சேக்சுபியர் கதைகள் - 1
சிறுகதைகள்
Back
சேக்சுபியர் கதைகள் - 1
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சேக்சுபியர் கதைகள் - 1 (அப்பாத்துரையம் - 37)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 24+312= 336
விலை : 420/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சேக்சுபியர் கதைகள் - 1
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கைக் குறிப்புகள்
புலவர் கோ. தேவராசன், எம்.ஏ., பி.எட்.,
உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியராகவும் உலகம் போற்றும் மாபெரும் கவிஞராகவும் விளங்கியவர் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தது 1564 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26ஆம் நாள். இவருடைய தந்தையார் ஜான் ஷேக்ஸ்பியர் என்பவர் தையல், ஆடை வணிகர், ஊன் விற்பனை, ஆகிய பல தொழில்களைச் செய்தவர். தனது பேருழைப்பினால் நகரத் தலைவராகவும் உயர்ந்தவர். வில்லியம் ஷேக்ஸ்பியரின் தாயார் பெயர் மேரி ஆர்டன் என்பதாகும்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பிடம் தென்மேற்கு இங்கிலாந்தில் ஆவோன் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ட்ராப்போர்டு என்ற நகரம். இந்நகரம் பல சிற்றாறுகளையும், ஏரிகளையும் கொண்டு எழில்மிகு நகரமாக விளங்கியது. இந்நகரம் இலக்கியப் புகழ் வாய்ந்தது.
ஷேக்ஸ்பியர் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பின், இந்நகரில் வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய கவிஞரும், ஹாஸ்லிட், லாம் ஸதே முதலிய பாவலரும் வாழ்ந்த பெருமையைப் பெற்றது இந்நகரம். இதனால் இந்நகரைக் “கவிதை வட்டம்” எனப் புகழ்வர். இந்நகர், கவிஞர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் வந்து பார்வையிடும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.
ஷேக்ஸ்பியர் பன்னிரண்டு வயது வரை தம் ஊரிலிருந்த இலக்கணப் பள்ளியில் இலத்தீன் மொழியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வரலாற்று நூல்களைத் தாமே முயன்று கற்றார். இவருடைய தந்தை வாணிகத்தில் பெரும் அளவில நட்ட மடைந்ததால் இவரால் தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. அதன்பின் தம் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்தார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
ஷேக்ஸ்பியர் தமது பத்தொன்பதாம் வயதில் இருபத்தேழு வயதுடைய ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு 1583இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆணும் பெண்ணுமாக இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். இவர் மகன் “ஹாம் னெட்” தனது பதினோராவது வயதிலேயே இறந்துவிட்டான். இவர் மகள்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டு, இவர் காலத்திற்குப் பின்னரும் வாழ்ந்தனர்.
1587இல் ஒரு நாடகக் கம்பெனியார் ஸ்ட்ராப் போர்டு நகரில் தங்கிச் சில நாடகங்களை நடத்தினர். அந்நாடகங்கள் ஷேக்ஸ்பியர் மனதைக் கவர்ந்தன. நாடகக் கலையின் மீது அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது. அதன் பின்னர் ஷேக்ஸ்பியர் இலண்டனுக்குச் சென்றார். அங்கே நாடகக் கலையை நன்கு பயின்றார். முதலில் நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் நாடக ஆசிரியரானார். நாடகக் கம்பெனியில் பங்கு தாரராகவும் விளங்கினார். விரைவில் முன்னேறி நாடகக் குழுவின் முழு உரிமையாளர் ஆனார். அரண்மனையில் அரச குடும்பத்தினருக்காக அடிக்கடி நாடகங்களை நடத்தினார். பெரும் பொருள் ஈட்டினார். அவரது புகழ் உலகெங்கும் பரவியது.
ஷேக்ஸ்பியர் நாடக ஆசிரியராக மட்டுமின்றி புகழ்பெற்ற பெருங் கவிஞராகவும் விளங்கினார். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதுவதற்கு முன்னும் பின்னும் இயற்றிய பாடல் தொகுதிகளுள் சில பின்வருமாறு:
1. "வீனஸும் ஆமூடானீஸும் எனும் தொகுதி 1593 இல் வெளிவந்தது. இதன் கண் இலங்கிய இன்னோசை அனைவரையும் ஈர்த்தது. சொல்வளமும், சொல்லணிகளும் நிறைந்த அழகிய கவிதைக் களஞ்சியமாய்த் திகழ்ந்தது இந்நூல்.
2. “லுக்ரீஸின் மான அழிவு” என்பது இரண்டாம் தொகுதி மக்களின் அவலச் சுவையை எடுத்துக்காட்டும் அற்புதமான கவிதைத் தொகுதி.
3. ஷேக்ஸ்பியரின் மூன்றாவது தொகுதி ‘சானட்’ எனப்படுவது. ஒரு குறிப்பிட்ட அளவு ஒழுங்கும் ஒலிநயமும் அமைந்து பதினான்கடி கொண்ட பாவகையால் ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட “சானட்” வகைப்பாடல்களை எழுதினார். ஷேக்ஸ்பியருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது. ‘சானட்’ வகைப் பாடல்களேயாகும்.
ஷேக்ஸ்பியர் தம் நாற்பத்தி ஆறாம் வயதில் நாடகம் எழுதுவதைத் துறந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஐந்தாண்டுகள் சுகபோக வாழ்க்கை நடத்தினார். 1616இல் 52ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஷேக்ஸ்பியர் மொத்தம் முப்பத்தேழு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றை இன்பியல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என மூவகையாகப் பிரிப்பர்.
இன்பியல் நாடகங்களில் “நடுவேனில் கனவு,” “வெனிஸ் வணிகன்,” “அடங்காப் பிடாரியை அடக்குதல்” முதலியவை புகழ் பெற்றவை.
துன்பியல் நாடகங்களில் “ரோமியோவும் ஜுலியட்டும்”, புகழ் பெற்றதாகும். மற்றும் “ஜுலியஸ் சீசர்”, “ஒத்தெல்லோ” மாக்பெத், லியர் அரசன் என்பனவும் சிறப்பு வாய்ந்தவை.
வரலாற்று நாடகங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் ஆங்கில மன்னர்களைப் பற்றிய நான்காம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி, மூன்றாம் ரிச்சர்டு என்ற நாடகங்கள் பெரும்புகழ் பெற்றவை.
அறிஞர்கள், இவருடைய நாடகங்களில் எல்லாம் தலை சிறந்தது “ஹாம்லெட்” என்பர்.
உலகியலில் நாம் காணும் பல்வகை மக்களையும், அவர் களிடம் தோன்றும் பல்வகை உணர்ச்சிகளையும் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களில் இயற்கையாகச் சித்தரித்துள்ளார். மனித மனத்தின் ஆழத்தை ஊடுருவிப் பார்த்தவர்களில் இவரே தலை சிறந்தவர் எனலாம்.
வரலாறு, கலை, இசை, உளவியல், அரசியல், போரியல், சட்டம் ஆகிய பல் துறைகளிலும் இவரது பரந்துபட்ட பேரறி வினை இவரது நாடகங்களில் கண்டு களிக்கலாம். புதிய புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் உருவாக்கி ஆங்கில மொழியை வளப்படுத்தியவர்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் காலத்தால் அழியாதவை. இன்றுங்கூட உலகின் பலபாகங்களில் அவரது நாடகங்கள் நடிக்கப் பட்டு வருகின்றன. உலகின் பெரும்பான்மையான மொழிகளில் அவரது நாடகங்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மனிதகுல வரலாற்றில் ஷேக்ஸ்பியர் என்ற மாமேதையின் புகழ் என்றென்றும் ஒளிவீசிய வண்ணமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வெனிஸ் வணிகன்(The Merchant Of Venice)
பஸானியோ கடன் கேட்டல்
இத்தாலி நாட்டின் பெரிய நகரங்களுள் வெனிஸ்¹ என்பது ஒன்று. அக்காலத்தில் யூதன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ஷைலாக்². அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை. அவன் கிறித்துவ வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்து கடுவட்டி வாங்கி, பெருஞ்செல்வம் திரட்டினான். அவனுடைய கொடுமையான முறைகளையும், கல் நெஞ்சையும் பலரும் வெறுத்தனர்.
அந்நகர வணிகருள் அந்தோனியோ³ என்னும் செல்வன் ஒருவன்; அவன் ஈகையும் இரக்கமும் உடையவன்; ஏழைகளுக்கு உதவி செய்யும் உயர்ந்த பண்பு வாய்ந்தவன். யாரேனும், தன்னிடம் கடன் கேட்டால், அவன் வட்டியில்லாமல் கடன் கொடுத்து வந்தான். இதனால், ஷைலாக் அவன்மீது பொறாமையும் உட்பகையும் கொண்டான். அவனும் ஷைலாக்கைக் கண்டபோ தெல்லாம் இகழ்ந்து பேசினான். “ஷைலாக் நீ பெரிய பாவி. ஏழைகளிடம் இரக்கம் கொள்ளாத நீ இருந்தால் என்ன; இறந்தால் என்ன?” என்று பலமுறை வெகுண்டு கூறினான். இவற்றை ஷைலாக் பொறுத்துக் கொண்டிருந்தபோதிலும், பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று உள்ளத்தில் உறுதிகொண்டிருந்தான்.
அந்தோனியாவுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ⁴பஸானியோ. இவன் பெருமை மிகுந்த நற்குடியில் பிறந்தவன். பெற்றோர் வழியாகப் பெற்ற செல்வம் அவனுக்குப் போதவில்லை. வரவுக்கு மிஞ்சிய செலவாளிக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் என்ன பயன்? ஆனால், பஸானியோ தீயவழியில் பொருட்செலவு செய்து காலங்கழிப்பான் அல்லன். நண்பர் பலருடன் கூடிக் களிப்பதிலும், ஆடம்பர வாழ்க்கை நடத்துவதிலும் அவன் விருப்பம் மிகுந்தவன். எனவே, உள்ள பொருள் எல்லாம் விரைவில் அழியவே. அவன் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடன் வாங்குவதற்காக, பஸானியோ அங்கும் இங்கும் அலைந்தான் அல்லன்; பணம் வேண்டிய போதெல்லாம் அந்தோனியாவை அண்டினான். பஸானியோ மனம் மகிழ்ந்தால் போதும் என்ற ஓரெண்ணத்துடன், அந்தோனியோவும் வரையாது கொடுத்து வந்தான். இருவருக்கும் மனவேறுபாடு இல்லாதது போலவே, பண வேறுபாடும் இல்லை.
ஒருநாள் பஸானியோ மூவாயிரம் பொன் கடன் கேட்பதற் காக அந்தோனியோவிடம் வந்தான். அப்போது தன் உள்ளத்தில் இருந்த ஓர் எண்ணத்தையும் வெளியிட்டான். “நண்பா! எனக்கு நல்ல காலம் பிறப்பதாகத் தெரிகிறது. ஒரு பணக்காரப் பெண்ணை மணம் செய்து கொள்ள எண்ணுகிறேன். அவள் பெயர் போர்ஷியா5. அவளுடைய தந்தையார் இறந்து விட்டார். அவர் பெரிய செல்வர். அவருக்குப் பின் போர்ஷியாவே அச்செல்வத்திற்கு உரிமை உடையவள். அவர் வாழ்ந்த காலத்தில் நான் அடிக்கடி சென்று பழகினேன். நான் அவளை விரும்புவதுபோலவே, அவளும் என்னை விரும்புவாள். அவளை மணம் செய்து கொண்டால், என் குறை எல்லாம் தீரும். நான் செல்வன் ஆவதற்கும், கடனைத் தீர்ப்பதற்கும் இஃது ஒன்றே வழி. இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால், இப்போது நீ உதவி செய்தல்வேண்டும். எனக்கு மூவாயிரம் பொன் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கொடுத்தால், அவளுடைய செல்வநிலைக்கு ஏற்ற நடையுடை பாவனையோடு சென்று நான் முயற்சி செய்தல் கூடும். இதுவரைக்கும் பலவகை உதவிகள் செய்து என்னைக் காத்ததுபோலவே, தக்க சமயமாகிய இப்போதும் இந்த உதவியைச் செய்வாய் என்று வந்தேன்,” என்று பஸானியோ கூறினான்.
இல்லை என்னாது கொடுத்து உதவிவந்த அந்தோனி யோவிடம் அப்போது பணமில்லை. சரக்கு ஏற்றிக்கொண்டு திரும்பிவருகின்ற கப்பல்களை அவன் எதிர் நோக்கியிருந்தான். தன்னுடைய கப்பல்கள் திரும்பி வந்தவுடன் பணத்துக்குக் குறை வில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அவன் பஸானியோவுக்கு ஒரு வழி கூறினான். “என்னுடைய கப்பல்கள் விரைவில் திரும்பும்;. திரும்பிய பிறகு, எவ்வளவு பொன் வேண்டு மானாலும் பெறமுடியும். ஆனால், நீ சொல்லுவதைக் கருதினால், அதுவரைக்கும் பொறுத்திருத்தல் முடியாது என்று தெரிகிறது. இரக்கம் என்பது இன்னது என்று அறியாத ஷைலாக்கிடம் எந்நாளும் பணம் கிடைக்கும். அவனிடம் செல்வோம். கப்பல்களை ஈடுகட்டிக் கடன் கேட்போம். அவனும் வட்டி என்றால் வாய் திறப்பான்; தயங்காமல் கொடுப்பான்.” என்று அந்தோனியோ கூறினான்.
ஷைலாக் கடன்தரல்
இருவரும் ஷைலாக்கிடம் சென்றனர்; கடன் கேட்டனர். “இந்தப் பயல் - அந்தோனியோ இப்போது அகப்பட்டுக் கொண்டான்” என்று ஷைலாக் மனத்தில் எண்ணினான். “வட்டியில்லாமல் கடன் கொடுத்து நம்முடைய வருவாயைக் கெடுக்கிறவன், யூதர் என்றால் வெறுத்துப் பேசுகிறவன்; கண்ட விடத்தில் எல்லாம் என்னைப் பழித்து இகழ்கிறவன்; இவனை வாளாவிடல் கூடாது; பழிக்குப்பழி வாங்குவேன்” என்று பலவாறு நினைத்துக்கொண்டே பேசாமல் இருந்தான். அந்தோனியோ மீண்டும் கேட்டான். அப்போது, ஷைலாக் அவனை நோக்கி, ’ஐயா, நாய் என்றும், பேய் என்றும் என்னை இகழ்ந்து பேசிய நாவால் இப்போது கடன் கேட்கிறாய். யூத வகுப்பார்க்குப் பொறுமை இயற்கை; நானும் எவ்வளவு பொறுத்துக் கொண்டிருந்தேன்! போன வாரத்தில் என்மீது துப்பினாய்; என்னைப் பாவி என்று பழித்தாய். இந்த வாரத்தில் கடன் கொடு என்று கேட்கின்றாய். இது நன்றாய் இருக்கின்றது அன்றோ?" என்று கூறினான்.
“ஷைலாக்! இப்போது உன்னிடம் வணங்கி வந்திருக்கிறேன் என்று நினைக்கவேண்டா. இனியும் நான் உன்னை வெறுப்பேன்; இகழ்வேன்; பழிப்பேன்; எல்லாம் செய்வேன். உனக்கு விருப்பம் இருந்தால், கடன்கொடு; நண்பனுக்குக் கொடுப்பதுபோல் கொடுக்காதே; பகைவனுக்குக் கொடுப்பதுபோல் கொடு. நான் சொல்லும் கெடு நாள் கடந்தால், நீ விரும்பும் அபராதம் வாங்கிக் கொள்” என்று அந்தோனியோ கடுகடுத்துக் கூறினான்.
உடனே ஷைலாக் தன் பேச்சினை மாற்றிக்கொண்டான்; “என்ன ஐயா, பொறுத்துப் பேசக்கூடாதா? உன்னோடு நட்பு முறையில் பழக நான் பேராவல் கொண்டிருக்கிறனே. நீ செய்த தீங்கை நான் மறந்து விடுகிறேன். கடனுக்கு வட்டி அரைக்காசும் வேண்டாம். பத்திரம் எழுதிக்கொடுத்தால் போதும். அதில் ஏதேனும் ஒரு கெடுவைக் குறிப்பிட்டு, கெடுநாள் கடந்தால் உன் உடம்பில் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடுக. கெடுநாள் கடந்தாலும் கவலை வேண்டாம்,” என்று கூறி நண்பனைப்போல் நடித்தான்.
அந்தோனியோ அந்தக் கட்டுப்பாட்டிற்கு இசைந்தான். பஸானியோ அவ்வாறு எழுதிக்கொடுத்துத் துன்பம் தேடிக் கொள்ளல் ஆகாது என்று தடுத்தான். “நாம் ஏன் அஞ்ச வேண்டும்? இன்னும் சில நாட்களுக்குள் நம்முடைய கப்பல்கள் திரும்பி வருதல் திண்ணம் அன்றோ? இந்தத் தொகை மூவாயிரந்தானே! முப்பது ஆயிரம் என்றாலும், முந்நூறு ஆயிரம் என்றாலும் நம்மால் தரமுடியுமே!” என்று கூறினான். “கிறித்தவர்களாகிய இவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை போலும்,” என்று சொல்லிக்கொண்டு, ஷைலாக் பஸானியோவைப் பார்த்து, “பஸானியோ! ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? கப்பல்கள் வருதல் உறுதியாயிருக்கும்போது, கெடு தவறக் காரணம் என்ன? ஒருகால் தவறினாலும், நான் கட்டுப்பாட்டை வற்புறுத்துவேனா? அதனால் நான் பெறக்கூடியது ஓர் இராத்தல் தசை-அதுவும் மனிதன் தசை. அதனால் பயன் என்ன? வேடிக்கையாகக் கூறிய கட்டுப்பாட்டைக் கேட்டதும் இவ்வளவு நடுக்கமா? விருப்பமானால் எழுதிக் கொடுக்கலாம்” என்று நயவஞ்சகமாகப் பேசினான்.
இப்பேச்சினால், பஸானியோ ஏமாறவில்லை. அந்தோனி யோவைத் தன்னால் இயன்றவரை தடுக்கமுயன்றான். ஆனால், வேடிக்கையான கட்டுப்பாடு என்று நம்பின அந்தோனியோ பத்திரம் எழுதிக்கொடுத்துப் பணம் வாங்கி நண்பனிடம் கொடுத்தான்.
பஸானியோ போர்ஷியா திருமணம்
பஸானியோ தன் நண்பனுடைய அருஞ்செயலை வியந்து போற்றி, பணத்தைப் பெற்றுக்கொண்டு, போர்ஷியாவை மணப்பதற்கு வேண்டிய முயற்சிகளைத் தொடங்கினான். அவள் வாழ்ந்த இடம் பெல்மாண்ட்⁶என்னும் நகரம். அவள் அழகிலும் அறிவிலும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவள். ஆகையால், இளைஞர் பலர் அவளை மணக்க ஆவல்கொண்டு பெல்மாண்ட் நகரத்துக்கு வந்து வந்து போயினர். ஆனால் மணம் செய்து கொள்ளுவதில், போர்ஷியா தன் தந்தையாரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றக் கடமைப் பட்டிருந்தாள். அவர், பொன் பெட்டி ஒன்று, வெள்ளிப் பெட்டி ஒன்று, ஈயப்பெட்டி ஒன்று ஆக மூன்று செய்து, ஒவ்வொன்றையும் மூடிப் பூட்டிச் சாவியை மேலே வைத்திருந்தார். இந்த மூன்றனுள் ஒன்றில் போர்ஷியாவின் படம் இருந்தது. அப்படம் அடங்கிய பெட்டியைத் திறப்பவனே போர்ஷியாவை மணப்பதற்கு உரியவன் என்பது அவருடைய ஏற்பாடு. ஒவ்வொரு பெட்டியின் மேலும் ஒவ்வொரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் உலகத்தில் எல்லோரும் விரும்புவதைப் பெறுவான்,” என்பது பொன்பெட்டியின் மீது வரையப் பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் தன் திறமைக்கேற்றதைப் பெறுவான்” என்பது வெள்ளிப் பெட்டியின் மீது வரையப்பட்டிருந்தது. “என்னை விரும்புவோன் எல்லாம் இழத்தல் வேண்டும்,” என்பது ஈயப் பெட்டியின் மீது பொறிக்கப் பட்டிருந்தது. அரசிளங்குமரரும் செல்வமிக்க வருமாகிய சிலர் வெள்ளிப் பெட்டியையும் பொன் பெட்டியையும் திறந்து பார்த்து, வெட்கமுற்றுச் சென்றனர்.
பஸானியோ போர்ஷியாவுக்கு நன்றாகத் தெரிந்தவன். அவனை மணப்பதற்கு அவளும் விரும்பினாள். ஆனால், தந்தையின் கட்டளையை மீற அவள் எண்ணவில்லை. பஸானியோ தன் நண்பனாகிய கிராஷியானோ⁷ என்பவனோடு ஆடம்பரமாகப் புறப்பட்டுப் பெல்மாண்ட் வந்து சேர்ந்தபோது, தந்தை ஏற்பாட்டையும் தன் உள்ளக்கருத்தையும் எடுத்துரைத்தாள். “ஐயோ, நான் உன்னைப் பெற முடியாமல் போனால் நான் எப்படி உயிர் வாழ்வேன்? உன்னுடைய படம் எந்தப் பெட்டியில் உள்ளதோ? நான் எப்படி அறிவேன்?” என்று அவன் வருந்தினான். போர்ஷியா அவனைத் தேற்றினாள். ’உண்மை என்றும் உயர்வே தரும்" என்று உரைத்துப் பெட்டிகளின் அருகே அழைத்துச் சென்றாள்.
அவற்றைக் கண்டவுடன் பஸானியோ திகைத்தான். அப்போது, போர்ஷியா தன் மெல்லிய குரலால் பாடி அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் பொன் பெட்டியைக் கண்டு, "இது வெளித்தோற்றம்; இதனால் நான் மயங்கேன்; என்று சொல்லி, வெள்ளிப் பெட்டியை நோக்கினான். வெள்ளியும் வேண்டாம் என எள்ளி அப்பாற்சென்று, ஈயப்பெட்டியைத் திறந்தான்; திறந்ததும் உவகைக் கடலில் மூழ்கினான். அதில் இருந்த போர்ஷியாவின் அழகிய படம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போர்ஷியாவும் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்; தன் விருப்பத்திற் கேற்றவாறு முடிந்ததை நினைத்து நினைத்து களித்தாள்.
“மங்கையர்க்கரசியே! நான் பெருஞ்செல்வனும் அல்லன்; வேறு சிறப்பு உடையவனும் அல்லன். என் குடிபிறப்பு ஒன்றுதான் எனக்குள்ள தகுதி, என்று பஸானியோ கூறினான். இதைக்கேட்ட போர்ஷியா,”என் தலைவரே! உமது அன்பே நான் பெற விரும்பும் செல்வம், அதைவிட உயர்ந்த செல்வம் உண்டோ? நான் ஒன்றும் அறியேன். என்னுடையவை எல்லாம் இன்றுமுதல் உம்முடையவையே,“என்று சொல்லித் தன் கையிலிருந்த கணையாழியைச் சுழற்றி அவனிடம் கொடுத்தாள். அவளுடைய அடக்கத்தை அறிந்த பஸானியோ, மிக வியந்து அவளைப் புகழ்ந்தான்.”உன்னையும் கணையாழியையும் நான் என்றும் விட்டுப் பிரியேன்," என்று சூளுரைத்தான்.
போர்ஷியாவுக்கு நெரிஸா⁸ என்ற தோழி ஒருத்தி இருந்தாள். அவளை மணக்க கிராஷியானோ விரும்பினான். அவளும் அதற்கு இசைந்திருந்தாள். பஸானியோ வெற்றி பெற்றவுடன், கிராஷியானோ அவனையும் போர்ஷியாவையும் வாழ்த்திவிட்டுத் தனக்கும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்
அதனைக் கேட்ட பஸானியோ, தகுந்த மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியோடு அவ்வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் கூறினான். நெரிஸா தன்னை மணக்க இசைந்திருப்பதைக் கிராஷியானோ எடுத்துரைத்தான். போர்ஷியா நெரிஸாவை வினவி, அவள் கருத்தை அறிந்து மகிழ்ந்தாள்.
இங்ஙனமாக, எல்லோரும் பெருமகிழ்ச்சியோடு இருந்த போது, அந்தோனியோவிடமிருந்து ஒருவன் கடிதம் கொண்டு வந்தான். பஸானியோ அக்கடிதத்தை வாங்கிப் படித்தபோது, அவன் முகக் குறியைக் கண்டு போர்ஷியா வருந்தினாள். அதைப் பற்றி அவனைக் கேட்டாள். “எனது வருத்தத்தை நான் எவ்வாறு கூறுவேன்? எனது குடியிருப்பு ஒன்றே எனக்குள்ள தகுதி என்பதை முன்பே கூறியுள்ளேன். ஆனால், நான் கடன்காரன் என்பதை அப்போது கூறத் தவறிவிட்டேன். என் பொருட்டாக என் ஆருயிர் நண்பன் அந்தோனியோ மூவாயிரம் பொன் கடன் பட்டிருக்கிறான். கடன் கொடுத்தவன் ஷைலாக் என்னும் கொடியோன் ஒருவன். ’கெடுநாள் கடந்தால் ஓர் இராத்தல் தசை அறுத்துக் கொள்ளலாம் என்று அவனிடம் என் நண்பன் எழுதிக்கொடுத்தான். அந்தப் பாவி ஷைலாக் இனி என்ன செய்வானோ?” என்று பஸானியோ சொல்லிக் கண்ணீர் விட்டான். போர்ஷியா இதை அறிந்து மனம் உருகினாள். “இதுவரைக்கும் இவ்வளவு உயர்ந்த நண்பரைக் குறித்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. இத்தகைய நண்பருக்கும் துன்பம் வந்ததா? என்ன கொடுமை, ஆ! என்ன கொடுமை!” என்று சொல்லி அக்கடிதத்தைப் படிக்குமாறு வேண்டினாள்.
"ஆருயிர்த் தோழ!
என் கப்பல்கள் கடலில் கவிழ்ந்து அழிந்தன. யூதனிடம் கடன்பெற்ற கெடுநாள் தவறியது. அவன் என்னை அறுத்தல் இறுதி. நான் இறப்பதற்கு முன் உன்னைக் காண விழைகின்றேன். ஆனால், உன் விருப்பம்போல் செய்க. அன்பு காரணமாக வருக. இக்கடிதம் காரணமாக வரல் வேண்டாம்," என்பதே அக்கடிதம் ஆகும்.
“அன்பரே! இனி ஒரு நொடிப்பொழுதும் வீணாதல் கூடாது. நண்பருடைய உடலிலிருந்து ஒரு தூசும் எடுக்க இடந்தரலாகாது. நான் முன்பே கூறியுள்ளபடி என் செல்வமெல்லாம் உம்முடைய செல்வம். கடன் தொகையைவிட இருபது பங்கு வேண்டுமானாலும், எடுத்துக்கொண்டு செல்க, ஆனால் அதற்குள் நமது திருமணம் நடைபெறல் வேண்டும். திருமணம் முடிந்தால், உமது விருப்பம் போல் இச்செல்வத்தைச் செலவிடலாம்,” என்று கூறித் திருமண ஏற்பாடுகளைச் செய்வித்தாள். திருமணங்கள் இரண்டும் முடிந்தன. பஸானியோ கிராஷியானோவுடன் வெனிஸ் நகரத்திற்கு விரைந்து சென்றான்.
போர்ஷியா முறைமன்றம் ஏகுதல்
அங்கு அந்தோனியோ சிறையில் வைக்கப்பட்டிருத்தலை அவன் கண்டான்; மனம் நொந்து ஷைலாக்கிடம் ஓடினான்; கடன் தொகையை விடப் பன்மடங்கு கொடுப்பதாகக் கூறிப் பன்முறை வேண்டினான். அந்த யூதனோ மனம் இரங்கவில்லை. “இனி எனக்குப் பணம் எதற்காக? ஓர் இராத்தல் தசையே வேண்டும்,” என்று அவன் வற்புறுத்தினான். பஸானியோவின் முயற்சிகள் எல்லாம் வீணாயின.
வெனிஸ்மன்னன் இவ்வழக்கை ஆராய்வதற்காக ஒருநாள் குறித்திருந்தான். அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டு பஸானியோ அங்கே வருந்திக் கொண்டிருந்தான்.
தன் கணவன் பிரிந்தபிறகு, போர்ஷியா வாளா இருக்க வில்லை. “என்ன செய்யலாம் எவ்வாறு அந்தோணியோவைக் காப்பாற்றக் கூடும்,” என்று அவள் எண்ணி எண்ணி ஒரு முடிவுக்கு வந்தாள். அவள் தன் உறவினராகிய பெல்லாரியோ என்னும் வழக்கறிஞர் ஒருவர்க்குச் செய்தி எல்லாம் எழுதினாள்; அவருடைய கருத்தையும் தக்க வழிகளையும் அறிவிக்குமாறும் வழக்கறிஞர் உடையைக் கொடுத்தனுப்புமாறும் வேண்டினாள். அந்தக் கடிதத்தை ஒருவன் அவரிடம் சேர்த்து, உடனே உடையும், பதிலும், தனிக் கடிதம் ஒன்றும் பெற்றுக் கொண்டுவந்தான். இவற்றைப் பெற்ற போர்ஷியா மகிழ்ந்தாள்.
அவ்வுடைகளை அவள் அணிந்துகொண்டாள். தோழி நெரிஸாவுக்கும் ஆண் உடைகளை அளித்துத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெனிஸ் நகரத்தை அடைந்தாள். அரசன் அவ்வழக்கை ஆராய்வதற்காகக் குறித்த நேரத்தில், முறை மன்றத்தை அடைந்தாள். தன் உறவினர் பெல்லாரியோ கொடுத்த தனிக்கடிதத்தை அரசனிடம் சேர்ப்பித்தாள்.
"மாண்புமிக்க முறைமன்றத் தலைவர் அவர்களுக்கு,
என் உடல்நலம் குன்றியுள்ளது. ஆதலின், தங்கள் கட்டளைப்படி அந்தோனியோ வழக்கை எடுத்துரைக்க நான் வரமுடியவில்லை; மன்னிக்க வேண்டுகிறேன். எனக்குப் பதிலாக அறிவும் ஆற்றலும் வாய்ந்த பல்தசார் அவ்வழக்கை எடுத்துரைப் பார். அதற்குத் தாங்கள் இசைந்தருளக் கோருகின்றேன்."
இதுவே அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசன் அதைப் படித்த உடனே அதில் குறித்திருந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். “இவர்தாம் அந்தோனியோவின் பொருட்டு வந்துள்ள வழக்கறிஞர். அவர் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர் என்று வழக்கறிஞர் பெல்லாரியோ புகழ்கிறார்,” என்று கூறி, அங்கிருந்த சான்றோர்க்கு வழக்கறிஞர் பல்தசாரை (உருமாறி வந்த போர்ஷியாவை) அறிமுகப்படுத்தினான்.
போர்ஷியா தனக்களித்த இருக்கையில் அமர்ந்து சுற்றிப் பார்த்தாள்; யூதனையும், தன் கணவனையும் கண்டாள். பஸானியோ தன் மனைவியை அறிந்து கொள்ளவில்லை. மிகுந்த கவலையோடும் நடுக்கத்தோடும் அவன் அந்தோனியோவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருத்தலைப் போர்ஷியா அறிந்தாள்.
எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஏற்ற உறுதியும் அஞ்சாமையும் போர்ஷியாவிடம் இருந்தன. அவள் அமைதியாக வழக்கை எடுத்துரைக்கத் தொடங்கினாள். முதலில் ஷைலாக்கைப் பார்த்து, “ஐயா! நீ கொடுத்த வழக்கு வெனிஸ் அரசியலார் சட்டப்படி பொருத்தமாக உள்ளது. அந்தோனியோவின் உடம்பின் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசை பெறுவதற்கு உனக்கு உரிமை உண்டு,” என்று கூறினாள். இதனைக் கேட்டதும், ஷைலாக் உள்ளம் குளிர்ந்தது. வழக்கறிஞர் வயதால் இளைஞராயினும் அறிவால் முதியவர் என்று போற்றினான். போர்ஷியா தொடர்ந்து பேசினாள்: “ஆனாலும், இரக்கம் என்பது உயிரின் சிறந்த பண்பு அன்றோ? ஓர் உயிர்க்கும் துன்பம் செய்யாது வாழ்தலே உயர்ந்த வாழ்வு அன்றோ? ஆதலால் நீ எண்ணிப் பார்த்தல் வேண்டும். நீ கேட்டதைப் பெற உனக்கு உரிமை உண்டு. சட்டம் அதற்கு இடம் தருகிறது. ஆனாலும், கடவுளிடத்தில் இரக்கம் எதிர்பார்க்கின்ற நாம் நம்மவரிடத்தில் இரக்கம் காட்டுதல் வேண்டும் அன்றோ?” என்று அறிவுரை பல கூறினாள்.
கல் கரைந்தாலும் கரையும்; ஷைலாக்கின் மனம் கரைய வல்லதோ? “பத்திரத்தின்படி பெறவேண்டியதைப் பெறுதலே நான் காட்டும் இரக்கம்,” என்று அவன் சொன்னான்.
போர்ஷியா பஸானியோவைப் பார்த்து, “வாங்கிய கடனைக் கொடுக்க அந்தோனியாவிடம் பணம் இல்லையே?” என்று கேட்டாள். ஒன்பதினாயிரம் பொன் கொண்டுவந்து ஷைலாக் எதிரில் பஸானியோ வைத்தான். அந்தக் கல்நெஞ்சன் அதை வாங்க மறுத்து விட்டான். பஸானியோ போர்ஷியாவை நோக்கி “வழக்கறிஞர் அவர்களே! தாங்கள் என் நண்பன் உயிரை எவ்வாறேனும் காத்தருளல் வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டான். இதைக்கேட்ட போர்ஷியா, “சட்டப்படி நடந்தே ஆகவேண்டும். சட்டமே பெரியது; உன் வேண்டுகோள் பெரியதன்று,” என்று மறுத்துப் பேசினாள். பஸானியோ இதைக் கேட்டு வருந்த, ஷைலாக் பெருமகிழ்ச்சியோடு வழக்கறிஞரைப் பாராட்டிப் பேசினான்.
போர்ஷியா மீண்டும் ஷைலாக்கை நோக்கி, “இப்பத்திரத்தில் கண்ட கெடுநாள் கடந்தது உண்மையே. ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்,” என்று கூறினாள்: அந்தோனியோவை நோக்கி “ஐயா, உனது உடம்பிலிருந்து ஓர் இராத்தல் தசை அறுத்து எடுத்துக்கொள்ள ஷைலாக்குக்கு உரிமை உண்டு”. என்றாள். ஷைலாக் ஒரு கத்தியை எடுத்துத் தீட்டினான். அப்போது, “நீ ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுக,” என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். “நான் கூறவேண்டியது ஒன்றும் இல்லை; சாவதற்குச் சித்தமாக இருக்கிறேன்,” என்று அந்தோனியோ போர்ஷியாவுக்கு மறுமொழி கூறினான். பஸானியோவை நோக்கி, “அருமை நண்ப நலமுற வாழ்வாயாக. உனக்காக நான் துன்புற்றேன் என்று நீ கவலைப்பட வேண்டாம். உன் துணைவியிடம் என்னைப் பற்றியும் நம்மிடையே இருந்த நட்பைப்பற்றியும் சொல்லுக”, என்று சில சொற்கள் கூறினான். இச்சொற்கள் பஸானியோவின் செவியில் புகுந்தன. அவன் மனம் உருகியது. “தோழ! உன்னைக் காப்பாற்றுவதற்காக, என் மனைவியையும் என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கின்றேன். ஆனால், இந்தக் கொடியவன் மனம் மாற வில்லையே,” என்று வருத்தத்தோடு பேசினான். இப் பேச்சைப் போர்ஷியா கேட்டு வியந்தாள். “ஐயா! இங்கு உன்னுடைய மனைவி இருந்தால் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா?” என்று பஸானியோவைப் பார்த்துச் சொன்னாள்.
ஷைலாக் தோல்வியுறல்
அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வழக்கின் முடிவைக் கவலையோடு எதிர்நோக்கியிருந்தார்கள். ஷைலாக், “நேரமாகின்றதே”, என்று அவசரப்பட்டான். போர்ஷியா அவனை நோக்கி, “ஓர் இராத்தல் தசை நிறுக்க நிறைகோல் வேண்டும்; அந்தோனியோவின் உடலிலிருந்து இரத்தம் மிகுதியாக வெளியானால், உயிர் நீங்கும். ஆகையால், இங்கே மருத்துவர் ஒருவர் இருக்கவேண்டும்”, என்று கூறினாள். “பத்திரத்தில் அப்படி ஒன்றும் குறிப்பிடவில்லையே? என்று யூதன் மறுத்துச் சொன்னான்.”பத்திரத்தில் குறிக்காவிட்டால் என்ன? அறம் கருதியாவது அந்த உதவி செய்தல் வேண்டாவா?" என்று போர்ஷியா கேட்டாள். “பத்திரத்தில் உள்ளதே அறம், மற்றதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை,” என்று அவன் செருக்கோடு கூறினான்.
“அப்படியா? நல்லது. சட்டம் இடந்தருகிறது. முறை மன்றமும் ஒப்புக் கொள்கிறது. ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்,” என்று அப்போது போர்ஷியா கூறினாள். ஷைலாக் களித்தான். “அந்தோனியோ! வா, உன் மார்பைக் காட்டு.” என்று கையில் கத்தி கொண்டவனாய் அந்தோனியோவை அழைத்தான். அச்சமயத்தில், “ஷைலாக், பொறு; பத்திரத்தில் குறித்தபடியே நீ பெறுவாய். இதில் ஒருதுளி இரத்தமும் குறிக்கவில்லை. ஓர் இராத்தல் தசை தவிர, கிறித்தவன் இரத்தம் ஒரு துளி சிந்தினாலும் உனது செல்வம் முழுவதும் அரசியலார் பறிமுதல் செய்துவிடுவர்,” என்று போர்ஷியா கூறினாள். இதைக் கேட்டதும் ஷைலாக் விழித்தான்; தன் எண்ணம் நிறைவேறாது என்று அறிந்து மருண்டான். ஆனால், அங்கிருந்தோரும் அரசனும் வழக்கறிஞர் திறமையை வியந்து வாழ்த்தினர்.
“ஐயா, எனக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால் அதுவே போதும்,” என்று வாடிய முகத்துடன் ஷைலாக் கேட்டான். பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான். ஆனால், போர்ஷியா தடுத்தாள். அவள் ஷைலாக்கை நோக்கி, மீண்டும் பின்வருமாறு கூறினாள். “ஷைலாக்! பத்திரத்தில் குறித்தபடியே நீ பெற வேண்டும். ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு துளி இரத்தமும் சிந்தக்கூடாது. அது மட்டுமன்று. நீ அறுக்கும் தசை ஓர் இராத்தலுக்கு மிகுதலும் கூடாது; குறைதலும் கூடாது; மிகுந்தாலும் அல்லது குறைந்தாலும் உன் உயிரே போய் விடும்; உன் செல்வமெல்லாம் இழந்து விடுவாய்,” இம்மொழிகளைக் கேட்ட ஷைலாக், “என் பணத்தைக் கொடுத்தால் போதும்; நான் போய்விடுவேன்,” என்று வேண்டினான். அப்போது பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான்; ஷைலாக் அதைப் பெற்றுக்கொள்ளச் சென்றான்; ஆனால், போர்ஷியா தடுத்தாள்.
“யூத! பொறு; உன்னை எளிதில் விடமுடியாது. நீ வெனிஸ் குடிகளுள் ஒருவன் உயிரைப் போக்க முயன்றாய்; இது மிகப்பெரிய குற்றம். அதனால், உன் செல்வம் எல்லாம் இழந்துவிட்டாய்; அச் செல்வம் அரசியலார்க்குச் சேர்ந்ததாயிற்று. உன் உயிரையும் நீ இழக்கவேண்டும். ஆனால், அதைக் குறித்து நீ அரசர் பெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்,” என்று போர்ஷியா ஷைலாக்கை நோக்கிக் கூறினாள்.
அப்போது அரசன், “ஷைலாக்! கிறித்தவர்கள் இரக்க முயைடவர்கள். நான் கிறித்துவனாகையால், உனக்கு மன்னிப்பு அளிக்கின்றேன். உன் செல்வத்தில் ஒரு பகுதி அரசியலார்க்கும், ஒரு பகுதி அந்தோனியோவுக்கும் சேரும்,” என்றான். இதை அறிந்த அந்தோனியோ, “ஷைலாக்கின் செல்வம் எனக்கு வேண்டாம். இவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் தனியே பிரிந்து சென்று ஒரு கிறித்தவனை மணந்தாள். அவளுக்கு இந்தப் பகுதி சேர்வதாக,” என்று கூறினான்.
யூதனுக்கு வேறு வழி இல்லை. அவன் எல்லாவற்றுக்கும் உடன்பட்டான், “என் உடல் நலமாக இல்லை; நான் வீட்டுக்குப் போகவேண்டும்,” என்று விடைதருமாறு மன்னனை வேண்டினான். “யூத! நீ இனியேனும் இரக்கமுள்ளவனாக வாழ்வாயாக. நீ நல்லவழிக்குத் திரும்புவாயானால், உன் செல்வத்தின் மற்றப்பகுதி உனக்கே திருப்பி அளிக்கப்படும்,” என்று அரசன் கூறினான். ஷைலாக் முறை மன்றத்தை விட்டுச் சென்றான்.
கணையாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும்
உடனே, அரசன் அந்தோனியோவை விடுதலை செய்து விட்டு பல்தசார் என்று பெயர்பூண்ட வழக்கறிஞரைப் புகழ்ந்து பேசித் தன் வீட்டிற்கு விருந்தினராக வருமாறு அழைத்தான். தான் விரைந்து திரும்ப வேண்டியிருப்பதாகவும் வரமுடியாமைக்கு வருந்துவதாகவும் கூறி, அப்பொழுதே போர்ஷியா விடைபெற்றுச் சென்றாள். பஸானியோ அவளைத் தொடர்ந்து சென்று, “ஐயா! தங்களுடைய அரிய உதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? ஷைலாக்குத் தரவேண்டிய தொகையைத் தாங்கள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்,” என்று சொல்லி அத்தொகையைக் கொடுக்க முயன்றான். அந்தோனி யோவும் தனது நன்றியறிதலைக் கூறினான். போர்ஷியா அத்தொகையைப் பெற மறுத்த போது, பஸானியோ வருந்தி, “தாங்கள் விரும்புவது எதுவாயினும் நாங்கள் தயங்காமல் தருகிறோம்; அதைக் கூறியருளுங்கள்,” என்று வேண்டினான். அவன் கையிலிருந்த கணையாழியைத் தருமாறு போர்ஷியா கேட்டாள். “இந்தக் கணையாழியைவிட விலையுயர்ந்தது, சிறந்தது வேறு எதுவானாலும் எங்கிருந்தாலும் தேடி வாங்கித் தருவேன்; இஃது என் மனைவியால் அளிக்கப்பட்டது; இதனை என்றும் பிரியேன் என்று நான் அவளிடம் வாக்களித்துள்ளேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்,” என்று பஸானியோ வேண்டிக் கொண்டான். ஆனால், அந்தோனியோ அதனைப் பொருட்படுத்தாமல் கொடுத்துவிடுமாறு கூறினான். பஸானியோ மன வருத்தத்தோடு அதனைக் கழற்றிக் கொடுத்து விட்டான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நெரிஸாவும் கிராஷியானோ விடம் கணையாழி கேட்டுப் பெற்றுக்கொண்டாள்.
போர்ஷியாவும் நெரிஸாவும் பெல்மாண்ட் அடைந்து, ஆண் உடைகளைக் கழற்றிவிட்டு, வழக்கம் போல் உடுத்திக்கொண்டு, கணவன்மாரை எதிர்நோக்கியபடி மிக மகிழ்ச்சியோடு இருந்தனர். பஸானியோ அந்தோனியோவுடன் பெல்மாண்ட் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும், “போர்ஷியா! இவர்தாம் நம்முடைய நண்பர் - உயிர்த்தோழர் அந்தோனியோ,” என்று அந்தோனி யோவைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான். எல்லோரும் கூடி மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தனர். அதற்கிடையே, கிராஷியானோ நெரிஸா இருவர்க்கும் ஒரு சச்சரவு நிகழ்ந்தது. “இவள் திருமணத்தின் போது கொடுத்த கணையாழி எங்கே என்று கேட்கிறாள். அதை வழிக்கறிஞருடன் வந்தவருக்குக் கொடுத்ததாகச் சொன்னேன். அதை எப்படிப் பிரிந்தீர்? என்று இவள் கேட்கிறாள். வேறொன்றும் இல்லை,” என்று கிராஷியானோ கூறினான். “உயிருள்ள வரைக்கும் அதைப் பிரிவதில்லை என்று அவர் உரைத்த சூள் பொய்த்து விட்டது. அதை வேறொரு பெண்ணுக்குத்தான் கொடுத்திருப்பார். அதை நான் அறிவேன்,” என்றாள் நெரிஸா. “இல்லை இல்லை. உன் அளவு உயரமுள்ள ஓர் ஆண்மகனுக்கே அதை நான் கொடுத்தேன். இஃது உண்மை. அந்தோனியோவின் அருமையான உயிரைக் காப்பாற்றினார் அந்தச் சிறந்த வழக்கறிஞர். அந்த உதவியை நாம் மறக்கலாமா! அவருடன் வந்தவர் என் கணையாழியைக் கேட்ட போது, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது தகுதியா?” என்று கிராஷியானோ உண்மையை உரைத்தான்.
இவற்றைக் கேட்ட போர்ஷியா கிராஷியானோவை நோக்கி, “நீ செய்தது குற்றமே. உன் மனைவி அளித்த கணை யாழியை நீ பிரிந்தது குற்றமே. என் காதலர் அவ்வாறு ஒரு காலும் செய்ய இசையார், என்று கூறினாள். உடனே கிராஷியானோ,”அம்மையே! அவர்தாம் முதலில் வழக்கறிஞர்க்குத் தமது கணையாழியைக் கொடுத்தார். அவரைப் பின்பற்றியே நானும் அவ்வாறு செய்தேன்", என்றான்.
போர்ஷியா சினங்கொண்டவள் போல், “அவரும் அவ்வாறு செய்தாரா? அப்படியானால், நெரிஸா கூறுவது உண்மையே. ஒரு பெண்ணுக்கு அவரும் அதைக் கொடுத்திருக்கக் கூடும்,” என்று பஸானியோவை வெறுத்துக் கூறினாள். பஸானியோ அப்போது உற்ற வருத்தம் பெரிது. “உன் மனதைப் புண்படுத்திவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன். அந்த வழக்கறிஞர் நமக்குச் செய்த அரிய உதவிக்காக நான் மூவாயிரம் பொன் தர முயன்றேன். அவர் அதைப் பெற மறுத்துவிட்டு அந்தக் கணையாழியையே கேட்டார். நீ அங்கே இருந்திருந்தால், அதைக் கொடுத்து விடுமாறு நீயே வற்புறுத்தியிருப்பாய்,” என்று அவன் போர்ஷியாவைப் பார்த்துக் கூறினான். “அந்தோ! இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாக உள்ளவன் நான்தானே,” என்று அந்தோனியோ வருந்தினான்.
“தாங்கள் ஒன்றும் அதற்காக வருந்தவேண்டா,” என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். “உன் கணவனுக்காக நான் எனது உடலையே ஈடு கொடுத்தேன். என்னைக் காப்பாற்றிய அறிஞர்க்குத் தன் மோதிரத்தை அவன் கொடுத்தான். இனி என்றும் உன் கணவன் இத்தகைய தவறு செய்யான் என்று உறுதி கூறுகிறேன்,” என்று அந்தோனியோ சொன்னான். “தங்கள் உறுதி மொழி நன்று; இக்கணையாழியை அவர்க்குக் கொடுங்கள்; இதையேனும் போற்றி வைத்திருக்குமாறு கூறுங்கள்,” என்று சொல்லி, அந்தக் கணையாழியையே அவள் அந்தோனியோ கையில் கொடுத்தாள். பஸானியோ அதைக் கண்டான் “தான் வழக்கறிஞர்க்குக் கொடுத்த கணையாழி போர்ஷியாவிடம் எவ்வாறு வந்து சேர்ந்தது,” என்று எண்ணி எண்ணி வியந்தான். அப்போது போர்ஷியா உண்மையைக் கூறினாள்; அந்தோனியோவும் பஸானியோவும் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தன் மனைவியின் அறிவையும், ஆற்றலையும் பஸானியோ பலவாறு போற்றிப் புகழ்ந்து பாராட்டினான்.
அப்போது, போர்ஷியா தன் கையிலிருந்த சில கடிதங்களை அந்தோனியோவிடம் கொடுத்தாள். அவற்றில், அவனுடைய கப்பல்களைப் பற்றிய செய்தி இருந்தது. கப்பல்கள் அழியவில்லை என்றும் எல்லாம் வெனிஸ் வந்து சேர்ந்துவிட்டன என்றும், அவை தெரிவித்தன. இச்செய்தியை அறிந்த அனைவரும் அளவிலா உவகை அடைந்தனர்.
தங்களை இன்னார் என்று அறிந்துகொள்ளாமல் வழக்கறிஞர் என்றும், அவருடன் வந்தவர் என்றும் எண்ணிப் புகழ்ந்த கொழுநரைக் குறித்துப் போர்ஷியாவும் நெரிஸாவும் நகைத்து நகைத்து மகிழ்ந்தார்கள். ஆண் உடை உடுத்து முறைமன்றம் எய்தித் தங்களால் முடியாத அருஞ்செயலை முடிப்பித்த மனைவியரைக் குறித்துப் பஸானியோவும் கிராஷியோனாவும் எண்ணி எண்ணி வியந்தார்கள். கணை யாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும் அவர்களுக்கே ஓர் இன்பக் கதையாக விளங்கின. இவை எல்லாவற்றிற்குங் காரணமாக இருந்த வெனிஸ் வணிகன் அந்தோனியோவை அவர்கள் வாழ்த்தினார்கள்.
அடிக்குறிப்புகள்
1. venice
2. Shylock
3. Antonio
4. Bassanio
5. Portia
6. Belmot
7. Gratiano
8. Nerissa
விரும்பிய வண்ணமே(As You Like It)
மற்போரில் ஆர்லண்டோ¹ வெற்றி பெறுதல்
பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்; அவனுடைய தம்பி பிரடரிக்² என்பவன் அவனுக்குப் பகைவன் ஆனான். பிரடரிக் தமையனைக் காட்டிற்குத் துரத்தி விட்டுத்தானே அரசனாக ஆளத் தொடங்கினான்.
நாட்டை இழந்த மன்னனுக்கு நெருங்கிய நண்பர் பலர் இருந்தனர். அவர்களும் அவனுடன் காட்டிற்குச் சென்றார்கள். அந்த மன்னன் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பினால், தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வது அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. இயற்கை வாழ்வு அவர்கள் நெஞ்சில் அன்பை வளர்த்தது. காட்டில் வாழும் மான் முதலிய விலங்குகளை அவர்கள் கொல்லவில்லை; அவைகளை அவர்கள் அன்போடு போற்றினார்கள். அங்குக் கிடைக்கும் காய்கனி முதலியவை களைத் தங்கள் உணவாகக் கொண்டார்கள். மன்னனும் அவர்களோடு கூடி மகிழ்ந்து காலத்தைப் போக்கி வந்தான்.
இவ்வாறு காட்டில் காலங்கழித்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ரோஸலிண்ட்.³ பிரடரிக் அவளைக் காட்டிற்கு அனுப்பவில்லை. தன் மகளாகிய ஸீலியா4 என்பவளுக்குத் தோழியாக இருக்குமாறு தன் அரண்மனையில் நிறுத்திக் கொண் டான். தந்தை பெரிய தந்தைக்குச் செய்த தீங்கு ஸீலியாவுக்குத் தெரியும். அவள் தன்னுடன் இருந்த ரோஸலிண்ட் வருந்தும்போதெல்லாம் அவளுக்குத் தேறுதல் கூறிவந்தாள்; அவளை மகிழ்விப்பதற்காகத் தன்னால் இயன்ற முயற்சி யெல்லாம் செய்துவந்தாள்.
ஒருநாள் பிரடரிக் மன்னன் முன்னிலையில் மற்போர் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காக ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் சென்றனர். புகழ்பெற்ற ஒரு பெரிய வீரனுடன் ஓர் இளைஞன் மற்போர் செய்யக் காத்திருப்பதைக் கண்டனர். அரசன் இவர்களைக் கண்டதும் அழைத்தான். அழைத்து, “இப்போரில் ஈடுபடும் இளைஞனைக் குறித்து நான் மிக மிக வருந்துகின்றேன். இந்த வீரனோ, பெயர் பெற்றவன்; பலரைக் கொன்று வெற்றி பெற்றவன். அவனோ சிறுவன்; ஒன்றும் அறியாதவன். நீங்கள் அவனை வரவழைத்து இன்மொழிகள் கூறித் தடுக்க முயற்சி செய்யுங்கள். அவன் இந்த மற்போருக்கு இரையாவது நன்றன்று,” என்று சொன்னான்.
ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் இளைஞனை வரவழைத்தனர். முதலில் ஸீலியா அவனிடம் பேசினாள்; மற்போரில் ஈடுபடாதவாறு தடுக்க முயன்றாள். பிறகு, ரோஸலிண்ட் அவனை நோக்கி, “நீ இந்த வீரனோடு போர்புரிவது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. உன்னுடைய வாழ்வு வீணாக அழிந்து விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை; நன்றாக எண்ணிப் பார்த்து, மற்போரில் அகப்படாமல் விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று வேண்டினாள். இம்மொழிகள் இளைஞனுக்கு ஊக்கம் ஊட்டின. “எவ்வகையிலும் நான் வெற்றி பெற்று என் வலிமையை இவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்,” என்று அவன் தன்னுள் எண்ணினான். “நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்காக நன்றி கூறுகின்றேன். ஆனால், உங்கள் விருப்பத்தின்படி நான் விலகமாட்டேன். என்மீது சினம் கொள்ளல் வேண்டா. வெற்றி பெறுமாறு என்னை வாழ்த்துங்கள். ஒருகால் நான் தோற்று மாள நேர்ந்தால், என்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை. ஆகையால் வெற்றி ஆயினும் ஆகுக; தோல்வி ஆயினும் ஆகுக. நான் பின் வாங்குதல் இல்லை,” என்று அஞ்சாது மறுமொழி உரைத்தான்.
மற்போர் தொடங்கிவிட்டது. ஸீலியாவும் ரோஸலிண்டும் கவலையோடு நோக்கிக் கொண்டிருந்தனர். ஸீலியாவைவிட ரோஸலிண்ட் மிகுந்த கவலை கொண்டாள். தன்னைக் குறித்துக் கவலைப்படும் நண்பர் ஒருவரும் தனக்கு இல்லை என்று இளைஞன் கூறிய சொற்கள் அவள் உள்ளத்தில் பதிந்து கிடந்தன. தானும் அவனைப்போலவே திக்கற்றவளாக இருத்தலை எண்ணி மனம் உருகினாள்; அவளுடைய அன்பும் இரக்கமும் மிகுந்தன.
இவ்விருவருடைய அன்பும் ஊக்கம் அளித்தமையால், அவன் மனத்திட்ப முடையவனாய் மற்போர் செய்து, இணையிலா வெற்றி பெற்றான். அவனோடு பொருத வீரன் உடல்முழுதும் புண்பட்டு வருந்திச் சோர்ந்தான்.
பிரடரிக் மன்னன் இளைஞனுடைய வீரத்தை மிகப் போற்றினான். “நீ யார் மகன்? உன் பெயர் என்ன?”என்று அவனை அன்போடு வினவினான். “பெருந்தகையே! சர்ரோலண்ட்5 என்ப வருடைய இளைய மகன் நான். என் பெயர் ஆர்லண்டோ,” என்று இளைஞன் வணங்கி விடையிறுத்தான்.
சர் ரோலண்ட் என்ற பெயரைக் கேட்டதும், அரசன் கொண்டிருந்த அன்பு அகன்றது; அவன் உள்ளத்தில் வெறுப்பு நிறைந்தது. “என் தமையன் காட்டிற்குச் சென்றபோது அவனுடன் சென்று வாழ்ந்த நண்பர்களுள் சர்ரோலண்ட் என்பவனும் ஒருவன் அல்லனோ? இந்த இளைஞன் அவனுடைய மகனாக இருக்கின்றானே!” என்று வருந்தித் தன் அரண்மனை சேர்ந்தான்.
மகளிர் இருவரும் காட்டில் வாழ்தல்
தன் தந்தைக்கு நண்பனான சர்ரோலண்ட் என்பவன் மகனே இவ்விளைஞன் என்று அறிந்த ரோஸலிண்ட் பெரிதும் உவந்தாள்; ஸீலியாவுக்குத் தன் மகிழ்ச்சியை அறிவித்தாள். இருவரும் அவனிடம் சென்றனர். தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கச் சென்றவர்கள் அவன் முகவாட்டத்தைக் கண்டு வருந்தினார்கள். அரசன் வெறுப்பே அவன் வருத்தத்திற்குக் காரணமென்று அறிந்தார்கள். “உன்னுடைய வீரத்தை வியந்து வாழ்த்துகிறோம்; உனக்குக் கவலை ஒன்றும் வேண்டா; மகிழ்ந்திரு,” என்று அவனைத் தேற்றினார்கள். அப்போது ரோஸலிண்ட் தன் கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தை அவனுக்குத் தந்து, “இதனினும் சிறந்த பரிசிலை உனக்குக் கொடுக்க முடியவில்லையே என்று நான் மிகவும் வருந்துகின்றேன்,” என்று கூறினாள்; பிறகு இருவரும் அரண்மனைக்குத் திரும்பினர்.
ரோஸலிண்ட் அடிக்கடி ஆர்லண்டோவைப் பற்றித் தன் தங்கையிடம் பேசினாள். அவள் அவன் மீது காதல் கொண்டிருத்தலை ஸீலியா அறிந்தாள்.
ஸர் ரோலண்டின் மகனைக் கண்டது முதல் அரசனுக்குத் தமையன் மீதுள்ள வெறுப்பு வளர்ந்து வந்தது. தமையனுடைய மகளாகிய ரோஸலிண்டைப் பற்றி யாரேனும் புகழ்ந்து பேசினால், அஃது அவனுடைய பொறாமையைத் தூண்டும். ஒருநாள் அவன் ஸீலியாவின் அறைக்குச் சென்றபோது, ரோஸலிண்ட் ஆர்லண்டோவைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்பேச்சைக் கேட்ட மன்னன் வெகுண்டு, “ரோஸலிண்ட்! நீயும் காட்டிற்குச் சென்று உன் தந்தையோடு இரு; இங்கு இருத்தல் கூடாது,” என்று கட்டளையிட்டான். ஸீலியா மிக்க மனவருத்தம் அடைந்தாள். தமக்கையாகிய ரோஸலிண்ட் தன்னைவிட்டுப் பிரிதல் கூடாது என்று தந்தையைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். பிரடரிக் தன் மகளின் வேண்டுகோளையும் பொருட்படுத்தவில்லை; ரோஸலிண்ட் காட்டிற்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினான்.
தந்தையின் மனத்தை அறிந்த ஸீலியா தானும் தமக்கை யுடன் காட்டிற்குச் செல்லத் துணிவு கொண்டாள். இருவரும் அன்றிரவு ஆர்டென்⁶ என்ற காட்டிற்குப் புறப்பட்டனர். அவ்விடத்தில் தந்தையைக் காண வேண்டுமென்பது ரோஸலிண்ட் விருப்பம். வழியில் ஏதேனும் இடையூறு நேராதவாறு தடுப்பதற்காக, வழக்கமான உடைகளை அவர்கள் உடுக்கவில்லை. ரோஸலிண்ட் ஆண் உடை உடுத்தாள்; கனிமீட்⁷ என்று பெயர் வைத்துக் கொண்டாள். ஸீலியா அலைனா⁸ என்று பெயர் பூண்டு, நாட்டுப் புறத்துச் சிறுமிபோல் தோன்றினாள். இவ்வாறாக நெடுந்தூரம் நடந்து சென்ற அவர்கள் அக்காட்டை அடைந்தார்கள்.
அங்கே அவர்கள் பசியால் வருந்தினார்கள். ஸீலியா மிகக் களைப்பு அடைந்தவளாய்ச் சோர்ந்தாள். ரோஸலிண்ட் தன் நிலையை வெளியே சொல்லாதவளாய் வருந்தினாள்; என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்; அப்போது அவ்வழியே ஒருவன் வரக்கண்டாள். அவனிடம் தந்தையின் நிலைமையைக் கூறி எங்கிருந்தாவது சிறிது உணவு பெற்றுத் தருமாறு வேண்டினாள். அவன் ஓர் இடையனுடைய வேலையாள். அவனிடம் உணவு சிறிதும் இல்லை. அவன் அவர்களைத் தன் தலைவனிடம் அழைத்துச் சொன்றான். தலைவனாகிய இடையன் தன்னுடைய வீட்டையும் ஆட்டையும் விற்று விடமுயன்றான். அதனை அறிந்த அவர்கள் அவற்றை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு, உண்ண உணவும் இருக்க இல்லமும் கிடைக்கப் பெற்றவளாய் மகிழ்ந்தார்கள்; தந்தையைத் தேடிக் காணும் வரை அங்கு இருக்கத் துணிந்தார்கள்.
ரோஸலிண்ட் இடையனாகவும், ஸீலியா இடைச்சி யாகவும் வாழ்ந்த வாழ்வு அவர்களுக்கே புதுமையாக இருந்தது. ஆனாலும் ரோஸலிண்ட் ஆர்லண்டோவை மறக்கவில்லை; அடிக்கடி அவனைக் குறித்து எண்ணி வந்தாள்.
ஆர்லண்டோ அரசனுடன் வாழ்தல்
ஆர்லண்டோவின் தந்தை இறந்துவிட்டார்: அவர் இறக்கும் போது, மூத்த மகனாகிய ஆலிவர்9 என்பவனைப் பார்த்து, ‘நீதான் உன் தம்பி ஆர்லண்டோவைக் காப்பாற்ற வேண்டும்,’ என்று கூறினார். ஆனால், ஆலிவர், அதற்கு முற்றிலும் மாறாக நடந்தான்; தம்பியின்மேல் பொறாமை கொண்டான். நன்மை ஒன்றும் செய்திலன்; தீமை மிகப்பல செய்தான். மற்போரில் ஆர்லண்டோவை ஈடுபடுமாறு வற்புறுத்தியவனும் இவனே. ஆர்லண்டோ அறிவிற் சிறந்தவனாக விளங்கினான். அவன் அண்ணனுடைய கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான். அவன் வெற்றிமேல் வெற்றி பெற்று ஊக்கமுடன் வாழ்வதைக் கண்டு ஆலிவர் மனங் கொதித்தான்.
ஒருநாள் ஆர்லண்டோ இல்லாதபோது, “அந்தப் பயலை நான் தொலைத்துவிடவேண்டும். அதற்கு வழிகண்டேன். அவன் உறங்கும் போது அந்த அறைக்குத் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன்,” என்று ஆலிவர் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். இதைக் கேட்டறிந்தான் ஆதம்¹⁰ என்னும் வேலையாள்; ஆர்லண்டோ வீடு திரும்பியதும் அவனுக்குத் தெரிவித்தான். என்ன செய்வது என்று இருவரும் எண்ணி ஒரு முடிவிற்கு வந்தனர்.
அந்த முடிவின்படி, ஆர்லண்டோ, ஆதம் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்; நெடுந்தூரம் அலைந்தனர்; இறுதியில் ஆர்டென் காட்டிற்கே வந்து சேர்ந்தனர். வழி நடந்த களைப்பு ஒருபுறம்; பசியின் கொடுமை ஒரு புறம்; இவற்றால் அவர்கள் வாடினார்கள் ஆதம் வயதானவன்; ஆகையால் அடி எடுத்துவைக்கவும் முடியாத அவ்வளவு சோர்வு உற்றான்; கீழே விழுந்தான், “பசி மிகக் கொடியது; என்னை வாட்டுகின்றது; எனக்கு இடுகாடு இதுதான் போலும்,” என்று கூறினான். உடனே, ஆர்லண்டோ அவனைத் தூக்கிச் சென்று, மரநிழலில் இருக்கச் செய்து, “இதோ வந்துவிட்டேன்; நான் உணவு கொண்டுவந்து உன்னைக் காப்பாற்றுவது உறுதி. நீ அஞ்சாதே,” என்று சொல்லிவிட்டு விரைந்து ஓடினான்.
விரைந்து ஓடின ஆர்லண்டோ ஓர் இடத்தில் சிலர் அமர்ந்து உணவு உண்பதைக் கண்டான். “அந்த உணவை நீங்கள் உண்ணலாகாது; பொறுங்கள்,” என்று சொல்லிக்கொண்டே, தன்வாளை உறையிலிருந்து எடுத்துக்காட்டி அச்சுறுத்த முயன்றான். அங்கு இருந்தவர்களில் பிரடரிக் தமையனாகிய அரசனும் ஒருவன். அவன் ஆர்லண்டோவின் செயலைக் கண்டு வியந்தான். “நீ யார்? ஏன் இப்படிச் செய்கின்றாய்?” என்று வினவினான். “பசியின் கொடுமையால் இவ்வாறு செய்கிறேன்” என்று ஆர்லண்டோ விடை கூறினான். “எங்களுடன் நீயும் அமர்ந்து உண்ணலாமே,” என்றான் அரசன். இச்சொற்களைக் கேட்டதும் ஆர்லண்டோ வெட்கமுற்று, வாளை உறையில் இட்டு, அரசரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான், “ஐயா, இவ்வாறு அச்சுறுத்தினால் உணவு பெற முடியும் என்றும், இங்கே வாழ்கின்றவர்கள், அப்படிப்பட்ட கீழ்மக்களாக இருப்பார்கள் என்றும் தவறான எண்ணங் கொண்டிருந்தேன்,” என்று கூறினான்.
“அப்பா! எங்களைக் காட்டு விலங்குகள் என்று கருதவேண்டா. நாங்கள் பட்டணங்களில் வாழ்ந்த மக்களே; ஏழைகளின் துன்பம் எங்களுக்குத் தெரியும். விருந்தோம்பும் அறமும் எங்களுக்குத் தெரியும். ஈகையும் இரக்கமும் எங்களுக்குப் புதியன அல்ல. எங்களோடு உண்டு பசி தீர்க. பிறகு எல்லாம் பேசலாம்,” என்று அரசன் அவனை உண்ணுமாறு அழைத்தான்.
“ஐயா! உங்கள் அன்பே அன்பு! நான் எனக்காக உணவு கேட்கவில்லை. என்னோடு நடந்து வந்து சோர்ந்து பசியால் நலிந்து இறக்குந் தறுவாயில் உள்ள கிழவன் ஒருவனுக்காகவே உணவு கேட்டேன்,” என்று ஆர்லண்டோ தெரிவித்தான். “அப்படியானால் விரைந்து சென்று அவனை அழைத்து வருக; அவன் வருகின்ற வரைக்கும் நாங்களும் உண்ணாமல் காத்திருப்போம். விரைந்து செல்க,” என்று வேண்டினான் அரசன். ஆர்லண்டோ கார் எனக் கடிது சென்றான். கிழவனைத் தூக்கிக் கொண்டு விரைந்து மீண்டான். கிழவன் கண்திறந்து நோக்கினான். அனைவரையும் கண்டான். அரசனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஆதமும் ஆர்லண்டோவும் உண்டனர். அப்போது அரசனுடைய நண்பன் ஒருவன் இன்னிசை பாடினான். வாயுணவும் செவியுணவும் பசியையும் களைப்பையும் போக்கின; ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தன.
அரசன் ஆர்லண்டோவை அன்போடு நோக்கி “உன் வரலாற்றை இனிக்கூறுக,” என்றான். தான் சர் ரோலண்டின் மகன் என்பதை அவன் அறிவித்தவுடன், அரசன் அன்புமிக்கவனாய், தனக்கும் சர் ரோலண்டுக்கும் இருந்த நட்பை நினைந்து உருகினான்; ஆர்லோண்டாவையும் கிழவனையும் தன்னுடன் இருக்கச் செய்தான்.
ரோஸலிண்ட் தந்தையைக் காணுதல்
அங்கே இருந்துவரும் நாளில், ஆர்லண்டோ ரோஸலிண்ட் என்பவள் மீது தான் கொண்ட அன்பைப் பெருக்கினான்; நாள்தோறும் பலமுறையும் அவளை நினைத்துக் கொண்டான்; பல பாட்டுக்களையும் பாடினான். அக்காட்டில் இருந்த பல மரங்களிலும் அவளுடைய பெயரைப் பொறித்து வந்தான்.
அரசன் முதலானவர்கள் இருந்த இடம் காடு. ஆகையால் அங்கே இடையர்கள் பலர் வந்து போவது உண்டு. இடையர்களில் ஒருவனாக வாழ்ந்துவந்த ரோஸலிண்ட், தன் பெயர் இவ்வாறு மரங்களில் பொறிக்கப் பட்டிருதலை அறிந்தாள். “இவ்வாறு யார் எழுதி வைத்திருக்கக்கூடும்? அவர் நோக்கம் என்ன? இதன் காரணத்தை அறிவது எப்படி?” என்று பலவாறு ரோஸலிண்டும் ஸீலியாவும் எண்ணத் தொடங்கினார்கள்.
ஒருநாள் அவர்கள் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் வருதலைக் கண்டார்கள். அவன் நெருங்கி வந்தவுடன், கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தைக் கண்டு, அவன் ஆர்லண்டோ என்பதை அறிந்தார்கள். ஆனால், இவர்கள் யார் என்பதை அவன் தெரிந்து கொள்ளவில்லை. யாரோ ஓர் அழகான இடைப்பையன் என்று எண்ணி, அவன் ரோஸலிண்டுடன் பேசினான். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, “யாரோ ஒரு பித்தன் எங்கள் மரங்கள் எல்லாவற்றிலும் என்ன என்னவோ எழுதிப் பாழ்படுத்துகிறான். அவனைக் கண்டால் நான் வாளாவிடேன்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.
“நான்தான் அந்தப் பித்தன்”, என்றான் ஆர்லண்டோ, “அத்தன்மையான பித்து உன்னிடம் இருப்பதாகத் தெரிய வில்லையே,” என்றாள் ரோஸலிண்ட், “உண்மையாகக் கூறுகின்றேன், அப்பித்து என்னிடம் உள்ளது. அதற்காக எனக்கு நீங்கள் சொல்லக்கூடிய நன்மொழிகள் என்ன?” என்று ஆர்லண்டோ கேட்டான். “நீ நாள்தோறும் எங்களிடம் வரமுடியுமானால், அதை ஒழிக்க வழி கூறுகின்றேன். அவ்வாறு வந்தால், நாளடைவில் நீயே வெட்கமடையும் படியாகச் செய்துவிடுவேன்; உன்னுடைய பித்து ஒழியும்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.
அவளுடைய பேச்சில் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. ஆனாலும், அவ்வாறே வருவதாக அவன் உடன் பட்டான்; நாள்தோறும் அவர்கள் இருந்த வீட்டிற்கு வந்து வந்து போனான். அவன் மனம் சிறிதும் மாறவே இல்லை. அவன் அவர்களோடு நாள்தோறும் பழகி விளையாடிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த இடைப்பையன்தான் ரோஸலிண்ட் என்பதை அறியவே இல்லை; தான் ரோஸலிண்ட் மீது கொண்டிருந்த அன்பை மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான். ரோஸலிண்ட் அவன் உள்ளத்தில் இருந்த உண்மை அன்பை உணர்ந்துகொண்டாள்; இவ்வாறே நாட்கள் பல கழிந்தன.
ஆர்லண்டோவின் பழக்கத்தால், தன்னுடைய அன்பான தந்தை வாழுமிடம் வாழும்வகை முதலியவைகளை ரோஸலிண்ட் தெரிந்து கொண்டாள். எனினும், அந்த அரசனே தன்னுடைய தந்தை என்பதை அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஒருநாள் ரோஸலிண்ட் காட்டு வழியில் தந்தையைக் கண்டாள். அரசன் தன்னுடைய மகளைப் பற்றி ஒன்றும் அறிந்துகொள்ளவில்லை. அவள் ஆண் உடை உடுத்தி இருந்தமையால், அவளை ஓர் இளைஞன் என்றே அவன் கருதினான். “தம்பி! நீ யார்?” என்று அவன் ரோஸலிண்டைக் கேட்டபோது, அவள், “ஐயா! தங்களைப்போல் நானும் உயர்குடியில் பிறந்தவனே,” என்றாள். இவ்விடையைக் கேட்ட அரசன் வியந்தான். “இவனைப் பார்த்தால் இடையனாகத் தெரிகின்றான்; நம்மைப் போல உயர் குடியில் பிறந்தவன் என்று கூறுகின்றான்,” என்று சிரித்தான். ரோஸலிண்ட் தொடர்ந்து ஒன்றும் கூறாமல் வாளா இருந்தாள். “இப்போது உண்மையைக் கூறாமல் இருத்தல் வேண்டும்; பொறுத்திருந்து பிறகு கூறலாம்,” என்று அவள் எண்ணினாள்; ஒன்றும் கூறாமல் வந்து விட்டாள்.
ஆலிவர் ஸீலியாவைக் காதலித்தல்
ஆர்லண்டோ வழக்கம்போல் ரோஸலிண்ட் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒருநாள் போகும் வழியில் மண்மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கண்டான். அவன் கழுத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றியிருத்தலையும் பார்த்தான். ஆர்லண்டோ நெருங்கிவரக் கண்ட அப்பாம்பு அவன் கழுத்தை விட்டு விரைந்து ஓடி மறைந்து கொண்டது. அவன் இன்னும் நெருங்கிச் சென்றபோது, பெண்சிங்கம் ஒன்றைக் கண்டான். தூங்குகின்றவன் விழித்து எழுந்தவுடன் அவனை அடித்துக் கொல்வதற்காக அது காத்திருந்தது, ஆர்லண்டோ அஞ்சாமல் சென்று தூங்குகிறவன் யார் எனக் கண்டான்; அவன் தன் அண்ணனாகிய ஆலிவர்தான் என்று அறிந்தான். அப்போது, அவன் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றின. அவன் தனக்குப் பல தீங்கு செய்தது, தன்னைக் கொளுத்திக் கொல்ல முயன்றது, அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தானும் வேலையாளும் காட்டிற்கு வந்தது முதலிய எல்லாவற்றையும் அவன் நினைத்தான். “இத்தகைய கொடியவனுக்கு ஏன் உதவி செய்தல் வேண்டும்? அவனைப் பாம்பு கடித்தாலும் என்ன? சிங்கம் கொன்றாலும் என்ன?” என்று முதலில் எண்ணினான். ஆயினும் இரக்கமுள்ள அவன் மனம் உடனே மாறிவிட்டது; உடன் பிறந்த அண்ணன் என்ற அன்பு வந்தது. உடனே அவன் தன் வாளை உருவிக்கொண்டு சென்று ஆண்மையுடன் சிங்கத்தை எதிர்த்தான்; அதனைக் கொன்றான். அவ்வாறு அதனை எதிர்த்துக் கொன்றபோது அஃது அவனுடைய கையில் கீறிப் புண்படுத்திவிட்டது.
அவன் சிங்கத்தை எதிர்த்துக் கொண்டிருந்தபோது ஆலிவர் விழித்து எழுந்து தன் தம்பியைப் பார்த்தான். நிகழ்ந்தன எல்லாம் அறிந்தான்; அவன் ஆற்றிய அரிய உதவியை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்கு உருகினான்; தான் செய்த கொடுமைகளை நினைந்து நினைந்து மனம் மயங்கி வருந்தினான்; குற்றம் உணர்ந்தான்; குணவான் ஆனான்; “அன்பு நிறைந்த தம்பி! எனது பொறாமையால் யான் செய்த எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்,” என்று வேண்டினான். ஆர்லண்டோ அண்ணன் மனம் மாறியதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தான். பழையன எல்லாம் மறந்து விட்டதாக அண்ணனிடம் கூறினான். எங்கிருந்தாலும் தம்பியைத் தேடிக்கொல்லும் துணிவு கொண்டு காட்டிற்கு வந்த ஆலிவர் அன்று முதல் உண்மையான அன்புடையவனாய் ஆர்லண்டோவுடன் கூடிவாழத் தொடங்கினான்.
ஆர்லண்டோவின் கைப்புண்ணிலிருந்து இரத்தம் பெருகிற்று; மிகுதியாகப் பெருகிற்று. அக்காரணத்தால், அவன் அன்று ரோஸலிண்ட் இருப்பிடத்திற்குச் செல்லவில்லை; தனக்கு உற்றதை ரோஸலிண்டுக்கு அறிவிக்குமாறு அண்ணனை அனுப்பினான்.
