புறநானூறு உரை 2a


சங்க கால நூல்கள்

Back

புறநானூறு
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 2a (201முதல் 270வரை)



புறநானூறு - பாகம் 2A
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரையுடன்

Source:
புறநானூறு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
154, டி.டி.கே. சாலை, சென்னை - 18.
------------

பதிப்புரை

உலகில் வாழ் மக்கட்கெல்லாம் உடலும் உளமும் உணர்வும்போல் திகழ்வன அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்கள். இவற்றையே பண்பட்ட நாகரிகம் வாய்ந்த புலவர் பெருமக்கள் தம் பொய்யா நாவால் பாட்டாகவும், நூலாகவும் உலகுக்கு அளித்து உதவியுள்ளார்கள்.

‘ஞாலம் அளந்த மேன்மைத்’ தமிழ் மொழியகத்து வரலாற்றுக் காலத்துக்குப் பல்லாயிர ஆண்டுகளின் முன்னமே ‘ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்’ சால்பு வாய்ந்த வாய்மையே பாடும் தூய்மைப் புலவர்களால், எண்ணிறந்த பாடல்கள் யாக்கப்பெற்றுள்ளன. பாடிய புலவர்களும் அளவில்லாதவர்களேயாவர்.

எம்மொழிக்கண்ணும் காணப் பெறாததாய், ஈடும் எடுப்புமின்றித் தமிழ்மொழிக்கண் நின்று நிலவுவது, பொருளதிகாரமென்னும் தெருளுறு சிறப்பு வாய்ந்த அருள் நூலாகும். இது, மாண்புறு மக்கள் ஒழுகலாற்றினை வகுத்துக் காட்டுவது. ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியராம் செந்தமிழ்ச்சான்றோரால் செய்யப்பெற்றது. இவர் காலம் ஏறத்தாழ ஐயாயிரத்தறுநூறு யாண்டுகட்கு முன் என்ப. இதன்கண் அகத்திணை, புறத்திணை என இருபெரும் பிரிவுகள் காணப்படும். அகத்திணைக்கண் உணர்வுநிலையாம் இன்ப ஒழுகலாறு விரித்து விளக்கப்பட்டுள்ளது. புறத்திணைக்கண் உடல் உளங்களின் நிலையாம் அறம் பொருள்கள் பல்வேறு துறைகளாக வகுத்து விளக்கப்பெறுகின்றன.

தொல்காப்பியனார்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த செந்நாப்புலமைச் செல்வர்களால் யாக்கப்பெற்றுக் கடல்கோள்களாலும், பேணாப் பெருங்குறையாலும் கிட்டாதொழிந்தன போக, எஞ்சியவற்றைப் பாட்டெனவும் தொகையெனவும் கூட்டித் தொகுத்தனர். அவை, பத்துப்பாட்டெனவும் எட்டுத்தொகை யெனவும் பெயர் பெற்று வழங்கி வருகின்றன. எட்டுத் தொகை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எனப் பெயர் பெறும். இத்தொகுப்பின்கண் ஆறு அகமும் இரண்டு புறமும் காணப்படுகின்றன. அகத்தை மும்மூன்றாக அமைத்து ஒவ்வொன்றன் ஈற்றிலும் ஒவ்வொரு புறம் அமைத்துள்ளார்கள். இவ்வமைப்பு, அகம், கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனவும், புறம், சிறப்பும் பொதுவும் எனவும் பிரிந்தொருங்கியலும் அருமையைப் புலப்படுத்தும்.

புறநானூற்றின்கண், அறமும் பொருளு முதலாக வாழ்க்கைக்கு இன்றியமையாத ‘மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்’ முதலிய நற்பண்புகளும், கடமையும், உற்றுழி யுதவியூக்கும் நற்றிறமும், உயிரொடு கெழுமிய செயிர்தீர் நட்பும், செங்கோன்மையும், கடவுட்பற்றும், பற்றும் பகைமையொடு பொருது நகைமையை நாடெலாம் பெருக்கும் நலமும், புகழ் பெருக்கும் புலமும் பிறவும் செறிந்து காணப்படும்.

இவையே உழவு, வாணிகம், அரசியல், பொருளாக்கம், ஒற்றுமை, குழுஉயர்வு, கலைப்பண்பு முதலிய வளர்ந்தோங்குவதற்கு உறுதுணையாவன. இந்நூலின்கண் நூற்றுக்கணக்கினரான சங்கச்சான்றோர்களால் பாடப் பெற்ற நானூறு பாட்டுக்கள் அமைந்துள்ளன. பண்டைய உரையாசிரியர் ஒருவர் இருநூற்று அறுபத்தொன்பது பாடல்களுக்குச் செவ்விய உரையொன்று இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாட்டிலும் பாடினோர், பாடப்பட்டோர், திணை, துறை முதலியவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாட்டுகளுக்கு இதுகாறும்யாரும் உரை யெழுதி வெளிப்படுத்தவில்லை. அத்தொண்டினைச் செய்ய, நம் கழகம் முன் வந்தது. அதனைச் செய்து முடிக்கச் ‘சித்தாந்த கலாநிதி’ ஆசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வாய்ப்பாக முன் நின்றனர்.

இவர்கள் உரையில் பண்டையுரையாசிரியர் உரையை அடியொற்றி எளிதில் புரிந்து கொள்ளுமாறு கண்ணழித்தும், ஏனையவற்றிற்குப் புத்தம் புதிய செவ்விய உரை கண்டும், உரை விளக்கமும், ஆராய்ச்சிக் குறிப்பும், வரலாற்று உண்மையும், இவ்வுண்மையை வலியுறுத்த ஆங்காங்கே கல்வெட்டாராய்ச்சிக் குறிப்புகளும், தக்க அகப்புறச் சான்றுகளுடன் நன்கு விளக்கியுள்ளமை காணலாம். உரையின் திட்ப நுட்பச் சிறப்போர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்கள் அணிந்துரை நல்கியுள்ளார்கள்.

இந்நூலைத் தனித்தனி இருநூறு பாட்டுகள் கொண்ட இருபெருநூலாகக் கையடக்க வாய்ப்பமைய அச்சிட்டுள்ளோம். முதற் பகுதி 1947 இல் வெளிவந்துள்ளது. அதைப்போலவே இதனையும் தமிழுலகம் போற்றி யாதிரிக்குமென நம்புகின்றோம். இந்நூல்உண்மையான தமிழக வரலாறாகும். மேல் தமிழக வரலாற்றை விரித்தெழுது வோர்க்கும், தமிழ்ப் பற்றும் நாட்டுப்பற்றும் கொண்டு அன்பும் அருளும் ஆண்மையும், ஒற்றுமையும் நட்பும் வாய்ந்து விழுமிய ஒழுக்கம் ஒழுகி வாழவிழையும் யாவர்க்கும் உறுதுணையாக நிற்பது இந்நூலே யாகும். இதன்கண், ஏட்டுப்படிகள் பல கொண்டு ஒப்புநோக்கித் திருந்திய பாடங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெருமக்கள் போற்றிக் கற்றுத் தமிழையும், நாட்டையும் பண்டைய நிலைபோல் உலகுக்கு வழிகாட்டியாகச் செய்வார்களாக.

இச் சிறந்த அரிய பெரிய வுரையை ஆக்கித்தந்த ‘சித்தாந்த கலாநிதி’ ஆசிரியர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை யவர்களுக்குக் கழகத்தார் நன்றி உரியதாகின்றது.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
-------------

முன்னுரை

சங்ககாலச் சான்றோர்கள் அவ்வப்போது பாடிய புறத்திணைக்குரிய பாட்டுகளுள் நானூறு பாட்டுகளைத் தேர்ந்து, பண்டைநாளைச் சான்றோர் ஒருவரால் தொகுக்கப்பெற்றது, இப் புறநானூறு என்பது உலகறிந்த செய்தி. இதன் முதல் இருநூறு பாட்டுகள் ஒரு பகுதியாக முன்பு வெளியிடப்பெற்றன; இப்போது 201 முதல் 400 பாட்டுகள் கொண்ட இரண்டாம் பகுதி வெளிவருகின்றது.

இப்புறநானூற்றின் சிறப்பும், இதன்பால் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் அன்பும் மதிப்பும் இந்நூற்கண் அடங்கியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளின் மாண்பும், முதற்பகுதியின் முன்னுரைக்கண் சிறப்பாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இம் முன்னுரைக்கண் இவ் வெளியீட்டுக்கு அடிப்படையாய் நின்ற குறிப்பைத் தெரிவிப்பது முறையென்பது பற்றி அதனைச் சுருங்க உரைக்கின்றாம்.

சுமார் இருபத்தைந்து யாண்டுகட்கு முன், யான் கரந்தைப் தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ்த் தொண்டாற்றியபோது, தஞ்சை சில்லா அரித்துவாரமங்கலத்துக்கு அண்மையிலுள்ள பள்ளியூர் என்னும் சிற்றூர்க்கு என் நண்பதொருவருடன் சென்றிருந்தேன். அங்கே கிருட்டிணசாமி சேனைநாட்டாரென்ற தமிழாசிரியரொருவர் வாழ்ந்து வந்தார். அவர்பால் தொல்காப்பியத்து எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணருரை யொன்று இருந்தது. அதனைப் பிரதிபண்ணிக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தால் அவ்வூரிலேயேயான் சில நாட்கள் தங்கினேனாக, எனக்கும் அவருக்கும் நட்பு முதிர, அவர் வாயிலாக அரித்துவாரமங்கலத்தில் வாழ்ந்த தமிழ்ச் செல்வரும் அரிய புலவருமாகிய திரு. வா. கோபாலசாமி ரகுநாதராசாளியார் அவர்களையும் அவர்பால் நட்புற்றிருந்த பின்னத்தூர், திரு. அ. நாராயணசாமி ஐயர், கோழவந்தான், திரு. அரசஞ்சண்முகனார் முதலிய பல புலவர்களையும் பற்றிப் பல செய்திகளைக் கேட்டு மகிழும் வாய்ப்புடையனானேன். அவ்வாறிருக்கையில், ஒருநாள் யான் திரு. டாக்டர். உ.வே. சாமிநாதையர் வெளியிட்ட புறநானூறு இரண்டாம் பதிப்பு ஒன்றைப் புத்தம்புதிதாக வாங்கிச் சென்றேன். அதனைக் கண்டதும் சேனைநாட்டாரவர்கள் ஒரு செய்தியைத் தெரிவித்தார்கள். திரு. இராசாளியார் அவர்கள் பால் புறநானூற்று ஏடு ஒன்று இருந்ததாகவும், அதனை ஒரு கால் தம்மிடம் தந்து திருத்தமாகப் படியெடுக்குமாறு பணித்ததாகவும், அதனைத் தாம் அழகாக எழுதிவைத்திருப்பதாகவும், என்னிடம் செல்லிச் சில நாட்களுக்குப் பிறகு அக் கைப் பிரதியையும் காட்டினார். அப் பிரதியையும் அச்சாகியிருந்த புறநானூற்றையும் ஒப்புநோக்கியதில் முற்பகுதியில் வேறுபாடுகள் மிகுதியாகக் காணப்படவில்லை; பின்னர் 200 பாட்டுகட்கு மேலுள்ள பகுதிகளை ஒப்புநோக்கியபோது, சில பாட்டுகளில் அச்சுப் பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப்பெற்றன. அவற்றை மட்டில் அச்சுப் பிரதியில் ஆங்காங்கே குறித்துக்கொண்டோம். அவ்வாறு ஒப்புநோக்கும் பணி 1927 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் நாள் முடிவுற்றது. ஆயினும் இப்பிரதி திரு. டாக்டர் ஐயரவர்கட்குக் கிடைக்காது போனது பற்றி என் மனதில் ஐயமொன்று ஊசலாடிக் கொண்டிருந்தது நிற்க.

பின்பொருகால், எனக்கு இளமையில் தமிழறிவுறுத்திய ஆசிரியரும் திண்டிவனம் A.A.M. ஹைஸ்கூலில் தமிழாசிரியராய் இருந்தவருமான சீகாழி திரு.கோவிந்தசாமி ரெட்டியாரவர்கள் வைத்திருந்த ஐங்குறு நூற்றுக் கையெழுத்துப் படியையும், அச்சாகி வெளிப்பட்டிருந்த ஐங்குறு நூற்றையும் ஒப்புநோக்கும் வாய்ப்புப்பெற்றேன். அப்போது அச்சுப் பிரதியில் காணப்படாத சில வேறுபாடுகள் கிடைத்தன. அதனால், டாக்டர் திரு. ஐயரவர்களுடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள்பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன். இத் தெளிவால் பழைய ஏடுகளைத் தேடுவதில் வேட்கையொன்று என் உள்ளத்தே கிளர்ந்தெழுவதாயிற்று. இதன் பயனாகவே, சைவசித்தாந்த நூல்களுள் சிறப்புடைய வொன்றாகக் கருதப்படும் ஞானாமிர்தத்துக் குரிய ஏடுகள் திருக்கோவலூர்த் தாலூக்கா சிறுமதுரை (ஏனாதிவாடி) யினின்றும், திருநெல்வேலிக் கண்மையிலுள்ள இராசவல்லிபுரத்துச் செப்பறையினின்றும் பிறவிடங்களினின்றும் கிடைத்தன.

இந்நிலையில் யான் வெளியிட்ட ஐங்குறுநூறு சார்பாக டாக்டர் திரு. ஐயரவர்கட்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப்போக்குவரவால் ஏடு தேடி ஒப்புநோக்கி இன்புறும் முயற்சியில் எனக்குண்டான வேட்கை திண்ணிதாய் மேன்மேலும் முயலுமாறு செய்தது. என் முயற்சியின் திண்மை கண்ட நல்லறிஞர் சிலருடைய துணையால் பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய இவற்றின் ஏடுகள் கிடைக்கப்பெற்றுப் புதிய பாட வேறுபாடுகளும் திருத்தங்களும் கண்டு இன்புற்றேன்.

இந்நாளில் இம்முயற்சிகட்குப் பொருளுதவி செய்யும் செல்வர்கள் அரியராய் இருப்பது கண்டு யான் மனம் தளர்ந்திருந்தபோது தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அமைச்சராய் இருந்த திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள், இவ்வாராய்ச்சிகளை முடித்துக் கொண்டு உரையில்லாத பகுதிகட்கு உரையும் எழுதினால் இவற்றைக் கழகத்தின் வாயிலாகவே வெளியிடலாமெனக் கட்டுரைத்தார்கள். சின்னாட்குப்பின் அவர்கள், இம் மண்ணுலக வாழ்வை நீத்தேகியது எனக்குப் பெருவாட்டத்தை யுண்டுபண்ணிற்று; ஆயினும், அவர்களுடைய உரிய தம்பியும் என் இனிய நண்பருமாகிய திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் என்னை ஊக்கினார்கள். யானும் என் பணியைச் செய்து வந்தேன்.
-------------

இச் சூழ்நிலைக்கிடையில் யசோதர காவிய ஏடொன்று கிடைக்கப் பெற்று அதற்கு உரை கண்டு கழகத்தின் வாயிலாக வெளியிட்டேன். அது முடியும் நிலையில் காலஞ்சென்ற, பண்டித நாவலர். திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் மணிமேகலையில் வரும் சமய பகுதிக்கும் தருக்கப் பகுதிக்கும் உரை காணுமாறு பணித்தார்கள். அப்போது யான் திருப்பதி, ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஓரியண்டல் கல்லூரியில் தமிழாசிரியனாக இருந்தது அவ் வுரைப்பணிக்குச் சிறந்த ஆதரவாயிற்று; அங்கேயிருந்த வடநூற் பேராசிரியர்களாலும் நூல் நிலையத்து நூல்களாலும் நான் பெற்ற நலங்கள் பலவாகும். ஆயினும், இடையீடாகத் தோன்றிய இப் பணிகளால் பதிற்றுப்பத்து உரைப்பணியும் புறநானூற்று உரைப்பணியும் காலத் தாழ்வு பெற்றன.

பின்னர், யான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராயச்சிப் பகுதித் தமிழ் விரிவுரையாளனாய் வந்தேனாக, அந்நாளில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, M.A., M.L., அவர்கள் ஞானாமிர்தத்தைச் செம்மைசெய்து வெளியிடுமாறு பணித்தார்கள். அது செய்து வருங்கால் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரான திரு T.V. சதாசிவப் பண்டாரத்தாரவர்களுடைய இனிய நட்பைப் பெற்றுக் கல்வெட்டுகளின் வரலாற்று மாண்பும் இன்றியமையாமையும் உணர்ந்து அவற்றைப் படித்தறிதற்கு வேண்டும் பயிற்சியும் அவர் துணையால் பெறும் பேறுடையனானேன். அப் பயிற்சியால் சங்ககாலச் சான்றோர் பலருடைய ஊர்களையும், பெயர் மரபுகளையும், நாட்டுவரலாறுகளையும் அறிந்து கொள்வது இனிது இயலுவதாயிற்று; சங்க நூற் புலவர் பலரைப்பற்றிய அரிய குறிப்புகளைக் கல்வெட்டுகளைக் கொண்டும் நேரில் சில இடங்கட்குச் சென்று கண்டும் அறிந்து கொண்டேன்.

இச்செயல்கட்கிடையே யசோதரகாவியத்தின் சார்பாக என்னிடம் வந்த வீடூர் திரு. பூரணசந்திரநயினார் வாயிலாகச் சூளாமணியேடுகள் நான்கு வரப்பெற்று, அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் திரு. T.P. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்பால் சேர்த்தேன். அவர்கள் திரு. வெள்ளைவாரணம் அவர்களையும் என்னையும் ஒருங்குவைத்து அதனை ஆராய்ச்சி செய்தார்கள்.

இவ்வாறு இடையிடையே தோன்றிய தமிழ்ப்பணிகளால் மெல்ல நடந்து போந்த சங்க நூல் உரைப்பணியும் முற்றுப்பெற்றது. பெறவும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் புறநானூற்றை வெளியிடத் தொடங்கினர். கைக்கடக்கமாக அமைதல் வேண்டி 1-200 பாட்டுக்களை ஒரு பகுதியாகவும், எஞ்சியவற்றை ஒரு பகுதியாகவும் வெளியிடக் கருதி முற்பகுதியை 1947 இல் வெளியிட்டனர். பின்னர்ப் பதிற்றுப் பத்து உரையினைத் தொடங்கி 1950 இல் முடித்து வெளியிட்டு இப்போது புறநானூற்று இரண்டாம் பகுதியை வெளியிடுகின்றனர்.

முதற்பகுதியிற் போல இவ் விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு பாட்டுக்கும், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரைவிளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாட வேறுபாடுகளும் அவற்றைப்பற்றிய குறிப்புகளும் அவ்வப்பாட்டின் உரை விளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப்பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப்பற்றிக் கிடைத்தவரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன. பாடப்பட்டோர் பெயர் தெரியாவிடத்துப் பாடினோர் பெயரும், இருவர் பெயரும் புலப்படாதவழிப் புறத்துறைப் பெயரும் பாட்டுக்களுக்குத் தலைப்பாக இப்பகுதியில் தரப்பெற்றுள்ளன. இன்னும் எத்தனையோ பல கல்வெட்டுகளும் (Inscriptions) செப்பேடுகளும் (Copper plate grants) பழந்தமிழ் நூல்களும் வெளிவராமல், தெளிவின்மை, பற்றின்மை, பொருளின்மை உள்ளமின்மை முதலிய மையிருட்பிழம்பில் புதைந்து மறைந்து கிடத்தலால், இந்நூற்கண் காணப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை முடிந்த முடிபாகக் கோடற்கு இடமில்லை; ஆயினும், அவை முழுதும் வெளியாகுங்காறும் இக் குறிப்புகளை மேற்கொள்வது அறிஞர்கட்குத் தவறாகாது.

"பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித் திரிந்து ஆராயந்து கழித்த உங்கள் காலத்தை B.O.L., M.O.L. என்ற பட்டங்களைப் பெறுவதற்குக் கழித்திருந்தால் உங்களது வாழ்க்கை, பொருள்நிலையில் மிக்க சிறப்புபெற்றிருக்கும்," என்று என் நண்பரொருவர் என் சங்கநூல் வெளியீடுகளை நோக்கி என்பால் கொண்ட உண்மையன்பினால் கழறிக் கூறினார். பொருள்நிலை நோக்கி அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே; அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும் பிற எக்காலத்தும் இந்த இனிய தமிழ்ப்பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில் முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்.

யான் செய்து போந்த ஆராய்ச்சிகட்கு வேண்டும்போதெல்லாம் அறிவுத்துணையும் ஊக்கமும் காட்டி இன்புறுத்திய பேரறிஞர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறை விரிவுரையாளர்களுமான திரு. T. V. சதாசிவபண்டாரத்தார், திரு. வெள்ளைவாரணனார் ஆகிய திருவாளர்களுடைய அன்பும் நன்றியும் என் நெஞ்சில் என்றும் நின்று நிலவுகின்றன. ஞாமாமிர்த ஏடு, நற்றிணையேடு முதலிய ஏடுகளை உடனிருந்து ஒப்புநோக்கற் கண்ணும், புறநானூற்றுப் பாட வேறுபாடுகளை ஆராயுமிடத்தும், கல்வெட்டுக் குறிப்புகளைத் தெளியுங்காலும் என் இனிய நண்பர் திரு. வெள்ளைவாரணனாம் அவர்கள் செய்த உதவி நினைத்தொறும் அறிவுக்கு இன்பந்தரும் நீர்மையதாகும்.

இவ் வுரைநூலுக்கு இனிய முகவுரை எழுதிச் சிறப்பிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் திரு. டாக்டர். அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களது நுண்மாண்புலமை நலமும் சிறந்த ஆராய்ச்சித் திறமும் தமிழுலகு அறிந்து பாராட்டி இன்புறுகின்றது. அவர்கள் தங்கட்குள்ள பல அலுவல்கட்கிடையே இவ்வுரையினை அன்பு கூர்ந்து ஆராய்ந்து அழகிய அணிந்துரை தந்து சிறப்பித்தது நினைந்து அவர்கட்கு என் மனம் கெழுமிய நன்றி உரியதாகின்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணிபுரிந் தொழுகிய எனக்குப் பல நல்ல வசதியினைச் செய்து என் தமிழ்ப்பணிக்கு வேண்டும் ஆதரவும் அன்பும் நல்கும் ‘மதுரை மீனாக்ஷி மில்ஸ்’ உரிமையாளர் பெருந்தமிழ்ச் சைவ வள்ளல் உயர்திரு. கரு. முத்து, தியாகராச செட்டியார் அவர்களது பெருநலம் புலவர் பாடும் புகழுடையதாகும்.

எளிது இனிது விரைவில் விலையாகிப் பேரூதியம் தரும் துறையே நினைந்து மாணவர் பயிலும் பள்ளிகட்குரிய பாடப்புத்தக வெளியீட்டிலே இன்றைய புத்தக வெளியீட்டு வாணிகருலகு பேரூக்கமும் கருத்தும் கொண்டு இயங்குதலால், இவ் வுரைநூல் போலும் பெருநூல்களை வெளியிடற்கு இடமில்லாதிருக்கவும், "இவற்றை வெளியிடுவதற்கும் யாம் அஞ்சோம்" என்ற மனத்திண்மை கொண்டு தளராது தவிராது பெருநூல் வெளியீடுகளால் உயர்ந்து நிற்கும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதனை அழகுற அச்சிட்டு வெளியிடுவது குறித்துத் தமிழுலகம் அவர்கட்கு என்றும் நன்றி பாராட்டும் கடமையுடையது.

பரந்த புலமையும் சிறந்த செல்வாக்கும் நிறைந்த ஆதரவுமுடைய தக்கோர் செய்தற்குரிய இத் தமிழ்ப் பெரும்பணியில் ஒரு தகுதியும் இல்லாத என்னையும் ஈடுபடுத்தி ஆட்கொண்டருளும் அங்கயற் கண்ணியொடு ஆலவாய் அமர்ந்த சொக்கப்பெருமான் திருவடிகள் எக்காலும் என் நெஞ்சினின்றும் நீங்காது நிலவுக என என் மனமொழி மெய்களாற் பரவுகின்றேன்.

    "ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே"

மதுரை ஒளவை சு. துரைசாமி.
22.8.1951
------------------

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய டாக்டர். அ. சிதம்பரநாத செட்டியார் M.A., P.H.D., அவர்கள்
அணிந்துரை

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு, பண்டைத் தமிழகத்தின் அரசியல் நிலைமையையும் குடிவாழ்க்கையினையும் பொருளாதாரச் செழுமையினையும் புலவர் பெருமக்களின் உள்ளத்துணர்வுகளையும் தெரிவிக்கு முகமாக, இக்காலத் தமிழ்மக்கள் நெஞ்சில் அரசியற் சீர்திருத்தங்களைத் தோற்றுவிக்கும் நூல்களில் தலையாயது. இதனைப் பழையவுரையுடன் 1894 ஆம் ஆண்டு மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாத ஐயரவர்கள் முதற்பதிப்பாகவெளியிட்டார்கள். ஐயரவர்களால் பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் நான்குமுறைக்கு மேலாகப் பல பதிப்புகளைப் பெற்று இந்நூல் வெளிவந்திருத்தலொன்றே தமிழ்மக்கள்உள்ளத்திற்கு எழுச் சிதரும் நூல்களில் தலைமையானது இஃதென்பதனை வெளிப்படுத்தும்.

சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையேதம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம் ’நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத் துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்ககாலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. அரும்பெறல் நூலாகிய இதனை மாணவர் முதல் முதியோர் வரை அனைவரும் பயிலுதல் விரும்பத்தக்கது.

இந்நூலுக்கு அமைந்த பழையவுரை பாடற்பொருளைத் தொகுத்துரைக்கும் பொழிப்புரையாகவும், சொன்முடிபும், இலக்கணக் குறிப்பும், பிறநலங்களும் ஆகியவற்றை விளக்குஞ் சிறப்புரையாகவும் அமைந்துளது. இப் பழையவுரை 266 ஆம் பாடல் வரையுமே கிடைத்துளது. இதனுள்ளும் 242 ஆம் பாடலுக்கு மேலுள்ள உரைப்பகுதிகள் சில இடங்களிற் சிதைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் புறநானூறு முழுவதுக்கும் யாவரும் எளிதாக உணரும் வகையில் தெளிவான விளக்கவுரை யொன்று வெளிவருதல் தக்கதே. இவ்வுரைத் தொண்டினைத் திரு. சித்தாந்த கலாநிதி, ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தமிழார்வத்துடன் நிறைவேற்ற முன் வந்து இந்நூல் முழுவதுக்கும் தெளிவான விளக்கவுரை யொன்றை எழுதி முடித்துள்ளாரகள். இவர்கள் புறநானூற்றின் முதல் இருநூறு பாடல்களுக்கு எழுதிய விளக்கவுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் 1947 ஆம் ஆண்டில் முதற் பகுதியாக வெளியிடப்பெற்றது. பின் இருநூறு பாடல்களுக்குரிய விளக்கவுரை அக் கழகத்தின் சார்பில் இரண்டாம் பகுதியாக இப்பொழுது வெளிவருகின்றது. இவ்விளக்கவுரையில், ஒவ்வொரு செய்யுளின் முன்னும் அதனைப் பாடிய புலவர்க்கு உரிய ஊரும் பேரும் நாடும் பிற செய்திகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்பும், பாடப்பட்டோரைப் பற்றிய செய்திகளும் விரித்துரைக்கப்பெற்றுள்ளன. பழைய வுரையுள்ள பாடல்களுக்கு அப்பழைய வுரையின் பொழிப்புரையினையே சிறிதும் மாற்றாது கண்ணழித்து அமைக்கப்பட்ட பதிவுரையொடு சிறப்புரையும் தரப்பட்டுள்ளது. இம்முறை பழைய வுரையினைப் பயில்வார்க்கு மிகவும் துணை செய்யும் என்பது உறுதி.

பழையவுரை யில்லாதனவாகிய 269 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்குத் திரு. பிள்ளையவர்கள் தாமே புதியதோர் உரையினை வரைந்துள்ளார்கள். புறநானூற்றின் பிற்பகுதிக்கு இவர்கள் எழுதிய இப்புதிய உரை முற்பகுதிக்கு அமைந்த பழையவுரையின் சொன்னடையினையே பெரிதும் அடியொற்றிச் செல்வது பாராட்டத் தக்கது. இப் பதிப்பில் பாடல்தோறும் உரைப்பகுதியின் பின்னே அப்பாடலில் அமைந்த சுவைநலங்களை விளக்குமுகமாக உரை விளக்கங்கள் தரப் பெற்றுள்ளன; சங்க நூல்களிலும் பிறநூல்களிலும் காணப்படும் ஒப்புமைப் பகுதிகளும் வரலாற்றுச் செய்திகளும் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. டாக்டர் ஐயரவர்கள் பதிப்பில் வெளிவந்த பாடல் பகுதிகளிற் சிதைந்து காணப்படும் அடிகளில் சில பழைய ஏடுகளுடன் ஒப்புநோக்கப்பட்டு ஓரளவு திருத்தம் பெற்றுள்ளன. புறம்: 328, 337, 355, 357, 361, 362, 366, 370 என்னும் எண்ணுள்ள பாடற் பகுதிகளைச் சிறப்பாக நோக்குக. அரித்துவார மங்கலத்தில் வாழ்ந்த புலமைச் செல்வரும், தமிழ்ப்புலவர்களைப் போற்றிப் புகழ்பெற்ற செந்தமிழ்ப் புரவலரும் ஆகிய வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் அவர்கள் வைத்திருந்த பழைய புறநானூற்றுச் சுவடியின் துணை கொண்டு பிள்ளையவர்கள் இப் பதிப்பில் அமைந்த செய்யுட்களைத் திருந்திய வடிவில் வெளியிட்டுள்ளார்கள் என அறிகிறேன். இவ்வுரைப் பதிப்பில், புலவர் பெருமக்களும் அவர்களாற் பாடப்பெற்ற வள்ளல்களும் வாழ்ந்த ஊர்களைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளின் துணை கொண்டு உய்த்துணர வைக்கப்பட்டுள்ளன. இத்தொண்டு தமிழ் நாட்டின் பழைய வரலாற்றினை ஆராய்ந்து காண விரும்புவார்க்கு மேலும் ஊக்கமளிக்குமென நம்புகிறேன்.

இவ்விளக்கவுரையாசிரியர் சங்கப்புலவர் பெயர்களுட் சிலவற்றை உய்த்துணர்ந்தும், பாடவேறுபாடு கண்டும் திருத்தியுள்ளார். அவற்றுட் சில பின்வருவன-:
கருங்குழலாதனார் - கருங்குளவாதனார் புறம் 224
ஆடுதுறைமாசாத்தனார் - ஆவடுதுறை
மாசாத்தனார் " 227
தும்பி சொகினனார் - தும்பைச்சொகினனார் " 249
மாற்பித்தியார் - மாரிப்பித்தியார் " 252
குளம்பாதாயனார் - குளம்பந்தாயனார் " 253
வெறிபாடியகாமக் கண்ணியார் - வெறிபாடியகாமக் காணியார் " 271
அடைநெடுங்கல்வியார் - அண்டர்
நடுங்கல்லினார் " 238
நெடுங்கழுத்துப்பரணர் - நெடுங்களத்துப்பரணர் " 291
வெள்ளைமாளர் - வெள்ளைமாறனார் " 296
ஆலியார் - ஆவியார் " 298

இவை அறிஞர்கள் ஆராய்தற்கு உரியன.

செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும், உள்ளத்துணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் புனைந்துரைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. இம்முறை பாடிப்போருள்ளத்திற் பாடற் பொருளை நன்கு பதியும்படி செய்யும். மேலும், இவ்வாசிரியர் பாடற் பொருளைத் துறைக்குறிப்புடன்இயைந்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.

ஓரளவு தமிழ்ப்பயிற்சியுடையாரும், புறநானூற்றின் பொருள் நலங்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி இனிய எளிய தமிழ்நடையில் இவ்வுரை அமைந்துளது. இக் காலத்து அரசியற் சீர்திருத்தங்களிற் கருத்துடைய தமிழ்ச் செல்வர்கள், தமிழ்மாணவர்கள், தமிழ் நாட்டு வரலாற்றிற் கருத்துடையோர் ஆகிய அனைவர்க்கும் இவ்விளக்கவுரை நன்கு பயன்படு மென்னும் துணிபுடையேன். இதனை அழகிய முறையில் வெளியிட்டுதவும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருடைய தொண்டுபோற்றத் தக்கது.
-----------

புறநானூறு மூலமும் உரையும்

201. இருங்கோவேள்

இருங்கோவேள் என்பான் பதினெண்குடி வேளிருள் ஒருவன் தமிழகத்தின் வடபகுதியாகிய எருமை (மைசூர்) நாட்டைச்சேர்ந்தது வரையென்னும் நகர்க்கண்ணிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர்வழியினன். இத் துவரை துவார சமுத்திரம் எனப்படுகிறது. இருங்கோவேள் அவ் வேளிருள் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன். புலி கடிமால் என்பது இவன் குடி முதல்வனுக்குப்பெயர். இவ் வேளிர் வள்ளன்மை சிறந்தவர்; போர்வன்மை மிக்கவர். இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ளமலைநாடு. இவற்றிற்கு மேற்கிலுள்ள கோடைமலைத்தொடர் பொன்படுமால்வரையென (Imp. gazette. Coimbatore) ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். பாரிமகளிரைக் கொணர்ந்த கபிலர் இவனையடைந்து, "இம் மகளிரை யான்தர மணந்து கொள்க" என வேண்டுகின்றவர், "இவர்கள்முல்லைக்குத் தேரீந்து நல்லிசை நிறுவிய பறம்பிற்கோமானாகிய பாரியின் மகளிர்; யான் இவருடைய தந்தையாகிய வேள்பாரிக்குத் தோழன்; அந்தணன் புலவன்"
என்று கூறுகின்றார்.

    இவரியார் என்குவை யாயி னிவரே
    ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
    முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
    படுமணி யானைப் பறம்பிற் கோமான்
    நெடுமாப் பாரி மகளிர் யானே         5
    தந்தை தோழ னிவரென் மகளிர்
    அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
    நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
    செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
    உவரா வீகைத் துவரை யாண்டு         10
    நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
    வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
    தாரணி யானைச் சேட்டிருங் கோவே
    ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்         15
    யான்றர விவரைக் கொண்மதி வான்கவித்து
    இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
    பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
    உடலுந ருட்குந் தானைக்
    கெடலருங் குரைய நாடுகிழ வோயே.         20
    -------

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. பாரிமகளிரை இருங்கோவே ளுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.

உரை: இவர் யார்என்குவையாயின் - இவர்யாரென்று வினவுவாயாயின்; இவர் - இவர்தாம்; ஊருடன் இரவலர்க்கு அருளி - ஊரெல்லாவற்றையும்இரப்போர்க்கு வழங்கி; தேருடன் முல்லைக்கீத்த - தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணியோடும் புரவியோடும்கூட முல்லைக்கு வழங்கிய; செல்லா நல்லிசை - தொலையாத நல்ல புகழையும்; படுமணி யானை - ஒலிக்கும் மணியையுடைய யானையையுமுடைய; பறம்பின் கோமான் நெடுமாப் பாரிமகளிர் - பறம்பிற்குத் தலவனாகிய மிக்க பெரிய பாரியுடைய மகளிர்; யான் தந்தை தோழன் - யான் இவர் தந்தையின் தோழனாதலான்; இவர் என் மகளிர் - இவர் என்னுடைய மகளிர்; அந்தணன்புலவன்கொண்டுவந்தனன் - அந்தணனாகியபுலவன் யான்கொண்டுவந்தேன்; நீயே - நீதான்;வடபால்முனிவன் தடவினுள் தோன்றி - வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கண் தோன்றி; செம்பு புனைந்தியற்றிய சேண் நெடும் புரிசை - செம்பால் புனைந்து செய்தாலொத்த சேய்மையையுடைத்தாகிய நெடிய மதிலையுடைய; துவரை ஆண்டு - துவராபதி யென்னும் படை வீட்டையாண்டு; உவரா ஈகை - வெறுப்பில்லாத கொடையினையுடையராய் நாற்பத்தொன்பது வழிமுறை வந்த - நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த; வேளிருள் வேள் - வேளிருள்வைத்து வேளாயுள்ளாய்; விறற்போர் அண்ணல் - வென்றிப் போரையுடைய தலைவ; தாரணி யானைச் சேடு இருங்கோவே - தாரணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே; ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - ஆண்டன்மையைக் கடப்பாடாக வுடைமையால் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையை யுதவிய; ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; யான் தர இவரைக் கொண்மதி - யான் நினைக்குத்தர இவரைக் கொள்வாயாக, வான் கவித்து - வானாற் கவிக்கப்பட்டு; இருங்கடல் உடுத்த இவ்வையகத்து - பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ் வுலகத்தின் கண்; அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ - அணுகுதற்கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ; வென்வேல் உடலுநர் உட்கும் தானை - வெற்றிவேலையுடைத்தாகிய பகைவரஞ்சும் படையையுடைய; கெடலரும் நாடுகிழவோய் - கேடில்லாத நாட்டுக்குரியவனே; என்றவாறு. உவரா வீகை வேளிர் எனக் கூட்டுக. "வடபால்முனிவன் தடவினுள் தோன்றி" என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும். அது கேட்டுணர்க. புலிடிமால் என்பது இவனுக்கொரு பெயர். வேளே, அண்ணல், இருங்கோவே புலிகடிமாஅல், கிழவ, நாடுகிழவோய், நீ இப்படிப்பட்ட உயர்ந்த குடியிற் பிறந்தவனாதலால், யான்தர இவரைக் கொண்மதி யெனக் கூட்டி வினை முடிவு செய்க. யான் இவருடைய தந்தை தோழனாதலானும் அந்தணனாதலானும் யான் தர இவரைக் கோடற்குக் குறையில்லை யென்பது கருத்து. விளக்கம்: இருங்கோவளுக்குபாரிமகளிரைமுன்னர்க் காட்டிப் பின் அவர்கட்கும்தனக்கும் உண்டாகிய தொடர்புகாட்டி, "யான்தர இவரைக்கொள்க" என்கின்றாராகலின், முதலில்பாரிமகளிரைக் கூறினார்.இரவலர்க்கு ஊரும், முல்லைக்குத் தேரும் தந்தான் என்பவர், "தேருடன்" என்பதற்குத் "தேருடனே புரவியும்" முல்லக் கீத்தான் என்று உரைகாரர்கூறுகின்றார். இவ்வாறுகூறாது, முல்லைக் கொடியின் நிலைகண்டு பிறந்த அருளால் முன்பின்நினையாது உடனே,தேரை ஈந்தான் என்றிருப்பின் சிறப்பாகஇருக்கும். பறம்பு - பறம்பு மலை. இவர் தந்தைக்குத் தோழன்;அதனால் யானும் இவர்கட்குத் தந்தையென்பார், "இவர் என் மகளிர்" என்றார். அந்தணரும் மகட்கொடை நேர்தற்குரிய ரென்பது தோன்ற "அந்தணன்" என்றார். விசுவபுராண சாரமென்னும் தமிழ்நூலையும், இரட்டையர் செய்த தெய்விகவுலாவையும் துணையாகக் கொண்டு, வடபால் முனிவன் என்றது சம்புமுனிவனாக இருக்கலாமென டாக்டர். உ. வே. சா. ஐயரவர்கள் "ஊகிக்கின்றார்கள்." துவரையென்றது,

வடநாட்டில் "நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்" இருந்து ஆட்சிபுரிந்த துவரை யென்றும், அவன்பாலிருந்து மலயமாதவனான குறுமுனிவன் கொணர்ந்தவர் வேளிர்கள் என்றும் பதினெண் குடியினரென்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார். "துவரைமாநகர் நின்று போந்த தொன்மைபார்த்துக் கிள்ளிவேந்தன், நிகரில் தென்கவிர் நாடு தன்னில் நிகழ் வித்த நிதியாளர்"* எனவரும் கல்வெட்டால், துவரை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தொன்மையுடையதாகக் காணப்படுவது நச்சினார்க்கினியர் கூற்றை வற்புறுத்துகின்றது. மைசூர் நாட்டுத் துவரை பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே உண்டாகியநகரம். இத்துவரையிற் றோன்றி மேம்பட்ட ஹொய்சள வேந்தரோடு புலிகடிமாலாகிய இருங்கோவேளை இணைத்துக் கண்டு, புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக் கருவதுமுண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கட்வெட்டுக்களுள், பண்டை நாளில்யதுகுலத்தில் தோன்றிய சளவென்ற பெயரினனானவேந்த னொருவன் சஃகிய மலைகளிடையே (மேலை வரைத் தொடர Western Ghats) வேட்டைபுரியுங்கால் முயலொன்று புலியொடு பொருவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணியவனாய் அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம் புரிந்துவந்த முனிவனொருவன் புலியைக் கண்டு, *Pudukkota State. Ins. 120. "சளனே,போய்ப் புலியைக் கொல்க" (அதம் ஹொய்சள) என வேந்தனைப் பணித்தலும், அவன் உடைவாளையுருவிப் புலியைக் கொன்றான்: முனிவன் அருள்பெற்று மீண்டசளவேந்தன் அதுமுதல் ஹொய்சளன் எனப்பட்டான்; அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வாராயினர் எனமைசூர்நாட்டுப்பேலூர்மாவட்டத்துப் பேலவாடியில் உள்ள நரசிம்மஹொய்சளதேவர் கல்வெட்டொன்று (Ep Car. Vol.I.B1 : 171) கூறுகிறது. அந்நாட்டுஹொன்னாவரத்துக்கேசவப்பெருமாள்கோயில் கல்வெட்டு (lbid : Hn.65) இவ்வரலாற்றிற் கண்ட முயலைப்பற்றிய செய்தியை நீக்கி எஞ்சியவற்றைக் கூறுகிறது.காட்டிலிருந்தமுனிவன் மந்திர வலிமையுடையனென்று சளன் என்பான் அறிந்து அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினனென்றும், அதனால் மகிழ்ச்சியுற்று, அவனுக்குச் சசகபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பேரரசை வழங்க வேண்டுமென விரும்பிய முனிவன் அதற்கேற்ற மந்திரச் செயல்களைச் செய்தானென்றும், அதனை அழித்தல் வேண்டிச் சசகபுரநகரத் தெய்வமாகிய வாசந்திகை யென்பாள், ஒரு புலியுருக் கொண்டு வந்தாளென்றும், அதுகண்டு முனிவன் அப் புலியைக் கொல்லுமாறு பணிப்பான் "ஹொய்சள" என்றானென்றும், அவன்அவ்வண்ணமேசெய்து ஹொய்சள வேந்தனானானென்றும் (lbi d. AK. 71) அரிசிக்கரையில்உள்ளவீரவல்லாள தேவன் கல்வெட்டொன்றுகூறுகிறது.இப்புறப்பாட்டில்முனிவனென்றும், துவரை யென்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக்கொண்டு, இந்த ஹொய் சளக் கதை ஈண்டு நினைக்கப்படுகிறது. மற்று, மேற்கு மலைத் தொடர்ப்பகுதியினர், நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை நிலத்தைக் தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது, முனிவனொருவன் இருந்த மலைமிசை யிடைநிலமென்றும், அந்நிலத்து வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப் பகுதிக்குக் கிழக்கில் உள்ள புலிநாடென்றும்பன்நாடென்றும்வழங்கியகன்னட நாட்டு வேந்தனை வென்றது பற்றிப் புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத் தோன்றுகிறது.அந்நாளில் அப்பகுதியையாண்ட ஆந்திர சாதவாகன வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை வென்றதுபற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும் கொள்ளலாம். மேனாட்டு யவனரான தாலமியும் இப் புலிமாய் வேந்தனைக் குறித்துரைத்துள்ளார்; சாதவாகனராட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்திருக்கிறது; அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம் அந்நாட்டில் இருந்திருக்கிறது.

ஸ்ரீ புலுமாவி, புலிமாயி எனக் காணப்படினும் கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும், புலிபோலும் மெய்வலியுடைய னென்பது பொருளென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ்வாற்றால் ஹொய்சளக் கதையினும் இது பொருத்தமாதல் காணப்படும். இப் புலிகடிமால் வழிவந்த இருக்கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்திருந்தனரென அப் பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. கொடும்பாளூரிலிருந்து வாழ்ந்த வேளிரும் இருங்கோ வேளிரே;பிற்காலத்தே அவர்கள் இருக்குவேளிர் எனத் தம்மைக் கூறிக் கொள்வாராயினர். இவ் வேளிர்கள் வேளகத்தி (Balgam) லிருந்து கங்கநாடு கொங்குநாடுகளின் வழியாகத் தென்னாடடைந்தவர். இனி, வேளிர்கள் முதற்கண் வாழ்ந்த மலைநாடு பொன்வளம் படைத்தவையாதலின் "பொன்படுமால்வரைக் கிழவ" என்றாரென்றுமாம்.
----------

202. இருங்கோவேள்

"பாரிமகளிரையான்தரநீமணந்துகொள்க"என வேண்டிக் கொண்ட கபிலர் வேண்டுகோளை இருங்கோவேள் மறுத்துவிட்டான். அம் மறுப்புக் கபிலரது செந்நாப்புலமையை இகழ்ந்த குறிப்புடைத் தாயுமிருந்தது. வேள்பாரி எவ்விகுடியிற் பிறந்த செவ்வியன் என்றும் அப்பெரியோனுடைய மகளிர் இவரென்றும் தாம் தெளியக்கூறிய கூற்றை அவன் தெளிந்துகொள்ளாமைக்குவருந்தினார். தம் சொல்லைப் பொய்ப்படுத்திய இருங்கோவேள்பால்கபிலர்க்கு அருவருப்பும் சினமும் உண்டாயின; "வேளே, நின்னாட்டில் பொன்வளஞ் சிறந்தோங்கிச் சிற்றரையம் பேரரையமென இருபகுதித்தாய் விளங்கிய அரையமென்னும் மூதூர் இன்று அழிந்து கிடத்தற்குக் காரணம்அறியாய்;கூறுவேன்கேள்: நின் முன்னோருள் நின்னைப் போலும் அறிவுடைய ஒருவன் செந்நாப் புலவரான கழாஅத்தலையாரைஇகழ்ந்தனன்; அவ்விகழ்ச்சிபொறாது அவரும் சினந்தனர். அதனால் விளைந்த கேடுதான் அரையத்துக் குண்டாகிய கேடு. இவர்கள்எவ்விகுடியிற்பிறந்தவரென்றும் பாரிமகளிரென்றும் கூறிய என்சொல், தெளிவில்லாப் புன்சொல்லெனஎள்ளி இகழ்ந்தனை; யான் கூறியதனைப்பொறுத்துக்கொள்க. யான்விடைபெற்றுச் செல்வேன், நின்வேல்வென்றி யெய்துக வென இப்பாட்டின்கட் பாடிக் காட்டிவிட்டு நீங்கினார். இப்பாட்டின்கண் ஆங்காங்கு இவர் இகழ்ந்து கூறும் பகுதி இலக்கிய இன்பந்தருவனவாம்.

    வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்
    கட்சிக் காணாக் கடமா நல்லேறு
    கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
    கடிய கதழு நெடுவரைப் படப்பை
    வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி         5
    இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்க்
    கோடிபல வடுக்கிய பொருமணுமக் குதவிய
    நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி
    நுந்தை தாய நிறைவுற வெய்திய
    ஒலியிற் கண்ணிப் புலிகடி மாஅல்         10
    நும்போ லறிவி னுமரு ளொருவன்
    புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை
    இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல்
    எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
    கைவண் பாரி மகளி ரென்றவென்         15
    தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும
    விடுத்தனென் வெலீஇயர்நின் வேலே யடுக்கத்
    தரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மாத்தகட் டொள்வீ தாய துறுகல்
    இரும்புலி வரிப்புறங் கடுக்கும்         20
    பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே.
    -----------

திணையுந்துறையுமறை. இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

உரை: வெட்சிக்கானத்து வேட்டுவர் ஆட்ட - வெட்சியையுடைய காட்டின் நடுவண் வேட்டுவர் அலைப்ப; கட்சிகாணாக் கடமா நல்லேறு - தனக்குப் புகலிடங் காணாத கடமாவினது நல்ல ஏறு; கடறு மணிகிளர - வரைச்சாரல் மணி மேலே கிளம்பவும்; சிதறு பொன்மிளிர - சிதறிய பொன் விளங்கவும்; கடிய கதழும் நெடுவரைப்படப்பை - விரையவோடும்மலைப்பக்கத்து; வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி - வெற்றி நிலைபெற்றசிறந்த புகழ் பொருத்தி; இருபால் பெயரிய உருகெழு மூதூர் - சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற் பெயர்பெற்ற உட்குப்பொருந்திய பழைய வூரின்கண்; கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய - பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய; நீடுநிலை அரையத்துக் கேடும் - நீடிய நிலையையுடைய அரையத்தினது கேட்டையும்; இனி கேள் - இனிக் கேட்பாயாக, அது கெடுதற்குக் காரணம்; நுந்தை தாயம் நிறைவுற எய்திய - நினது தாளால் தரப்பட்ட பொருளையன்றி நுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற; ஒலியல் கண்ணி புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் - நும்மை யொக்கும் அறிவினையுடைய நுங்குடியுள் ஒருவன்; புகழ்ந்த செய்யுள் கழா அத் தலையை இகழ்ந்ததன் பயன் - புகழ்ந்த செய்யுளையுடைய கழா அத் தலையா ரென்னும் புலவரை அவமதித்ததனாலுண்டான பயன்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ; இவர் எவ்விதொல்குடிப் படீஇயர் - இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; மற்று இவர் கைவண் பாரிமகளிர் என்ற - பின்னை இவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லிய; என்தேற்றாப் புன்சொல் நோற்றிசின் - எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெரும - பெருமானே; விடுத்தனென் - யான் நின்னை விடை கொண்டேன்; நின்வேல் வெலீஇயர் - நின்வேல் வெல்வதாக; அடுக்கத்து அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை - அரைமலையில் முகையற மலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது; மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல் - கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூப்பரந்த பொற்றைக்கல்; இரும்புலி வரிப்புறம் கடுக்கும் - பெரும்பிலியினது வரியையுடைய புறத்தை யெக்கும்; பெருங்கல் வைப்பின் நாடுகிழவோய் - பெரிய மலையிடத் தூர்களையுடைய நாட்டையுடையோய் எ - று.

புலிகடிமா அல், அண்ணல், நாடுகிழவோய், அரையத்துக் கேடுங்கேள் இனி; அது கழாத்தலையை இகழ்ந்ததன்பயன்; இப்பொழுது, எவ்விதொல் குடிப்படீஇயர், இவர்பாரிமகளிர்என்ற புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தேன்; நின் வேல்வெல்வதாகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க. ஒலியல் கண்ணி, தளிர்மாலை யெனினுமமையும். நீடுநிலைஅரையத்துக் கேடும் கழாத்தலையைஇகழ்ந்ததன்பயன்என்றஉம்மையான், இவ்விகழ்ச்சியும் நினக்குக்கேடுதரும் என்பதாயிற்று. அது கெடுதற்குக் காரணம், கழாத் தலையை நுமருள் ஒருவன் இகழ்ந்ததனால், அவன் வாக்குத் தப்பாதாகலின் அவன் வசையாகப் பாடினானென்று சொல்லுவர், அதுவே என்பதாம்.

வெலீஇயர் நின் வேல் என்றது குறிப்புமொழி. நுந்தை தாயம் நிறைவுற வெய்தியஎன்பதூஉம், நும்போலறிவின்என்பதூஉம்இகழ்ச்சி தோன்ற நின்றன. வேங்கைவீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறம் கடுக்கும் என்ற கருத்து, ஏதம் செய்யாததும் ஏதம் செய்வதுபோலக் கண்டார்க்கு அச்சம் வரத் தோன்று மென்றமையான் இதுவும் இகழ்ச்சி தோன்ற நின்றது.

விளக்கம்: கட்சி - புகலிடம். இக்காலத்தே ஒரு சில கருத்துடன் பாட்டால் ஒற்றுமைப்பட்டுநிற்கும்மக்கள் குழுவைக் கட்சியென்பர். இருங்கோவேளுக்குரிய அரையம் பண்டை நாளிலே அழிந்தமையின் இப்போது அஃதுஇருக்குமிடம் தெரிந்திலது. இருங்கோவேள் மரபினர் இப்போது பாண்டி நாட்டில் கொள்கையைச் சூழ்ந்த வூர்களில் வாழ்கின்றனர். கழாத்தலை யென்னும் புலவர் கழாத்தலையார் எனப்படுவர். கழாத்தலை என்பது, சீத்தலை, பெருந்தலை முதலிய வூர்களைப் போல்வ தோரூர்.அவ்வூரினராதலின், கழாத்தலையார்எனப்பட்டமையின், ஈண்டுவாளாது கழாத்தலையென்றார். அவர் பாடிய பாட்டொன்று இத்தொகை நூற்கண் உளது. (புறம். 270) முகையற மலர்ந்த வேங்கை யென்றது, வேங்கை மரத்தில் இனிப் பூத்தற்கு அரும்பு ஒன்றும் இல்லை யென்னுமாறு முற்றவும் மலர்ந்து நிற்கும் வேங்கை மரம் என்றவாறு. பிறரும் "அரும்பற வள்ளிதழிவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கை" (புறம். 247) என்றுகூறுவது காண்க. வேங்கைப்பூப்பரந்ததுறுகல்இரும்புலிபோல் தோன்றுமென்றது, "யான்இவர் எவ்வி குடியிற் பிறந்த செவ்வியர், கைவண் பாரிமகளிர்" என்றதுநினக்குப்பகை தோற்றுவிப்பது போன்றதோர் அச்சத்தைப் பயப்பித்தது போலும் என இகழ்ந்த குறிப்பும் உடையதாதல் அறிக. "வெலீஇயர் நின் வேல்" என்றது நின்வேர் கெடுக என்ற எதிர்மறைப் பொருள் பயந்து நிற்றலின் குறிப்பு மொழியென்றார், "எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப், பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியென்ப" (செய். 177) என்று ஆசிரியர் கூறுவது காண்க. நுந்தை தாயும் நிறைவுற எய்திய என்றது, நீயே நின் ஆற்றலாற் கொண்டிலை எனவும், "நும்போ லறிவி னுமரு ளொருவ" னென்றது, நின்னைப்போலவே நல்லறிவில்லாத நின் முன்னோருள் ஒருவன் எனவும் பொருள் இசைத்து நிற்றலின், "இகழ்ச்சி தோன்ற நின்றன" என்று உரைத்தார்.
------------

203. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானால் இளஞ்சேட் சென்னி

இவ்விளஞ்சேட் சென்னியைச் சேரமான்பாமுளூர் எறிந்த இவ்விளஞ்சேட் சென்னியென்றும், நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியென்றும், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யென்றும் கூறுவர்.நெய்தலங்கானல் இவன் பிறந்தவூர் என்றும், இளஞ்சேட்சென்னியென்பது இவற்குப் பெயரென்றும், செருப்பாழி சோழர்க்குரிய தென்றும் பாமுளூர் சேரமான்களுக்குரியதென்றும் முன்பு கூறினாம்; செருப்பாழியைச் சேரர்க்குரியதெனக் கருதுவதும் உண்டு. இச் சென்னி தன்னொடு பகைத்துப் பொருதசேரமன்னனை அவற்குரிய பாமுளூரிடத்தே எதிர்த்துப் பொருது வெற்றி பெற்றிருக்கையில் இவனைச் சான்றோராகிய ஊன்பொதி பசுங்குடையார் சென்று கண்டார். நெய்தலங்கானலில் தான்இருக்கும்போதே இவர் தன்பாற்போந்து அறிவுரை வழங்கிச்சிறப்பித்ததைப் பாராட்டிப் பெரும்பரிசில் நல்கினானாயினும். இச் சோழன், போரில் உழந்த வருத்தத்தால் தான் நல்க இருந்தபரிசிலை நீட்டித்துத் தந்தான். அதனால் பரிசிலர் கூட்டத்துக்கும் சிறிது அசைவுண்டாயிற்று. ஊன்பொதி பசுங்குடையார் அவனை நன்கறிவாராயினும், ஏனைப் பரிசிலரும் பிறரும் அறியாராகலின் அவர் வேறுபட நினைப்பதனைச் சோழற்குத் தெரிவிக்க எண்ணினார். மேலும், "முன்னே தன்பாற் பரிசில் பெற்றவர்களாதலின் அவர்கள் சிறிது தாழ்த்துப்பெற்றுப் போகலாமெனும் கருத்துடையனானான் என்பதையும் ஊன் பொதி பசுங்குடையார் அறிந்து கொண்டார். அக் கருத்து நன்றன்றென்பதையும் சோழற்கு அறிவுறுத்த வேண்டிய கடமையுடையரானார். சோழனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி பெற்றதும், பரிசிற்றுறையாகத் தாம் பாடிய இப் பாட்டைப் பாடிக்காட்டினார். இதன்கண், முன்னே நல்ல மழையைப் பெய்தேமென நினைந்து மழை இப்போது பெய்யா தொழியுமாயின் விளைநிலங்களும் தாம் முன்னே நிறைய விளைந்தேமென்று இப்போது விளையாது போமாயின் எவ்வுயிருக்கும் இவ்வுலகில்உயிர் வாழ்க்கையில்லையாகும்; முன்னேயும் நீநிறையத்தந்தனை யாதலின் இப்போதும் அவ்வாறே தருகு எனஎம்போலும் பரிசிலர் நின்னை இரப்பர்; இரப்பராயின், நீர்முன்னர் நிறையக் கொண்டீராதலின் இப்போது வறிதே சென்மின்என்று சொல்லி நின்போல்வார் மறுப்பாராயின் அது மிகக்கொடிதாகும். தங்களை நாடிவரும் இரவலர்க்கு வறுமையால் ஒன்றும் கொடுத்தற்கியலாது அவர் முகம் காண்பதற்கு அஞ்சிநாணி முகமறைந்து வருந்தும் தன்மையுடையோர் இனத்தைச்சேர்பவன் நீ அல்லை. பகைவரை வென்று கொள்ளா முன்பேஅவர் அரணை நினதாகக் கொண்டு அதனைப் பரிசிலர்க்குவழங்கும் பேராண்மையுடைய நீ இரவலரைப் புரத்தல் நினக்கு மேற்கோடற்குரிய சீரிய கடமையாம் என வற்புறுத்தியுள்ளார்.

    கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்
    தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும்
    எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை
    இன்னுந் தம்மென வெம்மனோ ரிரப்பின்
    முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல்         5
    இன்னா தம்ம வியறே ரண்ணல்
    இல்லது நிரப்ப லாற்றா தோரினும்
    உள்ளி வருநர் நசையிழப் போரே
    அனையையு மல்லை நீயே யொன்னார்
    ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப்         10
    பாண்கட னிறுக்கும் வள்ளியோய்
    பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே.
    -----------

திணையுந் துறையு மவை. சேரமான் பாமுளூரெறிந்த சோழன் நெய்தலங்கான இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

உரை: கழிந்தது பொழிந்தென - கழிந்த காலம் பெய்தேனெனக் கருதி;வான்கண் மாறினும் - மழை பெய்யாது மாறினும்; தொல்லது விளைந்தென – முற்காலத்து விளைந்தேனெனக் கருதி; நிலம் வளம் கரப்பினும் – நிலம் விளைவை யொழியினும்; எல்லா உயிர்க்கும் வாழ்க்கைஇல் - எல்லாவுயிர்கட்கும்உயிர் வாழ்க்கையில்லை அதுபோல;இன்னும்தம்மெனஎம்மனோர் இரப்பின் - இன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்றுசொல்லி எம்போல்வார் இரப்பின்; முன்னும் கொண்டிர் எனநும்மனோர் மறுத்தல் இன்னாது - அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது; அம்ம - கேளாய்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடையஅண்ணலே;இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் – இல்லாத பொருளைத்தேடிநிரப்பமாட்டாது வறுவியோரினும்; உள்ளிவருநர் நசை இழப்போர் - அவராற் பரிசில் நினைந்து வரப்படுவார் கொடாராயின் அவ்விரப்போரால் நச்சப்படும் இன்பத்தை இழப்பர்; அனையையும் அல்லை நீ - தம் வறுமையாற் கொடுக்க முடியாமையின் நாணி அவரெதிர் முக நோக்கமாட்டாது இன்பமிழக்கும்மாந்தர் தன்மையையு மல்லை நீ, இறந்துபடுவை; ஒன்னார் ஆரெயில் அவர் கட்டாகவும் பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக் கொள்ளுவதன் முன்னே; நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - நும்முடைய தெனப் பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வென்றியோடு கூடிய வண்மையையுடையோ யாதலான்; எந்தை - எம் இறைவ; நீ இரவலர் புரவு கடன் பூண் - நீ இரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப் பரிகரிப்பாயாக; எ - று.

அனையையுமல்லை யென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணி யாது முன்னேயளித்தலின், நசையிழப்போர் தன்மையையுடையாயல்லை யென்றுமாம். எம்மனோரென்றது பிறரை நோக்கியன் றெனவுணர்க. "பொழிந்தென," "விளைந்தென" என்பனவற்றை வினையெச்சமாக்கி மாறினும் கரப்பினுமென்னும் வினையோடு முடிப்பினுமமையும்.

