ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
வரலாறு
Backஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
சில்லையூர் செல்வராசன்
அருள் நிலையம்
12, உஸ்மான் ரோடு, சென்னை - 17
----------------------------------------------------------------
முதற்பதிப்பு: 1967
விலை ரூபாய் இரண்டு
***
சௌந்தரா பிரிண்டர்ஸ், சென்னை-17
----------------------------------------------------------------
முன்னுரை
ஈழநாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிபற்றிய நூலொன்றினை எழுதுதல்வேண்டும் என்ற எண்ணம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளின்முன் எனக்கு உண்டாயிற்று. தென்னிந்தியாவில் எழுகின்ற - நூல்களுள்ளே பெரும் பாலானவை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளுக்கும் உரிய இடமளிக்காமை நெடுங்காலமாக என் மனத்தே உறுத்திக் கொண்டிருந்தது. ஈழத்து அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்திலிருந்து தொடங்கி எடுத்துப் பேசியியும் எழுதியுங் கொண்டுவர, எனது மனமோ அவர்கள் குறித்துங் காலத்துக்கு முற்பட்டதொரு கால எல்லைக்குச் சென்று உலாவிக்கொண்டிருந்தது. எனது கருத்தின்படி ஈழநாடு பண்டைத் தமிழகத்தின் புறத்தே கிடந்ததொரு நாடு அன்று: தமி•ழ மரபுரைகள் குறிக்கும் முதற்சங்க காலத்துக்கும் முற்பட்ட பழம்பெரு நாடு அது என்பதே யான் கண்டுகொண்ட உண்மையாகும். முதற்சங்க காலத்துக்கு முன்னும் ஈழநாடு இருந்த சுவடு தெரிகின்றது. பழந்தமிழ் நூல்களும் சாசனங்களும் அந்தச் சுவட்டினைத் தெளிவாகக் காட்டுகின்றன. உண்மையில் தமிழரின் மூலத் தாயகப் பகுதி என்ற பெயருக்குத் துணைக்கண்டப் பகதியைவிட மிகப் பழமை வாய்ந்த உரிமையுடையது இலங்கையேயாகும் . எனப் பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரைப்பிள்ளை அவர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தருகின்றார்கள்.
இங்ஙனமாகப் பழமைவாய்ந்த ஈழநாட்டின் இலக்கிய வளர்ச்சியினை ஈழத்துப் பூதந்தேவனார் காலத்திலிருந்து தொடங்கி மடக்கிட எனது மனம் இயையவில்லை. எனவே, அக் காலத்துக்கு முந்தியவையான நிகழ்ச்சிகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் தமிழிலக்கியப் பரப்பிலும், கல்வெட்டுக்கள் பட்டயங்களிலும், பிறமொழி நூல்களிலும் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தேன். அவ் வாராய்ச்சியின் பயனாக பன்மொழிப் புலவர் திரு.கா. அப்பாத்துரைப் பிள்ளை அவர்கள் கூறுகூதுபோல், தமிழ், தமிழன் தமிழகம் பற்றிய பல புத்தம் புதிய, முன் எங்கும் எவரும் கண்டறியாத, கேட்டறியாத - ஆனால், முன் விளங்காத பலவற்றை விளங்க வைக்க வைக்கிற-கருத்துக்களை க் கண்டறிந்தேன்.
இலக்கிய வளர்ச்சி பற்றி எழுத எண்ணிய யான் என்னை யறியாமலே பழந்தமிழர் வரலாற்றாராய்ச்சியிலே புகுந்துவிட்டேன். அந்த நிலையில், எனது முதல் எண்ணம் உடனடியாக உருப்பெற்று வளரவில்லை. எனினும் காலத்துக்குக் காலம் கண்டுகொண்டவற்றை அவ்வவ் வேளைகளிலே குறித்துவைத்துக் கொண்டேன். அப்படியாக யான் குறித்து வைத்தவற்றைப் பின்னதாகப் பார்த்தபோது காவியம், நூற்பதிப்பு, இலக்கணம், உரைவகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளிலும் ஈழ நாடு சிறந்த பணி ஆற்றியிருப்பதைக் கண்டேன். எனவே, எவ்வத்துறைகளில் நிகழ்ந்த பணிகளையெல்லாம் ஆராய்ந்து தொகுத்து வந்தேன். அத் தொகுப்புப் பணி ஓரளவுக்கு நிறைவுபெரும் வேளையில், பிற நூலாசிரியர்கள் மேற்காட்டிய துறைகளைப்பற்றி எழுதியவற்றில் அத் துறைகளைப்பற்றி யாது குறிப்பிட்டுள்ளனர் என நோக்கலாம் எனக் கருதினேன். அறிஞர் பலர் எழுதிய நூல்களைப் பெற்றுப் படித்தும் பார்த்தேன். ஏமாற்றமே உண்டாயிற்று. இதுவரை இலக்கிய வளர்ச்சிபற்றி இடையிடை எழுத முற்பட்டோர்கூட முன் காட்டிய துறைகளில் ஒன்றினையேனும் எடுத்து வரன்முறையாக முழுதுறழ் வகையில் எழுத முற்பட்டோர்கூட முன் காட்டிய துறைகளில் ஒன்றினையேனும் எடுத்து வரன்முறையாக முழுதுறழ் வகையில் எழுத முயலவில்லை என்பது புலனாயிற்று. ஈழத்து இலக்கிய வரலாறு இங்ஙனமாகத் தேய்ந்தொடுங்கிக் கிடக்கும் நிலையிலிருக்கும் என யாம் நம்பவில்லை. ஈழத்திலிருந்து நூல்கள் எழுத முற்பட்டோரெல்லோரும் ஈழத்தின் இலக்கிய வரலாற்றைப் பார்க்கிலும்-ஈழமே தலைகாட்டாத-தென்னிந்தியத் தமிழ் வரலாற்றினையே நன்கு அறிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அறிஞர் பலர் தென்னிந்தியத் தமிழ் வளர்ச்சிபற்றிக் காலத்துக்குக் காலம் வெளியிட்ட நூல்களே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன். ஈழநாட்டில் யாராவது தெளிவுபெற ஆராய்ந்து எழுதியிருந்தால் அவற்றைப் பார்த்துப் படி செய்திருப்பார்கள். காரியம் இலகுவாய் முடிந்திருக்கும்.
ஈழநாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர்களின் வரலாறுகளே செம்மையான முறையில் இற்றைவரை எழுதப்படவில்லை என்பது யாம் அறிந்தது. இத் துறையில் முதன் முதலாக ஈழத்தில் அடிகோலியவர் சைமன் காசிச் செட்டி அவர்களாவர் Tamil Plutarch (1859) என்னும் புலவர் வரலாற்று நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் அவர். தென்னிந்தியாவில் வாழ்ந்த புலவர்களையே அவரும் கருத்துட் கொண்டிருந்தார். ஆணல் சதாசிவம் பிள்ளை அவர்கள் 1886ம் ஆண்டில் பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலினை எழுதினார். ஈழநாட்டில் வாழ்ந்த புலவர்கள் பலரது வரலாற்றினைத் தெரிவிக்கும் நூல் அது. அதன்பின் ஈழ மண்டலப் புலவர் சரித்திரம் என்னும் நூலினை ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் 1914ம் ஆண்டின் எழுதி வெளியிட்டார். மகாவித்துவான் சி. கணேசையர் அவர்கள் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம் 1939ம் ஆண்டில் வெளிவந்தது. இங்குக் காட்டப்பட்ட வரலாற்று நூல்களைத் துணையாகக்கொண்டும் முழு நிறைவான இலக்கிய வளர்ச்சியினைத் துலக்கமாக அறிந்துகொள்ள முடியாது.
தமிழ் இலக்கிய வரலாறு-சுருக்கம் எனத் திரு.வி.செல்வநாயகம் (தமிழ் விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை) அவர்கள் 1951ம் ஆண்டில் ஒரு நூலினை வெளியிட்டார்கள். அந்த நூலிலும் புலவர் வரலாறுகள் உரிய வகையிற் கூளப்பட்டிருக்கவில்லை. பல்கலைக் கழகத்து நிலையே இப்படியிருக்கும்போது பிறரிடமிருந்து யாம் எதையாவது எதிர்பார்ப்பது தகாது எனக் கருதி வகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என வரும் துறைகளில் யானாகவே முயன்று செய்திகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் திரட்டத் தொடங்கினேன். அக் காலத்திலேதான் நாவல். சிறுகதை ஆகிய துறைகளில் ஈழ நாட்டினர் எவ்வெப் பணிகளைச் செய்துள்ளனர் என அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன். அவ் வேளையிலே, அத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய நிறைவான வரலாற்றினை எனக்குக் காட்டித் துணைபுரிந்தவர் சில்லையூர், திரு. செல்வராசன் அவர்களாவர்.
ஈழ நாட்டில் 1961ம் ஆண்டில் வெளிவந்துலவிய மரகதம் என்னும் திங்கள் இதழில் ஓட்டிப் பிறவாத இரட்டையர் எனற தலையங்கத்துடன் ஓர் அறிமுகம் ராம்-ரகீம் என்பரால் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிமுகத்தில், சில்லாலை ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதைவிடப் பெரிய கிராமங்களும், ஏன் சிறு நகரங்களுங்கூடப் பெறாத விளம்பரத்தைப் பெற்ற அக் கிராம மக்கள் தம் கிராமத்தை ஈழமெங்கும் மட்டுமல்ல தமிழ் வழங்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்திய செல்வராசனைக் கௌரவிக்க வேண்டும். பொன்னாடை போர்த்தியும் மகிழ்விக்கலாம். என்று கூறி, 'செல்வராசன் சுதந்திரன், வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் கடமையாற்றியுள்ளார். இவர் செய்யும் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், காற்றிலே பறக்கும் வானொலி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்விட அவருடைய கவிதைகளே அவருக்குச் சிறப்பைத் தேடித் தந்தன. தான் தோன்றிக் கவிராய ரான இவர் எழுதிய 'தலைவர்கள் வாழ்க மாதோ! என்ற கவிதைத் தொடர் (தொடரில்வந்த எல்லாம் அல்ல) என்றும் நின்று வாழக் கூடியது. இலக்கிய வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் எழுத்தாளரான இவர் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளையும் விமர்சிக்கத் தயங்காதவர். இதனால் இவருக்குப் பூமாலைகளும், பாமாலைகளும் மட்டுமல்ல 'பொல்லடி களும்கூடக் கிடைப்பதுண்டு என நகைச்சுவை சார எழுதப்பட்டிருந்தவை என் மனதை கவர்ந்தன.
அக் கவர்ச்சி ஏற்பட்ட சில நாள்களின்பின், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான புதுமை இலக்கியம் படைத்தளித்த மாநாட்டு மலரில், நாவல் என்ற தலையங்கத்துடன் சில்லையூர், திரு.செல்வராசன் அவர்கள் எழுதிய கட்டுரையினைக் கண்டேன். அந்தக் கட்டுரையே இன்று அருள் நிலையம் போற்றி வெளியிடுவதாகும். இலங்கையில் எழுந்த நாவல்களை எடுத்தோதுவதுடன் ஒப்பு நோக்கிக் காணும் இவ்வரிய கட்டுரை நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கெல்லாம் மிகவும் பயன்படுதல் கூடும். எனக்கே பெரிதும் பயன்பட்டிருக்கிறது. எனவே, ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோர் நாவல்பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை என இனிக் கவலை கொல்ல வேண்டுவதில்லை; பார்த்தே எழுதிவிடலாம்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்துக்கு முன்னதாக, ஈழ நாட்டிலே தமிழ் மொழியும் சைவ சமயமும் நாட்டின் பல பகுதிகளிலும் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. நாட்டிலுள்ள திருக்கேயில்களிளெல்லாம் கந்த புராணம் படித்துப் பயன் சொல்லப்பட்டு வந்தது. கந்த புராணப் பண்பாடே மக்கள் குருதியில் ஓடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணமே அக் காலத்தில் மொழி வளர்ச்சிக்கும் சமயவொழுக்கங்களுக்கும் ஊற்று நிலையமாய் விளங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணப் பண்பாடே கந்தபுராணப் பண்பாடாகவும் நிலவிய காலம் அது. அக் காலப் பகுதியிலே யாழ்ப்பாணத்துத் திண்ணைப் பள்ளிகளிலேயே கல்வி பயின்றவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று கல்வியும் பண்பாடும் பயிற்றி வந்தார்கள். சிங்கை யாரிய மன்னனின் முயற்சியால் யாழ்ப்பாணத்து நல்லூரில் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்ததென யாழ்ப்பான வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் யாத்தமைத்த நூல்கள் அம் மன்னனால் நிறுவப்பட்ட சரசுவதி மகாலயம் என்னும் நூல் நிலையத்தில் வைத்துப் பேணிக்காக்கப் பட்டனவாம். இம் மன்னனுக்குப் பின் பரராச சேகரன், செகராசசேகரன், அரசகேசரி ஆகியோர் புலவர்களாய் விளங்கித் தமிழ் வளர்த்தார்கள் என்பதையும் காண்கின்றோம்.
ஈழ நாட்டின் பண்பாடும் கல்வி நிலையும் இவ்வாறிருந்தபோதுதான் போர்த்துக்கேயர் ஈழநாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். எனவே, போர்த்துக்கேயர் வந்த காலத்தில் ஈழத்துத் தமிழ் மக்கள் கல்வி மணமின்றி அநாகரிகராயும் அஞ்ஞானிகளாயும் இருந்தார்கள் என்று கூறிவிடமுடியாது. போர்த்துக்கேயர் இங்கு வந்த காலத்தில் அவர்கள் தமது போர்களிற் கண்ணுங் கருத்துமாய் இருந்ததனாற் கல்வித் துறையில் அதிகமான பணிகளைப் புரிவதற்கு இயலாமற் போயிற்று. எனினும், தமது சமயத்தை நாட்டில் நிலை பெறச் செய்வதற்குக் கல்வித் துறையில் ஓரளவு சிந்தை செலுத்துதல் வேண்டுமென்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள்.
1561ம் ஆண்டு தொடக்கம் 1564ம் ஆண்டுவரை மன்னாரிலே தங்கியிருந்து சமயபோதனை செய்துகொண்டிருந்த ஒருவர் எண்டிரிக்குப் பாதிரியார் (Henry Heriquez) என்பார் தமிழ் மொழியினை நன்கு பயின்று சமயபோதனை நடாத்திவந்ததுடன், போர்த்துக்கேய மொழியில் பிளாக் கூசோர்கே என்பார் போர்த்துக்கேய மொழியில் எழுதிய டொக்ரிறினா கிறிஸ்தம் (Doctrina Christam) என்னும் நூலினையும் தமிழில் தம்பிரான் வணக்கம் என மொழி பெயர்த்து அச்சேற்றியிருப்பக் காண்கின்றோம். மன்னாரிலே தங்கியிருந்த காலத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை அங்கு நிறுவிக்கொள்ளவேண்டும் எனக் கதி உழைத்துவந்த எண்டிரிக்குப் பாதிரியார், தமிழ் அகராதி ஒன்றினையும் அர்ச்சியேஷ்டர்களின் வாழ்க்கை வரலாறு ஒன்றினையும் இயற்றி வெளியிருவதற்கு முய்ன்றுகொண்டிருந்தார் என்றும் அறியக் கிடக்கின்றது. மன்னாரில் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இவர் மொழிபெயர்த்த தம்பிரான் வணக்கம் 1578ம் ஆண்டிலே கொக்சியில் அச்சேற்றப்பட்டதாகக்கூறப்படுகின்றது. கொச்சியில் அம்பலக் காடு என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்த ஏசு சபை அச்சகத்திலேயே மரத்திற் செதுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு முதன் முதலாகத் தமிழ் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 1577ம் ஆண்டில் கிறிஸ்தவ வேதோபதேசம் (Flos sanctroum) என்னும் தமிழ் உரைநடை நூல் வெளியிடப்பட்டதாம். அம்பலக் காட்டில் அச்சிடப்பட்ட நூல்கள் இன்னாசி ஆச்சாமணி (Ignatius Aichamani) என்பார் உருவாக்கிய அச்செழுத்துக் கொண்டு அச்சிடப்பட்டனவாகும். புன்னைக்காயல் என்னும் ஊரில் ஜோ-த-வாரியா (John-de-Faria) என்பார் தாமாகவே வேறு அச்செழுத்துக்களை உருவாக்கினார். இங்ஙனமே கோவையிலும், கொல்லத்திலும், யாழ்ப்பாணத்திலும் தனித்தனியான எழுத்துக்கள் அச்சீட்டுக்காக உருவாக்கப்பட்டன.
அச்சுக் கலை என்னும் நூலினை இயற்றிய திரு.மா.சு.சம்பந்தன் அவர்கள் 19ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் தரங்கம் பாடியிலும் வேப்பேரியிலும் இருந்த மேற்சொன்ன அச்சகங்கள் முதலில் ஹாலியில் (1710) உண்டாக்கப்பட்ட சதுர நிலைக்குத்தான் அச்செழுத்துக்களையே (The square upright type-face) பயன்படுத்தி வந்தன. இதற்குப் பின் யாழ்ப்பாணத்தில் அமலில் இருந்ததை அடியொற்றி வட்டமானதும் சிறிது சரிந்த வடிவமுள்ளதுமான அச்சுக்களைப் (A more rounded and slightly sloping type0face) பயன்படுத்தினர். இவ்வகையான அச்சுக்களே 1862-ல் வின்ஸ்கோ தமிழ்-ஆங்கில அகராதி (Winslow's Tamil-English Dictionary) பதிப்பிக்கப்படும்வரை நிலைத்துநின்றன. இந்தப் பெருநூலுக்கு அமெரிக்க அச்சடிப்பாளரான திரு.பி.ஆர்.ஹண்டு (P.R. Hunt) என்பவர் புதிய தமிழ் எழுத்துக்களைப் 'பைசா' (Pica) 'லாங் பிரைமர்' (Long Primer) 'பிரிவியர்' (Brevier) எனப் பல்வேறு அளவுகளில் (விதங்களில்) உருவாக்கித் தந்தார். மேற்சொன்ன பல்வேறு அளவுக்குரிய எழுத்துக்களில் துளைபண்ணும் கருவிகள் அளவுக்குரிய எழுத்துக்களில் துளைபண்ணும் கருவிகள் (Punches) இந்தியத் தொழிற் கலைஞர்களாலேயே நெய்யப் பட்டன என கூறுகின்றார்கள். எனவே, தென்னிந்தியாவில் தமிழ் அச்சீட்டு முறை உருவாகிய காலத்திலே ஈழநாட்டிலும் தனிப்பட்தான அச்சீட்டு முறையே வின்ஸ்கோ தமிழ்-ஆங்கில அகராதியை வெளியிடுவதற்கம் ஏற்றதென அக் காலத்திற் கருதப்பட்டதென்பதும் தெளிவாகின்றது. அதுவுமன்றி பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் 1732ம் ஆண்டில் இயற்றிய சதுர் அசராதி நான்கு தொகுகிளுங் கொண்டதாய் இறிச்சேட்டு கிளாக்கு என்னும் மேலை நாட்டவரின் ஆணைப்படி 1842-ம் ஆண்டிலேயே-யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியிடப்பட்டபின்-வெளியிடப்படவேண்டிவந்ததும் யாழ்ப்பாணத்து அச்சீட்டு முறை சிறப்புடையதாய் இருந்தமையாலேயே என்பதையும் யாம் உணர்ந்து கொள்ளலாம்.
