ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
வரலாறு
Backஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நா. சுப்பிரமணியம் எம். ஏ
துணை விரிவுரையாளர், தமிழ்த்துறை
இலங்கைப் பல்கலைக் கழகம்
யாழ்ப்பாண வளாகம்
வெளியீடு:
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
யாழ்ப்பாணம்.
------------------------------------------------------
முதற் பதிப்பு: யூன், 1978
உரிமை:
திருமதி கசல்யா சுப்பிரமணியம்
கலைமகள் நிலையம்
முள்ளியவளை
TAMIL NOVELS IN CEYLON
by
NAGARAJAH IYER SUBRAMANIYAM, M. A. (Ceylon)
Asst. Lecturer in Tamil, University of Srilanka
Jaffna Campus, Thirunelvely.
சாதாரண பதிப்பு: விலை ரூபா 8-50
நூலகப் பதிப்பு: விலை ரூபா 12-00
Publishers:
MUTHTHAMIZH VELIYEEDDU KAZHAGAM, JAFFNA
Printers:
ASEERVATHAM PRESS, 50, KANDY ROAD, JAFFNA.
------------------------------------------------------------
காணிக்கை
1977ஆம் ஆண்டு
இலங்கையில் இடம்பெற்ற
இனக்கொலையில்
உயிரும் உடைமையும்
இழந்த
தமிழர்களுக்கு
----------------------------------------------------------
முன்னுரை
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
தலைவர்
இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம்.
ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் பயிலத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் நானூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் ஈழத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை தொடர்பான சிறு பிரசுரங்களும் கட்டுரைகளும் தகவல் தேட்ட முயற்சிகளாகவும் பட்டியல் தயாரிப்பு முயற்சிகளாகவும் மதிப்புரை, திறனாய்வு முயற்சிகளாகவும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. எனினும் முழுமையான நூல் எதுவும் இற்றைவரை எழுதப்படவில்லை. அவ்வகையில் திரு. நா. சுப்பிரமணியம் அவர்களின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற இந் நூல் கடந்த ஒரு நூற்றாண்டுக்கால ஈழத்துத் தமிழ் நாவல்களை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து விளக்கும் முதல் நூலாக அமைகின்றது.
இந் நூலாசிரியர் இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத் தமிழ்த்துறையிலே முதுகலைமாணிப் பட்டத்திற்கு ஈழத்துத் தமிழ் நவல்கள் தொடர்பாக எமது வழிகாட்டலில் ஈராண்டுகள் (1970-1972) ஆய்வு நிகழ்த்தியுள்ளார். அதன் பெறுபேறாகச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையே இந்நூலுக்கான ஆதாரமாக அமைகின்றது.அக்காலப் பகுதியிலிருந்து அண்மைக் காலம் வரை வெளிவந்த பல புதிய தகவல்களையும், எழுதப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களையும் கவனத்திற் கொண்டு, குறிப்பிடத்தக்க அமைப்பு மாற்றங்களுடன் அவ்வாய்வுக் கட்டுரை இந்நூலாக வெளிவருகின்றது.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் பண்பு இந்நூலில் அமைந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஈழத்திலே தமிழ் நாவல்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலையினை விளக்கி ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் சமுதாய சீர்திருத்தக் காலம் என்ற தலைப்பில் இரண்டாவது இயலில் ஆராயப்படுகின்றன. அக்காலப் பகுதியை அடுத்து ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக்காலப் பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள பதினைந்தாண்டுக் காலப்பகுதி சமுதாய விமர்சனக் காலம் என்னும் தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு, நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளாக ஈழத்துத் தமிழ் நாவலில் ஏற்பட்டுள்ள புதிய போக்கு, பிரதேசங்களை நோக்கி... என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து ஈழத்துத் தமிழ் நாவல்களின் விபரங்களும் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க ஆய்வுகளின் விபரங்களும் சான்றாதாரங்களும் அட்டவணையும் பினிணைப்புக்களாக அமைந்துள்ளன.
ஒவ்வோர் இயலிலும் முதலிற் சூழ்நிலையை விளக்கி, அதன்பின் அக்கால நாவல்களை வகைப்படுத்தி நோக்கி, இறுதியில் மதிப்பீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வகையிலே இந்நூல் வரலாற்று நூலாகவும் அதே வேளையில் திறனாய்வு நூலாகவும் அமைந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் திரட்டிய தகவல்களும் தொடர்ந்து மேற்கொண்டுவந்த வாசிப்பு முயற்சியும் இவ்வாறு வகுத்தும் தொகுத்தும் நோக்குவதற்குரிய ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளன என்று கொள்ளலாம். சான்றாதாரங்களைத் தக்கவகையில் பயன்படுத்துவதிலும், தமது கருத்துக்களை நிறுவுவதிலும் தன்னம்பிக்கையுள்ள ஓர் ஆய்வாளனை திரு. நா. சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் காண்கின்றோம். முதுகலைப்பட்டத்திற்கு ஆய்வு நிகழ்த்தத தொடங்கிய காலம் தொடக்கம் தொடர்ந்து ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பாக 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, 'தமிழியற் கழகக் கருத்தரங்கு', 'தமிழ்நாவல் நூற்றாண்டுவிழா ஆய்வரங்கு' ஆகியவற்றில் அவர் தயாரித்துப் படித்த ஆய்வுக்கட்டுரைகளும் அவ்வப்போது மேற்கொண்ட பிரசுர முயற்சிகளும் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பாக இத்தகையதொரு நூலை எழுதுவதற்கேற்ற நிலைக்கு அவரை வளர்த்துள்ளன.
ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகள் பற்றிப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டங்களுக்கு ஆய்வு நிகழ்த்தும் மரபு கடந்த எட்டு ஆண்டுக் காலமாக வளர்ந்து வருகின்றது. அவ்வகையில் நவீன இலக்கியங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக திரு. நா. சுப்பிரமணியம் அவர்களின் ஆய்வு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளும் ஆராயப்பட்டுள்ளன. அவ்வகையில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலொன்றான திரு. க. சொக்கலிங்கம் அவர்களின் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வுக் கட்டுரை இவ்வாண்டின் தொடக்கத்திலே நூலுருவம் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. நா. சுப்பிரமணியம் அவர்களின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற இந்நூல் வெளிவருகின்றது.
க. சொக்கலிங்கம் அவர்களுடைய நூலை வெளியிட்ட முத்தமிழ் வெளியீட்டுக் கழகமே இந்நூலையும் வெளியிட்டுள்ளது. இவ்வகையில் ஈழத்துத் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகளுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் அளித்து வரும் பேராதரவும் அதன் முயற்சித்திறனும் பாராட்டுக்குரியன. தொடர்ந்தும் ஒவ்வோராண்டும் நான்கு ஆய்வு நூல்களை இக்கழகம் வெளியிட்டு வருமென எதிர்பார்க்கின்றோம்.
சு. வித்தியானந்தன்
திருநெல்வேலி
1978-06-04.
------------------------------------------------
அணிந்துரை
கலாநிதி அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறைப் பொறுப்பு விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்னும் இந்நூல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினரின் இரண்டாவது வெளியீடாக வெளிவருகின்றது. திரு. நா. சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மேற்பார்வையில் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எம். ஏ. பட்டத்துக்காகச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் திருத்தம் பெற்ற வடிவமே இந்நூலாக அமைகின்றது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தம் ஆய்வுக் கட்டுரையிலே ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய தற்காலம் வரையிலான செய்திகளையெல்லாம் ஆசிரியர் சேர்த்துள்ளார். இவ்வகையிலே நோக்குமிடத்து, ஆசிரியர் இப்பொருள் பற்றி ஒரு புதிய நூலையே எழுதியுள்ளார் என்று கூறினும் ஓரளவு பொருந்தும்.
ஐந்து இயல்களையும் ஒரு நிறைவுரையையும், நாலு பின்னிணைப்புக்களையும் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. ஒவ்வோரியலிலும் குறிப்பிட்ட ஓர் அமைப்பினை யுடையதாயுள்ளது. அவ்வவ்வியலிலே ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட்ட நாவல்கள் பற்றிய எல்லாத் தரவுகளும் முதலிலே கொடுக்கப்பட்டு, இறுதியில் அவை ஆசிரியரின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. முதலாவது இயல் ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் பற்றி ஆய்வு செய்கின்றது. ஈழத்திலே தமிழ் நாவல் தோற்றம் பெற்ற பின்னணியை ஆசிரியர் சுருங்கிய சொற்களிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மக்களுக்குப் பயன்படும் வகையிற் கதை வடிவிலே தருவதற்கு முயன்றனர். உரைநடை பெற்றிருந்த வளர்ச்சி இவ்வகையிலே துணை புரிந்தது. மேனாட்டிலக்கியப் பயிற்சி, மேனாடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் சமய கலாசாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்களைப் படித்ததினாலுண்டான ஊக்கம் என்பன இம்முயற்சிகளை நெறிப்படுத்தின" (பக். 7)
இரண்டாவது இயல் சமுதாய சீர்திருத்தக் கால நாவல்கள் பற்றி விளக்குகின்றது. "பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரை சைவம், கிறிஸ்தவம் ஆகிய இரு சமயங்களினடிப்படையிலான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது" (பக். 20) என்று அக்காலப் பகுதிப் பொதுப் பண்பினை எடுத்துக்காட்டும் ஆசிரியர், அப்பண்பு எவ்வாறு அக்கால நாவல்களிலே பிரதிபலித்ததேன்பதை இயல் முழுவதிலும் விளக்குகின்றார். நடப்பியல்பு நாவல்கள், மர்மப் பண்பும் சம்பவச் சுவையுமுள்ள நாவல்கள், மொழி பெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமைந்த நாவல்கள் ஆகியன இவ்வியல் ஆய்விலே இடம் பெற்றுள்ளன.
முப்பதுகளின் முடிவு தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப காலம் வரையிலான காலப் பகுதியிலெழுந்த நாவல்களை 'எழுத்தார்வக் காலம்' என்னும் மூன்றாவது இயலிலே ஆசிரியர் விவரிக்கின்றார். மேலைத் தேசத்திலும் தமிழ்நாட்டிலும் பெருவாரியாக எழுதப்பட்ட நாவல்களின் அருட்டுணர்வாலும் எழுத்தாளர் எனத் தம்மை உலகம் மதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தாலும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரை இக்கால கட்டத்திலே உருவாயிற்று என ஆசிரியர் கருதுகின்றார். இக் கருத்து குறிப்பாக இக்கால கட்ட எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்று கூறுவது எவ்வளவு தூரம் சரியானது என்பது ஆராயற்பாலதாகும். அக்கால கட்டத்தில் உருவாகிய தமிழ் நாளிதழ்களும் வார வெளியீடுகளும் எழுத்தார்வத்தைப் புலப்படுத்தப் போதிய வசதியளித்தன. அவ்வாறமைந்த படைப்புக்கள் பற்றி ஆசிரியர் மதிப்பீடு செய்யுமிடத்து:
"இக்கால நாவலாசிரியர்கள் பலர் சமகாலத் தமிழ் நாட்டு நவீன இலக்கியப் போக்குடன் இணைந்து எழுதியவர்கள். இதனால் நாவல்களின் பொருள், வடிவம், உத்திமுறை என்பவற்றிலே தனித்துவம் பேண முடியாதவர்களாயிருந்தனர் எனலாம். காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சமகாலத் தமிழ்நாட்டுக் குடும்ப நாவல்களாலும் மர்மப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்களாலும் கவரப்பட்ட இக்காலப் பகுதி ஈழத்து நாவலாசிரியர்களின் படைப்புக்களிற் பல 'ஆசை பற்றி அறையலுற்ற' ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்ததில் வியப்பில்லை" (பக். 72)
என்று கூறுவது ஒருவகையிற் பொருத்தமாகவே அமைகின்றது.
நான்காவது இயல் 'சமுதாய விமர்சனக் காலம்' என்ற தலைப்பிலும், ஐந்தாவது இயல் 'பிரதேசங்களை நோக்கி' என்ற தலைப்பிலும் அமைகின்றன. ஆசிரியர் நூலினுள்ளே தமது திறமையைக் காட்டிய போதிலும், அந்நூலின் இறுதியிலே இணைக்கப்பட்டுள்ள நான்கு பின்னிணைப்புக்களாலும் அவர் ஆராய்ச்சியாளர், அறிஞர், இலக்கிய வரலாற்று மாணவர்கள் ஆகியோருக்கு மிகப் பயனுள்ள தரவுகளை வழங்குகின்றார்.
ஆசிரியருடைய நிறைவுரையில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் எதிர்காலப் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது சுட்டப்படுகின்றது. வரலாறு எழுதப்புகும் ஆசிரியன் ஒருவன், அவன் முடிவுகளும் மதிப்பீடுகளும் எவ்வாறமையினும், அவ்வரலாற்றுக்குத் தேவையான தரவுகளையும் சான்றாதாரங்களையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அவற்றை வாசகர்களுக்கு வழங்கவும் வேண்டும். இந்த வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் எழுதிய திரு. நா. சுப்பிரமணியம் தன் கடமையினைச் செவ்வனே செய்துள்ளார் என்றே கூற வேண்டும். பல்கலைக் கழகப் பட்டத்துக்காக எழுதப்பட்ட காரணத்தினாலே, வழக்கமாக அத்தகைய எழுத்துக்களிலே எதிர்பார்க்கப்படும் இறுக்கமான கட்டுக்கோப்பு, கூறியது கூறல் என்னுங் குற்றத்துக்குள்ளாகாமை, பொருத்தமான சான்றாதாரங்களை வழங்குதல், ஒழுங்கான நடை ஆகிய பண்புகள் இந்நூலிலே அமைந்திருக்கின்றன.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இரு வடிவங்களின் விரிவான வரலாற்றினைக் கொண்ட இரு நூல்களைத் தமிழிலக்கிய உலகுக்கு வழங்கிய முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர் தமிழ் மக்களின் பாராட்டுக் குரியவர்கள். இவ்வாண்டிலே, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்னும் அவ்விரு நூல்களையும் அவர்கள் வெளியிட்டமை போற்றுவதற்குரியது. தொடர்ந்து அவர்கள் பணி நீடிக்க வேண்டும்; நல்ல தமிழ் நூஉல்கள் ஈழத்திலே வெளிவர வேண்டும்.
அ. சண்முகதாஸ்
திருநெல்வேலி
1978-06-04
----------------------------------------------
முகவுரை
ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்த வகையினை வரலாற்று நோக்கிலே தொகுத்து நோக்கி மதிப்பீடு செய்வதாக இந்நூல் அமைகின்றது. 1885ஆம் ஆண்டில் வெளிவந்த அறிஞர் சித்திலெவ்வையின் அசன்பேயுடைய கதை தொடக்கம் 1977ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த 'ஞானரத'னின் புதிய பூமி வரை ஏறத்தாழ நானூற்றைம்பது நாவல்கள் ஈழத்தில் எழுதப்பட்டுளன. இவை எழுதப்பட்ட நோக்கம், சூழ்நிலை, கதைப்பண்பு முதலியவற்றைக் கருத்திற் கொண்டு காலகட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் முயற்சி இந் நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
''1970'-'72' காலப் பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத் தமிழ்த்துறையிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன், சிரேட்ட விரிவுரையாளர் சி. தில்லைநாதன் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் தமிழ் முதுகலைமாணிப் பட்டத்துக்காக ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வு முயற்சியை மேற்கொண்டேன். அதன் பெறுபேறாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையே இந்நூலின் ஆதாரமாகும். தொடர்ந்து அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலும், தமிழியற் கழகக் கருத்தரங்கு, தென்னாசியவியற் கருத்தரங்கு ஆகியவற்றிலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தேன். 1977ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்திலே நடைபெற்ற தமிழ் நாவல் நூற்றாண்டு விழாவிலே நூலக வெளியீடாக ஈழத்துத் தமிழ் நாவல் நூல்விபரப் பட்டியலொன்றைத் தயாரித்து வெளியிட்டேன். இத்தகைய தொடர் முயற்சிகளின் விளைவாக உருவான கருத்துக்களையும் துணைக்கொண்டு முதுகலைமாணிப் பட்ட ஆய்வுக் கட்டுரையிற் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் செய்து இந்நூலை அமைத்துள்ளேன்.
இந்நூல் ஐந்து இயல்களையும் நிறைவுரையையும் ஈழத்துத் தமிழ் நாவல் விபரங்களையும் அவை தொடர்பான ஆய்வு விபரங்களையும் துணை நூற் பட்டியல், அட்டவணை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ஒவ்வோர் இயலிலும் அவ்வவ்வியலுக்குரிய காலச் சூழ்நிலைகளை விளக்கி அச்சூழ்நிலையில் வெளிவந்த முக்கிய நாவல்களைப் பற்றிய விபரங்களைத் தந்து அவற்றின் கதைப்பண்பை விளக்கி மதிப்பீடு செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
இந் நூலை உருவாக்குவதற்கான ஆராய்ச்சித்திறனை என்னிடம் வளர்த்து வழிகாட்டியவர்கள் என்ற வகையிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன், சிரேட்ட விரிவுரையாளர் சி. தில்லைநாதன் ஆகியோருக்கு என் நன்றி என்றும் உரியது.
எனது ஆய்வு நூலை வெளியீட்டுக்குத் தெரிவு செய்ததோடல்லாமல் நூலாக்கத்திலே அல்லும் பகலும் துணைநின்று என்னை இயக்கிய முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர், சிறப்பாக க. சொக்கலிங்கம், பி. நடராஜன் இருவரும் ஆற்றிய பணி நன்றி என்ற சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட முறையிலே ஆய்வு நூற் பிரசுரம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டிய இன்றைய காலப் பகுதியிலே முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் துணிந்து மேற்கொண்டுவரும் இம்முயற்சி தமிழாராய்ச்சி ஆர்வலர்களது நன்றிக்கு என்றும் உரியது.
இந்நூலுக்கான தகவல்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட வேளைகளில் துணைபுரிந்த வீரகேசரி, இந்துசாதனம் ஆகூஅ பத்திரிகை நிருவாகிகளுக்கும் ஈழகேசரி இதழ்களைப் பார்வையிட உதவிய குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர்க்கும் என்றும் நன்றியுடையேன்.
நூலை உருவாக்கும் முயற்சியிலே திருவாளர்கள் க. உமாமகேஸ்வரன், ஏ. ஜே. கனகரட்ணா, ம. சற்குணம், ஆ. சிவநேசச்செல்வன், கலா பரமேஸ்வரன் முதலிய நண்பர்களின் ஆலோசனைகளை அவ்வப்போது பெற்றுக் கொண்டேன். எனது ஆசிரியர்களான கலாநிதி அ. சண்முகதாஸ், அப்பச்சி மகாலிங்கம் ஆகியோரும் நாவலாசிரியர்களான செங்கை ஆழியான், தி. ஞானசேகரன் முதலியவர்களும் இந்நூலாக்க முயற்சியினை ஆதரித்து என்னைத் தூண்டி நின்றனர். நூலின் அட்டவணையைத் தயாரிக்கும் முயற்சியில் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக மாணவ நண்பர்களான மு. திருநாவுக்கரசு, மு. குணசிங்கம், எஸ். சண்முகநாதன், நா. தர்மராஜா ஆகியோர் ஆற்றிய உதவி நெஞ்சம் நிறைவிப்பது. இவர்களனைவரும் எனது இதயங்கனிந்த நன்றிக்கு உரியவர்கள்.
அச்சேற்றும் வகையில் அரும்பணி புரிந்த ஆசீர்வாதம் அச்சகத்தினர்க்கும் சிறப்பாக அச்சமைப்பு முகவர் திரு. றோக் யோசவ், அச்சுக் கோப்பாளர்களான திரு. ஆ. கோவிந்தராஜா, திரு. சூ. கிறிஸ்ரியன், அச்சுப்படிவங்களைத் திருத்துவதில் துணைபுரிந்த திரு. எஸ். சிவலிங்கம் ஆகியோர்க்கும் என்றும் நன்றியுடையேன்.
நா. சுப்பிரமணியம்
பூநாறி ஒழுங்கை,
கொக்குவில்
1978-29-5
--------------------------------------------
பதிப்புரை
முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இரண்டாவது வெளியீடாய் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்ற ஆய்வுநூல் இன்று வெளியாகின்றது. கழகத்துப் பொதுச் செயலாளன் என்ற வகையில் இந்த வெளியீடு எனக்குப் பெருமிதம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், 1977-10-07 அன்று நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்திலே தொடங்கப் பெற்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் கலை, இலக்கியம், மொழியியல், அறிவியல் சார்ந்த தரமான ஆய்வு நூல்களை முத்திங்களுக்கு ஒன்றாக வெளியிடுவதே இக்கழகத்தின் அடிப்படை நோக்கமாய் முன்வைக்கப்பட்டுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த இருபதின்மராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கழகத்தின் முதல் வெளியீடாய் யான் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' என்ற நூல் வெளியிடுவதைக் கழகத்து நிறுவக உறுப்பினர் யாவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர். வெளியீட்டு முற்பண நிதிச் சேர்ப்பும் அன்றே தொடங்கியது. திருவாளர்கள் சி. தியாகராசா (எஸ். ரி. ஆர். பொலிம்ஸ் அதிபர்), இ. சரவணமுத்து, த. சோமசுந்தரம் (தலைவர், அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம்), அமரர் மு. வி. ஆசீர்வாதம் ஆகியோர் ஒவ்வொருவரும் வெளியீட்டு முற்பணமாக ரூபா ஐந்நூறு வழங்க இசைந்தனர். விரைவில் இம் முற்பணமும் சேர்ந்தது.
ஆசீர்வாத அச்சகத்தினரின் முழுமையான ஒத்துழைப்புக் காரணமாக, 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' 1977-12-24 அன்று வெளியிடப் பெற்றது. நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாய் நடந்தேறியது. வெளியீட்டு விழாவிற்கு முன்பே நூலின் விற்பனையை உறுதி செய்யும் வகையில் அன்பளிப்பட்டைகள் வாயிலாகக் கழகம் நிதி சேர்த்திருந்தமையால் எமது முதல் வெளியீடு எவ்வித விக்கினமுமின்றி எதிர்பாராத அளவு வெற்றியை அளித்தது.
வெளியீட்டு விழா நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்பு கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற பொழுது, முற்பணம் வழங்கியிருந்த எமது கழகப் பெரியார்கள் தமது முற்பணத்தினைக் கழக நிதியாய் வழங்கினர். இந்நிதி அளித்த நம்பிக்கையின் அடிப்படையே இன்று 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' நூல் வடிவம் பெறக் காரணமாய் அமைந்தது. எனவே இப்பெரியார்களுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தனது உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாய் ஈழத்திலே பல தமிழ் நூல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற் பெரும்பாலானவை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளையே சார்ந்தவையாகும். காத்திரம் வாய்ந்தனவும் எக்காலத்துக்கும் பயன் தருவனவுமான ஆய்வு நூல்கள் இங்கு வெளியாவது குறைவாகவே உள்ளது. இத்தகைய நூல்கள் பல்வேறு தரங்களையும், இரசனைகளையும் உடைய வாசகர்களைக் கவரத்தக்கன அல்ல என்பது ஒரு காரணம். அவற்றை வெளியிட முன்வரும் வெளியீட்டு நிறுவனங்கள் எவையும் எம் நாட்டில் இல்லை என்பது இன்னொரு காரணம். இந்நூல்களை எழுதும் அறிஞர்கள் தாமாகவே முன்வந்து இவற்றை வெளியிட அவர்களின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை என்பது பிறிதொரு காரணம். இக்காரணங்களால் எமது நாட்டறிஞரின் அறிவாற்றல் பற்றியும், ஆய்வுத்திறன் பற்றியும் பிறர் அறியவும் பயன் செய்யவும் வாய்ப்புக் கிட்டாது போவது பெருங் கவலைக்குரிய ஒன்றே. இதுகாலவரை ஈழத்துக்கு அப்பாலும் கணிப்பும் அறிமுகமும் பெற்ற அறிஞர் சிலரின் நூல்களே தமிழகத்தில் வெளியிடப் பெற்றுள்ளன. அவையும் இந்நாட்டு வாசகருக்கு எளிதிற் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமே.
இவற்றையெல்லாம் தீர அர்ர்ய்ந்து தடைகளை நீக்கி எவ்வாறேனும் சில நல்ல, தரமான ஆய்வு நூல்களையாவது வெளியிடும் முயற்சியை மேற்கொள்ள நாம் சிந்தித்ததன் பயனே முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தோற்றமாகும். எமது நோக்கத்தினை விளங்கிக் கொண்டு எம்மோடு ஒத்துழைத்து எதிர்காலத்தில் அறிவாராய்ச்சி இந்நாட்டிற் செழித்தோங்க உதவ வேண்டுமென அறிஞர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் ஆகியோரைப் பணிவன்புட வேண்டுகின்றோம்.
இன்று வெளியாகும் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் ஆய்வு நூல் எமது நாட்டிலே இதுவரை வெளியாகியுள்ள தமிழ் நாவல்கள் பற்றிய தரமான ஒரு மதிப்பீடாகும். தமிழகத்திலும் ஈழத்திலும் ஏறக்குறையச் சமகாலத்திலே தொடங்கப்பெற்ற நாவல் முயற்சிகள் படிப்படியாக பரப்பாலும், சமூக நோக்காலும் விரிவும் வளர்ச்சியும் பெற்று ஈழத்தில் நிலைபெற்றுள்ள வகையினை ஆய்வாளர் ஒருவர்க்கே உரிய 'காய்தல் உவத்தல்' அற்ற மனோபாவத்துடன் நூலாசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். இதற்கு முன்னரும் ஈழத்திலே, தமிழ் நவல் பற்றிய விமர்சனக் கண்ணோட்டத்தோடு கூடிய நூல்கள் சில வெளிவந்தன என்பது உண்மையே. ஆனால் அவை யாவும் அவ்வப்போது கட்டுரை வடிவிற் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியானவற்றின் தொகுப்புக்களே. இதனால் அவற்றில் வரலாற்றுத் தொடர்போ முழுமையோ காணப்படவில்லை.
இவற்றோடு ஒப்பு நோக்கும் போது 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்ற இந்த ஆய்வு நூல் முழுமை வாய்ந்ததொன்று என்பதும் மிக அண்மைக் காலத்தில் வெளியான நாவல்கள் பற்றிய மதிப்பீட்டினையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. சுருங்கக் கூறின் திருவாளர்கள் சோ. சிவபாதசுந்தரம், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவான 'தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்' என்னும் நூலோடு ஒப்பிட்டு ஆராயத்தக்க ஒரு சூழ்நிலையிலே, கலத்தின் தேவையாக இந்த ஆய்வு நூல் மலர்ந்துள்ளது எனக் கொள்ளலாம்.
