உத்தியோகம்
நாடகங்கள்
Back
உத்தியோகம்
வெ. சாமிநாத சர்மா
உத்தியோகம்
1. உத்தியோகம்
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. அணிந்துரை
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. உத்தியோகம்
9. முன்னுரை
10.நாடக பாத்திரங்கள்
11.முதல் அங்கம்
2. முதல் களம்
3. இரண்டாங் களம்
4. மூன்றாங் களம்
5. நான்காங் களம்
6. ஐந்தாங் களம்
7. ஆறாங்களம்
8. ஏழாங்களம்
உத்தியோகம்
வெ. சாமிநாத சர்மா
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : உத்தியோகம்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 11
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+296=312
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 195/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
பதிப்புரை
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
- படைப்பு இலக்கியமே நாடக இலக்கியம் ஆகும். மாந்த இனம் தோன்றியபொழுதே உணர்ச்சிகளும் தோன்றின. மொழி அறியாத மாந்தன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இன்பம் - துன்பம் கண்ட காலத்தும் தம்முடைய உணர்வு களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் விருப்பமாகவே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே பின்னர் நாடகமாக செழுமையுற்றது.
- அரசியல், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுலகுக்குத் தம் பங்களிப்பாகச் செய்த சாமிநாத சர்மா இந்திய நாட்டின் விடுதலையையும், தமிழகத்தின் குமுகாயப் போக்கையும் நெஞ்சில் நிறுத்தி பாண புரத்து வீரன், அபிமன்யு, மனோதருமம், உத்தியோகம், உலகம் பலவிதம் போன்ற நாடகங்களைப் படைத் தளித்தார்.
- மனோதத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம் _மனோதருமம்_ ஆகும். இதன் பின்னணியும், படைப் பாற்றாலும் நாடகத்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு பெண்ணின் மரணச் செய்தி அந்தக் குடும்பத்தாரிடம் பக்குவ மாக எடுத்துரைக்கப்படும் நிலையும், நுண்ணிய மனவுணர்வு களின் உரையாடல்களும் வாழ்க்கை நிலையற்றது என்பதும் இந்நாடகத்தின் மூலம் அறியும் செய்திகள்.
- பழந்தமிழ் பண்பாட்டின் பண்டைச் சிறப்பும், மேலை நாகரிகத்தால் புண்ணாகிப் போன தமிழர் நிலையும், நாட்டின் நலனை மறந்து வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை பார்ப்பதும். நரம்பெழுந்து உலரிய . . (புறம்.278) என்னும் புறநானூற்று வரி _உத்தியோகம்_ எனும் இந்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வரியாகும்.
- பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட நாடகமே _அபிமன்யு._ பழமைக்குப் புதுப்பொலிவூட்டும் நாடகம். பழய நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சியூட்டி தமிழர்களுக்குக் காட்சியாக அமைத்து தந்த நாடகமே அபிமன்யு.
- செந்தமிழ் நாடெனும் போதினிலே. . .”, காவிரி தென் பெண்ணை பாலாறு . . ”., செல்வம் எத்தனையுண்டு. .”., என்னும் பாரதியின் இந்த வரிகள் இந்நாடகத்தைப் படிப்பார்க்கு தமிழ்மொழி, நாட்டுப்பற்றும், விடுதலை உணர்வும், வீர முழக்கமும் ஏற்படுத்தும்.
- காட்லாந்து விடுதலைப் போராட்டக் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு வழி நூலே _பாணபுரத்து வீரன்_ என்னும் இந்நாடகப் படைப்பு. குறியீடுகளும், காட்சியமைப்பு களும், உரையாடல்களும் இந்தியத் தேசிய விடுதலையைக் களமாக வைத்து எழுதப்பட்டது.
- ஆங்கில வல்லாண்மையின் சூழ்ச்சிகளையும், மக்கள் எழுச்சியையும் நடுவமாகக் கொண்டு விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்னும் வீர முழக்கங்களை மக்களுக்குக் கண்ணாடிப் போல் காட்டுவது. கணவரின் பிரிவும், தன்னை மறப்பினும் தாய் நாட்டை மறவாதீர் என்று கணவனை வேண்டும் வீரமகளின் குறிப்பு.
- தமிழ் நாடக உலகில் முதன் முதலில் ஓரங்க நாடகத்திற்குப் பொன்னேர் பூட்டியவர் சாமிநாத சர்மா. _உலகம் பலவிதம்_ என்னும் ஓரங்க நாடகம் குமுக வாழ்வில் மாறுபட்ட உணர்ச்சி களையும், வேற்றுமைகளையும், சுவையான நிகழ்ச்சிகளையும் படைத்துக்காட்டுவது.
- அரசியல் - இலக்கியம் எனும் கருத்தோட்டத்தின் அழுத்தத்தை மீறி ஒரு நாடக ஆசிரியனாக இருந்துகொண்டு இந்திய விடுதலையுணர்விற்கு ஊக்கம் ஊட்டியவர். நாட்டுப்பற்றும், குமுகாய ஒழுக்கமும் அமைந்த நாடகம். இரண்டாம் உலகப் போரின் காலச்சூழலில் வெளிவந்த நாடகம். இதில் பதின்மூன்று நாடகங்கள் அடங்கியுள்ளன.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
உத்தியோகம்
முன்னுரை
தென்னாட்டிற்குப் புதிய உணர்ச்சியை உண்டாக்கிய தேச பக்தன் என்னும் சீரிய பத்திரிகையின் முதல் ஆண்டு அநுபந் தத்தில் இச்சிறிய நாடகம் முதன் முதலாக வெளியாயிற்று. அதனை இப் பொழுது எவ்வித மாற்றமும் செய்யாமல் அங்ஙனமே வெளியிட் டிருக்கிறேன்.
இதிலுள்ள குறைகளை மன்னித்து எளியேனை ஆட் கொள்ளு மாறு தமிழுலகத்தை வேண்டுகிறேன்.
வெ. சாமிநாதன்
நாடக பாத்திரங்கள்
அப்பு சாதிரி - ஒரு மிராசுதார்
நீலகண்ட ஐயர் - அவர் நண்பர்
மணி சாதிரி - அப்பு சாதிரியின் குமாரர் (நாடகத் தலைவர்)
ஆராவமுத, ஐயங்கார், ப்ரம்மைய்ய - மணிசாதிரியின் தோழர்
பிச்சப்ப செட்டியார் - மணிசாதிரியின் கட்சிக்காரர்
கதிரேசன் செட்டியார் - மணிசாதிரியின் கட்சிக்காரர்
குருமூர்த்தி - வக்கீல் குமாதா
பாலாம்பாள் - அப்புசாதிரியின் மனைவி
யோகாம்பாள் - மணிசாதிரியின் மனைவி (நாடகத்தலைவி)
செல்லம்மாள் - ஆராவமுத ஐயங்காரின் மனைவி
மற்றும், ஒரு கிழவி, பாலிய விதவை, நியாயாதிபதி முதலியோர்.
முதல் அங்கம்
முதல் களம்
இடம் : ஒரு தாழ்வாரம்.
காலம் : முன் மாலை.
_(அப்பு சாதிரி தாழ்வாரத்திலுள்ள ஒரு பெஞ்சியின் மீது சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் பாலாம்பாள் நின்று கொண்டு அவருக்கு வெற்றிலைச் சுருள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்._
அப்பு சாதிரி : இஃதென்ன பைத்தியமாயிருக்கிறாயே ! நாம் செய்த தர்மங்களெல்லாம் வீணாய்ப் போகுமா என்ன?
பாலாம்பாள் : சரிதான் போதும். உங்களுடைய பெருமையை நீங் களே பேசிக்கொள்ள வேண்டாம். ஈச்வரனுடைய அநுக் கிரகம் இருந்தது; பையன் பரீட்சையில் தேறினான். அவ்வளவு தான். கோயிலுக்கு அர்ச்சனை செய்து வைக்கச் சொல்லுங்கள்.
அ : எங்களுடைய பெரியவர்களெல்லாரும் மகா மேதாவிகள் ; பரம்பரையாக அந்த வித்வாம்சம் வந்து கொண்டே யிருக்கிறது. கடவுள் அநுக்ரஹமாவது - மண்ணாவது? எங்கள் பாட்ட னார் - நாகுகனபாடிகள் - பெயரைச் சொன்னாலே இந்த ஊர் நடுங்கும். இப்பொழுது இராமாயணம் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே, இந்தப் பயல்கள், என் பாட்டனார் செருப்பு தூக்குவதற்குக் கூட யோக்கியதையில்லாமல் தவித்துக்கொண் டிருந்தார்கள். ஏன்? என் தகப்பனாரைக் கண்டால் இந்தப் பயல் களுக் கெல்லாம் நடுக்கந்தானே. அவ்வளவு என்ன? என்முன்னே இவர்களை நிற்கச் சொல்; ஒரு கை பார்த்துவிட மாட்டேனா?
பா : ஐயோ ! அப்புறம்? சொல்லும்போதே பயமாயிருக்கிறதே. எதிரில் நின்றால் என்ன செய்து விடுவீர்கள்? உள்ளே ஓடிவந்து ஒளிந்து கொள்வீர்களோ?
அ : சீ ! கழுதை ! (பொறுத்து) பாக்கு கரைந்துபோகின்றதே. சீக்கிரம் வெற்றிலை கொடு. எத்தனை நாழிகை?
பா : அப்பா! என்ன அவசரம் இப்பொழுது உங்களை வெட்டிண்டு போகிறது? வெயிலில் காய்கிறீர்களா? மழையில் நனைகிறீர்களா? தாழ்வாரத்தில் தானே உட்கார்ந்து கொண் டிருக்கிறீர்கள்.
அ : இஃதேது? அடுக்குப் பட்டரை விழுவதுபோல் பேசுகிறாய் !
பா : அது கிடக்கிறது; கோயிலுக்கு அர்ச்சனை செய்து வைக்கச் சொல்லுங்கள்.
அ : அதற்கென்ன? பா-ர்ப்போ-ம்.
பா : பார்போம் கீர்ப்போம் என்று இழுத்துப் பேச வேண்டாம். உடனே செய்ய வேண்டும்.
அ : என்ன அவ்வளவு அவசரம்?
பா : இல்லையோ? ஆட்டம் - பாட்டம் இவைகளுக்கெல்லாம் பணம் செலவழிப்பதற்கு அவசரம். சுவாமிக்குச் செய்ய வேண்டுமென்றால் மாத்திரம் கை பின் வாங்குகிறது. இது யார் பாவமோ தெரியவில்லை.
அ : செ ! பைத்தியம் ! பாவம் என்ற பதத்தையே இங்கு உபயோகி யாதே. என்னமோ நம் பெரியவர்கள் செய்த புண்ணிய வசத்தால் நாம் சௌக்கியமாய் இருக்கிறோம். அசம்பாவிதமான வார்த்தைகளை யெல்லாம் உபயோகிக்கின்றாயே.
பா : என்ன அச்சான்யண்டி அம்மா !
அ : சரி ! அதிகமாய்ப் பேசாதே. அந்தக் குருக்கள் பையனுக்கு இரண்டணா விசிறி யெறிந்தால் அர்ச்சனை செய்துவிட்டு வரு கிறான்.
பா : நிரம்ப நன்றாயிருக்கின்றது, உங்களுடைய வார்த்தையும் பேச்சும். (ஒருவாறு _முகத்தைச் சுளித்துக் கொள்கிறாள்)_
அ : ஐயோ ! கோபம் வந்துவிட்டதா ? என்ன கஷ்ட காலம்?
பா : போதும். அர்ச்சனைக்கு இரண்டணா கொடுத்து விடுகிறா ராம். என்ன தாராளம்? ஈச்வரன் கொடுத்தது பத்து பன் னிரண்டு லக்ஷத்துக்கு இருக்கிறது. அருமையான ஒரு பிள்ளை வக்கீல் பரீட்சையில் பா செய்தான் என்று பத்து ரூபாய் சுவாமிக் கென்று கொடுக்க மனம் வருகிறதா? அதைக் காணோம்.
அ : அநாவசியமாகக் கோயிலுக்கும் குளத்துக்கும் செலவழிப்பா னேன் என்று தான் யோசிக்கிறேன்.
பா : ஆமாம். கோயிலுக்கும் குளத்துக்கும் செலவழிக்கலாமா? கூத்துக்கும் பாட்டுக்கும் செலவழிக்கலாம். ஏனோ இந்த நாதிக புத்தி உங்களுக்கு? வேண்டாம்; விட்டுவிடுங்கள் இதனை. வரும் போது கொண்டு வந்த தொன்றுமில்லை; போகும்போது கொண்டுபோவது மில்லை என்று பெரியவர்கள் சொல்லுவார் கள். காதற்ற ஊசியும் கடை வழிக்கு வாராது காண் என்ற வாக்கியந்தானே பட்டினத்துப் பிள்ளையைத் துறவியாக்கியது?
அ : இஃதேது? பாலு ! பெரிய வேதாந்தம் பேச ஆரம்பித்து விட்டாய்? உன்னுடைய வேதாந்தத்தை எனக்கும் போதிக்க வந்து விட்டாயே ! உம் - அப்புறம்.
பா : அப்புறம் விழுப்புரம்.
_(நீலகண்டய்யர் பிரவேசிக்கிறார். உடனே பாலாம்பாள் உள்ளே சென்று விடுகிறாள்.)_
அ : யார்? நீலகண்ட ஐயர்வாளா! வாருங்கள். உட்காரவேண்டும்.
நீலகண்ட ஐயர் : நிரம்ப சந்தோஷம். இப்பொழுதுதான் பையன் மணி அப் ரெண்டி பரீட்சையில் தேறினான் என்று கேள்விப்பட்டேன். கேட்டவுடன் சந்தோஷம் பொறுக்க முடிய வில்லை. தங் களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்.