எப்படிப் பார்ப்பினும், மேலைநாட்டவர் வருகையினால் தென்னிந்தியாவிலும் ஈழ நாட்டிலும் ஏறக்குறைய ஓரே காலப் பகுதியில் துரிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றங்களுள் ஒன்றுதான்இதுவரை எடுத்துக் கூறப்பட்ட அச்சுப் பொறியின் வருகையாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போர்த்துகேயர் முதுலில் வந்தார்கள். வாணிகத்தின் பொருட்டு வந்தார்கள். வந்தவர்கள் தங்களுடன் தாங்கள் பற்றியொழுகும் கிறிஸ்து சமயத்தினையும் பரவச் செய்வதற்காகப் பாதிரிமாரையும் அழைத்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே கிற்த்து சமயத்தைப் பரப்புவதிலும் மக்களைச் சமயம் மாறச் செய்வதிலும் தனி ஊக்கங்கொண்டு உழைத்தார்கள். அவர்கள் அங்ஙனம் மத மாற்றம் செய்வதற்கு இந்தியாவிலும் இலங்கையிலும் வழங்கிய மொழிகளைப் பயிலவேண்டியவர். மதம் மாறிய மக்களுக்கெனப் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. அம் மக்கள் படித்தறிவதற்காக நாட்டு மொழிகளில் உரை நடையில் நூல்கள் பழவறிறை எழுதினார்கள்; அச்சேற்றியும் வெளியிட்டார்கள் 19ம் நூற்றாண்டுக்கு முன்னதாக நிறுவப்பட்ட அச்சங்கங்கள் கிறிஸ்தவப் பாதிரிமாராலும் ஆங்கிலேயே வணிகக் குழுவினராலுமே நிறுவப்பட்டிருந்தன. அக்காலத்திலெல்லாம் அவர்கள் பெரும்பாலும் கிறித்தவ நூல்களை மட்டு•ம அச்சிட்டுப் பரப்பினார்கள். அவர்களைப் பேலவே இசுலாமிய சமயத்தவரும் தமது சயம நூல்களைச் சிறப்பாக தமிழ் மொழியில்-உரைநடையில்-வெளியிடத் தொடங்கினார்கள். அதன்பின் இலக்கிய படிமுறை வளர்ச்சியின் பயனாக தமிழ்மொழியிற் சிறுகதையும் நாவலும் உருவாயின என்பது சிலர் கொள்கை. அவர்கள் கருத்தின்படி 19ம் நூற்றாண்டுக்கு ; நாவலுமே இல்லை. இந்தக் கருத்து முற்றிலும் பொருந்தாது.
டாக்டர் மா. இராசமாணிக்கனார், ஓர் உண்மையை வற்புறுத்துவதாய், மூன்று நான்கு பாத்திரங்களைக் கொண்டி தாய், ஒன்று அல்லது இரண்டு நிகழிடங்களை யுடையதாய், குறுகிய கால அளவு நிகழ்ச்சியுடையதாய் எழுதப்பெறும் கதையே சிறுகதை என்று மேனாட்டு அறிஞர் கூளுகின்றனர் எனக் கூறி, ஒரு சிறுகதை நம் மனதில் தங்கவேண்டுமாயின் அதனில் அதனில் இரண்டு சிறப்புக்களில் ஒன்றேனும் இடம் பெற்றிருத்தல் வேண்டும் ; சிறு கதையில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறல் வேண்டும் ; அல்லது அதில் வரும் பாத்திரம் நாம் மதித்துவரும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும், என விளக்கி, இத்தகைய சிறு கதைகள் பல பண்டைத் தமிழில் பாங்குற அமைந்துள்ளன. கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கொங்குவேள் என்பவர் உதயணன் வரலாற்றைப் பெருங்கதை என்னும் பெயரில் பாடியுள்ளார். 'பெருங்கதை' என்னும் இப் பெயராலே தமிழில் 'சிறு கதை' நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்றோ? சங்க நூல்களை நன்கு ஆராய்யின், 'சங்க கால இலக்கியத்தில் சிறு கதைகள்' என்னும் அரிய நூல் ஒன்றை எழுதி முடிக்கலாம் என்பது திண்ணம் . என நிறுவுகின்றார்கள்.
அகிலன் அவர்களோ, முதல் தமிழ் நாவல் என்னும் தலையங்கத்துடன் தாம் எழுதிய கட்டுரையில் சிலப்பதிகாரமே முதல் தமிழ் நாவல் இலக்கணத்தையும், கதைக் கருவினையும் குறிக்கோளினையும் எடுத்துச் சிறப்பாக ஆராய்ந்து நிறுவுகின்றார்கள். உரைநடையிட்ட செய்யுள் காப்பியத்திற்கும், இன்று செய்யுள் படிப்பவர்களால் 'இலக்கியம்' என்று ஒப்புக்கொள்ளப்படாத உரைநடைச் சித்திரத்திற்கும் இப்படி ஒப்புக்கொள்ளப்படாத உரைநடைச் சித்திரத்திற்கும் இப்படி ஒரு முடிச்சுப் போடலாமா? காரணம் இருக்கிறது. ஒப்புநோக்கக்கூடிய பொதுத்தன்மைகள் இரண்டிலும் நிறைந்திருக்கின்றனவே! இணைப்புக் கருவியாகிய தங்கச் சங்கிலியின் அமைப்பில் மட்டிலும் வேறுபாடு தெரிகிறது. அன்றைக்குச் செய்யுள் தமிழில் ஆட்சி செய்தது. இன்றைக்கு உரைநடையின் ஆட்சி. காலம் மாறியதால் கருவிதான் மாறியதே தவிர, கற்பனையில், மூலப் பொருளில், கட்டுக்கோப்பில், இலக்கண வரம்பில் என்னால் மாற்றம் காண முடியவில்லை. என்பது அவர்கள் அளிக்கும் விளக்கம். யானும் இக் கருத்துக்களைக் கொண்ட வகுப்பினரையே சார்ந்தவன். எனவே, தமிழ் மொழியில் முன்னதாகக் காணக்கிடைக்காத துறைகள் இவை என ஒதுக்கி வைக்க என் மனம் ஒருபோதும் இயையாது.
இனி, திரு.செல்வராசன் அவர்கள் 1879ம் ஆண்டு வெளியான வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் எனப் பொதுவாகக் குறிப்பிடுகின்றார்கள். ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் 1890ம் ஆண்டில் வெளியிடப்பட்டதும், திரு.எஸ் இன்னாச்சித்தம்பி அவர்களால் எழுதப்பட்டதுமான ஊசோன் பாலந்தை கதை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்கள். Orson and Valentine என்னும் போர்த்துக்கேய நெடுங்கதையே இதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம் எனவும் கருதுகின்றார்கள். யான் அறிந்த வரையில் ஊசோன் பாலந்தை கதை க்கு முன்னதாக காவலப்பன் கதை என்ற மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனை மூர் என்பார் இயற்றியுள்ளார் Parley the Porter என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என டாக்டர் போப்பெனட் (1909) தாம் தொகுத்த அச்சிட்ட நூல்கள் என்னும் நூலிற் காட்டியுள்ளார். அறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களும் தாம் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி (1952) யிலும், தமிழ் புலவர் அகராதி (1960) யிலும் இதனைக்குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே தமிழில் முதலாவது நாவல் தோன்றியது எனச் சுட்டிக் குறிப்போர், காவலப்பன் கதை யினை எவ்வகையாலும் தள்ளிவிட முடியாது. காவலப்பன் கதை யே தமிழகத்தில்-ஈழத்தில்-முதன் முதலாகத் தோன்றிய நாவல் எனக் கொள்ளுதல் வேண்டும். திரு. செல்வராசன் அவர்கள் இதனை ஆராய்ந்து அடுத்துவரும் மதிப்பில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
சில்லையூர் செல்வராசன் அவர்கள் சொந்தத் தொல்லைகள் எனக் கூறி எளிதாகத் தப்பிக்கொள்ளும் கருத்தை மாற்றிக் கொண்டு, இனி எழுதுகோலை எடுத்து எங்களுக்கெல்லாம் பயன்படத்தக்க நூல்களை ஆக்கித் தருவார்கள் என நம்புகின்றோம். இந் நூலில், திரு செல்வராசன் அவர்களின் முயற்சியை மட்டுமன்று, மதித்திறத்தினையும் காண்கின்றோம். அவை கூடிக்வடி வரும் நூல்களை விரைவிற் காண்போமாக.
மு. கணபதிப்பிள்ளை.
பிள்ளையார் சுழி
தமிழ் எழுத்துலகில் 'பிள்ளையார் சுழி' போட்டு இருபத்திரண்டு ஆண்டுகளாகிவிட்டன.
பன்னிரண்டு வயதில் கவிதை முகிழ்த்தது.
1950-ஆம் ஆண்டு, நமக்குத் தொழில் எழுத்தாயிற்று.
பதினேழு ஆண்டுகள் 'இமைப் பொழுதும் சோராமல்' எழுதியாயிற்று. எழுதிதின் உருவக் கோலங்கள் எத்தனையோ அத்தனையிலும் வடித்த சிந்தனைகளும், உணர்வுகளம், மறுநாள் பாட்டி புளி சுற்றும் பத்திரிகையில், 'ஒரு நாள் அரசாங்கம்' செலுத்திக் கழிந்து போயின.
நித்திய ஆட்சித் தகுதி பெற்றவை அவற்றுட் பல என்பது நம் நம்பிக்கை. 'மழைக்கால இருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத' நிதான நுட்பம் வாய்ந்த தென்புலோலியூர், மு.கணபதிப்பிள்ளை ஐயாவுக்கும் அதே நம்பிக்கை. அவருடைய 'அருவினைக்கு ஆற்றாமல்' நமது முதலாம் நூலாக உருப்பெற்று வருகிறது 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி'.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962-ல் நடத்திய முதலாவது அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை யொட்டிப் பதிப்பித்த மலரில் வெளியானது இந் நெடும் கட்டுரை. முன்றாண்டுகளுக்கு மேலாக முயன்றுழைத்து, அதுவரை யாரும் முழுமையாக முயலாதிருந்த ஒரு துறையில் கால் வைத்து 'இருளில் கை வைத்துத் தேடிய பொருள்' இது. கையிருப்புக் கணக்கெடுப்பே தவிர, திறனாய்வன்று.
ஆயினும், கணிசமான கணக்கெடுப்பு அதனால் மதிப்புப் பெற்றது. பின்னாளில் பல திறனாய்வறிஞர்க்கும் கைம்முதலாயிற்று. இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த் துறைப் பயில்வுக்குத் துணைப் பாடப் பொருளாயிற்று. 'எழுத்து என்னும் தென்னகச் சஞ்சிகை இதனை மறுபிரசுரஞ் செய்தது.
இதனை விரிவு செய்தும் தெளிவு செய்தும், (Community) 'கம்யூனிட்டி' என்னும் ஆய்வுக் கழக ஆங்கிலச் சஞ்சிகையில் எழுத நேர்ந்த போதும், பின்னர் அவ்வாங்கிலப் படைப்பு சம்ஸ்க்ருதிய என்னும் தலையான சிங்களக் கலாமஞ்சரியில் சிங்கள மொழிபெயர்ப்பாக இடம் பெற்ற போதும், ஈழத்தில் வாழும் பிற இனத்தார் மத்தியிலும் இலங்கைத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய மதிப்பான மனப் பதிவு ஏற்பட்டது.
அந்த அளவில் மனத் திருப்தி. நூலாக இது வெளி வருவதால் தென்னகத்தும் இந்த மனப் பதிவு எற்படுமாயின் நம் மனத் திருப்தி மேலோங்கும்.
1962-ல் இது எழுதப்பட்ட பின்னர், தமிழ் நாவல் என்னும் ஏணியில் மேலும் பல நென்புகளில் ஏறிவிட்டார்கள் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள். அ.ந.கந்தசாமி, செ.கணேசலிங்கன், நந்தி போன்ற எழுத்து வல்லுநர்களும் பென்டிக்ற் பாலன் போன்ற வளர் சுடர்களும் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியின் புதுப் பொலிவுக்குக் கொடி காட்டியிருக்கிறார்கள். இந்த ஐந்தாண்டு வளர்ச்சியையும் கவனத்திற்கு எடுக்கலாம், 1962-ம் ஆண்டின் கணக்கெடுப்பை அட்சரம்கூட மாற்றாமல் அப்படியே இந் நூலாக வெளியிடுவதற்குச் சொந்தத் தொல்லைகள் சிலவே காரணம்.
புதிய வளர்ச்சியில் பின்னணியில், இந் நூலில் இடம் பெறும் சில கருத்துக்கள் பற்றி இப்போது நமக்கே உடன்பாடில்லை, ஆயினம், எழுதிய காலம் காட்டிப் பதிப்பிக்கும் இந்நூல், எழுதுங்கால் இருந்த மன முடிவு, மாற்றங் காணக் கூடாதென்ற நேர்மை நியதிபடி, மூலச் சிதைவின்றி முதற் கட்டுரையே இங்கு நூலாகிறது. அபிப்பிராயங்களைப்பொறுத்தளவில் இல்லாவிடினும் தகவல்களைப் பொறுத்தளவிலேனும், 1962-ம் ஆண்டுவரைக்கும், இந்நூல் நூறு சதவீதமும் சரி என்று கூடச் சொல்லலாம்.
நம்பால் மதிப்பும் நட்பும் உரிமையும் பாராட்டி, புகழ்ந்தும் உறவாடியும் கண்டித்தும் நம் தறி கெட்ட குணப் போக்கை ஒழுங்காகப் பாவோடச் செய்ய முயன்று வரும் 'திரு.மு.க.' அவர்களே இந்நூலுக்கு முன்னுரையும் வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கும், இதனை வெளியிடுவதில் சளைப்பின்றி ஊக்கங் காட்டிய 'அருள் நிலைய' உரிமையாளர்க்கும், 'மெச்சிடுமா றச்சழகு மிளிர்வித்த வினைஞர்க்கும்' மனம் கனிந்த நன்றி.
செல்வ மாளிகை
சில்லலை,
பண்டத்தரிப்பு
சில்லையூர் செல்வராசன்.
-----------------------------------------------------------------
பதிப்புரை
சில்லையூர் செல்வராசன் அவர்கள் ஞான சம்பந்ததரைப்போலச் சிறிய வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற காளை !
கவிபாடும் ஆற்றலோடு கட்டுரை, கதை முதலியவற்றை எழுதும் பேராற்றலும் இவருக்கு உண்டு என்பதை விளக்கும் பெருநூலாக இந் நூல் அமைந்துள்ளது.
இதனை வெளியிடும் நல்வாய்ப்பினை எங்களுக்கு நல்கிய செல்வக் கவிஞருக்கு எங்கள் நன்றி என்று உரியது.
நல்லவற்றைப் போற்றி வரவேற்கும் நற்றமிழி மக்கள் இந்நூலையும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுகின்றோம்.
இங்ஙனம்
அருள் நிலையத்தார்.
---------------------------------------------------------------------
காணிக்கை
அட்டையின் காலும் அளவிட்ட அப்பன் எனச்
செட்டாகவே தன் சிறப்பைக் கணித் தோதிக்
கட்டுமட்டாய் நான்சகல காரியமும் கையாண்டு
வெட்டொன்று துண்டிரண்டாய் வினைகள் இயற்றுதற்குப்
பாதை சமைத்தளித்த பாசக் கடலாம் என்
தாதைக்கும் கண்டிப்புத் தனத்தில் பிற காலே
பேதை மனத்துப் பிறக்கும் பெருங் கருணை
யாதரவும் சேர்ந்துறைதல் ஆவசியம் என்றுணர்த்தி
என்னை மனத்தால் இளகியனு மாக்கிய என்
அன்னைக்கும், கைமாறிளிக்க வழியறியாக்
சின்னவன் என்செய்வேன்? என்தினையைப் பனையாய்க்கொள்
அன்னார்க் கிந்நூலே என் அன்பின் உளக் காணிக்கை.
- சில்லையூர் செல்வராசன்.
------------------------------------------------------------------
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
தோற்றுவாய்
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தையும், நாளதுவரையுள்ள அதன் வளர்ச்சியையும், முழுமையாக ஆராயும் தீவிரமான முயற்சி எதுவும், இது காலவரை நடைபெற்றதில்லை. இப்படிச் சொன்னால் எவராவது 'இலக்கிய சர்ச்சை' பண்ணுவதற்குப் பேனாவைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும், நானறிந்த வரையில் இப்படிச்சொல்வது சரியென்றே நினைக்கிறேன்.
இலங்கைத் தமிழ் நாவல்களை நமது விமரிசகர்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டார்களா என்ன? இல்லையில்லை; நான் அப்படிச் சொல்லவரவில்லை.
நமது நாட்டில் பிரசுரமான பழைய நூல்களை மிகுந்த சிரமமெடுத்துத் தேடிச் சேகரித்து வருகிறவர் வித்துவான் எப்.எக்ஸ்.சீ. நடராசா அவர்கள். அந்த நூல்களை பற்றிய குறிப்புகளை, தமக்கு வாய்க்கும் ஓரோர் சந்தர்ப்பங்களில் எழுதியும் வருகிறார். சில வருடங்களுக்கு முன் ஈழமும் தமிழும் என்னும் கைநூலை அவர் வெளியிட்டார் இலங்கைத் தமிழ் நூல்களின் சிறிய நாமாவலி அது. ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள் சிலவற்றின் பெயர் விபரங்களை அதில் கொடுத்திருக்கிறார்.
திரு. கனக - செந்திநாதன், சில வருடங்களின் முன், ஈழத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்னும் கட்டுரைத் தொடரை, தினகரனில் எழுதினார். நாலைந்து இலங்கைத் தமிழ் நாவல்கள் பற்றி, அத்தொடர் கட்டுரையில் அங்குமிங்குமாகச் சில பந்திகளிற் குறிப்பிட்டிருக்கிறார். தவிரவும், வீரசிங்கன் கதை , விஜய சீலம் ஆகிய இரண்டு நாவல்கள் பற்றி, வீரகேசரியில் தனித் தனியாக இரண்டு அறிமுகக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். கடைசியாக வெளிவந்த சமீபத்திய ஈழகேசரி மலரில் தான் எழுதிய ஒரு கட்டுரையில் உலகம் பலவிதக்கதைகள் உட்பட நான்கு நாவல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஈழகேசரி யில் தான் எழுதி வந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் என்னும் அறிமுகக் கட்டுரை வரிசையில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சிற்சில நாவல்களின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்.
பண்டிதர் கா.பொ. இரத்தினர் இலங்கையில் இன்பத் தமிழ் என்னும் நூலை எழுதினார். அதில் ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி ஒரு பந்தி காணப்படுகிறது. மோனாங்கி என்ற ஒரே ஒரு நாவலைக் குறிப்பிடுகிறார். அந்த நாவலின் ஆசிரியரோ திரிகோணமலையைச் சேர்ந்த சரவணமுத்துப் பிள்ளை, பண்டிதரோ, யாழ்ப்பாணத்தறிஞா சரவண பிள்ளை என்று அவர் பெயரைக் குறித்ததோடு, விஷயத்தை முடித்து விட்டார். சமீபத்தில் தாம் வெளியிட்ட நூற்றாண்டுகளில் தமிழ் என்னும் நூலில், இந்தப் பெயர்த்தவறைத் திருத்தியதற்குமேல், வேறு நாவல் நூல்களைக் குறிப்பிடவுமில்லை அவர்.
தமிழ் இலக்கிய வரலாறு என்பது இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் வி.செல்வ நாயகம் அவர்கள் எழுதிய நூல். ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரமும், திரிகோணமலைச் சரவணப் பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பதும் ஆங்கிலத்திலுள்ள உலகியற் கதைகளாகிய நாவல்களைத் தழுவித் தமிழிலெழுதப்பட்ட நூல்களாகும் என்று, இந்த நூலில் ஒரு வசனம் எழுதியிருக்கிறார். இவ்வளவோடு சரி.
சில வருடங்களின் முன், விரகேசரி யில் தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் கட்டுரைத் தொடரை எழுதிய க. கைலாசபதி, இடைக்காடரின் நாவல்களை மாத்திரம் பிரஸ்தாபித்திருக்கிறார்.
பழம் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் நாவல் முயற்சிகள்பற்றி, கலாநிதி சு. வித்தியானந்தன், 'தமிழ்த்தென்றல்' என்னும் தமது நூலில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம்.
ஈழகேசரி யில் 'இளவரசு' என்பவர் (சி.செல்லத்துரை) வெளியிட்ட தமிழ் வளர்க்கும் செல்வர்கள் என்றும் எழுத்தாளர் அறிமுகக் கட்டுரை வரிசையில், இரண்டொரு நாவல்களின் பெயர்கள் வருவது ஞாபகத்துக்குரியது.
வளருந் தமிழ் என்னும் தமது நூலில் மோகனாங்கி என்னும் ஈழத்து நாவல்பற்றியும் குறிப்பிட்ட சோம. லெ.செட்டியார் அவர்கள், வீரசிங்கன் என்னும் நாவலையும் பிரஸ்தாபித்திருப்பதை நன்றியுடன் குறிப்பிடுவது பொருந்தும்.
கொழும்பில் இயங்கி வந்த ஒரு எழுத்தாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில், ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய ஒரு தொகுப்புரையை, இக்கட்டுரையாசிரியர் நிகழ்த்தியிருக்கிறார். தினகரனில் தான் எழுதி வந்த 'காரசாரம்' என்ற பத்தியில், இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றி ஒரு தடவை எழுதியிருக்கிறார்.
ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே!