அன்றியும் இந்நூல் ஆய்வுக்கட்டுரை வடிவில் இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்து முதுகலைமாணித் தேர்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாகும். பேராசிரியர் சு. வித்தியானந்தன், திரு. சி. தில்லைநாதன், எம். ஏ. எம். லிற் ஆகியோரின் மேற்பார்வையில் அவர்களின் வழிகாட்டலில் இந்த ஆய்வு நிகழ்ந்துள்ளது. பின்னர் இது நூல்வடிவம் பெறுகையில் அறிஞர்கள் பலரின் ஆலோசனைகளையும் திருத்தங்களையும் பெற்றுள்ளது. ஆக எல்லா வகையிலும் திட்பமும், ஒட்பமும் வாய்ந்ததாய் இந்நூல் வெளியாகின்றது என்று நாம் தயங்காது கூறலாம்.
இந்நூலின் ஆசிரியரான திரு. நா. சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக் கழகத்து யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறையிலே துணை விரிவுரையாளராய்ப் பணியாற்றுபவர்; முறையான தமிழ்க் கல்வியும் ஆய்வுக் கண்ணோட்டமும் அயரா முயற்சியும் கொண்டவர். எதனையும் காரண காரியரீதியில் நோக்கும் ஆழத்தன்மையை இவரின் ஆய்வு நூல் முழுவதிலும் நாம் பரவலாகக் காணலாம். இத்தகைய அறிஞர் ஒருவரின் பல ஆண்டு ஆய்வின் திரள்பயனை நூலாக வெளியிடும் வாய்ப்பு முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்திற்குக் கிடைத்தமை பெரும் பேறு என்றே கருதுகின்றோம். இதற்காக அன்னாருக்கு நன்றி கூறுவது கழகத்தின் கடனாகும். இவர் மேலும் தொடர்ந்து பல ஆய்வு நூல்களை வெளியிட 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' தூண்டு கோலாய் அமையும் என்பது எம் நம்பிக்கை.
இந்நூல் வெளியாகிக் கொண்டிருக்கையிற் பலவாறு ஒத்துழைத்த அனைவர்க்கும் எமது நன்றி உரியது.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தோற்றத்திற்குக் காலாயிருந்தோருள் ஒருவரான மு. வி. ஆசீர்வாதம் அவர்கள் இன்று நம்மிடை இல்லை. எனினும் அவரின் மனைவி திருவாட்டி றோ. ஆசீர்வாதம் அவர்களும், அச்சக ஊளியர்களான திருவாளர்கள் றோக் யோசவ், ஆ. கோவிந்தராஜா, சூ. கிறிஸ்ரியன் ஆகியோரும் எமக்குப் பலவகையில் உறுதுணை புரிந்தனர். அவர்களின் ஒத்துழைப்புக் கிடையாதிருந்திருக்குமாயின் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்நூல் சிறப்பாய் வெளிவந்திருக்காது. எனவே அவர்களுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இதய நன்றி என்றும் உரியதாகும்.
க. சொக்கலிங்கம்
(சொக்கன்)
"வாணி"
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
1978-06-04
-------------------------------------------------
பொருளடக்கம்
முன்னுரை v
அணிந்துரை viii
முகவுரை xii
பதிப்புரை xv
1. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 1-19
தோற்றுவாய் 1
ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் 3
ஈழத்திலே தமிழ் நாவல் தோன்றிய சூழ்நிலை 4
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள் 9
அடிக்குறிப்புகள் 17
2. சமுதாய சீர்திருத்தக் காலம் 20-46
சூழ்நிலையும் நோக்கமும் 20
நடப்பியல்பு நாவல்கள் 24
மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் 38
மொழி பெயர்ப்பும் தழுவலும் 41
மதிப்பீடு 43
அடிக்குறிப்புகள் 45
3. எழுத்தார்வக் காலம் 47-74
புதிய திருப்பமும் சூழ்நிலையும் 47
நாவல் வகைகள் 56
மொழிபெயர்ப்பும் தழுவலும்
காதல் நாவல்கள்
மர்ம நாவல்கள்
சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் 61
இளங்கீரனின் நாவல்கள்
பரிசோதனை முயற்சிகள்
மதிப்பீடு 71
அடிக்குறிப்புகள் 73
4. சமுதாய விமர்சனக் காலம் 75-135
சாதிப்பிரச்சினை நாவல்கள் 77
அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள் 91
தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள் 105
பாலியற் பிரச்சினை நாவல்கள் 114
பல்வகைப் படைப்புகள் 117
அவர்களுக்கு வயது வந்து விட்டது
நகைச்சுவை நாவல்கள்
வரலாற்று நாவல்கள்
மொழிபெயர்ப்பு நாவல்கள்
குடும்ப நாவல்களும் மர்ம நாவல்களும்
மதிப்பீடு 126
அடிக்குறிப்புகள் 134
5. பிரதேசங்களை நோக்கி 138-166
பிரதேச இலக்கியம் 136
ஈழத்து நாவல்களில் பிரதேச உணர்வு 138
பிரசுரக் களம் 143
வன்னிப் பிரதேச நாவல்கள் 146
கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள் 154
யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் 158
அண்மையில் வெளிவந்த இரு நாவல்கள் 162
மதிப்பீடு 164
அடிக்குறிப்புகள் 165
நிறைவுரை 167-174
பின்னிணைப்பு 1. ஈழத்துத் தமிழ் நாவல்கள்
பின்னிணைப்பு 2. ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுகள்
நூற்பட்டியல்
அட்டவணை
பிழைதிருத்தம்
-----------------------------------------------
1. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்
தோற்றுவாய்
'நாவல்' (novel) என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது. ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்ட போது அவற்றை ஆங்கிலேயர் 'நாவல்' என்னும் பெயரால் வழங்கினர். அக்கதைகளைப் போலவ்ர்ர் தாமும் சுயமாக எழுதமுயன்ற வேளையில் அவற்றுக்கும் அப்பெயரையே வழங்கலாயினர். இவ்வாறு எழுதப்பட்ட கதைகள் ஆரம்பத்தில் இயற்கையிகந்த நிகழ்ச்சிகளையும் காதலுணர்வுகளையும் சித்திரிக்கும் பண்புடையனவாய் அமைந்திருந்தன.
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சமூக அமைப்பிற் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழில் வளர்ச்சி, வாணிகப் பெருக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பாரம்பரிய சமூக அமைப்பு நிலைகுலைந்து புதிய 'சமூக பொருளாதார' உறவுகள் தோன்றின. இவற்றைப் புலப்படுத்தத்தக்க வகையில் 'நாவல்' பரிணாமம் பெற வேண்டியதாயிற்று. உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனைகதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகியது.
"வசனவடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீளமுடையதாகவும் புனைந்துரைக்கப் படுவதாகவும் பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப் பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களைச் சித்திரிப்பதாகவும் அமைவது நாவல்"
இது அகராதியியலாளர் தரும் வரைவிலக்கணம்.
தமிழில் நாவலிலக்கிய வடிவம் பயிலத் தொடங்கி நூறாண்டுகளாகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் மேனாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தினால் இந்தியாவிலும் ஈழத்திலும் தேசிய பாரம்பரிய சமூக அமைப்பு நிலைதளர்ந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் பயிற்சியும் மேனாட்டுக் கல்வி முறையும் சமூகத்திற் புதிய மதிப்பீடுகளை உருவாக்கத் தொடங்கியிருந்தன. ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்றான நடுத்தர வர்க்கம் வலிமிக்கதொரு சமூக சக்தியாக உருப்பெறத் தொடங்கியது. மேனாட்டுக் கல்வி முறையினாலும் வெளியீட்டுச் சாதனங்களின் வளர்ச்சியினாலும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த அறிவு வளர்ச்சியும் வாசிப்புப் பழக்கமும் இலக்கியத் துறையிலே பெருமளவு தாக்கத்தை விளைவித்தன. அக் காலம்வரை கற்றோர் கற்றுச் சுவைக்கும் வண்ணம் எழுதப்பட்டுவந்த மரபுவழி வசனமும் செய்யுளும் புதிய பரிணாமத்தை அவாவின. இத்தகைய சூழ்நிலையில் நாவலிலக்கிய வடிவம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியது. 1879ஆம் ஆண்டு வெளிவந்த மாயூரம் ச. வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவலாகும். 1976ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூவாயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன என்று ஆய்வாளர் கணித்துள்ளனர்.
ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள்
1977ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான தகவல் தேட்ட முயற்சிகள், பண்பியற் பகுப்பாய்வுகள் ஆகியவற்றில் வரலாற்றமைப்புக்குத் துணைபுரியக் கூடிய் வகையில் அமைந்த முக்கிய ஆய்வுகள் வருமாறு:
(அ) ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
-சில்லையூர் செல்வராசன், 1967
1891ஆம் ஆண்டு வெளிவந்த இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதைதொடக்கம் 1962ஆம் ஆண்டு வெளிவந்த தெல்லியூர் செ. நடராஜனின்காலேஜ் காதல் வரையிலான ஏறத்தாழ நூற்றைம்பது நாவல்கள் தொடர்பான தகவல்கள் இந்நூலிலே தரப்பட்டுள்ளன.
(ஆ) நொறுங்குண்ட இருதயம் - கதையும் கதைப்பண்பும்
-ஆ. சிவநேசச்செல்வன், 1972
1914ஆம் ஆண்டு வெளிவந்த மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம் நாவல் தொடர்பான ஆய்வுரை.
(இ) தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்
-சோ. சிவபாதசுந்தரம், 1972
1895ஆம் ஆண்டில் (தமிழ்நாட்டில்) வெளிவந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி நாவல் தொடர்பான ஆய்வுரை.
(ஈ) அஸன்பே கதைக்கோர் அறிமுகம்
-எம். எஸ். கமாலுத்தீன், 1974
1885ஆம் ஆண்டு வெளிவந்த சித்திலெவ்வை மரைக்காரின் (1838 - 1898) அசன்பேயுடைய கதை நாவலின் அறிமுகவுரை.
(உ) ஈழத்து மண்ணின் முதல் நாவல். சி. வை. சின்னப்பபிள்ளையின் 'வீரசிங்கன் கதை'
-நாகராஜ ஐயர் சுப்பிரமணியம், 1977.
1905ஆம் ஆண்டு வெளிவந்த வீரசிங்கன் கதை தொடர்பான ஆய்வுரை.
(ஊ) ஈழத்துத் தமிழ் நாவல்கள்- நூல் விபரப் பட்டியல் 1885 - 1976.
நா. சுப்பிரமணியம், 1977.
1976ஆம் ஆண்டு முடிவு வரை ஈழத்தில் வெளிவந்த நானூற்றேழு நாவல்கள் தொடர்பான விபரங்கள் இப்பட்டியலிலே தொகுக்கப்பட்டுள்ளன. நூல் வடிவில் வெளிவந்த நாவல்களிற் பெரும்பாலானவற்றுக்குக் கதைச் சுருக்கம், கதைப்பொருள், சமூக சமய அரசியற் பின்னணி, மொழிநடை, விசேட உத்தி முதலிய விபரக்குறிப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பண்பியற் பகுப்பாய்வுகளாக அமைந்த ஆய்வுக் கட்டுரைகளிற் குறிப்பிடத்தக்கவை இரண்டு. அவற்றுள் ஒன்றே ஈழத்துத் தமிழ் நாவல்கள் என்ற தலைப்புடன் இந்நூலாசிரியரால் 1972இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைமாணிப் பட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுக் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களுடன் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் என்ற இந்த நூலாக உருப்பெற்றுள்ளது.
மற்றையது சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ் நாவல்கள் என்ற தலைப்பில் 1973இல் க. சித்திரலேகா இலங்கைப் பல்கலைக் கழகத் தத்துவமாணிப் பட்டத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை. இது சுதந்திரத்துக்கு முற்பட்ட ஈழத்துத் தனிழ் நாவல்களின் கதைப் பண்புகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இவை தவிர ஆய்வரங்குக் கட்டுரைகளாகவும் சிறு பிரசுரங்களாகவும் பலவுள்ளன. இவ்வகை முயற்சிகளின் பெறுபேறாக ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வின் எல்லைகள் விரிவடைந்தன. ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகின்றது.
ஈழத்தில் தமிழ் நாவல் தோன்றிய சூழ்நிலை.
ஈழத்தின் இரண்டாவது தேசிய இனமான தமிழினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பாரம்பரியப் பிரதேசங்களாகக் கொண்டு ஏனைய மாகாணங்களிலும் பரவி வாழ்ந்து வருகின்றது. 1802ஆம் ஆண்டில் ஈழம் ஆங்கிலேயரது குடியேற்ற நாடானது. ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்திற் கிறித்தவ மதம் பரப்பும் நோக்கில் ஈழத்துக்கு வருகை தந்த மிசனரி இயக்கங்கள் தமது மதமாற்ற முயற்சிகளோடு ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றின. யாழ்ப்பாணப் பிரதேசம் ஆங்கிலக் கல்வியிற் சிறந்து விளங்கியது. கல்விகற்ற நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியது. ஆங்கிலக் கல்வி சிறப்புற்று வளர்ந்த அக்காலப்பகுதியில் மரபுவழிக் குருகுலக் கல்வி முறையிலே தமிழ்க் கல்வியும் வளர்ந்தது. ஆங்கிலமும் தமிழும் கற்ற கல்வியாளர்கள் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பகுதியிற் செயலூக்கத்தோடு பணியாற்றினர். இவர்களுட் பலர் தமிழ் நாட்டுக்குச் சென்று பலதுறைகளிலும் சிறந்து விளங்கியதோடு கல்விப் பணியும் புரிந்து பெருமை பெற்றனர்.
சைவத்தைப் பிரதான சமயாமாகக் கொண்டிருந்த தமிழர் மத்தியிற் குறிப்பிடத்தக்க தொகையினரை மிசனரி இயக்கங்கள் கிறித்தவர்களாக்கியிருந்தன. இத்தகைய மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து சிறீலசிறீ ஆறுமுக நாவலரும் (1822-1879) அவரைப் பினபற்றியோரும் உறுதியான இயக்கத்தை உருவாக்கினர். மிசனரிமாரின் கல்விக் கூடங்களுக்குப் போட்டியாகக் கல்விக்கூடங்களை நிறுவியதோடு அவர்களைப் போலவே மேடைப்பிரசங்கம், அச்சுப் பிரசுரங்கள் ஆகியவற்றையும் இவர்கள் நன்கு பயன்படுத்தினர்.
பரம்பரையடிப்படையிலமைந்த சமூக பொருளாதார உறவுகளைக் கொண்ட ஈழத்தமிழரின் பண்பாட்டில் ஆங்கிலக் கல்வியும் ஐரோப்பொய பழக்கவழக்கங்களும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. பழைமையில் நம்பிக்கையிழந்தவர்களும் புதியராய் கிறித்தவ மதத்தைத் தழுவியவர்களும் அக் காலப்பகுதியில் ஐரோப்பிய நடையுடை பாவனைகளையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். இவற்றின் விளைவாகத் தேசியப் பண்பாடு சீர்குலையும் என அஞ்சிய ஈழத்தறிஞர் சிலர் தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் இயக்கங்களைத் தொடங்கினர். கலாயோகாஅனந்த கெ. குமாரசுவாமி (1877-1947) 1905ஆம் ஆண்டில் நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தக் கழகம் (Ceylon Social Reforms League) இத்தகைய நோக்கில் எழுந்ததொன்றேயாகும்.
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களுள் ஒரு பிரிவினரான முஸ்லிம்களிடையிலும் சமயம், அரசியல், கல்வி ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆரம்பமாகியது. அறிஞர் சித்தி லெவ்வை இம்மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கி இஸ்லாமிய எழுத்துலக முன்னோடியாகப் ப்ணியாற்றினார்.
சமூகத்திற் புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தினரின் தொகை பெருகியபோது அவர்களது கருத்துப்பரிமாற்றத்திற்குரிய வெளியீட்டுச் சாதனமாகப் பத்திரிகைகள் தோன்றின. சமயக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் பரப்பும் நோக்கில் வெளிவரத் தொடங்கிய பத்திரிகைகள் தமிழ் மக்களிலே குறிப்பிடத்தக்க தொகையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தன.
"குறிப்பாகத் தமிழிலே 1841ஆம் ஆண்டு முதலாகத் தோன்றிய பத்திரிகைகளிலே எழுச்சிபெற்ற மத்திய வர்க்கத்தின் அபிலாசைகளை உணர்த்துவனவான விடயதானங்கள் காணப்படுகின்றன. உதயதாரகையின் முதலாவது இதழில் இருந்தே வாசனப் பயிற்சியில் ஆர்வம் ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட்து. துறைபோகக் கற்றோர் மட்டுமன்றிச் சாதாரண கல்வியறிவு பெற்ற மற்றோர்களுக்கும் புரியும் வகையில் பத்திரிகைகள் எழுத முயன்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறத்தாழ 25க்கு மேற்பட்ட தமிழ்ப் புதினப்பத்திரிகைகள் நாடெங்கும் காலந்தோறும் தோன்றின. குறிப்பாக இலங்கைகாவலன், இலங்காபிமானி, புதினாதிபதி, புதினாலங்காரி, முஸ்லிம் நேசன் போன்ற பத்திரிகைகள் பொதுமக்களின் வாசனை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இயங்கின."
என ஆ. சிவநேசச்செல்வன் இச் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறார். பத்திரிகைப் பின்னணியில் உறுதிபெற்ற வாசிப்புப் பழக்கத்தை மேலும் தூண்டி வளர்க்கும் வகையில் ஈழத்தின் பல்வேறு நகரங்களிலும் நூலகங்கள் உருவாகின. இந் நூலகங்களில் ஐரோப்பிய நாவல்களை வாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
தமிழிலக்கியத் துறையிலே செய்யுள் மரபு வகித்துவந்த முதன்மை படிப்படியாக உரைநடை மரபுக்கு மாற்றம் பெறும் காலமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைந்தது. 'வசன நடை கைவந்த வல்லாளர்' ஆகிய ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடையினைப் பல்வேறு வகைகளிற் கையாண்டிருந்தார். அவர் எழுதியவற்றுள் திருவிளையாடற் புராண வசனம், சைவ வினா விடை போன்றன பொதுமக்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய இலகுவான நடையிலமைந்தன. இவ்வகை நடையைப் பத்திரிகைத்துறை சார்ந்தோர் மேலும் வளர்த்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஈழத்திலே தமிழ் நாவலுக்கான முதன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மக்களுக்குப் பயன்படும் வகையிற் கதை வடிவிலே தருவதற்கு முயன்றனர். உரைநடை பெற்றிருந்த வளர்ச்சி இவ்வகையிலே துணை புரிந்தது. மேனாட்டிலக்கியப் பயிற்சி, மேனாடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளதும் சமய கலாசாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்களைப் படித்ததினாலுண்டான ஊக்கம் என்பன இம் முயற்சிகளை நெறிப்படுத்தின. ஈழத்தின் தொடக்ககால நாவலாசிரியர்களுள் ஒருவரான சித்தி லெவ்வை மரைக்கார் அராபிய இரவுக் கதைகளில் (Arabian Nights) ஈடுபாடு கொண்ட தமிழறிஞர். இவரது அஸன்பே சரித்திர அறிமுகவுரையில் எஸ். எம். கமாலுத்தீன் அந்நூல் எழுதப்பெற்ற சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார்.
"அறிஞர் சித்திலெவ்வையின் காலம் இலங்கை முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சி அரும்பிய காலமாகும். இலங்கை முஸ்லிம்களின் சமய கலாசார இயக்கங்களுக்கு மிஸர் (எகிப்து), யுருக்கி, அரேபியா போன்ற நாடுகளே வழிகோலின. இந்நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைகளில் பெரும் அளவில் இடம்பெற்றதில் வியப்பில்லை. இதனையொட்டியே இக்கால இலக்கிய ஆக்கங்களில் மத்திய கிழக்கு நாடுகள் நிழலாடலாயின."
கிறிஸ்தவ மதப்பிரசார முயற்சிகட்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நாட்டுக் கூத்து, நாடகம் ஆகியன அச்சக வசதி வந்த காலப்பகுதியில் நூல்வடிவு பெறத் தொடங்கின என்றும் அதன் தொடர்ச்சியாகவே நாவலிலக்கியம் தோன்றியது என்றும் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை எழுதப்பட்ட வரலாற்றைக் கூறுமிடத்துச் சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுகின்றார்.
தமிழ் நாட்டுத் தொடர்புடைய ஈழத்து ஆரம்பகால நாவலாசிரியர்கள் திரு. த. சரவணமுத்துப் பிள்ளையும் சி. வை. சின்னப்பபிள்ளையுமாவர். இவர்களுள் முதல்வர் தமிழ்நாட்டிலே வாழ்ந்து தமிழ் நாட்டு வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுதியவர். சி. வை. சின்னப்பபிள்ளை ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதிய வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) நாவலின் ஆங்கில முன்னுரையிலே தம்து நோக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
"வீரசிங்கன் கதை அல்லது ச்ன்மார்க்க ஜெயம் என்ற எனது கன்னிப் படைப்பான இந்த நாவலைப் பொதுமக்களுக்குச் சமர்ப்பிக்கும் வேளையிற் சில குறிப்புக்களைக் கூறவேண்டியுள்ள்து. இது எனது கன்னி முயற்சியாதலினால் பல இடர்பாடுகளை நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. வாசகர்களின் உள்ளங்களிலே சன்மார்க்கத்தின் மகத்துவத்தையும் அதனாலடையக் கூடிய நன்மைகளையும் பதிய வைப்பதும் இந்திய வாசகர்களுக்கு ஈழத்து மக்களின் சாதாரண கிராம வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் தெளிவாக விளக்குவதுமே இப்படைப்பின் நோக்கமாகும். தற்பொழுது தமிழ் நாவல்கள் பெரும்பாலும் இந்திய வாழ்க்கையயும் குறிப்பாகப் பிராமணரது வாழ்க்கையையுமே விபரிக்கின்றன. இக் கதை ஓர் இளைஞனுக்கு உண்மையில் ஏற்பட்ட அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் காதல், வீரம் போன்ற சுவைகளையும் தமிழ்ச் சான்றோரிலக்கியங்களின் பொருத்தமான மேற்கோள்களையும் இணைத்து இதனைப் படைத்துள்ளேன். இத்தகைய கன்னிப்படைப்பில் குறைபாடுகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே. அவ்வகைக் குறைபாடுகளை மன்னிக்குமாறு எனது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்."
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தில் தமிழ் நாட்டு நாவல்கள் வகித்த பங்கினை இம் முன்னுரை உணர்த்துகின்றது.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 1956ஆம் ஆண்டு வெளிவந்த காவலப்பன் கதையே தமிழில் வெளிவந்த முதலாவது நாவல் என்று மு. கணபதிப்பிள்ளை கருதுகிறார். Parley the Porter என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆக அமைந்த இது யாழ்ப்பாணம் 'ரிலிஜஸ் சொசைட்டி'யின் வெளியீடாகும். ஹன்னா மூர் (Hanna More) என்பார் இதன் ஆசிரியர். இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐஞ்ஞூற்றுக்கும் மேற்பட்ட கதைநூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.
'இலங்கை சும்பிறீம் கோட்டுப் பிறக்றரும் முஸ்லிம் நேசன் பத்திரிகைப் பத்திராதிபரும் ஆகிய சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றிய அசன்பேயுடைய கதை 1885ஆம் ஆண்டு முஸ்லிம் நேசன் அழுத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. இதன் இரண்டாவது பதிப்பு 1890இல் சென்னை அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்ததாகத் தெரிகிறது. இந் நூலின் புதிய பதிப்பொன்று அசன்பேயுடைய சரித்திரம் என்ற தலைப்புடன் 1974இல் திருச்சிராப்பள்ளி இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக வெளியீடாக வந்துள்ளது. இதன் கதை மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டது.
'மிசுறுதேச (எகிப்து) காயீர் பட்டணத்து யூசுபு பாக்ஷா என்னும் இராஜ வம்சத்தவர்க்குப் பிறந்த மகன் குழந்தைப் பருவத்திலேயே கடத்தப்பட்டு பொம்பாயில் (பம்பாய்) ஜகுவர் என்பவரிடம் வளருகிறான். இக்குழந்தைக்கு அஸன் (சுந்தரம்) என்ற பெயரிட்டனர். பதினான்கு வயதில் ஜகுபரை விட்டுப் பிரிந்து வஞ்சகரின் சூழ்ச்சிக்காளான இவன் அவற்றினின்று தப்பிக் கல்கத்தா நகருக்குச் சென்று அங்கிருந்த ஆங்கில தேசாதிபதி நாயகத்தின் ஆதரவில் கற்று மேம்படுகின்றான். லார்டு டெலிங்டனின் மகள் பாளினாவின் காதலனாகிறான். மிசுறு தேசத்திலிருக்கும் தனது பெற்றோரைக் காணச் செல்கிறான். அங்கும் பல சூழ்ச்சிகட்கு ஆட்பட்டுத் தப்பித் தீயோரைப் பிடித்துக் கொடுக்கிறான். இவ் வீரச் செயல்களுக்காகவே பே (Bey) என்னும் கௌரவ விருதைப் பெறுகிறான்.'
இக் கதையம்சம் மர்மச் சம்பவங்களுடனும் வீரசகாசச் செயல்களுடனும் இஸ்லாமியப் பண்பாட்டு அம்சங்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நடப்பியல்புச் சாயல் கொடுக்கும் வகையிற் கதை நிகழ்ச்சிகளுக்கு உண்மைத் திகதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தியாயப் பகுப்புகள் இன்றி ஒரே தொடராகக் கதை கூறப்பட்டுள்ளது. கதை கூறும் முறையில் காவியமரபின் செல்வாக்குப் புலனாகின்றது. நன்மை தீமை இரண்டின் பிரதிநிதிகளான அமைந்த பாத்திரங்கள் நாடகப்பாங்கான உரையாடல்களுடன் இயங்குகின்றன.
"இக் கதை எழுதப்பட்ட காலத்திலும் அதற்கு முன்னரும் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதை நோக்கும்போது அவை இத்தகைய உரையாடல்கள் எழுதப்படத் தூண்டுதல்களாய் உதவியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது."
