மனோதருமம்
நாடகங்கள்
Back
மனோதருமம்
வெ. சாமிநாத சர்மா
1. மனோதருமம்
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. அணிந்துரை
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. மனோதருமம்
9. முகவுரை
10. நாடக பாத்திரங்கள்
11. முதலங்கம்
12. கணியம் அறக்கட்டளை
மனோதருமம்
வெ. சாமிநாத சர்மா
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : மனோதருமம்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 11
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+296=312
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 195/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே 24339030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
பதிப்புரை
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்
களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி
யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
- படைப்பு இலக்கியமே நாடக இலக்கியம் ஆகும். மாந்த இனம் தோன்றியபொழுதே உணர்ச்சிகளும் தோன்றின. மொழி அறியாத மாந்தன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இன்பம் - துன்பம் கண்ட காலத்தும் தம்முடைய உணர்வு களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் விருப்பமாகவே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே பின்னர் நாடகமாக செழுமையுற்றது.
- அரசியல், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுலகுக்குத் தம் பங்களிப்பாகச் செய்த சாமிநாத சர்மா இந்திய நாட்டின் விடுதலையையும், தமிழகத்தின் குமுகாயப் போக்கையும் நெஞ்சில் நிறுத்தி பாண புரத்து வீரன், அபிமன்யு, மனோதருமம், உத்தியோகம், உலகம் பலவிதம் போன்ற நாடகங்களைப் படைத் தளித்தார்.
- மனோதத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம் மனோ தருமம் ஆகும். இதன் பின்னணியும், படைப் பாற்றாலும் நாடகத்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு பெண்ணின் மரணச் செய்தி அந்தக் குடும்பத்தாரிடம் பக்குவ மாக எடுத்துரைக்கப்படும் நிலையும், நுண்ணிய மனவுணர்வு களின் உரையாடல்களும் வாழ்க்கை நிலையற்றது என்பதும் இந்நாடகத்தின் மூலம் அறியும் செய்திகள்.
- பழந்தமிழ் பண்பாட்டின் பண்டைச் சிறப்பும், மேலை நாகரிகத்தால் புண்ணாகிப் போன தமிழர் நிலையும், நாட்டின் நலனை மறந்து வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை பார்ப்பதும். நரம்பெழுந்து உலரிய . . (புறம்.278) என்னும் புறநானூற்று வரி _உத்தியோகம்_ எனும் இந்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வரியாகும்.
- பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட நாடகமே _அபிமன்யு._ பழமைக்குப் புதுப்பொலிவூட்டும் நாடகம். பழய நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சியூட்டி தமிழர்களுக்குக் காட்சியாக அமைத்து தந்த நாடகமே அபிமன்யு.
- செந்தமிழ் நாடெனும் போதினிலே. . .”, காவிரி தென் பெண்ணை பாலாறு . . ”., செல்வம் எத்தனையுண்டு. .”., என்னும் பாரதியின் இந்த வரிகள் இந்நாடகத்தைப் படிப்பார்க்கு தமிழ்மொழி, நாட்டுப்பற்றும், விடுதலை உணர்வும், வீர முழக்கமும் ஏற்படுத்தும்.
- காட்லாந்து விடுதலைப் போராட்டக் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு வழி நூலே _பாணபுரத்து வீரன்_ என்னும் இந்நாடகப் படைப்பு. குறியீடுகளும், காட்சியமைப்பு களும், உரையாடல்களும் இந்தியத் தேசிய விடுதலையைக் களமாக வைத்து எழுதப்பட்டது.
- ஆங்கில வல்லாண்மையின் சூழ்ச்சிகளையும், மக்கள் எழுச்சியையும் நடுவமாகக் கொண்டு விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்னும் வீர முழக்கங்களை மக்களுக்குக் கண்ணாடிப் போல் காட்டுவது. கணவரின் பிரிவும், தன்னை மறப்பினும் தாய்நாட்டை மறவாதீர் என்று கணவனை வேண்டும் வீரமகளின் குறிப்பு.
- தமிழ் நாடக உலகில் முதன் முதலில் ஓரங்க நாடகத்திற்குப் பொன்னேர் பூட்டியவர் சாமிநாத சர்மா. _உலகம் பலவிதம்_ என்னும் ஓரங்க நாடகம் குமுக வாழ்வில் மாறுபட்ட உணர்ச்சி களையும், வேற்றுமைகளையும், சுவையான நிகழ்ச்சிகளையும் படைத்துக்காட்டுவது.
- அரசியல் - இலக்கியம் எனும் கருத்தோட்டத்தின் அழுத்தத்தை மீறி ஒரு நாடக ஆசிரியனாக இருந்துகொண்டு இந்திய விடுதலையுணர்விற்கு ஊக்கம் ஊட்டியவர். நாட்டுப்பற்றும், குமுகாய ஒழுக்கமும் அமைந்த நாடகம். இரண்டாம் உலகப் போரின் காலச்சூழலில் வெளிவந்த நாடகம். இதில் பதின்மூன்று நாடகங்கள் அடங்கியுள்ளன.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
மனோதருமம்
முகவுரை
கவுண்ட் மாரி மெட்டர்லிங்க் (Count Maurice Maeterlinck) என்ற பெல்ஜிய நாட்டுப் புலவன் ஒரு சிறந்த நாடகாசிரியன்; உரை நடையில் கைதேர்ந்தவன்; மனிதனுடைய உணர்ச்சி பாவங்களை வர்ணித்துக் காட்டுவதில் திறமை சாலி; 1862ம் வருஷம், பெல்ஜியத்திலுள்ள கெண்ட் (Ghent) என்னும் ஊரில் பிறந்தவன்.
இவனுடைய ஓரங்க நாடக மொன்றைத் தாங்கள் நடிப்பதற் காக மொழி பெயர்த்துத் தருமாறு 1926ம் வருஷம் சென்னை அடை யாற்றிலுள்ள சில நண்பர்கள் எனக்கு ஆஞ்ஞாபித்தார்கள். நாடகங் களிலே, நடிப்பு நாடக மென்றும், படிப்பு நாடகமென்றும் இரு வகையுண்டு. மெட்டர்லிங்கினுடைய நாடகங்கள் யாவும் படிப்பு நாடகங்களே. எனவே, இந்த நாடகத்தை மொழி பெயர்த் தாலும், நடிக்க முடியா தென்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சொன்னபடி செய் என்று உத்திரவு போட்டார்கள். நானும் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு, மெட்டர்லிங்கி னுடைய நாடகங்களை நடிக்க முடியாதுதான்; நீ சொன்னது சரி என்று கையெழுத்துப் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அந்த மட்டும் நல்ல காலம் என்று எண்ணிக் கொண்டு, பிரதியை, என்னுடைய செலாவணி யாகாத பொக்கிஷப் பெட்டியில் - அதாவது கையெழுத்துப் பிரதிகள் கட்டோடு - வைத்து விட்டேன். பதின் மூன்று வருஷங்க ளுக்குப் பிறகுதான், இதற்கு நல்ல காலம் பிறந்தது. 1939-ம் வருஷம் இந்த மனோ தர்மம் ஜோதியில் பிரசுரமாயிற்று. அதுவே, இப்பொழுது புத்தக வடிவத்தில் வெளியாகி யிருக்கிறது. இப்படி வெளி யிட்டதனால், என்னுடைய அறியாமையை பகிரங்கப் படுத்திக் கொண்டு விட்டேனோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இதற்கெல் லாம் காரணர் என்னுடைய தள்ளு கட்டையாக அமைந்துவிட்ட அத்திக்கேணிக் கிழார் தான். அவர் ஒருநாள் மாலை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்ன ஐயா, இப்படி படுமோசமாகப் போய் விட்டீர்களே; 1940-ம் வருஷம் பிறந்து ஒரு புதகங்கூட வெளியிட வில்லையே என்று கோபித்துக் கொண்டார். வறுமைக் கும் அஞ்சாத நான், அன்று, அவருடைய கோபத்துக்கு அஞ்சி விட்டேன். எதையாவ தொன்றை வெளியிடுவதென்று துணிந்தும் விட்டேன். அந்தத் துணிச்சலின் விளைவுதான் இந்த மனோ தர்மம்.