மேற்குறித்த எவர் மீதும் குறைகாணும் நோக்கம் எனக்கில்லை. உண்மையில் இந்த அளவிலாவது இத்துறையில் அவர்கள் செய்திருக்கும் சேவை, பாராட்டவேண்டிய நல்ல சேவையே. ஆனாலும் என்னுடைய இந்த நூலின் தன்மை பற்றி எவராவது குறை கண்டால், இவ்வாறு நுல் அமைவதற்குக் காரணம் யாது என்பதைத் தற்பாதுகாப்பாகச் சொல்லிக் கொள்ளவே முன் சொன்ன தகவல்களைக் குறிப்பிடுகிறேன்.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சில உண்மைகள் பெறப்படுகின்றன. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தனித்துறையாக எடுத்துக் கொண்டு, அதை முழுமையாக ஆராயும் தீவிரமான முயற்சியை இற்றைவரை எவரும் மேற்கொள்ளவில்லை விரும்புகிற ஒருவருக்குக்கூட, இத்துறையில் கைமுதலாக இருப்பது, முன் குறித்தோரின் மேலாழ்ந்த வாரியான குறிப்புகள் மாத்திரமே.
'ஈழத்துத் தமிழ் நாவல்' போன்ற ஒரு துறை பற்றி முழுமையாக ஆராய்வதானால், விரிவான பல வேறு துறைகளையும் அதனோடு ஒப்புநோக்கி ஆராயவேண்டியிருக்கும். அடிப்படையில் சில வினாக்களைப்போட்டுக் கொண்டு அவற்றுக்கு விடை கண்டு ஆராய வேண்டியிருக்கும். ஈழத்தில் தமிழ் நாவல் பிறந்த போதிருந்த சமூக, கலாசார, அரசியல், பொருளாதார சூழல்களை முதலில் ஆராய்ந்து, நாவலின் தோற்றத்துக்கு அடிகோலிய அம்சங்கள் யாவையென்று நிதானிக்கவேண்டியிருக்கும். இந்த அம்சங்கள், இலங்கையின் சிங்கன இலக்கிய வட்டாரத்துக்கும் பொதுவான அமையுமானதால், இவை சமகாலத்துச் சிங்கள இலக்கியத்தை எவ்வாறு பாதித்தன என ஆராய்ந்து, சிங்கள நாவல்களின் தன்மையோடும் ஈழத்துத் தமிழ் நாவல்களை ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும். தென்னிந்தியாவில் தமிழ் நாவல்கள் இதே காலத்தில் தோன்றி வளர்ந்ததோரணையைக்கவனத்திற்கெடுத்துக் கொண்டு அவற்றுக்கும் இலங்கைத் தமிழ் நாவல்களுக்கும் உள்ள ஒப்புமை வேற்றுமைகளையும் பகுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். ஈழத்துத் தமிழ் நாவல் தோன்றிய நாள் தொட்டு, இற்றை வரை அது அடைந்துள்ள மாற்றம், வளர்ச்சி முதலியவற்றை, அரசியல், சமூக, கலாசார, பொருளாதார காரண காரியத் தொடர்பம்சங்களை முன்வைத்து, விமரிசிக்க வேண்டியிருக்கும்.
இத்துணை விரிவான காரியத்தை ஒரு சிறு நூலிற்செய்தல் சாலாது என்பது ஒரு புலமிருக்க மற்றொரு பிரச்சினை முதலிற் குறுக்கிடுகிறது.
ஒரு நூறு வருடங்களுக்கு, அல்லது குறைந்த பட்சம் ஐம்பது வருஷங்களுக்காவது, கவிதை, கதை, நாடகம், நாவல் போன்ற இலக்கியத் துறைகளில், ஈழத்தில் சிருஷ்டிக்கப்பட்ட அத்தனை படைப்புகளினதும் சரியான, பூரணமான, தொடர்பான, காலக்கிரமமான கணக்கெடுப்பு நம் வசமில்லையே! கையிருப்புக் கணக்கே தெரியாமல், இலக்கியத் துறைகளின் பாரம் பரியத்தையும், மாற்றத்தையும், வளர்ச்சியையும், அவற்றின் மீது புற அம்சங்கள் பிரயோகித்த தாக்கத்தையும் செல்வாக்கையும், ஆராயமுனைவது, காற்றிலே கை வீசுகிற கதையாகவே முடியும். நமது விமரிசகர்களின் பார்வையில், ஆய்வு இல்லாமல் வெறும் அலசலே காணப்படுவதற்குக் காரணம், இதுதான். தற்போதைக்கு, ஈழத்து இலக்கியத் துறைகளின் பாரம்பரியம் பற்றி ஆழமாக ஆராய முடியாமல் அல்லற்பட்டும், செய்கிற அலசற் பார்வையைக் கூட, இடைவிட்டு, கெந்தற் பாய்ச்சலாகச் செய்தும், நம் விமரிசகர்கள் வெறுங்கை முழம்போட்டுக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், நம்முடைய கையிருப்புக் கணக்கே நமக்குத் தெரியாமலிருப்பதுதான்.
இந்த நிலையில், ஈழத்துத் தமிழ் நாவல்பற்றி முழுமையாக ஆராய்வதற்கு முன், நாவல்களைப் பொறுத்தவரையில் நம்முடைய கையிருப்புக் கணக்கென்ன என்று தெரிந்து கொள்வது, அத்தியாவசியமாகிறது. இந்த நூல், விஸ்தாரமான விமரிசனச் சார்பில்லாமல், ஒரு பட்டியற் றொகுப்பைப் போலத் தோன்றக் கூடுமானால், அதற்குக் காரணமும் இதுவே.
ஏறத்தாழ இந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையில் வெளிவந்த நாவல்கள் அனந்தம். நூலுருவில் வெளிவந்தவை அநேகமல்ல. பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொடராகப் பிரசுரமானவை. முதனூல்களாக வெளிவந்தவை போகஇ தழுவல் நாவல்களாகவும், மொழி பெயர்ப்பு நாவல்களாகவும், சில வெளியாகியுள்ளன.
மூன்று வருடங்களுக்கு மேலாக முழுமூச்சாகச் செய்த முயற்சியில், அநேகமாக இவையனைத்தின் விபரங்களையும், பெரும்பாலானவற்றின் பிரதிநிதிகளையும் தேடிச் சேகரிக்க முடிந்திருக்கிறதென்று நம்புகிறேன். விடுபட்டுப் போனவை சொற்பமாகவேயிருக்குமென்று நினைக்கிறேன். இந்த முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த பலரில் பிரதானமானவர்கள் இருவர். தாம் அரிதின் முயன்று தேடிப் பெற்ற பழைய நாவல்கள் பலவற்றையும், அவை பற்றிய தகவல்களையும், நானே சேகரித்துக் கொள்ளத் தகுந்த ஆலோசனைகள் கூறியும், பெருந்துணை புரிந்தார், வித்துவான் எப்.எக்ஸ்.சீ. நடராசா. பிற்கால நாவல்கள் பலவற்றைத் தானே சேகரித்துத் த்ந்ததோடு, இத்துறையில் சலியாது நான் ஈடுபடுமாறு தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் துணை நின்றார் நண்பர் பெ.ராமநாதன். இவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது.
ஈழத்துத் தமிழ் நாவல்பற்றி விரிவாகவும் முழுமையாகவும் ஆராய்வதற்கு முன்னோடியான ஒரு 'கையிருப்பு' நூலாகவே இதை எழுதுகிறேன். நூலுருவிலும் பத்திரிகைகளிலும் வெளியான ஈழத்துத் தமிழ் நாவல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய தகவல்களும் என் அபிப்பிராயக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஒரு தொகுப்புரை போலமையும் இந்தக்குறிப்புகள், இந்தத் துறை பற்றிப் பின்னர் விஸ்தாரமாக ஆராய முனையும் விமரிசன முறையான ஒரு தனி நூலுக்கோ, அல்லது கட்டுரைத் தொடருக்கோ, தாபரமாக அமையத்தக்கவாறிருந்தால், தற்போதைக்குப் போதுமானதென்று கருதுகிறேன்.
நாவலின் தோற்றத்தில் ஈழத்தின் இடம்
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றமும் நாளது வரையுள்ள அதன் வளர்ச்சியும், ஏறத்தாழ எழுபத்தைந்து வருட காலத்தைத் தழுவி நிற்பன. 1879-ம் ஆண்டு வெளியான வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தான், தமிழ்மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட போதிலும், அதன் பிறகு 1893ம் வருஷத்தில் எழுதப்பட்ட ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் தான் முதலாவது தமிழ்நாவலென்று சொல்வாரும் இருக்கிறார்கள். பிரதாப முதலியார் சரித்திரத்தை ஒரு நாவல்என்று சொல்ல முதலியார் சரித்திரத்தை ஒரு நாவல்என்று சொல்ல முடியாதென்பதும், நாவல் என்னும் பிரக்ஞையோடு, நாவலுக்கரிய இலட்சணங்களோடு, அது எழுதப்படவில்லை என்பதும், இவர்களின் வாதம். இந்தப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்ளாமல், பிரதாப முதலியார் சரித்திரம் முதலாவது தமிழ் நாவல் என்று நாம் கருதினால், அது வெளிவந்த பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் வெளி வந்து, தமிழ் மொழியில் வெளியான இரண்டாவது நாவல் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது என்று கொள்ளலாம். கமலாம்பாள் சரித்திரம் தான் முதலாவது தமிழ் நாவல் என்று நாம் நினைத்தால், அதற்கும் முன்பே வெளிவந்த ஈழத்தின் முதல் நாவலே, தமிழிலேயே முதலாவதாக வெளியான நாவல் என்று சொற்ப கர்வத்தோடு சொல்லி, நாம் பெருமைப்பட்டும் கொள்ளலாம்.
முதல் நாவல் எது?
நாம் பெருமை கொள்ளும்படியான முதலாவது ஈழத்துத் தமிழ் நாவல், 1891-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரசுரமான ஊசோன் பாலந்தை கதை என்னும் நாவலாகும். இந்த நாவலை எழுதியவர் திருகோண மலையைச் சேர்ந்த எஸ். இன்னாசித்தம்பி என்பவர்.
இந்த நாவலை முதலில் பதிப்பித்தவர் எஸ்.தம்பி முத்துப்பிள்ளை என்பவர். ('மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தினசிங்கம்', 'சந்திரகாசன்கதை' என்னும் பிற்கால நாவல்களைப் பதிப்பித்தவரும் இவரே.) முதற்பதிப்பில் ஊசோன் பாலந்தை கதை என்னும் நாவலின் ஆயிரத்து ஐந்நூறு பிரதிகள் பிரசுரமாயின. 1x8 கிறவுண் அளவில், சிறிய எழுத்தில் தொண்ணூற்றாறு ஐம்பது சத விலைக்கு வெளியாயிற்று. பிற்பாடு 1924-ம் ஆண்டில் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இப்பதிப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அச்சுவேலி ஞானப் பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சாயிற்று. வண.சா.ஞானப் பிரகாச சுவாமி இந்த இரண்டாம் பதிப்பைப் பரிசோதித்து வெளியிட்டார்.
தமிழகத்திலும் சரி, ஈழ நாட்டிலுஞ் சரி, நாவல் எனப்படும் பெருங்கதையினை முதலில் எழுதியவர்கள் கிறிஸ்து சமயத்தைச் சார்ந்த தமிழர்களே என்று ஞானப்பிரகாசர் ஒரு சமயம் கூறியமையும் இங்கு நினைவுக்கு வருகிறது. முதலாவது தமிழ் நாவலெனப் பொது நோக்கில் கொள்ளப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளையைப் போலவே, ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை எழுதிய இன்னாசித்தம்பியும் கிறிஸ்து சமயத்தைச் சேர்ந்தவர். அந்நாளில் பிரசித்தி பெற்றிருந்த அந்தோனிக்குட்டி அண்ணாவியாரின் கிறிஸ்து சமய கீர்த்தனைகள் என்ற நூலை, தமது நாவல் வெளியான அதே 1891-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் பதிப்பித்து வெளியிட்ட இன்னாசித்தம்பி, தமது சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரென்பதை ஊசோன் பாலந்தை கதை யும் புலப்படுத்துகிறது.
ஊசோன் பாலந்தை கதை கிறிஸ்தவ பின்னணி கொண்ட கதை. கதை நிகழ் களமும் இலங்கையல்ல.
உலகின் கண்னே உயர்வுற விளங்கும் அலுமான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கை போந்த பெற்றோரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறு வயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குக் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.
கதை இவ்வாறு ஆரம்பமாகிறது. அலெக்சாந்தர் எம்பரதோருக்கும் தொன்வெலிச்சாந்தென்னும் ராஜகுமாரிக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை ஆகிய சசோதரர்களைப் பற்றியது கதை. கதையை விபரிக்க இது சமயமல்ல. ஆனாலும், சந்தர்ப்ப பேதங்களால் வனத்தில் பிறந்து பெற்றோரைப் பிரிந்து தனித்துப் போன இச் சகோதரர்களில் ஊசோன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு பயங்கரக் காட்டுமனிதனாகி, மக்களைத் தொல்லைப்படுத்துவதும்; உண்மையறிந்த பின் அதற்காக வருந்தித் தவமிருந்து மரித்தலும்; இக் கதையில் அடங்கும் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
சற்றே அன்னியமான கதை போலிருக்கிறதே என்னும் உணர்வு ஏற்படுகிறதல்லவா? இன்னாசித் தம்பி, தமது கதை மொழி பெயர்ப்பென்றோ தழுவலென்றோ நூலில் எங்கேனும் குறிப்பிடவில்லை யென்றபோதிலும், இக்கதை பிற மொழி நூலொன்றை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆராய்ந்தளவில் ஓர்சன் அன்ட் வலன்டைன் (Orson and Velentine) என்னும் போர்த்துக்கேய நெடுங்கதையை ஆதாரமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. இருந்த போதிலும், கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும் கதையின் நிகழ்ச்சியோட்டங்களிலும், செறிவான முறையில் தமிழ்த் தன்மை'யைப் பெய்து, பெரும்பாலும் தமிழ் நாவலென்று தோற்றும்படியாக இந்நூலை ஆக்கியிருக்கிறார் இன்னாசித்தம்பி. நாவலென்ற வகையில், ஓர் அற்புதமான நாவல் என்னும் கற்பனாகதை என்ற அட்டைக் குறிப்பைத் தாங்கி வெளியாகியுள்ள இந்நூலின் தாரதம்மியங்களைக் காத்திரமான முறையில் ஆராய்வதென்றால், அது தனியான ஒரு கட்டுரையில் செய்ய வேண்டிய காரியமாயிருக்கும். தற்போதைக்கு, பொது நோக்கில் இது ஈழத்து முதலாவது தமிழ் நாவல் என்று குறித்துக்கொண்டு, பலரும் முதலாவது இலங்கைத் தமிழ் நாவல் என்று குறிப்பிடும் 'மோகனாங்கி' என்னும் நூலுக்கு வருவோம்.
யாழ்ப்பாணம் பின்தங்கியதேன்?
1895-ம் ஆண்டில் வெளியானது மோகனாங்கி என்னும் நாவல். இந்த நாவலை எழுதியவரும் திருகோணமலையைச் சேர்ந்தவரே. த. சரவணமுத்துப் பிள்ளை என்பவரே இவர். தத்தை விடுதூது , முத்துக்குமாரசாமி இரட்டை மணி மாலை போன்ற வேறு பல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் அச்சிட்டுப் பிரசுரிக்கப்பட்ட மோகனாங்கி என்ற இந்த இரண்டாவது ஈழத்துத் தமிழ் நாவல், ஓரளவுக்கு சரித்திர சம்பந்தமுடைய கதை. சொக்கநாதன், மோகனாங்கி ஆகிய இரு காதலர்களுமே கதையின் நாயகனும் நாயகியும். இவர்களின் காதல் வாழ்வையும் குடும்ப வாழ்க்கையையும் சுற்றி வரும் இந்தக் கதையில் பாதிக்குப் பாதி இடம் பெற்றிருக்கும் அழகிய கவிதைகள், நாவல் என்ற உருவ இலட்சணத்தைக் குறைத்த போதிலும், சரவணமுத்துப்பிள்ளையின் கவித்திறனை அவை நன்கு வெளிப்படுத்துகின்றன. நூலாசிரியர் தன் நாவலில் எத்தகைய சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறாரென்பதற்கு இந்நூலில் வரும் கவிதைகளில் ஒன்றை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். விஜயராகவ நாயக்கர் தோத்திரமாக அமைகிறது இக்கவிதை :-
நீதி தவறத் தருமம் நிலை குலையச்
சாதி, குலம், பிறப்பென் றெண்ணித் தடுமாறும்
பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின்
சோதியே! நின்னைத் தொழுதேந் தொழுதேமால்!
மோகனாங்கி சில வருட காலத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றது. இதன் காரணமாக, இந்த நாவலின் சுருக்கம், பள்ளிக்கூடங்களில் பாட நூலாகப் படிப்பதற்காக, 1919-ம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது. இந்தச் சுருக்கப் பதிப்பை, சென்னை எம். ஆதி அன்ட் கம்பனியார் பிரசுரித்தனர். ஆனால், மோகனாங்கி என்றிருந்த நாவலின் பெயர் இந்தச் சுருக்கப் பதிப்பில் சொக்கநாத நாயக்கர் என்று மாற்றப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்துக்குக் காரணமாக இருந்தவர், சரவணமுத்துப்பிள்ளையின் சகோதரரான திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை என்று தெரிகிறது. கனகசுந்தரம்பிள்ளை என்று தெரிகிறது. கனகசுந்தரம் பிள்ளை பிறமொழிப் புலமையும் தமிழறிவும் மிகுந்தவர். பி.ஏ.பட்டதாரி. தமிழ் நாடு சென்று சென்னை பச்கையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் நிகழ்ந்தவர். கம்பராமாயணம் பாலகாண்டத்துக்கு அரும்பதவுரை செய்ததோடு, குமாரசாமிப் புலவருடன் கூடி நம்பியாகப் பொருளுக்கு உரை எழுதி வெளியிட்டவர். இலக்கியத்தில் நிரம்பிய ஈடுபாடு கொண்ட கனகசுந்தரம் பிள்ளை தமது சகோதரரின் இலக்கிய மயற்சிகளில் மிகுந்த செல்வாக்கைப் பிரயோகித்திருக்கிறாரென்பது மோகனாங்கி நாலிலும் வெளிப்படை. இந்நூலை ஆராய்ந்து படித்துவிட்டு, கனகசுந்தரம் பிள்ளை தெரிவித்த அபிப்பிராயத்திற் கிணங்கவே, சுருங்கப் பதிப்பில் நூலின் பெயர் சொக்கநாத நாயக்கர் என்று மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
ஆறுமுக நாவலரை ஆதீன புருஷராகக் கொண்டு அக்காலத்து இலக்கிய விழிப்புணர்ச்சிக்குக் கேந்திர ஸ்தானமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில், ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் பிறப்பதற்குரிய சூழல் உருவாகாமற் போனதற்குக் காரணம் என்ன என்பதும், முதலிரண்டு இலங்கைத் தமிழ் நாவல்களும் திருகோணமலையில் தோற்றியதற்கான காரணம் என்ன என்பதும். சமூக, சரித்திர, இலக்கிய ரீதியாக ஆராயப்படத்தக்க விஷயங்கள். தற்போதைக்கு அந்த விசாரத்தை ஒத்திவைத்து விட்டு, அடுத்த நாவல்கள் பற்றிய விபரங்களுக்கு வருவோம்.
கால நிர்ணயப் பிரச்சினைகள்
மோகனாங்கி க்குப் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவு வரையில் வேறு தமிழ் நாவலெதுவும் இலங்கையில் வெளி வந்ததாகக் தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்து வருடங்களில் வெளியான சில தமிழ் நாவல்களை வைத்துக்கொண்டு. அவற்றிற் காலத்தால் முந்தியவை எவை, பிந்தியவை எவை என்று நிர்ணயம் செய்து கொள்வதில் சங்கடமிருக்கிறது.
உதாரணமாக, ஈழத்தின் இரண்டாவது தமிழ் நாவலும் முதலாவது சரித்திர நாவலும் என்று திரு. கனக-செந்திநாதன் அபிப்பிராயப்படுகிற வீர சிங்கன் கதையை எடுத்துக் கொள்ளலாம். திரு.சி.வை. சின்னப்பிள்ளை எழுதிய வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் என்னும் நாவல், 1905-ம் வருடம் பிரசுரமானது. ஆனால், அதற்கு முந்திய ஐந்து வருட காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நாவல்களாவது வெளியாகியிருக்கலாமென்று நம்பத் தூண்டும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தகவல்கள் சரியா தப்பா என்று நிச்சயித்துக் கொள்ளும்வரை, வீரசிங்கன் கதையை உறுதியாகக் கால நிர்ணயம் செய்துகொள்வது இலேசாக இருக்காது.
மட்டக்களப்பின் புகழ்போந்த தமிழறிஞராகத் திகழ்ந்து பல நூல்களியற்றிய சுவாமி சரவணமுத்து, கலாமதி என்னுமொரு நாவலையும் எழுதியதாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பின் முதல் நாவலான இந் நாவல், 1904-ம் ஆண்டில் வெளியானதாக, சில இலக்கியாபிமானிகள கருதுகிறார்கள். நம்பகமான, ஆதாரப்பூர்வமான தகவலை இது விஷயமாகத் திரட்டியாக வேண்டும். ஊசோன் பாலந்தை கதை யைப் பதிப்பித்த தம்பிமுத்துப்பிள்ளை பின்னர் பதிப்பித்த இரத்தினசிங்கம் சந்திரகாசன் கதை ஆகிய நாவல்களும் இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்து வருடம் என்ற காலப் பிரிவிற்கே உரியவை. ஆனால் அச்சொட்டாகப் பிரசுர வருடங்களை அடித்துச் சொல்ல முடியவில்லை. தம்பி முத்துப்பிள்ளை, சொந்தத்தில் தானும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் முந்தியது அழகவல்லி , பிந்தியது சுந்தரன் செய்த தந்திரம் . முந்தியது 1904-ம் ஆண்டிலும் பிந்தியது அதற்கடுத்த ஆண்டிலும் பிரசுரமாகியிருக்க வேண்டுமென்று நம்ப ஏதுக்கள் உள்ளன. இவை தவிர, பரிமளா ராகவன் என்னும் ஒரு நாவலும் இதே பத்து வருட காலப்பிரிவில் வெளிப்போந்தாகத் தெரிகிறது. எனவே கைவசமுள்ள இந்தக் தகவல்களையும், தேடிப்பெறும் ஆதாரங்களையும் வைத்து விரிவாக ஆராய்ந்த பிறகே, வீரசிங்கன் கதையின் கால நிர்ணயத்தை உறுதியானதென்று ஒப்புக்கொள்ளலாம்.
நாவலின் வளர்ச்சியை நாடிய முதல்வர்
ஈழத்துத் தமிழ் நாவலின் ஆரம்பகாலச் சரித்திரத்தில் தம்பி முத்துப்பிள்ளை முக்கியமான இடத்தைப் பெறுகிறாரென்பதில் ஐயமில்லை. ஈழத்தின் முதலாவது நாவலையும், மற்றும் நான்கு நாவல்களையும் பதிப்பித்திருக்கிறார். தானும் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். நாவல் துறையில் விசேஷ கவனத்தை அந்தச் சமயத்தில் செலுத்திய முதல்வர் இவரென்பது வெளிப்படை. இவரெழுதிய நாவல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலமைந்தவை என்று கருதப்படுகிறது. நாடகவியல்புகளும் அம்சங்களும் இவரின் நாவல்களில் அமைந்தமைக்கு, இவர் ஒரு நாடக ஆசிரியரென்ற வகையில் அதிக திறமைபெற்றிருந்தது காரணமாக இருக்கலாம். பிரக்கியாதி பெற்ற பழைய சங்கிலி நாடகமும், எஸ்தாக்கியார் நாடகம் போன்ற வேறு சில நாடகங்களும் இவரால் யாக்கப்பட்டவையே.
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் அடுத்த அத்தியாயம் 1916-ம் வருடத்தில் வருகிறது. வீரசிங்கன் கதையை எழுதிய சி.வை.சின்னப்பள்ளை, அந்த வருடத்தில் விஜயசீலம் என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். முதன் முதலாக அதிக நாவல்களை எழுதி, நாவல்களை அந்தக் காலத்தில் விரும்பிப் படிக்கும் ஒரு இலக்கிய உருவமாக ஆக்கித்தந்தவர் இவர் என்று சொல்வது தவறன்று. உதிரபாசம் , இரத்தின பவானி ஆகிய மற்றிரண்டு நாவல்களையும் இவர் எழுதினார். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞராகவும் பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை, இவரின் தமையனாரென்பதைத் தெரிந்து கொண்டால், இவரது நாவல்களில், கதா பாத்திரங்களின் குணாகுண விசாரத்தைவிட, செந்தமிழ் நடை அதைக வலிவு பெற்று விளங்குவதற்கான ஒரு காரணமும், புலப்படலாம். 1910-ம் ஆண்டுக்கும் 1920-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஈழத்து நாவல் துறையில் தனிக்காட்டு ராஜாவாக இவர் திகழ்ந்தாரென்றும் குறிப்பிடலாம்.
நாவல் எழுதிய முதலாவது பெண்மணி
1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் குறைந்த பட்சம் ஒரு டசின் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பித்த மற்றொரு நாவலான மேகவர்ணன் வாசகர்க்குக் கிடைத்தது இந்தக் காலப் பிரிவில்தான். 1922-ம் ஆண்டில் பிரசுரமான இந்த நாவலின் ஆசிரியர் திரு.வே.வ. சிவப்பிரகாசம்.
இலங்கையின் முதலாவது தமிழ் நாவலாசிரியை தோன்றியதும் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட இந்தக் காலப் பிரிவில்தான். செ.செல்லம்மாள் என்னும் அம்மையார் எழுதிய இராசதுரை என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடுவதைத் தவிர, இராசதுரை யைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்வதற்கில்லை.
அந்தக் காலத்து வரதராசனார்
1925-ம் ஆண்டில் வெளிவந்த இடைக்காடரின் நாவல்களோடு, ஈழத்துநாவல்களில் அதுவரை இருந்துவந்த முன்னொரு காலத்திலே, நாற்புறமும் கடலாற் சூழப்பட்டு, வளைந்தோடும் நதிகளும், வற்றாத ஏரிகளும், சோலைகளும் சாலைகளும் மலிந்து, குபேர புரியாய் விளங்கிய அலங்காரபுரி என்னும் தேசத்தில் என்று கதாரம்பம் செய்கின்ற உபகதைப் பாணிவிடை பெற்று, கதாவஸ்துக்களுடன் கருத்தாழத்தையும் பின்னி நாவல் எழுகிற உத்தி உதயமாகிறது.
நீலகண்டன் (ஓர் சாதி வேளாளன்) என்னும் நாவலையும், இரண்டு பாகங்களைக் கொண்ட சித்த குமாரன் என்னும் நாவலையும் 1925-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார் இடைக்காடர்.
இடைக்காடல் உயர்தர பட்டதாரி. தன் காலத்தில் மேலைத் தேசத்துக் கல்வி ஞானங்களிலும், தத்துவங்களிலும் ஊறித் திளைத்த சிலரில் ஒருவராக விளங்கிய இரைடக்காடர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தன் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதிக்க வேண்டுமென்னும் இவருடைய கடமையுணர்ச்சி, இவர் நாவல் எழுதிய சந்தர்ப்பங்களிலும் இவரை விட்டுப் போகவில்லை. தர்க்கம், நியாயம், அர்த்தம், சித்தம், கணிதம், சீவம், தர்மம், சமயம், வியாகரணம் போன்ற பல்வேறு சாஸ்திரங்களையும் அலசியும் ஆராய்ந்தும் சம்பாஷ’க்கிற பாத்திரங்கள் இவரது நாவல்களில் சுற்றிவரும். மேனாட்டுத் தத்துவ வாதங்களிலும் பண்பாடுகளிலும் பரிச்சயம் கொண்டிருந்தும், அவற்றோடு மல்லுக்கட்டி, அவற்றை விடத் தமது தேசிய சிந்தனைகளும் பண்புகளும் சிறந்தவை என்று தருக்கமிட்டு, அவற்றைக் கட்டிக்காக்க விரும்புகிற இவரது முனைப்பை, இவர் எழுதிய நாவல்களில் பரக்கக் காணலாம். குத்துமதிப்பாகச் சொன்னால், இவர் அந்தக் காலத்து வரதராசனாராக விளங்கியிருக்கிறாரென்று சொல்லலாம். ஆனால் வரதராசனாரின் நாவல் துறைச் சாதனையை, இடைக்காடர், பல வருடங்களுக்கு முன்பே, சில மடங்கு செப்பமாகவே நிறைவேற்றி விட்டாரென்று சொல்ல வேண்டும்.
இடைக்காடரின் இலக்கிய முயற்சிகள் நடைபெற்ற இந்தக் காலப் பிரிவின் பிற் பகுதியிலேயே, கிறிஸ்தவ தர்மங்களைத் தாங்கி விவாதிக்கும் நாவல் ஒன்று வெளியிடப்பட்டதை, காரியார்த்தமான ஒரு சம்பவமாகக் கருத வேண்டும். சுதேச தத்துவச் சாயல் படர்ந்த இடைக்காடரின் நாவல்களுக்கு மாற்றமான தன்மைகளுடன், விதேச கிறிஸ்தவ மதத் தத்துவங்களைப் பிற்களத்தில் வைத்து, அவையே சிறந்தவை என வலியுறுத்தும் முகமாக எழுதப்பட்டது. புனித சீலி என்னும் நாவல். இந்த நாவல் ஞானச் சகோதரர் (ரெவரென்ட் பிறதர்) யோன்மேரி என்பரால் எழுதப்பட்டது. நாவல் என்பது நெடுங்கதை என்னும் ஒரு அர்த்தத்தை விசுவரூபமாகக் கண்டு, நான்கு பாகங்களாக எழுதி வெளியிடப்பட்டு, நீளத்தால் கல்கியின் மிக நீண்ட நாவல்களையும் விட அதிக பெருமை தேடிக் கொள்ளும் இந்த நாவலில், இலக்கண சுத்தமான யாழ்ப்பாணத் தமிழுடன், ஆங்காங்கே யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும் இடம் பெற்றிருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் முத்திரை கணிசமாகப் படியுமாறு, யாழ்ப்பாணத்துப் பிரதேச மொழி வழக்கை முதன் முதலாக நாவலில் ஓரளவு புகுத்திய புதுமையை இந்த நாவலின் ஒரு சிறப்பியல்பாகக் கொள்ளலாம்.
உயிர் வாழும் பழைய நாவலாசிரியர்கள்
சரளமான தமிழ் நடை, புனித சீலி வெளிவந்த அதே வருடமான1927-இல் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு நாவலில் மேலோங்கி நிற்கிறது. சாம்பசிவம்-ஞானாமிர்தம், அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்பது இந்த நாவலை எழுதினார். மலாயாவில் வேலை பார்த்து, ஓய்வு பெற்று வந்து, சொந்த ஊரான காரைத் தீவில் இளைப்பாறும் நாகலிங்கம், உயிருடனிருக்கும் பழைய நாவலாசிரியர்களில் ஒருவர். நாவலர் ரா.பி. சேதுப்பிள்ளையின் முகவுரையுடன் வெளியான இந்த நாவல், கரைத் தீவில் ஒரு கோயிற் கேணியைப் புதுப்பிப்பதற்கு நிதி சேர்ப்பதற்கென்றே எழுதப்பட்டதென்பது ஒரு ரசமான செய்தி. இந்த நூலின் பெயரே, இதன் சற்போதக குணாம்சங்களைத் தெளிவாக விளக்கி விடுகிறது. ஆனால் இந் நூலின் மூன்று நான்கு அணிந்துரைகளில், இலங்கைத் தமிழறிஞர்கள் சிலர், இக்கால இலக்கிய சர்ச்சைகளுக்குங்கூடப் பொருந்தக்கூடிய சில தரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். வரைதற் சித்திரங்களுடன் வெளிவந்த முதலாவது இலங்கைத் தமிழ் நாவலும் இதுவே.
நாகலிங்கம் போலவே இன்றும் உயிருடனிருக்கும் ஒருவரால் எழுதப்பட்டது, 1929ம் ஆண்டில் வெளியான சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண் மணி என்னும் நாவல். இதை எழுதிய சு.இராசம்மாள் என்னம் அம்மையார் இலங்கையின் இரண்டாவது தமிழ் நாவலாசிரியயை என்று சொல்லலாம். முடிவு என்ன என்னம் ஆவலைச் சிறிது தூண்டும் வகையில் அமைந்த ஒரு வித மர்ம நாவலாக இந்த நூல் விளங்குகிறது. (ஒரு நாவலோடு ஓய்வு பெற்று, தற்போது ஹெந்தலைப் பக்கத்தில் வாசம் செய்யும் இவர், மீண்டும் உற்சாகம் பெற்று தனது இரண்டாவது நாவலை எழுதி முடித்து, பிரசுரிக்க முயன்று வருகிறாரென்று தெரிகிறது).
1930ல் எழுதப்பட்டது மா. சிவராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் என்னும் நாவல். ஆசிரியர் இந்த நாவலைத் தொடர்ந்து விஸ்தரித்து வேறு பாகங்களோ பாகமோ வெளியிட உத்தேசித்தாரென்பது, இந்நூலில் முதலாம் பாகம் என்று போட்டிருக்கும் குறிப்பிலிருந்து தெரிகிறது. ஆனால் பிரசுரமானது என்னவோ சுமார் மூந்நூறு பக்கங்களைக் கொண்ட முதலாவது பாகம்தான். இலக்கியம் மக்களுக்குப் பயன்படு பொருளாக வேண்டுமென்று வலியுறுத்தும் முன்னுரையோடு வெளியாகியுள்ள இந்த நாவல் கொக்குவில் சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலையிலிருந்து பிரசுரமாயிற்று.
உலகம் பலவிதக் கதைகள்
இடைக்காடரின் நாவல்கள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய இதே பத்தாண்டுக் காலப் பிரிவில் நாவல் இலக்கியத்திற்கு வாசகர்களிடமும், ரசிகர்களிடமும், எழுத்தாளர்களிடமும் ரஞ்சகத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்னும் பிரக்ஞையோடு, ஓரளவு முனைப்பான சில முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த முனைப்பில்விளைந்த நல்முத்துக்கள் உலகம் பலவிதம் என்ற வரிசை நாவல்களின் ஆசிரியர், அந்தப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து வந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, முந்திய தலைமுறையில் புகழ்பெற்று மிளிர்ந்த உரையாசிரியர் ம.வேற்பிள்ளை என்னும் மட்டுவில் வேலுப்பிள்ளையின் மைந்தன் இவர். சமகாலத்தில் தமிழறிஞனாகத் திகழ்ந்த மகாலிங்க சிவத்தின் சகோதரர். தந்தை வேற்பிள்ளையிடமிருந்து பெற்ற தமிழறிவை மகாலிங்கசிவம் ஒரு விதத்திலும் பிரயோகித்து, பிரசாசித்தார்கள். நாடகாசிரியராகவும், உரைகாரராகவும மிளிர்ந்து பல நுல்களை எழுதிய திருஞானசம்பந்த பிள்ளை, கோபால-நேசரத்தினர் , காசிநாதன்-நேசமலர் என்னும் இரண்டு நாவல்களிலும் தனக்கு முந்திய நாவாலாசிரியர்கள் கையாளாத உத்திகளைப் புகுத்தி, பிந்திய நாவலாசிரியர்களுக்கு அழுத்தமும் அர்த்தமும் பதிந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரென்று சொல்வது தவறன்று. தன்னுடைய இரு காதல் நாவல்களிலும் நகைச் சுவை ரசத்தை லாவகமாகப் பின்னியிருக்கிறார். இந்த நகைச் சுவை இடமறிந்து, கேலியும், கிண்டலும், குத்தலுமாகப் பல விவரணங்களைப் பெற்று நாவலுக்கு ஒரு அர்த்த புஷ்டியையும் அளிக்கிறது. கலை உருவம் கெடாதவாறு, நாவலை ஒரு சீர்திருத்த நோக்கத்துக்குப் பயன் படுத்தலாமென்று நாவலாசிரியர் உற்றறிந்த உள்ளுணர்வு, இந்த நாவல்களில் உறுதியோடு தொனிக்கிறது. இந்த நாவல்கள் 1920-ம் ஆண்டுத் தொடரின் பிற் பகுதியில் நூல்களாகப் பிரசுரமாயின.
1920-ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பவருடங்களில் கமலாவதி என்று ஒரு நாவல் வெளியாகியிருப்பதாகவும் தெரிகிறது. இந்நூல் ஆசிரியர் யாவரென்று நிச்சயித்துச் சொல்ல முடியவில்லை. அந்தக்காலத்தில் மானிப்பாய் தபால் நிலைய அதிபராக இருந்த சபாபதி என்னும் பெயர் கொண்ட ஒருவரே இந்த நாவல் ஆசிரியரென்று ஊகமான ஒரு தகவல் மாத்திரமே கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. 1930-ம் ஆண்டில் பிரசுரமான தாமோதரன் என்னும் நாவலையும் இந்தக் காலப் பிரிவில் சேர்க்க வேண்டும். வ.றெ. பாவிலுப்பிள்ளை என்பவர், இந்தச் சிறிய நாவலை எழுதினார்.
சமூக சீர்திருத்தம் கதா வஸ்துவானது
1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில், ஈழத்துத் தமிழ் நாவலில், சமூகப் பொதுவான பிரச்சினைகள் இடம் பெற ஆரம்பித்தமையும், இதனால் நாவல் இலக்கியம் புதிய வலிவைப் பெறத் தொடங்கியமையும், குறிப்பிடத் தக்கவை.
ஈழத்தின் முதலாவது முழுதான துப்பறியும் நாவல்கள் வெளியானதும் இந்தக் காலப் பிரிவில் தான். வரணியூர் ஏ.சி. இராசையா 1932-ம் வருடத்தில் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் என்னும் நாவலையும் 1936-ம் வருடத்தில் அருணோதயம் அல்லது சிம்மக் கொடி என்னும் நாவலையும் எழுதி வெளியிட்டார். ஈழகேசரி யில் தொடர்கதையின் எழுதி வந்த இராசையாவின் இந்தத் துப்பறியும் நாவல்கள், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் நாவல்களையும்கூட அந்தக் குறிப்பிட்ட வகையான இலக்கியப் பிரிவில், தூக்கியடிக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லலாம்.
( கலாமதி என்னும் நாவல் பற்றி நம்பகமான தகவல் கிடையாதவரை) மட்டக்களப்பில் நாவல் இலக்கியம் உருப்பெறத் தொடங்கியது 1934-ம் வருடத்தில் என்று தற்காலிகமாகக் கொள்ளலாம். அந்த வருஷத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும், சைவசமய ஈடுபாடு மிகுதியும் உள்ளவருமான வே. ஏரம்பமூர்த்தி அரங்கநாயகி என்னும் நாவலை வெயிட்டார். நிச்சயபூர்வமாகத் தெரிந்த வரையில், மட்டக்கடப்பிலிருந்து பிரசுரமான முதலாவது தமிழ் நாவலென்ற பெருமையைப் பெறும் அரங்கநாயகி , 1919-20-இலங்கையெழுத்துப் பிரதியாகத்தயாராகிவிட்ட போதிலும் பிரசுரமானது 1934இல் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலத்தில் வீரதீரக் கதைகளை எழுதிப் புகழ்பெற்ற சர் வால்டர் ஸ்காட்டின் கெனில்வேர்த் என்னும் நாவலைத் தழுவி இந்த நாவல் தமிழில் எழுதப்பட்டது. தழுவல் உருவில்கூட, அரங்கநாயகி , அதற்கு முன்பு வெளிவந்த பெரும்பாலான ஈழத்துத் தமிழ் நாவல்கள் போல, நல்லொழுக்க உபதேச நாவலாகவே பரிணமித்தது.
இந்தத் தழுவல் நாவல் பற்றிக் குறிப்பிடுகையில்இ ஈழகேசரியில் இதே காலப் பிரிவில் வெளியான மாலை வேளையில் என்னும் மொழிபெயர்ப்புநாவல் நினைவுக்கு வருகிறது. ஐவான் துர்கனீவ் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பான இதை எழுதியவர், இலங்கையின் சிறு கதை முதல்வர் என்று புகழப்படும் சி. வைத்திலிங்கம் அவர்கள். ஈழகேசரியில் தேவி திலகவதி என்னும் ஒரு நாவலும் இதே காலப் பிரிவில் தொடர் கதையாகப் பிரசுரமானதாகத் தெரிகிறது.
