ஆங்கிலப் புலவர் வரலாறு
வரலாறு
Back
ஆங்கிலப் புலவர் வரலாறு
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : ஆங்கிலப் புலவர் வரலாறு (அப்பாத்துரையம் - 45)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 20+252 = 272
விலை : 340/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
** -கல்பனா சேக்கிழார்**
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
ஆங்கிலப் புலவர் வரலாறு
முதற் பதிப்பு - 1947
ஷேக்ஸ்பியர்
1. முன்னுரை
மேனாட்டார் தம் கவிஞரது வாழ்க்கை வரலாற்றின் சிறு பகுதிகளையும் விடாது கோத்துப் பாரிய நூல்கள் எழுதிச் சேர்ப்பது வழக்கம். ஆனால் ஷேக்ஸ்பியர் ஒருவர் வகையில் மட்டும் நம் நாட்டுவாடை அப்பக்கம் வீசிற்று என்னலாம். ஏனெனில், அவர் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் நமக்கு மிகவுங் குறைவாகவே கிட்டியுள்ளன. இது வரலாற் றாராய்ச்சியாளர் குறையன்று. அவர்கள் செய்திகள் இல்லாத இடத்திலும் வருந்தித் தேடிப் புனைந்துரையும், ஐயஉரையும், உயர்வு நவிற்சியுரைகளுஞ் சேர்த்து மலைமலையாக நூல்களை எழுதிக் குவித்துள்ளனர். ஆயினும், இவையனைத்தும் பிற்கால முயற்சிகள்.
ஷேக்ஸ்பியர் காலத்தார் அவர் நூல்களைப் போற்றினரே யன்றி அவர் வாழ்க்கை வகையில் கவனம் செலுத்தாது போயினர். மேலும் ஷேக்ஸ்பியர் ஒரு நல்ல நாடகாசிரியர் என்று அவர்கள் கண்டிருந்த போதிலும், அவர் உலகப் பெருங் கவிஞராய் விளங்குவார் என்று அவர்கள் பெரும்பாலும் நினைத்திருக்க மாட்டார்கள். உண்மையில் ஷேக்ஸ்பியர் புகழ் அவர் வாழ் நாட்களில் இங்கிலாந்தளவிலேயே நின்றிருந்தது. அவர் காலத்திற்குப்பின், அதுவும் சிறப்பாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுந்தான். அஃது இங்கிலாந்தின் எல்லையைக் கடந்து ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் பரந்து உலக முழுமையினையும் திறை கொள்ளும் பெருமை பெற்றது. இன்று ஷேக்ஸ்பியரின் கலைப் படையினை உலகம், உலக முதல்வனது படைப்பாகிய இயற்கைக்கே ஒப்பாகக் கொண்டு போற்றுகின்றது.
தமிழர் இன்று தம் வாழ்வியல் சமய அரசியல் அடிமைத் தனத்தினிடையேயும் தம் ஒப்பற்ற அறிஞரான திருவள்ளுவரை அவ்வளவாகப் போற்றவில்லை; ஆங்கிலேயரோ, தாம் உலகப் பேரரசின் முதல்வராக விளங்கும்போதும் அப் பேரரசையும், அதன் பெருஞ் செல்வத்தையும் விட உயர்வாக ஷேக்ஸ்பியரைப் போற்றுகின்றனர்.
2. முன்னோர்கள்
இலக்கியக் களஞ்சியமான ஷேக்ஸ்பியரின் முன்னோர் களைப் பற்றி மிகுதியாகத் தெரிவதற்கில்லை என்று மேலே கூறினோம். அவர் பாட்டன் ரிச்சர்ட்டு ஷேக்ஸ்பியர் என்பவர். ஆனால், அவர் தந்தையாகிய ஜான் ஷேக்ஸ்பியர் காலத்திலே தான் ஷேக்ஸ்பியர் குடி அவர் பிறப்பிடமாகிய ஸ்ட்ராட்ஃபோர்டு வந்து தங்கியதாகத் தெரிகிறது.
ஜான் ஷேக்ஸ்பியர் தையல், ஆடை வாணிபம், ஊன் விற்பனை ஆகிய பல தொழில்கள் செய்தவர். அவர் பெரிய வழக்காளி. வழக்குகள் சிலவற்றில் அடைந்த வெற்றியின் பயனாக அவருக்கு நிறைந்த செல்வமும், செல்வாக்கும் ஏற்பட்டன. அதன் வாயிலாக அவர் நகரவை உறுப்பினராகி நாளடைவில் அந்நகர்த் தலைவராகவும் (Alderman), தண்டலாள ராகவும் (High Bailiff), அமைதிக் காவலராகவும் (Justice of the Peace) விளங்கினார். ஷேக்ஸ்பியர் பிறந்தபின் அவர் வாழ்க்கை மிகவுங் கடுமை யடைந்தது. கடன்பட்டும், வழக்குகளில் தோற்றும் அவர் மதிப்பிழந்தார். நகரவையிலிருந்து இதனால் அவர் விலக்கப் படவும் நேர்ந்தது. ஆனால், இதற்கு முன் தம் வாழ்க்கையின் மாலைக் காலத்தில் அவர் மீண்டும் நல்நிலை பெற்றார். இஃது அவர் மகனார் இலண்டன் வாழ்வி லடைந்த வெற்றியின் சிறந்த பயனாகவே இருத்தல் வேண்டும்.
