சேக்சுபியர் கதைகள் - 2
சிறுகதைகள்
Back
சேக்சுபியர் கதைகள் - 2
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சேக்சுபியர் கதைகள் - 2 (அப்பாத்துரையம் - 37)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 24+312= 336
விலை : 420/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சேக்சுபியர் கதைகள் - 2
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
நடுவேனிற் கனவு(A Mid summer Night’s Dream)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. தீஸியஸ்: அதேன்ஸ் நகரத்து அரசன்
2. ஈஜியஸ்: அதேன்ஸ் நகரத்தான் - ஹெர்மியாவின் தந்தை
3. லைஸாண்டர்: ஹெர்மியாவின் காதலன்
4. தெமத்ரியஸ்: ஹெலனாவின் பழங்காதலன் - ஈஜியஸால் ஹெரிமியாவுக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.
5. ஓபிரான்: வனதெய்வங்களின் அரசன்
6. பக் (அல்லது நற்றோழன் ராபின்): ஓபிரானுக்கு அமைச்சனும் விகடனும்
7. பாட்டம்: நாட்டுப்புற நாடகக் குழுவின் தலைவன் - பக்கால் கழுதைத் தலை தரப்பட்டு, திதானியா காதலைப் பெற்றவன்.
8. நூலாம்படை: வன அரசி திதானியாவின் பணியாட்கள்
9. கடுகுவெடிப்பு:
பெண்டிர்:
1. ஹிப்பாலிதா: தீஸியஸ் மணந்துகொள்ளவிருக்கும் பெண்ணரசி
2. ஹெர்மியா: ஈஜியாஸின் மகள் - லைஸாண்டர் காதலி
3. ஹெலனா: ஹெர்மயாவின் உயிர்த்தோழி தெமெத்ரியஸைக் காதலித்தவள்
4. திதானியா: வன அரசி- ஓபிரான் மனைவி - மாய மலரின் மயக்கத்தில் கழுதைத்தலைப் பாட்டமின் காதலி
5. பயற்று நெற்று: வன அரசி திதானியாவின் பணியாட்கள்
6. விட்டில் பூச்சி:
** கதைச்சுருக்கம்**
அதேன்ஸ் நகரத்தில் அரசன் தீஸியஸிற்கும் ஹிப்பாலி தாவுக்கும் மணவினை ஏற்பாடாயிற்று. அதற்கிடையில் ஈஜியஸ் என்பவன் தான் தேர்ந்தெடுத்த மணமகனாகிய தெமத்ரியஸை மறுத்து லைஸாண்டரை மணக்க விரும்பும் தன் மகள் ஹெர்மியாவுக்கெதிராக வழக்குக் கொண்டு வந்தான். அரசன் நாலுநாள் தவணை தர, ஹெர்மியா லைஸாண்டருடன் வேறிடம் சென்று மணமுடிக்கத் தீர்மானித்தாள். இதனை அறிந்த அவள் தோழி ஹெலனா தான் காதலித்த தெமெத்ரியஸிடம் சொல்ல, அனைவரும் காட்டில் இரவில் ஒன்று கூடினர்.
காட்டில் வன அரசன் ஓபிரானுக்கும் வன அரசி திதானியாவுக்கும் ஒரு சிறு இந்தியப் பையனைக் கைக்கொள்ளும் வகையில் ஏற்பட்ட பிணக்கால் வன அரசன் தன் துணைவன் பக்கின் உதவி கொண்டு உறங்கி எழுந்தவுடன் கண்டவரைக் காதலிக்கச் செய்யும் மாயமலரைக் கொணரச் செய்தான். அப்போது பக்தீஸியஸுக்காக நாடகம் நடிக்கவந்த நாட்டுப்புறத்து மக்கள் தலைவனாம் பாட்டம் தலைமீது கழுதைத் தலையை வைத்து அதனைத் திதானியா காதலிக்கும்படி செய்தான்.
இதே மாயமலரைப் பயன்படுத்தி தெமெத்ரியஸை ஹெலனா மீது காதல் கொள்ளச் செய்ய ஓபிரான் எண்ணினான். ஆனால் பக்கின் பிழையால் அது லைஸாண்டர் கண்மீது பட அவன் ஹெர்மியாவை விட்டு ஹெலனாவைப் பின்பற்றினான். பிழைகண்டு திருத்துகையிலும், தெமெத்ரியஸ் கண்ணில் மலரிட்டு அவனையும் ஹெலனா பக்கமே திருப்பினான். தோழியர் இருவரும் இந்நிலையைத் தாமே அறியாமல் பூசலிட்டனர். ஓபிரான் இறுதியில் தெளிவு பெற்று அனைவரையும் உறங்கவைத்து லைஸாண்டர் கண்ணில் மாற்று மலரிட்டான். இதே சமயம் கழுதைத் தலையனுடன் அளவளாவும் திதானியா விடமிருந்து இந்தியப் பையனை அடைந்தபின் அவள் கண்களிலும் ஓபிரான் மாற்று மலரிட்டான்.
விழித்தெழுமுன் தீஸியஸும் பிறரும் வேட்டையாட வந்து காதலர் மனமாற்றங் கண்டு, வியப்பும் மகிழ்ச்சியும் பெற்றனர், அரசன் மணத்துடன் காதலர் மணங்களும் சிறக்க நடந்தேறின. மண இரவில் வன தெய்வங்கள் மணப் படுக்கைகளைச் சுற்றி வாழ்த்துப் பாடின.
1.காதலுக்காகக் கானக மேகுதல்
அதேன்ஸ்¹ நகரத்தில் ஒரு புதுமையான சட்டம் உண்டு. அதன்படி ஒரு பெண் தன் தந்தை கருத்துக்கிசைந்த கணவனை ஏற்க மறுத்தால் அவள் கொலைத் தீர்ப்புக்கு உரியவள் ஆகவேண்டும். ஆயினும், பொதுவாக எவரும் தாம் பெற்ற புதல்வியரை இழக்க விரும்பாததால் இயற்கைக்கு மாறான இச்சட்டம் நடைமுறையில் வழங்காமலே இருந்தது.
ஆயினும், ஒரு தடவை மட்டும் ஈஜியஸ்² என்பவன் இச்சட்டத்தின் பெயரால் தன் புதல்வியாகிய ஹெர்மியா³ மீது அதேன்ஸ் அரசராகிய தீஸியஸ்⁴ முன்பாக வழக்குத் தொடுத்தான். உயர் குடியிற் பிறந்த தெமத்ரியஸ்⁵ என்னும் இளைஞனுக்கு அவளை மணம் செய்விக்க வேண்டுமென்று ஈஜியஸ் விரும்பினான். ஆனால், அவள் லைஸாண்டர்6 என்ற வேறோர் இளைஞனையே மணஞ் செய்துகொள்ள விரும்பியதனால் தந்தையின் ஆணைப்படி நடக்க மறுத்தாள். இக்குற்றத்திற்காகச் சட்டப்படி அவளைத் தண்டிக்க வேண்டும் என்று ஈஜியஸ் வேண்டிக் கொண்டான்.
ஹெர்மியா இதற்கு எதிராக, ‘தெமத்ரியஸ் என்பவன், முன் ஹெலனா⁷ என்ற பெண்ணைக் காதலித்திருந்தான். அந்த ஹெலனா இன்னும் அவனையே எண்ணி எண்ணி வாடுகின்றனள். தெமத்ரியஸ் அவளை மணந்து கொள்ளா விட்டால் அவள் வீணே உயிரிழக்க நேரிடும்’ என்று வழக்காடினாள்.
தீஸியஸ் பெருந்தன்மையும் அருளும் உடைய அரசர். ஆயினும், அவர் அதேன்ஸின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவரா யிருந்தார். எனவே, அவர் இவ்வகையில் நன்காராய்ந்து ஒரு முடிவுக்கு வர ஹெர்மியாவுக்கு நான்கு நாட்கள் தவணை கொடுத்தார். ‘அத்தவணைக்குள் தந்தையின் விருப்பப்படி நடப்பதாக ஒப்புக் கொள்ளாவிட்டால் உன்னை நான் கொலைத் தீர்ப்புக்கு ஆளாக்க வேண்டி வரும்’ என்று அவர் அவளிடம் கூறினார்.
ஹெர்மியா, தீஸியஸின் வழக்கு மன்றத்தினின்று நேராகத் தன் காதலனாகிய லைஸாண்டரிடம் சென்று தமது இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறினாள்.
இது கேட்டு லைஸாண்டர் மிகவும் மனம் உடைந்தான். பின் அவன் ஒருவாறு தேறி ‘அதேன்ஸினின்றும் சிறிது தொலைவில் எனக்குச் சிற்றன்னை ஒருத்தி இருக்கிறாள். அவள் உறைவிடம் நகர் எல்லைக்கு வெளியில் உள்ளது. இக்கொடிய அதேனியச் சட்டத்தின் ஆட்சி அவ்விடத்தில் செல்லாது. ஆதலால், இன்றிரவே அவ்விடத்துக்கு இருவரும் சென்று மணம் புரிந்துகொள்வோம்’ என்றான். ஹெர்மியாவும் அதற்கிணங் கினாள். “வேனிற் காலத்தில் நாம் இருவரும் களிப்புடன் நகர்ப்புறத்துக் காட்டில் உலவுவதுண்டன்றோ? அதே இடத்தில் இன்றிரவு நான் உன்னுடன் வந்து சேர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
மகிழ்ச்சி தரும் இச்செய்தியை ஹெர்மியா தன் தோழி ஹெலனாவுக்கு மட்டிலுமாவது சொல்லாதிருக்க முடியவில்லை. காதலர் கண்ணற்றவர் என்ற கருத்திற்கிணங்க, ஹெலனா அதனைத் தெமத்ரியஸுக்கு உரைத்தாள். தன் தோழிக்குத் தீங்கு இழைக்கவேண்டும் என்பது அவள் கருத்தன்று. ஆயினும், தானும் தன் காதலனைத் தொடர்ந்து காட்டிற்கே போகலாம் என்ற ஆர்வம் இச்செயலைச் செய்யும்படி அவளைத் தூண்டிற்று.
2.வன அரசன் காதற் பிணக்கு
லைசாண்டரும் ஹெர்மியாவும் வந்து சேர எண்ணிய காடு, குற்றுரு உடைய ⁸வனதெய்வங்களின் நடமாட்டத்துக்குரிய இடமாக இருந்தது.
அத்தெய்வங்களின் அரசன் ஓபிரான்⁹ அரசி திதானியா¹⁰. அவ்விருவரும் அவர்கள் குழாங்களும் அக்காட்டிடையே தங்கள் நள்ளிரவு விழாவைக் கொண்டாட வந்திருந்தனர்.
இவ்வன அரசனுக்கும் அரசிக்கும் இடையே ஒரு வருத்தந்தரும் பிணக்கு ஏற்பட்டது. அதன் பயனாக அவ்விருவரும் வழக்கம்போல அவ்வடர்ந்த காட்டில் முழு நிலவெரிக்கும் இரவுகளில் ஒன்றாய் உலாவுவதில்லை. அவர்களது குழாத்தைச் சேர்ந்த சிறு தெய்வ வடிவங்களும் அவர்கள் இருவரது சீற்றத்திற்கு அஞ்சி வாதுமைக் கொட்டைகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளத் தொடங்கின.
இப்பிணக்கிற்குக் காரணம் இந்தியாவிலிருந்து திதானியா கொண்டு வந்த ஓர் அழகிய சிறுவனேயாவன். அவன் முன்னம் திதானியாவுக்குத் தோழியாயிருந்த ஒருத்தியின் புதல்வன். அவன் தாய் இறந்தபின் அப்பையனைத் திதானியா அவனுடைய வளர்ப்புத் தாயிடமிருந்து கைப்பற்றித் தானே வளர்த்து வந்தாள்.
காதலர் கானகத்தே வருவதாகச் சொன்ன இரவில், திதானியா தன் உரிமைத் தோழியருடன் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது ஓபிரானும் அவன் குழாத்தினரும் எதிரே வந்தனர்.
ஓபிரான்: இறுமாப்பு மிக்க திதானியா! உனது வருகை என் மனத்திற்கு வெறுப்பையே தருகின்றது.
திதானியா: பொறுப்பற்ற அரசே! வருவது நீ என்பதை நான் காணவில்லை. தோழியரே! இவருறவு தகாது. இவ்விடம் விட்டு விரைவில் அகலுங்கள்.
ஓபிரான்: துணிச்சல் மிக்கவளே! சற்று நிற்பாயாக! நான் உன் கணவன் என்பதை நீ மறந்துவிட்டாய் போலும்! தன் ஓபிரான் விருப்பத்திற்குத் திதானியா ஏன் மாறாக நடக்க வேண்டும்? அச்சிறுவனை எனக்குப் பணியாளாகத் தருக.
திதானியா: அவ்வகையில் உமக்கு நெஞ்சு துடிக்க வேண்டாம். உமது வன அரசு முற்றிலும் கொடுத்தாலுங்கூட அச்சிறுவனை நீர் பெறமுடியாது.
இக்கடுஞ் சொற்களுடன் திதானியா மிகுந்த சினத்துடன் சென்றாள். ஓபிரானும், ‘இப்போது நீ செல்க! விடியுமுன் இதற்காக உன்னை என்ன பாடுபடுத்துகிறேன் பார்’ என்று கறுவிக்கொண்டான்.
ஓபிரான் அதன்பின், தன் குறிப்பறிந்து நடக்கும் தோழனும் முதல் அமைச்சனுமாகிய பக்¹¹(அல்லது நற்றோழன் ராபின்) என்பவனைத் தன்னிடம் அழைத்தான்.
பக் கூரிய அறிவும் குறும்புத்தனமும் உடையவன். அவனை நேரில் கண்டவர் மிகச் சிலரேயாயினும் அவன் கைத்திறன் அறிந்தவர் பலர். அவன் குறும்புகள் எண்ணில்லாதவை. நாட்டுப்புறப் பெண்கள் பக்கமாக மறைந்து நின்று கூவி அச்சம் விளைவிப்பான். தயிர் கடைவோர் கலங்களில் புகுந்து வெண்ணெய் திரளாமல் தடுப்பான். பால் பருகுவோர் கிண்ணங்களிலிருந்து நண்டு உருவில் துள்ளி அவர்கள் பாலைக் கொட்டும்படி பண்ணுவான். முக்காலி உருவில் ஆராய்ச்சியாளர் முன் கிடப்பான். அவர்கள் உடகாரப் போகும்போது சற்றே சறுகி அவர்களை விழப்பண்ணி எல்லாரையும் சிரிக்க வைப்பான்.
ஓபிரான் பக் வந்ததும், “என் அரிய நண்பா! முன் ஒருநாள் நாம் பேசிக் கொண்டிருக்கையில், கடற்பன்றியின் மீது சென்ற ஒரு கன்னித் தெய்வத்தின் மேல் காமன் கணை தொடுத்ததைப் பார்த்தோமல்லவா? அக்கணை அவள்மீது விழாமல் தவறி ஒரு வெண்மலர்மீது விழுந்து அதனைச் சிவப்பாக்கியதை நீ பார்த்திருக்கலாம். அம்மலருக்குக் காதலர் மாயமலர்¹² என்று பெயர். அதன் சாற்றை உறங்குவோர் கண்களிற் பிழிந்தால், எழுந்தவுடன் முதலிற் கண்ட ஆள் அல்லது பொருளின்மேற் காதல் கொள்வர். அம்மலரை நீ எனக்குப் பறித்துக் கொண்டுவா. அதன் சாற்றை நான் திதானியாவின் கண்களிற் பிழிந்து, அவள் எள்ளி நகையாட வழி தேடப் போகிறேன். அப்போது அவள் என் வழிக்கு வருவாள். அதன்பின் அதற்கு மாற்றான ஒரு மலரைப் பிழிந்து அம் மாயக்காதலை நீக்கிவிடுவேன்” என்று சொன்னான்.
மாய மலரைப் பறிக்கப் பக் சென்றபின் தெமத்ரியஸும் ஹெலனாவும் காட்டு வழியே வருவதை ஓபிரான் கண்டான். ஹெலனா தெமத்ரியஸிடம் தன் காதலையும் அதன் உறுதிப் பாட்டையும் பற்றிப் பேச முயன்றாள். ஆனால் அவன் அவளிடம் கடுமொழிகள் பேசி அவள் தன்னைத் தொடரவேண்டா என்று தடுத்துத் தள்ளிவிட்டுப் போனான்.
வன அரசன் காதலர்களிடம் என்றும் பரிவுடையவன். அதிலும் ஹெலனா நெடுநாளாய் தெமத்ரியஸிடம் மாறாப் பற்றுக்கொண்டிருப்பது தெரிந்து அவளிடம் அவனுக்கு நல்லெண்ணம் உண்டாயிற்று. எனவே தனது மாய மலர் மூலம் அவளுக்கும் நலம் செய்ய எண்ணங் கொண்டான். பக் அம்மலரைக் கொண்டு வந்ததும் அவன் பக்கினிடம், “இம்மலரின் ஒரு பகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன். இன்னொரு பகுதியை நீ கொண்டுபோ. அதேனிய இளைஞனொருவனும் மங்கை ஒருத்தியும் இக்காட்டில் செல்கின்றனர். அவர்களைச் சரியாக அடையாளங் கண்டு, மங்கையைக் காதலிக்கும்படி இளைஞன் கண்ணில் மாய மலர்ச் சாற்றைப் பிழிவாயாக” என்றான். பக் அங்ஙனமே செய்வதாகக் கூறி அகன்றான்.
அதன்பின் ஓபிரான், திதானியா அறியாது அவள் தங்கும் மலர்ப் படுக்கையை அணுகினான். அங்கு மல்லிகை முல்லை, சண்பகம் முதலிய நறுமலர்கள் பூத்துக் கிடந்தன. திதானியா ஒரு மலரணை மீது பாம்பின் தோலை ஆடையாக உடுத்துக் கொண்டு வீற்றிருந்தாள். அவளுடைய தோழியராகிய வனதெய்வங்கள் அவள் பணியைத் தலைமேற்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் மல்லிகை மொட்டுக்களைத் தின்னும் புழுக்களைக் கொல்லும் வேலையிலீடுபட்டிருந்தனர்; சிலர் வெளவால்களுடன் போர் புரிந்தனர். இப்போர்களிற் கொன்ற வெளவால்களின் தோலினாலேதான் வனதெய்வங்கள் ஆறுகளைக் கடக்கும் படகுகளைச் செய்துவந்தனர். சிலர் அருவருக்கத்தக்க குரலும் உருவும் உடைய ஆந்தைகள் வந்து வனஅரசிக்கு ஊறுசெய்யாமற் காவலிருந்தனர். இன்னும் சிலர் வனஅரசி உறங்கும் வண்ணம் அவளுக்குத் தாலாட்டுப்பாட்டுப் பாடினர்.
** (பாட்டு)**
** முதல் வனதெய்வம்**
வகிர்ந்த நாவும் புள்ளியுங் கொண்ட
வன்கட் பாம்பீர்! வாராதீர்!
பகர்ந்த பல்லியீர்! பதுங்கு நாங்கூழ்ப்
புழுவீர்! அரசியைப் பாராதீர்!
(பல்லவி)
கானக்குயிலீர் இசையுடனே
பாடீர் எம்முடன் நசையுடனே
தனனத் தன்னத் தானானா
தானாத் தனனா தானானா
தீங்கு செய்யாதீர்! தீங்கான
மந்திர மெதுவுந் தந்தெமதரசி
நொந்திட எதுவும் நேராதீர்!
** இரண்டாம் வனதெய்வம்**
வலைபுரி எண்கால் சிலந்திப் பூச்சியீர்
வார்ந்துநும் நூல்கொடு சாராதீர்!
அலைவரி விட்டிலிர்! நத்தையிர்! புழுவிர்!
அரசியின் துயிலினைப் பேராதீர்
(பல்லவி)
கானக்குயிலீர்
இப்பாட்டைக் கேட்டுக்கொண்டே திதானியா உறங்கி விட்டாள். அவள் தோழியரும் தத்தம் வேலையைச் செய்யப் போயினர். அதன்பின் ஓபிரான் ஓசை செய்யாது திதானியா பக்கம் வந்து,
‘விழித்தெழு பொழுதினில் விழிப்படு பொருளே
விருப்பினுக் குரிதா விளங்குக பெரிதே’
என்று கூறிக்கொண்டு மாய மலரின் சாற்றை அவள் கண்களிற் பிழிந்தான்.
3.காதலர் குழப்பம்
அதேனியச் சட்டத்திற்கஞ்சிக் காட்டிற்கு வந்த ஹெர்மியாவும் லைஸாண்டரும் சிறிது தொலைவு நடந்து பின் களைப்புற்று உறங்கினர். அப்போது பக் அவர்களைக் கண்ணுற்றான். ஓபிரான் கூறிய அதேனியக் காதலர் இவர்களே என்று நினைத்து அவன் லைஸாண்டரின் கண்களில் மாய மலரின் சாற்றைப் பிழிந்தான். அதன்பின் அவ்வழியே ஹெலனா வந்தாள். தற்செயலாக லைஸாண்டர் விழித்தபோது அவளைப் பார்க்க நேர்ந்தது. மாய மலரின் ஆற்றலால் உடனே அவன் ஹொமியாவின் காதலை மறந்து ஹெலனாவைக் காதலித்தான்.
ஓபிரான் பக்கினிடம் மாய மலரை அனுப்பியபோது காதலில்லாத ஓரிடத்துக் காதலை உண்டுபண்ணவே விரும்பினான். ஆனால், நடந்தது இதற்கு நேர்மாறாய் விட்டது. காதலிருந்த இடத்தில் அதனை அகற்றி, இருந்த குழப்பத்தை இன்னும் மிகுதியாக்கிற்று அது. ஹெலனா முதலிலேயே தெமத்ரியஸை பின்பற்றிச் செல்ல முயன்று, பின்பற்ற முடியாமல் பின்னடைந்து தனியே வந்துகொண்டிருந்தாள். அதற்கிடையில் இப்பொழுது அவளுக்கு லைஸாண்டர் காதலிப்பது இயற்கை அன்றாகலின் அவன் அவளைக் கேலி செய்வதாகவே அவள் நினைத்தாள். ’எல்லாருடைய ஏளனத்திற்கும் ஆளாக நான் ஏன் பிறந்தேன்? தெமத்ரியஸிக் வெறுப்பால் நான் புண்பட்டிருப்பது போதாதா? நீரும் சேர்ந்து வேறு என்னை அவமதிக்க வேண்டுமா? நான் உம்மை நல்ல உள்ளம் உடையவர் என்றன்றோ நினைத்திருந்தேன்! நீர் என்னிடம் இப்படிக் கொடுமை காட்டலாமா? என்று அவள் சினந்து கூறிக்கொண்டு சென்றாள். அவள் கடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு லைஸாண்டர் அவளையே விடாமற் பின்பற்றினான்.
ஹெர்மியா விழித்தெழுந்தபோது லைஸாண்டர் அங்கில்லை. தனியே இருப்பதில் அவளுக்கும் அச்சம் ஏற்பட்டது. லைஸாண்டருக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையும் உண்டாயிற்று. அவனைத் தேடித் தேடி அவள் காடெங்கும் அலைந்தாள். இதற்கிடையில் ஹெலனாவை வெறுத்துத் தள்ளிவிட்டு முன்சென்ற தெமத்ரியஸ் காட்டில் இன்னொருபுறம் தூங்குவதை ஓபிரான் கண்டான். தெமத்ரியஸ் என்று நினைத்துக் கொண்டு பக் உண்மையில் லைஸாண்டர் கண்களிலேயே மாயச்சாற்றைப் பிழிந்துவிட்டான் என்பதை ஓபிரான் கண்டு கொண்டான். இப்போது தாம் குறிப்பிட்ட இளைஞனையே நேரில் பார்த்தாயிற்று. எனவே,அவன் கண்களில் அப்பொழுதே மாயச்சாற்றைப் பிழிந்தான். சற்று நேரம் சென்றபின் அவ்வழியே லைஸாண்டரும் ஹெலனாவும் வந்தனர். அவர்கள் ஓசைகேட்டு விழித்த தெமத்ரியஸ் முதன் முதலாக ஹெலனாவைக் கண்டான். காணவே, அவன் இதுகாறும் அவளிடம் காட்டிய வெறுப்பை மறந்து காதல் மொழிகள் பகரத் தொடங்கினான்.
உண்மையில் தெமத்ரியஸின் காதலையன்றி வேறெதனையும் ஹெலனா விரும்பினாளல்லள். ஆயினும் அவளும் லைஸாண்டரும் தன்னிடம் காதல் மொழிகள் கூறுவதைக் கண்ட அவள் அது தன்னைக் கேலி செய்வதற்காகவே என நினைத்தாள். ஹெர்மியாவே ஒருவேளை அவளைக் காதலித்த இருவரையும் ஏவி இந்நாடகம் நடிக்கச் செய்திருக்கலாம் என்றும் அவளுக்குப் பட்டது.
ஹெலனாவுக்கெப்படியோ, அப்படியே ஹெர்மியாவுக்கும் இச்செய்தி விளங்கவில்லை. ஹெலனாவை வெறுத்திருந்த தெமத்ரியஸ் அவளைக் காதலித்ததே புதுமை. ஆனால், அது களிப்புத் தரும் புதுமையேயாகும். அதோடு தன் காதலனும் சேர்ந்து அவளைக் காதலிப்பது அவளுக்கு ஏன் என்று விளங்கவில்லை? முதலில் அது கேலி எனக் கொண்டு அவள் அவனை அணுகினாள். ஆனால், விரைவில் அவன் உண்மை யாகவே சீறுகிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது. ஹெலனா ஏதோ மாயத்தால் தெமத்ரியஸை மயக்கியதோடு தன் காதலனையும் மயக்கினாள் என்று அவள் நினைத்தாள்.
இதுகாறும் தோழியர் இருவரும் ஒற்றுமையாய் இருந்தனர். இப்பொழுது இக்காதற் சுழலில் பட்டு ஒருவரை ஒருவர் ஏசியும் தாக்கியும் பூசலிட்டனர்.
“ஹெர்மியா, நீ இப்படிக் கொடியவள் ஆவாய் என்று நான் நினைக்கவில்லை. உன்னுடைய லைஸாண்டரைக் கொண்டு என்னைப் பொய்யாகப் புகழ்ந்து ஏளனம் பண்ணச் செய்கிறாய். அதோடு என்னைக் காலால் உதைத்தால் கூடக் கால் கெட்டு விடும் என்று முதுகைத் திருப்பிக் கொண்டாடும் என் தெமத்ரியஸையும் எனக்கெதிராகத் தூண்டிவிட்டாய். அவ்வளவு வெறுப்பையும் இப்போது அவன் வஞ்சப் புகழ்ச்சியாக்கி என்னைத் ’தெய்வப் பெண்ணே! வனமாதே! மாணிக்கமே!” என்றழைக்கிறான். உன் பழைய பள்ளித் தோழியை இப்படி ஆண்பாலருடன் சேர்ந்துகொண்டு எள்ளி நகையாட உனக்கு எப்படி மனம் வந்ததோ? நாமிருவரும் ஒரே இருக்கையில் இருந்து, ஒரே பாட்டைப் படித்துக் களிப்புடன் உரையாடிக் கொண்டு ஒரே மாதிரியாய்ப் பூத்தைத்தோமே! ஒரே காம்பிற் பழுத்த ஈரொட்டுப் பழங்கள் போலன்றோ நாம் வாழ்ந்தது?" என்று ஹெலனா குறை கூறினாள்.
ஹெர்மியா இதற்கு மாறாக, “உன் சொல்மழை எனக்கு வியப்பைத் தருகிறது. நான் ஏளனம் செய்வதாகக் கூறிக்கொள்கிறாய். ஆனால் ஏளனம் செய்தது நானா? நீதானே, அதற்குமேல் என்னைக் குறை சொல்லவுந் துணிந்தாய்!” என்றாள். ஹெலனா, “அதுதான் சரி; அப்படியே நீ தொடங்கியதை விடாமல் நடித்துக் காட்டு, இப்படியே என் கண்முன் நாடகம் நடத்திவிட்டு என் முதுகு திரும்பியதும் ஒருவருக்கொருவர் கண்ணடித்து என்னை ஏளனம் செய்யுங்கள். தினையளவாவது உங்களுக்கு நட்போ, ஒழுங்குமுறையோ, நாகரிகமோ இருக்குமானால் என்னை இப்படி நடத்துவீர்களா?” என்று இடித்துக் கூறினாள்.
தோழியர் இருவரும் இப்படிச் சொற்போர் தொடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் ஹெலனாவின் காதலுக்கு நீ நான் என்று போட்டியிட்டு மற்போர் தொடுக்கும் எண்ணத்துடன் லைஸாண்டரும் தெமத்ரியஸும் அவர்களை விடுத்து அப்பாற் சென்றனர். அதைக்கண்டு அத்தோழியர் இருவரும் தம்முட் சண்டை செய்வதை விட்டுவிட்டுத் தத்தம் காதலரைத் தேடிச் சென்றனர்.
அவர்கள் குழப்பங்களனைத்தையும் கூர்ந்து கவனித்தான் ஓபிரான். பக்கை நோக்கி, ‘இவையெல்லாம் உன் திருவிளை யாடல்கள்; வேண்டுமென்று தான் இப்படிச் செய்திருப்பாய் நீ’ என்றான். ’அப்படி ஒன்றும் இல்லை ஐயனே! அதேனியக் காதலர் என்றுதானே நீங்கள் சொன்னீர்கள். அதனையே குறிப்பாகக் கொண்டு சென்றேன். இவர்களும் அதேனியர்களே; ஆதலால் ஏமாந்தேன்; ஆனால் இப்பொழுது இக்குழப்பம் பார்ப்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் என்னால் மறுக்கக்கூட முடியவில்லை என்றான், குறும்பில் விருப்புடைய பக்.
ஓபிரான் ‘சரி, போனது போகட்டும்; மற்போர் புரியச் சென்றிருக்குங் காதலர்கள் ஒருவரிடமிருந்து ஒருவரை எதிரியின் குரலில் பேசிப் பிரித்துக் கொண்டு போய் உறங்கவை. அதன்பின் மாயமலருக்கு மாற்றாகிய இம் மலர்ச்சாற்றை லைஸாண்டர் கண்களிற் பிழிந்துவிடு’ என்று சொல்லி வேறொரு மலரைக் கொடுத்தான். அதன்பின்பு அவன் திதானியா வகையில் தான் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றச் சென்றான்.
4.கழுதை மீது காதல்
இதற்கிடையில் நகரில் தீஸியஸ் மன்னன் திருமணத்திற்கு நாடகமாடத் தொழிலாளர் சிலர் எண்ணம் கொண்டனர். ‘நகரில் சிறுவர் தொந்தரவு செய்வர். இரவில் நிலவு வெளிச்சத்தில் காட்டிற்குப் போய் ஒத்திகை நடத்துவோம்’ என்று அவர்கள் முடிவு செய்தனர். தற்செயலாக அவர்கள் திதானியா உறங்கிக் கொண்டிருக்கும் மலர்ப்படுக்கை அருகிலேயே தங்கள் ஒத்திகையை நடத்த நேர்ந்தது. அதில் தலைமையான நடிகர் நிலையில் நடித்தவன் பாட்டம்¹³ என்பவன். அவன் ஒரு கோமாளியே எனினும் கல்வியறிவற்ற அத்தொழிலாளர் கூட்டத்தில் அவன் தலைவனாகக் கருதப்பட்டான். இதனால் அவனுக்கு ஓர் இறுமாப்பும் பெருமித நடையும் ஏற்பட்டன. அவனுடைய கோமாளித்தனத்தை இவை மிகைப்படுத்தின வேயன்றிவேறல்ல.
திதானியாவை ஏளனம் செய்து பணிய வைக்க இவனே சரியான பேர் வழி என்று ஓபிரான் நினைத்தான். அவனது கோமாளித்தனத்திற்கு ஏற்ற உருவத்தையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். எனவே நாடக ஒத்திகையின் இருகாட்சிகளுக்கிடையில் உருமாற மறைவிடத்துக்கு அவன் வந்த சமயம் பார்த்து அவன் தலைமீது கழுதைத் தலை ஒன்றை வெட்டி வைத்துவிட்டான். அம்மாறுதலையறியாத கோமாளி வெளியே வர எல்லோரும் பார்த்துத் திகைத்தனர். சிலர் நகைத்தனர். அது கண்டு பாட்டம் சினங்கொண்டு அவர்கள் மீது சீறி விழுந்தான். அவர்கள் மூலைக் கொருவராகச் சிரிப்பை அடக்க முடியாமல் விலாவைப் பிடித்துக் கொண்டே அகன்றார்கள்.
பாட்டம் நடந்த ஓசையில் திதானியா விழித்துக் கொண்டாள். அப்போது அவள் பார்வை பாட்டத்தின் மேல் விழுந்தது. உடனே அவள் அவன்மீது காதல் கொண்டு, “ஆ! என்ன அழகிய தெய்வீக உரு! வெளியழகே இவ்வளவு! அக அழகு எப்படி இருக்குமோ?” என்றாள்.
பாட்டம்: ஏன் அம்மணி, அக அழகிருந்தால் அகத்திற்குச் செல்லும் வழி எனக்குத் தென்படாதா?
திதானியா: ‘வேண்டா, வேண்டா; நீ அகம் செல்லவேண்டா. இக் காட்டிலேயே உனக்கு நல்ல அகம் உண்டு பண்ணுகிறேன். நான் மனிதமாதல்லேன்; தெய்வமாது. எனக்கு உன்மீதுதான் காதல். என்னிடமே நீ வா. உனக்கு என்னுடைய தெய்வமங்கையர்கள் பணிபுரிவார்கள். அவர்கள் நல்ல ஆட்கள், பெயர்களும் நல்ல பெயர்கள். பயற்று நெற்று¹⁴, நூலாம்படை¹⁵ விட்டில் பூச்சி¹⁶, கடுகுவெடிப்பு¹⁷! என்று சொல்லிக்கொண்டு அவர்களைப் பார்த்து, ’இவ்இனிய செல்வனுக்கு வேண்டிய நலன்கள் தருக. அவன் காண ஆடல் பாடல் புரிவீர்! நறுங்கனிகளும் தேனும் அவனுக்குக் கொண்டுவந்து தருவீர்!’ என்று உத்தரவிட்டாள். அதன்பின் அவள் பாட்டத்தைத் தன் அருகில் அழைத்து அவன் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ’என் அருமைக் கழுதை மணியே! உன் அழகே அழகு! என்ன நிமிர்ந்தோடிய காதுகள்! என்ன பரந்த கண்கள்!" என்று சொல்லி அவனுடைய அழகில் மயங்கி அவனுக்கு முத்தங்கள் தந்து மகிழலானாள்.
பாட்டமும் இக்காதலைத் தனக்குத் தக்கதாகவே ஏற்றுக் கொண்டான். திதானியாவோ, அவள் காதலோ அவனுக்கு ஒன்றும் புதுமையாகப் படவில்லை. அரசியின் காதலை ஏற்று அரசரது நிலையில் உடன் தானே பேசத் தொடங்கினான்.
வன அரசி தன் மயிரடர்ந்த கன்னங்களை வருடுவதையோ, கழுத்தைக் கட்டிக் கொஞ்சுவதையோ அவன் பொருட்படுத்துவ தாகக் காட்டிக் கொள்ள வில்லை. அரசியின் காதலை ஒரு சிறு பொருளாகப் பெற்ற ஓர் அரசனது மனப்பான்மையுடன் நடக்கவுந் தொடங்கினான்.
பாட்டம்: ஏனடி, பயற்று நெற்று!
பயிற்று நெற்று: ஐயா, இதோ! உத்தரவு!
பாட்டம்: என் தலையைச் சற்றுச் சொறி, அடா நூலாம்படை!
நூலாம்படை: இதோ, ஐயா!
பாட்டம்: சரி, திருவாளர் நூலாம்படை, சற்று அதோ அந்த முள் முருங்கையின் முகட்டில் இருக்கும் தேனீயைக் கொன்று அத்தேன் கூட்டைக் கொண்டுவா. வரும்போது தேன் கூட்டை மட்டும் கிழித்து விடாதே. தேன் வழிந்து உன் உடலெல்லாம் வீணாகக் கெட்டுவிடும்; சரி, விரைவில் போ, அடே அந்தக் கடுகு வெடிப்புப் பயல் எங்கே?
கடுகு வெடிப்பு: இதோ இங்கேதான் இருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்? ஐயா!
பாட்டம்: ஒன்றுமில்லை. இந்தப் பயற்று நெற்றுச் சொறிவது போதாது. கொஞ்சம் துணையாக நின்று சொறி.இங்கே நல்ல அம்பட்டன் விடுதி ஏதாவது உண்டா? என் முகமெல்லாம் மயிர் அடர்ந்திருக்கிறது. முகம் வழித்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் திதானியா அன்புடன், “என் அருமைக் கழுதையே? உனக்கு உணவுக்கு என்ன விருப்பம்? எனக்கு வனதெய்வம் ஒருவன் இருக்கிறான். அவனைக் கொண்டு அணில் கூடுகளைத் தேடிக் கொட்டைகள் கொண்டுவரச் சொல்லட்டுமா?” என்றாள்.
பாட்டத்துக்குக் கழுதைத் தலையோடுகூட நாவின் சுவையும் கழுதையின் சுவையாய் விட்டது. “எனக்கு அஃதொன்றும் வேண்டா, கொஞ்சம் வறுத்த கடலையே போதும்!” என்றான்.
"எனக்கு உறக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. உன் ஆட்கள் கொசுக்கள் போலக் குறுகுறு என்று ஓசையிட்டால் நான் உறங்க முடியாது’ என்றான் சிறிது நேரங்கழித்து.
திதானியா: "அவர்கள் ஒன்றும் ஓசை செய்யமாட்டார்கள். தடையில்லாமல் சற்று என் தோள்மீது சாய்ந்து படுத்துறங்கு. ஆ! என் அருமைக் கழுதையே! உன்னை நான் பெற்றதே பேறு! என்று பாட்டத்தைக் கைகளால் அணைத்து உறங்கவைத்தாள்.
அச்சமயம் மறைவிடத்திலிருந்து ஓபிரான் வெளிவந்து, “அடடா, வன அரசி இருந்திருந்து கழுதையையா காதலிக்க வேண்டும். மிகவும் நன்றாயிருக்கிறது!” என்று நகைத்தான். திதானியா கண்களில் மாயச்சாற்றின் வன்மை இருந்து கொண்டு அவள் விருப்பத்தைக் கழுதைத் தலையன் பக்கமே இழுத்தது. அதே சமயம் தன்னுடன் பிணங்கிய கணவனது ஏளனத்தையும் அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனை விரைவில் அனுப்பிவிட்டுத் தன் காதலனுடன் தடையின்றி இருக்க விருப்பங் கொண்டாள். ஆகவே, அவன் கேட்டபடி தன் சிறிய இந்தியப் பையனை அவனுக்குக் கொடுத்துவிட்டாள்.
5. முடிவு
தன் காரியம் கைகூடின பின் திதானியா கழுதையுடன் கிடந்து உறங்குவதைக் கண்டு ஓபிரானுக்கு இரக்கம் வந்தது. ஆகவே அவன் அவள் கண்களில் மாற்று மலரின் சாற்றைப் பிழிந்தான். அவள் விழித்தெழுந்ததும் தனது பொய்க்காதலை மறந்து ஓபிரானிடமே தன்னியற்கைப்படி காதல் கொள்ளலானாள்.
அதே சமயத்தில் காதலர்கள் குழப்பமும் ஒருவாறு தீர்ந்தது. பக் மற்போருக்கு முனைந்த காதலர்களை அவர்கள் எதிரிகளின் குரலில் தனித்தனி அழைத்துச் சென்று பிரித்தான். பின் அவர்கள் பலவிடங்களிலும் சென்று களைப்படைந்தனர். காதலியரும் அதேபோன்று அலைந்து களைப்படைந்தனர். அனைவரும் பக்கின் சூழ்ச்சித் திறத்தின் பயனாகக் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வந்து படுத்துறங்கினர். அப்போது பக் லைஸாண்டர் கண்களில் மாற்றுமலரின் சாற்றைப் பிழிந்தான்.
அவர்கள் எழுந்தபோது தெமத்ரியஸ் ஹெலனாவின் காதலை மறவாது அவளைப் புகழ்ந்தான். அவளும் மயக்கந்தெளிந்து தன் விருப்பங் கைகூடியதென மகிழ்ந்தாள். அதே நேரத்தில் லைஸாண்டர் விழித்தபோது அவனை மயக்கிய மாயமலரின் ஆற்றல் மாற்று மலரால் அகன்றுவிட்டது. அவன் பழையபடி ஹெர்மியாவிடம் இன்மொழிகள் கூறினான். அவளும் தான் பட்ட துன்பமனத்தையும் கனவென உணர்ந்து மகிழ்ந்தாள். தோழியர் இருவரும் இப்போது காதற்சுழலிலிருந்து விடுபட்டு விட்டனர். இருவரும் தத்தங் காதலரைப் பெற்ற மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
நகரத்தில் மன்னன், தீஸியஸுக்கும், ஹிப்பாலிதாவுக்கும் மணவினை நிகழ்த்த எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறின. மறுநாள் மணநாள். அவ்விரவு, அரசனுக்கும் அவன் காதல் துணைவிக்கும் மிக நீண்டதாகத் தோன்றிற்று. ஆதலால், அதனைக் களிப்பு போக்க அவர்கள் காட்டிற்கு வேட்டையாட வந்தனர். காட்டில் அவர்கள் ஹெலனாவும் தெமத்ரியஸும் பகை நீத்துக் கைகோத்து வருவதைக் கண்டனர். பக்கத்தில் அதேபோல ஹெர்மியாவும் லைசாண்டரும் வந்து கொண்டிருந்தனர். தெமத்ரியஸ் இப்போது லைஸாண்டரிடம் பகைமையும் போட்டியும் கொள்ளாமல் நட்புடையவனாயிருந்தான்.
நிலைமை மாறிவிட்டபடியால், இனித் தன் பிடி முரண்டு செல்லாதென ஈஜியஸ் கண்டான். ஆகவே காதலர் மனப்படி மணம் புரிவிக்க இணங்கினான். மறுநாள் அரசனது மணவினை நடக்கும்போது அதனுடன் கூடவே இவர்கள் மணவினைகளும் நடந்தேறின. இம் மணவினைப் போதில், பட்டம் உட்படத் தொழிலாளர் தம் நாடகத்தை நடித்தனர். அஃது உயர்வுடையதாயில்லா விட்டாலும் காதலரது நகைத்திறனைத் தூண்டி அவர்கள்இன்பத்தைப் பெருக்க உதவிற்று.
மணநாள் இரவு அனைவரும் படுக்கைக்குச் சென்று உறங்கியதன் பின் வனதெய்வங்கள் தம் அரசன் அரசியுடன் வந்து மணவாழ்த்துப் பாடின.
** (பாட்டு)**
1. மன்றற் படுக்கை
ஒன்றன்பின் ஒன்றாய்
நன்றென வாழ்த்திச்
சென்றிடு வோமே!
2. காத லிளைஞர்தம்
காதலி தழுவிப்
போதரு புதல்வர்
தீதற வாழ்க!
3. கருக்கொளு நேரம்
உருக்கொளும் ஓரை
திருப்பெறச் சேர
விறுப்புறு வோமே.
4. மறுவறு சாயல்
மகிழ்தரு மென்மை
நெறியுடன் பெற்றவர்
நிலைபெற வாழ்க!
5. பொன்னுயர் பொலிவும்
இன்னுயிர்க் களிப்பும்
நன்னிலக் கிழமையும்
மன்னிட வாழ்க!
அடிக்குறிப்புகள்
1. Athens
2. Egeus.
3. Hermia
4. Theseus.
5. Demetrius
6. Lysander
7. Helena.
8. Fairies.
9. Oberon
10. itania
11. Puck or Robin Good-fellow
12. Love-in-Idleness
13. Bottom
14. Pease - blossom
15. Cobweb
16. Moth
17. Mustard seel.
ஸிம்பலின்(Cymbaline)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. ஸிம்பலின்: பிரிட்டன் அரசன் - இமொஜென் தந்தை.
2. கிளாட்டென்: ஸிம்பலினை மணக்கு முன்னைய அரசியின் மகன்.
3. பாஸ்துமஸ்: போரிலிருந்த வீரன் மகன் ஸிம்பலின் வளர்ப்புப் பிள்ளை - இமொஜென் காதற் கணவன்.
4. அயாக்கிமோ: பாஸ்துமஸுடன் பழகிய தீய இத்தாலிய இளைஞன் - இமொஜென் வகையில் அவனை ஏமாற்றியவன்.
5. பிஸானியோ: ஸிம்பலின் அரண்மனை வேலையாள் - பாஸ்துமஸின் உண்மை நண்பன்.
6. பெலாரியஸ்: ஸிம்பலினால் நாடு கடத்தப்பட்டு அவன் பிள்ளைகளிருவரையும் கவர்ந்து காடு சென்று வளர்த்தவன்.
7. கிடரியஸ்: ஸிம்பலின் பிள்ளைகள் - மொஜன் உடன்
8. அர்விராகஸ்: பிறந்தார்-பெலாரியஸால் கவர்ந்து செல்லப்பட்டுக் காட்டில் வளர்ந்தவர். மாற்றருவில் பாலியாடர் காட்ஸல் என்றழைக்கப்பட்டவர்.
9. லூரியஸ்: ரோம் படைத்தலைவன் - இமொஜெனை ஆணுருவில் ஆதரித்தவன்.
10. பிடேலே: இமொஜெனுக்கு ஆணுருவில் பெயர்.
பெண்டிர்:
1. அரசி: ஸிம்பலின் இரண்டாம் மனைவி - கிளாட்டென் தாய் கொடியவள்.
2. இமொஜென்: ஸிம்பலினுக்கு முதல் மனைவியிடம் பிறந்த புதல்வி - கிடரியஸி அர்விராகஸின் தமக்கை. மாற்றுரு - ஆண் - பிடேலே.
கதைச் சுருக்கம்
பிரிட்டனின் அரசன் ஸிம்பிலினுடைய முதல் மனைவி இறந்தபின் அவன் வேறு மணம் செய்துகொண்டான். முதல் மனைவியால் இமொஜென் என்ற மகளும் கிடரியஸ் அர்விராக்ஸ் என்ற இரு புதல்வரும் இருந்தனர். அரசனிடம் பகைமை கொண்ட பெலாரியஸ் என்ற வீரப் பெருமகன் அவர்களைக் கவர்ந்து காடு சென்று ஒரு குகையில் பாலிடோர் கசாட்வெல் என்ற பெயர்களுடன் அவர்களை வளர்த்து வந்தான்.
அரசி அரசனை மணக்கு முன்னுள்ள தன் மகனாகிய கிளாட்டெனுக்கு இமொஜெனை மணந்து அரசுரிமையைப் பெற எண்ணினாள். ஆனால் இறந்துபோன ஒரு வீரன் மகனும் ஸிம்பலினால் எடுத்து வளர்க்கப் பட்டவனுமான பாஸ்துமஸை அவள் காதலித்து மறைவில் மணஞ்செய்து கொண்டாள். இதனை அறிந்த அரசி பாஸ்துமஸை நாடு கடத்தினாள்.
பாஸ்துமஸ் இத்தாலி நாடு சென்று இன்ப வாழ்விலீடுபட்ட நண்பர்களுடன் காலங்கழித்தான். அவர்களில் ஒருவனாகிய அயாக்கியமோ என்ற தீயவன் அவன் நாவைக் கிளறித் தன் மனைவியின் கற்புடமை மீது ஆயிரம் பொன் பந்தயம் வைக்கத் தூண்டினான். இமொஜெனைக் கண்டதும் நம்பிக்கையற்றது. ஆனால் வஞ்சகமாய்ப் பாதுகாப்புக்காக அவளறையில் வைக்கச் சொன்ன பெட்டகத்திலுட்கார்ந்து உடற்குறி முதலிய மறை செய்திகளறிந்து கைவளையும் கவர்ந்து இவற்றால் பாஸ்துமஸ் தன் பொய்யை நம்பவைத்துப் பந்தயத்தையும் இமொஜென் கணையாழியையும் பெற்றான்.
பாஸ்துமஸ் இதனால் பித்துக்கொண்டு அரண்மனை வேலையாளான பிஸானியோ என்ற தன் உண்மை நண்பனுக்கெழுதி, அவளைக் கொல்லத் தூண்ட, அவன் செய்தியைக் கூறிவிட்டு அவளை விட்டுச் சென்றான். அப்போது அவன் இமொஜெனைக் கொல்ல எண்ணி நஞ்சொன்று மருத்துவனிடம் வாங்கி மருந்தென்று சொல்லிக் கொடுத்த மயக்க மருந்தையும் அவளிடம் கொடுத்தான். இமொஜென் அதனுடன் தற்செயலாக கிடரியஸ் அர்விராக்ஸை அடுத்து உடன் பிறந்தார் என்றறியாமல் அவர்களை உடன் பிறந்தாராக நடத்தினாள். பின்னொரு நாள் அயர்வால் அம்மருந்து கொண்டிறந்தாற்போற் கிடக்க, சிறுவர் பூப்பெய்து உடலை அடக்கஞ் செய்து போக அவள் பின் எழுந்து சென்றாள்.
இச்சமயம் ரோமர் படையெடுக்க, பாஸ்துமஸ், பெலாரியஸ், சிறுவர் முயற்சியால் ரோமர் முறியடிக்கப் பட்டார்கள். ஆண் வடிவுள்ள இமொஜென் ரோமனாகிய லூஸியஸால் ஆதரிக்கப்பெற்று அவனுடன் சிறைப்பட்டாள். பாஸ்துமஸ் உயிர் வெறுத்து ரோமனாக நடித்துச் சிறைப்பட்டான். இமொஜென் கணவனைக் கண்டதுடன் அயாக்கிமோவிடம் தன் கணையாழி கண்டு, தன்மீது இராங்கிய அரசனிடம் வேண்டி அவனை ஒறுத்து உண்மை விளக்கித் தன் உருக்காட்டி எல்லோரையும் மகிழ்விக்கின்றாள்.
1.காதலர் பிரிவு
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிரிட்டனில் (அஃதாவது இங்கிலாந்தில்)¹ ஸிம்பலின்என்றோர் அரசன் இருந்தான். அவனுடைய முதல் மனைவி இறந்தபின் அவன் மீண்டும் மணம் செய்து கொண்டான். முதல் மனைவி மூலமாக அவனுக்குப் புதல்வி ஒருத்தியும் புதல்வர் இருவரும் இருந்தனர். இரண்டாம் மனைவி பேராசையுடையவள். அவள் எப்படியாவது அரசுரிமையைத் தன் வசப்படுத்த நினைத்தாள். முதல் மனைவியின் புதல்வர் இருவரும் சிறு பிள்ளைகளாயிருக்கும்போதே எங்கோ காணாமல் மறைந்து போய்விட்டனர். முதல் மனைவியின் புதல்வி அழகிலும் அறிவிலும் மிக்க இமொஜென்². அவளைத் தன் புதல்வனான கிளாட்டெனு3க்கு மணஞ் செய்து வைத்துவிட்டால் அவள் அரசுரிமை மூலமாக அவனுக்கே வரும் என அரசி எண்ணினாள்.
ஸிம்பலினுடைய குடிகளுள் சிறந்த வீரனொருவன் அவ்வரசனது போரில் மாண்டான். அப்போது குழந்தை ஒன்றை அவன் விட்டுப் போனான். அதன் துணையற்ற நிலைக்கு இரங்கி ஸிம்பலின் அப்பிள்ளையை எடுத்து வளர்த்தான். தந்தை இறந்தபின் பிறந்த பிள்ளையாதலின் அவனுக்குப் பாஸ்துமஸ்⁴ (பிந்திப் பிறந்தவன்) என்று பெயரிட்டனர். இப்பாஸ்துமஸ் உருவில் வளருந்தோறும் அறிவிலும் குணத்திலும் வளர்ந்து வந்தான். இமொஜெனும் பாஸ்துமஸும் இளமை முதற்கொண்டே விளையாட்டுத் தோழர்களாயிருந்தனர். அத் தோழமை முதிர்ந்து அவர்களிருவரும் நாளடைவில் அரசன் அரசியை எதிர்பாராமலே தம்முள் மறைவாக மணம் செய்துகொண்டனர்.
அரசியின் ஒற்றர் இளவரசியின் நடைமுறைகளை ஊன்றிக் கவனித்து வந்தனர். ஆதலின் விரைவில் இம்மறை மணச்செய்தி அரசிக்குத் தெரிந்துவிட்டது. தனது பகற் கனவின் மீது மண்சொரிந்த இமொஜெனிடம் அவளுக்கு மட்டற்ற சீற்றம் ஏற்பட்டது. அவள் அரசனுக்கும் இவ்வகையிற் சினம் மூட்டி பாஸ்துமஸை நாட்டை விட்டு வெளியே துரத்திவிட்டாள்.
ஒருவரை நேரே எதிர்த்துக் கெடுப்பதைவிட, அவரை நயமாக அடுத்துக் கெடுப்பதே எளிது என்று அரசிக்குத் தெரியும். எனவே, தான் இமொஜெனுக்கு நல்லவளாக நடந்துகொண்டால் நாளடைவில் அவள் மனத்தை விட்டு பாஸ்துமஸை அகற்றி அவள் தன் மகனையே ஏற்கும்படி செய்யலாம் என்று அரசி இன்னும் மனப்பால் குடித்துக்கொண்டு தான் இருந்தாள். இந்நோக்கங் கொண்டு அவள் பாஸ்துமஸ் போகுமுன் இமொஜெனுடன் அவன் பேச இடம் கொடுத்தாள்.
பாஸ்துமஸ் இமொஜெனிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொள்ளும்போது அவள் அவனுக்குத் தனது வைரக் கணையாழி ஒன்றை நினைவுக்குறியாகக் கொடுத்தாள். அவனும் அதுபோலவே அவள் கையில் தனது நினைவுக் குறியாகப் பொன்வளை யொன்றை அணிவித்தான்.
பாஸ்துமஸ் தன்னுடைய பிரிவு நாட்களை எண்ணிக் கொண்டே ரோம் நகரில் வாழ்ந்த வந்தான். இமொஜெனும் தன் உயிரற்ற வாழ்க்கையைத் தந்தை அரண்மனையில் வேண்டா வெறுப்பாகக் கழித்து வந்தாள்.
2.ஒரு புதுமையான பந்தயம்
ரோமில் பல நாடுகளிலிருந்தும் வந்த இளஞ் செல்வர் பலர் இருந்தனர். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்து பாஸ்துமஸ் வாழ்ந்து வந்தான். அவர்களது ஆரவார வாழ்வில் பாஸ்துமஸ் தன் மனத்துயரை ஒருவாறு அகற்ற முயன்று கொண்டிருந்தான். ஒருநாள் அவர்கள் பேச்சு தற்செயலாகப் பெண்கள் பக்கம் திரும்பியது. முதலில் ஒவ்வொருவரும் தத்தம் நாட்டுப் பெண்களே உயர்வுடையவர் என்று நிலைநாட்ட முயன்றனர். அதிலிருந்து படிப்படியாகப் பேச்சு முன்னேறி ஒவ்வொருவரும் அவரவர் மனைவி அல்லது காதலியைப் போற்றும் அளவிற்கு வந்தது. பாஸ்துமஸும் அவர்கள் பேச்சிற் கலந்துகொண்டு தன் நாட்டு மாதர்களைச் சிறப்பாகத் தன்னுடைய காதல் தலைவி இமொஜெனையும் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினான்.
அப்போது அயாக்கிமோ⁵ என்ற செல்வன் ஒருவன் இடையில் வந்து, “பெண்களிடம் எங்குமே உண்மைக் கற்பு என்பது கிடையாது. கற்புடையவர் என்பவரின் கற்பெல்லாம் இயலாக் கற்பேயன்றி வேறன்று. முயல்வார் முயன்றால் எம்மாதும் கற்பை விட்டுக் கொடுத்தே தீருவாள்” என்றாள். இது கேட்டுப் பாஸ்துமஸ் சினங்கொண்டு அவ்வுரையை மறுத்தான். “தான் கள்ளன் பிறரை நம்பான்” என்ற பழமொழிக்கிணங்க அவன் அதையே பிடி முரண்டாகக் கூறினான். மேலும் தான் கூறியதை நிலைநாட்டப் பதினாயிரம் பொன் பந்தயம் வைப்பதாகவும் உறுதி கூறினான்.
பேச்சில் மிக முனைந்துவிட்டதாலும், தன் மனைவியின் கற்பில் மாறா உறுதி இருந்ததாலும், (ஊழ்வினை முந்துறுத்தலாலும்) பாஸ்துமஸ் இப் பந்தயத்தை ஏற்றான்.
இம்முயற்சியில் இறங்க உதவும் முறையில் பாஸ்துமஸ் அயாக்கிமோவிடம் தன் கணையாழியைக் கொடுத்து, இமொஜெனுக்கு அயாக்கிமோவை ஒரு நண்பன் என அறிமுகப்படுத்தி ஒரு கடிதம் வரைந்து கொடுத்தான். இவற்றைப் பெற்றுக்கொண்டு அவன் பிரிட்டனை நோக்கிப் பயணமானான். இமொஜென் கைவளையையும் காதலையும் பெற்று வந்து விடுவதாக அவன் வீம்பு பேசிக்கொண்டு சென்றான்.
3.வஞ்சகன் வஞ்சம்
தன் கணவனுடைய நண்பன் என்ற முறையில் இமொஜென் அயாக்கிமோவை நன்கு வரவேற்றாள். அவனுக்கு யாதொரு குறையுமின்றி வேண்டும் உதவிகளையும் புரிந்தாள். ஆனால், அவள் பாஸ்துமஸின் மனைவி என்று நடந்து கொண்டாளே யொழிய, பெண் என்ற முறையில் நடந்துகொள்ளவேயில்லை. தன் போன்ற இளைஞர் கருதும் காதலுக்கும் இமொஜென் போன்ற இல்லுறை தெய்வங்களுக்கும் எவ்வளவு தொலை என்பதை அவன் அறிய நெடுநாள் செல்லவில்லை. ஆனால், இதனை அப்படியே உள்ளபடி ஏற்பதென்றால், பத்தாயிரம் பொன்னும் போயின. அதுகூட அவ்வளவு பெரிதன்று. தோழரிடைத் தான் கூறிய வீம்பு என்னாகும்? தன் மதிப்பு என்னாகும்? எனவே எப்பாடு பட்டாவது. என்ன பொய் சொல்லியாவது தன் மதிப்பைக் காக்கவேண்டும் என்று எண்ணமிட்டான் அயாக்கிமோ.
இக்கருத்துடன் நஞ்சகங்கொண்ட அவ்வஞ்சகன் ஓராள் தங்கியிருக்கும் அளவு பெரிதான ஒரு பெட்டி வாங்கினான். பின் அவன் இமொஜெனிடம் ‘நான் பிரிட்டனில் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். அது வரைக்கும் இப்பெட்டியை நல்ல பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து திருப்பித்தர வேண்டுகிறேன்’ என்று சொன்னான். இமொஜென் “அதனை என் கண் காண என் அறையிலேயே வைத்திருக்கிறேன்”என்று உறுதி கூறினாள்.
பணியாட்கள் மூலம் பெட்டி இமொஜெனுக்கு அனுப்பப் பட்டது. சூதொன்றும் நினையாத இமொஜெனும் அதனைத்தன் படுக்கையறையில் கொண்டு வந்து வைக்கும்படி கூறினாள். ஆனால், அப்பெட்டிக்குள் அயாக்கிமோவே உட்கார்ந்திருந்தான்.
இரவில் இமொஜென் நன்றாய் உறங்கியபின் அயாக்கிமோ மெல்லப் பெட்டியைத் திறந்துகொண்டு வெளிவந்தான். அறையின் அமைப்பையும் அதிலுள்ள பொருள்களையும் அவன் நன்கு மனத்தில் குறித்துக் கொண்டான். இமொஜென் படுக்கும் கட்டிலின் அமைப்பு அதன் உறுப்புக்கள் முதலிய விவரங்களை அதன்பின் கவனித்தான். அதன்பின் அவன் கண்கள் இமொஜென் உருவத்தின்மீது சென்றன. உள் ஒளி என்ற ஒன்று உண்டானால், அஃது அன்று அவள் உடலைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஞாயிற்றின் ஒளியும் திங்களின் குளிர்ச்சியும் ஒருங்கே நிறைந்து தோன்றின. பாலாடை போன்ற அவளுடைய மெல்லிய ஆடைகள் அவள் உடலமைப்பையும் நிறத்தையும் கூட அப்படியே எடுத்துக் காட்டுவனவாயிருந்தன; தனக்கு மிகப் பயன்படுமெனக் கருதி அவற்றையும் அவன் நன்கு கவனித்தான். அப்போது அவளது தொடையில், படுக்கைக்கான அவ்வுடையி லன்றி வேறெவ்வுடையிலும் பிறர் கண்கள் காணமுடியாத இடத்தில், மறு ஒன்று இருந்ததைக் கண்டான். இருளே நிறைந்த அவ்வஞ்சகன் நெஞ்சில் அம்மறுவைக் கண்டதே இருள் ஞாயிறு தோன்றிய தென்னும்படி இருளொளி வீசிற்று.
அயாக்கிமா இமொஜெனுடைய பணியாளருக்குக் கைநிறையப் பொன் கொடுத்து அவர்கள் துணையைப் பெற்றிருந் தமையால், அயாக்கிமோ அவள் படுக்கையறையில் பலநாள் தங்கியிருக்க முடிந்தது. தங்கி இரவுதோறும் ஓசையின்றி வெளிவந்து, ஒன்றுவிடாமல் அவ்வறையின் நுட்பங்கள், பொருள்கள், அவளைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பர், உறவினர், தோழியர் இவர்களுடைய விவரங்கள், அவள் இயல்புகள் பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் நன்கு அறிந்து கொண்டான். கடைசி இரவில் அவளது வளையையும் அரிய கைத்திறனுடன் அவள் கையினின்று திருடிக் கொண்டான்.
இறுதியில் அயாக்கிமோ பணியாளருதவியால் வெளிவந்து பெட்டியை மீட்டுக்கொண்டு ரோம் நகரத்துக்குப் புறப்பட்டான்.
4.வீண்பழி
ரோமில் வழக்கம்போல் தோழர்கள் கூடியிருந்தனர். பாஸ்துமஸும் அவர்களிடையே இருந்தான். அயாக்கிமோ வலியத் தன் முகத்தில் வெற்றிக்குறியை வருவித்துக் கொண்டான். அதனைக் கண்டு வியந்தனர் பலர். புன்முறுவல் கொண்டனர் சிலர். பாஸ்துமஸ் மட்டும் தனக்குள் ‘ஏன் இந்த இறுமாப்பு; சான்றுகள் வரட்டும்; பார்ப்போம்’ என்றிருந்தான். அவன் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது.
அயாக்கிமோ தன் பொய்யுரைகளைத் துணிகரமாக அளந்தான். ‘நான் சென்றேன்; சென்று பார்த்தேன்; பார்த்து வென்றேன்’ என்று வீம்புடன் கூறிய ஸீஸர் மொழிகளை ஒத்தன அவன் மொழிகள். ’இமொஜென் என்னை நன்கு வரவேற்றாள். முதலில் அவளுடனும் அவள் தோழியருடனும் நயமாக நடந்து கொண்டேன். பின் தோழியரைப் பல வழியில் வசப்படுத்தினேன். அவர்கள் உதவியாலும் ஒத்துழைப்பாலும் இமொஜெனுடன் நெருங்கிப் பழக முடிந்தது. இறுதியில் இமொஜென் என் வழிக்கு வந்தாள். பல வகையிலும் அவளுடன் பொழுது போக்கினேன். ஓரிரவு படுக்கையறையிலேயே கழித்தேன். பின் பல உறுதி மொழிகளுடன் பிரிந்தேன்" என்றான்.
தோழர் ஒருவரை ஒருவர் நோக்கினர். பாஸ்துமஸ் பின்னும் புன்சிரிப்புடன் ‘அத்தனையும் வெறும் கட்டுக்கதை’ என்றான்.
அயாக்கிமோ; ‘சரி அப்படியே இருக்கட்டும். அவள் படுக்கையறை வெண் பொன் கரையிட்ட பட்டு மேற்கட்டி யுடையது. அதில் தீட்டப்பெற்ற படம் ஒப்பற்ற அரசியான 6கிளியோப்பாத்ரா தன் தலைவன் ⁷அந்தோனியாவைக் கண்ணுறும் காட்சி; ஆம்’ என்றான்.
‘அஃது உண்மையே; ஆனால் இதனை நீ பார்க்காமலே கேட்டறிந்திருக்கக் கூடும்’ என்றான் பாஸ்துமஸ்.
“புகைபோக்கி, அறையின் தென்புறம் உள்ளது. அப்பக்கம் உள்ள படம் ‘திங்களஞ் செல்வி’ (னுயையே) குளிப்பது ஆகும்.”
“இதுவும் கேட்டறியக்கூடியதே.”
அதன்பின் அயாக்கிமோ அறையின் முகட்டையும் தணலடுப்பின் முன் தட்டில் கண்ட இரண்டு வெள்ளிக் காமனுருவங்களையும் குறிப்பிட்டான். ‘இவையனைத்தும் நீ பணியாட்களிடமிருந்து உசாவி அறிந்திருப்பாய்’ என்றான் பாஸ்துமஸ்.
“சரி; இதனை நீ நன்றாய் அறிந்திருக்கலாமே!” என்று பொன் வளையைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து முன்வைத்தான். பின், “நான் அவளிடமிருந்து பிரியும்போது அவள் பல உறுதி மொழிகள் கூறினாள். அதன்பின் நான் நினைவுக்குறியாக இப்பொன் வளையைத் தருக’ என்றேன். அவள் முதலில் நெடுநேரம் தயங்கினாள். அதைத் தருவதில் வருத்த முண்டானால் அதனைத் தரவேண்டுவதில்லை என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கூறினேன். அவள்அது கண்டு துணிந்து. ‘அப்படி யொன்றும் இல்லை. அஃது, என் உயிருக்குயிராயிருந்த காலமும் உண்டுதான். ஆனால் உங்களிடம் தராத பொருள் என்ன இருக்கமுடியும்?’ என்று கூறி இதனைத் தந்தாள்” என்றான்.
பாஸ்துமஸின் முகம் சட்டென்று கறுத்தது. சினங்கொண்டு ‘இஃதனைத்தும் உன் மாயப் புரட்டு. நீ அதனைத் திருடியே கொண்டு வந்திருக்கவேண்டும்’ என்றான்.
‘ஆம். ஆனால் இதனை மட்டுமன்று. அவள் உள்ளத்தையும் திருடிக்கொண்டுதான் வந்திருக்கிறேன் என்று உனக்குக் காட்டுகிறேன்’ என்று சீற்றத்துடன் மொழிந்து, பின் அவள் உடலமைப்புக்களையும் உறுப்புக்களின் அமைப்புக்களையும் விரித்துரைத்தான். இறுதியில் தனது மறுக்கப்படாத கடைசித் துருப்பாகிய மறுவைப் பற்றியும் கூறினான்.
பாஸ்துமஸின் முகம் வரவரச் சுண்டிக்கொண்டே வந்து இறுதியிற் குருதி கசியும்படி கன்றிவிட்டது. இனித் தோழர்களிடம் சீற்றங்கொண்டு என்ன பயன்? சீற்றமெல்லாம் இனி இமாஜெனிடத் திலும் அவளைப் படைத்த இறைவனிடத்திலுமேயாம்.
பந்தயம் தோற்றது.
ஆனால், பாஸ்துமஸ் இழந்தது பத்தாயிரம் பொன்னல்ல. அவன் தன் உயிர் நாடியையே இழந்தவன் போலானான். பந்தயப் பேச்சுப்படி இமொஜென் கொடுத்த கணையாழியும் அயாக்கிமோவினிடமே சென்றது.
5.படுகுழிப் பிழைத்தல்
பாஸ்துமஸ் மனத்தில் ஊழித்தீயே பரந்தெரிவது மாதிரி இருந்தது. இமொஜென் பேரில் அவனுக்கிருந்த சீற்றத்தில் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை என்று துணிந்தான். அவள் செய்த பிழையின் தன்மை, தனது சினத்தின் தன்மை இவற்றை விரித்து அவன் தன் நண்பனும் ஸிம்பலின் பணியாளனுமான ⁸பிஸானியோவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவள் நிலைதவறினாள் என்பதற்குத் தனக்குக் கிடைத்த சான்றுகள் இவை இவை என்பதை அதில் குறிப்பிட்டிருந்தான். பின் அவளை எப்படியும் கொன்று அவள் கறையை அகற்ற வேண்டுமென வேண்டிக்கொண்டான். அதற்கு வாய்ப்பாக அவன் தான் மில்போர்டு ஹேவனுக்கு வருவதாகவும் அங்கு வந்து தன்னைக் காணும் படியாகவும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதன்படி அவள் அங்கு வரும்போது பிஸானியோ அவளைக் கொன்றுவிட வேண்டும் என்பதே பாஸ்துமஸின் திட்டம்.
கணவன் பெயரையும் அவனைக் காணும் செய்தியையுந் தெரிந்து இமொஜென் எல்லையிலா மகிழ்ச்சியுடன் பிஸானியோவுடன் பயணமானாள். பிஸானியோவுக்குத் தன் தலைவனாகிய பாஸ்துமஸை மீறவும் மனம் இல்லை; அவன் ஆணையைச் செய்யவும் மனமில்லை. இங்ஙனம் வழியெல்லாம் அவன் போராடி இறுதியில் அந்த ஆணையை மீறி அவளிடமே அவ்வாணையைப் பற்றிய செய்திகளைக் கூறினான்.
தன் ஆரூயிர்த் தலைவனைக் காணும் மகிழ்ச்சி கொண்டு இமொஜென் இதுகாறும் விரைந்து வந்தாள். இப்போது அவன் உண்மையில் தன்னைக் கொல்ல விரும்பும் அளவுக்குத் தன்மீது வெறுப்பு கொண்டுள்ளான் என்பதை அறிந்தாள். இஃது அவளுக்குப் பேரிடி போல் திகைப்புத் தந்தது. பின் ‘ஏதோ ஒரு தப்பெண்ணத்தினாலேதான் இப்படி ஏற்பட்டிருக்க வேண்டும். நாளடைவில் அது தெளிவடையும் என்று பிஸானியோ தேற்ற ஒருவாறு தேறினாள். ஆயினும், தன் கணவன் வெறுத்தபின் வாழ அவள் ஒருப்படவில்லை. அப்போது பிஸானியோ அவளுக்கு நல்லுரைகள் கூறிப் ’பாஸ்துமஸின் மயக்க நினைவு மாறினபின் அவன் தன் செயலை நினைந்து, வருந்துவான், ஆதலால், அதுவரை வாழ்ந்திருந்தால் மட்டுமே அவன் துயரைத் தீர்க்க முடியும்,’ என்று எடுத்துக்காட்டினான். பாதுகாப்புக்கும் மறைவுக்கும் உதவும் வகையில் ஆண் உடை அணிந்து நீங்கள் ரோம் சென்று கணவனுடனிருந்து அந்த நல்ல நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்றும் அவன் கூறினான்.
பிஸானியோ எப்படியும் அரண்மனைக்கு விடியுமுன் வர வேண்டியவன். எனவே இமொஜென் உருமாற ஆணுடை பார்த்துக் கொடுத்துவிட்டுத் திரும்பினான். திரும்புகையில் அவன் அரசியிடமிருந்து தான் பெற்ற ஒரு மருந்துப் புட்டியை அவளிடம் கொடுத்தான். இதனை, ‘எல்லாப்பிணிகளுக்கும் மருந்தாய் உதவும் சஞ்சீவி’ என அவள் அவனிடம் கூறியிருந்தாள். ‘வழியில் உடல் நலத்திற்கு ஏதேனும் ஊறு நேரின், அதனைப் பயன்படுத்திக் கொள்க’ என்றான். பிஸானியோ, உண்மையில் இம்மருந்து சஞ்சீவியன்று. நீ நினைவே குடிகொண்ட அரசி சஞ்சீவி என்ற பெயரால் நஞ்சையே கொடுக்கத் துணிந்தாள். ஆனால், அவள் குணத்தை அறிந்து, அவள் எலி முதலிய உயிர்களை உடனே கொல்லும் நஞ்சு கேட்கும்போது, மருத்துவன் நஞ்சைக் கொடுக்காமல் மயக்க மருந்தொன்றையே கொடுத்து வைத்தான். எனவே இமொஜென் கையிற் கிட்டிய அம்மருந்து, பிஸானியோ நினைத்தது போலச் சஞ்சீவியன்றாயினும் அரசி நினைத்ததுபோல நஞ்சுமன்று.
6.இயற்கையின் ஆற்றல்
இறைவனது திருவருளின் போக்குச் சிலசமயம் புதுமையானதாக அமைவதுண்டு. இமொஜெனுக்கும் இங்ஙனமே நிகழ்ந்தது. ஏனெனின், அவள் தற்செயலாகத் தன் உடன்பிறந்தார் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள். இவர்களை ஸிம்பலினின் அரண்மனையினின்று மறைவாக எடுத்துக்கொண்டவன் ⁹பெலாரியஸ் ஆவன். இவன் ஸிம்பலினின் பெருங்குடி மக்களுள் ஒருவன், இவன் மீது அரசன் பொய்யாக வீண் பழி சுமத்தி நாட்டை விட்டுத் துரத்தினான். அதனால் வெகுண்டு பழிக்குப் பழியாகவே இப்பிள்ளைகளைத் தூக்கிச் சென்றான். முதலில் அவன் நோக்கம் இதுவாயினும், அவர்களைத் தன் பிள்ளைகளென வளர்த்து, அவர்களிடம் பற்றுதலுடையவன் ஆவான்.
இமொஜென் மில்போர்டு ஹேவனுக்குச் சென்று ரோமுக்குக் கப்பலேற வேண்டுமென்று தான் விரைந்து நடந்தாள். ஆனால் எப்படியோ வழிதவறிக் காட்டில் வந்து மேற்கூறிய உடன்பிறந்தார் வாழ்ந்த குகைக்கு வந்து சேர்ந்தாள். வழியில் அவள் பட்ட துயர் கொஞ்ச நஞ்சமன்று. ஆணுடை அணிந்ததனால் ஆண்தன்மை வந்துவிடாதன்றோ? அவளது பஞ்சினும் மெல்லிய சீறடிகள் கல்லும் முள்ளும் உறுத்தக் கொப்பளித்தன. பசியும் நீர் விடாயும் காதடைத்தன. இக்குகையினருகில் மனித வாழ்க்கைக்கான அறிகுறிகள் கண்டு, உணவு இருக்குமா என்று பார்க்க உள் நுழைந்தாள். உள்ளே ஆளில்லை. ஆனால், ஒருபுறம் பழ அமுது வைக்கப் பட்டிருந்தது. பசிக் கொடுமையால் பொறுமையிழந்து முன்பின் எதுவும் நினையாது அதனை உண்ணலானாள். உண்ணும்போதும், தன் நிலை தன் கணவனது கொடுமை இவற்றைப் பற்றிய நினைவு அவள் மனதைவிட்டு அகலாதிருந்தது.
உடன்பிறந்தார் இருவருக்கும் முதலில் ¹⁰கிடரியஸ், ¹¹அர்விராகஸ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பெலாரியஸ் அப்பெயர்களை மறைத்து அவர்களுக்கு, ¹²பாலிடோர், ¹³காட்வேல் என்னும் வேறு பெயர்களை வழங்கினான். அவர்கள் காட்டில் வளர்ந்தபோதிலும், பெலாரியஸ் அவர்களுக்கு எல்லாவகைக் கல்வியும் கற்றுக் கொடுத்தான். அரசிளங்குமரரது இயற்கைப்படி அவர்களும் வாட்போர், மற்போர், வேட்டை முதலிய அரசுரிமைக் கேளிக்கைகளிற் பயின்று வீரமிக்க இளைஞராயினர்.
குகைக்குள் அவ் இளைஞர் நுழைந்ததும், உணவின் முன் குனிந்து உட்கார்ந்திருந்த ஆண் உடை அணிந்த இமொ ஜெனைக் கண்டனர். கண்டு, ’இஃதென்ன! பொற்பாவையோ! பொன்னுலகத்தணங்கோ!" எனத் திகைத்து நின்றனர். அதனிடையே இமொஜெனும் அவர்களைக் கண்டதும் தான் அவர்களை எதிர்பாராது அவர்களது இடத்தில் உரிமையுடன் புகுந்தது பற்றி அவர்கள் சீற்றங் கொள்வாரோ என அஞ்சினாள். ’ஐயன்மீர்! மன்னிக்கவும்; பசி மிகுதியால் உங்கள் வரவுக்குப் பொறுக்காமல் உணவை உட்கொள்ளலானேன். ஆனால், அதனைத் திருடும் நோக்கம் எனக்கில்லை.
அதற்கான விலையை இங்கு வைத்துவிட்டு உங்களுக்கு நன்றி கூறிப்போகவே இருந்தேன்’ என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்குப் பொருள் தரப்போனாள். அவர்கள் அதனை மறுத்தனர்.
பெலாரியஸ்: நீ யார்? எவ்விடத்திற்குப் புறப்பட்டு வந்தாய்?
இமொஜென்: என் பெயர் ¹⁴பிடலே என்பது, என் உறவினர் ஒருவர் மில்போர்டு ஹேவனிலிருந்து ரோமிற்குப் புறப்படப் போகிறார். அவருடன் சேரும் நோக்கத்துடன் வருகையில் வழி தப்பி இங்கே வந்தேன்.
பெலாரியஸ்:
“நீ மிகவும் உயர்குணமுள்ளவனாகவே காண்கிறாய். நாங்களும் இவ்விடத்திலே வாழ்கிறோமாயினும் காட்டாளர்கள் அல்லேம். இங்கு நீ எங்களுடன் தங்கி உணவுண்டு வாழ்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே” என்று கூறிவிட்டுப் பையன்களையும் அவளுக்கு வணக்கம் செய்து நல்வரவு கூறும்படி பணித்தான். அம்மூவரும் அதுமுதல் உடன் பிறந்தவராகவே வாழ்ந்து வந்தனர்; ( அவர்கள் உண்மையில் உடன்பிறந்தவரே என்பது அவர்களுக்குத் தெரியாது ) இமொஜெனும் அவர்களது குகையைத் தன் வீடாக்கி அதில் தனதியற்கைப்படி தூய்மையும் ஒளியும் விளங்கச் செய்தாள். சிறுவர்கள் உணவு அன்று முதல் இமொஜென் கைகளிடமிருந்து இனிமையைக் கடன் வாங்கின. இத்தகைய இன்னுணவாலும் இனிய பாட்டுக்களாலும் இளைஞரிருவரும் அவளிடம் மாறாத பற்றுக் கொண்டனர்.
ஆனால் (பிடலே என்று அவர்கள் வழங்கிய) இமொஜென் அவர்களுடன் எவ்வளவுதான் ஆடிப்பாடி நகையாடினாலும், அவள் முகத்தில் பொறுமை என்னுந் திரையால் மறைக்கப்பட்டு மங்கலான துயரின் நிழல் தோன்றுவதை அவர்கள் அடிக்கடி கவனித்தனர். இமொஜெனும், அவர்களிடம் தன் செய்திகள் எவையுங் கூறாமலே பொழுதைக் கழித்தாள். உடல் நலிவெனக் காரணங் காட்டி, அவள் அவர்களுடன் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்துப் பின் தங்கினாள். உண்மையில் கணவனது நினைவும், காட்டில் அலைந்த அலைச்சலும் அவளுக்குப் பெருநலிவை உண்டு பண்ணின என்பதில் ஐயமில்லை.
6.மயக்க மருந்து
மற்றவர் வேட்டையை நாடிச் சென்றபின் இமொஜெனுக்கும் பிஸானியோவிடமிருந்து பெற்ற மருந்தின் நினைவு எழுந்தது. அஃது எல்லாப் பிணிக்கும் மருந்தென அவன் கூறியிருப்பதையும் அவள் ஓர்ந்தாள். ஓர்ந்து அதனைப் பருகி உணர்விழந்து உயிரற்றவள் போல் விழுந்து கிடந்தாள்.
பெலாரியஸும் இளைஞரும் காட்டில் வேட்டையாடி விட்டுத் திரும்புகையில்அவள் படுத்திருந்தது கண்டு முதலில் உறங்குகிறாள் என்று நினைத்தனர். ஆனால், அவள் மட்டுக்கு மிஞ்சி நெடுநேரம் உறங்குவது கண்டு அவளை எழுப்ப முயன்றனர். அப்படியும் அவள் எழவில்லை. அவள் இறந்தனள் என்று இதனால் உறுதிப்படுத்திக் கொண்டு அவர்கள் கன்றினைப் பிரிந்த ஆவெனக் கதறியழுதனர். அந்த ஒரு நாளைக்குள்ளாக உடன்பிறந்து வளர்ந்தவர்களைவிட மிகுதியாக இமொஜென் அச்சிறுவருடன் பழகிவிட்டபடியால் அவர்களும் கையற்றவர்கள் போன்று கவன்றனர்.
இரவு நெடுநேரம் வரை அழுதரற்றியபின் பெலாரியஸ், ‘இனி அழுது பயனென்ன? பிடலே போய்விட்டான், அவன் உடம்பை நல்ல முறையில் அடக்கம் செய்யவாவது முயல வேண்டாமா?’ என்றான்.
காட்டில் ஒரு நறுஞ்சோலையினுள் பூம்படுக்கை செய்து அதில் அவள் உடலை, பண்ணும் இரங்கும் இனிய பாட்டுகளுடன் அடக்கம் செய்தனர்.
** (பாட்டு)**
** பெலாரியஸும் இளைஞரும்:**
கஞ்சமலர் கண்டுனது கண்மறத்தல் செய்யோம்
காந்தளவை கண்டுனது கைவிரல்கள் மறவோம்
செஞ்சொலிளங் கிளியதனால் சொல்மறத்தல் செய்யோம்
தேம்பழத்தால் நின் உணவின் தீஞ்சுவையும் மறவோம்
வஞ்சமறு மான்மறியிற் சீரிளமை மறவோம்
வாழும்வரை உன்வாழ்வும் மாள்வும் இனிமறவோம்
நெஞ்சிலுறை கின்றமையாம் நேருறவா ராயோ
நேயமுடன் யாமழைக்க நேருறவா ராயோ
** பாலிடோர்:**
¹⁵கூடப்பிறந்திலமே
¹⁶கூடப்பிறந்திலமே
கூடிப்பிரிந்தினம் மேல்-கூடுவோமே!
காட்வேல்
மன்றலிள நிலவு
தென்றலுள அளவும்
உன்றனுள் ஒளிவு-பொன்றிடாதே!
வாழ்க்கையில் நிறைவென்ற ஒன்றையும் குறைவென்ற ஒன்றையும் அச்சிறுவர் பிடலே தம்மிடையே வந்த நாளிலும் தம்மை விட்டுச் சென்ற நாளிலுந்தான் கண்டனர். பெலாயஸும் பொற்பெட்டியை இழந்தவன் அதன் திறவுகோலைக் கண்டு மனமழுங்குவது போலத் துணை இழந்து கதறும் தன் இளைஞரைக் கண்டு வருந்தினான்
நிற்க. மயக்க மருந்தின் ஆற்றல் தீர்ந்து இமொஜென் விழித்தெழும்போது நள்ளிரவு கடந்த பின்யாமமாயிருந்தது. அப்போது அவள் என்றும் உறங்கி எழுவதுபோல் எழுவதாக முதலில் நினைத்தாள். சுற்றும் முற்றும் பார்த்தபோது, தான் இருப்பது அரண்மனையுமன்று, வீடுமன்று; காடே என்பது விளங்கிற்று. அப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாகத் திரைப்படக் காட்சிபோலப் பெலாரியஸினுடைய குகையின் நினைவுகள் வந்தன. ‘அவர்கள், தான் இறந்துவிட்டதாக நினைத்திருப்பார்கள்; விடிந்ததும் அவர்களிடமே போவோம்’ என்று முதலில் நினைத்தாள், ஆனால் கணவனது நினைவு இதனைத் தடுத்தது. அதன்பின் எப்படியும் இத்தாலி நாட்டுக்குப் போய் அவனைப் பார்ப்பது என்று துணிந்து புறப்பட்டாள். ஆயினும் பழையபடியே திருவருள் குறுக்கிட்டு அவள் வாழ்க்கையை மாற்றிற்று.
7.போர்
இமொஜென் காட்டுக்கு வந்தபின் ரோம் அரசர்க்கும் பிரிட்டன் அரசரான ஸிம்பலினுக்கும் போர் மூண்டது. ரோம் அரசர் படை ஒன்று பிரிட்டனுக்கு வந்து போர் தொடங்கிற்று.
பாஸ்துமஸ் அப்படையோடு கூடவே பிரிட்டனுக்கு வந்தான். ஆனால், அவன் தன் தாய்நாட்டுக்கெதிராகப் போரில் கலக்க எண்ணவில்லை. அவன் மனமும் இப்பொழுது நல்ல நிலையிலில்லை. இமொஜெனைக் கொன்று விட்டோம் என்ற எண்ணத்தினால் அவன் மனம் எவ்வகை அமைதியையும் அடையவில்லை. உண்மையில் அதன் பரபரப்புக் குறைந்ததேயன்றித் துயரம் குறையவில்லை. ‘ரோமர்களோடு பிரிட்டனுக்கு வந்தால், தன்னையும் ரோமன் என்று நினைத்து எவரேனுங் கொல்லக்கூடும்; அன்றி, எதிரியுடன் சேர்ந்தவன் என்று ஸிம்பலின் கொலை செய்யவுங்கூடும்? எப்படியும் உயிரை விட்டுவிட வாய்ப்பு நேரும்’ என்று கருதித்தான் அவன் அங்கே வந்தான்.
காட்டில் அலைந்து திரிந்த இமொஜென் ரோம் படை வீரரால் பிடிக்கப்பட்டாள். ஆனால் அவள் நாகரிகத்தையும் நற்குணத்தையுங் கண்டு ரோம் படைத்தலைவர் ¹⁷லூஸியஸ் அவளைத் தன் பணியாளாக ஏற்படுத்திக் கொண்டான்.
இப்போரில் சேர்ந்து சண்டை செய்யவேண்டுமென்று பாலிடோரும் காட்வெலும் விரும்பினர். பெலாரியஸும் வீரனாதலின் அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட்டதுடன் தானும் உடன் சென்று போரிற் சேர்ந்துகொண்டான்.
போரில் ரோம் வீரர் மிகத் துணிகரமாகச் சண்டை செய்ததால் பிரிட்டனின் படை மிகவும் மலைவுற்றது. அச்சமயம் பாஸ்துமஸ் ஒருபுறம், பாலிடோர், காட்வெல் ஆகிய இளஞ்சிங்கங்கள் ஒருபுறம் நின்று தாக்கிப் பிரிட்டனின் படைக்கு ஊக்கந்தந்து வெற்றியுண்டாக்கினர். பாஸ்துமஸ் நாட்டுப்பற்றுக் காரணமாக வெற்றிபெறப் போர் புரிந்தானாயினும் அவ்வழியில் தான் இறவாமையால், பகைவனாகவே சிறை பிடிக்கப்பட்டான். ஆணுடை உடுத்த இமொஜெனும், அவள் தலைவனாகிய லூஸியஸும், இமொஜென் வாழ்க்கைக்கு உலை வைத்த சண்டாளனாகிய அயாக்கிமோவும் எஞ்சிய வீரருடன் சிறைபட்டனர். பாஸ்துமஸுக்கு அவன் எதிர்பார்த்தபடியே கொலைதீர்ப்பு அளிப்பதென்று துணியப்பட்டது.
வீரத்துடன் போர் புரிந்ததற்காகப் பாலிடோரும் காட்வெலும் பாராட்டப்பெற்று நன்கொடை பெறும்படி கொண்டு வரப்பட்டனர்.
பாஸ்துமஸ் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டு கொண்டாள். ஆனால் அவள் ஆணுடையிலிருந்த படியால் அவன் அவளை அறிந்து கொள்ளவில்லை. பாஸ்துமஸின் நண்பன் என்ற நிலையில் தன்னிடம் சில காலம் பழகிய அயாக்கிமோ என்பவனும் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டாள். ஆனால் அவன் கையில் பாஸ்துமஸுக்குத்தான் கொடுத்த வைரக்கணையாழி இருப்பது கண்டு அவளுக்குச் சொல்லொணா வியப்பு ஏற்பட்டது. அதில் ஏதோ சூதிருக்கிறதென்று அவள் உடனே உணர்ந்து கொண்டாள். அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்று அவள் மனம் விரைந்து பதைத்தது.
இமொஜெனை அங்கே வேறு சிலரும் அறிய இடமிருந்தது. அவளுக்கு ஆணுடை கொடுத்த பிஸானியோ அவர்களுள் ஒருவன். பெலாரியஸும் இளைஞரும் அவளைக் கண்டு கொண்டனர்; ஆயினும் இறந்தவள் எப்படி வந்தாள் என்றும், ஏன் பேசாதிருக்கிறாள் என்றும் அறியாது விழித்தனர்.
8.முடிவு
எங்கும் கவலையும் விழிப்பும் ஆர்வமும் நிறைந்த இந்நிலையில், திருவருள், ரோம் படைத்தலைவன் லூஸியஸின் நாவில் வந்திறங்கியது. அவன்,
“அரசே! நான் ரோம் நாட்டவன். என்னை நீங்கள் கொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தெரிந்ததும் நான் உயிருக்கு மன்றாடப் போவதில்லை. ரோமர்கள் சாவுக்கு அஞ்சார். ஆனால், எனக்காக ஒன்றுங் கேட்க வேண்டுவதில்லை யாயினும், பிறருக்காக ஒன்று கேட்க விரும்புகிறேன். இதோ இப்பையன் (இமோஜெனைச் சுட்டிக்காட்டி) ரோம் நாட்டான் அல்லன்; பிரிட்டானியனே, அவன் உண்மையுடையவன். அவன் பிரிட்டனுக்கு எதிராகச் சண்டையிற் சேர்ந்தவன் அல்லன். ரோமன் கையிற் சிறைபட்டு அதனால் அவனுக்கு உழைத்தவன். அவனைப் பாதுகாப்பீராக!” என்றான்.
“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பதற் கிணங்க ஸிம்பலின், இமொஜெனை இன்னாள் என அவளது ஆணுருவில் அறியாவிடத்தும் இயற்கையான பாசத்தின் உந்துதலால் அவளைப் பார்த்து, “உன்னைப் பார்க்க, நான் உன் உயிரைத் தருவதென்பது மட்டுமன்று; நீ வேண்டும் வேறு ஒருவரது உயிரைத் தருவதற்குங்கூடத் தயங்க மாட்டேன்” என்றான்.
இத்தறுவாயில் எல்லோரும் இமொஜென் தன் உயிரை மறுத்து, அவளுயிர்க்கு மன்றாடிய லூஸியஸ் என்ற பெரியானது உயிரைத்தான் கேட்பாள் என எதிர்பார்த்து நின்றனர். அரசன்கூட அதனை எதிர்பார்த்தே அவ்வாறு கூறினான். லூஸியஸும் அதுவே இயற்கையென நினைத்தவனாதலால், முன்கூட்டியே ‘நீ என் உயிரைக் கேட்காதே’ என்றான். இமொஜென், அப்பெருந்தன்மை வாய்ந்த லூஸியஸை நோக்கி, யாவருந் திடுக்கிடும் வகையில், “என் ஐயனே! மன்னிக்கவேண்டும். உங்கள் உயிரினும் சிறந்த பொருளாக நான் கேட்க வேண்டுவது ஒன்று உளது” என்றாள். “இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட சிறுவனிடம் இத்தனை நன்றி கொல்லுந் தன்மையும் இருக்க முடியுமா?” எனப் பலரும் மூக்கிற் கைவைத்து வியந்தனர்.
கருமமே கண்ணாய் நின்ற இமொஜென் பிறர் எண்ணத்தைப் பொருட்படுத்தவில்லை. தான் இன்னதுதான் கேட்கவேண்டும் என்பதை அவளது கூரிய அறிவு நொடிப்பொழுதில் முடிவு செய்துவிட்டது.
அயாக்கிமோவைச் சுட்டிக்காட்டி, “அதோ நிற்பவர் கையில் ஒரு வைரக்கணையாழி இருக்கிறதே அது அவர் கையில் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்தறிய வேண்டுகிறேன்” என்றாள்.
“என்ன புதுமையான கேள்வி இது! என்ன முட்டாள் தனமான கேள்வி” என்றுகூடப் பலர் எண்ணினர்.
முதலில் அயாக்கிமோ யாதும் கூற மறுத்துப் பார்த்தான். ஆனால் இவ்வுண்மையை வெளியிடா விட்டால் படிப்படியாகக் கொலை செய்யப்படுவதாக அச்சுறுத்தப்பட்டபின், அவன் முழு உண்மையையுங் கூறிவிட்டான்.
இதற்கு முன்னமேயே கொலைத்தீர்ப்பை அவாவி நின்ற பாஸ்துமஸ் குற்றமற்ற தன் மனைவியைக் கொன்றுவிட்டோமே என்ற கவலையால் தன்னை மிகவும் நொந்துகொண்டான். அவன் அரசன்முன் வந்து, இமொஜெனுக்குத் தான் செய்த தீங்கையும் வெளிப்படுத்தி, “என் இமொஜென் இறந்தபின் நான் இனி உயிர் வாழேன்; என் உயிரை நீங்கள் வாங்காவிடின், நான் வாங்க வேண்டியதே” என்று சொல்லிப் புலம்பினான்.
கணவனது கொடுமை தப்பெண்ணத்தினால் வந்த தென்பதைக் கண்ட இமொஜென், அவன் துன்பங் காணப் பொறாமல் முன் வந்து, “இதோ! உங்கள் இமொஜென்!” என்று அவனைத் தழுவிக் கொண்டாள்.
இங்ஙனம் எதிர்பாரா வகையில் மகளையும் மருமகனையும் மீண்டும் நன்னிலையில் அடையப்பெற்ற ஸிம்பலின், போரில் கண்ட வெற்றி மகிழ்ச்சியினும் பன்மடங்கு அகங்களித்து அவர்களை ஏற்றுக்கொண்டான்.
இச்சமயமே நற்சமயமாகக் கொண்டு பெலாரியஸ் முன் வந்து, தன் பிழைகளையும் வெளியிட்டுத் தான் வளர்த்த இளைஞர்களை முன்நிறுத்தி, “ஐயனே! நான் இதுகாறும் தங்களுக்கும் என் தாய்நாட்டுக்கும் இழைத்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன். இதோ இவ்விருவரும் உம்முடைய மக்கள், உம்மீது பகைமையால் அவர்களைக் கவர்ந்துசென்று வளர்த்தேன்” என்றான்.
பிள்ளைகளைத் தந்தையினின்றும் பிரித்தது மிகப் பெருங்குற்றமேயாயினும், களிப்பே நிறைந்த இந்த நாளில் கறை வேண்டாமென்று கருதி, ஸிம்பலின் அவனை மன்னித்துத் தம் புதல்வரை அன்புடன் அணைத்துக்கொண்டான்.
இமொஜென் தான் ஆண் உடையிலிருந்தபோது தனக்குத் தலைவராயிருந்த லூஸியஸின் உயிரைக் கேட்க வேண்டாமலே எல்லாம் நலமாக முடிந்தது. இவ்வளவுக்குந் திட்டம் போட்டு முதலில் அவர் உயிரைக் கேட்காதிருந்த அவள் நுண்ணறிவுக்கு யாவரும் வியப்பெய்தினர்.
இளைஞரை உடன்பிறந்தவர்போல இதுவரை நடத்திய இமொஜென் இப்போது உடன் பிறந்தவரெனவே கண்டு அவர்களைத் தழுவிக்கொண்டாள். மயக்க மருந்தினால் நிகழ்ந்த செய்திகளனைத்தும் அவள் எடுத்துக் கூறினாள். அதன்பின், அரசியின் மருத்துவன் வந்து ‘அரசி இங்கு நடப்பது யாவுங்கண்டு தனது மறைந்த தீவினை தன்னைச் சூழ்கின்றது என்று தெரிந்து மனங்கொதித்து மாண்டாள்’ என்று தெரிவித்தான். மேலும், அவள் கொல்லும் எண்ணத்துடன் நஞ்சு கேட்பதைத் தான் குறிப்பாக அறிந்தே மயக்க மருந்தைக் கொடுத்ததாக அவன் கூறினான்.
அயாக்கிமோவே இவ்வளவு தீமைக்கும் வேரானவன். ஆயினும், அவன் தீங்குகள் வெற்றியடையாததே போதும் என்று கருதி அவனை விட்டுவிட்டனர்.
இமொஜென், பிரிந்த கணவனைப் பெற்றதோடு, பிரிந்த தந்தை, பிரிந்த உடன்பிறந்தார் ஆகியவர்களையும் பெற்று இறவா இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்தாள்.
** அடிக்குறிப்புகள்**
1. Cymbeline 2. Imygen
2. Cloten 4. Posthumu
3. Icahimo 6. Cleopatra
4. Antonio. 8. Pisanio
9.Belarius 10. Guiderius
11. Arviragus 12. Polydore
12. Cadwell 14. Fidele
13. கூட=உடனாக 16.கூட=ஒன்றாக வாழ
14. Lucius
கார்காலக் கதை(The Winters Tale)
** (கதை உறுப்பினர்)**
ஆடவர்
1. லியோண்டிஸ்: ஸிஸிலித் தீவின் அரசன்.
2. பாலிக்ஸெனிஸ்: பொஹீமியாவின் அரசன் - லியோண்டிஸின் நண்பன்-பிளாரிஸெல் தந்தை.
3. மாமில்லஸ்: லியோன்டிஸ் மகன் - தாய் துயர் கேட்டிறந்தவன்.
4. காமில்லோ: பாலிக்ஸேனிஸுக்கு உண்மை நண்பனாயிருந்து உடன் சென்றவன் - இறுதியில் பிளாரிஸெல் பெர்திதா காதலை ஏற்க முன்வந்தான்.
5. அந்திகோனஸ்: பெருமகன் - பாலினா கணவன் - பெர்திதாவைக் கடல் கடந்து அகற்றிவிட்டு வருகையில் கரடி வாய்ப்பட்டவன்.
6. பிளாரிஸெல்: பாலிக்ஸெனிஸ் மகன் - பெர்திதா காதலன் - மாற்றுருவில் இடையர் வகுப்பு இளைஞன் - தொரிக்ளிஸ்.
பெண்டிர்
1. ஹெர்மியோன்: லியோன்டிஸ் மனைவி.
2. பாலினா: அந்திகோனஸ் மனைவி - ஹெர்மியோனை மறைவாக வைத்துக் காத்தவள்.
3. பெர்திதா: அரசனால் அந்திகோனஸ் மூலம் கடல் கடந்து விடப்பட்ட பெண் மகவு - இடையர் வளர்த்துப் பிளாரிஸெல் காதலியானவள்.
** கதைச்சுருக்கம்**
ஸிஸிலி அரசன் லியோன்டிஸ் தன் நண்பனாகிய பொஹிமியா அரசன் பாலிக்ஸெனிஸைப் பலநாள் விருந்திற்கப்பால் தான் வற்புறுத்திய போது தங்காமல் மனைவி வற்புறுத்தித் தங்கினதால் பொறாமை கொண்டு அவனைக் கொல்ல நண்பனாகிய காமில்லோப் பெருமகனை ஏவ, அவன் பாலிக்ஸெனிஸிடம் எல்லாம் சொல்லி உடன் சென்றுவிட்டான். ஹெர்மியோனையும் சிறையிலிட்டுத் துன்புறுத்த அது பொறாத அவள் சிறுவன் மாமில்லஸ் இறந்தான். பின் பிறந்த பெண்மகவையும் அந்திகோனஸ் பெருமகன் மூலம் கடல் கடந்து விட்டுவிடத் தூண்டினான். அங்ஙனம் விட்டு மீள்கையில் அவனைக் கரடி விழுங்கிற்று. ஹெர்மியோனிடம், அரசன் இறங்குமுன், அவள் இறந்தாள் என்று கூறி அந்திகோனஸ் மனைவியாகிய பாலினா அவளைக் காத்தாள்.
விடப்பட்ட மகவு இடையரால் எடுக்கப்பட்டு பெர்திதா என்ற பெயருடன் வளர்ந்தது. இடையனுருவில் வந்த பாலிக்ஸெனிஸ் மகன் பிளாரிஸெல் அவளைக் காதலித்து அரசன் அறிந்து சீறியும் பொருட்படுத்தாதிருப்ப, ¹காமில்லோ இரங்கி லியோன்டிஸ் மூலம் அவர்களைச் சேரவைக்க நினைக்க, லியோன்டிஸ் பெர்திதாவைக் கண்டவுடன் அவள் தன் மனைவி போன்றிருப்பது கண்டு இடையனை உசாவ உண்மை விளங்கிற்று. பின் பாலினாவும் உருவம் காட்டுவதாகக் கூறி ஹேர்மியோனைக் காட்ட இதற்கிடையில் பாலிக்ஸெனிஸும் வர, அனைவரும் ஒருங்கு சேர வளர்ந்தனர். பிளாரிஸெல் பெர்திதாவை மணந்தான்.
1.நட்பின்பம்
²லியோன்டிஸ் என்பான் ³ஸிஸிலித் தீவின் அரசன். அவன் மனiவி அழகிலும் கற்பிலும் மிக்க⁴ஹெர்மியோன் ஆவள். அவளது இவ்வாழ்க்கை பொன்மலரும் நறுமணமும் பொருந்தியதென்னும்படி குறைவிலா நிறைவு பெற்றிருந்தது.
⁵பொஹீமியா நாட்டரசனான ⁶பாலிக்ஸெனிஸ் லியோன்டிஸினுடைய பழைய பள்ளித்தோழனும் உற்ற நண்பனுமாவான். தனது மணவினையின் பின் லியோன்டிஸ் பாலிக்ஸெனிஸைக் கண்டதே கிடையாது. கடித மூலமாக ஒருவரை ஒருவர் நலம் உசாவுவது மட்டும் உண்டு.
லியோன்டிஸ் அவனை நேரில் கண்டு உறவாடுவதுடன் தன் அரிய மனையாளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கவும் வேண்டும் என்று நெடுநாள் எண்ணிக் கொண்டிருந்தான். பல தடவை அழைப்பு அனுப்பிய பின், இறுதியில் ஒருநாள் பாலிக்ஸெனிஸ் அவற்றிற்கிணங்கி லியோன்டிஸைப் பார்க்க வந்தான்.
முதலில் லியோன்டிஸுக்கு நண்பனது வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. தனது இன்ப வாழ்விற்கிருந்த ஒரே குறை இப்பொழுது நீங்கிற்றென அவன் உணர்ந்தான். பழைய பள்ளித்தோழனது வரவினால் பழைய பள்ளி, நினைவுகளும் பள்ளியுணர்வுகளும் ஏற்பட்டது மட்டுமன்றித் தானும் பழையபடி பள்ளிச் சிறுவன் ஆனதாகவே அவன் உணர்ந்தான். நண்பரிருவரும் பேசும் இப்பழங்காலப் பேச்சுக்களையும் அதனால் கணவன் கொண்ட களிப்பினையும் பார்த்து ஹெர்மியோனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
சிலநாள் லியோன்டிஸுடன் தங்கியிருந்தபின் பாலிக்ஸெனிஸ் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள விரும்பினான். லியோன்டிஸ் தன் நண்பனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவனை இன்னும் சில நாள் தங்கியிருக்கும்படி வற்புறுத்தினான்.
லியோன்டிஸ் எவ்வளவு சொல்லியும் பாலிக்ஸெனிஸ் தான் இனிப் போக வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டான். இதனால் மனமுடைந்த லியோன்டிஸ் ஹெர்மியோனிடம் சென்று, “நீயாவது அவனை வற்புறுத்தி இருக்கச் செய்யலாமே” என்றான். அதன்படி அவள் பாலிக்ஸெனிஸிடம் சென்று பெண்களுக்கியற்கையான நயத்துடன் அவனை இன்னுஞ் சிலநாள் தங்கியிருந்து போகலாம் என்று வேண்டினாள். அவளுடைய இன்மொழிகளை மறுக்கக் கூடாமல் பாலிக்ஸெனிஸ் தன் முடிவைச் சற்றுத் தள்ளி வைக்க உடன்பட்டான்.
2.பொறாமைப் பேய்
தனது வேண்டுகோளை மறுத்த தன் அன்பன் தன் மனைவியின் வேண்டுகோளை ஏற்றான் என்ற செய்தி லியோன்டிஸ் மனத்தில் சுறுக்கென்று தைத்தது. அது நயமான மொழிகளாலும் இருவர் வேண்டுகோளின் ஒன்றுபட்ட ஆற்றலாலுமே ஏற்பட்டதென்று அவன் மனத்தில் அப்போது படவில்லை. அதற்குக் காரணம் கள்ளங் கபடற்றிருந்த அவன் உள்ளத்தில் பொறாமைப் பேய் புகுந்து கொண்டதேயாம்.
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பர். அஃதேபோன்று மனத்தில் இக்களங்க நினைவு ஏற்பட்டது. முதல், அதற்குமுன் இயல்பாகத் தோன்றிய சிறுசிறு செய்திகளும் இப்பொழுது களங்கமுடையனவாகத் தோன்றின. கணவனுக்கு நண்பன் என்ற முறையில் ஹெர்மியோன் பாலிக்ஸெனிஸுக்குக் காட்டிய மதிப்பும் அன்பும் எல்லாம் லியோன்டிஸின் மனத்தில் களங்க நினைவுகளாக மாறின. அவனது பால்போல் தெளிந்த இனிய உள்ளம். இக்கடுப்பினால் திரைந்து தீமையும் கொடுமையும் நிறைந்ததாயிற்று.
இறுதியில் லியோன்டிஸ் தன் பெருமக்களுள் ஒருவனும் நண்பனுமான ⁷காமில்லோவிடம் தனது மனத்துள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டான். காமில்லோ உண்மையும் ஒழுக்கமும் அமையப் பெற்றவன். எனவே முதலில் அரசனது கருத்துத் தப்பானது என்று விளக்க முயன்றான். ஆனால் லியோன்டிஸ் அதனைச் செவியில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு பாலிக் ஸெனிஸை நஞ்சிட்டுக் கொல்லுமாறும் அவன் காமில்லோவைத் தூண்டினான். காமில்லோ அதற்கு இணங்கு வதற்கு மாறாக, இம் மாற்ற முழுமையும் பாலிக்ஸெனிஸுக்கு அறிவித்து அவனுடன் அவன் நாடாகிய பொஹீமியாவுக்கே போய்விட்டான்.
தன் கருத்து ஈடேறாமற் போனது லியோன்டிஸின் சீற்றத்தை இன்னும் மிகைப்படுத்தியது. அவ்வெறியில் அவன் தன் மனைவியைச் சிறையிலிட்டான். அவர்களுக்கு அப்போது ⁸மாமில்லஸ் என்ற ஒரு மைந்தன் இருந்தான். தாய்க்கு நேர்ந்த அவமதிப்பையும் துன்பத்தையும் நினைந்து நினைந்து அவனும் வாடித் துரும்பாக மெலிந்தான். அப்பொழுதும் அரசன் மனம் கனியவில்லை
ஹெர்மியோனுக்குச் சிறையில் ஒரு பெண் மகவு பிறந்தது. மகவின் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாறக்கூடும் என்று அவள் அடிக்கடி நினைப்பாள். ஆனால், கொந்தளிக்கும் புயல்போலச் சீறிக் கொண்டிருக்கும் அரசன் முன் அக்குழந்தையைக் கொண்டுபோக யாருக்கும் மனம் துணியவில்லை. இதையறிந்து அந்நாட்டுப் பெருமக்களுள் ஒருவனான ⁹அந்திகோனஸ் என்பவன் மனைவி ¹⁰பாலினா அப்பணியைச் செய்வதென முன்வந்தாள். ஹெர்மியோன் அவளை வாயார வாழ்த்தி, “உன் நல்லெண்ணம் ஈடேறுவதாக!” என்று சொல்லிக்கொண்டு குழந்தையை அவளிடம் ஒப்படைத் தாள்.
குழந்தையை அரசன் முன் கிடத்திப் பாலினா கல்லுங்கரைய ஹெர்மியோனுக்காகப் பரிந்து பேசிப் பார்த்தாள். லியோன்டிஸ் அதற்குச் சற்றும் இணங்காதது கண்டு, குழந்தையைத் தனிமையாக இருக்கும்போது பார்த்தாவது அவன் மனம் இளகக்கூடும் என்று நினைத்து அதனை அங்கேயே விட்டு விட்டுப் போனாள். இதிலும் அவள் நினைவு தவறாகவே முடிந்தது. லியோன்டிஸ் குழந்தையைக் கடல் கடந்து ஆளில்லா இடத்தில் விட்டு விடும்படி அந்திகோனஸை ஏவினான். அந்திகோனஸும் அப்படியே விடச் சென்றான்.
குழந்தைக்கு நேர்ந்த முடிவு கேட்டு ஹெர்மியோன் உள்ளம் அனலிலிட்ட மெழுகுபோல் உருகிற்று. ஆனால், அதனை நினைந்தழுவதற்குக் கூட அவளுக்கு நேரமில்லை. அவள் குற்றத்தை நாட்டுப் பெருமக்கள் நிறைந்த மன்றத்தில் உசாவித் தீர்ப்பளிக்க மன்னன் முனைந்தான். அக்குற்றத்தின் முழு உண்மையையுங் கேட்டு வரும்படி ¹¹தெல்பாஸ் என்ற இடத்திலுள்ள பேர்போன குறிசொல்லுந் தெய்வத்தினிடம் அரசன் இரு தூதர்களை அனுப்பியிருந்தான். அவர்கள் அப்போது திரும்பி வந்து, ‘ஹெர்மியோன் குற்றமற்றவள். பாலிக்ஸெனிஸும் அப்படியே லியோன்டிஸ் பொறாமை வாய்பட்டுக் கொடுங்கோலனாய் விளங்குகிறான். இழந்த குழந்தை பிழைத்து வந்தாலன்றி, அவனுக்கு வேறு பிள்ளையுமில்லை’ என்று குறிகாரன் எழுதிய துண்டைக் கொடுத்தார்கள். அரசன் அம்மொழிகளையும் சட்டை பண்ணாமல் ஹெர்மியோ மீது குற்றஞ் சாட்டினான்.
இத்தனையுங் கேட்டு முன்னமேயே நலிவுற்றிருந்த மாமில்லஸ் இறந்து போனான். லியோன்டிஸுக்கு இப்போது அரசியிடம் சற்று இரக்கம் வரும் போலிருந்தது. ஆனால், அதற்குள் பாலினா அவனிடம் வந்து, ‘ஹெர்மியோன் இறந்து போய் விட்டாள்’ என்று கூறினாள்.
லியோன்டிஸின் மனம் இப்போதுதான் தன் நிலைக்கு வந்தது. தன் மனைவி கெட்டவளாயிருந்தால் இவ்வளவு மனஞ்சிதைந்து மடிந்திருக்க மாட்டாள் என்று அவனுக்குப் பட்டது. அதோடு மாமில்லஸ் இறந்ததால், குறிகாரன் மொழிகளும் உண்மை என ஓரளவு தெளிவுபடுத்தப்பட்டன. இழந்த அச்சிறு பெண்மகவு அகப்படவில்லையானால், தன் அரசாட்சிக்கு உரிமையான பிள்ளை வேறு இனி இருக்க முடியாதன்றோ?
3.ஆவாரை யாரே அழிப்பர்!
நிற்க, குழந்தையை ஆளில்லா நாட்டுக் கடற்கரையில் எறியவேண்டும் என்று சென்ற அந்திகோனஸின் கப்பல் பாலிக்ஸெனிஸின் நாடாகிய பொஹீமியாப் பக்கமே புயலால் கொண்டு போகப்பட்டது. குழந்தையை அவனும் அங்கேயே நல்லாடை அணிகளுடன் விடுத்துச் சென்றான். குழந்தையின் பிறப்பு முதலிய விவரங்களைக் கூறும் ஒரு கடிதமும், ¹²பெர்திதா (இழந்தவள்) என்ற பெயர் எழுதிய துண்டொன்றும் அவ்வாடையணிகளுடன் சேர வைக்கப் பட்டன. குழந்தையை விட்டுவிட்டுச் செல்கையில், அந்திகோனன் அத்தீமைக்குத் தண்டனை பெற்றான் என்று சொல்லும் வண்ணம் கரடி ஒன்றாற் கொல்லப்பட்டான்.
4.சேராதவரையும் சேர்த்துவைக்கும் காதல்
பெர்திதா என்னும் அக்குழந்தையை ஓர் ஏழை இடையன் கண்டெடுத்தான். அவளுடன் வைக்கப்பட்டிருந்த அணிகலன் களுள் சிலவற்றை விற்று அவன் செல்வமுடையவனாகி வேறோரூரிற் சென்று வாழ்ந்தான். பெர்திதா தான் யார் என்ற அறிவின்றி அவன் மகளாக அவன் வீட்டிலேயே வளர்ந்து வந்தாள். ஆயினும் அவள் தன் தாயின் ஒரு புதிய பதிப்பே என்னும்படி வடிவழகியாய் விளங்கினாள்.
பாலிக்ஸெனிஸின் புதல்வனான ¹³பிளாரிஸெல் என்பவன் ஒரு நாள் வேட்டையாடி விட்டு வரும்போது பெர்திதாவைக் கண்டான். அரம்பையரும் நானும் அழகுடைய அம்மெல்லியலாள் இடைச்சேரியில் இருப்பது கண்டு வியப்படைந்தான். அரசிளங்குமரன் என்ற நிலையில் அவளை அடுத்தால் எங்கே அவளிடத்தில் அன்பிற்கு மாறாக அச்சமும் மதிப்பும் மட்டும் ஏற்பட்டு விடுமோ என்று அவன் அஞ்சினான். அதனால் தானும் ஓர் இடைக்குல இளைஞன் போன்ற மாற்றுருக் கொண்டு ¹⁴தொரிக்ளிஸ் என்ற பெயர் பூண்டு அவள் நட்பையும் காதலையும் பெறுவானானான்.
வர வர, பெர்திதாவின் காதல் வலையிற் பட்டு பிளாரிஸெல் இடைச்சேரியிலேயே பெரும்பாலாகத் தனது நாளைக் கழிக்கத் தொடங்கினான். பாலிக்ஸெனிஸ் தன் மகன் அடிக்கடி அரண்மனையை விட்டுப் போய் வருவதையும் அரண்மனையில் அவன் கால் பாவாததையுங் கண்டான். எனவே ஒற்றர்களை ஏவி அவன் எங்கே போகிறான் என்று பார்த்து வரும்படி அனுப்பினான். அவர்களால் பிளாரிஸெல் இடைச்சேரியில் ஒரு மங்கையைக் காதலிக்கிறான் என்று அறிந்தான்.
அந்நாட்டிடையர்கள் பாலுக்காக மட்டுமன்றிக் கம்பளி மயிர்க்காகவும் ஆடுகள் வளர்த்து வந்தனர். ஆண்டுக்கு ஒரு தடவை அவற்றின் கம்பளி கத்தரிக்கப்பட்டது. நம் நாட்டு உழவர் தமது அறுவடை நாளைக் கொண்டாடுவது போல் அவர்களும் அம் மயிர்வெட்டி நாளை விழாவாகக் கொண்டாடி விருந்து செய்வர். அத்தகைய விருந்து நாளில் பாலிக்ஸெனிஸ் காமில்லோவையும் கூட்டிக்கொண்டு இடையர் மாதிரி உடையுடனே பெர்திதாவை வளர்த்த இடையனது வீட்டிற்குச் சென்றான்.
இடையனும் அவன் மனைவியும் அரசனையும் காமில் லோவையும் தம்மை ஒத்த இடையர்களே எனக் கொண்டு வரவேற்றார்கள். அப்போது அரசனும் காமில்லோவும் அவ்விருந்தில் பிறருடன் கலவாது ஒரு மூலையில் பிளாரிஸெல் பெர்திதாவுடன் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்திருப்பதைக் கண்டார்கள். இடையனிடம் சென்று அவர்கள், ‘யார்’ என்று அவன் கேட்க சூதின்றி ‘என் மகளும் அவளைக் காதலிக்கும் இளைஞனும்’ என்றான்
பெர்த்திதாவின் அழகும் பெருமிதத் தோற்றமும் பாலிக்ஸெனிஸுக்கு வியப்பைத் தந்தன. அவளை அவனால் பாராட்டாதிருக்க முடியவில்லை. ஆயினும், அவள் ஓர் எளிய இடையன் மகளாதலால், அவளுடன் தன் மகன் காதல் கொள்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்கள் காதல் எவ்வளவு தொலை சென்றுள்ளது என்று காணும் எண்ணத்துடன் அவர்களை அணுகி உரையாடினான். அவர்கள் அம்மாற்றுருவில் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை.
பாலிக்ஸெனிஸ்: இளைஞனே! உன் மனம் இப்புற விருந்துகளில் செல்லவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் உன் அகவிருந்தையும் நீ அவ்வளவு திறம்படச் செய்யவில்லை என்றுதான் சொல்லுவேன்.
பிளாரிஸெல்: அப்படியா! அதில் நீர் கண்ட குறை யாது?
பாலிக்ஸெனிஸ்: நான் இளைஞனாயிருந்து காதல் கொண்டபோது என் காதலிக்கு வகைவகையான கண் கவர்ச்சியான நற்பொருள்கள் வாங்கித் தந்து மகிழ்வதுண்டு. நீ ஏன் ஒன்றும் கொண்டு வராமல் ஊமைக் காதலாகவே காதலிக்கிறாய்?
பிளாரிஸெல்: நெஞ்சில் பொருளற்று வெறுமையாய் வருபவர்களே கையில் பொருளுடன் வரவேண்டும். இந்நங்கை நல்லாளும் புன்மையான கைப்பொருள்களை மறுத்து என் நெஞ்சத்துள்ள விலையற்ற பொருளையே பொருளாக மதிப்பவள். அப்பொருள் வஞ்சமற்ற காதலேயாகும். எப்படியும் நீங்கள் இப்பேச்சை எடுத்துவிட்ட படியால் நீங்களே சான்றாக நான் அவளுக்கு அத்தகைய காதலைக் கொடுக்கிறேன் “(என்று அவள் பக்கம் திரும்பி)” என் உரிமைப் பெர்திதா! இப் பெரியவர், காதலைக் கண்ட மனிதர் ஆவார். அவர் அறிய நான் கூறுகிறேன். இந்த நொடி முதல் நம் உறவு காதலின் கனியாகிய மண உறவு ஆகுக! இந்நொடி முதல் நீயே என் துணைவி. இதுவே நம் மண ஒப்பந்தம்" என்றான்.
அவர்கள் காதல் இவ்வளவு தொலை வளர்ந்திருக்கும் என்று நினைக்காத பாலிக்ஸெனிஸுக்கு இது முதலில் ஏமாற்றத்தையும் பின் சினத்தையும் உண்டு பண்ணிற்று. அவன் உடனே தனது மாற்றுருவைக் கலைத்து அரசனுருத் தாங்கி, ‘அடே அறிவிலி! ஒப்பந்தம் ஏற்படும்போதே உன் ஒப்பந்தத்தைக் கலைக்கிறேன் பார். நீ இந்நொடியிலேயே இவளை விட்டுப் பிரிந்து வரவேண்டும்’ என்று கூறினான். பின் அரசிளங்குமரனை உடனழைத்து வரும்படி காமில்லோவிடம் சொல்லிவிட்டு அவன் அரண்மனை சென்றான்.
பெர்திதா பாலிக்ஸெனிஸின் மொழிகளைக் கேட்டதும், பிளாரிஸெலை நோக்கி, ‘நீங்கள் அரச குமாரராதலால் உங்கள் பெருமையை நீங்கள் வைத்துக் கொள்வது பற்றி எனக்குத் தடையில்லை’ என்று பெருமிதத்துடன் கூறிப் பின் பெருமூச்சுடன், ‘என் கனவு மட்டும் பாழாயிற்று’ என்றாள். பிளாரிஸெல் உடனே வெட்டென ‘நான் உனக்கு அரச குமாரனல்லன்; காதலனே! என் உறுதியை மறக்க வேண்டாம்’ என்றான். அவளது உளச் செம்மையையும் உயர்வையும் சேர்த்துவைக்க எண்ணினான்.
5.திரை நீக்கம்
லியோன்டிஸ் இப்பொழுது தன் மனைவிக்கும் நண்பனுக்கும் செய்த தீங்கை எண்ணி வருந்துவது காமில்லோவுக்குத் தெரியும். ஆகவே அவன் லியோன்டிஸ் நாடாகிய ஸிஸிலிக்கே அக்காதல் துணைவருடன் சென்று லியோன்டிஸின் உதவியால் பாலிக்ஸெனிஸ் இவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்யலாம் என்று நினைத்தான். காதலரும் அதற்கிணங்கவே, அவர்கள் மூவரும் பெர்திதாவை வளர்த்த இடையனுடன் புறப்பட்டு ஸிஸிலி வந்து சேர்ந்தார்கள்.
லியோன்டிஸ் காமில்லோவை அன்புடன் வரவேற்றான். பின் தன் நண்பனாகிய பாலிக்ஸெனிஸின் மகனை வரவேற்றுத் தழுவிக்கொண்டு, ‘உன் தந்தைக்கு நான் பெரும் பிழை செய்துவிட்டேன்; உன்னைக் கண்டதும் அவனையே கண்டாற் போன்று மகிழ்கிறேன்’ என்று அளவளாவினான்.
அப்போது அவன் பின் நின்ற பெர்திதாவைக் கண்டதும் அவன் கொண்ட வியப்பிற்களவில்லை. அவன் கண்ணுக்கு அவள் ஹெர்மியோனை அப்படியே உரித்து வைத்தாற் போன்றிருந்தாள். அவன் மனம் கனவுலகிற் சென்று உலவத் தொடங்கிற்று. ’ஆ! என் குழந்தையை நான் கொல்லாதிருந்தால், அல்லது அந்த அந்திகோனஸ் அவளைக் கொல்லாது விட்டிருந்தால் அவள் இன்று இவளே மாதிரி, இவள் பருவத்தில் இருப்பாளே!" என்று கூறி அவன் பெருமூச்சு விட்டான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த இடையன் மனத்தில் உண்மையின் ஒரு சாயல் தென்பட்டது. அவன் உடனே பெர்திதாவின் நகையுடனிருந்த கடிதத்தைக் கொண்டு வந்துகொடுத்தான். நகைகள், தான் குழந்தையுடன் வைத்துக் கொடுத்த அந்த நகைகளே என்பதை அரசன் உணர்ந்தான். உணர்ந்து பெர்திதாவைத் தன் புதல்வியென்றறிந்து அவளை ஏற்று மகிழ்ந்தான்.
இதற்கிடையில் பாலினா வந்து அக்கடிதத்தின் எழுத்துக்களைப் பார்த்து அது தன் கணவன் (அந்திகோனஸ்) எழுதியதே என்று ஒப்புக்கொண்டாள்.
தன் கணவன் இப்போது எங்கே என அவள் அறிய விரும்பினாள். அப்போது இடையன் வருத்தத்துடன், ‘இக் குழந்தையை நான் காணும்படி கடற்கரையிலிட்டவர் தங்கள் கணவராகவே இருக்கவேண்டும். அவரை ஒரு கரடி விழுங்கியதை நான் கண்டேன். அதனைத் தங்களுக்கு இவ்வளவு நாட்கழிந்து நான் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்’ என்றான். பாலினா ஒருபுறம் தன் கணவன் இறந்ததற்காக வருத்தமும், இன்னொரு புறம் பெர்திதா மீட்கப்பட்டாள் என்றதற்காக மகிழ்ச்சியும் கொண்டாள்.
பெர்திதாவை மீண்டும் பெற்றது லியோன்டிஸுக்கு மகிழ்ச்சியேயென்றாலும், அவள் உருவைக் கண்டதால் அவன் தாயின் உருவையும் அதனுடன் சேர்த்து, ’ஆ! உன் தாயைக் கொன்ற தீவினையேனாயினேனே!" என்று உருகினான். அதனைக் கேட்டு நின்ற பாலினா இரங்கி, “ஐயா! உயிருடன் ஹெர்மியோன் உங்களிடம் வரமுடியாது. ஆனாலும் ¹⁵ஜுலியோரோமானோ என்ற ஓர் அரிய செதுக்குக் கலைஞனால் செதுக்கப் பெற்ற உயிர்த்தன்மையுடைய உருவம் ஒன்று என் வீட்டில் உள்ளது. அதை அங்கு வந்தால் தாங்கள் காணலாம்” என்றாள்.
அதன்படியே லியோன்டிஸும், பிறரும் பாலினாவின் வீடு சென்றனர். அங்கே ஓர் அறையின் நடுவில் ஒரு திரை கட்டப் பட்டிருந்தது. அனைவரும் வந்து அமர்ந்தபின் பாலினா திரையை ஒதுக்கினாள்.
6.ஓவியமா? உயிருருவமா?
அப்போது சலவைக்கல் இருக்கைத் தட்டொன்றின் மீது நிற்கும் பெருமிதத் தோற்றமுடைய ஓர் உருவை அனைவரும் கண்டனர். அதில் உருவின் அமைதியும் இருந்தது. உயிரின்களையும் இருந்தது. ‘அஃது உருவாயின், அமைத்தோன் ஒரு சிறு கடவுளேயாவன். அஃது உயிராயின், அது கடவுளின் படைப்புத் திறனுக்கு ஓர் உயரிய சான்றேயாகும்’ என்றெல்லாம் பலரும் நினைத்தனர்.
அரசனுடைய கண்கள். அச்சிலையைப் பார்த்த பார்வையில் பார்த்த- படியே நின்றன. அவன் பார்க்கும்போது, அவன் நின்ற நிலையிலேயே அவன் உடல் நின்றுவிட்டது. அவ்வுரு உயிருடையதே போன்று நின்றதெனில், அதைப் பார்த்து நின்ற அவ்வரசன் உருவெனச் சமைந்தான் எனல் வேண்டும். அப்போது பாலினா, “அரசே! தாங்கள் வாளா நிற்பதொன்றே தாங்கள் இவ்வுருவை மெச்சுகின்றீர்கள் என்று காட்டுகிறது; ஆயினும் இஃது எவ்வளவு தங்கள் அரசிக்கு ஒத்ததாக இருக்கின்றது?” என்று கேட்டாள்.
அரசன்: ஆம். நான் முதலிற் கண்டபோது அவள் இப்படித்தான் நின்றாள்; அதே நிலைதான்! ஆனாலும் ஒரு செய்தி. இந்த உருவில் தோன்றுமளவு அவள் ஆண்டு சென்றவள் அல்லளே!
பாலினா: அந்த அளவு அந்தக் கலைஞன் திறனுடையவனே என்று தோன்றுகிறது. அவள் இன்றிருந்தால் எப்படியிருப்பாளோ அப்படி அவளை அவன் தன் மனக்கண் முன் பார்த்து எழுதியிருக்கிறான்! ஆ! எவ்வளவு திறன்!
அரசன்: அது மட்டுமன்று; அந்த உருவில் அவளுயிர் அப்படியே இருக்கிறது. அதோடு அக்கண்கள் அசையவே செய்கின்றன. ஆம். அம்முகம் நிறம் மாறவே செய்கிறது, ஆம்; இஃது அவளே!
பாலினா: சரி, அரசே, இனி நான் திரையைப் போட்டு விடுகிறேன். இப்பொழுதே அதன் கண்ணசைகிறது; காதசைகிறது, என்கிறீர்கள். இன்னுங் கொஞ்சம் சென்றால் நடக்கிறது பறக்கிறது என்று கூடக் கூறுவீர்கள்.
அரசன்: இல்லை, இல்லை; திரையை இழுக்காதே! ஆ! அவ்வுருவுக்கு உயிரிருந்து நான் உருவாய் உயிரற்றிருக்கக் கூடாதா? ஆ! அஃது உருவன்று; அவள் உயிர்க்கின்றாள். அவள் உயிர்ப்பு என்மீது படுகிறது.
பாலினா: அரசே! தங்கள் மனம் நல்ல நிலையிலில்லை. இன்னும் கொஞ்சம் சென்றால், அஃது உங்கள் கண்ணுக்கு உயிர் உள்ள பெண்ணாய் விடும்! வேண்டா. திரையைப் போட்டு விடுகிறேன்.
அரசன்: ஓரிரண்டு நொடி பொறு பாலினா, உனக்குப் புண்ணியம் உண்டு. ஒருவரும் என்னை எள்ளி நகையாடாதீர்கள். நான் கிட்டப்போய் அவளுக்கு ஒரு முத்தமளிக்க வேண்டும்.
பாலினா: சரி, விரைவில்! நான் திரையை ஒரு நொடியில் மூடவேண்டும்.
அரசன்: முடியாது. பாலினா ஒரு நொடியன்று; ஒரு ஆண்டாயினும் திரையைக் கீழே விடவிடேன். நான் இங்கேயே இருந்து என் ஹெர்மியோனைப் பார்த்து கொண்டிருக்கப் போகிறேன்.
பெர்திதா: ஆம் அப்பா! நானும் அப்படியே என் தாயைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.
பாலினா: தந்தையும் மகளும் இப்படிப் பித்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு வேண்டுமானால், இந்த உருவுக்கு உயிர்கொடுக்கக்கூட என்னால் முடியும். ஆனால் நீங்கள் சூனியக்காரியின் செயல் என்று ஏளனம் செய்யக்கூடுமே!
அரசனும், பெர்திதாவும்: இல்லை, இல்லை; அப்படியே வரச்செய்.
இவ்வளவு சொன்னதுதான் தாமதம் பாலினா ஒரு சொடக்கிட்டாள். உடனே பக்கத்தில் மெல்லிய இன்னிசை எழுந்தது. அதன் நடைக்கிசைய உருவம் மெல்ல மெல்ல அசைந்து இருக்கையினின்றும் சரேலென்றிறங்கி வந்து, அரசனையும் பெர்திதாவையும் கட்டிக் கொண்டழுதது.
அவ்வுருவம் உருவமன்று; ஹெர்மியோனே!
முன்னர் லியோன்டிஸின் கொடுமையிலிருந்து இனி ஹெர்மியோனைத் தப்புவிக்க முடியாதென்று கண்ட பாலினா அவளை இங்ஙனம் தன் வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு இறந்துவிட்டதாகக் கூறிவிட்டாள்.
மகளைப் பெற்ற அன்றே அரசன் மனைவியையும் பெற்று இன்புற்றான்.
அதே சமயத்தில் பிளாரிஸெலைத் தேடிப் பாலிக்ஸெனிஸும் வந்தான். வந்து செய்தியனைத்தையுங் கேட்டு, அவன் இதுவரையிற் பெற்ற துன்பமெல்லாம் இவ்வின்பத்திற்கே என மகிழ்ந்து, மைந்தனையும் தன் பழைய நண்பனான லியோன்டிஸையும் தழுவிக் கொண்டான். தங்கள் நட்புக்குப் புத்துயிர் தரும் தம் புதல்வர் புதல்வியர் காதலை இருவரும் மணவினையால் நிறைவேற்றி இன்புற்றனர்.
மகளையிழந்த ஹெர்மியோன் ஒரே நாளில் மகளைத் திரும்பப் பெற்றதன்றி மருமகனையும் பெற்றுக் களித்தாள்.
** அடிக்குறிப்புகள்**
1.Camillo 2. Leontes
3.Siclly 4. Hermione
5.Booehemia 6. Polixenes
7.Camillo 8. Mamillus
9. Antigonus 10.Paulina
11.Delphos 12. Perdita
13. Florizel 14. Thoricles
14. Julio Romano
¹ஒதெல்லோ(Othello)
** (கதை உறுப்பினர்)**
** ஆடவர்:**
1. பிரபான்ஸியோ: வெனிஸ் நகர்ச் செல்வன்-டெஸ்டிமோனா தந்தை.
2. ஒதெல்லோ: கருநிற மூர் வகுப்பினன்-சிறந்த வீரன்-வெனிஸ் படைத்தலைவன்-டெஸ்டிமோனா காதற் கணவன்.
3. மைக்கேல் காசியோ: படைத் துணைத்தலைவன்-ஓதெல்லோவின் நண்பன்-காதல் தூதன்-ஓதெல்லோ தந்த உயர்வால் அயாகோ பகைமை ஏற்றவன்.
4. அயாகோ: படைஞன்-காசியோ உயர்நிலையால் ஓதெல்லோவிடம் பகைமை கொண்டவன்-வஞ்சகன்.
5. ராடெரிகோ: டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட செல்வனான பழங்காதலன்.
6.மொந்தானோ: படைக்கலப் பணியாள்.
பெண்டிர்:
1. டெஸ்டிமோனா: பிரபான்ஸியோ மகள்-ஓதெல்லோவின் காதல் மனைவி.
2. அயாகோ மனைவி.
** கதைச் சுருக்கம்**
வெனிஸ் நகர்ச் செல்வனான பிரபான்ஸியோவின் மகள் டெஸ்டிமோனாவை அந்நகர்ப் படைத்தலைவனான கருநிற மூர் வகுப்பைச் சேர்ந்த ஓதெல்லோ காதலித்து மறைவாய் அழைத்துச் சென்று மணந்து கொண்டான். அது வகையில் உதவிய மைக்கேல் காசியோ என்ற நண்பனைத் தன் படையில் ஓதெல்லோ உயர்பணி தர, அதனால் பகைமையும் பொறாமையும் கொண்ட அயாகோ என்ற படைஞன், டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட பழங்காதலனும் அறிவிலியுமான ராடெரிகோ என்ற செல்வனை ஏவி அவன் மூலம் இரவில் மறைந்து வெளியேறும் காதலரைப் பிரபான்ஸியோவின் ஆட்களைத் தேடும்படி செய்தான். பிரபான்ஸியோ பேரவையில் ஒதெல்லோ மீது மாயத்தால் தம் மகளை மருட்டியதாகக் குற்றம் சாட்டினான். டெஸ்டிமோனாவின் காதற் சொற்கள் ஒருபுறம், அத்தறுவாயில் ஸைப்பிரஸில் துருக்கிப் படையை எதிர்க்க ஒதெல்லோவின் பணி இன்றியமையாதிருந்தது. மற்றொரு புறம் அவ்வழக்கைப் புறக்கணிக்க வைத்தது. ஓதெல்லோ டெஸ்டிமோனாவுடன் ஸைப்பிரஸ் சென்றான்.
அத்தீவில் முதல்நாள் காவலுக்கு வைக்கப்பெற்ற காசியோ அயாகோ தூண்டுதலால் குடித்து நிலைதவற, அந்த அயாகோ ராடெரிகோ மூலம் மணியடித்து இதனை வெளிப்படுத்திக் காசியோவைப் பணியினின்றும் அகற்றும்படி செய்தான். பின் காசியோவிடம் டெஸ்டிமோனா மூலம் ஓதெல்லோவை மனமிரங்கச் செய்யலாம் என்று தூண்டி, மறுபுறம் அவன் டெஸ்டிமோனாவிடம் மறைவாகப் பேசுகிறான் என்று ஒதெல்லோ மனத்தில் பொறாமையையும் தூண்டினான். டெஸ்டிமோனாவின் கைக்குட்டையைத் திருடிக் காசியோவிடம் சேர்ப்பித்து அதனையும் ஒரு தெளிவாகக் காட்டி ஒதெல்லோவை வெறிப்படுத்த, அவன் டெஸ்டிமோவைக் கொன்றான். அதற்கிடையில் ராடெரிகோவைத் தூண்டிக் காசியோவும் கொல்லப்பட்டான். சாகுமுன் ராடெரிகோ சொற்களாலும், அவன் பையில் இருந்த கடிதத்தாலும், காசியோ தூய்மையும் அயாகோ சூழ்ச்சியும் தெளிவுபட்டுப் போயின. தன் பிழையுணர்ந்து ஓதெல்லோ வாள்மீது வீழ்ந்திறந்தான். அவன் பெருமிதத்தையும், டெஸ்டிமோனா தூய்மையையும் காசியோவின் எளிமையையும் மக்கள் போற்றினர்.
1.ஒதெல்லோவின் காதல்
இத்தாலி நாட்டின் சிறந்த நகரங்களுள் ²வெனிஸ் ஒன்று. அதன் நகரவை உறுப்பினருள் ³பிரபான்ஸியோ என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய புதல்வி எல்லா வகையான நற்குண நற்செய்கைகளும் பொருந்திய ⁴டெஸ்டிமோனா ஆவள். அவளை அடையும் விருப்பத்துடன் பல நாட்டிலிருந்து செல்வக் குமரர் பலர் வந்து வந்து, தம் விருப்பம் ஈடேறாது ஏமாந்து போயினர். புற அழகே போன்ற அக அழகும்மிக்க இவ்வரிய நங்கை அவர்களது புற அழகில் மயங்காது அகஅழகே அழகென நாடி நின்றாள். அதனால் பிறர் எதிர்பாரா வகையில் அவள் தன் நாட்டினர் அனைவரையும் விடுத்து மூர் என்ற கருநிறமுடைய வகுப்பைச் சார்ந்த ஓதெல்லோ என்பவனுக்கே தனது காதலை உரிமைப்படுத்தினாள்.
டெஸ்டிமோனாவின் காதலுக்கு உண்மையில் ஓதெல்லோ தகுதியுடையவன் என்பதில் ஐயமில்லை. அவன் உடல் நிறம் கருப்பாயினும், உள்ள உயர்வு எத்தகைய உயரிய பண்புடைய செல்வ நங்கையும் பாராட்டத்தக்க தன்மையுடையதாகவே இருந்தது. அவன் ஒரு சிறந்த போர்வீரன்; போரில் அஞ்சா நெஞ்சமுடையவன்; வீரம் ஒன்றின் மூலமாகவே போரில் சிறைப் படுத்தப்பட்ட ஓர் அடிமையின் நிலையினின்று படிப்படியாக உயர்ந்து வெனிஸ் படையின் தலைவனானான். நகராண்மை மன்றத்தின் பகைவர்களாகிய துருக்கியரை அடக்கி ஒடுக்கி அதனைக் காத்தவன் அவனே. நகராண்மைக் கழகத்தார் அவனை மிகவும் நன்கு மதித்திருந்தனர். அதோடு டெஸ்டிமோனாவின் தந்தையும் அவனிடம் மிகுந்த நட்புக்கொண்டு தம் வீட்டிற்கு அவனை அடிக்கடி அழைத்து அவனுடன் விருந்துண்டு மகிழ்வார்.
ஒதெல்லோ பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தவன். டெஸ்டிமோனாவிற்குப் பெண்களின் இயற்கைப்படி அவனுடைய பலவகையான வாழ்க்கைச் செய்திகளையுங் கேட்பதில் ஆர்வம் மிகுதி. அவனும் அதற்கேற்பத் தான் ஈடுபட்டிருந்த போர்கள், முற்றுகைகள், படையெடுப்புகள்; நிலத்திலும் நீரிலும் தனக்கு நிகழ்ந்த இடையூறுகள்; பீரங்கி முனைகளிலும் கோட்டை மதிற் பிளவுகளிடையே இருதிறத்துப் படைகளும் எதிரிட்டுக் கைகலந்த சண்டைகளிலும் மயிரிழை அளவில் தான் தப்பிய அருஞ்செய்திகள்; தான் சிறைப்பட்டமை; அடிமையாக விற்கப்பட்டமை; வாங்கப்பட்டமை; விடுதலை செய்யப்பட்டமை முதலிய தன் வரலாறுகளை அவளிடம் கூறுவான். அவ்வரலாற்றினிடையே தான் கண்ட புதுமை வாய்ந்த செய்திகள்; அகன்ற பாலைவனங்கள், நினைப்பினும் மயிர்க்கூச்செறியும் இரு நிலக்குகைகள், முகில் தவழும் மலைகள், மனிதரைத் தின்னும் அரக்கர்கள், தோள்களுக்குக் கீழ்பக்கந் தலையையுடைய கவந்தர்கள் முதலிய வியத்தகு மக்களின் கதைகள் பலவும் விரித்துரைத்து அவளுக்கு எல்லையில்லாக் களிப்பு உண்டுபண்ணுவான்.
இக்கதைகளிடையே அவள் மனம் ஈடுபட்டிருக்கும்போது சில சமயம் வீட்டுவேலைக்காக அவள் அவ்விடம் விட்டுப் போகவேண்டி வரும். அப்போது அவள் மனமெல்லாம் ஒதெல்லோவின் கதையில் ஈடுபட்டிருக்கும். ஆகவே அவள் வேலையை மிக விரைவில் முடித்துவிட்டு, முன்னிலும் பன்மடங்கு ஆர்வத்துடன் அவன் கதையைக் கேட்க அவன்முன் வந்து உட்கார்ந்து கொள்வாள். ஒரு சமயம் அவள் இங்ஙனம் தான் துண்டாகக் கேட்ட அவன் வாழ்க்கை வரலாறு முழுமையும் அடி முதல் முடிவு வரை ஒரே கோவையாக உரைக்கும்படி அவனைக் கோரினாள். அவனும் அவள் கண்களில் இன்பநீர் ஊற்றெடுக்க மெய்ம்மயிர் சிலிர்ப்ப அதனை உருக்கத்துடன் கூறி அவளைத் தன் அன்புக்கு உரிமைப்படுத்தினான்.
அக்கதையின் நற்பகுதிகளைக் கேட்கும் சமயம் அவள் மனமென்னும் பெட்டகத்தினின்றும் வெளிப்பட்ட ஒவ்வொரு பெருமூச்சும் புலவருடைய பாட்டுக்களைக் கேட்டுக் களித்து அவர்களுக்கு முடிமன்னர் ஈயும் ஒவ்வொரு பொற்காசுக் கொப்பாக அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆகா! அப்போது அவன் முகத்தில் கண்ட வியப்பென்ன! இரக்கமென்ன! அவற்றைக் கேட்டு அவள் தான் அடைந்த துயரத்தை எண்ணி, ‘நான் கேட்டதே தவறு’ என்பாள். ஆனால், அதே சமயம் ‘ஆ! கடவுள் என்னையும் இத்தகைய வீரச் செயல்கள் செய்யத்தக்க ஆடவனாகப் படைத்தானில்லையே!’ என மறைமுகமாக அவனைப் பாராட்டுவாள். ‘என் காதலைப் பெறவேண்டும் என்று உன் நண்பர் எவரேனும் விரும்புவீராயின், இக்கதையை இப்படிச் சொல்லும்படி நீ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் போதும்’ என்பாள். பெண்களது மடமையைப் பீறிட்டெழுந்த இக்காதற் குறிப்பைத் துணைக்கொண்டு, வெற்றி தராதெனத் தான் ஒதுக்கித் தன்னகத்தே வைத்திருந்த தனது காதலை அவனும் வெளிப்படை யாகக் காட்டலானான். நாளடைவில் அவர்கள் காதல் முற்றிக் களவியல் முறையில் மனம் ஒத்து மணம் புரிந்துகொண்டனர்.
இந்த அகமணத்தை வெளிப்படையாகக் கூறிப் பிரான்ஸியோவின் மருமகனாக ஏற்கப்படுவதற்கு ஒதெல்லோவின் பிறப்புரிமையும் நிறமும் ஒரு புறமும், வாழ்க்கை முறையில் அவனுக்கு ஏற்பட்டிருந்த நிலை மற்றொரு புறமும் தடையாயிருந்தன. பிரபான்ஸியோ தன் புதல்வி டெஸ்டி மோனாவுக்குத் தனது மனப்போக்கின்படி நடக்க உரிமை தந்திருந்தது உண்மையே. ஆனால், “அவ்வுரிமையை நன்முறையில் தன் கருத்துப்படியே பயன்படுத்துவாள்; பிற வெனிஸிய மங்கையரைப் போலவே தானும் உயர்நிலையுள்ள நகரவை உறுப்பினர் ஒருவரையோ, அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையுடைய ஒருவரையோ, தனக்குத் துணைவனாகத் தேர்ந்தெடுப்பாள்” என்றுதான் அவன் மனப்பால் குடித்து வந்தான்.
அவர்கள் தம் உறவை எவ்வளவு நாள் மறைத்து வைத்திருக்க முடியும்? விரைவில் அது பிராபான்ஸியோவுக்கும் தெரிய வந்தது. அவன் உடனே சீறியெழுந்து, நகராண்மை மன்றத்திற்குச் சென்று ஓதெல்லோவின் மீது குற்றஞ்சாட்டி, இக்கருநிற அடிமை நன்றிகெட்டவன்; என் நட்புரிமையைப் பாழ்படுத்தித் தூய உள்ளத்தினளாகிய என் புதல்வியை மாயத்தாலோ மந்திரத்தாலோ கெடுத்து, அவளை என் விருப்பத்திற்கும் மனித இயற்கைக்கும் மாறாக நடக்கும்படி வற்புறுத்தியிருக்கிறான்’ என்று முழங்கினான்.
வெனிஸ் நகரச் சட்டப்படி மந்திரத்தால் பிறரை மயக்குவோர்க்குக் கொலைத்தண்டனை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் ஓதெல்லோவுக்கு வாய்ப்பாக அந்நேரம் துருக்கியர் ஸைப்பிரஸ் மீது படையெடுப்பதாகச் செய்தி வந்தது. ஸைப்பிரஸ் தீவு அந்நாள் வெனிஸியர் ஆட்சிக்குட் பட்டிருந்தது. எனவே, அதைப் பாதுகாக்க வெனிஸ் நகராண்மை மன்றத் தார்க்கு ஒதெல்லோவின் உதவி இன்றியமையாததாயிருந்தது. அவனைவிட அப்பொறுப்பு வாய்ந்த பணிக்கு ஏற்றவர் அந்நகரில் இலர். எனவே, ஓதெல்லோ உயிருக்கு இடையூறு தரும் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் வெனிஸின் உயிருக்கு அவன் உதவியும் இன்றியமையாததாய் இருந்தது.
பிரான்ஸியோவின் பெருஞ்செல்வத்தையும் நகராண்மை மன்றில் அவர் உறுப்பினர் என்பதையும் நோக்க, அவர் வழக்குப் புறக்கணிக்கத் தக்கதாக இல்லை; அஃதோடு அவர், சீற்றத்தால் எதிரியின் குற்றத்தை மிகைப்படுத்திக் கூறினர். ஆனால், அச்சீற்றமே ஒதெல்லோவின் பக்கமாக நின்று உதவிற்று என்னலாம். ஓதெல்லோவிடம் இக்குற்றச்சாட்டு வகையில் உனது விடை என்ன என்று கேட்டபோது அவன், சீற்றத்திற்கு எதிர் சீற்றம் இன்றி, “காதலர் காதற் கன்னியர் மனத்தைக் கவரப் பொதுப்படையாகக் கையாளும் மாயவித்தைகளையன்றி வேறெவ்வகை மாயத்தையும் நான் அறியேன். அன்பு கனிந்த மொழிகளும் உரையாடலுமே நான் இழைத்த மாயம்” என்று உண்மைக் கதையை உள்ளவாறே கூறினான். இதுவும், தமது நகர்ப்பணிக்கு அவனது இன்றியமையாமையும் சேர்ந்து, நகர்த்தலைவர் மனத்திலும் நகரத்தார் மனத்திலும் அவன் மீது நன்மதிப்பை உண்டு பண்ணின. நகரத் தலைவர், “இத்தகைய கபடற்ற நேரடியான காதல் பிரபான்ஸியோவின் மகளை மட்டுமன்று; யார் மகளையும், என் மகளைக்கூடக் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை” என்று வெளிப்படை யாகக் கூறினார்.
ஒதெல்லோவின் இக்கூற்றிற்கு டெஸ்டிமோனாவின் உரைகளும் சான்று பகர்ந்தன. வெளியே வந்து ஆடவர் முன் பேசியறியாதவள் அவள்; ஆயினும் அன்று தந்தை எதிரிலும், அவரையொத்த நகரத்துப் பெரியார் அனைவரது முன்னிலை யிலும் வந்து நின்று அவள் “நான் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தவள்; கல்வி கேள்விகளில் தேர்ச்சியுடையவள்; எனவே என் கட்சியை உரைக்க எனக்கு உரிமை உண்டு. என் தந்தைக்குக் கீழ்ப்படிவது எனக்குக் கடமையே என்பதை நான் நன்கு அறிவேன்; ஆனால் என் தலைவனுக்கும் கணவனுக்கும் நான் அதனினும் உயர்ந்ததோர் கட்டுப்பாடுடையேன்; இதனை என் தந்தை அறிவர். இவ்வுரிமை பற்றியே என் தாய் தன் தந்தையினும் அவரை உரிமையுடையவராகப் பின்பற்றினாள்” என்று அவள் கூறிய மொழிகள் பசுமரத்தாணிபோல் நயமுடையவையாகவும் மறுக்கக் கூடாதவையாகவும் இருந்தன.
இங்ஙனம் தமது தசையே தமக்கு எதிர்வழக்காடித் தமது கட்சியை முறித்ததென்று பிரபான்ஸியோ கண்டார். கண்டு நிலைமைக்கேற்ப அவர் தம் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம் புதல்வியை வேண்டாவெறுப்பாக ஓதெல்லோவிடம் ஒப்படைக்க இசைந்தார். ஆயினும் அவளது முடிவால் தமக்கேற்பட்ட மன எரிவை அவர் வெளிப்படையாகக் காட்டாதிருக்க முடியவில்லை. “எனக்கு டெஸ்டிமோனாவை யன்றி வேறு பிள்ளையில்லாதது நன்றாயிற்று. இன்றேல் அவள் நடந்துகொண்ட முறையைப் பார்த்தபின் பிற குழந்தைகளை அடக்கு முறையால் கட்டுப்படுத்தி, அவர்கள் வாழ்வுக்கு இடையூறு செய்யவேண்டி நேர்ந்திருக்கும்” என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார்.
2.அயாகோவின் பொறாமைப் புயல்
காதற் போரில் இங்ஙனம் ஒருவகையாக வெற்றி கண்டபின் உடன்தானே படைப்போருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டியதா யிருந்தது. டெஸ்டிமோனா பட்டுடுத்துப் பஞ்சணை மெத்தையிற் கிடப்பதே காதல் எனக் கொள்ளாது கணவனுடன் இன்ப துன்ப மனைத்தையும் பங்கு கொள்வதே காதல் எனக் கொண்டவள். இடையூறுகளையும் தாங்கத் துணிந்து முன்வந்தாள்.
ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும் ⁵ஸைப்பிரஸில் இறங்கியதும், புயலால் துருக்கியப் படை தானாகவே சிதறடிக்கப் பட்டதென்று நற்செய்தி வந்தது. எதிர்பார்த்த பகைவரினிடையூறு இதனால் அகன்றது. ஆயினும், புறப்பகைவரது போர்தான் நின்றது. ஓதெல்லோவின் பக்கத்தே அவன் எதிர்பாராத இடத்திலும் உள்ளமொத்த வாழ்க்கையிலும் அவனுக்கெதிராக ஒரு வாழ்க்கைப் போர் அவனை நிலைகுலைக்க எழுந்தது.
ஒதெல்லோ தன் நண்பர்களுள் ⁶மைக்கேல் காசியோ என்பவனையே முதன்மையான நண்பனாகக் கொண்டிருந்தான். இவன் வீரமும், நேரிய தோற்றமும் உடையவன். பெண்களிடம் நாகரிகமாகவும் நயமாகவும் நடந்துகொள்ளும் இயல்பினன். ஒதெல்லோ டெஸ்டிமோனாவின் காதலை நாடி நின்ற சமயம் அவனது திறனைப் பயன்படுத்தி, அவனைத் தன் காதல் தூதனாக்கிக் கொண்டான். கள்ளங் கபடற்ற மனமும் சிறுமையான நினைவுகளுக்கு இடந்தராப் பெருந்தகைமையு முடைய ஓதெல்லோ அவனிடம் பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தது இயல்பே. டெஸ்டிமோனாவும் தான் காதலித்த கணவன் நீங்கலாக, வேறெவரையும் விட அவனிடம் நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவளாகவே இருந்தாள். மணவினைக்கு முன் இருந்த இந்த நட்புறவு மணவினைக்குப் பின்னும் அவனுடன் இருவருக்கும் இருந்து வந்தது, யாதொரு தங்கு தடையுமின்றிச் சூதற்ற நிலையில் ஓதெல்லோ இருக்கும் போதும் சரி; இல்லாதபோதும் சரி; மைக்கேல் காசியோவும் டெஸ்டிமோனாவும் நகைத்து உரையாடியும் களித்தும் நேரம் போக்குவதுண்டு. இந்நட்பின் குற்றமற்ற தன்மையும் உயர்வுமே தீயோன் ஒருவன் எறிந்த தீக்கணைக்கு அதனை எளிதில் இரையாகச் செய்தல் என்னல் வேண்டும்.
ஸைப்பிரஸ்க்கு வருவதற்குச் சற்று முன்னதாகவே ஓதெல்லோ காசியோவுக்குத் தனக்கடுத்ததோர் உயர்பணி தந்தான். காசியோவை விட முதலில் உயர்ந்த நிலையில் இருந்து இவ்வுயர்வால் அவனுக்குக் கீழ்ப்பட்டுவிட்ட ⁷அயாகோ என்னும் படைஞனுக்கு இவ்வுயர்வு கண்ணுறுத்தலா யிருந்தது. அயாகோ பார்வையில் காசியோ அதற்கு எவ்வகையிலும் தகுதியுடைய வனாகப் படவில்லை. ‘பெண்களிடையே பசப்பித் திரிவதற்குத் தானே இவன் தகுதியுடையவன்? இவனுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்?’ என அவன் கூறுவதுண்டு. இதுமுதல் அவனுக்குக் ’காசியோ’வின் பெயர் நஞ்சாயிற்று. காசியோவுக்கு உயர்வு தந்ததாலோ அல்லது வேறெவ்வகை நினைவாலோ ஒதெல்லோவின் பேரிலும் எல்லை இல்லாக் கசப்பும் வயிற்றெரிச்சலும் ஏற்பட்டு நாளாக நாளாக வேரூன்றித் தழைத்து வளர்ந்து வந்தது. சமயம் ஏற்பட்ட போதெல்லாம் அவன் உள்ளதும் இல்லதும் ஆக ஒதெல்லோ காசியோ இவர்களைப் பற்றிய தீய கருத்துக்களைப் போற்றிப் பெரிதாக்கிப் பொறாமைத் தீயை வளர்த்து வந்தான்.
அயாகோ இயற்கையாகவே வஞ்சமும் கைத்திறனும் உடையவன். மனித இயல்பையும் மனிதர் மனப்போக்கையும் அறிந்தவன். மனிதர் மனத்தை உள்ளூர நின்று ஆற்றி வைக்கும் உணர்ச்சியாற்றல்களையும், அவற்றை இயக்கும் நெறியையும், அவற்றால் துன்பத்தை மிகுதியாக விளைத்துப் பிறரைத் துன்புறுத்தும் வகையையும் அவன் நன்குணர்ந்தவன். தன் எதிரிகளாகிய ஓதெல்லோ, காசியோ ஆகிய இவர்களுள் காசியோ மீது ஓதெல்லோவுக்குத் தப்பெண்ணம் உண்டாகும் படி மட்டும் செய்து விட்டால், எதிரி கையாலேயே எதிரியை-ஒருவேளை எதிரிகள் இருவரையும் கொன்று ஒழித்து விடலாகும் என்று அவன் எண்ணி மனக்கோட்டை கட்டலானான்.
3.காசியோ மீது குற்றச்சாட்டு
பகைவர் படை உலைந்ததும், படைத்தலைவரும் அவர் தலைவியும் தம்மிடையே வந்திருப்பதும், ஸைப்பிரஸ் மக்களக்கு எல்லையில்லாக் களிப்புத் தந்தன. அக்களிப்பில் அவர்கள் எங்கும் விழாக் கொண்டாடத் தொடங்கினர். பாலும் நறுந்தேனும் எங்கும் ஒழுகின, ‘ஓதெல்லோ வாழ்க, டெஸ்டிமோனா வாழ்க’ என்னும் ஆரவாரத்தினிடையே பொற்கலங்களும் வெள்ளிக்கிண்ணங்களும் கணகண என ஒலித்தன.
அன்றிரவு படைப்புலம் காவல் காக்கக் காசியோ அமர்த்தப்பட்டான். படைஞர்கள் மட்டுக்கு மிஞ்சிக் குடிக்கவோ, தம்முட் சண்டையிட்டு மக்களை வெருட்டவோ செய்யாதபடி பார்க்க அவனுக்கு ஆணை தரப்பட்டது. அயாகோவின் ஆழ்ந்த சூழ்ச்சிகளுக்கு அன்றைய இரவே மிகவும் வாய்ப்புடைய தாயமைந்தது. அவன் துணைத் தலைவனாகிய காசியோவிடம் பொய்ப் பற்றுக் காட்டி, அவனது உடல் நலத்தையே விரும்பி வற்புறுத்துபவன் போல அவனை மேன்மேலும் குடிக்கச் செய்தான். குடிக்கும், இன்மொழிக்கும் இணங்கும் இயல்புடைய காசியோ அயாகோவின் சூதை அறியாது வரம்பற்றுக் குடியில் மூழ்கி அறிவிழந்தான். அந்நிலையில் அயாகோ தனது அரிய வேலைப்பாட்டை இன்னும் மிகைப்படுத்தி டெஸ்மோனாவின் பெயரையும் புகழையும் இடையே இழுக்க, அவன் அப்பெயரைத் தகாதவகையில் கூறிப் பிதற்றத் தொடங்கினான். டெஸ்டி மோனாவின் பழங் காதலர்களுள் செல்வச்செருக்கில் மிகுந்தும், அறிவில் குறைந்தும் விளங்கிய ⁸ராடரிகோ என்பவனை அயாகோ வேண்டுமென்றே அவ்விடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவனும் குடித்திருந்ததால் டெஸ்டி மோனாவின் பெயரைக் கேட்டதும் காசியோவை எதிர்க்க, இருவருக்கும் இடையே கடுமொழிகளும் அடிதடியு- மாயின. அவர்களை விலக்கும் நோக்கம் கொண்டு வந்த 9மொந்தானோ என்னும் பணியாளனும் இப்பூசலில் காயமடைந்தான்.
இவ்வளவையும் பார்த்து இதுதான் குழப்பத்தைப் பெருக்கச் சமயமென்று நினைத்து அயாகோ சென்று நகர மண்டபத்தின் மணியை அடித்தான். நகர மக்கள் அது கேட்டுக் கலவரமடைந்து வந்து கூடுவாராயினர். ஒதெல்லோவும் விரைந்து எழுந்து வந்து பார்த்துக் காசியோவின் நிலையைக் கண்டு வியப்படைந்தான். அயாகோ மிகுந்த திறமையுடன் தான் காசியோவுக்கு உற்ற நண்பன் போலவும் அவனை மறைத்துப் பேசுபவன் போலவும் நடித்து, அவனிடம் தானே உண்டு பண்ணிய குற்றத்தைப் பன்மடங்கு மிகைப்படுத்திக் காட்டினான். அவன் நட்பின் பெயரால் தப்பெண்ணம் வளர்ந்துகொண்டே வந்தது. அது, அயாகோ குறிப்பாக மறைத்துரைக்கும் உரைகளைப் பன்முறையும் வருந்திக் கிளறு முழுப்பொய்ம்மைத் திறனையும் காட்ட அவனுக்கு இடம் கொடுத்தது. போர்க்களத்தில் விருப்பு வெறுப்பென்று பாராமல் ஒழுங்கொன்றையே தலைமையாகக் கவனிக்கும் இயல்புடையவன் ஓதெல்லோ. ஆதலால் காசி யோவைத் தன் நண்பனென்றும் பாராமல் பணியினின்றும் நீக்கி விட்டாள்.
4.டெஸ்டிமோனாவின் இல்வாழ்க்கைக்கு உலை
இங்ஙனமாக அயாகோவின் சூழ்ச்சித் திட்டத்தின் முதல்படி நிறைவேறிற்று. காசியோவைப் பணியிலிருந்து நீக்கியாயிற்று. அவனிடம் ஓதெல்லோவுக்கிருந்த பற்றுதலைக் கலைத்தாயிற்று. ஆனால் இவ்வளவில் நின்றுவிட அவனது பொறாமைத் தீ இடம் தரவில்லை. அவ்வெறுப்பை விதையாக மட்டும் வைத்துக்கொண்டு பகைப்புலத்தில் அழிவுப் பயிரை வளர்க்க அவன் எண்ணினான்.
அதற்கிசையக் காசியோ அவனையே தன் உற்ற நண்பனாக நினைத்து அவனிடம் சென்று, ‘நான் இப்படி அறிவிழந்து கீழ்மகனது செயல் செய்துவிட்டேனே! எனக்கு இத்தண்டனை கூடப் போதாது’ என்று வருந்தினான். ஆனால், அயாகோ வினயமாக, அவன் குற்றம் அவ்வளவு பெரிதொன்றுமில்லை. யாவருக்கும் இயற்கையானதே என்றும் ஒதெல்லோ முன் சினத்தாலேயே இத்தண்டனை தந்தான் என்றும் கூறினான். மேலும் ‘தலைவர் எவ்வளவோ பெரியவர்; ஆயினும் அவருக்குந் தலைவியான டெஸ்டிமோனாவினிடமே உண்மையில் எல்லா வல்லமைகளும் அடங்கியுள்ளன’ என்றும், ‘அவள் இரக்கமான உள்ளமும் அன்பும் உடையவளாதலால் தலைவரை அடுப்பதைவிட அவளை அடுத்தால் இச்சிறு குற்றம் மன்னிக்கப்பட்டுக் காசியோ மீண்டும் தன் பணியைப் பெறலாம்’ என்றும் அவன் எடுத்துக் கூறினான். இம்மொழிகள் இனிமையும் தகுதியும் உடையவையேயாயினும் அவற்றைக் கூறும் உள்ளத்தின் நஞ்சால் அவை தீய முடிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
அயாகோவின் உரைப்படியே காசியோ நடந்தான். எதிர்பார்த்தபடியே டெஸ்டிமோனாவின் கனிந்த உள்ளத்தில் காசியோவின் வேண்டுகோள் நற்பயன் அளித்தது. ‘என் தலைவரிடம் நல்லுரை கூறி உனக்குக் கட்டாயம் உன் பணியை நான் மீட்டும் வாங்கித் தருவேன், உனக்கு உதவி செய்யக்கிடைத்த இத்தறுவாயில் நான் உனக்காக உயிரிழப்பதாயினும் பின்வாங்கேன்’ என்ற பெருந்தகை மொழிகள் ஊழ்வலி முந்துறுவதாலோ என்னவோ அவன் நாவினின்றெழுந்தன.
அம்மொழிகளின்படியே ஒதெல்லோ வந்ததும் அவள் அவனுக்காகப் பரிந்து பேசினாள். ஓதெல்லோ எளிதில் அவள் மொழிகளை மறுக்கக் கூடவில்லையாயினும், அன்று காசியோ மீதிருந்த கடுஞ்சினத்தின் ஆற்றலால் ‘சரி பார்ப்போம்; வரட்டும்’ என்று இழுத்துக் கூறவே அவள் அவன் குறிப்பறியாமல் (பெருந்தன்மையுடையோர் பலரது அழிவுக்கு இக்குணமே காரணம் என்பது காண்க) அடுத்தடுத்து இச்செய்தியை வற்புறுத்திக் கூறுவாளாயினள். ‘இத்தகைய மாபெரும் குற்றம் அவ்வளவு விரைவில் மன்னித்துத் தள்ளத்தக்க தன்’றென அவன் கூறியதற்கு மாறாக அவள், ’இன்னே மன்னிக்கவேண்டும்; தவறினால் இன்றே மன்னிக்க வேண்டும். அன்றேல், நாளை விடிந்த உடனாவது மன்னிக்க வேண்டும்’ என்று பன்னிப்பன்னி மன்றாடினாள். காசியோவின் கழிவிரக்கத்தையும் பணிவையும் அவள் விரித்துரைத்தாள். ’அவன் குற்றம் சிறிது, இத்தகைய பெருந்தண்டனை அதற்குத் தகா’தென வாதாடினாள்.
இவ்வளவுக்கும் இணங்காது அவன் தயங்குவதைக் கண்டு தீவினையால் அவள் தன் பழங்காதல் நினைவுகளையே தனது இறுதித் துருப்பாகப் பயன்படுத்தினாள். ‘என் தலைவ! இச்சிறு செய்திக்காக நான் இவ்வளவு கூறவேண்டுமா? அதுவும் காசியோ வகையில்! தாங்கள் என்னை அடையும் எண்ணத்துடன் காதல் தூதனாக அனுப்பப்பட்டவனும், நான் உங்களைக் குறைவாகப் பேசியபோது மறுத்து உங்களைப் புகழ்ந்து என்னை உங்களுக்குரியவளாகச் செய்தவனுமான காசியோ வகையில் நான் இவ்வளவு கூறவேண்டுமா? காதலுக்காக எவ்வளவோ பெரிய செய்திகளையும் மனிதர் விட்டுக்கொடுப்பர். இச்சிறு செய்திக்கே இடந்தராவிட்டால் அத்தகைய பெருந்தேர்வுகளை உங்கள் காதலுக்கு நான் கொடுப்பதெவ்வாறு?’ என்று பலவாறாகப் பேசினாள். ஒதல்லோ மறுக்கக்கூடாமல், ‘சற்றுப் பொறுமையாக மட்டுமிரு: உன் விருப்பப்படி எப்படியும் செய்வேன்’ என்றான்.
டெஸ்டிமோனாவிடம் மீண்டும் ஒருமுறை தனது வேண்டுகோளை வற்புறுத்திவிட்டுக் காசியோ மறைவாக வெளியேகும் சமயம் பார்த்து, அயாகோ ஒதெல்லோவை அவ்விடம் கூட்டிக்கொண்டு வந்தான். அப்போது அயாகோ தனக்குள் சொல்லிக்கொள்வது போல மெல்ல, ‘இஃதெல்லாம் நன்றாயில்லை’ என்று மறைவில் சிறு பொடிவைத்துக் கூறினான். ஒதெல்லோ அச்சமயம் அதனைக் கவனிக்கவில்லை. ஆனால், அஃது அவன் மனநிலையறிந்து பக்குவமாக நல்ல நிலத்தில் விதைத்த விதையாய்ப் பின் பயன் விளைத்தது. அவ்விதைக்கு உயிரூட்டுவது போல் டெஸ்டிமோனா இல்லாதபோது அவன், ‘நீங்கள் டெஸ்டிமோனாவைக் காதலித்தபோது காசியோவுக்கு அக்காதல் செய்தி தெரியுமோ?’ என்று ஒரு கேள்வி கேட்டான். ஒதெல்லோ அவனே அக்காதலுக்கு இடையீடாய் நின்றவன் என்றபோது, அயாகோ ஏதோ பெரியதோர் உள்ளுறைக் கருத்துடையவன் போலப் புருவங்களை நெரித்துக்கொண்டு தன்னை அறியாமல் உட்கிடக்கையை வெளியிடுபவன் மாதிரி, ‘அதுவும் அப்படியா!’ என்று பெருமூச்சு விட்டான்.
இப்போது ஒதெல்லோவின் மனத்தில் சிதறிக்கிடந்த பல செய்திகளும், ஐயப்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருப்பெறத் தொடங்கின. ‘அயாகோ நேர்மையுடையவன், காசியோவிடம் கொண்ட நட்பினாலேதான் உண்மையை வெளியிடத் தயங்குகிறான்’ என்ற எண்ணம், அவனது ஒவ்வொரு குறிப்பிற்கும் எல்லையற்ற பொருள் கொடுக்கும்படி அவனைத் தூண்டிற்று. எனவே, அவன் அயாகோவிடம், ‘ஒளிவு மறைவின்றி எனக்கு உண்மையைக் கூறுக’ என்றான்.
5.பொய்யும் சொல்வன்மையினால் மெய்யாம்
ஓர் உயரிய நாடக ஆசிரியன் தன் கதைப் போக்கைத் தன் உரைகளாற் கூறாமல் பிறருடைய உரையாடல்களாலேயே இணைத்துக் கொண்டு கூட்டுவான். அதுபோல அயாகோவும் தான் ஒதெல்லோவின் மனத்தில் எழுப்ப நினைத்த இருண்ட எண்ணங்களை நேரிடையான மொழிகளால் கூறாமல், குறிப்பாகப் பல செய்திகளாலும் புனைவுரைகளாலும் இயற்கையாய் எழும்வண்ணம் கூறத்தொடங்கினான். ‘மனதிற் பட்டவையெல்லாம் உண்மைகள் ஆகுமா? பல சமயம் மிக இருண்ட நினைவுகள் மனத்தில் எழுவதுண்டு. அவை உண்மையாகவும் இருக்கலாம்; பொய்யாகவும் இருக்கலாம். அவற்றை ஆராயாது கூறினால் எவ்வளவு தீங்கு விளையும்’ என்று தன்னையும் காத்துத் தான் கூற விரும்பும் செய்தியின் இயல்பையும் குறிப்பாகக் காட்டினான். ‘அதனால் எத்தனையோ நல்லவர்கள் கெட்ட பெயர் அடையும்படி நேரும்’ என்று கூறி ஒதெல்லோவின் குழம்பிய ஐயத்தை ஒருவரிருவர் மீது செலுத்தினான். ‘அதிலும் மனைவியைப் பற்றிக் கணவன் ஐயம் கொள்ளுதல் மிகக் கொடிது. இருவர்க்கும் அது தீது; வாழ்ககை அமைதியும் அதனால் கெடும்’ என்று கூறி ஒதெல்லோவின் மனத்தில் குமுறியெழும் ஐயப் புயலை டெஸ்டிமோனா பக்கமாகச் சாய்த்தான்.
யானைகளையும் சிங்கங்களையும் எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வல்லமையுடைய சிங்கவேற்றைப் பல்லாயிரக் கணக்கான சுண்டெலிகள் பலநாள் தொடுத்துப் பொருது வதைத்துக் கொல்ல முடியுமன்றோ? அதுபோல் டெஸ்டிமோ னாவின் மீதும் அவளது கற்பின் மீதும் ஒதெல்லோ வைத்திருந்த மாறாத பற்றையும் நன்மதிப்பையும் அயாகோ என்னும் மந்திரக்காரன் ஏவிய ஐயங்களும் தூண்டுதல்களும் சென்று தாக்கத் தொடங்கின. அப்பற்றின் உறுதி முதலில் அவற்றைச் சிதறடித்தது. ‘என் மனைவி ஓர் அழகி என்பதும், மனிதரது கூட்டுறவு களியாட்டம் உரையாடல் இவற்றில் விருப்புடையவள் என்பதும் எனக்குத் தெரிந்தவையே; ஆனால், இவை மட்டிலும் குற்றங்கள் ஆகிவிடா. உண்மையில் கற்பு இருக்கும் இடத்தில் இவை சிறந்த குணங்கள் ஆம். அக்கற்புக்குக் குறைவு கூற நான் மும்முறை தயங்குவேன்’ என்று ஓதெல்லோ கூறினான்.
ஒதெல்லோவின் இவ்வுறுதியையும், மனைவியின் கற்பில் குறைவு கருதத் தயங்குவதையும் அயாகோ மிகவும் போற்றினான். ‘டெஸ்டிமோனா கறையுடையவள் என்பதற்குத் தெளிவென்ன?’ என்று அவன் நேரில் கேட்டபோது, ‘அதற்குத் தெளிவே இல்லை. அது வெறும் ஐயப்பாடே. அதன் சுழலில் நீங்கள் விழவே கூடாது’ என்று அயாகோ தனது உண்மை எண்ணத்திற்கு நேரெதிரான மொழிகள் கூறினான். “ஆனால் அவள்மீது குருட்டு ஐயுறவு கொள்வது எவ்வளவு தவறோ அவ்வளவு அவள்மீது குருட்டு நம்பிக்கை வைப்பதும் தவறேயாகும். கருப்பர்களாகிய நீங்கள் கபடறியாதவர்கள். இத்தாலியர், அதிலும் இத்தாலியப் பெண்கள் இயல்பை இத்தாலியராகிய நாங்களே நன்கு அறிவோம்” என்று ஐயத்தின் மீது அயாகோ தன் சொல் துருத்தியால் காற்றை ஊதினான். மேலும், ’உங்கள் காதலை ஏற்றதே அவள் இயற்கைக்கு மாறானது அன்றோ? அவள் தந்தைகூட அதனை ஏதோ மாயக்காரத்தனம் என்றுதானே நம்ப இடமிருந்தது! காதலுக்காகத் தந்தையை வஞ்சிக்கத் துணிவு கொண்டவள் கணவனையும் வஞ்சிக்கலா மன்றோ? என்று கூறிய உரைகணைபோல் ஓதெல்லோவின் உள்ளத்தையுங் கடந்து அவனது உயிர்நிலையை ஊடுருவிச் சென்றது.
இவ்வளவு சொல்லிவிட்டு, ‘ஐயையோ! என்ன காரியம் செய்து விட்டோம்! ஒருவர் மனைவாழ்க்கைக்கு உலை வைத்துவிட்டோமே!’ என்று திடுக்கிட்டுப் பின்வாங்குபவன் போல அயாகோ பின்வாங்கினான். ஆனால், ஓதெல்லோ அதற்கு இடங்கொடாமல் தன் மனத்தில் எழுந்த காட்டுத்தீயை வெளிக்காட்டாது மறைத்துக் கொண்டு, ‘நீ அறிந்ததைக் கூறுவதில் பிழையில்லை. நான் ஒன்றும் ஆய்ந்தோயாது நம்புபவன் அல்லன். காசியோமீது ஐயப்பட இடமுண்டா என்பதைக் கூறுக’ என்றான். வானம் பார்த்த வறண்டபுலம் போல் இப்பணிக்கே காத்திருந்த அயாகோ காசியோவின் நேர்மைக் குணத்தின்மீதும் போர்தொடுக்கலானான். ‘தன் இனத் தாரிடையே அழகுமிக்கார் பலரை வெறுத்து டெஸ்டிமோனா ஓதெல்லோவைத் தெரிந்தெடுத்தது பிறர்க்கிணங்காத் தன் ஆண்மையை உணர்த்தவில்லையா? காதலிக்கும்போதே உங்களையும் காசியோவையும் அவள் ஒப்பிட்டு உங்களிரு வரிடையேயுள்ள தோற்ற வேற்றுமை, நடை வேற்றுமை இவற்றைக் கவனித்துத் தானே இருப்பாள்? அவள் காசியோவுக்காக மன்றாடுவது வெறும் பரிவுக்கு மேற்பட்டதாக இல்லையா?’ என்றெல்லாம் ஓதெல்லோ மனதிற்படக் கூறியபின், ‘இதனைத் தேர்ந்தறிய வேண்டின், காசியோவை மன்னித்துப் பணியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் சற்றுத் தாமதம் செய்தால் போதும். அப்போது அவள் நடையிலிருந்து உண்மை அறியலாகும்’ என்று தூண்டினான். இங்ஙனம் டெஸ்டிமோனாவின் நற்குணமும் உயர்வுமே இந்நயவஞ்சகக் கொடியோன் கையில் அவள் அழிவுக்காக விரிக்கப்பெற்ற வலையாயிற்று.
6.கைக்குட்டையே கழுத்துக் குட்டையாதல்
தக்க முடிவான சான்றுகளின்றி மனைவி மீது ஐயம் கொள்ளலலாதென அயாகோ ஒதெல்லோவை வற்புறுத்தி வேண்டிக் கொண்டான். ஒதெல்லோவும் அங்ஙனமே பொறுமையை இழவாமல் அவள் செயலை ஆராய்வதாக உறுதி கூறினான்! ஆனால் நாவின் உறுதி எங்கே? மன உறுதி எங்கே? இனி ஒதெல்லோ இழந்த அமைதிதான்! அபினி முதலிய மயக்க மருந்துகளாலோ மந்திரத்தாலோ அஃது அமைவதும் அன்று. அவன் எண்ணத்துக்கும் மொழிக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பு அற்றது. உண்ணும்போது அவன் உண்டானும் அல்லன்; உடுக்கும்போது அவன் உடுத்தானும் அல்லன்; துயிலோ அவன் கண்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டது. இனி அவை சென்றடையும் துயில் ஒழியாத்துயில் ஒன்றேயாம். அணிவகுப்பையும் கொடி வகுப்பையும் கண்டு துள்ளிக் குதிக்கும் அவன் உள்ளம், போர்முரசு கேட்டுப் போருக்கு முனைந்து துடிக்கும் அவன் உள்ளம், குருதியாறுகளிடையேயும் கொன்று வீழ்த்தப் பட்டுருளும் யானைகளிடையேயும் கலங்காத உறுதி யுடைய அவனது உள்ளம், இன்று இப்பொய்ம்மைப் புனைவின் முன் அறிவற்று உரையற்றுச் செயலற்றுத் தத்தளித்தது.
அவன் மனம் பித்துக்கொண்டவர் மனம்போல் ஊசலாடியது. ஒருசமயம் டெஸ்டிமோனா உண்மையில் தூயளே என்று எண்ணுவான்; ஒரு சமயம் அவள் கபடியே என்பான்; இன்னொரு சமயம் அவள் எப்படியிருந்தால் என்ன! நான் அவளை அணுகாதிருந்தேனில்லையே என்பான். வேட்டை நாய்களாலும் வேடர்களின் சுழல் வெடிகளாலும் காயமடைந்து விழப்போகும் காட்டு முள்ளம்பன்றி இறுதியாகத் தன் முழுவன்மையையுங் காட்டிச் சீறி விழுவதுபோல் அவன் ஒரு தடவை தன் சினமனைத்தையும் சேர்த்து அயாகோவின் மீதே பாய்ந்து அவன் கழுத்தைப் பற்றி இழுத்து, ‘எனக்குக் கண்கூடான சான்று வேண்டும்; கண்கூடான சான்று வேண்டும்’ என்று கூறி அவனை உலுக்கினான். அதனைச் சரியான தறுவாயாகக் கொண்டு அயாகோ தன்னைப் பொய்யன் என்று சொன்னதற்காகச் சினங் கொண்டவன் போன்று, ‘நானாக என் நன்மைக்காகவா இவ்வளவு உமக்குச் சொன்னது? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன! இதோ, உமக்குக் கண்கூடான சான்றா வேண்டும்; சரி தருகிறேன்! உம் மனைவி கையில் முன் இலந்தைப் பழம் போன்ற புள்ளிகள் உடைய கைக்குட்டை இருந்ததன்றோ? அஃது இப்போது காசியோவிடம் எப்படி வந்தது என்று கேளும்’ என்றான். அத்தகைய ஒரு கைக்குட்டை உண்மையில் தானே அவளுக்கு அளித்தது என்று ஓதெல்லோ ஒத்துக்கொண்டான்.
ஒதெல்லோ: அப்போது அது காசியோவிடம் இருக்கிற தென்று உமக்கு எப்படித் தெரியும்.
அயாகோ: அவன் அதைக்கொண்டு முகந் துடைப்பதை இன்று காலையில் கண்டேன்.
ஒதெல்லோ: சரி, நான் நேரில் ஆராய்கிறேன். நீர் சொல்வது உண்மையாயின், அக் காசியோவை மூன்று நாட்களுள் தூக்கிலிடுவேன். அதன்பின், அந்தக் கொடிய அழகிய நச்சுப் பாம்பைக் கொல்ல உலகில் இல்லாப் புதுவகை தேடுவேன்.
‘சீற்றத்திற்குக் கண்ணில்லை’ என்பர் ஓதெல்லோவிற்குத் தன் மனைவி, தன் நண்பன் இருவர் உயிரையும் ஒழிக்கத்தக்க பெரிய குற்றச்சாட்டிற்கு இந்தச் சிறு கைக்குட்டையே போதிய சான்றாகப்பட்டது. உண்மையில் டெஸ்டிமோனாவுக்கோ, காசியோவுக்கோ இக் கைக்குட்டைக் கதை ஏற்பட்ட வகை தெரியாது. அயகோவின் மனைவி டெஸ்டிமேனாவுக்குத் தோழியாயிருந்தாள். அயாகோ அக் கைக்குட்டையைப் பார்த்து மாதிரி எடுத்துக்கொண்டு தருவதாக அதனை மறைவாய் எடுத்து வரச்செய்து காசியோ கண்ணிற்படும்படி வழியில் போட்டு வைத்தான். அதன் அழகைக் கண்டு வியந்த காசியோ, வினைவலி முன் இழுப்ப, அதனை எடுத்துக் கொண்டதனாலேயே அயாகோ இவ்வளவு புனைவும் செய்ய முடிந்தது.
அன்றிரவு ஓதெல்லோ தன் மனைவியைக் கண்டபோது தனக்குத் தலையிடிப்பதாகவும், எனவே நெற்றியில் அவளது கைக்குட்டையைக் கட்டும்படியும் கூறினான். அவள் அதற்கு ஏதோ ஒரு கைக்குட்டை கொணரவும், ‘இது வேண்டா; நான் கொடுத்த கைக்குட்டையை எடு’ என்றான். அவள் தேடிப்பார்த்துக் ‘காணவில்லை’ என்றாள். உடனே ஓதெல்லோ அக்கைக்குட்டை தன் குடும்பத்தில் வழி வழி வந்த தெய்வத் தன்மை மிக்கதொரு கைக்குட்டை என்றும், அதை இழந்தவர் கணவன் அன்பை இழப்பர் என்றும் அச்சுறுத்தினான். டெஸ்டிமோனா இது கேட்டு உண்மையிலேயே தன் கணவன் அன்பை இழப்போமா என்று அஞ்சினாள்; (இழந்து விட்டோம் என்பதை அடுத்த நொடியே அவள் அறிய இருந்தாள்) அதன்பின் ஓதெல்லோவின் முகமும் மொழியும் செயலும் மாறிவிட்டன. பேய்போல் விழித்தான்; பாம்புபோல் சீறினான்; புலிபோல் பாய்ந்தான். டெஸ்டிமோனா இதன் மாயம் ஒன்றும் அறியாமல் இஃதெல்லாம் காசியோவுக்காகத் தான் பரிந்து பேசுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடிக்கும் நடிப்புப் போலும் என்று நினைத்தாள்.
தன் கணவனது மனத்தில் ஏதேனும் தப்பெண்ணம் இருக்குமோ என்று ஒரு சமயம் அவள் ஐயுறுவாள். ஆனால் அவள் கற்பின் உயர்வே இவ்வையத்தைக் கண்டித்தது. ‘என் கணவனாவது, தப்பெண்ணமாவது! கதிரவனிலும் கறை இருக்குமோ?’ என்று அவள் மனம் கூறிற்று. ‘வெளியுலகில் அவருக்கு ஏதோ மனக்குழப்பம் தரும் செய்தி கிடைத்திருக்கும். அதனாலேயே என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று நினைத்தாள் உலகின் சூதறியாத அவ் ஆரணங்கு. ’மனிதர் என்ன இருந்தாலும் மனிதர் தாமே. வானவர் அல்லரே. மணநாள் அன்றுபோல் என்றும் இருப்பர் என்றெண்ண முடியுமா? அவரது காதலில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்யும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள், உயர்நெறியில் தளராத அந்நங்கை நல்லாள்.
7.டெஸ்டிமேனாவின் முடிவு
அடுத்த தடவை ஓதெல்லோ டெஸ்டிமோனாவைக் கண்டபோது, தெளிவாக அவள் கற்புநெறி தவறி, இன்னொருவனைக் காதலிப்பவள் என்று அவளிடம் கூறி அவளை வைதான். காதலிக்கப்பட்டவன் எவன் என்று மட்டும் கூறவில்லை. இதைக் கேட்டதும் அவள் உள்ளம் பருந்தின் பிடியுட்பட்ட புறாப்போல் துடித்தது. அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் வழிந்தன. நேர்மையான காலங்களில் அதன் ஒரு துளி விழுமுன், அவன் ஒரு நூறு தடவை உயிர்விட்டிருப்பான். இப்போது அவன் மனம் கல்லாய் விட்டது. உணர்ச்சியற்று, ‘இந்த நாள் மட்டுந்தான் உனக்குத் துன்ப நாளென்று நீ அழுகிறாய் போலும்’ என்றான். அவன் குறிப்பைத் தன் உயர் குணத்தின் காரணமாகவே அவள் அறிந்தாளில்லை. “எனக்கு எல்லாத் தீமைகளையும் தாங்க முடியும். வறுமையும் சரி, பிணியும் சரி, அவமதிப்பும் சரி; எனக்கு ஒன்றுமில்லை. ஆயின், உன் வஞ்சம், உன் ஏமாற்று, உன் அடாப்பழி என் நெஞ்சை அடர்த்துவிட்டது. நீ என் வாழ்க்கைக்கொருகளை; நீ அழகால் மயக்கும் நமன்; கண் பார்வை ஒன்றினாலேயே கொல்லும் நச்சுப்பாம்பு” என்று பலவாறாக அவன் பிதற்றிப் புலம்பினான்; ஏசினான்; அழுதான். அவன் தன் கையை நெரித்துக் கறகறவென்று பற்களைக் கடித்தான். விழிகள் அழலெழ உறுத்து நோக்கினான். ‘நீ உலகில் பிறந்த நாள் எத்தகைய கரி நாளோ’ வென்றான். இறுதியில் எதையோ எண்ணி, அவன் சட்டென்று வெளியே சென்றான்.
இவ்வளவு கேட்டும் அவள் கலங்கினாளேயன்றி உரைக்கு உரை பகரவும் இல்லை. என்ன என்றோ, ஏன் என்றோ காரணம் வினாவவும் இல்லை. கணவன் மொழியில் அன்பில்லை என்ற ஒன்றிலேயே அவள் உள்ளம் கல்லாய்ப் போயிற்றுப் போலும். உரைக்கு மாறாக அன்பு தருதல் அவள் செயல். கொடுமைக்கு மாறாக உரைதரல் அவள் அறிந்தது. அன்பிற்கு மாறாக அவள் செய்வதெல்லாம் செயலற்றுச் சாவாமல் சாவது ஒன்றே ‘என்னைக் குறை கூறும்போது நான் குழந்தையாகி விடுகின்றேன். குழந்தையை மென் மொழிகளால் அல்லவோ திருத்தல் வேண்டும்? வன்மொழி கூறினால், அஃது என்ன செய்யும்?’ என்றாள். உடலென்னும் சிறு சிறையுட்பட்ட இப்பேருயிர்க் காரிகை.
கணவனை நெடுநேரம் எதிர்பார்த்திருந்து பின் டெஸ்டிமோனா படுக்கை சென்று கண்ணயர்ந்தாள். வெளியிருளை நிலவாக்கும் காரிருள் செறிந்த கருத்துக்களுடன் கற்புக்கே கனிவு தரும் அக்காரிகையைக் கொல்லும் முடிவுடன், ஒதெல்லோ அவள் படுக்கையறையுள் நுழைந்தான். வானுலகத்து அரம்பையர் அழகும் பின்னிட, மாசு மறுவற்ற சலவைக் கல்லால் கடைந்த பொற்பு மிக்க பதுமைபோன்று அவள் கிடந்ததைக் கண்டு, கொல்ல வந்த அவன் கண்களும் கதறிக் கண்ணீருகுத்தன. புன்முறுவல் பூத்து வாடியது போன்ற அவளது முகத்தில் அந்நேரத்திலும் முத்தமிடாதிருக்க மீண்டும் மீண்டும் முத்தமிடாதிருக்க அவனால் முடியவில்லை. ஆனால், அவன் தன் மனத்தை உளியாக்கிக் கொண்டு வந்திருந்தான். அக் கண்ணீர்களைப் பார்த்து, ‘நீங்களும் அவள் பக்கத்தில் நிற்கும் கொடியவர்கள்’ என்றான். முத்தங்களைப் பார்த்து, ‘நீங்களே அவளுக்குப் பிறந்த கடைசிக் குறளிகள்’ என்றான்.
அவன் கண்ணீரின் ஈரமும் முத்தங்களின் வெம்மையும் அவளைத் துயிலினின்றெழுப்பின. அவனது கலங்கிச் சிவந்த கண்களிலும், துடி துடிக்கும் உதடுகளிலும், முகத்தோற்றத்திலும் அவனது கொடிய கருத்து வெளிப்பட்டது. அடுத்த நொடியில் அவன் உரைகளும் அதனைத் தெளிவுப்படுத்தின. ‘உனது இறுதி வணக்கத்தை இறைவனுக்குத் தெரிவித்துக் கொள். உன் உடலைக் கொன்றாலும் உன் உயிர்நலனைக் கொல்ல நான் விரும்பவில்லை’ என்றான் அவன். அப்போதுதான் (முன் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!) அவள் அவன் சினத்தின் காரணம் கேட்டாள். விளக்கிக் காரணக் காரியங்களை ஆராயும் நேரமா அது! அவன் தொடர்பற்ற பிதற்றுதலிடையே ‘கைக்குட்டை’ ‘காசியோ’ என்ற மொழிகள் மட்டுமே அவள் செவியின் உட்புலனிடையே பட்டன. அதற்குள் ஒதல்லோ, குருதியின் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாது அவளைக் கொல்வேன் என்று கருதிப் படுக்கையிற் கிடந்த தலையணைகளை அவள்மீது அடுக்கி அவற்றாலேயே அவளை அழுத்தித் திணற வைத்து உயிரை மாய்த்தான்.
8.புயலுக்குப் பின்
இதற்குள் அயாகோவின் கையாள் ஒருவனால் காசியோ உடலெங்கும் குத்துண்டு ஒதெல்லோ முன் குற்றுயிருடன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். தன் உள்ளுரைகளைக் காக்க எத்தகைய தீச்செயலுக்கும் அஞ்சாத அயாகோ காசியோவைக் கொல்ல ஏவிய ஆளையும் கொன்றுவிட்டான். ஆனால், அவன் சட்டைப் பையில் கிடைத்த கடிதங்களால் காசியோவின் தூய்மையும் அயாகோவின் பழிச்செயல்களும் காவலருக்கு வெளிப்பட்டன. இவற்றைக்கேட்ட ஓதெல்லோ இடியுண்ட நாகம்போல் அறிவிழந்து விழித்தான். தன் மனைவியின் உயர்வையும் தன் அறியாமையின் தடிப்பையும் உணர்ந்து அவன் உயிர் நிலை மின்னலால் கருகியது போல் கருகிற்று. இனித் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தனக்கு மீளாநரகினும் கொடிதாம் என உணர்ந்து அவன் தன் வாள் மீது வீழ்ந்து மடிந்தான்.
டெஸ்டிமோனாவின் மாசற்ற கற்பையும், ஓதெல்லோவின் உயர்வையும் வெனிஸ் மக்கள் அனைவரும் கண்களில் நீர் சொரியப் போற்றி, அவர்கள் வாழ்க்கையை அழித்த கொடியோனாகிய அயாகோவைத் தூக்கிலிட்டனர்
** அடிக்குறிப்புகள்**
1. Othello 2.Venice
2. Brabantio 4. Desdemona.
3. Cyprus 6.Michael Cassio
4. Iago 8. Roderigo
5. Montano
பன்னிரண்டாம் இரவு(Twelth Night)
** (அன்றேல்) உன் விருப்பம்**
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. ஸெபாஸ்தியன்: மெஸ்ஸலின் நகர் இளைஞன்-வயோலாவின் உடன்பிறந்தான்.
2. ஆர்ஸினோ: இல்லிரியா நாட்டுத் தலைவன்.
3. அந்தோனியோ: ஸெபாஸ்தியனை மீட்ட மீகாமன்-அவன் ஆருயிர் நண்பன்.
4. வேறு மீகாமன்: வயோலாவை மீட்டு உதவியவன்.
5. ஸர் ஆன்ட்ரூ ஏக்சீக்: ஒலிவியாவின் பழங்காதலன் - மேரியாவின் குறும்புக்கு ஆளாகி இறுதியில் அவளை மனைவியாகப் பெற்றவன்.
6. ஸெஸரியோ: வயோலாவின்ஆணுரு ஒலிவியாவிடம் ஆர்சினோவின் காதல் தூதன்.
பெண்டிர்:
1. வயோலா: ஸெபாஸ்தியனின் தங்கை ஆணுருவுடன் மறைவில் ஆர்ஸினோவைக் காதலித்து இறுதியில் அவனை மணந்தவள்-ஆணுருவில் ஸெஸாரியோ.
2. ஒலிவியா: உயர்குடி மங்கை-ஆர்ஸினோ காதலை மறுத்தவள்-வயோலா ஆணுருவில் மயங்கிப் பின் ஸெபாஸ்தியனை மணந்தவள்.
3. மேரியா: பணிப்பெண்-ஸர் ஆண்ட்ரூவைக் குறும்புடன் தூண்டிப் பின் அவனையே மணந்தவள்.
4. வேறு பணிப்பெண்.
** கதைச்சுருக்கம்**
உருவில் ஒருவரை ஒருவர் ஒத்த ஸெபாஸ்தியன், வயோலோ என்ற இரட்டையரான அண்ணன் தங்கையர் கடற்பயணத்தின் போது இல்லிரியா அருகில் கப்பலுடைந்ததனால் ஒருவர் நிலையை ஒருவர் அறியாதவகையில் வேறு வேறு காமன்களால் காப்பாற்றப்பட்டனர்.
வயோலா தன்னைக் காப்பாற்றிய மீகாமன் நல்லுரையால் ஆணுருவில் ஸெஸாரியோ என்ற பெயருடன் இல்லிரியாத் தலைவன் ஆர்ஸினோவிடம் வேலைக்கமர்ந்தாள். ஆர்ஸினோ உயர்குடி மங்கையாகிய ஒலிவியாவைக் காதலித்தும் அவள் அவனைப் பொருட்படுத்தாத நிலையில் வயோலாவைக் காதல் தூதனாக அனுப்பினான். வயோலா மனத்துள் ஆர்ஸினோவைக் காதலித்தாள். ஆனால் அவள் ஆணுருவில் மயங்கி ஒலிவியாவும் காதல் வயப்பட்டாள். போதாக்குறைக்கு இக்காதலைக் கண்டு பழங்காதலனான ஸர் ஆண்ட்ரூ, மேரியா என்ற குறும்புப் பணிப்பெண்ணால் தூண்டப் பெற்று அவளை எதிர்த்தான்.
ஸெபாஸ்தியனைக் காப்பாற்றிய மீகாமனாகிய அந்தோனியோ ஆர்ஸினோவின் உறவினனை எதிர்த்த குற்றத்தால் இல்லிரியாவுக்குள் வரமுடியாதவன். ஆகவே, இல்லிரியாவைக் காணவந்த ஸெபாஸ்தியனிடம் பணப்பையைக் கொடுத்துவிட்டு, நெடுநேரமானதால் தேடவந்தான். வயோலாவை ஸெபாஸ்தியனென்றெண்ணி ஸர் ஆண்ட்ரூவுக் கெதிராக உதவிப் பின் காவலர் கையில் பட்டு, பணப்பையைக் கேட்டான். வயோலா விழிக்க அவனைக் காவலர் கொண்டேகினர்.
இன்னொருபுறம் ஸெபாஸ்தியனை வயோலா என்றெண்ணி உரையாடிய ஒலிவியா மீது ஸெபாஸ்தியன் காதல்கொள்ள, அவர்கள் மணம் செய்துகொண்டனர். பின் அவனைத்
தேடி ஒலிவியா ஆர்ஸினோவிடம் வந்து வயோலாவைக் கணவனென்றழைத்தாள். அதே சமயம் காவலருடன் அந்தோனியாவும் வந்து வயோலாவை ஸெபாஸ்தியனென் றெண்ணித் தன்னை ஏமாற்றியதாகக் கூறினான். சற்று நேரத்தில் ஸெபாஸ்தியன் வரக் குழப்பம் அகன்றது. ஆர்ஸினோ பயனற்ற ஒலிவியா காதலை விடுத்து வயோலாவைக் கடிமணம் செய்துகொண்டான்.
1.உடன்பிறந்தார் பிரிவு
மெஸ்சிலின்¹என்ற இடத்தில் ஸெபாஸ்தியன்²என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயோலா³ என்பவள் தங்கை. இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஒரே உருவமும் தோற்றமும் உடையவர்கள். ஆண் பெண் என்ற முறையில் அவர்கள் நடை உடை முதலியவற்றாலல்லாது அவர்களைப் பிரித்துணரல் அரிது.
அவர்களிருவரும் கடலிற் பயணம் செய்து கொண்டிருக்கையில் இல்லிரியா4 என்ற நாட்டினருகில் வந்து அவர்கள் கப்பல் உடைந்து போயிற்று. பலர் கடலில் மூழ்கி இறந்து போயினர். கப்பல் மீகாமன் சிலரை மட்டுமே படகு மூலம் காப்பாற்ற முடிந்தது. அங்ஙனம் காப்பாற்றப்பட்டவர்களுள் வயோலாவும் ஒருத்தி. ஆனால், ஸெபாஸ்தியன் என்ன நிலையை அடைந்தான் என்பது விளங்கவில்லை. வயோலாவுக்குத் தான் பிழைத்ததால் ஒரு சிறிதும் களிப்பேற்படவில்லை. தன் அண்ணனைப் பற்றிய கவலையே முகத்திற் குடிகொண்டிருந்தது.
அக்கப்பலின் மீகாமன் அருள் நிறைந்த உள்ளமுடையவன். வயோலாவுக்கு அவன் தேறுதல் கூறி, “ஸெபாஸ்தியன் இறந்திருக்க முடியாது. ஒரு பாய்மரத்தைப் பற்றிக்கொண்டு அவன் மிதந்ததை நான் கண்டேன். ஆனால் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிலரைப் படகில் கொண்டுவந்து விட்டு அவனைப் போய்ப் பார்க்குமுன், இருட்டில் அவன் எங்கேயோ மறைந்துவிட்டான். அவன் நீரில் மூழ்கியிருக்க மாட்டான் என்பதை மட்டும் நான் உறுதியாய்ச் சொல்ல முடியும். ஏனெனில் அவன் பற்றியிருந்த பாய்மரம் அங்குக் காணப்படவில்லை” என்றான். அதுகேட்டு வயோலா ஒருவாறு தேறுதலடைந் தனளாயினும், உடன் பிறந்தான் பிரிவால் நேர்ந்த துயரம் மட்டும் மனத்தில் மாறாதிருந்தது.
இதற்கிடையில், இனித் தான் என்ன செய்வது என்ற கவலையும் இன்னொருபுறம் அவளுக்குண்டாயிற்று. மீகாமனிடம் அது பற்றி அவள் உரையாடலாயினள்.
வயோலா: ஐயா, இந்நாட்டின் பெயர் முதலிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
மீகாமன்: நான் இந்நாட்டிலேயே பிறந்தவன். ஆதலால் இதனை நன்கு அறிவேன். இதன் பெயர் இல்லிரியா என்பது. இந்நாட்டை ⁵ஆர்ஸினோ என்பவர் ஆள்கின்றார்.
வயோலா: ஆர்ஸினோ நெடுநாள் மணமாகாதிருந்தவர் என்று என் தந்தை கூற நான் கேட்டிருக்கிறேன். அவர் அரண் மனையில் ஏதேனும் பணிபெற முடியுமோ என்று நான் அறிய விரும்புகிறேன். அவர் இப்போது என்ன நிலையிலிருக்கிறார்?
மீகாமன்: இப்போதும் அதே நிலையிலேதான் இருக்கிறான். அதற்குக் காரணம் 6ஒலிவியா என்ற ஓர் உயர்குல மாதினிடம் அவர் வைத்துள்ள பற்றுதல் ஆகும். அலிவியாவின் தந்தை ஓராண்டிற்கு முன்னதாக இறந்து போனார். அதன்பின் தந்தையிடம் வைத்த பற்றுதலையுஞ் சேர்த்து அவள் தமையனிடம் மிகுந்த அன்பு காட்டினாள். அண்மையில் அவனும் இறந்து போகவே, அவள் ஆற்றொணாத் துயரில் மூழ்கி, அதுமுதல் ஆடவர் முகத்திலேயே விழிக்காது வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கிறாள். ஆர்ஸினோ அவளையன்றி வேறெவளையும் மணப்பதில்லை என உறுதி கொண்டுள்ளான். ஆனால், அவளோ அதற்கு நேர்மாறாக யாரையும் மணப்ப தில்லை என்று கூறிக்கொண்டு, அவனுடைய தூதர்களைக் கண்கொண்டு கூடப் பாராமல் தடைப்படுத்தி வருகிறாள்.
வயோலா: ஓ, அப்படியானால் நான் இந்த ஒலிவியாவிடம் சென்று அவளிடம் பணி ஏற்க முடியுமன்றோ?
மீகாமன்: அங்ஙனம் முடியுமென்று எனக்குத் தோன்ற வில்லை. ஏனெனில், இன்றிருக்கும் நிலையில் ஒலிவியா யாரையும் புதிதாக வரவேற்கவும் மாட்டாள்; நட்புக்கொள்ளவும் மாட்டாள்.
வயோலா: அப்படியானால் நான் முதலில் எண்ணிய வாறாகவே ஆர்ஸினோ அரசர் அரண்மனையிலேயே பணி தேட வேண்டியதுதான்.
மீகாமன்: ஆம், ஆனால் நீயோ சிறுமி; உலகின் சூது அறியாதவள். ஆகவே இப்பெண் உடையில் செல்வதைவிட ஆண் உடையில் செல்வதே பாதுகாப்பாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
வயோலா இவ்வுரையை நல்லுரையாகக் கொண்டு அதன்படியே நடப்பதாக ஒப்புக்கொண்டாள். அதன் பின் அவள் விருப்பப்படியே மீகாமன் அவள் அண்ணனது உடையை ஒத்த ஆணுடைகளை வாங்கி, அவளுக்குக் கொடுத்தான். அதோடு அரண்மனையில் தனக்குத் தெரிந்தவர்கள் வாயிலாக அவளுக்கு அரசனுடைய தோழமைப் பணியையும் தேடிக் கொடுத்தான்.
இப்புதிய ஆணுருவில் வயோலா தனது பெயர் ஸெஸாரியோ7 என்று வைத்துக் கொண்டாள்.
2.காதலின் தன்மறுப்பு
வடிவழகனும் உயர்நடை உடையவனுமாகத் தோன்றிய ஸெஸாரியோ என்ற இவ்வயோலாவிடம் ஆர்ஸினோ அரசன் மிகுந்த மதிப்பும் நட்பும் உடையவனானான். வயோலாவும் இதற்கேற்பத் தன் கடமைகளைச் சரிவரச் சுறுசுறுப்புடன் செய்துவந்தாள். ஆர்ஸினோ அவளிடம் தோழமை பூண்டு அவளிடம் மனந்திறந்து தன் காதல் தன்மையையும், காதல் கதையையும் உரைக்கலானான். அதைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆர்ஸினோவிடம் மதிப்பு மிகுந்தது. இத்தகைய காதலை உதறித் தள்ளும் ஒலிவியா மீது அவளுக்கு ஒரு வகையான வெறுப்பும் ஏற்பட்டது. அவள், அவன் காதல் துயரத்தைத் தணிக்கப் பலவகையான ஆறுதல மொழிகள் கூறினாள். அப்போது அவள், “இத்தகைய தங்கள் காதலை ஒலிவியா ஏற்கவில்லை என்று சொல்வதை நான் நம்பக்கூட வில்லை” என்றாள். இது கேட்டதும் ஆர்ஸினோ மனத்தில் ஓர் எண்ணம் உண்டாயிற்று. “தன் மீது இவ்வளவு நம்பிக்கையுடைய இவ் இளைஞனையே அனுப்பி ஏன் தன் காதலை அவளுக்குத் தெளிவாக்கக் கூடாது” என்று அவன் நினைத்தான். வயோலாவின் நேரிய தோற்றம், இன்சொல் முதலியவை தன்னை வென்றது போலவே ஒலிவியாவின் உறுதியையும் வெல்லக்கூடும் என்று அவனுக்குப்பட்டது.
இப்போது வயோலாவின் மனம் இருதலைப்பட்டு வருந்தியது. ஆர்சினோவின் நேர்மை, உயர்குணம், அவன் காதலின் ஆழம் இவற்றைக் கண்டபின், அவள் தன் உள்ளத்தையே அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள்; ஆனால், அவள் பெண் என்று கூடத் தெரியாமல், ஆண் என்று நினைத்த ஆர்ஸினோ, அவள் காதலை அறியாததுடன் மட்டுமல்லாமல், தன் காதலை மறுக்கும் இன்னொருத்தியிடம் அதனை வளர்க்கும்படி அவளை அனுப்ப எண்ணினான். தன்னையும் அறியாமல் அவள், “அரசே, நீங்கள் ஒலிவியாவைக் காதலிப்பது போலவே தங்களை ஒரு பெண் காதலிப்பதாகவும், நீங்கள் மாறாக அவளைக் காதலிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, அவள் நீங்கள் மறுப்பதை ஏற்றுக்கொண்டு உங்களை மறந்துவிட வேண்டும் என்றுதானே சொல்வீர்கள்? ஒலிவியா இப்போது அப்படித்தானே சொல்கிறாள். அதனை ஏற்று அவளை மறப்பதன்றோ நல்லது?” என்றாள். ஆனால் இவ்வழக்கு ஆர்ஸினோவுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. “நான் ஒலிவியாவைக் காதலிப்பது போல் ஒரு பெண் என்னைக் காதலிப்பது முடியாத காரியம். எனவே, ‘அப்படி வைத்துக் கொள்வோம்’ என்று பேச இடமேயில்லை. இது மறக்கமுடியாத காதல்; எனவே, மறுக்கமுடியாத காதல்” என்றான் அவன்.
வயோலா: அரசே, நீங்கள் அப்படிச் சொல்வதற்கில்லை. என் நடைமுறை அறிவிலேயே…
ஆர்ஸினோ: சரி, சரி அப்படி வழிக்குவா. உன் நடைமுறை அறிவிலேயே நீ காதலை நன்றாய் அறிந்தவன் என்று புலப்பட்டு விட்டது.
வயோலா: ஆம், ஒரு பெண் ஆடவனைக் காதலிக்கும் காதல் எத்தகையது என்பதை நான் நன்றாய் அறிவேன். என் தந்தைக்கு ஒரு புதல்வி உள்ளாள். அவள் ஒருவரை உண்மையாகக் காதலிப்பவள். நான் ஒரு பெண்ணாயிருந்து உங்கள் காதலுக்குச் சரியாக உங்களைக் காதலிப்பதனால் கூட அவளை விட மிகுதியாகக் காதலிக்க முடியாது.
ஆர்ஸினோ: ஆ! நீ வேறு காதற் கதைகள் வைத்திருக் கிறாயா! சரி, அவள் காதல் என்னாயிற்று?
வயோலா: என்னாயிற்று, ஒன்றும் ஆகவில்லை. அவள் தன் காதலை யாரிடமும் வெளியிட்டுக் கூறினாளில்லை. அரும் பினுள்ளிருந்து அதனை அழிக்கும் புழுப்போல அவள் நெஞ்சகத்தே அது கிடந்து, அவள் இளமை நலனை அரித்துத்தின்றது. அவள் பெருமூச்சு விடுவாள்; ஆனால் வாய்விட்டு ஒரு மொழியும் பேசாள். அவள் பொறுமையே உருவாக நின்று துயரமாகிய தெய்வத்திற்குத் தன்னை இரையாக்கினாள்.
ஆர்ஸினோ இப்பேச்சைத் தொடர்ந்து வேறு கேள்வி கேட்குமுன் ஒலிவியாவிடம் தூதாக அனுப்பப்பட்ட ஒருவன் வந்தான். “ஐய, அவளை நேரில் பார்க்கக்கூடவில்லை. தோழி வாயிலாக அவள் தந்த விடை இது: ‘என் தமையன் இறந்து ஏழு ஆண்டு செல்லும்வரை காற்று, வெயில் முதலியவற்றின் முகத்தில் கூட விழிப்பதில்லை என்று நான் நோன்பு கொண்டுள்ளேன். அத்தமையனது நினைவைத் தூண்டிவரும் இவ்வீட்டை அதுவரை எனது கண்ணீரால் கழுவி வர எண்ணமுடையேன்!’ இது அவளது மாறா உறுதியாம்?” என்று அவன் கூறினான்.
இம்மொழிகளைக் கேட்டதும் ஆர்ஸினோ, “ஆ, என்ன பெண்மை! அண்ணனுக்கு இத்தனை அன்பு செலுத்துகின்றவள், மாரன் கணை மட்டும் அவள் நெஞ்சிற் பாய்ந்து நோய் செய்வதாயின், அந்நோய்க்கு மருந்தாய் வருந் தலைவனிடம் எவ்வளவு அன்பு கொள்ள மாட்டாள்!” என ஒலிவியாவைப் புகழ்ந்தான்.
அதன்பின் அவன் வயோலாவைப் பார்த்து, “என் அருமை ஸெஸாரியோ, என் உள்ளத்தின் உட்கிடக்கை முற்றும் ஒளியாது உனக்கு உரைத்துவிட்டேன். ஆகவே, நீ என் நட்பினை ஒரு பொருட்டாகக் கொண்டு ஒலிவியாவினிடம் செல்வாய்; சென்று, அவள் உனக்கு உட்செல்ல இணக்கமளிக்க வில்லையாயினும், விடாப்பிடியாய் இங்கேயே வேரிட்டு நிலைத்து விடுவேன் என்று முரண்டி, என் காதற்பிணிக்கு மருந்து பெற்று வருவாய்” என்றான்.
வயோலா: அரசே! தங்களுக்காக நான் செய்யத் தகாத தொன்றுமில்லை. ஆயினும், இவ்வகையில் நான் செய்யக் கூடியதென்ன? தாங்கள் சொல்வது போலப் பிடிமுரண்டாயிருந்து உட்செல்ல இணக்கமே வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம்; அப்பொழுதுதான் என்ன ஆய்விட்டது?
ஆர்ஸினோ: உன் திறனைப் பற்றி நீ அவ்வளவாக அறியமாட்டாய். இதுவரை என் காதலைத் திறம்பட உன் போன்றோர் எடுத்துக் கூறாத குறைதான் அவள் என் பக்கம் இன்னும் நாடாதது. நீ பொற்பும் இனிமையும் மிக்க தோற்றமுடையாய்! அதோடு, காதலின் உயிர் நாடியை அறிந்து, நயத்துடன் மருந்துதவும் மருத்துவன் போன்றவனாயுந் திகழ்கின்றாய். ஆடவனாகிய என்னைவென்ற நீ பெண்ணாகிய ஒலிவியாவை வெல்வது அருமையன்று என்று நான் அறிவேன்.
வயோலா மனத்திற்குள், “ஆ! ஆடவரைத்தான் நான் வெல்ல விரும்புகின்றேனேயன்றிப் பெண்டிரை வெல்ல விரும்பவில்லையே”என்று நினைத்துக் கொண்டாளாயினும், வெளிப்பட, “என்னாலானவரை அவ் ஒலிவியாவின் கல்மனத்தைக் கரைக்க முயல்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள். ஆயினும் அவள் கால்கள் ஒவ்வோரடியும் முன் செல்லுந்தோறும் இரண்டடி பின் செல்ல வேண்டும் என்று நினைத்தனவென்றே கூறவேண்டும்.
3.மாற்றுருவால் நேர்ந்த மாயக் காதல்
ஆர்ஸினோவிடமிருந்து மீண்டும் இளைஞன் ஒருவன் வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் ஒலிவியா பணிப் பெண்ணைச் சினந்து, “அதை என்னிடம் வந்து சொல்வானேன். ‘அவளுக்கு உடம்புக்குக் குணமில்லை; துயில்விட்டு எழவில்லை; குளிக்கிறாள்’ என்று ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி அனுப்பிவிடுகிறது தானே” என்றாள்.
பணிப்பெண்: நான் சாக்குப் போக்குகள் என்னென்ன வெல்லாம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்லிப் பார்த்தாயிற்று. அம்மணி! அவன் ஒவ்வொன்றுக்கும் நம்மை விடத் திறம்பட வாயடைத்துப் பேசிக்கொண்டு இங்கேயே இருப்பேனென்று காத்திருக்கிறான். அவளுக்கு உடம்பு நலமில்லை என்றால், அதையறிந்து நலஞ்செய்யவே வந்திருக்கிறேன் என்கிறான். துயிலுகிறாள் என்றால், அவளைத் துயிலினின்றும் உணர்த்துவேன் அல்லது துயிலுணரும் வரையிற் காத்திருந்து பார்ப்பேன் என்று இருப்பதாகக் கூறுகிறான். அவள் இன்னும் குளித்து உணவருந்தவில்லை என்றால் அதற்கென்ன, நான் குளித்து உணவருந்தியாயிற்று; ஆதலால் பொறுமையுடன் மெல்லக் குளித்து உண்டபின் பார்த்துக் கொள்வேன் என்கிறான். இனி என்ன சாக்குப் போக்குச் சொல்வதென்று விளங்கவில்லை. அதனாலேதான் உங்களிடம் வந்தேன்.
ஒலிவியா: அப்படியா, பெண்களிடமும் இப்படித் திறங்காட்டும் அந்த மனிதனைச் சற்றுப் பார்க்கவேண்டும்தான். அவனை வரச்சொன்னதாகச் சொல்.
துறக்கவாசல் திறந்துவிட்டது; இனி இறைவியின் அருள் ஒன்றே வேண்டும்.
பெண்மையில் ஓர் ஆண் அழகும், ஆண்மையில் ஒரு பெண்ணழகுந் தோன்ற வயோலா வணங்கிய வடிவுடன் மெல்லென உட்புகுந்தாள்.
வயோலா: ஒளியும் பொலிவும் ஒப்பற்ற அழகுமுடைய நங்கையே! உனக்கு வணக்கம். நான் பேசப்புகு முன் நீதானா இவ்விடம் கோயில் கொண்ட இறைவி என்பதை அறிய விரும்புகிறேன். ஏனெனில், நான் பேச வந்த மொழிகள் வேறெவர் காதிலும் விழத்தகாத பொன்மொழிகள். இதற்குமுன் எவரும் இத்தகைய மொழிகள் கேட்டிரார். இதனை வழுவாது சொல்ல வேண்டுமென்றே திருத்தமுற எழுதிப் பலகால் உருவிட்டுப் படித்து வந்துள்ளேன். ஆதலால் அருள்கூர்ந்து, நான் நாடிவந்த இறைவி நீயே என்பதை வலியுறுத்தக் கோருகிறேன்.
ஒலிவியா: அங்ஙனம் எழுதிப் படித்துப் பேசவருவதற்கு ஈதென்ன நாடக மேடையா? நீர் என்ன நாடகக்காரரா?
வயோலா: நாடகக்காரனல்லேன் ஆயினும், இன்று நடிக்கும் நடிப்பு என்னது அன்றுதான்; நான் என்முன் காண்பது இவ்வீட்டின் இறைவியைத்தானா என்பதைத் தெரிவிக்கும்படி மீண்டும் கோருகிறேன்.
ஒலிவியா: ஆம்; இறைவிதான்.
வயோலா: ஆர்ஸினோவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இறைவிக்கு வணக்கம். இறைவி! நான் வந்த செய்தியைக் கூறுமுன் இன்னொரு நலனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என் போன்றோர் நட்பைத் திறைகொண்ட இறைவனையே திறையாகக் கொண்டது தங்களது திங்கள் முகம்! அஃது எவ்வாறிருக்குமோ என்பதை நான் சற்றுப் பார்க்கலாமா?
வயோலா உட்புகுந்தபொழுதே மாரன் தன் கரும்பு வில்லைக் கையிலெடுத்தான். அவள் பேசத் தொடங்கிய போதே அவன் வில்லை வளைத்துவிட்டான். இம்மொழிகள் அவள் செவியில் விழாமுன் அவனது மலர்க்கணை ஒலிவியாவின் நெஞ்சை ஊடுருவிற்று. அவள் உடனே திங்களின் பரிவட்டம் போன்ற தனது மெல்லிய முகமூடியை ஒதுக்கினாள். திங்களின் பின்புறம் கதிரவன் ஒளிந்துகொண்டால் எப்படியோ, அப்படி அவள் முகம் ஒளிவீசிற்று.
ஒலிவியா: சொல் நயமிக்க செல்வரே! நீர் என் முகத்தைப் பார்க்க விரும்புவதேன்? உம்முடைய தலைவர் உம்மை இம்முகத்தினிடமா தூதாக அனுப்பினார்? சரி, என் முகத்தைப் பற்றிய உமது எண்ணமென்ன?
வயோலா: அதன் அமைப்பு நான்முகன் கைக்கு ஒரு நற்சான்றே. பொன்மையும் செம்மையும் நீலமும் இடையிடை இட்டுக் கலந்த இவ்வொப்பற்ற ஓவியம் மனிதர் கையால் என்றுந் தீட்டுந்தரத்ததன்று. ஆம், என்ன அருமையான அழகு! இத்தகைய அழகை உலகிற்குக் காட்டவந்த நீ அதன் மாதிரியை உலகத்திற் படியவிடாதது எவ்வளவு கொடுமை!
ஒலிவியா: நீர் என்ன தூதரா, கவிஞரா? என் அழகைப் பார்த்துக் குறிப்பெடுத்து வரவா உம் தலைவர் உம்மை அனுப்பினார்? அப்படியானால், உமக்குத் துணை செய்கின்றேன். இதை எழுதிக் கொள்ளும். கொவ்வைப்பழம் போன்ற இதழ்கள் இரண்டு; கதிரொளியோடிய வானொத்த நீலக்கண்களும், அவற்றைக் கவிந்து பொதிந்த இமைகளும் இரண்டிரண்டு; எட்பூவொத்த மூக்கு ஒன்று; இவ்வளவு போதுமா?
வயோலா: உனது தற்பெருமை ஏட்டிலடங்காதது; ஆனால், உன் அழகும் அப்படியே. அதில் விழுந்து என் தலைவர் அழுந்துகிறார். ஓ! அவர் காதல் துயரை நான் அறிவேன்! நீ மட்டும் அவர் காதலுக்கு இணையாகக் காதல் தரமுடியுமாயின், எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆனால், அக்காதலுக்கு இணை ஏற்படல் அரிதினும் அரிது. அழகினுக்கு அரசியாய்விட்ட நீ கூட அக்காதலைத் தாங்குதல், அதற்குத் தகுதியுடையவளாதல், கூடியதன்று. வானின்று பொழியும் மழை, அவர் காதற் கண்ணீர்ப் பெருக்கிற்கு இணையன்று; கடலின் இரைச்சல், அவரது நெஞ்சகத்து ஏற்படும் பேராரவாரத்தினுக்கு ஈடன்று; அவரது பேருயிர்ப்பு, வடவைத் தீயினும் வெம்மையானது.
ஒலிவியா: இத்தகைய கவிதைகளாற் பயனென்ன? உம்முடைய தலைவருக்கு எனது முடிவைத்தான் நான் தெரிவித்துவிட்டேன். அவரிடம் எனக்குக் காதலில்லை. அவர் நற்குணம் உடையவர்; பெருந்தன்மையுடையவர்; தூய இளமைநலம் உடையவர். ஆயினும் அவரிடம் என் மனம் செல்லவில்லை. அவர் வீரர் என்றும், அறிஞர் என்றும், அன்புடையவர் என்றும் நாற்புறத்தாரும் புகழும் புகழை நான் கேளாமலில்லை. ஆனால், என் மனம் அவரை நாடவில்லை! இந்த ஒரே முடிவை நான் இன்னும் எத்தனை தடவை சொல்லவேண்டும்?
வயோலா: நீ எத்தனை தடவைதான் சொல்லேன்! அதனை அவர் ஏற்கமாட்டார். அவர் உன்னிடங் கொண்ட காதலை என் போன்ற எளியோர் கொண்டால், உன் வாயிலில் வேங்கையாய் நிற்பரேயன்றிப் போகமாட்டார் காற்றில் இலைகள் ஆடுந்தோறும் வேங்கைமரம் அகவுவது போல உன் பெயரையே கூறிக்கொண்டிருப்பார். காதற் பாட்டுக்கள் வரைந்து பாடுவர்; காற்றும், மரமும், குன்றும், மேடும் ஒலிவியா, ஒலிவியா என்று ஒன்றுபோலக் கத்தும்படி செய்வர். ஐம்பெரும் பூதங்களுங் கூடி உன்னைத் தம்மீது இரங்கவைக்கும்படி செய்வர்.
ஒலிவியா: நும் போன்றவர் பலவும் செய்யக்கூடியவரே; உமது குடியாதோ?
வயோலா: என் குடி நற்குடியே; நீ காணும் நிலையினும் உயரியதே; நான் ஒரு நன்மகன்.
ஒலிவியா: அப்படியா, நல்லது; உம் தலைவரிடம் போய் என் முடிவை வழுவறக் கூறி, ‘அவள் உம்மைக் காதலிக்க மாட்டாள்’ என்று தெரிவித்துவிடும். ‘இனி இப்பக்கம் ஆள் அனுப்ப வேண்டா’ என்றும் உறுதியாய்க் கூறிவிடும்… ஆயினும் நீர்-நீர் இன்னொரு தடவை வந்து, வேண்டுமானால் அவர் நிலைமையை அறிவிக்கலாம்.
வயோலா, இனி நிற்பது பயனற்றதெனக் கருதித் திரும்பலானாள். ஆனால், ஒலிவியாவுக்கு அவன் போவது தன் உயிர் போவது போன்றிருந்தது. உள்ளே ததும்பி நின்ற காதலால் தூண்டப் பெற்ற குறிப்புடன், அவள் ஆர்ஸினோவுக்கு மறுப்புக் கூறும் மொழிகளோடு அவளுக்கு அழைப்பும் மறைவாகத் தந்தாள்.
4.மாரன் விளையாட்டுகள்
அவன் போனபின் ஒலிவியா மீண்டும் மீண்டும் “என் குடி நற்குடியே; நீ காணும் நிலையினும் உயரியதே; நான் ஒரு நன்மகன்” என்ற மொழிகளைத் தனக்குள் சொல்லிச் சொல்லி நினைவில் ஆழ்ந்துவிடலானாள். திடீரெனச் சில சமயம், “ஆம், அவர் உயர் குடியினர் என்பதற்கு ஐயமிருக்க முடியாது. அவர் பேச்சு, அவர் தோற்றம், அவர் சாயல், அவர் நடை, அவர் செயல் ஆகிய யாவும் அவர் ஒரு நன்மகனே என்பதை எடுத்துக் காட்டுகின்றன” என்பாள். ‘இந்த அரசர் என்னைக் காதலிப்பதில் எத்தனை யிலொரு பங்கேனும் இவர் என்னைக் காதலிக்கக்கூடாதா’ என்பாள். சில சமயம் ‘ஆ! அவர் நிலைமையை ஆய்ந்தோய்ந்து பாராது இப்படிக் காதல் வெள்ளத்துள் குதித்து விட்டேனே’ என்று நினைப்பாள். ஆனால், அப்படியும் இப்படியும் அலையும் அவள் உள்ள நினைவுகள் அனைத்தும் ‘ஸெஸாரியோ’ என்ற வயோலாவின் ஆண் உருவைச் சுற்றியே வட்டமிட்டன.
வழியில்லா இடத்தும் காதல் வழி செய்யும் இயல்பினதன்றோ? எனவே, அவள் பொறுமையிழந்தாள். பெண்களுக்கியற்கையான நாணம் துறந்து, தனக்கும் தான் கருதிய இளைஞனுக்கும் உள்ள உயர்வு தாழ்வையும் பொருட்படுத்தாது, நேரடியாக ஸெஸாரியோவுக்குத் தன் காதலை அறிவிக்கத் துணிந்தாள். அதன்படி ஒரு பணிப்பெண்ணிடம் ஒரு வைரக் கணையாழியைக் கொடுத்து, ‘இஃது ஆர்ஸினோவுடையது; இப்போது வந்த இளைஞர் இதனை மறைவாக இங்கே போட்டுவிட்டுப் போயிருக்கிறார். ’இத்தகைய கைத்திறன் இங்கே வேண்டா; இதனை உம் தலைவருக்கே கொடுத்து விடும்’ என்று சொல்லி இதனை அவரிடமே கொடுத்துவிடு’ என்று கூறி அனுப்பினாள்.
இக்கணையாழி உண்மையில் ஆர்ஸினோ அனுப்பிய தன்று. ஒலிவியாவினுடையதே. பணிப்பெண்ணுக்குத் தெரியாதபடி அவள் இதன்மூலம் தன் காதலை வயோலாவுக்குக் குறிப்பாக அறிவித்ததேயன்றி வேறன்று. தான் விடை கொள்ளும்போதே ஒலிவியாவின் உள்ள நிலையை உன்னிப்பாய் அறிந்த வயோலாவுக்கு இப்போது அவ்வெண்ணம் உறுதியா யிற்று. அந்தோ! என் மாற்றுருவால் விளைந்த தீவினைகள்தாம் என்னே! ஒருபுறம் ஆணுருவில் என் காதலை ஆர்ஸினோ அறியவில்லை. இன்னொரு புறம் அவ்வுருவை உண்மை என்று மயங்கி ஏழை ஒலிவியா இம்மாய உருமீது காதல் கொண்டு விட்டாள்! எனக்காவது ஒருபோக்கு உண்டு. பெண்ணைக் காதலித்த பெண்ணே, உன்நிலை யாதோ? என அவள் எண்ணமிடலானாள்.
ஆர்ஸினோ ஒலிவியாவின் மொழிகேட்டு மனம் உளைந்தான்; ஆனால், காதலால் கனிவுற்ற உள்ளம் முறிவு பெறாது, பன்னிப் பன்னி மீண்டும் வயோலாவை அவளிடம் அனுப்பவே எண்ணங் கொண்டது. அரசர்க்குரிய போரும் வேட்டையும் நீத்து அவன் ஒலிவியாவின் பெயரிலும், காதற்பாட்டுக்களிலுமே பொழுதைப் போக்கி வந்தான். பாணர் அவன் பக்கமிருந்து ஓயாது யாழ் மீட்டி அத்தகைய பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடி அரசனைச் சுற்றிலும் காதற் புகையும், துயரப் புகையும் பரப்பி வந்தனர்.
** பாட்டு**
1.வருதி, வருதி, மறலி! நீ
வந்து பைம்பணை ஏற்றியே
அரிதின் எனைக்கொ டேகுவாய்!
அணங்கி னாலுளம் நைந்துளேன்;
விரிது கில்கவித் தோலையும்
வேய்ந்திடாய்! எரி காய்ந்திடாய்!
நரிகள் சூழ்சுடு காடென்போல்
நயந்து ளார்எவர்? தோய்ந்திடாய்!
2.மலர்கள் நறிய மலர்களை
வந்தென் பாடையில் தூவலீர்
பலரும் நண்பர் என்னவே
பண்பின் எலும்பு பொறுக்கலீர்
கலந்து நூறுபேர் அழல்
ருதிலேன், ஆ, கருதிலேன்!
மெலிந்த காத லார்கணீர்
விழைந்திலேன்! ஆ, விழைந்திலேன்.
காதலாலுடைந்த உள்ளத்தின் நிலைமையை எடுத்துரைக்கும் துயர்மிக்க இவ்வுருக்கமான பாடல் வயோலாவின் உளநிலைக்கும் ஒத்ததாகவே இருந்தது. அதன் துயர் அவள் உள்ளத்திற் புகுந்து முகம் வழிய வெளிப்படக் கண்ட ஆர்ஸினோ, “என் அரிய ஸெஸாரியோ, நீ பிறர் காதலையன்றி நேரடியாகவே காதலை உணர்ந்தவனல்லையோ?” என்றான்.
வயோலா: மன்னிக்கவும் அரசே! அமிழ்தினும் இனிதாய் நஞ்சுபோல் கெடுக்கும் அக்கனியின் சுவையை நானும் சற்று அறிந்துள்ளேன்.
ஆர்ஸினோ: நீ காதலித்த பெண் எப்படிப்பட்டவள்? அவள் ஆண்டு எவ்வளவு இருக்கும்?
வயோலா: அவள் தங்கள் உயரம், தங்கள் சாயலாகவே இருப்பாள். அவள் ஆண்டும் தங்கள் அளவே இருக்கும்.
வயோலாவின் உருவிற் கரந்திருந்த உள்ளுறை உண்மையை அறியாத ஆர்ஸினோ இதுகேட்டு, ‘இச்சிறிய இளைஞ னெங்கே, என்னளவு வளர்ந்த மாதெங்கே - என்னளவு ஆண்டில் ஒரு மாது பேரிளம் பெண்ணாக அன்றோ இருப்பாள்’ என எண்ணங்கொண்டு வியப்பு ஒருபுறமும், நகைப்பு ஒருபுறமுங் கொண்டான்.
தான் ஆர்ஸினோ போன்ற பெண்ணைக் காதலித்ததாக வயோலா கூறியபோது, அவள் உண்மையில் மனத்துக் கொண்டது தான் பெண், தான் காதலித்த ஆடவன் ஆர்ஸினோ என்பதேயாம்.
ஒலிவியா வயோலா வரவை எதிர்பார்ப்பதை அவள் பணிப்பெண்களும் பணியாட்களும் எளிதில் அறிந்து கொண்டனர். ஆகவே, அவள் மறுமுறை வந்தபோது அவர்கள் அவளைத் தடையின்றி வரவேற்று உள் அனுப்பினர். ஆனால், வயோலா ஆர்ஸினோவின் பேச்செடுத்ததும் ஒலிவியா அவள் பேச்சை இடைமறித்து, “அவர் காதலுக்காகப் பரிந்து பேசுவதில் பயனில்லை என்றுதான் முன்னமே கூறிவிட்டேனே. அதை விடுத்து நான் கனவு கண்டுகொண்டிருக்கும் காதலின் பேச்சையெடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று நயந்து கூறினாள். வயோலா அக்குறிப்பையறிந்தும் அறியாதவள் போலிருக்கவே அவள் நாண் துறந்து நேரடியாகவே வயோலாவின் காதலை வேண்டி, அவள் நாடியைத் தாங்கலானாள். இதற்கு இன்னும் இடங்கொடுத்தால் தன் நிலை கெட்டுவிடும் என்று கண்டு வயோலா அங்கே நின்றும் விரைந்து வெளியேறத் தொடங்கினாள்.
ஒலிவியாவின் பழங்காதலருள் ஸர் ஆன்ட்ரூ ஏக்ச்சீக் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் உயர்குடியுட் பிறந்தவனாயினும் அறிவற்றவன்; கோழை; வாயாடி; இவ்வளவு போதாமல் தற்பெருமை வேறு. அவன் உண்மையில் அருவருக்கத்தக்க தோற்றம் உடையவனாயினும் பெண்கள் பலர் தன்னை நினைத்தேங்குவதாக நினைத்துக் களித்துக்கொள்பவன். ஒலிவியாவின் பணிப் பெண்களுள் நகைத்திறனும், அறிவு நுட்பமும் உடைய மேரியா என்பவள் அவனைப் பலவகையிலும் எள்ளி நகையாடுவாள். ஸெஸாரியோ ஒலிவியாவின் காதலைப் பெற வந்துள்ளான் என்று அவனிடம் அவள் கூறி அவனை ஸெஸாரியோவுடன் போர் செய்யும்படி தூண்டினாள். அவன் கோழையானதால் போர் செய்ய அஞ்சினான். மேரியாவே விடாமல் அவனைக் கிண்டித் தள்ளிவிட அவன் வேண்டா வெறுப்பாய் வயோலாவிடம் போருக்கு வந்தான். வாளையே காணாத பெண்ணாகிய வயோலாவும் அவனது இயல்பையறியாமல் வலைப்பட்ட மான்போல் மருள மருள விழித்தாள்.
5.கலங்கிய நீர்
அச்சமயம் எங்கிருந்தோ ஒரு வீரன் வந்து அவளுக்குத் துணையாக நின்று ஸர் ஆண்ட்ரூவைத் துரத்தினான். வயோலா, எதிர்பாராத வகையில் இறைவன் அருளே வந்ததுபோல் வந்த அவனுக்கு நன்றி கூறினாள். ஆனால், அங்ஙனம் கூறி முடிப்பதற்குள் அரசன் ஆட்கள் அவனைப் பிடித்துக்கொண்டு, “என்ன ஓடப் பார்க்கிறாய்; இத்தனை நாள் தப்பித் திரிந்தவன் இன்று அகப்பட்டாயா?” என்று கட்டிக்கொண்டு போகத் தொடங்கினர். அப்போது அவன் வயோலாவை நன்கறிந்தவன் போல அவளை நோக்கி, “இவ்வளவு தொல்லையும் உன் பொருட்டாக ஏற்பட்டதே சரி, இனிச் செய்ய வேண்டியதைப் பார்ப்போம். நான் திரும்பி வாங்கும் எண்ணமில்லாமலேயே உனக்கெனக் கொடுத்த பணப்பையை இப்போது என் நிலைமையில் கேட்கவேண்டியவனாய் இருக்கிறேன். அருள்கூர்ந்து அதனைத் தந்துதவுவாய்” என்றான்.
வயோலா அவனை முன்பின் தெரியாதவளானபடியால், ஒன்றுந் தோன்றாது விழித்தாள். அவன் செய்த உதவிக்கு நன்றியுடையவளாயினும், அவனையோ அவன் பணப்பையையோ தான் அறிந்தவள் அல்லளென அவள் மறுத்தாள். அவன் அதுகேட்டு வெகுளி நகைநகைத்துக் காவலரைப் பார்த்து, அவளைச் சுட்டிக்காட்டி, “ஆ, உலகம் இருந்தவாறு காணுங்கள். இதோ இச்சிறுவனை இறப்பிலிருந்து மீட்டவன் நான். போதாக் குறைக்குப் பிள்ளை போல் நடத்தி என் பணப்பையை உரிமையுடன் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பாழும் கவலையினாலே உயிரையும் பொருட்படுத்தாது இந்நகர் வந்து உங்கள் கையில் சிக்கினேன். இத்தகைய நன்றியின்மையைப் பார்த்தபிறகு எனக்குச் சிறையைப் பற்றியோ தூக்கைப் பற்றியோ கூடக் கவலையில்லை. இத்தகைய பொய்ம்மை வாழும் உலகிலிருந்து விடுபட வேண்டியதே” என்று வெறுத்துப் பேசினான். கடைசியாக அவன் காவலருடன் செல்கையில் அவள் பக்கமாகப் பார்த்து, “நன்றி கெட்ட ஸெபாஸ்தியன்! என்னை விற்று நீயாவது நன்மை அடைக” என்று கூறிவிட்டுச் சென்றான்.
ஸெபாஸ்தியன் என்றது வயோலாவின் அண்ணன் பெயர் என்று மேலே கூறியுள்ளோம். வீரன் தன்னை அப்பெயர் கொண்டு அழைத்தவுடன், தன்னைத் தன் அண்ணனாகவே நினைத்திருக்கலாம் என்று வயோலா கண்டாள். எனவே, அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்றறிந்து கரைகாணா மகிழ்ச்சியுடன் அவள் அரண்மனையடைந்தாள்.
வயோலா நினைத்தது உண்மையே. அவ்வீரன் உண்மையில் அந்தோனியா என்னும் ஒரு மீகாமனேயாவன். இக்கதைத் தொடக்கத்திற் கூறப்பட்டபடி கப்பலுடைந்தபின் பாய்மரத்தைப் பற்றியிருந்த ஸெபாஸ்தியன் இம்மீகாமனால் காப்பாற்றப்பட்டுப் பிள்ளை போல நடத்தப்பட்டான். ஸெபாஸ்தியன், இல்லிரியா பக்கம் அன்று வந்தபோது அந்நாட்டைப் பார்க்க விரும்பினான். ஆனால், மீகாமன் அந்நாட்டில் முன் குற்றவாளியாக நாடு கடத்தப்பட்டவன். ஆதலால் தான் உள்ளே வராது ஸெபாஸ்தியனிடம் வேண்டிய பொருள்கள் வாங்கும்படி தன் பணப்பையைக் கொடுத்தனுப்பினான். பின் அவன் வரத் தாமதிக்கவே கவலை கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வருகையில், ஸர் ஆண்ட்ரூவுடன் சண்டைக்கு அஞ்சிநின்ற ஆணுடையுடுத்த வயோலாவை ஸெபாஸ்தியன் என்று கருதி, அவளைக் காப்பாற்றினான். அப்போதுதான் அரசன் காவலர் அவனை அடையாளங் கண்டு சிறைப் படுத்தியது.
அதேசமயம் வயோலாவின் அண்ணனாகிய ஸெபாஸ்தியன் நகரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு ஒலிவியாவின் வீட்டுப் பக்கம் வந்தான். அப்போது ஸர் ஆன்ட்ரூ அவனைக் கண்டு முன் அந்தோனியாவால் பாதுகாக்கப்பட்டுப் பிழைத்த வயோலாவும் அவனும் ஒருவரே என்று நினைத்து ஓங்கி அடிக்கப் போனான். உண்மையிலேயே ஆடவனும் வீரனுமான ஸெபாஸ்தியன் அப்பேடியை நொடியில் அடக்கித் தண்டித்தான்.
இச்சமயம் சண்டையின் அரவங்கேட்டு ஒலிவியா வெளியே வந்தாள். அவள் ஸர் ஆன்ட்ரூவைச் சினந்து எச்சரித்தபின், வெற்றிக்கொண்டு விளங்கிய ஸெபாஸ்தியனை மெச்சி உள் அழைத்தாள். ஸர் ஆன்ட்ரூவின் பூசல் எப்படியோ அப்படியே ஒலிவியாவின் பாராட்டும் அவனுக்கு வியப்பாயிருந்தது. ஆயினும் ஒலிவியாவின் அழகிலீடுபட்டுக் காதலித்துவிட்ட ஸெபாஸ்தியன் அவளுடன் சென்று அவள் காதலை ஏற்று மகிழ்ந்தான். ஒலிவியாவும் சற்று முன் தன்னை வெறுத்துச் சென்ற தன் தலைவன் விருப்புடன் தன்னை ஏற்றவகை தெரியாவிடினும், அதனை இறையருளாக நினைத்து அவனுடன் அளவளாவினாள். அவள் ஏவலால் நொடிக்குள் ஓர் அந்தணன் வந்து அவர்கள் மணவினையையும் முடித்து விட்டான். ஸெபாஸ்தியனுக்கு மட்டும் அவள் முன்பின் அறியாமல் தன்னைக் காதலித்தது நோக்க அவள் மூளைக் கோளாறுடையவளாயிருப்பாளா என்ற ஓர் ஐயம் இருந்தது.
அந்தோனியா அரசன் முன்கொண்டு நிறுத்தப்பட்டடான். அப்போது வயோலா அரசனுடன் நின்றிருந்தாள். அந்தோனியா அவளைப் பின்னும் ஸெபாஸ்தியானாகவே கருதி அரசனிடம் அவளைச் சுட்டிக்காட்டி, “என் பிழையை நான் ஏற்றுத் தண்டனை பெறுவதில் ஒன்றுந் தடையில்லை; ஆனால், தங்கள் பக்கம் நிற்கின்றானே அந்த இளைஞன், நன்றிகொன்றவன்; மூன்று திங்களாக என்னுடன் இருந்துவிட்டு இன்று என்னை அறியேன் என்று மறுக்கிறான்; இதன் புதுமையைப் பாருங்கள்” என்றான். அரசன் சிரித்து, “அப்பனே, நீ சொல்வது எப்படிப் பொருந்தும்? இவன் மூன்று திங்களாக என்னுடனேயே இருக்கிறானே” என்றான்.
இதே சமயத்தில் ‘வெயிலும் காற்றும் என் முகத்தில் விழிக்க மாட்டா’ என்றிருந்த ஒலிவியா அரனை நோக்கி வந்தாள். கடவுளே நேரில் வந்ததைக் கண்ட அடியவர் போல் அரசன் விதிர்விதிர்ப்புடன், “இஃதென்ன புதுமை! உன் வரவு என் நல்வினை” என்று வரவேற்றான். ஆனால், அவள் அம்மொழி களைச் செவியில் வாங்காமல் அந்தோனியாவைப் போலவே வயோலாவை முறைக்க முறைக்கப் பார்த்துக் கொண்டு அரசனிடம், “இதோ நிற்குங் கள்வர் என் உள்ளத்தையும் உயிரையுங் கைக்கொண்டு என்னைத் தனியே புறக்கணித்துவிட்டு, இங்கே உங்களுடன் வந்திருக்கிறார்” என்றாள். தன் தோழனும் பணியாளனுமான ஸெஸாரியோ ஒலிவியாவிடம் காதல் தூதாகப் போய்த் தானே அக்காதலை அடைந்து வந்திருக்கிறான் என்று நினைத்து அரசன் அழலெழவெகுண்டு, “இழி தகைமையையுடைய சிறுவனே! உன்னை எப்பாடு படுத்துகிறேன் பார்” என்று பிடித்திழுத்தான்.
வயோலா அந்நேரம், “ஐய, தங்கள் மன அமைதிக்கு என் உயிர் உதவுமாயின் தட்டின்றி எடுத்துக்கொள்க; தங்களதே என் உயிர்” என்று காதலின் பெருமிதத் தன்மை தோன்றக் கூறினாள். ஆனால் ஒலிவியா, “என் காதலனை-என் உயிரை-ஊறுபட விடேன். என்னையே முதலில் கொல்க, அரசே!” என்று இடையே வந்து நின்று அரசனைத் தடுத்தாள். அதோடு அவள், “இவர் என் கணவர் அந்தணர் சான்றாக இவர் என்னை மணந்தவரே -யாயினும் எக்காரணத்தினாலோ அடிக்கடி வெறுத்துச் சொல்கிறார்” என்றாள்.
இச்சமயம் எல்லாரும் வியக்கும் செய்தி ஒன்று நிகழ்ந்தது. ஒலிவியாவை விட்டுச் சற்று வெளியே போயிருந்த ஸெபாஸ்தியன் திரும்பி வந்து, அவளைக் காணாமல் பின்தொடர்ந்து அரசன் முன் வந்தான். வந்து அவளை அங்கே காணவும், அவளை வெளிப்படையாக மனைவி என்ற உரிமையுடன் அழைத்தான். அவன் எல்லாவகையிலும் ஆணுடையுடுத்த வயோலாவைப் போலவே இருந்ததனால், அவ்விருவருள் ‘யார் தன் கணவர்?’ என அறியாது ஒலிவியா திகைத்தாள். அரசனும் ‘யார் தன் தோழன்?’ என அறியாதவன் ஆனான். ஸெபாஸ்தியனும் ஆணுடையில் வயோலாவை உணரவில்லை. ஆனால், வயோலாவுக்கு மட்டும், ‘இவன் தன் அண்ணனே!’ என்பது தெளிவாயிற்று. உடனே பேராவலுடன் அவனருகில் ஓடி அவனைக் கட்டிக்கொண்டு, “அண்ணா! நான் வயோலா, தங்கை வயோலா, ’இவ்வளவு நாள், நீ வருவையோ, இறந்தனையோ என்று இருந்தேன்” என்று வாய்விட்டுக் கூறி நின்றாள். அவனும், “ஆ, வயோலா! நானும் உன்னை இழந்து விட்டதாகவே நினைத்தேன்; ஆ, ஆ! திரும்பவும் பெற்றேன்” என்று மகிழ்ந்து ஆரவாரித்துரைத்தான்.
ஒலிவியாவுக்கும் அரசனுக்கும் இப்போது உண்மை விளங்கத் தொடங்கிற்று. தன்னிடம் தூதனாக வந்தவன் ஆணல்லன்; பெண்ணேயென்றறிந்து ஒலிவியா முதலில் வெட்கமுற்றனள். ஆயினும், உண்மையில் அவளே போன்ற ஸெபாஸ்தியனை அடைந்ததனால் நிறைவெய்தினாள். அரசனுக்கு இப்போது, முன் ஆணுருவில் வயோலா கூறிய அவள் காதலின் உண்மைத்தன்மை தெரியவே, கானல் நீர்போல ஒலிவியாவின் காதல் மறைந்து வயோலாவின் உயரிய காதலையே பெறவேண்டுமென்னும் விருப்பு ஏற்பட்டது. வயோலாவுக்கு அது பாலில் பழம் நழுவியதெனப் பெருமகிழ்வு அளித்தது. ஸெபாஸ்தியனுக்கும் ஒலிவியாவுக்கும் மணம் புரிவித்த அதே அந்தணன் அரசனுக்கும் வயோலாவுக்கும் மணவினை நிகழ்த்தினான்.
மேரியாகூட அவளது ஏளனத்திற்கு ஆளாயிருந்த ஸர் ஆண்ட்ரூவை மணந்துகொண்டாள்.
** அடிக்குறிப்புகள்**
1. Messaline 2. Sebastine
2. Viola 4. Illyria
3. Orsino 6. Olivia
7.Cesario.
சிறுபிழையால் நேர்ந்த பெருந்தொல்லை(Much Ado About Nothing)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. லியோனதோ: மெஸ்ஸினாத் தலைவன்-ஹீரோ தந்தை-பீயாத்ரிஸ் மாமன்.
2. கிளாடியோ: பிளாரென்ஸ் நகரத்துப் பெருமகள்-ஹீரோவின் காதலன்.
3. பெனிடிக்: பாதுவா நகரத்துப் பெருமகன். பீயாத்திரிஸை வெறுத்தெதிர்த்துப் பின் காதலித்தவன்.
4. தான்பெத்ரோ: ஆரகன் இளவரசன்-கிளாடியோ. பெனிடிக் ஆகிய இருவருக்கும் நண்பன்.
5. தான்ஜான்: தான் பெத்ரோவின் மாற்றாந்தாய் மகன்-அவன்மீதும் அவன் நண்பன் மீதும் பொறாமை கொண்டவன்.
6. பொராகியோ: ஹீரோவின் தோழியாகிய மார்கரட்டின் காதலன்-தான்ஜானின் நண்பனாதலின் அவன் தூண்டுதலால் ஹீரோமீது பழி சுமத்தியவன்.
பெண்டிர்:
1. ஹீரோ: லியோனதோவின் மகள்-கிளாடியோ காதலி.
2. பீயாத்ரிஸ்: லியோனதோவின் மருமகள்-முதலில் பெனிடிக்குடன் பூசலிட்டுப் பின் நண்பர் சூழ்ச்சியால் அவன் காதலியானவள்.
3. உர்ஸுலா: ஹீரோவின் தோழியர்.
4. மார்கரட்:
** கதைச் சுருக்கம்**
பிளாரென்ஸ் பெருமகனான கிளாடியோவும், பாதுவாப் பெருமகனான பெனிடிக்கும் தன் நண்பனான ஆரகன் இளவரசன் தான்பெத்ரோவுடன் போருக்குச் சென்று வெற்றியுடன் மீளும் வழியில் மெஸ்ஸினாத் தலைவன் லியோனதோவின் அரண்மனையில் தங்கினர். கிளாடியோ லியோனதோவின் மகள் ஹீரோவைக் காதலித்தான். ஆனால் பெனிடிக்கும் லியோனதோ மருமகள் பீயாத்ரிஸும் இதற்கு நேர்மாறாகப் பூசலிடவே, நண்பரனைவரும் லியோனதோவும் சேர்ந்து அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது காதல் கொண்டு தவிப்பதாக மற்றவர்க்குத் தெரியக் கூறிச் சூழ்ச்சியால் அவர்களிடையே காதல் உண்டு பண்ணினார்.
இதற்குள் தான்பெத்ரோவினிடமும் நண்பரிடமும் பொறாமை கொண்ட அவன் மாற்றாந்தாய் மகன் தான்ஜான் தன் நண்பனும் ஹீரோவின் தோழியாகிய மார்கரட்டின் காதலனுமான பொராகியோவை ஏவி ஹீரோமீது பழிசுமத்தி அவனை அவள் காதலன் கிளாடியோ மணவினையின் போது வெறுத்து அவமதித்தொதுக்கச் செய்தான். தோழி நிலையைத் திருத்தியன்றித் தான் மணப்பதில்லை என்று பீயாத்ரிஸ் கூறிவிட்டாள். லியோனதோ ஹீரோ இறந்ததாகக் கூறி அவள் மானங்காத்தான்.
அதற்குள் ஒரு வழக்கறிஞர் முன் தான்ஜான் தன் வஞ்சகச் செயல் கூறி வீம்படித்ததால் ஹீரோவின் தூய்மை விளங்கவே, கிளாடியோ கழிவிரக்கங் கொண்டு துடித்தான். அப்போது லியோனதோ தேற்றி அவள் போன்ற அவள் தங்கையை மணக்கும்படி வேண்டிக்கொண்டு உண்மையில் ஹீரோவையே மணக்கச் செய்தான். அதனையறிந்த கிளாடியோ மகிழ்ந்தான். பெனிடிக்கும் பீயாத்ரிஸை மணந்து மகிழ்ந்தான்.
1.காதல் ஒருபுறம்; பூசல் ஒருபுறம்
¹லியானதோ என்பவன் ²மெஸ்ஸினா நகரத்து அரசியல் தலைவன். அவனுக்கு ஒரு மகளும் ஒரு மருமகளும் இருந்தனர். மகள் பெயர் ³ஹீரோ; மருமகள் பெயர் ⁴பீயாத்ரிஸ் என்பது.
இவர்களுள் ஹீரோ அடக்கமான பேச்சு உடையவள். பீயாத்ரிஸோ கலகலத்த பேச்சும் பிறரை எளிதில் எள்ளி நகையாடும் குணமும் உடையவள்.
அந்நாட்டரசனுக்குப் போரில் உதவி செய்யச் சென்ற வீர இளைஞர் சிலர் வழியில் மெஸ்ஸினாவில் தங்கினர். அவர்களுள், ⁵ஆரகன் இளவரசனான தான்பெத்ரோ தலைமையானவன். அவனுடன் வந்தவர்கள் ⁶பிளாரன்ஸ் நகரத்துப் பெருமகனான ⁷கிளாடியோவும் ⁸பாதுவா நகரத்துப் பெருமகனான ⁹பெனிடிக்கும் ஆவர்.
போரிலேயே அப்போது அவர்கள் கவனம் இருந்த படியால், லியோன தோவின் மாளிகையில் இருந்த பெண்களை அவர்கள் அவ்வளவாகப் பார்க்கவில்லை. ஆனால், போரில் அருஞ்செயல் புரிந்து புகழும் வெற்றியும் பூண்டு திரும்பு வந்தபோது அவர்கள் கண்ணுக்கு அப்பெண்கள் அரமங்கைய ராகத் திகழ்ந்தனர்.
கிளாடியோ ஹீரோவைக் கண்ணுற்றது முதல் மதிமயக்க முற்றவன் ஆனான். அவள் அழகில் ஈடுபட்ட அவன் கண்கள் தேனுண்ட வண்டுகள் போல் அவளை விட்டகலாமற் சுற்றின. அவளுடைய அடக்க ஒடுக்கமான போக்கும், நடையும், நயமிக்க மொழிகளும் அவன் உள்ளத்தை அரித்தன. அவன் கண்கள் தன் பக்கம் நாடுவதைக் குறிப்பாக அறிந்த ஹீரோவின் உள்ளமும் அவள் இணக்கத்தை நாடாமலே அவன் பக்கம் ஒன்றிவிட்டது. இருவர் மனநிலைகளையும் உய்த்துணர்ந்து கொண்ட இளவரசன் தலைவனுடன் இது பற்றிக் கலந்து பேசினான். ஹீரோவுக்குக் கிளாடியோ ஏற்ற காதலனே என்று எண்ணி அவர்களை மணவினையால் இணைக்கத் தலைவனும் ஒப்புக்கொண்டான். காதலருக்கும் இது தனித்தனியே நண்பர்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுகேட்டுத் தம்மையே மறந்து மகிழ்வுற்றனர்.
ஹீரோவும் கிளாடியோவும் இங்ஙனம் மனமொத்து ஒன்றுபட்டதற்கு நேர்மாறாகப் பெனிடிக்கும் பீயாத்ரிஸும் ஓயாது கலவரமிடுவாராயினர். பெனிடிக்கும் பீயாத்ரிஸுக் கிணையான வாயடியும் நகைத்திறனும் உடையவனாயினும் அவன், கிளாடியோவும் தலைவனும் பேசுவதையே கவனித்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். தன்னிடம் ஒருவரும் பேசாதது கண்டு, பீயாத்ரிஸ் சினங் கொண்டாள். பிறரிடங் கடகடவென்று பேசிக் கொண்டிருக்கும் பெனிடிக்கைக் கண்டதும் தன் நகைத்திறனுக்கும் வாயடிக்கும் ஏற்ற பேர்வழி இவனே என்று எப்படியோ அவள் மனந் துணிந்துவிட்டது. உடனே அவள் அவனை அணுகி, “ஐயோ பாவம்! ஓயாது பேசியும் உன்னை ஒருவரும் கவனிப்பாரில்லை; அப்படியும் நீ பேசிக் கொண்டே இருப்பதுதான் வியப்பாயிருக்கிறது” என்றாள்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதன்றோ? அதுபோல் பெனிடிக் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. மாறாக அவளுக்கு நல்ல பாடம் படிப்பிக்க எண்ணிச் சற்று நேரம் பொறுத்து அவளை அப்பொழுதுதான் கண்டவன் போல் பாவித்து, “அடடா, நான் பார்க்கவில்லையே; இந்தத் திருமகளுக்கு மூத்த பெருமகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாளா?” என்றான்.
பிறரை ஏளனம் செய்பவருக்குத்தான் ஏளனம் சுடும். தன்னை மூத்தாள் என்று அவன் சொன்னதும் அவள் பின்னும் சினங்கொண்டு, அவனைக் குறைத்துக் கூறலானாள். மேலும் இளவரசன் பெனிடிக் பேசுவதையெல்லாங் கேட்டு, அவனுக்குப் பக்கத்துணையாக நிற்பது கண்டு இருவரையும் ஒரே சொல்லால் இழிவுபடுத்த எண்ணி, அவள் “பெனிடிக், உன் திறத்தைப் பார்த்து இவ்விளரசர் சிரிக்கிறதைப் பார். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு நல்ல கோமாளி கிடைத்ததென்று விளங்கவில்லை” என்றாள். கேலியில் உண்மை கலந்திருந்தால் அஃது ஆழ்ந்து பதியும். ஆதலால் தன்னை இங்ஙனம் இளவரசனுக்குக் கோமாளி என அவள் அழைத்தது பெனிடிக்கின் மனத்திற் சுறுக்கெனத் தைத்தது.
அதோடு, போரைப் பற்றிய பேச்சு வந்தபோதும், அவள் அவனுடைய வீரத்தை மதியாமல், ‘இந்தப் போரில் நான் மட்டும் உன்னுடன் வந்திருந்தால், நீ கொன்றதனைத்தும் நான் தின்றிருக்கக் கூடுமே’ என்றாள். அவன் போரில் மிகுதியாகக் கொன்றிருக்க முடியாது என்ற இக்குறிப்புப் பொய்யேயாயினும், அவனுக்கு அது மிகுந்த அவமதிப்பைத் தருவதாக இருந்தது.
பீயாத்ரிஸின் சுடுமொழிகள் ஒவ்வொன்றிற்கும் பெனிடிக்கும் சரியாக இரண்டு பங்கு சிடுமொழிகள் தந்தான். இங்ஙனமாக இவர்களிருவரும் ஒருவரையொருவர் குத்தலாகப் பேசுவதில் தம் திறனையெல்லாங் காட்டி வந்தனர்.
2.சூழ்ச்சியால் வெறுப்பு விருப்பாக மாறுதல்
கிளாடியோவும் ஹீரோவும் கொண்ட காதல் முதிர்ந்து அவர்கள் விரைவில் இணைபிரியாத் தோழராயினர். அவ்விருவரும் தம் மணவினை நாளை மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தனராதலின், அந்நன்னாள் வரையிற் பொழுதுபோவது அருமையாயிருந்தது. இதனைக் குறிப்பாய் அறிந்த இளவரசன், அவர்களுக்குக் களிப்பை ஊட்டி நேரத்தைப் போக்கியுதவ, ஓர் இனிய வேலையை உண்டுபண்ணினான். கலகலப்பாய்ப் பூசல் விளைத்து வரும் பெனிடிக்கும் பீயாத்ரிஸும் ஒருவரையொருவர் காதல் கொள்ளும்படி செய்ய வேண்டு மென்பதே அவ்வேலை. முதலில் பெனிடிக்கின் தோழர்கள் அவன் மீது பீயாத்ரிஸ் காதல் கொண்டுள்ளாள் என்று அவனை நம்பச் செய்யவேண்டும். அதுபோல் பீயாத்ரிஸின் தோழியர் பெனிடிக் அவள்மீது காதல் கொண்டிருப்பதாக அவளை நம்பச் செய்ய வேண்டும். அப்போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கும் வகையைப் பார்த்து அவர்களை எல்லாரும் சேர்ந்து ஏளனம் செய்யலாம் என்று இளவரசன் எடுத்துரைத்தான்.
இதன்படியே லியானதோவும், கிளாடியோவும் பெனிடிக்குக்குத் தெரியாமல் பேசுவது மாதிரி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, பெனிடிக் தமதருகில் செடி கொடி வரிசைகளுக்கப்புறம் ஓர் இருக்கையில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தற்போக்காகப் பேசுவதுபோல் வேறு பொதுச் செய்திகளைப் பற்றிச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபின், திடீரென்று கிளாடியோ லியோனதோவைப் பார்த்து, “அஃதிருக்கட்டும் நண்பரே! நீர் உமது மருகியைப் பற்றிச் சொன்ன செய்தி என்னாயிற்று? என்னால் அதை நம்பவே கூடவில்லை” என்றான்.
லியோனதோ: ஆம்; முதலில் என்னாலும் நம்ப முடியாமலேதான் இருந்தது. பெனிடிக்கைப் பற்றி அவள் பேசுவதைக் கேட்டால் அவள் அவனை வெறுக்கிறவள் என்றுதான் எவரும் சொல்லுவர். அப்படியிருந்தும், அவள் அவனைக் காணாதவிடத்து அவன் பெயரையே நினைத்துப் புலம்பி அவனைப் புகழ்ந்து புகழ்ந்து அழுங்குவானேன்? பாவம். அவள் நல்லவள்; அறிவுடையவளும் கூட இந்த ஒரு வகையிலேதான் அவள் தன் அறிவைப் பறிகொடுத்து விட்டுப் பெண்ணே பிடிக்காத இந்தக் காட்டானிடம் மனம் செலுத்துகிறாள்.
கிளாடியோ: ஆம்; அதுவொன்றுதான் அவள் அறிவுக்குப் பொருந்தாச் செயல் என்று ஹீரோ கூடக் கூறுகிறாள். எப்படியும் அவனிடம் இதைக் கூறி இவனைக் காதலிக்கச் செய்யவேண்டு மென்று ஹீரோ என்னிடம் சொன்னாள். அதற்கு நான், அவனிடம் இதைச் சொல்வதில் பயனில்லை. காதலுக்கும் அவனுக்கும் தொலை மிகுதி. அதிலும் பீயாத்ரிஸையாவது அவன் விரும்புவதாவது’ என்று சொல்லித் தடுத்துவிட்டேன்.
முதலில் அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவதாக எண்ணி, பெனிடிக் அக்கதையை அரைமனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். பின் அது பீயாத்ரிஸையும் தன்னையும் குறிப்பதாகக் கண்டு அதனைக் கூர்ந்து கவனித்தான். பிறர் தன்னைக் குறைவாக நினைத்தும் பீயாத்ரிஸ் மட்டும் தன்னை உயர்வாக மதித்துக் காதலிப்பதைக் கேட்டதும், அவள்மீது அவனுக்கிருந்த வெறுப்பே விருப்பாக மாறிவிட்டது. ‘ஆ! இதுவரை நான் பெண்கள் பக்கம் நாடாதிருந்ததெல்லாம் இப்பெண்ணரசிக்காகவே போலும்’ என்று அவன் வாய்விட்டுக் கூறினான். கிளாடியோவும், லியோனதோவும் இதனைச் செவியுற்று முதல்படியிலேயே தமது சூழ்ச்சி வெற்றியுற்றதென மகிழ்ந்தனர்.
இச்சமயம் மறுபுறம் ஹீரோவின் வேலையும் நன்கு தொடங்கிற்று. ‘உணவு வேளையாயிற்று; எல்லோரும் வந்து விட்டார்கள். உன் நாக்குக்கு அஞ்சியோ என்னவோ பெனிடிக் வரவில்லை. அவனை நீயே இழுத்து வா’ என்று அவள் பீயாத்ரிஸை அனுப்பினாள். பீயாத்ரிஸும் அதனைப் பின்பற்றி வேண்டா வெறுப்பாகத் தோட்டத்திற்குள் வந்து பெனிடிக்கைப் பார்த்துத் தன் வழக்கப்படி கடுகடுத்த குரலில், ‘வயிற்றில் பசி கூடவா உனக்குத் தெரியவில்லை. இங்கு உன்னை அழைத்து வரவும் வேறு போக்கற்றவர்கள் அகப்படவில்லையாம்!" என்றாள். அவள் மொழிகள் உண்மையில் எப்படியிருந்தாலும் பெனிடிக்கின் காதுக்கு மட்டும் அன்று அதில் அன்பும் காதலும் உள்ளடங்கியிருப்பனவாகப்பட்டது. அன்று ஒருநாள் மட்டும் அவன் அதற்கு மாறாகக் கடுமொழி கூறாது. ’சரி, இதோ வருகிறேன். நீ இன்னும் உணவருந்தாமலா இருக்கிறாய்’ என்றான். அவனது பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தைப் பீயாத்ரிஸ் கவனியாம லில்லை.
பீயாத்ரிஸினது காதல் வளர்ச்சியின் அடுத்தபடி அன்று மாலையே தொடங்கிற்று. ஹீரோ அப்போது தன் தோழியராகிய ¹⁰உர்ஸுலா ¹¹மார்கரட் ஆகிய இருவருடனும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது ஹீரோ மார்கரட்டை அனுப்பிப் ‘பீயாத்ரிஸிடம் ஹீரோவும், உர்ஸுலாவும் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டே போகிறார்கள்’ என்று கூறும்படி செய்தாள். பீயாத்ரிஸும் இதைக் கேட்டவுடன் எதிர்பார்த்தபடி தோட்டத்திற்கு வந்து தொலைவிலிருந்தே பதுங்கிப் பதுங்கி ஹீரோவும் உர்ஸுலாவும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலுள்ள பூம்பந்தருக்கருகில் மறைந்து நின்றாள்.
அவள் வந்திருப்பதை அறிந்தும் அறியாதது போல ஹீரோ உர்ஸுலாவுடன் முன் பேசியதைப் போலத் தொடர்ந்து பேசும் முறையில் பேசத் தொடங்கினாள்.
ஹீரோ: அவள் எவ்வளவோ பெருமைக்காரி, உர்ஸுலா! அதோடு ஆடவர் என்றாலே, அவளுக்குப் பிடிப்பதில்லை. இப்படிப்பட்டவளைப் பார்த்துப் பெனிடிக் காதல் கொண்டது வியப்பாகவே இருக்கிறது. இதை அவளிடம் சொன்னால் அவள் ஏளனந்தான் பண்ணுவாள். ஆதலால் அவளிடம் சொல்ல வேண்டா.
உர்ஸுலா: சரி, எளிதாகச் சொல்லிவிட்டாய். சொல்லாவிடில் பெனிடிக்கின் நிலை என்னாவது? எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும். என் அறிவுக்கு, அவள் வெளிக்கு வாயடி அடிக்கிறாள்; அடித்தலும் அவனுடைய உயர் நடையையும் அறிவையும் உள்ளூரப் பாராட்டாமலிருக்கும் படி அவ்வளவு அறிவில்லாதவளல்லள் அவள். என்னவோ அவள் மனத்தை யார் கண்டார்கள்? பெனிடிக்கைப் போன்ற வீரமும், அறிவும் உடைய இளைஞன், இந்த இத்தாலி நாடு முழுமையும் தேடினாலும் அகப்படப் போவதில்லை. அவனைத் தெய்வம் யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? சரி, அவள் காரியம் எப்படியாவது இருக்கட்டும். உனக்கும் கிளாடி யோவுக்கும் மணவினை எப்போது?
ஹீரோ: நாளையே, அதற்கான ஆடைகள் எல்லாம் வந்துவிட்டன. மணவறைக்கான ஆடைகளைத் தெரிந்தெடுத்து அணிவதில் உன் துணை வேண்டும்; வா போகலாம்.
ஹீரோவும், உர்ஸுலாவும் போனபின் பீயாத்ரிஸ் தனக்குள், ‘ஆ! இம்மட்டில் இப்பெண்கள் என்னை உதவாக்கரை என்று வைத்திருக்கிறார்கள். ஆனால், பெனிடிக்கைக் கைக்கொள்வதன் மூலம் என் திறனை அவர்களுக்குக் காட்டுகிறேன்’ என்றெழுந்தாள்.
பெனிடிக்கும் பீயாத்ரிஸும் அதன்பின் தாம் முன் ஒருவரையொருவர் திட்டியதை மறந்து கலந்துறவாடத் தொடங்கினர். கிளாடியோவும் ஹீரோவும் தொடங்கிய கைத்திறன் அவர்கள் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு பயன் தந்தது. ஆனால், அதனைக் கண்டு அவர்கள் நெடுநாள் மகிழ்வதற்கின்றி, ஊழ் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத புயல் ஒன்றைக்கொண்டு வந்துவிட்டது.
3.வஞ்சத்தால் விளைந்த பேரிடர்
இளவரசன் தான்பெத்ரோவுக்கு ஒரு மாற்றாந்தாய் மகன் இருந்தான். அவன் பெயர் தான்ஜான் என்பது. அவன் கெட்ட குணமும், குறுகிய நோக்கமும் உடையவன். அவனுக்கு இளவரசனிடமும், அவனுடைய நண்பர்களிடமும் பொறாமை மிகுதி. அவர்களுக்கு ஒரு நன்மை வந்தால் அவனுக்கு அஃது ஒரு தீமை போலக் குத்துதலாயிருக்கும். இளவரசன் கிளாடியோவின் மணவினைக்கு உள்ளீடானவன் என்பதைக் கண்டதும் எப்படியாவது அவர்களது கனவுலகை உடைக்கவேண்டும் என்று உறுதி கொண்டான்.
தான்ஜானின் நண்பனாகிய ¹²பொராகியோ ஹீரோவின் தோழி மார்கரட்டைக் காதலித்து வந்தான். தான்ஜா அவனுக்கும் அவன் மூலமாக மார்கரட்டுக்கும் நிரம்பப் பொருள் கொடுத்து அவர்களைத் தன் வசப்படுத்தினான். பின் அவன் பொராகியோ விடம், “ஹீரோவின் உடையணிந்து உன் காதலியைப் பலகணி வழியாக நள்ளிரவில் வந்து உன்னுடன் பேசச் செய். நான் அச்சமயம் பார்த்து கிளாடியோவை அங்கே அழைத்து வந்து ஹீரோமீது அவனுக்குக் கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்கிறேன். அப்போது இம்மணவினை முறிவடையும்” என்றான்.
அதன்படியே அன்று நள்ளிரவு நடைபெற்றது. தான்ஜான் அன்று கிளாடியோவினிடமும் இளவரசனிடமும் சென்று ‘ஹீரோவைக் கிளாடியோ மணப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அவள் தீயவள்’ என்றான். இளவரசனும் கிளாடியோவும், ‘இஃதென்ன, உனக்கு மட்டுமா அவள் தீயள் என்று பட்டுவிட்டது? அவளை அனைவரும் பெருமையாகவே பேசுகின்றார்கள். எங்கள் கண்ணுக்கும் மாசிலாமணியாகவே அவள் காணப்படுகின்றாள்’ என்றனர். அப்போது பொய்மையை வாய்மையாகத் திரிப்பதையே தொழிலாகக் கொண்ட அவ்வஞ்சகன், ‘அவள் பிறருடன் உறவாடுவதை நான் அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறேன். நாளை அவள் உங்களை மணக்கப்போகும் பெண் அல்லவா? இன்றிரவு கூட அவள் வழக்கம்போல் ஒரு மூன்றாம் மனிதனுடன் பேசுவதை நீங்கள் கண்டால் என்ன சொல்வீர்கள்?’ என்றான். அது கேட்டு வியப்பும் கலவரமுங் கொண்டு கிளாடியோ, ‘நீ கூறுவது உண்மையாயின் மணவினையைப் பலரறியத் துறந்து அவளை நீக்கிவிடுவேன்’ என்றான். இளவரசனும் ‘அப்படிச் செய்தே தீருவோம்’ என்று அவனுடன் சேர்ந்தே பேசினான். அதன்பின் மூவரும் ஹீரோவின் அறைச் சாளரத்தின் பக்கம் ஒளிந்து நின்றனர். நள்ளிரவில் முன்னேற்பாட்டின்படி ஹீரோவின் உடையணிந்த மார்கரட் சாளரத்தைத் திறந்து வெளியே கண்ணோட்டம் செய்தாள். அதனை எதிர்பார்த்து நின்ற பொராகியோ மெல்லிய குரலில் காதற்பா ஒன்றைப் பாடிக்கொண்டு வந்தான். உண்மையிலேயே காதலரான அவ்விருவரும் அளவளாவிக் கைகோத்துப் பேசி மகிழ்ந்தனர். அதனைக் கண்ணுற்றிருந்த கிளாடியோவின் நெஞ்சில் ஊழித் தீப்போன்ற சீற்றம் எழுந்து புகைந்து எரியலாயிற்று. இளவரசன் நெஞ்சமும் சட்டென்று கருகிற்று.
மறுநாள் மணவினை தொடங்குகையிலேயே கிளாடியோ துடிதுடிக்க வந்து, அந்தணன் வளர்த்த வேள்வித்தீயை அவித்து, அதற்காக வைத்திருந்த பொருள்களைக் காலாலுதறித் தள்ளித் தேய்த்தான். பின் மணப்பெண்ணைப் பார்த்து, ‘உனக்கு மணவினை தான் எதற்கு? உன் நடையை மறைக்க உன் தந்தை செய்த சூழ்ச்சியா இது?’ என்றான். வியோனதோ இக்கொடு மொழிகள் கேட்டு, ‘ஐயா! நேற்றுவரை என்னுடன் உயிருக் குயிராய்ப் பழகிய நீங்கள் இன்று இப்படி ஏன் தாறுமாறாய்ப் பேசுகிறீர்கள் என்றான். இளவரசன் முன்வந்து தாறுமாறாய்ப் பேசுவது நாங்கள் அல்லோம்; தங்கள் புதல்வி நடையில் தாறுமாறான தன்மையே நீங்கள் காண்பதன மூலக்காரணம்’ எனக் கூறிவிட்டு கிளாடியோவையும் கூட்டிக்கொண்டு வெளியேறினான்.
தன் காதலனே தன்னை வெறுத்துத் தன் நடையிற் குறை கண்டதாகக் கூறவே, ஹீரோ எண்சாணும் ஒரு சாணாய்க் குறுகினாள். அவள் மெய் துடிதுடித்தது. அவள் உணர்வற்று நிலத்தில் வீழ்ந்தாள். கிளாடியோவும், இளவரசனும் அவள் விழுந்ததைப் பார்த்தும் அவளுக்கு என்னுற்றதோ என்றுகூடக் கருதாமல் வெளியே சென்றுவிட்டனர்.
4.உற்றவிடத்துதவும் உறவோர்
உண்மை வீரர்களும் உயர்குணமுடையவர்களுமான இவ்விருவரும் கூறிய மொழிகளிலிருந்து லியோனதோவும் தன் மகள் தீய நடத்தையுடையவளே என்று நினைத்தான். உணர்வற்றுக் கிடக்கும் ஹீரோவினருகிற் சென்று பீயாத்ரிஸ், “என் அருமை அண்ணி, உனக்கு என்ன தீவினை நேர்ந்தது? ஐயோ, நீ கண் திறவாயோ?” என அழுதாள். பெனிடிக்கும் அணுகி வந்து, ‘பீயாத்ரிஸ் அவள் எந்நிலையிலிருக்கிறாள்?’ என்றான். பீயாத்ரிஸ் கண்ணீர் வழிந்த முகத்துடன், ‘அவளைக் கொன்று விட்டார்கள் போலும் அப்பாவிகள்!’ என்றாள். ஹீரோவின் தந்தையாகிய லியோனதோ மட்டும், “அவள் இறந்தே போகட்டும். இறைவனே, அவள் கண்கள் திறவாதிருக்க அருள்க” என்றான்.
மணவினை முடிக்க வந்த அந்தணன் ஹீரோவின் செவியில் கிளாடியோ சுடுமொழிகள் விழும்போதும் அவள் முகத்திற் கண்ட வியப்பையும் பெருந்தன்மையையுங் கண்டு, அவள் தூய கற்புடையவளே என்று உறுதி கொண்டான். அவன் உதவியாலும் பீயாத்ரிஸ், பெனிடிக் ஆகியவர்கள் முயற்சியாலும் ஹீரோ விழித்தெழுந்தாள். ஆனால் அவள், ‘நான் ஏன் பிறந்தேன்; ஏன் பிழைத்தேன்?’ என்று அழத் தொடங்கினாள். அந்தணன் அவளுக்கு ஆறுதல் கூறி லியோனதோவிடம், ‘ஐய! இவள் குற்றமற்றவள் என்று நான் உறுதி கூறுவேன். இவள் வகையில் ஏதோ சூது நடந்துள்ளது. எல்லாம் காலம் சரிப்படுத்தும். அதுவரை அவள் இறந்து விட்டாள் என்றே வெளியிற் செய்தி கூறிவிடுங்கள். பிற என் பொறுப்பு’ என்றான்.
லியோனதோ: அதனால் பயனென்ன? அப்படி ஒரு வீண் பொய்யைத் தான் சொல்வானேன்?
அந்தணன்: அப்படியன்று. நான் சொல்கிறபடி செய்யுங்கள். அதன் பயன் பின்னால் தெரியும், அவள் இறந்தாள் என்று ஏற்பட்டபின், அவளைப் பற்றிய பொய் எளிதில் வெளிப்படும்.
லியோனதோ இதற்கு ஒருவாறு இணங்கினான். பெனிடிக்கும் பீயாத்ரிஸும் உண்மைச் செய்தியை வெளியிடோம் என உறுதி கூறினர்.
பெனிடிக்குக்கு உண்மையிலேயே ஹீரோவினிடம் நல்ல நம்பிக்கையும், இரக்கமும் ஏற்பட்டன. ஆயினும் பீயாத்ரிஸ், ‘அவன் என் அருமை அண்ணியைக் குறை கூறின கிளாடியோவின் நண்பன்தானே’ என மனதிற் கொண்டு அவனிடம் விலகி நடக்கலானாள். அப்போது அவன், ‘நான் உனக்குச் செய்த பிழை யாது?’ என வருந்திக் கேட்டான்.
பீயாத்ரிஸ்: நீ என்னை நேசிக்கவில்லை.
பெனிடிக்: யார் சொன்னது! நான் நேசிப்பது போல…
பீயாத்ரிஸ்: அந்தக் கதை கட்டுகளெல்லாம் இப்போது என் காதில் விழாது. என் மனத்தில் ஹீரோவைப் பற்றிய கவலை ஒன்றிற்கே இடம் உள்ளது; அதைத் தீர்த்த பின்னர்தான் உம்மைப் பற்றி என்னால் நினைக்க முடியும். அவளைக் கறைப்படுத்திய அந்தக் கிளாடியோ இருக்கும்வரை நான் உம்மை அவர் நண்பராகவே நினைப்பேன்.
பெனிடிக்: கிளாடியோ வேண்டுமென்று இக்குற்றம் செய்ததாக எனக்குப் புலப்படவில்லை. ஆயினும் அவனை எதிர்த்து வென்று உன் காதலுக்குத் தகுதியுடைவனாவேன்.
இம்மொழிகளுடன் பெனிடிக் கிளாடியோவை நாடிச் சென்றான். அச்சமயம் லியோனதோ இளவரசனையும் கிளாடியோவையும் வழிமறித்துத் தன் புதல்வியின் மானத்தைப் பழித்து அவள் உயிரை வாங்கியதற்காகத் தன்னுடன் போராடும்படி அவர்களை அழைத்தான். ‘ஆண்டிலும் ஆட்சி முறையிலும் எங்களுக்குப் பெரியவரான தங்களுடன் நாங்கள் போர் செய்யமாட்டோம்’ என அவர்கள் மறுத்துவிட்டனர். அச்சமயம் பெனிடிக்கும் வந்து போருக்கழைத்தான்.
5.உண்மை விளங்குதல்
இத்தறுவாயில் தீயவர் நலம் தீய்ந்து நல்லோர் தீமை நலிய அருள்புரியும் இறைவனது தோற்றம் போன்ற நற்செய்தி ஒன்று நிகழ்ந்தது. பொராகியோ தான்ஜான் ஏவலினால் தான் செய்துமுடித்த அரிய வேலைத்திறனைப் பற்றி வீம்பு பேசிக்கொண்டிருந்தான். குற்ற வழக்குத் தலைவர் ஒருவர் இதனைக் கேட்டிருந்து அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்டுவந்து லியோனதோ முன் விட்டார். லியோனதோவின் காவலர் அவனை அச்சுறுத்தி உண்மை முழுமையும் வெளியிடச் செய்தனர்.
ஹீரோ வகையில் தான் செய்த தீமையின் முழுவன்மையும் இப்போது கிளாடியோ மனத்தில் அழுந்திற்று. அவனுடைய தீச்சொல் கேட்டு ஹீரோ அடைந்த துயர்கூட அதற்கு ஈடன்று; தான் ஹீரோவுக்குச் செய்த தீங்கிற்கு அவன் அழலாய் உருகி, வியோனதோவை நோக்கி, அதற்காக எத்தகைய கழுவாய் புரியவும் தான் முன்வருவதாகக் கூறினான்.
லியோனதோ, ‘என் மகளுக்குச் செய்த தீமைக்குச் சரியான கைம்மாறு அவளுக்கு இளையாளான அவள் போன்ற மற்றொரு புதல்வியை மணப்பதுதான்’ என்றான். தன் மொழியால் தானே கட்டுண்டு கிளாடியோ இதனை வேண்டாவெறுப்பாய் ஏற்றான். முறைப்படி மணம் நடக்கலாயிற்று. மணத்திரை நீக்கியதும் கிளாடியோ மணவினையில் ஏற்பட்ட வழக்கப்படியே, ‘நீ ஏற்றுக் கொள்வையாயின் நான் இன்றுமுதல் உன் கணவன்’ என்றான். அதற்கு விடையாகப் பெண், ‘நான் முன்பே உம்மை ஏற்றும் உன் மனைவியாய் இருக்கிறேன்’ என்றாள். அதுகேட்டு வியப்புடன் கிளாடியோ அவளை நோக்க, அவள் தன் பழைய காதலியே-தான் மணக்க மறுத்த ஹீரோவே என்று கண்டு ஒன்றுந் தோன்றாமல் திகைத்தான். அப்போது அந்தணன் நடந்தவற்றை யெல்லாம் விளங்கக் கூறினான். கிளாடியோ அதுகேட்டுக் கண்ணையிழந்து மீண்டும் பெற்றவன்போல் உளமகிழ்ந்தான். மனைவினை இனிது நடந்தேறியது.
இம் மணவினையின் போதே தாமும் மணந்து கொள்ள வேண்டுமென்று பெனிடிக்கும் பீயாத்ரிஸும் வியோனதோவிடம் வழக்காடினார்கள். ஆனால், லியோனதோ, ‘உங்களிடையே காதல் கிடையாது’ என்று கூறி மறுக்கத் தொடங்கினான். பெனிடிக்கும் பீயாத்ரிஸும் ஹீரோவையும் கிளாடியோவையும் விடத் தாம் ஒருவரை ஒருவர் பன்மடங்கு காதலிப்பதாகக் கூறினர். அப்போது ஹீரோவும் கிளாடியோவும் நகைத்துத் தாங்கள் அவர்கள் வகையில் செய்த ஏமாற்றத்தை விளக்க, அதுகேட்டுப் பீயாத்ரிஸ் சற்று முகம் கோணினாள். ஆனால், பெனிடிக்கு அவள் கையைப் பற்றி இழுத்து, ‘இவர்கள் வாயாலேயே இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆய்விட்டது. இவர்கள் இப்போது கூறுவதும் ஏமாற்றமாகவே இருக்க வேண்டும். எப்படியானாலும், நான் அரும்பாடுபட்டுத் தேடிய என் காதல் மணியை மணம் செய்தே தீருவேன்’ என்றான்.
லியோனதோ விலாப்புடைக்க நகைத்துப் பீயாத்ரிஸைப் பார்த்து, ‘இவர் இப்படிச் சொல்லுகிறாரே. நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டான்.
பீயாத்ரிஸ், ‘இவர் இவ்வளவு பிடிமுரண்டாயிருப்ப தனால், இவரை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் கிளாடியோ மாதிரி இவரும் பெருங்கதை கிளப்பி விட்டுவிடுவார்’ என்றாள்.
எங்கும் மணவாழ்த்தும் மணமுரசும், தான்ஜான் காதுக்கு மட்டும் இம்மணப் பேச்சு சுவை தரவில்லையாம். அவனை யார் இப்போது கவனிப்பார்கள்!
** அடிக்குறிப்புகள்**
1. Leonate 2. Messina
2. Hero 4. Beatrice
3. Don Pedro Prince of Arragon 6. Florence
4. Claudio 8. Padwa
5. Benedict 10.Ursula
6. Margaret. 12. Borachio
சரிக்குச் சரி (Measure for Measure)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. வின்ஸெந்தியோ: வீயன்னா நகர்த்தலைவன்-மாற்றுருவில் துறவி.
2. ஏஞ்செலோ: வின்ஸெந்தியோவைக் குறை கூறிய கூட்டத்தின் தலைவன்-எஸ்காலஸ் பெருமகன் ஆதரவுடன் நகர்த்தலைவனானவன்-மேரியானா கணவன்-அவளைத் துறந்து போலித் துறவியானவன்.
3. எஸ்காலஸ் பெருமகன்: முதல் அமைச்சன்-வின்ஸெந்தி யோவைக் குறை கூறி ஏஞ்செலோவை ஆதரித்தவன்.
4. கிளாடியோ: நகர் இளைஞன் ஜுலியட்டின் காதலன்-இஸெபெலின் தம்பி.
5. லூஸியோ: கிளாடியோவின் நண்பன்.
பெண்டிர்:
1. இஸபெல்: கிளாடியோவின் தமக்கை-ஜுலியெட்டின் உயிர்த் தோழி கிளேர்நாச்சியார் மடத்து முதற் பயிற்சித் துறவி.
2. ஜுலியட்: இஸபெலின் உயிர்த்தோழி-கிளாடியோவின் காதலி.
3. மெரியானா: ஏஞ்செலோவால் துறக்கப்பட்ட மனைவி.
** கதைச்சுருக்கம்**
வீயன்னா நகரத்துத் தலைவன் வின்ஸெந்தியோ ஈர நெஞ்சுடையவன். களவான காதலுக்கு அந்நாட்டுச் சட்டம் தூக்குத் தீர்ப்புக் கொடுத்தபோதிலும் அதனை அவன் வலியுறுத்தவில்லை. இதற்காக அவனை எதிர்த்தவருள் தலைவனான ஏஞ்செலோவைத் தற்காலிகமாக நகர்த் தலைவனாக்கி விட்டு வெளியேறி அவன் துறவி உருவில் மீண்டும் வந்து மறைவாய்ப் புதிய தலைவன் போக்கைக் கவனித்து வந்தான். அப்போது ஜுலியட் என்ற பெண்ணைக் காதலித்ததற்காகக் கிளாடியோ என்ற இளைஞன் இந்தச் சட்டப்படி சிறைப்பட்டான். அவன் தமக்கை இஸபெல், கிளேர்நாச்சியார் மடத்துப் பயிற்சிநிலைத் துறவி. கிளாடியோவுக்காகப் பரிந்து பேசவந்த அவளிடம் ஏஞ்செலோ உள்ளூறக் காதல் கொண்டு தன்னை மணப்பதாயின் அல்லது விருப்பத்திற்கு இணங்குவதாயின் அவள் உடன் பிறந்தானைக் காப்பதாகக் கூறினான். அவள் அதனை மறுத்துவிட்ட போதினும், துறவியுருக் கொண்ட வின்செந்தியோவின் தூண்டுதலால் இணங்குவதாகக் காட்டி ஏஞ்செலோவினால் துறக்கப்பெற்ற மனைவி கற்பரசியாகிய மேரியானாவை அவனிடம் அனுப்பினாள். இப்படியும் அமையாது ஏஞ்செலோ கிளாடியோவைக் கொல்ல உத்தரவிடும் அளவில் வின்செந்தியோ தன்னுருக் காட்டி எல்லாம் விளக்கிக் கிளாடியோவைக் காத்து ஜூலியட்டை மணக்கும்படி செய்ததுடன் இஸபெலின் கற்பை வியந்து அவளைத்தானே மணந்து கொண்டான்.
1.சட்டப்பொறி
¹வீயன்னா நகரம் முன்னாட்களில் ஒரு குடியரசாயிருந்தது. அதன் தலைவன் ²வின்ஸெந்தியோ அன்பும் அருளும் நிறைந்த உள்ளம் உடையவன். மக்கள் தவறி நடந்தவிடத்துக் கூடியமட்டும் திருத்த முயலுவானேயன்றிச் சினங்கொள்ளவோ, கடுமையாகத் தண்டிக்கவோ மாட்டான். அந்நாட்டுச் சட்டங்களுள் சில அவனுக்கு மிகக் கடுமையாகப்பட்டன. அவற்றை அவன் கையாளாமல் கூடியவரை விலக்கியும், இன்றியமையா இடங்களில் அருமையாக வழங்கியும் வந்தான். அச்சட்டங்களுள் ஒன்று தம் மனைவியரல்லாத பெண்களுடன் உறவு கொண்டவரைத் தூக்கிலிட வேண்டும் என்பது. சொல்லளவில் இச்சட்டம் பிறர்மணை நயப்பவரை மட்டுமல்லாமல் காதலரையும் உட்படுத்துவதாயிருந்தது. ஆயினும், காதலரைப் பொறுத்தமட்டில் தலைவன் இச்சட்டத்தை நடைமுறையில் வழங்காமலே விட்டுவிட்டான். ஆகவே, அதன் குரங்குப் பிடிக்கு அஞ்சி ஓடி ஒளிந்து காதலித்த இளைஞர் இப்போது அச்சமின்றி மங்கையருடன் காதல் கொள்ள முடிந்தது.
இளைஞரும் மங்கையரும் இங்ஙனம் கட்டுப்பாடின்றி வெளிப் படையாகக் காதல் வாழ்க்கை வாழ்வது அந்நகரத்துப் பெருமக்கள் பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தலைவனது இளக்க மனமுடைய நடையைக் குறை கூறினர். முதல் அமைச்சனாகிய ³எஸ்காலஸ் பெருமகனும் இத்தகையோர் பக்கமே நிற்பது கண்ட தலைவன், “நீங்கள் உங்கள் மனப்படி ஒரு தற்காலிகத் தலைவனைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்துங்கள். நான் போலந்து நாடு சென்று, சற்று ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறேன். உங்கள் ஆட்சி நன்றாக நடப்பதாயிருந்தால் அதனையே நானும் தொடர்ந்து நடத்தலாகும்” என்றான்.
தலைவனைக் குறை கூறுவோர் கூட்டத்தில் ⁴ஏஞ்செலோ என்பவன் ஒருவன். அவன் தன் மனைவியைத் துறந்துவிட்டு அதன்மேல் இல்வாழ்க்- கையையே நாடாதிருந்தான். ஆதலால், அவனைப் பலரும் துறவி என்றும், ஒழுக்கம் உடையவன் என்றும் போற்றி வந்தனர்; அவனது கண்டிப்பு தலைவனது வழவழப்பிற்கு ஒரு மாற்று ஆகும் என்று மக்கள் நினைத்தனர். நினைத்து அவனையே தமக்குத் துணைத் தலைவனாக்கிக் கொண்டனர். அதன்பின் சில நாட்களுக்குள் தலைவன் போலந்துக்குப் போவதாகச் சொல்லி விட்டுப் பயணமானான். ஆனால், உண்மையில் அவன் வேறெங்கும் போகவில்லை. நகரத்திலிருந்து வெளியே போய் மடத்துத் துறவி என மாற்றுருக் கொண்டு திரும்பி வந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
தலைமை ஏற்ற சில நாளைக்குள் ஏஞ்செலோ தனது கண்டிப்பைக் காட்ட இடம் ஏற்பட்டது. அந்நகரில் ⁵கிளாடியோ என்ற ஒரு நல் இளைஞன் இருந்தான். அவன் தமக்கையாகிய ⁶இஸபெல் அங்குள்ள கிளேர் நாச்சியாரது ⁷கன்னிமாடத்தில் துறவியாகச் சேர விரும்பி அதற்கான முதற் பயிற்சிகளைக் கையாண்டு கொண்டிருந்தாள். அவள் தோழி ⁸ஜுலியட் ஓர் அழகிய நங்கை. கிளாடியோ அவளை விரும்பிக் காதலித்தான். அவன் அவளை மணஞ் செய்துகொள்ளும் விருப்பினனாயினும், அந்நகர் வழக்கப்படி அதன் முன்னாகவே அவளுடன் அளவளாவி வாழ்வானாயினன். இது வரையில் நடைமுறையி லில்லாமல் இன்று நடைமுறையில் திடீரென வர இருக்கும் சட்டம் தவறான காதலை மட்டுமே கண்டிப்பது ஆயினும், சொல் அளவில் தன்னையும் அகப்படுத்த வல்லது என்று அவன் அறியாது அதன் பொறியுட்பட்டான்.
நகர்க் காவலர் ஒரு குற்றவாளியைப் பிடித்துக்கொண்டு போவது போல அவனைக் கொண்டுபோய்ப் புதிய தலைவனாகிய ஏஞ்செலோவின் முன் விட்டனர். தனக்கேற்பட்ட புதிய நிலையையும் மதிப்பையும் எண்ணி வெறிகொண்டிருந்த ஏஞ்செலோ, சட்டத்தின் கண்டிப்பைக் காட்ட இது நல்ல வாய்ப்பு எனக் கொண்டு கிளாடியோவுக்குத் தூக்குத் தண்டனை தரும்படி தீர்ப்பளித்து விட்டான்.
கற்பைக் காக்கவேண்டிய சட்டம், காதலைப் பலிகொள்ள லாயிற்று.
கிளாடியோவின் சிறு குற்றத்திற்குக் கொலைத் தீர்ப்பளிப்பது கொடுமை என்பதைப் பலரும் எடுத்துக்காட்டினர். ஏஞ்செலோ தலைவனாக வரவேண்டுமென்று முயன்ற ஏஸ்காலஸ் பெருமகன் கூட இத்தண்டனையால் இச்சட்டத்திற்கே கெட்ட பெயர் வரும் என்று கூறினான். ‘கிளாடியோவுக்காக அன்றாயினும் அவனைக் காதலித்த மங்கைக்காகவேனும் அவனை மன்னித்துத் தண்டனையைக் குறைத்தருளுக’ என்று அவன் வேண்டினான். ஆனால், ஏஞ்செலோ, “அங்ஙனம் முதல் முதலாகவே இச்சட்டம் வெறும் பூச்சாண்டியென்று காட்டிவிட்டால் பின் அதனை யார் மதிப்பர்?” என்றான்.
இன்னொருபுறம் கிளாடியோவின் நண்பனாகிய 9லூஸியோவும் மன்றாடிப் பார்த்தான். எல்லாம் வீணாயின. காவலர் கிளாடியோவைச் சிறைக்கூடத்திற்குக் கொண்டு போயினர். அரும்பாடுபட்டு லூஸியோ சிறைக் காவலர்களை வசப்படுத்திச் சிறைக்கூடத்திற்குள் சென்று கிளாடியோவைப் பார்த்தான். அப்பொழுது கிளாடியோ, ‘அன்ப, எனக்காக ஒரு காரியம் மட்டும் இன்னும் நீ செய்யவேண்டும். கிளேர் நாச்சியார் கன்னிமாடம் சென்று என் தமக்கையிடம் செய்தி தெரிவிப்பாயக! ஒரு வேளை அவள் ஏஞ்செலோவிடம் நேரில் சென்று கேட்டால் எனக்கு மன்னிப்புக் கிடைக்கலாம். அவள் சொல்திறமும் நயமும் உடையவள்’ என்றான். லூஸியோ அப்படியே ஆகட்டும் என்று இணங்கி இஸபெலைக் காண அக்கன்னி மாடத்தை நோக்கிச் சென்றான்.
மாடத் தலைவியின் இணக்கம் பெற்று, இஸபெலை அணுகி, லூஸியோ கிளாடியோவுக்கு நிகழ்ந்தவை அனைத்தும் கூறினான். முதலில் இஸபெல் அதனை நம்பக்கூடவில்லை. ‘ஜூலியட்டும் கிளாடியோவும் ஒன்றாக வாழ்வதில் தவறென்ன? அவர்கள்தாம் மணம்புரிந்து கொள்ளப் போகிறவர்கள் என்பதை நகரமுற்றும் அறியுமே. கிளாடியோ அவளை மணம்புரிய மறுத்தாலன்றோ, அவன் குற்றம் செய்தவன் ஆவான்’ என்றாள் அவள்.
லூஸியோ: அம்மணி! அக்காலம் வேறு; இப்போது வீயன்னாவில் நாமனைவரும் மறந்துவிட்ட ஒரு சட்டம் புதுப்பிக்கப் பெற்று நடப்புக்கு வருகிறது. உண்மையில் அது கற்பைக் கெடுப்பவரைத் தண்டிக்க எழுந்த சட்டமேயாயினும், சொல் அளவில் மணமாகாதவர் அனைவரையும் குறிக்கிறது. சூதறியாத கிளாடியோவை ஏஞ்செலோ இச்சொற் பொறியிற் பிடித்துத் தண்டித்துவிட்டான். எங்கள் மொழி ஒன்றும் அவனிடம் செல்லவில்லை. கிளாடியோ ஏதோ தங்கள் திறனில்லையே நம்பிக்கை வைத்திருந்தான்.
இஸபெல்: நான் பெண்ணாயிற்றே, அதிலும் துறவி. நான் என்ன செய்யக்கூடும்?
லூஸியோ: அம்மணி, தாங்கள் பெண்ணாயிருப்ப தனாலேதான் தங்கள் சொல் ஏஞ்செலோவின் நெஞ்சைக் கனிய வைக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். தாங்கள் துறவியாயிருப்பது அவன் தங்களை இன்னும் மதிக்கவே இடமாகும். தங்கள் சொல்நயத்தாலும் திறத்தாலும் தான் பிழைக்கக்கூடும் என்று கிளாடியோ நம்புகின்றான்.
இஸபெல்: கடவுள் துணை செய்வாராக. நான் என்னாலானதைச் செய்கிறேன். நீ போய்க் கிளாடியோவைக் கண்டு நான் போகும் விவரம் கூறித் தேறுதல் கூறுக.
2.நடுநிலையா? அருளா?
லூஸியோ போனதும் இஸபெல் தனது முக்காட்டை அந்நாட்டு வழக்கப்படி இழுத்து முகத்தை மூடிக்கொண்டு தலைவர் மாளிகையை நோக்கி நடந்தாள். பொதுமன்ற வேலை முற்றும் முடிந்தபின் ஏஞ்செலோ தன் இருக்கை சென்றான். அவனைத் தொடர்ந்து சென்று இஸபெல் அவன் முன் பணிந்து நின்றாள். அடி முதல் முடிவரை வெண்துகில் போர்த்து நின்ற அவளது பொன்வடிவம், வாடி வதங்கித் துயரே வடிவெடுத்து வந்தது போலிருந்தது.
ஏஞ்செலோ: அம்மணி, தங்களைப் பார்த்தால் உயர்குடி மாதராகத் தோற்றுகிறது. உடையோ துறவி உடை. தாங்கள் கண்ணீரும் கம்பலையுமாய்க் காணப்படுகிறீர்களே! தங்கள் போன்ற துறவிகளுக்கும் வருத்தந்தரும் துயர் எதுவோ?
இஸபெல்: குடிகள் குறைதீர்க்கும் குடியாண்மைத் தலைவ துறவிகள் தாமாகக் கவலையை உண்டுபண்ணிக் கொள்ளாதவர் களேயாயினும், பிறப்பால் துயருக்கு உரியவர்களே. அத்துயரைப் பொறுமையுடன் தாங்கவும் வேண்டியவர்கள் ஆனால், இன்று தங்களால் தீரவேண்டும் குறை ஒன்றுடையேன்.
ஏஞ்செலோ: நாட்டின் சட்டத்திற்கும், என் திறனுக்கும் உட்பட்ட எதனையும் நான் செய்யப் பின்வாங்கேன். உமது குறையைக் கூறுக.
இஸபெல்: என்னுடைய தம்பி கிளாடியோ ஒழுக்கமும் நேர்மையும் உடையவன். அவள் ஜுலியட்டிடம் கொண்ட காதலும் உண்மையான காதலே. அவளை மணந்துகொள்ளும் எண்ணமே உடையவன். அப்படி இருக்க, அவனை நீங்கள் இச்சட்டத்தின் கீழ்த் தூக்குத் தீர்ப்பளிப்பது கடுமையன்றோ? அருள்கூர்ந்து அத்தண்டனையைக் குறைக்க வேண்டுகிறேன்.
ஏஞ்செலோ: அம்மணி, இவ்வகையில் என் தீர்ப்பை மாற்ற வழியில்லை; அவன் இறக்க வேண்டியவனே.
இஸபெல்: இறைவன்கூட நடுநிலையுடன் கருணையும் உடையவராயிருப்பதனாலன்றோ நாம் இருவினைப் பயனாகிய நரகச் சுழலினின்றும் விடுபட முடிகின்றது. ஆகவே, தாங்கள் அருளுக்கெதிராக இந்நடுநிலையை வழங்கலாமா?
ஏஞ்செலோ: அம்மணி, அருள் வழங்குவதற்குத் துறவியருடைய மடங்கள் இருக்கின்றன. நான் சட்டத்தை ஒட்டி அரசியலை நடத்த வேண்டியவன். நான் அதினின்றும் விலக முடியாது. வீணே கேட்க வேண்டா.
இஸபெல், இனி நிற்பதில் பயனில்லை என்று திரும்பிவந்தாள். ஆனால், அச்சமயம் லூஸியோ அவளை வாயிலினருகில் கண்டு, ‘அம்மணி, அவர் எவ்வளவு கடுமையாகச் சொன்னாலும், நீங்கள் மனம் உளையக்கூடாது. காரியம் கைகூடும் வரை நீங்கள் முயன்று அவர் மனத்தில் இரக்கத்தை உண்டு பண்ணவே வேண்டும்’ என்றான்.
ஏஞ்செலோவிடம் தனக்கேற்பட்ட கசப்பை அடக்கிக் கொண்டு இஸபெல் மீண்டும் ஒருமுறை ஏஞ்செலோவை அணுகினாள். பற்றற்ற துறவியாகிய அவள் உள்ளத்தில் உள்ளடங்கி நின்ற சினத்தின் தாக்கினால் அவள் உடல் காற்றிலாடும் தளிரெனத் துடித்தது. சினத்தினால் பயனில்லை. தன் தம்பியின் உயிர் அவன் கையிலிருக்கிறது என்ற எண்ணத்தினால் துயர் பொங்கி எழுந்தது. கண்ணீர் ஆறாகப் பெருக அவள் அடியற்ற மரம்போல் ஏஞ்செலோவின் காலடிகளில் வீழ்ந்து அவற்றைப் பற்றிக்கொண்டு, ‘இந் நகரத்துக்கு உயிர் போன்ற காவலரே! தம்பிக்காக அன்றாயினும் எனக்காகவாவது இத்தண்டனையைக் குறைத்தருளலாகாதா? என் தம்பி மணமாகப் போகும் நிலையிலுள்ள இளைஞன்; சாவுக் குரியவன் அல்லன். உணவுக்காக ஆடு கோழி அறுப்பவர்கூட அதனை இத்தகைய பருவத்தில் அறுக்கத் துணியாரே! அண்ணலே, தாங்களும் அவன் போன்ற இளைஞர் தாமே; தமது நெஞ்சைத் தொட்டுத்தான் பாருங்கள். தாங்கள், துறவு வாழ்வு வாழ்பவராயிருந்தாலும், தாங்கள், நெஞ்சத்தின் உட்கிடக்கையுள் அவன் மனத்துத் தோன்றும் அதே ஆர்வம் இல்லையா! பார்த்து அதற்காக வேனும் அவனிடம் அன்பு கூருங்கள்’ என்றாள்.
இச்சொற்கள் எதிர்பாரா வகையில் அவன் நெஞ்சைப் பிளந்து கொண்டு சென்றன. துறவி எனப்பெயர் தாங்கினும் தன்னலம் துறவாச் சிறியோனாகிய ஏஞ்செலோவுக்கு இஸபெலின் தூய உள்ளமும், அவள் துன்பத்தின் ஆழமும் தென்படவில்லை. அவள் மொழிகளைத் தன் சிறுமைக்கேற்பப் பொருள்படுத்திக் கொண்டான். இறைவனது அருளழகு துன்பத்தாலேதான் வெளிப்படும் என்பர். அதுபோல் பெண்களது முழுக்கவர்ச்சியும் அவர்கள் துன்பத்திலே தான் காணப்படும். இஸபெலின் வடிவழகும், அவள் சொல்நயமும் கல்லையும் கனிவித்து அதிற் கடவுளது அருளை ஊட்டத்தக்கது. ஆனால் ஏஞ்செலோ போன்ற அன்பிலாப் புறத்துறவியர் உள்ளம் கல்லினும் கடுமையானதாதலின் அதற்கு இதுவரை இடந்தரவில்லை. ஆனால், ‘கிளாடியோ இளைஞன்-மணமாகவேண்டும் நிலையுடைவன்-அவனுக்காக அன்றாயினும் எனக்காக-தாமும் இளைஞர் தாமே’ என்ற மொழிகள் அவனது மேற்படையான துறவைக் கிழித்து, அவனுடைய உண்மை விலங்கியல்பைக் கிளறிற்று. எனவே, இஸபெல் எதிர்பாராத வகையில் அவனது மனத்தில் அது தீய எண்ணங்களை உண்டுபண்ணிற்று.
‘தங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள்’ என்ற மொழிகள். காதில் விழுந்தபோதுதான் அவனுக்குத் தன் மனத்தில் இஸபெல் மீது தீய பற்று உண்டாய் விட்டது என்று தெரிந்தது.
செய்தி இன்னது என்றறியாமல் ஊழ்வலியால் உந்தப்பெற்று அவள், மேலும், "தலைவரே! எனது வேண்டுகோளைப் புறக்கணித்து என்னை விட்டுச் செல்லாதீர்; என் துயரைப் பாராது முகந் திரும்புகின்றீர்! என் பக்கமாகத் திரும்பிப் பார்த்து மனமிரங்குக! தாங்கள் இன்று எனக்கு நன்மை செய்தால், அதற்கான பயன் உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும்’ என்று மொழிந்தாள்.
‘பயன்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என்னவோ உள்ளம் சட்டென எழுந்து கிளர்ச்சியுற்று. ‘ஆ, நான் மனத்துட் கொண்ட பயன் எனக்குக் கிட்டுமாயின்’ என அவன் மனம் கோட்டை கட்டலாயிற்று. ‘பயனா! எனக்கு என்ன பயன் கிட்டக்கூடும்’ என்று அவனையும் அறியாது அவன் நாக்கு வினவிற்று. அவன் உடல் முழுமையும் அவன் கட்டிலடங்காது துடிதுடித்தது.
இஸபெல்: ஆம்; நற்செய்கை செய்பவர் எவரும் அதனால் வரும் பயனை இழந்ததில்லை. அந் நற்பயன் மனிதர் தரும் வெள்ளி பொன் போன்றதன்று அந் நற்செய்கைக்கு ஆளான உயிர்களின் உள்ளத் தடத்தினின்றும் மேலெழுந்து இறைவனை நோக்கி நன்றியுடன் செலுத்தப்படும் பாராட்டு வணக்கம் அவ்விறைவனையே ஆட்டுவிக்க வல்லது. அதன் விலை அளவிடற் கரியது.
ஒரு பெரிய புயல், அதன் இறுதியில் இஃது ஒரு ஏமாற்றமா?
ஏமாற்றமில்லை; குறிப்பே என்றது உடல்.
இருநிலைப்பட்ட உள்ளத்தினனாய் ஏஞ்செலோ, ’இப்போது இவ்வகையில் துணிந்து முடிவு செய்யக்கூட வில்லை. நாளை வருக! என்றான்.
‘அன்பு விதை வேரூன்றி விட்டது’ என்று நினைத்தாள் இஸபெல். பாவம்! விதை அன்பு விதைதானா, வம்பு விதையா என்பதை அறியாமல் அகத்துள் அருளொளி கொண்ட அந்நங்கை அமைதியுடன் அன்றைப் பொழுதைக் கழித்தாள்.
அன்பகத்தில்லா இருளொளி கொண்ட ஒரு புறத்துறவிக்கு அந்த நாள் இறவா நாளாயிருந்தது.
3.போலித் துறவி
அவள் போனபின் ஏஞ்செலோ, தன் மனத்துள் எழுந்த பகைப்புயலை எதிர்த்தடக்க முயலுவானாயினான். ‘ஆ அ என் துறவு அவள் துறவின் முன் பணிந்து விட்டதா? குற்றவாளியின் சிறு குற்றத்திற்கு மன்னிப்பு வாங்க வந்த அவள், என்மீது அதினிலும் பன்மடங்கு கொடிய குற்றத்தை எழுப்பிவிட்டனளே? பயன் என்ற சொல்லைக் கேட்டு அஞ்ச வேண்டிய எனது கண்டிப்பு எங்கே? நினைத்த பயன் கிட்டாதா என்ற ஏக்கமெங்கே! ஆ, நான் ஏன் தலைவனானேன்? துறவி என்ற பெயர் எனக்கேன் வந்தது? இத்தகைய பெண்மையின் கவர்ச்சி இல்லாமையா லன்றோ நான் இதுவரை உலகத்தில் பெரியவர் குழாத்தில் எளிதில் சேர்ந்திருக்க முடிந்தது? ஆ அப்பெருமை எல்லாம் என்ன பயன் உடையது? இவளுடைய கறுத்திருண்ட கண்களின் பார்வை ஒன்றிற்கு அஃது ஈடாகுமா? என்னே அன்பகத்திலா வாழ்க்கை? அவள் நேரிய அன்பிற்காக இரங்கும் பொழுது வன்நெஞ்சனாய் மறுத்தேனே? இப்போது தவறான எண்ணத்திற்கு நான் என்ன செய்வேன்? இக்கண்டிப்பினால் என்ன பயன்? அவளுக்குத் தம்பி உயிர் வேண்டும், ஆம், அதற்காக அவள் கண்ணீர் வடிக்கிறாள், அழுகிறாள்; ஆம், அவளுக்கு அதைக் கொடுத்து நான் விரும்பிய பயன் பெறுவதாயிருந்தால்-நன்று நன்று, தலைவர் என்ற நிலை எங்கே? கண்டிப்பு எங்கே? குடிகள் என்மீது வைத்த நம்பிக்கை எங்கே? ஆனால், நான் என்ன செய்வது? இவ்வேட்கை அடக்கக் கூடியதன்று. அடக்கினும் அதன்பின் உயிர் வாழ்தல் முடியா. எப்பாடு பட்டாயினும், எதைக் கொடுத்தாயினும் அவளை நான் அடையவே முயலவேண்டும். கண்டிப்பு? வெளிக்குக் கண்டிப்பைச் சற்றுக் குறைத்தால் என்ன? எல்லாரும் வேண்டியபடி அருள் காட்டின தாகத்தானே ஆகும். மதிப்பு! அதுவும் என்ன கெட்டுவிட்டது? மறைவில் நடப்பதை யார் அறியப் போகிறார்கள்? அறிந்தாலுங்கூட நான் கவலைப்படப் போவதில்லைதான். இவ்வேட்கை ஒன்று ஒரு தட்டில், உலகில் புகழும் செல்வமும் எல்லாம் ஒரு தட்டில் வைத்தால்கூட எனக்கு வேண்டியது இவ்வேட்கையே. அது நிறைவேறியபின் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி, ஒன்றுதான்’ என்றிவ்வாறு அல்லோலகல்லோலப்பட்டது அவனது உள்ளம்.
நாளை இடப்படும் தூக்குத் தண்டனைக்காகச் சிறையிற் காத்திருக்கும் ஒருவனது உள்ளங்கூட அன்று தலைவனது உள்ளம் பட்டபாடு பட்டிருக்க முடியாது. ஆனால் இதற்கு நேர்மாறாகத் தூக்குத் தண்டனையே பெற இருக்கும் கிளாடியோவுக்கு அன்று பேராறுதல் கூட ஏற்பட்டது. ஏனெனில், அன்றிரவு பழைய தலைவன், மடத்துத் துறவி உருக்கொண்டு கிளாடியோவை அணுகி, ‘இளைஞனே! உலகின் இருட்சட்டம் உனக்குத் தீங்கிழைத்தது. அதனை நினைத்து இறைவன் அருட்சட்டத்தை மறந்து விடாதே’ என்று கூறி, ‘உடல் இறந்தாலும் அருள் உடம்பு அதனை இழந்து வாழ்வதைவிட அதனைப் பெற்று இறப்பதுமேல், இறைவன் உன் அருள் உடம்பு கெடாது தன் அடியிற் சேரும்படி உனக்கு அருள் புரிவானாக’ என்று வாழ்த்தினன். கிளாடியோ அதுகேட்டுச் சாவுக்கஞ்சும் கோழைத்தனத்தை விட்டு, இறைவனை மனத்துள் நினைந்துகொண்டே துயிலுள் ஆழ்ந்தான்.
குற்றம் செய்தவன் நெஞ்சில் ஒரு புயல்; குற்றம் செய்ய எண்ணுபவன் நெஞ்சிலோ இரு புயல்; ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடுகின்றன. ஏஞ்செலோ கண்முன் சட்டத்தின் கண்டிப்பு இப்பொழுது இருபுறமும் இரு கத்திகள்போல் தொங்குகின்றன. தன் விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், சட்டத்தின் கண்டிப்பைத் தளர்த்திக் கிளாடியோவைக் காத்தாக வேண்டும். அப்படிச் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினாலோ, அந்தச் சட்டத்தின் கண்டிப்புக்குத் தானும் ஆளாகவே வேண்டும். அது வெளியில் தெரியாவிட்டால் என்ன? தன் மனச்சான்றின்முன் தான் என்றுங் குற்றவாளிதானே? ஆனால் இவ்வளவும் ஆராய்ந்தால், பின் விருப்பம் நிறைவேறாது போய்விடும் என்ற நினைவு வந்தது. மின் வலியால் தாக்குண்டவன் போல் அவன் துள்ளி எழுந்தான். ‘நான் என்ன கோழை! காரியமே கண்ணாயினோர் இத்தகைய எண்ணங்களுக்கு இடங்கொடுத்த லாகாது; அவளை அடைவேன். அதற்காகச் சட்டத்தைத் தளர்த்த மட்டுமன்று; வேண்டுமாயின் அச்சட்டத்தையும் அதனை என்மீது சுமத்தும் இந்நகரையுங் கூடத் துறந்து விடுவேன்’ என்று முடிவு கொண்டான் ஏஞ்செலோ.
மறுநாட் காலையில் இஸபெல் வந்தபோது வாயிற் காவலர் அவளை மதிப்புடன் வரவேற்று உள் அனுப்பினர். ஏஞ்செலோவின் ஏற்பாட்டின்படி வேறெவரும் உள்ளே வரக்கூடாதெனத் திட்டம் செய்யப்பட்டிருந்தது. இஸபெல் உள்ளே வேறு யாரும் இல்லாததைக் கவனிக்கவில்லை. ஆனால், இஸபெலுக்கு அவன் வணக்கம் அளித்துச் சரியிருக்கை அளித்தபோது அவளுக்கு அது புதுமையாகத் தோன்றிற்று. இருக்கையை மறுத்துவிட்டு, ‘என் விருப்பத்தைத் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்றாள்.
ஏஞ்செலோ: ஆம், ஆனால் நீயும் என் விருப்பத்திற்கு இணங்க வேண்டும், என்று நான் வேண்டுகிறேன்.
இஸபெல்: (சற்றுத் திடுக்கிட்டு) என்ன! உங்கள் விருப்பமா? தலைவரான நீங்கள் அப்படி என்னிடம் விரும்புவதற்கு என்ன இருக்க முடியும்?
ஏஞ்செலோ: நான் நகரத்துக்கு மட்டும் தலைவன்; நீ அழகுக்குத் தலைவி, உன்னைக் கண்டபிறகு கிளாடியோவின் குற்றத்தைத் தண்டிக்காமல் விட்டுவிடவே மனம் வருகிறது. ஆனால், கிளாடியோ செய்யும் குற்றத்தை நானும் செய்ய மனம் நாடுகிறது.
இஸபெல் அவனது இழிந்த நோக்கத்தை ஒரு நொடியில் கண்டுகொண்டாள். அவள் கண் அழலெனச் சிவந்து பொறி வீசின. ‘தலைவரே, தகுதியான காதலுக்குக் கொலைத் தண்டனை தரக் கூசாத நீர், அதில் கண்டிப்பாய் இருக்கவேண்டும் என்று பிடிமுரண்டு கொண்ட நீர், இப்பொழுது என்பாற் செய்த குற்றத்திற்கு யாது சொல்வீர்?’ என்றாள்.
விலங்கியல் கொண்டிருந்த ஏஞ்செலோ, பேய் இயல் கொள்ளலானான். ‘என் தண்டனையைப் பற்றிப் பேச்சில்லை. உன் தம்பியின் உயிர் வேண்டுமா, வேண்டாவா என்பதே பேச்சு, நீ இவ்விரவிற்குள்ளாக என் விருப்பத்திற்கு இணங்கவேண்டும். அன்றேல், உன் தம்பியை மறந்துவிடு’ என்றான்.
இஸபெல்: (வியப்புடன்) தலைவ! துறவி என்றும் வீரர் என்றும் பெயர் எடுத்த நீர், இவ்வாறு பேசுவதென்றால், என்னால் நம்பக்கூடவில்லையே. ஒருவேளை என் உறுதியைப் பார்க்க இப்படி நடக்கிறீரே என்னவோ?
ஏஞ்செலோ: பெண்மணி, உனக்கு அந்த ஐயம் சற்றும் வேண்டா. நான் எவரையும் அங்ஙனம் நடித்து ஏமாற்று பவனல்லன்.
இஸபெல் காதிரண்டையும் பொத்திக்கொண்டு, ‘ஐயோ, கடவுளே! இந்தப் பேர்வழி நடிப்பவனேயல்லன். நேற்றுவரை துறவியாக நடித்ததெல்லாம் மறந்துவிட்டானா’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள். வெளிப்படத் ‘தலைவரே, உமது பகுத்தறிவை இழந்து நன்மை தீமை தெரியாதவராய் நீர் பேசுகின்றீர். ஆனால், உமக்கு நான் கூறுகிறேன். நீர் இப்போது என்னிடம் கூறியதை யெல்லாம் ஊரிற் சென்று பறைசாற்றி உமக்கு நாலாபக்கமும் நரகத்தீயை என்னால் உண்டுபண்ண முடியும் என்பதை நீர் அறிந்து கொள்ளும். ஆகவே மறுபேச்சுப் பேசாமல் என் தம்பியை மன்னித்துவிட்டேன் என்று எழுதிக்கொடும்’ என்றாள்.
தான் அச்சுறுத்துவதற்கு அஞ்சாததோடு இப்பெண் தன்னையே ஏமாற்றியது கண்டு முதலில் ஏஞ்செலோ திகில் கொண்டான். ஆனால், மறுநொடியில் அவனது தீய அறிவு அவன் துணைக்கு வந்தது. உடனே அவன், ‘பெண்மணி, என்னை மிரட்டுவதற்கு உன் அறிவைப் பயன்படுத்தாதே, உன் தம்பியைத் தப்ப வைப்பதற்கு அதைப் பயன்படுத்து, நீ வெளியிற் சென்று என்னைத் தூற்றுவாயானால் எல்லாரும் என்னையே நம்புவர்; உன்னை நம்பார். ஒருவரிருவர் நம்பக்கூடியவரும் உன் தூய்மையைத்தான் அவமதிப்பர்’ என்று கூறிப் பேய்போல நகைத்தான். பின் ‘சரி, உனக்கு ஒருநாள் தவணை தந்தேன். அதற்குள் முடிவு தெரிவி’ என்றான்.
இஸபெல் அந்த ஒருநாளில் எப்படியும் இவன் வலையை அறுக்க வழிதேட வேண்டும் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள்.
4.மறைந்து நின்றருள் புரியும் அண்ணல்
இஸபெல் உடனே நேராகத் தன் தம்பியைக் காணச் சிறைக்கூடம் சென்றாள். மடத்துத் துறவி உருக்கொண்ட பழைய தலைவன் அப்போது கிளாடியோவுக்கு அருளுரை தந்து கொண்டிருந்தான். இஸபெல் வந்ததும், அவன் “நான் சென்று வருகின்றேன். கடவுள் உன்னைக் காப்பாராக” என்று ஒளிந்திருந்து அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்டுக் கொண்டிருந்தான்.
கிளாடியோ : இஸபெல், ஏஞ்செலோவைக் கண்ட காரியம் வெற்றிதானா?
இஸபெல்: உனக்கு உயிர் பெரிதாயின் வெற்றியே; மானம் பெரிதாயின் தோல்வியே.
கிளாடியோ : நீ சொல்வது விளங்கவில்லையே!
இஸபெல்: விளங்குமுன் இதற்கு விடைசொல். உனக்கு உயிர் பெரிதா, மானம் பெரிதா?
கிளாடியோ : இதைக் கேட்கவேண்டுமா? மானந்தான் பெரிதென்று நான் நினைப்பேன் என்பது உனக்குத் தெரியாதா?
இஸபெல் : சரி. இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. என் மானம் நிற்பதானால் நீ இறக்கவேண்டும். களிப்புடன் இறக்கவேண்டும். ஏனெனில். நீ பிழைக்க வேண்டுமானால். அவ்வொன்றையே விலையாகக் கேட்கிறான் அந்த நீசன் ஏஞ்சலோ?
கிளாடியோ: ஆ! அப்படிக் கேட்பானா? கொடியன்! ஆயினும். அதே குற்றத்தின் பகுதியை நானும் செய்திருக்கிறேன். நான் பிழைப்பதனால் ஜுலியட்டுக்கு நான் செய்த தீங்கையும் அகற்றமுடியும். இஸ்பெல்! இருவர் நன்மையை நினைத்தால்-நீ துறவியாகப் போகிறவள் தானே! வெளித் தெரியாத ஒரு தவறுதலை எங்கள் இருவர் நன்மைக்காகக் கடவுள் பொறுக்கமாட்டாரா?
இஸபெல்: அட, கோழை! உன்னை நான் எவ்வளவு பெரிதாக எண்ணினேன்! இன்றிருந்து நாளைப் போகும் உயிரை வெல்லமாகக்கொண்டு உடன்பிறந்தவள் மானத்தை விற்று தின்னப் பார்க்கிறாய்! நீ உண்மையாகவே என் உடன் பிறந்தவனாயிருந்தால், என் மானத்தை இழக்குமுன் இருபது தடவை சாவ அஞ்சியிருக்கமாட்டாய்!
கிளாடியோ தலைகவிழ்ந்து நின்று, ‘இஸபெல், நீ வீர மாது என்று நான் காண்கிறேன்; என் பிழை பொறுப்பாய்’ என்றான்.
அச்சமயம் துறவியுருக் கொண்ட தலைவன் வந்து இஸபெலின் வீரத்தை மெச்சி, கிளாடியோவைப் பார்த்து, ‘இத்தகைய தமக்கைக்குத் தகுந்த தம்பியாய் வீரத்துடன் உன் முடிவை ஏற்பாயாக’ என்று கூறி அவனை அவன் அறைக்கு அனுப்பினான். அதன்பின் அவன் இஸபெலை நோக்கி, ’இஸபெல், நீ பத்தரைமாற்றுத் தங்கம் போன்றவள். உன் வீரத்தை நான் இன்றுதான் கண்டேன். நான் சொல்லுகிறபடி நீ நடந்தால் உனக்குத் தீமையில்லாமலே உன் தம்பி பிழைப்பதோடு நீ இன்னொரு பெண்ணுக்கும் உயிர் கொடுத்தவள் ஆவாய்" என்றான்.
இஸபெல்: துறவுருக் கொண்ட பெருந்தகையோய், தாங்கள் கூறுவது தக்கதாயின் அங்ஙனமே செய்வேன்.
துறவி: நான் கூறுவது தக்கதா அன்றா என்பதையே நீயே மதித்து விடை கூறலாம்.
’உன்னை வஞ்சிக்க முயன்ற ஏஞ்செலோ ஒரு போலித் துறவி. அவனால் வாழ்க்கையிலிருந்து ஒரு பெண் தவிக்கின்றாள். அவள் பெயர் ¹⁰மேரியானா. அவள் இந்நாட்டையடுத்த தீவின் இறைவனான ¹¹பிரடெரிக்கின் தங்கை. பிரடெரிக் அவளை இவ்வேஞ்செலோவுக்கு மணம் செய்துகொடுத்தான். தங்கைக்குப் பரிசமாக அவன் பெரும் பொருட்குவையைக் கப்பலில் வைத்துக்கொண்டு கடல் வழியாக வந்தான். வழியில் கப்பல் உடைந்து பொருள் அழிந்ததுடன் அவனும் அவன் நண்பர்களும் இறந்தொழிந்தார்கள். மேரியானா தன் ஒப்பற்ற தமையனையும், உறவினரையும் இழந்தாள். ஆனால், இவ்வேஞ்செலோ அதனைப் பெரிதாக எண்ணாமல் அவள் பொருள் போனதையே பெரிதாகக் கருதினான். மேலும், பொருளுக்காகவே அவளை அவன் மணந்தவனாதலால் அவளைப் பல கொடுமைகளுக்கு உட்படுத்தி இறுதியில் அவள் தீ நடத்தையுடையவள் என்று பொய்க்குற்றம் சாட்டித் தள்ளிவைத்து விட்டான்.
‘அப்பேதை மாது தீமையே தரும் அக்கணவனிடமே உயிர் வைத்து நலிகின்றாள். தன் உயிரைத் தான் மாய்த்துக் கொண்டால் கூட அவனுக்குத் தீவினைப்பயன் வருமே’ என்று அஞ்சுகின்றாள்.
’ஏஞ்செலோ இத்தகைய கொடியன்.
‘ஆனால் இப்போது, நீ அவன் சொல்வதற்கிணங்குவதாக நடித்து இரவு வரும்படி சொன்னால், உனக்கு மாறாக அவளை அனுப்ப நான் எண்ணங் கொண்டுள்ளேன்.’
இஸபெல் முதலில் இச்சூழ்ச்சிக்கு இணங்கவில்லை யாயினும், நால்வழியும் ஆராய்ந்து அது தீமையற்றது எனக் கண்டு இணங்கினாள்.
அதன்படியே இஸபெல் ஏஞ்செலோவை ஏமாற்றி இரவு வந்து சேரும் இடத்தை அறிந்து அதற்கான திறவு கோல்களும் வாங்கி வந்துவிட்டாள். அவற்றின் உதவியால் மேரியானா தன் மனத்தைக் கொள்ளைகொண்ட கொடியவனை அடைந்து ஓரளவு தன்னை மறந்தாள்.
தீமையில் இறங்க இறங்கத் தீயவர் துணிவும் மிகுதி, தான் நினைத்த காரியத்தை முடித்துவிட்டதாக எண்ணிய ஏஞ்செலோ ஏன் இஸபெலை முற்றிலும் ஏமாற்றக்கூடாது என்று எண்ணி விடியற்காலையிலே கிளாடியோவைக் கொலை செய்யும்படி ஆள் அனுப்பினான். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த துறவியுருக் கொண்ட தலைவன் தனது தலைமை நிலைக்கான குறிகளைச் சிறைக் காவலனுக்குக் காட்டி அவனைத் தன் கருத்துக்கிணங்கச் செய்தான். அதன்படி அவன் கிளாடியோவை மறைத்து வைத்து விட்டு, வேறு இறந்துபோன ஒருவன் தலையைக் கொண்டுபோய்க் கொடுத்து, ‘கிளாடியோவை வெட்டி விட்டேன்’ என்றான்.
தன்னையும் ஏஞ்செலோவின் இன்னல்களையும் வெளிப்படுத்தும் சமயம் வந்துவிட்டதெனப் பழைய தலைவன் இப்போது எண்ணினான். ஆகவே, தன் பயணத்தைச் சில காரணங்களால் நிறுத்துவிட்டுத் தான் திரும்புவதாகவும், மறுநாட் காலையிலேயே தனது தலைமை உரிமையைத் தன்னிடம் விட்டுவிட வேண்டுமென்றும் அவன் ஏஞ்செலோவுக்கு எழுதினான். அதோடு, தன்னிடம் குறை கூறிக்கொள்வோர் நகரத்துத் தெருக்களிலேயே முறையிட்டுக் கொள்ளலாம் என்று முரசறைவிக்கும்படி பணித்தான்.
ஏஞ்செலோ இழிகுணமுடையவன் என்பது இஸபெலுக்குத் தெரியும். ஆனால், தன் கீழான விருப்பத்தை ஈடேற்றிக் கொண்ட பின்னும் அவன் கிளாடியோவைக் கொல்வான் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. எனவே, அதனைக் கேள்வியுற்றதும் அவள் எண்ணாததெல்லாம் எண்ணி விம்மினாள்; வெகுண்டாள்; தன் தீவினையை எண்ணி மனமழுங்கினாள். ஏஞ்செலோ நயவஞ்சகன் மட்டுமன்று; நன்றியறிதலற்ற பன்றிமகன் என்பதுங் கண்டாள். இதற்கிடையில் பழைய தலைவன் நாளையே வருகிறான் என்ற முரசொலி கேட்டதும் அவள் ஒருவாறு தன்னை அடக்கிக்கொண்டு அவனிடம் முறையிட எண்ணினாள்.
நிழலின் அருமை வெயிலில் அன்றோ தெரியும்? அருள் நோக்குடையார் ஒழுங்கிற்கும், போலி நடுநிலையுடையார் கண்டிப்புக்கும் உள்ள வேற்றுமையை ஏஞ்செலோவின் ஆட்சியில் கண்டுகொண்ட நகர மக்கள், தம் பழந்தலைவன் வருவது கேட்டு இழந்த உறுப்புக்கள் உயிர் பெற்றெழுந்தன என ஆரவாரத்துடன் எழுந்து சென்று வரவேற்றனர். இன்முகத் துடனும், வணங்கிய கைகளுடனும் தலைவன் அனைவர் வணக்கத்தையும் ஏற்றுத் தெருவழியே வரலாயினான். அச்சமயம் இஸபெல் தலைவிரி கோலத்துடன் அவனெதிரே வந்து வழிமறித்து, ’அருளுருக்கொண்ட எம் ஆருயிரே வருக. நீவிர் இல்லாதபோது இக்கொடியோன் (ஏஞ்செலோவைச் சுட்டிக் காட்டி) என் தம்பிக்கு உயிர் கொடுக்கும் பொய் உறுதி தந்து என் மானத்தைக் கைக்கொண்டு பின் அப்பழியோடு பழிசேர்த்து அவன் உயிரையும் வாங்கிவிட்டான். என் கண்மணியையும் இழந்தேன். பெண்களின் உண்மணியையும் இழந்தேன். இது முறையோ? என்று கதறி நின்றாள்.
ஏஞ்செலோ, ‘தம்பியை இழந்த துயர் இப்புனைவையும் அருளியது போலும்!’ என்று கூறி, வலிய முறுவலை வருவித்துக் கொண்டான்.
அப்போது மேரியானா முன்வந்து, "அரசே! இம்மாது கூறியவை முற்றிலும் உண்மையன்று; இவ்வுதவித் தலைவர் அவளுக்கு உண்மையில் எத்தகைய தீங்கும் செய்யவில்லை. அவர் செய்த தீங்கு எனக்கே. அவள் பெயரால் அங்கே சென்று அவர் காதலைப் பெற்றவள் நானே’ என்றாள்.
இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக வழக்காடவே தலைவன், ‘உங்களுக்குச் சான்று உண்டா?’ என்றான். இருவரும் ஒருங்கே மடத்துத் துறவி ஒருவரே எங்களுக்குச் சான்று என்றனர். ‘சற்று நேரத்தில் அவரை அழைத்து வருக’ என்று தலைவன் அவர்களிடம் கூறிவிட்டு, முதல் அமைச்சனாகிய எஸ்காலஸ் பெருமகனை அழைத்து, ‘இப்போது ஏஞ்செலோ வழக்காளிகளுள் ஒருவனாய் விட்டபடியால் நான் வருமுன் அவர்கள் சான்று கொண்டு வந்தால் நீயே வழக்காராய்ந்து தீர்ப்பளிப்பாயாக’ என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
5.கற்பரசிகளின் வெற்றி
வெளியே சென்று அவன் மறுபடியும் மடத்துத் துறவி உருக்கொண்டு மேரியானாவுக்கும் இஸபெல்லுக்கும் சான்று கூறுவதாக அவர்களையும் உடன் கூட்டிக்கொண்டு வந்தான். தலைவனில்லாததையும் தன் நண்பனே உதவித் தலைவனாக இருப்பதையும் கண்டு துணிவுற்று ஏஞ்செலோ, ‘ஐயா, இப்பெண்கள் இருவரும் சேர்ந்து, என் மீது பழி கட்டியிருக்கின்றனர். இத்துறவியும் அவர்களுக்கு உடந்தை யானவனே’ என்று கூறினான். அது கேட்டுத் துறவி, ‘நான் சான்று பகர வந்தேனேயன்றி உனக்கெதிராக வழக்காட வரவில்லை. ஆயினும், நீ என்னை இழுத்து விட்டபடியால் கூறுகிறேன். உன் தகுதி தெரியாமல் தலைவன் உன்னை ஆளவிட்ட வீறு. நீ தலைகால் தெரியாமல் நடக்கின்றாய். நீ செய்த கொடுமைகள் பலவும் நான் நேரில் கண்டறிந்தவனே’ என்றான். இவனைப் பேசவிடுவது தவறு என்று கண்டு எஸ்காஸ், ‘அடே துறவி, இவர் தலைவராயிருந்தவர், இன்னும் உயிர்நிலையி லுள்ளவர். இவருக்கெதிராகப் பேசமுன் உன்னைக் குற்றுயிராகக் குலைக்கும்படி உத்தரவிடுவேன்’ என்றான்.
‘உதவித்தலைவன் ஒழுங்கு இதுதானா?’ என்று கேட்டுக் கொண்டே தலைவன் தன் துறவி உடையை அகற்றித் தலைவனுடையில் வெளிப்பட்டான். எஸ்காலஸ் பெருமகன் முகம் சுண்டிற்று. ஏஞ்செலோ முகத்திலோ இருபத்தொரு நகரங்களும் தாண்டவமாடின. தலைவன்முன் தன் சிறுமையனைத்தும் வெளிப்பட்டு விட்டது எனக் கண்டு அவன் வேரற்ற மரம்போலத் தலைவன் முன் விழுந்து உயிருக்கு மன்றாடினான். தலைவனோ அவன் பக்கம் பாராமல், ‘உன்னை எக்குற்றத்திற்கும் மன்னிக்கலாகும்; கிளாடியோவின் உயிரைக் கொள்ளை கொண்டதற்கு மட்டும் மன்னிக்க முடியாது. அவனது முடிவை நீயும் அடைக’ என்றான்.
அச்சமயம் மேரியானா ஓடிவந்து பணிந்து, ‘அண்ணலே, எனக்கு இவர் கணவர், காதலர். அவர் என்னைத் தள்ளினும் என் உள்ளத்தில் அவர் என்றும் தலைவரே. அவர் இறந்து வாழேன், என்னுயிரைக் கொண்டேனும் அவர் உயிரைக் காப்பாற்றி யருளுவீர்’ என்றாள்.
தலைவன் அசையாதது கண்டு, அவள் இஸபெலை அணுகி, ‘இஸபெல், இஸபெல், நீ பெரிய மனம் கொண்டவள் என்று எனக்குத் தெரியும். அவர் செய்த பிழை மன்னிக்க முடியாதது என்றும் நான் அறிவேன். அதற்காக நான் என்மீது எத்தகைய தண்டனையையும் ஏற்றுக்கொள்வேன். அவரை மட்டும் காப்பாற்ற வேண்டுமென்று தலைவரை என்னுடன் நீயும் வேண்டிக் கொள்வாயா?’ என்று இரந்தாள்.
இஸபெல் தன் தம்பியைக் கொன்ற பாதகன் மீது தனக்குள்ள சீற்றத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, ‘தலைவரே அவ்வாடவன் செய்த குற்றம் எதுவாயினும், இப்பெண் அவன்மீது கொண்ட காதல் அதனை அழித்துவிடும் தன்மையது. இவள் வேண்டுகோளை நிறைவேற்றி அருள்புரிவீர்’ என்றாள்.
தலைவன் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டு, ‘மேரியானா கற்பரசி. அவளுக்கு அவள் கணவன் உயிரைக் கொடுக்கத் தடையில்லை. ஆனால் அவன் தன் போலித் துறவை ஒழித்து அவள் கணவனானால் மட்டுமே உயிர் பிழைப்பான்’ என்றான். மேலும் அவன், ‘அவளைவிட இஸபெலும் கற்பிற் குறைபடுபவள் அல்லள். அதோடு தம்பியைக் கொன்றவனை மன்னித்த அவள் பெருமை அரிதே. அவளுக்கும் நான் பரிசு கொடுக்க எண்ணுகிறேன்’ என்று கூறி ஒரு வேலையாளைக் குறிப்பாகப் பார்த்தான். உடனே அவன் சென்று கிளாடியோவைக் கூட்டிக்கொண்டு வந்தான்.
இறந்து போவோம் என்று வந்த கிளாடியோ, உயிரையும் பெற்றான். உயிரினும் பன்மடங்கு உயரிய தமக்கை அன்பையும் பெற்றான்; இஸபெலின் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இல்லை.
தலைவன் இஸபெலை நோக்கி, ‘இத்தனைப் பெருந் தகைமையையும் உறுதியான கற்பையும் உடைய நீ துறவறம் பூண்பது தகுதியன்று. உனது பெருமைக்கேற்ற கணவன் இவ்வுலகில் இருக்க முடியாது. ஆயினும் உனக்கு நான் செய்த உதவியை எண்ணி என்மீது கடைக்கணிப்பதாயின், அஃது இந்நகரும் யானும் செய்த முன்னை நல்வினைப்பயன் என்றெண்ணுவேன்’ என்றான்.
இஸபெல் தன்னை ஈன்ற தாயை நினைப்பவள் போல நிலமாதை உற்று நோக்கினாள்.
அதுமுதல் வீயன்னா நகரத்து இளைஞரை அந்நகரத்து மங்கையர் விழிகளே நல்வழிப்படுத்தின. இஸபெலின் முன்மாதிரியே, அவர்களுக்கு எச்சட்டத்திலும் மேலான சட்டமாய் அமைந்தது.
** அடிக்குறிப்புகள்**
1. Vienna 2. Vincentio.
2. Lord Escalus 4. Anglo
5.Claudio 6. Isabel
7.Convent of St. Clare 8. Juliet
9. Lucio 10. Mariana
10. Frederick
ரோமியோவும் ஜூலியட்டும்(Romeo and Juliet)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. கப்பியூலத்துப் பெருமகன்: ஜூலியட்டின் தந்தை.
2. மாண்டேகுப் பெருமகன்: கப்பியூலத்தின் வரன்முறைப் பகைவன்-ரோமியோவின் தந்தை.
3. ரோமியோ: மாண்டேகுப் பெருமகன் புதல்வன்-ஜூலியட்டைக் காதலித்து மறைவாய் மணந்தவன்.
4. பென்வாலியோ: ரோமியோவின் நண்பர்கள்.
5. மெர்குதியோ:
6. டைபால்ட்: ஜூலியட்டின் அருமை மைத்துனன்-ரோமியோவை மல்லுக்கிழுத்து அவன் கையால் இறந்தவன்.
7. லாரன்ஸ்: துறவி-அருளுடையார்-ரோமியோ ஜுலியட் காதலால் இரு குடிகளின் பகை தீர்க்க எண்ணி மணம் புரிவித்தவர்.
8. கவுண்ட்பாரீஸ்: பெற்றோரால் ஜூலியட்டுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற மணமகன்.
பெண்டிர்:
1. ஜுலியட்: கப்பியூலத்துப் பெருமகன் புதல்வி, ரோமியோவின் காதலி.
2. ரோஸாலின்: ரோமியோவின் முதற் காதலி-அவனைப் புறக்கணித்தவள்.
** கதைச்சுருக்கம்**
மாண்டேகு, கப்பியூலத்து என வெரோணா நகரத்தில் இரு பெருஞ் செல்வக் குடிகள், அவர்கள் தம்முட் பெரும் பகைமை கொண்டிருந்தனர். மாண்டேகுப் பெருமகனுடைய ஒரே புதல்வன் ரோமியோ. கப்பியூலத்துப் பெருமகனுடைய ஒரே புதல்வி ஜூலியட். கப்பியூலத்துப் பெருமகன் மாளிகையில் நடந்த ஒரு விருந்திற்குத் தான் விரும்பிய ரோஸாலின் என்ற மங்கையைக் காணப் பென்வாலியோ, மெர்குதியோ என்ற தன் இரு நண்பருடன் வந்த ரோமியோ ஜூலியட்டைக் கண்டு காதலித்தான். ரோமியோவுக்கு லாரன்ஸ் என்ற ஒரு துறவி நண்பனாயிருந்தான். அவன் பகைமை கொண்ட இரு குடிகளையும் இணைக்கும் ஆர்வத்துடன் ரோமியோ ஜூலியட் ஆகியவர்களின் காதலை ஆதரித்து மறைவில் மணஞ் செய்துவைத்தான்.
அவர்கள் காதல் செய்தியறியாது ஜூலியட்டின் மைத்துனன் டைபால்ட் ரோமியோவை மெர்குதியோவுடன் தெருவில் கண்ணுற்று மல்லுக்கிழுத்துப் போரிட்டு அவனால் கொலையுண்டான். இதனால் நகர்த்தலைவன் ரோமியோவை நாடு கடத்தவே, ஜூலியட்டிடமும் துறவியிடமும் விடைபெற்று அவளை அழைத்துக் கொள்வதாக உறுதி தந்து சென்றான்.
இதற்கிடையில் ஜூலியட்டின் காதல் மணச் செய்தியறியாத பெற்றோர் அவளைப் பாரிஸ் பெருமகனுடன் மணஞ் செய்ய ஏற்பாடு செய்தனர். இவ்விக்கட்டினின்றும் தப்ப லாரன்ஸ் ஒரு சூழ்ச்சி செய்தான். 42 மணி நேரம் இறந்தவர் போலாக்கும் மயக்க மருந்தொன்றை அவளுக்கு அவன் கொடுக்க, அவள் இறந்தவளென்று தன் குடும்பக் கல்லறையில் அவளை அடக்கம் செய்கின்றனர். துறவி இது செய்தியைத் தூதனால் அவனுக்குத் தெரிவித்து அவளைப் எழுப்பிப் போகும்படி ரோமியோவுக்கு எழுதினான். ஊழ்வலியால் தூதன் தாமதம் செய்துவிட்டான். நற்செய்தியிலும் கடுகச் சென்ற ஜூலியட் இறப்புச் செய்தி கேட்டு வந்த ரோமியோ அவளைக் கண்டு இறந்ததாகக் கொண்டு அங்கே வந்த பாரிஸ் பெருமகனுடன் போரிட்டு அவனைக் கொன்றபின் தானும் மாள, அதன்பின் எழுந்த ஜூலியட்டும் காதலுடன் மாண்டாள். இறுதியில் வந்த இரு குடிப் பெற்றோரும் நகரத்தலைவனும் துறவியால் செய்தி முற்றும் அறிந்து முன் பகைமைக்குக் கழிவிரக்கங் கொண்டு வருந்தினர்.
1.எதிர்பாரா விருந்தினர்
¹வெரோணா நகரத்தில் ²கப்பியூலத்து என்றும் ³மாண்டேகு என்றும் இரண்டு பழம் பெருங்குடிகள் இருந்தன. இக்குடியினர் நெடுங்காலம் ஒருவரை ஒருவர் பகைத்து வந்திருந்தனர். அந்நகரத்தார் நினைவு எட்டியவரையிலும் அவர்கள் பகைவர்களாகவே இருந்து வந்தமையால் அப்பகைமை வேரூன்றிய தோடன்றி, அவர்கள் உறவினர், நண்பர் பணியாட்கள் முதலியயாவரிடமும் பரவிற்று. எனவே, அந்த இரு கட்சியினரும் அவர்கள் நண்பர்களும் பணியாட்களும் தெருக்களிலும் சந்துகளிலும் ஒருவரையொருவர் கண்ணுறும் போதெல்லாம் நாள்தோறும் பூசல் விளைவித்து வந்தனர். அடிதடியும் கொலையும் தீமொழியும் இதனால் நகரில் மிகுந்தன.
ஒருநாள் கப்பியூலத்துப் பெருமகனார் மாளிகையில் ஒரு பெரு விருந்து நிகழ்ந்தது. அதில் அந்நகரத்து நன்மக்களில் மாண்டேகுகள் நீங்கலாக ஆடவர் பெண்டிர் யாவரும் வந்து குழுமினர். நகரத்தின் அழகிகள் அனைவரும் அவ்விருந்தின் போது நடக்கும் ஆடல் பாடல்களில் கலந்தனர். அவர்களைப் பார்க்க வந்த இளைஞரும் மிகப்பலர்.
அத்தகைய அழகிகளுள் ஒருத்தி ⁴ரோஸாலின் என்பவள். மாண்டேகுப் பெருமகனாரின் மகனாகிய ⁵ரோமியோ இவ்வழகியின் கவர்ச்சியுட்பட்டு அவள் வெறுத்துத் தள்ளியும் நீங்காது அவளைத் தொடர்ந்து வந்தான். அவளுடன் கலந்துறவாட இவ்விருந்து நல்ல வாய்ப்பளிக்கும் என்பதைத் தெரிந்து அவன் அதில் வந்து சேர்ந்து கொள்ள விரும்பினான். ஆனால் தன் குடும்பத்தின் பண்டைப் பெரும் பகைவர்களான கப்பியூலத்துக்களின் வீட்டில் நிகழும் விருந்துக்குச் செல்வ தென்றால், ‘அது கீரி வீட்டில் பாம்பு குடி போவது போலாயிற்றே’ என்று கவன்றான்.
ரோமியோவுக்குப் ⁶பென்வாலியோ, ⁷மெர்க்குதியோ என்ற நண்பர்கள் இருவர் இருந்தனர். காதலின் அருமை அறியாத கல்நெஞ்சினளாகிய ரோஸாலினுக்குத் தம் நண்பன் அடிமை யாயிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கப்பியூலத்துக் களின் விருந்தில் அழகிகள் பலரும் வருவார்களாதலால் அவர்களைக் கண்டு ரோமியோ ரோஸாலினின் கவர்ச்சியினின்று விடுபடக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். ஆகவே, அவ் விருந்துக்கு அவனுடன் போவதென அவர்களும் தீர்மானித்தனர். எதிரிகள் தம்மை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்கள் அனைவரும் முகமூடியுடன் செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
முகமூடியணிந்து விருந்துகளுக்கும் நடனங்களுக்கும் செல்வதும், ஒருவரை ஒருவர் தெளிவாக அறியாமலேயே உறவாடிக் கலந்து காதல் நாடகம் நடிப்பதும் அந்நாட்டில் அக்காலத்தில் வழங்கி வந்த வழக்கங்கள் ஆகும். ஆகவே, அவர்கள் முகமூடியணிந்து வந்ததைப் பற்றி எவரும் தவறாக எதுவும் எண்ணவில்லை. ஆனால், அவர்கள் இன்னார் என்றறிய முடியாவிடினும், நடை உடை தோற்றங்களால் அவர்கள் இளைஞர்கள் என்றும், உயர்குடிச் செல்வர்கள் என்றும் எளிதில் உணரமுடிந்தது. அதனால் அவர்களைக் கப்பியூலத்துப் பெருமகனாரே நேரில் வந்து எதிர்கொண்டு அழைத்தார். அவர் ஆண்டில் முதிர்ந்தவராயினும் அன்புகனிந்த உள்ளமும் இளைஞர்களும் வியக்கும் ஊக்கமும் உடையவர். எனவே, அவர்களுடன் இன்மொழிகள் கூறி அளவளாவலாயினார்.
ரோமியோவின் நண்பர்கள் எதிர்பார்த்தபடியே வெரோணா நகரத்திலுள்ள வடிவழகிகள் அவ்விருந்தில் நடந்த ஆடல் பாடல்களில் கலந்து கொண்டனர். அழகுக்கலை வல்லுநர் பாராட்டும் பல்வகை அழகுகளும் உருவெடுத்து நேரில் வந்தனவோ என்னும்படி அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒப்புயர்வற்ற அழகிகளாகவே விளங்கினர். பலவகை மலர்கள் ஒரே கொம்பில் வந்து சேர்ந்தாற்போல ஒரே இடத்தில் வந்து குழுமிய இத்தனை அழகிகளை ரோமியோ பார்த்ததே கிடையாது. கால்கள் பாவுகின்றனவோ அல்லவோ என்று ஐயுறும் வண்ணம் நீரில் மிதக்கும் அன்னங்கள்போல அவர்கள் மிதந்து சென்றனர். கண்களைக் கவரும் பலநிறப் பாம்புகள் போல் அவர்கள் ஒருவரை ஒருவர் வட்டமிட்டு, நெளிந்து நெளிந்து ஒருவரூடு ஒருவர் புகுந்து மீளுவாராயினர். இஃதனைத்தும் விழித்த கண் விழித்தபடி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரோமியோ. ரோஸாலினின் கொடுமையால் புண்பட்ட அவன் உள்ளத்தில் இவ்வினிய காட்சி படிந்து புண்ணாற்றியது.
ரோஸாலினைப் பற்றிய நினைவு அதனுடன் மனத்தினின்றும் அகன்றது.
விண்மீன்களிடையே திங்கள் போலும், வான மங்கையரிடையே இந்திராணி போலும் அம்மங்கையர் குழாத்தில் ஒப்பற்ற வடிவழகி ஒருத்தி விளங்கினாள். அவள் அழகை நோக்க அவளைச் சூழ்ந்து நின்ற வாத்துக்கள் போலத் தோன்றினர். அவன் கண்ணுக்கு அங்குள்ள விளக்கங்கள் அனைத்தும் அவளிடமிருந்தே ஒளிபெற்று விளங்குவனவாகத் தோன்றின. ‘ஆ! இத்தனை அழகும் இம்மண்ணுலத்திற்குரியது தானா? இது மனிதர் கண்கள் பார்க்கத் தக்கதுதானா?’ என்று அவன் வியந்தான். அவள் அப்பெண்கள் கூட்டத்தில் இடையிடையே தோன்றித் தோன்றி மறையுந்தோறும் அவனுக்குத் தன் உயிரே அவளுடன் சென்று மீளுவதாகக் காணப்பட்டது.
காதல் வயப்பட்டோர், கவிதை வயப்பட்டோர், கள் வயப்பட்டோர் என்னும் இம்மூவரும் நாவை அடக்கார் என்பது பொதுச்சொல் அன்றோ? ரோமியோ உளமும் கண்ணும் அவ்வழகியர் கூட்டத்திற்குள்ளும் புறமுமாகத் திரியும்போது கூட அவன் நாக்கு மட்டும் ஓயாது அவளைப் புகழ்ந்து புகழ்ந்து பிதற்றிய வண்ணமாகவே இருந்தது. ‘ஆஅ அவள் மேனி பொன்மேனி’ என்பான்; அவள் ஆடைகள் பாலாடைகள் போன்றன’ என்பான்; அவை ஆடைகள் அல்ல அன்னப் பறவையின் தூவிகள்’ என்பான்; இத்தகைய பெண்ணைக் கப்பியூலகத்தின் மாளிகையில் வந்தா காணவேண்டும்? எமது குடிக்கு இத்தகைய தெய்வ வடிவம் கொடுத்து வைக்கவில்லையே என்றிவ்வாறு கூறிப் பலபடப்புலம்புவான்.
2.காற்று நுழையா இடத்தும் நுழையும் காதல்
ரோமியோவின் உள்ளத்தைக் கவர்ந்த அப்பெண்ணணங்கு வேறு யாருமல்லள். கப்பியூலத்துக் குடிகளின் குலக்கொடியாக வந்து பிறந்த ⁸ஜூலியட்டேயாவாள். திருமகள் பிறந்த பாற்கடலுள் அவளுடன் கூடவே பிறந்த நஞ்சுபோல அவளுக்கு ⁹டைபால்ட் என்ற மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் இவ்விளைஞர்களினுடைய பெருமித நடையையும் அவர்களிடம் கப்பியூலத்துப் பெருமகன் காட்டிய நன்மதிப்பையும் கண்டு உள்ளூறப் பொறாமை கொண்டான். நண்பரைவிட ஒருவனை நன்கு உற்றுக் கவனிப்பர் பகைவர் ஆதலின் அவன் அவர்களை அடுத்து, அவர்கள் தமக்குள் தாழ்ந்த குரலிற் பேசுவதைக்கூட உற்றுக் கேட்டு வந்தான். தன் குடிக்கு ஒரு குலக்கொழுந்தான ஜூலியட்டின் மீது அவன் கண்கள் செல்வதையும் அவள் கவர்ச்சியில் அவன் ஈடுபடுவதையும் காண அவனது பொறாமைத் தீ இன்னும் பலமடங்கு மிகுதியாயிற்று.
இறுதியில் அவன் பேச்சிலிருந்தும், நடை உடை தோற்றத் திலிருந்தும் அவன் மாண்டேகுக் குடியினன் என்பதையும், அக்குடியின் தலைவன் மகன் ரோமியோ என்பதையும் உன்னிப்பாய் அறிந்தபோது, அவனுடைய உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த பொறாமைக் கனல் வெஞ்சினமாகப் பொங்கி எழுந்தது. ஆனால், விருந்து விழாவின்போது பூசல் விளைப்பது அதன் பெருமையைக் குலைப்பதாகும் என்பதை உன்னி அவன் மிக முயன்று தன்னைத் தற்காலிகமாக அடக்கிக் கொண்டான்.
இரும்பும் காந்தமும் எங்கிருந்தாலும் எது வந்து இடைப்பட்டாலும் ஒன்றை ஒன்று ஈர்த்தே தீருமன்றோ? அதுபோல எதிரெதிரான பகைக் குடியுட் பிறந்தும், இவ்விரு சிற்றுயிர்களும் ஒன்றையொன்று பார்த்தது தான் தாமதம்; உடன் தாமே உடல் மாறி ஒருவர் உடலில் ஒருவர் புகுந்து வருத்தத் தொடங்கினர்.
விருந்தின் முடிவில் நங்கையர் தம் ஆடல் பாடல்களை விடுத்துக் கலைந்த போது ரோமியோ ஜூலியட்டை அணுகினான். அவ்வளவு ஆடல் பாடல்களினிடையேயும் அவள் உள்ளம் அவன் பக்கமாகவே நாடி நின்றதாதலின் அவளும் தன்னை அறியாமலேயே அவனை அணுகினாள்.
முகமூடியணிந்தோர் அதன் மறைவிலிருந்து கொண்டு கபடின்றித் தம் கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அதை ஒட்டி ரோமியோவும் ஜூலியட்டின் கையைத் தன் கைகளிற் புதைத்துக்கொண்டு அவள் அழகையும் இனிய பாடலையும் பாராட்டிப் பேசுவானாயினான்.
ரோமியோ: உன் உருவமும் பாடலும் நடையும் யாவுமே வானவர்க்குரியன. நீ ஒரு தெய்வமங்கை என நினைக்கிறேன்.
ஜூலியட் : மிகவும் நன்று. அப்படியானால் அத்தெய்வ மங்கையின் கையை மண்ணுலக மாந்தர் கைகொண்டு தீண்டல் பழியன்றோ?
ரோமியோ : உண்மை, ஆயின் அப்படிக்கேற்ற தண்டனை அதனை முத்தமிடுவதுதான் (என்று கூறிக்கொண்டு அக்கையை முத்தமிடலானான்)
ஜூலியட் : உண்மைப் பற்றுடைய அடியவர் தெய்வ வடிவங்களைத் தீண்டும் உரிமையுடையவரே. ஆனால் அதனை முத்தமிடும் உரிமை உடையவரல்லர்.
இத்தகைய இனிய காதலுரைகளுக்குத் தடையாக ஜூலியட், ஜூலியட்’ என்ற ஒரு குரல் கேட்டது. உடனே ஜூலியட். ‘ஆ, என் தாய் அழைக்கிறாள்’ என்று கூறிவிட்டு ஓடினாள். ஓடும்போது ஒன்றிரண்டு தடவை அவள் கண்கள் சற்றுச் சாய்வாகத் தன் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றன என்று ரோமியோவுக்குப் பட்டது.
அதன் பின்புதான் அவன், அவள் யார் என்று பக்கத் திலுள்ளவர்களிடம் உசாவினான். உண்மையை அறிந்தபோது அவன் மனம் முதலில் இடிவுற்றது. ‘ஆ என்ன செய்தேன். பகைவர் புலத்துட்பட்ட பாவையிடம் என் உயிரைக் கொண்டு வைத்துவிட்டேனே’ எனக் கலங்கினான். ஆனால், காதலைத் தடுத்து நிறுத்தும் வன்மையுடையது எது? பகை, பொறாமை, சிறுமை ஆகிய புயல்களால் மொத்துண்ட வாழ்க்கைக் கடலுக்கு அமைதியளிக்கும் மதியம் அக்காலத்தன்றோ?
மாண்டேகுப் பெருமகனாரின் மகனாகிய ரோமியோ கப்பியூலத்தின் மாளிகையுட் புகுந்து விருந்தில் கலந்து கொண்டதோடன்றி ஜூலியட்டிடம் பேசக்கூடத் துணிவு கொண்டானென்ற செய்தி நகரெங்கும் பரவிற்று. அன்று முழுமையும் தான் கண்ட இளைஞனையும், அவனுடைய காதற் குறிப்புக்களையும் பற்றியே கனாக் கண்டுகொண்டிருந்த ஜூலியட்டின் காதிலும் இது விழுந்தது. அப்போது அவள்முகம் சட்டென நகையிழந்து கவலையுள் ஆழ்ந்தது. ‘அந்தோ, எனக்கும் என் காதலுக்கும் இடையே மாந்தர் கட்டியகோட்டைகள் எத்தனை உள்ளன!’ என்று ஏங்கினாள் அவள்.
பண்டை நாள் தொட்டே காதல், கடலும் மலையும் கானாறும் கடக்கும் திறனுடையதாக விளங்குகின்றது. அது காலம் இடம் என்பவற்றின் கட்டறுத்த கடவுளின் ஒரு சிறு பதிப்பு ஆதலின், அவரைப் போலவே இச்சிறு வாழ்க்கையளவில் அது காலமும் இடமும் கடந்து நிற்கின்றது. அதன் வயப்பட்டோர்க்கு இரவும் பகலும் ஒன்றுதான். காடும், நாடும் முள்ளும் மலரும் ஒன்றுதான்.
உலகத்திற்கு ஒரு பகல் சென்றது. உலகத்தார்க்கு ஓர் இரவு வந்தது. தூங்கும் உயிர்களுக்கு அது நள்ளிரவுப்போது. ஆனால், ரோமியோவுக்கு ஜுலியட்டின் நினைவே ஞாயிறாய் இருந்தது. அந்நினைவு மாறாத அவனுக்கு இரவேது? ஞாயிறு படிந்ததையும், மதி உயர்ந்ததையும் அவன் அறியவில்லை. அப்படி ஜூலியட்டே நினைவாக மனதுட் கொண்டலைந்தான்.
அவன் உள்ளம் ஜூலியட்டைச் சுற்றி வட்டமிட்டது. அவன் கால்களும் அவனையறியாமலே கப்பியூலத்தின் மாளிகையைச் சுற்றி வட்டமிட்டன. மாளிகையின் பின்புறம் ஒரு தோட்டம். அதன் மதில்கள் இரண்டாள் உயரம் ஓங்கி நின்றிருந்தன. தன் காதலி இருப்பது அதன் மறுபுறம் என்று மனதுள் நினைத்தான். உடன் அம்மனமும் அதனைப் பின்பற்றி அவனுடலும் தாமே அம்மதிலைத் தாண்டிக் குதித்தன. தோட்டத்தில் யாரேனும் இருப்பாரோ என்று எண்ணிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். அந்நள்ளிரவில் அங்கு யார் இருப்பர்? கொஞ்ச நேரத்திற்குள் தோட்டங் கடந்து மாளிகையின் பின்புறத்தை அடைந்தான். அதன் பலகணி தலைக்கு மேலாகச் சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன் சித்திர வேலைப்பாட்டினால் அதுவே பெண்டிர் பகுதி எனக் கண்டான். அதன் உட்புறமே அவனது காதற்கனி தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதனைப் பற்றி எண்ணிய தான் இப்படி வெளியே நிற்பதை எண்ணி வருந்தினான்.
3.காதலர் கண்ட இன்பம்
காதல் கூட்டிவைக்கும் என்றால், அவர்கள் காதலைச் சொல்ல வேண்டுமா? ரோமியோ அங்கு வந்து நின்ற அதே சமயத்தில் ஜூலியட்டும் அதே பலகணியின் பக்கத்திலேதான் நின்றிருந்தாள். அவளது காதல் அவள் மனத்துள் அடங்காத தாகத் தோன்றியதனால் அதனைச் சற்றே இவ்வகன்ற உலகில் திறந்து வெளியிடுபவள் போல அவள் பலகணியைத் திறந்து வந்து நின்றாள். பின் தன் காதலேபோல் உயர்ந்தகன்று விரிந்த வானத்திரையில், தன் எண்ணங்களே போல் எண்ணற்று விளங்கிய விண்மீன்களில் தன் கவனத்தைச் செலுத்தினாள். ’ஆ
** காதல், காதல், காதல்; அக்காதல் போயின்**
** சாதல், சாதல், சாதல்!!**
எவ்வளவு பொருத்தமானது இப்பாட்டு’ என்றாள் ஜூலியட்டு. கீழிருந்து ஒருவன், ‘உன் விழியிலே தானே இருக்கிறது, அச்சாதல்’ என்றான். அஃது அவள் காதில் விழவில்லை.
“ஆ! விருந்தில் ஆடிப் பாடியபோது நீ தெய்வமாது என்பது முற்றிலும் விளங்கவில்லை; இப்போது உன் குரல் வானிலிருந்து வருவது போன்றே இருக்கிறது. உயரப் பறக்கப் போகும் பறவை போலவே நீ வெளியில் அந்தரத்தில் வந்து நிற்கிறாய்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ரோமியோ!
தன் மனத்துட் கொண்ட ரோமியோவைப் பார்த்து அவள் பேசத் தொடங்கினாள். உண்மையில் ரோமியோவே அதனை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.
“ஆ, ரோமியோ, ரோமியோ! நீ ஏன் ரோமியோவாயிருக்க வேண்டும்? மாண்டேகுக் குடியில் நீ ஏன் பிறக்கவேண்டும்? அன்றி, அதுதான் போகட்டும். கடவுள் என்னை ஏன் ஜூலியட்டாகப் படைக்க வேண்டும்? நான் ஏன் உனக்குப் பகைவர்களான கப்பியூலத்துக் குடியிற் பிறக்கவேண்டும்?” என்றாள்.
அவளுக்கு விடையிறுக்க, அவளுடன் உரையாட அவன் உள்ளம் பாய்ந்தெழுந்தது. ஆனால், அவள் இன்னுரைகளைப் பின்னும் கேட்க வேண்டுமென்னும் ஆர்வம் அதனை அழுத்திப் பின்னுக்கு இழுத்தது.
அவள் பின்னும், ‘ஆ, ரோமியோ? நீ ஏன் ரோமியோவா யிருக்க வேண்டும்? நீ ஏன் மாண்டேகு ஆயிருக்க வேண்டும்? அக் கொடியர்களை விட்டுவிட்டு வேறு பெயர் கொள்ளலாகாதா? என் மனத்தில் உள்ள காதலின் ஒரு பகுதி மட்டும் உன் மனத்தில் இருந்தால் இப்பெயர்களை உதறித் தள்ளிவிட மாட்டாயா? அப்படி நீ தள்ளாவிட்டால், இதோ நான் தள்ளுகிறேன். நான் ஜூலியட்டல்லள், கப்பியூலத்து அல்லள் என்று வைத்துக் கொள்க’ என்றாள்.
காதல் போட்டிக்கழைத்த அழைப்புப் போன்ற இம்மொழிகளுக்கு ரோமியோவால் விடை கொடுக்காமல் இருக்க முடியவில்லை. எனவே, அவன் ‘நானுந்தான் இனி’ ரோமியோ அல்லன்; மாண்டேகு அல்லன்; உன்னைக் கண்டபோதே நான் மீண்டும் பிறந்தேன். நீ இனி எனக்கு என்ன பெயரிட்டழைப்பாயோ அதுவே என் பெயராகும். நீ காதல் என்றோ, கண்மணி என்றோ, வேறெப்படி வேண்டுமாயினும் அழைத்துக் கொள்க’ என்றான்.
தான் தனிமையாய் இருப்பதாக நினைத்ததற்கு மாறாக வேறு ஏதோ குரல், அதுவும் ஆடவர் குரல் கேட்பது கண்டு திகில்கொண்டு ஜூலியட் கதவை அடைத்துவிட்டு உட்செல்ல இருந்தாள். ஆனால் ரோமியோ, என் ஜூலியட்; உன் மனக்கதவைத் தான் திறந்துவிட்டாயே; இனி ஏன் இவ்வெளிக் கதவைச் சாத்திவிட்டு ஒளிக்கவேண்டும்’ என்றான்.
அப்போதுதான் அவளுக்கு, அவன் தன் உள்ளங் கோயில் கொண்ட தலைவனே என்பது விளங்கிற்று.
பசிப்பிணி தீரக் கூழில்லையே என்று வருந்துபவன் முன் முக்கனியும் தேனும் கலந்த இன்னுணவு வைக்கப்பட்டா லெப்படியோ, அப்படியிருந்தது ஜூலியட்டுக்கு ரோமியோவின் வரவு!
அவளது உள்ளத்துக்கு முந்த நாவும், நாவுக்கு முந்த உளமும் துடித்தன. அவனைக் கண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒரு புறம்; அவன் பகைவரிடத்திற்கன்றோ வந்திருக்கிறான். அவனுக்கு என்ன நேருமோ என்ற அச்சம் ஒருபுறம் ஆகப் போரிட்டன. பின் தழுதழுத்த குரலில் அவள், ‘நீ இவ்விடத்தை அறிந்து எப்படி வந்து சேர்ந்தாய்?’ என்று கேட்டாள்.
ரோமியோ: காதலாகிய வடமீன் வழிகாட்ட வந்தேன். இம்மாளிகையிலிருக்கும் பொருட் குவையைப் பெற ஏழு கடலையுந் தாண்டவும் நான் தயங்கேன்.
அவனுக்காகத் தன் மனம் துடிப்பதுபோல் தனக்காக அவன் மனமும் துடிக்கின்றது என்பதை அவள் கண்டாள். அவளுள்ளத்தில் ஒளிந்து நின்ற நாணாகிய செவிலித்தாய் உடன்தானே தனது சிவந்த திரையால் அவள் முகத்தை மறைத்துவிட்டாள்.
ஆனால், அவர்கள் காதலில் திரைக்கு ஏது வேலை? கண்டபின் காதலிப்பவருக்கன்றோ திரை மறைவிலிருந்து காதல் வலை வீசவேண்டும்? காணுமுன்னே காதலனுடன் கலந்துவிட்ட அவள் உள்ளம், நாணம் மடம் அச்சமென்னும் முப்படியையும் கடந்து தன் காதலுணர்ச்சிகளை உள்ளன உள்ளபடியே வெளியிட்டது. அவனது விடையும் அதற்கு எதிரொலி போன்றே இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தம் காதலை வெளியிட்டு, உலகு மாறினும் மாறா உறுதி கூறி இறைவனே சான்றாகக் காதல் மணம் செய்துகொண்டனர்.
ஆயினும் உலகத்தோடொப்ப அந்தணர் சான்றும் வேண்டுவ தேயாதலின் மறுநாளே அவனிடம் ஒரு தூதனை அனுப்புவதாகவும், மணவினை நாள் முதலிய விவரங்களை அவன்மூலம் அறிவிக்க வேண்டு மென்றும் அவள் வேண்டிக் கொண்டாள்.
மேலும் அவர்கள் பேசுவதற்கில்லாது போயிற்று. ஜூலியட்டின் தாய் அவளைத் தன் பக்கம் காணாமல் ‘ஏன் இராப்பொழுதில் பனியில் போய் நிற்கிறாய்?’ என்று கடிந்து அவளை உள் அழைத்தாள். தாய்ப்பணி ஒருபுறமும் காதல் ஒருபுறமும் இழுக்க ஜூலியட் கனிந்த மொழிகள் பேசிப் பிரிவு பெற்றுக்கொண்டாள்.
அவர்கள் பிரிந்தபோது விடியும் நேரமாயிருந்தது. வெளியே நிலவு மங்கிக் கதிரொளி வீசலாயிற்று. ரோமியோவுக்கு அப்போதுதான் பகல் போய் நிலவு வருவதுபோல இருந்தது.
திரும்பத் தன் வீடு சென்று முன்போல் நண்பர்களுடன் பொழுது போக்க அவனுக்கு மனம் வரவில்லை. காதல் நினைவு ஒன்றைத் தவிர வேறெதற்கும் அவன் மனதில் இடமில்லை. எனவே, தன் வீடு செல்லாது நகர்ப்புறத்திலுள்ள ஒரு மடத்தை நோக்கி நடந்தான். அதில் ¹⁰லாரென்ஸ் என்ற துறவி ஒருவர் உறைந்து வந்தார். அவர் இன்ப வாழ்க்கையைத் துறந்த துறவியேயாயினும் அன்பு வாழ்க்கையைத் துறந்தவர் அல்லர். ரோமியோவிடம் சிறப்பாக அவர் பரிவுடையவர், ரோஸாலினையே தஞ்சமென அவன் திரியும் காலத்தில், அவர் அவனிடம், ‘அவள் அன்பற்றவள், அவளை நம்பி அலைவானேன். அன்பின் முதல்வனாகிய அருட்கடலை விட்டுவிட்டு இச்சிற்றின்ப வலையிற்பட்டு ஏன் அலைகிறாய்?’ என்று அறிவுரை கூறுவார்.
ரோமியோவின் புதிய காதல் வரலாற்றைக் கேட்டதும் முதலில் அவருக்கு நகைப்பு ஏற்பட்டது. ‘என்னே! மனிதரின் மடமை? நட்ட நடுவிலிருக்கும் நறுநீர்ச் சுனையை விடுத்து அதனைச் சுற்றி நாற்புறத்திலும் காணப்படும் கானல்நீரைத் தேடி அலைகின்றனரே? ஒரு தடவை இரு தடவை ஏமாந்தால் போதாதா? பின்னும் அவ்வகையிலே புதிய புதிய மாதிரியா ஏமாற்றுக்குள் விழவேண்டும்!’ என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார். அது கேட்டு ரோமியோ, ‘அடிகளே! தாங்கள் அறியாதது என்ன? இறைவனது அருளை நேரடியாக அடையச் சிறியேம் தகுதியுடையேம் அல்லமே; பொறுத்தருள்க. எமது கண்ணில் இக்காதலே பெரிதாகப் படுகிறது. அதன் வழியாகவே எம்மைக் கடைத்தேற்றுக’ என்றான். துறவியின் ஏளனச்சிரிப்பும் புன்முறுவலாக மாறிற்று. ‘அப்படியே ஆகுக. உனக்க நான் என்ன செய்யவேண்டும் உதவி யாது?’ என்றார். ரோமியோ, தான் ஜூலியட்டை மணக்கும்படி உடனிருந்து உதவவேண்டும் என்றான்.
எப்பொருளிலும் நற்பொருளே காணும் பெருந்தகை யோராகிய லாரன்ஸு, ரோமியோ ஜூலியட் ஆகிய இவர்கள் காதலை வற்புறுத்தி மணவினையால் அவர்களைப் பிணைத்து விட்டால் அதன்மூலம் மாண்டேகுக்கள் கப்பியூலத்துக்கள் ஆகிய இரு குடியினரின் பழம் பகையும் ஒழிந்து நகரில் அமைதி நிலவும் என்று மனத்துட் கொண்டார். அவர் இணக்கம் பெற்று ரோமியோவும் ஜூலியட்டுக்குச் செய்தி சொல்லியனுப்பினான். அன்றிரவே, ஜூலியட் பிறரறியாமல் அம்மடத்திற்கு வந்து ரோமியோவை மணந்து கொண்டாள்.
4.துயரமும் பிரிவும்
அன்றிரவு ரோமியோ ஜூலியட்டின் மாளிகைக்கு வந்து அவளைக் காண்பதாய்க் கூறியிருந்தான். அதனையே எண்ணி எண்ணி அவள் போகாத அப்பகலைப் போக்கி வந்தாள். ஆனால், அப்பகல் அவள் எதிர்பார்த்ததை விட அவளுக்குக் கொடியதாயிருந்தது.
விருந்து நாளன்றே ரோமியோ மீது கறுவிக்கொண்டு சென்று டைபால்டு, நகரத்துத் தெருக்களில் மெர்க்குதி யோவையும் ரோமியோவையும் கண்டு அவர்களைக் கடுமொழியால் தாக்கினான். இருபக்கத்தினரும் முதலில் வசைமாரியில் தொடங்கி விரைவில் அடிதடி மாரியிலிறங்கினர். ரோமியோ சிலநேரம் இப்பூசலில் கலக்காது அதை விலக்கவே முயன்றான். இயற்கையிலேயே அவனுக்கு இத்தகைய அடிதடிகளில் பற்றில்லை. இப்பொழுதோ கப்பியூலத்து என்ற பெயரே அவன் காதுக்கினிமை தருவதாயிருந்தது. ஆனால், அவன் பின்வாங்கப் பின்வாங்க, டைபால்டு மட்டுக்கு மிஞ்சிச் சீறியெழுந்து அவனைக் கோழை என்றும், பேடி என்றும் வைது தாக்கினான். டைபால்டு பேச்சு வீரனேயன்றி வாள் வீரனல்லன். ஆதலின் ரோமியோவின் தாக்கை எதிர்த்து நிற்கமாட்டாமல் வாளேறுண்டு மாண்டான். அடிதடியோடு இங்ஙனம் கொலையும் சேர நகர மாந்தர் அனைவரும் பெருங்கலவரம் அடைந்தனர். விரைவில் எள்விழ இடமின்றி எங்கும் மக்கள் திரண்டெழுந்தனர்.
நகரின் நிலை கண்டு கலக்கமுற்ற நகர்த்தலைவனும் சண்டை நடந்த இடத்துக்கு வந்து இருதிறத்தாரையும் நிறுத்தி உண்மையை ஆராய முயன்றான். இத்தகைய நேரங்களில் நடுநிலை உண்மை காண்பது அருமை. எப்படியும் அமைதியை நிலைநிறுத்துவதிலேயே கண்ணாயிருந்த தலைவன் இருதிறத்தாரையும் புண்படுத்தாமல் தீர்ப்பளிக்க விரும்பி, ரோமியோவை நகரினின்றும் துரத்திவிட்டான்.
நகரெங்கும் பரவிவிட்ட இச்செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக ஜூலியட்டின் செவிகளிலும் புகுந்தன. அச்செய்திகளுக்கு மாறாக உருக்கிய நாராம் அவள் காதில் பாய்ந்திருந்தால் அவள் அதனைப் பொருட் படுத்தியிராள். ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்னுமாறு போல டைபால்டு அவள் உறவினனானதால், அவன் குற்றம் முதலில் அவள் கண்ணுக்குப் படவில்லை. அவள் சீற்றமனைத்தும் முதலில் ரோமியோவிடமே சென்றது. அவன் காதலனாகவே வந்தான் என்பதை மறந்து, தன் மைத்துனனுக்குக் காலனாகவே வந்தான் என்று வைதாள். ஆனால், முதல் எழுச்சி தணிந்ததன்பின், ரோமியோவின் காதலைப் பற்றிய நினைவும் அவனுடைய நற்குணமும் நடையும் அவள் கண்முன் நின்று அவள் சீற்றத்தைத் தணித்தன. அச்சண்டையை நேரில் பார்த்த அவள் தோழியர் சிலர் அவனுடைய நேர்மையையும் வீரத்தையும் போற்றியதை அவள் செவிகுளிரக் கேட்டாள். மேலும் அவன் கூடியவரை டைபால்டை எதிர்க்காமலே இருந்தான் என்றும், டைபால்டு தன்னைக் கோழை என்று அவமதித்த பின்னரே வேண்டாவெறுப்பாகச் சண்டையில் நுழைந்தான் என்றும் அவள் அறிந்தபோது, அவன் மீதிருந்த சீற்றம் எல்லாம் பாராட்டாக மாறியது. ‘ஆ என் காதலின் தகுதியை நானே குறித்துக் கொண்டேனே! நான் இப்பெருந்தகை வீரனுக்குத் தகுதியுடையள் அல்லள்’ என வருந்தினாள். மேலும், ‘என் மைத்துனன் ஓர் உதவாக்கரை. அவன் இறந்தது கூடப் பெரிதன்று; என் ரோமியோவுக்கு அவன் ஊறு செய்திருந்தால்…. ஓ அதை நான் எவ்வாறு பொறுப்பேன்’ என நினைத்து அவள் அவன் செய்கைக்காக வருந்தாமல் நன்றி செலுத்தக்கூடத் தொடங்கினாள்.
ரோமியோவுக்குத் தான் நாடு கடத்தப்பட்ட செய்தி பேரிடி போன்றிருந்தது. தூக்குத் தீர்ப்புக்கூட அவனுக்கு அவ்வளவு கொடிதாகத் தோன்றியிராது. ஏனெனில், அவன் ஜூலியட் இருக்கும் நகரில் இராது வேறெங்கே போய் இருக்கமுடியும்? அவள் இருக்குமிடம் அவனுக்கு விண்ணுலகம் அவள் இல்லாத இடம் மண்ணுலகுகூட அன்று; நரகம்கூட அன்று; அதனினுங் கொடிய உலகமேயாம். இதில் வாழ்வதை விட இறப்பதே மேலேன்று துணிவுறலானான். அப்போது அத்துறவி, ‘என்ன கூர் அறிவு உனக்கு? நீ உன் காதலியை விட்டுச் சற்றுத் தொலைவில் செல்ல அஞ்சி இறந்தாயானால் உன் உயிரை இழந்து ஜூலியட் எப்படி வாழக்கூடும்?’ என்றார். முதலில் இதை எண்ணிப் பார்க்காத ரோமியோ பின்னும் மனங்கலங்கி, ‘அந்தோ! அங்ஙனமாயின் நான் என்னதான் செய்வது? வாழவும் வகையில்லை; மாளவும் வகையில்லையே; நீர்தாம் ஒரு வழிகாட்டுவீர்!’ என்றான்.
அருளும் அறிவும் நிறைந்த அத்துறவி சிலநேரம் ஆழ்ந்து எண்ணமிடலானார். அதன்பின் தெளிந்து, ‘நான் கூறுகிறபடி கேள். இன்றிரவு இறுதியாக ஜூலியட்டைக் கண்டு விடைபெற்றுக் கொண்டு மாந்தவா¹¹ நகரத்துக்குச் சென்று உறைவாயாக. அதன்பின் நான் வேளை நயமறிந்து தலைவருக்கும் நகர மக்களுக்கும் உங்கள் மணச்செய்தியை அறிவித்துச் சேராத இரு குடியினரையும் சேரவைப்பேன். அதன்பின் நீ வந்து நகரறிய அவளை மனைவியாகப் பெற்று வாழலாம்’ என்றார். ரோமியோவுக்கு இது பொருத்தமாகவும் நலமாகவும் பட்டபடியால், அதன்படியே நடக்க இசைந்தான்.
ஜூலியட்டின் தோழியர் சிலரது துணையால் அன்றிரவு ரோமியோ அவளது மாளிகையுள் அவளைத் தனிமையாகக் கண்டு உறவாட முடிந்தது. முதல்முதல் அம்மாளிகையில் அவர்கள் கூடியபோது அக்கூட்டுறவு மாசுமறுவற்ற காதலின்பமாகவே இருந்தது. இப்போது பிரிவுத் துன்பத்துடன் அது கலந்து துன்பமோ இன்பமோ என்று கூறமுடியாத நிலையிலிருந்தது. அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசக்கூட முயன்றிரார். அதற்குமுன் விடிந்து விட்டதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. கடையாமத்துக் கோழி கூவின போது ரோமியோ திடுக்கிட்டான்; இரண்டாம் யாமமே’ என்றாள். வெளியே வந்தபோது விடிவெள்ளியைக் கண்டு நேரமாயிற்றென அவன் கலவரப்பட்ட போது, அவள் ‘அது விடிவெள்ளியன்று; அது செட்டியைக் குடிகெடுத்த வெள்ளி; இன்று உன் அமைதியைக் கெடுக்கவந்தது போலும்!’ என்றாள்.