25.5.1940
நாடக பாத்திரங்கள்
உதியமான் - ஒரு வயோதிகன்
சேரலாதன் - வயோதிகனின் நண்பன்
பெருந்தேவி மாரியம்மை - வயோதிகனின் பேர்த்திகள்
பிச்சன் - ஒரு குடியானவன்
கூட்டத்தைச் சார்ந்த சிலரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பனார், தாயார், இரண்டு சிறுமிகள், ஒரு கைக் குழந்தை முதலி யோரும்.
நாடக நிகழ்விடம் - ஒரு தோட்டம்.
முதலங்கம்
இடம் : தோட்டத்தில் சிறு குடிசை.
காலம் : பின் மாலை.
_(மூன்று பலகணிகள் உடைய ஒரு குடிசையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பனார், தாயார், இரண்டு சிறு பெண்கள் முதலியோர், கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து குளிர் காய்ந்து கொண் டிருக்கின்றனர். இரண்டு சிறு பெண்களும், காலையில் தங்கள் தாயார் கற்றுக் கொடுத்த தையல் வேலையில் கை பழகிக் கொண்டிருக் கிறார்கள். தாயார், தனது கைக் குழந்தையை மடியில் வைத்துச் சீராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள். மூலையில் ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. எங்கும் அமைதி நிறைந்திருக்கிறது. உதியமானும் சேரலாதனும் மெதுவாகப் பிரவேசிக் கிறார்கள்)_
உதியமான்: (பெருமூச்சு _விட்டு)_ அப்பா மெதுவாக வீட்டுக்குப் பின்புறம் வந்து சேர்ந்தோம். (குடிசையிலுள்ளவர்களைச் _சுட்டிக் காட்டி)_ அதோ பார்! அவர்கள் இப்பக்கம் வருவதே யில்லை. வீட்டுக்கு முன்புற மாகவே கதவுகள் முதலியன எல்லாம்! இந்தப் பக்கம் ஒன்றுமில்லை. (குடிசையைக் _கூர்ந்து கவனித்து)_ இப்படி வா! இந்த ஜன்னலின் வழியாகப் பார்! எல்லோரும் நெருப்புக் குமட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கின்றனர். நல்ல காலம்! நாம் வந்ததும், இங்குப் பேசிக் கொண்டிருப்பதும் அவர் களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், தாயாராவது, அந்தப் பெண்களாவது ஓடிவந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த் திருப்பார்கள். அப்பொழுது நாம் என்ன செய்வது?
சேரலாதன்: (சிறிது _திகைப்புடன்)_ என்ன செய்வது?
உதிய : (கையை _அமர்த்தி)_ இரு; குடும்பத்தினர் அனைவரும் அந்த அறையிலேயே இருக்கிறார்களா வென்று பார்க்கிறேன். (தலை _யைத் தூக்கிப் பார்த்துச் சிறிது பொறுத்து)_ ஆம்; தகப்பனார் குமட்டியின் கிட்டே ஒரு மூலையாக உட்கார்ந்து கொண் டிருக்கிறார். குளிருக்காக முழங்காலைக் கட்டிக் கொண்டு, ஏதோ யோசனை செய்து கொண்டிருக் கிறார். அந்த அம்மாள்- குழந்தைகளின் தாயார் - சுவரின் மீது சாய்ந்து கொண்டு -
சேர : நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
உதிய : இல்லை; இல்லை. அவள் எதையும் பார்க்கவில்லை. இப் பொழுது அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிற மாதிரியில் நம்மைப் பார்க்க முடியாது. மரத்தின் நிழல் நம்மை மறைத்துக் கொண் டிருக்கிறது. - உ! இன்னும் அருகில் போகாதே. இறந்துபோன பெண்ணின் இரண்டு சகோதரி களும் - பாவம்! தையல் வேலையில் கைபழகிக் கொண்டிக்கிறார்கள். கைக் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது. (ஆகாயத்தைப் _பார்த்து)_ நாழிகை ஒன்பதுக்கு மேலிருக் கும். (குடிசையை _நோக்கி)_ மௌனத்தின் ஆட்சிக்கு இந்தக் குடிசை உட்பட்டிருக்கிறது.
சேர : அந்தக் குழந்தைகளின் தகப்பனாருடைய கவனத்தைக் கவரும்படியாக நாம் ஏதேனும் சந்தடியோ சைகையோ செய்தா லென்ன? இந்தப் பக்கம் அவர் தலையைத் திருப்பிக் கொண் டிருக்கிறார். ஏதேனும் ஒரு பலகணியின் கீழ்ப் போய் நான் தட்டிச் சப்தஞ் செய்யட்டுமா? யாராவது ஒருவர் முதலில் இந்தத் துக்க சமாசாரத்தைக் கேட்டுத்தானே தீரவேண்டும்.
உதிய : எதைச் செய்வது என்று எனக்குத் தோன்றவில்லை. நாம் மிகுந்த ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும். தகப்பனார் வயதா னவர்; தவிர, நோயாளி. தாயாரும் வியாதியால் அவதைப் பட்டுக் கொண்டிருக் கிறாள். அந்தப் பெண் குழந்தைகளுக்கோ மிகுந்த பாலிய வயது. இவர்கள் எல்லாரும் அவளை - இறந்து போன அந்தப் பெண்ணை - எவ்வளவு அன்புடன் நேசித்து வந்தார்கள் தெரியுமா? வேறெவரிடத்திலும் இவர்கள் அம்மாதிரி அன்பு செலுத்தவில்லை. இத்தகைய சந்தோஷம் நிறைந்த குடும்பத்தை நான் எங்கும் பார்த்தது கிடையாது. (பொறுத்து) வேண்டாம்! வேண்டாம்! சேரலாதா! ஜன்ன லண்டை போகாதே! இதுவே அவர்களுக்கு நாமிழைக்கும் பெரிய தீங்காகும். சாதாரண ஒரு சம்பவத்தைப் போலவே, இந்த மரணச் செய்தியை அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். மற்றும், நாம் அதிக துக்கமடைந்தவர்களாகவும் காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், நமது துக்கத்தை விட தங்களுக்கு அதிக துக்கம் இருக்கிறதென்று காட்டக் கருதி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பார்கள். (பொறுத்து) நாம் மெதுவாகத் தோட்டத்திற்கு முன்புறம் போவோம். போய்க் கதவை தட்டுவோம். கதவைத் திறப்பார்கள். பிறகு, ஒன்றுமறியாதவர்கள்போல் உள்ளே செல்லலாம். முதலில் நான் போகிறேன். என்னைக் கண்ட அவர்களில் ஒருவரும் ஆச்சரியப் படமாட்டார்கள். நான் சாதாரணமாக மாலை வேளைகளில், பழம், புஷ்பம் முதலியவைகளைக் கொண்டுவந்து இவர்களுக் குக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வேன்.
சேர : அப்படியானால் நானும் உன்னுடன் வரவேண்டுமென்று ஏன் விரும்புகிறாய்? நீ மாத்திரம் போ. நீ என்னைஅழைக்கும் வரை, நான் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை எப்பொழுதும் பார்த்ததேயில்லை. நான் ஒரு வழிப் போக்கன்தானே! அந்நிய மனிதன் தானே!
உதிய : நான் ஒருவனாகப் போவது நல்லதல்ல. ஒருவனே சென்று அறிவிக்கும் துக்கச் செய்தி, அதிக துன்பத்தைத் தரக்கூடியதா யிருக்கிறது. நான் வரும்போதே இதைப்பற்றி யோசித்தேன். நான் தனியாகவே சென்றால், போனதும் முதலில் இந்தத் துக்கச் செய்தியையே தெரிவிக்க வேண்டியிருக்கும். என்னுடைய இரண்டொரு வார்த்தைகளிலேயே அவர்கள் எல்லா விஷயங் களையும் தெரிந்து கொள்வார்கள். பிறகு எதையும் சொல்ல எனக்கு வழி யிராது. துர்ச் சம்பவத்தைத் தெரிவிக்கும் வார்த்தை கள் முற்றுப் பெற்ற பிறகு ஏற்படும் அமைதி இருக்கிறதே, ஓ! எவ்வளவு பயங்கரமானது தெரியுமா? அந்த அமைதியில்தான் இதயம் வெடித்துப் போகிறது. நாமிருவரும் ஒன்றாகப் போனால், வளைத்து வளைத்து நான் பேசத் தொடங்குவேன். நாங்கள் அந்தப் பெண்ணை அப்படிப் பார்த்தோம்; அவள் ஆற்றின் மீது மிதந்து கொணடிருந்தாள்; அவள் இரு கைகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்தன என்று இப்படி யெல்லாம் பேச ஆரம்பிப்பேன்.
சேர : அவள் கைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்க வில்லையே. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களில் மிதந்து கொண்டிருந்தனவே.
உதிய : பார்த்தாயா? நம்மையும் மீறி நாம் பேச ஆரம்பிக்கிறோம். அந்தப் பெண் இறந்து போன விவரங்களில் தான் துக்க மெல்லாம் அடங்கி யிருக்கின்றன. நான் தனியாகச் சென்று இந்தச் செய்தியைத் தெரிவித்தால் - அவர்களுடைய சுபாவம் எனக்கு நன்றாகத் தெரியும் - என்னுடைய முதல் வார்த்தைகளே அவர்களுக்கு எவ்வளவு துயரத்தை உண்டாக்கும் தெரியுமா? ஆண்டவனே அதை அறிவான். நாமிருவரும் சென்று, மாறி மாறிப் பேசினால், அவர்கள் நமது பேச்சிலே கவனத்தைச் செலுத்திவிட்டு, நமது முகத்திலே தங்கியிருக்கும் துக்கக் குறியைக் காண மறந்து விடுவார்கள். இறந்து போன பெண்ணின் தாயார் அங்கு இருக்கிறாள் என்பதை நீ மறந்து விடக்கூடாது. அவளுடைய பிராணன் ஒரு நூலிழையில் தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. துக்கத்தின் முதல் அலையானது, அநாவசியமான வார்த்தைகளில் சென்று அடங்கி விடுவதே நல்லது. ஒரு துக்கச் செய்தியைப் பலர் சென்று தெரிவித்தால், அந்த துக்கத்தைப் பலரும் பங்கிட்டுக் கொண்டு விடுகிறார்கள். துக்கத்தில் சம்பந்தப்படாதவர்கள்கூட, அதில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால், அத்துக்கமானது முயற்சி யின்றி, சந்தடியின்றி, காற்றைப்போல் கலைந்தும், வெளிச்சத்தை போல் பரந்தும் போய் விடுகிறது.
சேர : உன் துணிகள் நனைந்திருக்கின்றன.
உதிய : என்னுடைய மேற் சட்டையின் ஒரு பாகந்தான் நனைந்தது; வேறொன்று மில்லை. நீ யென்ன இவ்வளவு ஈரத்துடனிருக் கிறாயே? உன்னுடைய மேற்சட்டையிலெல்லாம் சேறு வடிந் திருக்கிறது. இருட்டா யிருந்ததால், வழியில் இதை நான் கவனிக் கவே யில்லை.
சேர : இடுப்பு வரை நான் தண்ணீருக்குள் சென்றேன்.
உதிய : நான் வருவதற்கு நெடு நேரத்திற்கு முந்தியே நீ அவளைக் கண்டு பிடித்துவிட்டாயா?
சேர : இல்லை; சில விநாடிகளுக்கு முன்புதான் நான் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது தான் இருள் மூடிக் கொண்டுவரத் தொடங்கியது. நான் ஆற்றோரமாகவே, ஆற்றைப் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்பொழுது ஒரு நாணற் புதருக்கு அருகாமையில் ஏதோ ஒன்று ஆச்சரியமாகப் புலப்பட்டது. நெருங்கிச் சென்றேன். அந்தப் பெண்ணின் தலை மயிரானது தலையைச் சுற்றிப் பின்னலிட்டுக் கொண்டு, அலையின் வேகத்தால் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.
_(இச்சமயத்தில் குடிசையிலுள்ள இரண்டு பெண்களும் ஜன்னல் பக்கமாகத் திரும்பிப் பார்க்கின்றனர்.)_
உதிய : அந்தப் பெண்ணின் இரண்டு சகோதரிகளின் தலை மயிரும் அவர்களுடைய தோட்களின் மீது அசைந்தாடிக் கொண்டிருப் பதை நீ பார்த்திருக்கிறாயா?