என்பர் சி. தில்லைநாதன். க. கைலாசபதி இந்நாவல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்
"சித்திலெவ்வையின் நூலைப்படிக்குமொருவர் இதற்கு "அஸ்ன்பேயின் திகைப்பூட்டும் நூதன சாகசங்கள்" என்று பெயரிட்டிருக்கலாமென்று எண்ணக் கூடியதாயுள்ளது. கதையின் கருவும் போக்கும் அவ்விதம் எண்ணத்தக்கதாகவே அமைந்துள்ளன"
எனக் கூறுவது அவதானிக்கத்தக்கது.
வீரசாகசச் சம்பவங்களுடன் கூடிய அற்புதக் கதைப் பண்பு வாய்ந்த அசன்பேயுடைய கதை ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் என்ற சிறப்பையும் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் இரண்டாவது நாவல் என்னும் சிறப்பையும் பெறுகின்றது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் (1879) போலவே இந் நாவலும் காவியமரபின் செல்வாக்கிலிருந்து விடுபடாத ஒரு நிலைமாறுகாலப் பிரசவம் ஆக அமைந்தது.
Orson and Valeantine என்ற போர்த்துக்கேய நெடுங்கதையை ஆதாரமாகக் கொண்டெழுதப்பட்டதாக அறியப்படும் ஊசோன் பாலந்தை கதை 1891ஆம் ஆண்டு வெளிவந்தது. திருகோணமலை எஸ். இன்னாசித்தம்பியால் எழுதப்பட்ட இந்நூல் அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. 'அலுமான்ய' தேசத்தின் அலக்ஸாந்தர் ஏம்பரதோருக்கும் தொன்வெலிச்சாதென்னும் அரசகுமாரிக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை என்னுமிரு வீரவாலிபர்களது சாகசங்களைக் கூறுவதாக அமையுமிந்நாவலின் பிரதிகள் கிடைக்கவில்லையாதலால் இதன் நாவலிலக்கியத்தரம் பற்றியும் தழுவலா தமிழாக்கமா என்பது பற்றியும் அறிய முடியவில்லை. சில்லையூர் செல்வராசன் தந்துள்ள குறிப்பின்படி அரச குடும்பத்தைச் ஆர்ந்த வீரசாகசக் கதையாகவிருக்கலாம் என்று கருத முடிகிறது. இதன் இரண்டாம் பதிப்பு 1924ஆம் ஆண்டில் வெளிவந்தது.
தமிழ் நாட்டிலே சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசியராய்ப் பணிபுரிந்த ஈழத்தவரான திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை (1863-1922) யின் இளைய சகோதரரான தி. த. சரவணமுத்துப்பிள்ளை சென்னை, மாநிலக் கல்லூரியிற் கீழைத்தேயச் சுவடி நிலையத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். அப்பணி புரிந்த வேளையில் தாம் மேற்கொண்டிருந்த வரலாற்றாராய்ச்சியின் பயனாகக் கிடைத்த ஊக்கத்தால் மோகனாங்கி நாவலை எழுதினார். இது 1895ஆம் ஆண்டு சென்னை இந்து யூனியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இந்நாவலின் கதை தமிழ் நாட்டில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிப் பிரதேசங்களில் நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்த பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இரு நகரங்களிலும் ஆட்சி புரிந்தவர்களிடையில் நிகழ்ந்த அரசியற் போட்டியின் பகைப்புலத்திற் காதல், வீரம், சூழ்ச்சி முதலிய சம்பவங்களைப் பொருத்தி வரலாற்று நாவலைப் புனைந்துள்ள சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவலிலக்கியத் துறையின் முன்னோடியாக அமைகிறார். இந்நாவல் ஈழத்தவரால் எழுதப்பட்டதென்றாலும் தமிழ் நாட்டையே களமாகக் கொண்டுள்ளதால் இதனை ஈழத்துத் தமிழ் நாவல் என வரையறை செய்ய முடியாது என்பர் சோ. சிவபாதசுந்தரம். ஆயினும், தமிழ் நாவலின் முக்கிய பிரிவொன்றுக்கு முன்னோடியாக விளங்கியவர் ஈழத்தவர் என்ற நியாயமான பெருமை ஈழத்துத் தமிழ் நாவலாராய்ச்சியில் ஈடுபடுபவர்களால் நினைவுகூரத்தக்க தொன்றென்பதை மறுப்பதற்கில்லை. இந்நாவல் 1919ஆம் ஆண்டு சொக்கநாதநாயக்கர் என்ற தலைப்பிற் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.
மோகனாங்கி தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலமொன்றை நிலைக்களனாகக் கொண்டு எழுதப்பட்ட போதும் நாவலின் மொழிநடையில் ஈழத்துப் பேச்சு வழக்குகள் இடம் பெற்றுள்ளமையை சோ. சிவபாதசுந்தரம் எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பிடத்தக்க ஈழப் பேச்சு வழக்குகள் வருமாறு;
விலை சரசமாயிருக்கு, வீட்டுக்குக் கிட்ட, கன நாளாச்சுது, மெத்த நேரஞ் சென்று, இதாலே, அதாலே, மெய்தானா, வலோற்காரம், செவ்வையாக, சொன்னனான், போனனான், வரக்காட்டிறன், தெண்டிக்க வேண்டும், சுறுக்கு, தேள்வையில்லை, பின்னை, சீ, வடிவான பெண், விசர், பகலைக்கு.
ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகின்றதென்று பொதுவாகக் கருதப்பட்டாலும் ஈழத்து மண்ணையும் ஈழத்து மக்களது வாழ்க்கை முறைகளையும் நிலைக்களனானக் கொண்ட படைப்புக்களாக அக்காலத்தன எவையும் அமையவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. எழுதியவர்கள் ஈழத்தவர்கள் என்பதும் ஒரு நாவலைத் தவிர ஏனையவை ஈழத்திலே பதிப்பிக்கப்பட்டன என்பதுமே ஈழத்தோடு அவற்றுக்குள்ள தொடர்பெனலாம். இவ்வகையிலே இவை ஈழத்துத் தமிழ் நாவலின் முதன் முயற்சிகள் என்று கொள்ளப்படுகின்றன.
ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு தமிழ் நாவல் எழுதும் மரபு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்தே தோற்றம் பெறுகின்றது.
இவ்வகையில் ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நாவல் எழுதிய முதல்வர் என்ற சிறப்பு சி. வை. சின்னப்பபிள்ளைக்கு உரியது. பதிப்புப் பேராசிரியர் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832-1901) யின் இளைய சகோதரரான சி. வை. சின்னப்பபிள்ளை தமிழ் நாட்டில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றபின் ஈழத்துக்கு மீண்டு கல்வி விருத்திக்கான பணிகள் புரிந்தவர். இவர் வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905), உதிரபாசம் அல்லது இரத்தின பவானி (1915), விஜயசீலம் (1916) ஆகிய நாவல்களையும் தனலுக்குமி தாலாட்டு (1909) என்னும் செய்யுள் நூலையும் இயற்றினார். வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் சென்னை மினர்வா அச்சுக் கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டது. ஏனையவை ஈழத்திற் பதிப்பிக்கப்பட்டன.
ஈழத்தில் எழும் இலக்கியம் ஈழத்து மக்களது வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு அமைய வேண்டுமென்ற தேசிய உணர்ச்சிக் குரலின் சாயலை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் முகவுரையில் தெளிவாகக் காணமுடிகிறது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்லாகம் என்ற கிராமத்திற் பிறந்த வீரசிஙகன் என்ற வீரவாலிபன் தனது அண்ணன் மனைவியின் சூழ்ச்சியால் ஊரை விட்டு வெளியேறிக் கால் நடையாக அநுராதபுரம் வரை செல்கிறான். யாழ்ப்பாணம் வன்னி ஆகிய பிரதேசங்களைக் கடந்து அவன் மேற்கொள்ளும் பயணத்தில் எருமை, யானை ஆகியவற்றையும் கூட்டாக எதிர்க்கும் முரடர்களையும் வெல்கிறான். அநுராதபுரத்தில் மெனிக் பண்டா என்ற சிங்கள வீரனுடன் போரிட்டு வென்று அவனை நட்பாக்கிக் கொள்கின்றான். அங்கு குடியேறியிருந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இலட்சுமி என்ற அழகு நங்கையின் காதலுக்குரியவனாகிறான். அவளை அடைய முயன்ற தீயோர் கூட்டத்தை வென்று அகப்படுத்திச் சட்டத்தின் கையிற் கொடுக்கின்றான். பின்னர் இலட்சுமியை மணந்து வாழ்க்கையில் முன்னேறி இன்பமாக வாழ்கிறான்.
வீரன், அறிவு, அன்பு, ஒழுக்கம் முதலிய நற்பண்புகள் பொருந்தப் பெற்ற கதைத் தலைவன், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளுக்கு இலக்கியமான கதைத்தலைவி என்ற வகையிற் காவியப் பண்புடையனவாய்ப் பாத்திரங்கள் அமைந்துள்ளன. வீரசிங்கன் ஒரு சந்தர்ப்பத்திலே தனது ஆற்றலைப் புலப்படுத்தும் வகையிலே,
"சென்னை வித்தியாசங்கப் பிரவேசப் பரீட்சையில் தேறியிருக்கிறேன். தமிழிலே நிகண்டு, நாலடியார், திருக்குறள், நைடதம், பாரதம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், கம்பராமாயணம் முதலிய செய்யுட்களும் நன்னூலும் இலக்கண விளக்கமும் படித்திருக்கிறேன்"
என்று கூறுகிறான். அன்றைய காலப் பகுதியிலே அறிஞன் என மதிக்கப்படுவதற்கு வேண்டப்பட்ட தகைமைகளை இக்கூற்று உணர்த்துகின்றதெனலாம். ஆசிரியர் தமது கல்வியறிவைப் பாத்திரத்தில் ஏற்றியுள்ளமை தெரிகிறது. கதைப் போக்கிற்குப் புறம்பாகத் தமது அறிவாற்றலைப் பாத்திரங்களில் சுமத்தும் இப் பண்பினைத் தற்கால நாவலாசிரியர்களிலே தி. சா. ராஜூவிடம் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த படித்த நடுத்தர வர்க்கத்தினரிற் பலர் அரசபணி நோக்கிலும் வர்த்தகத் தேவைகளின் பொருட்டும் குடா நாட்டை நீங்கி ஈழத்தின் பல பாகங்களிலும் பரவி வாழ்ந்த சூழ்நிலையை நாவலிற் காணலாம். யாழ்ப்பாணம் தொடக்கம் அநுராதபுரம் வரையிலுள்ள நீண்ட வீதி, வன்னிப் பிரதேசக் காட்டுப் பகுதி, அநுராதபுரம், மேன்றலை (மிகுந்தலையாகலாம்), திருக்கோணமலை, திரியாய், தம்பலகாமப்பற்று, கொட்டியாரப்பற்று, கட்டுக்குளம்பற்று ஆகிய பிரதேசங்கள் கதைக்குள் வருகின்றன. ஈற்றில் கொழும்பு நகரும் கதையுடன் இணைகிறது.
உரையாடலும் ஆசிரியர் கூற்றுமாக அமையும் கதையிலே மாடசாமி என்ற யுணைப் பாத்திரமொன்றின் உரையாடல்களைத் தவிர ஏனைய பகுதிகள் இலக்கணச் செறிவுடைய செந்தமிழிலேயே அமைந்துள்ளன.
"உங்களைப் பார்க்கலாமெண்ணு ஒருநாள் இங்கை வந்தேனையா; நீங்க திருக்கிணாமலைக்கு பூட்டீங்கெண்ணு சொன்னாங்க; அப்புறம் அந்தம்மிணியைப் போய்ப் பார்த்தேன். அது அழுதுகிண்ணு எவனோ உங்கமேலை இல்லாத கோளுங்க சொல்லி அத்தையெல்லாம் அந்தையா நம்பிக்கிண்ணு உங்களை அனுப்பி விட்டாங்க எண்ணு சொல்லிச்சு."
வடகரை (இந்திய) நாயக்கன் என அறிமுகப் படுத்தப்படும் மாடசாமி என்ற பாத்திரத்தின் இத்தகைய உரையாடல்கள் நகைச்சுவை யூட்டுவதற்காகச் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன எனக் கருத முடிகின்றது
'பாலைமரத்தின் பாராரை சற்றேறக்குறைய இரண்டு பாகஞ் சுற்றளவுள்ளதாய் இருந்தபடியால் வந்த நால்வாய் மரத்துக்கிப்பால் நின்று தன் றோல்வாயை ஒரு பக்கமாய் அவைனைப் பிடிக்கக் கருதிப்போலும் நீட்ட.....'
என ஆசிரியர் கூற்றாக வரும் பகுதியில் பராரை (பருத்த அடிப்பகுதி), நால்வாய் (யானை), தோல்வாய் (துதிக்கை) முதலிய வழக்கிழந்த பழந்தமிழ்ச் சொற்கள் பயிலக் காணலாம்.
ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் விளக்கும் நோக்கில் நாவல் எழுத முயன்ற சி. வை. சின்னப்பபிள்ளை சமூக நடப்பியல்போடு பொருந்தாத வீரசகாசப் பண்பு வாய்ந்ததாகவே வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலைப் படைத்துள்ளார்.
உதிரபாசம் அல்லது இரத்தின பவானி நாவல் தமிழ் நாட்டுப் பகைப்புலத்தில் எழுதப்பட்டது. இரத்தினம் என்ற வீரவாலிபன் பல சாகசங்கள் புரிந்து பவானி என்ற அழகியைக் கரம்பற்றுகிறான்.
விஜயசீலம் ஈழத்து வரலாற்றிலே முதல் மன்னனெனப்படும் விஜயனின் கதை. வரலாற்றுச் செய்தியை விரிவுசெய்து கற்பனைச் சம்பவங்களைப் புகுத்தி வீரகாவியப் பண்புடன் எழுதப்பட்டது. ஈழத்து வரலாற்றடிப்படையிலெழுந்த முதலாவது வரலாற்று நாவல் என இதனைக் குறிப்பிடலாம்.
சி. வை. சின்னப்பபிள்ளையின் நாவல்கள் வீரசகாசப் பண்பு வாய்ந்த வசன காவியங்களாக அமைந்தமைக்குத் தன்னிகரில்லாத் தலைவனையுடையதாய் மிளிரும் காவிய மரபு வழிவந்த தமிழறிவு ஒரு காரணமாகலாம்.
வீரசாகசங்களையும் காதலையும் புனைந்து நற்போதனைகளை உள்ளடக்கிக் கூறும் கதையே நாவல் என்று சி. வை. சின்னப்பபிள்ளை கருதிதுள்ளார். இதனால் ஈழத்து மண்ணின் முதல் நாவல் என்ற சிறப்புக்குரிய வீரசைங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலிற் கதை நிகழும் இடம் ஈழம் என்பதைத் தவிரக் கதைப் பொருளில் ஈழத்துச் சமூகக்களம் முக்கியத்துவம் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத் தமிழ் மக்களது சமுதாயப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் என்ற சிறப்பு திருமதி மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம் (1914) நாவலியே சாரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழத்தில் நிலவிய சமயசார்பான சமுதாய சீர்திருத்த உணர்வூக்கத்தினடியாக எழுந்த இந்நாவலைச் சமுதாய சீர்திருத்தக் காலம் என்ற தலைப்பின் கீழ் நோக்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. Origins, A Short Etymological Dictionary of Modern English, 1963, pp. 441-442
2. The Columbia Encyclopaedia, 1947, p. 1284
Chambers's Encyclopaedia, New ed. Vol. X, 1950, pp. 104-106
The Encyclopaedia Americana, 1958, p. 503
3. Webster's New International Dictionary of the English Language, 1926, p. 1474
Chambers's Twentieth Century Dictionary, 1960, p. 732
4. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம்- தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, பக். 278
5. புதுமை இலக்கியம், அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர், 1962, பக். 9-12, 97-104, 109-111 ஆகிய பக்கங்களிற் பிரசுரமான கட்டுரையின் நூல்வடிவம்.
6. பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாமலர் 1972.
பக். 73-80 மகாஜனாக் கலூரி, தெல்லிப்பழை.
மல்லிகை கொடி 7 மலர் 49, 50 (1972 மே-ஜூன்) பக். 14-18, 38-41 ஆகிய பக்கங்களிற் பிரசுரமான கட்டுரையின் விரிவு.
7. தினகரன் வார மஞ்சரி, 1972-11-12, 19, 'தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நூல்' என்ற தலைப்பே காணப்பட்டாலும் 'தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்' என்பதே சரியான தலைப்பு என சோ. ச. சிவபாதசுந்தரம் எழுதிய 1977-3-13 திகதிக் கடிதமூலம் அறிய முடிகின்றது.
8. தினகரன் 1974-5-26, அசன்பேயுடைய கதையின் புதிய பதிப்பான அஸ்ன்பே சரித்திரத்தின் (1974) அறிமுகவுரையாகவும் இது அமைந்துள்ளது. தினகரன் வாரமஞ்சரி 1972-10-22 ஆந் திகதி இதழில் "அறிஞர் சித்திலெவ்வை இலங்கையின் முதல் தமிழ் நாவலாசிரியர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலே தமிழ் நாட்டில் 1890ஆம் ஆண்டு பிரசுரம் செய்யப்பட்ட அசன்பேயுடைய சரித்திரம் பற்றிய தகவலைத் தந்த இவர் தொடர்ந்து ஆய்வு நிகழ்த்தி 1885ஆம் ஆண்டில் ஈழத்தில் பிரசுரிக்கப்பட்ட தகவலை வெளிக் கொணர்ந்துள்ளார்.
9. மல்லிகை-105, 1977 ஜனவரி பக். 32-37
10. இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக நூலக வெளியீடு. இல. 2, 1977 (தட்டச்சுப் பிரசுரம்)
11. அச்சில் வெளிவரவில்லை
12. பின்னிணைப்பு 2, பார்க்க.
13. "ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்". தமிழ் நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்கக் கட்டுரை 1977, (தட்டச்சுப் பிரதி) பக். 3
14. மறுபிரசுரம் 1974, பக். V
15. சில்லையூர் செல்வராசனின் Community-5 இதழ்க் கட்டுரையினின்று இக் கருத்தை, ஆ. சிவநேசச்செல்வன் 'ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் - சில குறிப்புகள்' - 1973, பக். 4இல் எடுத்தாண்டுள்ளார்.
16. சில்லையூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, 1967 முன்னுரை பக். 11-12
17. Barnett, L. D. and Pope, G. U., A Catalogue of the Tamil Books in the Library of British Museum, London, 1909 .117
18. அ. ச. ஞானசம்பந்தன், பொதுப் பதிப்பாசிரியர், தமிழ்நூல் விவர அட்டவணை 1965, தொ. 1 பகுதி 5 அநுபந்தம். பக். 729
19. மேற்படி தமிழ் நூல் விவர அட்டவணையில் இவற்றின் விபரத்தைக் காணலாம்.
20. தினகரன் வாரமஞ்சரி, 1974-4-4, பக். 7 இல் பிரசுரிக்கப்பட்ட அசன்பேயுடைய கதை முதலாம் பதிப்பின் முகப்புப் புகைப்படப் பிரதி.
21. எஸ். எம். கமாலுதீன், தினகரன் வாரமஞ்சரி, 1974-5-26, பக்.8 இல் சென்னை, தமிழ்நூற்பட்டியலை (1857-1900) ஆதாரம் காடி இத்தகவலைத் தந்துள்ளார்.
22. "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்-ஒரு பொது மதிப்பீடு." தமிழ் நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை. 1977, (தட்டச்சுப் பிரதி) பக். 2
23. 1974-2-25 வானொலிமஞ்சரியில் இடம்பெற்ற க. கைலாசபதியின் இக்குறிப்பை எஸ். எம். கமாலுத்தீன் 1974-5-26 தினகரன் வார மஞ்சரிக் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார்.
24. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, பக். 15
25. அடிக்குறிப்பு 7 இல் குறிக்கப்பட்ட கட்டுரை பக் 3
26. மேற்படி பக். 9
27. மு. கணபதிப்பிள்ளை, ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள், 1967, பக். 123
28. இந்நூலில் 8 ஆம் பக். பார்க்க
29. வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜயம், பக். 78
30. வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜயம், பக். 222
31. வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜயம், பக். 11
32. வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜயம், முன்னுரை.
--------------------------------------------------
2. சமுதாய சீர்திருத்தக் காலம்
சூழ்நிலையும் நோக்கமும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரை சைவம், கிறித்தவம் ஆகிய இரு சமயங்களி னடிப்படையிலான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தது. கிறித்தவ மிசனரியினர்க்கும் நாவலர் மரபைப் பேணிய சைவர்களுக்குமிடையில் நிலவிய 'போட்டி நிலை' சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சமயம் சார்ந்த அறம், ஒழுக்கம் ஆகியவற்றினடிப்படையிலே தீர்வுகூறும் இயல்பைத் தூண்டியது. இதன் விளைவாக ஈழத்தின் ஏனைய இலக்கியத் துறைகளிற்போல[1] நாவலிலும் சமய அடிப்படையிலான சமுதாய சீர்திருத்தம் ஒரு பொதுப் பண்பாயமைந்தது.
இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப் பகுதியை ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்திற் சமுதாய சீர்திருத்தக் காலம் எனலாம். ஆசிரியர்களும் கல்விகற்ற குடும்பத்துப் பெண்களும் சமயத் தொடர்பான பிரசுரமுயற்சிகளி லீடுபட்டிருந்தோருமான இக்காலப்பகுதி நாவலாசிரியர்கள் பலர் சமுதாய சீர்திருத்தத்திற்குரிய வசன இலக்கிய வடிவம் என்ற வகையிலேயே 'நாவ'லைக் கருதினர்.
இக்காலப்பகுதி நாவலாசிரியர்கள் தமது நாவல்களுக்கு எழுதியுள்ள முன்னுரைகளிலும் சக நாவலாசிரியர்களுக்கு வழங்கிய அணிந்துரைகளிலும் தெரிவித்துள்ளவை அவர்களின் நோக்கத்தையும் நாவல் தொடர்பாக இக்காலப் பகுதியில் நிலவிய கருத்துணர்வையும் தெளிவாக்குகின்றன.
"சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக் கதையை எழுதத் துணிந்தேன். ஒரு விஷயத்தை உவமைகளாலும் ஒப்பனைகளாலும் மனதிற் பதியப் பண்ணுதல் இலகுவென்றது யாவருங் கண்ட நல்வழி. ஆகையினால் சில காரியங்களைப் போதனையாகவும் புத்திமதியாகவும் இப் புத்தகத்தில் அடக்க மனமேவப்பட்டேன்."[2]
என நொறுங்குண்ட இருதயம் நாவலின் ஆசிரியை திருமதி மங்களநாயகம் தம்பையா தமது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிறித்தவ சமய அடிப்படையிலான சமூக வாழ்கையே அவர்களது குறியீட்டில் சன்மார்க்க சீவியம் எனப்பட்டது. இராசதுரை (1924) நாவலில், அதன் ஆசிரியை திருமதி செம்பொற் சோதீஸ்வரர் செல்லம்மாள் தமது முன்னுரையாக அமையும் 'குறிப்பு' என்ற பகுதியில்,
"வாசிப்பவர்களின் இருதய கமலத்தை நல்வழிப்படுத்தும் அதிருசிகரமான இராசதுரையென்னும் இக் கதை தூர்த்தர், துஷ்டஸ்திரி, முதலியோரின் கொடிய சிந்தனையையும் அவர்களின் மர்மமான செய்கைகளையும் நன்கு வெளிப்படுத்தி அப்படிப்பட்ட பாவிகளோடு கூட்டுறவு செய்து வார்த்தையாடாமலும் அவர்களைத் திருஷ்டி கோசாரம் செய்யாமலும் புத்திசாதுரியத்தால் விலக்கி, சற்சங்கத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் செவ்வனேயடைந்து வாழும்படி என் சிற்றறிவிலுதித்த அனுபவத்தைக் கண்டு நவமாக எழுதப்பட்டது."
என்கிறார். இக் காலப் பகுதி நாவலாசிரியர்களின் இலக்கிய நோக்கிற்கு இவற்றை 'வகை மாதிரி'யாகக் கொள்ளலாம். நொறுங்குண்ட இருதயம் நாவலுக்கு 'நூற்பிரயோகம் வழங்கிய ஜே. ரி. அப்பாப்பிள்ளை, இராஜதுரை நாவலுக்கு நூன்முகமளித்தவரும் இக் காலப்பகுதி நாவலாசிரியரிலொருவருமான ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை முதலிய பலரும் நாவல் சமுதாய சீர்திருத்தத்திற்குரிய நீதிகளைப் போதிக்கும் இலக்கிய வடிவம் என்று கருதியே மதிப்பீடு செய்துள்ளனர். இக்கருத்திற்கமையச் சில நாவல்களின் தலைப்புக்கள் வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம், நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு, சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி, காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி முதலியனவாக அமைந்துள்ளமை மனங்கொள்ளத் தக்கது.
ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்றான ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தாலே தேசிய பண்பாடு நிலை தளரத் தொடங்கியிருந்த சூழ்நிலையும் பாரம்பரிய சமுதாய அமைப்பிற் புதிய கல்வி முறை ஏற்படுத்திய மதிப்பீடுகளும் இக்காலப்பகுதி சீர்திருத்தம் வேண்டி நின்றமையை உணர்த்தும். சுதேச நாட்டியம் பத்திரிகையின் ஆசிரியரான வசாவிளான் க. வேலுப்பிள்ளை (1860-1944) தமது யாழ்ப்பாண வைபவ கௌமுதி (1918) நூலிலே தெரிவித்துள்ள கருத்து இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கது.
"சீர்திருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல மரத்திற் புல்லுருவிகளைப் போலச் சில மோசங்களும் சிறிது சிறிதாய்ப் பெருகுவதைக் காண்பது துக்கமான சம்பவம். மதுபானம் பாவித்தல், அலங்கார மாளிகை, விலைபெற்ற வர்ணப் பட்டாடை முதலியவைகளில் அதிக பணத்தைச் செலவிடுதல், வாணவேடிக்கை, கூத்து முதலியவைகளுக்கு வீண் செலவு செய்தல், ஐரோப்பிய நாகரிக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் அழிக்கும் குருவிச்சைகளாம்."
இத்தகைய கருத்தோட்டம் நிலவிய காலப் பகுதியிலே தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் ஏற்பட்டு வந்த விழிப்புணர்ச்சியைப் பாவலர் தெ. ச். துரையப்பாபிள்ளையின் (1872-1929) கவிதைகளிலும் சமகால ஈழத்து நாடகாசிரியர்களின் நாடகங்களிலும் அவதானிக்க முடிகின்றது. சமூகத்தில் நிலவிய ஊழல்களான சூது, சீதன முறை, சாதிப் பாகுபாடு, கைக்கூலி முதலியவற்றைக் கடிந்து தெ. அ. துரையப்பாபிள்ளை கவிதைகள் புனைந்தார்.[4] நாடகத் துறையிற் சமய தத்துவ அறப்போதனைக் காலமான இக்காலப் பகுதியிலே சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்துப் புராணக் கதைகளும் தத்துவக் கருத்துக்களும் சமகால சம்பவங்களும் நாடகங்களாக எழுதப்பட்டன.[5]
இக்காலப் பகுதியிலே தமிழ் நாட்டிலிருந்து வந்த பெருந்தொகையான நாவல்கள் ஈழத்தில் வாசிக்கப்பட்டன. இப்படி வந்தவற்றுட் பெரும்பாலானவை ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜு முதலியோரின் பரபரப்பும் மர்மமும் நிறைந்த நாவல்களாகும். ஆங்கிலத்தில் 'ரெயினால்ட்ஸ்' (G.W.M. Reynolds) எழுதிய இவ்வகை நாவல்களைத் தழுவியும், தமிழாக்கியும் எழுதப்பட்ட இவை பொழுது போக்கு வாசகர்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தன. இவற்றுட் குப்புசாமி முதலியாரின் மொழிபெயர்ப்பு நாவல்கள் மனிதனுடைய கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் இயல்பின என்பர்.[6] இவ்வகை நாவல்களுக்கெதிரான கருத்தொன்று இக் காலப் பகுதியில் உருவானதை உணர்த்தும் வகையில் 1924ஆம் ஆண்டில் இந்துசாதனம் பத்திரிகையில் 'குமரன்' என்பார் 'நாவல் வெள்ளம்' என்னும் தலைப்பில் எழுதிய குறிப்பு அமைகின்றது.
"அன்பர்களே! உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் மிகவும் அருமையானது. ஆகவே.... புண்ணிய நூலல்லாத தீய நாவல்களைத் தீக்கிரையாக்குங்கள். இந் நாவல் வெள்ளத்தைத் தடுத்தற்கு நாம் த்தகைய அணை கோலுதல் வேண்டும்? முள்ளை முள்ளாற் களைந்தெறிவது போல், இத்தீய நாவல் வெள்ளத்தை நல்ல நாவல்களை வெளியிட்டே தடுத்தல் வேண்டும். ஆங்கிலமும் தமிழும் பாங்குடன் கற்ற தமிழாசிரியர்கள் நல்ல நாவல்களை எழுதி வெளியிடல் வேண்டும். ஆகவே நாவல்களெழுதுதல் பாமரர் கரத்திலிருந்து பண்டிதர் கரத்திற்கு மாறுதல் வேண்டும். தீய நாவல்களை வாசித்தல் கூடாது என்று பிள்ளைகளைப் பெற்றோரும் மனைவியை நாயகனும் மாணவனை ஆசிரியரும் அழுத்தமாகக் கண்டிக்க வேண்டும்."[7]
தரமற்ற நாவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தரமான - சமூகப் பயன்பாடுள்ள - நாவல்களைப் படைக்க வேண்டுமென்று நடுத்தர வர்க்க அறிஞரை நோக்கிச் சமூகம் வேண்டுகோள் விடுத்த சூழ்நிலையை உணர முடிகின்றது. இவ்வேண்டுகோளிலும் சமுதாய சீர்திருத்த உணர்வே அடிப்படையாகவுள்ளமை தெளிவு.
இத்தகைய பகைப்புலத்தில் சி. வை. சின்னப்பபிள்ளையின் நாவல்களை அடுத்து முப்பதுகளின் முடிவுவரை ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் எழுதப்பட்டன. தொடக்கத்தில் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு நடப்பியல்பு நாவல்கள் எழுந்தன. அவற்றை அடுத்து மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் பொருந்திய நாவல்கள் வெளிவந்தன. இந்துசாதனம், சன்மார்க்க போதினி, சத்திய வேத பாதுகாவலன் முதலிய பத்திரிகைகளிலே தொடர்களாக வெளிவந்த சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவை நூல் வடிவிலேயே வெளிவந்தன. 1930ஆம் ஆண்டை அடுத்து வெளிவரத் தொடங்கிய செய்திப் பத்திரிகைகளான ஈழகேசரி, வீரகேசரி முதலியன ஆரம்பகாலத்தில் வாசகரசனை நோக்கில் தொடர் கதைகளை வெளியிட்டன. முப்பதுகளின் முடிவுவரை இவற்றிற் பிரசுரமானவற்றுட் பெரும்பாலன மர்மப்பண்பும் சம்பவச் சுவையும் வாய்ந்தவையேயெனலாம்.
நடப்பியல்பு நாவல்கள்
சமகால சமுதாயப் பிரச்சினைகளைக் கதைப் பொருளாகத் தேர்ந்து நடப்பியல்புக்குப் பொருந்தும் வண்ணம் கதையை மைத்து வளர்த்துச் சென்று நிறைவு செய்த நாவலாசிரியர்கள் என்ற வகையில் திருமதி மங்களநாயகம் தம்பையா, எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய கல்விக் குடும்பத்திற் பிறந்த மங்களநாயகம் தம்பையா மதப் பிரசார நோக்கில் அநுபவக் களஞ்சியம் என்ற நூலை எழுதியவர்.[8] இவர் நொறுங்குண்ட இருதயம் (1914), அரியமலர் (1926) ஆகிய இரு நாவல்களை எழுதியவர். அரியமலர் முழுவடிவிற் கிடைக்கவில்லை.
நொறுங்குண்ட இருதயம் நாவல் கணவனது கொடுமைகளுக்காளாகி இதயம் நொறுங்குண்ட கண்மணியென்ற நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்ணின் அவல வாழ்க்கையைப் பொருளாகக் கஒண்டது. பொருளாசை, அந்தஸ்துணர்வு என்பன இன்ப வாழ்க்கைக்கு எவ்வாறு தடையாகவுள்ளன என்பதையும் அன்பில்லாத வாழ்க்கை சுமையாக அமைவதையும் எடுத்துக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. அன்பில்லாத கணவனாற் கொடுமைப்படுத்தப்பட்ட கண்மணி உளம் நைந்த நிலையில் கிறிஸ்தவ பாதிரியாரொருவரின் இதமான போதனைகளால் அமைதியடைகிறாள்; வாழ்க்கையின் இறுதிவரை கிறிஸ்தவ மதத்தைக் கடைப்பிடிக்கிறாள். அவளது உயிர் பிரியும் வேளையிற் கணவனான அருளப்பா அவளின் நற்பண்புகளை உணர்ந்து திருந்தி வாழ்கிறான். கண்மணியின் தோழி பொன்மணியும் அவளுடைய காதலன் பொன்னுத்துரையும் சமூகத்தின் பொருளாசை, அந்தஸ்துணர்வு ஆகியவற்றால் பல இடர்களை அனுபவித்து ஈற்றில் இணைகின்றனர்.
சமகால சமூகத்திற் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுப்பதாக அமையும் இந்த நாவலிலேதான் முதன் முதலில் ஈழத்து நடுத்தர வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள கதைமாந்தரைக் காண்கிறோம். 'வகை மாதிரி'யாகப் படைக்கப்பட்ட வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் கதை மாந்தர் போலல்லாமற் பண்பு வளர்ச்சியுடைய கதைமாந்தராக இவர்கள் அமைகின்றனர். நடப்பியல்பு நாவலுக்கான இன்றியமையாத பண்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பமுதல் இறுதி வரை உணர்ச்சிகளிற் சிக்கி நிறைவுதேடும் பாத்திரமாக அமைகிறாள் கண்மணி. அருளப்பாவும் அப்பாத்துரையும் எதிர்நிலைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டனர். அருளப்பாவின் பாத்திரப் பண்பில் வளர்ச்சி காணப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு விரவிய தராதர ஈழத்துத் தமிழ் நடை நடப்பியல்புக்கு வலுவூட்டுகின்றது.
"...வயோதிகரின் மாடுகள் வெருண்டோடி முன்சென்ற வாலிபனுடைய ஒற்றைக் கரத்தையில் மோத, அக் கரத்தை குடைக்கடித்து பக்கத்திலுள்ள கானுக்குள் விழுந்தது. ... கரத்தைக்காரன் தங்களுக்கு அபாயம் நேரிடாது தப்பிக்கொள்ளும் பொருட்டு மணற்றரையான ஓரிடத்தைக் கண்டு மாடுகள் அங்கிருக்குமாறு நாணயத்தை அப்பக்கமாகச் சுண்டப்பிடிக்க அவைகள் மணலில் ஓடிக்கொள்ளச் சக்தியற்று நின்றுவிட்டன. மாடுகள் வெருண்டு புகைவானமாய் ஓடுவதைக் கண்ட கண்மணியும் அவள் தாயாரும் தெய்வமே தெய்வமே என்று பதறிக் கத்தினார்கள்."[9]
மண்வாசனையுடன் கூடிய சொல்லாட்சிக்கு எடுத்துக் காட்டாக இவ் வருணனைப் பகுதி அமைகின்றது.
சமகால நடுத்தர வர்க்கத்துப் பெற்றோரின் மனவியல்பைப் புலப்படுத்தும் வகையில் ஆசிரியை,
"ஓர் கமக்காரனின் மகளாகிய கண்மணிக்குக் கிடைத்த மாப்பிள்ளை போலும், தம் மகளுக்கு விசேஷமான மாப்பிள்ளை எடுக்கவேண்ய்மென்பதே பெற்றோரின் முழுவாஞ்சையுமாயிருந்தது."[10]
என்கிறார். பொன்மணியின் பெற்றோர் அவளது காதலன் பொன்னுத்துரையை, "சடங்கு செய்வதானால் தாலி, கூறை முதலிய செலவுகட்குக்கூட வழியற்றவன்"[11] என உதாசீனம் செய்கின்றனர்.
சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உதாரணங்களால் உணர்த்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நாவலிற் சன்மார்க்கம் என்றதன் பொருள் கிறித்தவ சமயம் தழுவிய வாழ்க்கைநெறி என்பது தெளிவாகின்றது.
"கிறிஸ்துமார்க்க வளர்ச்சிக்குரிய காரியங்களில் மற்றோருக்கு உபயோகமாகவிருக்க முன்னேறிவரத் தெண்டிக்க வேண்டுமென்பதே நம் வாஞ்சை."[12]
என ஆசிரியை அநுபவக்களஞ்சியம் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளமை இத் தொடர்பில் நோக்கத்தக்கது. இவரது சமயப் பிரசார நோக்கிற்குக் கண்மணியென்ற பாத்திரத்தின் மனவியல்பு நன்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. கிறித்தவ மிசனரிமார் யாழ்ப்பாணக் கிராமங்களிற் சமயப்பிரசாரம் செய்துவந்த சூழ்நிலை கதைகட்குட் புலனாகின்றது. கணவனது கொடுமைகளால் மனம் நைந்திருந்த கண்மணியை நோக்கிப் பாதிரியார்,
"கர்த்தருக்குப் பிரியமான இருதயம் இங்கேயிருக்கிறது. அவரை ஏற்றுக் கொள்ளுங்காலம் சீக்கிரம் வரும் ..... மகளே; கர்த்தராகிய இயேசு இரட்சகரை இன்று தொட்டு உன் அன்பான பிதாவாக ஏற்று அவரின் வழி நடக்க மாட்டாயா?"[13]
எனப் போதிக்கிறார். கண்மணி தனது துயரங்களுக்குக் கிறித்தவ மதத்தில் அமைதி காண முயன்று இறுதிவரை கிறித்தவப் பெண்ணாக வாழ்கிறாள். அவளின் மரண வேளையில் வேதப் புத்தகத்தின் 46ஆம் சங்கீதம் வாசிக்கப்படுகிறது.[14] அவளின் குடும்பத்தினர் அவளிறந்த பின்னர் கிறித்தவ மதம் சார்கின்றனர்.
ஆசிரியை சமகால சமூகப் பிரச்சினைகு சமய உணர்வில் அமைதி காண முயல்வதன் மூலம் நடப்பியல்போடு பிரசாரத்தைஇணைத்துள்ளார். பிரச்சினைகளிலிருந்து விலகியோடும் இயல்பு புலனாகின்றது. தமிழ் நாட்டின் ஆரம்பகால நாவலான கமலாம்பாள் சரித்திரமும் இக் குறைபாடுடையதே.[15] சமூகப் பிரச்சினைகளுக்குத் தர்க்கரீதியான தீர்வு நாடும் வகையில் இன்று வளர்ந்துள்ள சமூகவியலறிவைக் கொண்டு ஆரம்பகால நாவல்களை நோக்கும் போது அவற்றில் இவ்வகைக் குறைபாடுகள் காணப்படுவது இயற்கையே. ஆயின் அன்றைய அறிவுச் சூழலையும் சமூகப் பகைப் புலத்தையும் கருத்திற்கொண்டு நோக்கினால் இவ்வகைக் குறைபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பது புலனாகும்.
ஈழத்தின் ஆரம்பகால நாவல்களிலொன்றான ஊசோன் பாலந்தை கதையின் பதிப்பாசிரியரும் நாவல், நாடகம், கவிதை முதலிய துறைகளிற் பல நூல்களைப் பதிப்பித்தவருமான அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை (1857-1921) சுந்தரன் செய்த தந்திரம் (1918), அழகவல்லி (1926) ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். அழகவல்லி சன்மார்க்கபோதினிப் பத்திரிகையிலே தொடராக வெளிவந்து நூலுருப்பெற்றதென அறியப்படுகிறது. கிறித்தவ சமயப்பிரசுரங்களை வெளியிடுவதில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் சமகால யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்திற் காணப்பட்ட ஊழல்களை நகைச்சுவையுடன் கண்டிக்க முயன்றுள்ளார். என்பதைச் சுந்தரன் செய்த தந்திரம் நாவல் உணர்த்துகின்றது.
தொல்புரத்தைச் சேர்ந்த போலித் துறவியான சுந்தரன் சமூகத்தை ஏமாற்றி வாழ்கிறான். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று ஏமாற்றித் திரியும் இவன் ஈற்றில் 'யமுனாரி' ஏரியில் வீழ்ந்து இறக்கின்றான். ஏமாற்றும் தந்திரமும் நீண்ட நாட்களுக்குப் பலிக்காது என்ற பொருளில் அமைந்த இச் சிறு நாவலிற் பழமொழிகள் விரவியுள்ளன.
"இடங்கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான்"[16]
"வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும்
பூசுரரும் ஒருவருக்கொருவர் பொருந்தார்"[17]
"தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுமில்லை உரையுமில்லை"[18]
போன்ற பழமொழிகள் நகைச்சுவை நோக்கில் இடம்பெறுகின்றன.
அழகவல்லி நாவல் யாழ்ப்பாணப் பிரதேச மழவர் குடும்பத்தினருக்கிடையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டது. சண்பகமழவனின் மனைவியான அழகவல்லி தான் உயர் குடும்பத்தவள் என்ற மமதையீல் கணவனையும் மாமியையும் உதாசீனம் செய்கிறாள். குடும்ப மகிழ்ச்சி சீர்குலைகின்றது. பொறாமையாற் பிறர்க்குத் தீமை செய்ய முயன்று ஈற்றிலே தானே அதற்குப் பலியாகின்றாள். 'பிறர்க்கிடு பள்ளம் தான் விழுபள்ளம்' என்ற பழமொழிப் போதனையைப் புலப்படுத்தும்வகையில் எழுதப்பட்ட இந் நாவல் அக்காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே தமக்குட் சாதி ஏற்றத்தாழ்வு பார்க்கும் உளநிலை கொண்டிருந்தமையைப் புலப்படுத்துகின்றது.
சுந்தரன் செய்த தந்திரம் நாவல் போலவே பழமொழிகளை மிகுதியாகக் கையாண்டு எழுதப்பட்ட இந் நாவலில் யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சு வழக்கு பயின்றுள்ளது. சமூகத்தின் பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் ஆசிரியர் நன்கு அவதானித்துள்ளார். கல்யாண வீட்டிற்கு வர மறுத்த உறவினரைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும் முயற்சியிற் 'சாராயம்' வகித்த முக்கியத்துவத்தை வாசிக்கும்போது அன்றைய கால கட்ட சமூக உணர்வோட்டங்களை உய்த்துணர முடிகின்றது. உரும்பிராய்ச் சாராயம் 'வைரவர்' என்ற குழூஉக்குறி மூலம் சுட்டப்படும் முறை நகைச்சுவை பயப்பது.
ஆசிரியருடைய சித்திரிப்புத் திறனைப் புலப்படுத்தும் வகையிலும் அக் காலகட்ட சமூக மதிப்பீடுகளையுணர்த்தும் வகையிலும் பின்வரும் ஊர்வலக் காட்சி வருணனை அமைந்துள்ளது.
"பெண் வீட்டிலும் இதற்குத் தோல்வி போகாமல் சிறப்பான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மணமகன் வீட்டிற்குத் தஞ்சாவூரினின்று முதல் நாள் வந்த பேர்பெற்ற தங்க நாகசின்னக்காரன் அழைக்கப்பட்டான். மணமகள் வீட்டிற்குத் தொல்புரத்திலிருந்து வந்த வெள்ளி நாகசின்னக்காரன் அழைக்கப்பட்டான். அத்தருணம் புஷ்பத் தண்டிகையில் மணமகனை ஏற்றி பாவாடை விரித்து பன்னீர் தெளித்துச் சிலர் முன்செல்ல, பலவகை ஆகாய வாணங்கள் ஆகாயத்தை ஊடுருவிச் செல்ல, தோட்டாகாசம் சுழன்று சுழன்று முகில்களைப் பிளந்து செல்ல, சக்கரம், எலிவாணம், நிலவிறிசு, பகல்வெற்றி ஆகியவைகள் கண்களின் ஒளிகளை மழுங்கச் செய்ய, தீவட்டி சூலவிளக்கு, வௌவால் விளக்கு, பந்த விளக்குகளாதியன பகல் போலொளி செய்ய, நட்டுவர்தம் சாமர்த்தியத்தைக் காட்ட, அவருள் தவிற்காரனோ கட்டையாய் வெட்டப்பட்ட தன் மயிர் நட்டுக் கொண்டும் மட்டுப்பட்டும் சரிந்தும் விரிந்தும் குவிந்தும் தாளத்துக்குத் தக்கபடி ஆடியலையத் தவிலை முழக்க இவ்வேடிக்கைகளை 'எட்டியெட்டிப் பார்ப்பாரும் ஏணிவைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலை குனிந்து நின்று பார்ப்பாரு'மாய்க் காட்சி பார்ப்பதில் சனங்கள் நிற்க அன்று நடந்த காட்சி முன்னோர்போதுமிலா மாட்சியாயிருந்தது."[19]
ஏறத்தாழ அரை நூற்றாண்டுகட்கு முற்பட்ட இவ் வருணனை இன்றைய காலச் சராசரி நாவல்களின் வருணனைகளை விடத் தரமாயுள்ளதெனின் மிகையாகாது.
கிறித்தவ சமயப் பிரசார நோக்கில் ஞானச் சகோதரர் யோண் மேரி என்பவர் அருந்தவக் கனிகள் என்னும் தலைப்பில் சத்திய வேத பாதுகாவலன் பத்திரிகையில் தொடராக எழுதிவந்த கதையின் முதற்பாகம் புனிதசீலி என்ற தலைப்புடன் நூலாக 1927இல் வெளிவந்தது. கர்த்தரைப் பணியும் கிறித்தவ சமய பக்தையான புனித சீலியும் அவளின் கணவன் ஞானேந்திரனும் இன்ப வாழ்க்கை வாழ்வதைக் காணப் பொறுக்காமல் ஞானேந்திரனின் அன்னை கொடுமை புரிகிறார். கர்த்தரருளால் யாவும் இன்பமாக நிறைவடைகின்றன. இந்நாவலில் விவிலிய வேதத்திலுள்ள பல செய்திகளும் இயேசுபிரானின் திருப்பாடுகள் தொடர்பான வருணனைகளும் இடம் பெற்றுள்ளன. இந் நாவலின் இரண்டாம் பாகம் அருமைநாதன் என்னும் தலைப்புடன் 1930இல் வெளிவந்தது. மூன்றாம் பாகம் இதயரத்தினம் என்னும் தலைப்புடன் கையெழுத்துப் பிரதியாக 1935இல் எழுதிமுடிக்கப்பட்டது என அறியப்படுகிறது.[20]
இந்துசாதனம் பத்திரிகையின் ஆசிரியராகவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியாசிரியராகவும் திகழ்ந்த மரபுவழிச் சைவத் தமிழறிஞரான ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை இந்துசாதனத்தில் உலகம் பலவிதம் என்ற தலைப்பில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார்.[21] சமகாலச் சமூகப் பிரச்சினைகளையும் சீர்கேடுகளையும் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுவந்த இவற்றுள் மூன்று கதைத் தொடர்கள் நாவலாக நூலுருப் பெற்றுள்ளன. காசிநாதன் நேசமலர் (1924), கோபால நேசரத்தினம் (1926-27), துரைரத்தினம் நேசமணி (1927-28_ ஆகிய இம் மூன்று நாவல்களில் முதலிரண்டும் சமய நோக்கும் மூன்றாவது பொதுவான சமூக சீர்திருத்த நோக்கும் உடையவை.
கண்டி சிறீ S. செல்வநாயகமவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட 'நேசமலர்' என்னுங் கதையை ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பெற்றது.'[22]
எனப்படும் காசிநாதன் நேசமலர் தொடர்கதை நூலுருப் பெறும்பொழுது புதிதாக அறாம் ஏழாம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டன.
மானிப்பாயைச் சேர்ந்த நேசமலரின் கணவனான காசிநாதன் கண்டியிற் கிறிஸ்தவ மத போதகர் நல்லதம்பியின் மகள் எதெல் ஜோதிமதியிடம் காதல் கொண்டு தனது மனைவியைப் புறக்கணித்து அவளுடன் வாழத் தொடங்குகின்றான். நேசமலர் கணவனைத் தேடிச்சென்று கதிர்காமக் கந்தனருளால் அவனை அடைகிறாள். கிறிஸ்தவ சமயப் பிரசார முயற்சிகள் சைவக் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்தும் வகையில் எழுதப்பட்ட இக்கதையில் ஆசிரியரது முருகபக்தியே விஞ்சிநிற்கிறது.
கோபால நேசரத்தினம் நாவல் 1926-27இல் தொடராக வெளிவந்து 1927இல் நூலுருப் பெற்றது. இதன் இரண்டாம் பதிப்பு 1948ல் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பின் நூன் முகத்திலே இந் நாவல் 1921 இலிருந்து பாகம்பாகமாக இந்து சாதனத்தில் வெளிவந்ததென்ற குறிப்புளது.[23]
சிறு வயதில் தந்தையை இழந்த கோபாலன் என்ற சைவக் குடும்பத்துச் சிறுவன் கிறித்தவ பாடசாலை யொன்றிற் கல்வி பயின்று வருகிறான். அவனது திறனைக் கண்ணுற்ற பாதிரியாரும் போதகரும் மதமாற்றம் செய்விக்கும் முயற்சியி லீடுபடுகின்றனர். இந்நோக்கில் குட்டித்தம்பிப் போதகர் இளம் விதவையான தமது மகள் நேசரத்தினத்துடன் கோபாலனைப் பழக விடுகிறார். காலப் போக்கில் இப் பழக்கம் காதலாக மாறுகின்றது. கோபாலனின் தாயாகிய வள்ளியம்மை மிகுந்த சவப் பற்றுள்ளவர். இவரது கட்டுப்பாட்டுக்கமையக் கோபாலன் மதம் மாற மறுக்கிறான். எனவே முடிவில் நேசரத்தினம் மதம் மாறிக் கோபாலனை மணம் முடிக்க வேண்டியவளாகிறாள். பாதிரியாரின் முயற்சி தோல்வியடைகிறது. நேசரத்தினம் சைவப் பெண்ணாக மாறிக் கோபாலனைக் கரம் பற்றுகிறாள்; குட்டித் தம்பிப் போதகரை பாதிரியார் பதவியை விட்டு விலக்குகிறார்.
பிற கல்வி வசதிகளற்ற நிலையிலே தம்முடைய கல்விக் கூடங்களுக்கு வரும் ஏழைப்பிள்ளைகளை மதம் மாற்றும் முயற்சியிலீடுபட்டிருந்த கிறிஸ்தவ மிசனரியினரின் சமயப் பிரசார நோக்கைக் கண்டிக்கும் வகையில் எழுந்த இந்நாவல் அக்காலப்பகுதியில் நிலவிய சமயப் போட்டிச் சூழ்நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆங்கிலேயர் ஈழத்தை ஆளத்தொடங்கியபோது கிறித்தவ சமயம் பரப்புவதிற் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகப் பல்வேறு மிசனரி இயக்கங்கள் ஈழத்திற்கு வந்தன. இவை ஈழத்தின் பல பாகங்களிலும் கல்விக்கூடங்களை நிறுவிச் சமயக் கல்வியும் பொதுக்கல்வியும் போதித்தன. கல்வியிலும் உயர்பதவியிலும் ஆசைகொண்ட பிள்ளைகளை மதமாற்றம் செய்தன.
"பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஈழத்தவர் சிலர் 'நவீனமானது', 'உயர்தரமானது' என்று கிறித்தவத்தின்பால் ஈர்க்கப்பட்டனர் என்பதிற் சந்தேகமில்லை. பாடசாலைகள் அநேகமாக மிசனரி நிறுவனங்களால் நடத்தப்பட்டதும் அரசாங்க சேவைகளுக்கு மேலைத்தேசக் கல்வி ஒரு 'கடவுச்சீட்டு' ஆக இருந்ததும் மிக முக்கியமானவையாகும்"[24]
என விருசின்ஸ் (Wriggins, W. H.) இச்சூழ்நிலைய விளக்குவர். இவ்வாறான கிறித்தவ சமயப் பிரசார முயற்சிகளுக்கெதிராகப் பௌத்தரும் இந்துக்களும் நடத்திய இயக்கங்களை அநாகரிக தர்மபால, சிறீலசிறீ ஆறுமுகநாவலர் ஆகியோர் வழிநடத்தினர். விவிலிய வேதம் போதிக்கும் பாடசாலைகளுக்கு மட்டும் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது பற்றிப் பௌத்த கமிட்டியினரின் அறிக்கை (1867) குறைகூறியுள்ளமை[25] இங்கு நோக்கத்தக்கது. ஆறுமுகநாவல்ர் யாழ்ப்பாணச் சமய நிலை நூலிற் கூறியுள்ளவற்றையும் இத்தொடரில் நோக்குவது பொருத்தமானது.