ஆனால் பொய்யின் துணையால் தன்னையே எத்தனை தடவை வஞ்சிக்க முடியும். கிழக்கு வெளுத்தது. சின்னஞ்சிறு பறவைகள் தம் பெற்றோரது பிரிவஞ்சிக் கலகலத்தன. இனித் தாம் பிரிந்தேயாக வேண்டும் எனக் கண்டனர் காதலர். ஆனால், அவர்கள் பிரிந்தாலும் அவர்கள் உடல் பிரியமாட்டேன் என்று முரண்டின. கன்றைவிட்டுச் செல்லும் ஆ போன்று மீண்டும் மீண்டும் வருவான் ரோமியோ, கருத்தை இழந்தவள் போன்று மீண்டும் மீண்டும் அவனை அழைத்துப் பேசுவாள் ஜூலியட். இங்ஙனம் காலம் தாழ்த்துவதால் காதலனுயிருக்கு இடுக்கண் என்பதை ஓர்ந்து அவள் அவனை எச்சரித்து, ‘மனம் கவல வேண்டா; நான் நேற்றுவரை சிறு பெண். இன்று உன் காதலால் பெரியவளாய் விட்டேன். நாம் ஒன்றுபடும் நாள்வரை நான் ஆண்மையுடன் பிரிவைப் பொறுத்திருப்பேன். நீ கவலையற்று அந்நன்னாளுக்கான ஏற்பாடுகளைச் செய்க’ என்று கூறி, அவனை அனுப்பினாள். அவனும் நாள்தோறும் தவறாது தன் நிலைமையையும் காதலையும் கடிதமூலம் வரைவதாக உறுதி கூறிச் சென்றான்.
5.துறவியின் திட்டமும் முடிவும்
ஜூலியட்டின் அறையினின்று கீழிறங்கிய பின் ஜூலியட் கண்ணுக்கு அவன் அவ்வறையிருளில் புதையுண்டு போவது போல் தோற்றியது; அத்தீய நினைவை அவளால் விலக்கக்கூட வில்லை. அதேபோன்று அவன் கண்ணுக்கு அவள் முகில்களிடையே மறைவது போல் தோன்றினாள். இத்தகைய நினைவுகளுக்கிடங் கொடுக்காது அவன் விரைந்து நகரை விட்டு நீங்கினான்.
அதுமுதல் அவர்கள் தீவினை அவர்கள் காதலின் போக்கில் வந்து குறுக்கிட்டதென்ன வேண்டும். ஜூலியட் காதலாலும், துயராலும் அடைந்த மாறுதல்களை அவள் தாய் தந்தையர் கவனியாமலில்லை. பெண் பெரியவளாய் விட்டாள். அவள் உள்ளம் உலைவுறத் தொடங்கிற்று எனக் கண்டு அவர்கள் அவள் மணவினையை விரைவில் முடிக்க வேண்டுமென நினைத்தனர். அதற்கேற்றபடி, அவர்கள் நெடுநாள் மனத்திற்குள் அவளுக்கேற்றவனென்று நினைத்திருந்த ¹²கவுண்ட் பாரிஸ் தானாகவே அவளை மணம் செய்து கொள்ள விரும்பிக் கடிதம் எழுதினான். அது கண்டு மகிழ்ந்து உடன் தாமே அவன் விருப்பத்திற்கு உடன்பட்ட தோடன்றி விரைவிலேயே மணநாளையும் குறிப்பிட்டனுப்பினர்.
கவுண்ட் பாரிஸ் ஜூலியட்டை ஒத்த பெண்கள் விரும்புந் தலைவன் என்பதில் ஐயமில்லை. ஆனால் ரோமியோவினிடமே மனம் வைத்து அவன் மனைவியாய் விட்ட ஜூலியட் அவனை மணப்பதெங்ஙனம்? தன் மனத்தை வெளியிட்டுச் சொல்லி மறுத்துவிடலாமா என்று நினைத்தாள். எதற்கும் தனக்கும் தன் ரோமியோவுக்கும் உற்ற நண்பரான துறவியினிடம் சென்று அவரது அறிவுரையைப் பின்பற்றுவோம் என்றெண்ணினாள்.
ஜூலியட்டின் மணச்செய்தியை இப்போது வெளியிடுவ தானால் நன்மை விளையாது என்று லாரென்ஸ் எண்ணினார். ஆனால், நிலைமையோ முற்றிவிட்டது. தப்ப வழி வேண்டும். அவர் மனத்தில் ஓர் அரிய எண்ணம் தோன்றியது. அதனைச் செய்துமுடிக்க வீரமும் துணிவும் வேண்டும் என்று அவர் ஜூலியட்டினிடம் கூறினார். ஜூலியட், ‘என் காதலனுக்காக நான் எதனையும் துணிந்து செய்வேன். என்னை நம்பலாம். தங்கள் எண்ணத்தை வெளியிடுக’ என்றாள். அவர் அவள் கையில் மயக்க மருந்து ஒன்றைக் கொடுத்து, ‘இதனை உட்கொண்டோர் நாற்பத்திரண்டு மணிநேரம் இறந்தவர் போல் கிடப்பார். பின் உயிர் மீண்டார்போல் எழுந்திருப்பர். இதனை மணநாளின் முன் நீ உட்கொண்டால் இறந்தவள் போல் கிடப்பாய். பெற்றோரும் உற்றோரும் உன்னை இறந்தவள் என நினைத்து, உங்கள் குடும்பத்தாருக்குரிய கல்லறையில் கொண்டு அடக்கம் செய்வர். அதற்குள் ரோமியோவுக்கு நான் கடிதம் எழுதி வரவழைத்து உன்னை அழைத்துப் போகச் செய்வேன். அதன்பின் மணவினையை நான் வெளியிடும் வாய்ப்பு நேர்ந்தபோது நீங்கள் வெளிப்படலாம்’ என்றார். ஜூலியட் மகிழ்ச்சியுடனும், துணிவுடனும் இவ்வேற்பாட்டுக்கிணங்கினாள்.
முதன்முதலில் பாரிஸை மணக்கவேண்டுமென்று பெற்றோர் சொன்னபோது அவள் முகம் கோணியது கண்டவர், இப்போது அவள் அமைந்த முகத்துடன் விளங்குவது கண்டு வியப்படைந்தனர். ‘பாரிஸை நேரில் கண்டபின் வந்த மாறுதல் இது. ஆளை அறிவதன் முன் காதல் கொள்வதெங்ஙனம்’ என அவர்கள் மனந்தேறினர். பாரிஸினிடம் அவள் மணப்பெண் மாதிரி நடக்கவில்லையாயினும், நெடுநாள் பழகிய உறவினரிடம் நடந்துகொள்வது மாதிரி நடந்து கொண்டாள். சூதொன்று மறியாத பாரீஸ், ‘காதலென்றும் அறியாத சிறுபெண்தானே’ என்று நினைத்தான்.
மணநாளைக்கு முந்திய இரவில் ஜூலியட் மருந்தை உட்கொண்டாள். விடியுமுன் எழுந்து தோழியரும் தாயும் அவளை எழுப்பி மணப்பெண்ணுக்குரிய வாழ்த்துக் கூற வந்தனர். அவர்கள் கண்ட காட்சியையும் அவர்கள் அடைந்த திகிலையும் யாரோ மதிப்பிடக்கூடும்? அழகே வடிவெடுத்த அவள் வடிவம் தந்தத்தால் கடைந்தெடுக்க பாவைபோல் கிடந்தது. நெடுநேரம் உடலையசைத்தும், ஓசையுண்டு பண்ணியும், உருட்டிப் புரட்டிப் பார்த்தும் பயனில்லாது போகவே இறந்தாள் என்று கருதிக் கதறினர். பெண்ணழைக்க வந்த மணமகன் பாரீஸ் அவ்வொலி கேட்டுக் கலங்கி ஓடிவந்து பார்த்தான். பார்த்து அவனும் இடியொலி கேட்ட அரவம்போல் மெய்ம்மறந்து அவள் அருகில் வீழ்ந்து புரண்டான். மன்றங்கறங்க மணப்பறை ஒலிக்க வேண்டிய அன்றே பிணப்பறை ஒலிக்கலாயிற்று.
சுற்றத்தினரும் நண்பரும் நகர மக்களும் அழுதரற்ற ஜூலியட்டின் உடலம் நகர்ப்புறத்துள்ள கப்பியூலத்துக் குடியினரின் கல்லறையிற் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது. அதற்குச் செய்யவேண்டும் கடமை களனைத்தும் நிறைவேற்றிய பின் ஒருவர் பின் ஒருவராகக் கலைந்தனர். ஜூலியட்டின் தாய்தந்தையர் கோவெனக் கதறிய வண்ணமே அங்கு நின்றும் இழுத்துச் செல்லப்பட்டனர். பாரிஸ் உணர்வற்ற நிலையில் கொண்டு போகப்பட்டான். ஜூலியட் உணர்வற்ற நிலையில் தனியே அக்கல்லறையுட்கிடந்தாள்.
இதற்கிடையில் துறவியாகிய லாரென்ஸ் புதிதாக ஏற்பட்ட நிலைமையினையும், அதனால் நேர்ந்த இக்கட்டையும், அதனை மாற்றத் தான் செய்த சூழ்ச்சினையும், இனிச் செய்ய வேண்டும் காரியங்களையும் பற்றி விவரமாக எழுதிய கடிதமொன்றை ஓராள் மூலமாக ரோமியோவுக்கு அனுப்பினார். அச்செய்தியை விரைவில் கொண்டு சேர்க்கும்படி அவர் அத்தூதனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தார். ஆனால், ஊழ்வலியால் அத்தூதன் வழியில் காலந்தாழ்த்தி விட்டான். நல்ல செய்திகளை விடத் தீய செய்திகளே விரைவில் பரவும் என்பதற்கிணங்க, அதற்குள் ஜூலியட் இறந்தாள் என்ற துயர் தரும் செய்தி பரவி ரோமியோவின் காதுவரை எட்டியது. அதுகேட்டு ரோமியோ துடிதுடித்த உள்ளத்தினனாய்த் தலைகால் தெரியாமல் ஓடோடியும் வெரோணாவுக்கு வந்து நகரமக்களால் அவள் இறந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு கல்லறைக்குச் சென்றான். அங்கே அதற்கு முன்னதாகவே ஜூலியட்டை மணக்க எண்ணிய பாரிஸ் வந்து அவள் உடல்மீது மலர் தூவிக் கொண்டிருந்தான். ரோமியோ ஜூலியட்டின் காதலன் என்றறியாது அவள் இறந்தபின் உடலை அவமதிக்க வந்தானென்று நினைத்துப் பாரிஸ் அவனை எதிர்த்தான். இருவருக்கும் நடந்த சண்டையில் பாரிஸ் வீழ்ந்திறந்தான். அவன் ஜூலியட்டை மணக்க வந்தவன் என்று கேட்டிருந்த ரோமியோ அவனை வேறிடத்தடக்கம் செய்தபின், ஜூலியட் உடலின் அருகேவந்து நஞ்சுண்டிறந்தான்.
ஜூலியட் மயக்க மருந்தின் வன்மை தீர்ந்தபின் எழுந்து தன் அருகே தன் காதலன் மாண்டு கிடப்பது கண்டாள். அதன் காரணம் என்னவென்று அவளுக்கு விளங்கவில்லையாயினும், அவன் இறந்தான் என்பது மட்டும் கண்கூடாயிற்று. இனி எஃது எப்படியானாலும் என்ன என்று அவளும் அவனருகிற் கிடந்த உடைவாளால் தன் உயிரைப் போக்கிக் கொண்டாள்.
தான் எழுதிய கடிதப்படி ரோமியோ வரக்காலந் தாழ்த்தது கண்டு, துறவி நேராகத் தாமே கல்லறை எய்த ஜூலியட்டைக் கூட்டிப் போகலாம் என்று வந்தார்; வந்து அங்கு நடந்த காட்சிகளைக் கண்டு, துறந்த மனமும் துடிக்கக் கண்கலங்கினார். அதற்குள்ளாக ரோமியோவும் பாரிஸும் கல்லறைப் பக்கம் போவது கண்ட சிலர் என்ன நேருமோ என அஞ்சிப் பின் வந்தனர். அவர்களும் இக்காட்சியைக் கண்டு திகைத்து நாலாபுறமும் சென்று புலம்பினர். அரை நாழிகைக்குள் நகர மாந்தர் அனைவரும் தலைவரும் கல்லறை வந்து சேர்ந்தனர். அவர்களிடையே கிழவர்களான ரோமியோவின் பெற்றோர்கள் ஒருபுறமும், ஜூலியட்டின் பெற்றோர்கள் ஒருபுறமும் வந்து நின்றனர். அவர்கள் வடித்தக் கண்ணீர் ஆறாகப் பெருகி அவர்கள் பசுமையைக் கருதாது ஒன்றாகக் கலந்தன. இத்தனை நாளாக இரு குடும்பத்திடையேயும் நாயும் பூனையும் போல் சண்டை போட்டுக் கொண்ட அந்தப் பெரிய குடியினர் தம் கான்முறைகள் பலியாயினவென்று கண்டு மனம் வருந்தினர்.
துறவு நடந்ததையெல்லாம் முடிவுவரை எடுத்துக்கூறி, நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது. உங்கள் பகைமை இத்துடனாவது போகட்டும்; உங்கள் பிள்ளைகள் இப்போதும் அவர்கள் காதலின் புகழ் நின்று நிலவும்படி அவர்களை ஒரே கல்லறையிலிட்டு அவர்கள் நினைவுக் குறியாகப் பெரியதொரு மண்டபம் நிறுவுங்கள். கடவுள் அக்காதலர் உயிர்களைக் காத்து உங்களை மன்னிப்பாராக!’ என்று கூறி அகன்றார்.
வெரோணா நகரத்தார் அக்காதலர் நினைவு மண்டபத்தையே நகர மண்டபமாகக் கொண்டு அவர்களைப் போற்றினர்.
** அடிக்குறிப்புகள்**
1. Verona 2. Capulet
2. Montague 4. Rosaline
3. Romeo 6. Benvolio
4. Mercutio 8. Juliet
5. Tybalt 10. Lawrence
6. Mantua. 12. Count Paris.
.
வெரோணா நகரின் இரு செல்வர்கள்(Two Gentlemen of Verona)
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1.புரோத்தியஸ்: வெரோணா நகர் இளைஞன்-ஜூலியாவின் காதலன்.
2. வலந்தைன்: புரோத்தியஸ் நண்பன்-ஸில்வியாவின் காதலன். மாற்றுருவில் கள்வர் தவைன்.
3. மிலன் நகரத் தலைவன்: ஸில்வியாவின் தந்தை.
4. தூரியோ: மிலன் தலைவனால் ஸில்வியாவுக்குக் கணவனாகத் தேரப்பட்டவன்.
5. எக்ளாமர்: ஸில்வியாவின் நம்பகமான பணியாள்-காட்டிற்கு அவளுடன் சென்றவன்.
பெண்டிர்:
1. ஜூலியா: வெரோணா நகர நங்கை-புரோத்தயன் காதலி மாற்றுருவில்-ஆண்-அவன் பணியாள்.
2. லூஸெத்தா: ஜூலியா தோழி.
3. ஸில்வியா: மிலன் தலைவன் மகள்-வலந்தைன் காதலி.
** கதைச்சுருக்கம்**
புரோத்தியஸும் வலந்தைனும் வெரோணா நகரின் இரு செல்வ இளைஞர்கள்; இணைப்பிரியா நண்பர்களும் கூட புரோத்தியஸ் ஜூலியா என்ற நங்கையின் காதலில் ஆழ்ந்து கிடக்க, வலந்தைன் மேல்நிலையை எண்ணி முயன்று மிலன் நகரத்தலைவனிடம் பணிபெற்றேகினான். புரோத்தியஸின் தந்தையின் விருப்பத்தால் அவன் முயன்று புரோத்தியஸுக்கும் ஒரு பணி தருவித்தான்.
வலந்தைன் மிலன் நகரத் தலைவன் மகளாகிய ஸில்வியாவைக் காதலித்தான். தந்தை அவளைத் தூரியோ என்பவனுக்கு மணஞ்செய்ய ஏற்பாடு செய்யவே, அவர்கள் நூலேணி மூலம் வெளியேறிக் களவியல் முறையில் மணஞ்செய்ய எண்ணனிர். நட்பு முறையில் வலந்தைன் இதனைப் புரோத்தியஸிடம் சொல்ல அவன் நம்பிக்கைக் கேடாய் அதனைத் தலைவனுக்கறிவித்து வலந்தைகள் நகரினின்றும் துரத்தும்படி செய்தான். வலந்தைன் காட்டில் ஒரு திருடர் கூட்டத்தில் அகப்பட்டும் தன் திறத்தால் அவர்களைத் தன் வயப்படுத்தித் தலைவனானான்.
புரோத்தியஸுக்காக நெடுநாள் காத்திருந்த ஜூலியா இறுதியில் ஆணுடையுடன் அவனிடம் பணியாளாய் வந்து, அவனால் ஸில்வியாவிடம் காதல் தூதாய் அனுப்பப்பட்டு, அவள் உளநிலை அறிந்தாள்.
வலந்தைனைப் பின்பற்றி அங்கு வந்த புரோத்தியஸ் அவளை விடுவித்துப் பின் தானே தொந்தரவு செய்தான். அச்சமயம் வலந்தைன் வந்தான். உடனிருந்த ஜூலியாவும் தன் உருக்காட்டினாள். புரோத்தியஸ் காதலியையும் நண்பனையும் வஞ்சித்தமைக்கு மன்னிப்புக்கேட்டு மனமாறி ஜூலியாவை ஏற்று மணந்தான். வலந்தைனும் ஸில்வியாவை மணந்தான். மிலன் நகரத் தலைவன் சீற்றமாறி நண்பனாய் அனைவரையும் ஏற்றுக் கொண்டான்.
1.நண்பர் பிரிவு
வெரோணா நகரத்தில் ¹புரோத்தியஸ் என்றும், ²வலந்தைன் என்றும் இளைஞர்கள் இருவர் செல்வர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஈருடலும் ஓருளமும் போல் மனமொத்த நண்பர்களாய் விளங்கினர். பருவம் குணம் நடை முதலியவற்றில் மட்டுமின்றி உடையிலுங்கூட அவர்கள் ஒற்றுமை யுடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.
அவர்களிடைத் தோன்றிய வேற்றுமை அனைத்தும் ஒரே ஒரு வகையைப் பற்றியதாகும். அஃதாவது அவர்களுள் புரோத்தியஸ் என்பவன் மட்டும் காதலுக்காட்பட்டு 3ஜூலியா எண்ணம் மங்கையை நாடி, நெஞ்சில் அவள் நினைவும் நாவில் அவள் மாற்றமுமாக இடைவிடாது அவளை விரும்பி நிறைதேயாம். இதற்கு மாறாக வலந்தைனோ எனில், காதல் என்பது ஒரு மயக்கம் என்றும், உடல் நலிவோ மற்று எதுவோ ஏற்பட்ட காலை அறிவும் மயங்குவதனாலேயே அஃது ஏற்படுகின்றது என்றும் கூறிப் புரோத்தியஸை எள்ளி நகையாடுவான்.
காதலே கருத்தாய்த் தான் நினைத்த கன்னிகையையே மனமொழி மெய்களால் வழிபட்ட அப்புரோத்தியஸையும், கன்னியர் எவரையும் மனித வகுப்பிற்குப் புறம்பாகவும் களையாகவும் மதித்து வெறுத்திருந்த வலந்தைனையும், அவர்கள் நட்பையும் பற்றி நாத் தழும்புபடப் பேசி நகையாடி இன்புறாதவர் அந்நகரத்தில் இலர் என்னலாம்.
ஒருநாள் வலந்தைன், தன் காதலியின் படம் ஒன்றை வரைந்து, அதற்கு மைதீட்டிக் கொண்டிருந்த புரோத்தியஸிடம் வந்து ஏளனங் கலந்த புன்னகையுடனும் அன்புடனும் அவன் தோள் மீது சார்ந்து நின்று, “அன்பனே! மாந்தர் வாழ்க்கை யனைத்தும் பெண்களுக்காகவே ஏற்பட்டதென்று தான் நீ நினைத்திருக்கிறாய்போல் இருக்கிறது. உனக்கு என்னதான் சொல்லியும் பச்சைக் குழந்தைகள் ஒரு பொம்மையை வைத்து விளையாடுவது போல, ஒரு பெண்ணின் படத்தை வைத்து இப்படி விளையாடுகிறாயே” என்றான்.
புரோத்தியஸ் அவனைத் திரும்பிக்கூடப் பாராமல், “ஆமாம்; நான் பச்சைக் குழந்தை போலும்! ஊனையும் உள்ளத்தையும் உருக்கி உயிருக்கு உயிரூட்டும் காதலைப் பச்சைக் குழந்தைகள் விளையாட்டு என்று கூறும் நீ குழந்தையா, நான் குழந்தையா என்று நாலு பேரைக் கேட்டுப்பார். எல்லாம் இன்னும் இரண்டோர் ஆண்டு சென்றால் தெரிந்து போகிறது. வேண்டாம் வேண்டாம் என்பதெல்லாம் பின்னால் வேண்டும் என்பதற்கொரு பீடிகையேயன்றி வேறன்று” என்றான்.
வலந்தைன்: சரி, புரோத்தியஸ் அதுகிடக்கட்டும். இப்படி நாம் விளையாட்டாய்ப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் காலத்தற்கு ஓர் எல்லை வந்துவிட்டது. உன்னை விட்டுப் பிரிவது எவ்வளவோ வருத்தமாயிருப்பினும், என் எதிர்கால நலனை யொட்டிப் பிரியத்தான் வேண்டி வருகிறது. நீ உடன் வருவதாயின் உனக்குக்கூட நலமாயிருக்கும். ஆனால், நீ வழிக்கு வருவது ஏது! நீதான் ஜூலியா என்ற கட்டுத்தறியிற் கட்டப்பட்டவனாயிற்றே!
புரோத்தியஸ்: உன் நகையாடலுக்கு இதுதானா நேரம்? ஏது அப்படி என்னையும் பிரிந்து செல்லும்படி தூண்டும் செய்தி? நம் நட்பை விட நலந்தருவதான அப்பொருள் காதலல்லாது வேறு யாதாயிருக்கக்கூடும்!
வலந்தைன்: போதும் போதும். உன் அறிவு செக்கைச் சுற்றி ஓடும் மாடு போலவேதான் ஓடுகிறது. உன் ஊகம் முற்றிலும் தவறு. நான் ஓர் உயர்ந்த அரசியல் பணியைப் பெற்று மிலன் நகர் செல்கின்றேன். மிலன் நகர்த்தலைவனிடமிருந்து அதற்கான கடிதம் வந்துள்ளது.
புரோத்தியஸ் சற்றே ஜூலியாவின் படத்தைக் கீழ் வைத்துவிட்டுக் கவலையுடன் தன் நண்பன் கைகளைப் பிடித்துக்கொண்டு, “நீ நல்நிலை பெறுக; என்னை என்றும் மறவாதே” என்றான்.
வலந்தைனும், “நான் மறக்கமாட்டேன். நீதான் அடுத்த நொடியே என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிடப் போகிறாய்” என்று கூறிவிட்டு அகன்றான்.
2.காதலர் பிரிவு
அவன் கூறிய மொழிகள் ஒரு சிறிதும் வழுவாதபடி வலந்தைன் அகன்றதே புரோத்தியஸ் அப்படத்தின் முன் உட்கார்ந்து, ஜூலியாவின் பெயரில் அமைந்த பாவொன்றை அப்படத்தின் கீழ் வரைவதில் கண்ணும் கருத்துமாய் ஆழ்ந்துவிட்டான்.
புரோத்தியஸின் காதலுக்கு இலக்கான ஜூலியா ஓர் உயர்குடியைச் சேர்ந்த பெண். அழகிலும் ஒழுக்கத்திலும் ஒப்புயர்வற்றவள். பிற கன்னியரைப் போல் அவள் இளைஞர் காதல் நடிப்புகளுக்கு இடந் தருவதுமில்லை. அவர்களுடன் உறவாடுவதையும் நகையாடுவதையும் எவ்ளவும் விரும்புவதும் இல்லை. எனவே புரோத்தியஸும் அவளை நெடுநாள் அணுக முடியாத படியே இருந்தது.
பலநாள் ஜூலியாவின் பின் சென்று அவள் வீட்டையும் தோட்டத்தையும் சுற்றித் திரிந்து அவன் மனமுளைந்து வந்தான். அவன் காதலைக் குறிப்பால் அறிந்த ஜூலியா தன் இயற்கைப்படியே அவன் பக்கம் நாடாதிருக்க முயன்றும் அவளையறியாது அவள் உள்ளமும் கண்களும் அப்பக்கம் சென்றன. ஆயினும், அவள் மடமும் பயிர்ப்பும் அவளைத் தடைசெய்து அவன் பக்கத்தினின்றும் வளை அகற்றிச் சென்றன.
ஜூலியாவின் தோழி 4லூஸெத்தா என்பவள், தன் தலைவியின் உள்ளக் குறிப்பையும் அவள் காதலன் புரோத்தியஸின் துன்பத்தையுங் கண்டு ஒருநாள் அவனிடம் வந்து உரையாடலாயினள். புரோத்தியஸும் நீந்த அறியாதவன் ஆறு கடக்கும் பூனை கண்டது போல் மகிழ்ந்து, அவள் வாயிலாகத் தன் காதலைத் தெரிவிக்கலானான். தெரிவித்ததும் காதலனது காதலின் ஆழத்தை அறியும் அவாவினளாய் ஜூலியா அவனுக்கு எளிதில் விட்டுக் கொடாமலும் தெளிவான மறுமொழி தராமலுமிருந்து வந்தாள்.
புரோத்தியஸின் காதலைத் தேரும் நோக்கத்துடன் காட்டிய இக்கடுமை நாளடைவில் தனக்கே தேர்வாய் இருப்பதை ஜூலியா கண்டாள். அடிக்கடி தன்னையும் மீறித் தன் உள்ளம் அவன்பாற் செல்வத்தையும், தன் கண்கள் தன் கட்டையும் மீறி அவனைக் காணக் கோருவதையும் அவள் மறைக்க முடியவில்லை. சில சமயம் அவன் ஓரிரண்டு நாழிகை வராதிருந்தால் அவனைத் தாமே சென்று காணவும் கால்கள் விரையும். ஆனால், அவன் எப்போதும் வலந்தைடன் இருந்தது கண்டு நாணித் திரும்புவாள். அவன் வலந்தைனுடன் தன்னைப் பற்றிக் கூறியது கேட்டு அவனுக்கு எழுதவும் அவள் உளங் கூசிற்று.
தன் தோழிகள் வாயிலாக, வலந்தைன் மிலன் நகர் சென்றான் என்று கேட்டபின் அவள் சற்றுத் துணிந்து அவனிடம் தன் காதலைக் குறிப்பாய்க் காட்டி ஒரு கடிதம் வரைந்தாள். அப்போது அவன் உண்டிக்கு அலைந்தவன் ஒப்பற்ற அமுதம் பெற்றது போல மகிழ்ந்து அக்கடிதத்தை ஓவாது படிப்பதும் மடிப்பதும் பின்னும் பிரிப்பதும் விரிப்பதுமாக இருந்தான்.
புரோத்தியஸ் இங்ஙனம் தன்னை மறந்திருக்கும் நேரம், அவன் தந்தை அவனைக் காண வந்தான். அவனுடைய நண்பர்கள், புரோத்தியஸ் வேறு தொழிலொன்றிலும் ஈடுபடாமல் தேனீப்போல் ஜூலியா என்னும் மலரைச் சுற்றித் திரிவது கண்டு, அவன் என்றும் இப்படிச் சோம்பேறியாய் இருந்து விடாமல் மேம்பாடு தரும் நல்ல தொழில்முறையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பி, அதனை அவனிடம் அடுத்தடுத்து அறிவித்து வந்தனர். தந்தையோ மைந்தனிடம் உள்ள பற்றுதலால் அவனை விட்டு அகல மனமில்லாதவனாய் இருந்தான். ஆனால், அவனிலும் இளைஞனான அவன் நண்பன் வலந்தைன் கூடத்தொழில் முறையை நாடித் தொலைவிடம் சென்றதைக் கேட்டபின், அவனும் தன் மகனைத் தொலைநாடு அனுப்பத் தீர்மானித்தான். அதனைத் தெரிவிக்கவே அவன் இப்போது தன் மைந்தனிடம் வந்தது. மைந்தன் ஒரு கடிதம் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டதே, அவன் அது நண்பனிடமிருந்துதான் வந்திருக்குமோ என்று எண்ணி, “அது யார் எழுதியது?” என்று கேட்டான்.
முதலில் புரோத்தியஸ் இக்கேள்வியைச் செவியுட் கொண்டவுடன் திடுக்கிட்டான். பின் காதலர் இயற்கைப்படி நொடியில் மனந்தேறி, சமயத்துக்கேற்ப, ‘அது தன் நண்பனிடமிருந்து வந்தது’ என்றான்.
தந்தை அதனை நம்பி, “அவன் என்ன எழுதியிருக்கிறான்?” என்று கேட்டான்.
புரோத்தியஸ் சூதொன்றும் இன்றி வினைவாய்ப்பட்டு, “வேறொன்று மில்லை; அவன் அங்கு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், நானும் அங்கே போனால் அவனைப்போல் நல்ல நிலையில் இருக்கலாமென்றும் எழுதியிருக்கிறான்” என்றான்.
புரோத்தியஸின் தந்தை அதனை முழுமையும் நம்பி, மறுநாளே வலந்தைனுக்கு எழுதினான். வலந்தைன் உண்மையில் புரோத்தியஸுக்குத் தொழில் பார்த்துக் கொடுப்பதாகச் சொல்லவில்லையாயினும், அவன் வர வேண்டுமென்று மிகுதியான விருப்பம் உடையவனாய் இருந்ததனால் நகர்த் தலைவனிடம் சென்று, இச்செய்தியைத் தெரிவித்தான். புரோத்தியஸின் குணமும் திறனும் பற்றி வலந்தைன் புகழ்ந்துரைப்பது கண்ட தலைவன் அவனுக்கு வலந்தைன் நிலைக்கு ஒப்பான பணி தருவதாக மறுமொழி அளித்தான். அதனையறிந்த புரோத்தியஸின் தந்தை புரோத்தியஸை அழைத்து, மறுநாளே நண்பனிருக்கும் நகருக்குப் போகுமாறு உத்தரவளித்தான்.
இங்ஙனம் சிறுபிழையொன்றை மறைக்கப் புகுந்து பெருந் தொல்லைக்களான புரோத்தியஸ் மிகவும் மனமுடைந்தான். ஆயினும் தந்தை சொல்லைத்தட்ட மனந்துணியாமல் ஜூலியாவினிடம் சென்று பிரியாவிடை பெற்று மிலனுக்குச் சென்றான். ஜூலியாவும் தன் பயிர்ப்பாகிய திரையைக் கிழித்து அவனிடம் தன் காதலின் வன்மையை முற்றிலுங் காட்டியதுடன் தானும் உடன் வரவேண்டுமென்று மன்றாடினாள். ஆயினும், தொழில் முயற்சியை நாடிச் செல்பவர்க்குப் பெண்டிர் தடையெனக் கூறக்கேட்டு அவள் அமைந்து மனம் வருந்தி இருந்தாள்.
3.பொறாமைப் புழு
மிலனில் புரோத்தியஸ் வந்ததும் வலந்தைன், நெடுநாள் தாய்நாட்டை விட்டவன் அந்நாட்டவன் ஒருவனது வரவு கண்டாற்போல் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டான். மிலன் நகர்த்தலைவனிடம் அவன் புரோத்தியஸை அறிமுகம் செய்து வைத்து, தன் நாட்டில் எல்லாரையும்விட அறிவிலும் குணத்திலும் அவன் பெயர் பெற்றவன் என்பதை புகழ்ந்துரைத்தான். விரைவில் தலைவனும் வலந்தைனிடம் காட்டிய அதே பற்றும் அதே மதிப்பும் புரோத்தியஸினிடமும் காட்டலானாள்.
ஆனால், வலந்தைன் மட்டும் இப்போது வெரோணாவி லிருந்த வலந்தைனாயில்லை. அவனிடம் இப்போது ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. பெண்களின் பெயரையும் எடுக்காத அவன், இன்று தவைனின் புதல்வியாகிய ⁵ஸில்வியாச் சீமாட்டியின் உளமார்ந்த நட்பைப் பெற்றான். தலைவன் வலந்தைனை மிகவும் நேசித்துப் பாராட்டி வந்த போதிலும், தன் குடும்பத்துக்கு ஒத்தநிலை உடையவனாக அவனைக் கருதாதவன். ஆகவே அவர்கள் காதல், மறைவிலேயே வளர்ந்து வந்தது. தலைவன் அவளைத் தன் அரண்மனைப் பெருமக்களுள் ஒருவனான ⁶தூரியோவுக்குக் கொடுக்க எற்பாடு செய்திருந்தான். ஸில்வியா தூரியோவை ஏறெடுத்தும் பாராமல் வலந்தைனையே தன் நெஞ்சுக்கிறைவனாகக் கொண்டு நாட்கழித்தாள்.
நண்பர் இருவரும் கலந்துறவாடுகையில் வலந்தைன் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இப்புது மாறுதல் பற்றிப் புரோத்தியஸினிடம் கூறினான். தம்மிலும் எத்தனையோ உயர் நிலையுடைய கன்னிகையைத் தன் நண்பன் அடைந்தான் என்று கண்டதே, பொறாமை என்னும் புழு அவன் மனத்தகத்தே புகுந்து வேலை செய்யத் தொடங்கிற்று. அதன் பயனாக அவன் எப்படியாவது தன் நண்பனுக்குக்கிட்டிய காதலைப் பயன்பட வொட்டாமற் செய்துவிட வேண்டும் என்று எண்ணங் கொண்டான்.
புரோத்தியஸின் படுமோசக் கருத்தை உணராமல் வலந்தைன் தன் காதற் கதை முழுமையும் கூறியதோடன்றி, தன் காதலி வகையில் தலைவன் செய்யும் ஏற்பாட்டையும், அதனின்றும் விலக எண்ணி அவளுடன் தான் இரவிற் புறப்பட்டோடச் செய்திருக்குந் திட்டத்தையுங் கூறினான். இதனைக் கேட்டதே புரோத்தியஸின் வஞ்ச நெஞ்சம். நண்பனது திட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அவன் நிலையையும் அவன் காதலியின் காதலையுங்கூடக் கவர எண்ணிற்று.
வலந்தைன் தன் காதலியுடன் வெளியேறக் குறித்த நாளன்று அதற்கா நூலேணி ஒன்றைச் சுருட்டி முன்னேற் பாடாகத் தன உடையிற் கரந்து வைத்திருந்தான். தனது திட்டத்தைப் பற்றி விரிவான செய்திகள் கூறியபோது அவன் இந்நூலேணியையும் புரோத்தியஸுக்குக் காட்டினான். புரோத்தியஸ் நண்பன் என்ற முறையில் இத்தனையையும் அறிந்து கொண்டு, நகர்த்தலைவனிடம் சென்று எல்லா வற்றையும் தெளிவாகக் கூறிவிட்டான்.
4.கலங்கிய நீர்
அதுகேட்ட நகர்த்தலைவன் அதன் உண்மைiத் தெளிவுபடுத்த எண்ணி வலந்தைனிடம் சென்றான். சென்று விரைவாக எங்கோ செல்பவன் போல் பரபரப்புடன் நின்ற அவனிடம் "அன்ப, இவ்வளவு விரைந்து போகும் காரியம் யாது?’ என்று கேட்டான்.
வலந்தைன், “வெரோணா செல்லும் தூதன் ஒருவனிடம் அங்குள்ள நண்பர்களுக்குக் கடிதம் கொடுத்தனுப்பப் போகிறேன்”என்றான்.
தலைவன், “அவ்வளவுதானா? எனக்குக் கொஞ்சம் அரசியல் காரியங்களைப் பற்றி ஆராயவேண்டும்” என்று கூறி அவனைத் தாக்காட்டினான். வலந்தைன் வெளிக்கு அமைதியாகப் பேசமுயன்றாலும், உள்ளே பொறுமையிழந்து குமுறுவதைக் குறிப்பாகக் கண்டும் காணாதது போல் அவனைப் பின்னும் நயமாக வாட்ட எண்ணினான். ஆதலால் தன் புதல்வியின் பேச்சை எடுத்து, அவள் தன் எண்ணப்படி தூரியோவை மணக்க விரும்பாததால், அவளுக்கு உடைமையில்லாமல் வெற்றுடம்புடன் யாரையேனும் மணக்கும்படி விடுவதாகவும், தான் இரண்டாவது மணம் செய்துகொள்ள விரும்புவதாகவும். அதுவகையில் வலந்தைன் உதவ வேண்டும் என்றும் திறம்பட வினாவினான்.
அப்போது சூதறியாத வலந்தைன், “நான் அதில் எவ்வாறு உதவக்கூடும்?” என்றான்.
தலைவன், "ஏன், நண்ப, எம்போன்ற முதியவர் காதலியை வசப் படுத்தும் வகையறியாதவர் அன்றோ? மேலும், காதலர் நடைமுறைகளும் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எனக்குப் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையை அறிவிக்கலாகாதா?
வலந்தைன் கபடின்றித் தலைவன் கேட்ட வகையில் விரிவான நல்லுரைகள் தந்தான். தலைவன் அவள் நாணமுடையவள் எதுவும், பகலில் பேச அஞ்சுகிறாள் எனவும் கூற, வலந்தைன் இரவு காண்பது நன்று என்றான்.
தலைவன், இரவு அவள் மாளிகை தாழிடப்பட்டுக் காலுடைய- தாயிருக்குமே என்ன, வலந்தைன் தன் மனத்து நிறைந்த எண்ணமே மேலிட்டு உந்த நூலேணி ஒன்றின் உதவியால் பலகணி வழியாகச் சென்று காணலாம் என்றான்.
தலைவன், நூலேணியைப் பறிர் காணாமல் கொண்டு போவ தெங்ஙனம் என, வலந்தைன் என்னைப்போல் ஆடையுடுத்துக் கரந்து செல்க என்றான். இவ்வுரைக்கே காத்திருந்த தலைவன் அப்படியாயின் அவ்வாடையைப் பார்ப்போம் என இழுத்த அளவில், வலந்தைன் ஒளித்து வைத்திருந்த நூலேணி தென்பட்டது.
தென்படவே, தலைவன் தனது நடிப்பைத் துறந்து வெகுளியுடன், “நன்றிகெட்ட பதரே, உண்ட வீட்டுக் கிரண்டக மாக என் புதல்வியின் மனத்தையா கெடுக்க எண்ணினாய்?” என அவனை இழித்துப் பேசி அவமதித்து நகரினின்றும் துரத்திவிட்டான்.
வலந்தைனை இங்ஙனம் காட்டிக் கொடுத்துத் துரத்தியபின் புரோத்தியஸ் தலைவனுக்கு உண்மையுள்ள நண்பனானான். அதோடு நில்லாமல் ஸில்வியாச் சீமாட்டியையும் அண்டி, அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ, வலந்தைனுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்தது மன்றி, புரோத்தியஸின் இழிதகையான நன்றியின்மையை அறிந்தவளாத லால், அவனையும் மனமார வெறுத்து விலக்கினாள்.
5.காதல் துணிவ
புரோத்தியஸால் முதலில் காதலிக்கப்பட்ட ஜூலியா, நெடுநாள் அவனிடமிருந்து கடிதம் வராதது கண்டு கவலைக்கொண்டான். இறுதியில் அவனை எப்படியாவது கண்டுபிடிப்பதென்று துணிந்து ஆணுருத்தாங்கி மிலன் நகர் வந்து சேர்ந்தாள்.
ஜூலியா மிலனில் பெரிய விடுதி ஒன்றில் தங்கியிருந்தாள். தான் அங்கே அவ்வருவுடன் வந்திருப்பதை அறிந்தால் புரோத்தியஸ் தன்னை ஏளனமாக நினைப்பான் என்று எண்ணி அவள் கலை கொண்டதால், அவள் முகம் நகையிழந்திருந்தது. அவளை ஓர் இளஞ்செல்வனாகக் கொண்ட விடுதியாளன், அவளை மகிழ்விக்க எண்ணி, “ஐய, இன்று தாங்கள் நேரப்போக்கு விரும்புவதானால் நல்ல வாய்ப்பு ஒன்று உள்ளது. தலைவன் புதல்வியுடன் ஒரு காதலன் வந்து இரவு பாடுவதுண்டாம். அதனை மறைவில் கண்டு மகிழலாம்” என்றார்.
தலைவனுடைய அரண்மனையின் பக்கமே புரோத்தி யஸையும் காணலாம் என்றெண்ணி ஜூலியா அதற்கிணங்கினாள். ஆனால், அங்கே யாரோ ஒரு காதலன் வருவான் என்றிருந்ததற்க மாறாகத் தன் காதலனே வந்திருப்பது கண்டதும் அவள் நெஞ்சம் இடிவுற்றது. காதலன் எந்நிலையுற்றானோ என்ற கவலைக்கு மாறாக, இப்போது அக்காதலனது காதலையே இழந்த நிலையில் அவள் வாழ்க்கையில் மிகவும் வெறுப்புக் கொண்டாள். ஆயினும் காதலனை அண்டியிருந்தேனும் உயிர் பொறுக்கலாம் என்று எண்ணி அவள், அவன் பணியாள் விலகும் சமயம் பார்த்துத் தானே பணியாளாய்ச் சென்று சேர்ந்தாள்.
இங்கும் ஜூலியாவுக்குப் புதியதோர் இக்கட்டுத் தோன்றியது. அவள் ஜூலியா என்று கனவிலுங் கருதாத புரோத்தியஸ் அவளையே ஸில்வியாவிடம் காதல் தூதாக அனுப்பினான்.
ஸில்வியா புரோத்தியஸின் காதலை மறத்தபோது தான், ஜூலியாவிற்குச் சற்று அமைதி உண்டாயிற்று. அங்ஙனம் தனக்கு ஆறுதல் தந்த ஸில்வியாவினிடம் பற்றுக்கொண்டு, அவளிடம் புரோத்தியஸின் பழைய காதலைப் பற்றிப் படர்க்கைப் பான்மையில் ஜூலியா கூறினாள். ஸில்வியா அது கேட்டு அக்காதலுக்காளான ஜூலியாவினிடம் பரிவு கொண்டாள். தன்முன் நிற்கும் இளைஞனே அந்த ஜூலியா என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை.
ஸில்வியாவின் நிலைமை இப்போது மிகவும் இடர்ப்பாடாயிற்று. ஒருபுறம் புரோத்தியஸின் தொந்தரவு; இன்னொருபுறம் தந்தை குறித்த மணநாள் நெருங்குகிறது. இரண்டிலிருந்து தப்ப என்னி ¹எக்லாமர் என்ற பணியாளுடன் இரவே வெளியேறி ஓடிவிட்டாள்.
6.தெளிவு
ஸில்வியா வெளியேறினாள் என்று கேட்ட புரோத்தியஸ் தானும் அவளைப் பின்பற்றினான். பணியாளுருவில் ஜூலியாவும் உடன் சென்றாள். அவர்கள் அனைவரும் நகர்ப்புறத்துள்ள காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். அக்காட்டில் திருடர் மிகுதி. அத்திருடர் சில நாட்களுக்கு முன் நகரினின்று துரத்தப்பட்ட வலந்தைனைக் கைப்பற்றினர். ஆனால், வலந்தைன் தன் நாத்திறத்தாலும் உயர்குணத்தாலும் வீரத்தாலும் அத்திருடராலும் போற்றப்பட்டு அவர்கள் தலைவனாய் இருந்து வந்தான்.
ஸில்வியா காட்டு வழியாகச் செல்கையில் வலந்தைன் கூட்டத்திலுள்ள திருடரில் ஒருவன் அவளைக் கைப்பற்றித் தன் தலைவனிடம் கொண்டு செல்ல முயன்றான். அப்போது புரோத்தியஸும் மாற்றுருக் கொண்ட ஜூலியாவும் அங்கே வந்தனர். புரோத்தியஸ் திருடனை வென்று ஸில்லியாவை மீட்டான். ஆயினும், அங்ஙனம் மீட்டதனை ஸில்வியர் பாராட்ட முடியவில்லை. ஏனெனில், மீட்ட மறுநொடியே அவளை அவன் மீண்டும் தொந்தரவு செய்யலானான். அதனை உடனிருந்தும் தடுக்க இயலாத ஜூலியா மனமாழ்கினாள். இத்தறுவாயில், வலந்தைன் அவ்விடம் வந்தான். ஸில்வியா அவனைக் கண்டதும் ஓடி அவனைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்தாள்.
வலந்தைன் புரோத்தியஸைப் பார்த்து, “அன்பனே, ஏன் உன் இயல்பு மாறி இத்தகைய தகாத செயல்களில் இறங்கினாய்? உன் ஜூலியா இது கேட்டால் என்ன நினைப்பாள்?” என்றான்.
அப்போது ஜூலியா தன் ஆணுரு அகற்றி நின்று, “ஜூலியா இஃதனைத்தும் கேட்டதோடு மட்டுமின்றிக் கண்டுந்தான் நிற்கிறாள்” என்றாள்.
நண்பனுக்கும் காதலிக்கும் தான் செய்த நன்றியற்ற செயல்களை எண்ணி புரோத்தியஸ் முகங் கவிழ்த்துத் தன்னை மன்னிக்கும்படி இருவரையும் வேண்டினான்.
வலந்தைன் நண்பன் துயர் கண்டு, கழிந்தன அனைத்தும் மறந்து அவனைத் தழுவினான்.
அவனும் தான் இடையில் கொண்ட நினைவெல்லாம் கனவெனக் கொண்டு, குணம் மாறிப் பழையபடி ஜூலியாவை ஏற்று மகிழ்ந்தான்.
** அடிக்குறிப்புகள்**
1. Protheus
2. Valetine
3. Julia
4. Lucetta
5. Lady Silvia
6. Thurio
7. Eglamar
இரண்டாம் ரிச்சர்டு மன்னன்King Richard II
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1. இரண்டாம் ரிச்சர்டு மன்னன்: பேரரசன் மூன்றாம் எட்வர்டின் பேரன்-அவன் மூத்த மகனாகிய எட்வர்ட் இளவரசன் மகன்-தனி மனிதன் என்ற முறையில் அன்பும், பெருமிதமும், நல் உணர்ச்சிகளும் உடையவன்-அரசன் என்ற முறையில் தன்னாண்மையும், பண ஆர்வமும், பெருங்கடி மக்களை அடக்கி ஆளும் தன்மை உடையவன்.
2. ஜான் ஆவ் காண்டு: அரசன் மூத்த சிற்றப்பன்-அரசியல் திறமுடையவன்-நாட்டுப் பற்றுடையவன்-கண் கண்டது சொல்லி முதுமையில் அரசன் அவமதிப்பைப் பெற்றவன்.
3. கிளஸ்டர் கோமகன்: அரசன் சிற்றப்பன்-ஜான் ஆவ்காண்டு தம்பி-அரசன் எதிர்த்தனால் அரசன் தூண்டுதலால் கொல்லப்பட்டவன்-அரசன் அழிவுக்கு விதையாய் அமைந்தது இக்கொலை.
4. யார்க் கோமகன்: அரசனது இன்னொரு சிற்றப்பன்-அவன் சொல் பொறுத்தும் பணிந்து கொடுத்தவன்-கோழை-ஹென்றியை எதிர்க்கவும் துணியாது விட்டுக் கொடுத்தவன்.
5. ஹென்றி ஹெரிபோர்டு: பாலிங் புரோக் கோமகன்-லங்காஸ்டர் பெருமகன்-பின் நான்காம் ஹென்றி அரசன்; ஜான் ஆவ்காண்டின் மகன்-அரசனை நயமான முறையில் எதிர்த்து வெற்றி பெற்று, நான்காம் ஹென்றி அரசன் ஆனவன்.
6. நார்போக் கோமகன்: கிளஸ்டர் கோமகன் கொலையில் அரசனுக்கு உடந்தையாயிருந்த நண்பன்-அரசனழிவுக்கு முன் பீடிகையாக ஹென்றி ஹெரிபோர்டால் எதிர் வழக்காடப்பட்டு, அவனுடன் பத்தாண்டு நாடு கடத்தப்பட்டவன். ஹெரிபோர்டு தண்டனை குறைக்கப்பட்டும். தனது தண்டனை குறைக்கப்படாமையால் முணுமுணுத்தவன்.
7. நார்தம்பர்லந்துப் பெருமகன்: நார்தம்பர்லந்தை நேரிடையாக எதிர்த்த பெருமகன்-ரிச்சர்டிடம் ஹென்றி ஹெரிபோர்டின் தூதனாய்ச் சென்று அவமதித்து இறுதியில் பழிச்சொல் ஏற்றவன்.
8. பொர்ஸ்டர் பெருமகன்: நார்தம்பர்லந்துப் பெருமகன் உடன் பிறந்தான்-அரண்மனைக்காரன்-நார்தம்பர்லந்துடன் சேர்ந்து அரசனை எதிர்த்தவன்.
9. கார்லைல் தலைமகன்: அரசர் தெய்வீக நிலையில் உறுதிக் கொண்டவன்-மாறா நண்பனாயிருந்து அறிவுரை கூறியவன்.
10. ஆமெர்ல் பெருமகன்: யார்க் கோமகன் மகன்-தந்தை அரசனைத் துறந்த பின்னும் உடனிருந்தவன்.
11. புஷி
12. பாகட்
13. கிரீன்: அரசன் இன்ப வாழ்வுக்குதவிய நண்பர்கள்-மக்கள் வெறுப்புக்காளானவர்-ஹென்றி ஹெரிபோர்டின் வெற்றி கரமான கிளர்ச்சியின் தொடக்கத்திலேயே தூக்கலிடப் பட்டவர்கள்.
14. தோட்டக்காரன்: அரசி கேட்க அரசாட்சியைத் தோட்டப் பயிர்த்தொழிலுடன் ஒப்பிட்டு அரசனைக் குறை கூறியவன்.
பெண்டிர்:
1. அரசி: ரிச்சர்டின் மனைவி-பிரான்சு அரசன் உடன்பிறந்தாள்- கற்பு மிகுந்து துயருழந்த மெல்லியலாள்.
** கதைச் சுருக்கம்**
இரண்டாம் ரிச்சர்டு மன்னன் இன்ப வாழ்வினன்; சோம்பேறி; ஆனால் பண ஆவலும் தன்னாண்மையும் மிக்கவன். பெருமக்கள் அவனை வெறுத்தனர். அவன் செயலைக் கண்டித்த அவன் சிற்றப்பனாகிய கிளஸ்டர் கோமகனை மறைவாக அவன் கொலை செய்வித்தான். அவன் உடன்பிறந்தாராகிய யார்க் கோமகனும், ஜான் ஆவ்காண்டும் வெறுத்தும் வெளியிட்டுச் சொல்லாதிருந்தனர். ஜான் ஆவ்காண்டின் மகன் ஹென்றி ஹெரிபோர்டு ரிச்சர்டுக்கு உடந்தையாய் நின்ற கிளஸ்டரைக் கொன்ற நார்க்போக் கோமகன் மீது வழக்காடினான். இருதிறத்தாரும் பத்தாண்டு நாடு கடத்தப்பட்டனர். ஹென்றி ஹெரிபோர்டின் தண்டனை குறைக்கப்படும் அதே கவலையால் முதியவனான ஜான் ஆவ்காண்ட் இறந்தான்.
இறக்கும்போதும் அரசன் ஜான் ஆவ்காண்டை அவமதித்ததுடன் பண ஆவலால் அவனுரிமையையும் செல்வத்தையும் பறித்தெடுத்தான். இதனை வைத்து ஹென்றி ஹெரிபோர்டு இங்கிலாந்தில் ஒரு பிரெஞ்சுப் படையுடன் இறங்கினான். அச்சமயம் அயர்லாந்து சென்றிருந்த அரசன் எதிர் காற்றினால் திரும்பி வரத் தாமதமாக, ஹென்றியுடன் நார்தம்பர்லந்து கோமகனும் வொர்ஸ்டர் பெருமகனும் சேர்ந்தனர். யார்க் கோமகனும் ஹென்றிக்கு நண்பனாயினன்.
கடைசியாக ரிச்சர்டு இங்கிலாந்து வந்திறங்கினான். நாட்டு நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறிந்து மனங் கலங்கினான்.
ஹென்றியும் தந்தையிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாலிங் புரூக் நிலக்கிழமையைத் தனதாக்கியதோடு அரசனைப் போலவே விளங்கிப் படையுடன் மேற் சென்று கொண்டிருந்தான்.
பாலிங் புரூக்கை நோக்கி வந்துகொண்டிருந்த ரிச்சர்டு நண்பருடன் பிளின்ட் கோட்டையருகில் வந்ததும், ஹென்றி படையுடன் அண்மையிலேயே வருகிறானென்று கேள்வியுற்று அக்கோட்டையிலேயே தங்கினான். கின்னேரத்தில் நார்தம்பர்லந்து ஹென்றியின் தூதனாக வந்து ஹென்றிக்கு நீதி வழங்க வேண்டுமென்று கூறினான்.
ரிச்சர்டு தன் வலிமையின்மை தோன்றுமாறு சினத்தால் பலவாறு அவனிடம் பேசி ஹென்றியை அழைத்து வருமாறு கூறினான். நார்தம்பர்லந்து மூலம் இதை உணர்ந்த ஹென்றி பிளின்ட் கோட்டைக்க வந்து நின்று அரசன் தன்னை வந்து பார்க்குமாறு மீண்டும் நார்தம்பர்லந்தை ஏவினன். ரிச்சர்டு வந்ததும் அவனை ஹென்றி பணிந்தான். அதுகண்ட ரிச்சர்டு தன் சினம் வெளிப்படப் பலவாறு பேசி, ‘உமக்கு உரியதையும் தந்தேன்: என்னையும் தந்தேன்’ என்று கூறினான். ஹென்றி ரிச்சர்ட்டைக் கொண்டு படையுடனும், துணைவருடனும் லண்டன் நோக்கிச் சென்றான்.
லண்டர் வெஸ்ட் மின்ஸ்டரை யடைந்தும் ரிச்சர்ட்டே மன வெறுப்புற்று, “என் முடியை உம் தலைவர் ஏற்பாராக!” என்று நார்தம்பர்லந்திடம் கூறினான். ஹென்றியும் முடிசூட்டப் பெற்றான்.
ரிச்சர்டு சிறையில் வைக்கப்பட்டான். அவன் மனைவி மடத்தில் சென்றுறைந்து சின்னாளில் உயிர் நீத்தாள்.
யார்க் கோமகன் மகன் திரும்பவும் ரிச்சர்டை அரசனாக்க முயன்றான். இதை யாக் கோமகனே ஹென்றிக்குக் காட்டிக் கொடுத்தான். பின் ஹென்றியின் நண்பர் மூவர் ரிச்சர்டை வலியச் சண்டைக்கிழுத்துக் கொன்றனர்.
ஆயினும் ஹென்றி தனக்குற்ற மாசு துடைப்பானாய் அம்மூவரையும் வெறுத்துத் தூக்கிலிட்டான்; யாக் கோமகன் மகனையும் மன்னித்து விட்டான்.
இங்ஙனம் முடிவில் ரிச்சர்டின் குணமே மேலோங்கி விளங்கிப் புகழ்பெற்றது.
1.மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும்
மனிதன் சிறப்புகளுட் பல அவனது இன்ப வாழ்வினுட் காணா விடினும், துன்ப வாழ்வில் காணப்படுவது உறுதி. துன்ப வாழ்விலும் சிறப்படையாதவன் கீழ் மகனேயாவான்.
¹இரண்டாம் ரிச்சர்டின் வாழ்வு இவ்வுண்மைக்கு ஒரு சான்று ஆகும். மணிமுடியுடன் மாநிலம் ஆளுங் காலையில், அவன் குற்றங்களே தலை சிறந்து விளங்கின. அரசுரிமை அவனை விட்டகலும் போதுதான், அவன் அரசர்க்குரிய பெருமை எய்தி விளக்கமுற்றான் என்னல்வேண்டும்.
இங்கிலாந்தில் முடியழிந்த மன்னர் ரிச்சர்டு நீங்கலாக மூவராவர். அவர், ²இரண்டாம் எட்வர்டு, ³முதல் சார்லஸ், ⁴இரண்டாம் ஜேம்ஸ் ஆகியோர். அவருள் பின் இருவரும் பொதுமக்கள் விழிப்படைந்தபின் அவர்களது விடுதலை யுணர்ச்சியின் பயனாக முடியிழந்தவராவர்.
ஆனால் ரிச்சர்டும் எட்வர்டும் முடியிழந்தது பொது மக்கள் விழிப்பாலன்று. அரசியல் வாழ்வில் அன்று பொதுமக்களோ நடுநிலை மக்களோ இடம் பெறவில்லை. பெருங்குடி மக்களே ஒருபுறம் பொதுமக்களைத் துன்புறுத்தியும், இன்னொருபுறம் மன்னரை எதிர்த்தும் நின்று, அன்று மேலோங்கியிருந்தனர். இவர்களின் எல்லையற்ற வன்மையால் எங்கும் உள்நாட்டுச் சண்டையே மலிந்திருந்தது.
ரிச்சர்டு ‘கரிய வீரன்’ எனப் புகழ் பெற்ற ⁵எட்வர்டு இளவரசன் மகன். பேரரசரான மூன்றாம் எட்வர்டு இறந்தபின், எட்வர்டு இளவரசனே பட்டம் பெற வேண்டும். ஆனால், அவன் எட்வர்டு காலத்திலேயே போரிற் பட்டபடியால், ரிச்சர்டு அரசனானான்.
அரசனாகும்போது ரிச்சர்டு சிறுவனாகவேயிருந்தான். ஆகவே, அவள் சிற்றப்பனாகிய ⁶ஜான் ஆவ்காண்டு அவன் இடத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தான். ஆனால் ரிச்சர்டு செருக்கும் தற்போக்கு விருப்பும் உடையவன். விரைவில் அரசுரிமையைத் தன் கையிலேயே பறித்தெடுத்ததோடு, தன் விருப்பம்போல் நாட்டையாண்டும் நாட்டின் பொருட்குவையைத் தானும் தன்னைச் சேர்ந்தவருமாக, மட்டின்றிச் செலவு செய்தும் வந்தான். யாரேனும் இந்நடைகளை வெறுத்துப் பேசினால் அவர்களை அவன் ஈவிரக்கமின்றி அழித்தடக்கி வந்தான்.
இத்தகையோருள், ஜான் ஆவ் காண்டுக்கு இளையவரான கிளஸ்டர் ⁷கோமகன், ⁸யார்க் கோமகன் ஆகிய சிற்றப்பர் இருவரும் தலையானவர். ரிச்சர்டின் வஞ்சினம் அவர்கள்மீது சென்றது. அவனது சூழ்ச்சியால் பிரான்சு நாட்டில் ⁹கலேக்குச் சென்றிருந்த கிளஸ்டர், அங்கு வைத்தே கொல்லப்பட்டான். தனக்கும் அதே முடிவு வந்தெய்துமோ என அஞ்சி, யாக்கோமகன்அவனிடம் வளைந்து பணிந்து அவனுக்கு உடந்தையாய் நின்று கொண்டான்.
ரிச்சர்டு இன்ப விருப்பினனும் சோம்பேறியுமாதலால் அரசியல் வல்லுநராகிய தன் சிற்றப்பரை அரசியல் வாழ்வில் ஈடுபடுத்தாது, தன் மனப்போக்கிற்கொத்த நமயசஞ்சீவிகளான ¹⁰புஷி, ¹¹பாகட், ¹²கிரீன் முதலியவர்கள் உறவையே நாடினான். இவர்களுதவியால் நாட்டின் சீர்த்திருத்தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த பொருளை அவன் ஊதாரித்தனமாகச் செலவு செய்துவந்தான். இப்படியும் வருவாயற்றுப் போகவே நாட்டின் செழித்த வட்டங்களைத் தனி மனிதருக்குப் பணயம் வைத்தும் வரிப்பணத்தை ஈடுவைத்தும் பொருள் திரட்டலானான். மேலும், அவன் செல்வர்களான வணிகரிடமிருந்து கடன் என்ற பெயரால் பெருந் தொகைகளைக் கொள்ளையுங் கொண்டான்.
எதை மூடி வைத்தாலும் கொலையையும் வஞ்சத்தையும் மூடிவைக்க முடியாதன்றோ? அதன்படி கிளஸ்டர் முடிபு இயற்கையானதன்று; படுகொலையின் பயனே என்றும், அதுவும் ரிச்சர்டின் கைவரிசையே என்றும், ஆங்காங்கு மக்கள் கூறத் தலைப்பட்டனர். அதிலும், இக்கிளஸ்டர் பெருமகன் பேரரசன் மூன்றாம் எட்வர்டின் மகனும் பெருமக்களுள் தலைசிறந்தவனும் ஆனதனால், பெருமக்களிடையேயும் மிகவும் கிளர்ச்சி ஏற்பட்டது. ரிச்சர்டின் வாள்வலிக்கும் பொதுமக்களிடையே அவனுக்கிருந்த செல்வாக்குக்கும் அஞ்சியே, அவர்கள் வெளிப்படையாக அவனை எதிர்க்காத்திருந்தனர்.
இங்கிலாந்தின் பெருமக்களுள் செல்வாக்கிற் சிறந்தவன் ¹³நார்தம்பர்லந்துப் பெருமகன் ஆவன். அவனும் அரண்மனைக் காரியக்காரனான அவன் உடன் பிறந்தான் ¹⁴வொர்ஸபுடர் பெருமகனும் துணிந்து ரிச்சர்டின் கொடுங்கோன்மையைப் பற்றியும் தீச்செயல்களைப் பற்றியும் பலபடத் தமக்கள்ளும் பிறரிடமும் பேசலாயினர். ரிச்சர்டின் மற்றச் சிற்றப்பர்களாகிய ஜான் ஆவ்காண்டும் யார்க்கும் இவர்களுடன் நேராகக் கலக்கவில்லை யாயினும் இவர்களையொப்ப ரிச்சர்டின் போக்கை மட்டிலும் வெறுத்தே வந்தனர். இவர்கள் ரிச்சர்டின் ஆட்சியுடன் ஒத்துழைத்ததெல்லாம் கடமையுணர்ச்சியாலும் நாட்டுப் பற்றாலுமேயன்றி வேறன்று.
ரிச்சர்டின் தீச்செயல்களால் ஏற்பட்ட மனக்கொதிப்பாலும் ஆண்டு முதிர்வாலும் ஜான் ஆவ்காண்டின் உடல்நிலை மிகுதியும் தளர்வுற்றது. இத்தருணத்தில் அவன் மகன் ஹெரிபோர்டு கோமகனாகிய ஹென்றிக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சி அவன் நோயைப் பெரிதும் மிகைப்படுத்தியது.
ஹென்றி ஹெரிபோர்டு முதியோராகிய தன் தந்தை சிற்றப்பர் முதலியோரைப்போல் ரிச்சர்டின் தீச்செயல்களைப் பொறுத்திருக்க விரும்ப வில்லை. அவர்களை ஒத்த உயர்ந்த கடமையுணர்ச்சியும் நாட்டுப் பற்றும் உடையவன் அல்லன் அவன். வாள்வலியால் பெருங்குடி மக்களையும் நயமொழிகளாலும் பகட்டாலும் நடுநிலை மக்களையும் அவன் தன்வயப்படுத்தி வைத்திருந்தான். அதன் பயனாக அவன் ரிச்சர்டின் தீச்செயல்களைச் சாக்காக வைத்துக் கொண்டு நாட்டுமக்களை அவனுக்கெதிராகத் திருப்பியதோடு அவனை வீழ்த்தித் தன் நிலையை உயர்த்தவும் எண்ணங் கொண்டான்.
இவ்வெண்ணங்களை வெளிப்படையாக முதலிலேயே காட்டாமல் படிப்படியாக எதிரிகளையும் அவர்களைச் சேர்ந்தோர்களையும் தொலைக்க எண்ணி அவன் முதலில் கிளஸ்டர் கொலையில் அரசனுக்குத் துணை நின்ற நார்போக் கோமகனை நாட்டுப் பகைவன் என அரசவையிற் குற்றஞ் சாட்டினான். தன் கைக்கருவியைப் பழிப்பது தன்னையே பழித்ததாகும் என்றறிந்தும் ரிச்சர்டு, ஹென்றியை நேரே எதிர்ப்பதை விடப் பிறருடன் மாறுபடச் செய்வதே நன்று என்று எண்ணி அக்குற்றச்சாட்டு வழக்கை மற்போரால் இருவரும் தீர்த்துக் கொள்ளுமாறு பணித்தான். ஆனால், தன் நண்பருடன் உசாவியபின், இம்மற்போர் ஒருவேளை பெரும் போராகித் தன் நிலைக்கு இடுக்கண் விளைக்குமோ என அஞ்சி அவன் அதனை நிறுத்தி இருதிறத்தாரையும் பத்தாண்டு நாடு கடத்தினான்.
இச்செயலால் தன்னை நடுநிலையாளன் என யாவரும் கொள்வர் என்று அவன் நினைத்தான் போலும்! ஆனால் உண்மையில் இதனால் இருதிறத்தாரும் முணுமுணுத்தனரே யன்றி வேறன்று, நார்போக், ஒருபுறம் அரசனிடம் தான் கொண்ட பற்றை அவன் எண்ணிப் பாராமல் தன்னைப் பகைவனோ டொப்ப நடத்திப் பகைவனுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று எண்ணினான். ஹென்றியோவெனில், நார்போக்கினிடம் பழிவாங்கு வதினின்றும் தடுக்கப்பட்டோம் என்று குமுறினான்.
ரிச்சர்டு இடுக்கண் வந்த நேரத்தன்றிப் பிற நேரங்களில் ஒரு கோழையே யாவன். அவன் நண்பனைப் புண்படுத்துவதை விடப் பலமடங்கு பகைவனைப் புண்படுத்தவே அஞ்சினான். முகம் ஒளியிழந்து வாட்டமுற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற நார்போக்கை அவன் ஏறெடுத்துக்கூடப் பாராமற் சீறிக்கொண்டு, புன்முறுவலுடன் ஹென்றி பக்கம் திரும்பித் “தாம் என் நெருங்கிய உறவினர் ஆயினும் ஒழுங்கை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கிறேன். பத்தாண்டுகளையும் பத்து நொடிகளாகக் கழித்து வருக” என்றான்.
இதனைக் கேட்டிருந்த ஹெரிபோர்டின் தந்தையாகிய ஜான் ஆவ்காண்டு, “அரசே, தமக்கு ஓர் ஆண்டு ஒரு நொடிதான். எமக்கு ஒரு நொடி ஓர் ஆண்டாகும் என்பதில் ஐயமில்லை. அதிலும் என் இறுதி நாட்களில் பத்தாண்டு பிரிவதென்பது என்றென்றைக்கும் பிரிவதாகவே ஏற்படும் பத்தாண்டுகளுக்குள் என் காலம் கழிந்துவிடும்” என்றான்.
ரிச்சர்டு இயற்கையில் இளகிய நெஞ்சுடையவன். அதோடு ஜான் ஆவ்காண்டின் செல்வாக்குக்கும் உயர்வுக்கும் சற்று அஞ்சியவன். ஆகவே அவனைச் சற்று மதித்து, ஹென்றியின் ஒறுப்பு நாட்களை ஆறாண்டுகளாகக் குறைத்தான். ஆனால், அப்போதும் ஜான் ஆவ்காண்டு முணுமுணுத்துக் கொண்டே, “தமக்கென அரசே, தாம் ஒரு நாவசைப்பால் நாலு ஆண்டு குறைக்கவும் செய்யலாம்; நாற்பது ஆண்டு கூட்டவும் செய்யலாம். மனிதர் வாழ்க்கையெல்லாம் தன் போன்ற அரசர்க்கு ஒரு பந்தாட்டந்தானே” என்றான்.
இங்ஙனம் மகனும் தந்தையும் தன்னை ஒரு பொருட்டாய் எண்ணாமற் பேசினது ரிச்சர்டின் அமைதியையும் தற்பெருமை யையும் குலைத்தது. அவன் அன்று முதல் அவர்களுக்கு எவ்வகையிற் பாடம் படிப்பிக்கலாம் என்றெண்ணலானான்.
மகன் நாட்டை விட்டுப் போன நாள் முதலே ஜான் ஆவ் காண்டின் உடல்நிலை முன்னிலும் பன்மடங்கு சீர்கெட்டு அவன் படுக்கையும் பாயும் ஆனான். ரிச்சர்டு அதனைக் கேள்வியுற்றும் சற்றும் பரிவு காட்டாது அவனிடம் கொடுமையாகவே “இன்னும் இறுதிநாள் எவ்வளவு தொலைவி லுள்ளது?” என்று கேட்டான். பின் இறக்கும் தறுவாயில் ஜான் ஆவ்காண்டு தானாகவே ரிச்சர்டைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினான். அப்போதும் சமயத்தின் அருமையைக் கூடப் பாராமல் ரிச்சர்டு அவனிடம் அசட்டையான மொழிகள் பேசினான். ஜான் ஆவ் காண்டு தன் அரசாட்சியையும் தன் போக்கையும் குறை கூறுவதைப் பொறாமல் அவனை வெளியேற்றும் படியும் கூறினான். வெளியேறிய சில நொடிகளில் அவன் இறந்தும், ரிச்சர்டு தன் குற்றத்தை ஏற்றுக் கழிவிரக்கங் கொள்ளத் தவறினான்.
2.பகைப் புயல்
மேலும், தந்தையிடம் கொண்ட சீற்றத்தை மகனிடமும் காட்ட ரிச்சர்டு தயங்கவில்லை. கருவூலம் வெறுமையாயிருந்ததை உன்னி ஜான் ஆவ்காண்டின் நிலங்களையும் உடைமைகளையும் அரசியலுக்கெனப் பறிமுதல் செய்தான். அதோடு அவனது பெருநிலக் கிழமைக்குரிய ¹⁵பாலிங் புரோக் கோமகன் என்ற பட்டத்தையும் அவன் மகன் ஹென்றி ஹெரிபோர்டுக்குச் செல்லாமல் தடை செய்தான். அரசவையிலுள்ள நண்பரும் பிறரும் இஃது அடாத செயலெனக் கூறியும் ரிச்சர்டு அவர்களனைவரையும் பொருட் படுத்தாது வாயடக்கினான்.
ரிச்சர்டின் வாழ்க்கைக்கோள் உச்சநிலையைடைந்து திரியத் தொடங்கியது இப்போதுதான் என்னலாகும்.
இது சமயம் ரிச்சர்டின் தீவினைப் பயனாக அயர்லாந்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை அடக்கும் எண்ணத்துடன் ரிச்சர்டு தன் படைகளைத் திரட்டிக்கொண்டு போனான். அயர்லாந்து கிளர்ச்சியை அடக்கப் பல வாரங்களாயின. அது கழிந்து திரும்பும் சமயத்தில் காற்று எதிர்ப்புற மாயடித்ததனால் பின்னும் சில நாள் தாமதமாயிற்று.
இத்தனைக்குள்ளாக, இங்கிலாந்தில் ரிச்சர்டுக்கு எதிர்ப்பு வலுத்தது. பகைப் புயல் கிளம்பி அரசியல் வானெங்கும் பரந்தது.
முதன்முதல் அது வடகிழக்கு மூலையில் ஒரு சிறு வெண் முகிலுருவில் காணப்பட்டது.
ஹென்றி தன் தந்தை வழி உடைமைகளை மீட்கும் சாக்குடன் இங்கிலாந்தில் வந்திறங்கினான். நார்தம்பர்லந்து உடன் தானே அவனுடன் வந்து சேர்ந்தான். விரைவில் பெருமக்கள் பலரும் அவன் பக்கம் வந்தனர். வொர்ஸ்டர் பெருமகன் தன் பணியைத் துறந்து, தன் ஆட்களுடனும், அயர்லாந்து போகாது எஞ்சிய படைகளுடனும் எதிரி பக்கம் சென்றான். இங்ஙனம் ஹென்றி உருவில் எழுந்த சிற்றோடை, பார்க்லிக் கோட்டையருகே வருவதற்குள் தடங்கரைக் காவிரியாய்ப் பெருகிற்று.
பார்க்லிக் கோட்டையில் யார்க்கோ கோமகன் தன் சிறுபடையுடன் தங்கியிருந்தான். அவனும் ரிச்சர்டின் தீவழிகளைக் கண்டிப்பவனே யாயினும், கொண்ட கொள்கையை நிலைநிறுத்தும் உரமற்றவன். இக்கோழைத் தனத்துடன் தன்னலமும் சேர்ந்து அவனது தயக்கத்தை மிகைப்படுத்திற்று. முதலில் அவன் கிளஸ்டர் பக்கம் நலிந்திருந்தபோது ரிச்சர்டு பக்கம் சேர்ந்தான். இப்போது ரிச்சர்டு பக்கம் நலிந்து வருவது கண்டு அவன் மெல்ல மெல்ல அதனின்றும் நழுவலானான். இதற்கியைக் கிளஸ்டர் கோமாட்டியும் அவனிடம் சென்று தன் கணவனும் அவன் உடன் பிறந்தானுமாகிய கிளஸ்டர் கோமகன் கொலைக்குப் பழிவாங்குமாறு அவனைத் தூண்டி வந்திருந்தாள்.
இவற்றின் பயனாக யார்க் ஹென்றியை எதிர்க்கத் துணியவில்லை. ஆயினும், நன்றியற்றவனாய் விடவும் அவன் துணியாது நாக்கடிப்பாக ஹென்றியின் செயல் அடாதெனக் கண்டித்துப் பேசினான். ஹென்றி தன் உரிமைக்கு மட்டுமே போராட வந்ததாகக் கூறிபோதும், அவன் குடிகளுள் யாரும் தன் உரிமைக்காகக் கூட மன்னனை எதிர்க்கக்கூடாதென்ற ஒழுங்கை நினைவூட்டினான். இறுதியில் இவையனைத்தும் ஹென்றியின் படைவலிக்கு முன் பயனற்றதென்று கண்டு தான் நடுநிலைமை தாங்குவதாகக் கூறி அவனைப் பார்க்லிக் கோட்டைக்குள் விருந்தினனாய் வரவேற்றான். இவ்வளவு இடம் பெற்ற ஹென்றி விரைவில் மூக்கிடம் பெற்ற ஒட்டகம் போல் கோட்டை கொத்தளம் முதலிய யாவற்றையும் படையையும் தன் வயமாக்கிக் கொண்டான்.
ரிச்சர்டின் மனைவி பிரான்சு நாட்டரசனுடைய உடன்பிறந்தாள் ஆவள். அவள் சூது வாதற்றவள். அன்பும் அருளும் பொருந்தியவள். அவள் அரண்மனையில் தனியே தன் கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளைச் சுற்றிலும் அரசியல் புயல் குமுறியடிக்கக் காத்திருந்தது. அதனிடையே, பூந்தோட்டத்தில் பொலிந்தொளிர வேண்டும் மலர்போன்ற அவள், வற்றற்பாலையில் வெயிலில்கிடந்து வாடினதுபோல் வாடலானாள். மாசற்ற அவள் உள்ளத்தில்கூட உலகைச் சுற்றியடிக்கும் அப்புயலின் தொலைவான எதிரலை தட்டிற்று. ரிச்சர்டின் பெயர் மதிப்பின்றி ஆங்காங்கு அடிபடுவதும் மக்களது நடமாட்டத்திலும் பேச்சிலும் ஏதோ அமைதியின்மையும் பரபரப்பும் காணப்படுவதும் அவள் உள்ளத்தின் தூய அமைதியைக் குலைத்து அதில் இன்னதென்று விளங்காத ஒரு நுண்ணிய கவலையை உண்டு பண்ணிற்று. அதனால் அவள் ஊணும்தடைப்பட்டது. உறக்கமும் தடைப் பட்டது. தோட்டத்ததிலேனும் சென்று உலாவலாம் என அவள் புறப்பட்டாள்.
அவளது தோட்டத்தில் அன்று தோட்டக்காரனுடன் அவன் நண்பர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். தோட்டத்தின் நேர்த்திகண்டு நண்பர்கள் தோட்டக்காரன் திறத்தை மெச்சினர். அப்போது அவன் மகிழ்வதற்கு மாறாகக் கோணிய முகத்துடன், “அன்பரீர், இத்தோட்டத்தை நீங்கள் மெச்சுவதற்கு மாறாகப் பழித்திருக்க வேண்டும். இதன் நேர்த்தி கொண்டு என்ன பயன். இன்றைய நம் இங்கிலாந்து இதனினும் பெரியதொரு தோட்டம் எனலாம். அதுவன்றோ நேர்த்தியாயிருக்க வேண்டும்? ஆனால் அஃது அங்ஙனம் இல்லையே! அதன் தோட்டக்காரன் நல்லவனும் நன்முயற்சி உடையவனுந்தான். ஆனால், பூவை வளர்த்துப் புழுவையும் வளர்த்துவிட்டது போல் நாட்டுமக்களிடம் காட்டும் அதே அன்பை அவர்கள் உயிரை உறிஞ்சும் சமயசஞ்சீவிகளிடமும் காட்டுவதால் நாட்டை அவன் அவர்களுக்கு இரையாக்கி விட்டான். மேலும். பெரும் மக்களைக் களைகள் போல் வளரவிட்டுப் பொதுமக்களாகிய பயிர்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியும் வந்திருக்கான். தன் கவனக்குறைவால் நேர்ந்த தீங்குகளைப் பாவம் அவன் அறியான்! இத்தோட்டத்தை மெச்ச நேர்ந்திருப்பின் எத்தனையோ நலமாயிருந்திருக்கும்” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.
தோட்டத்தைக் காக்கும் முறையில் தனக்கிருக்கும் திறன் இங்கிலாந்தைக் காக்கும் முறையில் ரிச்சர்டுக்கு இல்லை என்று அத் தோட்டக்காரன் கூறிய குறிப்பைக் கேட்டு முதலில் கனன்றெழுந்த அரசி, கணவனுக்கு ஏதோ தீங்கென உள்ளூரக் கண்டதன் பயனாகத் தோட்டக் காரனை அணுகி, “நேயனே, அரசன் அயல்நாடு சென்று பல நாளாகியும் வரக்காணேன்; கவலைப்படுகிறேன்; அவன் அரசியலுக்கு ஊறு நேர்ந்ததெனக் கண்டால் எனக்குக் கூறுவாய்” என்றாள்.
தோட்டக்காரன் தன் புன்மொழிகள் இங்ஙனம் எதிர்பாராத பெரிய இடத்தைச் சென்று சேர்ந்ததே என வருத்தமும் வெட்கமும் அடைந்தான். பின் அரசியின் முகநோக்கி ஆண்டு அரசியல் பெருமைக்கு மாறாகப் பெண்மையின் மெல்லியல்பும் கவலையும் குடிகொண்டிருக்கக் கண்டு பரிவுற்று, ஹென்றி ஹெரிபோர்டு படையுடன் வந்திருப்பதை நார்தம்பர்லந்து முதலியோர் எதிரிபக்கம் சேர்ந்திருப்பதையும் விளங்கக் கூறினான். கேட்ட அரசி தீக்காற்று வீசப் பெற்ற மாந்தளிரெனச் சாம்பத் தலைப்பட்டாள்.
3.அலைமேல் அலை
அயர்லாந்திலிருக்கும் ரிச்சர்டுக்கு இச்செய்திகளின் முழு விவரமும் எட்டவில்லையாயினும் நிலைமை நெருக்கடியானது என்ற அளவிலேனும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. காற்று தொடர்ச்சியாகப் பல நாட்கள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து நோக்கி அடித்ததினால், இச்செய்திகள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து வந்து சேர்ந்தும் ரிச்சர்டு அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து வரமுடியாமலிருந்தது. இக்கால தாமதத்தால் ஒவ்வொரு நொடியும் ஹென்றியின் வலிமை வளர்ச்சியடைந்ததும் ரிச்சர்டின் வலிமை குன்றியும் வந்தன. ரிச்சர்டு இங்கிலாந்தில் வந்திறங்கியபோது, தீச்செய்திகள் பல அவன் காதில் வந்துவிழக் காத்திருந்தன. அவற்றுள் முதன்மையானது வேல்ஸில் ஸாலிஸ்பரி தலைமையிலுள்ள படைகள் கலைந்து போயின என்பதே. அவற்றிடையே ரிச்சர்டு இறந்து போனான் என்ற பொய்ச் செய்தி பரந்ததே அவை கலைந்து போனதன் காரணம் என்று தெரியவந்தது. தன் தாமதத்தால் நேர்ந்த இப்பெருந் தீங்கைக் கேள்வியுற்று ரிச்சர்டு பொறி கலங்கி நின்றான். சற்றுக் கழிந்தபின், அவன் தன் பக்கம் நின்ற யார்க்கோமகன் மகனாகிய ¹⁶ஆமெர்ல பெருமகனை நோக்கிச் சற்று மனத்தேர்தலுடன், “ஆயினும் என்ன, கேடொன்றும் இல்லை; நின் தந்தையிடம் இன்னும் நம் நாட்டுப் படையின் ஒரு பகுதி உண்டன்றோ? அதன் வலியே நமக்குப் போதும்” என்றான்.
அவ்வமயம் தூதன் ஒருவன் வந்து, யார்க் கோமகன் பார்க்லிக் கோட்டையினுள் ஹென்றியை வரவிட்டதையும், அக்கோட்டையும் அதிலுள்ள யார்க் கோமகன் படைகளம் எதிரி பக்கம் சேர்ந்ததையும் கூறினான். அதனையடுத்தாற் போல் இன்னொருவன் வந்து, வொர்ஸ்டர் கோமகன் எதிரியிடம் மீதிப் படைகளுடன் சென்றதையும் நார்தம்பர்லந்து முதலியோர் எதிரிக்குத் துணையாக வருவதையும் கூறினான்.
அலைமேல் அலை அடித்ததுபோல் வந்த இச்செய்தி களால் மோதுண்டு சற்றே அமிழ்ந்து நின்ற ரிச்சர்டின் உள்ளமாகிய கட்டுமரம், அதன் இயற்கை நொய்ம்மையால் மீண்டும் மீண்டும் மேலெழுந்து கடல்மீது பாய்ந்து செல்லவே தொடங்கிற்று. நன்மையே நிறைந்த வெற்றி நாட்களில் செருக்காய்த் தோன்றிய அவனது தற்பெருமை, தோல்வியின் நிழல் கண்முன் ஆடும் இந்நாட்களில் வீரமமாகவும் பெருமிதமாகவும் மாறி அவனுடைய உடலெழிலுக்கு ஓர் அரசுரிமைப் பெருமை நல்கியது. தன்னை அடுத்தோரை இச்சமயம் அவன், தன் வனப்பாலும் தன்னைச் சூழ்ந்த துயரத்தின் குறிகளாலும் தன் கவித்திற மிக்க மொழிச் சித்திரங்களாலும் தன் பக்கமாக ஈர்த்து, அவர்கள்மீது புதுவகையானதோர் ஆட்சி செலுத்தினான்.
‘சாவப் போகிறவன் துரும்பையும் புணையாகக் கொள்வான்’ என்பது பழமொழி. ஆனால், அத்தகையோர் அத்துரும்பைப் புணையாக நம்புவதுமில்லை; நம்புவதாகக் காட்டுவதுமில்லை. ஆனால், குழந்தை போல் சூதற்ற தன்மையுடைய ரிச்சர்டுக்கு, இச்சமயம் துரும்புகூட உண்மையில் புணையாகவே தோன்றிற்று. ஒருவேளை துயர்நீக்க அது புணையாகத் தோன்றியிரா விட்டாலுங்கூட அத்துயரிடையே தான் சிறுமைப்படாது காக்கும் அளவுக்கேனும் அவன் அத்தகைய துரும்பைப் புணையெனக் கொண்டான் என்னல் வேண்டும். ஏனெனில், நம்பிக்கையிழந்த அந் நிலையிலும் சமய உண்மை கண்ட அந்தணாளனாகிய ¹⁷கார்லைல் தலைமகன் அவனை நோக்கி, “அரசே, மனிதர் துனை அகன்றதெனக் கொண்டு கவலற்க; இறைவனது துணையின் நிறைவு தமக்கு உளது. உமக்கு அரசுரிமை தந்தது மனிதரல்லவே! அவ் அரசுரிமை தந்த அதே இறை இன்று அதன் பகைவரை அழித்து உமக்கு அது நிலைக்குமாறும் செய்யும்” என்றதே, ரிச்சர்டு தன் நிலைமறந்து அவன் ஆறுதலே ஒரு தேறுதலாகக் கொண்டு, “ஆம் ஐயனே, எனக்குப் பற்றுக்கோடாயுள்ள அப்பேருண்மையை மறந்தேன். நீர் நன்கு நினைவூட்டினீர். இனிக் கவலைப்படக் காரணமில்லை” என்று நகைத்தான். உலகின் மோசடி நடைகளை உணர்ந்த அவன் வெள்ளையுள்ளம் கண்டு அவன் நண்பரும் பிறரும் பரிவுகொண்டு வருந்தினர்.
ஹென்றியின் படைவலி மேன்மேலும்பெருகிக் கொண்டே வந்தது. ரிச்சர்டின்மீது பொறாமை கொண்ட பெருமக்கள். அவனது கட்டுப்பாடற்ற இன்ப வாழ்க்கையை வெறுத்த மடத்துத் துறவியர், அவன் நண்பர்களான சமயசஞ்சீவிகளையும் அவனையும் வெறுத்த பிறமக்கள் முதலிய பலரும் லண்டன் நோக்கி வரும் ஹென்றியின் படையில் வந்து சேர்ந்தனர்.
இங்ஙனம் படைவலி மிகுதியாக மிகுதியாக ஹென்றியின் தற்பெருமையும் பெருநோக்கும் கூடவே வளர்ந்து கொண்டு வந்தன. அவன் அரசன் என்ற பெயர் இல்லாமலேயே அரசனுரிமைகளை ஒவ்வொன்றாய்ப் மேற்கொள்ளலானான். முதன்முதல் அவன் தனதாக்கியது, தந்தையினி டமிருந்து ரிச்சர்டு பறிமுதல் செய்த பாலிங்புரோக் பெருநிலக் கிழமையாகும். உடன அப் பெருநிலக்கிழமைக்குரிய பட்டத்துடன் அவன் ஹென்றி பாலிங் புரோக் என்று அழைக்கப்பட்டான். இதுவரை அவனோ டொத்த வராயிருந்த பெருமக்கள், அவன் படைவலியும் செல்வாக்குங் கண்டு அரசர் முன் பணிவது போல் அவன் முன் பணியத் தலைப்பட்டனர். அவனும், அங்ஙனம் பணியாத வரையும் ரிச்சர்டுக்கு உடந்தையான வரையும் அச்சுறுத்தவும் ஒறுக்கவும் தொடங்கினான்.
இத்தகைய பெரு நிலைகளுடன் ஹென்றி வரும் வழியில் ரிச்சர்டின் சமய சஞ்சீவிகளான புஷியும் கிரீனும் தென்பட, அவன் ஆட்கள் அவர்களைச் சிறைப்படித்து அவன் முன்னிலையிற் கொண்டு வந்து நிறுத்தினர். ஹென்றி பாலிங் புரோக், அவர்களை வழக்கு மன்றத்தில் உசாவுவது போல் உசாவிக் குற்றஞ்சாட்டித் தானே அரசனென்றாற் போல அவர்களைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டான்.
பாலிங் புரோக்கை நோக்கி வந்து கொண்டிருந்த ரிச்சர்டு, தன் நண்பர் ஒவ்வொருவராகத் தன்னைவிட்டு அகன்றது கண்டு ஒருபுறம் வெகுண்டான்; தன் நிலை ஓர்ந்து ஒருபுறம் துயரடைந்தான். மற்றொருபுறம், இறைவன் கடைசி நொடியிலேனும் தன்னால் அரசனாகப் படைக்கப்பட்ட தொரு பேருயிரைக் காப்பானோ என்ற ஆவல். அவன் உள்ளத்தடத்தின் இருளிடையே மின்னிற்று. அச்சமயம் திடீரென்று அவனக்குக் கிரீன், புஷி முதலிய நண்பர்களின் நினைவு வந்தது. வந்ததும், அவர்களேனும் இன்னும் உதவுவர் என்ற நம்பிக்கை சற்றே தலைதூக்க, அவன் அவர்கள் எங்கே என்று உசாவினான். அருகில் இருந்தவர் எவரோ அச்சமயம், “அவர்கள் அப்பாற் சென்று சேர்ந்தனரே” என்ன, அவர்களும், தன்னைக் கைவிட்டு எதிரியிடம் சென்று சேர்ந்தனர் என்று தவறாகக் கருதத் தீ மிதித்தவன் போல மனங்கொதித்து, “ஆ பதடிகள், நன்றி கெட்டவர்கள்! அவர்களும் சென்றனரா? ஆ, இவ்வுலக வாழ்வனைத்தும் எத்துணை வெளிப்பூச்சு” என அரற்றினான். அச்சமயம் நண்பர் அவன் கொண்ட தப்பெண்ணத்தைத் திருத்தி, “அரசே! அவர்கள் உம்மைக் கைவிட்டு அப்பாற் செல்லவில்லை; உமக்காக உயிர்விட்டு உலகை நீத்து அப்பால் எமனுலகுக்குச் சென்று சோந்தனர்” என்றனர். அது கேட்டதும் ரிச்சர்டு சினமனைத்தும் மாறித் தன் துயரையும் மறந்து அவர்களுக்காகக் கண்ணீருகுத்து மன மாழ்கினான்.
4.ஊழிற் பெருவலி யாவுள?
ரிச்சர்டு தன் நண்பருடன் வேல்ஸ் எல்லையிலுள்ள ¹⁸பிளின்ட் கோட்டைக்கு வந்ததும், ஹென்றி படையுடன் அண்மையிலேயே எதிர்நோக்கி வருகிறான் என்று கேள்விப் பட்டான். அவனை எதிர்க்க வேண்டிவரின் கோட்டையே பாதுகாப்பான இடம் என்றெண்ணி ரிச்சர்டு அக்கோட்டை யிலேயே தங்கி அவனை எதிர்பார்த்திருந்தான்.
சின்னேரத்தில் ஹென்றின பாலிங் புரோக்கின் படையைச் சேர்ந்த பேரிகை ஒலியும், படைவீரர் ஆரவாரமும் பிளின்ட் கோட்டையருகே வந்தெட்டியது. கோட்டை வாயில் வந்ததும் ஹென்றி நார்தம்பர்லந்தைத் தூதனாக அனுப்பினான். நார்தம்பர்லந்து ரிச்சர்டு முன் வந்து, “நான் ஹென்றி ஹெரிபோர்டு பாலிங் புரோக் கோமகனிடமிருந்து வருகிறேன். எம் தலைவர், ரிச்சர்டினிடம் சில செய்திகள் பகர வேண்டுமென்று விரும்புகிறார்.”
அரசனை அரசனுக்குரிய முறையிலன்றி ரிச்சர்டு என்றுமட்டுங் கூறியது கண்டு, காவலரும் துணைவரும் உள்ளூரச் சீற்றங் கொண்டனர். ஹென்றி பாலிங் புரோக்கின் படைவலியும் செல்வாக்குமே அன்று நார்தம்பர்லந்தைக் காத்தன என்னல் வேண்டும். ரிச்சர்டு முன்னிலையில் அவன் பணியாது நின்று பேசினான். இத்தகைய நடைகளிலிருந்தும் மக்கள் பரபரப்பிலிருந்தும் ஹென்றியின் உள்ளாந்த் நோக்கம் தனக்கு உரிமையான பாலிங் புரோக் பெருநிலக்கிழமையினை மட்டும் பெறுவதன்று, அதனை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு இங்கிலாந்தின் மீது படையெடுத்து அரசுரிமையைக் கைப்பற்றுவதேயாம் என்பது தெற்றென விளங்கிற்று.
ஹென்றியின் செல்வ வெறியிலும் செல்வாக்கிலும் மயங்கிப் பெரு மக்களும் நடுநிலை மக்களிற் பலரும், அவனை அரசனாக்க ஒருப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் ரிச்சர்டு காதில் விழுந்தே இருந்தது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு ரிச்சர்டைச் சேர்ந்தோர் நார்தம்பர்லந்து ஹென்றி ஆகியவரின் நடை மீதுள்ள சீற்றத்தை வெளிக் காட்டாது அடக்கிக் கொண்டனர். ரிச்சர்டோ, கடலினுள் புதைந்து கனன்று கொண்டிருக்கும் வடவைத் தீப்போன்று குமுறிக் குமுறி மேலெழுவதும் அடங்கி நிற்பதுமாக இருந்தான்.
வணங்காமுடி மன்னனாய் நிற்கும் நார்தம்பர்லந்தை அவன் எரியெழ உறுத்து நோக்கி, “ஐய, தாம் அரசர் முன்னிலையில் நின்று பேசுகின்றீர் நின்று பேசுகின்றீர் என்பதை மறக்கச் செய்த தமது தற்பெருமை அல்லது தம் தலைவரது தற்பெருமை யாதோ? அல்லது அரசர் யாம் அல்லேம் என்றுகூட நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு கட்டிவிட்டீர்களே?” என்றான்.
தனது திட்டம் முற்றும் அரசர் வாயிலிருந்து வருவது கேட்டு நார்தம்பர்லந்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தும் வெளிக்கு ஒன்றும் அறியாதவன் போலச், “சிவசிவ! என்ன சொற்கள் சொன்னீர்? குடிகளாகிய எமக்குத் தமது அரசுரிமையை எதிர்க்கத் துணிவு வருமோ? யாம் வறிதே எம் உரிமைக்காக மன்றாட வந்துள்ளோம். தாம் என் தலைவர் ஹென்றி ஹெரிபோர்டு பாலிங் புரோக் கோமகனுக்குச் செய்த தீங்கை அகற்றி அவரை ஏற்றுக்கொள்ளும்படி மட்டும் வேண்டுகிறோம்” என்றான்.
தேன் பூசிய நஞ்சே போன்ற அவனது நயவஞ்சக மொழிகள் கேட்டு ரிச்சர்டு தான் இதுகாறும் இயற்றிய பிழைகளை ஒரு நொடி எண்ணிப் பார்த்து, “ஆம், இன்று வருந்துவதாற் பயனென்? இப்பெருமக்கள் குழுவை வரம்பில் வைக்கத் தவறினேன். பொதுமக்களின் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பெறத் தவறினேன். நகத்தாற் கிள்ளி பகைவன் இப்போது கோடரியால் தறிப்பினும் தறிபட முடியாத அளவு வளர்ந்து விட்டானே! என் அரசாட்சி இருந்தவாறு என்?” என்று வருந்தினான்.
பின் அணைகடந்த வெள்ளத்துக்கு என் செய்வதென்று மனந்தேறி நார்தம்பர்லந்தை நோக்கி அவன் “சரி, உம் தலைவனிடம் போய் அரசனைக் காணலாம். கண்டு தம் உரிமைகளைப் பெறலாம் என்று சொல்க!” என்றான்.
இத்துடன் ரிச்சர்டின் நா நின்றிருந்தால்கூட ரிச்சர்டின் வீழ்ச்சி தடைப்பட்டிருக்கலாகும். ரிச்சர்டு பாலிங் புரோக்கின் பெருநிலக் கிழமையை விட்டுக்கொடுத்திருந்தால், தற்காலிகமாக வாவது பாலங் புரோக் தன் படைகளைக் கலைக்கவேண்டி வந்திருக்கலாம். ஆனால், பெரிய தேரின் போக்கை மாற்றும் சிறு சறுக்குக்கட்டை போன்றதொரு நிகழ்ச்சி இச்சமயம் ரிச்சர்டின் தீவினைப் பயனால் நிகழ்ந்து, அவனது தீய நாவைத் தூண்டிற்று. வெளியே சென்று கொண்டிருந்த நார்தம்பர்லந்து, ‘தன் தலைவர் தர இணக்கம் பெறவில்லையே’ என்று நினைத்துத் திரும்பி வந்தான். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்றபடி ரிச்சர்டுக்கு ‘அவன் தன் மறைப்பையும் நடிப்பையும் முற்றிலும் துறந்து நேரே தன் முடிவைக் கேட்கிறானோ’ என்று தோன்றிற்று. தோன்றவே, தன் மன அமைதியையும் பகுத்தறிவையும் சற்றே பறிகொடுத்து விட்டு, “ஏன் ஐயன்மீர், இத்துணை நாள் விட்டுக்கொடுத்தது போதாது என்றா இன்னும் வருகிறீர்? உம் தலைவர், நான் எவ்வளவு பணிந்தால் நிறைவடைவார்? அவருக்கு இந்த ஒரு மணிமுடி போதுமா? இந்த ஓர் அரசிருக்கையும் இந்த ஓர் அரண்மனையும் அல்லது இந்த ஒரு நாடும் உலகமுந்தான் போதுமா? இவ்வளவும் போதாமல் இருந்தால் இந்த ரிச்சர்டின் உயிரே வேண்டுமானாலும் தருகிறேன். அதுமட்டுமன்று; என் அரசுரிமையோடுகூட என் தன் மதிப்புங்கூட வேண்டுமா? என்று கேட்டு வருவீர். நான் அரசனாக வாழாமல் தனி மனிதனென்ற முறையிலாவது வாழலாமா? இந்த இங்கிலாந்தில் என் மனைவியும் நான் மிதக்கும் நிலமுமாவது எனக்குரியவை என்று நான் சொல்லிக் கொள்ளலாமா? இவையனைத்தையும் நீர் அறிந்து வந்து சொல்லும்!” என்றிவ்வாறு தன் மனக்கொதிப்பைக் கேள்வி களாக வார்த்துக் கொட்டினான்.
நார்தம்பர்லந்து, “அரசே! தற்போது தாம் தருவதாகக் கூறுவதன் ஒரு பகுதி போதும். நான் எம் தலைவரைக் கலந்துகொண்டு வருகிறேன்” என்று கூறி அகன்றான்.
இங்ஙனம் அகன்ற நார்தம்பர்லந்து விரைந்து பாலிங் புரோக்கினிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறினான். ரிச்சர்டினிடம் படைவன்மை இல்லையென்றும், தன் வலிமை யின்மையைத் தானே உணர்ந்து அவன் கோபமும் தாபமும் அடைகிறான் என்றும் கேட்டதே. பாலிங் புரோக்குக்குத் தன் எதிரியின் வன்மையிற் பாதி அப்போதே தன் பக்கம் வந்து விட்டதாகத் தோற்றியது. அப்பெருமையை அவன் அடக்க ஆற்றாது உடன்தானே நார்தம்பர்லந்தை நோக்கி, “ரிச்சர்டிடம் பின்னும் ஒருமுறை செல்க; சென்று, முற்றத்தில் நான் நிற்பதாகவும் இறங்கி வந்து பார்க்கத் திருவுளம் செய்ய வேண்டுமென்றும் கூறுக” என்றான்.
நார்தம்பர்லந்து மூலம் இம்மொழிகள் ரிச்சர்டின் செவிகளில் புகவும், அவன், எண்சாண் உடலும் ஒரு சாணாகக் குன்றினான். கடலைக் குடித்த குறுமுனி போல இச்சண்டாளனையும், இவனைத் தாங்கி நின்ற இவ்வியனுலகையுமே விழுங்கி விடுவோமா என்ற பெருஞ்சினம் எழுந்து அவனைச் சிலநேரம் ஆட்படுத்திற்று. சினம் தீர்ந்தபின் துயர் அவனுள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன் நிலைமையைக் கண்டு அவன் அலறினான்; அழுதான்; மனம் புழுங்கிப் புழுங்கி விம்மினான். தன் நண்பரும் பணியாளரும் தேற்ற ஒருவாறு தேறினான். இறுதியிற் கார்லைல் தலைமகனை நோக்கி, “அந்தணாள, மன்னிக்கவும்; மாந்தரை வீழ்த்தும் துயர் மன்னனையும் ஆழ்த்துவது தகாதுதான். வாழ்வில் ஆட்சி செலுத்திய இக்கண்கள் மாள்விலும் ஆட்சி செலுத்தும் எனக் காட்டுவேன்” என்று எழுந்தான்.
பின் அவன் நார்தம்பர்லந்தை ஏறெடுத்து நோக்கி ஏளன நகைப்புடன், “பெருந்தகையோய், நின் பெருந்தகைத் தலைவனிடமிருந்து நீ கொணர்ந்த மாற்றமும் பெருந்தகைமை உடையதே. அரசன் முன் குடிகள் வருவதன்றிக் குடிகள் முன் அரசர் வருவதில்லையே! ஆயினும் இஃது உங்கள் காலம். நான் வருகிறேன்; இறங்கி வருகிறேன்; கீழ் முற்றத்திற்கே கீழ்நோக்கி இறங்கி வருகிறேன்; செல்க” என்றாள்.
ரிச்சர்டினிடம் அரைகுறை அன்புடையோர் அனைவரும் அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல் உற்றுழித்தீர்ந் தேகினார். ஒரு சிலர் மட்டும்உண்மை நட்புக்கிலக்காய்க் ‘கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல ஒட்டி’ நின்றனர். இடுக்கண் என்பது, நண்பருள் நல்லவர் தீயவர் உண்மை யுடையவர் போலியானவர் இவர்களைப் பிரித்து வேறுபடுத்தும் அரிப்பன்றோ?
ரிச்சர்டின் வீழ்ச்சி உறுதிப்பட்டு விட்டது! வீழ்வது இன்றோ நாளையோ என்பது மட்டுந்தான் கேள்வி என்ற நிலையிலும், விடாது நின்ற அன்புரிமையாளர் சிலர் இருந்தனர். அவர்கள் “அரசே! பெருந் தன்மையற்ற இந்த ஹென்றி பாலிங் புரோக்கினிடம் ஆத்திரப்பட்டுத் தம் மனத்திலுள்ள தனைத்துங் கூறிவிட வேண்டாம். அவன் ஆள்வலியை வைத்துக்கொண்டு வெளிமிரட்டுக்கு ஒரு சாக்குத் தேடுகிறான். முன்கூட்டி அவன் முடிவை எடுத்துக் காட்டி, அவனுக்கு அவன் தேடும் சாக்கிற்கு இடங்கொடுத்து விடாதீர்கள்” என்றனர்.
ஆனால், ரிச்சர்டின் மனம் வேறு வழியிற் சென்றது. முன்னே பின்னே தன் முடிவு உறுதி என்று அவனுக்கு ஐயமற விளங்கிற்று. தான உரலுக்குள் அகப்பட்டவனே என்று தெரிந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் நொறுங்கவதைவிட ஒரே இடியாய் இடிபட்டுத் தகர்ந்து பொடியாவது நல்லதல்லவா? பூனையின் கையில் அகப்பட்ட எலி, அப்பூனை தன்னைச் சற்றே விட்டுவிட்டு விளையாட்டுக் காட்டி வதைக்கையில், அதற்கிடங் கொடுக்கும் வகையில் தப்பி ஓடப் பார்க்காமல் அப்பூனையால் உடன் கடித்துக் கொல்லப்படுவதற்குத் தானே வழி பார்ப்பது நல்லதல்லவா? இவ்வெண்ணத்துடன் ரிச்சர்டு ஒருபுறம் பாலிங் புரோக்கின் மறைந்த வஞ்ச எண்ணங்களை வெளிப்படக் கூறிக் கோப மூட்டினான். இன்னொரு புறம் அவன் கூறத் தயங்கிய மொழிகளைத் தானே கூறி, அவன் வேலையை எளிதாக்கினான்.
5. முயலெய்த அம்பும் யானை பிழைத்த வேலும்
ரிச்சர்டைக் கண்டதும் பாலிங் புரோக் படம் எடுக்கப்புகும் பாம்பு பணிந்து வளைவதுபோல் முழங்காலிட்டு வணங்கி நின்றான். ரிச்சர்டு அவனைத் தூக்கி நிறுத்தி, “உள்ளத்தில் இல்லாத பணிவு உடலில் ஏனோ?” என்றான்.
பாலிங் புரோக் தீண்டப்பெற்ற அரவமெனச் சீறி, “ஐயனே, உள்ளத்திற் பணிவு இல்லையெனக் கூறுவது யார்? தன் உரிமைக்குத் தான் போராட வருவதுதான் பணி வின்மையோ? இதுவும் தம் அரசாட்சியின் வண்மை போலும்!” என்றான்.
இதுகேட்டு ரிச்சர்டு முகம் சிவந்தது. கண்கள் கன்றிப் பனித்தன. உதடுகள் படபடத்தன. அவன் பாலிங் புரோக்கை நோக்கி, “இறைவனால் அமர்த்தப்பட்ட முடியரசு ஆட்சியைப் பழிக்கும் துணிவுடைய மேலோய்! என் ஆட்சியை நீக்கி நும் ஆட்சியை நிறுவுவதாயின் நிறுவுக!” என்றான்.
பாலிங் புரோக்கின் முகம் ஒளி வீசிற்று. குரலில் ஒரு பெருமிதம் எழுந்தது. ஆனால், மாறுதலில்லாத வெற்று மொழிகளில் அவன், “எனக்க உரியதை மட்டுமே யான் தம்மிடம் கோரினேன்” என்று பசப்பினான்.
ரிச்சர்டின் சினம் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதித்தது. அவன் தீவினை அவன் நாவில் மீண்டும் வந்து நின்றது. நிற்கவே அவன், "அன்பரீர், உமக்குரியதும் உமக்குத் தந்தேன். எனக்குரியதும் உமக்குத் தந்தேன். நானும் இனி உம் உடைமை. இன்னும் என்ன வேண்டும் உமக்கு? நான் உம்முடன் வரவேண்டுமா? எங்க வரவேண்டும்? லண்டனுக்கா வர வேண்டும்?’ எனப் பல நாள் கணக்கில் பாலிங் புரோக் படிப்படியாகக் கேட்க இருந்த அத்தனை செய்திகளையும் முன்கூட்டி ஒரே மூச்சில் அவன் முன் அள்ளி வீசினான்.
பிறர் மெய்ப்புக்காக வேண்டா வேண்டா என்று சொல்லிக்கொண்டு கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கித் தின்னும் அலகைகள் போலப் பாலிங் புரோக், “அவ்வளவு நான் எண்ணவில்லை! தாங்கள் அவ்வளவும் ஒருப்படுவதால் அங்ஙனமே ஆகுக. லண்டனுக்கே புறப்படலாம்” என்று கூறிவிட்டுப் பக்கத்தில் நின்றோரிடம் “ரிச்சர்டையும் உடன் கொண்டு லண்டன் நோக்கிப் பயணமாகுக” என்றான்.
ஒருவரும் கவனிக்காமலே ரிச்சர்டு அரசன், ரிச்சர்டு ஆய்விட்டான்.
பாலிங் புரோக், அரசனைச் சிறையாளி போல முன்னே எளிய உடையில் எளிய ஊர்தியில் விட்டுத்தான் நாற்படைசூழ அரச உடையுடன் ரிச்சர்டின் குதிரையிலேறி அணிமணிகளுடன் ஊர்வலம் செல்லும் அரசன் போற் செல்வானாயினான்.
பெருமக்கள் ஆங்காங்கு நின்று, “ரிச்சர்டு வீழ்க, பாலிங்புரோக் ஒங்குக” எனக் கத்தினர்.
பொதுமக்கள், பலரும், கொடி பிடித்தவனுக்குக் கோவிந்தாப் போடுமுறையில் கூடிநின்று ‘பாலிங் புரோக் வாழ்க, ஹென்றி வாழ்க’ என்று தொண்டை கிழியக் கத்தி ஆரவாரித்தனர்.
மாநிலமாளும் மன்னவனுக்கிந்நிலை வந்துற்றதே எனப் பிரிவு கொண்டவர் மிகச்சிலரே.
ரிச்சர்டின் போக்கு இங்ஙனமிருப்பக் கற்பணிகலமும் பிரான்சின் உதிர்ந்த மென் மலருமாகிய அவனரசி அவன் அரிய வரவுக்காகக் காத்திருந்து கண் பஞ்சடைந்து ஊணும் உறக்கமும் துறந்து பேய் போலத் தன்னிலை மறந்து நாற்புறமும் ஓடிக் கணவனைத் தேடுவாளாயினள். அவள் நிலை கண்டிரங்கிய சிலர் ரிச்சர்டுக்கு நேர்ந்த பழியையும், லண்டனுக்கு அவன் எடுத்துச் செல்லப்படும் அலங்கோலக் காட்சியையுங் குறித்துக் கூறினர். கணவனிடமே உயிர்வைத்து நடைப்பணிமெனச் சின்னாளாய் வீட்டில் தங்கியும் உலவியும் வந்த அம்மங்கை நல்லாள், உயிரை அணைய விரையும் உடலே போல், லண்டன் நோக்கிச்செல்லும் வழியிற் செல்லலானாள்.
ரிச்சர்டை உடன்கொண்டு லண்டன் சென்ற பெருமக்கள் ஊர்வலம் அரசியற் பெருமன்றங்கூடுமிடமாகிய ¹⁹வெஸ்ட் மினிஸ்டர் சென்று சேர்ந்தது. ஆண்டு நின்றும் ‘ஹென்றி வாழ்க, பாலிங்புரோக் வாழ்க’ என்ற கூக்குரல் வானைப் பிளந்தது. ரிச்சர்டின் பெயரைத் தானுங் கூறுவாரைக் காணோம். குடிகள் அன்பின்மை என்ற நச்சரவங் கண்ட ரிச்சர்டு. அரசியல் வாழ்வில் முற்றிலும் வெறுப்புற்று, ‘இம்மக்களையோ இவ் ஹென்றியையோ இனிக் கண்ணிற் காணாதிருக்கும் வரம் தருவாய்’ என இறைவனை வபத்தலானான்.
பின் மண்ணுலக வாழ்வை வெறுத்த அம்மன்னன் யாரும் எதிர்பாரா வகையில் நார்தம்பர்லந்தை அழைத்துப், “பெரியீர், வளைந்து வளைந்து செல்வானேன்? நேர்வழியை நான் இணக்கத்துடன் காட்டுகின்றேன். இம்மணிமுடி எனக்கு வேண்டா. நும்தலைவர் அதனை ஏற்கத் திருவுளங் கொள்ளின் ஏற்றருளுமாறு நான் இறைஞ்சுவதாகக் கூறுவீர்” என்றான்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வரப்பெற்றது போல் மகிழ்வெய்திப் பாலிங் புரோக், ரிச்சர்டைத் தானே வந்து அரசியல் மன்றில் அதனை விட்டுக் கொடுக்கும்படி வேண்டினான்.
இறப்பினும் மானம் துறவா ஆங்கில அரசர் வழியில் வந்த ரிச்சர்டு, “யான் தற்போது அரசு துறந்து அரசுரிமைப் சாம்பலென நிற்பினும், யான் குடிகள் முன்சென்று குடிமக்கள் நிலையில் பேச ஒருப்படேன்” என்று மறுத்தான். ஹென்றியும், மாளும் அரியேற்றினிடம் மாளுமுன் எதிர்ப்பது தவறெனக் கொண்டு, தனது வேண்டுகோளை வற்புறுத்தாமல் சற்றுப் பின்வாங்கினான்.
ரிச்சர்டு அதன்பின், அரசிருக்கையும், முடியும் தான் ஹென்றியினிடம் ஒப்புவிப்பதாகவும், தான் பிரான்சுக்குச் செல்ல விரும்புவதாகவும் சொல்லியனுப்பினான்.
கொடுப்போர் குலப்பெருமை அறியாத வாங்குவோர் குலத் தோன்றலாகிய ஹென்றி, ரிச்சர்டின் கோரிக்கைகளுள் முன்னதை மட்டும் வெட்டவெளிச்சமாக மன்றத்தார் முன் வாசித்துக் காட்டிப் பின்னதை அடக்கிக் கொண்டான்.
ஹென்றி பாலிங் புரோக், பெருமக்கள் தலைவனாக யார்க் கோமகன் துணை செல்லக், கான்ரிபெர்த் தலைமகன் வழிகாட்ட, அரசிருக்கையேறி, மேளதாளங்களுக்கிடையே மணிமுடி அணிவிக்கப் பெற்றான்.
²⁰தலைமக்கள், ²¹பெருமக்கள், ²²பொதுமக்கள் ஆகிய ²³மும்மண்டலத்த வரும் போற்ற, நானிலமெங்கும் புகழலை வீச, “பாலிங் புரோக் வாழ்க. நான்காம் ஹென்றி வாழ்க” என்ற ஆரவாரங்களுக்கிடையே அன்று ஹென்றி முடிசூட்டப் பெற்றான்.
ரிச்சர்டு என்னும் ஞாயிறு அரசியல் வானில் மேல்பால் கண்கவர் சிறப்புடனும் நல்லோர் மனத்துயராகிய நிழற்படங் களுடனும் மறையவும், ஆங்க வளர்பிறை முதற் கலைபோலும் பெருமிதத்துடன் ஹெனறி என்னும் மதிக்கொழுந்து மேலேழுந்தது.
6.தோல்வியில் வெற்றி
புதிய முடிசூட்டு விழாவில் கறை ஒன்றே ஒன்றுதான். ‘புலனழுக்கற்ற அந்தணாள’ னாகிய கார்லைல் தலைமகன் அரசியல் மன்றில் முடிசூட்ட முன் எழுந்து, “அரசர் என முடிசூட்டப் பெறப்போகும் பாலிங் புரோக் பெருமகனாரே! அரசர் அரசிருக்கை ஏறுவதும் துறப்பதும் மக்கள் விருப்பு வெறுப்பாலன்று; இறைவன் திருவுளப் போக்கு ஒன்றினால் மட்டுமே ஆகக் கூடியது என்று அறிவீர். ரிச்சர்டுக்குரிய இவ்வரசுரிமையை அவனிடமிருந்து பறிக்கவோ, மேற்கொள்ளவோ உமக்கு என்ன தகுதி உண்டு? இறைவன் முன்னிலையில் ரிச்சர்டே அரசர்; அதுருவே என் கொள்கை; பிற அறிவுடையோர் கொள்கையும் அதுவேயாம். உமக்கஞ்சி உம்மை ஏற்கும் கோழைகளுக்குப் புறம்பான மக்களும் உளர். அவரே மக்கள். பிறர் மாக்களே என்பதை நீர் உணர்க” என்றான்.
பாலிங் புரோக் பொறுமையிழந்து, முடிசூட்டு விழாநாள் என்று கூட எண்ணாது, “உடன் தானே இப்பார்ப்பான் தலையைத் துணிக்க” என்று பணித்தான். முடிசூட்டின் முதற்பலி நிறைவேறிற்று.
இனி ரிச்சர்டின் கொலை ஒன்றுதான் குறை.
ரிச்சர்டின் துணைவி ²⁴லண்டனுக்கு வந்து அவன் மணிக்கூண்டுச் சிறைக்குக் கொண்டு போகப்படுவதாகக் கேட்டு, அவ்விடத்துக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் தன் உயிர்த் தோழியர் சிலருடன் காத்திருந்தாள்
அவன் சிறையாளிபோல் கொண்டு வரப்படும் அப்போதும், புகழிற்கு மாறாக அவன் இகழ்மாலை சூட்டப்பெற்று வரும் அதே நேரத்திலுங்கூட, அவள் கண்ணுக்கு அவன் அடிமுதல் முடிவரை ஒவ்வோர் அங்குலமும் நிறையரசாகவே காணப்பட்டான்.
அவன் துயரால் அவன் வனப்பும் கவர்ச்சியும் அவள் கண்களுக்குப் பன்மடங்கு மிகுந்து தோன்றின. அவள் தன் தோழியர் தோளிற் சாய்ந்து அவனைக் குறித்த நோக்குடன், “ஆ, மன்னர் என்ற சொல்லுக்கொரு மகுடம்போல் விளங்கும் என் இறைவனை நோக்குவீர்! துயரால் கறைப்பட்ட அம் மகுடத்தை யான் என் காதற்கண்ணீரால் கழுவி இன்னும் புத்துயிர் பெறும்படி புதுப்பிப்பேன்” என்று புலம்பினாள்.
அவள் துயர்கண்டு தன் உள்ளுயிர் பொசுங்கினும் அவளையும் அவள் துயரையும் கண்டும் காணாதவன் போன்ற தோற்றத்துடன் ரிச்சர்டு அவளைத் தோழியருடன் சேர நோக்கி, ’யான் உங்களைக் கவனிக்கும் காலம் அன்று அது. இங்கிலாந்தின் புயல் காற்றும் என் முடிவும் உங்களுக் குகந்தவையல்ல. இந்நாட்டின் சூறாவளியின் சுழற்சியுட் படாமல் அமைதியுடன் பிரான்சு நாடு சென்று கன்னியர் மடத்துட் சென்று ஒதுங்கி உறையுங்கள்" என்றான்.
என் தலைவர் தாங்கரும் துயரினும் என்னை இங்ஙனம் மறத்தல் தகுமோ? நான் தம் உடலினும் உயிரினும் ஒரு பகுதி என்ற முறையில் தம் துயரையும் பகிர்ந்து துய்க்கும் உரிமை யுடையவளன்றோ?" என்றாள் அப்பெண்மை அரசி.
ரிச்சர்டு மின்னியிடித்தார்த்து மழை பொழிந்து வெளித்தாலன்ன முகத்துடன் அவள் பக்கம் திரும்பி நோக்கி, “என் உயிரே! நீ என் பகுதி மட்டிலும் அல்ல; என் உள்ளுயிர் நீ; உயிர் நிலை நீ; உன்னைத் தாக்காத எத்துயருக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் அஞ்சேன். ஆனால், உன்னைத் தாக்கும் துயர் என்னைக் கோழையாக்கி விடும். நீ ன் துயரை பகிர்வதற்கு மாறாக, அதனைப் பன்மடங்க் மிகைப்படுத்த மட்டுமே செய்யக்கூடும். ஆதலின் இவ்வுடல் எந்நிலை எய்தினும் அதனால் தாக்குறாமல் அதன் உயிராக விலகி நின்று மறுபிறப்பில் என்னுடன் வந்து சேர்வாய்” என்றான்.
அரசி அச்சொற் கேட்டுப் பின்னும் உருகினாள். பின் அவன் பக்கம் பாராது நார்தம்பர்லந்து பக்கம் நோக்கி, “என்னையும் சிறையாளியாக உடன் கொண்டேக வேண்டுகிறேன்” என்றாள்.
நார்தம்பர்லந்து கடுகடுத்த முகத்துடன், “அம்மணி! தம் கணவர் இப்போது சிறையாளியும் அரசியல் பகைவரும் ஆவர். அவருடன் செல்வது முடியாத காரியம். அது மட்டுமன்று, அவர் இப்போது நாட்டுப் பகைவரான படியால் அவருடன் பேசுவதும் பரிவு கொள்வதும் கூட, அரசியற் பகைமையாகக் கருதப்பட இடமுண்டு” என்றான்.
நாக்கில் நரம்பற்றுப் பேசப்பட்ட இம்மொழிகள் கேட்டுப்பொங்கிய சினத்தை உள்ளடக்கிக் கொண்டு அரசி பின்னும், “மன்னரை ஆக்கவும் அழிக்கவும் வல்ல மன்னர் மன்னரே! நான் அவருடன் காட்டும் பரிவு அரசியல் முறைப்படி மன்னன் என்ற வகையில் அல்லவே, பெண் என்ற முறைப்படி கணவன் என்ற வகையில்தானே! தனது புது மன்னனிடம் தம் bல்வாக்கைப் பயன்படுத்தி, என் கணவனுக்கு இத்துயர் பொழுதில் துணையாய்ச் சில நாட்களேனும் உதவ இணக்கம் அளிக்கலாகாதா?” என்று மன்றாடினாள்.
நார்தம்பர்லந்து இரக்கமின்றி, “இதற்கு மன்னனிடம் செல்ல வேண்டுவதில்லை. முடியாதென்று நான் கூறிவிட்டேன்” என்று தன்னாண்மையுடன் கூறினான்.
தனது புதிய வலிமையின் வெறியால் ரிச்சர்டு அவளுக்குத் தன் இறுதி முத்தமளித்து விடைகொள்வதைக் கூட அவன் தடுத்தான். அப்போது அரசியின் முகம் சரேலென்று சிவந்து கறுத்தது. உயிரினும் இனிய தன் துணைவிக்கு நேர்ந்த அவமதிப்புக்கண்டு ரிச்சர்டு சீறினான்.
சீற்றத்தால் ஒரு வாழ்நாளின் அரசுரிமை வீறுமுற்றும் ஒரு நொடிக்குள் அவன் முகத்திலும் நிலையினும் வந்தேற, அவன் நார்தம்பர்லந்தை அழலெழ நோக்கிக் கேட்போர் அஞ்சும் வஞ்சின மொழிகள் பகரலானான்.
"கொண்ட முடி மன்னனுக்கு வஞ்சகம் செய்த நீ, கொண்ட கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்க எண்ணுதல் இயல்புடையதே!
"முடி மன்னனுக்கு வஞ்சமிழைத்த நீ, அவ்வஞ்சத்தின் பயனாக உயர்த்திய நின் கைப்பிடி மன்னனுக்கு வஞ்ச மிழைப்பாய்!
"மணிமுடியார்வத்தால் தீங்கிழைத்த நின் தலைவற்கு, அம்முடி முள்முடியாகி அவனுக்குத் துன்பத்தையும் வெறுப்பையுந் தருவதாக!
“முடிமன்னர் குடிக்கெதிராக மேலோங்கிய நின் புன்கை நின் குடியையுங் கெடுக்க!” என்றான்.
இப்பழி மொழிகளைப் பொருட்படுத்தாது நார்தம்பர்லந்து சிரிக்க முயன்றான். ஆனால், அது பேய்ச்சிரிப்பையொத்து நகையிழந்திருந்தது. மன்னனுடன் உள்ளூரப் பரிவு கொண்டவர்கள் உள்ளங்களையும் இம்மொழிகள் ஈர்த்தன.
அனைவரும் பேச்சு மூச்சின்றி நிற்ப, ரிச்சர்டும் அரசியும் வாயற்ற நெடும் பார்வையுடனும் நெடுமூச்சுடனும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். இது முதல் ரிச்சர்டின் வாழ்வு, குறுகிய மணிக்கூண்டுச் சிறையினும்; அரசியின் வாழ்வு, அகன்ற பயைற்ற மடத்து வாழ்விலும் கழியலாயின.
அரசி, தன் வாழ்நாளை நெடுநாள் தாங்க இயலாது உடல் வாடி வதங்கி உலகை நீத்தாள். அவள் உயிர் தன் தலைவனை எதிர்கொள்ள முன்கூட்டி விண்ணுலகெய்திற்று.
ரிச்சர்டின் ஆட்சி முடிவு கேட்டுப் பொதுமக்களிற் பலர் வியப்புற்றனர். அவன் ஆட்சியின் குறைபாடுகளை நன்கு உணர்ந்தவர்கள்கூட, அவன் ஆட்சி முடிவு ஏற்புடைய தன்றெனக் கொண்டனர். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்றபடி பெருமக்களும், இன்ப வாழ்வும் தற்பொருமையுடைய ரிச்சர்டின் குற்றங்கள், தன்னலமே நோக்கமாகக் கொண்ட ஹென்றி ஆட்சியின் குற்றங்களைப் பார்க்கினும் எவ்வளவோ மேல் என்று எண்ணினர்.
ரிச்சர்டுக்கு உட்பகையாய் நின்ற யார்க் கோமகன் மகன் ஆமெர்ல பெருமகன் தலைமையில் பல பெருமக்களும், பொதுமக்களும் சேர்ந்து, திரும்ப ரிச்சர்டை அரசனாக்கும் எண்ணத்துடனும் சூழ்ச்சி செய்தனர். ரிச்சர்டுக்கு வஞ்ச மிழைத்த யார்க், மைந்தனையும் மனைவியையும் கூடக் காட்டிக்கொடுத்து நல்ல பெயரெடுக்க முயன்றான்.
ஹென்றியின் சமய சஞ்சீவிகளில் ஒரு மூவர் யார்க்கைவிட ஒருபடி முன் சென்று சிறையிலிருந்த ரிச்சர்டை வலியச் சண்டைக்கிழுத்துப் படுகொலை செய்தனர்.
தன்னலத்திற்காக ரிச்சர்டிற்கு எதிராக அனைவரையும் தூண்டி ஹென்றி, ரிச்சர்டின் பெருந்தன்மையினையும், அவனுக்கெதிராகத் தன் தூண்டுதலுக்கிணங்கிய வஞ்சகர்களின் சிறுமையையும் உள்ளபடி உணர்ந்து ரிச்சர்டை மனமாரப் புகழ்ந்து. அவன் கொலைஞர்களைத் தூக்கலிட்டான். ஹென்றியின் குற்றங்களை இச்செயல் ஒருவாறு பொது மக்கள் முன்னிலையில் கழுவிற்று என்னலாம்.
இதே காரணத்தால் அவன் யார்க் கோமகன் சொற்கேளாது அவன் மனைவி மக்களை மன்னித்து விட்டான். யார்க்கின் கோழைத்தனமான நட்பை விட, அவர்களது வீரஞ்செறிந்த பகைமை நல்லதெனக் கொண்டான். அதற்கேற்ப, அவர்களும் ரிச்சர்டிடம் காட்டிய உண்மையினை அவனிடமுங் காட்டினர்.
ஹென்றி இங்ஙனம் ரிச்சர்டுக்குத் தன்னலத்தால் தான் இழைத்த தீங்கைச் சரிசெய்ய எண்ணியும், ரிச்சர்டின் புகழும் வஞ்சினமும் அவன் வாழ்க்கையை வாள்போல் ஈர்த்தன.
ரிச்சர்டுக்கு வாழ்வில்லாத வெற்றி, மாண்டபின் கிட்டியதென்னலாம். அவன் முடியரசை வென்றவனையும் அவன் வழியினரையும் ரிச்சர்டின் பெயர் நின்று நெடுநாள் வருத்திப் பலிகொண்டு பின் தணிந்து, இங்கிலாந்துக்கு மாறாகப் புகழாக மாறிற்று.
ஆங்கில மக்கள் அவன் அரசியல் குறைகளை மறந்து, அவனது குண நிறைவையும் துயரிடையே அவன் காட்டிய பொறையையும் பெருந் தன்மையினையும் நெடுநாள் புகழ்ந்து பாராட்டினர்.
** அடிக்குறிப்புகள்**
1. Richard II 13. Earl of Northumberland
2. Edward II 14. Earl of Worcester
3. Charles I 15. Duke of Boling Broke
4. James II 16. Lord Aumerle
5. Edward the Black Prince 17. Bishop of Carlisle
6. John of Gaunt. 18. Flint Castle
7. Duke of Cloucester 19. West Minister
8. Duke of York 20. Clergyc
9. Calais. 21. Lords
10. Bushy 22. Commons
11. Bago 23. Chambers
12. Green 24. Tower of London
கருத்துகள்
கருத்துரையிடுக