ஆலிவர் அவ்விடம் சென்று அவர்களைக் கண்டு நிகழ்ந்தன எல்லாம் கூறினான்; தான் செய்த தீங்குகளையும் அவன் செய்த பேருதவியையும் விளக்கமாக உரைத்தான்; அவன் கையினின்றும் பெருகிய இரத்தத்தைத் துடைத்த சிறு துணியைக் காட்டினான். அச்சிறு துணியைக் கண்டதும், ரோஸலிண்ட் மயங்கிச் சோர்ந்தாள். ஆனால், ஆலிவர் மனம் உருகிப் பேசின பேச்சைக் கேட்ட ஸீலியா அவன் மீது பேரன்பு கொண்டாள்; அவளுடைய அன்பைக் குறிப்பால் அறிந்த ஆலிவரும் அவளை மணக்க விரும்பினான். ரோஸலிண்ட் மயக்கம் தெளிந்து எழுந்தபின், “எனக்கு உண்மையாக மயக்கம் வரவில்லை. மயக்கம் வந்ததுபோல் நடித்துக் காட்டினேன். இதை ஆர்லண்டோவுக்குச் சொல்லுக,” என்றாள்.
ஆலிவர் மீண்டு சென்றதும், தன் தம்பிக்கு அவ்வாறே ரோஸலிண்டின் மயக்கத்தைப் பற்றிக் கூறினான்; தான் ஸீலியாமீது காதல் கொண்டதையும் உரைத்தான்; “நான் அவளை மணந்து கொண்டு இக்காட்டிலேயே வாழ ஆவல் கொண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தான். ஆர்லண்டோ அவ்விருப்பம் நிறைவேறுமாறு தான் முயற்சி செய்வதாகக் கூறினான். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ரோஸலிண்ட் வருதலைக் கண்டான் ஆர்லண்டோ. “அண்ணா இது நல்ல சமயம் இவன் வந்து விட்ட படியால், இவனுடைய தங்கை தனியாக இருப்பாள். நீ சென்று அவள் திருமணத்திற்கு உடன்படுகின்றாளா என்று தெரிந்துகொண்டு வரவேண்டும்,” என்று அண்ணனிடம் சொன்னான். ஆலிவரும் உடனே புறப்பட்டுச் சென்றான்.
ரோஸலிண்ட் வந்ததும், அவனுடைய கைப் புண்ணைக் குறித்துக் கேட்டு அறிந்தாள். பிறகு, ஆலிவர் காதலைப்பற்றிய பேச்சு நிகழ்ந்தது. அப்போது ஆர்லண்டோ, “நாளையே அவர்கள் இருவர்க்கும் திருமணம் நடைபெறும். ஆனால், எனக்கும் ரோஸலிண்டுக்கும் திருமணம் என்று நடைபெறுமோ? நாளையே அதுவும் நடைபெறக் கூடுமானால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவேன்,” என்று உண்மையாகவே தான் கொண்ட பேராவலைத் தெரிவித்தான். “நீ உண்மையாகவே காதல் கொண்டு ரோஸலிண்டை மணக்க விரும்பினால், என்னால் ஓர் உதவி செய்ய முடியும். எனக்கு என்னுடைய சிறிய தந்தையார் கற்றுக்கொடுத்த மந்திர வலியால் நாளையே அவளை இங்கு வருவிக்கின்றேன்,” என்று ரோஸலிண்டு கூறினாள். ஆர்லண்டோ அதனை நம்பவில்லை. ரோஸலிண்ட் அவனுக்கு உறுதி கூறினாள்.
ஆலிவர் ஸீலியாவின் உடன்பாடு பெற்று மீண்டான். ஆர்லண்டோ அவனுடன் சென்று அரசனிடம் எல்லாம் கூறினான்.
இழந்த உரிமை எய்தப் பெறுதல்
திருமணங்கள் இரண்டனையும் காண்பதற்காக அரசனும் நண்பர்களும் கூட்டினார்கள்; மணமகள் ஒருத்தி இருத்தலும் மற்றொருத்தி இல்லாமையும் கண்டு வியந்தார்கள்! “இடையன் கனிமீட் வேண்டுமென்றே ஆர்லண்டோவை ஏமாற்றுகின்றான்,” என்று எல்லோரும் எண்ணினார்கள். அரசன் ஆர்லண்டோவை அழைத்து, “கனிமீட் கூறுவதை நீ ஏன் நம்பினாய்?” என்று கேட்டான். இதற்குள் கனிமீட் ஆகிய ரோஸலிண்ட் வந்துவிட்டாள். அவள் அரசனை நோக்கி, “தங்கள் மகள் இவனை மணப்பது தங்களுக்கு உடன்பாடுதானா?” என்று கேட்டாள். அரசன், தன் மகள் எவ்வாறு இங்கு வரமுடியும் என்று வியந்தவனாய், “அவ்வாறு அவள் ஆர்லண்டோவை மணப்பது எனக்கு உடன்பாடே, அவளுடைய திருமணத்தின் போது சீர் சிறப்பாக அளிக்க என்னிடம் ஒன்றும் இல்லையே. நாட்டை இழந்து காட்டில் வாழும் நான் என்ன செய்தல் கூடும்?” என்று வருந்தினான். உடனே அவள் ஆர்லண்டோவை நோக்கி, “நீ விரும்புகின்ற ரோஸலிண்ட் இங்கே வந்துவிட்டால், அவளை மணக்க உடன்பட்டிருக்கிறாய் அல்லையோ?” என்று வினவினாள். “எனக்கு அது முற்றிலும் உடன்பாடே. ஆனால் அவளை மணப்பதற்கு ஏற்றவாறு எனக்கு அரசுரிமை இல்லையே என்று வருந்துகின்றேன்,” என்றான் அவன்.
தமக்கையும் தங்கையும் அங்கிருந்தவர்களை விட்டுச் சென்றனர்; இடையனும் இடைச்சியுமாக உடுத்தியிருந்த உடைகளைக் களைந்தனர்; தங்களுடைய பழைய உடைகளை அரண்மனையில் வாழும்போது அணிந்திருந்த அழகிய உடைகளை எடுத்து உடுத்தினர். மந்திரமும் மாயமும் இன்றியே இடையன் பெண் ஆனான். பிறகு இருவரும் திருமணக் கூட்டத்தாரிடம் வந்தனர்.
அவர்கள் அங்கு வந்து சேர்வதற்குள், அரசன் தன் மனத்தில் எழுந்த ஓர் ஐயத்தை ஆர்லண்டோவிடம் வெளியிட்டான். “அந்த இடையன் கனிமீட் என் மகள் ரோஸலிண்ட் போன்று தோன்றுகிறான் ,” என்று சொன்னான். “ஆம்; அவ்வாறுதான் தோன்றுகிறான்,” என்றான் ஆர்லண்டோ. இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டிருக் கையில், ரோஸலிண்ட், ஸீலியா இருவரும் அங்கு வந்துவிட்டனர்.
ரோஸலிண்ட் அங்கு வந்தவுடன் அரசனை வணங்கி, “தந்தையே எனக்குத் தங்கள் நல்வாழ்த்து வேண்டும்,” என்று வேண்டினாள். “இஃது என்ன விந்தை!” என்று அங்கிருந்தோர் அனைவரும் வியந்தனர். அப்போது ரோஸலிண்ட் ஒன்றையும் மறைக்காமல் தன் சிற்றப்பன் தன்னை வெறுத்துக் காட்டிற்குப் போக்கியது, தங்கை ஸீலியாவும் தன்னைத் தொடர்ந்து வந்தது காட்டிற்கு வந்தபின் இடையனும் இடைச்சியுமாக வாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் தந்தையிடம் விரிவாக உரைத்தாள். இவற்றை அறிந்த எல்லோரும் வியப்பும் களிப்பும் கொண்டனர். திருமணங்கள் இரண்டும் நடைபெற்றன. மர நிழலில் அமர்ந்து எல்லோரும் வியந்து உண்டனர்.
அப்போது, அங்கு ஒருவன் வந்து அரசனுக்கு ஒரு செய்தி அறிவித்தான். “அரசே வாழ்க, வாழ்க! தங்கள் நாட்டைத் தங்களுக்கே கொடுத்துவிட்டார் தங்கள் தம்பியார்; தாங்கள் முன்போலவே முடிசூடி நாட்டை ஆண்டருளல் வேண்டும். இதனைத் தெரிவிக்கவே நான் இப்போது வந்தேன்” என்றான்.
தன்மகள் ஸீலியா ரோஸலிண்டுடன் ஓடிவிட்டாள் என்பதை அறிந்ததும் பிரடரிக் சினங்கொண்டான். நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் காட்டிற்குச் சென்று தமையனோடு வாழ்ந்து வருதல் அவன் மனத்தைப் புண்படுத்தியது; தமையன்மீது கொண்டிருந்த வெறுப்பும் மிகுந்தது. ஆகவே, அவன் ஒரு பெரும்படையுடன் சென்று தமையனையும் அவனுடைய நண்பர்களையும் கொல்லத் துணிந்தான். அவ்வாறே அவன் படையுடன் புறப்பட்டுக் காட்டை நோக்கி வரும்போது, வழியில் துறவி ஒருவர் எதிர்ப்பட்டார். அவர் மெய்யுணர்வு உடையவர் இறைவன், உயிர், பிறவிப் பயன் இவற்றைக் குறித்து அவருடன் பிரடரிக் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தான். அவன் மனம் பெரிய மாறுதல் அடைந்தது. உண்மை ஒழுக்கமும் தூய துறவுமே உயிர்க்கு உறுதி பயப்பன என்று அவன் தெளிந்தான்; தமையனுக்கே நாட்டைத் தந்து, துறவியாய் வாழத் துணிந்தான்; தமையனுக்குத் தான் இழைத்த தீமையை எண்ணி நொந்தான்; நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வதற்குக் காரணமாக இருந்த தன் கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான்; உடனே, தமையனிடம் ஓர் ஆள் அனுப்பினான்; அவன் தான் மேற்குறித்த செய்தியை அரசனுக்கு அறிவித்தவன், காட்டில் வாழ்ந்த பெருமக்களும் நாட்டிற்குச் சென்று தங்கள் செல்வத்தை மீண்டும் பெற்றுச் சிறப்புடன் வாழுமாறு வேண்டிக் கொள்வதாகவும், பிரடரிக் அந்த ஆள் வாயிலாகவே செய்தி அனுப்பியிருந்தான். இச் செய்தியை எதிர் பாராமல் அறிந்த அனைவரும் வியந்து மகிழ்ந்தனர். திருமணக் கொண்டாட்டம் முன்னிலும் பன்மடங்கு இன்பமாக மாறியது.
ஸீலியா பேருவகை கொண்டாள்; தமக்கை ரோஸலிண்டை வாழ்த்தினாள். அவள் பெற்ற பெருஞ்சிறப்பு, தான் பெற்றதே ஆகும் என்று தெரிவித்தாள். ஸீலியாவின் உள்ளத்தில் பொறாமையோ வருத்தமோ எழவில்லை. தமக்கையினிடம் அவளுக்கு இருந்த உண்மையான அன்பு அத்தகையது.
அரசன் நாட்டிற்குச் சென்றான்; முடி சூடினான், தன்னுடன் காட்டிற்கு வந்து தன் பொருட்டுத் துன்பமுற்ற நண்பர்களுக்கு நன்றி கூறினான். எல்லோரும் இன்புற்றனர்; எல்லாம் விரும்பிய வண்ணமே ஆயின.
அடிக்குறிப்புகள்
1. Orlanda 2. Frederick
2. Rosalind 4. Celia
3. Sir Rowland 6. Arden
4. Ganymede 8. Aliena
5. Oliver 10. Adam
மாக்பெத்(Macbeth)
மாயக்காரிகள் வருபொருள் உரைத்தல்
ஸ்காட்லாந்து¹ என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த சிறிய நாடாகும். அதை டன்கன்² என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த சிற்றூர்கள் பலவற்றுள் கிளாமிஸ்³ என்னும் ஓர் ஊர்க்கு மாக்பெத்⁴ என்பவன் தலைவனாக இருந்தான். அவன் அரசனுக்கு நெருங்கிய உறவினன்; அஞ்சாமை, ஆண்மை, ஆற்றல் எல்லாம் ஒருங்கு அமைந்தவன்; எனவே, அரசன் முதலான எல்லோரும் அவனை நன்கு மதித்திருந்தனர்.
ஒருமுறை உள் நாட்டில் பெரியதொரு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடக்கும் பொருட்டு அரசன் மாக்பெத்தையும் அவனுக்குத் துணையாகப் பாங்கோ⁵ என்னும் தலைவனையும் அனுப்பியிருந்தான். கலகப் படையுடன் அவர்கள் பெரும்போர் புரிந்தனர். மாக்பெத்தின் இணையிலா வீரம் அப்படையைச் சிதறடித்தது.
வெற்றியுடன் மீண்டுவந்த மாக்பெத், பாங்கோ இருவரும் வழியில் ஒரு காட்டைக் கடக்க நேர்ந்தது. அவ்வழியில் அவர்களுக்கு எதிரே பெண் உருவங்கள் மூன்று தோன்றின. அப்பெண் உருவங்களுக்குத் தாடி அமைந்திருத்தலை அவர்கள் கண்டார்கள். அவ்வுருவங்கள் மக்கள் உருவங்களாகத் தோன்றவில்லை. அவைகளை நெருங்கியவுடன் மாக்பெத், “நீங்கள் யார்?” என்று வினவினான். அப்போது முதல் உருவம் “கிளாமியஸ் தலைவரே! வாழ்க!” என்று மாக்பெத்தை வாழ்த்தியது. இதனைக் கேட்டதும் அவன் வியந்தான். “என் பெயர் இவர்களுக்குத் தெரியுமாறு எங்ஙனம்?” என்று எண்ணினான். இரண்டாம் உருவம். “கௌடர் தலைவரே! வாழ்க!” என்றது. இதனைக் கேட்டதும், அவன், “இப்பெயருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லையே,” என்று எண்ணி மிகுதியான வியப்பு அடைந்தான்; மூன்றாம் உருவம், “ஸ்காட்லாந்து மன்னராகும் பேறு பெற்றவரே! வாழ்க” என்று வாழ்த்தியது. இதனைக் கேட்ட மாக்பெத் திடுக்கிட்டான். “டன்கன் மன்னனுக்கு மைந்தர் இருவர் இருக்க, நான் மன்னன் ஆவதாக வாழ்த்தியது ஏன்? இவைகள் உரைத்தவற்றை நம்புதல் இயலாது,” என்று எண்ணினான். உடனே, அவைகள் பாங்கோவை நோக்கி, “மாக்பெத்தைப் போல அரசனாகும் பேறு உனக்கு இல்லை. ஆனால், உன் மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப் பெறுவார்கள்,” என்று உரைத்துவிட்டு மறைந்து விட்டன. அவ்வாறு மறைந்ததைக் கண்ட படைத்தலைவர் இருவரும் அவைகளை மாயக்காரிகள் என உணர்ந்தார்கள்.
மாயக்காரிகள் உரைத்தவற்றை இருவரும் எண்ணிக் கொண்டு நின்றபோது, அரசனிடமிருந்து தூதர் சிலர் வந்தனர்; வந்து மாக்பெத்தை நோக்கி, “அரசர் தங்களுக்குக் ‘கௌடர் தலைவர்’ என்னும் பட்டத்தை அளித்திருக்கின்றார். அதைத் தங்களுக்கு அறிவிக்கும் படியாக எங்களை அனுப்பினார்,” என்றனர். “மாயக் காரிகள் உரைத்தவற்றுள் ஒன்று உடனே பலித்து விட்டதே! இஃது என்ன வியப்பு! நான் ஸ்காட்லாந்து மன்னன் ஆவதும் மெய்யாகி விடும் அன்றோ! ஒன்று பலித்தபோது, மற்றொன்றும் பலிப்பது உறுதி,”என்று மாக்பெத் தன்னுள் எண்ணினான்.
பிறகு, அவன் தன்னுடன் இருந்த பாங்கோவை நோக்கி, “உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்து அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே; அக்கூற்றை நீ நம்பவில்லையோ? என்னைப் பற்றி அவர்கள் உரைத்த வருபொருள் ஒன்று மெய்ப்பட்டது. ஆகவே, உன் மைந்தர்கள் ஸ்காட்லாந்தை ஆளுவார்கள் என்பதை நம்பலாம்.” என்றான்; “இந்த நம்பிக்கை கொடியது; அரசுரிமையை நாம் பெற வேண்டும் என்ற அவாவினையும் அரசன்மீது பொறாமையையும், மற்றத் தீய எண்ணங்களையும் அந்நம்பிக்கை வளர்க்கும். மாயக்காரிகள் இத் தன்மையான நம்பிக்கையை அளித்துத்தான் மக்களைக் கெடுத்துப் பாழாக்குகின்றார்கள்,” என்று பாங்கோ கூறினான்.
பாங்கோவின் மொழிகள் மாக்பெத் மனதை மாற்றவில்லை. பாங்கோ உண்மையான நண்பன்; ஆகையால் நன்மையான அறிவுரை கூறினான். ஆனால் பொறாமையும் தீய எண்ணங்களுமே மாக்பெத் மனதில் வளர்ந்தன. ஸ்காட்லாந்து அரசாட்சியைப் பற்றிய ஆசை அவனைக் கெடுத்தது.
மாக்பெத் மன்னனைக் கொல்லுதல்
மாக்பெத் வீடு திரும்பியதும், நிகழ்ந்தன எல்லாம் தன் மனைவிக்குத் தெரிவித்தான்; மாயக்காரிகள் வாக்கு ஒன்று மெய்ப்பட்டவாறும் அறிவித்தான்; ஸ்காட்லாந்து அரசாட்சியைப் பெறுதல் திண்ணம் என்று தன் நம்பிக்கையையும் விளக்கினான். அவனுடைய மனைவி நல்லெண்ணம் உடையவள் அல்லள்; பிறர்க்குத் தீங்கு செய்யப் பின்வாங்காதவள்; ஆகையால் பேய் போல் அலையும் இயல்பினள். எனவே, எவ்வகையிலேனும் அரசாளும் உரிமையைப் பெற்றே தீரவேண்டும் என அவள் துணிந்தாள். தீய வழியில் முயற்சி செய்து அதனைப் பெறுவதில் மாக்பெத்துக்கு விருப்பம் இல்லை. “அரசனைக் கொன்று அரசுரிமை பெறுதல் நமக்குத் தகாது. மாயக்காரிகள் வாக்கு அவ்வாறுதான் நிறை வேற வேண்டுமா? அச்செயலுக்கு என் மனம் இசையாது,” என்று அவன் கூறி வருந்தும் போதெல்லாம், அவனை அவள் தேற்றி ஊக்கம் அளித்துவந்தாள்.
அரசன், அடிக்கடி மாக்பெத், பாங்கோ போன்ற தலைவர்கள் வீடுகளுக்குச் சென்று விருந்தினனாகத் தங்கியிருப்பது உண்டு. ஒரு நாள் தன் மக்களாகிய மால்கம்⁶ டனால்பின்⁷ என்னும் இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு அவன் மாக்பெத் வீட்டிற்கு விருந்தினனாக வந்தான். அவனுடன் ஏனைய தலைவர்களும் வேலை யாட்களும் வந்தார்கள். அவன் மாக்பெத் வீட்டிற்கு வந்தது, அவன் பெற்ற வெற்றியைப் பாராட்டி அவனைப் பெருமைப்படுத்துவதற்கே ஆகும்.
மாக்பெத் மனைவி நகைமுகமும் இன்மொழியும் உடையவளாய் அரசனை வரவேற்று மகிழ்வித்தாள். அவள் விருந்தோம்பும் முறையை அரசன் உவந்து போற்றினான். ஆனால் அவள் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று செய்தலை அரசன் அறியான். அவன் விலையுயர்ந்த நன்கொடை ஒன்றை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்; தன்னுடன் வந்தோர்க்கும் தக்க பரிசுகள் வழங்கினான்; வழிநடையால் களைப்புற்றிருந்தமையால், விரைவில் பள்ளியறைக்குச் சென்று உறங்கினான். அவன் அருகே வேலையாட்கள் இருவர் படுத்து உறங்கினர்.
எல்லோரும் உறங்கிவிட்டனர்; எங்கும் அமைதி நிலவிற்று. கொடிய விலங்குகளும் கொலைஞரும் கள்ளரும் நள்ளிரவில் விழித்திருத்தல் உண்டு. மாக்பெத் மனைவியும் கொடிய எண்ணமும், கொலை முயற்சியும் உடையவளாய் நள்ளிரவில் விழித்து எழுந்தாள். தன் கணவன் இரக்க முடையவன் என்றும், அரசனைக் கொல்லத் துணியான் என்றும் அவள் எண்ணி, கையில் கட்டாரி எடுத்துக் கொண்டு, அரசனது படுக்கையருகே சென்றாள். அவள் கொடுத்திருந்த கள்ளைக் குடித்த மயக்கத்தால் வேலையாட்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் அரசனை உற்றுப் பார்த்தாள்; தன் தந்தையை நினைத்துக் கொண்டாள்; “இவர் முகம் என் தந்தையின் அன்பான முகம் போலவே தோன்றுகின்றதே!” என்று எண்ணிக்கொண்டே திரும்பி வந்து விட்டாள்; கணவனையே தூண்டி அனுப்ப முயன்றாள்.
ஆனால், மாக்பெத் மனம் இரங்கி “அந்தோ! அரசரை நான் எப்படிக் கொல்வேன்? அவருடைய உப்பை உண்டு வாழ்கின்ற நான் அவரை எங்ஙனம் கொல்வேன்? நன்றி கெட்ட பாவி ஆவேனோ? அவர் என்னைக் காத்த அரசர்; எனக்கு நெருங்கிய உறவினர். அன்பு மிக்கவர்; அருள் நிறைந்தவர்; நம்பிக்கை கொண்டவர்; ‘கௌடர் தலைவர்’ என்ற பட்டம் அளித்தவர், என்னைப் பெருமைப் படுத்தியவர். அவரைக் கொன்றுவிட்டு நான் வாழவேண்டுமோ? என் பெருமை பாழ்படுமே! குடிகளின் பகையை விலை கொடுத்து வாங்கினவன் ஆவேனே! தகாது, தகாது; இந்த எண்ணம் தகாது,” என்று பலவாறு கூறத் தொடங்கினான்.
இம்மொழிகளைக் கேட்டவுடன் அவனுடைய மனைவி திடுக்கிட்டாள்! “என்னுடைய முயற்சி வீணாகும் என்று தெரிகின்றதே,” என்று எண்ணினாள். ஆயினும், அவள் தீத் தொழிலில் திண்மை உடையவள். ஆதலால், உறுதி தளரவில்லை. “தங்களால் இப்பொழுது காரியமே கெடப்போகின்றது. போர்க்களத்தில் தாங்கள் காட்டும் வீரத்தை இன்றிரவு ஒரு நொடிப் பொழுது காட்டுதல் கூடாதோ? இன்றிரவு செய்யும் ஒரு செயல் என்றென்றும் இன்பம் தருமானால், அதனைச் செய்ய பின்வாங்குதல் ஆண்மையோ? எனக்குள்ள அஞ்சாமையும் தங்களிடம் இல்லை போலும்! பழி நேருமே என்று தயங்குதல் வேண்டா. அந்தப் பழியை வேலையாட்களின் மீதுசுமத்திவிடுதல் எளிது அன்றோ? இச்சமயம் தவறினால் எச்சமயம் வாய்க்குமோ? வேலையாட்களும் குடிவெறியால் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எழுங்கள்; உடனே முடித்துவிடுங்கள்,” என்று அவள் பற்பல கூற அவனைத் தூண்டினாள். அவனும் ஒருவாறு இசைந்தான்.
மாக்பெத் கையிற் கட்டாரி எடுத்துக்கொண்டு அரசனுடைய பள்ளியறையை நோக்கிச் சென்றான். அப்போது அவனுடைய மன மயக்கத்தாற் பற்பல தோற்றங்களைக் கண்டான். வேறுகட்டாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அதிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பது போலவும் அவன் தன் எதிரே கண்டான். அதைக் கையில் பிடிக்கச் சென்றான் மாக்பெத். அது உடனே மறைந்துபோயிற்று. அவன் மேற்கொண்டிருந்த கொடிய செயலால் இத்தகைய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டது. இத்தோற்றங்களுக்கு அவன் ஒரு சிறிதும் அஞ்சிலன்; அரசன் படுத்திருந்த இடத்திற்குச் சென்று அவனைக் குத்திக் கொன்றான்.
உடனே, அங்குப் படுத்திருந்த வேலையாட்களில் ஒருவன் உறக்கத்திலே சிரித்தான். மற்றொரு வேலையாள், “கொலை, கொலை,” என்று உறங்கிக்கொண்டே கத்தினான். இருவரும் விழித்தனர்; கனவில் பயந்ததாகத் தேறி, கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினர். இவ்விருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் மாக்பெத். அவனுக்கும் கடவுளைப்பற்றிய எண்ணம் எழுந்தது; அவனும் கடவுளை வணங்கி, அவரிடம் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்தான். ஆனால், அவனால், “கடவுளே” என்று வாயால் கூறமுடியவில்லை; எண்ணம் தோன்றியும் நா எழாமல் நின்றது.
“மாக்பெத் இனி உறங்குதல் இல்லை. அவன் உறக்கம் ஒழிக, அவன் தூக்கத்தைக் குலைத்தான்,” என்று ஒரு குரல் அவனுக்குக் கேட்டது. அந்த ஒலி எல்லோரும் கேட்கும்படி இருந்ததாக மாக்பெத் எண்ணினான்.
உடனே, அவன் தன் மனைவியிடம் சென்றான். “இவர் அந்தக் காரியத்தை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வராத காரணம் யாதோ? என்ன தடை ஏற்பட்டதோ?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அவள், தன் கணவன் திரும்பியதும், அவனுடைய முகக்குறியைக் கண்டு, “ஏன் இவ்வளவு வருத்தத்தோடும் கவலையோடும் வருகின்றீர்கள்? தாங்கள் செய்த செயல் தங்களைக் கோழை ஆக்கிவிட்டதோ? ஆண்மையோடு இருங்கள். விரைந்து சென்று கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். இரத்தத்தை மற்றவர்கள் பார்த்தல் ஆகாது; அஞ்சாமல் இருந்து இன்னும் செய்வன திருந்தச் செய்தல் வேண்டும்” என்று சொன்னாள். அவனுடைய கையிலிருந்த கட்டாரியை அவள் வாங்கிக் கொண்டு, அதில் இருந்த இரத்தத்தை உறங்கிக் கொண்டிருந்த வேலையாட்களின் முகங்களில் தடவிவிட்டு, கட்டாரியையும் அருகே வைத்துவிட்டு விரைந்து மீண்டாள்.
இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. கொலையைப் பலரும் அறிந்தனர்: அதை மறைத்து வைத்தல் இயலாது அன்றோ? மாக்பெத்தும் அவன் மனைவியும் துயர்மிக்கவராய்த் தோன்றினர். வேலையாட்களின் முகங்களிலிருந்த இரத்தக் கறையும். அருகே இருந்த கட்டாரியும் அவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டின. ஆயினும், பலரும் மாக்பெத் மீது ஐயுற்றனர். வேலையாட்கள் அரசனைக் கொல்லக் காரணம் இல்லை என்றும், அதனால் அவர்கள் பெறும் பயன் ஒன்றும் இல்லை என்றும், மாக்பெத்தே அரசுரிமையைக் கவரும் எண்ணங்கொண்டு இவ்வாறு செய்தான் என்றும் தம்முள் பேசிக் கொண்டனர். அரசனுடைய மைந்தர் இருவரும் ஓடிச் சென்றுவிட்டனர்; அவருள் மூத்தவன் மால்காம் இங்கிலாந்து அரசனிடம் அடைக்கலம் புகுந்தான்; இளையவன் டனால்பின் அயர்லாந்து சேர்ந்தான்.
பட்டத்துக்குரிய மைந்தர் இருவரும் அஞ்சி ஓடவே, மாக்பெத் எதிர்ப்பாரின்றி முடி சூடினான்; மாயக்காரிகள் வாக்கு மெய்யானது கண்டு மகிழ்ந்தான்.
பாங்கோவின் ஆவி அலைத்தல்
மாக்பெத் ஸ்காட்லாந்து மன்னன் ஆவான் என்பதைத் தெரிவித்த மாயக்காரிகள் பாங்கோவுக்கு வருபொருள் ஒன்று உரைத்திருந்தார்கள்; அவனுடைய மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப் பெறப்போவதையும் அறிவித்திருந்தார்கள். அரசனைக் கொன்று அரசுரிமை பெற்ற மாக்பெத்தும், அவன் மனைவியும் இதனை மறக்கவில்லை. “நாம் அரசுரிமை பெற்றும் பயன் இல்லையே! நமக்குப்பின் நம்முடைய மக்கள் அவ்வுரிமை பெறுதல் இயலாது அன்றோ? பாங்கோவின் மக்கள் அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே! அவர்கள் வாக்குப் பொய்க்காதே வேறொருவனுடைய மக்கள் சிறப்படை வதற்கோ நாம் அரும்பாடுபட்டு அரசனைக் கொன்று ஆட்சியைப் பெற்றோம்? அவ்வாறு ஆகாதாவாறு நாம் தடுத்தல் வேண்டும். அதற்கு வழி என்ன? வல்லமை மிகுந்த அரசனையே ஒழித்துவிட்ட நமக்கு, இந்த இடையூறு ஒன்றை ஒழித்துவிட முடியாதோ? இஃது எளிய செயலே; பாங்கோவையும் அவனுடைய மகனையும் கொன்றுவிடுதல் வேண்டும். மாயக்காரிகள் வாக்கு நமக்குப் பலித்தது. ஆனால், அவனுக்குப் பலிக்காதவாறு நாம் தடுத்தல் வேண்டும்” என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந் தார்கள்.
அவர்கள் இக் கொடிய எண்ணத்தை விரைவில் முடித்துக் கொள்ளத் துணிந்தார்கள். ஒரு பெரிய விருந்து ஒன்று ஏற்படுத்தினார்கள். அவ்விருந்துக்குத் தலைவர்கள் பலரையும் வருமாறு அழைத்தார்கள்; பாங்கோவையும் அவன் மகனையும் மிக்க அன்போடு வரவேற்பது போல் நடித்தார்கள்; அவ்விருந்து இரவில் நடைபெறுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பாங்கோவும் அவன் மகனும் அரண்மனைக்கு வரும்வழியில் அவர்களைக் குத்திக் கொல்லுமாறு கொலைஞர் ஏவப் பட்டிருந்தனர். முதலில் பாங்கோ வர, அவன் கொல்லப்பட்டான். அக் கொலையால் எழுந்த ஒலியைக் கேட்டதும், பாங்கோவின் மகன் ப்ளீன்ஸ்⁸ என்பவன் விரைந்தோடி மறைந்துவிட்டான்.
விருந்து சிறப்பாக நடைபெற்றது. அரசி எல்லோரையும் தக்கவாறு வரவேற்று மகிழ்வித்தாள். வந்த விருந்தினரும் களிப்புற்றிருந்தனர்; விருந்தினர்க்கு நன்றி கூறும்போது, மாக்பெத், “நீங்கள் எல்லோரும் அரண்மனைக்கு வந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தீர்கள்; உங்களுக்கு எமது நன்றி உரியதாகுக. ஆனால் எம்முடைய தோழன் பாங்கோ இப்போது இங்கு வந்து எம்மை மகிழ்விக்கவில்லை. அவன் வேண்டுமென்றே இவ்விருந்தைப் புறக்கணித்தான் என்று தெரிகின்றது,” என்று நெட்டுயிர்ப்போடு கூறினான்.
உடனே, அங்கே ஒன்று தோன்றி அங்காந்த வாயுடன் வந்தது. அது மாக்பெத்தை விடாமல் தொடர்ந்து சென்றது; அவனுக்கு முன் சென்று அவனுடைய இருக்கையில் அமர்ந்தது. வஞ்சனையால் கொல்லப்பட்ட பாங்கோவின் ஆவிதான் அவ்வாறு வந்து அமர்ந்தது. அஞ்சாமைக்கும் ஆண்மைக்கும் பெயர் போன மாக்பெத் அஞ்சினான்; நடுங்கினான்; வெளுத்தான்; அந்த ஆவியை உற்று நோக்கினான்; திகைத்தான் ஆனால், அவனுடைய மனைவியும் விருந்தினரும் அந்த ஆவியைக் காணவில்லை. “நன்றாகப் பேசிக் கொண்டிருந்த அரசர் திடீரென்று பேச்சின்றிச் செயலின்றி நாற்காலியைப் பார்த்துக்கொண்டு வாளா நிற்கின்றாரே!” என்று அனைவரும் வியப்புற்றனர். அவன் மனைவி மட்டும் அருகே சென்று, அவன் அவ்வாறு விழித்துக்கொண்டு நிற்பதைக் கடிந்து கூறினாள்: முன்பு பலமுறை கண்ட மாயத்தோற்றங்கள் போன்றே இது; அஞ்சவேண்டா," எனப்பிறர்க்குக் கேட்காமல் சொல்லித் தேற்ற முயன்றாள். அவனோ, விழித்துப் பார்த்துக் கொண்டே நின்றான்; சற்றும் திரும்பவில்லை; பித்தன் போல் பிதற்றத் தொடங்கினான்; அவ்வாறு பிதற்றும் போது, கொலையைக் குறித்த சொற்களும் கலந்தன. அச்சொற்களைக் கேட்டதும், அவன் மனைவியும் அஞ்சினாள். “யாரும் அறியாமல் மறைவாய் இருந்த கொலைச் செய்திகள் வெளியாகி விடுமே! அந்தோ, என் செய்வேன்,” என்று அவள் கவலையுற்றவளாய், விருந்தினர் அனைவர்க்கும் விரைந்து விடை கொடுத்து அனுப்பினாள்.
கொலைஞன் மனம் பலவாறு மயங்குதல் இயற்கை. அதனால், மாக்பெத் பல கொடிய காட்சிகளை அடிக்கடி கண்டு கலங்கினான். அவன் மனைவியும் கொடுமை நிறைந்த கனாக்கள் பலவற்றைக் கண்டு அஞ்சினாள். அவர்களுடைய ஆற்றல் அழிந்தது. தங்கள் நெஞ்சே தங்களைச் சுட்டதனால், அவர்கள் வாடி வருந்தினார்கள். “பாங்கோவைக் கொன்றது போல், அவன் மகனையும் கொல்ல முடியாமற் போயிற்றே! அவன் தப்பி ஓடிவிட்டானே! இப்போது நாம் என்ன செய்வோம்? மாயக்காரிகள் உரைத்தவாறே நமக்குப்பின் பாங்கோவின் மகன் அரசுரிமை பெறுவானோ?” என்று பற்பல எண்ணித் துயர்க்கடலில் ஆழ்ந்தார்கள்; இரவும்பகலும் உறக்கமின்றி ஏங்கினார்கள்; இறுதியில் மாயக்காரிகளை மீண்டும் கண்டு எதிர் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றையும் அறிய எண்ணி மாக்பெத் புறப்பட்டான்.
மாக்பெத் வாழ்க்கையை வெறுத்தல்
மாயக்காரிகளைத் தான் முதலில் கண்ட அந்தக் காட்டிற்கே அவன் சென்றான். அங்கு ஒரு குகையில் அவர்கள் இருப்பார்களென்று தேடினான். இவன் வருகையை முன்னமே அறிந்த மாயக்காரிகள், வினாக்களுக்கு ஏற்ற விடைகள் கொடுப்பதற்காகச் சில ஆவிகளை வருவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். மாக்பெத் அருகே வந்து சேர்ந்தான். “உன் வினாக்களுக்கு நாங்களே விடைகள் கூறவேண்டுமா? அல்லது ஆவிகள் கூறவேண்டுமா?” என்று மாயக்காரிகள் கேட்டார்கள். மாக்பெத் அஞ்சாமையுடன், “அந்த ஆவிகள் எங்கே?” என்று கேட்டான். அவர்கள் வருவிக்க, மூன்று ஆவிகள் அங்கு வந்தன.
அவற்றுள், முதல் ஆவி, “மாக்டப்⁹ என்னும் தலைவனைக் குறித்து நீ சாக்கிரதையாக இருப்பாயாக,” என்றது. மாக்பெத்துக்கும் மாக்டப்புக்கும் பெரும்பகை இருந்தது. ஆதலால், மாக்பெத் அந்த ஆவியின் கூற்று நன்மையானதே என்று கருதி, அதற்கு நன்றி கூறினான்.
இரண்டாம் ஆவி, “மாக்பெத்! நீ அஞ்சற்க, உறுதியோடு இரு; கொலைக்குப் பின்வாங்காதே; உன்னை எவனும் கொல்லுதல் இயலாது” என்று கூறியது.
இதைக்கேட்டதும் மாக்பெத் மனம் தேறினான். “மாக்டப்! உன் பகை என்னை ஒன்றும் செய்யாது. இனி நான் அஞ்சுவேன் என்று கருதவேண்டா. நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. உன்னை நான் கொல்வது திண்ணம்; உன்னை ஒழிப்பது உறுதி,” என்று வஞ்சினம் உரைத்தான்.
மூன்றாம் ஆவி தோன்றி, “மன்னவ! நீ ஒருவர்க்கும் அஞ்சாதே. பலருடைய பகையும் உன்னை ஒன்றும் செய்யாது. பர்னம்¹⁰ காடானது டன்ஸினேன்¹¹ மலை நோக்கி வந்து, உன்னை எதிர்க்கும் வரை உனக்குக் கேடு இல்லை,” என்று கூறியது. மாக்பெத் மனம் மகிழ்ந்தான். “காட்டைப் பெயர்த்து வந்து என்னை எதிர்க்கவல்லவன் ஒருவனும் இலன்; என் வாழ்நாளைப் பற்றி எனக்கிருந்த கவலை ஒழிந்தது. எனக்குள்ள மற்றோர் ஐயம் பெரிதாக வருந்துகின்றது. அந்த ஐயத்தைப் போக்க முடியுமானால் சாலவும் மகிழ்வேன். பாங்கோவின் வழித் தோன்றுவோர் இந்த அரசுரிமையைப் பெறுவாரோ? கூறுக,” என்று அவன் வேண்டிக்கொண்டான். அந்த ஆவி மறுமொழி கூறாமல் மறைந்துவிட்டது.
அப்போது மாக்பெத் இன்னிசைக் கருவிகள் ஒலித்தலைக் கேட்டான். அவன் எதிரே அரசர் எண்மர் நிழலுருவங்கள் தோன்றின. அவற்றுள் எட்டாம் உருவம் பாங்கோவின் உருவமாக இருந்தது. அது கையில் கண்ணாடி ஒன்று வைத்திருந்தது. அக்கண்ணாடியில் அரசர் பலருடைய நிழலுருவங்கள் காணப்பட்டன. பாங்கோ உடல் முழுவதும் இரத்தக்கறை உடையவனாய்க் காணப்பட்டான்; அவன் புன்சிரிப்புடன் அவ்வுருவங்களை மாக்பெத்துக்குக் காட்டினான். மாயக்காரிகள் மாக்பெத்துக்கு விடை தந்து, இன்னிசை ஒலிக்க மறைந்து விட்டனர்.
பாங்கோவின் நிழலுருக் காட்டிய அரசர்கள் ஸ்காட்லாந்தை ஆளப்போகின்றவர்கள் என்றும், அவர்கள் பாங்கோவின் வழித் தோன்றுவோர் என்றும் மாக்பெத் உணர்ந்தான். அன்றுமுதல் அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மிகக் கொடியவை ஆயின.
அவன் குகையை விட்டு அப்பாற் சென்றான். வழியில் தூதன் ஒருவன் வந்து, “பெருமானே! மாக்டப் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். அங்கே மால்கம் தங்களுக்கு எதிராகப் பெரும்படை திரட்டுகின்றாராம். அப்படையில் மாக்டப் சேர்ந்துகொண்டாராம்,” என்று தெரிவித்தான். உடனே, மாக்பெத் வெகுண்டெழுந்தான்: மாக்டெப் வாழ்ந்த அரண்மனைக்குச் சென்றான். அங்கிருந்த அவனுடைய மனைவி மக்களைக் கொன்றான்: உறவினர் பலரையும் கொன்றுவிட்டான்.
மாக்பெத் கொண்ட கொலை வெறியைக் கண்ட தலைவர்கள் அவனை வெறுத்தார்கள். அவர்களுள் பலர் இங்கிலாந்துக்கு ஓடிச் சென்று மால்கமுடன் சேர்ந்து கொண்டனர்; நாட்டில் இருந்த ஏனையோரும் மாக்பெத்துக்குக் கீழ்படிவது போல் நடித்து, உள்ளத்தில் வெறுத்தனர்: “மால்கம் வெற்றி பெற்று முடி சூடும் திருநாள் என்று வருமோ?” என்று எண்ணிக் காத்திருந்தனர். மாக்பெத் கொடுங்கோல் மன்னனாக நாட்டை ஆண்டுவந்தமையால் குடிகள் எல்லோரும் அவன் அழியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
மாக்பெத் பிறர்க்குச் செய்த தீவினை எல்லாம் அவனையே சூழ்ந்து வருத்தத் தொடங்கின. அவன் தன் நிலையை அறிந்து தன்னை வெறுத்துக் கொள்ளத் தொடங்கினான். தான் கொன்ற டன்கன் அரசன் துன்புறவில்லை என்றும், பகையும் பழியும் பயமும் தன்னைச் சூழ்ந்து வருத்துதலால் தானே துன்புறுகின்றவன் என்றும் அறிந்து துயருழந்தான். “டன்கன் மன்னனே! உன் நிலையே சிறந்தது. எத்தகைய படையும் இப்போது உன்னை என்ன செய்ய இயலும்? என்னை எல்லாம் துன்புறுத்துகின்றனவே! உன்னைக் கொன்ற நன்றி கொன்ற பாவியாகிய நான்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றேன்,” என்று நினைத்து வருந்தினான்.
மாக்பெத்துக்குத் துணையாயிருந்த டன்கன் அரசனைக் கொல்வித்த அவன் மனைவியே அவன் வருந்திய போதெல்லாம் தேற்றி வந்தாள்; அவன் கனாக்கண்டு அலறியபோதெல்லாம் அவனுடைய நடுக்கத்தைப் போக்கி வந்தாள்; இரவிலும் பகலிலும் அவனுடைய கவலை எல்லாவற்றையும் போக்கி ஊக்கம் அளித்து வந்தாள். அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. தன்னை எல்லோரும் வெறுப்பதை அறிந்தவுடன் அவள் தற்கொலை செய்து கொண்டாள். மாக்பெத் அரசன் உற்ற வருத்தத்திற்கு எல்லை இல்லை மனைவி தவிர வேறொரு துணையும் இல்லாதவனாய் வாழ்ந்த அவன் சோர்ந்தான். அவனிடம் அன்பு செலுத்திய ஓர் உயிர் அவனிடம் நம்பிக்கை கொண்ட ஓர் உயிர் நீங்கியபின், அவன் வாழ்தலை விரும்பு வானோ? சாதலையே விழைந்தான். என்ன என்னவோ எண்ணி மனக்கோட்டை கட்டிவந்த மாக்பெத் எல்லாவற்றையும் வெறுத்தான். அரசுரிமையைப் பெறும்பொருட்டு பலருடைய வாழ்வைக் குலைத்த மன்னன் உயிருடன் வாழும் ஓர் உரிமையையும் இழக்க எண்ணினான்.
காடு மலை நோக்கி வருதல்
அப்போது, மால்கம் அவனை எதிர்க்கும் பொருட்டு இங்கிலாந்தில் இருந்து பெரும்படையுடன் புறப்பட்டு வந்தான். அதனை அறிந்த மாக்பெத் இழந்த ஊக்கத்தை மீண்டும் எய்தினான், “பர்னம் காடு பெயர்ந்தது வரும்வரை எனக்கு அழிவில்லை என்று ஆவி கூறியது பொய்யாகுமோ? யார் வரினும் வருக; அஞ்சாது கொன்று குவிப்பேன். ஒரு கால் நான் மாள நேர்ந்தாலும், என் மனைவியைப் போலவே இறப்பேன்? இறுதிவரைக்கும் போர் செய்து கொண்டே உயிர்விடுவேன். ஆனால், காடு பெயர்ந்து வரப்போவதும் இல்லை; நான் அழிவதும் இல்லை,” என்று அவன் எண்ணினான். மால்கம் வருகையை எதிர்நோக்கியவனாய்ப் போருக்குச் சித்தமாக இருந்தான்.
அவன் இருந்த அரண்மனை பகைவரால் அழிக்கலாகாதது; முற்றுகைக்கு எளியது அன்று. அத்தகைய அரண்மனையில் மாக்பெத் இருந்தான். அதை நோக்கி மால்கம் படை வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அது நெருங்கி வந்துவிட்டதைக் கண்ட தூதன் ஒருவன், விரைந்து சென்று மாக்பெத் முன்னிலையில் நடுநடுங்கி நின்றான். ஒன்றும் கூறமுடியாமல் நடுங்கிக்கொண்டு நின்ற தூதனை நோக்கி, “என்ன செய்தி? உடனே சொல்,” என்றான் அரசன். “மலைமேல் ஏறிக் காவல் புரிந்து வரும்போது, பர்னம் காட்டை நோக்கினேன். அது நகர்ந்து வருதலைக் கண்டேன்,” என்றான் அத்தூதன். அரசன் அவனைப் பொய்யன் என்று வெறுத்துரைத்து அனுப்பி விட்டான்.
தூதன் சென்றுவிட்ட பிறகு, அரசன் பலவாறு எண்ணத் தொடங்கினான். “ஆவிகளின் மொழிகள் பொய்யாகுமோ? அந்தக் காடு இந்த மலையை நோக்கிப் பெயர்ந்துவரும் வரைக்கும் அழிவு இல்லை என்று ஆவிகள் கூறியதை உண்மை என்று நம்பியிருந்தேனே! அந்தக் காடு பெயர்ந்து வருகின்றது என்று தூதன் கூறுகின்றான். காடு பெயர்ந்துவருமோ? என்ன வியப்பு! கேட்டறியாத புதுமையாக இருக்கின்றதே! அப்படிக் காடு பெயர்ந்து வருமானால், நான் அழிவது திண்ணம் அன்றோ? அதைத் தடுக்க முடியுமோ? எங்காவது ஓடிச் சென்றுவிடுதல் என்றால் அது வீரனுக்குத் தகுமோ? அத்தகைய இழிந்த செயலை நான் செய்வேனா? இதோ, புறப்படுவேன்; போர்க்கோலம் பூண்டு எதிர்த்துப் போர் செய்வேன். ஆறிலும் சாவு நூறிலும் சாவு; எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பு மிகுந்துவிட்டது. என் வாழ்வு இன்றோடு முடிந்தாலும் நலமே,” என்று அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். அதற்குள் மால்கம் படையும் அரண்மனையை நெருங்கிவிட்டது.
அரசன் அப்படையின் தோற்றத்தைக் கண்டான். வியந்தான்; பர்னம் காடு பெயர்ந்து வருதல்போலவே தோன்று தலைக் கண்டு தன் நம்பிக்கை இழந்தான்.
மால்கம் தன் படையுடன் புறப்பட்டு, பர்னம் காட்டு வழியாகத் தான் வந்தான்; தன் படையின் அளவு எதிரியின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினான்; அதற்காக அக்காட்டிலிருந்த மரக்கிளைகளை வெட்டி வீரர் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கிளையைக் கையில் ஏந்திவருமாறு கட்டளை யிட்டான். அவ்வாறே வீரர் அனைவரும் செய்யவே, பர்னம் காடு நகர்ந்து வருதல் போலத் தோன்றியது. ஆவியின் வாக்கு உண்மையாயிற்று.
கேடுசூழ்ந்தவனே கெடுதல்
போர் மூண்டது. மாக்பெத்துக்குப் பெரும்படை இருந்த போதிலும் அப் படையிலிருந்தோர் எல்லோரும் அவன்மீது கொண்ட வெறுப்பால், ஊக்கமுடன் போர் செய்யவில்லை; அவனுடைய கொடுங்கோன்மையைப் பொறுக்கமுடியாமல், “எப்போது மால்கம் வருவார்! எப்போது நாம் அவருடன் சேர்ந்து கொள்வோம்!” என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். அரசனும் அவர்களை நம்பவில்லை. அவன் வீரமுடன் பகைவரை எதிர்த்தான்; தன்னை எதிர்த்தவர் எல்லோரையும் வாளுக்கு இரையாக்கினான்.
மதயானைப்போல் போர்க்களத்தில் கலக்கிய மாக்பெத், இறுதியில், மாக்டப் இருந்த இடத்தை அடைந்தான்; அவனைக் கண்டவுடனே, “மாக்டப்பைக் குறித்து நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று ஆவி கூறியதை நினைத்துக் கொண்டான். அவன் எதிரே அசையாமல் நின்றான்; திரும்பிவிட எண்ணினான்; அதற்குள் மாக்டப் இருவருக்கும் நிகழ்ந்தது பெரும்போர் ஆகும். “கீழ் மகனே! உன்னுடைய வீரத்தை என்னிடம் காட்டு; பெண் களிடத்திலும் சிறுவரிடத்திலும் வீரம் காட்டினாய் அல்லையோ! என் மனைவி மக்களைக் கொன்ற பயலே! உன்னைப் பழிக்குப்பழி வாங்குவதே என் கடமை,” என்று சினந்துரைத்தான். அப்போதும் மாக்பெத் ஓடிவிட முயன்றான். மாக்டப்பின் மனைவி மக்களைக் கொன்ற கொடுஞ் செயலைப்பற்றிய நினைவு அவனைத் திகைத்து நிற்கச் செய்தது. மாக்டப் கடுஞ்சினங் கொண்டவனாய் அவனைத் தாக்கினான்.
இவ்வாறு மாக்டப்பிடம் அகப்பட்டுக் கொண்டு திகைத்து நின்ற மாக்பெத், அப்போது, ஆவி கூறிய தொன்றை நினைத்துக் கொண்டான். “உன்னை எவனும் கொல்ல முடியாது,” என்ற ஆவியின் கூற்றை மாக்டப்பிடம் கூறி, “நீ என்னைக் கொல்ல முடியாது. உன் முயற்சி வீணாகும்,” என்று வீரம் பேசினான்; அதற்கு மறுமொழி கூறும்போது மாக்டப், “உன்னை எவனும் கொல்ல முடியாது என்றா சொல்லுகின்றாய்? அப்படியானால், உயிருடன் இரு. உன்னை ஒரு கூட்டினில் அடைத்துவைத்து, அதன் முகப்பில் ஒரு பலகையில்”மாக்பெத் கொடுங்கோல் மன்னன்" என்று எழுதிப் பலர்க்கும் காட்டுவோம்," என்றான்.
அதற்கு மாக்பெத் இசைந்தானா? இல்லை. “அஃது உன்னால் ஆகாத செயல். அந்த மால்கம் காலில் நான் விழுந்து வணங்குவேன் என்று எண்ணுகின்றாயோ? எனக்கு மானம் இல்லை என்று நினைத்து விட்டாயோ? நான் வாளா இருப்பேனா? என் உயிருள்ள வரைக்கும் என் ஆண்மையைக் காட்டிப் பொருதே மாள்வேன். பர்னம் காடு டன்சினேன் மலை நோக்கி வந்தால் எனக்கு அழிவு உண்டு என்பதை அறிவேன். அவ்வாறே காடு மலைநோக்கி வந்துவிட்டது. இன்னும் என்ன என்ன நடப்பதாயினும் நடக்க தலைக்குமேல் போகும் வெள்ளம் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? நான் அஞ்சுவேன் என்று கருதவேண்டா,” என்று சொல்லிக் கொண்டே மாக்பெத் மாக்டப்பைத் தாக்கினான். இருவருக்கும் நிகழ்ந்த கடும்போரின் முடிவில் மாக்டப் மாக்பெத்தின் தலையை வெட்டி அதனைக் கையிற்கொண்டு போய் மால்கமுக்குப் பரிசாகக் கொடுத்தான்.
மால்கம் மாக்டப்பைப் புகழ்ந்து போற்றினான். அவன் ஸ்காட்லாந்து அரசுரிமை பெற்று, முடிசூடினான். டன்கன் அரசனாகிய அவனுடைய தந்தையின் நற்பண்புகள் பலவும் அவனிடம் இருந்தன. ஆதலால் குடிகளும் தலைவர்களும் அளவிலா மகிழ்ச்சி அடைந்து அரசனை வாழ்த்தினார்கள். “கெடுவான் கேடு நினைப்பான்”, என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக இருந்த மாக்பெத்தின் கொடுங்கோன்மை ஒழிந்து செங்கோன்மை நிலவிற்று
அடிக்குறிப்புகள்
1. Scotland
2. Duncan
3. Glamis
4. Macbeth
5. Banquo
6. Malcom
7. Donalbin
8. Fleance
9. Macduff
10. Birnam
11. Dunsinane.
புயற்காற்று¹(The Tempest)
** கதை உறுப்பினர்கள்**
ஆடவர்
1. பிராஸ்பிரோ: மிலன் மன்னன் - தம்பி அந்தோனியோவால் துரத்தப்பட்டு மாயத் தீவில் தங்கியவன் - மிராந்தா தந்தை.
2. அந்தோனியோ: அண்ணன் பிராஸ்பிரோவைத் துரத்தி அரசனானவன்.
3. நேபல்ஸ் அரசன்: பிராஸ்பிரோ பகைவன். அவனைத் துரத்த அந்தோனியோவுக்கு உதவியவன்.
4. பெர்திநந்து: நேபல்ஸ் அரசன் மகன் - மிராந்தாவைக் காதலித்தவன்.
5. கன்ஸாலோ: பெருங்குடி மகன்-பிராஸ்பிரோவின் நண்பன்.
6. காலிபன்: தீவிலிருந்து காலஞ்சென்ற ஸிகோராக்ஸ் என்ற கொடிய மாயக்காரியின் மகன். அரை விலங்கியல் புடையவன்-முழுச் சோம்பேறி-பிராஸ்பிரோவால் சுடு வேலையிலிடப்பட்டவன்.
7. ஏரியல்: ஸிகோராக்ஸால் மரத்தில் சிறைப்படுத்தப்பட்ட நல் ஆவி - பிராஸ்பிரோவால் விடுவிக்கப்பட்டு அவனுக்குத் தொண்டு செய்தவன். காலிபனைத் துன்புறுத்தி வேலை வாங்க உதவியவன்.
பெண்டிர்
1. மிராந்தா: பிராஸ்பிரோ மகள். அவள் நாடுவிட்டு வரும்போது குழந்தை. பெர்திநந்தைக் கண்டு காதலித்தவள்.
** கதைச் சுருக்கம்**
மந்திர நூலாராய்ச்சியில் மூழ்கிய மிலன் அரசனாகிய பிராஸ்பிரோவை அவன் தம்பி அந்தோனியோ அவன் பகைவனாகிய நேபல்ஸ் அரசன் உதவிகொண்டு வீழ்த்தி அரசனானான். பிராஸ்பிரோ கைக்குழந்தையாகிய மிராந்தாவுடன் சிறு படகில் கடலில் தள்ளப்பட்டான். ஆனால், அவன் நண்பனாகிய கன்ஸாலோப் பெருமகன் பிறருக்குத் தெரியாமல் படகில் அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளையும், மந்திர நூல்களையும் வைத்திருந்தான். ஆகவே, அவர்கள் ஸிகோராக்ஸ் என்ற மாயக்காரியிருந்த தீவில் இறங்கியதும், பிராஸ்பிரோ இறந்து போன ஸிகோராக்ஸ் அடைத்து வைத்து ஏரியல் என்ற நல் ஆவியை விடுவித்து அதனுதவியால் காற்றையும் கடலையும் ஏவி யாண்டதுடன், ஸிகோராக்ஸின் பிள்ளையாகிய அரை விலங்கியல்புடைய காலிபனையும் அவனுதவியால் கடுவேலையிற் பழக்கிக் கொண்டான்.
ஒருநாள் நேபல்ஸ் அரசனும் அவன் மகன் இளவரசன் பெர்திநந்தும், அந்தோனியாவும் ஒரு கப்பலில் அவ்வழியே போய்க் கொண்டிருந்தார்கள். பிராஸ்பிரோ ஏரியலைத் தூண்டி ஒரு மாயப் புயலை எழுப்பிக் கப்பல் கவிழ்ந்தது போல் காட்டி ஒவ்வொருவரையும் தனித் தனியே கரையில் தப்ப வைத்தான். அவர்களுள் பெர்திநந்தைப் பிராஸ்பிரோ தன் மகள் இருக்குமிடம் கொணர்விக்க அவர்கள் எளிதில் காதல் கொள்கின்றனர். பெர்திநந்துக்குக் கடுவேலை கொடுப்பதன் வாயிலாக அவர்கள் காதலின் ஆழத்தை ஆய்ந்தபின் பிராஸ்பிரோ அனைவரையும் ஒருங்கு சேரவிட்டுத் தன் மாயமனைத்தும் கூறுகிறான். அந்தோனியோவும் நேபல்ஸ் அரசனும் தம் பிழை கண்டு வெட்கி மன்னிப்பு வேண்டுகின்றனர். அனைவரையும் ஏரியல் நாட்டுக்கு விரைந்தனுப்ப அங்கே பெர்திநந்துக்கும் மிராந்தாவுக்கும் மணம் நிகழ்ந்தது. ஏரியல் அவர்களை அனுப்பியவுடன் முழு விடுதலையும் பெற்றான்.
சிற்றப்பன் சூழ்ச்சி
ஒரு தீவில் முதியோன் ஒருவன் தன் மகளுடன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் பிராஸ்பிரோ¹. அவன் மகள் பெயர் மிராந்தா². அவள் அழகில் சிறந்தவள். அவர்களைத் தவிர வேறு ஒருவரும் அந்தத் தீவில் இல்லை. மிராந்தா குழந்தையாக இருந்த போதே அந்தத் தீவிற்கு வந்துவிட்டமையால் அவளுக்குத் தன் தந்தை முகம் தவிர வேறு ஒருவர் முகமும் பார்த்ததாக நினைவு இல்லை.
ஒரு பாறையில் அமைந்த குகையில் அவர்கள் வாழ்ந்தார்கள். அக்குகை பல அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்றைப் பிராஸ்பிரோ தன் கல்விக்காக வைத்துக்கொண்டான். அந்தக்கல்வி அறையில் அவன் தன் நூல்களை வைத்திருந்தான். அக்காலத்தில் கற்றோர் எல்லோரும் மந்திரக்கலையை விரும்பிப் பயின்றார்கள். பிராஸ்பிரோவின் நூல்கள் பெரும்பாலும் மந்திரக் கலை பற்றியனவே. அவனுக்கு அக்கலை மிகுந்த பயன் அளிப்பதாக இருந்தது. அவன் அத்தீவிற்கு வந்தது ஒரு வியப்பான காரணத்தால் ஆகும். அவனுக்கு முன் சிகோராக்ஸ்³ என்னும் மாயக்காரி அங்கே இருந்தாள். அவன் வருவதற்குச் சில நாட்களுக்குமுன் அவள் இறந்துவிட்டாள். தன் கொடிய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்த நல்ல ஆவிகளைப் பெரிய மரங்களில் சிறைப்படுத்தியிருந்தாள் அந்த மாயக்காரி. பிராஸ்பிரோ தன் கலைவன்மையால் அவைகளை விடுவித்தான். அதுமுதல் அந்த நல்ல ஆவிகள் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தன. அவைகளுள் ஏரியல்⁴ என்பவன் ஆவி தலையானது.
ஏரியல் நல்லவன். அவனிடம் கெட்ட குணம் ஒன்றும் இல்லை; ஆனால், ’காலிபன் என்னும் விகாரமான ஒருவனைத் துன்புறுத்தும் வழக்கம் உண்டு. அப்படித் துன்புறுத்துவதில் ஏரியல் மகிழ்ச்சி கொண்டான். ஏன் எனில் அவனுடைய பழைய பகையாளியான சிகோராக்ஸின் மகனே காலிபன் ஆவான். காலிபனைப் பிராஸ்பிரோ முதலில் காட்டில் கண்டான். குரங்கைவிடத் தாழ்ந்த உருவ முடையவனாகக் காலிபன் தோன்றினான். ஆயினும், பிராஸ்பிரோ அவனைத் தன் குகைக்குக் கொண்டுபோய்ப் பேசக் கற்றுக் கொடுத்தான். தன் தாய் சிகோராக்ஸின் கொடிய பண்பு காலிபனிடமும் இருந்தபடியால். நல்லது ஒன்றையும் அவன் கற்றுக் கொள்ளவில்லை; ஆதலால், விறகு வெட்டிக்கொண்டு வருதல் முதலான வருத்தமான வேலைகளை அடிமைபோலச் செய்து வந்தான். இந்த வேலைகளைக் காலிபன் செய்யும்படி ஏரியல் வற்புறுத்திவந்தான். இவையெல்லாம் பிராஸ்பிரோவின் ஏற்பாடு.
பிராஸ்பிரோ தவிர, மற்றவர் கண்ணிற்கு ஏரியல் தெரிவதில்லை. அவன், காலிபன் வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருக்கும்போது தந்திரமாய் வந்து கிள்ளுவான்; சிலவேளை காலிபனைச் சேற்றில் தள்ளுவான்; பிறகு, குரங்கு போல அவன் முன்வந்து பல் இளித்துச் சிரிப்பான்; உடனே வடிவுமாறி முள்ளம் பன்றியாய்த் தோன்றி அவன் நடக்கும் வழியில் கிடப்பான். அப்பன்றியின் கூரிய முட்கள் செருப்பு இல்லாத தன் கால்களில் தைத்து வருத்தும் என்று காலிபன் அஞ்சுவான். பிராஸ்பிரோ இட்டவேலைகளைச் செய்யாமல் காலிபன் சோம்பியிருக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட கொடிய தந்திரங்களால் ஏரியல் அவனைத் துன்புறுத்துவான்.
ஏரியல் போன்ற வல்லமை வாய்ந்த ஆவிகள் தன் கட்டளைப்படி நடந்ததனால் பிராஸ்பிரோ அவற்றின் உதவியினால், கடல் அலைகளையும் காற்றையும் தான் நினைத்தபடி ஆட்டிவந்தான். அவன் கட்டளையால் அவை கொடியதொரு புயற்காற்று உண்டாக்கின. அப்புயற்காற்றால் ஓயாது உயர்ந்து எழுந்து அலைத்த கடல் அலைகளின் நடுவே அழகிய பெரிய கப்பல் ஒன்று சிக்குண்டு தவித்தது. அந்தக் காட்சியைப் பிராஸ்பிரோ தன் மகளுக்குக் காட்டி, அக் கப்பலில் தங்களைப் போன்ற மக்கள் இருப்பதாக அறிவித்தான்.
மிராந்தா: அன்புள்ள தந்தையே! இந்தப் புயல் உம்முடைய மந்திரவன்மையால் ஏற்பட்டதனால், அக்கப்பலில் உள்ளவர்கள் படும் துன்பத்திற்காக மனம் இரங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தோ! எனக்கு ஆற்றல் இருக்குமானால் கடலை மண்ணின் கீழ் அமிழ்த்திவிடுவேன்; அத்துணை அருமையான உயிர்களோடு அந்த நல்ல கப்பல் அழியும்படி விடேன்.
பிராஸ்பிரோ: அருமை மிராந்தா! ஒரு தீங்கும் நேராது. அஞ்சாதே! கப்பலில் உள்ள ஒருவருக்கும் ஒரு துன்பமும் நேராத படி கட்டளையிட்டிருக்கிறேன். மகளே! உன் நன்மையைக் கருதியே நான் இவ்வாறு செய்திருக்கிறேன். நீ யார் என்று உனக்குத் தெரியாது. எங்கிருந்து வந்தாய் என்பதும் நீ அறியாய். நான் உன் தந்தை என்பதும், நீ இந்தக் குகையில் வாழ்வதும் தவிர வேறொன்றும் நீ அறியாய். இந்தக் குகைக்கு வருவதன் முன் நிகழ்ந்தது ஏதேனும் உன் நினைவில் இருக்கிறதா? ஒன்றும் இராது என்று எண்ணுகிறேன். அப்போது உனக்கு மூன்று ஆண்டு நிரம்பவில்லையே.
மிராந்தா: தந்தாய்! எனக்கு நினைவிருக்கிறதே.
பிராஸ்பிரோ: எப்படி? வேறு வீடாவது ஆளாவது நினைவு வருகிறதா? உன் நினைவிலிருப்பதைச் சொல் பார்ப்போம்.
மிராந்தா: அப்பா! ஏதோ கனவுபோல் உள்ளது. ஒரு காலத்தில் பெண்டிர் நால்வரோ ஐவரோ என்னைக் காத்து வரவில்லையா?
பிராஸ்பிரோ: ஆம், ஆம். ஐவர்க்கு மேலும் இருந்தனர். இஃது எப்படியோ உன் நினைவில் இருக்கிறதே! இவ்விடத்திற்கு எப்படி வந்தாய் என்பது நினைவிருக்கிறதா?
மிராந்தா: வேறொன்றும் நினைவில்லை.
பிராஸ்பிரோ: குழந்தாய்! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் மிலன்5 நாட்டு மன்னனாக இருந்தேன். நீ எனக்கு ஒரே குழந்தையாகவும் இளவரசியாகவும் இருந்தாய். என் தம்பி அந்தோனியோ என்பவனிடம் நம்பிக்கையோடு எல்லாவற்றையும் ஒப்புவித்திருந்தேன். ஓய்வுடனிருந்து நூல்களைக் கற்பதே எனக்கு மிகுந்த விருப்பம். ஆதலால், அரசாட்சியை உன் சிற்றப்பனிடம் விட்டுவிட்டு, நான் கல்வியில் ஆழ்ந்திருந்தேன். உன் சிற்றப்பனோ துரோகி. அது பிற்பாடு தெரியவந்தது. உலகியலை நான் முற்றும் மறந்துவிட்டு அறிவுச் செல்வத்தைத் தேடுவதிலேயே காலம் முழுதும் கழித்தேன். என் தம்பி அந்தோனியோ6 நாட்டை ஆளும் உரிமை பெற்றவனாய், தானே அரசன் என்று எண்ணத் தொடங்கினான். என் குடிகளின் அன்பைப் பெறுவதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்ததும், அவன் கெட்ட எண்ணம் கொண்டான்; எனது அரசுரிமையைக் கவர ஆசை கொண்டான். அப்போது நேபல்ஸ்7நாட்டு மன்னன் எனக்குப் பகையாய் இருந்தான். வலிமையுள்ள அம் மன்னன் துணைகொண்டு. அவன் தன் கருத்தை முடித்துக் கொண்டான்.
மிராந்தா: அவர்கள் அப்பொழுதே நம்மை அழித்து விட்டிருப் பார்களே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?
பிராஸ்பிரோ: என் குடிகள் என்மீது கொண்ட அன்பிற்கு எல்லை இல்லை. அதனாலேதான் அவர்கள் நம்மை அழிக்க முன் வரவில்லை. ஆனால் அந்தோனியோ வேறொரு சூழ்ச்சி செய்தான். அவன் நம்மை ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து, சில மைல் கடந்த பின் சிறிய படகு ஒன்றில் வற்புறுத்தி ஏற்றிவிட்டுச் சென்றான். அந்தப் படகில் கயிறு பாய் முதலியவை ஒன்றும் இல்லை. நாம் அப்படகில் கிடந்து அழிந்து விடுவோம் என்பது அவன் எண்ணம். ஆனால், நாம் அழியவில்லை. என்மீது அன்பு கொண்ட கன்சாலோ8 என்னும் பெருமகன் ஒருவரும் அறியாமல், அந்தப் படகில் உணவும் நீரும் உடையும் சில நூல்களும் வைத்திருந்தான். அந்த நூல்கள் என் அரசுரிமையை விடச் சிறந்தவை என நான் மதிக்கிறேன்.
மிராந்தா: தந்தையே! அப்போது நீர் பட்ட துன்பங்களுக்கு நான் தானே காரணம்?
பிராஸ்பிரோ: குழந்தாய்! உன்னால் ஒரு துன்பமும் இல்லை. உண்மையில் நீதான் தெய்வக்குழவியாக இருந்து என்னைக்காத்தாய். வஞ்சமற்ற உன் புன்சிரிப்பால் என் துன்பங்கள் பறந்து போயின. இந்தத் தீவை அடையும் வரைக்கும் நமக்கு உணவு இருந்தது. இங்கு வந்த பிறகு உனக்குக் கல்வி புகட்டுவது எனக்கு இன்பமாய் இருந்தது. அந்தக் கல்வி உன் முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்பட்டது.
மிராந்தா: அன்புமிகுந்த தந்தையே! உம்முடைய நன்றியை நான் என்றும் மறவேன். அது நிற்க, இந்தப் புயலை உண்டாக்கியது ஏன்? அன்புடன் எனக்கு அறிவிக்க.
பிராஸ்பிரோ: என் பகைவர்கள்-நேபல்ஸ் அரசனும் என் தம்பியும்-புயற்காற்றால் இந்தத் தீவின் கரையில் வந்து சேர்வார்கள்.
இளவரசனைக் காணுதல்
இவ்வாறு பிராஸ்பிரோ சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஏரியல் வந்தான்; புயற்காற்றைப் பற்றியும், கப்பலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தியதைப் பற்றியும் தன் தலைவனிடம் சொல்லும் பொருட்டு வந்தான். ஆவியுருவம் மிராந்தா கண்ணுக்குப் புலப்படாது. என்றாலும், ஏரியலுடன் தான் பேசுவதை வெட்ட வெளியுடன் பேசுவதாக எண்ணி அவள் வியப்படைவாள் என்று பிராஸ்பிரோ கருதினான்; ஆதலால், தன் மகளை மந்திரக் கோலினால் மெல்லெனத் தொட்டான். உடனே அவள் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
“அஞ்சாமையுள்ள ஏரியலே! உன் வேலையைச் செய்து முடித்தாயா?” என்று பிராஸ்பிரோ கேட்டான்.
புயலைப் பற்றியும் கப்பற்காரர் நடுக்கத்தைப் பற்றியும் ஏரியல் விரிவாக எடுத்துக்கூறினான்; ’நேபல்ஸ் அரசன் மகன் பெர்திநந்து9 முதலில் கடலில் குதித்தான்; தன் மகனைக் கடல் அலைகள் விழுங்கின என்று அவன் தந்தை வருந்தினான். ஆனால், அவனுக்கு ஒரு தீங்கும் இல்லை; இத்தீவின் ஒரு மூலையில் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் தந்தை கடலில் மூழ்கிவிட்டிருப்பான் என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவனுடலில் ஒரு மயிரிழைக்கும் கெடுதி நேரவில்லை. அவனுடைய சிறந்த உடைகள் நீரில் நனைந்த போதிலும் முன்னிலும் பொலிவாக விளங்குகின்றன," என்று சொன்னான்.
பிராஸ்பிரோ: நன்று, நன்று. அந்த இளவரசனை அழைத்துக் கொண்டுவா. என் மகள் அவனைப் பார்க்க வேண்டும். அரசன் எங்கே? என் தம்பி எங்கே?
ஏரியல்: இளவரசனை அவர்கள் தேடிக் கொண்டிருக் கிறார்கள். ஆயினும், அவனைக் கண்டுபிடிக்கும், நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. கப்பற்காரர் ஒருவரும் மாயவில்லை. அவர்கள் தனித்தனியாகச் சிதறி யிருப்பதால், ஒவ்வொருவரும் தாம் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாக எண்ணுகிறார்கள். கப்பல் அவர்களுக்குக் காணாமற் போயினும், துறைமுகத்தில் தீங்கின்றி இருக்கிறது.
பிராஸ்பிரோ: ஏரியல்! நீ உனக்கிட்ட வேலையைச் செய்து விட்டாய். இன்னும் செய்யவேண்டிய வேலை உள்ளது.
ஏரியல்: இன்னுமா வேலை இருக்கிறது? தலைவரே! என்னை விடுதலை செய்வதாக வாக்களித்திருக்கிறீர். அதை உமக்கு நினை வூட்டுகிறேன். இது வரைக்கும் நான் உண்மையாக ஊழியம் செய்து வந்தது உமக்குத் தெரியும். நான் பொய் சொன்னதில்லை; தவறு இழைத்ததில்லை; வெறுப்பு இல்லாமலும் முணுமுணுக்காமலும் இட்ட வேலையைச் செய்து வந்திருக்கிறேன்.
பிராஸ்பிரோ: அப்படியா? உன்னை எப்படிப்பட்ட துன்பத் திலிருந்து விடுவித்தேன் என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. வயது முதிர்ந்த கூனி-கெட்ட பொறாமை குடிகொண்டவள் - கொடிய மாயக்காரி - சிகோராக்ஸ் என்பவளை நீ மறந்து விட்டாயோ! அவள் பிறப்பிடம் எது? சொல்.
ஏரியல்: ஐய! அவள் பிறந்த இடம் ஆர்ஜியர்.
பிராஸ்பிரோ: அங்கேயா பிறந்தாள்? அவளிடம் நீ கட்டுப் பட்டிருந்த நிலைமையை மறந்துவிட்டிருக்கிறாய். அதைச் சொல்லுகிறேன், கேள். அங்கே அவள் இருந்தபோது அந்தக் கெட்ட மந்திரக்காரி கொடிய சூனியங்களைச் செய்தாள். அவற்றைக் கேட்கவும் மனம் பொறாது. அதனால் அங்கிருந்தோர் அவளைத் துரத்தினர். கப்பற்காரர் அவளை இங்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அவளுடைய கொடிய ஏவல்களை நிறைவேற்றும் வன்மை உனக்கு இல்லை. ஆகையால் உன்னை ஒரு மரத்தில் பிணித்திருந்தாள். நீ அங்கே ஊளையிட்டுக் கொண்டிருந் தாய். அப்போது நான் உன்னைக்கண்டு, அத்துன்பத்திலிருந்து விடுவித்தேன். அதை இப்போது நினைத்துப்பார்.
ஏரியல்: அன்புள்ள தலைவரே! என்னை மன்னித்தருள்க. நான் உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன்.
இவ்வாறு ஏரியல் சொல்லித் தன் நன்றிகெட்ட தன்மைக்காக நாணமுற்றான். இன்னும் சில வேலைகளைச் செய்து முடித்தபின் அவனுக்கு விடுதலை அளிப்பதாகப் பிராஸ்பிரோ கூறினான்; இனி, என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தான்.
ஏரியல் உடனே அங்கிருந்து புறப்பட்டு, பெர்தி நந்தை நாடிச் சென்றான். பெர்திநந்து முன் இருந்த இடத்திலேயே அதே துயரக் கோலத்துடன் புல்தரையின்மீது உட்கார்ந்திருக்கக் கண்டான். “ஐயா! இளந்தலைவரே! உம்முடைய அழகிய வடிவத்தை மிராந்தா அம்மையார் பார்க்க வேண்டுமாம். அதற்காக நீர் இப்போது வரவேண்டும். என்னைத் தொடர்ந்து வருக!” என்று ஏரியல் அவனிடம் கூறி, பின்வருமாறு பாடத் தொடங்கினான்:-
அரசிளங் குமர அன்புடன் கேளாய்
பரவுறு தந்தை பரவையின் அடியில்
ஆழ்ந்ததோர் இடத்தில் அமைந்தே உள்ளான்
ஆழ்ந்தனன் என்றே அலமரல் ஒழிக
பண்பமை எலும்புகள் பவழமே ஆயின
கண்கள் இரண்டும் கருதரும் முத்தே
யாக்கையின் உறுப்பு யாவும் அழிந்தில
போக்கறு கடல்விளை பொருள்கள் ஆயின
அன்னவன் மறைய அக்கடல் வாழும்
கன்னியர் அடிக்கடி கனமணி அடித்தல்
கேட்டறி திலையோ டொண் டொண்
கேட்குமவ் வொலியே கேட்குமால் எனக்கே.
இறந்த தந்தையைப் பற்றி ஏரியல் இவ்வாறு கூறக்கேட்டதும், பெர்திநந்து தன் கலக்கத்தைவிட்டொழித்தான்; ஏரியலின் குரல் ஒலியைத் தொடர்ந்து பின்பற்றிச் சென்று ஒரு பெரிய மரத்தை அடைத்தான். அம்மரநிழலில் பிராஸ்பிரோ தன் மகளுடன் உட்கார்ந்திருந்தான். தன் தந்தை தவிர வேறொருவரையும் மிராந்தா இதற்கு முன் கண்டதில்லை.
அப்போது, பிராஸ்பிரோ தன் மகளை நோக்கி, “மிராந்தா! நீ அங்கே பார்ப்பது எதனை?” என்று கேட்டான்.
மிராந்தா மிக்க வியப்படைந்து, “தந்தையே! உண்மையில் அஃது ஓர் ஆவியே! அஃது அழகானதோர் உயிர் என்பதில் ஐயம் இல்லை. அஃது ஓர் ஆவியே அன்றோ?” என்றாள்.
“அன்று, அன்று அஃது உண்ணும், உறங்கும், நமக்கு இருப்பன போல அதற்கும் புலன்கள் உண்டு. அவன் ஓர் இளங்குமரன். அவன் அந்தக் கப்பலில் இருந்தவன் துயரத்தால் அவன் முகம் வாடியிருக்கிறது. இல்லையானால், அவன் அழகனாக விளங்குவான். தன்னுடன் வந்தவர்கள் காணாமற் போனதால், அவன் அவர்களைத் தேடி அலைகிறான்,” என்று பிராஸ்பிரோ தெரிவித்தான்.
உள்ளம் கலத்தல்
மக்கள் எல்லோரும் தன் தந்தையைப் போலவே முதுமை காட்டும் முகமும் நரைத்த தாடியும் உடையவர்கள் என்று மிராந்தா எண்ணியிருந்தாள். ஆகையால், அரசிளங்குமரனது அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அந்த வெற்றிடத்தில் ஓர் அழகிய நங்கையைக் கண்டதாலும், கேட்டறியாத ஒலிகளைக் கேட்டதாலும், பெர்திநந்துக்கு எல்லாம் புதுமையாக இருந்தன. தான் ஒரு மாயத் தீவில் வந்திருப்பதாகவும் அத்தீவின் தெய்வமே மிராந்தா என்றும் அவன் எண்ணினான். அந்த எண்ணத்திற்கு ஏற்பப் பேசத் தொடங்கினான்.
மிராந்தா நாணமுடையவளாய், தான் தெய்வம் அல்லள் என்றும் எளிய பெண் மகளே என்றும் கூறி, தன் வரலாற்றை எடுத்துரைக்கத் தொடங்கினாள். அப்போது பிராஸ்பிரோ அவளைத் தடுத்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போற்றிப் பாராட்டியது பிராஸ்பிரோவுக்கு மகிழ்ச்சி அளித்தது. முதன் முதலிற் கண்ட அளவிலேயே அவர்கள் காதல் கொண்டதும் அவன் அறிந்தான்; ஆயினும் பெர்திநந்தின் உறுதியைச் சோதிக்க எண்ணினான்; அதனால், சில துன்பங்களை உண்டாக்கத் துணிந்தான்.
அவ்வாறே, பிராஸ்பிரோ, சற்று முன்சென்று இளவரசனைக் கடுமையாய்ப் பார்த்து, “நான் இத்தீவின் மன்னன்; இத்தீவினை என்னிடமிருந்து கவர எண்ணி நீ ஒற்றனாக வந்திருக்கிறாய். என் பின்னே வா. உன் கழுத்தையும் காலையும் சேர்த்துக் கட்டுவேன். நீ கடல்நீரைக் குடிக்கவேண்டும்; நண்டு முதலியவற்றையும் உலர்ந்த கிழங்குகளையும் தின்ன வேண்டும்,” என்றான். உடனே, பெர்திநந்து “முடியவே முடியாது. மிக்க வலிமை வாய்ந்த பகைவனைக் காணும் வரையில், உன்னை எதிர்ப்பதே என் கடமை,” என்று சொல்லிக் கொண்டே தன் வாளை உருவினான். ஆனால், பிராஸ்பிரோ, தன் மந்திரக்கோலை அசைத்து, நின்ற இடத்திலேயே அவனை நிற்கச் செய்தான். பெர்திநந்து அசையவுமில்லை.
மிராந்தா தன் தந்தையைப் பற்றிக்கொண்டு, “ஏன் இவ்வளவு கொடுமையாக நடக்கிறீர். இவருக்காக நான் உறுதி கூறுகிறேன். இவர்மீது இரக்கம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். உம்மைத் தவிர, நான் பார்த்தது இவரைத்தான். இவர் உண்மையுள்ளவர் என்றே நான் கருதுகிறேன்,” என்றாள்.
அதற்குப் பிராஸ்பிரோ, “பேசாதே வாளா இரு. மேற்கொண்டு வாய் திறந்தால் கடிந்து பேசுவேன். என்ன! இந்தப் போலிப்பயலுக்குத் துணை பேச வருகிறாயா? இவனையும் காலிபனையும் மட்டும் பார்த்ததனால், இவனைவிட நல்லவர் இல்லை என்று எண்ணி விட்டாய் போலும்! அறிவில்லாப் பெண்ணே! காலிபனைவிட இவன் எவ்வளவு சிறந்தவனோ, இவனைவிட அவ்வளவு சிறந்தவர்கள் இருக்கிறார்கள்,” என்றான். மகளுடைய மன உறுதியைப் பார்க்க வேண்டும் என்றே இவ்வாறு அவன் கூறினான். “என்னுடைய அன்பு எளிமையானதே. இவனைவிட அழகானவர்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை,” என்று மிராந்தா விடை பகர்ந்தாள்.
பிராஸ்பிரோ இளவரசனை நோக்கி, “இளைஞனே, என் ஆணையை மீறி நடக்க உன்னால் ஆகாது, என் பின்னே வா,” என்றான்.
“ஆம். உண்மைதான்,” என்று பெர்திநந்து கூறினான். பிராஸ்பிரோ வின் மந்திர வன்மையால்! தான் எதிர்க்க வலிமையற்று நிற்பதை அவன் அறியவில்லை. பிராஸ்பிரோவைப் பின்தொடர்ந்து போகுமாறு நேரிட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. கண்ணுக் கெட்டியவரைக்கும் அவன் திரும்பித் திரும்பி மிராந்தாவைப் பார்த்துக் கொண்டே போனான்; பிராஸ்பிரோவைத் தொடர்ந்து குகைக்குள் சென்றபோது, "என் புலன்கள் அடக்கப் பட்டிருக்கின்றன. கனவில் இருப்பதுபோலக் கட்டுப்பட்டிருக்கிறேன். இவனோ என்னை அச்சுறுத்துகிறான். நானோ வலிமையற்று இருக்கிறேன். இவற்றையும் நான் பொருட்படுத்தமாட்டேன். இந்தச் சிறையிலிருந்து கொண்டே அந்த அழகியை நாள்தோறும் ஒருமுறை பார்க்கக் கூடுமானால், அதுவே போதும்,’ என்றான்.
பிராஸ்பிரோ பெர்திநந்தை நீண்ட நேரம் சிறையில் வைத்திருக்கவில்லை; சிறிது நேரத்தில் அவனை வெளியே கொண்டு வந்து கடுமையானதொரு வேலையைச் செய்யும்படி கட்டளையிட்டான்; அவனுக்கிட்ட வேலையின் கடுமையைத் தன் மகள் அறியுமாறு செய்தான்; பிறகு, தான் கற்கப் போவதாகக் காட்டிக்கொண்டு, மறைந்து நின்று இருவரையும் கவனித்தான்.
பளுவான மரத் துண்டுகளை அடுக்கும்படியாகப் பிராஸ்பிரோ அவனுக்குக் கட்டளையிட்டிருந்தான். அரச குமாரனுக்குக் கடுமையான வேலை செய்து பழக்கம் இல்லை. ஆகையால், அவன் சற்று நேரத்தில் மிகவும் களைத்துப் போனான். தன் காதலன் நிலையைக் கண்டு, “அந்தோ! இவ்வளவு வருந்தி உழைக்காதே, என் தந்தை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று மணி நேரம் வெளியே வாரார். ஆகையால் நீ ஓய்வு கொள்ளுமாறு வேண்டுகிறேன்,” என்றாள்.
அதற்குப் பெர்திநந்து, “அன்புள்ள பெண்மணியே! நான் அவ்வாறு செய்தல் கூடாது. ஓய்வு கொள்ளுமுன் என் கடமையை முடித்தாக வேண்டும்,” என்றான்.
“நீ வாளா இரு. உன்பொருட்டு நான் மரத்துண்டுகளை எடுத்து அடுக்குகிறேன்,” என்று மிராந்தா மொழிந்தாள். பெர்திநந்து அதற்கு உடன்படவில்லை. மிராந்தா துணை செய்யப்போய் இடையூறாக ஆனாள். எவ்வாறு எனில், அவர்கள் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த படியால், வேலை விரைந்து முடியவில்லை.
அவனுடைய காதலைச் சோதித்து அறிவதற்காகவே பிராஸ்பிரோ இந்த வேலையைச் செய்யுமாறு ஏவினான். ஆனால், மிராந்தா எண்ணியபடி அவன் படித்துக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதற்காகக் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.
பெர்திநந்து அவளுடைய பெயரைக் கேட்டான். அவள் தன் பெயரைச் சொல்லிவிட்டுப் பிறகு அது தன் தந்தையின் கட்டளையை மீறி நடந்ததாகும் என்றும் கூறினாள்.
பிராஸ்பிரோவின் மந்திர வன்மையாலே தான் இவ்வளவு விரைவில் அவள் அவன் மீது காதல் கொண்டாள்; அக்காதலால் தன் கட்டளையை மீறி மிராந்தா நடந்தது பற்றி அவன் சினங் கொள்ளவில்லை; தன் மகள் முதன் முதலாக அவ்வாறு மீறி நடந்தது குறித்து அவன் புன்சிரிப்புக் கொண்டான். அப்போது பெர்திநந்து, தான் பார்த்த பெண்கள் எல்லோரையும்விட மிராந்தாவிடத்தில் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகச் சொல்லி நெடுநேரம் பேசத் தொடங்கினான். அப்பேச்சைக் கேட்டுப் பிராஸ்பிரோ மிக மகிழ்ந்தான்.
தன்னைப்போல அழகுள்ள பெண் உலகத்திலேயே இல்லை என்று பெர்திநந்து புகழ்ந்தபோது மிராந்தா பின்வருமாறு கூறினாள்; “எந்த ஆண் முகமும் என் நினைவில் இல்லை. உன்னையும் என் அருஐமத் தந்தையையும் தவிர வேறு ஆண்மக்களையும் நான் கண்டதில்லை. இத்தீவுக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்வதொன்று உண்டு; அதை நம்புவாயாக! உன்னைத் தவிர இவ்வுலகத்தில் வேறு துணையை நான் விரும்பேன். எவ்வளவு எண்ணிய போதிலும் உன் அன்பான உருவம் தவிர வேறு உருவம் என் உள்ளத்தில் தோன்றவில்லை. என் தந்தையின் கட்டளையை மறந்துவிட்டு இவ்வாறு நான் அளவளாவிப் பேசுவது தவறு என்று அஞ்சுகிறேன்.” என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிராஸ்பிரோ புன்முறுலுடன் தலையசைத்தான், “என் விருப்பம் போல முடியும் எனத் தெரிகிறது. என் மகள் நேபல்ஸ் நாட்டு அரசியாவாள்,” என்று அவன் தந்தை மகிழ்ந்தான்போலும்.
அரசகுமாரர் அணிபெறப் பேசுதல் இயற்கைதானே! பெர்திநந்து மீண்டும் சிறந்த முறையில் பேசத் தொடங்கினான். அப்பேச்சினிடையே, தான் நேபல்ஸ் நாட்டு அரசுரிமை யுடையவன் என்றும், அவள் அந்நாட்டு அரசியாவாள் என்றும், கூறினான்.
உலகியல் அறியாத மிராந்தா அவனை நோக்கி, “ஐய! என்னே என் அறியாமை! என் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகுகிறதே! எனக்குக் கள்ளம் ஒன்றும் தெரியாது; நான் மனம் விட்டுச் சொல்கிறேன்; நீ என்னை மணந்தால், நான் உன் மனைவி ஆவேன்,” என்றாள்.
அதற்காகப் பெர்திநந்து நன்றி கூறுமுன்னே பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றினான்.
அரசன் அளித்த நன்கொடை
அவன் தன் மகளைப் பார்த்து, “குழந்தாய்! ஒன்றுக்கும் அஞ்சாதே. நீ சொன்னதெல்லாம் மறைந்திருந்து கேட்டேன். எல்லாம் எனக்கு உடன்பாடே. அப்பா, பெர்திநந்து! நான் உன்னைக் கடுமையாக நடத்தினேனா? அதற்கு ஈடாக என் மகளை உனக்குக் கொடுத்து மகிழ்விக்கிறேன். உனக்குத் தந்த துன்பம் எல்லாம் உன் காதலைச் சோதிப்பதற்காகவே. சோதனையில் நீ வெற்றி பெற்றாய். உன் உண்மையான காதலுக்குத் தகுந்த பரிசு கொடுக்கிறேன். அப்பரிசு என் மகளே; ஏற்றுக் கொள்வாயாக. அவளைப் புகழ்ந்து கூறச் சொற்கள் இல்லை. இவ்வாறு நான் பெருமை பாராட்டுவது பற்றிச் சிரிக்கவேண்டா. நான் போய்ச் செய்யவேண்டிய வேலை இருக்கிறது. நான் திரும்பி வரும்வரைக்கும் நீங்கள் இருவீரும் இங்கே பேசிக்கொண்டு இருங்கள்,” என்றான். இவ்வாறு தந்தை கட்டளையிடுவதைக் கேட்ட மிராந்தா மகிழ்ந்தாள்.
பிராஸ்பிரோ உடனே அப்புறம்போய், ஏரியலைக் கூப்பிட்டான். அப்பொழுது ஏரியல் அவன் முன் வந்து நின்றான்; பிராஸ்பிரோவின் தம்பியையும் நேபல்ஸ் அரசனையும் பற்றித் தான் செய்தவற்றைச் சொல்ல ஆவலுற்று நின்றான். “புதுமையான காட்சிகளையும் ஒலிகளையும் உண்டாக்கி, அவர்கள் காணுமாறும் கேட்குமாறும் செய்தேன். அவற்றால் அவர்கள் அஞ்சி உணர்விழந்தார்கள். அங்கும் இங்கும் அலைந்து களைத்துப் பசித்து வருந்தியபோது அவர்கள் எதிரே திடீரென்று இன்சுவை உணவை உண்டாக்கி வைத்தேன். அவர்கள் உண்ணத் தொடங்கிய போது, தீராப்பசி கொண்ட அரக்கன் போலத் தோன்றி அவ் உணவை ஒழித்து விட்டேன். உடனே அவ் உருவத்துடன் அவர்களைப் பார்த்து, ’பிராஸ்பிரோவை நாட்டிலிருந்து துரத்தி அரசுரிமை கவர்ந்தீர். அவரையும் அவர் மகளையும் கடலில் மாளுமாறு விட்டுச் சென்றீர். அந்தக் கொடுமையாலேதான் இப்போது இந்தத் துன்பங்களும் நடுக்கங்களும் உங்களுக்கு ஏறப்பட்டிருக்கின்றன; என்று எடுத்துரைத்தேன். அவர்கள் அதைக் கேட்டு மெய்ம்மறந்து போனார்கள்”, என்று ஏரியல் கூறினான்.
மீண்டும், அவன் பிராஸ்பிரோவைப் பார்த்து, “நேபல்ஸ் மன்னனும் அந்தோனியாவும் செய்த தவற்றை நினைந்து மனம் வருந்துகிறார்கள்; உண்மையாகவே அவர்கள் மனம் திருந்தி வருந்துகிறார்கள்; அவர்கள் நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளாதிருக்க முடியவில்லை,” என்றான்.
“ஏரியல்! அப்படியானால், அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வா. ஆவியுருவாக உள்ள நீயே அவர்களுடைய துன்பத்திற்காக வருந்துவாயானால், அவர்களைப் போன்ற மனிதனாகிய நான் மனம் இரங்காதிருக்க முடியுமோ? உடனே போய் அவர்களை அழைத்துவா,” என்றான் பிராஸ்பிரோ.
அவ்வாறே ஏரியல் சென்று அரசனையும் அந்தோனி யோவையும் முதியவனான கன்ஸாலோவையும் அழைத்துச் சென்றான்; அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களுக்கு முன்னே இசையுடன் பாடிக்கொண்டு சென்றான். இதை அவர்கள் வியந்து கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்து சென்றார்கள்.
பாய்மரம் முதலியன ஒன்றும் இல்லாத வெறும் படகில் பிராஸ்பிரோவையும் மிராந்தாவையும் அவனுடைய தம்பி கடலில் விட்டுச் சென்றான் அல்லனோ? அப்போது அந்தப் படகில் பிராஸ்பிரோவுக்காகச் சில நூல்களும் உணவு முதலியனவும் அன்புடன் வைத்திருந்த கன்ஸாலோதான் இப்போது அவர்களுடன் சென்றவன்.
அச்சமும் துன்பமும் அறிவுகலங்கச் செய்திருப்பதால், இப் போது பிராஸ்பிரோவை இன்னான் என்று அவர்கள் தெரிந்துக் கொள்ளவில்லை. பிராஸ்பிரோ அவர்களைக் கண்டதும், முதலில் கன்ஸாலோவை வரவேற்றுத் தன்னை இன்னான் என்று தெரிவித்தான்; “என் உயிரைக் காத்தருளிய தோழனே! வருக!” என்றான். உடனே, அவன் தம்பியும் நேபல்ஸ் அரசனும் அவனை அறிந்துகொண்டனர்.
தமையனுக்கு இழைத்த தீங்கை நினைத்து உண்மையாகவே இரங்கி வருந்திக் கண்ணீர்விட்டு அந்தோனியோ மன்னிக்கு மாறு வேண்டிக்கொண்டான். பிராஸ்பிரோவைத் துரத்தும் முயற்சிக்குத் துணைபுரிந்த குற்றத்திற்காக மிகவும் வருந்துவதாக அரசன் அறிவித்தான். பிராஸ்பிரோ அவர்களை மன்னித்தான். நாட்டைப் பிராஸ்பிரோவுக்கே கொடுத்து விடுவதாக அவர்கள் உறுதி மொழிந்தார்கள். பிராஸ்பிரோ நேபல்ஸ் அரசனை நோக்கி, “ஐய! உமக்கு நான் தரவேண்டிய நன்கொடை ஒன்று உள்ளது,” என்று சொல்லி, கதவைத் திறந்து அறையினுள் பெர்திநந்து மிராந்தா இருவரும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருப்பதைக் காண்பித்தான்.
ஒருவரை ஒருவர் காணாமல் கடலில் மூழ்கிவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்த நேபல்ஸ் அரசனும் அவன் மகனும் இப்பொழுது திடீரென்று கூடியதால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அவர்களைக் கண்டதும், “என்ன வியப்பு! இவைகள் எவ்வளவு சிறப்புடைய உயிர்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் உலகம் மேன்மை உடையதே ஆகும்,” என்றாள் மிராந்தா.
நாட்டை அடைந்து நலமுறல்
மிராந்தாவின் வனப்பும் சிறப்பும் கண்ட நேபல்ஸ் மன்னன். முதன் முதலில் பெர்திநந்து கண்டு வியந்தது போலவே பெருவியப்புற்றான்; “இக் கன்னி யாரோ? நம்மைப் பிரித்து மீண்டும் கூடச்செய்த தெய்வமோ இவள்?” என்று வினவினான். மிராந்தாவை முதலில் பார்த்தபோது பெர்திநந்தும் இவ்வாறே தெய்வமென எண்ணினான். தன் தந்தையும் அவ்வாறே எண்ணுவதைக் குறித்துப் பெர்திநந்து புன்சிரிப்புக் கொண்டு, “தந்தாய்! இவள் தெய்வம் அல்லள், பெண் மகளே ஆவாள்; இறைவன் திருவருளால், எனக்கு உரிய வாழ்க்கைத் துணைவி ஆவாள். நீர் இறந்துவிட்டீர் என்று தவறாக எண்ணிக்கொண்டு, உமது உடன்பாடு பெறாமலேயே நான் இவளைத் துணையெனக் கொண்டேன். இவள் இந்தப் பிராஸ்பிரோவின் மகள். இவர் மிலன் நாட்டு அரசர்; இவரது புகழைப்பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்; ஆனால் இவரை நேரில் கண்டது இப்போதுதான். இவர் அருளால் நான் புத்துயிர் பெற்றேன். அருமைத் துணைவியாகிய இவளை அளித்ததனால், இவர் எனக்கு மாமனார் ஆகிறார்,” என்றான்.
“அவ்வாறானால் நான் இவளுக்கு மாமனார் ஆவேன். அந்தோ! நான் என்ன தீங்கு இழைத்து விட்டேன்! அதற்காக என் மருமகளிடம் மன்னிப்புக் கேட்பதனால், அது புதுமையாக இருக்குமே!” என்றான் நேபல்ஸ் மன்னன்.
அதற்குப் பிராஸ்பிரோ, “இனி அதைப்பற்றி நினைக்க வேண்டா. கழிந்துபோன துன்பங்களைப் பற்றிய எண்ணமே வேண்டா. எல்லாம் இன்பமாக முடிந்துவிட்டனவே!” என்றான். அவன் தன் தம்பியைத் தழுவி அணைத்து, “நீ செய்ததை நான் மறந்துவிட்டேன். இனி அதைக் குறித்துக் கவலைப்படாதே. எல்லாம் இறைவன் திருவுளம்; நான் நாட்டை இழந்து வரவேண்டும் என்பதும் இந்தத் தீவிற்குப் பெர்திநந்து வந்து என் மகளைக் கண்டு காதலிக்கவேண்டும் என்பதும், அதனால் நேபல்ஸ் நாட்டு அரசுரிமையை என் மகள் பெறவேண்டும் என்பதும் ஆகிய எல்லாம் அவன் செயல்,” என்று கூறினான்.
அந்தோனியோவைத் தேற்றும் பொருட்டாகப் பிராஸ்பிரோ இவ்வளவு அன்பாகப் பேசினான். ஆனால் அவன், அம்மொழிகளைக் கேட்டு வெட்கமுற்று வருந்திக் கண்ணீர்விட்டு வாய்குழறிப் பேசாமல் நின்றான். அன்பு மிகுந்த முதியோன் கன்ஸாலோ இவ்வாறு எல்லாம் இன்பமாக முடிந்தது கண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்தான்; காதலர் இருவர் நன்மைக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டான்.
பிறகு, பிராஸ்பிரோ அவர்களைப் பார்த்து, “நீங்கள் வந்த கப்பல் துறைமுகத்தில் கேடின்றி இருக்கிறது. கப்பற்காரரும் அதில் நலமாக இருக்கின்றனர். நானும் என் மகளும் நாளைக் காலையில் உங்களுடன் வருவோம். அதுவரையில், இக்குகையில் தங்கியிருந்து இங்குக் கிடைக்கும் எளிய உணவை உண்ணுமாறு வேண்டுகிறேன். மாலையில் உங்கள் பொழுதுபோக்கிற்காக, நான் இத்தீவிற்கு வந்த பிறகு நிகழ்ந்தவற்றை உங்களுக்கு எடுத்துரைப்பேன்,” என்றான். உடனே, அவன் காலிபனை அழைத்து, உணவு சமைக்குமாறும், குகையை ஒழுங்காய் அமைக்குமாறும் கட்டளையிட்டான். காலிபனைக் கண்டதும், அவர்கள் எல்லாரும் அவனுடைய விகாரமான விலங்குருவத்தைக் குறித்து வியப்புக் கொண்டனர். தனக்கு உள்ள பணியாள் அவன் ஒருவனே என்று பிராஸ்பிரோ அவர்களிடம் கூறினான்.
பிறகு, பிராஸ்பிரோ ஏரியலுக்கு விடுதலை அளித்தான்; ஏரியல் பெருமகிழ்ச்சி கொண்டான்; தன் தலைவனுடைய நம்பிக்கைக்குரிய பணியாளாக இருந்து வந்தபோதிலும், உரிமை உடையவனாய் வாழ்ந்து இன்புறவேண்டும் என்றே அவன் எப்போதும், ஆவல் கொண்டிருந்தான். கட்டுப்பாடின்றி, பசுமரங்களின் நிழலிலும், இனிய பழங்களின் இடையிலும் நறுமணமுள்ள மலர்களின் நடுவிலும், திரிந்து கொண்டிருக்க அவன் எப்போதும் ஆவல் கொண்டிருந்தான். அவனுக்கு விடுதலை அளித்தபோது, பிராஸ்பிரோ, “என் அன்பிற் குரியவனே! ஏரியல்! உன்னைப் பிரிய மனம் இல்லை; ஆயினும் உனக்கு உரிமை வழங்குகின்றேன்,” என்றான். அதற்கு ஏரியல், “அன்புமிக்க தலைவரே! உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதுவரை உம்மிடம் நம்பிக்கையோடு ஊழியம் செய்துவந்தேன் நான் பிரியுமுன், நீங்கள் ஊருக்குப் போய்ச் சேரும் வரைக்கும் அக்கப்பலை நல்ல காற்றுச் செலுத்துமாறு செய்து தொடர்ந்து வர விரும்புகிறேன். அதற்கு இசைந்தருளுமாறு வேண்டுகிறேன். பிறகு, நான் விடுதலை பெற்று இன்பவாழ்வு வாழ்வேன்,” என்று சொல்லிப் பின்வருமாறு பாடினான்.
"வண்டுகள் தேன் உணும் பூக்களில் யானும்
வளமுற உண்டலர் மணங்குளிப்பேனே
கொண்டுறு மலர்களே எனதரும் பாயல்
கூகைகள் கூவிடக் குவிந்திருப் பேனே
நண்ணிய வேனிலில் வெளவாலின் மீதே
நயனுறப் பறந்தெங்கும் நான்சிரிப் பேனே
உண்மகிழ் பெருகவே உயர்கொம்பிற் பூவின்
உறுநிழல் வைகியே உயிர்சிறப் பேனே."
பிறகு, பிராஸ்பிரோ தன் மந்திரவண்மையை இனி எங்கும் செலுத்துவதில்லை என்று உறுதி பூண்டான்; மந்திர நூல்களையும் மந்திரக் கோலையும் மண்ணில் ஆழப் புதைத்தான். இவ்வாறு பகையைவென்று தம்பியுடனும் நேபல்ஸ் அரசனுடனும் மீண்டும் நட்புக் கொண்ட பிறகு அவன் எண்ணம் நிறைவேறியது எனலாம். ஆனால் ஒருகுறை இருந்தது. தன் தாய்நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அரசுரிமையைத் திரும்பப் பெற்றுப் பெர்திநந்து இளவரசர்க்கும் மிராந்தாவுக்கும் நடைபெறும் திருமணத்தைக் கண்டு களிப்பதே குறையாக இருந்தது. நேபல்ஸ் நாட்டிற்குத் திரும்பிய உடனே அத் திருமணத்தை மிகமிகச் சிறப்பான முறையில் விரைவில் நடத்துவதாக நேபல்ஸ் மன்னன் தெரிவித்தான். ஏரியலின் நல்ல துணை கொண்டு கடலில் இனிய பிரயாணம் செய்து முடித்து விரைவில் அவர்கள் அந்நாட்டை அடைந்தார்கள். திருமணம் இனிது நிறைவேற, அனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.
அடிக்குறிப்புகள்
1. Prospero
2. Miranda
3. Sycorax
4. Ariel
5. Milan
6. Antonia
7. Naples
8. Gonzalo
9. Ferdinand
லியர் மன்னன்(King Lear)
** ஆடவர்**
1. லியர்: பிரிட்டனின் அரசன்.
2. ஆல்பனித் தலைவன்: அரசன் மூத்தமகள் கானெரிலின் கணவன்:- இறுதியில் அரசன்
3. கார்ன்வால்தலைவன்: இரண்டாம் மகள் ரீகனின் கணவன்.
4. பர்கண்டித் தலைவன்: இளைய மகள் கார்டெலியாவை வேட்டும்; அவன் செல்வமற்றபோது! அவளை வேண்டா மென்றும் மறுத்தவன்.
5. பிரான்சு அரசன்: கார்டெலியாவை வேட்டு அரசுரிமை யற்ற பின்னும் மணந்தவன்.
6. கென்ட் தலைவன்: அரசனிடம் உண்மையான நண்பன் - அரசனால் துரத்தப்பட்டும் மாற்றுருவில் வேலையாளாய் உதவியவன். மாற்றுருவில் கேயஸ் - வேலையாள்.
7. எட்மன்ட்: கிளஸ்டர் தலைவன் இளைய மகன்:அண்ண னைத் துரத்தி உரிமை பெற்றவன்; கா கானெரில் ஏவலாள்னெரிலையும் ரீகனையும் தனித்தனி மறைவாகக் காதலித்தவன்.
8. எட்கார்: எட்மன்ட் அண்ணன்.
9. கானெரில் ஏவலாள்: கேயஸ் உருவில் வந்த கென்ட் தலைமகனால் புடைக்கப்பட்டவன்.லியர்ஆல்பனித் தலைவன்: அரசன் மூத்தமகள் கானெரிலின் கணவன்:- இறுதியில் அரசன்
10. கோமாளி: இறுதிவரை லியருடன் இருந்து உதவியவன்.
பெண்டிர்:
1. கானெரில்: லியரின் மூத்தமகள்; ஆல்பனித் தலைவன் மனைவி.
2. ரீகன்: லியரின் இரண்டாம் மகள்; கார்ன்வால் தலைவனின் மனைவி.
3. கார்டெலியா: லியரின் கடைசி மகள்; பர்கண்டித் தலைவனால் விருப்பப்பட்டும் அரசுரிமையற்றபோது பிரான்சு அரசனால் மணஞ்செய்யப் பெற்றவர்.
** கதைச் சுருக்கம்**
லியர் பிரிட்டனின் மன்னன். அவனுக்கு மூன்று புதல்வியர். மூத்தவர்களாகிய கானெரிலையும், ரீகனையும் முறையே ஆல்பனித் தலைவனும் கார்ன்வால் தலைவனும் மணந்து கொண்டனர்; கார்டெலியாவை மணக்கப் பர்கண்டித் தலைவனும் பிரான்சு அரசனும் காத்திருந்தனர்.
லியர் தன் புதல்வியர் அன்பின் அளவிற் கிணங்க நாட்டைப் பங்கிட விரும்பவே, நேர்முகமான புகழ்ச்சியுரைகளால் கானெரிலும் ரீகனும் பெரும்பகுதி நாட்டை அடைய, உண்மையுள்ள கார்டெலியா அவன் சினத்துக்களாகி அனைத்துமிழந்தாள். இந்நிலைமையில் அவளைப் பர்கண்டி துறக்க பிரான்சு அரசன் போற்றி ஏற்று மணந்து கொண்டான்.
லியர் மன்னன் அறியாமையை இடித்துக்காட்டிய உண்மையன் பனான கென்ட் தலைவனும் அவனால் துரத்தப்பட்டான். ஆனால் கென்ட் மீட்டும் உருமாறிக் கேயஸ் என்ற பெயருடன் வேலையாளாய் வந்தமர்ந்தான்.
கானெரிலும் ரீகனும் லியர் மன்னன் படைக்குழுவினரை வீண் சுமையென விலக்கி அவனைக் கடுஞ்சொற்களால் தாக்குவதில் ஒருவரை ஒருவர் போட்டியிட்டனர். அதனைப் பொறாமல் புயலென்றும் பாராது லியர் வெளியேறி வருந்தினன். மன்னனின் கோமாளி அவனையண்டி ஒரு பழங்குடிலிலாயினும் சென்று தங்கும்படி தூண்டினான். ஆனால் லியரின் மனம் மக்கள் கொடுமையால் பித்துக்கொண்டு தள்ளாடியது. கேயஸ் உருவில் உடன்வந்த கென்ட் தலைவன் இந்நிலையில் அவனைத் தன்னிடமாகிய டோவர் அரண் மனைக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கார்டெலியாவுக்குச் செய்தி அனுப்பினான். கார்டெலியாவைக் கண்டும் குழம்பிய மூளையால் ஒன்றும் அறிய முடியவில்லை.
இதற்குள் கானெரிலும் ரீகனும் தன் கணவரை மதியாது கிளஸ்டர் தலைவன் இளையமகன் எட்மன்ட் என்பவனைக் காதலித்தனர். ரீகன் அவன் அண்ணனைத் துரத்திக் கிளஸ்டரின் உரிமையை அவனுக்குக் கொடுத்தாள். அதோடு தன் கணவன் தற்செயலாய் இறந்தவுடன் அவனை மணக்க முயன்றாள். இது கேட்டுப் பொறாமை கொண்ட கானெரில் அவளுக்கு நஞ்சிட அவள் கணவன் அனைத்துமறிந்து அவளைச் சிறையிட்டான். சிறையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். இருவரும் இறந்தும் இவர்கள் ஆணையால் சென்ற படை கார்டெலியா படையை முறியடித்து அவளைச் சிறையிட அவளும் மடிந்தாள். ஆல்பனித் தலைவனே அரசுக்கட்டிலுக்கு மீந்தான்.
உண்மை அறியாமல் சினங்கொள்ளுதல்
பிரிட்டனை ஆண்ட¹ மன்னன் லியர் என்பவனுக்குப் பெண் மக்கள் மூவர் இருந்தனர்; மூத்தவள்² கானெரில் என்பவள்³ ஆல்பனித் தலைவனை மணந்தாள். ரீகன்⁴ என்பவள் கார்ன்வால்⁵ தலைவனை மணந்தாள். இளையவள்⁶ கார்டெலியாவுக்கு மணமாகவில்லை. பிரான்சு மன்னனும் ⁷பர்கண்டித்தலைவனும் அவளை மணக்க விரும்பினர்; அவ்விருப்பத்தோடு, லியர் மன்னனது அரசவைக்கு வந்திருந்தனர்.
மன்னனுக்கு வயது எண்பதுக்குமேல் ஆயிற்று. மூப்பின் காரணமாக ஏற்பட்ட தளர்ச்சியாலும், நெடுங்காலம் அரசாண்ட அயர்ச்சியாலும், அரசியலில் இனிக் கலப்பதில்லை என்றும், ஆளும் பொறுப்பை இளைஞர்பால் விடுத்து, விரைந்து வரக்கூடிய மரணத்தைக் கருதித் தன் வாழ்வை அமைதியால் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவன் துணிந்தான். இக்கருத்தினைக் கொண்ட அவன், தன் பெண்கள் மூவரையும் அழைத்து, அவர்களுள் யார் தன்னிடம் பேரன்பு கொண்டவர் என்பதை அவர்கள் வாய் மொழியால்அறிய விரும்பினான். அவர்கள் தன்பால் காட்டும் அன்பின் அளவிற்கு ஏற்றபடி தன்நாட்டை அவர்களுக்குப் பகுத்துக் கொடுக்க எண்ணினான்.
மூத்தவளை மன்னன் அழைத்துக் கேட்டான், “தந்தையே! உம்மிடம் யான் கொண்ட அன்பை எம்மொழிகளால் எடுத்துரைக்க இயலும்? என் கண்மணியினுஞ் சிறந்த பொருள், என் உயிரினும் உரிமையினும் உயரிய பொருள் நீர்தாம்,” என்று அவள் கூறினாள். இவ்வாறு மேலும் சில பொய்ம்மொழிகளை உரைத்தாள். உண்மையான அன்பு இல்லாதவரே இவ்வாறு பேசுதல் கூடும். அவ்வன்பு இருக்குமானால், உள்ளத்திலிருந்து பிறந்த சில சொற்களே அமையும் அல்லவோ? அவள் வாயினின்றும் வெளிப்பட்ட இம்மொழிகளைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்; மனமார்ந்த அன்போடு அவள் உரைத்ததாக எண்ணிவிட்டான்; தந்தை ஒருவர்க்கு இயற்கையான அன்புமிக்க நிலையில், அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்துவிட்டான்.
பின்னர், தன் இரண்டாம் மகளை அழைத்து அவள், கூறுவதைக் கேட்டான். அவள் தன் தமக்கையைப் போன்றவளே; அவளைப் போலவே இல்லாததைப் புனைந்து கூறினாள், “என் தமக்கை செலுத்தும் அன்பைவிட, யான் உம்மிடம் கொண்ட அன்புமிகப் பெரிது; உலகத்தார் புகழும் எதுவும் எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை; உம்மிடம் - என் அருமைத் தந்தையாராகிய உம்மிடம் அன்பு செலுத்துவதிலே தான் எனக்குச் சிறந்த மகிழ்ச்சி உள்ளது,” என்றாள்.
தான் எண்ணியபடியே இவ்வளவு அன்புமிக்க மக்களை உடையவனாக இருக்கும் பேற்றை நினைந்து அவன் களித்தான். ரீகன் கூறிய அழகிய சொற்களைக் கேட்டதும், மூத்தவளுக்குத் தந்ததுபோலவே அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்தான்.
பிறகு, அவன் தன் இளையமகன் கார்டெலியாவை அன்புடன் அழைத்தான். அவன் அவளையே தன் செல்வக் குழந்தையாகப் போற்றிவந்தான்; மற்றவரினும் அவளிடம் மிக்க அன்பு காட்டி வந்தான்; ஆகையால், அவர் இருவரும் உரைத்தவாறே அவளும் இன்மொழி கூறித் தன் உள்ளத்தை மகிழ்விப்பாள் என்பதில் அவனுக்கு ஐயமே இல்லை. அன்றியும் அவர் கூறியவற்றைவிட அவள் வாய்ச்சொல் விழுமியதாக இருக்குமென்றும் எண்ணினான்.
ஆனால், கார்டெலியாவுக்கு உண்மை தெரியும். தன் தமக்கையார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் தந்தையைப் புகழ்ந்தது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தந்தை நாட்டை இழக்கச் செய்வதே அவர் பேச்சின் நோக்கம் என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு தந்தை நாடிழந்தபின் தம் கணவருடன் தாம் அரசாட்சி நடாத்தி மகிழ எண்ணங் கொண்டிருத்தலையும் அவள் அறிந்தாள். ஆகையால், அவள் தந்தையை நோக்கி, “தந்தையே என் கடமைக்கேற்றவாறு யான் உம்மிடம் அன்பு செலுத்துகின்றேன். அந்த அளவிற்கு மிகுதலும் குறைதலும் இல்லை,” என்று சுருங்கக் கூறினாள்.
தன் செல்வமகளிடம் இத்தகைய நன்றியற்ற மாற்றத்தை அரசன் எதிர்பார்க்கவில்லை. “கார்டெலியா! உன் சொற்களைத் திருத்திக்கொள். நன்றாக எண்ணிப்பார். நீ பெறவேண்டிய செல்வத்தை இழக்கவேண்டா,” என்று அவளிடம் கூறினான்.
“தந்தையே! என்னைப் பெற்றுவளர்த்து அன்போடு போற்றிய நன்றியை நான் மறக்கவில்லை. என்னால் இயன்றவரை கைம்மாறு செய்யும் கடமை உடையேன். உம்முடைய கட்டளைப் படி நடக்கிறேன். உம்மிடம் அன்பு செலுத்துகிறேன். உம்மிடம் வணக்கமாய் ஒழுகுகிறேன். ஆனால், என் தமக்கையரைப் போல ஆரவாரமாய்ப் பேச என்னால் இயலாது; இந்த நிலவுலகத்தில் உம்மிடம் தவிர வேறொருவரிடமும் அன்பு இல்லை என்று உறுதியளிக்கவும் இயலாது. அவர்கள் இருவரும் சொன்னவை உண்மையா? வேறொருவரிடமும் தமக்கு அன்பு இல்லை என்று கூறினார்களே! அப்படியானால், அவர்கள் ஏன் கணவரை நாடி மணம் செய்து கொண்டார்கள்? நான் மணம் செய்து கொள்வதானால், என் காதலரிடம் என் அன்பின் ஒரு பெரும் பகுதி செல்லாதோ அவர் பொருட்டு எனக்குச் சில கடமைகள் ஏற்படும் அல்லவோ? யான் உம்மையே முழு அன்புடன் போற்ற வேண்டுமானால், என் தமக்கையார் போல மணம் செய்து கொள்ளல் தகுதியோ?” என்று கார்டெலியா எடுத்துரைத்தாள்.
அவள் தமக்கையார் இருவரும் தந்தையிடம் பேரன்பு கொண்டவராக நடித்தனர்; ஆனால், கார்டெலியா உண்மை யாகவே, பேரன்பு கொண்ட உள்ளத்தினள்; அவள் வாய்ச் சொற்கள் நன்றியற்றவை போல இருந்தன. அவள் தமக்கையரை விட அன்பு மிக்க சொற்கள் பேசியிருத்தல் கூடும். ஆனால், தமக்கையர் தந்திரமாய்ப் பேசிய போலிப் பேச்சைக்கேட்டு அப்பேச்சிற்காக அவர்கள் பெற்ற பெரும் பரிசுகளை அறிந்த பின்னர், அவளால் அவ்வாறு பேச முடியவில்லை; அன்பைச் செலுத்தி அமைதியாய் ஒழுகலே தக்க தொன்று என அவள் எண்ணினாள். அதனால், அவள் கொண்ட அன்பு தூய்மையானது என்பதும், பொருளாசையால் மேற்கொண்ட போலியன்று என்பதும் புறத்தே தமக்கையரை விட ஆரவாரம் குறைந்த அளவிற்கு அகத்தே உண்மை நிறைந்திருந்தது என்பதும் அறியலாம்.
ஆனால், மன்னன் இப்பேச்சைச் செருக்குக் கொண்ட தென்றான்; தன் மகளின் வஞ்சகமற்ற தன்மையை அறியாமல் சினந்தான். இயற்கையாகவே அவன் ஆத்திரம் உடையவன்; உண்மையான பேச்சு எது, வெறும் புகழுரை எது, உள்ளத் தினின்றும் பிறந்த சொற்கள் எவை. பொருளற்ற போலி மொழிகள் எவை எனப் பிரித்தறியும் திறனும் முதுமையின் காரணமாக அவனிடம் இல்லை. அறியாது கொண்ட சினத்தால், அவன் தன் நாட்டின் மூன்றாம் குதியை கார்டெலியாவின் பொருட்டு ஒதுக்கி வைத்தருந்த செல்வத்தை - அவளுக்குத் தாராமல், அவளுடைய தமக்கையார்க்கும் அவர் தம் கொழுநர்க்குமாகத் தந்து விட்டான்.
அவர்களையும் அவர்களுடைய கொழுநரையும் லியர் தன் அரசவைக்கு வரவழைத்தான். அமைச்சர் முதலானோர் கூடியிருந்த அந்த அவையில் அரசுரிமையை அவர்களிடம் ஒப்புவித்தான். படை, செல்வம் முதலியன யாவும் அவர்களைச் சார்ந்தன. அரசன் என்ற வெறும் பட்டத்தை மட்டும் தன்பால் நிறுத்திக் கொண்டான். தனக்கு ஏவலராக வீரர் நூற்றுவர் இருக்கப் பெற்றான். தன்னையும் அவர்களையும் தன் பெண்கள் இருவருள் ஒருவர் தம் அரண்மனையில் வைத்துத் திங்கள் முறையாகப் போற்ற வேண்டும் என்றும் ஏற்பாடு செய்தான்.
ஆராய்ச்சி இன்றி ஆத்திரங்கொண்டு அரசன் தன் நாடுபற்றிச் செய்த தகுதியற்ற முடிவினைக் கண்டு, அமைச்சர் முதலாயினோர் வியந்தனர்; வருந்தினர். ஆனால், அவர்கள் அரசன் செய்கையில் குறுக்கிட்டுத் திருத்தும் ஆற்றல் உடையவர்கள் அல்லர். அவர்களுள் 8’கென்ட் தலைவன் ஒருவனே அஞ்சாது எழுந்தான், கார்டெலியாவின் சார்பாகப் பேசத் தொடங்கினான்; வாளா இருக்கத் தவறினால் கொன்று ஒறுப்பதாக அரசன் அச்சுறுத்தியும் அடங்கவில்லை.
“வேந்தர் பெருந்தகையே! யான் என்றும் அரசியல் முறைக்கு அடங்கி ஒழுகிவந்தேன். உம்மை வணங்கி வழிபட்டுவந்தேன்; தந்தை எனப் போற்றித் தலைவர் எனப் பின்பற்றினேன். என் உயிரை யான் பொருட்படுத்தியதும் இல்லை; உமது நன்மையின் பொருட்டு எப்போதும் அதனை இழக்கதுணிந்து வாழ்ந்தேன். இப்போது என்மீது கடுஞ்சினங்கொண்டு நீர் பகைத்தபோதிலும், என் பழைய கொள்கையைக் கைவிடேன். உமது நன்மைக்காகவே இன்று உம்மை எதிர்த்துப் பேசவும் முன்வந்தேன். உம்முடைய பொருத்தமற்ற செய்கையே யான் முறை தவறி நடப்பதற்குக் காரணமாகும். இதுகாறும் யான் உண்மையான அமைச்சனாக இருந்து என் கடமையை ஆற்றி வந்தது உமக்குத் தெரியும். நான் இன்று கூறுவதன் உண்மை உமக்கு விளங்குக் காலம் வரும். அப்போது ஆத்திரங்கொண்டு செய்த செய்கையைப் பற்றி நீரே வருந்துவீர். இதற்கு முன்னும் அவ்வாறு நேர்ந்ததில்லையோ? இளைய மகளுக்கு உம்மிடம் சிறிதும் அன்பு இல்லை என்றும் போலியுரைகள் பேசிப் புகழ்ந்த மற்றவர்கள் அன்புடையவர்கள் என்றும், நீர் கொண்ட முடிவு எவ்வகையிலும் பொருந்தாது. அதன் பயனை நீரே அனுபவிக்கப் போகின்றீர். வல்லார் வெறும் புகழுரையை விழைவாரானால், உண்மையாளர் வேறு என் செய்வார்? வெளிப்படையாக உண்மை உரைத்தலே தகுதி எனக் கொள்வர். யான் உமது அடிமை; என் உயிர் உம் ஆணை வழிப்பட்டது; அஞ்சுவது யாதொன்றும் இல்லை; என் கடமையை ஆற்றவேண்டுமன்றோ? ஆதலின் இச் சொற்களைக் கூறினேன்,” என்றான் அவன்.
குணக்குன்றாகிய கென்ட் தலைவன் உண்மையும் உரிமையுங் கொண்டு பேசிய பேச்சால் அரசன் சினம் மேலும் மூண்டது. தன் மருத்துவனைக் கொன்றுவிட்டுத் தன்னைப் பற்றிய தீராநோயைப் போற்றும் பித்துப்பிடித்த பிணியாளனைப் போல அரசன் அவன் உரிமையைப் போக்கினான்; இன்னும் ஐந்து நாட்களுக்கு மேல் பிரிட்டன் எல்லைக்குள் இருப்பின் கொல்லப்படுவான் என்றும் எச்சரித்தான். அத்தலைவனும் தயங்கவில்லை, “அரசே! உம்மிடம் விடை பெறுகிறேன். இத்தகைய போக்கு உம்மிடம் காணப்படுவதால், யான் இங்கு இருந்தாலும் குற்றமே ஆகும். திறனுற எண்ணி நலனுறப் பேசிய கார்டெலியாவைத் தெய்வங்கள் காப்பனவாக! நீண்ட பேச்சுகளைப் பேசிய ஏனை மகளிர் தம் அன்பிற்கு ஏற்ற பயன் பெறுவாராக! நான் எங்கேனும் புதியதொரு நாடு புகுந்து தொன்னெறி போற்றி வாழ்வேனாக!” என்று கூறிப் பிரிந்தான்.
சொல்லுதல் எளிது: செய்தல் அரிது
பிரான்சு மன்னனுக்கும் பர்கண்டித் தலைவனுக்கும் அரசன் தன் முடிவை அறிவித்தான். கார்டெலியா இப்போது தன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகித் தனக்குரிய செல்வம் இழந்து நிற்பதால், அவளை மணக்க இனியும் அவர்கள் விரும்புகின்றனரா என்பதை அறிய விரும்பினான். கார்டெலியா உற்ற அந்நிலையில் தான் அவளைத் துணைவியாகக் கொள்ள விரும்பவில்லை என்று பர்கண்டித் தலைவன் தன் முயற்சியைக் கைவிட்டான்.
ஆனால், பிரான்சு மன்னனோ, தந்தை வெறுப்புக் கொள்ளுமாறு கார்டெலியா இழைத்த தவற்றின் தன்மையையும், தமக்கையர்போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பயிற்சியில்லாத குறையையும் ஆராய்ந்தறிந்தவன்; அதனால், கார்டெலியாவின் கையினைப் பற்றியவனாய், “உன்னுடைய நல்ல பண்புகளே அரசுரிமையினும் சிறந்த செல்வமாகும். தந்தை உம்மீது அன்பு கொள்ளாதவர் ஆயினும், அவரிடம் கூறி விடை பெறுக. உன் தமக்கையரிடமும் விடை பெறுக. என்னுடன் வருக. என் வாழ்க்கைத் துணைவியாகவும் சீர்மிக்க பிரான்சு நாட்டின் அரசியாகவும் விளங்குக. உன் தமக்கையர் பெற்றவற்றினும் பெருமை மிக்க உரிமைகளைப் பெறுக,” என்று உரைத்தான். கார்டெலியாவின்பால் கொண்ட காதலை ஒரு நொடிப் பொழுதில் மாற்றிக்கொண்ட காரணத்தால், அவன் பர்கண்டித் தலைவனை இகழ்ந்தான்.
பிறகு, கார்டெலியா கண்ணீர் கலங்கித் தமக்கையரை நோக்கி, “தமக்கையீர்! உங்கள் வாக்குறுதி தவறாமல் தந்தையை அன்போடு பாதுகாத்துவர வேண்டுகிறேன்,” என்று சொல்லி விடைபெற நின்றாள்; அவர்கள் இருவரும் உடனே, “போதும்; நீ எங்களுக்கு ஒன்றும் அறிவுறுத்த வேண்டுவதில்லை; எங்கள் கடமையை அறிவோம். நீ உன் கணவர் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்துகொண்டிரு; அவர்தாம் உன்னைப் பெறற்கரிய பேறாகக் கொண்டு மகிழ்ந்தாரே,” என்று ஏனைக் குறிப்புடன் கூறினார்கள். கார்டெலியாவுக்கு அவர்களின் வஞ்சகமும் விரகும் தெரியும்; ஆகையால், வருந்திய மனத்தோடு பிரியலுற்றாள்; அவர்களிடம் தந்தை வாழ்வதைவிட வேறு எங்கேனும் நல்ல தோரிடத்தில் இருக்கலாகாதா என எண்ணிச் சென்றாள்.
கார்டெலியா பிரிந்ததும், தமக்கையர்தம் கொடிய இயல்பு வெளிப்படலாயிற்று. முன்செய்த ஏற்பாட்டின்படி முதல் திங்களில் தன் மூத்தமகள் கானெரில் அரண்மனையில் லியர் வாழ்ந்து வந்தான். அத்திங்கள் முடிவதற்குள்ளாகவே, சொல்லுதல் எளிது என்பதும் சொல்லிய வண்ணம் செயல் அரிது என்பதும் அவனுக்கு விளங்கின. தந்தை தரவேண்டிய யாவற்றையும் அவன் தலையில் அணிந்திருந்த முடியினையும் கவர்ந்து கொண்ட அக்கீழ் மகள் இப்போது என் செய்தாள்? தான் இன்னும் அரசனே என்று எண்ணி மகிழ்வதற்காக லியர் தன்பால் வைத்திருந்த பரிவாரத்தைக் குறித்து முணுமுணுத்தாள்; அவனையும் அவன் வீரர் நூற்றுவரையும் காண அவள் நெஞ்சு பொறுக்கவில்லை. தந்தையைக் காணும் போதெல்லாம் அவள் முகஞ் சுளித்தாள். தந்தை தன்னுடன் பேசவந்த போதெல்லாம், உடல் நலமில்லை என்றோ, வேறு காரணம் கூறியோ அவனைப் பார்க்கவும் மறுத்துவிட்டாள். ஏன்? அவனுடைய முதுமையை மிகப் பெருந் தொல்லையாகவும், வீரர் நூற்றுவரும் இருத்தலை வீண் செலவாகவும் அவள் கருதினாள்.
கானெரில், தந்தைக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தான் தவறியதோடு நில்லாமல், தன் ஏவலர் தவறி நடக்கவும் காரணமானாள். தலைவியாகிய அவள் நடக்கையைக் கண்டோ, அல்லது அவள் மறைவாகச் சொல்லியிருக்கக் கூடியவற்றைக் கேட்டோ, அவளுடைய ஏவலரும் லியரைப் போற்றாது புறக்கணித்தார்; லியர் இட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். சில வேளைகளில் அவன் கூறிய கட்டளை தம் காதில் விழாதது போலப் போய்விட்டனர்.
தன் மகள் இவ்வாறு நடக்கத் தொடங்கிவிட்டதை லியர் அறிந்து கொண்டான்; ஆயினும் அதைப் பற்றி ஒன்றும் அறியாதவன் போலப் பலநாளும் வாளா இருந்தான். தாம் செய்த தவறே தம்மை வருத்தும் போது மக்கள் இவ்வாறு இருத்தல் இயற்கைதானே?
பொய்யும் போலி வாழ்வும் இன்பம் வந்துற்ற காலத்தினும் திருந்துவதில்லை. அதுபோலவே, உண்மையன்பும் பண்பும் துன்பம் வந்துற்றபோதும் மாறுவதில்லை. இதனைக் கென்ட் தலைவன் ஒழுக்கத்திலிருந்து நன்கு அறியலாம். அவன் லியர் மன்னனால் கைவிடப்பட்ட போதிலும், பிரிட்டனை விட்டுச் செல்லாவிடின் கொல்வதாக அச்சுறுத்தப்பட்ட போதிலும், தன் தலைவனாகிய அரசனுக்குத் தான் பயன்படுமாறு வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து, வருவன வருக என்று நாட்டிலேயே தங்கியருந்தான். அரசனுக்குக் கீழ்ப்படிந்து ஒழுகும் நல்லொழுக்கத்தால் சில வேளைகளில் எவ்வளவு இடர்கள் நேர்கின்றன பாருங்கள்! ஆயினும், அவற்றால் இழிவு ஒன்றும் இல்லை. நன்றி மறவாது கடமையைச் செலுத்துதல் என்றும் உயர்வே அன்றோ?
அவன் தன் பெருமையையும் ஆடம்பரத்தையும் கைவிட்டு, ஏவலாளாக வேற்றுருவங்கொண்டான்; லியர் மன்னனிடம் ஏவல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். லியர் அவனை இன்னான் என அறியவில்லை; புதிய ஏவலாளின் பேச்சு வெளிப்படை யாகவும் நயமற்றதாகவும் இருத்தலை அறிந்து மகிழ்ந்தான். (அரசன் மகள் பேசிய பொன்மொழிகளின் பயனை உணர்ந்தமை யால் கென்ட் தலைவன் இனிய முறையில் புகழ்ந்து சொல்லுவதில் வெறுப்புக் கொண்டான்.) உடனே அரசன் அவனைத் தன் ஏவலாளாக ஏற்றுக் கொண்டான். தனக்கு நெருங்கிய அன்பனாக இருந்த கென்ட் தலைவன் அவன் என்ற ஐயமே லியர் நெஞ்சில் தோன்றவில்லை. கென்ட் தலைவன் தன் பெயர் கேயஸ்⁹ என்று தெரிவித்துக் கொண்டான்.
புதிய ஏவலாள் தன் பழைய தலைவனாகிய லியரிடம் அன்பும் நன்றியும் செலுத்துவதற்குரிய வாய்ப்பு விரைவில் நேர்ந்தது. கானெரில் அரண்மனை ஏவலாள் ஒருவன் அன்று லியரிடம் மதிப்பற்ற முறையில் நடந்து கொண்டான்; அவன் பேச்சும் பார்வையும் அத்தகையனவாக இருந்தன. அவ்வாறு நடக்குமாறு அவன் தலைவி கானெரில் அவனுக்கு மறைமுகமாக ஊக்கமளித்திருந்தாள். தன் அரசனை இவ்வாறு இகழ்ந் துரைப்பதைக் கேயஸ் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; உடனே அவனை உதைத்துத் தள்ளினான். இவ்வாறு புதிய ஏவலாள் செய்ததைக் கண்ட லியர் அவன்மீது மிக்க அன்பு கொண்டான்.
லியரிடம் அன்பு கொண்டவன் அவன் ஒருவனே அல்லன். லியர் தன் அரண்மனையில் வாழ்ந்தபோது, அங்கிருந்த நகைச் சுவையாளன் ஒருவன் அவன் நிலைமைக்குரிய அளவில் அன்பு செலுத்தி வந்தான். லியர் முடியிழந்த பின்னும் அவன் விடாது தொடர்ந்தான்; தன் திறமான பேச்சுக்களால் மன்னனை மகிழ்வித்தான்; சில வேளைகளில், அறியாமையால் முடியிழந்ததும், செல்வமெல்லாம் பெண்கட்குப் பகுத்தளித்ததும், ஆகிய மன்னன் செயல்களைக் குறித்து எள்ளி நகையாடினான்; பாடலாகவும் பாடினான். இவ்வாறு, அவன் முரட்டுப் பேச்சாலும் பாட்டாலும் பற்பலவாறு தன் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப் படுத்தினான். அவன் வஞ்சமற்ற நெஞ்சினன்; ஆதலின், சில வேளைகளில் கானெரில் முன்னிலையிலும் இவ்வாறு ஒழுகினான்; அவன் குத்தலாகப் பேசிய கடுஞ்சொற்கள் அவள் நெஞ்சினைச் சுட்டன. (தந்தைக்குப் பிற்பட்டிருக்க வேண்டிய மக்கள் அவனுக்கு முற்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்துடன்) குதிரையை வண்டி இழுத்துச் செல்லுதல் குறித்துக் கழுதையே அறியும் என்றும், இப்போது உள்ளவன் லியர் மன்னன் அல்லன்; அவன் நிழலே என்றும் வேறு பலவகையாகவும் அவன் பேசத் தொடங்கினான். இவ்வாறு சிறிதும் அஞ்சாது அவன் பேசி வருதலை அறிந்த கானெரில், அவனைக் கசையடியால் ஒறுப்பதாக இரண்டொரு முறை எச்சரித்தாள்.
தமக்கையினுங் கொடிய தங்கை
லியர் மன்னன் நாள் செல்லச் செல்லத் தான் மதிப்பிழந்து வருவதை உணரத் தொடங்கினான்.கொடிய மகளாகிய கானெரில் அன்புமிக்க தந்தையிடம் நடந்து கொண்ட தவறான முறையே அல்லாமல், வேறொரு செய்தியும் அதற்குக் காரணமாக இருந்தது. “தந்தையே! வீரர் நூற்றுவராகிய பெரும்படையுடன் நீர் என் அரண்மனையில் தங்கியிருப்பது துன்பந் தருவதாக உள்ளது. இவ்வரச குழாம் பயனற்றது; வீண் செலவை விளைப்பது; இதனால் உண்ணும் ஆரவாரமும் உட்குழப்பமுமே பெருகியுள்ளன. நூற்றுவர் வேண்டா. தொகையைக் குறைத்துக்கொள்ளும். உம்மைப் போலவே உம் வயதுக்கு ஒத்தவராய் உள்ள முதியோர் சிலரை உடன் வைத்துக்கொண்டால் போதும்,” என அவள் வெளிப் படையாகக் கூறிவிட்டாள்.
இங்ஙனம் சிறிதும் அன்பின்றித் தன்னிடம் பேசியவள் தன் மகளே என்பதை முதலில் லியர் நம்பக் கூடவில்லை. தன்னிடமிருந்து தன் முடியைப் பெற்றுக்கொண்ட மகள் கானெரில், தன் வீரர் தொகையினைக் குறைக்கவும், தன் ஆண்டிற்கு ஏற்ற மதிப்பும் கொடுக்காமல் நடத்தவும் முன்வந்தாள் என்று அவன் எண்ணவும் முடியவில்லை. தகுதியற்ற அக்கோரிக்கையை அவள் வற்புறுத்தினாள்; லியர் அப்போது சினங்கொண்டவனாய், “பேராசை பிடித்த நாயே! பொய் பேசுகிறாய். என் வீரர் நூற்றுவரும் உண்ணும் ஆரவாரத்திற்கும் உட்குழப்பத்திற்கும் பெயர் போனவர் அல்லர். அனைவரும் உயர்ந்த நற்பண்புகளும் உண்மை ஒழுக்கமும் உடையவர்; கடமையைத் திறமையாய் ஆற்றும் ஆற்றல் உடையவர். நீ சொன்னது முற்றிலும் தவறு” என்று கடிந்துரைத்தான். பிறகு அவன், தன் குதிரைகளைப் பண்ணமைக்குமாறு ஏவலாளர்க்குக் கட்டளையிட்டான்; மற்றொரு மகள் ரீகன் அரண்மனைக்குத் தானும் தன்னைச் சூழ்வோரும் புறப்படவேண்டும் எனத் தெரிவித்தான்.
பின்னர், அவன் தன் மகளின் நன்றிகெட்ட தன்மையை கடிந்து கூறிய கடுஞ்சொற்கள் கேட்கத் தக்கன அல்ல. “நீ குழந்தையற்ற பாவியாக வாழ்வாயாக! ஒருகால், குழந்தை பிறந்தால், நீ என்னை வெறுத்து வைத்து ஒதுக்கியது போலவே, அதுவும் உன்னைச் செய்வதாக; கடும் பாம்பின் நச்சுப் பற்களை விட நன்றிகெட்ட மக்களே கொடியர் கொடியர் என்பதை அப்போது நீ உணர்வாயாக!” என்று அவன் வெகுண்டு கூறினான். கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன், தான் ஒரு தவறும் செய்யவில்லை என்பதைத் தெரிவிக்க முயன்றான். ஆனால், லியர் அதற்குச் செவிகொடாமல், சினம் பொங்கிய வனாய், குதிரைகளைப் பண்ணமைத்தவுடன் தன் வீரருடன் ரீகன் அரண்மனைக்குப் புறப்பட்டான். அப்போது அவன் எண்ணிய எண்ணங்கள் பல. கார்டெலியா ஏதேனும் தவறு இழைத் திருந்தாலும், அத் தவறு அவள் தமக்கை செய்த பெருங் குற்றத்துடன் ஒப்பிட்டால் எத்துணைச் சிறிது என்பதை அறிந்து அவன் அழுதான். கானெரில் போன்று சிறியோர் தன் பேராண்மையைக் கலக்க அழச்செய்யும் ஆற்றல் வாய்ந்திருப்பதை எண்ணி வெட்கமுற்றான்.
ரீகனும் அவள் கணவனும் தன் அரண்மனையில் மிக்க ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்தனர். தன்னை வரவேற்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு, லியர் தன் ஏவலாள் கேயஸ் என்பவனைக் கடிதத்துடன் முன்னே அனுப்பியிருந்தான். ஆனால், கானெரில் அதற்கு முன்பே தன் தங்கைக்குப் பல கடிதங்கள் எழுதி அனுப்பியிருந்தாள். அவற்றில் தந்தையின் மீது பலவாறு குறைகூறி, அவன் தன்னுடன் கொண்டுவரும் பெரும்படையை வரவேற்றுப் போற்றல் வேண்டா என்றும் அறிவித்திருந்தாள். அக்கடிதங்களைக் கொண்டு சென்றவனும் கேயஸும் ஒரே காலத்தில் ரீகன் அரண்மனை அடைந்தனர்; ஒருவரை ஒருவர் கண்டனர். கானெரில் கடிதங்களைக் கொணர்ந்தவன் யார்? லியரிடம் தகாத முறையில் நடந்த குற்றத்திற்காகக் கேயஸால் ஒறுக்கப்பட்ட ஏவலாளே ஆவான். அவன் பார்வை கேயஸுக்குப் பிடிக்கவில்லை. அவன் வந்த காரணத்தைப் பற்றிக் கேயஸ் ஐயுற்று அவனை வைது, தன்னுடன் வாட்போருக்கு வருமாறு அறைகூவினான். அவன் வரமறுத்தான். கேயஸ் தன்மானம் தூண்ட ஒருவகை உணர்ச்சிக் கொண்டு அவனை நன்றாகப் புடைத்தான். கொடிய செய்திகளைக் கொண்டு செல்லும் தீயோன் ஒருவனுக்கு அது தகுதியுடையதே. ஆனால், ரீகனும் அவள் கணவனும் அதைக் கேள்வியுற்றுக் கேயஸைத் தொழுவில் இட்டனர்; ரீகன் தந்தையாகிய அரசனிடமிருந்து வந்தவன் என்பதைப் பொருட்படுத்திலர். அரசன் ரீகன் அரண்மனைக்கு வந்தவுடன் முதலில் கண்ட காட்சி, தன் நன்றியுள்ள ஏவலாள் இழிநிலையுற்றுத் தொழுவிலிருத்த லேயாயிற்று.
லியர் எதிர்பார்த்த வரவேற்பிற்கு இஃது ஒரு தீயநிமித்தம். இதனினும் தீயது மற்றொன்று நேர்ந்தது. அவன் தன் மகளையும் மருமகனையும் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இரவெல்லாம் செய்த பிரயாணத்தால் களைப்புற்றதால் அரசனைப் பார்த்துப் பேச இயலாமல் இருப்பதாக ஏவலாளர் தெரிவித்தனர். இறுதியில் எவ்வாறேனும் அவர்களைத் தான் பார்த்துப் பேசவேண்டும் என்று சினங்கொண்டு வற்புறுத்தியபோது, அவர்கள் வரவேற்க வந்தனர். அப்போது அவர்களுடன் கானெரிலும் இருக்கக் கண்டான் லியர் மன்னன். தன் கதையை நேரில் சொல்லத் தந்தைக்கு மாறாகத் தங்கை மனத்தைத் திருப்பவேண்டும் என்றே கானெரில் அங்கு வந்திருந்தாள்.
லியர் கண்ட காட்சி அவன் மனத்தை வருத்தியது. ரீகன் தன் தமக்கையின் கையைப் பற்றிக்கொண்டு அளவளாவுதலைக் காண வருத்தம் மிகுந்தது. “கானெரில்! என் நரைத்த தாடியைப் பார்க்க உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று லியர் தன் மூத்த மகளைக் கேட்டான்.
“தந்தையே! தமக்கையின் அரண்மனைக்கு மீண்டு செல்வதே நல்லது. அங்கு அமைதியாக வாழ்ந்திருப்பீராக! உம் வீரரில் பகுதியினரை நீக்கிவிடுக. தமக்கையினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும். உமக்கோ ஆண்டு நிரம்பிவிட்டது. நன்மை தீமை பகுத்தறிதல் இம்முதுமையில் இயலாது. வல்லார் பிறர் வகுக்கும் வழியில் நடத்தலே நலம்,” என்று ரீகன் அறிவுரை கூறத் தொடங்கினாள்.
லியர் உடனே அவளை நோக்கி, “நான் என் மகளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டு உணவும் உடையும் இரந்து பெற்று வாழ்தல் எத்துணை அறியாமை! மானக் குறைவு! நான் மீண்டும் அவள் அரண்மனைக்குச் செல்லேன்; இஃது என் உறுதி. உன்னிடத்திலேயே நானும் என் வீரர் நூற்றுவரும் இருப்போம். என் நாட்டின் அரைப் பகுதியை நீ என்னிடம் பெற்றதை மறந்து விடவில்லையே? உன் பார்வை கானெரில் நோக்குப் போலக் கொடியதன்று; அன்பும் இரக்கமும் உடையது என நம்புகிறேன். என் வீரர் தொகையைக் குறைத்துக்கொண்டு கானெரிலிடம் சென்று வாழ்தலை விட, பிரான்சுக்குச் சென்று, என் செல்வத்தில் ஒரு சிறு பகுதியையும் பெறாமலேயே என் இளையமகளை மணந்த அரசனிடம் உதவி வேண்டி இரக்க என் நெஞ்சம் துணிகிறது,” என்றான்.
கானெரில் நடந்ததுபோல அல்லாமல் ரீகன் தன்பால் மிக்க அன்புடன் ஒழுகுவாள் என மன்னன் எதிர்பார்த்தது தவறே. அவளோ, கொடுமையில் தமக்கையை விஞ்ச விரும்பினள் போல, அவனுக்கு வீரர் ஐம்பதின்மரும் மிகையே என்றும், இருபத்தைவரே இருத்தல் வேண்டும் என்றும் கூறினாள்.
மன்னன் பித்தனாய் அலைதல்
லியர் மேலும் மனமுடைந்தவனாய், கானெரிலை நோக்கி, “நான் மீண்டும் உன் அரண்மனைக்கே வருகிறேன். இருபத்தைந்து இருமடங்கு கொண்டதே ஐம்பது. ஆதலின், ரீகனைவிட நீ அன்பிற் சிறந்துள்ளாய்,” என்றான். அவளோ, “இருபத்தைவரோ, பதின்மரோ, ஐவரோ ஏன் உடன் இருத்தல் வேண்டும்? என் ஏவலாளர் அல்லது தங்கையின் ஏவலாளர் இருக்கும்போது உமக்குக் குறை உளதோ?” என்றாள்.
இவ்வாறாக, கொடுமைமிக்க அவர்கள் அன்பான தந்தைக்குத் தீங்கு இழைப்பதில் ஒருவரினும் ஒருவர் முற்பட முயன்றனர். ஒரு காலத்தில் நாடு முழுதும் ஆண்ட மன்னனுக்குக் குறைந்த அளவில் எஞ்சி நின்றவை அவன் வீரர் தொகையும் அவன் மதிப்புமே, அவற்றையும் படிப்படியாகக் குறைத்துச் சிறிதும் இல்லாதவாறு செய்ய முயன்றனர் இருவரும் சிறந்த பரிவாரம் இன்பத்திற்கு இன்றியமையாதது அன்று. ஆயினும், அரசனாக இருந்து ஆண்டியாக மாறுதல் நாட்டை ஆளும் உரிமை விடுத்து ஏவலாளும் இல்லா நிலைக்கு மாறுதல் அரிதே அன்றோ? ஏவலாள் ஒருவரும் வேண்டா என்று சொன்ன சொல் அவனுக்குத் துன்பமாக இருந்தது. மகள் இருவரும் நன்றி மறந்து சொன்ன சொல் உள்ளத்தைத் தைத்து வருத்தியது. அரச செல்வத்தைக் கொடுத்துவிட்டுத் துன்புறும் தன் அறியாமையை நினைந்து வெறுத்தான். அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. “இந்தப் பெண்பேய்களை நான் பழிக்குப்பழி வாங்குவேன். அதன் வழியாக, இந்த உலகத்திற்கே அறிவு புகட்டுவேன்,” என்று சூளுரைத்தான்.
அவனால் ஒன்றும் செய்ய இயலாது எனினும், இவ்வாறு அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தான். இரவு வந்தது. மின்னலும் இடியும் மழையும் கூடிய பெரும்புயல் தொடங்கிற்று. உடன்வந்த வீரரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று அப்பெண்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். நன்றி கெட்டவர்கள் அரண்மனையில் அவர்களுடன் தங்கியிருப்பதை விடப் புயலின் கடுமையைத் தாங்கி நிற்பதே நன்று எனத் துணிந்தான் மன்னன். அப் பெண்களோ, அறிவில்லாதவர் தாமே தேடிக்கொள்ளும் துன்பங்களே தமக்கு ஏற்ற தண்டனையாம் என்று சொல்லி அப்புயலிடையே தந்தை புறப்பட்டுச் சென்று வருந்துமாறு விடுத்துக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டனர்.
காற்றின் கடுமை மிகுந்தது; மழை விடாது பொழிந்தது; ஆயினும், அவை தன் மக்களினும் கொடியவை அல்ல என்று அரசனும் புறப்பட்டுச் சென்றான். செல்லும் வழியிலோ பல கல் தொலைவு வரைக்கும் ஒரு புதரும் காண்பது அரிது. அத்தகைய பாலையில் நள்ளிரவில் கடும்புயலுக்கிடையே லியர் மன்னன் திரிந்து, காற்றையும் இடியையும் எதிர்த்துச் சென்றான். “காற்றே! இந் நிலவுலகத்தைத் தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிடு; அல்லது கடல் அலைகள் பொங்கி நிலத்தை விழுங்குமாறு செய்துவிடு. எவ்வாறேனும் செய்து மனிதன் என்னும் நன்றிகெட்ட உயிர் இருந்த இடம் தெரியாமல் ஒழித்துவிடு,” என்றான். முதுமை மிக்க லியருக்கு முன் இந்த நகைச்சுவையாளன் இப்போதும் துணையாக இருந்தான். இடுக்கண் வருங்கால்அடுத்தூர்வதற்கு உதவும் நகைச்சுவை மிக்கவன் அவன். ஆதலின், அவன் தன் சொற்களால் அரசன் கவலையைக் குறைக்க முயன்றான்.
ஒரு காலத்தில் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்த லியர், இவ்வாறு எளியனாய்ச் செல்லும்போது ஏவலாள் கேயஸும் உடன் இருந்தான். என்றும் மறவா நன்றியுள்ள கென்ட் தலைவனே அவன் என்பதை அரசன் இன்னும் அறியான். “ஐய! அந்தோ! நீர் இங்கு இருத்தல் தகுமோ? இராக் காலத்தை விரும்பித் திரியும் உயிரினங்களும் இத்தகைய இரவுகளை விரும்பாவே. இக்கொடிய புயலால் விலங்குகளும் அஞ்சி ஒதுக்கிடத்தில் ஒதுங்கி விட்டனவே. அச்சமும் துன்பமும் தாங்கல் மக்களுக்கு இயற்கையன்றே,” என்று கேயஸ் முறையிட்டான். லியர் அவனைக் கடிந்து நோக்கி “இத் துன்பங்கள் மிகச் சிறியவை. மிகப் பெரிய துன்பம் வாட்டும்போது இவை தெரிவதில்லை. மனம் ஓய்ந்திருக்கும்போது உடல் இன்ப நுகர்ச்சியை விழையும். என் மனத்தில் பெருங்குழப்பம் ஒன்று உள்ளதே. அந்த ஒன்று தவிர வேறெதுவும் என் புலன்களில் படுமோ? பெற்றோரிடம் நன்றிகெட்டு நடத்தல் ஆ! எவ்வளவு கொடியது! தனக்கு உணவு நல்கும் கையினைக் கடிந்து அழிக்கும் வாயின் கொடுமை போன்றது அன்றோ அது? மக்களுக்குக் கையாகவும் உணவாகவும் மற்றெல்லாமாகவும் உதவுபவர் பெற்றோரே அல்லரோ?” என்றான்.
ஆனாலும், கேயஸ் தன் வேண்டுகோளைவிடாது, திறந்த வெளியில் மன்னன் இருத்தல் ஆகாது என்று வற்புறுத்தினான்; அப் பாலையில் இருந்த பாழடைந்த தொரு குடிலினுள் தங்குமாறு வேண்டினான். மன்னனும் இசைந்தான். நகைச்சுவையாளன் முதலில் அதனுள் நுழைந்ததும் அஞ்சி ஓடிவந்துவிட்டான்; அதனுள் ஆவி ஒன்று இருப்பதாக அலறினான். ஆனால், உட்புகுந்து பார்த்தபோது அங்கே ஆவி ஒன்றும் இல்லை; ஏழை இரவலன் ஒருவனே இருந்தான். அவனும் புயலின் கொடுமைக்கு அஞ்சி அதனுள் தங்கினவனே, அவன் பேய்களின் செயல்களைக் கூறத் தொடங்கினான்; நகைச் சுவையாளன் அவற்றைக் கேட்டு அஞ்சினான்.
இரக்கம் மிகுந்த நாட்டுப்புற மக்களிடம் பொருள் பெற்று வாழும் பித்தரும், பித்தர்போல் நடிப்பவரும் ஆகிய சிலர் உள்ளனர். அவர்கள் நாட்டுப்புறங்களுக்குச் சென்று டாம்¹⁰ முதலிய பெயர்கள் சொல்லிக் கொண்டு, தாம் திக்கற்றவர் என்று முறையிட்டு, ஏதேனும் பொருள் உதவுமாறு வேண்டுவர்; ஊசி, ஆணி, முள் முதலியவற்றால் தம் கைகளில் குத்திச் செந்நீர் வருவிப்பர். இதுபோன்ற கொடுஞ் செயல்களுடன் வேண்டு கோள்களால் மக்கள் இனம் இரங்குமாறு செய்வர்; அல்லது பித்தர் போல நடித்துச் சாபங்கொடுப்பதால் அம்மக்களை அச்சுறுத்துவர். மனம் இரங்கியோ அஞ்சியோ மக்களும் பொருள் ஈவர். அத்தகைய இரவலருள் ஒருவன் அக்குடிலில் தங்கியிருந்தவன், அவன் கோவணத்துடனும் அதைச் சுற்றிய ஒரு போர்வையுடனும் இரங்கத்தக்க நிலையில் இருத்தலை மன்னன் கண்டான்; தன்னிடம் இருந்தவற்றைத் தன் பெண்களுக்குக் கொடுத்துவிட்டு வறியனான ஒரு தந்தையே அவன் என்று எண்ணலானான். நன்றிகெட்ட பெண்களைப் பெற்ற தந்தையே அல்லாமல் மற்றவர் எவரும் இந்நிலைக்கு வருதல் இல்லை என்று மன்னன் நம்பியதால் இவ்வாறு எண் ணினான்.
இதனாலும் இதுபோன்ற பல பேச்சுக்களாலும், மன்னன் மனங் கலங்கினான் என்றும், தன் பெண்கள் செய்த கொடுமைகளால் பித்துக் கொண்டான் என்றும் கேயஸ் தெளிந்தான். அதுகாறும் ஆற்றிய உதவிகளை விடச் சிறந்த பேருதவி ஒன்றை இப்போது கென்ட் தலைவனாகிய அவன் ஆற்ற முன் வந்தான். அரசனிடம் உண்மையான அன்புடன் நடந்துவந்த ஏவலாளர் சிலர் உதவியால் விடியற்காலைக்குள் அரசனை டோவர்¹¹ அரண்மனைக்குக் கொண்டு சென்றான். கென்ட் தலைவனாய் இருக்கும் நிலையில் தன் செல்வாக்கும் நண்பர்களும் சிறப்பாக உள்ள இடம் அதுவே ஆதலின் அவன் அவ்வாறு செய்தான்; உடனே பிரான்சில் உள்ள கார்டெலியாவுக்கு விரைந்து ஆள் அனுப்பி, அவளுடைய தந்தையின் இரங்கதக்க நிலையினையும், தமக்கையாரின் ஈரமற்ற நெஞ்சினையும் விளக்கமாகவும் விரிவாகவும் தெரிவித்தான். அவற்றைக் கேட்டறிந்த நல்ல மகளாகிய கார்டெலியா கண்ணீர் விட்டுத் தன் கணவனிடம் சென்று, “துணைவரே! நான் இங்கிலாந்திற்கு விரைந்து செல்லுதல் வேண்டும். என்னுடன் பெரும்படை வருதல் வேண்டும். அப்படை வலியால் கொடியவராகிய என் தமக்கையரையும் அவர்தம் கணவரையும் ஒறுத்து அடக்குவேன். என் தந்தையை மீண்டும் அரசுரிமை பெற்ற மன்னன் ஆக்குவேன். விடை தருக!”என்று வேண்டினாள். பிரான்சு மன்னனும் இசைந்தான். அவள் பெரும் படையுடன் புறப்பட்டு, டோவர் துறைமுகத்தை அடைந்தாள்.
லியர் பித்துப்பிடித்தவனாய் இருந்ததால் அவனைக் காத்திருக்குமாறு கென்ட் தலைவன் சிலரைப் பணித்திருந்தான். ஆனால் லியர் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பிவந்து டோவர்க்கு அருகேயுள்ள வயல்களில் திரிந்து கொண்டிருந்தான். கார்டெலி யாவுடன் வந்தவர்களில் சிலர் அவன் திரிவதைக் கண்டனர். அப்போது அவன் நிலை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவன் தனக்குத்தானே உரக்கப் பாடிக் கொண்டிருந்தான்; வயலில் கண்ட பலவகைக் கொடிகளாலும் புல்லாலும் தானே செய்ததொரு முடியினைத் தலைமீது வைத்துக் கொண்டிருந்தான். தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கார்டெலியா மிக்கஆவல் கொண்டிருந்தாள். ஆனால், மருத்துவர் தடுத்தனர்; தாம் கொடுத்துள்ள பச்சிலைகளாலும் உறக்கத்தாலும் அவன் நிலை திருந்தும் என்றும், அதுவரைக்கும் அவனைப் பார்த்துப் பேசுதல் வேண்டா என்றும் கூறினார். மன்னர் பித்துத் தணியுமானால், மருத்துவர்க்குத் தன்னிடம் உள்ள பொன்னும் மணியுமாகிய எல்லாம் தருவதாகக் கார்டெலியா வாக்களித்தாள். மருத்துவர் மிக்கதிறன் வாய்ந்தவர். அவர்தம் உதவியால் மன்னன் ஒருவாறு தெளிவு பெற்றான். கார்டெலியா தன் தந்தையைக் காணலாம் என்று அப்போது மருத்துவர் கூறினர்.
எல்லார்க்கும் நேர்ந்த முடிவு
மகள் உடனே சென்று தந்தையைக் கண்டாள். அக்காட்சி உருக்கமானதாகும். தன் செல்வ மகளாக இருந்த கார்டெலியாவை மீண்டும் காணப்பெற்ற பெருமகிழ்ச்சி ஒருபுறம்; மிகச் சிறிய தவறு காரணமாகத் தான் வெறுத்துத் தள்ளிய மகளிடம் உண்மையான அன்பு விளங்குவதை உணர்ந்ததால் உற்ற வெட்கம் ஒருபுறம்; இவையல்லாமல் தெளிந்தும் தெளியாமலுமுள்ள பித்தின் இயற்கை மற்றொரு புறம்; இவற்றுக்கிடையே, தான் அங்கிருப்பதும், தன்னை இவ்வளவு அன்போடு பார்த்துப் பேசியவள் யார் என்பதும் அவனுக்கு நினைவிலிருப்பது அரிதாயிற்று. “இவளை என் மகள் கார்டெலியா என்று நான் எண்ணுகிறேன். என் எண்ணம் தவறாக இருந்தால் எள்ளி நகைக்காதீர்கள்!” என்று தன்னைச் சூழ்ந்திருப்போரை நோக்கி வேண்டினான். பிறகு; தன் மகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளத் தொடங்கி அவளை வணங்கினான். கார்டெலியா தன் நல்லியல்பு குன்றாமல் அவனை வணங்கிக் கொண்டே, “தந்தையே! எனக்கு உமது நல்வாழ்த்து வேண்டும். நான் உம்மை வணங்குதல் என் கடமை; உண்மையான அன்புடைய மகளாகிய எனக்கு இயற்கை. ஆனால், நீர் அவ்வாறு வணங்குதல் வேண்டா; அஃது ஏற்றதன்று,” என்று கசிந்துரைத்தாள். மேலும், அவள், “என் தமக்கையரைப் பொருட்படுத்தல் வேண்டா என்னைக் கடித்த நாயாக - அதுவும் என் பகைவன் நாயாக - இருப்பினும், பெருமழை பெய்யும் நள்ளிரவில் ஒதுக்கிடம் தந்து ஓம்புவேன். ஆனால், என் தமக்கையார் முதுமை மிக்க எந்தையாகிய உம்மைக் கொடியதோர் இரவில் அலைந்து வருந்திக் குளிரால் நடுங்க விட்டனரே! அவர்கள் தம் செயலை நினைந்து நினைந்து வருந்துவார்களாக. உமக்கு உதவும் பொருட்டே நான் பிரான்சிலிருந்து விரைந்து வந்தேன்,” என்றாள். அதற்கு மன்னன், “எல்லாவற்றிற்கும் காரணம் என்னுடைய முதுமையும் அறியாமையுமே; ஆகையால், எல்லாவற்றையும் மறந்துவிடுக. மன்னித்துவிடுக. என்னைப் போற்றாமல் விட்ட உன் தமக்கையர்க்கு நான் ஒரு தீங்கும் செய்வதில்லை. உனக்கேனும் ஒரு காரணம் உளது. அவர்களுக்கு அத்தகைய காரணமே இல்லை. ஆயினும், மறந்து விடுக,” என்றான்.
இவ்வாறாக, அன்பும் உண்மையும் மிக்க தன் மகளின் பாது- காப்பில் இருந்துகொண்டு, மருந்தாலும் உறக்கத்தாலும் மன்னன் படிப்படியாக நலம்பெற்று வந்தான். அவள் அன்பாலும் மருத்துவர் திறமையாலும் முடிவில் அவன் பித்து அறவே தீர்ந்தது.
நன்றிகெட்ட தமக்கையர் அப்போது எவ்வாறு இருந்தனர்? பெற்ற தந்தையிடம் கன்னெஞ்சம் உடையவராய்த் தீங்கிழைத்த அப்பாவிகள் தம்கொழுநரிடம் நன்முறையில் ஒழுகி வாழ்வார்கள் என எதிர்பார்த்தல் கூடுமோ? கொழுநர்க்குத் தன் அன்பான கடமைகளைச் செய்வதிலிருந்து வழுவினர்; வேறொருவனிடம் காதல் கொண்டொழுகினர்; குற்றம் நிறைந்த அவ்வொழுக்கம் வெளிப்படலும் ஆயிற்று. அவர்கள் இருவரும் ஒருவரிடமே காதல் கொள்ள நேர்ந்ததும் வியப்பே.
அவன் யார்? காலஞ்சென்ற கிளஸ்டர்¹² தலைவனுடைய மகன் எட்மன்ட்¹³ என்பவனே அவன். அவனுடைய தமையன்¹⁴ எட்கார் என்பவேன கிளஸ்டர் தலைமைக்கு உரிமையுடைய வனாய் இருந்தான். எட்மன்ட வஞ்சகச் சூழ்ச்சி செய்து அவனை நீக்கி விட்டுத் தான் தலைவனான். அவன் மிகக் கொடியவன். கானெரில், ரீகன் என்னும் கொடிய உயிர்கள் அவனைக் காதலித்துப் பொருந்துவதே. இவ்வாறு இருக்கும்போது, ரீகன் கணவனாகிய கார்ன்வால் தலைவன் இறந்து விட்டான். உடனே, ரீகன் கிளஸ்டர் தலைவனாகிய எட்மன்டை மணப்பதாகத் தெரிவித்துவிட்டாள். இதனால், கானெரில் மனத்தில் பொறாமை மிக்கது. ஏன் எனில், அவர்கள் இருவரிடத்திலும் தனித்தனியாக எட்மன்ட் தன் காதலைப் புலப்படுத்தியிருந்தான். கானெரில் கொண்ட பொறாமையால் தன் தங்கை ரீகனை நஞ்சு கொடுத்துக் கொன்றாள். இக்கொடுஞ் செயலை அவளுடைய கணவன் ஆல்பனித் தலைவன் அறிந்தான்; அவள் கிளஸ்டர் தலைவனிடம் கொண்ட கள்ளக் காதலைப் பற்றியும் அவன் எவ்வாறோ அறிந்தான்; ஆதலின் அவனை உடனே சிறையிலிட்டான். தன் காதலுக்கு நேர்ந்த ஏமாற்றத்தாலும் பொங்கி எழுந்த சினத்தாலும், விரைவில் அவள் தற்கொலை செய்து கொண்டாள். கொடியோர் இருவர்க்கும் இங்ஙனம் முடிவு கண்டது இறைவன் முறை.
எல்லோரும் இந்நிகழ்ச்சியைப் பற்றியே எண்ணி அவர்கள் இருவரும் மாண்டொழிந்தது மிகப் பொருத்தமானதே என்று வியந்தனர். அதே ஊழின் வியப்பான முறைப்படி கொடிய தொன்றும் நிகழ்ந்தது. நல்லொழுக்கமும் தூய உள்ளமும் இவ்வுலகத்தில் வெற்றியே தரும் என்று கூற முடியாது. இது கொடுமை நிறைந்ததோர் உண்மையாகும். கார்டெலியா குணக்குன்று; நல்லவள். அவள் நற்செயல்களுக்கு ஏற்ற நன்முடிவு ஏற்பட்டிருத்தல் வேண்டும். கானெரிலும் ரீகனும் தன் படைகளைத் திரட்டிக் கிளஸ்டர் தலைமையின் கீழ்ப்போர் செய்யுமாறு அனுப்பியிருந்தனர். அப்படைகள் வெற்றி பெற்றன. கிளஸ்டர் தலைவன், அரசுரிமையைக் கவர்வதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை ஒழித்திடும் சூழ்ச்சியில் வல்லவன்; அவன் சூழ்ச்சியில் கார்டெலியா சிறையில் கிடந்து மாண்டாள். பெற்றோரைப் போற்றி ஒழுகும் நல்லொழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உலகத்திற்கு விளக்கி விட்டு கார்டெலியாவை இளமையிலேயே கடவுளின் முறை கொண்டு சென்றது. மன்னன் லியரும் தன் செல்வமகள் மறைந்தபின் விரைந்து உலக வாழ்வை நீத்தான்.
கென்ட் தலைவன், மன்னனுடைய மூத்தமகள் துன்புறுத்தத் தொடங்கியநாள் முதல் அவனது இறுதிவரைக்கும் உடன் இருந்து வந்தான்; கேயஸ் என்னும் பெயர்கொண்டு தொடர்ந்து வந்தவன் தானே என்பதை மன்னன் இறப்பதற்குமுன் அவனுக்கு அறிவிக்க முயன்றான். ஆனால், அப்போது மன்னன் மனமோ கவலையால் நொந்து நொந்து கலங்கியிருந்தது. அதனால், அஃது உண்மையாக இருக்கமுடியும் என்றும், கென்ட் தலைவனும் கேயஸ் என்பவனும் வேறு வேறானாவர் அல்லர் என்றும் அவனால் உணர முடியவில்லை. ஆகையால், அந்நிலைமையில் அதனை விளக்கிக் கூறி அவனை வருத்தலாகாது. லியர் மன்னன் ஆவி பிரிந்த பின்னர், அவனிடம் உண்மையாக ஊழியம் செய்து வந்த அத்தலைவனும், தன் முதுமையாலும் மன்னன் துன்பங்களுக்காகத் தான் உற்ற துயரத்தாலும் விரைவில் இறந்தான்.
கிளஸ்டர் தலைவனாக இருந்த எட்மன்ட் செய்த கொடுஞ் செயல்கள் வெளிப்பட்டன. கிளஸ்டர் தலைமைக்கு உரியவனான எட்கார் அவனுடன் தனிப்போர் புரிந்து, அவனைக் கொல்லவே, இறைமுறை அக்கொடியோனையும் கொண்டு சென்றது. கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன் ஒரு குற்றமும் அறியாதவன் அல்லனோ? கார்டெலியாவின் முடிவு பற்றி அவன் ஒன்றும் செய்ய வில்லை. லியர் மன்னனைக் கொடுமையாக நடத்துமாறு தன் மனைவியை அவன் தூண்டியதுமில்லை. லியர் மாண்டபின், அவனே பிரிட்டன் அரசுரிமை பெற்றான்.
அடிக்குறிப்புகள்
1. King Lear 2. Goneril
2. Dake of Albany 4. Regan
3. Duke of Cornwall 6. Cordelia
4. Duke of Burgundy. 8. Earl of Kent
5. Caius 10. Tom
6. Dover 12. Earl of Gloucester
7. Edmund 14. Edgar
ஹாம்லெத்(Hamlet)
கதை உறுப்பினர்கள்
ஆடவர்
1. ஹாம்லெத்: டென்மார்க் இளவரசன் - காலம் சென்ற அரசன் ஹாம்லெத்தின் மகன்.
2. காலஞ்சென்ற ஹாம்லெத்தின் ஆவி.
3. கிளாடியஸ்: காலஞ்சென்ற அரசன் மனைவி கெர்ட்ரூடை மணந்து அரசனானவன்.
4. ஹொரேஷியோ: இளவரசன் ஹாம்லெத்தின் நண்பன் - கல்லூரித் தோழன்.
5. பொலோனியஸ்: டென்மார்க் மந்திரி ஹாம்லெத்தின் காதலியாகிய ஒபீலியா லேயர்ட்டிஸ் ஆகியவர்களின் தந்தை.
6. லேயர்டி: பொலோனியஸின் மகன் - ஒபீலியாவின் அண்ணன் வாட்போர் வல்லான்.
7. மார்செல்லஸ்: காவலான் - முதலில் ஆவியைக்கண்டு ஹொரேஷியோவுக்கு உரைத்தவன்.
** பெண்டிர்**
1. கெர்ட்ரூட்: காலஞ்சென்ற அரசர் ஹாம்லெத்தின் மனைவி இளவரசன் ஹாம்லெத்தின் தாய் - அரசர் இறந்தபின் கிளாடியஸின் மனைவி.
2. ஒபீலியா: ஹாம்லெத்தின் காதலி - பொலோனியன் மகள் - லேயர்டின் தங்கை.
உள்நாடக உறுப்பினர்கள்
ஆடவர்:
1. பிரயம்: முதல் நாடகத் தலைவன் - ட்ராய் மன்னன்
2. கன்சாகோ: (இரண்டாம் நாடகம்) வியன்னா நகரமன்னன்.
3. லூஷியானஸ்: கன்சாகோ உறவினன் - அவனைக் கொன்றபின், பப்டிஸ்டா கணவன்.
பெண்டிர்
1. ஹெக்யூபா: (முதல் நாடகம்) பிரயம் மனைவி.
2. கன்சாகோ மனைவி: (இரண்டாம் நாடகம்) கன்சாகோ இறந்தபின் லூஷியானஸ் மனைவி.
** கதைச் சுருக்கம்**
டென்மார்க் அரசன் ஹாம்லெத்தின் மனைவி கெர்ட்ரூட் அரசனைக் கொன்ற அவன் தம்பி கிளாடியஸை மணந்து கொள்ள, அதுகண்டு நொந்த இளவரசன் ஹாம்லெத்து தன் கல்லூரி நண்பன் ஹொரேஷியோ வாயிலாய்த் தந்தையின் ஆவியைக் கண்டு தந்தை கொலைபற்றிய விவரம் அறிந்து பழி வாங்க எண்ணினான். அதற்கான மன உறுதியின்றிக் குழம்பிய உள்ளத்துடன் இன்னும் தெளிவு வேண்டி கிளாடியஸ் வாழ்க்கையை ஒத்த கதைப் போக்குடைய நாடகம் நடித்துக் காட்டி அரசன் குற்றத்தை நேரடியாகக் கண்டான்.
தன் எண்ணத்தை மறைக்கப் பித்தனாக நடித்ததினால் ஹாம்லெத் தன் காதலி ஒபீலியாவைக் கடுமையாக நடத்தினான். அவள் தந்தை பொலோனியஸ் கிளாடியஸின் மந்திரி; மகள் மீது காதலாலேயே பித்து என எண்ணி அரசியும் ஹாம்லெத்தும் பேசும் போது ஒற்றுக்கேட்டவன். அரசி அச்சமுற்றநேரம் உள்ளிருந்து கூவினான். அரசனே கூவுகிறான் என்றெண்ணிய ஹாம்லெத் திரைமறைவிலேயே அவனைக் குத்திவிட்டு உண்மையறிந்த பின் வருந்தினான்.
ஹாம்லெத்தை எப்படியாவது கொல்ல எண்ணி அவனைத் தூக்கிலிடும் படி இங்கிலாந்து அரசனுக்கெழுதி ஹாம்லெத்தைக் கப்பலில் அனுப்ப, ஹாம்லெத் கடிதங் கண்டு, கொண்டு வருவோரைக் கொல்லும்படி மாற்றி எழுதிவிட்டுத் திரும்ப டென்மார்க்குக்கே வர, அங்குக் காதல் முறிவால் இறந்த ஒபீலியா இழவுச் சடங்கைக் கண்டான்.
அரசன் ஒபீலியா அண்ணன் லேயர்ட்டிஸை ஹாம்லெத்துக் கெதிராக முட்டிவாட் போரில் நஞ்சிட்ட வாளால் வெட்டத் தூண்டியதுடன், ஒருவேளை ஹாம்லெத் வெற்றி பெற்றால் கொடுக்கும்படி நஞ்சிட்ட பாலும் வைத்திருந்தான். ஹாம்லெத் வெட்டுண்ட போதிலும், அதே வாளால் லேயர்ட்டிஸையும் வெட்டினான். அவனுக்காக வைத்திருந்த பாலையும் அரசியே குடித்தாள். இருவரும் அரசன் சூதை இறக்கும் தறுவாயில் வெளிப்படுத்த ஹாம்லெத் தான் விழுமுன் அரசனையும் வீழ்த்தினான். அனைவரும் இறப்பது கண்டு தானும் இறக்க முன்வந்த ஹொரேஷியோவை உலகிற்குத் தன் வரலாறு கூறும் பொருட்டு வாழ்ந்திருக்கும்படி ஹாம்லெத் வேண்டிக் கொண்டான்.
தந்தையின் ஆவியைக் காணுதல்
டென்மார்க்¹ தேசத்தை ஹாம்லெத்² என்னும் அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் திடீரென இறந்தான். அவன் இறந்து இரண்டு திங்கள் கழிவதற்குள் அவன் மனைவி கெர்ட்ரூட்³ தன் மைத்துனனாகிய கிளாடியஸ்⁴ என்பவனை மணந்தாள். அவள் செயலை எல்லாரும் வெறுத்தனர்; அறிவிலி என்றும், வன்னெஞ்சம் உடையவள் என்றும் அவளை வைதனர். அவள் மறுமணம் செய்துகொண்ட அந்தக் கிளாடியஸ் வடிவினாலோ பண்பினாலோ இறந்த மன்னனை ஒரு சிறிதும் ஒத்தவன் அல்லன். கண்டோரும் கேட்டோரும் வெறுக்கத் தக்கவனாக இருந்தான் அவன்.
இறந்த அரசனுக்கு ஹாம்லெத் என்ற மகன் ஒருவன் இருந்தான். அரசனைத் தொலைவித்துத் தான் பட்டம் பெறவேண்டும் என்றும், அவன் மனைவியைத் தான் மணக்க வேண்டுமென்றும் சூழ்ச்சி செய்து கிளாடியஸ் தன் தமையனைக் கொன்றிருத்தல் கூடும் என்ற ஐயமும் சிலர் உள்ளத்தில் இருந்தது.
அரசன் மனைவி செய்துகொண்ட மறுமணத்தைப் பற்றி மிகுந்த கவலைகொண்டவன் அவள்மகன் ஹாம்லெத் ஒருவனே. அவன் தன் தந்தையின் பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சுருகினான்; தன் தந்தையைக் கடவுள்போலப் போற்றி வணங்கினான். அவன் நல்லொழுக்க நெறி தவறாதவன்; மானம் உடையவன்; ஆதலால், தன் தாய் செய்த அடாத செயலை எண்ணி எண்ணி மனம் நொந்தான். தந்தை இறந்தது பற்றித் தீராத் துயரம் ஒருபுறம்; தாயின் மறுமணம் பற்றி நீங்காத வெட்கம் ஒருபுறம்; இவற்றால் அந்த இளைஞனுடைய வாழ்வில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.அவன் அகத்தின் மகிழ்ச்சி அறவே தொலைந்தது; முகத்தில் கவலைக் குறிகளே மிகுந்தன. நவில்தொறும் நயம்பயந்த நூற் கல்வியிலும் அவனுக்கு இன்பம் இல்லை. அரசிளங்குமரர்க்கு இயல்பான வேட்டையிலும் விளையாட்டிலும் அவனுக்கு இன்பம் இல்லை. உலக வாழ்க்கையில் அவனுக்குச் சலிப்புத் தோன்றிப் பெருகியது. தனக்குக் கிடைக்க வேண்டியதான அரசுரிமை கிடைக்காமற் போனதே என்று அவன் வருந்தினான் அல்லன். அவன் வருத்தத்திற்கு உண்மையான காரணம் வேறு. அன்பும் அருளும் நிறைந்த தன் தந்தை உயிருடன் இருந்த போது, அவர்தம் வாழ்க்கைத் துணையாய் இருந்து மலரும் மணமும் போலப் பிரியாது வாழ்ந்துவந்த தன்தாய், அவர் இறந்த சில வாரங் களுக்குள், நெறிதவறி மைத்துனனை மணம் புரிய விழைந்து, உண்மையும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, சிறிதும் தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டனளே என்ற எண்ணமே அவன் வருத்தத்தின் காரணம். இதனால்தான் அவன் அகமகிழ்ச்சி முற்றும் அழிந்தது. பத்துப்பெரிய நாடுகளை இழப்பதனாலும் அவன் இவ்வளவு சோர்வும் கவலையும் அடைந்திருக்க மாட்டான்.
அவனுடைய மனக்கவலையை மாற்றக் கெர்ட்ரூடும் கிளாடியஸும் எவ்வளவோ முயன்றனர். அவர் தம் முயற்சிகள் வீண் ஆயின. தந்தை இறந்த போது உடுத்த கரிய உடையை அவன் ஒருநாளும் களையவில்லை. தாய் மறுமணம் செய்துகொண்ட அந்த நாளிலும் அவன் அந்த உடையே அணிந்திருந்தான்.
அந்த நாள் தன் குடும்பத்தின் மானம் அழிந்த நாள் என்றே அவன் கருதினான். பிறகு நடந்த களியாடல்களிலும் விழாக் களிலும் அவன் கலக்கவேயில்லை.
தந்தை இன்ன காரணத்தால் இறந்தான் என்று உண்மையை அறியக் கூடாமையாலும் ஹாம்லெத் மிக்க கவலைகொண்டான். பாம்பு தீண்டியதால் மன்னன் இறந்தான் என்று கிளாடியஸ் குடிகளுக்கு அறிவித்தான். ஆனால் கிளாடியஸ் தான் அந்தப் பாம்பு என்றும், அரசுரிமை பெறும் ஆசையால் அக்கொடிய பாம்பு தன் தந்தையைக் கடித்துவிட்டு அரசு கட்டில் ஏறி ஆண்டு வருகிறது என்றும் ஹாம்லெத் ஐயுற்றான்.
இந்த ஐயப்பாட்டில் உண்மை எவ்வளவோ, தன் தாய் இக் கொலைக்கு உடன் பட்டிருந்தாளோ, அவள் அறியாமலே கொலை நடைபெற்றதோ என்று பலவாறு ஹாம்லெத் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கலங்கினான்.
இவ்வாறு இருக்கும்போது ஹாம்லெத் ஒரு செய்தி கேள்வியுற்றான். அரண்மனை வாயிலின் எதிரே உள்ள மேடையில் நள்ளிரவில் இரண்டு மூன்று நாளாக இறந்த மன்னன் சாயலான உருவம் ஒன்று தோன்றியதாகவும், அதை அரண்மனைக் காவலர் கண்டதாகவும் அவன் அறிந்தான். அரசன் அணியும் கவசத்தையே அஃது அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த உருவத்தைக் கண்டவர்களுள் ஹொரேஷியோ⁵ என்பவன் ஒருவன். அவன் ஹாம்லெத்துக்கு உயிர்த் தோழன். அவ்வுருவத்தைக் கண்ட காலமும் கோலமும் பற்றி அவர்கள் ஒரு வகையாகவே கூறினார். அஃதாவது, சரியாகப் பன்னிரண்டு மணிக்குத்தான் அது தோன்றியது; அதன் முகத்தில் வாட்டம் காணப்பட்டது; கோபம் இல்லை, துயரமே காணப்பட்டது; தாடி இளநரை நரைத்திருந்தது. காவலர் பேசியபோதும் அது மறுமொழி கூறவில்லை; ஒரு முறை அது தலைநிமிர்ந்து பேசத் தொடங்கினாற் போலக் காணப்பட்டது; ஆனால் அதற்குள் கோழி கூவிற்று; அதைக் கேட்டதும் உருவம் விரைந்து மறைந்தது; அடுத்த இமைப்பொழுதில் அது கண்ணிற்குப் புலப்படவே இல்லை.
காவலாளர் கூற்றுக்கள் ஹாம்^123 4^லெத்துக்குப் பொய்யாகத் தோன்றவில்லை. அவன் வியந்தான். அது தன் தந்தையின் உருவமே என்று எண்ணி அதைக் காணத் துணிந்தான். ’அது காரணம் இல்லாமல் தோன்றவில்லை; ஏதோ சொல்வதற்காகவே தோன்றியது; என்னைக் கண்டால் அது பேசக்கூடும்," என்று எண்ணினான். அன்று இரவே அதைக் காணவேண்டும் என்று காத்திருந்தான்; எப்போது பொழுது போகும்; எப்போது இரவு வரும் என்று பதைபதைத்தான்.
இரவு வந்தது. ஹெராரேஷியோவுடன்⁶ மார்ஸெல்லஸ் என்னும் வேறொரு காவலாளனுடனும் குறித்த மேடைக்குச் சென்றான் ஹாம்லெத். அன்றிரவு குளிர் மிகுதியாக இருந்தது; கடும் பனியும் இருந்தது. குளிர்மிகுந்த காரணத்தைக் குறித்து மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று, “இதோ வந்து விட்டது!” என்று ஹொரேஷியோ கூறினான்.
தந்தையின் ஆவியுருவத்தைக் கண்டதும் ஹாம்லெத் வியப்பும் அச்சமும் கொண்டான். அதன் தோற்றமும் நன்மை பயக்குமோ தீமை விளைக்குமோ என்று அறியாதபடியால் அவன் மனம் நடுங்கினான்; தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கடவுளை நோக்கித் தொழுது கலங்கினான்; வரவர அவன் அச்சம் அகன்றது. தன் தந்தையின் உருவம் தன்னை இரக்கத்தோடு பார்ப்பதாகவும், தன்னோடு பேச விரும்புவதாகவும் அவனுக்குத் தோன்றியது; ஆதலால், அவன் வாய் திறந்து, “ஹாம்லெத் அரசே! அருமைத் தந்தையே” என்று அழைத்தான்; “உமது உடலைப் புதைத்த இடுகாட்டிலிருந்து நீர் எழுந்து வந்தது ஏனோ? உம்முடைய ஆவியின் அமைதிக்காக யாங்கள் செய்ய வேண்டுவது ஏதேனும் உளதோ? அதைத் தெரிவித்தல் வேண்டும்,” என்று கேட்டான்.
ஆவியோ, அதைக் கேட்டதும், தனியாக இருந்து பேசும் பொருட்டுத் தன்னுடன் வருமாறு ஹாம்லெத்துக்குக் குறிப்பால் அறிவித்தது. குறிப்பை உணர்ந்தவர் காவலர் இருவரும், அந்த உருவத்தைப் பின்பற்றிச் செல்லுவதால் ஹாம்லெத்துக்குத் தீங்கு நேரினும் நேரும் என்று அஞ்சினர்; நயமாக அழைத்துச் சென்று கடலில் விழச் செய்தும் உயர்ந்த மலையுச்சி ஏறச் செய்தும் கொன்றாலும் கொல்லும் என்று கலங்கினர்; ஆகையால் பின் தொடராதவாறு ஹாம்லெத்தைத் தடுத்தனர். ஹாம்லெத் அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை. அவன் உறுதி தளரவில்லை. உயிர் போகுமோ என்ற அச்சமே அவன் நெஞ்சில் இல்லை “உயிருக்கு அழிவு என்பதே இல்லையன்றோ?” என்று அவன் கூறினான்; சிங்கவேறு போல அவர்கள் தடையை விலக்கி, ஆவியுருவத்தைத் தொடர்ந்து நடந்தான்.
சிறிது தூரம் சென்றபின், தனிமையான இடத்தில் ஆவியுருவம் நின்றது; நின்று ஹாம்லெத்தைப் பார்த்து, “மகனே! நான் உன் தந்தையே ஐயுறல் வேண்டா. உன் சிற்றப்பன் என்னை அநியாயமாய்க் கொன்றான். வழக்கம் போல நான் பூங்காவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். மெய்மறந்து நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையறிந்து அந்தக் கொடிய கிளாடியஸ் மெல்லென வந்து என் காதில் நச்சுச்சாறு ஊற்றினான். அஃது என் உடலில் நரம்புத் துளைதொறும் பாய்ந்து செந்நீர் முழுதும் கெடுத்தது. மகனே; யாதொரு கவலையும் இல்லாமல் அமைதியாகப் பூங்காவில் உறங்கிக் கொண்டிருந்த என்னை இவ்வாறு கொன்றான். அந்தப் பாவியாகிய என் தம்பி, என் அரசுரிமை, என் மனைவி, என் ஆரூயிர் இம்மூன்றையும் கவர்ந்தான் வஞ்சகன் மகனே; என்மீது உனக்கு உண்மையான அன்பு இருக்குமானால், நீ அவனைக் கொன்று பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும். இதை நீ மறவாதே. என்னுடைய வாழ்க்கைத் துணையாய் இருந்த உன் தாய், நன்றி கெட்டவளாய், என்னைக் கொன்ற பாவியை மணந்தாளே! அந்தோ! இதை நினைக்கவும் என்னால் கூட வில்லையே! போனது போக! நீ உன் சிற்றப்பனைக் கொன்று பழிவாங்கு. ஆனால், உன் தாயை ஒன்றும் செய்யவேண்டா, அவள் மனச்சான்றே அவளை வருத்தும்,” என்று கூறிவிட்டு உடனே மறைந்தது. அவ்வாறே செய்வதாக ஹாம்லெத் உறுதி பூண்டான்.
பித்தனாக நடித்தல்
ஹாம்லெத் தனியாக அவ்விடத்தில் நின்றான்; அப்போது, “இனி என் நினைவில் உள்ள எல்லாவற்றையும் மறப்பேனாக, நூல்களில் கற்றவையும் பிறவாறு அறிந்தவையும் என் நினைவிலிருந்து நீங்குவனவாக. எல்லாவற்றையும் மறந்து, என் தந்தை கூறியனவும் அவர் இட்ட கட்டளையையுமே நான் எண்ணிக் கொண்டிருப்பேனாக,” என்று துணிவு கொண்டான். ஆவி சொன்னவற்றைத் தன் உயிர்த் தோழன் ஹொரேஷியோ தவிர வேறொருவர்க்கும் அவன் கூறவில்லை. அன்றிரவு கண்ட காட்சியை எவர்க்கும் சொல்லுதல் கூடாது என்று ஹொரேஷியோ, மார்ஸெல்லஸ் இருவரையும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.
ஹாம்லெத் முன்னரே மெலிந்து சோர்வுற்றிருந்தான். ஆவியுருவத்தைக் கண்ட பின் அவன் மனம் குன்றிக் குலைந்தது; அவன் அறிவும் தடுமாறியது, “இந்த நிலைமை நீடிக்குமானால், பலரும் என்னைப் பற்றி ஆராய்வர்; என் சிற்றப்பனும் என்னை ஐயுறுவான்; என் தந்தை இறந்த வகையை அறிந்து கொண்டு நான் பழிவாங்க முயல்வதாக அறிந்து கொள்வான். ஆதலால் நான் உண்மையான பித்தன்போல நடிப்பேன் அப்போது யாரும் என்னை ஐயுறார். என்னால் ஒரு தீங்கும் நேராது என்று என் சிற்றப்பனும் தெளிந்திருப்பான். என் மனக்கலக்கம் ஒருவருக்கும் தோன்றாமல் மறைக்கப்படும்,” என்று அவன் பித்தன்போல் நடிக்கத் துணிந்தான்.
அன்று முதல் ஹாம்லெத் உடுத்த உடை, பேசிய பேச்சு, நடந்த நடை ஆகிய எல்லாவற்றிலும் மாறுதல் நிகழ்ந்தது. அவன் போக்கே புதுமையாக இருந்தது. பித்தனாக நடிப்பதில் அவன் வெற்றியே பெற்றான். அரசனும் அரசியும் அவனைப் பித்தன் என்றே நம்பினர். தந்தையின் பிரிவால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர்கள் எண்ணவே இல்லை. ஆவியுருவம் தோன்றிய செய்தி அவர்களுக்குத் தெரியாது. ஆதலால் அவன் படுந்துயரம் பெண்ணாசையால் விளைந்தது என்றே அவர்கள் முடிவாகக் கருதினார்கள். அவன் மயக்கத்தின் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர்கள் மகிழ்ந்தார்கள்.
ஹாம்லெத் உள்ளத்தில் காதலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது தந்தையின் பிரிவால் ஏற்பட்ட வருத்தத்திற்கும் பின்னதே ஆகும். அரசனுடைய முதல் அமைச்சனாகிய பொலோனியஸ்⁷ என்பவன் மகள் ஒபீலியா⁸ என்னும் கட்டழகியை அவன் காதலித்திருந்தான். அவன் தன் காதலிக்குக் கடிதங்கள் எழுதியிருந்தான்; கணையாழிகள் கொடுத்திருந்தான். தன் உண்மைக் காதலைப் பலவாறு அறிவித்திருந்தான். அவளும் அவனிடம் மெய்யன்பு கொண்டிருந்தாள். பின்னர் நேர்ந்த பேரிடரால் அவன் தன் காதலியைக் கைவிட்டான்; பித்தனாக நடிக்கத் தொடங்கின நாள்முதல், அவளிடம் அன்பில்லாதவன் போல் நடக்கத் தொடங்கினான்.
அந்த மங்கையர்க்கரசியோ அதற்காக அவனை நிந்தித்தாள் அல்லள். அவன் தன்னை அன்பில்லாமல் புறக்கணிக்கவில்லை என்றும், அவன் கொண்ட மன நோயே அதற்குக் காரணம் என்று அவள் மனம் தேறினாள். அவனுடைய இயற்கையான அரும் பண்புகளையும் அறிவின் மாட்சியையும் நினைந்து நினைந்து வருந்தினாள்.
தன் தந்தையைக் கொன்றவனைத் தான் கொன்று பழிக்குப்பழி வாங்கும் கொடுந்தொழிலை ஏற்றுள்ளான் ஹாம்லெத். எனவே, அவன் உள்ளத்தில் காதல் இடம்பெறுதல் கூடுமோ? அத்துறையில் காலத்தைக் கழிப்பது வீண் என்றே அவனுக்குத் தோன்றியது. ஆனாலும், இடையிடையே ஒபீலியாவைப்பற்றி அன்பான எண்ணங்களும் அவனுள்ளத்தில் எழுந்தன. தான் அவளை அன்பில்லாமல் புறக்கணிப்பது தவறு என்ற எண்ணமும் அவனுள்ளத்தில் ஒரு நாள் தோன்றியது; அப்போது அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்; தன் சிந்தை தடுமாற்றமும் காதற் பெருக்கும் அதில் புலப்படுத்தினான். அவள் மீது கொண்ட மெய்யன்பு அவன் உள்ளத்தில் இன்னும் உள்ளது என்பதை அக்கடிதம் அறிவித்தது. விண்மீன் ஒளி மழுங்கினும், கதிரவன் செலவு நிற்பினும், மெய்யே பொய் ஆயினும் தான் கொண்ட காதல் அழியாது என்று அதில் ஹாம்லெத் குறித்திருந்தான்.
அக்கடிதத்தை ஒபீலியா தன் தந்தைக்குக் காட்டினாள்; அவனோ அதை அரசனுக்கும் அரசிக்கும் தெரிவித்தான். தாங்கள் முன்னமே கருதியவாறு ஹாம்லெத் கொண்ட பித்து உண்மையாகக் காதற்பித்தே என்று அரசனும் அரசியும் நம்பினார்கள். ஒபீலியாவின் ஒப்பற்ற அழகு இவ்வாறு அவன் அறிவை மயக்கிய போதிலும், அவளுடைய சீரிய நற்பண்புகளே அம்மயக்கை அழித்து நல்வாழ்வு நல்கும் என்று அரசி எண்ணினாள்.
ஆனால், ஹாம்லெத் உற்ற நோயோ, அரசி எண்ணியவாறு எளிதில் தீர்க்கக்கூடியது அன்று; அஃது ஆழ்ந்து வேரூன்றியது அன்றோ? தந்தையின் ஆவியுருவம் அவன் நினைவிலிருந்து நீங்கவே இல்லை. பழிக்குப் பழிவாங்கும் கடமையே அவனை எந்நேரமும் தூண்டி வந்தது. அந்தக் கடமையைச் செய்யாது கழிக்கும் காலமெல்லாம் பாவத்தில் கழிக்கும் காலமாகவே அவன் கருதினான்; அதனை நிறைவேற்றக் காலம் தாழ்க்கும்வரை தந்தையின் ஆணையை மீறி நடப்பதாகவே நம்பினான். ஆயினும் எந்நேரமும் விடாமல் காவலர் சூழ்ந்திருக்கும் அரசனைக் கொல்வது எவ்வாறு? அஃது எளியதொன்றோ? அன்று. தன் தாய் கெர்ட்ரூட் அவனைவிட்டு நீங்காது எந்நேரமும் உடன் இருப்பதும் பெரிய தடையாக இருந்தது. அத்தடையை அவன் எவ்வாறு வெல்வான்? மேலும், அரசுக் கட்டிலைக் கவர்ந்தான் தன் தாயின் கணவனே என்பதை எண்ணும் போதெல்லாம் அவன் துன்புற்றான்; சோர்வும் உற்றான். இயல்பாகவே ஹாம்லெத் இளகிய நெஞ்சினன்; ஆகவே ஓருயிரைக் கொல்லுதல் என்பது அவனுக்கு அடாத கொடிய செயலாகத் தோன்றியது. நாட்பட்ட வருத்தமும் சோர்வும் அவன் துணிவை அழித்தன; அவன் உள்ளம் ஒருவழிப்படவில்லை. அவன் கண்ட உருவம் தன் தந்தையின் ஆவியுருவந்தானோ என்றும், தன் சோர்வும் வருத்தமும் அறிந்த பேய் ஒன்று அவ் உருவம் கொண்டு தோன்றிக் கொடுமை செய்யுமாறு தன்னைத் தூண்டியதோ என்றும் அவன் உள்ளத்தில் ஐயங்கள் எழுந்தன. எனவே, தான் கண்டதும் கேட்டதும் வெளிமயக்கமாகவும் பொய்யாகவும் இருப்பினும் இருக்கும் என்று அவன் எண்ணினான்; தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரையில் பொறுத்திருக்கத் துணிந்தான்.
பழிக்குப் பழி வாங்கும் உறுதி
இத்தகைய தடுமாற்றங்களுக்கிடையே அவன் இருந்தபோது ஒருநாள் அரண்மனைக்குக் கூத்தர் சிலர் வந்தனர். அதற்கு முன்னரும் அவர்கள் வந்தது உண்டு. அப்போது ஹாம்லெத் அவர்கள் கூத்தைக் கண்டு மகிழ்ந்ததும் உண்டு. ட்ராய்⁹ மன்னன் ப்ரயம்¹⁰ என்பவன் இறந்ததையும், அவன் மனைவி ஹெக்யுபா¹¹ வருந்தியதையும் அவர்கள் நடித்துக் காட்டியபோது ஹாம்லெத் உருக்கத்தோடு கவனித்திருந்தான். இப்போது அவர்கள் வந்தவுடன் ஹாம்லெத் வரவேற்றான்; அந்தத் துன்பக் கதையை மீண்டும் நடிக்குமாறு வேண்டினான். அவர்கள் அவ்வாறே நடித்தார்கள்.
பிரயம் என்னும் கிழமன்னன் கொடுமையாய்க் கொல்லப் படுதல், அவன் குடிகளும் நகரமும் தீக்கிரையாக்கப்படுதல், முதியோளாகிய அவன் மனைவி பித்துப் பிடித்தவள்போல வருந்தி அலைதல், அவள் அரண்மனையில் மேன்மாடிக்கும் கீழ்மாடிக்கும் ஓடித் திரிதல், முடி தரித்த தலையில் கந்தை அணிதல், அரசு கட்டிலிற் கேற்ற அழகிய உடையை விடுத்துக் கம்பளியைச் சுற்றிக் கொள்ளுதல் ஆகிய இவையனைத்தும் கண்டோர் உள்ளத்தை உருக்கிக் கண்ணீரைப் பெருக்கின. கதையை நடித்துக் காட்டிய கூத்தனும் உண்மையாகவே கசிந்து கண்ணீர் மல்கி அழுதான்.
உடனே ஹாம்லெத் பலவாறு எண்ணத் தொடங்கினான்; “இங்கு நிகழ்ந்தது நாடகமே; உண்மை அன்று; ஹெக்யுபா என்ற அந்த அரசி இறந்து பன்னூறு ஆண்டுகள் ஆயின. ஆயினும், இதை நடிக்கும் பொழுது இவன் நெஞ்சுருகி அழுதான் அல்லனோ? ஆனால், இந்த நாட்டில் அரசு செலுத்திய உண்மை அரசன்-அன்பான என் தந்தை கொல்லப்பட்டான். இதை நான் அறிவேன்; ஆயினும் உணர்வும் ஊக்கமும் இழந்து, பழிவாங்கும் முயற்சியும் சோர்ந்து இதுவரைக்கும் சோம்பித் தூங்கிக் கொண்டிருந்தேனே!” என்று வருந்தினான்; ஒரு நாடகத்தில் நடிப்போரும் அவர்தம் நடிப்பும் காண்போர் உள்ளத்தை உருக்குகின்ற ஆற்றலைக் கருதினான். அப்போது ஒரு கதை அவனுக்கு நினைவு வந்தது. கொலைஞன் ஒருவன் ஒரு நாடகத்திற்குச் சென்று காணுங்கால், அதில் கண்டதொரு கொலைக் காட்சியும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளும் அவன் செய்த கொலைக் குற்றத்தை நினைவுறுத்தின; அந்நாள் வரைக்கும் மறைத்து வைத்திருந்த தன் குற்றத்தை அவன் உடனே பலரும் அறியக் கூறிவிட்டானாம். இந்தக் கதையை ஹாம்லெத் நினைத்துக் கொண்டான். நன்று, நன்று, என் தந்தை கொலை யுண்டதற்கு ஒப்பான தொரு நாடகம் இவர்கள் நடிக்குமாறு செய்தல் வேண்டும். அப்போது அதைக் காணும் என் சிற்றப்பன் முகத்தில் தோன்றும் மாறுதல்களை நான் ஆராய்வேன். அவன் உண்மையாகவே என் தந்தையைக் கொன்றானா இல்லையா என்பதைத் தெளிவாக அறிவேன்," என்று முடிவு செய்தான். அவ்வாறே கூத்தரைக்கொண்டு ஒரு நாடகம் நடிக்கச் செய்தான்; அதைக்காண அரசனையும் அரசியையும் அழைத்திருந்தான்.
அந்த நாடகத்தின் கதை இதுதான்: வியன்னா¹² நகரத்திலிருந்த கண்சாகோ¹³ என்பவன் பெரிய குறுநில மன்னன். அவனுடைய செல்வத்தைக் கவர விரும்பினான், அவனுடைய உறவினனான லூஷியானஸ்¹⁴ என்பவன். அவன் பூங்காவில் உறங்கிக்கிடந்த போது, லூஷியானஸ் நஞ்சிட்டுக் கொன்றான். சில நாட்களுக்குள் அவனுடைய மனைவியான பப்டிஸ்டா¹⁵ என்பவளைத்தான் மணந்தான்.
தன்னை அகப்படுத்த ஹாம்லெத் செய்த சூழ்ச்சி அறியாத அரசன் அரசியுடனும் அமைச்சர் முதலானோருடனும் இந்நாடகம் காணச் சென்றான். அவனுடைய முகக்குறிப்பை அறியுமாறு ஹாம்லெத் அருகே உட்கார்ந்திருந்தான்.
நாடகம் தொடங்கியது. முதலில் கன்சாகோவுக்கும் அவன் மனைவிக்கும் பேச்சு நிகழ்ந்தது. அதில் அவன் மனைவி பப்டிஸ்டா பின்வருமாறு கூறினாள். “என் உள்ளத்தில் உள்ளது உண்மையான காதலேயாகும். என் இன்னுயிர்த் துணைவராகிய நீர் இறந்த பின்பும் யான் உயிர்வாழ நேர்ந்தால், எக்காரணத்தாலும் யான் மறுமணம் புரியேன். இஃது உறுதி அப்படி மறுமணம் செய்து கொள்வேனானால் என்னிலும் கொடியவள் இல்லை. ஏன்? கொண்ட கொழுநரைக் கொன்று வாழும் கொடிய பெண்டிரே மறுமணம் செய்துகொள்ள வல்லவர்,” என்று கூறினாள். நாடகத்தில் இப்பகுதி நிகழும் போது அரசன் முகக் குறிப்பைக் கூர்ந்து கவனித்தான் ஹாம்லெத். அம்மொழிகள் அரசனுக்கும் அரசிக்கும் அம்பாய்த் தைத்தன. பிறகு நாடகத்தில் லூஷியானஸ் பூங்காவுக்குச் சென்று நஞ்சிட்டுக் கொல்லும் பகுதி நிகழ்ந்தது. தன் தமையனைத் தான் நஞ்சிட்டுக் கொன்றமைக்கு இது முற்றிலும் ஒத்திருந்தமையால் அரசன் நெஞ்சே அவனைச் சுட்டது. அங்கிருந்து கொண்டு மேலும் நாடகம் பார்க்க இயலாமல் அவ்வளவு கடுமையாக அவன் மனச்சான்று அவனை வருத்தியது. உடனே அரசன் விளக்குக் கொண்டுவருமாறு ஏவித் திடீரென ஏதோ நோயுற்றாற் போல நடித்து, அவ்விடம் விட்டு அகன்றான். அரசன் அகலவே நாடகம் நின்றது.
ஆவியின் மொழிகள் உண்மையே, பொய் அல்ல என்பதில் ஹாம்லெத்துக்குப் போதிய நம்பிக்கை பிறந்தது. ஐயுற்றுப் பெரிதும் வருந்திக் கொண்டிருந்த ஒருவனுக்குத் திடீரெனத் தெளிவு பிறந்து மனம் தேறினால் பெருமகிழ்ச்சி உண்டாகும் அன்றோ? அத்தகைய மகிழ்ச்சியை அடைந்தவனாய், ஹாம்லெத் ஹொரேஷியோவைப் பார்த்து, “ஆவி சொன்ன சொல் ஆயிரம் பொன் பெறும்” என்று கூறினான். பழிக்குப் பழி வாங்கும் உறுதியோடும் இனிச் செய்யத் தக்கது யாது என்று அவன் எண்ணத் தொடங்கினான் அதற்குள், அரசி ஹாம்லெத்துக்கு அழைப்பு அனுப்பி அவனோடு தனிமையில் பேச விரும்புவதாகத் தெரிவித்தாள்.
இவ்வாறு அழைப்பு அனுப்பியது அரசன் விருப்பத்தாலேயே ஆகும். ஹாம்லெத்தின் ஒழுக்கக் கேட்டினால் தனக்கும் அரசிக்கும் மிக்க வருத்தம் விளைந்திருப்பதாக அறிவிக்குமாறு அவன் அரசியிடம் கூறியிருந்தான். தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பேச்சு முழுதும் விடாமல் அறிய விரும்பி அவன் ஓர் ஏற்பாடு செய்திருந்தான். பெற்ற தாய் தன் மகன் சொன்னவற்றில் சிலவற்றை மறைத்துவிடுவாள் என்று அவன் ஐயங்கொண்டு அரசியும் ஹாம்லெத்தும் தனிமையில் பேசும் இடத்திற்கு அருகே திரைமறைவில் பொலோனியஸை இருக்கச் செய்தான். ஆண்டு முதிர்ந்த அமைச்சனாகிய பொலோனியஸ் அங்கிருந்தபடியே எல்லாப் பேச்சும் கேட்டல் கூடும். இப்படிப்பட்ட தந்திரங்களிலும் அரசியற் சூழ்ச்சிகளிலும் அனுபவம் மிகுந்த பொலோனியஸுக்கு இது முற்றிலும் பொருத்தமான வேலையே. இவ்வாறு செய்திகளை மறைந்திருந்து அறிவது அவனுக்கு மகிழ்ச்சியே.
நாடு கடந்து மீளுதல்
தாயின் விருப்பப்படியே ஹாம்லெத் சென்றான். “மகனே! உன் நடையும் செயலும் இவ்வாறு தகாத முறையில் மாறக் காரணம் என்னை? உன் தந்தையாகிய அரசருக்கு நீ பெருந்தீங்கு இழைத்தவன் ஆகிறாய்,” என்று அரசி கூறினாள். (தான் கிளாடியஸை மணந்த காரணத்தால் அவனை ஹாம்லெத்துக்குத் தந்தை எனக் குறிப்பிட்டாள்.)
ஹாம்லெத்: (தந்தை என்ற அன்பும் பெருமையும் வாய்ந்த அரிய பெயரைத் தந்தையைக் கொன்ற கீழ் மகனுக்கு வழங்கினளே என்ற சினக் குறிப்புடன்) அன்னாய்! என் தந்தைக்கு நீர் பெருந்தீங்கு இழைத்திருக்கிறீர்.
அரசி: இது வீண் பேச்சு!
ஹாம்லெத்: உமது வினா எத்தகையது?
அரசி: மகனே! நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறந்தாயோ?
ஹாம்லெத்: அந்தோ! அந்தோ! மறந்துவிடவல்லேனாகில் நான் பெரும்பேறு பெற்றேனாவேன். நீர் யார் என அறிவேன்: அரசி; உம் மைத்துனனுக்கு மனைவி என்னுடைய தாய். ஆ! இந்த முறை இல்லாதிருந்தால் மகிழ்வேனே!
அரசி: அப்படியா? இவ்வாறு என்னை இழித்துரைப் பாயானால், உன்னிடம் பேசவல்லாரை அனுப்புகிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு அரசனையாவது அமைச்சனை யாவது அனுப்ப எண்ணி அவள் புறப்பட்டாள். ஹாம்லெத் அவளை அடியெடுத்து வைக்கவிடவில்லை. அவள் தனிமையில் இருந்தமையால், அவள் செய்த கொடுமையை அவளுக்குச் சுட்டிக்காட்டி வருத்தித் தன் குற்றத்தை உணருமாறு செய்ய முயன்றான்; அவள் கையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்தான். இந்தச் செயலால் அவள் அஞ்சினாள்; பித்துப் பிடித்த நிலையில் தனக்கு ஏதேனும் தீங்கு செய்திடுவான் என்று எண்ணிக் கூக்குரலிட்டாள். உடனே, திரை மறைவிலிருந்து, “அரசியைக் காக்க! காக்க!” என்று ஒரு குரல் கேட்டது. ஹாம்லெத் அதனைக் கேட்டதும், திரை மறைவில் இருந்தவன் அரசனே என்று எண்ணி, வாளை உருவி ஒலி எழுந்த இடத்தில் குத்தினான்; ஓடும் எலியை அடுத்தடுத்துக் குத்துபவன் போலப் பலமுறை குத்தினான்; ஒலி சிறிதும் இன்றி அடங்கிய பின் அரசன் இறந்துவிட்டான் என்று நம்பினான்; திரையை நீக்கிப் பிணத்தை இழுத்துப் பார்த்தான்; திரைமறைவில் இருந்து ஒற்றறிய முயன்ற பொலோனியஸ் என்னும் அமைச்சனையே தான் கொன்றமை அறிந்தான். “அந்தோ! என் செய்தாய்! சிறிதும் இரக்கமின்றிப் படுகொலை செய்தாயே,” என்று அரசி அரற்றினாள். “அன்னாய்! இது கொடுஞ் செயலே; ஆயினும், ஓர் அரசனைக் கொன்று அவன் தம்பியை மணந்த உமது கொடுஞ் செயலைப் போன்ற அவ்வளவு கொடுமையானது அன்று,” என்றான் ஹாம்லெத். அவன் அவ்வளவில் நின்றானில்லை. தன் உள்ளத்தில் உள்ள எல்லா வற்றையும் வெளிப்படையாகக் கூறிவிடத் துணிந்தான். பெற்றோருடைய குற்றங்களை மக்கள் மறந்து விடுதலே கடமை; ஆயினும், செய்யத் தகாத பெருங்குற்றங்களைப் பெற்ற தாய் செய்வாளானால், கண்ணோட்டமின்றிக் கண்டித்துச் சொல்லும் உரிமை மகனுக்கு உண்டு அன்றோ? அவ்வாறு கண்டித்துச் சொல்வது அத்தாயை மேன்மேலும் வருத்துவதற்காக அல்லாமல், தீய வழியிலிருந்து அவளைத் திருப்பி அவளுக்கு நன்மை செய்வதாய் இருத்தல் வேண்டும்.
“தாயே! என் சொல்லைக் கேட்டு மனம் இரங்குவீராக. இறந்த அரசராகிய என் தந்தையை இரண்டு திங்களுக்குள் மறந்தீர். அவரைக் கொன்ற கொலைஞனாகிய அவர் தம்பியை மணந்தீர். என் தந்தையை மணந்த காலத்தில் நீர் செய்த வாக்குறுதிகள் என்ன ஆயின? இனி, பெண்பாலார் செய்யும் வாக்குறுதிகளை உலகம் நம்புவது எங்ஙனம்? பெண்டிரிடம் உள்ள நற்பண்புகள் யாவும் மாயமே என்பதை உம்முடைய ஒழுக்கம் காட்டவல்லது அன்றோ? திருமணக் காலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் நடக்கும் ஒப்பந்தம் சூதாடுவோர் சூளுறுதலுக்கு ஒப்பானதாக ஆகிறதே! சமயநெறி என்பது கேலிக் கூத்தாகவும் வெறுஞ் சொற்களின் கோவையாகவும் புலப் படலாயிற்றே! அன்னாய்! நீர் செய்த செயல் எத்தகையது? ஆ! அதைக் கண்டு விண்ணோர் வெட்கமுற்றனர்; மண்ணோர் மனம் நொந்தனர். (இவ்வாறு சொல்லிக் கொண்டே ஹாம்லெத் இரண்டு படங்களை எடுத்துக் காட்டினான். அவற்றுள், ஒன்று இறந்த மன்னன் படம்; மற்றொன்று அவனைக் கொன்ற கிளாடியஸ் படம்.) இந்தப் படங்கள் இரண்டிற்கும் உள்ள வேற்றுமையைப் பாரும். என் தந்தையின் முகக்களை என்னே! தெய்வம் போலத் தோற்றம் அளிக்கிறார்! இவரே உம்முடைய கணவராக இருந்தவர். இதோ இந்தப் படத்தில் காண்பவனோ அவர் இறந்தபின் நீர் விரும்பி மணந்த கயவன்; அழகனாகிய தன் தமையனைக் கொன்ற பாவியின் முகத்தைப் பாரும்!” என்று ஹாம்லெத் பற்பல எடுத்துக் கூறினான். இச்சொற்களைக் கேட்ட அரசி உற்ற வெட்கத்திற்கு அளவே இல்லை. தன் குற்றத்தைத் தன் மகன் தெளிவாக அறிந்தமைபற்றி அவள் மிகவும் நாணினாள். தான் செய்த குற்றமும் தனது ஒழுக்கக்கேடும் எத்துணைக் கொடுமை நிறைந்தவை என்பதும் அவள் தன்னுள் உணர்ந்தாள்.
மீண்டும் ஹாம்லெத் தாயைப் பார்த்து, “அன்னையே! உம்முடைய முதற்கொழுநரைக் கொன்று அவர் அரசைக் கவர்ந்த கள்ளனுக்கு மனைவியாகி, அவனுடன் கூடி வாழ்கின்றீரே! அஃது எங்ஙனம் இயலும்?” என்று கேட்டான். அப்போது திடீரென்று இறந்த மன்னனது ஆவியுருவம் அந்த அறையில் தோன்றியது. அச்சத்தால் நடுநடுங்கிக் கொண்டே ஹாம்லெத் அவனைப் பார்த்து, வந்த காரணம் கூறுமாறு கேட்டான். “நீ பழி வாங்கும் கடமையை மறந்து விட்டனையோ? அதனை உனக்கு நினைவூட்டவே இப்போது வந்தேன். உன் தாய் அடைந்துள்ள அச்சமும் துயரமும் அவளைக் கொல்லவல்லன். ஆகையால் நீ அவளுடன் பேசி ஆறுதல் அளி,” என்று ஆவியுருவம் கூறி மறைந்தது. ஹாம்லெத் தவிர வேறு யாரும் அதைக் காணவில்லை. அது நின்ற இடத்தைச் சுட்டியும் வந்த கோலத்தைக் கூறியும் தாய்க்கு அவன் கூறி விளக்க முயன்றும், அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அங்கு ஒருவரும் இல்லாதிருக்கவும் ஹாம்லெத் என்னவோ பேசிக் கொண்டிருந்தது பற்றி அவள் பெருந்திகில் அடைந்தாள்; அவனுடைய மனக்கோளாறே அதற்குக் காரணமென்று கருதினாள். “தாயே! தந்தையின் ஆவி மீண்டும் மண்ணுலகிற்கு வருமாறு செய்தது நீர் செய்த பெருங்குற்றமே. அவ்வாறு இருக்க, நான் பித்துப்பிடித்துப் பிதற்றுகிறேன் என்று குறைகூறி மனந்தேறுதல் வேண்டா. என்நாடி பிடித்துப் பாரும். நான் பித்தனானால் நாடி விரைந்தோடுமே! அத்தகைய ஓட்டம் இன்றி அமைதியாக அன்றோ உள்ளது? அன்னாய்! குற்றம் உணர்ந்து உருகிக் கடவுளிடம் முறையிடு வீராக! இனி அரசன் நட்பைத் துறந்துவிடுவீராக! அவனுக்கு மனiவியாக இருந்து வாழ்தல் ஒழிவீராக! என் அருமைத் தந்தையை நினைத்து வழிபடுவீராக! எனக்குத் தாயாக விளங்குவீராக! அப்பொழுது நான் உண்மையான மகனாக இருந்து உம்முடைய வாழ்த்துப் பெறுவேன்” என்று ஹாம்லெத் கண்ணீர் சொரிந்து வேண்டினான். அவ்வாறே வாழ்வதாக அரசி வாக்களித்ததும் பேச்சு முடிந்தது.
பிறகு ஆய்ந்தோய்ந்து பாராமல் திரைமறைவில் இருந்தவனைத் தான் கொன்றதை நினைத்துக் கொண்டான் ஹாம்லெத், கொல்லப்பட்டவன் தன் அருமைக் காதலி ஒபீலியாவின் தந்தையாகிய பொலோனியஸே என்பதை ஹாம்லெத் அறிந்து, அவன் உடலை ஒரு புறத்தில் ஒதுக்கி, பதைப்பும் சினமும் ஆறி, தன் செயலை நினைந்து வருந்தினான்.
பொலோனியஸ் இறந்ததைக் காரணம் காட்டி, ஹாம்லெத்தை நாடு கடத்த வேண்டும் என்று அரசன் கட்டளை யிட்டான். ஹாம்லெத் தனக்குத் தீங்கு செய்யக்கூடுமென்று அரசன் அஞ்சினான்; அதனால் அவனைக் கொன்றுவிடவும் துணிந்திருப்பான். ஆனால் தன் குடிகள் அவன்மீதும் அரசிமீதும் அன்பு கொண்டிருப்பதால், குடிகளுக்கு அஞ்சி அவனைக் கொல்லாமல் விட்டான். அன்றியும், அரசி ஹாம்லெத்தைத் தன் அன்பிற்குரிய மகனாய்ப் போற்றுதலையும் அவன் அறிந்திருந்தான். ஆகையால், அமைச்சனைக் கொன்ற ஹாம்லெத் எப்படியாவது தப்பிப் பிழைக்க வேண்டுமென்று அன்புடையவன் போலக் கூறி அவனைக் கப்பலில் ஏற்றி இங்கிலாந்திற்கு அனுப்பினான்; அவனுடன்அரண்மனைக் காவலர் இருவர் செல்லுமாறு ஏவினான்; ஹாம்லெத் வந்து கரைசேர்ந்தவுடன் அவனைக் கொன்று விடுமாறு இங்கிலாந்து அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அதனைக் காவலரிடம் கொடுத்தனுப்பினான். (அக்காலத்தில் இங்கிலாந்து அரசன் டென்மார்க்கு அரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திறை கொடுத்து வந்தான்.)
அரசன் வஞ்சகமாய் ஏதேனும் சூழ்ச்சி செய்திருப்பான் என்று ஹாம்லெத் ஐயுற்றான். அன்றிரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்த போது, அக்கடிதத்தை எடுத்துப் பிரித்துத் தன் பெயரை அழித்துக் காவலர் இருவர் பெயரையும் அதற்குப் பதிலாக எழுதிவிட்டு மீண்டும் முத்திரை செய்து இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான். சிறிது நேரத்திற்குள் கடற்கள்வர் சிலர் கப்பலைத் தாக்கினர். கள்வர்க்கும் கப்பலில் இருந்தவர்க்கும் போர் நடந்தது. அப்போரில் ஹாம்லெத் தன் ஆண்மையைக் காட்டி வாள்கொண்டு எழுந்து கள்வர் இருந்த கலத்தில் பாய்ந்தான். உடனே, ஹாம்லெத்துடன் வந்தவர்கள் நடுநடுங்கி அவனைக் கைவிட்டு, ஆண்மையின்றிக் கப்பலைத் திருப்பி இங்கிலாந்திற்கு விரைந்து செலுத்தினார்கள். தம் அழிவிற்கே காரணமாக மாற்றி எழுதப்பட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு காவலரும் சென்றனர்.
அரசிளங்குமரனாகிய ஹாம்லெத் கள்வர் கையில் அகப்பட்டுக் கொண்டான். ஆயினும் அக்கள்வர் அவனிடம் அன்பு காட்டினர்; தம்மிடம் அகப்பட்டவன் இன்னான் என அறிந்து கொண்டனர்; தாம் இப்போது ஏதேனும் உதவி செய்தால் அதற்குத்தக்க கைம்மாறு இளங்கோவாகிய ஹாம்லெத் செய்வான் என்று நம்பினர்; டென்மார்க்குக் கரையில் உள்ள ஒரு துறைமுகத்தில் அவனை இறக்கிவிட்டனர்.
அவ்விடத்திலிருந்து ஹாம்லெத் அரசனுக்கு ஒரு திருமுகம் எழுதினான்; அதில், தான் தப்பிப்பிழைத்துத் தாய்நாடு சேர்ந்ததைத் தெரிவித்து, மறுநாள் அரசன் முன்னிலையில் வருவதாக அறிவித்திருந்தான். திருமுகத்தில் எழுதியவாறு அரண்மனைக்குத் திரும்பிய போது அவன் கண்ட முதற்காட்சி அவனுக்குப் பெருந்துயர் தந்தது.
வாட்போரில் மடிதல்
அவன் கண்டது என்னை? அவன் ஆருயிர்க் காதலி ஒபீலியாவின் உடலை இடுகாட்டிற் புதைத்த சடங்கே ஆகும். தந்தை இறந்த நாள் முதல் அந்தக் கன்னியின் அறிவு கலங்கியது. தன் தந்தைக்கு நேர்ந்த எதிர்பாராத முடிவு, தான் காதலித்த அரசிளங்குமரனே தன்னைக் கைவிட்ட கொடுமை ஆகிய இவற்றை அவள் எண்ணி எண்ணி வருந்தினாள். விரைவில் அவள் மனம்மாறிப் பித்துப் பிடித்தவள் போல அலைந்தாள்; அரண்மனையில் இருந்த மகளிர்க்கு மலர் பறித்துக் கொடுத்து, அம்மலர் தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கான அறிகுறி என்பாள்; காதலைக் குறித்தும் சாதலைக் குறித்தும் பாடல் பல பாடுவாள்; பொருளற்ற வெறும் பாடல்களையும் பாடுவாள்; தன் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முற்றும் மறந்தவள் போலத் திரிவாள். ஆற்றங்கரையில் அலரிச் செடி ஒன்று சாய்ந்து வளர்ந்திருந்தது. அதன் இலைகளின் நிழல் ஆற்றுநீரில் தெரிந்தது. ஒருநாள் யாரும் இல்லாதபோது, அழகிய மாலை ஒன்று தொடுத்துக் கையில் ஏந்திக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள் ஒபீலியா; தன் கையில் இருந்த மலர்மாலையை அலரிச் செடியின் ஒரு கிளையின் முனையில் தூக்கக்கருதி அச்செடியில் ஏறினாள். ஏறி நின்றிருந்த கிளை ஒடிந்தது. ஒபீலியா ஆற்றுநீரில் விழுந்தாள்; அவள் உடை உடனே நீரில் நனையாமையால் சிறிது நேரம் நீர்மேல் மிதந்தாள்; தான் உற்ற பேரிடர் அறியாதவளாய், நீர் வாழ்வனபோல இருந்து, அப்பொழுதும் சில பாட்டுக்களைப் பாடினாள். உடை சிறிது சிறிதாக நனைந்துகொண்டே வந்தது; முழுதும் நனைந்து நங்கையை நீரினுள் இழுத்துச் சென்றது; அவளும் பாடலை மறந்தாள்; சேற்றில் மறைந்தாள். சகோதரன் லேயர்ட்டிஸ்¹⁶ அவளுடைய இறுதிச் சடங்கை நடத்த, அரசனும் அரசியும் அரசவையோரும் கூடியிருந்த வேளையிலேதான் ஹாம்லெத் அங்குச் சென்றான்.
அங்கு நடப்பது யாதென்று ஹாம்லெத்துக்கு விளங்கவில்லை. அவன் ஒருபுறமாக ஒதுங்கி நின்றான். நடக்கும் சடங்கில் குறுக்கிட அவன் விரும்பவில்லை. கன்னிப் பெண்களாயிருந்து இறப்பவர்கள் உடல்மீது மலர் தூவுதல் வழக்கம். அவ்வழக்கப்படி மலர்தூவப்படுதலைக் கண்டான் ஹாம்லெத். அவ்வாறு மலர் தூவினவள் அரசியே. அரசி மலர் தூவியபோது, “இனிமைக்கோர் இனிமையே! எழிலுக்கோர் எழிலே! உன் மணவறைக்கு அணிசெய்ய எண்ணியிருந்தேனே! உன் பிணக்குழியில் மலர் தூவுமாறு முடிந்து விட்டதே! எனதுள்ளம் ஒன்றாயிருக்கத் திருவுளம் மற்றொன்றானதே! நீ என் மகன் ஹாம்லெத்தின் மனைவியாக இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறி வருந்தினாள். ஒபீலியாவின் சகோதரனோ, “இக்குழியினின்று அழகிய நீலமலர் தோன்றுக,” என்று கூறிவிட்டு, உடனே குழியினுள் குதித்து, நின்றிருந்தவர்களை நோக்கி, “என் சகோதரியுடன் யானும் புதைக்கப்படுவேனாக! என் மீது மலைபோல மண் குவியுங்கள்,” என்றான்.
ஹாம்லெத் அக் கட்டழகியின் மீது தான் கொண்டிருந்த காதலை நினைத்துக் கொண்டான்; “உடன் பிறந்த ஒருவன் இவ்வளவு வருந்துகிறானே! இவனைப் போல உடன் பிறந்தோர் நாற்பதினாயிரவர் செலுத்தும் அன்பும், நான் கொண்ட அன்பிற்கு ஈடாமோ?” என எண்ணினான். அவன் அகத்தே கொண்ட எண்ணம் புறத்தே வெளிப்பட்டது. லேயர்ட்டிஸ் கொண்ட பித்தனும் பெரும் பித்துக்கொண்டு குழியினுள் குதித்தான் ஹாம்லெத். அங்கிருந்து லேயர்ட்டிஸ் அவனை இன்னான் என அறிந்து, தன் தந்தையும் சகோதரியும் ஆகிய இருவர் சாதலுக்குக் காரணம் அவனே என நினைந்து, கழுத்திறுகப் பற்றினான். அங்கிருந்தவர்கள் விலக்குமளவும் அவன் விட்டான் அல்லன். சடங்கு முடிந்தபின், லேயர்ட்டிஸை எதிர்ப்பவன் போலக் குழியினுள் பாய்ந்தது தவறுதான் என ஹாம்லெத் ஒப்புக்கொண்hன்; அழகிய ஒபீலியா இறந்ததற்காகத் தன்னிலும் மிகுதியாக ஒருவன் வருந்துவதைத் தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை என அவன் அறிவித்தான். அப்போது இளங்குமரர் இருவரும் பகை தணிந்தவர் போலக் காணப்பட்டனர்.
லேயர்ட்டிஸ் தன் தந்தையும் சகோதரியும் மாண்டதுபற்றி வருத்தமும் சினமும் கொண்டுள்ளான் அல்லனோ? அவ்வருத்தமும் சினமும் ஹாம்லெத்தை அழிப்பதற்குப் பயன்படுமாறு அரசன் சூழ்ச்சி செய்யலானான். அவன் லேயர்ட்டிஸை அழைத்து, “நீ ஹாம்லெத்துடன் நட்புப் பாராட்டி வாட் போரில் பெற்றுள்ள திறமையைக் காட்டுமாறு அவனை அழைப்பாயாக,” என்று ஏவினான். ஹாம்லெத் அதற்கு உடன்பட்டான். ஒருநாள் குறிக்கப் பட்டது. அன்று அரசவையோர் அனைவரும் அதனைக் காண வந்தனர். அரசன் சூழ்ச்சியின்படி லேயர்ட்டிஸ் ஒரு வாளுக்கு நஞ்சூட்டி வைத்திருந்தான்.
ஹாம்லெத், லேயர்ட்டிஸ் இருவரும் வாட்போரில் பெயர் பெற்றவர். அதனால் அரசவையோர் பலவாறு ஓட்டம் வைத்துக் களிப்புடன் காத்திருந்தனர்.
லேயர்ட்டிஸின் செயலைப்பற்றி ஹாம்லெத் ஒன்றும் ஐயுற வில்லை. அவன் கைக்கொண்ட படையை ஆராயவுமில்லை. கூர் மழுங்கிய வாள் ஒன்றைக் கையில் ஏந்தினான். சிலம்பப்போர் முறைக்கு மாறாக லேயர்ட்டிஸ் கூரிய வாளைக் கையில் ஏந்தி நின்றான்; அரசன் சூழ்ச்சியின்படி நஞ்சூட்டப்பெற்ற வாளே அது. போர் தொடங்கியது. தொடக்கத்தில் லேயர்ட்டிஸ் விளையாட் டாய்க் காலம் போக்கி, ஹாம்லெத் வெல்லுமாறு இடங்கொடுத்து வந்தான். அதனைக் கண்ட அரசன் தன் உள்ளத்தில் உள்ள கொடிய எண்ணத்தை மறைத்து, ஹாம்லெத்தின் திறமையை மிகவியந்து பாராட்டிப் புகழ்ந்தான்; அவனே வெற்றி பெறுதல் வேண்டுமென வாழ்த்தினான்; மேன்மேலும் உயர்ந்த ஓட்டம் வைத்தான். இவ்வாறு சிலமுறை வாளா இருந்த லேயர்ட்டிஸ் சினம் மூண்டு நஞ்சூட்டிய வாளை ஒச்சி ஹாம்லெத்தைக் குத்தினான். அது சாவைத் தரவல்ல குத்தே ஆகும். ஹாம்லெத் உடனே சினம் மூண்டு எழுந்தான்; அரசனது சூழ்ச்சியை அறியாது பொருதான்; போரின் இடையே லேயர்ட்டிஸ் வைத்திருந்த வாள் ஹாம்லெத் கையில் அகப்பட, கூர்மழுங்கிய வாள் அவன் கைப்பட்டது. நஞ்சூட்டிய அவ்வாளால் ஹாம்லெத் அவனைக் குத்தினான்; லேயர்ட்டிஸ் தான் விரித்த வலையில் தானே அகப்பட்டுக் கொண்டான்.
அதே நேரத்தில், “நஞ்சுகுடித்து விட்டேனே அந்தோ!” என்று அரசி கூக்குரலிட்டாள்.
வாட்போரில் களைத்து நீர் வேட்கை மேலிட்டு ஹாம்லெத் கேட்பானானால், அவனுக்குத் தரும் பொருட்டு அரசன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறு வைத்திருந்தான்! ஒருகால் லேயர்ட்டிஸ் தோற்று ஹாம்லெத் வெல்வானானால், எப்படியும் அவனைக் கொன்றுவிடல் வேண்டும் என்ற கருத்துடன் அரசன் அதில் நஞ்சு கலந்திருந்தான்; அந்தக் கிண்ணத்தைப் பற்றி அரசிக்கு அவன் எச்சரிக்கை செய்ய மறந்து விட்டான். அதனை அரசி எடுத்துக் குடித்து இறந்தாள்; இறக்கும்போதுதான் மேற்கூறியவாறு கூக்குரலிட்டாள்.
ஏதோ வஞ்சகம் நடந்திருப்பதாக அப்போது ஹாம்லெத் ஐயுற்றான்! உடனே கதவுகளை மூடுமாறு கட்டளையிட்டு ஆராயத் தொடங்கினான். லேயர்ட்டிஸ் அப்போது அவனைப் பார்த்து, “ஒன்றும் ஆராய்தல் வேண்டா. நானே வஞ்சகன். நீ குத்திய குத்து என் உயிரைப் போக்குகிறது. நான் கைக்கொண்டது கூரிய வாள்; அதன் முனைக்கு நஞ்சூட்டினேன். அதற்கு நானே இரையானேன். அதன் முனை உன் உடம்பிலும் பாய்ந்துள்ளது. நீயும் இனிப் பிழைத் திருத்தலும் அரிதே. என்னை மன்னிப் பாயாக. இவ்வளவு துன்பத்திற்கும் காரணமான சூழ்ச்சி செய்தவன் அரசனே,” என்று கூறி உயிர் நீத்தான்.
தனக்கும் முடிவு நெருங்கிவிட்டதை ஹாம்லெத் உணர்ந்தான்; அந்த வாளின் முனையில் இன்னும் சிறிதளவு நஞ்சு இருத்தலை அறிந்தான்; உடனே தன் சிற்றப்பனாகிய வஞ்சகன்மீது பாய்ந்து அவன் மார்பில் குத்தினான்; இவ்வாறு தன் தந்தையின் ஆவியுருவத்திற்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றினான்; பழிக்குப்பழி வாங்கினான்; கொலைஞனைக் கொன்றான்.
தன் மூச்சு அடங்கிக்கொண்டு வருதலை உணர்ந்தான் ஹாம்லெத்; அருமை நண்பன் ஹொரேஷியாவை நோக்கினான்; அவனும் தற்கொலை செய்துகொள்ள முயலும் குறிப்பை அறிந்து, “அருமை நண்பா! உலகிற்கு என் வரலாற்றைத் தெரிவித்தல் வேண்டும்; அதன் பொருட்டு வாழ்ந்திரு இதுவே என் வேண்டுகோள்” என்றான். ஹொரேஷியாவும் அவ்வாறு வாழ்ந்திருந்து உலகிற்கு உண்மையை அறிவிப்பதாக வாக்களித்தான். உடனே மனநிறை வோடு ஹாம்லெத் உயிர்விட்டான். ஹொரேஷியாவும் மற்றவர்களும் கண்ணீர் விட்டுக் கசிந்து இளங்கோவின் இன்னுயிர் அமைதிபெற அருளுமாறு தெய்வங்களை வேண்டினார்கள். ஹாம்லெத் அரிய பண்புகள் வாய்ந்த அரசிளங்குமரன்; அன்பும் அருளும் நிறைந்தவன்; எல்லோராலும் போற்றப் பட்டவன். அவன் உயிர் பெற்று வாழ்ந்திருந்தால் டென்மார்க் நாட்டிற்குத் தனிப்பெரு மன்னனாய்த் தழைத்தோங்கியிருப்பான்.
அடிக்குறிப்புகள்
1. Denmark 2. Hamlet
2. Gertrude 4. Claudius
3. Horatio 6. Marcellus
4. Polonius 8. Ophelia
5. Troy 10. Praim
6. Hecuba 12. Vienna
7. Conzago 14. Lucianus
8. Baptista 16. Laertes
கருத்துகள்
கருத்துரையிடுக