சேர : அந்த இரண்டு பெண்களும் நம் பக்கமாகத் தலையைத் திருப்பிப் பார்க்கிறார்கள். ஒருகால் உரக்கப் பேசிவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. (மீண்டும் _இரண்டு பெண்களும் பழையபடி தலையைத் திருப்பிக் கொள்கின்றனர்)_ அவர்கள் மறுபடியும் பழையபடி தலையைத் திருப்பிக்கொண்டு விட் டார்கள். (பொறுத்து) நான் உடனே தண்ணீருக்குள் இறங்கி, இடுப்பளவு ஆழம் வரை சென்றேன். மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கரைக்கு இழுத்துக் கொண்டு வந்தேன். ஆ! தனது சகோதரி களைப் போலவே அவளும் அழகாயிருந்தாள்.
உதிய : இவர்களைவிட அழகா யிருந்தாளென்று நினைக்கிறேன். நான் ஏன், என் தைரியத்தையெல்லாம் இழந்துவிட்டேனென்று தெரிய வில்லை.
சேர : என்ன தைரிய மிழந்து விட்டோ மென்று சொல்கிறாயே. மனிதப் பிரயத்தின மனைத்தையும் நாம் செய்து பார்த்தோம். நான் பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முந்தியே அவள் இறந்திருக்க வேண்டும்.
உதிய : இன்று காலை அவள் உயிரோடிருந்தாள்! கோயிலிலிருந்து வெளி வரும்போது அவளைப் பார்த்தேன். எந்த ஆற்றில் அவளை நீ மிதக்கக் கண்டாயோ, அந்த ஆற்றுக்கு அக்கரையி லிருக்கும் தனது பாட்டியைக் காணச் செல்லப் போவதாக அவள் கூறினாள். நான் எப்பொழுது அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்று கேட்டதற்குச் சரியான பதில் சொல்லக் கூட அவளுக்கு தெரியவில்லை. ஏதோ என்னைக் கேட்க வேண்டுமென்று விரும்பினாள். ஆனால் அதை வாய் திறந்து கேட்கத் துணியவில்லை. உடனே என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள். இப்பொழுதுதான் அதன் உண்மை எனக்குப் புலப்படு கிறது. அப்பொழுது எனக்கு ஒன்றுந் தெரிய வில்லை. மௌனமாக இருக்கவேண்டுமென்ற தங்கள் விருப் பத்தைச் சிலர் புன்சிரிப்பின் மூலமாகத் தெரிவித்து விடுவது வழக்கம். அல்லது தங்கள் அபிப்பிராயங்களைப் பிறர் சரியாகத் தெரிந்துகொள்ள மாட்டார்களென்ற சந்தர்ப்பங்களிலும் புன்சிரிப்பு சிரித்து விடுவதுண்டு. அது போலவே அவளும் அப்பொழுது சிரித்தாள். வாழ்க்கையிலுள்ள நம்பிக்கை கூட அவளுக்கு ஒரு துயரமாக இருந்ததுபோலும். அவள் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும் அவள் கண்கள் என்னைப் பார்க்கவே இல்லை.
சேர : பகல் முழுவதும் அவள் ஆற்றங் கரையிலேயே உலவிக் கொண் டிருந்ததாகச் சில குடியானவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏதோ புஷ்பம் பறித்துக்கொண்டு செல்வதற்காக அவள் அங் கிருக்கிறாள் என்று அவர்கள் கருதினார்களாம். அவளு டைய மரணம், ஒருகால் -
உதிய : அதைப்பற்றி ஒருவரும் சொல்ல முடியாது. யாருக்கு என்ன தெரியும்? அதிகமாகப் பேச விரும்பாதவர் சிலர் இருக் கின்றனர். அவரில் அவள் ஒருத்தியா யிருக்கலாம். இந்த உலகத் திலே வாழ வேண்டா மென்பதற்கு, ஒவ்வொருவருடைய மனத் திலும் எத்தனையோ காரணங்கள் குடி கொண்டிருக்கலாம். இதோ, இந்த அறைக்குள் நீ பார்ப்பதுபோல், ஒவ்வொரு வருடைய ஆத்மாவுக்குள்ளும் சென்று நீ பார்க்க முடியா தல்லவா? இவர்கள் - அதாவது அதிகமாகப் பேசாதவர்கள் - சிறு விஷயங்களைத் தவிர வேறொன்றும் பேசமாட்டார்கள். இவர்களைக் கனவில் கூட எவரும் தவறாக நினைப்பதில்லை. இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் ஈடுபடாதவர்கள் அருகில் நீ மாதக் கணக்காய் வசிக்கலாம்; அவர்கள் கேட்ட கேள்விக்கு நீ முன்பின் யோசியாமல் பதில் சொல்லி விடலாம். ஆனால் அவர்களோ உயிரற்ற பொம்மைகள் போல் பார்வைக்குத் தோன்றிய போதிலும், அவர்களுடைய இதயத்தில் எத்த னையோ விதமான எண்ணங்கள் உதயமாகிக் கொண்டும் மறைந்து கொண்டுமிருக்கின்றன. தாங்கள் இன்னாரென்று அவர்களுக்கே தெரிவதில்லை. இப்படியே, அந்தப் பெண்ணும், மற்றவர்களைப் போலவே வாழ்ந்திருக்கலாம். தான் மரிக்குந் தினத்தன்று கூட, இன்று மழை பெய்யப் போகிறது; நாங்கள் இத்தனை பேர் உட்கார்ந்து விருந்து சாப்பிடப் போகிறோம்; அல்லது அந்தப் பழம் பழுத்திருக்கிறது என்று இப்படி யெல்லாம் சகஜமாகப் பேசி யிருக்கலாம். இத்தகையவர்கள், ஒரு புஷ்பம் வாடிக் கீழே விழுந்து போனால், அதைப் பார்த்து வெளிப்படையாகச் சிரிக்கிறார்கள்; ஆனால் இருட்டில் சென்று அதற்காக அழுகிறார்கள். தேவதைகள் கூட, எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்ப்பதில்லை. மனிதர்களோ, ஒரு காரியம் நடந்து, பூரணமாக முடிந்த பிறகுதான் அதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். (பொறுத்து) நேற்று மாலை, அவள் தன்னுடைய சகோதரிகளுடன், (குடிசைக்குள் _காட்டி)_ இந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்று அப்படி யில்லை. முதன் முதலாக இப்பொழுதுதான் அவளை நான் பார்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது, இந்த உலக வாழ்ககையின் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டு மானால், நமது தினசரி சாதாரண வாழ்க்கையில் ஏதேனும் புதிய சம்பவம் ஒன்று ஏற்படவேண்டும் போலும். நாம் யாரோடு இரவு பகலாகக் கூடவே இருந்து உறவாடு கிறோமோ, அவர்கள் இவ்வுலக வாழ்க்கை யினின்று பிரிந்த பிறகுதான் அவர்கள் இத்தன்மை யுடையவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம். ஓ! அந்தப் பெண் எவ்வளவு அற்புத மான பிறவி!
சேர : (குடிசையைக் _காட்டி)_ அதோ பார், அந்த அறையின் அமைதியிலே அவர்கள் புன் சிரிப்பு தவழ்கிறது.
உதிய : அவர்கள், அந்தப் பெண்ணின் வரவில் ஆவலாயில்லை. இன்று மாலை அவள் வருவாள் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
சேர : அவர்கள் சிரித்துக் கொண்டே, அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் பார். தகப்பனார், தமது உதட்டின் மீது விரல் வைத்து -
உதிய : தாயாருடைய மடியிலே கைக் குழந்தை தூங்குகிறதென்று சொல்கிறார்.
சேர : குழந்தைக்கு எங்குத் தொந்திரவு உண்டாகுமோ என்று கருதி, தாயார் தலை கூட நிமிரவில்லை.
உதிய : சிறு பெண்கள், தையல் வேலையை நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது பார்; ஒரே அமைதி.
சேர : அவர்கள் மேல் துணி கூட விழுந்து விட்டது.
உதிய : அவர்கள் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சேர : தங்களைப் பிறர் பார்க்கின்றனர் என்று பாவம்! - அவர் களுக்குத் தெரியாது.
உதிய : நாம் கூட கவனிக்கப் படுகிறோம்.
சேர : இப்பொழுதே அவர்கள் பார்வை மேல் நோக்குகிறது.
உதிய : ஆயினும் அவர்களால் ஒன்றும் பார்க்க முடியாது.
சேர : அவர்கள் சந்தோஷ முள்ளவர்களாகத் தான் தென்படுகி றார்கள். ஆயினும் - ஏதோ ஒன்று - அஃதின்ன தென்று என்னால் சொல்ல முடியவில்லை.
உதிய : அவர்கள் எல்லா ஆபத்துக்களையும் கடந்து விட்டதாகக் கருதுகிறார்கள். கதவுகளையும் ஜன்னல்களையும் சாற்றி விட் டார்கள். பழைய வீட்டின் சுவர்களைப் பலப்படுத்தி யிருக்கி றார்கள். கதவுகளுக்குப் புதிய தாழ்ப்பாள்கள் போட்டிருக் கிறார்கள். எதை எதிர் பார்க்கக்கூடுமோ அதை எதிர் பார்த்தே காரியங்கள் செய்திருக்கிறார்கள்.
சேர : இப்பொழுதோ பின்னையோ, அவர்களுக்கு நாம் இந்தச் செய்தியைத் தெரிவித்தே ஆக வேண்டும். அல்லது வேறு யாராவது திடீரென்று வந்து கண்டபடி உளறிவிடுவர். அந்தப் பெண்ணின் சவத்தை நாம் விட்டுவந்த மைதானத்தில் ஏராளமான குடியானவர்கள் கூடி யிருந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவர் ஓடிவந்து -
உதிய : மாரியம்மையும் பெருந்தேவியும் பிரேதத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். குடியானவர்கள், மரக்கிளை களைக் கொண்டு, ஒரு தொட்டில் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் பிரேதத்தை வைத்துக் கொண்டு அவர்கள் புறப்படுவதற்கு முன்னால் என்னிடம் வந்து தெரிவிக் கும்படி என் பெரிய பேர்த்தியினிடத்தில் தெரிவித்திருக்கிறேன். அவள் வரும்வரை சிறிது காத்திருப்போம். அவளும் வந்து விடுவாள். நாம் இம்மாதிரி காத்தக் கொண்டிராமலிருந்தால் நன்றா யிருக்கும். ஆனாலும் - நான் நினைத்ததென்னவென்றால், நேரே வந்து கதவைத் தட்டவேண்டியது, பெண்ணின் பெற்றோர்களுக்குச் சில வார்த்தைகளில் சமாசாரத்தைச் சொல்லிவிட வேண்டியதென்று கருதினேன் - ஆனால் இங்கு வந்த பிறகு, இக்குடும்பத்தினரை அதிக நேரம் கவனிக்க வேண்டிய தாகிவிட்டது.
_(மாரியம்மை பிரவேசிக்கிறாள்.)_
மாரியம்மை : தாதா ! அவர்கள் வருகிறார்கள்.
உதிய : (ஆச்சரியத்துடன்) நீயா? அவர்கள் எங்கே?
மாரி : மலையடிவாரத்தின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள்.
உதிய : சந்தடி செய்யாமல் வருகிறார்கள் போலும்.
மாரி : தாழ்ந்த குரலில் பிரார்த்தனை செய்து கொண்டு வருமாறு கூறிவிட்டு வந்தேன். பெருந்தேவி அவர்களுடன் வருகிறாள்.
உதிய : அதிக ஜனங்கள் வருகிறார்களோ?
மாரி : கிராம முழுவதும் புரண்டு வருகிறது. அவர்கள் விளக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். நான் அணைத்துவிடும்படி கூறி னேன்.
உதிய : அவர்கள் எந்த வழியாக வருகிறார்கள்?
மாரி : ஒற்றையடிப் பாதையாகவே அவர்கள் வருகிறார்கள்; அதுவும் மெது மெதுவாக.
உதிய : அதிக நேரமாய்விட்டது.
மாரி : தாதா! அவர்களுக்கு இந்தச் சமாசாரத்தைத் தெரிவித்துவிட் டாயா?
உதிய : அவர்களுக்கு இன்னும் நான் ஒன்றுங் கூறவில்லை. அதோ பார்! அவர்கள் கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். குழந்தாய்! அவர்களைப் பார். வாழ்க்கை என்பது இன்னதென்று உனக்குத் தெரியும்.
மாரி : ஓ! அவர்கள் எவ்வளவு சாந்த சீலர்களாய் விளங்குகிறார்கள்! நான் காண்பது ஒரு கனவு போல் இருக்கிறது!
சேர : உ - அதோ பார், அந்த இரண்டு பெண் குழந்தைகளும் அசைத்துக் கொடுக்கிறார்கள்.
உதிய : அவர்கள் எழுந்திருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.
சேர : பல கணியண்டை வருகிறார்களெனறு கருதுகிறேன்.
_(ஒரு பெண் ஒரு பலகணியண்டையும், மற்றொரு பெண் மற்றொரு பலகணியண்டையும் வந்து இருட்டை உற்று நோக்குகிறார்கள்.)_
உதிய : நடுவேயுள்ள இந்த ஜன்னலண்டை எவரும் வரவில்லை.
மாரி : அவர்கள் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உ - சும்மா இரு. அவர்கள் உற்றுக் கேட்கிறார்கள்.
உதிய : தன்னால் பார்க்க முடியாததைக் குறித்துப் பெரியவள் சிரிக்கிறாள் பார்.
சேர : சின்னவளுடைய கண்களில் பயம் நிரம்பி யிருக்கிறது.
உதிய : ஜாக்கிரதை! தேகத்தைச் சுற்றி ஆத்மா எவ்வளவு தூரம் பரவியிருக்கிற தென்று யாருக்குத் தெரியும்?
_(சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருக்கிறது, மாரியம்மை, தனது பாட்டனாரைச் சேர்த்துக் கட்டிக் கொள்கிறாள்)_
மாரி : தாதா! (பயத்தினால் _அழுகிறாள்.)_
உதிய : குழந்தாய்! அழாதே! நமக்கும் அந்த நிலைமை ஏற்படக் கூடும். (சிறிது _நேரம் மௌனம்)_
சேர : நெடு நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.
