக்க பனையினது பழத்தைத் தொடுதற்கு முயலும்; வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் - நாடோறும் புதுவரு வாயையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனாகிய; எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி - வேல் விளங்கும் பெரிய கையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய சென்னியது; சிலைத்தார் அகலம் மலைக்குநர் - இந்திர விற்போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர்; உள ரெனின் - உளராயின்; தாம் அறிகுவர் தமக் குறுதி - தாமறிகுவர் தமக்குற்ற காரியம்; யாம் - யாங்கள்; அவன் எழு வுறழ் திணி தோள் வழுவின்று மலைந்தோர் - அவனுடைய கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர்; வாழக் கண்டன்றும் இலமே - வாழக்கண்டது மிலம்; தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் - விரைய அவனது திருந்திய அடியை அடையவல்லோர்; வருந்தக் காண்டல் அதனினும் இலமே - வருந்தக் காண்டல் அவ் வாழக்கண்டதனினும் இலம் எ-று.

தளம்பு என்றது சேறு குத்தியை. வழுவின்று மலைதலாவது வெளிப்பட நின்று மலைதல்.

விளக்கம்: தளம்பு. சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை யுடைத்துச் செம்மை செய்யும் கருவி. அது செல்லுங்கால் சேற்றிற் கிடக்கும் வாளை மீன் அறுபட்டுத் துண்டுபடுமாறு தோன்ற. "தளம்பு தடிந்திட்ட பரூஉக்கண் துணியல்" என்றார். கண்ணுறை வியஞ்சனம்; சோற்றோடு துணையாய் உண்ணப்படும் காய் கறிகள் உணவை மிக வுண்டதனால் மயங்கிச், சூட்டினை இடுமிட மறியாது தடுமாறுதல் உண்டாயிற்று. செழுங்கோட் பெண்ணை யென்புழி, கோள் என்றது குலை பொருந்தி எளிதிற் கொள்ளத்தக்க நிலையிலிருப்பதை யுணர்த்தி நின்றது. உறுவது, உறுதி யென நின்றது; தபுவது தபுதி யென வருதல் போல. தாழ்த்த வழி, சீற்றத்துக் கிலக்காய்க் கொல்லப்படுவ ரென்பது கருதி, "தாழாது" என்றார். அது, வாழக் காண்டல்.
-----------

62. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,
சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்வன்மையும், கொடைச் சிறப்பும் மிக வுடையவன். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பதிகம் கூறும் சேரமான் இவனாயின், இவற்குப் பின் அரசுகட்டி லேறியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி பெருநற்கிள்ளி யெனவும் வழங்கப்படுவன் போலும். இவ்விரு பெருவேந்தர்க்கும் மண்ணாசையின் விளைவாகப் போருண் டாயிற்று. கழாத்தலையாராகிய சான்றோர் சேரலாதன் போர்க்களத் திருப்பதை யறிந்து அவனைக் காண்பது கருதிச் சென்றார். அவர் சென்று காணும்போது இரு வேந்தரும் பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்குந்தறுவாயி லிருப்பக் கண்ட அச் சான்றோர், அவன் புகழ்பாடி வியந்தாராக, அவன் தன் கழுத்திலிருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ் பெற்றான். சிறிது போதில் அவன் உயிரும் நீங்கிற்று. இருவரும் வீழ்ந்து கிடத்தலைக் காணுந்தோறும் கழாத்தலையார், ஆறாத்துயர மெய்தி, இப்பாட்டால், "செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமும் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த குடைகளும் துளங்கின; அவர் தம் வெற்றியும் குடையும் நுவலும் முரசமும் ஒழிந்தன; போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந்தமையின் அமரும் உடன் வீழ்ந்தது. இவர்தம் பெண்டிரும் பாசடகு மிசைதல், பனிநீர் மூழ்கல் முதலிய கைம்மைச் செயல்களை விரும்பாது இவர்தம் மார்பகம் பொருந்தி உயிர் துறந்தனர்; இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்; இவர்தம் புகழ் மேம்படுவதாக" எனப் பாடிச் சிறப்பித்தார்.

கழாத்தலையார் பெயர் கழார்த் தலையார் என்றும் காணப்படுகிறது. முதுமக ளொருத்தியின் தலையை, "நறுவிரை துறந்த நாறா நரைத்தலை" யென்றது போலக் கழாத்தலை யென்று பாடிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றன ராதல் வேண்டும். கழார்த் தலையார் என்பதே பாடமாயின், காழர் என்னும் ஊரின ராதல் வேண்டும். கழாத்தலை யென்பதே ஓர் ஊரென்பதும், இவர் அவ்வூரின ரென்றும் கூறுப. ஒருகால், இருங்கோவேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்தமையால், வேளிர்க்குரிய அரைய மென்னும் நகர் கெட்டதெனக் கபிலர் (புறம்.202) கூறுகின்றார். இவர் செய்யுள் புலவர் புகழும் சிறப்புடைய தென்றும் இவர் பெயர் கழாத்தலை யென்றும் தோன்ற, "புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயன்" என்று கபிலர் கூறுவது ஈண்டு நினைவுகூரத் தகுவதாம். இவர், குடக்கோ நெடுஞ்சேரலாதன்பால் ஆரம் பெற்றதும், பிறவும் மேலே கூறினாம்.

    வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
    பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக்
    குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
    நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர்
    எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்         5
    பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
    தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
    தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
    உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
    பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்         10
    இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
    களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
    உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
    பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
    மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே         15
    வாடாப்பூவி னிமையா நாட்டத்து
    நாற்ற வுணவி னோரு மாற்ற
    அரும்பெற லுலக நிறைய
    விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே.        (62)

திணை: தும்பை. துறை: தொகைநிலை. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.

உரை: வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது - வருகின்ற தூசிப்படையைத் தடுத்துப் போரின்கண் ஒருவர் ஒருவரை வெல்வே மென மிகுதல் எங்ஙனமாவது; பொருது ஆண்டொழிந்த மைந்தர் - பொருது அக்களத்தின்கட்பட்ட வீரரது; புண் தொட்டுக் குருதிச் செங்கை - புண்ணைத் தோண்டி அவ்வுதிரந் தோய்ந்த செய்ய கையால்; கூந்தல் தீட்டி - தமது மயிரைக் கோதி; நிறங் கிளர் உருவிற் பேஎய்ப் பெண்டிர் - நிறமிக்க வடிவையுடைய பேய் மகளிர்; எடுத் தெறி அனந்தற் பறைச் சீர் தூங்க - மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே யாட; பருந்து அருந்துற்ற தானையொடு - பருந்து ஊனைத் தின்னப் பொருந்திய படையானே; செருமுனிந்து - போரின்கண் வெகுண்டு; அறத்தான் மண்டிய மறப்போர் வேந்தர்தாம் மாய்ந்தனர் - அறத்தின் அடர்த்துச் செய்த வலிய போரையுடைய அரசர் இருவரும் பட்டார்; குடை துளங்கின - அவர் கொற்றக் குடையும் தளர்ந்தன; உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தன -புகழமைந்த தலைமையையுடைய முரசு வீழ்ந்தன; பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் - பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண் பாடை மாக்களாகிய படைத் தொகுதி; இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை- இடமில்லை யாம்படி தொக்க அகன்ற இடத்தையுடைய பாடிவீட்டின்கண்; களம் கொளற்கு உரியோர் இன்றி - போர்க்களம் தமதாக்கிக் கொள்ளுதற் குரியோர் ஒருவரின்றி; தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமர் - கண்டார்க்கு அச்சம் வர வுடனே மடிந்தது பூசல்; பெண்டிரும் பாசடகு மிசையார் - அவர் பெண்டிரும் பச்சையிலை தின்னாராய்; பனி நீர் மூழ்கார் - குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்; மார்பகம் பொருந்தி - அவர் மார்பகத்தைக் கூடி; ஆங்கு அமைந்தனர் - அக் களத்தின் கண்ணே உடன் கிடந்தார்; வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற வுணவினோரும் - வாடாத கற்பகத்தின் தாரினையும் இமையாத கண்ணினையும் நாற்றமாகிய உணவினையுமுடைய தேவர்களும்; ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் - மிகப் பெறுதற்கரிய உலகம் நிரம்ப விருந்து பெற்றார்; பொலிக நும் புகழ் - அதனால் பொலிக நுங்கள் புகழ் எ-று.

அனந்தல், பறை கொட்டுவார் கை புண்படுதலின் மந்தமாக ஒலித்தல். அறத்தின் மண்டுதலாவது, படை பட்டபின் பெயராது சென்று இரு பெரு வேந்தரும் பொருதல். பட்ட இரு வேந்தரும் அக் களத்துக் கிடக்கின்ற படியைக் கண்டு, தம் மனத்தோடு நொந்து கூறுகின்றாராதலான், நும் புகழென முன்னிலையாக்கிக் கூறினார். வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; முரசு ஒழிந்தன; அமர் உடன் வீழ்ந்து; பெண்டிரும் மார்பகம் பொருந்தி அமைந்தனர்; நாற்ற உணவினோரும் விருந்து பெற்றனர்;

இவ்வாறான பின்பும் யாம் அமரினை மேற்கொண்ட பொருது வெல்வே மென்று தாந்தாம் நினைந்த நினைவு எவ்வண்ணமாவதென்று தன் நெஞ்சொடு கூறிப் பின் பொலிக நும் புகழே யென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு கூறியவாறு.

மறத்தின் மண்டிய வென்ற பாடமோதுவாரு முளர். வருதார் தாங்கி அமர் மிகல் யாவது என்பதற்கு, இவர்கள் செய்தபடி கண்டு......இனிச் சிலர் பொருது வேறல் எங்கே யுளது என வியந்து கூறியதாக வுரைப்பாரு முளர்.

விளக்கம்: அமரின்கண் மிகுதல் என்பது ஒருவர் ஒருவரை வெல்வேமென மிக்குற நினைத்து முயறல். அனந்தல் - மயக்கம், ஈண்டு மந்தமான ஓசைமேல் நின்றது. அருந்தவுற்ற வென்பது அருந்துற்றவென நின்றது. பாசடகு மிசைதலும் பனிநீர் மூழ்கலும் கணவனை யிழந்த மகளிர் மேற்கொள்ளும் கைம்மைச் செயல்.பைஞ்ஞிலம், மக்கட்டொகுதி: "உண்ணாப் பைஞ்ஞிலம் (பதிற். 31) என்று பிறரும் வழங்குப. வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; அமரும் வீழ்ந்தது எனப் படர்க்கைக்கண் கூறிவந்த ஆசிரியர், "பொலிக நும் புகழ்" என முன்னிலைப்படுத்துரைத்தற்கு அமைதி காட்டுவார், "பட்ட இருவேந்தரும்.....கூறினார்" என்றார். தேவரை வழிபடுவோர் "நறும்புகை" யிடுவது அவர்கள் நாற்ற வுணவினோ ராதல்பற்றி யென அறிக.
--------

63. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,
சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

இவ்விரு பெரு வேந்தரும் போர்க்களத்திற்பட்டு வீழ்ந்தது கண்டு, கழாத்தலையார் இரங்கியதுபோல, ஆசிரியர் பரணரும் அமர்க்களம் போந்து இருவரையும்கண்டு"ஒருவரையொருவர்வஞ்சியாதுநின்றுவென்றிபெறுவேம்" என்று போரில் மண்டிய இவர்தம் வீழ்ச்சி மண்ணாளும் மன்னர்க்கு ஒரு நல்ல வுண்மை யுணர்த்தும் என்ற கருத்தால், இப் பாட்டின்கண், "இவர்கள் பால் எத்துணையோ யானைப்படைகள் இருந்தன; அவை யாவும் அம்பால் துளங்கி விளைத்தற்குரிய வினையின்றி யழிந்தன; குதிரைகளோ மிக்க புகழ் படைத்தவை யெனினும் தம்மைச் செலுத்தும் மறத்தகை மைந்தரோடு பட்டொழிந்தன; தேரேறி வந்த வீரரனைவரும் கேடகம் தாங்கிய கையோடே வீழ்ந்தழிந்தனர். இவர் தம்வெற்றி முரசங்களும் கிழிந் தொழிந்தன; நெடுவேல் மார்பில் பாய்ந்ததால் வேந்தரும் வீழ்ந்து பட்டனர். இவர்தம் அகன்றலை நாடுகள் இனி என்னாம்" என இரங்கிப் பாடியுள்ளார்.

    எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
    விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே
    விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
    மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே
    தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
    தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே         5
    விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
    பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே
    சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
    வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே         10
    என்னா வதுகொ றானே கழனி
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    பாசவன் முக்கித் தண்புனற் பாயும்
    யாண ரறாஅ வைப்பிற்
    காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே.        (63)

திணையும் துறையும் அவை. அவரை அக்களத்திற் பரணர் பாடியது.

உரை: எனைப் பல் யானையும் - எத்துணையும் பலவாகிய யானையும்; அம்பொடு துளங்கி - அம்பால் கலங்கி; விளைக்கும் வினையின்றிப் படை யொழிந்தன - இனிமேலுண்டாக்கும் போரின்றிப் படையிடத்துப் பட்டன; விறற் புகழ் மாண்டபுரவி யெல்லாம் - வெற்றிப் புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம்; மறத்தகை மைந்தரொடு - ஆண்மைக்கேற்ற வீரப் பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே; ஆண்டுப் பட்டன - அக்களத்தே பட்டன; தேர் தர வந்த சான்றோர் எல்லாம் - தேர் கொடுவர வந்த போரிற் கமைந்தோ ரெல்லாம்; தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் - தாம் பிடித்த பரிசை தம் கண் மறைப்பச் சேரப் பட்டனர்; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம் - வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர் சீவாது போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரச மெல்லாம்;பொறுக்குநர் இன்மையின் - பரிப்பார் படுதலான்; இருந்து விளிந்தன - இருந்து கெட்டன; சாந்தமை மார்பில் நெடு வெல் பாய்ந்தென - சாந்தமைந்த மார்பின்கண்ணே நெடிய வேல் பாய்ந்தெனவாக; வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் - அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே மடிந்தனர்; இனி என்னாவது கொல்தான் - இனி என்ன வருத்த முறுவதோ தான்; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய மகளிர்; பாசவல் முக்கி - செவ்வி யவலை முக்கி; தண் புனல் பாயும் - குளிர்ந்த புனற்கண்ணே பாயும்; யாணர் அறாஅ வைப்பின் புதுவருவா யறாத ஊர்களையுடைய; காமர் கிடக்கை - அழகிய கிடையையுடைய ; அவர் அகன்றலை நாடு - அவரது அகன்ற விடத்தையுடைய நாடு எ-று.

அன்னோ என்னவாதுகொல் என்று பாடமோதுவாரு முளர். நாடு தான் என்னாவதுகொல் எனக் கூட்டுக. நாடென்று மொருமை நோக்கி, என்னாவதுகொல் என ஒருமையாற் கூறப்பட்டது.

விளக்கம்: வெற்றியால் உளதாகும் புகழை "விறற்புகழ்"என்றார். அறப்போர் செய்தற்குரிய குணங்களால் அமைந்தோரைச் "சான்றோர்" என்பது மரபு; "மெய் சிதைந்து சாந்தெழில் சிதைத்த சான்றோர் பெருமகன்" (பதிற். 67) என்று பிறரும் கூறுதல் காண்க. மயிர்க்கண் முரசம் "கொல்லேற்றுப் பைந்தோல், சீவாது போர்த்த மாக்கண் முரசம்" (மதுரை.732-3) சீவுதல், மயிரை நீக்குதல். சீவாது போர்த்த முரசினை மயிர்க்கண் முரசம் என்றலை, "தழங்கு குரல் மயிர்க்கண் முரசினோரும்" (நற்.93) என்பதனாலு மறிக. முக்குதல், உண்ணுதல். "தத்திங்கந் தத்திங்கம் கொட்டு வாளாம், தயிருஞ் சோறுந் தின்பாளாம், ஆப்பஞ் சுட்டால் தின்னு வாளாம், அவலிடிச்சால் முக்குவாளாம்" என்று மகளிர் கைக்குழந்தைகட்குப் பாடிக் காட்டும் பாட்டிலும் முக்குதல் இப் பொருளில் வருதல் காண்க.
--------------

64. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

முதுகுடுமிப் பெருவழுதி புலவர் பாடும் புகழ் படைத்தவன். இவனது வண்மை புலவர் மிடி தீர்க்கும் பெருநலம் படைத்திருப்பதுபற்றி, வறுமை யெய்துங் காலங்களில் புலவர்கள் இவன்பால் பொருள் பெற்றுச் சென்று இனிது வாழ்வதனோ டமையாது, தாம் பெற்ற பெருவளத்தைப் பெறார்க்கும் அறிவித்து, அவன்பாற் சென்று அது பெறச் செய்வது மரபு. அம்முறையே, இப்பாட்டின்கண் ஆசிரியர் நெடும்பல்லியத்தனார், வறுமை யெய்தி வாடும் விறலியைக் கண்டு, "இக் காலத்தே புற்கையுண்டு வருந்தும் நாம் முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு வருவேமாயின், புற்கை யுணவு நீங்கி இனிய வுணவு கொள்ளும் செல்வம் பெறலாம் வருக செல்வேம்" என்று பாடியுள்ளார்.

நெடும்பல்லியத்தன் என்னும் பெயர். ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலை யெனப் பல்லியங்களைத் தொகுத்தோதுதலின் இவர் நெடும்பல்லியத்தனா ராயினா ரெனக் கருதுவோரும் உளர். நெடும் பல்லியத்தை யென வருதலை நோக்கின் இக்கருத்துச் சிறப்புடையதாகத் தோன்றவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி தனக்குரிய கூடலினீங்கிப் போர்க்களத்தே அமர்ந்திருப்பதை யறிந்துவைத்தும் அங்கே அவன்பாற் செல்லக் கருதுவது அவனது வண்மையும் இவரது வறுமைக் கொடுமையும் புலப்படுத்துகிறது. இவரைப்பற்றி வேறே குறிப்பொன்றும் காணப்படவில்லை.

    நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
    செல்லா மோதில் சில்வளை விறலி
    களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப்
    பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற்         5
    குடுமிக் கோமாற் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.        (64)

திணை: பாடாண்டிணை துறை: விறலியாற்றுப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

உரை: நல் யாழ் ஆகுளி பதலை யொடு சுருக்கி - நல்ல யாழையும் சிறு பறையையும் ஒரு தலை மாக்கிணையுடனே கட்டி; செல்லாமோ சில் வளை விறலி - போவே மல்லேமோ சொல்லுவாயாக சில வளையையுடையவிறலி; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - யானை யணிபொருத இடமகன்ற பாசறைக்கண்; விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப - ஆகாயத்தின் கண்ணே பறக்கும் எருவையைப் பசிய வூன் தடி தகைப்ப; பகைப் புலம் மரீஇய - மாற்றார் தேயத்தின்கண்ணே மருவிய; தகைப் பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமான் கண்டு - அழகிய பெரிய செல்வத்தினையுடைய முதுகுடுமியாகிய கோமானைக் கண்டு; நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கு - மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு எ-று.

எருவை, தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருத்து; கழுகெனினு
மமையும். விறலி, குடுமிக் கோமாற் கண்டு புற்கையை நீத்தனம் வரற்குச்
செல்லாமோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

தகைப்பெருஞ் சிறப்பின் என்பதூஉம் பாடம்.

விளக்கம்: சுருக்குதல் - கட்டுதல்; பைக்குள்ளே வைத்து அதன் வாயைச் சுருக்கிக் கட்டுதல்பற்றி இவ்வாறு கூறினார். யானைகள் தம் மில் அணிவகுத்துச் செல்லும் இயல்பினவாதலால், களிற்றுக் கணம் என்றதற்கு யானை யணி யென உரை கூறினார். பசுந்தடியின் காட்சி எருவையை மேலே செல்லாவாறு தடுத்துத் தன்னை யுண்டற்குரிய வேட்கையை யெழுப்புதலின், அதன்மேலேற்றி, "பசுந்தடி தடுப்ப" என்றார். தகை அழகு. தகைப்பருஞ் சிறப்பின் என்ற பாடத்துக்குத் தடுத்தற் கரிய தலைமையையுடைய என உரை கூறிக் கொள்க.
--------

65. சேரமான் பெருஞ் சேரலாதன்

இச் சேரலாதன் பெயர் சில ஏடுகளிற் பெருந்தோளாதன் என்று காணப்படுகின்றது. இவன் மிக்க வீரமும், சான்றோர் பாடும் சால்பு முடையன். குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவற்குமுன் தோன்றிக் குறுகிய காலத்தில் உயிர் துறந்தான். இவ்விருவர் காலத்தும் கழாத் தலையார் இருந்தார்; இருவர்பாலும் அவர் சிறந்த நன்மதிப்புடையராய்ப் பாடியுள்ளார். இச் சேரமான் சோழநாட்டை யாண்ட கரிகால்வளவனொடு வெண்ணியென்னு மிடத்தே பெரும்போர் செய்தான். அப் போரில் பாண்டிவேந்த னொருவனும் போர் உடற்றினன்.இதன்கண் வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பிற் பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பினும் முகத்தினும் பட்ட புண்ணையே வீரர் விழுப்புண் ணென விரும்புவர். மார்பிற்பட்ட கருவியால் முதுகிடத்தும் இச் சேரமானுக்குப் புண்ணாயினமையின், இவன் அதனால் பெரு நாணம் கொண்டு மானம் பொறாது வடக்கிருப் பானாயினன்.

இச்செய்தி தமிழ் நாடெங்கும் பரவிற்று. கேள்வியுற்ற ஏனை யரசரும் சான்றோரும் இவன்பால் பெருமதிப்புற்றுப் பாராட்டுவா ராயினர். கழாத்தலையாராகிய சான்றோர், இவன் செயல் கண்டு, ஆற்றாமை மிகக் கொண்டு, தன்போலும் வேந்தனொருவன் மார்பு குறித்தெறிந்த படையாலுண்டாகிய புறப் புண்ணிற்கு நாணி மறத்தகை மன்னனாகிய எங்கள் பெருஞ்சேரலாதன் வாள் வடக்கிருந்தனன்; எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும் பகற்போது முன்போலக் கழியாது; உழவர் உழவு மறப்பர்; சீறூர்களும் விழாவை மறக்கும்; இவனது வடக்கிருப்பு உவாநாளில் ஞாயிறுதோன்றத் திங்கள் மலைவாய் மறைவதுபோல வுளது. அஃதாவது, தமிழ் நாட்டின் மேலைப் பகுதியில் இனி இருள் சூழ்வதன்றி ஒளியில்லையாம்" என்று இப்பாட்டின்கண் கையறவுற்றுக் கலுழ்ந்து பாடியுள்ளார். மாமூலனார் என்னும் சான்றோர், இவன் வடக்கிருந்து உயிர் துறந்தன ரெனக் கூறுகின்றார்.

    மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
    இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
    சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப
    உழவ ரோதை மறப்ப விழவும்
    அகலு ளாங்கட் சீறூர் மறப்ப         5
    உவவுத்தலை வந்த பெருநா ளமயத்
    திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
    புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்         10
    வாள்வடக் கிருந்தன னீங்கு
    நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.         (65)

திணை: பொதுவியல் துறை:கையறுநிலை.சேரமான்பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.

உரை:முழா மண் மறப்ப - முழா மார்ச்சனை யிடுத லொழிய; யாழ்பண் மறப்ப - யாழ் பண்ணை யொழிய; இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப - பெரிய இடத்தையுடைய பானை பாலின்மையிற் கவிழ்ந்து நெய் கடைதலை யொழிய; சுற்றம் சுரும்பார் தேறல் மறப்ப - தம்முடைய கிளை வண்டார்ந்த மதுவை யுண்ணா தொழிய; உழவர் ஓதை மறப்ப - உழுவார் தொழில் செய்யு மோசையை யொழிய; அகலுள் ஆங்கண் சீறூர் விழவும் மறப்ப - அகன்ற தெருவினையுடைய சீறூர் விழாவினை யொழிய; உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து - உவாவந்து கூடிய பெரிய நாளாகிய பொழுதின்கண்; இரு சுடர் தம்முள் நோக்கி - ஞாயிறுந் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து; ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு - அவற்றுள் ஒரு சுடர் புல்லியமாலைப் பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற்போல; தன் போல் வேந்தன் முன்பு குறித்தெறிந்த புறப்புண் நாணி - தன்னை யொக்கும் வேந்தன் முன்னாகக் கருதி யெறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி; மறத்தகை மன்னன் வாள் வடக் கிருந்தனன் - மறக் கூறுபாட்டையுடைய வேந்தன் வாளோடு வடக்கிருந்தான்; ஈங்கு ஞாயிற்றுப் பகல் - நாள்போற்கழியல - ஆதலால், இவ்விடத்து யாம் அவனை யின்றித் தனித்து உயிர்வாழும் ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்த நாள் போலக் கழியா எ-று.

மண் முழாமறப்ப வென்று முதலாகிய செயவெனெச்சங்க ளெல்லாம் வாள் வடக்கிருந்தன னென்னும் வினையோடு முடிந்தன. எறிந்த புண் - எறிதல் ஏதுவாக வுற்ற புண். முன்பு குறித்தெறிந்த புறப்புண் ணாணி யென்றது, மார்பில் தைத்துருவின் புண்ணும் புறப்புண்ணாதலை யொக்கு மென நாணி யென்றதாகக் கொள்க.

விளக்கம்: முழாவை மண்ணுதலாவது மார்ச்சனையிடுதல். குழிசி இழுது மறப்ப வென்றதனால், குழிசி யிடத்தே கடைந்தெடுக்கப்படும் இயைபு கருதி, நெய் கடைதல் பொருள் கூறப்பட்டது. இழுது - நெய்; இன்றும் மலைநாட்டவர் உருக்காத நெய்யை இழுது என்ப. அரசர் குடியில் இழவுண்டாயின் ஊர்களில் எடுக்கப்படும் விழா கைவிடப்படும். திரையனை இழந்து வருந்தியதனால் காவிரிப்பூம்பட்டினம் இந்திர விழாவை மறந்த செய்தி மணிமேகலையால் உணர்ந்து கொள்க. கரிகாலனொடு பொருத காலத்தில் சேரமான் முதுகிடாது நேர் நின்று பொருதானென்றும், அவன் மார்பு குறித்தெறிந்த கரிகாலன் வேல் அவனது மார்பிற் பட்டு முதுகிடத்தே புண்ணாக்கிற் றென்றற்கு, "முன்பு குறித்தெறிந்த புறப்புண்" என்றார். உவாநாளில் இருண் மாலைப்போதில் கிழக்கே திங்கள் தோன்ற, மேற்கே ஞாயிறு மலைவாய் மறையுமாறு தோன்ற, "ஒருசுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு" என்றார்.
--------

66. சோழன் கரிகாற் பெருவளத்தான்

சேரமான் பெருஞ்சேரலாதனோடு பொருது வெற்றிபெற்று மகிழ்ந்த கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் என்னும் புலவர் பெருமாட்டியார் கண்டார். அச் சேரமான் புறப்புண்ணாணிவாள் வடக்கிருந்ததும், அது கண்டு, வீரராகிய சான்றோர் பலர் உயிர் துறந்ததும் கேள்வியுற்றிருந்த அவர்க்கு, கரிகாலனது வன்மையும், சேரமானது மானவுணர்வும் பெருவியப்பைப் பயந்தன. இதனினும் சிறப்புடைய பொருள் தாம் பாடுதற் கில்லாமை தேர்ந்து இப்பாட்டின் கண் இதனைப் பொருளாக அமைத்து, "களியியல் யானைக் கரிகால் வளவ, பல போர்களினும் பகைவரை வென் றுயர்ந்த நின் ஆற்றல் மிக விளங்குமாறு பெருஞ்சேரலாதனை வென்றனை; ஆயினும் வெண்ணிப் பறந்தலைக்கண் நின்னால் உண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி வாள் வடக்கிருந்து இவ் வுலகத்தே புகழ் மிக எய்திய சேரலாதன் நின்னினும் நல்ல னன்றே" என்று பாடியுள்ளார்.

வெண்ணி யென்பது, தஞ்சை மாநாட்டில் உள்ளதோர் ஊர். இது வெண்ணில் என்றும் வழங்கும். குயத்தியார் என்பது இப்புலவர் பெருமாட்டியின் பெயர். வேட்கோவருள் சிறந்தோர்க்குப் பண்டை நாளில் வேந்தர் குயம் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு. இவர் குயத்தியார் எனப்படுதலால், வேட்கோவருள் சிறந்தவ ரென்பது துணிபாம். இம்மரபு பத்தாம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கிறது. கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பணி கொள்ளும் விரகினை முதன் முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; உரோமானிய ரல்லர் என்பது இவர் பாட்டால் வலிபெறுகிறது. கரிகாலன் முன் இவர் அவர்க்குத் தோற்ற,பெருஞ்சேர லாதனைச் சிறப்பித்து, "வேந்தே, வெற்றிப் புகழ் ஒன்றே நீ பெற்றனை; அதனை நினக்குத் தந்து, நின்னாலுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து பெறும் பெரும்புகழை அவன் எய்தினான்; அவன் நின்னினும் நல்லன் போலும்" என நயம்படக் கூறுவது இவரது புலமை நலத்தைப் புலப்படுத்துகிறது.

    நளியிரு முந்நீர் நாவா யோட்டி
    வளிதொழி லாண்ட வுரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ
    சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
    வென்றோய் நின்னினு நல்ல னன்றே         5
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப்புக ழுலக மெய்திப்
    புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.         (66)

திணை: வாகை துறை: அரசவாகை. சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.

உரை: நளி யிரு முந்நீர் நாவாய் ஓட்டி - நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தை யோட்டி; வளி தொழிலாண்ட உரவோன் மருக - போர்செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச் செல்வனை யழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளானே; களியியல் யானைக் கரிகால் வளவ - மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவ; சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் - மேற் சென்று போரை யெதிர்நின்று கொன்ற நினது வலி தோற்ற வென்றவனே; நின்னினும் நல்லன் அன்றே - நின்னினும் நல்லனல்லவே; கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை - தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தின் கண்; உலகம் புகழ் மிக எய்தி - உலகத்துப் புகழை மிகப்பொருந்தி; புறப் புண் ணாணி வடக்கிருந்தோன் - புறப் புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன் அவ்வாறிருத்தலான் எ.று.

புகழெய்தி யென்றது, புறப்புண் நாணுதல்தன்னை. ஓட்டி யென்பதனை யோட்ட வெனத் திரிக்க. எய்தி, எய்த வெனத் திரிப்பினு மமையும். எய்தவென்று பாடமோதுவாரு முளர். உரவோன் மருக, கரிகால் வளவ, வென்றோய், வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி உலகத்துப் புகழ் மிக எய்தி வடக்கிருந்தோன், நின்னினும் நல்ல னன்றே யெனக் கூட்டுக.

இது, கரிகால் வளவன் வென்றி கூறியதாகலின் அரசவாகை யாயிற்று.

விளக்கம்: ஆண்டில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் வணிகக் காற்றின் வரவறிந்து கலஞ் செலுத்துவது முறையென்ற செய்தி ஆராய்ச்சியால் விளங்காமுன் இவ்வுரை யெழுதப்பட்டதாகலின், உரைகாரர், வளிதொழி லாண்ட வுரவோன்" என்றதற்குத் தம் காலத்து வழங்கிய புராண கதை யொன்றைப் பெய்து கூறுகின்றார். மார்புகுறித் தெறிந்த வேல் முதுகிடத்தே புண்ணாக்கியது கரிகாலனது ஆற்றல் தோற்றுவித்து நிற்றலின், "ஆற்றல் தோன்ற வென்றோய்" என்றார். வெண்ணிப் பறந்தலை - வெண்ணி யென்னும் ஊர்க்குப் புறத்தேயுள்ள போர்க்களம். ஊர்க்குப் புறத்தே அதனருகே யுளதாகிய போர்க்களம் இவ்வாறு கூறப்படும்; கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை, வாகைப் பறந்தலையென வருதல் காண்க. புகழுடையார்க்கன்றிப் புறப்புண்ணுக்கு நாணு தலுண்டாகாதாகலின், நாணுதலையே புகழென்றார். ஆற்றல் தோன்ற வென்று கொண்ட நின் புகழினும், விழுப்புண் பட்டும் புறப்புண்ணாணியும் சேரமான் கொண்ட புகழ் போற்றத்தக்க தென்றற்கு, "நின்னினும் நல்ல னன்றே" என்றார்.
-------

67. கோப்பெருஞ் சோழன்

இப் பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த பெருவேந்தன்; சிறந்த புலவன். இவன் ஆட்சிக்காலத்தே, இவனுடைய மக்கள் இவற்கு மாறாக வெழுந்து போருடற்றக் கருத, அவரைச் செகுத்தற்கு இவனும் போர்க்கெழுந்தான்; ஆயினும், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய சான்றோர் விலக்க விலக்குண்டு அமைந்தான். அம் மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான். இவனுக்குப் பிசிராந்தையார், பொத்தியார் முதலிய சான்றோர் உயிர்த் தோழர். நட்புக்குரிய காரணங்களான புணர்ச்சி பழகுதல், உணர்ச்சி என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்கு இவற்கும் பிசிராந்தையாருக்கும் உளதாய நட்பினைச் சான்றோர் எடுத்துக் காட்டுவர். இவன் வடக்கிருந்த காலத்தில், அவ்வாறே தாமும் இருந்து உயிர்நீத்தற்குப் போந்த பொத்தியாரை விலக்கி, "நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக" என இச்சோழன் பணித்தான். அவ்வாறு அவர் வருதற்குள் இவன் உயிர் துறந்து நடு கல் லாயினன். பின்னர் அவர் வந்தபோது நடுகல்லாகிய தான் அவற்கு இடமளித்தான். இவன் தானே அவ்வப்போது பாடிய பாட்டுக்களும் உள. அவை உயர்ந்த கருத்தும், சிறந்த இலக்கிய நலமும் உடையன. இப்பாட்டின்கண் ஆசிரியர் பிசிராந்தையார், அன்னச் சேவலுக்குக் கூறுவாராய்க் கோப்பெருஞ் சோழன் தன்பால் கொண்டிருக்கும் அன்பினையும் நன்மதிப்பையும் எடுத்தோதிக் காட்டுமுகத்தால் உண்மை யன்பு கலந்த நண்பர் மனப் பாங்கினை வெளிப்படுக்கின்றார்.

பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோ ரூர். ஆந்தையார் என்பது இச் சான்றோரது பெயர். இவர் காலத்தே, பாண்டிநாட்டை அறிவுடை நம்பி யென்பான் ஆண்டுவந்தான். அவன் தன்னாட்டு மக்கள் பால் இறை பெறுந்திறத்தில் முறைபிறழும் நிலையி லிருப்ப, அதனை யறிந்த பிசிராந்தையார், தம்மூர்ச் சான்றோர் தம்மை விடுப்ப வேந்தன் பாற் சென்று, "அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடியாத்து நாடு பெரிது நந்தும்" என்று தெருட்டி நெறிப்படுத்தினார். பின்பு, கோப்பெருஞ் சோழனது செம்மையும் புலமையும் கேள்வியுற்று, அவன்பால் பேரன்பு பூண்டார்; சோழனும் இவர்பால் மெய்யன்பு கொண்டான். உணர்ச்சி யொருமையால் ஒருவரை யொருவர் அறியாமே பிறந்த நட்பு முடிவில் ஒருவரை யொருவர் இன்றியமையா நிலையினைப் பயந்தது. கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து நடுகல்லாகிய பின்பு இவர் சென்று கண்டு தாமும் உயிர்நீத்தார். அந் நிகழ்ச்சிக் குறிப்புக்கள் இத் தொகைநூற்கண் காணப்படும்.

    அன்னச் சேவ லன்னச் சேவல்
    ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
    நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
    கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்
    மையன் மாலையாங் கையறு பினையக்        
    குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
    சோழநன் னாட்டுப் படினே கோழி
    உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கெம்         10
    பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
    ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
    இன்புறு பேடை யணியத்தன்
    நன்புறு நன்கல நல்குவ னினக்கே         (67)

திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

உரை: அன்னச் சேவல் அன்னச் சேவல் - அன்னச் சேவலே அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் - கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல்; நாடு தலை யளிக்கும் ஒண் முகம் போல - தன்னாட்டைத் தலையளி செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் - இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா விளங்கும்; மையல் மாலை - தமியோராயினார்க்கு மயக்கத்தைச் செய்யும் மாலைப் பொழுதின் கண்; யாம் கையறுபு இனைய - யாம் செயலற்று வருந்த; குமரியம் பெருந் துறை அயிரை மாந்தி - குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து; வடமலைப் பெயர்குவை யாயின் - வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின்; இடையது சோழ நன்னாட்டுப் படினே - இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழநாட்டின்கண் சென்று பொருந்தின்; கோழி - உரையூரின்கண்; உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு - வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக் கோயிற்கண்ணே புக்கு; எம் பெருங் கோக் கிள்ளி கேட்க - எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே - பெரிய பிசி ரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்புறு பேடை அணிய - மாட்சிமையுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கு - தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பன் நினக்கு எ-று.

ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி யெனினுமமையும். குறும் பறை யென்றது? பேடையை, வாயில் விடா தென்றதற்கு வாயில் காவல் விடவேண்டா தெனினு மமையும். முகிழ் நிலா வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென முதல்வினை கொண்டது; மதியம் முகிழ்க்கும் நிலா வெனினு மமையும் ஆந்தை யடியுறை யென்பதற்கு. ஆந்தை, நின் அடிக்கண் உறைவானென் பாரு முளர். கேடை யணிய நன்கலம் நல்குவ னென்றதனாற் பயன், மறவாது போதல் வேண்டும் என்னும் நினைவாயிற்று.

விளக்கம்: ஆடு கொள் வென்றிக்கு இடமும் ஏதுவுமாகலின், "அடுபோர் அண்ணல்" என்றார். அடு போர் அண்ணல் பகைவரை வஞ்சியாது கொல்கின்ற போரையுடைய, இம் மாலைப்போது வருத்தத்தால் மயக்க முறுவிக்குமாகலின், "மையல் மாலை" யெனப்பட்டது. மாலைப்போதில் வெயிலொளி குன்ற இருள் விரவுதலின், மையல் மாலை யெனப்பட்ட தென்றுமாம். வடமலை, இமயமலை. திருவேங்கடமும் விந்தமும் வடமலை யெனப்படுமாயினும், அவை தாமும் வடக்கே பிறமலைகளை யுடைமையின், அவ்வாறில்லாத இமயமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று. இவற்றின் கண்ணுள்ள நீர்நிலை ஒருகால் நீர் வற்றுமாயினும், இமயத்து நீர்நிலை என்றும் வற்றாமையின், அது நோக்கி அன்னச் சேவல் செல்வதாகக் கருதுகின்றார். குறும் பறை - இளமை பொருந்திய பெடை யன்னம். குறுமை, இளமை குறித்துநின்றது; குறு மகள் என்றாற்போல, பறத்தலை யுடையது பறை. வாழ்க்கைத் துணையாகிய பெடை தனக்குரிய பெண்மைக் குணத்தால் மாட்சிமைப் படுவதையே இவர் பெரிதும் விரும்புவராதலால்,"மாண்ட நின் பெடை" என்றார். பிறாண்டு தம் மனைவியை, "மாண்டவென் மனைவி" யென்பர். அடியுறை யென்னற்குரியது அன்னமாதலின், அதற்கேற்ப "அடிக்கீழ்" என்றார். "அடியுறை யெனின் வறிது செல்வாயல்லை; நின் இன்புறு பேடை அணிய நன்கலம் நல்குவன்" என்பது கேட்கின் அன்னம் மறவாது செல்லும் என்பது கருத்து.
------------

68. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளி உறையூரின்கண் இருக்கையில், கோவூர் கிழார் சென்று அவனைக் கண்டார். அவன் உயர்ந்த பூண்களை யணிந்து மகளிர் பால் மென்மையுடையனாய் இனி திருப்பதும், அவன் மெய்-வன்மையால் வீரராகிய ஆடவர் அவனைப் பணிந் தொழுகுவதும், சோழ நாட்டு மன்பதைகட்குத் தான் உயிரெனக் கருதிப் பேணுவதும், அவனுடைய மறம் நீங்கா வீரர் போர்த்தினவு கொண்டு செம்மாப்பதும் நேரிற் கண்டு வியந்தார். சோழனும் அவர்க்கு மிக்க பொருளைப் பரிசிலாக வழங்கினான். இச் செய்தியை இவர் இப்பாட்டின்கண் பாண னொருவதற்குக் கூறும் முறையில் வைத்துக் கூறுகின்றார்.

    உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற்
    கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
    சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்
    தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந்
    தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து         5
    மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
    ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
    புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச்
    சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர்
    மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்         10
    உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
    கேவா னாகலிற் சாவேம் யாமென
    நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
    தணிபறை யறையு மணிகொ டேர்வழிக்
    கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த         15
    நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை
    நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்
    உறந்தை யோனே குருசில்
    பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.         (68)

திணை: அது. துறை: பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

உரை: உடும்பு உரித்தன்ன என்பெழு மருங்கிற் கடும்பின் - உடும்புரித்தாற்போன்ற எலும்பெழுந்த விலாப்புடையை யுடைய சுற்றத்து; கடும் பசி களையுநர்க் காணாது - மிக்க பசியைத் தீரப்பாரைக் காணாதே; சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து - கேட்டார் பலரும் அறிதற் கரிதாய் அறிவார் சிலராதலின் சில் செவிக்கண்ணதாகிய யாழை இப்பாண் சாதியது உணவிற்கு முதலாகப்பெற்ற பரிசு என்னென்று வெறுத்து; ஈண்டு எவன் செய்தியோ - பாண இங்கே என் செய்கின்றாயோ பாண; பூண் சுமந்து - பூணைத் தாங்கி; அம் பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து - அழகிய பெருமையையுடைய எழில் பெற்ற செம்பொறி பொருந்திய மார்பினையுடைய; மென்மையின் மகளிர்க்கு வணங்கி -மென்மையான மகளிர்க்குத் தாழ்ந்து; வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் - வன்மையான் வீரரை யகப்படுக்கும்; பீடு கெழு நெடுந்தகை - பெருமை பொருந்திய நெடுந்தகை; புனிறு தீர் குழவிக் கிலிற்று முலை போல - ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல; சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் - நீர் மிக்க காவிரியினது கரை மரத்தைச் சாய்க்கும் மிக்க வெள்ளம்; மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன் - உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்ல சோழநாட்டையுடைய வேந்தன்; உட்பகை ஒரு திறம் பட்டென - உட்பகை யொரு கூற்றிலே பட்டதென்னும்படி; புட்பகைக்கு ஏவானாகலின் - எம்மைப் புட்செய்யும் பகையிடத்து ஏவானாகலான்; சாவேம் யாமென - யாம் எம்மிற் பொருது மடியக்கடவேமென்று; நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப - நீங்காத மறத்தையுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட; தனி பறையறையும் அணி கொள் தேர் வழி - அவருடைய மேற்கொள் தணிதற்குக் காரணமாகிய பறை யறையும் அழகு பொருந்திய தேர் வழிக்கண்; கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த - வெய்ய கள்ளைப் பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப்பட்ட; நறுஞ் சேறாடிய வறுந்தலை யானை - நறிய அச்சேற்றின்கண் ஆடிய பாக ரேறாத யானை; நெடு நகர் வரைப்பிற் படுமுழா ஓர்க்கும் - நெடிய நகரிடத் தொலிக்கும் பறையினது ஓசையைச் செவி தாழ்த்துக் கேட்கும்; உறந்தையோன் - உறையூரிடத்தான்; குருசில் - அவ்விறைவன்; பிறன் கடை மறப்ப நல்குவன் செலின் - நீ பிறன் வாயிலை நினையாமை நினக்கு அளிப்பன் அவன்பாற் செல்வையாயின் எ-று.

செம்பொறி யென்றது, "வரையகன் மார்பிடை வரையு மூன்றுள" (சீவக. 1426) என்றும் இலக்கணத்தை; திருமக ளெனினு மமையும். உறந்தையோ னென்றது வினைக்குறிப்பு முற்று. பூண் சுமந் தெழிலிய அம் பகட் டாகத்து நெடுந்தகை யென இயையும். பாண, நீ, செலின், நெடுந்தகை பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ வெனக் கூட்டுக. "உட்பகை யொருதிறம் பட்டென" என்பதற்கு உள்ள பகை சந்தாகிய ஒரு கூற்றிலே பட்டதாக என்றுரைப்பினு மமையும் பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். புட்பகை யேவானாகலின் என்றோதி உள்ள பகை தம்மிற் கூடிற்றாக, புள் நிமித்தத்திற்குப் பகைவன் ஏவானாகலின், சாவேம் யாமென மறவர் தோள் புடைப்ப வென்றுரைப்பாரு முளர். புட்பகை யென்று இவனுக் கொரு பெயர்.

விளக்கம்: சில் செவித்தாகிய கேள்வி யென்ற விடத்துக் கேள்வி யாழ் என்றும், அவ் யாழிசையின் நலத்தைக் கேட்டறிவோர் சிலராதலின், "சில் செவித்தாகிய கேள்வி" யென்றும் கூறினார். நொந்து நொந்து என அடுக்கியது. வறுமை மிகுதியாற் பிறந்த வருத்த மிகுதி தோற்றுவித்து நிற்றலின், அதனை, "இப் பாண் சாதியது உணவிற்கு முதலாகப் பெற்ற பரிசு என்னென்று வெறுத்து" என விளக்கினார். பகடு - பெருமை; இது யானைக்கும் உரியதாகலின், அதுபற்றி, அம்பகட்டெழிலிய வென்றதற்குப் பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். என்றார். இலிற்றுதல் - சுரத்தல். மன்பதை - உயிர்த் தொகுதி. படை கொண்டு செல்லும் தலைவன், தன் படையில் ஒரு பகுதிக்கண் உட்பகை தோன்றிற்றெனின், அதுகுறித்துச் செய்வன செய்தற்கு மேற்செலவை நிறுத்திவிடுவேன்; அது போல வேந்தன் புட்பகைக் கேவானாதல் கண்டு, "புட்பகை யொருதிறம் பட்டென" என்றார். புட்பகை. காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட் டோடித் தீநிமித்தம் செய்தல். குறையத் தாராது மிக நிறையத் தருவன் என்பதுபட "பிறன்கடை மறப்ப" என்றார்.
----------

69. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

இக் கிள்ளிவளவனும் உரையூரின்கண் ணிருந்து சோழநாட்டை ஆட்சி செய்த வேந்தன். ஒருகால், ஆலத்தூர், கிழா ரென்ற சான்றோர் இவனைக் காண்டற்குச் சென்றார். அங்கே வாயில் காப்போர் ஒரு தடையும் செய்யாது அவரை உட்புக விடுத்தனர். இவனும் அவரை அன்புடன் வரவேற்றான். அங்கே இவனுடன் அவர் சின்னாள் தங்கினார். அப்போது அவர் இவனது தானைச் சிறப்பையும் போர்க்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் இருப்பையும் வேற்படையில் மாண்பையும் நேரிற் கண்டு மகிழ்ந்தார். முடிவில் இவன் அவர்க்கு மிக்க பொருளை நல்கிச் செல விடுத்தான். இவன் பெற்ற பெருவளத்தைப் பாண னொருவற்குக் கூறி, ஆற்றுப்படுக்கும் வகையில் இப்பாட்டால் வளவனைச் சிறப்பித்தார்.

    கையது கடனிறை யாழே மெய்யது
    புரவல ரின்மையிற் பசியே யரையது
    வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
    ஓம்பி யுடுத்த வுயவற் பாண
    பூட்கை யில்லோன் யாக்கை போலப்         5
    பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
    வையக முழுதுடன் வளைஇப் பையென
    என்னை வினவுதி யாயின் மன்னர்
    அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக்
    குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்         10
    புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன்
    பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
    பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்
    பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்
    ஒள்ளெரி விரையு முருகெழு பசும்பூட்         15
    கிள்ளி வளவற் படர்குவை யாயின்
    நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்
    தேர்வீ சிருக்கை யார நோக்கி
    நீயவற் கண்ட பின்றைப் பூவின்
    ஆடும்வண் டிமிராத் தாமரை         20
    சூடா யாத லதனினு மிலையே.        (69)

திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடியது.

உரை: கையது - நின் கையகத்து; கடன் நிறை யாழ் - இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; மெய்யது - உடம்பின்கண்ணது; புரவலரின்மையின் பசி - ஈத்தளிப்போ ரில்லாமையால் பசி; அரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதா அர் - அரையதாகிய வேற்றிழை யூடுபோன வேர்ப்பால் நனைந்த சீரையை; ஓம்பி உடுத்த உயவற் பாண - அற்ற மறைத்துடுத்த வருத்தத்தையுடைய பாண; பூட்கை யில்லோன் யாக்கை போல - மடியால் மேற்கோ ளில்லாதவன் உடம்பை யொப்ப; பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை - பெரிதாகப் புற்கென்ற மிகப் பெரிய சுற்றத்தை யுடையையாய்; வையக முழுதும் வளைஇ - உலக மெல்லாவற்றையும் சூழ்வந்து; என்னைப் பையென வினவுதியாயின் - பின்னை என்னை மெல்ல வறுமை தீர்ப்பார் யார் எனக் கேட்கின்றாயாயின் கேளாய்; மன்னர் அடு களிறு உயவும் - வேந்தரது கொல் யானை புண்பட்டு வருந்தும்; கொடி கொள் பாசறை - கொடி யெடுக்கப்பட்ட பாடிவீட்டின் கண்; குருதிப் பரப்பில் கோட்டு மா தொலைச்சி - குருதிப் பரப்பின்கண்ணே யானையைக் கொன்று; புலால் களஞ் செய்த கலாஅத் தானையன் - புலாலையுடைய போர்க்களத்தை யுண்டாக்கிய போர் செய்யும் படையை யுடையவன்; பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் - உயர்ந்த நிலையை யுடைத்தாகிய மாடத்தையுடைய உறையூரிடத்திருந்தான்; பொருநர்க் கோக்கிய வேலன் - அவன் பொருவோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலை யுடையவனாய்; ஒரு நிலைப் பகைப்புலம் படர்தலும் உரியன் - ஒரு பெற்றியே பகைவர் நாட்டின்கண் போதலு முரியன்; தகைத்தார் - சுற்றப்பட்ட மாலையையும், ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் - ஒள்ளிய எரியை யொக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னாற் செய்யப்பட்ட பூணினையுமுடைய; கிள்ளி வளவற் படர்குவையாயின் - கிள்ளி வளவனிடத்தே செல்குவையாயின்; நெடுங் கடை நிற்றலும் இலை - அவனது நெடிய வாயிலின்கண் காலம் பார்த்து நிற்றலும் உடையை யல்லை; கடும் பகல் - விளங்கிய பகற்பொழுதின்கண்; தேர் வீசு இருக்கை ஆர நோக்கி - அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கியிருக்கும் இருப்பை நின் கண்ணாரப் பார்த்து; நீ அவற் கண்ட பின்றை - நீ அவனைக் கண்ட பின்பு; பூவி னாடும் வண்டு இமிராத் தாமரை சூடா யாதல் - பூவின்கணாடும் வண்டு ஊதாத பொற்றாமரைப் பூவைச் சூடாயாதல்; அதனினும் இலை - அந் நெடுங்கடை நிற்றலினும் ஊடையை யல்லை; அதனால் ஆண்டுச் செல்வாயாக எ-று.

தகை தார், தகைத்தா ரென நின்றது; மேம்பட்ட தாருமாம். பாண, ஒக்கலையாய் வளைஇ வினவுதியாயின், தானையை யுடையவன், உறந்தை யோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கைவது யாழாதலானும், மெய்யது பசியாதலானும் நெடுங்கடை நிற்றலுமில்லை: நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினு மிலையென மாறிக் கூட்டுக. பூவாகிய தாமரை யெனினு மமையும்; அதற்கு இன் அல்வழிச் சாரியை; புகழ்த்தகையில்லோன் என்பதூஉம் பாடம்.

ஒரு நாளுள், முதலன பத்து நாழிகையும் அறத்தின்வழி யொழுகிப் பின் பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச் செய்த பொருளைப் பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால், "கடும் பகல் தேர் வீசிருக்கை" யென்றார்.

விளக்கம்: கடன் - முறைமை; ஈண் டஃது இலக்கண முறைமை குறித்து நின்றது. மெய்யிடத்துப் பசியுண்மைக் கேது, ஈத்தளிப்போரில் லாமையாதலின், அதனைப் பெய்துரைத்தார். பூட்கை யில்லோன் பால் அப்பூட்கை யில்லாமைக் கேது மடிமையாதலின், அதனை வருவித்தார். பாசறையில் தங்கும் படைக்குரிய கொடிகள் அப் பாசறையில் கட்டப்படிருக்குமாதலால், "கொடிகொள் பாசறை" யென்றார். கலாஅத்தானை; கலாஅம் - போர். தகை யென்பது மேம்பாட்டையும் குறித்தலின், தகைத்தார் என்றற்கு, மேம்பட்ட தாருமாம் என்றார். நெடுங் கடை நிற்றல் - காவலர்களால் தடைப்பட்டு நிற்பதன்றி, வளவனைக் காண்பதற்கு வேண்டும் காலம் நோக்கி நிற்றலாதலால், அதனைப் பெய்துரைத்தார். வேந்தர் பரிசிலர்க்குத் தேர் முதலியன வழங்கும் திருவோலக்கக் காட்சி காண்டற் கினிதாதலால், "தேர்வீ சிருக்கை ஆரநோக்கி" என்றார். "ஈர நெஞ்சமோடிச் சேண் விளங்கத் தேர்வீ சிருக்கை போல" (நற்.381) என்று பிறரும் கூறுதல் காண்க. பூவின் ஆடும் வண் டிமிராத்தாமரை யென்பது, பூவின் தாமரை யென இயைந்து, பூவாகிய தாமரை யெனப் பொருள்படின், இன் அல்வழிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியையாம். பூட்கையில்லோன் என்பது சில ஏடுகளில் "புகழ்த்தகை யில்லோன்" என்று பாட வேறுபாடுற்றுக் காணப்படுகிற தென உரைகாரர்" குறிக்கின்றார். பொருளை யீட்டுக வென்பார். "பொருள் செய்க" வென்ப வாதலால், ஈட்டப்பட்ட பொருளைச் "செய்த பொருள்" என்றார்.
-----------

70. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மீண்டும் ஒருமுறை ஆசிரியர் கோவூர்கிழார் சென்று கண்டார். முன்பு சென்று கண்டபின் காவிரியின் வடகரையில் உள்ள சிறுகுடி யென்னும் ஊரை யுடையவனும், "தனக்கென வாழாப் பிறர்க் குரியாள"னெனச் சான்றோராற் சிறப்பிக்கப்பட்டவனுமாகிய பண்ணன் என்பானைக் கண்டு பெருஞ்சிறப்புத் தரப்பெற்றாராயினும், கிள்ளி வளவனுடைய அன்பு நலத்தால் மீளவும் சென்றார். அவர்க்குச் சோழன் மிக்க பொருளைத் தந்து சிறப்புச் செய்தான். அப்போது நாட்டில் சோறும் நீரும் குறைவின்றி யிருப்பதும், அவனுடைய நல்லிசை விளக்கமிக்கிருப்பதும், அவன் இரவலர்க்குப் பெருவண்மை புரிவதும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. அதனைப் பாணாற்றுப்படை வாயிலாக இப்பாட்டின்கண் குறித்துச் சிறப்பித்தார்.

    தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
    கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன
    நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை
    இனிய காண்கிவட் டணிகெனக் கூறி
    வினவ லானா முதுவா யிரவல         5
    தைஇத் திங்கட் டண்கயம் போலக்
    கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
    அடுதீ யல்லது சுடுதீ யறியா
    திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்
    கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி         10
    நாற்ற நாட்டத் தறுகாற் பறவை
    சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும்
    கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
    பாதிரி கமழு மோதி யொண்ணுதல்
    இன்னகை விறலியொடு மென்மெல வியலிச்         15
    செல்வை யாறிற் செல்வை யாகுவை
    விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
    தலைப்பா டன்றவ னீகை
    நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே.        (70)

திணையுந் துறையு மவை. அவனைக் கோவூர் கிழார் பாடியது.

உரை: தேஎந் தீந்தொடைச் சீறி யாழ்ப் பாண - தேன் போல இனிய நரப்புத்தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாண; கயத்து வாழ் யாமை காழ் கோத் தன்ன - கயத்தின்கண் வாழும் யாமையை நாராசத்தின்கண்ணே கோத்தாற் போன்ற; நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை - நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய பெரிய உடுக்கை யோசை; இனிய காண்க இவண் தணிக எனக் கூறி வினவல் ஆனா - இனிய காண்க, இவ்விடத்தே சிறிது ஆறிப் போவீராக என்று சொல்லிப் பலவும் என்னை வினவுத லமையாத; முது வாய் இரவல - முதிய வாய்மையுடைய இரவலனே!; யான் சொல்லுவதனைக் கேட்பாயாக; தைஇத் திங்கள் தண் கயம் போல - தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல; கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - கொள்ளக் கொள்ளத் தொலையாத சோற்றையுடைய அகன்ற நகரிடத்து; அடு தீ யல்லது சுடு தீ யறியாது - அடு நெருப்பல்லது சுடு நெருப்பறியாது; இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - சோற்றையும் தண்ணீரையும் விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்; கிள்ளி வளவன் நல்லிசை உள்ளி - கிள்ளி வளவனது நல்ல புகழை நினைத்து; நாற்ற நாட்டத் தறுகாற் பறவை - மணத்தை யாராயும் ஆராய்ச்சியையுடைய வண்டு; சிறு வெள்ளாம்பல் ஞாங்கர் ஊதும் - சிறிய வெளிய ஆம்பலின்மீதே யூதும்; கை வள் ஈகைப் பண்ணன் சிறு குடி - கையான் வள்ளிய தொடையையுடைய பாணனது சிறுகுடிக்கண்; பாதிரி கமழும் ஓதி - பாதிரி நாறும் மயிரினையும்; ஒண்ணுதல் இன்னகை விறலியொடு - ஒள்ளிய நுதலினையும் இனிய முறுவலையுமுடைய விறலியுடனே; மென் மெல இயலிச் செல்வை யாயின் - மெல்ல மெல்ல நடந்து செல்வையாயின்; செல்வை யாகுவை - செல்வத்தையுடைய யாவை; விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் - விறகைக் காட்டினின்றும் ஊரகத்துச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப் பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு; தலைப்பாடு அன்று - நேர்பா டன்று; அவன் ஈகை அவனது வண்மை; நினைக்க வேண்டா - அது பெறுவேன்கொல் என்று கருதவேண்டா;அவன் தாள் வாழ்க - அவனது தாள் வாழ்க எ-று.

பாண, தணிக எனக் கூறி வினவலானா இரவல, விறலியொடு மென்மெல இயலிச் செல்குவையாயி னென இயையும்; வியனகர்ச் செல்வையாயி னெனவு மமையும். நகரையுடைய நாடென இயைப்பாரு முளர். "விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்" றென்பதற்கு விறகிற்குச் சென்றோர் பொன் பெற்றாற்போல்வதொரு தலைப்பாடதென்று பொருளுரைப்பாரு முளர்; அது பொருந்துமே லறிந்து கொள்க.

விளக்கம்: தீந் தொடை யென்றவிடத்துத் தொடையின் இனிமையைத் தேனாகிய உவமையால் விளக்கினா ரென்றற்குத் "தேன்போலும் இனிய தொடை" யென வுரைத்தார். வறுமை யுற்றிருக்கும் இரவலன் வளவன்பால் பொருள்பெற்று வரும் பாணனை நோக்கி, "பாண, மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக" எனச் சொல்லித் தன் வறுமை நீக்குதற்குரியவர் யாவரென வினவுகின்றான். "கயத்துவாழ் யாமை காழ்கோத்தன்ன" வென்றது, கிணையின் உருவமைப்பைப் புலப்படுத்துதல் காண்க. தணிதல், பசி தணித்து இளைப்பாறுதல். முது வாய் இரவலன் இரவல னுடைய முதுமையும் சொல்லின் வாய்மையும் தோன்ற நின்றது. மழைக் காலத்து நீர்ப் பெருக்கால் கலக்கமுற்றிருக்கும் நீர், தைத் திங்களில் தெளிந்து தண்ணிதாயிருத்தலால், "தைத் திங்கள் தண்கயம்" என்றார். "பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ணிய" (குறுந். 196) என்ப. "கூதிராயின் தண்கலிழ் தந்து, வேனி லாயின் மணிநிறங் கொள்ளும், யாறு" (ஐங்.45) என்பது ஈண்டுக் குறிக்கத் தக்கது. பகைவர் ஊர்களைச் சுடு நெருப்பு, ஈண்டுச் சுடுநெருப் பெனப் பட்டது. செலவு - செல்வம். ஒய்தல் - செலுத்துதல்; "உப்பொய் ஒழுகை" (புறம்.116) எனப் பிறரும் கூறுப. தலைப்படுதல் - நேர்படுதல். விறகு விற்போர் ஊருக்குக் கொண்டுசென்று ஆங்கே விற்றுப் பெறும் பொருளை அக் காட்டிடத்தே பெற்றுக்கொள்ள நேரும் வாய்ப்பு; அது போல்வதன்று; போல்வதாயின், அஃது ஐயத்துக் கிடமாம் என்பார்,
----------
"தலைப்பா டன்று" என்றார். விறகு வெட்டப் போனவன் புதையல் கண்டாற்போல்வதொரு வாய்ப்பெனக்கொண்டு அதற்கேற்பப் பொருள் கோடல் பொருந்தா தென்பது.
-----------

71. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

பூதப்பாண்டியன், பாண்டியர்க்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனச் சிறப்பிக்கப்பட்டான். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளாவாள். இருவரும் நல்லிசைப் புலமையும் ஒருவரையொருவர் இன்றியமையாக் காதலன்பும் உடையர். இப்பாண்டியற்குத் திதியன் என்பான் இனிய நண்பன். அவன் பொதியின் மலையைச் சார்ந்த நாட்டுக்குரியவன். அவன் இன்னிசை நல்கும் இயம் இயம்புவதில் வல்லுநன்; விற்போரிலும் விறல் படைத்தவன். ஒருகால், இப் பாண்டியற்கும் ஏனைச் சேர சோழ வேந்தர்கட்கும் பகைமை யுண்டாயிற்று. அதுகாரணமாக, அவ்விருவரும் ஒருங்குகூடி இவனோடு பொருதற்கு வந்தனர். அதனை அறிந்ததும், மிக்க சினமுற்று இவன் கூறிய வஞ்சினமே இப் பாட்டாகும்."வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும் என்ப" எனத் தான் கேள்வியுற்று கூறி,அவரை அமரின்கண் அலறத் தாக்கிப் புறங்காணேனாயின், இதோ என்னருகிருக்கும் "சிறந்த பேரமருண்கண் இவளினும் பிரிக" என்றும், மறுபிறப்பில் தென்புலங் காக்கும் சிறப்பிழந்து பிறர் வன்புலம் காக்கும் காவலர் குடியில் பிறப்பேனாக என்றும் இவன் கூறும் வஞ்சினம் மிக்க நயமுடையதாகும். மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் இவனுக்குக் கண்போன்ற நண்பராவர். இப் போரில் இவன் இறந்துபட்டான். இவன் மனைவியாகிய பெருங்கோப் பெண்டு சான்றோர் விலக்கவும் விலகாது கைம்மை நோன்பின் கடுமையை விளக்கித் தீப்பாய்ந்தாள். அக்காலை, அவள் பாடிய பாட்டும் இந்நூற்கண் உள்ளது.

    மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
    தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
    தென்னொடு பொருது மென்ப வவரை
    ஆரம ரலறத் தாக்கித் தேரொ
    டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த         5
    பேரம ருண்க ணிவளினும் பிரிக
    அறநிலை திரியா வன்பி னவையத்துத்
    திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
    மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
    வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்         10
    பொய்யா யாணர் மையற் கோமான்
    மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்
    அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
    வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
    கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த         15
    இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
    மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
    தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
    வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே.         (71)

திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு.

உரை: மடங்கலிற் சினைஇ - சிங்கம் போலச் சினந்து; மடங்கா உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் - மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச் செல்லும் படையையுமுடைய வேந்தர்; உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக் கூடி; என்னொடு பொருதும் என்ப - என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவரை ஆர் அமர் அலறத் தாக்கி - அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது; தேரொடு அவர்ப்புறம் காணேனாயின் - தேவருடனே அவருடைந் தோடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின்; சிறந்த பேரமர் உண்கண் இவனினும் பிரிக - எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட கண்ணியையுடைய இவளினும் நீங்குவேனாக; அறன் நிலை திரியா அன்பின் - அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய; அவையத்து - அவைக்களத்து; திறனில் ஒருவனை நாட்டி - அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து; முறை திரிந்து மெலிகோல் செய்தே னாகுக - முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தே னாகுக; மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் - மிக்க புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்; பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் - பொய்யாத புது வருவாயையுடைய மைய லென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும்; மன் னெயில் ஆந்தையும் - நிலைபெற்ற எயிலென்னு மூரையுடைய ஆந்தையும்; உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும் - புகழமைந்த அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்; வெஞ்சின இயக்கனும்- வெய்ய சினத்தையுடைய இயக்கனு மென; உளப்படப் பிறரும் - இவருட்படப் பிறரும்; கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த - எனது காண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய; இன் களி மகிழ் நகை இழுக்கியான் - இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத் தப்பியவனாகி; மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த - பல வுயிரையும் சிறந்த; தென்புலம் காக்கும் காவலின் ஒரீஇ - பாண்டி நாடு காக்கும் காவலின் நீங்கி; பிறர் வன் புலங் காவலின் மாறி - பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே இக் குடிப்பிறப்பின் நீங்கி; யான் பிறக்கு - யான் பிறப்போனாக எ-று.

மெலிகோல் செய்தே னாகுக வென்பதனுள், ஆகுக வென்பது எங்குந் தந்துரைக்கப்பட்டது. ஒன்றோ வென்பது எண்ணின்கண் வருவதோர் இடைச்சொல்; அதனை முன்னும் பின்னும் கூட்டுக.

விளக்கம்: மடங்கா வுள்ளத் தடங்காத் தானை: தொடங்கின் இடையில் மடங்குதல் ஊக்கமுடைய தானை வீரர்க்கு ஆகாமையாலும் தொகை மிகுதியால் அடங்கி நிற்றல் அமையாமையாலும் இவ்வாறு கூறினார். அறன் நிலை திரிய அன்பு; அறத்திற்கே அன்பு சார்பென்ப வாதலால், அறம் நிலைகலங்காமைக்கு அன்பு இன்றியமையாததாயிற்று. கண்ணன் நண்பரொடு கூடிக் களித்தலை விட்டு வேறுபடும் குறிப்பு, கெடுவது காட்டும் குறியாதலால், "கேளிரொடு கலந்த இன்களி மகிழ் நகை இழுக்கியான்" என்று எடுத்தோதினான். மாறுதல், ஈண்டுப் பிறப்பு மாறுதல்; "இம்மை மாறி மறுமை யாயினும்" குறுந்.49) என்றாற் போல. பிறக்கு; செய்யென்னும் வாய்பாட்டுத்தன்மை வினைமுற்று. இப் பாட்டின்கண், தென்புலங் காக்கும் பாண்டியர் குடிப்பிறப்பின் உயர்வு குறித்துரைக்கப் படுவது நோக்கத்தக்கது. இவ்வாறே, "மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது" (சிலப்.20: 76-7) என வருவதும் ஒப்புநோக்கத்தக்கது.
------------

72. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசருமாகிய எழுவருக்கும் தலையாலங்கானம் என்னுமிடத்தே பெரும் போருண்டாயிற்று. அக்காலத்தே இவன் மிக இளையனாயிருந்தான். வேந்தர் தாமும் இவன் இளையன்தான் என இகழ்ந்து நால்வகைப் படையும் நிரம்ப வுடையேமெனத் தருக்கினர்; அதனால் அவர்கள் இவனை இகழ்ந்து கூறுயதும் உண்டு, அச்சொற்களைக் கேட்ட நெடுஞ்செழியற்குச் சினத் தீக்கிளர்ந்தெழுந்தது. உடனே படையைப் பண்ணிப் போருக்கெழும் இச்செழியன் நெடுமொழிகள் சில சொல்லலுற்றான். நல்லிசைப் புலமையும் மாங்குடி மருதனார் முதலிய சான்றோர் கேண்மையு முடையனாதலின் அச்சொற்கள் அழகிய பாட்டாய் வெளி வந்தன. அப்பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு. இக்கண் குடிபழி தூற்றும் கொடுங்கோன்மையும், புலவர் பாடும் புகழ் பெறாமையும், இரவலர்க் கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப் படுத்துவன என்னும் உணர்வு இவன் உள்ளத்தே யூறி நிற்பது காண்மின்.

    நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
    இளைய னிவனென வுளையக் கூறிப்
    படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
    நெடுநல் யானையுந் தேரு மாவும்
    படையமை மறவரு முடையம் யாமென்         5
    றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
    சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
    அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
    டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
    என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது         10
    கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
    குடிபழி தூற்றுங் கோலே னாகுக
    ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
    மாங்குடி மருதன் றலைவ னாக
    உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்         15
    புலவர் பாடாது வரைகவென் னிலவரை
    புரப்போர் புன்கண் கூர
    இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.         (72)

திணையும் துறையு மவை. பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

உரை: நகு தக்கனர் நாடு மீக் கூறுநர் என - நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவர் எனவும்; இளையன் இவன் என - இவன்தான் இளையன் எனவும்; உளையக் கூறி - யான் வெறுப்பச் சொல்லி; படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடு நல் யானையும் தேரும் மாவும் - ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோ டொன்று மாறி யிசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையு முடைய உயர்ந்த நல்ல யானையினையும் தேரையும் குதிரையையும்; படை யமை மறவரும் உடையம் யாம் என்று - படைக்கலத் தொழில் அமைந்த வீரரையும் உடையேம் யாம் என்று; உறு துப்பு அஞ்சாது - எனது மிக்க வலிக்கு அஞ்சாதே; உடல் சினம் செருக்கி - மாறுபடுஞ் சினம் பெருகி; சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை - புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம் பொருந்திய அரசரை; அருஞ் சமம் சிதையத் தாக்கி - பொறுத்தற்கரிய போரின் கண்ணே சிதறப் பொருது; முரச மொடு ஒருங்கு அகப்படேஎனாயின் - முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின்; பொருந்திய என் நிழல் வாழ்நர் - பொருந்திய எனது குடைநிழற் கண் வாழ்வார்; செல் நிழல் காணாது - தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே; கொடியன் எம் இறை யென - கொடியன் எம்முடைய வேந்தனென்று கருதி; கண்ணீர் பரப்பி - கண்ணீரைப் பரப்பி; குடி பழி தூற்றும் கோலே னாகுக - குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை யுடையே னாகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக - உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய மாங்குடிமருதன் முதல்வனாக; உலக மொடு நிலைஇய - உலகத்தோடு நிலைபெற்ற; பலர் புகழ் சிறப்பின் புலவர் - பலரும் புகழும் தலைமையையுடைய புலவர்; பாடாது வரைக என் நில வரை - பாடாது நீங்குக எனது நில வெல்லையை; புரப்போர் புன்கண் கூர - என்னாற் புரக்கப்படுங் கேளிர் துயரம் மிக; இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற - இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யான் உற எ-று.

என் நிழல் வாழ்நராகிய குடியென்க. உளையக் கூறியதனைத் தம் மிடத்திருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத் தெதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க. இவனென்றார் தம் கருத்துக்கண் அணுமையான். அகப்படேனாயினென்றது, ஈண்டுப் பிறவினைமே னின்றது. வேந்தரைத் தாக்கி அகப்படேனாயின், கோலேனாகுக, இன்மையானுற; என் நிலவரை புலவர் பாடாது வரைகவென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. "நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்" என்பதனை நாட்டாரால் மீக்கூறப்பட்ட மந்திரிச் சுற்ற முதலாயினார் நகுதக்கன ரெனப் பிரித்துரைப்பினு மமையும்: நிலவரைப் புரப்போர் எனவும் பாடம்.

விளக்கம்: "நெடுஞ்செழியன் நாட்டை மீக்கூறுவோர் அவன் பகைவராகிய நம்மால் எள்ளி நகைக்கத்தக்கவராவர்; இவன் மிக இளையன்" எனப் பகைவர் தம்மிடத்திருந்தே கூறிக் கொள்கின்றனர். போர்க்களத்தில் நேர்பட்டு நின்று "யானையும் தேரும் மாவும் மறவரும் உடையம்" எனத் தம்மை மிகுத்துச் சொல்லுகின்றனர். படையமை மறவர் என்ற விடத்துப் படை, படைக்கலத்தொழில் குறித்துநின்றது. அவர்கள் செயற்குரியது என் உறுதுப்புக்கு அஞ்சுவதாகும்; அது செய்யாது சினஞ் செருக்கி, அது காரணமாகச் சிறுசொல் சொல்லுகின்றா ரென்பதாம். அகப்படுதல், ஈண்டுப் பிறவினையாய் அகப்படுத்துதல் என்ற பொருள் தந்து நிற்கிறது. சிறப்பு - தலைமை இரப்போர்க்குக் கொடாத இன்மையால் இம்மைப் புகழும், புலவர் பாடாது வரைதலால் மறுமையின்ப வாழ்வும் பெறா தொழிவேனாக என்று வஞ்சினம் கூறுகின்றான்.
---------

73. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளிக்கும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளிக்கும் பகைமை யுண்டாயிற்று. நெடுங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான். பகைமை மிக்குறவே நெடுங்கிள்ளி, இந் நலங்கிள்ளியை இகழ்ந்து போர்க் கெழுதற்குரிய சினத்தை யுண்டாக்கினான். நலங்கிள்ளி தானும் போர்க் கெழுந்தான். அக்காலத்தே, சினங் கெழுமிய அவன் தன் உள்ளத்தே நெடுங்கிள்ளி போர் தொடுத்தற்குக் காரணம் யாதாகலாமென வெண்ணி, "அரசு கட்டிலைக் கவர்தல் இந் நெடுங்கிள்ளிக்குக் கருத்தாயின், என் நல்லடி பொருந்தி ஈயென விரந்தால் அரசினையேயன்றி என் உயிரையுந் தருகுவேன்; அவ்வாறின்றி துஞ்சு புலி இடறிய சிதடன் போலப் போர் தொடுத்து வறிதே மடிகின்றான்; இனி இவன் உய்ந்துபோதல் கூடாது" என நினைந்து வஞ்சினங் கூறுவானாய், "இவனை இப் போரில் வருந்தப் பொரேனாயின், என் மார்பின் தார் பொதுப்பெண்டிரின் பொருந்தா முயக்கத்தால் குழைவதாக" என்று கூறுகின்றான். இவனும் இனிய செய்யுள் செய்யும் செந்நாவினனாதலால், இவ் வஞ்சினம் இப் பாட்டு வடிவில் வருவதாயிற்று.

    மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி
    ஈயென விரக்குவ ராயிற் சீருடை
    முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்
    இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத்
    தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென்         5
    உள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற்
    றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
    உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக்
    கழைதின் யானைக்காலகப் பட்ட
    வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்         10
    வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய
    தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
    பல்லிருங் கூந்தன் மகளிர்
    ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே.        (73)

திணையுந் துறையு மவை. சோழன் நலங்கிள்ளி பாட்டு.

உரை: மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி - மெல்ல வந்து எனது நல்ல அடியை யடைந்து; ஈ என இரக்குவ ராயின் - எமக்கு ஈய வேண்டுமென்று தாழ்ந் திரப்பாராயின்; சீருடை முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் - அவர்க்குச் சீர்மையையுடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையை யுடைய எனது அரசாட்சி கொடுத்தலோ எளியது; இன் உயிராயினும் கொடுக்குவென் இந் நிலத்து - இனிய உயிரேயாயினும் கொடுப்பேன் இந் நிலத்தின்கண்; ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது - அமைச்சர் படைத்தலைவர் முதலாகிய வலியை யுடையோரது வலியைப் பாதுகாவாது; என் உள்ளம் எள்ளிய மடவோன் - என் உள்ளத்தையிகழ்ந்த அறிவில்லாதோன்; தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல - யாவர்க்கும் விளங்கத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல; உய்ந்தனன் பெயர்தலோ அரிது - பிழைத்துப் போதலோ அரிது; கழைதின் மைந்துடை யானை கால் அகப்பட்ட வன்திணி நீள் முளைபோல - மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின்கண் அகப்பட்ட வலிய திணிய மூங்கிலது நீண்ட முளையை யொப்ப; சென்று - மேற்சென்று; அவண் வருந்தப் பொரேஎ னாயின் - அவ்விடத்து வருந்தும்படி பொருதிலேனாயின்; பொருந்திய தீதில் நெஞ்சத்து - கூடிய தீதில்லாத நெஞ்சத்தால்; காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிரின் - காதல் கொள்ளாத பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது; ஒல்லா முயக்கிடை என் தார் குழைக - பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக எ-று.

இரக்குவி ராயி னென்று பாடமோதுவாரு முளர். தீதில் காதல் கொள்ளாவென இயைப்பினு மமையும். உள்ளமென்றது, உள்ளத்தாற் சூழும் சூழ்ச்சியை. தன் மேம்பாடு கூறுகின்ற இடமாதலின், நல்லடி யென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது.

விளக்கம்: சீருடை முரசு கெழு தாயத்து அரசு எனச் சிறப்பித்தது, பிறர்க்கு எளிதிற் கொடுத்தற்குக் கூடாமை விளக்கி நின்றது. ஆற்றலுடையோர் ஆற்றலை யறிந்து அதற்கேற்ப வொழுகுதல் அறிவுடைமை யாதலால், அதனை யறியாமையால் பகை வேந்தனை "மடவோன்" என்கின்றான். புலிதான் பிறர் கண்ணிற் படாது தன் முழைக்கண்ணே துஞ்சும் இயல்பிற்று; அது மக்களும் விலங்கும் இனிது காணத் துஞ்சுவது போலத் தான் இனிதிருப்பது அறிந்து வைத்தும், அப் புலியை இடறும் குருடன் அப் புலியாற் கொல்லப்படுவது போல, இப்பகைவேந்தனும் இறத்தல் ஒருதலை யென்பான் "உய்ந்தனன் போதலோ அரிது" என்கின்றான். பொருட் பெண்டிர், "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்" (குறள்.911) எனப்படுதலின், அவரை, "பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளா மகளிர்" என்றார். பொது மகளிரை உயர்ந்தோர் கூடாராகலின், "குழைக வென்தாரே" யென்றான்.
----

74. சேரமான் கணைக்கா லிரும்பொறை

இச் சேரமான், சான்றோர்களால் கோச் சேரமா னென்றும், சேரமான் என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவன். இதனால் இவன் காலத்தே, இவன் மிக்க சிறப்புடன் வாழ்ந்தவ னென்பது புலனாகும். இவன் பெரும் படையும் மிக்க போர்வன்மையு முடையவன். இவனுடைய தலைநகர் தொண்டி யென்பது. மேனாட்டு யவனர்களான பிளினி முதலியோர் இதனை டிண்டிஸ் என்று வழங்குகின்றனர். இந்நகர்க்கண் பெரிய கோட்டை யிருந்தது. இவன் தன்னொடு பகைத்துப் போருடற்றிய மூவன் என்பவனைக் கொன்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கிக் கோட்டை வாயிற் கதவில் வைத்து இழைத்திருந்தா னெனப் பொய்கையார் கூறியுள்ளார். இவன் காலத்தை யடுத்தே சேரமான் கோக்கோதை மார்பன் தோன்றினான். சோழநாட்டை யாண்டு வந்த செங்கணானுக்கும் இக் கணைக்காலிரும் பொறைக்கும் யாது காரணத்தாலோ பெரும் பகையுண்டாக, இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே பொரத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை யென நற்றிணை முன்னுரையும், திருப் போர்ப் புறமென இப்புறநானூற்றுக் குறிப்பும் கூறுகின்றன. இவன் பாசறைக்கண் தங்கியிருக்கையில் ஒரு நாள் இரவு யானைப்படையிலிருந்த களிறொன்று மதஞ் செறிந்து தீங்கு செய்யலுற்றது. அதனால் பலரும் அஞ்சி யலமந்தனர். அதனையறிந்த சேரமான் சென்று அடக்கி வீரர் பலரும் "திரைதபு கடலின் இனிது கண்படுப்ப" ச் செய்தான். பின்னர்ப் போர் முடிவில் சேரமான் படையுடைந்து கெட்டது; அவனும் சோழன் கையகப்பட்டுக் கால்யாப் புற்றுச் சிறையிடப் பெற்றான். அவ்வாறிருக்கையில் ஒருநாள் சேரமான் நீர் வேட்கையுற்றுக் காவலர்களை நீர்கொணருமாறு பணித்தான். அவர் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்ந்து கொடுத்தனர். அந்த மானத்தைப் பொறாத சேரமான் "அரசராயினார், குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமின் றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர்; அக் குடி யிற் பிறந்த யான் சிறைப்பட்டுக் கிடந்து உயிர் நீத்தல் தீது; இத்தகைய மறக் குடியினரான எம் பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு உயிர் வாழு மாறு மக்களைப் பெறார் காண்" என்று நினைந்து, இதனை ஒரு பாட்டாக எழுதி வைத்து உயிர் நீத்தான். அப் பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு.

    குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
    ஆளன் றென்று வாளிற் றப்பார்
    தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
    கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்         5
    தாமிரந் துண்ணு மளவை
    ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.         (74)

திணை: பொதுவியல். துறை: முதுமொழிக்காஞ்சி. சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

உரை: குழவி இறப்பினும் - பிள்ளை யிறந்து பிறப்பினும்; ஊன் தடி பிறப்பினும் - தசைத் தடியாகிய மணை பிறப்பினும்; ஆள் அன்றென்று வாளின் தப்பார் - அவற்றையும் ஆளல்ல வென்று கருதாது வாளோக்குதலில் தவறார் அரசராயிருக்க; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய - பகைவர் வாளாற் படாது சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போலப் பிணித்துத் துன்பத்தைச் செய்து இருத்திய; கேளல் கேளிர் வேளாண் சிறு பதம் - கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான் வந்த தண்ணீரை; மதுகை யின்றி - இரந்துண்ணக் கடவேமல்லே மென்னும் மனவலி யின்றி; வயிற்றுத் தீத் தணிய - வயிற்றின்கண் தீயை யாற்றவேண்டி; தாம் இரந்துண்ணும் அளவை - தாமே இரந்துண்ணும் அளவினை உடையாரை; ஈன்மரோ இவ் வுலகத் தான் - அவ்வரசர் பெறுவார்களோ இவ்வுலகத்தின்கண் எ-று.

அளவை யுடையாரை அளவை யென்றார். இதன் கருத்து, சாக்குழவியும் ஊன் பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலே மெனப் பிறர்மேல் வைத்துக் கூறியவாறு. கேளல் கேளி ரென்றது, சிறைக் கோட்டங் காவலரை. அன்றி, இவன் ஆண்மையுடையனல்ல னென்று வாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படு ஞமலி போல இடர்ப்படுத் திருத்திய கேளல் கேளிர் வேளாண் சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத் தீத்தணிக்க வேண்டித் தாம் இரந்துண்ணு மளவாகக் குழவிசெத்துப் பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோ வென வுரைப்பினு மமையும். அரசர்க்கு மானத்தின் மிக்கஅறனும் பொருளும் இன்பமும் மில்லை யென்று கூறினமையின், இது முதுமொழிக் காஞ்சி யாயிற்று.

விளக்கம்: "நோற்றோர் மன்ற தாம் கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம்.61) என்ற கருத்துடையராதலின், பண்டைத் தமிழ் வேந்தர், குழவி யிறப்பினும் உறுப்பில் பிண்டம் பிறப்பினும், மூத்து விளியினும், நோயுற்றிறப்பினும், வாளாற் போழ்ந்து அடக்கம் செய்யும் மரபினரா யிருந்தனர். வாளோக்குதல் - வாளை யோச்சி வெட்டுதல். கேளல் கேளிர் - பகைவர். உண்ணீரைச் சிறுபதம் என்றார்; உணவாய் உண்ணப் படுதல் பற்றி மதுகை, வலி; ஈண்டு மனவன்மை குறித்துநின்றது. மானத்தின் மிக்க அறமும் பொருளும் இன்பமு மில்லை யெனக் கருதுதற் கேதுவாகிய மனத்திட்பம். வயிற்றுத் தீ - பசி நோய் "தொடர்ப்படு ஞமலியின்" என்றதற் கேற்பத் தொடர்ப்படுத்து என வருவித்துக்கொள்கின்றனர். சிறைப்படுத்திய செயலை, ஞமலியின் "தொடர்ப்படுத் திடர்ப்படுத் திரீஇய" என்றார். குறிப்பறிந்து நல்கப் பெறாது வாய் திறந்து கேட்டுப் பெறுதலின் "இரந்துண்ணும் அளவை" யென மானமுடைமையின் மாண்பு தோன்றக் கூறுகின்றான்.
---------

75. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான். வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, "அரசு முறை மூத்தோர்க்குப் பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின், அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்" என்றான். இங்ஙனம் சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.

    மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
    பாறர வந்த பழவிறற் றாயம்
    எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
    குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
    சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே         5
    மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
    விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
    அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
    என்றூழ் வாடுவறல் போல நன்றும்
    நொய்தா லம்ம தானே மையற்று         10
    விசும்புற வோங்கிய வெண்குடை
    முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே.        (75)

திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி பாட்டு.

உரை: மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென - தம் குடியில் முதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக; பால் தர வந்த பழ விறல் தாயம் - விதி தரப்பட்டுத் தம்பால் வந்த பழைய வெற்றியாலுண்டாகிய அரசுரிமையை; எய்தின மாயின் - பெற்றே மானால்; சிறப்பு எய்தின மென - இத் தலைமையைப் பெற்றே மெனக் கொண்டு; குடி புரவு இரக்கும் - தம் குடி மக்களை இறைவேண்டி யிரக்கும்; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன் பெறின்; அது சிறந்தன்று மன் - அத்தாயம் அவனுக்குப் பரிக்க வொண்ணாதாம் படி கனத்தது மிகவும்; மண்டமர் பரிக்கும் மதனுடை நோன்றாள் - அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய; விழுமியோன் பெறுகுவ னாயின் - சீரியோன் பெறுவனாயின்; ஆழ் நீர் அறு கய மருங்கில் - தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்து; சிறு கோல் வெண் கிடை - சிறிய தண்டாகிய வெளி கிடேச்சினது; என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்து - கோடைக் கண் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும் நொய்து; மையற்று - குற்றமற்று; விசும்புற ஓங்கிய வெண் குடை - விண்ணின் கண்ணே பொருந்த வுயர்ந்த வெண் குடையினையும்; முரசு கெழு வேந்தர் அரசு கெழு திரு- முரசினையுடைய அரசரது அரசாட்சியைப் பொருந்திய செல்வம் எ-று.

குடிபுர விரக்கு மென்பது குடிமக்களைக் கொள்ளுங் கடமையன்றி மிகத் தரவேண்டு மென்று இரத்தலை. தாயம் சிறியோன் பெறின், அது மிகவும் சிறந்ததன்று; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறுகுவனாயின் நன்றும் நொய்தா லெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன், ஆக்கத்தின்கண் வந்தது. அம்ம: அசைநிலை.

விளக்கம்: தந்தை மூத்துக் கழிந்தவழி அவன்வழித் தோன்றும் அரசு முறையெனும் தாய முறையை ஈண்டுப் "பழவிறல் தாயம்" என்றும், மூத்தோர் இறந்த பின்னே வரும் உரிமையுடைத் தென்றற்கு "மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென" என்றும் கூறினான். உரிய கடமையைக் குடிமக்கள் தாமே நல்குவராதலின், கையிகந்த கடமை வாங்கும் வேந்தன் செயலைக் "குடிபுரவு இரக்கும் சிறியோன்" என்றான். குடி புரவு - குடிமக்களைப் புரத்தற் பொருட்டுப் பெறும் கடமை. மிக்க ஆண்மையே வேந்தற்கு வேண்டப் படுதலின், அஃதில்லாதானைக் "கூரிலாண்மைச் சிறியோன்" என்றான். மதன் - மன வெழுச்சி. கிடை - கிடேச்சு; அஃதாவது நெட்டி. என்றூழ் - வெயில். சிறந்தன்று - மிகுதிப் பொருட்டாய், கனம் மிகுந்தது என நின்றது. மன் னென்றது ஆகும் என ஆக்கப் பொருள் தருதலின், ஆக்கம் என்றார்.
-----------

76. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் நடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தன்னை யெதிர்த்த முடி வேந்தர் இருவரும் குறுநில மன்னர் ஐவருமாகிய எழுவரும் தோற்றோடுமாறு தான் ஒருவனே வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், ஆலம்பேரி சாத்தனார், கல்லாடனார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்திருக்கின்றனர். அவருள், இடைக்குன்றூர்கிழார் என்னும் சான்றோர் இச் செழியன் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தவர். அவர் இச் செழியன் ஒருவனாய் இருந்து பொருது வென்றதை, "ஒருவரை யொருவர் அடுதலும், ஒருவர்க் கொருவர் தொலைதலும் இவ்வுலகத்தே தொன்றுதொட்டு வருவன; அவ்வாறு அடுதலும் தொலைதலும் நிகழுமிடத்து வெற்றி பெற்றோர் பலரும் பலருடைய துணைபெற்று அதனைப் பெற்றது கேள்வி யுற்றுள்ளோமேயல்லது ஒருவனே தனித்து நின்று பலராய்க் கூடி யெதிர்ப்போரை வென்றது கேட்டிலம்; பாண்டியன் ஒருவனாய் நின்று தம் பீடும் செம்மலும் அறியாமல் எதிர்த்த எழுவர். நல்வலம் அடங்க வென்றது, இன்றுகாறும் யாம் கேட்டதன்று" என இப்பாட்டின்கண் வியந்து கூறியுள்ளார்.

இடைக்குன்றூர் என்பது இவரதூர். இவர் வேளாளர். இவர் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருவனால் எழுவரை வென்ற செய்தியை வியந்தும், போர் செய்த திறத்தைப் புகழ்ந்தும், பகைவர் கருத்தழிந்த வகையைக் கட்டுரைத்தும், அவன் போர்க்குச் சென்ற நலத்தைப் பாராட்டியும் பாடியுள்ளார். சுருங்கச் சொல்லின், தலையாலங்கானப் போர் நிகழ்ச்சியை நேரிற் கண்டுரைக்கும் சான்றோருள் இவர் சிறந்தவர் என்பது மிகையாகாது.

    ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும்
    புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை
    இன்றி னூங்கோ கேளலந் திரளரை
    மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
    நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து         5
    செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
    ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப்
    பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக
    நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
    பீடுஞ் செம்மலு மறியார் கூடிப்         10
    பொருது மென்று தன்றலை வந்த
    புனைகழ லெழுவர் நல்வல மடங்க
    ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.        (76)

திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

உரை: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று - ஒருவனை யொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும் புதிதன்று; இவ்வுலகத்து இயற்கை - இந்த உலகத்தின்கண் முன்னே தொட்டு இயல்பு; இன்றின் ஊங்கு கேளலம் - இன்றையின் முன் கேட்டறியோம்; திரள் அரை மன்ற வேம்பின் - திரண்ட தாளையுடைய மன்றத்திடத்து வேம்பினது; மாச்சினை ஒண் தளிர் - பெரிய கொம்பின்கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை; நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து - நீண்ட கொடியாகிய உழிஞைக் கொடியுடனே விரவி; செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி - செறியத் தொடுக்கப்பட்ட தேன் மிக்க மாலையை; ஒலியல் மாலையொடு பொலியச் சூடி - வளைய மாலையுடனே சிறப்பச் சூடி; பாடின் தெண் கிணை கறங்க - ஓசையினிய தெளிந்த போர்ப்பறை யொலிப்ப; காண்தக - காட்சிதக; நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன் - நாடு பொருந்திய செல்வத்தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணையணிந்த நெடுஞ் செழியனது; பீடும் செம்மலும் அறியார் - பெருமையையும் உயர்ந்த தலைமையையும் அறியாராய்; கூடிப் பொருதும் என்று தன் தலை வந்த - தம்மிற்கூடிப் பொருவேமென்று தன்னிடத்து வந்த; புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க - புனைந்த வீரக் கழலினையுடைய இரு பெரு வேந்தரும் ஐம் பெரு வேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி யடங்க; ஒரு தானாகிப் பொருது களத்து அடல் - தான் ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல் எ-று.

ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை; செழியன் பொருது மென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: வேம்பினது, அடிப்பகுதி பருத்துத் திரண்டிருத்தலின், திரளரை யென்றாராக, உரைகாரர், "திரண்ட தாள்" என்றார். பவர் - கொடி. வேம்பு, அடையாளப் பூ; உழிஞை - போர்த்துறைக்குரிய பூ. ஒலியல் மாலை - வளைய மாலை. செம்மல், செம்மையுடைமை அதனை யுடையார் தலைவராதலின், செம்மல் தலைமை யாயிற்று. புனை கழல் எழுவராவார். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற எழுவர். பசும்பூண் பாண்டிய னென்னாது, செழியன் என்றார். பசும்பூண் பாண்டிய னென்ற பெயரே யுடைய பாண்டி வேந்தனொருவன் உளனாதலின்.
------

77. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும் அவன் பின்னர்ப் பகைவரொடு பொருது அவரைக் கொன்றவிடத் தமைந்த தோற்றத்தையும் கண்ட இடைக்குன்றூர் கிழார், நெடுஞ்செழியன் தேர்க் கொடிஞ்சிக்கண் நிற்கின்றானாயினும், "யார்கொல் அவன்; அவன் கண்ணி வாழ்க" என வியந்து வாழ்த்தி, "அவன் இளமைச் செவ்வி அண்மையிற்றான் கழிந்தான்; இதுகாறும் அணிந்திருந்த கிண்கிணியை நீக்கி இப்போதுதான் கழல் அணிந்தான்; சென்னியில் வேம்பின் தளிரும் உழிஞைக் கொடியும் விரவித் தொடுத்த கண்ணியுடையனானான்; இதுவரை யணிந்திருந்த தொடியை நீக்கிக் கையில் வில்லைப் பற்றிக்கொண்டு தேர் மொட்டில் நிற்கின்றான்; மார்பில் தாரணிந்துள்ளானாயினும் ஐம்படைத்தாலியை இன்னமும் கழித்திலன்; பாலருந்துவதை விட்டு இப்போதே உணவினையும் உண்ணத் தலைப்பட்டான்; இத்துணை இளையோன், புதியராய் மேன்மேல் வெகுண்டு வரும் வீரரைக் கண்டு வியப்பதும் செய்கின்றிலன்; இகழ்வதும் இலன்; அவர்மீது பாய்ந்து பற்றிக் கீழே கவிழ்த்து, அவர் தம் உடல் நிலத்தில் வீழக் கொன்றபோதும், அவன் முகத்தில் மகிழ்ச்சியோ, இவ்வாறு செய்தே மென்ற தருக்கோ ஒன்றும் தோன்றுகின்றிலது; இவன் வீரம் இருந்தவாறு என்னே" என இப் பாட்டின் கண் வியந்தோதுகின்றார்.

    கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்
    குடுமி களைந்த நுதல் வேம்பி னொண்டளிர்
    நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
    நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்         5
    யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு
    தாலி களைந்தன்று மிலனே பால்விட்
    டயினியு மின்றயின் றனனே வயின்வயின்
    உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
    வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை         10
    அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக்
    கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை
    மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே.         (77)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு - சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலினைச் செறித்து; குடுமி களைந்த நுதல் - குடுமி யொழிக்கப்பட்ட சென்னிக்கண்ணே; வேம்பின் ஒண் தளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து - வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடி; குறுந் தொடி கழித்த கை சாபம் பற்றி - குறிய வளைகளை யொழிக்கப்பட்ட கையின்கண்ணே வில்லைப் பிடித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் - நெடிய தேரினது மொட்டுப் பொலிவுபெற நின்றவன்; யார் கொல் - யாரோதான்; அவன் கண்ணி வாழ்க - யாரே யாயினும் அவன் கண்ணி வாழ்வதாக; தார் பூண்டு தாலி களைந் தன்றும் இலன் - தாரை யணிந்து ஐம்படைத்தாலி கழித்தலும் இலன்; பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன் - பாலை யொழித்து உணவும் இன்றுண்டான்; வயின் வயின் - முறை முறையாக; உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை; வியந்தன்றும் இழிந்தன்றும் இலன் - மதித்தலும் அவமதித்தலும் இலன்; அவரை அழுந்தப் பற்றி - அவரை இறுகப் பிடித்து; அகல் விசும்பு ஆர்ப்பு எழ - பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலி யெழ; கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை - கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு; மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் - இலன் மகிழ்ந்ததுவும் இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன் எ-று.

யார் கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு இழித்தன் றென்பது இழிந்தன்றென மெலிந்து நின்றது.

விளக்கம்: இளஞ் சிறார்க்குக் காலிற் கிண்கிணியும், தலையிற் குடுமியும்,கையில் குறிய வளையும், மார்பில் ஐம்படைத் தாலியும் அணிவதும், பாலுணவளிப்பதும் பண்டைத் தமிழ்ச் செல்வர் மரபு. இளமை கழிந்து காளைப் பருவ மெய்தினார் காலிற் கழலும் தோளில் தொடியும் மார்பில் மாலையும் அணிவர்; சோற்றுணவு உண்பர். ஈண்டு நெடுஞ்செழியன் இளமைச் செவ்வியை இன்னும் நன்கு கழிந்திலன் என்றற்கு இவற்றை விரித்துக் கூறினார். கொடுஞ்சி தேர்த்தட்டின் நடுவே மொட்டுப்போ லமைத்த இடம்; அது மொட்டென்றும் கூறப்படும். அது கொடுஞ்சி யெனப்பட்டது. தன்னொடு பொர வருவாருள் தக்கோரை மதிப்பதும், தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கும் இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை; மேல்வரும் வீரரைக் கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு; அது தானும் இவனிடம் இல்லை. இவற்றைக் கண்டதால் வியந்து, "யார் கொல்" என்றார்.
--------

78. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் மேற்கொண்டு போந்த கொள்கை சீரிதன்மையால் அவர் கெட்டனர் என்பார் போல இப் பாட்டின்கண் இடைக்குன்றூர் கிழார், "எம் இறைவனான நெடுஞ்செழியனது மலைத்தற்கரிய மார்பினை மதியாது யாமே விழுமியம், பெரியம்; நம்மொடு பொரும் இவனும் இளையன், கொள்ளத்தக்க கொள்ளையும் பெரிது, என இகழ்ந்த கருத்துடன் வந்தனர்; அவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றதனோடமையாத எங்கள் இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு அவர்கட்குத் தொன்றுதொட்டுரியவாகிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ் வேந்தர்களைக் கொன்றழித்தான்" என்று பாடிக் காட்டுகின்றார்.

    வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்
    அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
    தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
    மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
    விழுமியம் பெரியம் யாமே நம்மிற்         5
    பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
    ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
    மாணிழை மகளிர் நாணினர் கழியத்         10
    தந்தை தம்மூ ராங்கண்
    தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே.         (78)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன்றாள் - வளைந்த சந்துகளாற் பொலிந்த வலி பொருந்திய போரின் கண் நிலை தளராத பொறையினையுடைய தாளினையும்; அணங்கருங் கடுந் திறல் - வருத்துதற்கரிய மிக்க வலியையுமுடைய; என்னை - என் இறைவன்; அளைச் செறி உழுவை இரைக்கு முணங்கு நிமிர்ந்து வந்தன்ன - முழையின்கட் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி மூரிநிமிர்ந்து வந்தாற்போன்ற; மலைப்பரும் அகலம் - மாறுபடுதற்கரிய மார்பத்தை; மதியார் சிலைத்து எழுந்து - மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து; விழுமியம் பெரியம் யாம் - சிறப்புடையேம் படையாற் பெரியேம் யாங்கள்; நம்மிற் பொருநனும் இளையன் - நம்மிற் பொருவானும் இளையன்; கொண்டியும் பெரிது - கொள்ளையும் பெரிது; என எள்ளி வந்த வம்ப மள்ளர் - என இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்; புல்லென் கண்ணர் புறத்திற் பெயர - புற்கென்ற கண்ணராய் நின்றவிடத்து நில்லாதே புறத்தே போக; அவர் ஈண்டு அடுதலும் ஒல்லான் - அவரை இப் போர்க்களத்தின் கண்ணே கொன்றிடுதலும் உடன்படானாய்; ஆண்டு - அவ்விடத்து; அவர் மாணிழை மகளிர் நாணினர் கழிய - அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் நாணினராய் இறந்துபட; தந்தை தம்மூர் ஆங்கண் - தந்தையருடையவாகிய தங்கள் ஊரிடத்து; தெண் கிணை கறங்கச் சென்று - தெளிந்த போர்ப்பறை யொலிப்பச் சென்று; ஆண்டு அட்டனன் - அவ்விடத்தே கொன்றான் எ-று.

தந்தை தம்மூ ரென்றதனை, "ஏவ லிளையர் தாய்வயிறு கறிப்ப" என்றாற்போலக் கொள்க. தந்தை தம்மூ ரென்றது, தாம் தோற்றிச் செய்த நகரியன்றி உறையூரும் கருவூரும் முதலாகிய ஊர்களை.

விளக்கம்: தாளில் அணிந்த வீரகண்டை இடையே தொடுக்கப் பட்ட சந்துகளையுடையதாகலின், தொடை யென்றும், அதுதான் வளைவுடையதாதல் பற்றி, "வணங்குதொடை" யென்றும் கூறினார். முணங்கு நிமிர்தல் - மூரி நிமிர்தல்; அஃதாவது தூங்கி யெழுந்தவுடன் கைகளையும் உடம்பையும் நீட்டித் திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல். முன்பும், "முணங்கு நிமிர் வயமான்" (புறம்.52) என்றது காண்க. மலைத்தல் - மாறுபட்டுப் பொருதல். ஆண்மையால் உளதாகும் சிறப்பினை யுடைமை தோன்ற, "விழுமியம்" என்றார். வம்ப - மள்ளர் - புதியராய் வரும் வீரர்; முன்பு வந்தோர் தோல்வியுற் றொழிதலின் புதியர் புதியராய் வந்து நீங்குதலின், "நிலையில்லாத வீரர்‘ என்றுரைத்தார். தோல்வியால் உளம் மழுங்கி ஒளியிழந்த கண்ணராதலின், "புல்லென் கண்ணர்" என்றார். அவ்விடத் தென்புழி, அகரச் சுட்டுப் பின்னர் வரும் தந்தை தம் மூரைக் குறிக்கும். இளையர் பலராயினும், ஒவ்வொருவரையும் பெற்ற தாய் ஒருத்தி யாதலால் தாயென்றாற் போல, ஊர் ஒருமையாற் கூறப்பட்டது.
---------

79. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவின்கண் பாண்டியன் நெடுஞ்செழிய னுடைய வீரர்கள், பகைவர் படையை யழித்து வருகையில், பகற்போது கழியலுற்றது. ஞாயிறு மறைதற்குச் சில நாழிகைக்கு முன்பே செழியன் செருக்களம் நோக்கி வந்தான். வந்தவன், காலைப்போதில் மூதூரிலுள்ள கயத்தில் மூழ்கி நீராடி வேம்பின் மாலை சூடிப் போர்க்குத் தெண்கிணை முன்பாகக் கறங்கிச் செல்ல, பின்னே பெரும் களிறொன்று நடந்து வருவது போலப் பெருமிதத்துடன் போர்க்களத்திற்கு வந்தான். பொர நிற்கும் வீரரும் பலராயிருந்தனர். இக் காட்சியைக் கண்ட இடைக்குன்றூர் கிழார் "பகற்போது மிகக் குறைவாக வுளதே; இவரனைவரும் படாது ஒருசிலர் உயிர் தப்புவர் போலும்" எனத் தம்முள் நினைந்து இப்பாட்டினைப் பாடியுள்ளார்.

    மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி
    மன்ற வேம்பி னொண்குழை மலைந்து
    தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி
    வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே         5
    எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே.        (79)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி - தனது பழைய நகரிவாயிற்கண் குளிர்ந்த பொய்கையின் கண்ணே மூழ்கி; மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து - மன்றத்திடத்து வேம்பினது ஒள்ளிய தளிரைச் சூடி; தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி - தெளிந்த ஓசையையுடைய பறை முன்னாகக் களிறு போலப் பெருமிதத்தோடு நடந்து; வெம் போர்ச் செழியனும் வந்தனன் - வெய்ய போரையுடைய நெடுஞ்செழியனும் வந்தான்; எதிர்ந்த வம்ப மள்ளர் பலர் - அவனோடு பகைத்த நிலையில்லாத மறவர் தாம் பலர்; பகல் தவச் சிறிது - பகற்பொழுது மிகச் சிறிதாதலால்; எஞ்சுவர்கொல் - அவருட் சிலர் படா தொழியவுங் கூடும் எ-று.

போர் மடந்தையைப் புணர வருகின்ற கன்னிப்போ ராதலால், "பனிக்கய மண்ணி" யென்றார். கிணை முன்னர் வருதல், யானைக்கும் இவனுக்கும் ஒக்கும்.

விளக்கம்: கயம் மண்ணி - நீர்நிலையின்கண் மூழ்கி நீராடி; "மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை" (குறுந் 292) என்றாற்போல. போர்ப்பறை கறங்கிக்கொண்டு முன்னே செல்லப் போர்க்களிறு பின்னே செல்வது போல, செழியனும் போர்ப்பறை கறங்கி முன்னே செல்லத் தான் பின்னே சென்றான் என்றறிக. பகல் மறையுமுன் ஒரு வீரரும் எஞ்சாமற் பொர வேண்டுமென்பது அவன் மொழிந்த வஞ்சின மாகலின், "எஞ்சுவர் கொல்லோ" என்றார்; என்றாராயினும், பகற்போது முடிவதற்கு முன்பே பகை வீரர் அனைவரும் எஞ்சாமற் பட்டனர் என அறிக. அரசு கட்டிலேறிய பின் முதன் முதலாகச் செய்யும் போராதலால், இது கன்னிப்போரெனப்பட்டது.
-----

80. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

இக்கிள்ளி, முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் வேறுபடுத்தற்குச் சான்றோரால் இவ்வாறு கூறப்பட்டான். இவன் பெயரில் போரவை யென்பது போர்வை யெனக் காணப்படுவது ஏடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை. இவன் தந்தை தித்தன் எனப்படுவன். அவன் செயலிடத்தே வெறுப்புற்ற இவன் வேறோர் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் கட்டிளமையும் போர் வன்மையும் உடையன். ஒருகால், இவன் முக்காவல் நாட்டு ஆமூர் சென்று, அங்கே மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மேம்பட்டான். இவனுடைய ஆண்மை அழகு முதலிய பண்புகளில் பேரீடுபாடுற்ற நக்கண்ணையார் என்பார் இவன்பாற் பெருங்காதல் கொண்டார். அவர் அக்கிள்ளி சென்று தங்கிய ஆமூரில் இருந்தவர். பெருங்கோழி நாய்கன் என்பாற்கு மகளாராவர்; நல்லிசைப் புலமையும் வாய்ந்தவர். அவர்க்குக் காதல் பெரிதாயிருந்ததேயன்றி, அவன் அவர்பாற் காதல் கொண்டொழுகிய குறிப்பொன்றும் கிடைத்திலது. பின்னர் இவன் எவ்வாறு முடி வேந்த னாயினன் என்றும், நக்கண்ணையார் என்னாயின ரென்றும் தெரிந்தில.

போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனொடு பொருது வென்று நின்ற காலத்துச் சாத்தந்தையார் என்னும் சான்றோர் உடனிருந்து நேரிற் கண்டார். அக்காட்சி அவருள்ளத்தைக் கவர்ந்தமையின், இப்பாட்டின்கண் அம் மற்போரை விரித்துரைக்கின்றார்.

சாத்தந்தையார் என்பது சாத்தன் தந்தையார் எனப் பொருள்படுமாயின் ஈண்டு இயற்பெயராகவே யுளது. சாத்தன் தந்தை யென்பது பொருளாயின், இவரது இயற்பெயர் கூறப்படவேண்டும். இவர் இக்கிள்ளியின்பால் இளமை தொட்டே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். பெருநற்கிள்ளி தந்தையை வெறுத்து முக்காவல் நாட்டு ஆமூரையடைந்திருக்கையில் தாமும் உடனிருந்து இவன் செயல்களைக் குறித்துக் கொண்டுள்ளார். ஆமூர் மல்லனை வென்றதும், பிற போர்களில் வீரரை வென்றதும் இவனது போர்த் திறமும் இவரால் விரியக் கூறப்பட்டுள்ளன. போரில் மடியும் மள்ளர் உம்பருலகில் அமர மகளிரை மணப்பர் என்று இவர் கூறுகின்றார். அம்பு தைப்பினும், வேல் பிறழினும், யானைக்கோட்டு நுதி மடுத் தூன்றினும் அடிபெயர்த்தோடாமை பீடுடையாளர்க்குச் சிறப்பெனக் கருதுவர்.

    இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்
    மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங் கின்றே யொருகால்
    வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
    நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப்         5
    போரருந் தித்தன் காண்கதி லம்ம
    பசித்துப்பணை முயலும் யானை போல
    இருதலை யொசிய வெற்றிக்
    களம்புகு மல்லற் கடந்தடு நிலையே         80

திணை: தும்பை: துறை: எருமை மறம். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

உரை: இன் கடுங் கள்ளின் ஆமூ ராங்கண் - இனிய அழன்ற கள்ளினையுடைய ஆமூரிடத்து; மைந்துடை மல்லன் மதவலி முருக்கி - வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து; ஒருகால் மார்பு ஒதுங்கின்று - ஒருகால் மண்டியாக மார்பிலே மடித்து வைத்து; ஒருகால் வருதார் தாங்கி - ஒருகால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி; பின் ஒதுங்கின்று - முதுகின்கண் வளைத்து; பசித்துப் பணை முயலும் யானை போல - பசித்து மூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையை யொப்ப; இருதலை ஒசிய எற்றி - தலையுங் காலுமாகிய இரண்டிடமும் முறிய மோதி; களம்புகு மல்லன் கடந் தடு நிலை - அக்களத்தின்கட் புக்க அம் மல்லனை எதிர்ந்து நின்று கொன்ற நிலையை; நல்கினும் நல்கா னாயினும் - கண்டால் உவப்பினும் உவவானாயினும்; வெல்போர்ப் போர் அருந் தித்தன் காண்க - இவன் தந்தையாகிய வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக எ-று.

என்றது, தந்தையுடன் வெறுத்துப் போந்தான் அமருட் புகுந்து, இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான், விரும்பாவிடின் அஞ்சுகின்றா னென்பதாம். "பணைமுயலும் யானை போல ஒரு தலை யொசிய வொற்றி" என்று பாடமோதி, அம் மல்லன் முற்கூறாயினும் பிற்கூறாயினும் ஒருதலை முறிய மோதி யென்றுரைப்பாரு முளர். தில்: விழைவின்கண் வந்தது.

விளக்கம்: கடுங் கள், புளிப்பு மிகுதியால் களிப்புற்றுச் சீறிப் பொங்கும் கள்; அதனையே "அழன்ற கள்" ளென்றார். தன்மேல் மண்டியாக இருப்போனைத் தள்ளிக் கீழ்ப்படுத்தற்பொருட்டுச் செய்யப்படும் மற்போர்ச் சூழ்ச்சி, "உபாயம்" எனப்பட்டது. பணை முயலும் - பணைக்கு முயலும் என நான்கனுருபு விரிந்தது. பெற்ற தந்தை யாதலின், கண்டால் உவப்பெய்தா தொழியான் என்ற கருத்தால் "நல்கினும்" என்றும், பெருநற்கிள்ளிபால் கொண்ட வெறுப்பால் ஒருகால் உவவானாயினும் வன்மை கண்டு நெஞ்சில் அஞ்சுவன் என்பது தோன்ற, "நல்கானாயினும்" என்றும் கூறினார்.
---------

81. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

கோப்பெரு நற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூரின்கண் இருக்கையில் போருண்டாயிற்று. அப் போரில் பகைத்து வந்தோரை யெதிர்த்துப் பொரும் படையில் இக்கிள்ளி யிருந்தான். அப் படைக்குத்தலைமை தாங்கிப் பொரும் இவனது போராண்மையைக் கண்ட சாத்தந்தையார் பெருவியப்புற்று, இப்பாட்டின்கண்ணே "இவன் படையின் ஆர்ப்புக் கடலினும் பெரிது; களிறுகள் இடிபோல் முழங்குகின்றன; இந்நிலையில் இவன் கைப்படுவோர் யாவரோ? அவர் பெரிதும் இரங்கத்தக்கார்" எனப் பாடிப் பரவுகின்றார்.

திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

    ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே
    கார்ப்பெய லுருமின் முழங்கலா னாவே
    யார்கொ லளியர் தாமே யார்நார்ச்
    செறியத் தொடுத்த கண்ணிக்
    கவிகை மள்ளன் கைப்பட்டோரே.         (81)

உரை: ஆர்ப்பு எழு கடலினும் பெரிது - படையினது ஆரவாரம் எழுகடலும் கூடி யொலிக்கும் ஒளியினும் பெரிது; அவன் களிறு அவனுடைய களிறு; கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனா - கார்காலத்து மழையின்கண் இடியினும் முழங்குதலையமையா; நார் செறியத் தொடுத்த ஆர் கண்ணி - நாரால் பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக் கண்ணியையும்; கவிகை மள்ளன் கைப்பட்டோர் - இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின் கட் பட்டோராகிய; அளியர் யார்கொல் - இரங்கத்தக்கார் தாம் யார் கொல் எ-று.

விளக்கம்: களிற்றின் முழக்கமும் கிள்ளியின் கைப்படுவோர் ்பால் இரக்கமும் கூறுதலின், ஆர்ப்பு படையினது ஆரவாரமாயிற்று. கார் காலத்து இடி முழக்கம் குமுறு குரலாய் நெடிது நில்லாதென வறிக. கண்ணியும் கவிகையுமுடைய மள்ளன் என்க. சோழற் குடியிற் பிறந்தமையின், ஆத்திக்கண்ணியும், ஈகை அக் குடிப்பிறந்தோர்க் கியல் பாதலின், கவிகையும் கூறினார். கவிகை: வினைத்தொகை. கையகப் பட்டோர் யார்கொல் என மனமிரங்கிக் கூறினார். அவர்தாம் கொலை யுண்டல் ஒருதலை யென்றற்கு.
--------

82. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

கோப்பொரு நற்கிள்ளி போரவையில் நிகழ்த்திய மற்போரின் விரைவினைக் கண்ட சாத்தந்தையார் இப்பாட்டின்கண், அவ்விரைவை மட்டில் வியந்து மற்போர்க்கு வந்த மல்லன் தன் வெற்றிப் பயனாக ஆமூரைத் தனக்குரித்தாகக் கொள்ளக் கருதி வந்தான். அவனை இக்கிள்ளி தான் வென்று அவன் எண்ணத்தை மிக விரையில் சிதைத்தான் என்று பாடிப் பாராட்டியுள்ளார்.

    சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டி னிணக்கு மிழிசினன் கையது
    போழ் தூண் டூசியின் விரைந்தன்று மாதோ
    ஊர்கொள வந்த பொருநனொ         5
    டார்புனை தெரிய னெடுந்தகை போரே.        (82)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: சாறு தலைக் கொண்டென - ஊரின்கண் விழாத் தொடங்கிற்றாக அவ் விழாவிற்குதவப் போகவும்; பெண்ணீற்று உற்றென - தன் மனைவி பிள்ளை பெறுதலைப் பொருந்தினவளாக அவள் மெய்ந்நோவிற் குதவப்போகவும் வேண்டி; பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று - பெய்கின்ற மழையையுடைய ஞாயிறு வீழ்ந்த போழ்தின்கண்; கட்டில் நிணக்கும் இழிசினன் கையது - கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய; போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று - வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து; ஊர் கொள வந்த பொருநனொடு - ஊரைக் கொள்ளவந்த வீரனோடு; ஆர் புனை தெரியல் நெடுந்தகை போர் - ஆத்தியால் தொடுக்கப் பட்ட கண்ணியையுடைய பெருந்தகையது போர் எ-று.

நெடுந்தகை போர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கட் சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றென இழிசினன் கையதாகிய ஊசியின் விரைந்தன் றெனக் கூட்டுக. சாறுதலைக் கொண்டென அதற்கு உதவப்போகவும், பெண்ணீற் றுற்றென அதற்குதவப் போகவுமென வேறு வேறு கொள்க; ஒன்றாக வுரைப்பாரு முளர்.

விளக்கம்: ஈற்று - பிள்ளைப் பேறு. விழாவிற்கு உதவுதலும், மனைவி மெய்ந்நோவுக் குதவுதலும் இழிசினனுக்குக் கடமையாதலின், அவன் உள்ளத்தே விரைவு தோன்றுவது ஒருதலையாயிற்று. ஞாயிறு மறைதல் தையல் வேலைக்கு இடையூறாதலின், அஃது அவன் விரைவினை மிகுதிப்படுத்திற்று. மல்லனொடு பொருமிடத்துப் பெருநற்கிள்ளியின் கையும் காலும் விரைதற்கு இழிசினன் கையதாகிய போழ்தூண்டூசி உவமமாயிற்று. ஊர் கொள வந்த வீரன் என்றதனால், மல்லன் போரவைக்கு வந்ததன் நோக்கம் வெளிப்படுவதாயிற்று.
----------

83. போரவைக் கோப்பெருநற்கிள்ளி

போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர்க்கண், தன் தந்தையை வெறுத்து வந்திருந்த காலத்து அவன் கட்டிளமையும் போர் வன்மையும் நல்லழகும் கண்டு, அவ்வூர்ப் பெருங்கோழி நாய்கன் மகளாகிய நக்கண்ணையார் என்பார் அவன்பால் காதற்காமம் கொண்டார். அவரொரு சிறந்த புலவர்பெருமாட்டியுமாவர். இப் பாட்டின்கண், அவர் கோப்பெருநற்கிள்ளி பொருட்டுத் தொடி நெகிழும் பசப்புற்றுத் தம் தாய்க் கஞ்சுவதும், ஊரிலுள்ள சான்றோர் தம் காதற் பெருமை யறிந்து மணம் புணர்த்த நினையாமைக்கும் வருந்திக் கூறியுள்ளார்.

பெருங்கோழி நாய்கன் என்ற பெயர், இவர் உறையூரிடத்து வாழ்ந்த வணிகர் மரபினர்போலும் என நினைத்தற் கிடந்தருகிறது. மாநாய்கன் என்ற பெயர் இளங்கோவடிகளாற் கூறப்படுவதால் பெருங்கோழி நாய்கன் என்பது இயற்பெயராதற்கும் அமையுமென உணரலாம். நக்கண்ணன் என வரும் ஆண்பாற் பெயர்க்கேற்ப, நக்கண்ணை யென்பது பெண்பாற் பெயராகும். இவர் பாடியனவாக அகத்தி லொன்றும், நற்றிணையில் இரண்டும், புறத்தில் மூன்றுமாக ஆறு பாட்டுக்கள் உள்ளன. இவர் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளிபால் கைக்கிளைக் காமக் காதல்கொண் டொழுகிய திறம் இப் பாட்டுக்களால் அறியலாம்.

    அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
    தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
    அடுதோண் முயங்க லவைநா ணுவலே
    என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
    ஒருபாற் படாஅ தாகி         5
    இருபாற் பட்டவிம் மைய லூரே.         (83)

திணை. கைக்கிளை. துறை; பழிச்சுதல். அவனைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

உரை: அடி புனை தொடு கழற் மையணற் காளைக்கு - அடியின்கட் புனைந்த வீரக் கழலினையும் மைபோன்ற தாடியினையுமுடைய இளையோன் பொருட்டு; என் தொடி கழித்திடுதல் - எனது வளை என்னைக் கைவிடுதலான்; யான் யாய் அஞ்சுவல் - யான் யாயை அஞ்சுவேன்; அடு தோள் முயங்கல் - அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு; அவை நாணுவல் - அவையின் கண் உள்ளாரை நாணுவேன்; என்றும் ஒருபாற் படாதாகி - எந்நாளும் யாயே யாதல் அவையே யாதல் ஒரு கூற்றிற் படாதாகி; இருபாற் பட்ட இம் மையல் ஊர் - யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தையுடைய ஊர்; என்போல் பெருவிதுப் புறுக - என்னைப்போல் மிக்க நடுக்க முறுவதாக எ-று.

மையலூர் பெருவிதுப்புறுக வெனக்கூட்டுக. யாயில்லையாயின் வளைகழலுதற் கஞ்சவேண்டா; அவை யில்லையாயின் முயங்குதற் கஞ்ச வேண்டா வென்பது கருத்தாகக் கொள்க.

ஒருபாற் படாதாகி இருபாற்பட்ட இம் மையலூர் என்பதற்கு அச்சமும் நாணுமுண்டாய் வருந்தும் என் கூற்றிலும் நில்லாது என் காதலறிந்து அவனொடு கூட்ட நினையாத யாய் கூற்றிலும் நில்லாது இருவர் கூற்றிலும் நின்று மயங்குகின்ற ஊரெனினும் அமையும்.

விளக்கம்: காதலொழுக்கம் மேற்கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரியினும் தலைக்கூடப் பெறாவிடினும் பசந்து உடம்பு நனி சுருங்கித் தொடியும் வளையும் கழல வருந்துவராதலின், இங்கே பெருநற்கிள்ளியைத் தலைக்கூடப் பெறாத நக்கண்ணையார், "மையணற் காளைக்குத் தொடி கழித்திடுதல் அஞ்சுவல்" என்றும், தன்னொழுக்கத்திற்குத் தாய் இடையூறாதலின் "யா யஞ்சுவல்." என்றும் கூறினார். சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத்தால் கூட்டி வைப்பவராதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ் வவையினர் இகழ்வர் என்பது பற்றி, "அவை நாணுவல்" என்றார். தமது மையலை ஊர்மேலேற்றி "மையலூர்" என்றார்.
------------

84. போரவைக் கோப்பெருநற்கிள்ளி

பெருநற்கிள்ளியால் காமக் காதல் கொண்டொழுகும் நக்கண்ணையார் அவன் வாழ்ந்த மனையின் சிறைப்புறத்தில் வாழ்ந்து வந்தனர். அவனை யடிக்கடி கண்டும் இருந்தார். அவ்வாறிருந்தும், அவனை மணந்து கோடற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை; ஆயினும் அவன்பால் அவருக்குண்டாகிய காதல் பெருகிவருவதாயிற்று. அந்நிலையில் அவர் மிகவும் வருந்தி, "என் தலைவனாகிய கிள்ளி, தன்னாடு நீங்கிப் போந்து ஈண்டு வாழ்வதால் வறியனாய்ப் புற்கையுண்டு வருகின்றானாயினும் தோட் பெருமை குன்றாதவன்; அவனை எளிதிற் காணுமாறு அவன் சிறைப்புறத்தே வாழினும் யான் பசப்புற்றுப் பொன்னிறமே பெறுவேனாயினேன்; அவன் போர்க்களம் புகின் போர் வீரர்க்கு ஏற்றிழிவுடைய துறைபோல வருத்தம் உண்டுபண்ணுகின்றான்; எனவே, அவன் வீரர்க்கும் எனக்கும் ஒப்ப வருத்தத்தைச் செய்கின்றான் காண்" என்று இப்பாட்டின்கண் பரிந்து கூறுகின்றார்.

    என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
    யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே
    போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே
    கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்        
    குமணர் வெரூஉந் துறையன் னன்னே.         (84)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: என்னை - என்னுடைய தலைவன்; புற்கை உண்டும் பெருந்தோளன் - தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும் பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்; யாம் புறஞ் சிறை யிருந்தும் பொன்னன்னம் - யாம் அவனுடைய சிறைப் புறத்திருந்தும் பலகாலும் காணப் பெறினும் மெய்யுறப் பெறாமையின் வருந்திப் பொன்போலும் நிறத்தை யுடையே மாயினேம்; போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகின் - போரை யேற்று என் தலைவன் போர்க்களத்தின் கட்புகின்; கல்லென் பேரூர் - கல்லென்னும் ஒலியையுடைய பெரிய வூரின்கண்; விழவுடை ஆங்கண் - போர் செய்தற்கெடுத்த விழா வினையுடைய அவ்விடத்து; ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு - தோள் வலி பேசி இன்பமுற்றுப் போந்த வீரர்க்கு; உமணர் வெரூஉம் துறை அன்னன் - உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை யொப்பன் எ-று.

என்னை புற்கை யுண்டும் பகை வெல்லும் பெருந்தோளனாம்; யாம் அவன் சிறைப்புறத்திருந்தும் பசப்பை வெல்லமாட்டாமையால் பொன் போன்றன மெனத் தன் வேட்கை மிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு, என்னை புற்கையுண்டும் வழங்கும் பெரிய தோளையுடையனாயும் நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும், பொன்போற் பசந்தே மென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரு முளர். உணமர் வெரூஉம் துறையன்னன் என்றதனாற் பயன் வருத்துங் கூற்றில் ஆடவரையும் மகளிரையும் ஒக்க வருத்துவதல்லது அருளுமாறு கற்றிலனோ வென்னும் நினைவிற் றாக்குக.

விளக்கம்: கிள்ளி அரசகுமர னாதலின், அவன் புற்கையுண்டற்குக் காரணம் காட்டல் வேண்டி; ‘‘நாடிழந்த வறுமையால்’’ என அவன் வரலாறு காட்டினார். ஆமூர் மல்லனை அட்டு நின்றமையால் அவன் தோள் பெருமை விளங்கினமை கண்டு, ‘‘பெருந் தோளன்’’ என்றார். பலகாலும் அவனைக் காணத்தக்க நிலையில் தாம் இருப்பினும், அவனை முயங்கப் பெறாமையின் கண் பசப்புற்றிருக்குமாறு தோன்றப் ‘‘பொன்னன்னம்’’ என்றும் பெறுதற்கரிய நலம் பசலையால் உண்ணப்பட்டுக் கழிதற் கிரங்குதலின் ‘‘யாம்’’ என்றும் கூறினார். பசலையால் மகளிர் கண் பொன்போறல், "பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே’’ (ஐங். 16) என்பதனா லறிக. தம் வலியைத் தாமே வியந்து செருக்கி வந்து பின்பு அதனை யிழந்த வீரரை, ‘‘ஏமுற்றுக் கழந்த வீரர்’’ என்றார்.
-------------

85. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

போரவை கூட்டி மற்போர் விற்போர் முதலிய போர்களைச் செய்து மேம்படும் இயல்பினனான பெருநற்கிள்ளி, தொடக்கத்தில் ஆமூர் மல்லனொடு மற்போர் உடற்றிய காலத்தில் நக்கண்ணையார் அவன் மற்போரில் மல்லனை யட்டுநின்ற காட்சியை நேரிற் கண்டார். அப்போரைக் காண வந்திருந்த மக்களுள் ஒருசாரார் ‘‘கிள்ளியே வெல்வன்’’ என்ன, ஒரு சாரார் கிள்ளிக்கு வெற்றியில்லை’’ என்றனர். ‘‘இருதிறத்தார் கூற்றையும் கேட்ட யான் விரைந்தோடி, ஆங்கு நின்ற பனைமரத்தின் அடியில் அதனைப் பொருந்தி நின்று மற்போரைக் கண்டேன்; அதன்கண் கிள்ளியாகிய என் தலைவனே வென்றி யெய்தினான்’’ என்று இப் பாட்டால் நக்கண்ணையார் கூறுகின்றார்.

    என்னைக் கூரிஃ தன்மை யானும்
    என்னைக்கு நாடிஃ தன்மை யானும்
    ஆடா டென்ப வொருசா ரோரே
    ஆடன் றென்ப வொருசா ரோரே
    நல்ல பல்லோ ரிருநன் மொழியே         5
    அஞ்சிலம் பொலிப்ப வோடி யெம்மில்
    முழாவரைப் போந்தை பொருந்திநின்
    றியான்கண் டனனவ னாடா குதலே.         (85)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: என்னைக்கு ஊர் இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு ஊர் இஃதல்லாமையானும்; என்னைக்கு நாடு இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு நாடு இஃதல்லாமையானும்; ஆடு - அவனுக்கு இயல்பாய வென்றியை; ஆடென்ப ஒரு சாரோர் - அவனது வென்றி யென்று சிறப்பாகச் சொல்லுவர் ஒரு பக்கத்தார்; ஆடன்று என்ப ஒரு சாரோர் - அவனது வென்றி யன்றென்று சொல்லுவர் ஒரு பக்கத்தார்; பல்லோர் இரு நன்மொழி நல்ல - பலரும் ஒத்து பக்கத்தார்; பல்லோர் இரு நன்மொழி நல்ல - பலரும் ஒத்து ஒவ்வாமற் கூறும் இவ் விருவகைப்பட்ட நல்லவார்த்தையும் நல்லவாயிருந்தன; அஞ் சிலம்பு ஒலிப்ப ஓடி - அவ்வாறு கூறினாராயினும் அழகிய சிலம் பார்ப்ப ஓடிச் சென்று; எம்இல் - எம்முடைய மனையின்கண்; முழா வரைப் போந்தை பொருந்தி நின்று - முழாப்போலும் பக்கத்தையுடைய பனையைப் பொருந்திநின்று; அவன் ஆடாகுதல் யான் கண்டனன் - எனது வளையும் கலையு முதலானவை தோற்கும் ஆண்மை யுடைமையின் அவனது வென்றியாதல் யான் கண்டேன் எ-று.

பின்னும் ஒருகால் என்னை யென்றதனால், இவரது ஆதரவு தோற்றி நின்றது. நல்ல வென்றது இகழ்ச்சிக் குறிப்பு. ஆடென்றதூஉம் ஆடன்றென்றதூஉம் அவனைச் சுட்டியே கூறினமையின், இரு நன்மொழியும் நல்லவென்றா ரெனினு மமையும்.

யாதேனும் ஒன்றைச் சார்ந்து நின்று காண்டல் நாணுடைய குல மகளிர்க் கியல்பாதலின், "போந்தை பொருந்தி நின்று யான் கண்டனன்" என்றார். வரும் பாட்டிலும், "சிற்றில் நற்றூண் பற்றி நின்று" ஒருத்தி வினவுதல் காண்க.

விளக்கம்: பெருநற்கிள்ளி போர் உடற்றிநிற்குங்கால் அவனுக்கு வென்றி யென்று சிலர் சொல்லுதற்குரிய காரணம் இது வென்பார், "என்னைக் கூரிஃதன்மையானும், என்னைக்கு நாடு இஃது அன்மையானும்" என்றார், "ஆடன்" றெனப் பிறர் கூறுவது இவர்க்கு இன்னாதாய்த் தோன்றலின், இவ்வாறு காரணங் காட்டினார். அவற்கு வென்றி யுண்டாதலை "யான் கண்டனன்" என்றமையின், அதற்குக் காரணம் வளையும் கலையும் தோற்றோடத் தாம் நின்றமை யென வருவித்துரைத்தார். இருதிறத்தார் மொழியும் கிள்ளியைச் சுட்டி அவன் நினைவையே யெழுப்பினமையின், "இருநன் மொழியும் நல்ல’’வென்றார்.
-----------

86. காவற் பெண்டு

காவற் பெண்டென்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து மறக்குடியில் வாழ்க்கைப் பட்டவர்; இனிய செய்யுள் செய்யும் சிறப்புடையவர். இவருக்கு மறம் மிக்க மகனொருவன் இருந்தான். ஒரு சால்புடைய மகள் அவர் மனைக்கு ஒரு நாள் போந்து, "அன்னே, நின் மகன் யாண்டுளன்?" என வினவினள். அக்காலை, அவர் "அவன் போர்க்களத்தே விளங்கித் தோன்றுவன்; அவற்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் அதன் முழைக்குமுள்ள தொடர்பாகும். அவனை ஈன்ற வயிறோ இது" வெனத் தம் வயிற்றைக் காட்டி யுரைத்தார். அவ்வுரையே இப் பாட்டு.

    சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
    யாண்டுள னாயினு மறியே னோரும்
    புலிசேர்ந்து போகிய கல்லளை போல
    ஈன்ற வயிறோ விதுவே         5
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.         (86)

திணை: வாகை. துறை: ஏறாண் முல்லை. காவல்பெண்டின் பாட்டு. இவர்பெயர் காதற்பெண்டென்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது செவிலித்தாயைக் காவற்பெண்டென்பதும் வழக்கு. ஈண்டஃது இயற்பெயராய் வந்தது:

உரை: சிற்றில் நற்றூண்பற்றி - சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றி நின்று; நின் மகன் யாண்டுளனோ வென வினவுதி - நின் மகன் எவ்விடத் துளனோ வென்று கேட்பை; என் மகன் யாண்டுளனாயினும் அறியேன் - என்னுடைய மகன் எவ்விடத்துளனாயினும் அறியேன்; புலி சேர்ந்து போகிய கல்லளை போல - புலி கிடந்து போன கன் முழை போல; ஈன்ற வயிறோ இது - அவனைப் பெற்ற வயிறோ இஃது; போர்க்களத்தான் தோன்றுவன் - அவன் செருக்களத்தின் கண்ணே தோன்றுவன், அவனைக் காணவேண்டின் ஆண்டுச் சென்று காண் எ-று.

ஈன்ற வயிறோ இது என்ற கருத்து; புலி சேர்ந்து போகிய அளைபோல அவனுக் கென்னிடத்து உறவும் அத்தன்மைத் தென்பதாம். ஒரு மென்பதூஉம் மாதோ வென்பதூஉம் அசைச்சொல்.

விளக்கம்: சிற்றில்லின்கண் கூரையைத் தாங்கி நிற்பதுபற்றி, தூணை "நற்றூண்" என்றார். என் மகன் போர்க்களத்திற்றான் விளக்க முறத்தோன்றுவன் என்பார், "தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" என்றார். "யாண்டுள ாயினும் அறியேன்" என்றார், பிற விடங்களிலிருப்பின் அறியாமைக்கும் போர்க்களத் திருப்பின் அறிதற்கும் இயைபு வற்புறுத்தற்கு. அவன்பால் தமக்குள்ள தொடர்பை "ஈன்ற வயிறோ இதுவே" என்றார்.
------------

87. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியர் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமைபற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளிற் காணப்படுவது பற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகை யென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேரநாட்டிற் குடியேறி யிருத்தல் வேண்டும் என்றும், இதனால் திகையராகிய இவர் அதியர் எனப்படுவாராயின ரென்றும் அறிஞர் கருதுகின்றனர். நெடுமான் அஞ்சி யென்பது இவன் பெயர். இவன் ஒரு குறுநில மன்னன்; இவனது தலைநகர் இக்காலத்தில் தருமபுரி யெனப்படும் தகடூராகும். இவன் சேரர்கட்குரியனாய் அவர்க்குரிய கண்ணியும் தாரும் தனக்குரியவாகக் கொண்டவன். மழவர் என்னும் ஒருசார் கூட்டத்தார்க்கும் இவன் தலைவன். இதனால் இவனை "மழவர் பெரு மகன்" என்றும் சான்றோர் கூறுப. இவனது ஆட்சியெல்லை நடு நாட்டுக் கோவலூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது. குதிரை மலை இவன் நாட்டின்கண்ணதாகும். முதன் முதலாகத் தமிழகத்திற் கரும்பினை வேற்று நாடுகளினின்றும் கொணர்ந்தவர் இவனுடைய முன்னோராவர். பழம் புலவர்கள் இச் செய்தியை, "அதியமான் முன்னோர் விண்ணவரை வழிப்பட்டுக் கரும்பினை இவண் கொணர்ந்தன" ரென்றும், அவ்விண்ணவர் போந்து தங்குதற் பொருட்டு இவன தூர்க்கணொரு சோலையிருந்த தென்றும் கூறுவர்.

இவன் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனியொன்றைப் பெற்றான். அக் கனி தன்னை யுண்டாரை நெடிது நாள் வாழச் செய்யும் வலியுடையது. அதனைப் பெற்ற இவன் தானே யுண்டொழியாது நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க் கீந்து அழியா அறப்புகழ் பெற்றான். இவனுக்கு ஒளவையார்பால் பெரு மதிப்பும் பேரன்பும் உண்டு. ஒருகால் தன்னோடு மாறுபட்ட தொண்டைமானிடைச் சந்து செய்வித்தற்கு ஒளவையாரைத் தூது விடுத்தான். இறுதியில் இவன் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறையுடன் போர் உடற்றி உயிர் துறந்தான். சேரமான் தகடூரை முற்றுகையிட்டிருந்த போது இவன் தன் பொருள் படை துணை முதலியன வலி குறைந் திருப்பதுணர்ந்து தன் அரணகத்தே அடைபட்டுக் கிடந்ததும் பின்னர்ப் போருடற்றி, உயிர் துறந்தும், தகடூர் யாத்திரை யென்னும் நூற்கண் விளங்கும். அந்நூல் இப்போது கிடைத்திலது; சிற்சில பாட்டுகளே காணப்படுகின்றன. இவனைப் பாராட்டி ஒளவையார் பாடியுள்ள பாட்டுகள் பலவாகும். இந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு அத்தை மகள் ஒருத்தியுண்டு. அவளும் சிறந்த பாவன்மை யுடையவள். அவள் அஞ்சியை மணந்து இன்புற்ற நாளில், ஒருநாள் தான் கண்ட மலைச் சாரற் காட்சியை அஞ்சியின் அவையில் இசைப்பாணர் புதுவகையான திறங்களைப் புணர்த்துப் பாடும் நலத்தை யோதிப் பாராட்டியுள்ளான்.

ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை யெதிர்ந்த பகைவேந்தரொடு பொருதற்குச் சமைந்திருந்தான். பகைவர் தம்மிடையே யுள்ள மறவரது மறத்தை வியந்து கூறுவதனை ஒளவையார் கேள்வியுற்றார். உடனே, அவர் அஞ்சியின் வலிநலத்தை எடுத்துரைக்கக் கருதி, பகை வீரர்களே, போர்க்களம் புகாதீர்கள்; எம்பால் ஒரு வீரனுளன்; அவன், நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் பெருவன்மை படைத்த தச்சன், முப்பது நாள் அரிது முயன்று செய்ததொரு தேரை யொக்கும் பெரு விரைவும் பெருந் திண்மையும் உடையன்" என்று இப்பாட்டால் குறித்தோதுகின்றார்.

ஒளவையார் சங்க மருவிய நல்லிசைப் புலவர் கூட்டத்துச் சிறந்தோருள் ஒருவர்; பெண்பாற் புலவருள் தலைமை பெற்றவர். தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரிலும் இவர் பெயரைக் கேட்டறியாதார் ஒருவரும் இலர். அதியமான், ஒருகால் தன்னை யுண்டாரை நெடிது வாழச் செய்யும் நெல்லிக்கனி பெற்று, அதனை இவர்க்குத் தந்து நெடிது வாழச் செய்தான். அவன் நெடுமனைக்கண் இனிதிருந்து அவ்வப்போது இவர் அவனைப் பல பாட்டுக்கள் பாடிச் சிறப்பித்துள்ளார். அதியமான் பொருட்டு ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றார்; அதியமான் பகைவரைக் கடந்த செய்திகளை நன்கு எடுத்தோதியுள்ளார்; அதியமான் இறந்த காலையில் இவர் கையற்றுப் பாடிய பாட்டு நெஞ்சை நீராய் உருக்கும் நீர்மை யமைந்தது. அதியமான் மகன் பொகுட்டெழினி யென்பான் பிறந்த காலை முதல், அவன் அரசனாய் விளக்க மெய்துங்காறும் ஒளவையார் இருந்திருக்கின்றார். வேள் பாரியினது பறம்பை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்தபோது அங்கிருந்த கபிலர் கிளிகளை வளர்த்து வெளியே விடுத்து நெற்கதிர் கொணர்வித்து அடைப்பட்டிருந்த மக்கட்கு நேர்ந்த உணவுக்குறையை நீக்கினாரென்றும், வெள்ளிவீதியார் என்பார் தம் காதலனை யிழந்து வருந்திய செய்தியும் பிறவும் இவரால் குறிக்கப் பெறுகின்றன. இவர் பெயரால் தமிழகத்து வழங்கும் செய்திகள் பலவாகும். அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

    களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந்
    தெம்முளு முளனொரு பொருநன் வைகல்
    எண்டேர் செய்யுந் தச்சன்
    திங்கள் வலித்த காலன் னோனே         (87)

திணை: தும்பை. துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

உரை: களம் புகல் ஓம்புமின் தெவ்விர் - போர்க்களத்தின் கட்புகுதலைப் போற்றுமின், பகைவீர்; போரெதிர்ந்து - போரின் கண் மாறுபட்டு; எம்முளும் உளன் ஒரு பொருநன் - எங்களுள் வைத்தும் ஒரு வீரன் உளன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் - ஒருநாள் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன்; திங்கள் வலித்த காலன்னோன் - ஒரு மாதங் கூடிக் கருதிச் செய்யப்பட்ட தொரு தேர்க்காலை யொப்பன் எ-று. போரெதிர்ந்து களம்புக லோம்புமின், எம்முளும் உளன் எனக் கூட்டுக. எம்முளும் என்ற உம்மை சிறப்பும்மை. தேர்க் காலொடு உவமை, விரைவும் திண்மையுமாகக் கொள்க.

விளக்கம்: பகைவர் தமது மைந்து பொருளாகத் தருக்கிவந்தனராதலின், அவருக்கு மாற்றம் கூறுவாராய், "பகைவர்களே, நும்மிடையே வீரர் உளராதல் போல் எம்மிடையேயும் ஒரு வீரன் உளன்" என்பார். "எம்முளும் உளன் ஒரு பொருநன்" என்றார். "ஒரு நாள் எண் தேர் செய்யும் தச்சன்" என்றது, தச்சனது தொழில்நலம் தோற்றி நின்றது, மிக்க திண்மையும் செப்பமும் உடைமை தோன்ற, "திங்கள் வலித்த கால்" என்றார்.
----------

88. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சியொடு பொருது வெல்வதாக அவன் பகைவர் சிலர் தம்முட் பேசிக்கொண்டது ஒளவையார்க்குத் தெரிந்தது. அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாதெனத் தேர்ந்த ஒளவையார், அவர் தம்முடைய கூழைப்படை தார்ப்படை யென்ற இவற்றின ்வலி நினைந்து தருக்குகின்றமை யறிந்தார். அவர் உடனே அப் பகைவரை நோக்கி, "நீவிர் அதியமானைக் காணாமுன்பு கூழையையும் தாரையும் கொண்டு பொருது வெல்வேம்" என்பது கூடாது; காண்பீராயின் அவ்வாறு நினைத்தற்கே அஞ்சுவீர்கள்" என்று இப் பாட்டால் அறிவுறுத்துகின்றார்.

    யாவி ராயினுங் கூழை தார்கொண்
    டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல்
    ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
    கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின்
    விழவுமேம் பட்ட நற்போர்         5
    முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே.         (88)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: யாவிராயினும் - எப்பெற்றிப்பட்டீராயினும், கூழை தார் கொண்டு - அணியையும் தூசியையும் கொண்டு; யாம் பொருதும் என்றல் ஓம்புமின் - யாம் அவனொடு பொருவோ மென்று சொல்லுதலைப் பாதுகாமின்; ஓங்கு திறல் ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெரு மகன் - உயர்ந்த வலியையுடைய பாடஞ் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத் தலைவனாகிய; கதிர் விடு நுண் பூண் - சுடர் விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த; அம் பகட்டு மார்பின் - அழகியவலிய மார்பினையும்; விழவு மேம்பட்ட நற்போர் முழவுத் தோள் - கள வேள்வி முதலாகிய விழாச் சிறந்த நல்ல போரைச் செய்யும் முழாப்போலும் தோளினையுடைய; என் ஐயைக் காணா வூங்கு - என் இறைவனைக் காண்பதற்கு முன், கண்டால் அது செய்தல் அரிதாகலான் எ-று.

என்னையைக் காணா வூங்கு யாவிராயினும் பொருது மென்றல் ஓம்புமின் எனக் கூட்டுக.

விளக்கம்: அறிவு ஆண்மை பொருள் படை முதலியவற்றால் மிகச் சிறந்திருக்கின்றீராயினும் என்பதற்கு, "யாவிராயினும்" என்றார்; முடிவேந்தராயினும் குறுநில மன்னராயினும், ஒருவராயினும் பலராயினும் அடங்க இவ்வாறு கூறினா ரெனினு மமையும். கூழை, பக்கத்துப் பின்னரும் அணிவகுத்து வரும் படை. தார் - தூசிப்படை. பாடம்செய்த வேலும் வாளும் கூர்மையும் ஒளியுமுடைய வாதலால், "ஒளிறிலங்கு வாள்" என்றார். பாடஞ் செய்தலாவது கூர்மை மிகத் தீட்டி அது துருவேறி மழுங்காவாறு நெய்யணிந்து தோலுறையுள் வைத்தல். பகடு, ஈண்டு வலிமை குறித்து நின்றது. விழவு மேம்பட்ட போர் என்றதனால், விழவு, கள வேள்வி முதலாயின குறிப்பதாயிற்று. கண்டவழித் தம் கூழையும் தாரும் போர்க்கு ஆற்றா வெனவுணர்ந்து அஞ்சி நீங்குவர் என்பது கருத்து.
---------

89. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒருகால், அதியமானுடைய பகைவருள் ஒருவன் ஒளவையாரைக் கண்டு, "நுங்கள் நாட்டில் சிறந்த போரைச் செய்வோர் உளரோ?" என வினவினன். இரப்போர்க் கீயும் இசைநலமுடையோரைப் பாடிப் பரிசில் பெறும் பாண்மகள் போலச் செல்லும் ஒளவையார், அது கேட்டுச் சிறிதும் மனமஞ்சாராய்ப் பெருமிதத்துடன், "எங்கள் நாட்டில் எறியும் கோலுக்கஞ்சாது அதனை ஓச்சுந்தோறும் உடன்றெழும் பாம்பு போலச் சீறி யெழும் வீரர் பலர் உளர், அன்றியும்; மன்றின்கண் கட்டப்பட்டிருக்கும் போர்ப்பறை காற்றாலசைந்து இசைக்குமாயின், ‘போர் வந்து விட்டது போலும்’ என்று பொருக்கென எழும் தலைவனும் உளன் காண்" என்று இப்பாட்டாற் கூறுகின்றார்.

    இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
    மடவர லுண்கண் வாணுதல் விறலி
    பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
    வினவ லானாப் பொருபடை வேந்தே
    எறிகோ லஞ்சா வரவி னன்ன         5
    சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
    பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
    வளிபொரு தெண்கண் கேட்பின்
    அதுபோ ரென்னு மென்னையு முளனே.         (89)

திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

உரை: இழை யணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் - மணிக் கோவையாகிய அணியாற் பொலிந்த ஏந்திய பக்கத்தினையுடைய அல்குலினையும்; மடவரல் - மடப்பத்தினையும்; உண்கண் - மையுண்ட கண்ணினையும்; வாள் நுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுமுடைய விறலி; பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டென - என்னொடு பொருவாரு முளரோ நும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண் என; வினவல் ஆனாப் பொரு படை வேந்தே - என்னைக் கேட்ட லமையாத செருச் செய்யுந் தானையையுடைய வேந்தே; எறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வன் மள்ளரும் உளர் - நீ போர் செய்யக் கருதுவை யாயின் எம்முடைய நாட்டின் கண்ணே அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய வீரரும் உளர்; அதா அன்று - அதுவே யன்றி; பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை - மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது; வளி பொரு தெண்கண் கேட்பின் - காற்றெறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக் கேட்பின்; அது போர் என்னும் என்னையும் உளன் - அது போர்ப்பறை யென்று மகிழும் என்னுடைய தலைவனும் உளன் எ-று.

தெண்கண் என்றது அதன்கண் ஓசையை. போரென்றது போர்ப் பறையை.

விளக்கம்: மணிக் கோவை, மணிமேகலை. கோடு, பக்கம். மடவரல் - மடப்பம்; "மடவரல் அரிவை" (குறுந். 321) என்றாற்போல. பொரு படை - போரைச் செய்யும் படை; அஃது ஈண்டுத் தானைமேல் நின்றது. தெண்கண் என்பது ஆகுபெயராய் ஒலியைக் குறித்தது. யானையின் மணியோசையைச் சேய்மையிற் கேட்போன் இஃது யானை என்பது போல, முழவோசை காற்றால் உண்டாகக் கேட்பின், "அது போர்" என்பன என்றவாறாம்.
---------

90. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒருகால், அதியமான் தன்னைப் பகைத்துப் பொரக் கருதும் வேந்தருடன் போர்செய்தற்குச் சமைந்திருந்தான் அடிக்கடி நிகழும் போர்களால் வீரர் பலர் இறப்பதும், பொருட்கேடுண்டாவதும் அவன் நினைவிற் றோன்றி அசைவினைப் பிறப்பித்தன. போரைச் செய்யாது நிறுத்தின் வரும் கேடும் அவன் அறிவுக்குப் புலனாகா தொழியவில்லை. அந்நிலையில் அதனை யுணர்ந்த ஒளவையார் அதியமானைப் போர் செய்தற்கு ஊக்கவேண்டிய கடமை யுடையவரானார். இப் பாட்டால், "புலி சினந்தால் மான் கூட்டம் எதிர் நில்லா; ஞாயிறு சினந்தால் இருள் நில்லாது; பெருமிதப் பகட்டுக்கு வழியருமை கிடையாது; அவ்வாறே நீ களம் புகின் போர் செய்வார் இல்லை" யென்று கூறி யூக்கியுள்ளார்.

    உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
    அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்
    மறப்புலி யுடலின் மான்கண் முளவோ
    மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய
    இருளு முண்டோ ஞாயிறு சினவின்         5
    அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய
    பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய
    அரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும்
    பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ
    எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை         10
    வழுவில் வன்கை மழவர் பெரும
    இருநில மண்கொண்டு சிலைக்கும்
    பொருநரு முளரோ நீகளம் புகினே.         (90)

திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

உரை: உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் - முரிந்த வளையையொப்ப மலர்ந்த வெண் காந்தட் பூ; அடை மல்கு குளவியொடு. கமழும் சாரல் - இலை தழைத்த குளவியுடனே நாறும் மலைச்சாரற்கண்; மறப் புலி உடலின் மான் கணம் உளவோ- மறத்தையுடைய புலி சீறின் எதிர்நிற்கவல்ல மானினமும் உளவோ; மருளின விசும்பின் மாதிரத்து - மயங்கிய ஆகாயத்திடத்தும் திசையின்கண்ணும்; இருளும் உண்டோ ஞாயிறு சினவின் - இருளுமுண்டோ ஞாயிறு கொதித் தெழுமாயின்; பார் அச்சொடு தாக்கிய - பாரத்து மிகுதியால் பார் அச்சுமரத்தோடு வந்து தாக்கி; உற்று - உற இருத்தலின் இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய - நிலத்தின்கட் குளித்த பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு; அரி மணல் ஞெமர - புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும்; கற்பக - கல் பிளக்கவும்; நடக்கும் - நடக்கவல்ல; பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - மிக்க மனச்செருக்கினையுடைய கடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ, இல்லையன்றே அவை போல; எழு மரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை - கணைய மரத்தையொக்கும் முழந்தாளிலே பொருந்திய பெரிய கையாகிய; வழுவில் வன் கை - தப்பாத வன்மையைச் செய்யும் கையினையுடைய; மழவர் பெரும - வீரர்க்குத் தலைவ; இரு நிலம் மண்கொண்டு சிலைக்கும் - பெரிய நிலத்தின்கண் நினது மண்ணைக் கொண்டு ஆர்க்கும்; பொருநரும் உளரோ - வீரரும் உளரோ இல்லையன்றே; நீ களம் புகின் - நீ போர்க்களத்திற் புகின் எ-று.

மழவர் பெரும, நீ களம் புகின் பொருநரும் உளரோ, இல்லயன்றே யெனக் கூட்டி வினமுடிவு செய்க. தடக்கயயுடய பெருமவெனக் கூட்டி, வன்கய மழவரொடு கூட்டி யுரப்பினும் அமயும். இரு நிலமாகிய மண்ணென் பாரு முளர். மதப்பகடு என்பதூஉம் பாடம்.

விளக்கம்: காந்தட்பூ உடந்த வளபோலும் என்பத, ''வளயுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்'' (மலபடு. 519) எனப் பிறரும் கூறுதல் காண்க. குளவி - மலமல்லிக. மருளுதல் - மயங்குதல்; புக போலும் முகிற்கூட்டம் பரவி நீலவானத்த மறத்தல். விசும்பின் மாதிரத் விசும்பினும் மாதிரத்தினும். தாக்கி யென்ப தாக்கிய வென்றும், உறுதலின் என்ப உற்று என்றும் நின்றன; ''வினயெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய'' (சொல்.457) என்ப தொல்காப்பியம். இயங்குதல் ஈண்டுச் சேற்றிற் புததல் என்பபட வந்த. அரி மணல் - நீரலயால் கொழிக்கப்பட்ட மணல். வரி மணல் என்று பாடங்கொள்வர் நச்சினார்க்கினியர். ஞெமர்தல் - பரத்தல். ''தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்'' (நெடுநல். 60) எனப் பிறரும் கூறுதல் காண்க. எழுமரம் - கணய மரம். க தாள்வர நீண்டிருத்தல் ஆடவர்க்கு இலக்கணம் என்ப வழுவில் வன் க என்புழி, வழுவுதல் - வழுக்குதல். மழவர் - ஒருவக வீரர்; ''உருவக் குதிர மழவர்'' (அகம்.2) என வருதல் காண்க. இவ்வுரகாரர், இளய வீரர் எனக் கொள்வர்; ''மழவும் குழவும் இளமப் பொருள்'' (சொல்.305).
---------------

91. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒருகால், வேட்டம் புரிவான் சென்ற அதியமான் தன் நாட்டில் நின்ற மலக்குச் சென்றான். அம்மலயிடத்தே பிளவு ஒன்றுண்டு. அதன்கண் அருநெல்லி மர மொன்று இனிய கனி தாங்கி நின்ற. அதன யுண்டோர் நெடி வாழ்வ ரென்பர். வேட்டக்குச் சென்ற அஞ்சி அந்நெல்லி மரத்த யடந் அதன் தீங் கனியப் பறித்க் கொண்டு வந்தான். வந்தவன் அதனத் தானே உண்டொழியா, அப்போ தன்பால் வந்திருந்த ஒளவக்குத் தந்தான். அதன அவர் உண்ட பின்னர், அதன யுண்டவர் நெடி வாழ்வ ரென்ற செய்தி தெரிந்த. ஒளவயார், பெருவியப்புற்றுத் ''தான் நெடி வாழ நினயா, எனக்குத் தந் என்ன நெடி வாழப் பண்ணிய இந் நெடுந்தகயின் பெருந்தகமய யென்னென்பேன்'' என நினந் அவன வாழ்த்தலுற்று, ''இந் நெல்லிக்கனியின் அரும கருதா எனக்குத் தந் சாதல நீக்கிய நீ நீலமணி மிடற்றுக் கடவுள்போல மன்னுவாயாக'' என இப்பாட்டினப் பாடி வாழ்த்தியுள்ளார்.

    வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
    களம்படக் கடந்த கழறொடித் தடக்க
    ஆர்கலி நறவி னதியர் கோமான்
    போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
    பால்புர பிறநுதற் பொலிந்த சென்னி         5
    நீல மணிமிடற் றொருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
    தாத னின்னகத் தடக்கிச்         10
    சாத னீங்க வெமக்கீத் தனையே.         (91)

திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

உரை: வலம்படு வாய் வாள் ஏந்தி - வென்றியுண்டான தப்பாத வாளை எடுத்து; ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர் களத்தின்கட்பட வென்ற; கழல் தொடித் தடக்கை - கழல விடப்பட்ட வீர வளை பொருந்திய பெரிய கையினையுடைய; ஆர் கலி நறவின் அதியர் கோமான் - மிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடையஅதியர் கோமான்; போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி - மாற்றாரைப் போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையையுமுடைய அஞ்சி; பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி - நீ பால் போலும் பிறை நுதல் போலப் பொலிந்த திருமுடியினையும்; நீலமணி மிடற்று ஒருவன் போல - நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல; மன்னுக - நிலைபெறுவாயாக; பெரும நீயே - பெரும நீ; தொல் நிலை பெருமலை விடரகத்து - பழைய நிலைமையையுடைய பெரிய மலையிடத்து விடரின் கண்; அருமிசைக்கொண்ட - அரிய உச்சிக்கட் கொள்ளப்பட்ட; சிறி யிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய பழத்தை; குறியாது ஆதல் நின் அகத்து அடக்கி - பெறுதற் கரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குக் கூறாது நின்னுள்ளே அடக்கி; சாதல் நீங்க எமக்கு ஈத்தனை - சாதலொழிய எமக்கு அளித்தாய் ஆதலால் எ-று.

நீலமணி மிடற் றொருவன்போ லென்ற கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும் என்பதாம். அதியர் கோமான், அஞ்சி நெல்லித் தீங்கனி, எமக்கு ஈத்தாயாதலால், பெரும, நீ நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிறைநுதற் பொலிந்த சென்னி என்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னி யெனினு மமையும்.

விளக்கம்: வில்லும் வாளும் வேலும் ஏந்தி நிற்கும் வீரர்க்குத் தொடி செறிய அணியப்படின் இடையூறு செய்யுமாதலின், இனிது கழல இடப்பட்ட தென்றற்குக் "கழல் தொடி" என்றார். தொடி கழல விடப்பட்ட தாயினும் கைபெருமை குறைந்த தன்றென்றற்கு, "தடக்கை" யெனப்பட்டது. போர் அடு திரு - போரின்கட் பகைவர்களைக் கொல்லும் மனத் திட்பமும் வினைத் திட்பமுமே திருவாகக் கருதப்படுகின்றன. பால் போலும் நிறத்தையுடைய பிறைத்திங்கள் இறைவன் முடியில் நுதல் போல விளங்குதலால், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி" என்றார். பிறை இறைவன் நுதற்கண்ணே பொலிய விளங்கும் சென்னி யென்று உரைப்பினும் அமையும் என்றற்கு, "பிறை நுதல் அமையும்" என்றார். ஒருவன், இறைவன் பெயர்களுள் ஒன்று; "ஒருவனென்னும் ஒருவ போற்றி" எனச் சான்றோர் கூறியிருத்தல் காண்க. நீலமணி மிடற் றொருவன் என்ற விடத்து, நீலமணி நிறம் நஞ்சுண்டமை நினைப்பித்து, "விண்ணோரமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ் சுண்டிருந்தருள’’ச் செய்யும் சிறப்பைப் புலப்படுத்துகிறது. இறைவன் நஞ்சினைத் தானுண்டு அமுதினை விண்ணோர்க்கு வழங்கியது போல, அதியமானும் நெல்லிக்கனியே ஒளவைக்கீந்து சிறப்புற்றான். தன்னை நெடிது வாழப்பண்ண வேண்டுமெனக் கருதிய அவன் கருத்தை வியந்த ஒளவையார், அவனும் இறைவன் போன்ற செய்கையுடையனாயது பற்றி, அவ்விறைவனே போல நிலைபெறுதல், வேண்டுமென்றெண்ணி, "ஒருவன் போல மன்னுக பெரும நீயே" என்றார். நெல்லிக்கனியின் அருமை தோன்றப் "பெரும நீயே" என்றார். நெல்லிக்கனியின் அருமிசை - ஏறுதற்கரிய உச்சி. ஆதல் - நீடிய உயிர் வாழ்க்கைக்கு ஆக்க மாதல். நெல்லிக்கனி தன்னை யுண்டார்க்குச் சாதல் உண்டாகாமை தருவது தோன்றச் "சாதல் நீங்க" என்றார். பிறிதோரிடத்தும், "அதிகா, வன் கூற்றின் நாவை அறுப்பித்தாய்ஆமலகம் தந்து" (தனிப் பாட்டு) என்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.
------------

92. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான், தான் நெடிது உயிர்வாழ்தலினும் ஒளவையார் நெடிது வாழ்தலால் உலகுயிர்கட்கு ஆக்கமாகும் என்ற பேரருளால் தான் பெற்ற நெல்லிக் கனியைத் தந்தருளியது கண்ட ஒளவையார் மனங் குழைந்து நாக்குழறித் தாம் நினைத்தவாறெல்லாம் அவனைப் பாராட்டக் கருதி, "நெடுமான் அஞ்சி, நீ என்பால் மிக அருளுதலால் என் சொல் தந்தையர்க்குத் தம் புதல்வர் சொல்லும் சொற்போல அருள் சுரக்கும் தன்மையனவாம்" என்று இப்பாட்டாற் கூறியுள்ளார்.

    யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
    பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க்
    கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை
    என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார்
    கடிமதி லரண்பல கடந்த 5
    நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே.         (92)

திணை: அது: துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

உரை: யாழொடுங் கொள்ளா - யாழோசை போல இன்பமும் செய்யா; பொழுதொடும் புணரா - காலத்தொடும் கூடியிரா; பொருள் அறிவாரா - பொருளும் அறிய வாரா; ஆயினும்-; தந்தையர்க்கு அருள் வந்தன புதல்வர் தம் மழலை தந்தையர்க்கு அருளுதல் வந்தன் பிள்ளைகளுடைய இளஞ்சொல்; என் வாய்ச் சொல்லும் அன்ன என்னுடைய வாயின்கட் சொல்லும் அத்தன்மையன; ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி - பகைவரது காவலையுடைத்தாகிய மதிலையுடைய அரண் பலவற்றையும் வென்ற நெடுமானஞ்சி; நீ அருளன் மாறு - நீ அருளுதலால் எ-று.

புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்னவெனக் கூட்டுக. யாழென்றது, யாழிற் பிறந்த ஓசையை. பொருளும் என்னும் உம்மை, விகாரத்தால் தொக்கது.

விளக்கம்: இளம் புதல்வர் வழங்குஞ் சொல்லோசையில் யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும், அவர்கள் சொல்வழிப் பிறக்கும் இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும்; பெருந் துன்பம் போந்து வருத்துகின்றபோதும் தந்தையர்க்குப் புதல்வர் போந்து வழங்கும் சொல் நிரம்பாமையின் குறிக்கும் பொருள் விளங்காதாயினும், தந்தையர் அச்சொல்லைக் கேட்டற்குப் பெரிதும் விரும்புவர். மழலை - இளஞ் சொல்; எழுத்து வடிவு பெறாது தோற்றும் இளஞ்சொல் லென்றும் கூறுவர். புதல்வர் மொழியும் மழலை பொருணலமும் இடச்சிறப்புமுடைய வல்லவாயினும் தந்தையரால் அருள்சுரந்து கேட்கப்படுதல் போல என் வாய்ச் சொல்லையும் நீ அருள்சுரந்து கேட்கின்றாய்; நின் அருள் இருந்தவாறென்னே என்பதாம். என் சொல்லென் றொழியாது வாய்ச்சொல் லென்றது, தமது பணிவு தோன்றி நின்றது. "கடிமதில் அரண்பல கடந்த நீ" யென்றது அவனது போரடு திருவும் அதற்கேற்ப வேண்டும் மற மிகுதியும் உணர்த்திற்று. இன்ன செய்கையையுடைய நீ என்பால் அருள் மிகச் சுரந்தொழுகுவது என்னை நின் மக்களுள் வைத்துப் பேணுகின்ற அன்பு மிகுதியைக் காட்டுகின்ற தென்றவாறாயிற்று.
------------

93. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் பகைவர் எதிர்ந்த போர்க்களத்தில், அப்பகைவர் பலரையும் வென்று வெற்றி மேம்பட்டான்; ஆயினும் அவனுடைய முகத்தினும் மார்பினும் பகைவர் எறிந்த படையால் புண்கள் உண்டாயின. போர் முடிவில் வாகை சூடி வென்றி பெற்று நிற்கும் அவனுடைய புண்களைக் கண்ட ஒளவையார்க்குப் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவர் தம் மகிழ்ச்சியை இப்பாட்டால் புலப்படுத்தினார். இதன் கண், "பெருந்தகையே, நீ விழுப்புண் பட்டு ஓய்வு பெறுதலால், நின்னொடு பொருது உடைந்தோடி இழிவுற்ற பகை வேந்தர் நின் வாளால், சிதைந்தழிந்தமையின், நினக்குத் தோற்றார் என்ற பழியும், சுற்றத்தாற் கூடி வாளாற் போழ்ந்தடக்கும் சிறுமையும் இல்லாதபடி பட்டொழிந்தனர்; இனி நின்னைப் போரில் எதிர்ப்பார் இல்லை; ஆகவே நீ இனி முரசு முழங்கச் சென்றாற்றும் போர் எங்கே யுண்டாகப் போகிறது" என்ற கருத்துப் படப் படியுள்ளார்.

    திண்பிணி முரச மிழுமென முழங்கச்
    சென்றமர் கடத்தல் யாவது வந்தோர்
    தார்தாங் குதலு மாற்றார் வெடிபட்
    டோடன் மரீஇய பீடின் மன்னர்
    நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்         5
    காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார்
    அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
    திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
    மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
    நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென         10
    வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ
    வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்
    தண்ணல் யானை யடுகளத் தொழிய
    அருஞ்சமந் ததைய நூறிநீ
    பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே.         (93)

திணை: வாகை. துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றானை அவர் பாடியது.

உரை: திண் பிணி முரசம் இழும் என் முழங்க - திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழு மென்னும் ஓசையை யுடைத்தாய் ஒலிப்ப; சென்று அமர் கடத்தல் யாவது - மேற் சென்று போரை வெல்லுதல் இனி எங்கே யுளது; வந்தோர் - நின்னோடு எதிர்ந்து வந்தோர்; தார் தாங்குதலு மாற்றார் - நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்; வெடி பட்டு ஓடல் மரீஇய பீடில் மன்னர்- சிதறிக் கெட்டுப் போதலிலே மருவிய பெருமையில்லாத அரசரது; நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ - நோயின் பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்து; காதல் மறந்து - தமது ஆசைத்தன்மையை மறந்து; அவர் தீது மருங்கு அறுமார் - அவர் வாளாற் படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்க வேண்டி; அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்; திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி - நல்ல கூற்றிலே பொருந்திய பசிய தருப்பைப் புல்லைப் பரப்பினராய்க் கிடத்தி; மறம் கந்தாக - தமது ஆண்மையே பற்றுக்கோடாக; நல்லமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்கென - நல்ல பூசலிலே பட்ட மேம்பட்ட வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்க
வென்று; வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் - வாளோக்கி யடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள்; வரி ஞிமிறார்க்கும் வாய் புகு கடா அத்து - வரியையுடைய தேனீ யொலிக்கும் வாயின்கண் வந்து புகுகின்ற மதத்தினையுடைய; அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானை அடு களத் தொழிய - போர்க்களத்தின்கண்ணே பட; அருஞ் சமம் ததைய நூறி பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி; பெருந் தகை பெரிய தகைமையையுடையாய்; நீ விழுப்புண்பட்ட மாறு - நீ சீரிய புண்பட்ட படியால் எ-று.

பெருந்தகாய், நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால்நின்னோடு எதிர்த்து வந்தோர் தாம் பீடின் மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு டெதிர்ப்பா ரின்மையின் முரசு முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தன ரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும்.

இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதே யன்றி வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தனராதலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர் கடத்தல் என்ன பயனுடைத்தென்றுரைப்பினு மமையும். இனி வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண் பட்டபடியாலே வாள் போர்ந் தடக்கலு முய்ந்தார். இனி நின்னோ டெதிர்ப்பா ரின்மையின் மேற் சென்ற அமர் கடத்தல் யாவதெனக் கூட்டி அதற்கேற்ப உரைப்பாருமுளர்.

தார் தாங்கலு மென்ற உம்மை இழிவு சிறப்பு. வாள் போழ்ந் தடக்கலு மென்பது நினக்குத் தொலைந்தா ரென்னும் இழிதகவே யன்றித் தமர் வாள் போழ்ந் தடக்கு மிழிவையும் உய்ந்தன ரென எச்சவும்மையாய் நின்றது.

விளக்கம்: இழும் என்றது, முழவின் முழக்கத்தைக் குறித்து நின்றது. நின் தூசிப் படைக்கே ஆற்றாது கெட்டன ரென்பார், "தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல்" மருவினர் என்றார். பகைவர் வாள்வாய்ப் படாது வெடிபட்டு ஓடி வீழ்ந்து மாண்டனர் என்பதாம். போரில் வேலும் வாளுமாகிய படையாற் பட்டோர் நோற்றவர் என்றும், ஏனை நோய் முதலியவாற்றால் இறந்தவர் நோலாதவரென்றும் பண்டையோர் கருதுவர். "நோற்றோர் மனற் தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம்.61) என்று சான்றோர் கூறுதல் காண்க. நோலாத வேந்தரைப் "பீடில் மன்னர்" என்றார். தீது - வீரர் எறியும் படையால் இறவாமல் நோயுற்று இறந்த பழி, தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து அடக்கியவழி, அப்பழி, வழி வழியாகத் தொடராது என்ப. பசும் புல் - தருப்பை. அஃது உலர்ந்த வழியும் நிறம் மாறாது நெடிதிருத்தல்பற்றி, அவ்வாறு கூறப்பட்டது. வாளாற் போழுமிடத்து, அம்மன்னர்பால் வைத்த காதல் நீங்கி விடுதலால் "காதல் மறந்து" எனல் வேண்டிற்று. வாள் போழ்ந்தடக்கல் அவரது நோலாமையை யுணர்த்துதலின் அதுவும் இழிதகவாயிற்று. இப் பீடில் மன்னர், நோலாமையால் வீரராற் படுவதுமின்றி, நோயுற்றிற வாமையால் வாள் போழ்ந் தடக்கலுமின்றி பட்டழிந்தனராதலால், "வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர்" என்றார்.

வந்தோர், மன்னரை வாள்போழ்ந் தடக்கும் அவ் விழிதகவும் பெறாது உய்ந்தனராதலின், "இனி நீ முரசம் முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது" என்பதாம். தூசிப்படை, மருங்கிலும் பின்னும் அணிவகுத்து வரும் கூழைப் படையினும் வலிகுறைந்த தாதலால், "தார் தாங்கலு" மென்ற உம்மை இழிவு சிறப்பாயிற்று.
-----------

94. அதியமான் நெடுமான் அஞ்சி

திருவோலக்கத்தின்கண் அரசர் சூழ விருப்பினும் போர்க்களத்தே படை நடுவண் இருப்பினும், ஒளவையார்க்கும் அவரொத்த, புலவர்க்கும், அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாய் இருந்துவந்தான். அவனது அவ்வொழுகலாறு மிக்க மகிழ்ச்சி தந்தமையின் அதனை யவர் இப்பாட்டின்கண், "பெரும நீ எமக்கு இனியையாய் ஒன்னாதார்க்கு இன்னா செய்பவனாய் உள்ளாய்" என்று சிறப்பித்துள்ளார்.

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும வெமக்கே மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.         (94)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: ஊர்க்குறு மாக்கள் - ஊரின்கட் சிறுபிள்ளைகள்; வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் - தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும்; பெருங் களிறு போல - பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம் அவ்வாறே; எமக்கு பெரும இனியை - எங்களுக்குப் பெருமநீ இனியை; மற்று அதன் துன்னரும் கடாஅம் போல - மற்றதனுடையஅணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம் அதுபோல; பெரும நின் ஒன்னாதோர்க்கு இன்னாய் - பெரும நின் பகைவர்க்கு இன்னாய் எ-று.

கழாஅலின் என்பதற்குக் கழுவப்படுதலா லெனினு மமையும்.

விளக்கம்: மன வுணர்வு நிரம்பாமையின், இளஞ் சிறுவர்களைக் "குறுமாக்கள்" என்றார்; "மடக்குறு மாக்களோ டோரையயரும், அடக்கமில் போழ்து" (கலி.82) என்றாற்போல. மதம் பட்ட யானை பாகர்க் கடங்காது மறலு மாதலால், அதுபற்றித் துன்னரும் கடாஅத்து நிலைமை யென்றார். பெருமைக்கும் வலிக்கும் களிறு உவமமாயிற்று. கடா அம்: ஈண்டு ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது. கழாலின் என்றதற்குக் கழுவுதல் காரணமாக என்று கூறாமல், கழுவப்படுதலால் என்று பொருள் கூறினும் பொருந்தும் என்பதாம். பெரும என இருமுறை கூறியது அவரது காதன்மை யுணர்த்தி நின்றது.
-----------

95. அதியமான் நெடுமான் அஞ்சி

தொண்டை நாட்டை யாண்ட வேந்தர்க்குத் தொண்டைமான் என்பது பெயர். அதியமான் காலத்தே தொண்டை நாட்டை யாண்ட தொண்டைமான், அதியமான்பால் பகைமை கொண்டான். தன்பால் படைவலி மிக்கிருப்பதாக, வெண்ணி, அவ்வேந்தன் செருக்குற்றான். அவனது அறியாமையை யறிந்த அதியமான், போரின் கொடுமையையும், அதன்கண் அவன் வலியிழந்து கெடுவதன் உறுதியையும், அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்கட்கும் நேரும் கேட்டையும் தெளிந்து கொள்ளுமாறு அறிவித்தற்கு ஒளவையாரை அவன்பால் தூதுவிட்டான். ஒளவையார் அவன்பாற் சென்று சேர்ந்தார். தொண்டைமான் தன் படைப்பெருமையை அவருக்குக் காட்ட வெண்ணி, அவரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று பலவேறு படைக்கலங்களைக்காட்டினான். அவன் கருத்தறிந்த ஒளவையார் அதியமான் படைக்கலங்களைப் பழிப்பது போலப் புகழ்ந்தும் தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போலப் பழித்தும்இப் பாட்டின்கட் கூறியுள்ளார்.

இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்         5
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.         (95)

திணை: பாடாண்டிணை. துறை: வாண்மங்கலம். அவன் தூது விடத்தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது.

உரை: இவ்வே - இவைதாம்; பீலியணிந்து - பீலி யணியப்பட்டு; மாலை சூட்டி - மாலை சூட்டப்பட்டு; கண் திரள் நோன் காழ் திருத்தி - உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு; நெய் அணிந்து - நெய்யிடப்பட்டு; கடி யுடைவியன் நகர - காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன; அவ்வே - அவைதாம்; பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து - பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து; கொல் துறைக்குற்றில என்றும் - கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டி லிடத்தனவாயின எந்நாளும்; உண்டாயின் பதம் கொடுத்து - செல்வ முண்டாயின் உணவு கொடுத்து; இல்லாயின் உடன் உண்ணும் - இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்; இல்லோர் ஒக்கல் தைலவன் வறியோருடய சுற்றத்திற்குத் தைலவனாகிய; அண்ணல் எம்கோமான் வ நுதி வேல் - தைலமையயுடய எம் வேந்தனுடய கூரிய நுனிையயுைடய வேல் எ-று.

பீலி யணிந் தென்ப முதலாகிய விைனயெச்சம் நான்கும் வியனகர வென்னும் குறிப்பு விைனயொடு முடிந்தன; இவற்றச் செயவெனெச்சமாகத் திரிப்பினு மைமயும். ''சிதந் கொற்றுறக் குற்றில'' வென்ப பழித்த போலப் புகழ்ந் கூறப்பட்ட. இவ வியனகர; வந்நுதி வேலாகிய அவ கொற்றுறக் குற்றிலிடத்தன வெனக் கூட்டுக. விைனக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்ட. இ கொடச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு.

விளக்கம்: அணிந், சூட்டி, திருத்தி யென்னும் செய்தெனெச்சங்கள் செயப்பட்டு விைனப்பொருளில் வந்தன. இவ், அவ் என்பவ வகரவீற்றுச் சுட்டுப்பெயர். தொண்டமானுடய படக் கொட்டிலிலிருந் கூறுதலின் அதியமான் வேற்படய ''அவ்வே'' யென்றார். கங்கு - வேலின் இலப்பகுதியத் தாங்கும் நடுவிடம். குற்றில் - குறுகிய இல், இவ வியன் நகர; அவ குற்றில என்பதாம். நகர, குற்றில வென்பன குறிப்பு விைனமுற்று.பொருள் உளதாய விடத்ப் பிறர யுண்பித்த பின்பே யுண்ணுமாறு தோன்ற, ''உண்டாயின் பதங்கொடுத்'' என்றார். இல்லோர் ஒக்கல் தலவன் - வறியோருடய சுற்றத்க்குத் தலவன்; என்றும், அவ்வறியோர் வறும தீர்க்கும் தலமப்பணி புரிதலால், ''இல்லோர் ஒக்கல் தலவன்'' என்றார். ''ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே'' (எச்ச.36) என்ப தொல்காப்பியம். இபற்றியே ''வினக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்ட'' தென்றார்.
-----------

96. அதியமான் பொகுட்டெழினி

அதியமான் நெடுமான் அஞ்சிக்கு மகனொருவன் உண்டென முன்பே கூறினாம். அவனே இப் பொகுட்டெழினி. அஞ்சியின்பால் பேரன்பு கொண்டிருந்த ஒளைவயார் ஒருகால் பொகுட்டெழினியக் கண்டார். இளமச் செவ்வி யுடயனாதலால் அவன்பால் இன்பக் குறிப்பும் மறக்குறிப்பும் மிக்கு விளங்கின. இவ வரம்பு கடந்த வழித்தீங்கு பயக்கும் என்பதனால், இவ்விரண்ைடயும் விதந் இப் பாட்டின்கண் ஒளவயார் அவைனப் பாராட்டிக் கூறியுள்ளார்.

    அலர்பூந் ம்ப யம்பகட்டு மார்பின்
    திரண்டுநீடு தடக்க யென்ன யிளயோற்
    கிரண்டெழுந் தனவாற் பகயே யொன்றே
    பூப்போ லுண்கண் பசந்ததோ ணுணுகி
    நோக்கிய மகளிர்ப் பிணித்தன் றொன்றோ         5
    விழவின் றாயினும் படுபதம் பிழயா
    மயூன் மொசித்த வொக்கலொடு றநீர்க்
    கைமான் கொள்ளு மோவென
    உறையுண் முனியுமவன் செல்லு மூரே.         (96)

திணை: அது. துறை: இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

உரை: அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின் - மலர்ந்த பூவையுடைய தும்பைக் கண்ணியை யணிந்த அழகிய வலிய மார்பினையும்; திரண்டு நீடு தடக்கை என்னை இளையோற்கு - திரண்டு நீண்ட பெரிய கையினையுமுடைய என் இறைவன் மகன் இளையோனுக்கு; பகை இரண்டெழுந்தன - பகை இரண்டு தோன்றின; பூப்போல் உண்கண் பசந்து - அவற்றுள் பூப் போலும் வடிவினையுடைய மையுண்ட கண்கள் பசப்ப; தோள் நுணுகி - தோள் மெலிய; நோக்கிய மகளிர் பிணித் தன்று - தன்னைப் பார்த்த மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின் உள்ளதாயது; ஒன்று - ஒரு பகை; அவன் செல்லும் ஊர்- அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர்; விழவின் றாயினும் -விழா இல்லையாயினும்; படுபதம் பிழையாது - உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமல்; மையூன் மொசித்த ஒக்கலொடு - செம்மறி யாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே; துறைநீர் - யாறுங் குளனு முதலாகியவற்றின் துறை நீரை; கை மான் கொள்ளும் என - அவன் யானை முகந் துண்ணு மெனக் கருதி; உறையுள் முனியும் - அவ்விடத்து உறைதலை வெறுக்கும்; ஒன்று - அவ்வெறுத்ததனா லுளதாயது ஒரு பகை ஆகப் பகை இரண்டு எ-று.

பசந்து நுணுகி யென்னும் செய்தெனெச்சங்களைச் செயவெனெச்ச மாக்கி அவற்றைப் பிணித்தன்றென்னும் வினையோட முடிக்க. ஓகாரம் அசைநிலை. இதனால் அவன் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு.

விளக்கம்: அகன்ற மார்பும் திரண்ட தோளும் நீண்ட கையும் ஆண்மக்கட்குச் சிறந்தனவாதலால், "அம்பகட்டு மார்பின் திரண்டு நீடு தடக்கை" யென்றார். பசந் தென்பது பசப்ப வெனத் திரிக்கப்பட்டது. பிணித்தலால் உளதாகும் பயன் துனி கூர்தலாதலால், பிணித்தன் றென்பதற்கு, "பிணித்ததனால்....உள்ளதாயது" என்றார். படையெடுத்துச் சென்று முற்றுதலை, "எடுத்துவிட்டுச் சென்றிருக்கும்" என்றார். மொசித்தல் - உண்டல். கைம்மான் என வரற்பாலது எதுகை நோக்கிக் கைமான் என வந்தது. கைம்மான், கைம்மா வெனவும் வரும்; இது யானைக்குரியது. இளமைச் செவ்வியும் மெய் வன்மையும் உடையனாதலின், இவற்றால் இன்பச் சிறப்பையும் வென்றிச் சிறப்பையும் பகையாகக் கூறியது இன்ப மிகுதி கழிகாமமாய்ப் பகைவர்க் கெளிமையும், மற்றதன் மிகுதி குடியஞ்சும் கோலுடைமையுமாய்த் தீது பயக்குமென்றற்கு. இவன்பால் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் விளங்குவவாயின.
----------

97. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறைசெலுத்தற்குரிய வேந்தர்சிலர் அதனைச் செலுத்தாது போர்க்குச் சமைந்திருப்பதை ஒளவையார் அறிந்தார். அவர்கட்கு உண்மை யறிவித்தற்கும், அதுவே வாயிலாக அதியமானைப் பாராட்டுதற்கும் எண்ணி, இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், "நெடுமான் அஞ்சி யேந்திய வாள் போரில் உழந்து உருவிழந்துள்ளது; வேல் மடை கலங்கி நிலை திரிந்துளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந்துள்ளன; குதிரைகள் போர்க்களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை யேந்தியுள்ளான்;இவற்றால் இவனைப் பகைத்துப் பொரக் கருதியவர் உய்ந்து போதல் இல்லை; ஆதலால், உங்கள் மூதூர் உங்கட்கு உரித்தாகல் வேண்டின், அவனுக்குரிய திறையைச் செலுத்தி யுய்மின்; மறுப்பீராயின், அவன் ஒருகாலும் பொறான்; யான் சொல்லு மிதனைக் கேளீராயின்; உங்களுடைய உரிமை மகளிர் தோளைப் பிரிந்து மடிதல் திண்ணம்; இதனை யறிந்து போர்செய்தற்கு நினைமின்" என்று பாடியுள்ளார்.

    போர்க்குரைஇப் புகன்று கழித்தவாள்
    உடன்றவர்காப் புடைமதிலழித்தலின்
    ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே
    வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர்
    நறுங்கள்ளி னாடுநைத்தலிற்         5
    சுரைதழீஇய விருங்காழொடு
    மடைகலங்கி நிலைதிரிந்தனவே
    களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர்
    குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற்
    பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே         10
    மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர்
    பொலம்பைந்தார் கெடப்பரிதலிற்
    களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே
    அவன்றானும், நிலத்திரைக்குங் கடற்றானைப்
    பொலந்தும்பைக் கழற்பாண்டிற்         15
    கணைபொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட்
    பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர்
    நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற்
    கிறுக்கல் வேண்டுந் திறையே மருப்பின்         20
    ஒல்வா னல்லன் வெம்போ ரானெனச்
    சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற்
    கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே.         (97)

திணையும் துறையு மவை. அதியமா னெடுமான் அஞ்சியை அவர்பாடியது.

உரை: போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள் - போரைச் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி விரும்பி உறை கழித்த வாள்கள்தாம்; உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின் - பகைத்தவரது காவலையுடைய அரணை யழித்தலால்; ஊன் உற மூழ்கிஉரு இழந்தன - அவர் தசையின்கண்ணே உறக்குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன; வேல் - அவன் வேல்கள்தாம்; குறும்பு அடைந்த அரண் கடந்து - குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று; அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின் - அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை யழித்தலால்; சுரை தழீஇய இருங் காழொடு - சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே; மடை கலங்கி நிலை திரிந்தன - ஆணி கலங்கி நிலைகெட்டன; களிறு - அவன் களிறுதாம்; எழூஉத் தாங்கிய கதவு மலைத்து - கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது; அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின் - அப்பகைவரது திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால்; பரூஉப் பிணிய தொடி கழிந்தன - பரிய பிணித்தலை யுடையவாகிய கிம்புரிகள் கழன்றன; மா - அவன் குதிரைதாம்; பரந்து- பரந்து வந்து; ஒருங்கு மலைந்தவர் - ஒக்கப் பொருத வீரரது; பொலம் பைந்தார் கெட - பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழிய; பரிதலின் - ஓடுதலால்; களன் உழந்து அசைஇய மறுக் குறும்பின - போர்க்களத்தின்கட் பொருது வருந்திய குருதியான் மறுப்பட்ட குளம்பை யுடையவாயின; அவன் தானும்-; நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கும் கடல்போன்ற படையுடனே; பொலந் தும்பை - பொன்னானியன்ற தும்பைக் கண்ணியையுடைய; கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன் - கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்பு படுதலால் துளைபட்ட பரிசையை யுடையன்; ஆயிடை - அவ்விடத்து; உடன்றோர் உய்தல் யாவது - அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது; தடந்தாள் பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர் - பெரிய தாளினையும் ஒன்றோடொன்று தெற்றிக் கிடக்கின்ற கதிரினையு முடைத்தாகிய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழைய வூர்; நுமக்கு உரித்தாகல் வேண்டின் நுங்கட்கு உரித்தாக வேண்டுவிராயின்; சென்று அவற்குத் திறை இறுக்கல் வேண்டும் - போய் அவனுக்குத் திறை கொடுத்தல் வேண்டும்; மறுப்பின் - கொடீராயின்; ஒல்வான் அல்லன் வெல் போரான் என - அதற்குடம்படுவா னல்லன் வெல்லும் பூசலையுடையான் என்று; சொல்லவும் தேறீராயின் - யான் சொல்லவும் தெளியீராயின்; மெல்லியல் கழல் கனி வகுத்த - நுமக்கு மெல்லிய தன்மையையும் கழல் மணியினது கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட; துணைச் சில் ஓதி - இனமாகிய சிலவாகிய பனிச்சையையும்; குறுந்தொடி மகளிர் - குறிய வளையையுமுடைய உரிமை மகளிரது; தோள் விடல் இறும்பூ தன்று - தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று; அஃது அறிந்து ஆடுமின் - அதனை யறிந்து போர் செய்ம்மின்
எ-று.

அறிந்தாடுமின் என்ற கருத்து, அறியிற்போர் செய்தல் அரிதென்பதாம்.குறும்பு, சிற்றரண். கடற் றானையினையும் பொலந்தும்பையினையுமுடைய அவன் றானு மென்க.

விளக்கம்: உரைஇ - உலாவி "ஒன்றார் தேயப்பூ மலைந் துரைஇ" (பதிற்.40) என்றாற்போல. கதுவாய் போய் - மிகவும் வடுப்பட்டு. நைத்தல் - அழித்தல்; நைவித்தல் என வந்ததெனினுமாம். உள்ளே புழையுண்டாகச் செய்து அதன்கண்ணே காம்பைச் செருகி ஆணியிட்டு முடுக்கி வைத்தல் இயல்பு. குழூஉக்களிற்றுக் குறும்பு - குழுமியிருக்கும் யானைத்திரள் அரண் போறலின், களிற்றுக் குறும்பெனப்பட்டது. தொடி, ஈண்டுக் கிம்புரி மேற்று. தார்: ஆகுபெயரால் மார்பைக் குறித்தது. அசைவு - வருத்தம். நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கிக் கொள்ளும் கடல் போலும் தானை. கழல் பாண்டில் கணை - கழல் வடிவாகவும் பாண்டில் வடிவாகவும் வாயமைக்கப்பட்ட அம்பு. பரிசை - கேடயம். பிணிக் கதிர் - ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் கதிர்கள். செம்மல் - தலைமை. மறுப்பாவது - கொடாமையாதலின், மறுப்பின் என்பதற்குக் "கொடீராயின்" என்றார். பனிச்சை - தலைமயிரை முடிக்கும் ஐவகையுள் ஒன்று. தோள் விடல் - தோளைப் பிரிந்துறைதல். "எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்." (தொல். பொ. கற்பு: 34) என்பவாகலின், போரிடத்தே மகளிரைப் பிரிந்து போந்து நெடிது தங்கி உயிரிழப்பது உறுதியாதல் குறித்துத் "தோள் விடல்" என்றா ரென்றுமாம்.
-----------

98. அதியமான் நெடுமான் அஞ்சி

தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த அதியமானுக்கும் கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகைமையுண்டாயிற்று. பகைமை முதிரவே அதியமான் பெரும் படையுடன் கோவலூரை நோக்கிச் செல்லத் தலைப்பட்டான். இடைநிலத்து வாழ்ந்து வந்த சிற்றரசர் அதியமான் படையினைக் கண்டு அஞ்சி அலமரலாயினர். ஒளவையார், இந்நிகழ்ச்சிகளைக்கண்டு, "இனி இவனுடன் போரெதிர்ந்து நிற்கும் வேந்தரதுநாடு என்னாகுமோ?" என்று நினைந்து இப்பாட்டின் கண், வேந்தே, நின் யானைப்படை செல்லக் கண்ட வேந்தர் தத்தம் மதில் வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக் கதவுகளை நிறுத்திப் புதிய கணைய மரங்களை யமைக்கின்றனர்; குதிரைப் படையைக் கண்டவர் காவற்காட்டின் வாயில்களைக் கவைத்த வேல் முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம் கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நீட்டும் செறிக்கின்றனர்; மறவரது பெரும் படை கண்டவர் தம்தம் தூணிகளில் அம்பை யடக்கிக் கொள்கின்றனர்; நீயோ கூற்றத்தனையை; இனி நின் பகைவரது வயல் வளம் சிறந்த நாடு அவர் மனம் வருந்தி யிரங்குமாறு கெடுவது திண்ணம்" என இவன் படைச் சிறப்பும் பகைவர் நாட்டழிவு குறித்த இரக்கமும் தோன்றப் பாடியுள்ளார்.


    முனைத்தெவ்வர் முரணவியப்
    பொரக்குறுகிய நுதிமருப்பினின்
    இனக்களிறு செலக்கண்டவர்
    மதிற்கதவ மெழுச்செல்லவும்
    பிணனழுங்கக் களனுழக்கிச்         5
    செலவசைஇய மறுக்குளம்பினின்
    இனநன்மாச் செலக்கண்டவர்
    கவைமுள்ளிற் புழையடைப்பவும்
    மார்புறச் சேர்ந்தொல்காத்
    தோல்செறிப்பினின் வேல்கண்டவர்         10
    தோல்கழியொடு பிடி செறிப்பவும்
    வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
    மறமைந்தர் மைந்துகண்டவர்
    புண்படுகுருதி யம்பொடுக்கவும்
    நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென         15
    உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்
    கூற்றத் தனையை யாகலிற் போற்றார்
    இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்
    திறங்குகதி ரலம்வரு கழனிப்
    பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே.         (98)

திணை: வாகை. துறை: அரசவாகை. திணை வஞ்சியும், துறை: கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது.

உரை: முனைத் தெவ்வர் முரண் அவிய - போர் முனைக் கண் பகைவரது மாறுபாடு அடங்க; பொரக்குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு - பொருதலால் தேய்ந்து குறைந்த நுனையுடைத்தாகிய கோட்டையுடைய நினது இனமாகிய யானை; செலக் கண்டவர் - போகக் கண்ட பகைவர்; மதிற் கதவம் எழுச் செல்லவும் - தமது மதில்வாயிற் கதவங்களும் கணய மரங்களும் புதியனவாக இடுதற்குப் பழயன போக்கவும்; பிணன் அழுங்கக் களன் உழக்கி - பட்டோர பிணம் உருவழியப் போர்க்களத்த யுழக்கி; செலவு அசஇய மறுக் குளம்பின் நின் இனமா செலக் கண்டவர் - செல்லுதலால் வருந்திய குருதிக்கற பொருந்திய குளம்பயுடய நின இனமாகிய நல்ல குதிர போகக்கண்ட அப் பகவர் தாம்; கவ முள்ளின் புழ அடப்பவும் - கவத்த வேல முள்ளால் காட்டு வாயில்கள யடப்பவும்; மார்புறச் சேர்ந் ஒல்கா - நின் பகவர மார்பின்கண் எறிந்த வழி ஆண்டுத் தத் நில்லா உருவிப் போன; தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் - உறயின்கட் செறித்தல் இல்லாத நின் வேலக் கண்ட பகவர்; தோல் கழியொடு பிடி செறிப்பவும் - தம கிடுகக் காம்புடனே கந்நீட்டுச் செறிக்கவும்; வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மந்தர் - வாள் வாய்க்கத் தத்த வடுப்பரந்த நின்னுடய மறத்தயுடய வீரர; மந் கண்டவர் - வலியக் கண்ட அப் பகவர்; புண் படு குருதி யம்பொடுக்கவும் - புண் பட்ட குருதியயுடய அம்பத் தூணியகத் தடக்கிக்கொள்ளவும்; நீயே - நீதான்; ஐயவி புகப்பவும் தாங்கா - வெண் சிறு கடுகக் காவலாகப் புகப்பவும் தரியா; ஒய்யென உறுமுற மரபின் - விரய வந் பொருந்தல் முறமய யுடய இயல்பின்; புற நின்று உய்க்கும் - புறத்தே நின்று உயிரக் கொடுபோம்; கூற்றத் அனய - கூற்றத்த யொப்ப; ஆகலின் - ஆதலால்; போற்றார் இரங்க விளிவ கொல்லோ - பகவர் இரங்கக் கெடுவ கொல்லோ; வரம்பு அணந் இரங்கு கதிர் அலம் வரு கழனி - வரம்பச் சேர்ந் வளயும் நெற்கதிர் சுழலும் கழனியொடு; பெரும் புனல் படப்ப - மிக்க நீர்ப்பக்கத்தயுடய; அவர் அகன்றல நாடு அவர அகன்ற இடத்தயுடய நாடு எ-று.

செலவு மென்ப முதலாய செயவெனெச்சங்கள் கூற்றத்தனய யென்னும் வினக்குறிப்போடு முடிந்தன. நீ கூற்றத்தனய யாதலின் போற்றார் நாடு அவர் இரங்க விளிவகொல் லெனக் கூட்டுக. கொல்லும் ஓவும் அசநில.

விளக்கம்: செல்லவும், அடப்பவும், செறிப்பவும், ஒடுக்கவும், புகப்பவும் கூற்றத்தனயயாயின என முடிதலின் ''செல்லவு..... முடிந்தன'' என்றார். யானக்கோடு நெடிதாயிருப்ப குறுகியதற்குக் காரணம் கூறுவார். ''பொரக் குறுகிய'' என்றார். கதவம் எழுச்செல்லவும் என்ற, கணய மரத்தப் புக்குதல் குறித் நின்ற. குதிரகள் விரந்தோடு மிடத்ப் பிணங்களின் குருதி வழுக்குதலால் அவ வருந்வ பற்றி, ''செலவு அசஇய'' என்றார். கவ முள் - வேலமுள். தோல் செறிப்பு - தோலாலாகிய உறயில் இடப்படுதல். தோல் - கேடயம். பிடி - கைப்பிடியாகிய காம்பு; இது கைந்நீட்டு எனப்பட்டது. படையெடாதவழி, பகைவர் பொருதலைச் செய்யாராதலால், "அம்பு ஒடுக்கவும்" என்றார். புறத்தே நின்று உயிரைக் கொண்டுபோதல் கூற்றுவற்கு இயல்பு. அலம் வரு கழனி - சுழலும் கழனி. அலம் வருதல், அலமருதல் போலச் சுழற்சிப் பொருளது.
-----------

99. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் அரசு கட்டி லேறியதும், தனக்கு முன்னோருடைய சிறப்பெல்லாம் தான் எய்தினான்; எழு பொறி யமைந்த இலாஞ்சனை பெற்றான்; தன்னோடு பொர வந்த அரசர் எழுவரை வென்றான். இவ்வாறு பெருஞ் சிறப்பெய்தியும் அமையாது கோவலூர்மேற் படையெடுத்துச் சென்று அதற்குரிய வேந்தனை வென்று வாகை சூடினான். அக்காலை அதனை யறிந்த ஆசிரியர் பரணர் அவனுடைய போர் வென்றியை அழகொழுகும் தமிழாற் பாடினார். ஒளவையாரும் இப் பாட்டின்கண் இச்செய்தி முற்றவும் தோன்றப் பாடியுள்ளார்.

    அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
    அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
    நீரக விருக்கை யாழி சூட்டிய
    தொன்னிலை மரபினின் முன்னோர் போல
    ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற்         5
    பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
    எழுபொறி நாட்டத் தெழா அத் தாயம்
    வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
    டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
    சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய         10
    அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
    பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
    முரண்மிகு கோவலூர் நூறிநின்
    அரண்டு திகிரி யேந்திய தோளே.         (99)

திணையும் துறையும் அவை. அவன் கோலலூ ரெறிந்தானை அவர் பாடியது.

உரை: அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் - தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்களுக்கு வேள்விக்கண் ஆவுதியை யருந்துவித்தும்; அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்; நீரக விருக்கை - கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே; ஆழி சூட்டிய - சக்கரத்தை நடாத்திய; தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல - பழைய நிலைமை பொருந்திய முறைமையையுடைய நின் குடியிற் பழையோரை யொப்ப; ஈகையங் கழற்கால் - பொன்னாற் செய்யப்பட்ட வீரக் கழல் புனைந்த காலினையும்; இரும் பனம் புடையல் - பெரிய பனந் தோடாகிய தாரினையும்; பூவார் காவின் - பூ நிறைந்த காவினையும்; புனிற்றுப் புலால் நெடு வேல் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய; எழு பொறி - ஏழிலாஞ்சனையும்; நாட்டத்து எழாஅத் தாயம் - நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையை; வழுவின்று எய்தியும் அமையாய் - தப்பின்றாகப் பெற்றும் அமையாய்; செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - போரை விரும்பி யொலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து; சென்று மேற்சென்று; அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் - போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த அற்றை நாளும்; பாடுநர்க்கு அரியை - பாடுவர்க்குப் பாட அரியை; இன்றும் பரணன் பாடினன் - இற்றை நாளும் பரணன் பாடினன்; நீ முரண் மிகு கோவலூர் நூறி - நீ மாறுபாடு மிக்க கோவலூரை யழித்து வென்று; அரண் அடு திகிரி ஏந்திய தோள் - பிறவும் அரண்களை யழிக்கின்ற ஆழியைத் தாங்கிய தோளை எ-று.

இன்றும் பரணன் பாடின னென்றது, அவனும் தன் பெருமையாற் பாடினான்; பிறராற் பாடப்படுத லரிதென்றதாம். நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை; திகிரி யேந்திய தோளை இன்றும் பரணன் பாடினன் எனக் கூட்டுக. கழற் காலையும் புடையலையும் காவையும் வேலையுமுடைய நின் முன்னோர் போலத் தாயமெய்தியும் அமையா யெனமாறிக் கூட்டுக. நாடுதல் - ஆய்தல். மூவரொடு முரணியென்றும் முரணடு திகிரி யென்றும் பாடம். கொல்: ஐயம் மன்; அசைநிலை. பூவார் கா - வானோர் இவன் முன்னோர்க்கு வரம் கொடுத்தற்கு வந்திருந்ததொருகா. இவனுக்குப் பனந்தார் கூறியது, சேரமாற்கு உறவாதலின்.எழுபொறி நாட்டமென்பதற்கு ஏழரசர் நாடுங் கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று நன்மையும் தீமையு மாராய்தலெனினு மமையும்.

விளக்கம்: அருத்துதல் - உண்பித்தல். இவண் தந்தெனவே, கரும்பு இருந்த விடம் அவணாகிய விண்ணுலக மெனப்பட்டது. வழிமுறை தொடர்பறாது வருதல்பற்றித் "தொன்னிலை மரபு" என்றார். ஈகை - பொன். புடையல் மாலை. நாடோறும் பகைரைக் குத்திக் குருதிக் கறை தோய்ந்து புலால் நாறுதலால், "புனிற்றுப் புலால் நெடுவேல்" என்றார். அரணடு திகிரி யென்புழித் திகிரி யென்றது, ஆழிப்படை போலும். எழு பொறி யென்றது, ஏழ்வகை இலாஞ்சனையை; அவை. கேழல் மேழி கலை ஆளி வீணை சிலை கெண்டை" (கலிங். கடவுள்.18) என்பன.
--------

100. அதியமான் நெடுமான் அஞ்சி


குடிக்குரிய முதன்மகன் பிறந்த காலத்தில், பிறந்த சின்னாட் கழித்துத் தந்தை போர்க்குரிய உடை உடுத்துச் சான்றோர் சூழச் சென்று அம்மகனைக் காண்டல் பண்டைத் தமிழர் மரபு; உலகிற்பிறந்த மகன், முதன்முதல் தன் தந்தையைக் காணுமிடத்து அவன் நெஞ்சில் போர்க்கோலமும் போர்மறமும் நன்கு பதிய வெண்டுமென்பது கருத்து; அக் காலநிலை போர்மறவரையே பெரிதும் வேண்டியிருந்தது. அதியமானுக்கு முதன் மகனாகிய பொகுட்டெழினி பிறந்த சின்னாட்குப் பின் அதியமான் அவனைக் காணச் சென்றான். அக்காலை ஒளவையார் அங்கே இருந்தார். அவர் அதியமானது போர்க்குரிய மறநிலையைத் தாம் குறைவறக் கண்ட காட்சியை இப்பாட்டின் கண் விளங்கக் கூறியுள்ளார்.

    கையது வேலே காலன புனைகழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
    வட்கர் போகிய வளரிளம் போந்தை
    உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு
    வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்         5
    சுரியிரும் பித்தை பொலியச் சூடி
    வரிவயம் பொருத வயக்களிறு போல
    இன்னு மாறாது சினனே யன்னோ
    உய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே
    செறுவர் நோக்கிய கண்டன்
    சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே.         (100)

திணையுந் துறையு மவை. அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

உரை: கையது வேலே - கையின் கண்ணது வேலே; காலன புனை கழல் - காலின் கண்ண அணிந்த வீரக் கழல்; மெய்யது வியர் - உடம்பின் கண்ணது வேர்ப்பு; மிடற்றது பசும்புண் - மிடற்றின் கண்ணது ஈரம் புலராத பசிய புண்; வட்கர் போகிய வளர் இளம் போந்தை - பகைவர் தொலைதற் கேதுவாகிய வளரும் இளைய பனையினது; உச்சிக் கொண்ட - உச்சிக் கண்ணே வாங்கிக் கொள்ளப்பட்ட; ஊசி வெண் தோட்டு - ஊசித்தன்மையைப் பொருந்திய வெளிய தோட்டையும்; வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ - வெட்சியினது பெரிய மலரையும் வேங்கைப் பூவுடனே விரவி; சுரி இரும் பித்தை பொலியச் சூடி - சுருண்ட கரிய மயிர் பொலிவுபெறச் சூடி; வரிவயம் பொருத வயக் களிறு போல - புலியொடு பொருத வலிய யானையை யொப்ப; இன்னும் மாறாது சினன் - இன்னமும் நீங்காது சினம் ஆதலால்; அன்னோ - ஐயோ; உய்ந்தனர் அல்லர் - பிழைத்தாரல்லர்; இவன் உடற்றியோர் - இவனைச் சினப்பித்தவர்கள்; செறுவர் நோக்கிய கண் - பகைவரை வெகுண்டு பார்த்த கண்; தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனா - தன்னுடைய புல்வனைப் பார்த்தும் சிவப்பமையா வாயின எ-று.

காலன புனைகழ லென்பது, வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்த்தோறும் வென்றுகட்டின வெனவுமாம். உம்மை: சிறப்பு. தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச் செறுவர் நோக்கிய கண் சிறுவனை நோக்கியும் சிவப்பானா; ஆதலால், அன்னோ, இவனுடற்றியோர் உய்ந்தன ரல்லரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வட்கா ரென்பது வட்கரெனக் குறுகிநின்றது; வட்கர் - குற்ற மெனினுமமையும்.

விளக்கம்: நன்கு ஆறாத புண், பசும் புண் என்றும் ஈரம் புலராத பசும் புண் என்றும் கூறப்பட்டது. சுரிதல் - சுருளுதல். வரி வயம் - வரிகளையுடைய புலி. போர்க்கோலம் கண்டு கூறுதலின், "உய்ந்தனரல்லர் இவன் உடற்றியோர்" என்றார். சிறுவரைக் காணின் செறுநரும் விழைவர்; இவன் மறம் அவரினும் மிக்க தென்பார், "சிறுவனை நோக்கியும் சிவப்பானா" வென்றார்; "செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்" (அகம்:66) எனப் பிறரும் கூறுதல் காண்க.


101. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒருகால், ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிப் பாடிச் சென்றார். அவன் அவர்பால் மிக்க விருப்பும் மதிப்பு முடையனாதலால் விரும்பியவுடனே அவர்க்கு அதனை நல்காது சிறிது தாழ்த்தனன். ஆகவே, அவர்க்கு நெஞ்சில் வருத்தம் சிறிது தோன்றிற்று. ஆயினும். அவர் அவனது மனப்பண்பை நன்கறிந்திருத்தலின் நெஞ்சிற்குக் கூறுவாராய், "நெஞ்சே! வருந்த வேண்டா; அதியமானது பரிசிலைப் பெறும் காலம் நீட்டினும் நீட்டியாதாயினும், யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல நம் கையகத்ததென்றே கொள்; இது பொய்யாகாது"எனத் தெருட்டும் கருத்தால் இப்பாட்டைப் பாடியிருக்கிறார்.

    ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
    பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
    தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
    அணிபூ ணணிந்த யானை யியறேர்
    அதியமான் பரிசில் பெறூஉங் காலம்         5
    நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
    கோட்டிடை வைத்த கவளம் போலக்
    கையகத் ததுவது பொய்யா காதே
    அருந்தே மாந்த நெஞ்சம்
    வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. 10         (101)

திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.

உரை: ஒருநாள் செல்லலம் - யாம் ஒருநாட் செல்லேம்; இரு நாள் செல்லலம் - இரண்டுநாட் செல்லேம்; பல நாள் பயின்று பலரொடு செல்லினும் - பலநாளும் பயின்று பலரோடு கூடச்செல்லினும்; தலை நாள் போன்ற விருப்பினன் - முதற் சென்ற நாள் போன்ற விருப்பத்தை யுடையன்; அணி பூண் அணிந்த யானை - அணிகல மணிந்த யானையையும்; இயல்தேர் அதியமான் - இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் - பரிசில் பெறுங் காலை; நீட்டினும் நீட்டா தாயினும் - நீட்டிப்பினும் நீட்டியா தொழியினும்; யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல - யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்ட கவளம் போல; கையகத்தது - நமது கையகத்தது அப் பரிசில்; அது பொய்யாகாது - அது தப்பாது; அருந்த ஏமாந்த நெஞ்சம் - உண்ணஆசைப்பட்ட நெஞ்சே; வருந்த வேண்டா - நீ பரிசிற்கு வருந்த வேண்டா; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்வதாக எ-று. அதியமான் விருப்பின னென முன்னே கூட்டுக. கோட்டிடை வைத்த கவளம் போல என்றதற்கு, யானை வாயிற்கொண்டு நுகரு மளவும் கோட்டிடை வைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது என்க; அன்றிக் களிறு கோட்டிடை வைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும், அஃது அதற்குத் தப்பாதவாறு போலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும், நமக்குத் தருதல் தப்பாது என்பதாக்கி யுரைப்பினு மமையும். தாளை முயற்சி யென்பாரு முளர். அருந்த வென்பது அருந்தெனக் கடை குறைக்கப்பட்டது. அருந்து என முன்னிலையாக்கி யுரைப்பினுமமையும்.

விளக்கம்: ஒரு நாள் இருநாள் அல்ல; பன்னெடு நாட்கள் தனித்துச் செல்வதின்றிப் பலரோடு கூடிப் பன்முறையும் சென்றபோதும் தலைநாளில் வரவேற்று வேண்டுவன அளித்ததுபோலவே நல்குவன் என அதியமானது கொடை நலத்தைப் பாராட்டியது இப்பாட்டு. தலை நாள் - முதல் நாள்; "தண்டாக் காதலும் தலைநாட்போன்மே"(அகம்.332) என்று பிறரும் கூறுப. கொடை யெதிர்வார் கொடைப் பொருளைப் பெறுதற்குத் தாழ்த்தால் தாழ்க்கலாமே யன்றி, அதியமான் கொடுத்தலில் தாழ்ப்பதிலன் என்பது தோன்ற, "பரிசில் தரூஉங் கால"மென்னாது, "பெறூஉங் கால"மென்றார். யானை கோட்டிடை வைத்த கவளம் அதன் வாய்ப்படுதலில் தவறாது; அது போல அவனது கொடையினைப் பெறுதல் தவறாது என்றதற்கு, "யானை தன ் கோட்டிடை வைத்த கவளம் போலக், கையகத் ததுவது பொய்யா காதே" யென்றார். இதற்குக் காட்டப்பட்ட பிற பொருள்கள் உரையிற் கூறியதுபோல அத்துணைச் சிறப்பிலவாகலின், "உரைப்பினு மமையு"மென்றொழிந்தார். அருந்த ஏமாந்த வென்புழிப் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இக் கருத்தையே, உரைகாரர், "அருந்த வென்பது அருந்தெனக் கடைக் குறைக்கப்பட்ட"தென்றார். ஏமாந்த நெஞ்சே, நீ அருந்துவாயாக என்று பொருள்பட, "முன்னிலை யேவலாக்கி யுரைப்பினு மமையும்"என்றார். ஏமாத்தல். ஆசைப்படுதல்; "காமர் நெஞ்ச மேமாந் துவப்ப"(புறம்.198) எனப் பிறரும் இப்பொருளில் வழங்குதல் காண்க. நெஞ்சம்: அண்மை விளி. வாழ்க அவன் என்பது, வாழ்கவன் என வந்தது. அருள்புரியுந் தக்கோரை, அவர் அருள் பெற்றோரும் பெற விழைவோரும் வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்தும் மரபு கருதி, "வாழ்கவன் தாளே"என்றார். பிறாண்டும் இவ்வாறே "வாழ்கவன் தாளே"(புறம்.103) என வாழ்த்துதல்
காண்க.
------------

102. பொகுட்டெழினி

அதியமான் நெடுமானஞ்சியின் மகனான இப் பொகுட்டெழினி தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி புரிகையில், ஒளவையார் அவனைக் காணச் சென்றார். இவன் தன் குடிகட்கு உற்றுழி யுதவும் பேருள்ளமுமு் நிறைந்த கல்வியறிவு முடையவனாய் விளங்குவது கண்டு, அவர், மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் கொண்டு, இப் பாட்டின்கண், "நெடியோய், நாணிறை மதிபோல் நீ விளங்குதலால், நின் நிழற்கண் வாழ்வார்க்குத் துன்ப மென்பதில்லையாம்" என்று பாராட்டியுள்ளார்.

    எருதே யிளைய நுகமுண ராவே
    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
    அவலிழியினு மிசையேறினும்
    அவண தறியுநர் யாரென வுமணர்
    கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன         5
    இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
    நாணிறை மதியத் தனையையிருள்
    யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே.        (102)

திணை: அது. துறை: இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

உரை: எருது இளைய - எருதுகள் இளைய தாம்; நுகம் உணரா - நுகம் பூண்டலை யறியா; சகடம் பண்டம் பெரிது பெய்தன்று - சகடந்தான் பண்டம் பெரியதாக இடப்பட்டது; அவல் இழியினும் மிசை ஏறினும் - ஆதலால் அது, பள்ளத்தே யிழியினும் மேட்டிலே யேறினும்; அவணது அறியுநர் யார் என - அவ்விடத்து வரும் இடையூறறிவார் யார்தான் என்று நினைந்து; உமணர் - உப்பு வாணிகர்; கீழ் மரத்து யாத்த சேம அச்சன்ன - அச்சுமரத்தின் கண்ணே யடுத்துக் கட்டப்பட்ட சேம வச்சுப் போன்ற; இசை விளங்குகவிகை நெடியோய் - புகழ் விளங்கிய இடக் கவிழ்ந்த கையையுடையஉயர்ந்தோய்; திங்கள் நாள் நிறை மதியத் தனையை - நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது - ஆதலின், நின் நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது? எ-று.

திங்கள் நாள் நிறை மதியத் தனையை யென்றது, அறிவும் நிறையும் அளுரு முதலாகிய குணங்களா லமைந்தா யென்றவாறாம். சேம வச்சன்ன வென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சு முறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறுற்றால் அது நீக்கிக் காத்தற்குரியை யென்பதாம். ‘எருதே இளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே’ யென்பது உவமங் கருதாது, சகடத்திற்கு வரும் ஏதம் குறித்து, உமணர் சேமவச்சு யாத்தற்குக் காரணமாய் நின்றது.

விளக்கம்: "எருது இளையவாகலின் நுக முணரா; பண்டம் மிகப் பெய்யப் பெற்றுளது; அவண் நிகழ்வதனை யாவர் அறிகுவ"ரென்பது உமணர் தம்முட் கருதிக் கூறும் கூற்று. இக்கருத்து உமணர் சேமவச்சு யாத்துக் கோடற்கு ஏதுவாய் நிற்றலின், உரைகாரர், "எருதே.........காரணமாய் நின்றது"என்றார். கீழ் மரம், அச்சு மரம். "இசை விளங்கு நெடியோய்"என்பவர், பொகுட்டெழினியின் கொடை நலம் தோன்றுதற்குக் "கவி கை நெடியோய்"என்று சிறப்பித்தார். "அரம்பையின் கீழ்க் கன்றும் கனி யுதவும்"என்று கூறும் நன்னெறிக்கு இவன் தக்க சான்றாதல் இதனால் விளக்கமுறும். அவல், பள்ளம்; மிசை. மேடு அவண் உறும் இடையூற்றிணை "அவணது"என்றார். உறுவது அறிபவர் அரியராதலின், "அறியுநர் யார்"என்றார். நாள் நிறை மதியம் - நாடோறும் வளர்ந்து நிறையும் முழுத் திங்கள். கலை நிரம்பிய திங்களை மதியமென வழங்குப. முழுத் திங்கள் தண்ணிய நிலவை மிகப் பொழிந்து இருளைப் போக்குதலின், "இருள் யாவணது"என்றார். முழுத் திங்களை அவற் குவமை கூறினமையின், அவன் செய்யும் அருள் தண்ணிலவும் அவன் தாணிழலில் வாழ்வார்க் கெய்தும் துன்பம் இருளுமாயின. கீழ்மரத் தச் சிருப்பவும் சேமவச்சுக் கொண்டது கூறியதனால், அதியமானஞ்சி யிருப்பவும், பொகுட்டெழினி அவற்குத் துணையாய் இருந்தானென்பது தெள்ளிதாம்.
----------

103. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு சுரத்தில் தன் சுற்றத்தோடு போந்து தங்கியிருந்த விறலி யொருத்தியைக் கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து, "கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?" என ஏங்கியிருப்பது கண்டு, "சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி யுள்ளான்; அவன்பாற் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப வுடையன்; அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க"என, இதனால் ஆற்றுப்படுத்துள்ளார்.

    ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத்
    தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
    கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
    சுரனமுத லிருந்த சில்வளை விறலி
    செல்வை யாயிற் சேணோ னல்லன்         5
    முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
    மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
    பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
    பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
    மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப         10
    அலத்தற் காலை யாயினும்
    புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே.         (103)

திணை: அது. துறை: விறலியாற்றுப்படை. அதியமானெடுமானஞ்சியை அவர் பாடியது.

உரை: ஒரு தலை பதலை தூங்க - காவினது ஒருதலைக் கண்ணே பதலை தூங்க; ஒரு தலை - ஒரு தலைக்கண்ணே; தூம்பகச் சிறு முழாத் தூங்கத் தூங்கி - துளையை யகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும் பரிசு தூக்கி; கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என - இடுவோ ரின்மையின் ஏலாது கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்த்த வல்லார் யார் எனச் சொல்லி; சுரன் முதல் இருந்த சில் வளை விறலி - சுரத்திடத்தே யிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி; செல்வை யாயின் - நீ அவன்பாற் போவையாயின்; சேணோன் அல்லன் - அவன் சேய்மைக்கண்ணானல்லன்; முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை - முனைப் புலத்தைச் சுடுதலா னெழுந்த இருட்சியையுடைய கரிய புகை; மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும்; பகைப்புலத்தோன் - பகைவர் தேயத் திருந்தான்; பல்வேல் அஞ்சி - பல வேற்படையையுடைய அதியமான்; பொழுது இடைப் படாஅ - ஒருபொழுதும் ஓயாமல்; புலரா மண்டை - உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை; மெழுகு மெல்லடையின் கொழு நிணம் பெருப்ப - மெழுகான் இயன்ற மெல்லிய அடை போலக் கொழுத்த நிணம் மிக; அலத்தற் காலை யாயினும் - உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும்; புரத்தல் வல்லன் - பாதுகாத்தலை வல்லன்; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்க எ-று.

பதலை யென்பது ஒருதலை முகமுடைய தொரு தோற்கருவி. பகைப்புலத்தோ னென்ற கருத்து, பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டிய வெல்லாந் தருதல் அவனுக்கெளி தென்பதாம். உம்மை: சிறப்பு. சேணோ னல்ல னென்பதற்குப் பரிசில் நீட்டிபானல்லன் என்று உரைப்பினு மமையும்.

விளக்கம்: காவடியின் ஒருபுறம் பதலையும் ஒருபுறம் சிறுமுழாவும் சம எடைபடத் தொங்கவிட்டாலன்றிக் காவிச் செல்ல முடியாதாகலின், "தூங்கத் தூக்கி"யென்றார். பகைப்புலத்தே இருக்குமாறு வற்புறுத்தற்குச் "சேணோ னல்லன்"என முன் மொழிந்தார். பொழுது இடைப் படாமையால் புலராத மண்டையைப் பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை"யென்றார். பெருப்ப என்புழிப் பெருத்தல் மிகுதல். அடிசிறுத்து முகம் அகன்றிருப்பது பற்றி, நாட்டுப்புறங்களில் வாழும் மகளிர் ஒருவரோ டொருவர் உறுப்பு நலம் பழித்து வைதுரைக்குமிடத்துப் "பதலை மூஞ்சி" யென்று கூறுவர். இதனால், ஒருதலை முகமுடைய தோற்கருவியாகிய இதன் முகத்தியல்பு அறியப்படும். பகைப்புலத்தோன்பால் ஆற்றுப்படுத்துவது, அப்பகைப் புலத்தே திறையாகப் பெறப்படும் அனைத்தையும் நல்குவன் என்பது குறித்து நிற்றலின், "பகைப் புலத்தோன்......என்பதாம்"என்றார். "அலத்தற் காலையாயினும்,"என்புழி உம்மை புரத்தலின் அருமையை மிகுதிப்படுத்தி நிற்றலின், "உம்மை சிறப்பு"என்றார். நீட்டித்தலை எவ்வழியும் அறியாதானைப் பரிசில் நீட்டிப்பானல்லன்என்பது சிறப்பன்மையான், "நீட்டிப்பானல்ல னென்றுரைப்பினு மமையு"மென்றொழிந்தார். அலத்தற்காலை யாயினும் மண்டை நிணம் பெருப்ப நல்கிப் புரத்தல் வல்லன் என இயைத்துக் கொள்க. நல்கி யென ஒருசொல் வருவித்துக் கொள்க.
-----------

104. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது வெல்வது குறித்து அவனிருந்த தகடூரைப் பகைவேந்தர் தம் படையொடு போந்து முற்றுகையிடக் கருதினர். அதனை ஒற்றரால் அறிந்து வைத்தும் அதியமான் அஞ்சாது செய்வன செய்து வந்தான். அவனது திருவோலக்கத்திருந்த ஒளவையார் பகைவர் முயற்சியும் அதியமான் மனவுரமும் அறிந்து பகைவர்க்கு அதியமானது வலியைத் தெரிவித்தற்குச் செவ்வி நோக்கியிருந்தார். இதற்குள் போர் மூண்டது; போரில் அதியமான் பகைமன்னரைத் தன் னகர்ப்புறத்தே வென்று வாகை சூடினான். தோற்ற வேந்தர்க்கு அறிவுறுக்கு மாற்றால் ஒளவையார் அதியமானது வாகைநிலையைப் பாராட்டி, "நீவிர் போருடற்றக் கருதியது அதியமான் இளையன் என்பது பற்றியாகும். அதனால் அவனை அவனிருந்த ஊரிடத்தே வெல்லுதலை விரும்பினீர்கள்; முழங்காலளவிற்றாய நீரிற் கிடப்பினும் முதலை பெருங்களிற்றையும் கொல்லும் வலியுடைத்தாம்; அம் முதலை போல்வன் அதியமான்; இன்று அறிவிக்கின்றேன்; இனியேனும் இவனை இளையன் என்று இகழ்வதை விடுத்து நும்மைப் பாதுகாத்து வாழ்மின்’’என இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.

போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை
ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும்
தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் காரஅத் தன்ன வென்னை
நுண்பல் கரும நினையா
திளையனென் றிகழிற் பெறலரி தாடே. (104)

திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

உரை: போற்றுமின் - நீங்கள் பாதுகாமின், மறவீர்-; நும்மைச் சாற்றுதும் - நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊர்க்குறு மாக்கள் ஆட -ஊரின்கண் இளம்புதல்வர் ஆட; கலங்கும் தாள் படு சின்னீர் - கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே; களிறு அட்டு வீழ்க்கும் - யானையைக் கொன்று வீழ்க்கும்; ஈர்ப்பு உரைக் கராஅத்தன்ன - இழுத்தலையுடைய முதலையை யொக்கும்; என்னை -என் இறைவனது, நுண்பல் கருமம் நினையாது - நுண்ணிய பல கருமத்தையும் நினையாதே; இளையன் என்று இகழின் - இளையனென்று மதியா திருப்பின்; ஆடு பெறல் அரிது - நுங்களுக்கு வென்றி பெறுதல் அரிது எ-று.

மறவீர், நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையன் என்றிகழின் வென்றி பெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமின் எனக் கூட்டுக. மீப்புடையென் றோதி மிகுதியை யுடைய வென்று செப்பினு மமையும்.

விளக்கம்: இளஞ் சிறுவர்களைக் "குறு மாக்கள்" என்றார், மனவுணர்வு நிரம்பாமையின். நிரம்பியவழிக் "குறு மகன்"என்றும், "குறு மகள்"என்றும் வழங்குதல் காண்க. ஆடுதல், விளையாடுதல். தாள் படு சின்னீர் - தாள் மறையும் அளவிற்றான தண்ணீர். இடத்தால் வலி மிகுதலோடு இயல்பாகவே பெருங்களிற்றினையும் பற்றி யீர்த்துக் கொல்லும் வலியுடைத்தாதல் தோன்ற, "ஈர்ப்புடைக் கராஅம்"என்றார். "நெடும் புனலுள் வெல்லும் முதலை" (குறள். 495) என்றது பொது வியல்பு. என்னை - என் இறைவன். அதியமான் தனக்கு இறைவனென்றும், அவன் கராம்போலும் வலியுடையனென்றும் கூறியவாறு. நுண் பல் கருமம் - நுணுகி யாய்ந்து செய்யும் பல்வகைக் கருமச் சூழ்ச்சி. இதனால், அதியமான் இளையனாயினும், இடத்தாலும் மெய் வலியாலும் வினை வலியாலும் பெரியனாகலின், அவனைப் பகைவர் வெல்லுதல் அரிதென்றவாறு. ஈரப்புடை யென்னாது மீப்புடை யென்று பாடமாயின், மீப்புமிகுதி குறிக்கும் என்றற்கு "மீப்புடை..... அமையும்"என்றார்.
----------

105. வேள் பாரி

வேள் பாரி பாண்டிநாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த நாட்டை யுடையன்; இப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; பறம்புமலை இப்போது பிரான்மலை யென வழங்குகிறது; புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்திருக்கிறது. பாரி என்பான் வேளிர் குலத்தவனாதலின், இவனைவேள் பாரி யென்பது வழக்கு. இவர் வேளிர் குலத்தில் எவ்வி யென்பான் குடியிற் பிறந்தவன். பறம்பு நாட்டைச் சார இருந்த பாண்டி நாட்டுத் திருவாதவூரிற் பிறந்து சிறந்து விளங்கிய கபில ரென்னும் நல்லிசைப் புலவர்க்கு இவன் இனிய நண்பன்; ஒளவையாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்றவன்; வரையாது வழங்கும் வள்ளல்; காற்றில் அலைந்த முல்லைக்கொடியின்பால் அருள்கொண்டு அது கொழுகொம்பாகப் பற்றிப் படரும் பொருட்டுத் தான் ஊர்ந்து சென்ற தேரைத் தந்தவன். முடிவில் தமிழக மெங்கும் இவனது புகழ் பரவக் கண்டு அழுக்காறு கொண்ட தமிழ்வேந்தர் மூவராலும் சூழ்ச்சிவகையாற் கொலையுண்டனன். இவற்கு இரு மகளிர் உண்டு. இவற்குப் பின் கபிலர் இம் மகளிரை ஒளவையார் துணைக்கொண்டு தக்கார்க்கு மணம்புரிவித்துத் தாமும் உயிர் நீத்தார். இவன் காலததுக்குப் பின்வந்த சான்றோர்கள் பலரும் ஆளுடைய நம்பி முதலிய அருட்குரவன்மார்களும் இவனையே கொடைக்கு எல்லையாகக் கொண்டு கூறினரெனின், மேலும் கூறல் மிகையாம். தமிழகத்துப் புரவலர் வரலாற்றில் வேள்பாரி சிறப்பிடம் பெறுதற்குரியன். இவன் நாட்டு மலைவளமும் சுனைநீர் நலமும் புலவர் பாடும் புகழ் படைத்தவை.

கபிலர் ஒருகால் வறுமையால் வாடி வதங்கும் விறலி யொருத்தியைக் கண்டு அவளை வேள்பாரியிடம் சென்று அவனைப் பாடித் தனக்கு வேண்டுவன பெற்றுக்கொள்க வென இப்பாட்டின்கண் அவளை ஆற்றுப் படுத்தியுள்ளார்.

    சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினு மருவி
    கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக         5
    மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
    நீரினு மினிய சாயற்
    பாரி வேள்பாற் பாடினை செலினே.         (105)

திணை: பாடாண்டிணை. துறை: விறலியாற்றுப்படை. வேள் பாரியைக் கபிலர் பாடியது.

உரை: வாணுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுடைய விறலி;தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை - பெரிய இடத்தையுடைய சுனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத்தினது; வண்டு படு புது மலர் - வண்டு மொய்க்கும் புதிய மலரின் கண்; தண் சிதர் கலாவ - குளிர்ந்த துளி கலக்க; பெய்யினும் பெய்யா தாயினும் - மழை பெய்யினும் பெய்யா தொழியினும்; அருவி - அருவி; கொள் ளுழு வியன்புலத் துழை காலாக - கொள்ளிற் குழுத பரந்த நிலத்திடை நீரோடு காலாக ஓட; மால் புடை நெடு வரைக் கோடு தோறு இழிதரும் - கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரந்தோறும் இழிதரும்; நீரினும் இனிய சாயல் - நீரினும் மிக இனி மையையுடைய; வேள் பாரிபால் பாடினை செலின் - வேள் பாரி பக்கலே நீ பாடிச் செல்லின்; சேயிழை பெறுகுவை - சிவந்த அணியைப் பெறுகுவை
எ-று.

விறலி, பாரி வேள்பாற் பாடினை செலின் சேயிழை பெறுகுவை யெனக்கூட்டுக. அவன் மலையாதலால் எக்காலமும் அருவி கோடுதோ றிழிதரு மெனப்பட்டது. புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும் பெய்யாதாயினும் காலாகக் கோடுதோ றிழிதரும் அருவி நீரினும் இனிய வென இயையும். எனவே அவன் குணங்கள் தோன்றி நின்றன.

விளக்கம்: விறலியின் நுதலொளி அவளது இசையும் கூத்தும் வல்ல நலத்தை விளக்கி நிற்றலின், "வாணுதல் விறலி"யென்றார். தடவுவாய், சுனைக்கு ஆகுபெயர். மாரியிற் பெய்த மழையைக் கோடையின் கண் உமிழும் வாய்ப்புடைய மலையாதலின், "அருவி கொள்ளுக் குழுத வியன்புலத்தில் நீரோடு காலாகக் கோடுதோறும் இழிதரும்"என்றார். பறம்பு மலையின் சுனைநீர் தட்பமும் இனிமையும் உடையதென்று சான்றோரால் "பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்"(குறுந். 194) என்று பாராட்டப்படும். சிவந்த பொன்னாற் செய்த அணியைச் "சேயிழை" யென்றார். மால்பு, மூங்கிலின் கணுவினிடத்தே புள் செருகிய ஏணி; இதனைக் கண்ணேணி யென்றலும் வழக்கு. பாடுவோர் பசி தீர்த்துப் பெருங்கொடை நல்கும் பண்பினன் பாரி யென்றற்கு, "பாடினை செலினே" யென்றார். மழை பொய்யாவிடத்து அருவி கோடுதோ றிழிதரும் என்றது, வருவாய் குன்றினும் பாரி தன் கொடை நலம் குன்றுவதிலன் என்பது முதலிய குணநலம் தோற்றுவித்தலின், உரைகாரர், "எனவே.........நின்றன"
என்றார்.
-----------

106. வேள் பாரி

நல்லிசைச் சான்றோராகிய கபிலர் இப்பாட்டின்கண், வேள் பாரி தன்னை நாடி வருவோர் அறிவாலும் குணஞ் செயல்களாலும் மிகத் தாழ்ந்தோராயினும் அவர்பாலும் அருள் புரிந்து அவர் வேண்டுவன நல்கிப் புரக்கும் கைவண்மையுடையவன் என அவனது கொடை நலத்தைச்
சிறப்பித்துள்ளார்.

    நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
    புல்லிலை யெருக்க மாயினு முடையவை
    கடவுள் பேணே மென்னா வாங்கு
    மடவர் மெல்லியர் செல்லினும்
    கடவன் பாரி கைவண் மையே.         (106)

திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

உரை: நல்லவும் தீயவும் அல்ல - நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூ, ஆதலால் அவை இரண்டினும் வைத்து எண்ணப்படாத; குவி இணர்ப் புல் லிலை எருக்க மாயினும் - குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம் பூவாயினும்; உடையவை - ஒருவன் உடையனவற்றை; கடவுள் பேணேம் என்னா - தெய்வங்கள் விரும்பேம் என்னா; ஆங்கு - அதுபோல; மடவர் மெல்லியர் செல்லினும் - யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும்; பாரி கைவண்ணம் கடவன் - பாரி கைவண்மை செய்தலைக் கடப் பாடாக வுடையன்
எ-று.

குவியிணர்ப் புல்லிலை யெருக்கம் என்றது, முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர். உம்மை இழிவு சிறப்பு; மெல்லிய ரென்பதற்கு வறுமையுற்றா ரென்று முரைப்பர்.

விளக்கம்: எருக்குக் குவிந்த இணர்களை யுடைத்தென்பதை, "குவியிண ரெருக்கின் ததர்பூங் கண்ண"(அகம்.301) என்று பிறரும் கூறுதல் காண்க. நறுமண மின்மையின், நற்பூ வகையிலும், இறைவன் சூடுதலின் தீய பூவகையிலும் சேராமையின், எருக்கம் பூவை, "நல்லவும் தீயவு மல்ல குவியிணர்ப், புல்லிலை யெருக்க மாயினும்"என்றார். குவியிணரும் புல்லிலையுமுடைமை எருக்கமாகிய முதற்குரிமையாதலின், இவை முதற்கேற்றஅடையாயின. ஆயினும், எருக்கம் ஈண்டு ஆகுபெயராய் எருக்கம் பூவை யூணர்த்தி நின்றது. பித்தேறினோரும் மடலூர் பவரும் ஆகிய நாண் கடை நின்றோர் சூடும் பூவாய் இழிக்கப்படுவது பற்றி உம்மை இழிவுசிறப்பாயிற்று. மெல்லிய ரென்றற்குப் புல்லிய குணமுடையோ ரெனப் பொருள் கூறினமையின், "வறுமையுற்றாரென்று
முரைப்ப"ரென்றார்.
------------

107. வேள் பாரி

இப் பாட்டின்கண், ஆசிரியர் கபிலர், "நாட்டிற் புலவர் பலரும் ‘பாரி, பாரி’ யெனப் பாரி யொருவனையே புகழ்கின்றனர்; இவ்வுல குயிர்களைப் புரத்தற்கண் பாரி யொருவனேயன்றி மாரியும் உண்டே; இஃதென்ன வியப்பு "என வியந்து கூறியுள்ளார்.

    பாரி பாரி யென்றுபல வேத்தி
    ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
    பாரி யொருவனு மல்லன்
    மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.        (107)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: பாரி பாரி என்று - பாரி பாரி யென்று சொல்லி; பல ஏத்தி - அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் - அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் - பாரியாகிய ஒருவனுமே யல்லன்; மாரியும் உண்டு-; ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு எ-று.

உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரி யொருவனைப் புகழ்வர் செந்நாப் புலவ ரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.

விளக்கம்: ஒருவர் புகழ்வர் என்றவிடத்துப் பிரிநிலை யேகாரம் தொக்கது செந்நாப் புலவர் என்றார், பிறர் புகழின் அது பொருளாகக் கொள்ளப்படா தென்றற்கு. மக்களுட் பிறர் இல்லையாயின், உலகு புரக்கும் தொழி லொப்புமையால் மாரியுண்டன்றோ; அதனைப் புகழ்தற்கென்னை என்பதாம். "உறுமிடத் துதவாது"(புறம். 143) போதலும் மாரிக்கு இயல்பு; அச் சிறுமை யியல்பு பாரிபால் என்றும் இல்லாமையால் செந்நாப் புலவர் பாரி யொருவனையே புகழ்ந்தன ரென வறிக.
--------

108. வேள் பாரி

இப்பாட்டின்கண், வேள் பாரியின் கொடையறத்தைச் சிறப்பிக்கத் தொடங்கிய கபிலர், "பாரிக்குரிய பறம்பு அவனைப் பாடி வருவார்க்குக் கூறுகூறாகப் பகுத்துக் கொடுக்கப்பட்டமையின் அவர்களுடையதாயிற்று; இனி, வருவோர் ‘பறம்பில்லையாயின், நீயே வேண்டுமென்பராயின், தான் விரும்பும் கொடையறத்தை மேற்கொண்டு அவர்வழி நிற்கலுறுவன்; அவர் ஏவல்வழி நிற்றலை வெறுத்து வாரேன் என்று நினைத்தலும் சொல்லுதலும் செய்யான்"என்று வற்புறுத்தியுள்ளார்.

    குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
    ஆர மாதலி னம்புகை யயலது
    சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
    பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு
    பாரியும் பரிசில ரிரப்பின்
    வாரே னென்னா னவர்வரை யன்னே.         (108)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: குறத்தி மாட்டிய வறற் கடைக் கொள்ளி - குறத்தி மடுத்து எரிக்கப்பட்ட வற்றிய கடைக்கொள்ளி; ஆரம் ஆதலின் - சந்தனமாதலால்; அம் புகை அதன் அழகியதாகிய புகை; அயலது - அதற்கு அருகாகிய; சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு - சாரற்கண் வேங்கையின் பூங்கொம்பின்கட் பரக்கும் பறம்பு; பாடினரது - பாடுவோர்க்குக் கூறிட்டுக் கொடுத்தலின் அவருடையதாயிற்று; அறம் பூண்டு - தன்மத்தைப் பரித்து; பாரியும் பரிசிலர் இரப்பின் - பாரியும் பரிசிலர் வேண்டுவராயின்; வாரேன் என்னான் - அவ்வழி வாரேன் என்னானாய்; அவர் வரையன் - அவர் எல்லையின் கண்ணே நிற்பன் எ-று.

சந்தனப் புகை வேங்கையின் மிசைத் தவழும் பறம்பு எனவே, இவையொழிய மரம் இன்மையும் பகைவர் சுடும் புகையின்மையும் கூறியவாறாயிற்று.

விளக்கம்: வேள் பாரியைப் போருடற்றி வேறல் அரிதென வுணர்ந்த தமிழ் வேந்தர், இரவலர் வடிவிற் போந்து அவனையே இரந்து நிற்ப, அவன் இரவலர் இன்மை தீர்க்கும் நல்லறத்தைக் கைக்கொண்டு அவர்வழிச் சென்று அவரால் கொலையுண்டானாதலின், அக்குறிப்புத்தோன்ற, "அறம் பூண்டு வாரேன் என்னான் அவர் வரையன்னே"என்றார். இரவலர் உருவில் வந்த வேந்தர் பாரி போல, அறம் பூணாது கொலை சூழ்ந்து பழி பூண்டனர். குறத்தி எரித்தலாலுண்டாகிய சந்தனப் புகை வேங்கைப் பூஞ்சினைத் தவழும்என்றது, வேள் பாரி இரவலர்க்குக் கொடுத்தலா லுண்டாகிய நல்லிசை முடிவேந்தர் மூவர் தலைமையை அகப்படுத் தோங்கிற்றென அவர் பகைமைகோடற்குரிய காரணம் காட்டி நிற்பது காண்க. இதனை வெளிப்படக் கூறல் முறையின்மையின் உள்ளுறுத்துரைத்தார். இப் பாட்டு வேள் பாரி யிறந்ததன் பின் பாடப்பட்டது.
---------

109. வேள் பாரி

வேள் பாரிபால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே வாயிலாக அவன்பால் பகைமை மிக்கனர். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு பொருதற்குவந்து தோல்வி யெய்தினர். அதுகண்ட கபிலர், "தமிழ் வேந்தர்களே, ஒருவரேயன்றி மூன்று பேரும் ஒருங்கு கூடி நின்று இப் பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள் பாரியை வெல்லுதலும் அரிது; பாரியது இப் பறம்பினைக் கைப் பற்றலும் அரிது; பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை வேண்டாதே இப் பறம்புமலை நால்வகை யுணவுப் பொருளை நல்கும்; அகலநீள வுயர வகையில் பறம்பு வானத்தை யொக்கும்; அதிலுள்ள சுனைகளோ வானத்துள்ள விண்மீன்களை யொக்கும்; ஆகவே நீவிர் மரந்தோறும் களிறுகளைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள்மெய்ம்முயற்சியாலும் வாட்படையாலும் பறம்பினைப் பெறக் கருதுவது முடியாத செயல் எனத் தெளி மின்; அவ்வாறு கொள்ளக் கருதுவதும் அறியாமை. எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி. அஃதோர் அரியசெயலன்று. நீவிர் நும் வேந்தர் வடிவினை மாற்றிக் கூத்தர் வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள்பாரியின் திருமுன் சென்று ஆடலும் பாடலும் செய்வீராயின், அவன் அவற்றிற்கு வியந்து தன்னாட்டையும் மலையையும், ஒருங்கே யளிப்பன்"என இப்பாட்டின்கண் கூறியுள்ளார்.

    அளிதோ தானே பாரியது பறம்பே
    நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
    உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
    ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
    இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே         5
    மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
    நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
    திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
    வான்க ணற்றவன் மலையே வானத்து         10
    மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
    மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
    புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
    தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
    யானறி குவனது கொள்ளு மாறே
    சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி         15
    விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
    ஆடினிர் பாடினிர் செலினே
    நாடுங் குன்று மொருங்கீ யும்மே.         109

திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல். அவனை அவர் பாடியது.

உரை: அளிது பாரியது பறம்பு - இரங்கத்தக்கது பாரியுடைய பறம்பு; நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - பெருமையைக்கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தரும் சூழினும்; உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து - உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை யுடைத்து; ஒன்று - அவற்றுள் முதலாவது; சிறி இலை வெதிரின் நெல் விளையும் - சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டு - இரண்டாவது; தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும் - இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்று - மூன்றாவது; கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும் - கொழுவிய கொடியையுடைய வள்ளிக் கிழங்கு தாழ விருக்கும்; நான்கு - நான்காவது; அணி நிற ஓரி பாய்தலின் - அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான்; மீ தழிந்து - அதன் மேற் பவர் அழிந்து; திணி நெடுங் குன்றம் தேன் சொரியும் - கனத்த நெடியமலை தேனைப் பொழியும்; வான் கண் அற்று அவன் மலை - அகல நீள வுயரத்தால் வானிடத்தை யொக்கும் அவனது மலை; வானத்து மீன் கண் அற்று அதன் சுனை - அவ்வானத்தின்கண் மீனை யொக்கும் அம்மலையின்கட் சுனை; ஆங்கு அவ்விடத்து; மரந் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் - மரந்தோறும் கட்டப்பட்ட யானையை யுடையீராயினும்; புலந் தொறும் பரப்பிய தேரினிராயினும் - இடந்தோறும் பரப்பப்பட்ட தேரை யுடையீராயினும்; தாளில் கொள்ளலிர் - உங்கள் முயற்சியாற் கொள்ளமாட்டீர்; வாளில் தாரலன் - நுமது வாள் வலியால் அவன் தாரான்; யான் அறிகுவன் - அது கொள்ளுமாறு யான் அறிவேன் அதனைக் கொள்ளும் பரிசை; சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி - வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்து; விரை யொலி கூந்தல் நும் விறலியர் பின் வர - நறு நாற்றத்தையுடைய தழைத்த கூந்தலையுடைய நும் விறலியர் பின்னே வர; ஆடினிர் பாடினிர் செலின் - ஆடினிராய்ப் பாடினிராய்ச் செல்லின்; நாடும் குன்றும் ஒருங்கு ஈயும் - அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் கூடத் தருவன் எ-று.

அளிதோ வென்பது, ஈண்டு வியப்பின்கண் வந்தது. ஓரி யென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம்; முசுக்கலை யெனினு மமையும். குன்றம் தேன் சொரியு மென இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. நான்கு பயனுடைத்தென்று வைத்து, நெல் விளையும், பழம் ஊழ்க்கும், கிழங்கு வீழ்க்கும், தேன் சொரியும் என்று அவற்றின் செய்கை தோன்றக் கூறினா ரெனினும், கருதியது நெல்லும் பழமும் கிழங்கும் தேனுமாகக் கொள்க. வான்கணற்று அணிமலையே யென்று பாடமோதுவாருமுளர். வான்கணற் றென்றது மலையினோக்கமும் பரப்பும். மீன்கணற்றென்றது, சுனையினது பன்மையும், தெளிவும் சிறுமையும் ஈண்டுக் கண்ணென்ப தசைநிலை. தாளென்றது, படையறுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின வியற்றலும். விறலிய ரென்றது, அவர் உரிமை
மகளிரை.

விளக்கம்: நாட்பட்ட தேன் நிறம் மாறியது கண்டு "தேன் ஓரி பாய்ந்து விட்ட"தென இக்காலத்தும் குறவர் வழங்குகின்றனர். சொரிதல் தேனுக்குரிய வினையாயினும் குன்றம் தேன் சொரியுமெனக் குன்றத்துக் குரித்தாய் நிற்பதுபற்றி, "இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்ற"தென்றார். தாளிற் கொள்ளலாவது படை வலி யழித்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின இயற்றிக் கோடலும் ஆகிய செயல்களால் வென்று கொள்ளுதல். உரிமை மகளிர் விறலியராக, வேந்தர் பரிசிலராக வரின், பாரி நாடும் குன்றும் ஒருங்கேயீயும் என்றார். அவ்வாறு செய்ய அவர் மனங் கொள்ளார் என்று கருதிச் "செலின்"என்றார். "யான் அறிகுவன் அது கொள்ளுமாறு"என்றது, நீவிர் கொள்ளும் திறம் அறியாது களிறும் தேரும் முதலாயின கொண்டு போருடற்றக் கருதினீர்; அச் செயல் நுமக்குப் பயன் தாராது என்பது பட நின்றது. யானறிகுவன் என்புழி அன்னீறு தன்மைக்கண் வந்தது. வீழ்க்கும் - நிலத்திற்குள்ளே ஆழச் சென்றிருக்கும். கீழ் நோக்கிச் செல்வது பற்றி "வீழ்க்கும்"என்றார்; வீழ்ந்து வீழ் என்பனவும் இக்குறிப்பே யுடையவாதல் காண்க.
-----------

110. வேள் பாரி

தமிழ் வேந்தர் மூவரும் பாரியின் பறம்பைத் தம் பெரும்படையுடன் போந்து முற்றிக்கொண்ட காலையில், கபிலர், அவர்க்குப் பாரியின் போராண்மையும் கை வண்மையும் எடுத்தோதுவாராய், "நீவிர் மூவிரும் கூடிச் சூழ்ந்தாலும் பாரியை வென்று அவன் பறம்பினைக் கைக்கொள்வது முடியாது; பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; அம்முந்நூறூர்களையும்பரிசிலர் அவனைப் பாடித் தமக்குரிமை செய்துகொண்டனர். இனி அவனும் யாமுமே யுள்ளோம்; நீவிரும் அவர்போலப் பாடி வருவீராயின், எம்மையும் பெறலாம்; எஞ்சி நிற்கும் இப்பறம்பு மலையினையும் பெறலாம்"என்று கூறுகின்றார்.

    கடந்தடு தானை மூவிருங் கூடி
    உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே
    முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
    முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
    யாமும் பாரியு முளமே         5
    குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.         (110)

திணையுந் துறையு மவை. மூவேந்தரும் பறம்பு முற்றிருந்தாரை அவர் பாடியது.

உரை; கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனி ராயினும் - வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையினையுடைய மூன்று திறத்தீரும் கூடிப் பொருதீ ராயினும்; பறம்பு கொளற்கு அரிது - பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊர்த்து தண் பறம்பு நன்னாடு - முந்நூறு ஊரை யுடைத்து குளிர்ந்த நல்ல பறம்பு நாடு; அம் முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்-; நீர் பாடினிர் செலின் - நீயிர் பாடினிராய் வரின்; யாமும் பாரியும் உளம் - நுமக்கு யாமும் பாரியும் உள்ளேம்; குன்றும் உண்டு - அதுவேயன்றி மலையும்
உண்டு எ-று.

நீர் பாடி வரினும் பறம்பு நாடு பரிசிலர் முன்னே பெற்றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க.

விளக்கம்: நாடு வேண்டிப் பொருவதிற் பயனில்லை; அந்நாட்டு ஊர் முந்நூரும் பரிசிலர்க் குரியவாய்விட்டன; எஞ்சி நிற்பது குன்றமொன்றே; அதனை நும்மூர்க்குக் கொண்டு செல்ல முடியாது. வேள் பாரியோடு யானும் என்போலும் புலவர்களுமே நும்மாற் கொண்டு செல்லத்தக்க நிலையில் உள்ளோம். எம்மால் நுமக்காவதோர் செயலுமில்லை; ஆதலால், நீவிர் மீண்டு செல்வதே தக்கது என்று இகழ்ந்து கூறியதுமாம். இரவலரைப் புரக்கும் இயல்பினராகிய மூவேந்தரும் இழிந்த செயலாகிய இரவலர் செயலைச் செய்ய விரும்பாரெனக் கபிலர் எண்ணி ஏமாற்றமடைகின்றார். கபிலர் கூறியது போலவோ, அது போல்வதொரு சூழ்ச்சியினையோ அவர்கள் செய்து பாரியைக் கொன்றனர் என்ப.
--------------

111. வேள் பாரி

இப் பாட்டின்கண் கபிலர், மூவேந்தரையும் நோக்கிப் பாரியின் தோளாண்மையைப் புகழ்ந்து, "நுமக்கு இப்பறம்பு கொள்ளற் கரிது" என்றவர், அவ்வியப்பு நீங்கா வுள்ளத்தோடு அப்பறம்பு மலையை நோக்கி, "பறம்பு மலையே, நீ பாரியாற் காக்கப்படுதலால் நின்னை வேல் கொண்டு வென்று கைப்படுத்தல் வேந்தர்கட்கு அரிதே; ஆயினும் கிணை கொண்டு பாடும் விறலி யொருத்தி வேந்தாகிய பாரியைப் பாடி வருவாளாயின் அவள் கொள்ளுதற்கு எளியையாய் உள்ளாய்"என்று
கூறுகின்றார்.

    அளிதோ தானே பேரிருங் குன்றே
    வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே
    நீலத், திணைமலர் புரையு முண்கட்
    கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.         (111)

திணையுந் துறையு மவை; அவனை அவர் பாடியது.

உரை; அளிது பேரிருங் குன்று - இரங்கத்தக்கது பெரிய கரிய குன்றம்; வேலின் வேந்தர்க்கோ அரிது - அது வேலான் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்து இணை மலர் புரையும் - நீலத்தினது இணைந்த மலரை யொக்கும்; உண்கண் கிணைமகட்கு - மையுண்ட கண்ணையுடைய கிணையையுடைய விறலிக்கு; எளிது-; பாடினள் வரின் - பாடினளாய்
வரின் எ-று.

அளிதோ வென்றது, வியப்பின்கண் வந்தது. பாடினளாய் வரின் என்ற கருத்து அவட்கும் அவ்வாறன்றித் தன் பெண்மையால் மயக்கி வென்று கோடல் அரிதென்பதாம்.

விளக்கம்: உள்ளதன் உண்மை கூறிப் பாராட்டுகின்றாராகலின், "பேரிருங் குன்றே"என்றார். கிணை மகட்கும் தன் பெண்மையால் மயக்கி வென்றுகோடல் அரிதென்றார். இதனால், பாரியை இரந்து ஒன்று கோடல் எளிதேயன்றி, எவரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வென்று கோடல் என்பது அரிதென்றவாறாம்.
-----------

112. வேள் பாரி

மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள்பாரி இறந்தபின், சான்றோராகிய கபிலர், அவன் மகளிரை வேறொரு நல்ல காப்புள்ள இடத்தே சேர்த்துவிட, ஆங்கே ஒரு திங்கட்குமேல் அம் மகளிர் அவர் பாதுகாப்பில் இருந்து வந்தனர. ஆயினும், அம் மகளிர்க்குப் பாரியை யிழந்த துயரும் பறம்பினைத் துறந்த வருத்தமும் பெருங்கலக்கத்தைத் தந்தன. ஒருநாளிரவு முழுத்திங்கள் தன் பானிலவைப் பொழிந்து கொண்டு வானத்தே திகழ்ந்தது; அதுகண்ட அம் மகளிர்க்கு வருத்தம் கையிகப்பதாயிற்று. அஃதொரு பாட்டாய் வெளிவந்தது. அஃது இப்பாட்டு.

    அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
    எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
    இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
    வென்றெறி முரசில் வேந்தரெம்
    குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.         (112)

திணை பொதுவியல். துறை: கையறுநிலை. பாரிமகளிர் பாடியது.

உரை: அற்றைத் திங்கள் - மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் - அவ் வெள்ளிய நிலாவின்கண்; எந்தையும் உடையேம் - எம்முடைய தந்தையையு முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் - எம்முடைய மலையையும் பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில் - இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின்கண்; வென்று எறி முரசின் வேந்தர்- வென்றறைந்த முரசினையுடைய அரசர்; எம் குன்றும் கொண்டார் - எம்முடைய மலையையும் கொண்டார்; யாம் எந்தையும் இலம் - யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் எ-று.

திங்களை மாத மென்பாரு முளர். ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின் "வென்றெறி முரசின் வேந்த" ரென்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.

விளக்கம்: தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு தோன்ற, "அற்றைத் திங்கள்.....கொளார்"என்றார். "வென்றெறி முரசின் வேந்தர்"என்றது, நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை, அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின், இகழ்ச்சிக் குறிப்பினை யுடையதாயிற்று.
-------------

113. வேள் பாரி

வேள் பாரிக்கு மகளிர் இருவர் உண்டு. அவன் மூவேந்தர் சூழ்ச்சியால்இறந்தபோது அவர்கள் மணப்பருவ மெய்தியிருந்தனராதலால், அவர்களைத் தக்க பாதுகாப்பமைந்த இடத்தில் வைத்துத் தமிழ்நாட்டு வேந்தர்க்கு திருமணம் செய்விப்பது தமது கடனாமெனக் கருதி, வேள் பாரி இறந்ததும், கபிலர், அவர்களை யழைத்துச் செல்வாராயினர். செல்பவர், பார்ப்பாரிடை, வைத்த பொருட்கும் பார்ப்பார்க்கும் ஏதம் செய்தலாகா தென்ற அக்கால அரசியன் முறைப்படி அம் மகளிரைப் பார்ப்பாரிடை அடைக்கலப்படுத்தக் கருதிச் செலவு மேற்கொண்டார். அந்நாளில் பார்ப்பாரைத் தீண்டாமைப் பேய் பிடிக்கவில்லை. பறம்பு நாட்டைப் பிரியுங்கால், இதுகாறும் தமக்கு உணவும் உறையுளும் நல்கியின்புறுவித்த பறம்பினது நன்றியினை அவரால் மறக்க முடியவில்லை. அதனால் அவருளத்தே பிரிவாற்றாமை தோன்றிப் பேதுறுவித்தது. நெஞ்சு கலங்கிற்று. புலம்பும் பெரிதாயிற்று. அப் புலம்புரையே இப் பாட்டு.

    மட்டுவாய் திறப்பவு மையிடை வீழ்ப்பவும்
    அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
    பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
    நட்டனை மன்னோ முன்னே யினியே
    பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று         5
    நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச்
    சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
    நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.         (113)

திணையுந் துறையு மவை. அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.

உரை: மட்டு வாய் திறப்பவும் - மதுவிருந்த சாடியை வாய் திறப்பவும்; மைய விடை வீழ்ப்பவும் - ஆட்டுக் கிடாயை வீழ்ப்பவும்;அட்டு ஆன்று ஆனா - அடப்பட்டு அமைந் தொழியாத; கொழுந் துவை - கொழுவிய துவையையும்; ஊன் - ஊனையுமுடைய; சோறும் - சோற்றையும்; பொட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி - விரும்பிய பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து; நட்டனை மன் முன் - எம்மோடு நட்புச் செய்தாய் முன்பு; இனி - இப்பொழுது; பாரி மாய்ந் தென - பாரி இறந்தானாக; கலங்கிக் கையற்று - கலங்கிச் செயலற்று; நீர் வார் கண்ணேம் தொழுது - நீர் வார் கண்ணையுடையேமாய்த் தொழுது; நிற்பழிச்சிச் சேறும் - நின்னை வாழ்த்திச் செல்லுதும்; பெரும் பெயர்ப் பறம்பே - பெரிய புகழையுடைய பறம்பே; கோல் திரள் முன் கை குறுந்தொடி மகளிர் - கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையை யணிந்த முன்கையினையுடைய மகளிரது; நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து - மணங்கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற் குரியவரை நினைந்து எ-று.

பறம்பே, பெருவளம் பழுனி நட்டனை முன்பு; இனி, நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து சேறு மெனக் கூட்டுக. மன் கழிவின்கண் வந்தது. வாழியும் ஓவும் அசைநிலை. ஆனாக் கொழுந் துவை யென்பதற்கு விருப்பமமையாத கொழுந் துவை யெனினு மமையும்.

விளக்கம்: மட்டு - கள்; ஆகுபெயரால் அது நிறைந்திருக்கும் சாடிக்காயிற்று. இடையறவின்றி அடப்படுமாறு தோன்ற, "அட்டான்றானா" என்றார். பாரியோ மாய்ந்தனன்; யாமும் செல்கின்றேம்; நிற்கின்ற நீ, வேள் பாரியின் பெருமையும் புகழும் உலக முள்ளளவும் நிலைபெற்றோங்க நிற்கின்றாயாதலின், நீ வாழ்வாயாக என்பார்; "வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே"என்றார். தாம் செல்லுதற்கும் காரணம் இது வென்பார், "மகளிர்க் குரிய கிழவரைப் படர்ந்து செல்கின்றே"மென்றார். மணந்த கணவனாலன்றி மகளிர் கூந்தல் பிறரால் தீண்டப் படாதாகலின், அம்மரபு நோக்கி, "மகளிர் நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்"தென்றார். கொழுந் துவை, தன்னை உண்பார்க்கு மேன்மலும் விருப்பத்தை மிகுவிக்கும் சுவையுடைய தென்றற்கு,"விருப்ப மமையாத கொழுந் துவை யெனினு மமையும்"என்றார் உரைகாரர்.
--------

114. வேள் பாரி

பாரி மகளிரை அழைத்துக்கொண்டு செல்லுங்கால், நெடிது சென்ற வழியும் பறம்புமலை தோன்றி நிற்பக் கண்ட மகளிர், "யாம் இத்துணை நெடிது போந்தும் நம் பறம்பு நமக்குத் தன் தோற்றத்தினை வழங்கா நின்றது"என வியந்து கூறக் கேட்ட கபிலர் மனம் நொந்து கூறுவார், "நெடிய புகழானாகிய பாரியது பறம்பு ஈண்டு நின்று காணினும் தோன்றும்; அவனுளனாய காலத்து யாண்டு நின்று நோக்கினும் புகழுருவாய்த் தோன்றும்; இப்போதோ ஏனை மலைகளைப்போல வெறுங்கட்புலனாய்த் தோன்று மளவாயிற்"றெனக் கூறுகின்றார்.

    ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை
    சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற
    களிறுமென் றிட்ட கவளம் போல
    நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
    வாரசும் பொழுகு முன்றிற்         5
    றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே.         (114)

திணையுந் துறையு மவை. அவன் மகளிரைக் கொண்டு போங்கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

உரை: ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் - இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற - சிறிது எல்லைபோய் நின்றோர்க்கும் தோன்றும் நிச்சயமாக; களிறு மென்று இட்ட கவளம் போல - யானை மென்று போகடப்பட்ட கவளத்தினது கோதுபோல; நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் - மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும்; வார் அசும் பொழுகும் முன்றில் - வளர்ந்த மதுச்சே றொழுகும் முற்றத்தையுடைய; தேர் வீசு இருக்கை நெடியோன் - குன்று தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை எ-று.

நெடியோன் குன்று தோன்று மென்றது, புகழான் உயர்ந்து காணாதார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும் அவனுளனாய காலத்து; இப்பொழுது பிற மலை போலக் கட்புலனாகத் தோன்றுமள வாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க.

விளக்கம்: "ஈண்ட நின்றோர்க்கும் தோன்றும், சிறு வரை, சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற"என்றது மகளிர் கூறியதனைக் கொண்டு கூறியது. இதனால், இவ்வாறு தோன்றும் மலை பாரி உளனாய காலத்து யாண்டிருந்தோர்க்கும் புகழ் வடிவாய்க் காட்சி யளித்தது என்பது எய்த நின்றது. பாரியை நினைக்குந்தோறும் அவனது கொடை கபிலரது நெஞ்சில் எழுந்து இன்புறுத்தலின், "தேர்வீ சிருக்கை நெடியோன்"என்றார். பிழிந்திட்ட கோதுடைச் சிதறலினின்றும் அசும்பொழுகும் என்றது, பாரியில்லாமையாற் பொலிவற்றிருப்பினும் யாம் கண்டு கண்ணீர் விட்டுக் கலுழுமாறு தோன்றாநின்ற தென்றொரு குறிப்புத் தோற்றுவித்தது.
-------------

115. வேள் பாரி

வேள் பாரியோடு தாம் இருந்த காலத்து அம் மலையிடத்தே வீழும் அருவிகளின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த திறத்தை அவன் மகளிர் தமக்குள்ளே பேசிக்கொண்டனராக, அது கேட்ட கபிலர் வருந்திக் கூறுவாராய், "இக்குன்றம், முன்பு பாரியிருந்த காலத்தில், ஒரு சார் அருவிகள் ஒலிக்க, ஒருசார் தன்பால் வந்த பாணருக்குத் தரும் பொருட்டு வடிக்கப்படும் இனிய கள் அருவிபோலக் கற்களை யுருட்டிக்கொண்டோடும்; மூவேந்தர்பால் பகைகொண்டு மாய்ந்த பாரியின் குன்றம் இந்தச் சிறப்பை யிழந்ததுகாண்"என்று வருந்திக் கூறுகின்றார்.

    ஒருசா ரருவி யார்ப்ப வொருசார்
    பாணர்மண்டை நிறையப் பெய்ம்மார்
    வாக்க வுக்க தேக்கட் டேறல்
    கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல்
    அண்ணல் யானை வேந்தர்க்         5
    கின்னா னாகிய வினியோன் குன்றே.         (115)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: ஒரு சார் அருவி ஆர்ப்ப - ஒருபக்கம் அருவி ஆர்த்தொழுக; ஒருசார் - ஒரு பக்கம்; பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் - பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்க வேண்டி; வாக்க உக்க தேக்கள் தேறல் - வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்; கல்லலைத் தொழுகும் - கல்லை யுருட்டி யொழுகும்; பல்வேல் - பல வேற்படையுடனே; அண்ணல் யானை வேர்ந்தர்க்கு - தலைமை பொருந்தி யானையையுமுடைய வேந்தர்க்கு; இன்னானாகிய இனியோன் குன்று - கொடியோனாகிய இனியோன் மலை; மன் - அது கழிந்தது எ-று.

குன்று தேறல் கல்லலைத் தொழுகும்; இனி அது கழிந்ததென்று கூட்டுக. அருவியும் அவனுளனாயின் உளதாவதென்பது கருத்து. மன், கழிவின்கண் வந்தது. குன்று தேறல் கல்லலைத் தொழுகுமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.

விளக்கம்: முன்னைப் பாட்டு, "நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல், வாரசும் பொழுகும்"என்றதாக, இப்பாட்டு, பாணரது மண்டை நிறையுமாறு சொரியும் தேறல் கல்லலைத் தொழுகும் என்கின்றது. வேள் பாரி, வேந்தர்க்கு இன்னானாகியும் இரவலர்க்கு இனியனாகியும் ஒழுகினமை தோன்ற, "வேந்தர்க்கு இன்னானாகிய இனியோன்"என்றார். மன், கழிவின்கண் வந்தது; இதனால், பாரியும் இல்லை; அருவியும் இல்லையாறிற் றென்பதாம். வழிந் தொழுகும் தேறலின் மிகுதி தோன்றக் "கல்லலைத் தொழுகும்"என்றார். பாணர்க்குப் பெய் தற்குச் சொரிந்த தேறலின் மிகுதி கல்லலைத் தொழுகு மென்றது, வேள்பாரி இரவலர்க்கு வரையாது வழங்கியும் மிக்கிருந்த அவனது செல்வம், வேந்தர் உள்ளத்தே பகைமை தோற்றுவித்து, அதன் வாயிலாக அவன் உயிரைக் கொண்டுபோயிற்றென இரங்கும் குறிப்புடையதாதலை யுணர்க.
--------------

116. வேள் பாரி

பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர், அவர்களைத் தக்க அரச குமாரர்கட்கு மணம்புரிவித்தல் வேண்டித் தமிழகத்துக் குறுநில மன்னர் பலரையும் காணச் சென்றார். செல்கையில் அடிக்கடி பாரியினது பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் காண்பாராயினர்; அந்நாடும் கெட்டுப் புன்புலமாயிற்று; மலையும் பொலிவிழந்தது. அவற்றின் காட்சி அவர் காணுந்தோறும் அவர்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. இந்நிலையில் ஒருகால் பறம்பு நாட்டைக் கண்டார். பாரியிருந்த காலத்தே நாட்டு மகளிர் வரைமே லேறியிருந்து நாட்டில் பாரியொடு பொருதல் வேண்டி வரும் வேந்தர்களின் குதிரைகளை யெண்ணிப் பார்ப்பது வழக்கம்; இப்போது அஃதொழிந்தமையின் அவர்கள் அந்நாடு வழியே செல்லும் உமணர்கள் கொண்டேகும் உப்பு வண்டிகளை யெண்ணிப் பார்ப்பது கண்டார். அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.

    தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
    கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்
    ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர்
    புன்மூசு கவலைய முண்மிடை வேலிப்
    பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்         5
    பீரை நாறிய சுரையிவர் மருங்கின்
    ஈத்திலைக் குப்பை யேறி யுமணர்
    உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ
    நோகோ யானே தேய்கமா காலை
    பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்         10
    பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும்
    கலையுங் கொள்ளா வாகப் பலவும்
    கால மன்றியு மரம்பயம் பகரும்
    யாண ரறாஅ வியன்மலை யற்றே
    அண்ண னெடுவரை யேறித் தந்தை         15
    பெரிய நறவிற் கூர்வேற் பாரிய
    தருமை யறியார் போரெதிர்ந்து வந்த
    வலம்படு தானை வேந்தர்
    பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே.         (116)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை : தீ நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த - இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த; குவளைக் கூம்பவிழ் முழு நெறி புறள் வரும் அல்குல் - செங்கழு நீரினது முகை யவிழ்ந்து புறவித ழொடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்; ஏந்தெழில் மழைக்கண் - மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்ணினையும்; இன்னகை மகளிர் - இனிய முறுவலையுமுடைய மகளிர்; புல் மூசு கவலைய - புல் மொய்த்த கவலையை யுடையனவாகிய; முள் மிடை வேலி - முள்ளால் நெருங்கிய வேலியையும்; பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் - பஞ்சு பரந்த முற்றத்தையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்; பீரை நாறிய சுரை இவர் மருங்கின் - பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த விடத்தில்; ஈத்திலைக் குப்பை ஏறி - ஈத்திலையையுடைய குப்பையின்கண்ணே ஏறி; உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப - உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை யெண்ணுவர்; நோகோ யான் - நோவேன் யான்; காலை தேய்கமா - எனது வாழ்நாள் கெடுவதாக; பயில் பூஞ்சோலை மயில் எழுந் தாலவும் - பயின்ற பூவையுடைய சோலைக்கண் மயிலெழுந் தாடவும்; பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் - பயின்ற மலையின்கண்ணேயேறி முசுக்கலை தாவி யுகளவும்; கலையுங் கொள்ளா வாக - அம்முசுக்கலையும் நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு; காலமன்றியும் மரம் பலவும் பயம் பகரும் - காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும் பழமு முதலாயினவற்றை விளைந்து கொடுக்கும்; யாணர் அறாஅ வியன் மலை அற்று - புது வருவாயொழியாத அகன்ற மலையைப் போலும்; அண்ணல் நெடு வரை ஏறி - தலைமையையுடைய வுயர்ந்த வரையின் கண்ணேயேறி; தந்தை பெரிய நறவின் கூர் வேல் பாரியது - தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூரிய வேலினையுமுடைய பாரியது; அருமை யறியார் - பெறுதற்கருமையை யறியாராய்; போர் எதிர்ந்து வந்த - போரேற்று வந்த; வலம்படு தானை வேந்தர் - வென்றிப்பட்ட சேனையையுடைய அரசரது; பொலம் படைக் கலிமா எண்ணுவோர் - பொன்னாற் செய்யப்பட்ட கல முதலியவற்றையுடைய மனஞ் செருக்கிய குதிரையை யெண்ணுவோர் எ-று.

வியன்மலை யென்றது, அரை மலையை; நெடுவரை யென்றது உச்சி மலையை. இன் னகை மகளிர், நெடு வரை யேறி முன்பு வேந்தர் கலிமாவை யெண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பொய் ஒழுகையை எண்ணுவர்; இதற்கு நோவேன் யான்; எனது வாழ்நாள் கெடுவதாக வென வினைமுடிவு செய்க. அன்றே யெண்ணு மேகாரம் அசைநிலை. வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும்.

விளக்கம்: குவளைக் கூம்பவிழ் முழு நெறி யென்றவிடத்துக் குவளை, செங்கழுநீர்; செங்கழு நீரின் முகை யவிழ்ந்து புறவித ழொடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி யெனப்பட்டது. இனி, அடியார்க்கு நல்லார், "முழு நெறிக் குவளை" (சிலப். 2, 14) என்பதற்கு இதழொடிக்கப்படாத குவளை யென்ற பொருள்பட, "இதழொடிக்கப்படா தெனவே செவ்வி கூறிற்று" என்று கூறி இவ்வடிகளை யெடுத்துக் காட்டினர்.

கூம்பு, முகை. பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூற்றல் மகளிர் செயலாதலின், "பஞ்சி முன்றில்" என்றார். பறம்பு நாட்டில் வாழும் மகளிர் இப்போது உமணர் செலுத்தும் சகடத்தை யெண்ணுதல் கண்டு கபிலர் இரங்குகின்றவர், பாரியிருந்து அரசுபுரிந்த காலத்தே இம்மகளிர் பாரியொடு போர் வேட்டு வந்த வேந்தருடைய போர்க்குதிரைகளை யெண்ணி விளையாடியது நினைந்து வருந்துகின்றார். பகைவேந்தர் வந்த வண்ணம் இருந்ததற்குக் காரணம் கூறுவார், "பாரியது அருகை யறியார் போரெதிர்ந்து வந்த வலம் படு தானைவேந்தர்" என்றார். அரை மலை, மலையின் அடிப்பகுதி. சோலையில் மயிலெழுந்தால, சிலம்பில் கலை பாய்ந்துகள, மரங்கள் காலமன்றியும் பயம் பகரும் புது வருவாய் ஒழியாத அரை மலை அத்தன்மைத்தாக, உச்சி மலையில் மகளிர் ஏறி வேந்தருடைய குதிரைகளை யெண்ணுவர் என்றும் உரை கூறுவ துண்டென்பார், "வியன்மலை அத்தன்மைத் தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும்" என்றார். வலம்படு தானை வேந்த ரென்றது, வலம்படு தானையினை யுடையராகியும், பாரியது அருமை யறியாது போரெதிர்ந்தமையின் கெட்டனரென்பது விளங்கநின்றது. பாரியைத் தந்தை யென்றார், தந்தைபோல நாட்டு மக்களை அவன் பேணிப் புரந்தமை தோன்ற.
-----------

117. வேள் பாரி

பாரியது நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர் அவன் மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து கண்டது கூறலுற்றார்;கூறுபவர், "இம் மகளிர்க்குத் தந்தையாகிய வேள் பாரியது நாடு அவன் உளனாகிய காலத்தில் அவன் செங்கோன்மையால் மழை பிழையாது; சான்றோர் பலர் நிறைந்திருந்தது; அத்தகைய நாடு இன்று அவனை இழந்து புல்லிதாயிற்" றென இரங்கிப் பாடினர். அப் பாட்டே இது.

    மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
    தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
    வயலக நிறையப் புதற்பூ மலர
    மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண்
    ஆமா நெடுநிரை நன்பு லாரக்         5
    கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
    பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
    பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
    பாசிலை முல்லை முகைக்கும்
    ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே.        (117)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: மைம் மீன் புகையினும் - சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; தூமம் தொன்றினும் - எல்லாத் திசையினும் புகை தோன்றினும்; தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் - தென்றிசைக் கண்ணே வெள்ளி போக்குறினும்; வயலகம் நிறைய - வயலிடம் விளைவு மிக; புதல் பூ மலர - புதலிடத்துப் பூ மலர; மனைத் தலை மகவை ஈன்ற அமர் கண் ஆமா நெடு நிரை - மனையிடத்துக் குழவியை யீன்ற மேவிய கண்ணையுடைய ஆமாவினது நெடிய நிரை; நன் புல் ஆர - நல்ல புல்லை மேய; கோல் செம்மையின் சான்றோர் பல்கி - கோல் செவ்விதாகலின் அமைந்தோர் பலராக; பெயல் பிழைப்பு அறியாப் புன் புலத்தது - மழை பிழைப்பறியாத புல்லிய நிலத்தின்கண்ணது; பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய - இளையவெருகினது கூரிய பல்லை யொப்ப; பாசிலை முல்லை முகைக்கும் - பசிய இலையையுடைய முல்லை முகைக்கும்; ஆய் தொடி அரிவையர் தந்தை நாடு - நுண்ணிய தொழிலையுடைய வளையினை யணிந்த மகளிரையுடைய தந்தை நாடு எ-று.

பல்கி யென்பதனைப் பல்க வெனத் திரிக்க. அரிவையர் தந்தை நாடு, பெயல் பிழைப்பறியாப் புன்புலத்தது வெனக் கூட்டுக. என்றதனாற் போந்தது. புன்புலத்ததாயிருந்ததே! அது பெயல் பிழைப்பறியாமை கோல்செம்மையினான் உளதாய தன்றே! அவ்வாறு கோல் செவ்விதாக நிறுத்தியவனை இழப்பதே யென்று அவன் நாடு கண்டு இரங்கியவாறாகக்
கொள்க.

விளக்கம்: மைம்மீன் - சனி; சனியைக் கரியவன் என்றும் கூறுப. "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (சிலப். 10. 102-3) என்பதற்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார், "கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீன மென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோ ளெழினும் விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்" என்பது, "கரியவன், சனி; புகைக்கொடி, வட்டம், சிலை, நுட்பம், தூம மென்னும் கோட்கள் நான்கினும் தூமக்கோள்" என்றும் கூறுவது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. கோல் செம்மை யுறாதவழிச் சான்றோர் இராராகலின், "கோல் செம்மையின் சான்றோர் பல்கி" என்றார். வெருகு - பூனை. ஆய் தொடியரிவைய ரென்றது, பாரி மகளிரை. சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பறியாத நாடு இன்று பாரியை யிழந்து, அந் நலமுற்றும் கெட்டுப் புன்புலமாயிற்றென இரங்கியவாறாம். முகைக்கு மென்பது முகை யென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை.
---------

118. வேள் பாரி

இப் பாட்டின்கண் சான்றோராகிய கபிலர் பறம்பு நாட்டு வழியே வருபவர், அதன் அழிவு கண்டு, "அறைகளையும் பொறைகளையும் இடையிடையே அமைய இணைத்தமைத்த கரையையுடைய சிறு குளம் மிக்க நீர் நிரம்பிப் பாதுகாப்பார் இன்மையின், கரையுடைந்து வீற்று வீற்றோடி யழிவதுபோல் பல்வகைக் குடிகள் நிறைந்து பாரியாற் காக்கப்பட்டிருந்த பறம்பு நாடு, அவன் இறந்ததும் கெட்டழிந்து போயிற்றே" என வருந்திப் பாடியுள்ளார்.

    அறையும் பொறையு மணந்த தலைய
    எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத்
    தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ
    கூர்வேற் குவைஇய மொய்ம்பிற்
    றேர்வண் பாரி தண்பறம்பு நாடே.         (118)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: அறையும் பொறையும் மணந்த தலைய - பாறையும் சிறு குவடும் கூடிய தலையை யுடையவாகிய; எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரை - எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் வளைந்த கரையை யுடைத்தாகிய; தெண்ணீர்ச் சிறு குளம் கீள்வது - தெளிந்த நீரையுடைய சிறிய குளம் பாதுகாப்பாரின்மையின் உடைவது போலும்; கூர் வேல் குவைஇய மொய்ம்பின் - கூரிய வேலையேந்திய திரண்ட தோளையுடைய; தேர் வண் பாரி தேர் வண்மையைச் செய்யும் பாரியது; தண் பறம்பு நாடு - குளிர்ந்த பறம்பு நாடு எ-று.

நாடு குளங் கீள்வதென இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்து மேலேறி நின்றது. மாதோ: அசைநிலை.

விளக்கம்: அறைகளையும் பொறைகளையும் இடையிடையே கரையாக அமையுமாறு பிறை வடிவில் ஏரிகட்குக் கரையமைக்கும் முறை பண்டுதொட்டே வருவதென்பது இதனாலும், மலைநாட்டு ஏரிகளைக் கண்டும் அறியலாம். அறை - பாறை. பொறை - சிறுகுவடு. சிறு குளம் என்றாராகலின், அதற்கேற்பக் கரையைப் "பாதுகாப்பார் இன்மையின்" என்றார். உள்வழி, கரை கீள்வதற் கிடந்தாராரென வறிக. சிறு குளங்கள் நீர் நிரம்புங்காலத்து அதன் கரைகளைக் காவலர் இருந்து காக்கும் மரபு இன்றும் உண்டு. பண்டும் உண்டென்பதை, "சிறுகோட்டுப் பெருங்குளங் காவலன் போல, அருங்கடி யன்னையுந் துயில்மறந்தனளே" (அகம். 252) என்று சான்றோர் கூறுதல் காண்க.
--------

119. வேள் பாரி

பறம்பு நாட்டின் அழிவு கண்டு வருந்தும் கபிலர், முன்பு அது புளங்கறியும் தினையாகிய புதுவருவாயுமுடையதாய் விளங்கி யிருந்ததும், வேள் பாரி, நெடுஞ்சுரத்து நின்ற தனி மரம்போல் இரவலர்க்குப் பெருவண்மை புரிந்தொழுகியதும் நினைந்து இப் பாட்டின்கண் கையற்றுப்
பாடியுள்ளார்.

    கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
    களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
    செம்புற் றீயலி னின்னளைப் புளித்து
    மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ
    நிழலி னீளிடைத் தனிமரம் போலப்         5
    பணகெழு வேந்தரை யிறந்தும்
    இரவலர்க் கீயும் வள்ளியோ னாடே.         (119)

திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

உரை: கார்ப்பெயல் தலைஇய - கார்காலத்து மழை பெய்து மாறிய; காண்பு இன் காலை - காட்சியினிய காலத்து; களிற்று முகவரியின் - களிற்று முகத்தின்கண் புகர் போல; தெறுழ் வீ பூப்ப - தெறுழினது மலர் பூப்ப; செம் புற்று ஈயலின் - செம்புற்றின்கண் ஈயலை; இன் அளைப் புளித்து - இனிய மோரோடு கூட்டி அடப்பட்ட புளிங்கறியை யுடைத்து; மென்றினை யாணர்த்து - மெல்லிய தினையாகிய புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல் - இனி அது கெடுங்கொல்லோ; நிழலில் நீளிடைத் தனி மரம் போல - நிழலில்லாத நெடிய வழிக்கண் நின்ற தனிமரத்தை யொப்ப; பணை கெழு வேந்தரை இறந்தும் - முரசையுடைய அரசரின் மிகுத்தும்; இரவலர்க் கீயும் வள்ளி யோன் நாடு - இரவலர்க்கு வழங்கும் வண்மையை யுடையவனது நாடு எ-று.

பூப்ப வென்னும் வினையெச்சம் இன்னளைப் புளித்தென்னும் குறிப்பொடு முடிந்தது. வள்ளியோன் நாடு இன்னளைப் புளித்து; யாணர்த்து; அது நந்துங் கொல்லோ வெனக் கூட்டுக. தெறு ழென்றது, காட்டகத்த தொரு கொடி; புளிமா வென் றுரைப்பரு முளர்.

விளக்கம்:நீரின்மையான் வாடி வதங்கிப் பொலிவழிந்திருக்குங் கானம், கார்ப்பெயல் பெய்தவிடத்து, தழைத்துப் பூத்து வண்டினம் பாட, வரி நுணல் கறங்க, தெள்ளறல் பருகிய மானினம் துள்ளி விளையாடக் காண்பார்க்கு இனிய காட்சி வழங்குதலின், "கார்ப்பெயல் தலை இய காண்பின் காலை" யென்றார். பிறரும், "பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு, வான்றளி பொழிந்த காண்பின் காலை" (நற். 264) என்பது காண்க. புளிச் சோற்றை ஈயல் பெய்து அடும் பண்டையோர் மரபு, "வரகின அவைப்பு மாணரிசி யொடு, கார்வாய்ப் பொழிந்த வீர்வாய்ப் புற்றத், தீயல்பெய் தட்ட வின்புளி வெஞ்சோறு" (அகம். 394) என்று சான்றோர் கூறுமாற்றாலும் அறியப்படும். ஈயல் பெய் தடப்படும் புளிச் சோற்றுக்கு வேண்டப்படும் இன் அளை, ஆட்டின் பழுக்கக் காய்ச்சிய பாலானாகிய தயிர் என்று ஈண்டுக் காட்டிய அகப்பாட்டு "சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்" என்று கூறுகிறது.
----------

120. வேள் பாரி

பாரி மகளிரை நல்ல பாதுகாப்புடைய இடத்துக்குக் கொண்டேகும் கபிலர், பறம்பு நாட்டின் வளத்தைக் கண்டு, இனி இவ் வளஞ்சிறந்த நாடு, பாரி யிறந்தமையின் காப்பாரின்றிக் கெட்டழியும் போலும் என வருந்திப் பாடியுள்ளார்.

    வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
    கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
    பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
    பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
    களைகால் கழலிற் றோடொலிபு நந்தி         5
    மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
    கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து
    கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து
    வாலிதின் விளைந்த புதுவர கரியத்
    தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக்         10
    கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக
    நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல்
    புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
    நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
    பெருந்தோ டாலம் பூசன் மேவர         15
    வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
    இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை
    ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர்
    பாடி யானாப் பண்பிற் பகைவர்
    ஓடுகழற் கம்பலை கண்ட         20
    செருவெஞ் சேஎய் பெருவிற னாடே.         (120)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் – வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து; கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து - கார்காலத்து மழையான் மிகுந்த பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கண்; பூழி மயங்கப் பல உழுது வித்தி - புழுதி கலக்கப் பல சால்பட வுழுது வித்தி; பல்லி ஆடிய பல்கிளைச் செவ்வி - தாளியடிக்கப்பட்ட பல கிளையையுடையசெவ்வியின்கண்; களை காழ் கழாலின் - களையை யடியினின்றும் களைதலான்; தோடு ஒலிபு நந்தி - இலை தழைத்துப் பெருகி; மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப - மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை யொப்ப; நீடி - ஓங்கி; கருந் தாள் போகி - கரிய தண்டு நீண்டு; ஒருங்கு பீள் விரிந்து - எல்லாம் ஒருங்கு சூல் விரிந்து; கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து - கதிரினது அடியும் தலையும்ஒழியாமல் மிகக் காய்த்து; வாலிதின் விளைந்த - சீரிதாக விளைந்த; புது வரகு அரிய - புதிய வரகை யறுக்க; தினை கொய்ய - தினையையரிய; கவ்வை கறுப்ப - எள்ளிளங் காய் கறுப்ப; அவரைக் கொழுங் கொடி விளர்க்காய் கோட் பதமாக - அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக; நிலம் புதைப்பழுனிய மட்டின் தேறல் - நிலத்தின்கட் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை; புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து - புல்லாலே வேயப்பட்ட சிறியமனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக்கொடுக்க; நறு நெய்க் கடலை விசைப்ப - நறிய நெய்யிலே கடலைதுள்ள; சோறு அட்டு - சோற்றை யட்டு ஊட்டுதற்கு; பெருந்தோள் தாலம் பூசல் மேவர - பெரிய தோளையுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த; வருந்தா யாணர்த்து - வருந்த வேண்டாத புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல் - இனியது கெடும் போலும்; இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை - கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்களுக்குத் தந்தையாகிய; ஆடு மழை நரலும் சேட்சிமை - அசைந்த மூங்கில் இழைந்தொலிக்கும் உயர்ந்த உச்சியையுடைய; புலவர் பாடி ஆனாப் பண்பின் - புலவர் பாடப்பட்டமையாத தன்மையையுடைய; பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட - பகைவரது புறக்கொடுத்தோடும் வீரக் கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற; செரு வெஞ் சேஎய் பெருவிறல் நாடு - போரை விரும்பிய சேயை யொக்கும் பெரிய வென்றியை யுடையவனதுநாடு எ-று.

வித்தி ஆடிய செவ்வி யென இயையும். நந்தி யென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்த வென்னும் பெயரெச்ச வினையோடும், அரிய வென்பது முதலாக மேவர வென்ப தீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த் தென்னும் குறிப்பு வினையோடும் முடிந்தன. பகர்ந் தென்பது பகர வெனத் திரிக்கப்பட்டது. விசைப்பச் சோறட்டு மேவர வென இயையும். செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோ எனக் கூட்டுக. பெருந்தோ ளென்பது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை வெப்புள் என வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது. வெம்மை உள்ளும் முதிர்ந்த வெனினு மமையும்.

விளக்கம்: பல சால்பட வுழுதலால் நல்ல புழுதி தோன்றி எரு வேண்டாதே மிக்க பயனை விளைவிக்குமாதலின், "பூழி மயங்கப் பலவுழுது" என்றார்; "தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும், வேண்டாது சாலப்படும்" (குறள். உழவு-7) என்பர் திருவள்ளுவர். வரகுக் கொல்லைகளில் உண்டாகும் ஒருவகைக் களையைப் பல்லி யென்றே இக்காலத்தும் வழங்குகின்றனர். அது வரகுபோலவே இருப்பினும் பல் போலும் வெள்ளிய பூக்களையுடையதாகும். அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை யென்றார். தாலம் பூசல், அகன்ற கலமாகிய தாலத்தே சோற்றை வாங்கிப் பிசைந்துண்டல். புலவரது புல வெல்லையைக் கடந்த புகழுடையனாகலின், பாரியின் புகழ்க்குரிய பண்புகளை, "புலவர் பாடியானாப் பண்பு" என்றார். பகைவர் புறந்தந் தோடு மிடத்து, அவரது கம்பலை கண்டு, இத்தகைய மறமானமில்லாத மள்ளரொடு பொருதல் தன் மறமாண்புக் கிழுக்காதலின், பாரி நாணமுற்று, அவர் பின்னே செல்வ திலனாகலின், "கம்பலை கண்ட செருவெஞ்சேய்" என்றதற்கு, "ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற" செரு வெஞ்சேய் என்று உரை கூறினார். பெருந்தோளென்றது, அடையடுத்துநின்ற சினையிற் கூறும் முதலறி கிளவி; அற்றாயினும் உரைகாரர், தொடர்மொழியாகக் கொண்டு, பெருந்தோளையுடையாளென விரித்தலின், "பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை" யென்றார்.
-------------

121. மலையமான் திருமுடிக்காரி

திருக்கோவலூர்க்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் பண்டை நாளில் மலாடு என்ற பெயரால் வழங்கப்பெற்று வந்தது. அதற்குக் கோவலூரே தலைநகர். கபிலர் காலத்தே அக் கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்த வேந்தன் திருமுடிக்காரி யென்பான். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரே வைத்துப் பேணினன். இதனை "காரிக் குதிரைக் காரி" (சிறுபாண். 110) என்றும், "காரியூர்ந்து பேரமர் கடந்த மாரியீகை மலையன்" (புற. 158) (110, 111) என்றும் சான்றோர் கூறுவர். இதனால் பண்டை நாளைத் தலைமக்கள் தம் பெயரையே தாம் இவர்ந்து பொரும் குதிரைக்கும் இட்டுப் போற்றுவ ரென்பதும் விளக்கமுறுகிறது. செங்கைமாவின் தெற்கே பெண்ணையாற்றின் தென்மேற்கிலுள்ள முள்ளூர் இக் காரிக் குரியதாய் மிக்க பாதுகாப்புடன் விளங்கிற்று. ஒரு கால் அதனைக் கைப்பற்றக் கருதி வடநாட்டு ஆரிய மன்னர் பெரிய வேற்படையொடு போந்து முற்றிகையிட்டனர். அதனை யறிந்த காரி, கோவலூரினின்றும் சென்று தன் வேற்படை கொண்டு தாக்கினானாக; அவ் வாரியர் கூட்டம் அரியேற்றின் முன் நரிக் கூட்டமென அஞ்சி நடுங்கி யோடிவிட்டன ரென்பார், "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாள் மலையன, தொருவேற் கோடி யாங்கு" (நற். 170) என்று சான்றோர் கூறியுள்ளனர். இவன் புலவர் பாணர் முதலிய இரவலர் பலர்க்கும் களிறும் தேரும் பல நல்கிப் பெரும் புகழ் விளைத்தான்.

இவனைக் காரி யென்றும், மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் கூறுவர். "துஞ்சா முழவிற் கோவற்கோமான், நெடுந்தேர்க் காரி" (அகம்.35) யென்றும், "முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்" (குறுந்.312) என்றும் கூறுதல் காண்க. இத்துணைப் புகழ் படைத்த மலையன் தமிழ் வேந்தர் மூவர்பாலும் ஒத்த நட்புக்கடம் பூண்டு அவரவர்க்கும் வேண்டுங்கால் உதவிபுரிந்துள்ளான். கபிலர்பாலும் பேரன்புடையன். இவனது கோவலூரில் வாழ்ந்த பார்ப்பாரிடத்திற்றான் கபிலர் பாரி மகளிரை அடைக்கலப்படுத்திருந்தார்.

ஒருகால் கபிலர், திருமுடிக்காரியைக் காணச் சென்றார். மூவேந்தரையும் ஒப்பக் கருதும் கருத்தால் அவன் ஏனைப் புலவரோடொப்பக் கபிலரையும் கருதி வேண்டும் சிறப்பினைச் செய்தான். அக்காலை அவர், வேந்தே, யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயினும், ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசை யறிதலேயரிது. ஆதலால், புலவர்பால் வரிசை நோக்காது பொதுவாக நோக்குதலை யொழிக" என இப் பாட்டின் கண் வற்புறுத்துகின்றார்.

    ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
    பலரும் வருவர் பரிசின் மாக்கள்
    வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
    ஈத லெளிதே மாவண் டோன்றல்
    அதுநற் கறிந்தனை யாயிற்         5
    பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.         (121)

திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது.

உரை: ஒரு திசை ஒருவனை உள்ளி - ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து; நாற்றிசைப் பரிசில் மாக்கள் பலரும் வருவர் - நான்கு திசையினுமுள்ள பரிசின் மாக்கள் பலரும் வருவர்; அறிதல் அரிது - அவர் வரிசை யறிதல் அரிது; ஈதல் பெரிதும் எளிது; கொடுத்தல் மிகவும் எளிது; மா வண் தோன்றல் - பெரிய வண்மையையுடைய தலைவ; அது நற்கு அறிந்தனை யாயின் - நீ அவ் வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின்; புலவர்மாட்டு பொதுநோக்கு ஒழிமதி - அறிவுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக எ-று.

விளக்கம்: பரிசின்மாக்கள் பலரும் வருவர் என்றவிடத்துப் பலரும் என்றதனால், அவருள் வல்லவரும் மாட்டாதவரு மெனப் பலரும் இருப்பது பெறப்படும். பரிசிலர் என்ற முறையில் மாட்டாதவரோடொப்ப வல்லவரையும் வைத்து நோக்குதல் மடவோர் செயலாதலால், அறிவுடையோர் வரிசையறிந் தீதல்வேண்டும் என்றதற்கு "ஈதல் எளிது; வரிசை யறிதல் அரிது" என்றார். "புலமிக்க வரைப் புலமை யறிதல், புலமிக்க வர்க்கே" இயலுவ தொன்றாதலின், வரிசையறிவது "அரிதாயிற்று" "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்" (குறள். 528) என்று திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க.
-------------

122. மலையமான் திருமுடிக்காரி

திருமுடிக்காரி தன் வண்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் பெருவியப்புற்று, "திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அஃது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்துக்குக் காரணம் அறியேன்" என்று இப் பாட்டிற் குறித்துள்ளார்.

    கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
    கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
    அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
    வீயாத் திருவின் விறல்கெழு தானை
    மூவரு ளொருவன் றுப்பா கியரென         5
    ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
    வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
    வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
    அரிவை தோளள வல்லதை
    நினதென விலைநீ பெருமிதத் தையே.        (122)

திணை: பாடாண்டிணை. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.

உரை : கடல் கொளப்படாது - கடலாற் கொள்ளப்படாது; உடலுநர் ஊக்கார் - அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற் கொள்ளார்; கழல் புனை திருந்தடி காரி - வீரக்கழலணிந்த இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி; நின் நாடு - நினது நாடு; அழல் புறந்தரூஉம் அந்தணரது - அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; வீயாத் திருவின் விறல் கெழு தானை- கெடாத செல்வத்தினையும் வென்றி பொருந்திய படையையுமுடைய; மூவருள் ஒருவன் துப்பாகியர் என - மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டுமென்று; ஏத்தினர் தரூஉம் கூழ் - அம் மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும் பொருள்; நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரது - நுமது குடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையது; வடமீன் புரையும் கற்பின் - ஆதலால் வட திசைக்கண் தோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும்; மட மொழி - மெல்லிய மொழியினையு முடைய; அரிவை தோள் அளவு அல்லது - அரிவையுடைய தோள் மாத்திரையல்லது; நினது என இலை - நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடைய யல்லையாயிருக்கவும்; நீ பெருமிதத்தை - நீ பெரிய செருக்கினை யுடையையாயிராநின்றாய், இதற்குக் காரணமென்னையோ எ-று.

ஏத்தினர் தரூஉ மென்று பன்மையாற் கூறியது, அவ்வேந்தன் அமைச்சரை, "மூவருள் யானொருவன் எனக்குத் துப்பாகியர்" என அம் மூவரும் ஏத்தினர் தரூஉ மென் றுரைப்பினு மமையும். நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவை தோள் அளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தா யென வியந்து கூறியவாறு.

விளக்கம்:காரியின் மலைநாடு உள்நாட்டதாகலின், "கடல் கொளப்படாது" என்றும், முடிவேந்தர் மூவரும் துணையாக விரும்பும் பெருவலி படைத்தவனாதலின், "உடலுநர் ஊக்கார்" என்றும் கூறினார். திருந்தடி என வாளாது கூறினமையின், "இலக்கணத்தால் திருந்திய அடி" என உரை கூறப்பட்டது. துணை வலியாக வேண்டுமென வேந்தர் விடுப்ப வரும் பொருளைக்கொண்டு இரவலர் பசிப்பிணி தீர்த்தலின், அதனைக் "கூழ்" என்றார். மூவருள் ஒருவன் துப்பாகியர் என்றதற்கு "மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டும்" எனப் பொருள் கூறினமையின், வேறு வகையாகக் கூறப்படும் பொருளை, "மூவருள்.....அமையும்" என்றார். பண்டைத் தமிழ்மக்கள் தம் தாளாற்றலால் ஈட்டிய பொருளை இரவலர்க்கீத்துப் பெறும் புகழையே புகழாகக் கருதுவர்; தாயத்தாற் பெற்ற செல்வத்தை வழங்கிப்பெறும் புகழை விரும்புவதிலர். இந்நூன் முழுதும் தாளாற்றலாற் பெற்ற பொருளே பரிசிலர்க்கு வழங்கப்படுவதை யெடுத்தோதுவதைப் படிப்பவர் நன்கறிவர். பொருளை யீட்டியது போலத் தம் ஆண்மை நலத்தால் மணந்து கொள்ளப்பட்டாராயினும், மகளிர் வாழ்க்கைத் துணையாகக் கருதப் பட்டமையின், கொடைக்குரியராகார் என்பது தமிழ் நூன் மரபு. அதனால், தன்னிற் பிரித்துப் பிறர்க்கு நல்கக்கூடிய பொருளன்மையின், "அரிவைதோ ளளவல்லதை நினதென இலை" என்றார். மனைவியை விலைப்பொருளாகக் கருதி விற்றலும், "பிறர்க்
கீத்தலும் வடநூன் மரபு".
-----------

123. மலையமான் திருமுடிக்காரி

ஒருகாற் புலமை நலஞ் சான்ற நல்லோரிடையே வள்ளல்களின் கொடைநலம் பற்றிப் பேச்சு நிகழ்ந்தபோது, நாநலம் சிறந்த கபிலர், "நாட்காலையிற் கள்ளுண்டு களிக்குங்கால் இரவலர் புகழுரை கேட்டு அவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்; எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதனால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது முள்ளூர்மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். எனவே, இஃது இயற்கைக் கொடை யெனத் தெளிமின்" என்று இப்பாட்டால் எடுத்துரைக்கின்றார்.

    நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
    யார்க்கு மெளிதே தேரீ தல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலையன்
    மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
    பயன்கெழு முள்ளூர் மீமிசைப்         5
    பட்ட மாரி யுறையினும் பலவே.        (123)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: நாட்கள் உண்டு - நாட் காலையே மதுவை யுண்டு; நாள் மகிழ் மகிழின் - நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்; தேர் ஈதல் யார்க்கும் எளிது - தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது; தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்; மகிழாது ஈத்த - மது நுகர்ந்து மகிழாது வழங்கிய; இழை யணி நெடுந்தேர் - பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்; பயன் கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட - பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சிக்கண் உண்டாகிய; மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல எ-று.

இதன் கருத்து, ஏனையோர் கொடை செயற்கை யென்றும் இவன் கொடை இயற்கை யென்றும் கூறியவாறு.

விளக்கம்: செயற்கையாவது, மதுவுண்ட மகிழ்ச்சியால், தன்னால் நல்கப்படும் பொருள்களின் அருமை நோக்கும் இயற்கை யறிவிழந்து ஏற்குநர் ஏற்க வழங்குவது. இயற்கை, மது முதலியவற்றால் அறிவு நலங் குன்றாது ஏற்போர் வரிசை யறிந்து நல்குவது. மகிழ்தல், மது வுண்டு மயங்குதல். "மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு" (குறுந். 165) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. மது மகிழ்ச்சியில் பிறர் நல்கும் கொடையளவினும், அம் மயக்கமின்றியே மலையமான் நல்கும் கொடையளவு பெரிதென்பர், "மாரி யுறையினும் பல" என்றார்.
-----------

124. மலையமான் திருமுடிக்காரி

இரவலர் புரவலரை நாடிப் புறப்படுங்கால் நன்னாள் நோக்குதலும் புள்நிமித்தம் காண்டலும் இயல்பு. "நாள் செய்வது நல்லோர் செய்யார்" என்பது தமிழகத்துப் பண்டுதொட்டே இயன்று வரும் வழக்கு. நாளும் நிமித்தமும் நலமாகாவழிப் பெறக் கருதும் பரிசில் எய்தாதென்று கருதினர். இவ்வண்ணம்கருதிக்கொண்டிருந்த சான்றோர் சிலரைக் கண்ட கபிலர், "மலையன் திருமுடியைக் காணச் செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும், செவ்வி நோக்குதலும், கூறத் தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப் பாடிச் சென்றோர் வறிது பெயர்வதில்லை" யென்று இப் பாட்டில் வற்புறுத்தியுள்ளார்.

    நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப்
    பாடான் றிரங்கு மருவிப்
    பீடுகெழு மலையற் பாடி யோரே.         (124)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை : நாள் அன்று போகி - நல்ல நாளன்றாகப் போகி; புள் இடை தட்ப - புள் நிமித்தம் இடையே நின்று தடுப்ப; பதன் அன்று புக்கு - செவ்வியன்றாகச் சென்று கூடி; திறன் அன்று மொழியினும் - கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும்; வறிது பெயர்குவர் அல்லர் - வறிதாக மீள்வா ரல்லர்; நெறி கொள் - ஒழுங்குபட; பாடு ஆன்று இரங்கும் அருவி - ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய; பீடு கெழு மலையன் பாடியோர் - பெருமை பொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள் எ-று.

மலையற்பாடியோர் வறிது பெயர்குவ ரல்லரெனக் கூட்டுக. அன்றி யென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின்.வறி தென்னும் குறிப்பு வினையெச்சம், பெயர்குவ ரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென் றுரைப்பாரு முளர்.

விளக்கம்: இன்றி யென்பது போல அன்றி யென்பதும் அன்று எனச் செய்யுளில் உகரவீறாக வரும் என்பவாகலின், ஈண்டு அன்றி யென்பது அன்று என வந்தது. இஃது ஆசிரியர் தொல்காப்பியனாரால் எடுத்தோதப்படாது உரையிற் கொள்ளவைக்கப்பட்டமையின், உரைகாரர் "அன்றி....செய்யுளாகலின்" என்றார். பதம் - சென்று காண்டற்குரிய காலம். திறன், கூறத் தகுவனவும் தகாதனவும் ஆகிய கூறுபாடுகள். வாய்தவறிக் கூறத்தகாதன கூறினும் அவற்றைக் கொள்ளாது வேண்டுவன நல்குவன் என்பார், "திறனன்று மொழியினும்" என்றார்.
-------------

125. மலையமான்திருமுடிக்காரி

ஒருகால், சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போருடற்றுவாராயினர். அப்போது சோழன் தன்னுடைய அமைச்சரை விடுத்து மலையமானைத் தனக்குத் துணைவலியாமாறு வேண்டினன். மலையமான் திருமுடிக்காரியும் அவற்குத் துணையாய் நின்று வென்றி பெறுவித்து, பின்னர், அவன் தன் திருக்கோவலூரை யடைந்து இனிதிருந்தான். வழக்கம்போல் அவனைக் காண்டற்குச் சான்றோர் பலர் வந்தனர். வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரும் அவரிடையே வந்திருந்தார். பெருஞ்சாத்தனார் வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் குடியேறிய பழங்குடி மக்களுள் ஒருவர். அக்குடியினரை வடமர் என்பது வழக்கு. இது இப்போழ்தும் பார்ப்பனரிடையே வழங்குகிறது. பொன்னின் நோட்டம் பார்ப்பது இவரது தொழிலாதல் பற்றி, இவர் "வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்" எனப்படுவாராயினர். வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் என்பார் ஒருவர் உளர். அவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். அவர் வேறு; இவர் வேறு. இவர் பாட்டிலும், "வில்லெறி பஞ்சி போல மல்குதிரை, வளிபொரு வயங்குபிசிர் பொங்கும்" (நற். 299) என அவர் கூறுவது போல, நிணந் தயங்கு கொழுங் குறைக்குப் "பருத்திப் பெண்டின் பனுவல்" கூறப்படுவது முதலிய இயைபு கண்டு இவரையும் பேரிசாத்தனாராகக் கொள்வாரு முளர்.

இப் பெருஞ்சாத்தனார் தேர்வண்மலையன் சோழற்குத் துப்பாகி வென்றியொடு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுடன், "வேந்தே, நீ துணைசெய்த இப் போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான் வென்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வி யெய்திய சேரமானும், வல்வேல் மலையன் துணைபுரியாதிருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என வியந்து கூறுவன். இருதிறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப்போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறி மாறி யுண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாக" எனப் பாராட்டியுள்ளார்.

    பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
    நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
    பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
    உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே
    நள்ளாதார் மிடல்சாய்ந்த         5
    வல்லாளநின் மகிழிருக்கையே
    உழுத நோன்பக டழிதின் றாங்கு
    நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே
    குன்றத் தன்ன களிறு பெயரக்
    கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே         10
    வெலீஇயோ னிவனெனக்
    கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
    விரைந்துவந்து சமந்தாங்கிய
    வல்வேன் மலைய னல்ல னாயின்
    நல்லமர் கடந்த லெளிதும னமக்கெனத்         15
    தோற்றோன் றானு நிற்கூ றும்மே
    தொலை இயோ னிவனென
    ஒருநீ யாயினை பெரும பெருமழைக்
    கிருக்கை சான்ற வுயர்மலைத்
    திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.         (125)

திணை: வாகை. துறை: அரசவாகை. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

உரை : பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன - பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோன்ற; நெருப்புச் சினம் தணிந்த - நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய; நிணந் தயங்கு கொழுங்குறை - நிணமசைந்த கொழுவிய தடிகளை; பரூஉக்கண் மண்டையொடு - பெரிய உடலிடத்தையுடைய கள் வார்த்த மண்டையொடு; ஊழ் மாறு பெயர - முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட; உண்கும் - உண்பேமாக; எந்தை - எம்முடைய தலைவ; நின்காண்கு வந்திசின் - நின்னைக் காண்பேன் வந்தேன்; நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள - பகைவரது வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்; நின் மகிழ் இருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைகண்; உழுத நோன் பகடு அழி தின் றாங்கு - உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற்போல; நீ நயந்துண்ணும் நறவு - நினது தாளாற்றலாற் செய்த பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பி யுண்ணும் கள்; நல் அமிழ்தாக - நல்ல அமிழ்தாக; குன்றத் தன்ன களிறு பெயர - மலைபோலும் யானை பட; கடந் தட்டு வென்றோனும் - எதிர்நின்று கொன்று வென்றவனும்; வெலீஇயோன் இவனென நிற்கூறும் - நம்மை வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்; கழலணிப் பொலிந்த சேவடி - வீரக் கழலாகிய அணியாற் சிறந்த செய்ய அடியாலே; நிலம் கவர்பு - போர்க்களத்தைக் கைக்கொள்ளவேண்டி; விரைந்து வந்து சமம் தாங்கிய - விரைந்து வந்து போரைத் தடுத்த; வல்வேல் மலையன் அல்ல னாயின் - வலிய வேலினையுடைய மலைய னல்லனாயின்; நல்லமர் கடத்தல் நமக்கு எளிதுமன் என - நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதென; தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென நிற்கூறும் - தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென நின்னையே புகழ்ந்து சொல்லும்; ஒரு நீ ஆயினை - ஆதலால் நீ ஒருவனாயினாய்;பெரும-; பெருமழைக்கு இருக்கை சான்ற - பெரிய மழைக்கு இருப்பிடமாதற் கமைந்த; உயர் மலை - உயர்ந்த மலையையுடைய; திருத்தகு சேஎய் - திருத்தக்க சேயை யொப்பாய்; நிற் பெற்றிசினோர்க்கு - நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு எ-று.

பனுவலன்ன நிணமென இயையும். நிலங்கவர்யென்பது கவர வெனத் திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண்டெனினு மமையும். தாளாற்றலாற் செய்த பொருளில் நல்லனவெல்லாம், பரிசிலர்க்கு வழங்கி எஞ்சியது உண்டலான் "அழிதின் றாங்கு" என்றார். காண்கு வந்தென்பன, ஒரு சென்னீர்மைப்பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன. உண்குமென்றது சுற்றத்தை உளப்படுத்தி நின்றமையின் பன்மை யொருமை வழுவமைதியாய் நின்றது. மன்: கழிவின்கண் வந்தது.

பெரும, சேஎய், வென்றோனும் வெலீஇயோன் இவனென நிற்கூறும்; தோற்றோனும் தொலைஇயோன் இவனென நிற்கூறும்; அதனால் நிற் பெற்றிசினோர்க்கு ஒரு நீ ஆயினையாதலால் நின் மகிழிருக்கைக் கண்ணே உண்கும் காண்கு வந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு நல்லமிழ்தாக வென மாறிக் கூட்டுக. நெருப்புச் சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை யென்பதற்கு எரியாது பூத்துக் கிடக்கின்ற தழல்போலும் நிணந்தயங்கு கொழுங்குறை யெனினு மமையும். பரூஉக்கண் மண்டை யென்பதற்கு கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை யெனினு மமையும்.

விளக்கம்: கொட்டையும் கோதும் நீக்கி நூற்றற்கேற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு போறலின் நிணத்தை, "பனுவ லன்ன நிணம்" என்றார். உரைகாரரும் "பனுவ லன்ன நிணமென வியையும்" என்றார். காண்கு என்னும் செய்கென்னும் வினைமுற்று வேறு வினைகொண்டு முடியுமாதலின் "காண்கு வந்திசின்" என்றார்; "செய்கென் கிளவி வினையொடு முடியினும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்’ (சொல். வினை. 7) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. இது பற்றியே உரைகாரரும், "காண்குவந் தென்பன....நின்றன" என்றார். "பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி, எண்ணியல் மருங்கிற் றிரிபவை யுளவே" (வினை. 12) என்றமையின், உண்குமென்பது சுற்றத்தை உளப்படுத்தி நின்ற தென்றார், உண்கும் என்பது பன்மையும், காண்கு வந்திசின் என்பது ஒருமையுமாகலின் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகிய உண்குமென்பது பன்மை யொருமை வழுவமைதியாயிற்று. வென்றோன் நன்றி யறிவால் நின்னைப் பாராட்டுதல் ஒருபுறமிருக்க, தோற்றோன் நின் பேராண்மையை வியந்து "நம்மைத் தொலைவித்தவன் இவன்" என்று கூறுவன் என்பார், "தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென நிற்கூறும்" என்றார். இவ்வாறு வென்றோனும் தோற்றோனும் ஆகிய இருவரும் ஒப்பப் பாராட்டுதல் பற்றி, "ஒருநீ யாயினை பெரும" என்றார். நண்பரும் பகைவரும் ஒப்பப் பாராட்டும் சிறப்பு முருகற் குரியதாகலின், "நிற் பெற்றிசினோர்க்குத் திருத்தகு சேஎய்" என்றார். பெற்றிசினோர் - நட்பாகவும் பகையாகவும் பெற்றோர். சேஎய் மலைக்குரியனாகலின், "பெருமலைக்கு இருக்கை சான்ற உயர்மலை" யுடைய
சேய் என்றார்.
---------

126. மலையமான் திருமுடிக்காரி

மலையமான் கபிலர் பாடும் புகழ் பெற்று இனிதிருக்கையில் மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண்டற்கு வந்து, அவனுடைய முன்னோர் பகைவரை வென்று அவர் யானைகட்கிட்ட ஓடைப் பொன்னால் பொற்றாமரை செய்து தம்பால் வந்த பாணர்க்கு வழங்கினரென்றும், திருமுடிக்காரியின் புகழனைத்தையும் எஞ்சாமல் இனிய பாட்டில் வைத்துக் கபிலர் பாடியுள்ளாரென்றும், மேலைக்கடலில் சேரமன்னர் கலஞ்செலுத்தி வாணிகம் செய்யத் தொடங்கியபின் வேற்றோர் எவரும் கலஞ்செலுத்துதற் கஞ்சுவாராயின ரென்றும் குறிப்பிட்டு, "பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத் தலைவ, நின் குடிப்பெருமையும் நின் புகழும் யாம் கூறவல்லேமல்லேம். ஆயினும், இயன்ற அலவிற் கூறுவேம்; அன்றியும்; சேரர் காலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலஞ் செல்லமாட்டாதது போலக் கபிலர் பாடியபின், எம்போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை முன்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவே மாயினம்" என்று பாடியுள்ளார்.

    ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
    பாணர் சென்னி பொலியத் தைஇ
    வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
    ஓடாப் பூட்கை யுரவோன் மருக
    வல்லே மல்லே மாயினும் வல்லே         5
    நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல்
    துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற்
    பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந
    தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
    நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்         10
    புலனழுக் கற்ற வந்த ணாளன்
    இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்
    பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு
    சினமிகு தானை வானவன் குடகடற்
    பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப்         15
    பிறர்கலஞ் செல்கலா தனையே மத்தை
    இன்மை துரப்ப விசைதர வந்துநின்
    வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற்
    றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப
    அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய         20
    அருஞ்சமத் ததையத் தாக்கி நன்றும்
    நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
    பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே.        (126)

திணை : பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை. மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

உரை : ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு - பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக்கொண்டு; பாணர் சென்னி பொலியத் தைஇ - பாணரது தலை பொலியும்படி செய்து; வாடாத் தாமரை சூட்டிய - வாடாத பொற்றாமரையைச் சூட்டிய; விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக - சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையுமுடைய பெரியோன் மரபினுள்ளாய்; வல்லே மல்லே மாயினும் - ஒன்றைக் கற்றறியேமாயினும்; அறிவேமாயினும்; வல்லே நின்வயின் கிளக்குவ மாயின் - விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின்; கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின் - இராப்பொழுது தான் ஓரிடத்தே யுறங்குவது போன்ற செறிந்த இருளையுடைய சிறு காட்டையும்; பறை இசை அருவி - பறை யொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய; முள்ளூர்ப் பொருந - முள்ளூர்க்கு வேந்தே; தெற லரும் மரபின்நின் கிளையொடும் பொலிய - அழித்தற்கரிய தன்மையையுடைய நின் சுற்றத்துடனே பெருக; நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் - நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும்; புலன் அழுக்கற்ற அந்தணாளன் - அறிவின்கண் மாசற்ற அந்தணாளனாகிய கபிலன்; இரந்துசெல் மாக்கட்கு - இரந்து செல்லும் புலவர்க்கு; இனி இடன் இன்றி - இனிப் புகழ்தற்கு இடனில்லையாக; பரந்து இசை நிற்கப் பாடினன் - பரந்து புகழ் நிற்பப் பாடினான்; அதற்கொண்டு - அதனைக் கொண்டு; சினமிகு தானை வானவன் - சினமிக்க சேனையையுடைய சேரன்; குட கடல் பொலம் தரு நாவாய் ஒட்டிய அவ்வழி - மேல்கடலின்கண் பொன்னைத் தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து; பிரர் கலம் செல்கலா தனையேம் - வேறு சிலர் மரக்கலம் போக மாட்டாத அத்தன்மையை யுடையேமாயும்; இன்மை துரப்ப - எமது மிடி துரக்க; இசைதர வந்து - நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்தனம் யாம் - நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம் யாங்கள்; முள் எயிற்று அரவு எறி உருமின் முரசு எழுந்தொலிப்ப - முட்போலும் பல்லினையுடைய பாம்பை யெறியும் இடியேறு போல முரசு கிளர்ந் தொலிப்ப; அண்ணல் யானையொடு - தலைமையையுடைய யானையுடனே; வேந்து களத் தொழிய - அரசு போர்க்களத்தின்கட்பட; அருஞ் சமம் ததையைத் தாக்கி - பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டி; நன்றும் நண்ணாத் தெவ்வர்த்தாங்கும் - பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும்; பெண்ணையம் படப்பை நாடு கிழவோய் - பெண்ணையாற்றுப் பக்கத்தை யுடைய நாட்டை யுடையோய் எ-று.

உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின்வயிற் கிளக்குவமாயின் அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்பப் பாடினன்; அதற்கொண்டு பிறர் கலம் செல்லாத அனையேமாயும் இன்மை துரத்தலால் இசைதர வந்து நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

மக்கட் கெல்லா மென்பது ஐந்தாவதன் மயக்கம். மக்கட்கெல்லாம் ஒக்க வெனினு மமையும் வண்மையிற் றொடுத்தனம் என்பதற்கு நின் வண்மையால் வளைப்புண்டன மெனினு மமையும்.

விளக்கம் : பகைவருடைய யானைகளைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னைக் கொண்டு தாமரைப் பூக்கள் செய்து பாணர்க்கு வழங்குவது பண்டையோர் மரபு. இதனை இவனுடைய முன்னோரும் செய்தனரென்றதற்கு, "வாடாத் தாமரை சூட்டிய உரவோன் மருக" என்றார். கடல் மீதும் பொதுநீக்கி நிலவும் தமது அரசாணை (Maritime Supremacy) செலுத்திப் பண்டைத் தமிழ் வேந்தர் ஆட்சி புரிந்த திறம் தோன்ற, "சினமிகு.......செல்கலாது" என்றார். இஃது ஆங்கிலேயர் நாட்டு வரலாற்றினும் காணப்படும் அரசியற் பண்பென அறிக. வல்லே யென்பது விரைந்தென்னும் பொருளதாயினும் வல்லவாறே என்று பொருள் கூறிக்கொள்ளினும் பொருந்தும். மக்கட்கெல்லாம் என்பது மக்களெல்லாரினும் என ஐந்தாவதன் பொருள்படுதலின், உரைகாரர் "ஐந்தாவதன் மயக்கம்" என்றார். மலையனையும் அவன் மலையையும் கபிலர் பாடிய செய்தியை மாறோக்கத்து நப்பசலையார், பிறாண்டும் "பொய்யா நாவின் கபிலன் பாடிய, மையணி நெடுவரை" (புறம். 174) என்று கூறியுள்ளார். மலையனுக்குரிய முள்ளூரில் முன்னொருகால் சோழ வேந்தனொருவன் புகலடைந்திருந்தா னென்பதையும் நப்பசலையாரே குறித்துள்ளார். ததைதல்-சிதறுதல். தாங்குதல்-தடுத்தல். "வருதார் தாங்கி" (புறம்.52) என்றாற்போல. வண்மையில் தொடுத்தனம் என்றற்கு வண்மையிற் சிலவற்றைத் தொடுத்துக் கூறினேம் என்று உரை கூறினவர், வேறு பொருளும் கூற அமைதலின், "நின் வண்மையால் வளைப்புண்டனம்" என்று பொருள் உரைக்கினும் அமையும் என்றார்.
------------

127. வேள் ஆய்

வேளிர் குலத்துப் பாரிபோல ஆயும் வேளிர் குலத்தவன். இவன் பொதியின் மலையடியிலுள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு அரசு முறை புரிந்தொழுகிய குறுநில மன்னன். இவன் ஆய் அண்டிரனென்றும் சான்றோராற் பாராட்டப்படுகின்றான். அண்டிரன் என்னும் சொற்குப் பொருள் விளங்கவில்லை. நற்றிணை யுரைகாரரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் "அண்டிரனென்பது ஆந்திரனென்னும் தெலுங்கச் சொல்லின் திரிபாதலின் இவன் தெலுங்க நாட்டின னெனவும், அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தா ரென்றிருத்தலானே இவன் அவராற் கொண்டுவரப்பட்ட வேளிர் மரபின னெனவுங் கூறுவ" ரென்பர்.

தெலுங்கர்க்குரிய ஆந்திர ரென்னும் சொல் பிற்காலத்திற் காணப்பட்ட தாதலின், அண்டிர னென்பது ஆந்திர னென்பதன் திரிபென்றல் பொருந்தாது. அகத்தியனாற்கொண்டு வரப்பட்ட குடியினனாயின், இவனைப் பாடிய சான்றோர் அதனைக் குறிக்காமையின், அக் கூற்றும் ஏற்கற்பாலதன்று. இவனுடைய கைவண்மையும் போராண்மையும் சான்றோர்களாற் பெரிதும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. இவனுக்கும் கொங்கருக்கும் ஒருகால் போருண்டாயிற்று. அப்போழ்து இவன் கொங்கரை வென்று அவர் குட கடற்கரையிடத்தே யோடி யொளிக்குமாறு பண்ணினன். தமிழகத்தின் தெற்கின் கண்ணதாகிய பொதிய மலையும் ஆய் குடியும், அம் மலைக் குழுவிலுள்ள கவிர மலையும் புலவர் பாடும் புகழ் படைத்தவை யாகும். இவனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக் கண்ணனார் முதலிய சான்றோர் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். இவருள் இவனைப் பல படியாலும் பாராட்டிப் பாடியுள்ளவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவர்; "திருந்துமொழி மோசி பாடிய ஆயும்" (புறம். 158) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க; இவன் பரிசிலர்க்கு மிக்க பரிசில் வழங்க அவர்கள் அதனைப் பெற்றுச் செய்யும் ஆரவாரத்தை விதந்தோதும் "கருங்கோட்டுப் புன்னை" யென்று தொடங்கும் நற்றிணைப் பாட்டை (167)ப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இவருட் பரங்கொற்றனார், "அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன், சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய்" (அகம். 69) என்றும், பரணர், இவன் நாட்டுக் கவிரத்தைச் சிறப்பித்து, "தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற், கவிரம் பெயரிய உருகெழு கவான்" (அகம். 168) என்றும், காரிக்கண்ணனார், "வியப்படை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை" (நற். 237) என்றும் பாடியுள்ளனர். ஏனையோர் பாட்டுக்கள் இந்நூற்கண் வந்துள்ளன.

ஆசிரியர் ஏணிச்சேரி முடமோசியார், ஏணிச்சேரி யென்னும் ஊரினர். இஃது உறையூரின் பகுதியாகும். மோசி யென்பது இவரது இயற்பெயர். மோசி குடி யென்னும் ஓர் ஊரும் உண்டு. அவ்வூர் மதுரைமாநாட்டுக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தொல்காப்பிய வுரைகாரர் இவரை அந்தணராகக் கொள்வர். இவர் இப் பாட்டின்கண், "பிறர்க் கீயாது தாமே தமித்துண்டு தம் வயிறு நிரப்பும் ஏனைச் செல்வர் மனைகளிற் காணப்படும் ஆரவாரமும் பொலிவும், தன்பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி இழையணிந்த மகளிரொடு புல்லிதாய்த் தோன்றும் ஆய் அண்டிரனது திருமனைக்கண் காணப்படா" என ஆயினது கொடை நலத்தைச் சிறப்பித்துள்ளார்.

    களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
    பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
    களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
    கான மஞ்ஞை கணனொடு சேப்ப
    ஈகை யரிய விழையணி மகளிரொடு         5
    சாயின் றென்ப வாஅய் கோயில்
    சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
    பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
    உரைசா லோங்குபுக ழொரீஇய
    முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.         (127)

திணை : அது. துறை : கடைநிலை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

உரை : களங் கனியன்ன கருங் கோட்டுச் சீறியாழ் - களாப்பழம் போலும் கரிய கோட்டை யுடைத்தாகிய சிறிய யாழைக் கொண்டு; பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென - பாடும் இனிய பாட்டை வல்ல பாணர் பரிசில் பெற்றுக்கொண்டு போனார்களாக; களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் - களிறுகள் இல்லையாகிய புல்லிய பக்கத்தையுடைய நெடிய தறியின் கண்ணே; கான மஞ்ஞை கணனொடு சேப்ப - காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்க; ஈகை அரிய இழையணி மகளிரொடு - பிறிதோர் அணிகலமு மின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே; ஆஅய்கோயில் சாயின்று என்ப - ஆயுடைய கோயிலைப் பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுப; சுவைக்கு இனிதாகிய குய்யுடை அடிசில் - நுகர்தற் கினிதாகிய தாளிப்பையுடைய அடிசிலை; பிறர்க்கு ஈவு இன்றி- பிறர்க்கு உதவலின்றி; தம் வயிறு அருத்தி - தம்முடைய வயிற்றையே நிறைத்து; உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய - சொல்லுதற்கமைந்த மேம்பட்ட புகழை நீங்கிய; முரைசு கெழு செல்வர் நகர் - முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயில்; போலாது - இதனை ஒவ்வாது எ-று.

என்றதன் கருத்து, செல்வர் நகர் பெருந் திரு வுடைமையின் சிறந்ததுபோன் றிருப்பினும், ஆய் கோயில் வறிதெனினும், இஃது அதனினும் சிறந்த தென்பதாம். ஆஅய் கோயில் சாயின் றென்ப; ஆயினும் முரசு கெழு செல்வர் நகர் இதனை யொவ்வாதெனக் கூட்டுக.

விளக்கம் : வெளில் - யானை கட்டுந்தறி. யானை கட்டுந் தறிகளில் யானையில் வழி அவை பொலிவழிந்து தோன்றுமாதலின், "புல்லரை நெடுவெளில்" என்றார். மகளிர்க்கு மங்கலவணி யொழியப் பிறவெல்லாம் நீக்குதற்கும் உரியவாமாதலின், "ஈகை யரிய இழை" யென்றார். "உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மேல் நிற்கும் புகழ்" (குறள்.242) என்பவாகலின், பிறர்க்கீதலின்றித் தம் வயிறு நிறைக்கும் வேந்தரை "உரைசால் ஓங்குபுக ழொரீஇய செல்வர்" என்றார்.
-----------

128. வேள் ஆய் அண்டிரன்

வேள் ஆய் அண்டிரன் பெருஞ்செல்வ முடையவனாதலின், அக்கால நிலைக்கேற்ப ஏனைச் செல்வமுடைய வேந்தர் அவன் புகழ் கேட்கப் பொறாது அவனோடு போருடற்றுவர். அவ்வாறு வேற்று வேந்தரது படையெடுப்பின்றி ஆய் இனிதிருந்து புகழ் வளர்ப்பது பற்றிச் சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்ததாக, ஆங்கே இருந்த ஏணிச்சேரி முடமோசியார், "போருடற்றற் கேதுவாகிய அழுக்காறு கொண்ட வேந்தர் உளராயினும், ஆயது பேராண்மையைக் கஞ்சி அமைந்திருந்தனரே யன்றி வேறில்லை; வேள் ஆய் அண்டிரன் இருக்கும் ஆய் குடி பொதியின்மலை யடியிலுள்ள தென்பது அவர் அறியாத தன்று; அவ்வூர்புகல் பாணர் முதலிய பரிசிலர்க்கு எளிதே யன்றிப் போர் குறித்து வரும் வேந்தர்க்கு அரிது" என்ற கருத்தமைந்த இப்பாட்டின் வாயிலாக அவரது ஐயத்தை யகற்றினார்.

    மன்றப் பலவின் மாச்சினை மந்தி
    இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
    பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
    அன்னச் சேவன் மாறெழுந் தாலும்
    கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்         5
    ஆடுமகள் குறுதி னல்லது
    பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே.         (128)

திணை : அது. துறை : வாழ்த்து. இயன்மொழியுமாம். அவனை அவர் பாடியது.

உரை : மன்றப் பலவின் மாச்சினை மந்தி - ஊர்ப் பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி; இரவலர் நாற்றிய - பரிசிலர் தூக்கி வைக்கப்பட்ட; விசி கூடு முழவின் படின் தெண் கண் - பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது ஓசை இனிய தெளிந்த கண்ணை; கனி செத்து அடிப்பின் - பலாப்பழ மென்று கருதித் தட்டினவிடத்து; அன்னச் சேவல் - அதன்கண் வாழும் அன்னச் சேவல்; மாறு எழுந்து ஆலும் - அவ்வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும்; கழல் தொடி ஆஅய் - கழலவிடப்பட்ட வீரவளையையுடைய ஆயது; மழை தவழ் பொதியில் - முகில்படியும் பொதியின் மலை; ஆடு மகள் குறுகின் அல்லது - ஆடச் செல்லும் மகள் அணுகி னல்லது; பீடு கெழு மன்னர் குறுகலோ அரிது - பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது எ-று.

இது கொடைச் சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று.

விளக்கம்:விசி, விசித்தல்; கட்டுதல் என்னும் பொருளதாம். "விசிப்பலகை" என்ற வழக்குண்மையுங் காண்க. பலாப் பழத்தையே கண்டு பயின்ற மந்தி, முழவினையும் பலாக்கனி யென்று கருதி, அதனைத் தட்டுவது தோன்ற, "கனி செத்து அடிப்பின்" என்றார். "தூவற் கலித்த புதுமுகை யூன்செத்து, அறியா தெடுத்த புன்புறச் சேவல்" (மலைபடு. 146-7) என வருதல் காண்க. ஆய் அண்டிரனது ஆய்குடி பொதியின் மலையிடத்ததாகலின், "ஆஅய் மழைதவழ் பொதியில்" என்றார். ஆடுமகள் குறுகினல்லது மன்னர் குறுகுதல்அரிது என்றாற் போலப் பாரியது பறம்பைப் பற்றிக் கூறப்போந்த கபிலர், பாரியின் பேரிருங் குன்று, "வேந்தர்க்கோ அரிதே, நீலத் திணைமலர் புரையு முண்கண், கிணைமகட் கெளிதால் பாடினள் வரினே" (புறம். 111) என்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
-------------

129. வேள் ஆய் அண்டிரன்

ஆய் அண்டிரன் தன்பால் வரும் பரிசிலர் யாவர்க்கும் மிக்க யானைகளை வழங்குவது கண்டு சான்றோர் வியப்புற்றாராக, ஏணிச்சேரி முடமோசியார் அவர்கள் தெளிவெய்துமாறு மாசு மறுவின்றி விளங்கும் வானத்தின்கண் எங்கும் சிற்றிடமுமின்றி விண் மீன்கள் பூத்து விளங்கினும் அவற்றின் தொகை, ஆய் அண்டிரன்பாலுள்ள களிறுகளின் தொகைக்கு நிகராகாது என்று இப்பாட்டாற் கூறியுள்ளார்.

    குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
    வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து
    வேங்கை முன்றிற் குரவை யயரும்
    தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
    ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல்         5
    இரவலர்க் கீத்த யானையிற் சுரவின்று
    வான மீன்பல பூப்பி னானா
    தொருவழிக் கருவழி யின்றிப்
    பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே.         (129)

திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.

உரை : குறி யிறைக் குரம்பை - குறிய இறப்பையுடைய சிறிய மனையின்கண்; குறவர் மாக்கள் - குறமக்கள்; வாங்கு அமைப்பழுனிய தேறல் மகிழ்ந்து - வளைந்த மூங்கிற் குழாயின் கண் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து; வேங்கை முன்றில் குரவை அயரும் - வேங்கை மரத்தையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தை யாடும்; தீஞ் சுளைப் பலவின் மாமலைக் கிழவன் - இனிய சுளையை யுடைத்தாகிய பலாமரத்தையுடைய பெரிய மலையை யுடையோன்; ஆஅய் அண்டிரன் - ஆயாகிய அண்டிரன்; அடு போர் அண்ணல் - கொல்லும் போரைச் செய்யும் தலைவன்; இரவலர்க்கு ஈத்த யானையின் - அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத் தொகைபோல; கரவின்று வானம் மீன் பல பூப்பின் - மேகம் மறைத்தலின்றி வானம் பல மீனையும் பூக்குமாயின்; ஆனாது- அமையாது; ஒருவழிக் கருவழியின்றி - ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக; பெரு வெள்ளென்னின் - பெருக வெண்மையைச் செய்யுமாயின்; பிழையாது மன் - அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது எ-று.

யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை.

விளக்கம் : தேனை மூங்கிற் குழாய்களிற் பெய்துவைத்துக் களிப்பு மிகுவித்தல் பண்டையோர் மரபாதலின், "வாங்கமைப் பழுனிய தேறல்" என்றார்; பிறரும் "நீடமை விளைந்த தேக்கட் டேறல்" (முருகு. 195) என்பது காண்க. மாமலைக் கிழவன் என்றது, ஆய் அண்டிரன் பொதிய மலைக் குரியனாதல்பற்றி. வானத்தில் வெற்றிடம் சிறிதுமின்றி எங்கும் விண்மீன்களே பூக்கின் அவற்றின் தொகை, ஆய், இரவலர்க் கீத்த யானைத் தொகைக்கு நிகராகும் என்பார், "யானையிற் பிழையாது" என்றார். மீன் பூக்காத இடத்து வானம் கரிதாய்த் தோன்றுதலின், அதனைக் "கருவழி" யென்றார். வானமெங்கும் விண்மீன்களே நிறையப் பூத்தவழி எங்கும் அவற்றின் வெள்ளொளி பரந்து வெளிதாய்த் தோன்றுமாதலின், "பெருவெள் ளென்னின்" என்றார். பிழைத்தல் - நிகராகாமை. "பெருவெள் ளென்னின்" என்றதனால், பெருவெள் ளென்னுமாறு விண் மீன்களும் தோன்றா; ஆகவே, அவற்றின் தொகையும் யானைக்கு நிகராகா என்பதாம்.
--------------

130. வேள் ஆய் அண்டிரன்

ஆய் அண்டிரன் திருமனைக்கண் ஏணிச்சேரி முடமோசியார் தங்கியிருந்த காலையில், அவன்பால் வந்த பரிசிலர் பலர்க்கும் அவன் களிறுகளை மிகுதியும் வழங்குவது கண்டு பெருவியப்புக் கொண்டார். அதனால் அவர் அவனை நோக்கி, "ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர் பலர்க்கும் மிக்க யானைகளை வழங்குகின்றாய்; அவற்றின் தொகைகளை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு பொருத காலத்தில் அவர்கள் நினக்குத் தோற்றுக் கீழே எறிந்துவிட்டு உயிர் தப்பி மேலைக் கடற்கரைப் பகுதிக்கு ஓடிய காலத்தில் அவர் எறிந்து சென்ற வேல்களினும் பலவாக வுள்ளன. யானைகள் இத்துணை மிகுதியாக இருத்தற்குக் காரணம் நோக்கினேன்; ஒன்றும் புலனாகவில்லை. ஒருகால் நின் நாட்டு இளம்பிடி ஒரு சூலுக்குப் பத்துக் கன்று ஈனுமோ?" என்று இப்பாட்டிற் றம்வியப்புத் தோன்றக் குறித்துள்ளார்.

    விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட்
    டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ
    நின்னுநின் மலையும் பாடி வருநர்க்
    கின்முகங் கரவா துவந்துநீ யளித்த
    அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்         5
    குடகட லோட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே.        (130)

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை : விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய் - விளங்கிய மணிகளான் இயன்ற வளைந்த பூணாகிய ஆரத்தையுடைய ஆயே; நின்நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ - நினது நாட்டின்கண் இளைய பிடி ஒரு கருப்பம் பத்துக்கன்று பெறுமோ தான்; நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு - நின்னையும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு; இன்முகம் கரவாது - இனிய முகத்தை யொளியாது வெளிப்படுத்தி; உவந்து - காதலித்து; நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் - நீ கொடுத்த தலைமையை யுடைத்தாகிய யானையை யெண்ணின்; கொங்கர்க் குட கடல் ஓட்டிய ஞான்றை - நீ கொங்கரை மேல்கடற் கண்ணே ஓட்டப்பட்ட நாளில்; தலைப்பெயர்த் திட்ட வேலினும் பல - அவர் புறங்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகப்பட்ட வேலினும் பல எ-று.

தலைப்பெயர்த் திட்ட வேலென்ற கருத்து, படைக்கல மில்லாதாரை ஏதஞ்செய்வா ரில்லையாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப் பட்ட வேலென்பதாம்; அன்றிப்புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப் பிடித்த வேல் என்பாரு முளர். இதனால் வென்றிச் சிறப்பும் கொடைச்
சிறப்பும் கூறியவாறு.

விளக்கம் : யானை ஒரு சூலுக்கு ஒரு கன்றுதான் ஈனுமேயன்றிப் பல கன்றுகளை யீனாது; யானைகளின் தொகை மிகுதி கண்டு வியந்து கூறுதலின் இவ்வாறு கூறினார். ஆய் கோயிலின் வெளியில் முழுதும் யானைகள் மிகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதைச் சான்றோர், "இரவலர் வரூஉ மளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை" (நற். 237) என்பது காண்க. இரவலர்க்குக் கொடுக்கும் திறத்தை "இன்முகம் கரவாது உவந்துநீ யளித்த" என்றும் கொடுக்கப்பட்ட யானைகளின் இயல்பை, "அண்ணல் யானை" யென்றும் குறித்துள்ளார். யானைக் கொடை வாயிலாக அண்டிரன் கொங்கரை வென்ற திறத்தையும் குறிக்கக் கருதலின், "கொங்கர்க் குடகடலோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேல்" என்றார்.
----------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III