தீண்டாமைக்குச் சவுக்கடியும் சாவுமணியும்
1935-ம் ஆண்டில் நல்லூரைச் சேர்ந்த வே.க.நவரத்தினர் எழுதிய செல்வரத்தினர் என்னும் நாவல் வெளியானதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி என்னும் நாவல் பிரசுரமானது. இந்த நாவலின் ஆசிரியர் சி.வே. தாமோதரம்பிள்ளை. பல நூல்களை எழுதியும் பதித்தும் தன் பெயர் பரப்பிய இவரின் கதிர்காமப்புராணம் வெகு ஜனப்புழக்கத்துக்கு வந்த நூல்களில் ஒன்று.
எம்.ஏ. செல்வநாயகம் என்பவர் 1938-ம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஒரு நாவலுடன் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பிக்கிறது. அதுகாலவரை தனிமனித சீர்திருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்ட நல்லொழுக்க உபதேசக் கருவிகளாகப் பயன்பட்டு வந்த நாவல்களின் போக்கை, சமூகத்தின் பொதுப்படையான சீர்கேடுகளைக் கிளறிப் பார்க்கும் வாருகோல்களாகத் திருப்பி விட வழி காட்டியாக அமைந்தது செல்வ நாயகத்தின் செல்வி சரோசா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி என்னும் நாவலாகும். தன் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்கு இலக்கிய உருவங்களைப் பிரசாரக் கருவிகளாகப் பயன்படுத்தினார் செல்வ நாயகம். நாவல் எழுதியதுடன், பல சீர்திருத்த நாடகங்களையும் படைத்தார். இன்றும் உயிர்வாழும் செல்வநாயகத்தின் மிகப்பிந்திய நாடகம் கமல குண்டலம் என்பது.
**இ.தொ.ETNV002**
** ETNV001.MTFன் தொடர்ச்சி** ** ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி**
-------------------
ஓரினத்திலே காணப்பட்ட சாதிபேத வர்க்கப் பிளவுகளைத் தன் நாவலில் செல்வநாயகம் கிளறிப்பார்த்து மருந்து சொன்ன இதே காலப்பிரிவில், வெவ்வேறு இனங்களிடையில் காணப்பட்ட வகுப்புவாதப் பிளவுகளைக் களைந்தெறிய முனைந்து நாவல் எழுதினார் எச். நெல்லையா. அக்காலத்தில் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியராக இருந்த நெல்லையா, தான் வேலை பார்த்து வந்த பத்திரிகையில் தொடர்கதைகளாக இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி முதலாம் நாவல்களை எழுதி வந்ததுடன் 1940-ம் ஆண்டுக்கு முன்னாக சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு என்னும் நாவலை நூல் வடிவில் வெளியிட்டார். இலங்கையில் வாழ்ந்த இந்தியரான நெல்லையா, இங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லுறவுகளை ஏற்படுத்தும் குறிக்கோளுடன், இன ஒற்றுமையைத் தூண்டும் அம்சங்கள் பொதிந்த இந்த நாவலைப் பிரசுரித்தார். காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி என்றும் இவர் ஒரு நாவலை எழுதியிருப்பதாக எண்ணம்.
பல கிளைகளாகப் பரந்து விரிந்த காலம்
செல்வநாயகம், நெல்லையா ஆகியோரின் நாவல்களின் தோற்றத்தோடு, ஈழத்துத் தமிழ் நாவல்களின் வரலாற்றின், அழகுணர்ச்சி, கற்பனாலங்காரம், தனிமனித நல்லொழுக்கம், வீரதீர பிரதாபம் இவற்றையே பெரும்பாலும் சுற்றிச் சுழன்ற ஒரே ரகமான கலாவினோத மனோரஞ்சக நாவல்களின் காலகட்டம் முற்றுப்பெற்று, ஒரு புதிய காலகட்டம் உதயமாகிறது. 1940ஆம் ஆண்டுவரை, ஒரு ஒழுங்குப் பிரமாணமாக ஒற்றைச் சுவடு கட்டிச்சென்ற ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியப் பாதை, அந்த ஆண்டிலிருந்து பல கிளைகளாகப் பிரிந்து, பரந்து செல்கிறது. அந்த ஆண்டிலிருந்து 1962-ம் ஆண்டுவரையுள்ள இருபத்திரண்டு வருட காலத்தின் ஈழத்துத் தமிழ் நாவல்களை வருஷவாரியாகவோ, தரவாரியாகவோ, ரக வாரியாகவோஇ நாவலாசிரியர்களின் கோஷ்டி வாரியாகவோ பிரிந்து வகைப்படுத்தி ஆராய்வது சுலபமன்று. ஆயினும் இந்தக் குறிப்பிட்ட இருபத்திரண்டு வருடகாலத்தில் இலங்கையில் பிரசுரமான நாவல்களைத் தேடிச் சேகரித்துக் கொள்வதும், இந்தக் காலத்து நாவலாசிரியர்களை இனங்கண்டு கொள்வதும் சிரமமான காரியமன்று.
தமிழ் நாட்டில் முனைப்போடு தத்தம் முத்திரை பதித்து எழுதியவர்களின் நாவல்களையும், மேல் நாடுகளிலிருந்து இலங்கைப் புத்தகச் சந்தைகளில் வந்து குவிந்த ஏராளமான பிறமொழி நாவல்களையும், வாசித்துப் பரிச்சயம் செய்து கொண்டு, அவற்றின் செல்வாக்குகளால் பாதிக்கப்பட்டும், அவற்றின் தனித்தன்மைகளை உணர்ந்து ஈழத்துத் தமிழிலக்கியத்துக்கு பிரத்தியேக தனித்தன்மையை ஊட்டியும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய தரமான நாவல்களை எழுத முயன்றது, இந்த இருபத்திரண்டு வருட காலத்தில்தான் என்று சொல்ல வேண்டும். இந்த முயற்சி, திருவினையை ஆக்கியிருக்கிறதா என்பதை, இந்த மேல்வாரியான அஸ்திவாரச் சிறுநூலில் ஆராய்வது உசிதமில்லை யாகையால், இந்தக் காலக்கட்டத்தில் ஈழத்துத் தமிழ் நாவல்கள் உருவ அழுத்தமும், கருத்தாழமும், இலட்சியார்த்தமும் பெற்றுச் செழிப்புற்றன என்பதை ஒட்டு மொத்தமாகக் கவனித்துக் கொண்டு, இந்த இருபத்திரண்டு வருஷ கால நாவல்கள் பற்றிய குறிப்புகளுக்கு வருவோம்.
கன நாவல்கள் எழுதிய கசின்
ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் 'மறு மலர்ச்சிக்காலம்' என்றும் கடந்த முப்பது முப்பத்தைந்து வருட ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் 'பொற்காலம்' என்றும் குறித்த அந்தக் 'கால' விமர்சகர்கள் சிலர் ஆடம்பரமாகக் குறிப்பிட்டு அகமகிழ்ச்சியடைகிற 1940-ம் ஆண்டுத் தொடர் வருடங்களில், 'கசின்' என்கிற க.சிவகுருநாதன், கனக-செய்திநாதன், வரதர், சம்பந்தன், சுயா, ஜே.எஸ். ரவீந்திரா ஆகியோரின் பெயர்கள் நாவலாசிரியர்கள் என்ற வகையில் பளிச்சிடுகின்றன.
'கசின்' என்கிற சிவகுருநாதன், சகடயோகம் , இராசமணியும் சகோதரிகளும் போன்ற சில நாவல்களை இந்தக் காலப் பிரிவிலும், கற்பகம் , சொந்தக்கால் போன்ற சில நாவல்களைச் சமீப காலத்திலும் எழுதியிருக்கிறார். ஈழகேசரியில் தொடர் கதைகளாக வெளியிட்ட நாவல்கள் பெரும்பாலானவை. சாதாரணமான ஒரு சிறு கதைக் கருவை வைத்துக் கொண்டு, 'காக்கை உட்காரப் பனம் பழம் விழுகிற' சம்பவங்களை இடைச் செருகலாக்கி, நடுத்தரக் குடும்பங்களையும், கிராமத்துப் பாத்திரங்களையும் பிற்களத்து உபயோகித்து, ஓசைப்படாமல் வாசித்து முடிக்கக் கூடிய நாவல்களை, பரபரப்பில்லாமல் எழுதி முடித்துவிடுவதில் இவர் சமர்த்தர். இவருடைய நாவல்களில் சுளிப்பான அசமந்த நகைச் சுவை பின்னணியில் இழையோடிச் செல்லும்.
மறுமலர்ச்சிக் குழுவினர் எழுதியவை
ஈழம் பெருமைப்படக்கூடிய சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கனக-செந்திநாதன், விதியின்கை , வெறும்பானை ஆகிய இரண்டு நெடுங் கதைகளை எழுதியிருக்கிறார். நம்முடைய பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைப் பகைப்புலத்தில் வைத்து நாம் எழுதவேண்டுமென்று, அறிவறிந்து இலக்கியம் சமைக்கும் செந்திநாதன், கஷ்டப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைக்கூட, கலை அழகு குன்றாமல் சமத்காரமாகக் கதையாக எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த நெடுங்கதைகள் உதாரணம். உபகுப்தன் வெளிவந்த விதியின் கை யளவுக்கு, வெறும்பானை யை நாவலியல்புச் சிறப்புடையதென்று தூக்கிச் செல்ல முடியவில்லையென்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
வரதர், 'மறுமலர்ச்சியில் வென்று விட்டாயடிரத்னா என்னும் நாவலை எழுதினார். அவர் பிற்காலத்தில் எழுதிய வாழ்க நீ சங்கிலி மன்ன என்னும் நூலும் ஒரு நாவலே என்று சிலரால் கருதப்படுகிற போதிலும் விமரிசன நோக்கில் பார்த்தால் அப்படிக்கருத முடியாதென்றே தோன்றுகிறது.
இலங்கைச் 'சிறுகதைத் திரு மூலர்களில்' ஒருவரென்க் கருதப்படும் சம்பந்தன் இதே காலப் பிரிவில் ஈழகேசரியில் 'பாசம்' என்னும் தொடர் கதையை எழுதினார். சாருகாசினி, சாரதா என்னுமிரு பள்ளி மாணவிகளையும் அவர்களின் ஆசிரியர் நாராயணனையும் சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் சுவையான கதை அது.
தினகரனில் 'சுயா' தொடர் கதையாக எழுதிய ரவீந்திரன் என்னும் நாவலும் இதே காலப் பிரிவில் வெளியானதே. இதே காலப் பகுதியில்தான் 'ராமப்பிரேமன்' எழுதிய ஆப்பக்காரி யும் தினகரனில் தொடா கதையாகப் பிரசுரமாயிற்று.
நடேசையர், பண்டிதமணி நாவல்கள்
1940-ம் ஆண்டுத் தொடரின் இறுதிப் பாகத்தில் வெளிவந்த காதல் உள்ளம் என்னும் நாவல் ஜே.எஸ். ரவீந்திரா என்பவரால் எழுதப்பட்டது. வாசகரை வசப்படுத்தக் கூடிய லளிதமான நடையும், மென்மையான உணர்ச்சிகளின் சலனமும், உள்ளத்தை உருக்கக்கூடிய காதலுறவுப் பிரச்சினைச் சம்பவங்களும் மின்னுகிற இந்த நாவல், 'அகிலன்', 'விந்தன்', 'மாயாவி' ஆகிய மூவரையும் ஒட்டுப் போட்டு உருவாக்கிய ஒருவர் எழுதிய நாவல் போலத் தோற்றமளிக்கிறது.
1940-ம் ஆண்டுத் தொடரில் வரும் இந்தத் தசவருடங்களில் வேறு சில நாவல்களும் வெளியாகின. மலைநாட்டுத் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்த நடேசையர், தாம் ஆசிரியராகப் பணி புரிந்த சுதந்திரன் பத்திரிகையில் ஒன்றிரண்டு நாவல்களை எழுதினார் பண்டித மணி சி. கணபதிப் பிள்ளையின் முடிவு பெறாத காலப் பிரிவில்தான். துர்கனீவின் நாவலொன்றை முதற்காதல் என்னும் பெயரில் 'இலங்கையர் கோன்' மொழி பெயர்க்க, 1942இல் அது நூலாகப் பிரசுரமாயிற்று. ஆர்.எல். டீவன்சனின் ட்றெஷர் ஜலன்ட் , மணி பல்லவம் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்துத் தேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டு 1949இல் நூல்கவடிவம் பெற்றது. தேவனின் வாடிய மலர்கள் எழுதப்பட்டதும் ஏறத்தாழ இதே காலப் பிரிவில்தான்.
சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்
1950-ம் ஆண்டு தொடக்கம் 1962-ம் ஆண்டு வரையுமுள்ள பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்துப் பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவும் நூல் வடிவிலும் வெளி வந்த நாவல்கள் பலதரப்பட்ட இலக்கிய வட்டாரங்களோடு தொடர்பு கொண்டவை. தரமான எழுத்தாளர்கள் மாத்திரமன்றி, ஒழுங்காக வசனம் எழுதத்தெரியாத பலரும் கூட நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.
நாவல்கள் எழுதுவதற்கென்று தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொள்ளாதவர்களும் கூட, நாவல் இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்த பொறுப்புணர்ச்சியுள்ள எழுத்தாளர்களோடு போட்டி போட்டுக் கொண்டு புற்றீசல்களாக நூல்களைப் பெருக்கிய இந்தக் காலத்தில், வெளியான நெடுங்கதைகளோ அனந்தம். இவற்றில் எவற்றையும் தராதரம் பார்த்து ஒதுக்காமல்,அனைத்தையும் தட்டடிப்பார்த்துத் தகவலறிந்து கொள்வது, கையிருப்பை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அவசியமாயிருக்கலாம். ஆயினம் ஒரு சாதாரண வாசகன் கூட நாவல் என்று கருதாமல் தள்ளிவிடக்கூடிய 'சில்லறைக் கதைகளை', இந்த அஸ்திவாரச் சிறுநூலில் முதலாய்ச் சேர்த்து கொள்ள வேண்டியதில்லையென்றே தோன்றுகிறது. ஆகவே, இந்தப் பன்னிரண்டு வருடங்களில் வெளியான 'சில்லறைக் கதைகளை' ஆராய்வதை நீக்கி, புறம்புபடுத்தி வைத்துக்கொண்டு, ஏனைய நாவல்களனைத்தையும் இங்கு கவனத்திற்கெடுத்துக்கொள்ளலாம்.
தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்
இந்தப் பன்னிரண்டு வருஷங்களின் முதற்பாதியில், நாவலாசிரியர்கள் என்னும் வகையில் ஓரளவு பிரகாசித்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தேவன், கே.வி.எஸ்.வாஸ், அ.செ. முருகானந்தன், வே.தில்லைநாதன், கலாநிதி, க. கணபதிப் பிள்ளை, வி.லோகநாதன், க.சச்சிதானந்தன், க.நாகப்பு, த. சண்முகசுந்தரம், சுலோசனா, ஈழத்து மாயாவி, நவல், எம்.ஏ. அப்பாஸ், டி.எம்.பீர்முகம்மது, சிதம்பரநாத பாவலர், இராஜ அரியரத்தினர் ஆகியோர் என்று சொல்லலாம்.
தேவன் - யாழ்ப்பாணம் , ஈழகேசரியில், தான் தொடர்கதையாக எழுதி வந்த கேட்டதும் நடந்தது•ம என்னும் நாவலை, பின்னர் நூல் வடிவில் வெயியிட்டார். கண், காது என்று இரண்டு பிரிவுகளோடு, மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்டது என்ற பாவனையில் ஓரளவு கவனத்தைப் பெற்றது இந்த நாவல்.
இலங்கையோடு தன் வாழ்கையைப் பின்னிக்கொண்டுவிட்ட கே.வி.எஸ். வாஸ், சுமார் பத்து நாவல்களை எழுதியிருக்கிறார். 'அறுபது டன் ரஷ்ய டாங்கி' என்று கல்கியாற் புகழப்பட்ட இந்த அசுரவேக எழுத்தாளரின் நாவல்களும் தீவிரகதியில் செல்லுகிற மர்ம நாவல் வகையைச் சேர்ந்தவை. 'ஆரணி'யையும் 'வடுவூராரை'யும் அடியொற்றியும், சரித்திரக்கதை ரூபத்திலும் குந்தளப் பிரோமா நந்தினி (2 பாகங்கள்), தாரிணி பத்மினி (2 பாகங்கள்) புஷ்ப மால , ஜம்புலிங்கம் சாந்தினி போன்ற நாவல்களை முதலிலும், சிவந்திமலைச் சாரலிலேஞ, ஈழத்தின் கதை போன்ற இரண்டொரு நாவல்களைச் சமீபத்திலும் இவர் எழுதியிருந்தாலும், இவருடைய மலைக்கன்னி , உதய கன்னி இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிறந்த, வலிமையான நாவல்கள். ரைடர் ஹக்கார்ட் எழுதிய ஷ“ தறிட்டர்ன் ஒவ்ஷ“ ஆகிய நாவல்களைப் படித்தவர்களுக்கும் கூட, அந்த மூலக்கதைகளையும் விடச் சுவைப்படக் கூடிய விதத்தில், இந்திய சரித்திரம் பற்றித் தான் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளையும் ஜனரஞ்சகமாக எழுதினார். வீரகேசரி யின் தற்போதைய ஆசிரியரான இவர் அந்தப் பத்திரிகையில் தன் நாவல்களில் ஒன்றிரண்டு தவிர ஏனைய அனைத்தையும் தொடர்கதைகளாக எழுதினார். தொடர்கதைகளாக வெளிவரும் நாவல்களுக்குத் தொகையான வாசகர்களைத் தன் காலத்தில் பெருக்கிக் கொடுத்த பெருமையையும் ஓரளவு இவரைச் சாரும்.
1950ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பக் கட்டத்தில் பிரசுரமான புகையில் தெரிந்த முகம் , ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் பொற்சுடர் என்று பெருமைப் படக்கூடிய அ.செ. முருகானந்தனின் கைவண்ணத்தைக் குறித்துக் காட்டும் குறுநாவல். யாழ்ப்பாணத்து வண்டிற் சவாரியை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதைக் கருவே இந்தக் குறநாவலாக மறு பிறப்பெடுத்திருக்கிறதென்றாலும், ஈழத்து மண்ணில் ஆழமாக வேர் விட்டு நிற்கும் கதை அது. யாத்திரை என்ற மற்றொரு நல்ல குறுநாவலையும் ஈழகேசரி யில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார். 1957ல், பீஷ்மன் என்ற புனைபெயருடன் இதை எழுதினார்.
காரை தீவைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளை என்ற புகழ் பெற்ற தமிழாசானின் புதல்வரான அத்துவக்காத்து வே. தில்லைநாதன் அனிச்ச மலரின் காதல் என்ற குறுநாவலை 1953ல் வெளியிட்டார். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியராக முன்பு கடமையாற்றிய வாசனை தென்படக் கூடியவாறு ஒரு நல்லொழுக்கப் போதனை நாவலாக இதை அமைத்துவிட்ட இவர், முற்போக்கான சில கொள்கைகளையும் தன்னுடைய நாவலிற் புகுத்திக் காட்டுகிறார். கலாநிதி கணபதிப்பிள்ளையின் முன்னுரையுடன் வெளியானது இக் குறுநாவல்.
கலாநிதி கணபதிப்பிள்ளையின் கதைகள்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு நாடகங்கள் பல எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞரும், வியாகரண 'விண்ணருமான' கலாநிதி கணபதிப்பிள்ளை, 1953ம், 1945ம் ஆண்டுகளில் முறையே பூஞ்சோலை , வாழ்க்கையின் வினோதங்கள் ஆகிய நாவல்களை வெயிட்டார். ஜெர்மானிய எழுத்தாளர் தியடோர்ஸ்தம் எழுதிய இமென்ஸே என்னும் கதையின் தழுவல் பூஞ்சோலை , வாழ்க்கையின் வினோதங்கள் என்ற நாவலும், பிறமொழிக் கதையைப் படித்த மன அருட்சியில் விளைந்ததுதான். ஆயினும், யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஒரு கணிப்பை வெளியிடும் சுவையான கதைகளாக இவை அமைந்திருக்கின்றன.
கலைமுதிர்ச்சி கொண்ட லோகு வின் நாவல்கள்
வீரகேசரி யின் வாரப்பதிப்பு ஆசிரியர் வி.லோகநாதனின் பிரேமாஞ்சலி என்ற நாவல், சரித்திரப் பின்னணியில், ஆத்மானுவப ரீதியான காதல் கடமை-தர்மம்-தத்துவம் யாவற்றையும், மனோசலன ரீதியில் உணர்ச்சிப் பின்னலாக்கிச் செல்கிறது. உள்ளத்தைச் சிறைப்படுத்தும் கலைமுதிர்ச்சி கொண்ட வசன நடையழகும், நமக்கே நடந்தது போன்ற ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திச் செல்லும் உத்தியும் 1956ல் வெளியான இந்த நாவலின் தனிச்சிறப்புகள். அம்பிகாபதி என்ற புனைபெயருடன் தற்போது வீரகேசரி யில் இவர் எழுதி வரும் பாரிஸ்டர் சிற்றம்பலம் என்ற நாவல் செல்லும் கதியில், இந்தச் சிறப்புக்கள் மேலும் வலிவு பெற்றிருப்பதைக் காணலாம்.
'பாட்டில் ஒரு வரியைத் தின்று களிப்பேன்' என்று உணர்ச்சி வெறியோடு கவிதை பாடும் க. சச்சிதானந்தனின் அன்னபூரணி என்ற நாவலும், க நாகப்புவின் ஒன்றரை ரூபாய் என்ற நாவலும் ஏழையின் காதல் என்ற பெயரில் வெளியான நாவலும், இப்பொழுது எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நல்ல நாவலாசிரியர் த. சண்முகசுந்தரம் 1954ல் சுதந்திரனின் தொடர்கதையாக எழுதி வந்த ஆசை ஏணி என்ற நாவலும், அதே பத்திரிகையில் 1953ல் சுலோசனா எழுதிய வாடாமலர் , 1952ல் மாயாவி யால் எழுதப்பட்டுப் பிரசுரமான ரஞ்சிதம் , நவல் எழுதிய மிஸ்.மனோகரி, ஆகிய நாவல்களும்,குறித்த இந்தக் காலப் பிரிவில் வெளிவந்தவை.
மலைநாட்டுப் பேச்சுத் தமிழ் நாவல்
ஈழத்திற்கு வந்து சொற்ப காலமிருந்து துரோகி , கள்ளத்தோணி முதலிய நாடக நூல்களை வெளியிட்டுப் பரபரப்பூட்டி, பிறகு இந்தியாவுக்குக் குடி பெயர்ந்து சென்ற எம்.ஏ. அப்பாஸ’ன் இவளைப் பார் மூன்று பிரதேசங்கள , ஒரே ரத்தம் சி.ஐ.டி. சிற்றம்பலம் , சிங்களத் தீவின் மார்மம் யக்கடையாவின் மர்மம் போன்றமர்ம நாவல்களும் இந்தக் காலகட்டத்தில் நூல்களாகவும் தொடர்கதைகளாகவும் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.
இந்தக் காலப் பிரிவில் பிரசுரமாகி வந்த 'நவஜ“வன்' பத்திரிகையில், சிதம்பரநாத பாவலர் தொடர்கதையாக எழுதிய நாவலையும், டி.எம்.பீர்முகம்மது ஹமீதா பானு என்ற புனைபெயருடன் நூல்களாக எழுதிய 'சதியில் சிக்கிய சலீமா', 'கங்காணி மகள் குறுநாவல் என்ற வகையிற்கூடி குறைப் பிரசவமென்றாலும், மலைநாட்டுத் தமிழர்களின் பேச்சு வழக்குத் தமிழை அந்த நாவலில் பீர்முகம்மது கையாண்டிருப்பதுபோல வெற்றிகரமாக, வேறெவரும், வேறெந்த நூலிலும் கையாளவில்லை என்று சொல்லவேண்டும்.
இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி என்ற காலப் பிரிவிலே தங்கப் பூச்சி என்ற நாவலை இராஜ. அரியரத்தினம் எழுதினார். இந்தக் காலப்பிரிவில் நாவலாசிரியர்களாக ஓரளவு பிரகாசித்தவர்களென்று குறிப்பிட்ட இவர்கள் போக, வேறுபலரும் நெடுங்கதைகளை எபதியிருக்கிறார்கள். இவற்றில் சில மாத்திரமே குறிப்பிடத்தக்கவை.
குறிப்பிடிக்கூடிய வேறு சில நெடுங்கதைகள்
முல்க் ராஜ் ஆனந்தின் நாவலைத் தமிழாக்கி, தீண்டாதான் என்ற பெயரில் வெளியிட்டார் கே. கணேஷ்.
'பாணன்' என்ற சஞ்சிகையில் வெளிவந்தது ஒரு தொடர்கதை.
'சமூகத் தொண்டன்' பத்திரிகை ஆசிரியர் க.பே.முத்தையா தன்னுடைய பத்திரிகையில் பண்டிறாளை என்ற பெயரில் ஒரு நாவலைத் தொடர்ந்து எழுதினார்.
'கலைச் சுடர்' சஞ்சிகையில் 'சுதர்ஸன்' 'காதல் பலி' என்ற நாவலை எழுதி வந்தார்.
சாந்தியி யின் மரணத்தின் வாயிலில் என்ற நாவல், காதல் பற்றிய காண்டேகரின் இலக்கியக் கொள்கைக்குச் சவால் விடும் கதை என்று கட்டியம் கூறிக்கொண்டு 1955ம் ஆண்டில் 'சுதந்திரன்' பத்திரிகையில் சுமார் எட்டு மாதங்களாகத் தொடர்கதையாகப் பிரசுரமாயிற்று.
காற்றில் பறந்த கருங்காலிக் குதிரை என்ற சரித்திர நாவலை இஸ்லாமிய தாரகை என்ற பத்திரிகையில் எம். செயினுல் ஆப்தீன் என்பவர் தொடர் கதையாக எழுதினார்.
'சுரபி' பத்திரிகையில் வீரமைந்தன் என்ற மற்றொரு வரலாற்று நாவலும் சி. சண்முகத்தால் எழுதப்பட்டுத் தொடர்கதையாகப் பிரசுரமாகி வந்தது.
தினகரனில் வெள்ளிவீதியார் எழுதிய சிங்கை ஆரியன் 1953ல் வெளிவந்து கொண்டிருந்தது.
வே.க.ப. நாதன் தினகரனில் எழுதிய கபட நாடகம் இதே காலப் பிரிவைச் சேர்ந்தது.
இவையே குறிப்பிடக் கூடிய நாவல்கள்.
இளங்கீரன் சகாப்தம்
இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி போனால், எஞ்சியிருப்பது 1956 முதல் 1962 வரையுள்ள இந்த ஆறு வருட காலம். இந்தக் காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பூரண உருவமும் தாக்கமும், ஈழத்து நாவல் எந்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறது என்று சொல்வது தவறல்ல. உலகின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய தரமான நாவல்களுடனும் சமமாகத் தராசுத் தட்டில் நிற்கக் கூடிய இரண்டொரு நாவல்களாவது இந்த ஆறு வருட காலத்திற் பிறந்திருக்கின்றன என்று துணிந்து சொல்லலாம்.
இத்தனை துணிவோடு ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிச் சொல்ல வைக்கக்கூடிய சாதனையை நிறைவேற்றிய பெருமையின் பெரும் பங்கு, இலங்கையின் நாவல் இலக்கிய வானத்து விடிவெள்ளியாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இளங்கீரனைச் சாரும். 1950 முதல் இற்றை வரையுள்ள இந்தப் பன்னிரண்டு ருட காலத்திய ஈழத்துத் தமிழ் நாவல்களின வளர்ச்சி என்பதும் அநேகமாக இளங்கீரனுடைய வளர்ச்சிதான் என்று சொல்லவேண்டும். 1950ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்து வருகிற ஒவ்வொரு வருஷத்திலும் நாவல் எழுதும் சாதனையில் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறார் இளங்கீரன். வருஷத்துக்கு வருஷம் அவர் நாவல்களை எழுதிய காகிதங்களில் அவருடைய பேனா மென்மேலும் அழுத்தமாகப் பதிந்துகொண்டு நகர்ந்திருக்கிறது.
1951ல் அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்தார். பன்னிரெண்டு வருஷங் கழித்து இப்பொழுது திருப்பிப் பார்க்கிறபோது, வருஷத்துக்கு சுமார் இரண்டு நாவல்கள் தேறும்படியாக அவர் இருபதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதிவிட்டாரென்பது தெரிகிறது. ஆரம்பத்தில் அவர் நாவல்களில் காணப்படாத உருபச் சிறப்பு, பொருள் சிறப்பு, நடைச் சிறப்பு யாவும், 1956ம் ஆண்டுக்குப் பிற்பட்ட அவரது நாவல்களில் தலைகாட்டி, இந்த மூன்று நான்கு வருஷங்களில் பூரண முதிர்ச்சி பெற்றிருக்கின்றன.
யதார்த்த இலக்கியத்துக்குத் தகுந்த உதாரணம்
1951ம் ஆண்டு தொடக்கம் அவரது நாவல்களை முறையே நிரைப்படுத்தினால், ஒரே அணைப்பு , மீண்டும் வந்தாள் , பைத்தியக்காரி , பொற்கூண்டு , கலாராணி , மரணக் குரி , காதலம் , அழகு ரோஜா , வண்ணக் குமரி , காதல் உலகிலே , பட்டினித் தோட்டம் , நீதிபதி , எதிர்பார்த்த இரவு , மனிதனைப் பார் , புயல் அடங்குமா? , சொர்ககம் எங்கே? , தென்றலும் புயலும் , மனிதர்கள் , மண்ணில் விளைந்தவர்கள் , நீதியே நீ கேள் , இங்கிருந்து எங்கே? என்று இருபத்தொரு நாவல்கள் தேறுகின்றன.
நாவல்களின் தொகையாலும், காலத்தாலும் இளங்கீரனை இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் உரித்தாக்கினாலும், தரத்தால் அவர் இந்த ஆறு ஆண்டுகளில்தான் நாவல் துறையில் தன் ஆழமான முத்திரையைப் பதித்திருக்கிறாரென்று சொல்லவேண்டும். அவருடைய நாவல்களிரண்டும் தலைசிறந்த பிறமொழி நாவல்களுடனும் சமமாகத் தலைநிமிர்ந்து நிற்கும் தகுதி வாய்ந்தவை. நாவல் எழுதம் திறமையால் மாத்திரமே, தனக்கென்று இலங்கையில் மிகப் பெரும் வாசகர் கூட்டத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கிறவர் இவர்.
ஈழத்திலும், பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலும் வாழுகின்ற கிராம மக்களினதும், ஏழை எளியவர்களினதும் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கூர்ந்து நோக்கி, அனுபவ உணர்வோடு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்பபதற்கு மார்க்கங் காணும் முயற்சிகள் என்று, இளங்கீரனுடைய மிகப் பிந்திய நாவல்களை வர்ணிக்கலாம். யதார்த்த இலக்கியம், சோஷலிஸ யதார்த்த இலக்கியம் என்று நாளும் பொழுதும் மந்திரோச் சாடனம் நடைபெறுகிற இன்றைய ஈழத்து இலக்கிய உலகில், யதார்த்த இலக்கியங்களை எங்கே படைத்திருக்கிறீர்களென்று எவராபது கேட்டால், தைரியமாகத் தூக்கிக் காட்டுவதற்கு, நாவல்களைப் பொறுத்த வரையிலாவது, இளங்கீரனின் கதைகள் மாத்திரமே கதி.
கதாசிரியர்களின் கவனம் திரும்பியது
இலங்கையின் இன்றைய முன்னணிக் கதாசிரியர்கள் பலரும் நாவல் துறையில் தமது கவனத்தை அதிகம் திருப்பி, இந்த ஆறு வருடங்களில் சில நல்ல நாவல்களைப் படைத்தளித்திருக்கிறார்கள். சொக்கன், வ.அ.இராசரத்தினம், டானியல், சி.வீ. வேலுப்பிள்ளை, சிற்பி, உதயணன், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
சில வருஷங்களின் முன்னரே மலர்ப்பலி என்னும் நாவலை எழுதிப் பெற்ற அனுபவத்தின் சீர்மை தென்படுமாறு, 1961ல், தினகரனில், செல்லும் வழி இருட்டு என்ற தனது நாவலைத் தொடர்கதையாக எழுதினார் சொக்கன்.
வ.அ.இராசரத்தினத்தின் கொழு கொழும்பு , 'ஈழகேசரி'யிலும், துறைக்காரன் 'ஈழநாட்டி'லும் தொடர்கதைகளாக வெளிவந்தன. கொழு கொம்பு பின்னர் நூலுருவில் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது.
சிறுகதைத் துறையில் சுமாரான வெற்றியைப் பெற்றிருக்கும் டானியல், வீரகேசரி யில் 1961ம் ஆண்டு எழுதிய நெடுந் தூரம் என்ற நாவல் அவருடைய சிறுகதை எழுதும் ஆற்றலைத்தான் மேலும் வலியுறுத்திக் காட்டியது.
சீ.வீ.வேலுப்பிள்ளை தினகரனில் மூன்று வருஷங்களின் முன்னும் வீரகேசரி யில் சில மாதங்களின் முன்னும் முறையே வெளியிட்ட வாழ்வற்ற வாழ்வு , வீடற்றவன் ஆகிய நாவல்கள், மலை நாட்டு மக்களின் வாழ்கையை ஓரளவு சித்தரித்துக் காட்டின.
'கலைச் செல்வி'யில் அதன் ஆசிரியர் 'சிற்பி' உனக்காக கண்ணே என்ற நெடுங்கதையையும் உதயணன் , மனப்பாறை என்ற நாவலையும் எழுதினர். உதயணனின் இதய வானிலே என்ற நாவல் ஒன்றும் 'ஈழதேவி' சஞ்சிகையில் வெளிவந்தது.
பொன்னுத்துரையின் 'தீ'
'பணியாரமில்லாத சலசலப்பிலும்' சமயா சமயங்களில் ஈடுபடுவதன் விளைவாக, 'பிரச்னையாளர்' என்று ஒரு 'பழிகரப்பான ஸ்துதி'க்கு இலக்காவிட்ட போதிலும், இலக்கியத் துறையிற் 'கை வைத்து' முன்னேறக் கூடிய சூரத்தனத்தின் சுவடுகளைத் தன் எழுத்துக்களிற் காட்டி வரும் எஸ். பொன்னுத்துரை எழுதிய 'தீ' என்னும் நாவல், இந்த வருஷத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. நூலுருவில் வெளியான ஈழத்து நாவல்களில் மிகச் சமீபத்திய நவீன நூல் இதுவே. பொன்னுத் துரையின் பல்வேறான திறமைகளையும் புலப்படுத்திக் காட்டுகிற இந்த நாவல், நாவலுக்கரிய உருவ அமைதிகள் நன்மையைப் பெறாத போதிலும், கதாவஸ்துவைப் பொறுத்தவரையில், தமிழுக்கு, ஒரு துணிச்சலான முயற்சியென்பதை மறுக்கமுடியாது. உடலுறவும் பிரச்னைகளைக் கருப் பொருளாகக் கொண்டெழுந்திருக்கும் இந்த நாவலில், பாலுணர்ச்சி விவகாரங்களைப் பச்சை பச்சையாக வர்ணிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்குப் பக்குவமானவை போலப் போக்குக் காட்டக்கூடிய அந்தஸ்தையும் கொடுத்து எழுதியிருக்கும் ஆசிரியரின் கொட்டித்தனத்தை ஒரு வகையல் மெச்சலாம். கதாசம்பவங்களின் ருசிப்பிசமான அம்சங்களின் அடி நாதமாக இழையோடு தனி மனித சோகத் தவிப்பிலும் உள்ளம் பற்றுமாறு, தீ அமைந்திருக்கிறதென்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்
பெயர் பெற்ற எட்டுச் சிறுகதையாசிரியர்கள் சேர்ந்து ஆளுக்கொரு அத்தியாயமாக, தினகரனில் வண்ணமலர் என்ற நாவலைச் தொடராக எழுதியமையும், இதேபோல ஐந்து சிறு கதையாசிரியர்கள் சேர்ந்து வீரகேசரி யில் முத்தாப்பு என்றநாவலைத் தொடராக எழுதியமையும், இந்தக் காலப் பிரிவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் மத்தாப்பு பின்னர் நூலாக வெளிவந்திருக்கிறது.
இவை தவிர, கச்சாயில் இரத்தினம் தினகரனில் எழுதிய அலைகள் என்ற நாவலும், விவேகி யில் எழுதிய 'வன்னியின் செல்வி' என்ற நாவலும், 'அன்பு எங்கே?' என்னும் ஒரு தொடர்கதை நாவலும், அருள் செல்வநாயகம் தினகரனில் எபதிய மாலதியின் மனோரதம் என்ற நாவலும் 1953ம் வருஷ ஹர்த்தாலைப் பின்னணியாக வைத்து காண்டீபன் என்பவர் தேசாபிமானி யில் எழுதிய தொடர் நவீனமும் இங்கு குறிப்பிட வேண்டியவை. (கச்சாயில் இரத்தினத்தின் விடிவு நோக்கி என்ற நாவல் இப்போது தொடர் கதையாக வந்துகொண்டிருக்கிறது.)
இவை தவிர, இந்தப் பன்னிரண்டு வருட காலத்தில் வேறு நெடுங்கதைகளும் வெளியாகின. நாவல்களென்று கருதி வெளியிடப்பட்ட போதிலும், குறைப் பிரசவங்களாகவும் சில்லறைக் கதைகளாகவும் அமைந்துவிட்ட இவற்றைப் பின்வருமாறு பட்டியல் போட்டு, விட்டு விடலாம்.
காயல்தாஹ’ர் எழுதிய சிந்தித்துப் பார் .
மு.வே.பெ.சாமி எழுதிய யார் கொலைகாரன்? .
புதுமைலோலன் எழுதிய காணிவல் காதலி , தாலி .
தா. சண்முகநாதன் எழுதிய கோமதியின் கணவன் .
செ.சி. பரமேஸ்வரன் எழுதிய கொந்தளிப்பு , காதல் பைத்தியம் .
வியாசக விதரணம் எஸ். முத்தையா எழுதிய நாகரிக நிர்மலா அல்லது மலைக் குறத்தி மக்ள் .
வீ.ஆ. புரட்சி மணி எழுதிய ஈரக்கொலை .
பாத்திமா மொஹ’தீன் எழுதிய நீறு பூத்த நெருப்பு .
ஹுசெய்ன் எழுதிய பயங்கரக் கனவு .
தெல்லியூர் செ. நடராசா எழுதிய காலேஜ் காதல் .
இறுவாய்
1981ல் தோன்றிய ஊசோன் பாலந்தை கதை முதல், இந்த வருஷம் வந்து சேர்ந்த தீ வரை, ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஏறத்தாழ அனைத்தையும் பற்றிப் புறனடையாகவே இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதன் தோற்றுவாயில், ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே, என்று நான் குறிப்பிட்டவற்றை, முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டியதில்லை.
சுதந்திரனில் வெளிவந்த அறிமுகப் படுத்துகிறோம் என்ற பத்தி போன்ற சிறு முயற்சிகள் சிலவற்றிலும், ஆங்காங்கே இரண்டொரு இலங்கைத் தமிழ் நாவல்களின் பெயர்கள் வரத்தான் செய்திருக்கின்றன. இத்தகைய சில்லறைக் குறிப்புகளைத் தவிர, நமது நாட்டுத் தமிழ் நாவல்கள் பற்றிச் சற்று முனைப்போடு ஆராய முற்படும் குறிப்புகள் நமக்கு வழிகாட்டியாகக் கிடைப்பதாயில்லை யென்பதைத் தெரிந்துகொண்டால் சரி.
ஆக, முன் குறித்தபடி, இந்தக் கட்டுரை, ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிப் பின்னர் விரிவாக எவராயினும் ஆராய்வதற்குத் தூண்டுகோலாகவும், ஓரளவு ஊன்றுகோலாகவும் அமைந்திருந்தால், தற்போதைக்கு அது போதும்.
அனுபந்தம் I
[ஈழத்துத் தமிழ் நாவல்களின் நடை எவ்வாறு காலப் போக்கில் மாற்றம் பெற்று வந்ததென்பதை, இங்கு ஆங்காங்கே தேர்ந்தெடுத்துக் காட்டியிருக்கும் பல்வேறு நாவல்களில் வரும் வசனங்களின் செல்கதியிலிருந்து கண்டு கொள்ளலாம்.]
எஸ். இன்னாசித்தம்பி எழுதிய
'ஊசோன் பாலந்தை கதை'யிலிருந்து (1891)
உலகின் கண்ணே உயர்வுற விளங்கும் அது மான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கைபோந்த பெற்றோரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறுவயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குத் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.
மற்றொருபந்தி (1891)
நாம் மன்றல் செய்ய உங்களுக்கு விருப்பமானால் உங்கள் விருப்பத்தின்படி புத்தி விமரிசையுடையவளான ஓரணங்கைத்தேடி வாருங்களென்று பிரதிவாதித்தார். இந்த வாக்கையவர்கள் கேட்டவுடன் ஆதித்தனைக் கண்டலர்ந்த சரோருகம் போல் இருதயம் மலர்ந்து, மனோகரமாய்த் தங்களுக்குள் வினவிசி சருவேசுவரனைத் துதித்துச் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய ஆசார நமஸ்காரங்களையும் செய்து தங்கள் தங்க ளகத்துக் கேகினார்கள். அப்படியே அவர்கள் கூடிய வீரர்களில் அதிக சங்கை போந்தவர்களும் மிக சாமர்த்திய கெம்பீரமுள்ளவர்களுமான பன்னிரு தானாதிபதிகளைத் தெரிந்து அரசனுக்கிணங்கியது வாலிபப் பெண்களிருக்குமிடங்களிற்போய் விசாரித்து வாருங்களெனச் சொல்லி யனுப்பினார்கள்.
த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய
'மோகனாங்கி'யில் வரும் ஒரு பாடல் (1895)
நீதி தவறத் தருமம் நிலைகுலையச்
சாதிகுலம் பிறப்பென் றெண்ணித் தடுமாறும்
பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின்
சோதியே நின்னைத் தொழுதேம் தொழுதேமால்.
மா.சிவராமலிங்கம் பிள்ளை எழுதிய
'பூங்காவனம்' நூலிலிருந்து (1930)
1884-ம் வருடம் ஆடி மாதம் 24ம் தேதி புதன்கிழமை இரவு எழரை மணியளவில் வண்ணை மாநகரில் 1-ம் குறுக்குத் தெருவில் 82-ம் இலக்க வீட்டுக்குச் சுமார் கால்மைல் தூரத்தில் சுமார் பதினாறு வயசுடையவளும் பூரண சந்திரன் போன்ற முகத்தையும் சைவலத்தையும் யொத்த கூந்தலையும் மூன்றாம் பிறையையொத்த நுதலையும் கயல்மீன் போன்ற கண்களையும் வள்ளியிலை போன்ற காதுகளையும் பவளத் துண்டம் போன்ற அதரங்களையும் எட்பூவை நிகர்த்த நாசியையும் கண்ணாடி போன்ற கபோலங்களையும் வலம்புரிச் சங்கனைய கழுத்தையும் மூங்கில் போன்ற தோள்களையும் கரும்பையொத்த முன் கைகளையும் தாமரை மலரையொத்த அங்கைகளையும் செவ்விளநீர் போன்ற தனங்களையும் ஆவிலை போன்ற வயிற்றையும் உடுக்கை நிகர்த்த இடையையும் அலவனை நிகர்த்த காற்சிப்பிகளையும் இளவரால் போன்ற கணுக்கால்களையும் படம் போன்ற பாதங்களையும், வட்ட மதி போன்ற நகங்களையும் உடையவளுமான ஒரு பெண்மணி இட்டடி நோவ எடுத்தடி கொப்பளிக்க நடந்துவரும் போது, எதிர்முகமாகச் சிறிது தூரத்திற் சம்பாஷ’த்துக் கொண்டு வந்த இரு துஷ்ட வாலிபர்கள் அப்பெண்மணியைக் கண்டு மதுவருந்திய மயக்கத்தினால் அறிவு மயங்கித் தள்ளாடி அவ்விடம் வந்து அவளைத் தூக்கிக் கொண்டோடுதற்கு எத்தனித்தார்கள்.
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் எழுதிய
'சாவித்திரி'யிலிருந்து (1914)
இன்னடிசில் புக்களையும் தாமரைக் கைப் பூநாறும் செய்ய வாய் மக்களை யில்லாத மனை என்ன மனை? மக்கட் செல்வம் இல்லாதார் செல்வம் என்ன செல்வம்? மக்கள் மெய் தீண்டி இன்பம் அடையாத யாக்கை என்ன யாக்கை? குறுகுறு நடக்கும் கோமக்கள் பால்வாய்ச் சிறு குதலை கேளாச் செவி என்ன செவி? இம்மையிலே இன்பத்தைத் தருவதும் மறுமையிலே சுவர்க்கத்தைத் தருவதும் மக்கட் பேறேயாகும். ஒருவன் சத்திய விரதம் உடையவனாயினுமென்? தானம் தவம் முதலிய நல்லொழுக்க முடையவனாயினுமென்? அவற்றால் அவன் பயன் அடைவதில்லை. மக்கட் பேற்றினாலன்றோ அவன் பெரும் பயனடைகிறான். கற்றவர்கள் சபைப்கு அலங்காரத்தைக் கொடுக்கின்றார்கள். சூரியன் ஆகாயத்தை அலங்கரிக்கின்றான். தாமரை வாவிக்கு அழகைக் கொடுக்கின்றது. அதுபோல மக்கட் செல்வமே இல் வாழ்க்கைக்கு அலங்காரமாயிருக்கின்றது.
இடைக்காடர் எழுதிய
'சித்தகுமாரன் நூலிலிருந்து (1925)
சித்தகுமாரன் தான் கற்ற சாத்திரங்களில், சாங்கியர்களாற் செய்யப்பட்ட தர்க்க சாஸ்திரத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் நிகரான சாஸ்திரங்கள் எத்தேசத்தாராலும் எச்சாதியினாராலும் ஆக்கப்பட்ட தத்துவ சாத்திரத்துக்கு இணையான சாத்திரமுமங்ஙனமே யென்றும், சைவ சித்தாந்திகளாற் செய்யப்பட்ட ஒழுக்க நூலுக்குச் சமமான ஒழுக்க நூல் எச் சமயத்தாராலும் செய்யப்பட வில்லையென்றும், சோதிட சாத்திரங்களில் இந்தியரே நிபுணரென்றும் ஐரோப்பிய அமெரிக்க பண்டிதர்கள் வைத்திய சாத்திரத்தில் இன்னும் பூரண ஸ்திதிக்கு வரவில்லையென்றும், ஐரோப்பா, அமெரிக்கா தேசங்களில் நாடி சாத்திரம், கர சாத்திரம் முதலியன காணப்படவில்லையென்றும் அவைகளைப் பற்றிய எண்ணமே அத்தேசத்தவர்களுக்கு இன்னும் உதிக்கவில்லையென்றும் கண்டார். இன்னும் மனுஷருக்கு லௌகீகத்தில் தேவையான அநேக சாத்திரங்கள் பூர்வ இந்தியர்களுக்குள் இருந்தன என்றும் அவைகள் ஐரோப்பா அமெரிக்கா தேசங்களிலுள்ளவர்களுக்கு இன்னும் மனதிற் புலப்படவில்லை யென்றும் தெளிந்தார்.
இலங்கையர்கோன் எழுதிய 'முதற் காதல்'
என்னும் மொழியெர்ப்பு நூலிலிருந்து (1942)
இளமை! ஓ இளமையே! உனக்கு அச்சம் என்பது இல்லையா? நீ ஒன்றையும் பொருட்படுத்த மாட்டாய்! உலகத்திலுள்ள சகல செல்வங்களுக்கும் அதிபதி நீ ! துயரமும் ஏக்கமும் உன்னை வருத்துவதில்லை. அவை உனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கின்றன. நீ கொண்டிருக்கும் கர்வத்துக்கும் ஓர் அளவில்லை. அதனால் உன் நாட்கள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மறைந்து போவதுகூடி உனக்குத் தெரிவதில்லை. உன் சம்பத்து எல்லாம் உருகி அற்றுப் போகின்றது. ஒருவேளை வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல், நிகழ் காலத்தையே நிலையுள்ளதாக மதித்து, எல்லாம் உன் வல்லமைக்குள் அடங்கியதுதான் என்று கர்வம் கொண்டு உன் செல்வம் அனைத்தையும் காற்றிலே அள்ளித் தூற்றும் உன் கவலையற்ற மனப்பான்மை ஒன்றில்தான் உன் பெருமை தங்கியிருக்கிறது போலும்!
அ.செ. முருகானந்தன் எழுதிய
'புகையில் தெரிந்த முகம்' எனும் நாவிலிருந்து (1950)
அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாளிரவு. செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர்பிறை காலத்து இரவுகளிலோ நிலைமை எதிர்மாறாகவிருக்கும். வெண்மனற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப் போல பரந்து கிடக்கும் ஒரே மணல்வெளி. அந்த வெளியை இரண்டாகப் பிளந்துசெல்லும் தெரு வீதி வழியே நிலாக் காலத்தில் மாட்டுவண்டி பிரயாணம் செண்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்ல வேண்டும், வருஷம் முந்நூற்றி அனுபத்தைந்து நாளும், மண்கிண்டி, தண்ர் இறைத்து, களைபிடுங்கி அலுத்துப் போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும் ஆறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால் போன்ற வெண்ணிலவு. வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவைகளைக் கடந்து போய்க் கோயிலை அமைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும் தென்றற காற்றும்தான். கூட, கோயிலிலிருந்து நாதசுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?
அ. மரியதாசன் எழுதிய
'பனைநாடு அல்லது பிளந்த உலகம்'
என்னும் நூலிலிருந்து (1953)
காலை ஆகிறது. வானிடை முகில் ஒன்றும் இல்லை. செஞ்ஞாயிறு குண கடலினின்று பரிதியாய்க் கிளம்புகின்றது. பெவளத்தில் அங்கொன்று இங்கொன்றாய் மிதந்து செல்வன யாவை?
அஃதோர் ஆவின் பிணம்! இஃதோர் ஆட்டின் உடல்! முகம் வானம் பார்த்தாற்போல் செல்வது ஓர் அரிவையின் பிரேதம்! குப்புற மிதந்து துவள்வது ஓர் ஆடவனின் உயிர் நீங்கிய யாக்கை!
மிதக்கின்ற பனை, தென்னைகளுக்கு ஒரு கணக்கே இல்லை. ஆனாற் சில பனைகளின் முடிகளே தென்படுகின்றன. இவை மிக உயர்ந்தனவும் இன்னும் நிலம் பெயராதனவுமாய் இருத்தல் கூடும்.
வே. தில்லைநாதன் எழுதிய
'அனிச்சமரின் காதல்' எனும் நாவலிலிருந்து (1953)
அளிச்சம்....அன்றையத் தினமிருந்த அழகை எளிதில் விவரிக்க முடீயாததாயிருந்தது. நீண்ட வடம்போல் பின்னித் தொடை வரைக்குந் தூங்கிய கூந்தலும் சிறந்த நெற்றியும் அகண்ட வாள்போல் கண்களும் மெத்தென்னும் மாந்தளிர் மேனியும் முத்துப்போல் பற்களும் அன்ன நடையும் காதில் கண்ணைக் கூசும்படி ஜொலிக்கும் வைரத் தோடும் மார்பில் முத்து வடமும் உடையவளாய் வந்து சபையின் கண் இருந்தனள். அத் தருணம் வந்த மகான்களில் அயல் கிராமத்தில் நீதவானாயிருக்கும் ஒரு வாலிபரும் வந்தார். அவர் ஆடவர்களில் மன்மதன் போல் பார்க்கிறவர்கட்கெல்லாம் கண்ணைத் தைக்கும்படியாய் இருந்தார். பொன்னிற மேனியும் கருமையான தலைமயிரும் அகண்ட நெற்றியும் பார்க்கிறவர்களை ஊடுருவிச் செல்லத்தக்க கண்களும் சிறந்த அலங்காரமான முகமுடையவராய் அனிச்சமலருக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய
'வாழ்க்கையின் வினோதங்கள்'
என்னும் நாவலிலிருந்து (1954)
ஒரு நாள் கொம்பனித் தெருவிலுள்ள வறிய வீடொன்றிற்கு நான் போனேன்... அத் தெருவுக்கு அன்றுதான் முதன் முறை போனோம். அங்கு போனதும் அத் தெரு இருந்த நிலையைக் கண்டு விறைத்துப் போனேன. அத் தெருவைப் பற்றிக் குற்றமாய் கூற எனக்கு விருப்பமில்லை. அங்குள்ள வீடுகள் மிகப்பழுதான நிலையில் இருந்தன. சில மாதங்களில் அவற்றை நகரசபையார் இடித்துவிடத் தீர்மானித்திருந்தனர். அங்கு காற்றோட்டமில்லை. சூரிய வெளிச்சத்தைத் கனவிலும் காணமுடியாது. அத் தெரு இருந்த பகுதி கொழும்புக் கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு நகரவாசிகள் அதைச் சிறிதேனும் அறியார். அத் -ருவுக்குத் தார் போட்டிருந்ததோ என்னவோ எனக்கு நினைப்பில்லை. ஆனால் அங்கு வைக்கோற் துண்டுகளும் பலவகையான அழுக்குப் பொருள்களும் நிறைந்து நிலத்தை மறைத்தன. தெருவே வாழிடமாகக் கொண்ட வறிய சிறு குழந்தைகள் அங்குள்ள சேற்றிலே உருண்டு விளையாடித் திரிந்தனர். வலது பக்கமும் இடது பக்கமும் வீடுகள் நிறைந்திருந்தன. அவை யாவும் உயர்ந்து அழுக்குப் படிந்து கிடந்தன. அவ் வீடுகளின் சாளரங்கள் திரைச் சீலைகளை ஒருபோதும் கண்டறியா. திரைச் சீலைகளுக்குப் பதிலாக அவை ஒவ்வொன்றிலும் கிழிந்த கந்தைகள் தொங்கின. அக் கந்தைகள் யாவும் எப்போது அங்கு காற்று ஒரு சிறிதாவது வந்து தம்மைக் காய வைக்குமோ என்று பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தன.
கே.வி.எஸ். வாஸ் எழுதிய
'குத்தாளப் பிரேமா'விலிருந்து (1951)
இந்த விளம்பர யுகத்தில் கம்பனும் காளிதாசனும், மறு ஜென்மமெடுத்து வந்தால்கூட ஓரளவு விளம்பர மில்லாவிட்டடால் உலகம் அவர்களை மகாகவிகளென்று அங்கீகரிக்காதென்று ரமணி அடிக்கடி சொல்லுவான். தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன்! இன்றும் நம்மிடையில் எவ்வளவு மகாகவிகள் இருக்கிறார்கள். எவ்வளவு அற்புதமான கவிதா மாலைகளைப் புனைந்து தமிழ் மொழியை வளம்பெறச் செய்கிறார்கள்! அவர்களை நீங்களும் நானும் பெரிய கவிஞர்களென்று சொல்லிவிட்டால் உலகம் ஒப்புக்கொண்டுவிடுமா? அவர்கள் செத்துச் சாம்பலான பிறகு ஏதோ ஓரிரண்டு பத்திரிகைகள் அவர்களது பழைய கவிதைகளை ரசித்துவிட்டுப் புளுகுகின்றன. உடனே ஓரேயடியாக மற்றப் பத்திரிகைகளும் இந்திரன் சந்திரன் என்று வானளாவிப் புகழ்கின்றன. பிறகு மாண்ட கவிகளுக்கு ஞாபகச் சின்னமாக மண்டபம் கட்டுவோமா, ஸ்தூபி நிறுத்துவோமா என்று கூட்டம் போட்டுக் கூடி யோசிக்கிறார்கள். இந்த அளவு அந்தக் கவிஞன் உயிருடன் இருக்கும் பொழுதே ஏற்படுவது தானே? வறுமையில் வயிற்றைச் சுருக்கிக் குடிக்கக் கூழுமில்லாமல் செத்து மடிகிறான் தற்காலக் கவிஞன். அவனைப் ஆதரிக்க ஆளில்லை. இதை எதற்குச் சொல்லுகிறேன்றால் இன்று கன்னா பின்னா என்று ஏதோ எழுதித் தள்ளும் அரை குறைப் பேர்வழிகளைக் கூட விளம்பரம் என்ற மகா சக்தி மேதையாக்கி விடுகிறது. விளம்பரம் தான் இன்றைய வர்த்தகத்தின் உயிர் நாட.... என்று ரமணி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வான்.
எம்.ஏ.அப்பாஸ் எழுதிய
'இவனைப் பார்' நாவலிலிருந்து (1953)
நாளை திருமணம்!- அப்படி நினைத்துக் கொண்டு தான் வந்தார் சலீம். பூட்டிக் கிடந்த கதவைத் தட்டினார். ஆம், வைராக்கிய மென்னும் பூட்டால் பூட்டப்பட்டிருந்த என் இதயக் கதவிலும் தான் அந்தத் தட்டு மோதியது! குதித்தோடிப் போய்க் கதவைத் திறக்கத் துடித்தன காதலும் கையும்! சிறிது நேரம் சிரமப் பட்டு, உணர்ச்சிகளையெல்லாம் அடக்கிக் கொண்டு மெதுவாகச்சென்று கதவைத் திறந்து விட்டு விர்ரென்று ஓடி வந்து கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதேன். விஷயம் விளங்காமல் விழித்தார். என்னை அள்ளியெடுத்தார். அன்பொழுகப் பேசினார். அரும்பாடுபட்டு என் கரும்பு மனத்தை இரும்பாக நான் மாற்றிக் கொண்டதை அவர் எப்படி அறிவார்? புழுவாகத் துடித்தார். கேள்விகளை அடுக்கினார் முடுக்கினார். அவருடைய நிலை பார்ப்பதற்கே பரிதமாக இருந்தது. அப்படியே கட்டித் தழுவி எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று மனம் துடித்தது. கண்களைத் திறந்தேன். ஆ! அந்தத் துர்ப்பாக்கியத் தாயின் சோகச் சித்திரம் தோன்றி என்னை எச்சரித்தது. அன்பும் தியாகமும் காதலும் கடமையும் குமுறித் கொந்தளிக்கும் உள்ளத்தோடு போராடிக் கொண்டே, போட்டு உடைத்தேன் அந்த அணுகுண்டை!
தேவன்-யாழ்ப்பாணம் எழுதிய
கேட்டதும் நடந்ததும் நாவலிலிருந்து (1956)
இப்படி எத்தனையோ நினைவுகள். அழியாத நல் இன்பமூட்டும் நினைவுகள். சோலைவாய் வாழ்வை ஆக்கியவை அவை தாம். நிறைவை உண்டு பண்ணியதும் அவை தாம். ஆனால் துன்பந்தந்து துடிக்கச் செய்வதும் அவை தான். கொல்லுவதும் அதே நினைவுகள். செழிக்கச் செய்வதும் அதே நினைவுகள். இத்தனையும் என்னைப் புது மனிதனாக்கி விட்டன. வகுப்பில் மட்டுமென்ன, பார்த்த இடமெல்லாம் அழகைக் கண்டேன். இன்பத்தைக் கண்டேன். ஒரு கவிஞன், அழகு எங்கெல்லாமிருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் திரிந்து கண்டு பிடித்து ஆராதிக்கிறேன், அனுபவிக்கிறேன் என்று பாடியிருக்கிறான். ஆனால் எனக்குத் தேடித் திரிய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. பார்க்குமிடங்களெல்லாம் 'நந்தலாலா, உன்றன் பச்சை நிறந்தோன்றுதையே நந்தலாலா' தான்.
ஹமீதா பானு எழுதிய
சதியில் சிக்கிய சலீமா விலிருந்து
சரி அம்மா! நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீ போய்த் தூங்கு என்று தாயாரை அனுப்பி விட்டுச் சலீமா படுத்துக் கொண்டாள். தான் கண்ட கனவு நனவாகுமா என்பதிலேயே கவலை கொண்டு கருத்தைச் செலுத்திக் கொண்டு புரண்டு புரண்டு கிடந்தாள்.
காகம் கரைந்தது, கருமை வெளுத்தது. கண் விழித்துக் கனவேகத்தில் காலைக் கடன்களை முடித்து விட்டாள் சலீமா. வயிற்றிலே வளர்ந்து வரும் சிசுவின் வரப்பிரசாதமான குமட்டல், வாந்தி, மயக்கம் இவைகளும் கூடவே கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற் கேற்ப மழுப்பி மறைத்து மந்திர ஜாம் செய்து கொண்டாள். அவளது வெள்ளையுள்ளத்தைப் போன்ற வெண்ணிற ஒளி பரப்பி சூரியனும் வெளிக்கிளம்பி வந்து கொண்டிருந்தான்.