உதிய : பாவம்! ஆயிரக்கணக்கான வருஷங்கள் அவர்கள் பார்க் கட்டுமே. இந்த இருட்டில் என்ன தெரியப் போகிறது? அவர் கள் இந்த வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறு வழியாக துரதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்கிறது.
சேர : அவர்கள் இந்த வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது தான். (தூரத்தில் _உற்று நோக்கி)_ தூரத்தில் ஏதோ வொன்று - அஃதின்ன தென்று எனக்குத் தெரியவில்லை - வந்து கொண்டிருக்கிறது.
மாரி : அது ஜனக் கூட்ட மென்று நினைக்கிறேன். அஃது அதிக தூரத்தில் வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அதனால் தான் நமக்குச் சரியாகப் புலப்படவில்லை.
சேர : ஒற்றையடிப் பாதை எப்படி வளைந்து வருகிறதோ அப்படி யெல்லாம் அவர்களும் வந்துதானே யாகவேண்டும். அதோ பார்! அந்தச் சரிவில் இறங்கி வருவது தெரிகிறது.
மாரி : ஓ! எத்தனை பேர் வருகின்றனர்! நான் புறப்பட்டபோதே, வெளியூர்களிலிருந்து ஏராளமான ஜனங்கள் வந்து கொண் டிருந்தார்கள். அவர்கள் கோணல் வழியாக வந்து கொண்டிருக் கிறார்களென்று தோன்றுகிறது.
உதிய : எப்படியானாலும் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். அவர்கள் மைதானத்தைக் கடந்து வருவது என் கண்ணுக்குக் கூட புலனாகிறது. தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் எவ் வளவு சிறியவர் களாகத் தென்படுகிறார்கள்! இந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்தால், இக் குடிசையிலுள்ள இரண்டு சிறுமிகளுக்கும் என்ன வென்று புலப்படாது. துரதிர்ஷ்டம், சென்ற இரண்டு மணி நேரமாக எவ்வளவு மெது மெதுவாக வந்து கொண்டிருக்கிறது! அதை இப்பெண்கள் தடுக்க முடி யாது. அதைக் கொண்டு வருவோரும், அதைத் தடுக்கச் சக்தி யற்றவராயிருக்கின்றனர். துரதிர்ஷ்டம், இவர்களைத் தன்னா திக்கத்திற் குட்படுத்திக் கொண்டு விட்டது. ஆதலின் அதற்குக் கீழ்ப் படிந்தேயாக வேண்டும். அதற்குத் தனது இலட்சியம் இன்ன தென்று தெரியும். அதனை நாடி அது செல்கிறது. அதற்குச் சலிப்பே கிடையாது. அதற்கு ஒரே நோக்கந்தான் உண்டு. ஆயினும், மனிதர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும். இந்தத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறவர்கள் மிகுந்த விசன முள்ளவர்களாகவும் பச்சாதாப முடையவர் களாகவுமிருக் கிறார்கள். ஆயினும் அதனுடன் அவர்கள் முன் னோக்கியே வரவேண்டி யிருக்கிறது.
மாரி : தாதா! பெரிய பெண் சிரிப்பதை நிறுத்தியிருக்கிறாள்.
சேர : ஜன்னல்களிலினின்று விலகிப் போகிறார்கள்.
மாரி : தங்கள் தாயாருக்கு முத்தங் கொடுக்கிறார்கள்.
சேர : பெரிய பெண், கைக் குழந்தையின் தலை மயிரை, அஃ தெழுந் திராதபடி தடவிக் கொடுக்கிறாள்.
மாரி : தமக்குக் கூட அந்தக் குழந்தைகள் முத்தங் கொடுக்க வேண்டு மென்று தகப்பனார் விரும்புகிறார்.
சேர : இப்பொழுது மறுபடியும் அமைதி ஏற்பட்டிருக்கிறது.
மாரி : அந்த இரண்டு பெண்களும் தங்கள் தாயாரை மீண்டும் அடைந்துவிட்டார்கள்.
சேர : நாழிகை எவ்வளவு இருக்கு மென்று தகப்பனார் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மாரி : தாங்கள் செய்வ தின்ன தென்று தெரியாமலே அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் போல் தோன்று கிறது.
சேர : தங்களுடைய ஆன்ம நாதத்தையே அவர்கள் கேட்டுக் கொண் டிருக்கிறார்கள் போல் இருக்கிறது.
மாரி : தாதா! இன்று, இந்தத் துக்கச் செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாமே!
உதய : பார்த்தாயா, நீ கூட தைரியத்தை இழந்து விட்டாய்! நீ அவர்களைக் கவனிக்கக் கூடாது. எனக்கு இப்பொழுது வய தென்ன தெரியுமா? எண்பத்து மூன்று. ஆனாலும், வாழ்க்கை யின் உண்மை இப்பொழுது தான் எனக்கு முதன் முதலாகப் புலனாகிக் கொண்டு வருகிறது. அவர்களுடைய செய்கைகளும் பிறவும் ஏன் எனக்கு நூதன மாகவும் கம்பீரமாகவும் புலப் படுகின்றனவோ தெரியவில்லை. நம்மைப் போலவே அவர் களும் கணப்புச் சட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். ஆயினும் அவர்கள் வேறு உலகத்திலிருப்பதாகவும் நான் வேறு உலகத்திலிருப்பதாகவுமே எனக்குப் புலப்படுகிறது. அவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் எனக்குத் தெரிந் திருப்பதான உணர்ச்சியுமிருக் கிறது. குழந்தாய்! இஃதுண்மை தானா? (பொறுத்து) ஏன் உன் முகம் திடீரென்று வெளுத்து விட்டது? நம்முடைய வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி அந்நியமான தொன்று ஏதேனும் இருக்கிறதோ? அதுதான் நம்மை அழச் செய்கிறது போலும். இவ்வளவு துக்கம் வாழ்க்கையி லிருக்கிற தென்று எனக்குத் தெரியாது. மற்றும் அதைப் பார்த்தவுடன் இவ்வளவு பயம் உண்டாகுமென்றும் இதுவரை அறியாமலிருந்தேன். வேறொன்றும் நடவா விட்டா லும், அவர்கள் இவ்வளவு சாந்தமாக உடகார்ந்திருப் பதைப் பார்த்தே எனக்குப் பயம் உண்டாகிறது. அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கிறது. துரதிருர்ஷ் டம் என்ற சத்துருவுக்குச் சில அடி தூரத்திலேயே அவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டுக் கதவுகளை மூடி விட்டதனால், தங்களுக்கு இனி ஒன்றும் நடவாதென்றும் அவர்கள் கருதுகிறார்கள் போலும். ஆன் மாவுக்குள்ளேயே பலவித சம்பவங்கள் நிகழ்கின்றன வென்றும், தங்களுடைய வீட்டு வாயிற்படியுடன் உலகம் முடிவடையை வில்லை யென்றும் அவர்களுக்குத் தெரியாது பாவம்! தங்க ளுடைய அற்ப வாழ்க்கை மிகுந்த பத்திரமாக இருக்கிறதென்று அவர்கள் கருதியிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையைப்பற்றித் தங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட வெளியாருக்கு அதிகம் தெரியும் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்களுடைய வீட்டுக்கு இரண்டடி தூரத்தில் இருக்கும் நான், ஓர் அற்பக் கிழவன், அவர்களுடைய சுகத்தை யெல்லாம் என் கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
மாரி : அவர்களிடத்தில் கருணை காட்டுங்கள் தாதா!