விளக்கம்: வான் கண்மாறுதலாவது மழையாகிய கண்ணோட்ட மின்றி யொழிதலாதலின் வான் கண்மாறினும் என்றதற்கு மழை பெய்யாது மாறினும் என்றார். நசை, ஈண்டு நச்சப்படும் இன்பங்குறித்து நின்றது. அனையையுமல்லை யென்றதற்கு ஏது இதுவென்பார், "வறுயைாற் கொடுக்க முடியாமையின் நாணி" என்றும், நாணத்தால்"அவரெதிர் முகநோக்கமாட்டாது"என்றும், உள்ள தன்மையைக் குறிப்பாராய், "இறந்துபடுவை"யென்றும் உரைகாரர் கூறினார். ஆகவே, நீ பெரிதும் மானமுடையை யென்றாராயிற்று. எம்மனோரென்றது, தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பற்றாதல்தோன்ற,"எம்மனோர்என்றதுபிறரை நோக்கியன்றென வுணர்க" என்றுரைத்தார். ஒன்னார் மதிலைக் கொள்ளு முன்பே பாணார்க்குக் கொடுத்தலின், அவர் அதனைப் பெறுங்காறும் பாணர்க்குக்கடன்பட்டான்போறலின், பாண்கடன் என்றாரென்றுமாம். பாணர் பொருநர் புலவர் முதலாயினார்க்கு வறுமை யெய்தியபோது அவர் வேண்டுவன தந்து புறந்தருதல் பண்டைநாளைச் செல்வர்க்குக் கடனாகக் குறிக்கப் பட்டிருந்தது.செல்வர்அது செய்யாவழி, வறியோரது வறுமை செல்வர்பால் பகைமையுணர்வை யெழுப்பிச் செல்வரது செல்வ வருவாய் கெடுதற்கேற்ற சூழ்ச்சியும் கிளர்ச்சியும் நாட்டில் எழுப்பிச் செல்வர் வாழ்வைச் சீரழிக்கும்மென்பதைப் பண்டையோர் நன்கறிந்தமை இதனால் விளக்க முறுகிறது.
----------

204. வல்விலோரி

பெருங்கொடை வள்ளலாகிய வல்வில் ஓரி கொல்லிமலைக் குரியனாய் அருளாட்சி புரிந்து வருகையில் வன்பரணர் முதலிய சான்றோர் அவன்பால் பரிசில் பெற்றுச் சிறப்பெய்தினார். அவருள் கழைதின் யானையார் என்ற சான்றோர் ஒருகால் வல்விலோரிபால்சென்றிருந்தார். அக்காலத்தே பரிசிற்றுறைப் பொருளில் இப் பாட்டைப் பாடினார். இதன்கண் ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்தோதி, ஈவோர் ஈயேனென்பதால், ஏற்போரினும் இழிந்தவராவரென்றும், ஏற்போர் கொள்ளேனென்பதால் ஈவோரினும் உயர்ந்தவராவரென்றும் விளக்கி, உண்ணும் நீர்நிலை வற்றிச் சேறு பட்டதாயினும் அதனை நாடிச் செல்வோர் பலராவதுபோல, வரையா ஈகையுடையோரை நாடிப்பலரும் வருவர்; வருவோர் ஒருகால் தாம் வேண்டியது பெறாவிடின், அவர் தம்மை நொந்துகொள்வதின்றிக் கொடாத வள்ளியோரை நோவார் என்று
குறிக்கின்றார்.

கழைதின்யானையார் என்ற இச்சான்றோரின்இயற்பெயர் தெரிந்திலது. யானையைக் கழைதின்யானையெனச் சிறப்பித்த நயங்கண்ட சான்றோர் இவரை இச் சிறப்புப் பெயரிட்டு வழங்கினர். இவர் பாடிய பிற பாட்டுகள் கிடைக்கவில்லை.

    ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
    ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
    கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
    கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்         5
    உண்ணா ராகுப நீர்வேட் டோரே
    ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
    சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
    உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
    புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை         10
    உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற்
    புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.
    -----------

திணையும்துறையு மவை. வல்வில்ஓரியைக்கழைதின் யானையார் பாடியது.

உரை: ஈ என இரத்தல் இழிந்தன்று - இழிந்தோன் கூற்றால் ஈ எனச் சொல்லி யிரத்தல் இழிந்தது; அதன் எதிர் ஈயேன் என்றால்- அவ்வீயென்ற தன் எதிர் ஈயேன் என்று சொல்லிமறுத்தல்; அதனினும் இழிந்தன்று - அவ்விரத்தலினும் இழிந்தது; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று - ஒருவன் இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று சொல்லித் தான்இரந்து கொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதன் எதிர் கொள்ளேன் என்றல் - அதனை அவன் அவ்வாறு கொடுப்ப அதன் எதிர் கொள்ளேனென்று சொல்லி மறுத்தல்; அதனினும் உயர்ந்தன்று -அக் கொடையினும் உயர்ந்தது; தெள்நீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்- தெளிந்த நீர்ப்பரப்பான் ஒலிக்கும் திரையையுடைய பெரிய கடல்நீரை; உண்ணாராகு நீர்வேட்டோர் - உண்ணாராவர் தண்ணீரை விரும்பினோர்; ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி - ஆவும் மாவும் சென்று நீரையுண்ணக் கலங்கி; சேறொடுபட்ட சிறுமைத்தாயினும் - சேற்றொடு கூடிய சிறுமையை யுடைத்தேயாயினும்; உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் - உண்ணு நீரையுடைய தாழ்ந்தவிடத்துச் செல்லும் வழி பலவாகும்; புள்ளும் பொழுதும் பழித்தல்அல்லதை - தாம்புறப்பட்டுச்செல்லப்பட்டவழியிடத்துஅப்பொழுது செய்யும் புள் நிமித்தத்தையும் புறப்பட்ட முழுத்தத்தையும் பழித்தலல்லது; உள்ளிச் சென்றோர்ப் பழியலர் - தாம் பரிசில் பெறக் கருதிச் செல்லப்பட்டோரை அவர் ஈத்திலராயினும் பரிசிலர் பழியார்; அதனால் புலவேன்- அதனால் நீஎனக்கு இன்னையாயினும் வெறேன்; வாழியர் ஓரி-வாழ்வாயாக ஓரி; விசும்பில் கருவிவானம்ே பால - ஆகாயத்தின்கண் மின் முதலிய தொகுதியையுடைய மழைபோல; வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே – யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையையுடையோய் நின்னை;
எ - று.

ஓரி, வள்ளியோய், பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லது உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் யானும் நின்னைப் புலவேன், வாழியர் எனக் கூட்டுக.

மேற்கூறிய இரத்தல்முதல் நான்கிற்கும் ஈயென இரத்தலால் இழிவுபெற்று, கொள்ளேன் என்னும் உயர்வு யான் பெற்றிலேன் என்பதூஉம், அவ்வாறு இரப்பவும், ஈயேன் என்றாற்போலப் பரிசில் நீட்டித்தலால் உள்ள இழிபுபெற்று, கொள்ளெனக் கொடுக்கும் உயர்ச்சி நீபெற்றிலை யென்பதூஉம்கருத்தாகக்கொள்க. இதனால் ஈயேனென்னும் இழிபினும் கொள்ளெனக் கொடுக்கும் உயர்பினும் நினக்குத் தக்கதறிந்து செய்யென்பது கூறினாராம்.

"பெருங்கடல் உண்ணாராகுபநீர்வேட்டோர்"என்பதனாற் செல்வரேயாயினும் வள்ளியோரல்லார்பாற் செல்லேனென்பதூஉம், "உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்" என்பதனால் நீ வள்ளியை யாகலின் நின்பால் வந்தேன் என்பதூஉம் கொள்ளப்படும்.

விளக்கம்: ஈயென இரத்தலும், ஈயேன் என மறுத்தலும் இழிவென்றும், இரப்போர்குறிப் பறிந்துகொள்ளெனக் கொடுத்தலும், கொடுத்த வழிக் கொள்ளேன் என மறுத்தலும் உயர்வு என்றும் எடுத்தோதி இவ்விரண்டனுள் நீ விரும்புவ-தொன்றனைச் செய்க எனஆசிரியர் கழைதின் யானையார் வல்விலோரிக்குக் கூறுகின்றார். இரத்தலின் இழிவுவிளங்க இழிந்தோன் கூற்றால் ஈயெனச் சொல்லி யிரத்தல் இழிந்ததென்றார், "ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே" (தொல். எச்ச. 49) என்பவாகலின், இழிவு பயக்கும் இன்மைச் சொல்லச்சொல்லி யிரப்பார்க்கு இன்மையுண்மையான் இரத்தலாலுண்டாகும் இழிவன்றிப் பிறிதில்லை; ஈயேனென்ன மறுக்கும் செல்வர்க்குத் தாமுடைமையை மறைத்துப் பொய்ம்மொழிந்து, அவ்வின்மைச் சொல்லாற் பிறக்கும் இழிவையும் மேற்கொண்டு அதனைக் கூறி மறுத்தலால், இலன்என்னும்எவ்வமும், பொய்ம்மொழியால் உளதாகும் இழிதகவும் ஆகியமிக்க இழிவுஉண்டாதல் பற்றி, "ஈயேனென்றல் அதினினும் இழிந்தன்று" என்றார். ஏற்பார்பால் ஈயென்னும் சொல் பிறவாமையின், கொள்னெனச் சொல்லி கொடுத்து ஏற்பிப்பதால், செல்வர்க்குப் பிறர்பால் உளதாகும்இழிவைமறைத்து ஓம்புதலாற் புகழ்உண்டாகி உயர்வு தருதலின், "கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று" என்றார். தான் இரந்து கொடுத்தலாவது ஏற்பாரைத் தான் பணிந்து நின்று தான் கொடுப்பதை ஏற்பித்தல்; இப் பணிவு செல்வர்க்குப் பெருஞ் செல்வமாம் தகைமையினை யுடையதெனத் திருவள்ளுவர் கூறுவர். கொள்ளேன் என்பதாற் பிறக்கும் பெருமிதம், கொடுக்கப்படும் பொருள் பிறர்க்குக் கொடுக்கப்பட்டுப் பயன்படுமாற்றால் பிறக்கும் புகழினும் தான் உரிமையெய்தி மேம்படுதலின், "அதனினும் உயர்ந்தன்று" என்றார். சிறுமை, ஈண்டு நீர் சிறிதாதல். உண்ணீர் மருங்கு, பலரும் நீர் குறித்துச் செல்லுதலால் வழிபலவுடையதாம். தாழ்ந்தஇடத்தே நீர் நிற்குமாகலின், மருங்கு தாழ்ந்த இடமாயிற்று. கொடுப்போர் கொடாராதற்கும் கொடை மறுத்தற்கும் காரணம் புள்ளும் பொழுதுமேயெனக் கொண்டு பழித்தொழிவன்றிப்,பரிசிலர் செல்வரைப் பழிப்பதிலர் என அவரது இயல்பு கூறுமாற்றால் உயர்த்துக்கூறினார். இனி, ஆசிரியர் நசிசினார்க்கினியர், "ஈயென இரத்தலென்னும் புறப்பாட்டினுள், தெண்ணீர்... வேட்டோரே யென்றவழி, நின்செல்வம் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க" (தொல். செய். 126. உரை.) என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
---

205. கடியநெடுவேட்டுவன்

வெட்டுவனெனப் பொதுப் பெயராற் கூறப்படினும், இத் தலைமகனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாம். கடியமென்பது நெடுவேட்டுவனது ஊர்; இது கோடைமலைக்கடியிலுள்ளது. இவ்வூர் பிற்காலத்தே நன்னியார் என்னும் சான்றோர் பிறந்து விளங்குதற்கு இடமாய் விளங்கிற்று. அச் சான்றோர் கடிய நன்னியார் எனப்படுவர். அவர் எழுதிய செய்யுளிலக்கணத்தைப் பேராசிரியரும் யாப்பருங்கலவிருத்தி யுடைகாரரும் மேற்கொள்ளுகின்றனர். (தொல். செய். 161; யாப். விரு. செய். 2) இவன் தன்னைத் துணைவேண்டியவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன்; பகைத்துப் பொரக்கருதுவாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும் காட்டாண்மையுடையவன். கொடைவண்மையால் இவன்பால் பரிசிலர் கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால், கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி வாராதவாறு போல, இந் நெடுவேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது கொடை நலத்தைப் பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை இவனுக்குப் பிறங்கியிருந்தது. கோடைமலை இவனுக்கு உரியது. இக்காலத்தே மதுரைநாட்டில் கோடைக்கானல் என்ற பெயரால் சிறப்புற்று விளங்கும் மலையே இக் கோடைமலை. கோடைக்காலத்தில் வேனில் வெம்மை பொறாது செல்லும் செல்வமாக்கட்கு இக் கோடைமலை இன்னும் பெருந்தட்பந்தந்து இன்புறுத்தி யிலங்குகிறது.

இக் கோடைமலைத் தொடராகிய பழனிமலைத் தொடரின் வடசார்க் குன்றாகியமுதிர மலைக்குரியகுமணனைப்பாடிச்சிறப்பெய்திய பெருந்தலைச் சாத்தனார், ஒருகால்இவனைக்காணச்சென்றார். பெருந்தலையென்பது சாத்தனாரது ஊர். அது கொங்குநாட்டில் உளது. இந் நெடுவேட்டுவனுடைய புகழ் சாத்தனார்க்கு இன்பந் தந்தது. இவனைப் பாடிவந்த பரிசிலர் களிறும் பொருளும் பெற்றுச் செல்லும் சிறப்பு இவர்க்குப் பேருவகையளித்தது. கடிய நெடுவேட்டுவன் எக்காரணத்தாலோ இச்சாத்தனார்க்கு வேண்டும் பரிசிலைத் தந்து விடைதராது நீட்டிப்பானாயினன். அவன் கருத்தறியாத சாத்தனார்க்கு வருத்த முண்டாயிற்று. வேட்டுவ, முடிவேந்தர்பாற் சென்றால் அவர்கள் கொடையில் விருப்பின்றி, அது வேண்டிவரும் பரிசிலர்க்கு நீட்டித்து நல்குவது இயல்பு. அதனையறிந்தே எம்போலும் பரிசிலர் அவர் விருப்பின்றி நல்குவதை விரும்புவதில்லை. நின்பால் வரும் பரிசிலர் அவர் விருப்பின்றி வந்குவதை விரும்புவதில்லை. நின்பால் வரும் பரிசிலர், கடற்குச் சென்ற முகில் நீரின்றிப் பெயர்ந்து செல்லாததுபோலப் பரிசிலின்றிப் போவது கண்டிலேன்; இன்று யான் பரிசிலின்றி வறிது செல்லுமாறு நீட்டித்தனை; யான் வருந்தும் மனத்தோடு செல்கின்றேனாயினும், நீ வருத்தமின்றி வாழ்வாயாக" என்ற கருத்துப்பட இப் பாட்டைப் பாடினார். ---------

    முற்றிய திருவின் மூவ ராயினும்
    பெட்பின் நீதல் யாம்வேண் டலமே
    விறற்சினந் தணிந்த விரைபரிப் புரவு
    உறுவர் செல்சார் வாகிச் செறுவர்
    தாளுளந் தபுத்த வாண்மிகு தானை         5
    வெள்வீ வேலிக் கோடைப் பொருந
    சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
    மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
    நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
    ஆர்கலி யாணர்த் தரீ இய காலிவீழ்த்துக்         10
    கடல்வயிற் குழீ இய வண்ணலங் கொண்மூ
    நீரின்று பெயரா வாங்குத் தேரொ
    டொளிறுமருப் பேந்திய செம்மற்
    களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே.
    -------------

திணையும் துறையு மவை. கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித் தானைப் பெருந்தலைச் சாத்தனால் பாடியது.

உரை: முற்றிய திருவின் மூவராயினும் - நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும்; பெட்பு இன்று ஈதல்யாம் வேண்டலம் - எம்மைப் பேணுதலின்றியீ தலையாங்கள் விரும்பேம்; விறல் சினம் தணிந்த - வென்றியான் உளதாகியசினம் தீர்ந்த; விரைபரிப் புரவி - விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய; உறுவர் செல் சார்வாகி - அஞ்சி வந்து அடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய்; செறுவர் தாள் உளம் தபுத்த - அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த; வாள் மிகுதானை - வாட்போரின் மிக்க படையினையுடைய; வெள்வீவேலிக் கோடைப் பொருந - வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லை வேலியையுடைய கோடை யென்னும் மலைக்குத் தலைவ; சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய - சிறியனவும் பெரியனவுமாகிய புழைகளைப் போக்கற விலக்கிய; மான்கணம் தொலைச்சிய- மானினது திரட்சியைத் தொலைத்த; கடுவிசைக் கதநாய் நோன் சிலை வேட்டுவ - கடிய செலவையுடைய சினமிக்க நாயையும் வலிய வில்லையுமுடைய வேட்டுவ; நோயிலையாகுக - நீ நோயின்றி யிருப்பாயாக; ஆர்கலியாணர்த் தரீ இய - இடியினது மிக்க ஓசையையுடைய புதுப்பெயலைத் தரவேண்டி; கால் வீழ்த்துக் கடல்வயின் குழீஇய - கால்வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட; அண்ணலங் கொண்மூ தலைமையையுடைய முகில்; நீரினின்று பெயரா ஆங்கு - நீரின்றி மீளாதவாறுபோல; பரிசிலர் கடும்பு - பரிசிலரது சுற்றம்; தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மேல் களிறு இன்று பெயரல தேருடன் விளங்கிய கோடுயர்ந்த தலைமையையுடைய களிற்றையின்றி மீளா; எ - று.

புரவியையுடைய விறற்சினம் தணிந்த உறுவரென இயையும் செல்சார் வாகித்தாளுளம் தபுத்த பொருந என இயையும். புழை கெட விலங்கிய நாயென இயையும்.

வெள்வீயென்றது. அதனையுடைய முல்லையை. மூவராயினும் என்ற உம்மைசிறப்பும்மை. கோடைப் பொருந, வேட்டுவ, பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக் கூட்டுக.

யான் களிறின்றிப் பெயரா நின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாக வென்பது இகழ்சிக்குறிப்பு. புழை கெட விலங்கி யென்பதூஉம் பாடம்.

விளக்கம்: முற்றுதல், நிறைதல். வென்றி யெய்துங்காறும் சினம் தணியாது நின்று பொருதவர் அவ் வென்றி யெய்தியபின் தணிதலின், விறல் சினம் தணிந்த உறுவர் என இயையுமென்றார். இவ்வியல்பினோரும் தமது மாட்டாமையுணர்ந்து புகலடைதற்குரிய பெருமை நெடுவேட்டுவற் குண்டென்பார், "உறுவர்செல் சார்வாகி"யென்றார்.தாள் முயற்சி குறித்தாகலின், தாள் உளம்என்றதற்கு முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளம் என்று உரைத்தார். கோடைமலை வெள்ளிய முல்லைப்பூவாற் புகழ் மிக்கதாகலின், "வெள்வீயென்றது அதனையுடைய முல்லையை" யென்றும், வெள்வீவேலி யென்றதற்குவெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலி யென்றும் உரைத்தார். பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல வென்றது, யான் களிறின்றிப்பெயரா நின்றேன் என்பது குறிப்பாய்ப் பெறவைத்து நிற்கிறது. "நோன்சிலைவேட்டுவ"என்றவர் நீநீடுவாழ்கஎனவாழ்த்தாது நோயிலையாகுக என்றது,பரிசிலர் கடும்புபோலாது யான் களிறின்று பெயருமாறு விடுக்கு மாற்றால் என்நெஞ்சு நோவச் செய்கின்றாய். "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்" (குறல் 320.) என்பவாகலின், நீ நோயுறா தொழிக என்று இகழ்ந்து கூறியவாறாயிற்று. கலி - முழக்கம்; நிறைந்த முழக்கத்தையுடைமைபற்றி, இடியேறு ஆர்கலி யெனப்பட்டது. யாணர், ஈண்டுப் புதுப்பெயல் மேற்று. செம்மல், தலைமை.
---

206. அதியமான் நெடுமானஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி கொங்கு நாட்டில் தருமபுரி யெனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில், அவனதுகொடைப் புகழ் தமிழகமெங்கும்பரந்திருந்தது. கடல்நோக்கிச் செல்லும் ஆறுகள் போலப் புலவரும்பாணரும்பொருநரும் கூத்தருமாகிய பரிசிலர் பலரும் அவனை நோக்கிவந்து பரிசில் பெற்றுச் சென்ற வண்ணம்இருந்தனர். அக்காலத்தே தமிழகத்தே முடிவேந்தர்களையும் வேள்பாரி முதலிய வள்ளல்களையும் பாடிப் புகழ்நிறுவி நிலவிய ஒளவையார்க்கு அதியமானது புகழ் செவிப்புலனாகியதும் அவனைக் காண வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது. வழக்கம்போலப் பரிசிலர் உடன்வர ஒளவையார் தகடூருக்குச் சென்றார். புகழ் வள்ளலாகிய அதியமானும் ஒளவையாருடைய புலமை நலமும் மனநலமும் கேள்வியுற்றிருந்தான். ஒளவையார்தன் பெருமனைக்குவரப் பெற்றதும், அவரைச் சின்னான் தன்னோடே இருத்தவேண்டி, உடன்வந்த பரிசிலர் வேண்டும் பரிசிலை நல்கி விடுத்தான், எத்துணைச்சிறந்த புலவராயினும் ஒருவரது உள்ளத்தின் உள்ளே நிகழும் எண்ணங்களை அறிவது அரிதன்றோ? அதியமான் கருத்தறியாத ஒளவையார் அவன் பரிசில் நீட்டிப்பது குறித்து மனத்தே கவலையுற்றார். ஒருநாள் அவனைக் கண்டு தமது கருத்தை யறிவித்துவிட்டு விடைபெற நினைத்தார்.அவனதுசெவ்விபெறுவதுஅரிதாயிற்று. பெருமனையில் உள்ளார் அனைவரும் ஒளவையார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு ஒழுகினர். வாயில் காவலர் முதல் அமைச்சர் ஈறாக அனைவரும் ஒளவையாரைப் பேணிச் சிறப்பித்தாராயினும், அவர்க்கு மட்டில் மனக் கவலை நீங்கவே இல்லை. அதியமானது செவ்வி பெறவேண்டி ஒளவையார் முயலும்தோறும் வாயில் காவலர் அன்பமைந்த சொற்களால் அவர் கருத்து நிறைவுறாதவாறு செய்தொழிந்தனர், உடைந்த மனத்தராகிய ஒளவையார், வாயில் காவலரை நோக்கினார்: அவர்கட்குத் தலைவன் முகத்தைப் பரக்க விழித்து நோக்கினார். அவனோ அவர் மனநிலையை யறியானாயினன். ஒளவையார் உள்ளத்தில் வெம்மையுண்டாயிற்று. அதனால் சில சொற்கள் அவர் வாயிலிருந் தெழுந்தன. அச் சொற் கூட்டம் ஒரு பாட்டாயிற்று. அதுவே இப் பாட்டு. இதன்கண், "வாயிலோனே, நீ எப்போதும் பரிசிலர் பரிசிற்கு வருந்தும் வாழ்க்கையுடைய ரென்பதறிந்து அவர்க்கு அவ் வாயிலை அடைப்பதில்லை. ஆயினும், என்மாட்டு வாயிலை யடைக்கின்றாய். இது நின் செயலன்றென்பதை அறிவேன். நின் தலைமகனான அதியமான் ஒன்று, தன் தகவுடைமையை அறியானாக வேண்டும்; அன்றி என் தரத்தை அறியானாகவேண்டும்; அறிவும் புகழுமுடைய வேள்பாரி முதலிய நல்லோர் இறந்ததனால், இவ் வளமிக்க உலகம் வறிதாய்விடவில்லை. யாங்கள் எத்திசையேகினும் எங்கட்குச் சோறு குறை கிடையாது. சோறொன்றே யான் வேண்டுவது என எண்ணி எனக்கு விடைதர நீட்டிப்பது விழுமிதன்று" என்று அவர் கூறுகின்றார். இந் நிகழ்ச்சிக்குப் பின்புதான் அதியமான், ஒளவைக்கு நெல்லிக்கனி தந்ததும், தொண்டைமானுழைத் தூது விடுத்ததும் பிறவும் நிகழ்ந்தன.

    வாயி லோயே வாயி லோயே
    வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
    உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
    வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
    பரிசிலர்க் கடையா வாயி லோயே         5
    கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி
    தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
    அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
    வறுந்தலை யுலகமு மன்றே யதனாற்
    காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை         10
    மரங்கொஃறச்சன் கைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத் தற்றே
    எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.
    -------------

திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

உரை: வாயிலோய் வாயிலோய் - வாயில் காப்போய் வாயில் காப்போய்; வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழிவித்தி- வண்மையுடை யோரது செவியிடத்தே விளங்கிய சொற்களை விதைத்து; தாம் உள்ளியது முடிக்கும் - தாம்நினைந்த பரிசிலை விளைக்கும்; உரன் உடை உள்ளத்து - வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய; வரிசைக்கு வருந்தும் இப்பரிசிலான் வாழும் இல் வாழ்க்கையையுடைய பரிசிலர்க்கு; அடையாவாயிலோய் - அடைாத வாயில் காப்போய்; கடுமான் தோன்றல்- விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய; நெடுமான் அஞ்சி - நெடுமானஞ்சிதான்; தன் அறியலன் கொல் -தன் தரம் அறியான் கொல்லோ; என் அறியலன் கொல் - அதுகிடக்க என் தரம் அறியான் கொல்லோ; அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென –அறிவும் புகழுடையோர் இறந்தாராக; வறுந்தலை உலகமும் அன்றே - வறிய இடத்தையுடையது உலகமும்அன்றே; அதனால் - ஆகலான்; காவினெம் கலன் - காவினேம் கலங்களை; சுருக்கினெம் கலப்பை - கட்டினேம் முட்டுக்களை; மரம்கொல் தச்சன் மழுவுடைக் கைவர் சிறா அர் - மரத்தைத் துணிக்கும்தச்சன்பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்ல மகார்; காட்டகத்து அற்று – காட்டிடத்துக் சென்றால் அக்காட்டகம் பயன்படுமாறு அவர்க்கு எத்தன்மைத்து; எத்திசைச் செலினும் அத்திசைச் சோறு அற்று - எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கண் சோறு அத்தன்மைத்து எ - று.

கலம்யாழுமாம். உள்ளத்தையுடையபரிசிலரெனினுமமையும். மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம். காட்டகமென்றாரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லுந் திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க.

விளக்கம்: பரிசிலர் சொல்லேருழவராகலின், அவர்தம் சொற்களாகிய விதையை வள்ளியோர் செவியாகியபுலத்தில் விதைத்துப் பரிசிலாகிய நெல்லை விளைவித்துக் கொள்வர் என்பது விளங்க, உள்ளியது முடிக்கும் என்றதற்கு, "நினைந்த பரிசிலை விளைக்கும்" என்வுரைத்தார். உலகம் அறிவும் புகழுமுடையாரையே சார்ந்து நிற்பதாகலின், அவர் மாயந்த் வழி உலகம்வறுந்தலையாம்என்பதுமேற்கோள். உலகம்வறுந்தலை யன்றெனவே, அறிவும்புகழுமுடையார் இலரல்லர்உளர்என்பது குறித்தவாறாம். நும்போல் வேந்தர்க்கரிதேயன்றி எமக்குச் சோறு அரிதன்றென்பார், "எத்திசைச்செலினும் அத்திசைச் சோறு" என்றார். கைவல்சிறார் மழுவேந்திக் காட்டுட்செல்லின், அவர்க்கு மரக்குறைவு இல்லாதவாறுபோல யாமும் எம் கல்வி கொண்டு எத்திசைக்குச் சென்றாலும் எங்கட்கு உணவுக் குறைபாடு உண்டாகா தென்பதாம். ஆகவே, யாங்கள் வெறுஞ்சோறு வேண்டியன்று இப் பரிசில் வாழ்க்கை மேற்கொண்டது என்பது குறிப்பு.
-----------

207. இளவெளிமான்

வெளிமான் என்பவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் பெயரால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் ஊர்கள் பல உள்ளன. வெளி மானல்லூர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வெளிமானுக்குப் புலவர் முதலிய பரிசிலர்பால் பெருமதிப்பும், அவர்கட்கு அவன்பால் பேரன்பும் உண்டு. ஒருகால் பெருஞ்சித்திரனார் வறுமைத்துயர் போக்கும் முயற்சியராய் வெளிமானையடைந்தார். அவன் துஞ்சும் காலையில் இருந்ததனால் தன் தம்பி இளவெளிமானை அழைத்து "இவர்க்கு வேண்டும் பரிசில் நல்குக" எனப் பணித்தான்.பெருஞ்சித்திரனார் அவன்துஞ்சியபின் சென்று இளவெளிமானைக் கண்டார்.அவன் ஈத்துவக்கும் இன்பமறியாத மடவோன்; செல்வத்துப் பயன்ஈதல் என்பது அவர்க்குக் தெரியாது. புலவர்களால் இயற்றமிழும், பாணரால் இசைத் தமிழும், கூத்தரால் நாடகத் தமிழும் என்ற மூன்றும் வளருவன என்னும் தெளிவுஅம் மடவோனுக்குக் கிடையாது. அறிவின்மையும் செருக்கும் இளவெளிமான் கண்ணிலும் கருத்திலும் களிக் கூத்தாடின. பெருஞ்சித்திரனார் முன்பே தன் பெருமனைக்கு வந்திருந்தகை அறிந்து வைத்தும்அறியாதான்போல அவரைப் பார்த்தான். புலவரைக் காண்பார்க்குளதாகிய முகமலர்ச்சி அவன்பால் உண்டாகவில்லை. வருக எனச் சொல்லுதற்கும் அவன் வாய் வறுமையுற்றது. இரப்பவர் என்பெறினும் கொள்வரெனக் கருதியீவாரைப் போலப்பொருள் சிறிது கொணர்ந்து கொடுத்தான். வெளிமானென்னும் பெரியோனுக்குத் தம்பியென்னும் தன் தகுதியையோபெருஞ்சித்திரனாரதுவரிசையையோநோக்கிற்றிலன். பெருஞ்சித்திரனார்க்குப் பேதுறவு பெரிதாயிற்று. "அறிவிலா மடவோனை யிரந்தது குற்றம்; இவனை அறிவு நெறியில் தெருட்டுவதும் நம் கடனே; அதனைப் பின்பு செய்வோம்," எனத் தமக்குள்ளே நினைந்தார். இனித் தம் நெஞ்சில் எழுந்தசிவப்பை மாற்றி, "நெஞ்சே,அருகில் இருப்ப இருகண்களால் கண்டு வைத்தும் காணார்போல் முகங் கசந்து நல்குவார் நல்கும் பரிசில் பெரிதாயினும், தாளாளர் விரும்பார். வருகென வரவேற்ற நல்குவதுசிறிதாயினும்ஏற்றல் தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகுதி. வரிசையுடைய நமக்கு உலகம் பெரிது; நம்மை விரும்பியேற்றுப் பேணும் பெரியோர் பலர் உளர். ஆளிபோல மீளிமை குன்றாத நெஞ்சே, நீ உள்ளம் உடையற்க. கனியாத பழங்கருதி உழல்பவர் யாவரும் இரார்; எழுக, வேறிடஞ் செல்வேம்" என மொழிந்து கொண்டார். அதனோடமையாது, எடுத்தார் ஏட்டையும் எழுத்தாணியையும். தாம்தம் நெஞ்சொடு நேர்ந்தவற்றை யெழுதினார்; அது சிறந்த பாட்டாயிற்று. அப்பாட்டு இது.

    எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ
    பருகு வன்ன வேட்கை யில்வழி
    அருகிற் கண்டு மறியார் போல
    அகனக வாரா முகனழி பரிசில்
    தாளி லாளர் வேளா ரல்லர்         5
    வருகெனல் வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே யுலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பி னாளி போல
    உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென
    நோவா தோன்வயிற் றிரங்கி         10
    வாயா வன்கனிக் குலமரு வோரே.
    -------------

திணையும் துறையு மவை. வெளிமான் துஞ்சியபின் அவன் தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.

உரை: நெஞ்சம் எழு இனி செல்கம் - எம்முடைய நெஞ்சமே எழுந்திருப்பாயாக, இனி யாம் போவேமாக; பருகு அன்ன வேட்கை இல்வழி - கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாதவிடத்து; அருகிற் கண்டும் அறியார் போல தம்மருகே கண்டுவைத்தும் கண்டறியாதார்போல; அகன்நக வாரா - உள்ளம் மகிழவாராத; முகனழி பரிசில் - தம் முகமாறித்தரப் பட்ட பரிசிலை; தாளிலாளர் - பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர்; வேளாரல்லர்- விரும்பாரல்லர்; வருகெனல் வேண்டும் - இங்ஙணம் வருவீராகவென்று எதிர்கோடல் வேண்டும்; வரிசையோர்க்கு - தரமுடையோர்க்கு; பெரிதே உலகம் - பெரிது உலகம்; பேணுநர் பலர் - விரும்புவோரும் பலர்; மீளிமுன்பின் ஆளிபோல- ஆதலால் மறம் பொருந்திய வலியையுடைய யாளியை யொப்ப; உள்ளம்உள் ளவிந்து அடங்காது - உள்ளம் மேற்கோளின்றித் தணியாது; வெள்ளென - கண்டோர் யாவர்க்கும் தெரிய; நோவாதோன்வயின் திரங்கி - தம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி; வாயாவன்கனிக்கு உலமருவோர் யாரோ - உள்ளுறக்கனியாத வலிய பழத்தின் பொருட்டுச் சுழல்வோர் யார்தாம் எ - று.

வன்கனியென்றது நெஞ்சு நெகிழ்ந்து கொடாத பரிசிலை. உலமாலும்
அலமரல் போல்வதோர் உரிச்சொல். வாயாவன்கனிக்கு உலமருவோர் யாரோ, நெஞ்சமே, உள்ளம் உள்ளவிந்தடங்காது, யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வரிகையோர்க்கு யாளி போல உள்ளம் உள்ளவிந்தடங்காது என முற்றாக்கி யுரைப்பாருமுளர்.

விளக்கம்: முகனழி பரிசிலைத் தாளிலாளர் விரும்பியேற்பர்; தாளாளர் அப்பரிசிலை விரும்பாது, வருகென எதிர்கோடலை விரும்புவர்; அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம் பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்; ஆதலால், நெஞ்சே, நீ, உள்ளம் உள்ளவிந்தடங்காமல், இனி எழு. செல்கம்; எவரும் வெள்ளென, வன்கனிக்கு உலமருவாரல்லர் எனக் கொள்க. இனி வரிகையோர்க்கு உலகம் பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்; அவரது உள்ளம் உள்ளவிந்தடங்காது; அதனால் இனி எழுக செல்கம்; வன்கனிக்கு உலமருவோர் யாரும் இல்லை என உரை கூறுவதும் பொருந்தும் என்பார், "வரிசையோர்க்கு...உரைப் பாருமுளர்" என்றார். அன்புவழிப்பட்ட ஆர்வ நோக்கம், நோக்கப்படும் பொருளை எடுத்துப் பருகுவது போலும் இயல்பிற்றா மென்றற்குச் சான்றோர் அதனைப் "பருகுவன்ன நோக்கம்" என்ப. ஈண்டுப் ‘பருகுவன்ன வேட்கை’ யென்றாற்போலப் பிறரும் "பருகுவன்ன காதலுள்ளமொடு" (அகம். 399) என்பது காண்க.

அருகிற் கண்டும் அறியார்போல் ஒழுகுவது செருக்கின்பாலதாய்ப் பரிசிலரை இகழ்ந்து மறுக்கும் குறிப்பிற்றாதலின், அதனை யெடுத்தோதி வெறுக்கின்றார். திரங்குதல், ஏக்கத்தால் உள்ளம் வெதும்பி உடல் வாடுதல் குறித்து நின்றது. நின்னைத்தவிரவேறே எம்மை ஆதரிப்பார் இல்லெனக் கருதற்க என்பார், "பெரிதே யுலகம் பேணுநர் பலரே" என்றார்.
-------------

208. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமானஞ்சி தகடூரில் இருக்கையில் பெருஞ்சித்திரனார் அவனைக்காணச் சென்றார். பெருஞ்சித்திரனார்த மதுவறுமைத் துன்பத்தைப் போக்குவதொன்றே கருதித் தமதுபுலமை நலத்தைச் செலவிடுகின்றாரென்று கருதியோ, இளவெளி மான் முதலிய இளையோர் மடமைகருதாது நேர்வைத்து இழித்தமைகருதியோ தன்பால் அரசியல் அலுவல் மிகுதியாக இருந்ததனாலோ எதனாலோ அதியமான் இவரை நேரிற்கண்டு அளவளாவ இயலாதவனாயினான். அவன் இறந்த பின்னும் பெருஞ்சித்திரனார் இருந்து குமணனைப் பாடிப் பரிசில் பெற்றுள்ளாராகலின், அவனைக் காணச் சென்றபோது அவன் ஒருகால் உடல்நலங் குன்றியிருந்தும் இருக்கலாம்.ஆயினும் அக்கொடைவள்ளல் பெருஞ்சித்திரனார் வரிசை நோக்காது பரிசிலும் நல்காது விடுத்தானல்லன். தன் தகுதிக்கும் புலவரது வரிசைக்கும் ஏற்றபரி சிலைவரக் கண்டதும் அழகுறக்கொண்ட இந்த அதியமான்" என்னைக்காணாது நல்கும்பரி சிலையான் ஏலேன்; குன்றுகளையும் மலைகளையும் கடந்து நெடுவழி நடந்து பரிசிலொன்றே கருதி யான் இங்கே வந்துள்ளேனென்பது இக்கொடை வள்ளல் எங்ஙணம் அறிந்தான்? வருகெனல் வேண்டும் வரிசையுடையேனாகிய என்னைக் கண்ணாற்காணாமே நல்கும் இப்பரிசிலையேற்றுக் கோடற்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; என்னை விரும்பி வருகென எதிர்கொண்டு, என் புலமையளவும் கண்டு, பின் எனக்கு நல்கும் பரிசில் மிகச்சிறிதாயினும் எனக்கு அது மிக்க இன்பந் தருவதாம்" என்று பாடிவிட்டார். அதியமான் மனங்கனிந்து நேரிற்கண்டு பிழை பொறுக்குமாறு வேண்டிப் பெருஞ்சித்தரனாரது லமையன்புபெற்று உடல் பூரித்தான். பெருஞ்சித்திரனார் பின்பு அவன் தந்த பரிசில் பெற்று விடைகொண்டு சென்றார்.

    குன்று மலையும் பலபின் னொழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
    நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
    டீங்கனஞ் செல்க தானென வென்னை
    யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்         5
    காணா தீத்த விப்பொருட் கியானோர்
    வாணிகப் பரிசில் னல்லேன் பேணித்
    தினையனைத் தாயினு மினிதவர்
    துணையள வறிந்து நல்கிணர் விடினே.
    ------------

திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இது கொண்டு செல்க என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது.

உரை: குன்றும் மலையும் பல பின் ஒழிய - குன்றுகளும் மலைகளும் பல பின்னே கழிய; வந்தனென்பரிசில் கொண்டனென் செலற்கு - வந்தேன் யான் பரிசில் கொண்டடேனாய்ப் போதற்கு; என நின்று என் நயந்தருளி - எனச் சொல்லிநின்ற என்னை அன்புற்றருளி; ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தான் என-இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக தான் எனச் சொல்ல; என்னை யாங்கறிந்தனனோ - என்னை எப்பரிசறிந்தான்; தாங்கருங் காவலன் - பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன; காணாது ஈத்த இப்பொருட்கு-என்னை யழைத்துக் காணாதே தந்த இப் பொருட்கு; யான் ஒர் வாணிகப் பரிசிலன் அல்லேன் - யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்; பேணி - விரும்பி; தினையனைத்தாயினும் இனிது- தினைத்துணை யள வாயினும் நன்று; அவர் துணையளவறிந்து நல்கனிர்விடின் - அந்தப்பரசிலரது கல்வி முதலாகிய பொருந்திய எல்லையை யறிந்து கொடுத்து விடின் எ - று.

ஈங்கனம் செல்கவென்றது காணாதே அவன் சொல்லிவிட்ட வார்த்தையை, அவர் துணையளவறிந்து பேணி நல்கினர்விடின், தினையளவாயினும் இனிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. யான் தரங்கெடப் பொருள்கொடு போமவனல்லேன்; அவனாயின் இதுவும் கொடுபோவன்; நீ எனக்குத் தரமறிந்து தரவேண்டுமென்பதாம். அவர் துணையனவெனத் தம்மை உலகின் மேலிட்டுக் கூறினார்.

விளக்கம்: வழிச்செலவின்அருமையுணர்த்துவதற்கு "குன்றும் மலையும் பல பின்னொழிய" என்பது கூறப்பட்டது. "நயந்தருளி," யென்றது "அன்புமிகவுடைமை" யென்ற குற்றங்காட்டி நின்றது. "என்னைக் காணுதல் வேண்டா; இவற்றைப் பெற்றுக்கொண்டு செல்லட்டும்" என்பதுபட நின்றவாறு தோன்ற, "ஈங்கனம் செல்கதான்"என்றானாகக்கொள்கின்றார், தன் வரவறிந்ததுணையே பரிசில் நல்கித் தன்னோடு உரையாடாதே செல்க என விடையும்விடுத்ததனால் மதி மருண்டமை தோன்ற, "யாங்கறிந்தனனோ" என்றார். "தாங்கருங்காவலன்" என்றது. என்னைக் காணுமளவுதானும் இடைபெறாதவன் என்பதும் சுட்டிநின்றதாயினும், இச்செயலால் பெருஞ்சித்திரனார் தாங்கரிய மனக்கவலை கொண்டு வருந்தினமையுணர்த்தி நிற்பது காண்க. இப்பொருட்கு - இப்பொருளைப் பெற்றுச் செல்லுதற்கு, பெறக்கருதும் ஊதியத்தின்மேல் கருத்துச் செலுத்துவது வணிகர் இயல்பு;அவ்வாறேபயன் பரிசில் மேலே கருத்துச் செலுத்தும்புலவன் என்று கருதினன் போலும் என நினைந்து வருந்துகின்றாராதலால், "யான் ஒரு வாணிகப் பரிசிலேனல்லேன்" என்றார். "தினையனைத்தாயினும் பேணித் துணையளவறிந்து நல்கினர் விடின்" என்றது, தமது கோட்பாடு இதுவெனப் பெருஞ்சித்திரனார் குறிப்பதாம்.
---------------

209. மூவன்

மூவனென்பது இயற்பெயர்; மூப்பனென்னும் சொல்போல்வது. அம் மூவனாரென்பதும் இப்பெயரடியாக வருவதே. சேரமான் கணைக் கால் இரும்பொறை காலத்திலும் மூவனென்பானொரு தலைவன் காணப் படுகின்றான். அவன் சேரனொடு பொரும் வகைசெய்து கொண்டு தீங்கு பல செய்தான். அதுபொறாத சேரமான் அவனைப் போரில்வென்று கொன்று அவனுடைய பல்லைப்பிடுங்கித் தன் தொண்டிநகர் வாயிற்கதவில் வைத்து இழைத்துக் கொண்டான் எனப் பொய்கையார் புகன்றுரைக்கின்றார். இவன் அந்த மூவனோ வேறோ தெரிந்திலது; ஆயினும் இவனை அவன் குடியில்தோன்றியவன் என்று கொள்ளுவது இழுக்காகாது. இவன் சேய் என்றும் குறிக்கப்படுகின்றான். இவனுடைய நாடு கடற்கரையைச் சார்ந்த நெய்தற் பகுதியில் மருதவளஞ்சான்ற நாடாகும். பெருஞ்செல்வமும் கொடை நலமுமுடையவன் என நாட்டில் இவன் பெயர் பரவியிருந்தது. அதனைக் கேள்வியுற்ற பெருந்தலைச் சாத்தனார் ஒருகால் இவனைக் காணச் சென்றார். இவன் மகளிர் நாப்பண் இன்பத்துறையில் எளியனாய் ஒழுகினான். சான்றோரது சால்பினை யறியும் தகைமை இவன்பால் குறைந்து காணப்பட்டது. குமணன்பால் பெருந்தலைச்சாத்தனார் செய்த பெரும் புலமையருஞ்செயல் நலத்தையும் இவன் அறிந்திலன். புலவர்க்கு வழங்கற்கெனக் கடமைப்பட்டிருக்கும் தன் தகுதியையும் இவன் நோக்காது சாத்தனார் மனம் புண்படத்தக்க நிலையில் இவறலை மேற்கொண்டான்.ஒரு காரணமுமின்றி இந்த மூவன் தம்மை இகழ்ந்தது சாத்தனார், "எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால், இவர்க்கு என்ன தீங்கு நேருமோ?" என்று அஞ்சி, "நோயிலை யாகுமதி பெரும்" என்று வாழ்த்துவாராய், "நன்செய் வளஞ்சான்ற நன்னாட்டுக்குத் தலைவ. பெருமலை விடரொன்றில் நின்ற பழுமரம் பழுத்து மாறிற்றாயின, அதனைச் சார்ந்து வாழ்ந்த புள்ளினம் செயலற்று வேறுமரம் நாடிச் செல்லும்; அப் புள்ளிமை போல நின்னை நாடி வந்தேன்,யான் வெறுங்கையுடனே செல்லவேண்டிய நிலையினேனாயினேன்; நீ ஈயாயாயின் யான் அது குறித்து வருந்துவேனல்லேன்; நீ நோயின்றி வாழ்தலையே வேண்டுவேன்.மேலும் யான் நின்பால் வந்து வறிது செல்லும் செய்தி மகிழ்ந்திருக்கும் நினது திருவோலக்கத்தே நினக்கு மிக அண்மியோர் அன்றிப் பிறர் அறியாராகவேண்டும்; அது நினக்கும் எனக்கும் நலம் தரும்" என்று கூறினார். இதுவே இப்பாட்டு.

    பொய்கை நாரை போர்விற் சேக்கும்
    நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்
    கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல்
    அகலடை யரியன் மாந்தித் தெண்கடற்
    படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்         5
    மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
    பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து
    பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
    பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்
    பெறாது பெயரும் புள்ளிமை போலநின்         10
    நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன்
    வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந
    ஈயா யாயினு மிரங்குவே னல்லேன்
    நோயிலை யாகுமதி பெரும நம்முட்
    குறுநணி காண்குவ தாக நாளும்         15
    நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித்
    தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
    பெருவரை யன்ன மார்பிற்
    செருவஞ் சேஎய்நின் மகிழிருக் கையே.
    -----------

திணை: அது துறை: பரிசில் கடாநிலை. மூவன் பரிசில் நீட்டித் தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

உரை: பொய்கை நாரை - பொய்கைக்கண் மேய்ந்த நாரை; போர்வில் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்;நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்- நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லை யறுக்கும் உழவர்; கூம்புவிடுமென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை - முகை யவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே; அரியல் மாந்தி -மதுவை யுண்டு; தெண்கடல் படுதிரை இன்சீர்ப்பாணி தூங்கும் - தெளிந்த கடலினது ஒலிக்கும் திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும்; மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந-மென்புலத்தூர் களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; பல்கனி நசைஇ- பல பழத்தையும் நச்சி;அல்க விசும்பு உகந்து - தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து; பெருமலை விடரகம் சிலம்ப முன்னி -பெரிய மலையின் முழைஎதிரொலி முழங்கச்சென்று; பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்று - அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி; பெறாது பெயரும் புள்ளினம்போல -பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை யொப்ப; நின் நசைதர வந்து - நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து; நின் இசை நுவல் பரிசிலேன் - நின் புகழைக்கூறும் பரிசிலேன் யான்; வறுவியேன் பெயர்கோ- வறியோனய் மீளக்கடவேனோ; வாள் மேம்படுந - வாட்போரின்கண் மேம்படுவோய்; ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் - நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன், நோயிலை யாகுமதி - அதுநிற்க நோயின்றிருப்பாயாக; பெரும் நம்முன் குறுநணி காண்குவதாக - பெரும நம்மிடத் துளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக; நாளும் - நாடோறும்; நறும்பல் ஒலிவரும் கதுப்பின் - நறிய பலவாகிய தழைத்த மயிரையும்; தேமொழித்தெரியிழை மகளிர் – தேன்போலும் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையுமுடைய மகளிர்; பாணி பார்க்கும் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம் பார்க்கும்; பெருவரையன்ன மார்பின் பெரியமலைபோலும் மார்பினையுடைய;செரு வெஞ் சேஎய் - போரைவிரும்பும் சேயையொப்பாய்; நின்மகிழிருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய நாளோலக்கம்; எ - று.

பாணி பார்க்கும் மார்பு பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு. நம்முட் குறுநணி காண்குவதாக என்றது. நீ என் மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றி, பிறர் அறியாதொழிவாராக வென்னும் நினைவிற்று.

பொருத,வாண்மேம்படுந, சேஎய், நின் இசை நுவல் பரிசிலேன், வறுவியேன் பெயர் கோ, ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்: பெரும, நோயிலையாகுமதி; நம்முட்குறு நணியை நின்னிருக்கை காண்குவதாக; பிறர் காணாதொழிகவெனக் கூட்டுக.

நோயிலையாகென்பது, நீ செய்த தீங்கால் நோயுறுவை; அஃதுறா தொழிகவென்பதாம். இனி, நின் மகிழிருக்கைக்கண் நம்முன் மிக அணித்தாகக் காணும் காட்சி உளதாகவென்றுமாம். இதனாற் காட்சி யுண்டாகாதென்பது குறிப்பு. இனி, "குறுநணி காண்குவதாக" என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற் காணும் காட்சி உளதாகவென்பது கூடாது நீ செய்த கொடுமையான் என்னுரைப்பினு மமையும்.

விளக்கம்: பாணி, காலம்; ஈண்டுப் புணர்தற்குரிய காலத்தின் மேல் நினற்து. பார்ப்பவர் மகளிரும். பார்க்கப்படுவதுபாணியுமாகலின், அவற்றோடு மார்பு இயைதற்கு விளக்கங் கூறுவாராய், "பாணி பார்க்கும் மார்பு, பாணி பார்த்தற்கேதுவாகிய மார்பு" என்றார்.குறுநணி, அணிய அணுமை;அஃதாவதுமிக்க நெருக்கம்.இதுகுறிப்புமொழியாய் நெஞ்சத்தால் நெடுந்தொலையில் இயைபின்றி யிருப்பது என்பதுபட நின்றது. கொடுக்கும் வள்ளன்மை யில்லாதாரை முன்னறிந்து கொள்ளாது சென்று பரிசில் பெறப்பாடி வறுவியராய்ச் சேறல் புலவரது புலமைக்கு இழிவு பயக்குமாகலினாலும், புலவரை யிகழ்ந்த செல்வரை ஏனைப் புலவர் பாடாது வரைவாராதலாலும், "நம்முட் குறுநணி காண்குவதாக" என்பதனால் "நீ என்மாட்டுச் செய்த... பிற ரறியா தொழிவாராக" என்று விளக்கினார். எனவே, காட்சியோடமைந் தொழியல் வேண்டுமேயன்றிக் கண்டதனைப் பிறர்க்கு உரைத்தலுமாகாது என்பதாம். "நோயிலையாகுக" என்றதற்குக் கருத்து இதுவென விளக்குவாராய், "நோயிலையாகென்பது... என்பதாம்" என்றார். இன்றில்லையாயினும் பிறிதொருகால் "நின்மகிழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணும்காட்சியுளதாக" என்ற கருத்தால் "நோயிலையாகுமதி" யென்று கூறற்கும் இடமுண்மையின், உளதாகுக என்றுமாம்" என்றும் எனினும், உள்ளக்குறிப்பு, "இதனால் காட்சியுண்டாகாதென்பது" என்றும் உரைத்தார். "குறுநணிக் காண்குவது ஆக" என நிறுத்தி, காண்குவது "மனத்தாற் காணுங்காட்சி" என்றும், ஆக, உளதாக என்றும் பொருள் கொண்டு, மனத்தாற் காணும் காட்சியுளதாக என்றாரேனும் குறிப்பு, அத்தகையதொரு காட்சியுண்டாதல் "கூடாது" என்றும், அதற்கு ஏது அவன் செய்த கொடுமைதான் என்றும் விளக்குவார், இனி ‘குறுநணி...உரைப்பினுமமையும்’ என்றார்.
-----------

210. சேரன் குடக்கோச்சேரலிரும்பொறை

குடநாட்டுக்குத் தலைவனாய்ச் சேரநாடுமுற்றும் தனக்குரித்தாகப் பெற்றுச் சிறப்புற்றிருந்த சேரமான்களில் இக் குடக்கோச்சே ரவிரும் பொறை சிறந்தவன். இவன் பின்னவன் குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை யெனப்படுவன். இவன் பொறையர் நாட்டினனாதலால், இரும்பொறை யெனப்பட்டான். இவன் முடியுடை வேந்தனாய்ச் செல்வக் குறைபாடிலனாய்ப் புலவரைப் போற்றும் வேந்தர்வழித் தோன்றலாய் விளங்குவது கேள்வியுற்றபெருங்குன்றூர்கிழார் ஒருகால் தன் மனையில் நின்று வருத்தும் வறுமைத்துயர் போர்க்ககருதி இவனையடைந்தார். பகைவேந்தர் மருளப்போருடற்றிக்கொற்றமெய்தும் இவனது ஆண்மையினையும், உள்ளியது முடிக்கும் உரனுடைமையினையும் விதந்தோதித் தமது வறுமைநிலையினையும் விளங்கவுரைத்தார். சேரமானும் அவர் விருப்பத்துக்கேற்பக் கொடுப்போன்போலக் காட்டிக் கொடை வழங்க நீட்டித்தான். உள்ளம் உடைந்த பெருங்குன்றூர்கிழார், "உலக மக்களைப் புரக்கும் நினது உயர்வு நினையாது எம்பால் அன்பு இலனாயினை; நின்னைப்போலும் வேந்தர் உலகத்தில் உளராயின் என்னைப் போலும் இரவலர் இவ்வுலகிற் பிறக்கவேமாட்டார்கள். வறுமை வருத்தினும் என் மனையவள் தன் கற்புக்கொள்கை தவறாத பொற்புடையவன். வறுமையால் அவள் ஒருகால் உயிரிழந்திருப்பாள்; இறவாதிருப்பளாயின், என்னனை நினையாதிராள்; நினைக்கும்போது, தன்னைப் பிரிந்துறையும் யான் இறந்தொழிந்தேனோ என நினைந்து "என் உயிரும் ஒழிக" என் வருந்தியுரைத்துக் கொள்வன், அவளது இடுக்கண் தீர்த்தல் வேண்டி, நின்னைப் பகைத்துத் தோற்றவர் செயலற்றொழிவது போல, யானும் செய்தவதறியாது தனிமைத் துயரை முன்னிட்டுக் கொண்டு செல்கின்றேன்" என்ற சொல்லி நீங்கினார். அச் சொற்கள் இப்பாட்டில் உள்ளன. பின்னர் அவன் அவர் வேண்டுவன நல்கிவிடுத்தான்.

    மன்பதை காக்குநின் புரைமை நோக்காது
    அன்புகண் மாறிய வறனில் காட்சியொடு
    நும்ம னோருமற் றினைய ராயின்
    எம்ம னோரிவட் பிறவலர் மாதோ
    செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி         5
    உயிர்சிறி துடைய ளாயி னெம்வயின்
    உள்ளா திருத்தலோ வரிதே யதனால்
    அறனில் கூற்றந் திறனின்று துணியப்
    பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென
    நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும்         10
    இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
    விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
    அவல நெஞ்சமொடு செல்வனிற் சறுந்தோர்
    அருங்கடி முனையரண் போலப்
    பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்தே.         15
    -------------

திணையும் துறையு மவை. சேரமான் குடக்கோச்சேரலிகும் பொறை பரிசில்நீட்டித்தானைப்பெருங்குன்றூர்கிழார் பாடியது.

உரை: மன்பதைகாக்கும்நின் புரைமை நோக்காது - உயிர்ப் பன்மையைக் காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது; அன்பு கண்மாறிய அறனில்காட்சியொடு - காதல் கண்மாறிய அறமல்லாத பார்வையுடனே கூடி; நும்மனோரும் மற்று இனையராயின்நும்போல்வார் யாவரும் இதற்கொத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின்; எம்மனோர் இவண் பிறவலர் - எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி - குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி; உயிர் சிறிதுஉடையளாயின் இறந்துபடாது உயிர்வாழ்வுடையளாகக் கூடின; எம்வயின் உள்ளாதிருத்தலோ அரிது - எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால்-; அறனில் கூற்றம் திறனின்று துணிய - அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய; பிறனாயினன் கொல்- இறுந்துபட்டான் கொல்லோ; இறீஇயர் என் உயிர் என - என்னுயிர் கெடுவதாகவென்று; நுவல்வுறு சிறுமையள் - சொல்லுதலுற்ற நோயையுடையளாய்; பலபுலந் துறையும் - பல படவெறுத்துறையும்; மனையோள் இடுக்கண் தீரிய - மனைவியது துன்பம் தீர்க்கவேண்டி; குருசில் வாழியர் - இறைவ வாழ்வாயாக; உதுக்காண் - இதளைப் பாராய்; அவல நெஞ்சமொடு செல்வல் - இன்னாமையையுடைய நெஞ்சத்துடனே போவேண்; நிற்கறுத்தோர் அருங்கடி முனையரண்போல - நின்னை வெகுண்டாது அணுகுதற்கரிய காவலையுடைய முனையிடத்து அரணைப்போல; பெருங்கையற்ற என் புலம்பு முந்துறுத்து - பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போகவிட்டு; எ - று.

குருசிலே, நும்மனோரும் இனையராயின், எம்மனோர் இவண்பிறவார்; எங் காதலி உயிர் சிறிதுடையளாயின் நினையாதிருத்தல் அரிது; அதனால் அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன், வழி யரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. "உதுக்காண்" என்றது அச் செலவை.

என் வறுமை என்னைவிட்டு நீங்கப் போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக் கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால் "வாழியர் குருசில்" என்பது இகழ்ச்சிக் குறிப்பாயிற்று. உயிர்வெங் காதலியென்று பாடமோதுவாருமுளர்.

விளக்கம்: பின்னர்த் தாம் செல்கின்ற செலவை "உறுக்காண்" எனச் சுட்டினார். நும்மனோர், எம்மனோர் என்புழி அன்னோரென்பது, "இடைச்சொல் முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர்" என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர். இனையர், இதற்கொத்த அறிவுடையராய் அருள்மாறுவர். எம்மனோர் இவ்வுலகிற் பிறத்தற்கேது, நும்மனோர்பால் கிடந்த அன்பும் அறமுமேயாம்; நும்மனோர்பால் அவை இலவாயின், எம்மைப்போல்வார் பிறவார் என்பார், "மன்பதை...மாதோ" எனறார். புரைமை - உயர்வு "புரையுயர்பாகும்" (தொல். சொல்-300) என்பது காண்க. மன்பதை காக்கும் புரைமைக்கு அன்பும் அறமும் அடிப்படையெனவறிக. பொருளின்மை கருதி என் மனைவி என்னை வெறுப்பவளல்லள்; அவட்கு என் உயிரே பொருள்; பொருளை யுயிராகக் கருதும் புன்மை என் மனைவிபாலும் கிடையாதென்பார், "செயிர்தீர் கொள் கை யெம் வெங் காதலி" என்றும், என் பிரிவு அவளைப் பெரிதும் வருத்துமாகலின், அவ்வருத்தம் இல்லையாமாறு யான் செல்கின்றேன் என்பார், "அறனில் கூற்றம்...விடுத்தேன்" என்றார், பெறக் கருதிய பரிசிலின்றி வறிது செல்லுமாற தோன்ற, "புலம்பு முந்துறுத்து" என்றார். வேறு பிற செல்வர்பாற் சென்ற பரிசில் பெறவும் கருதிற்றிலேன் என்பார், "பெருங்கை யற்ற" என்று குறித்தார். கை - செய்கை, நின்னால் வெகுளப்பட்ட பகைவருடைய அரண் நின்னால் அலைப்புண்டு தன்னைக் காப்பாராற் கைவிடப்பட்டு அழிவது போல, யானும் அவல நெஞ்சமொடு பெருங்கையற்ற புலம்புமுந்துறுத்து மனமழிந்து செல்கின்றேன் என்பது சேரமான் தன்னை வெகுண்டு பரிசில் தாராதொழிவது அறமன்றென் பதனைக் குறித்து நிற்கிறது. அரண்போலப் பெருங்கை (முயற்சி) அற்றென்க. புலம்பு ஈண்டு வறுமைமேல் நின்றது; வறுமையின் பயன் அதுவாகலின். "வாழியர் குருசில்" என்றது நின் வாழ்வு பயனற்றதென்பது குறித்து நின்றது. உயிர்வெங்காதலி யென்பதற்கு என்னுயிரை விரும்புயுறையும் என் மனைவி என்று பொருள் கூறுக. எம்மென்றது உயிரையும் தன்கண் உளப்படுத்தி நிற்றலின், அப்பாடம் அத்துணைச் சிறப்பின்றெனவறிக.
---

211. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை

சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறைபால் பரிசில் வேண்டி வந்த பெருங்குன்றூர்குழார் சின்னாள் அவன்பால் தங்கிப் பரிசில் எதிர் நோக்கியிருந்தார். அவன் வேண்டும் பரிசில் நல்கிவிடாது நீட்டித் தான். அவர் இருந்த காலத்தும் அதற்கு முன்பும் அவ்விரும்பொறை முரசு முழங்கும் தானைகொண்டு பகையரசர்மேற் சென்று அவரொடு வஞ்சியாது பொருது வெற்றி மேம்படுதலைக் கண்டிருந்தார். அவன் கொற்றத்தையும் அவ்வப் போது நம் பெருங்குன்றூகிழார்பாடி அவனைச் சிறப்பித்தார். அவனும் அவரது செய்யுணலத்தை நுகர்ந்து வியந்து இன்புறற்றான். அதனால் பெருங்குன்றூர்கிழார் தாம் கருதியவாறு அவன் சிறந்த பரிசில் நல்கி விடுப்பனென எண்ணி யின்புற்றார். அவனும் அவர் எதிர் பார்த்தற்கேற்ற வகையில் பரிசில் நல்குவான் போலும் செய்லகள் சில செய்தான். இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. முடிவில் அவன் செயலெல்லாம் ஏமாற்றமாமாறு அவர் எதிர்பார்த்த பரிசிலை அவன் நல்குவனென எண்ணற்கிடமில்லை யாயிற்று. பெருங்குன்றூர்கிழார்க்கு ஏமாற்றமும் வருத்தமும் பெருகின. அவர், சேரமானை நோக்கி, "தோன்றலே! நின்னை நினைந்து நீ தரும் பரிசிலை விரும்பிவந்த பரிசிலருள் யான் ஒருவன். நீ என்னைச் சேர்ந்தார்க்கும், வீரர்க்கும் செய்யும் வள்ளன்மையையும் அன்பையும் கண்டு இவ்வாறு அன்பால் தாழ்ந்து எமக்கும் வண்மை புரிகுவாய் எனக் கருதி, நினக்கு எம்மை யெதிரேற்றுப் பரிசில் கொடாது மறுத்த பிறரது கொடுமையை விரியக் கூறினேன். கூறவும், நீ நின் கருத்திற் கொண்டவாறே செய்து முடித்துவிட்டாய். முன்னாள் நீ செய்த குறிப்பால் "பரிசில் என் கைக்கு வந்துவிட்டதென்றே நான் கருதச்செய்தாய்; பின்னாள் அது குறித்து ஏமாந்து வருந்துமாறு என்னைச் செய்தாய். என் வருத்தங் கண்டு நீ சிறிதும் நாணாயாயினை. யானோ நீ நாணுமாறு என் நாவால் நின் புகழைப் பன்முறையும் பாடினேன்; என் பாடுபுகழை நீ ஏற்றுக் கொண்டாய். உண்ண உணவின்மையின் என் மனையில் வாழும் எலிதானும் பசித்து மடிந்து கிடக்கும் சுவரைச் சார்ந்து என் மனைவி மெலிந்திருக்க, பாலில்லாமையால் மார்பிற் பால் சுவைத்து அது பெறாது பாலுண்டலையே மறந்தொழிந்த நிலையிலிருக்கும் பிள்ளையையுடைய அவளைநினைந்து கொண்டு செல்கின்றேன். செல்லும் யான் நின்னைத் தொழுது விடைபெற்றுப் போகின்றேன்" என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினார்.