அ : பேஷ்! அவ்வளவு தயவு நம்மீது யார் வைத்திருக்கின்றனர்?
நீ : உம் - நம் பெரியவர்கள் நாள் முதற்கொண்டு பரம்பரையான சிநேகம். அது விடாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது. உம் (பொறுத்து) பயல், மணி எங்கே? அவனைப் பற்றி எல்லாரும் பிரமாதமாகச் சொல்லிக்கொள்கிறார்களே!
அ : யாரார் என்னென்ன சொல்லுகின்றனர்?
நீ : மணி இங்கிலீஷிலே நிரம்ப கெட்டிக்காரனாமே. வெள்ளைக் காரர்கள் கூட அவனோடு சரியாக நின்று கொண்டு இங்கிலீஷ் பேச மாட்டார்களாமே.
அ : அவ்வளவு தானா நீர் பார்த்தீர்? பயல் ட்ரெ பண்ணிக் கொண்டானானால் வெள்ளைக்காரன் கெட்டானே.
நீ : உம் - ! நான் அந்த மாதிரி ஒரு நாளும் பார்க்கவில்லை பயலை. இந்தக் காலத்தில் வெளி வேஷந்தான் அதிகமாய் வேண்டி யிருக்கிறது. அதிகமான படிப்பாவது பணமாவது இல்லா விட்டால் கூட, வேஷத்தைப் பார்த்தே ஜனங்கள் மயங்கி விடு கிறார்கள். ஆனால் நம் மணிக்குப் பணத்தில் ஒன்றும் குறை வில்லை.
அ: புத்தியில் தானென்ன? நல்ல மேதாவி. எங்கள் பெரியவர்கள் எல்லாரும் மகாபுத்திசாலிகள். எங்கள் பாட்டனார் - நாகு கனபாடிகள் - தெரியுமோ இல்லையோ உங்களுக்கு?
நீ : அடடா ! இஃதென்ன அப்படி கேட்கிறீர்கள்? உங்கள் பாட்ட னார் எனக்கு நன்றாகத் தெரியுமே. எங்கள் பாட்டனாரும் உங்கள் பாட்டனாரும் நெருங்கிய சிநேகமாச்சே. உங்கள் பாட்டனாரைப்பற்றி எங்கள் தகப்பனார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாரே. உங்கள் பெரியவர்களெல்லாரும் நல்ல புத்திமான்கள்.
அ : அந்த அமிசம் பையனிடத்தில் பூர்த்தியாயிருக்கிறது.
நீ : (இழுத்தாற்போல்) சரி - தா - ன்.
அ : என்ன ஒரு மாதிரியாக இழுக்கிறீர்?
நீ : உம் - உம் - அஃதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம பயலுக்கு என்ன? மணி என்றால் மணிதானே அவன். தட்டினால் ஒசைப்படுமே. மணி என்ற பெயர் அவனுக்கே பொருந்தும்.
அ : பன்றி பத்து குட்டி போடுவதைவிட யானை ஒரு குட்டி போடுவது விசேஷம் என்று ஒரு பழமொழி யுண்டு. அந்த மாதிரி, எனக்குப் பிறந்தன வெல்லாம் இந்த ஒரு பிள்ளையா னாலும் நிரம்ப புத்தி சாலியாகவும், நல்ல அழகுள்ளவனாகவும் இருப்பதைப் பற்றி எனக்குண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே யில்லை.
நீ : இருக்குமோ இல்லையோ? எல்லாருக்கும் சகஜந்தானே.
அ : நம் பையனை இலேசாக நினைக்க வேண்டாம் நீங்கள். சமயத் திற் கேற்ற புத்தி அவனுக்கிருக்கிறதுபோல் வேறொருவருக்கும் இராது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீ : உம்! மணிக்கு என்ன வயசு இப்பொழுது?
அ: ஏன்? ஜாதகம் பார்க்கிறீர்களா? பார்க்கத் தெரியுமோ உங்க ளுக்கு?
நீ : எனக்கு ஒன்றுந் தெரியாது. வயசு என்ன ஆயிற்று என்று தான் கேட்டேன்.
அ : தாது வருஷத்துப் பஞ்சத்தின்போது அவன் பிறந்ததாக எனக்கு ஞாபகம். ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும்.
நீ : அப்பொழுது பையனுக்கு நிரம்ப வயசாகிவிட்டாற் போலிருக் கிறதே. இவ்வளவு நாள் கழித்த பிறகா அவன் அப்ரெண்டி பரீட்சையில் தேறினான்?
அ : அவன்மேல் ஒன்றுங் குற்றமில்லை. நான் அவனைப் படிக்கவைத்ததே பதினாறாவது வயதில்தான். அது வரைக்கும் அவன் செல்லப் பிள்ளையாக வளர்ந்து விட்டான்.
நீ : அப்படியிருந்தால்கூட, இத்தனை நாட்களில் அவன் வக்கீலாக வந்து நிரம்ப பணம் சம்பாதித்திருக்கலாமே.
அ : ஆமாம். அடியிலிருந்து பி. ஏ. வரைக்கும் நேராக வந்திருந்தால் நீங்கள் சொல்லுகிற மாதிரிதான் நடந்திருக்கும். ஒவ்வொரு கிளாசிலும் இரண்டு வருஷம் - மூன்று வருஷம் - இப்படி - இருந்து கொண்டே வந்தான். அதனால்தான் கொஞ்சம் தாமத மாயிற்று ஆனாலும் பையன் புத்திசாலிதான் - அதைப்பற்றிச் சந்தேகமேயில்லை.
நீ : ஒவ்வொரு கிளாசிலும் தவறாமல் பரீட்சையில் தேறிக் கொண்ட வந்த பிள்ளைகள் மாத்திரம் என்ன ஆயிரம் ஆயிர மாகச் சம்பாதித்து விடுகிறார்கள்? ஒன்றுமில்லை. எத்தனை கிளாசுகளில் தப்பினால்தான் என்ன? பையன் புத்திசாலியாக இருக்கவேண்டியது நமக்கு முக்கியம்.
அ : அதுதான். சூட்சுமத்தை அறிந்து நீங்கள் வார்த்தை சொல்லுகி றீர்கள்!
நீ : அது சரி. பிள்ளையாண்டான் இனிமேல் யாராவது ஒரு வக்கீலின் கீழிருந்து வேலை கற்றுக்கொள்ள வேண்டாமா?
அ : (தூங்கி _எழுந்தவர்போல்)_ ஆமாம். மறந்தே போய் விட்டேன் பார்த்தீர்களா! உங்களிடத்தில் இதைப் பற்றி யோசிக்க வேண்டு மென்றே யிருந்தேன். அதற்குள் மறந்துவிட்டேன். நல்ல வேளை யாக ஞாபகப்படுத் தினீர்கள். உம் - பையனை எந்த வக்கீ லிடத்தில் கொண்டுவிடலாம்? சொல்லுங்கள்.
நீ : (சிறிதுநேரம் _யோசித்து)_ உம் - நம்ம கீழக்குடி கிருஷ்ணசாமி ஐயர்வாள் கிட்டே கொண்டுவிடலாமா? எனக்கு அவர்கள் நிரம்ப பரிச்சயம்.
அ : மனுஷ்யன் எப்படி?
நீ : நல்ல யோக்கியர்; பூதிதி சமர்த்தியாக இருக்கிறது. ரொக்கமும் கையில் ஏராளமாய் உண்டு. அவைகளைக் கொண்டுதான் இங்கு ஜீவனம் செய்கிறார்.
அ : ஆனால் வக்கீல் வேலையில் அவருக்கு ஒன்றும் வருவ தில்லையோ?
நீ : அதை அவர் கவனிப்பதேயில்லை. ஆனால் லாபாய்ண்டுகளை (Law Points) யெல்லாம் நன்றாக அறிந்தவர். நமக்கு முக்கியமாகப் பையன் வேலை கற்றுக்கொள்ள வேண்டியது தானே. அவருக்கு வரும்படி வந்தாலென்ன? வராவிட்டால் என்ன?
அ :- நீர் சொல்வதும் வாதவந்தான். மனுஷ்யன் தன்மை எப்படி? அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் பிள்ளை யாண்டான் ஒருவருக்குக் கீழ் அடங்கி உத்தரவு சொல்லமாட் டான். அதற்காகவே அவன் வக்கீல் பரீட்சைக்குப் படித்துப் பா பண்ணினான்.
நீ : அது வாதவந்தான். அந்த மாதிரியான எண்ணம் அவனுக்கு உதித்தது உங்களுடைய பாக்கியந்தான். (பொறுத்து) உம்- கிருஷ்ணசாமி ஐயர் நிரம்ப நல்லவர்; அன்ன தாதா; இல்லை யென்று அவர் வாயால் வராது; வீட்டில் என்னமோ? உம் - இன்னும், பொது விஷயங்களில் தலையிட்டுழைப்பவர். ஆனால் எரி மூஞ்சி.
அ : ஐயையோ! அப்படியானால் வேண்டவே வேண்டாம். நம் பையன் அவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான். வேறெ யாரையாவது சொல்லும்?
நீ : (சிறிது _நேரம் யோசித்துப் பிறகு மறந்தது ஞாபகம் வந்ததுபோல்_) உ - மறந்தேவிட்டேன். நம் மேல்பாதி மஹாதேவ ஐயர் இருக்கும்போது நமக்கு ஏன் யோசனை?
அ : அவர் எப்படி?
நீ : என்ன ஒன்றுந் தெரியாதவர் போலக் கேட்கின்றீரே? மஹாதேவ ஐயர் தெரியாதோ உங்களுக்கு?
அ : எந்த மஹாதேவ ஐயர்?
நீ : மேல்பாதி மஹாதேவ ஐயர் தெரியாதோ? அசட்டு சுப்பைய்யர் பிள்ளை; இந்த ஊரிலே பெரிய வக்கீலாக இருக்கின்றாரே.
M : X!ஓ! நம்ம அசட்டு சுப்பன் பிள்ளை மஹாதேவனா? யாரோ என்று பார்த்தேன், இந்த ஊரிலேயா இருக்கிறான் அவன்?
நீ : நெடுநாளாக இந்த ஊரிலே தான் அவர் இருக்கிறார்.
அ : அவர் என்ன அவனுக்குப் பட்டம்? நம் அகத்திலே சோற்றுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் அந்தப் பயல்.
நீ : இருக்கலாம். உங்கள் வீட்டிலே வந்து தாளம் போடாதவர்
யார்? மஹாதேவ ஐயர், இந்த ஊருக்குள்ளே பெரிய வக்கீல். ஜட்ஜுக்கு அவரிடத்தில் நிரம்ப அபிமானம் உண்டு. சிக்கலான கேசுகளெல்லாம் அவரிடத்தில் தான் வரும். பேசாமல் அவரிடத்தில் மணியைக் கொண்டு விடலாம்.
அ : நம் வீட்டில் சோற்றுக்குத் தடமாடின ஒருவன் கீழா நம் பையன் இருப்பது என்று தான் யோசிக்கிறேன்.
நீ : அப்படி யெல்லாம் பார்த்தால் நம் பையன் விருத்தியடைவ தெப்படி? அதைத் தானே நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும்.
அ : எனக்கொன்றுந் தடையில்லை. பையன் அதற்குச் சம்மதிப்பானா என்பதே கேள்வி.
நீ : பையன் புத்திசாலி என்பதற்கு என்ன அடையாளம்? பெரியோர் சொன்ன வார்த்தையைக் கேட்பது தானே அழகு.
அ : சரி! அப்படியானால் மணியை மஹாதேவனிடத்திலேயே கொண்டுவிட்டு வருவோம். நமக்குக் காரியம் பிரதானமா? வீரியம் பிரதானமா?
நீ : அப்படியே செய்யுங்கள். எனக்கு உத்தரவா? ஞாபக மிருக்கட்டும்.
அ : ஏன் போகிறீர்கள்? காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாமே.
நீ : எனக்கு அந்த வழக்கமில்லை.
அ : பாதகமில்லை. கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கள். (உள்பக்கமாகத் _திரும்பி எழுந்து)_ வாருங்கள். உள்ளே போக லாம். யார் அங்கே உள்ளே? காபி கொண்டுவை ஐயர்வாளுக்கு. ஐயர்வாளுக்கு நிரம்ப சிரமம். வாருங்கள்; போகலாம்.
_(இருவரும் செல்கின்றனர்.)_
இரண்டாங் களம்
இடம் : ஒரு விளையாட்டு மைதானம்.
காலம் : மாலை.
_(மணி சாதிரி ஒரு மாதிரியான ஐரோப்பிய உடைதரித்துக்கொண்டு யோசித்த வண்ணம் தனியாக உலவிக் கொண்டிருக்கிறார்.)_
மணி சாதிரி :- (தமக்குள்) என்ன பெரிய தொல்லையாக இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் இருத்தல் என்றைக்குங் கஷ்டந்தான். சாதிரி என்ற பட்டம் நமக்கு வந்தாலும் வந்தது; தற்கால நாகரிகத்திற் கொத்தவாறு நடந்த கொள்ள முடிவதில்லை. இந்த க்ராப் பண்ணிக் கொள்ள நான் பட்ட பிரயத்தனம் எண்ணத்தரமன்று. பென்சர் ஸிகாரை வாயில் வைத்துக் கொண்டு மோடாரில் போனால் அஃதொரு கௌரவமாகவே இருக்கிறது. நாம் அந்த மாதிரி செய்யலா மென்றால் வீட்டில் தாயார் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. தற்கால நாகரிகப்படி நடந்து கொண்டு சொஸைடியில் நான்கு பேருடன் பழகினால் தான் நல்லபேரும் கிடைக்கும்; நம்மிடத்தில் எல்லாருக்கும் ஒரு வித மதிப்பும் உண்டாகும். அதற்கென்னடாவென்றால் தாயார் ஒரு பெரிய முட்டுக் கட்டையாக வந்து சேர்ந்து கொண்டாள். உம் - (யோசிக்கிறார்).
_(ஆராவமுத ஐயங்கார் பிரவேசிக்கிறார்.)_
ஆராவமுத ஐயங்கார் : நமகாரம்.
மணி சாதிரி : ஓ! குடீவினிங் (Oh! Good Evening.)
ஆ : பேஷ்! எந்தக் கப்பலில் வந்திறங்கினீர்கள் துரையவர்களே!
ம :- என்ன ஆராவமுது! பரிகாசம் செய்கிறாய்?
ஆ : பின் என்ன? நமகாரம் என்று சொன்னால் குடீவினிங் என்று சொல்கிறாயே. உனக்குத்தான் இங்கிலீஷ் தெரியுமோ?
ம : அப்படி யெல்லாம் ஒன்று மில்லை. அதே வழக்கமாய்ப் போய் விட்டது. உம் - சரி; என்ன விசேஷம்?
ஆ : இந்த க்ராப் எப்பொழுது பண்ணிக் கொண்டாய்?
ம : இப்பொழுதுதான் பண்ணிக்கொண்டேன். சுமார் பத்து நாட்க ளாயின.
ஆ : என்ன இப்படி திடீரென்று மாறுதலடைந்ததற்குக் காரணம்?
ம : என்ன புதிதாகக் கேட்கிறாய்? உனக்கு ஒன்றுந் தெரியாதோ?
ஆ : என்ன விசேஷம்? எனக்கு ஒன்றுந் தெரியாதே.
ம : ஐ ஆம் எ லாயர் நௌ. (I am a lawyer now.)
ஆ : (ஆச்சரியப் _பட்டவன் போல்)_ என்ன?
ம : நான் இப்பொழுது ஒரு வக்கீல் என்பது உனக்குத் தெரியாதோ?
ஆ : அப்ரெண்டி பரீட்சையில் பா பண்ணிவிட்டாயோ நீ?
ம : (ஓ! _ஓ! என்று தலையை யசைக்கின்றார்.)_
ஆ : அப்படியா! நிரம்ப சந்தோஷம். எனக்குத் தெரிவிக்கவே யில்லையே நீ?
ம : மறந்து விட்டேன்.
ஆ : ஆமாம்; சிறிது அந்தது உயர்ந்தால், பழைய சிநேகிதர்களை மறந்து விடுவது சகஜந்தான். உம் - இப்பொழுது யாரிடத்தில் ஜுனியராய் இருக்கிறாய்?
ம : மஹாதேவ ஐயரிடத்தில்.
ஆ : பேஷ்; நல்ல வக்கீலிடத்தில்தான் சேர்ந்து கொண்டாய்.
ம : அவர் இன்னாரென்று உனக்குத் தெரியுமோ?
ஆ : இஃதென்ன அப்படி கேட்கின்றாய்? மஹாதேவ ஐயரை அறியா தவர்கூட இவ்வூரில் உண்டோ? மஹாதேவ ஐயர் என்றால் அழுத பிள்ளையும் வாயை மூடிக்கொள்ளுமே.
ம : அந்த மஹாதேவ ஐயர் தான் எங்கள் வீட்டில் சோற்றுக்குத் தாளம் போட்டவர்.
ஆ : அஃதென்ன விசேஷம்?
ம : அவருக்கு நேற்று வந்த வாழ்வுதானே இஃதெல்லாம். இதற்குமுன் வயிற்றுக்கில்லாமல் அலைந்தவர்தானே அவர். எங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டு வக்கில் பரீட்சை யில் தேறினார். அதை நினைத்துக் கொண்டால் மாத்திரம் அவரி டத்தில் நான் ஜுனியராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொள் வது கூட மானக்கேடாக இருக்கிறது.
ஆ : பேஷ்! மணி! புத்திசாலி நீ. (தட்டிக்கொடுக்கிறார்.) என்ன கௌரவம்! என்ன கௌரவம்!! (பெருமூச்சு _விட்டுக் கொண்டே தமக் குள் நகைத்துக் கொள்கிறார்.)_
ம :- என்ன?
ஆ : ஒன்றுமில்லை. இந்தக் காலத்து கௌரவம், நாணயம், அந்தது, நாகரிகம் இவைகளை யெல்லாம் நினைத்துப் பெரு மூச்சு விடுகிறேன்.
ம : ஏன்?
ஆ : மஹாதேவ ஐயர் உங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டே வக்கில் பரீட்சைக்கு வாசித்துத் தேறினார். அவர் இப்பொழுது இந்த ஊரில் பிரபல வக்கீலாயிருக்கிறார். அவ ரிடத்தில் வேலை கற்றுக் கொள்வது உனக்கு அவமானமா யிருக்கிறது, அல்ல?
ம : பின் இல்லையோ?
ஆ : ஆமாமாம் (பொறுத்து) போடா போ முட்டாள். கௌரவ மாம் கௌரவம்? என்ன பெரிய மனுஷத்தனம் அப்பா!
ம : என்ன ஆராவமுது! கோபித்துக் கொள்கிறாய்?
ஆ : பின் என்னடா? மஹாதேவ ஐயரிடத்தில் இருந்தால் உனக்கு என்ன கௌரவம் குறைந்துவிட்டது? அவரிடத்தில் ஜுனிய ராக இருக்க நீ பாக்கியம் பெற்றாய் என்று சொல்லவேண்டும்.
ம : அடடா! நேற்றுச் சோற்றுக்கு வீங்கின மஹாதேவ ஐயர், இன்று வக்கீல் மஹாதேவ ஐயராகப் போய்விட்டார். அவ்வளவுதானே.
ஆ : இன்னும் என்ன வேண்டும்? நேற்றுத் தெருவில் விளையாடிக் கொண்டு ஊர்ச்சண்டைகளை யெல்லாம் விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த மணி, இன்று மணி சாதிரியாகி, வக்கீலாகி, க்ராப் பண்ணிக்கொண்டு, செல்ப் ரெபெக்ட், சிவிலிசேஷன் (Self Respect, Civilization) என்று இங்கிலாந்தில் பிறந்தவனைப் போலவே பேசிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதானே.
ம : சரி; உனக்கென்ன வேலை? வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பாய். நான் போய் இரண்டு ஆட்டம் ஆடினாலும் பிரயோஜனமுண்டு.
ஆ : மணி! நான் சொல்வதைக் கேள். என்மீது வீணாகக் கோபிக்க வேண்டாம். இந்த வேஷமெல்லாம் எதற்கு? நீ என்ன வெள்ளைக் காரனா? இங்கிலாந்து எந்தத் திக்கில் இருக்கிறது என்றாவது உனக்குத் தெரியுமா? வெள்ளைக்காரரில் யாராவது நம்மைப் போல் உடை யணிந்து கொண்டிருக்கின்றாரா? இந்த க்ராப் இல்லாமல் உனக்கு எந்த மூலையில் குறைவாக இருந்தது?
ம : (ஒருவாறு _முகத்தை வைத்துக்கொண்டு)_ என்ன அதிகமாகப் பேசுகிறாயே?
ஆ : நான் சொல்வதைத் தப்பாக அர்த்தம் செய்து கொண்டால் உன் னிடத்தில் ஒன்றும் பேசவேயில்லை. என்னுடைய உண்மை யான சிநேகிதனாக உன்னை நான் நினைத்துக்கொண்டிருப்ப தால் உனக்குச் சில வார்த்தைகள் கூற விரும்பினேன். இல்லா விட்டால் எனக்கு என்ன அக்கரை?
ம : நீ என்ன சுத்த கர்நாடகமாக இருக்கிறாயே? ஐம்பத்தேழாவது தேசத்திலிருந்து உதித்தனையோ நீ! காலத்திற் கேற்றவாறு நாம் நடந்து கொள்வதை விட்டு, ஆசாரம் - ஆசாரம் என்று அழுது கொண்டிருப்பதே உன்னைப் போன்றவருடைய வேலை. இதனால் நீங்களும் கெடுகின்றீர்கள்; பிறரையும் கெடுத்து விடுகின்றீர்கள்.
ஆ : தோளுக்கு மிஞ்சிய தோழன் நீ. என் செய்வது?
_(ப்ரம்மய்யன் விளையாட்டு உடையுடன் பிரவேசிக்கிறான்.)_
ப்ரம்மய்யன் : கமான்! மணி!
ம : கம் ஹியர். ஹியர் இ எ கண்ட்ரி ப்ரூட் (Come here. Here is a country brute)
ப் : ஏமி சமாசாரம்?
ம : நமக்குப் பெரிய தத்துவங்களை யெல்லாம் போதிக்க ஆரம் பித்து விட்டார் நம் ஆராவமுத ஐயங்கார். தெரியுமோ இல்லையோ இவர் உனக்கு?
ப் : (தலையை _யசைத்துக் கொண்டே)_ என்னய்யா சொல்றிங்கோ நீங்கோ?
ஆ : நான் சொல்வது உங்களுக்கு ஏளனமாக இருக்கிறது போல் தெரிகிறது.
ப் : அதியந்த லேது. மீரு பாக செப்பண்டி.
ஆ :- உங்களுடைய வேஷங்களும் எண்ணங்களும் எனக்குப் பிடிக்க வில்லை.
ப் : காரணம்?
ஆ : நம் பெரியவர்கள் அனுஷ்டித்து வந்த பழக்க வழக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு, மேனாட்டு உடைகளை அணிந்து கொண்டு, மேனாட்டு நாகரிகத்தில் மயங்கிக் கிடக்கின்றீர்களே; எனக்குப் பிடிக்கவேயில்லை. இப்பொழுது க்ராப் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதனால் உங்களுக்குண்டான இலாபம் என்ன?
ம : பெரியவர்கள் வைத்துக்கொண்ட மாதிரி நீ உன் தலைமயிரை வைத்துக்கொண்டிருக்கிறாயே, அதனால் உனக்கென்ன இலாபம்?
ஆ : சரி. நீ குதர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டாய். பிறகு உன்னு டன் சாத்தியப்பட்டால் பேசுகிறேன். நான் இப்பொழுது போய் வருகிறேன்.
ப் : கோபிஞ்சகண்டி.
ஆ : எனக்குக் கோபமே கிடையாது!
ப் : ஐதே வெள்ளி வதாரா?
ஆ : மணி! போய் வருகிறேன். பெரிய மனிதன் நீ! ஞாபகமிருக் கட்டும்.
_(செல்கிறார்.)_
ம : அவன் பேசுகிறதைப் பார்த்தாயா?
ப் : அதிபோதுந்தி. மீ வக்கீலு எட்ல உன்னாரு?
ம : எங்கள் வக்கீலா? என்னிடத்தில் நிரம்ப ஆசையாயிருக்கிறார். எந்தக் கேசுக்கும் என்னிடத்தில் யோசியாமல் கோர்ட்டுக்குச் செல்வ தில்லை. அவருக்கு ஏதேனும் சந்தேகங்கள் தோன்றிவிட் டால் அவை களை என்னிடத்தில் வந்து கேட்பார். அவைகளுக் கெல்லாம் நான் தகுந்த சமாதானம் சொல்லுவேன். எல்லாம் நம் சாமர்த்தியத்திலிருக்கிறது.
ப் : அதி சரே.
_(குருமூர்த்தி பிரவேசிக்கிறான்.)_
குருமூர்த்தி : (மணிசாதிரியைப் _பார்த்து)_ நமகாரம். அண்ணா.
ம : என்ன குருமூர்த்தி! என்ன விசேஷம்?
கு : ஒன்றுமில்லை. தங்களுடைய தயவுக்குத்தான் காத்துக்கொண் டிருக்கிறேன்.
ம : என் தயவு எதற்கு அப்பா? உன்னுடைய தயவே எங்களுக்கு வேண்டும்.
கு : அஃதென்ன அண்ணா அப்படிச் சொல்லுகின்றீர்களே?
ம : பின் இல்லையோ? நீ ஏதாவது கேசு - கீசு கொண்டு விட்டால் தானே எங்களுக்கெல்லாம் பிழைப்பு உண்டு.
கு : அதற்கென்ன அண்ணா! வேண்டிய கேசுகள். நீங்கள் நம்மைக் கொஞ்சம் பார்த்துக்கொண்டீர்களானால் கேசுகள் உங்களி டத்தில் வந்து விழாதா?
ம : என்ன பார்த்துக்கொள்ளவேண்டும்? ஒன்றையும் ஒளியாமற் சொல்?
கு : நான் கேட்கிறேனென்று நீங்கள் ஒன்றும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. நான் ஏழை; குடும்பி; இதைக்கொண்டே நான் ஜீவனம் செய்யவேண்டியதாயிருக்கிறது.
ம : அஃதெல்லாம் ஒன்றுமில்லையப்பா. நீ தாராளமாய்ச் சொல். கேசுகள் பிடித்துக்கொடுத்தால் உனக்கென்ன கொடுப்பது வழக்கம்? வழக்கம்போல் வாங்கிக்கொண்டு போ.
கு : நான் மாமூலாக நூற்றுக்கு இருபத்தைந்து வாங்குகிறேன்.
ம : அதற்கென்ன? அப்படியே வாங்கிக்கொண்டு போ.
கு : நிரம்ப சந்தோஷம். வேண்டிய கேசுகள் உங்களிடத்தில் கொண்டு வருகிறேன். தாங்கள் இப்பொழுது மேல்பாதி மஹாதேவ ஐயர் கீழே தானே இருக்கின்றீர்கள்?
ம : அவர் கீழே என்ன?
கு : அவருடைய ஜுனியராகத் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
ம : (வெறுப்புள்ளவர் _போல்)_ ஆமாம்.
கு : அவர் கூட உங்களைப் பற்றி நிரம்ப சொன்னார்.
ம : என்ன சொன்னார்?
கு : நிரம்ப புத்திசாலி யென்றும், சிக்கலான கேசுகளை யெல்லாம் விளக்கப்படுத்திச் சொல்லும்படியான சாமர்த்தியம் உங்களிடத் தில் இருக்கிறதென்றும் சொன்னார்.
ம : வேறு ஒன்றும் சொல்ல வில்லையே.
கு : ஒன்றும் இல்லை. நான் போய் வரட்டுமா?
ம : சரி. ஞாபக மிருக்கட்டும்.
கு : அடடா! அஃதென்ன அப்படிச் சொல்லுகின்றீர்கள்.
_(செல்கின்றான்.)_
ப் : ராவய்ய மனமு போதாம்; ரெண்டு ஆட்டமைன ஆடவச்சுனு.
ம : ஆல்ரைட் (Alright)
_(செல்கிறார்கள்.)_
மூன்றாங் களம்
இடம் : ரெயிலடி.
காலம் : காலை.
_(பிச்சப்ப செட்டியாரும் கதிரேசன் செட்டியாரும் பிரவேசிக்கின்றனர்.)_
பிச்சப்ப செட்டியார் : அடி ஆத்தே; பொட்டி எங்கே?
கதிரேசன் செட்டியார் :- எங்கணுவைச்சா? என்ன டாப்பா யளவு? டேசன்லயாவது போய்ப்பாரு.
பி : அடேயளவே
_(டேஷன் பக்கமாகச் செல்கிறார். அப்பொழுது குருமூர்த்தி பிச்சப்ப செட்டியினுடைய பையை எடுத்துக் கொண்டு வருகின்றான்.)_
க : இதோ ஐயா எடுத்து வாராகளே.
பி : எங்கேரிந்து சாமி எடுத்து வாரேக?
கு : யார்தையா பெட்டி இது?
க : எங்களுத்தாஞ் சாமி.
கு : இப்படித் தான் போட்டு விட்டு வந்து விடுகின்றதோ?
பி : எங்களுக்கு ஒண்ணும் தெரியாது சாமி.
கு : பையை எடுத்துக் கொண்டு வருவதற்குக் கூடவா தெரியாது?
க : கோவிச்சுக்காதங்கையா. அந்தப் பொட்டியே இந்தாலே கொடுங்க. அதலே கோட்டு கட்டு, நோட்டு இதுங்கள்ளாம் வைச்சிருக்கு.
கு : ஏதாவது கேசு விஷயமாக இங்கே வந்தீர்களோ?
பி : ஆமாஞ்சாமி.
_(குருமூர்த்தியிடத்திலிருந்து பெட்டியை வாங்கிக் கொள்கிறார்.)_
கு : (தனக்குள்) நல்ல ஆசாமிகள் தான்; நன்றாக ஏமாற்றலாம். (பிரகாசமாய்) நீங்கள் எந்த ஊர்? தேவ கோட்டையா? கானாடுக்காத்தானா?
க : ஏன்?
கு : உங்கள் இரண்டு பேரையும் முன்னே நான் பார்த்திருக்கிறேன்.
பி : எங்கே சாமி?
கு : உங்களுடைய ஊர் எது? சொல்லுங்கள்?
க : கானாடுக் காத்தான்.
கு : உங்களுடைய விலாசம் என்ன?
பி : வயி. சே. பிச்சப்ப செட்டி என் விலாசம். ராம. சொ. ராம. கதிரேசன் செட்டி அவன் விலாசம்.
கு : (எல்லாம் _தெரிந்தவன்போல்)_ ஆ! அப்படிச் சொல்லுங்கள். வயி. சே. பிச்சப்ப செட்டியாரா நீங்கள்? அவர் ராம- -சொ-ராம கதிரேசன் செட்டியார். சரிதான்; இப்பொழுது தெரிந்தது. உங்கள் ஊர் கானாடுக் காத்தான்தானே. தேவ கோட்டையிலே உங்களுக்கு லேவாதேவி உண்டு; இல்லை?
பி : ஆமாம்; ஐயா ரொம்ப பழகினவபோல இருக்காங்களே.
கு : என்ன? நன்றாகத் தெரியுமே; உங்கள் ஊரில் எல்லாரும் எனக்கு தெரியுமே. வீரப்பசெட்டியார் இருக்கிறாரோ?
க : எந்த வீரப்ப செட்டியார்? வ. சோ. வீரப்ப செட்டியாரா?
கு : அவர் தான், அவர் தான். எனக்கு, மாயாண்டி செட்டியார், சிதம்பர செட்டியார், இராமசாமி செட்டியார் எல்லாரும் தெரி யுமே.
பி : ஐயாவுக்கு அவங்கள்ளாம் எப்படித் தெரியும்?
கு : கோர்ட்டு மூலமாகத் தெரியும். அவர்கள் எந்தக் கேசு வந்தாலும் என்னிடத்தில் தான் கொடுப்பார்கள். அவர்கள் என்னிடத்தில் கொடுக்கிற கே ஒன்றாவது தோற்றுப்போனதேயில்லை. என் னாலே அவர்களுக்கு எத்தனையோ லக்ஷம் ரூபாய் இலாபம் வந்திருக்கிறது.
க : ஐயா இங்கே வைக்கலோ?
கு :- வக்கீல்களெல்லாம் கிடக்கிறார்களய்யா. என்னிடத்தில் எத்தனை வக்கில்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரி யுமா?
_(குருமூர்த்தியின் நண்பன் ஒருவன் பிரவேசிக்கிறான்.)_
கு - நண்பன் : எங்கே இப்படி? அவசரமா?
கு : எங்குமில்லை. நம்ம செட்டிமார் இரண்டு பேரும் கானாடுக் காத்தானிலிருந்து கே விஷயமாக வந்திருக்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு போகிறேன்.
கு - ந : என் கேசைக் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா? அவ்வளவு தயவு இல்லையா?
கு : அட பைத்தியமே! உனக்கென்னடா? (அவன் _அருகிற்சென்று இரகசியமாய்ப் பேசுகிறான்.)_
பி : ( _கதிரேசன் செட்டியாரைப் பார்த்து)_ ஐயா ரொம்ப பெரியவக. எல்லாந் தெரிஞ்சவங்கபோலிருக்கு.
க : அப்படித்தான் தோணுது. நம்ம கேசை இவங்க கையிலேயே கொடுத்திடலாமே?
பி : எனக்கும் அதான் தோணுது. நமக்கு முன்னே பின்னே தெரிஞ்ச வரா இருக்கிறாரு. நம்ம வீரப்பனெ தெரியுமாமலே இவருக்கு?
க : அதான்; பேசாதே இவர் கையிலேயே கேசை கொடுத்துடலாம். ரொம்ப நாணயதர் போலிருக்குது. நம்ம பையைக்கூட எடுத்துக்கொடுத்தாரே.
_(தன் நண்பனை விட்டு குருமூர்த்தி திரும்பி வருகிறான்.)_
கு : என்னையா? என்ன விசேஷம் இந்த ஊருக்கு வந்தீர்கள்?
பி : எல்லாம் உங்களிடத்திலே தாஞ்சாமி.
கு : என்னிடத்திலேயா? என்ன விசேஷம்?
க : எங்களது ஒரு கேசு. அது அப்பீலுக்கு இங்கு வந்திருக்கு.
கு : கேசினுடைய சாராம்சம் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம்.
பி : இதோ இருக்காறாரே கதிரேசன் செட்டியார். -
கு : இருக்கிறார் இதோ.
பி : இவருக்கு தமையன் மெய்யப்ப செட்டியார்னு ஒத்தர் இருந்தாரு. அவர் - உம் - என்னாடாப்பா யளவு - மறந்து போச்சு - கதிரேசா! உங்கண்ணாத்தே எப்போ இறந்து போனாரு?
க : போன வருசம் சித்திரையிலே.
பி : ஆமாம், ஆமாம். போன வருசம் சித்திரையிலே இந்தக் கதிரே சன் செட்டியாருடைய தமையனார் மெய்யப்ப செட்டியார் இறந்துவிட்டார்.
கு : சரி! அப்புறம். -
பி : அவருக்கு ஒரு பத்து லச்சத்துக்கு இருக்குது. ஆனா அவருக்கு புள்ளே குட்டி ஒண்ணுமில்லை. ஒரே ஒரு சம்சாரந்தான்.
கு : ஒரே ஒரு சம்சாரந்தானா?
பி : ஆமாமய்யா, அத்தெப்பத்தி சந்தேகப்பட வேண்டாம். இங்கே கொஞ்சம் கவனமா கேளுங்க சாமி.
கு : உம் - சொல்லுங்கள்.
பி : அவர் இறந்து பூட்டாரா - யாரு? மெய்யப்ப செட்டியார்.
க : சுருக்கச் சொல்லியளுவே.
பி : அட இர்ராப்பா யளவு; அவசரப்பட்ரே; பையத்தானே சொல்லியளணும். (பொறுத்து) பத்து லச்சத்தை அநுபவிக்க மெய்யப்ப செட்டியாருக்குப் புள்ளைகுட்டி ஒண்ணுமில்லே. அதனாலே அந்த சொத்துக்கு யார் வார்சு?
கு : நீங்கள் யாரென்று சொல்கிறீர்கள்?
பி : அந்தப் பத்து லச்சத்தை யார்யா அநுபவிக்கிறது?
கு : அதைத்தான் சொல்லுங்கள் என்கிறேன்.
பி : கீழ்க் கோர்ட்டிலே மெய்யப்ப செட்டியாருடைய பெண்சாதிக் குத் தான் அந்தப் பத்து லச்சமும் என்று தீர்ப்புச் சொல்லிப் போட்டான்.
கு : அது சரி என்கிறீர்களா? தப்பு என்கிறீர்களா?
பி : தப்பய்யா தப்பு. அவன் முட்டாப்பய; கண் மூடித்தனமாய்த் தீர்ப்புச் சொல்லிப்போட்டான். அதுக்குத் தான் அப்பீலுக்கு இந்தூருக்கு வந்திருக்கோம்.
கு : கீழ்க்கோர்ட்டில் ஏன் அந்த மாதிரி தீர்ப்புச் சொல்லப்பட்டது?
பி : (சிறிது _கோபத்துடன்)_ அந்த மெய்யப்ப செட்டியார் சொந்தமா சம்பாதிச்சதான் அந்தப் பத்து லச்சமும். அதனாலே அது பங்காளிக்குப் பாத்தியமில்லையாம்.
கு : அவ்வளவு தானே உங்க கே.
பி : ஆமாஞ் சாமி.
கு : பேஷா ஜெயிக்கும் உங்க கே. நமக்குப் போட்டுவிட வேண்டிய சில்லரையை மாத்திரம் சரியாகப்போட்டு விடுங்கள். உங்க கே உடனே ஜெயிக்கிறதா இல்லையா பாருங்கள்.
பி : அதாஞ் சாமி எங்களுக்கு வேண்டியது. உங்களை நாங்க கைவிட்டுவிடமாட்டோஞ் சாமி.
கு : (கதிரேசன் _செட்டியாரைச் சுட்டிக்காட்டி)_ இவர் உங்களுக்கு என்ன பாத்தியம்?
பி : இவன் என் மருமகப்பிள்ளை.
கு : ஓ! அப்படிச் சொல்லுங்கள். அதற்காகத் தான் நீங்கள் இவ் வளவு கஷ்டப்படுகிறீர்கள். உம் - சரி, நீங்கள் இன்னும் சாப்பிட வில்லையே?
பி : இல்லேசாமி; எங்கே போவலாம்?
கு : என்னோடு வாருங்கள். நகரத்தார் விடுதிக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். உம் - இதோ நான் காபி கிளப்புக்குப் போய்விட்டு வருகிறேன். சில்லரை ஏதாவது இருக்கிறதா?
பி : சில்லரை இல்லையே; நோட்டாகத் தான் இருக்குது.
கு : அதைத்தான் கொடுமே; எங்கே ஓடிப்போகிறது? (நோட்டைப் _பெற்றுக்கொண்டு)_ இந்த ரோட்டு வழியாக மெதுவாய்ப் போய்க்கொண்டே யிருங்கள். நான் இதோ வந்து விட்டேன்.
பி : சரி. சாமி. கடிய வந்துடுங்க சாமி.
_(யாவரும் செல்கின்றனர்.)_
நான்காங் களம்
இடம் : அப்பு சாதிரி வீட்டில் ஒர் அறை.
காலம் : பகல்.
_(பாலாம்பாளும் ஒரு கிழவியும் (விதவை) பேசிக் கொண்டிருக் கின்றனர்.)_
கிழவி : உனக்கென்ன குறைச்சல் பாலு? பணத்தாலே குறைச்சலா? பாக்கியத்தாலே குறைச்சலா? சம்பத்தாலே குறைச்சலா? ஒண் ணாலே ஒண்ணு குறைச்சலா? பூர்வஜன்மத்திலே நல்ல நோம்பை நூத்தே, இந்த ஜன்மத்திலே நல்ல ஆம்பிடையானைத் தாலி கட்டி மத்த கஜத்தைப்போல ஒரு பிள்ளையைப் பெத் துண்டே.
பாலாம்பாள் : எல்லாம் உன்னைப் போலொத்த பெரியவா ளுடைய ஆசீர்வாதந்தான். நீயும் எல்லாரையும் போல நன்றாக இருந்தால் எவ்வளவோ பாக்கியசாலியாக இருக்கலாம்.
கி : (சிறிது _விசனத்துடன்)_ ஐயோ! அத்தெ யெல்லாம் இப்போ கிளப்பிவிடாதே நீ. அத்தெயெல்லாம் இப்பொ நினைச்சுண்டா எனக்கு துக்கம் மண்டிண்டு போறது.
_(கண்ணில் ஜலம் விடுகிறாள்.)_
பா : அவ்வளவுதான் நாம் கொடுத்து வைத்தது. அவாளவாள் கொடுத்த வைத்தபடி தானே கிடைக்கும்.
கி : அதெல்லாம் கடக்கறது. உன் புள்ளெ என்ன பண்றான் இப்போ?
பா : உனக்கொன்றும் தெரியாதா என்ன?
கி : எனக்கொண்ணும் தெரியாதுடி அம்மா. யார் ஜோலிக்குப் போ ரேன்; யார்ஜோலிக்கு வரேன். நாட்டுத் தவளைக்கு கிணத்து வளப்பமேன்னு பேசாமலிருக்கேன்.
பா : கிணற்றுத் தவளைக்கு நாட்டுவளப்பமேன் என்று சொல்லு.
கி : பாத்யா அதெகூடச் சொல்லத் தெரியலெ. என்ன பண்றான் உன் புள்ளே இப்போ?
பா : வக்கீலாக இருக்கிறான்.
கி : யாரு? உன் புள்ளெயா? மணியா? உம் - பரவாயில்லையே. மாசம் என்னா வரும்?
பா : மாசமா? இதற்குள்ளே என்ன வரும்?
கி : ஏண்டி? எத்தனை வருஷமாச்சு?
பா : இப்போதான் அவன் ஒரு பெரிய வக்கீலிடத்தில் வேலை கற்றுக் கொள்கிறான். இவனிடத்திலும் தனியாகச் சில கேசுகள் வரு கின்றன.
கி : இன்னாதான் வரும் சொல்லேன்?
பா : இன்னாவருமோ? இன்னா போகுமோ? வீட்டில் ஒரு பைசா கூட கொண்டுவந்து கொடுப்பதில்லை.
கி : அவன் செலவையாவது அவன் பாத்துண்டு போரானா?
பா : என்ன செலவு இருக்கிறது அவனுக்கு?
கி : என்னமோ சொல்லாப்பட்டா போயேன். உன் நாட்டுப்பெண் இங்கேதான் இருக்காளோ?
பா : ஆமாம்; இங்கேதான் இருக்கிறாள்.
கி : பருப்புஞ் சாதம் சீக்கிரத்தில் ஏதாவது கிடைக்குமோ?
பா : ஒன்றையும் காணோம்.
கி : ஏண்டி, நாக ப்ரதிஷ்டையாவது பண்ணி வைக்கிறதுதானே.
பா : ஏதாவது ஒரு குறை தேவையில்லையா? சுவாமி எல்லாவற் றையும் ஒருவனுக்குக் கொடுத்துவிடுவாரா?
கி : எல்லாம் கொடுப்பார்; நீயேன் இதுக்குள்ளே கவலைப்பட்றே? உனக்கென்னா கொறச்சல்? தினம் இரண்டு சுமங்கலிக்கும் இரண்டு பிராமணனுக்கும் சாதம் போட்டுண்டு வா; தினம் கார்த்தாலையும் சாயங் காலமும் உன் நாட்டுப்பெண்ணை போய் அரச மரத்தை ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு வரச்சொல்லு. ஆனா இந்தமாதிரி யெல்லாம் நீ பண்ணயானா உன் ப்ராமணன் கண்லே ரத்தம் சொட்டும்.
பா : அவர் என்ன செய்வார் பாவம்? பணத்து மேலே பிராணன். ஆனால் நான் செலவுசெய்தால் ஒன்றும் சொல்லமாட்டார்.
கி : ஆனா நான் சொன்னபிரகாரம் செய்; ஈச்வரன் உனக்கு நல்லதைத் தான் செய்வார்.
_(ஒரு பாலிய விதவை பிரவேசிக்கிறாள்.)_
பா-விதவை : எயவு வீட்டிலே என்னெக்கும் எயவுதான்.
கி : (பாலாம்பாளுடன்) இந்த அசட்டுப் பொணம் இங்கே எங்கே வந்தது?
பா : என்னடி அம்மா வரும்போதே எழவு கிழவு என்று சொல்லிக் கொண்டு வருகிறாய்? இந்த வீட்டிலே வந்துதானா சொல்ல வேண்டும்?
பா-வி. : பின்னே பாயுமாமி; எந்தாத்லே என்னெக்கும் பேரெயவுதான்.
கி : அம்மா! நீவந்தவேளை நல்லவேளை; ஒங்காத்து எழவு ஒங்காத் தோடேயே இருக்கட்டும். இந்தாத்துக்கும் வரவேண்டாம்.
பா-வி : பின்னே பாருபாத்தி; அப்ளாம் இதச் சொன்னா. இத்துந்தே யிந்தேன்; ஒரு 1தாதா வந்து ஒரு உருந்தையே தூத்திந்திபூத்து. அதுத்து என் தாலியே பிதிச்சு அறுத்தா?
கி : யார் உன்னே என்னான்னு சொன்னா?
பா-வி : யாரு இருத்தா எந்தாத்லே? என் தந்தெ ஒண்ணு இருத்துதோ இல்லியோ? அதான் பாதெயிலே தத்தோ - தத்தையிலே போதோன்னு என்னை வெய்யறது. அது எவ்வளவு; நான் எவ்வளவு?
கி : அப்பா! என்னமோன்னு பார்த்தேன். அந்தக் கொழந்தே சொல்லிப் புட்டா உனக்கு எந்த மூலையிலே கொறஞ்சு போச்சு. நீ சமுத்து. உன்னே ஒர்த்தரும் வெய்யவும் மாட்டா; திட்டவு மாட்டா.
பா . வி : ஐயோ! அம்மா! உனத்து தூட பரிதாசமா போச்சா? சனி - நான் ஏன் இந்தாத்து வந்தேன்? ஆத்துத்தாரி இதிச்ச புளி மாதிரி உத்தாந்திருத்தா; இந்த தழம் என் வாயை அதத்தறதே.
_(சிறிது கோபத்துடன் செல்கிறாள்)_
கி : உன் நாட்டுப் பெண்ணே கூப்பிடேன் பார்ப்போம்.
பா : அதோ வருகிறாளே பாரேன்.
_(யோகாம்பாள் பிரவேசிக்கிறாள்.)_
இந்தப் பாட்டியை நமகாரம் பண்ணடியம்மா.
_(யோகாம்பாள் அப்படியே செய்கிறாள்.)_
பா : எங்க அகத்திலே வந்து விட்டாற்போலிருக்கிறது. நான் போகிறேன்; யோகாம்பாவுடன் பேசிக்கொண்டிரு பாட்டி.
_(செல்கிறாள்)_
கி : நான்கூட போறேண்டி அம்மா..
யோகாம்பாள் : ஏன் பாட்டி? மாமியார் போய்விட்டாரே என்று நீங்களும் போகிறீர்களா என்ன?
கி : ஐயோ, அதெல்லாம் ஒன்றுமில்லையடி யம்மா.
_(செல்லம்மாள் பிரவேசிக்கிறாள்.)_
இதோ செல்லம்மா வந்துட்டாளே, நான் போறேன்.
செல்லம்மாள் : ஏன் பாட்டி! நான் வந்தேனென்றா நீங்கள் போகிறீர்கள்?
கி : இல்லையடியம்மா, இல்லை. எனக்குப் போய் காரியம் ரொம்ப இருக்குது.
_(செல்கிறாள்.)_
யோ : என்ன செல்லம்! என்ன சமாசாரம்? இப்படி நாற்காலி மேலேயே உட்கார்.
செ : என்ன? யோகாம்பாவுக்கு யோகம் அதிகமாயிருக்கிறது போலிருக்கிறதே.
யோ : அஃதெல்லாம் ஒன்று மில்லையடியம்மா. நான் என்றைக்கும் ஒரே சீர்தான்.
செ : நேற்றோ என்னவோ - எங்கள் பிராமணர் உன் அகத்துக் காரரைப் பார்த்தாராம்; - உம்- என்ன? உங்கள் வீட்டுக்காரர் இப்படிப் போய்விட்டாராமே?
யோ : என்ன விசேஷம்?
செ : க்ராப் பண்ணிக் கொண்டிருக்கிறாராமே. நல்ல பிராமண ராய்ப் பிறந்து, சாதிரி என்ற பட்டம் வைத்துக்கொண்டு, ஊர் பெயர், குலப் பெயர், குடிப் பெயர் எல்லாவற்றையும் கெடுத்துக் கொள்வானேன்?
யோ : அவைகளை யெல்லாம் ஏன் கேட்கிறாய்? நான் எவ்வளவோ தடவை முட்டிக்கொண்டு பார்த்தேன். ஒன்றும் பலிக்கவில்லை. நான் சொல்லச் சொல்ல க்ராப் அதிக கோணலாகிறதே தவிர ஒன்றும் குறைந்த பாடில்லை. என்ன செய்வது?
செ : உன் மாமனார் - மாமியார் ஏதாவது சொல்லக் கூடாதோ?
யோ : மாமனாருடைய பலத்தின் மேல் தான் இவ்வளவு ஆட்டம் ஆடுகின்றார்; மாமியார் வார்த்தையை யார் கேட்கிறார்? அவரும் தினந்தோறும் முட்டிக்கொண்டு தானிருக்கிறார்.
செ : எங்கள் அகத்துக்காரர் பழைய சிநேகிதர் என்பதைக் கூட உங்கள் அகத்துக்காரர் மறந்து விட்டாராமே.
யோ : ஒருவர்க்கொருவர் ஏதாவது மனதாபப்பட்டுக் கொண்ட னரோ?
செ : இந்த வேஷங்களெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா; பெரிய வர்கள் அநுஷ்டித்து வந்த ஆசார முறைகளை நாம் அடியோடு தள்ளி விடக்கூடாது. இந்த க்ராப் எல்லாம் எதற்கு என்று எங்கள் பிராமணர் கேட்டாராம். அதற்கு உங்கள் வீட்டுக் காரர், சுத்த நாட்டுப்புறமா யிருக்கிறாயே நீ என்று முகத்தில் அறைந்ததுபோல் பதில் சொன்னாராம்.
யோ : ஐயோ! நான் என்ன பண்ணுவேனடி செல்லம்? எங்கள் மாமி யாரிடத்தில் வேண்டுமானால் சொல்.
செ : அது முதற்கொண்டு எங்களகத்திலே ஒரு மாதிரியாக இருக் கிறார்.
யோ : அப்பாவைப்போலவே படபடப்பு அதிகம். என்ன செய்வது? நீ மனதிலே ஒன்றும் வைத்துக்கொள்ளாதே செல்லம். உன் னகத்திலேயும் சொல்.
செ : எனக்கென்னடி பைத்தியம். எங்ககத்திலேகூட என்ன இந்த மாதிரியாகப் போய்விட்டாரே என்று தான் இரங்குகிறார்.
யோ : நானும் தினந்தோறும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த வடக்கித்யான் ஒருவன் வந்தாலும் வந்தான்; அவனாலே எல்லாம் கெட்டுப் போகிறது.
செ : ஆமாண்டி. எங்ககத்திலே கூட சொன்னார். அவன் நேற்று வந்தவன். அவனைக் கட்டிக்கொண்டு உங்கள் அகத்துக்காரர் அழுகின்றாரே? அவனாலேயே உங்ககத்திலே கெட்டுப்போய் விட்டாராம்.
யோ : அஃதென்னமோ வாதவந்தான். அவனோடு சிநேகம் பண்ணிக் கொண்ட மறுநாளே தலையை மொட்டை யடித்துக் கொண்டார்.
செ : எனக்கும் ஆறவில்லை. உன்னிடத்தில் சொல்லிக்கொள்ளலா மென்று தான் வந்தேன்.
யோ : நானும் சொல்லிப் பார்க்கிறேன். உங்கள் அகத்துக்காரரை ஒன்றும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாமென்று சொல்.
செ : அஃதெல்லாம் ஒன்று மில்லையடி. நான் போய் வரட்டுமா? மாமியார் எங்கே? பார்த்துவிட்டுப் போகிறேன். போகும்போது சொல்லி விட்டுப் போகவில்லை என்று சொல்வார்.
_(இருவரும் செல்கின்றனர்)_
ஐந்தாங் களம்
இடம் : நியாயதலம்.
காலம் : நண்பகல்.
_(நியாயாதிபதி ஓருயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறார். நியாய வாதிகள் பல இடங்களில் இருக்கிறார்கள். பிச்சப்ப செட்டியாரும் கதிரேசன் செட்டியாரும் ஒருபுறம் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். குருமூர்த்தி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறான்.)_
மணி சாதிரி : (எழுந்து) கதிரேசன் செட்டியாருக்காக நான் ஆஜரா கின்றேன்.
நியாயாதிபதி : நீர் யார்?
ம : நான் ஒரு வக்கீல்.
நி : உம்மைப் பார்த்தாலே வக்கீல் என்று தெரிகின்றதே. அதை இப்பொழுது நான் கேட்கவில்லை. நீர் இந்தக் கோர்ட்டில் எப்பொழுது வக்கீலாகப் பதிவு செய்து கொள்ளப்பட்டீர்?
ம : நியாயாதிபதிக்கு இதைப்பற்றிக் கேட்க அதிகாரம் இல்லை யென்று வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நி : எந்தச் சட்டம் அந்த மாதிரி கூறுகின்றது?
ம : அம்மாதிரி சட்டம் இல்லாவிட்டால் நாம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். (நியாயாதிபதியும் _எல்லா வக்கீல்களும் நகைக் கிறார்கள்)_
நி : நீர் யாருடைய ஜுனியர்?
ம : அதைப்பற்றித் தாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை.
நி : அப்படியானால் உம்முடைய வாதத்தை நான் கேட்க வேண்டிய அவசியமில்லை.
ம : ஜட்ஜவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது; லாபாயிண்டு களை ப்பற்றி மாத்திரம் நியாயாதிபதி பேசலாமே தவிர, மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் சரியோ என்று நான் கேட்கிறேன்.
நி : ஆமாம்; லா பாயிண்டுகளை எடுத்துச் சொல்ல உமக்கு யோக்கியதை இருக்கிறதென்று எனக்கு எப்படித் தெரியும்?
ம : அதற்காகக் கேட்கின்றீர்களா? அப்படி முன்னமேயே கேட்டிருந்தால் நான் பதில் சொல்லியிருப்பேனே. உம் - நான் லக்ஷப் பிரபுவான அப்பு சாதிரியினுடைய பிள்ளை.
நி : (ஆச்சரியத்துடன்) என்ன? உமது பேரென்ன?
ம : மணி சாதிரி,
நி : பிராமணரா நீர்? - உம் - பிறகு - ?
ம : நான் பி. ஏ. பரீட்சையில் தேறி, எப். எல்லுக்குப் போய், பி. எல்லில் பாபண்ணி, அப்ரெண்டி பரீட்சையிலும் தவறா மல் தேறிவிட்டு வக்கீலாகப் பதிவு செய்து கொண்டேன்.
நி : எப்பொழுது?
ம : எனக்குச் சரியாக ஞாபகமில்லை.
நி : சுமாராகச் சொல்லுமே?
ம : சந்தேகமாகச் சொல்லும் வழக்கம் என்னிடத்தில் இல்லை. உத்தரவு கொடுத்தால் என் தகப்பனாரைக் கேட்டுக்கொண்டு வருகிறேன்.
நி : பேஷ்! நல்ல மேதாவி நீர்? சரி; நீர் இப்பொழுது ஜுனியர் வக்கீலாக யாரிடத்தில் இருக்கிறீர்?
ம : மேல்பாதி மஹாதேவ ஐயரிடத்தில் இருக்கிறேன். அவர் தம் ஆதிகாலத்தில் எங்கள் வீட்டில் பரிசாரகம் செய்து கொண்டிருந்தார்.
நி : சரி; அவைகளைப்பற்றி யெல்லாம் இங்குப் பேசாதேயும். உம் முடைய கேஸை ஆரம்பியும்.
ம : (தன் _குரலைச் சரிப்படுத்திக் கொண்டும், உடைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டும் பேசத் தொடங்குகிறார்.)_ பிரபுவே! அப் பீல் வாதியும் என் கட்சிக்காரருமான கதிரேசன் செட்டி யார் என்பவர் கானாடுக் காத்தான் என்ற ஊரில் இருப்பவர். அது புதுக்கோட்டையைச் சேர்ந்தது. அந்த ஊரில் அநேகமாகச் செட்டிமார்களே இருக்கிறார்கள். அவர்கள் பணக்காரர்கள். அவர்களுக்கு அதிகாரம் அதிகமாக அந்த ஊரில் உண்டு. பிரபுவே! தயை செய்து கவனமாய்க் கேட்க வேண்டும். என் னுடைய கட்சிக்காரருக்குக் கதிரேசன்செட்டியார் என்று பெயர். கதிரேசன் என்றால் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பெயர்.
நி : அதற்கும் இந்தக் கேசுக்கும் என்ன சம்பந்தம்?
ம : சம்பந்தம் இருக்கிறது. சுப்பிரமணியக் கடவுளுடைய பெயரை என்னுடைய கட்சிக்காரர் வைத்துக் கொண்டிருப்பதனால் அவர் கொண்டுவந்த கேசானது உண்மையாகவும் பொய்கலந்த தில்லாததாகவும் இருக்கும் என்று நான் கூறுகிறேன்.
நி : ஓ! ஓ! அப்படியா? (எல்லாரும் _நகைக்கின்றனர்.)_
ம : இந்தக் கானாடுக்காத்தானைப்போல் மற்றோர் ஊரும் இருக் கிறது. அதற்குத் தேவகோட்டை என்று பெயர். அங்கும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் அதிகமாய் வசிக்கிறார் கள். அவர்கள் பெரும் பணக்காரர்கள். அவர்க ளுடைய வரலாற்றைப் பற்றிச் சில கதைகளும் சொல்லப் படுகின்றன.
பிச்சப்ப செட்டியார் : (கதிரேசன் _செட்டியாருடன்)_ நம்ம வக்கீல் ஐயாவுக்கு எல்லாம் தெரியும் போலேயிருக்குதே.
நி : (மணி _சாதிரியைப் பார்த்து)_ நீர் உம் கேசைப் பற்றிப் பேச வந்தீரா? அல்லது நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுடைய சரித்திரத்தைச் சொல்ல வந்தீரா?
ம : உயர்ந்த வமிசத்திலிருந்த நாட்டுக்கோட்டைச் செட்டி யொருவ ரால் கொண்டு வரப்பட்ட இந்தக் கேசானது பொய்யல்ல என்று நிரூபித்துக் காட்டவே இந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுடைய சரித்திரத்தை ஆதிமுதல் விடாமல் கூறுகின்றேன்.
நி : பேஷ்! உம்முடைய கேசு பொய் யென்பதாக உமக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கின்றதா?
ம : என்னுடைய கேசு அல்லவே இது. என்னுடைய கட்சிக்கார ருடைய கேசைப் பற்றித் தான் நான் இப்பொழுது வாதஞ் செய்கிறேன் என்பதை நியாயாதிபதி அறிந்து கொள்ள வேண்டும்.
நி : அடாடா, நல்ல தப்புகள் கண்டு பிடிக்கின்றாரையா நம் வக்கீல்? சரி; கட்சிக்காரருடைய கேசு பொய் யென்பதாக உமக்கு ஏதேனும் சந்தேக முண்டோ?
ம : அது பொய்யோ மெய்யோ எனக்குத் தெரியாது. என் கட்சிக் காரர் உண்மை யென்று சொல்கிறார். அதை நான் நம்புகின் றேன். நான் நம்புவது போல் நியாயாதிபதியும் நம்பவேண்டும் என்றுதான் கூறுகின்றேன்.
நி : பேஷ்; நல்ல தருக்கம். உம்; சரி; உம்முடைய கட்சிக்காரரின் கேசு உண்மை யென்று நான் நம்புகின்றேன். பிறகு உம் கேசைப் பற்றி வாதம் செய்யும்.
ம : அப்படியானால் சந்தோஷம். (குரலைக் _கனைத்துக் கொண்டு)_ பிரபுவே! என் கட்சிக்காரர், தம் மாமனாருடைய தூண்டுதலின் பேரில் இக்கேசைக்கொண்டு வந்திருக்கிறார்; அந்த மாம னாரும் இங்கே வந்திருக்கிறார். என்னுடைய கட்சிக்காரரும் இங்கே வந்திருக்கிறார். இதை நியாயாதிபதியவர்கள் குறித்துக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். (பொறுத்து) பிரவுவே! குறித்துக் கொண்டீர்களா?
நி : உம் - சரி. (எல்லாரும் _நகைக்கின்றனர்)_
ம : பிரபுவே! என் கட்சிக்காரரான கதிரேசன் செட்டியாருடைய தமையனார் மெய்யப்ப செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவர் பெயர் மெய்யப்ப செட்டியாரே தவிர அவர் மெய்யைப் பேசியே அறியார். அவருக்குச் சுமார் பத்து லக்ஷம் ரூபாய் பெறு மான சொத்துக்கள் இருக்கின்றன. அவர் சென்ற வருஷம் கால கதியானார். அவருக்கு ஒரே ஒரு மனைவிதான் உண்டு. (பிச்சப்ப _செட்டியாரைப் பார்த்து)_ செட்டியார் வாள்! மெய்யப்ப செட்டியாருக்கு ஒரே ஒரு பெண்சாதி தானே.
பி : ஆமாமாம். அதுக்குச் சந்தேகமில்லை. அதை நன்னா அழுத்திச் சொல்லுங்க சாமி.
ம : பிரபுவே! அந்த மெய்யப்ப செட்டியாருக்கு ஒரே ஒரு மனைவி தான் என்பதைத் தங்கள் குறிப்பில் குறித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இறந்துபோன அந்த மெய்யப்ப செட்டியாருக்குச் சந்ததி ஒன்றுமில்லை. அதனால், அவர் இறக்குந் தறுவாயில் பெரியதொரு தந்திரம் செய்தார். தமது பிற்காலத்தில், தம் சொத்துக்களெல்லாம் தம் மனைவியைச் சேரவேண்டியது என்று அவர் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். சந்ததி இல்லாமலிருந்த அவர், தம் சொத்துக்களைத் தம் மனைவிக்குச் சேரும்படி உயில் எழுதிவைக்கப் பாத்தியப்பட்டவரேயாகார். அவர் அங்ஙனம் செய்தது தவறென்று நான் கூறுகிறேன். இதைக் கீழ்க்கோர்ட்டார் அறியவேயில்லை.
நி : அந்தப் பத்துலக்ஷம் ரூபாயும் இறந்துபோன மெய்யப்ப செட்டியாருடைய சுயார்ஜிதமா? பிதுரார்ஜிதமா?
ம : என்னய்யா செட்டியார்! பத்து லக்ஷம் ரூபாய் அந்த மெய்யப்ப செட்டியாரால் சொந்தமாகச் சம்பாதிக்கப் பட்டதா அல்லது அவர் தகப்பனாரால் கொடுக்கப்பட்டதா?
பி : அவர் சொந்தமாகச் சம்பாதிச்சதுதாங்கோ. ஆனால் எல்லாம் மோச அடி.
ம : பார்த்தீர்களா? நியாயாதிபதியவர்கள் இந்தப் பாய்ண்டைக் குறித்துக் கொள்ளவேண்டும். என்னுடைய கட்சிக்காரரான கதிரேசன் செட்டியார், இறந்துபோன மெய்யப்ப செட்டியா ருடைய தம்பி. ஆதலால் மெய்யப்ப செட்டியாருடைய சொத்துக்க ளெல்லாம் இவருக்குத் தான் சேரவேண்டும். மெய்யப்ப செட்டி யாருக்கு வேறே வார்சுகளில்லை. மெய்யப்ப செட்டியாருடைய சொத்துக்கள் யாவும் என் கட்சிக்காரரான கதிரேசன் செட்டி யாருக்குச் சேரவேண்டியதுமன்றி, மெய்யப்ப செட்டியா ருடைய மனைவியும் என் கட்சிக்காரரைத்தான் அடைய வேண்டும். சொத்துக்கள் என்பதற்கு தாவர ஜங்கம சொத் துக்கள் என்று மாத்திரம் பொருள் கொள்ளக்கூடாது. மனைவி யையும் ஜங்கம சொத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். நியாயாதிபதியவர்கள் மனைவியை தாவர சொத்தில் சேர்த்துக் கொண்டாலும் எனக்கு ஆக்ஷேபமில்லை. வார்சில்லாத ஒருவனுடைய சொத்துக்கள், எவனிடத்தில் வந்து சேருகின்ற னவோ அவனிடத்திலேயே வார்சில்லாதவனுடைய பெண்சாதி யும் வந்து சேரவேண்டும். இதுதான் என்னுடைய வாதத்தில் முக்கியமாய் நியாயாதிபதியவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதைக்கீழ்க் கோர்ட்டார் கவனிக்கவே இல்லை. கிழ்க் கோர்ட்டில் என் கட்சிக்காரருக்கு ஆஜரான வக்கீலும் இதைக் கவனிக்கவில்லை. இந்தச் சூட்சுமத்தை நானே கண்டு பிடித் தேன். மிடர் மஹாதேவ ஐயரும் இதைப்பாராமலே விட்டு விட்டார். (எல்லோரும் _நகைக்கின்றனர்)_ சொத்துக்களை மாற்றும் சட்டம் (Transfer of Property Act) என்ற சட்டத்தின் கீழ் என் கட்சிக்காரருடைய கேசு வரும். அந்தச் சட்டத்தில் சொத்துக்கள் என்பதில் மனைவியையும் சேர்க்கா விட்டால், அதைச் சேர்த்துப் புதிய சட்டம் ஒன்று உண்டாக்க வேண்டு மென்று அரசாங்கத்தாருக்கு எழுத வேண்டுமென நியாயாதி பதியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கத்தாருடைய உத்தரவு வந்த பிறகே என் கட்சிக்காரருடைய கேசில் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சொத்துக்கள் என்பதில் மனைவியைச் சேர்த்துக்கொள்ளலா மென்பதற்குப் பல ஆதாரங்கள் இருக் கின்றன. பாண்டவர்களும் துரியோதனாதியர் களும் சூதாடிய பொழுது, பாண்டவர்களுடைய மனைவியாகிய துரோபதையைப் பந்தயமாக வைத்து ஆடும்படி, துரியோதனாதியர்கள் பாண்டவர்களைக் கேட்டது நியாயாதிபதிக்கு ஞாபகமிருக்க லாம். இதனால் தெரிவது என்ன? சொத்துக்களில் மனைவியும் அடங்கினவள் என்பது நன்கு விளங்கவில்லையா? பாரதப் போரை நடத்தின பெரியவரெல்லாரும் அந்த மாதிரியாகச் செய்திருக்கும்போது நாம் ஏன் அந்தமாதிரி செய்துகொள்ளக் கூடாது? சட்டத்தில் அங்ஙனம் இல்லாவிட்டால் நாம் அச் சட்டத்தைத் திருத்திக்கொள்ள வேண்டும். என் கேசுக்கு அநுகூலமாக வேண்டிய விஷயங்களை எல்லாம் நான் விரிவாய் எடுத்துக் கூறிவிட்டேன். நியாயாதிபதியவர்கள் நன்றாக ஆலோ சித்து என் கட்சிக்காரருக்கு நியாயம் செய்து கொடுக்க வேண்டு மாய்க் கேட்டுக் கொள்கிறேன். (தம் _ஆசனத்தில் உட்காரு கிறார்.)_
நி : (பிரதிவாதி _வக்கீலைப் பார்த்து)_ உம்முடைய வாதத்தை ஆரம்பிக்கலாம்.
பிரதிவாதி வக்கீல் : நான் ஒன்றும் வாதஞ் செய்யப் போவதில்லை. எனக்காக என் நண்பர் மணி சாதிரி எல்லாவற்றையும் விரி வாக எடுத்துக் கூறிவிட்டாராதலால் நான் ஒன்றுங் கூறச் சித்தமாயில்லை. நியாயம் எங்கு இருக்கின்றதோ அங்கு வெற்றி உண்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதாதலின் நான் ஒன்றும் பேசவில்லை. நியாயப்படி தீர்ப்புச் சொல்ல வேண்டுமாய் நியாயாதிபதியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நி : நாளை தீர்ப்புச் சொல்கிறேன். இன்று கோர்ட் கலையலாம்.
_(கோர்ட் கலைகிறது.)_
ம : என்ன செட்டியார்வாள்? எப்படியிருந்தது நம் வாதம்?
பி : பேஷ் சாமி.
கு : என்ன செட்டியார்! வக்கீலய்யாவைப் பார்த்தீர்களா? வெளுத்து விட்டார்களே. எதிரி வக்கில் ஏதாவது வாயைத் திறந்தானா பார்த்தீர்களா? ஐயாவை நன்றாகத் திருப்தி செய்ய வேண்டும்.
பி : அதுக்கென்ன சாமி.
கு : உம்; சரி, சில்லரை ஏதாவது இருக்கிறதா? ஐயா வண்டியிலே போக வேண்டும்.
பி : வேண்டியது சாமி; இந்தாலே வாங்க.
_(யாவரும் செல்கின்றார்.)_
ஆறாங்களம்
இடம் : மேல்மாடி
காலம் : நிலவு.
_(மணிசாதிரி ஒரு சோபாவின் மீது சாய்ந்துகொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் யோகாம்பாள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு புறம் வீணை வைக்கப்பட்டிருக்கிறது.)_
மணிசாதிரி : அப்புறம் என்ன சமாசாரம்?
யோகாம்பாள் : அன்றைய தினமென்ன, செல்லத்தின் அகத்துக் காரரை அப்படிக் கோபித்துக் கொண்டீர்களாமே?
ம : பின் என்ன? அவன் சுத்த நாட்டுப்புறமாக நடந்து கொண்டான்.
யோ : அவர் நாட்டுப் புறம். நீங்கள் என்ன?
ம : நான் பெரிய வக்கீல்.
யோ : உங்களுடைய வக்கீல்தனம் உங்களோடேயே இருக்கக் கூடாதோ? அவரிடத்தில் சென்றுதான் காட்ட வேண்டுமோ?
ம : சீ! கழுதை! அன்றைய தினம் கோர்ட்டில் ஒரு கேசு சம்பந்தமாக வாதஞ் செய்தேன். எல்லாரும் சிரித்துச் சிரித்து வயிறு புண் பட்டார்கள். எதிரி வக்கீல் ஒன்றும் பேசாமல் இரண்டொரு வார்த்தைகள் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டான்.
யோ : எதற்காக எல்லாரும் சிரித்தனர்?
ம : அவ்வளவு வேடிக்கையாகவும் நன்றாகவும் பேசினேன்.
யோ : அதற்காகவா சிரித்தார்கள்?
ம : சந்தேகமில்லாமல் அதற்குத்தான்; என்னைப்போல் இந்த ஊரில் யாராவது பேசும் திறமை பெற்றிருக்கின்றனரா?
யோ : அது கிடக்கின்றது. இந்தப் பாழும் க்ராபை எடுத்து விடுங்கள். இந்த இரவில்கூட பூட்ஸும் நிஜாரும் வேண்டுமா? வீட்டில்கூடவா பிராமணராக இருக்கக் கூடாது?
ம : அவைகளெல்லாம் ஈரோப்பியன் பாஷன் (Europieon Fashion.) உனக்கென்ன தெரியும்? நீ சுத்த நாட்டுப்புறம்! எனக்குத் தகுந்த பெண்டாட்டி நீ அல்ல.
யோ : நான் உங்களுக்குத் தகுந்த பெண்டாட்டியாக இல்லாமல் இருக்கலாம். தாங்கள் எனக்குக் கணவராக வாய்த்தது என் பூர்வ ஜன்மபுண்ணியபலனே என்று நான் நினைத்துக் கொண் டிருக்கிறேன். நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். (திடீரென்று) இன்று வெள்ளிக் கிழமையல்லவா? உங்களை நமகாரஞ் செய்ய மறந்தே விட்டேன். (தன் _கணவனை நமகாரஞ் செய்கிறாள்.)_
ம : இவைகளெல்லாம் என்ன, நான்சென்! கணவனை மனைவி நமகாரம் செய்கிறதாவது போகிறதாவது? மேலும் (Male) பீமேலும் (Female) ஈக்வல்; ஹபண்டும் ஒய்ப்பும் சமம்; நீயும் நானும் ஒன்று.
யோ : அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள். கடைசியில் சொன்ன வார்த்தையை நான் ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன். மற்றவைக ளெல்லாம் சரியல்ல. மனைவியாவாள், என்றைக்கும் கணவன் கீழடங்கி இருக்கவேண்டியவளே.
ம : இப்பொழுது உங்களுக்கெல்லாம் சுதந்தரம் வேண்டாமா?
யோ : இப்பொழுது எங்களுக்குச் சுதந்தரமில்லையா? வீட்டில் நாங்கள் சுதந்தரமாகத் தானே இருக்கிறோம். நாங்கள் சிறையிலா வைக்கப்பட்டிருக்கிறோம்? இல்லையே. சுதந்தரம் என்றால் நீங்கள் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள்?
ம : என்னைப் பரீட்சிப்பதில் பிரயோஜனமில்லை. புருஷர்களுக் குள்ள சுதந்தரம் திரீகளுக்கும் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.
யோ : அது கூடாதென்பது தான் என்னுடைய அபிப்பிராயம். புருஷர்களுக்குள்ள சுதந்தரங்கள் திரீகளுக்கும் கொடுக்கப் பட்டால் அப்பொழுதே உலகம் அழிந்து விடுவது நிச்சயம். சிலரைப்போல் திரீகளை மிருகங்களென நடத்துவதும் தவறு; சிலரைப் போல் திரீகளைக் காளைகளென வெளியில் திரியும்படி விடுவதும் தவறு. இரண்டும் கூடாவென்றே நான் கூறுகிறேன். திரீகளுக்குச் சுதந்தரம் வேண்டும் என்பவர்கள், தங்கள் வீட்டு திரீகளுக்குச் சுதந்தரம் எப்படிக் கொடுத்திருக் கிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
ம : அஃதென்னமோ? பொதுவாக நான் கூறுகிறேன். ஹிந்து சமூகத் தினர், பெண்கள் என்றால் அடிமைகள் என்று பொருள் கொண்டு அவர் களை மிருகங்களினும் இழிவாய் நடத்துகின் றனர். மேனாட்டாரைப்பார். ஒரு நாள் என்னுடன் மாலை வேளையில் கடற்கரையோரமாகவா. அங்கு ஐரோப்பியர் தத்தம் மனைவிமாருடன் வருவதும், அவர்கள் யாதொரு வித்தியாசமுமின்றி ஒருவருக் கொருவர் உரையாடுவதும் பார்க்கப் பார்க்க இன்பத்தைத் தருகின்றது. இன்னும் மேனாட்டு திரீகள் அரசியல் விஷயங்களில் எவ்வளவு முன்னடைந்திருக்கிறார்கள் என்பதை நீ அறிவையோ? பார்லி மெண்டு சபையில் அங்கத்தவராக இருக்கும் படியான நிலைமை யில் மேனாட்டு திரீகள் இப்பொழுது இருக் கிறார்கள். நம் மாதர்களின் நிலைமை யென்ன? அடுப்பங்கரை யுண்டு; அவர்கள் உண்டு, நம் பெண்களிற் சிலர், தம் கணவரைக் காணின், பூனையைக் கண்டு எலி அஞ்சி யோடுவது போல் மூலையில் பதுங்கிக் கொள்கின்றனர். மற்றும், நம் பெண்க ளிடத்தில் பல வெறுக்கத் தக்க செயல்கள் இருக்கின்றன. நம்மவர் இந்தப் பாழும் மஞ்சளை ஏன் பூசிக் கொள் கின்றனரோ தெரியவில்லை. சோப் யூ பண்ணால் எவ்வளவு நைஸாக இருக்கும்? இவைகளையெல்லாம் மேனாட்டாரிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய திரீகள் அணிந்து கொள்வது போல் ஆடை களை நம் பெண்கள் ஏன் தரித்துக் கொள்ளக் கூடாது? பொதுவாக, புருஷன் - திரீ என்ற வித்தி யாசமே கூடாது. ஏறக்குறைய இந்தக் கொள்கையையே ஐரோப்பியர் அநுசரிக்கின்றனர். நம்மவரைப்பார்; ஆசாரம், சநாதன தர்மம் என்று சொல்லிக்கொண்டு பழைய குருட்டு வழக்கங்களை உடும்பு போல் பிடித்துக்கொண் டிருக்கின்றனர். இந்தியா முன்னடைய வில்லை யென்றால் எப்படி முன்ன டையும்? (யோகாம்பாள் _பெருமூச்சு விடுகிறாள்)_ என்ன பெரு மூச்சு விடுகிறாய்? உன் அபிப்பிராயமென்ன?
யோ : நீங்கள் சொல்கிற மாதிரி நம் நாட்டு திரீகள் அநுசரித்துக் கொண்டு வந்தால்தான் இந்தியா முன்னடையுமோ? ஐரோப் பியர்களைப் போல் நமது பெண்மணிகளும் இங்கிலீஷ் பேச ஆரம்பித்துவிட்டால் இந்தியா உயரப் பறக்கும்போலும். பேஷ்; நீங்கள் சொல்வது நிரம்ப நன்றாயிருக்கிறது. (பொறுத்து) நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். என்னு டைய வார்த்தைகளைத் தயை செய்து காதுகொடுத்துக் கேட்க வேண்டும். உம் - மேனாட்டு நாகரிகத்தில் நீங்கள் நன்றாக மயங்கிக் கிடக்கின்றீர்கள். உங்களைப்போல் பலர் இருக்கின்ற னர். நீங்கள் யாவரும் நமது சநாதன தர்மங்களையும், நம் பெரியோரால் ஏற்படுத்தப்பட்ட ஒழுக்க நிலைகளையும் குறை கூறுவது, அவைகளைச் சரியாக அறிந்து கொள்ளாமையி னாலேயே என்று நான் தைரியமாய்க் கூறுகிறேன். மேனாட்டு திரீகளைப் போல், நம் இந்தியப் பெண்மணிகளும் உண்டு, உடுத்து, உறங்க வேண்டுமென்பதே உங்கள் கருத்தெனத் தெரி கிறது. திரீகள் சுதந்தரம் இவைகளேபோலும், மிருகங்களும், பக்ஷிகளும் உண்டு உறங்குகின்றன. ஆகையால் மனிதருக்கும் விலங்குகளுக்கும் என்ன வேற்றுமை என்று கூட உங்கள் தருக்க நூல் கூறுமோ? (பொறுத்து) பிராணநாதா! என்மீது கோபிக்க வேண்டாம். மேனாட்டு நாகரிகம், மிருக சுபாவத்தை யுடைய தென்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். நமது இந்திய நாகரிகம் ஆன்மஞானத்தைப் பற்றியது; மேனாட் டாருடைய நாகரிகம் உலகாயதக் கொள்கை கொண்டது; ஏறக்குறைய நாதிக மதத்தைப் பின்பற்றியது என்றுங் கூற லாம். நாம் இவ்வுலகிற் பிறந்தது உண்டு, உடுத்து, உறங்கு வதற்கல்ல; குறித்த ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொருவனும் பிறக்கும்போதே கடவுளால் கட்டளையிடப் படுகிறான்; ஈசனுடைய ஆக்ஞையை நிறைவேற்றவே அவன் இப்புவியில் தோன்றுகிறான். (பொறுத்து) நமது இந்திய ஜன சமூகவாழ்க்கையானது இரண்டு வாக்கியங்களை அதிவார மாகக் கொண்டு நின்றது; நிற்கின்றது. இனி எங்ஙனமோ யானறியேன். அவை உண்மை கடைப்பிடி அறஞ்செய விரும்பு என்பவையாம். இந்த இரண்டு வாக்கியங்களையே ஸத்யம்வத தர்மஞ்சர என்று அநாதியான வேதம் வெளிப் படுத்துகின்றது. சத்தியத்தையும் தர்மத்தையும் முன்னணியாகக் கொண்டு நம் பாரததேசம் உலகிலுள்ள எல்லாத் தேசங்களை யும் விட முன்னேறி நின்றது. ஆனால், மேனாட்டு நாகரிக வாசனை இந்தியாவில் வீசத்தொடங்கியது முதல் நம் சத்தியமும் தர்மமும் சிதைவுறத் தொடங்கின. ஆன் ஊன் உண்ணும் அறனிலோர் நம் பரதகண்டத்தில் கால்வைத்த வன்றே பாரத தேவியினுடைய இரண்டு கால்களாகிய சத்தியமும் தர்மமும் ஆடத் தொடங்கின. உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதன சத்தியமும் தர்மமுமே என்று முதலில் உலகிற்கு வெளிப் படுத்தியவர் நாமே; அவைகளை அநுபவத்திற்குக் கொண்டு வந்ததும் நாமே; அவைகளால் ஒப்புயர்வற்ற பேறு பெற்றதும் நாமே; இப்பொழுது அவைகள் அழியப் பார்த்துக் கொண் டிருப்பதும் நாமே. நம் இந்திய நாகரிகம் தவிர உலகத்தில் உண்டான எந்த நாகரிகமும் ஆன்ம ஞானத்தை அடிப்படை யாகக் கொண்டு கிளம்பவில்லை; சத்தியத்தையும் தர்மத்தையும் விதையும் நீருமெனக் கொண்டு உலகிற் செழித்து வளர வில்லை. இந்திய நாகரிகம் என்று தோன்றியது என எவனும் துணிந்து கூறமாட்டான்; என்று அழியும் எனத் தைரியமாகச் சொல்ல மாட்டான். உலகத்தில் இருந்த நாகரிகங்களெல்லாம் என்று தோன்றின என்றும் என்று அழிந்தன என்றும் கூறிவிடலாம். இந்திய நாகரிகம் அத்தகைமைத் தன்று; இதன்அடிமுடி இன்னதென எந்தச் சரித்திரக்காரனாலும் கூற முடியாது. இத்த கைய நாகரிகத்தை இழித்துக் கூறுகின்றீர்களே: உங்களுக்கு நியாயமா யிருக்கின்றதா? இந்திய மாதர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுகின்றேன். சோப் பூசிக் கொள்வதாலும், கண்ட புருஷருடன் நாணமற்றுப் பேசுவதாலும், கடற்கரைக்குச் சென்று கணவனுடன் சம்பாஷித்தலினாலும் திரீகள் சுதந்தரம் பெற்றவர்களா வார்களா? சுதந்தரங்கள் இவைகள் தாமோ? இச்சுதந்தரங்களை நம் மாதர்கள் அடைந்துவிட்டால் இந்தியா முன்னடையும் என்பது உங்கள் கோரிக்கைபோலும். இப்பொழுது நம் இந்தியப் பெண்மணிகள் அநுபவிக்கும் சுதந்தரத்தைப்போல் உலகத்திலுள்ள எந்த இனத்து திரீகளும் அநுபவிப்பதில்லை யென்று நான் திண்ணமாய்க் கூறுவேன். மேனாட்டுப் பெண்களுடைய சுதந்தரம் மிருக சுதந்தரம்; நம் திரீகள் அநுபவித்துக் கொண்டிருப்பது மானிட சுதந்தரம். இதை திரீ சுதந்தரத்திற்குக் கிளர்ச்சிசெய்து கொண்டிருக்கும் ஒவ்வோர் இந்தியப் பெண்மணிக்கும் அறிவுறுத்த வேண்டு மெனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அடிமைகளன்றோ சுதந்தரத்தை விரும்புவார்கள்? நம் திரீகள் இப்பொழுது அடிமைகளாயிருக்கிறார்களோ? கற்பரசிகள், இல்லொளிகள் என்று இந்திய திரீகளை உலகம் புகழ்ந்து கூறுகின்றது. மேனாட்டு திரீகளிடத்தில் மேற் சொன்ன குணங்கள் மருந்துக்கும் காண்டல் அரிது. கணவனுடைய உயிரைக் கொடுக்க வேண்டுமென்று கூற்றுவன் பின் இரந்து சென்ற காரிகையை ஈன்றது இவ்விந்திய நாடு; அமர்க்களத்தில் சென்ற மகன் இறந்துபட்டானென்று கேள்வி யுண்டு புறத் திலோ உரத்திலோ என் மகன் காயங் கொண்டான் என்றேங் கினளாய்க் களத்திடை சென்று மகன் உரத்தே புண்ணுண்டு விண்ணுலகடைந்தான் என்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்ட அன்னையைப் பெற்றது இப்பாரததேசம்; மனமுறிந்து, சினங் கொண்டு, தன் மார்பினைக் கரத்தால் பிரித்தெறிந்து, ஒரு பெரும் புரத்தை எரித்த பத்தினிக்கடவுளைக் கொண்டதிந்நாடு; இத்தகைய நறுங் குணங்களையே அணியெனக் கொண்ட மின்னார் பலர் முற்காலத்து வாழ்ந்திருந்தனர். அப்பொழுது இந்திய தேசம் எவ்வளவு உன்னத நிலையி லிருந்தது? அவர்கள் எத்தகைய சுதந்தரத்தைப் பெற்றிருந்தார்கள்? கணவனே கண் கொண்ட தெய்வ மென்பதன்றி அவருக்கு வேறென்ன தெரியும்? அவர் சோப் பூசிக்கொண்டனரோ? கடற்கரையை மாலை வேளைகளில் நாடினரோ? கொண்டவனைவிட்டுக் கண்டவ னுடன் வேசாறினரோ? இவைகளுக் கெல்லாம் நீங்கள் என்னபதில் கூறுவீர்கள்? முற்காலத்திலிருந்த மாதர் அநாகரிகர் என்று எவரும் வாய்திறந்து கூறமாட்டார். இது சத்தியம். அவர் அநு சரித்துவந்த வழக்க ஒழுக்கங்களையே நாம் அநுசரித்தல் நியாய மன்றி, மிருக சுபாவமுடைய நாகரிகத்தை நாடுதல் நீதியாமோ? திரீகள் என்றும் கணவனுக்கு அடங்கினவர்களாகவே இருத்தல் வேண்டும். அதுவே அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் புகழைத் தருவது. கணவனைக் காண்டல் பேரின்பமென்றும், அவனுடனிருந்து பணிவிடை செய்தல் தன் பிறவிப் பயனென்றும், அவனுக்கு இன்பமூட்டுதலே தன் னுடைய முக்திநிலை என்றும் ஒவ்வொரு குல திரீயும் கருதல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர். கடைசியில் ஒன்றுகூறி முடிக்கிறேன். இதுகாறும் நான் கூறியவற்றால், திரீகள் கடற் கரைக்குப் போகக் கூடாதென்றும், அடுப்பங் கரையிலேயே அழுது இறக்கவேண்டுமென்றும், இன்னும் பிறமாதிரியாகவும் எண்ணக்கூடாது. திரீகள் தாங்கள் செய்யும் காரியங்களில் நாயகனுடைய உத்தரவையும் உதவியையும் பெற்றிருக்க வேண்டும் என்றே நான் கூறுகின்றேன். பெண்களைப் பற்றி ஒரு பெண் கூறலாமோ என்று நீங்கள் கேட்கலாம். இங்கொருவரு மில்லாமை யினாலும், தங்களிடத்தில் என் உள்ளத்தில் உள்ளதை ஒளியாமற் சொல்லலாம் என்ற ஒரு தைரியத்தாலும் என் மனதிற்குத் தோன்றியதைக் கூறினேன். குற்றமிருந்தால் மன்னிக்கவேண்டும்.
ம : இஃதேது பிரமாதமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டாயே! என்னால் மூச்சுவிட முடியவில்லையே! (பொறுத்து) நம்முடைய அபிப்பி ராய பேதங்களைப் பற்றிப் பின்னர்ப் பேசிக் கொள்ளலாம். நாழிகையாகின்றது. உன் வீணையை எடுத்துக்கொண்டு ஒரு பாட்டு பாடு; நல்ல பாட்டாக இருக்கவேண்டும்.
யோ : அதற்கென்ன? அப்படியே செய்கிறேன். (பாடுகிறாள்.)
ம : பேஷ்; நிரம்ப நன்றாயிருக்கிறது.
_(அப்பு சாதிரி பிரவேசிக்கிறார்.)_
அ : இன்னுமா விழித்துக்கொண்டிருக்கிறீர்கள்? (மணிசாதிரியும் _யோகாம்பாவும் ஒவ்வொரு புறமாய்ச் செல்கின்றனர்.)_ அடடா? நாம் ஏன் வந்தோம் இங்கே? என்னமோ அறியாதவர்கள்! - உம் -
_(செல்கிறார்.)_
ஏழாங்களம்
இடம் : ஓர் அறை.
காலம் : முன்மாலை.
_(மணிசாதிரி தாம் தவறாக வாதம் செய்த காரணமாகக் கோர்ட்டாரால் தம் வக்கீல் சன்னத்து பிடுங்கப்பட்டமை குறித்து விசனித்துக்கொண் டிருக்கிறார்.)_
மணிசாதிரி : (தமக்குள்) அந்தோ! என் எண்ணங்களெல்லாம் பாழாய்ப் போயினவே! உலகத்தில் உயர்வாய் வாழலாம் என்ற என் நோக்கம் இன்றே அழிந்து போயது. என்னைப்பற்றி நான் அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தமையாலேயே எனக்கு இக்கதி வாய்த்ததோ? இப்பொழுதே, கடவுள் ஒருவர் இருக்கி றார் என்ற ஞாபகம் எனக்கு வருகிறது. என் நண்பன் ஆராவமுத ஐயங்காரின் பேச்சையும் முன்னர்க் கேளாமற் போயினேன்.
_(ஆராவமுத ஐயங்கார் பிரவேசிக்கிறார்.)_
ஆராவமுத ஐயங்கார் : மணி! இப்பொழுதே உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
ம : (விசனத்துடன்) ஆ! நண்பனே! நண்பனே!! உன் புத்திமதியை முன்னர்க் கேளாமற் போயினேன். வக்கீல் பரீட்சைக்குப் படிக்கு முன்னர், என்னைத் தடுத்து நம் நாட்டுக் கைத் தொழிலையேனும் விவசாயத்தையேனும் விருத்தி செய்ய முயற்சி செய் என்று நீ கூறியது இப்பொழுதே என் ஞாபகத்திற்கு வருகின்றது.
ஆ : சென்றது சென்று விட்டது. இனியேனும் நீ நன்மதிபெற்று வாழ்வாய் என்று நம்புகின்றேன். வக்கீல் உத்தியோகம் செய் வதற்கேனும், அரசாங்க சேவை செய்வதற்கேனும் நம்மவர் நம் பிள்ளைகளுக்கு இப்பொழுது கல்வி கற்பித்து வருகின்றனர். இதைப் போன்ற தவறு வேறொன்றுமில்லை. வக்கீல் உத்தி யோகம் செய்வதினாலும் அரசாங்கத் தொண்டு பூண்டொழுகு வதினாலும் நம் நாட்டிற்கு என்ன நன்மை உண்டாகப் போகிறது? நாம் படிப்பது உலகத்திற்குப் பயன்பட வேண்டும். அஃதன்றி, பணம் சம்பாதித்துச் சுகமாய் வாழவேண்டுமென்ற நோக்கத்துடன் படிப்பதைப் போன்ற பேதைமை வேறொன்று மில்லை. நம் நாட்டுக் கைத்தொழில்கள் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றன என்பது உனக்குத் தெரியுமோ? நம் விவசாயிகளின் நிலைமையை நீ அறிவையோ? நமக்கு வேண்டிய எல்லாப் பொருள்களுக்கும் இப்பொழுது நாம் அந்நிய நாடுகளையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால் நம் நாட்டுப் பணம் அந்நிய நாடுகளுக்குச் செல்வது எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தால், சிறிய குழந்தையும் கண்ணீர் விடும் என்பதிற் சந்தேகமில்லை. இப்பொழுது நம் நாட்டில் சுமார் 420 லக்ஷம் ஜனங்கள் பசிப்பிணியால் வருந்திக்கொண் டிருக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தைப் போக்குவது நம் பெருங்கடமை யன்றோ? இன்னும், கல்வியில்லாமல் நம் சகோதரர்கள் கண் மூடிகளாய் இருப்பதை நீ அறிவையோ? அவர்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்த வேண்டாவோ? இவைகளை யெல்லாம் மனதில் கொண்டே நான் உன்னை வக்கீல் பரீட்சைக்குப் படிக்கவேண்டாமென்று தடுத்தேன். என் தடையை மீறி நீ வக்கீல் பரீட்சைக்குப் படித்தாய். இப்பொழுது அதனால் நீ அடைந்த பயனென்னை? பணச் செலவும் துக்கமுமே. இனியேனும் நீ தேச நன்மையை நாடுவையோ?
ம : நண்பனே! உணர்ந்தேன் என் பிழையை. இனி, என் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேசத்திற்கே அர்ப்பணஞ் செய்வல். என் தாய் நாடு முன்னேற்ற மடைவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவைகளையெல்லாம் செய்வேன்; உத்தியோகத்தை ஒரு பொழுதும் நாடேன். இதனை நீ உறுதியாய் நம்புக. எனக்கு நல்லறிவூட்டிய உனக்கு நான் என்றுங் கடமைப்பட் டுள்ளேன்.
ஆ : இப்பொழுதேனும் உன்பிழையை உணர்ந்து கொண்டதற்கு நான் பெரிதும் மகிழ்கின்றேன். வா, வெளியிற் செல்லலாம்.
ம : (தமக்குள்) நான் வக்கீலா யிருந்ததை நினைத்துக் கொண்டால் எனக்கே நகைப்பு உண்டாகின்றது. அதையும் பெருங் கௌரவ மாக நினைத்துப் பெருமிதங் கொண்டேன். ஆ! நல்ல உத்தியோகம்!
_(செல்கின்றனர்.)_
கருத்துகள்
கருத்துரையிடுக