உதிய : அவர்களிடத்தில் நமக்குக் கருணை இருக்கிறது. ஆனால் நம் மீது கருணை வைப்பார் எவருமில்லையே.
மாரி : இந்தத் துக்கச் செய்தியை அவர்களுக்கு நாளை தெரி வியுங்கள் தாதா! பகற் காலத்தில் தெரிவித்தால் அவர்களுடைய துக்கம் சிறிது குறைந்திருக்கும்.
உதிய : நீ கூறுவது சரிதான் குழந்தாய்! இந்தத் துக்கச் செய்தி, இரவில் கழிந்து போகும்படி விட்டு விடுவது நல்லதே. பகற் காலம், துக்கத்திற்கு மிக இனிமையானது. ஆனால் நாளை, அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? துரதிர்ஷ்ட மானது, ஜனங்களுக்குள் பொறாமையை உண்டு பண்ணி விடுகிறது. யாருக்கு அந்தத் துரதிர்ஷ்டம் வந்து சேர்கிறதோ, அவர், அதன் வரவை மற்றவரனைவருக்கும் முந்தியே அறிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களுக்குத் தெரியாதவர் கையில் அத்துரதிர்ஷ்டத்தை விட்டு வைக்க அவர்கள் விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து ஏதோ கவர்ந்து கொண்டு போய் விட்ட தாக நாம் கருதப்படுவோம்.
சேர : இப்பொழுது அதிக நேரமாய் விட்டதல்லவா? பிராத்தனை தொனி என் செவிகளில் விழுகிறது.
மாரி : அவர்கள் சமீபமாக வந்து விட்டார்கள்.
_(பெருந்தேவி பிரவேசிக்கிறாள்.)_
பெருந்தேவி : நான் வந்து விட்டேன் தாதா! ஜனக் கூட்டத்தை மெதுவாக இதுவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அது பாதையில் காத்துக் கொண்டிருக்கிறது. (கூட்டத்திலுள்ள _குழந்தைகளின் கூக்குரல் கேட்கிறது)_ ஆ! குழந்தைகள் இன்னும் அழுது கொண்டிருக் கின்றன. அவை, என்னுடன் வரக்கூடாதென்று தடுத்துவிட்டு வந்தேன். ஆயினும் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. தாய்மார்களும் என் வார்த் தைக்கு இணங்க மறுக்கிறார்கள். (பொறுத்து) வேண் டாம். அவர்களே அழுகையை நிறுத்திக் கொண்டார்கள். (உதிய _மானைப் பார்த்து)_ எல்லாம் சித்தமாயிருக்கின்றனவா? அவ ளுடைய விரலிலிருந்து மோதிரத்தையும் கொண்டு வந்திருக் கிறேன். கைக் குழந்தைக்குச் சிறிது பழமும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். நானே, அவளைத் தொட்டிலில் (பாடையில்) படுக்க வைத்தேன். அவளைப் பார்த்தால் தூங்கிக் கொண் டிருப்பது போலவே தெரிகிறது. அவளுடைய தலை மயிர்தான் அதிக தொந்திரவைக் கொடுத்தது. அதைச் சரியாக ஒழுங்கு படுத்த என்னால் முடியவில்லை. கூடிய வரை ஒழுங்கு செய்து சில புஷ்பங்களையும் அதில் முடித்து வைத்தேன் தாதா! நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? அவர்களோடு நீங்கள் ஏன் இல்லை? (பலகணியைப் _பார்த்து)_ அவர்கள் அதிகமாக அழ வில்லையே! ஓ! அவர்களுக்கு நீங்கள் இந்தச் செய்தியைச் சொல்லக்கூட இல்லையா!
உதிய : பெருந்தேவி! பெருந்தேவி! வாழ்க்கையின் இரகசியம் இன்னும் உனக்கு நன்றாகத் தெரியவில்லை.
பெருந் : அதை நான் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது? (பொறுத்து) நீங்கள் இம்மாதிரி அவர்களிடம் சொல்லாம லிருக்கக்கூடாது.
உதிய : பெருந்தேவி! உனக்கொன்றுந் தெரியாது.
பெருந் : நான் சென்று அவர்களிடம் தெரிவிக்கட்டுமா?
உதிய : இரு, குழந்தாய்! .இங்கேயே சிறிது நேரம் பொறு.
பெருந் : இந்தத் துக்கத்தை அவர்களுக்குத் தெரிவியாமலிருப்பதால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? அவர்களுக்கு இன்னுமா தெரிவியாமலிருப்பது?
உதிய : தெரிவியாம லிருந்தால் என்ன?
பெருந் : எனக்குத் தெரியாது. ஆனால் தெரிவியாமல் முடியாது என்று நான் கருதுகிறேன்.
உதிய : குழந்தாய்! இங்கே வா!
பெருந் : அவர்கள் எவ்வளவு பொறுமை யுடையவர்கள்!
உதிய : இங்கே வா, குழந்தாய்!
பெருந் : (திரும்பி) தாதா! நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள்? எனக்கு மிகுந்த துக்கமா யிருக்கிறது. நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லையே. நான் என்ன செய்வதென்றும் எனக்குப் புலனாகவில்லை.
உதிய : அவர்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் வரை என்னைப் பாராதே.
பெருந் : உங்களோடு நான் வரவேண்டும்.
உதிய : கூடாது. நீ இங்கேயே இரு. உன் சகோதரியுடன் இந்தக் கல்லின் மீது உட்கார்ந்து கொண்டிரு. நீ மிகச் சிறியவள். ஆதலின் இந்தக் காட்சியை நீ எப்பொழுதும் மறக்க மாட்டாய். மரண தேவதை ஒருவனுடைய கண்களில் தாண்டவம் செய்து கொண்டிருக்கையில், அந்தக் கண்களைக் கொண்ட முகம் எப்படி யிருக்கும் என்பதை நீ இன்னும் பார்த்திருக்க மாட்டாய். நான் சொல்லும் துக்கச் செய்தியைக் கேட்டு அப்பெற்றோர்கள் உரத்த குரலில் அழுதாலும் அழக்கூடும். அல்லது அழுகைக்குப் பதிலாகப் பூரண மௌனமே நிரம்பினும் நிரம்பும். அது எப்படி யிருந்த போதிலும் அந்தப் பக்கம் சிறிது கூடத் திரும்பிப் பாராதே. துக்கம், எந்த வழியைக் கடைப் பிடித்துச் செல்லும் என்பதை முன்னாடியே எவரும் நிர்ணயித்துக் கூறமுடியாது. அடி வயிற்றிலிருந்து எழும் சிறிது அழுகையுடனும் நின்று விடுதல் கூடும். அவர்களுடைய நிலையைக் கண்டு நான் என்ன செய்வேன் என்பதே எனக்கு இப்பொழுது தெரிய வில்லை. குழந்தாய்! அவர்களிடம் போகு முன்பு எனக்கு ஒரு முத்தங் கொடு.
_(ஜனக்கூட்டம் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு அருகாமையில் வருகிறது. பிச்சன் என்னும் குடியானவனும் வருகிறான்.)_
சேர : (ஜனக்கூட்டத்தைப் _பார்த்து)_ இங்கேயே நில்லுங்கள். பலகணிக்கு அருகாமையில் போகாதீர்கள். அவர்கள் எங்கே?
பிச்சன் : யார்?
சேர : இறந்து போன பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள்.
பிச் : அவர்கள் நேர் வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
_(உதியமான் குடிசைக்குள் செல்கிறான். மாரியம்மையும் பெருந் தேவியும் கல்லின் மீது உட்கார்ந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் முணு முணுப்புச் சப்தம் கேட்கிறது.)_
சேர : உ! எவரும் பேசவேண்டாம்.
_(குடிசைக்குள், கதவின் உட்புற முள்ள தாழ்ப்பாளை ஒரு பெண் போடுகிறாள்.)_
பெருந் : அவள் கதவைத் திறக்கிறாளா?
சேர : அதற்கு மாறாகத் தாழ்ப்பாளை நன்றாகப் போட்டு விட் டாள்.
_(அனைவரும் மௌனம்)_
பெருந் : தாதா இன்னும் உள்ளே செல்லவில்லையா?
சேர : அந்தப் பெண் மறுபடியும் தாயாரிடம் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டாள். மற்றவர்கள் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். கைக்குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது.
_(சிறிது நேரம் மௌனம்.)_
பெருந் : மாரி! கிட்டே வா!
மாரி : ஏன் அக்கா? _(இருவரும் தழுவி முத்தமிட்டுக் கொள்கின்ற னர்)_
சேர : உதியமான் கதவைத் தட்டி யிருக்க வேண்டும். - அதோ! அவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.
பெருந் : மாரி! மாரி! என் துக்கத்தை அடக்க முடியவில்லையே (மாரியம்மை _மீது தலை சாய்க்கிறாள்.)_
சேர : அவர் மறுபடியும் கதவைத் தட்டுகிறார் போலிருக்கிறது. வீட்டுக்காரர் எவ்வளவு நாழிகையாயிருக்குமென்று பார்க் கிறார்- ஆ! எழுந்திருக்கிறார்-!
பெருந் : மாரி! உள்ளே போக வேண்டுமென்று எனக்கு இருக்கிறது. துக்கத்தில் அவர்களைத் தனியாக விடுவதா?
மாரி : அக்கா! இரு. (போகாதபடி _தடுக்கிறாள்.)_
பெருந் : உனக்கு -
சேர : என்ன?
பெருந் : பிரேதத்தைத் தூக்கிக்கொண்டு வருவோர் -
சேர : சிறிதளவு தான் கதவைத் திறந்தார். ஒரு மூலைதான் தென் படுகிறது. கதவின் மீது கைவைத்து ஓர் அடி பின் எடுத்து வைக்கிறார். ஹா! நீங்களா என்று கேட்கிறார் போலிருக்கிறது. மெதுவாகக் கதவைத் திரும்பவும் சாற்றுகிறார். உங்கள் தாதா உள்ளே சென்று விட்டார்.
_(கூட்டத்தினர், ஜன்னலண்டை வந்து விட்டனர். மாரியம்மையும் பெருந்தேவியும், தங்கள் இடத்திலிருந்து எழுந்து கூட்டத்தினருடன் கலந்து கொள்கின்றனர். உதியமான் உள்ளே நுழைந்ததும், அனைவரும் எழுந்து நிற்கின்றனர். தாயாரும், இரண்டு பெண் குழந்தைகளும் உதியமானை உபசரிக்க முயல்கின்றனர். ஆனால் உதியமான் உபசரணைகளை மறுப்பது போல் பாவனை செய்கிறான். உதியமான் ஜன்னல் பக்கம் பார்க்கிறான்.)_
சேர : இந்தச் செய்தியைத் தெரிவிக்கக் கிழவருக்கு மனம் வரவில்லை. ஜன்னல் பக்கம் பார்க்கிறார்.
_(கூட்டத்தில் முணு முணுப்பு.)_
சேர : உ!
_(உதியமான் மெதுவாக ஒரு நாற்காலியில் உட்காருகிறான். என்ன சொல்வதென்று தெரியாதது போல் முன் தலையைத் தடவிக் கொண்டிருக்கிறான்.)_
சேர : உட்கார்ந்து கொண்டு விட்டார்.
_(உள்ளிருக்கும் அனைவரும் உட்கார்ந்து கொண்டு விட்டனர். உதியமான் ஏதோ மெதுவாகச் சொல்கிறான். எல்லாரும் உற்றுக் கேட்கின்றனர். திடீரென்று தாயார் மட்டும் இடத்தை விட்டு எழுந் திருக்கிறாள்.)_
பெருந் : ஓ! தாயாருக்கு விஷயம் தெரிந்து விட்டது.
_(தாயார் துக்க மிகுதியால் முகத்தை மறைத்துக் கொள்கிறாள். வெளி யிலுள்ள கூட்டத்தில் சிறிது பரபரப்பு உண்டாகிறது.)_
சேர : உ! இன்னும் அவர் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது.
_(தாயார், உதியமானை ஏதோ கேட்கிறாள். உதியமான் பதில் சொல்ல, எல்லாரும் எழுந்துவிட்டனர்.)_
சேர : அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்!- சொல்லி விட்டார்!-
கூட்டத்தில் சப்தம் : சொல்லி விட்டார்! சொல்லி விட்டார்!-சேர : எனக்கொன்றும் கேட்கவில்லை.
_(உள்ளே, உதியமான் எழுந்து கதவுப் பக்கமாகத் திரும்புகிறான். தாயார் வெளியே செல்ல முயல்கிறாள். அதை உதியமான் தடுக்கிறான்.)_
கூட்டத்தில் சப்தம் : அவர்கள் வெளிச் செல்கிறார்கள்! வெளிச்செல்கிறார்கள்!
_(கூட்டத்தில் கலவரம், கூட்டத்தினர் வெளிக் கதவு பக்கமாகச் சென்று மறைந்து விடுகின்றனர். குடிசையிலிருக்கப்பட்டவரும் வெளியே சென்று விடுகின்றனர். அறையில் கைக் குழந்தை மாத்திரம் தூங்கு கிறது.)_
சேர : அம்மட்டும் கைக் குழந்தை விழித்துக் கொள்ளவில்லை.
_(செல்கிறான்.)_
கருத்துகள்
கருத்துரையிடுக