இப்பாட்டைப் பாடிய இரண்டொருநாள் கழிந்தபின்னரும் சேரமான் பரிசில் நீட்டித்தானாக, "மன்பதை காக்கும்" என்று தொடங்கும் பாட்டைப் பாடி நீங்கினார். இப்பாட்டுக்கள் பலவும் வரலாற்று முறை பற்றித் தொடுக்கப்பட்டன வல்லவென முன்பே கூறினோம், கடைப் பிடிக்க.

    அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே
    றணங்குடை யரவி னருந்தலை துமிய
    நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக்
    குன்றுதூ வெறியு மரவம் போல
    முரசெழுந் திரங்குந் தானையொடு தலைச்சென்         5
    றரைசுபடக் கடக்கு முரைசா றோன்றனின்
    உள்ளி வந்த வோங்குநிலைப் பரிசிலென்
    வள்ளியை யாதலின் வணங்குவ னிவனெனக்
    கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
    உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாட்         10
    கையுள் ளதுபோற் காட்டி வழிநாட்
    பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
    நாணா யாயினு நாணக் கூறியென்
    நுணங்கு செந்நா வணங்க. வேத்திப்
    பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்         15
    ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச்
    செல்வ லத்தை யானே வைகலும்
    வல்சி யின்மையின் வயின்வயின் மாறி
    இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற்
    பா அ லின்மையிற் பல்பாடு சுவைத்து         20
    முலைக்கோண் மறந்த புதல்வனொடு
    மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே.
    ------------

திணையும் துறையு மவை. அவனையவர் பாடியது.

உரை: அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு - அஞ்சத் தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு அணங்குடை யரவின் அருந்தலை துமிய - அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய; நின்று காண்பன்னை நீள்மலை மிளிர - நிலவகலத்தை நின்று பார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழ;குன்று தூவெறியும் அரவம்போல - சிறுமலை தூவஎறியும் ஒசைபோல; முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று - வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று;அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் - வேந்தர்பட எதிர் நின்று கொல்லும் புகழமைந்த தலைவ; வள்ளியை யாதலின் - நீ வள்ளியை யாதலான்; வணங்குவன் இவன் என - எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவன் என்று; நின் உள்ளி வந்த- நின்னை நினைந்து வந்த; ஓங்கு நிலைப் பரிசிலென்- உயர்ந்த நிலைமையயுடைய பரிசிலேனாகிய யான்; கொள்ளா மாந்தர் கொடுமை கூற -நினக்கு எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தரது கொடுமையைச் சொல்லவும்;நின் உள்ளியது முடித்தோய் மன்ற-நின்னுடைய நினைவே செய்தாய் நிச்சயமாக; முன்னாள் கையுள்ளது போல் காட்டி - முன்னைநாள் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டி; வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் - பிற்றைநாள் பொய்யைப் பெற்று நின்ற நினது புறநிலைமைக்குயான் வருந்திய வருத்தத்திற்கு;நாணாயாயினும் - நீ தான் நாணாய் ஆயினும்; நாணக் கூறி - நீ நாணச்சொல்லி; என் நுணங்கு செந்நா-எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா; அணங்க ஏத்தி வருந்தப் புகழ்ந்து;பாடப்பாடப் பாடுபுகழ் கொண்ட -நாடோறும் பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை யேற்றுக்கொண்ட;நின் ஆடு கொள் வியன் மார்பு - நினது வென்றி பொருந்திய அகன்ற மார்பை;தொழுதனென் பழிச்சிச் செல்வல் யான் - வணங்கி வாழ்த்திப் போவேன் யான், வைகலும் வல்சி இன்மையின் - நாடோறும் உணவில்லாமை யான்; வயின் வயின் மாறி - இடந்தோறம் இடந்தோறும் மாறி மாறி அகழ்தலால்;இல்லெலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் - இல்லெலி மடிந்த பழைய சுவராகிய எல்லையையுடைய; பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து - பாலில்லாமையாற் பலபடி சுவைத்து; முலைக்கோள் மறந்தபுதல்வனொடு - முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே; மனைத்தொலைந்திருந்த - மனையின் கண்ணே தோன்றல், நின்னுள்ளிவந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான், வருத்தம் கூறி ஏத்தித் தொழுத னென் பழிச்சி, வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனோடு தொலைந்திருந்த என் வாணுதலை நினைந்து செல்வல் யானெனக்கூட்டி வினைமுடிவு செய்க. நாணக்கூறி யென்றதன் பின்னே ஏத்திப் பழிச்சிச் செல்வல் என்றமை யான் அவை குறிப்பு மொழி வரைப்பின் மனை யென இயையும்.

"வள்ளியனாகலின் வணங்குவன் இவனென" என்று பாடமாயின், வண்மையை யுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதி யென்க. "வள்ளியை யாதலின் வணங்கு வனிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற" என்றதற்கு வள்ளியை யாதலின் இவனை வணங்குவே னென நினைந்து வணங்க அது பாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர் நினது கொடுமை..."

தூவவெறியு மென்பது தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற் கொள்க. விகாரமெனினு மமையும். "தூவவெறியும்" என்பதூஉம்பாடம். புறநிலை யென்பதற்குப் புறங்கடை நின்றநிலை யென்றுமாம். இல்லெலி மடிந்த தொல்சுவர் என்பதற்கு இல்லெலிதான் தொழில் மடிந்த தொல் சுவர் என்று உரைப்பினு மமையும். நின்னைக் கொடுமைகூற வென்றுரைப்பினு மமையும்.

விளக்கம்: புறநிலை வருத்தம் - புற நிலைமைக்கு யான் வருந்திய வருத்தம். புறநிலைமை, அன்புகண் மாறிய நிலைமை; அகநிலைமை யன்பாதலின், அதற்கு மாறாய் மறுக்கும் நிலைமை புறநிலைமையாயிற்று. ஆராய்ச்சியது நுணுக்கம், அதனை யுரைக்கும் நாவின்மேல் ஏற்றப்பட்டது. இனி, ஏத்துதல்வேண்டா வென்னும் நாநோவ ஏத்தினமை குறிப்பார், "செந்நா அணங்க ஏத்தி" யென்றார். நாவின் செம்மை ஏத்துதல்; அணங்குதல் தீது என்பது குறிப்பு. நாணுமாறு கூறியவர் பின்பு ஏத்துதலும் பழிச்சுதலும் பிறவும் செய்தல் அந் நாணத்தை மிகுதிப் படுத்துவதனால், அவை ஏத்துதல் முதலியன ஆகாது பழிப்பாதல் பற்றிக் குறிப்புமொழி யென்றார்."வள்ளியை யாகலின்" என்ற பாடத்தைக் கொள்ளாது "வள்ளியனாகலின்" என்ற பாடங்கொள்வது முண்டென்றும், அவ்வாறு கொண்டால், "வள்ளியை யாகலின்... பெறாத மாந்தர் கொடுமைகூற..." என்று உரைகூறிக் கொள்க என்றார். புறநடை, எழுத்ததிகாரத்திறுதியிற் கூறிய, "கிளந்தவல்ல செய்யுளுள் திரிநவும், வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும், விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின், வழங்கியன் மருங்கின் உணர்ந்தன ரொழுக்கல், நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்" (எழுத்து. 483) என்ற புறநடை, புறநிலை யென்பதற்குப் புறங்கடை நின்றநிலையென்று பொருள் கூறினும் பொருந்தும் என்றார்; புறங்கடை நின்றார் ஒன்று ஈத்தல் இல்லை யாதல் பற்றி. இல்லெலிதான் மாறிமாறிப் பலவிடங்களை யகழ்ந்தும் பயன் இல்லாமையால் மடிகொண்ட தென்றதற்கு வேறாக, இல்லெலியும் தொழிலின்றி மடிந்த தொல்சுவர் என்று உரைப்பினும் பொருந்தும் என்றார். இல்லெலி பலவிடங்களில் அகழ்ந்தும் பயன் பெறாது மடி கொண்டாற் போல, புதல்வனும் தாய் முலையைப் பன்முறை சுவைத்தும் பாலின்மையால், பாலுண்டலையே வெறுத் தொதுங்கினான். தொலைவு பொருட்குறைவாதலின், தொநை்திருந்த என்றதற்கு வறுமையுற்றிருந்த என்று உரை கூறினார்.
--------------

212. கோப்பெருஞ் சோழன்

உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கோப்பெருஞ் சோழன் அறிவு நலமும் ஆட்சி நலமும் ஒருங்குடையவன்; மானத்திற் கவரிமா வனையன்; மற மாண்புகளில் சான்றோர் மெய்ம்மறை. சான்றோர் சால்பறிந்து அவர் கூட்டுறவு விரும்பியுறைபவன். பிசிராந்தையார் பால் பேரன்புடையவன். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன். ஒரு கால் இவனுடைய மக்கள் இவன்பால் பகைத்தீக் கொளுவப் பெற்றுப் போர்க்கெழுந்தனர். தெருண்டவர் தெருட்டவும் தெருளாது முரணிய மக்களை ஒறுத்தற் கெண்ணிக் கோப்பெருஞ் சோழனும் போர்க் கெழுந்தனர்.தெருண்டவர் தெருட்டவும் தெருளாது முரணிய மக்களை ஒறுத்தற் கெண்ணிக் கோப்பெருஞ் சோழனும் போர்க் கெழுந்தான். அது கண்ட சான்றோரான புல்லாற்றூர் எயிற்றியனாரென்பார் கோப்பெருஞ் சோழன் மனங்கொள்ளத் தக்க நல்லுரைகளை எடுத்தோதி அவனைப் போரைக் கைவிடுமாறு செய்தார். முடிவில் அவன் மானம் பொறாது வடக்கிருந்து உயிர்துறந்தான். அக்காலத்தே இவனுடனே உயிர்துறந்த சான்றோர் பலர். கேள்விமாத்திரையே பெருநட்புக் கொண்டிருந்த பிசிராந்தையார் இவன் வடக்கிருந்து உயிர் துறந்து நடுகல்லாயின பின் போந்து தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார். இவர் காலத்தே இவன் நட்புச் சுற்றமாயிருந்த சான்றோர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், நத்தத்தனார், புல்லாற்றூர் எயிற்றியனார், பிசிராந்தையார் முதலியோராவர்.

பிசிராந்தையார் பாண்டிநாட்டுப் பிசிரென்னும் ஊரில் இருந்து வருகையில், கோப்பெருஞ்சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும் கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண்டொழுகினார். பாண்டி நாட்லிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர் உறையூரிலிருந்த கோப்பெருஞ் சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. பிசிர் இப்போது பிசிர்க் குடியென வழங்குகிறது. அவரது நினைவுமுற்றும் சோழன்பால் ஒன்றியிருந் தமையின், யாவரேனும் நம்முடைய வேந்தன் யாவன் என்று கேட்பின், "எம் வேந்தன் கோப்பெருஞ் சோழன். அவன் உரையூரில் பொத்தியாரென்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக்கின்றான்" என்று கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று இப் பாட்டாய் உருக்கொண்டு நிற்கின்றது.

    நுங்கோ யாரென வினவி னெங்கோக்
    களமர்க் கரித்த விளையல் வெங்கள்
    யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
    ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
    வைகுதொழின் மடியு மடியா விழவின்         5
    யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
    பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
    கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
    பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
    வாயார் பெருநகை வைகலு நக்கே.         10
    -----------

திணை: அது. துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

உரை: நுங் கோ யார் என் வினவின் - உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின்; எங் கோ - எம் முடைய இறைவன்; களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் - களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை; யாமைப் புழுக்கின் - ஆமையிறைச்சியுடனே; காமம் வீடஆரா - வேட்கைதீர அக்களமர் உண்டு; ஆரல் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ - ஆரல் மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தே அடக்கி; வைகு தொழில் மடியும் மடியா விழவின் - மதுவுண்ட மயக்கத்தால் வைகு தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய; யாணர் நல் நாட்டுள்ளும் - புதுவருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும்; பாணர் பைதற் சுற்றத்துப் பசிப் பகையாகி - பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய்; கோழியோன்- உறையூரென்னும் படைவீட்டிடத் திருந்தான்; கோப்பெருஞ் சோழன் -; பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ - புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி; வாயார் பெருநகை வைகலும் நக்கு - மெய்ம்மையார்ந்த மிக்க மகிழ்ச்சியை நாடொறும் மகிழ்ந்து;
எ - று.

நன்னாட்டுள்ளும் என்ற உம்மை சிறப்பும்மை. கோழி - உறையூர்.

நுங்கோயாரென வினவின் எங்கோக் கோப்பெருஞ்சோழன்: அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத் திருந்தா னெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆகிக் கெழீஇ நக்கென்னும் செய்தெனெச்சங்களைக் கோழியோ என்னும் வினைக்குறிப் போடு முடிக்க.

விளக்கம்: களமர் பொருட்டு வடித்தெடுக்கப்பட்ட அரியலை அக்களமரேயுண்பர். அரியலாகிய கள்ளை வெறிக்க வுண்பரென்பதற்கு, "காமம் வீட ஆரா" என்றார். ஆர்தல் - உண்டல். கள்ளுண்ட மயக்கத் தால் விளைவது தொழிலில் ஈடுபடாது மடிவது. விழவுதோன்றி, கள்ளுண்ட களமரைத் தன்பால் ஈடுபடச் செய்வது விளங்க, "வைகு தொழில் மடியும் மடியாவிழவு" என்றார். பசியால் வாடியிருக்கும் சுற்றமென்பது தோன்றப் "பைதற் சுற்றம்" என்பது குறிக்கப்பட்டது. உறையூர்க்குக் கோழி யென்றும் பெயருண்டு. கோழியென்றது, ஒரு கோழி "நிலமுக்கியத்தால் யானையோடு பொருது, அதனைப் போர் தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த நகர்க்குப் பெயராயிற்று; ‘முறஞ்செவி வாரணமுன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் (சிலப். 10: 247-8) என்பர் மேலும்’ என்று அடியார்க்கு நல்லார் கூறுவது காண்க. பொத்து, புரைபடுதல்; "பலர் நின்று போற்றினும் பொத்துப் படும்" (குறள். 468) என வருதல் காண்க. ஈண்டுப் புரைபடுவதாவது அறைபோகுதல். புரையில்லாத நல்லமைச்சரோடு கூடியிருக்கும் வேந்தனுக்கு மெய்ம்மையின்பம் ஒருதலையாதலின், "வாயார் பெருநகை" என்று வியந்தோதினார். கோழியோன் என்பது கோழியின் கண் உள்ளன் என்பதுபட நிற்றலின், "கோழியிடத் திருந்தானெனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்று உரைத்தார். பெருநகை யென்ற விடத்துப் பெருமை மிகுதி குறித்துநின்றது. செய்தெனெச்சங்கள் வினைக்குறிப்போடு முடியலாம்;

"வினையெஞ்சு கிளிவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய, முடிபாகும்மே" (எச்ச. 36) என்பது தொல்காப்பியம். ஆகி, கெழீஇ, நக்கென்னும் செய்தெனெச்சங்கள் காரணமாகாமையின் ஆக்கச்சொல் விரிக்கப்படவில்லை.
---------

213. கோப்பெருஞ் சோழன்

கோப்பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில், அவன் மக்கள் சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று அவன் பால் பகைகொண்டு போர்க்கெழுந்தனர். அவர் அறிவு திருந்த வேண்டிச் சான்றோர் செய்த முயற்சிகள் பயனிலவாயின. அவர்கட்குத் துணைசெய்யக் கூடிய புல்லல்களும் உளராயினர். தந்தையொடு போருடற்றவ தொழியப் பிறிதொன்றும் கருதாத பேதைகளான மக்கள் செயல் கோப்பெருஞ் சோழன் உள்ளத்திற் கொதிப்பை யுண்டுபண்ணிற்று. மறமும் மானமும் பொங்கி யெழுந்துகோப்பெருஞ் சோழனைப்போர்க்கெழுமாறுதூண்டின. இருதிறத்தாரும் போர்க்குரிய வற்றைச் செய்யத் தொடங்கினார். இச் செயல் நாட்டிலிருந்த நல்லிசைச் சான்றோருக்குப் பெருங் கலக்கத்தை யுண்டு பண்ணிற்று. நல்லறிவு நிறைந்த சொற்களைக் கேட்டற்கு ஒருப்படா உள்ளம் படைத்த மக்களைத் தெருட்டுதலைவிடக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை மாற்றுவதே மாண்பெனக் கண்டனர். தந்தையும் மக்களும் போர்செய்தலால் விளையும் தீங்குகளையும் பழியையும் எடுத்து இயம்பினர் தொடக்கத்தில் கோப்பெருஞ் சோழனும் அவர் கூற்றுகட்கு இடங்கொடானாயினன். முடிவில் சோழன் தன்மக்கள்மேல் செல்லலுற்றான். அதனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சான்றோர் கண்டார். புல்லாற்றூர் என்பது காவிரியின் வடகரையில் உள்ள ஊர்களுள் ஒன்று. அவர் போர்மேற் செல்லும் சோழனையடைந்தார். போர்க்களத் திருப்பினும், சான்றோர் அவைக்களத் திருப்பினும் அறிவுடையோர் அறிவுரை கேட்கும் அமைதியுடையனாகிய கோப்பெருஞ் சோழன் அவரை வரவேற்றான். அவர் அவனது மேற்செலவை விலக்கும் கருத்தினராய், "வேந்தே! நின்னொடு பொர வந்திருப்போரையும்நின்னையும்நோக்கின், அவர் தொன்றுதொட்டுவந்த நின் பகை வரல்லர்; பகைவரான சேர பாண்டியர் குடியினரல்லர்; நீயும் சோழர்க்கு மாறான சேரபாண்டியர் குடியினனல்லை; இவ்வுலகில் இம்மையில் நீ இப் போரையுடற்றி நல்ல புகழ் நிறுவி மறுமை யுலகமெய்துவையாயின், நினக்குப் பின் இவ்வரசுரிமை நின்னொடுபொர வந்திருக்கும் அவர்க்குத் தானே உரியதாய்ச் சென்று சேரும்; இது நீ நன்கறிந்த தொன்று. மேலும் இப்போரில் நின்னோடு பொரும், நல்லறிவில்லாத இளையவர்கள் தோற்பரேல், நின்பெருஞ் செல்வத்தை யார்க்குத் தரப்போகின்றாய்? ஒருகால் நீ இப்போரில் தோற்பாயாயின், பெரும்பழிதானே நிலைநிற்கும். ஆதலால், போரைக் கைவிடுவதே பொருத்தமாகும். அன்றியும், நின் திருவடி அஞ்சினோர்க்கு அரணாகும் அழகுடையது; அச் சிறப்புக் குன்றா வண்ணம் செய்யத்தக்கது ஒன்றே உளது. இப்போரைத் தவிர்த்து வானோருலகத்து மேலோருவப்ப அறம்புரிவதே கடன். அதனைச் செய்க" என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடிக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை மாற்றினார். சோழனும் சான்றோர் உரையின் சால்பினைத் தெளிந்தான். படைவீரர்க்குப் போரைக் கைவிடுமாறு பணித்தான். போர் நிகழ்ச்சி கண்டு வருந்திய சான்றோர் மகிழ்ச்சி கொண்டனர். மகிழ்ச்சி கொண்டிருந்த பகைவர் மனந்தடுமாறினர். முடிவில் கோப்பெருஞ் சோழன் மக்கட் செயலால் விளைந்த மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான்.

    மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
    வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
    பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து
    நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
    றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்         5
    தமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவம்
    நினையுங் காலை நீயு மற்றவர்க்
    கனையை யல்லை யடுமான் றோன்றல்
    பரந்துபடு நல்லிசை யெய்தி மற்றுநீ
    உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும்         10
    ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
    அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
    இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
    நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
    எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்         15
    நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
    அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
    இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
    அதனால், ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந்
    தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க்         20
    கேம மமாகுநின் றாணிழன் மயங்காது
    செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
    அரும்பெற லுலகத் தான்றவர்
    விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளந்கே.
    -------------

திணை: வஞ்சி, துறை - துணைவஞ்சி. அவன் மக்கள் மேற்சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.

உரை: மண்டு அமர் அட்ட மதனுடைய நோன்றாள் - மடுத் தெழுந்த போரின்கண் பகைவரைக்கொன்ற மிகுதி பொருந்திய வலிய முயற்சியையுடைய; வெண்குடை விளக்கும் - வெண் கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும்; விறல்கெழு வேந்தே - வென்றியையுடைய வேந்தே; பொங்கு நீர் உடுத்த இம் மலர்தலை உலகத்து - கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்; நின்றலை வந்த இருவரை நினைப்பின் - நின்னிடத்துப் போர் செய்ய வந்த இருவரையும் கருதின்; தொன்றுறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் - பழையதாய்த் தங்கப்பட்ட வலியையுடைய நின் பகைவேந்தராகிய சேர பாண்டியருமல்லர்; அமர் வெங் காட்சியொடு - போரின்கண் விரும்பிய காட்சியுடனே; மாறு எதிர்பு எழுந்தவர் - நின்னொடு பகையாய் வேறு பட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலை - நினையுங்காலத்து; நீயும் அவர்க்கு அனையையல்லை - நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; அடு மான் தோன்றல் - பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ; நீ பரந்து படு நல்லிசை எய்தி - நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி; உயர்ந்தோர் உலகமெய்தி - தேவருலகத்தின்கட்போய்; பின்னும் ஒழிந்த தாயம் - பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை; அவர்க்கு உரித்தன்று - அவர்க்கு உரித்து; அதனால் - ஆதலால்; அன்னது ஆதலும் அறிவோய்- அப்பெற்றித்தா தலும் அறிவோய்; நன்றும் இன்னும் கேண்மதி - பெரிதும் இன்னமும் கேட்பாயாக; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; நின்ற துப்பொடு - நிலைபெற்ற வலியொடு; நிற்குறித்து எழுந்து எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் - நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்பின்; நின் பெருஞ்செல்வம் யார்க்கு எஞ்சுவை - நினது பெரிய செல்வத்தை அவர்க் கொழிய யார்க்குக் கொடுப்பை; அமர் வெஞ் செல்வ - போரை விரும்பிய செல்வ; நீ அவர்க்கு உலையின்- நீ அவர்க்குத் தோற்பின்; இகழுநர் உவப்ப - நின்னை யிகழும் பகைவர் உவப்ப; பழி எஞ்சுவை பழியை யுலகத்தே நிறுத்துவை; அதனால் - ஆகலான்; ஒழிகதில் நின் மறன் - ஒழிவதாக நின்றுடைய மறன்; வல்விரைந்து எழுமதி - கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின் உள்ளம் வாழ்க - நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாள் நிழல் - அஞ்சினோர்க்கு அரணாகும் நினது அடிநிழல்; மயங்காது செய்தல் வேண்டமால் நன்று - மயங்காமற் செய்தல் வேண்டும் நல்வினையை; வானோர் அரும் பெறல் உலகத்து ஆன்றவர் - விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர்; விதும்புறு விருப்பொடு - விரைந்த விருப்பத்தோடு, விருந்து எதிர் கொளற்கு - விருந்தாக ஏற்றுக்கொள்ள; எ - று.

மற்று: அசை. தில்: விழைவின்கண் வந்தது. வானோருலகென்றது ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது. வேந்தே, நின்மறன் ஒழிக; ஆன்றவர் விருந்தெதிர் கொளற்கு நன்று செய்தல் வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயக; நின்னுள்ளம் வாழ்வதாக எனக் கூட்டி வினைமுடிவு
செய்க.

செல்வமும் பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல் வினைகொண்டன - எஞ்சுதல், இவர்க்குப்பின்னும் நிற்றல். தாணிழல் மயங்காதென்பதற்கு நினக்கு ஒரு தீங்கும் வாராமலென்றதாகக் கொள்க.

இனி, "அதனால் அன்னதாதலு மறிவோய்" என்றதற்கு உயர்ந்ததோர் உலகமெய்துவது காரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து; அன்னதாதல் நீ யறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்கு ஏமமாகும் நின்தாணிழலென முற்றாக்கி மயங்காது தெளிந்துநின்று நன்று செய்தல் வேண்டுமென வுரைப்பாருமுளர். "மாவெங் காட்சி யோடு மாறெதிர்ந் தெழுந்தவர்" என்று பாடமோதுவாருமுளர்.

விளக்கம்: வெண்குடை நிழல் செய்யும் நீர்மைத்தாதலின், ஆனுருபைவிரித்து, விளக்குதற்குரிய புகழை வருவித்து, "வெண்கொற்றக் குடையன் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வேந்தே" யென்றார். ஓரினமாய் ஒருகுடியில் தோன்றித்தெளிந்த சூழ்ச்சியில்லாமையால் பகைத்தெழுந்தமையால், புதல்வர்களை "மாறெதிர்பு எழுந்தவர்" என்று ஆசிரியர் கூறியதனால், உரைகாரர், அதற்கு, "்நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்" என்றுரைத்தார். புகழக்கு இடம் இவ்வுலகமாதலால், "நல்லிசையெய்தி" என்றதற்கு, "நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி" யென்றார். எண்ணில் காட்சி யென்புழி எண் சூழ்ச்சி மேலும் காட்சி அறிவின் மேலும்நின்றன. அறிவுடையராயினும், சூழுந்திறன் உடையரல்லராதலின் "எண்ணில் காட்சி", யென்றும், புதல்வ ரென்னாது இளையரென்றது, அஃதிலராதற்கேது அவரது இளமை யென்றும் கூறினாராம். வேந்தனை நோக்கி, "நீ தோற்பின்" எனத் தோல்வி கூறுதலின், அது கேட்டு அவன் மனம் வேறுபடாமைக்கு "அமர்வெஞ் செல்வ" என்றார். மற்றென்பது வினை மாற்றன்றென்பது விளங்க "மற்று, அசை" என்றார். சோழனும் அவன் புதல்வர்களும் "பகைஞராய்" "மாறெதிர்பு எழுந்து" நிற்றலால், "நினைப்பின்" என்றும், "நினையுங்காலை" என்றும் கூறினார். வானோருலகென்புழி, ஓர் என்பதை அசையாக்கி, வானாகிய உலகென ஒட்டாக்காது, வானோரென ஒரு பெயராக்கி, வானோரது உலக மெனவுரைக்க வென்பார், "வானோருலகென்றது ஒட்டன்றி ஒரு பெயராய் நின்ற" தென்றார். செல்வமும் பழியும் எஞ்சுவனவாதலால் அவற்றிற் குரிய எஞ்சுதலாகிய வினையை, "எஞ்சுவை" எனச் சோழனுக்குரிய வினையாகக் கூறினமையின், அதற்கு அமைதி கூறுவார், செல்வமும் பழியும் அவற்றைச் செய்வோர்க்குச் சினையுமுதலும் போல இயைபுறுதலால், "செல்வமும் பழியும் சினைவினைப் பாற்பட்டு முதல்வினை கொண்டன" என்றார். "மாவெங் காட்சியொடு மாறெதிர்ந் தெழுந்தவர்" என்ற பாடத்துக்கு "யானைப்படையால் விரும்பத்தக்க காட்சியோடு மாறுபட்டுப் போர்க்கு எழுந்தவர்கள்" என்று கூறுக. "யானையுடைய படை காண்டல் முன்னினிதே" யென்பவாகலின், "மாவெங்காட்சியொடு" என்றாரெனக் கொள்க.
--------------

214. கோப்பெருஞ் சோழன்

மக்கள் செயலல் மானம் பொறாத கோப்பெருஞ்சோழன் துறவு பூண்டு வடக்கிருந்து உயிர்துறந்து புகழ்நிறுவக் கருதினான். வடக்கிருத்தலாவது, ஊர்ப்புறத்தே தனிணிடங்கண்டு, அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப்பரப்பி அதின்மீதிருந்து உண்ணாநோன்பு மேற கொண்டு அறங்கூரும் தவம் செய்தலாகும். இத் தவம் செய்து உயிர் துறப்போர் வானோர் உலகம் புகுந்து இன்புறுவர்; இதுவே பெருந்தவமாயின் வானுலகிற்கு மேலாகிய வீட்டின்கண் சென்று பிறவாநிலையினை யெய்துவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தொடங்கியவுடன், அதுபற்றிப் பலரும் பலபடப் பேசலுற்றனர். வடக்கிருத்தலாகிய நல்வினையை நன்றெனக் கருதாதவரும் என்றும் பிறவா நிலையென்பது கிடையாதென்பவரும் இருந்தனர். இதனையறிந்த அறிவுமிக்கவனான கோப்பெருஞ்சோழன் "இத்தவத்தைச் செய்வதற்குரிய வாய்ப்புண்டானபோது தெளிந்த அறிவில்லாதவர்களே, இதனைச் செய்யலாமோ செய்யாதொழியலாமோ என ஐயுற்று அலமருவர். யானை வேட்டைக்குச் செல்வோன் தவறாது வேட்டம் வாய்க்கப் பெறுவதும், சிறுபறவைகளை வேட்டையாட விழைந்து செல்வோன், அவற்றைப் பெறாது தப்பி வெறுங்கையுடனே திரும்புவதும் கண்கூடு. இதனால் உயர்ந்தது உள்ளுவோர்வெற்றியும், சிறியது கருதுவோர் தோல்வியும் பெறுவரென்பது துணிவாம் அதனால், உயர்ந்ததாகிய இத்தவத்தை மேற்கொண்டோர், தொய்யாவுலகாகிய துறக்கவுலக இன்பத்தைப் பெறுவர்; தவத்தின் பெருமைநோக்க அவ்வின்பம் சிறிதாயின், தொய்யாவுலக நுகர்ச்சி வேண்டாது பேரின்ப வீட்டைப்பெறுவர். அவ்வீடெய்தினோர் மீளப் பிறவார். இனி மறுபிறப்பு இல்லையென்று கருதுவோர்க்கு இது தெரிந்த உண்மையாகும்; என்னெனில், இத்தவம் செய்வோர், மாறிப் பிறவாராயினும், தம் புகழை நிறுவிப் புகழுடம்பு கொண்டு நிலைபெறுவர்" என எடுத்தோதும் கருத்தால் இப் பாட்டைப் பாடினான். சூழ இருந்தோர் இது கேட்டு மனந் தெளிவடைந்தனர்.

    செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
    ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
    நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே         5
    அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
    றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
    மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்         10
    மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
    கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
    தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே.
    -----------

திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி. அவன் வடக்கிருந்தான் சொற்றது.

உரை: நல்வினை செய்குவங்கொல்லோ என-அறவினையைச் செய்வேமோ அல்லேமோ என்று கருதி; ஐயம் அறாஅர்-ஐயப்பாடு நீங்கார்; கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்து அழுக்குச் செறிந்த காட்சி நீங்காத உள்ளத்தினையுடைய; துணிவில்லோர் - தெளிவில்லாதோர்; யானை வேட்டுவன் யானையும் பெறும் - யானைவேட்டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வரும் - குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் -; உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு - உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்கு; செய்வினை மருங்கின் - தாம் செய்யப்பட்ட நல்வினைக் கூற்றிலே; எய்தல் உண்டெனில் - அதனை யனுபவித்த லுண்டாமாயின்; தொய்யாவுலகத்து நுகர்ச்சியும் கூடும் - அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்ப மனுபவித்தலும் கூடும்; தொய்யாவுலகத்து நுகர்ச்சி இல்லெனின் - அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சி யில்லையாயின்; மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் - மாறிப் பிறவாராயினும் - மாறிப் பிறவாரென்று சொல்லுவா ருளராயின்; இமயத்துக் கோடு உயர்ந்தன்ன- இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற; தம் இசை நட்டு - தமது புகழை நிலைபெறுத்தி; தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலை - வசையில்லாத வுடம்போடு கூடி நின்று இறத்தல் மிகத் தலையாயது, அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது; எ - று. உயர்ந்தி சினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினை மருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சியுங் கூடுமென்றுரைப்பினுமமையும். பிறவாராயினும் என்னும் உம்மை அசை நிலை; உம்மையின்றி யோதுவாருமுளர். காட்சியொடு நீங்கா நெஞ்சத்து என்பதூஉம் பாடம்.

விளக்கம்: அல்லேமோ என்பது எஞ்சிநின்றது. கசடு, அழுக்கு. தெளிந்த நீரைத் துணிநீரென்றாற்போலத் தெளிவில்லதாரைத் "துணிவில்லா" ரென்றார்; "துணிநீர் மெல்லவல்" (மதுரை. 283) என்றும், "துணிநீரருவி" (ஐங். 223) என்று சான்றோர் வழங்குதல் காண்க. வேட்டம், விருப்பம். உயர்ந்தது விரும்பி முயல்வார் உயர்ந்து சிறப்பரென்பதுபற்றி, "உயர்ந்த வேட்டத் துயர்ச்திசி னோர்க்கு" என்றார். நல்வினைக் கூற்றின்பயன் இன்பமாதலின், அவ்வின்பத்தை, "அதனை" யென்று குறித்தார். தொய்தல், வினைக்கண் ஈடுபடுதல். தொழிலாகிய வினைக்குரியது இவ்வுலகமென்றும், வினையீடுபாடின்றி இன்ப நுகர்ச்சி யொன்றிற்கே யுரியது உம்பருலகென்றும் சான்றோர் கூறுவர்.இது பற்றியே வடநூலார் இம்பருலகைக் கன்மபூமியென்றும், உம்பருலகைப் போகபூமியென்றும் வழங்குவர். மாறிப் பிறப்பு- உம்பருலக நுகர்ச்சி கழிந்தவழி மண்ணுலகில் மீளப்பிறக்கும் பிறப்பு. பிறப்பு: தொழிற்பெயர். பிறப்பின் இன்மை- பிறத்தற்கண் பிறத்தலுக்குரிய நுகர்ச்சியேது இல்லாமையால் பிறப்பில்லையாதல்; அஃதாவது வீடுபேறு உண்டாம். தொய்யாவுலகத்தில் நுகர்ச்சியில்லையாயின், அதற்கப்பாற் பட்டதாகிய வீடுபேறுண்டாம்; அதனைப் பண்டையோர் ‘வானோர்க் குயர்ந்த வுலகம், என்றும்’ ‘ஈண்டு வாராநெறி’ யென்றும் கூறுப."மாறிப் பிறவாராயின்"என்பதனை "இமயத்துக் கோடுயர்ந்தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்" என்பது தொடர்ந்துசிறப்பிப்பதுகொண்டு, "மாறிப்பிறவா ரென்று சொல்லுவாருளராயின்...தலையாயது" என்று உரைத்தார். "அதனால் எவ்வாற்றானும் நல்வினையே செய்தல் அழகிது" என்றது குறிப்பெச்சம். ஆகவே, நல்வினை செய்தார் இம்மையிற் புகழும் மறுமையில் இன்பமும் வீடுபேறும் பெறுவர் என்பதாம்.
----------

215. கோப்பெருஞ் சோழன்

கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச் சூழ இருந்தனர். வேறு பலரும் அவ்வப்போது வந்து பார்த்த வண்ணமிருந்தனர். இவ்வாறு நண்பர்களாகிய சான்றோர் பலரும் இருந்தாராயினும், சோழனது எண்ணம் பிசிராந்தையார்பால் ஒன்றியிருந்தது. அவ்வப்போது அவன் அவரை நினைந்து சான்றோர்பால் உரையாடினான். "சோழன் வடக்கிருக்கும் செய்தி ஒருகால் பிசிராந்தையார்க்குத் தெரியாது போலும்; பிசிரென்னும் ஊர் பாண்டிநாட்டில் நெடுந்தொலைவில் உளது; அவர்க்கு இச்செய்தி சென்று சேர்தலும் எளிதன்று. செய்தி தெரிந்தாலும் அவர் தவறாது வருவார் என்பதும் ஐயப்படற்குரியது. சோழன் அவரை நினைந்து காட்சியார்வத்தால் கருத்தழிதல் நன்றன்று" என்று சான்றோர் தம்முட் பேசிக்கொண்டனர். இது கோப்பெருஞ் சோழன் செவிக்கெட்டியது. ஆந்தையாருடைய ஆன்றவிந் தடங்கிய அருமையும் அன்பும் அவர்க்குரைப்பானாய், "ஆந்தையார் பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரினரே; ஆயினும், அவர் என் உயிரை விரும்பும் உண்மை நண்பர். செல்வக்காலத்தே அவர் போந்து என்னைக் கண்டதிலர். காணாராயினும் அல்லற்காலமாகிய இப்போது போந்து என்னைக் காணதொழியார்; காண்டற்கு விரைய வருவார்" என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினான்.

    கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
    தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய
    வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
    ஆய்மக ளட்ட வம்புளி மிதவை
    அவரை கொய்யுந ரார மாந்தும்         5
    தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
    பிசிரோ னெ்னபவென் னுயிரோம் புநனே
    செல்வக் காலை நிற்பினும்
    அல்லற் காலை நில்லலன் மன்னே.
    ---------

திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. போப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லயிது.
உரை: கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் - கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்; தாதெரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண்பூ - தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை; வெண் தயிர்க்கொணீஇ - வெள்ளிய தயிரின்கட்பெய்து; ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை - இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்; அவரைகொய்யுநர் ஆரமாந்தும் - அவரை கொய்வார் நிறையவுண்ணும், தென்னம்பொருப்பன்நன்னாட்டுள்ளும் - தென்றிசைக்கண்பொதியின் மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும்; பிசிரோன் என்ப - சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவர்; என்உயிரோம்புநன் - என்னுயிரைப் பாதுகாப்போனை; செல்வக்காலை நிற்பினும் - அவன் எமக்குச்செல்வ முடைய காலத்து நிற்னினும்; அல்லற்காலை நில்லலன்- யாம்இன்னாமை யுறுங் காலத்து ஆண்டு நில்லான்; எ - று.

மன், அசைநிலை.

விளக்கம்: அவைப்பு. குற்றுதல். "இதைப்புன வரகின் அவைப்பு மாண் அரிசி" (அகம். 394) என்று பிறரும் கூறுதலால், வரகரிசிக்கு நன்கு குற்றுதல் மாண்பாதால் காண்க. மறுகென்றது ஆகுபெயரால் அதனையடுத்துள்ள சிறையிடத்தின் மேற்று. சிறையைச் "சிறகம்" எனவும் வழங்குவர். வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு "அம்புளி மிதவை" யெனப்பட்டது. மிக்க வுடலுழைப் பில்லாரும் நிறைய வுண்பரென்றற்கு "அவரை கொய்யுநர் ஆர மாந்தும்" என்றார். தென்னம் பொருப்பு, பொதியின்மலை. பிசிர் மதுரை நகரினின்றும் தொலைவில் இருப்பது தோன்ற "நாட்டினுள்ளும் சேய்த்தாகிய" என்று உரைத்தார். "என்னுயிர் ஓம்புநன்" என்று பிசிராந்தையாரைக் கூறினான், சோழன் இறந்தபின்பு தானும் அவன் பின்னே உயிர் துறக்கும் அவரது துணிவு நினைந்து; இதனையுட்கொண்டே, உரைகாரரும் "உயிர் ஓம்புநன்" என்றதற்கு "உயிரைப் பாதுகாப்போன்" என்று உரைத்தார். மன்னைச் சொற்குரிய ஏனைப் பொருள்களைக் கொள்ளாது அசைநிலைப் பொருளே கொள்க என்பாராய், "மன் அசைநிலை" யென்றார். "உயிரோம்புதற்குச் செல்வக் காலையினும்" அல்லற்காலமே ஏற்ற காலமாதலின், அக்காலமே நோக்கியிருக்கும் அவர் வாராதொழியாரரென்பான், "அல்லற்காலை நில்லலன்" என்றான்.
----------

216. கோப்பெருஞ் சோழன்

"வேந்தே!பிசிராந்தையார் நின்னைக் கேள்விப்பட்டிருக்கின்றா ரேயன்றி நேரில் கண்டதிலர்; பல யாண்டுகளாகப் பழகிய நண்பராயினும், நேரில் வருவது அரிது; நட்புநெறியில் திரியாது ஒழுகுவதும் அரிது;" என்று சான்றோர், சோழன் ஆந்தையாரை நினைந்து மனங் கவலாவாறு கூறினர். அதுகேட்ட சோழன், "அறிஞர்களே! நீவிர் இவ்வாறு ஐயங்கொள்ளல் வேண்டா; நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை அவர்பால் கிடையாது; இனிமை நிறைந்த குணங்களையுடையர்; உயிரின் நீங்காது பிணிப்புற்ற நண்புடையர்; பொய்யாமை புகழ்தருவதாகையால், புகழைக் கெடுக்கும் பொய்ம்மையை விரும்புவது இலர்; தனது பெயரைச் சொல்லவேண்டு மிடத்து, என்னின் வேறன்மை விளங்க என் பெயரைத் தன் பெயராக "என் பெயர் கோப்பெருஞ் சோழன்" என்று சொல்லுவர்; இக்காலத்தே இப்பொழுது வாரா தொழியார்; அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக" என்று கூறினான். அக்கூற்று இப்பாட்டேயாகும்.

    கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
    காண்ட லில்லா திணாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
    அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
    றையங் கொள்ளன்மி னாரறிவாளீர்         5
    இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
    பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
    காதற் கிழமையு முடைய னதன்றலை         10
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே.
    ---------

திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.

உரை: கேட்டல் மாத்திரையல்லது - நின்னையவன் கேட்டிருக்கும் அளவல்லது; யாவதும் காண்டல் இல்லாது - சிறிது பொழுதும் காண்டல் கூடாது; யாண்டு பல கழிய - பல யாண்டு செல்ல; வழுவின்று பழகிய கிழமையராகினும்-தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும்; அரிது - அரிதே; தோன்றல் - தலைவ; அதற்பட ஒழுகல் - அவ்வழுவாத கூற்றிலேபட ஒழுகுதல்; என்று ஐயங்கொள்ளன்மின் - என்று கருதி ஐயப்படா தொழிமின்; ஆர் அறிவாளீர் - நிறைந்த அறிவினையுடையீர்; இகழ்விலன் - அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய; இனியன் - இனிய குணங்களையுடையன்; யாத்த நண்பினன் - பிணித்த நட்பினையுடையன்; புகழ்கெடவரூஉம் பொய் வேண்டலன் - புகழ் அழிய வரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயர் கிளக்குங்காலை - தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது; என்பெயர் பேதைச் சோழன் என்னும் - என்னுடைய பெயர் பேதைமையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும்; சிறந்த காதற்கிழமையும் உடையன் - மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; அதன்றலை - அதற்குமேலே; இன்னதோர் காலை நில்லலன் - இப்படி யான் துயமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இன்னே வருகுவன் - இப்பொழுதே வருவன்; அவற்கு இடம் ஒழிக்க - அவனுக்கு இடமொழிக்க; எ - று.

"அகற்பட" என்பதற்கு அவ் விறந்து பாட்டிலே பட என்றும், "இகழ்விலன்" என்பதற்கு இகழப்படுவன குணமிலனென்று முரைப்பினுமமையும். பேதைச் சோழனென்றது தான் தன்னை இழித்துக் கூறியது.

விளக்கம்: "கேட்டல் மாத்திரை யல்லது யாவதும், காண்டல் இல்லாது யாண்டு பலகழிய, வழுவின்று பழகிய கிழமைய ராகினும், அரிதே தோன்றல், அதற்பட வொழுகல்" என்பது சான்றோர் கூற்று. அவர் கூற்றுக்கு மாறாகப் பிசிராந்தையார் தவறாது வருவரென்னும் துணிவுபற்றி அவர் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தான். "வழுவின்று பழகிய கிழமை" ஈண்டு அது என்பதனால் சுட்டப்படுகின்றமையின், அதற்கு, "அவ்வழுவாத கூற்று" என விளக்கினார். துணிவின் கண் நின்ற தன் அறிவை அச் சான்றோரது ஐயம் பேதுறுவித்து நோய் செய்யுமாகலின், "ஐயங் கொள்ளன்மின்" என்றும், ஆர்ந்த அறிவின் பயன் பிறரறிவைப் பேதுறுவித்தல் கூடாதென்பது தோன்ற, "ஆரறிவாளீர்" என்றும் கூறினான். இகழ்விலன் என்ற வினைக்குறிப்பு எக்காலும் என்ற காலத்தைக் குறிப்பாய்க் கொண்டிருத்தலின், அதற்கு "என்றும் இகழ்ச்சியிலனாய்" என்று உரைத்தார். பொய்யாமை புகழாதலின், "புகழ்கெடவரூஉம் பொய்" என்றான்; "பொய்யாமை யன்ன புகழில்லை" (குறள் - 296) என்பர் திருவள்ளுவர். தன் பெயரை ஆந்தையென்னாது சோழன் என்பவன், செஞ்சாலும் தான் வேறு சோழன் என்ற பெயர் வேறு என வேறுபாட்டுணர்வின்றி உயிரொன்றிய உணர்வினனென்பதுபடப் "போதைச்சோழன் என்னும்" என்றான். இஃது உயிரொன்றிய அன்புடைமையின் பயனாக உண்டாகும் செயலாதல் தோன்ற, "சிறந்த காதற் கிழமையும் உடைமயன்" என்றான். இகழ்விலனென்றதற்கு இகழப்படுவனவாகிய குணமிலன் என்பது பொருளாயின், சான்றோரை ஐயுற வேண்டா என்றதற்கு ஏதுக் கூறியவாறாம்.
--------

217. பிசிராந்தையார்

கோப்பெருஞ்சோழன்பால் பெரு நட்புக்கொண்டு சூழ இருந்த சான்றோர்களுள் பொத்தியார் என்பவர் ஒருவர். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டாகியிருந்த நட்பின் திறமும், அச் சோழனது ஆட்சி நலமும் மனப்பண்பும், அவன் வடக்கிருக்க நேர்ந்த திறமும் பிறவும் நேரில் அறிந்து அவன்பால் பிரியா அன்புகொண்டிருந்தார். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கச்சென்றபோது பொத்தியாருடைய மனைவியார் கருப்பமுற்றிருந்தார். ஆயினும், பொத்தியாரும் அவனுடன் சென்று ஏனைச் சான்றோர் போல வடக்கிருக்க விரும்பினார். சோழனோ அதனையறிந்து "நின் மனைவி கருவுறிர்த்த பின்பு வடக்கிருக்கலாம்" என்று அவரைத் தடுத்துவிட்டான். பொத்தியார் அதனையுடன் பட்டு வடக்கிருத்தலை அப்போதுமேற்கொண்டிலர். ஆயினும், வடக்கிருந்த அவன் உயிரோடிருக்குங்காறும் அடிக்கடிசென்றுகண்டுகொண்டுவந்தார். சின்னாட்களில் கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பால் உயிர் துறந்தான். அவன் பிரிவால் பெரிதும் கையற்று மனங்கவன்ற சான்றோர் ஒருவாறு தேறி அவற்குநடுகல்நிறுவிச்சிறப்புச்செய்தனர். அவன்நடுகல்லான சில நாட்களில் பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவர் அவனது நடுகல்லையும் சூழ இருந்த சான்றோரையும் கண்டு பெருவருத்தமுற்றார். கோப்பெருஞ்சோழன் சொன்ன குண நலமுற்றும் பிசிராந்தையார் பால் இருக்கண்ட சான்றோர்க்கு மிக்க வியப்பும் விம்மிதமும் உண்டாயின. பொத்தியார்க்கு உண்டான வியப்பு அவருள்ளத்தைக் கவர்ந்து ஒரு பாட்டாய் வெளிப்பட்டது. அப் பாட்டு இது.

    நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
    எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
    அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
    தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
    இசைமர பாக நட்புக் கந்தாக         5
    இனையதோர் காலை யீங்கு வருதல்
    வருவ னென்ற கோனது பெருமையும்
    அதுபழு தின்றி வந்தவ னறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும்         10
    சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
    என்னா வதுகொ லளியது தானே.
    ---------

திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. அவன் வடக்கிருந்தானுலைச் சென்ற பிசிராந்தையாரைக்கண்டு பொத்தியார் பாடியது.

உரை: நினைக்குங்காலை மருட்கையுடைத்து - கருதுங் காலத்து வியக்குந்தன்மையையுடைத்து; எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் - எத்துணையும் பெரிய தலைமையுடனே கூடியும் இவன் சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; அதனினும் மருட்கையுடைத்து- இவன் அவ்வாறு துணிந்த அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து; பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் - போற்றி - பாதுகாத்து; இசை மரபாக புகழ்மேம்பாடாக; நட்புக் கந்தாக - நட்பே பற்றுக் கோடாக; இனையதோர் காலை - இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்காலத்து; ஈங்கு வருதல் - இவ்விடத்து வருதல்; வருவன் என்ற கோனது பெருமையும் - இவ்வாறு வருவானென்று துணிந்து சொல்லிய வேந்தனது மிகுதியும்; அது பழுதின்றி வந்தவன் அறிவும் அவன் சொல்லிய சொற்பழுதின்றாக வந்தவனது அறிவும்; வியத்தோறும் வியத்தொறும் வியப்பிறந்தன்று - வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்புக் கை மிக்கது; அதனால் - ஆதலால்; தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் - தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும்; சான்றோன் நெஞ்சுறப்பெற்ற - அமைந்தோனது நெஞ்சைத் தன்னிடத்தே யுரித்தாகப்பெற்ற; தொன்றிசை அன்னோனை இழந்த இவ்வுலகம் - பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட பெரியோனையிழந்த இத் தேயம்; என்னாவது கொல் - என்ன இடும்பை யுறுங் கொல்லோ; அளியது - இது தான் இரங்கத்தக்கது; எ - று.

இது வென்பது அரசினைக் கைவிட்டு இறந்துபடத் துணிதலென்றுமாம்.

விளக்கம்: "புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான். நட்பாம் கிழமை தரும்" (குறள். 785) என்பதன் உரையில் "உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும்" என்றதை விளக்கத் தொடங்கிய பரிமேலழகர், "கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும்போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்" என்று வியந்து கூறியுள்ளார். இனி, நச்சினார்க்கினியார், "தோழி தாயே பார்ப்பான்" (கற்பு.52) என்ற சூத்திரம் "யாத்த சிறப்பின்" என்றதனால் துறவு நோக்குகிறது என்று கூறி, "இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவா" றென்று கூறுகின்றார். "வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்று" என்றது, "கோனது பெருமையும்" என்பதனோடும், "வந்தவனதறிவும்" என்பதனோடும் தனித் தனியே சென்று இயையும். மரபு - மேம்பாடு. கந்து - பற்றுக் கோடு. இன்றியென்பது இன்றாகவெனத் திரிக்கப்பட்டது. தன்கோல் இயங்காத் தேயத் துறையும் இரவலர் புரவலர் ஆகியோர் நெஞ்சுறப் பெறுதலினும் சான்றோர் நெஞ்சுறப்பெறுதல் அரிதாகலின், அதனைப் பாராட்டினார்.
--------

218. பிசிராந்தையார்

கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் தம்மில் ஒருவரை யொருவர் கண்ணிற் கண்டு பழகாதே, கேள்வி மாத்திரையே உணர்ச்சி யொத்த நண்பினராய் ஒழுகிய திறமும், கோப்பெருஞ் சோழன் கூறிய சொல் பொய்யாகாதவாறு பிசிராந்தையார் போந்த திறமும் கண்டு வியந்த சான்றோருள் கண்ணகனார் என்பவர் ஒருவர். இவரும் கோப்பெருஞ் சோழனைச் சூழ இருந்த சான்றோர். பிசிராந்தையார் வந்தபோது அவரை வரவேற்றுச் சொல்லாடி யின்புற்றவர். இக் கண்ணகனார் உள்ளது உள்ளவாறும் பாடும் உயர்ந்த புலமைநலம் உடையவர். தலைமக்களிருவர் ஒருவனும் ஒருத்தியுமாய் மனைவாழ்க்கை நடத்துமிடத்து, தலைமகன் வினைவயிற் பிரிந்திருந்து மீண்டுவந்து தன் மனைக் கண் தலைவியொடு கூடி இன்புற்றிருக்கையில் மறுவலும் பிரியவேண்டிய கடமையுடையனானான். தலைமகட்கு அவனைப் பிரிந்திருக்கும் துயர் மிகுந்து வருத்திற்று. வேறு செய்வகை அவட்குத் தெரியவில்லை. தனது காதற்காம மிகுதியை எடுத்துரைப்பது ஆண்மகற்கமையுமே யன்றிப் பெண்மகட்குப் பெண்மை தடுக்குமாதலின் கூடாது. எனினும், அவ்வரம்பு கடந்து எடுத்துரைப்பது தக்கதென எண்ணுகின்றாள்; உரையாவிடின், அவன் பிரிந்தால் தனது உயிரும் தன்னுடன் பினின்றும் நீங்கிவிடும் என உணர்கின்றாள். அலமரல் பெரிதாகின்றது. தன் தோழியுடன் இதனை யுசாவுகின்றாள். இதனைக் கண்ணகனார், "பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர், பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ, என்றுநாம் கூறிக் காமம் செப்புதும், செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று, அம்ம வாழி தோழி, யாதெனில் தவிர்க்குவம் காதலர் செலவே" (நற். 79) என்று பாடியுள்ளார். இவ்வாறு பட்டாங்குப் பாடும் பாவன்மை படைத்த கண்ணகனார், பிசிராந்தையார் போந்து கோப்பெருஞ் சோழனைக் காணப்பெறாது அவன் வடக்கிருந்து நடுகல்லானது கண்டு, தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தது கண்டார்; வியப்பு கைம்மிகுந்தது. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்ததையாரும் வேறுவேறு நாட்டிற்றோன்றிச் சிறந்த சான்றோர்களாயினும், உலகிற்குச் சான்றாண்மையை நிலைபெறக் காட்டுதற்கு ஒருவழிப்படுவரென்ற சிறப்பை எடுத்தோத விரும்பினார். அவ்விருப்பம் இப் பாட்டினைப் பயந்தது.

    பொன்னுந் துகிரு முத்து மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
    தருவிலை நன்கல மமைக்குங் காலை
    ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்         5
    சான்றோர் பால ராப
    சாலார் சாலார் பாலரா குபவே.
    ---------

திணையும் துறையு மவை. பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.

உரை: பொன்னும் துகிரும் முத்தும் - பொன்னும் பவளமும் முத்தும்; மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் - நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும்; இடைபடச் சேய ஆயினும் - ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்நிலத்தின வாயினும்; தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங்காலை - கோவை பொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்து; ஒருவழித்தோன்றி யாங்கு - ஓரிடத்துத் தோன்றினாற்போல; என்றும் - எந்நாளும்; சான்றோர் சான்றோர் பாலராப - அமைந்தோர் அமைந்தோர் பக்கத்தராவர்; சாலார் சாலார் பாலராகுப - அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவார்; எ - று.

சான்றோர் குழுவினைப் புகழுங் கருத்தாகலின், அவர்க்கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்ற உவமம் வருவித்துக் கொள்க. தொடை புணர்ந்து தோன்றி யாங்கென இயையும்.

விளக்கம்: மணியை மாமலை பயந்த மணியென்றமையின், ஆறு பயந்த பொன்னும் எனவும் கடல் பயந்த துகிரும் முத்து மெனவும் கூறிக் கொள்ளல்வேண்டும். கோவையும் தொடுக்கப் படுவது பற்றித் தொடை யெனப்பட்டது. புணர்ந்தென்னும் வினையெச்சம் தோன்றியாங் கென்னும் வினைகொண்டது. "சான்றோர் சான்றோர் பால ராப" எனவே, சாலார் எப்பாலராகுப வென்னும் ஐயமறுத்தற்குச் "சாலார் சாலார் பால ராகுப"
வென்றார்.
--------

219. கோப்பெருஞ் சோழன்

பண்டைநாளில் பேரூர்களிலுள்ள பெருஞ் சதுக்கங்களில் பூதங்கட்குக் கோயில் எடுத்து அதற்கு வழிபாடு செய்தல் மரபு. காவிரிப்பூம்பட்டினம், மதுரை, உரையூர் முதலிய நகரங்களில் சதுக்கப் பூதங்கட்குக் கோயில் இருந்ததாகப் பண்டை நூல்கள் கூறகின்றன. கருவூரும் பண்டை நாளைப் பெருநகரமாதலின் அந் நகர்க்கண் இருந்த பெருஞ்சதுக்கத்துப் பூதத்தின் பெயர் கொண்ட சான்றோர் ஒருவர் உண்டு. அவரைச் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்பர். இப்பெயர் நானூறாண்டுகட்கு முன்பும் மக்களிடையே வழங்கியிருக்கிற தென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவர் உரையூரிலிருந்து ஆட்சிபுரிந்த கோப்பெருஞ் சோழன்பால் பேரன்புடையவர். சோழன் வடக்கிருந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறக்கக் கருதி அதனை மேற்கொண்ட திறத்தைக் கேள்வியுற்றார்.உண்ணா நோன்பால் உடம்பு வாடிப் பேசும் ஆற்றல் இன்றி உயிரிழக்கும் நிலையில் கோப்பெருஞ் சோழன் இருக்குங்கால் பூதநாதனார் அவண் போந்தார்; அங்கே சோழனுடன் சான்றோர் பலர் வடக்கிருத்தலையுங் கண்டார். தாமும் முற்படப் போந்து அவனொடு வடக்கிருக்க இயலாது போனது குறித்துப் பூத நாதனார்க்கு வருத்த முண்டாயிற்று. சோழன் பேச்சு மூச்சின்றி இருக்கும் நிலை அவருள்ளத்தைப் பெரிதும் வாட்டிற்று. கையறவு மிகுந்தது. ஆற்று நடுவேயுள்ள தீவில் மர நிழலில் இருந்து உண்ணா நோன்பால் உடம்பை வாட்டி வடக்கிருத்தலை மேற்கொண்டிருக்கும் வேந்தே! நின் கருத்துப்படியே சான்றோர் பலர் வடக்கிருப்ப அவருள் ஒருவனாய் யானும் முற்பட வாராமையால் என்னோடு புலந்து வாய்பேசாது இருக்கின்றனை போலும்" எனக் கல்லுங்கனியும் கருத்தமைந்த இப் பாட்டைப் பாடினார்.

    உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
    முழூஉ வள்ளூர முணக்கு மள்ள
    புலவுதி மாதோ நீயே
    பலரா லத்தைநின் குறியிருந் தோரே.
    --------

திணையும் துறைவு மவை. அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூநாதனார் பாடியது.

உரை: உள்ளாற்றுக் கவலை - யாற்றிடைக் குறையுள்; புள்ளி நீழல் - புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து; முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள - உடம்பாகிய முழுத்தசையை வாட்டும்வீர; நின் குறியிருந்தோர் - நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார்; பலரால் - பலராதலால்; புலவுதி நீ - அவரோடு சொல்லி வெறுத்தி நீ;
எ - று.

யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீ என்றும், இவனுடனே வடக்கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமை நோக்கி நின் குறிப்பிற்கேற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினு மமையும். "உள்ளாற்றுக் கவலை" யென்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையுங் கூடிய இடமென்றுமாம்; கவர்த்த வழிக்குள் என்று உரைப்பாரு முளர். அரசு துறந்து வடக்கிருந்து உயிர் நீத்த உள்ள மிகுதியான் "மள்ள" என்றார்.

விளக்கம்: கோப்பொருஞ் சோழனுக்குரிய உறையூர் காவிரிக் கரைக் கண்ணதாகையால், ஆற்றிடைக் குறை யென்றது, காவிரியாற்றின் இடைப்பட்ட நிலப்பகுதியாயிற்று. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த இடம் திருவரங்கத்துக்கு மேற்கிலாதல் கிழக்கிலாதல் உளதாகும். யாற்றிடைக் குறை, துருத்தியெனவும்படும்; ஆற்றின் நடுவேயுள்ள நிலத்தை உள்ளாற்றுக் கவலை யென்றார்; பிறரும் "செல்லாற்றுக் கவலை" (குறுந்.258) என்பர். கவலை, கவர்த்தவழி, வள்ளுரல், முழுத்தசை. குறி, குறிப்பு; ஈண்டுக் கருத்துணர்த்திநின்றது. மள்ளன், உள்ள மிகுதியுடையவன். வள்ளுரத்தை வாட்டுதலாவது உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை வெயில் பனி காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது. உயிர் நீங்கிய உடம்புகண்டு கூறியது இப்பாட்டு.
--------

220. கோப்பெருஞ் சோழன்

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காலையில் சான்றோராகிய பொத்தியார் தாமும் வடக்கிருக்கச் சென்றார். பொத்தியார் கோப்பொருஞ்சோழனுக்குச் சிறந்த நண்பராவார். கோப்பொருஞ்சோழன் பெயரோடு பொத்தியார் பெயரும் இணைந்தே நாடு முழுவதும் பரவியிருந்தது. பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனை நினைக்கும் போதெல்லாம் பொத்தியாரையும் உடன்நினைந்து "பொத்தில் நண்பிற் பொத்தி" (புறம்.212) என்று பாராட்டுவர் சோழன் பிரிவாற்றாது பொத்தியாரும் வடக்கிருக்கக் கருதியது கண்ட கோப்பெருஞ்சோழன் "கருவுற்றிருக்கும் நின் மனைவி கருவுயிர்த்தபின்பு வருக" என அன்பாற் பணிக்கவே, அவர் திரும்பி உறையூர்க்கு வந்தார். கோப்பெருஞ்சோழனில்லாத உறையூர் அவர்க்குப் பாழ்பட்டுத் தோன்றிற்று. அவன் இருந்த அரண்மனை பொலிவிழந்து அவருக்கு அழுகையை யுண்டு பண்ணிற்று. "பலயாண்டுகளாகப் பெருஞ் சோறளித்துப் பேணிப் பாதுகாத்து வந்த யானை இறந்ததாக, அஃது இருந்த இடத்தைக் காணும் அன்புடைய பாகன் அழுது புலம்புவதுபோல, கோப்பெருஞ்சோழன் இல்லாத இந்த உறையூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கிக் கையற்றுப் புலம்புகின்றேன்" என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடி வருந்தினார்.

    பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களி றிழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
    வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
    கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்         5
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே.
    ---------

திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

உரை: பெருஞ்சோறு பயந்து - பெரிய சோற்றையுண்டாக்கி; பல் யாண்டு புரந்த - பல்யாண்டு பாதுகாத்த; பெருங்களிறு இழந்த பைதல் பாகன் - பெரிய களிற்றை யிழந்த வருத்தத்தினையுடைய பாகன்; அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை - அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின் கண்; வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந் தாங்கு- கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல; யான் கலங்கினேன்; அல்லேனோ - யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினே னல்லனோ; பொலம் தார்த் தேர் வண்கிள்ளி போகிய - பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர் வண்மையைச் செய்யும் கிள்ளி போகப் பட்ட; பேரிசை மூதூர் மன்றங் கண்டு - பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து; எ - று.

மூதூர் மன்றங்கண்டு கலங்கினேனல்லனோ எனக் கூட்டுக. மன்றம் ஈண்டுச் செண்டுவெளி. அழுங்கல், முன்புள்ள, ஆரவாரமுமாம். இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் "போகிய" என்றார்.

விளக்கம்: பண்டைநாளில் களிறுகட்கென வேந்தரும் செல்வரும் நெல்விளை வயல்களைவிட்டு,அவற்றில் நெல்விளைவித்துஅந் நெல்லைக் களிறுகளின் உணவுக்கும் பயன்படுத்துவது மரபு.அவ்வயல்கட்கு யானைமானியம்என்றுபெயர்கூறுவர். இவ்வாறு பல ஆண்டுகளாக நெல்லைவிளைத்துக்களிற்றைப் பேணிவந்த பாகன் என்பது விளங்க, "பெருஞ்சோறுபயந்துபல்யாண்டுபுரந்த பாகன்" என்றார். "காய் நெல்லறுத்துக் கவளங் கொளினே, மாநிறை வில்லதும் பன்னாட்காகும், நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே, வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்"(புறம். 184)என வருதல் காண்க. பைதல், துன்பம். பெருங்களிறுதங்கியஆலையைக் காணுந்தோறும் பாகற்கு வருத்தம் மிகுதலின், "அழுங்கல் ஆலை"யென்றார். அழுங்கல் என்பதற்கு ஆரவாரமென்பதும் பொருளாதலின், அழுங்கல் ஆலை யென்றது, பெருங்களிறு இறப்பதற்கு முன்பெல்லாம் ஆரவாரத்தோடு கூடியிருந்த ஆலையென்று உரைத்தலும் பொருந்தும் என்று உரைக்கின்றார். கிள்ளி சோழர்கட்குரிய பெயர்களுள் ஒன்று. கோப்பெருஞ் சோழனுடைய இயற்பெயருமாம். இறந்தானெனல் சீரிதன்மையின், "போகிய" என்றார். இன்னாமை: ஈண்டு அமங்கலம்.
---------

221. கோப்பெருஞ்சோழன்

வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்ததும் சான்றோர், அவன் தன் குடிச்சிறப்பும் மானமும் நல்லிசையும் கெடாமை குறித்து வடக்கிருந்த பெருமையும் பீடும் கருதி அவற்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அந்நடுகல்லில் அவன் பெயரும் பீடும் எழுதி மயிற்பீலி சூட்டு விழாவயர்ந்தனர். அவன் உயிர் நண்பரான பொத்தியார் அவன் பிரிவாற்றாது அவன் நடுகல்லைக் கண்டு பரவினார். அவர் நெஞ்சில் அவனுடைய புகழும் அன்பும் செங்கோன்மையும் பேரறிவும் பிறவும் தோன்றி அவன் புகழுடம்பின் முழுவடிவும் புலப்படச் செய்தன. அவர்க்கு ஆற்றாமை மீதூரக் கண்ணீர் பெருகிற்று. அவனுயிரைக் கொண்ட கூற்றுவனை நினைந்தார். நெஞ்சில் வெகுளியும் பிறந்தது. சூழ நின்ற சான்றோரை நோக்கினர். தமிழ் கூறும் நல்லுலகம் பெருந்துயர் கொள்ளச் சோழவேந்தன் புகழ்மாலை சூடி நடுகல்லாய் விளங்குகின்றான். அவனை இவ்வுலகினின்றும் மறைவித்த கூற்றுவனை நாம் ஒருங்கு கூடி வையலாம் வம்மின் என்று அறைகூவியழைத்தார். அந்த அழைப்பு அவர் நாவினின்றும் இந்த இனிய அழகிய பாட்டாய் வெளிவந்தது.

    பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
    மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து         5
    துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
    அனைய னென்னா தத்தக் கோனை
    நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
    பைத லொக்கற் றழீஇ யதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்         10
    நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
    கெடுவி னல்லிசை சூடி
    நடுக லாயினன் புரவல னெனவே.
    ---------

திணையும் துறையு மவை. அவன் நடுகற்கண்டு அவர் பாடியது.

உரை: பாடுநர்க்கு ஈத்த பல் புகழன் - பாடுநர்க்குக் கொடுத்த பல புகழினையுமுடையன்; ஆடுநர்க்கு ஈத்த பேரன்பினன் - கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையுமுடையன்; அறவோர் புகழ்ந்த ஆய் கோலன் - அறத்திறமுடையோர் புகழப்பட்ட நீதிநூற்குத் தக ஆராய்ந்து நடத்திய செங்கோலினையுடையன்; திறவோர் புகழ்ந்த திண்ணன்பினன்- சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினையுடையன்; மகளிர் சாயம் - மகளிரிடத்து மென்மையுடையன்; மைந்தர்க்கு மைந்து - வலியோரிடத்து மிக்க வலியை யுடையன்; துகளறு கேள்வி உயர்ந் தோர் புக்கில் - குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அனையன்என்னாது - அத்தன்மையையுடையோ னென்று கருதாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் அத் தகுதியையுடையோனை அவ்வாறு கருதாத கூற்றம்; இன்னுயிர் உய்த்தன்று - இனிய உயிர்கொடு போயிற்று; பைதல் ஒக்கல் தழீஇ - அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு;அதனை வைகம் வம்மோ - அக்கூற்றத்தை வைவேமாக வாரீர்; வாய்மொழிப் புலவீர்- மெய்யுரையை யுடைய புலவீர்; நனந்தலை யுலகம் அரந்தை தூங்க - நல்ல இடத்தினையுடைய உலகம் துன்பமாக; கெடுவில் நல்லிசை சூடி - கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே - நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போன் எனச் சொல்லி; எ - று.

ஈத்த புகழ், ஈதலால் உளதாகிய புகழ் எனவும், ஈத்த அன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவும் கொள்க. வாய்மொழிப்புலவீர், அத்தக்கோனைக்கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனால் புரவலன் கல்லாயினானென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டி வினை முடிவு செய்க.

சாயல், மைந்து, புக்கில் என்பன ஆகுபெயர். புக்கில்: வினைத் தொகை. கேடென்பது கெடுவெனக் குறைந்துநின்றது.

விளக்கம்: அறவோர் புகழ்தற்கமைந்தது அறநூன்முறை யாதலின், ஆராய்ந்து நடத்தும் முறைமைக்குக் கருவியாகிய நீதி நூல் அவாய்நிலையால் வருவித்து நீதி நூற்குத் தக என்பது கூறப்பட்டது. கோல், உவமை யாகுபெயராய் அரசுமுறை குறித்துநின்றது. முறையாவது, "ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந், தேர்ந்துசெய்வஃதே முறை" (குறள். 541) என்பது காண்க. சான்றோரென்றது மறவர்களுட் சிறந்தவர்களை. "சான்றோர் மெய்ம்மறை" (பதிற். 14) என்று பிறரும் கூறுவர். மகளிர் மெல்லிய இயல்பினராதலின் அவர்பால் மென்மையும், வலியுடைய மைந்தர்க்கு வலிமையும் கொண்டொழுகினானென்பார்,"மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து" என்றார். "வணங்கிய சாயல் வணங்கா வாண்மை" (பதிற். 48) என்று பிறரும் கூறுதல் காண்க. புக்கில் என்பது புகும் இல் என விரிவது பற்றி, அதனை வினைத்தொகை யென்றார். தக்காரது தகுதி பற்றியே உலகம் உளதாகின்றதாகலின், கூற்றம் அதனை நினைப்பது கடனாகவும், அக்கடனை நினையா தொழிந்ததென்பார், "நினையாக் கூற்றம்" என்றும், பொய்கூறி வைதார்க்கு வசை பயன் தாராமையின், "வாய்மொழிப் புலவீர்" என்றும் கூறினார். கூற்றின் நினையாச் செயல் நனந்தலையுலகிற்குத் துன்பம் தருவதாயிற்றென்றற்கு, "உலகம் அரந்தை தூங்க" என்றார். கெடுவென்பதனை முதனிலைத் தொழிற்பெயர் என்பர்.
-------------

222. கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கச்சென்றபோது உயிர்த்தோழரான
பொத்தியாரும் வடக்கிருக்க ஒருப்பட்டனர். அப்போது அவர் மனைவியார்
கருவுற்றிருந்ததை யறிந்திருந்த சோழன், "நினக்கு மகன் பிறந்தபின் வருக" என்று பணித்தான். பொத்தியாரும், சான்றாண்மை மிக்க சான்றோராகலின், அதற்கு உடன்பட்டு மனைவாழ்வில் இருந்து வந்தார். ஆயினும், கோப்பெருஞ்சோழன் இறந்த போதும் நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தபோதும் உடனிருந்து எல்லாப் பணிகளையும் சிறப்புறச் செய்தவரும் பொத்தியாரேயாவர். சின்னாட்களுக்குப்பின் பொத்தியார்க்கு மகனொருவன் பிறந்தான். "எப்பொழுது தன் மனைவி கருவுயிர்ப்பது? எப்பொழுது தாம் கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருப்பது?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்த பொத்தியார்க்கு மனக்கவலை நீங்குவதாயிற்று.வடக்கிருக்கச் செல்வோர் செய்யும் ஏற்பாடுகளைச் செவ்வையாகச் செய்துவிட்டு ஒரு நன்னாளில் பொத்தியார் கோப்பெருஞ்சோழன் நடுகல்லாயிருக்கும் இடத்திற்குச் சென்றார். அவன்பால் அவர்க்கிருந்த அன்பும் நட்பும் பெருக்கெடுத்தன. அந்நடுகல் சோழனது மெய்யுருவை அவர் மனக் கண்ணிற்குக் காட்டிற்று. அவர் மனங்குழைந்து "வேந்தே! யான் வடக்கிருக்க வேண்டும்; அதற்கு ஏற்ற இடம் யாது? கூறுக" என்று வேண்டினார். அவ்வேண்டுகோளே இப்பாட்டு.

    அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
    நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
    புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
    என்னிவ ணொழித்த வன்பி லாள
    எண்ணா திருக்குவை யல்லை         5
    என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே.
    -----------

திணையும் துறையு மவை. அவனைத் தன்மகன் பிறந்தபின் பெயர்த்துச்சென்று பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது.

உரை: அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி - தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினை யுடையளாய்; நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த - நின் நிழலினும் ஒருபொழுதும் நீங்காத நீ விரும்பத்தக்க மனைவி பெறப்பட்ட; புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென- புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வா எனச் சொல்லி; என் இவண் ஒழித்த அன்பிலாள - என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே; எண்ணாது இருக்குவையல்லை - உன்னோடு என்னிடை நட்பைக் கருதாது இருப்பையல்லை; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; என்னிடம் யாது - நீ எனக்குக் குறித்த இடம் யாது சொல்வாயாக; எ - று.

மற்று: அசை. அழல்போலப் பாடஞ்செய்யும் மேனியெனினு மமையும்.

விளக்கம்: தீயாற் சுடச்சுடப் பொன் விளக்கமுறுதலின், பொன்னாற் செய்யப்பட்ட இழைகள், "அழலவிர் வயங்கிழை" யெனப்பட்டன. அழலை மேனிக்கு இயைபுபடுத்து, அழலவிர்மேனி யென்பதற்கு "அழல் போலப் பாடஞ்செய்யும் மேனி" எனினுமமையும்" என்று உரைகாரர் கூறினர். பாடஞ்செய்தல், ஒக்குமாறு மஞ்சள் முதலியனவணிந்து செம்மையுறுத்தல். நீக்கமின்றியுறைதற்கு நிழல் உவமை; "செல்வுழிச் செல்வுழி மெய்நிழல்போல, ஆடுவழி யாடுவழி யகலேன் மன்னே" (அகம். 49) என்று பிறரும் கூறுதல் காண்க. அறிவறிந்த மகனைப் பெற்றோர் இம்மையில் நற்புகழ் பெறுதலின் "புகழ்சால் புதல்வன்" என்றார்; "இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப...சிறுவர்ப் பயந்த செம்மலோர்" (அகம். 66) என்று சான்றோர் கூறுவது காண்க. ஒழித்ததுபற்றி "அன்பிலாள" என்றார்; அன்புமிகவுடையனென்பது கருத்தாதலின், "என்னிடம் யாது" என்றார்.
------

223. கோப்பெருஞ் சோழன்

மேற்கூறியவாறு வடக்கிருக்க விரும்பித் தனக்குரிய இடம் குறிக்குமாறு வேண்டிய பொத்தியார் மனக்கண்ணில் கோப்பெருஞ் சோழன் தோன்றித் தான் வடக்கிருந்த இடத்தருகே இடம் காட்டினார். அதனைத் தெளிந்துணர்ந்த பொத்தியார்க்கு வியப்புப் பெரிதாயிற்று; சோழன்பால் உண்டாகிய பேரன்பும் மேன்மேலும் மிகுந்தது; அவனது நட்பின் பெருமாண்பு விளங்கித் தோன்றிற்று. ஆகவே அவர்க்கு வடக்கிருப்பதில் உள்ளம் உறைத்துநின்றது. குறித்த இடத்தில் இருந்து வடக்கிருக்கும் நற்றவத்தை மேற்கொண்டார். சோழன் நட்புரிமையால் இடங்குறித்த பேரன்பு நெஞ்சின்கண் மிக்கிருந்தமையின், அதனை இப்பாட்டால் வெளிப்படுத்துகின்றார்.

    பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித்
    தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
    நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
    இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
    டின்னுயிர் விரும்புங் கிழமைத்         5
    தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.
    ----------

திணையும் துறையு மவை. கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.

உரை: பலர்க்கு நிழலாகி - பலர்க்கும் அருளுடைமை யான் நிழலையொத்து; உலகம் மீக்கூறி - உலகத்தார் மிகுத்துச் சொல்ல; தலைப்போகன்மையின் - உலகத்தையாளுந் தன்மை முடியச் செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின்; சிறுவழி மடங்கி - வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து; நிலைபெறு நடுகலாகியக் கண்ணும் -உயிர் நீத்தலின்நிலைபெற நடப்பட்ட கல்லான விடத்தும்; இடம் கொடுத்தளிப்ப மன்ற - இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இன்னுயிர்விரும்பும் கிழமை உடம்போடு இனிய உயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய; தொன்னட்புடையார் தம்முழைச் செலின் - பழைதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்; எ - று.

மீக்கூறி யென்பது மீக்கூற வெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம். தொன்னட்புடையோர் தம்முழைச்செலின் இடங் கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

அவன் நட்பினை வியந்து கூறியது.

விளக்கம்: மீக்கூறி யென்பது செய்தெனெச்சமாய் இயைபுறாமை யான், "மீக்கூற வெனத் திரிக்கப்பட்ட" தென்றார். உலகாளுந் தன்மையை முடிவுபோகச் செலுத்தமாட்டாமைக்கு இடையில் தோன்றும் மறுமை யுணர்வு ஏதுவா மென்றற்கு அதனை வருவித்தார். ஆகவே, கோப்பெருஞ் சோழன், துறவுமேற்கோடற்கேற்ற செவ்வி யெய்து முன்பே அதனை மேற்கொண்டான் என்பதாம். தனது ஒளி, பரந்த உலகெங்கும் விளங்க இருந்த வேந்தன் "உள்ளாற்றுக் கவலைப்புள்ளி நீழற்கண்" ஒடுங்கியிருந்தமைபற்றி, "சிறுவழி மடங்கி" யென்றார். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சான்றோரது புகழ் உலகில் என்றும் நிலை பெறும்பொருட்டே அவர் பெயரும் பீடு மெழுதிய கற்கள் பண்டை நாளில் நடப்பட்டன என்பது இனிது விளங்க, "நிலைபெறு நடுகல்" என்றார். தமிழ் நாட்டில் இவ்வழக்கம் இரண்டு மூன்று நூற்றாண்டு கட்குமுன் வரையில் இருந்துள தென்பதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிறந்த நட்புக்கு உடம்பும் உயிரும் இயைந்துநிற்கும் இயைபு உவமமாதல் இயல்பு. "யாக்கைக் குயிரியைந் தன்ன நட்பு" (அகம். 339) என்றும், "உடம்போடுயிரிடை யென்ன மற்றன்ன மடந்தையொடெம்மிடை நட்பு" (குறள். 1122) என்றும் வருதல் காண்க. "இடங்கொடுத்தளிப்பமன்ற," என்றது, "செத்துங் கொடுத்தான் சீதக்காதி" என்ற பிற்கால வழக்கை நினைவுகூர்விப்பது காண்க.
--------

224. சோழன் கரிகாற்பெருவளத்தான்

சோழவேந்தருள் கரிகாற் பெருவளத்தான் மிக்க சிறப்புடையவன். அவன் காலத்தே உறையூரும் காவிரிப்பூம் பட்டினமும் சோழநாட்டின் அரசியல் சிறப்புடைய நகரங்களாக விளங்கின. சோழ நாட்டின் புகழ் அக்காலத்தே மிக உயர்ந்த நிலையை யெய்தியிருந்தது. இடைக்காலத் தெலுங்கச் சோழர்களும் தங்கள் குடிவரவு கூறுமிடத்துத் தங்களைக் கரிகாலன்வழி வந்தோர் என்றே கூறிக்கொள்கின்றனர். கரிகாலன் வாழ்க்கையைப்பற்றிய குறிப்புக்கள் பல பண்டைத் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன. போர் பலவுடற்றிய பேராண்மையும், இரப்பார்க் கீத்துப் பெற்ற இறவாப் புகழும், வேதியர்கள் விருப்பத்திற் கியைந்து வேள்விபல முடித்த வீறுடைமையும், பிறவும் கரிகாலனுடைய புகழ்க் கூறுகள் பலவற்றுட் சிறப்புடையவாகும். இவன் நெடுங்காலம் அரசு புரிந்து உயிர் நீத்தகாலை இவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோர்களுள் கருங்களவாதனார் ஒருவர். அவர் கரிகாலன் பெரும்பிறிதுற்றது கண்டு ஆற்றாது கையற்றுப் பாடிய பாட்டு இப்பாட்டு. இப் பாட்டின் கண் அவர் கரிகாலன் புகழ்க்கூறுகள் சிலவற்றை யெடுத்தோதி, "இத்தகைய அறிவுடைய வேந்தனை இழந்த உலகம் இரங்கத்தக்கது. பெருவறங் கூர்ந்த காலத்தில் இடையர்கள், தம் நிரைகட்கு இரையாதல் வேண்டிப் பூத்துத் தழைத்துச் செறிந்திருந்த வேங்கை மரத்தைக் கூரிய வாள்கொண்டு கழித்தவழி, அம்மரம் பொலி விழந்து நிற்பது போலக் கரிகாலன் இறந்தபின் அவனுடைய உரிமை மகளிர் தம் இழைகளைக் களைந்து பொலிவிழந்து வருந்தா நின்றனர்" என இரங்கிக் கூறுவது மிக்க உருக்கமாக இருப்பது நினைவுகூரத்தக்கது.

    அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்
    துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி
    இரும்பா ணொக்கற் கடும்பு புரந்ததூஉம்
    அறமறக் கண்ட நெறிமா ணவையத்து
    முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த         5
    தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
    பருதி யுருவிற் பல்படைப் புரிசை
    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
    வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்
    அறிந்தோன் மன்ற வறிவுடை யாளன்         10
    இறந்தோன் றானே யளித்திவ் வுலகம்
    அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப்
    பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப்
    பசித்த வாயத்துப் பயனிரை தருமார்
    பூவாட் கோவலர் பூவுட னுதிரக்         15
    கொய்துகட் டழித்த வேங்கையின்
    மெல்லியன் மகளிரு மிழைகளைந் தனரே.
    --------

திணையும் துறையு மவை. சோழன் கரிகாற்பெருவளத்தானைக்
கருங்குளவாதனார் பாடியது.

உரை: அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் - அரிய அரண்களைப் பாதுகாவாது போரைச் செய்தழித்ததுவும்; துணை புணராயமொடு - துணையாய்க் கூடிய இனத்துடனேயுங் கூட; தசும்புடன் தொலைச்சி - மதுக்குடங்களைச் சேர நுகர்ந்து தொலைத்து; இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் - பெரிய பாண் சுற்றமாகிய சுற்றத்தைப் பாதுகாத்ததுவும்; அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து - அறத்தைத் தெளி வுணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அந்தணரது அவைக்களத்தின்கண்; முறை நற்கு அறியுநர் முன்னுற - வேள்விக்குரிய முறைமையை நன்றாக அறியும் சடங்கவிகள் அம் முறைமையை முன்னின்று காட்ட; புகழ்ந்த - பலரானும் புகழப்பட்ட; தூ இயல் கொள்கைத் துகளறு மகளிரொடு - தூய இயல்பை யுடைத்தாகிய கற்பொழுக்கமாகிய கொள்கையையுடைய குற்றம் தீர்ந்த குல மகளிரொடு; பருதியுருவின் பல்படைப் புரிசை - வட்டமாகிய வடிவினை யுடைத்தாகிய பல படையாகச் செய்யப்பட்ட மதிலாற் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்; எருவை நுகர்ச்சி யூபநெடுந்தூண் - பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்ட விடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து; வேத வேள்வித் தொழில் முடிந்ததூஉம் - வேதத்தாற் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய; மன்ற அறிந்தோன் - இவற்றானாய பயனை நிச்சயமாக அறிந்த அறிவினையுடையோன்; அறிவுடையாளன்தான் இறந்தோன் - அவன் தான் துஞ்சினன்; இவ்வுலகம் அளித்து-ஆதலால் இனி இவ்வுலகம் இரங்கத்தக்கது; அருவி மாறி அஞ்சுவரக் கடுகி - அருவிநீர் மறுத்து உலகத்தா ரஞ்சும் பரிசு வெம்மையுற்று; பெருவறங் கூர்ந்த வேனிற் காலை- பெரிய வற்கடமிக்க வேனிற் காலத்து; பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார் - பசித்த ஆயமாகிய பயன்படும் ஆனிரையைப் பாதுகாத்தலைச் செய்வாராக; பூவாள் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து-கூர்மை பொருந்திய கொடுவாளாற் கோவலரானவர்கள் பூக்களுடனே யுதிரக் கொம்புகளைக் கழித்து; கட்டழித்த வேங்கையின் - அதன் தழைச் செறிவையழித்த வேங்கையினை யொப்ப; மெல்லியல் மகளிரும் இழை களைந்தனர்-மெல்லிய இயல்பினையுடைய உரிமை மகளிரும் அருங்கலவணி முதலாகிய அணிகளை யொழித்தார்; எ - று.
முறை நற்கு அறியுநர் முன்னுறவேள்வித் தொழில் முடித்ததூஉ மென
இயையும். எருவை யென்றது, பருந்தாகச் செய்யப்பட்ட வடிவினை.

அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்தெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

எருவை நுவற்சி யென்று பாடமோதுவாரு முளர். ஆயத்துப் பயனிரை என்பதற்கு ஆயத்திற்குப் பயனாகிய இரை யெனினு மமையும்.

விளக்கம்: கருங்குளவாதனார் பெயர் கருங்குழலாதனார் என்று அச்சுப்படியிற் காணப்படுகிறது. அது பொருந்தாது. கருங்குளம் என்னும் ஊரினரான ஆதனார் என்பது கருங்குளவாதனா ரென்பதன் பொருள். இக் கருங்குளம் பாண்டிநாட்டில் இப்போது கோட்டைக் கருங்குளமென வழங்குகிறது. இடைக்காலத்தே, இது "கருங்குள வளநாட்டுக் கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" (Annual Report of Epigraphy. Madras No. 269 of 1928) எனப்பட்டது. இதனால் இவ்வூர், கரிகாற் சோழனால் ஆதனார்க்குத் தன் பெயரால் தரப்பட்ட தென்பதும் தெளிவாம். இவ்வூரில் பாண்டியன் இராசசிங்கன் காலத்தில் இராசசிம்மேச்சுரம் என்னும் சிவன் கோயில் கட்டப்பட்டுளது. இவ்வூர் பின்பு சீகண்ட நல்லூ ரெனவும் பெயர் பெற்றது. (A.R.No. 277 of 1928) இவ்வூர்க் கோயிலுக்குத் திருவாங்கூர் வேந்தரும் திருப்பணி (A. R. No.287 of 1928) செய்துள்ளனர். இதனால் சேரர் குடிக்கும் இவ் வூர்க்கும் தொடர் புண்மை துணியப்படும். சடங்கவிகள் - ஆறங்கங்களையும் உணர்ந்தவர்கள். இவருள் நேர்நின்று செய்வோ ரொழியச் செயல்முறையைக் காட்டுவோரை உபதிருட்டாக்கள் எனவும், பருந்து விழுங்குவதாகச் செய்யப்படுவதைக் கருடசயனமெனவும் கூறுவர். சடங்கவிக் குறிச்சி யென்றோர் ஊரும் பாண்டியநாட்டில் உண்டு (A. R. 453 of 1930). அமர் கடத்தல், கடும்பு புரத்தல், வேள்வித் தொழின் முடித்தல் என்ற இவற்றால் ஆகும் இம்மை மறுமைப் பயன்களை நன்கறிந்தவன் கரிகாலன் என்பர், "அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்" என்றார். வேங்கைப்பூ மகளிரணியும் பொற்றாலிபோல் இருத்தலின், அப்பூவுதிர்ந்த வேங்கை இழை துறந்த மகளிர்க்கு ஏற்ற உவமமாயிற்று. "முறைநற்கறியுநர் முன்னுறப் புகழ்ந்த" என்றதற்கு உரைகாரர் கூறும் உரையினும், "முறைவழங்கும் சான்றோர் தம்முன் வீற்றிருக்கவும் தன் இளமை தோன்றாவாறு நரை முடித்து முதியோன் கோலம் பூண்டு முறை வழங்கிய கரிகாலன் புகழப் பட்ட திறத்தை ஏற்றி யுரைகூறுவது சீரிது.
----------

225. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளி உரையூரில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில், உறுபகை ஒடுக்கி உலகோம்புந் துறையில் மேம்பட்டு விளங்கினான். ஏனைவேந்தர் பலரும் இவனுக்கு அஞ்சியே வாழ்ந்தனர். ஒவ்வொரு வேந்தரிடத்தும் வெற்றிகுறித் தூதும் வலம்புரிச் சங்கு இருந்ததெனினும், அதனை முழக்கின் சோழன் நலங்கிள்ளி செவிக் கெட்டும்; அது கேட்பின் அவன் பொறாது போந்து நம் வலியை யழிப்பனென அஞ்சி அதனைத் தம் மனையின் ஒரு புடையே கட்டிவைத்திருந்தனர். வேந்தர் மனைகளில் பள்ளி யெழுச்சிக் காலத்தில் அவ்வலம்புரி முழக்கப்படின், அதுகேட்டு, நலங்கிள்ளியை நினைந்து என் னெஞ்சு வருந்துவது வழக்கம். மேலும், நலங்கிள்ளியின் படைமிக்க பெருமையுடையது. அவனது படை புறப்படுங்கால் முன்னே செல்லும் தூசிப்படையிலுள்ளார் பனையின் நுங்கினைத் தின்னுங் காலமாயின், இடைப்படையிலுள்ளார் அப்பனையிருக்கும் இடம் சேரும்போது பனை நுங்கு முற்றிக் காய்த்துக் கனிந்துவிடும்; அவர்கள் அதனைத் தின்னக்கூடிய காலமாகும்; படையின் கடையிற் செல்வோர் அவ்விடத்தை யடையும்போது, பனங்கனியும் போய்ப் பிசிரொடு கூடிய பனங்கிழங்கு பெற்றுச் சுட்டுத் தின்னும் காலமாகும். இத்துணைப் பெரும் படையை வைத்தாளும் பேராற்றல் படைத்தவன் சோழன் நலங்கிள்ளி. இவன் வலிமுற்றும் இப்போது புறங்காட்டிடத்ததாயிற்றே என அவன் இறந்துபட்ட போது, சோழநாட்டு ஊர்களுள் காவிரிக்கரைக் கண்ணதாகிய ஆலத்தூரில் வாழ்ந்த சான்றோர், பிரிவாற்றாது இப் பாட்டைப்பாடி இதன் கண் மேற்கூறிய கருத்தெல்லாம் தொகுத்துரைத்துக் கையற்று இரங்கினார்; இச் சான்றோர் ஆலத்தூக்கிழார் எனப்படுவர். இவர் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பல பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்துள்ளனர்.

    தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
    இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
    கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
    நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
    வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ         5
    டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    முள்ளுடை விளன்காட் டதுவே நன்றும்
    சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
    இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்         10
    தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப
    ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
    ஞாலங் காவலர் கடைத்தலைக்
    காலைத் தோன்றினு நோகோ யானே.
    -----------

திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர்கிழார் பாடியது.

உரை: தலையோர் - முன்செல்லும் தூசிப்படையோர்;நுங்கின் தீஞ் - சேறு மிசைய - பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில; இடையோர் - இடைச் செல்வோர்; பழத்தின் பைங்கனி மாந்த - பழத்தினது செவ்விக்கனியை நுகர; கடையோர் - பின் செல்வோர்; விடுவாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர - நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகர; நிலம் மலர் வையத்து வலமுறை வளைஇ - இப்படி யொழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாச் சூழ்ந்து; வேந்து பீடழித்த ஏந்து வேல் தானையோடு - மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடைய சேனையுடனே கூடிய; ஆற்றல் என்பதன் தோற்றம் - வலியென்று சொல்லப்பட்டதன் விளைவை; இனி கேள் - இனிக் கேட்பாயாக; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட விடத்து; முள்ளுடை வியன் காட்டது - முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின் கண்ணதாயிற்று; நன்று பெரிதும்; சேட்சென்னி நலங்கிள்ளி -; கேட்குவன் கொல்லென - கேட்பான் கொல்லோ என அஞ்சி; இன்னிசைப் பறையொடு வென்றி நுவல - இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க; தூக்கணங் குரீஇ தூங்குகூடு ஏய்ப்ப - முன்பு தூக்கணங் குருவியினது தூங்கப்பட்ட; வலம்புரி திரிவாய் - வலத்திலேபுரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; ஞாலங் காவலர் கடைத்தலை - இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே; காலைத் தோன்றினும்- பள்ளியெழுச்சிக்காலத்தே தோன்றினும்; யான் நோகு - யான் அதனைக்கேட்டு இறந்து படாது நோமளவினே னாயினேன்; எ - று.

முன்பு நலங்கிள்ளி சேட்சென்னி கேட்குவன் கொல்லென ஒரு சிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலா நிற்க, பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கேள்இனி யென்றது நெஞ்சினை.

"வென்றிநுவலா" வென்றும், "காலை தோன்றின" என்றும் பாடமோது வாருமுளர்.

விளக்கம்: ஆலத்தூர்கிழாருடைய ஆலத்தூர் சோழநாட்டுக் காவிரித் தென்கரையிலுள்ளதோரூர். இதனை இடைக்காலக் கல்வெட்டுக்கள் "ஆவூர்க் கூற்றத்து விக்கிரமசோழன் பேராலத்தூர்" (A. R. No. 481 of 1922) என்றும், "தென்கரை நித்த விநோத வள நாட்டு ஆலத்தூர்" (A. R. No. 360 of 1929) என்றும் கூறுகின்றன. திருச்சிவபுரத்துக் கல்வெட்டொன்றில், "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆலத்தூர் கிழன்" (A. R. No. 273 of 1927) ஒருவன் காணப்படுகின்றான். இக் குறிப்புக்களால், இப்பாட்டைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் இவ்வூரினரே யெனத் துணியலாம். நிலமலர் வையம் இடமகன்ற உலகம். தோற்றம், ஈண்டு விளைவு குறித்து நின்றது. தோற்றத்தின் விளைவு வியன்காட்டதாயிற்று என்க. வெற்றி நுவல் அத் திரிவாய் வலம்புரி என இயைந்து, வெற்றியைப் பலரும் அறியத் தெரிவிப்பதாகிய அத் திரிவாய் வலம்புரி யென வுரைப்பது சீரிது. பள்ளி யெழுச்சிக் காலத்தே வேந்தர் மனைமுன்றிலில் வலம்புரி முழக்குவது மரபு. "இரங்குகுரல் முரசமொடு வலம்புரி யார்ப்ப" (புறம். 397) என்று பிறரும் கூறுதல் காண்க. தோற்றத்தைச் சிறப்பித்து அதன்கண் ஈடுபட்டு நின்ற நெஞ்சை மாற்றி நலங்கிள்ளி இறந்த நிகழ்ச்சிக்கட் செலுத்துதலின், "கேள் இனி" என்றார். "இனி" யென்றதனால், இப்பாட்டிற் கூறப்பட்ட சிறப்புக்கள் பலவும் முன்பு நிகழ்ந்தவையென்பது பெறப்பட்டன. "கொளீஇய" என இறந்த காலத்தாற் கூறினமையின், "முன்பு" என்பதும், "தோன்றினும்" என்றதனால், "இப்பொழு" தென்பதும் வருவிக்கப்பட்டன. "வெற்றி நுவலா" என்ற பாடத்துக்கு "வெற்றியைச் சொல்லாமல்" என்றும், "காலைத் தோன்றின" என்ற பாடத்துக்குக் காலையில் முழங்கின என்றும் உரைக்க.
--------

226. சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் கிள்ளிவளவன் பேராண்மையும் பெருவண்மையும் படைத்தவன். ஆசிரியர் ஆலத்தூர்கிழார், "மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக், குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப், புலா அக்களஞ் செய்த காலஅத் தானையன்" என்றும், "பொருநர்க்கு ஓக்கிய வேலன்" என்றும் (புறம். 69) இவனது ஆண்மை நலத்தைச் சிறப்பிப்பர். வெள்ளைக்குடி நாகனாரென்பார், "மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்குதானை மூவருள்ளும், அரசெனப் படுவது நினதே பெரும" (புறம். 35) என்று எடுத்தோதிப் பாராட்டுவர்; "செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை" என இவனுடைய ஆண்மை மிகுதியை ஆவூர்மூலங்கிழார் மிகுத்துரைப்பர்; கோவூர்கிழார் என்பார், "காலனும் காலம் பார்க்கும் பாராது, வேலீண்டுதானை விழுமியோர் தொலைய, வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்" தென விளம்புகின்றார். இங்ஙனம் சான்றோர் பலராலும் பல்வேறு வகையிற் பாராட்டப்பெற்ற இவ் வளவன் குளமுற்றம் என்னும் இடத்துள்ள அரண்மனையில் இறந்தான். அக்காலத்தே மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெருமாட்டியார் அச்செய்தியைக் கேள்வியுற்று ஆறாத் துயருற்றார். கிள்ளிவளவனுடைய ஆண்மையும் வன்மையும் கொண்டவண்மையும் அவர் நினைவுக்கு வந்தன. அவனது பேராண்மையை நினைந்தவர்க்கு அவனது இறப்பு அமைதி தரவில்லை. "வளவன் உயிர் கெண்ட கூற்றம், அவன் நேர்நின்று மெய்தீண்டியோ, வெகுண்டோ, மனதிற் பகைமைகொண்டோ அவனுயிரைக் கொண்டிருக்க முடியாது; இம் மூன்றனுள் எது செய்யினும் கூற்றமே தோற்றோடிப்போம்; அக் கூற்றம் உயிர்கொண்டொழிந்த திறம் வேறொன்றாக வேண்டும். அஃது இரவலர் உருவில் வந்து அவன் எதிர் நின்று கைதொழுது பாடி அவனுயிரை இரந்து அவன் ஈயப்பெற்றுச் சென்ற தாகல் வேண்டும்" என்று நினைத்து நினைக்குந்தோறும் நெஞ்சுருகப் பாடிப் புலம்பினார். அதுவே இப்பாட்டு.

    செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
    உற்றன் றாயினு முய்வின்று மாதோ
    பாடுநர் போலக் கைதொழு தேத்தி
    இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
    மண்டமர் கடக்குந் தானைத்         5
    திண்டேர் வளவற் கொண்ட கூற்றே
    -------

திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

உரை: செற்றன்றாயினும் - தன் மனத்துள்ளே கறுவு கொண்டதாயினும்; செயிர்த்தன் றாயினும் - வெளிப்பட நின்று வெகுண்டதாயினும்; உற்றன் றாயினும் - உற்று நின்று கையோடு மெய்தீண்டி வருத்திற்றாயினும்; உய்வின்று - அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி இரந்தன்றாகல் வேண்டும் - பாடுவாரைப் போலத் தோன்றி நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர் கொண்டதாகல் வேண்டும்; பொலந்தார் - பொன்னானியன்ற மாலையினையும்; மண்டமர் கடக்கும் தானை - மண்டிய போரின்கண் எதிர் நின்று வெல்லும் படையினையும்; திண்டேர் வளவன் கொண்ட கூற்று - திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று; எ - று.

பொலந்தார் வளவனென இயையும். கூற்றம் இரந்ததாகல் வேண்டும்; இம் மூன்றனுள் ஒன்று செய்யினும் பிழைப்பின்று எனக் கூட்டுக.

இஃது அவன் ஆண்மை மிகுதியினையும், வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு.

விளக்கம்: செற்றம் - கறுவு. செற்றம் மனத்துள்ளே வெகுளுவது; செயிர்த்தல், வெளிப்படையாக வெகுளுதல். உறுதல், மெய் தீண்டுதல். இரந்தன்று இரந்துகொண்டது. கடத்தல், வஞ்சியாது பொருவது; அஃதாவது நேர்நின்று பொருதுவெல்வது. காஞ்சித் திணையில் கூறப்படும் துறைவகைகளுள், "கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை" (புறத். 19) என்ற துறைக்கு இளம்பூரணர் இதனை எடுத்துக் காட்டுகின்றார். இனி, நச்சினார்க் கினியர், இதனை "மன் அடாது வந்த மன்னைக் காஞ்சி" (புறத்.24) என்று கூறுகின்றார். செற்றும் செயிர்த்தும் உற்றும் உயிர்கோடல் ஆகாதென்றது ஆண்மை மிகுதி; பாடுநர் போலக் கைதொழுதேத்தி இரந்தன்றாகல் வேண்டும்" என்றது வண்மை மிகுதி.
-------

227. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

குளமுற்றத்தில் கிள்ளிவளவன் துஞ்சியது அறிந்த சான்றோர்களில் மாசாத்தனார் என்பவர் ஒருவர். அவர் சோழநாட்டு ஆவடு துறை யென்னும் ஊரினர். திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்பது பழம் பெயரென அவ்வூர்க் கல்வெட்டுக்களும் (A. R. No. 124 of 1925) திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப் பெயர்; திடுவாவடுதுறை யென்பது திருக்கோயிலுக்குப் பெயர். நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து போகவே, திருவாவடுதுறையென்ற பெயரே ஊர்க்கும் பெயராய்விட்டது. ஆவடுதுறை யென இருத்தற்குரியது ஆடுதுறையெனப் பிழைக்கப்பட்டது. இச் சாத்தனூர் என்னும் பெயர் மாசாத்தனார் பெயரால் பண்டைச் சோழமன்னரான கிள்ளிவளவன் முதலிய சோழமன்னரால் வழங்கப்பட்டதாகல் வேண்டும்.அதனால் அவர் ஆவடுதுறை மாசாத்தனார் என ஏடுகளில் வழங்கப்படுகின்றனர். அவர்க்குக் கிள்ளியின் பேராண்மையும் பெருவன்மையும் நன்கு தெரிந்திருந்தமையின் அவன் உயிரைக் கவர்ந்து கொண்ட கூற்றுவன்பால் மிக்க சினமுண்டாயிற்று. வளவனது உயிருண்ட கூற்றினது கொடுமை ஒருபுறமிருக்க, மன்னுயிரை யுண்பதையே நோக்கியிருக்கும் இயல்புபற்றிக் கூற்றம் தன் செயலுக்கே கேடுசெய்து கொண்டதை நினைந்து அதன் பேதைமைக்கு இரங்குவார் போல அதை வையலுற்றார். வளவன் இறந்ததனால் பிறந்த ஆற்றாமை காரணமாக இவ் வைவினைச் செய்கின்றாராயினும் இதன்கண், அவருடைய வருத்தமும் இரக்கமும் தோன்றிப் படிப்போர் உள்ளத்தை உருக்குகின்றன. அதனை இப்பாட்டின்கட் காண்க. இதன்கண், கூற்றுவனை நோக்கி, ‘இரக்கமில்லாத கூற்றமே! விதையைக் குற்றியுண்டு மேல் விளைவுக்கு ஏங்கிநிற்கும் பேதை யுழவனைப்போல நீ நின் பசிக்கு வேண்டும் உயிர்களை நாடோறும் தன் போர்ச் செயலால் கொன்று தரும் கிள்ளிவளவனுயிரையே இப்போது உண்டொழிந்தாய்; அவன் இருக்குமளவும் பசி வாட்ட முண்டாகாவாறு வேண்டும் உயிர்களை அவன் நல்க உண்டு வாழ்ந்தாய்; இத்தீச்செயலால் இனி நின் பசி தணிப்போரைப் பெறாது வருந்தப் போகின்றாய், காண்" என்ற கருத்தமையக் குறித்துள்ளார்.

    நனிபே தையே நயனில் கூற்றம்
    விரகின் மையின் வித்தட் டுண்டனை
    இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
    ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும்.
    கருதியங் கரூஉப்புனற் பொருகளத் தொழிய         5
    நாளு மானான் கடந்தட் டென்றுநின்
    வாடுபசி யருத்திய பழிதீ ராற்றல்
    நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
    வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
    இனையோற் கொண்டனை யாயின்         10
    இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.
    -----------

திணையும் துறைவு மவை. அவனை ஆவடுதுரை மாசாத்தனார் பாடியது.

உரை: நயனில் கூற்றம் - ஈரமில்லாத கூற்றமே; நனிபேதை - மிகவும் அறிவுடையையல்லை; விரகு இன்மையின் - நினக்குப் போவதொரு விரகில்லாதமையினால்; வித்து அட்டு உண்டனை - மேல்விளைந்து பயன்படும் விதையைக் குற்றியுண்டாய்;நன்வாயாகுதல் இன்னும் காண்குவை - ஆயின் நினக்கு இவ்வாறு சொல்லிய வார்த்தை நல்ல மெய்யாதல் இன்னமும் காண்பை; ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும் - ஒளிவிளங்கிய வாட்போரை வல்ல வீரரும் யானையும் குதிரையும்; குருதியங் குரூஉப் புனல் பொருகளத் தொழிய - உதிரமாகிய நிறமுடைய அழகிய நீர் மிக்க போர்க்களத்தின்கண் மாய; நாளும் ஆனான் கடந்து அட்டு - நாடோறும் அமையானாய் எதிர்நின்று கொன்று; என்றும் நின் வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல் - நாடோறும் நினது மெய் வாடுதற் கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத் தொழிலுக்கு; நின்னே ரன்ன - நின்னையொத்த; பொன் இயல் பெரும்பூண் வளவனென்னும் - பொன்னானியன்ற பேரணிகலத்தையுடைய வளவனென்று சொல்லப்படும்; வண்டு மூசு கண்ணி இனையோன் கொண்டனை யாயின் - வண்டுகள் மொய்க்கப்படுங் கண்ணியையுடைய இத் தன்மையினை யுடையோனை நீ கொண்டாயாயின்; இனி நின்பசி தீர்ப்போர் யார் - இனி நின் பசியைக் கெடுப்போர் யார், சொல்லுவாயாக; எ - று.

கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல் இன்னும் காண்குவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க நயன் - நியாயமுமாம்.

விளக்கம்: "நனிபேதையே" என்ற துணிவை வற்புறுத்தற்கு "வித்தட்டுண்டனை" என்றார். வேறே செய்தற்குரியவற்றை யெண்ணும் அறிவில்லையாயினை யென்பால், "விரகின்மையின்" என்று காட்டினார். வித்து, மேல்விளைந்து பயன் படுவதாகலின், "மேல் விளைந்து பயன்படும் விதை" யெனவே உரை கூறப்பட்டது. வித்தென்றமையின், அட்டுண்டனை யென்றதற்குக் "குற்றியுண்டாய்" என்றார். நல்ல மெய்யாதலாவது சொல்லும் சொல் ஒவ்வொன்றும் மெய்யாவது. என்றும் - நாடோறும். வாடுபசி - வாடுதற்குரியது மெய்யாதலின், மெய் வாடுதற்கேதுவாகிய பசி. அருந்துதற்கேற்ற காரணம் இதுவென்பார்"வளவனது ஆற்றல்"என்றும், நின்னுடைய ஆற்றல் எம்மனோரால் பழிக்கப் படும் குற்றமுடைய தென்பார், வளவனது ஆற்றலை, "பழிதீராற்றல்" என்றும், நின்னோடு வளவனுக்குள்ள ஒப்புமை கொலைத்தொழில் ஒன்றே யென்றதற்கு,"நின்னோரன்ன"என்றும் கூறினார். ஆயின் என்பதற்கு, இனி நினக்கு வளவன்போல் உதவுவோர் யாவருளரென ஆராயுமிடத்து என்று உரைப்பினும் அமையும். நயன், என்றதற்கு நியாயம் என்பது பொருளாயின், தனக்கு வேண்டும் உணவு நல்கித் தான் செய்யும் தொழிலை எளிதாக்கி உதவுவோரைக் கொல்வது ஒருவருக்கு முறைமையன்று என்பது பற்றி "நயனில் கூற்றம்" என்றார் என்று கோடல்வேண்டும்.
-----------

228. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

கிள்ளிவளவன் குளமுற்றத்தில் துஞ்சியதறிந்து வருந்திய சான்றோருள் ஐயூர் முடவனாரும் ஒருவர். அவர் பெயரை ஐயூர் மூவனாரென்றும் சில ஏடுகள் கூறுகின்றன. பாண்டிநாட்டிற் காணப்படும் சிற்றையூர் பேரையூர் என்பனவற்றுள் இவரது ஐயூர் இன்னதெனத் தெரிந்திலது. இச்சான்றோர் பாண்டியன் கூடகாரத்துச் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடிச் சிறப்புப் பெற்றவர். இவர் ஒருகால் கிள்ளிவளவனைக் காண வந்தார். இடைவழியில் இவர்க்கு மாட்டாமை உண்டாக, தோன்றிக் கோன் என்பவன் ஊர்தி தந்து இவரை ஊக்கினான். பின்னர், கிள்ளி வளவனைக்கண்டு பாடி அவனால் சிறப்புச் செய்யப் பெற்றார். இவர்க்குக் கிள்ளிவளவனது பிரிவு பெருவருத்தத்தைச் செய்தது. அக்காலத்தே இறந்த மக்களை நிலத்திற் புதைக்குமிடத்து அவர்மேல் பெரிய தாழியைக் கவித்துப் புதைப்பது மரபு. கிள்ளிவளவனையும் தாழியிற் கவித்து வைத்தனர். அவர் மனக்கண்ணில் கிள்ளிவளவனுடைய பூதவுடம்பு புலனாகாது புகழுடம்பு புலனாயிற்று. தாழியாற் கவிப்பதாயின் அப்புகழுடம்பைத் தான் கவிக்க வேண்டுமேன எண்ணினார். அவ்வுடம்பு நிலவுலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின், நிலவுலகைக் குயவன் ஆழியாகவும் மேருமலையை மண் திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்ய வேண்டும்," என எண்ணினார். குயவனை நோக்கி "இவ்வாறு ஒரு தாழி செய்ய இயலுமோ" என்பார் போல இந்தப் பாட்டைப் பாடியுள்ளார்.

    கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
    இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை
    அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
    அளியை நீயே யாங்கா குவைகொல்         5
    நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப்
    புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை
    விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன
    சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
    கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்         10
    தேவ ருலக மெய்தின னாதலின்
    அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
    வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம்
    இருநிலந் திகிரியாப் பெருமலை
    மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே.         15
    ---------

திணை: அது. துறை: ஆனந்தப்பையுள். அவனை ஐயூர் முடவனார் பாடியது.

உரை: கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; இருள் திணிந்தன்ன குரூஉ - இருள்நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய்; திரள் பரூஉப் புகை - திரண்ட மிக்க புகை; அகல் இருவிசும்பின் ஊன்றும் - அகலிய பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும்; சூளை நனந்தலை மூதூர்க்கலம் செய் கோவே - சூளையையுடைய அகலிய இடத்தினையுடைய பழையவூரின்கண் கலம் வனையும் வேட்கோவே; அளியை நீ - இரங்கத்தகுவை நீ; யாங்காகுவை கொல் - என்ன வருத்த முறுவைதான்; நிலவரை சூட்டிய நீணெடுந்தானை - நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்க பெரிய சேனையினையுடைய; புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை - அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும்; விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன- பரந்த சுடரினையுமுடைய ஆதித்தன் வானத்தின்கண் பரந்தாலொத்த; சேண் விளங்கு சிறப்பின் - சேய்மைக்கண்ணே விளங்கும் தலைமையையுடைய; செம்பியர் மருகன் - செம்பியர் மரபினுள்ளான்; கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் - கொடிகள் நுடங்காநின்ற யானையினையுடைய மிகப்பெரிய வளவன்; தேவருலக மெய்தினன் - அவன் தேவருடைய விண்ணுலகத்தை யடைந்தானாகலான்; அன்னோற் கவிக்கும் இடமகன்ற தாழியை; வனைதல் வேட்டனையாயின் -வனைதலை நீ விரும்பினாயாயின்; எனையதூஉம் - எப்படியும்; இருநிலம் திகிரியா- பெரிய நில வட்டம் உருளியாக; பெருமலை மண்ணா - பெரிய மேருமலை மண்ணாக; வனைதல் ஒல்லுமோ நினக்கு - வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு; எ - று.

அடுக்கு விரைவின்கண் வந்தது. கலஞ்செய் கோவே, வளவன் தேவருலக மெய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல் ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்காய் எனக் கூட்டி வினை முடிவு செய்க. இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதனின், ஆனந்தப்பையுளாயிற்று.

விளக்கம்: சூளையினின்றெழுந்து கருத்துத் திரண்டுசென்று வானத்தில் ஒடுங்கும் புகையை நீங்கி இருள் ஓரிடத்தே நின்றாற் போன்ற நிறத்தையுடைத்தாய் வானத்திற் சென்று தங்கும் என்றார். குரு, நிறம்; அது குரூஉவென நீண்டது. வானத்தின்கட்சென்று ஒடுங்கிவிடுதலின், புகையை "ஊன்றும்" என்றார். செய்தற்குரிய தொழிலைச் செய்ய மாட்டாமையும் ஒருவற்கு மிக்க வருத்தத்தை நல்குமாகலின், "யாங்காகுவை" என இரங்கினார் நல்லிசையும் விரிகதிரையும் உடைய ஞாயிறு என இயையும். ஞாயிறு பலராலும் புகழப்படுமென்பது, "உலகமுவப்ப வலவனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு" (முருகு. 1-2) என்று சான்றோர் கூறுதலாலும் தெளியப்படும். ஞாயிறு வானத்தின் கண் தோன்றிப் பொழுதை வரையறுத்து அவரவரும் தத்தம் தொழில் தரீஇயர் வலனேர்பு விளங்கி" (அகம்.298) எனப் புலவர் புகழுமாறு காண்க. செம்பியர் சோழர்க்கொரு பெயர்; "தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்" என்றாற் போல. வளவனது புகழுடம்பு நிலவுலக முற்றும் பரந்து வானளவும் உயர்ந்து விளங்குதலின், அதனை முற்றும் மூடிச் கவிக்கவல்ல தாழியன்றோ செயற்பாலது; அதனைச் செய்வதாயின் நிலவட்டம் திகிரியாகவும் மேருவென்னும் பெருமலை மண் திரளாகவும் கொண்டு தாழி வனைதல் வேண்டுமே! அதனைச் செய்யவல்லுவையோ? நினக்கு அஃது இயலாதன்றோ என்பாராய், "இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கு" என்று கூறுகின்றார். ஆனந்தப் பையுளாவது இன்னதென்பார், "விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று" (பு.வெ.மா.சிறப்.பொது.13) என்பதை எடுத்துக்காட்டி, இதனைப் பாடுபவர் ஐயூர் முடவனாரால் கண்டு, "இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின் ஆனந்தப்பையுளாயிற்று" என்றார். ஐயூர் முடவனார் பெயர் ஐயூர் மூவனார் என்றும் ஏட்டில் காணப்படுகிறது. உறையூர் முடவனார் என்றும் பாடமுண்டெனத் திரு. சாமிநாதையரவர்கள் குறிக்கின்றார்கள்.
-------

229. கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் இறுதிநாளில், அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்குமுன் நாட்டில் புதுமையான நிகழ்ச்சி யொன்றுண்டாயிற்று. தீ நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் கூடலூர் கிழார் என்பார் ஒருவர். அவர் வானநூல் வல்லவர்; விண்ணிடத்தே ஒருவிண்மீன் தீப் பரக்கக்காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருகசீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார்; இந் நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில் உலகாளும் வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரவிரும்பொறையாகலின் அவற்கு என்ன தீங்குநேருமோ எனக் கலக்கமுற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர் துறந்தான். யானைகள் கையை நிலத்தே நீட்டிவைத்து உறங்கின; முரசம் தானே கண் கிழிந்து போயிற்று; வெண்குடை கால் துணிந்து வீழ்ந்தது; குதிரைகள் செல்லும் கதியின்றிக் கிடந்தன. இத் தீநிமித்தங்கள் வேந்தன் முடிவை வலியுறுத்தின. இவற்றால் மனம் அழுங்கிய ஆசிரியர் கூடலூர்கிழார் இப்பாட்டின்கண் இந் நிகழ்ச்சிகளை எடுத்தோதி வருந்துகின்றார்.

கூடலூர் கிழாரது கூடலூர் பொறைநாட்டுப் பாலைக்காட்டு வட்டத்து (Palghat Tq) நடுவட்டம் என்ற நாட்டிலுள்ள தோரூர். இவர் இனிய பாட்டுக்கள் பாடவல்லவர். இவராற் பண்டை மரந்தை நகரம் சிறப்புறக் குறிக்கப்படுகிறது. கணவனொடு கூடிக் கடிமனைக்கண் வாழும் தலைமகள், கணவற்குப் புளிப்பாகர் சமைத்து உண்பிக்கும் திறத்தை,நினைக்குந்தோறும் இன்பம் ஊறுமாறு இவர் பாடிய பாட்டுக் குறுந்தொகைக்கண் காணப்படுகிறது. சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை விரும்பியது கொண்டு இவர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றைத் தொகுத்தார். இவரைப் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என ஐங்குறுநூற்றின் ஈற்றுக் குறிப்புக் கூறுவது இவரது சிறப்பை இனிதெடுத்துக் காட்டுகிறது.

    ஆடிய லழற்குட்டத்
    தாரிரு ளரையிரவின்
    முடப்பனையத்து வேர்முதலாக்
    கடைக்குளத்துக் கயங்காய்ப்
    பங்குனியுய ரழுவத்துத்         5
    தலைநாண்மீ னிலைதிரிய
    நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்
    தொன்னாண்மீன் றுறைபடியப்
    பாசிச் செல்லா தூசி முன்னா
    தளக்கர்த்திணை விளக்காகக்         10
    கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
    ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
    அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
    பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்
    நோயில னாயி னன்றுமற் றில்லென         15
    அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப
    அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
    மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
    திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்
    காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்         20
    காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
    மேலோ ருலக மெய்தின னாகலின்
    ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்
    தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
    பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்         25
    களந்து கொடை யறியா வீகை
    மணிவரை யன்ன மாஅ யோனே.
    ---------

திணையுந் துறையு மவை. கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சிய விடத்துக் கூடலூர்கிழார் பாடியது.

உரை: ஆடு இயல் அழற்குட்டத்து - மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலன்கண்; ஆரிருள் அரை இரவின் - நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண்; முடப் பனையத்து வேர் முதலா - முடப்பனை போலும் வடிவையுடைய அனுட நாளில் அடியின் வெள்ளி முதலாக; கயம் குளத்துக் கடை காய- கயமாகிய குள வடிவுபோலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லையாக விளங்க; பங்குனி உயர் அழுவத்து- பங்குனி மாதத்தினது முதற்பதினைந்தின்கண்; தலை நாண் மீன் நிலை திரிய - உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய; நிலை நாண் மீன் அதன் எதிர் ஏர்தர - அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழா நிற்க; தொல் நாண் மீன் துறை படிய - அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட எட்டா மீனாகிய மிருகசீரிடமாகிய நாண் மீன் துறையிடத்தே தாழ; பாசிச் செல்லாது - கீழ்த் திசையிற் போகாது; ஊசி முன்னாது வடதிசையிற் போகாது; அளக்கர்த் திணை விளக்காக - கடலாற் சூழப்பட்டது பூமிக்கு விளக்காக; கனை எரி பரப்ப முழங்காநின்ற தீப்பரக்க; கால எதிர்பு பொங்கி - காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து; ஒரு மீன் வீழ்ந்தன்றால் விசும்பினான் - ஒரு மீன் வீழ்ந்தது வானத்தினின்றும்; அது கண்டு - அதனைப் பார்த்து; யாமும் பிறரும் பல்வேறு இரவலர் - யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்; பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்- பறையொலி போலும் ஒலியையுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன்; நோயிலனாயின் நன்று என நோயை யுடையனல்லானாகப் பெறின் அழகிதென; அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப - இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப; அஞ்சினம் - யாம் அஞ்சினேம்; எழுநாள் வந்தன்று - அஞ்சினபடியே - ஏழாம் நாள் வந்ததாகலின்; இன்று வலியையுடைய யானை கையை நிலத்தேயிட்டு வைத்துத் துஞ்சவும்; திண் பிணி முரசம் கண் கிழிந் துருளவும் - திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்; காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் - உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும்; காலியல் கலிமா கதியின்றி வைகவும் - காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக்கிடக்கவும்; மேலோருலகம் எய்தினன் - இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை யடைந்தான்; ஆகலின்-ஆகையாலே; ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணையாகி - ஒன்றிய வளையையுடைய மகளிர்க்குமேவப்பட்ட துணையாகி; தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ -தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ; பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் - பகைவரைப்பிணித்துக் கொல்லும் வலியையும்; நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை - நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய; மணிவரை யன்ன மா அ யோன் -நீல மலைபோலும் மாயோன்; எ - று.

மன்னும் தில்லும் அசை. கயத்துக் குளக்கடை யென்க. நற்றிசை யாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்று ஆம்;அன்றி, வடக்கும் கிழக்கும் செல்லாதெனவே, வடகிழக்கே வீழ்ந்த தென்றுமாம். படவென்றல், இன்னாமையிற்கைவைத்துறங்கவும், கண் கிழிந்துருளவும்,கால் பரிந்துலறவும், கதியின்றி வைகவும் எனக் தகுதி பற்றிக் கூறப்பட்டன.

மாயோன், மகளிர்க்குத் துணையாகி, தன்றுணையாயம் மறந்தனனோ, இல்லையோ; யாம் மறவா நிலைமையமாயினம் என இரங்கிக் கூறியவாறு.

"அஞ்சினம் எழுநாள் வந்தன்றின்றென" என்றும் பாடம்.

விளக்கம்: அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். "அக் கினியை அதிதேவதையாக வுடைமையின், கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று" என்ப.ஆட்டினை,வடநூலார்மேடராசியென்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவனி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள்ஆடாகிய மேடத்துக்குரியவாதலின், கார்திகையின் முதற்காலை "ஆடியல் அழற் குட்டம்" என்றார்.அனுடமென்பதுஆறு மீன்களின் தொகுதி; அது வளைந்த பனைமரம்போ லமைதலின், "முடப் பனையம்" எனப்பட்டது.வேர்முதலா -அடியின் வெள்ளி; அஃதாவதுமுதல் நாண்மீன்.உயரழுவம் - முதற ் பதினைந்துநாள்.தலைநாண்மீன் உத்தரநாள். நிலை நாண் மீன் - எட்டாம் மீன்; "உச்சி மீனுக்குமுன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; "உச்சி மீனுக் கெட்டாம் மீன் உதய மீன்"என்ப.தொன்னாண்மீன்- எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். பாசி - கிழக்குத் திசை. ஊசி - வடக்குத் திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின், இராச பீடையென்பர்; "ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்" என்பர். கயமாகிய குளம் என்றது கயக்குளம் என்றார் அஃதாவது புனர்பூசம்; இது குளம்போலும் வடிவுடையது. இதுபற்றியே, பிங்கலந்தையும், "அதிதி நாள் கழையா வணமேரி புனர்தங் கரும்பிவைபுனர்பூசமாகும்" என்று கூறுவதாயிற்று. தகுதியாவது, செத்ததாரைத் துஞ்சினாரென வழங்குவது போல்வது. மணி வரை, நீலமணிபோலும் மலை; அஃதாவது நீலமலை. இப்பகுதி தேவி குளம் என்னும் இடத்தைச் சார்ந்தது.
-----

230. அதியமான் எழினி

தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்துவந்த அதியமான்களுள் எழினி பெயன்பான் ஒருவன். இவன் காலத்தே சேரநாட்டைச் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறை ஆண்டு வந்தான். சேரமானுக்கும் அதியமானுக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. அது வாயிலாக இருவர்க்கும் போருண்டாயிற்று.சேரமான் பெரும் படையுடன் வந்து தகடூரைச் சூழ்ந்துகொன்டான். தகடூர்ப் போரில் எழினி பேராற்றலுடன் பொருது வீழ்ந்தான். பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிச் சிறப்பித்த சான்றோராகிய அரிசில்கிழார்எழினியின் குணமாண்பையும் போர் வன்மையையும் நன்கறிந்திருந்தார். இப்போர் நிகழாவாறு அவர் செய்த முயற்சி வெற்றி தரவில்லை. ஆயினும், இருதிறத்தார்பாலும் அவர்க்கு மன வேறுபாடு தோன்றவில்லை. இருவர் நலங்களையும் எடுத்தோதிப் பாடிச் சிறப்பிப்பதில் அரிசில்கிழார் தவறினதில்லை. தகடூரில் பொருது வீழ்ந்த எழினியை இழந்த தகடூர் நாடுதாயையிழந்த குழவிபோல நெஞ்சு தடுமாறி வருந்துவது கண்டு அரிசில்கிழார் அவலமுற்று இப்பாட்டின்கண் வருந்திப் பாடுகின்றார். எழினியாது வீழ்ச்சிக்கு ஏதுவாகிய சேரமானை நோவாது, அவனுயிரையுண்ட கூற்றுவனையே இப்பாட்டில் நொந்து, "கூற்றமே! வீழ்குடியுழவன் வித்தினையட்டுண்டதுபோல, பலவுயிர்களை உணவாகத் தரக்கூடிய போர் மறவனாக எழினி இருப்ப, அவனுயிரை யுண்டு நினக்கே கேடு சூழ்ந்து கொண்டாய்" என இரங்கிக் கூறியுள்ளார். தகடூர் நாட்டில் அதியமான்களின் கோட்டையிருந்த வூர் இந்நாளில்" அதமன் கோட்டை" யென வழங்குகிறது. தகடூரும் இந்நாளில் தருமபுரி யென வழங்குகிறது. இந்த எழினியின் வழிவந்தோர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும்
தகடூர்ப் பகுதியில் இருந்தனரென்று தகடூர்க்கருகிலுள்ள ஒட்டப்பட்டிக்
கல்வெட்டுக்கள் (A. R. No.211 of 1910) தெரிவிக்கின்றன.

    கன்றம ராயங் கானத் தல்கவும்
    வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்
    களமலி குப்பை காப்பில வைகவும்
    விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
    வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட்         5
    பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர
    ஈன்றோ ணீத்த குழவி போலத்
    தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக்
    கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு
    நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி         10
    நீயிழந் தனையே யறனில் கூற்றம்
    வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
    வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங்
    கொருவ னாருயி ருண்ணா யாயின்
    நேரார் பல்லுயிர் பருகி         15
    ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே.
    -------------

திணை: அது துறை: கையறுநிலை. அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது.

உரை: கன்றமராயம் கானத்து அல்கவும் - கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும்; வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் - சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழிபோவார் தாம் வேண்டியவிடத்தே தங்கவும்; களமலி குப்பைகாப்பில வைகவும் -களத்தின்கண்நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும்; விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் - எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காதசெவ்விய ஆட்சியினையும்; வையகம் புகழ்ந்த வயங்கு வினை - உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும்; ஒள்வாள் பொய்யா எழினி பொருது களம் சேர - ஒள்ளிய வாளினையும் தப்பாதமொழியினையுமுடையஎழினி பொருது போர்க்களத்தின் கண்ணே வீழ; ஈன்றோள் நீத்த குழவி போல - பெற்ற தாயாற் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்ப; தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய - தன்னைமேவியகிளைஇடந்தோறும் இடந்தோறும் வருந்த; கடும்பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமோடு - மிக்க பசி வருத்திய கலக்கமுற்று துன்ப மிக்க நெஞ்சமோடு;நோய் உழந்து வைகிய உலகினும்-அவனை யிழந்துவருத்தமுற்றுக்கிடந்த உலகத்து விதனத்தினும்; மிக நனி நீ இழந்தனை - மிகப் பெரிதாக நீ இழந்தாய்; அறன் இல் கூற்றம் - அறமில்லாதகூற்றமே;வாழ்தலின் வரூஉம் - வாழ்தல் ஏதுவாக வரும்; வயல் வளன் அறியான் - வயலிடத்து விளையும் வருவாயை யறியானாய்; வீழ்குடி யுழவன் - தளர்ந்த குடியையுடைய உழவன்; வித்து உண்டாங்கு - விதையை யுண்டாற் போல; ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின் - இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரையுண்டிலை யாயின்; நேரார் பல்லுயிர் பருகிஆர்குவை - பகைவருடைய பல உயிரையும் பருகி நிறைவை; அவன் அமர் அடுகளத்து - அவன் போரில் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்; எ - று.

மன்: கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும் படுவதன். றாயினும் அவ்வாறு கூறுதல், "அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல் கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி" (பெரும்பாண்.1-2) என்றாற்போல ஓர் அணிகுறித்து நின்றது.

எழினி, களஞ்சேர, ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின், அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகியார்குவை; அது கழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

"கடும்பசி துளங்கிய" என்றும் பாடம்.

விளக்கம்: "வம்பலர் வேண்டுபுலத் துறையவும்" எனவும், "களமலி குப்பை காப்பில் வைகவும்" எனவும் கூறியதனால், அல்கவும் என்றதற்குப் "பிறிதொன்றான் ஏதமின்றிக் கிடப்பவும்" என்றுஉரைகூறப் பட்டது. பகைவராற் கலக்கமுண்டாகிய வழிச் செங்கோன்மையால் நிலத்து வாழும் வாழ்வு கலங்கிச் சீர்குலையு மென்பதுபற்றி, கலங்காச் செங்கோல் என்றதற்கு நிலங்கலங்காதசெவ்விய ஆட்சியெனவுரை கூறினார். செங்கோன்மை ஒன்றே கொண்டுபகைகடியுந்திறன்இல்வழி,வேந்தனதுநிலம் கலக்கமுறும் என்பதுபற்றி, "விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்" என்றார். உட்பகை, புறப்பகை யென்ற இரண்டுமடங்க, "விலங்கு பகை" யெனல் வேண்டிற்று.ஒருவன்,தனக்குக்கூட்டாக வேறு எவரையும் வேண்டாதவன். ஒருவன் ஆருயிரை யுண்டொழிந்ததனால், "நேரார் பல்லுயிர் பருகும் நற்றிறம்நினக்குஇல்லாதுகழிந்ததுஎன்பதுபட" "ஆர்குவைமன்" என்றார். அணியாவது சமாதி யெனப்படுவது; சிவஞான முனிவர் இதனை விட்டும்விடாதஇலக்கணையென்பர். ஆர்தல், நிறைதலாதலின், பருகி ஆர்குவை யென்றதற்கு, "பருகிநிறைவை" என்று உரைத்தார். ஆருயிர், கொள்ளுதற்கரிய வுயிர் எனப் பொருள் கொள்ளப்படும்.
------

231. அதியமான் நெடுமானஞ்சி

தகடூரில் இருந்து நல்லாட்சிபுரிந்த அதியமான்களில் நெடுமான் அஞ்சி மிக்க புகழ் படைத்தவன். தன்னையுண்டாரை நெடிது வாழப் பண்ணும் நெல்லிக்கனியை ஒளவையார்க் களித்துப்பெருநலம் செய்தவன். இவன் முடிவில் சேரமானோடுபோருடற்றி உயிர் துறந்தான்.இவன்இறந்த காலத்தில் இவனுக்காக நெஞ்சு கலங்கிப் புலம்பியசான்றோர்களுள் ஒளவையார் தலைசிறந்தவர். அதியமான் இறந்தபின் அவனை ஈமத்திற்குக் கொண்டு எரிவாய்ப்பெய்துஇறுதிக் கடன்களை உரியவர். செய்து முடித்தனர். அங்கிருந்த சான்றோர் "இதுகாறும் புகழ் மேம்பட்டு விளங்கிய அதியமான் மறைந்தான்" என வருந்தினர்.அவரோடுஉடனிருந்த ஒளவையார், "அதியமான் உடம்பு எரியிற் பட்டு வெந்து கரியினும், வேகாது நேரே விண்ணுலகு புகினும், அவன் பெற்ற புகழ்கள் ஒருகாலும் அழியா" எனக் கையற்றுப் பாடினர். அப் பாட்டு இது.

    எறிபுனக் குறவன் குறைய லன்ன
    கரிபுற விறகி னீம வொள்ளழற்
    குறுகினுங் குறுகுக குறுகாது சென்று
    விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த்
    திங்க ளன்ன வெண்குடை         5
    ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.
    -----------

திணையும் துறையு மவை. அதியமா னெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

உரை: எறிபுனக் குறவன் குறையல் அன்ன - வெட்டிச் சுட்ட கொல்லை நிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற; கரிபுற விறகின் ஈம வொள்ளழல் - கரிந்த புறத்தை யுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண்; குறுகினும் குறுகுக - உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; குறுகாது சென்று - அவ்வாறு அணுகாது போய்; விசும்புற நீளினும் நீள்க - வறிதே ஆகாயத்தை உற ஓங்கினும் ஓங்குக; பசுங்கதிர்த் திங்களன்ன வெண்குடை - குளிர்ந்த சுடரையுடைய மதிபோலும் வெண்கொற்றக் குடையையுடைய; ஒண் ஞாயிறன்னோன் - ஒள்ளிய ஞாயிற்றை யொப்போனது; புகழ் மாயல - புகழ் மாயா; எ- று.

ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி, ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமல் சிறுகினும்சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும்.

"எரிபுனக் குறவன்" என்று பாடமோதுவாரு முளர்.

விளக்கம்: எறி புனம் - எறிந்த புனம்: இறந்தகாலந்தொக்க வினைத்தொகை. குறைபட வெட்டிய கட்டைத்துண்டு "குறையல்" எனப்பட்டது. "கரிபுற விறகின் ஈமம்" என்றதனால், எரிந்து குறைபட்ட கட்டைகளையே பண்டை நாளில் ஈமத்தில் எரிமூட்ட அடுக்குவரென்பது தெரிகிறது. அதியமான் உடல் ஈமத்தீயில் எரிவது கண்டு ஆற்றாது கூறுகின்றாராகலின் "குறுகினுங் குறுகுக" என்றும், சில கட்டைகள் தீக்கொழுந்துவிட்டெரியினும் தங்கண் இட்ட பொருள் நன்கு வேகச் செய்யாது போவதுண்மையின், "குறுகாது சென்று விசும்புற நீளினும் நீளுக" என்றும் கூறினார். "ஒண் ஞாயிறன்னோன்" என்றார், ஞாயிற்றின் ஒளியை மறைக்க முடியாதவாறுபோல அதியமான் புகழ்களும் மாயாவென்று கட்டுரைக்கின்றாராகலான்; "புதைத்தலொல்லுமோ ஞாயிற்ற தொளியே" (ஐங்.71.) என்று பிறரும் கூறுதல் காண்க. குறுமை, சிறுமையு முணர்த்துமாதலால், குறுகினுங் குறுகுக என்றதற்கு, "இவனுடற் சிதையாமற் சிறுகினும் சிறுகுக" என்றும், "நீளினும் நீளுக என்றதற்கு, சிதையும்படி சென்று நீளுக, இவன் புகழ் மாயாவெனினு மமையும்" என்றும் உரைத்தார்.
-------

232. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின், அவன் உடலை அடக்கம் செய்த சான்றோர் நன்னாளில் அவனுக்கு நடுகல் நாட்டினர். அதன்கண் அவன் பீடும் பெயரும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுகல் விழா அயர்ந்தனர். அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருந்தனர்.அவருடன் ஒளவையாரும் இருந்தார். நடுகல்லாகிய அதியமானுக்குச் சிறுகலங்களில் நாரால் வடிக்கப்பட்டதேறலைவைத்துப் படைத்து வழிபட்டனர். அதுகண்ட ஒளவையாருக்கு நெஞ்சில் எழுந்ததுயரத்துக்கு அளவில்லை; அவர் கண்களில் நீர் ஆறாய்ஒழுகிற்று."பகைவர் தமது நாடு முழுவதும் கொடுப்பினும்கொள்ளாதமறமாண்புடையஇந்தஅதியமான் இந்தச் சிறுகலங்களில் பெய்து தரப்படும் தேறலைக் கொள்வானோ?" என்ற இந்தப் பாட்டைப் பாடினார்.

    இல்லா கியரோ காலை மாலை
    அல்லா கியர்யான் வாழு நாளே
    நடுகற் பீலி சூட்டி நாரரி
    சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
    கோடுயர் பிறங்குமலை கெழீஇய         5
    நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே.
    -----------

திணையும் துறையு மவை. அவனை யவர் பாடியது.

உரை: காலை மாலை இல்லாகியர் - அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக; யான் வாழும் நாள் அல்லாகியர் - யான் உயிர் வாழும் நாளும் எனக்கு ஒருபயன் படாமையின் அவை யல்லவாக; நடுகற் பீலி சூட்டி - நடப்பட்ட கல்லின்கண் பீலியைச் சூட்டி; நாரரி சிறுகலத்து உகுப்பவும் - நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும்; கொள்வன் கொல்லோ - அதனைக் கொள்வனோ கொள்ளானோ; கோடு உயர் பிறங்குமலை கெழீஇய - சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய; நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோன் - நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்; எ - று.

நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: காலை பகற்போதின் தொடக்கமாய்ப் பகலையும், மாலை இரவுப்போதின் தொடக்கமாய் இரவையும் குறித்துநின்றன. பயன் படாத நாள் வீணாள் எனப்படுதலின், "அல்லாகியர்" என்றார். நடுகல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும் பீடுகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுவது மரபாதலின் நடுகற் பீலி சூட்டி யென்றார். "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதாதொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" (அகம்: 67) என வருதல் காண்க. நடுகல்லாயினானைத் தெய்வமாக்கி, அவன் விரும்பும் உணவைப் படைத்துப் பரவுவது பண்டையோர் வழக்கு. அதனால் சிறுகலங்களில் தேறலைப் பெய்து படைத்தனரென அறிக. "ஒலிமென கூந்த லொண்ணுத லரிவை, நடுகற் கைதொழுது பரவும்" (புறம்: 306) என நடுகல் தெய்வமாகப் பரவப்படுவது காண்க.
-----------

233. வேள் எவ்வி

வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது. அதனால் இவன் "நீடூர் கிழவன்" எனப் படுவன். இவன் பெருங்கொடை புரியும் வள்ளல். இவன்பால் பாணர்கட்குப் பேரன்புண்டு. வாட்படையும் வேற்படையும் சிறக்க உடைய இவன் புலவர் பாடும் புகழ் மிகப் படைத்தவன். ஒருகால் இவன் தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த பசும்பூண் பொருந்திலர் என்பாரை வென்று அவர்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம் இப்போது அரிமளம் என வழங்குவது போலும். வேள் எவ்வி பகைவரொடு போர் செய்து இறந்தான். அவனால் பெரிதும் பேணப்பட்ட பாணர் தம் இசைக்கருவியாகிய யாழை முறித்திட்டு அவனைப் பரவி வருந்தினர்: அவர்கள் பின்பு எய்திய வறுமை புலவர் பரிந்து எடுத்தோதும் அத்துணை மிகுதி பெற்றிருந்தது. இந்த எவ்வியின் பிரிவாற்றாது வருந்திய சான்றோர்களுள் வெள்ளெருக்கிலையார் என்பவரும் ஒருவர். "போர்க்குச் சென்று பெரும் போருடற்றி வீழ்ந்த எவ்வியின் முகத்தினும் மார்பினும் பட்ட புண்கள் பலவாகும்" எனப் போரிடையிருந்து வந்த செய்தி வெள்ளெருக்கிலையார்க்கு விடியற்காலத்தே வந்தது. வேள் எவ்வியின் வாள் வன்மையும் பேராண்மையும் நன்கறிந்தவ ராதலின், அச் செய்தியை அவர் உண்மையென ஏற்கவில்லை.ஆயினும், அவர் மனம் அமைதி பெறவில்லை. "இச் செய்தி பொய்யுரையாகுக" என அவர் தமக்குள்ளே விழைந்தார். அவ்விழைவின் வெளியீடே இப்பாட்டு. வெள்ளெருக்கின் இலையைச் சிறப்பித்துப் பாடியதனால் இவர்க்கு இப்பெயர் எய்திற்றாகல் வேண்டும்.

    பொய்யா கியரோ பொய்யா கியரோ
    பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
    சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
    பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
    இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்         5
    போரடு தானை யெவ்வி மார்பின்
    எஃகுறு விழுப்புண் பலவென
    வைகுறு விடிய லியம்பிய குரலே.
    ------------

திணையும் துறையும் அவை. வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

உரை: பொய்யாகியரோ பொய்யாகியரோ - பொய்யாகுக கொய்யாகுக; பாவடியானை பரிசிலர்க்கு அருகா - பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும்; சீர் கெழு நோன்றாள் - சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய; அகுதைகண்தோன்றிய - அகுதையிடத்து உளதாகிய; பொன்புனை திகிரியின் பொய்யாகியர் - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; இரும்பாண் ஒக்கல் தலைவன் - பெரிய பாண் சுற்றத்திற்கு முதல்வன்; பெரும்பூண்போர் அடுதானை எவ்வி மார்பின் - பேரணிகலத்தினையுடைய போரின் கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண்; எஃகுறு விழுப்புண் பல என - வேல் தைத்த சிறந்த புண் பலவென; கைகுறு விடியல் இயம்பிய குரல் - வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை; எ - று.

பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரிதைத்த தென்று
பிறந்த வார்த்தை; பொன் ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின் கண் வந்தது.
இயம்பிய குரல் பொய்யாகியர் எனக் கூட்டுக.

விளக்கம்: அகுதை யென்பவன் பண்டை நாளில் கடல் சார்ந்த ஊராகிய கூடல் என்ற ஊர்க்குத் தலைவன். மறப்போர் புரியும் சான்றாண்மையும் பரிசிலர்க்குக் களிறு வழங்கும் கைவண்மையும் உடையவன். இவன் பெரிய தானையையுமுடையன் என்ப. இவன்பால் பொற்றிகிரி யுண்டு; ஆதலின், இவனை வெல்வது எவர்க்கும் ஆகாதென்றொரு பெருமொழி நாடெங்கணும் பரவியிருந்தது. அதனால் பலரும் அவனையஞ்சி யிருந்தனர்; முடிவில் ஒருகால் போருண்டாகிய போதுஅகுதைகொல்லப்பட்டான். பொற்றிகிரியுண்டென்பது பொய்யாயிற்று. அச் செய்தி போல எவ்வி மார்பிற் புண்ணுற்றிறந்தானென்ற சொல்லும் பொய்யாகுக வென்பார், "அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரி போலப் பொய்யாகியர்" என்றார்.
---

234. வேள் எவ்வி

வெள்ளெருக்கிலையார் விடியலிற் கேட்ட செய்தி உண்மையே யாயிற்று. அவர்க்குண்டாகிய வருத்தத்துக்கு அளவில்லை. யாவர்க்கும் வரையாது அளித்துப் பலரோடு இருந்துண்டலையே பெரிதும் விரும்பி வாழ்ந்த வேள் எவ்வியின் பிரிவு வெள்ளெருக்கிலையார் நெஞ்சில் நிலைபெற நின்று வருத்திற்று. நாட்கள் பல கழிந்தன. ஒரு நாள் அவர் எவ்வியின் மனைக்கு வந்தார். கைம்மை நோன்பு நோற்கும் அவன் மனைவியர் எவ்வி கிடந்து உயிர்நீத்த இடத்தை மெழுகிப் புல்லைப் பரப்பி அதன் மேல் இனிய சிறு உணவை வைத்துப் படைத்து வழிபடுவதைக் கண்டார். "உலகமுழுதும் வரினும் வருவார்க்குத் தடை யாது மின்றித் திறந்த வாயிலை யுடையனாய்ப் பலரோடும் இருந்துண்ணும் வள்ளலாகிய வேள் எவ்வி புல்மேல் வைக்கப்பட்ட இச் சிறு பிண்டத்தை விரும்பியேற்பனோ" என எண்ணிப் புண்ணுற்ற நெஞ்சினராய்க் கதறிப் புலம்புனார். அப்புலம்புரை இப் பாட்டாகும்.

    நோகோ யானே தேய்கமா காலை
    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
    தன்னமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயிற்         5
    பலரோ டுண்டன் மரீஇ யோனே.
    ----------

திணையும் துறையும் அவை. அவனை யவர் பாடியது.

உரை: நோகோயான் - நோவக்கடவேனோ யான்; மாகாலை தேய்க - எனது வாழக்கடவ மிக்க நாள் மாய்வதாக; பிடியடி யன்ன சிறுவழி மெழுகி - பிடியினது அடிபோன்ற சிறிய இடத்தினை மெழுகி; தன் அமர் காதலி - தன்னை மேவப்பட்ட காதலி; புல்மேல் வைத்த இன் சிறு பிண்டம் - புல்மேல் வைக்கப்பட்ட இனிய சிறிய பிண்டத்தை; யாங்கு உண்டனன் கொல் - எவ்வி உண்டான் கொல்லோ; உலகு புகத் திறந்த வாயில் - உலகத்தார் யாவரும் புகும் பரிசு திறந்த வாயிலையுடைய; பலரோடு உண்டல் மரீஇயோன் - பலரோடுங் கூடி யுண்டலை மருவியோன்; எ - று.

இன் சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு. பலரோடு உண்டலை மரீ இயோன் பிண்டம் யாங்கு உண்டனன்கொல் எனக் கூட்டுக.

விளக்கம்: எவ்வி கிடந்து உயிர் நீத்த இடத்தை வட்டமாக மெழுகினமை தோன்றப் "பிடியடியன்ன சிறு வழி" யென்றார். இலையிட்டு அதன்மேல் தருப்பைப்புல்லை வைத்து அதன்மேல் இனிய சுவையில்லாத உணவைப் பெய்து படைத்துக் கைம்பெண்கள் உண்பது இயல்பாதலால், அதனை, "புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம்" என்றார். இனிய சுவையின்றி ஒரு பொழுதைய உணவாதலால், அதனை "இன் சிறு பிண்டம்" என்றது குறிப்பாய் இகழ்ந்தவாறாயிற்று. எவ்வியின் வள்ளன்மையை நினைந்து வியந்து கூறலின், "யாங்குண்டனன் கொல்" என்றார். இவ்வாறே அதியமானைப் பாடிய ஒளவையார், "நாகரி சிறு கலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ" (புறம்: 232) என்பது காண்க.
-------

235. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் இறந்தபின் ஒளவையாரை யுள்ளிட்ட சான்றோர் கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரை அவன் பேணுந் திறமும் பொருளாகப் பேசப்பட்டன. ஒளவையார் அவனோடு இருந்து அவனது வள்ளன்மையைத் தெளிய அறிந்திருந்தாராதலின், அதனைஇப் பாட்டின்கண் விரியக் கூறியுள்ளார். அஞ்சியின் மார்பில் தைத்து அவன் உயிருண்ட வேல், பாணர் புலவர் முதலியோர் வாழ்க்கையையே சீரழித்து விட்டதென்றும், எனவே, நாட்டில் பாடுவோரும் பாடுவோர்க்கு ஈவோரும் இலராயினர் என்றும்,ஈயாது வைத்து உயிர் துறந்து கெடும் கீழ்மக்களே மிகப் பலராக இவ்வுலகில் உள்ளனர் என்றும் படிப்போர் நெஞ்சுருகிக் கண்கலுழுமாறு பாடியுள்ளார்.

    சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
    பெரியகட் பெறினே
    யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
    சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே         5
    என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
    அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
    நரந்த நாறுந் தன்கையாற்
    புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
    அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ         10
    இரப்போர் கையுளும் போகிப்
    புரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
    சென்றுவீழ்ந் தன்றவன்
    அருநிறத் தியங்கிய வேலே         15
    ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு (மில்லைப்
    பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
    றீயாது வீயு முயிர்தவப் பலவே.         20
    --------

திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

உரை: சிறிய கள் பெறினே - சிறிய அளவினையுடைய மதுவைப்பெறின்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கே தருவன், அது கழிந்தது; பெரிய கள் பெறின் - பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின்; யாம் பாட - அதனை யாம் உண்டு பாட; தான் மகிழ்ந்துண்ணும் மன் - எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான், அது கழிந்தது; சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன் - சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத் தோடுங் கூட வுண்பன், அது கழிந்தது; பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன்மன் - மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன், அது கழிந்தது; என்பொடு தடிபடு வழியெல்லாம் - என்பொடு கூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கு அளிப்பன், அது கழிந்தது; அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் - அம்பொடு வேல் தைத்து உருவுமிடமாகிய போர்க்கள முழுதும்; தான் நிற்கும் மன் - தானே சென்று நிற்பன் அது கழிந்தது; நரந்தம் நாறும் தன் கையால் - தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால்; புலவு நாறும் எம் தலை தை வரும் மன் - தான் அருளுடைமையின் புலால் நாறும் எம்முடைய தலையைத் தடவுவன் அது கழிந்தது; அருந்தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளைஉரீஇ - அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி; இரப்போர் கையுளும் போகி - இரப்பவர் கை யுள்ளும் தைத்துருவி; புரப்போர் புன்கண் பாவை சோர - தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணிற் பாவை ஒளி மழுங்க; அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று- அழகிய சொல்லை யாராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது; அவன் அருநிறத்து இயங்கிய வேல் - அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்; ஆசாகு எந்தை - எமக்குப் பற்றாகிய எம் மிறைவன்; யாண்டு உளன் கொல்லோ - எவ்விடத்துள்ளான் கொல்லோ; இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை - பாடுவாரும் இல்லை பாடுவார்க்கு ஒன்று ஈவாரும் இல்லை; பனிந்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் - குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கண் பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர்; சூடாது வைகி யாங்கு - பிறராற்சூடப்படாது கழிந்தாற் போல; பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப்பல - பிறர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காது மாய்ந்து போம் உயிர் மிகப்பல; எ - று.

அவன் நிறத்து உருவிய வேல் அவனுக்கு இறந்துபாட்டைச் செய்தலோடே பாணர் முதலாயினார்க்கும் இறந்துபாட்டினைச் செய்தலான், ஒரு காலத்தே யாவரிடத்தும் தைத்தது என்றாராகக் கொள்க. மன்: கழிவின்கண் வந்தது.

விளக்கம்: "சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே என்புழி மன்னைச் சொல் இனி அது கழிந்தது காண் என்னும் பொருள் குறித்து நின்றது; காண் என்றால், பொருளுணராதானை, அரிதாகப்பெற்றகள்ளை எக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின் எமக்குக் கள்ளுண்டல் போயிற்றென்றல் இதன் பொருள் எனத் தொடர்மொழி கூறிப் பொருளுணர்த்துக" என்பர் (சொல். உரி. 94) நச்சினார்க்கினியர். அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் என்றதற்குச் சொல்லழகும் பொருளழகு மென்ற அழகமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின்கண்ணும் நூலின் கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர் என்று உரைத்தாலும் பொருள்நலம் குறையாதென வுணர்க. ஆசு, பற்றுக்கோடு, பற்றாசு என்றாற்போல அவன் இறந்தது குறிந்து கையற்றுப் பாடுதலால், "யாண்டுளன்கொல்லோ" என்றார். பகன்றை பலரும் சென்று படியும் நீர்த்துறைக்கட் பூத்திருப்பினும், பெரிதாயும் நிறைந்ததாயும் இருப்பினும் அதன் பூ எவர்க்கும் பயன்படா தென்றற்குப் "பனித்துறைப் பகன்றை" யென்றும், "நறைக்கொண் மாமல" ரென்றும் மிகுத்துக் கூறினார். காஞ்சித் திணைக்குரிய துறைகளுள், "இன்னனென் றிரங்கிய மன்னை" யென்ற துறைக்கு இப்பாட்டு முழுதையும் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். 19) இளம்பூரணர். "ஈயாது வீயும் உயிர்" என்ற வழி, உயிரென்பது உடம்பொடு கூடிநிற்கும் மக்களையேயாயினும், உடம்பின் தொடர் பாலுண்டாகும் ஈத்துவக்கும் இன்பமும். ஈகையாலுளதாகும் புகழும் அறியாமையின் வாளா "உயிர்" என்றார். "தோன்றலின் தோன்றாமை நன்று" (குறள். 236) என்றதற்குப் பரிமேலழகர் கூறும் உரை ஈண்டு நினைவுகூரத்தக்கது.
---

236. வேள்பாரி

வேள்பாரி இறந்தபின் அவன் மகளிர் இருவரையும் அந்தணராகிய கபிலர் வேந்தர் சிலரிடம் கொண்டு சென்று மணம் புரிவிக்க முயன்றனர். அவர் முயற்சி பயன்படவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலை நகராகிய திருக்கோவலூரை யடைந்து அம் மகளிரை அவ்வூர்ப் பார்ப்பாரிடத்தே அடைக்கலமாகத் தந்தனர். பார்ப்பனரிடையுள்ள பொருட்கும் உயிர்கட்கும் பிறர் எவரும் தீங்கு செய்தலாகாது என்பது அந்நாளைய முறை. பிறர்பால் மகட்கொடை வேண்டிச் செல்வதும், மகள் மறுத்தால் அது குறித்துப் போர்தொடுத்து உடற்றுவதும் பண்டையோர் மரபு; ஆயினும், பார்ப்பாரிடம் மகட்கொடை விழைவதும் அதுவே வாயிலாகப் போர் மேற்கொள்வதும் இல்லை. இதனை ஆசிரியர் கபிலர் நன்கறிந்தவராதலாற்றான், பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப் படுத்தார். அவர்கட்கு ஒரு தீங்கும் உண்டாகாதென வுணர்ந்த கபிலருக்குப் பெருஞ்சுமை நீங்குவதாயிற்று. வேள் பாரியின் உயிர்த் துணைவராதலின், அவனையில்லாத இந்நிலவுலகு அவர்க்கு உயிரிலாத உடல் போலப் பொலிவிழந்து தோன்றிற்று. பாரியை நினைந்து நினைந்து அவர் தம் தூய நெஞ்சு துயரத்தால் புண்பட்டது. இனி வடக்கிருத்தலை மேற்கொண்டு உண்ணா நோன்பால் உயிர் துறந்து மறுமையுலகில் அவனைக் கண்டு கூடிப் பண்டேபோல் நட்புக்கிழமையால் நல்வாழ்வு வாழ்தல் வேண்டுமென அவர் எண்ணினார். தென் பெண்ணையின் நட்டாற்றுத் துருத்தியில் ஓரிடங்கண்டு வடக்கிருக்கலானார். இன்றும் கோவலூர்க்கருகில் தென் பெண்ணை யாற்றில் கபிலக்கல்லென ஒரு கல்லிருந்து கபிலர் வடக்கிருந்த செய்தியை நிலைவுறுத்துக் கொண்டு நிற்கிறது. அக்காலை அவர், வேள் பாரியை மனக்கண்ணிற்கண்டு, "மாவண் பாரி, என்னை நீ பல யாண்டுகள் பேணிப் பாதுகாத்தாய்; அக்காலமெல்லாம் நீ என்னோடு உயிர்கலந்தொன்றிய கேண்மையுடையனாய் ஒழுகினாய்; ஆயினும், நீ இவ்வுலகினின்றும் பிரியுங்கால், என்னையும் உன்னோடு உடன்வரவிடாது "இருந்து வருக" எனக் கூறிப் பிரிந்தாய்; இதனால் நீ என்பால் வேறு பட்டாய் போலும்; யான் நினக்குப் பொருந்தாதவன் போலும்; எவ்வாறாயினும் ஆகுக; இனி, இப் பிறப்பில் நம்மிருவரையும் கூட்டி ஒன்றிய நட்பால் உயர் வாழ்வு வாழச்செய்த நல்லூழ், மறுமையிலும் நின்னோடு உடனுறையும் வாழ்வை நல்குவதாக" என்று மொழிந்தார். அம் மொழியே இப்பாட்டு.

    கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்
    மலைகெழு நாட மாவண் பாரி
    கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே         5
    பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா
    தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி
    இனையை யாதலி னினக்கு மற்றியான்
    மேயினே னன்மை யானே யாயினும்
    இம்மை போலக் காட்டி யும்மை         10
    இடையில் காட்சி நின்னோ
    டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே.
    ----------

திணை: அது. துறை: கையறுநிலை. வேள்பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது.

உரை: கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப் பழம்; சிலைகெழு குறவர்க்கு அல்கு மிசைவாகும் - வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாளைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்; மலைகெழு நாட - மலையையுடைய நாட்டையுடையோய்; மாவண் பாரி - பெரிய வண்மையுடைய பாரி; கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் - நீயும் யானும் கலந்து நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய்; நீ என் புலந்தனையாகுவை - நீ யென்னை வெறுத்தாயாகக் கடவை; புரந்த யாண்டு - நீ எனக்கு உதவி செய்த யாண்டுகளும்; பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது - பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல்; ஒருங்கு வரல் விடாது - யானும் நின்னோடுகூடப் போதுதற்கு இயையாது; ஒழிக எனக் கூறி - நீ ஈண்டுத் தவிர்க எனச் சொல்லி; இனையை யாதலின் - இப்படி வேறுபட்ட தன்மையையுடைய யாதலின்; நினக்கு யான் மேயினேன் அன்மையான் - நினக்கு யான் பொருந்தினே னல்லாமையான்; ஆயினும் - இங்ஙனம் பொருந்திற்றிலேனாயினும்; இம்மை போலக் காட்டி - இப்பிறப்பின்கண் நீயும் யானும் கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி; உம்மை - மறுபிறப்பினும்; இடையில் காட்சி நின்னோடு - இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு; உடனுறைவு உயர்ந்த பால் ஆக்குக - கூடி வாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக; எ - று.

உலந்த யாண்டு என்று பாடமாயின், கழிந்த யாண்டு என்க. மற்று: அசைநிலை.

விளக்கம்: கலந்த கேண்மையை விளக்கற்கு, நீயும் யானும் கலந்த நட்பு என்றார். இம்மையில் தன்னோடு கூடியிருந்து கலந்த கேண்மையால் இடைவிடாத காட்சி நல்கி இன்புறுத்தினா னாதலின், "உம்மைப் பிறப்பில் உடனுறை வாக்குக பால்" என்றார். பால், விதி. "உயர்ந்த பால்" என்றார், இம்மையிற்போல மறுமையிலும் உடனிருந்து பயன் தரும் உயர்வுடைமைபற்றி. பிறரும் "வாழச்செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப் புணைபிறி தில்லை" (புறம்: 367) என்று விதியின் உயர்வை எடுத்தோதுவது காண்க.
---

237. இளவெளிமான்

வெளிமானாகிய வள்ளலைக் காண்டற்குப் பெருஞ்சித்திரனார் அவனுடைய ஊர்க்குச் சென்றதும், அக்காலை அவன் துஞ்சும் நிலையில் இருந்ததும், தன் தம்பி இளவெளிமானை நோக்கிப் பெருஞ்சித்திரனாரை நன்கு மதித்துப் பேணுமாறு அவன் பணித்ததும், பின்னர் அவன் இறந்ததும், இளவெளிமான் தனக்கு மூத்தோன் உரைத்தலை மதியாது பெருஞ்சித்திரனார்க்குச் சிறிதளவே தந்து இகழ்ந்ததும் முன்பே நாம் கண்டுள்ளோம். அப்போது அவர் அவன் கொடுத்த சிறு பரிசிலைப் பொருளாக மதியாது தமது நெஞ்சொடு நொந்து "உலகம் பெரிது; நம்மைப் பேணுவோர் பலர்; செல்வோம் வருக" என எழுந்து சென்றதும் நாம் அறிந்த செய்தியே. வெளிமானைக் கண்டு பரிசில் பெற விழைந்தவர், வெளிமான் இறந்ததனால் உள்ளம் உடைந்தார்; அதனால் உண்டாகிய கவலை, இளவெளிமான் சிறிது கொடுத்து இகழ்ந்ததனால் மிகவும் பெரிதாய்க் கையறவினைப் பயந்தது. சோறாக்குதற்கேற்றிய உலைப்பானையில் சோறு வாராது நெருப்பு வந்தது போல, நாம் நாடிப் போந்த நல்லோன் நம்நசை பழுதாக மாய்ந்தான்; தான் கொல்லக் கருதிய களிறாகிய இரை தவறுமாயின், வயப்புலி, வேறோர் எலியை வேட்டம்புரிந்து கொன்று பசிதீர நினையாது; அதுபோல் நாமும் இச் சிற்றளவாகிய பரிசிலை விரும்பி யேற்றல் முறையன்று; வேற்றிடம் சென்று பெரும் பரிசிலைப் பெறலாம்" எனத் தமது நெஞ்சோடு இனைந்து வருந்தித் தேறினார். அத் தேற்றம் இப் பாட்டுருவில் வெளி வந்தது.

    நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப்
    பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென         5
    நச்சி யிருந்த நசைபழு தாக
    அட்ட குழிசி யழற்பயந் தா அங்கு
    அளியர் தாமே யார்க வென்னா
    அறனில் கூற்றந் திறனின்று துணிய
    ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர்         10
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கது நோயின் றாக வோங்குவரைப்         15
    புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்
    எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக்
    கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசிற் றருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே.         20
    ----------

திணையும் துறையு மவை. வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.

உரை: நீடு வாழ்க என்று - நெடுங்காலம் வாழ்வாயாக என்று; யான் நெடுங்கடை குறுகி - யான் நெடிய வாயிலை யணுகி; பாடிநின்ற பசி நாட்கண் - பாடி நின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே; கோடைக் காலத்துக் கொழு நிழலாகி- கோடையான் வெம்மையுற்ற பொழுதின்கண் அடைந்தார்க்குக் கொழுவிய நிழலையொத்து; பொய்த்தல் அறியா உரவோன் - யார் கண்ணும் பொய் கூறுதலறியாத அறிவையுடையோனது; செவிமுதல் வித்திய பனுவல் - செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர்; நன்று விளைந்தன்று என - நன்றாக விளைந்ததென நினைத்து; நச்சியிருந்த நசை பழுதாக - பரிசிலை விரும்பியிருந்த அவ்விருப்பம் பயனில்லையாக; அட்ட குழிசி அழல் பயந்தாங்கு -அடப்பட்ட பானையினின்றும் சோறின்றி எரிபுறப்பட்டாற்போல; அளியர் - அளிக்கத்தக்கார்; ஆர்க என்னா அறனில் கூற்றம் - உண்பாராகவென்று கருதாத அறமில்லாத கூற்றம்; திறனின்று துணிய - கூறுபாடின்றாகி அவன் உயிரைக் கொள்ளத் துணிய; ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - முறையான் வெய்தாக மார்பின்கண் அறைந்து கொண்ட மகளிர்; வளை முறி வாழைப் பூவின் சிதற; முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்க - முதிய வாக்கினையுடைய சுற்றத்தோடு கூடிய பரிசிலர் இரங்க; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டின்கண்; வெள்வேல் விடலை சென்று மாய்ந் தனன் - வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்;அது நோய் இன்றாக - கூற்றம் நோயின்றியிருப்பதாக; ஓங்கு வரை - உயர்ந்த மலையிடத்து; புலி பார்த்து ஒற்றிய - புலி பார்த்துவீழ்த்த; களிற்றிரைபிழைப்பின் - களிறாகியஇரைதப்பின்; எலி பார்த்து ஒற்றாதாகும் - தனக்குஇரையாதற்குப்போதாத எலியைப் பார்த்து வீழ்த்தாதாகும்; மலி திரைக் கடல் மண்டு புனலின் - மிக்க திரையையுடைய கடலின்கண் மண்டிய ஆற்று நீர்போல; இழுமெனச் சென்று விரையப்போய்; நனியுடைப் பரிசில் தருகம் - மிகுதியை யுடைத்தாகிய பரிசிலைக் கொடு வருவேமாக; எழுமதி நெஞ்சே - எழுந்திராய் நெஞ்சே; துணிபு முந்துறுத்து - தெளிவை முன்னிட்டுக்கொண்டு; எ - று.

நசை பழுதாக அழற் பயந்தாங்குக் கூற்றம் துணிய விடலை மாய்ந்தன னெனவும், மகளிர் வளைமுறி வாழைப்பூவிற் சிதறவெனவும் துணிபு முந்துறுத்து நெஞ்சமே எழுவெனவும்கூட்டுக. நோயின்றாக வென்றது "குறிப்பிற்றோன்றல்" (தொல். பெய.3). ஆங்கது நோயின்றாக வென்றது இளவெளிமான் சிறிது கொடுப்ப அதனை இகழ்ந்து கூறிய தென்பாருமுளர். "புலி பார்த்தொற்றிய களிற்றிரை பிழைப்பின். எலி பார்த் தொற்றாதாகும்" என்பதூஉம் இவன்பின் கொடுத்த பரிசிலின் சிறுமை நோக்கி நின்றது.

"ஊழை யுருப்ப எருக்கிய மகளிர்" என்று பாடமோதி விதியை வெறுப்ப எருக்கிய மகளிர் என்றுரைப்பினு மமையும்.

விளக்கம்: "கோடைக் காலத்துக் கொழு நிழலாகி" என்ற விடத்து ஆகுதல் ஒப்புப் பொருள் உணர்த்திநின்றது. "பொய்த்தலறியா வுரவோ" னென்றதனால், பொய்யாமையாகிய நல்லறம் மிக்க திண்மையுடையார் பாலேகாணப்படும் என்பதும் தெரிகிறது. பனுவல், நல்லோர் உரைத்த நல்லுரை. நன்று விளைந்தன்று என இயைத்து நன்றாக விளைந்ததெனப் பொருள் கூறப்பட்டது. பழுது - பயனின்மை. "அட்ட குழிசி யழற் பயந்தாங்கு" என்பது பழமொழி. திறன் - கொள்ளத்தக்கார், தாகதார் எனக் கூறுபடுத்தறியும் அறிவு. அறிவின்மையான், உயிர் கொள்ளத்தகாத வெளிமான் உயிரைக் கொன்றதென வருந்திக் கூறுகின்றாராதலால், "திறனின்று துணிய" என்றார். எருக்குதல் மார்பிலறைந்து கொள்ளுதல்; இஃது அருக்குதல் எனவும் வழங்கும்; "மகளிர் குரூஉப் பைந்தார் அருக்கியபூசல்" (அகம். 208) என வருதல் காண்க. களர் நிலமே புறங்காடாக வகுக்கப்படுவது பற்றி, "கள்ளி போகிய களரியம் பறந்தலை" யென்றார். "பாறிறை கொண்ட பறந்தலை மாறுதகக், கள்ளி போகிய களரி மருங்கு" (புறம். 360)என்று பின்னரும் கூறுதல் காண்க. வெளிமான் முதுமை யெய்து முன்பே இறந்தமை தோன்ற, "வெள்வேல் விடலை சென்று மாய்ந்தனன்" என்றார். அது, அக் கூற்றம்; சுட்டினைக் கூற்றுக் கேற்றாது இளவெளிமான் சிறிது கொடுத்தற்கேற்றுதலும் உண்டென்பது தோன்ற "ஆங்கது.... என்பாருமுளர்" என்று உரைத்தார். களிறாகிய இரையைத் தின்னும் புலிக்கு எலி சிறிதும் ஆற்றாதாகலின், தனக்கு இரையாதற்குப் போதாத எலியென்று உரைத்தார்.இள வெளிமான் சிறிது கொடுப்ப மனத்தே கலக்கமும் சினமும் கொண்டாராதலால், "துணிபுமுந்துறுத்து எழுமதி" என நெஞ்சை ஒருப்படுத்தினார். பெருவேந்த னல்லனாதலின் இவ்வண்ணம் கூறினார். பெருவேந்தன் மறுத்த வழிப் "புலம்புமுந் துறுத்துச்" (புறம். 210) செல்லுப என அறிக.
-------

238. வெளிமான்

வெளிமானது நல்லூர்க்குப் போந்து அவன்பால் பரிசில் பெற்றுத் தமது வறுமைத் துன்பத்தைப் போக்கிக்கொள்வது கருத்தாக வந்தவர் ஆசிரியர் பெருஞ்சித்திரனார். அவர் வந்தபோது வெளிமான் துஞ்சும் நிலையில் இருந்தான். ஆயினும், பெருஞ்சித்திர னாரது பெருமையும் புலமையம் நன்கறிந்திருந்தமையின் முகத்தால் அன்புற நோக்கி இன்புற இருத்தி அவரை வரவேற்றான். தன் தம்பி இளவெளிமானை நோக்கிப் பெருஞ்சித்திரனாருக்கு வேண்டும் பரிசில் நல்கிச் சிறப்பிக்கு மாறு பணித்தான். பின்பு சிறிது போதில் வெளிமான் துஞ்சினான். அது கண்டு ஆற்றாது பெருஞ்சித்திரனார் பெரிதும் மனம் வருந்தி,"அவனது மறைவால் பாடுவார் கூட்டம் பரிவுற்று வருந்துமென்றும்,போர் முரசும் போர்க்களிறும் பிறவும் கையற்று மெலியுமென்றும் நினைந்து, மாரிக் காலத்திரவில் கலமொன்றிற் போந்த கண்ணில்லாத ஊமன், கலம் சிதைதலால் கடலில் வீழ்ந்து கலங்குவதுபோல யானும் கலங்குகின்றேன்; என் சுற்றம் என்னாகுமோ, அறியேன்; இறந்துபடுதலே தக்கது போலும்" என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடி வருந்தினார்.

    கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்
    பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்         5
    தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே
    ஆளில், வரைபோல் யானையு மருப்பிழந் தனவே
    வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப         10
    எந்தை யாகுத லதற்பட லறியேன்
    அந்தோ வளியேன் வந்தனென் மன்ற
    என்னா குவர்கொலெற் றுன்னி யோரே
    மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக்         15
    கண்ணி லூமன் கடற்பட் டாங்கு
    வரையளந் தறியாத் திரையரு நீத்தத்
    தவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமற் றகுதியு மதுவே.
    ---------

திணையும் துறையு மவை. வெளிமான் துஞ்சியபின் அவர் பாடியது.

உரை: கவி செந்தாழிக் குவி புறத்து இருந்த - பிணமிட்டுப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்த புறத்தே யிருக்க; செவி செஞ்சேவலும் பொகுவலும் வெருவா - செவி சிவந்த கழுகின் சேவலும் பொகுவலென்னும் புள்ளும் அஞ்சாவாய்: வாய்வன் காக்கையும் கூகையும் கூடி - வாய் வலிய காக்கையும் கோட்டானும் கூட்டி; பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் - பேயினத்துடனே தாம் விரும்பிய வழியே யியங்கும்; காடு முன்னினன் கள் காமுறுநன்; தொடி கழி மகளிரின் - அவனுடைய வளை கழிக்கப்பட்ட உரிமை மகளிரைப் போல; தொல் கவின் வாடி - பழைய அழகு தொலைந்து; பாடுநர் கடும்பும் பையென்றன - பாடுவாரது சுற்றமும் ஒளி மழுங்கின; தோடு கொள் முரசும் கண் கிழிந்தன - தொகுதி கொண்ட முரசங்களும் கண் கிழிந்தன; ஆளில் வரை போல் யானையும் மருப்பு இழந்தன - பாகர் முதலாயின ஆளில்லாத மலைபோன்ற யானைகளும் மருப்பிழந்துவிட்டன. வெந்திறல் கூற்றம் பெரும்போது உறுப்ப - இவ்வாறு வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்து பாட்டை எய்துவிப்ப; எந்தை ஆகுதல் - என்னிறைவன் பேதுறவெய்தி; அதற்படல் - அவ் விறந்துபாட்டிலே படுதலை; அறியேன் - அறியேனாய்; அந்தோ - ஐயோ; அளியேன் வந்தனென் -அளித்தலை யுடையேன் வந்தேன்; மன்ற என்னாகுவர்கொல் என் துன்னியோர் - நிச்சயமாக என்ன துயரமுறுவர் கொல்லோ என்னையடைந்த சுற்றத்தார்; மாரி இரவின் - மழையையுடைய இரவின்கண்; மரங்கவிழ் பொழுதின் - மரக்கலங் கவிழ்ந்த காலத்து; ஆரஞர் உற்ற நெஞ்சமொடு - பொறுத்தற்கரிய துன்பமுற்ற நெஞ்சுடனே; ஒராங்கு - ஒரு பெற்றிப்பட; கண்ணில் ஊமன் கடற்பட்டாங்கு - கண்ணில்லாத ஊமன் கடலின்கண் அழுந்தினாற்போல; வரையளந் தறியாத் திரையரு நீத்தத்து-எல்லையளந்தறியப்படாத திரையரிதாகிய வெள்ளத்தின்கண்; அவல மறுசுழி மறுகலின் - துன்பமாகிய மறுசுழியின்கட்பட்டுச் சுழலு மதனில்; தவலே நன்றுமன் - இறந்துபடுதலே நன்று; தகுதியும் அதுவே - நமக்குத் தக்க செய்கையும் அதுவே; எ - று.

யான் அது செய்யப் பெற்றிலேன் என்னும் நினைவிற்று. மன்: கழிவின்கண் வந்தது. வெருவா வழங்குமென இயையும். முரசும் கண் கிழிந்தன; யானையும் மருப்பிழந்தன என்ற கருத்து, அவற்றால்தொழில் கொள்வார் இன்மையின் அவை பயனிழந்தன என்பதாம்.

விளக்கம்: செவி செஞ் சேவ லென்பது எதுகை நோக்கி மொழி மாறி நின்றது: அது செஞ் செவிச் சேவலென நிற்றற்பாலதென்று தெய்வச்சிலையார் (கிளவி. 25) கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்தபடியே கொள்வர். "செவி சிவந்தசேவ" லென்பது, "வாய்வன் காக்கை" யென்பதற்குக் கூறப்படும் உரையோடு வைத்து ஒப்புநோக்கத்தக்கது. ஆகுதல், கூற்றம் புணர்க்கும் பேதுறவுக்கு இயைதல். அளியேனாதலின் வந்தனென்என்க. காணுந்திறமும் தன் துயரத்தை அரற்றி யுணர்த்தும் திறமும் இல்லாதவன் என்றற்குக் "கண்ணிலூமன்" என்றார். துன்பமாகிய வெள்ளமென்பது கருத்தாதல்பற்றி, "திரையரு நீத்தம்" எனப்பட்டது. வெள்ளமோடும் நெறியே யோடாது மறித்துச்சுழன்று சுழிதலால், மறுசுழி யென்றார். நன்று விளைவின் மேலும், தகுதி செய்கைமேலும் நின்றன. நினைவிற் றென்பது, குறிப்பெச்சத்தாற் கொள்ளக் கிடந்த தென்றவாறு. களிறுகள் மருப்பிழத்தலாவது, தொழில்கொள்ளும் பாகர் இல்லாமையால் பயன்படுதல் இழந்தன என விளக்கினார்.
---

239. நம்பி நெடுஞ்செழியன்

முடியுடைய வேந்தராகிய பாண்டியர்க்கு வினைவேண்டியவிடத்து அறிவும், படை வேண்டுமிடத்து வெல் படையும் தந்து புகழ் மேம்படு வித்த குறுநிலத் தலைவர் பலருண்டு. அவருள் வினை வகையில் வீறு எய்தியோர்க்குப் பாண்டிவேந்தர் தம்முடைய பெயர்களையே பட்டமாக வழங்குவர். இவ் வழக்கு ஏனைச் சோழர்பாலும் சேரர்பாலும் காணப்படும். இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இவ்வழக்காறு இருந்து வந்தது. இவ்வகையில் நம்பி யென்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன் அரியவினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான். அதனால் இவனைச் சான்றோர் நம்பி நெடுஞ்செழியன் என வழங்கினர். இவன் காலத்து முடியுடைப் பெருவேந்தன் பாண்டியன் நெடுஞ்செழியன் எனக் கருதலாம். இப் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன்பால் இந் நாட்டு வெண்புல நாட்டுப் பேரெயில் (A. R. No. 96 of 1894) என்னும் ஊரினாரன முறுவலார் என்ற நல்லிசைச் சான்றோர் பேரன்பு கொண்டொழுகினார். இவனுடைய பலவாகிய நற்பண்புகள் அனைத்தையும் அவர் பன்முறையும் கண்டு பயின்றிருந்தனர். இருக்கையில், நம்பி நெடுஞ்செழியன் எதிர்பாராவகையில் உயிர் துறந்தான். பிறர் படையால் இறவாமல் கூற்றத்தாற் கொள்ளப்படுபவர் நோலாதவர் என்ற கருத்தால், அக்காலத்துச் சான்றோர், வேல் வாள் முதலிய படைகளால் இறவாதார் உடம்பை, அடக்கம் செய்யுங்கால் படையால் போழ்ந்து நிலத்திற் புதைத்தலோ சுடுதலோ செய்வர். நம்பி நெடுஞ்செழியன் வாள் முதலிய படையாற் புண்பட்டிறவாமையால், செய்யத்தகுவது அறிய வேண்டி அக் காலையில் அங்கே கூடியிருந்த சான்றோர், நல்லிசைச் நெடுஞ்செழியனது எதிர்பாரா இறப்பு அவர்க்குப் பெரும் பேதுறவை விளைத்தது. அவர், "நம்பிநெடுஞ்செழியன் அறத்துறை, பொருட்டுறை, இன்பத்துறை யென்ற எல்லாத் துறையிலும் மாசற்க கடைபோகி மாண்புற்றவன். சுருங்கச் சொல்லுமிடத்து அவன் செய்யத் தகுவன வெல்லாம் சிறப்புறச் செய்தானாதலால், அவன் தலையை வாளாற் போழினும் சுடினும் எது செய்யினும் தகுவதாம்" என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடிக் காட்டிப் பரிவுற்றார்.

    தொடியுடைய தோண்மணந்தனன்
    கடிகாவிற் பூச்சூடினன்
    தண்மகமழுஞ் சாந்துநீவினன்
    செற்றோரை வழிதபுத்தனன்
    நட்டோரை யுயர்புகூறினன்         5
    வலியரென வழிமொழியலன்
    மெலியரென மீக்கூறலன்
    பிறரைத்தா னிரப்பறியலன்
    இரந்தோர்க்கு மறுப்பறியலன்
    வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன்         10
    வருபடை யெதிர் தாங்கினன்
    பெயர்படை புறங்கண்டனன்
    கடும்பரிய மாக்கடவினன்
    நெடுங்தெருவிற் றேர்வழங்கினன்
    ஓங்கியல களிறூர்ந்தனன்         15
    தீஞ்செறி தசும்புதொலைச்சினன்.
    பாணுவப்பப் பசிதீர்த்தனன்
    மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
    செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
    இடுக வொன்றோ சுடுக வொன்றோ         20
    படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
    -----------

திணையும் துறையு மவை. நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயில் முறுவலார் பாடியது.

உரை: தொடியுடைய தோள் மணந்தனன் - இளைய மகளிரது வளையணிந்த தோளை முயங்கினான்; கடிகாவில் பூச்சூடினன் - காவலையுடைய இளமரக்காக்களில் பூவைச் சூடினான்; தண் கமழும் சாந்து நீவினன் - குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான்; செற்றோரை வழி தபுத்தனன் - பகைத்தோரைக் கிளையொடுங் கெடுத்தான்; நட்டோரை உயர்பு கூறினன் - நட்டோரை மிகுத்துக் கூறினான்; வலியரெனவழி மொழியலன் - இவர் நம்மில் வலியரென்று கருதி அவர்க்கு வழிபாடு கூறியறியான்; மெலியரென மீக் கூறலன் - இவர் நம்மில் எளியரென்று கருதி அவரின் மிகுத்துச் சொல்லியறியான்; பிறரைத் தான் இரப்பறியலன்- பிறரைத் தான் ஒன்று ஈயெனச் சொல்லி இரந்தறியான்; இரந்தோரக்கு மறுப்பறியலன் - சூழ்ந்துநின்று இரந்தோர்க்கு யாதும் இல்லையென்று மறுத்தலை யறியான்; வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் - அரசருடைய அவைக்களத்தின்கண் தனது உயர்ந்த புகழை வெளிப் படுத்தினான்; வருபடை எதிர் தாங்கினன் - தன்மேல் வரும்படையைத் தன்னெல்லையுட் புகுதாமல் எதிர்நின்று தடுத்தான்; பெயர் படை புறங்கண்டனன் - புறக்கொடுத்துப் பெயரப்பட்ட படையினது புறக்கொடை கண்டு அதன்பின் செல்லாது நின்றான்; கடும்பரிய மாக்கடவினன் - விரைந்த செலவையுடைய குதிரையைத் தன் மனத்தினும் விரையச் செலுத்தினான்; நெடுந்தெருவில் தேர் வழங்கினன் - நெடிய வீதியின்கண் தேரைச் சூழ இயக்கினான்; ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் - உயர்ந்த இயல்புடையவாகிய களிற்றைச் செலுத்தினான்; தீஞ் செறி தசும்பு தொலைச்சினன் - இனிய செறிவை யுடைத்தாகிய மதுவையுடைய குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தொலைவித்தான்; பாண் உவப்பச் பசி தீர்த்தனன் - பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்; மயக்குடைய மொழி விடுத்தனன் - நடுவு நிலைமையின் மயங்குதலையுடைய சொற்களை அந் நடுவு நிலைமையிற் பிழையாதபடி மயக்கந்தீரக் கூறினான்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் - அப்படிச் செய்யத் தகுவனவெல்லாம் செய்தானாகலான்; இப் புகழ் வெய்யோன் தலை - இப் புகழை விரும்புவோனது தலையை; இடுக - வாளானறுத்துப் போகடினும் போகடுக; சுடுக - அன்றிச் சுடினும் சுடுக; படுவழிப் படுக பட்டபடி படுக; எ - று.

"நட்டோரை உயர்பு கூறினன்" என்றது, தான் உயர்த்துக் கூறவே யாவரும் உயர்த்துக் கூறுவரென்பதாம். "மயக்குடைய மொழி விடுத்தனன்" என்பதற்கு உலகவொழுக்கத்தில் மயக்கமுடைய சொற்கள் தன்னிடைப் புகுதாமல் விடுத்தானென்றும், பொருள் மயங்கிய சொற்களைத் தன்னிடத்துப் புகுதாமல் விடுத்தானென்றும் உரைப்பினும் அமையும். ஒன்றே வென்பது எண்ணிடைச் சொல்.

விளக்கம்: பேரெயில் என்றோரூர் சோழநாட்டிலும் உளது. ஆயினும், முறுவலார் பாண்டித் தலைவனைப் பாடியிருப்பதாலும், பாண்டி நாட்டிலும் இப் பெயருடையதோரூர் இருத்தலாலும் இவர் பாண்டி நாட்டினரென்பது வலியுறுகிறது. நம்பிநெடுஞ்செழியன் பெயர். நெடுமொழியனென்றும் காணப்படுகிறது. நம்பிநெடுமொழியன் என்பதே பாடமாயின், நெடுமொழியனூரென்றோரூர் தென்னார்க்காடுவட்டத்தில் உண்மையின், பேரெயின் முறுவலார் சோழநாட்டினரெனத் துணியலாம். தொடி, மகளிர்க்குரிய சீரிய அணியாதலின், அதுவே இளமகளிரைக் குறிப்பதாயிற்று. "சுடர்த்தொடீஇ கேளாய்" (கலி.51.) என வருதல் காண்க. அதனால் தொடியுடையதோள் என்றதற்கு "இளைய மகளிரது வளையணிந்த தோள்" என உரை கூறப்பட்டது. பழம்பகை ஒருகாலும் நட்பாகாமை குறித்து, அதனை "வழிதபுத்தனன்" என்றார். வழிமொழிதலாவது, யாது கூறினும் தலை குனிந்து உடன்பட்டொழுகுதல். "வேந்துடை அவையத் தோங்கு புகழ் தோற்றினன்" எனவே, இந்நெடுஞ்செழியன் முடி வேந்தனல்ல னென்பது தெள்ளிதாம். புறங்கண்ட வழி, அப் புறங்காட்டினாரை யெறிதல் மறத்துறையாகாமையின், "புறக் கொடை கண்டு அதன்பின் செல்லாது நின்றான்" எனவுரைத்தார். கடவுதல் விரையச் செலுத்துதலாதலால், கடவினன் என்றதற்கு "மனத்தினும் விரையச் செலுத்தினான்" என்றார். தசும்பு- கட்குடம். தீஞ்செறி, இனிய செறிவை யுடைத்தாகிய கள். தொலைச்சினன் என்றது பலர்க்கும் வழங்கித் தீர்த்தான் என்பதாம். மயக்குடைய மொழியென்பது மயங்குதலையுடைய மொழியெனவும் மயக்கமுடைய சொற்கள் எனவும், பொருள் மயங்கிய சொற்கள் எனவும் மூவகையாகப் பொருள்பட நிற்றலால் மூன்று பொருளும் எடுத்துக் காட்டினார். இடுகவென்றதற்குப் புதைக்க என நேர் பொருள் கூறாது, "வாளால் அறுத்துப் போகடினும் போகடுக" என்றது, இவ்வாறு வாளாற் போழப்பட்டாரைச் சுடுவது மரபன்மையின், அப்பொருள் தானே பெறப்படவைத்தார். மேலும் இங்கு இடுதல், சுடுதல் என்பனவற்றைப் பற்றி யன்று ஆராய்ச்சி எது செய்யினும் கேடில்லை யென்றற்கு, "படுவழிப்படுக" என்றார்.
---

240. ஆய் அண்டிரன்

பொதியமலையைச் சூழ்ந்த வேணாட்டுக்குரியனாய் ஆய்குடியிலிருந்து ஆட்சிபுரிந்துவந்த வள்ளலாகிய ஆய் அண்டிரன், புலவர் பாணர் முதலிய பலர்க்கும் ஈத்துப் புகழ் நிறுவி என்றும் பொன்றா இசைவடிவினனாய் இருந்துவந்தான். மேலைக் கடற்கரையில் பொதியின் மலையை நடுவாகக் கொண்டு வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிடந்த நாடு வேளிர்க்குரிய வேணாடாகும். இதன் வடக்கில் குட்டநாடும் தெற்கில் குமரிப் பகுதியான தென்பாண்டி நாடும் இருந்தன. இவ்வேணாட்டை மேனாட்டுத் தாலமி முதலிய அறிஞர் ஆவி (Avi) நாடெனக் குறித்தனர். இதனை ஆண்டவேந்தர், வேள், வேளிர், வேண்மான் என்றும் வேணாட்டடிகள் என்றும் தம்மைக் கூறிக் கொண்டனர். இந் நாட்டின் தென்பகுதியில் பொதியிலைச் சூழ்ந்து ஆய் அண்டிரனது நாடு இருந்தது. செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடியைத் தலைமையாகக் கொண்டு ஆய்குடிப்பகுதி யென்றொரு பகுதியுளது. குட்டநாட்டுச் சேரர்களுக்கும் தென்பாண்டி வேந்தர்க்கும் இடையிலிருந்த ஆய் நாடு கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுவரையில் பல இன்னல்களுக்கிடையே ஆய் குடியில் தோன்றிய வேந்தராட்சியில் இருந்து வந்தது. ஆய் அண்டிரன் ஆய்குடியைத் தோற்றுவித்த முதல்வனாகலாம் எனக் கருதுவர். பழுமரந் தேர்ந்து வரும் பறவை போலப் புலவர் பலரும் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தனர்; அண்டிரனும் அவர் வேண்டுவனவற்றை ஆர வழங்கிக் கொண்டு வந்தான். அவன் வாழ்நாள் முடிந்தது. கண்ணிலாக் காலன் அவன்பால் உயிர்கவர்ந் தொழிந்தான். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட அண்டிரன் மேலுலகம் சென்றான். சான்றோர் அவன் உடம்பை ஈமத்தெடுத்த எரியில் இட்டனர்; அவன் உருவுடம்பு மாய்ந்தது; அதனோடு அவன் உரிமை மகளிரும் மாய்ந்தனர். அந் நிகழ்ச்சி கண்ட புலவர் பலரும் கையற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் வேறு நாடு செல்வாராயினர். இவற்றை உடனிருந்து கண்ட சான்றோருள் குட்டுவன் கீரனார் என்பவர் ஒருவர். அவர் குட்ட நாட்டுச் சிறப்புடைய குட்டுவர் குடியிற் பிறந்தவர். கீரன் என்பது அவரது இயற்பெயர். அவர் அண்டிரன் இறந்ததும் உரிமை மகளிர் உடனுயிர் விடுத்ததும் கண்டு கலங்கிய தொருபுறம் நிற்க, கற்று வல்ல புலவர் பலரும் வேறுநாடு செல்வது கண்டு மிகவும் மனங்கலங்கினார். அக் கலக்கத்திடை இவ்வினிய பாட்டையும் பாடினார்.

    ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும்
    வாடா யாணர் நாடு மூரும்
    பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன்
    கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு
    கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப         5
    மேலோ ருலக மெய்தின னெனாஅப்
    பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி
    ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது         10
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசிய ராகிப்பிறர்
    நாடுபடு செலவின ராயின ரினியே.
    ------

திணையும் துறை மவை. ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

உரை: ஆடுநடைப் புரவியும் - தாளத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடையையுடைய குதிரைகளும்; களிறும் தேரும் - யானைகளும் தேர்களும்; வாடாயாணர் நாடும் ஊரும் - அழியாத புதுவருவாயையுடைய நாடும் ஊர்களும்; பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் - பாடுவார்க்குக் குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன்; கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு - கோடேந்திய அல்குலினையும் குறிய வளைகளையுமுடைய உரிமை மகளிரோடு; காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப - காலனென்று சொல்லப்படாநின்ற கண்ணோட்ட மில்லாதவன் கொண்டுபோக; மேலோர் உலகம் எய்தினன் எனாஅ தேவருலகத்தை யடைந்தானாகக் கொண்டு; பொத்த அறையுள் - பொந்தாகிய தான் வாழுமிடத்து;போழ்வாய்க் கூகை - போழ்ந்தாற் போலும் வாயலகையுடைய பேராந்தை; சுட்டுக்குவி எனச் செத்தோர்ப் பயிரும் - சுட்டுக் குவியென்று செத்தோரை அழைப்பதுபோலக் கூவும்; கள்ளியம் பறந்தலை - கள்ளியையுடைய பாழிடமாகிய புறங்காட்டுள்; ஒரு சிறை அல்கி - ஒரு புடையிலே தங்கி; ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது - ஒள்ளிய தீச்சுட உடம்பு மாய்ந்துவிட்டது; புல்லென் கண்ணர் - பொலிவழிந்த கண்ணினையுடையராய்; புரவலர்க் காணாது - தம்மைப் பாதுகாப்போரைக் காணாது; கல்லென்சுற்றமொடு கையழிந்து - ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று; புலவர் - அறிவுடையோர்; வாடிய பசியராகி - தம் மெய்யுணங்கிய பசியையுடையராய்; ----------- 90 பிறர் நாடுபடு செலவினராயினர் இனி - பிறருடைய நாட்டின்கண் தலைப்படும் போக்யைுடையராயினார் இப்பொழுது, இஃதொரு நிலையிருந்தவாறென்னை; எ - று.

"மேலோருலகம் எய்தினன் எனவே" எனவும், "ஒள்ளெரி நைப்பவுடம்பு மாய்ந்தனனென" எனவும் பாடமோதுவாருமுளர்.

விளக்கம்: ஆஅய் அண்டிரன் இறந்தபின் அவனுடைய வழியினர் இடைக் காலப் பாண்டியர் காலத்திலும் இருந்தனர்; இதனை வேள்விக் குடிச் செப்பேடுகள், சீமாறவன்மன், அரிகேசரி பாண்டியன் மகனான கோச்சடையன் இரணதீரனென்பவன் "கொற்றவேல் வலனேந்திப், பொருதூருங் கடற்றானையை மருதூருள் மாண்பழித்து, ஆய்வேளையகப் படவே யென்னாமை யெறிந்தழித்து" மண்ணினிதாண்டான் என்று கூறுவது காண்க. ஆடு நடை - அசைந்த நடை; விரைந்து செல்லும் இயல்பினதாகிய குதிரையை இவ்வாறு கூறுதற்குக் காரணம் காட்டுவாராய்த் "தாளத்திற் கேற்ப நடக்கும் அசைந்த நடை" யென்றார். அருகுதல், குறைதல்; அருகாது கொடுப்பன் எனவே, "குறைவறக் கொடுக்கும்" என்றார். தன் செயலாற் புலவர்க்குளதாகும் துன்பத்தைக் கண்டு வைத்தும் கண்ணோட்டஞ் செய்து ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போகும் கருத்தைக் கைவிடாமையின், "காலனென்னுங் கண்ணிலி" யென்றார். செத்தோரை யழைத்தலாவது, புறங்காட்டிலிருந்து பேராந்தை அலறுகுரல் செய்தல்; அதுசெத்தவர்களை விரையத் தன்பால் வருமாறு அழைப்பது போலிருத்தலின். "சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்" என்று உரைத்தார். ஓர்த்தது இசைக்கும் பறை யென்றதற்கேற்ப, ஆந்தையின் பறைக்குரல் இவ்வாறு ஓர்க்கப் பட்டது.

241. ஆய் அண்டிரன்

ஆய் அண்டிரன் இறந்தபோது அவனை யடக்கம் செய்த சான்றோரிடையே உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் இருந்தனர். அண்டிரனோடு பன்னாள் நெடிதிருந்து பயின்று பழகிய கேண்மையராதலின், மோசியாருக்கு அவனது பிரிவு பெருந்துயரத்தை விளைத்தது. அந் நிலையில் அண்டிரன் உடம்பு ஈமவெரியில் எரிவதும், அவனுடைய உரிமை மகளிர் உடன் வீழ்ந்து எரிவதும் கண்டார். தம்முடைய இரு கண்களையும் ஆற்றாமையால் மூடிக்கொண்டார்; அவர் மனக்கண்ணில் ஆய் அண்டிரன் அவன் உரிமை மகளிர் உடன் சூழ்வரத் தேவருவலகம் சென்று சேரும் காட்சி புலனாயிற்று. இம்மையில் அற வாழ்வு வாழ்ந்து, மறுமையில் நுகர்தற்குரிய இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டிவரும் ஆயைத் தேவருலக வேந்தன் பெருவிருப்பத்தோடு வரவேற்கும் திறத்தை மனமே கண்ணாகக் கண்டார்; தேவர்கோன் பெருங் கோயிலுள்ள வரவேற்பு முரசு முழங்குகிறது; தேவர் கூட்டத்தில் பேராரவாரம் எழுகிறது; வானமெங்கும் பெருமுழக்கம் எதிரொலிக்கின்றது. இதனை இப் பாட்டின்கட் குறிக்கின்றார் நம் ஏணிச்சேரி முடமோசியார்.

    திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
    அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
    வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
    போர்ப்புறு முரசங் கறங்க
    ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.         5
    ------

திணையும் துறையு மவை. அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

உரை: திண் தேர் இரவலர்க்கு ஈத்த - திண்ணிய தேரை இரவலர்க்கு ஈத்த; தண் தார் அண்டிரன் வரூஉம் என்ன - குளிர்ந்த மாலையையுடைய ஆய் வருகிறான் என்று; ஒண்தொடி - ஒள்ளிய தொடியினையும்; வச்சிரத் தடக்கை நெடி யோன் கோயிலுள் - வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலுள்ளே; போர்ப்புறு முரசம் கறங்க - போர்த்தலுற்ற முரசம் முழங்க; விசும்பினான் ஆர்ப்பெழுந்தன்று - வானத்தின்கண் ஓசை தோன்றிற்று; எ - று.

இப் பெற்றிப்பட்ட வள்ளியோனை வானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு. இது தற்குறிப்பேற்ற மென்பதோர் அணிப்பொருட்டாய் நின்றது.

விளக்கம்: மோசியின் பெயரால் தமிழ்நாட்டில் பல வூர்களுண்டு; தொண்டை நாட்டில் மோசிப்பாக்கம் என்றும், நடு நாட்டில் மோசு குளத்தூரென்றும், பாண்டி நாட்டில் மோசி குடியென்றும் இருத்தல் காண்க. அண்டிரன் என்பதற்கு ஆய் என உரை கூறப்படுவதால், ஆய் என்பது குடிப்பெயரென்றும், அண்டிரன் என்பது இயற்பெயரென்றும் உணர்தற்கு இடமுண்டாகிறது. நெடியோன், இந்திரன். "இப்பெற்றிப் பட்ட...தென்றவாறு" என்றது குறிப்பெச்சம். ஒரு புலவன் தான் கருதிய குறிப்பை உயர்த்துச் சொல்வது தற்குறிப்பேற்றம். அண்டிரனைத் தேவருலகத்து வேந்தன் எதிர்கொண்டு வரவேற்பன் என்பது மோசியார் குறிப்பு; இதனை இந்திரன் கோயிலுள் ஆங்கு வரும் அண்டிரனை வரவேற்றற்பொருட்டு முரசு முழங்குகிறது என உயர்த்துக் கூறுதலால் தற்குறிப்பேற்றமாயிற்று.
--------

242. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைத் தனியரசின்கீழிருந்த ஊர்களுன் ஒன்று. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்ற பெயர் வழங்குகிறது. இதனைச் சூழவுள்ள பகுதி ஒல்லையூர் நாடெனப்படும். சோழ நாட்டிற்கும் பாண்டிநாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென்வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் வழங்கின. தென் கோனாட்டின் மேலைப்பகுதி ஒல்லையூர் நாடு. இந்த ஒல்லையூரில் வாழ்ந்த கிழானுக்குப் பெருஞ்சாத்தன் இனிய மகனாய்ப் பாண்டிநாட்டின் வடகோடியில் இருந்து சோழர்க்கும் பாண்டியர்க்கும் அடிக்கடி நிகழ்ந்த போரில் ஈடு பட்டுப் பாண்டியர்க்கு வெற்றி பயந்து வந்தான். சாத்தனது பெருமை முற்றும் அவனுடைய போராண்மையிலும் தாளாண்மையிலும் கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது. இந் நலமுடைமை கண்ட நல்லிசைச் சான்றோர் இவனை நயந்து பாடிச்சிறப்பித்தனர்.

பெருஞ்சாத்தன் நல்வாழ்வு வாழ்ந்து முடிவில் வானுலகு பெயர்ந்தான். அப்போது அவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோருள் குடவாயில் கீரத்தனார் என்பாரும் ஒருவர். குடவாயில் சோழநாட்டில் உள்ளதோர் ஊர். கீரத்தனார் அவ் வூரினராயினும், அவர்க்கு "யாதும் ஊரே; யாவரும் கேளிரே." அதனால் அவர் மனத்தின்கண் பெருஞ்சாத்தன் பிரிவு பெரு வருத்தத்தை யுண்டாக்கியது. பெருஞ்சாத்தன் இறந்தபின் கீரத்தனார் குடவாயில் நோக்கிச் செல்வாராயினர். அக்காலையில் ஒல்லையூர் நாட்டைக் கடந்து வருபவர் வழியில் முல்லைக் கொடி பூத்திருப்பக் கண்டார். அதன் அழகும் மணமும் கீரத்தனார் உள்ளத்தில் பல எண்ணங்களை எழுப்பின. இன்பக் காலத்தில் முல்லைப் பூவை இளையர் பலரும், செவ்வி மகளிரும் வரைவின்றிச் சூடிக் கொள்வர்; பாணருள்ளும் பாண்மகன் அதனைத் தன் யாழ்க் கோட்டால் வாங்கிச் சூடிக் கொள்வான்; பாண்மகளும் தன் கூந்தலிற் சூடி இன்புறுவாள். பெருஞ்சாத்தன் இறந்தபின் இவர்கள் துயருறுகின்றனர். இன்பக் காட்சியும் துன்பக் காட்சியும் கீரத்தனார் கண்களில் மாறி மாறித் தோன்றின. முல்லைக் கொடியை நோக்கினார்; "முல்லையே, பெருஞ்சாத்தன் இறந்தபின் இத் துன்பக் காலத்தில் நின்னை இளையரும் சூடார்; வளையணியும் பருவ மகளிரும் கொய்து குழலிற் சூடார்; பாணனும் சூடான்; பாடினியும் அணியாள், இந்த ஒல்லையூர் நாட்டில் நீ ஏனோ பூத்துள்ளாய்" என்பாராய் இப்பாட்டைப் பாடினார்.

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி யணியாள்
    ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
    வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை         5
    முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.
    -----------

திணையும் துறைவு மவை. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.

உரை: இளையோர் சூடார் - இளைய வீரர் சூடார்; வளையோர் கொய்யார் - வளை யணிந்த இளைய மகளிர் பறியார்; நல்லி யாழ் மருப்பின் மெல்ல வாங்கி - நல்ல யாழ்க் கோட்டின் மெல்ல வளைத்து; பாணன் சூடான் - பாணன் பறித்துச் சூடிக் கொள்ளான்; பாடினி அணியாள் - பாடினி சூடாள்; ஆண்மை தோன்ற தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்பட; ஆடவர்க்கடந்த - வீரரை எதிர் நின்று கொன்ற; வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை - வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு; முல்லையும் பூத்தியோ - முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ; ஒல்லையூர் நாட்டு - அவனது ஒல்லையூர் நாட்டின்கண்; எ - று.

"அவனையிழந்து கொடியேனாய் வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோ?" என எச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வார் இன்மையின் பயனில்லை யென்றதாம்.

விளக்கம்: குடவாயிற் கீரத்தனார் பெயர் குடவாயில் நல்லாதனா ரென்றும் ஏடுகளிற் காணப்படுகிறது.பெயர் வகையில் வேறுபாடுண்டாயினும் ஊர் வகையில் அஃதில்லாமை குறிக்கத்தக்கது. கொங்கு நாட்டிலும் குடவாயில்என்றோர் ஊர் பொங்கலூர்க்கா நாட்டிலுள்ளதெனக் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரைக்கல்வெட்டொன்று (A. R. No.6 of 1923) கூறுகிறது. தம்மைப் புரக்கும் புரவலர் இறப்பின் , புரக்கப்படும் மகளிரும் வீரருமேயன்றிப் பரிசி லராகிய பாணரும் பிறரும் தம்மை ஒப்பனை செய்து கொள்ளாராகலின், "பாணன் சூடான் பாடினியணியாள்" என்றார்; பிறரும் "தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே" (புறம்.238) என்பது காண்க. முல்லை மிக மென்மையுடையதாகையால் , அதனை யாழ்ப்பாணன், யாழ்க்கோட்டால் "மெல்ல வாங்கி"ச் சூடுவானாயினான்; யாழ்க்கோட்டின் மென்மைபற்றி இவ்வாறு செய்வன் எனினுமாம் . யாழ்க்கோடு வளைந் திருத்தல் பற்றி, முல்லையை வாங்குதற்குஏற்றதாயிற்று. "கொடிது யாழ்கோடு" (குறள். 279) என்பர் திருவள்ளுவர். இதன் அமைதியை விபுலாநந்த அடிகள் கண்ட யாழ்நூல் யாழுறுப் பியலிற் காண்க. இளையோர் முதல் பாடினி யீறாகப் பலர்க்கும் பயன் படாமையின், "பூத்தியோ"என்றார். இதற்குப் பழையவுரைகாரர் கூறும் உரை அறிந்து இன்புறத்தக்கது.
------

243. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

ஒல்லையூர் கிழான் மகனான பெருஞ்சாத்தன் பேரிளையனாய் இருந்த காலத்தில் ஒருகால் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார்.சாத்தனும் அவரை மிக்க அன்புடன் வரவேற்று இனிமை மிகப்பேசி அளவளாவினான். வேறுபல சான்றோரும் அங்கே கூடியிருந்தனர் . அக் கூட்டத்தில் இளமையின் வளமை பற்றிப் பேச்சுண்டாயிற்று. இளமையிற் சிறந்த வளமை இல்லாமையும், அக்காலத்தே இளைஞர் உள்ளம் இன்பக் களி யாட்டில் பெரிதும் ஈடுபடும் திறமும் பிறவும் விரிய ஆராயப்பட்டன. அக்கூட்டத்திருந்த சான்றோருள் தொடித்தலைவிழுத்தண்டினாரும், வேறு சிலரும் மிக்க முதியராய் இருந்தனர். முதுமையிலும் கழிந்த இளமைபற்றி அவரையுள்ளிட்ட சான்றோர் வளமையுறப் பேசுவது எல்லோர்க்கும் இன்பத்தை யுண்டு பண்ணிற்று. முடிவில் நம் தொடித்தலை விழுத்தண்டினர் இளமைச் செய்கைகளை ஒரு வகையால் தொகுத்துரைப்பாராய், மறையும் மாயமும் அறியாத இளையரொடு கூடி நீரிற் பாவை வைத்து விளைாயடியதும், நெடுநீர்க் குட்டங்களிற் குதித்து மணல் காட்டி மகிழ்ந்ததும், பிறவும் கூறி, "இத்தகைய இளமை இப்போது எங்கோ சென்று ஒளிந்துவிட்டது; இப்போது அது கழிந்துவிடவே, மேனியில் நடுக்கமும் இருமல் கலந்த சொல்லும் தண்டூன்றியல்லது நடவாத தளர்ச்சியுமுடைய முதியராயினோம்; யாம் இப்போது இளமையை நினைப்பின் நெஞ்சில் இரக்க முண்டாகிறது" என்பவர் இதனையே ஒரு பாட்டின் கண் வைத்துப் பாடினார். அப் பாட்டே இது. இதன்கண் தாம் கைக் கொண்டு செல்லும் தண்டினைத் "தொடித்தலை விழுத்தண்டு" என்று சிறப்பித்த நலங்கண்ட சான்றோர் இவரைத்"தொடித்தலைவிழுத்தண்டினார்"என அழைக்கலுற்றனர். அது பெரு வழக்கான மையின் , அவரதுஇயற்பெயர்மறைந்துபோயிற்று.

    இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
    செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
    தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறையென லறியா மாயமி லாயமொ         5
    டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா விளமை         10
    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோர்
    தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
    றிருமிடை மிடைந்த சிலசொற்
    பெருமூதாளரே மாகிய வெமக்கே.
    --------

திணையும் துறையு மவை. அவனைத் தொடித்தலை விழுத்தண்டினர் பாடியது .

உரை: இனி நினைந்து இரக்கமாகின்றது - இப்பொழுது நினைந்து இரக்கமாகாநின்றது ; திணி மணல் செய்வுறு பாவைக்கு செறிந்த - மணலிடத்துச் செய்யப்பட்ட வண்டற் பாவைக்கு; கொய்பூத தைஇ - பறிக்கப்பட்ட பூவைப் பறித்துச் சூடி; தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து - குளிர்ந்த பொய்கையின்கண் விளையாடும் மகளிரோடு கைகோத்து; தழுவு வழித் தழீஇ - அவர் தழுவினவிடத்தே தழுவி; தூங்கு வழித் தூங்கி - அசைந்தவிடத்தே அசைந்து ; மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு - ஒளித்துச் செய்யும் அஃதறியாத வஞ்சனையில்லாத இளமைந்தருடனே கூட; உயர்சினை மருதம் - உயர்ந்த கோடுகளுடைய மருதினது; துறையுறத் தாழ்ந்து - துறையிலே வந்து உறத்தாழ்ந்து; நீர் நணிப் படி கோடு ஏறி - நீர்க்கு அண்ணிதாகப் படிந்த கொம்பிலே யேறி ; சீர் மிக - அழகு மிக; கரையவர் மருள - கரையிடத்து நிற்போர் வியப்ப; திரையகம் பிதிர - திரையிடத்துத் திவலையெழ; நெடு நீர்க் குட்ட த்துத் துடும் எனப்பாய்ந்து குளித்து - ஆழத்தான் நெடிய நீரையுடைய மடுவின்கண் துடுமென்றொலிப்பக் குறித்து மூழ்கி; மணல் கொண்ட கல்லா இளமை - மணலை முகந்து காட்டிய கல்வியில்லாத இளமை; அளிது - இரங்கத்தக்கது; யாண்டு உண்டு கொல்லோ - அவ்விளமை எவ்விடத் துண்டு கொல்லோ; தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி - பூண் செறிந்த தலையையுடைய பரிய தண்டுக்கோலை யூன்றி; நடுக்குற்று - தளர்ந்து; இரும் இடைமிடைந்த - இருமல் இடையே நெருங்கின; சில சொல் பெருமூதாளரேம் ஆகிய எமக்கு - சில வார்த்தையையுடைய பெரிய
முதுமையையுடையேமாகிய எங்களுக்கு; எ - று.

எமக்கு இளமை யாண்டுண்டு கொல்லோ; அதுதான் இரங்கத்தக்க தெனக் கூட்டுக. இளமை கழிந்து இரங்கிக் கூறுதலான் இதுவும் கையறு நிலையாயிற்று.

"மறையென வறியார்" என்று பாடமோதுவாருமுளர்.

விளக்கம்: தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர், இளிவர லென்னும் மெய்ப்பாட்டுக்கு இதனை யெடுத்துக்காட்டி, "தன்கண் தோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை, இளமைக் காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக் காலத்து என்றமையின்" (தொல். மெய். 9) என்பர். நச்சினார்க்கினியார், "கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை" (தொல். புறத். 24) யென்பர். பாவை, வண்டற் பாவை. "சிறுவீ ஞாழல் தோன்றோய் ஒள்ளிணர், நேரிழை மகளிர் வார்மண லிழைத்த, வண்டற் பாவை வனமுலை முற்றத், தொண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்" (நற். 191) எனப் பிறரும் கூறுதலாலறிக. மறைப் பறியாதவழி மாயமும் இல்லையாதலால், "மறையெனலறியா மாயமில் ஆயம்" என்றார். ஆயம், ஈண்டு இளைய மைந்தர் மேற்று. இரும், இருமல்.
---

244. கையறுநிலை

ஒருவன் தான் உறுகின்ற துன்பத்தை மான் கலை ஒன்று எய்தி வருந்து வதுபோல இப் பாட்டைப் பாடியுள்ளான். இப்பாட்டு முழுவதும் கிடைத்திலது; பாடினவர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும் தெரியவில்லை. உரையின் இறுதிப்பகுதி கிடைத்திருக்கிறது. ஆகவே, உரைகாரர் காலத்தே செம்மையுற இருந்த இப்பாட்டு, தமிழன் அறிவறை போகித் தன் தமிழின்பால் மெய்யன்பிலனாகிய, காலத்தே தன் உருவம் சிதைந்து அழிந்து போயிற்று. இன்றும் அதுவே நிலை.

    பாணர் சென்னியும் வண்டுசென் றூதா
    விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா
    இரவன் மாக்களும்...
    -----

திணையும் துறையு மவை.

உரை: பாணர் சென்னியும் - பாணர்களுடைய தலையும்; வண்டு சென்று ஊதா - வண்டுகள் படிந்து தாதூதுவதொழிந்தன; விறலியர் முன்கையும் - விறலியருடைய முன்கைகளும், தொடியின் பொலியா - தொடியணிந்து விளங்குவதொழிந்தன; இரவன் மாக்களும் - இரவலர்களும்... முசுக்கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தனர்...சாதலென்பது இன்னாதாகலின் பெரும் பிறிதாயின்றோ என்றான். தானுறுகின்ற துன்பத்தைக் கலைமேல் வைத்துக் கூறியவாறு.

விளக்கம்: தம்மைப் புரப்பவர் இனிய செவ்வியராகிய வழி பாணர் தம் தலையிற் பூக்களைச் சூடி யின்புறுவர். அப் பூவின் தேனாடி வண்டுகள் சென்று படிந்து ஊதும். விறலியரும் தம் முன்கையில் தொடியணிந்து விளங்குவர். பாணர் முதலியோரைப் பேணும். தலை மகன் துன்புற்றானாக, அதனால் கையறவுற்ற சான்றோர் ஒருவர், "பாணர் சென்னியும் வண்டு சென்...றூதா" விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா, இரவன் மாக்களும்..." என்று பாடியுள்ளார். பரிசில் பெற்ற பாணர் புதுப் பூக்களைத் தலையிலணிந்து வாயில் விருந்தினுண்ட கள் மணங்கமழ வருங்கால் வண்டு மொய்த்தரற்றுமாகலின், அந்நிலையைப் பிறர், "கண்டோர் மருளும் வண்டு சூழ்நிலை" (பொருந. 97) என்பர்; அந்நிலை கழிந்தமை குறித்து நிற்றலின், "பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா" என்றார். பாணர்க்குத் தாமரையும் விறலியர்க்குத் தொடி முதலிய இழையும் பரிசிலாகத் தரப்படும். கையறவு எய்துங் காலத்து மகளிர் தொடி கழித்து வருந்தும் நிலைமை விளங்க, "விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா" என்றார்; "தொடிகழி மகளிரின் தொல் கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென்றனவே" (புறம். 238) என்று பிறரும் கூறுதல் காண்க. இப்பாட்டின் சிதைந்த பகுதியில், கலையாகிய இரலையொன்று காட்டில் பெருந்துன்பமுறுதலைக் கண்டு அதன் துன்ப நிகழ்ச்சியைக் குறித்துப் பாடியுள்ளார். அப் பகுதி கிடைத்திலது. அதன்கண் கலையென்று வாளாகூறாது, கலையாகிய இரலையெனக் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் கூறலுற்ற உரைகாரர், "முசுக்கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தார்" என்று உரைத்துள்ளார். அப் பகுதியில் ஒருவன் கலைமான் உற்ற துன்பம் கண்டு கூறுபவன் அதன் காதற் பிணையாகிய மான் இறந்து போயிற்றுப் போலும் என ஐயுற்று, அவ்வாறு கூறாது "பெரும் பிறிதாயின்றோ" என்று இசைத்துள்ளான். அதுகுறித்து விளக்கம் கூறவந்த உரைகாரர், "சாலென்பது...என்றான்" என்று கூறுகின்றார். இப் பாட்டு முழுவடிவும் காண்டற்குரிய நற்பேறு நமக்கு இல்லை.
-------

245. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

கோட்டம்பலமென்பது சேரநாட்டூர்களுள் ஒன்று. இக்கோட்டம் பலம், இப்போது அம்பலப்புழை யென்னும் இடமாகும்; கடற்கோட்டில் உள்ள அம்பலமாதலின், இது கோட்டம்பலம் எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே அம்பலப் புழையென மாறிற்றாதல் வேண்டும்; இன்றும் இது தொன்மைச் சிறப்புடைய ஊராகவே விளங்குவதும், இப்பகுதியில் மாக்கோதை மங்கலமென ஓர் ஊர் இருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இது சில ஏடுகளில் கூத்தம்பலம் எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. கூத்தம்பல மென்பதே பாடமாயின், இறைவன் கோயில்களிற் காணப்படும் இக் கூத்தம்பலங்களுள் ஒன்றிலிருந்து இம் மாக்கோதை துஞ்சினான் எனக் கோடல்வேண்டும். திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (T.A.S. Vol. VI of 1927, p.35) கூறுகின்றன. சேரமான் மாக்கோதை தன் இறுதிநாளில் இக் கோட்டம்பலத்தில் இருந்து இறந்தான். அதனால் அவனைச் சான்றோர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவாராயின். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவள் இவனுக்குப் பேரிளமைப் பருவமெய்து முன்பே இறந்தாள். அவள் பிரிவு மாக்கோதையின் மனத்தே பெருந்துயரத்தை விளைவித்தது. அவளது உடலம் ஈமத்தில் மூட்டிய எரியில் வெந்து கரிவதாயிற்று. அதனை மாக்கோதை தன் கண்களாற் கண்டான். அவள்பால் தான் கொண்டிருந்த காதலை நினைத்தான்; அவள் பிரிந்தால் தானும் உயிர் பிரிவதாக எண்ணிய காதல்நிலை அவன் கருத்தில் தோன்றிற்று. அதனை உடனிருந்த சான்றோர் குறிப்பால் உணர்ந்து "வேந்தே, காதலிபால் கொண்ட காதலினும் நாடு காவலை மேற்கொள்வதால் உளதாகும் கடமை பெரிதாகும். கடமையின் சிறப்பு நோக்காது, காதல் வாழ்விற் பிரிவால் உளதாகும் துன்பம் மிகவும் பெரிதெனச் சிறப்புற நோக்கி அதற்கு இரையாகி உயிரிழப்பது நன்றன்று" எனத் தெளிவித்தனர். காதலி யிறப்பின் காதலற்குண்டாகும் துன்பம் மிகப் பெரிதாம் என்றதை மறுப்பான் போல், "எத்துணைப் பெரிதாகத் தோன்றினும் காதல் நோய் அத்துணை வலியுடையதன்று; இதோ, என் கண்ணெதிரே என் ஆருயிர்க்காதலி இறந்தாள்; அவள் உடலும் தீயில் மாய்ந்தது. இதனைக் கண்டு வைத்தும் யான் இன்னும் உயிர் வாழா நின்றேன்; இதன் பண்பை என்னென்பது" என்று உரைப்பானாய் இப் பாட்டினை நெஞ்சுருகிப் பாடினான்.

    யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே
    உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
    தொள்ளழற் பள்ளிப் பாயல் தேர்த்தி         5
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே.
    --------

திணையும் துறையு மவை. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு.

உரை: யாங்கு பெரிதாயினும் - எப்படிப் பெரிதாயினும்; நோய் அளவு எனைத்து - யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று; உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் - என்னுயிரைப் போக்கமாட்டாத வலியை யுடைத்தல்லாமையால்; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள்; வெள்ளிடைப் பொத்திய - வெள்ளிடையில் மூட்டிய விளை விறகு ஈமத்து - தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையினகண்; ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி - ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப் பண்ணி; ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை - மேலுலகத்தே போயினாள் மடவாள்; இன்னும் வாழ்வல் - அவள் மாயவும் இன்னமும் உயிரிருந்து வாழ்வேன்; இதன் பண்பு என் – இவ்வுலகியற்கை இருந்தவாறு என்னோ? எ - று.

எனைத் தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின் நோயை இகழ்ந்து கூறியவாறு. பாவை சேர்த்தி யென்றோதி அவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தி யென்றுரைப்பாருமுளர். உயிர் செகுக்கலாமைக்குக் காரணம் மதுகையுடைத்தல்லாமையென வுணர்க. பாயல் சேர்த்தி இன்னும் வாழ்வல் என இயையும். சேர்த்த எனத் திரிப்பினு மமையும். ஞாங்கர் மாய்ந்தனளென்பதற்கு என்னை நீத்துமுன்னே இறந்தாளென்றுமாம்.

விளக்கம்: யாங்குப் பெரிதாயினும் என்றதற்கு ஒருவற்குத் தன் காதலியால் உண்டாகும் காதல் மிக்க பெருமையுடையதெனினும் என்றும், நோய் என்றதற்குக் காதலையுடைய காதலி யிறப்பின் உண்டாகும் நோய் என்றும் உரைப்பினும் அமையும். காதல் வாழ்வின் மாண்பை "’விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேணாடும், இரண்டுந் தூக்கின் சீர்சா லாவே" (குறுந். 101) என்று சான்றோர் கூறுதல் காண்க.
-------

246. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பாண்டி நாட்டின் வடவெல்லைப் பகுதியாகிய ஒல்லையூர் நாட்டைச் சோழவேந்தர் கைப்பற்றிக் கொண்டதனால் பாண்டியர் குடிக்குண்டாகிய சிறுமையைச் சோழனோடு பொருது வென்று போக்கிய பெருமையுடையவன் பூதபாண்டியன். அதனால் அவன் ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்றும் சான்றோரால் பாராட்டப்பெற்றான். அவன் பெயர் இன்றும் நினைவுறுமாறு நாஞ்சில் நாட்டில் பூதபாண்டி யென்ற பெயருடையதோர் ஊர்உளது. செந்தமிழ்ப் பாண்டி நாட்டில் சிறப்புற அரசு செலுத்திய பூதபாண்டியன் இறந்தானாக. அவன் மனைவி பெருங் கோப்பெண்டென்பாள், தீப்பாயக் கருதினாள். அவள்மண்ணாளும் வேந்தர்க்குக் கண்ணென்று ஓதப்படும் அரசியல் நீதிகளை நன்கு பயின்றவள்; மூதில் மகளாதலால் மறத்திலும் வாடாத மாண்புடையள். பூதபாண்டியனுக்குப்பின் பாண்டிநாட்டைக் காக்கும் பண்புடைய வேந்தர் இன்மையின், அரசியற் சுற்றத்தாராகிய சான்றோர் பலர் அவளை வேண்டித் தீப்புகாது அரசுகட்டிலேறி ஆட்சிபுரியுமாறு வேண்டினர். அவர் உரை நாட்டு மக்களின் நலம் குறித்து நவிலப்பட்டது. ஆனால், பெருங்கோப்பெண்டோ அதனை அவ்வாறு கொள்ளாது, தன் காதலன் உயிருடன் தன்னுயிரை ஒன்றுவித்து மறுமையிற் பிரிவிலாக் காதல் வாழ்வு தனக் குண்டாகாவாறு விலக்கும் விலக்குரையாகக் கருதினாள்; விலக்குண்டு உயிர்வாழக் கருதின் கைம்மைநோன்பு மேற்கொண்டு துன்புற வேண்டியிருத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தாள். ஆற்றாமை மீதூர்ந்தது; பலவாறு வேண்டி நிற்கும் சான்றோர்பால் வெகுளியும் மிக்கெழுந்தது.அந்த வெகுளியுரை கண்ணீர் சோரக் கதறி நிற்கும் அவள் வாயினின்றும் ஒரு பாட்டாய் வெளிவந்தது. அதுவே இப்பாட்டு.

    பல்சான் றீரே பல்சான் றீரே
    செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
    பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
    அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
    காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா         5
    தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
    வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
    வேளை வெந்தை வல்சி யாகப்
    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
    உயவற் பெண்டிரே மல்லே மாதோ         10
    பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
    நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
    பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
    வள்ளித ழவிழ்ந்த தாமரை
    நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.         15
    ------

திணை: அது. துறை: ஆனந்தப்பையுள். பூதபாண்டியன் தேவிபெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது.

ஆனந்தப் பையுளாவது: "விழுமங்கூர வேய்த்தோ ளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று" (பு.வெ.மா.சிறப். பொது. 13)

உரை: பல் சான்றீரே பல் சான்றீரே - பல சான்றவிரே பல சான்றவிரே; செல்க எனச் சொல்லாது - நின் தலைவனோடு இறப்ப நீ போ என்று கூறாது; ஒழிக என விலக்கும் - அதனைத் தவிர்க என்று சொல்லி விலக்கும்; பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே - பொல்லாத விசாரத்தையுடைய பல சான்றவிரே; அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ்போல் - அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற; நல் விளர் நறுநெய் தீண்டாது- நல்ல வெள்ளிய நறியநெய் தீண்டாமல்; அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் - இலையிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே; வெள்ளெள் சாந்தோடு - வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே; புளி பெய்து அட்ட வேளை வெந்தை - புளி கூட்டி யடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை; வல்சியாக - உணவாகக் கொண்டு; பரல் பெய் பள்ளி - பருக்கைகளாற் படுக்கப் பட்ட படுக்கையின்கண்; பாய் இன்று வதியும் - பாயுமின்றிக் கிடக்கும்; உயவல் பெண்டிரேம் அல்லேம் - கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளே மல்லேம் யாம்; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் - புறங்காட்டின்கண் உண்டாக்கப் பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை; நுமக்கு அரிதாகுக - உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு எம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென- எமக்கு எம்முடைய பெரிய தோளையுடையனாகிய கொழுநன் இறந்துபட்டானாக; அரும்பு அற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை முகையில்லையாக வளவியள இதழ் மலர்ந்த தாமரையையுடைய; நள்ளிரும் பொய்கையும் - நீர் செறிந்த பொய்கையும்; ஓர் அற்று - தீயும் ஒரு தன்மைத்து; எ - று.

தில் விழைவின்கண் வந்தது. எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து; நுமக்கு அரிதாகுக எனக் கூட்டுக.

விளக்கம்: பல குணங்களால் நிறைந்தமைந்தவராதலின் "பல சான்றவிரே" என்றுரைத்தார். பன்மை, அமைந்த குணங்கண்மேனின்றது. கைம்மை மேற்கொண்டொழுகும் மகளிரை, "உயவற்பெண்டிர்" என்றாள். கண்ணகியார், "இன்புறு தங்கணவரிடரெரி யகமூழ்கத் துன்புறுவன நோற்றுத் துயருறு மகளிரைப்போல், மன்பதை யலர் தூற்ற மன்னவன் தறவிழைப்ப. அன்பனை யிழந்தேன்யான் அவலங் கொண்டழிவலோ" என்றும், துயருறு மகளிரை, "துறைபல திறமூழ்கித் துயருறு மகளி" ரென்றும், "கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளி" ரென்றும் இகழ்ந்து கூறுதல் (சிலப். 18:34-51) காண்க. சுடுகாட்டை முதுகாடென்றலும் பெருங்காடென்றலும் வழக்கு. அற்றென்பதனைப் பொய்கைக்கும் தீக்கும் தனித்தனி கூட்டி முடிக்க - ஆனந்தம், சாக்காடு; பையுள் - அது காரணமாகப் பிறக்கும் துன்பம்.
-------

247. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பூதபாண்டியன் இறந்தபோது அவன் தேவி தீப்புகுந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர்களுள் மதுரைப் பேராலவாயாரென்னும் சான்றோரும் ஒருவர். மதுரையில் உள்ள சொக்கப்பெருமான் திருக்கோயிலுக்கு ஆலவாய் என்பது பெயர். அதனால் அங்கே எழுந்தருளியுள்ள இறைவனை ஆலவாயார் என்பதும் வழக்கம். அந்தத் திருப்பெயரே இந்தச் சான்றோருக்கும் பெற்றோரால் இடப்பட்டடுளது. சான்றோராகிய பேராலவாயார், மதுரையை, "மலைபுரை நெடுநகர்க் கூடல்" என்றும், பாண்டியனை "பேரிசைக் கொற்கைப் பொருநன், வென்வேல், கடும் பகட்டியானை நெடுந்தேர்ச்செழியன்" என்றும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுந்ததை நேரிற் கண்டவர். அக் காட்சி அவர் நெஞ்சில் நன்கு பதிந்திருந்தது அதனை அவர் இந்த அழகிய பாட்டின்கண் பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்தவிடம், காட்டிடத்தே காடுகிழாள் கோயிலுக்கு முன்பாகும். கோயில் திருமுன் அரசமாதேவி தீப்புகுதற்குத் தீ மூட்டப் பட்டிருந்தது; தீ நன்கு எரியத் தொடங்கியதும், அவள் நீராடிக் கூந்தலைப் பிழிந்துகொண்டு புறங்காட்டை நோக்கி வந்தாள். தன் பெருமனைக்கண் கணவனாகிய பூதபாண்டியன் சிறிது போது பிரியினும் பிரிவாற்றாது வருந்தும் இயல்பினளாகிய அவள் "தனித்துப் புறங்காடு நோக்கி நடந்தது காண்பார்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. புறங்காட்டில் காடுகிழாள் கோயில் திரு முன்றிலில் எரிந்துகொண்டிருந்த தீயை, நீர் துளிக்கும் கூந்தல் முதுகிடத்தே கிடைந்தசையக் கண்களில் நீர் பெருகிச் சொரிய வலம் வந்தாள்; பின்பு தீயுட்குளித்து மாண்டாள்," என்று இசைத்துள்ளார்.

    யானை தந்த முளிமர விறகிற்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
    மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்
    நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்         5
    பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
    தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
    முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
    சிறுநனி தமிய ளாயினும்
    இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே.         10
    ----------

திணையும் துறையு மவை. அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயால் சொல்லியது.

உரை: யானை தந்த முளிமர விறகில் - யானை கொண்டு வரப்பட்ட உலர்ந்த மரத்து விறகால்; கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து - வேடர் மூட்டப்பட்ட கடைந்துகொள்ளப்பட்ட எரியாகிய விளக்கினது ஒளியின்கண்; மடமான் பெரு நிரை - மடவிய மானாகிய பெரிய நிரை; வைகு துயில் எடுப்பி - வைகிய உறக்கத்தை எழுப்பி; மந்தி சீ்கும் - மந்தி தூர்க்கும்; அணங்குடைத் தேவியுடைய முற்றத்து; நீர் வார் கூந்தல் இரும்புறம்தாழ - நீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழ;பேரஞர்க்கண்ணள் - பெரிய துன்பமேவிய கண்ணையுடையளாய்; பெருங்காடு நோக்கித் தெருமரும் - புறங்காட்டைப் பார்த்துத் தான் சுழலும்; தன் கொழுநன் - தன் தலைவன்; முழவுகண் துயிலா - முழவினது கண் மார்ச்சனை யுலராத; கடியுடைய வியன்நகர் சிறுநனி தமியளாயினும் - காவலையுடைய அகலிய கோயிலுள் மிகச் சிறிதுபொழுது தனித்திருப்பினும்; இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்து - இனிய உயிர் தளரும், தன் இளமை புறங்கொடுத்து; எ - று.

...யான் அதற்கு அஞ்சி நடுங்குதல்...இளமை புறங்கொடுத்துப் பெருங்காடு நோக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக. அம்ம: அசை.

விளக்கம்: காட்டில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைப் பழகிய யானைகளைக் கொண்டு கொணர்விப்பது இன்றும் நிகழும் நிகழ்ச்சி. தீ விளக்கத்தின்கண் மானிரை துயிலுவது இயல்பு; பிறரும், "சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும், முத்தீ விளக்கில் துஞ்சும்" (புறம்.2) என்பது காணக். அணங்கு - அணங்குடைய தேவி. முழவினை இடையறாது இசைத்தலால் சூடேறிக் கிழயாதபடி மார்ச்சனையை ஈரப்படுத்துதலால்" முழவுகண் துயிலா என்றதற்கு "முழவினது கண் மார்ச்சனையுலராத" என்று உரை கூறப்பட்டது. படவே, முழவு எப்போதும் முழங்கிக்கொண்டிருக்கும் என்பதாம். இளமைக்குப் புறங்கொடுத்தலாவது இளமை யுணர்ச்சிகட்கு அடிமையாய் உணர்வு மடிந்தொழுகுதலெனக் கொள்க. காதலனொடு கூடி யுறையும் நலங்கனிந்த இளமகளிர்க்குப் பிரிவினும் துன்பந்தருவது பிறிதில்லை; "இன்னாது இனனில்லூர் வாழ்தல் அதனினும், இன்னாது இனியார்ப் பிரிவு" (குறள். 1158) என்று சான்றோர் உரைப்பது காண்க.
------

248. ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன. மாசாத்தன் என்பது இவரது இயற்பெயர்.மாசாத்தியார் என்னும் சான்றோர் ஒருவரும் இவ்வூரில் தோன்றியிருந்திருக்கிறார். சாத்தனார் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. சிறப்புடைய தன் கொழுநன் மாய்ந்தானாக, ஒருவன் மனவைி உடனுயிர்விடுதலை மேற்கொள்ளாது கைம்மை நோன்பினை மேற்கொண்டொழுகலானாள். அதனால் மறுபிறப்பில் தன் காதலனையை கூடிவாழும் வாழ்க்கையெய்தும் என்பது கருத்து. இவனை மணிமேகலை யாசிரியர், "அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்" (மணி. 3: 46-7) என்பது காண்க. இக் கைம்மை மகள் ஒருகால் ஒருகால் ஆம்பலை நோக்கினாள். இளமைக்காலத்தில் அந்த ஆம்பல் தழை தொடுத்தணிதற்குப் பயன்பட்டதும். கைம்மைக் காலத்தில் புல்லரிசி யுதவுவதாயதும் கண்டு வருந்திக் கூறினாள். அக் கூற்றினை மாசாத்தனார் இப்பாட்டின்கண் நமக்குரைக்கின்றார்.

    அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
    இளைய மாகத் தழையா யினவே, இனியே
    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
    தின்னா வைக லுண்ணும்
    அல்லிப் படூஉம் புல்லா யினவே.         5
    ------

திணை: அது. துறை: தாபத நிலை...ஓக்கூர் மாசாத்தனார் பாடியது.

தாபதநிலையாவது "குருந்தலர்க் கண்ணிக்கொழுநன் மாய்ந்தெனக், கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று" (பு. மா. சிறப். பொது. 4)

உரை: அளிய சிறு வெள்ளாம்பல் - இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல், இளையமாக - அவை தாம் யாம் இளையேமாயிருக்க; தழையாயின- முற்காலத்துத் தழையாயுதவின; இனியே இக்காலத்து; பெருவளக் கொழுநன் மாய்ந்தென - பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக;பொழுது மறுத்து- உண்ணுங்காலை மாறி; இன்னா வைகல் உண்ணும் - இன்னாத வைகும் பொழுதின்கண் உண்ணும்; அல்லிப்படூஉம் புல்லாயின - தம் அல்லியிடத்துண்டாம் புல்லரிசியாய் உதவின; எ - று.

தாம் இன்புறுங்காலத்தும் துன்புறுங்காலத்தும் துணையாயுதவின வாதலான் அளியவாயினவென ஆம்பலை நோக்கிக் கூறியவாறாயிற்று. நெல்லலா வுணலெல்லாம் புல்லென்றல் மரபு.

விளக்கம்: இளமகளிர் ஆம்பற பூவாற்றொடுக்கப்பட்ட தழையுடைய யணிந்து தம்மை யழகு செய்துகொள்வது பண்டைநாளில் இயல்பு; "அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப வரும்" (குறுந். 293) என்று சான்றோர் கூறுதல் காண்க.புல்லரிசி யுதவுமாறு, "தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற், சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும், கழிகல மகளிர்" (புறம். 280) என வருவதனாலும் அறியப்படும். நெல்லரிசிபோற் பயன் படுவதனைப் புல்லென்றதற்கேது கூறுவாராய், "நெல்லலா...மரபு" என்றார்.
------

249. தும்பைச் சொகினனார்

தும்பை யென்பது இவரது ஊர் எனவும், சொகினன் என்பது இவரது பெயரெனவும் கொள்க. தும்பையூர் "தொண்டை நாட்டுப் பையூரிளங் கோட்டத்துப் பட்டையநாட்டுத் தும்பையூர்" (Nel. Ins. Sulur. 15) என்றும், திருவேங்கடத்துக்கண்மையிலுள்ள திருச்சொகினூர் (திருச்சானூர்) (A.R. No. 452 of 1924) சொகின்னூரென்றிகருந்து திருச்சொகினூரென மருவியிருக்க வேண்டுமென்றும், எனவே இச் சான்றோர் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவராமென்றும் செந்தமிழ்ச் செல்வி (23-4, 152.) யில் ஆராய்ந்து காட்டப்பட்டுள்ளன. சொகினன் - சொகினம் (நிமித்தம்) கூறுபவன்; சொகினம் பிற்காலத்தே சகுணம் என மருவிவிட்டது.

இவர் பெயர் ஏடுகளில் தும்பி சொகினனாரென்றும், தும்பைச் சொகினனாரென்றும், தும்பி சோகீரனாரென்றும் காணப்படுகின்றன. நற்றிணையுரைகாரர், தும்பி சோகீரனாரென்பதன் பொருள் விளங்காமையால் தும்பிசேர்கீரனாரென்ப பதிப்பித்ததாக வுரைககின்றார்; தும்பி சொகினனா ரென்றே டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிக்கின்றார். சொகினனார், சோகீரனார் என்று பாடங்களைக்காட்டிலும் சேர்கீரனார் என்பது விளக்கமாய் இருப்பது கண்டு முன்னைப் பதிப்புக்கள் தும்பி சேர்கீரனாரென்று கொண்டன;சங்கவிலக்கியப் பதிப்பாளரும் இப் பாடமே கொண்டுள்ளனர். "அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி" (குறுந். 392) எனத் தும்பியைப் பாராட்டியும், "கொடியை வாழி தும்பி" (நற். 277)என அதனை நொந்தும் கூறியவாற்றால் தும்பியொடு தொடர்புடைய இவரது சொன்னலம், தும்பிசேர் கீரனார் என்ற பாடத்தை ஏற்றுக் கோடற்கு இடந்தந்து நின்றது.

இச் சொகினனார் கணவனை யிழந்தாள் ஒருத்தி கைம்மை நோன்பு மேற்கொண்டு, அவனுக்கு உணவுபடைப்பது கருதி ஒரு சிறிய இடத்தை ஆவின் சாணத்தால் மெழுகுவதும், அக்காலை யவள் நெஞ்சு கணவனை நினைந்து கலக்கமுறக் கண்ணீர் சொரிவதும் கண்டார். அதனை அவர் கணவனொடு கூடி வாழ்ந்த காலத்துக் கண்டிருந்தோர் கூற்றில் வைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் அவள் கணவன் அகன்ற நாட்டுக்குத் தலைவன்; அவன் உயிர்வாழ்ந்த காலத்துப் பலரொடு சூழ விருந்துண்ணும் பரந்த இடமாயிருந்தது; இப்போது அவன் மேலுலகம் சென்றதனால், அவள் தன் கண்ணீரால் ஆவின் சாணங்கொண்டு மெழுகும் சுளகுபோன்ற சிறிய இடமாயிற்று என்று இரங்கிக் கூறுகின்றார்.

    கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர்
    அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப்
    பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ         5
    டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும்
    அகனாட் டண்ணல் புகாவே நெருநைப்
    பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே
    அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை         10
    உயர்நிலை யுலக மவன்புக வார
    நீறாடு சுளகிற் சீறிட நீக்கி
    அழுத லானாக் கண்ணள்
    மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே.
    ------

திணையும் துறையு மவை...தும்பைச்சொகினனார் பாடியது.

உரை: கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப - கதிர் நுனைபோலும் மூக்கையுடைய ஆரல்மீன் சேற்றின்கீழே செருக; கணைக்கோட்டு வாளை நீர் மீப் பிறழ - திரண்ட கோட்டையுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ; எரிப்பூம் பழனம் நெரித்து - எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி; உடன் - உடனே; வலைஞர் - வலைஞரானவர்; அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர - ஒலி நிரம்பா ஓசையையுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழ; பனை நுகும்பன்ன சினை முதிர் வராலொடு - பனையினது நுகும்பையொத்த சினைமுற்றிய வராலோடு; உறழ் - மாறுபடும்; வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் - வேல்போன்ற ஒள்ளிய கயலை மகந்துகொள்ளும்; அகல் நாட்டண்ணல் புகா - முன் அகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு; நெருநை - நெருநலை நாளால்; பகல் இடம் கண்ணி - பகுத்த இடத்தைக் கருதி, பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்றுமன் - பலருடனே இயைந்து ஒருவழிப்பட்டது. அது கழிந்தது; இன்று-; அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை - தன்கண்ணே யடங்கிய கற்பினையும் சிறிய நுதலினையுமுடைய மடந்தை; உயர்நிலை யுலகம் அவன புக வார - உயர்ந்த நிலைமையையுடைய விண்ணுலகத்தை அவன் சென்று புக அவனுக்கு உணவு கொடுத்தல் வேண்டி; நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி - புழுதியாடிய சுளகளவாகிய சிறியவிடத்தைத் துடைத்து; அழுதலானாக் கண்ணள் - அழுதலமையாத கண்ணையுடையளாய்; கண்கலுழ் நீரான் ஆப்பி மெழுகும் - தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகுகின்றாள், எ - று.

மெழுகுமளவாயிற்றென்றது பொருளென வுரைக்க. மன்: கழிவின்கண் வந்தது. இது கண்டார் நிலையாமை கூறி இரங்கியவாறு.

விளக்கம்: ஆரல்மீன் கூரிய மூக்கினையுடையதாகலின், அதனைக் "கதிர்மூக்காரல்" என்றார். நீர்க்கீழ்ச் சேற்றிற் புதைந்து கிடப்பது அதற்கியல்பு. "அள்ளல் நாரை யாரல் வாரு மந்தணா ரூரென்பதே" (திருஞான. 237:6) எனச் சான்றோர் கூறுவது காண்க. வாளை மீனின் மீசை ஈண்டுக் கோடெனப்பட்டது. "கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு"(குறுந். 164) என்று பிறரும் கூறுவர். எரிப்பூ, எரிபோலும் நிறத்தையுடைய தாமரைப்பூ. நெரித்தலாவது, சேறு பிறழக் குழப்புதல். அரித்த குரலையுடையதாமரைப்பூ. நெரித்தலாவது, சேறு பிறழக் குழப்புதல். அரித்த குரலையுடையதடாரிப் பறையோசை "ஒலி நிரம்பா ஓசை" யெனப்பட்டது; கம்புட் கோழியின் குரல்போலும் ஓசை அரிக் குரலோசை யெனவுணர்க; "வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை" (ஐங். 85) என்று சான்றோர் வழங்குப. "இன்று" என்றதற்கேற்ப "முன்" னென்பது வருவிக்கப்பட்டது. "ஆறிய கற்பின் அடங்கிய சாயல்" (பதிற். 16) என்றாற் போல அடங்கிய கற்புக் கூறப்பட்டது. இப்பாட்டின் இடையே சில சொற்களும், அவற்றிற்குரிய உரையும் சிதைந்திருக்கின்றன. பகலிடம் முன் ஒரு வழிப்பட்டன்று; இன்று மெழுகுமளவிலே முடிந்தது என முடித்துக் கொள்க என்பார், "மெழுகுமள வாயிற்றென்றது பொருளென வுரைக்க" என்றார்.
------

250. தாயங்கண்ணியார்

தாயன் என்பார்க்கு மகளாதல் தோன்ற இவர் தாயங்கண்ணியார் எனப்படுகின்றார். கண்ணியார் என்பது இவரது இயற்பெயர். சங்க கால நல்லிசைப்புலமை மெல்லியலாருள் இவரும் ஒருவர். முடத்தாமக் கண்ணியார் என்றாற்போல இவர் பெயரும் கண்ணியாரென நிற்றலின், இவரை ஆண்பாலராகக் கருதுவோரும் உண்டு. கணவன் மாய்ந்தானாக, மனைவி கைம்மை மேற்கொண்டு நோற்று வந்தனள். சான்றோராகிய தாயங்கண்ணியார், அவள் கணவன் இருந்த காலத்துத் தாம் சென்றாற் போல இக்காலத்தும் சென்றார். கைம்மை மேற் கொண்ட மனைவியும் மக்களும் மனையின்கண் இருந்தனர். அவர்களது நெடுமனையாகிய திருநகர்பொலிவிழந்திருந்தது. மனையாட்டியும் மழித்த தலையும் வளை கழித்த வறுங்கையும் அல்லியரிசி யுணவும் உடையளாய் இருப்பது தாயங்கண்ணி யார்க்கு மிக்க வருத்தத்தை யுண்டுபண்ணிற்று. அப் பெருமனையின் பண்டை நிலையும் அவர் நினைவுக்கு வந்தது. அவையெல்லாம் நினைத்தார்க்கு அவை ஒரு பாட்டுருவில் வெளிப்பட்டன. அப் பாட்டு இது:

    குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில்
    இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
    கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
    கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
    அல்லி யுணவின் மனைவியோ டினியே         5
    புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்
    வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
    முனித்தலைப் புதல்வர் தந்தை
    தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.
    ------

திணையும் துறையு மவை... தாயங்கண்ணியார் பாடியது.

உரை: குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் - தாளிப்போசை மிக்க கொழுவிய துவையோடு கூடிய அடிசில்; இரவரர்த் தடுத்த வாயில் - இரவலரைத் தன்கண்ணே தகைத்த வாயிலினையும்; புரவலர் கண்ணீர் தடுத்த தண்ணறும் பந்தர் - தன்னாற் புரக்கப்படுவோர் கண்ணீரை மாற்றிய குளிர்ந்த நறிய பந்தரினையுமுடைய மனையிடத்து; கூந்தல் கொய்து - மயிரைக் குறைத்து; குறுந்தொடி நீக்கி - குறிய வளையைக் களைந்து; அல்லி உணவின் மனைவியோடு - அல்லியரிசியாகிய உணவையுடைய மனையாளுடனே; இனி - இப்பொழுது; புல்லென்றனை - பொலிவழிந்தாய்; வளம் கெழு திருநகர் - செல்வம் பொருந்திய அழுகாகிய நகர; வான் சோறு கொண்டு - வான் சோற்றைக் கொண்டு; தீம்பால் வேண்டும் - இனியபாலை வேண்டும்; முனித்தலைப் புதல்வர் தந்தை - வெறுப்பைத் தம்மிடத்தேயுடைய புதல்வர் தந்தை; தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின் - தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தபின்; எ - று.

கொய்து நீக்கி என்னும் வினையெச்சங்களை உணவினையுடைய வென்னும் குறிப்புவினையோடு முடிக்க. நகரே, நீ புதல்வர் தந்தை காடு முன்னியபின் புல்லென்றனை யெனக் கூட்டுக. முனித்தலை, குடிமித்தலை யெனினு மமையும்.

விளக்கம்: தன்கண் வந்த இரவலர்க்கு வேண்டும் உணவை நிரம்ப நல்கி அவரை மீளத் தம் மனையை நோக்கித் திரும்பிப் போகாத வாறு தன்கண்ணே இருத்தற்குரிய விருப்பத்தை யுண்டு பண்ணுதலின், "இரவலர்த் தடுத்த வாயில்" என்றார். அல்லற்பட்டு ஆற்றாது அழுது கொண்டு வருவோர்க்கு அல்லலைப்போக்கி அவர் கண்ணீர் விட்டுக் கலுழாமல் ஊக்குதல் பற்றி, "புரவலர் கண்ணீர்த் தடுத்த பந்தர்" என்றார். புரவலர் என்றது, புரக்கப்படுவோர்மேல் நின்றது. திருநகர் என்றது அண்மை விளி. வான்சோறு, வெள்ளிய சோறு. புதல்வர் தந்தை, புதல்வர்க்குத் தந்தை. உணவின் மனைவி யென்றதை உணவினையுடைய மனைவியென விரித்து, விரிந்த உடைய வென்னும் குறிப்புவினையோடு, கொய்து, நீக்கியென்னும் வினையெச்சங்களை முடிக்க என்று கூறுகின்றார் உரைகாரர்.
-------------

251. மாரிப்பித்தியார்

மாரிப்பித்தியார் என்னும் இப் பெயர் மாற்பித்தியார் என்றும், மரற்பித்தியாரென்றும் காணப்படுகிறது. மாரிக்காலத்து மலரும் பித்திகத்தைப்பொற்புறத் தொடுத்துப் பாடிய சிறப்புக்குறித்து இவர்க்கு இப் பெயரெய்திற்றுப் போலும். அப் பாட்டுக்கிடைத்திலது. இனி மாற்பித்தியாரென்றே கொண்டு வேறு வேறு பொருள் கூறுவாருமுளர். புகழ்புரியும் புதல்வரையும் அறம்புரியும் சுற்றத்தாரையும் முடையனாய்ச் சிறப்புற வாழ்ந்த தலைமகனொருவன் காமஞ் சான்ற கடைக்கோட் காலையில் வீடுபேறு குறித்துத் தவமேற்கொண்டு காட்டில் உறைவானாயினான். அவன் பெயர் ஏடுகளில் சிதைந்துபோய்விட்டது. அவன் இல்வாழ்வில் இருந்த காலத்து அவனைப்பாடிச், சிறப்பித்தவாதலான், பித்தியார் துறவு நிலையில் சடைமுடித்துத் தவம் புரியும் அவனது தாபத நிலையை வியந்துநோக்கினார். அவன் அருவியில் நீராடிக் காட்டகத்து யானைகள் கொணரும் விறகு கொண்டு தீ வேட்பதும், அவன் முடியிலுள்ள சடைமுதுகிடத்தே கிடந்து புலர்வதும் கண்டார். கண்டார்க்கு அவனது இளமைக் காலத்து அழகிய இனிய தோற்றம் நினைவிற்கு வந்தது. அக்காலத்தே அவனைக் கண்ட மகளிர் அவன்பால் கொண்டகாதற் காமத்தால் தொடி நெகிழ்ந்து உடம்பு நனி சுருங்கி உயங்கியதும் அவன் உயங்காது. வியங்கியதும் நினைவிற்கு வந்தன. அவற்றை இந்த அழகிய பாட்டால் வெளிப்படுத்தியுள்ளார்.

    ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
    பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
    இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
    கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
    கான யானை தந்த விறகிற்         5
    கடுந்தெற்ற செந்தீ வேட்டுப்
    புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே.
    --------

திணை: வாகை.: துறை: தாபத வாகை...மாரிப்பித்தியார்பாடியது.

உரை: ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் - ஓவியம் போலும் அழகினையுடைத்தாகிய இடமுடைய இல்லின்கண்; பாவை யன்ன குறுந்தொடி மகளிர் - கொல்லிப்பாவை போன்ற வடிவினையுடைய சிறிய வளையணிந்த மகளிருடைய; இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் - அணிகலன்களை அவை நிற்கும்நிலையினின்றும் கழலும் வகை ஆதரஞ் செய்தவனைக் கண்டோம்; கழைக்கண் நெடுவரை அருவி யாடி - மூங்கிலிடத்தை யுடைய நெடிய மலையிடத்து அருவி நீரை யாடி; கான யானை தந்தவிறகின் - காட்டு யானை கொண்டுவரப்பட்ட விறகால்; கடுந்தெறல் செந்தீ வேட்டு - மிக்க வெம்மையையுடையசெந்தீயை வேட்டு; புறந்தாழ் புரிசடை புலர்த்துவோன் - முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்; எ - று.

ஆடி வேட்டுப் புலர்த்துவோன் என இயையும். முன்பு இழைநெகிழ்த்த மள்ளற் கண்டேம்; அவன் இப்பொழுது புறந்தாழ்புரிசடை புலர்த்தா நின்றான் என அவனைக் கண்டு வியந்துகூறியவாறு. பாவை யென்றது பிறிது எவ்வுணர்வுமின்றிக் காமவேட்கையாகிய ஒரு குறிப்பினை. கானயானை தந்தவிறகென்றது, இவன் தவ மிகுதியான், அதுவும் ஏவல் செய்தல்.

விளக்கம்: ஓவம், ஓவியம். உரையாசிரியரான பேராசிரியர், "ஓவத்தன்ன இடனுடைய வரைப்பின் என்புழி அந் நகரினதுசெயற்கை நலந்தோன்றக் கூறினமையின், அதற்கு நிலைக்களன்நலனாயிற்" (தொல். உவ. 4) றென்பர். பூவெனப்படுவது தாமரையாதல் போலப் பாவை யென்றது கொல்லிப்பாவைக்காயிற்று. கொல்லிப் பாவை, கொல்லிமலையில் பூதத்தாற் காமக் குறிப்புக் கிளரப் புணர்க்கப்பட்ட பாவை. குறுந்தொடி யென்றதில் குறுமை மகளிரது இளமை யுணர்த்திற்று. மள்ளன்என்றது, மகளிர் தொடி நெகிழ்ந்து வருந்தத் தான் வருந்தாதொழுகிய சிறப்புப்பற்றி. மள்ளன் இளையனுமாம். கழைக்கண் - மூங்கில் வளரும் இடம். கானயானை, தொழிற் பயிற்சியின்றிக்கொன்னே காட்டில் பிறந்து வளர்ந்த யானை; இத்தகையயானையும் அவன் தவமிகுதியால் ஏவல் செய்வது உணர்த்தியவாறாயிற்று "செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்களிறு தருவிற்கின்...மலைகிழ வோனே" (பெரும் பாண். 498 - 500) என்றுபிறரும் குறிப்பது காண்க. புரிசடை: இறந்தகாலந் தொக்கவினைத்தொகை. புரிசடை புலர்தற்குக் கடுந்தெறல் செந்தீதுணை யாதல் அறிக. கண்டிகும்: இறந்தகாலத் தன்மைவினைமுற்று.
------

252. மாரிப்பித்தியார்

மேலே கண்ட தமிழ்த்தாபதன், மகளிர் இழை நெகிழ்த்துக் காமக்கலவிப் போரில் திண்மையுடையனாய் விளங்கிய திறத்தை யெடுத்தோதிக் காட்டில் அவன் தவமேற்கொண்டொழுகுவதை மாரிப்பித்தியார் இனிய பாட்டால் பாராட்டியது கேட்டசான்றோர் சிலர், "இத்தாபதன் பண்டு மணம்புரிந்து இல்வாழ்ந்த காலத்தில் ஒழுகிய திறம் யாது?" என்று வினவினர். அதனையும் நன்கறிந்தவராதலால், மாரிப் பித்தியார், "சொல்வேன், கேண்மின்" எனவுரைத்து அவனைக் காட்டினார். அவன் அருவியில் பலகாலும் நீராடுதலால் அவன் தலையிலுள்ள சடை தில்லந்தளிர்போல புற்கென்று பொலிவிழந்து காணப்பட்டது. அவன் ஆங்காங்குச் செறிந்திருந்த தாளியிலையைப் பறித்துக்கொண்டிருந்தான். "மனைவாழ்வில் இவன் தன் மனையாள்பால் பேராக் காதலுடையனாய் ஒழுகினான். ஓதுவது குறித்தும் பொருள் குறித்தும் பகை தணிக்கும் வினை குறித்தும் போர் மேற்கொண்ட வேந்தரிடையே சந்து செய்தற்கும் இவன் பிரிந்தொழுகியதுண்டு. இவன் மனையாள் இவனது பிரிவைச் சிறிதும் ஆற்றாத சிறந்த காதலுடையள். பிரியுங்கால் அவள் தெளியத்தக்க சொற்களைச் சொல்லித் தன் பிரிவை ஆற்றியிருக்குமாறு பண்ணினான்; அவட்குத் தன்பால் ஊடலுண்டாயினும்அவ் வூடலில் தேனும் பாலும் போலும் செஞ்சொற்களை வழங்கிஅவளைத் தெளிவித்துத் தன் சொல்வழி யமைந்தொழுகுமாறு பண்ணினான். இவ்வாறு தன்னுடைய இனிய சொற்களால் தன்மனையாளின் மனத்தைத் தன்பாற் பிணித்து நல்லறம் புரிந்தான்" என்ற கருத்தமைய இந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார்.

    கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து
    தல்லை யன்ன புல்லென் சடையோ
    டள்ளிலைத் தாளி கொய்யு மோனே
    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
    சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே.         5
    --------

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: கறங்கு வெள்ளருவி யேற்றலின் - ஒலிக்கும் வெள்ளியஅருவிநீரை ஏற்றலால்; நிறம் பெயர்ந்து - பழைய நிறம் மாறி; தில்லை அன்ன புல்லென் சடையோடு - தில்லந்தளிர் போன்றபுற்கென் சடையோடு கூடி நின்று, அள் இலைத் தாளிகொய்யுமோனே - செறிந்த இலையையுடைய தாளியைப் பறிப்போன்; இல் வழங்கும் மடமயில் பிணிக்கும்- மனையின்கண் இயங்கும் மடப்பத்தையுடைய மயிலை அகப்படுத்திக்கொள்ளும், சொல் வலை வேட்டுவனாயினன் முன் - சொல்லாகிய வலையையுடைய வேட்டைக் காரனாயினன் முன்பு; எ - று.

இதுவும் அவன் நிலைமையைக் கண்டு வியந்து கூறியது.

விளக்கம்: கல்லலைத்து இழுமெனும் ஓசையுடன் வீழும் அருவிதெளிவாய் வெள்ளிதாதலால், "கறங்கு வெள்ளருவி" யென்றார். பெயர்ந்தெனவே பழைய நிறம் மாறின்மை பெற்றாம். அள்ளிலை- செறிந்த இலை. மனையாளை மயில் என்றமையின்; அதற்கேற்பத் தன்னையின்றி யமையாதவளாகச் செய்த மள்ளனை, "மயில்பிணிக்கும் சொல் வலை வேட்டுவனாயினன்" என்றார். "வேட்டுவனாயினன் முன்னே" என்றதனால் இப்போது சடையோடு தாளி கொய்வோனாயினன் என்றார். கொய்யுமோன் என்றதே நிகழ் கால முணர்த்தி நிற்றலின் இப் போழ்தெனக் கூறாராயினர். இதனை "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்" (தொல். புறத். 5) என இளம்பூரணர் காட்டுவர். பேராசிரியர் இதனைப்பிறன்கட்டோன்றிய அசைவு பற்றிய அவலச் சுவைக்கு (மெய். 5) மேற்கோளாகக் காட்டுவர். கொய்யுமோன் முன்னேவேட்டுவனாயினன் என இயையும்.
---------

253. குளம்பந்தாயனார்

தாயனார் என்பது இப் பாட்டினைப் பாடிய ஆசிரியர் இயற்பெயர். இவர் தந்தை பெயர் குளம்பன் என்பது. குளம்பன் மகன்தாயனார் என்பது குளம்பந்தாயனார் என வந்தது; குளம்பன்என்னும் இயற் பெயர் மக்கள் முறையில் தாயனார் என்ற பெயர்வரவே, ஈற்று அன்சாரியை கெட்டு அம்மென்னும் சாரியைபெற்றுக் குளம் பந்தாயனாரென வரும்; இதற்குவிதி, "அப்பெயர்மெய்யொழித்து அன்கெடு வழியும், நிற்றலும் உரித்தே அம்மென்சாரியை. மக்கள்முறை தொகூஉம் மருங்கி னான" (பள்ளி. 55) தொல்காப்பியனார் கூறுவதனால் அறியலாம். குளம்பன் என்னும் பெயர் இடைக்காலத்தும் குழம்பன் என மக்கட்கு இடப்பட்டுளது; "சிவப்பிராமணன் பாலாசிரியன் சாத்தன் சிவப்பிரியனான குழம்பன் நாயகன்" (S.I.I. Vol. VIII. No.3330) எனவருதல் காண்க. குளம்பனாரென்றொரு நல்லிசைச் சான்றோர் நற்றிணை பாடிய ஆசிரியர் வரிசையுட் காணப்படுகிறார். அவரின் வேறுபடுத்தற்குக் குளம்பனார் மகனார் தாயனாரென்னாது குளம்பந்தாயனார் என்று சான்றோர் இவர் பெயரைக் குறித்திருக்கின்றனர்.

தலைமகனொருவன் போர்க்குச் சென்று களத்திற்பட்டு வீழ்ந்தான். அச் செய்தியறிந்த அவன் மனைவி களத்துக்குச் சென்று அவன் கிடப்பது கண்டு கதறிப் புலம்பினாள். அவள் அவனை நோக்கி, "நின்னோடு உடன் வந்த இளைய வீரர் போரிற்கலந்து வினைசெய்கின்றனர். நீயோ இனி யான் இவரோடு கூடமகிழேன் என்றுஇறந்துபட்டாய்.இனி யானும் இறந்துபடுவதை விடுத்து நின்இறப்பை, என் கையைத் தலைமேல் மோதிக்கொண்டு ஊர்க்குட்சென்று நின் சுற்றத்தார்க்குத் தெரிவிப்பேனோ; யாதுசெய்வேன்; எனக்குச் சொல்லுவாயாக" எனக் கரைந்துருகி வினவினாள். இதனைக் கண்டிருந்த தாயனார் இப் பாட்டின்கண் குறிக்கின்றார்.

    என்றிறத் தவலங் கொள்ள லினியே
    வல்வார் கண்ணி யிளையர் திளைப்ப
    நகாஅலென வந்த மாறே யெழாநெற்
    பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின்
    வளையில் வறுங்கை யோச்சிக்         5
    கிளையி ளொய்வலோ, கூறுநின் னுரையே.
    -------

திணை: பொதுவியல்; துறை: முதுபாலை - குளம்பந்தாயனார் பாடியது. முதுபாலையாவது: "காம்புயர் கடத்திடைக் கணவனையிழந்தபூங் கொடியரிவை புலம்புரைத்தன்று".

உரை: என் திறத்து அவலம் கொள்ளல் இனி-நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்னுடைய திறத்து வருத்தங் கொள்ளா தொழிவாயாக இப்பொழுது; வல் வார் கண்ணி இளையர் திளைப்ப-வலிய வாராற் சுற்றப்பட்ட கண்ணியையுடைய நின்னோடு கூடி விளையாடப்போந்த இளையோர் விளையாடா நிற்ப; நகாஅல் என வந்த மாறு-அவரோடு நகுகின்றிலேனென்று கருதவந்த நின் இறந்துபாட்டை; நெல்எழா பைங்கழை பொதிகளைந்தன்ன-நெல்லெழாத பசிய மூங்கில் பட்டையொழித்தாற் போன்ற; விளிர்ப்பின் வளையில் வறுங்கை ஓச்சி-வெளுத்திருந்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே ஏற்றிக் கொண்டு; கிளையுள் ஒய்வலோ-நின் சுற்றத்திடத்தேசெலுத்தச் செல்லுவேனோ இன்னும் இறந்துபடினல்லது; நின் உரைகூறு-நின் வார்த்தையை எனக்குச் சொல்லுவாயாக; எ - று.

அவல மென்றது, பிரிந்த வழி ஆற்றெனென்று வருந்தும் அவலத்தை கூறு நின் உரையென அவன் சொற் கேட்டல் விருப்பினாற் கூறுவாள் போன்று மயங்கிக் கூறியவாறு.

விளக்கம்: நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்பது அவலமென்றதனால் பெறப்பட்டதெனக் காட்டற்கு "அவலமென்றது...அவலத்தை" யென்று உரைகாரர் கூறுகின்றார். அவலம் மிக்க வழி, வாய்திறந்து பேசவியலாமை யுண்டாகுமாதலால், சொற்கேட்கும் விருப்பத்தால் "என்திறத் தவலங் கொள்ளல் இனி" என்றாள். நகுதல், விளையாட்டுக் குறித்து நின்றது: "நகையேயும் வேண்டற்பாற் றன்று" (குறய், 871) என்றவிடத்துப்போல. மாறு-இறந்துபாடு. எழாநெல் என்றது மூங்கிற்கு வெளிப்படை. பொதி, ஈண்டுப் பொதிந்திருக்கும் தோலாகிய பட்டைமேல் நின்றது. வளைகிடந்த முன்கையிடம், அது நீங்கியபோது, வளைவடிவில் வெளுத்திருப்பதற்குப் பட்டை நீங்கிய மூங்கில் பட்டை வடிவில் வெளுத்திருப்பது உவமமாயிற்று. செலுத்துதல், தெரிவித்தல், தானும் இறந்துபடத் துணிந்துள்ளமை தோன்ற "அவலங் கொள்ளல்" என்றது கொண்டு "ஒய்வலோ" என்றாளாக, "இறந்துபடினல்லது" என உரைகாரர் உரைப்பாயினர். இறந்தவனைக் "கூறு" என்கின்றமையின் "மயங்கிக் கூறியவாறு" என்றார்.
------

254. கயமனார்

கயமனார் என்னும் இச் சான்றோர். சோழநாட்டினர். கயவென்பது பெருமைப் பொருளுணர்த்தும் சொல்லாதலால், கயமனாரென்பது பெரியவரென்னும் பொருளதாம். இவர் பாடியபாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களினும் உள்ளன. அப்பாட்டுக்களில் தாயரின் தாய்மை யன்பின் திறத்தைப் பெரிதும்எடுத்துப் பேசியுள்ளார். சோழநாட்டில் குறுக்கையைத் தலைநகராகக்கொண்டு திதியன் என்பான் வாழ்ந்து வந்தான். அவனது காவல் மரம் புன்னை. அன்னி யென்னும் வேறொருவனும் இந் நாட்டில் வாழ்ந்தான். இருவர்க்கும் எவ்வகையாலோ போருண்டாயிற்று அதில் அன்னியென்பவன் திதியனொடு குறுக்கைப் பறந்தலையில் போருடற்றித் தொலைந்தான். தொலையுங்கால், திதியனது காவல் மரத்தை அன்னி வெட்டி வீழ்த்தினான். இச் செய்தியைக் கயமனார் குறிக்கின்றார்.

போர்முடிவில் படாது எஞ்சிய மறவருள் இளையரும் முதியருமாகியோர் பலரும் தத்தமக்குரிய இடஞ்சென்று சேர்ந்தனர். ஒருவீரனுடைய மனைவி போர்க்குச் சென்ற தன் கணவன், மீளவாராமை கண்டு போர்க்களத்துச் சென்றாள். அங்கே அவன்மார்பிற் புண்பட்டு மாண்டு கிடந்தான். கவிழ்ந்து கிடந்த அவனை அவள் தூக்கியிருத்தி, "அன்ப, மார்பு நிலத்திற்பட இச்சுரத்திடையே கிடக்கின்றாய்; யான் எடுக்கவும் எழுகின்றாயில்லை. யான் வளை கழித்து என் வறுங்கையைத் தலைமேல் வைத்துஅழுதுகொண்டே நம்முடைய வூர் நோக்கி, ‘இளையனாகிய என்காதலன் இங்ஙனமாயினன்‘ என்று சொல்லிப் புலம்பிச் செல்வேன்; யான் மனைக்குச் சென்று சேருமுன் சுற்றத்தார் பலரும் சூழ்ந்து கொள்வர்; நின் செல்வத்தையும் தலைமையையும் சிறந்தோதி மகிழ்வுறும் நின் தாய் கேட்பாளாயின், அவள் என்னாவாள்; ஐயோ, இதுவோ நின் முடிவு" என்று அரற்றிய அரவலத்தை ஆசிரியர்கயமனார் கண்டார். இஃது அவர் நெஞ்சில் நன்கு பதிந்துவிடவே, ஒரு பாட்டாய் வெளி வருவதாயிற்று. வீழ்ந்த போர்மறவன் பெயர் ஏடுகளில் சிதைந்து போயிற்று.

    இளையரு முதியரும் வேறுபுலம் படா
    எடுப்ப வெழா அய் மார்பமண் புல்ல
    இடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
    வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள்
    இன்ன னாயின னிளையோ னென்று         5
    நின்னுரை செல்லு மாயின் மற்று
    முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப்
    புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
    வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்
    ஆனாது புகழு மன்னை         10
    யாங்கா குவள்கொ லளிய டானே.
    ---------

திணையும் துறையு மவை......கயமனார் பாடியது.

உரை: இளையரும் முதியரும் வேறுபுலம் படர-இளையோரும் முதியோரும் வேற்றுநிலத்தே விலங்கிப்போக; எடுப்ப எழாஅய்-யான் எடுப்பவும் நீ எழுந்திராயாய்; மார்பம் மண்புல்ல-நினது மார்பம் நிலத்தைப் பொருந்த; இடைச்சுரத்து இறுத்த மள்ள-சுரத்திடை மேம்பட வீழ்ந்தஇளையோய்; விளர்த்த வளையில் வறுங்கை யோச்சி-வெளுத்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து; கிளையுள்-சுற்றத்தின்கண்; இன்னனாயினன் இளையோன் என்று நின்னுரை செல்லுமாயின்-இத்தன்மையனாயினான் இளையனென்று யான்சொல்ல நின் இறந்துபாடு கூடிய வார்த்தை செல்லுமாயின்; முன்னூர் பழுனிய கோளி ஆலத்து-ஊர் முன்னர்ப் பழுத்த கோளியாகிய ஆலமரத்தின்கண்; புள்ளார் யாணர்த்தற்று-புள்ளுக்குள் மிகும் புதுவருவாயையுடைய அத்தன்மைத்து; என் மகன் வளனும் செம்மலும் எமக்கென-என்னுடைய மகனது செல்வமும் தலைமையும் எமக்கென்று; நாளும் ஆனாது புகழும் அன்னை-நாடோறும் அமையாது புகழும் நின்னுடைய தாய்; என்னாகுவள்கொல் அளியள்தான்-எவ்வாறாவாள் கொல், அவள் இரங்கத்தக்கவள் தான்; எ - று.

வளனும் செம்மலும் புள்ளார் யாணர்த்தற்று என்றது, புள்ளெல்லாம் சென்றணுக ஆலமரம் பயன்பட்டு நின்றாற்போல இவனும் தன் சுற்றத்தாரும் பிறரும் நாட்டாரும் நுகரும்படி நின்றமை தோன்ற நின்றது. நின்னுரை செல்லுமாயின் யாங்காகுவள்கொல் என்ற கருத்து, யான் நீ இறந்துபட்டவாறு சொல்லின், அன்றே அவள் வருத்த முறுவன்; அது யான்மாட்டேனென்பதாம். முன்னூர், முன் மொழி நிலையல். மற்று: அசைநிலை.

விளக்கம்: சுரத்திடை யென்பது இடைச்சுரமென முன்பின்னாகத் தொக்கது; ஈண்டிது போர்க்களத்தின்மேல் நின்றது. இறந்து கிடந்தானாக அதனால் மயங்கிக் கூறுதலால், "எடுப்ப எழா அய்" என்றும், இறந்தானெனக் கூற விருப்பமின்மையின், "இன்ன னாயினன் இளையோன்" என்றும் கூறினாள். உள்ளூரென்றாற்போல முன்னூரென்றார். தன் கணவனையும் உளப்படுத்துமாறு தோன்ற, "எமக்கென" என்று தாய் கூறுவள். நின் உயிரைப் பற்றுக் கோடாகக்கொண்டு வாழ்கின்றள் நின் தாய்; அவள் இறந்துபடுதலும் ஒருதலை யென்றற்கு "அன்னையென்னா குவள்கொல் அளியள்" என்றாள். அவனுயிரும் தன்னுயிரும் வேறொன்னாது ஒன்றிய காதல ளாதலின், அவனுடைய அன்னையும் தனக்கு அன்னையாகக் கோடலின், நாளும் ஆனாது புகழும் அன்னையென்னா குவள் கொல்லெனப் பொதுப்படக் கூறினாள். காதலன் கைப் பற்றிய "அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்" (திருநா. 239:7) என்று சான்றோர்கள் உரைப்பது பற்றியும் சங்க இலக்கியங்களிற் காணப்படும் வழக்கு நோக்கியும் ஓர்ந்து கொள்க.
------

255. வன்பரணர்

ஆசிரியரான வன்பரணர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள நெடுங்களம் என்னும் ஊரினரான நெடுங்களத்துப் பரணரெனவும், இவர் ஓரியின் வன்மையை அவன் வின்மேலேற்றி வல்விலோரியெனச்சிறப்பித்துப் பாடியதனால் வன்பரணரென்று கூறப்படுவாராயினரெனவும் செந்தமிழ்ச் செல்வியில் (சிலம்பு: 23.பரல்.12) ஆராய்ந்து காட்டினாம்.

தலைமகனொருவன் போரில் புண்பட்டு வீழ்ந்து மாண்டான். அவன் திரும்ப வாராமையால் பெருங்கலக்கமுற்ற அவன் மனைவி அவன் வீழ்ந்த இடத்துக்குச் சென்றாள். அந்த இடம் புலி முதலியகொடிய விலங்குகள் வாழும் காட்டருகே இருந்தது. கணவனைக் கண்டதும், அவளுக்குண்டான கையறவு பெரிதாயிற்று. அவன் உடலைத் தழுவிக் கண்ணீர் சொரிந்து கலங்கினாள். "அன்பே, நின்னைக் கண்டு வருந்தும் யான் ‘ஐயோ’ என வாய்விட்டுக் கதறியழுவேன்; அந்த ஓசைகேட்டுக் காட்டிலுள்ள புலிகள் வந்துநின் உடலைக் கொண்டுபோய்விடும்; பின்பு யான் அதனையுங் காணப்பெறாது ஒழிவேன்; இந்த அச்சத்தால் கதறிப் புலம்புகின்றேனல்லேன்; நின்னை எடுத்துக்கொண்டு போகலாமே யெனின், நினது அகன்ற மார்பு பெரிதாகையால் என்னால் இயலாது; ஒரு தீங்கும் செய்தறியாத என்னை இப்பெருந்துயரத்துள் அழுத்தி நடுக்கமுறுவிக்கும் கூற்றம் என்னைப் போலப் பெருந்துன்பம் உறுவதாக; நீ என்னுடைய வளையணிந்த கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்து வருக; யாம் இம் மலையைின் நிழலை யடையலாம்; வெயில் வெம்மை வருத்தாது" எனக் குழைந்து மொழிந்தாள். இக் காட்சி வன்பரணர் உள்ளத்தைக் குழைவித்தது. அக் குழைவின் வடிவே இப்பாட்டு. இப்பாட்டுடைத்தலைமகன் பெயர் தெரிந்திலது.

    ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே
    அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன்
    என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை
    இன்னா துற்ற வறனில் கூற்றே
    நிரைவளை முன்கை பற்றி         5
    வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே.
    -------

திணையும் துறையு மவை........வன்பரணர் பாடியது.

உரை: ஐயோ எனின் - ஐயோவென்று அரற்றுவேனாயின்; யான் புலிஅஞ்சுவல் - அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல் ஏதஞ்செய்யுமோவென்று புலியை யஞ்சுவேன்; அணைத்தனன் கொளின் - இவ்விடத்தி னின்றும் எடுத்துக் கொண்டு போவேனென்று நினைப்பின்; அகல்மார்பு எடுக்கவல்லேன் - நினது அகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்போல் பெருவிதிர்ப்பு உறுக - என்னை யொப்பப் பெரிய நடுக்கத்தை உறுவதாக; நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்று - உன்னை யிறந்துபடும் பரிசு வந்து தாக்கிய அறமில்லாத கூற்று; வரை நிழல் சேர்கம் - யாம் மலையினது நிழற்கண்ணே அடைவேமாக; நிரைவளை முன்கை பற்றிச் சிறிதுநடத்திசின் - எனது நிரைத்த வளையையுடைய முன்கையைப்பிடித்து மெல்ல நடப்பாயாக; எ - று.

நடவாயென்னும் முன்னிலை வினைச்சொல் சின்னென்னும் இடைச்சொல்லான் அசைக்கப்பட்டு நின்றது.

விளக்கம்: யான் காண இருப்பது நின் உடம்பேயாயினும், அதனையும் யான் காண இயலாது போகுமேயென்று அஞ்சுகின்றே னென்பாள் "புலியஞ்சுவல்" என்றாள். இன்னாது, இறந்துபாடு. "இன்னுயிர் கழிவினும் நனியின்னாது" (நற். 227) என்றும், "சாதலின் இன்னாத தில்லை"(குறள். 230) என்றும் சான்றோர்விதந்தோதுதலின், சாக்காடு ஈண்டு இன்னாது எனப்பட்டது. உற்ற என்பது உறுவித்த என்னும் பொருளது. இறந்த உடம்புகண்டு மயங்கிக் கூறுகின்றாளாதலால் "சிறிது நடத்திசின்" என்று சொல்லுகின்றாள். எனவே, அவனை அவள் மெல்லச் சுமந்து கொண்டு செல்லுமாறு பெற்றாம். நடத்திசின் என்பதில் சின்முன்னிலையசை; எஞ்சி நிற்கும் நடத்தி யென்பது நடவாய் எனனும்பொருட்டு. "இகுமுஞ் சின்னும் ஏனையிடத்தொடுந், தகுநிலையுடைய என்மனார் புலவர்" (தொல். இடை 27) என்றுஆசிரியர் கூறுதல் காண்க. அவல மிகுதியாற் பிறக்கும் அரற்றாதலின் இரண்டாமடி நீண்டு நெடிலடியாமாறு காண்க.
--------

256. தனிமகள் புலம்பிய முதுபாலை

இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பாட்டுடைத்தலைவி பெயரும் தெரிந்தில;அதனால், இப் பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி, "தனிமகள் புலம்பியமுதுபாலை" யெனப் பெயர் கொள்ளப் பட்டது. தனிமகள் ஒருத்தி தன் காதற்கொழுநனுடன் சுரத்திடை வந்து கொண்டிருக்கையில், கொழுநன் ஆண்டு உண்டாகிய போரின் கண் விழுப்புண்பட்டு உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். அதனால் தனிமையுற்றுக் கொழு கொம்பிழந்த கொடிபோல் வருந்தும் அவள், கலம் செய்யும் ஊர்க்குயவனை நோக்கி, "வேட்கோவே,சிறப்புண்டாகப் போரிடை மாண்டாரை ஈமத்தே தாழி கவித்து வைப்பது குறித்து வேண்டும் தாழியாகிய கலத்தைச் செய்பவனாதலின், நின்பால் வேண்டுவதொன்றுண்டு. இப்போது என் கொழுநனைக் கவித்தற்குத்தாழியொன்று வேண்டியுளது; நின்பால் இருப்பது ஒருவரைக் கவித்தற்குரிய அகலமுடையது. சகடத்தைக் கொண்டேகும் உருளை (சக்கரம்) யிலுள்ள ஆர்க்காலைப் பொருந்தியிருக்கும் பல்லியொன்று, அவ்வார்க்காலை நீங்காமல் பற்றிக்கொண்டு வருவதுபோலயானும் என் கொழுநனைத் தொடர்ந்து வந்துள்ளேன். என்னையும் சேர்த்து ஒருங்கே கவிக்கக்கூடிய அகலமுடையதாக என்பால் அருள்கூர்ந்து செய்வாயாக" என வேண்டினாள்,அவ்வேண்டுகை இப்பாட்டின் பொருளாக அமைந்துள்ளது.

    கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
    அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த வெமக்கு மருளி
    வியன்பல ரகன்பொழி லீமத் தாழி         5
    அகலி தாக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவோ.
    --------

திணையும் துறையு மவை...........

உரை: கலம் செய் கோவே கலம் செய் கோவே - கலம் வனையும் வேட்கோவே கலம் வனையும் வேட்கோவே; அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய - சகடம் செலுத்தும் உருளின்கண் ஆரத்தைப் பொருந்தி வந்த; சிறு வெண் பல்லிபோல - சிறியவெளிய பல்லி போல; தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் நெருநலை நாளால் பல சுரமும் தன்னோடு கழிந்து வந்த எமக்கும்; அருளி அருள்பண்ணி; வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி - யானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரியபரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்காட்டாழியை; அகலிதாக வனைமோ - இடமுடைத்தாக வனைவாயாக; நனைந்தலை மூதூர்க் கலம் செய் கோவே - பெரியஇடத்தினையுயை பழைய வூரின்கண் கலம் வனையும்வேட்கோவே; எ - று.

எமக்கும் என்றது பன்மையும் தலைமையும் கருதாது மயங்கக் கூறிநின்றது. கோவே, மூதூர்க் கலம் செய் கோவே, கோவே, எமக்கும் அருளி அகலிதாக வனைக எனக் கூட்டுக. அடுக்குவிரைவின்கண் வந்தது.

விளக்கம்: கலஞ் செய்யும் எனச் சிறப்பிக்கவே, கோ, வேட்கோவென்பதாயிற்று. ஆரம், ஆர்க்கால், அருள், தொடர்பு கருதாதுயாவர் மாட்டும் செய்யப்படும் அன்பு. வியன் பெருமையும் மலர்பரப்பையும் குறித்து நிற்றலின், ‘பெரிய பரப்பு’ என்றார். பொழில், பூமி; "வண் புகழ் மூவர் தன் பொழில்" (தொல். செய். 78) என ஆசிரியர் கூறுவது காண்க. ஈமத்தாழி முதுமக்கள் தாழி. யாமும் எம் தலைவனோடே இறக்கவிருக்கின்றோமாதலால் எமக்கும் அவனோடே இடம் அமையத்தக்க அகலமுடைத்தாகப் பெரியதொரு தாழி செய்ய வேண்டுமேன வேண்டுதலின், "எமக்கும் அருளி அகலிதாக வனைமோ" என்றாள். "எமக்கும்" என்றது கூற்று நிகழ்த்துவோரிடத்துத் தலைமையும் பன்மையும் இல்லாமையால்,"பன்மையும் தலைமையுங் கருதாது" நின்றது என்றும், வழுவாயினும் மயங்கக் கூறுதலின் அமைக்க வென்பார், "மயங்கக் கூறி நின்றது" என்றும் உரைத்தார்.சாகாட்டாரம் பொருந்திய பல்லிபோலக் கணவனைப் பற்றித் தொடர்ந்துவந்தவள் "எனக்கும்" என அவனிற் பிரித்திசைக்கும் சொல்லை நெஞ்சாலும் நினையாளாதலின், "எமக்கும்" என்றாளெனினுமமையும்.அங்ஙனம் வனைதற்கு ஈமம் இடம்பெறாதெனத் தடை நிகழ்த்தாவண்ணம், "வியன் மலரகன் பொழில் ஈமம்" எனச் சிறப்பித்தாள்.அகலிதாக வனைதற்குரிய வாய்ப்பும் கலஞ்செய் வேட்கோவற் குண்டென்பது, "நனந்தலை மூதூர்" என்று சிறப்பித்ததனால் விளங்குகிறது. பற்றுக்கோள்விடாமைக்குப் பல்லி உவமமாயிற்று.
-----

257. உண்டாட்டு

இரு தலைவர்கட்கிடையே எக்காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. அதுவாயிலாக ஒரு திறத்தார் மற்றவருடைய ஆனிரைகளைக் கவர்ந்தனர். அதனை யறிந்தநிரையுடைய கரந்தையார் எதிர்நின்று போருடற்றினர். கவர்ந்துகொண்ட வெட்சியார் அக் கரந்தையாரை வென்று வெருட்டிவிட்டு ஆனிரைகளைத் தாம்கொண்டு சென்று தம் மூரிற்பிறர்க்கு வழங்கி இன்புற்றனர். கரந்தையாரை வென்ற வெற்றிகுறித்துத் தானைத் தலைவருடனே கள்ளுண்டு மகிழ்ந்தாடினர். அந்த உண்டாட்டிடையே தலைவனது பேராண்மையை எடுத்தோதும் ஒருவன், "பகைவர் நிரை கொணர்ந்த வெட்சித்தலைவன், பகைவர்க்குத் துன்பம் செய்வதில் செருப்பிடையுற்ற பரற்கல் போல்வன்: திரண்ட காலும் அகன்ற மார்பும் நல்ல மீசையும் செவிமறைய வளர்ந்த தலை மயிரும், உயர்ந்த வில்லுமுடையன்; அவன் மிகவும் அளியன்; ஆராயுமிடத்து அவன் தன் ஊரைவிட்டு மிகுதியும் நீங்கியதில்லை; பகைவர்க் கஞ்சிக் காட்டை யரணாக அடைந்ததும் இல்லை; இன்று காலையில் பகைவருடைய நிரைகள் இருக்கும் இருப்பை யறிந்தான்; அவர் நிரையைக் கவர்தற்குரிய சூழ்ச்சியை மெல்ல எண்ணினான்; கரந்தையார் நிரையைக்காத்தற்குச் செய்த போரை மிக விரைவில் மாற்றி வென்றான்" என வியந்தோதி இன்புறுகின்றான். அந்த இன்பப்பாட்டு இது:

    செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால்
    அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட்
    குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ
    டியார்கொலோ வளியன் றானே தேரின்         5
    ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக்
    காடுகைக் கொண்டன்று மிலனே காலைப்
    புல்லா ரினநிரை செல்புற நோக்கிக்
    கையிற் சுட்டிப் பையென வெண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே யவைதாம்         10
    மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும்
    வெண்கோ டொன்றாக் குழிசியொடு
    நாளுறை மத்தொலி கேளா தோனே.
    --------

திணை: வெட்சி. துறை: உண்டாட்டு...

உரை: செருப்பிடைச் சிறுபால் அன்னன் - பகைவன் மேற்செல்லாதவாறுதுன்பம் செய்தலால் செருப்பிடையுற்ற சிறுபரற் கல்லை யொப்போன்; கணைக்கால் - திரண்ட காலையும்; அவ்வயிறு - அழகிய வயிற்றினையும்; அகன்ற மார்பின் - பரந்தமார்பினையும்; பைங்கண் - பசிய கண்ணினையும்; குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் - குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்; செவியிறந்து தாழ்தரும் கவுளன் - செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பனையுமுடையனாய்; வில்லொடுயார்கொலோ அளியன் - வில்லுடனே யார் தான் இவ்வளிக்கத்தக்கான் தான்; தேரின் - ஆராயின்; ஊர் பெரிது இகந்தன்றும் இலன் - ஊரைப் பெரிதும் நீங்கனதுமிலன்; அரண்எனக் காடு கைக்கொண்டன்றும் இலன் - தனக்கு அரண் எனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும் இலன்; காலை - இற்றைநாட் காலையே; புல்லார் இனநிரை செல் புறம் நோக்கி -பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப்பார்த்து; கையின் சுட்டிப் பையென எண்ணி - தன் கையாற் குறித்துமெல்ல எண்ணி; சிலையின் மாற்றியோன் - கரந்தையார் செய்யும்பூசலை மாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அவைதாம் மிகப்பல வாயினும் என்னாம் எனைத்தும் - அந்நிரைதாம் மிகப்பலவே யாயினும் என்ன பயன்படும் எத்தன்மைத்தும்; வெண்கோள் தோன்றாக் குழிசியொடு - பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையைக் காண்டலுடனே; நாளுறை மத்தொலி கேளாதோன் - நாட்காலத்து உறை தெறிப்பக் கடையும் மத்தின் ஒலியைக் கேளாதபடி பிறருக்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான் அவனுக்கு; எ - று.

பகைவர் மல்நடக்கவொட்டாது எதிரினின்று விலக்குதலின் "செருப்பிடைச் சிறுபர லன்னன்" எனப்பட்டான். அன்ன என்று பாடமொதிச் செருப்பிடைச் சிறு பரலோசைபோல நெடிய ஓசையையுடைய காலென்றுரைப்பாருமுளர். யார்கொல் என்றது அறியான் வினாதலன்றி வியப்பின்கண் வந்தது. "ஊர் பெரி திகந்தன்றுமிலனே" என்பது நிரைகோட் கடுமை.

சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன் தான் யார்கொல்லோ, தேரின், வில்லொடு ஊர் பெரிது இகந்தன்றுமிலனாய், காடு கைக்கொண்டதுமிலனாய், நோக்கி எண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசி காண்டலோடு மத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம் மிகப்பலவாயினும் என்னாமெனக் கூட்டுக. கேளாதோற் கென வுருபு விரித்துரைப்பினு மமையும்.

விளக்கம்: செருப்பிடைச் சிறுபரல் என்பது பழமொழி. "தருக்கியொழுகித்தகவல்ல செய்தும், பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும், கரப்பிடை யுள்ளங் கனற்று பவரே, செருப்பிடைப்பட்ட பரல்" (பழ 224) என வருதல் காண்க, குச்சி, குச்சிப்புல். கவுள் என்றது, செவி மருங்கிருந்து மோவாய்வரை வளர்ந்து நன்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மயிர். "ஊர் பெரிது இகந்தன்றுமிலன்" எனவே, அச்சமுடைய னென்பது படாமை விலக்கற்கு "அரணெனக்காடுகைக் கொண்டன்றுமிலன்" என்றான். பகைவருடைய இனநிரை முன்னின்று நோக்கினும் மருங்கிருந்தெண்ணினும், அவர்க்ள் அயிர்த்தற்கிடனாமென்றெண்ணிப் புறமிருந்து நோக்கினமை தோன்ற, "செல்புறம் நோக்கி" யென்றும், நிரைகோடற்குச்சூழ்ச்சியை விரைந்தெண்ணுதல் முறையன்மையால் "பைய வெண்ணி" யென்றும், கரந்தையாரைத் தொலைவிலேநிறுத்திப் பொருதுசாய்த்தமை விளங்க, "சிலையின் மாற்றியோன்" என்றும் கூறினார். பகைவர் முன்னேறவிடாது முன்னோக்கி அடிவைக்குந்தோறும் அவரைத் தடுத்து மாற்றுவது பற்றி, "பகைவர்...எனப்பட்டான்" என்றும் பரலன்னனென்னாது அன்ன என்று பாடங்கோடலும் உண்டாதலின், அதற்குப் பொருள் இதுவென்பார் "அன்ன...ஊர்" என்று கூறினார். "ஊர் பெரிது...கடுமை" யென்றது, "ஊரிலேயிருந்துகொண்டுதான் இருந்தான்; பகைவர்நிரை கவர்ந்து கொணரப்பட்டது" என்று உலகுரை காட்டிநின்றது. நிரைவந்ததும் பிறர்க்குப் பகுத்ததும் பிறர் அறிதற்குமுன்பே மிக மிக விரைவாக விடிவதற்குள் நிகழ்ந்தன என்பது, "எனைத்தும்...கேளாதோன்" என்பதனால் பெறப்படுகிறது.
--------

258. உலோச்சனார்

சோழநாட்டுச் சான்றோர்களுள் இவருள் ஒருவர். இவர் பெயர் உலோச்சனாரென்றும் காணப்படுகிறது. இவர் நெய்தல் நிலக்கருப் பொருள்களை நுணுகி நோக்கி இனிமையுறக் கூறுவதால் இவர் நெய்தல் நிலத்தவராவர். சோழநாட்டு நெய்தல் நிலத்தூர்களுள் பொறையா றென்னு மூரையும் ஆங்கிருந்துஆட்சிபுரிந்த தலைவனான பெரியன் என்பானையும் சிறப்பித்து," பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், பரியுடைநற்றோர்ப் பெரியன்" (அகம்: 100) என்றும், "நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு" (நற்: 131) என்றும் பாடியுள்ளார். கண்ப வாயில் என்னும் ஊரை இவர் குறித்திருக்கும் நலம் கண்ட நற்றிணையுரைகாரர் (38); இதுவே இவரது ஊராகவும் இருக்கலாம் என்று கருதுவர். இவர் காலத்தே சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உரையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான். அவனை இவர்ஒருகால் சென்று கண்டார். அவனும் இவர் சேய்மை நாட்டில் இருப்பவரென அறிந்து மணியும் பொன்னும் முத்தும் உடையும் பிறவும் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். இவ்வண்ணம் சிறப்புற்று விளங்கிய இவர், ஒருகால் ஒரு தலைவன் பகைவர் நாட்டிற்குச் சென்று அவர்தம் நிரைகளைக் கவர்ந்துவந்த திறத்தைக்கண்டார். அவன் மறுபடியும் வேற்று நாட்டிற்கு நிரை கவரச்செல்வது கருதினான். அது குறித்து வீரரிடையே உண்டாட்டு நிகழ்ந்தது. உலோச்சனாரும் ஆங்கே இருந்தார். அவர்வீரருக்குக் கள் வழங்குவோனைப் பார்த்துக் கூறுவது போல "கள்வழங்குபவனே, முன்பு இத்தலைவன் கந்தார நாட்டிற்குட் புகுந்துநிரை கவர்ந்து கொணர்ந்து கள் விலைக்கு ஈடாக வழங்கினன்: இன்றும் அவ்வாறே செல்லச் சமைந்துள்ளான்; சென்றுள்ளானெனவே கூறலாம். நின்பால் உள்ள கள்ளை வழங்குவாயாயின் முடிவில் அவற்கு இல்லையாய்விடும்; அவன் ஆனிரைகளைக் கொணருங்கால்,விடாய் மிக வுடையனாவன். அப்போதுவழங்குதற்கு முதுகட்சாடி யொன்றைப் பேணி வைப்பாயாக" என்று இப்பாட்டைப் பாடினார்.

    முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தேங்கந் தாரம்
    நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
    பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
    எச்சி லீர்ங்கை லிற்புறத் திமிரிப்         5
    புலம்புக் கனனே புல்லணற் காளை
    ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
    ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுத லோம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்         10
    காய்தலு முண்டக் கள்வெய் யோனே.
    -------

திணையும் துறையு மவை...உலோச்சனார் பாடியது.

உரை: முட்கால் காரை முதுபழன் ஏய்ப்ப - முட்டாளை யுடையகாரையினது முதிர்ந்த பழத்தை யொப்ப; தெறிப்ப விளைந்ததேம் கந்தாரம் - முற்ற விளைந்த இனிய மதுவையுடைய கந்தாரமென்னும் பெயரையுடைய வேற்றுப்புலத்து; நிறுத்த ஆயம்தலைச்சென்று உண்டு - தான் கொண்டுவந்து நிறுத்தின நிரையைக்கள் விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு; பச்சூன்தின்று - செவ்வித் தசையைச் தின்று; பைந்நிணம் பெருத்த - செவ்விநிணமிக்க; எச்சில் ஈர்ங்கை வில்புறம் திமிரி - எச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தே திமிர்ந்து; புலம் புக்கனன் புல்லணல் காளை - வேற்று நாட்டின்கண்புக்கான் புல்லிய தாடியையுடைய காளை; ஒருமுறை உண்ணா அளவை - இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன் முன்னே; பெருநிரை ஊர்ப்புறம்நிறையத் தருகுவன் - பெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக் கொடு தருகுவன்; யார்க்கும் தொடுதல்ஒம்புமதி - யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத் தொடுதலைப் பாதுகாத்து வைப்பாயாக; முதுகள் சாடி முதிர்ந்த மதுவையுடைய சாடியை; ஆ தரக் கழுமிய துகளன் ஆவைக் கொண்டு வரக் கலந்த தூளியை யுடையனாய்; அக் கள்வெய்யோன் - அம்மதுவை விரும்புவோன்; காய்தலும் உண்டு விடாய்த்தலும் உண்டாம்; எ - று.

தலைச் சென்றென்பது தலைச் செலவெனத் திரிக்கப்பட்டது. கள் விலையாட்டியிடத்தே செல்ல வென்றுமாம். "தீங்கட்டாரம்" என்றோதிக் கள்ளாகிய இனிய பண்டமெனினுமமையும். "காய்தலும் உண்டு" என்பதற்குக்கள் வெய்யோனாதலின் நின்னைவெகுளவுங்கூடு மென்பாருமுளர்.

இவன் நிரை கொள்ளச் செல்கின்றமை கண்டார்கள் விலையாட்டிக்குக் கூறியது.

விளக்கம்: காரையென்பது முட்செடி; அதனால் அதனை "முட்கால் காரை" யென்றார். தெறித்தல் - முற்றவும் புளித்தல். தன் என்பது தேம் என வந்தது. கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். இவ்வூரினைத் தலைமையாகக்கொண்ட சிறு நாடும் இருந்தது; இதனை "நித்தா வினோதவளநாட்டுக் கந்தார நாடு" (M. E. R. 1936-37 : NO.31:) எனக்கல்வெட்டுக் கூறுவது காண்க.கவர்ந்து போந்த நிரைகளைக் கொண்டோர் அவற்றைக் தாமுண்ணும் கள்ளுக்கு விலையாகமாறுவது வழக்காதலால், "நிறுத்த ஆயத் தலைச் சென்றுண்டு" என்றார். பிறரும், "அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் செங்கட், செருச்சிலையாமன்னர் செருமுனையிற் சீற, வரிச்சிலையாற் றந்த வளம்"(பு.வெ.மா. 19) என்பது காண்க. காளை புக்கனன் என்றபின், "ஒருமுறை யுண்ணாவளவை" யெனவே, உண்பவர், புலத்துக்குச்செல்லாது கள்ளுண்டற் கிருந்த மறவரென்பது பெறப்படுதலால், "இவ்விருந்த மறவர்" என்பது வருவிக்கப்பட்டது. உண்ணா வளவையென்றது, நிரைகோட் கடுமையுணர நின்றது. யாவர்க்கும் வாராது - எல்லார்க்கும் பெய்து கொடுக்காமல். கள்விற்போர்பால் செல்ல ஆநிரைகளை விற்றுவிடுதலின், "தலைச்செல்ல எனத் திரிக்கப்பட்ட" தென்றார். காய்தலும் என்புழியும்மை, எதிர்மறை. மிக்க வலியுடையார்க்கு வெகுளி மிகவிரைவில் உண்டாகாதென வறிக. பெருநற்கிள்ளியின் பெயருடையார் புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள வூர்களிற்காணப்படுதலால், (A. R. No.297 of 1914) இப் பாட்டு அவ்வூர் நிகழ்ச்சியாகக் கோடற்கு இடனாகிறது. இது மேலும் ஆராய்தற்குரியது.
------

259. கோடை பாடிய பெரும்பூதனார்

கோடை யென்பது மலை; இப்போது அது கோடைக்கானல் எனவழங்குகிறது. இதனைச் சான்றோர் பலரும் வியந்துபாராட்டுமாறு பாடிய சிறப்பால் பெரும்பூதனார் "கோடைபாடிய பெரும்பூதனார்" என்று குறிக்கப்படுகின்றார். நாட்டில்மறவர் பகைவரது நிரை கவர்தலும், கவர்ந்த நிரையைமீட்டலுமாகிய செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் மறமாண்பை நிறுவிப்புகழ்பெறுந்துறையில் கருத்தூன்றி யிருந்தனர். அதனைப் பெரும்பூதனார் கண்டு மகிழ்ந்து வந்தார். ஒருகால் பகைவரூர்நிரைகளை மறவர் கவர்ந்தேகினர். அஃதறிந்து மானம்பொறாத நிரைக்குரிய மறவர் மீட்டற்குச் செல்ல விரைந்தனர். அவர்களுடைய தலைவன் நிரை மீட்கும் வேட்கைகொண்டு முன்னேசெல்லலுற்றான். அந்நிரை கவர்ந்தேகும் பகைவர்காட்டிடத்தே மறைந்திருந்து காவல் புரிந்தனர். ஆனிரைகள், தெய்வமருள் கொண்ட புலைமகளிர் தாவித் துள்ளிக் குதிப்பதுபோலத் தாவித் துள்ளிச் சென்று கொண்டிருந்தன. அந்நிரைகளைமீட்கச் செல்லும் மறவர் அவற்றின் நிரையும் காவல் புரியும்மறவரது மறமாண்பும் அறியாது செல்லுதல் கூடாது; நிலைமையை ஒருவாறறிந்து கொண்ட ஒரு சான்றோர், அம் மறவனைநோக்கிக் காட்டில் மறைந்திருந்து காவல்புரியும் பகைவர் களைக்கண்டு அவர் காவலைக் கட்டழித்தபின் னல்லது நிரைமீட்க அவரிடையே செல்வது நன்றன்று என அறிவுறுத்தினார். அவ்வறிவுரை இப்பாட்டு வடிவில் தரப்பட்டுள்ளது.

    ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
    திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
    வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம்
    முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்         5
    தாவுபு தெறிக்கு மான்மேற்
    புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே.
    -------

திணை: கரந்தை. துறை: செருமலைதல்; பிள்ளைப்பெயர்ச்சியுமாம்.

செருமலைதலாவது, "வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ, உட்குவரத்தாக்கி யுளர் செருப்புரிந்தன்று."

உரை: ஏறுடைப் பெருநிரை பெயர்தர - தாம் கொள்ளப் பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக; பெயராது மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது; இலை புதை பெருங்காட்டு - தழையால் மூடிய பெரிய காட்டின்கண்; தலைகரந்திருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய் - தலைகரந்திருந்தவலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கயிநிலையைக் கருதாய்; செல்லல் செல்லல் - போகாதொழி போகாதொழி; நின் உள்ளம் சிறக்க - நினது மேற்கோள் சிறப்பதாக; முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல - தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை யொப்ப; தாவுபு தெறிக்கும் ஆன்மேல் - தாவித்துள்ளும் ஆனிரைமேல்; புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோய் - மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக் கழலினையு முடையோய்; எ - று.

புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம் சிறப்பதாக எனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக்கண்டு பொருது கொன்றன்றிச் செல்லலென்பதாம்.

விளக்கம்: வெட்சியாரை...செருப்புரிந்தன்று; "வெட்சியாரைக் கிட்டிச் சூழ்ந்து அஞ்சத் தாக்கி யெடுப்பும்சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது." (பு. வெ. 25. உரை)பெரநிரை பெயர் தரப் பெயராது என்றதனால் முன்பின்பெயர்தல் வருவித்து, மறவர் பிற்பெயர்தற்குக் காரணமும் "மீட்கவருவாரைக் குறித்து" என வருவித்துரைத்தார். செல்லல் எனவிலக்கியது,செல்வோனது உள்ளத்தின் சிறுமை கருதிக் கூறப்பட்ட தன்றாதல் விளங்க, "சிறக்க நின் உள்ளம்" என்றார். தெய்வ மருள்கொண்டு ஆடும் புலைத்தியை, "முருகு மெய்ப்பட்டபுலைத்தி" யென்றார். "சிலம்பிற் சூர் நசைந்தனையையாய்நடுங்கல் கண்டே" (குறுந். 52) என்று பனம்பாரனாரும் கூறுதல்காண்க. கரந்திருந்த மறவர் வெட்சியார் புனைகழலோன்,கரந்தையார் தலைவன்; மறவனுமாம். செல்லல் செல்லல் என அடுக்கியது, அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்லலாகா தென்பது வற்புறுத்தி நின்றமையின்," செல்லலென்றது...என்பதாம்" என்று உரைத்தார். நார்த்தாமலைப் பகுதியிலுள்ள குன்றுகளில் ஒன்றான கோடைமலைஇவராற் பாடப்ட்டதென்றும் கொள்ளலாம்.
-----

260. வடமோதங்கிழார்

வடமோதம் என்பது ஓரூர். அது தொண்டை நாட்டிலுள்ளது. சித்தூர் மாவட்டத்திற் சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களிலுள்ளமாதம் என்னும் ஊர் பண்டைநாளில் மோதம் என இருந்துஇந்நாளில் மாதம் என அரசியல் ஏடுகளில் வழங்குகிறது. மதுரைமாவட்டத்திலும் மோதம் என்ற பெரியதோர் ஊரிருந்தமையின்தொண்டை நாட்டின் வடபால் இருந்த மோதம் எனவழங்குகிறது. வடமோதங்கிழார் பாடிய பாட்டொன்று அகத்திலும் காணப்படுகிறது. இவர் பொருள்களைக் கூர்ந்துநோக்கி, ஓவியம் எழுதுபவர்க்குவேண்டுங் குறிப்புததருபவர்போலச் சொற்களால் ஓவியம் செய்து காட்டும் ஒள்ளியபுலமை படைத்தவர். முருக்கம்பூவின் அரும்பு இளமகளிரின்நிறமூட்டியஉகிரை நிகர்க்கும் என்பதும், குரவமலர் வண்டூதுதோறும் உதிர்வது, வெள்ளி நுண்கோல் அரத்தால் அறுக்கப் படுங்கால் உதிர்வதுபோல வுளதென்பதும், உடம்பொழிந்து உயிர் நீங்கும் ஒருவனைத் தன் தோலையுரித்துக் கொண்டேகும்பாம்பின் செயலோடு உவமித்துரைப்பதும் மிக்க இன்பம் தருவனவாகும். பிற்காலத்தே சிவஞான போதமருளியமெய்கண்ட தேவரும் இடைக் காலத்தே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவரும் உடம்பை விட்டுயிர் நீங்குதற்கிவர் காட்டிய உவமையை வியந்தெடுத்துத் தாமும் ஓதுவாராயினர்.

தலைமகளொருத்தி, தன் காதலன் பிரிந்து சென்றவன் விரைய வாராமையால் வேறுபட்டு வருந்தினாள். அவளது மெலிவுமிகுந்தமையின் அவன் வரவு இன்றியமையாதாயிற்று. அந்நிலையில்அவனை மிக நினைந்து வருந்தினள்; அவ்வருத்த முடிவில் அவனும்வந்து சேர்ந்தான். அதனை முன்னறிந்து உணர்த்த வந்ததோழி "மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக;நயந்தாங்கு, உள்ளிய மருங்கின் உள்ளம் போல, வந்து நின்றனரேகாதலர்" (அகம். 317) என மொழிவது மிக்க இன்பம் தருகிறது.

ஒருகால் பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்தேகியது அறிந்து பின்னே சென்று அப்பகைவரை வென்று நிரைகளை மீட்டுக்கொண்டு ஊரின்கண் உய்த்தான் ஒரு தலைமகன். அவன் நிரைமீட்குங்கால் செய்த போரில் அவன் மார்பில் பவைர் எய்த அம்புதைத்து அவன் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் நிலையைப் பயந்தது. ஊரருகே வந்ததும், அவன் உயிர் நீங்கிற்று; உடம்பும் கீழேவீழ்ந்தது. ஊரவர் அவற்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும்எழுதிச் சிறப்பித்தனர். அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவன்பாணர்க்கும் புலவர்க்கும் நிலனும் பொருளும் வழங்கி இசை பெற்றவன்.அவன் நடுகல்லானது அறியாத பாணனொருவன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவற்கு வழியில் தீநிமித்தங்கள் உண்டாயின. அதனால் அவன் இத்தலைவனைக்காண்டல் இயலாது போலும் எனும் கவலையால் விழுங்கப்பட்டுவாடிய முகத்தனானான். அவனை இடைவழியில் வேறொரு பாணன்கண்டு, "பாண, இனி நீ தலைவன் தந்த நிலத்தை உழுதுண்டல்செய்வதோ, வேறு வேறிடஞ் சென்று இரந்துண்பதோ இவையேசெய்யத்தக்கன; தலைமகனோ நிரைமீட்டு வந்தவன் ‘நிரையொடுவந்த உரையனாதி, உரிகளை யரவம் மான, அரிதுசெல் லுலகிற்சென்றனன்" என்று சொல்லி, "அவன் பெயர் கல்லில் எழுதப்பட்டுளது; சென்று கண்டு வழிபடுக" எனக் கையறவுபடவுரைத்தான். இதனை நம் வடமோதங்கிழார், இந்த இனியபாட்டால் நம் நெஞ்சுருகுமாறு பாடியுள்ளார்.

    வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
    விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
    தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
    உளருங் கூந்த னோக்கிக் களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்         5
    பசிபடு மருங்குலை கசிபுகை தொழா அக்
    காணலென் கொல்லென வினவினை வரூஉம்
    பாண கேண்மதி யாணரது நிலையே
    புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
    தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும்         10
    கையுள போலுங் கடிதண் மையவே
    முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
    நெடுநிரை தழீஇய மீளி யாளர்
    விடுகணை நீத்தந் துடிபுணை யாக
    வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து         15
    வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
    வையேயிற் றுய்ந்த மதியின் மறவர்
    கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையொடு வந்த வுரைய னாகி
    உரிகளை யரவ மானத் தானே         20
    அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே
    கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
    கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
    அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
    உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே         25
    மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
    இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
    படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே.
    ---------

திணை:அது.துறை:கையறுநிலை.பாண்பாட்டுமாம்...வடமோதங்கிழார் பாடியது.

உரை: வளரத் தொடினும் - ஓசை மிக வேண்டுமென்று எறியினும்; வௌவுபு திரிந்து - ஓசையை யுள்வாங்கி வேறு பட்டு; விளரி உறுதரும் தீந்தொடை நினையா - இரங்கற் பண்ணாகிய விளரியைச் சென்றுறுகின்ற இனிய நரம்புத் தொடை யினது தீங்கை நினைந்து; தளரும் நெஞ்சும் தலைஇ -நடுங்கும் நெஞ்சத்தைத் தலைப்பட்டுப் புறப்பட்ட அளவில்; மனையோள் உளரும் கூந்தல்நோக்கி - நிமித்த வழியாக ஒரு மனைவி விரித்து வருகின்றமயிரைப் பார்த்து; களர கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - களர் நிலத்துள்ள கள்ளி மரத்தின் நிழற்கண் உண்டாகிய தெய்வத்தை ஏத்தி; பசிபடு மருங்குலை - பசி தங்கிய வயிற்றையுடையாய்; கசிபு கை தொழா - இரங்கிக் கையால்தொழுது; காணலென் கொல் என வினவினை வரூஉம் - நம்குரிசிலைக் காணமாட்டேன் கொல்லோ என்று எதிர் வருவாரைப் பார்த்துக் கேட்டு வருகின்ற; பாண கேண்மதியாணரது நிலை - பாண கேட்பாயாக நமது செல்வம் பட்டநிலைமை; புரவுத்தோடு துண்குவை யாயினும் - இனி நீ அவன் நமக்குவிட்ட பண்டங்களைக் கைப்பற்றி உண்பாயாயினும்; இரவு எழுந்து எவ்வம்கொள்குவையாயினும் – அன்றி அவனோடு கூடி இன் புற்றிருந்தவிடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக்கடவோமென்றெழுந்திருந்து வருத்தம் கொள்வாயாயினும்; இரண்டும் கையுள போலும் - இரண்டும் நினது கையகத்துள்ளன்; கடிது அண்மைய முன்னூர்ப் பூசலில் தோன்றி – மிக்க அணுமையையுடையர் ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கண் தோன்றி; தன்னூர் நெடுநிரை தழீ இய மீளியாளர் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்; விடுகணை நீத்தம் துடி புணையாகவென்றி தந்து - எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியேபுணையாகக் கடந்து; கொன்று - பகைவரைக் கொன்று; கோள் விடுத்து- அவர் கொண்ட நிரையை மீட்டு; வையகம்புலம்ப - உலகம் தனிப்ப; வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்தமதியின் - சூழ்ந்துகொண்ட பாம்பினது கூரிய பல்லினின்று பிழைத்துப் போந்த திங்களைப் போல; மறவர் கையகத் துய்ந்தகன்று டைப் பல்லான் நிரையொடு வந்த - மறவருடைய கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றையுடைய பலவாகியஆனிரையுடனே வந்த; உரையனாகி - சொல்லையுடையனாய்; உரிகளை அரவம்மான - தோலுரித்த பாம்பு போல; தானேஅரிது செல்லுலகில் சென்றனன் - தான் ஒருவனுமேயாகஅரிதாகச் செல்லப்படும் தேவருகத்தின்கட் போயினான்; உடம்பு - அவனது உடம்ப; கானச் சிற்றியாற்று அருங்கரை - காட்டுட் சிற்றியாற்றினது அரிய கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு சிற்றியாற்றினது அரிது கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு துலங்கிய இலக்கம் போல - காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த இலக்கத்தை யொப்ப; அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்று - அமபாற்சலித்து அவ்விடத்து வீழ்ந்தது; உயர்இசை வெறுப்பத் தோன்றியோன் பெயர் - உயர்ந்த கீர்த்தி மிகவும் தோன்றிய மறவன் பெயர்; மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர்சூட்டி - மென்மை யமைந்த மயிலினது அழகிய மயிராகிய பீலியைச்சூட்ட; பிறர் இடம் கொள்ளாச் சிறுவழி - பிறர்இடங்கொள்ளப்படாத சிறிய விடத்து; படஞ்செய் பந்தர்க்கல் மிசையது - புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்டகல்மேலது; எ - று.

சூட்டியென்பது சூட்டவெனத் திரிக்கப்ட்டது; சூட்டப்பட் டெனினுமமையும். மனையோள் கூந்தனோக்கி என்பதற்குப் "பாண, என்மனைவியது சரியும் மயிரை நோக்கி" யெனவும், புரவுத் தொடுத்தென்பதற்கு அன்று உம்மைப் புரந்த பரிசபை பாடியெனவும் உரைப்பாருமுளர்.

விளக்கம்: உரையில் ஒரு மனைவி யென்றதில், மனைவி, மனைக்கு உரியவளாகிய ஒருத்தி யென்பதுபட நின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்தி முற்படவரின், அதனைத்தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாம் எனக் கருதிய தீங்கை விலக்குதல் வேண்டித் தெய்வம்பரவினமையின், "கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி" யென்றார். அணங்கெனவும் தெய்வமெனவும் கூறாது கடவுள் என்றது, மனமொழிகளின் எல்லை கடந்து நின்று, உயிர்கள் நுகர்தற்குரிய வினைப்பயன்கள் தாமே சென்று செய்தவுயிரைச் சாரமாட்டாமையான், அவ்வினைப்பயனை வினை முதலாகிய உயிர்கள் நுகரச்செய்யும் முழுமுதற் பொருள், தீநிமித்தம் காட்டும்தீப்பயன் வந்து சாராமை விலக்க வல்லதாமென்பதனால், அதனைக் கடவுள் எனவும், கடவுள் வாழ்த்தி யெனவும் கூறினார். "கோட்பாலனவும் வினையுங்குறு காமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்க தக்கார்" (திருஞான. மூன், பதி:54) என்று சான்றோர் தெளிய வுரைப்பது காண்க. குருசிலைக் காணச் செல்லுதற்குக் காரணம், வயிற்றிடை நின்றுவருத்தும் பசியாதலால், "பசிபடு மருங்குலை" யென்பது கூறப்பட்டது. யாணர், புதுமை; sஈண்டு ஆகுபெயரால் புதியவாய்ப்பெறப்படும் பொருண்மேனின்றது. ஒருகாலத் தோரிடத்தேஒருவர் தமக்குரிய அன்பரைக் கண்டு, பிறிதொருகால் அவரையின்றி அவ்விடத்தைக் காணின், அஃது அன்பரைப்போல் இன்பஞ் செய்யுமென்பது இயல்பு. இதனால் "இரவெழுந்து எவ்வங்கொள்குவையாயின்" என்றதற்குப் பொருள் கூறுவாராய்," அவனோடு கூடி யின்புற்றிருந்த விடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக் கடவோம் என்றெழுந்திருந்து வருத்தங்கொள்வாயாயினும்" என்று உரைகாரர் கூறுவாராயினர். போலும்: உரையசை. போலும் என்பதை உவம வுருபாகவே கொண்டு கையுள்ளனபோல மிக்க அணுமையையுடைய என இயைத்துரைப்பின், ஈண்டுக் கூறிய உண்டலும் கோடலும் என்ற இரண்டும் தொழின்மேனின்ற சொற்களாய், அண்மைச் சொற்கு இயையாதனவாய் இருத்தலின் பொருந்தாமை கண்டேஉரைகாரர், கடிதண்மைய வென்றதை ஊரோடியைத்துரைத்தாரென அறிக. அம்பு வெள்ளம் - அம்புகளாகிய வெள்ளம். பாம்பின்வையெயிற்றுய்ந்த மதியின் மறவர் கையகத்துய்ந்தன ஆனிரையென்ற இவ்வுவமவழகைக் கண்ட திருத்தக்கதேவர், சீவகன்நிரை மீட்ட செய்தி கூறலுற்ற விடத்து, "வாள் வாயுமின்றிவடிவெங் கணையுமின்றிக், கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறுமீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகை வெண்மதிசெல்வதொத்தான்" (சீவக: 454) என்று தாம்மேற் கொண்டமைத்துப் பாடுவது கண்டு இன்புறுவது தக்கது. அறமும் புகழுமுடையார்க்கல்லது செல்லுதல் அரிதாகலின்,மேலுலகம் "அரிது செல்லுலகு" எனப்பட்டது. நிலத்தே படியவீழாது சாய்ந்து நிற்குமாறு தோன்ற, காலுற்றுத் துளங்கியகம்பம் என்றார். இலக்கம், விற்பயிற்சி பெறுவார் அம்பு எய்துபயிறற்கு நிறுத்தம் கம்பம். தோன்றி யென்பதே பாடமாயின் அதுதோன்றியோன் என்று பொருள்பட வந்த பெயராம்.
-----------

261. ஆவூர் மூலங்கிழார்

பாண்டி நாட்டில் மல்லியைத் தலைநகராகக் கொண்ட சிறு நாடுமல்லி நாடெனப்படும். அதற்குரிய தலைவன் காரியாதி யென்னும் பெயரினன். அவன்பால் ஆவூர் மூலங்கிழார் பேரன்புடையவர். ஒருகால அவர் அவன் நெடுமனைக்குச் சென்றிருந்தார். அவன்தன்பால் வருபவர்க்குத் தடையின்றி வரவேற்பு நல்கி நல்லவுணவளித்துச் சிறப்புச் செய்தான் . அதனைக் கண்ட ஆவூர்மூலங்கிழார்க்கு வியப்பு மிகுந்தது. அவனைப் புகழ்வாராய் அவனது நெடுமனையின் சிறப்பை இனிய பாட்டொன்றில் சிறப்பித்தார். பின்பு அவன் தந்த மிக்க பரிசிலைப் பெற்றுத் தமதுஊரை யடைந்தார் ஆவூர் மூலங்கிழார். பல நாட்குப்பின் அவர்காரியாதி யுறையும் மல்லிக்குச் சென்றார். இடையில் நிகழ்ந்ததுஅவர்க்குத் தெரியாது. காரியாதியின் பகைவர் அவனூர் ஆரிரைகளைக் கவர்ந்து சென்றனர். அதுகேட்ட காரயாதிவிரைந்து சென்று அவரோடு போருடற்றி அந்த நிரைகளை மீட்டுக் கொணர்ந்து மேம்பட்டான். ஆயினும், பகைவர் அவன்மேல் எறிந்த படைகள் அவற்கு இறுதியை விளைத்தன. ஊரவர் அவனது பெறலரும் பீடும் பெயரும் நடு கல்லிற் பொறித்து நட்டு வழிபட்டனர். இது நிகழ்ந்த பின்பே ஆவூர் மூலங்கிழார் மல்லிக்கு வந்ததாகும். அதனால் மனம் புண்பட்டு வருந்தியவர் காரியாதியின் பெருமனை பொலிவிழந்து தோன்றுவது கண்டு இந்தப் பாட்டினைப் பாடினார். காரியாதியின் பெயர் ஏடுகளிற் சிதைந்து போயிற்று. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் கரந்தைப் போரில் நிரைமீட்டுப்பட்டான். ஒருவன் நடுகல் "தஞ்சை கொண்டகோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு 3-வது: கற்பூண்டி நாட்டுஅத்தீயூர் கரம்பை, கலிதொடான்" முக்கண் அணியன் தொறுக்கொள (அத்) தொறு மீட்டுப்பட்டான்." (A.R. for 1935-6. பக்.72) எனவருவது பண்டைநாளில் நடுகல்லிற் பீடுபெற எழுதிய திறத்தை எடுத்துக்காட்டுகிறது. தஞ்சைகொண்ட பரகேசரி விசயாலயன் என்னும் சோழவேந்தன்.

    அந்தோ வெந்தை யடையாப் பேரில்
    வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
    வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
    கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே         5
    வையங் காவலர் வளங்கெழு திருநகர்
    மையல் யானை யயாவுயிர்த் தன்ன
    நெய்யுலை சொரிந்த மையூ னோசை
    புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப்
    பயந்தனை மன்னான் முன்னே யினியே         10
    பல்லா தழீஇய கல்லா வல்வில்
    உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி
    நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
    விரகறி யாளர் மரபிற் சூட்ட
    நிரையிவட் டந்து நடுக லாகிய         15
    வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
    கழிகல மகடூஉப் போல
    புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே.
    --------

திணையும் துறையு மவை...ஆவூர் மூலங்கிழார் பாடியது.

உரை: அந்தோ-; எந்தை அடையாப் பேரில் - என்னிறைவனது அடையாத பெரிய இல்லே; வண்டுபடு நறவின் தண்டாமண்டையொடு - வண்டுகள் படியும் மதுவினால் ஒழியாத மண்டையுடனே; வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம் யாவர்க்கும் வரையாமல் வழங்கும் மிக்க சோற்றையுடைய முரிந்த குறட்டையுடைத்தாகிய முற்றம்; வெற்று யாற்று அம்பியின் எற்று - நீரற்று யாற்றின் ஓடம் எத்தன்மைத்து; அற்றாக கண்டனென் மன்ற - அத்தன்மைத்தாகக் கண்டேன் நிச்சயமாக; என் கண் சோர்க - என் கண்மணி சோர்ந்து வீழ்வனவாக; வையங் காவலர் வளங்கெழு திருநகர் - உலகத்தைக்காக்கும் வேந்தருடைய செல்வமிக்க திருநகரின்கண்; மையல்யானை அயா வுயிர்த்தன்ன - மதத்தான் மயங்கிய யானை உயங்குதலான் நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற; நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை - நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையையுடைபொரியலை; புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர - புது மாந்தருடைய ஒளிமழுங்கிய கண்கள் நிறைய; பயந்தனை முன்மன்- உண்டாக்கினாய் முன்பு அது கழிந்தது; இனியே - இப்பொழுது; பல் லா தழீஇய - பல ஆனிரையைக் கைக்கொண்ட; கல்லா வல்வில் - கற்கவேண்டாத வலிய விற்படையை; உழைக்குரல் கூகை அழைப்ப-தன்னிடத்தே குரலையுடைய கூகை தன் இனத்தை அழைக்கும்படி; ஆட்டி -அலைத்து; நாகு முலையன்ன - நாகனிது முலை போன்ற; நறும் பூங் கரந்தை- நறிய புவையுடைய கரந்தையை; விரகறியாளர் மரபின ் சூட்ட - அறிவுடையோர் சூட்டும் முறைமையிலே சூட்ட; நிரை இவண் தந்து - நிரையை இவ்வூரின்கண் மீட்டுத் தந்து; நடுகல் ஆகிய வென்வேல் விடலை இன்மையின் - நடப்பட்ட கல்லாகியவென்றி வேலையுடைய இறைவன் இல்லாமையால்; புலம்பி - தனித்து; கொய்ம்மழித் தலையொடு - கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே; கைம்மை உறக் கலங்கிய கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற; கழிகல மகடூஉப் போல- ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை யொப்ப; புல்லென்றனை பல்லணி இழந்து - பொலிவழிந்தனை பல அழழும் இழந்து; எ - று.

அம்பியின் என்புழி இன் அசைநிலை. அம்பியின் அற்றாக என்று பாடமோதுவாருமுளர். கண்: அசை. மன்: கழிவின்கண் வந்தது. எந்தை பேரில்லே! செதுக்கணாராப் பயந்தனை முன்; இனி, மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென்றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்;கண்ட என்கண் சோர்க எனக்கூட்டுக. ஓசை யென்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை; இஃது ஒரு திசைச்சொல். செதுக்கணார வென்பதற்குச் செதுக்கின குடர் நிறைய என்றுமாம்; கைம்மிஞ்ச என்றுமாம்.

விளக்கம்: பொலிவிழந்த மனையைக் கண்டதும் மனம் கலங்கி வருந்துகின்றாராதலின், "அந்தோ! எந்தை அடையாப் பேரில்" என்றார். வரையாத வண்மையுடையன் என்பது தோன்ற, "அடையாப் பேரில்" எனப்பட்டது. நறவுண்ணும் கலம் மண்டை; நறவு குறையாமையால் மண்டையும்ஒழியாதாயிற்று. முரிவாய் முற்றம் என்பதில் வாயென்றது குறடு; அது பலரும்சார்தலால் தேய்ந்து முரிந்து கொண்டு "முரிவாய் முற்றம்" எனப்பட்டது. நீர்வற்றிய யாற்றில் ஓடம் பயன் படாமையால் அதனை நாடுவார் இலர்; அவ்வாறே பேரில்லமும் மக்கள் வழக்கற்றமையின், பொலிவற்றுக் கிடக்கின்றது என்பதாம். இத்தகைய நிலை எய்துமென எக்காலத்தும் எதிர்பார்த் திலராதலால், எய்தக்கண்ட ஆசிரியர் பிறரறிய வற்புறுத்துவாராய்"கண்டனென் மன்ற" என்றும் பெருஞ் செல்வ நிலையிற் கண்ட கண்கள்,அவ்வண்ணமே காணாது இந்நிலையிற் காண்டலின் வருந்துவார்,"சோர்கவென் கண்ணே" என்றும் கூறினார். காரியாதி குறுநிலத் தலைவனாதலால், முடிவேந்தர் மனையை ஒப்பாக நினைக்கின்றார்.முடிவேந்தர் பெருமனை முன்றிலில் மதங்கொண்ட யானைகள் நின்று நெட்டுயிர்ப்புக் கொள்வதால் எழும் ஓசைபோல, இத்தலைமகன் பேரில்லத்தின்முன்றிலில் "நெய்யுலை சொரிந்த மையூனோசை" எழுந்தது. இது முன்பு வந்ததோது ஆசிரியர் கண்டகாட்சி. புதுவோர் புதுமை காரணமாகப் பிறந்த மருட்கை கொண்டு அதனை நோக்கினாராதலால், "செதுக்கண் ஆர" என்றார். செதுக்கண், ஒளி மழுங்கின கண். புதுக் கண் என்ற விடத்துக் கண்ணென்பது அசைநிலை; அதனால் புதுக்கண் மாக்கள் என்றதற்குப் "புது மாந்தர்" என உரை கூறப்பட்டது. ஒசையென்றே வழங்குகின்றனரென்பார், "இஃதொரு திசைச் சொல்" என்று உரைகாரர் குறிக்கின்றார். கல்லா வல்வில் என்றவிடத்து வில்லென்றது வில்லேந்திய வீரர்களை. அவர்க்ள வழிவழியாக வில்லேருழவராயிருந்ததலால், "குலவிச்சை கல்லாமற் பாகம்படும்" என்பதற்கேற்ப அவர் தனியே கற்க வேண்டாராயின ரென்பார், "கல்லா வல்வில்" என்றார். வல்வில் ஆட்டியென இயையும். ஆட்டுதல், அலைத்தல்; "ஒருவனாட்டும் புல்வாய்போல" (புறம். 193) என்பதன் உரை காண்க. வில் வீரரையலைத்தலால் கூகை முதலியன வேண்டும் இரை கிடைப்பதுகண்டு தம் இனத்தை யழைப்பவாயின என்பதுபட, "உழைக்குரற் கூகை யழைப்ப ஆட்டி" என இயைய வுரைத்தார். பெருங்குரலுடைமைபற்றி, "உழைக் குரல்" என்றார். நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப்பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு. இதுபற்றியே "நாகு முலைன்ன நறும்பூங் கரந்தை" யென்றார்.

விரகு நுண்ணறிவுடையார்பால்உளதாகலின் விரகறியாள ரென்றதற்கு "அறிவுடையோர்" என வுரைத்தார். நிரை கவரச் செல்வார்க்கு வெட்சியும், மீட்போர்க்குக் கரந்தையும் சூடுவது மரபாதலால், கரந்தை சூடிப் பொருது வென்று வந்தார்க்குக் கரந்தை சூட்டுதலை, "மரபிற் சூட்ட" என்றார். காரியாதி இறக்குங்கால் முதுமை யெய்தினவனல்லன் என்பதற்கு "வென் வேன் வேல் விடலை" என்றார். கலங்கிய மகடூஉ, கழிகல மகடூஉ என்க. கணவனையிழந்தமையால் அணிகலன்களைத் துறந்து நிற்பதுபற்றி "கழிகல மகடூஉ" என்றார். பேரில்லினும் கலங்கழிந்து நிற்கும் மகளிரது நிலை பொலி விழப்பினை விளங்கக் காட்டுதலால், "கழிகல மகடூஉப்போல" என உவமையின் வைத்தோதினார். செதுக்கணார வென்பதற்கு வேறு வகையிலும் பொருள் கூறலாமென்பதற்கு, "செதுக்கணார...என்றுமாம்" என்றார்.
------

262. மதுரைப்பேராலவாயார்

ஒருகால் மதுரைப்பேராலவாயார் என்னும் சான்றோர் தாம் அறிந்த தலைவனொருவனைக் காணச் சென்றிருந்தார். அக்காலை அவன் பகைவர் நாட்டுட் சென்று அவர்தம் நிரைகளைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவு நோக்கிப் பேராலவாயார் அங்கே தங்கியிருந்தார். சிறிது போதில் அவன் தன்னொடு போந்த துணைமறவர் புடை சூழப் பகைவர்பால் கவர்ந்த ஆனிரையுடன் திரும்பி வந்தான். மக்கள் பேராரவாரத்துடன் அவனை வரவேற்றனர். அச்சிறப்புக்குறித்து அங்கே உண்டாட்டு நிகழ்ந்தது. அதன்கண் சிறப்புடையோர் சிலர் உண்டாட்டுக்குரிய இடத்தை ஒப்பனை செய்தற்கும் நறவு முதலிய உணவுப் பொருள்களை யமைப்பதற்கும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரிடையே நிகழ்ந்த பேச்சுக்கள் நம் சான்றோராகிய மதுரைப் பேராலவாயார் புலமைக்கு நல்விருந்தாயின. அதன் பயனாக இப் பாட்டு எழுந்தது.

    நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
    பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
    புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
    ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
    நிரையொடு வரூஉ மென்னைக்         5
    குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே,
    ------

திணை: வெட்சி. துறை: உண்டாட்டு; தலைத் தோற்றமுமாம்…மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத் தோற்றமாவது, "உரவெய்யோ னினந்தழீஇ,வரவுணர்ந்து கிளை மகிழ்ந்தன்று," (பு.வெ.மா.வெட்சி. 12)

உரை: நறவும் தொடுமின் - மதுவையும் அலைத் துண்ணும்படி பிழிமின்;விடையும் வீழ்மின் - ஆட்சி விடையையும் படுமின்; பாசுவல் இட்ட புன்கால் பந்தர் - பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண்; புனல் தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின் - நீர்கொழித்துக் கொடுவரப் பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; ஒன்னார் முன்னிலை முருக்கி - பகைவரது தூசிப்படையை முறித்து; பின்னின்று நிரையொடு வரூஉம் என்னைக்கு - பெயர்ந்து போதுகிற தனது படைக்குப் பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு; உழையோர் - பக்க மறவராய் நிரை கொண்டு வருவோர்; தன்னினும் பெருஞ் சாயலர் - அவன் தன்னினும் பெரிய இளைப்பை யுடையார்; எ - று.

சாயல் விடாயாலுண்டான் மெை்மை. என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக.

விளக்கம்: "உரவெய்யோன் இனந்தழீஇ, வரவுணர்ந்து கிளை மகிழ்ந்தன்று" என்பதற்குப் பொருள் "வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மன மகிழ்ந்தது" என்பது. தொடுதல், பிழிதல், பிழியுங்கால் கோது நீக்கித் தூய நறவு பெறப்படுதலின் அது தெளிந்து தேறலாகிய வழி சிறந்ததாகக் கருதப்படுகிறது. "எமக்கே கலங்கல் தருமே" (புறம். 298) என்று பிறரும் கூறுவது காண்க. பாசு உவல், பசிய தழை; "உவலைக் கூவல்" (ஐங். 10) என வருதல் காண்க. இளமணல் - புதுமணல். என்னை - என் தலைவன். பகைவர் தூசிப்படையை வென்றெறிந்து முன்னே வருதலால், உழையோர்க்குத் தலைவனைக் காட்டிலும் இளைப்புப் பெரிதாயிற்றென அறிக. விடாய் - வேட்கை. சாயல் மென்மையாதலால் அதற்குக் காரணம் விடாய் என்பார், "சாயல், விடாயாலுண்டாகும் மென்மை"
யென்றார்.
--------

263. கையறுநிலை

பகைவர் தன்னூர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர் என ஆயர்வந்து முறையிடக் கேட்டான் ஒரு தலைமகன். உடனே தன் பக்க மறவர் சூழச்சென்று அப்பகைவரினின்றும் ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான்.வருங்கால் முன்னே மறவர் ஆனிரைகளைச் செலுத்திக்கொண்டு செல்லத் தான் பின்னே நின்று காவல் புரிந்து வந்தான். வருகையில் பின்னிட்ட வெட்சியார் மீளவும் திரண்டுவந்து நிரை கவரும்பொருட்டுப் போருடற்றினர். பெருகிவரும் புனலை எதிர்நின்று சிறைக்கும் கல்லணை போல் இத்தலைமகன் எதிர்த்து நின்று பொருதான். அவர் பலராய்த் தம் அம்புகளை மிகுதியும் சொரியவே அவை அவன் உடம்பில் ஊடுருவி அவன் உயிரையுண்டன. ஊரவர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை அவன் பொருட்டு நிறுவிச்சிறப்புச் செய்தனர். பின்பு, அங்கே உடனிருந்து அவன் புகழ்பாடிய சான்றோர்மீளத் தம்மூர்க்குச் சென்று கொண்டிருக்கையில் எதிரே கிணையுடைய பாணனொருவன் வரக்கண்டு அவனுக்குக் கூறுவாராய், "பாண, நீ இவ்வழியே செல்கின்றாயாயின், வழியில் உடன்வந்த மறவர் அஞ்சி நீங்கவும் நீங்காது நின்று வெட்சியாருடன் பொருது நடுகல்லாகிய தலைமகனைக் காண்பாய்; அங்கே அந்நடுகல்லைக் கண்டு வழிபடாது செல்லற்க; வழிபடுவையேல், வறங்கூர்ந்திருக்கும் இவ்வழிவண்டு மேம்பட்டுவாழும் வளமுடையதாம்," என்று இப்பாட்டினைப் பாடுகின்றார்.

    பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
    இரும்பறை யிரவல சேறி யாயின்
    தொழாதனை கழித லோம்புமதி வழாது
    வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
    பல்லாத் திறணிரை பெயர்தரப் பெயர்தந்து         5
    கல்லா விளையர் நீங்க நீங்கான்
    வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
    கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே
    -------

திணை: கரந்தை. துறை: கையறுநிலை...

உரை: பெருங்களிற்று அடியின் தோன்றும் - பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும்; ஒருகண் இரும்பறை இரவல - ஒரு கண்ணினை யுடையதாகிய பெரிய பறையினையுடைய இரவலனே; சேறியாயின் - நீ போகின்றாயாயின்;தொழாதனை கழிதல் ஓம்புமதி-தொழாயாய்ப் போதலை நீ பரிகரிப்பாயாக; வழாது வண்டு மேம்படுஉம் இவ் வறநிலை யாறு - தவறாதே தொழவே இடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும் இக்கொடிய வழி; பல்லாத் திரள் நிரை மீண்டு தன்னோடு போதரப் பேர்ந்து; கல்லா இளையர் நீங்க இயல்பாகிய போர்த் தொழிலையுடைய வீரர் இரிந்தோட; நீங்கான் - தான் போகானாய்; வில்லுமிழ் கடுங்கணை மூழ்க - வில்லுமிழப்பட்ட விரைந்த அம்பு குளிப்பு; கொல் புனல் சிறையின் கரையைக் கொல்லும் புனலின்கண் அணை போல; விலங்கியோன் கல் - எதிர்நின்று விலக்கியவனது கல்லை; எ - று.

புனற் சிறையில் விலங்கியோன் கல்லைத்தொழாதனை கழிதலை. யோம்பு; தொழவே இவ்வறநிலை யாறு வண்டு மேம்படுமெனக் கூட்டுக. தொழுது போகவே, கொடுங்கானம் மழை பெய்தலாற் குளிருமென்பான், காரியமாகிய வண்டு மேம்படுதலைக் கூறினான். வண்டென்பது மறவருள் ஒரு சாதியென்பாருமுளர். ஆறு வண்டு மேம்படுமென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேலேறி நின்றது.

விளக்கம்: கிணைப்பறைக்குக் கிற்றின் அடியை யுவமித்தல். மரபு; பிறரும், "கடாஅ யானைக் கால்வழி யன்னவென், தடாரித் தெண் கண்" (புறம்.368) என்பது காண்க. தொழுது செல்கவென்னாது தொழாது செல்லுதலை ஒழிக என்றது. தொழுதாற் பிறக்கும் பயனை யறிதற்கு நினைவுறுத்தியவாறு. இவ்வறநிலை யாறு எனச் சுட்டியது, வறங்கூர்ந்து பசுமையற்ற வழியை யுணர்த்திற்று. போர்த் தொழிலையன்றி வேறெத் தொழிலும் பயிலாதவரென்றதற்குக் "கல்லா விளையர்" என்றார். கரையைக் கல்லி அணையை உடைத்துக் கொண்டுபோகும்பெரு வெள்ளம் என்பது போதர, "கொல்புனல் சிறையின் விலங்கியோன்" எனல் வேண்டிற்று.

கொல்லுதலாவது கரையை அலைத்துக் கெடுத்தல்; விலங்குதல், குறுக்கிட்டு நிற்றல். தொழுதவழி நடுகல்லில் நிற்கும் மறவன் தெய்வமாய்ப்பின் மழைபெய்விக்கும் மாண்புடையனாவன் என்பது கருத்து. இவ்வறனில் யாறே என்றும் பாட வேறுபாடுண்டு. வண்டின் வினையாகிய மேம்படுதல், வழியின்மேல் நின்றது. சேரநாட்டு மலைமுடியில், குட்டநாட்டுக்குத் தலைவன் வண்டன்; அவனை, "கடவுளஞ்சி வானத்திழைத்த தூங்கெயிற் கதவம் கொண்ட, எமூஉ நிவந்தன்ன பரே ரெறுழ் முழவுத்தோள், வெண்டிரை முந்நீர்வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன்" (பதிற். 31) எனக் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுதல் காண்க. இவ்வண்டன் வழியினரை நினைந்து, "வண்டென்பது மறவருள் ஒருசாதி யென்பாருமுளர்"எனப் பழைய வுரைகாரர் கூறுகின்றார் அம்மலைப்பகுதி இப்போது ‘வண்டன் மேடு’ என வழங்குகிறது. பொன்னானி வட்டத்து மூதூர்களுள் வண்டூர் என்பது இந்தக் குறிப்புக்கு ஆதரவு தருகிறது. தூய்மையில்லாதான் ஒருவனை வையுமிடத்து, மக்கள் "இவன் ஒரு வண்டல்" என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
-------

264. உறையூர் இளம்பொன் வாணிகனார்

இளம் பொன்னென்பது ஓடுதலுடைய மாற்றுக் குறைந்த பொன்னாகும். இதனை வாணிகம் செய்தது பற்றி இவர் இளம்பொன் வாணிகராயினார். இத்தகைய வாணிகர் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் வஞ்சியிலும் பிறநகரங்களிலும் இருந்தனர். பொன்வகையுள் சாதரூபமும் கிளிச்சிறையும் இளம் பொன்னாதலால், இவற்றை உரைத்து உரையால் அறுதியிட்டு வாணிகம் செய்வோர் இளம்பொன் வாணிகராயினர். செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனாரென்னும் சான்றோருடைய தந்தையாரும் இவ்வகையினறே. முல்லைப்பாட்டின் ஆசிரியராகிய நப்பூதனாருடைய தந்தையும் பொன் வாணிகரே; என்றாலும் அவர் இளம்பொன் வாணிகரல்லர். சான்றோர் கூட்டத்துள் இவர் இயற்பெயர் வழங்காது இளம்பொன் வாணிக ரென்ற பெயரே பயில வழங்கினமையின், இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் உறையூர் இளம்பொன் வாணிகனாரென்றே குறித்தொழிந்தார்.

ஒரு தலைவன் தன்னூரினின்றும் நிரைகளைக் கவர்ந்துசென்ற பகைவரை வென்று வெருட்டியோட்டி, அவற்றை மீட்டுக் கொணர்ந்து ஊரில் உரியவர்க்குக் கொடுத்தான். அவன் அவ்வாறு கொடுப்பினும், நிரை மீட்கும் போரில் புண்பட்டமையின், அதுவே வாயிலாக உயிர் துறந்தான். சான்றோர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை அவன் பொருட்டு நாட்டி மயிற் பீலியும் பூமாலையும் சூட்டிச் சிறப்புச் செய்தனர். அங்கேயிருந்த சான்றோருள் உரையூர் இளம்பொன் வாணிகனாரும் ஒருவராவர். அவர், "இத்தலைவன் உயிரோடிருந்த காலத்தில் நெடுஞ்சுரத்து நின்ற நிழல் மரம்போல் பாணர் முதலிய இரவலர்க்கு இனிய அருள்புரிந்து வந்தவன்; இவன் நடுகல்லாகியது பாண் சுற்றத்தார்க்குத் தெரியுமோ தெரியாதோ? பாணர் தெரியாது வந்து மன்றம் புகுந்து மறுகுசிறை பாடுவரேல், கேட்போருக்குக் கையறவு மிகுமே; பாணர் கூட்டம் அறியாது இன்னும் வருமோ? வராமை நன்றன்றோ" என இரங்கி இப்பாட்டைப் பாடினர்.

    பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
    மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ
    டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்
    தினிநட் டனரே கல்லுங் கன்றோடு
    கறவை தந்து பகைவ ரோட்டிய         5
    நெடுந்தகை கழிந்தமை யறியா
    தின்றும் வருங்கொல் பாணரது கடும்பே.
    -------

திணையும் துறையும் அவை...உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

உரை: பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி - பருக்கைகளையுடைய இடத்துத் திட்டையைச் சேர்த்தி; மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு - ஆண்டுள்ள மரலைக் கீறித் தொகுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே; அணி மயில் பீலி சூட்டி - அழகிய மயிலினது பீலியைச் சூட்டி; பெயர் பொறித்து - பெயரை எழுதி; இனி நட்டனர் கல்லும் - இப்பொழுது நட்டார் கல்லையும்; கன்றொடு கறவை தந்து - கன்றுடனே கறவையையும் மீட்டுக் கொண்டுவந்து; பகைவர் ஒட்டிய நெடுந்தகை - மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகை; கழிந்தமை அறியாது - பட்டமை அறியாது; இன்னும் வரும்கொல் பாணரது கடும்பு - இன்னும் வருங்கொல்லோ பாணரது சுற்றம்; எ - று.

பட்டமையறிந்து வாராதொழியுமோ, அறியாது வருமோ என ஐயமாக்குக. பதுக்கை சேர்த்ததேயன்றிக் கல்லும் நட்டனரென உம்மை எஞ்சிநின்றது.

விளக்கம்: பருக்கைக்கற்கள் நிறைந்திருக்கும் இடம் பரலுடைய மருங்கு எனப்பட்டது. பதுக்கையென்றது மேடையென்னும் பொருள் பட நின்றது. மரலிடத்து எடுத்த நார் கொண்டு செம்பூங்கண்ணி தொடுத்தனர் என்பார், "மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி" என்றார். மரல், கற்றாழையினத்தைச் சார்ந்தது. செம்பூங்கண்ணியும் மயிற்பீலியும் சூட்டி யென்றவாறு. பெயரும் பீடும் எழுதி நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிக் கல் நாட்டுவது முறையாக நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிப் பெயர் பொறித்தபின் கன்னடுவது கூறுவது கண்ட நச்சினார்க்கினியர், "அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து,இனி நட்டனரே கல்லும்" எனக் கன்னாட்டுதல்பெரும் படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமையென்பது,"சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை" (தொல்.புறத்.5) "என்புழிச் சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க" என்பர். மரல்நார் கொண்டு கண்ணி தொடுப்ப துண்டென்பதை, "தளிரொடு மிடைந்த காமர் கண்ணி, திரங்குமரல் நாரிற் பொலியச் சூடி" (மலைபடு. 430) என்று சான்றோர் கூறுவதனாலுமறிக. இது தலைவன் பட்டது கண்டு பாணன் கூற்றில் வைத்துக் கையற்றுப் பாடியது.
-----------

265. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

காட்டு நாட்டு ஊர்களுள் வல்லாரென்பது ஒன்று. அவ்வூர்க்குத் தலைவனான பண்ணன் என்பவன் வாள் வன்மையும் கை வண்மையும் உடையவன். அவனைப் பாடிச் சிறப்பெய்தியவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். பண்ணன் கரந்தைப் போர் செய்து மாண்டான். நிரை மீட்டுத்தந்து புகழ்கொண்டதுபற்றிக் கோவலர் அவனுக்கு நடுகல் நாட்டிச் சிறப்புச் செய்தனர். அக்காலையிற் சிறுகருந்தும்பியாரும் வந்திருந்தார். அவர்க்கு அவனது நடுகல்லைக் காணவே மிக்க வருத்தமுண்டாயிற்று. அவனுடைய கைவண்மையால் பாணர் முதலிய இரவலர் இனிது வாழ்ந்து வந்தனர்; அவனுடைய வாள் வன்மையால் முடிவேந்தரும் குறுநில வேந்தரும் வென்றி மேம்பட்டனர். பண்ணன் நடுகல்லானமையால், இருதிறத்தாரும் பெரு வருத்தமெய்துவது கண்டார். கையறவு பெரிதாகவே இக்கையறுநிலைப் பாட்டைப் பாடினார்.

    ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
    போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
    பல்லான் கோவலர் படலை சூட்டக்
    கல்லா யினையே கடுமான் றோன்றல்         5
    வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப்
    பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க்
    கடும்பகட் டியானை வேந்தர்
    ஒடுங்கா வென்றியு நின்னொடு செலவே.
    -------

திணையும் துறையு மவை...சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

உரை: ஊர் நனி இறந்த - ஊரை மிகவும் கடந்த; பார்முதிர் பறந்தலை- முரம்பு நிலமாகிய முதிர்ந்த பறந்தலையிடத்து; ஓங்கு நிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீ - உயர்ந்த நிலையையுடைய வேங்கையினது ஒள்ளிய கொத்தாகிய நறிய பூவை; போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து - பனையோலையால் அலங்கரித்துத் தொடுத்து; பல்லான் கோவலர் படலை சூட்ட - பல ஆக்களையுடைய கோவலரானவர்கள் இலை மாலைகளைச் சூட்டி வழிபட; கல்லாயினை - கல்லிலே நின்றாய்; கடுமான் தோன்றல் - விரைந்த குதிரைகளையுடைய தலைவனே; வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை - மழையிடத்துத் தோன்றும் இடியேறு போன்ற நின்னுடைய தாணிழற்கண் வாழும் வாழ்க்கையையுடைய; கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்காவென்றியும் - விரைந்த செலவையுடைய களிற்றியானைகளையுடைய வேந்தரது மடியாத வென்றியும்; நின்னொடு செல - நின்னோடே கழிய; எ - று.

வானேறு புரையும் நின் தாணிழல் என்றது மழைபோலும் வண்மையுடைமையும் பகைவர்க்கு இடிபோலும் முரணுடைமையும் கருதி. தன்னுடைய வேந்தனுக்குப் போருண்டாகிய போழ்தெல்லாம் வென்றி தந்து போந்தமையின் வென்றியும் அவனோடே கழிந்த தென்றார். தோன்றல், செல்வமன்றியும் வென்றியும் நின்னோடுசெலக் கல்லாயினை எனக் கூட்டுக. சூட்டவென்றது சூட்டி வழிபட எனக் காரியத்தின்மேல் நின்றது.

விளக்கம்: முகையலூர் என்பது இடைக் காலத்தில் முகலாறு என (M. Ep. A.R. No. 214 of 1936-7) வழங்கி இப்போது மொகலாரென வழங்குகிறது. இதற்கு முகையலென்றும் பெயருண்மையின் சோணாட்டு முகையலூர் இதுவென்று துணியலாம். பண்டைக்காலத்துச் செங்கைமா வென்பது இடைக்காலத்தில் செங்கமா(S.I.I. Vol. VIII No. 177)என வழங்கி, இக்காலத்துப் பொதுமக்களாலும் அரசியல் ஏடுகளாலும் செங்கம் என்று வழங்குவது இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டு. இப்பாட்டின் முதன் மூன்றடிகட்கே பழையவுரை கிடைத்துளது. "பல்லான் கோவலர்" என்பது முதல் இறுதி வரையுள்ள பகுதிக்குப் புத்துரை இப்போது வகுக்கப்பட்டுளது. பார்-முரம்பு. இம்முரம்பினைத் தொண்டைநாட்டார் பாரெனவே வழங்குவர். கரந்தைப் போருடற்றிக் கல்லாயினனாதலின், பல்லான் கோவலர் படலை சூட்டி வழிபட்டனரெனவறிக. பரிசிலரைத் தாணிழல் வாழ்க்கையரென்றார்; பிறரும் "யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, யவன் பெறுக வென்னாவிசை நுவறல்" (புறம். 379) என்று பரிசிலன் கூறுவதாக வுரைப்பது காண்க. "வேந்தர் வென்றியும் நின்னொடு செல" வென்றது, வேந்தர்க்குத் துணையாய் நின்று பொருது வெற்றி யெய்துவிக்கும் விறலுடைமை விளக்கி நின்றது; இது, கன்னின்று "கடவுளாகியபின் கண்டது" (புறத்.5) என்பர் நச்சினார்க்கினியார்.
-----

266. சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி உறையூரிலிருந்து ஆட்சியுரிந்து வருகையில் பெருங்குன்றூர்கிழார் தாமுற்ற வறுமைத் துயர்க்காற்றாது அவன்பால் பரிசில் பெறச் சென்றார். அவனும் அவரை வரவேற்றுச் சின்னாள் தன்பால் வைத்திருந்து அவரது புலமை நலத்தைத் துய்த்து வந்தான்.அவன்பால் அவர் பன்முறையும் குறிப்பால் தமது வறுமைத் துன்பத்தைக் கூறினார். அவன் அதனை யுணராதவன்போல் அவருடைய துணைமை யின்பத்தை விழைந்திருந்தான். முடிவில் பெருங்குன்றூர்கிழார் தமது கருத்தை வெளிப்படையாக எடுத்துரைப்பதென்று துணிந்தார். அத்துணிவின் பயனாக இப்பாட்டுப் பிறந்தது.இதன்கண்,"வேந்தே,சான்றோர் இருந்த அவையின்கண் ஒருவன் போந்து தன் குறையை முறையிட்டுத் தனக்குப் பற்றாக வேண்டினானாயின்,அவர்களால் அவனது குறை கடிதில் தீர்த்து வேண்டுவன செய்யப்படும்; எனக்குப் பிறிதொரு குறையில்லையாயினும் விருந்து கண்டால் அவரை ஓம்பமாட்டாத வறுமையாகிய குறையொன்று என்பால் தங்கி வருத்துகிறது; என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது; அதனால் என் வறுமையைத் தீர்ப்பாயாக" என்று வேண்டினார். உடனே அவனும் அவர் வேண்டும் பரிசிலை நிரம்ப நல்கிச் சிறப்பித்தான்.

    பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
    கயங்களி முளியுங் கோடை யாயினும்
    புழற்கா லாம்ப லகலடை நீழற்
    கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை
    நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம்         5
    நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
    வான்றோய் நீள்குடை வயமான் சென்னி
    சான்றோ ரிருந்த வவையத் துற்றோன்
    ஆசா கென்னும் பூசல் போல
    வல்லே களைமதி யத்தை யுள்ளிய         10
    விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புண ருடம்பிற் றோன்றியென்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே.
    -------

திணை: பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

உரை: பயங்கெழு மாமழை பெய்யாது மாறி - பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யா தொழிதலால்; கயம் களி முளியும் கோடை யாயினும் - நீர்நிலைகள் களியாய் முளியும் கோடைக்காலமாயினும்; புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் - துணைபொருந்தி தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நீழற்கண்; கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை -கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை; நாகிள வளையொடு பகல் மணம் புகூஉம் - நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணங் கூடும்; நீர் திகழ் கழனி நாடு கெழு பெருவிறல் - நீர் விளங்கும் வயலையுடைத்தாகிய நாட்டையுடைய பெரியவெற்றியையுடையோய்; வான் தோய் நீள்குடைவயமான் சென்னி - ஆகாயத்தைப் பொருந்தும் நெடிய குடையினையும் வலிய குதிரையினையுமுடைய சென்னி; சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் - அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண் சென்று பொருந்தினானொருவன்; ஆசா கென்னும் பூசல் போலயானுற்ற துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாக வேண்டும் என்னும் ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல; வல்லே களைமதி - விரையத் தீர்ப்பாயாக; உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை - என்னைக் கருதி வரப்பட்ட விருந்தினரைக் கண்டுவைத்து அவர்க்கு விருந்தாற்றமாட்டாமல் ஒளிக்கும் நன்மையில்லாத இல்வாழ்க்கையையுடைய;பொறிப்புணர் உடம்பில் - தோன்றி ஐம்பொறியும் குறைவின்றிப் பொருந்திய எனது யாக்கையின்கண் தோன்றி; என் அறிவுகெட நின்ற நல்கூர்மை - அவற்றானாய பயன் கொள்ளாதபடி எனது அறிவுகெட நிலைபெற்ற வறுமையை; எ - று.

மதியும் அத்தையும் அசைநிலை. பெருவிறல், சென்னி, சான்றோர் இருந்த அவையத்துற்றோன் பூசலை அவர் விரையக் களைந்தாற்போல எனது நல்கூர்மையை வல்லே களையெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

நந்து வளையொடு பகல் மணம் புகூஉம் என்ற கருத்து: அவை தம் செருக்கினால் சாதியறியாது மயங்கிப்புணரும் என்று நாடடின் மிகுதி கூறியதனால் அவன் செல்வ மிகுதி கூறியவாறு. "நாகிளந் தவளையொடு பகல்மணம் புகூஉம்" என்று பாடமோதி நந்தினேற்றை நாகிளந் தவளையுடனே தத்தம் இனத்தொடு மணம் புகூஉமென்றுரைப்பினு மமையும். ஆசாகு என்பதனை இரங்கற் குறிப்புப்படு மொழி யென்பாரு முளர். பெரு விறலையுடைய வயமான் சென்னி யெனினுமாம்.

"பொறிப் புணருடம்பிற் றோன்றி" யென்பதற்குப் பாவைபோலும் வடிவு மாத்திரையே தோன்றித் தோன்றிய பயன் கொள்ளாமையால் என் அறிவு கெடநின்ற நல்கூர்மை யென்றும், "விருந்து கண்டொளிக்கும்" என்பதற்கு வறுமைகண்டு வந்த விருந்து தாம் அது காணமாட்டாது ஒளிக்குமென்றும் உரைப்பாருமுளர். மாறியென்பது மாறவெனத் திரிக்கப்பட்டது.

விளக்கம்: களியாய் முளிதலாவது, ஆழ அகழ்ந்தாலும் நீர் ஊறா தொழிவது.நத்தையின் நீண்ட மயிர்போற்றோன்றும் இருதண்டுகளும் கோடு எனப்பட்டன. அத்தண்டுகள் முனையில் நத்தையின் கண்கள் உள்ளன; அவை நத்தைக்கு உணர் கருவியுமாம். ஏற்றை,ஆண்.நாகு,பெண்பால் குறித்துநின்றது. பேராசிரியர், "நீர்வாழ் சாதியுணந்து நாகே" (தொல்.மரபு.63) என்பதற்கு "நாகிள வளையொடு பகன் மணம் புகூஉம்" எனும் இதனை யெடுத்துக் காட்டுவர். உற்றோன், இடம்பற்றித் துன்பமுற்றோன் என்பதுபடி நின்றது. ஆசாக என்னும், ஆசாகென்னும் என முடிந்தது. ஆசாக என்னும் பூசல், பற்றாகல் வேண்டுமென முறையிடும் ஆரவாரம். "வல்லே களைமதி" யென்பதற்கேற்ப உவமைக்கண்,பூசலை அவையத்தோர் விரையத் தீர்க்குமாறு வருவிக்கப்பட்டது. உள்ளிய, உள்ளிவந்த. விருந்து வரக் கண்டதும் விரும்பி வரவேற்பதைவிடுத்து ஒளித்தற்குக் காரணம் வருவிக்கப் பட்டது. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பது இல்வாழ்வுக்குச் சிறப்பாதலின், விருந்து கண்டொளிக்கும் வாழ்க்கை திருந்தா வாழ்க்கையெனப்பட்டது. திருந்தாமை, நன்மை யில்லாமை. நல்கூர்மை, இன்மையெனப்படும்; அறிவுடைமையே உடைமை; ஆகவே, நல்கூர்மையுளதாயவழி அறிவுகெடுதல் ஒரு தலையாதலின், "அறிவு கெட நின்ற நல்கூர்மை" யென்றார். "ஆசாகு" என்பது அந்தோ, அன்னோ என்றாற்போல இரங்கற் பொருண்மை யுணர்த்தும் குறிப்பு மொழியாகவும் கோடல் உண்டு என்பார் "ஆசாகு...முளர்" என்றார்; "ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ" (புறம். 235) என ஒளவையார் கூறுவது காண்க. விருந்துகண்டு என்புழி, விருந்தை எழுவாயாகவும், கண்டென்றதை அதன் வினையாகவும் கொண்டு, விருந்தினரே வறுமை நிலவுவது கண்டு நீங்குவர் என்றுரைப்பது முண்டென்பார், "விருந்து கண்டொளிக்கும்...என்று உரைப்பாருமுளர்" என்றார்.
---------

267 ... ... ... ...
--------
268 ... ... ... ...
-------

269. ஒளவையார்

ஒருகால் ஒரு தலைவன் தன் பகைவர்மேல் வெட்சிப் போர் செய்ய நினைந்து படை திரட்டினான். வீரர் ஒருங்கு கூடினர். நிரை கவர்தற்குப் புறப்படுமுன் உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை ஆங்குப் புலியினது கண்போல வெவ்விய கள்ளுணவு யாவர்க்கும் தரப்பட்டது. மறவர் எல்லோரும்அவ்விடத்தேயிருந்து அதனை ஒரு முறைக்கு இருமுறை யுண்டு மகிழ்ந்து களியாடடயந்தனர். நிரைகோட்குப் புறப்படச் சிறிது பொழுதிற்கு முன்பு துடி கொட்டுவோன் வந்து துடியைக் கொட்டிப் புறப்பாட்டிற் குரியராமாறு தெரிவித்தான். யாவர்க்கும் பிழிந்தெடுத்த தேறலாகிய உணவு வழங்கினர். அவருள் தானைத் தலைவன்பால் சென்று அதனைக் கொள்ளுமாறு பிழி வழங்குவோர் வேண்டினர்; அவன் அதனை யேலாது தனக்குரிய வாளைக் கொணர்ந்து தருமாறு பணித்தான் என்று அக்கூட்டத்திற் கூடியிருந்த சான்றோர் பேசிக்கொண்டனர். வெட்சிப் போர்க்குச் சென்ற மறவர் வெற்றியொடு திரும்பினர். அவர்கட்கு மறுபடியும் உண்டாட்டு நிகழ்ந்தது. அப்போது அவர் அவனது மற மாண்பை எடுத்தோதிப் பாராட்டுவாராய். சான்றோருடன் இருந்த ஒளவையார், "நிரை கோட்குப் புறப்படும் பணியைத் துடியோன் வந்து தெரிவித்தானாக, பிழி வழங்குவோர் வந்து பிழி மகிழாகிய தேறலை யுண்ணுமாறு வேண்டினர்; நீ இது தாவெனக் கொள்ளாது வாள்தரக் கொண்டனை; இப்போது நிகழ்ந்த வெட்சிப் போரில் கரந்தையாரைக் கொன்று அவருடைய ஆனிரைகளைத் தழீஇப் போந்தபோது அவரது மாறுபாட்டினைக் கெடுத்த இவ்வாளைத் தானே அப்போது தரக் கொண்டனை; நின் வென்றி மேம்படுவதாக" என இந்த அழகிய பாட்டைப் பாடினர்.

    குயில்வா யன்ன கூர்முகை யதிரல்
    பயிலா தல்கிய பல்காழ் மாலை
    மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
    புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்
    ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை         5
    உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
    பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
    கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக்
    கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற்
    பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க்         10
    கொடுஞ்சிரைக் குரூஉப்பருந் தார்ப்பத்
    தடிந்துமாறு பெயர்த்தவிக் கருங்கை வாளே.
    ---------

திணை: வெட்சி. துறை: உண்டாட்டு. ஒளவையார் பாடியது.

உரை: குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் - குயிலினது வாயலகுபோன்ற கூரிய மொட்டுக்களையுடைய புனலிக்கொடியினது; பயிலாது அல்கிய பல்காழ் மாலை - பயில மலராமல் தங்கிய பல காழாகிய பூவால் தொடுக்கப்பட்ட மாலையை; மையிரும் பித்தை பொலியச் சூட்டி - கரிய தலைமயிர் பொலிவு பெறச்சூடி; புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்று புதிய அகலிடத்தே கொள்ளப்பட்ட புலியின் கண்ணைப் போலும் நிறத்தையுடைய வெம்மையான நறவு ஒன்றையே; இருமுறை இருந்துண்ட பின்றை - இரண்டுமுறை இங்கே இருந்து உண்ட பின்பு; உவலைக் கண்ணி துடியன் வந்தென - பசிய தழை விரவித் தொடுத்த கண்ணியையுடைய துடிகொட்டுவோன் அதனைக் கொட்டி வெட்சிப் போர்க்கு எழுச்சியினைத் தெரிவித்தானாக; பிழிமகிழ் வல்சி வேண்ட - வடித்த கள்ளையேந்தி யுண்கவென வேண்டியும்; கள்ளின் வாழ்த்தி அது கொள்ளாய் - கள்ளினை வாழ்த்தி வேண்டாவென அது கொள்ளாய் வாளைக் கொண்டனை; என்ப - என்று சான்றோர் கூறா நிற்பர்; கரந்தை நீடிய அறிந்துமாறு செருவில் - கரந்தையார் நெடியராய் மறைந்திருத்தலை யறிய்து மாறிச்சென்று செய்யும் போரில்; பல்லான் இன நிரை தழீஇ - அவர்களுடைய பலவாகிய இனமான ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு; கொடுஞ்சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப- வளைந்த சிறகினையும் நிறத்தினையுமுடைய பருந்துகள் ஆரவாரிக்கும்படி; வில்லோர் தடிந்து மாறு பெயர்த்த இக்கருங்கை வாளே - கரந்தையாராகிய வில் மறவர்களைக் கொன்று மாறுபாட்டினைப் போக்கிய இப்பெரிய கை வாள்தானே அது; எ - று.

மற்று: வினைமாற்று. காழ் போறலின், அதிரற்பூ காழெனப் பட்டது. கொடி முழுதும் நிரம்பப் பூவாது ஆங்காங்கொன்றாகப் பூத்துக்கிடத்தலால் "பயிலாது அல்கிய பூ" என்றார். வெட்சிப் போர்க்குச் செல்வோர் அதிரற் பூவைச் சூடிக்கொள்வது மரபு."கொய்குழையதிரல் வைகுபுல ரலரி,சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி, இகல் முனைத் தழீஇ ஏறுடைப் பெருநிரை" (அகம். 213) எனச் சான்றோர் கூறமாற்றால் அறிக. கள்ளினை வேண்டானாயினும், அதன்மேல் அவற்கு வெறுப்பில்லை யென்றதற்குக் "கள்ளின் வாழ்த்தி" யென்றார். நிரையைக் காப்பவர் கரந்தைப்பூ சூடுவராதலின்,அவரது நெடும்படையைக் "கரந்தை" என்றார்.வல்சி வேண்ட,இது கொள்ளாாய்க் கொண்டனை வாள் என்ப; பெயர்த்த இக்கைவாளே அது என முடிக்க. கரந்தைப் படையின் பன்மை விளங்க "நீடிய" என்றார். வாளே என்புழி ஏகாரம் வினா. இது வாளைப் புகழுமுகத்தால் தலைவனது வாளாண்மையை வியந்து பரவியது.

விளக்கம்:உண்டாட்டாவது, "தொட்டிமிழுங் கழல் மறவர் மட்டுண்டு மகிழ் தூங்கின்று" (பு.வெ.மா.வெட். 14) அதிரற் பூவைப் பயிலா தல்கிய பல்காழ் என்றது போலப் பிறரும் "வைகுபுலர் அலரி" என்பதுகுறிக்கத்தக்கது. தெளிந்த நறவு புலியின் கண்போலுதம் நிறமும் ஒளியுமுடைய தென்றற்குப், "புலிக்கண் வெப்பர்" என்றார். துடியன், பாணன் பறையன் என வரும் குடிவகையுள் ஒரு குடியினன். போர் மறவர்க்கு அவர் தம் தலைவரிடும் பணியைத் துடி கொட்டித் தெரிவிப்பவன். வந்தென என்றது அவன் வந்து வெட்சிப் போர்க்கு எழுதல் வேண்டுமென்று தெரிவித்தானென்பதை யுணர்த்திற்று. பெயர்த்த என இறந்தகாலத்தாற் குறித்தது, நிகழ்ந்த வெட்சிப்போரை; அதன் முடிவில் இவ்வுண்டாட்டு நிகழ்வதுபற்றி, பெயர்த்து என்ற பாடத்துக்கு இறந்தகாலம் விரைவுக் குறிப்பிற்றென வுரைக்க.
----------------

270. கழாத்தலையார்

பகைவர், தம்மூர் நிரைகளைக் கவர்ந்தேகக் கண்ட ஊர்மறவர் கரந்தை சூடிச்சென்று அவரோடு கடும்போர் செய்து வென்று நிரைகளை மீட்டற்குச் சமைந்தனர். வெட்சியார் நிரை கவர்ந்த செய்தியறிந்த வேந்தன் தன்னூர் மறவரைத் தண்ணுமை முழக்கி யறிவித்தழைப்ப, அவர்கள் வென்றிபெறும் வேட்கையும் பலரும் காண மன்றத்தில் நின்று போருடற்றி மறப்புகழ் பெறும் வேட்கையும் உடையராயச் சென்று பொருதனர். அவருள் ஒரு மறவன் அப்போரில், கோடரியால் வெட்டுண்டு வீழ்ந்த மரம்போல் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தான். அதனைக் கண்டோர் பலர்; அவருள் கழாத்தலையாரும் ஒருவர். அவன் வீழ்ந்து கிடப்பதைச் சான்றோர் சூழ வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் சொரிந்தான். "புரந்தார்கண்ணீர் மல்கச் சாகிற்பின் சாக்கா, டிரந்துகோட்டக்க துடைத்து"(குறள். 780) என்பவாகலின், கழாத்தலையார் அவன் பொருட்டு வேந்தன் முதலிய சான்றோர் வருந்திய வருத்தத்தை அவனைப் பெற்ற தாய்க் குரைப்பாராய் இப்பாட்டினைப் பாடியுள்ளார்.

    பன்மீ னிமைக்கு மாக விசும்பின்
    இரங்கு முரசி னினஞ்சால் யானை
    நிலந்தவ வுருட்டிய நேமி யோரும்
    சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
    நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்         5
    சிறுவர் தாயே பேரிற் பெண்டே
    நோகோ யானே நோக்குமதி நீயே
    மறப்படை நுலலு மரிக்குரற் றண்ணுமை
    இன்னிசை கேட்ட துன்னரு மறவர்
    வென்றிதரு வேட்கையர் மன்றங் கொண்மார்         10
    பேரம ருழந்த வெருமரு பறந்தலை
    விழுநவி பாய்ந்த மரத்தின்
    வாண்மிசைக் கிடந்த வாண்மையோன் றிறத்தே.
    -------

திணை: கரந்தை. துறை: கையறுநிலை. கழாத்தலையார் பாடியது. கண்டார் தாய்க்குச் சொல்லியது.

உரை: பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் - பலவாகிய விண்மீன்கள் திகழும் மாகமாகிய உயர்ந்த வானத்தின்கண் முழங்கும் முகில்போல; இரங்கும்முரசின் - முழங்கும் முரசினையும்; இனம் சால் யானை - இன மமைந்த யானையினையும்; நிலம் தவ உருட்டிய நேமியோரும் - நிலத்தின்கண ் நெடிது செலுத்திய ஆணையாகிய ஆழியினையுமுடைய வேந்தரும்;சமம் கண் கூடி வேட்ப-போர்க்களத்தின் கண் ஒன்றுகூடி அன்பால் வருந்தா நின்றார்; நறுவிரை துறந்த நாறா நரைத்தலை - நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறிய மணங் கமழாத நரைத்த தலையையுடைய; சிறுவர் தாயே - இளையோர்க்குத் தாயே; பேரில் பெண்டே - பெருங்குடிப் பெண்டே; நோகுயான் - நோவேன்யான்; நீயே நோக்குமதி - நீயே பார்ப்பாயாக; மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை - மறம்பொருந்திய வீரரைப் போர்க்கழைக்கும் அரித்த குரலையுடைய தண்ணுமையது; இன்னிசைகேட்ட துன்னரும் மறவர் - இனிய ஓசையைக்கேட்ட நெருங்குதற்கரிய மறவர்; வென்றிதரு வேட்கையர் - வென்றி பெறும் வேட்கையுடையராய்; மன்றம் கொண்மார் - மன்றத்தைக் கொள்ளும்பொருட்டு; பேரமர் உழந்த வெருமரு பறந்தலை - பெரிய போரைச்செய்த அச்சம் பொருந்திய பறந்தலையின் கண்; விழுநவி பாய்ந்த மரத்தின் - பெரிய கோடரியால் வெட்டப்பட்டு வீழ்ந்த மரம்போல; வாள்மிசைக் கிடந்த ஆண்மை யோன் திறத்து - வாளின்மேல் வீழ்ந்துகிடந்த ஆண்மையையுடைய மறவனாகிய நின் மகன் திறத்தில்; எ - று.

ஓவும் மதியும் அசைநிலை. தவ, மிக; ஈண்டு நெடிதெனக் காலத்தின் மேற்று. மன்றம், போர்க்களத்தின் நடுவிடம். தாயே, பெண்டே, யான் நோகு, நீயே நோக்கு; மறவர் வேட்கையராய் மன்றம் கொண்மார், உழந்த பறந்தலையில், வாண்மிசைக்கிடந்த ஆண்மையோன் திறத்து நேமியோரும் வேட்ப எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாண்மிசைக் கிடந்த ஆண்மையைத் தம் கண்ணீர் சொரிந்து வேட்பதுபற்றி "வேட்ப" என விதந்துரைக்கப்பட்டது.

விளக்கம்: கரந்ததையிற் கையறுநிலையாவது, "வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு, கருவி மாக்கள் கையற வுரைத்தன்று" (பு.வெ.மா. 2:10) எனவரும். கருவி மாக்களாவார் பாணர் விறலியர் முதலியோரரினும் இனம்பற்றிப் புலவரும் சான்றோரும் கொள்ளப்படும். "மாக விசும்பின் நடுவுநின் றாங்கு" (புறம். 35) என்றதற்குப் பழையவுரைகாரர் "மாகமாகிய உயர்ந்த வானம்" என்றது கடைப்பிடிக்க. விசும்பு, ஆகுபெயராய் மழைமுகில் மேனின்றது; "விசும்பிற் றுளிவீழி னல்லால்" (குறள். 16) என்றாற்போல. முரசும்,யானையும் நேமியுடையோர் என இயையும். வேட்ப, பகரவீற்றுப் பல்லோர் படர்க்கை வினைமுற்று. பேரில் வேட்கையராய் மன்றங் கொள்ளற்குப் பேரமர் உழந்தும் நின் மகன் பெற்ற மறப் புகழைப் பெறாராயினார் என்பது தோன்ற, "பேரம ருழந்த வெருவரு பறந்தலை" யென மிகுத்தோதினார். வாளால் எறியுண்டு வீழ்ந்தானாயினும், மறங்குன்றா ஆண்மையால் வேந்தரும் மறவரும் கையற்றுப் பாராட்டும் பெரு நலத்தை, யாம் கூறக் கேட்பதேயன்றி நீயும் கண்ணாற் காண்பாயாக என்றற்கு, "சிறுவர் தாயே பேரில் பெண்டே, நோக்குமதி நீயே" என்றார். வீழ்ந்த மறவனை யல்லது வேறுபற்றுக் கோடில்லாதவள் என்பது தோன்ற, "நறுவிரை துறந்த நாறா நரைத்தலை" யுடையவளே என்றார்.
-----


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III