காயல் தாஹ’ர் எழுதிய
சிந்தித்துப் பார் நூலிலிருந்து (1954)
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டங்....டங்' கென்று ஆறுமுறை அடித்தது. கதிரவனின் பொற் கதிர்கள் கீழ் வானத்திலே தெரிந்து. பின் சற்று நேரத்திலே அக் கதிர்கள் பச்சைக் கம்பளம்போல் படர்ந்திருந்த பசும் புல்லின் மேட்பட்டு, அதில் ஒட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளை வெண்முத்துக்களாக்கின. ஆதவன் வரவைக்கண்டு 'தன் பகைவன் வந்து விட்டான். இனி நமக்கு மதிப்பில்லை' என்றெண்ணிய இருள் மெள்ள மறைந்தோடியது. காதலனைக் கண்ட அல்லிமலர் ஆனந்தத்தால் தன்னிதழ்களை விரித்தது. மற்ற மலர்களம் தங்கள் இதழ்களை விரித்தது, வண்டுகளை வா வா என்றழைப்பது போலிருந்தது. பறவை இனங்கள் இனிமையாகப் பாடிக்கொண்டு இறைவனைத் தொழுதன.
வியாசக விதரணன் எஸ்.முத்தையா எழுதிய
'நாகரிக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள்' நூலிலிருந்து (1955)
அவள் மனமே பரவசமடைந்து என்ன ஆனந்தம்! என்ன அழகு ! காதல் என்பதும் இதுதானா? காதல் லீலை என்பதும் இதுதானா? என்ற சொற்கள் அவளை அறியாமலே வெளியாகின்றது. பக்கத்தில் படுத்திருந்த நூர்ஜா திடுக்கிட்டெழுந்து உட்காந்தாள். நிர்மலா, நிர்மலா என்று கூப்பிட்டும் பார்த்தாள். சத்தமில்லை, அதே சமயம் நிர்மலாவின் வாயிலிருந்து சந்தனக்குமார் சொன்ன:
யாமினி அரா மின்னாக் கலவி, கற்றவர் ஞைஞை
மனன மாறி தராக் கிரகி, மறுதலைப் பாவை வாழ் பாழ்
என்றது வெளியானது. லைலாவும் அதை இரண்டு மூன்று தரம் பாடமாக்கிக்கொண்டாள்.
மு.வே.பெ.சாமி எழுதிய
யார் கொலைகாரன்? நாவலிலிருந்து (1954)
ஏழை என்றால் இன்பமாளிகைக்குப் பணக்காரன் ஏறிச் செல்லும் ஏணி என்றுதானே பொருள். அந்த ஏழைக்குப் பசி என்றால் அவர்களுக்குப் பன்னீர் இறைத்ததைப்போல, அவன் பட்டினி என்றால் பரவச மடைவார்கள். மரணம் என்றால் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட நித்திய ஜ“வயாத்திரைஎன நீட்டோலை வாசிப்பார்கள். சிந்தும் கண்ர் அவர்களின் தேள் கொட்டிய கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும். பாட்டாளி என்றால் காலடியில் வீழ்ந்துறங்கும் நாய்கள் என வரட்டு வேதாந்தம் பேசுவார்கள்.
இ.தொ ETNV003.MTF
எம்.பீ.எம். முகம்மதுக் காசீம் எழுதிய
'கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு' நூலிலிருந்து (1955)
குனிந்த முதுகு நிமிராமல் மூட்டை சுமக்கும் பாரத இந்தியா ஈன்ற பாரத இந்தியா ஈன்ற பாக்கியங்களைப் பார் பார்! அவர்களல்லவா இலங்கை மாதாவாகிய என்னைப் பல வகையாலும் சிறப்பித்துச் சீர்படுத்திச் சிலோன் என்று ஒரு நாமத்தடுன் உலகமெல்லாம் புகழடையச் செய்தார்கள். கீழ்த்திசையின் முத்தென்று பேர்வந்தது எனக்கு, இந்திய மக்கள் செய்த அழியாத அலங்காரச் சேவையாலென்றால் அது மிகையாகாது மகனே! எனக்கு எத்தனை பெயர் கவனி. பவளத்தீவு, நாகதீபம், இலங்காபுரி, சேரந்தீவு, சீலோன் இப்படிப் பல பவிசுப் பெயர்கள் வரக் காரணம் இந்தியன் இயற்றிய சிங்காரச் சேவையின் சிறப்பு. அவர்களை இந் நாட்டை விட்டு நீங்களகற்றினால் நாலேமாதத்தில் நானும் என்னுடைய நாசூக்கான அழகும் நலிந்து போய்விடும்; சந்தேகமில்லை.
வி.லோகநாதன் எழுதிய
'பிரேமாஞ்சலி'யிலிலிருந்து (1954)
என்னைப் பொறுத்த வரையில் காதலை வாழ்வுக்கு அடுத்தபடியாகவே வைக்க விரும்புகிறேன். யோசித்துப் பார்த்தால் காதல் வாழ்க்கையாகாது. வாழ்க்கை இல்லாவிட்டால் காதல் ஏது? ஆனால், காதலுக்கோ வாழ்வு முழுவதையும் தின்னும் சக்தி உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் காதலைப் பிரதானமாக்கிக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறேன். வாழ்க்கையைப் பரிமளிக்கக் காதல் அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. காதல் மிகமிக அவசியம்தான். ஆனால், அது வாழ்வில்லை, ஓர் அம்சமாகவே இருக்க வேண்டும். வாழ்வோ பரந்தது. காதலுக்காக இந்த வாழ்வையே பலியிடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் மாத்திரமன்று; அப்படிப் பலியிடுவது அந்தக் கடவுளுக்குக் கூட அடுக்காதென்றே நினைக்கிறேன். காதலுக்காக வாழ்க்கையை - மகா சிரேஷ்டமான உயிரையே - பலியிடும் காதலர்களைக் காவியங்க• புகழ்ந்துகொண்டேயிருக்கட்டும். அந்தக் காவியக் கற்பனைகளைப் படித்துவிட்டு நாமும் காதலுக்காக வாழ்கையைப் பலியிட வேண்டாம்.
வரதர் எழுதிய
வாழ்க நீ சங்கிலி மன்ன! நூலிலிருந்து (1957)
போர்! தினவெடுத்த தோள்களைத் தட்டித் திரண்டெழுந்தனர் தமிழ் வீரர். போர்ப் பறை ஒலித்தது. வீரர்கள் ஆரவாரம் அதைவிடப் பெரிதாய் முழங்கிற்று. வில்லும், வேலும், வாளும், ஈட்டியும் தாங்கிய வீரர் படை அணியணியாகச் சென்று பறங்கியர் பாசறையை நெருங்கிற்று, பறங்கியர் படையும் தயாராக எதிர் வந்தது. அவர்கள் கையிலே துப்பாக்கிகள். ஒருவன் வெடிக்கச் செய்யும் துப்பாக்கிகள், தமிழர் படையிலிருந்து அம்புகளும் நஞ்சூட்டிய ஈட்டிகளும் கவண் கற்களும் சக்கரங்களும் பறந்து பறந்து பறங்கியரைத் தாக்கி வீழ்த்தின. பறங்கியர் துப்பாக்கிச் சூடுகளும் தமிழ் வீரர்களைத் துளைத்தன.
வ.அ. இராசரத்தினம் எழுதிய
'கொழு கொம்பு' நாவலிலிருந்து (1959)
நீண்ட இரவின் மௌனம் அவனுக்கு இன்பமாகவே இருந்தது. மலைநாட்டிலே கொட்டும் மழையும் பனியையும் அவனால் அனுபவிக்க முடிந்தது. வெள்ளிக்கம்பிகளாய் ஒழுகும் மலையருவிகளின் இன்பத்தை அவனால் நுகர முடிந்தது. மாலை மதியத்தின் குளுமையையும் வேனிற் காலத்து வனப்பையும் அவனால் உணர முடிந்தது.
தனிமையின் கொடுமையையும் அதன் பயங்கரத்தையும் மறக்கச் செய்து தன்னை நிலத்திலே நன்றாக வேரூன்றி நிலைக்கச் செய்துவிட்ட புருஷன் என்ற கொம்பிலே அந்தக் கொடியும் செழிப்பாக படர்ந்தது. நாளுக்கொரு முகையும் தளிரும்விட்டு ஆனந்தமாகப் படர்ந்து அக்கொடி தென்றலில் ஆடிற்று. வேனிலில் விகசித்தது. நிலவிலே குளிர்ந்து ஓளிர்ந்தது. காலம் வரும்போது அது பூக்கும், காய்க்கும். தன் இனத்தைப் பெருக்கியே தீர்க்கும்.
தா. சண்முகநாதன் எழுதிய
'கோமதியின் கணவன்' என்ற நாவலிலிருந்து (1959)
இரவில் தாயின் ஒருபக்கத்தில் சோமுவும் மறுபக்கத்தில் சோமுவின் அக்காவும் படுத்துக்கொள்வார்கள். தன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளும்படி சோமுவின் அக்கா சொல்லுவார். என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள் என்று சோமு கூறுவான். சோமுவின் தாயார் இருதலைக் கொள்ளி எறும்பு போலாவார். மகளைச் சமாதானம் செய்துவிட்டு இவன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்வார். மகளும் அடம் பிடித்தால் இருவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்வார்.
எஸ்.பொன்னுத்துரை எழுதிய
'தீ' யிலிலிருந்து (1961)
இனியவையாகத் தோன்றியவையெல்லாம் துன்பச் சாயலில் கருகுகின்றன. மங்கையின் மிருதுவான பட்டுக் கன்னங்களை நினைவுபடுத்திய அந்தி வானம், கூரிய வாளினால் பிளந்தெளியப்பட்ட மூளிமுண்டங்களிலிருந்து பாயும் இரத்தத்தை ஞாபகப்படுத்துகின்றது. வேல்விழி மாதரினி சிங்காரப் போதையூட்டும் நயன சிந்துக்களை மனத்தில் நிறுத்திய விண்மீன்கள், பிணத்தை முழுசாக ஜ“ரணித்த சிதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பொறிகளை ஞாபகப்படுத்துகின்றது. புன்னகை புரள, லளித, அலை நெளிய, தேனூரும் குமரி இதழ்களை நினைவுறுத்தும் குங்குமச் சிமிழி, போர்க்களம் விட்டோடிய கோழையின் முதுகில் ஏற்பட்ட ரண காயத்தின் காயலைக் காட்டுகிறது. வளைந்த செப்பு நாணயத்தைப் போன்ற இமைகளின் உட்பக்கம் குடைந்திருக்கும் சின்னஞ்சிறு குகைக்குள் பயப் பிராந்தியுடன் விழிகள் கடியிருக்க மறுக்கின்றன. சொகுஸான பஞ்சு மெத்தை. நான் படுத்துக்கொண்டதும் தீப்பற்றி எரிகிறது. உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. சித்தம் குலைந்த பித்த நிலையில்-லில்லி! (என் லில்லி!); அது என் அழைப்பல்ல. என்னுள்ளிருந்து, என்னில் வேறாக, ஒரு சக்தி அழைப்பது உன் காதில் விழுகிறதா? உன் செவிகள் வானொலிப் பெட்டிகளா? என் தொண்டைக்குள் அஞ்சல் நிலையம் இருக்கிறதா?
இளங்கீரன் எழுதிய
நீதியே நீ கேள் நாவலிலிருந்து (1959)
வயிற்றுக்காக - கூலிக்காக - ஏழைகள் பணக்காரர்களிடம் வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. மற்றப் பயனெல்லாம் பணக்காரர்களுக்கு- சொத்துக்குரியவர்களுக்குச் சேர்கிறது: அதை அவர்கள் லாவம் வருமானம் என்ற பெயரில் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சுரண்டல் முறையிலேயே முழுக்க முழுக்க ஊறிப்போன முதலாளி பரமசிவம் பிள்ளையும் தன் கடைச் சிப்பந்திகளின் விஷயத்தில் இப்படித்தான் நடந்துகொண்டாரென்றால் வல்லி புரத்தை மட்டும் விட்டு வைப்பாரா? வில்லிபுரமும் அவர் குடும்பமும் உயிரை மட்டும் சுமந்துகொண்டு திரிவதற்குத் தேவையான தொண்ணூறு ரூபாவைச் சம்பளமாகக் கொடுத்துவிட்டு, வல்லிபுரத்தின் ஒரே சொத்தான உழைப்புச் சத்தியை நல்லமுறையில் தனக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், வல்லிபுரத்துக்குப் பிள்ளை குட்டிகள் பெருகியதுபோல வருமானம் பெருகவில்லை. யுத்த காலத்திலே பரமசிவம் பிள்ளைக்கு அடித்த யோகத்தின் நிழழ்கூட வல்லிபுரத்தின் மேல் விழவில்லை. பரமசிவம் பிள்ளை செல்வச் சீமானென்ற அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக ஓடினார். வல்லிபுரமோ ஒரு அடிகூடப் பெயர்த்து வைக்கவில்லை. நின்ற இடத்திலேயே நின்றான்.
-------------------
அனுபந்தம் .2
1891 முதல் 1962 வரை ஈழத்தில் உருவான தமிழ் நாவல்கள்
வருடம் நூற்பெயர் ஆசிரியர்
1891 ஊசோன் பாலந்தை கதை எஸ். இன்னாசித்தம்பி
1895 மோகனாங்கி த. சரவணமுத்துப்பிள்ளை
1904(?) கலாமதி (?) சுவாமி சரவணமுத்து(?)
1905 வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் சி.வை. சின்னப்பபிள்ளை
சந்திரகாதன் கதை
1904(?) அழகவல்லி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை
1905(?) சுந்தரன் செய்த தந்திரம்
பரிமளா-ராகவன்
1916 விஜயசீலம் சி.வை.சின்னப்பபிள்ளை
உதிரபாசம்
இரத்தினபவானி
1921 கோபால-நேசரத்தினம் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
1922 மேகவர்ணன் வே.வ.சிவப்பிரகாரம்
1924 காசிநாதன்-நேசமலர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை
1924 இராசதுரை செ.செல்லம்மாள்
1924(?) கமலாவதி(?) சபாபதி(?)
1925 நீலகண்டன்
(ஓர் சாதி வேளாளன்) இடைக்காடர்
1925 சித்தகுமாரன்
1927 புனிதசீலி Rev.Bro. யோன் மேரி
1927 சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது
நன்னெறிக் களஞ்சியம் அ.நாகலிங்கம்
1929 சரஸ்வதி அல்லது காணாமற் போன
பெண்மணி சு. இராசம்மாள்
1930 பூங்காவனம் மா. சிவராமலிங்கம்பிள்ளை
1932 பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் வரணியூர் ஏ.சி. இராசையா
1934 அரங்கநாயகி வே. ஏரம்பமூர்த்தி
1935 செல்வரத்தினம் வே.க.நவரத்தினம்
1936 அருணோதயம் அல்லது சிம்மக்கொடி சரணியூர் ஏ.சி. இராசையா
1936 (?) மாலை வேளையில் (மொழிபெயர்ப்பு) சி.வைத்திலிங்கம்
1936(?) தேவி திலகவதி
1936 காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி சி.வே.தாமோதரம்பிள்ளை
1938 செல்வி சரோசா அல்லது
தீண்டாமைக்குச் சவுக்கடி எம்.ஏ.செல்வநாயகம்
1938(?) இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி எச்.நெல்லையா
1939(?) சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு
1940 (?) காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச்
சாவுமணி (?)
(1940-50) சகடயோகம் 'கசின்'
இராசமணியும் சகோதரிகளும்
(1950-60) கற்பகம்
சொந்தக் கால்
(1940-50) விதியின் கை உபகுப்தன்
வெறும் பானை கனக செந்திநாதன்
வென்று விட்டாயடி ரத்னா வரதர்
வாழ்க நீ சங்கிலி மன்ன
பாசம் சம்பந்தன்
ரவீந்திரன் 'சுயா'
ஆப்பக்காரி 'ராமப்பிரேமன்'
----- நடேசையர்
இரு சகோதரர் (முடிவு பெறாதது) பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை
1942 முதற் காதல் (மொழி பெயர்ப்பு) இலங்கையர்கோன்
1949 மணிபல்லவம் தேவன்-யாழ்ப்பாணம்
(1940-50) வாடிய மலர்கள்
(1950-60) கேட்டதும் நடந்ததும்
(1940-50) குந்தளப் பிரேமா கே.வி.எஸ்.வாஸ்
நந்தினி
தாரினி
பத்மினி
புஷ்பமாலா
ஜம்புலிங்கம்
சாந்தினி
சிவந்திமலைச் சாரலிலே
(1950-55) மலைக்கன்னி
உதயக்கன்னி
1951 புகையில் தெரிந்த முகம் அ.செ.முருகானந்தம்
1957 யாத்திரை
1953 அனிச்சமலரின் காதல் வே. தில்லைநாதன்
பூஞ்சோலை கலாநிதி, க.கணபதிப் பிள்ளை
1954 வாழ்க்கையின் வினோதங்கள்
1957 பிரேமாஞ்சலி வி.லோகநாதன்
1962 பாரிஸ்டர் சிற்றம்பலம்
(1950-55) அன்னபூரணி க.சச்சிதானந்தன்
ஒன்றரை ரூபாய் க.நாகப்பு
ஏழையின் காதல்
1954 ஆசை ஏணி த. சண்முகசுந்தரம்
1953 வாடாமலர் சுலோசனா
1952 ரஞ்சிதம் மாயாவி
1950.55 மிஸ் மனோகரி நவம்
1950-55 இவளைப்பார் எம்.ஏ.அப்பாஸ்
மூன்று பிரதேசங்கள்
ஓரே ரத்தம்
சி.ஐ.டி, சிற்றம்பலம்
சிங்களத்தீவின் மர்மம்
யக்கடையாவின் மர்மம்
----- அ.சிதம்பரநாதபாவலர்
சதியில் சிக்கிய சலீமா டி.எம்.பீர்முகம்மது
கங்காணி மகள்
தங்கப்பூச்சி இராஜ அரியரத்தினம்
தீண்டாதான் (மொழிபெயர்ப்பு) கே.கணேஷ்
பண்டிறாளை கே.பீ.முத்தையா
1950-55 காதற் பலி சுதர்ஸன்
1955 மரணத்தின் வாயிலில் சாந்தி
1950-60 காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை எம்.செயினால் ஆப்தீன்
1950-55 வீரமைந்தன் சி.சண்முகம்
1953 சிங்கை ஆரியன் வெள்ளிவீதியார்
1950-55 கபட நாடகம் வே.க.ப.நாதன்
1950-60 ஓரே அணைப்பு இளங்கீரன்
மீண்டும் வந்தாள்
பைத்தியக்காரி
பொற்கூண்டு
கலா ராணி
மரணக் குழி
1950-60 காதலன் இளங்கீரன்
அழகு ரோஜா
வண்ணக் குமரி
காதல் உலகிலே
பட்டினித் தோட்டம்
நீதிபதி
எதிர்பார்த்த இரவு
மனிதனைப் பார்
புயல் அடங்குமா?
சொர்க்கம் எங்கே?
தென்றலும் புயலும்
மனிதர்கள்
மண்ணில் விளைந்தவர்கள்
நீதியே நீ கேள்!
இங்கிருந்து எங்கே?
மலர்ப் பலி சொக்கன்
1961 செல்லும் வழி இருட்டு
1955-60 கொழுகொம்பு வ.அ.இராசரத்தினம்
துறைக்காரன்
1961 நெடுந்தூரம் கே.டானியல்
1959 வாழ்வற்றவாழ்வு சி.வி.வேலுப்பிள்ளை
1962 வீடற்றவன்
1955-60 உனக்காக கண்ணே சிற்பி
இதயவானிலே உதயணன்
மனப்பாறை
தீ எஸ்.பொன்னுத்துரை
1955-62 வண்ண மலர் எட்டுப் பேர்
1955-62 மத்தாப்பு ஐந்து பேர்
அலைகள் கச்சாயில் இரத்தினம்
மாலதியின் மனோரதம் அருள் செல்வநாயகம்
காண்டீபன்
சிந்தித்துப் பார் பாயல் தாஹ’ர்
யார் கொலைகாரன்? மு.வே.பெ.சாமி
காணிவல் காதலி புதுமைலோலன்
தாலி
கோமதியின் கணவன் த.சண்முகநாதன்
கொந்தளிப்பு செ.சி.பரமேஸ்வரன்
காதல் பைத்தியம்
கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு எம்.பி.எம். முகம்மதுக் காசிம்
நாகரிக நிர்மலா அல்லது
மலைக்குறத்தி மகள் வியாசக விதரணன் எஸ் முத்தையா
ஈரக் கொலை வீ.ஆ. புரட்சிமணி
நிறுபூத்த நெருப்பு பாத்திமா மொகிதீன்
பயங்கரக் கனவு ஹுசேன்
காலேஜ் காதல் தெல்லியூர் செ. நடராஜா
***** ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி *** முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக