பொருநராற்றுப்படை விளக்கம் - கி. வா. ஐகந்நாதன்
சங்க கால நூல்கள்
Back பொருநராற்றுப்படை விளக்கம்
கி. வா. ஐகந்நாதன்
-
Source:
பொருநராற்றுப்படை விளக்கம்
கி. வா. ஐகந்நாதன்
அமுத நிலையம் லிமிடெட்
46, ராயப்பேட்டை ஹைரோடு
உரிமை பதிவு, அமுதம்: 288
முதற்பதிப்பு:- ஜூலை, 1985, விலை ரூ. 8.00
அச்சிட்டோர்: சாந்தி பிரிண்டிங் எண்டர்பிரைஸ்
38, ராயப்பேட்டை ஹைரோடு: சென்னை-600044,
-------
முன்னுரை
சங்கநூலாகிய பத்துப்பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைகள் உள்ள. கரிகால் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த, வறுமையை உடைய மற்றொரு பொருநனைப் பார்த்து, ’நீயம் என்னைப் போலக் கரிகால்வளவனை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வரலாம்' என்று வழிப்படுத்தியது. ஆற்றுப்படை என்பதற்கு வழிப்படுத்தல் என்பது பொருள். ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல்காப்பியத்தில் காணலாம்.
பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று பல வகையாக உள்ளவர்கள். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டுபவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போல ஒரு பக்கம் மாத்திரம் அடிப்பனவாக உள்ள ஓர் தாள வாத்தியம். இந்தப் பொருநன் தன்னுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் வழங்குபவரைத் தேடிச் செல்பவன்.
இந்த ஆற்றுப்படையில் யாழின் இயல்பும், விறலியின் சிலையும், எதிர் வருபவன் கூற்றும், தன் நிலை கூறுதலும், கரிகாலன் செய்த உபசாரங்களும், அவன் வழங்கிய கொடையும், அவனுடைய பெருமையும், அவனுடைய செயலும், அவன் வழங்கும் பரிசிலப் பற்றிய செய்தியும், சோழநாட்டு வளமும், காவிரியாற்றின் பெருமையும் உள்ளன. பொருநர் ஆற்றுப்படை உரை நடையையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். இறுதியில் பொரு நர் ஆற்றுப்படை மூலம் இருக்கிறது. அப்பால் அருஞ்சொற் பொருள் அகராதியும் இருக்கிறது.
திருமுருகாற்றுப் படைக்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளேன். அந்த முறையில் பொருநர் ஆற்றுப்படைக்கும் எழுதினேன். பத்துப்பாட்டில் எஞ்சியுள்ள பாட்டுக்களுக்கும் இவ்வாறே விளக்கத்தை எழுத எண்ணியிருக்கிறேன். முருகன் திருவருள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவன் திருவடிகளைப் நினைந்து பிரார்த்திக்கிறேன்.
காந்தமலை,
சென்னை.28. கி.வா. ஜகந்நாதன்
24-7. 85
---------------
பொருநர் ஆற்றுப்படை விளக்கம்
பத்துப் பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநர் ஆற்றுப்படை, கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவர், எதிரே வந்த வறுமையையுடைய வேறொரு பொருநனைப் பார்த்து "நீயும் கரிகால் வளவனை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வருவாய்' என்று வழிப் படுத்தியது. ஆற்றுப்படையின் இலக்கணத்தை, 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருநர்க் கறிவுறீ இச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” என்று தொல்காப்பியம் சொல்கிறது. ”கூத்தர்களும் பாட்டுப் பாடும்பாணரும் பொருநரும் ஆடும் களிரும், வழியினிடையே சந்திக்க அவர்கள் காணும்படி தான் பரிசு பெற்ற அழகிய கோலங் தோன்றி, தான் பெற்ற பெரிய செல்வத்தைப் பெருதவராக எதிர் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களையும் வள்ளலிடம் சென்று பயன் பெறும்படி சொன்ன முறையும்" என்பது பொருள்.
பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டுபவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போன்ற ஓர் இசைக்கருவி; தாளவாத்தியம்.
பொருநர் ஆற்றுப்படையில் வருபவன் தடாரி கொட்டுபவன். அவனுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் தருபவரைத் தேடிச் செல்பவன்.
இந்த ஆற்றுப்படையில் முதலில் யாழின் வருணனையும், பிறகு விறலியின் வருணனையும், பொருநனுடையின் இயல்பையும் கூறுகிறது. பிறகு, ”நானும் வறுமையால் துன்புற்றவன்தான், கரிகால் சோழனிடம் சென்று இந்தப் பரிசுகளையெல்லாம் பெற்றேன்' என்று சொல்கிறான். அப்பால் அவன் சென்ற பொழுது கரிகாற் பெருவளத்தான் அவனே எதிர்கொண்டு அழைத்து, அவனுடைய வறுமைக்குரிய சின்னங்களை யெல்லாம் அறவே நீக்கி, பலவகை உணவுகளைத் தருகிறான், பலநாள் அங்கே தங்கிய பொருநன் ஒருநாள், "எங்கள் ஊருக்குப் போகிறேன்" என்று சொல்ல, வளவன் சற்றே சினந்தவனைப் போலப் பார்த்து, யானை முதலிய பரிசுகளை வழங்குகிறான்.
இந்தப் பகுதிக்குப் பின் கரிகாற் பெருவளவன் சிறப்புக் கூறப்படுகிறது. அவன் கருவில் இருக்கும்போதே அரசுரிமையைப் பெற்றதும், சேர பாண்டியர்களோடு பொருது அழித்ததும், அவனிடம் போனால் இன்னஇன்ன நலம் செய்வான் என்பதும் வருகின்றன.
பிறகு சோழநாட்டில் கால்வகைத் திணைகள் இருப்பதும், ஒரு திணையில் உள்ளவர் வேறு திணைக்குச் சென்று அங்குள்ள இன்பங்களை நுகர்வதும் வருகின்றன. இறுதியில் காவிரியின் பெருமையைக் கூறுகிறான் பொருநன்.
இவற்றை இனி முறையே பார்ப்போம்.
யாழின் இயல்பு
முதலில் எதிர்வரும் பொருநனைப் பரிசு பெற்று வரும் பொருநன் விளிக்கிறான். பெரிய ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் சென்று தன் வாத்தியத்தை வாசித்து உணவும் பரிசும் பெற்றவன் எதிர் வருபவன். ”என்றும் அறாத புது வருவாயையும் அகன்ற இடத்தையும் உடைய பெரிய ஊர்களில் திருவிழா நடை பெற, அங்கே சென்று வாத்தியம் வாசித்துவிட்டு, வயிறு நிரம்ப உண்டு, விழா நடந்து முடிந்து மறுநாள் உணவே வேண்டாமல் வேறு இடங்களுக்குப் போவோம் என்று எண்ணியவனே, தடாரி வாசிக்கும் முறைகளை யெல்லாம் அறிந்த பொருநனே" என்று அவனை விளிக்கிறான்.
-
'அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாள் சோறு நசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகு அறி பொருந!"
யாணர் - புது வருவாய்; செலவிடச் செலவிட மேலும் மேலும் வரும் வளம். யாணர் - அழகுமாம். தலை - இடம். பேரூர் ஆதலின் பல வகையான், விரிவான இடங்களை ஆயிற்று. விழாவுக்குப் பல ஊர்களினின்றும் வரும் பெருந்தொகையினராகிய மக்களுக்கும் இடங் கொடுக்கும் விரிவைச் சொல்லியபடி. சாறு – விழா, வழிகாள் – மறுநாள்; நசை – விருப்பம்; புலம்- ஊர். முன்னிய- செல்ல விரும்பிய; வேறிடத்தில் வேறு வகையான இன்பங்களைத் துய்க்கலாமென்று அங்கே செல்ல எண்ணினான். விரகு - உபாயம்; தடாரிப்பறையும் - வாசிக்கும் பலவகை முறைகள்.
இனி யாழின் வருணனை வருகிறது. அதே யாழை ஓர் உறைக்குள் வைத்திருக்கிறார்கள். அதன் குடம் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளமாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மான்குளம்பினல் அழுத்திய இடம் எப்படி இடையில் மேடும் இரு பக்கமும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.
-
குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்.
யாழை மூடிய உறை சிவப்பாக இருக்கிறது. விளக்கினுடைய எரிகின்ற நிறத்தைப் போன்றது அது. அதை இறுக்கித் தோற் போர்வையினல் மூடியிருக்கிறர்கள்.
-
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
யாழின் மேற் போர்வையைத் தைத்துப் போட்டிருக்கிறார்கள். இன்னும் நன்றாகத் தெரியாத இளஞ்சூலையுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லியதாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது.
-
எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை,
[எய்யா - அறிய முடியாத, செய்யோள் – சிவந்த நிறம் உடையவள். சிவந்த மேனியில் மயிரின் ஒழுங்கு மெல்லிதாக இருந்தாலும் நன்றாகத் தெரிகிறது. ஐது - மெல்லிது. ஒழுகிய –நீண்ட. பொல்லம் பொத்திய – தைத்த; பொதி உறு - பொதிந்து வைத்த.]
குடத்தைத் தைப்பதற்கு ஆணிகளை முடுக்கியிருக்கிரார்கள். அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல இருக்கின்றன.
-
அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி.
வீணையில் தலைப்புறம் வளைந்திருக்கிறது. அதன் முடிவில் மேல்நாக்கு இல்லாமல் அமைந்த வறிய வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அந்த வாய் எட்டு நாள் ஆன பிறையைப் போல இருக்கிறது.
-
எண்ணாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்ணா இல்ல அமைவரு வறுவாய்.
யாழினுடைய தண்டு பாம்பு தலையெடுத்தாற் போல ஓங்கின தண்டை - கரிய தண்டை உடையதாக உள்ளது.
-
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்.
யாழில் வாரைக் கட்டியிருக்கிறார்கள். அது கரிய நிறத்தை உடைய பெண்ணின் முன் கையில் - அழகினே யுடைய முன் கையில் - அணிந்த இரு கைகளிலும் ஒத் தணிந்த வளைகளைப் போல உள்ளன.
-
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்.
நரம்புகளே ஒன்றொடொன்று நெருக்கமாக அமையும்படி திண்ணிய கட்டுதலையுடைய வார்க்கட்டை உடையதாக இருக்கிறது.
-
கண்கூடு இருக்கைத் திணிபிணித் திவவின்.
கண் கூடு-இடம் கூடிய; பிணி – கட்டு; திவவு – நரம்புக்கட்டு.]
விரலால் சுண்டி அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அது; அது அதிசய அழகினையுடைய தினயைக் குத்தின் அரிசிபோல இருக்கிறது. குற்றம் சிறிதும் இல்லாத நரம்புகள் அவை.
-
ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரள்உளர் நரம்பின்,
ஆய்தினை - அழகிய தினை. அவையல் - குத்தல் அரிசி, வேய்வை போகிய - குற்றம் நீங்கிய; உளர் - சுண்டி இழுக்கும்.]
அந்த நரம்புத் தொடர்ச்சி இசை முற்றுப் பெற்ற நீண்ட கட்டுதலையுடையது.
-
கேளவி போகிய நீள்விசித் தொடையல்.
திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்தாற் போன்ற மாதங்கி என்னும் தெய்வம் தன்னிடத்திலே பொருந்தி நின்ற அமைதியை உடைய அழகையுடையதுமாக உள்ளது அது.
-
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி.
மணம் – திருமணம்; மண்ணிஅன்ன -அலங்காரம் செய்தாற் போன்ற; அமைவரு - யாழிற்குரிய இலக்கணங்கள் யாவும் அமைந்திருக்கிற; காட்சி - காண்பதற்கினிய அழகு.]
அந்த யாழ் பாலையாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆறலை கள்வராகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள படைகள் தாமே நழுவிவிடும். அருளுக்கு மாறாகிய கொடுமையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும். அத்தகைய மருவுதல் இனிய யாழ் அது.
-
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதல் பெயர்க்கும் மருஇன் பாலை.
ஆறலை கள்வர் - வழிப் போவார்களை மறித்து அவர்களைத் துன்புறுத்தி அவர்களிடம் உள்ள பொருள்களைப் பறித்துக் கொள்ளும் திருடர். படை விட - தம் கையில் வழிப் போவாரை அடிப்பதற்காக வைத்திருக்கிற ஆயுதங்களைக் கை கழுவ விட, அருளின் மாறுதலை - அருளுக்கு எதிராகிய கொடுமை. பெயர்க்கும் - நீக்கும். மரு இன் பாலை - ஏந்துவதற்கு இனிய பாலையாழ்.]
அந்தப் பாலையாழை வழிச்செல்பவர்களோடு செல்லும் விறலி வாசிக்கிறாள். நரம்புகளைக் கூடத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும் பாடுகிறர்கள்.
-
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்.
வார்தல் - நரம்புகளைச் சேர்த்துத் தழுவி வாசித்தல். வடித்தல் . உருவுதல்; நரம்பைச் சுண்டுதல் எனலும் ஆம். உந்துதல் - சுண்டுதல். உறழ்தல் - ஒன்றைவிட்டு ஒன்றைச் சுண்டுதல்.]
அப்படி யாழை வாசிக்கும்போது விறலி பாடுகிறாள். சிறப்புப் பொருந்தியதும் தெய்வங்களைப் பாடும் தேவபாணியையும் அதற்குரிய இலக்கணங்களுடன் விரிவாகப் பாடுகிறாள்.
-
சீருடை நன்மொழி நீரொடு சிதறி.
சீருடை நன்மொழி என்பது தெய்வங்களைப் பாடும் தேவபாணி என்ற வகைப் பாடலைக் குறித்தது. தேவ பாணி சிறு தேவபாணி, பெருந்தேவபாணி என்று இரு வகைப்படும். இத்தகைய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே, என்ற நினைவினால் அவர்கள் தெய்வங் களைப் பாடுகிறார்கள். ஆறலைகள்வர்களோ அந்தப் பாடல் களின் பொருளை அறியாதவர்களாதலின் இசையைக் கேட்ட அளவில் மயங்கிப் போகிறார்கள். நீர் - நீர்மை; அதற்குரிய இயல்பு. சிதறி என்றார் அச்சத்துடன் பாடுவதனால் விட்டுவிட்டுப் பாடினர் என்பதைக் குறிக்க.
-
விறலியின் நிலை
அந்த விறலியின் கூந்தல் கருமணலைப் போலக் கருமையாக இருக்கிறது, அவள் அழகிய நெற்றியோ பிறை போலத் தோற்றம் அளிக்கிறது.
-
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதல்.
அவளுடைய புருவம், கொலை செய்வதற்காக வளைந்திருக்கும் வில்லைப் போல உள்ளது. அவளுடைய கண்கள் வளமான கடைசியையுடைய குளிர்ச்சியைப் பெற்றனவாக இருக்கின்றன.
-
கொலைவிற் புருவத்துக் கொழுங்க்டை மழைக்கண்.
கொலை செய்வதற்காக வில்லை வளைப்பார்கள். அந்த வளைந்த தோற்றத்தை உடையதாக இருக்கிறது புருவம். கடைக் கண்ணால் பார்த்தல் மகளிர்க்கு அழகாதலால் கொழுங்கடைக்கண் என்றார். மற்றச் சமயங்களில் குளிர்ச்சியான பார்வையை உடையதாதலின் ’மழைக்கண்’ ஆயிற்று. மழை - குளிர்ச்சி; ஆகுபெயர்)
அவளுடைய வாய் இலவம் பூவின் இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்து வரும் சொல் இனிமையாக இருக்கிறது.
-
இலவு இதழ் புரையும் இன்மொழித் துவர் வாய்.
அவள் பற்கள் வெள்ளை வெளேரென்று உள்ளன. முத்துக்களை வரிசையாக வைத்தது போன்ற காட்சியை அளிக்கின்றன. அந்தப் பற்கள் சிறிதும் குற்றம் இல்லாமல் உள்ளன.
-
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்.
பலஉறு. முத்தின் - பலவாக வரிசையாக அமைக்கப் பெற்ற முத்தைப் போல. பழி - குற்றம்.]
அவளுடைய காதுகளில் பொலிவுபெற்ற குழைகளை அணிக்திருக்கிறாள். மயிரை நறுக்குகின்ற கத்திரியின் பெருமையையுடைய அடிப்பக்கத்தைப் போல அவை உள்ளன. அந்தக் காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன. அந்த அணிகலத்தைக்கூடப் பாரமாக அணிந்திருக்கிறாள் அவள். அவ்வளவு மென்மையுடையவள் அவள்.
-
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசற் பெர்றைசால் காதின்.
குறைத்தல் - கத்தரித்தல். கத்தரிக் கோலில் விரல்களை விட்டு உபயோகிக்கும் துவாரங்களையே ’மாண் கடை அன்ன’ என்றார், அந்தத் துவாரம் இல்லாவிட்டால் விரலை வைத்துக் கத்திரிக்க முடியாமையால் அது ’மாண் கடை’ ஆயிற்று. பூங்குழை -பொலிவு பெற்ற காதணி; பூ வேலை செய்யப் பெற்ற காதணி எனலும் ஆம், அது ஊசலாடுவது போல அசைந்து தோன்றுகிறது. பழங்காலத்தில் பெண் காதுத் துவாரம் நீண்டிருக்கும். அதில் அணிந்த குழை ஊசலாடுவது போலத் தோன்றும், பொறை - பாரம்; அந்தக் குழையே அவளுக்குப் பாரமாக உள்ளதென்று அவள் மென்மையைச் சுட்டியபடி.
அவள் நாணமுடையவள். பெண்களுக்கு எல்லாக் குணங்களிலும் சிறந்தது நாண், 'உயிரினும் சிறந்தன்று நானே' என்று பாடுவர் புலவர். அந்த நாண் தம்மை நிமிர்ந்து பார்க்கச் செய்யாமல் தடுக்கிறதாதலின் அவள் தன் பிடரியைக் கீழே சாய்த்திருக்கிறாள். அந்தப் பிடரி அழகாக இருக்கிறது.
-
நாண் அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின்.
அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கிலப் போல இருக்கின்றன. அவளுடைய முன்கை மெல்லிய, மயிர்களை உடையதாகக் காட்சி அளிக்கிறது.
-
ஆடுஅமைப் பணத்தோள் அரிமயிர் முன்கை.
ஆடு - அசையும். அமை - மூங்கில். பணை - பருத்தல், அரிமயிர்- மெல்லிதாகிய மயிர். மயிர் அடர்த்தியாக இருத்தல் அழகன்றாதலின் ’அரிமயிர்' என்றார்.]
அவளுடைய விரல்கள் மென்மையானவை. உயர்ந்த மலையின் மேலே வளர்ந்திருக்கும் காந்தளைப் போன்றவை.
-
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்.
நெடுவரை - உயர்ந்தமலை, காந்தள் என்பதைக் கார்த்திகைப்பூ என்று சொல்வார்கள். விளக்குப் போலத் தோன்றுதலின் அவ்வாறு உரைப்பர். விறலி செவ்வண்ண மேனியளாதலின் அவள் விரல்கள் சிவப்பாக இருக்கின்றன.
அவள் விரலில் உள்ள நகங்கள் கிளியின் மூக்கைப் போல ஒளி விடுகின்ற பெருமையை உடையன.
-
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர்.
வாய் என்றது மூக்கு, வள் - வளப்பம்; அழகு; உகிர்- கை நகம்.]
அவளுடைய தனங்கள் கண்டார்க்கு வருத்தத்தை உண்டாக்குவது; அழகுத் தேமல் படர்ந்தது. இரண்டு நகில்களும் நெருங்கியிருத்தலின் ஈர்க்கும் இடையாதபடி அமைந்துள்ளன, இளமையும் அழகும் பொருந்தியவை.
-
அணங்கென உருத்த சுணங்கு அணி ஆர்த்து
ஈர்க்குஇடை போகா ஏர் இள வனமுலை.
அணங்கு - வருத்தம்; கண்டார் இதைத் தழுவ இயல வில்லையே என்று வருந்தும் வருத்தம். உருத்த – தோன்றின; சுணங்கு – அழகுத்தேமல்; ஆரம் – மார்பு; வனம் - அழகு.]
அவளுடைய கொப்பூழ் நீரிலே உள்ள சுழியைப் போல் உத்தம இலக்கணங்கள் நிறைந்ததாக இலங்குகிறது.
-
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
அவளுடைய இடை உண்டோ இல்லையோ என்று உணர முடியாமல் தனபாரங்களால் வருந்துகிறதாக உள்ளது.
-
உண்டென உணரா உயவுறு நடுவின்.
அவளுடைய இரகசியத்தானம் பல வண்டினங்களின் இருப்பைப் போல இருக்கிறது. பல மணி கோத்த வடங்களை மேலே அணிந்திருக்கிறாள்.
-
வண்டிருப்பு அன்ன பல காழ் அலகு.
காழ் - மணி, இங்கே வடத்துக் காயிற்று, ஆகுபெயர்.]
அவளுடைய துடைகள் செறிந்தும் திரண்டும் உள்ளன. பெரிய பெண் யானையின் விசாலமான கையைப் போல அவை உள்ளன.
-
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்.
இரும்பிடி - பெரிய பெண் யானை, குறங்கு – துடை]
அவளுடைய அடி சிறியதாக இருக்கிறது. கணைக் காலுக்குரிய இலக்கணங்கள் என்று சொல்வனவெல்லாம் பொருந்தி, ஒழுங்கான மயிரையும், ஏனை இலக்கணங்களையும் திருத்தமாகப்பெற்ற காலையுடையவள். அவளுடைய காலுக்கு ஏற்ற வகையில் பொருத்தமாகவும் பெருமை உடையதாகவும் இருக்கிறது அவளுடைய பாதம்.
-
பொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாட்கு ஒப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி.
ஒழுகிய - தொடர்ந்து வளர்ந்த. திருந்து - திருத்த முடையதாகிய, வருந்துநாய் - ஓடி இளைத்த நாய். அது நாவைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருக்கும். அதைப் போன்ற மென்மையும் செம்மையும் உடைய அடி ]
அரக்கை உருக்கி வைத்தாற் போல செம்மையும், வெம்மையும் உடைய நிலத்தில் கடந்ததனாலே சுக்கான் கல்லாகிய பகையாலே வருந்திய வருத்தத்தோடு பொருந்தி யிருக்கிறாள்.
-
பரற்பகை உழந்த நோயொடு சிவனி.
அப்படி நடந்தமையால் அவள் காலில் கொப்புளங்கள் உண்டாகியிருக்கின்றன. அந்தக் கொப்புளங்கள் மரல் என்ற மரத்தில் பழுத்த பழம்போல இருக்கின்றன. அந்தக் கொப்புளங்களிலிருந்து நீர் துளும்புகிறது.
-
மரல் பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள்.
நன்றாகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவிலே தவிர்வதனாலே.
-
நண்பகல் அந்தி நடைஇடை விலங்கலின்
அப்படித் தங்கும் பொழுது வெம்மையை மறப்பதற்காக அவள் பாடுகிறாள். பெண் மயிலின் உருவத்தைப் போல உருவமும் பெருமையும் தகுதியையும் உடைய அந்த விறலி பாடின தாளத்தோடு கூடிய பாட்டுக்கு ஏற்ப அவர்கள் அங்கே தங்கி இளைப்பாறுகிறார்கள். அந்த இடம் ஆண் யானைகள் நடமாடும் வழிகளையுடைய காடு, அங்கே அவர்கள் தங்குகிறார்கள்.
-
பெடைமயில் உருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும்
களிறு வழங்கு அதர்க் கானத்து அங்கி.
பெடைமயில் - பெண் மயில்; பாடினி – விறலி; பாணி - தாளத்தோடுபாடும் பாட்டு. வெம்மை தாங்காமல் தெய்வத்தைத் துதிக்கும் தேவபாணியைப் பாடினார்கள் என்றும் கொள்ளலாம். வழங்க - உலாவும். அதர்- வழி. அங்கி – தங்கி ]
அவர்கள் தங்கிய இடம் பாலை நிலமாதலின் அங்கே உள்ள மரா மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக நிற்கின்றன. அதன் கீழே வெயிலினால் உண்டாகிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
-
இலைஇல் மராதத எவ்வம் தாங்கி.
மரா - மராமரம். எவ்வம் - துன்பம். தங்குவதற்குரிய வேறிடம் இன்மையில் அந்த மராமரத்தின் கீழ்த் தங்குகிறார்கள்.]
அந்த மராமரத்தின் நிழல் அடர்ந்து இல்லாமல் வலையை மேலே கட்டினால் ஒத்த இடையிட்ட நிழலாக இருக்கிறது. இடையிடையே கதிரவன் கிரணங்கள் வந்து வெப்பத்தைத் தருகின்றன.
-
வலைவலந் தன்ன மெல்நிழல் மருங்கில்
அங்கே தங்கினவர்கள் காட்டிலே உறையும் கடவுளைப் பாடித் தம் கடமையை முடிக்கிறார்கள்.
-
காடுறை கடவுட்சுடன் கழிப்பிய பின்றை.
எதிர்வருவோன் கூற்று
பெருமைமிக்க செல்வத்தையும் பெரும்புகழையும் வலிமையான முயற்சிகளையும் உடையவர்களும் வெற்றி முரசுகள் முழங்கும் சேனைகளை உடையவர்களும் ஆகிய சேர சோழ பாண்டியர் என்ற மூன்று மன்னர்களும் ஒருங்கே தங்கியிருந்த தோற்றத்தைப் போல, வாயினால் பாடும் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களை உடைத்தாகிய கூத்தர்க்குத் தலைவனே!
-
பீடுகெழு திருவிற் பெரும் பெயர் நோன்றாள்
முரசு முழங்கு தானே மூவரும் கூடி.
பீடு-பெருமை, திரு-செல்வம்; பெரும் பெயர் - பெரும் புகழ்; உலகம் அறிந்த பெரிய பெயர் என்றாலும் ஆம். நோன் தாள் - வலிய முயற்சி. தானை - சேனை. மூவரும் சோழ பாண்டியரும்; தொகைக் குறிப்புச் சொல். அம்மூவரும் அரசவையில் வீற்றிருந்த தோற்றத்தைப் போல. வாயினால் இனிதாகப் பாடும் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்திலே உடையதாகிய கூத்தருக்குத் தலைவனே !
-
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ!
அரசவை - இராச சபை, எழால் - பாட்டை எழுப்பும் யாழ். கோடியர் - கூத்தர்.
இவன் போர்க்களம் பாடும் பொருநனாதலாலும் இவனை விடச் சிறந்த கூத்தர் இல்லாமையாலும், ’கோடியதலைவ!’ என்று விளித்தான். ]
மூவரசரை உவமித்ததற்கு அவர்கள் பாடுவது நிருத்த கீத வாச்சியத்தை உடைமையினால்.
பிறர் மனத்திலே கொண்டவற்றை அறிந்து பாடுபவன் இவன்.
-
கொண்டது அறிக
’பொருந, பந்தலையும், பச்சையையும், போர்வையை யும், ஆணியையும், மருப்பையும், திவவையும், நரம்பையும், தொடையலையும், காட்சியையும் உடைய பாலையாழை, வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும், நன்மொழி சிதறி, கூந்தலும் நுதலும் கண்ணும் வாயும் பல்லும் காதும் விருத்தும் தோளும் முன் கையும் விரலும் முலையும் கொப் பூழும் நடுவும் அல்குலும் குறங்கும் அடியும், செக்கிலன் ஒதுங்கலின் நடை இடை விலங்கலின், அல்கித் தாங்கிக் கழிப்பிய பின்றை, பாடல் பற்றிய கோடியர் தலைவ, கொண்டதறிக' என்று கூட்டி வினை முடிவு செய்க.
”எங்கே போவது என்று தெரியாமல் வழிபெயர்ந்து திரிந்து நீங்காமல் நான் வரும் வழியின் எதிரில் பட்டாயே; இது நீ செய்த தவத்தின் பயன்தான்”
-
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப்படுதலும் தோற்றதன் பயனே.
நெறி – வழி, திரிந்து - மாறி. ஒராஅது - நீங்காமல். ஆறு - வழி. நோற்றது - தவம் செய்தது. என்னைக் கண்டது நீ தவம் செய்ததின் பயன் என்பதனால் இனி அவனுக்குக் கிடைக்கப் போகும் கலத்தைக் குறிப்பிடுகிறான் ]
அரசவைகளில் அரசர்களை மேம்படுத்திக் கூறுபவனே, நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக.
-
போற்றிக் கேண்மதி: புகழ்மேம் படுந!
[ போற்றி கவனமாக ஏற்று. கேண்மதி - கேட்பாயாக. புகழ் மேம்படுக - புகழில் மேம்பட்டவனே என்பதும் பொருந்தும்.]
”நீ தளர்ச்சி அடைய வேண்டாம். அடுதலை உடைய பசியாலே வருந்துகின்ற நின்னுடைய கரிய பெரிய சுற்றத் தோடே, நெடுங்காலமாக வந்து உங்களை வருத்தும் பசியானது நீங்க வேண்டினால் ( நான் சொல்லும்படி செய் என்று முடியும்.)
-
ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி ஒராஅல் வேண்டின்.
ஆடு – அடுதல், வருத்துதல். உழந்த - துன்புற்ற, இரும்பேர் ஒக்கல் - கரிய பெரிய சுற்றம், உணவு இன்மையால் உடல் கறுத்தது தனக்கே உணவின்றித் தன் சுற்றத்துக்கு உதவ முடியாமையின் அவர்களை ’இரும்பேர் ஒக்கல்' என்றார், ஒக்கல் - சுற்றம். நெடுங்காலமாகப் போதிய உணவு கிடைக்காமையின், ’நீடுபசி’ என்றார், ஒராஅல் - நீங்குதல்; போதல். ]
”ஏழு சுவரங்களை யுடைய பாடல்களைப் பாடும் உரிமை உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவாயாக, நீ வாழ்வாயாக."
-
எழுமதி வாழிய, ஏழின் நீடின்று கிழவ!
நீடின்று - நீட்டிக்காமல்; தாமதிக்காமல். இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என் நின்றது. எழுமதி - எழுவாயாக; தளர்ச்சியை எண்ணாமல் இனி கலம் கிடைக்கும் என்ற ஊக்கத்தோடு எழுந்து நான் சொல்கிறபடி செய்வாய். ஏழ் - சப்தசுவரம்; அவற்றையுடைய பாட லுக்கு ஆயிற்று; ஆகுபெயர். ஏழ் என்பது தொகைக் குறிப்புச் சொல். கிழவ - உரிமை உடையவனே, உன்னிடத்தில் அருமையாகப் பாடும் திறம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தித் தக்கவர்களிடம் பரிசு பெறாமல் காலதாமதம் செய்யாமல் உடனே புறப்படுவாயாக என்றபடி. ]
தன் நிலை கூறுதல்
*நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். எங்கே பழுத்தமரம் உள்ளது என்று தேடும் வெளவாலைப் போல இருந்தேன்."
-
பழுமரம் உள்ளிய பறவையின் யானும்
”நான் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே என்னைப் போன்ற வறியவர்கள் இருந்தனர். அவர்கள் ஓசை இடைவிடாமல் கேட்டது. இடம் விரிவாக உள்ள மதிலையுடையது அவ்விடம்.”
-
இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின்.
இடைவிடாது ஒலிக்கும் ஒலியை இழுமென் ஓசை என்பர், வீட்டுவிட்டு ஒலிக்கும் ஓசையை அரிக்குரல் என்பர். சும்மை-ஒலி. பல வறியவர்கள் கூடி இருத்தலின் இடைவிடாத ஓசையை உடையதாயிற்று. இடன் - பரந்த இடம். வரைப்பு -சுற்றுச் சுவர். ]
அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம் பொருந்தியது. மிகப் பெரியது. அவனிடம் இரவலாளர் விருப்பத்தோடு வந்தால் வாயில் அவர்களுக்கு அடையாமல் திறந்திருக்கும். அது பல நலங்களையுடைய பெரிய வாயில்.
-
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
நசையுநர் - பரிசு பெற விரும்பி வருகிறவர்கள், தடையா - தடை செய்யாத, நன்மை. அலங்காரங்கள். பலரும் ஒரே சமயத்தில் புகுவதற்குரிய பெரிய வாயில் அது.]
அங்கே நான் போகும்போது யாரிடத்திலும், ”உள்ளே போகலாமா?" கேட்கவில்லை. நேரே புகுந்துவிட்டேன். என் உடம்பு இளைத்திருந்தது. ’இங்கே நலம் பெறலாம்’ என்று எண்ணிய போதே என் இளைப்புத்துன்பம் தீர்ந்து விட்டது.
-
இசையேன் புக்குஎன் இடும்பை தீர
எய்த்த மெய்யேன், எய்யேன் ஆகி.
என் கையில் வைத்திருந்த உடுக்கையை அடித்தேன். படம் விரித்த பாம்பினைப் போல் அடித்து அடித்து என் கையின் வடுப்பட்டுக்கிடந்த அடிக்கும் இடம் அகன்ற தடாரி அது.
-
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக்
கைக்கசடு இருந்த கண்ணகன் றடாரி.
அப்போது நள்ளிருள் போய் விடிந்திருந்தது. விடி வெள்ளி முளைத்திருக்தது. அப்போது இரட்டைத் தாளத்திற்கும் பொருந்த ஒரு பாட்டினை யான் பாடினேன். அப்போது நடந்தது என்ன தெரியுமா?
-
இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்.
இருசீர்ப்பாணி - இரட்டைத் தாளம், வெள்ளி - விடி வெள்ளி. விடியல் - விடியற் காலை.]
ஒரு பாட்டினை யான் விரும்பிப் பாடுவதற்கு முன்னே. (இது நடந்தது.)
-
ஒன்றியான் பெட்டா அளவையின்.
ஒன்றியான்; இகரம், குற்றியலிகரம். அளவையின் காலத்துக்கு முன்னே.]
அப்போது முன்பே என்னோடு பொருந்திய நண்பரைப் போல அவன் வந்தான். என்னுடன் உறவு கொள்ளுதலை விரும்பினான்.
-
கேளிர்போல ஒன்றிய கேள்கொளல் வேண்டி.
கேளிர் - நண்பர்; உறவினருமாம். கேள்கொளல் - நட்புக் கொள்ளுதல். ]
அவன் என்னிடம் அன்பாகப் பேசினான். இவனைப் போன்றவனிடம் என்றுமே இருக்கலாமே என்று நான் விரும்பும்படி உபசார் வார்த்தைகளைக் கூறினான்.
-
வேளாண் வாயில் வேட்பக் கூறி.
வேளாண் வாயில் - உதவி செய்தற்குரிய வழி. வேட்ப - இரத்தலையே யான் என்றும் விரும்பும்படி கூறி - உபசார வார்த்தைகளைச் சொல்லி. ]
என்னை உட்காரச் செய்தான் தன் பார்வையில் படும் படியாக அருகில் என்னை அமரச் செய்தான்.
-
கண்ணில் காண கண்ணுவழி இரீஇ.
நண்ணுவழி அருகான இடத்தில், இரீஇ - இருக்கச் செய்து.]
அவன் பார்த்த பார்வையை என்னவென்று சொல்வேன். என்னைப் பருகுவதுபோலக் கெடாத பார்வையினால் நோக்கினான்.
-
பருகு வன்ன அருகா நோக்கமோடு.
அருகா - தணியாத ]
அவனுடைய பார்வ்ை என்னை உருக்கிவிட்டது. அதனால் என் எலும்பெல்லாம் குளிர்ச்சியை உடையவை ஆயின.
-
உருகுபவைபோல் என்பு குளிர்கொளீஇ.
உருகுபவை - மெழுகு முதலான உருகும் பொருள்கள். கொளிஇ - கொள்ளச் செய்து.]
பிறகு என் இடையில் இருந்த கங்தையை முற்றும் நீக்கினான். அந்தக் கந்தை எப்படி இருந்தது தெரியுமா? ஈரும் பேனும் கூடி அரசாண்டு கொண்டிருந்தன.
-
ஈரும் பேனும் இருந்துஇறை கூடி.
இறைகூடி - அரசைச் செலுத்தி. ]
அதை நீக்கிய பிறகு எனக்கு வேறு ஆடை அணிவித்தான். என் கந்தை உடை வேர்வையால் நனைந்திருந்தது. வேறு நூலில் அங்கங்கே தைத்திருந்தேன். அப்படித் தைத்த கங்தையை முற்றும் நீக்கினான்.
-
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி.
வேர் - வேர்வை. வேற்றிழை - கிழிந்த இடங்களைத் தைத்த வேறு நூல். அதனால் தைக்கும்போது ஊசி நுழையாமல் கடினமாக இருந்தமையால் ’நுழைந்த’ என்றார், துன்னல் - தைத்தலையுடைய, கிதாஅர் – கந்தை, துவர - முற்றும்.]
எனக்குப் புதிய ஆடையை வழங்கினான். நூலில் நெய்யப்பட்ட ஆடையானாலும் நெருக்கி நெய்தமையால் ஓரிழைக்கும் மற்றோரிழைக்கும் இடையே பார்வை செல்லாது. மிகவும் நுண்மையான பூவேலை செய்த ஆடை அது. பாம்பின் உரியைப் போல மெல்லிதாக இருந்த ஆடையை வழங்கினான்.
-
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி அன்ன, அறுவை நல்கி.
னோக்கு நுழைகல்லா - பார்வை புக முடியாத, பூக் கனிந்து - பூ வேலைகள் நிரம்பி. அரவுரி - பாம்புச் சட்டை; அறுவை - ஆடை, நல்கி - வழங்கி)
அதன் பின் அந்த மாடத்தில் பலவகை அணிகலன்களை அணிந்த வெண்கள் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை போலக் குற்றம் இல்லாத பொன் கலங்களில் நிறைய வார்த்துத் தந்தார்கள். அவர்கள் பலமுறை வார்த்துத் தரத்தர வழிவந்த வருத்தம் போகும்படியாக நிறைய உண்டு, இதுகாறும் இத்தகைய கள்ளைக் குடிக்கவில்லையே என்று நெஞ்சில் இருந்த வருத்தம் போய்விட்டது.
-
மழை என, மருளும் மகிழ்செய் மாடத்து
இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்
போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேர்அஞ்ர் போக்கி.
இவ்வாறு மனநிறைவு பெறும்படி கள்ளை உண்டதனாலே மகிழ்ச்சியுடன் நின்றேன்.
-
செருக் கொடு நின்ற காலை.
பிறகு அவனுடைய செல்வம் நிறைந்த அரண்மனையில் ஓரிடத்தில் தங்கினேன்.
-
மற்று அவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி.
திரு - செல்வம், கிளர் - மேன்மேலும் தழைக்கும். கோயில் - அரண்மனை. ஒரு சிறை - ஒரு பக்கத்தில். அரண்மனை பெரிதாதலின் அங்கே ஒரு பக்கத்தில் தங்கினான்.
தவம் புரிகிறவர்கள் இந்திரிய நிக்கிரகம் செய்து மனத்தை ஒருமைப்படுத்திக் கடவுள் தியானத்தில் ஈடுபட்டால் இந்த உடம்பு இறப்பதற்கு முன்னே தவத்தின் பயனாகிய பேரின்பத்தை இந்த உலகத்திலேயே பெறுவார் கள். அதனைச் சிவன் முக்தி என்பார்கள். நான் பெற்ற இன்பம் அவர்கள் பெற்ற பேரின்பத்தைப் போல இருந்தது.
-
தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான
உடம்பு இடாஅது - உடம்பை நிலவுலகத்தில் விட்டு விடாமலே. அதன் பயம் - அந்தத் தவத்தினற் கிடைக்கும் பயனசிய பேரின்பத்தை; பயம் - பயன். அளவைமான - முறையைப் போல.]
வழிநடத்த வருத்தம் எல்லாம் இப்போது அறவே அகன்று போகும்படி செய்தான். அப்படியும் நடந்து வருந்தினேமோ என்று தோன்றும் அளவுக்கு நான் இன்பத்தை அடைந்தேன்.
-
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி.
அங்கே சுகமாகப் படுத்து உறங்கினேன். பிறகு துயில் எழுந்தேன். கள்ளின் செருக்கால் உண்டான மெய்ந் நடுக்கம் அல்லது வேறு மனக்கவலையின்றி மயங்கி எழுந்தேன்.
-
அனந்தர் நடுக்கம் அல்ல தியாவதும்
மனம் கவர்பு இன்றி மாழாந்து எழுந்து
அனந்தர் - துயின்று எழுந்தவுடன் தோன்றும் மயக்கம். அல்லதியாவதும் என்பதில் அல்லது என்பது யா வந்த மையின் குற்றியலிகரம் ஏற்றது. யாவதம் - சிறிதும். கவல்பு - கவலையடைதல், மாழாந்து - மயங்கி. எழுந்த பின்பும் முன்பு உள்ள கள்ளின் மயக்கம் ஒரளவு இருந்தது. ]
அப்பொழுது நான் எண்ணிப் பார்த்தேன், ’முதல் நாள் நாம் இருந்த நிலை என்ன? இப்போது இருக்கும் நிலை என்ன?’ என்பதை நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது. நான் அவனைக் காண்பதற்கு முன்னாளின் மாலை நேரத்தில் என்னிடத்தில் இருந்த சொல்லிற் கெட்டாத வறுமையையும் அவனைக் கண்ட மறுநாளில் என்னைக் கண்டவர், நேற்று வந்தவன் இவன் அல்லன்' என்று மயங்குவதற்குக் காரணமான நிலை உண்டாயிற்று. கள் உண்டமையால் என்னை இடையறாது வண்டுகள் மொய்த் தன. இவற்றை யெல்லாம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன்.
-
மாலை அன்னதோர் புன்மையும், காலைக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
புன்மை - வறுமை. பல நறுமணங்களும் உடைமையால் ’வண்டு சூழ்நிலை’ என்றான்]
இந்த நிலையில் நாம் இருப்பது கனவோ என்று கலங்கியது நெஞ்சம். பிறகு நனவென்று துணிந்து பெருமிதம் கொண்டது.
-
கனவுஎன மருண்டஎன் இநஞ்சு ஏமாப்பு.
மருண்ட - மயங்கிய, ஏமாப்ப - துணிந்து மகிழ.]
நானும் என்னுடன் வந்தவர்களும் வலிய வறுமையினால் வருத்தம் நிறைந்த மனம் மகிழ்ச்சியடைந்தது.
-
வல் அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப.
அஞர் - துன்பம்; வறுமையால் உண்டான துன்பம், பொத்திய - வருத்தம் பொருந்திய. மகிழ் - மகிழ்ச்சி, முதல் நிலைத் தொழிற் பெயர்.]
அப்போது, அவனுக்குரிய புகழ்களை முற்றக் கற்று என்பின் நின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்டினார்கள்.
-
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட.
’கல்லா இளைஞர்’ என்பதற்கு, ’தத்தம் சிறு தொழிலன்றி வேறு ஒன்றும் கல்லாத இளைஞர்’ என்று வேறு ஒரு பொருளும் கூறுவர் நச்சினார்க்கினியர். கல்லா என்பது செய்யா என்னும் எச்சம்; கற்று என்பது பொருள். முதல் நாள் வந்தவனைப் போல இராமையால், ‘நேற்று வந்தவன் இவன்’ என்று சொல்லிக் காட்டினார்கள். ]
அந்த இளைஞர் கூறியவுடன், ’சற்றுக் காத்திருக் கட்டும்’ என்று சொல்லாமல், ’அவர்களே விரைவில் அழைத்து வாருங்கள்’ என்று வாயிலோர்க்குக் கூறினான். நாங்கள் உள்ளே போனவுடன், 'அருகில் வாருங்கள்’என்று அழைத்தான்.
-
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
கதுமென - விரைவில். கரைந்து - சொல்லி. வம் என - வாருங்கள் என்று, கூஉய் - உரக்க அழைத்து; அன்பு தோன்ற அழைத்ததைக் குறித்தபடி. ]
அவனிடம் சென்றவுடன நாங்கள் முறைப்படி அவனை வணங்கி அவன் அன்பைப் பாராட்டினோம்.
-
அதன்முறை கழிப்பிய பின்றை.
அதன் முறை-அவனைக் கண்டபோது செய்ய வேண்டி முறைகள்; என்றது வணங்குதல், வாழ்த்துதல் என்பவற்றை, கழிப்பிய - செய்து முடித்த பின்றை - பிறகு.]
அவன் செய்த உபசாரங்கள்
அதன் பின் எங்களுக்கு நடந்த உபசாரங்களை என்ன வென்று சொல்வேன்! அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறியாட்டுக் கிடாயின் அழகினையுடை யதும் ஆகிய பெரிய மேல் துடையின் நெகிழ வெந்ததனை விழுங்குங்கள் என்று பல முறையும் வற்புறுத்தனான்.
-
துராஅய் துற்றிய துருவைஅம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு எனத் தண்டி.
துராய் - அறுகம் புல்லால், திரித்த பழுதை; துருவை – செம்மறிக்கிடாய்; புழுக்கு - வேக வைத்த ஊன்; பரா அரை - பழுத்த துடை, வேவை - வெங் த ஊன். பருகு - உண்க. தண்டி - பல முறை வற்புறுத்திச் சொல்லி. இத்தகைய உணவை முன்பு உண்டவர்களாதலின் சற்றே மயங்கும்போது, ’தடையில்லாமல் உண்ணுங்கள்’ என்று பலமுறை சொன்னன். தண்டல் - வற்புறுத்தல்.]
இருப்புக் கோலில் கோத்து சுட்ட கொழுவிய ஊனை வழங்கினான். அது சுட்டமையின் வாயின் இரு புறமும் மாறி மாறி ஒதுக்கி ஆற்றித் தின்றேன்.
-
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஏற்றி.
காழ் - இருப்புக்கோல், கோழ்ஊன் - கொழுப்பான மாமிசம். கொழுங்குறை - வளப்பமான துண்டுகள். ஊழின் ஊழின் - முறை முறை. வெய்து ஒற்றி - வெப்பத்தை மாற்றச் சேர்த்து.]
அவ்வாறு தின்ற தசைகள் தெவிட்டிவிட்டு வேண்டாம் என்று சொன்னபோது இனிய சுவையும் வெவ்வேறாகிய பல வடிவத்தையுடைய பணியாரங்களையும் கொண்டு வந்து தின்னும்படி எங்களை இருத்தினான்.
-
அவை அவை முனிகுவம் எனினே, சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ.
அவை அவை - நாங்கள் தின்ற வெவ்வேறு தசைகள். முனிகுவம் - வெறுத்தோம்; தெவிட்டினதைச் சொல்லியபடி. விரகு - உபாயம்; பலவகை உபாயங்களால் பண்ணப் பட்ட பண்டங்கள்; ஆகுபெயர். இரீஇ - இருக்கச் செய்து. ]
அநத உணவுகளை உண்ட மகிழ்ச்சியாலே, பண்கள் நன்கு அமைந்த சிறிய யாழை ஒளி பொருந்திய நெற்றியை யுடைய விறலியர்கள் மார்ச்சனை அமைந்த முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள். அவ்வாறு மகிழ்ச்சியையுடைய கள்ளை உண்பதிலே பல நாளைப் போக்கினோம்.
-
மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க.
மண் - வலந் தரையில் மிருதங்கத்தில் பூசிய மண், முழவு - மத்தளம், சீறியாழ் - சிறிய யாழ்; சிறு யாழ் என்பன புணர்ச்சியில் சிறியாழ் ஆயின; இகரம், குற்றிய லிகரம். ஒண்ணுதல் அவர்களுடைய மகிழ்ச்சியைப் புலப்படுத்தியது. பாணி - தாளம்; இங்கே தாளத்திற் கேற்ற பாலை. தூங்க - ஆட.]
இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்ளை உண்டு உண்டு பல நாளைப் போக்கினோம்.
-
மகிழ்பதம் பல்நாள் கழிப்பி.
பதம் - உணவு. இங்கே கள். அடிக்கடி கள்ளை உண்டதனால் அதனைச் சொன்னான். கழிப்பி-போக்கி.
இப்படி ஊனையே தின்று கொண்டிருந்த எங்களுக்கு ஒருநாள் சோறாகிய உணவு கிடைத்தது. ’இந்தச் சோற்றையும் உண்ணுங்கள்’ என்று அவன் எங்களை வேண்டிக் கொண்டான்.
-
ஒருநாள் அவிழ்ப்பதம் கொள்கென்று இரப்ப.
அவிழாகிய பதம்; அவிழ் --சோறு; பதம் - உணவு. இரப்ப. நாங்கள் கேளாமலே அவன் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி இரந்து ஊட்டுவாரைப் போலே இரந்தான் என்றபடி. ]
அதன் பின்பு முல்லை மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முரியாத அரிசி விரலென்று தோன்றும்படி நீண்ட, ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும் வழ்ங்கினான்.
-
முரவை போகிய் முகிழ்த்தகை போகிய
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
முரவை போகிய - இடை முரியாத, முரியா - இடை முரியாத, நிமிர்ந்த – நீண்ட. நிரல் அமை புழுக்கல் - ஒன்றோடு ஒன்று சேராமல் வரிசையாய் அமைந்ததும், பழுத்த அரிசியை ஆக்கினதுமாகிய சோற்றை. ’பழுத்து அரிசியை ஆக்கினமை தோன்ற நிரலமை புழுக்கல் என்றார்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுவர்.]
பிறகு பல கொட்டைகளைப் பொரித்து அவற்றோடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் நிரம்பும் படி விழுங்கினோம்.
-
பரல்பரை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை.
பரல் - பலவகை வித்துக்கள். வறை - வறுத்தவை. கருனை - பொரிக்கறி. காடி - கழுத்து. அயின்ற - விழுங்கின. இத்தகைய உணவை உண்டிராதவன் ஆதலின் அவுக் அவுக்கென்று விழுங்கினான். ‘இனிக் காடியைப் புளிங்கறி யாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலை என்றும் உரைப்பர்’ என்று நச்சினார்க்கினியர் உரைப்பார்.
இவ்வாறு உண்ட மகிழ்ச்சியோடு அவனிடத்திலிருந்து போகாமல் இனிதாக இருந்தேன்.
-
பயின்று இனிது இருந்து.
பயின்று - பழகி. ]
இவ்வாறு அவன் வழங்கிய ஊனைத்தின்று எம்முடைய பற்கள் கொல்லை நிலத்திலே உழுத கொழு முனை மழுங்குவது போல, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கிவிட்டன.
-
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி.
கொல்லை -கொல்லை நிலம். கொழு -கலப்பையின் முனை. ஏய்ப்ப - ஒப்ப, எல்லை - பகல்.]
சற்றே இளைப்பாறவும் நேரம் இன்றி உண்டோம். அதனால் அந்த உணவுகள் தெவிட்டிவிட்டன.
-
உயிர்ப்புஇடம் பெருஅது ஊன்முனிந்து.
உயிர்ப்பு - இளைப்பாறுதல்; மூச்சுவிடக் கூட நேரம் இல்லாமல் எனலும் ஆம். ’மூக்கு முட்டச் சாப்பிட்டான்' என்ற வழக்கு இங்கே நினைப்பதற்குரியது. இடம் - நேரம். முனிந்து - இது போதும் என்று மேலும் உண்ணுவதை விரும்பாமல் வெறுத்து.
இப்படி இருப்பது எங்களுக்கு அலுத்துப் போயிற்று. ஆகவே, ஒரு நாள் அவனிடம், ’குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரை வென்று திறை கொள்ளும் வகையெல்லாம் முற்றச் செய்த செல்வா' என்று விளித்துக் கூறத் தொடங்கினோம்.
-
ஒருநாள்
செயிர்த்து எழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ!
செயிர்த்து - கோபித்து எனலும் ஆம், தெவ்வர் - பகைவர். திறைதுறை- அவர்கள் தரும் திறைகளின் வகைகள். போகிய - முற்றப் பெற்ற.]
’நாங்கள் எங்கள் பழைய ஊருக்கு இங்கிருந்து புறப் பட்டுப் போவோம்’ என்று சொன்னோம்.
-
சேறும் எம் தொல்பதிப் பெயர்த்து என.
சேறும் - செல்வோம். ’தொல்பதி என்றார், இதுவும் தமக்குப்பதி என்று தோன்ற’ என்பது நச்சினார்க்கினியர் உரை. ’இதுவும் எம்முடைய ஊராகிவிட்டமையால் இனி வேண்டும் போதெல்லாம் இங்கே வருவோம்" என்ற குறிப்பு இதனால் புலப்பட்டது. பெயர்த்து . மீண்டும் புறப்பட்டு. ]
அப்படிச் சொல்லும்போது அவனுடைய அன்பிலே நெகிழ்ந்து போயிருந்தமையால் அந்த வார்த்தைகளை மெதுவாகச் சொன்னோம்.
மெல்எனக் கிளந்தனம் ஆக.
அது கேட்ட அவன் எம்முடைய கூட்டத்தை விட்டு விட்டு விரைந்து போகிறீர்களோ என்று சொன்னான். அப்படிச் சொல்லும் போது கோபித்தவன் போல இருந்தான். அவனைப் பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது போல இருந்தது.
-
வல்லே
அகறி ரோஎம் ஆயம் விட்டுஎனச்
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு
வல்லே – விரைவில்; அகறிரோ – போகின்றீரா; ஆயம்- கூட்டம். சிரறியவன் போல் - கோபித்தவனேப் போல. செயிர்த்த - எமக்கு வருத்தத்தைச் செய்த, உண்மையில் கோபம் இல்லாதவன் ஆதலின், ’சிரறியவன் போல்’ என்றார். ]
கரிகாலன் வழங்கிய கொடை
பெண் யானைகளோடு சேர்ந்த 'ஆண் யானைகளை, தம் அடிகள் உடுக்கையின் பக்கத்தை’ ஒத்த அசைந்த நடையினை உடைய கன்றுகளுடனே விரும்பினவற்றை ஏற்றுக் கொள்வாயாக என்று சொன்னான்.
-
துடி அடி அன்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென.
துடி - உடுக்கை, அடி - பாதம். தூங்கு நடை - அசையும் நடை. குழவி - யானைக் கன்று. பிடி - பெண் யானை. வேழம் - ஆண் யானை, பெட்டவை - விரும்பிய வற்றை, தமக்கு எவை வேண்டுமோ அவற்றைத் தேர்ந்து ஏற்றுக் கொள்வீர்களாக என்றான்.
பின்னும் ஊர்திகள், ஆடைகள், அணிகலன்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே தந்தான்.
-
தன் அறி அளவையில் தாத்தர.
அவன் கொடுத்த எல்லாவற்றையும் ஏற்றுச் செல்வது என்பது என்னாலே இயலாத காரியம். ஆகவே யானும் எனக்கு வேண்டியவற்றை யானறிந்த அளவிலே வாங்கிக் கொண்டேன்.
-
யானும், என் அறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு
அளவை - அளவு முகந்து கொண்டு என்றர் அள வற்ற பொருளைத் தந்தமையால்.
அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை யெல்லாம் போயிற்று. அந்த நிலையில் கான் பெரு மிதத்தோடு வந்தேன்.
-
இன்மை தீர வந்தனென்.
யானும் அவன் வரைப்பின் வாயிற் கண்ணேபுக்கு என் இடும்பை தீர்தல் காரணமாக எய்யேனாகி விடியற் காலத்தே, ஒன்று யான் பெட்டா அளவையில், கொளல் வேண்டிக் கூறி, இருத்தி, நோக்கத்தாலே குளிர் கொளுத்தி, சிதார் நீக்கித் துவர நல்கி, மகளிர் மகிழை வார்த்துத் தரத் தர உண்டு போக்கி நின்ற காலை, தங்கி, நீக்கி, எழுந்து ஏமாப்பச் சொல்லிக் காட்டக் கூவுகை யினாலே கழிப்பிய பின்றை, தண்டி, ஒற்றி, வேண்டேம் என் கையினாலே, இரீஇ, தூங்கக் கழிப்பி இரப்ப அயின்ற காலத்திலே இருந்து, மழுங்கி முனிந்து சேறும் என, ஒரு நாள் கிளந்தனமாக, அகறிரோ எனச் சொல்லித் தரத்தர யானும் தவம் செய் மாக்கள் அதன் பலம் எய்திய அளவை மான, வேண்டுவ முகந்து கொண்டு, அரசவை இருந்த தோற்றம் போல இன்மை தீர வந்தனென் என்று வினை முடிவு கொள்க.
அவன் பகைவரிடத்தில் சிற்றம் கொள்பவன். முருகனது சிற்றம் போல அது இருக்கும். பகைவர்கள் அஞ்சுவதற்குரிய தலைவன் அவன்.
-
முருகற் சீற்றத்து உருகேழு குருசில்.
சிற்றம் - கோபம். உரு - அஞ்சுதல் . குருசில் - தலைவன். ]
அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே, தன் தந்தை இறந்து போனமையின் அரசுரிமையைப் பெற்றான்.
-
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி.
தாயம் - அரச உரிமை. ’தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயினுடைய வயிற்றிலே இருந்து பிறக்கையினாலே, அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்து என்றார்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுவர். கோச்செங்கட் சோழன் பிறக்கின்ற காலத்தில் பிறவாமல் நல்ல முகூர்த்தம் வரும் அளவும் தாயினுடைய வயிற்றிலே இருந்து பிறந்தான் என்றும், அக்காரணத்தால் அவன் சிவந்த கண்ணை உடையவனானான் என்றும் கூறுவர்.
அவனுடைய பெருமையை அறியாமல் அவனை எதிர்த்துத் தோல்வியுற்றுப் பிறகு அவனுடைய வலிமையை அறிந்து அவன் ஏவின தொழிலைச் செய்தார்கள்.
-
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
எய்யா - அறியாத, தெவ்வர்- பகைவர்.]
அவனுக்கு ஏவல் செய்யாமல், நாம் பணிய மாட்டோம் என்று இருந்த பகைவர் தேசத்தில் உள்ளார். ’இவன் நம்மை என்ன செய்து விடுவானே’ என்று மனக்கவலை பெருக இருந்தார்கள்.
-
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப.
செய்யார் - ஏவல் செய்யாதவர். தேஎம் - காடுகள், தெரு மரல் - மனம் சுழன்று மறுகுதல். கலிப்ப - பெருக.]
மிக்க வெம்மையையுடைய சூரியனாகிய செல்வன் கடலின் மீது பரலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே சென்றாற் போல அவன் தோற்றினான்.
-
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந்தாங்கு
பவ்வம் - கடல், பகற் கதிர்-பகலைச் செய்யும் கிரணங்கள். வெவ்வெஞ் செல்வன் - மிக்க வெம்மையை உடைய கதிரவன்; உலகம் வளம் பெறுவதற்குரிய கதிர்களாகிய் செல்வத்தை உடையவன். விசும்பு - வானம், படர்ந் தாங்கு - சென்றாற் போல.]
அவன் பிறந்து தவழ்வதைக் கற்ற நாள் தொடங்கி, பல வகையாலும் சிறந்திருந்த நல்ல சோழ நாட்டைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு நாள்தோறும் அதன் வளம் பெருகும்படி வளர்த்தான்.
-
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்ததன்
நாடுசெகிற் கொண்டு நாள்தோறும் வளர்ப்ப.
தவழ் - தவழ்தல்; முதனிலைத் தொழிற் பெயர். செகில் - தோள். அரச பாரத்தைத் தோளில் ஏந்தினார் என்று சொல்வது வழக்கு. தன் தோள் வலிமையால் நாட்டைக் காத்த செயலைக் குறித்தபடி, நாள்தோறும் வார்ப்ப - ஒரு நாளுக்கு ஒரு நாள் சிறந்து வளர்ந்து வரும்படி செய்ய.]
யாளியென்னும் நல்ல விலங்கினையுடைய வருத்தம் செய்தலையுடைய குட்டி போலவும் யமனைக் காட்டிலும் மிகுந்த வலிமையினாலே பெருமிதமுற்று விளங்கினான்.
-
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி.
ஆளி - யாளி யென்னும் விலங்கு; மான் – விலங்கு; அணங்கு - துன்பம் செய்தல்; குருளை – குட்டி; மீளி – எமன்; மொய்ம்பு – வலிமை; செருக்கி - கர்வம் கொண்டு; பெருமிதம் பெற்று. ]
யாளியாகிய மிருகம் குட்டியாக இருக்கும் போதே; தன் தாய் முலைப் பாலை உண்ணும் பருவத்திலேயே, விரைவிலே தான் உண்ண விரும்பி வேட்டை ஆடத் தொடங்குகிறது. களிற்றைக் கொன்றுவிடும் வலிமை அதற்கு இயல்பிலே அமைந்திருக்கிறது. அதைப் போலக் கரிகாலன் இருந்தானாம்.
-
முலைக்கோள் விடாஅ மாத்திரை எருரோஎனத்
தலைக்கோள்வேட்டம் களிறு அட் டாங்கு.
முலைக்கோள் - பால் குடிக்கத் தாயின் முலையைப் பற்றுதல். மாத்திரை - மாத்திரத்தில், எருரேல் என - விரைவாக, ஒலிக்குறிப்பு. தலைக்கோள் வேட்டம் - முதல். முதலாக மேற்கொள்ளும் வேட்டையாக, அட்டாங்கு - கொன்றாற்போல. ]
கரிகாலன் செயல்
கரிகாலன் இளம் பருவத்திலேயே சேர பாண்டியரைப் பொருது வென்றான். கரிய பனங்குருத்தில் அலர்த்த வலம் பக்கத்து ஒலையை அடையாளமாக அணிந்தவன் சேரன். கரிய கொம்பினை உடைய வேம்பினுடைய ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையுடைய அழகிய தளிராற் செய்த மாலையை அணிந்தவன் பாண்டியன்.
மற்ற மாலைகளிலெல்லாம் சிறந்தனவாக எண்ணி அவற்றைத் தம்முடைய நிமிர்ந்த பெரிய தலைகளில் மேலாக விளங்கும்படி அணிந்த இரண்டு பெரிய வேந்தர்களாகிய சேரனும் பாண்டியனும் ஒருங்கே எதிர்த்த ஒரு களத்தில் அழியும்படி செய்தவன் கரிகாலன்.
-
இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய.
இரு - கரிய: இது மரத்துக்குஅடை; போந்தை – பனை; தோடு – மடல்; சினை – கிளை; அரம் – ரம்பம்; குழை - தளிர், தெரியல் -மாலை. ஓங்கு – நிமிர்ந்த, மேம்பட - தலையில் அணிந்தமையால் அவை மேம்பட்டன. மிலைந்த - அணிந்த, அவிய - அழிய.]
வெண்ணி என்ற ஊரில் இந்தப் போர் நடைபெற்றது, அவ்விடம் இப்போது கோயிலுண்ணி என வழங்குகிறது. அந்தப் போரில் கரிகாலன் பகைவரைத் தாக்கினான். பயங்கரமான வலிய முயற்சியை உடையவன் அவன்; கண்ணுக்கு அழகு நிரம்பிய ஆத்தி மாலையை அணிந்த கரிகால் வளவன்.
-
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன்.
தாக்கிய - பொருது வென்ற; வெருவரு - அச்சம் உண்டாதற்குக் காரணமான, நோன்தாள் - வலிய முயற்சி. கண்ஆர் - கண்ணுக்கு அழகு நிரம்பிய கண்ணிஅடையாள மாலை; இது தலையிற் சூடுவது. ]
தாயம் எய்திப் பிறந்து மிகுவலி செருக்கித் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தோம் தெருமரல் கவிப்ப, நாடு செகிற் கொண்டு, நாள்தோறும் வளர்த்தல் காரணமாக, குருளை களிறட்டாங்கு, இரு பெரு வேந்தரும் அவியத் தாக்கிய கரிகால் வளவன் என்று கூட்டிப் பொருள் கொள்க.
கரிகாலன் வழங்கும் பரிசில்
அவனிடம் சென்று அவன் திருவடியைக் குறுகி அதனைத் தொழுது அவன் முன்னே நீங்கள் விற்க வேண்டும். அப்போது அவனுடைய பார்வை உங்கள் மேற்படும். சிறிதும் குற்றம் இல்லாத பார்வையால் தன் கன்றுக்குப் பால்தர வேண்டுமென்று கன்றை ஈன்ற பசுவைப் போல, உங்கள் தோற்றத்தைக் கண்டு அதனால் உங்கள் வறுமையை உணர்ந்து கொண்டு, அதைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பான்.
-
தாள்நிழல் மருங்கில் அணுகுபு குறுகித்
தொழுதுமுன் நிற்குவிற் ஆயின், பழுதின்று.
ஈற்றா விருப்பிற் போற்றுபு கோக்கி.
தாள்நிழல் மருங்கில் - திருவடியின் கீழிடத்தில், அவன் உயர்ந்த ஆசனத்தல் அமர்ந்திருப்பானாதலின் இவ்வாறு கூறினார். அணுகுபு -அச்சமில்லாமல் சென்று. குறுகி - நெருங்கி. பழுது - முன் உள்ள வறுமை. இன்று - இன்றி. ஈற்றா - கன்றை ஈன்ற பசு, விருப்பின் - கன்றுக்குப் பால் தரவேண்டும் என்ற விருப்பத்தோடு இருப்பது போல, போற்றுபு - உங்கள் வரவை - மகிழ்த்து. நோக்கி – அன்புடன் பார்த்து. ]
அவனைக் கண்டவுடன் உங்கள் கலைத் திறமையைக் காட்டத் தொடங்குவீர்கள். அவ்வாறு உங்கள் வாத்திய ஒசையைக் கேட்பதற்கு முன்பே அவன் உங்களுக்கு நலம் புரியத் தொடங்குவான். விரைல் பாசியினது வேரைப் போலே அழுக்கோடே குறைந்த தையலையுடைய கந்தைத் துணியைப் போக்கச் செய்து, தூயவாகிய திரள முடிந்த முடிகளை கரையிலே உடைய பட்டாகிய உடைகளைத் தருவான்.
-
நும், கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி.
கையது - கையில் உள்ள வாத்தியத்தின் ஒசையை. ஒய்யென - விரைவில். வேரின் - வேரைப்போல. குறைந்த- குறைவுள்ள. துன்னல் சிதாஅர் - தையலை உடைய கந்தை, கொட்டை - விளிம்பிலே முடிந்த முடிச்சு. நல்கி - வழங்கி.]
அப்பால் அவன் உங்களுக்குப் பகுகுவதற்குக் கள்ளைத் தருவான். குங்குமப் பூவைக் கலந்தமையால் மணம் வீசுகின்ற தெளிந்த கள்ளை பெறுவதற்கரிய பொற்கலத்தில் நீ விரும்பியப்படியே உண்பாயாக என்று வழங்குவான். நீங்கள் கையைக் கவித்துக் கொண்டு உண்ண உண்ண அவன் மேலே மேலே வழங்குவான். அதை ஒவ்வொரு நாளும் பருகுவீர்கள்.
இவ்வாறு உண்ட பிறகு நெருப்பு ஒளிர்ந்தாற் போன்ற, ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்லாத பொற்றாமரைப் பூவை கடை குழன்ற உங்கள் மயிரிலே பொலியச் சூட்டுவான்.
-
எரிஅகந் தன்ன ஏடுஇல் தாமரை
கரிஇரும் பித்தை பொலியச் சூட்டி.
எரி - நெருப்பு. அசைதல் - கொழுந்துவிட்டு எரிதல். ஏடுஇல் தாமரை என்றது பொன்னல் ஆன் தாமரையைச் சூட்டியது. பித்தை - தலை மயிர். பொலிய - அம்மயிர்
விளங்கும்படியாக, அத்தாமாரையைக் கண்டார் அதனை யணிந்த தலை மயிரையும் பார்ப்பார்களாதலின் பொலிய என்றார்.]
உங்களுடன் வரும் விறலிக்கும் அவன் பரிசில் தருவான். நூலில் கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரி மாலையை வெள்ளிதாகிய ஒளியையுடைய பாடினி சூட வழங்குவான்.
-
நூலின் வலவா நுணங்களில் மாலை
வால்ஒளி முத்தமொடு பாடினி அணிய.
நூலால் கட்டாமல் பொன்னரியினலே கட்டப்பெற்ற மையின், ’நூலின் வலவா’ என்றார். வலத்தல் - கட்டுதல். நுணங்கு - நுட்பமான. அரில் - ஒன்றனோடு ஒன்று இணைந்தது. வால் ஒளி - வெள் ஒளி. பாடினி - விறலி. ]
பிறகு பொருநனுக்கு விடை கொடுத்தனுப்புகிறான். அப்போது அவன் செய்ததைச் சொல்கிறான் பொருநன்.
எங்களை ஒரு தேரிலே ஏற்றி அனுப்பினான். அந்தத் தேர் யானைக் கொம்பால் செய்தது. முன்னாலே கையினால் பிடிப்பதற்குத் தாமரை மொட்டைப் போன்ற கொடுஞ்சியை உடையது. உயரமான தேர். அதில் பூட்டிய குதிரைகள் வெள்ளை வெளேரென்று பாலைப் போல இருந்தன. சாதிலிங்கம் ஊட்டின தலை மயிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய இருந்த அத்தகைய குதிரைகள் நான்கை அந்தத் தேரில் பூட்டினான்.
-
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுஉளே துயர்வர ஓரிநுடங்கப்
பால்புரை புரவி கான்குடன் பூட்டி.
-
காலின் ஏழடிப் பின்சென்று.
தேரை ஓட்டுபவர்கள் குதிரைகளை முடுக்கி ஓட்டத் தாற்றுக் கோலை வைத்திருப்-பார்கள். ஆனால் இந்தக் குதிரைகள் இயல்பாகவே வேகமாக ஒடுபவை. அதற்கு மேல் வேகமாக ஒடினால் பொருநன் தாங்கமாட்டான் என்று கருதி, செலுத்துவதற்கு இனிதாகிய அந்தத் தாற்றுக்கோலைக் கொடுக்காமல் நீக்கிவிட்டான்.
-
கோலின் தாறு களைந்து.
தாறு - முடுக்கும் கோல், ’என்றதனால் கடுவிசைக்கு இவர் இருத்தலாற்றார் என்று கருதி இயற்கையிற் சேறல் அமையும் என்றான்' என்று எழுதுவார் நச்சினார்க்கினியர். ]
அவன் தந்த தேரில் இன்னவாறு ஏறுவதென்னு அறியாமல் இருந்த என்னை, இவ்வாறு ஏறுக என்று ஏற்றினான்.
ஏறு என்று ஏற்றி.
மற்ற யாழ்களில் வீறு பெற்ற யாழ்ப்பாணர்களுக்குக் கொடுக்கும் வரிசைகளை யெல்லாம், நினக்குத் தருவான். நீ யாழ் வாசித்தலைக் கேட்டு நன்கு சுவைத்த உணர்த்தவனாதலின் அவ்வாறு செய்வான்.
-
வீறுபெறு பேர்யாழ் முறையுளிக் கழிப்பி.
நீ வாசித்தது எப்படி இருந்தாலும் மிகச் சிறந்த யாழ்ப்பாணர்களுக்கும் வழங்கும் பரிசுகளை யெல்லாம் வழங்குவான் என்றபடி. இது அவனுடைய கொடை மடத்தைக் காட்டியது. வீறு – சிறுப்பு, வீற்றுத் தெய்வமாகிய மாதங்கியும் ஆம். அத் தெய்வம் உறைதலின் அதனை உணர்ந்த அவன் நிரம்பப் பரிசில்களைத் தருவான் என்றும் கொள்ளலாம்.]
அவை மட்டுமல்ல. உங்களுக்கு அவன் பல ஊர்களையுடைய நாடுகளையே வழங்குவான். அந்த ஊர்கள் வளஞ் சிறந்தன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை. அங்கே வாழ்வார்கள் தாம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வதனால் வேறிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பமே அவர்களுக்கு இராது.
-
நீர்வாய்த்
தண்பனை தழீஇ ய் தளரா இருக்கை
நன்பல் ஊர நாட்டொடு.
நீர்வாய் - நீர்வளத்தைப் பெறுதலை உடைய, தண்பணை - வயல்கள் சூழ்ந்த மருத நிலம், தளரா இருக்கை - தம்மிடம் வாழ்வோர் வளம் குறைந்து தளராமல் இருக்கும் இடங்களை உடைய. ஊர – ஊரையுடைய.]
இவற்றோடு உங்களுக்கு யானைகளையும் வழங்குவான். யானை சென்றால் அதன் வரவை அறிவித்தற்குப் பறை அடிப்பார்கள். அதனால் யாவரும் விலகி அதற்கு வழிவிடுவார்கள். அத்தகைய நல்ல பல யானைகளைத் தருவான். அச்சத்தைத் தருகின்ற பறைகளை முழக்குவதற்குக் காரணமாகிய, பருத்த பெரிய வளைவினையுடைய, அஞ்சுதற்குக் காரணமான வேகமும் கோபமும் உடைய யானைகள் அவை.
-
நன்பல், வெரூஉப்பறை நுவலும் பழுஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்.
வெரூஉ - அச்சத்தைத் தரும், நுவலும் . முழங்குவதற்குக் காரணமான, பரூஉ உப் பெருந்தடக்கை - பருமையும் பெருமையும் வளையும் உடைய துதிக்கை, வெருவரு - அச்சம் உண்டாக்கும். செலவு - நடை, அதன் நடையைக் கண்டாலே மக்கள் அஞ்சி ஓடி வழிவிட்டு விலகி விடுவார்கள்.
இவ்வாறு பரிசில்களை அவன் இடைவிடாது தந்து கொண்டே இருப்பான், தன்பால் வரும் பொருநர், பாணர், விறலியர் ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசில்களைத் தருவதில் அவன் கை ஓயமாட்டான்.
-
தரவு இடைத் தங்கல் ஒவிலன்,
தரவு இடை - தருதலாகிய சமயத்தில். ‘தரவிடத்துத் தாழ்த்தல் இலன் என்றுமாம்" என்று கூறுவர் நச்சினார்க்கினியர். ஒவிலன் - இடையீடில்லாதவன்; தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பவன். ]
நீங்கள் பெற்றவை அனைத்தையுப் எடுத்துக் கொண்டு வர இயலாது. ஆதலின் நீங்கள் பெற்றவற்றில் உங்களால் எடுத்துச் செல்ல முடியாதவற்றை உங்களைப் போல வந்த வேறு வேறு பேர்களுக்கு நிரம்பக் கொடுக்க வேண்டி யிருக்கும்.
-
வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி.
வள்ளலைச் சார்ந்தமையால் அவர்களும் வள்ளலைப் போலப் பிறருக்கும் வழங்கும் தன்மையைப் பெறுவார்கள்.
பல நாள் அங்கே தங்கியிருந்தமையால் உங்களுக்கு வீட்டு நினைவு வரும். ’இந்த வளங்களை யெல்லாம் நம் மனைவிக்கும் சுற்றத்தார்க்கும் காட்டிப் பெருமிதம் அடைய வேண்டும்’ என்ற எண்ணம் எழும்.
அதனல் அவனிடத்தினின்றும் புறப்பட்டுச் செல்ல வேண்டும் எனற முடிவுக்கு வருவீர்கள். அவனுடைய பேரருள், நம்மை விட்டாற் போதும் என்று தெவிட்டிப்
போய்விடும் என்றபடி, ஆகவே உங்கள் ஊரை நாடிச் செல்ல முடிவு செய்வீர்கள்.
-
தெற்றனச் செலவுகடைக் கூட்டுதிர் ஆயின்,
தெற்றென் - விரைவில், செலவு - போதல். கடைக் கூட்டுதல் - முடிவு செய்தல். ]
அதனை அவன் உணர்ந்து கொள்வான். பலகால் பழகிய நண்பர்களைப் பிரிவது போன்ற வருத்தம் அவனுக்கு உண்டாகும். அந்தப் பிரிவைப் பொறுக்காமல் அதற்குக் காரணம் இன்னதென்று தெரியாமல் தன்னைத்தானே வெறுத்துக் கொள்வான்.
-
பல புலந்து.
நீங்கள் போவதற்கு அவன் எளிதில் விடை கொடுக்க மாட்டான். செல்வம், யாக்கை, பதவி முதலியவை விலை யில்லாத உலகத்தில் புகழொன்றே நிலை பெறும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பான்.
-
நில்லா உலகத்து நிலைமை தூக்கி.
உங்கள் விருப்பம் இதுவென அறிந்து அது நியாயந்தா னென்று எண்ணி, ’சரி போய் வாருங்கள்’ என்று எளிதில் நும்மை போகும்படி விட மாட்டான்.
-
செல்கென விடுக்குவன் அல்லன்.
செல்க என விடுக்குவன் அல்லன் - போக விடுவானல்லன். ]
தொழுதுமுன் நிற்கு வீராயின், நோக்கி, நல்கி, பாடினி அணியா நிற்கச் சூட்டி, வாக்குபு தரத்தரப் பருகி, தெற்றெனச் செலவு கடைக் கூட்டுதிராயின், அதற்குப் பல புலந்து, தேரிலே குதிரையைப் பூட்டி, ஏற்றி, முறையுளிக் கழிப்பி, விடுக்குவன் அல்லன்; பின்னர் நின்னை நோக்கி உலகத்து நிலைமையைச் சீர்தூக்கி, வரவிடைப் பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி, இங்ஙனம் செல்வாயாக எனக் கூறி, அங்ஙனம் நீ போவதற்கு நாட்டொடு வேழம் தர விடைத் தங்கல் ஒவிலன் என முடிக்க' என முடித்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
சோழ நாட்டு வளம்
இனி, கரிகால் வளவனுடைய ஆட்சியிலுள்ள சோழ நாட்டின் வளத்தைக் கூறப் புகுகிறார் புலவர்.
சோழ நாட்டில் மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலமும், காடும் காட்டைச் சார்ந்த முல்லை நிலமும், வயலும் வயலைச் சார்ந்த மருத நிலமும், கடலும் கடலைச் சார்ந்த நெய்தல் நிலமும் உள்ளன. இயற்கையான பாலை நிலம் இல்லை. ”முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்றபடி கோடைக் காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் பாலை நிலமாகக் காட்சி அளிக்கும். ஆதலால் ‘ நானிலம்’ என்ற வழக்கு உண்டாயிற்று; ’ஐந்நிலம்’ என்று சொல்வதில்லை.
புலவர் கூறும் சோழ நாட்டை இனிப் பார்ப்போம்.
ஒல்லென்ற ஓசையோடு அலைகள் புரளும் கடற்கரை சூழ்ந்த அகன்ற இடத்தை உடையது சோழநாடு. அங்கே மிகுதியாக நெல் விளைகிறது. அவற்றைக் குதிர்களிற் சேமித்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு மா என்னும் அளவைக் கொண்ட இடங்கள்தோறும் நெற்குதிர்கள் இருக்கும். அதனைக் கூடு என்கிறார் புலவர். நெல்லைக் கூட்டி வைப்பதனால் அப்பெயர் வந்தது. அங்கங்கே தாழ்ந்த தென்னை மரங்கள் இருக்கும். தண்ணிய சோலைகள் விளங்கும். அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள்.
-
ஒல் எனத்
திரைபிறழிய இரும்பெளவத்து
கரைசூழ்ந்த அகன் கிடக்கை
மாமாவின் வயின்வயின் நெல்
தாழ்தாழைத் தண்தண்டலைக்
கூடு கெழீஇய குடிவயினால்.
ஒல்என; ஒலிக் குறிப்புச் சொல். திரை - அலை. பிறழிய - புரளுகின்ற, இரும்பெளவம் - பெரிய கடல்; கரிய கடலுமாம், கிடக்கை - ஊர்கள், மண் மருங்கினான் - இவ்வுலகத்து ஒரு பக்கத்தில். மா என்பது ஒரு நில அளவு. தாழை - தென்னை. தண்டலை - சோலை.
கூடு - குதிர் ]
அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுவார்கள். அவற்றைக் கரிய காக்கைகள் விழுங்கும்.
-
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங் காக்கை.
பலி - காக்கைக்கும் இடும் சோறு.]
இவ்வாறு செஞ்சோற்றைப் பல காலும் உண்டமையினால் வேறு உணவை விரும்புகின்றன. மனைகளில் உள்ள நொச்சி மரங்களின் நிழலில் குட்டியை ஈன்ற ஆமைகள் உள்ளன. அதை உண்டு அதனாலும் வெறுப்பை அடைந்த தானால், பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாதுகாத்து வைக்கும்.
-
கவவு முளையின்
மனகொச்சி நிழல் ஆங்கண்
ஈற்றியாமைதன் பார்ப்புஒம்பவும்.
இதில் திணை மயக்கம் வந்தது. மருத நிலத்தில் இருக்கும் காக்கை நெய்தல் நிலத்தில் உள்ள ஆமைக் குட்டியைத் தின்னும் என்றர். தவழ்பவற்றைப் பார்ப்பு என்பது இலக்கணம். (தொல், மரபு. 5.)
மருத நிலத்தில் உள்ள உழவர்களின் சிறு பெண்கள் விளையாடுகிறர்கள். நெய்தல் நிலத்தில் உள்ள மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடுகிறர்கள்.
-
இளையோர் வண்டல் அயரவும்.
இளேயோர் - இழய உழவர் மகளிர். வண்டல் - விளையாடும் இடம், அயர - விளையாட.]
கரிகாலனுடைய நாட்டில் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை. எல்லோரும் சமாதானமாக வாழ்ந்தார்கள். அரசனது அவையிலே ஒன்றாகக் கலந்து சென்று புகுவார்கள். அவர்களிடம் இருந்த மாறுபாடெல்லாம் போயிருக்கும். அவ்வாறு கரிகாலன் ஆட்சி புரிந்தான்.
-
முதியோர்
அவைபுகு பொழுதில்தம் பகைமுரண் செலவும்.
முதியோர் - பகையில் முதியவர்கள். அவை - அரசவை, பகைமுரண் - பகையால் வந்த மன வேறுபாடு.]
கரிகாலன் தம் முன் வழக்கிட்டவர்களின் வழக்கைத் தீர்ப்பதில் வல்லவன். ’தம்முள் மறுதலை ஆயினார் இருவர் தமக்கு முறைமை செயவேண்டி வந்து சில சொன்னால் அச்சொல் முடிவுகண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தான் என்று இகழ்ந்த நரை முதுமக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து முறை வேண்டி வந்த இரு திறத்தாரும் சொல்லிய சொற் கொண்டே ஆராய்ந்து அறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்’ என்று பழமொழி என்னும் நூலின் உரையில் ஒரு செய்தி வருகிறது. இதனால் கரிகால் வளவன் வழக்கிடுவார் இரு திறத்தாரும் ஏற்கும் வகையில் முறை வழங்கினான் என்பது பெறப்படும்.
இனிச் சோழ நாட்டைப் பார்ப்போம்.
அங்கே மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தையும் சிவந்த சுளையை உடைய வாகிய பாலாப் பழத்தையும் தின்று, வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத்திலும் அந்த மயில்கள் தங்கி, தம்முடைய பெடை மயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படியாக அங்கு நின்றும் போகின்றன.
-
முடக் காஞ்சிச் செம்மருதின்
மடக்கண்ண மயில் ஆலப்
பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி.
மடக்கண் - அறியாமையை உடைய கண் என்பதும் ஆம். கண் என்றது தோகையிலுள்ள பல கண்களை. ஆல – ஆட; துணரிய - கொத்தாக உள்ள, மாந்தி - உண்டு. ]
நிலவளம் மிக்கமையால் கரும்புகள் நன்றான வளர்ந்திருக்கின்றன. அவற்றை வெட்டி ஆலையிலிட்டுச் சாறு பிழிவார்கள்.
கரும்பை அறுக்கும் பொழுதும் நெல்லை அரியும் பொழுதும் களத்தில் உள்ள உழவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து கொண்டே தம் செயலைச் செய்கிறார்கள்.
-
அறைக்கரும்பின் அரிநெல்லின்
இனக்களமர் இசைபெருக.
அறை - அறுத்தல், இனம் - கூட்டம். களமர் - ஏர்க்களத்தில் தொழில் செய்யும் உழவர். இசை - ஓசை. ]
நீரற்ற வறண்ட இடத்திலும் அடும்பங்கொடி படர்ந் திருக்கிறது. பகன்றை என்ற கொடி படர்ந்திருக்கிறது. தளிர்கள் நிரம்பிய புன்க மரங்கள் உள்ளன. இவ்வளவு மரங்களையும் கொடிகளையும் உடையதாக உள்ள அந்தச் சோலை தாழ்ந்து இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் நிற்கின்றன. இப்படிப் பலவகை மரங்கள் சூழ்ந்தது அவ்விடம்.
-
வறள் அடும்பின் இவர் பகன்றைத்
தளிர்ப்புன்கின் தாழ்காவின்
நனைஞாழலொடு மரங்குழீஇய
அவண்.
வறள் - வறட்சி. இவர் - படரும். தாழ் - தங்குதலு மாம். நனை - அரும்பு. ஞாழல் ஒரு வகைக் கொன்றை. குழீஇய - கூட்டமாக வளர்ந்த. ]
அந்த இடத்தில் சில காலம் தங்கிச் சலிப்பு ஏற்பட் டால் அங்கிருந்து நீங்கி மாறுகின்றன.
முல்லை நிலத்தில் தளவு என்ற முல்லை படர்ந்திருக்கிறது. அந்தத் தளவையும் பரந்த தோனறியையும், அலர்கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்றாவையும், பொன் போன்ற பூவினையுடைய கொன்றையினையும் நீலமணி போன்ற பூவினையுடைய காயாவினையும் உடைய நல்ல காட்டில் உறை சில காலம் உறைவர். பிறகு அது சலித்துவிட்டால் மருத நிலத்துக்குச் செல்வார்கள். அங்குள்ள காட்சிகளையும் அங்குள்ளார் ஒழுக்கத்தையும் புகழ்வார்கள். பிறகு அங்கும் சலிப்பு ஏற்படும்.
-
அவண்முனையின் அகன்றுமாறி
அவிழ்தளவின் அகன்தோன்றி
நகுமுல்லை உகுதேறுவீப
பொற்கொன்றை மணிக்காயா
நற்புறவின் நடைமுனையின்,
அவண் - அவ்விடத்தில், முனையின் - சலிப்பு ஏற்பட்டால், அவிழ் - இதழ் விரிந்த. தளவு - செம்முல்லை. நகு -ஒளி பெற்ற, உகு - உதிரும். தேறுவீ - தேற்றாம்பூ, மணி - நீலமணி. புறவு – முல்லைநிலம்; நடை - ஒழுக்கம். முனையின் - சலிப்பு ஏற்பட்டால். ]
இனி, சுறாமீன்கள் உலாவுகின்ற விரிந்த கடலில் உள்ள இரு மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்கள் நிரம்பிய புன்னை மரத்தின் கிளையில் தங்கினால், ஓங்கி வீசும் கடல் அலையின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடல்களில் தங்கவும்.
-
சுறவழங்கும் இரும்பெளவத்து
இறவு அருந்திய இனநாரை
பூம்புன்னைச் சினைச்சேப்பின்
ஓங்குதிரை ஒலிவெரீஇத்
தீம்பெண்ணை மடற்சேப்பவும்.
பெளவம் - கடல், இனம் - கூட்டம். சினை - கிளை. சேப்பின் -தங்கினால். வெரீஇ - அஞ்சி. தீம் - இனிமை; நுங்கை நினைந்து சொன்னபடி, சேப்ப - தங்க. ]
குலைகுலையாகக் காய்த்த தென்ன மரங்களின் காய்க் குலைகளையும், வாழையையும், கொழுவிய காந்தளையும், மலர்ந்த சுரபுன்னையையும், துடி ஓசை போன்ற ஓசையை உடைய பேராந்தையினையும் உடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழும் மாதவர் அவ்விடத்தில் சலிப்பு ஏற்பட்டால் குறிஞ்சி நிலத்துக்குச் சென்று அவ்விடத்தைப் புகழ்கிறார்கள்.
-
கோள்தெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தள் மலர்நாகத்துத்
துடிக்குடிஞைப் குடிப்பாக்கத்து.
கோள் - காய். நாகம் - சுரபுன்ன. துடி - உடுக்கை. குடிஞை – பேராந்தை. பாக்கம் - குறிஞ்சி நிலத்து ஊர். ]
குறிஞ்சி நிலத்தில் வண்டுகள் யாழைப் போல முரல்கின்றன. அந்தப் பாட்டுக்கு ஏற்பத் தன் கலாவத்தை விரித்த இளைய மயில்கள் நிலவு போன்ற நிறமுடைய மணல் மேட்டில் பலவாகப் பெயர்ந்து செல்கின்றன.
-
யாழ்வண்டின் கொளைக்குஏற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயர.
கொளை - பாட்டு. கலவம் - தோகை. எக்கர் - மேடு. நிலவுஎக்கர் - மிலவு படர்ந்த மேடு எனலும் ஆம். பல பெயர - பலமாகச் செல்ல. ]
அங்கே தேனையும் கிழங்கையும் கொண்டு போய் விற்கிறார்கள். அவற்றிற்குப் பதிலாக மீன நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிறார்கள்.
-
தேன் நெய்யொடு கிழங்குமாறியோர்
மீன் நெய்யொடு கறவுமறுகவும்.
இனிய கரும்புகளையும் அவலையும் கூறுபடுத்தி விற்கிறார்கள் சிலர். அவர்கள் அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு கள்ளையும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.
-
தீங்கரும்பொ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவும்
குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள் மிகுதியாகப் பாடுவது குறிஞ்சிப்பண். அந்தக் குறிஞ்சியை நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் பாடுகிறார்கள். நெய்தல் நிலத்திற்குரியது. நெய்தல்பூ. அதனுடைய மணமுள்ள கண்ணியை மலைவாழ் குறவர் சூடுகிறார்கள்.
-
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூட.
பரதவர் - நெய்தல் நிலத்தோர். கண்ணி - தலையில் அணியும் மாலை.]
முல்லை நிலமாகிய காட்டில் உள்ளவர்கள் மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணைப் பாடுகிறர்கள், மருத நிலத்தி லுள்ள பாட்டுக்காரர்கள் நீல நிறம் பொருந்திய முல்லை நிலத்துக்குரிய பலவகைப் பாடல்களைப் பாட.
-
கானவர் மருதம் பாட அகவர்
கீல்நிற முல்லைப் பஃறிணை நுவல
காட்டிடமாகிய முல்லை நிலத்திலுள்ள கோழிகள் மருத நிலத்தில் உள்ள நெற்கதிரைத் தின்கின்றன. மருத நிலத்தில் வீடுகளில் உள்ள கோழிகள் மலையில் விளையும் தினையைத் தின்னவும், மலையிடத்தில் வாழும் மந்திகள் நெய்தல் நிலத்துக் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும்.
-
கானக்கோழி கதிர்குத்த
மனக்கோழி தினக்கவர
வரைமந்தி கழிமூழ்கக்
கழிநாரை வரை இறுப்ப.
கழி - நெய்தல் நிலத்துக்கழி. இறுப்ப - தங்க.]
இவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களும் உடைய நாடுகள் சேர்ந்தது சோழ நாடு.
’பரப்ப்பு ஓம்பவும், அயரவும், மயில் ஆல, மடமிஞ்ஞை பல பெயரவும், நாரை சேப்பவும், அகவர் அகன்று மாறிப் பஃறிணை நுவலவும், கானவர் நடை முனையின் மருதம் பாடவும், பாக்கத்துப் பரதவர் குறிஞ்சி பாடவும், கிழங்கு மாறியோர் நறவு மறுகவும், அவல் வகுத்தோர் மது மறுகவும், குறவர் கண்ணி சூடவும், கோழி கதிர் குத்தவும், மனைக்கோழி தினைக்கவரவும், மந்தி மூழ்கவும், நாரை வரை இறுப்பவும், நால்நாடு குழீஇ, மாமாவின் வயின்வயின் நெற்கூடு கெழீஇய நாடு’ என்று முடித்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
இவ்வாறு குளிர்ந்த இடங்களையுடைய குறிஞ்சி முதலிய 'நான்கு கூறாகிய நாடுகள் திரண்ட இடம் சோழ வளநாடு.
-
தண்வைப்பின் கால்காடு குரீஇ.
உலகத்தில் உள்ளவர்கள் கரிகாலனப் புகழ்கிறார்கள். அப்படி இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் அவன். தன்னுடைய குடை ஒன்றுமே எங்கும் பரவ, யாவரும் காவலனுடைய ஆணை ஒன்றையே கூற, பெருமையுடன் ஆட்சி புரிந்த மிக்க அன்பையும், தருமத்தோடு சேர்ந்த ஆட்சித் திறத்தையறிந்த செங்கோலையும் உடைய அந்தக் கரிகால்வளவன் வாழ்வானாக! வெல்லுகின்ற வேற்படையை உடைய மன்னன் அவன்.
-
மண்மருங்கினன் மறுஇன்றி
ஒருகுடையான் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
அறனெடு புணர்ந்த திறன் அறி செங்கோல்
அன்னேன் வாழி! வென்வேற் குரிசில்.
மருங்கு -இடம். மறு -குற்றம். யாவரும் மகிழும்படி அவரவருக்கேற்ற நலங்களைச் செய்தமையால் யாவரும் ஒரே மாதிரியாக அவனைப் புகழ்ந்தார்கள். பெரிது ஆண்ட -வேறு யாரும் ஆளமுடியாத அளவில் பெரிய ஆட்சியைப் புரிந்த. ]
காவிரியின் பெருமை
இனி, சோழநாட்டை வளப்படுத்தும் காவிரியின் பெருமையைக் கூற வருகிறார் புலவர். அரசாட்சி செய்யும் , மன்னர்கள், தம் குடிகளை எவ்வாறு துயரின்றிக் காப்பது
என்று நடுங்கும்படி, பல வகையாகச் சிறப்புப் பெற்ற விளக்கத்தைத் தரும் நல்ல பலகிரணங்களைப் பரப்புகிறது கதிரவன். எங்கும் ஒரே வெப்பம், பசுமைக்கே இடம் இல்லை.
கஞ்சாச் செடிகள் கருகுகின்றன. மரங்களின் கொம்புகள் தீப்பற்றி எரிகின்றன. பெருமையையுடைய மலைகளிலிருந்த வீழும் அருவிகள் எல்லாம் வறண்டு போயின. அன்றியும் கூட்டமாகிய மேகங்கள் கடலிலுள்ள தண்ணீரை முகக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம் இல்லாத பொல்லாத காலத்திலும் காவிரி தன் வளம் குன்றுவதில் .
-
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லைதருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவும் மற்றக்
கருவி வானம் கடல்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்பில் காலையும்.
மன்னர் - பகை மன்னர். பன்மாண் -பலவாக மாட்சிமைப்பட்ட; எல்லை - வெளிச்சம். நன் என்றது மற்றக் காலத்து நிலையைச் சொன்னபடி, நன்பலகதிர், இப்போது தீமையை உண்டாக்கியது. குல்லை - கஞ்சா. கோடு - மரக் கிளைகள். நைப்ப - எளிய, நிழத்த - இல்லையாக, கருவி வானம் - தொகுதியாகிய மேகங்கள். கடல் கோள்-கடலில் நீர் முகத்தலை.
இப்படிப் பெரிய பஞ்சம் உண்டாகி, நற்பண்புகள் யாவும் இல்லாமல் போன காலத்திலும் காவிரி நலம் செய்கிறதாம்.
-
பெருவறன் ஆகிய பண்புஇல காலையும்.
இத்தகைய பஞ்ச காலத்திலும் காவிரியாறு நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் இளைப்பாறத் தள்ளிப் போகிறது.
-
நறையும் ஈரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி.
நறை - ஒருவகை நறுமணக் கொடி. நரந்த - ஒரு வகை நறுமணப் புல். ஆரம் - சந்தனம். பொறை உயிர்த்து - பாரத்தை இறக்கி, அங்கங்கே தள்ளிச் சென்று என்றபடி. ]
புது வெள்ளம் நுரையுடன் வருகிறது. ஆரவாரத்தோடு ஓடுகிறது. குளத்திலும் கோட்டகம் என்ற மடுக்களிலும் புகுகின்றது.
-
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்.
குரைப்புனல் - ஆரவாரத்தையுடைய நீர். வரைப்பு அகம் - குளத்திலும் மடுக்களிலும். ’வரைக்கப்படுதலின் வரைப்பு: ஆகு பெயர்’ என்று எழுதுவார் நச்சினார்க்கினியர்.
ஆற்றில் நீர் வந்தமையால் மகளிர் வேகமாகக் குதித்து மூழ்கி விளையாடுகிறார்கள்.
-
புனல் ஆடும் மகளிர் கதுமெனக் குடைய.
இவ்வாறு வந்த வெள்ளத்தினால் நெல் நன்றாக விளைகிறது. அதை அறுவடை செய்கிறார்கள். நெற்கதிர் முற்றிச் சாய்ந்திருத்தலின் அவற்றை அறுப்பவர்கள் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுக்கிறார்கள்.
-
கூனிக் குயத்தின் வாய்கெல் அரிந்து
நெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி மூட்டைகளில் அடுக்குகிறார்கள். அரிந்த சூட்டை மலை போல அடுக்குகிறர்கள்.
சூடுகோடு ஆகப் பிறக்கி
[ சூட்டை மலையாக அடுக்கி. கோடு - மலை. பிறக்கி- அடுக்கி.]
இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுத்த நெற்கதிர்களைக் கடாவிட்டு அடித்து நெல்லேத் திரட்டிக் குவிக்கிறார்கள்.
-
நாள்தொறும்
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை.
நெல் மூட்டைகளைக் குதிர்களில் சேமித்து வைக்கிறார்கள். நெருங்க அமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும்படி கிடக்கும்படி அடுக்குகிறார்கள்.
-
சுடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்.
தெற்றுமூடை - நெருங்கிய மூட்டை. ]
’கடுந்தெற்று மூடை-கோட்டையுமாம்’ எழுதுவர் நச்சினார்க்கினியர்.
இவ்வாறு விளைந்த மெல்லின் அளவு எப்படி இருக்கிறது?
செந்நெல்லின் விளைவு ஒரு வேலிக்கு ஆயிரக்கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்தக் காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரிகால்வளவன்.
-
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
'பொருந, கோடியர் கொண்டதறிந, புகழ் மேம்படுந, எழின் கிழவ, காடுறை கடவுட் கடன் கழிப்பிய பின்றை, நெறி திரிந்து ஏராஅது, ஆற்றெதிர்ப்படுதலும் நோற்ற தன்பயனே, போற்றிக் கேண்மதி, நின் இரும் பேரொக்கலொடு பசி ஒராஅல் வேண்டின், நீடின்று எழுமதி: யானும் இன்மை தீர வந்தனென்; உருகெழு குருசிலாகிய உருவப் பஃறர் இளையோன் சிறுவன், கரிகால் வளவன், நாடுகிழவோன், குருசில்; அன்னோன் தாள் நிழல் மருங்கிற் குறுகி, மன்னர் நடுங்கத் தோன்றி, வாழி எனத் தொழுது முன் நிற்குவீராயின், நாட்டொடு வேழம் தரவிடைத் தங்கலோ விலன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க’ என்பது நச்சினார்க்கினியர் காட்டும் வினைமுடிவு.
----------
பொருநராற்றுப்படை உரைநடை
இடையறாத செல்வ வருவாயினை உடைய அகன்ற இடத்தை உடைய பெரிய ஊர்களிடத்து, விழாக்கழிந்த பின்னாளில் அங்கே பெறுகின்ற சோற்றை விரும்பாமல், விழாக் கொண்டாடும் வேற்றிடத்தைக் கருதிய உபாயத்தை அறிந்த பொருந, மான்குளம்பு அழுத்திய இடத்தை யொத்த இரண்டு பக்கத்திலும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த குடத்தினையும், விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய விசித்துப் போர்த்த தோல், மிக அறியப்படாத இளைய கருப்பத்தை உடைய சிவந்த நிறத்தை பெற்றவளுடைய அழகினையுடைய வயிற்றின் மெல்லிதாகிய மயிர் ஒழுங்கு படக் கிடந்த தோற்றம் போல, இரண்டு தலையும் கூட்டித் தைத்த மரக்கைத் பொதிதலும் போர்வையினையும், வளையிலே வாழ்கின்ற நண்டின் கண்ணைக் கண்டது போன்ற குடமிரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மன்றதற்குக் காரணமாகிய முடுக்குதலமைந்த ஆணியினையும், உலாவிற்கு எட்டாம் நாளின் சந்திரனின் வடிவை உடையதாய் உள்நாக்கு இல்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும், பாம்பு தலை எடுத்தாலொத்த ஓங்கிய கரிய தண்டினையும், கரிய நிறத்தையுடைய பெண்ணின் முன் கையில் அழகினையுடைய நேர்ந்த வளையை ஒக்கு வார்க்கட்டையும், ஒன்றொடு ஒன்று நெருங்கிய இருப்பை யுடைய திண்பிணிப்பையுடைய நரம்புக் கட்டையும், அழகினையுடைய தினையரிசியிற் குத்தலரிசியை ஒத்த, குற்றம் போகிய விரலால் அசைக்கும் நரம்பினையுடைய இசை முற்றுப் பெற்ற நீட்ட விசித்தலையுடைய தொடர்ச்சியினையும் கல்யாணம் செய்தமை தோற்றுகின்ற மாதரை அலங்கரித்தா-லொத்த அழகினையும் உடைய, யாழிற்குரிய தெய்வம் தன்னிடத்தே, நின்ற இலக்கணம் அமைதல் வரும் அழகையுடைய, வழியை அலைக்கின்ற கள்வர் கையிற் படைக் கலங்களைக் கைவிடும்படி, அருளினது மாறாகிய மறத்தினை அவர்களிடத்தி-னின்றும் பெயர்க்கும் மருவுதல் இனிய பாலையாழை, நரம்புகளைக் கூடத் தழுவியும், உருவியும், தெறித்தும், ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும், சீரை உடைய தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி, ஆற்றறல் போன்ற கூந்தலையும், பிறைபோல அழகினையுடைய நெற்றியினையும், கொலைத் தொழிலையுடைய விற்போலும் புருவத்தினையும், அழகிய கடையினை உடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும், இலவினுடைய இதழை ஒக்கும், இனிய சொல்லையுடைய செம்மையுடைத்தாகிய வாயினையும், பலவும் சேர்ந்த முத்துக்களைப் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும், மயிரை வெட்டுகின்ற கத்தரிக்கோல் போன்ற மாட்சிமைப்பட்ட குழைச்சை யொத்து பொலி வினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்த லமைந்ததுமாகிய காதினையும், நாணம் வருத்தலால் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும், அசைகின்ற மூங்கில் போலும் பெருத்தலையுடைய தோளையும், மெல்லிய மயிரையுடைய முன் கையையும், நெடிய மலையின் உச்சியில் வளர்ந்த காந்தளைப் போன்ற மெல்லிதாகிய் விரலையும், கிளியினது வாயை ஒத்த ஒளிவிடுகின்ற பெருமையை உடைய நகத்தையும், பிறருக்கு வருத்தமெனத் தோன்றின அழகுத் தேமல் அணிந்த மார்பிடத்து ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சியையுடைய இளைய அழகிய முலையையும், நீரில் பெயரும் சுழிபோல உத்தம இலக்கணங்கள் நிறைந்த கொப்பூழையும், உண்டென்று பிறர் உணரப்படாத வருந்தும் இடையினையும், பல வண்டுகளின் இருப்பையொத்த பல மணி கோத்த படங்களையுடைய மேகலையை அணிந்த அல்குலையும், பெரிய பிடியினுடைய பெருமையை உடைய கை போல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடையையும், கணைக்காலுக்கு இலக்கணம் என்பதற்குப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனை இலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த, ஒடி இளைத்த நாயின் நாக்குப் போன்ற சிறிய தாளுக்குப் பொருந்தப் பெருமை தங்கியிருக்கும் அடியையும், சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த செய்ய நிலத்தே நடக்கையினாலே, சுக்கான கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி, மரல் பழுத்தாற் போன்ற துளும்பு நீரையுடைய கொப்புளத்தோடு, நன்றாகிய உச்சிக் காலமாகிய சந்தியிலே நடத்தலை நடுவிலே தவிர்தலாலே, பெடை மயில் அருகு நின்ற மயில் போலும் சாயலினையும். உடைய கல்விப் பெருமை தக்கிருக்கின்ற பாடினி பாடின தாளத்திற்குப் பொருந்த, நாள் தோறும் யானை உலா வரும் வழியை உடைய நாட்டில் தங்கி, இலைஇல்லாத மராமரத்தின், வலையை மேலே கட்டினால் ஒத்த மெல்லிய நிழலில், கொப்புளத்தால் வந்த வருத்தத்தைத் தாங்கி, தடாரியை வாசித்து காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைகளைச் செய்துவிட்ட பின்பு பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய பெயர்களையும் வலியையுடைய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையினையும் உடைய சேர சோழ பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கிச் சேர்ந்து, செல்வக் குறைபாடு இன்றி அரசிருத்தற்குரிய அவையாக இருந்த தோற்றம் போல, மிடற்றுப் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்தே உடைய யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே! பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பாக அறிய வல்லாய்!
வழி அறியாமலே இவ்வழியைத் தப்பி வேறு ஒரு வழியிற் போகாமல் இவ்வழியிலே என்னைக் கண்டதும் நீ முற்பிறப்பிற் செய்த கல்வினைப் பயன்.
புறத்தார் புகழை அரசவைகளில மேம்படுத்த வல்லாய, யான் கூறுகின்றவற்றைக் கேட்பாயாக:
அடுகின்ற பசியினாலே வருந்தின நின்னுடைய கரிய பெரிய சுற்றத்தோடே, தொன்று தொட்டு வந்த பசி நின்னைக் கைவிடுதல் விரும்புவையாயின், நீட்டித்தலின்றி எழுந்திருப்பாயாக! நீ வாழ்வாயாக!
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் நரம்பு ஏழினிடத்தும் உரிமை உடையாய்!
செல்வம் எய்திய யானும், முன்பு பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற பறவையைப் போல, அவனுடைய இழுமென்று எழும் ஓசையினையுடைய, அகலமுடைய மதிலில், நச்சி வந்தார்க்குத் தடை இல்லாத நன்றாகிய பெரிய கோபுர வாயிலில், வாயிலோனுக்குக் கூறாமல் புகுந்து, என்னுடைய மிடி தீர்தல் காரணமாக, முன்பு இளைத்த உடம்பையுடைய யான், அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பின்பு இளைப்புத் தீர்ந்து, படம் விரித்த பாம்பின் பொறியை ஒப்புக் கையின வடுப்பட்டுக் கிடந்த எனது கண் அகன்ற உடுக்கையில் தோற்றுவித்த இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டினை யான் பேணிப் பாடுவதற்கு முன்னே, விடிகின்ற கிரணங்களை உடைய வெள்ளி எழுந்த, செறிந்த இருளை உடைய விடியற் காலத்தே, முன்பே தன்னோடே பொருந்திய நட்டாரைப் போல என்னுடன் உறவு கொள்ளுதலை விரும்பி, தான் உபசரித்தற்கு வழியாகிய இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக் கூறி, தன் கண்ணிலே காணும்படி தனக்கு அண்ணிதான இடத்திலே என்னை இருத்த, தன்னைக் கண்ணாற் பருகும் தன்மையை ஒத்த கெடாத பார்வையாலே என்பை உருகும் மெழுகு முதலியன போல் நேகிழும்படி குளிர்ச்சியை உண்டாக்கி, ஈரும் பேனும் கூடியிருந்து அரசாண்டு வேர்வையாலே நனைந்து சரகுகள் உள்ளே ஒடுதற்குக் காரணமான தைத்தல் தொழிலையுடைய சீரையை என்னிடத்தினின்றும் போக்கி, கண்ணிற் பார்வை, இஃது இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத நுண்மையையுடையனவாய்ப் பூத்தொழில் முற்றுப்பெற்ற தன்மையால் பாம்பினது தோலை ஒத்த துகிலை மிக நல்கி, இழைகளை அணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர், உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை என்னும்படி மாடத்திலே பல்காலும் வார்த்து, ஓட்டமற்ற பொன்னால் செய்த வட்டில் நிறையத் தரத்தர, வழிபோன வருத்தம் போகும்படி நிறைய உண்டு, கள் உண்ணப் பெறுகிலேம் என்று நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி, மகிழ்ச்சியுடனே நான் நின்ற அந்திக் காலத்தே, இங்ஙனம் மிடி தீர்ந்த பின்பு அவனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையின் ஒரு பக்கத்தே கிடந்து, மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம் முடைய தவம் செய்த உடம்பைப் போடாதே இருந்து அத் தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப, வழி போன வருத்தத்தை என்னிடத்தில் சிறிதும் நில்லாமல் போக்கி, கள்ளின் செருக்கால் உண்டான மெய்ந் நடுக்கம் அல்லது வேறு மனக்கவலை சிறிதும் இன்றித் துயிலுணர்ந்து, யான் அவனைக் காண்பதற்கு முன்னாளின் மாலைக் காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிற்கு எட்டாத வறுமையையும், அவனைக் கண்ட மற்றை நாட் காலத்தில், என்னைக் கண்டவர் நெருநல் வந்தவன் அல்லன் என்று மருளுதற்குக் காரணமான, வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி, இது கனவாக இருக்குமென்று கலங்கிய என்னுடைய நெஞ்சு கனவு என்று துணிய, வலிய வறுமையால் உண்டாகிய வருத்தம் பொதிந்த கூட்டத்தார் மனம் மகிழ்ச்சி மிக, அவனுக்குரிய புகழ்களைத் தாங்கள் முற்றக்கற்று என்பின் நின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்ட, அது கேட்டு, அவர்களே விரைவில் அழைத்து வாரும் என்று வாயிலோர்க்குக் கூரி, யாங்கள் சென்ற பின், அணுகவாரு மென்று அழைக்கையினாலே, அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள் செய்து முடித்த பின்பு, காலம் அறிந்து, அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதில் பருத்த மேல்துடை நெகிழ வெந்ததனை விழுங்கென்று பல கால் வற்புறுத்தி, இருப்பு நாராசத்தில் கொழுத்த இறைச்சியினைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயில் இடத்திலும் வலத்திலும் சேர்த்தி ஆற்றித் தின்று, புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள், இனி வேண்டேம் என்கை யினாலே, இனிமையுடையனவாய வெவ்வேறாகிய பல வடிவினையுடைய பணியாரங்களைக் கொண்டு வந்து, அவற்றைத் தின்னும்படி எங்களை இருத்தி, பண் குறைவற்ற சிறிய யாழை உடைய ஒண்ணிய நுதலைப் பெற்ற விறல் படப் பாடி ஆடுவார் மார்ச்சனை அமைந்த முடிவினது தாளத்திற்கு ஆடும்படி, மகிழ்ச்சியையுடைய கள் உண்டலிலே பல நாள் போக்கி, ஒருநாள் சோறாகிய உணவையும் கொள்வாயாக என்று வேண்டிக்கொள்கையினாலே, முல்லை மொட்டின் தகைமையினையுடைய, வரியற்ற, இடை முரியாத அரிசி விரல் என்னும்படி, நெடுகின ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும், பாலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம்பும்படி விழுங்கின காலத்தே, அவனை விடாதே இனிதாக இருந்து, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று எம்முடைய பற்கள் கொல்லை நிலத்தில் உழுத கொழுவை ஒப்ப முனை மழுங்கி, இளைப்பாற இடம் பெறாமல் இவ்வுணவுகளை வெறுத்து, ’குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரைத் திறை கொள்ளும் கூறுபாடுகள் எல்லாம் முடியப் போன செல்வா, இனி மீண்டு எம்முடைய பழைய ஊருக்குச் செல்வேமென்று மெல்ல ஒருநாள் சொன்னேமாக, அது கேட்டுக் கோபித்தான் போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே, ’எம் கூட்டத்தை விட்டு விரைந்து போகின்றீரோ?’ எனச் சொல்லி, பிடியொடு புணர்ந்த களிறுகளைத் தம் அடிகள் துடியின் கண்ணை யொத்த அசைந்த நடையினையுடைய கன்றுகளுடனே, "கைக் கொள்வாயாக" என்று சொல்லி, பின்னும் தான் விரும்பியிருந்த ஊர்திகள், ஆடைகள், அணிகலங்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே தர, யானும் என்னுடைய குறைகளை யான் அறிந்த அளவாலே வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு, வறுமை எக்காலமும் இல்லையாகும்படி வந்தேன்.
முருகனது சீற்றம்போலும் கோபத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவனும், தாயுடைய வயிற்றிலே இருந்து அரச உரிமையைப் பெற்றுப் பிறந்தவனும், முன்பு தன் வலிமையை அறியாத பகைவர் பின்பு தன் வலிமையினை அறிந்து ஏவின தொழிலச் செய்ய, ஏவல் செய்யாத பகைவர் தேசம் மனக்கவலை பெருக, வெம்மையை உடைய, எல்லாராலும் விரும்பப்படும் இளஞாயிறு கடலின் மீதே பகற் பொழுகைச் செய்யும் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே மெல்லச் சென்றாற்போலே, தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி கூற்றுவனுடைய வலியைக் காட்டிலும் மிகுகின்ற வலியாலே கலித்து, ஏனையோர் நாட்டிலும் சிறந்த தன் நாட்டைத் தோளிலே வைத்துக் கொணடு நாள்தோறும் வளர்த்தல் காரணமாக ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய குட்டி முலை உண்டலைக் கைவிடாத இளைய பருவத்தில் விரைவில் முற்பட இரையைக் கொள்வதற்குக் காரணமான வேட்டையிலே களிற்றைக் கொன்றாற் போல, கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும், கரிய கொம்பினை உடைய, வேம்பினுடைய ரம்பத்தின் வாய் போலும் விளிம்பினை உடைய அழகிய தளிரால் செய்த மாலையும், நறிய மாலைகளில் மேலா தற்குக் காரணமான பெரிய தலையிலே ஏனையோர் சூடும் அடையாளப் பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சேரனும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி, வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையை உடைய முயற்சியையும் கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடையவனுமாகிய கரிகாற் சோழனுடைய, அருளைத் தன்னிடத்திலே உடைய திருவடிகளை அருகில் நின்று சேர்ந்து வணங்க, நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின், ஈன்ற பசு தன் கன்றுக்குப் பால் சுரந்து கொடுக்க வேண்டும் என்னும் விருப்பம் போல, நும்மிடத்து நிற்கின்ற வறுமை இல்லையாகும் படி பேணிப் பார்த்து, நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே, விரைவில், கொட்டைப்பாசியின் வேர்போலே அழுக்கோடே குறைந்த தையலை உடைய துணிகளைப் போக்கி, தூயனவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலே உடைய பட்டாகிய உடைகளைத் தந்து, பெறுதற்கரிய பொற்கலத்தில் விரும்பினபடியே உண்பாய்ாக என்று சொல்லி, குங்குமப்பூ மணக்கின்ற, தனி கடுமையால் சிறிது அமையும் என்று கைகவித் தற்குக் காரணமான கள் தெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர, நாள்தோறும் நாள்தோறும் பருகி, நெருப்புக் கொழுந்து விட்டாற் போன்ற, ஒருவன் செய்ததன்றித் தனக்கு என இதழ் இல்லாத பொற்றாமரையை, கடை குழன்ற கரிய மயிரிலே பொலிவு பெறச் சூட்டி, நூலால் கட்டாத நுண்ணிமயையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரி மாலையை வெள்ளிதாகிய ஒளியை உடைய முத்தத்தோடே பாடினி சூட, யானைக் கொம்பாற் செய்தி தாமரை மொட்டையுடைய உயர்ந்த தேரிலே, சாதிலிங்கம் ஊட்டின் தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய, பாலை ஒத்த நிறத்தினை உடைய குதிரைகள் நான்கினச் சேரப்பூட்டி, தான் காலாலே ஏழடி பின்னே வந்து, செலுத்துதற்கு இனிதாகிய செலவு முடுக்கும் சோலை, கடு விசைக்கு இவர் ஆற்றார் என்று கருதிப் போக்க, இங்ஙனம் ஏறென்று ஏறவிட்டு, என யாழ்களின் வீறுபெற்ற யாழ்ப் பாணர்க்குக் கொடுக்கும் முறைமைகளை நினக்குத் தந்து விட்டு, நீரை எப்பொழுதும் தன்னிடத்தே உடையதாகிய தண்ணிய மருத நிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்பினை உடைய நன்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே, பறையை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுதற்கு அடிப்பதற்குக் காரணமாகியவையும், பருத்த பெரிய வளைவினையுடைய கைகளையும் அச்சம் தோன்றும் ஓட்டத்தினையும் கோபத்தினையும் உடையனவுமாகிய பல யானைகளைத் தருவதில் நிலைபெறுதலில் ஒழிவிலனாக இருப்பான்.
வருதலிடத்துப் பெற்ற பொருள்களைப் பிறர்க்கும் பிறர்க்குக் கொடுத்து விரைவில் அவனிடத்தினின்றும் போகின்ற போக்கைத் தீர்மானிப்பீராயின், அது பொறாமல் பலகாலும் வெறுத்து, செல்வம், யாக்கை முதலியன நிலை நில்லாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து, இங்ஙனம் போகெனக் கூறி, நும்மை விரைவில் விடுவானல்லன்.
ஒல்லென்னும் ஓசை பட அலைகள் சிதறிய கரிய கடலினது கரை சூழ்ந்த அகன்ற பரப்பினை உடைய இவ்வுலகத்தில் ஒரு பகுதியின் கண் உள்ளது சோழநாடு, அங்கே, ஒவ்வொரு மாநிலத்திலும் திடர்தோறும் திடர் தோறும் நெற்கூடுகள் பொருந்தியிருக்கும். தாழ்ந்த தென்ன மரங்களை உடைய குளிர்ந்த மரச் சோலைகளில் இருக்கின்ற குடிமக்களிடத்தில், உதிரத்தால் சிவந்த சோற்றையுடைய பலியை விழுங்கின கரிய காக்கை, மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலிலே கிடந்த ஈன்ற ஆமையின் குட்டியைத் தான் தின்றலை வெறுத்ததாயின், அதனைப் பின்பு பசித்த காலத்தில் தின்பதாகப் பாதுகாத்து வைக்கவும், அவ்வுழவர் மகளிர் நெய்தல் நிலத்தின் மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடவும், பகைமை முதிர்ந்தோர் தனது அரசவையில் சென்று புகும் காலத்தில் தம் மாறுபாட் டைப் போக்கும்படியாகவும், ஆண்டவன் கரிகாலன்.
பசிய பாகற் பழத்தையும் சிவந்த சுளையை உடையன வாகிய குலைகளை உடைய பலாப்பழத்தையும் தின்று வளைவையுடைய காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத்திலும் இருந்த, மடப்பத்தைத் தம்மிடத்தே உடையவாகிய பெடை மயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படி அங்கு நின்றும் போய், யாழோசை போன்ற வண்டின் பாட்டைக் கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த அறியாமையை உடைய மயில், நிலவு போன்ற இடுமணலிலே பலபகுதிப் பட ஆடவும், நாட்டில் வாழ்வார் அறுத்தலைச் செய்யும் கரும்பின் கண்ணும் அரிகின்ற நெல்லின் கண்ணும் எழுப்பின திரண்ட களமருடைய ஒசை மிகுதி யினாலே, நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிரையுடைய புன்கினையும் தாழ்ந்த சோலைகளையும் உடையதாய், அரும்பின ஞாழலோடே, ஏனை மரங்களும் திரண்ட அந்நாட்டை வெறுத்தார்களாயின், அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு, நீல நிறத்தை உடைய, முல்லைக் கொடி படர்ந்த பலகாட்டு நிலத்தே சென்று அந்நிலத்தைக் கொண்டாடவும், முல்லை நில்த்து வாழ்வோர் அவிழ்கின்ற தளவினையும் பரந்த தோன்றியினையும் அலர்கின்ற முல்லையினையும் பூ உகுகின்ற தேற்றாவினையும் பொன்னைப் போன்ற பூவினையுடைய கொன்றையினையும் நீலமணி போன்ற பூவினையுடைய காயாவினையும் உடைய நல்ல நாட்டில் உறைகின்ற ஒழுக்கத்தை வெறுக்கின், மருதநிலத்தே சென்று அவ்வொழுக்கத்தைப் புகழவும், சுறாத்திரியும் கரிய கடலின் கண் இறவைத் தின்ற திரண்ட நாரைகள் பூக்களை உடைய புன்னைக் கிளையிலே தங்கின், அதன் மேலே முரிகின்ற உயர்ந்த திரையினது ஆரவாரத்திற்கு அஞ்சி மருத நிலத்தில் இனிய பனையின் மடலிலே தங்கவும், குலை கொண்ட தென்னையையும் குலையினையுடைய வாழையையும் கொழுவிய காந்தளையும் மலர்ந்த சுரபுன்னையையும் துடி ஓசை போன்ற ஓசையை உடைய பேராந்தையினுடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழும் மருதவர் அவ்விடத்தை வெறுப்பின் குறிஞ்சி நிலத்துக்குச் சென்று அவ்விடத்தைப் புகழவும், தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள் மீன் நெய்யோடே நறவையும் கொண்டு போகவும், இனிய கரும்போடே அவலைக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே கள்ளையும் கொண்டு போகவும், குறவர் அந்நிலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது நறிய பூவாற் செய்த கண்ணியைச் சூடவும், காட்டில் உள்ள கோழிகள் நெற்கதிரைத் தின்னவும், மருத நிலத்தின் மனையில் உள்ள கோழிகள் தினையைத் தின்னவும், மலையிடத்திற்குரிய மந்திகள் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் காரைகள் மலையிலே கிடக்கவும், குளிர்ந்த இடங்களை உடைய நான்கு கூறாகிய நாடுகள் திரண்டு, குற்றமின்றித் தருமத்தோடு கூடிய வழியை உலகம் அறிதற்குக் காரணமாகிய செங்கோலாலும், தண்ணளி செய்தற்கு எடுத்த ஒரு குடையாலும், தனது ஆணையையே உலகம் கூறும்படியாகவும், முதியோர் முரண் செல்லும்படியாகவும், பெரிய நட்புடனே நெடுங்காலம் உலகை ஆண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன் யான் கூறிய அத்தன்மைகளை உடையோன்.
நீ வாழ்வாயாக!
-------------
பகையரசர் நடுங்கும்புடி விளங்கி, பல்லுயிர்களும், மாட்சிமைப்படுவதற்குக் காரணமாகிய பகற் பொழுதைத் தரும் கதிரவன் தன் நிலையைவிட்டுப் பல கிரணங்களைப் பரப்புகையினாலே, கஞ்சங்குல்லை தீயவும், மரங்களினு டைய கிளைகளை நெருப்புத் தின்னவும், பெருமையை உடைய மலை தன்னிடத்து அருவிகளை இல்லையாக்கவும், இவை ஒழிந்த தொகுதியையுடைய மேகம் கடலில் நீரை முகத்தலை மறக்கவும், பெரிய பஞ்சம் உண்டாகிய நற்குணம் இல்லாத காலத்திலும், நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் ஆகிய சுமையைத் துறைதோறும் துறை தோறும் இளைப்பாறத் தள்ளிப் போய், நுரையைத் தலையிலே உடைய ஆரவாரத்தை உடைய நீர் குளத்திலும் மடுவிலும் புகுந்தோறும், நீராடும் மகளிர் விரைவில் முழுகிக் குடைந்து விளையாட, வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுத்து, சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும் கடாவிட்டு மேரு என்னும்படி குவித்த தொலையாத நெற்பொலி, நெருங்க அமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும்படி கிடத்தற்குக் காரணமான, வரம்பு கட்டின வேலி நிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல்லின் விளைவை உடையதாகக் காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரியதாகும் தன்மையை உடை யவன் கரிகால்வளவன்.
[ பொருநர் ஆற்றுப்படை, சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. முடத் தாமக் கண்ணியார் பெண் புலவர் என்று தோன்றுகிறது. ]
பொருநர் ஆற்றுப்படையின் பின் மூன்று வெண்பாக்கள் உள்ளன. அவை வருமாறு: .
-
ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் தேரின்
அரிகாலின் கீழ்உகூஉம் அந்நெல்லே சாலும்,
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
-
அரிமா சுமந்த அமளிமே லானைத்
திருமா வளவன் எனத் தேறேன்; - திருமார்பின்
மானமால் என்றே தொழுதேன்; தொழுதகைப்
போனவா பெய்த வளை.
-
முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியதால்
இச்சக் கரமே அளந்ததால்: - செய்ச்செய்
அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல்நீர் நாடன்
கரிகாலன் கால்நெருப் புற்று.
கால் நெருப்புரு விட்டால் மும்மண்டலத்தையும் அளந் திருக்கும்.]
--------------
பொருநர் ஆற்றுப்படை (மூலம்)
அறாஅ யரணர் அகன் தலைப் பேரூர்
சாறுகழி வழிநாட் சோறுகசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகறி பொருந,
குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்கழல் உருவின் விசியுறு பச்சை 5
எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி 10
எண்ணாள் திங்கள் வடிவிற் றாகி
அண்ணா இல்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணங் தன்ன ஓங்கிரு மருப்பின்
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் 15
ஆய்தினை அரிசி அளவயல் அன்ன
வேய்வை போகிய விரல்உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணம்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்க் நின்ற அமைவரு காட்சி 20
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி
அறல்போற் கூந்தற் பிறைபோல் திருநுதற் 25
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் 30
நாண் அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரற்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து 35
ஈர்க்கிடை போகா ஏர்இள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடங்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் 40
பொருந்துமயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செங்கிலன் ஒதுங்கலின்
பரற்பகை உழந்த நோயொரு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் 45
நன்பகல் அந்தி நடைஇடை விலங்கலின்
பெடை மயில் உருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும்
களிறு வழங்கதர்க் கானத்து அல்கி
இலைஇல் மராத்த எவ்வம் தாங்கி 50
வலைவலங் தன்ன மென்னிழல் மருங்கில்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்தாள்
முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப் 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ, கொண்ட தறிந,
அறியா மையின் நெறிதிரிந்து ஒராஅது
ஆற்றெதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே;
போற்றிக் கேண்மதி. புகழ்மேம் படுந, 60
ஆடுபசி உழந்த நின் இரும்பே ரொக்கலோடு
நீடுபசி ஒராஅல் வேண்டின், நீடின்று
எழுமதி, வாழி! ஏழின் கிழவ,
பழுமரம் உள்ளிய பறவையின் யானும்அவன்
இழும்என் சும்மை இடனுடை வரைப்பின் 65
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்குஎன் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப்
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக்
கைக்கசடு இருந்தஏன் கண்அகன் தடாரி 70
இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரீகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் 75
கண்ணில் காண நண்ணுவழி இரீஇப்
பருகு வன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோல் என்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த 80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து,
அரவுரி அன்ன அறுவை நல்கி
மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து
இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர் 85
போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேரஞர் போக்கிச்
செருக்கோடு நின்ற காலை, மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கித் 90
தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லதி யாவதும்
மனங்கவல்பு இன்றி மாழாந்து எழுந்து 95
மாலை அன்னதோர் புன்மையும் காலைக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவுஎன மருண்டஎன் நெஞ்சுஏ மாப்ப
வல்லறார் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் 100
கதும்எனக் கரைந்து வம்எனக் கூஉய
அதன்முறை கழிப்பிய பின்றைப் பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு எனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழ்ஊன் கொழும்குறை 105
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிருவம் எனினே, சுவைய
வேறுபல் உருவின் வீரகுதந்து இரீஇ
மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
ஒண்நுதல் விறலியர் பாணி தூங்க 110
மகிழ்ப்பதம் பன்னாள் கழிப்பி, ஒருநாள்
அவிழ்ப்பதம் கொள்கென் றிரப்ப, முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காலடியில் மிகப்ப 115
அயின்ற காலப் பயின்றினிது இருந்து
சொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண்முனிந்து ஒருநாள்,
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய 120
செல்வ, சேறும்எம் தொல்பதிப் பெயர்ந்து' என
மெல்எனக் கிளந்தனம் ஆக, வல்லே
அகறி ரோஎம் ஆய் விட்டுஎனச்
சிரறி யவன்போல் செயிர்த்த நோக்கமொடு
துடி அடி அன்ன தூங்குநடை குழவியோடு 125
பிடிபுணர் வேழ பெட்டவை கொள்கெனத்
தன் அறிஅளவையின் தரத்தர, யானும்
என்அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென்; வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்,
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி 135
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
நாடுசெகிற் கொண்டு நாள்தோறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி 140
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரோரனத்
தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்கிவரும் சென்னி மேம்படமிலந்த 145
இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன்
தாள்நிழல் மருங்கில் அணுகுபு குறுகித்
தொழுதுமுன் நிற்குவிர் ஆயின், பழுதின்று 150
ஈற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்எனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய்
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் 155
பெறலரும் கலத்திற் பெட்டாங்கு உண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல வைகல் கைகவி பருகி
எரிஅகைந் தன்ன ஏடில் தாமரை
சுரியிரும் பித்தை பொரியச் சூட்டி 160
நூலின் வலவா நுணங்குஅரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி அணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடும்தேர்
ஊட்டுளை துயல்வர ஓரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் 165
காலின் ஏழடிப் பின்சென்று, கோலின்
தாறுகளைந்து ஏறென்று ஏற்றி, வீறுபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா இருக்கை
நன்பல் ஊர நாட்டொடு நன்பல் 170
வெரூஉப்பறை நுவுலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே; வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதிர் ஆயின், பலபுலந்து 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவன் அல்லன்; ஒல்எனத்
திரைபிறழிய இரும்பெளவத்து
கரைசூழ்ந்த அகன்கிடக்கை
மாமாவின் வயின்வயின் நெறல் 180
தாழ்தாழைத் தண்தண்டலைக்
கூடு கெழீஇய குடிவயினாற்
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின்
மனை நொச்சி நிழலாங்கண் 185
ஈற்றியாமைதன் பார்ப்பு ஒம்பவும்,
இளையோர் வண்டல் அயரவும், முதியோர்
அவைபுகு பொழுதில்தம் பகைமுரண் செலவும்,
முடக்காஞ்சிச் செம்மருதில்
மடக்கண்ண மயில் ஆலப் 190
பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி
அறைக் கரும்பின் அரிநெல்லின்
இனக் களமர் இசைபெருக
வறள் அடும்பின் இவர்பகன்றைத் 195
தளிர்ப்புன்கின் தாழ்காவின்
நனைஞாழலொடு மரம்குழீஇய
அவண்முனையின் அகன்றுமாறி
அவிழ்தளவின் அகன்தோன்றி
நகுமுல்லை, உகுதேறுவீப் 200
பொற்கொன்றை, மணிக்காயா
நற்புறவின் நடைமுனையின்,
சுறவழங்கும் இரும்பெளவத்து
இறவு அருந்திய இனநாரை
பூம்புன்னைச் சினைச்சேப்பின் 205
ஓங்குதிரை ஒலிவெரீஇத்
தீம்பெண்ணை மடற்சேப்பவும்,
கோள்தெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தள் மலர் நாகத்துத்
துடிக்குடினருக் குடிப்பாக்கத் 210
தியாழ்வண்டின் கொணைக்குஏற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயரத்
தேன் நெய்யொடு கிழங்குமாறியோர்
மீன்நெய்யொடு நறவுமறுகவும் 215
தீங்கரும்பொடு அவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்,
கானவர் மருதம் பாட, அகவர் 220
நில்கிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமந்தி கழிமூழ்க
கழிநரை வரை இறுப்ப 225
தண்வைப்பின் நால்நாடு குழீஇ
மண்மருங்கினான் மறுஇன்றி
ஒருகுடையான் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
அறனெடு புணர்ந்த திறன் அறி செங்கோல் 230
அன்னோன் வாழி! வென்வேற் குருசில்,
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மரண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவும், கோடுஎரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவும், மற்றக் 235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெருவறன் ஆகிய பண்பில் காலையும்,
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறைஉயிர்த்து ஒழுகு
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும் 240
புனல்ஆடும் மகளிர் கதும் எனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடுகோடு ஆகப் பிறக்கி, நாள்தொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும் 245
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே. 248
--------------
அருஞ்சொற் பொருள் அகராதி
அ - அழகு | அதர் - வழி |
அகவர் - நாட்டில் வாழ்வார் | அந்தி - சந்தி |
அகைதல் – கொழுந்துவிட்டு எரிதல் | அமளி - ஆசனம் |
அஞர் - வருத்தம் | அமை - மூங்கில் |
அடுதல் -அழித்தல், கொல்லுதல், வருத்துதல் | அயர்தல் - செய்தல் |
அடும்பு - ஒருவகை மரம் | அயிலுதல் - விழுங்குதல் |
அண்ணா - உள் நாக்கு | அரவுரி - பாம்பின் கோல் |
அணங்கு- தெய்வம், வருத்தம் | அரிகால் - நெல்லை அரியும் அடி |
அணத்தில் . தலையெடுத்தல் | அரிமயில் – மென்மையான மயிர் |
அணுகுபு - அணுகி | அரிமா - சிங்கம் |
அரில் - பிணக்கம் | அளவை . அளவு, தன்மை |
அருகுதல் - கெடுதல் | அளவையின் -அதற்கு முன்னே |
அலகுதல் - தங்குதல | அளை - வளை |
அலவன் - நண்டு | அறல் - கருமணல் |
அவண் - அவ்விடம் | அறன் - தரும்ம் |
அவிதல் - அழிதல் | அறிரன் - அறிபவன் |
அவிழ்பதம் - சோறாகிய உணவு | அறை - அறுத்தல் |
அவிழ்தல் - மலர்தல் | அன்னோன் - அத்தகையவன் |
அவை - சபை | அனந்தர் - உண்ட மயக்கம் |
அவையல் - குத்துதல் |
ஆகம் - மார்பு | இசை - ஒசை |
ஆடு - வருத்தம் | இசைத்தல் - கூறுகல் |
ஆய் அழகிய | இடாது. விட்டு விடாமல் |
ஆயம் - கூட்டம் | இடும்பை - துன்பம் |
ஆர் - ஆத்தி | இரீகி - இருத்தி |
ஆர்த்தல் - நிறையக் கொடுத்தல் | இரு - கரிய |
ஆர - நிறைய | இருக்கை - குடியிருப்பு |
ஆரம் - சந்தனம் | இருமை - கருமை |
ஆறுதல் - ஆரவாரித்தல் | இழை - அணிகலன் சரடு |
ஆறலைகள்வர் – வழிப்பறி காரர் | இளையோர் - இளைய பெண்கள் |
ஆறு - வழி | இறுத்தல் - தங்குதல் |
இறை கூடுதல் - அரசாளுதல் | உருத்தல் - தோன்றுதல் |
இன்மை - வறுமை | உழத்தல் – வருந்துதல் |
இனம் - கூட்டம் | உள்ளுதல்- நினைத்தல் |
ஈற்றா - கன்றை ஈன்ற பசு | உளர்தல் - மீட்டுதல் |
ஈற்று ஆமை - குட்டியை ஈன்ற ஆமை | உளை - குதிரையின் தலையாட்டம் |
உகிர் - நகம் | உறழ்தல் -ஒன்றை விட்டு ஒன்றைத் தெறித்தல் |
உந்துதல் - தெறித்தல் | ஊழ்- முறை |
உயவுதல் - வருந்துதல் | எக்கர் - மேடு |
உயிர்த்தல் - இளைப்பாறுதல் | எய்த்தல் - இளைத்தல் |
உரு. அச்சம், சாயல் | எய்யாமை - அறியாமை |
எரி - நெருப்பு | ஏர் - எழுச்சி |
எருத்து - கழுத்து | ஏழ் - ஏழுசுரம் |
எல்லை. பகல் | ஐது - மெல்லியது |
எவ்வம் - வருத்தம் | ஒக்கல் - சுற்றம் |
எழா ஆல் - யாழ் | ஒதுங்குதல் நடத்தல் |
எழுமதி - எழுந்திரு | ஒய்யென - விரைவாக |
ஏடில் தாமரை – பொற்றாமரை | ஒரா அல் விடுதல் |
ஏடு -இதழ் | ஒருவுதல் - நீங்குதல் |
ஏழாத்தல்- மகிழ்தல் | ஒழுகுதல் – ஒழுங்குபடக் கிடத்தல், ஓடுதல் |
எய்த்தல் - ஒத்தல் | ஒற்றுதல் - சேர்த்தல் |
ஒன்றுதல் - பொருந்துதல் | கதிர் - கிரணம் |
ஓம்புதல் –பாதுகாத்து வைத்தல் | கதுமென - விரைவில் |
ஒரி - கழுத்தின் மயிர் | கருவி - தொகுதி |
ஓவு - ஒழிதல் | கருனை - பொரிக்கரி |
கசடு - வடு | கரைதல் . அழைத்தல் |
கடல் கோள் - கடலில் நீரை முகததில | கலம் - பாத்திரம் |
கடுத்தல் - ஒத்தல் | கலவம் - மயில் தோகை |
கடை . கடைசிப் பகுதி | கலித்தல் - பெருகுதல் |
கடைக் கூட்டுதல் – தீர்மானம் செய்தல் | கவடு - மேடும் பள்ளமுமாக இருத்தல் |
கண் - இடம், அடிக்கும் பக்கம் | கவர்தல் - தின்னுதல் |
கவல்பு - கவலை | காழ் - இருபட நாராசம், : மணிகள் சேர்ந்தவடம் |
களம் - போர்க்களம் | கானம் - காடு |
களமர் – நெற்களத்தில் பணி புரிவோர் | கானவர் - முல்லை நிலத்தில் வாழ்பவர் |
கழிப்பி - போக்கி | கிடக்கை - நிலப்பரப்பு |
கழிப்பிய - செய்து முடித்த | கிழவோன்- உரியவன் |
கா – சோலை | கிளத்தல் - சொல்லுதல் |
காட்சி - அழகு | கிளர்தல் - விளங்குதல் |
காடி - கழுத்து, புளிங்கறி | குடி - குடிமக்கள் |
காந்தள் . கண்வலிப்பூ | குடிஞை – பேராந்தை |
காலை - காலம் | குடைதல் - நீரில் மூழ்கி விளையாடுதல் |
குப்பை - நெற்பொலி | குழை - காதணி, தளிர் |
குயம் - அரிவாள் | குறங்கு - துடை |
குருசில் - தலைவன் | குறை - திசை |
குருளை - குட்டி | கூஉய் - அழைத்து |
குரை – ஆரவாரம் | கூறுதல் - வளைதல் |
குல்லை - கஞ்சா | கெழீஇய-பொருந்திய |
குவை இய- திரட்டின | கெழுதல் - பொருந்துதல் |
குழவி - கன்று | கேண்மதி - கேள் |
குழீஇ - திரண்டு | கேண்மை - நட்பு |
குழுவுதல் - திரளுதல். | கேள் - உறவு |
கேளிர் - நண்பர் | சாறு - விழா |
கொட்டை – முடிந்த முடிச்சு, தும்பு | சிதறுதல் - பாடுதல் |
கொடுஞ்சி - தேரின் முன்னே இருக்கும் தாமரை மொட்டுப் போன்ற உறுப்பு. | சிதாஅர் - கந்தை |
கொல்லை - கொல்லை நிலம் | சிரறுதல் - கோபித்தல் |
கொளை - பாட்டு | சிவணுதல் - பொருத்துதல் |
கோடியர் - கூத்தர் | சிறை - பக்கம், வரம்பு |
கோடு கிளை, மலை, யானைத் தந்தம் | சினை - கிளை |
கோயில் – அரண்மனை | சுணங்கு - அழகுத்தேமல் |
கோள் - சூலை | சும்மை - ஒசை |
சக்கரம் - மண்டலம் | சுரிதல் - கடைகுழலுறல் |
சாலி - செந்நெல் | சூடு -நெற்கதிர் |
சாலுதல் அமைதல் | சூல் - கருப்பம் |
செகில் - தோன் | தடாரி - உடுக்கை |
செய் - வயல் | தடையா - தடை இல்லாத |
செய்யார் - ஏவல் செய்யாத பகைவர் | தண்டலை - சோலை |
செய்யோன் - சிவந்த நிறத்தை உடையவன் | தண்டுதல் - வற்புறுத்தல் |
செயிர்த்தல் – குற்றத்தைச் செய்தல், வருத்தம் செய்தல் | தண்டை – ஒருவகைக் காலணி |
செருக்கு - மகிழ்ச்சி | தரவு- தருதல் |
செலவு ஓட்டம், போதல் | தலை - இடம் |
சென்னி - தலை | தலைக்கோள் - முதலில் கொண்டது |
சேத்தல் - தங்குதல் | தழீஇய - உடைய |
ஞெரேரென - விரைவாக | தவழ் - தவழ்தல் |
தகை – தன்மை | தளவு - செம்முல்லை |
தட - பெரிய, வளைந்த | தாக்குதல் - பொருதல் |
தாயம் - அரச உரிமை | துடி - உடுக்கை |
தாழை - தென்னைமரம் | துத்தி – புள்ளி |
தாள் - முயற்சி | துயல்வருதல் - பொங்குதல் |
தாறு - குதிரையை முடுக்கும் தாற்றுக்கோல் | துரப்பு – முடுக்குதல் |
தானை - படை | துராஅய - அறுகிய புல்லால் திரித்த பழுதை |
திரிதல் - தப்புதல் | துருவை - செம்மறிக்கிடாய் |
திரு- அழகு, செல்வம், திருமகள் | துவர் - சிவப்பு |
திரை - அலை | துவர - மிக |
திவவு - யாழின் வார்க்கட்டு | துற்றல் -தின்றல் |
திறன் - வழி | துன்னல் - தைத்தல் |
திறை - கப்பம் | தூக்குதல் – சீர்தூக்கிப் பார்த்தல் |
தீங்கரும்பு - இனிய கரும்பு | தூங்கு நடை-அசைந்த கடை |
தெங்கு-தென்னை | தொண்டர் - அன்பர் |
தெரியல் - மாலை | தோடு - ஓலை |
தெருமரல் - மனக்கவலை | நகுதல் - மகிழ்தல் |
தெவ்வர். பகைவர் | நகை - மகிழ்ச்சி |
தெற்றுதல் – நெருக்கி அமைத்தல் | நசை - விருப்பம் |
தெற்றென - விரைவில் | நசையுநர் - விரும்புவோர் |
தேளம் - தேசம் | நடு - இடை |
தேறல் - கள்ளின் தெளிவு | நண்ணுதல் – அருகிற் செல்லுதல் |
தேறு - தேற்றா | நரந்தம் - கரந்தம் புல் |
தொட்டு - தொடங்கி | நள்இருள் . செறிந்த இருட்டு |
தொடி - வளை | நறை - நறைக்கொடி |
தொடையல் - தொடர்ச்சி | நனை - அரும்பு |
நாகம் - சுரபுன்னை | நைத்தல் - தின்னுதல் |
நாங்கு - நான்கு | நோக்கம் - பார்வை |
நிரல் - வரிசை | நோற்றல் - நல்வினை செய்தல் |
நிழத்தல் - இல்லையாக்குதல் | நோன்மை - வலிமை |
நீடு - நீட்டித்தல் | பகன்றை - ஒருவகைக் கொடி |
நுடங்குதல் - அசைதல் | பச்சை - தோல் |
நுணங்குதல் – நுண்மையாக இருத்தல் | படர்தல் - செல்லுதல் |
நுதல் - நெற்றி | படை - ஆயதம் |
நுவலுதல் - கொண்டாடுதல் | பண்பு - நற்குணம் |
நெடுமை - உயரம் | பணை - பெருத்தல், மருதநிலம் |
நெற்கூடு - நெற்குதிர் | பத்தல் - யாழின்குடம் |
நெறி - வழி | பதம் – உணவு, காலம் |
பதனி – காலம் | பாணி - தாளம் |
பதி - ஊர் | பாலை - பாலையாழ் |
பயம் - பயன் | பிணி - கட்டுதல் |
பயிலல் – இடைவிடா திருத்தல் | பித்தை - தலைமயிர் |
பரதவர் - வலைஞர் | பிறக்குதல் - அடுக்குதல் |
பரல் – சுக்கான்கல் | பிறழ்தல் - அருளுதல் |
பரா அரை - பருத்த துடை | பின்றை-பின்பு |
பருகு - பருகுதல் | புணர்தல் - கூடுதல் |
பலி- காக்கைக்கு இடும் சோறு | புரத்தல் – பாதுகாத்தல் |
பழி - குற்றம் | புரவி - குதிரை |
பாக்கம் - ஊர் | புரைதல் - ஒத்தல் |
பாடினி - பாணன் மனைவி | புலத்தல் -வெறுத்தல் |
புலம் - நாடு | பை - பசிய |
புழுக்கல் - சோறு | பைத்தல் - படம் விரித்தல் |
புறவு - காடு | பொத்துதல் -கூட்டித் தைத்தல், பொதிதல் |
புன்மை - இழிந்தநிலை | பொருநன் . தடாரிப்பறை கொட்டுபவன் |
புனல்நீர் நடன் – சோழ நாட்டரசன் | பொல்லம் - கிழிசல் |
பூ - பொலிவு | பொலங்கலம்-பொன்வட்டில் |
பெட்டல் - விரும்புதல் | பொலங்கலம்-பொன்வட்டில் |
பெண்ணை – பனை | பொலிதல். விளங்குதல் |
பெய்தல் - அணிதல் | பொறை - பொறுத்தல் |
பெயர்த்தல் - நீக்குதல் | போந்தை - பனை |
பெயர்தல் - ஆடுதல் | போற்றுதல் - விரும்புதல் |
பெருந்தகு – பெருமை தக்கிருக்கும் | போற்றுபு - பேணி |
போனவா - போனது என்ன வியப்பு | மருவு - வாசித்தல் |
பெளவம் - கடல் | மருள் - மயக்கம் |
மகிழ் - கள் | மருளுதல் - கலங்குதல், மயங்குதல |
மஞ்ஞை - மயில் | மழை- குளிர்ச்சி |
மடம் அறியாமை | மறு - குற்றம் |
மண் – உலகம், மார்ச்சனை | மறுகுதல் - கொண்டுபோதல், துளும்புதல் |
மண்ணுதல் – அலங்கரித்தல் | மா - ஒரு வகை நில அளவு |
மணி - நீலமணி | மாண் - மாட்சிமைப்டட்ட |
மயிர்குறை கருவி - கத்தரி | மாத்திரை - பருவம் |
மரல் - ஒருவகை மரம் | மாந்துதல் - தின்னுதல் |
மரா - மராமரம் | மாயோள் - கரிய நிறத்தை உடையவள் |
மருங்கு - இடம்: பக்கம் | மால் - திருமால் |
மருப்பு - யாழின்தண்டு | மாழாத்தல் - மயங்குதல் |
மாறுதல் - கைவிடுதல் | முறையுளி - முறையாக |
மான் - விலங்கு | முனுன்தல் – கருது கல் |
மானம் -பெருமை | முனிதல், முனைதல் - வெறுத்தல் |
மானுதல் - ஒத்தல் | மெய் - உடம்பு |
முகிழ் - அரும்பு | மொக்குள் - கொப்புளம் |
முடம் - வளைவு | மொய்ம்பு - வலிமை |
முரண் - மாறுபாடு | யாணர் - செல்வ வருவாய் |
முரவை - முரிதல் | யாவதும்- சிறிதும் |
முல்லைத்திணை - காட்டு நிலம் | வகுத்தல் கூறுபடுத்தி விற்றல் |
முலைக்கோன் - முலையை உண்டல் | வடித்தல் - உருவுதல் |
முளைத்தல் - தோன்றுதல் | வண்டல் - மகளிர் விளையாடும் இடம் |
வண்மை - பெருமை | வார்தல் - நரம்புகளைக் கூடத் தழுவுதி |
வம் - வாரும் | வாரி - வரும் நீர் |
வயின் - இடம் | வால் ஒளி- வெள்ளொளி |
வரை – மலை | வானம் - மேகம் |
வரைப்பகம் - குளமும் மடுவும் | விசித்தல் - கட்டுதல், போர்த்தல் |
வரைப்பு - மதில் | விசும்பு - வானம் |
வல்லே - விரைவில் | விடியல் - விடியற் காலம் |
வலத்தல் - கட்டுதல் | விடுத்தல் - போகவிடுதல் |
வழங்குதல் - திரிதல் | விரகு - உபாயம், பணியாரம் |
வளம் - அழகு | விலங்கல் - தவிர்தல் |
வறன் - பஞ்சம் | விளையுட்டு – விளைவை உடையது |
வாக்குபு - வார்த்து | விறலியர் – சத்துவம் படப்பாடி ஆடும் மகளிர் |
வாயில்- வழி | வீ - பூ |
வீடு கல் - போதல் | வேட்டம் - வேட்டை |
வீறு - வலிமை | வேட்டல் - விரும்புதல் |
வெம்மை - விருப்பம் | வேய்வை - குற்றம் |
வெரீஇ -அஞ்சி | வேர் - வேர்வை |
வெருவருதல் . அச்சம் தோன்றுதல் | வேலி – வேலி நிலம் |
வெருஉ - அச்சம் | வேவை - வெந்தது |
வெள்ளி – விடியலில் தோன்றும் நட்சத்திரம் | வேளாண்மை - உபகாரம் |
வென்வேல் – வெல்கின்ற வேல் | வைகல் - நாள் |
வைப்பு - இடம் |
கி.வா ஜகந்நாதன் எழுதியவை:
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள்
1. அலங்காரம் | 11. ஓங்கார ஒளி |
2. குறிஞ்சிக் கிழவன் | 12. தண்டைச் சிற்றடி |
3. ஆனந்தத் தேன் | 13. நீர்க்குமிழி |
4. வாழ்க்கைக் கூத்து | 14. விழிக்குத்துணே |
5. மரணம் இல்லா வாழ்வு | 15. பழகித் திருகாமம் |
6. காலேயும் மாலையும் | 16. மனமலர் |
7. அடியார்க்கு நல்ல பெருமாள் | 17. இருவிலங்கு |
8. மயில் ஏறிய மாணிக்கம் | 18. தனிவெளி |
9. தனி வீடு | 19. உள்ளம் குளிர்ந்தது |
10. படிக்கும் திருப்புகழ் | 20. திரட்டுப்பால் |
புதிய வெளியீடு
1. அற்புதத் திருவந்தாதி
2. திருஅம்மானை
----------
கருத்துகள்
கருத்துரையிடுக