"..... இத்தேசத்திலுள்ள வறியவர்கள் அநேகர் சைவ சமயமே மெய்ச்சமயமென அறிந்தும், அன்னம், வஸ்திரம் முதலியவற்றைப் பெற்றுப் படிக்கும் பொருட்டும், உபாத்தியாயருத்தியோகம், பிரசங்கி உத்தியோகம் முதலிய உத்தியோகங்களைச் செய்து பணம் வாங்குதற் பொருட்டும், கவர்மெண்டு உத்தியோகங்களினிமித்தம் துரைமார்களிடத்தே சிபாரிசு செய்விக்கும் பொருட்டும், கிறிஸ்து சமயப் பெண்களுள்ளே சீதனமுடையவர்களையும் அழகுடையவர்களையும் விவாகம் செய்யும் பொருட்டும் கிறிஸ்து சமயத்திலே பிரவேசிப்பாராயினார்கள்."[26]
கோபாலனை மதம் மாற்ற முயன்ற குட்டித்தம்பிப் போதகர் பிரசங்கியுத்தியோகத்தின் பொருட்டு மதம் மாறியவர். இவர் தம் மகள் நேசரத்தினத்தைக் கோபாலனுடன் பழக விடுவது அழகுள்ள பெண்ணை மணம் புரியும் ஆவலைத் தூண்டி மதமாற்றம் செய்விக்கும் நோக்கிலேயாம். காசிநாதன் நேசமலர் நாவலிற் காசிநாதன் எதெல் ஜோதிமதியின் அழகில் ஈடுபடுவதும் இத்தொடர்பில் நோக்குதற்குரியது. ஆறுமுக நாவலர் குறிப்பிட்ட சூழ்நிலை அவருக்குப் பின்னரும் அரை நூற்றாண்டுக் காலம்வரை மாற்றமடையவில்லை என்பதைத் திருஞானசம்பந்தபிள்ளையின் நாவல்கள் உணர்த்துகின்றன.
கோபாலனை மதம் மாறவிடாமல் நேசரத்தினத்தை மதம் மாறச் செய்தமை ஆசிரியரது இலட்சியத்தை உணர்த்துகின்றது. ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் சமகாலத்திற் கிறித்தவர்களது மதமாற்ற முயற்சி ஒரு பொதுப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இச் சமூகப் பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகி இலக்கிய வடிவம் தந்தவர்கள் சிங்கள எழுத்தாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. பியதாச சிரிநேனவின் ஜயதிஸ்ஸ ரோஸ லிண்ட் ஹேவத் வாஸனாவந்த விவாஹய (1906) நாவலை இதற்கெடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.[27] தமிழில் இதனைக் கதைப்பொருளாகத் தேர்ந்தெடுத்த முதல்வர் என்ற சிறப்பு ம. வே. திருஞானசம்பந்தபிள்ளையையே சாரும் எனலாம். தமிழ் நாட்டு எழுத்தாளரிற் புதுமைப்பித்தன் ஒருவர் மட்டுமே ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இப்பிரச்சினையைப் புதிய கூண்டு என்ற தலைப்பிற் சிறுகதை வடிவில் அணுகினார்.[28]
'பிரச்சினை நாவல்' என்ற உணர்வுடன் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை எழுதியிருக்க முடியாதெனினும் தாம் வாழ்ந்த காலத்தின் முக்கிய சமூகப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டு எழுத முயன்றார் என்ற வகையிலும் தம்மளவிலே அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றுள்ளார் என்ற வகையிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. ஆசிரியன் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமா வேண்டியதில்லையா என்ற முரண்பாட்டிலே, தீர்வுகாண வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவராகவே ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை தம்மைக் காட்டிக் கொள்கிறார். மணம் முடிப்பதற்காகக் கிறிஸ்தவர்கள் மதன் மாறுவதென்பது அன்றைய கால கட்ட நடப்பியல்புக்குப் பொருந்துவதல்ல என்ற பொழுதும் நேசரத்தினம் என்ற பாத்திரத்தின்மீது தமக்குகந்த தீர்ப்பை இவர் சுமத்தியுள்ளார்.
மகனை மதம் மாறாது தடுக்கும் சைவப் பற்றுள்ள தாயாகிய வள்ளியம்மை மூலம் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை மற்றுமொரு மௌனப் புரட்சியையும் செய்து விடுகிறார். விதவை மறுமணம் என்ற சமூக சீர்திருத்தக் கருத்தைச் சீரணித்துக் கொள்ள முடியாத வள்ளியம்மையென்ற சமயப் பற்றுள்ள தாயையும் இளம் விதவையான நேசரத்தினத்தை மருமகளாக ஏற்க வைத்துள்ளார். தமிழ் நாட்டில் ஏறத்தாழ இதே காலப்பகுதியிலேதான் விதவை மறுமணக் கருத்தோட்டம் நவீன தமிழிலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கியதென்பதும் வ. ரா. (வ. ராமசாமி ஐயங்கார்), மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் தத்தம் எழுத்துக்களில் இக்கருத்தைப் புலப்படுத்தினரென்பதும் குறிப்பிடத்தக்கன.[29]
துரைரத்தினம் நேசமணி நாவலின் நூன்முகத்திலே,
"இதன்கண் சீதனத்தால் வரக்கூடிய பிணக்கு, மதுபானத்தால் வருங்கேடு, தீயவர் சகவாசத்தால் நேரும் அநர்த்தம், பரத்தையர் சேர்தலால் வரும் பழி முதலியன உதாரணமுகத்தான் விளக்கப்பட்டுள்ளன. இதனை வாசிக்கும் பெண்பாலார்க்கும் பயன்படும் வண்ணம் பதிவிரதாதர்மம், நாயகபக்தி முதலியன நன்கு விளக்கப்பட்டுள்ளன."
என நோக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரான துரைரத்தினம் திருமணப் பேச்சின் போது கூறியபடி தம் மாமனார் சீதனம் தரவில்லையென்ற காரணத்தை முன்வைத்து மனைவி நேசமணியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புகிறார். கணவனைப் பிரிந்திருத்தல் அழகன்றெனவுணர்ந்து நேசமணி கணவன் வீட்டுக்கு மீள்கிறாள். அவள் வந்து சேருமுன்பே துரைரத்தினம் தாம் தொழில் செய்யும் நகருக்குப் போய்விடுகிறார். அங்குத் தீயவர் சகவாசத்தால் மதுப்பழக்கமும் பிறபெண் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்கிறார். முடிவில் மனைவியின் நற்பண்புகள் கணவனைத் தவறான பாதையினின்று மீட்கின்றன. முன்கோபக் காரரான துரைரத்தினம் இயல்பிலே நற்பண்பினரென்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளே அவரைத் தவறான வழியில் இட்டுச் சென்றன என்றும் கருதத்தக்க வகையிற் பாத்திரப் படைப்பு அமைந்துள்ளது. கற்புள்ள தமிழ்ப் பெண்ணுக்கு நேசமணி ஒரு வகைமாதிரி எனலாம்.
ஆசிரியர் கூற்றாக மையும் இந்நாவலின் இடையே 'பழையனூர் நீலி கதை' நேசமணி வாயிலாகக் கூறப்படுகின்றது.[30] கதைக்குட் கதை கூறும் இம்மரபு பஞ்சதந்திரம், இதோபதேசம் முதலிய கதைமரபுகளின் தாக்கத்தால் அமைந்ததெனலாம். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்திலும் இப் பண்பு காணப்படுகின்றது என்பது நோக்கற்பாலது. சைவ சித்தாந்தக் கருத்தை இயற்கைக் காட்சியிற் பொருத்திக் காணும் உவமைநயம் பொருந்திய பின்வரும் வருணனை இவர் கையாண்ட உரைநடைக்கு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.
"பெருக்கு நேரமாகவிருந்த படியினாற் சமுத்திரத்தின் அலைகள் அரைப் பனையுயரம் வரையில் எழுந்து சுருண்டு நுரையைச் சிந்திக்கொண்டு இரைந்தபடி கரையிற் பெருகி மென்மேலும் சென்று மீண்டு கடலிற் போய்க் கொண்டிருந்தன. இங்ஙனம் அலைகள் மீண்டு செல்லும் போது தாம் முந்தி அள்ளிக் கொண்டுவந்த நண்டுகளைக் கரையில் விட்டுப்போக, அந் நண்டுகள் எங்ஙனஞ் செல்வதென்றறியாது தியங்குவது, தம்மை நம்பி வந்தவர்களை அந்தரவழியில் விட்டுச் செல்லும் கீழ்மக்களின் செயலுக்கு திருஷ்டாந்தமாகவிருந்தது. இவ்வாறு நின்று தியங்கிய நண்டுகளைப் பின்னர் ஒரு பெருந்திரை வந்து கரையில் மோதி மீண்டு போகு போது அள்ளிக்கொண்டு கடலுட் செல்லுதல், வினைகளையனுபவிக்கும்படி ஆன்மாவைப் பிறந்துழலவிட்ட இறைவன், இருவினையொப்பு மலபரிபாகமென்னுமிவைகளை அவ்வான்மா அடையுங்காலத்து அந்த இறைவனே அவ்வான்மாக்களை மார்ச்சார சம்பந்தமாய் (பூனை குட்டிகளைக் கௌவிச் செல்வதுபோல) வந்து அடிமை கொள்வதை ஞாபகப்படுத்தியது."[31]
சமூகத்திற் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காஅண்பதற்குப் பெண்குலத்தின் நற்பண்புகளைத் துணைக்கொள்ள முயல்வதை மூன்று நாவல்களிலும் காணலாம். இதனாற் போலும் மூன்று நாவல்களின் கதைத் தலைவியரும் ஏறத்தாழ ஒத்த பண்பினராகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலக் கல்வி கற்ற நடுத்தர வர்க்க வாலிபர்கள் பலர் தமது புதிய பழக்கவழக்கங்களாற் குடும்ப நலனைப் பேணாது திரிந்தமையையும், தொழில்முறைத் தேவைகளின் பொருட்டு நகரவாழ்க்கையை மேற்கொண்டோர் சமூகத்தின் பழமையான பண்பாடுகளைக் கைவிட்டு ஒழுக்கக் குறைவாக நடந்து கொள்வதையும் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை அவதானித்துள்ளார். இதனாற் பெண்களை முன்வைத்துச் சீர்திருத்தம் பேச முன்வந்துள்ளார்.
"ஒரு சாதியாரின் பழைய சீர்திருத்தத்தையும் புராதன பழக்க வழக்கங்களையும் மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்ப்பவர்கள் பிரதானமாகப் பெண்பாலினரேயாவரென அறிவுடையோர் கூறுகின்றனர். ஆண்பாலினராயுள்ளோர் நவீன கல்வி காரணமாகவும் அந்நிய தேச சஞ்சாரம் காரணமாகவும் சிற்சில சமயங்களிற் றங்கள் சாதிக்குரிய ஆசாரங்களை மறந்து அந்நிய சாதியினருக்குரிய ஆசாரங்களைக் கைக்கொள்ள நேர்ந்த சமயத்தும், அவர்கள் தங்கள் ஜநநதேயத்துக்கு மீண்டுவரும்போது பெண்பாலாரே தஞ்சாதிக்குரிய புராதன கொள்கைகளை அந்த ஆண்பாலாருக்கு ஞாபகப்படுத்திப் பழையபடி அவர்களை யொழுகச் செய்வர்."[32]
இந்துசாதனம் பத்திராதிபர் குறிப்பாக இவர் எழுதியுள்ள இப்பகுதி இதனைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
அன்றைய சூழ்நிலையிற் கிறித்தவ சமயம் சார்ந்த பெண்கள் ஆடையலங்காரங்களாற் தமது அழகை வெளிப்படுத்திக் கொள்வதையும் ஆண்களுடன் சரிசமமாகப் பழகுவதையும் கவனித்திருக்கிறார். ஒழுக்கக் கேடுகளுக்கு இவையுக் காரணம் எனக் கருதிக் கண்டிக்க முனைந்துள்ளார். கிறித்தவ சமயம் தழுவிய பெண்களின் ஆடம்பரப் போக்கு அன்றைய காலப்பகுதி யாழ்ப்பாணக் கிராமப்புற முதியோரால் எவ்வாறு நோக்கப்பட்டுள்ளதென்பதை வள்ளியம்மையின் கூற்றாக அமையும் பின்வரும் உரைப்பகுதி உணர்த்துகின்றது.
"உன்னை விற்றாலும் அவளுடைய உடுப்புச் செலவுக்குக் காணாதே; சட்டையென்ன, பாவாடையென்ன, பவுடர் மாவென்ன, சவர்க்காரமென்ன, கட்டப் பூட்ட நகையென்ன, மூக்குக் கண்ணாடியென்ன, கைமேசு கால்மேசு சப்பாத்தென்ன, இவைகளுக்கு நீ என்ன செய்வது? இவ்வளவோடு நின்றுவிடப் போகிறதா? இல்லையில்லை. அடுக்களைப் பக்கம் அவர்கள் போவதே கிடையாது; சமையலுக்கு வேலைக்காரி வேணும்; சமைத்து வைப்பதை உண்ணும்படி கொண்டுவந்து கொடுக்க ஒரு பையன் வேணும்."[33]
ஆடம்பரப் போக்குள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கக் கூடாதென்பதையும் அடக்கமுடைய பெண்களே நன்மனைவியராதற் குரியரென்பதையும் இந்நாவல்களில் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை உணர்த்துகிறார் எனலாம்.
மர்மப் பண்பும் சம்பவச் சுவையும்
சமகால சமுதாயப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு நாவல் எழுத முயன்றோரிற் பலர் அவற்றுக்கு நடப்பியல்போடு பொருந்திய வடிவம் தருவதிற் கவனம் செலுத்த வில்லையென்பது புலனாகின்றது. கதையைச் சுவையாகக் கூறி முடிக்க வேண்டுமென்று கருதி அதற்கேற்பச் சம்பவங்களையும் மறைப்புக் கவர்ச்சியாகிய மர்மப்பண்பையும் பொருத்தி எழுதியுள்ளனர் எனலாம். சமகாலத்திலே நமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு வெள்ளம்போல் வந்த பரபரப்பும் மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் பொருந்திய நாவல்கள் விளைவித்த தாக்கம் இதற்கு ஒரு காரணமாகலாம்.
"இதுவரை ஆரணி குப்புசாமி முதலியார் புனா வாசுதேவராவ் கேய்க்வார்[34] முதலிய தமிழ்ப் பூஷணங்களால் எழுதப்பெற்று வெளிவந்த அரிய பெரிய நாவல்களைக் கண்ணுற்றே யானும் நாவல்களைப் பகுத்தறியும் தன்மை பெற்றெனேயன்றி உண்மையில் தமிழ் மிகப் படித்தவனல்லன்."[35]
என இக்காலப்பகுதி ஈழத்து நாவலாசிரியரொருவர் தமது நாவல் முகவுரையில் குறிப்பிட்டுள்ளமை இத் தொடர்பில் நோக்கத்தக்கது.
கொலை, கொள்ளை, பெண்கடத்தல் முதலிய சம்பவங்கள் இடன் பெறுவதால் இவ்வகை நாவல்கள் பலவற்றில் நீதிமன்றக் காட்சிகளையும் நீண்டவாதப் பிரதிவாதங்களையும் காணமுடியும். சட்டத்துறைப் பயிற்சியும் சொத்துரிமை வழக்குகளும் 'யோக்கியக் கள்ளர்'களும் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு காலச் சமுதாய நிலையை இவை புலப்படுத்துகின்றன.
எஸ். கே. சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி (1918), திருமதி செம்பொற்சோதீஸ்வரர் செல்லம்மாளின் இராசதுரை (1924), இடைக்காட்டாரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (1925), அ. நாகலிங்கம்பிள்ளையின் சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் (1927), வண்ணை மா. சிவராமலிங்கம்பிள்ளையின் பூங்காவனம் (1930), வ. மு. சின்னத்தம்பியின் வீராம்பாள் அல்லது விபரீத மங்கை (1930), சார்ள்ஸ் ஸ்ரிக்னியின் தேம்பாமலர் (1929). ஞானபூரணி (1933), சி. வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தரவதனா அல்லது இன்பக் காதலர் (1938), வரணியூர் ஏ. சி. இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932), அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933) ஆகியனவும் வீரகேசரிப் பத்திரிகையில் அதனாசிரியர் எச் நெல்லையா எழுதிய ஏறத்தாழப் பத்துத் தொடர் நாவல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது என்ற வகையில் நீலகண்டன் ஓர் சாதிவேளாளன் நோக்கத்தக்கது. வேளாள குலத்துப் புவிமன்னனுக்கும் பண்டாரப் பெண் கமலாவதிக்கும் பிறந்த நீலகண்டன் தந்தையின் சொத்துரிமையைப் பெறுவதற்குத் தடையேற்படுகிறது. தடை செய்த தீயோரைத் தனது வீர சாகசங்களால் வெற்றி பெற்று நீலகண்டன் முதலிப் பட்டம் பெற்று உய்ர்வாழ்வு வாழ்கிறான். இடைக்காடர், சாதிப்பாகுபாடு இயற்கையில் இல்லாதிருந்து காலப்போக்கில் வளர்ந்தது என்ற கருத்துடையவர். நாவலிற் சுப்பிரமணிய தேசிகர் என்ற பாத்திர வாயிலாகச் சாதிப் பாகுபாட்டின் வரலாறு பற்றி ஒரு பிரசங்கம் செய்கிறார்.[36] இந்நாவலிற் சாதி ஏற்றத் தாழ்வுகளால் எழும் பிரச்சினைகள் பற்றிய ஆழமான கருத்தோட்டம் எதையும் காண முடியாது. எனவே பிரச்சினைக்குத் திட்டவட்டமான முடிவையும் காண்பதற்கில்லை. மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தரவதனா அல்லது இன்பக்காதலர் நாவலிற் கதைத் தலைவி சிங்கார வதனா சாதியின் அடிப்படை பற்றி விரிவுரை செய்கிறார். இந்நாவலிலும் சாதிப் பிரச்சினை பற்றிய ஆழமான கருத்தோட்டம் இல்லை. இக்காலப்பகுதியில் வெளிவந்தனவாக அறியப்படும் எச். நெல்லையாவின் காந்தமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி (1937), எம். ஏ. செல்வநாயகத்தின் செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி (1938) ஆகியன தீண்டாமை பற்றிய தீவிர கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. சமகாலப் பகுதியில் இந்தியாவின் காந்தீய சீர்திருத்தக் கருத்துக்களின் தாக்கம் இவ்வகையில் எழுதத் தூண்டியிருக்கலாம்.
முப்பதுகளில் வெளிவந்த நாவல்களிற் சமூகப் பார்வையுடையன என்ற வகையில் சாள்ஸ் ஸ்ரிக்னியின் நாவல்கள் குறிப்பிடத்தக்கன. ஈழத்தின் முதலாவது நடப்பியல் நாவலை எழுதிய திருமதி மங்களநாயகம் தம்பையாவின் நெருங்கிய உறவினரான இவர் 'அனுபவ சத்தமான விடயங்களைக் கதாரூபமாக வெளியிடுதல் அநேகருக்குப் பயன்படும்'[37] என்று கருதியவர். சமூக எற்றத்தாழ்வுகளும் பொருளாசை முதலியனவும் பெண்கள் தாம் விரும்பிய நாயகரை அடையத் தடையாய் இருந்த சமூகநிலையை இவரது நாவல்கள் காட்டுகின்றன. இவரது இரு நாவல்களின் கதைப் போக்கும் ஒத்த ப்ண்புடையன. தீயோர் சூழ்ச்சி, பெண் கடத்தல், நல்லவர் பழிசுமப்பது, கொலை, துப்புத் துலக்குதல் முதலியன இந் நாவல்களில் இடம் பெறுகின்றன. மர்மப் பண்புடன் வளர்த்துச் செல்லப்படும் கதை ஈற்றில் மங்கலமாக நிறைவு பெறும். சார்ஸ் ஸ்ரிக்னி சமகால சமூகப் பார்வையுடன் எழுதியதாலும் பிரதேசப் பேச்சு வழக்கைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாலும் முப்பதுகளின் சிறந்த நாவலாசிரியர் எனப் பாராட்டப்படுகிறார்.[38]
சமகாலச் சமூகப் பார்வையுடன் எழுதிய நாவல் என்ற வகையில் எச். நெல்லையா எழுதிய சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940) நாவலும் குறிப்பிடத்தக்கது. முப்பதுகளில் ஈழத்திற் சிங்கள தேசியவாதிகளுக்கும் இலங்கையிலிருந்த இந்தியருக்குமிடையில் நிலவிய முரண்பாட்டின் பகைப்புலத்தில் படைக்கப்பட்ட காதல் கதையான இந்நாவல் இரு இனத்தினருக்குமிடையில் நட்புறவை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டது. கதைப் பொருளிலும் கதையை வளர்த்துச் செல்லும் முறையிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
மொழிபெயர்ப்பும் தழுவலும்
கல்வி நோக்கிலும் சமய நோக்கிலும் கற்கப்பட்ட ஆங்கில நாவல்கள் சில இக்காலப் பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டும் தழுவப்பட்டும் தமிழில் எழுதப்படுவதைக் காண முடிகின்றது. சமகாலத் தமிழகத்திலும் இது முக்கிய பண்பாக இருந்தது. தாம் பிற மொழியிற் கற்றவற்றை அம் மொழி தெரியாதார்க்கு உணர்த்த வேண்டு மென்ற நோக்கமும் தாம் அவற்றிற் கொண்ட ஈடுபாட்டைப் புலப்படுத்தும் நோக்கமும் இத்தகைய முயற்சிகளைத் தூண்டி நின்றன எனலாம்.
1903ஆம் ஆண்டிலே அடாத சோதனை என்னும் மதிகெட்ட மாரன் கதை என்ற ஒரு நாவல் வெளிவந்ததாக அறியப்படுகின்றது.[39] 'கதாநந்தன்' என்பவர் இதனை எழுதியதாகத் தெரிகிறது. இவர் ஈழத்தவரா அல்லரா என்பதும் எங்கே வெளியிடப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. இது பற்றிய விளம்பரத்திலே,
"இது ஆங்கில பாஷையிலேயுள்ள (Don Quixote) டொன் குவிஷொட் என்னும் ஓர் சிறந்த கதைப் புத்தகத்திலிருந்து இத் தேசத்துப் பழக்க வழக்கங்களுக்கிசையக் கதைப்போக்கை மாற்றித் தமிழிலே மொழி பெயர்த்தெழுதப்பட்ட ஓர் அதியற்புதக் கதை"
என்ற குறிப்பு மட்டுமே உளது. ஸ்பானிய வீரசாகசக் கதையான இந்நாவல் ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுத் தேவைகேற்பக் கதைப் போக்கை அமைத்து எழுதப்பட்டது போலும்.
ஆரபகால ஆங்கில நாவலாசிரியரான டானியல் டிபோவின் Robinson Crusoe மல்லாகம் வீ. விஸ்வநாதபிள்ளையால் மொழிபெயர்க்கப்பட்டுப் புதிய பதிப்பாக 1906ஆம் ஆண்டு சென்னையில் வெளிவந்தது. றாபின்சன் குறூசோ சரித்திரம் என்ற தலைப்புடன் வெளிவந்த இந்நாவலின் முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு அறியப்படவில்லை. வரலாற்றாய்வறிஞரான மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையின் தந்தையரான வீ. விஸ்வநாதபிள்ளை '1825-1884'இல் வாழ்ந்தவரென்றும் சென்னையில் தமிழ் மொழி பெயர்ப்பாளராகப் (Translator in the Department of Public Instruction) பணிபுரிந்தார் எனவும் அறியப்படுகிறார்.[40] இந்நாவலின் முதலாவது பதிப்பு வெளிவந்த ஆண்டு அறியப்பட்டால் ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் எது என்பது தொடர்பாகப் புதிய கருத்து உருவாகலாம்.
பதிப்பாசிரியரும் நாவலாசிரியருமான ஜே. எஸ். தம்பிமுத்துப்பிள்ளை சம்சோன் கதை என்ற நாவலைக் கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பு 1911இல் வெளிவந்தது.
மட்டக்களப்பு, தாமரைக்கேணியைச் சேர்ந்த வே. ஏரம்பமுதலி ஆங்கிலத்தில் சேர் வால்டர் ஸ்கொட் எழுதிய கெனில்வேர்த் (Kenilworth) நாவலைத் தழுவி எழுதி அரங்கநாயகி என்ற தலைப்புடன் (1934) வெளியிட்டுள்ளார்.
"..... 1914ஆம் ஆண்டு கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு ஓர் இலக்கிய பாடமாக என்னால் வாசிக்கப்பட்டது. அப்போ அக்கதையின் சுவையும் ஆசிரியர் அவர்களின் பாஷா வன்மையும் கதையிலே காணப்பட்ட அரிய படிப்பனைகளும் என் மனதைக் கவர்ந்தன."[41]
என்று தமது ஈடுபாட்டைக் கூறி 1919ஆம் ஆண்டிலிருந்து தம் மனைவியின் கேள்விக்கிணங்க மொழிபெயர்க்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார். இந்நாவலிற் கதைமாந்தரும் கதை நிகழிடங்களும் தமிழ் நாட்டுச் சூழலுக்கேற்ப அமைந்துள்ளன. நேரடி மொழிபெயர்ப்பாக அமையாமல் இவ்வண்ணம் சூழலுக்கேற்பப் பெயர்களையும் ஊர்களையும் மாற்றியமைப்பது அக்காலப் பகுதியிலே தமிழ் நாட்டு மொழிபெயர்ப்பு நாவலாசிரியர்களிடம் காணப்பட்டதொரு பொதுப்பண்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.[42]
கிறித்தவ சமய குருவானவர் ஒருவர் பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அநுபவித்த துன்பங்களைக் கூறும் பாவசங்கீர்த்தன இரகசியப் பலி (1923) நாவல் 1888 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக அறியப்படுகின்றது. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
சைவசித்தாந்த தத்துவத்தை உருவகப்படுத்தி இக்காலப் பகுதியில் நமசிவாயம் அல்லது நான் யார்? (1929), உயிரிளங்குமரன் (1936) ஆகிய நாடகங்கள் வெளிவந்ததைப் போல சித்தகுமாரன் (1925) எற நாவலொன்றும் வெளிவந்தது. நீலகண்டன் ஓர் சாதிவேளாளன் நாவலை எழுதிய இடைக்காடரே இந்நாவலையும் எழுதியுள்ளார். தத்துவ உருவகம் என்ற வகையிற் குறிப்பிடத்தக்க நாவல் இது. தமிழ் நாட்டில் தி. ம. பொன்னுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தக் கருத்து விளக்கங்களாக நாவல்களை எழுதினார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.[43]
மதிப்பீடு
சீர்திருத்த உணர்வு மேலோங்கி நின்ற இக் காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களை வரலாற்று நோக்கிலே நோக்கும்போது தொடக்கத்தில் நடப்பியபுக்கு முக்கியத்துவம் அளித்தும் அடுத்து மர்மப் பண்புக்கும் சம்பவச் சுவைக்கும் முதன்மை தந்தும் எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
நடப்பியல்போடு பொருந்தின என்ற வகையில் நொறுங்குண்ட இருதயம், கோபால நேசரத்தினம், துரைரத்தினம் நேசமணி என்பன தாம் கதைக்குப் பொருளாக எடுத்த பிரச்சினைகளின் முக்கியத்துவத்தாற் குறிப்பிடத்தக்க சிறப்புடையன. சமகாலத்திலே தமிழ் நாட்டின் தமிழ் நாவலிலக்கியம் பெற்றிருந்த வளர்ச்சியோடு ஒப்பிட்டுக் கூறக்கூடிய சிறப்பு இவற்றுக்கு இல்லை. கதை மாந்தரைப் பொறுத்தவரை நொறுங்குண்ட இருதயத்தின் கண்மணியும், கோபால நேசரத்தினம் நாவலின் நேசரத்தினம், குட்டிதம்பிப் போதகர் ஆகியோரும் நினைவில் நிற்கின்றனர்.
புனைகதை யிலக்கியத்தின் இன்றியமையாத பண்புகளிலொன்று உணர்ச்சிபூர்வமான அதன் உரைநடை. உள்ளத்தில் எழும் உணர்ச்சி பேதங்களையும் கற்பனைகளையும் உள்ளவாறே வாசகருள்ளத்திற் பதிய வைப்பதற்குப் பயன்படும் வகையில் ஊடகமாக அமைவதே புனைகதைக்குரிய உரை நடையின் பண்பும் பயனுமாம். தமிழ் நாட்டில் இப் பண்புடன் இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு பத்தாண்டுகளில் உருவாகி வளரத் தொடங்கிய மறுமலர்ச்சி நடை சமகால ஈழத்து நாவலாசிரியர்களது கவனத்தைக் கவரவில்லை. சமயம், பண்பாடு ஆகிய சிந்தனைகளில் ஊறித் திளைத்தவர்களும் கருத்தை முதன்மைப்படுத்தி 'வசன இலக்கியம்' படைக்க முனைந்தவர்களுமான ஈழத்து ஆரம்பகால நாவலாசிரியர்கள் கதை சொல்லும் முறை பற்றியோ மொழியைக் கையாளும் முறை பற்றியோ சிந்தித்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. காவியமரபின் செல்வாக்கிலிருந்து விடுபடாத இவர்களிற் பலர் தமது நாவல்களைக் 'காப்பு'ச் செய்யுளோடு தொடங்குவதையும் முடிவில் வாழ்த்து வணக்கத்துடன் முடிப்பதையும் காணலாம். சில நாவல்களில் இடையிடையே திருமுறைகள், அறநூல்கள் ஆகியவற்றின் பாடல்களும் செவிவழி வந்த பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இலக்கணம் இகவாத நடையில் ஆசிரியர் கூற்றாகவே கதை கூறப்படும் இக்கால நாவல்கள் பலவற்றிலே பாத்திரங்களின் உரையாடல்களில் ஆங்காங்கே பேச்சு வழக்கு மொழி பிரயோகிக்கப்பட்டிருப்பது நாவல்களுக்கு நடப்பியல்புச்சாயல் தருவதற்காயிருக்கலாம். கதை மாந்தர் உரையாடும் கட்டங்களில் நாடக எழுத்துப் பிரதியினமைப்பிலே எழுதும் போக்கும் இக்கால நாவல்கள் பலவற்றிற்குப் பொதுப் பண்பாயுள்ளது. சமகாலத் தமிழ்நாட்டு நாவல்கள் பலவற்றிலும் இது பொதுப் பண்பாக இருந்தது என்பர்.[44]
அடிக்குறிப்புகள்
1. ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ இதேகாலம் சமய தத்துவ அறப் போதனைக் காலமாக அமைந்துள்ளது. க. சொக்கலிங்கம், ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, (1977) நூலில் இவ்வகைக் காலப்பாகுபாடு செய்துள்ளார்.
2. நொறுங்குண்ட இருதயம், 1914, பக். 3.
3. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, பக். 329
4. சிந்தனைச் சோலை 1960, பக்கங்கள் 102, 135, 123, 67
5. க. சொக்கலிங்கம், மு. கு. பக். 62
6. கி. வா. ஜகந்நாதன், தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும், 1966, பக். 29-30
7. இந்து சாதனம், தொகுதி 35 இல. 62, 1924-2-14, பக். 3
8. ஆ. சிவநேசச்செல்வன், நொறுங்குண்ட இருதயம் கதையும் கதைப் பண்பும் 1972, பக். 2-3
9. நொறுங்குண்ட இருதயம், பக். 7
10. நொறுங்குண்ட இருதயம், பக். 55
11. நொறுங்குண்ட இருதயம், பக். 72
12. ஆ. சிவநேசச்செல்வன், மு. கு. பக். 4
13. நொறுங்குண்ட இருதயம், பக்.124
14. நொறுங்குண்ட இருதயம், பக். 260
15. எஸ். தோதாத்திரி, 'கமலாம்பாள் சரித்திரம்' - ஆராய்ச்சி தொகுதி 3 இல. 1, 1972, பக். 30-38
16. சுந்தரன் செய்த தந்திரம், பக். 9
17. சுந்தரன் செய்த தந்திரம், பக். 5
18. சுந்தரன் செய்த தந்திரம், பக். 72
19. கனக செந்திநாதன், 'அழகவல்லி அல்லது பிறர்க்கிடுபள்ளம் தான் விழுபள்ளம்' - மல்லிகை 106. 1977 பெப்ரவரி, பக். 33இல் இவ் வருணனைப் பகுதி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
20. அருமைநாதன், இதயரத்தினம் ஆகியவை பற்றிய தகவல்களை F. X. C. நடராசா, எம். சற்குணம் இருவரும் தந்தனர்.
21. 1922 இலிருந்து 1940 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து உலகம் பலவிதம் தலைப்பில் கதைகளும் கட்டுரைகளும் அவ்வப்போது எழுதப்பட்டுள்ளன.
22. இந்துசாதனம், தொ. 5 இல. 70, 1924-3-13, பக். 4
23. ஆசிரியர் தந்த இத்தகவலின்படி 1921 ஆம் ஆண்டின் இந்துசாதனம் இதழ்களில் கோபால நேசரத்தினம் நாவலின் தோற்றம் கண்டறியப்படவில்லை. இந்துசாதனம் 23-9-1926 இதழிலிருந்தே கதை தொடர்கின்றது.
24. Ceylon: Delemmas of a New Nation, 1960 p. 27
25. K.H.M. Sumathipala, Education in Ceylon 1796-1965 p. 15
26. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு பாகம் 1, 1922, பக். 29-30
27. E. R. Sarathchandra, The Sinhalese Novel, 1950, p p. 92-104
28. காஞ்சனை சிறுகதைத் தொகுதியில் இரண்டாவது கதை
29. வ. ரா. வின் சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு (1917), பாரதியாரின் சந்திரிகையின் கதை (1921) ஆகியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
30. துரைரத்தினம் நேசமணி, 1931. பக். 24-27
31. துரைரத்தினம் நேசமணி, பக். 36-37
32. இந்துசாதனம், 1926-9-23, பக். 2
33. கோபால நேசரத்தினம், 2ம் பதி; 1948, பக் 30
34. மராட்டிய எழுத்தாளரான இவரைத் தமிழரெனத் தவறாகக் கருதியுள்ளார்.
35. வ. மு. சின்னத்தம்பி, வீராம்பாள் அல்லது விபரீத மங்கை, 1930, முகவுரை
36. நீலகண்டன் ஓர் சாதி வேளாளன், 1925, பக். 178-185
37. தேம்பாமலர் முகவுரை
38. கலாபரமேஸ்வரன், 'சார்ஸ் ஸ்ரிக்னி முப்பதுகளின் சிறந்த நாவலாசிரியர்' மல்லிகை, 104, 1976 டிசம்பர், பக். 33
39.இந்துசாதனம், தொ. 15 இல. 2 1903-7-15, பக். 1
40. பொ. பூலோகசிங்கம், தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், 1970, பக். 236-237
41. அரங்கநாயகி, 1934, முகவுரை, பக். v
42. ஆரணி குப்புசாமி முதலியாரின் மொழிபெயர்ப்பு நாவல்களில் இப் பண்பைக் காணலாம்.
43. தி. ம. பொன்னுசாமிப்பிள்ளை தம்து ஞானப்பிரகாசம் (1920) நாவல் முன்னுரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
44. அசோகமித்திரன், 'அமெரிக்க ஆங்கிலமும் இலங்கைத் தமிழும்' தீபம், 1977 நவம்பர், பக். 18
-----------------------------------------------------------
3. எழுத்தார்வக் காலம்
புதிய திருப்பமும் சூழ்நிலையும்
"பண்டிதத் தமிழும் பழைமையும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில் புதுமைக் கிளர்ச்சி ஏற்பட்டுச் சொற்ப காலம். ஆனால் அக்குறுகிய கால எல்லைக்குள் தன்னாலான புதுமைத் தொண்டு ஆற்றுவதற்கு யாழ்ப்பாணம் கொஞ்சமும் பின் நிற்கவில்லை. வங்க நாவல்களைப் பின்பற்றிப் புதுமையிலிறங்கிய அன்னபூரணியும் இதற்குப் பிரத்யக்ஷம்."[1]
முப்பதுகளின் முடிவில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றிலே உருவாகத் தொடங்கிய புதிய திருப்பத்தை இனங்காட்டும் வகையிலமைந்த இக்குறிப்பிலே புதுமைக் கிளர்ச்சி, புதுமைத் தொண்டு ஆகிய சொற்றொடர்கள் சிந்தனைக்குரியன. மரபுவழி இலக்கியச் சிந்தனைகளிலிருந்து விலகிப் புதுமையை நாடும் புதிய தலைமுறையின் கருத்தோட்டத்தையே இவை உணர்த்தி நிற்கின்றன எனலாம். இப் புதிய கருத்தோட்டம் நவீன இலக்கியப் போக்கைக் கலாபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்ற தாகத்தையும் அவ்விலக்கியப் போக்குடன் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது. கருத்துக்களைக் கூறுவதற்கான 'வசன இலக்கிய வடிவ'மே நாவல் என்ற ஆரம்பகால நாவலாசிரியர்களின் இலக்கிய நோக்கிலிருந்து வேறுபட்டதாகவே இக்கருத்தோட்டம் அமைந்துள்ளதென்பது தெளிவு.
"தமிழிலே நாவல் ஒரு திட்டமிட்ட இலக்கிய ரூபமாக அமைய வேண்டுமென்ற நோக்கமும் கொள்கையும் நாவல் எழுதுவோரிடையே கடந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குச் சற்று முன்பின்னாகத்தான் தோன்ற ஆரம்பித்தது. அதற்கு முன்பெல்லாம் நாவல் என்பது ஒரு சுவையான, நீண்ட கதையாக, சரளமான நடையிலிருந்தால் போதும்; நடப்பியலில் நாம் காணும் மனிதர்களைப் போன்ற கதை மாந்தர்கள் நடமாடுவது மட்டும் நாவலின் கதைப் பொருளுக்கு ஊட்டம் கொடுத்து விடும் என்ற மனப்பான்மைதான் நாவலாசிரியர்களிடையே நிலவி வந்தது. ... 1930க்குப் பின் ஆரம்பித்த காலகட்டத்தில் மேற்கே ஆங்கில இலக்கியத்தில் தோன்றிய மாறுதல்களும், புதிதாக ஏற்பட்ட இயக்கங்களும் இலக்கியக் கொள்கைகளும் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு புதிய விழிப்பையும் உந்துதலையும் கொடுத்தன."[2]
தமிழ் நாட்டு நாவலிலக்கியப் பரப்பைத் தொகுத்து நோக்கித் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றுக்கும் பொருந்துவதாகவேயுள்ளது.
மேனாட்டு நாவல்களையும் தமிழ் நாட்டு நாவல்களையும் வாசித்ததன் காரணமாக ஏற்பட்ட அருட்டுணர்வுடனும் எழுத்தாளனாக மதிக்கப்பட வேண்டுமென்ற ஆர்வத்துடனும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையொன்று இக்காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலுலகில் அடியெடுத்து வைத்தது. இவர்களது முயற்சிகட்கு அடிப்படையாக அமைந்தது எழுத வேண்டும் என்ற ஆர்வமேயாம். இந்த ஆர்வம் தொடக்கத்திலே மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகளாகவும் பின்னர் சுயமாகப் படைக்கும் ஆற்றலாகவும் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் ஏறத்தாழப் பதினைந்தாண்டுக் காலம் இவ்வகையில் வெளியிடப்பட்ட எழுத்தார்வம் அடுத்து ஏறத்தாழப் பத்தாண்டுக் காலத்திற் சமூக, தேசிய உணர்வுகளுடன் இணைந்து புதிய பரிணாமம் பெறலாயிற்று. இவ்வகையில்முப்பதுகளின் முடிவில் ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தினை விசாலித்த காலம் தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப ஆண்டுக்ள் வரை ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக் காலத்தை எழுத்தார்வக் காலம் எனலாம்.
இவ்வெழுத்தார்வம் உருவாகி வளர்வதற்குச் சாதகமாக அமைந்த சூழ்நிலை தொடர்பாக நோக்கும்போது முதலிற் குறிப்பிடத்தக்கது செய்திப் பத்திரிகைகளின் தோற்றமாகும். 1930ஆம் ஆண்டை அடுத்து ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் ஆகியனவும் 1947இலிருந்து சுதந்திரனும் செய்திப்பத்திரிகைகளாக வெளிவரலாயின. இவை அரசியல் சமூக விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதோடு அமையாமற் புனைகதைத் துறைக்கும் குறிப்பிடத்தக்க அளவு பணியாற்றின. வீரகேசரியில் எச். நெல்லையா தமிழ்நாட்டுப் பரபரப்பு நாவல்களை வாசித்த பரந்த வாசகர் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் வகையிற் பல தொடர் நாவல்களை எழுதி வந்தார். இவருக்குப்பின் நாற்பதுகளின் முடிவிலிருந்து ரஜனி (கே. வி. எஸ். வாஸ்) இப்பணியைத் தொடரலானார்.
ஈழகேசரி ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே சிறுகதைகளையும் தொடர் கதைகளையும் வெளியிட்டு வந்ததெனினும் 1938ஆம் ஆண்டிற் சோ.ிவபாதசுந்தரம் ஆசிரியராக அமர்ந்த போதுதான் நவீன இலக்கியத் தேவைகட்கேற்பத் தனது இலக்கியக் களத்தை விசாலித்தது. 1939ஆம் ஆண்டில் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்கதைகள் ஈழகேசரியில் வெளிவந்தன. சோ. சிவபாதசுந்தரம் தொடக்கி வைத்த 'ஈழகேசரி கல்வி அநுபந்தம்' இளம் எழுத்தாளர் பலர் எழுதி வளர்வதற்குக் களமாயிற்று. இப்படி எழுதி வளர்ந்தவர்களே 1942ஆம் ஆண்டை அடுத்து எழுத்தார்வத்தாலே தூண்டப்பெற்று மறுமலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் இணைந்து செயற்பட்டு மறுமலர்ச்சி என்ற பெயரில் இலக்கிய சஞ்சிகையொன்றையும் சிறிது காலம் நடத்தினர் என்பது இகுக் குறிப்பிடத்தக்கது. ஈழகேசரியிற் சமகாலத் தமிழகத்து இலக்கியச் செய்திகளாக இலக்கிய மதிப்புரைகளும் கட்டுரைகளும் வெளிவந்தன சோ. சிவபாதசுந்தரம் ஆசிரியப் பதவியிலிருந்து விலகிய பின்னர் இராஜ அரியரத்தினம் ஆசிரியராக அமர்ந்து இப்பணியைச் செவ்வனே தொடர்ந்தார்.பீஷ்மன் என்ற புனைபெயரில் அ. செ. முருகானந்தன் எழுதிய யாத்திரை என்ற நாவலை நிறைவு செய்யாமலே 1958இல் ஈழகேசரி தனது வாழ்வை நிறைவுசெய்து கொள்ளும் வரை அதன் நவீன இலக்கியப்பணி தொடர்ந்தது.
ஐம்பதுகளில் தினகரனும் சுதந்திரனும் நவீன இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து செயற்படுவதற்கான களங்களாக அமைந்தன. சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் எழுத்தார்வத்திற் படிவதற்கான சூழ்நிலையை உருவாக்கியதில் ஈழகேசரியுடன் இவற்றுக்கும் முக்கிய பங்குண்டு.
எழுத்தார்வம் உருவாகி வளர்வதற்குக் காரணமாயிருந்த முக்கியமான மற்றொரு அம்சம் தமிழ் நாட்டு இலக்கியத் தொடர்பாகும். ஈழத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிற் காலங்காலமாக நிலவிவரும் பபாட்டுத் தொடர்பின் ஒரு கூறுதான் இது எனினும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் போக்கில் முக்கிய தாக்கத்தை விளைவித்ததென்ற வகையில் இது சிறப்பாக நோக்கத்தக்கது.
தமிழ் நாட்டில் முப்பதுகளில் ஏற்பட்ட நவீன இலக்கிய விழிப்புணர்ச்சியிற் சஞ்சிகைகள் முக்கிய பங்கை வகித்தன. மணிக்கொடி சஞ்சிகை சிறுகதைத் துறையில் விளைவித்த சாதனையைத் தொடர்ந்து சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இலக்கிய சஞ்சிகைகளும் ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலிய ஏடுகளும் நாவல் சிறுகதை இரு துறைகளுக்கும் வளர்ச்சிக் களங்களாக அமைந்தன. ஆனந்தவிகடனும் கலைமகளும் இக்காலப் பகுதியில் வங்காளம், மகாராட்டினம், இந்துஸ்தானி முதலிய இந்தியாவின் பிற மொழிகளின் நாவல்களையும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் நாவல்களையும் தமிழாக்கித் தொடராக வெளியிட்டன. பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், வி. ஸ. காண்டேகர், பிரேம்சந்த், ஆர். கே. நாராயணன் முதலிய நாவலாசிரியர்கள் தமிழ் வாசகருக்கு அறிமிகமாயினர். நாற்பதுகளிலே சமகாலத் தமிழ் நாட்டு அரசியல் சமூகச் சூழ்நிலைகளையும் வரலாற்றுக் கால கட்டங்களையும் பகைப்புலங்களாகக் கொண்டு தொடர் நாவல்கள் எழுதும் மரபு புதிய வேகத்துடன் தொடங்கியது. 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி, அகிலன் ஆகியோர் இவ்வெழுச்சிக்கு முன்னோடிகளாயினர்.
ஈழத்து வாசகர்களின் மத்தியில் ஆனந்த விகடனும் கலைமகளும் பின்னர் கல்கியும் விரும்பி வாசிக்கப்பட்டன. இலக்கிய ஆர்வலர் மத்தியில் இவற்றுடன் கலாமோகினி, கிராம ஊழியன் முதலியனவும் விரும்பி வாசிக்கப்பட்டன. வாசிப்பது மட்டுமன்றி அவை தொடர்பான ரசனையில் ஈடுபடுவதும் தம்மாற் படைக்கப் பட்டவற்றை இவற்றிற் பிரசுரிப்பதும் ஈழத்து இலக்கிய ஆர்வலர் மத்தியிற் காணப்பட்ட பொதுப் பண்பாகும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முதல்வர்களான இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், க. தி. சம்பந்தன் ஆகியோரது படைப்புக்கள் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்தமையும் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை ஆனந்த விகடன் நடத்திய நாவல் விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசில் பெற்றமையும் (1935) இதனைத் தெளிவாக்குகின்றன.
முப்பதுகளிலே ஈழத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் அரும்பிய நைஇன இலக்கிய நட்புறவு ஈழத்துத்தமிழ் நாவல் வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையிலே தொடர்ந்து நிலவி வருகின்றது. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் ஈழத்தில் நாவல் எழுதிய பலர் சமகாலத் தமிழ்நாட்டு நாவல்களை வாசித்த அருட்டுணர்வால் உந்தப்பட்டவர்கள். நாற்பதுகளில் ஜே. எஸ். ரவீந்திரா என்பவர் எழுதிய காதல் உள்ளம் நாவல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஈழத்து விமர்சகரொருவர்,
"இந்த நாவல். 'அகிலன்', 'விந்தன்', 'மாயாவி' ஆகிய மூவரையும் ஒட்டுப்போட்டு உருவாக்கிய ஒருவர் எழுதிய நாவல்போலத் தோற்றமளிக்கிறது"[3]
எனக் குறிப்பிட்டுள்ளமை இத்தொடர்பில் நோக்கத்தக்கது.
ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுப் பிரபல நாவலாசிரியர்களை ஆதர்சமாகக் கருதினர் என்பதற்கு யாழ்ப்பாணம் 'தேவன்', ஆனந்தவிகடன் 'தேவன்' இருவருக்குமிடையில் நிலவிய 'ஏகலைவன்'-'துரோணர்' தொடர்பு எடுத்துக்காட்டாகும். ஈழத்தின் பிரபல நாவலாசிரியரான இளங்கீரன் தமிழ்நாட்டிலே சிலகாலம் வாழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்து நாவல்கள் படைத்தவர்[5] என்பதும் மர்ம நாவல்களைப் படைத்த 'ரஜனி', எம். ஏ. அப்பாஸ் இருவரும் தமிழ்நாட்டினர் என்பதும் 'தமிழக-ஈழ' நாவலிலக்கியத் தொடர்பின் இயல்பை விளக்கப் பொருத்தமான சான்றுகளாகும். ஐம்பதுகளின் முடிவிலே ஈழத்துத் தமிழிலக்கியம் தனக்கெனத் தனிப்பண்புடையதாக அமைய வேண்டுமென்ற தேசிய உணர்வடிப்படையிலான கருத்து வளர்ச்சியடைந்த பின்னருங்கூட ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர்களும் திறனாய்வாளரும் தமிழ் நாட்டு நாவலாசிரியர்களுடன் நெருங்கிய இலக்கிய உறவு கொண்டிருந்தனர். 1960இல் 'தினகரன் தமிழ் விழா'வுக்குக் க. கைலாசபதியும் செ. கணேசலிங்கனும் அகிலனை வரவழைத்துச் சிறப்பித்தனர்.[6] 1965இல் செ. கணேசலிங்கன் தனது நீண்ட பயணம் நாவலை அகிலனின் முன்னுரையுடனேயே வெளியிட்டார். அறுபதுகளில் வெளிவந்த ஈழத்தின் சிறந்த நாவல்களிற் பெரும்பாலானவை தமிழ் நாட்டுப் பிரசுரக் களங்களின் மூலம் வெளியானவையே என்பதும்[7] ஈண்டு அவதானிக்கத் தக்கது.
எழுத்தார்வத்தைத் தூண்டிய முக்கிய அம்சங்களில் ஆங்கிலக் கல்விமூலம் பெற்ற மேனாட்டு இலக்கியப் பயிற்சியும் ஒன்றாகும்.
"நான் கேம்பிரிஜ் சீனியர் வகுப்பில் படித்து வந்த பொழுது செல்வ மாணிக்கம் ஆங்கிலபாட ஆசிரியராக இருந்தார். ... திரு. செல்வமாணிக்கம் எங்களுக்கு அடிக்கடி சொல்வார் "லார்ட் ரெனிஸன் எழுதிய ஈனோக் ஆர்டனை நான் பத்தொன்பது தரம் படித்து விட்டேன். நான் இறப்பதற்குமுன் இருபதாவது தரமும் படித்துவிட வேண்டுமென்பது எனது அவா" என்று. அவர் என்மனதில் ஊன்றிய அவ்வித்தே இம் மொழிபெயர்ப்புக்குக் காரணம். நானும் ஈனோக் ஆர்டனை எத்தனையோ தரம் படித்திருக்கிறேன். படிக்குந் தொறும் படிக்குந் தொறும் நான் அநுபவித்த இன்பம் சொல்ல முடியாது; அவ்வின்பத்தில் ஒரு பகுதியை யாயினும் ஆங்கிலந் தெரியாத என் சகோதரர்கள் அனுபவிக்க வேண்டுமென்ற அவா எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கின்றது.[8]
என இலங்கையர்கோன் தமது மொழிபெயர்ப்புக்கான எழுத்தார்வத்தை உணர்த்துகிறார்.
முப்பதுகளின் முடிவிலிருந்து வளர்ந்து வந்த எழுத்தார்வத்தில் ஐம்பதுகளிலே தேசிய உணர்வுச் சாயல் படிவதைக் காணலாம். ஐம்பதுகள் வரை நாடு தழுவிய தேசிய உணர்வு வளர்வதற்கேற்ற வகையில் அரசியற் சூழ்நிலை ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் அமைந்திருக்கவில்லை. தனித்தனியாக இருந்த ஈழத்தின் பிரதேசங்களை ஆட்சி வசதி கருதி ஆங்கிலேயர் இணைத்து ஆண்டபோது வலிந்து புகுத்தப்பட்ட அரசியல், பொருளாதார அடிப்படையிலான தேசிய ஒருமைப்பாடு மக்கள் தழுவிய சிந்தனையாக மலரவில்லை. அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டமும் ஈழத்தில் - இந்தியாவில் நடைபெற்றதைப் போல - மக்கள் இயக்கமாக உருவாகவில்லை. இதன் காரணமாக ஈழத்தில் அவ்வப்போது நடைபெற்றுவந்த அரசியல் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தமிழிலக்கியத்திற் குறிப்பிடத்தக்க எந்த அடிப்படைத் தாக்கத்தையும் விளைவிக்கவில்லை. 1931இல் டொனமூர் அரசியற்றிட்டப்படி கிடைத்த சர்வசன வாக்குரிமையும் 1947ஆம் ஆண்டின் சுதந்திரமும் நவீன தமிழிலக்கியத் துறையிலே எவ்வித உடனடி மாற்றத்தையும் விளைவிக்கவில்லை.
1905 ஆம் ஆண்டிலே சி. வை. சின்னப்பபிள்ளை இந்திய வாசகருக்கு ஈழத்துச் சாதாரண கிராம வாழ்க்கையைக் காட்ட விரும்பியதும் 1943இல் சுவாமி விபுலானந்தர் மறுமலர்ச்சிச் சங்கத்தார் முன்,
"தமிழில் வெளிவரும் கதைகளில் அநேகம் இந்தியராலேயே எழுதப்படுகின்றன. ஆஇ அந்நாட்டு வாழ்வினை நமக்குத் தெரிவிக்கின்றன. நம்மைப் போலவே இந்தியர்களும், ஈழத்து மக்களின் வாழ்வையும் வளங்களையும் அறிய விரும்புவர். எனவே நமது வாழ்வை உள்ளபடி சித்திரிக்கும் உயர்ந்த கதைகளை மறுமலர்ச்சித் தொண்டர்கள் வெளிக்கொணர வேண்டும்."[9]
என்று தெரிவித்த கருத்தும் தமிழ் நாட்டுத் தமிழரிலிருந்து ஈழத்தவர் தம்மை வேறுபடுத்தியுணர்வதைக் காட்டுவனவேயன்றி நாம் ஈழத்தவர் என்ற நாடு தழுவிய தேசிய உணர்வினைக் காட்டுவன என்று கொள்ள முடியாது. சிறுகதை முதல்வருளொருவரான ந. சிவஞானசுந்தரம் 'இலங்கையர்கோன்' என்ற புனைபெயர் பூண்டதும் தமிழ் நாட்டிலிருந்து புவியியல் ரீதியாக வேறுபட்டவன் என்ற உணர்வின் வெளிப்பாடேயெனலாம். இவ்வேறுபாட்டுணர்வு தத்தம் பிரதேச, கிராமிய வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டம்சங்களையும் இலக்கியங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தினடிப்படையில் தேசிய உணர்வுச் சாயல் பெறலாயிற்று.
"யாழ்ப்பாணத்துக் கிராமப் புறமொன்றிற் பிறந்த எனக்கு, அந்தச் செம்மண்ணின் விசேஷமோ என்னவோ சில பிடிவாதமான குணங்கள் இருக்கின்றன. கிராமங்களில் அருகிவரும் - படிப்படியாக மறைந்துவரும் - சில முக்கியமான விஷயங்களை எமது இளம் சந்ததிக்கு ஞாபகமூட்ட வேண்டும். அவற்றைச் சிறுகதைகளாக, நாவல்களாக, நாடகங்களாகப் படைக்க வேண்டும். கிராமத்தின் உயிர்மூச்சைச் செயற்கைத் தன்மை படாமல் அப்படியே காட்ட வேண்டும் என்பது எனது எண்ணம்."[10]
என்றும்
" ... அந்த வெறி - மாவலி கங்கை என் கதைகளிலே வளைந்து நெளிந்து ஓட வேண்டும், அந்தப் பிரதேசத்தில் வாழும் எனது கிராமப்புற மக்களின் வாழ்க்கை இலக்கிய வடிவம் பெறவேண்டும் என்ற தணியாத வெறி - தான் நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கு அன்றும் இன்றும் விடையாக இருக்கிறது"[11]
என்றும் முறையே கனக செந்திநாதன், வ. அ. இராசரத்தினம் இருவரும் கூறியுள்ளமை இதனை அரண் செய்கின்றன.
பிரதேசப் பண்பாட்டம்சங்களின் மீது கொண்ட ஈடுபாட்டினடிப்படையிலான இத் தேசிய உணர்வுச் சாயல் இடதுசாரி அரசியற் சிந்தனைகளால் நாடு தழுவிய தேசிய உணர்வாக வளரும் சூழ்நிலை ஐம்பதுகளின் முடிவில் காணப்பட்டது. ஈழத்துத் தமிழ் எழுத்தாளருள் ஒரு பகுதியினர் தாம் சார்ந்திருந்த இடதுசாரி அரசியலியக்கங்களின் தேசிய உணர்வுக்குட்பட்டு ஈழம் ஒரே நாடு என்ற அடிப்படையினை வரைந்து கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளை அணுகினர். 1956ஆம் ஆண்டில் அரசியல் ரீதியாக இடதுசாரிகள் இணைந்து பெற்ற வெற்றி இவர்களது குரலை வலுப்படுத்தியது. தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றுக்கெதிராகப் பெரும்பான்மையினர் மேற்கொண்ட புறக்கணிப்பும் அடக்குமுறையும் தமிழரை இன உணர்ச்சி கொள்ளத் தூண்டி நின்ற வேளையிலே இவர்கள் தாம் வரித்துக் கொண்ட தேசிய உணர்வுக்குப் புறம்போகாத வகையிலே தமிழ் மக்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தமது இலக்கியங்களிற் பிரதிபலித்தனர்.
ஐம்பதுகளின் முடிவில் ஈழத்துத் தமிழிலக்கியம் தனக்கெனத் தனித்தன்மை பெற்றதாக அமைய வேண்டும் என்ற கருத்தோட்டத்தினடியாகத் தேசிய உணர்வு முகிழ்த்தது. ஈழத்து இலக்கிய ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ள கருத்து இத்தொடர்பிற் குறிப்பிடத்தக்கது.
"ஈழத்திலே தமிழர் சிறுபான்மையினர் என்ற நிலமை ஏற்பட்ட இக் கால கட்டத்திலே, ஈழத்துத் தமிழர் முதன்முதலாகத் தாம் இலங்கையர் என்று எண்ணத் தொடங்கினர். இவ் வெண்ணத்தினாலே தமிழகத்தோடு பூண்டிருந்த ஆத்மார்த்தத் தொடர்பு பலவீனமடையத் தொடங்கியது. தேசியப் பண்பு பொருந்திய இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஈழத்துப் பண்டைய இலக்கியங்களைப் பேண வேண்டும் என்ற உணர்வும் பிறந்தன."[12]
நாவல் வகைகள்
இக் காலப் பகுதியிலே எழுத்தார்வங் கொண்ட ஆசிரியர்களும், பத்திரிகைத் துறை சார்ந்தோரும், நிர்வாகப் பணி புரிந்தவர்களும், பல்வேறு சமூக இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தோருமான எழுபதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளனர். இவற்றுட் சமகால சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் உடைய சில நாவல்களைத் தவிர ஏனையவற்றை மொழிபெயர்ப்பும் தழுவலும், காதல் நாவல்கள், மர்மப்பண்பு நாவல்கள் என மூவகைப்படுத்தலாம்.
மொழிபெயர்ப்பும் தழுவலும்
இவ்வகைகளில் ஏறத்தாழ இருபது நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் பல ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலே தொடராக வெளிவந்தவை. வங்க நாவலாசிரியரான ரவீந்திரநாத் தாகூரின் நாவல் ஒன்றை அறுந்த தளைகள் (1937) என்ற தலைப்பில் ரவீந்திரன் என்பவர் மொழிபெயர்த்தார். வங்க நாடோடிக் கதைகளிரண்டை 'வில்லன்' என்பார் மல்லிகை (1940), கொள்ளைக்கார நிசாம் (1940) ஆகிய தலைப்புக்களில் மொழிபெயர்த்தார். ஆங்கிலக் கவிஞர் அல்பிரட் ரெனிஸன், நாவலாசிரியர் தோமாஸ் ஹார்டி, ருஷ்ய நாவலாசிரியர் ஐவன் துர்கனேவ் ஆகியோரின் படைப்புக்களிற் சிலவற்றை 'இலங்கையர் கோன்' மொழி பெயர்த்தார். துர்கனேவின் நாவல் மொழிபெயர்ப்புக்களிலொன்றான முதற் காதல் (1940) தமிழ் நாட்டிற் கலைமகள் பிரசுரமாக வெளிவந்தது. ஏனையவை ஈழகேசரியிலே தொடராக வெளிவந்தன. இவற்றுள் அல்பிரட் ரெனிஸ்னின் படைப்பின் மொழி பெயர்ப்பான ஈனோக் ஆர்டன் (1939) கதைப்பொருளுக்கும் 'மஹாகவி'யின் புதியதொரு வீடு கவிதை நாடகத்தின் கதையம்சத்திற்குமிடையில் ஒற்றுமையுண்டு. தொழில் நிமித்தமாக மனைவியைப் பிரிந்த கணவன் பல்வேறு இடையூறுகளாலே தடைப்பட்டு நீண்ட நாட்களின் பின்னர் மனைவியை நோக்கி ஆவலுடன் திரும்பி வரும்போது மனைவி இன்னொருவனுடன் வாழ்வதைக் கண்டு ஏற்படும் ஏமாற்றமும் மனத் துயருமே இரண்டிலும் கதைக்கு அடிப்படை. ஈழகேசரியில் ஈனோக் ஆர்டன் வெளிவந்து ஏறத்தாழ முப்பதாண்டுகளின் பின்னரே 'மஹாகவி'யின் புதியதொரு வீடு எழுதப்பட்டது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனிய நாவலாசிரியர்களான வில்ஹெல்ம் ஸ்மித், தோமஸ்மான் ஆகியோரது இரு படைப்புக்கள் அ. செ. முருகானந்தம், சோணாசலம் ஆகியோரால் முறையே போட்டி (1941), மனவிகாரம் (1945) ஆகிய தலைப்புக்களில் மொழிபெயர்க்கப்பட்டு ஈழகேசரியில் வெளிவந்தன.
ஐவன் துர்க்கனேவின் நாவலொன்றினை மாலை வேளையில் என்ற தலைப்பில் சி. வைத்தியலிங்கம் தமிழாக்கினார். மிஸ் டொரத்தி. எஸ். செயர்ஸ் என்ற ஆங்கில நாவலாசிரியையின் துப்பறியும் நாவலொன்றை அலிபாபாவின் குகை (1943) என்ற தலைப்பில் முருகு என்பார் மொழிபெயர்த்தார். ஈழகேசரி ஆசிரியர் இராஜ அரியரத்தினம், ஜே. ஸி. எதிர்வீரசிங்கம் எழுதிய ஆங்கில நாவலொன்றை தங்கப்பூச்சி (1948) என்ற பெயரிலே தமிழாக்கினார். இவை மூன்றும் ஈழகேசரியிலே தொடராக வெளிவந்தன.
யாழ்ப்பாணம் 'தேவன்' ரொபேட் லூயி ஸ்டீவன்ஸனின் Treasure Island நாவலை மணிபல்லவம் (1949) என்ற தலைப்பிலே தமிழாக்கினாள். இது முதலில் கேரளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நூலாகப் பிரசுரமாகியது. இந்தியாவின் பாஞ்சாலத்தைச் சேர்ந்த நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந்தின் Untouchable நாவலை கே. கணேஷ் தீண்டாதான் (1947) என்ற தலைப்பிலே தமிழாக்கினார். இந்நாவல் தமிழ் நாட்டிற் காரைக்குடிப் புதுமைப் பதிப்பகத்தாற் பதிப்பிக்கப்பட்டது.
எமிலி ஜோலாவின் பிரெஞ்சு நாவலான நானா அ. ந. கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்டு 1951இல் சுதந்திரனில் வெளிவந்தது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஜெர்மனிய மொழியில் தியோடர் சுதாம் எழுதிய இம் மென் சே நாவலைத் தழுவிப் பூஞ்சோலை (1953) நாவலையும் பிரெஞ்சு நாவலாசிரியர் சபூ எழுதிய இரட்டையர் நாவலைக் கற்ற கற்பனையில் வாழ்க்கையின் வினோதங்கள் (1954) நாவலையும் எழுதினார். இவை இரண்டும் நூல் வடிவில் வெளிவந்தன.
மொழிபெயர்ப்பு முயற்சிகள் பெருமளவு நாற்பதுகளிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தை விசாலித்த சூழ்நிலையில் உடனடித் தேவையாக இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆங்கிலங் கற்ற எழுத்தாளர்கள் அவ்வப்போது தாம் படித்துச் சுவைத்தவற்றை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த களத்தை நன்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது. பொதுவாக இக்காலப் பகுதி, தமிழ் நாவல் வரலாற்றிலே மொழிபெயர்ப்பு நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்ட காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன் முதலில் நாவல் வளம்பெற்ற வங்கமொழியின் நாவல்களும் மகாராஷ்டிர மொழி நாவல்களும் தமிழ் வாசகரதும் எழுத்தாளர்களதும் ஆர்வத்தைத் தூண்டி நின்ற இக்காலப் பகுதியில் ஈழத்து நாவலாசிரியர்களும் தாம் பிறமொழிகளிற் கற்றவற்றைத் தமிழிலே தரும் ஊக்கத்துடன் செயற்பட்டனர் எனலாம்.
காதல் நாவல்கள்
இக்காலப் பகுதியின் பெரும்பாலான நாவல்கள் இவ்வகையைச் சார்ந்தனவே. காதலை மையமாக வைத்து அதனடிப்படையிலே தனி மனிதனுக்கும் குடும்ப உறவுமுறைகளுக்கும் சமூகத்திற்குமிடையிலே நிகழும் பிரச்சினைகளை உணர்ச்சிகரமாகச் சித்திரிக்கும் ஆர்வமே இக்கால நாவலாசிரியர்கள் பலரிடமும் காணப்பட்டது. இவ்வகைக் கதைகளை எழுதுவதற்கு அக்காலப் பகுதியிலே தமிழில் வெளிவந்திருந்த தாகூர், காண்டேகர் முதலியோரது நாவல்கள் உந்து சக்தியாயின என்று கூறலாம். 1955இல் சுதந்திரனில் வந்த நாவலொன்று
"காதல் பற்றிய காண்டேகரின் இலக்கியக் கொள்கைக்கு சவால்விடும் கதை"
என்று கட்டியம் கூறிக்கொண்டு வந்தது என்பர்.[13] தமிழ் நாட்டில் ஆரம்ப எழுத்தாளர்கள் பலர் இக்காலப்பகுதியிற் காதலுக்குக் கலைவடிவம் தரும் முயற்சியில் பெருந் தொகையான நாவல்களை எழுதியிருந்தனர். ஈழத்தில் இவ்வகை நாவல்களை எழுதியோரிற் சிலர் சமகாலச் சமூக உணர்வுடன் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி எழுதினர். பெரும்பாலோர் காலதேச வர்த்தமானங்களைக் கடந்த வகையில் உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி எழுதினர். உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி எழுதிய பலருட் குறிப்பிடத்தக்கவர் க. தி. சம்பந்தன்.
ஈழகேசரியிலே தொடராக வெளிவந்த இவரது பாசம் (1947) நாவல், கல்லூரி மாணவியர் இருவருக்கும் ஆசிரியனொருவருக்குமிடையில் நிலவிய உணர்ச்சிப் போராட்டத்தைச் சித்திரிப்பது. நாராயணன் சாருகாசினி இருவரது காதலுக்கும் துணைநின்று இணைத்து வைக்கிறாள் சாரதா. பின்னர் அவர்களின் வீட்டிலே அவள் வாழ நேர்கின்ற வேளையில் நாராயணனுக்கும் அவளுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. இதனாற் 'சாருகாசினி - நாராயணன்' உறவில் பிரச்சினைகள் தோன்றுவதை உணர்ந்த சாரதா தன்னுயிரைத் தியாகம் செய்கிறாள்.
"நியாயத்துடனோ அன்றி அது இல்லாமலோ எல்லோரிடத்திலும் பாசம் வைக்கவே கூடாது. வேண்டுமானால் எந்த விதத்திலேயும் ஒட்டாமலிருந்து இயன்ற வரை உதவி செய்வதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கடமை தவிர இப்படி விழுந்து அவலத்தைத் தேடிக் கொள்வது அல்ல."[14]
என்று டாக்டர் என்ற பாத்திரத்தின் கூற்று மூலம் ஆசிரியர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். காதலுணர்வையும் தத்துவங்களையும் கலந்து அமைக்கப்பட்ட இந்நாவலின் கதையம்சமும் உத்தி முறையும் தாகூர், காண்டேகர் ஆகியோரது நாவல்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. தமிழ்ச் சிறுகதை முதல்வர்களுள் ஒருவரான சம்பந்தன் பாசம் நாவலின் மூலம் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலும் இடம் பெறத்தக்க சிறப்பைப் பெறுகிறார்.
குடும்ப உறவுகளையும் காதலையும் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கால ஏனைய நாவல்களிற் பொன். குமாரவேற்பிள்ளையின் உத்தம ம்னைவி (1935), க. சச்சிதானந்தனின் அன்னபூரணி (1935), 'சு. வே.'யின் மன நிழல் (1948), யாழ்ப்பாணம் 'தேவ'னின் கேட்டதும் நடந்ததும் (1954-55) முதலியன இக்காலப் பகுதி ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியப் போக்கை இனங்காட்டவல்லன.
மர்ம நாவல்கள்
இக்காலப் பகுதியில் ஏறத்தாழ இருபது மர்ம நாவல்கள் வெளிவந்தன. இவற்றுட் பெரும்பாலானவற்றை எழுதியவர் 'ரஜனி' (கே. வி. எஸ். வாஸ்). வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த காலப்பகுதியில் இவர் எழுதிய குந்தளப்பிரேமா (1949-50), நந்தினி (1950), பத்மினி (1953), தாரிணி (1954), மலைக்கன்னி (1955), உதய கன்னி (1955) முதலியன இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன. வாசகரது ரசனையையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அற்புதச் சுவையும் அரசியற் செய்திகளும் கொண்டமைந்த இவ்வகை நாவல்கள் ஐம்பதுகளில் ஈழத்து நாவல் வாசகர் தொகையைப் பெருக்கின.
ஈழத்திற்கு வந்து சொற்ப காலமிருந்து பிறகு இந்தியாவிற்குக் குடிபெயர்ந்து சென்ற எம். ஏ. அப்பாஸ் இவளைப்பார் (1953), சி. ஐ. டி. சிற்றம்பலம் (1953), சிங்களத் தீவின் மர்மம் (1956), யக்கடையாவின் வர்மம் (?) முதலிய நாவல்களை எழுதியுள்ளார்.
சமுதாய சீர்திருத்தக் காலத்திலே எழுதப்பட்ட மர்மப்பண்பு நாவல்கட்கும் எழுத்தார்வக்கால மர்மப்பண்பு நாவல்கட்குமிடையில் வேறுபாடுண்டு. முதல் வகையின சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கூற எடுத்துக் கொண்ட கதைக்குச் சுவைநோக்கி மர்மப்பண்பு புகுத்தப்பட்டவை. எழுத்தார்வக் காலப்பகுதியிலே மர்மச் சுவையுடன் நாவல்கள் எழுத வேண்டுமென்ற ஆர்வமே தூண்டி நின்றது. பிறமொழிகளிற் படித்த புதுவகை மர்மக் கதைகளைப் போலத் தமிழில் எழுத முயன்ற பல தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தனர். அவ்வகை வாசகர் வட்டத்தைத் திருப்தி செய்யும் நோக்கில் எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவ்வண்ணம் எழுதியவர்கள் தமது நாவல்களில் சமகாலக் குடும்ப உறவுமுறைகள் காதல் ஆசாபாசங்கள் முதலியவற்றையும் சித்திரிக்கத் தவறவில்லை.
சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும்
கால தேசவர்த்தமானங்களைக் கடந்த காதல் நாவல்களும் குடும்ப நாவல்களும் எழுந்த இக் காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க சிலர் தாம் வாழும் சமூகத்தையும் பிரதேசங்களையும் கருத்திற் கொண்டு நாவல்களை எழுத முயன்றனர். இவ்வாறு எழுதப்பட்ட நவல்கள் 'ஆசை பற்றி அறையலுற்ற' ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்தனவெனினும் வரலாற்று நோக்கிற் குறிப்பிடத்தக்கன. சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் கொண்டவை என்ற வகையில் இளங்கீரனின் நாவல்களையும் பரிசோதனை முயற்சிகளையும் தனித்தனியாகவும் நோக்கலாம்.
'மறுமலர்ச்சி' எழுத்தாளரான அ. செ. முருகானந்தம் யாழ்ப்பாணக் கிராமப்புற மண் வாசனையை எழுத்தில் வடிக்க முயன்றவர். இவரது குறுநாவல்களான வண்டிச்சவாரி (1944), புகையில் தெரிந்த முகம் (1950) இரண்டும் யாழ்ப்பாணப் பிரதேசப் பழக்க வழக்கங்கள் சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றைச் சித்திரிப்பவை; சமூகக் குறைபாடுகளையும் தொட்டுக் காட்டுவன. இவர் யாத்திரை என்ற தொடர் நாவலையும் (1958) எழுதியுள்ளார்.
உபகுப்தன் என்ற புனைபெயரில் கனக செந்திநாதன் எழுதிய விதியின் கை (1953) நாவல் காதல், கிராமப்புறப் பண்பாட்டம்சங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை இணைத்து எழுதப்பட்டது. இந் நாவலின் கதைக்களமான 'மாஞ்சேரி' யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமமொன்றின் கற்பனைவடிவம். இங்குள்ள உயர்சாதிப் பணக்காரக் குடும்பங்களுக்கிடையில் நிகழும் போட்டி மனப்பான்மையும் உட்பூசலும் ஒரு காதலுக்கும் சமூக நலனுக்கும் தடையாகிறது. சமூகக் குறைபாடுகளுக்கெதிரான கருத்துக்கள் கொண்ட மாசிலாமணி என்ற ஆசிரியன் அன்றைய கால கட்டத்தில் மாறிவரும் தலைமுறையின் பிரதிநிதி; அவ்வகையில் ஒரு முற்போக்குவாதி. ஆயின் செயற்றிறன் வாய்ந்தவனல்ல. சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவனாக அவன் அமையவில்லை. விதிப்படி கதை சுபமாக நிறைவுறுகிறது. கிராமத்துப் பாடசாலை, கிராமச் சங்கத் தேர்தல், காவடி ஆட்டம் ஆகியவற்றை நாவலின் கதை வளர்ச்சிக்கு ஏற்றவகையிற் புகுத்திக் கிராமத்தின்'உயிர்மூச்சைக்' காட்ட வேண்டுமென்ற தன் எண்ணத்துக்கு வடிவம் தரமுயன்றுள்ளார். கிராமச் சங்கத் தேர்தல் விவரணத்தில் ஆசிரியர்,
"உள்ளூர்க் கவிராயர்கள் பாடிய 'கணபதிப்பிள்ளைச் சிந்தும்' உணர்ச்சி வசப்பட்டோர் எழுதிய 'சுவர்ப் பழமொழி'களும் எங்கும் காட்சியளித்தன. பூசினிக்காய் கூடச் சரியாக வரையத் தெரியாத எத்தனையோ மாணவர்கள் யானையும் பைசிக்கிளும் அழகாகக் கீறிப் பெரிய ஓவிய விற்பன்னர்களாகி விட்டார்கள் ... ஒளிவு மறைவிலே ஒரு போத்தல் உட்செலுத்தியவர்கள் பகிரங்கமாகக் கூட்டத்தோடு கூட்டமாய்க் குடித்து விட்டுக் கும்மாளமடித்தனர். அரைநிர்வாணப் பக்கிரிகளாய் அலைந்த ஐந்தாறு வாலிபர்கள் அருமையான வேட்டி சால்வைகளோடு அரசியலும் பேசியது அற்புதத்திலும் அற்புதமாக இருந்தது"[15]
எனத் தமது நகைச்சுவையுணர்வைப் புலப்படுத்தியுள்ளார். கதையம்சத்திற் புதுமையற்ற இந்நாவல் ஒரு காலச் சமூகச் சித்திரம் என்றவகையில் கவனத்திற்குரியதாகிறது. பரதன் என்ற புனைபெயரில் வெறும்பானை (1956-57) என்ற தொடர் நாவலையும் இவர் எழுதியுள்ளார்.
'கசின்' என்ற புனைபெயருடைய க. சிவகுருநாதன் ஐம்பதுகளில் ஈழகேசரியிற் பதினொரு தொடர் நாவல்களெழுதியுள்ளார். இவற்றுட் பல குறுநாவல்கள். இந்த நாவல்களிலே சமகால சமூக குடும்ப ஊழல்கள் நகைச்சுவையுடன் தொட்டுக் காட்டப்படுகின்றன. ஆசிரியரான இவர் தனது நாவல்களிலே ஆசிரியப் பணியோடு தொடர்புடையவர்களையே பாத்திரங்களாகக் கொண்டுள்ளார்.
"சுவர்ணலிங்கம் கனகாம்பரத்திற்கு உத்தியோகம் எடுத்துக் கொடுத்தமாதிரி இன்னும்பல ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியர்களுக்கும் உத்தியோகம் எடுத்துக் கொடுத்திருந்தான் ...... சுவர்ணலிங்கத்திற்குச் சம்பளத்தை விட வெட்டுக் கொத்துக்கள் அதிகம் என்று எங்கும் கதை பரம்பின"[16]
இவரின் குமாரி இரஞ்சிதம் (1952) நாவலில் வரும் ஒரு பாத்திர விவரணம் இது. இவருடைய நாவல்கள் தொடர்பாகக் குறிப்பிடுகையிற் கனக. செந்திநாதன்
"அவருடைய கதைகள் முறைதவறிய காதலையோ, காமத்தையோ சித்திரிப்பனவானகவும், எங்கேயோ நடந்த உண்மைக் கதைகளை வாசிப்பனவாகவும் அமைந்திருக்கின்றன."[17]
என்பர்.
வ. அ. இராசரத்தினம் எழுதிய கொழுகொம்பு (1955-56) நாவல் காதல், தியாகம் முதலிய தனி மனித உணர்வுகளுடனமைந்ததொரு குடும்பக் கதையாக அமைந்தாலும் கதை நிகழும் களம், கதாசிரியர் வழங்கும் செய்தி ஆகியனவற்றினடிப்படையில் அதனையும் சமகாலச் சமூக உணர்வுடைய நாவலாகவே கொள்ள வேண்டும். கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்டெழுதப்பட்ட நாவல் என்ற வகையிற் குறிப்பிடத்தக்க சிறப்பு இந்நாவலுக்கு உண்டு.
மூதூரைச் சேர்ந்த நடராஜன் தனது மாமன் மகளான கனகத்தைக் காதலிக்கிறான். இருவரின் குடும்பங்களுக்குமிடையில் நிலவும் பகைமையுணர்ச்சி காதலுக்குத் தடையாகிறது. நடராஜன் கனகத்தைத் தன்னுடன் வந்து இடுமாறு அழைக்கிறான். அவள் அவனது படிப்பைக் காரணங் காட்டிச் சிலகாலம் பொறுத்திருக்கும் வண்ணம் கேட்டுக் கொள்க்றாள். அவளது காதலில் நம்பிக்கையிழந்த நடராஜன் விட்டு விலக், தொழில் பார்க்குமிடத்தில் பிலோமினா என்ற பெண்ணை மணம் புரிகிறான். கனகத்தின் காதலை அறிய நேர்ந்த பிலோமினா அவளுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்கிறாள்.
சமூகத்திற் பெண்கள் ஆண்களை நம்பி ஏமாற்றமடைந்து துன்புறாது தமது காலிலே தனித்து நின்று இயங்கவல்ல சமுதாய நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அதுவரை ஆண்களே பெண்களுக்கு கொழுகொம்பு ஆக அமைய வேண்டும் என்றும் பிலொமினா மூலம் ஆசிரியர் போதிக்கிறார். இந் நாவலில் மூதூர்ப் பிரதேச இயற்கைச் சூழல், மக்கட்பண்பு என்பன புலப்படுத்தப் படுகின்றன. வ. அ. இராசரத்தினம் துறைக் காறன் (1959) என்ற இன்னொரு தொடர் நாவலையும் எழுதியுள்ளார்.
இக்காலப் பகுதியில் ஈழத்தின் மலையகப் பிரதேசமும் தமிழ் நாவலுக்குப் பகைப்புலமாக அமையத் தொடகுகின்றது. மலையக மக்களின் அவல வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு சி. வி. வேலுப்பிள்ளை வீடற்றவன், வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்களை எழுதினார். டி. எம். பீர் முகமது என்பார் ஹமீதாபானு என்ற புனைபெயரில் கங்காணி மகள் என்ற குறுநாவலை எழுதினார். இதில் மலையகத்தின் பேச்சு வழக்கு வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளது என்பர்.[16] மலையகத் தொழிலாளர் வாழ்க்கைப்ம் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு செ. சிவஞானசுந்தரம் (நந்தி) எழுதிய மலைக்கொழுந்து (1962) நாவலை அடுத்த இயலிலே தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள் என்ற பகுதியில் நோக்கலாம்.
க. சொக்கலிங்கம் (சொக்கன்) மலர்ப்பலி (1949), செல்லும் வழி இருட்டு (1961) ஆகிய இரு நாவல்களை இக்காலப் பகுதியில் எழுதினார். இவற்றுட் செல்லும் வழி இருட்டு (1961ஆம் ஆண்டுக்குமுன்) பாடசாலைகளைச் சமய நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் நிர்வகித்துவந்த காலப் பகைப்புலத்தில் எழுதப்பட்டது; முகாமையாளரின் அடக்குமுறைகளால் ஆசிரியர்களநுபவித்த இன்னல்களையுணர்த்துவது. குறிப்பிட்ட ஒரு ககா கட்ட சமூகப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டதென்ற வகையில் இந்நாவல் குறிப்பிடத்தக்கது.
இளங்கீரனின் நாவல்கள்
ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர் என்ற வகையில் இளங்கீரன் வரலாற்று முக்கியத்துவமுடையவராகிறார். ஏறத்தாழ இருபது நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர் என்ற வகையில் மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை அணுகித் தீர்வுகூற விழைந்த முதல் நாவலாசிரியர் என்ற வகையிலும் ஈழத்துத் தமிழ் நாவலுக்குத் தேசியச் சாயல் தரமுயன்ற முதல்வர் என்ற வகையிலும் இவருக்குச் சிறப்பானதோர் இடமுண்டு.
இவரால் ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட பத்துத் தொடர் நாவல்களில் நூல்வடிவம் பெற்றவை தென்றலும் புயலும் (1955), நீதியே நீ கேள்! (1959) இரண்டுமாகும். புயல் அடங்குமா? (1954), சொர்க்கம் எங்கே (1955), மனிதர்கள் (1956), இங்கிருந்து எங்கே? (1961), காலம் மாறுகிறது (1964) ஆகியன தினகரன் பத்திரிகையிலே தொடராக வெளிவந்தன. மண்ணில் விளைந்தவர்கள் (1960) நாவல் தமிழன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972) நாவல் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. சிரித்திரன் சஞ்சிகையில் இப்பொழுது (1977-78 இல்) அன்னை அழைத்தாள் என்ற தொடர்நாவலை எழுதிவருகிறார்.
தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! இரண்டும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பகைப்புலத்திற் காதலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டவை. முதலாவது நாவலிற் சாதியை மீறிய காதலும் இரண்டாவது காதலில் இனத்தை மீறிய காதலும் வெற்றி பெறுகின்றன. இரண்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்குட்பட்ட காதல்கள் தோல்வியடைகின்றன.
யாழ்ப்பாணத்தில் உயர் சாதியைச் சேர்ந்த பாலுவின் குடும்பம் வீட்டை ஏலத்தில் இழந்து அல்லலுறுகின்றது. வேலை தேடிக் கொழும்புக்குச் சென்ற பாலு அங்கு பணக்காரப் பெண்ணான மனோன்மணியைக் காதலித்து உடலுறவும் கொள்கிறான். அந்தஸ்து வேறுபாட்டால் மனோன்மணி வேறொருவனுக்கு மனைவியாகிறாள். பாலு காதல் தோல்வியால் மனமுடைந்து வருந்துகிறான். பாலுவின் தங்கை தங்கம் தாழ்த்தப்பட்ட சாதியினனெப்படும் பூபதியைக் காதலித்துப் பலத்த எதிர்ப்புக்கிடையில் மணம் புரிந்து கொள்கிறாள். பாலுவும் தந்தையும் மனத்துயர் தாழாமல் மரணமடைகின்றனர். தென்றலும் புயலும் நாவலின் இக் கதைப் போக்கில் ஆசிரியரின் குரலாக நடராசன் என்ற பாத்திரம் அமைகின்றது. யதார்த்த சமூக நிலையை உணர்த்தும் சிந்தனையாளனாக இப் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர்மீது உயர் சாதியினரென்று கூறப்படுவோர் கைக்கொள்ளும் அடக்குமுறை, வெறுப்பு மனப்பான்மை என்பனவும் பொருளாதார நிலையிலே தாழ்ந்த வேளையிலும் சாதிப்பிடிப்பை விட்டு நீங்கா மனவியல்பும் இந் நாவலிற் காட்டப்படுகின்றன. தங்கம் தனது சாதியை மீறிப் பூபதியைக் கரம்பற்றுவதாகக் காட்டுவதன் மூலம் இளங்கீரன் தனது சமூக மாற்ற விருப்பத்தின் படியான தீர்ப்பை அவள்மீது சுமத்தியுள்ளார் எனலாம்.
தென்றலும் புயலும் நாவல் தொட்டுக் காட்டிய வர்க்க வேறுபாட்டை விரித்து வளர்த்துக் காட்டுவது நீதியே நீ கேள்! நாவல். முதலாளி பரமசிவத்தின் மகன் கணேஷ் தொழிலாளி வல்லிபுரத்தின் மகள் பத்மினியைக் காதலிக்கிறான். பொருளாதார எற்றத்தாழ்வு தடையாகிறது. அதை மீறிக் காதலர் ஒன்றிணைய முயலும் வேளையிற் பத்மினி திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறாள். கணேஷின் தங்கை தவமணி தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த பிரேமதாஸ் என்ற சிங்களவரைத் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மணம் புரிகிறாள். இக் கதையம்சம் பல்வேறு விவரணங்களுடனும் உரையாடல்களுடனும் நானூறு பக்கங்களுக்கு மேல் நீண்டுள்ளது. இந் நாவலில் வரும் அன்சாரி என்ற பாத்திரம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார உறவு முறைகட்கிடையிற் போராடிக் கொண்டே ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைகின்றது. தென்றலும் புயலும் நாவலில் நடராசன் என்ற பாத்திரத்தின் தர்க்கரீதியான வளர்ச்சியாக அன்சாரி என்ற பாத்திரம் அமைந்துள்ளதெனலாம்.
இரண்டு நாவல்களிலும் சில பொதுப்பண்புகள் உண்டு. சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் பொதுவுடமைத் தத்துவத்தினூடாக அணுகித் தீர்வுகாண விழைகின்றார் இளங்கீரன். தென்றலும் புயலும் நாவலில் அரும்பிய இக்கண்ணோட்டம் நீதியே நீ கேள்! நாவலில் விரிவடைந்து அடுத்துவந்த நாவல்களில் மேலும் தெளிவாக வற்புறுத்தப்படுவதைக் காணலாம். சிங்கப்பூர், மலேசியா முதலிய பிரதேசங்களிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்து எழுதிய பின்னர் ஈழத்துக்கு வந்தபொழுது இவரை முதலில் தூண்டி நின்றது ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதவேண்டும் என்ற ஆர்வமேயாம். இதனை அவர்,
"... இலங்கைக்கு வந்தபிறகு, இந்நாட்டுச் சூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டு கதைகளும் நாவல்களும் எழுத வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. ஆர்வம் என்னைத் தூண்டியது. உடனே தென்றலும் புயலும் என்ற இந்த நாவல் உருவாகி ஆனந்தன் இதழில் தொடர்ந்து வெளிவந்தது. வாசகர்கள் விரும்பி வரவேற்று ஆர்வத்துடன் படித்தார்கள். இந்த வரவேற்பு மேலும் எழுதத் தூண்டியது.[19]
எனத் தெளிவாக்குகிறார். தமிழ் நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'பகுத்தறிவுப் பாசறை'யினைச் சார்ந்திருந்த போது பெற்ற சமூகப் பார்வை சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க முரண்பாடுகளையும் அணுகும் சிந்தனையாற்றலைத் தூண்டி நின்ற தெனலாம். ஈழத்திற்கு மீண்டுவந்து இடதுசாரி அரசியல் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனிணைந்து எழுதமுயன்ற வேளையில் இச் சிந்தனையாற்றலும் எழுத்தார்வமும் வளர்ச்சியடைந்தன எனலாம். நீதியே நீ கேள்! நாவலில் அன்சாரி என்ற பாத்திர வாயிலாக,
"கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரான நாம் நமது உரிமைகளை இதுவரை விட்டுக் கொண்டிருந்தது போதும். முதலாளிகளின் அக்கிரமங்களுக்கும் அநீதியான போக்குகளுக்கும் அடங்கியிருந்தது போதும் ..... நாம் சங்கங்களில் ஒன்றுதிரள விரும்புகிறோம். ஒரு மாபெரும் தொழிலாளர் இயக்கத்தில் தொழிலாளர் கட்சியில் உழைப்பாளர் அனைவரையும் ஒன்றுபடுத்த விரும்புகிறோம்"[20]
என்று தொழிலாளரை ஒன்றிணைக்கும் பொதுவுடமைக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இங்குத் தொழிலாளர் கட்சி என்பது பொதுவுடமைக் கட்சியே யாகலாம். 1956ஆம் ஆண்டு அரசியலில் இடதுசாரியினர் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து - பொதுவுடமைக் கட்சி யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சூழ்நிலையில்[21] - நவீன தமிழிலக்கியத்திலே இக்கோட்பாடு தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் 1954ஆம் ஆண்டிலே தமது கைநூலில்[22] வெளியிட்ட "சோஷலிஸ்ட் யதார்த்தவாதம்" என்ற இலக்கியத் தத்துவத்தைத் தமது நாவலில் ஆங்காங்கே பிரச்சினைகளைச் சித்திரிப்பதன் மூலமும் பாத்திரப் பண்புகளைப் புலப்படுத்துவதன் மூலமும் வெளிக்காட்டியுள்ள இளங்கீரன் அதற்கியையும் வண்ணமே நடராசன், அன்சாரி ஆகிய பாத்திரங்களைப் படைத்துள்ளார் எனலாம்.
நீதியே நீ கேள் நாவலில், முதலாளிகள் தொழிலாளரைச் சுரண்டும் நிலையை மாற்றியமைக்க வேண்டுமென்று கூறும் தொழிற்சங்கவாதியான அன்சாரி, தொழிற்சங்கத்திற் சேரவந்த சோமசுந்தரம் என்ற தொழிலாளியை வேலை நீக்கம் செய்யும் முதலாளி பரமசிவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறான்.
தொழிலாளரது வறுமை, துன்பம் என்பவற்றை உணர்கின்றவனாகவும் அன்சாரியுடன் பழகுபவனாகவும் படைக்கப்பட்ட பரமசிவத்தின் மகன் கணேஷ், காலமாற்றத்துடன் இணைந்து தொழிலாளர்பால் அநுதாபம் கொள்ளத் தொடங்கும் முதலாளி வர்க்கத்தின் வாரிசாக அமைகிறான். முதலாளி வர்க்கத்தின் வகைமாதிரியான பாத்திரங்களாகப் பரமசிவம், மகாதேவா ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.
சிங்களவரான டாக்டர் பிரேமதாஸ தமிழ்ப் பெண் தவமணியை மணம்புரிவதும் அன்சாரி என்ற இஸ்லாமியப் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளமையும் ஆசிரியரின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வின் வெளிப்பாடுகள் எனலாம். இப் பாத்திரங்கள் தத்தம் சமூகத்தின் பிரதிநிகளாக 'வகைமாதிரி'யாய் அமையாமல் தனிமனித பாத்திரங்களாகவே அமைந்துள்ளன.
தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! ஆகிய இரு நாவல்களிலும் முக்கிய பாத்திரங்கள் மரணமடைகின்றன. வர்க்க வேறுபாடு தொடர்பான தமது கோட்பாட்டை வலியுறுத்துவதற்கும் நாவல்களின் உணர்ச்சிகரமான நிறைவுக்குமாக ஆசிரியர் பாத்திரங்களின் தலைவிதியை நிர்ணயித்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.
நீதியே நீ கேள்! நாவலின் கதையம்சம் நெகிழ்ச்சியடைந்துள்ளது. தொடர்கதைத் தேவையையொட்டி விரித்தெழுதப்பட்டமையால் இவ்வாறு அமைந்துள்ளது போலும். பத்மினி கொல்லப்பட்ட பின் கணேஷ் பத்மினியின் தம்பி தங்கையர்க்காகத் தன்னைப் பரித்தியாகம் செய்து கொண்டு வாழ்வதாக அமையும் நாவலின் முடிவு சமகால, காதல், தியாகம் முதலிய தனிமனித உணர்வு நாவல்களின் முடிவாகவே யுள்ளது.
பரிசோதனை முயற்சிகள்
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகள் என்ற வகையில் மத்தாப்பு (1961), தீ (1961) ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். மத்தாப்பு ஐவர் இணைந்தெழுதிய குறுநாவலாகும். தமிழ் நாட்டிற் சுதேசமித்திரன், உமா ஆகிய பத்திரிகைகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகைக் கூட்டுமுயற்சிகளை வாசித்தவர்களால் அவற்றை மாதிரியாகக் கொண்டு இது எழுதப்பட்டது.[23] பொறாமை காரணமாகக் கொலைக்குற்றஞ் சாட்டப்பட்ட மாரிமுத்துவின் துயரக் கதையான இதைச் 'சு. வே' (சு. வேலுப்பிள்ளை), கனக செந்திநாதன், இ. நாகராஜன், குறமகள் (இ. வள்ளிநாயகி), எஸ். பொன்னுத்துரை ஆகியோர் எழுதியுள்ளனர். யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சுத் தமிழும் மலையக, சிங்கள கிராமப் புறப் பிரதேச மொழி வழக்குகளும் விரவ எழுதப்பட்டுள்ள இக் குறுநாவலில் 1858ஆம் ஆண்டு இனக் கலவரப் பகைப்புலமும் தொட்டுக் காட்டப்பட்டுள்ளது. வீரகேசரியில் தொடர்நாவலாக வெளிவந்த இது நூல்வடிவம் பெற்றுள்ளது. வண்ணமலர், மணிமகுடம், கோட்டைமுனைப் பாலத்திலே முதலிய இவ்வகைக் கூட்டு முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ். பொன்னுத்துரை எழுதிய 'தீ' கதையம்சத்திலும் உத்திமுறையிலும் தமிழ் நாவலின் வரலாற்றிற் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. ஆடவனொருவன் பல்வேறு பெண்களுடன் பாலியலுறவு கொண்டு அவ்வநுபவங்களை சுயசரிதைப் போக்கில் விபரிக்கிறான். கதை கூறும் முறையிலே அநுபவங்களை மீளப்பார்க்கும் நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது.
கதாநாயகனான 'நான்' பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகா, சரசு ஆகியவர்களை ஒவ்வொருவராக அநுபவிக்கிறான். புனிதம் விருப்பத்திற்கெதிராக மணம் செய்து வைக்கப்பட்ட மனைவி. லில்லி அந்தஸ்தில் உயர்ந்தவள். அவள் மேலேதான் அவனுக்கு காதல் பிறக்கிறது. தனது அந்தஸ்துக்குக் குறைந்த பெண்களிடம் அவனுக்குப் பாலியலுணர்ச்சி மட்டுமே உண்டாகின்றது.
"பாலுணர்ச்சியின் அடிப்படைத் தன்மையை அறிமுகப் படுத்துவதற்காக அதை மையமாக வைத்து - மலர்களைக் கோக்கிறார் ஆசிரியர். ஒவ்வொன்றாய் அவை வந்து போகின்றன. வாடி நார் மட்டும் மிஞ்சி நிற்கிறது. நார்! வாழ்க்கையின் உந்தல், வீரியம்! அதுதான் மையம். பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகம், சரசு - அவர்களல்ல முக்கியம். முக்கியமான நார், பாலுணர்ச்சி -"[24]
என இந்நாவலை விமர்சனம் செய்த மு. தளையசிங்கம் இது காட்டும் பாலுணர்ச்சி முக்கியத்துவத்தைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டச் செயல்கள் கால வளர்ச்சிக்குப் பொருந்தாத விற்போக்குத் தனம் என்பர்.[25]
மதிப்பீடு
எழுத்தார்வக் காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதப்பட்டன. இவற்றுட் பெரும்பாலன பத்திரிகைத் தொடர்கதைகளாக வெளிவந்த நிலையிலேயே உள்ளன. பல்வேறு வகையிலும் தரத்திலும் அமைந்த இவற்றிலே வரலாற்று நோக்கிற் குறிப்பிடத்தக்கவற்றைத் தொகுத்தும் வகுத்தும் நோக்கும் முயற்சியே இவ்வியலில் மேற்கொள்ளப்பட்டது.
பிறமொழி நாவல்களையும் தமிழ்நாட்டு நாவல்களையும் வாசித்த அருட்டுணர்வால் எழுத்தார்வம் பெற்ற இக்கால ஈழத்து நாவலாசிரியர்கள் எழுத்தை ஒரு கலை என்றும் எழுத்தாளராக மதிக்கப்படுவது ஒரு சமூக அந்தஸ்து என்றும் கருதியவர்கள். இவர்களிற் பலர் சிறுகதைகள் எழுதிப் பெற்ற அநுபவத்துடன் நாவல் எழுத முயன்றவர்கள். இவ்வகையிலே சமுதாய சீர்திருத்தக் காலப் போதனை நோக்கினரிலிருந்து இவர்கள் வேறுபடுகின்றனர். இவ்வேறுபாடு இவர்களது படைப்புக்களிலும் பிரதிபலித்தது.
இக்கால நாவலாசிரியர்கள் பலர் சமகால தமிழ்நாட்டு நவீன இலக்கியப் போக்குடன் இணைந்து எழுதியவர்கள். இதனால் நாவல்களின் பொருள், வடிவம், உத்திமுறை என்பவற்றிலே தனித்துவம் பேண முடியாதவர்களாயினர் எனலாம். காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சமகாலத் தமிழ்நாட்டுக் குடும்ப நாவல்களாலும் மர்மப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்களாலும் கவரப்பட்ட இக்காலப்பகுதி ஈழத்து நாவலாசிரியர்களின் படைப்புக்களிற் பல 'ஆசைபற்றி அறையலுற்ற' ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்ததில் வியப்பில்லை. இவற்றுட் க. தி. சம்பந்தனின் பாசம் குறிப்பிடத்தக்கது. காலதேச வர்த்தமானங்களைக் கடந்த இவ்வகை நாவல்கள் எழுத்தார்வத்தை மட்டுமே வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
ஐம்பதுகளிலே சமகால சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் பொருந்த எழுத முயன்றவர்களுள்ளும் பெரும்பாலோர் கதையம்சத்திலும் பாத்திரப் படைப்பு முதலியவற்றிலும் தனித்தன்மையைப் புலப்படுத்தவில்லை. அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம், சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை முதலியோர் சமகால ஈழத்து மக்கள் வாழ்க்கையைக் கதைக்குக் களமாகக் கொண்டோர் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்கள்.
இக்காலப்பகுதி நாவலாசிரியருள் இளங்கீரன், எஸ். பொன்னுத்துரை இருவருமே தரமான படைப்புக்களைத் தந்தனர். எஸ். பொன்னுத்துரையின் தீ தமிழில் அதுவரை பிறர் கையாளாத கதையம்சத்தைக் கொண்டது. ஈழத்தில் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட முதலாவது நாவல் என்ற சிறப்பும் இதற்குரியது.
இளங்கீரன் சமகாலச் சமூகப் பிரச்சினைகளை மார்க்சியக் கோட்பாட்டில் அணுகித் தீர்வுகூற முயன்றவரான பொழுதிலும் தமது இக்கால நாவல்களின் கதையம்சத்திற் காதல், தியாகம் முதலிய உணர்வுக்ளையே முன்வைத்ததன் மூலம் வழக்கமான தமிழ்நாட்டு நாவல்களைப் போலவே எழுதியுள்ளார். தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! நாவல்களில் இதனைத் தெளிவாகக் காணலாம். சாதி ஏற்றத்தாழ்வும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் காதலுக்குத் தடையாகின்றன என்னும் கருத்தை விளக்கும் வகையிலேயே இரண்டின் கதைப்போக்கும் அமைந்துள்ளமையைக் காணலாம். எனினும் சமகால ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை விரிவான முறையிலே தமது நாவல்களில் பிரதிபலித்தவர் என்ற சிறப்பு இவருடையது.
"பத்து வருடங்களுக்கு மேலாக அமைதியாக இருந்து தேசியப் பண்பு பொருந்தப் பெற்ற யதார்த்த இலக்கியங்களைப் படைத்து வந்திருக்கும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்"[26]
என இவரது நாவலிலக்கியப் பணியைக் க. கைலாசபதி பாராட்டுவர். இளங்கீரனின் நாவல்களை யதார்த்த நாவல்கள் என்று கொள்ள முடியாது. சமகாலத்திலே தமிழ் நாட்டில் அகிலன் முதலியோர் பத்திரிகைகளைக் களமாகக் கொண்டு செய்த பணியையே இளங்கீரனும் ஈழத்திற் செய்துள்ளார் என்பதையும் அவ்வகையிலே அவை ஈழத்தில் அதற்கு முன்வந்த தமிழ் நாவல்களைவிடத் தரமானவையாக அமைந்தன வென்பதையும் மறுப்பதற்கில்லை.
அடிக்குறிப்புகள்
1. க. சச்சிதானந்தனின் அன்னபூரணி தொடர்நாவலின் முடிவிலமைந்த பத்திராதிபர் குறிப்பு. ஈழகேசரி, 1942.12.27, பக். 7.
2. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல், நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, பக். 165.
3. சில்லையூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, 1967, பக். 34
4. யாழ்ப்பாணம் 'தேவன்' தமது 'கேட்டதும் நடந்ததும்' (1956) நாவலின் 'வாசகர்களுக்கு' என்ற முடிவுரைப் பகுதியிலே (பக். 302) இவ்வுறவுமுறையைக் குறிப்பிட்டுள்ளார்.
5. கனக. செந்திநாதன், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, 1964, பக். 104. க. கைலாசபதி, 'முதன் முதலில் சந்தித்தேன்' மல்லிகை, 1973 நவம்பர், பக். 8. இவ்விருவரும் தந்த தகவல்களிலிருந்து இக் கருத்துப் பெறப்பட்டது.
6. அகிலன், 'எழுத்தும் வாழ்க்கையும்' தீபம், 1978 பிப்ரவரி, பக். 7
7. செ. கணேசலிங்கனின் நீண்டபயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), போர்க்கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியனவும் யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்? (1968) நாவலும் வேறுசில நாவல்களும் தமிழ்நாட்டின் பாரிநிலைய வெளியீடுகளாகும்.
8. ஈனோக் ஆர்டன், 'ஒரு சிறு முன்னுரை', ஈழகேசரி. 1939-6-18, பக். 4
9. அ. ந. கந்தசாமி 'புதிய தமிழ் இலக்கியம்', ஈழகேசரி, 1943-10-17
10. 'ஆசிரியர் உரை', விதியின் கை, வீரகேசரி பிரசுரம், 1977
11. 'நான் ஏன் எழுதுகிறேன்', வானொலி மஞ்சரி, 1972-8-28, பக்.3
12. பொ. பூலோகசிங்கம், தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள், 1970. முன்னுரை, பக். v
13. சில்லையூர் செல்வராசன், மு. கு. பக். 41
14. பாசம் தொடர் நாவல், அத்தியாயம் 30, ஈழகேசரி, 1974-9-14, பக்.7
15. விதியின் கை, வீரகேசரி பிரசுரம், 1977, பக்.43
16. குமாரி இரஞ்சிதம், தொடர்நாவல், ஈழகேசரி, 1962-12-7, பக். 6
17. ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பக். 105
18. சில்லையூர் செல்வராசன், மு. கு. பக். 41
19. 'நாவலும் நானும்', தென்றலும் புயலும், 1956, பக். v. தடித்த எழுத்துக்கள் எம்மாலிடப்பட்டன.
20. நீதியே நீ கேள்!, 1962, பக். 121-122
21. பருத்தித்துறைத் தொகுதியில் 1956இல் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த பொன். கந்தையா பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
22. கா. சிவத்தம்பி, 'இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்', புதுமை இலக்கியம், 1975, பக். 25-26 இல் இக் கைநூல் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
23. மத்தாப்பு முகவுரையிற் கனக. செந்திநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
24. எழுத்து, 1963 ஜனவரி, பக். 20
25. எழுத்து, 1963 ஜனவரி, பக். 21
26. நீதியே நீ கேள்!, அணிந்துரை, பக். xix
----------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக