பட்டினப்பாலை
சங்க கால நூல்கள்
Back
paTTinappAlai of kaTiyalUr uruttirang kaNNanAr
(work in pattuppATTu anthologies) (in Tamil Script, unicode format)
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவதான
பட்டினப்பாலை
(work in pattuppATTu anthologies) (in Tamil Script, unicode format)
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவதான
பட்டினப்பாலை
- -----------------------
பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் :: திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை :: பாலை
துறை :: செலவழுங்குதல்
மொத்த அடிகள் :: 301
-----------------------
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி .. .10
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும்
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
அனகர் வியன்முற்றத்துச் ... 20
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லாய்ப் ப·றி ... 30
பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழிற் புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன்
உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
இருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவின் ... 40
திருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந் ... 50
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்
முதுமரத்த முரண்களரி
வரிமணல் அகந்திட்டை ... 60
இருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும்
புனலாம்பற் பூச்சூடியும்
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் ... 70
பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
பறழ்ப்பன்றிப் பல்கோழி
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
கிடுகுநிரைத் தெ·கூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய ... 80
குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர் ... 90
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானல்
மாமலை யணைந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும்
மலியோத் தொலிகூடல்
தீதுநீங்கக் கடலாடியும்
மாசுபோகப் புனல்படிந்தும் ... 100
அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும் ... 110
நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாட லோர்த்தும் நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான்
மாஅகாவிரி மணங்கூட்டும்
தூஉவெக்கர்த் துயில் மடிந்து
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியந்தெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும் ... 120
தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும் ... 130
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை ... 140
ஏழகத் தகரோ டுகளு முன்றிற்
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் ப·றகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்துச்
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குல்
தூசிடைத் துகிர்மேனி
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர் ... 150
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும் ... 160
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப்
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர் ... 170
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும்
மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு ... 180.
பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்
செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும் .... 190
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிதுதுஞ்சிக்
கிளை கலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றில் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் .... 200
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது ...210
பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் ... 220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் ... 230
உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணிப் புரவியடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளைய டுழிஞை சூடிப்
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை எடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி ... 240
மாவிதழ்க் குவளையடு நெய்தலும் மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோட் டிரலையடு மான்பிணை உகளவும்
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப் ... 250
பெருநல் யானையடு பிடிபுணர்ந் துறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக்
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும் ... 260
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக்
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்
பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற ... 270
மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லரு வாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் ... 280
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமெனப் பெயர்கொடுத்து
ஒருவேனெப் புறக்கொடாது ... 290
திருநிலைஇய பெருமன் னெயில்
மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும்
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் தோளே. ... 301
--------------------
பட்டினப்பாலை முற்றிற்று
------------------
கருத்துகள்
கருத்துரையிடுக