புறநானூறு உரை 2b


சங்க கால நூல்கள்

Back

புறநானூறு
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 2b (271 முதல் 340 வரை)



புறநானூறு - பாகம் 2B
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரையுடன்

Source:
புறநானூறு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
154, டி.டி.கே. சாலை, சென்னை - 18.
------------

271. வெறிபாடிய காமக்காணியார்

சங்கச் சான்றோருள் காமக்கண்ணியென்றும் காமக்கணியென்றும் வழங்கப்படுவோர் உளர்; இப்பெயர் காமக்காணியென வரற்பாலது. இம்மையிற் புகழ் மக்கட்பேறு முதலிய பயன்களையும் மறுமையில் துறக்க வின்பதையும் கருதிச் செய்யும் வேள்வி காமியம் எனப்படும்; அது காமம் எனவும் வரும்; இவ்வேள்விகளை முடித்துத்தரும் வேதியர் கட்குத் தரப்பெறும் சிறப்பு, காமக்காணி யெனப்படும். இது பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்தும் நிகழ்ந்த தென்பது வேள்விக் குடிச் செப்பேட்டால் புலனாகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டில் (Journal of the Annamalai University, Vol. XV.) இது விரிவாக ஆராய்ந்து காட்டப்பெற்றுள்ளது. இத்தகைய காமக்காணிகள் இடைக் காலத்திலும் பலர் இருந்திருக்கின்றனர். இக்காமக்காணி யென்பது ஏடெழுதினோரால் காமக்கணி யென்றும் காமக்கண்ணி யென்றும் எழுதப்பட்டுவிட்டது. களவுக் காலத்தில் மகளிர் வரைவு நீட்டித்த விடத்து மேனி வேறுபாடெய்தி வருந்துவர். களவுண்மையறியாமல் பெற்றோர் அவ்வேறுபாடு முருகனால் உண்டாயிற்றெனக் கருதி வெறிபாட்டெடுத்து வழிபடுவர். அவ்வெறியாட்டை மிக விளக்கமாக எடுத்துப் பாடுவதில் இக்காமக்காணியார் தலைசிறந்தவர். இவர் வெறியாட்டினை விதந்து பாடும் பாட்டுக்களுட் சில அகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய, சான்றோர் ஒருகால் அரசர் இருவர் போருடற்றக் கண்டார். ஒருவர் மற்றவருடைய நகரத்து அரணை முற்றிக்கொண்டனர். அடைமதிற்பட்ட மற்றவருடைய மறவர் மதிலிடத்தே நின்று நொச்சிமாலை சூடி அதனைக் காக்குமாற்றால் பெரும்போர் புரிந்தனர். அப்போரில் ஒரு மறவன் அணிந்திருந்த நொச்சி மாலை, அவன் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தபோது, அறுப்புண்டு அவன் குருதியிற் படிந்து உருமாறிப் போயிற்று. போரிடைப்பட்டு வீழ்ந்த பிணங்களைத் தின்றற்குப் பருந்து முதலிய பறவைகள் அங்கே சூழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு பருந்து குருதியிற்படிந்து உருமாறிய நொச்சிமாலையை ஊன் எனக் கருதித் தூக்கிக் கொண்டு உயரத்திற் பறந்துபோயிற்று. அதனைக் காமக்காணியார் கண்டார். அக்காட்சி அவர் புலமையுள்ளத்திற் படிந்து இந்த அழகிய பாட்டை வெளிப்படுத்திற்று.

    நீரற வறியா நிலமுதற் கலந்த
    கருங்குர னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
    மெல்லிழை மகளி ரைதக லல்குற்
    றொடலை யாகவுங் கண்டன மினியே
    வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந்         5
    தொறுவாய்ப் பட்ட தெரிய லூன்செத்துப்
    பருந்துகொண் டுகப்பயாங் கண்டனம்
    மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே.
    ---------

திணை: நொச்சி; துறை: செருவிடை வீழ்தல். வெறிபாடிய காமக்காணியர் பாடியது.

உரை: நீரறவு அறியா நிலமுதல் கலந்த - நீர் தொலைவறியாத நிலமாகிய முதலொடு ஒன்றி நிற்கும்; கருங்குரல் நொச்சி கண்ணார் குரூஉத் தழை - கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது கண்ணுக்கு நிறைந்த அழகிய நிறமுடைய தழை; மெல்லிழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும் கண்டனம் - மெல்லிய இழைகளையணிந்த இளமகளிருடைய அழகியதாக அகன்ற அல்குலிடத்தே தழையுடைாக அணியப்படவும் கண்டேம் முன்பு; இனி - இப்பொழுது; வெருவரு குருதியொடு மயங்கி - அச்சம் தருகின்ற குருதியில் கலந்து; உருவு கரந்து - உருமாறி; ஒறுவாய்ப்ட்ட தெரியல் - துணிபட்டுக்கிடந்த நொச்சி மாலையை; ஊன் செத்து - ஊனென்று கருதி; பருந்து கொண்டு உகப்ப - பருந்து கவர்ந்து உயரத்திற் கொண்டு போகவும்; யாம் கண்டனம் யாம் கண்டேம்; மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு - மறத்தை விரும்பும் இளையோன் அணிந்திருந்ததனால்; எ - று.

நொச்சி முதலிய கருப்பொருட்கு நிலம் முதலாதலின், "நிலமுதல்" என்றார். நிலமுதல் கலந்த நொச்சி யென்றதற்கு நிலத்தின்கண் நின்ற அடிமரத்தில் தழைத்த நொச்சி யென்றுரைப்பினுமமையும். இளைய மகளிர் அணியும் தழையில் நொச்சியும் ஒன்று; "ஐதக லல்குல் தழை யணிக்கூட்டும் கூழை நொச்சி" (அகம். 275) என்று பிறரும் கூறுதல் காண்க. ஒறுவாய்ப்பட்ட தெரியல் - ஒறுக்கும் வாள்வாய்ப்பட்டுத் துணிபட்டமாலை. மறவன் செருவில் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தமை, அவன் அணிந்திருந்த தெரியல் மேல் வைத்தோதியவாறு. நொச்சிக் குரூஉத் தழை, முன்பு, தொடலை யாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, பருந்து கொண்டு கப்பவும், யாம் கண்டனம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: செருவிடை வீழ்தலாவது "ஆழ்ந்துபடு கிடங்கோடரு மிளை காத்து, வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று" (பு.வெ.மா. 514) என்பது. தொடலை, தொடுக்கப்படுவது; தழையும் மாலை போலத் தொடுக்கப்படுவது பற்றித் தொடலை யெனப்பட்டது. நொச்சித்தழை காண்டற்கு நிறைந்த அழகுடையதென்பார், "கண்ணார் குரூஉத்தழை" யென்று சிறப்பித்தார்; ஆகவே, அதன் அழகு தழையிடைத் தொடுக்கப்படும் தொழிற் பாட்டால் மேம்படுமாறு பெற்றாம்; "கண்ணார் கண்ணி" (பொருந. 148) என்பது காண்க. மெல்லிழை மகளிர் என்றவிடத்து மென்மையை மகளிர்க் கேற்றுக. மயங்குதல், கலத்தல். குருதி காண்பார்க்கு அச்சமுண்டாதல்பற்றி "வெருவரு குருதி" யெனப்பட்டது. உருவு கரத்தல், குருதி படிந்து நிறம் வேறுபட்டுத் தசைத் துண்டம் போறல். "நிறம் பெயர் கண்ணிப் பருந்தூறளப்ப" (பதிற். 51) எனப்பிறரும் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது. உகப்பு, உயர்தல்; "உகப்பே யுயர்தல்" (தொல்.உரி. 8) புகலுதல், விரும்புதல். "குடையும் வாளும்"என்று தொடங்கும் புறத்திணைச் சூத்திரத்து(11)"அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்தநொச்சி யென்றதற்கு இளம்பூரணர் இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். நிலமும் காலமும் முதற்பொருள் எனவும், நிலத்தில் உள்ள உயிருள்ளனவும் இல்லனவுமாகிய பொருள் கருப்பொருளெனவும் வழங்கும். இனியென்றதற்கேற்ப, முன்பு என்பது வருவிக்கப்பட்டது. முன்பு தொடலையாகவும் கண்டனமென்பதனால், பருந்து கொண்டு உகப்பவும் என உம்மை விரித்துக் கூறப்பட்டது. பருந்து ஊன் எனக் கருதுதற்கேது கூறுவார், "குருதி மயங்கி உருவுகரந்து" என்றும், நொச்சி அவ்வாறாதற் கேது,"மைந்தன் மலைந்த மாறு" என்றும் கூறினார்.
----------------

272. மோசி சாத்தனார்

மோசி யென்பது பாண்டிநாட்டில் உள்ளதோர் ஊர். இஃது இப்போது மோசிகுடி யென வழங்குகிறது. இவ்வூர், சான்றோர் பலர் பிறந்த பெருமையுடையது. பகைவர் கைப்பற்றாதபடி மதிலிடத்து நொச்சி சூடிப் பொருத மறவன் ஒருவன் அப்போரில் புண்பட்டு மாண்டான். அவன் சென்னியில் சூடிக்கொண்டிருந்த நொச்சியும் அவனோடே கிடந்தது. அது கண்ட சாத்தனார்க்குக் கையறவு பெரிதாயிற்று. எதிரே இருந்த ஒரு நொச்சி மரத்தையும் பார்த்தார். பார்த்த அளவில் அவர் உள்ளத்தில் கருக்கொண்டெழுந்தது இப்பாட்டு.

    மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த
    காத னன்மர நீமற் றசினே
    கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளி ரல்குலுங் கிடத்தி         5
    காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலின்
    ஊர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே.
    ----------

திணையும் துறையு மவை. மோசிசாத்தனார் பாடியது.

உரை: மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி - மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே; போது விரி பன்மரனுள்ளும் - பூக்கள் மலர்ந்த பலவாகிய மரங்களுள் வைத்து; சிறந்த காதல் நன்மரம் நீ - மிக்க அன்பு செய்தற்குரிய மரம் நீயாவாய்; கடியுடை வியல் நகர் காண் வரப் பொலிந்த - காவலையுடைய அகன்ற நகரின்கண் அழகுவர விளங்கிய; தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி - தொடியையுடைய இளமகளிர் அல்குலிடத்தே தழையாகவும் கிடப்பாய்; காப்புடைப் புரிசைக்கு - காவலையுடைய எயிலிடத்தே நின்று; மாறு அழித்தலின் - கோடல்கருதி வருவாரையடர்த்து அவர்கள் மாறுபாட்டை யழிப்பதால்;ஊர்ப்புறம் கொடா நெடுந்தகை - நகர்ப்புறத்தைக் கைவிடாது காக்கும் நெடுந்தகையினுடைய பீடுகெழு சென்னிக்கிழமையும் நினது - பெருமை பொருந்திய தலையில் அணியப்படும் உரிமையும் நின்னுடையதாம்; எ - று.

துணர் - கொத்து. மறவராற் காக்கப்படுவதேயன்றி, அமைப்பாலும் பொறி முதலியனவுடைமையாலும் காப்பமைந்திருப்பது பற்றிக் "காப்புடைப்புரிசை" யென்றார். ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை யென்றதற்கு,அடுத்தூர்ந்து பொரும் போரின்கண் புறங்கொடாத நெடுந்தகை யெனினுமமையும். நெடுந்தகை - நெடிய தகைமையினை யுடையோன். சென்னிக்கிழமை - சென்னியிற் சூடப்படும் உரிமை. மற்று, இசின் என்பன அசைநிலை. மாக்குரல் நொச்சி பனமரனுள்ளும் சிறந்த காதல்மரம் நீ, அல்குலும் கிடத்தி; நெடுந்தகை சென்னிக்கிழமையும். நினது என வினைமுடிவு செய்க.

விளக்கம்: "முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி" (தொல் புறத். 13) என்பதற்கு இதனைக் காட்டி, "இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது" என நச்சினார்க்கினியர் கூறுவர். நொச்சித்துணரை, "மணிக்குரல் நொச்சி" (நற். 293) எனப் பிறரும் கூறுதல் காண்க. "பன் மரனுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நீ" என்றது மேற்கோள்: மகளிரும் மைந்தரும் ஒப்ப விரும்புதலான் என்றது ஏது. இதனை வற்புறுத்தற்கு "மகளிர் அல்குலுங் கிடத்தி" யெனவும், "நெடுந்தகை சென்னிக் கிழமையும் நினது" எனவுங் கூறினார். தழையில் ஆம்பல் முதலிய பிறவற்றோடு விரவும் நொச்சி, நொச்சிப் போரில் தனித்துச் சூடப்படும் உரிமையுடைமையின் "கிழமை" என்றார்.
------

273. எருமை வெளியனார்

எருமை யென்பது ஓர் ஊர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுங்செழியனோடு பொருத எழுவருள் எருமையூரன் என்பவன் ஒருவன். அவனை நக்கீரனார், "நாரறி நறவின் எருமையூரன்" (அகம். 36) என்று கூறுவர். மைசூர்நாட்டுக்குப் பண்டைநாளில் எருமைநாடு என்றும், மைசூர் எருமையூரென்றும் வழங்கின. அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களுள் கன்னட மொழியிலுள்ளவை எருமைநாடு (Eq. car. Vol. X Cu. 20) என்றும் தமிழ்க் கல்வெட்டுக்கள் எருமைநாடு (A. R. for 1907. Para. 1) என்றும் கூறுகின்றன. தகடூர் அதியமான்களில் எழினியென்பான் எருவாயில் என்னும் ஊரைக் கைப்பற்றிய போரில் எழினியின் படைமறவன் ஒருவன் போரில் வீழ்ந்து நடுகல் நிறுவப்பட்டான். அவனை எருமைய நக்கன் என்று கல்வெட்டு(A. R. No.211 of 1910) கூறுவதால், இந்நக்கன் எருமைநாட்டு எருமையூரினனாம். இந்த எருமையூரில் தோன்றிய இந்தச் சான்றோரது இயற்பெயர் வெளியன் என்பது. இந்நாட்டில் வெளியமென்றோ ரூருமுளது.

இவர் பாடிய பாட்டொன்று அகத்திலும் காணப்படுகிறது. இவர்க்குக் கடலன் என்ற பெயருடைய மகன் உண்டு. கடலனாரும் நல்லிசைச் சான்றோராவர். ஒருகால் ஒரு மறவன் தும்பை சூடிப் பகைவருடன் போர்செய்ய நேர்ந்து அழகிய குதிரையூர்ந்து சென்றான். அவனோடு வேறு பல குதிரை மறவரும் சென்றனர். போர் முடிந்த பின், சென்ற குதிரை வீரர்களின் குதிரைகள் திரும்ப வந்தன. அம்மறவனுடைய குதிரைமட்டில் வாராதாயிற்று. அதனால் அவன் மனையோள் மனவமைதி பெறாது கலக்கமுறலானாள். வாராமைக்குரிய காரணத்தைப் பலரையும் வினவினாள். அவளது நிலைகண்ட வெளியனார் மிக்க வியப்புற்றார். குதிரை இறந்தது கொல்லோ என அவள் வருந்தியது அவர் உள்ளத்தில் இப்பாட்டினை எழுவித்தது.

    மாவா ராதே மாவா ராதே
    எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
    புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
    செல்வ னூரு மாவா ராதே
    இருபேர் யாற்ற வொருபெருங் கூடல்         5
    விலங்கிடு பெருமரம் போல
    உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.
    ------

திணை: தும்பை; துறை: குதிரைமறம். எருமைவெளியனார் பாடியது.

உரை: மாவாராது மாவாராது - குதிரை வாராதாயிற்று குதிரை வாராதாயிற்று; எல்லார் மாவும் வந்தன - ஏனைமறவர் எல்லாருடைய குதிரைகளும் வந்து சேர்ந்தன; எம்இல் புல்லுளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மா வாராது - எம் மனையின்கண் புல்லிய உளைபோலும் குடுமியையுடைய புதல்வனைப்பெற்ற செல்வனாகிய கொழுநன் ஊர்ந்து செல்லும் குதிரையே வாராதாயிற்று; இருபேர் யாற்ற ஒரு பெருங்கூடல் - இரண்டு பெரிய யாறுகள் கூடும் ஒரு பெரிய கூடற் பெருக்கை; விலங்கிடு பெருமரம்போல - குறுக்கிட்டு நின்று தடுக்கும் பெரிய மரம் அலைப்புண்டு வீழ்வது போல; அவன் மலைந்த மா உலந்தன்று கொல் - அவனைச் சுமந்து சென்று போருடற்றிய குதிரை பட்டு வீழ்ந்து போயிற்றுப் போலும்; எ - று.

மக்கட்பேறுடையாரைச் செல்வரெனச் சிறப்பித்துரைப்பது பண்டையோர் மரபு; "செல்வக் கொண்கன்" (ஐங்.104) எனப் பிறரும் கூறுதல் காண்க. இரண்டு பெரிய யாறுகள் கூடுமிடத்தே இடைநிற்கும் மரம். நீர்ப்பெருக்கால் வேரலைக்கப்பட்டு வீழ்தல் ஒருதலையாதலின், "விலங்கிடு பெருமரம் போல" என்றார். எத்துணைப் பெருமையுடையதாயினும் பயனின்றென்றதற்குப் "பெருமரம்" எனச்சிறப்பிக்கப்பட்டது. எல்லார் மாவும் வந்தன; செல்வனூரும் மாவாராது; ஆகலான் அவன் மலைந்த மா உலந்தன்று கொல்லென வினைமுடிவு செய்க.

விளக்கம்: தும்பையிற் குதிரை மறமாவது, "எறிபடையானி கலமருள், செறிபடைமான் திறங் கிளந்தன்று" (பு.வெ:மா. 7:7) என வரும். மகனால் தந்தை தாயருடைய புகழ் மேம்படுதலால், "புதல்வன் தந்த செல்வன்" என்றார். இளஞ்சிறார் குடுமியைப் புல்லுளைக் குடுமியென்பது பெருவழக்கு; "புல்லுளைக்குடுமிப் புதல்வன்" (புறம். 160) எனவும், "புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து" (அகம். 176) என வும் சான்றோர் வழங்குதல் காண்க. "எல்லார் மாவும்" என்றது, செல்வனூரும் மாவொழிய ஏனை யெல்லாருடைய மாவும் என்பதுபடநின்றது; "ஆறுபோயினா ரெல்லாங் கூறை கோட்பட்டார்" என்றாற்போல. ஒருபுடை நின்று பொருத வழி, மாவைப்படுத்தல் இயலாது என்பது தோன்ற, இருபேர்யாற்றுக் கூடற் கண் குறுக்கிட்டு நிற்கும் பெருமரம் உவமை கூறப்பட்டதெனவறிக. பெரும் போரிடை நின்று பொருது வீழ்ந்த மறச்சிறப்புணர்த்தலின், இது குதிரை மறமாயிற்று.
-----

274. உலோச்சனார்

இரண்டு பெருவேந்தர் கடல்போன்ற படையுடன் கைகலந்து தும்பை சூடிப் போருடற்றினர். அப்போரின்கண் மறவனொருவன் இடையிற் கச்சையால்இறுகிய உடையும், தலையில் மயிற்பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியும் உரையனாய் வேலேந்தி நின்று கடும்போர் புரிந்தான். அக்காலை அவன்மேற் பெரிய களிறொன்று அடர்க்க வந்தது. உடனே அவன் தன் கைவேலை அக்களிற்றின் நெற்றியிற் பாய்ந்துருவச் செலுத்தினான். அக்களிறு வேலுடனே பிறக்கிட்டுச் சென்று வீழ்ந்துபட்டது. இதற்கிடையே பகைவர் பலர் வேலேந்திப்பரந்து வந்தனர். அவனே, அவர் செலுத்திய வேலை வாங்கி மடித்து அவர் தம் தலைவனையும் தோளுறப்பற்றி நிலத்தில் மோதி உயிர் நீங்கிய அவனது உடலைக் கைக்கொண்டு நின்றான். அந்நிலையில் ஒழியாது மேலும் பொர வருவாரை நோக்கி நின்றமையின், அவனை உலோச்சனார் கண்ணாரக் கண்டார். அவனது நிலைதான் உயிர் முடியுங்காறும் பொருதொழிவது துணிபாக உடையன் என்றுணரக் காட்டிற்று. அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.

    நீலக் கச்சைப் பூவா ராடைப்
    பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
    மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
    தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர்
    எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்         5
    கையின் வாங்கித் தழீஇ
    மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே.
    ----

திணை: தும்பை; துறை: எருமை மறம். உலோச்சனார் பாடியது.

உரை: நீலக்கச்சை - நீலநிறமுடைய கச்சையினையும் பூவார் ஆடை - பூத்தொழில் செய்யப்பட்ட ஆடையினையும்; பீலிக்கண்ணி – மயிற்பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுமுடைய; பெருந்தகை மறவன் - பெருந்தகையாகிய மறவன்; மேல்வருங் களிற்றொடு வேல் துரந்து - தன்மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி; இனி - இப்பொழுது; தன்னும் துரக்குவன் போலும் -தன்னுயிரையும் செலுத்திப் பொருவான்போலும்; ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர - பகைவர் வேலை வலத்தில் ஏந்தினவராய்க் களிற்றுடனே பரந்து வரக்கண்டு; கையின் வாங்கி - அவர் எறிந்தவேல் தன் மெய்க்கண்ணதாக அதனைப் பிடுங்கி அவர் திரளை மடித்து; தழீஇ- அவர்தம் தலைவனைத் தோளுறத் தழுவி மொய்ம்பின் ஊக்கி - தன் மெய் வலியாற் கிளர்ந்து உயரத்தூக்கி நிலத்தில் மோதி; மெய்க்கொண்டனன் - உயிர் நீங்கிய அவனது உடலைப்பற்றிக்கொண்டு நிற்கின்றானாதலால்; எ - று.

விலங்கெனக் கருதித் தான் களிற்றின்மேற் செல்லாத பெருந்தகை யாதலின், அவனாற் கொல்லப்பட்ட களிற்றை, "மேல்வருங் களி" றென்றார். வாங்குதல், மடித்தல். கையின் வாங்கி யென்றதற்கு, கை வேலைக் களிற்றொடு போக்கினமையின், தன்மேல் வந்த மறவரைக் கையால் வளைத்து என்றுரைப்பினுமாம். சிறப்புப்பற்றித் தழுவப் பட்டவன் தானைத் தலைவனெனவுணர்க.மெய்வலி வாடாது மேன் மேல் ஊக்குதலால் உயரத் தூக்கி நிலத்தில் மோதுவது பயனாதல் பற்றி, "மொய்ம்பின் ஊக்கி" யென்றார். மெய்க்கொண்டு நிற்பது, "வந்து மீட்போர் நும்மில் உள்ளீர் வம்மின்" என்றழைப்பது போறலின், "மெய்க் கொண்டனனே" என்று அறிவிக்கின்றார். ஆண்டு தன்னுயிர் முடியுங்காறும் பொருவது குருதினமை. புலப்படுதலின், "தன்னும் துரக்குமவன் போலும்" என்றார்.

விளக்கம்: எருமை மறமாவது, "வெயர்பொடிப்பச்சினங்கடை இப் பெயர்படைக்குப் பின்னின்றன்று" (பு.வெ. மா. 7 :13) களிறு மனவுணர்வில்லாத விலங்காதலின், அது தம்மெல்வரினன்றித் தாம் அதன்மேற் செல்லுதல் மறச்சான்றோர் சால்புக்கு நாணுத் தருவ தொன்றென்பர்."வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை, யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும், விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும், நலங்காணேன் நாணுத் தரும்" எனத் தகடூர் யாத்திரை கூறுவது காண்க. "தானை யானை" (தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, "படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம்" என்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப.
-----------

275. ஒரூஉத்தனார்

எண்ணுப்பெயராகிய ஒருத்தன் என்பதனின் வேறுபடுத்தற்கு இவர் பெயர்ஒரூஉத்தனாரென நின்றது. இவர் பாடியதாகத் தொகை நூல்களுள் இவ்வொரு பாட்டே காணப்படுகிறது. போர்க்களத்தே பெரிய போரைச் செய்யும் மறவன் ஒருவன் தன் சோழன் பிறிதொரு புறத்தே பகைவர் வளைத்துக்கொள்ள அவர் நடுவே நின்று பொருவது கண்டான். உடனே, அவற்குத் துணைசெய்யக் கருதி நெடிய வேலைக் கையிலேந்திக் கொண்டு விரைந்து செல்லலுற்றான். அது கண்ட பகைவர் அவனைத் தடுத்தற்கு முயன்றனர்; அவன் தடைப்படாது சென்று தோழர்க்குத் துணையாயினான். அவன் செயலைக்கண்ட ஒரூஉத்தனார் இப்பாட்டின்கண் அதனை வைத்துப் பாடியுள்ளார்.

    கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்
    வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
    ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய
    திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன்
    வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி         5
    ஓம்புமி னோம்புரி னிவணென வோம்பாது
    தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக்
    கன்றமர் கறவை மான
    முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே.
    -----------

திணையும் துறையு மவை. ஒரூஉத்தனார் பாடியது.

உரை: கோட்டம் கண்ணியும் - வளையத்தொடுத்த கண்ணி சூடுதலும்; கொடுந்திரை யாடையும் - வளைந்து திரைந்த ஆடை யுடுத்தலும்; வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் - வேந்தன் விரும்பியதுவே தானும் விரும்பிச் சொல்லி அவனை வளைத்தலும்; இவற்கு ஒத்தன்று - இவன்கண் பொருந்தியுள்ளன; செற்றிய திணிநிலை அலறக் கூழை போழ்ந்து - பகைவர் கறுவு கொண்டு சூழ்ந்த திணிநிலையிலுள்ள மறவர் அஞ்சியலறிச் சிதையுமாறு அவருடைய பின்னணிப்படையைப் பிளந்து கொண்டு; தன் வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி - தனது வடித்து மாட்சியுள்ள வேலைப் படைமுகம்நோக்க ஏந்தி; இவண் ஓம்புமின் ஓம்புமின் என - இவ்விடத்தேயே இவனைச்செல்லாத படி பரிகரியுங்கோள் பரிகரியுங்கோள் என ஏனைத் தானை வீரர் தம்மிற் கூறித் தடுக்கவும்; ஓம்பாது அவர் தடையைக்கடந்து; தொடர்கொள் யானையின்- சங்கிலியாகிய தளைபூண்டு செல்லும் - யானை போல; குடர்கால் தட்ப - கொலை யுண்டு வீழ்ந்த மறவர்களின் குடர் தன் காலைத் தளைக்கவும்; கன்றமர்கறவை மான - கன்றைக் காதலிக்கும் கறவைப் பசுப்போல; முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வரும் - முன்னணிப்போரில் பகைவரை நேர்பட்டு அவரால் வளைப்புண்டிருக்கும் தோழன்பால் வருவானாயினன்; எ - று.

கண்ணி முதலிய மூன்றனோடும் ஒத்தன் றென்றதைத் தனித் தனியே கூட்டுக. வளைத்தல் என்றதற்கேற்பச் சூடலும் உடுத்தலும் வருவிக்கப் பட்டன. கண்ணி சூடல் முதலிய மூன்றும் செயல்வகையால் மாண்புற வேண்டுதலின், "ஒத்தன்று" என்றார். திணிநிலை, இருதிறத்து வீரரும் செறிந்து போருடற்றும் களத்தின் நடுவிடம். வில்லும் வேலும் வாளும் ஏந்தி அணிநிலை பெற்றுக் காண்பார்க்கு அச்சமுண்டாக நிற்கும் படை வரிசையின் முன்னணி "கடிமுகம்"எனப்பட்டது. இனித் தான் செல்லும் திசை நோக்கி வேலின் இலைமுகத்தை யேந்திச் செல்கின்றான் எனினுமாம். கடிமுகம், வேலின் இலைமுகம். "ஓம்பு மின் ஓம்புமின் இவண்" என்றது, பகைவர் கூற்றினைக்கொண்டு கூறியது. தோழற்கு வருமாகலின், இவற்கே ஒத்தன்று எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: "தானையானை" யென்ற சூத்திரத்து (தொல். புறத். 17) "ஒருவ னொருவனை யுடைபடை புக்குக், கூழை தாங்கிய எருமை" யென்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப. "தானையானை குதிரை யென்ற, நோனா ருட்கும் மூவகை நிலையுள்" தானை நிலைக்கு இதனைக் காட்டி, "இஃது உதவியது" என்பர் நச்சினார்க்கினியர். கோட்டம், வளைவு. "ஒத்தல்", "உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்" (தொல். உவம, 8) என்றாற்போல. கூவை போழ்ந்து என்ற பாடத்துக்குக் கூவைக்கிழங்கைப் பிளப்பதுபோலப் பிளந்துசென்று எனவுரைக்க. பின்னோக்காத பெருமித நடையும், வழியிடையுள்ள இடையீடுகளை மதியாது செல்லும் மாண்பும் உடையனென்றதற்குத் "தொடர்கொள் யானை" யுவமமும், தோழன் பாலுள்ள அன்பு விளங்குதற்கு, கன்றமர் கறவை யுவமமும் கூறப்பட்டன. "கன்றமர் கறவை" யெனப் பொதுப் படக் கூறினாராயினும், விரைவுடைமையும் உடன்தோன்ற, தன் கன்று பிறர் கைப்பட்டிருக்கக் காணும் கறவை அவர்பால் விரைந்து செல்வது போலத் தோழன்பால் சென்றாரெனினும் அமையும்; "கன்றுசேர்ந்தார்கட் கதவிற்றாய்ச் சென்றாங்கு, வன்கண்ணன் ஆய்வரல் ஓம்பு" (கலி. 116) என்று சான்றோர் கூறுவது காண்க.ஓம்புமின் ஓம்புமின் என்ற அடுக்கு அச்சம் பொருளாகப் பிறந்த விரைவுக் குறிப்புணர நின்றது.
--------

276. மதுரைப்பூதன் இளநாகனார்

மதுரையில் வாழ்ந்த பூதன் என்பாருடைய மகனாதலால் இளநாகனார், இவ்வாறு வழங்கப்பட்டார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். மதுரை மருதன் இளநாகனாரென வேறொரு சான்றோருண்மையின், அவரின் வேறுபடுத்தற்கு இவர் பூதன் இளநாகனார் என்று சிறப்பிக்கப் பெறுகின்றார். பெருவேந்தர் இருவர் தும்பை சூடிப் போருடற்றினர். அவருடைய இருபடைகளும் கைகலந்து போர் செய்தன. அத் தானையின் நிலையினை இளநாகனார் கண்டார். மறவருள் ஒருவன் பகைவர் படைநிலை முழுதும் கலக்கி வென்றிமேம்படுவது தெரிந்தது. அதனை இப்பாட்டின்கண் அழகு திகழக் கூறியுள்ளார்.

    நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
    இரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச்
    செம்முது பெண்டின் காதலஞ் சிறா அன்
    மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
    குடப்பாற் சில்லுறை போலப்         5
    படைக்குநோ யெல்லாந் தானா யினனே.
    ---------

திணை: அது. துறை: தானை நிலை. மதுரைப் பூதனிளநாகனார் பாடியது.

உரை: நறு விரை துறந்த நரைவெண் கூந்தல் - நறிய விரைப்பொருள்களைத் துறந்த நரைத்த வெளிய கூந்தலையும்; இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலை - இரவமரத்தின் விதை போலத் திரங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையுமுடைய; செம்முது பெண்டின் காதலம் சிறாஅன் - செம்மைப்பண்பு பொருந்திய முதியவளுடைய அன்புடைய மகன்;மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் - இளமைப் பான்மையையுடைய ஆய்க்குல மகளுடைய வளவிய உகிரினால்; குடப்பால் தெறித்த சில்லுறை போல - குடம் நிறையவைத்த பாலின்கண் தெளித்த சிவவாகிய பிரை அக்குடவளவிற்றான பால் முற்றும் கலங்கிக் கெடுதற்குக் காரண மானாற்போல; படைக்கு நோயெல்லாம் தானாயினன் - பேரளவினதாகிய பகைவர் படைத்திரள் உடைந்து கெடுதற்குரிய நோய் முழுதுக்கும் தான் ஒருவனே காரணனாயினான்;எ - று.

முதுபெண்டின் முதுமையைச் சிறப்பித்தற்குத் தலைமயிர் முதலியன எடுத்துரைத்தார். செம்மைப்பண்பு கூறியது, மாற்றார் படைக்குண்டாய நோய் முழுதுக்கும் அவள் வயிற்றிற் பிறந்த காதல் மகனது மறமாண்பு காரணமென்பது விளக்குதற்கு. மடமையுடைய ஆய்மகள் என்றமையின் அதற்கேற்ப வள்ளுகிரால் தெறித்தாள் என்றார். முது பெண்டின் சிறாஅன் சில்லுறைபோலத் தானாயினன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: ஒப்பனை செய்துகோடற்குரிய செவ்வி கழிந்தமை தோன்ற, "நறுவிரை துறந்த" என்றும், இளமை கழிந்தமை தோன்ற, "நரைவெண் கூந்த" லென்றும் விளக்கினார். இரங்காழ், இராவென்னும் மரத்தின் விதை. மறப்பண்புகுன்றாமை விளங்க, "செம்முது பெண்டு"என்றார்.பால்,பருவம், மடம், இளமை. "மடவளம்ம நீ இனிக் கொண்டோளே" (ஐங். 67) என்றாற்போல. மடப்பால், இளமைச்செவ்வி. குடவளவிற்றாய பாலில் அளவறிந்திட்ட பிரை அதனை யுறையப் பண்ணும்; அதனிற் குறையின், பால் தன் தன்மை கெட்டுத் தயிராய் உறைதலுமின்றிக் கலங்கித் தோன்றுமாதலின், அக்கருத்து விளங்க, "ஆய்மகள் வள்ளுகிர்த்தெறித்த குடப்பால் சில்லுறை" யென்றார். தும்பைத் தானைநிலையாவது, "இருபடையும் மறம்பழிச்சப் பொரு களத்துப் பொலிவெய்தின்று" (பு. வெ. மா. 7:22) என்பர். இதனைத் தொல்காப்பியவுரைகாரர்கள் "தானையானை" என்ற சூத்திரத்துத் ‘தானை நிலையின்பாற்படும்’ என்பர். செம்முதுபெண்டின் முதுமையை விரித்துக் கூறியது, அவள் முதியளாயினும், அவள் வயிற்றிற் பிறந்து அவள் மார்பிற் பாலுண்டு வளர்ந்த சிறுவன் மாற்றார்படை முழுதும் கலங்கியலமரச் செய்யும் பெருமறம் உடைய பெருந்தகையாயினான் என வியந்தோதியவாறு. "வறுந்தலை முதியாள் அஞ்சுதக்கனளே, வெஞ்சமத், தென்செய் கென்னும் வேந்தர்க், கஞ்சலென்னுமோர் களிறீந்தனளே" (புறத். 1372) என்று பிறரும் கூறுதல் காண்க.
----------

277. பூங்கண் உத்திரையார்

பூங்கண் என்பது காவிரியின் வடகரையிலுள்ள தோரூர் எனக் கல் வெட்டுக்களால் (M.E.R. No. 153 of 1932) அறிகின்றோம். இவரது இயற்பெயர்உத்திரையென்பது. இஃது ஆதிரை யென்றாற்போலப் பிறந்த நாளால் வந்த பெயர். களவுக் காதலொழுக்க மேற்கொண்ட தலைமக்களுள் வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி பிரிவாற்றாது வேறுபடும் திறத்தை இனிய பாட்டுக்களால் நயம்படிவுரைக்கும் நலம்வாய்ந்தவர் இவர். ஒரு மறவன் காளைப் பருவத்தே வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றான். அவன் தாய் மிக்க முதுமை யெய்தி அவனையேபற்றுக் கொடாகக் கொண்டிருந்தாள். அவன் போரில் விழுப்புண்பட்டு மேலோராகிய சான்றோர் வருந்த இறந்தான். இச்செய்தியை அவர்கள் அம்முதியவட்டு மெல்ல அறிவித்தனர். அது கேட்டு அவள் கழிபேரு வகை யெய்திக் கண்ணீர் சொரிந்து மகிழ்ச்சியுற்றாள். மறக்குடி மகளாகிய அவளது மறமாண்பு முதுமையால் வாடாத திறம் கண்ட உத்திரையார் வியந்தார். அவ்வியப்பின் உண்மை வடிவே இப்பாட்டு.

    மீனுண் கொக்கின் றூவி யன்ன
    வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
    களிறெறிந்து பட்டன னென்னு முவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
    நோன்கழை துயல்வரும் வெதிரத்து         5
    வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
    ----------

திணை: அது; துறை: உவகைக் கலுழ்ச்சி. பூங்கண் உத்திரையார் பாடியது.

உரை: மீன் உண் கொக்கின் தூவி யன்ன - மீன் கவர்ந்துண்ணும் கொக்கினுடைய தூவிபோன்ற; வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் - வெள்ளிய நரைத்த கூந்தலையுடைய முதியவளுடைய மகனாகிய இளையோன்;களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - போரில் தன்மேல் வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தானெனச் சான்றோர் உரைத்த செய்தி கேட்டதனால் எய்திய உவகை; ஈன்ற ஞான்றினும் பெரிது - அவனை யீன்றபொழுது அவட்குண்டாகிய உவகையினும் பெரிதாயிருந்தது; கண்ணீர் அவ்வுவகையால் அவளுடைய கண்கள் சொரிந்த நீர்; நோன்கழை துயல்வரும் - வலிய கழையாகிய மூங்கிலிடத்து அசையும்; வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பல - மூங்கிற் புதரின்கண் மழை பெய்தவழித்தங்கித் தூங்கித் துளிக்கும் நீர்த்துளியினும் பலவாகும்; எ - று.

முதியோள் சிறுவன் என்றது முதுமைக்காலத்துப் பற்றுக் கோடாய் நெடுநாள் பெறாதிருந்து பெற்ற மகன் என்பதுபட நின்றது. என்னுமென்ற பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டது. தனித்த மூங்கிற்கழி கழை யெனவும்.பலவாய் அடர்ந்திருக்கும் கழைத் தொகுதியாகிய புதர் வெதிரெனவும் வழங்கும். வெதிர மென்றதனை ஒரு மலை யென்பாருமுளர். உவகை ஈன்றஞான்றினும் பெரிது; கண்ணீர் சிதரினும் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

பட்டன்னென்னு முரை நோய் பயவாது உவகை பயந்து முதுமையினும் வாடாத மறமுடையளாதலைக் காட்டுதலின் இதனை விதந்து பாடினார். விளக்கம்: உவகைக் கலுழ்ச்சியாவது, வாள்வாய்த்த வடு வாழ்யாக்கை, கேள்கண்டு கலுழ்ந் துவந்தன்று என்பதாம். "மாற்றருங் கூற்றம்" என்ற சூத்திரத்து, "பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம், ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்" (புறத். சூ. 24) என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். நரைத்த தலைமயிரின் வெண்மை நிறத்துக்குக் கொக்கின் தூவி உவமங் கூறப்பட்டது. என்னும், என்று சொல்லக் கேட்டவழி உள்ளத்துப்பிறக்கும் என்றவாறு. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்" (குறள். 69) என்றவிடத்துச் சான்றோனென்றது, மறமாண் குணங்களால் நிறைந்தோனையும் குறிக்கு மாகலின்,ஈண்டும் அத் திருக்குறள் இயையுமாறு கண்டுகொள்க.கண்ணீரின் மிகுதி யுணர்த்தற்கு "வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பல" என்றார். வெதிர மென்பது வெதிர மென்னும் மலைக்கும் பெயர்; அதுபற்றி வெதிரமென்றது வெதிரமலையென வுரைப்பாருமுளர் எனப்பட்டது. டாக்டர்; திரு. ஊ. வே. சாமிநாதையரும் "வெதிரம் ஒரு மலை" யென்று குறித்திருப்பது காண்க.
---------

278. காக்கைபாடினியார் நச்செள்ளையார்

"விருந்து வருமாயின் கரைந்து காட்டுக, வாராதாயின் நடந்து காட்டுக"என இளமகளிர் காக்கை மனைக்கண்வரின் அது கண்டு சொல்வது வழக்கம்.இவ்வழக்காறு தமிழகத்தில் தொன்று தொட்டு வருவது. இதனைப் பொருளாக வைத்துப் பாடிய சிறப்பினால் நச்செள்ளையார் காக்கைபாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகின்றார். செள்ளையென்பது இவரது இயற்பெயர்.சிறப்புணர்த்தும் எழுத்தாகிய நகரம் புணர்ந்து நச்செள்ளையென வந்தது. கீரனாரென்பது நக்கீரனார் என்றும், பூதனா ரென்பது நப்பூதனாரென்றும் வருவது காண்க. இனி, நக்கீரன் நற்பூதன் என்பன நக்கீரன் நப்பூதன் எனவரும்; அவ்வாறே நற்செள்ளை யென்பது நச்செள்ளையென வந்தது என்று கூறுவாருமுளர். இச்சான்றோர் கண்டீரக்கோப்பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம்பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று, அதிகமான்நெடுமான் அஞ்சிபால் ஒளவையார் இருந்தாற்போல அவன் பக்கத்துப் புலவராகும் சிறப்பும் பெற்றாரென்ப. ஒருகால் ஒரு மறவன் போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்;அவன் பீடுடைய போருடற்றியதனால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடப்பதாயிற்று. அதனையறியாத பலர், போர் முடிவில் ஊர்க்குப் போந்து அவன் தாயைக் கண்டு "நின் மகன் பகைவர்க்கு முதுகு காட்டி மாண்டான்" என்று பொய்யாகக் கூறினர். அவள் அப்போது மிக்க முதுமை-யெய்தியிருந்தாளாயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு இழுக்காதலை யெண்ணினாள்; கண்களைத் தீயெழத் திறந்து நோக்கி, "என் மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள். அங்கே மறவர் பிணங்கள் மலிந்து முழுவதும் பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள்.முடிவில் ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக் கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்;அவன் முகத்தினும் மார்பினும் விழுப்புண் பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன்" எனத் தெரிந்தாள். அக்காலை அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை நிறுவினானென உண்டாகிய உவகை மிகுந்தது. அதுதானும் அவனை அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இது காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக இப்பாட்டினைப் பாடுவாராயினர்.

    நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படையழிந்து மாறின னென்றுபலர் கூற
    மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
    முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்         5
    கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
    செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.
    --------

திணையும் துறையு மவை. காக்கையாடினியார் நச்செள்ளையார் பாடியது.

உரை: நரம்பு எழுந்த உலறிய நிரம்பா மென்றோள் - நரம்பு தோன்றி வற்றிய நிரம்பாத மெல்லிய தோள்களையும்; முளரி மருங்கின் முதியோள் - தாமரையிலைபோன்ற அடிவயிற்றினையுமுடைய முதியவள் ஒருத்தி; சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற - நின் மகன் பகைவர் படை கண்டு அஞ்சிப் புறங்கொடுத்து மாண்டான் என்று அறியாதார் பலர் வந்து சொல்ல; மண்டமர்க்கு உடைந்தனனாயின் - நெருங்கிச் செய்யும் போர் கண்டு அஞ்சி யிறந்தானென்பது உண்மையாயின்; உண்ட என் முலை யறுத்திடுவென் யான் எனச் சினைஇ - அவன் வாய் வைத்துண்ட என் முலையை யறுத்தெறிவேன் யான் என்று சினந்து சொல்லி; கொண்ட வாளொடு- சொல்லிய வண்ணமே செய்தற்கு வாளைக் கையிலேந்திப் போர்க்களம் சென்று; படு பிணம் பெயரா - அங்கே இறந்து கிடக்கும் மறவர் பிணங்களைப்பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்துக் கொண்டே; செங்களம் துழவுவோள் - குருதி படிந்து சிவந்த போர்க்கள முற்றும் சுற்றி வருபவள்; சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ - விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறு வேறாகத் துணிபட்டுக் கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு; ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் அவனைப் பெற்ற நாளிற் கொண்ட உவகையினும் கொண்டாள்; எ - று. முதியோள் கேட்டுச் சினைஇ, பெயரா, துழவுவோள், கிடக்கை காணூஉப் பெரிதுவந்தனள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முதுமையால் தோள் சரிந்தமையின், "நிரம்பா மென்றோள்" என்றார். நரம் பெழுந்து திரைந்து முளரியிலையின் அடிப்பகுதிபோல் பசுமையின்றி யிருத்தலின், முதியோளது அடிவயிற்றை "முளரிமருங்" கெனக் குறித்தார். படை யென்புழி நான்கனுருபு விரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிணமாக ஆராய்தின், "துழவுவோள்" என்றார். சிதைந்து வேறாகிய உடலைப் பொருந்த வைத்து விழுப்புண்பட்டு வீழ்ந்தமை கண்டு தெளிந்தமை தோன்ற, "படுமகற் காணூஉ" வென்னாது, "படுமகன் கிடக்கை காணூஉ" வென்றார். படுபிணம் பெயராச் செங்களமென இயைத்துப் படுபிணம் நீங்காத சிவந்த போர்க்களமென வுரைப்பாருமுளர்.

விளக்கம்: முதுமையால் மேனி பசுமை குன்றி நரம்பு மேலெழுந்து இனிது காணத்தோன்றுதலால் "நரம்பெழுந்து உலறிய தோள்" என்றார். பசுமையின்றி விளர்த்து நரம்பு தோன்றத் திரங்கி நி்ற்பதுபற்றி வயிற்றுக்கு முளரி யுவமமாயிற்று. நன்றெடுத்து மொழிவாரினும் தீதெடுத்து மொழிவார் உலகத்துப் பலராதலால், "பலர் கூற" என்றார். கூறுவோரது பன்மை கண்டாட்குத் தன் மகனது மறத்தின்கண் ஐயந்தோன்றவே, ஒரு தலையாகத் துணியமாட்டாளாய், "மண்டமர்க் குடைந்தனனாயின் உண்ட வென்முலை யறுத்திடுவன் யான்" எனச் சினந்துரைத்தாள். மகனது மாண்பை அவள் ஓரளவு அறிந்திருந்தமையின், "உடைந்தனனாயின்" எனக் கூனிறான். "அறுத்திடுவென்" என்ற சொல் வாயினின்று வெளிவரும் போதே அவள் கை தன் மறக்குடிக்குடைமையாகிய வாளைத் தேர்ந்து கொண்டமையின் "கொண்ட வாள்" எனப்பட்டது. பட்ட வீரர்களின் குருதி படிந்து போர்க்களம் சிவந்தமையின் செங்களம் என்றும், இனிது கண்டறியத் தக்க வகையில் அவள்மகன் கிடவாமையின், "துழவிவோள்" என்றும், சிதைந்து வேறாகிய மகனது உடம்பைக் கண்டதும் காதன் மிகுதியால் கட்டிய ழுதலின்றிப் பட்ட புண்ணைத் தேர்ந்து பழியின்மைகண்டு உவகையால் உள்ளம் வீங்குதலால், "சிதைந்து வேறாகிய படுமகன்" என்றும் விளங்க வுரைத்தார். சிதைந்து வேறாகிய மகனது கிடக்கை அவளது உள்ளத்தை யழித்திலது என்பது இதனால் வற்வுறுத்தப்பட்டது. விழுப்புண்பட்டு வீங்குபுகழ் பெற்றதோடு குடிப்பழியும் போக்கினமையின், உவகை பெரிதாயிற்றென வறிக.
----------

279. ஒக்கூர் மாசாத்தியார்

மாசாத்தனாரைப்போல் மாசாத்தியாராகிய இவரும் ஒக்கூரிற் பிறந்தவராவர். ஒக்கூரெனப் பெயரிய ஊர்கள் பாண்டிநாட்டிலும் சோழநாட்டிலும் உள்ளன. இந்த ஒக்கூர் இன்ன நாட்டதெனத் துணிய முடியவில்லை.சங்ககாலத்து நல்லிசை மெல்லியலாருள் இந்த மாசாத்தியாரும் ஒருவர். போர் நிகழுங் காலத்தில் மறக்குடி யொன்றிற்கு மாசாத்தியார் சென்றிருந்தார். அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்று இவர் கருத்தைக் கவர்ந்தது. அந்த இல்லக்கிழத்தியான மற்குடிமகள் முகத்தில் மறத்தீக் கிளர்ந்து நின்றது. அன்றைய முன்னாளில் அவளுடைய கொழுநன் ஆனிரைகளைப் பகைவர் கவர்ந்தேகாவாறு குறுக்கிட்டுப் பொருது நின்று மாண்டான்; அதற்கு முன்னாள் அவளுடைய தந்தை போரில் தன்மேல் வந்த பெருங் களிற்றைக் கொன்று தானும் பட்டு வீழ்ந்தான். மாசாத்தியார் இச்செய்திகளை உசாவிக்கொண்டிருக்கையில் தெருவில் செருப்பறை முழங்கிற்று. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவளுடைய ஒரு மகன் ஓடிவந்துரைத்தான். மறமகள் முகத்தில் உவகை பிறந்தது. உலறிக்கிடந்த அவன் தலையில் எண்ணெய் தடவிக் குடுமியை ஒப்பனை செய்தாள்; அரையில் வெள்ளிய ஆடையை எடுத்துடுத்தினாள்; வேலொன்றை யெடுத்து அவன் கையில் தந்தாள். மகன் முகத்தைத் தன் முகத்துக்கு நேரே திருப்பி, "மகனே, உன் தந்தையும் தன்னையரும் போருடற்றித் தமது கடனைக் கழித்து நம் மறக்குடியின் புகழை நிறுவினர்; நீ இப்போது செல்க!" என விடுக்கலுற்றாள். புலவர் பாடும் புகழமைந்த இச்செயலை மாசாத்தியார் வியந்து இப்பாட்டின்கண் இதனை அழகுறப் பாடியுள்ளார்.

    கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
    மூதின் மகளி ராத றகுமே
    மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
    யானை யெறிந்து களத்தொழிந் தனனே
    நெருத லுற்ற செருவிற் கிவள் கொழுநன்         5
    பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
    இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
    பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
    ஒருமக னல்ல தில்லோள்         10
    செருமுக நோக்கிச் செல்கென விடுமே.
    ---------

திணை: வாகை. துறை: மூதின் முல்லை. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

உரை: சிந்தை கெடுக - இவளது சிந்தை கெடுக; இவள் துணிவு கடிது - இவளது துணிவு அச்சம் பொருந்தியதாகவுளது; மூதில் மகளிராதல் தகும் - இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே; மேனாள் உற்ற செருவிற்கு – முன்னாளில் உண்டாகிய போரின்கண்; இவள் தன்னை யானை எறிந்து களத் தொழிந்தனன்- இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான்; நெருநல் உற்ற செருவிற்கு - நெருநற் றுண்டாகிய செருவின்கண்;இவள் கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டனன் - இவளுடைய கணவன் பெரியவாகிய நிரைகளைக் கவர்ந்து செல்லாவாறு பகைவரைக் குறுக்கிட்டு நின்று பொருது அவ்விடத்தே மாண்டான்; இன்றும் -; செருப்பறை கேட்டு - போர்க்கெழுமாறு வீரரையழைக்கும் பறையொலி கேட்டு; விருப்புற்று- மறப் புகழ்பால் விருப்பங்கொண்டு; மயங்கி - அறிவு மயங்கி; வேல் கைக் கொடுத்து - வேலைக் கையிலே தந்து; வெளிது விரித்து உடீஇ - வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி; பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி - உலறிய மயிர் பொருந்திய குடுமியல் எண்ணெயைத் தடவிச்சீவி; ஒரு மகன் அல்லது இல்லோள் - இந்த ஒரு மகனையல்லது இல்லாதவளே யாயினும்; செருமுகம் நோக்கிச் செல்க என விடும் - போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்; எ - று.

மூதில், முதுகுடி; "கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு, முற்றோன்றி மூத்தி குடி." தன்னை, தன் உடன்பிறந்த மூத்தோருமாம். பெருநிரை யென்றது அவள் கொழுநனது ஆண்மை மிகுதி புலப்படுத்தா நின்றது. தன்னொரு மகனும் மிக இளையனாதலையறியாது செருமுக நோக்கிச் செல்க என விடுத்தற்கேது இது வென்பார், "மயங்கி" யென்றும், அதற்குக் காரணம் மறப்புகழ்பால் அவட்குள்ள விருப்பமென்பார் "விருப்புற்" றென்றும் கூறினார். சிந்தையையும் துணிவையும் வியந்து பாராட்டும் கருத்தினராதலின், "கெடுக சிந்தை கடிதிவள் துணி" வென்றது எதிர்மறைக் குறிப்புமொழி.

விளக்கம்: மூதின் முல்லையாவது, "அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று" (பு. வெ. மா. 8:21) எனவரும்.மூதில் மகளிர், முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர்; "மூதிற் பெண்டிர் கசிந்தழ" (புறம். 19) என்பதன் உரை காண்க. மூதில், முதுமையான குடி; அஃதாவது, "வையகம் போர்த்த வயங்கொலி நீர் கையகல, கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு, முன்தோன்றி மூத்தகுடி" (பு. வெ. மா. 1:14) என்பதாம், இம்முதுகுடி மகளிர், உலக வாழ்வில் உயிரினும் மறத்தையே பெரிதும் விரம்புபவர். கெடுக சிந்தை யென்றும், கடிதிவள் துணிவு என்றும் கூறியது இகழ்வது போலப் புகழ்ந்தவாறு. "மூதின் மகளிராதல் தகும்" என்றது மேற்கோள்; தன்னை யொழிந்தனனெனவும் கொழுநன் பட்டனனெவும்,மகனை விடுமெனவும் கூறியது அதனைச் சாதித்தற்கு வந்த ஏது. விலங்குதல், குறுக்கிடுதல். ஆண்டு, பெருநிரை குறித்துச் செய்த போர்க்களத்தின்கண். விருப்பு மறப்புகழ் மேலாதலின், செருப்பறை கேட்டெழுந்த விருப்பத்தால் செய்வதறியாது மயங்கினளென்பார்,"விருப்புற்று மயங்கி" யென்றார்.வெளிது, வெள்ளாடை. பாறு மயிர், விரிந்த தலைமயிர். ஒரு மகனல்ல தில்லோள் என்றது, மதுமகளின் மறப்பண்பைச் சிறப்பித்து நின்றது.

இனி,இளம்பூரணர், "மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த, கொற்றவை நிலையுமத்திணைப் புறனே" (தோல். புறத். 4) என்று கொண்டு, குடி நிலையில் மகளிர் இயல்பு இது வென்பாராய், இப்பாட்டை யெடுத்துக் காட்டுவர்; நச்சினார்க்கினியார், குடிநிலை யென்னாது துடிநிலை யென்று பாடங் கொண்டு,"வெறியறி சிறப்பின்" (தொல். புறத். 5) எனத் தொடங்கும் சூத்திரத்து வரும் "வாள் வாய்த்துக் கவிழ்தல்" என்றதற்கு எடுத்துக்காட்டுவர்.
---------------

280. மாறோக்கத்து நப்பசலையார்

மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கமென்னும் பகுதியைச் சேர்ந்தவர். கொற்கையைச் சூழ்ந்த பகுதி மாறோக்கமெனப்படும். இப்பகுதியிலுள்ள மாறமங்கலம் என்பது மாறோக்கம் என்னும் பழைய வூரென்று சிலர் கூறவர்; இது மாறவன்மன் மங்கலமெனவும், மான மங்கல மெனவும் கல்வெட்டுக்களிற் கூறப்படுகிறதன்றி மாறோக்க மெனக் கூறப்படவில்லை. இம் மாறோக்கம் மாறோகமென்றும் வழங்குகிறது. ஒருகால் நப்பசலையார், போர்முடிவில் ஒரு தலைவன் மனைக்குச் சென்றார். அவன் போர்ப் புண்பட்டு இறுதிநிலையில் இருந்தான். "எவ்வகையிலும் அவன் இறுதியெய்துவான்" என்பதைப் பல குறிகளால் அவன் மனையோள் உணர்ந்து கொண்டான். மறக்குடி மகளாதலால் ஒருவாறு தேறியிருந்தாளாயினும், தலைவன் தாணிழலில் வாழ்ந்த துடியன் பாணன் விறலி முதலியோர் வாழ்வு சீர்குலையுமே என நினைந்தாள்; அவர்களும் ஆங்கே இருந்தனர். அவர்களை நோக்கி, "தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரியவாய் உள்ளன; நண்பகற்போதில் முரலாத தும்பிகள் அப்போதில் வந்து ஒலிக்கின்றன; ஏற்றிய விளக்கும் நில்லாது அவிகிறது; என்னையறியாமல் எனக்கும் உறக்கமுண்டாகிறது; மனைக் கூறையில் இருந்து கூகை குழறுகிறது; விரிச்சி நிற்கும் முதுபெண்டிர் சொற்களும் பொய்படுகின்றன; ஆகவே தலைமகன் இறுதியெய்துவது உறுதி; இனி உங்கள் நிலை யாதாகுமோ, அறியேன்; இனி நீங்கள் இங்கே இருந்து வாழ்வதென்பதும் அரிது; அதனினும் அரிது யான் உயிர் வாழ்ந்திருப்பேன் என நினைப்பது" என மொழிந்தாள். இதுகண்டு நெஞ்சு கரைந்துருகினார் நப்பசலையார். மனையோளது மறமாண்பை யெண்ணினார்; எண்ணிய எல்லையில் அவளுரைத்த சொற்கள் நெஞ்சிற் பதிந்தமையின் அவற்றை இப்பாட்டில் தொகுத்துப் பாடியுள்ளார்.

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்         5
    நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு
    செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும்
    இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்         10
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரிற்
    சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந் திருத்த லதனினு மரிதே.         15
    ---------

திணை: பொதுவியல். துறை: ஆனந்தப்பையுள். மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

உரை: என்னை மார்பில் புண்ணும் வெய்ய - என் தலைவனுடைய மார்பிலுண்டாகிய புண்களும் பெரியவாயுள்ளன. நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் - நண்பகற்காலத்தே வந்து வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன;நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா நெடிய மனையின்கண் ஏற்றிவைத்த விளக்குகளும் நின்றெரியாமல் அவிந்து விடுகின்றன; துஞ்சாக்கண் துயிலும் வேட்கும் - உறங்குதல் ஒழிந்த என் கண்களும் உறக்கத்தை விரும்புகின்றன; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் - அச்சத்தைத்தரும் கூகையும் தன் குழறு குரலெடுத்து ஒலியா நிற்கிறது; நெல் நீர் எறிந்து விரிச்சியோர்க்கும் - நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா -செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன; துடிய - துடி கொட்டுபவனே; பாண - பாண் மகனே; பாடுவல் விறலி - பாடல்வல்ல விறலியே; என்னாகுவிர் கொல் -எங்ஙனமாவீர்களோ; அளியீர் - இரங்கத்தக்கீர்; நுமக்கும் இவணுறை வாழ்க்கையரிது - இதுகாறும் இருந்தாற்போல இவ்விடத்தே இருந்து வாழலாமென்பது உங்கட்கும் இனி அரிதாம்; மண்ணுறு மழித்தலை தெண்ணீர் வார - கழுவுகின்ற மொட்டையான தலையினின்றும் தெளிந்த நீர் ஒழுக; தொன்று உடுத்த அம்பகைத் தெரியல் - முன்பு இளமைக் காலத்தில் உடுத்த அழகிய பகைத்தழையா யுதவிய; சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும் - சிறிய வெள்ளிய ஆம்பலிடத் துண்டாகும் அல்லியரிசியை யுண்ணும்; கழிகல மகளிர்போல - கழித்த அணிகலங்களையுடைய கைம்பெண்டிர்போல; வழி நினைந்திருத்தல் அதனினும் அரிது - தலைவன் இறந்த வழிப் பின்னே வாழு் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம்; எ - று.

உயிர்க்கிறுதி பயவா தொழியாத புண்களாதலால் "வெய்ய" என்றாள். தும்பி முதலியவற்றின் செயல் கூறியது தலைவன் சாக்காட்டினை முன்னறிவிக்கும் தீக்குறி. இதுகாறும் தலைவன் தாணிலிழல் வாழ்ந்தவராதலால், அவன் இறந்தவழி அவர்கள் துன்புறுவரென இரங்குவாள், "என்னாகுவிர் கொல் அளியீர்" என்றாள். மழித்ததலை மழித்தலையென வந்தது.வழிநினைந் திருத்தல் அதனினும் அரி தென்றது, இறத்தல் ஒருதலை யென்றவாறாம். புண்ணும் வெய்ய; தும்பியும் துவைக்கும்; விளக்கும் நில்லா; கண் துயில் வேட்கும்; குராஅல் குரல் தூற்றும்; சொல்லும் நிரம்பா; ஆதலால் துடிய, பாண, விறலி, என்னாகுவிர் கொல், அளியீர்; நுமக்கும் அரிது; யானும் இருத்தல் அதனினும் அரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: ஆனந்தப்பையுளாவது, "விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று" (பு. வெ. மா. 10:13) என வரும். என்னை- எனக்குத் தலைவன்; ஈண்டுக் கணவன் என்பது படநின்றது. "அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்,தோன்றா மரபின் என்மனார் புலவர்" (தொல். பொருள்-52) என ஆசிரியர் கூறுதல் காண்க. தலைவன் உறக்கமின்றி வருந்துவது காண்பாள் மனைவி யுறங்காளாயினமைின், "துஞ்சாக் கண்" என்றாள். கூகையின் குரல் கேட்போர்க்கு அச்சம் தருவதுபற்றி, "அஞ்சவரு குராஅல்" எனப்பட்டது. "நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது; பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப" (முல்லை. 8-11) என்று பிறரும் கூறுவதால் விரிச்சியின் இயல்புணரப்படும். நிரப்பாமை, பொய்படுதல். துடியன் துடியும், பாணன் யாழுமாகிய கருவி யுடையர்; விறலிதன் மிடறொன்றே கருவியாகப் பாடுபவளாதலின், "பாடுவல் விறலி" யென்றாள். தலைமகன் வாழ்ந்த நாளில் பகைப்புலத்துப் பொருது கொணர்ந்த பொன்னும் பொருளும் மாவும் களிறும் துடியன் முதலாயினார்க்குப் பரிசிலாக வழங்கப்பட்டமையின், அவர்கள் வறுமையின்றி இனிது வாழ்ங்கப்பட்டமையின், அவர்கள் வறுமையின்றி இனிது வாழ்ந்தனராதலின், அவர் வாழ்வு சீர் குலைவது நினைந்து வருந்திக் கூறுவாள், "என்னாகுவிர் கொல்" என்றும், பெற்றவை செலவான பொழுதெல்லாம் தலைவன்பால் வந்து வேண்டுவன நிரம்பப்பெற்று மகிழ்ந்த அவர் தம் நிலைமைக்கு இரங்கி, "அளியீர்" என்றும் கூறினாள். வாழ்க்கை, வறுமைத்துன்பமின்றி வாழ்தல்.அருமை,இன்மைகுறித்து நின்றது. மகளிர் கணவனைணயிழந்தபின், அவரொருவரானன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. "கூந்தல் கொய்து குறுந்தொடி நீ்க்கி, அல்லியுணவின் மனைவி" (புறம்:250) எனப் பிறரும் கூறுவது காண்க. "மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே" (குறுந்:225) எனவும், "குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து" (புறம்:113) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனொருவற்கே யுண்டென்பதும், எனவே, கூந்தற்குரியர் இறந்தவழி, கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை, மழித்தலையெனவும், வைத்த தலை, வைத்தலை (பதிற்:44) யெனவும் வருதல் விகாரம்.
-----------

281. அரிசில்கிழார்

முடிவேந்தருள் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையையும் குறுநில மன்னருள் வையாவிக் கோப்பெரும்பேகன், அதியமான் எழினி முதலியோரையும் பாடிப் பெருஞ் சிறப்புப் பெற்றவர் சான்றோராகிய அரிசில்கிழார். இவரது அரிசில் என்னும் ஊர் சோழ நாட்டுக் குடந்தை நகர்க்கண்மையில் இருந்ததோரூர்; குடந்தையிலுள்ள கல்வெட்டொன்று(A. R. 255 of 1911) அரிசிலூரைக் குறிக்கின்றது. அஃது இப்போது இருக்குமிடம் தெரிந்திலது. வேந்தன் பொருட்டுப் போரில் புகழுண்டாகப் பொருது விழுப்புண்பட்ட வீரனொருவன் தன் மனைக்கண்ணே யிருந்தான். மனையுறை மகளிர் அவன் புண்ணை யாற்றிவந்தனர். அரிசில் கிழார் அவனைக் காண்டற்பொருட்டு அவன் மனைக்குச் சென்றிருந்தார். அக்காலை அவன் மனையோள் தன் தோழியுடன் சொல்லாடியது கேட்டார். அது மறக்குடி மகளொருத்தியின் மாண்பை எடுத்துக்காட்டு தலின் அதனை இப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளார்.

    தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
    ஐயவி சிதறி யாம்ப லூதி
    இசைமணி யெறிந்து காஞ்சி பாடி         5
    நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழி
    வேந்துறு விழுமந் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
    --------

திணை: காஞ்சி, துறை: தொடாக் காஞ்சி. அரிசில்கிழார் பாடியது.

உரை: தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ - தீவிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி; வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க - வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய இயங்களும் இயம்ப; கைபயப் பெயர்த்துமை யிழுது இழுகி - கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினையிட்டு; ஐயவி சிதறி - வெண் சிறுகடுகைத் தூவி; ஆம்பல் ஊதி - ஆம்பற்குழலை யூதி; இசைமணி எறிந்து - ஓசையைச் செய்யும் மணியையியக்கி; காஞ்சி பாடி,காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடுநகர் வரைப்பில் கடி நறை புகைஇ - நெடிய மனையின்கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புதைத்து; காதலம் தோழி - அன்புடைய தோழியே; காக்கம் வம்மோ - காப்போமாக வருக;வேந்துறு விழுமம் தாங்கிய - வேந்தனைக்குறித்துச் செய்யப் பெற்ற இடுக்கணைத் தானேற்றுக் காத்த; பூம் பொறிக் கழற்கால் நெடுந்தகை புண் - பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலையணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவற்குண்டாகிய புண்களை; எ - று.

நகர் வரைப்பில் மனைச்செரீஇ, கறங்க, இழுகி, சிதறி, ஊதி, எறிந்து, பாடி, புகைஇ, நெடுந்தகை புண்ணை, தோழி, காக்கம் வம்மோ என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. இரவமொடு வேம்புமனைச் செருகுதல் முதலிய செயல்களை பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன. நெடுந்தகை புண்ணுற்றதற்குக் காரணம் கூறுவாள், "வேந்துறு விழுமம் தாங்கிய நெடுந்தகை" யென்றாள். நோய்க்கெல்லாம் காரணம் பற்றாதலின், பற்றறுதி குறித்துக் காஞ்சிப்பண் பாடப்பட்டது.

விளக்கம்: இப்பாட்டுப் பேய்க்காஞ்சியென ஏடுகளில் துறை வகுக்கப்பட்டுள்ளது; பேய்க்காஞ்சியாவது "பிணம் பிறங்கி களத்து வீழ்ந் தார்க்கு, அணங்காற்ற வச்சுறீஇ யன்று" (பு. வெ. மா. 4:17) என வரும். இப்பாட்டு அதற்குப் பொருந்தாது; "அடலஞ்சா நெடுந்தகை புண், தொடலஞ்சித் துடித்து நீங்கின்று" (பு. வெ. மா. 4:19) என வரும். தொடாக் காஞ்சிக்கண் அடங்கும்; எங்ஙனமெனின், பேய் தொடுதற்கஞ்சி நீங்குமாறு புண்ணுற்று வீழ்ந்த மறவனுடைய மனைவி காப்பது இதன்கட்கூறப்படுகின்றது; (தொல். புறத். 24) என ஆசிரியர் கூறுவது காண்க. நச்சினார்க்கினியரும் இப் பாட்டைத் தொடாக்காஞ்சித் துறையென்றே கொள்வர். இரவமரத்தின் தழையும்வேம்பின் தழையும் பேய் நெருங்காவாறு கடிவன. வாங்கு மருப்பு - வளைந்த கோடு. மையிழுது கொண்டு மனையை ஒப்பனை செய்தற்கண் கைபையச் செல்லுமாதலின், ஒப்பனை செய்தலைக் "கைபயக் பெயர்த்" தென்றாள். "பிறந்த பொழுதேயும் பெய்தலைக் "கைபயப் பெயர்த்" தென்றாள். "பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார்" (புறத். 1318) என்ற கருத்தால், "வேந்துறு விழுமந் தாங்கி"னானென்றும், அதனால், பழிதீர் கொடைக் கடனாற்றிய புகழ்" (புறத். 1274) பெற்று மேம்படுதலின், "நெடுந்தகை" யென்றும் கூறினாள். போரிற் பெரும்புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும், இனிய இசை பாடுதலும் நறிய விரைப் பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணங் கமழுமாறு செய்வதும் பண்டைத் தமிழ் மக்கள் மரபு.
------

282. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ முடிவேந்தருள் ஒருவனாதலேயன்றி நல்லிசைச் சான்றோர் வரிசையிலும் ஒருவனாகத் திகழ்பவன். அருந்திறல் படைத்த மறவனொருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனது பேராண்மை புலவர் பாடும் புகழ் படைத்தது. அவன் புகழ் நாடுமுற்றும் பரவியிருந்தது. அவனைக் காண்பது குறித்துச் சான்றோர் ஒருவர் அவனூர்க்குச் சென்று வினவினார். வினாவப்பட்டோர், "ஐய பகைவரொடு செய்த போரில், வேல் மார்பில் ஊடுருவவும், அஞ்சாது பொருது செய்தற்கரிய செயலால் பெறற்கரிய வென்றியும் புகழும் எய்திய வீறுடையவன் அவன்; அவன் யாண்டுளன் என வினவுகின்றீர்; போரிற் பகைவர் அவன் உடம்பு தெரியாதவாறு அழித்துச் சிதைத்தனர்; அதனால் உயிர் நீங்கிற்று. ஆயினும், அவன் தன் நல்லிசையை உலகில் நிறுவிப் புலவர் பெருமக்களின் நாநவில் செய்யுளில் நிலைபெற்றுள்ளான்" என்றனர். இவ்விடை பெருங் கடுங் கோவின் புலமையுள்ளத்தை இயக்கி இப்பாட்டு வெளி வருவதாயிற்று. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

    எஃகுளங் கழிய விருநில மருங்கின்
    அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுள னோவென வினவுதி யாயிற்
    ..........................
    வருபடை தாங்கிய கிளர்தா ரகலம்
    அருங்கட னிறுமார் வயவ ரெறிய         5
    உடம்புந் தோன்றா வுயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறெதிர் கிழியத்
    ..........................
    அலகை போகிச் சிதைந்துவே றாகிய
    பலகை யல்லது களத்தொழி யாதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ         10
    நாநவில் புலவர் வாயு ளானே.
    ---------

திணை...பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது.

உரை: எஃகு உளம் கழிய - பகைவர் எறிந்த வேல் நெஞ்சிற் பாய்ந்துருவிச் செல்ல; இருநில மருங்கின் - பெரிய நிலத்தின்கண் இருந்து; அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனை - ஆற்றுதற்கரிய கடமையினை ஆற்றிய மிக்க செய்கையையுடைய சான்றோனாகிய மறவனை; யாண்டுளன் என வினவுதி - எவ்விடத்துள்ளான் என வினவுகின்றாய்; ஆயின் - ஆராயுமிடத்து;...வருபடை தாங்கிய கிளர்தார் அகலம் - தன்னைக் குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பை; அருங்கடன் இறுமார் வயவர் எறிய - தம்முடைய அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால்; உடம்பும் தோன்றாஉயிர் கெட்டன்று - அம்பும் வேலும் மொய்த்து உடம்பும் கட்புலனாகாத உயிரும் கெட்டன; மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய - பொருகின்ற பகைவர் பிறக்கிட்டு முரணவிந்து கெடுதலால்...அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகையல்லது - காக்கும் அமைதி கெட்டுச் சிதைந்து துணி துணியாகிய கேடக மொழிய; களத்து ஒழியாது - போர்க்களத்தே கிடந்தொழியாமல்; சேண்விளங்கு நல்லிசை நிறீஇ - திசைமுற்றும் பரவி விளங்கும் நல்ல புகழை நிலைநாட்டி; நா நவில் புலவர் வாயுளான் - நாவால் நல்லுரை பயிலும் புலவருடைய வாயிலிருந்து வரும் செய்யுளிடத்தே யுள்ளான்; எ - று.

இறுத்தற்கரிய கடன்களை முற்றவும் ஆற்றினமையின், "பெருஞ் செயாளன்" என்றார். செய் என்னும் முதலிலைத் தொழிற்பெயர் அரிய வினை குறித்து நின்றது. தாங்கிய என்னும் வினையெச்சம் கிளரகலமென இயையும் வினைத்தொகையது வினையொடு முடிந்தது. கிளர் தாரென வியைத்து வண்டு கிளரும் மாலையென வுரைப்பினுமமையும்; அவ்வழி, தாங்கிய அகலம் என இயையும். கிளரகல மென்றவழித் தார் இடை நிலை. இம் மறவன் தன்னோடு ஒத்த மறவரோடே பொருது வீழ்ந்தான் என்பார், "அருங்கடன் இறுமார் வயவர் எறிய" என்றார். கட்புலனாகத் தோன்றும் உடம்பும் தோன்றாத உயிரும் கெட்டன என உடம்பையும் உயிரையும் பிரித்தோதினார். இருத்தற்குரிய இடங் காட்டலாகாமை விளக்குதற்கு கெட்டன்றென்பதை உடம்புக்கும் கூட்டுக. இனி உடம்பும் தோன்றாதெனக் கொண்டு தோன்றதென்பது ஈறு தொக்கதென்றுரைப்பினுமமையும். அலகை, காப்பாகும் அளவு. வாயென்ற ஆகு பெயரால் அதனால் உரைக்கப்படும் செய்யுள் மேலாதாயிற்று. பெருஞ் செயாளனை வினவுதி: ஆயின் அவன் உடம்பும் உயிரும் கெட்டன; பலகையல்லது ஒழியாது; அவன் புலவர் வாயுளான் என வினைமுடிபு செய்க.

விளக்கம்: எஃகு, வேலும் வாளும் குறித்துநின்றது; இது முதலாகு பெயர்.அருங்கடன் என்றது, ஏனைப் பாண்கடன், புரவுக் கடன் முதலியன போலாது போரிற் பகைவரை வஞ்சியாது பொருந் தொழில்;இது படைக்கடன் (புறத். 1279). "செஞ்சோற்று நிலை" (புறம். 1354) எனவும் கூறப்படும். இது பெருஞ்செயலாகப் பேணப்படுவதுபற்றி, இதற்குரிய மறவரைப் பெருஞ்செயாளரென்றும்,பெருஞ் செயாடவர் (புறத். 199)என்றும் சான்றோர் சிறப்பிப்பர். செய்கையென்னும் வினைப்பெயரின் செய்யென்னும் முதலிலை மட்டும் நின்று பெயராய் வினையை யுணர்த்துதலால், இது முதலிலைத் தொழிற்பெயரெனப்படுவதாயிற்று. தோன்றாவுயிரெனவே, உடம்பு தோன்றும் என்பது வருவிக்கப்பட்டது. உயிர்க்குக் கேடு கூறியது, உடம்பின்கண் நில்லாது நீங்கிய நீக்கம் குறித்து நின்றது. புலவர் வாயுளான் என்றமையின், கேடு உடம்பிற்கும், நீக்கப் பொருண்மை உயிர்க்கும் கொள்க. மாறு எதிர் கழறிய என்பது பாடமாயின்,எதிர் மாறு கழறிய என இயைத்து எதிர்மாற்றம் கழறிக் கூறிய என்று உரைக்க. சேண்விளங்கு நல்லிசை, நாடிடையிட்டும் காலமிடையிட்டும் சென்று நிற்றல்பற்றிச் சேண்விளங்கு நல்லிசை யென்றார். சேண் என்றதற்குத் துறக்கவுல கென வுரைத்து, "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவனேவா வான வூர்தி, யெய்துப வென்பதஞ் செய்வினைமுடித்" (புறம். 27) தென்பதைக் காட்டுவாருமுளர்.
-----------

283. அண்டர்நடுங்கல்லினார்

கரந்தைப் போருடற்றி மேம்பட்ட வீரனொருவனைக் கல் நாட்டி ஆயர் சிறப்புச் செய்ய, அதனை அண்டர் நடுங் கல்லெனப் பாராட்டிப் பாடியதனால், இவர் அண்டர் நடுங்கல்லினார் எனப்படுகின்றார். இவர் பெயர் அடைநெடுங்கல்லியாரென்னும் காணப்படுகிறது. அடைநெடுங் கல்வியாரென்றோதி, இவர் ஒருவரையடுத்து அரிதிற் பெறுதற்குரிய கல்வியை எளிதில்பெற்று நெடிதுடையார் என்று பொருள் கூறவும் படுகிறது. இவரைப் பற்றித் தெரிந்துகோடற்குரிய குறிப்புகள் கிடைத்தில. இவர் மகட்பாற் காஞ்சியை விரும்பிப் பாடியுள்ளார். ஈண்டுக் காணப்படும் இவரது பாடாண்பாட்டு ஏடுதோறும் சிதைந்து காணப்படுகிறது. அழும்பில் என்னும் ஊரையும் கோசரது அவைக் களத்தையும் இப் பாட்டிகட்குறித்துள்ளார். இது புதுக்கோட்டைப் பகுதியில் உளது; இப்போது அம்புக் கோயில் என வழங்குகிறது; இங்குள்ள கல்வெட்டு "இராஜராஜ வளநாட்டுப் பன்யியூர் நாட்டு அழும்பில்"(p. s. Ins. 458)என்று குறிக்கிறது. ஒருவன் பகைவர் எறிந்த வேல் தைத்துத் தங்கிய மார்புடனே, வண்டியின் ஆழிக்குடம் தன்பாற் செருகிய ஆர்க்காலொடு நின்றாற்போல உயிரிழக்கும் நிலையை யெய்த அவன் துணைவன் தும்பை சூடிப் போர்க்கெழுதலை இதன்கண் உரைக்கின்றார். இப் பாட்டு இடையிடையே சில அடிகள் சிதைந்துளது.

    ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி
    வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப்
    பெறாஅ வுறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும்
    அழும்பில னடங்கான் றகையு மென்னும்         5
    வலம்புரி கோச ரவைக்களத் தானும்
    மன்று ளென்பது கெட...தானே பாங்கற்
    கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க
    உயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமண லயரும்         10
    மென்றோண் மகளிர் நன்று புரப்ப
    இமிழ்ப்புற நீண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.
    --------

திணை: தும்பை. துறை: பாண்பாட்டு. அண்டர்நடுங்கல்லினார் பாடியது.

உரை: ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி - ஒள்ளிய செங்குரலிக்கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க; வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ - வாளைமீனை நீர்நாய் தன் நாட் காலை யுணவாகப் பெற்றுண்டு; பெறாஅ உறை அராஅ வராலின் மயங்கி - உணவு பெறாமல். அங்கே யுறையும் பாம்புகளை வரால் மீன் எனக் கருதி மயங்கி; மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் - மாறுகொள்ளும் முதலைகளோடு முறை முறை மாறுபட்டு நீங்கும் அழும்பில் என்னும் ஊரையுடையோன்; அடங்கான் தகையும் என்னும் - அடங்கானாய் எதிர் நின்று பொருவன் என்று கருதி யெழும்; வலம்புரி கோசர் அவைக்களத்தானும்- வெற்றி விரும்பும் கோசருடைய அவைக்ளத்தின் கண்ணும்; மன்றுள் என்பதுகெட...போர்க்களத்தின் நடுவிடமென்பது இல்லையாக... தானே பாங்கற்கு - தான் தோழன்பொருட்டு; ஆர்சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க - ஆர்க்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம்போல வேல் மார்பிடைப் பாய்ந்தழுந்தித் தங்க; உயிர் புறப்படா அளவை - உயிர் உடம்பின் நீங்கற் கூசலாடுமளவில்; தெறுவர வெகுட்சி தோன்ற; தெற்றிப் பாவை திணிமணல் அயரும் - திண்ணைமேல் வைத்து விளையாடும் பாவையைத் திணிந்த மணலின்கண் வைத்து விளையாட்டயரும்; மென்றோள்மகளிர் நன்று புரப்ப - மெல்லிய தோளையுடைய பெண்கள் மிகவும் பேணி வளர்க்க; இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை விளக்கமிக நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியை; நுதலசைத்தோன் - தன் நெற்றியிலே கட்டினான்; எ - று.

நீர்நாய் வாளையை இரையாகப்பெற்று, இரைபெறாமல் மாறுகொள் முதலைகளோடு மயங்கி ஊழ் மாறு பெயரும் என இயைத்துரைக்க. வாளை யுண்டதனோடமையாது மயங்கி முதலையொடு மாறுபடும் என்றது, முன்னே பகைவரை வென்றதனோ டமையாது தம்மின் வலிமிக்க பகைவரோடு மாறுபட்டு நீங்கும் மறவர் பண்புணர்த்தி நின்றது. அழும்பில் வேளிர்க்குரியது; "மானவிறல்வேள் அழும்பில்" (மதுரை: 344-5) என மாங்குடிமருதனார் குறிப்பது காண்க. கோசர், சொல்வன்மைமிக்க ஒருவகை வீரர். மன்றுள் -போர்க்களத்தின் நடுவிடம். தெற்றியிடத்தே வைத்தாடுதற்குரிய பாவையை மணலிடத்தே வைத்தாடும் இளமைப் பருவத்து மகளிரென்றதற்கு "தெற்றிப்பாவை மணலயரும் மென்றோள் மகளிர்" என்றார். நுதலிடத்தே தோன்றச் சென்னியிற் கட்டுதலின், தும்பைக் கண்ணியை நுதலிடத்தே கட்டினான் என்றார்.

நீர்நாய், நாளிரை பெற்று, மயங்கி, முதலையொடு ஊழ்மாறு பெயரும் என இயையும். வேல் நிறத்து இங்க பாங்கற்கு உயிர் புறப்படாஅ அளவைத் தும்பையை நுதலசைத்தான் என வினைமுடிவு செய்க.

விளக்கம்: பாண்பாட்டாவது, "வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப்பாணர் கடனிறுத்தன்று" (பு. வெ. மா. 7:11) எனவரும். இதனிடையே சில அடிகள் சிதைந்தமையின் இத்துறை யமைதி நன்கு காண வியலவில்லை. பாடான் பாட்டு என்றும் பாட வேறுபாடுண்டு. இரை பெறா துறையும் அரவினை வராலென மயங்கிச் செல்லும், நீர் நாயொடு முதலை மாறுகொண்டு பொரும்; நீர்நாய் தோற்பின் வேறு நீர்நாய் வென்ற முதலையொடும், முதலை தோற்பின் வென்ற நீர்நாயொடு வேறு முதலையும் முறையே பொரும் என்பது விளங்க "ஊழ்மாறு பெயரும்" என்றாரென்க. "அழும்பில்" சோழ வேந்தர்க்குரிய தென்பது, "பிணையலங்கண்ணிப் பெரும் பூண் சென்னி அழும்பில்" (அகம். 44) என்பதனாலறிக.
---------

284. ஓரம்போகியார்

ஓரம்போகியார் மருதத்திணையைப் பாடுவதில் சதுரப்பாடுடையவர். ஆதனவினியென்னும் சேரமான் ஒருவன் காலத்தவர். அவினியின் பெயரால் அவினியாறு என்றோர் ஆறு பூழிநாட்டில் இருந்திருக்கிறது எனக் கல்வெட்டுக்களால் (A.R. 96 of 1906) அறியப்படுகிறது. ஐக்குறு நூற்று மருதப் பகுதியைப் பாடியவர், மகளிர் தாம் விரும்புவனவற்றுள் தம் நாட்டு வேந்தன் இனிது நெடிது வாழ்தலை ஒன்றாக விரும்புவரென்பதைப் பல பாட்டுக்களில் எடுத்தோதியுள்ளார். இயற்கைப் பொருள்களின் நலங்களையும் ஏனை உயிர்களின் அமைதிகளையும் நுனித்து நோக்கி அழகுறப்பாடும் ஆற்றலுடையவர். இவர் பாடிவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் ஒரு வேந்தன் போர் குறித்து வீரர் பலரும் வந்து தொகுமாறு தூது விடுத்தான். வீரர் பலரும் திரண்டு வந்தனர். ஒரு மறவன் நூலரி மாலையணிந்து கையில் வாளொன்றேந்திக் காலால் நடந்து வந்தான். பகைவரும் வந்து போர்முகத்து நின்றனர். போர் கடுமையாக நிகழ்ந்தது. அப்போரில் வாளேந்திவந்த மறவன் பகைவர் படையில் களிறுகளையும் வீரர்களையும் பொருதழித்து மேம்பட்டான். அவனுடைய போர்ச் செயல்கள் ஓரம்போகியாரது காட்சியைக் கவர்ந்தன: தக்கதோரிடத்தே யிருந்து போரை நோக்கி நின்ற இச் சான்றோர் இம் மறவனைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அவன் கைவாள் எதிர்நின்று பொருத பகைவீரன்களிற்றை றெிந்து வீழ்த்திற்று. களிறும் வீழ்ந்தது; வாளும் கோணிப் போயிற்று. உடனே அதன்மேனின்றும் வீழ்ந்த வீரன் எழுந்து வந்து பொருதற்குள், வீழ்ந்த களிற்றின் மருப்பிடையே வாளைத் தொடுத்துக் கோணலைப் போக்கிச் செம்மை செய்துகொண்டு அவன் வரவு நோக்கி நின்றான். அவ்வீரன் தான் தப்பியது தன் நல்வினையெனக் கருதித் தான் கைக்கொண்ட வேலுடன் இம் மறவற்கஞ்சியோடத் தலைப்பட்டான். அதுகண்டவன் நாணி நகைப்பானாயினான். இம் மறச்செயல் ஓரம்போகியார்க்கு உவகை பந்தது. அஃது இப் பாட்டாய் வெளிப்பட்டது.

    வருகதில் வல்லே வருகதில் வல்லென
    வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த         5
    ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வா டிருத்தாத்
    தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே.
    -------

திணையும் துறையும் அவை. ஓரம்போகியார் பாடியது.

உரை: வல் வரகதில் வல் வருகதில் என - விரைய வருக விரைய வருக என்று; வேந்துபடு விழுத்தூது ஆங்காங்கே இசைப்ப - வேந்தன் விட்ட பெரிய தூதுவர் போந்து வீரருறையும் இடந்தோறும் ஆங்காங்குச் சென்று தெரிவிக்க; நூலரி மாலை சூடி - நூலை யரிந்து கட்டிய நூலரி மாலையைச் சூடிச் கொண்டு; காலில் தமியன் வந்த மூதிலாளன் - காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன்; அருஞ்சமம் தாங்கி – தடுத்தற்கரிய போரில் பகைவரை மேற்செல்லாவாறு தடுத்து; முன்னின் றெறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு - தான் முன்னே நின்று வாளால் வெட்டி வீழத்தின் களிறாகிய பிணத்தினது கோட்டிடையே; மிறையாகத் திரிந்த வாய் வாள் திருத்தா - வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்துக் கொண்டு; தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகும் - தன்னைக் கண்டு அஞ்சியோடிய பகைவனை அவன் பெயர்த்துக் காட்டிய புறங்கண்டு நகாநிற்கும்; எ - று.

உயர்ந்தோன் தூதாகலின் "விழுத்தூது" என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த "நூலரிமாலை" யெனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை "ஒருகை யிரும்பிணம்" என்றார். மிறை - வளைவு. வாள் திருத்தக்கண்ட மறவன் அஞ்சிப் புறங்கொடுத் தோடக்கண்ட மூதிலாளன், அவன் செயல் மறமுடையார்க்கு இழிவு தருவதுபற்றி நாணமுற்று நகைத்தானாதலின், "நகும்"என்றார். இசைப்ப சூடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என வினைமுடிவு செய்க.

விளக்கம்: இது பாண்பாட்டு என்னும் துறை; புலவர் ஆக்கித் தரும் இதனைப் பாணன் தன் யாழிலிட்டுப் பாடுதலின், துறை அவன் மேலதாயிற்று. தூதிசைத்தது செவியிற்பட்ட மாத்திரையே ஊர்தி யொன்றும் கருதாது விரையப்போந்தமை தோன்ற, "காலில் தமியன் வந்த மூதிலாளன்"என்றார். யானைபோலும் வயவர் பிணமும் கிடத்தலின், யானைப் பிணத்தை"ஒருகை யிரும்பிணம்" என்று வெளிப்படுத்தார். வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின், எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத் திருத்தினானென்பார், "திரிந்த வாய் வாள் திருந்தா" என்றார். இதனை வஞ்சித்திணைத் துறைகளுள், "அழிபடை பட்டோர் தழிஞ்சிக்கும்," "வருவிசைப் புனலைக் கற்சிறைபோல, ஒருவன் தாங்கிய பெருமைக்கும்,""திறம்பட வொருதான் மண்டிய குறுமை" க்கும் காட்டுப.
-----

285. அரிசில் கிழார்

ஒருகால் ஒரு தலைவன் பகைவருடன் போர்செய்ய நேர்ந்தான். இருதிறத்தாருடைய படைகளும் கைகலந்து போர் செய்தன. நெல் மூடைகளைப்போல இருமருங்கும் பிணங்கள் குவிந்தன. அவற்றிடையே நின்று அவன் போருடற்றுங்கால் பகைவர் எறிந்த வேல் அவன் மார்பிற் பாய்ந்து உருவிற்று. புண்ணினின்றும் குருதி பெருக்கெடுத் தொழுகிற்று. அவனும் நின்று போர் செய்யமாட்டாது நிலத்தே சாய்ந்தான். அவன் கையிலிருந்த வேலைத் துடியன் தாங்கினன்; தோற்படையைப் பாணன் வாங்கிக் கொண்டான். சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். இச் செய்தி பாசறைக்குத் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவருள் சால்புடைய மறவன் ஒருவன். தலைவன் வீழ்ந்தது தெரிவிக்குங்கால், "பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவன் கையதாகிய வேல் துடி கொட்டுவோன் கையில் உளது;தோலாகிய கேடயம் பாணன் கையில் உளது;அவன் சூடிய மாலையும் வாடிவிட்டது; தலைவன் வே ல் மார்பில் ஊடுருவிப்போக, குருதி சோர நிலம் சேர்ந்தான்; சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று அவன் சால்பினைப் பாராட்டினர்; பாராட்டுமிடத்து, தலைவன் தன்னுடைய நாட்டு மருத நிலத்தூர்களை முன்வந்த இரவலர்க் கீத்தொழிந்தான், இறுதிக்கண் வந்த இரவலர் தலைவனுக்கு எஞ்சிநின்ற கரம்பை மிக்க சீறூரைக் கொடுத்தான் என்றனர்; அது கேட்டுத் தலைமகன் நாணித் தலை கவிழ்ந்தான்; என்னே அவன் சால்பிருந்தவாறு" என்று தெரிவித்தான். இதனை உடனிருந்து சேட்டார் அரிசில்கிழார். தலைவனது தலைமைப் பண்பறிந்து பாராட்டும் தானை வீரர் சொல் அவர்க்கு மிக்க வுவகையைத் தந்தது. இப் பாட்டினைப் பாடினார். இதனுள் சில பகுதிகள் கிடைக்க வில்லை.

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே யடிபுணர்
    வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்...         5
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வெண்டோள்...
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ         10
    மாறுசெறு நெடுவேன் மார்புளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே
    அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந்
    திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமருங் கழனித் தண்ணடை யொழிய         15
    இலம்பா டொக்கற் றலைவற்கோர்
    கரம்பைச் சீறூர் நல்கின னெனவே.
    --------

திணை: வாகை. துறை: சால்புமுல்லை. அரிசில்கிழார் பாடியது.

உரை: பாசறையீரே பாசறையீரே - பாசறையில் உள்ளவர்களே பாசறையில் உள்ளவர்களே; துடியன் கையது வேல் - துடிப்பறை கொட்டுவேன் கையில் உளதாயிற்று வேல்; அடிபுணர் வாங்கு இருமருப்பின் - அடிகாறும் புணர்க்கப்பட்ட வளைந்த கரிய கோட்டினையும்; தீந்தொடை -இனிய இசையை யெழுப்பும் நரம் பினையுமுடைய; சீறியாழ்ப் பாணன் கையது தோல் - சிறிய யாழையுடைய பாணன் கையதாயிற்றுகேடயம்; காண்வரக் கடுந்தெற்று மூடையின் - காட்சியுண்டாக நெருங்க அடக்கிய மூடைகள் போல;... வாடிய மாலை மலைந்த சென்னியன் - வாடிய மாலையையணிந்த தலையையுடை நம் தலைவன்; வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு - அரசன் தனக்குரிய அரசியற்றொழிலைச் செய்யும் அரிய தலைமையிமையுடை அமைச்சர் முதலிய சுற்றத்துடனே; நெடுநகர் வந்தென - நெடிய நகர்க்கு வந்தானாக; விடுகணை மொசித்த - பகைவர் எய்த அம்புகள் மொய்த்த; மூரி வெண்டோள்...மூரிய வெள்ளிய தோள்...; செம்மல் - தலைவனாகிய அவன்; சேறுபடு குருதி உக்கு - நிலத்தைச் சேறு செய்யும் குருதியைச் சொரிந்து; ஓ - ஐயோ; மாறு செறும் நெடுவேல் மார்புளம் போக - மாற்றார் செற்றங் கொண்டெறிந்தநெடிய வேலானது மார்பை உருவிக்கொண்டு உள்ளே புதைய; நிணம் பொதிகழலொடு நிலம் சேர்ந்தனன் - பிணங்களிடையே நின்று பொருதலால் நிணம் படிந்த கழலுடனே நிலத்தில் வீழ்ந்தான்; அது கண்டு - அவன் வீழ்ந்தது கண்டு; பரந்தோர் எல்லாம்- அல்மரலுற்ற சான்றோரெல்லாம்; பிணங்கு கதிர் அலமரும் கழனித் தண்ணடை யொழிய - கதிர்கள் தம்மிற் பின்னிக்கொண்டசையும் நெற்கழனிகளையுடைய மருத நிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத் தொழிந்ததனால்; இலம்பாடு ஒக்கல் தலைவற்கு வறுமையுற்ற இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு; ஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனப் புகழ - எஞ்சிநின்ற தொரு கரம்பையையுடைய சிறிய ஊரைக் கொடுத்தான் என்று புகழ்ந்தோத; குருசில் - குரிசிலாகிய அவன்; தலை பணிந்து இறைஞ்யோன் - நாணித் தலைகுனிந்து தாழ்ந்தான். அவன் சால்பிருந்தவாறு என்னே; எ - று.

வேலும் தோலும் பாணன் முதலாயினார்க்குச் செல்வம் வழங்கற்குத் துணை செய்தமையின், அவை அவர் கையகத்துச் சேர்ந்தன; அவற்றைக் கையாண்டதலைவன் இனிக் கையாளான் என்பது குறித்தற்கு. பிறர்பால் காண்டற்கரிய ஆற்றலும் அறிவுமுடையாரே அரசியற்றலைமைச் சுற்றமாதல் பற்றி அவரை "அருந்தலைச்சுற்ற" மென்றார். உயிர் இழக்கும் நிலையிலும் சான்றாண்மை குன்றாமை தோன்ற, "புகழ்த்தலை பணிந்து இறைஞ்சியோன்" என்றார். பாசறையீரே, துடியன் கையது வேல், பாணன் கையது தோல்; சென்னியன், செம்மல், நிலம் சேர்ந்தனன்; கண்டு, எல்லாம் நல்கினன் எனப் புகழ, குருசில், இறைஞ்சியோன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: சால்புமுல்லையாவது, "வான்றோயு மலையன்ன சான்றோர் தம் சால்புரைத்தன்று" (பு. வெ. அ: 31) என வரும். இசை தொடுத்தற்குரிய நரம்பு தொடையெனப்பட்டது. "பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் தொடைமை கேள்வி" (பெரும்பாண், 15-6) என்று பிறரும் கூறுவது காண்க. கடுந்தெற்று மூடை, "கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்குஞ்சாலி நெல்லின் சிறைகொள் வேலி"(பொருந. 245 : 6) என்பதன்கண் கடுந்தெற்று மூடை யென்றதற்கு நச்சினார்க்கினியார், "நெருங்கத் தெற்றின குதிர்" என்று பொருள் கூறுவர். மாறுபாட்டால் உண்டாகும் செற்றம் காரணமாக எறியப்படும் வேல், மாறு செறு நெடுவேல் எனப்பட்டது. புறத்தே மார்பிற்பட்டு உள்ளே ஊடுருவிச் செல்வது குறித்து "மார்பு உளம் போக" என்றான். பரந்தோர், ஆங்காங்குப் பரந்து நின்ற சான்றோர்கள். பிறர் தம்மைப் புகழுங்கால் சான்றோர் நாணுதல் இயல்பு; "தம் புகழ் கேட்டார்போல் தலை சாய்ந்து மரன் துஞ்ச" (கலி. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. ஈண்டுக் கூறியது, சான்றாண்மையுடையோர் உயிர் இறக்கும் எல்லையிலும் அது குன்றார் என்பது வற்புறுத்தி நிற்பது காண்க.
-------

286. ஒளவையார்

வேந்தரிடையே போர் நிகழ்ந்த காலத்தில் ஒருகால் ஒளவையார் மறக்குடி மகளொருத்தியைக் கண்டார். நாட்டில் பல இளைஞர்கள் வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றனர். அவருள் வென்றோர் சிலர்; வீழ்ந்தோர் பலர். வென்றி மேம்பட்டுப் போந்த வீரருள் அம் மறக்குடி மகளின் மைந்தனும் ஒருவனாவன். அது குறித்து அவள் முகத்தில் உவகைக் கிளர்ச்சி மீதூர்ந்திருந்ததாயினும், வேந்தன் திறத்து அவட்கிருந்த அன்பால் ஒரு குறையுடையாள் போன்ற பேச்சு நிகழ்ந்தது. அதனை வினவியபோது வேந்தற்காகப் போருடற்றி உயிர் கொடுத்துப் புகழ் நிறுவுதலினும் மேதக்க செயல் பிறிதியாதுமில்லை யென வற்புறுத்தினாள். அவள் கருத்தை விளங்க வுரைக்குமாறு வேண்டினார் ஒளவையார். "என் மகன் போல இளையர் பலர் எங்கள் வேந்தன் படையில் உளர்; அவர் அனைவரும் அவன் சென்ற நெறியே வெள்ளாடுபோல் அன்போடு அவனைப் பின் தொடரும் வீறு பெற்றவர். ஆயினும் உண்டாட்டு முதலிய சிறப்புக்கள் நிகழுங்கால், அவரனைவரையும் விடுத்து என் மகனைச் சிறப்பாகப் பேணி யாவர்க்கும் மேலாகக்கள் வழங்குவன். அத்தகைய சிறப்புப் பெறுபவன் அவ் வேந்தன் கண்ணீர் மல்கச் சாதல் பெறற்கரிய தொன்றாகும்; அவன் தந்த கள் அப் போற்றினை என் மகன் பெறுமாறு இன்னமும் செய்திலது" என்றாள். இச் சொற்களிடையே திகழும் மறமாண்பு ஒளவையார்க்கு வியப்பினைப் பயந்தது. அவள் நிலையில் தன்னை யொத்த மகளிரனைவரும் மறமகளிராதல் வேண்டுமென விழைந்தார். தான் அவளாக நினைந்த ஒளவையார் அவள் கூறிய சொற்களை ஒரு பாட்டு வடிவில் தந்தார். அப் பாட்டு இது:

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
    கால்கழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.         5
    ---------

திணை: கரந்தை. துறை: வேத்தியல். ஒளவையார் பாடியது.

உரை: வெள்ளை வெள் யாட்டுச் செச்சைபோல - வெள்ளிய நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப்போல; தன்னோரன்ன இளையர் இருப்ப - தன்னையொத்த இளையர் பலர் நிறைந்திருக்கவும்; பலர் மீது நீட்டிய மண்டை - அப் பலர்க்கும் மேலாக என் மகனுக்கு நீட்டித் தரப்பட்டகள்; என் சிறுவனை - என் மகனாகிய அவனை; கால்கழி கட்டிலில் கிடப்பி -காலில்லாத கட்டிலாகிய பாடையிற் கிடத்தி; தூவெள்ளறுவை போர்ப்பித்திலது- தூய வெள்ளிய ஆடையால் மூடுவியாதாயிற்று. அஃதன்றோ வேண்டுவது; எ - று.

மண்டையில் தரப்படுவதுபற்றிக் கள்ளினை "மண்டை" யென்றது ஆகு பெயர். யாடுகள் ஒன்று சென்ற வழியே ஏனைய யாவும் செல்வது போல, வேந்தன் சென்றாங்குச் செல்லும் சிறப்புடைய பண்பும் தொழிலுமுடைய ரென்றற்கு "வெள்ளை வெள்யாட்டுச் செச்சை" உவமை கூறப் பட்டது; அதனை விளக்கற்கு அவ் யாட்டினும் உயர்ந்த உவமப் பொருள் பிறிதின்மையின், இஃது இறப்ப இழிந்த உவமையன்மை யறிக. தன் மகன் மேலாகச் சிறப்பிக்கப்பட்டது காட்டுவார், "பலர்மீது நீட்டிய மண்டை" என்றார்.

கால் கழி கட்டில் என்றது பாடைக்கு வெளிப்படை. வேந்தன் பொருட்டுச் சாவும் சாக்காட்டின் மேன்மை வற்புறுத்துவது கருத்தாதலின், "அறுவை போர்ப்பித்திலதே" யென்றது, மகன் சாகவில்லையே யெனத் தாய் இரங்கினாளென்பதன்று என அறிக. மண்டை போர்ப்பித்திலது என வினைமுடிவு செய்க.

விளக்கம்: வெள்யாட்டுச் செச்சை, ஆட்டுக் கிடாய். வேந்தனை யடியொற்றிப் பின் தொடரும் மறவர்களின் ஒருமைப் பண்பும் "யான் கண்டனைய ரென்னிளையரும்" (புறம். 191) என்றாற்போல, இவ் விளையர் தம் வேந்தன் கண்டனையராதலும் உடைமை தோன்ற "வெள்யாட்டுச் செச்சைபோல" என்றார். மீது, மேம்பட. தன் மகன்பால வேந்தன் முதல் வரிசை நல்குதற்குரிய தலைமைப் பண்புண்டென்று கூறுவாள், "பலர்மீது நீட்டிய மண்டை யென் சிறுவனைக் கிடப்பிப் போர்த்திலது" என்றாள். "புரந்தார்கண்ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா,டிரந்துகோட்டக்க துடைத்து" (குறள். 780) என்றும், "பிறந்த பொழுதேயும் பெய் தண்டார் மன்னர்க் குடம்பு கெடுத்தாரே மூத்தார் - உடம்பொடு, முற்றுழிக் கண்ணு மிளையவரே திங்கோமாற், குற்றுழிக் காவா தவர்" (புறத். 1318) என்றும் பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் கருதினராகலின், இவ்வாறு கூற்று நிகழ்வதாயிற்றென வறிக. வேத்தியலாவது, (பு. வெ. மா. 2: 13) என வரினும் இதற்குக் காட்டப்பட்ட, "அங்கையு ணெல்லியதன் பயமாதலால், கொங்கலர் தாரான் குடைநிழற் கீழ்த்தங்கிச் செயிர் வழங்கும் வாளமருள் சென்றடையார் வேல்வாய், உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்" என்ற வெண்பா கருத்தொத்திருத்தல் ஈண்டு நோக்கத்தக்கது.
-----------

287. சாத்தந்தையார்

சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருதுவென்ற திறத்தை நேரிற்கண்டு வியந்து வாடியவர். முக்காவல் நாட்டு ஆமூர் திருச்சிராப்பள்ளி வட்டத்தில் காவிரியின் வடகரைசை் சார்ந்த நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்று. இன்றும் அப்பகுதி முக்காவல் நாடென வழங்குகிறது. பெருநற்கிள்ளியின் மற்போர் மாண்பு கண்டுபாடியதொன்றே இவரது மறப்பண்பினை இனிதெடுத்துக் காட்டும். இக்கிள்ளி அரசு கட்டிலேறுதற்கு முன் தந்தையொடு கருத்து வேறுபட்டு வேறோரிடத்தில்இருந்து ஆங்குள்ள வேந்தன் ஆதரவில் இருந்து வந்தான். அக்காலத்தே அவ்வேந்தன் கரந்தைப் போருடற்ற வேண்டிய கடமை யொன்றுண்டாயிற்று. அவன் தானைக்குத் தலைவனாய் நின்று போரை நடத்தும் பொறுப்புப் போரவைக்கோப் பெருநற்கிள்ளிக்குண்டாகவே, சாத்தந்தையாராகிய சான்றோர் அதனைத் தாமும் உடனிருந்து காணச் சென்றார். தானை மறவர்க்கு அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண்மொழி பேசி அவர்களை ஊக்குவது தலைமக்கள் கடனாகும். ஆகவே, அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு பணித்தான். அதனைச் சாத்தந்தையார் இப்பாட்டின் பொருளாக வைத்து நமக்கு வழங்கியுள்ளார். இதன்கண், அம்பு தைப்பினும், வேல்வந்து பாயினும், களிறுகள் கோடு கொண்டு தாக்கினும், அஞ்சிப் பிறக்கிட்டு ஓடாமையே மறவர்க்குப் பீடு தருவதாம். அத்தகைய பீடுடையோர் வேந்தனால் மருதநிலத்தூர்கள் பல தரப் பெறுவது உண்மை; ஆயினும் அவர்கள் ஊர் பெறுவதை ஒரு பொருளாக மதியார்; போரில் உயிர் கொடுத்துப் புகழ் பெறுவதையே நன்கு மதிப்பர். மேலும் அங்ஙனம் புகழ் பெற்றோர் மறுமையில் உயர்நிலையுலகம் சென்று அங்குள்ள உயர் நிலை மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர். அதனால் அந்த இன்பம் பெறுவது குறித்து நிரை கவர்ந்து குறும்பு செய்யும் வெட்சி வேந்தன் தானை வருவதனை இங்கு நின்றும் காண்பீராக" என்று அவனுரைத்த நீண்மொழி விளக்கப்படுகிறது.

    துடியெறியும் புலைய
    எறிகோல் கொள்ளு மிழிசின
    கால மாரியி னம்பு தைப்பினும்
    வயற்கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை யோடை யண்ணல் யானை         5
    இலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே         10
    மாசின் மகளிர் மன்ற னன்றும்
    உயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால்
    வம்ப வேந்தன் றானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே.
    -----------

திணை: கரந்தை. துறை: நீண்மொழி. சாத்தந்தையார் பாடியது.

உரை: துடி எறியும் புலைய - துடிப்பறை கொட்டும் புலையனே; எறிகோல் கொள்ளும் இழிசின - பறையை முழக்கும் குறுந்தடியைக் கைக்கொண்டு நிற்கும் புலையனே; கால மாரியின் அம்பு தைப்பினும் - கார காலத்து மழைத் தாரைபோல அம்புகள் வந்து உடம்பின்கண் தைக்குமாயினும்; வயல் கெண்டையின் வேல் பிறழினும் - வயல்களிற் பிறழும் கெண்டை மீன்போல் வேற்படை வந்து பாயினும்; பொலம் புனையோடை அண்ணல் யானை - பொன்னாற் செய்யப்பட்ட முகப்பட்டமணிந்த பெருமை பொருந்தியகளிறு போந்து; இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் - விளங்குகின்ற தன் கோட்டின் கூரிய நுனியை நாட்டிக் குத்துவதாயினும்; ஓடல் செல்லாப் பீடுடையாளர் - அஞ்சிப் புறங்கொடுத்தோடுதலைக் கருதாத மறப் பெருமையுடைய மறவர்; நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை-ஆழ்ந்த நீரையுடைய பொய்கைக்கண் கிளர்ந்தெழுந்த வாளைமீன்; நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதல் பிறழும் - நெல்லையுடைய நெடுமனையின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கரிசையிடத்து வீழ்ந்து புரளும்; தண்ணடை பெறுதல் -மருதநிலத் தூர்களைப் பெறுவது; யாவது - யாது பயனாம்; படின் - போர்க்களத் தேபட்டால்; உயர் நிலை யுலகத்து மாசில் மகளிர் மன்றல் நன்று நுகர்ப - வீரர் புகும் துறக்க வுலகத்துக் குற்றமில்லாத துறக்க மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர்; அதனால் ---; வம்ப வேந்தன் தானை வரவு இம்பர் நின்றும் காண்டிர் - குறும்பு செய்யும் பகை வேந்தனுடைய தானை வருவதை இங்கிருந்தே காண்பீராக; எ - று.

புலைய, இழிசின, பீடுடையாளர் பெறுதல் யாவது; படின் மன்றல் நன்றும்நுகர்ப; அதனால் வரவு காண்டிர் என வினை முடிவு செய்க. காண்டிர் என்றது, கண்டு யாவர்க்கும தெரிவித்து ஊக்குக என்பதாம். வேலின் முகம் கெண்டைமீன் போலும் வடிவினதாகலின், "கெண்டையின் வேல் பிறழினும்" என்றார். ஓடல் செல்லா வென்றதை ஒரு சொன்னீர்மைத்தாகக் கொண்டு ஓடாத என்றுரைத்தலுமொன்று. கூட்டு, நெற்கூடாகிய கரிசை. தண்ணடைப் பேற்றினும் மகளிர் மன்றல் உயர்ந்ததாகலின், "யாவது" என்றார்; என்றது நிரம்பிய பயனுடைத்தன்று என்றவாறாம். இன்பமும் துன்பமும் விரவிய இந் நிலவுலகினும் இன்பமே நிலவும் மேலுலகினை "உயர்நிலை யுலகம்" எனவும், போரிற்படின் நேரே உயர்நிலை யுலகில் மணம் புணர்ந்தின்புறுவதையன்றிப் போர்க்களத்தே கெட்டொழிவதில ரென்பார், "படின் மாசில் மகளிர் மன்றல் நன்றும் நுகர்ப" எனவும் கூறினார். வம்பு, குறும்புசெய்தல். வாளா இருந்த நம்முடைய நிரைகொண்டு போர் தொடுக்கும் வேந்தன் என்பான் "வம்ப வேந்தன்" என்றும், நின்றாங்கு நின்று வருபடையின் அணிநிலை சிதறி வீற்று வீற்றோடிக் கெடுந்திறம் காண்மின் என்பான், "இம்பர் நின்றும் காண்டிர்" என்றும் மொழிந்தான்.

விளக்கம்: கரந்தையில் நீண்மொழியாவது, "மன் மேம்பட்ட மதிக்குடையோர்க்குத், தன் மேம்பாடு தானெடுத் துரைத்தன்று" (பு. வெ. மா. 2 : 11) என வரும். துடியற்கும் பறைகொட்டும் புலையற்கும் கூறலின், "காண்டிர்" எனப் பன்மையாற் கூறினான். எறிகோலை விதந்தமையின், இழிசினன், பறை கொட்டும் பறையன் என்பது உணரப்படும். தண்ணுமை யியக்குவோனையும் பிறர் "மடிவாய்த் தண்ணுமை யிழிசினன்" (புறம். 289) என்பது காண்க. காலமாரி, கார் காலத்துப் பெய்யும் மழை. வேலுக்குக் கெண்டை மீன் வடிவுவமம். வால்மருப்பு - வெள்ளிய மருப்பு; "வான்சுதை" (குறள். 714) எனச் சான்றோர் கூறுதல் காண்க. புன்செய் நிலம் சிறந்த சீறூர்களினும் நன்செய் மிக்க மருதநிலத்தூர் சிறந்ததாகலின் அதனை விதந்து கூறினான்; வேல் பாய்ந்த மார்புடன் நிற்கும் மறவர்க்கு, "தண்ணடை பெருதலு முரித்து" (புறம் 297) என்று பிறரும் கூறுவது காண்க. போர்க்களத்துஉயிர் கொடுக்கும் மறவர் துறக்க வுலகடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவரென்பது பண்டையோர் கொள்கை; அதனால், "உயர்நிலை யுலகத்து நுகர்ப" என்றார்; பிறரும், "தம்மனை மகளிர்க்கு, வதுவை சூட்டிய வான் படர்ந்தனரே" (புறத். 1354) என்பது காண்க. வம்பு- புதுமை. போரில் வஞ்சியாது நின்று பொருது மடிவது, துறக்க வுலகில் அயரா இன்பம் நல்குமென்னும் உணர்வைப் பயத்தலின், வயவர் நெஞ்சில் அஞ்சாமை விளைதல் பயனாயிற்று "இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று (பெரிது) என்று நெடுமொழி கூறியது" என்பர் (தொல். புறத். 8) நச்சினார்க்கினியர்.
--------

288. கழாத்தலையார்

ஒருகால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் தும்பை சூடிப் பொருது வீழ்ந்தனர். அவர்களைக் காண்டற்குச் சான்றோராகிய கழாத்தலையார் போர்க்களத்துக்கே சென்றார். பெருவேந்தர் இருவரும் வீழ்ந்தொழிந்ததனைக் கண்ட அவர், அவர்தம் தானை வீரர் செய்த போர்த்திறத்தையும் கண்டனர். களத்தின் நடுவே போர் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவற்றின் பெரு முழக்கத்தால் மூடிய தோலமைதியை யறிந்தார். கூரிய மருப்புக்களையுடைய இரண்டு ஏறுகளைத் தம்முட் பொரவிடுத்து அவற்றுள் வென்றி பெற்ற ஏற்றின் தோலையுரித்து மயிர்களையாது முரசுகட்குப் போர்த்திருந்தனர். போர் கடுமையாக நடந்தது. வேல் மறவர், எதிர்ந்தார் மேல் தத்தம் வேற்படையை மிகத் திறலுடன் செலுத்தினர்; எதிர் வந்த வேலைக் கேடகத்தால் ஆண்மையுடன் தடுத்தனர். இவ்வாறு ஒரு வயவீரன் தன்னை நோக்கி வந்த வேல்களைத் தடுத்து அவற்றைச் செலுத்தினோரைத் தன் வேல் கொண்டு தாக்கி வீழ்த்தினான். எங்கும் அச்சம் பரந்தது. வயவரிடையே ஆரவாரமும் கலக்கமும் உண்டாயின. திடீரென ஒரு வேல் வந்து அவ் வேல் வலவன் மார்பிற் பாய்ந்து ஊடுருவியது. தான் அத்துணை விழிப்போடு போர் செய்தபோதும் மாற்றாரெறிந்த வேல் மார்பிற் பாய்ந்ததற்கு அவன் வருத்த மெய்தாது நாணம் பெரிதுமெய்தித் தலை குனிந்து நிலத்தைச் சேர்ந்தான். பெருகி யொழுகும் குருதியுடன் அவன் மார்பு அசைவதாயிற்று. சிறிது போதில பருந்து முதலிய பறவைகள் மொய்க்கத் தொடங்கின. அவனைக் காண்டற்கு அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள். அவள் சிறிதுமஞ்சாது அவன் உடம்பருகே வந்து மார்பிற் புண்ணிருக்கக் கண்டு முகம் மலர்ந்து தழீஇக்கொண்டாள். பருந்துகள் அவள் அணுகி முயங்குதற்கு எளிதில் இடந்தராது மொய்த்தன. இக் காட்சி கழாத்தலையார் உள்ளத்தை யுருக்கிற்று. அதனை உருப்பித்திக் காட்டும் வகையில் இப் பாட்டு வெளிவருவதாயிற்று.

    மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
    அண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க
    ஆரமர் மயங்கிய ஞாட்பிற் றெறுவர         5
    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்
    தருகுறை...மன்ற
    குருதியொடு துயல்வரு மார்பின்
    முயக்கிடை யீயாது மொய்த்தன பருந்தே.
    ----------

திணை: தும்பை, துறை: மூதின்முல்லை; கழாத்தலையார் பாடியது.

உரை: மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் - மண்ணைக் குத்திக் கொள்ளுவதால் வரி வரியாகக் கீறப்பட்ட மிக்க கூரிய கோட்டினையுடைய; அண்ணல் நல்லேறு இரண்டுடன் மடுத்து - பெருமை பொருந்திய நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முட் போர் செய்ய விடுத்து; வென்றதன் பச்சை சீவாது போர்க்கப்பட்ட; திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க - திண்ணிதாய்க் கட்டப்பட்ட போர்முரசு போர்க்களத்தின் நடுவிடத்தே முழங்க; ஆரமர் மயங்கிய ஞாட்பில் - தடுத்தற்கரிய போர் நிகழ்ந்த போர்க்களத்தின்கண்; தெறுவர - வெகுட்சி தோன்ற; நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து - மாற்றாரெறிந்த நெடிய வேல் வந்து பாய்ந்ததனால் நாணமுண்டாகிய நெஞ்சுடனே; அரு குறை... ; மன்ற - நிச்சயமாக; குருதியொடு துயல் வரும் மார்பின் - குருதி சோர்வ தனோடசையும் மார்பினை; முயக்கு இடை ஈயாது பருந்து மொய்த்தன - தழுவுதற் கிடந்தராது பருந்துகள் மொய்த்தன, காண்; எ - று.

மண்ணைக் குத்திக் கோட்டில் மண் கொள்ளுங்கால் ஆனேற்றின் கொம்பு கீற்றுக்களாக அறுப்புண்டல் இயல்பாதல்பற்றி, ‘மண்கொள வரிந்த மருப்பு’ என்றார். முரசுக்குத் தோலை மயிர் சீவாது போர்த்தல் மரபு. இடைப்புலம், இடைச்சுரம் என்றாற் போலப் பின் முன்னாகத் தொக்கது. ஞாட்பு, போர் நிகழும் களம். தோலைக் கைக்கொண்டிருந்தும் முன்னறிந்து தடாது வேலேறுண்டதற்கு நாணுதலின் "நாணுடை செஞ்சத்" தென்றார்;இது சால்பு முல்லை. வீழ்ந்த மறவன் மனையோள் அவன் மார்பைத் தழீஇக் கொண்டாளென்பதுபடக் கூறுதலில், இது மூதின் முல்லைத் துறை ஆயிற்று.

விளக்கம்: இம் மூதின் முல்லைத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலையுடையார் "சிருங்காரநிலை" (7 : 24) என்பர். அஃதாவது, "பகை புகழக்கிடந்தானை, மூகை முறுவலார் முயக்கமர்ந்தன்று" என வரும். முரசுக்குத் தோல் மயிர் நீக்காது போர்க்கப்படுமென்பதை "கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்" (மதுரை. 732-3) என்று பிறரும் கூறுவர். தோலுக்குரிய ஏறு மறஞ் சிறந்ததாக இருக்கவேண்டு மென்பது மரபு; அதனால் சான்றோர் "ஓடா நல்லேற்றுரிவை" யென்றும், "கொல்லேற்றுப் பைந்தோல்" என்றும் தெரிந்தோதினர்; ஈண்டும் ஆசிரியர் ஏற்றின் பீடு காணும் திறம் எடுத்தோதுவாராய் ‘அண்ணல் ஏறு இரண்டு உடன்மடுத்து, வென்றதன் பச்சை’என்றார். ஞாட்பு,போர்க்களம்.மார்பிற்பட்ட புண், குருதி மிகக் கான்று பருந்தினம் படிந்துண்ணும் பெரு நிலையாயிற் றென்பார்,"முயக்கிடையீயாது மொய்த்தன" என்றார்.அந்நிலை கண்டார்க்கு அச்சம் பயக்கும் இயல்பிற்றாக, அவன் மனையோள் அப் புண்ணால் உண்டாகி நிலை பெறும் புகழ் கருதி யெழுந்த உவகை பெரிதுற்று, பருந்தினம் இடந்தராது மொய்ப்பவும், சிறிதும் அஞ்சாது அவனைத் தழீஇ மகிழ்ந்தாள் என்பது எச்சவகையாற். கொள்ளப்படும். இப் பாட்டு இடையே சிதைந்துளது.
----------

289. கழாத்தலையார்

ஒருகால் ஒரு வேந்தன் வெட்சிப்போர் தொடுக்கவேண்டிப் போர்ப் பறை யறைவித்தான். நாட்டிலுள்ள வீரர் பலரும் திரண்டனர். வேந்தன் அவர்களோடிருந்து விருந்துண்டான். அப்போது வீரரனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. அந்நிலையில், அவன் மறக்குடியில் தோன்றி மறச் செயலால் மாண்புற்ற மறவரைத் தேர்ந்து அவர் வரிசைக் கேற்ப முகமன் கூறிச் சிறப்புச் செய்தற்குரியன். அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருப்பர். அதனால் சான்றோராகிய கழாத்தலைாரும் அங்கே வந்திருந்தனர். வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை யேவிச் சிறப்பித்தான். அதனை வியந்து நோக்கின பாணனை அச் சான்றோர் அழைத்து, "பாணனே! இவ்வாறு வேந்தன் செய்யும் சிறப்பை வியத்தலை யொழி; பாசறைக் கண்ணே, இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவைப் பெறுமாறு புலையன் தண்ணுமை யறைகின்றான்; அதனைக் கேட்பாயாக" எனப் பேச்சு நிகழ்த்தலானார். கழாத்தலையார் வேந்தனது தேர்ச்சித் திறனையும் முதுகுடிச் சான்றோரது சால்பினையும் எண்ணியெண்ணி இன்புற்றார். அந்த இன்பப் பயனாக வந்தது இப் பாட்டு.

    ஈரச் செவ்வி யுதவின வாயினும்
    பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி
    வீறுவீ றாயு முழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
    மூதி லாள ருள்ளுங் காதலின்         5
    தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
    இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
    கேட்டியோ வாழி பாண பாசறைப்
    பூக்கோ ளின்றேன் றறையும்
    மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே.         10
    ------

கழாத்தலையார் பாடியது.

உரை: ஈரச் செவ்வி உதவினவாயினும் - ஈரமாகிய பருவம் கழிவதன்முன் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்; பல்லெருத்துள்ளும் நல்லெருது நோக்கி - பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே தேர்ந்து கொள்வானாய்; வீறு வீறாயும் உழவன் போல - வேறு வேறாக வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப்போல; பீடு பெறு தொல் குடிப்பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும் - பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழிடிப்பட்டுவரும் நற்பண்புகளனைத்தையும் சோர்வுபடாது காத்துவரும் முதுகுடி மறவருள்ளும்; காதலின் - தன்பாலுள்ள அன்பால்; தனக்கு முகந்தேந்திய பசும்பொன் மண்டை - தனக்காக முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையிலுள்ள கள்ளை; இவற்கு ஈக என்னுமது - தன்னருகேயுள்ள இவனைக் காட்டி இவ் வீரனுக்கு நல்குவாயாக வெனச் சொல்லிச் செய்யும் அச் சிறப்பை; அன்றி சின்- மனங்கொண்டு வியத்தலை யொழி; பாண-பாணனே; பாசறை - பாசறையிடத்தே; பூக்கோள் இன்று என்று அறையும் - போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்போழுது என்று தெரிவியாநிற்கும்; இழிசினன் மடிவாய்த் தண்ணுமை குரல் கேட்டி - புலையன் இசைக்கும் தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்பாயாக; எ - று.

நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது அன்றிசின்;பாண, தண்ணுமைக் குரலைக் கேட்டி என வினைமுடிவு செய்க.அவனைத் தேர்ந்துகொண்டிதற்குக் காரணம் கூறுவார், "காதலின்" என்றும், சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாதென்றற்குப் "பசும்பொன் மண்டை" என்றும் கூறினார். அதுவும் என்புழி உம்மை, சிறப்பு. அன்றுதல், மறுத்தல்;"அன்றி நின்ற அவுணர்" (ஞானசம். 29, 7) என்று சான்றோர் வழங்குதல் காண்க. சின்: முன்னிலையசை. தன்னை வற்புறுத்தாமை வேண்டிப் பாணனை வேறுபட அழைத்துப் பூக்கோளேய தண்ணுமைக் குரலைக் கேட்பித்தான் என அறிக. கள்ளினும் பூக்கோளைச் சிறப்புற நோக்குதலும், தன் முன்னே தான் பெறும்
சிறப்புக்கு நாணுதலும், தொல் குடிப்பாடு.

விளக்கம்: உழவுவினை வென்றியுற முடிதற்கு உழவன் நல்லெருது தேர்ந்து கோடல்போல, வேந்தனும் வினைக்குரியாரை ஆராய்ந்து தேர்ந்துகோடல் இன்றியமையாதாகலின், "வீறு வீறாயும் உழவன் போல" என்றார்; அரசன் வினைக்குரியாரைத் தேர்ந்துகொள்ளும் முறையைத் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம், உயிரச்சம் என்ற நால்வகையால் தேர்ந்து வினைசெய்க என்பர். பீடு பெறு தொல் குடிப் பாடுபல தாங்கிய மூதிலாளரைப் பிறர், "பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையயும், அரசறி பெயரும் உரைசெயலாண்மையும், உடையோராகிய படைகோண் மாக்கள்" (புறத். 1354) என்பர். தனக்கு என்றது வேந்தனைக் குறித்து நின்றது. பசும் பொன் வள்ளத்தை மண்டை யென்றான், பாணனொடு சொல்லாடுதலின். பாணற்குக் கள்ளுண்ணும் கலன் மண்டையாகும். பசும்பொன் வள்ளத்திற் பெய்து தரப்படும் சிறப்பிற்றாயினும், அதனைப் பொருளாகக் கொள்ளாது அதனைக் தருதற்கேதுவாயிருக்கும் வேந்தன் மனத்து அன்பினையே பொருளாகக் கருதும் சான்றோரது சால்பு, "இவற்கீ கென்னு மதுவும் அன்றிசின்" என்றதனாலும், பூக்கோளேய தண்ணுமைக் குரல் "கேட்டியோ" என்றதனாலும் விளங்கித் தோன்றுகிறது. இளம்பூரணர் "மறங்கடைக் கூட்டிய துடிநிலை"க்கு (புறத். சூ. 4) இதனைக் காட்டுவர்.
-------

290. ஒளவையார்

ஒரு வேந்தன் வேறொரு வேந்தனொடு பகைகொண்டு வெட்சி மலைந்து அவன் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டான். அதனையறிந்த அவன் கரந்தை சூடித் தன்னாட்டு ஆனிரைகளை மீட்கும் குறிப்பால் போர்க்கெழச் சமைந்தான். கரந்தைப் போரைத் தெரிவிக்கும் போர்ப்பறை நாடு முற்றும் முழங்கிற்று. நாட்டிலுள்ள வீரர் அனைவரும் திரண்டனர். வேந்தன் தானைத் தலைவர்களைக் கூட்டி உண்டாட்டொன்றினை நிகழ்த்தினான். அப்போது தலைவர் பலரையும் நேரிற் கண்டு அவரவர் நலங்களையும் தெரிந்து சிறப்புச் செய்வது அவன் கடமையாகும். அவரவர் குடிவரவும் பண்பும் எடுத்தோதுவது சொல் நலம் வாய்க்கப்பெற்ற சான்றோர் செயல். இத்தகைய உண்டாட்டில் ஒளவையார் சென்றிருந்தார். தானைவீரர் குடிநிலையும் செயற்றிறமும் எடுத்தோதும் அரும்பணியைச் சான்றறோராகிய ஒளவையார் மேற்கொண்டார்.வீரர் ஒவ்வொருவரையும் பற்றிச் சான்றோர் எடுத்தோதக் கேட்கும் வேந்தன் மகிழ்ந்து தகுவது கூறிப் பொன் வள்ளத்தில் கள்ளேந்தித் தருவன்.இவ்வாறு வீரர் குடிநிலை யுரைக்கப்புக்க ஒளவையார், வீரனொருவன் குடிநிலையைக் கூறுவாராய் இனிய பாட்டொன்றைப் பாடினார். அதன்கண், "வேந்தே! இக்கள்ளை முன்னர் இவர்க்குத் தந்து பின்னர் நீ உண்பாயாக; இவன் தந்தைக்குத் தந்தை நின் தந்தை தந்தைக்குக் கண்ணிமையாது காத்து, ஆர்செறிப்புண்டு நிற்கும் ஆழிக்குடம்போலப் பகைவர் எறிந்தவேல் பாய்ந்து நிற்ப நின்று மாய்ந்தான்; அவன் பெயரானாகிய இவன் கடுமழை காக்கும் பனங்குடை போல நின்னைக் குறித்து மாற்றார் எறியவரும் வேலைத் தான் இடை நின்றேற்றுக் காத்து நிற்பன்; இவன் வெல்போர் பல செய்து மறப்புகழ் நிறைந்தவன்," என்று அவன் குடிநிலையை அழகுறக் காட்டியுள்ளார். அப் பாட்டு இது.

    இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற் றியானை யியறேர்க் குருசில்
    நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
    எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
    அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே         5
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும்
    உறைப்புழி யோலை போல
    மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.
    -----------

திணை: கரந்தை. துறை: குடிநிலையுரைத்தல். ஒளவையார் பாடியது.

உரை: கள் இவற்கு ஈத்து உண்மதி - கள்ளை முன்னர் இவனுக்குத் தந்து பின்னர் நீ யுண்பாயாக; சினப்போர் இனக் களிற்று யானை இயல் தேர்க்குருசில் - சினந்து செய்யும் போரினையும் இனமான களிற்றியானைகளையும் செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே; நுந்தை தந்தைக்கு - நின் தந்தையின் தந்தைக்கு; இவன் தந்தை தந்தை - இவனுடைய தந்தைக்குத் த ந்தை; எடுத்தெறி ஞாட்பின் இமையான் - படைகளை யெடுத்துப் பகைவர்மேலெறிந் தழிக்கும் போரின்கண் கண்ணிமையால்; தச்சன் அடுத்தெறிகுறட்டின் நின்று - தச்சனால் ஆர்க்காலைச் சேர்த்து எறியப்பட்ட குடம்போலப் பகைவர் எறிந்த படைகளைத் தானேற்று நின்று; மாய்ந்தனன் - மாண்டான்; மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் - மறப்போர் செய்து பெற்ற புகழ் நிறைந்த வலியை யுடையனாகிய இவனும்; உறைப்புழி ஓலை போல - மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனினின்று காக்கும் பனையோலைக்குடை போல; பெரும---; நிற் குறித்து வரு வேல் மறைக்குவன் - பகைவர் நின்னைக் குறித்து எறிய வரும் வேலைத் தான் இடை நின்று ஏற்றுத் தாங்குவனாதலால்; எ - று.

முன்னர் பின்னரென்பன அவாய் நிலையால் வந்தன. யானையும் தேரும் உடையையாயினும் இவன் சிறப்பாக வேண்டற்பாலன் என்பது தோன்ற, "இனக்களிற்றியானை யியல்தேர்க் குருசில்" என்றார். குறடு, ஆர்க்கால் செறிந்திருக்கும் குடம். காக்கும் திறப்பாடு விளங்க, "கண்ணிமையான்" என்றார். இமைப்பது வீரர்க்குப் புறக்கொடை போல் இழிவு தருவதெனக் கருதிஇமையானாயினா னென்பாருமுளர். இவன் தந்தைக்குத் தந்தை செயல்கூறி இவன் செயல் கூறாதொழிவது மயங்க வைத்தலென்னும் குற்றமாதலின், இவன் சிறப்பை "மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்" என்றார். "தந்தைய ரொப்பர் மக்கள்" (தொல். கற்.6) என்பதனால், தந்தை செயல் தானே விளக்கமுறுதலின் கூறாராயினார். குருசில், பெரும, இவற்கீத் துண்மதி, தந்தை மாய்ந்தனன், இவனும் மறைக்குவன் என வினைமுடிவு செய்க. ஓலை: ஆகுபெயர்.

விளக்கம்: குடிநிலையுரத்தலென்பது, "மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும், கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று" (பு. வெ. மா. 2:14) என வரும். பொருதற்குரிய சினமும், களிற்றி யானைகளும் தேரும் இருப்பினும் தொல்குடிப் பிறந்த மறச் சான்றோர் காப்பில்வழி வெற்றியுண்டாகாதென்பது தோன்றச், "சினப்போர் இனக்களிற்றியானை-யியல்தேர்க் குருசில்" என்றார். உயரிய மறப் புகழையுடைய இவன் தொன்று தொட்டுநின் குடியோடு பெருந்தொடர்புற்று அரிய மறப்பணி செய்த குடியில் தோன்றியவன் என அவன் குடிநிலை கூறுவார், நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தையும், நுந்தைக்கு இவன் தந்தையும் போர்செய்து மாய்ந்தனரென்று கூறுவதாயின், மாய்ந்தனரெனப் பன்மைவினை வருதல் வேண்டும்; அவ்வாறின்மையின், அஃது ஆசிரியர் கருத்தன்றென வுணர்க. மைந்து, வலிமை; மறப் புகழ்க்கு ஏது மைந்தாதலால், "மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்" என்றார். பனை, தெங்கு, தாழை முதலியவற்றால் மழையை மறைத்தற்காகச் செய்யப்படுவது குடை; இக் குடைத்தான், தன்னைப் பிடிப்பானை மழையில் நனையாவாறு இடைநின்று காப்பதுபோல, இவனும் நின்னைத் தாக்கவரும் வேலிற்கும் நினக்கும் இடையே நின்று அதனைத் தானேற்றுக் காப்பன் என்பதாம்.
---------

291. நெடுங்களத்துப் பரணர்

நெடுங்களத்துப் பரணர் நெடுங்களம் என்னும் ஊரினர். இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையிலுள்ளது. பரணரென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணரென்று வழங்கினர். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரிந்ததன்மேலும் திரிபடைவதாயிற்று. இத் தொடரினை நோக்கின் பலரும், சீத்தலைச்சாத்தனார் என்பதுபற்றிப் பல பொருள் கூறியதுபோல இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணரென உறுப்புப் பற்றிப் பெயர் பெற்றனரெனக் கூறினர். இதுபற்றிய விரிந்த ஆராய்ச்சியுரை, உரைகாரரால் "சங்க காலப் பரணர்கள்" (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு: 23; பக். 481) என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஒருகால் ஒரு தானைத்தலைவன் பகைவர் கவர்ந்துசென்ற ஆனிரைகளைமீட்பது கருதிக் கரந்தை சூடிப் போர்க்குப் புறப்படலானான். மறக்குடி மகளாகிய அவன் மனையோள் அவன்பாற்கொண்ட பெருங் காதலால் தான் சூடியிருந்த மாலையை அவற்குச் சூட்டி அவன் மார்பில் அணிந்திருந்த மாலையைத் தான் அணிந்து கொண்டு விடை கொடுத்து விட்டாள். இஃது அக்கால மறவர் குடி மரபு. அவன் செல்லுங்கால் உடுத்திருந்த வெள்ளிய தூய ஆடை அவனுடைய கரிய உடம்பிற்படிந்து பேரொளி கொண்டு திகழ்ந்தது. அக் காட்சி அவள் நெஞ்சிற் படிந்து மிக்க இன்பத்தைச் செய்தது. போர்க்குச் சென்ற தலைவன் நேரே தன் தலைவனான வேந்தனைக் கண்டான். வேந்தனும் அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையன். அவனை விடைகொடுத்து வழிவிடுவான், தான் அணிந்திருந்த பல வடங்களோடு கூடிய மணிமாலையை அவன் கழுத்தில் அணிந்து, அவ் வீரர் தலைவன் அணிந்திருந்ததாகிய ஒற்றை வட மாலையைத் தான் அணிந்து மகிழ்ந்தான். இதனைக் கண்டிருந்தோர் சென்று தானைத்தலைவன் மனையோட்குரைத்து மகிழ்வித்தனர். வெட்சியாரை நோக்கிச் சென்ற தலைவன் கரந்தை சூடிப் போருடற்றும் தன் தானை வீரர்க்கு முன்னே, காட்டில் மறைந்து சென்று வெட்சிப் பகைவரொடு கடும்போர்உடற்றினான்.

ஆனிரைகள் மீட்கப்பட்டு ஊர் நோக்கிச் செல்லத் தொடங்கின; அங்கே அந்நிலையில்; பகைவர் எறிந்த வேலொன்று தலைவன் மார்பையுருவிச் சென்றது. அவனும் வீழ்ந்து மாண்டான். பிணங்களைச் சூழ்ந்துகொண்டிருந்த பருந்து முதலிய புள்ளினங்கள் அவன் பிணத்தையும் சூழ்ந்து ஆரவாரித்தன. இதற்குள் செய்தியறிந்த அவன் மனையோள் அவன் வீழ்ந்த இடம் நாடி வந்தாள். அங்கே போருடற்றி வெற்றிபெற்ற வீரர் பலரும். ஆனிரைகள் பின் வந்தனர். போர் நிகழ்ந்தவிடத்தே துடியரும் பாண்மக்களும் பிறரும் இருந்தனர். காட்டில் குறுநரிகள் ஊளையிட்டன. அக் காட்சியைக் கண்டவள், துடியர் முதலாயினாரை யழைத்து "இப் புள்ளினங்கள் சூழ்ந்து செய்யும் ஆரவாரத்தை நீக்குமின்; யான் விளரிப் பண்ணைப் பாடிக்கொண்டு சென்று குறுநரிகள் நெருங்காவாறு ஓட்டி வருகிறேன்" என்று சொல்லி நரிகளை வெருட்டிவிட்டுத் தலைவன் பிணத்தருகே வந்தாள். அவன் புண்பட்ட மார்பில்வேந்தன் அணிந்த பன்மணி கலந்த பல் வட மாலையைக் கண்டாள். வேந்தன் சிறப்புச் செய்யினும் செய்யா தொழியினும் பயன் நோக்காதே வெறிதேயும் வேந்தன் பொருட்டுச் சாதலை விரும்புவோன் என் தலைவன்; இப் பெற்றியோனுக்குக் காதலால் தன் மாலையை யணிந்து இவன் மாலையைத் தான் அணிந்து கொண்டான் வேந்தன்; என்போல் வேந்தனும் இவன்பால் காதலுடையனாதலால், யான் இவனைப் பிரிந்து ஆற்றாது பெருநடுக்கம் கொள்வது போலத் தானும் பெருவிதுப்பு எய்துவானாக என வாய்விட்டரற்றினாள். இதனை யறிந்த நெடுங்களத்துப் பரணர் இந்த இனிய பாட்டின்கண் அவள் கூற்றைப் பொருளாகத் தொடுத்துப் பாடியுள்ளார்.

    சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர்
    தூவெள் ளறுவை மாயோற் குறுகி
    இரும்புட் பூச லோம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப் புறுக வேந்தே         5
    கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை
    மணிமருண் மாலை சூட்டி யவன்றலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.
    ---------

திணை: அது; துறை: வேத்தியல். நெடுங்களத்துப்பரணர் பாடியது.

உரை: சிறா அஅர் - சிறுவர்களே; துடியர் - துடிப்பறை கொட்டுபவர்களே; பாடுவல் மகா அஅர் - பாடுதல்வல்ல பாணர் மக்களே; தூவெள் அறுவை மாயோன் குறுகி - தூய வெள்ளிய ஆடையையுடைய கரியவனை யணுகி; இரும்புள் பூசல் ஓம்புமின் - கரிய பறவைகள் சூழ்ந்து செய்யும் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; யானும் விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென் - யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை யோட்டுவேன்; என்போல் வேந்து பெருவிதுப்புறுக- என்னைப் போல வேந்தனும் பெரிய நடுக்கத்தை எய்துவானாக; கொன்னும் சாதல் வெய்யோற்கு – வேந்தன்பொருட்டு வெறிதேயும் உயிர் கொடுத்தற்கு விழைபவனாகிய என் தலைவனுக்கு; தன் தலைமணி மருள் மாலை சூட்டி - தன்னிடத்து மார்பிலிருந்த பல மணிகள் விரவிய பல வடமாலையைத் தலைவனுக் கணிந்து; அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனன் - என் தலைவனாகிய அவனிடத்து மார்பிலிருந்து ஒற்றை வடமாலையைத் தான் அணிந்துகொண்ட பேரன்பினனாதலால்; எ - று.

போர்க்குச் செல்வோர் தூயவெள்ளாடையணிந்து செல்பவாதலால் "தூவெள்ளறுவை மாயோன்" என்றார்; பிறரும் "வெளிது விரித்துடீஇ" என்பது காண்க. காக்கை, கழுகு, பருந்து முதலிய பிணந்தின்னும் பறவைகள் சூழ்ந்து மொய்த்து ஆரவாரித்துச் செய்யும் பேரொலியை, "இரும்புட் பூசல்" என்றார். பருந்து வட்டமிடுவது போல இசைக்கப் படுவதுபற்றி, "விளரிக் கொட்பு" என்றார். யான் அவன்பாற்கொண்ட காதலால் நெஞ்சு நடுங்கு துயரம் எய்தியதுபோல வேந்தன் தன் மாலையை மாற்றிப் பெருங் காதலுடையனாதலால் மிக்க துயரம் எய்துவனென்பாள், "என்போல் வேந்தனும்பெருவிதுப்புறுக" என்றாள். ஓம்புமின், கடிகுவென்; மலைந்தனனாதலால் "வேந்து பெருவிதுப்புறுக" எனக்கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: "தோள் வலிய வய வேந்தனை, வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று" என்பது வேத்தியல் (பு. வெ. மா. 2 : 13) இதன்கண் வேந்தனை யென்றவிடத்து நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்றாகக் கொண்டு, வேந்தன் பொருட்டு உயிர் கொடுத்த வாள்வலி மறவர் சிறப்புரைப்பது வேத்தியல் என ஈண்டு அமைத்துக்கொள்க. "என்போற் பெருவிதுப் புறுக வேந்" தென்றது, மேற்கோள்; வெய்யோற்கு மாலை சூட்டித் தான் மாலை மலைந்தனனாகலான் என்பது அதனைச் சாதிக்கும் ஏது.
-----------

292. விரிச்சியூர் நன்னாகனார்

விரிச்சியூர் என்பது பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர். வேந்தன் பொருட்டு விரிச்சி நின்று கூறியது, அக் கூறியவாறே வேந்தற்கு வேண்டும் பயனை நல்கிற்றாக, அவ் வேந்தனால் இவ்வூர் விரிச்சி நின்றவளுக்கு வழங்கப்பட்டதாகல் வேண்டும். அதனால் இவ்வூர் விரிச்சியூர் எனப்படுவதாயிற்று. கணியூர், மருத்துவக்குடி,பிரமதேயம் முதலிய ஊர்கள் இவ்விரிச்சியூர் என (A. R. No. 66 of 1924) மருவி வழங்குவதாயிற்று. நன்னாகனாரென்ற பெயருடனே சான்றோர் வேறே இருத்தலால் அவரிற் பிரித்தறிதற்கு இந்த நன்னாகனார், ஊர்ப்பெயரோடு இணைத்து விரிச்சியூர் நன்னாகனார் என வழங்கப்பட்டனர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத்துள்ளது. இதன்கண், உண்டாட்டு நிகழுமிடத்து ஒரு வீரன் முறை தவறினானென. வெகுண்டவர்க்குச் சான்றோராகிய நன்னாகனார் அவனது ஆண்டகைமையை எடுத்தோதிப் பாராட்டியுள்ளார்.

    வேந்தற் கேந்திய தீந்தண் ணறவம்
    யாந்தனக் குறுமுறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனெ னென்று
    சினவ லோம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவ னாயின் 5
    என்முறை வருக வென்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கு மாண்டகை யன்னே.
    ----------

திணை: வஞ்சி. துறை: பெருஞ்சோற்று நிலை. விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

உரை: வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் - வேந்தன் பொருட்டுப் பசும்பொன் மண்டையில் எடுத்துக் கொடுத்த தீவிய குளிர்ந்த நறவை; தனக்கு உறும் முறை யாம் வளாவ - தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து கொடுத்தேமாக; விலக்கி வாய் வாள் பற்றி நின்றனன் என்று சினவல் ஓம்புமின் - இவன் அதனை மறுத்துத் தன் வாய் வாளைக் கைப்பற்றி எழுந்து நிற்பானாயினான் என்று சொல்லி இவனை வெகுளுதலை விட்டொழிவீர்களாக; சிறு புல்லாளர் - சிறிய புல்லாண்மை யுடையவர்களே; ஈண்டேபோல வேண்டுவனாயின் - இங்கே எவ்வாறு ஆண்மையுடன் வாளைப் பற்றினானோ அவ்வாறே போர்க்களத்தும் செய்ய விரும்புவானாயின்; என் முறை வருக என்னான் - யான் பகைவரை நேர்படுதற்குச் செல்லும் முறை வருக என்று இரானாய்; கம்மென - விரைய; எழுதரு பெரும்படை விலக்கி - தனக்கு முன்னே எழுகின்ற பெரிய படையைக் குறுக்கிட்டு விலக்கி; ஆண்டு நிற்கும் ஆண்டகையன் - அவ்விடத்தே முந்துற்று நிற்கும் ஆண்டகைமையை யுடையன் என்று அறிவீர்களாக; எ - று.

புல்லாளர், தாம் புல்லிய ஆண்மையை யுடையராயிருந்தே பிறர் தம்மைப் பேராண்மையுடையரென வுயர்த்துக் கூறுவரென மெய்ம்மையாப் பேராண்மையுடையார் செய்கைகளை ஏறட்டுக் கூறுபவர். இஃது சிறுமையுடையாரிடத்தே காணப்படுதலின், சிறு புல்லாளர் என்றார்; அண்மைவிளி. சினந்தவழிப் போர்க்குரிய அமைதி கெடுமாதலின், "சினவல் ஓம்புமின்" என்றார். நும்மைப்போற் சொல்லளவின்றிச் செயலிலும் தன் ஆண்மையைத் தோற்றுவிப்பவன் என்பதைத் தெளிய உணர்வீர்களாக என்பார், "பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் ஆண்டகையன்"என்றார். படைவீரர் அனைவரும் முறைகெட ஒழுகுவராயின், போர்வினை வென்றி பயவாதாகலின், முறைக்கேட்டினை அவன் செய்பவனல்லன் என்றதற்கு "வேண்டுவனாயின்" என்றார். வேண்டுவனாயின், என்றது முறைகெட ஒழுகும் சிறுமை அவன்பால் இல்லை என்பது தோற்றிநின்றது. சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவனாயின், என்னான், கம்மென, விலக்கி, நிற்கும் ஆண்டகையன் என வினைமுடிவு செய்க.

விளக்கம்: பெருஞ்சோற்று நிலையாவது, "திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப், பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று" (பு. வெ. 3:23) என வரும். வேந்தருண்ணும் நறவம் களிப்பு மிகவுடைய தன்மையின், அதனை ஏனை மறவர்க்குக் கொடுக்குமிடத்து அவர்க்கேற்பக் களிப்புத்தரும் கலங்கல் நறவம் கலந்து தருவது முறை. அம் முறையிற் சிறிதுபோது தாழ்த்தது பொறாது அதனை விலக்கிப் போர்க்குச் செலவு மேற்கொண்டு வாள்பற்றி நின்றான் என்பது போதர, "யாந்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி, வாய்வாள்பற்றி நின்றனன்" என்று சிறுபுல்லாளர் கூற்றினைக் கொண்டு கூறினார். இவ் வண்ணம் கழிசினமுடையான்போல் வாள் பற்றி நின்றதுகொண்டு அவனை எள்ளித் துயருறேன் மின் என்பார், "சினவல் ஓம்புமின்"என்றும்,சிறுபுல்லாளராகிய நும் சினம் செல்லாது, அவன் சினம் செல்லும் என்பார், "வேண்டுவனாயின் ...ஆண்டகை யன்னே" யென்றும் கூறினார். பெரும்படை வரினும் அஞ்சாது ஒருவனே கற்சிறை போல் விலங்கி நின்று வென்றி யெய்துவனென்றற்குப் "பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும்" என்றார்.
---

293. நொச்சிநியமங்கிழார்

இச் சான்றோர்க்கு நியமம் என்னும் ஊர் உரியதாகும். இப் பெயருடைய ஊர்கள் பல இருத்தலால், நொச்சிவேலி சூழ்ந்து பிறவற்றின் வேறுபடுதலின், இந் நியமம் ‘நொச்சிநியமம்’ எனப்பட்டது. இஃது இப்போது நொச்சியமென வழங்குகிறது. இது திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அண்மையில் உளது. இந் நொச்சி நியமங்கிழாருடைய இனிய பாட்டுகள் அகத்திலும், நற்றிணையிலும் உள்ளன. காட்டில் குறமகளிர் வேங்கைப் பூவைப் பறித்தற்கு மாட்டாது புலி புலியென இரைச்சலிடுவதும், இது கேட்கும் குறவர் வில்லேந்தி ஓடிவருவதும், அவர்களைக் கொண்டு இம் மகளிர் தாம் வேண்டும் பூவைப் பெறுவதும் இவர் பாட்டில் அழகுறக்குறிக்கப் படுகின்றன. மனை வாழ்வில் தலைவன் பிரிந்தவிடத்து வேறு பட்டாற்றாத தலைமகட்குத் தோழி, தலைவன் அன்புநிலையை எடுத்தோதி ஆற்றுவிக்கும் திறம் இவரால் மிக்க நயமுறப் பாடப்பெறுகின்றது.

களவின்கண் தலைவி அறத்தொடு நிற்கும் விரகும், வேண்டுமிடத்து வழங்கும் முன்னிலைப் புறமொழியும் இலக்கிய இன்பவூற்றாக உள்ளன. நகர்ப்புறத்தே போர் நிகழும் காலத்தே, அரண் சூழ்ந்த நகர்க்குள்ளிருந்த நெடுமனை யொன்றிற்கு இச்சான்றோர் ஒருகால் சென்று அங்கே இருந்து மறக்குடி மகளிரின் செயல் நலங்களைக் காணும்பேறு பெற்றார். தானை வீரரும் தானைத் தலைவரும் வாழும் தெருவழியே வருகையில் பூ விற்கும் மகளிர் அத் தெருவில் இயங்காது வேறு தெருக்களை நோக்கிச் செல்வது கண்டார். ஒரு வீரனது மனைக்குட்சென்று அவன் மனையோளைக் கண்டு சொல்லாடுங்கால் தாம் கண்டஇக் காட்சியைத் தெரிவித்தார். மறக்குடி மகளாகிய அவள்,"சான்றீர்! வள்ளுவன் யானைமேலிருந்து தனது தண்ணுமையை ஒலித்து, அரணுக்குப் புறத்தே முற்றி நிற்கும் பகைவரை யெறிதற்குச் செல்லும் வீரர்க்குக் காஞ்சிப்பூ உரியதாதலால், அதனைச் சென்று பெறுமாறு பணிப்பன். அவ்வொலி ஈண்டு மனையிடத்துள்ளார் செவியிற் கேட்குமாறு ஒலிக்கின்றது.போர்ப்பறை கேட்ட அளவிலே புறப்பட்டுச் செல்லற் பாலராகிய வீரருள் நாணமில்லாதார் சிலர் இப்பூக்கோள் குறித்த தண்ணுமையொலி கேட்குமளவும் மனையிடத்தே யிருப்பர். அவேரை விரைய வருமாறு அழைப்பதும் அதன் கருத்தாகும். இத் தண்ணுமை யொலி கேட்டபின் பூவிலைப் பெண்டு, ‘போர் தொடங்கிவிட்டது; இனி ஆடவர் மனைக்கண் இரார்: அதனால் இம்மனை மகளிர் நம்பால் பூக்களை வாங்கமாட்டார்’ என்று கருதிப்பிறர் மனைக்கண் செல்கின்றாள்; அளியள்" என்று பூவிலைப் பெண்டின் பொருட்டு இரங்குவாள்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட நொச்சிநியமங்கிழார் வியப்பு மிகக்கொண்டு அவள் கூற்றுப் பொருளாக இப்பாட்டைப் பாடியுள்ளார்.

    நிறப்படைக் கொல்கா யானை மேலோன்
    குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை
    நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்
    எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ         5
    அளிய டானே பூவிலைப் பெண்டே.
    -------

திணை: காஞ்சி; துறை: பூக்கோட்காஞ்சி. நொச்சிநியமங்கிழார் பாடியது.

உரை: நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் - குத்துக்கோற்கு அடங்காத யானைமேலிருப்போனாகிய வள்ளுவன்; குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை - அரண் புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும் பூக்கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமையொலி; நாணுடை மாக்கட்கு இரங்கும் - போர்ப்பறை கேட்ட துணையானே புறப்படாத நாணமில்லாத வீரர்இதனைக்கேட்டு விரையச்சென்று போர்ப்பூவைப் பெறுமாறு ஒலியாநிற்கும்; ஆயின் - ஆதலால்; எம் மினும் பேரெழில் இழந்து - மனைமகளிராகிய எம்மினும் பெரிய தனது எழுச்சி குன்றி; வினையென - போர் நிகழுங் காலமாதலின் தனித்துறையும் மனைமகளிர் இனிப் பூக்கொள்ளாரென்று கருதி; பூவிலைப் பெண்டு - பூ விற்கும் பெண்டு; பிறர் மனை புகுவள் - பிற மகளிர் வாழும் மனைகட்குச் செல்லுகின்றாள் போலும்; அளியள் - அளிக்கத்தக்காள்; எ - று.

நிறப்படை - குத்துக்கோல். வலிமிக்க பட்டத்தியானை யென்றற்கு "நிறப்படைக் கொல்கா யானை" யென்றார். தன்பால் எழும் ஒலியால் வேந்தனால் தரப்படும் காஞ்சிப்பூவைப் பெறுமாறு வீரரைப் பணித்தலைச் செய்தலின், "ஏவல் தண்ணுமை" என்றார். போர்க்களத்தில், பகைவரை மேற்சென்றெறியுமாறு ஏவுவது "ஏவல் வியன்பணை" (பதிற். 39) எனப்படும். நாணுடைமாக்கள்: எதிர்மறைக் குறிப்பு மொழி. தனிமைத் துயருழந்து எழிலிழக்கும் எம்மினும், எம்போற்பலருடைய தொடர்பிழந்து பூ வாணிகம் குன்றவரும் இன்னாமையும் கொண்டு பெருந்துன்பமுழத்தலின் பேரெழிலிழந்து"என்றும். எனவே அவள் இரங்கத்தகும் நிலையினளென்பது தோன்ற, "அளியள்" என்றும் கூறினாள். தண்ணுமை இரங்கும்; ஆயின் பூவிலைப் பெண்டு இழந்து, வினையெனப் பிறர்மனை புகுவாள்; அளியள் என வினைமுடிவு செய்க.

விளக்கம்: பூக்கோட் காஞ்சியாவது "காரெதிரிய கடற்றானை, போரெதிரிய பூக்கொண்டன்று" (பு. வெ. மா. 4:10) என வரும். நுதலிற் பாய்ந்து நோய் செய்வது பற்றி, குத்துக் கோல் "நிறப்படை" யெனப்பட்டது.குறும்பர், அரண்புறத்தே முற்றிநின்று போரெதிர்ந்து நிற்கும் பகைவர்; அவரொடு பொருவது குறித்துப் பூக்கோள் அறையப்படுவதனால், "குறும்பர்க்கெறியும் ஏவல் தண்ணுமை"யென்றாள். நாணுடைமாக்கள் என்றதற்கு நாண் உடைந்த மாக்கள் என்று உரைத்தலுமுண்டு. பிறர்மனை, போர்க்கு ஆகாரென விலக்கப்பட்ட பார்ப்பனர், நோயுற்றார், மகப்பெறாதார் முதலாயினார் மனை. "விலையெனப் புகுவள்" என்று பாடமோதுதலுமுண்டு. மறக்குடி மகளிர் பூவிலைப் பெண்டிர்க்கு நன்கலங்களை வீறுபட வழங்கும் இயல்பினர்;காஞ்சி சான்ற உள்ளமும், போர் செய்து பெற்ற அருங்கலன்களும் அம் மகளிர் உடையர்; அவர் பூவை விலக்கியது பூவிலை மகட்குப் பெருவருத்தத்தைச் செய்ததென வறிக. அவளது வருத்தத்தை அவள் கூறும் பூவிலையொலியே எடுத்துக் காட்டுதலால் "அளியள்" என இரங்கினாள்.
----------

294. பெருந்தலைச் சாத்தனார்

பெருந்தலைச் சாத்தனார் சிறந்த மறப்பண்புடையரென்பதை இளங் கண்டீக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்று இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாதொழிந்த செயலாலும், புல்லாமைக்குக் கூறிய காரணத்தாலும் நன்கறிந்துள்ளோம். குமணன் தந்த வாள் கொண்டு அவன் தம்பி இளங்குமணன் உள்ளத்தை மாற்றிச் செம்மை செய்த அவரது சிறப்பு நாடறிந்தது. ஒரு கால், பரிசில் வேண்டிச் சென்ற நம் பெருந்தலைச் சாத்தனார்க்குக் கடியனெடு வேட்டுவனும், மூவன் என்பானும் பரிசில்தர நீட்டித்தாராக, சாத்தனார் வேட்டுவனை, "நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக" என்றும் மூவனை. "ஈயாயாயினும் இரங்குவெனல்லேன், நோயிலையாகுமதி" என்றும் கூறியது அவரது பெருந்தகைமையை இனிது காட்டி நிற்கிறது. இத்தகைய சான்றோர் ஒருகால் போர்க்கள நிகழ்ச்சி யொன்றை நேரிற் காண நேர்ந்தது. இரவில் பாசறைக்கண்தங்கிய தானைத் தலைவன், பகலில் போர்க்களத்தில் நின்றான். இருதிறத்துப் படை வீரரும் எதிர் நின்று பொருபவர் தமரென்றும் பிறரென்றும் பாராது கடும்போர் புரிந்தனர். தானைத் தலைவன் போர்க்களத்துட் சென்று பகைவரைநோக்கி, நும்பெயரையும் நுங்கள் இறைவன் சிறப்பையும் விளக்கி நுங்கள் வாழ்நாள் முறையையும் முடித்துக் கொண்டவர் இங்கு எம்பால் போர்க்கு வருக எனச்சொல்லி எதிர்ந்த பெருவீரர் பலரை வென்று ஒருபால் நின்றான். அவனது போர்த்திறங்கண்ட மாற்றார், பாம்புமிழ்ந்த மணியை எவ்வாறு எவரும் குறுகுதற்கஞ்சுவரோ அவ்வாறே அவனைக் குறுகுதற்கு அஞ்சினர். இதனைக்கண்டு வியப்புற்ற பெருந்தலைச்சாத்தனார் போர்முடிந்தபின் அத்தலைவன் தன் மனைக்கண் இருக்கையில் சென்று அவன் மனைவி கேட்ப அவன் செயலையுரைத்து மகிழ்வித்தார். அவ்வுரை இப் பாட்டில் எடுத்துக் கூறப்படுகிறது. இவருடைய வூராகிய பெருந்தலை, பெருந்தலையூரென்னும் பெயரோடு கோயமுத்தூர் மாவட்டத்தில் உளது.

    வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
    கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர்
    தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத்
    திறையும் பெயருந் தோற்றி நுமருள்         5
    நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப்
    போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
    அரவுமிழ் மணியிற் குறுகார்
    நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே.
    ----------

திணை: தும்பை; துறை: தானை மறம். பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

உரை: வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர -வெண் குடைபோலும் முழுத்திங்கள் வானத்தின்மேனின்று நிலவைப் பொழிந்து விளங்க; கண் கூடு இறுத்த கடல்மருள் பாசறை - படை வீரர் ஒருங்கு கூடித் தங்கியிருந்த கடல்போன்ற பாசறையின் நீங்கிச் சென்று; குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர் - புதமையுறச் செம்மை செய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலையுடைய போர்வீரர்; தமர் பியர் அறியா அமர் மயங்கு அழுவத்து - எதிர்வோர் உறவினரென்றும் பிறரென்றும் பாராமல் கைகலந்து செய்யும் போர்க் களத்தில்; இறையும் பெயரும் தோற்றுவித்து; நுமருள் நாண்முறை தபுத்தீர்- நும்மில் வாழ்நாண் முறை முடிந்தவர்; வம்மின் ஈங்கு என போர் மலைந்து ஒரு சிறை நிற்ப - வருக இவண் என்னோடு பொருதற்கென்று சொல்லி வந்த பெருவீரர் பலரையும் வென்று ஒரு புறத்தே நின்றானாக; அரவு உமிழ் மணியின் பிறர் யாவரும் குறுகார் - பாம்புமிழ்ந்த மணியை எவரும் குறுகாதொழிவதுபோலப் பகைவர் யாவரும் குறுகாராயினர்; நிரைதார் மார்பின் நின் கேள்வனை நிரையாகத் தொடுக்கப்பட்ட மாலையையுடைய நின் கொழுநனை; எ - று.

வெண்மதியத்தின் நிழலினும் வேந்தன் வெண்குடை நீழல் சிறந்ததாதலின், வெண்குடைபோலும் மதியம் எனப்பட்டது. வாய்தீட்டி நெய்பூசப் பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை குமரிப்படை உயிரை உடம்பினின்றும் நீக்கும் தொழிலைச் செய்வது கூற்றின் செயலாதலின், அதனைச் செய்யும் போர் வீரரைக் "கூற்றுவினை யாடவர்" என்றார். சீரிய வீரருடன் நேரிய முறையில் போர் புரிவது வீரர்க்குப் புகழும் அவரை யாளும் வேந்தர்க்குப் பெருமையும் பயத்தலின், "இறையும் பெயரும் தோற்றி" யென்றார். பாசறை யென்பதில் ஈற்றில் நீக்கப் பொருட்டாகிய இன்னுருபு தொக்கது.

விளக்கம்: தானை மறமாவது, "தாம் படைத்தலைக் கொள்ளாமை ஓம்படுத்த வுயர்பு கூறின்று" (பு. வெ. மா. 7:3) என வரும். நச்சினார்க்கினியரும், "தானை யானை குதிரை யென்ற, நோனாருட்கும் மூவகை நிலையும்" (தொல். புறத். 17) என்றவிடத்துத் தானைநிலை யென்பதற்கு இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். உவமம் பொருளினும் உயர்வுடைய தென்பதுபற்றி, "வெண்மதியத்தின்...எனப்பட்டது" என வுரைக்கப்பட்டது. குமரிப்படை யென்றது, புதியவாய்ச் செய்து வாய் தீட்டி நெய் பூசப்பெற்று முதன் முதலாக எறிதற்கேந்தும் படை யென்றுமாம். ஓரிடத்தே கூடி நிறைந்திருக்கும் பாடி வீடு, "கண்கூடிறுத்த பாசறை" யெனப்பட்டது. இது கட்டூர் என வழங்கும்: "கடல் கிளர்ந்தன்ன கட்டூர்" (புறத். 295) என்று பிறரும் கூறுவது காண்க. போர் எதிர்ந்தவழித் தமரென்றும்பிறரென்றும் பாராது பொருவது மறவர் இயல்பாதலால் "தமர் பிறர் அறியா அமர்" என்றார். இதனைச் சிலர் படைமடம் என்ப. படைமடம் மறவர்க்கு இழுக்காதலின், அது சிறவாமையறிக; "கொடை மடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படை மயக்குறினே" (புறத். 142) என்றும், "படைமட மென்றது வீரரல்லாதார் மேலும் முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார்மேலும் செல்லுதல்" (பழையவுரை) என்றும் சான்றோர் உரைப்பது காண்க. "நிலைமக்கள் சாலவுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல்" (குறள். 770) என்பதனால் வெற்றியுற நிகழும் போரில் தலைவன் பெயரும் விளக்கம் பெறுதலின், "இறையும் பெயரும் தோற்றி" யென்றார். வாணாட்கோள் பகை மறவர் நீணாட்கோள் எனப்படும் வழக்குப்பற்றி, நாண் முறை தபுத்தீர் என்றதற்கு வாழ்நாள் முறை முடிந்தவர்களே என்று உரை கூறப்பட்டது. பிறரும் "யாவருங், குறுகலோம்புமின் குறை நாண் மறவீர்" (புறத். 1342) என்பது காண்க. இனி நாண் முறை யென்புழி நாண், நாணம் என்பாரு முளர். நாணிழந்தவர் ஒத்த பண்புடைய மறவராகாமையின், அவரைத்தமிழ்மறவர் போர்க்கு அழையாரென அறிக. "மறமானம் மாண்டவழிச் செலவு தேற்றம், என நான்கே யேமம் படைக்கு" (குறள். 766). வந்த வழி நாள் முறைகெடுதல் தப்பா தென்றற்குத் தபுத்தீர் என இறந்த காலத்தாற் கூறினான்.
---------

295. ஒளவையார்

ஒருகால் வேந்தர் இருவர் தும்பை சூடிப் போருடற்றுவாராயினர். இருவர்பக்கத்தும் வீரர் பலர் பொருது வீழ்ந்தனர். வீழ்ந்த வீரருள் பலர் அரிய போருடற்றிப் பகைவரால் வேறு வேறாகத் துணிக்கப்பட்டனர். அவருள் வீரனொருவனுடைய தாய்க்குப் போர் முடிவில் அவன் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அவன் வீழ்ந்த திறத்தைக் காண்பதற்கு அவளும் போர்க்களஞ் சென்றாள். அதனை ஒளவையார் அறிந்து அவள் செயலை உற்று நோக்கினார். அத்தாய் மிகவும் முதியள். போர்க்களத்தே வீழ்ந்து கிடக்கும் வீரரிடையே அவள் மகன் சிறப்புறப் பொருததன் பயனாக உடல் சிதைக்கப்பட்டிருப்பது கண்டு சிறப்புடைய அவன்பால் உள்ளங் கரைந்தாள். அன்பின் முதிர்வால் வற்றி வாடிய அவள் மார்பில் பால் சுரந்தது. ஒளவையாருக்கு வியப்பு மிகுந்தது. அம்மிகுதி இப் பாட்டினுருக் கொண்டு வெளிப்பட்டது.

    கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
    வெந்துவாய் வடித்த வேறலைப் பெயரித்
    தோடுகைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின்
    வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
    இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய         5
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி
    வாடுமுலை யூறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
    ----------

திணை: அது. துறை: உவகைக் கலுழ்ச்சி. ஒளவையார் பாடியது.

உரை: கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் - கடல் கிளர்ந்தாற் போன்ற பாசறையொடு கூடிய போர்க்களத்தின் நடுவில்; வெந்து வாய் வடித்த வேல் தலைப்பெயரி - நெருப்பில் வேகவைத்து வாயைக் கூரிதாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி; தோடு உகைத்து எழுதரூஉ - மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் முற்பட வெழுந்து சென்று; துரந்தெறி ஞாட்பின் - அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில்; வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி - மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து தானும் துணைவரும் நின்று பொருதற்கு வேண்டும் இட முண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து; இடைப்படை யழுவத்து - படைத்திரளின் இடை நடுவில் உண்டாகிய களத்தில்; சிதைந்து வேறாகிய சிறப்புடையாளன் மாண்பு கண்டு-வெட்டுண்டு துணி துணியாய் வேறு பட்டுக்கிடந்த சிறப்புடையாளனாகிய தன் மகனுடைய மற மாண்பைக் கண்டு; அருளி - அன்பு மிகுந்து; வாடு முலை யூறிச் சுரந்தன - வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன; ஓடாப் பூட்கை விடலை தாய்க்கு - பின்னிடாத கொள்கையினையுடைய காளைக்குத் தாயாகிய இவளுக்கு; எ - று.

வீரர் தொகுதியைத் தன்னோடே முன்வரச் செலுத்துதலின், தானைத் தலைவன் என்பது விளங்கின்று. துரந்தெனவே, அம்பும் வேலும் கொள்ளப்பட்டன. துரத்தற்கமைந்தன அவையாகலின். பகைவரும் வெள்ளம்போல் அணியணியாய் வருதல் தோன்ற "வருபடைபோழ்ந்து" என்றார். வாய்ப்படை விலங்கி யென்று பாடமாயின், பகைவரிடையே தப்பாத படைகொண்டு குறுக்கிட்டு நின்றெனவுரைத்தலுமொன்று. இடைப்படை யழுவம் புகுந்து போருடற்றுவது சிறப்புடையாளர் செயலாதலின், சிறப்புடையாளன் என்றார். ஈன்ற ஞான்றைய அன்பிலும் மாண்பு கண்டவழிப் பிறந்த அன்பு மீதூர்ந்தமை தோன்ற, "அருளி" யென்றார். முலையூறிச் சுரந்தன என்புழி இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேனின்றது. தலைப்பெயரி, உகைத்து, எழுதரூஉ, போழ்ந்து, விலங்கி, சிதைந்து வேறாகிய என இயையும்; கண்டு, அரளி, தாய்க்கு, ஊறிச் சுரந்தன என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: போர்மேற் செல்லுந் தானை தங்குதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை, கட்டூர் எனப்பட்டது. அணியணியாய்த் தங்கும் தானைநிலை தெருப்போலக் காட்சியளித்தலின், ஊரெனப்பட்டது. பின்னர் இவ்விடமே ஊராக மாறியதுமுண்டென அறிக; தொண்டை நாட்டூர்களுள் "பெருங்கட்டூர்" என்றோர் ஊருமுண்டு. "கட்டூர் நாப்பண் வெந்து வாய் வடித்த வேல் பெயரி" என்பதனால், கட்டூரிடையே கொல்லருலைக்கள மிருந்து, போரிடை மடியும் வேலும் வாளும் செம்மை செய்தலும் வடித்தலும் செய்துகொண்டிருக்குமென்து துணியப்படும். வெந்து வாய்மடித்து என்ற பாடத்துக்குப் போர் குறித்தெழுந்த சினத்தீயால் உடலகம் வெந்து வாயிதழ் கடித்து என வுரைக்க. தோடு, தொகுதி. வெள்யாடு போலத் தலைமகனைப் பின்தொடர்வதுபற்றி, தானைத் தொகுதி தோடெனப் பட்டதென்றுமாம். ஞாட்பு, போர்க்களம். அழுவம், ஆழ்ந்த இடம்; களத்தின் நடுவிடம் அழுவம் போறலின் அழுவம் எனப்பட்டது. சிறப்பு, ஏனைமறவர் பலர்க்கும் இ்ல்லாத போர்ச் சிறப்பு. மாண்பு, போரிடை வஞ்சியாது பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்தது; "நோற்றோர் மன்றாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம். 61) என்று சான்றோர் இம் மாண்பினை விளங்கக் கூறுமாறு காண்க. உயிரின்றிச் சிதைந்து வேறாகிய உடம்பின் சிதைவு கண்டு அன்பு பெருகி நிற்றலின், "அருளி" என்றும், அதனால் மார்பிடைப் பால் சுரந்ததென வியந்து கூறுவார், "வாடுமுலையூறிச் சுரந்தன" என்றும் கூறினார். ஓடாப் பூட்கை, பிறக்கிடாத மேற்கோள். உவகைக் கலுழச்சியாவது, "வாள் வாய்த்த வடு வாழ் யாக்கைக், கேள் கண்டு கலுழ்ந்து வந்தன்று" (பு. வெ. மா. 8:25) என வரும்.
---------

296. வெள்ளை மாறனார்

வெள்ளை மாறனார் என்ற இச்சான்றோர் பெயர் அச்சுப் பிரதிகளில் வெள்ளை மாளரென்று காணப்படுகிறது. இப் பெயர் வெள்ளை மாளனார் என்று கொள்ளக் கிடக்கின்றது. இவரைப்பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. இவர் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் உளது. முன்னைப் பதிப்பாசிரியராகிய திரு. உ.வே. சாமிநாதையரவர்கள்,"இவர் பாடிய ஏறாண் முல்லைத்துறை மிக்க பொருள் நயமுடைய" தென்ற ஒரு கருத்தையே இவரைப்பற்றிக் குறித்துள்ளார். போர்க்குச் சென்றிருந்த வீரருள், இறந்தோரொழியப் புண்பட்ட வீரர் பலர் ஓரூரில் தத்தம் இல்லம் வந்துசேர்ந்தனர்.அவர் மனைகளில் புண்ணையாற்றுவது குறித்து வேப்பிலை கொணர்ந்து மனையிறைப்பில் செருகுவதும் காஞ்சிப்பண் பாடுவதும் ஐயவி புகைப்பதுமாகிய செயல்களால் கல்லென்னும் ஓசை மிக்கிருந்தது. போர் முடியும் நிலையில் இருந்தமையின் வீரர் சிலர் வரத்தாழ்த்தனர்.சிறப்புடைய வீரனொருவனது தேர் நெடிது தாழ்த்து வந்தது. அது கண்டு மிகழ்ச்சியுற்ற அவன் தாய், தாழ்த்தற்குக் காரணம் காண்பாளாய், பகைவேந்தனை வீழ்த்தல்லது மீளலாகாதெனத் தன்மகன் பொருகின்றான் போலும்;இன்றேல் அவன் தேர் நெடித்து வாராதென்றாள். இதனை யுவகையுடன் கண்ட ஆசிரியர் வெள்ளை மாறனார் இப் பாட்டின்கண் அவள் கூற்றினைத்தாம்கொண்டு கூறியுள்ளார்.

    வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும்
    நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும்
    எல்லா மனையுங் கல்லென் றவ்வே
    வெந்துடன் றெறிவான் கொல்லோ
    நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே.         5
    --------------

திணை: வாகை. துறை: ஏறாண் முல்லை. வெள்ளைமாறனார் பாடியது.

உரை: வேம்பு சினை யொடிப்பவும் - வேம்பின் கிளையை யொடித்து அதன் இலை கொணர்வதிலும்; காஞ்சி பாடவும் - காஞ்சிப் பண்பாடுவதிலும்; நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் - நெய்யுடைக் கையராய் மனையோர்வெண் சிறு கடுகைப் புகைப்பதிலும்; எல்லா மனையும் கல்லென்ற - எல்லாருடைய மனைகளும் கல்லென்ற ஆரவாரத்தை யுடையவா யிராநின்றன; வேந்து உடன்று எறிவான் கொல்லோ - பகை வேந்தகைச் சினந்து அவனை வீழ்த்தவல்லது மீளலாகாதெனப் பொருகின்றான் போலும்; நெடுந்தகை தேர் நெடிது வந்தன்று - நெடுந்தகையாகிய இவனுடைய தேர் நெடிது தாழ்த்து வந்தது; எ - று.

நெடித்தென்பது நெடிதென வந்தது. எல்லா மனையும் கல்லென்ற; தேர் நெடிது வந்தன்று; அதனால் எறிவான் கொல்லோ என வினைமுடிவு செய்க. வந்ததன்றென்பது வந்தன்றென விகாரமாயிற்றெனக் கொண்டு, பொழுது நெடிதாகியும் வாராதாயிற்று; எறிவான் கொல்லோ என்றுரைத்தலு மொன்று.

விளக்கம்: ஏறாண் முல்லையாவது "மாறின்றி மறங்கனலும் ஏறாண் குடி யெடுத்துரைத்தன்று" (பு. வெ. மா. 8:22) என வரும். வேம்பின் தழையை மனையின்கட் செருகுவதும் காஞ்சிப்பண் பாடுவதும் புண்ணுற்று வந்த வீரர் பொருட்டு அவர் மனையோர் செய்வது மரபு. அதனால் புண்ணுற்றோரைப் பேய்கள் அணுகா என்பது பண்டையோர் கருத்து. ஐயவி, வெண் சிறுகடுகு. அப்போழ்து ஐயவி புகைப்பதும் உண்டென்பதை, "நீயே ஐயவி புகைப்பவுந் தாங்காது ஒய்யென, உறுமுறை மரபின் புறநின்றுய்க்கும்...கூற்றத் தனையை" (புறம். 98) என்பதனாலு மறிக. ஏனை மனைக்குறிய வீரர்கள் விழுப்புண்பட்டுப் பேய்க்கோட்படாமை கருதி யேமமாவன செய்யப்பட்டனரெனவே, நெடித்து வந்த வீரன் புண்ணொன்றுமின்றி வந்தமை விளங்க, அவனை "நெடுந்தகை" யென்றாள். வெந்துடன்றென்பது பாடமாயின், சினமிக்குப் பகைவரை எறிதலையே மேற்கொண்டு போர் செய்யாநிற்கின்றான்போலும் என்றுரைக்க.
-----------

297. உண்டாட்டு

வேந்தனொருவன் வெட்சிப் போர் புரியுங் கருத்தினனாகித் தானை வீரரை வருவித்தான். தானைவீரரும் அரசியற் சுற்றத்தாரும் ஒருங்கு கூடினர். உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை, தானைத்தலைவரிடையே போரில் மாண்புறப் போர்புரிபவர்க்குச் செய்யப்படும் சிறப்புகளைப் பற்றிப் பேச்சு நிகழ்ந்தது. போரில் பகைவர் எறியும் வேல் பல பாய்ந்து மடலொடு நிற்கும் பனைமரம்போல் சலியாது நிற்கும் தானை வீரர்க்குப் பைம்பயறு விளையும் சீறூர்கள் இறையிலிப் புரவாக வழங்கப்படின் யாம் அவற்றை விரும்பியேலேம்; ஏற்க நேரில் நெல்லும் கரும்பும் விளையும் மருதநிலத்தூர்களையே யாம் விரும்புவேம் என்று ஒரு தலைவன் மொழிந்தான். அக் கூற்றில் யாம் பெறற்குரியது மறப்புகழே; பிறிதன்று; புகழோடு வேந்தன் தரும் ஊர்களைப் பெறுவதாயின் மருத நிலத்தூர் களையே யாம் விரும்புவேம் என்று விளம்புவதனால் வெளியாகும் உள்ளப் பெருமை புலவர் பாடும் பொற் புடையதாதலைக் கண்ட சான்றோர் ஒருவர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். அவர் பெயர் ஏட்டில் விடப்பட்டுள்ளது.

    பெருநீர் மேவற் றண்ணடை யெருமை
    இருமருப் புறழு நெடுமா ணெற்றின்
    பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க்
    கோளிவண் வேண்டேம் புரவே நாரரி         5
    நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
    துறைநணி கெழீஇக் கம்பு ளீனும்
    தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே.
    ----------

திணை: வெட்சி; துறை: உண்டாட்டு...

உரை: பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறமும்- மிக்க நீரின்கண் இருத்தலை விரும்பும் மருதநிலத்தூர்களில் வாழும் தண்ணிய நடையினையுடைய எருமையினது பெரிய கொம்பைப்போலும்; நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் - நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய பசிய பயற்றின் பயறு நீக்கப்பட்ட கோதுகளின்;கோல் அணை - திரட்சியைப் படுக்கையாகக் கொண்டு, கன்றுடை மரையா துஞ்சும் - கன்றையுடைய மரையான் கிடக்கும்; சீறூர் புரவு கோள் இவண் வேண்டேம் - சிறிய ஊர்களைப் புரவாகக் கொள்வதை இவ்விடத்து வேண்டேம்; நாரரி நனைமுதிர்சாடி நறவின் வாழ்த்தி - நாரால் வடிக்கப் பட்டுப் பூக்களையிட்டு முதிர்வித்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி; துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும் நீர்த்துறையிலிருக்கும் புதல்களைப் பொருந்திக் கம்புட்கோழி முட்டைகளையீனும்; தண்ணடை பெறுதலும் உரித்து - மருத நிலத்தூர்களைப் பெற்றால் பெறுவது உரியதாம்; வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் - மிகக்கூரிய நெடிய வேல் தைத்து நிற்கும் மார்புடனே; மடல்வன் போந்தையின் நிற்குமோர்க்கு - மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் போர் வீரர்க்கு; எ - று.

நிற்கு மோர்க்குத் தண்ணடை பெறுதலும் உரித்து; சீறூர்ப்புரவு கோள் வாழ்த்தி இவண் வேண்டேம் என வினைமுடிவு செய்க. தரப் படுவதொன்றை வேண்டாவென விலக்குமிடத்து நறவினை வாழ்த்துவது பண்டைப் போர்மறவர் மரபு. மரை ஆ - காட்டுப் பசு. பெறுதலும் என்ற உம்மை பெறாமையும் உரித்தென்பதுபட நிற்றலின் எதிர்மறை; மறப்புகழ் பெறுதலே இவண் பெரிதும் வேண்டப்படுவது என்பது எஞ்ச நிற்றலின் எச்சவும்மையுமாம். மறமுடையோர் புகழையல்லது பிற எவற்றையும் கொள்ளேம் என மறுப்பது சிறப்பு. மடல்வன் போந்தையுவமையால் மறவர் மார்பில் தைத்த வேலொடு பெற்றாம்.

விளக்கம்: உண்டாட்டாவது, "தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூஉங்கின்று" (பு. வெ. மா. 1:15) எனவரும். மருத நிலத்தூர்களின்கண்ணே மறவர் கருத்து ஒன்றி நிற்றலின், உவமையினும், மருதநிலத் தெருமை மருப்பே கூறப்படுவதாயிற்றெனவறிக. பயற்றின் நெற்றுக்குஎருமை மருப்புவமம். பயற்றங் கோதுகளை அணையாகப்பரப்பி அதன்மீது மரையான் படுத்து உறங்கும். புரவு,இறையிலி, முற்றூட்டு என்பன பண்டை வேந்தர் சிறப்தோர்க்கு அளிக்கும் நிலக்கொடை வகை. புரவாவது விளைநிலம்; இதற்கு அரசிறையுண்டேயன்றிப் புரவுவரி கிடையாது. இறையிலியாவது அரசிறையன்றிேனைப் புரவுவரி முதலியன உளப்பட வழங்கும்நிலம். முற்றூட்டாவது, அரசிறை, புரவுவரி, பாடிகாவல் முதலிய வரியின்றி முழுதும் உரிமையாக வழங்கும் நிலம். பயறும் மரையாவும் கூறவே, சீறூரென்பது முல்லை நிலத்தூராயிற்று. இறையிலி கோயில்கட்கும், முற்றூட்டு வினை மேம்பட்ட சான்றோர்க்கும் கற்றுவல்ல நல்லிசைச் சான்றோர்க்கும் பண்டை மன்னரால் வழங்கப் பட்டமை இடைக்காலக் கல் வெட்டுகளால் அறியலாம். துறைக்கு அணித்தாக வளர்ந்துள்ள சண்பங்கோரைப்புதல் "துறைநணி" யெனப் பட்டது. "வெறியறி சிறப்பின்" (தொல்.புறத். 5) என்ற சூத்திரத்து, "தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தல்" என்பதற்கு இதனை யெடுத்துக் காட்டி, "மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழிதன்னொடு புணர்த்தவாறு காண்க" என்றும், "சீறூர் புரவாகக் கொள்ளேன் தண்ணடை கொள்வேன் எனத் தன்னுறு தொழில் கூறினா" னென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
-----------

298. ஆவியார்

ஆவியாரென்னும் இச் சான்றோர், திருவாவிநன்குடியிலிருந்து ஆட்சிபுரிந்த வேளிர் குடியிர். "முருக னற்போர் நெடுவேளாவி" (அகம்.1) என்றும், "முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி" (அகம்.61) என்றும் ஆவியர் குடி முதல்வன் சான்றோரால் குறிக்கப்படுகின்றான். அவனுடைய தலைநகர் பொதினி யெனப்படும். அதனைப் "பொன்னுடை நெடுநகர்ப் பொதினி" (அகம். 61) என்ப; அது பிற்காலத்தே பழனியென மருவிற்று. இந்த ஆவியர் வழியினர் பிற்காலத்தே நன்குடி வேளாளரென்றாகித் தென் பாண்டியில் வாழ்வாராயினர்.அவருட் பலர் தொல்பெயரான ஆவியாரென்ற பெயர் தாங்கியிருக்கின்றனர்.ஆலியாரென்றும் பாட வேறுபாடுண்டு. அதுவே பாடமாயின் அவர் ஆலியென்னும் சோழநாட்டு ஊரினரெனக் கோடல் வேண்டும் பல்லவர் காலத்தே திருமால் அடியாராகச் சிறப்புற்றிருந்த திருமங்கை மன்னன் ஆலியென்னும் ஊரினராவர்; அவரைத் திருவாலிநாடர் என்பதும் வழக்கம். இத் திருவாலி சோழ நாட்டில் சீர்காழியிலிருந்து திருவெண் காட்டுக்குச் செல்லும் வழியில் உளது. கரந்தை சூடிப் போர்க்குச் சென்ற மறவருள் ஒருவன் முந்துற்றுச் செல்லும் விருப்பினனாக, போரை முன்னின்று நிகழ்த்தும் வேந்தன் பிறனொருவனைச் செலுத்தினான். அதனால் மனவிதுப் படங்காத அவன், "உண்டாட்டுக் காலங்களிலெல்லாம் முன்பு வேந்தன் சிறப்புடைய கலங்கற்கள்ளையே எமக்குத் தந்து களிப்புச் சிறப்பில்லாத தேறலைத் தானுண்பான்; இப்பொழுது அப்பெற்றியோன் எம்பால் அன்பிலனாயினான் தெளிவாக; எவ்வாறெனின், போரில் நீ முந்திச் செல்க என்று ஏவானாதலால்" என்றான். அதனை உடனிருந்து கேட்ட ஆவியார் அவனுடைய மறமாண்பை நினைந்து இப் பாட்டின்கண் உருப்படுத்தி நிலை நாட்டியுள்ளார்.

    எமக்கே கலங்க றருமே தானே
    தேற லுண்ணு மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே யினியே
    நேரா ராரெயின் முற்றி
    வாய்மடித் துரறிநீ முந்தென் னானே.         5
    -----------

திணை: கரந்தை. துறை: நெடுமொழி. ஆவியார் பாடியது.

உரை: எமக்குக் கலங்கல் தரும் - எமக்குக் கலங்கிய கள்ளையே கொடுப்பான்; தான் தேறல் உண்ணும் மன் - தான் தெளிந்த தேறலையே யுண்பான் பெரும்பான்மையும் முன்பு; இனி இப்பொழுது நன்றும் இன்னான் மன்ற - பெரிதும் அன்பில்லா தவானான் தெளிவாக; வேந்து - வேந்தன்; நேரார் ஆரெயில் முற்றி பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து; வாய் மடுத்து உரறி - வாயிதழைக் கடித்து உரப்பி; நீ முந்து என்னான் - நீ முற்படச் செல்லென ஏவானாதலால்; எ - று.

மன், பெருமை. இனியெனவே முன்னென்பது வருவிக்கப்பட்டது. கலங்கிய கள் களிப்பு மிகுதியும் உடையது. தேறல் தெளிவும் இனிமையு முடையது. வேந்தனது அன்புடைமையை விளக்குதற்குக் "கலங்கல் தரும்" "தான் தேறல் உண்ணும்" என்றான். தன்னைமுந்திச் செல்க என ஏவாமையால்ஆராமையுற்றுக் கூறுதலின், "நன்றும் இன்னான் மன்ற" என்றான்; ஆயினும் வேந்தன் அன்பிலானல்லன் என்பது கருத்து.

விளக்கம்: தன்னோடொத்த வயவர் பலரையும் உளப்படுத்திக் கூறுதலால், "எமக்கே" எனப் பன்மையாற் கூறினான். இப்பொழுதும் வேந்தன் கலங்கலை வீரர்க்குத் தந்து தேறலைத் தானுண்டலிற்றீராமையின், மன் ஒழியிசையன்றென்று தெளிக. மன்னே என்பதற்கு மன்னன் என்று பொருள் கூறுதலுமுண்டு;அதற்கு மன்னனென்றும் வேந்தென்றும் பன்முறை கூறியது ஆராமைபற்றி யெனவறிக. போரெனில் முந்துற்றுச் செல்லும்மறமும்போர் வேட்கையும்மிகவுடையான் வேந்தனென்பது பெறப்பட்டது. நேரார் ஆரெயில் என்றது குறிப்பால், பகைத்த வேந்தர் மதிலகத்திலே ஓடுங்கிக்கிடக்குமாறும், கூற்று நிகழ்த்தும் மறவன் தானை அவரை முற்றிறிருக்குமாறும். இனி அரண் கொண்டு செய்யும் போரே நிகழவிருக்குமாறும் தெளிவாகின்றன.
------------

299. பொன்முடியார்

சங்ககாலத்துப் பெண்பாற் புலவர் பெருமக்களுள் இவரையும் ஒருவராகக்கருதுவர்; மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமை பெற்றுச் சான்றோரினத்துள் ஒருவராய் மறச்செயல்களைப் பாராட்டிப் பாடும் பண்பு மிக்கவர். இவர் சேரநாட்டுக் குட்டநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர். இவர் பெயரால் இந் நாட்டில் பென்முடி யென்றோர் ஊரும் உளது. இப்போது இப் பகுதி வெள்ளாத்திரி நாடு என மக்களிடையே வழங்குகிறது இங்குள்ள முதியோர் "இதனை முன்னோர் பொன்முடி நல்லூர் என வழங்கின" ரென மொழிகின்றனர். காக்கை பாடினியாராது ஊரைக் காக்கை யூரெனச் சேரநாட்டவர் வழங்கக் காண்கின்றோமாதலால் இவ்வூரைப் பொன்முடியாரதுஊர் எனக் கருதுதற்கு இடமுண்டாகிறது. ஒருகால் சிற்றரசனொருவற்கும் பெருவேந்தனொருவற்கும் போருண்டாயிற்று. அப் போரில் பெருவேந்தன் தோற்றோடினான். போரியல்பைக் கண்டிருந்த பொன்முடியார் வேந்தர்களின் போர்நலத்தைக் குதிரைகளின் மறப்பண்பை யெடுத்தோதுமுகத்தால் இப் பாட்டின்கண் சில சொற்களால் விளங்கக் கூறியுள்ளார். சிற்றரசன் குதிரைகள் எளியவுணவுண்டு வளர்ந்தன; பேரரசன் குதிரைகள் நெய்பெய்த உணவுண்டு வளர்ந்தன: போர்க்களத்தை யடைந்ததும் சிற்றரசன் குதிரைகள் கடலலைகளைப் பிளந்தேகும் தோணி போலப் பகைவர் படைவரிசைகளைப்போழ்ந்து சென்று போர் உடற்றின; பேரரசன் குதிரைகள் படையணி கண்டு அஞ்சி முன்செல்லாது முருகன் கோயிலின் பூப்பால் விலக்குண்ட மகளிர் தலை கவிழ்ந்து ஒதுங்கி நிற்பது போல ஒதுங்கிப் பின்னிடலாயின என நகையுண்டாகக் கூறுகின்றார்.

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
    கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
    நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருந்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி         5
    அணங்குடை முருகன் கோட்டத்துக்
    கலந்தொடாமகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.
    ---------

திணை: நெச்சி: துறை: குதிரை மறம். பொன்முடியார் பாடியது.

உரை: பருத்தி வேலிச் சீறூர் மன்னன்-பருத்தியை வேலியாகவுடைய சிறிய ஊர்க்கு மன்னனுடைய; உழுத்ததர் உண்ட ஓய் நடைப்புரவி - உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரை; கடல் மண்டு தோணியின் படைமுகம் போழ - கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும் தோணிபோலப் பகைவருடைய தானைத்திரளை இட முண்டாகப் பிளந்து சென்று போரைச் செய்ய; நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின் நெய் பெய்து மிதித்தமைத்த உணவையுண்ட ஒழுங்குறக் கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய; தண்ணடை மன்னர் தாருடைக் புரவி மருத நிலத்தூர்களையுடைய பெரு வேந்தர்களின் தாரணிந்த குதிரைகள்; அணங்குடை முருகன் கோட்டத்து வருத்து தலையுடைய முருகன் கோயிலில்; கலந்தொடா மகளிரின் புழங்கும் கலங்ககைத் தொடுதற்கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப்போல; இகழ்ந்து நின்ற போர்க்கஞ்சிப் பின்னிட்டு நின்றொழிந்தன; எ - று.

தார், கிண்கிணிமாலை. செல்வவுணவன்றாதலின், சீறூர் மன்னன் குரிரைகள் ஒய்ந்த நடையுடையன என்பார் "ஓய்நடைப் புரவி" யென்றார். முருகன் மகளிரை வருத்துவனென்ற கொள்கையால், "அணங்குடை முருகன்" என்றார். பூப்புக்காலம் கூட்டத்துக்காகா தென்பது பற்றி, பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத் தோன்று மகளிர்க்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின், அதன் வரவைத் தாம் விலகிநின்று நாணிக்காட்டும் இயல்புபற்றி, "கலந்தொடா மகளிரின் இயழ்ந்துநின் றவ்வே" யென்றார்.இனி ஈராறு நாட்கு நீவிர் எம்மை நீத்தகன்றுறைவது கூடாதென்பதுபோலும் புணர்குறி யாதலின், அதன் வரவு மகளிர்க்கு நாணடச் சாய்ந்து கவிழ்ந்து நிற்கும் நலம் பயப்பதாயிற்றென்னுமாம். ஓய் நடைப் புரவி படைமுகம் போழ, தாருடைப் புரவி இகழ்ந்து நின்றன என வினைமுடிவு செய்க.

விளக்கம்: குதிரை மறமாவது, "ஏமாண்ட நெடும்புரிசை, வாமானது வகையுரைத்தன்று" (பு. வெ. மா. 5:5) என வரும். பருத்தி வேலிச் சீறூர் எனவே, நீர்வளமின்றிக் கரிசில் மண்ணுள்ள நிலப்பகுதியில் உள்ள சீறூர் என்றும், அம் மட்பாங்கு உழுந்தும் கொள்ளும் விளைதற்கேற்ற தென்றும் தெளியப்படும். ஊறவைத்து அரைக்கப்பட்ட உழுந்து ஈண்டுச் சக்கையெனப்பட்டது; அதன் உமியே சக்கையெனப் பட்டதென்றும் கூறுவர். போர்க் குதிரைக்கு ஒய்நடை குற்றமாகும். நெய் பெய்து நறுமணமும் சுவையுமுடையதாகச் சமைத்த உணவென்றற்கு நெய்ம்மிதி யென்றார்.குதிரை யுணவுக்கு மிகச் சிறந்தது பன்றி நெய்யென்பர். தண்ணடை, நிலத்துக் கணியாகிய நெல்லுங் கரும்பும் விளையும் நீர்வளம் சான்ற நிலப்பகுதி. பூப்புத்தோன்றக் கண்ட மகளிர், அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கஞ்சி நீங்குவதுபோலக் குதிரைகளும் படை கண்டு அஞ்சிப் பின்னிட்டுப் பெயர்ந்தன என்றவாறாயிற்று.
-----------

300. அரிசில் கிழார்

வேந்தர் இருவர் தும்பை சூடிக் கடும்போர் புரிந்தனர். இருதிறத்து வீரரும் மறலி மைந்துற்று மண்டமர் உடற்றினர். ஒரு வீரன் தன் முன்பிறந்தோனை முன்னாளைப் போரில் மாற்றார் படையிடத்து மறவனொருவன் கொன்றானென்று வெஞ்சினங்கொண்டு வஞ்சினம் பேசி அவனைப் போர்க்கழைத்தான். அம் மறவனும் அதற்குப் பின்னிடானாய்த் தன்பக்கலுள்ள இளையரைத் தன் கேடகத்தைக் கொண்டுவந்து தருமாறு விரைந்தான். அது கண்ட வீரனொருவன் இருவர் திறலையும்தூக்கி நோக்கி "மறவா! நீ கேடகத்தைக் கொணருமாறு பணிக்கின்றாய்; அது கொண்டு நின்னை மறைப்பதை விடுத்துத் துறுகல்லைத் தோலாகக் கொண்டு மறைக்கினும் உய்குவாய்போலும்; நெருதல் நின்னால் எறியப் பட்டோன் தம்பி இந்நாள் கண் சிவந்து பேரூரில் காய்ச்சிய பெருங்கள்ளைப் பெறுதற்குத் தன் மனைக்கண் நுழைத்து ஒரு கலத்தைத் தேடுவானைப் போல நின்னைத் தேடி வருகின்றான், காண்" என்றுரைத்தான். இவ்வுரை போர் மறவர்க்கு நல்லூக்கங்கொளுத்தும் நல்லுரையாக இருப்பதுகண்ட சான்றோராகிய அரிசில்கிழார் இப் பாட்டினுள் அக்கருத்தை வைத்துச் சிறப்பித்துள்ளார்.

    தோறா தோறா வென்றி தோலொடு
    துறுகண் மறையினு முய்குவை போலாய்
    நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி
    அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்
    பேரூ ரட்ட கள்ளிற்         5
    கோரிற் கோயிற் றேருமா னின்னே.
    ---------

திணை: தும்பை: துறை: தானை மறம். அரிசில்கிழார் பாடியது.

உரை: தோல்தர தோல்தர என்றி - கேடகத்தைக் கொணர்ந்து தருக, கேடகத்தைக் கொணர்ந்து தருக என்று கேட்கின்றாய்; தோலொடு துறுகல் மறையினும் - கேடகத்தோடு துறுகல் லொன்றைக் கேடகமாகக் கொண்டு நின் மார்பை மறைப்பாயாயினும்; உய்குவை போலாய் - உய்குவாய் போல்கின்றாய்; நெருதல் எல்லை - நேற்றைப் பகலில்; நீ எறிந்தோன் தம்பி நின்னால் கொல்லப்பட்டோனுடைய தம்பி; அகல்பெய்குன்றியின் சுழலும் கண்ணன் - அகலின்கண் பெய்த குன்றிமணியுருளுதல் போலச் சுழலுகின்ற கண்ணையுடையனாய்; பேரூர் அட்ட கள்ளிற்கு - பெரிய ஊரின்கண் காய்ச்சியகள்ளைப் பெறும் பொருட்டு; ஓர் இல் கோயின் நின் தேரும் - மனைக்குட்புகுந்து ஒரு கட்கலயத்தைத் தேடுவதுபோல நின்னைத் தேடா நின்றான்; எ - று.

கலயம் அகப்படாதொழியாதவாறு நீ அவற்கு அகப்படாதொழி யாய் என்பதாம். அவனது படைக்குத் தன் மார்பு ஆற்றாதெனத் தோல் வேண்டுவதை இகழ்ந்து தோலேயன்றித் துறுகல் கொண்டு காக்கினும் நீ உய்தல் அரிதென்பான், "தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்" என்றான். தன் படையைப் பிறர்பால் கொடுத்து வேண்டுங்கால் அது பெறாது இறப்பவன் பேதையாமென்பதுபற்றி உய்குவையல்லை யென்னாது "உய்குவை போலாய்" என்றான். அகலிடத்துக் குன்றிமணி யுருளுவதுபோலக் கண்ணில் விழி சுழலுவது கூறியது சினமிகுதியால் வீரனுடைய கண்கள் சினத்தால் சிவந்திருக்கும் திறத்தையும் உணரத்தி நின்றது. கோய் - கள் முகக்கும் கலம். என்றி, போலாய்; தம்பி, கண்ணன், தேரும் என வினைமுடிவு செய்க.

விளக்கம்: தானை மறமாவது, "பூம்பொழிற் புறங் காவலனை யோம்படுத்தற்கு முரித்தென மொழிப" (பு. வெ. மா. 7:4) என்பது காண்க. மறையினும் என்புழி உம்மையை இசை நிறையாக்கி, மறையின் உய்குவை; இன்றேல் உய்தல் இன்று என வுரைக்கினும் அமையும். நீ எறிந்தோன் - நீ எறிய அதனால் உயிர் துறந்தோன். போர்ச் சினத்தால் சிவந்த கண்ணையுடையனாதலால், குன்றி யுவமமாயிற்று. இவ்வுவம நயத்தை இனிது துய்த்த பரஞ்சோதியார், "வென்றிக் கணத்தை விடுத்தானகல் மீதுபெய்த, குன்றிக்கணம்போற் சுழல் கண்ணழல் கொப்புளிப்ப" (திருவிளை. 5:30) என்று பாடுகின்றார். ஒருமை, கலயத்துக் கேற்றுக.
-------------

301. ஆவூர் மூலங்கிழார்

இரு வேந்தர் பெரும்படை கொண்டு பொரத் தொடங்கினர். அப்போரில் பகை வேந்தன் பாசறையமைந்து அதனைச் சுற்றி நல்ல முள்வேலியிட்டு மிக்க பாதுகாவலில் இருந்தான். ஏனை வேந்தன் போர் முகத்து நின்று போரை நடத்தினான். போர் கடுமையாக நடந்ததாயினும் பகை வேந்தன் முன் வரவில்லை. அது கண்ட தானைவீரன், பகைவேந்தன் பாசறையோரைப் பார்த்து, "சான்றோர்களே! நும் பாசறையை முள்வேலியிட்டு அதனுள்ளே நும்முடைய வேந்தனைமயும் களிறுகளையும் நன்கு காக்கின்றீர்கள்; எத்தனை நாள் இவ்வாறு தங்குவதாகக் கருதுகின்றீர்கள்; எத்தனை நாள் தங்கினும் அத்தனை நாளும் தம்மை வேல் முதலிய படையெறிந்து தாக்காதாரைத் தாம் மேற்சென்று தாக்குவதென்பது யாங்குளது? தன்மேற் படையெறிந்த வீரர் தனக்கு நிகரன்மையால் எங்கள் இறைவன் மேற்சென்ற அவரை எறியக் கருதிற்றிலன். அவன் கருதுவதனை நும்மில் அறிந்துவர் யார்? அறியாது யாம் பலராகவுள்ளேம் எனத் தருக்குதலை யொழிவீராக. இப்போது இரவாதலின் எங்களுடைய தலைவன் பாசறைக்குச் சென்றுள்ளான். அவன் தன் வேலை நும்முடைய வேந்தன் ஊர்ந்துவரும் யானையை யெறிதற்பொருட்டு ஏந்துவனே தவிரப் பிறர் பொருட்டு ஏந்தும் கருத்துடையனாகத் தோன்றுகின்றானில்லை என உணர்வீர்களாக" என்று கூறினான். அதனை ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் இப் பாட்டின்கட் குறி்த்துள்ளார்.

    பல்சான் றீரே பல்சான் றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரி னிட்ட வருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைது மரசு மோம்புமின்         5
    ஒளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
    எனைநாட் டங்குநும் போரே யனைநாள்
    எறியா ரெறிதல் யாவண தெறிந்தோர்
    எதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனால்
    அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே         10
    பலமென் றிகழத் லோம்புமி னுதுக்காண
    நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபாராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக் கல்ல         15
    தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.
    ------

திணையும் துறையு மவை: ஆவூர் மூலங்கிழார் பாடியது.

உரை: பல்சான்றீரே பல்சான்றீரே - பலசான்றவீரே பலசான்ற வீரே; குமரி மகளிர் கூந்தல் புரைய - மணமாகாத நலங்கனிந்த மகளிருடைய கூந்தல்போல; அமரில் நட்ட அருமுள் வேலி - போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த; கல்லென் பாசறைப் பல்சான்றீரே-கல்லென ஆரவாரிக்கும் பாசறையிலுள்ள பலசான்றவீரே; முரசு முழங்கு நும்முடைய அரசனையும் நன்கு பாதுகாப்பீராக; ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின் - விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய நும்முடைய களிறுகளையும் நன்கு காப்பாற்றுவீராக; எனன நாள் நும் போர் தங்கும் - எத்தனை நாட்கள் நும்முடைய போர் இங்கே நிகழும்; அனை நாள் - அத்தனை நாளும்; எறியார் எறிதல் யாவணது - தன்மேற் படைகளை எறிந்தோரையும் எங்கள் இறைவன் தனக்கு நிகராகாமையான் எகிரே சென்று எறிவதிலன்; அதனால் - ஆதலால்; அவன் கண்ணிய பொருள் அறிந்தோர் யார் - அவள் கருதிய பொருளை நும்முள் அறிந்தவர் யார், அவர் எம்முன் வருக; பலம் என்று இகழ்தல் ஒம்புமின் - யாம் பலராகவுள்ளோம் எதை் தருக்கி இகழ்வதை ஒழிவீராக; உதுக்காண் - இதனைப் பார்; நிலன் அளப்பன்ன - நிலத்தைத் தாவடியிட்டளப்பது போல; குறுநெறி நில்லா - மிகக் குறுகிய வழியிலும் நில்லாது விரைந்து பாய்ந்தோடும்; வண்பரிப் புரவி பண்பு பாராட்டி - வளவிய செல வினையுடைய குதிரையின் போர்ப் பண்புகளைப் புகழ்ந்துகொண்டு; எல்லிடைப் படர்தந்தோன் - இரவுப்போது வந்தயைின் தன் நெடுமனை சென்றுள்ளான், கல்லென ---; வேந்தூர் யானைக் கல்லது - நும்முடைய வேந்தன் ஊர்ந்துவரும் யானையை எறிவதற்கன்றி; தன் இலங்கிலை வேல் ஏந்துவன் போபான் - தன்னுடைய விளங்குகின்ற இலை முகத்தையுடைய வேலைக் கையில் ஏந்தாள் போல்கின்றானாகலான் நாளையே நும் வேந்தனை வரவிடுமின்; எ - று.

பல் சன்றீரே, அரசும் ஓம்புமின், களிறும் போற்றுமின், எனை நாள் தாக்கும் அனை நாள் எறிதல் யாவணது; எறிதல் செல்லானாதலால், கண்ணிய பொருள் அறிந்தோர் எம்முன் வருக; ஓம்புமின்; உதுக்காண் பாராட்டிப் படர்ந்தான்; ஏந்துவன் போலான் என வினைமுடிவுசெய்க. குமரியின் கூந்தல் பிறரால் தீண்டப்படாதவாறு போல முள்வேலி அணுகப்படாதென்பது தோன்ற, "குமரி மகளிர் கூந்தல் புரைய" என்றார். அரசனையும் களிற்றையும் சான்றோர் பெரிதும் பேணிக் காப்பதறிந்து கூறுகின்றானாகலின், "நும்மரசும் ஓம்புமின், நும் களிறும் போற்றுமின்" என வற்புறுத்துவான் போல் இகழ்ந்தான். மேல்வந்த வேந்தனே முதற்கண் போர் தொடுக்கவேண்டியவனாக, அது செய்யா திருந்தமையின், "எறியாரெறிதல் யாவணது" என்றும், நிகர்ந்து மேல் வந்த வேந்தனையல்லது நிகராகாதாரோடு பொருதல் மானமுடைய வேந்தர் செயலன்மையின் "எறிந்தோர் எதிர் சென்றெறிதலும் செல்லான்" எனத் தன்னிறைவனை மிகுத்தோதினான். எதிர் வாரின்மையால் செயல் பிறிதின்மையின், குதிரைகளின் பண்புகளைப் பார்த்துப் பாராட்டினான். எங்கள் இறைவன் என்பான், "புரவிப் பண்பு பாராட்டி" யென்றான். குடங்கொண்டான் வீழின்குடம் வீழ்தல் தானே பெறப்படுதல் போல வேந்தூரும் யானையை வீழ்த்த வழி வேந்தனை வீழ்த்துவது சொல்லாமே தோன்றுதலின், "வேந்தூர் யானைக்கல்லது ஏந்துவன் போலான் தன் இலங்கிலைவேல்" என்றான்.

விளக்கம்: தானை மறமாவது, "பூம்பொழிற் புறங் காவலனை, ஓம் படுத்தற்கு முரித்தென மொழிப (பு. வெ. மா.7:4) என வரும். அருமுள்வேலி யென்றதன்கண், அருமையை வேலிக்கேற்றி, கடத்தற்கரிய வேலியென வுரைக்க. "கல்லென் பாசறை" யெனச் சிறப்பித்தார், கல்லென்னு மோசையல்லது வெற்றிக்குரிய விறல் காணப்படாமை குறித்தற்கு. பல் சான்றீர் என்புழிப் பன்மை சான்றோர் மேனின்றது. எறியாரை எறியாத வேந்தன்முன் எறிவதன்றி எத்தனை நாள் தங்கினும் பயனின்றென்பார், "எனைநாள் தங்கும் நும் வோரேயனைநாள், எறியா ரெறிதல் யாவனது" என்றார், "எறிந்தோர் எதிர் சென்றெறிதலும் செல்லான்" என்றது, எதிர்சென்றெறியும் படையை விலக்கித் தற்காப்பொன்றே செய்தானேயல்லது தான் மேற்சென்றெறிந்திலன் என்றும், எனவே, எதிர்சென்றறிந்தோர் நிகர்க்கும் திறனில்லாதவரென்றும் அறிக. "பலமென்றிகழ்த லோம்புமின்" என்பது, பலராய்க் காக்கைபோற் கூடிக்கொண்ட நீவிர் கரைவது பயனின்று நிலத்தின் எல்லையை யளந்து காண்டற்கு வகுத்த நெறிபோலும் நெறியெனவும், எல்லை காணப்படாமையின் நில்லாது நெடுகும் நெறியெனவும், அதுவும் அகலிதாகவன்றிக் குறுகிய தெனவும் கொள்ளினும் அமைமயும். இந்நெறியினும் அயராது சேறல்பற்றி, "வண்பரிப் புரவி" யென்றாரென்ற கொள்க. வேந்தரூரும் யானையை யெறிதலில் வீரர்க்கு வேட்கை மிகுதி யென்ப. "கட்டியன்ன காரி மேலோன், தொட்டது கழலே கையது வேலே, சுட்டியதுவுங் களிறே ஒட்டிய, தானை முழுதுடன் விடுத்துநம், யானை காமினவன் பிறிதெறியலனே" (புறத். 1372) என வேந்தனொருவன் தானையைப் பணிப்பது காண்க. "இகழத் லோம்புமின் புகழ்சான் மறவீர், கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசை, பண்ணமை புரவிப் பண்பு பாராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென, வேந்தூர் யானைக்கல்ல தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே" (புறத். 1370) என்ற பாட்டு இதனோடொத்திருத்தல் காண்க.
---------

302. வெறிபாடிய காமக்காணியார்

புன்புலங்கள் சூழ்ந்த சீறூர்களையுடைய தலைமகனொருவன், வேந்தரிருவர் தும்பை சூடிப் பொருத போர்க்களத்தில் ஒரு வேந்தன் பக்கலில் தானைத்தலைவனாய் நின்று கடும்போர் புரிந்தான். வெறிபாடிய காமக்காணியார் அவன் போர்த் திறத்தைக் காணும் பேறு பெற்றார். அத் தலைவனுடன் குதிரைமேல் வீரரும் போர் செய்தனர். குதிரைகள் வளைத்துவிட்ட மூங்கில்கள் மேலெழுவதுபோலப் போரில் தாவித் துள்ளிப் பாயந்து வென்றி விளைத்தன. அவன் போரிற்பெற்ற பொற் பூக்களை அவனுடைய விறலியர் கூந்தலில் அணிந்து கொண்டனர். புகழ்பாடிப் பரவிய பாணர்களுக்கு அவன் ஊர்கள் பல நல்கினான். இப்பெற்றியோன் போரில் எறிந்து வீழ்த்திய களிறுகளை யெண்ணின் மழைத்துளியினும் பலவாயிருந்தன. இக்காட்சி இப் பாட்டின்கண் அழகுறப் பாடப்பட்டுளது.

    வெடிவேய் கொள்வது போல வோடித்
    தாவு புகளு மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் காதை சுற்றிய
    ஐதமை பாணி வணர்கேர்டுத் சீறியாழ்க்         5
    கைவார் நரம்பின் பாணர்க் கோக்கிய
    நிரம்பர் வியல்பிற் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்குங் காளை யூக்கி
    வேலி னட்ட களிறுபெயர்த் தெண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்         10
    தண்பெய லுறையு முறையாற் றாவே.
    ---------

திணை: அது; துறை: குதிரைமறம். வெறிபாடிய காமக்காணியார் பாடியது.

உரை: வேய் வெடி கொள்வது போல - வளைத்து விட்ட மூங்கில் மேனோக்கி யெழுவது போல; தாவுபு ஒடி உகளும் மா - பாய்ந்தோடித் திரியா நின்றன குதிரைகள்; பூ - பொற்பூக்கள்; விளங்கிழை மகளிர் கூந்தல் கொண்ட - விளங்கிய அணிகளை யணிந்த விறலியர் கூந்தலை இடங்கொண்டன; நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய நரந்தப் பூவால் பல வட்ங்களாகத் தொடுக்கப் பட்ட மாலை சுற்றப்பட்ட; ஐதமை பாணி மென்மையாக அமைந்த தாளத்துக்கேற்ப; வணர்கோட்டுச் சீறியாழ் - வளைந்த கோட்டையுடைய சிறிய யாழினுடைய; கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய - கைவிரலால் இசைத்தொழில் புரிய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலையுடைய பாணர்களுக்குக் கொடுக்கப்பட்டன்; நிரம்பர் இயவின் கரம்பைச் சீறூர் - குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள்; நோக்கினர் செகுக்கும் காளை - தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளைபோல்வானாகிய அவன்; ஊக்கி வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் - ஊக்கம் கிளர்ந்து தன் வேலாற் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்குமிடத்து; விண்ணிவர் விசும்பின் மீனும் - முகில்கள் பரந்துலவும் விசும்பிலுள்ள விண்மீன்களும்; தண் பெயல் உறையும் -குளிர்ந்த மழை சொரியும் துளிகளும்; உறையாற்றா - அளவிடற்காகாக; மா உகளும்: பூ கூந்தற் கொண்ட; சீறூர் பாணர்க் கோக்கிய; காளை அட்ட களிறு எண்ணின் மீனும் உறையும் உரையாற்றா எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கோதை சுற்றிய சீறியாழ் என இயையும். வார், வார்தல்; சுட்டுவிரற் செய்தொழில் என்பர் அடியார்க்கு நல்லார்: இசைக் கரணம் எட்டனுள் ஒன்று காளைபோல்வானைக் காளை யென்றார்.

விளக்கம்: வளைத்து விட்ட மூங்கில் சிவ்வென்று மேலெழுதல் போலக் குதிரையும் மேலெழுந்து பாயும் என்றார்; பிறரும் "விட்ட குதிரை விசைப்பின்னன், விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்" (குறுந்-74) என்று கூறுதல் காண்க. சீறூர்க்குச் செல்வோர் சிலராதலின், செல்லும் வழியும் மிகக் குறுகியிருக்குமாகலின், "நிரம்பாவியவு" எனப்பட்டது. இயவு - வழி. "வரம்பிடை விலங்கி வழங்குதற்கரிதாய், நிரம்பாச் செலவின் நீத்தருஞ் சிறுநெறி" (பெருங். 1:19:30-1) என்று பிறரும் கூறுவது காண்க. "நிரம்பா வியல்பின்" என்று பாடமாயின், நிரம்ப விளையாக வியல்பினையுடைய கரம்பை யென்றுரைத்தக் கொள்க. "நோக்கினர்ச் செகுக்குங் காளை" என்றதனால் நோக்கத்தின்கண் செகுத்தற்குரிய பகைமைக் குறிப்புண்மை பெற்றாம்; "எள்ளுநர்ச் செகுக்குங் காளை" (புறத். 1375) என்பதனால்,களிறே ஈண்டு எண்ணப்பட்டன. அட்டகளிறுகள் சிதைந்து வேறாகித் குவிந்து கிடத்தலின், கிடந்தாங் கெண்ணலாகாதென்பார், "பெயர்த் தெண்ணின்" என்றும், வீழ்வன பலவாய் எண்ணலுறுவார் எண்ணத்தை ஈர்த்துக்கொள்ளுதலால், வீழ்ந்தவற்றை எண்ண வியலாதென்பதற்கு "எண்ணின்" என்றும், தொகையாக நோக்குமிடத்து விண்மீன் தொகையும் மழைத்துளியின் தொகையும் உறையிடற்காகா என்பார். "விண்ணிவர் விசும்பின் மீனும் தண்பெயலுறையும் உறையாற்றா" என்றும் கூறினார்.
------------

303. எருமைவெளியனார்

போர்க்களமொன்றில் தாளை வீரரிடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஆசிரியார் எருமைவெளியனார் கண்டு வந்தார். அவற்றுள் ஒரு நிகழ்ச்சி அவர் கருத்தைக் கவர்ந்தது. வீரனொருவன், பகை வேந்தன் காண அவனது கடல்போன்ற தானைப் பரப்பைக் கடலைப் பிளந்தேகும் தோணி போலப் பிளந்து சென்று பகைவருடைய களிற்றியானைகளைக் கொன்று வீழ்த்தினான். களிற்றின் பிரிவாற்றாக மடப்பிடிகள் புலம்பிப் பிளிறின. மறு நாள் அவ்ீகூரன் படையணி்யில் முன் நிற்கையில் பகைவர் படையிலிருந்து ஒரு காளை குதிரையொன்றின்மேல் வந்தான். வருகையில் அவனை வீரர் பலர் எதிர்த்து மார்பிற் புண்பட்டு வீழ்ந்தனர். இங்ஙனம் வென்றி மேம்பட்டு வேலை அலைத்துக்கொண்டு வருபவன் தன்னை நோக்கி வருதலை அவ்வீரன் அறிந்து, "இவன் என்னைப் பொருது வென்றி காண வருகின்றான். வருக" என்று மறத்தீக் கிளர மொழிந்தான். அதனைக் கேட்ட இச் சான்றோர் அவனது மறமாண்பை வியந்து இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

    நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
    உள்ள மொழிக்குங் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த
    வெந்திற லெஃக நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருதை         5
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே.
    -----------

திணையும் துறையும் அவை. எருமைவெளியனார் பாடியது.

உரை: நிலம் பிறக்கிடுவது போல் குளம்மபு கடையூஉ - நிலம் பின்னிடுவதுபோலக் காற்குளம்பை யூன்றி; உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான்மேல் - காண்போர் ஊக்கத்தைக் கெடுக்கும் விரைந்த செலவினையுடைய குதிரைலே் வரும்; எள்ளுநர்ச் செகுக்கும் காளை - தன்னை யிகழும் பகைவரைக் கொல்லும் காளையாவான்; கூர்த்த வெந்திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப ஆட்டி - கூரிய வெவ்விய வலியினைமயுடைய வேலால் எதிர்ந்தார் மார்பைக் குத்திப் புண் செய்து அலைத்துக்கொண்டு; காணிய வரும் காண்டற்கு வருகின்றான்; நெருநை - நேற்று; உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர் - புகழமைந்த தலைமையினையுடைய வேந்தர்கள் காண; கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து - கரையை யலைக்கும் கடலைப் பிளந்து செல்லும் தோணியைப்போலப் பகைவர் படையைப் பிளந்து; அவர் கயந்தலை மடட்பிடி புலம்ப - அவர்களுடைய மெல்லிய தலையையுடைய இளமையான பிடியானைகள் தனிமையுற்று வருந்த; இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கு - விளங்குகின்ற கோட்டினையுடைய களிறுகளைக் கொன்ற என் பொருட்டு; எ - று.

குதிரை செல்லும் கடுமையால் நிலம் பின்னிட்டோடுவது போறலின், "நிலம் பிறக்கிடுவது போல்" என்றார். விரைந்த செலவால் காண்போர் மனமாகிய உள்ளமும் நிகராமை செய்யும் என்றுரைப்பாருமுளர். விளைத்தென்பது விளைப்பவென நின்றது. என்னொடு பொருதுவென்றி காணவருகின்றான். வருக என்பான், "காணிய வரும்" என்றான். "வேந்தர் முன்னர்" என்றான், தங்களுடைய கண் முன்னே யான் செருவிளைப்பவும் அவர் அஞ்சி யெதிர்ந்திலரென்பது வற்புறத்தற்கு. கயந்தலை யென்றதற்குப் பெரிய தலை யென்றுரைப்பினு மமையும். நெருதை வேந்தர் முன்னர், போழ்ந்து, எறிந்த எற்கு மான்மேல் காளை எஃகம் ஆட்டிக் காணிய வரும் என வினை முடிவு செய்க.

விளக்கம்: நிலவுலகு பிற்பட்டு நிற்ப மேலுலகு செல்வதுபோலக் காற் குளம்பை யூன்றி மேனோக்கிப் பாய்ந்தோடுவதுபோற் சேறலின், "நிலம் பிறக்கிடுவதுபோற் குளம்மபு கடையூஉ" என்றார். கடையூஉ - கடைந்து, கடவி யென்பது பொருளாயின் கடைஇ யென்று பாட மிருத்தல் வேண்டும்: "ஊக்கறக் கடைஇ" (பதிற் 31) எனவருதல் காண்க. செகுத்து வருவானைச் "செகுக்கும்" என்றார். கூர்த்த எஃகம் என இயையும்; வெந்திற்லென்பது இடைநிலை. விளைப் வென்பதனை விளைத்தென்பதன் திரிபாக்காதவிடத்து, காளையாயினான், அதனைத் திரித்துக் கொண்டு வாராநின்றான் என்பது போந்த பொருளாகக் கொள்க. காணுதல், வெற்றி காண்பது. காணிய: செய்யியவென்னும் வினையெச்சம். உரை, புலவர் பாடும் புகழ். கரையை மோதியலைக்கும் கடற்றிரைகளை அக் கரையினின்று செல்லும் தோணி போழ்ந்து செல்வதுபோல, எம்முடைய தானையொடு பொரற்கு அவனுடைய அணியணியாய்த் திரைத்து வந்த தானையை யான் பினந்து சென்று யானைகளை யெறிந்தேன் என உவமம் விரித்துரைத்துக் கொள்க. "தடவுங் கயவும் நளியும் பெருமை" (தொல். உரி. 28) என்பதனால் பெரிய தலை யென்றலும் உண்டு. களிறு பட்டவழிப் பிடியானைகள் புலம்மபு மென்றார்: "யானைமயும், புல்லார் பிடிபுலம்பத் தன் கண் புதைத்ததே, பல் யானை பட்ட களத்து" (புறத். 1433) என்று பிறரும் கூறுவது காண்க. நச்சினார்க்கினியர் இதனைக் "குதிரை நிலை" யென்னும், துறைக்கு (தொல். புறத். 17) எடுத்துக் காட்டுவர்.
----------

304. அரிசில்கிழார்

வேந்தர் இருவர் தும்பை சூடிப் போர் உடற்றினர். போர் நிகழுங்கால், களஞ்சென்று போர் செய்யவேண்டிய முறைவரப்பெற்ற தானைத் தலைவனொருவன் ஆங்குள்ள குதிரைகளுள்விரைந்து செல்லும் வன்மையுடைய குதிரையைத் தேர்ந்து அதனைத் தான் இவர்ந்து செல்லக் கருதி ஒப்பனை செய்து கொண்டிருந்தான். பகைவருடைய ஒற்றர் அவன் செயலை ஒற்றிச் சென்று தங்கள் பாசறையில் உள்ள தலைவர்களைக்கண்டு, போர்க்கு வரும் முறையுடைய வீரர் தலைவன் தமையனை நேற்று நம் படைவீரருட் சிறந்தோனொருவன் எறிந்து கொன்றான்; அது கண்டு அத்தலைவன், "என் தமையனை யெறிந்தவன் எவனோ அவனையும் அவன் தம்பியையும் நாளைக் கொன்றல்லது உணவு கொள்ளேன்" என்று நெடுமொழி கூறினன்; கூறியவாறே இன்று "தனக்குரிய குதிரையை யாராய்ந்து கொண்டிருக்கின்றார்" னெனத் தெரிவித்தனர். அவ்வுரைகளைக் கேட்டிருந்த பாசறையிலுள்ளார் "அவன் கூறியது இரண்டாகா" தெனத் தம்முட் பேசிக்கொண்டதோடு அஞ்சி நடுக்கமும் கொண்டனர். இச் செய்தியைச் சான்றோராகிய அரிசில்கிழார் அறிந்தார். அவர் அத்தானைத்தலைவனை முன்பே அறிந்தவராதலின் அவன் பாற்சென்றார்; அவர் கேள்வியுற்றவாறே, அவன் தனக்குரிய குதிரையைப் பண்ணுதற்கு விரைகுவது கண்டார்; மாற்றாருடைய ஒற்றர் இவண் வந்து ஒற்றிக்கொண்டு தம் பாசறைக்குச் சென்றுரைத்ததும் அப் பாசறையொர் அஞ்சி நடுங்கினதும் அவற்கு எடுத்துரைப்பவர், இஃது அத் தலைவன் புகழை நிலைநாட்டும் நீர்மையுடையதாதலை யெண்ணி இப்பாட்டினைப் பாடியுள்ளார். போர் செய்யும் வேந்தர் பெயரும் தானைத்தலைவன் பெயரும் கிடைத்தில.

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனி களைஇயர் நாரரி பருகி
    வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயே நெருதை
    எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு         5
    நாளைச் செய்குவெ மைரெனக் கூறிப்
    புன்வயி றருத்தலுஞ் செல்லான் பன்மான்
    கடவு மென்ப பெரிதே யதுகேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கிரும் பாசறை நடுங்கின்         10
    றிரண்டா காதவன் கூறிய தெனவே.
    -------

திணையும் துறையு மவை. அரிசில்கிழார் பாடியது.

உரை: கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி - வளைத்த குழையணிந்த தேவியர் மாலை சூட்டி மகிழ்விக்க; நடுங்கு பனிகளைஇயர் நாரரி பருகி - நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் கோக்குதற்காக நாரால் வடிக்கப்பட்ட நறவையுண்டு; வளி தொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி - காற்றின் கடுமையைத் தனக்கு நிகராகாமை செய்யும் வளவிய, செலவையுடைய குதிரையை; பண்ணற்கு விரைதி நீ - போர்க்கேற்பச் சமைத்தற்கு விரைகின்றாய் நீ; நெருதை - நேற்று; என் முன் தப்பியோடும்; நாளை ஒராங்கு செய்குவென் அமர் எனக் கூறி- நாளை ஒருசேரப் பொருது அழிப்பேன் என்று வஞ்சினம் கூறி; புன் வயிறு அருத்தலும் செல்லான் - வயிற்றுப் பசிதீரச் சிறிதுணவு தானும் உண்ணானாய்; பன்மான் பெரிது கடவும் என்ப - பல குதிரைகளையும் பெரிதும் ஆராய்கின்றான் என ஒற்றர் கூறுவர்; அது கேட்டு - அவ் வொற்றுரை கேட்டு; வலம்படு வெல்லும் போரையுமுடைய வேந்துனுடைய; இலங்கிரும் பாசறை - விளங்குகின்ற பெரிய பாசறையிலுள்ளார்; அவன் கூறியது இரண்டாகாதென நடுங்கின்று - அவன் கூறிய வஞ்சினம் சொல்வேறு செயல்வேறென இரண்டாகாதென்று நடுங்குகின்றனர்; எ - று.

சூட்டி யென்றதனைச் சூட்டவெனத் திரிக்க. தன்னையுண்டார்க்கு வெம்மை யுண்டுபண்ணுவதுபற்றிக் கள்ளுண்டதனை, "நடுங்குபனிகளைஇயர் நாரரி பருகி" யென்றார்.அமர்செய்குவனென்றது, அமரில் கொல்வேனென்னும் குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென்னும் குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென வஞ்சினம் கூறினமை விளங்க ‘புன்வயிறருத்தலும் செல்லான்; என்றார். உணவினது புன்மை வயிற்றின் மேனின்றது. புன்மை ஈண்டுச் சிறுமை மேற்று. பகைவேந்தனை "வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்" என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நீ சூட்டப்பருகி விரைதி; கடவும் என்ப; அது கேட்டுப் பாசறை, இரண்டாகாதென நடுங்கின்று என விளைமுடிவு செய்க. பாசறை: ஆகுபெயர்.

விளக்கம்: போர்க்குச் செல்லும் வீரர்க்கு அவர்தம் மகளிர் சாந்தணிந்து மாலைசூட்டி வழிவிடுவது பண்டையோர் முறை. அது விளங்க, "கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி" யென்றார்; ஆகலாற்றான் சூட்டி யென்றது சூட்டவெனத் திரிக்கப்பட்டது. குளிர் காலத்திற் போர்க்குச் சேறல் தோன்ற, "நடுங்குபனி களைஇயர் நாரரி" பருகினானென அறிக. நாரால் வடிக்கப்படுவது பற்றிக் கள் "நாரரி" யெனப்பட்டது. (புறம். 24) என்பதனலறிக. விரைந்தேகுந் தொழிலில் காற்றுச் சிறந்ததாயினம், அதன் தொழிலினும் குதிரையின் செலவாகிய தொழில் மேற்படுமாறு விளங்க, "வளிதொழி லொழிக்கும் புரவி" யென்றும், ஒழித்தற்கு ஏது கூறுவார், "வணபரிப் புரவி" யென்றும் கூறினார். இத்தகைய குதிரையைத் தேர்ந்து அதனை யிவர்ந்து போர்க்குச் செல்லக்கருதி அதனைச் சமைக்கின்றானாகலான், "பண்ணற்குவிரைதி நீ" என்றார். நின் விரைவை ஒற்றிக்கண்ட ஒற்றார் வேறாகக் கருதித் தம் பாசறையோர்க்கு உணர்த்தினரென்பார், "நெருதை...என்ப" என்றார். "இன்றினிது நுகர்ந்தனமாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்" (பதிற். 58) என்று வஞ்சினம் கூறுவது மறவர் இயல்பாதலின், பகைவரொற்றர் இவ்வாறு கருதிக்கொண்டு சென்று பாசறையோர்க் குரைத்தொழிந்தனரென்று கொள்க. வலம்படு முரச என்றதற்குத் தன் முழக்கத்தாலே பகை வேந்தர் வெருவியோடப்பண்ணித் தன்னையுடைய வேந்தர் போரைச் செய்யாமே வெற்றி தோற்றுவிக்கும் முரசு என்று உரை கூறுதலுமுண்டு. வெல்போர் என்றதற்கு இதுகாறும் செய்து போந்த போர்களிலெல்லாம் வெற்றியே பெற்றுச் சிறந்த போர் என்று உரைத்தலுமுண்டு. இவ்வகையால் போர்ப்புகழ் விள்கும் பாசறை யென்பார், "இல்ங்கிரும் பாசறை" யென்றார். என்றது, இத்துணைச் சிறந்த பகைவரும் நின் விரைவுகண்டு அஞ்சி நடுக்குறுகின்றனர் என்றவாறாம்.
-----------

305. மதுரை வேளாசான்

வேள் சான் என்னும் பெயர் வேளாசான் என மருவிற்று. மதுரையில் பார்ப்பனரிடையே வேள்வித் தொழிற்கு ஆசானாக இருந்ததனால் இவர் மதுரை வேளாசான் எனப்படுவாராயினர். வேள்வி வேள்வு எனவும் வழங்கும் "விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால்" (சீவக. 138) என்று தேவர் வழங்குவது காண்க. ‘இவரது இயற்பெயர் இறந்துபோயிற்று. ஒருகால் வேந்தரிடையே போர்க்குரிய பகைமையுண்டாயிற்று. இரு வேந்தரும் போர்க்கு வேண்டும் படைகளைத் தொகுத்தனர். இருவரும் போர்க்கெழாவாறு தகுவன கூறுதற்குப் பார்ப்பானொருவன் தூதனாய்ச் சென்றான். முற்பட்ட வேந்தனையடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய வேந்தனை யடைந்தான். அதைற்குள், நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகுவாராயினர். பகைவர் மதில்கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்கமைந்திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு போரைக் கைவிடற்கு வேண்டுவன பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினன். வேந்தன் உடன் பட்டான்; விடிந்தது பொழுது; ஏணியும் சீப்பும் களையப்பட்டன; தானைவீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். அது கண்ட வேளாசானுக்கு அப் பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது. அதனை இப் பாட்டின் கட் பொருளாக வைத்துரைத்துள்ளார்.

    வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
    உயவ லூர்திப் பயலைப் பார்பபான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    கொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
    ஏணியுஞ் சீப்பு மாற்றி         5
    மாண்வினை யானையு மணிகளைந் தனவே.
    ---------

திணை: வாகை; துறை; பார்ப்பன வாகை. மதுரை வேளாசான் பாடியது.

உரை: வயலைக் கொடியின் வாடிய மருங்குல் - வயலைக் கொடி போல வாடிய இடையினையும்; உயவல் ஊர்தி - வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோலும் நடையினையும்; பயலைப் பார்ப்பான் - இளமையினையு முடைய பார்ப்பான்; எல்லி வந்து நில்லாது புக்கு - இரவின்கண் வந்து நில்லாமல் உள்ளே சென்று; சொல்லிய சொல்லோ சில - சொல்லிய சொற்களோ பலவல்ல சிலவே; அதற்கு - அதன் பயனாக; ஏணியும் சீப்பும் மாற்றி - ஏணியையும் சீப்பையும் நீக்கி; வினைமாண் யானையும் மணி களைந்தன் - போர் பல செய்து மாட்சிமைப்பட்ட யானைகளையும் அவற்றின் பக்கத்தே கட்டப்பட்ட மணிகளையும் நீக்கிவிட்டனர்; எ - று.

வயலைக்கொடி இக்காலத்தே வசலைக்கொடியென வழங்கும். ஊர்ந்து செல்வத ஊர்தி; ஈண்டு நடைக்காயிற்று. இதனைக் "குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு" செல்லுதல் என்பர் பேராசிரியர். "சொல்லிய சொல்லோ சிலவே" என்றதனால், செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பல வென்பது விளங்கற்று. மதில் கோடற் கேணியும் மதில் வாயிலைக் காத்தற்குச் சீப்பும் கருவிகளாம். சீப்பென்றது, உள்வாயிலில் கதவுக்கு என்பதும், ஏனைப் படை வகைகளும் கலைந்து தத்தம் இடம் சேர்ந்தன என்பதும் பெறப்படும். பார்ப்பான் வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சில; அதற்கு மாற்றிக் களைந்தன எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: இது பார்ப்பன வாகையெனத் துறை வகுக்கப்பட்டுளது; பார்ப்பன வாகையாவது, "கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று" (பு. வெ. மா. 8 : 9) எனப் படுகின்றது. இது பார்ப்பன முல்லை பெயன்றிருப்பின் சீரிதாம். பார்ப்பன முல்லையாவது: "கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கு, நான்மறையோ னலம் பெருகு நடுவுநிலை யுரைத்தன்று" (பு . செ. மா. 8:18) என வரும். இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும், போரொழிந்ததென்றம் கூறுவது. இது பார்ப்பனமுல்லையாதலை வற்புறுத்துகின்றது. வினைமாண் யானை யென்றது, போர் வினையில் நன்கு பயின்று மாட்சியுற்ற யானை யென்றவாறு. "வினை நவில் யானை," "தொழில் நவில் யானை," (பதிற். 82, 84) என்ற சான்றோர் யானையைச் சிறப்புத்தல் காண்க. "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூதுசென்றவாறு உணர்க" (தொல். அகத்,26) என்றும் "இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறம் கண்டோர் கூறியது" (தொல்.புற்த். 12) என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பர்.
--------

306. அள்ளூர் நன்முல்லையார்

நல்லிசைப்புமை மெல்லியலாருள் நன்முல்லையாரும் ஒருவர். இவரது ஊர் அள்ளூர் என்பது. தஞ்சை மாநாட்டிலுள்ள திருவாலங் காட்டிற்கும் அள்ளூரென்பது பெயரென அவ்வூர்க் கல்வெட்டு ( A. R. No. 79 of 1926) கூறுகிறது. திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டொன்றில் ( S.I.I. Vol.V.No.438) அள்ளூர் ஒன்று காணப்படுகிறது. இவரும், "கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர்" (அகம். 46) என்று பாண்டியனைக் குறித்துள்ளார். ஆதலால், இவர் பாண்டிநாட்டு அள்ளூரினரெனத் தெளியலாம். தலைமகனொருவன் கற்புடைய மனையாளொடு இல்லிருந்து நல்லறஞ் செய்து வருகையில் புறத்தொழுக்க முடையனானான். அதனால் அவன் மனையாட்டு வருத்தமுண்டாயிற்று. அவள் உடல்நலம் குறைந்தது; மேனி நலமும் வாடியது. அது கண்ட தோழி அவளது வருத்தம் நீங்கற்கென அவனைக் கொடுமை கூறினாள். தலைமகளோ அது பொறாது," நன்னலம் தொலைய நலமிகச் சாஅய், இன்னுயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு அன்னையும்;அத்தனும் அல்லரோ" (குறுந். 93) என்றாளென நன்முல்லையார் பாடுவது அவரது சான்றாண்மையச் சிறப்புறத் காட்டுகின்றது. ஒருகால் நன்முல்லையார் காடு சேர்ந்த நாட்டுக்குச் சென்று ஒரு மறக்குடி மகளைக் கண்டார். அவள் தன் குடியின் முன்னோர் புகழ் நிலவப் பொருது நடுகல்லாகியது அறிந்து அவர் நடுகல்லை நாடோறும் தவறாமல் வழிபட்டு வந்தாள். அவ் வழிபாட்டில், அவள், தான் நாளும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும் என்றும், தன் கொழுநன் போரில் வென்றிபெறுக வென்றும், போர் செய்யும் பகை வேந்தரும் உண்டாக வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டாள். அவள் செயல்மாண்பு கண்டு வியப்புற்ற நன்முல்லையார் இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

    களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
    அரிதுண் கூவ லங்குடிச் சீறூர்
    ஒலிமென் கூந்த லொண்ணுத லரிவை
    நடுகற் கைதொழுது பரவு மொடியது
    விருந்தெதிர் பெறுகதில் யானே யென்னையும்         5
    ஓ...வேந்தனொடு
    நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே.
    --------

திணை: அது,துறை: முதின்முல்லை. அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

உரை: களிறு பொரக் கலங்கும் - களிறு படிந்துழக்கக் கலங்கிச் சேறாகும்; அரிதுண் கூவல் - உண்ணும் நீர் அரிதாகிய நீர்நிலையும்; முள் கழல் வேலி இங்குடிச் சீறூர் - முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலி சூழ்ந்த அழகிய குடிகளைமயுடைய சிறறி வூரில் வாழும்; ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை - தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒள்ளிய நுதலையுமுடைய அரிவையாவாள்; ஒடியாது நடுகல் கைதொழுது பரவும் - நாளும் தவிராமல் நடுகல்லைக் கைகூப்பித் தொழுது வழிபடா நின்றாள்; விருந்தெதிர் பெறுக யான் - விருந்தினர் எதிர்வரப் பெறுவேனாக யான்; என்னையும்-என் கொழுநனும்...வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக என - வேந்தனும் மண்ணாசையால் அவன் உண்டாக்கும் பெரிய போரும் உண்டாகுக என்று; எ - று.

கலங்கும்கூவல், வேலிச்சீறூர் என நிரல்நிறையாகஇயைக்க. கழல் முள்வேலியெனக் கிடந்தவாறே கொண்டு கழற் கொடியாகிய முள்ளையுடைய வேலி யென்றுரைப்பினுமமையும், ஒடியாது பரவும் என இயையும். எதிர்பெறுதல் - எதிர்கொண்டோம்புதல். இல்லற மகளிர்க்கு நல்லறமாகலின், விருந்தெதிர் பெறுகதில் லெனவும், வேந்தனும் நாடு தரும் பகையும் உண்டாவதால் கணவற்கு மறப்புகழும், விருந்தெதிர் பெறுதல் முதலிய அறங்கட்கு வேண்டும் பொருளும் உண்டாதலின் விழுப்பகை யெய்துகவெனவும் விரும்பிப் பரவினாள். பகை: ஆகுபெயர் "மாறுகொள்மன்னருமவாழியர் நெடிதே" (புறம். 172) என்றுபிறரும் விழைந்தவாறுகாண்க. சீறூர் அரிவை. பெறுக, எய்துகவென் ஒடியாது பரவும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தில், விழைவின்கண் வந்தது.

விளக்கம்: முதில் முல்லையாவது" அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று" (பு. வெ. மா. 8:21) என வரும். மறக்குடிமக்கள் வாழும் ஊராதலின், "அங்குடிச்சீறூர் என்றும், நடுகல்லைத் தெய்வமாகக் கருதி வழிபடுதல் மரபாதலின், "நடுகல் கைதொழுது ஒடியாது பரவும்" என்றும் கூறினார். "அடும்புகழ் பாடியழுதழுது நோனா, திடும்பையுள் வைகிற்றிருந்த - கடும்பொடு, கைவண் குருசில்கற்கைதொமூஉச் செல்பாண, தெய்வமாய் நின்றான் திசைக்கு" (பு. வெ. மா. 10:13) என்று பிறருங் கூறுதல் காண்க. "கற்புங் காமமும் நற்பர் லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறத் தருதலும் சுற்ற மோம்பலும். பிறவு மன்ன கிழவோண் மாண்புகள்" (தொல். கற். 11) என்று ஆசிரியர் கூறுதலின், "விருந்தெதிர் பெறுகதில் யானே" என விருந்தோம்பல் விதந்து கூறப்பட்டது. பகையை வேறலால் நாடும் செல்வமும் பெறப்படுதலால். "நாடு தரு விழுப்பகை" யென்றார். எஞ்சா மண்ணாசைகொண்டு செய்யும் வஞ்சிப்போர் நாடுதரு பகையெனப்படுகிறது. மறக்குடி மகளின் செயலை வியந்து கண்டோர் கூறியது. ஏட்டில் இதன் அடியில் "இது கண்டோர் கூற்று" ்என்றொரு குறிப்புத் காணப்படுகிறது. இப் பாட்டு இடையே சிதைந்துளது.
-----------

307. களிற்றுடனிலை.

ஒரு போர்க்களத்தில் ஒரு வீரன் பகைவர் யானைகளையெறிந்து தானும் இடம் பெயர்ந்து இனிதியங்காதவாறு புண்பட்டு நின்றான். அந்நிலையினும் தன்னைத் தாக்க வந்த களிற்றைக்கொன்று தன் வேந்தன் பொருட்டு உயிரை விட்டான். இங்ஙனம் தானெறிந்த களிற்றோடு ஒரு வீரன் தானும் உடன் வீழ்ந்து மாண்டானாயின் அச்செயல் களிற்றுடனிலை யெனப்படும். தன் பொருட்டு உயிர்கொடுத்த வீரனது வீ்ழ்ச்சியை வேந்தன் கண்டான். வீழ்ந்த வீரர் பலரும் பெரும் புகழ் நிறுவி வீறுபெறுவது அவற்குப் பேரின்பம் தந்தது. இக்களத்தில் தானும் பொருது உயிர் கொடுத்துப் புகழ்பெறுவதினும் சிறந்தது பிறிதொன்றும் இல்லை யெனவும், இது புலவர் பாடும் புகழ் விளைக்கும்; அப்புகழ் பெறலரிதெனவும் எண்ணினான்; எழுச்சி மிக்குக் கடும்போர் உடற்றிக் காண்போர் கையற்றினைய வீழ்ந்து பெருமை பெற்றான். அவன் செயல் இப் பாட்டில் குறிக்கப்படுகிறது.

    ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்று முதுக்காண்
    வேனல் வரியணில் வாலத் தன்ன
    கான வூகின் கழன்றுகு முதுவீ         5
    அரியல் வான்குழற் சுரியற் றங்க
    நீரும் புல்லும் மீயா துமணர்
    யாருமி லொருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பக் டேய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளு மாதோ வதுகண்டு         10
    வெஞ்சின யானை வேந்தனு மிக்களத்
    தெஞ்சலிற் சிறந்தது பிறிதொன் றில்லெனப்
    பண்கொளற் கருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.
    --------

திணை: தும்பை ; துறை: களிற்றுடனிலை...

உரை: ஆசா கெந்தை யாண்டுள்ள கொல்லோ - எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எவ்விடத்தே யுள்ளானோ; குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன் - மலைபோன்ற களிற்றை யெறிந்து அதனோடே அவன் இறந்தான்; வம்பலன் போலத் தோன்றும் - அயலான்போலத் தோன்றுகின்றாள்; உதுக்காண் - அங்கே அவனைப் பார்; வேனல் - வேனிற் காலத்தில்; வரி யணில் வாலத்தன்ன - வரிகளையுடைய அணிலினது வாலைப்போன்ற; கான ஊகின் கழன்றுகு முதுவீ அரியல் - காட்டிடத்து ஊகம் புல்லினின்றும் உதிர்ந்த பழைய பூ அரியரியாகத் திரண்டவை; வான் குழல் கரியல் தங்க - பெரிய தலைமயிரிடத்துச் சுருள்களில் தங்குதலால்; நீரும் புல்லும் ஈயாது - நீரையும் புல்லையும் கொடாமல்; உமணர் - உப்பு வாணிகரால்; யாரும் இல் ஒரு சிறை - யாருமில்லாததோரிடத்தே; முடத்தொடு துறந்த வாழா வான் பகடு ஏய்ப்ப - முடம்பட்டதனால் கைவிடப்பட்ட வாழும் திறனில்லாத பெரிய எருதுபோல; தெறுவர் பேருயிர் கொள்ளும் - பகைவருடைய மிக்க உயிர்களைக் கவர்வான்; அது கண்டு - அச்செயலைக் கண்டு; வெஞ்சின யானை வேந்தனும் - வெவ்விய சினத்தையுடையயானைவேந்தனும்; இக்களத்து எஞ்சலில்சிறந்தது பிறிது ஒன்ற இல்லென் - இக்களத்தில் இறத்தலினும் சிறந்த செயலொன்று வேறியாதும் இல்லையென்று கருதியும்; பண்கொளற்கு அருமை நோக்கி - புலவர் பாடும் பாட்டை வேறு வகையால் பெறுதலின் அருமை நோக்கியும்; நெஞ்சற வீழ்ந்த புரைமையோன் - தன்னுயிர்மேல் ஆசையின்றி வீழ்ந்து பெருமை யுடையனாயினான்; எ - று.

பட்டோன், முதுவீயரியல் சுரியலில் தங்குதலால், உதுக்காண், வம்பலன்போலத் தோன்றும்; வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்; அது கண்டு வேந்தனும் இல்லெனவும் நோக்கியும் வீழ்ந்த புரைமையோன்; ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. உமணரால் துறக்கப்பட்ட வான்பகடுதான் இருக்கும் சூழலில் எத்தகையு புல் கிடைப்பினும் அதனை யுண்டொழித்தல்போல இவனும் தன்னைச் சூழநின்ற பகைவர் எத்துணைப் பெரியராயினும் அவரைக் கொன்று மேம்பட்டானென்பார் "வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்" என்றார். பேருயிர், தன்னை யொப்பாரும் மிக்காருமாகிய பகைவருயிர். உமணர் பகட்டைத் துறந்ததற்குத் காரணம் கூறுவார், "முடத்தொடு" என்றார். ஒடு, ஆனுருபின் பொருட்டு, வாழா வான் பகடென்றது, தன் சூழலிற்பட்டவை யொழிந்தபின் பகடு இறப்பது போலத் தன்னை யெதிர்ந்தவர் பட்டபின் தானும் பட்டான் என்பது எய்துவித்தது. முடத்தொடு துறந்த பகடென்ற உவமையாற்றால் களிறொடுபட்ட இவனும் புண்பட்டு நின்ற தெறுவர் பேருயிர் கொண்டானென்றறிக. இன்னோரன்ன அரிய செயல் புலவர் பாடும் புகழ்க்குரிமையும் அருமையும் உடையதாதலின், "பண்கொளற் கருமை நோக்கி" யென்றார். தன்னெஞ்சைத் தனக்காக்காது தன்பொருட்டுயிர்கொடுத்தானுக்காக்கி வீழ்ந்ததனால், பெறுவதுபற்றி, "புரைமையோன்" என்றும் கூறினார். வீழ்ந்த வென்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு ஆக்கவினை விகாரத்தாற்றொக்கது.

விளக்கம்: களிற்றுடனிலையாவது, "ஒளிற்றெஃகம் படவீழ்ந்த, களிற்றின்கீழ்க் கண்படுத் தின்று" (பு, வெ. மா. 7:20) என வரும். "தானை யானை" (தொல்.புறத்.14) என்ற சூத்திரத்துக் "களிறெறிந்தெதரிந்தோர் பாடு" என்றதற்கு இளம்பூரணர் இதனை யெடுத்துக் காட்டுவர். களிற்றின்கீ்ழ் வீழ்ந்த உருச் சிதைந்து போனமையின், "வம்பலன் போலத் தோன்றும்" என்றார். ஏனைக் காலத்தாயின் மழையாலும் பனியாலும் நனைந்து மயிர் படிந்து வேறுபடத் தோன்றுவது பற்றி, வேனிற் காலத்துத் தோன்றும் அணில் வால் ஊகம் பூவுக்கு உவமம் கூறப்பட்டது. வால், வாலமென வந்தது. சுரியல், சுருண்ட தலைமயிர்.
-----------

308 கோவூர் கிழார்

கோவூர் தொண்டைநாட்டு ஊர்களுள் ஒன்று. இப்போது இது செங்கற்பட்டு மாநாட்டில் உளது. சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலிய முடிவேந்தர்களைப் பாடிச் சிறப்புப்பெற்ற இவர், சீறூர் மன்னன் ஒருவனுக்கும் பெருவேந்த னொருவனுக்கும் நடந்த போரொன்றைக் கண்டார். சீறூர் மன்னன் கோவூர்கிழார்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையனாதலோடு போர் புரிவதிலும் பேராண்மை பெற்றவன். அவன் பெயர் தெரிந்திலது. அப்போரில் பெருவேந்தன் குன்றுபோ லுயர்ந்த களிறொன்றின் மேலிருந்து போர் செய்யச் சீறூராரசன் நிலத்தில் நின்று போரிட்டான். இருவரும் வேற்போர் பொருத காலையில், சீறூர் மன்னன் தன் வேலைச் சினந் தெறிந்தான்; அது சென்று களிற்றின் நெற்றியிற் பாய்ந்து ஊடுருவியழுந்திற்று. உடனே அவ் வேந்தன் தன் வேலைச் சீறூர் மன்னன்மேல் எறிய, அஃது அவன் மார்பிற்பட்டுத் தைத்தது. அவன் அதனைத் தன் கையிலேந்திப் பெருவேந்தன் யானையை எறிந்தானாக, அவ் யானைகள் அஞ்சிப் புறங் கொடுத்தோடின. இதனைக் கண்டு மகிழ்ச்சி மிக்க கோவூர்கிழார் அச் சீறூர் மன்னனுடைய பாணனுக்கு அவன் மனையோள் கூறம் கூற்றில் வைத்துக் கூறுவாராய் இப் பாட்டினனப் பாடியுள்ளார்.

    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
    மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
    நன்மை நிறைந்த நயவரு பாண
    சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
    வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே;         5
    வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
    சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
    உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல்
    ஓச்சினன் றுரந்த காலை மற்றவன்
    புன்றலை மடப்பிடி நாணக்         10
    குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே.
    --------

திணை: வாகை. துறை: முதின்முல்லை. கோவூர்கிழார் பாடியது.

உரை: பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் - பொற் கம்பியினை யொத்த முறுக்கட்ஙகின் நரம்பினையும்; மின் நேர் பச்சை - மின்னலைப்போலும் தோலினையும்; மிஞிற்றுக் குரல் - வண்டிசைபோலும் இசையினையுமுடைய; சீறி யாழ் நன்மை நிறைந்த நயவரு பாண - சிறிய யாழை இசைக்கும் புலமை நிறைந்த கேட்டார் நெஞ்சில் விருப்பம் எழுவிக்கும் பாணனே, சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் - சிறிய ஊரையுடைய சிற்றரசனது சிறிது இலையையுடைய வேல்; வேந்தூர் யானை ஏந்து முகத்தது - பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நுதலிற்றைத்து அதன்கண்ணே அழுந்திக் கிடந்தது; வேந்து உடன்று எறிந்த வேல் - பெருவேந்தன் சினந்தெறிந்த வேல்; என்னை சாந்தார் அகலம் உளம கழிந்தன்று - என்னிறைவனுடைய சாந்தணிந்த மார்பிற்றைத்து உருவிச்சென்றுது; உளம் கழி சுடர்ப்படை யேந்தி - மார்பினுள் உருவிய ஒளிவிளங்கும் வேலைப் பிடுங்கிக் கையிலேந்தி; நம் பெருவிறல் - நம்முடைய மிக்க வலி படைத்தவனான தலைவன்; ஓச்சினன் துரந்த காலை - ஒக்கிச் செலுத்தியவிடத்து; மற்றவன் குஞ்சரமெல்லாம் - பகைவனான பெருவேந்தனுடைய களிறுகளெல்லாம்; புன்றலை மடப்பிடி நாண -புல்லிய தலையையுடைய இளமையான பிடியானைகள் கண்ட நாணுமாறு; புறக்கொடுத்தன் - பின்னிட்டு அஞ்சியோடின; எ - று.

பாண, எஃகம் முகத்தது; வேல் கழிந்தன்று; ஏந்தி ஓச்சினன் துரந்த காலை, குஞ்சரமெல்லாம் பிடி நாணப் புறக் கொடுத்தன என வினைமுடிவு செய்க. சீறூர் மன்னன் எஃகம், பேரூர் வேந்தன் யானையின் நெற்றியில் பிடு்கவாராதபடி அழுந்தியதென்றதற்கு "ஏந்து முகத்தது" எனவும், வேந்தன் வேல் எளிதிற்பிடுங்கி எறியும் அளவில் மார்பிற் சென்ற தென்றற்கு "உளங்கழிந்தன்" றெனவும் கூறினார். களிறுகளின் புறக்கொடை பிடியானைகட்கு நாணம் விளைத்ததென்றதனால் வேந்தன்பட்ட இளிவரவு சொல்லவேண்டாதாயிற்று. என்னையென்றும் நம் பெருவிறல் என்றும் கூறியதனால், இக் கூற்று மனையோள் கூற்றாமென வுணர்க. இன்றேல் மூதின் முல்லை யாகாமை யறிக.

விளக்கம்: மூதின்முல்லையாவது, "அடல்வே லாடவர்க் சுன்றியு மவ்வில், மடவரன் மகளிர்க்கும் மறமிகுத் தன்று" (பு. வெ. மா. 8:21) என வரும். சீறூர் மன்னன் எனப்பட்டவன் தன் கணவன் என்பது தோன்ற, "என்னை" என்றும், "நம் பெருவிறல்" என்றும் ஆர்வமுடைமை விளங்கக் கூறினாள். இக் கூற்றில் வேந்தனெறிந்த வேல், தன் கணவன் மார்புளங் கழியச் சென்றது கூறுங்கால் அவல வுணர்வின்றி மறவுணர்வே மிக்கு நிற்பக் கூறுவது மனையோளது மற நிலையை எடுத்துக் காட்டுகிறது. நேர் நின்று எறிந்திருப்பானாயின், வேந்தன் ஒழிவது ஒருதலை யென்பது "வேந்துடன்றெறிந்த வேல்" என்றார். உடன்றெறிந்த வேல் என்றதனால் வேல்பட்டு யானை வீழ்ந்ததென்றும், எனவே வேந்தன் சினந்து தன் வேலைச் செலுத்தினனென்றும், அது தானும் மார்பில் நெடிது செல்லாது, சீறூர் மன்னனால் வாங்கி மீள மாற்றார்மேல் எறியப்பட்டதென்றற்கு, "உளங்கழி சுடர்ப்படையேந்தி ஓச்சினன்" என்றும் கூறினாள். வேந்தூரும் பேரியானை வீழ்ந்தது கண்ட ஏனைக் களிறுகள் அஞ்சிப் புறக்கொடுத் தோடின வென்றும், அது கண்டு மடப்பிடிகள் நாணினவென்றும் கூறியது மறக்குடி மகளின் மற மாண்பைக் சிறப்பித்து நிற்கிறது.
-----------

309. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்

இளங்கண்ணி யென்பது இவரின் தந்தை பெயர், முடத்தாமக் கண்ணியார், புல்லாளங் கண்ணியார் எனச் சான்றோர் பலர் இருந்திருத்தல்போல இளங்கண்ணியார் என்றொருவர் இருந்துள்ளார். இவர் தந்தை சிறப்புடைய சான்றோரன்மையால், இளங்கண்ணியாரென்று கூறப்பட்டது இளங்கண்ணி யென்றே கூறப்பட்டனர்போலும். இவர்க்குப் போர் வீரரது மறம் பாடுவதில் பெருவிருப்புண்டு. இவர் பாடினவாகப் பல பாட்டுகள் கிடைத்திலவாயினும் இவ்வொரு பாட்டே போதிய சான்றாகிறது. ஒரு வீரன் போரில் பகைவர் பலரையும் களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பதனால் மட்டில் சிறப்புடையனாக லில்லை; அஃது வீரர் பலர்க்கும் பொதுவாயமைந்த செயலே; தன் போர் நலத்தால் கேட்ட பகைவர் உள்ளத்தே உட்குண்டமாறு மேம்படும் ஒளியைப் பெறுவதே சீரிதாம் என்று இப்பாட்டில் விதந்தோதுவது, இவர். அறத்தாற்றிற் போராற்றிப் புகழ் பெறும் மறவர் மறத்தை நயப்பவரென்ற நலத்தை நாமறிய விளக்குகின்றது.

    இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார்
    இருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே
    நல்லரா வுறையும் புற்றம் போலவும்
    கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
    மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை         5
    உளனென வெரூஉ மோரொளி
    வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே.
    ---------

திணை: தும்பை: துறை: நூழிலாட்டு. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் பாடியது.

உரை: இரும்பு முகம் சிதைய ஒன்னார் நூறி - இரும்பாலாகிய வேல் வாள் முதலிய படைகள் வாய்மடிந்து ஒடியும்படியாகப் பகைவரைக் கொன்று; அருஞ்சமம் கடத்தல் - அவரது கடத்தற்கரிய போரை வஞ்சியாது செய்து வெல்லுதல்; ஏனோர்க்கும் எளிது - ஏனை வீரர் எல்லாருக்கும் எளிதாகும்; நல்லரா உறையும் புற்றம் போலவும் - நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்; கொல்லேறு திரிதரும் மன்றம் போலவும் - கண்டாரைக் கொல்லும் ஆனேறு திரியும் மன்றுவெளி போலவும்; மாற்றருந் துப்பின் மாற்றோர் - கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர்; பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி - பாசறைக் கண்ணே உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததோர் - ஒளியானது; வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதே - வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே யுளது; எ - று.

என்னை கண்ணதே என எடுத்தோதுதலின் ஏகாரம் தேற்றம். மன்றம், கொல்லேறு தழுவுதற்கு ஆயர் சமைக்கும் பொதுவிடம். ஒளியாவது "தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை" என்பர் பரிமேலழகர்; "ஒளி ஒருவற்குள்ள வெறுக்கை" (குறள் 971) என்பர் திருவள்ளுவர். கடத்தல் ஏனோர்க்கும் எளிது; ஒளி என்னை கண்ணதே என வினைமுடிவு செய்க.

விளக்கம்: இரும்பென்றது ஆகுபெயரான் அதனாற் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைகளைக் குறித்து நின்றது. ஒன்னார் அருஞ்சமம் என்றது, ஒன்னார் செய்யும் வெல்லுதற்கரிய கடும்போர் என்பதுணர நின்றது. ஏனோர் ஒளியில்லாத ஏனை மறவர். வலிமிக்க போர் விலங்குக்கும் ஒளியில்லாத போர் மறவர்க்கும் வேறுபாடின்மையின், விலங்குபோலப் பொருது வேறல் மக்களாகிய மறவர்க்கு எளிதென்றது, வலியும் வெற்றியும் உடையனாதலோடு மாற்றார் தன்னுண்மை கேட்ட துணையானே அஞ்சி நடுங்கத்தக்க சிறப்புடையனாதல் அரிதென்பது வற்புறுத்தற்கு இச்சிறப்பு ஒளியெனப்படுகிறது. ஒடுங்கி யிருக்குங்கால் உளதாகும் ஒளிக்குப் பாம்புறையும் புற்றும், போரெதிர்ந்து நிற்க வுளதாகும் ஒளிக்குக் கொல்லேறு திரியும் மன்றமும் உவமமாயின். "வரிமிடற்றரவுறை புற்றத்தற்றே நாளும், புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க் கருகாதீயும் வண்மை, உரைசால் நெடுந்தகை யோம்பு மூரே" (புறம். 329) எனச் சான்றோர் கூறுவது காண்க. கொல்லேறு திரியும் மன்றம் அச்சந்தரும் தன்மைத் தென்பதை, "கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக் "கொள்வார்ப் பெறா அக் குரூஉச் செகில் காணிகா, செயிரிற் குறை நாளாற் பின்சென்று நாடி, உயிருண்ணுங் கூற்றமும் போன்ம்" (கலி. 105) என்பதனாலறியலாம். நூழிவாட்டாவது, "களங்கழுமிய படை உளங்கழிந்த வேல்பறித் தோச்சின்று" (பு. வெ. மா. 7, 16) என வரும்: இப் பாட்டு நூழிலாட்டின் விளைவாகப் பிறந்த ஒளியுணர்த்தலின், நூழிலாட்டெனப்பட்டதெனக் கொள்க.
---------

310. பொன் முடியார்

வேந்தரிருவர் தும்பை சூடிப் போருடற்றினாராக, அப்போரில் முன்னாளில் கடுஞ்சமர் புரிந்து வீழ்ந்த பெருவீரனொருவனுடைய மகன் பகைவர் களிறுகள் பலவற்றைக் கொன்றான். அக்காலை, பகைவர் எறிந்த அம்பொன்று அவன் மார்பில் பாய்ந்து தைத்துக்கொண்டது. ஆயினும் அவன் அதனைப் பொருட்படுத்தாது மேலும் போரை நடத்தி முடிவில் தன் கைக்கொண்ட கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்தான். அதனைக் கண்ட தாய், அவனது பிள்ளைப்பருவ நிலைமையை நினைந்து வருந்தினாள். சிறிது போதில் மறக்குடி மகளாகிய அவள் தன் மனத்தைத் தேற்றி, "அனமேஇ இவன் பிள்ளைப் பருவத்தில் வள்ளத்தில் பாலேந்தி யுண்பித்தபோது உண்ணானகக் கண்டு சிறு கோலை யெடுத்து ஓச்சின காலையில் நம்மைக்கண்டு அஞ்சினான்: இப்போது, இவன் முன்னாள் போரில் வீழ்ந்த பெரவிரற்கு மகனாதற்கேற்ப, பல களிறுகளைக் கொன்றதனோடு அமையானாய், தன் கேடகம் கீழ்ப்படத் தான் அதன்மேல் வி்ாந்து கிடக்கின்றான்: இடையே தன் மார்பிற் புண்ணில் பகைவர் எய்த அம்பொன்று தைத்திருப்பதைக் காட்டியபோது யான் இதனைக் கருதிற்றிலேன் என்கின்றான்: இவன் மறம் இருந்தவாறென்னே! எனத் தனக்குள் வியந்து கூறிக்கொண்டான். இதனை நம் சான்றோராகிய பொன்முடியர் இப்பாட்டினுள் அழகுறப் பாடியுள்ளார்.

    பால்கொண்டு மடுப்பவு முண்ணா னாகலிற்
    செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியோ
    டுயவொடு வருந்து மனனே யினியே
    புகர்நிறங் கொண்ட களிறட் டானான்
    முன்னாள் வீழ்ந்த வுரவோர் மகனே         5
    உன்னிலெ னென்னும் புண்ணொன் றம்பு
    மானுளை யன்ன குடுமித்
    தோன்மிசைச் கிடந்த புல்லண லோனே.
    -------

திணையும் துறையு மவை. பொன்முடியார் பாடியது.

உரை: பால் கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின் - முன்பு இளமைக் காலத்தில் வள்ளத்தில் பாலை யேந்திக் கையால் இவனைப் பற்றிக் கொண்டு வாயில்வைத்து உண்பிக்கவும் உண்ணானாகவே செறா அது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு - உள்ளத்தே சினவாமல் புறத்தே சினந்தாற்போல் யான் கையில் கொண்டு ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சியுண்டவனான இவன் பொருட்டு; உயவொடு வருந்தும் மனனே - கவலைக்கொண்டு வருந்துகின்ற மனமே; இனி - இப்பொழுது; புகழ்நிறங் கொண்ட களிறட்டானான் புள்ளி பொருந்திய நுதலையுடைய யானைகளைக் கொன்றும் அமையானாய்; புண்ணொன்று அம்பு உன்னிலென் என்னும் - இடையே மார்பிற் புண்ணிடத்துத்தைத்துக்கொண்டு நிற்கும் அம்பைக் காட்டிய வழி யான் இதனையறியேன் என்ற சொல்லாநிற்கின்றான்; மான் உளை யன்ன குடுமி - குதிரையின் உளைமயிர்போலும் குடுமியுடனே; தோல் மிசைக் கிடந்த புல்லணலோன் - கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்து கிடக்கும் புல்லிய தாடியையுடையான்; எ - று.

மனனே, உரவோர் மகன், களிறட்டானான் கிடந்த புல்லணலோன், அம்பு உன்னிலென் என்னும் எனக் கூட்டி வினை முடிவு செய்க. மகன் வீழ்ந்து கிடந்தமை கண்டு வருந்தும் நெஞ்சிற்குக் கூறுதலின், "உயவொடு வருந்தும் மனனே" என்றாள். அஞ்சுதல் உடையானை "அஞ்சி" யென்றாள். சிறு கோலஞ்சி யென்ற நினைவால் வருந்துகின்றனை; அவன் இப்பொழுது அம்பு உன்னிலனென்னும்; அதனால் வருந்துதல் ஒழிக என்பதாம்.

விளக்கம்: பாலை வள்ளத்திற் கொண்டு மகன் வாயில் வைத்துண்பித்த காலையில், அவன் விளையர்டு விருப்பால் பசியறியாத மறுக்கவும்,அவ் விருப்பத்தை மாற்றிப் பசிதீர வுண்டல் வேண்டும் காதலால் சிறு கோல் கொண்டு அச்சுறுத்தும் தாய்மைப் பண்பை, "பால் கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின்: செறாஅ தோச்சிய சிறுகோல்" என்றார். தாயின் செயலில் செற்றமின்மை தோன்ற. "செறாஅதோச்சிய" எனப்பட்டது. கொல்லுதலுடையானைக் கொல்லி யென்பது போல அஞ்சுதலுடையானை அஞ்சியெனப் பெயர் கொடுத்தார்.செறாஅச் சிறுகோற் கஞ்சியவன் இ்ன்று பகைவர் மார்பிலெறிந்த அம்பாகிய வெய்ய கோற்கு அஞ்சாது "புண்ணொன்றம்பு உன்னிலென் என்னும்"என வியந்து கூறியவாறு. முன்னாளில் பொருது வீழ்ந்த தந்தையரும் தன்னையரும் ஆகிய சான்றோரை"உரவோர்" என்றாள். "மானுளை யன்ன குடுமிப் புல்லணலோன்" என்றது பிள்ளைமைச் செவ்வி முற்றவும் நீங்காமை யுணர நின்றது. உன்னிலன் என்றும் பாடவேறுபாடுண்டு.
----------

311. ஒளவையார்

பலர்க்கும் பலவகையிலும் பேருதவி புரிந்தொழுகிய பெருவீர னொருவன் போரொன்றில் கடுஞ்சமர்புரிந்து மேம்பட்டான். அவன் உதவி பெற்றவர் பலர் போர்க்களத்தே யிருந்தனர்.அவனைப் பகைவர் திறத்து வீரர் பலர் தம்முடைய படைகளையெறிந்து தாக்கினர். அவர் அனைவருடைய படைகளையும் அப்பெருவீரன் தன் ஒரு கேடகத்தையே கெண்டு தடுத்து வென்றான். கண் சிவந்து தீப்பொறி பறக்கவேறே துணை வேண்டாது அவன் ஒருவனே வென்று மாண்புறும் சிறப்பைக் கண்டார் ஒளவையார். அக்காட்சியால் அவர் உள்ளத்தே உவகை மிகுந்து இப்பாட்டுருவில் வெளிவருவதாயிற்று.

    களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை
    தாதெரு மறுகின் மாசுண விருந்து
    பலர்குறை செய்த மலர்தா ரண்ணற்
    கொருவரு மில்லை மாதோ செருவத்துச்         5
    சிறப்புடைச் செங்கண் புகையவோர்
    தோல்கொண்டு மறைக்குஞ் சால்புடை யோனே.
    ---------

திணை: அது; துறை: பாண்பாட்டு. ஒளவையார் பாடியது,

உரை: களர்ப்படு கூவர் தோண்டி - களர்நிலத்துண்டாகிய கூவலைத் தோண்டி; நாளும் புலத்தி கழீஇய தூவெள்ளறுவை - நாடோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய வெள்ளிய ஆடை; தாது எரு மறுகின் மாசுண இருந்து - எருப்பொடி பரந்த தெருவில் எழும் அழுக்குப்படிய இருந்து; பலர் குறை செய்த - பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்துதவிய; மலர் தார் அண்ணற்கு - பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த இத்தலைவனுக்கு; செருவத்து ஒருவரும் இல்லை - போர்க்களத்தில் துணையாக ஒருவரும் இல்லை; சிறப்புடைச் செங்கண் புகைய - சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து புகையெழ நோக்கி, ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்புடையோன் - தன் ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைகளைத் தடுக்கும் வலியமைதியுடையனா-யுள்ளான்; எ - று.

அறுவை, மாசுண இருந்து, பலர் குறைசெய்த அண்ணற்குச் செருவந்து ஒருவரும் இல்லை; சால்புடையோனாயினன் என வினைமுடிவு செய்க ஆக்கவினை வருவிக்க. பலர்க்கு அவர் குறை முடித்து உதவிய அண்ணல், உயிர்போங்காறும் பிறர் செய்யும் ஓருதவியும் வேண்டானாயினன் என்பார், "ஒருவரும் இல்லை" யென்றார். சிறப்புடைய கண்ணோட்டம் நிறைந்த கண்கள் சிவப்பச் சினந்து தன் ஒரு தோலைக் கொண்டு பகைவர் எறியும் பல படைகளைத் தடுத்தலின், "சிறப்புடைச் செங்கண்புகைய ஓர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடையோன்" என்றார். சால்புடையோன் என்றது, ஒரு தோலே அவற்கு அமைவதாயிற்றென்பதை வற்புறுத்துகிறது. மாதும் ஒவும் அசைநிலை. சால்புடையோர் என்பதே பாடமாயின், சால்புடையோர் ஒருவரும் இல்லை எனக் கூட்டி யுரைத்துக் கொள்க. இலரானமைக்குக் காரணம் அவ்வண்ணல் "கூட்டொருவரையும் வேண்டாக" கொற்றமுடையன் என்பது என்க.

விளக்கம்: களர்நிலத்து ஊறும் உவர்நீர் ஆடையிற்பற்றிய மாசு போக்கும் இயல்பிற்றாதலால், புலைத்தி "களர்ப்படு கூவல் தோண்டி" அறுவை வெளுக்கும் தொழில்புரிவாளாயினளென்க. புலைத்தி, வண்ணாத்தி. தாது, துகள். இன்றியமையாது வேண்டுவதொன்று குறையெனப்படும். மலர்த்தாரெனற்பாலது எதுகைநோக்கி மலர் தாரண்ணலென நின்றது. தார் என்பதை ஆகுபெயராய் அது கிடந்து விளங்கும் மார்புக்காக்கி, மலரென்றது மார்புக்கு அடையென்றாக்கி, தாரணிந்து விளங்கும் அகன்ற மார்பு என்றுரைப்பினுமமையும். பிறர் துணை வேண்டாது தான் ஒருவனே நின்று போருடற்றும் மற மாண்பைச் சிறப்பிப்பார், "செருவத்து ஒருவருமில்லை மாதோ" என இரங்குவார் போலக் கூறினார். "தலைவனது ஆற்றல் கூறியதானால் பாண்பாட்டாயிற்" றென்றொரு குறிப்பு ஏட்டிற் காண்ப்படுகிறது. பாண்பாட்டாவது, "வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று" (பு, வெ. மா. 7:11) எனவரும்.
---------

312. பொன்முடியார்

ஒருகால் சான்றோர் கூட்டத்திடையே போர்நிகழ்ச்சிபற்றியும், அதன்கண் மக்கள் ஈடுபட்டுப் போர் செய்வதுபற்றியும் பேச்சுக்கள நிகழ்ந்தன. அக்கூட்டத்துச் சான்றோருள் பொன் முடியாரும் ஒருவர். அவர் மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமைபெற்ற புலவர் பெரு மாட்டியா ராதலால், மக்கள் நன்னடையுடையராய் இருத்தல் வேண்டுமென்ற நோக்கங்கொண்டு அளியும் தெறலும் புரிவது வேந்தர்க்குக் கடன். தெறல் குறித்துப் போர் உளதாமாகலின் அப்போர்க்குக் சென்று வென்றியுறப் பொருது மேம்படுவது காளையர்க்குக் கடன்: அவர்களைப் பெற்று வளர்ப்பது தாயர் கடன்: வளரும் மக்கள் அறிவாலும் ஆண்மையாலும் சான்றோராகச் செய்வது தந்தைக்குக் கடன் என எடுத்துரைத்தார். அவர் கூறியது ஏனைச் சான்றோரனைவர்க்கும் பெருமகிழ்ச்சியை விளைவித்தது. அது பலர்க்கும் பயன்படுமாறு பொன்முடியார் மறக்குடி மகளொருத்தியின் கூற்றில்வைத்து இப் பாட்டு வடிவில் தந்துள்ளார்.

    ஈன்றுபுறத் தருத லென்றலைக் கடனே
    சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே
    வேல்படித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்         5
    களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
    --------

திணை: வாகை; துறை: மூதின்முல்லை. பொன்முடியார் பாடியது.

உரை: ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன் - மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் என்னிடத்துக் கடமையாகும்; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் - அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தையால் உள்ள கடமையாகும்; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடன் - அவனுக்கு வேண்டும் வேலை வடித்துக் கூரிதாக்கித் தருவது கொல்லனது கடமையாகும்; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன் - நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும்; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி - விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து; களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடன் - பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வென்றி யொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும்; எ - று.

பெற்ற தாய் பசியறிந்து உணவூட்டி உடம்பை வளர்த்தலின், "புறந்தருதல்" என்றார். சான்றாண்மை உயிரோடியையும் அமைதியாதலின், அதனையடுத் தோதினார். நல்லாரை அன்புறுத்தியும் அல்லாதாரை ஒறத்தும் நல்லொழுக்கம் நிலவச் செய்தலின், "நன்னடை நல்கல் வேந்தற்கக் கடன்" என்றார். அருஞ்சமத்து அஞ்சாது சென்று வஞ்சியாது பொருது பகைவரது பகைமை யெஞ்சாவகை வென்று மேம்படுதல் மறக்குடியிற் பிறந்த மகனது கடன் என்பதை வற்புறுத்தற்கு இறுதிக்கண் வைத்தோதினார்.

விளக்கம்: உறக்கம் வரினும் பசியெடுக்கினும் குழந்தைகள் அழுமாகலின், அவற்றின் பசிக்குறிப்பறிந்து பாலூட்டும் ஒட்பம் தாய்மையின் தனிப்பெருஞ்சிறப்பாதலாம், மணிவாசகரும் "பானினைந் தூட்டுந்தாய்" என்று விதந்து கூறுவது காண்க. தாய் உடலையும் தந்தை உடலகத்து நிலவும் உயிரறிவையும் ஓம்புங் கடப்பாட்டினராதலால், "புறந்தருதல்" தாய்க்குக் கடனாதலும், சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாதலும் எடுத்தோதப்பட்டன. அவ்வவ்வூர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர் அவ்வவ்வூரவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும் அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தும் ஒரு கட்டுப்பாடிருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று ( A. R. No. 205 of 1919) கூறுவது பொன் முடியர்ரி இப்பாட்டின் கட் கடனாக வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றான் முதலியோர்க்கு முறையே புறந்தருதல் முதலாகவுள்ள தொழிற் பண்புகளைக் கடனாகக் கூறியது அவற்றை நன்குணர்ந்து வழுவாது ஆற்றல்வேண்டும் என்றற்கென வறிக.
-------------

313. மாங்குடிகிழார்

வேந்தர் இருவர் பொருத போர்க்களத்தில் சான்றோர் பாராட்டிப் புகழ்தற்குரிய வெற்றி பெற்று வாகைசூடி நின்றான் ஒரு தானைத்தலைவன், அவன் பேராண்மையேயன்றிக் கொடைவண்மையும் பெரிதுடையன்; கொடுத்தற்குரிய கைப்பொருள் மிகவுடையனல்லனாயினும் தன்பால் வரும் இரவலர் களிறும் தேரும் வேண்டினாலும், ககைவர் பால் உள்ளவற்றைத் தான் உடையான்போல வழங்கும் உரவோனாவான். அவன் அவ்வாறு கருதற்கேதுவாகிய உள்ள நிலை இகழும் பான்மையுடைய தன்று என அவன் தலைமையின்கீழ் நின்று பொரும் வீரர் பேசிக் கொண்டனர். இதனை மாங்குடிகிழார் கேட்டனர். மாங்குடிகிழார் பாண்டியன் தலையாலங் கானத்துக் செருவென்ற நெடுஞ்செழியனைப் பல பாட்டுகளிற் பாராட்டிப் பாடி மாங்குடியென்னும் ஊர்க்குச் கிழாராயினர். மருதனென்பது இவரது இயற்பெயர். அதனால் இவர் மாங்குடி மருதனாரென்றும் கூறப்படுவர். பத்துப் பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியும் இவர் பாடியது. இதனால் இவர் மதுரைக்காஞ்சிப் புலவரென்றும் சான்றோரால் பாராட்டப்பெறுவர் இவர் தென்பாண்டி நாட்டு வாட்டாற்று எழினியாதன் என்பவனையும் பாடியுள்ளார்.

    அந்த நண்ணிய நாடுகெழு பெருவிறல்
    கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்
    காணிய சென்ற விரவன் மாக்கள்
    களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடவன்
    உப்பொய் சாகாட் டுமணர் காட்ட         5
    கழிமுரி குன்றத் தற்றே
    எள்ளமை வின்றவே னுள்ளிய பொருளே.
    ---------

திணை: அது; துறை: வல்லாண்முல்லை. மாங்குடிகிழார் பாடியது.

உரை: அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் - வழிகள் பல பொருந்திய நாட்டையுடையனாகிய பெரிய வலிமிக்க தலைவன்; கைப்பொருள் யாதொன்றும் இவன் - கையிலே பொருள் யாது முடையனல்லனெனினும்;நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் -பொருளை விரும்பி அவனைக் காண்டற்கு அவன்பாற் சென்ற இரவலர்; களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன் -யானையும் தேரும் வேண்டினாராயினும் பகைவர்பால் உள்ளவற்றைக் காட்டித் தரும் கடப்பாடுடையன்; அவன் உள்ளிய பொருள் - அவன் அவ்வாறு தருதற்கேற்ப அவன் உள்ளத்தே கருதும் கருத்து; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத் தற்று - உப்பைக் கொண்ட செல்லும் வண்டிகளையுடைய உப்பு வாணிகரது காட்டிடத்தாகிய கழி நீரால் அலைக்கப்பட்ட குன்றம் போன்றதாய்; என் அமைவின்று இகழப்படும் பான்மையுடைத்தன்று; எ - று.

மக்கள் இடையறாது அச்சமின்றி வழங்குதற் கேதுவாகிய காவலமைந்த நாடென்பார்" அத்தம் நண்ணிய நாடு" என்றும், இத்துணைக் காவற் சிறப்புடையவன் பெருஞ்செல்வமுடையனல்லன் என்றற்கு "கைப்பொருள் யாதும் இலன்" என்றும், அதனால் இரவலரக்கு இலனென்னும் எவ்வம் உரையாத அவர் வேண்டும் களிறு தேர் முதலிய "களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்" என்றும். கூறினார். இவன் கருதும் புகழ், போருடற்றிப் பொருளீட்டியும் ஈத்தும் பெறற்குரித்தாயினும், அதனாற் சலிப்புறாத திண்மை அவன்பால் உண்டென்றற்கு, "கழிமுரி குன்றத்தற்றாய் எள்ளமைவின்" றென்றார். பெருவிறல், இலன், எனினும் கடவன், உள்ளிய பொருள் குன்றத்தற்றாய் எள்ளமை வின்றென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: வல்லாண் முல்லையாவது, "இல்லும் பதியும் இயல்புங் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று" (பு, வெ. மா, 8:23) என வரும். "வெறியறி சிறப்பின்" (தொல். புறத். 5) என்ற சூத்ரித்து "சீரசால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல்" என்றதற்கு "வேந்தர்க்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்குரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறுதல்" என்றுரைத்து, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, "இது படையாளர் கூற்று. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்க" என்று கூறுவர். நன்னீர் உளதாயவிடத்துச் செல்லும் வழி பலவாதல் போலப் பயன்படும் செல்வம் நிறைந்த செல்வமுறையும் நாட்டிற்குச் செல்லும் வழி பலவாமாதலால், "அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்" என்றார; "உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும்" (புறம். 204) என்று சான்றோர் கூறுவது காண்க. ஆண்மைவாயிலாகப் பெறும் பொருளத்தனையும் ஓம்பர் தீயும் உயர்ந்த கொடையுடையன் என்பது விளங்க, "கைப்பொருள் யாதொன்று மிலனே" யென்றும் இரவலர் வருங்கால் கைப்பொருளில்லை யாயினும், வாடாத ஆண்மையுளதாகலின், பகைவருடைய களிறுகளையும் தேர்களையும் தான்கொண்டதாகத் துணிந்த வழங்கும் சிறப்புடையவன் என்றற்கு, "களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்" என்றும் கூறினார். "ஒன்னாராரெயிலவர் சுட்டாகவும் நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்" (புறம். 203) என்று பிறரும் கூறுவது காண்க. கழிமுரி குன்றம், கழி சூழ்ந்த குன்றம். உமணர்க்குரிய செல்வ வருவாயாகிய கழி சூழ்ந்த குன்றம் உப்பு விளையும் நிலத்தே யுளதாயினும் சலியாமையால் சிறப்புறுவது போல, பொருளின்மையாகிய நிலையிலிருந்தே வள்ளன்மை குன்றாத மனமாண்பால், எள்ளற்பாடெய்தாமை தோன்ற, "எள்ளமை வின்று" என்றார்.
-----------

314. ஐயூர்முடவனார்

போரில் புகழ் உண்டாகப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் தலைவனொருவனைப்பற்றி அவனுடைய வீரர்கள் தம்முட் பாராட்டிப் பேசிக்கொண்டனர். அதனையறிந்த ஐயூர் முடவனார் இப்பாட்டில் அவர் கூற்றைத் குறி்த்துள்ளார். அத்தலைவன் போலவே அவன் மனைவியும் புகழ் புரியும் நன்மாண்புடையவள். போர் முனையில் அவன் தானைக்கு வரம்பாய் நின்று பொரும் வேல் வன்மையால் நெடும்புகழ் பெற்றவன். அவனைப் போல அவன் இருக்கும் ஊரவருள் முன்னோர் பலர் கடும்போர் உடற்றிக் கன்னின்றமையின், நடுகற்கள் பல அவன் ஊரில் உண்டு. ஊரில் இருக்குங்கால் அவன் ஊர் வாழும் குடிகளுள் ஒருவனாய்த் தன் குடிக்கடனை யாற்றுவான். போர் வரின் படையாய் நிற்கும் அவன, போரில் தன் வேந்தன் துன்பமெய்துவானாயின், அக்காலை கொடியும் படையுங் கொண்டு மண்டி மேல்வரும் பகைவர் தானைக்குக் கற்சிறைபோல் தடையாய் நின்று வென்றியெய்தும் விறல்மிக்கவன் என இதன்கட் கூறியுள்ளார்.

    மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன்
    முனைக்குவரம் பாகிய வென்வே னெடுந்தகை
    நடுகற் பிறங்கிய வுவலிடு பறந்தலைப்
    புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
    குடியு மன்னுந் தானே கொடியெடுத்து         5
    நிறையழிந் தெழுதரு தானைக்குச்
    சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே.
    ----------

தினணயும் துறையு மவை. ஐயூர் முடவனார் பாடியது.

உரை: மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன் - மனையின்கண் ஒளி செய்யும் விளக்குப்போலத் தன் மாட்சியால் புகழாகிய விளக்கத்தைச் செய்யும் ஒளிபொருந்திய நுதலையுடைய வட்குக் கணவனும்; முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை - போரில் தன் படைக்கு எல்லையாய் நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலேந்திய நெடிய புகழையுடையவனு மாகயி எம் தலைவன்; நடுகல் பிறங்கயி உவலிடு பறந்தலை - நடு கற்களால் உயர்ந்த தழைகள் உதிர்ந்த பறந்தலைகளையும்; புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் - புல்லிய கொட்டையையுடைய நெல்லி மரங்கள் நிற்கும் புன்செய் நிலங்களையுமுடைய சீறூரின் கண் வாழும்; குடியும் தானே - குடிகளுள் ஒரு குடியாகி இருப்பவனும் அவன்; தன் இறைவிழுமுறின் - போரில் தன் வேந்தன் துன்பமுறுங்காலமாயின் அக்காலத்தே; கொடி யெடுத்து நிறையழிந்து எழுதரு தானைக்கு - கொடியை யுயர்த்தி நிறுத்தப்படும் நிறைக்கடங்காது முந்துற் றெழுந்து வரும் பகைவர் படைக்கு; சிறையும்தானே - மேற்செல்லாதபடியாகக் குறுக்கிட்டுத் தடுத்து நின்று காக்கும் அணையாய் நிற்பவனும் - அவனேயாம்; எ - று.

கணவனும் நெடுந்தகையுமாகிய தலைவன்குடியும் தானே, சிறையும் தானே எனக் கூட்டி வினை முடிவு செய்க. வாணுதல் கணவன் என்ற தற்கேற்பக் "குடியுமன்னும் தானே" என்றும், முனைக்கு வரம்பாகிய நெடுந்தகை யென்றதை வலியுறுத்தச் "சிறையும் தானே" என்றும் கூறினார். மன்னும் உம்மைமயும் அசைநிலை. வீரர் தொகை மிகுதியும் மற மிகுதியும் நிறுத்தப்படும் நிறையழிதற்கேது. விழுமமென்பது விழுமெனக் குறைந்து நின்றது. பிறாண்டும் இவ்வாறே கொள்க.

விளக்கம்: மகளிர் தம்முடைய நற்குண் நற்செயல்களால் மாண்புற்ற விடத்து மனைகள் தாம் பெறுவனநிறைந்து இன்ப வொளி விளங்கப் புகழ் மேம்படுவது குறித்து, மகளிரை "மனைக்கு விளக்காகிய வாணுதல்" என்று சிறப்பித்தார். சிறப்புடைய ஆண்மக்களைப் பாடுமிடத்து அவர் மனைவியரையும் சார்த்திப் பாராட்டுவது சான்றோர் மரபு; அதுபற்றியே "மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்" என்றார்; "அடங்கிய கொள்கை ஆறிய கற்பின் தேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடிகணவ" (பதிற். 60) என்றும், "பெண்மை சான்ற பெருமடம் நிலைஇக், கற்பிறை கொண்ட கமழும் சுடர்நுதல் புரையோள் கணவ" (பதிற். 70) என்றும் சான்றோர் கூறுவது காண்க. மனைவி மனைக்கு விளக்கமாய்த் திகழ, கணவன் போர் முனைக்கு விளக்கமமைந்த வரம்பாய் நின்றான் என்றார். நன்மனையாளை மணந்து புகழ் புரிந்து வாழும் ஒருவன், மனைவாழ்வு மேற்கொள்வது தன் குடியைச் சீர்பெறத் திகழ்வித்தற்காதலால், அதற்கேற்பக் "குடியுமன்னுந் தானே" யென்றார். நிற்ப நில்லாது படைச்செருக்கால் மேனோக்கி வந்து தாக்கும் பகைவர் தானைக்கு முன்னாக நின்று பொருது வெற்றி பெறு மாற்றால், அத் தானை மேலே செல்லாதவாறு விலக்கிப் பொருதழித்து நிற்பதனால், "சிறையுந் தானே தன் வேந்தன் விழுமுறினே" என்றார்.
-------

315. அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி பகைவரை வென்ற மேம்பட்டு வாழ்ந்த காலத்தில் அவன் அவைக்களத்திலிருந்து சிறப்புச் செய்த சான்றோராகிய ஒளவையார், அவன் வாழ்க்கை நலத்தைச் சான்றோர்க்கு அறிவிப்பாராய் இப்பாட்டினைப் பாடியுள்ளார் இதன்கண், "நெடுமான் அஞ்சி, மிகவுடையனாயின் பிறர்க்கீத்து எஞ்சியதைத் தான் உண்பான்; தான் கொடுத்தற்குக் கடமைப்பட்டவர்க்கு அவன் கொடுக்குமளவினும் இரப்பவர்க்கு மிகுதியாகத் தருவன்; திறனில்லாத மடவரோடும் உடனிருந்துண்டு மகிழும் எண்மையுடையவன்; மனையிறைப்பில் செருகிய தீக்கடைகோல் கடையாதபோது தீத்தோன்றாதவாறு போலத்தன் வலி தோன்றாதிருப்பதும், கடைந்த வழித் தீயைத் தோற்றுவிப்பது போலப் போருண்டாகியபோது தன் வலியைத் தோற்றுவிப்பதும், அவன் பண்பு" என்பதைத் தெளிவித்துள்ளார்,

    உடைய னாயி னுண்ணவும் வல்லன்
    கடவர் மீது மிரப்போர்க் கீயும்
    மடவர் மகிழ்துணை நெடுமா னஞ்சி
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்         5
    கான்றுபடு கனையெரி போலத்
    தோன்றவும் வல்லன்றான் றோன்றுங் காலே.
    ------

தினணயும் துறையு மவை: நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

உரை: உடையனாயின் உண்ணவும் வல்லன் - மிகவுடையனாயின் பரிசிலர்க்கு ஈந்து எஞ்சியதைத் தான் உண்ணவல்லன்; குறைந்ததாயின் அவர்கட்கீந்து தான் உண்ணாதிருக்கவும் வல்லன்;கடவர்மீதும் இரப்போர்க்கு ஈயும் - தான் தரக் கடன் பட்டவர்க்குக கொடுப்பதைவிட மிகுதியாகத் தன்னை இரப்பவருக்குக் கொடுப்பன்; மடவர் மகிழ் துணை - அறிவில்லாரோடும் உடனிருந்து உண்டு மகிழும் துணைவனாவான், நெடுமான் அஞ்சி -; இல்லிறை செரீஇய ஞெலிகோல் போல - மனையின் இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோலைப் போல; தோன்றாதிருக்கவும் வல்லன் - தன் வலி தோற்றாது ஒடுங்கியிருக்கவும் வல்லன்; அதன் கான்றுபடு கனையெரி போல - அதனைக் கடையவெளிப் படும் மிக்க தீயைப்போல;தோன்றுங்கால் - தன் வலிதோற்ற வேண்டு மிடத்து; தோன்றவும் வல்லன் - பலரும் அறியத் தோற்றுவிக்கவும் வல்லனாவான்; எ - று.

எதிர்மறை யும்மையால் உண்ணாமையும் உண்ணல் உண்ணாமைகட் கேற்பப் பெரிதுடைமையும் சிறிதுடைமையும் வருவிக்கப்பட்டன. கடவர், தன்னால் தரப்படும் கடனுடைய தானைவீரர் முதலியோர். இரப்போர், இன்மையால் துன்புறுதலின் அவர்கட்குக் கடவரினும் மேற்படத் தருதலை மேற்கொண்டான். அஞ்சியின் கைவண்மையும் கொடை மடமும் விளங்க "மடவர் மகிழ்துணை" யென்றார். பெரு வலி படைத்தவனாயினும் அடக்கங் கண்டு வலியிலனெனப் பகைவர் கருதி எள்ளாமை குறித்து, "தோன்றுங்கால் தோன்றவும் வல்லன்" எனவும் கூறினார். அஞ்சி, வல்லன். ஈயும், மகி்ழ்துணை. தோன்றாதிருக்கவும் வல்லன், தோன்றவும் வல்லன் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: உடையன் எனப் பொதுப்படக் கூறவே, மிக்க பொருளுடைமை கொள்ளப்பட்டது. பிறரை யுண்பித்தலிலே பேரீடுபாடு உடைய அஞ்சி அவருண்டு மகிழ்ந்து பாடக்கண்டு நுகரும் இன்பத்தி்லே திளைக்கின்றவனாதலால், தானே தனித்துண்ணும் இன்பமில் செயலை விரும்புதல் மிக்க வன்மையாற் செய்ய வேண்டுவதுபற்றி, "உண்ணவும் வல்லன்" என்றார். தானைவீரர், முதலாயினோர்க்குத் தலைவராயினோர் அவ்வக் காலங்களில் மிக்க சிறப்புக்களை நல்குவது கடனாகும். அவ்வகையில் அவர்கள் கடவர் எனப்படுகின்றனர். அக் கடவரினும் இரப்பேர்க்கு மிக அளிப்பது ஆண்மைச் சிறப்பாகும். இன்மையால் இளிவந்து இரப்பவர், யாதும் இரக்கமின்றிச் செய்யும் துணிவுடைய ராதலின், கடவரினும் மிகுதியாக ஈவது பெதற்குரிய ரென்பதுபற்றி, "கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்" என்றார் என்று கொள்ளினு மமையும். கடவர்க்கும் அது மிக்க இன்பத்தைச் செய்வதொன்று. மடவர், இளையருமாம். தீக்கோல் கடையப்பட்ட வழிப் பிறக்கும் தீயை, கான்றுபடு கனையெரி யென்றது, அஞ்சியின் சினப் போர்த்திறத்தை விளக்கிற்று.
-------------

316. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

கள்ளில் என்பது தொண்டைநாட்டில் உள்ளதோர் ஊர். இவ்வூரினரான கடையத்தன் என்பருக்கு மகனார் நம் சான்றோராகிய வெண்ணாகனார். இவர் மதுரையில் வந்து தங்கியிருந்தமையின், மதுரைக் என்றோர் ஊருண்டு. ஒருகால் ஒரு வேந்தன் வேறொரு வேந்தனுடன் போருடற்றி வெற்றி யெய்தினான். பகை வேந்தன் இறந்துபட்டான். வெற்றிபெறற் வேந்தனுடன் தானைத்தலைவரும் பிற சான்றோரும் கள்ளுண்டு மகிழ்ந்தனர், தன் மனைக்கு மீண்டு வந்த தலைவன் கள்ளை விடியலிலும் மிகவுண்டு அக்கள்ளை வாழ்த்தி உறங்குவானாயினன். அவன்பாற் சென்று பரிசில் பெற்றுவரும் பாணர் தலைவன், வழியில் வேறுசில பாணரைக் கண்டான். இப் பாண் தலைவன் அவர்களுடைய தலைவனை நோக்கி, "மனை முன்றிலில் துஞ்சுவோனாகிய அவனே எம் தலைவன்; யாம் அவன் பாணரேம்; நேற்று வந்த விருந்தை ஓம்பும் வகையின்றி அதன் பொருட்டுத் தன் இரும்புடைப் பழவானை ஈடு வைத்தனன். அப் பெற்றியேன், பகை வேந்தன் துன்புற்று வீழவென்று அவ் வெற்றியாற் பெற்ற பொருளை எமக்கு ஈந்து சிறப்பித்தான். நீவிரும் சென்று பரிசில் பெற்று உண்பனவுண்டு வாய் சிவந்து வருவீராக" என்று தெரிவித்தான். இதனைக் கேட்ட வெண்ணாகனார் இப் பாட்டில் அவன் கூற்றுப் பொருளாக வரப் பாடியுள்ளார்

    கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
    காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
    நாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே
    அவனெம் மிறைவன் யாமவன் பாணர்
    நெருதை வந்த விருந்திற்க மற்றுத்தன்         5
    இரும்புடைப் பழவாள் வைத்தன் னின்றிக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
    டீவதி லாள னென்னாது நீயும்
    வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
    கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்         10
    சென்றுவாய் சிவந்துமேல் வருக
    சிறுகண் யானை வேந்துவிழு முறவே.
    ---------

தினணயும் துறையு மவை. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

உரை: சிறுகண் யானை வேந்து விழு முறவே -சிறிய கண்களையுடைய யானைய யுடையோனாகிய பகை வேந்தன் போரில் வீழ்ந்து இறந்தானாக; கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி - கள்ளினை வாழ்த்திக் கள்ளினை வாழ்த்தி; காட்டொடுமிடைந்த சீயா முன்றில் - செந்தைகளால் நிறைந்து தூசி துடைக்காத முற்றத்தின்கண்; நாட் செருக்கு அனந்தர் துஞ்சுவோன் - விடியற்காலக்தே யுண்ட கள்மயக்கத்தால் உறங்குபவனாகிய; அவன் எம் இறைவன்அவனே எம்முடைய தலைவன்; யாம் அவன் பாணர் - யாங்கள் அவனுடைய பாணராவேம்; நெருதை வந்த விருந்திற்கு நேற்றுத் தன்பால் வந்த விருந்திரை யோரம்புதற்பொருட்டு; தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் - தனது பெரிய பக்கத்தேயிருக்கும் பழைய வாளை ஈடு வைத்தான்; இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்-ஈது உண்மை யென்றற்கு இக் கரிய கோட்டையுடைய சிறிய யாழைப் பணயமாக வைக்கின்றேம்; இது கொண்டு - இதனால்; இன்று ஈவது இலாளன் என்னாது- இன்று அவன் சென்றால் ஈதற்கு ஒன்றும் இல்லாதவனாவான் என்று நினையாமல்; நீயும்-; வள்ளி மருங்குல் வயங்கிழை அணிய - கொடி போலும் இடையையுடைய நின் பாடினி விளங்குகின்ற இழையாகிய பொற்பூ வணிய, கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ தூங்க - கள்ளையுடைய கலங்களையுடையராகிய யாம் மகிழ்ச்சி கொள்ள; சென்று வாய் சிவந்து மேல் வருக - அவன்பாற்சென்று விருந்துண்டு வாய் சிவந்து பின்பு வருக; எ - று.

வேந்து விழுமுறவே கள்ளின் வாழ்த்தின் துஞ்சுவோனாகிய அவன் இறைவன்; யாம் பாணரேம்; நெருதை வைத்தனன்; சீறியாழ் பணையம் இது கொண்டு ஈவதிலாளனென்னாது, நீயும், அணிய, தூங்கச் சென்று சிவந்து மேல் வருக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. வேந்து விழுமுறவே பெரும் பொருள் கிடைத்தமையின் வருவிருந் தோம்புதற் கிடையூறிம்மை யால் களித்து உறங்குகின்றான் என்பார், "நாட்செருக்கனந்தர்த் துஞ்சுவோன்" என்றும், போர் எய்துதற்கு முன் வரு விருந்தோம்பற்குரிய பொருளில்லாமையால் வாடினான் என்பான், "இரும்புடைப் பழவாள் வைத்தன" னென்றும், அதனை ஏலாதான்போல் எதிர்வந்த பாணன் நோக்கினானாகத் தன் கூற்று மெய்யென்பது வற்புறத்தச் "சீறியாழ் பணையம்" என்றும், இப்போது பெரும் பொருளுடையனாதலின் செல்க என்பான், "ஈவதிலாளன் என்னாது நீயும் சென்று வருக" என்றும் கூறினான். பாடினி இழைபெறுதல் கூறவே பாணன் தனக்குரிய வரிசை பெறுவது தப்பாதென்றற்கு "வயங்கிழை யணிய" என்றார். யாம் எனத் தன்னையும் உளப்படுத்தான்; இனம் பற்றி; அன்றித் தானும் உடன் வருவது உணர்த்தியவாறுமாம். வாய் சிவந்து வருவதாவது, உண்ணாமையால் வெளுத்திருக்கும் வாய் உண்பன நிரம்ப உண்டு மகிழ்ச்சி மிக்கு வருதல்.

விளக்கம்: காட்டு, செத்தை; காட்டிடத்துதிர்ந்த சருகு முதலிய வற்றைக் காற்றுக் கொணர்ந்து தொகுத்தலால்துகள் பட்டகுப்பைகாட்டேனப்பட்டது. துப்புரவு செய்யப்படாத முன்றிலை, "சீயா முன்றில்" என்றார். நன்கு துப்புரவு செய்யப்பட்டவிடத்தே கிடந்து உறங்குவோனாகிய வேந்தன் கண்மயக்கால் "காட்டொடு மிடைந்த சீயா முன்றிற் கண் நாட்செருக்குற்று உறங்குகின்றா" னென்பதாம். இவ்வாறு, தன்னைப் பேணாமல், கிடக்குமிடத்தின், புன்மைமயும் நோக்காதான், நீ செல்லின் நினக்கு நின் ஒக்கலின் பன்மை நோக்காது வேண்டுவன ஓம்பாது நல்குவனென்றானாயிற்று. களிமயக்குற்றோர் முன்றிற் கிடத்தலை, "முன்றிற் கிடந்த பெருங்களியாளன்" (புறம். 317) என்று பிறரும் கூறுதல் காண்க.
-----------

317. வேம்பற்றூர்க் குமரனார்

வேம்பற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழநாட்டிலுமுள்ளன. பாண்டிநாட்டு வேம்பற்றூர் இன்றவரையும் நல்ல புலவர்கள் பிறந்து சிறக்கும் ஊராக இருந்து வருகிறது. சான்றோராகிய குமரனார் பாண்டி நாட்டு வேம்பற்றூரினர் எனத் துணிந்துரைப் போருமுளர், வேம்பற்றூரிற் பிறந்தது பற்றி இவர் வேம்பற்றூர்க்குமரனார் எனச் சான்றோரால் வழங்கப்படுவாராயினர். தன் உயிர்க்காதலனைப் பிரிந்திருக்கும் தலைமகள், அவன் பிரிவாற்றாது மேனி வேறுபட்டிருக்கும் திறத்தை "பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய், வினையிற பாவை" யை (அகம். 157) உவமங் கூறி விளக்குவது இவரது புலமை நலத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது. போர்வீரரை "செருவேட்டுச் சிலைக்கும் செங்கண்ணாடவர்" எனத் திருந்த மொழிகின்றார். இவர் பாடினவாக அகத்தில் ஒன்றும் புறத்தில் இப் பாட்டொன்றுமே கிடைத்துள்ளன. போரில் வென்றி பெற்று வாகைசூடி மேம்படும் வீரனொருவன் வல்லாண்மையை இப்பாட்டில் குறித்துள்ளார். இதன் முழுவடிவும் தோன்றாதவாறு சிதைந்துளது.

    வென்வேல்.......................வந்து
    முன்றிற் கிடந்த பெருங்களி யாளற்
    கதளுண் டாயினும் பாயுண் டாயினும்
    யாதுண் டாயினுங் கொடுமின் வல்லே
    வேட்கை மீளப.....................         5
    .............குமெமக்கும் பிறர்க்கும்
    யார்க்கு மீய்ந்து துயிலேற் பினனே.
    ---------

திணையும் துறையுமவை. வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.

உரை: வென் வேல் - வென்றி பயக்கும் வேல்;...வந்து முன்றில் கிடந்த பெருங் களியாளற்க - வந்து முற்றத்தேயுள்ள பெரிய களிப்பேறிய இவனுக்கு; அதளுண்டாயினும் - மான் தோல் இருக்குமாயினும்; பாய் உண்டாயினும் - ஓலையால் செய்யப்பட்ட பாயிருக்குமாயினும்; யாதுண்டாயினும் வல்லே கொடுமின் - யாதிருப்பினும் விரையக் கொடுப்பீர்களாக; வேட்கை மீள எமக்குப் பொருள்மேற் சென்ற விருப்பம் மீண்டொழிய;...எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து துயிலேற்பினன் - பாணராகிய எங்கட்கும் பிற இரவலர்க்கும்்எல்லோருக்கும் பொருள் மிகத் தந்து உறங்குதலை மேற் கொள்வானாயினன்; எ - று.

கள்ளுண்டு பெருமயக்குற்று வந்தவன் நம்மைக் கேளாதே முற்றத்திற் கிடந்து உறங்கக்கருதுகின்றானென்பார், "முன்றிற் கிடந்த பெருங்களி யாளற்கு" என்றும், அவனை வெறிதே தரையில் உறங்கச் செய்வது நன்றன் றென்பார், "யாதுண்டாயினும் கொடுமின் வல்லே" என்றும் கூறினார். "யாதுண்டாயினும் கொடுமின்" என்றது, போர்க்களத்தினும் தன் தோல் (பரிசை) மேல் கிடக்கும் இயல்பினன் என்பது குறித்த நின்றது.

இக்களியாளனைப் பெருங்கனியாளன் என்றதற்கேற்ப, அவனது பெருமைக் குரிய கொடைநலத்தை "எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து" என்றார். பொருள் பெற்று மகிழும பாணன் ஏனைப் பாணர்க்குக் கூறியது.

விளக்கம்: தஞ்சை மாநாட்டில் உள்ள திருமங்கலக்குடிக்கருகே வேம்பற்றூரென ஊர் ஒன்றும் உளதெனக் கல்வெட்டு ( A. R. No 224 of 1927) கூறுகிறது; களிமயக்கால், கிடத்தற்கெனச் சிறிது இடம் கிடைத்தாற் போதுமென வருவார்க்குத், துப்புரவில்லாத முன்றில் கிடைக்கின், அதனைத் தூய்மை செய்து பாய் பரப்பி அதன்மேற் கிடத்தற்கு நினைவோடாதாகலின், அதனை அவன் தகுதி கண்டோர் தாமே செய்யும் கடப்பாட்டின ராவதுபற்றி, "வந்து முன்றிற்கிடந்தபெருங்கனி யானற்கு அதளுண்டாயினும் பாயுண்டாயினும் யாதுண்டாயினும் வல்லே கொடுமின்" என்றனர். இரவலரை நன்கு உண்பித்து இனிது துயிலப்பணணுந் தலைவற்கு அவர் தம்பால் உள்ளன நல்கி இனிது துயில்வித்தல் முறையாதலின், "யாதுண்டாயினும் வல்லே கொடுமின்" என்றாரென வறிக. இப் பாட்டிடையே அடிகள் சிதைந்தமையின், பாட்டின் பொருள் நலம் இனிது காண்டற்கியலாதவாறு கிடக்கின்றது.
-------

318. பெருங்குன்றூர்கிழார்

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி "மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூராயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம்" அவனால் விடப்பெற்றவர் பெருங்குன்றுர்கிழார். வையாவிக்கோப்பெரும்பேகனைப் பாடி அவன் மனைவி கண்ணகியோடு கூடி வாழுமாறு அவன் உள்ளத்தைத் திருத்தியவருள் இவரும் ஒருவர். தம்பால் "அறிவு கெட நின்ற நல்கூர்மை"யை ஒழிப்பது குறித்துச் சோழள் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பெரும் பரிசில் பெற்றவர், இத்தகைய சான்றோர் ஒருகால் பெரும் போருடற்றி வெற்றிக்கொண்டு வாகைசூடி மேம்பட்ட தலைவனொகுவனைக் கண்டார். அவன்தன் வேந்தன் பொருட்டுக் கடும்போர் புரிந்தான். அவ் வேந்தன் போரில் துன்புற்றிருப்பானாயின், தலைவனாகிய இப் பெருந்தகையின் ஊர் பசியால் பெருந்துயர் உழக்கும் என்று இப் பாட்டின்கட் குறித் துரைத்து மகிழ்கின்றார்.

    கொய்யடகு வாடத் தருவிற் குணங்க
    மயிலஞ் சாயன் மாஅ யோளொடு
    பசித்தன் றம்ம பெருந்தகை யூரே
    மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்         5
    குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லி னரீசி யார்ந்துதன்
    புன்புறப் பெடையொடு வதியும்
    யாணர்த் தாகும் வேந்துவிழு முறினே
    ---------

திணையும் துறையு மவை. பெருங்குன்றூர்கிழார் பாடியது.

உரை: கொய்யடகு வாட - கொய்யப்பட்ட இலைக்கறி வாடி வதங்கவும்; விறகு உணங்க - கொண்டுவந்த விறகு உலர்ந்து கெடவும்; மயிலஞ் சாயல் மாயோளொடு - மயில் போன்ற சாயலும் மாமை நிறமுமுடைய மனையானோ கூடி வாழும்; பெருந்தகையூர் - பெரிய தகைமையினையுடைய தவைவனதூர்; வேந்து விழு முறின் - வேந்தன் போரில் துன்புறுவானாயின்; பசித்தன்று - பசியால் வருந்தும்; மனையுறை குரீஇக் கறை யணல் சேவல் - மனையிறைப்பில் வாழும் ஊர்க்குருவியின் கரிய கழுத்தைமயுடைய ஆண்; பாணர் நரம்பின் சுகிரொடு - பாணருடைய யாழ் நரம்பின் கோதுகளுடன்; வயமான் குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை - வலிமிக்க சிங்கத்தின் கதிர்த்த பீலிபோன்ற மயிரைக்கொண்டு செய்த கூட்டின்கண்; பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து - பெரிய வயலிடத்து விளைந்த நெல்லரிசியை யுண்டு; தன் புன் புறப் பெடையொடு வதியும் - தனது புல்லிய புறத்தையுடைய பெண்ணோடு தங்கும்; யாணர்த்தாகும் -
புதுவருவாயினையுடையதாம்; எ - று.

வேந்து விழுமுறின், ஊர் பசித்தன்று; யாணர்த்தாகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேவர் அரிசியார்ந்த பெடையொடு குடம்பைக்கண் வதியும் யணர்த்தாம் என இயையும். பசித்தல் தெளிவாகலின், இறந்த காலத்தாற் கூறினார். வேந்தன் விழுமமுறாதவாறு பகைவரொடு பொருது வென்றி கண்டானாதலின் ‘பெருந்தனை" யென்றார். குருவியில் ஆண் கருத்த கழுத்தையுடையதாகலின், "கறையணல்" என்றார். நரம்பைச் சீவிச் செம்மை செய்யுங்களால் நீக்கப்படும் நார் போன்ற கோது, "சுகிர்" எனப்பட்டது. முதிர்ந்த மயிர் கதிர் விட்டுத் துய்போற் கவைத்து நிற்றலின், அதனைக் "குரல் செய் பீலி" யெனவும், நெல்லைப்பொறுக்கி உமியை நீ்க்கி அரிசியையே தின்றலின், "நெல்லின் அரிசி யார்ந்து எனவும் கூறினார்.

விளக்கம்: சோற்றிற்கு வேண்டும் அரிசியின்றி அடகும் விறகும் பெற்ப்படுமாயின், அவை உணவுக்காகாமையின், பயப்பாடின்றி வீணாமென்பார், "கொய்யடகு வாட" வெனவும், தருவிறகுணங்க" வெனவும் வகுத்தோதினார். மாலை நிறமும் மயில்போலும் சாயலு முடையாள் பசியால் மேனி மெலிந்து நிறங் கரிந்து சாயலுடைந்து கெடுவது ஒருதலை. வேந்தன் விழுமமுறுவானாயின் பெருந்தகையது ஊர் பசித்துக் கெடும் என்றவர், அவ்வூரின் நலம் கூறுவாராய்க் என்றார். விழுமுறின் எனவே, உறாமை பெற்பட்டது. மனையுறை குருவியின் ஆண் கழுத்திற் கறையுடையதாதல் கண்கூடு. இதனை விதந்து சான்றோரும் "உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்" (நற். 181) என்பார். பெருஞ் செய் நெல் லென்றவிடத்துப் பெருமை நெல்லிற்குரியது; அஃது இடத்தின்மேல் நின்றது. செய், வயல், பெடைசாம்பல் நிறத்ததாகலின், அதனைப் ‘புன்புறப் பெடை’ யென்றார்; பிறரும்" ஆம்பற்பூவின் சாம்பலன்ன, கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ (குறுந். 46) என்பர். மனையுறை அணிமையில் நெல் விளையும் வயலுள்ள வளவிய ஊராதல் பெறப்படும் பெருந்தகையூர் என்றதற்குப் பெரியதகைமையினை யுடைய வூரென வுரைப்பினுமமையும். வேந்து விழுமமுறின். யாணர்த்தாகும் பெருந்தகையூர் பசித்தன்று எனச் சொல்லி விழுமம் உறா வகையில் மறவர் பொருது காத்தவாறு
--------

319. ஆலங்குடி வங்கனார்

ஆலங்குடி யென்னும் ஊர்கள் பல தமிழ் நாட்டில் உள்ளன. இவ் வங்கனார் சோழருடைய உறையூரையும், அவ்வூரிலுள்ள அறங்கூறவை யத்தையும் "மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறங்கெட அறியாது" (நற். 400) எனச் சிறப்பித்துக் கூறலின், இவர் சோழ நாட்டவர் எனத் துணிந்து கூறலாம் பரத்தையிற் பிரிந்து புறத்தொழுகும் தலைமகனுக்குத் தோழி, "பரத்தையர் புன்மனமுடையவர்; அவரை நின் மனைக்கண் வைத்துப் பேணுவாயாயினும் அவர் "பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு, எம்பாடாதல் அரிது" எனத் தெருட்டுவது மிக்க இன்பந் தருவதொன்று. ஒரு தலைவன் தன்வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றிருந்தான். அவன் மனையவள் தன் மனைக்கண் இருந்து தனக்குரிய அறத்தைச் செய்து வந்தாள். அக்காலை அவன் அருள் பெற்று மாலைப் பொழுதாயிற்று; அவன் கருத்தையறிந்த மனைக்கிழத்தி, "பாண, பொழுது மறைந்தது. யாம் என்பாலுள்ளது முயற்கறியே யாயினும் தருகுவேம்; உண்டு இங்கேயிருந்து செல்க; நேற்று வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றுள்ள தலைவன் நானை வாகை குடிப் பெரும் பொருளுடனே வந்துவிடுவன். நின் பாடினி பொன்னரி மாலையணிய நீ பொற்றாமரை சூடத்தருவன்" என்றாள். அதனைக் கேள்வியுற்றார் ஆசிரியர் ஆலங்குடி வங்கனார். மறக்குடி மகளாகிய அவள் கூற்றில் தன் காதலனைப்பற்றிய நினைவிடைக் கலக்கம் சிறிதுமில்லாமலிருந்தது அவருக்கு மிக்க வியப்பினைத் தந்தது. அதனை இப்பாட்டின்கண் வைத்து இனிமை மிகப்பாடியுள்ளார்.

    பூவற் படுவிற் கூவற் றொடீஇய
    செங்கட் சின்னீர் பெய்த சீறில்
    முன்றி விருந்த முதுவாய்ச் சாடி
    யாங்கஃ டுண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை யுணங்கல்         5
    புறவு மிதலு மறவு முண்கெனப்
    முயல்சுட்ட வாயினுந் தருகுவேம் புகுதந்
    தீங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட் டாமா னடுங்குதலைக் குழவி         10
    புன்றலைச் சிறாஅர் கன்றென்ப் பூட்டும்
    சீறூர் மன்ன னெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே.         15
    --------

திணையும் துறையு மவை. ஆலங்குடி வங்கனார் பாடியது.

உரை: பூவல் படுவில் கூவல் தொடீஇய செங்கண் சின்னீர் பெய்த-செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர்நிலையைத் தோண்டியதனால் உண்டாகிய சிவந்த இடத்துச் சிறிதாக வூறிய நீரை முகந்துவைத்த; முது வாய்ச் சாடி அஃடு உண்டென அறிதும் - முதிய வாயையுடைய சாடியின் அடிப்பகுதியில் நீர் சிறிது உண்டென்று அறிகின்றேம்; மாசின்ற - அது குற்ற மின்றாகவும் உளது; படலை முன்றில் சிறு தினை யுணங்கல் - படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததை; புறவும் இதலும் அறவும் உண்க எனப் பெய்தற்கு---;;புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப் பிடித்துச் சமைத்தற்கு; பொழுது எல்லின்று - ஞாயிறு மறைந்து இரவாயிற்று; அதனால் -; முயல் சுட்டவாயினும் தருகுவேம் - உள்ளது முயலினது சுட்ட கறியேயாயினும் அதனை உண்ணத்தருவேம்; புகு தந்து ஈங்கு இருந்தீமோ -எம் மனைக்குட்புகுந்து இவ்விடத்தே இருப்பாயாக; முதுவாய்ப் பாண - அறிவு முதிர்ந்த பாணனே; கொடுங்கோட்டமான் நடுங்குதலைக் குழவி - வளைந்த கொம்பையுடைய ஆமானது அசைகின்ற தலையையுடைய இளங் கன்றை; புன்றலைச் சிறா மன்னன் - தம்முடைய சிறு தேர்க்குச் சேங்கன்றெனப் பூட்டி விளையாடும் சிறிய வூரையுடைய மன்னனாகிய கொழுநன்; நெருதை ஞாங்கர் - நேற்றைய நாளில்; வேந்து விடு கெதீாலொடு சென்றனன் - பெருவேந்தன் பொருட்டுப் போர்த் தொழிலை மேற்கொண்டு சென்றுள்ளான்; வந்து - நாளை வினைமுடித்து வந்து; நின்பாடினி மாலை யணிய - நின்னுடைய பாடினி பொன்னரி மாலை அணிந்து மகிழ; நினக்கு வாடாத்தாமரை சூட்டுவன் - நினக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டுவான்; எ - று.

பாண, சாடி, மாசின்று; பொழுது எல்லின்று; அதனால், தருகுவேம்; புகுந்தது ஈங்கிருந்தீமோ; மன்னன் நெருதை ஞாங்கர் சென்றனன்; நாளை வந்து, அணிய, சூட்டுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆங்கென்ப தசைநிலை. செம்மண் நிலத்துக் கூவலில் தோண்டிய சிறிய இடம் சிவந்திருத்தலின், "செங்கண்" எனப்பட்டது. சாடியின் வாய் உயர்ந் திருத்தலின் "முதுவாய்ச் சாடி" யென்றார். அகட்டிலுள்ள நீர் கசடு கலந்து மாசுடைத்தாமாயினும், இஃது அன்னதன்று என்றதற்கு "மாசின்று" என்றாள். தினையுணங்கலைத் தெளித்து அவற்றை யுண்ணவரும் புறாவையும் இதலையும் பிடித்தக் கொன்று சமைத்தற்கு இல்லாதபடி இரவு வந்துவிட்டதென்பாள் "புறவும் இதலும் உண்கெனப் பெற்தற்கு எல்லின்று பொழுது" என்றாள். மிக்க இளங்கன்றை "நடுங்குதலைக் குழவி" யென்றும், இளைய சேங்கன்றினை வாளாது "கன்" றென்றும் கூறினார். பூட்டும் என்றதற்கேற்பச் சிறுதேர் வருவிக்கப்பட்டது. நெருதை ஞாங்கர் என்றமையின் நாளை என்பது பெற்றாம். வினைமுடித்து வாகைசூடி வருதல் ஒருதலை யென்பது கருத்தாதல் தோன்ற, "பாடினி மாலையணிய, வாடாத்தாமரை சூட்டுவன் நினக்கே" யென்றாள். வாடாத்தாமரை, பொற்றாமைரக்கு வெளிப்படை ஆங்கு: அசைநிலை.

விளக்கம்: பூவல், செம்மண் நிலம். படு, பள்ளம்; இது மடுவெனவும் வழங்கும். தொடீஇய செங்கண், தோண்டுதலாலுண்டாகிய சிவந்த ஊற்றிடம். செம்மண் பாங்கினதாகலின் செங்கண் எனப்பட்டது; இயல்பாகவே சிவந்திருத்தல்பற்றிச் செங்கண் என்றார்; திருமாலின்கண் இயல்பாகவே சிவந்திருத்தல் கண்டு சான்றோர் "செயிர் தீர் செங்கண் செல்வ" (பரி. 4) என்றாற்போல. முதுவாய், உயர்ந்த வாயென்றுமாம். அகடு, அஃடு என வந்தது; செய்வது "செய்வஃது" எனவும், அகுதை அஃதையெனவும் வருவதுபோல ஆய்தம் விரிந்தது. பொழுது மறையின். புறாவும் இதலுமாகிய பறவைகள் தத்தம் சேக்கைக்கண் ஒடுங்கிவிடுமாகலின், "பொழுதும் எல்லின்று" என்றாள், சிறுதினைகளை உணக்கற்குப் பெய்தவழி, அவற்றை யுண்டற்கு வரும் புறா முதலியவற்றைக் கண்ணிவைத்துப் பிடிப்ப; கண்ணிவைத்துப் பிடித்தற்கு இது பொழுதன்று என்பாள், "உணங்கல் பெய்தற்கு எல்லின்று பொழுது" எனத் தகுதியுற மொழிந்தாள். புதிய இறைச்சி நல்குதற்குக் காலமன்மையின், உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறி; அதனை நல்குதற்கு இயலுமென்றது, இல்லென்னாது விருந்தோம்பும் மனையவளது மாண்பு தெரிவித்து நின்றது. கொடுமை வளைவு. ஆமான் ஈன்ற இளங்கன்றினை, "நடுங்குதலைக் குழவி" யென்றது அதன் இளமைமிகுதி குறித்து. கன்றொடு விளையாட்டயரும் சிறார், ஆமானுடைய இளங் குழவியைப் பற்றித் தம் சிறுதேர் ஈர்க்கும் கன்றெனப் பூட்டி விளையாடுவது, மிக்க இளமையுடையாரும் மறச் செயலில் ஈடுபட்டுப் பயிலும் திறம் கூறுகிறது. நெருதை ஞாங்கர் என்றதற்கு நெருநைக்கு முன்னாள் என்றும், இடையில் கழிந்த ஒரு நாளைய நிகழ்ச்சி கேட்டறிந்து, வெற்றி யுண்டாதலை நன்கு தெளிந்து நாளை வந்து நினக்குத் தாமரையும் நின் பாடினிக்குப் பொற்றாமரையும் நல்குவன் தன்கணவ னென்றும் கூறினாளென வுரைப்பினு மமையும்.
---------

320. வீரைவெளியனார்.

வெளியன் என்பது இவரது இயற்பெயர்; வீரை யென்பது இவரதூர். இது பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள நாட்டைச் சேர்ந்தது; புதுச்சேரிக் கருகில் வீராம்பட்டினமென இப்போது வழங்குகிறது. அகநானூற்றிற் காணப்படும் சான்றோர்களுள் ஒருவரான வீரைவெளியன் தித்தனார் இவருடைய மகனாராவர். மழையை நோக்கித்தோழி கூறுவதாக இத்தித்தனார் பாடியுள்ள பாட்டைப் படிப்பவர் இவரது புலமை நலங் கண்டு பெருவியப்படைவர். இத்தகைய புலமை நலஞ்சான்ற மகனைப் பெற்ற வெளியனாரை நினையாதிருப்பதற்கும் இடமிராது. வெளியனாரும் நல்லிசைப் புலமை நலம் சிறக்க வாய்ந்தவரென்பதை இப் பாட்ட எடுத்துக் காட்டுகின்றது. தானைத் தலைவனொருவன் தன் வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்று வெற்றி மேம்பாட்டால் வாகை சூடிச் சிறக்கின்றான். அவனைக் காண்பது குறித்துப் பாணனொருவன் செல்கின்றான், அவனைக் காணும் வெளியனார், அத் தலைவனது ஊர்நலத்தை யெடுத்தொதி அங்குச் சென்று தங்கிச் செல்லுமாறு இப் பாட்டால் அறிவுறத்துகின்றார். அத்தலைவன் வேந்தன்பால் பெற்றுவரும் பெருஞ் செல்வத்தைத் தன்பால் வரும் பரிசிலர்க்கும் இரவலர்க்கும் வரையாது வழங்கும் வண்மையுடையவ னென்றும், அதனால் அவன் பாட்டும் உரையும் பெற்ற பண்புடைய வேட்டுவர் மனையில் நிகழும் நிகழ்ச்சியொன்றைச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார். அது படிப்போர் தம் மனக்கண்ணிற் கண்டு மகிழ்தற்குரியதாகும்.

    முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
    பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழற்
    கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்
    பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
    தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவினை யாட         5
    இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
    கணவ னெழுதலு மஞ்சிக் கலையே
    பிணைவயிற் றீர்தலு மஞ்சி யாவதும்
    இல்வழங் காமையிற் கல்லென வொலித்து
    மானதட் பெய்த வுணங்குதினை வல்சி         10
    கானக் கோழியொ டிதல்கவர்ந் துண்டென
    ஆர நெருப்பி னார னாறத்
    தடிவார்ந் திட்ட முழுவள் ளூரம்
    இரும்பே ரொக்கலொ டொருங்கினி தருந்தித்
    தங்கினை சென்மோ பாண தங்காது         15
    வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும்
    அருகா தீயும் வண்மை
    உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.
    --------

திணையும் துறையு மவை. வீரை வெளியனார் பாடியது.

உரை: முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி - முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால்; பந்தர் வேண்டா பலாத் தூங்கு நீழல் - வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழவில்; கைம்மாள் வேட்டுவன் கனை துயில் மடிந்தென - யானை வேட்டம் புரியும் வேட்டுவன் மிக்க வுறக்கத்தைக் கொண்டானாக; பார்வை மடப்பிணை தழீஇ - பார்வையாகிய இளைய பெண்மானைத் தழுவி; பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட - தொழி லொன்றுமில்லாத பிறிதொரு தனி ஆண்மான் கலந்து விளையாட உயர; இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் - இன்பமிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட மனையவள்; கணவன் எழுதலும் அஞ்சி - தன் கணவன் உறக்கம் நீங்கி யெழுவனென் றஞ்சியும்; கலை பிணைவயின் தீர்தலும் அஞ்சி - அக் கலையாகிய மான் பிணை மானை விட்டு நீங்கி யோடிப்போமென்று அஞ்சியும்; யாவதும் - சிறிதும்; இல்வழங்காமையின் - மனையிடத்தே நடமாடாமல் ஒருபுடை யொதுங்கி அமைந்தனளாதலால்; கல்லென ஒலித்து - கல்லென ஆரவாரித்து; மானதள் பெய்த உணங்கு தினை வல்சி - மான்தோலின் மேல் பரப்பி யுலர வைத்த தினையரிசியை; கானக் கோழியொடு இதல் கவர்ந்துண்டென - காட்டுக் கோழியும் இதற் பறவையும் கவர்ந்துண்டு அகப்பட்டனவாக; ஆர நெருப்பின் - சந்தனக் கட்டையாலாகிய செருப்பில் கூட்டு; தடிவு ஆர்ந்திட்ட மழுவள்ளூரம் - துண்டு துண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை; ஆரல் நாற - ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ; இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிதருந்தி - கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒருங்கு கூடியிருந்து இனிதுண்டு; தங்கினை சென்மோ - அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக; தங்காது - குறையாமல்; வேந்து தரு விழுக்கூழ் - தனக்குப் பகைவேந்தர் திறையாகத் தந்தனவும் தன் அவந்தன் சிறப்பாகத் தந்தனவு மாகயி பெருஞ் செல்வத்தை; என்றும் பரிசிலர்க்கு அருகாது ஈயும் - எந்நாளும் தன்பால் வரும் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும்; வண்மை - கொடையும்; உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊர் - புகழமைந்த நெடிய தகை மையினையுமுடைய தலைவன் காக்கும் ஊரின்கண்; எ - று.

ஊர் தங்கினை சென்மோ, பாண எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வேட்டுவன் துயில் மடிந்தென, பிணைதழீஇக் கலை விளையாட, எழுதலு மஞ்சி, தீர்தலுமஞ்சி, மனையோள் இல்வழங்காமையின், கோழியோடு இதல் கவர்ந்துண்டென, வள்ளூரம் ஆரல் நாற, ஒக்கலொடு இனி தருந்திச் சென்மோ என இயையும். பார்வை மடப்பிணை, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி செய்யப்பட்ட மடப்பிணை, தினையுணங்கலைப் பரப்பிக் கண்ணிவைத்து, அவற்றை யுண்ணும் கோழியையும் இதலையும் புறா முதலியவற்றையும் பிடித்தல் மரபு. உண்டென் என்பது உண்டு பிடிபட்டனவாக எனக் காரியத்தின்மேல் நின்றது. பலர் தூங்கு நீழலென்றும், ஆரநாறவென்றும் பாடமோதி, பலர் உறங்கும் நீழலெனவும் சந்தனத்தின் மணங்கமழவெனவும் முறையே பொருளுரைப்பாருமுனர்.

விளக்கம்: முன்னைக் கொடியும் முசுண்டைக்கொடியும் முன்றிலில் நிற்கும் பலாமரத்திற் படர்ந்து பந்தர் வேய்ந்ததுபோல் இனிய நிழல்செய்தலின், பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல் என்றார். பலர் தூங்கும் நீழல் என்ற பாடத்துக்குப் பலரும் கள்ளுண்டு கிடந்துறங்கும் நீழலிடம் என்று உரைப்பினும் அமையும். கைம்மான், யானை. மேய்தலாகிய தொழிலைக் கைவிட்டுப் பிணையோடு புணர்ச்சிவேட்கை கொண்டு அதனொடு கூடி யுறைதலை விளக்குதற்குப் "பிறிதோர் தீர் தொழில் தனிக்கலை திளைந்து விளையாட" என்றார். கலையும் பிணையும் புணர்நிலைக்கண் விளையாட்டயரக் காண்பனேல் வேட்டுவனாகிய கணவன், கலையை யருளாது வீழ்த்துவன் என்றுணர்ந்து அவன் உறக்கத்தினீங்கி யெழுவனோ எனவும், தன் வரவு காணின் புதிதுவந்த கலைமான் அஞ்சியோடியவழிப் பிணைமானது புணர்நிலை யின்பம் சிதையுமெனவும் அஞ்சி ஒருபுடையில் ஒடுங்கினள். அவளது ஒடுக்கம், திணை யுணங்கலைக் கானக் கோழியும் இதலும் அஞ்சாது கவர்ந்துண்டற்கு இடந்தந்தது, கானக்கோழி முதலியவற்றின் இறைச்சியும் ஆரல்மீன் கறியும் ஏனை மான் முதலியவற்றின் இறைச்சித் துண்டமும் சந்தன விறகிற் சட்டு விருந்தினர்க்களித்து ஓம்புவர் எனக் கானவருடைய விருந்தோம்புந் திறன் கூறியவாறு. இதனைத் தொகுத்துத் சுருங்கவுரையாது விரித்தோதியது கேட்கும் பாணற்கு உள்ளத்தில் வேட்கை எழுப்பி, உரைக்கப்படும் உரைவழி நிற்கப்பண்ணுவது குறித்ததாம். சந்தனவிறகிற் சுடுவது நறுமணம் ஊட்டற்கென வுணர்க தங்கியவழி. இவ்விறைச்சி வகையுடனே, பகைப் புலத்துப் பெறும் உயரிய பொருளையும் தரப்பெறுதல் ஒருதலையென்பார், "தங்கினை சென்மோ" எனவும், "அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை" யெனவும் கூறினார். போரிடையே செய்யப்படும் அருஞ் செயலை வியந்து பாராட்டி வேந்தன் நல்கும் சிறப்பும் உளப்பட "விழுக்கூழ்" என்றார்.
--------

321. உறையூர் மருத்துவன் தாமோதரனார்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவன், பிட்டங்கொற்றன் என்ற இவர்களைப் பாடிச் சிறப்பெய்தியவர் இச் சான்றோர். இவர் உறையூர்ன்கண் இருந்து மருத்துவத்தொழில் செய்துவந்தவராதலால், உயையூர் மருத்துவன் தாமோதரனார் என இவர் கூறப்படுகின்றார். போரில் புகழுண்டாகப் பொருது வாகை மிலைந்து சிறப்புற்ற தலைவன் ஒருவனைப்பற்றிப் பாணரிடையே பேச்சுண்டாக, அதனைக் கேட்டிருந்த தாமோதரனார் அவர்கட்கு விடைகூறுவார்போல இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் தலைவனது ஊர் அமைந்த நாட்டின் இயல்பை விரித்துரைப்பாராய், அந்த நாடு நன்செய் வளமின்றிப் புன்செய் வளமிக்கதென்றும், அங்கே வரகே மிகுதியும் விளைவதென்றும், வரகுக் கொல்லைகளில் வாழ்வனவற்றுள் ஒன்றான பூழ்ச்சேவல் வரப்புகளில் வாழும் சுண்டெலிகளைப் பிடித்துத் தின்னுமாற்றால் அவற்றை யலைக்குமென்றும், அவற்றிற்கஞ்சும் எலிகள் ஓடிக் கொல்லையில் உதிர்ந்து கிடக்கும் தோனைகளிடையே பதுங்குமென்றும் சொல்லி, இத்தகைய நாட்டிடையுள்ள ஊரையுடைய தலைவன் சென்னி, போரில் பகைவருடன் பொருதலால் வாள்வடுவால் சிறப்புற்றுத் திகழுமென்றும், அவன் போரைப் பெரிதும் விரும்பும் வல்லாண்மையுடைய னென்றும் எடுத்துரைத்துள்ளார். இப் பாட்டு இடையே சில அடிகள் சிதைந்துள்ளது.

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெட்
    கூளகிடை யுணங்கற் செவ்வி கொண்டுடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தையஞ் செவிய கோட்டெலி யாட்டக்         5
    கலியார் வரகின் பிறங்குபீ ளொளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே சென்று
    தின்பழம் பசீஇ...னனோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசி லோம்பு மூரே.         10
    --------------

திணையும் துறையு மவை. உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

உரை: பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் - புள்ளி பொருந்திய புறத்தையுடைய குறும்பூழ்ப் பறவையின் சேவல்; மேந் தோல் களைந்த தீங்கொள் வெள்ளென் - மேலுள்ள தோல் நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்ளாகிய; சுளகிடை யுணங்கல் செவ்வி கொண்டு - முற்றத்தில் வைத்து உலர்த்தப்பட்டவற்றைக் கவர்ந்துண்டு; உடன் - உடனே; வேனற் கோங்கின் பூம்பொகுட்டன்ன - வேனிற் காலத்து மலரும் கோங்கினது பூவிடத்துள்ள கொட்டையைப்போன்ற; குடந்மையம் செவிய - வளைந்த அழகிய காதுகளையுடையவாகிய; கோட்டெலி யாட்ட - கொல்லை வரப்பில் வாழும் எலியை யலைக்க; கலியார் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் - தழைத்தலைப்பொருந்திய வரகின் உயர்ந்த தோகையிடையே அவ்வெலி சென்று மறையும்; வன்புல வைப்பினது - வன்புலமாகிய நாட்டின் கண்ணேயுளது; சென்று தின்பழம் பசீஇ - சென்று பறித்துத் தின்னப் படும் பழம் பசந்து...பாண - பாணனே; வாள் வடு விளங்கிய சென்னி - வாளால் வடுப்பட்டு விளக்கும் தலையையுடைய; செருவெங் குரிசில் ஓம்மபும் ஊர் - போரை விரும்பும் குரிசிலாகிய தலைவன் காத்தளிக்கும் ஊர்; எ - று.

ஊர், சேவல் உணங்கல்கொண்டு கோட்டெலியாட்ட, (அல்வெலி) பீள் ஒளிக்கும் வன்புல வைப்பினது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆட்டப் பீள் ஒளிக்கும் என்றதற்கு ஆட்டின் பொருட்டுப் பீளின்கண் ஒளிக்கும் என வுரைப்பினுமமையும். எள்ளின் மேல்தோல் நீங்கியவழி அதன் உள்ளீடு வெளுத்துத் தின்பார்க்கு இனிமை பயப்பதாகலின், "தீங்கொள் வெள்ளென்" என்றார். செவ்வி கொண்டென்றார், காவலின்மை யறிந்து அக்காலத்தே தப்பாது கவர்ந்துண்பது பூழ்ப் பறவைக்கு இயல்பாதலின், வரகு விளையும் கொல்லையின் வரப்பில் வளையமைத்து வாழ்வதுபற்றிச் கண்டெலியைக் "கோட்டெலி" யென்றார். வரகின் உதிர்ந்த வைக்கோல் ஈண்டுப் பீளெனப்பட்டது; அதனைத் தோகை யென்றலும் வழக்கு. வன்புலம் - முல்லைநிலம். சென்னியில் உண்டாகிய வாள்வடு, தலைவனது வாட்போர்வன்மையைச் சிறப்பித்துக் காட்டலின் "வாள்வடு விளங்கிய சென்னி" யென்றார். ஓம்புமூரென்றது ஆற்றலால் ஈன்ற தாய் தன் குழவியை யோம்புவது போல ஓம்புகின்றானென்பது விளங்க நின்றது.

விளக்கம்: கோழிகளை வளர்த்துப் போர் செய்து வெற்றி பெறப் பயிற்றுவதுபோலப் பண்டைநாளில் குறும்பூழையும் பயிற்றுவது மரபு; இவ்வகையால் போர் செய்தலில் வன்மைமிக்க சேவலை, "பூழின்போர்வல் சேவல்" என்றார். குறும்பூழ்களைப் போரிற் பயிற்சி செய்து விடுவோரைக் குறும்பூழாடிகள் என்ப. குறும்பூழ்க்கு அரிசி யுண்ணத் தருதலும், பச்சிலை பிசைந்து தடவுதலும் அவ்வப்போது அதற்கு மந்திரம் பல வோதுவதும் உண்டு. குறும்பூழ்களுள் வெல்லும் திறலுடையவற்றிற்கு இலக்கணங்களும் பண்டை நாட்புலவர் கண்டிருந்தனர். குறும்பூழைக்காடை யென்றும், காடையின் வேறாகிய கவுதாரி யென்றும் கூறுவர். நன்கு நனைத்துத் தேய்த்து மேல்தோலை நீக்கிய வெள்ளெள்ளை ஈரம் புலரச் சுளகிடைப் பரப்பி உணக்குப. உணக்கினாரது அற்றம் நோக்கி வெள்ளெள்ளைக் கவர்தலின், "செவ்வி கொண்" டென்றார். செவ்வி யுணங்கல் கொண்டு எனக் கொண்டு சுளகிடைச் செவ்வியுண்டாக உணக்கியதனைக் கவர்ந்து கொண்டென வுரைப்பினும் அமையும். குடந்தை, வனளவு. முடம் முடந்தை (பதிற் 32) யென வருதல்போல, குடம் குடந்தையென வந்தது; "குடந்தையஞ் செவிய" (அகம். 284) என வருதல் காண்க. இதனைப் "பெயர்த் திரிசொல்; இனிப் பழ வழக்கென்பது மொன்று" (பதிற். 27) என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரைகாரர். வேனிற்காலத் தரும்பும் கோங்கின் அரும்மபு சுண்டெலியின் காதுக்கு உவமை. பாணன் தங்கிச் செல்வானாயின் அவற்குத் தரப்பெறு வனவற்றை யுரைக்கும் அடிகள் சிதைந்துள்ளன. வாட்போர் செய்வார்க்குத் தலையிற் புண்ணுண்டாதல் இயல்பாதலின், "வாழ்வடு விளங்கிய சென்னி" என்றார் திருக்கோயிலூர் வட்டத்தின் மேலைப்பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்களுள் வாட்போர் செய்து தலையிற் புண்பட்ட வீரர்களைக் குறித்திருப்பது காணத்தக்கது.
---------

322. ஆவூர்கிழார்

ஆவூர்கிழாரது இயற்பெயர் தெரிந்திலது. ஆவூரென்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாநாட்டிலும் வடவார்க்காடு மாநாட்டிலும் உள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள ஆவூரே இச்சான்றோரது ஊராக இருக்கலாமென எண்ணுதற்கேற்ப, முல்லை நிலத்தையே இவர் சிறப்பித்துப் பாடியிருக்கின்றார். இவர்க்கு மகனாரொருவருளர். என்பது. ஆவூர்கிழார் மகனாரான கண்ணனார் பாடிய பாட்டொன்று அகத்தில் காணப்படுகிறது. அதுவும் குறிஞ்சி நிலச் சிறப்பை யெடுத்துக் கூறுகிறது. தஞ்சை மாநாட்டு ஆவூர் காவிரியின் தென்கரையில் உளது. அஃது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தராற் சிறப்பித்துப் பாடப்பெற்றதெனினும் மருத வளஞ்சார்ந்து அண்ணாமலை நாட்டு ஆவூரின் வேறுபடுகிறது. ஆவுர்கிழார் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் இந் நூலில் நமக்குக் கிடைத்துள்ளது. இதன்கண்வெள்வேல் வீரனொருவன் போரில் கடுஞ்சமம் புரிந்து பகைவேந்தர் அவனை நினைக்குந்தோறும் அச்சம் மிகுந்து உறங்காக் கண்ணராய்த் துன்ப முழக்குமாறு வென்றி மேம்பட்டான். அவனது ஊரைச் சிறப்பிக்கின்றார் ஆசிரியர் ஆவூர்கிழார். அந்த ஊர் வன்பலமாகிய முல்லை நிலத்தில் உளது; அந்த நாட்டு வில்லேருழவருடைய சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரசினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர்; எலியொன்றைக் கண்டதும் அவர்கள் வில்லை வளைத்து ஆரவாரிப்பர்; அவ்வோசை கேட்டதும் அருகே மேயும் குறுமுயல்கள் அண்மையில் அவர்கள் மனைமுற்றத்தில் இருக்கும் கரிய மட்கலங்களிடையே, அவை யுருண்டோடி யுடைந்து கெடுமாறு பாய்ந்தோடும், என அவ் வன்புலத்தியல்பை இப் பாட்டில் அழகுறக் கூறியுள்ளார்.

    உழுதூர் காளை யூழ்கோ டன்ன
    கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
    புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்
    புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற்
    பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய         5
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல
    திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட்
    டண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை யீயா வேலோ னூரே.         10
    ---------

திணையும் துறையு மவை. ஆவூர் கிழார் பாடியது.

உரை: உழுதூர் காளை யூழ்கோடு அன்ன - நிலத்தை யுழுததனால் ஓய்ந்த நடை கொண்டு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்புபோல்; கவைமுள் கள்ளி பொரியரைப் பொருந்தி - கவைத்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப் பகுதியைப் பொருந்தி யிருந்து; புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புதிது விளைந்த வரகை யரிந்தபின் உண்டாகிய அரிகாலின்கண் வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்குச் செவ்விபார்க்கும்; புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின் புல்லிய தலையையுடைய சிறுவர்கள் கையில் வில்லையெடுத்துக் கொண்டு ஆரவாரிப்பராயின; பெருங்கண் குறு முயல் - பெரிய கண்ணையுடைய குறுமுயல்; கருங்கலன் உடைய மன்றில் பாயும் - கரிய புறத்தையுடைய மட்கலங்கள் உருண்டுடைந்து கெடமன்றிலே பாய்ந்தோடும்; வன்புலத்தது - வன்புலத்தின் கண்ணே யுளது; கரும்பின் எந்திரம் சிலைப்பின் - கரும்பாட்டும் ஆலை யொலிக்குமாயின்; அயலது - அயலதாகிய நீர்நிலையிலுள்ள; இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண் - பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் அழகிய இடத்தையுடைய; தண்பணையாளும் வேந்தர்க்கு - குளிர்ந்த மருதநிலத்தூர்களை யாட்சி செய்யும் அரசர்கட்கு; கண்படை ஈயா வேலோன் ஊர் - கண்ணுறக்கத்தை யெய்தாமைக் கேதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையவன் ஊர்; எ - று.

ஊர் வன்புலத்தது என விளை முடிவு செய்க. கொம்பு முளையாத இளங்காளைகளை உழுதற்குப்பயன்படுத்தாராகலின், "உழுதூர் காளையூழ் கோடு" என்றார்; ஊர்தல், ஓய்ந்து நடத்தல். ஊழ்கோடென்றார். எருத்திலிட்ட நுகம் முகத்தே சரியாதவாறு தாங்கும் அளவாகத் தோன்றிய கோடு என்பது விளக்குதற்கு. பொரித்தாற்போல் பொருக்குடைய அரை, பொரியரை யெனப்பட்டது. புதுவரகறிந்த அரிகாலில் உதிர்ந்து கிடக்கும் வரகையுண்டற்கு வரம்பளையில் வாழும் எலி வரமாதலால் அதனைக் கண்டதும் சிறுவர்கள் அதன்மீது அம்பு அய்யும்பொருட்டு ஆரவாரிப்பது இயல்பென்பதுகொண்டு "ஆர்ப்பின்" என்றும், சிறாரின் ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் கருங்கலங்களினிடையே துள்ளிப்பாய்ந் தோடுங்கால், அவை யுருண்டு தம்மிற்றாக்குண்டு உடைதலால், "கருங்கல னுடைய மன்றிற் பாயும்" என்றும் கூறினார். வேலோனது பகைமைக்கஞ்சி இரவெல்லாம் உறக்கமிலராயினர் என்பார், "கண்படை யீயா வேலோன்" என்றார்; "முரசு முழங்கு நெடுநகரரசு துயியீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ்" (பதிற். 12) என்று பிறரும் கூறுதல் காண்க.

விளக்கம்: ஊழ்கோடு என்றதற்கு முதிர்ந்த கோடு எனவும் கூறுவர். இளமைச் செவ்வியிற்றோன்றி வெளிப்பட்டு நிமிர்ந்திருக்கும் இளங்கோடேகள்ளியின் கவைமுட்டு உவமமாதற் கேற்புடைமையின், ஊழ்கொடென்றதற்கு முளைத்த கோடென வுரை கூறப்பட்டது. அக்கோடு மிக நீளாது குறுகியிருக்கும் என்பது தோன்றக் "குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி" (அகம். 184) என மதுரை மருதனிள நாகனார் கூறுவது காண்க. கள்ளிகள் நிற்கும் வேலியடியைப் பொருந்தியிருந்து எலியின் வரவைச் சிறுவர் பார்த்திருப்பரென்றற்கு, கள்ளிப் பொரியரைப்்பொருந்திக் கருப்பை பார்க்கும் சிறார்" என்றார் அரிகால் அரிந்தவழி அடியில் நிலத்தோடு கொருந்தியிருக்கும் தாள். அரிகாலின் அடியில் வளை செய்துகொண்டு எலிகள் வாழுமாதலால், அவற்றை "அரிகாற் கருப்பை" யெனச் சிறப்பித்தார். சிறுவர்கள், வேட்டுவச் சிறார்கள் என்பது தோன்ற, "வில்லெடுத்தார்ப்பின்" என்றார். முயல், குறுகிய உருவிற்றாயினும் கண் பெரிதாதல் பற்றிப் "பெருங்கட் குறுமுயல்" எனப்பட்டது. சிறாராதலால், வில்லை வளைத்து அம்மை யெய்யுமிடத்து ஆரவாரிப்பாராயினர், ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் அருகே மனை முன்றிலில் இருக்கும் மட்கலங்கள் உருண்டுடையமாறு தாவியோடும் என்றார். புன்புல பூர்களில் இத்தகைய காட்சிகள் இக்காலத்தும் உண்டென வறிக. கரும்பின் எந்திரம், கரும்பை ஆட்டும் ஆலை கரும்பரைக்கும் ஆலையில் எழும் ஓசை சிலைப்பது போறலின், "சிலைப்பின்" என்றார். "கரும்பி னெந்திரம் களிற்றெதிர் பீளிற்றும்", (ஐங். 55) என்று ஐங்குறு நூறு கூறுவது காண்க. சுவல, கழுத்துமாம். புன்புலத்திலுள்ள ஊரில் வாழ்வோனாயினும் வேலோன், தண்புல நாட்டு வேந்தர்க்கு அச்சம் விளைவிக்கும் விறலுடையனாவன் என மறவனது வல்லாண்மையே கூறியவாறாயிற்று.
-------

323. வல்லாண்முல்லை

வல்லாண் முல்லை யென்பது, "இல்லும் பதியும் இயல்பும் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று," என்று புறப்பொருள் வெண்பாமாலை (8:22) கூறுகிறது. இப் புறப் பாட்டுக்களைத் தொகுத்துத் திணையும் துறையும் வகுத்தவர் புறப்பொருள் வெண்பாமாலையை மேற்கொண்டு சென்றிருத்தலின், அதுகொண்டே இவ்விளக்கம் கூறப்பட்டது. இப்பாட்டுப் பெரிதும் சிதைந்து கிடக்கிறது. இதனைப் பாடிய ஆசிரியர் பெயரும் பாடப்பட்ட தலைவன் பெயரும் தெரியாவாறொழிந்தன. ஒரு தலைவனது ஊர் நலமும் அவனுடைய போர் நலமும் எடுத்துக் கூறவந்த ஆசிரியர், பரிசிலர்க்கு அவர் கருதியதைக் கருதியவளவே கொடுக்கவல்ல கொடையும், ஏந்திய தன் வேல் கெடுமாயின், தன் வாளைப் பெரிய யானையை எறிதற்பொருட்டு எடுத்தால் எடுப்பனே தவிரப் பிறசெயற்கு அதனை எடான் எனப் போர்ச் சிறப்பும் கூறியுள்ளார். அவனது ஊர் நலத்தை யுரைக்கும் பகுதி தெளிய விளங்காவாறு சிதைந்துளது.

    புலிப்பாற் பட்ட வாமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத் தூட்டும்
    கா................பரிசிலர்க்
    குள்ளியது சுரக்கு மோம்பா வீகை
    வெள்வே லாவமாயி னொள்வாள்         5
    கறையடி யானைக் கல்ல
    துறைகழிப் பறியா வேலோ னூரே.
    ------

திணையும் துறையு மவை...............கிழார் பாடியது.

உரை: புலிப்பாற்பட்ட வாமான் குழவிக்கு - புலியிடத் தகப்பட்டிருந்த தாவும் மானினுடைய கன்றுக்கு; சினங்கழி மூதா - சினமில்லாத முதிய கறவைப்பசு; கன்று மடுத்து ஊட்டும் - தன் கன்றெனச் சேர்த்தத் தன் பாலை யுண்டற் கமைந்திருக்கும்; .................பரிசிலர்க்கு உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை - பரிசிலராகிய பாணர் முதலாயினார்க்கு அவர் கருதியதனைக் கருதியவளவே வழங்கும் தள்ளதா ஈகையினையும்;வெள்வேல் ஆவமாயின்- வெள்ளிய வேல் ஏந்திச் செய்யும் போர் உளதாயின்; கறையடி யானைக்கல்லது - உரல்போன்ற காலையுடைய களிற்றைக் கொல்லுதற்கன்றி; ஓள் வாள் உறை கழிப்பறியா - ஒள்ளிய வாளை அதன் உறைக் கூட்டினின்றும் கழித்தலைச் செய்யாதே; வேலோன் ஊர் - வேற்படையையுடைய தலைவனது ஊர்; எ - று.

தன் கன்றை யொழித்துப் பிறிதொரு கன்று வரின் அதனை அணுக விடாத சினமுடைய நல்லாவின் வேறுபடுத்தற்கு "சினங்கழி மூதா" என்றார். சினங்கழிந்ததற்கு ஏதுக் கூறுவார், "மூதா" எனக் குறித்தார். மான் கன்றைத் தன் கன்றுபோற் சேர்த்துப் பாலுண்பித்தலின் "கன்றுமடுத் தூட்டும்"என்றார். யானை சேய்மையில் வரின் வேற்படையும், அண்மைக் கண்ணதாயின் வாட்படையும் வேண்டுவனவாம். "வேந்தூர் யானைக் கல்லது, ஏந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே" (புறம். 301) என்பதனால் வேற் படையும் யானைக்கல்ல தெறிப்படா தென்றறிக.

விளக்கம்: ஆவம், போர். வேலெறிந்து செய்யும் போர்; வெள்வேலாவம் எனப்பட்டது. வேல் கொண்டு யானையை யெறிவதில் வீரர்க்கு மிகுவது சிறப்பு.
-----------

324. ஆலத்தூர்கிழார்

ஆலத்தூர் என்னும் பெயருடைய ஊர்கள் பல இருப்பினும். இச் சான்றோரது ஊர் சோழநாட்டுக் காவிரித் தென்கரை நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆலத்தூ (A. R. No. 273 of 1927) ராகலாம்; இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன்சேட் சென்னி நலங்கிள்ளியையும் பாடிச் சிறப்புற்றவர், ஒரு கால் ஒரு தலைவன் போரில் புகழுண்டாகப் பொருது வென்றியால் வீறுகொண்டு விளங்கினான். அவன் வன்புல நாட்டுச் சீறூர் ஒன்றிற் குரியன். தன் வேந்தனுக்குப் படை வேண்டுமிடத்து வாளுதவியும், வினை வேண்டு மிடத்து அறிவுரை வழங்கியும் சிறந்து நின்றமையின், வேந்தன் அவனைத் தனக்கு நெஞ்சறிந்த நற்றுணைவனாகக் கொண்டு பேணினான். வேந்தனுக்கு நற்றுணைவனாகப் பெற்றும் அவன் தன் மனநிறை நெகிழாமல் பண்டுபோல் ஒரு தன்மையனாய் ஒழுகினான். ஒருநாள் தன் சீறூரில் தனக்குரிய பாணருடன் அவன் கூடி இன்புற்றிருந்தான். அப் போழ்து அவன்பாற் சென்றிருந்த ஆலத்தூர் கிழார், அவனது வல்லாண்மையை எடுத்துக் கூறலுற்று அவன் தன் பெருமை கருதாது பரிசிலர் நடுவண் மிக எளியனாய்க் கூடியிருப்பதைப் பாராட்டி "இப்பெற்றியோன் வெற்றி தரும் பெரிய தானையையுடைய வேந்தனுக்கு உயிர்த்தணைவன்; அவன் இறப்பின் அவனோடு உடன் இறக்கும் ஒள்ளிய நண்பன்" என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினார்.

    வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை யுடைின் சுரையுடை வான்முள்
    ஊக நுண்கோற் செறித்த வம்பின்         5
    வாலஅர் வல்விற் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கரும்பை பார்க்கும்
    புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க்
    குமிழுண் வெள்ளை மறுவாய் பெயர்த்த
    வெண்காழ் தாய வண்காற் பந்தர்         10
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்
    குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே.
    -------

திணையும் துறையு மவை. ஆலத்தூர் கிழார் பாடியது.

உரை: வெருக்குவிடை யன்ன வெருள் நோக்குக் கயந்தலை - காட்டுப் பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும்; புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய் - பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய; வெள் வாய் வேட்டுவர் - வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின்; வீழ் துணை மகாஅர் - தம்மில் ஒருவரை யொருவர் விரும்பி நட்புக் கொண்டுறையும் சிறுவர்கள்; சிறியிலை உடையின் சுரையுடை வான் முள் - சிறிய இலைகளையுடைய உடைவேல் மரத்தின் உள்ளே புழையையுடைய வெள்ளிய முள்ளை; ஊக நுண் கோல் செறித்த அம்பின் - ஊகம்புல்லின் நுண்ணிய கோலில் செருகிய அம்பை; வலாஅர் வல்வில் குலாவரக் கோலி - வளாரால் செய்யப்பட்ட வில்லின் வைத்து வளையுண்டாக வலித்து; பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் - பருத்தியாலாகிய வேலியடியில் உறையும் காட்டெலியை வீழ்த்தற்குக் குறிபார்த்திருக்கும்; புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர் - புன்செய்கள் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூரின்கண்; குமிழ் உண் வெள்ளை மறுவாய் பெயர்த்த வெண்காழ் தாய - குமிழம் பழத்தை யுண்ணும் வெள்ளாடுகள் எருவாய் வழியாக வெளிப்படுத்த வெள்ளியகொட்டைபோலப் பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற; வண் கால் பந்தர் - வளவிய கால்கள் நிறுத்தப்பட்ட பந்தரின்கீழ்; இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து - இடையன் கொளுத்திய சிறிய சுடரையுடைய விளக்கொளியில்; பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை - பாணர் சூழ்ந்திருக்க அவரிடையே வீற்றிருந்த நாணமாகிய நற்பண்பை யுடைய நெடுந்தகையாகிய தலைவன்; வலம்படு தானை வேந்தற்கு - வெற்றியுண்டாகும் தானையையும வேந்தனுக்கு; நெஞ்சறி துணை - மனமறியக்கொண்ட உயிர் துணைவனாவான்; எ - று.

வெருக்கின் ஆண் விடையெனப்பட்டது. நோக்கும் தலையும் வாயு முடைய மாஅர் என இயையும். வெற்றிலை தின்னாத வாயென்றதற்கு "வெள்வாய்" என்றார். இடக்கர் மொழிகளை இடையிடையே கூசாது மொழியும் வாயெனினுமமையும்; அல்லதூஉம், எக்காலத்தும் கரவில்லாத சொற்களையே வழங்கும் வாயென்றுரைப்பினுமாம். வேலிகளில் பருத்திச் செடிகள் நிரல் நிரலாக நிற்ப அவற்றின் அடியின் வளையமைத்து வாழும் காட்டெலியைப் "பருத்திவேலிக் கருப்பை" யென்றார். எருவை வெளியிடும் வாயை மறுவாயென்றது அவையடக்கு. காழ் போல்வதனைக் "காழ்" என்றார். பாணரிடத்து மிக்க அன்பு செய்து எளியனாயுள்ளானென்றற்கு "பாணரொடு இருந்த நெடுந்தகை" யென்றும், மறத்துறைக்குரிய அறநெறி பிறழ நிகழ்வனகாண்டற்கும் செய்தற்கும் உள்ளம் சுருங்குதற்கேதுவாகிய மானம் நிறைந்து அதனால் நெடும்புகழ் பெற்றவன் என்பது தோன்ற, "நாணுடை நெடுந்தகை" யென்றும் கூறினார். "உலந்துழி யுலக்கும் நெஞ்சறி துணை" யென்றார், உற்றவிடத் துயிர் வழங்கும் உணர்ச்சி யொத்த உண்மை நண்பன் என்றற்கு. சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறி துணைனெக் கூட்டி வினைமுடிவு செய்க. பகுவா யென்றும் பாடம்.

விளக்கம்: பாண்டிமண்டலத்து மதுரோதய வளநாட்டு ஆலத்தூர் நாட்டு ஆலத்தூரும், தொண்டை நாட்டுப் புலியூர்க்கோட்டத்து ஆலத்தூரும் பல்குன்றக்கோட்டத்து ஆலத்தூருமெனப் பல இருத்தலின், ஆலத்தூர் கிழாரது ஆலத்தூர் இன்னதெனத் துணியமுடியாவிடினும். இவர் சோழ வேந்தர்களையே பாடியிருத்தலின், இது சோழ நாட்டு ஆலத்தூர்களில் ஒன்றென்பது தெளிவாம். கருவிழியின் நடுவிட மொழிய ஏனைப்பகுதி செங்கருமை நிறம் பரந்திருத்தலின் வெருணோக்கு எனப்பட்டது. புலவு நாறும் வாயென்றவழி, நாற்றத்தின் பொதுத்தன்மை விளங்காமையின், "புள்ளூன் தின்ற புலவு" எனச் சிறப்பித்தார். ஏனை யிறைச்சியினும் புள்ளினங்களின் இறைச்சியே பெரிதும் தின்னப்படுவ துணர்த்தற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். வேட்டுவர் மக்களாதலால் பிள்ளைப் பருவத்தே வில்லேந்தி எலிவேட்டம் புரிகின்றனரென வறிக. உடை, உடை யென்னும் வேலமரம்; இதனைக் குடை வேலென்றலும் வழக்கு. வெண்மை நிறமுடைமையின் வான் முள் எனப்பட்டது. ஊகம்புல்லைத் துண்டித்து அதன் நுனியில் முள்ளைச் செருகி, வில்லிடைவைத்து எலியின் மேல் எய்து விளையாடுவர் வேட்டுவச் சிறாஅர் என்பது கூறிவாறு. வலார் மலார் எனவும் வளாரெனவும் வழங்கும். இது வலிய மரக் கொம்பாதல் கண்க. குலாவரல்: வளைதல்; இது குலாவல் எனவும் வரும்; "கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்" (முருகு:194) என வருதல் காண்க. புன்புலந் தழீஇய சீறூராயினும் ஊரிடத்து வாழுங்குடிகள் மறப்பண்பும் கொடைப் பண்பும் ஒருங்குடைய நற்குடிகள் என்றற்கு அங்குடிச் சீறூர் எனச் சிறப்பித்தார். குமிழ், குமிழம் பழம். வெள்ளை, வெள்யாடு. குமிழின் கொட்டையும் வெள்யாட்டின் பிழுக்கையும் வேறுபாடறப் பரந்து கிடக்குமாறு தோன்ற "வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ்தாய வண்காற் பந்தர்" என்று பாடங்கொண்டுரைத்தலுமுண்டு. வேந்தர்க்குத் துணையாகச் செல்லும் புறத்துறைக்கு (தொல். புறத். 5) நச்சினார்க்கினியர் இதனை யெடுத்துக் காட்டுவர்.
-----------

325. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

இளங்கண்ணன் முதுகண்ணன் என்பவை பண்டையோர் மக்கட்கு இட்டு வழங்கிய பெயர்கள். உறையூரில் வாழ்ந்த முதுகண்ணன் என்ப வருடைய மகனாராதலால்.இச் சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனப்படுவாராயினர். ஒருவர் மிக்க இளைஞரொருவர்க்குப் பாதுகாப்பாளராய் இருப்பராயின் அவரை முதுகண் (Guardian) என்பது பழையநாளை வழக்கு. பன்னிரண்டாம் நூற்றாண்டிலெழுந்த கல்வெட் டொன்று, "வாச்சியன் இரவி கூத்தனை முதுகண்ணாகவுடைய இவன் பிராமணி தேவன் நீலியும் இவன் மகன் கூத்தன் இரவியும்" (S. I. Ins. Vol IV. No.227) என்று கூறுகிறது. இது கொண்டு முது கண்ணன் சாத்தனாரை மிக்க இளையனொருவற்கு முதுகண்ணாயிருந்து சிறந்தவராகக் கருதுதலும் உண்டு. ஆனால் சொற்கிடக்கை அவ்வாறு கோடற்கு இடந்தருகின்றிலது. இச் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி காலத்தவராகலின் அவனைப் பலபடியும் பாராட்டி நல்லறிவு கொளுத்தி யுள்ளாரென்பதை முன்னைய இவருடைய பாட்டுக்களால் அறிகின்றோம். இவர் ஒருகால் போரில் பெற்ற வென்றிமேம்பாட்டால் வாகை சூடி மாண்புற்று வரும் தலைவனொருவனைக் கண்டார். அவனுடைய வல்லாண்மையால் அவன் பெற்ற பொருளனைத்தும் பிறர்க்கீத்துப் புகழ் நடுவதில் பெரிதும் பயன்படுவது இவருக்குப் பெருவியப்பினைப் பயந்தது. அவ் வியப்பின் சொல்வடிவு இப் பாட்டு. இதன்கண் அவனது ஊர் நலமும் கொடை நலமும் குறிக்கப்பட்டுள்ளன. தலைவன் பெயர் தெரியவில்லை.

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொழிந் திறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅ லுண்டலிற்
    சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ணூறல்
    முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை         5
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்
    உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச்
    சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார்.
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழு மதுகை மன்றத்         10
    தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை யிருக்கை யதுவே வென்வேல்
    வேந்துதலை வரினுந் தாங்கும்
    தாங்கா வீகை நெடுந்தகை யூரே.         15
    ---------

திணையும் துறையு மவை. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

உரை: களிறு நீறாடிய விடுநில மருங்கில் - பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின்கண்; வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென - புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்துகொண்டு பெய்து நீங்கிற்றாக; குழிகொள் சின்னீர் குரால் உண்டலின் - பள்ளங்களில் தங்கிய சிறிதாகிய நீரைக் கன்றையுடைய பசுவானது ஆங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால்; சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல் - சேற்றை நீக்கித் தோண்ட வூறிய கலங்கலாகிய நீரை; முறையின் உண்ணும் - முறை முறையாகச் சென்று முகந்துண்ணும்; நிறையா வாழ்க்கை - நிரம்பாத வாழ்க்கையுடை; முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்லாடவர் - முள்ளம் பன்றியைக் கொன்ற முழுத்த சொல்லையுடைய வீரர்; அறுத்த உடும்பிழுது - அறுத்தெடுத்த உடும்பின் தசையை; ஒடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றில் - ஒடு மரத்தின் வலிய கழிகளாற் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட சிறிய மனை முற்றத்தில்; கூறு செய்திடுமார் - பகுத்தளித்தற் பொருட்டு; கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் - நெருப்பில் வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம்; மறுகுடன் கமழும் - தெருவெல்லாம் மணக்கும்; மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல் - வலிய மன்றத்தில் நிற்கும் உலர்ந்த தலையையுடைய இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில்; கயந்தலைச் சிறாஅர் - மெல்லிய தலையையுடைய சிறுவர்கள்; கணை விளையாடும் - அம் பெய்து விளையாட்டயரும்; அருமிளை இருக்கையது - கடத்தற்கரிய காவற் காடுகளையுடைய நாட்டின்கண்ணே யுளது; வென்வேல் வேந்து தலைவரினும் தாங்கும் - வெல்லும் வேலையுடைய வேந்தர்தம் தானைச் சுற்றத்துடனே திரண்டு தன்பால் வந்தாலும் தாங்கக்கூடிய; தாங்கா ஈகை நெடுந்தகை ஊர் - குன்றாத ஈகையையுடைய நெடுந்தகையாகிய தலைவனது ஊர்; எ - று.

விடுநிலம், ஆனிரைகளின் மேச்சலுக்கென ஊரவரால் பொதுவாக விடப்பட்ட நிலம். குரால், கன்றையுடைய பசு; ஒருவகைப் பசுவுமாம். கலுழ்கண் நீர் - கலங்கிய இடத்துண்டாகிய நீர். நீர் சிறிதே யூறுதலின், ஒருவன் பின்னொருவராக முறைகொண்டு சென்று (queue system) முகந்துண்ணுமாறு தோன்ற "முறையின் உண்ணும்" எனவும், அதனால் தமது வேட்கை தீரவுண்டு, பிறர்க்கும் அவ்வாறுவழங்குதற்கு வேண்டுமளவு கிடைக்கப் பெறாமையால், "நிறையா வாழ்க்கை" யெனவும் கூறினார். செப்பிய வஞ்சினம் தப்பாது செய்து முடிக்கும் மறமாண்பு உடைமை தோன்ற, "முழுச் சொல்லாடவர்" என்றார்; சொல்லினும் செய்கையே பெரிதுடைய ரென்றுரைப்பினுமமையும். காழ்பொருந்திய கழியைக் காழென்றார். வெயில் மழை காற்று முதலியவற்றால் சலியா திருத்தலின் மன்றம் "மதுகை மன்ற" மெனச்சிறப்பிக்கப்பட்டது. வேந்து வரினும் எனவே வேந்தன் தன் தானைச் சுற்றம் புடைசூழ வருதலும், தாங்கும் என்றதனால், அவர் வேண்டுவன தந்து ஓம்பும் வளனுடைமையும் பெற்றாம், ஆடவர், முன்றில் கூறு செய்திடுமார் வைத்த நிணம் கமழும் மன்றத்து நீழல் சிறார் விளையாடும் இருக்கையது நெடுந்தகையூர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: "கேழன் கண்ணும் கடிவரை யின்றே" (தொல். மர. 35) என்றதனால், களிறு பன்றிக்காயிற்று. பெரும் பெயல், பெருமழை. எங்கும் பரந்து பெய்யாது ஒருகாலத் தோரிடத்தே மிகுதியாகப் பெய்த மழையை "வரைந்து சொரிந் திறந்தென" என்றார். பெயலை யெதிர் நோக்காத காலத்தில் பெய்த மழையை "வம்பப்பெயல்" என்றமையின். அது பெரும் பெயலாயினும் நீர் நிலத்தே சுவறிவிடுதலால், குழிகளில் நின்ற நீர் சிறிதானமைபற்றி, "குழிகொள் சின்னீர்" எனல் வேண்டிற்று. குராற் பசு நீருண்ணவரின் அதனைத் தடாராதலின் "குராலுண்டலின்" என்றார் கிளைத்தல், தோண்டுதல். துளி துளியாக வூறும் நீரூற்று, "கலுழ்கண் ணூறல்" எனப்பட்டது. முள்ளையுடைய பன்றி, மூளவுமா என வழங்கும். "முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை" (மலைபடு. 171) எனப் பிறரும் கூறுதல் காண்க. வட்டுவர் வாழும்வன்புலச்சீறூராதலால், அங்கு வாழ்பவர் சிறப்பாக வுண்ணும் உணவை யெடுத்தோதினார். ஊனுணவுண்போர் உடும்பின் இறைச்சியும் நிணமும் மக்களுடம்புக்கு மிக்க வன்மை தருவது என்பர். எடும்பினைப் பற்றிக் கொணர்ந்த வேட்டுவர் அதனைத் தம்முள்றிலில் வைத்து அறுத்துத் தம்மவரிடையே கூறுசெய்து கோடல் இயல்பு. இரத்தி, இரத்தி யென்னும் மரம்; இதனை இலந்தை மரமென்றும் கூறுவர். "இரத்தி நீடியவகன்றலை மன்றம்" (புறம். 34) எனப் பிறரும் கூறுதல் காண்க. அலந்தலை; அலந்த தலையென்பதன் விகாரம். முதியோராகிய வேட்டுவர் உடும்பு கொணர்ந்து அதன் ஊனைச் சுட்டுத் தம்மிற் கூறுசெய்துண்டு இன்புறா நிற்ப, அவருடைய இளஞ்சிறார்கள் வில்லெடுத்து அம்பு தொடுத்து விளையாடா நிற்பர் எனச் சீறூர் வாழ்நர் சிறப்புக் கூறிய ஆசிரியர் அவ்வூர்க்குரிய தலைவன் தகைமையை, "வேந்து தலைவரினுந் தாங்குந் தாங்கா ஈகை நெடுந்தகை" யென்று சிறப்பிக்கின்றார். தாங்கா ஈகை யென்றது, "ஓம்பா வீகை" யென்பது போல நின்றது. மதுகை விளைவிக்கும் மன்றத்தை மதுகை மன்றம் என்றார் என்று உரைப்பினுமமையும். குறிஞ்சி நிலத்தவர் சுனை விளையாடியும்; முல்லை நிலத்தவர் கொல்லேறு தழுவியும் தமது மதுகை மாண்புறுவிக்கும் இடம் மன்றமென வறிக.
-----------

326. தங்காற் பொற்கொல்லனார்

தங்காலென்பது விருதுநகர்க்கு அருகிலுள்ளதோரூர். இளங்கோவடிகள் இதனைத் "தடம்புனற் கழனிற் கழனித் தங்காள்" (சிலப். மதுரைக். 23:118) என்று சிறப்பிப்பார். இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது. இதனை இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால் (A. R. No. 564 of 1922) என்று கல்வெட்டுக்கள் கூறும். மாறவன்மன் சுந்தர பாண்டியன் (1) காலத்தில் இவ்வூரிலுள்ள மடமொன்றில் பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கல்வெட்டொன்று (A. R. No. 546 of 1922) கூறுவதனால் இவ்வூர் கல்விவளம் சிறந்த நல்லூராதலை யறியலாம். சங்கத் தொகை நூலாசிரியர்கள் காலத்தில் இவ்வூரில் நல்லிசைச் சான்றோர் பலர்தோன்றியிருக்கின்றனர். ஆத்திரேன் செங்கண்ணனார் என்னும் சான்றரோரும் இப் பாட்டைப் பாடிய பொற்கொல்லன் வெண்ணாகனாரும் அவருள் சிறந்திருக்கினற்னர்.செங்கண்ணனார் பாட்டொன்று நற்றிணையிலும், தொகுக்கப்பட்டுள்ளன. புறத்தில் இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. இதன் கண், இவர் பெயர் தங்காற் பொற்கொல்லனா ரெனக்குறிக்கப்பட்டுள்ள தாயினும் அகத்தில் இவர் பெயர் பொற்கொல்லன் வெண்ணாகாரெனக் காணப்படுதலால், இவரது இயற்பெயர் வெண்ணாகன் என்று அறிகின்றோம். தங்காலைத் தண்காலென்றும் பொற்கொல்லனாரென்பதைப் பூட்கொல்லானரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. ஒருகால் இவர் மறக்குடித் தலைவன் ஒருவன் மனைக்குச் சென்று அவனைக் கண்டார் அவன் மனைவி விருந்தோம்பும் விருப்பு நிறைந்தவளாகவும், அவன் பெரும் போரில் பகைவருடைய பெருங் களிறுகளைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னைக் கொணர்ந்து தன்பால் வரும் பாணர் முதலாயினார்க்குப் பரிசில் நல்கும் பண்புடையனாகவும் இருப்பதுகண்டு இப் பாட்டின்கண் வியந்து பாடியுள்ளார்.

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகிளம் பெடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்         5
    கவிர்ப்பூ நெற்றிச் சேவலிற் றணியும்
    அருமிளை யிருக்கை யதுவே மனைவியும்
    வேட்டைச் சிறாஅர் சேட்புலம் படராது
    படுமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின்
    விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை         10
    யாணர் நல்லவை பாணரொ டொராங்கு
    வருவிருந் தயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமந் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்
    தண்ணல் யானை யணிந்த
    பொன்சே யோரைடப் பெரும்பரி சிலனே.         15
    ------------

திணை: வாகை. துறை: மூதின்முல்லை. தங்காற் பொற்கொல்லனார் பாடியது.

உரை: ஊர் முதுவேலி பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகு இளம் பேடை - ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய இருளில் வந்து வருத்தும் பகைக்கு அஞ்சிய மிக்க இளமை பொருந்தி பெட்டைக்கோழி; உயிர் நடுக்குற்று புலா விட்டரற்ற-உயிர்ப்பும் நடுக்கமும் கொண்டு தொண்டைத் தசையைத் திறத்து கூவி; சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த - பக்கங்களையும் குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த; பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து - பருத்தி நூற்கும் பெண்டினுடை சிறிய விளக்கொளியில்; கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் - முருக்கம்பூவை யொத்த கொண்டைமையுடைய சேவற் கோழியைக் கண்டு அச்சம் தணியும்; அருமிளை இருக்கையது - சிறுவர்கள்; செண்புலம் படராது - நெடுந்தொலைவு செல்லாமல்; படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் - மடுக்கரையில் பிடித்துக்கொண்டுவந்த குறுகிய காலையுடைய உடும்பினது; விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை - விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப் பட்ட தயிரோடு கூடிய கூழையும்; யாணர் நல்லவை - புதியவாக வந்த வேறு நல்ல உணவுப்பொருளையும், பாணரொடு வருவிருந்து ஓராங்கு அயரும் விருப்பினள் - பாணருக்கும் அவரொடு வந்த ஏனை விருந்தினர்க்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் அவரொடு விருப்பமுடையளாயுள்ளாள்; கிழவனும் - அவள் கணவனும், அருஞ்சமம் ததையத் தாக்கி - கடத்தற்கரிய போர் கெடும்படியாகத் தாக்கி; அணிந்த பெரும்போரில் தலைமையையுடைய யானைகள் அணிந்த பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலன் – பொன்னாற் செய்யப் பட்ட பட்ட முதலியவற்றைப் பெரிய பரிசிலாக வழங்குபவனாயுள்ளான்; எ - று.

ஊர் இருக்கையது, மனைவியும் விருப்பினள், கிழவனும் பரிசிலன் எனக்கூட்டிவினைமுடிவு செய்க. பார் நடை, பழகிய நடை தனக்குரிய இரையைக் கவர்தற் பொருட்டு மெத்தென்ற நடை பயின்றதாகலின் வெருகின் நடையை, "பார் நடை" யென்றார். வெருகு இருளிற் போந்து தீங்கு செய்வதுபற்றி "வெருகாகிய இருட் பகை" யெனப்பட்டது. புலா விட்டரற்றுவதாவது, தொண்டைத் தசை இறுகவிடாது திறந்து கூவுவது. பருத்தியைக் கொட்டை நீக்கித் தூய்மை செய்யுமிடத்து மனையின் சுவரோரங்களிலும் சுவரிலும் தரையிலும் பஞ்சியின் துய் பரந்து கிடப்பதனை இருந்தபடியே கொட்டை நூற்ற பருத்திப் பெண்டு எழுந்து நின்று புடைத்து நீக்குமாறு தோன்றப் "புடைநள்" என்றார். சிறையைப் பஞ்சியின் பிறத்தோலாகவும் கொட்டையும் தூமசியும் செற்றையாகவும் கொண்டு இவற்றைப் புடைத்து நீக்குவது தோன்றப் புடைந ளென்றாரென்றுமாம். படு, மடு. மடுக்கரைகளிலும் வயல் திடர்களிலும் வைசெய்து வாழ்வது உடும்பு; அதனை அவ்விடங்களிலே வேட்டை யாடிக்கொள்ள வேண்டுதலின், "படுமடைக் கொண்டு உடும்பு" என்றார்.

விளக்கம்: மூதின் முல்லையாவது, "அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று" (பு. வெ. மா. 8:21) என வரும். மறக்குடி மகளொருத்தியின் மறமாண்பு கூறலுற்ற இவ்வாசிரியர், அவளுடைய ஊரமைதியும், அவளுடைய செயன் மாண்பும், அவள் கணவனது மறமாண்பும் அழகுறக் கூறியிருப்பது, தென்பாண்டி நாட்டு விருதுநகர்ப் பகுதிக்குச் சென்று காண்பார்க்குப் பெருவியப்புத் தருவதாம். இந்நாளிலும் அப்பகுதி பருத்தி விளைவுக்குச்சீர்த்த இடமாக இருப்பது குறிக்கத்தக்கது. வெருகின் இருட்பகை, வெருகாகிய இருட்பகை; இன்: அல்வழிக்கண் வந்தது. பார் நடை, பார்த்து மெல்ல நடக்கும் நடை யென்றுரைத்தலுமுண்டு. பெடைக்கோழி இருள்வரக் கண்டு, இதன்கண் வெருகு போந்து தன்னை வருத்து மென்றஞ்சி அரற்றும் எனவும், அக்காலை, பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கால் இருள் நீங்குதலின் அப்பெடை அவ் விளக்கொளியில் தன்னருகே தன் காதற் சேவல் இருப்பதறிந்து அச்சந் தணியுமெனவும் ஊரின் இயல்பு கூறினார். இஃது ஊரின் இயல்பு கூறிற்றாயினும், நாபட்டு மகளிரது பண்பும் உள்ளுறுத்துரைத்ததாகவும் கொள்ளக்கிடக்கின்றது. மகளிர், பகை தோன்றியவிடத்து பகைவர் வரவு நினைந்து ஓலமிடுவரெனவும், இடைநின்று பகையை விலக்கும் மறவர் வென்றி யெய்தக்கண்டும், அவ்வென்றி மறவரிடையே தம் காதற் கணவன் இருப்பது கண்டும் உவகை மிகுகின்றனரெனவும் கொள்ளப்படும். இது மகளிர்க்குரிய பொதுப் பண்பாகலின் வெளிப்படையாகக் கூறப்படாதாயிற்று. விருந் தோம்பும் நன்மாண்பு வெள்ப்படக் கூறப்பட்டது. சேவற்கோழியின் கொண்டையும் கழுத்துமயிரும் கவிரின் பூப்போலுமென்பதை, "மனையுறை கோழி மறனுடைச் சேவற், போர்புரி யெருத்தம் போலக் கஞலிய, பொங்கழன் முருக்கி னொண்குரல்" (அகம்.277) எனச் சான்றோர் கூறுவது காண்க.
---------

327. மூதின்முல்லை

இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. மூதின்முல்லை யாவது "அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரல் மகளிர்க்குமற மிகுத்தன்று" எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். சீறூர்த் தலைவன் ஒருவன் சிலவாய் விளைந்த வரகையறுத்துக் காலால் மிதித்துக் கொண்டதைக் கடன்காரர்க்குக் கொடுத்து எஞ்சியதைப் பசித்துவந்த பாணருக்கு அளித்தான்; அவரும் உண்டு நீங்கினாராக, பின்வந்த சுற்றத்தாருடைய வறுமையைத் தீர்த்தல் வேண்டிப் பிறரிடம் வரகு கடன் பெறுவானாயினான்.இவ்வாறு வறுமை களையும் செயலில் வெற்றி மேம்படும் இத் தலைமகன், பேரரசர் பொர வரினும், அவர் படையை எதிர் நின்று தாங்கி வெல்லும் வீறுடையனாவான் என்று அவனது மற மிகுதியை இப்பாட்டு எடுத்துக் கூறுகிறது.

    எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாண ருண்டுகடை தப்பலின்
    ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்         5
    சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி
    வரகுகட னிரக்கு நெடுந்தகை
    அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே
    ----------

உரை: எருது கால உறாது - எருதுகளைப் பிணித்து அவற்றின் காற் கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி; இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை - இளையர்கள் காலால் மிதித் தெடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியவில்; தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் - வளைத்துக்கொண்ட கடன் காரருக்குக் கொடுத்ததுபோக எஞ்சியதை; பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - பசித்து வந்த பாணர் உண்டு வெளிகேினாராகப் புறங்கடை வறிதாகலின்; ஒக்கல் ஒற்கம் சொலிய - வறுமையுற்று வந்த சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டு; தன்னூர்ச் சிறு புல்லாளர் முகத்து அளவ கூறி - தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி; வரகு கடன் இரக்கும் - வரகினைக் கடனாகக் கேட்டுப் பெறும்; நெடுந்தகை நெடிய புகழுடைய தலைவன்; அரசுவரின் தாங்கும் வல்லாளன் - பெருவேந்தர் போர் குறித்து வருவாராயின் அவரது நெடும்படையைத் தாங்கி வெல்லும் வல்லாண்மையால் வீறுடையனாவான்; எ - று.

மிக விளைந்த வரகையே எருது கொண்டு கடாவிட்டு மிதித்தெடுப்ப தமையுமாகலின், சிலவாய் விளைந்தமைபற்றி இளைஞர் காலால் மிதித்துக் கொள்வாராயினரென வறிக. ஒக்கல் ஒற்கம் களைவது இல்வாழ்வானுக்கு இன்றியமையாக் கடனாதலால், "ஒக்கல் ஒற்கம் சொலிய" என்றார். சிறு புல்லாளர், தமது உடைமை சிறிதாயினும் பெரிதுபோலக் காட்டும் புல்லியோர். அவர்பால் படன் இரத்தல் குற்றமாயினும் ஒக்கற் குதவல் வேண்டிச் செய்தலில் எடுத்தோதினார். அளவ கூறுதலாவது இத் துணையளவாகிய வரகு தருக என அறுதியிட்டுக் கேட்பது. பொருட் குறையுடையனாயினும் போர்வரின் பெருவேந்தரையும் வெல்லும் பேராண்மையுடையனென்பதாம். உண்டவென என்பது உண்டென நின்றது.

விளக்கம்: எருது கால் உறாது இளைஞர் கொன்ற எனவே, இளைஞர் காலான் மிதித்துக் கொள்ளப்பட்டது வரகென்றவாறாயிற்று. வளம்பட விளையாது சிலவாய் விளைந்தமையின் வரகின் தொகுதி புல்லெனத் தோன்றுதலின். "புல்லென் குப்பை" யென்றார். வரகு விளைதற்கு முன் அதனைக் கடன் கொடுத்தவர், விளைந்துவரக் கண்டதும் பெறவருதலின், அக் கடன்காரரை,"தொடுத்த கடவர்"என்றார். அவர்க்குத் திரும்பக் கொடுக்க வேண்டியவளவும் கொடுத்தபின் எஞ்சி நிற்கும் வரகைத் தன்பால் பசித்துவரும் பாணர்க்குக் கொடுத்தலால், ஏனைத் தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு உதவுவான் வரகின்மை கண்டு, அவர் தன் மனைக்கடையில் வாராதொழிரென்றஞ்சிப் பிறர் பாற் கடன் பெறுவானாயினன் என்றார். ஒக்கல் வாராத புறங்கடை குற்றமுடைத் தென்பதுபற்றிக் "கடைதப்பலின்"என்பது கூறப் பட்டது. ஒற்கம், வறுமை. சிறுபுல்லாள ரென்றதற்கு மனஞ் சிறியராகிய புல்லிய தானாண்மை யுடையோர் என்று உரைப்பினுமமையும். முகத்தவை கூறி யென்று பாடங்கொண்டு புல்லாளர் முன்னின்று உள்ளது கூறி என்றலுமொன்று. வாகைத் திணைத் துறைகளுள் "புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்" (தொல். புறத். 17) என்பதற்கு இளம்பூரணர் இதனை எடுத்துக் காட்டுவர்.
---------

328. மூதின்முல்லை

இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயரும் தெரிந்திலது. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இதனால் இப் பாடடுக்குரிய திணையும் துறையும் அமையும் திறத்தை ஆராய்வதும் இயலாதாகின்றது.

    ...புல்லே னடைமுதற் புறவுசேர்ந் திருந்த
    புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
    வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்களுக் கீயத் தொலைந்தன
    ............டமைந் தனனே         5
    அன்ன னாயினும் பாண நன்றும்
    வள்ளத் திடும்பா லுள்ளுறை தொடரியொடு...
    களவுப் புளியன்ன விளைகள்...
    ..........வாடூன் கொழுங்குறை
    ----------
    கொய்குர லரிசியோடு நெய்பெய் தட்டுத்         10
    துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோ
    றுண்டினி திருந்த பின்றை.........
    .........தருகுவன் மாதோ
    தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை
    முயல்வந்து கறிக்கு முன்றிற்         15
    சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
    -----------

திணையும் துறையு மவை.

உரை: ...புல்லென் அடைமுதல் புறவு சேர்ந்திருந்த - புல்லென்ற தழையும் அடிமரமுமுடைய காடாகிய முல்லை நிலத்தைச் சேர்ந்துள்ள, புன்புலச் சீறூர் - புன்செய்க் கொல்லைகளையுடைய சீறூர்களில்; நெல் விளையாது - நெற்பயிரும் விளையாது; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - விளைவனவாகிய வரகும் தினையுமென உள்ளவை யெல்லாம்; இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன - இரவலர்க்குக் கொடுத்ததனால் குறைந்து போயின; ...அமைந்தனன் - பொருந்தினான்; அன்னனாயினும் அத்தன்மையுடையனாயினும்; பாண - பாணனே; வள்ளத்திடும் பால் உள்ளுறை தொடரியொடு - வள்ளத்திற் பெய்து உண்ணப் படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப் பழமும்;களவுப் புளியன்ன விளைகள்- களாப் பழத்தின் புளிப்புப்போலப் புளிப்பேறிய கள்ளும்...வாடூன் கொழுங் குறை - வெந்து வாடிய தசையாகிய கொழுவிய துண்டங்களை, கொய் குரல் அரிசியொடு - நெய் பெய் தட்டு கொய்யப்பட்ட கதிரிடத்துப் பெற்ற அரிசியுடனே நெய் கலந்து சமைத்து; துடுப்பொடு சிவணிய களிக்கொள் வேண் சோறு - துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தன்பால் கொண்ட வெள்ளிய சோற்றை; உண்டு இனிதிருந்தபின் - பசி தீரவுண்டு இனிதிருந்த பின்னர்; ...தருகுவன் - கொடுப்பான்; தாளி முதல்நீடிய சிறு நறு முஞ்ஞை - தாளி மரத்தின் அடியில் நீளப் படர்ந்திருக்கும் சிறிய நறிய முன்னைக் கொடியை; முயல் வந்து கறிக்கும் முன்றில் - குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய; சீறூர் மன்னைப் பாடினை செலின் - சிறிய வூர்களையுடைய வேந்தனைப் பாடிச் செல்வாயாயின்; எ - று.

புன்புலச் சீறூலெனவே நெல்விளையாமை பெறப்படுமாயினும் "நெல் விளையா" தென்றது, வரகும் தினையும் மிக விளையுமென்பதை வற்புறுத்தற்கு, நெல் விளையும் நாட்டையுடைய பெருவேந்தன்பாற் காணப்படாத கொடைநலம் சீறூர் மன்னன்பால் உண்மையுணர்த்தி நின்றது. ஊன் துண்டங்களைச் சோற்றிற் கலந் தடுதல் பண் டையோர் மரபு. தாளி, ஒருவகைப் பனைமரம் "தாளித் தண்பவர்" (குறுந். 104) என்றலின் ஒரு வகைக் கொடியுமாம். பாண, சீறூர், நெல் விளையாது; எல்லாம் ஈயத்தொலைந்தன; அமைந்தனன்; அன்னனாயினும் பாடினை செலின் தருகுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: திணையம் துறையு மவை யென்றதன்பின் "பங்கு..." என ஏட்டிற் காணப்படுகிறது. கிடைத்த ஏட்டில் சில சொற்களும் எழுத்துக்களுமே கிடைத்தன. நெல் விளையாதாயினும் வரகுந் தினையும் விளையும்; அவையும் இரவலர்க்கீயிப்பட்டன என்றான்; எனவே, சீறூர் மன்னனுடைய ஓம்பா ஈகை யுரைக்கப்பட்டதாம். வெள்ளத் திடும்பால் என்று பாடமாதயின், வெள்ளம்போற் சொரியப் படும் பால் என்றுரைக்க. தொடரி, ஒருவகைப் பழமரம். கொங்கு வேளிர் இதனைக் "கொடுமுள் தொடரி" (பெருங். 1:52 - 38) என்பதனால், இதற்கு வளைநத முள்ளுண்டெனத் தெரிகிறது. முஞ்ஞை முன்னைக் கொடி. இப் பாட்டு மிகச் சிதைந்திருந்ததலால் வேறே விளக்கம் காண இயலவில்லை.
-------

329. மதுரை அறுவை வாணிகள் இளவேட்டனார்

மதுரை நகரத்தவரான இளவேட்டனார் அறுவை வாணிகம் செய்தவராதலால் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் எனப் படுவாராயினர். இவர் அகப்பொருள்நெறியில் பல திணைகளையும் இனிமையுறப் பாடும் நல்லிசை வாய்ந்தவர். களவின்கண் ஒழுகும் தலை மகன் ஒருவன் ஒருகால் தலைவியின் நெடுமனைக்கு வத்தானாக, அவனைக் கண்ட தலைவியின் நற்றாய் முருகன் எனப் பிறழவுணர்ந்து அவனை வழிபட்டனள். அதனால் பியப்புமிக்க தலைமகள், "முருகென வுணர்ந்து முகமன் கூறி, உருவச் செந்தினை நீரோடு தூஉய், நெடுவேள் பரவும் அன்னை" யெனத் தன் தோழியோடு சொல்லாடுவதும், புனங்காவல் புரியுமிடத்து அவள் தலைவனோடு கூடி அருவியாடுத லும் சோலையில் விளையாட்டயர்தலும், தலைமகள் விளையாடுங்கால் சென்ற தலைவன் அவளைக் கண்டு, "விளையாட்டாயமொடு வெண்மணலுதிர்த்த, புன்னை நுண்டாது பொன்னி னொண்டு, மனைபுறந் தருதி யாயின் எனையதூஉம், இம்மனைக் கிழமை யெம்மொடு புணரின், தீதுமுண்டோ மாதராய்" எனச் சொல்லி நட்புக் கொள்வதும் பிறவும் மிக்க இன்பந் தருவன வாகும். காந்தட்பூ பாம்பு படம் சுருக்கியது போல வீழும் என்பதை, "பாம்பு பையவிந்தது போலக் கூம்பிக், கொண்டலின் தொலைந்த ஒண்செய் காந்தள், கல்மிசைக் கவியும்" (குறுந். 185) என்பதும், இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமகளை "விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள்" (நற். 221) என்பதும் பிறவும் இவரது புலமை நலத்தைச் சிறப்பிப்பனவாகும். இவர் பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் இவர் பேராண்மை மிக்க தலைவன் ஒருவனது சிற்றூருக்குச் சென்றார். அவ்வூரில் உறையும் மறக்குடி மகளிர் நடுகல்லுக்கு நீராட்டி வழிபடுவதுகண்டார். அத்தலை மகனும் புரவலராகிய செல்வர்ஙககுண்டான இடுக்கணைப் பெரிதும் நிளையாது இன்மையால் இரந்துண்டு வாழும் இரவலர் இடுக்கணத் தீர்ப்பதே சிறந்த செயலாகக் கருதியிருப்பதையும், பாம்புறையும் புற்றுப் போல அவ்வூர் பகைவர் நெருங்குதற்கஞ்சும் அச்சம் பயந்து வியங்குவதையும் கண்டார். இக் காட்சி இளவேட்டனார்க்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அதன் விளைவாக இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

    இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
    புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
    நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
    மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்
    அருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்         5
    றரவுறை புற்றத் தற்றே நாளும்
    புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்
    கருகா தீயும் வண்மை
    உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.
    ------

திணையுந் துறையு மவை. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

உரை: இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர் - இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர்; புடை நடு கல்லின் - பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு; நாட்பலி யூட்டி - விடியற் காலத்துப் பலியைப் படைத்து; நன்னீராட்டி - நல்ல நீரையாட்டி; நெய் நறை கொளீஇய - செ் விளக்கேற்றுதலாலுண்டாகிய; மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் - மேகம் போலும் புகையெழு ந்து தெருவில் மணக்கும்; அரு முனை இருக்கைத்தாயினும் - அரிய முதன்மையான இடத்தையுடையதாயினும்; வரிமிடற்று அரவுறை புற்றத்து அற்று - வரி பொருந்திய கழுத்தையுடைய பாம்பு தங்கும் புற்றை யொக்கும்; நாளும் - நாடொறும்; புரவலர் புன்கண் நோக்காது - வேந்தராகிய செல்வர்கட் குண்டான துன்பத்தைப் பாராமல், இரவலர்க்கு அருகாது ஈயும் - வண்மை இரவலரது வறுமைத்துன்பத்தைப் பார்த்து அவர்கட்கு அது நீங்கக் குறைவறக் கொடுக்கும் வள்யளன்மையையும்; உரைசால் நெடுந்தகை புகழமைந்த - நெடிய தகைமையைமுடைய தலைவன்; ஓம்பும் ஊர் - பாதுகாக்கும் ஊர்; எ - று.

ஊர் புற்றத் தற்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆற்றிடைக் குறையிலும் கவர்த்த வழியிடையிலும் நடப்பெறும் கல் சீறூர்களின் பக்கத்திலும் நடப்பெறுதலின், "சீறூர்ப்புடை நடுகல்" என்றும், புகை மேகம் போல் தெருவெங்கும் பரவிய தென்பார், "மறுகுடன் கமழ" வென்றும் கூறினார். முனை, பகைவர் வந்து தாக்குதற்குரிய முதன்மை பெற்ற இடம்; அது பகைவர் கொள்ளற்கரிய காவலுடைத்தாகிய வழி அரு முனையாம்; அவ்விடத்தேயுள்ள ஊர் என்பார், "அரு முனை இருக்மைத்து" என்றார். நெடுந்தகையின் ஆண்மை யொளியை விளக்குதற்கு, "அரவுறைபுற்றத்தற்று" என்றார். புரவலர்க்குண்டாகும் துன்பம் தன்னாண்மையால் நீங்குமாதலின், அதனை ஒரு பொருளாக நோக்காது, இரவலர் இன்மை தீர்ப்பதையே பெரிதும் நோக்கினான் என்பார், "இரவலர்க் கருகாது ஈயும் வண்மை நெடுந்தமை" யென்றும், அதனால் புகழ் உண்டாதலின், "உரைசால் நெடுந்தகை" யென்றும் கூறினார். புரவலர்பாலுள்ள செல்வத்தைக் கொணர்ந்து இரவலர்க்கு இன்மைதீர வழங்குபவனாதலால், புரலவர் புன்கண் நோக்கானாயினா னென்றலு மொன்று.

விளக்கம்: சீறூர்க்கண் சில குடிகளேயுள்ளன வாயினும் அவரனை வரும் மறக்குடிிற் றோன்றிய மாண்புடைய ரென்றற்கு, நடுகல்லைப் பரவி நாட்பலியூட்டும் நற்செயலை சிதந்தோதினார். நடுகல்லைப் பரவுவது, தாமும் நடுகல்லில் நின்ற தம் முன்னோரைப்போல மறந்துறையில் மாண்புகழெய்தும் மனமுடையராதலை விளக்கிநின்றது. நறை, தூபம். இத்தகைய மறவர் உறையிடம் பகைவர் அணுகுதற்கரிய தென்பது தோன்ற, "அருமுனை இருக்கைத்து" என்றும், பாம்புறையும் புற்றுப் பொலப் பகைவர் நெஞ்சில் அச்சத்தை விளைவிக்கும் ஒளியுடைய தென்றும் கூறினாராம். போர்வல்ல இளையரைப் பாம்பாகக் கூறுவது மரபு. "ஒள்வாள் புனிற்றான் றரவின் இளையர்" (அகம். 179) என்பது காணக். புரவலர் புன்கண், புரவலருக்கு அவர் பகைவரால் விளையும் பகை. அதனை ஒரு பொருளாகக் கருதாமை தோன்ற, ‘புன்கண்’ என்றும் அதனைத் தன்னாண்மையால் மிக எளிதில் மாற்றவல்லவனாகலின், "நோக்காது" என்றும், இரவலர்க் குண்டாகும் புன்கணைப் பெரிதாகக் கருதி அஃது அற நீங்குதற்கேற்பக் குறைவற நல்கும் வண்மையுடையன் என்றும் கூறினார். வண்மையால் உறையும், புரவலர் புன்கண் நோக்காத வல்லாண்மையால் நெடுந் தகைமையும் சீறூர்த் தலைவற்குரியவாயின. கல்நட்டுக் கால் கொண்டதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பிறத். 5).
----------

330. மதுரைக் கணக்காயனார்

நல்லிசைச் சான்றோருள் மிக்கசிறப்புற்று விளங்கிய நக்கீரனார்க்குத் தந்தையார் இந்த மதுரைக் கணக்காயனார். இவர் பாண்டிவேந்தன்பால் பேரன்புடையவர். அவனைப் பசும்பூண் பாண்டியன் என்று கூறுவர். இப் பாண்டியன் "அறங்க டைப்பிடித்த செங்கோலுடன் அமர், மறஞ் சாய்த்தெழுந்த வலுனுயர் திணிதோள், பலர்புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்" என்று பாராட்டுக் கூறப்படுகின்றான். இவர் இவ்வாறே சேரனை "ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும், துன்னருந் துப்பின் வென்வேற்பொறையன்" என்றும், சோழனை, "பொறாஅர்; வின்பொரக் கழிந்த திண்பிடி யொள்வாள், புனிற்றான் றரவின் இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன்" என்றும் சிறப்பிப்பார். பாண்டியர் பாலுள்ள யானைகள் பலவும் வடவேங்கடத்திற் பிறந்தவை யென்றும், கொற்கைப் பெருத்துறைக்கண் முத்துக் குளிக்கப்பெறுமென்றும் இவர் தம் பாடல்களிற் குறித்துள்ளார். இவர் பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. இப் புறப்பாட்டின்கண், சீறூரையுடைய தலைவன் ஒருவனை வியந்து அவன் வழிவழியாகக் கொடைப்புகழ் பெற்ற குடியிற் பிறந்தவனென்றும், தன் படையை யழித்து மேல்வரும் பகைவர் படையைக் கடலைத் தாங்கி நிற்கும் கரைபோல் தாங்கி நிற்கும் கட்டாண்மையுடைனென்றும் அழகுறப்பாடியுள்ளார். அவன் பெயர் தெரிந்திலது.

    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
    தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
    காழி யனையன் மாதோ வென்றும்
    பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்         5
    புரவிற் காற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே.
    ---------

திணையும் துறையுமவை. மதுரைக் கணக்காயனார் பாடியது.

உரை: வேந்துடைத்தானை முனை கெட நெரிதர - தன் வேந்தனுடைய படைப் பகுதியின் முன்னணியானது கெட்டழியுமாறு பகைப்படை நெருக்கி யடர்த்தலால்; ஏந்து வாள் வலத்தன் ஒருவனாகி - உயர்ந்த வாளை வலக்கையில் தாங்கிப் பொருவோன் தான் ஒருவனேயாய் நின்று; தன் இறந்து வாராமை விலக்கலின் - நேர்வரும் அப் பகைவரது பெரும்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதபடி இடைநின்று தாக்கித் தடுக்குமாற்றால்; பெருங்கடற்கு ஆழி யனையன் - பெரியகடலைத் தடுத்துத் தாங்கிநிற்கும் கரையை யொத்திருக்கின்றான்; என்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் - எப்போதும் தன்னைப் பாடிப்ச் சென்ற பரிசிலர்க்கேயன்றி; புரவிற்கு ஆற்றா வாரிச் சீறூர் - புரவுவரி செலுத்துதற்கும் ஆற்றாத வருவாயையுடைய சீறூரில் வாழும்; தொன்மை சுட்டிய வண்மையோன் - வழி வழியாக வரும் வண்மைக்குணமும் உடையவன்; எ - று.

வேந்தனுடைய முன்னணிப்படை நிற்றலாற்றாது கெடும்படி பகைவரது பெரும்படை அடர்த்து வருவது தோன்ற "பெருங்கடற் காழி யனைய" னென்றதனால் பகைவர் தானை கடல்போற் பெருகிவந்தவாறாயிற்று. வாரிச் சீறூர் எனக் கூட்டுக. புரவென்றது, புரவுவரியை, கொடையும் பிறவிக் குணமாகலின், "தொன்மை சுட்டிய வண்மை" என்றார்.

விளக்கம்: வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றவன் தானைத் தலைவனாய் நின்று பொருமிடத்து, பகைவர் பெரும் படையொடு போந்து தன் முன்னணிப்படை நில்லாது கெட்டழிந்தோட நெருக்கியடர்க்கக் கண்டான்; கண்டவன் வேறே துணை வேண்டாது தான் ஏந்திய வாளே துணையாக நின்று, பகைவரது கடல்போலும் பெரும்படை தன்னைக் கடந்து மேற்செல்லாவண்ணம் பொருது தடுத்து மேம்பட்டான்; இதனைச் சுருங்க வுரைக்கலுற்ற ஆசிரியர், "ஒருவனாகித் தன்னிறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு ஆழியனையன் மாதோ" என்று பாராட்டினார், ஆழி, கரை, பாடிச் சென்றோர்க்கன்றியும் பெருங்கடற்கு ஆழியனையன் என இயையும். பாடிச்சென்றோர் கொளங்க கொளக் குறையா வண்மையோனாதலின் ஆழியனையன் என்றாரென்க.

பாடிச்சென்ற பரிசிலர்க்கேயன்றி, தான் உறையும் சீறூரில் உள்ள தன் சுற்றத்தார்க்கும் அவன் வருவாயாகவுள்ளான் என்றுமாம். வாரி புரவிற் காற்றாச் சீறூர் எனவே கொண்டு, வருவாயால் இறையிலியாய் விடுதற்கும் ஆற்றாத சிறியவூர் என வுரைப்பினுமமையும். வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை" (தொல். புறத். 8) என்பதற்கு இதனை யெடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
---------

331. உறையூர் முதுகூத்தனார்

இச் சான்றோர் பெயர் சில ஏடுகளில் முதுகூற்றாரெனவும், உறையூர் முதுகூற்றனாரெனவும் மூதுகூத்தனாரெனவும் காணப்படுகிறது. இவர் வீரைவேண்மான் வெளியன் தித்தன் என்பானைப் புகழ்ந்து பாடுகின்றார். உறையூரில் நடைபெற்ற பங்குனி விழாவை, "விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளின் உறந்தை யாங்கண், வருபுனல் நெரிதரு மிகுகரைப் பெரியாற்று, உருவ வெண்மணன் முருகுநாறு தண்பொழிற், பங்குணி முயக்கம்" (அகம். 137) என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப் பங்குனி விழாக் காலத்தில் திருவரங்கத்துப் பெருமாளை உறையூர்க்குக் கொண்டு சிறப்புச் செய்வதுண்டென ஸ்ரீரங்கத்துக் கோயில் கல்வெட்டுக்கள் (A. R. No. 16 of 1936-7) கூறுகின்றன. இவர் பாடியனவாகச் சில பாட்டுக்கள் தொகை நூல்களில் உள்ளன. இப் பாட்டின்கண், சீறூர்த் தலைவன் ஒருவனுடைய இல்லாண்மையைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இவன் நல்குரவு உண்டாகுமாயின், அக் காலையில் தன்பால் இல்லாவற்றை விரையப் படைத்துக் கொள்ளும் வன்மைமிக்கவன், தன்பால் உள்ளது சிறிதாயினும் வருவோர் வரிசையறிந்து வழங்கும் வண்மையுடையன்; பொருள் மிகவுளதாகிய விடத்துப் பலர்க்கும் வரையாது வழங்குவான் என்று அவன் ஈகை நலத்தை எடுத்தோதுகின்றார்.

    கல்லறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர வாழ்க்கைச் சீறூர் மதவலி
    நனிநல் கூர்ந்தன னாயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா விடையன் போலக் குறிப்பின்         5
    இல்லது படைக்கவும் நல்ல னுள்ளது
    தவறிச் சிறிதாயினும் மிகப்பல ரென்னான்
    நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும்
    இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில
    வரிசையி னளிக்கவும் வல்ல னுரிதினிற்         10
    காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லனவன் றூவுங் காலே.
    ----------

திணையும் துறையுமவை. உறையூர் முதுகூத்தனார் பாடியது.

உரை: கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் - கல்லையுடைத்துச் செய்த வலிய உவர்நீர் ஊறும் கிணறுகளையும்; வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி - வில்லிக்கொண்டு வேட்ட மாடி வாழும் வாழ்க்கையையுமுடைய சீறூக்குரியவனாகிய மிக்க வலியையுடைய தலைவன்; நனி நல்கூர்ந்தனனாயினும் - மிக்க வறுமையுற்றானாயினும்; பனி மிக - குளிர் மிகுதலால்; புல்லென் மாலை சிறுதீ ஞெலியும் கல்லா இடையன் போல - புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடை கோலைக் கடைந்து தீயுண்டாக்கும் கல்லாத இடையன்போல; குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் - மனையில் இல்லாததைக் குறிபபாயறிந்து அதனை விரையப் படைத்துக்கொள்ளும் வல்லமையுடையன்; உள்ளது தவச்சிறிதாயினும் - தன்பால் உள்ளது மிகவும் சிறிதாக இருப்பினும், மிகப் பலர் என்னான் - பரிசிலர் மிகப் பலராக உள்ளனரே எனக் கருதி மயங்காமல்; நீள் நெடும் பந்தர் ஊண்முறை யூட்டும் இல் பொலி மகடூஉப் போல - நீண்ட நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல் வாழ்க்கையில் சிறந்த மகளைப் போல; சிற்சில வரிகையின் அளிக்கவும் வல்லன் - சில சிலவாக அவரவர் வரிசை அறிந்து கொடுக்க வல்லனாவான்; உரிதினின் - வரையாக் கொடைக்குரிய செல்வக்காலத்தில்; காவல் மன்னர் கடை முகத்து உகக்கும் - நாடு காத்தலைச்செய்யும் வேந்தரது பெருமனைின் புறக்கடையில் எறியப்படும்; போகுபலி வெண்சோறு போல - உயர்ந்த பலியாகி வெள்ளிய சோற்றைப்போல; தூவுங்கால் தூவவும் வல்லன் - பலரும் கொள்ளுமாறு தாக்கூடிய செல்வக் காலத்தில் யாவர்க்கும் வரையாது அள்ளி வழங்கவும் வல்லனாவான்; எ - று.

இல்லாப் போழ்தினும், உள்ளது சிறிதாய போழ்தினும் உள்ளது மிகுதியான போழ்தினும் சீறூர் தலைவனது கொடைநலம் அமைந்தவாறு கூறியது. கற்பாறை நிறைந்த நிலத்தில் அப் பாறைகளையுடைத்து அரிது முயன்று தோண்டப்பட்டவிடத்தும் அதன் கண் கூறும் நீரும் நன்னீராகாது உவர் நீராயொழிதலின் "கல்லறுத்திற்றிய வல்லுவர்க் கூவல்" என்றார். இருள் மயங்கும் அந்திமாலை "புல்லென் மாலை" யெனப்பட்டது. ஒன்று இல்வழி இதன்பொருட்டு இரங்காது அதனை முயன்று படைத்துக் கொள்வது ஆண்மையுடையார்க் கமைதியாகலின், "இல்லது குறிப்பின் படைக்கவும் வல்லன்" என்றார். இல்லது குறிப்பின் என்றதற்கு இல்லாத தொன்றனை நல்குமாறு குறித்து இரந்தால் என்றுரைப்பினுமமையும். தன்பால் உள்ளது சிறிதாயின், அதனை இவறுதலின்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தகமுறைப்படுத்தி வழங்குவதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாமையின் "வரிசையின் அளிக்கவும் வல்லன்" என்றார். வரிசையறிதலின் அருமைபற்றி "வல்லன்" எனல் வேண்டிற்று. மன்னர் தம்முடைய மனைமுன்றிலில் பெருஞ்சோறு சமைத்து நமர் பிறரென்று நோக்காது யாவர்க்கும் வாரி வழங்குவதுபோல இவனும் தன்பால் வருவார்க்கு அது தனக்குச் செல்வக் காலமாயின் அக்காலத்தே தன்னிடத்துள்ள மிக்க பொருளை வாரி வழங்குவன் என்பார், "தூவும் வல்லனவன்; தூவுங்காலே" என்றார். மதவலி நல்கூர்ந்தனனாயினும் படைக்கவும் வல்லன்; சிறிதாயினும் அளிக்கவும் வல்லன்; உரிதினின் தூவவும் வல்லன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. செல்வக் காலம் கொடைக்கடன் இறுத்தற்கு உரிய காலமாகலின், அதனை "உரிது" என்றார்.

விளக்கம்: சீறூர்த் தலைவனது ஊர்வளம் கூறலுற்று, அது நல்ல நீர்வளமில்லதென்றும், அதனால் அங்கு வாழ்பவர் வில்லேந்தி வேட்டம் புரிந்து வாழ்பவனென்றும் கூறினார். "களவேர் வாழ்க்கை" (பெரும்பாண். 40) என்றாற்போல "வில்லேர் வாழ்க்கை" யென்றார். பனிமிக்க வழி, இடையன் தன்பால் உள்ள ஞெலிகோல் கொண்டு இல்லாத சிறு தீயைப் படைத்துக்கொள்வதுபோல, தன்பால் இல்லாத பொருளை விரைந்தீட்டி வழங்கும் தாளாண்மை மிக்கவன் என்பார், "இல்லது படைக்கவும் வல்லன்" என்றார்; என்றது, இல்லதன் இன்மை கூறியமையான் என்றவாறாம்.படைக்கும் பொருள் சிறிதாயினும், படைக்கும் திறனுடைய ஒருத்தி படைக்கலுறின், ஏற்போர் பலராயினும், அவரது, பன்மையைமனங் கொள்ளாது யாவரும் ஏற்றமையுமாறு படைத்து மேம்படுமாறுபோல், "சிற்சில வரிசையில் அளிக்கவும் வல்லன்" என்றார். குடநீரட்டுண்ணு மிடுக்கட் பொழுதும், கடனீரற வுண்ணுங்கேளிர் வரினும், கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி, மாதர் மனைமாட்சி யாள்" (நாலடி. 382) என்று பிறரும் கூறுவது காண்க. மன்னர் மனைகளில், எக்காலத்தும் வரவோர் பலர்க்கும் வரையாது சோறு வழங்குவதுமரபு. இடைக் காலத்திலும் இவ்வாறு சோறளித்து வாழ்ந்த செல்வர் பலர் உண்டு. இதனைப் "பலியூட்டு" என்பது வழக்கம். அது சங்ககாலத்துச் செல்வர் மேற்கொண்டிருந்த பெருந்தொழில் என்பது இதனால் விளக்கமுறும். இல்லாக்காலத்தும் சிறிதுளதாய காலத்தும் நிலவும் வண்மை கூறவே, செல்வக் காலத்துக்கொடை விரித்துரைக்கப்படாதாயிற்று.
----------

332. விரியூர் நக்கனார்

விரியூர் என்பது சேரநாட்டு வள்ளுவ நாட்டுலுள்ளதோர் ஊர்.இப்போது மலையாளச் சில்லாவில் இவ் வள்ளுவநாடு ஒரு தாலுகாவாகவுளது. நக்கன் என்பது இச் சான்றோரது இயற் பெயர். இப் பாட்டொன்றொழிய வேறே இவர் பாடின பாட்டுக்கள் கிடைத்தில. சீறூரையுடைய தலைவன் ஒருவனுடைய மறமாண்மைப எடுத்தோதவந்த இவர், அவனது வேலின் செயலைக் கூறிச் சிறப்பித்துள்ளார். இப் பாட்டின்கண், அவனது வேல் பிறருடைய வேல்போல்வதன்று; அது பெருந்தகைமையுடையது; போரில்லாக் காலத்தில் அது புழுதி படிந்து ஒரு மூலையிலோ வீட்டின் கூரையில் செருகப்பட்டோ கிடக்கும்; மங்கல மகளிர் பாடிவர, யாழ் இசைப்ப, நீர்நிலைக்குச் சென்று நீராடி மாலையணிந்து தெருவில் உலாவருவதும் உண்டு; போர் உண்டாகுமாயின் சிறப்புடன் போர்க்களம் நோக்கிச் செல்லும்; அங்கே வேந்தருடைய பெருங்களிறுகளின் முகத்திற் றைத்து உருவிச் செல்லும் என்று வியந்து கூறியுள்ளார்.
--------

    பிறர்வேல் போலா தாகி யிவ்வூர்
    மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே
    இரும்புற நீறு மாடிக் கலந்திடைக்
    குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும்
    மங்கல மகளிரொடு மாலை சூட்டி         5
    இன்குர லிரும்பை யாழொடு ததும்பத்
    தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து
    மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்
    கிருங்கடற் றானை வேந்தர்
    பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே.         10
    ---------

திணையும் துறையு மவை. விரியூர் நக்கனார் பாடியது.

உரை: பிறர்வேல் போலா தாகி - ஏந்தும் வேல் போல வன்றி;இவ்வூர் மறவன் வேல் - இந்த ஊரையுடைய மறவனாகிய தலைவனது வேல்; பெருந்தகை யுடைத்து - பெரிய தகமையினையுடையதாகும்; இரும்புறம் நீறும் ஆடி - பெரிய இலைப்பக்கம் புழுதி படிந்து; குரம்பைக் கூரைக் கலந்து இடைக்கிடக்கினும் கிடக்கும் - குடிலின் கூரையில் செருகப்பட்டு அதனோ டொன்றாய்க் கலந்து கிடக்கினும் கிடக்கும்; மாலை சூட்டி - மாலைணியப் பெற்று; மங்கல மகளிரின் இன்குரல் இரும்பை யாழொடு ததும்ப - மங்கல மகளிரின் இனிய குரலானது பெரிய பையிடத்தே வைக்கப்படும் யாழிசையோடு கலந்திசைக்க; தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து- தெளிந்த நீருண்டாகிய மடுக்களிலும் தெருக்களிலும் ஊர்வலம் சென்று; மண் முழு தழுங்கச் செல்லினும் செல்லும் - பகைவர் நிலத்திலுள்ளார் அனைவரும் வருந்தச் சென்றாலும் செல்லும்; ஆங்கு - அவ்விடத்து; இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்ற முகத்தினும் செலவானாது - பெரிய கடல்போன்ற தானையையுடைய வேந்தர் மார்பினும் பெரிய களிற்றி யானைகளின் முகத்தினும் சென்று பாய்தலில் தப்பாதாகும்; எ - று.

வேல் பெருந்தகையுடைத்து; ஏன்னை, கிடக்கும், செல்லும், செலவானாதாகலின் என இயைத்து வினைமுடிவு செய்க. கூரையின் வேறாகாமல் நீறு படிந்து புழுதிகலந்துகாணப்படுதலின், "கலந்திடைக் கிடப்பினும் கிடக்கும்" என்றார். துருவேறியதனை நீறாடிய தென்றார். மகளிர், பாட, யாழ் இசைப்ப, படுவில் நீராட்டி மாைாசூட்டித் தெருவில் ஊர்வலம் செல்வதுண்மையின் "செல்லும்" என்றார். கருவி கருத்தாவாயிற்று. முகத்தினும் என்ற எச்சவும்மை வேந்தர் மார்பைத் தழுவி நின்றது.

விளக்கம்: தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிப் பகுதியில் விரியூ ரென்னுமோரூர் உளது; ஆயினும் அதன் தொன்மை யறிதற்குரிய சான்றொன்றும் கிடைத்திலது. வடபெண்ணைக் கரையிலும் விரியுரொன்றைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று, "ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கை நாட்டு விரியூர்ப் பெண்ணாற்று வடகரையில் ஸ்ரீசங்கமீச்சுரமுடை யார்" (Nell Ins No. 108) எனக் கூறுகிறது. "மாணார்ச் சுட்டிய வாண் மங்கலத்" (தொல். புறத். 30) துக்கு இளம்பூரணர் இதனைக் காட்டுவர். "வெண்றவாளின் மண்ணல்" (தொல். புறத். 13) என்பதனுரையில், "ஒன்றென முடித்தலால் இருவர் வேற்கும் சிறுபாண்மை மண்ணுதல் கொள்க" என்று கூறி, இதனை யெடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். "மங்கல மகளிரொடு மாலை சூட்டி" யென்றதற்கு, மறக்குடி மகளிர்க்கு மண வினை நிகழுமிடத்து வாள், வேல் முதலியவற்றை நீராட்டி மாலை சூட்டி மணம் புரிவதாகிய செயலை எடுத்துக் காட்டுவதும் உண்டு.
----------

333. மூதின்முல்லை

இப் பாட்டைப் பாடினோரும் பாடப்பட்டோரும் இன்னா ரென்றறியக் கூடவில்லை. குறிஞ்சி நிலத்தின் வழியாகச் செறற்குச் சமைந்த புலவர்களை வேறொரு புலவன் கண்டு அந்நிலத்து வாழும் வேளாண் பெருமகன் ஒருவனது மனை நலத்தையும் அவனுடைய பொருள் மாண்பையும் இதன்கண் எடுத்தோதுவானாய், அந்நிலத்து ஊரவர் தம்பால் வருவோர் குறிப்பறிந்து உணவு நல்கும் ஒட்பமுடையவரல்லர்; ஆயினும் நீவிர் அவ்விடம் விட்டு நீங்குதல் கூடாது; அங்கே தங்குவீராயின், மனையுறையும் மகள் வந்து நீவிர் உண்ணவும் கொள்ளவும் தக்க வரகும் தினையும் இல்லையாயினும், இல்லென்னாது தினைக்கதிரிடத்தே விதைக்கென விடப்பட்ட தினையைக் கொணர்ந்தேனும் குற்றி உணவாக்கித் தருவள்; அச் செயலில் தவறாள். அவள் கணவனான வேளாண் பெருமகன் தன்பால் வேந்தனே வந்தாலும் உண்பது அதுவேயாகும். அவன் போருடற்றிப் பெற்ற பெருவளங்களைப் பாணர் முதலிய பரிசிலர்க்கு உதவி விடுவான் என்று கூறுகின்றான்.

    நீருட் பட்ட மாரிப் பேருறை
    மொக்கு ளன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதற் றுள்ளுவன வுகளும்
    தொள்ளை மன்றத் தாங்கட் படரின்         5
    உண்கென வுணரா வுயவிற் றாயினும்
    தங்கினர் சென்மோ புலவிர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தெனக்         10
    குறித்துமா றெதிர்ப்பை பெறாஅ மையிற்
    குரலுணங்கு விதைத்தினை யுரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன் றேவில டன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு........
    ....................உடூம்புசெய்         15
    பாணி நெடுந்தேர் வல்லரோ டூரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னு மதுவே
    பரிசின் மன்னுங் குரிசில்கொண்டதுவே.
    --------

உரை: நீருட் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன நீர்க்குள் வீழ்ந்த மழையினுடைய பெரிய தாரையாலுண்டாகிய குமிழிபோல; பொகுட்டுவிழிக் கண்ண - கொட்டை போன்ற விழி பொருந்திய கண்ணையும்; கரும்பிடர்த் தலைய - கரிய பிடரி பொருந்திய தலையையும்; பெருஞ்செவிக் குறுமுயல் - பெரிய செவியையு முடைய குறுமுயல்; உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன் உகளும் - ஊருக்குள்ளேயிருக்கும் குறிய புதலிடத்தே துள்ளி விளையாடும்; தொள்ளை மறைத்து ஆங்கண் படரின் - வளைகள் பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்; உண்கென உணரா உயவிற்றாயினும் - உண்மின் எனக் குறிப்புணர்ந்துரைப் பதல்லாத வருத்தமுடையதாயினும்; நன்றும் தங்கினிர் சென்மோ - பெரிதும் தங்கிச் செல்வீர்களாக; புலவீர் - அறிஞரகளே; சென்றதற் கொண்டு - சென்றதனால்; மனையோள் விரும்பி - மனையவள் விருப்பமுற்று; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - வரகும் தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை யெல்லாம்; இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென - இரவலர் உண்டதனாலுங் கொண்டதனாலும் தொலைந்தனவாக; குறித்துமாறு எதிர்ப்பை பெறாமையின் - குறி யெதிர்ப்பைத் தானும் பெறமுடியாமையால்; குரல் உணங்கு விதைத்தினை - கதிரிடத்தே முற்றி யுலரவிட்ட விதைத்தினையை; உரல்வாய்ப் உரல்வாய்ப் பெய்து - உரலிடத்தே பெய்து குற்றி யுண்பிப்பாளே யல்லது; சிறிது புறப்பட்டன்றோ விலள் - சிறிதும் இன்மை கூறி நீவிர் வறிதேகுமாறு விடவாளல்லள்; தன்னூர் வேட்டக்குடி தொறுங் கூட்டும் - தன்னூரிலுள்ள வேட்டுவர் மனைதோறும் கூட்டப்படும்; ...உடும்பு செய் பாணி நெடுந்தேர் வல்லரோடு - உடும்பின் தோலாற் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்த நெடிய தேரைச் செலுத்தவல்ல வீரருடனே; ஊரா - ஊர்ந்து; வம்பணி யானை வேந்து தலைவரினும் - கச்சணிந்த யானையையுடைய வேந்தர் தன்பால் வந்தாலும்; உண்பதும் அதுவே - உண்பிப்பது அதுவேயாம்; பரிசில் - அவன் தன்பால் வரம் பரிசிலர்க்கு நல்கும் பரிசில்; குரிசில் கொண்டது - குரிசிலாகிய அவள் பகைவரை வென்று பெற்ற பொருளேயாம்; எ - று.

புலவீர் மன்றத்துத் தங்கினிர் சென்மோட சென்றதற்கொண்டு மனையோள் விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்; வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன்னும் உம்மும் அவை. பொகுட்டு விழி, வன்மையாலும் வடிவாலும் பொகுட்டுப்போலும் விழி. குமிழி நிறமும் ஒளியும்பற்றிய உவமமாதலின். "அடுக்கிய தோற்ற மன்று" மொக்குள் அன்ன கண், பொகுட்டு விழிக் கண் என இயையும். எலியும் பிறவும் தோண்டிய வளைகள் மிக்க மன்றம் என்றற்கு, "தொள்ளை மன்றம்" என்றார். மன்றம் என்றது புறந்திண்ணை யெனக் கொள்க. வந்த விருந்தினரது குறிப்பறிந்து ஓம்புவார் செயல் விருந்தினர்க்கு இன்பந் தருவதாகலின், குறிப்பறியும் திறனில்லாத வேட்டக்குடி மன்றத்தை "உண்கென உணராவியல்பிற" றென்றான்.உணராமை காரியத்தின் மேனின்றது. உணரார் மனைக்கண் புலவர் விருந்தாதலை விழையாராதலின், அது செய்யற்க என்பது, "உணரா இயல்பிற்றாயினும் நன்றும் தங்கினிர் சென்மோ புலவீர்" என்றான். இரத்தல் இழிவெனக் கருதாது மேற் கோடலின், இரவலரை "இரவன் மாக்கன்" என்றார். குறித்து மாறு எதிர்ப்பை, குறியெதிர்ப்பை; அஃதாவது கைம்மாற்றுக் கடன் முற்றிய தினைக்கதிர்களை மனைக்கூரையிற் கட்டித் தொங்க விட்டுவைப்பது இயல்பாதலால், அதனை யுரல் வாய்ப்பெய்து சமைத்து மனையோள் விருந்தோம்புவாளாயினள். புறப்படுதல் - வெளியே செல்லவிடுதல்: வெளிவருதலுமாம். விருந்தினர் உண்டொழியுங்காறும் வெளிப்பட்டிலள் என்றுமாம். இரவலர் உண்டதனால் ஒரு பகுதியும் தரக் கொண்டதனால் எஞ்சிய பகுதியும் ஆக எல்லாம் தொலைந்தமையின் "இரவலன் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென" என்றார். வித்தை யுண்டல் முறையன்றாயினும் விருந்தோம்பற்கு அதுவும் அமையுமெனக் கொண்டனளென்பார், "விதைத் தினை"என விதந்தோதினார்"குறித்துமா றெதிர்பை பெறாமையின்" என்றது, அது முறையன்மை யுணரப்பட்டமை குறித்து நின்றது."நனி பேதையே நயனில ்கூற்றம், விரகின்மையின் வித்தட்டுண்டனைஞ (புறம். 227) எனச் சான்றோர் கூறுதல் காண்க. உடும்பு: ஆகு பெயர். பாணி,கை; ஆகு பெயராற் கைச்சரடு குறித்து நின்றது.இதனை வம்பென்பதும வழக்கு;"வம்புகளை வறியாச் சுற்றம்" (பதிற். 19) என்பது காண்க. வுரவலர் வரினும் இரவலர் வரினும் விருந்தோம்பற்கண் வேறுபாடின்மை காட்டியவாறு. இப் பெற்றியோன் இரவலர் புரவலனாவதற்குக் காரணம் கூறுவார், "பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே" யென்றார்.

விளக்கம்: புலவர்களை ஆற்றுப்படுத்துகின்றாராதலால், தொடக்கத்தே ஊரினது இயல்பைக் கூறுகின்றார். ஊர்தொறும் மனைதோறும் பரிசிலர் வந்து தங்குதற்கு மன்றங்களுண்மையின், ஊர்க்குச் செல்லும் புலவர்கள் அம் மன்றங்களிற் றங்குவரென்பது கொண்டு, "தொள்ளை மன்றத் தாங்கண் படரின்" என்றார். மன்றத்தின் பொலிவழிந்த தோற்றம் தன்னைக் காண்பார் உள்ளத்தில் அருவருப்பை யுண்டுபண்ணி, உணவு வேட்கை யெழாவாறு செய்யுமென்பது தோன்ற, "உண்கென வுணரா வுயவிற்றாயினும்" என்றார். தங்கிய வழி, மனைக்குரியவள் விரைந்தேற்று விருந்தோம்புவள் என்றற்கு "விரும்பி" என்றார். புறப் பட்டன்றோ இலள், புறத்தேசெல்ல விடுவாளல்லள்: தன்பால் இன்மையினைப் புறத்தே நீவிர் அறியச் செய்குவாளல்லள் என்றுரைப்பது முண்டு. இஃது இல்லுறை மகளின் நன்மாட்சி யுணர்த்தி நின்றது. விதைத்தினையையுண்டல் முறையன்றாதலின், குறி யெதிர்ப்பை நாடினளெனவும், அது பெறாமையின்,விருந்தோம்பலோமபா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்றெனத் தேர்ந்தனளெனவும் அறிக. "வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சில் மிசைவான்புலம்", (குறள்) என்றது. ஈண்டுநினைவு கூதத்தக்கது விருந்தோம்பி மிச்சில்மிசைவான் விருந்து வந்தவிடத்துத் தன்புலத்துக்கு வித்து இடல் வேண்டுங் கொல்லோ; அதனையும் விருந்தோம்புதற்குச் செலவிடுவன் என உரை கூறற்கும் இக்குறள் அமையுமாறு காண்க: புலவர்களாகிய உம்மையேயன்றி, நாடாளும் பெருவேந்தர் தரினும் அவரையும் இவ்வாறே உண்பிக்கும் இயல்பினன் அவள் கணவன் என்றார். இத்துணை யெளியோனாகிய மனைக் கிழவன் வேந்தன்பால் மாராயமாகப் பெறும் பரிசில்களைத் தனக்கென வோம்பாது பரிசிலர்க்கு நல்கி மேம்படுமியல்பினன் என்பது விளங்க, "பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே" யென்றார்.
---------

334. மதுரைத் தமிழக் கூத்தனார்

சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார் (சிலப். 3:12) இருவகைக் கூத்தாவன "வசைக் கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல், பொதுவியல்; வரிக் கூத்து வரி சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, ஆரியம் தமிழ்; இயல்புக் கூத்து, தேசிக் கூத்தெனப் பல்வகைய, இவை விரிந்த நூற்களிற்காண்க" என்றனர். இதனால் கூத்து ஆரியக் கூத்து, தமிழ்க்கூத்து என இருவகைப்படுமென்று, இவ் வகைகளின் இயல்புகள் விரிந்த நூற்களிற் காணப்படுமென்றும் அறிகின்றோம். ஆயினும் விரிந்த நூல்கள் இப்போது இறந்தன. உலகவழக்கில் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணாயிருக்கவேண்டும்" என்றொரு பழமொழி யுண்டு. ஆதலால், ஆரியக் கூத்தும் தமிழ்க் கூத்தும் வழக்கிற் பயின்று வந்தன என்பது பெற்றாம். முகற் குலோத்துங்க சோழன் காலத்தில் கும்பகோண வட்டத்து வானம்பாடியிலுள்ள நாக நாதசாமி கோயிலில் உண்டான கல்வெட்டொன்று, அங்கே விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராச பயங்கர ஆசாரியன் என்றொரு கூத்தன் இருந்தானென்றம். மிழலைநாட்டு வீரநாராயண புரத்துக் கயிலாயமுடைய மகாதேவர்க்குரிய சித்திரை விழாவில் ஐந்து முறை தமிழக் கூத்தாட வேண்டுமென்றும், அதற்காக அவனுக்கு நகரத்தாரும் கோயிலார்களும் கூடி நாகன்பாடி (மானம்பாடி) யென்றவூரிற் சில நிலங்களைக ் கூத்தாட்டுக் காணியாகக் கொடுத்தனரென்றும் கூறுகிறது. (A. R. No. of 1931-32) பண்டை நாளில் மதுரையிலிருந்து தமிழ்க் கூத்து வகையிற் சிறந்து விளங்கிய சான்றோர் தமிழ்க்கூத்த ரெனப்பட்டார். இச் சிறப்பு மிகுதியால் இச்சான்றோருடைய இயற்பெயர் மறைந்துபோக,தமிழக்கூத்தர் என்ற பெயரே நிலவுவதாயிற்று. மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் தேவனாரென்று வேரொரு சான்றோர் பெயர் தொகை நூல்களிற் காணப்படுகின்றது. அவர் பெயரைக் காண்போர் அவர் மதுரைத் தமிழக்கூத்தனாரான நாகனாரென்றும், அவருக்கு மகனே மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் வேதனாரென்றும் கருதுவர். தமிழக்கூத்தன் நாகன் தேவன் என்ற சான்றோர் பெயரால் சோழநாட்டு யிருக்குமென நினைத்தற்கு இடமுண்டாதலால், மதுரைத் தமிழக்கூத்தன் என்பாரைப் பாண்டிநாட்டுச் சான்றோரென்றும், தமிழக்கூத்தன் நாகன் தேவனாரைச் சோழநாட்டுச் சான்றோரென்றும் மதுரை யென்பது ஏடெழுதினோரால் நேர்ந்த கைப்பிழை யென்றும் தெளியவேண்டும். இந் நூலைத் தொகுத்தோர் இவரை மதுரைத் தமிழக்கூத்தனாரென்றே குறித்துள்ளார். இவர் பாடியனவாக வேறே பாாட்டுகள் இல்லை. இவ்வொரு பாட்டும் சிதைந்து கிடக்கிறது. இதுவும் மூதின்முல்லைப் பாட்டாகும். இதன்கண் வேந்தனொருவனுடைய ஊரியல்பு கூறி, அவ்வூர் வாழும் தலைவன் தனக்குரிய கொடை நலத்தால் மேம்பட்டுப் பரிசிலர்க்குப் பொற்பட்டமணிந்த யானைகளை வழங்குவதில் தவறுவதிலன் என்றும், அவன் மனைவிதனக்குரிய விருந்தோம்புந் துறையில்சிறந்து பாணர்க்கும் ஏனைப் பரிசிலர்க்கும் பேருணவு தந்து பேணுவதில் பிழைபடுவதிலள் என்றும் கூறுகின்றார்.

    காமரு பழனக் கண்பி னன்ன
    தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்
    படப்பொடுங் கும்மே........பின்பு........
    .........றூரே மனையோள்         5
    பாண ரார்த்தவும் பரிசில் ரோம்பவும்
    ஊணொலி யரவமொடு கைதூ வாளே
    உயர்மருப் பியானைப் புகழ்முகத் தணிந்த
    பொலம் புனையோடை...ப்
    பரிசில் பரிசிலர்க் கீய         10
    உரவுவேற் காளையுங் கைதூ வானே.
    -------

திணையும் துறையு மவை. மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.

உரை: காமரு பழனக் கண்பின் அன்ன - அழகிய நீர் நிலைகளில் வளர்ந்திருக்குஞ் சண்பங் கோரையின் கதிர்போன்ற தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல் - தூய மயரிடர்ந்த குறுகிய கால்களையும் நெடிய காதுகளையுமுடைய குறுமுயல்; புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பின் - புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக் கஞ்சி; படப்பு ஒடுங்கும் - வைக்கோற் போருக்குள்ளே பதுங்கும்; ......பின்பு.....வேந்தனூர்- வேந்தனது ஊர்; மனைமோள் பாணர் ஆர்த்தவும் - மனையவள் பாணர்களை யுண்பிக்கவும்; பரிசிலர் ஓம்பவும் - பரிசிலராகிய புலவர் முதலாயினாரை வரவேற்றுப் புறந்தரவும்; ஊணொலி யரவமொடு கைதூவாள் - அவர்கள் உண்பதனா லுண்டாகும் ஆரவாரத்திடையே அச் செயலிற் கையொழி யாளாயினாள்; உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த பொலம்புனை யோடை உயர்ந்த கோடுகளையும் யானைகளின் புள்ளிபொருந்திய முகத்தில் அணியப்படும் கொன்னாலாகிய பட்டம்;........, பரிசில் பரிசிலர்க்கீய- பரிசிற் பொருளைப் பரிசிலர்க்கு வழங்குதலின்; உரவுவேல் காளையும் கைதூவான் - வலிபொருந்திய வேலையுடைய காளையாகிய அவள் கணவனும் கையொழியான்; எ - று.

கண்பைச் சண்பங் கோரை யென்பர் நச்சினார்க்கினியர்;இக் காலத்தில் இதனைச் சம்பு என்பர்; ஈண்டு; ஆகுபெயர். பழனம், மருத நிலமுமாம். தூமயிரென்றது, மென்மையுடைமைபற்றி, படப்பைக்கண் தொகுக்கப்பட்டிருத்தலின், வைக்கோற்போர் படப்பு எனப்பட்டது. கைதூவல் ஓய்ந்து செயலறுதல். உயர் மருப்பு யானை யென்றது, பகைவருடைய யானைகளை. அவற்றின் ஓடைப் பொன்னைப் பாணர் முதலியோர்க்கு வழங்குவது மரபு. "ஒன்னார் யானை யோடைப் பொன் கொண்டு, பாணர் சென்னிப் பொலியத் தைஇ" (புறம். 126) என்று சான்றோர் கூறுவது காண்க. முயல் படப்பொடுங்கும்; மனையோள் கைதூவாள்; காளையும் கைதூவான் என வினை முடிவு செய்க.

விளக்கம்: ஊரியல்பு கூறுவார், சிறுவர் மன்றத்திலிருந்து ஆர்ப்பராயின், அது கேட்டுக் குறுமுயல் அஞ்சிப் படப்பைக்கண் ஒடுங்கும் என்றார்; பாணர் ஆர்த்தலாவது, பாணர்க்கு உணவும் கள்ளும் தந்து உண்பித்தல். பொருநர், கூத்தர் முதலிய பரிசிலர்க்கு அவர் வேண்டுவன நல்கிச் சிறப்பித்தலை, பரிசிலரோம்பல் என்றார். ஊணொலியரவம், உணவினை யுண்போரால் உண்ணுங்காலுண்டாகும் ஆரவாரம்.உரவு வேல் காளையென்றது. மறத்துறையால் பொருளீட்டுவன் என்பதுபட நின்றது. காளையாவான் மறத்துறையாற் பொருளீட்டுபவன்.
---------

335. மாங்குடி கிழார்

மாங்குடி கிழார் முல்லை நிலத்துச் சிற்றூரொன்றில் வாழும் மக்களுடைய வாழ்க்கைக் கூறுகளை அவரணியும் பூவும் உண்ணும் உணவும் அவரிடை நிலவும் குடிவகையும் பரவுங் கடவுள் நிலையும் இப் பாட்டின் கண் வகுத்தோதுகின்றார். ஓர் ஊரில் வாழ்பவர் தம் கூற்றிலே நின்று வாழ்வாங்கு வாழ்ந்து மேம்படுவதும் வாகைத்திணையின்பாற் படுவதாகலான், இப் பாட்டும் வாகைப்பட்டாய் மூதின்முல்லைத் துறைக்குரிய தாய்த் தொகுக்கப்பட்டது. முல்லை நிலத்தூர் குடியெனவும் வழங்கும். இச் சிறு குடியில் வாழ்வோர் குரவும் தளவும் குருந்தும் முல்லையும் என்ற பூக்களை யணிவர்; அவர்க்கு உணவாவன வரகு, தினை, கொள், அவரை யென்ற நான்குமாகும்; அவரிடையே நிலவும் குடிவகை துடியன், பாணன், பறையன் கடம்பன் என்ற நான்குமாகும். இவ்வாறு பலவகைப் பூவணிதலும், உணவுண்டலும், குடிவகை கோடலும் இச் சிறு குடியிலுள்ளார்க்கியல் பாயினும், கடவுள் வழிபாட்டில் பட்டில் பல்வகை கோடல் இயல்பன்று. ஒரு கடவுளையே வழிபடுவர். அக் கடவுள் தானும் கன்னின்ற பெரு வீரராகும். இவற்றை இச் சிறு பாட்டிற் காணலாம்; இதுவும் தொடக்கப் பகுதியில் சிறிது சிதைந்து விட்டது.

    அடலகுந் துப்பின்................
    குரவே தளவே குருந்தே முல்லையென்
    றிந்நான் கல்லது பூவு மில்லை
    கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொ         5
    டிந்நான் கல்ல துணாவு மில்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பனென்
    றிந்நான் கல்லது குடியு மில்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்         10
    கல்லே பரவி னல்லது
    நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.
    ----------

திணையும் துறையுமவை. மாங்குடி கிழார் பாடியது.

உரை: அடலருந் துப்பின் - வெல்லற்கரிய வலியினையுடைய... ;குரவே தளவே குருந்தே முல்லை யென்ற இந் நான் கல்லது பூவும் இல்லை - குரவ மலரும் தளவு மலரும் குருந்த மலரும் முல்லை மலரும் என்று சொல்லப்பட்ட இந்த நால்வகைப் பூவல்லது வேறு பூக்கள் இல்லை; கருங்கால் வரகு இருங்கதிர்த்தினை - கரிய காலையுடைய வரகும் பெரிய கதிரையுடைய தினையும்; சிறு கொடிக்கொள் பொறிகிளர் அவரை - சிறிய கொடியாகிய கொள்ளும் பொறிகளையுடைய அவரையும்; இந் நான்கல்லது உணாவும் இல்லை - இந்த நான்குமன்றி உணவுப்பொருள் வேறே யில்லை; துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியும் இல்லை - துடியன்குடி பாணன்குடி பறையன்குடி கடம்பன்குடி யென்று சொல்ல்ப்பட்ட இந் நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி - மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென - விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண் பட்டு வீழ்ந்திறந்தாராக; நல்லே பாவின் அல்லது - அவர் பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது; நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல - நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறேயில்லை; எ - று.

பூவகையும் உணாவகையும் குடிவகையும் கடவுள் வகையும் வேறு பிறவுளவாயினும் அவை இந்நாட்டில் இல்லையென விதந்தோதிய வாறு. பூவைக் குரவு முதலியவற்றோடும் உணாவை வரகு முதலியவற்றோடும் கூட்டுக. கொள்ளுச் செடியாயினும் சிறு சிறு கொடியுடைமையின், "சிறுகொடிக் கொள்" என்றார். மக்கள் வலி யெல்லையைக் கடந்துள்ள கடவுளை விலக்கி நடுகல்லைக் கடவுளாகப் பரவுவதற்குக் காரணம் கூறுவார், "ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலக்கி, யொளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்வே பரவினல்லது" என்றார். ஈண்டு நெல்லென்றது நெற்பொரியினை. "வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும், செந்நெல் வான்பொரி சிதறி, (குறுந். 18) என்று சான்றோர் கூறுதல் காண்க.

விளக்கம்: பல்வேறு பூக்களும் உண்டெனினும், மக்களால் சிறப்பாக அணியப்படுவன இந்நான்குமே யென்றற்கு, "குரவே தளவே குருந்தே முல்லை யென்ற இந்நான் கல்லது பூவும் இல்லை" என்றார். "குரவே தளவே" என்ற பாடம் அச்சுப் பிரதியில் இல்லை. உணவாகும் சிறப்புப்பற்றி வரகு முதலியவற்றை முறையே கருங்கால் வரகெனவும், இருங்கதிர்த்தினை யெனவும், சிறுகொடிக் கொள்ளெனவும், பொறிகிளர் அவரை யெனவும் சிறப்பித்தார். குடிவகையில் வேளாளரும் வணிகரும் அரசரும் அந்தணரு மெனப் பொதுவகையின் பல குடிகள் இருக்கின்றன வெனினும், மேலே கூறிய பூவணிந்து வரகு முதலியவற்றைக் கொடையாகப் பெற்றுண்ணும் வகையில் சிறந்த குடிகளாதலின் துடியன் என்றார். மறங்கிளர்வித்துப் புகழ்பாடிச் சிறப்பெய்துவித்தலின், அணியோடும் உணவோடும் ஒன்றாக நால்வர் குடியினையும் எண்ணியுரைத்தார். அணியப்படுவனவும், உண்ணப்படுவனவும், புரக்கப் படுவனவும் கூறினமையின், பரவப்படுவன நடுகற்களன்றி வேறே கடவுளில்லை யென்றார்.
---------

336. பரணர்

ஆசிரியர் பரணர் முதலிய சான்றோர், நாட்டில் போல் நிகழுங்கால் பல நல்ல ஆடவர் உயிரிழப்பதபால் நாடு சீரழிவதும் பொருட் குறையும் பசியும் பிணியுந் தோன்றி உயிர்கட்கு உலக வாழ்வைத் துன்ப நிலைய மாக்குவதுங் கண்டு போர்கள் நிகழாதவாறு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் போர்க்குரிய தலைமக்கட்கு வேண்டுவன அறிவுறுத்துவர். போர்கள் உண்டாதற்குரிய ஏதுக்களுள் மகட்கொடை வேண்டிய வேந்தர்க்கு மகண் மறுத்தலும் அதுவே வாயிலாகப் போருண்டாதலும் கண்டு வருந்திப் பலவகையாகப் பாடியிருக்கின்றனர். ஒரு வேந்தன் பிறனொருவன் மகனை மணஞ்செய்து கொடுக்குமாறு வேண்டுகின்றான். இவ் வேந்தன் வெஞ்சினமுடையவன். மகளைக் கொடுத்தற்குரிய தந்தை வெஞ்சினமுடைமை முதலிய ஏதுக்களைக் கருதி மகட்கொடை மறுக்கின்றாபன். அவனுடனிருக்கும் மறவர் தாமும் மறுத்தற்குத் துணையா கின்றனரேயன்றி, நேர்தற்குத் துணையாகாது வாய் வாளாதிருக்கின்றனர். வேட்ட வேந்தன் சினங்கொண்டு போர்ப்பறை முழக்குகின்றான். ஊரிற் பெருங் கலக்க முண்டாகிறது. மகளைப் பெற்ற தாயும் தன் கணவற்கு வேண்டுவன கூறிப் போரைத் தடுக்குங் குறிப்பால் ஒன்றும் கூறாளாய் அவள் விரும்பியதையே தானும் விரும்புகின்றாள்; அவளை மகள் வளர்த்துச் சிறந்தாளென்னாது பகை வளர்ததுப் பண்பிலளென்பதால், "பண்பில் தாய் அறனிலள்" என்று இப் பாட்டிற் கூறுகின்றார்.

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்பிவ டந்தையுஞ் செய்யான்
    ஒளிறுமுகத் தேந்திய லீங்குதொடி மருப்பிற்
    களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த
    ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த் தனரே         5
    இயவரு மறியாப் பல்லயங் கறங்க
    அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர்
    அறனிலண் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத         10
    தகைவளர்த் தெடுத்த நகையொடு
    பவைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே.
    -----------

திணை: காஞ்சி. துளை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது.

உரை: வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன் - மகட்கொடை விரும்பிய வேந்தனும் வெவ்விய சினமுடையன்: கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் - செய்யத்தக்க கடமைகளைச் செய்தலை இவள் தந்தையும் செய்ய விரும்புகின்றிலன்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் - விளங்குகின்ற முகத்தின்கண் உயர்ந்துள்ள பெரிய தொடிகயணிந்த கோட்டினையுடைய; களிறும் கடிமரம சேரா - களிறுகளும் கடிமரத்தைச் சேர்ந்து நில்லாவாயின். சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனர் - வேந்தனும் தந்தையுமாகிய இருவரையும் சேர்ந்துள்ள விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடியொன்றும் உரையாடாராயினர்; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க - வாச்சியக்காரராலும் அறியப்படாத பல பல வாச்சியங்கள் முழங்க; இவ்வருங்கடி மூதூர் பெரும் பேதுற்றன்று - இந்தக் கடத்தற்கரிய காவலையுடைய பழைமையான வூர் பெரிய பேதுற வினை யெய்தியுள்ளது; அன்னோ - ஐயோ, விறன்மலை வேங்கை வெற்பின் - விறல்படைத்த மலையாகிய வேங்கை மலையின்கண்; விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா இளமுலை - பூவிரிந்த கோங்க மரத்தினுடைய அரும்பினது வனப்புடைய முதிராத இள முலையினையுடைய மகளது; தகை வளர்த்தெடுத்த நகையொடு - அழகு மிக வளர்த்தலால் உண்டாகிய மகிழ்ச்சியினையும்; பகை வளர்த்திருந்த பண்பில் தாய் ஊர்க்குப் பகைவர் மிகவுளாராக இருத்தலால் பண்பின்மையினையுமுடைய இத் தாய்; அறன் இலள் மன்ற - அறப்பண்பில்லாள், ஒருதலையாக; எ - று.

வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று; தாய் அறனிலள் எனக் கூட்டி வினை முடிவு கொள்க. வேந்தற்குச் செய்யக்கடவனவும், மகட்கொடை வேண்டினார்க்குச் செய்யக்கடவனவும் அடங்க, "கடவன" எனப்பட்டன. மகட்கொடையும் பெற்றோர்க்குச் செயற்குரிய கடனாம், உற்றார்க்குத் தம் மகளைக் கொடுத்து உரியராக்குவது பெற்றோர்க்குக் கடனாதலின், அதனைச் செய்யாது தாழ்ப்பது குறித்து, "கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்" என்றார். களிறுகளும் காவல் மறவரும் போர்க்கு உடன்பட்டு நிற்குமாறு தோன்ற, "களிறுகளும் கடிமரஞ் சேரா சேர்ந்த ஒளிறுவேன் மறவரும் வாய் மூழ்த்தனர்" என்றும் கூறினார். மூழ்த்தல் - மூடுதல். இயங்களின் பன்மை மிகுத்தற்கு "இயவரு மறியாப் பல்லியம்" என்றார். பேதறவு, கலக்கம்; மயக்குமாம். மகட்கொடையை விரும்பித் தந்தை தன்னையரை அதற்குடன்படச் சேய்யாமையும் போர்க்குரியராதலைத் தடாமையும் "அறனிலள்" என்றற்கு ஏதுவாயின. அறப்பண்பில்லாது மறப்பண்பேயுடையளென்றற்குப் "பண்பில் தாய்" என்றார். வேங் கைமலை, தமிழ் நாட்டிலுள்ள மலைகளுள் ஒன்று; "அருவி வேங்கைப் பெருமலை" (குறுந். 94) என்று அள்ளூர் நன்முல்லையாரும் கூறுவர். வேங்கை மரங்கள் மிக வளர்தலாலும், வேங்கைப் புலிகள் வாழ்வதாலும் இம் மலை வேங்கைமலை யெனப்பட்டதெனக் கருதுதலுமுண்டு. முற்றா இளமுலை யென்றது, பெதும்பைப் பருவமெய்திய அணிமைச் செவ்வியுடையளென்பதைத் தோற்றுவித்து நிற்கிறது; இஃது அன்மொழித்தொகை. மகளழகு கதிர்த்துத் தோன்றிக் காண்பார்க்கு மகிழ்ச்சி மிகுவித்தலின் "வகை வளர்த்தெடுத்த நகை" யென்றார். வளர்த்தென்னும் வினையெச்சம் முன்னது காரணப் பொருட்டு; பின்னது காரியப் பொருட்டு.

விளக்கம்: மகட்பாற் காஞ்சியாவது, "ஏந்திழையாள் தருகென்னும், வேந்தனொடு வேறு நின்றன்று" (பு. வெ. மா. 4:24) என வரும். "வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன்" என்றது, மகண் மறுத்த வழி, வெவ்விய சினங்கொண்டு போர்செய்தல் ஒருதலையென்பது குறித்து நின்றது. போர்க்குச் செல்லும் களிற்றின் மருப்புக்குத் தொடியணிதல், செயற்கை வலியூட்டற்கு. தந்தையும், களிறும் மறவரும் இருக்கும் நிலையினை விதந்தோதியது மகண் மறுக்கும் தந்தையும் போர்க்குச் சமைந்திருக்கின்றா னென்பதை யுணர்த்தி நின்றது. பகைவளர்த்திருந்தாளென்றற்கேற்பப் பண்பில் தாய் என்றார். இம் மகளைப் பெறாதிருந்தாளாயின், இப் போர் நிகழ்ச்சிக்கேதுவின்றா மென்பதுபற்றி இவ்வாறு கூறின ராதலின் பண்பில் தாய் என்றது குறிப்புமொழியாயிற்று.
----------

337. கபிலர்

ஆசிரியர் கபிலர் இப் பாட்டின்கண் சோழநாட்டுத் தலைவன் ஒருவன் ஊருக்குச் செல்லுகின்றார். அவனுடைய அருமை மகள் தன் பேதைப் பருவங்கடந்து பெதும்பைப் பருவமெய்தி இற்செறிக்கப்படும் இயல் பினளாகின்றாள். அச் செய்தி ஊர் முழுவதும் பரவுகிறது. சூழவுள்ள நாட்டிலும் படர்கிறது. அவளுடை குடிநலனும் மெய்ந்நலனும் அறிவு நலனும் யாவராலும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இச்செய்திகளை ஆசிரியர் கபிலர் அறிகின்றார். இப் பாட்டின்கண் கபிலர் இப் பெண்ணின் தந்தையின் இயல்பும் தன்னையர் இயல்பும் கண்டு, "இச் சோணாட்டண்ணல் பேரார வாரமுடையன்; இவளுடைய தன்னையர் போர் செய்து சிறந்த நெடு வேலைப் பற்றிக் குருதிபடிந்த தலையினையுடையராய் மறமிக்குள்ளனர்; வேந்தரும் ஒருவர்பின் ஒருவராய் வந்து மகட்கொடை வேண்டிய வண்ணமிருக்கின்றனர். இவளை மணஞ்செய்து கொள்ளும் பேறுடைய வேந்தர் யாவரோ, அது காண்டற்குரியது என இசைக்கின்றார்.

    ஆர்கலி யினனே சோணாட் டண்ணல்
    மண்ணாள் செல்வ ராயினு மெண்ணார்
    கவிகை வாள்வலத் தொழியப் பாணரிற்
    பாடிச் சென்றார் வரறோ றகமலர்
    பீத லானா விலங்கு தொடித் தடக்கைப்         5
    பாரி பறம்பிற் பனிச்சுனை போலக்
    காண்டற் கரிய ளாகிய மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய         10
    கபில நெடுநகர்க் கமழு நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுத லினியே
    அற்றன் றாகலிற் றெற்றெனப் போற்றிக்
    காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பன ரன்றி         15
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமங் கடந்த வுருகெழு நெடுவேற்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றிவர் மறனு மிற்றாற் றெற்றென
    யாரா குவர்கொ றாமே நேரிழை         20
    உருத்த பல்சுணங் கணிந்த
    மருப்பிள வளமுலை ஞெமுக்கு வோரே.
    -----------

திணையும் துறையு மவை. கபிலர் பாடியது.

உரை: சோணாட்டண்ணல் ஆர்கலியினன் - சோணாட்டுத் தலைவன் நிறைந்த ஆரவாரத்தையுடையன்; மண்ணாள் செல்வரா யினும் - நிலவுலகத்தையாளும் அரசியற் செல்வமுடையராயினும்; எண்ணார் - அதனை யெண்ணாராய்; கவிகை வாள் வலத்து ஓழிய - இடக்கவிந்த தம்முடைய கையில் வலமுண்டாக ஏந்தும் வாளை நீக்கி; பாணரிற் பாடிச் சென்றார் - பாண்மக்கள் போலப் பாடி வந்தோர்; பரல் தோறும் அகம் மலர்பு வருந்தோறும் மனமலர் விரிந்து; ஈதல் ஆனா கொடுத்தலமையாத; இலங்கு தொடித் தடக்கை - விளங்குகின்ற தொடியணிந்த பெரிய கையையுடைய; பாரி பறம்பின் பனிச்சுனை போல - வேள் பாரியின் பறம்புமலையிலுள்ள குளிர்ந்த சுனைநீர் போல; காண்டற் கரியளாகி - பிறர் காண்பதற்கு அரியவளாய்; மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு ;மாட்சிமையுற்ற பெண்மை நலம் நிறைந்த பொற்புடனே; மண்ணிய துகிவிரி கடுப்ப நுடங்கி - கழுவப்பட்ட துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல நுடங்கி; தண்ணென அகிலார் நறும்புகை ஐது சென்று அடங்கிய - தண்ணென்று அகிற் கட்டையினின்றெழுந்த நறிய புகையானது மெல்லச் சென்று படிந்த; கபில நெடு நகர்க் கமழும் மணம் பொருந்திய; மனைச் செறிந்தனள் வாணுதல் - இல்லிடத்தே செறிக்கப்பட்டாள் ஒளிபொருந்திய நுதலையுடையவள்; இனி - இப்பொழுது; அற்றன்றாகலின் - அத்தன்மைக்கிடமன் றாதலால்; தெற்றெனப் போற்றி - தெளிவாக வோம்பி; காய் நெல் கவளம் தீற்றி - விளைந்த நெல்லிடத்துப் பெற்ற அரிசியாலுண்டாகிய கவளத்தை யுண்பித்து; காவுதொறும் - காக்கள் தோறும்; கடுங்கண் யானை காப்பனர் அன்றி - வன்கண்மையையுடைய யானைகளைக் காப்பதல்லது; வருதல் ஆனார் வேந்தர் - வருதலமைார் வேந்தர்கள்; தன்னையர் - இவளோடு உடன்பிறந்தவர்கள்; பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல் - பொருந்திய நெடிய வேலையும்; குருதி பற்றிய வெருவரு தலையர் - பகைவரை யெறிதலால் அவர் குருதி தோய்ந்த - கண்டார்க்கு அச்சம் தரும் தலையையுமுடையரானிர்; இவர் மறனும் இற்று - இவரது மறப்பண்பும் இத்தன்மைத்தாய் இராநின்றது; நேரிழை உருத்த பல்சுணங் கணிந்த - நேரிய இழையணிந்த இவட்குரிமையாகத் தோன்றிய பலவாகிய தேமல் பரந்த; மருப்பு இள வனமுலை ஞெமுக்குவோர் - யானைக்கோடு போன்ற அழகிய இளமுலை யழுந்தப் புல்லுவோர், தெற்றென யாராகுவர்ர கொல் - தெளிவாக யாவரோ; எ - று.

நிரல் அல்லோர்க்கு மகட்கொடை மறுத்தலும் அது வாயிலாகப் போருண்டாதலும் எதிர்நோக்கிப் படைபண்ணப்படுதலின், "சோணாட்டண்ணல் ஆர்கலியினன்" என்றார். மண்ணாள் வேந்தர் என்னும் தாம் பிறரால் இரக்கப்படுவதல்லது தாம் பிறரை இரப்பதிலராதமல் முறை; அதனை யெண்ணாது தாம் இரவலராகிய பாணர் முதலியோர் போல வருதலின் "எண்ணார் வாள்வலத் தொழிப் பாணரிற் பாடிச் சென்றாஅர்" என்றார். பிறர்க் கிடக் கவிந்த கை, தான் ஏந்துதற்குரிய வாளை யேந்தாது பாடுநர் ஏந்தும் இசைக்கருவி யேந்துதல் கண்டு இகழ்வார், "கவிதை வாள் வலத் தொழிய" என்றார். கவிகை பாடியென மமையும். அன்றிக் கவிகைச் செல்வர் என இயைத்து இடக் கவித்த கையையுடைய செல்வரெனினுமாம். புகைபடிதலால் சுவர் கபிலநிறம் பெறுவதால் "கபில நெடுநகர்" என்றார். பாரியின் காவல் கடுமைபற்றி அவனது சுனை பிறர் காண்டற்கரிதானது பற்றி, இற்செறிப்புண்ட பெண்ணுக்கு அதனை யுவமம் கூறினார். அண்ணல் ஆர் கலியினன்; வாணுதல், சுனைபோலக் காண்டற்களியளாகிய மனைச் செறிந்தனள்; இனி அற்றன்றகலின், வேந்தர் வருதலானார்; தன்னையர் வெருவருதலையர்; மறனும் இற்று; ஞெமுக்குவோர் யாராகுவர்கொல் என இயைத்து வினைமுடிவுசெய்க.

விளக்கம்: இப் பாட்டின் முற்பகுதி அச்சுப்பிரதியில் சிதறிக் கிடக்கின்றது. வேள்பாரியொடு பகைத்துப் பன்னாள் முற்றியிருந்தும் வென்றி யெத்மாட்டாராகிய வேந்தர்க்குப் பண்டு கபிலர், "சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்று மொருங்கீ யும்மே" எனவும், "யாமும் பாரியு முளமே. குன்று முண்டு நீர் பாடினிர் செலினே" (புறம். 109. 110) எனவும் கூறினாராக, அவர் குறிப்பறியாது பட்டாங்கே கொண்டு மகட்கொடை வேண்டிவந்தனரென்னும் குறிப்புத் தடக்கைப் பாரி" என்றாரென வறிக. பாரியினது பறம்பின்கண்ணதாகிய சுனை மிக்க அருமையும் பெருமையுமுடைய தென்பதைப் பிறரும், "பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்" (புறம். 176) என்று கூறுதல் காண்க. களவிற் கொண்டு தலைக்கழிதல் முதலிய செயல்கட்கு இப்போது இடமில்லையென்பார், "அற்றன்றாகலின்" என்றார். காக்களில் மரந்தொறும் களிற்றைப் பிணித்துக் காத்தலைச் செய்வதையன்றி மகள் வேண்டி வருதலிலும் கையொழி யாராயின ரென்பார், "காப்பனரன்றி வருதலானார் வேந்தர்" என்றார். வேந்தரெனப் பன்மையாற் கூறியது. மகட்கொடை வேண்டிவருவோர் சான்றோர் உப்படப்பலராதல் தோன்ற "இற்றால்" என்றது, மகண்மறுத்தல் ஒருதலை யென்றவாறு.
------------

338. குன்றூர்கிழார் மகனார்

குன்றூர் என்பது ஓரூர். இவ்வூரினரான குள்றூகிழார் பெயர் இன்னதெனத் தெரிந்திலது. நற்றிணையில் குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனாரென ஒருவர் காணப்படுகிறார். இங்கே குன்றூர்கிழார் மகனாரென்றே காணப்படினும், கண்ணத்தனார் என்ற இவரது இயற்பெயர் ஏட்டில் விடுபட்டதாகக் கருதுதற்கிடமுண்டு. அவர் காலத்தே நெடுவேளாதன் என்பான் சோழநாட்டிற் போந்தை யென்னும் ஊர்க்குரியனாய் விளங்கினான். இச் சான்றோரை அவன் பரிசு நல்கிச்சிறப்பித்துள்ளான். இவர் ஒருகால் ஓரூரிலுள்ள தலைவன் மகள் மணப்பருவ மெய்த்திருப்பது கண்டு, அவள் தந்தை தன்னையருடைய மறப்பண்பையும் உடனுணர்ந்து இவளால் இவ்வூரில் கடும்போர் நிகழும் என எண்ணி மகட்கொடை வேண்டுவோர் இவள் தந்தையின் தகுதிக் கேற்ற வணக்கஞ்செய்து இவளைத் தரப் பெறுக எனக் குறிப்பிற் பெறவைத்து இப் பாட்டினை வழ்குகின்றார்.

    ஏர்பரந்தவய னீர்பரந்த செறுவின்
    நென்மலிந்தமனைப் பொன்மலிந்தமறுகிற்
    படுவண் டார்க்கரும் பன்மலர்க் காவின்
    நெடுவே ளாதன் போந்தை யன்ன
    பெருஞ்சீ ரருங்கொண் டடியளே கருஞ்சினை         5
    வேம்பு மாரும் போந்தையு மூன்றும்
    மலைந்த சென்னிய ரணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் வரினுந் தற்றக
    வணங்கார்க் கீகுவ னல்லன்வண் டோட்டுப்
    பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்         10
    றுணங்குகல னாழியிற் றோன்றும்
    ஓரெயின் மன்ன னொருமட மகளே.
    ---------

உரை: வண்தோட்டுப் பிணங்கு கதிர் கழனி நாப்பண் - வளவிய தோட்டினையும் ஒன்றோடொன்று தம்மிற் பின்னிக் கிடக்கும் கதிர் களையுமுடைய கழனிகட்கு நடுவே; ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் - கரையிற் பிணிக்கப்பட்டு உலர்ந்து தோன்றும் மரக்கலமும் கடலும்போலக் காட்சியளிக்கும்; ஓர் எயிர் மன்னன் ஒரு மடம்களே - ஒற்றை மதில் சூழ்ந்த நகரிடத்தேயுள்ள வேந்தனுடைய இளையளாகிய ஒரு மகள்; ஏர் பரந்த வயல் - ஏர்கள் உழுத வயல்களையும்; நெல் மலிந்த மனை - நெல் நிரம்பிய வீடுக ளையும்; பொன் மலிந்த மறுகின் - பொன் நிறைந்த தெருக்களையும்; படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின் - மொய்க்கின்ற வண்டுகள் ஒலிக்கும் பலவாகிய மலர்களையுடைய சோலைகளையுமுடைய; நெடுவேள் ஆதன் போந்தை யன்ன - நெடுவேள் ஆதன் என்பானது போந்தை யென்னும் ஊரைப்போன்ற; பெருஞ்சீர் அருங்கொண்டிள் - பெருத்த சீருடனே அரும்போர் உடற்றிப் பகைவரிடத்தே கொண்ட செல்வமுடையவளாவள்; கருஞ்சினை வேம்பும் - கரிய கொம்புகளையுடைய வேப்பமாலையும்; ஆரும் - ஆத்தி மாலையும்; போந்தையும் மூன்றும் - பனந்தோட்டு மாலையுமாகிய மூன்றையும்; மலைந்த சென்னியர் - சூடிய தலையையுடையராய; அணிந்த வில்லர் - வரிந்து கட்டப்பட்ட வில்லையுடையராய்; கொற்ற வேந்தர் வரினும் - வெற்றி மிக்க முடி வேந்தர் மூவரும் மகட்கொடை வேண்டி வந்தாலும்; தன் தகவணங்கார்க்கு ஈகுவனல்லன் - தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டார்க்கல்லது இவள் தந்தை தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டார்க்கல்லது இவள் தந்தை இவள் மகட்கொடை நேரான்; எ - று.

பள்ளப்பாங்கான நன்செய் வயலென்னும், மேட்டுப்பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க. வயலும் செறுவும் மனயைும் மறுகும் காவுமுடைய போந்தையென இயையும். பெருஞ்சீரும் அரிய போர் செய்து பகைவரிடத்தே கொண்ட பெருஞ்செல்வமும் தன் மகட்குத் தந்தையால் தரப்படுதலின், "பெருஞ்சீரருங் கொண்டியள்" என்றார்; இனி, பெரிய சீருடனே கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து கோடற்குரிய செவ்வியெய்தினவள். ஓரெிற்குக்கலுனும், கழனிக்கு ஆழியும் உவமம். செல்லும்வலியழிந்தமையின் கரையிற பிணிக்கப்பட்டிருக்கும், கலம், "ஏமுற் றுணங்கு கலன்" எனப்பட்டது மருதஞ்சான்ற சீறூர் மன்னன் என்றதற்கு, "வண்டோட்டு...ஓரெயில் மன்னன்" என்றார். சீறூர் மன்னனை ஓரெயில் மன்னென்றலும் வழக்கு. "முரவு வாய் ஞாயில் ஒரெயில் மன்னன்" (அகம். 373) என்று பிறரும் கூறுவது காண்க. மன்னன் ஒரு மடமகள், அருங் கொண்டியள்; அவளை வேந்தர் வரினும் தன்தக வணங்கார்க் கீகுவனல்லன்; ஆதலால் மகட்கொடை வேண்டினோர் வணங்கிப் பெறுக என்பது குறிப்பு.

விளக்கம்: போந்தையென்ற பெயருடைய வூர்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் உள்ளன. இப் போந்தை யென்னும் ஊர் மிறைக்கூற்றத்துப் போந்தை யென்று கல்வெட்டுகளில் (A. R. No. 5 of 1920) கூறப்படுகிறது. குறும்பொறை நாட்டிலும் ஓய்மா நாட்டிலும் உள்ளவை பொற்போந்தை (S. I. I. Vo XII. No. 97) யென்றும், அரும்போந்தை (A. R. No. 33 of 1919) யென்றும் குறிக்கப்டுகின்றன. மிறைக்கூற்றத்துப் போந்தைக் கண்மையில் ஆதமங்கலம் (A. R. No. 193 of 1927-8) என்றோர் ஊர் இருத்தலால், நெடுவேளாதனது போந்தை மிறைக் கூற்றத்துப் போந்தையாதல் வேண்டுமென்று கருதப் படுகிறது. மிறைக்கூற்றம் திருப்பழனம் முதலிய வூர்களைத் தன்பால் உடையது. வேளிர் குடியிற் சிறந்து விளங்கியவன் என்பது தோன்ற, ஆதன் நெடுவேளாதன் எனப்படுகின்றான்: இவ்வாறு நெடுவேள் எனச் சிறப்பிக்கப்படுகிறவன், பொதினி நகர்க்குரியனும் வேளிர் தலைவனுமான ஆவி யென்பானவன்: அவன் நெடுவேன் ஆவி எனப்படுவது (அகம். 1) ஈண்டு நினைவு கூரத்தக்கது. வயலும் செறுவும் மனையும் மறுகும் கலமும் பிறவும் சிறப்பித்துக் கூறலின், இப் போந்தை அந்நாளில் மேன்மையுற்ற நகரமாக இருந்ததென்பது தேற்றம். மினளயும் அகழியமாகிய அரண் பிற இல்லாமையின், "ஒரெயில்" என்றார்.
------------

339. மகட்பாற் காஞ்சி

ஓரூரில் வாழ்ந்த தலைமகன் ஒருவனுடைய மகள் மணத்திற்குரிய செல்வி யெய்தலுற்றாள். அவளது உருநலங்கண்ட வேந்தர் பலர் அவளை மணந்துகொள்ள முயல்வராயினர். மறக்குடியிற் றோன்றிய மாண்புடைய அவள்தந்தை தன்னோடொத்த மாண்புடையார்க்கே அவளை மகட் கொடை நேருங் கருத்தினனாய் இருந்தான். தந்தையின் கருத்துக்கேற்ப மக்ட கொடை வேண்டும் வேந்தர் மாணாராயின் போர் நிகழும் என்பது ஒருதலை. இதனைக் கண்ட சான்றோர் ஒருவர், அப் பெண்ணின் இள நலமும் அவளை மணக்க விழையும் வேந்தர் மன விருப்பமும் அறிந்து, "இவள் வேந்தர் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டாள்; அதனால் போர் நிகழுமென்பதையறிந்தும் அவள் அதனை விரும்புவாள் போன்றனன்; அவள் இன்னும் செவ்வி நிரம்பிற்றிலள்; அது நிரம்புதற்கு இவள் மேலும் பன்னாள் வளர்தல் வேண்டும்" என இப்பாட்டல் விரும்பிக் கூறியுள்ளார். இச் சான்றோர் பெயர் தெரிந்திலது. இப் பாட்டும் இடையிடையே சிதைந்துள்ளது.

    வியன்புலம் படர்ந்த பல்லா நெடுவேறு
    மடலை மாணிழ லசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வானையொ டுகளுந்து         5
    தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்
    கடலாடிக் கயம்பாய்ந்து
    கழிநெய்தய் பூக்குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிற் றதைந்த
    .............................கலத்தின்         10
    வளர வேண்டு மவளே யென்றும்
    ஆரம ருழப்பது மமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித் தோளே.
    ----------

திணையும் துறையுமவை...

உரை: வியன் புலம் படர்ந்த பல்லா நெடு வேறு - அகன்ற புல் வளர்ந்த நிலத்திற் பரந்து மேய்ந்த பல ஆக்களோடு கூடிய நெடிய ஆனேறுகள்; மடலை மாணிழல் அசைவிட - பூக்களை யுடைய மரங்கள் பயந்த பெரிய நீழவில் தங்கி யசையிடாநிற்க; கோவலர் தீதை முல்லைப் பூப் பறிக்குந்து - கோவலர் பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிக்கும்; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் - குறுகிய கோலால் எறியப் பட்ட நெடிய காதுகளையுடைய குறுமுயல், நெடுநீ்ர்ப் பரப்பின் வாளையொடு உகளுத்து - ஆழ்ந்த நீர்நிலையிலுள்ள வாளை மீன்களோடு ஒப்பத் துள்ளித் தாவும்; தொடலை மல்குல் தொடித்தோள் மகளிர் - மேகலை யணிந்த அல்குலையும் தொடியணிந்த தோளையுமுடைய பெண்கள், கடலாடி - கடல் நீரில் விளையாடி; கயல் பாய்ந்து - கானற் சோலையிலுள்ள குளத் தில் மூழ்கி; கழி நெய்தற் பூக்குறூஉந்து - கழியிடத்துப் பூத்த நெய்தய் பூக்களைப் பறிக்கும்; செறுவில் ததைந்த வயலிடத்தே நெருங்கயி; பைத்தழை துயல் வரும் - பசிய தழை யசையும்;..........கலத்தின் - ............கலத்தைப்போல; அவள் என்றும் வளரவேண்டும் - எப்போதும் அவள் வளரவேண்டியவளாக இருத்தலை இவ்வூரவர் வேண்டாநிற்பர்; ஆரமர் உழப்பதும் அமரியளாகி - தன் பொருட்டு வேந்தர்கள் கடத்தற்கரிய போர் செய்வதை விரும்பினவள்போல்; முறஞ்செவி யானை வேந்தர் - முறம்போலும் செவியையுடைய யானைகளையுடைய வேந்தர்களின்; மறங்கெழு நெஞ்சம் கொண்டடொளித்தோள் - மறம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து புறத்தே எவரும் காணாவாறு ஒளித்துக் கொண்டாளாகலான்; எ - று.

ஒளித்தாளாகலான், வளரவேண்டும் என வினைமுடிவு செய்க. ஒளித்தாள் என்புழி ஆகாரம் செய்யுளாகலின் ஓவாயிற்று. பறிக்கும், உகளும், குறூஉம் என வரும் செய்யுமென் விளையிடத்து உம் உந்தாயிற்று. மடல் பூ, பூக்களையுடைய மரம் மடலையெனப்பட்டது நெட்டேறு, நெடு வேறு என வந்தது. ததைதல், நெருங்குதல்; செறிதலுமாம். "வீததை கானல்" (குறுந். 304) என்றாற்போல, மேய்ந்த நிரைகள் மரநீழலிற் றங்கி யசையிடாநிற்ப, கோவலர் வறிதிராது முல்லைப் பூக்களைப் பறித்துக் கண்ணி தொடத்து அணிந்து மகிழ்வது இயல்பு. குறுமுயல் நிலத்தில், வாளை நீர்ப்பரப்பிலும் உகளுமென வறிக. கடலாடிய உவர் நீங்கக் கயம் படிவது நெய்தல் நிலத்து நிகழ்ச்சி. நாடோறும் பெண்மை நலஞ் சிறந்து வருதலால், தன்னலம் விரும்பி வரும் வேந்தராற் போருண்டாதலை விரும்பினான் போன்றாள் என்பார், "ஆரம ருழப்பது அமரிய ளாகி" யென்றார். யானையின் செவிக்கு முறம் உவமை; "முறஞ்செவி யானையுந ் தேருமாவும்" (மணி. 19:121) என்பது காணக். வேந்தரது மறங்கெழு நெஞ்சைக் கொண்டொளியாளாயின், அவர் மகட்கொடை வேண்டிப் போர்குறித் தெழாரென்பது கருத்து. வளர்ச்சி முற்றியவழி வேந்தர் வருதலும் அதுவே யேதுவாகப் போருண்டாதலும் ஒருதலையாகலின், முற்றாத இளையளாகவே யிருத்தல் வேண்டுமென்பார், "வளர வேண்டுமவளே யென்றும்" என்றார்.

விளக்கம்: "செறுவிற்றதைந்த...கலத்தின்" என இடம்விட்டே ஏட்டிலும் எழுதப்பட்டுளது. புலம்படர்ந்த நெடிய ஏறுகள் புல்லை மேய்ந்து மரநிழலிற் றங்கி அசைவிடாநிற்ப, மேய்க்கும் கோவலர் முல்லைப்பூவைப் பறித்தணிந்து கொள்ளாநிற்ப, குறுமுயல் கரையிட்ட்துத் தாவியோட, நீர்நிலையில் வாளைமீன் உகள, மகளிர் கடலாடிக் கழிகளிற் பூத்தபூக்களைப் பறித்துத் தழை தொடுத்தணிய இன்பபே நிலவும் ஊர் எனக் கொள்க. கலத்தின் வளரவேண்டும் என்றவிடத்து உவமப்பொருளை விளக்கும் தொடர்கள் விடுபட்டமையின், வளரவேண்டும் என்றதன் கருத்து விளங்கவில்லை. வரைய வேண்டும் என்று பாடமாயின். மகட்கொடையிரந்து பெற்று வேந்தர் தாம் மணக்கக் கருதும் கருத்தைக் கைவிடவேண்டும் என்றாதல், உற்றார்க்குத் தந்தை வரைவுடன்படுதல் வேண்டுமென்றாதல் உரைக்க தந்தை தன்னையர் செயலால் வேந்தர் சேட்படுக்கப்பட்ட வழியும், விடாது மகட்கொடையை வேட்டவண்ணமிருத்தல் தோன்ற, "வேந்தர் மறங்கெழு நெஞ்சங்கொண்டு" என்றும், தான் கவர்ந்து கொண்ட திறத்தைப் புலப்படுத்தாது இல்லிடத்தே யொடுங்கினாளாகலின், "ஒளித்தோள்" என்றும் மறங்கெழு நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டொளித்தமையின், அவ்வேந்தர் மகண் மறுத்தவழி மானம்பொறாது மறத்தீக்கிளரப் பொருவது ஒருதலையாதல்பற்றி, அறத்தொடு நின்று பெற்றோரை வரைவுடன் படுப்பதோ கொண்டு தலைக்கழிதற் குடம்படுவதோ செய்யாமையின், அவளை, "ஆரமருழப்பதும் அமரியளாகி" என்றும் கூறினார். அமர்தல், விரும்புதல். அமருழப்பது அவள் பொருட்டாகலின், "அமரியளாகி" என்றார். காதற் காமவயப்பட்டான் ஒருவன், காதலியை, "என்நிறையரு நெங்சங் கொண்டடொளித்தோளே" (ஐங். 191) என்று கூறுதல் காண்க.
-------------

340. அள்ளூர் நன்முல்லையார்

இவர் பெயர் இப் பாட்டின் குறிப்பில் பள்ளியூர் ஆசிரியர், திரு. கிருட்டினசாமி சேனை நாட்டாரது கையெழுத்துப்படியிற் காணப்பட்டது. புறநானூற்று அச்சுப் படிகளுள் இப்பெயர் காணப்படவில்லை. இப்பாட்டின் சிலவடிகள் சிதைந்து விட்டன. மூதின் முல்லைத் துறைப் பாட்டொன்று இவர் பாடியதாக இத் தொகைநூற்கண் உள்ளதனை (புறம். 304) முன்பே கண்டோம். ஒடகப் பூட்கையையுடைய உரவுவேற் காளை யொருவன் வேந்தனொடு பொருதற்குச் செல்பவன் வெற்றி மேம்பட்டு மீள்வனென்ற துணிபால் அவன் மனைவி நடுகல்லைப் பரவுவதும், பரவுங்கால் தான் விருந்துபெற வேண்டும் எனவும் தன் கணவனும் வேந்துனும் வென்றிபெற வேண்டுமெனவும் கருதுவதும் இவரால் தேனொழுகப் பாடப்பெற்றிருப்பது நம் நினைவுக்கு வருகிறது. அப்பாட்டின் சிதைவு எவ்வாறு நம் உள்ளத்தே வருத்தத்தை யெழுப்பிற்றுறா அவ்வாறே இப் பாட்டின் சிதைவும் பெருவருத்தத்தை எழுப்புகிறது. இப்பாட்டின்கண், மாந்தளிர் புரையும் மேனிநலஞ்சிறந்து இளமக ளொருந்தியைக் கண்ட தலைவனொருவன் அவளை மகட்கொடையாற் பெறக்கருதி அருகிருந்த சான்றோரை நோக்கி அவளுடைய பெற்றோர் திருவும் குடிமையும் பிறவும் கேட்கலுற்றானாக, அவற்கு, "இளமைச் செவ்வியும் மாமை நிறமும் உடைய இம் மகள் யார் மகளெனக் கேட்கின்றாய். யான்கூறுவதைக்கேள், இவள் தந்தை இவளைக் கருங்களிறு பெயர்க்கும் கைவேல் மன்னருக்குக் கொடைநேர்தல் வேண்டுமென வரைந்து கொண்டள்ளான்" என்று கூறுவதைப் பாடியுள்ளார்.

    அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக்
    குரலங் குன்றி கொள்ளு மிளையோள்
    மாமகள்.......................
    யார்மகள் கொல்லென வினவுதி கேணீ
    எடுப்பவெடாஅ............         5
    ............மைந்தர் தந்தை
    இரும்பனை யன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.
    --------

திணையும் துறையுமவை. அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

உரை: அணித் தழை நுடங்க ஓடி - இடையில் அணிந்த அழகிய தழை யுடை யசைய ஓடிச் சென்று; மணிப்பொறிக்குரலம் குன்றி கொள்ளும் - செம்மணிபோல நிகமும் பொறியுமுடைய குன்றிமணிக் கொத்துகளைத் தொகுக்கும்; இளையோள் மாமகள் - இளமைச் செவ்வியும் மாமை நிறத்தையும் உடையவள்; ......யார் மகள் கொல் என வினவுதி...... இவள் யாவர் மகள் என வினவுகின்றாய்! நீ கேள் - யான் கூறுவதனை நீ கேட்பாயாக; எடுப்ப எடாஅ ...... - தன் கையில் படையெடுக்க அதனை நேர்ந்து படையெடாத ......; ......மைந்தர் தந்தை - ......மைந்தர்களுக்குத் தந்தையானவன்; இரும்பனை யன்ன பெருங்கை யானை - கரிய பனைபோன்ற பெரிய கையையுடைய யானைகளை; கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் - கரந்தைக் கொடி படர்ந்த வயலின்கண்ணே நின்று பொருது வீழ்த்தும்; பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன் - பெரிய ஆண்டகைமையினையுடைய வேந்தர்கட்கென வரைந்துள்ளான்; எ - று.

குரல், கொத்து, பூவுந்தனிரும் கொண்டு இளமகளிர் தழை தொடுத்துத் தம் இடையில் அணிந்து கொள்வது மரபு. அழகுறத் தொடுத்தமை தோன்ற "அணித்தழை" யென்றார்;" ஆம்புந் தொடலை யணித்தழையல்குல்" (புறம். 341) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. இளைய மகளிரணிவரென்பதை, "இளையமாகத் தழையாயினவே" (புறம். 248) என்பதனா லறிக. மாநிறமுடைய மகளை மாமகள் என்றார். கரந்தைக் கொடிபடர்ந்த வயலிடத்தே தானைகள் தங்கிப் போர்செய்வதியல்பு. "காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை" (பதிற். 40) என ஆசிரியார் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுதல் காண்க.

விளக்கம்: கொத்துக் கொத்தாகக் காய்த்திருக்கும் குன்றிமணிகளைப் பறித்து விளையாடலை விரும்பும் இளமகள் என்றற்கு, "குரலங் குன்றி கொள்ளும் இளையோள்" என்றார். உருவவும் நலனுங் கண்டு, அவன்பால் தன் கருத்தைச் செலுத்திநின்று வினவுதல் தோன்ற, "யார் மகள் கொல்லென வினவுதி" யென்று பெயர்த்தும் ஓதினார். இவள் தந்தை பெரிய வேந்தருள்ளும் யானையை வீ்ழ்த்துவெல்லும் பெருவலியுடைய வேந்தர்க்கே இவளை மணஞ் செய்துதர மன்னர்" என்றார். யானையைப் பெயர்த்தற் பெருவன்மையே வேந்தர்க்கு அழகும் தகுதியுமாம் என்றறிக.
-----------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்