ஜான் ஷேக்ஸ்பியர் செல்வ நிலையிலிருந்தபோதுதான் மணம் புரிந்துகொண்டார். அதற்கேற்ப ஷேக்ஸ்பியரின் தாயாராகிய மேரி ஆர்டன் தங்கணவரினும் மேம்பட்ட உயர்குடியிற் பிறந்தவராயிருந்தார். ஆடவருள் உயர் குடியினரிடம் காட்டாத பற்றையும், உணர்வையும், உயர்குடிப் பெண்டிராகிய டெஸ்டிமோனா, இமொஜென் முதலிய கதையுறுப்பினரிடம் ஷேக்ஸ்பியர் காட்டியது இதனாலேயே என்று எண்ணலாகும்.
3. பிறப்பும் இளமையும்
வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தது 1564 ஏப்ரல் 26ஆம் நாளில் ஆகும். அவரது பிறப்பிடம் தென் மேற்கு இங்கிலாந்தில் ஆவோன் ஆற்றங்கரை யோரமுள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு என்ற நகரம். அதனைச் சூழ்ந்த ஸ்ட்ராட்ஃபோர்டு வட்டம் பல சிற்றாறுகளையும் ஏரிகளையும் உடையது. எனவே ஏரிவட்டம் எனவும் அது பெயர்பெறும். ஷேக்ஸ்பியர் காலத்துக்கு 200 ஆண்டுகளுக்குப்பின், அதே வட்டத்தில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய கவிஞரும் ஹாஸ்லிட், லாம், ஸதே முதலிய புலவரும் வாழ்ந்துவந்தனர். அதனால் அது ‘கவிதைவட்டம்’ எனவும் பேரடைந் துள்ளது. அஃது இப்போது ஷேக்ஸ்பியரை விரும்பி வாசிப்பவர்களும் ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியாளரும் பாட்டியல் அன்பரும், சுவைஞரும் வந்து பார்வையிடும் புண்ணிய இடமாய் விளங்குகின்றது. ஷேக்ஸ்பியர் நாட்களில் இது காடடர்ந்த இடமாயிருந்ததாம். ‘மனம் போல வாழ்வு’ என்ற நாடகத்தின் நிலைக்களனாய் விளங்கும் ஆர்டன் காட்டிற்கு இதுவே நினைவுமுதல் எனக் கருதப்படுகின்றது.
ஷேக்ஸ்பியரின் இளமைக் காலத்தைப் பற்றி அவர் நூல்களிலிருந்து சில செய்திகளை உய்த்துணரலாகும். அவர் நாட்டுப்புறத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் தம் தாய்மொழி யாகிய ஆங்கிலமும், எழுத வாசிக்கும் அளவுக்கேனும் பிறமொழியாகிய இலத்தீனும் கற்றிருந்தார். தவிர, அந் நாளைய இங்கிலாந்திற் புதியவாகப் புற்றீசல்போல் எழுந்த பிறமொழி மொழிபெயர்ப்புக்களும் ஐரோப்பிய இலக்கியங்களை அவர் பயன்படுத்து வதற்குத் துணையா யிருந்தன. அறிவுலகிற் சென்று மேம்பாடடைந்த பின் தம் இளங்காலப் பள்ளி வாழ்வினை அவர் எள்ளி நகையாடினார். ‘வின்ட் ஸாரின் இன்னகை மாதர்’ என்ற நாடகத்தில் ஒரு இலத்தீன் வகுப்பின் நடைமுறை காட்டப் படுகின்றது. ’காதல் சீரழி’வில் ஹாலோஃபர்னிஸ் வாயிலாக அவர் பழம்போக்கு ஆசிரியரையும், அவரது பிறமொழிக் கலவைப் போலி நடையையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
4. மண வாழ்வு
ஷேக்ஸ்பியர் 1582இல் ஆன் ஹாட்டவே என்ற மாதினை மணந்தார். அவர் ஷேக்ஸ்பியரைவிட எட்டாண்டுகள் முதிர்ந்தவர். அவர்கள் மணவினை ஒழுங்கு முறைப்படி நடவாது சற்று விரைவுபட்டே நடந்ததாகத் தெரிகிறது. ஆகவே, மணவினைக்குமுன் களவியல் முறைப்படி காதல் நிகழ்ந்து மறக்கமுடியா எல்லைக்குச் சென்றிருக்கும் என்று எண்ணலாகும். அதற்கேற்ப மணவினை கழிந்த ஆறாம் திங்களிலேயே அவர் முதற் குழந்தையாகிய சூசன்னா பிறந்தார்.
அதன்பின் 1585இல் ஹாம்னெட், ஜூடித் என்ற இரு புதல்வியர் இரட்டையராகப் பிறந்தனர். இம் மூன்று புதல்வியரைத் தவிர ஷேக்ஸ்பியருக்கு வேறு புதல்வர் இல்லை. அவருள் இளைய புதல்வியான ஜூடித்தி னிடமே ஷேக்ஸ்பியர் மிகவும் பற்றுடையவராயிருந்தனர் என்று தெரிகின்றது. ’புயற்காற்’றில் கதைத் தலைவியான மிராந்தா, ஷேக்ஸ்பியரின் தந்தையுள்ளத்திற் படிந்த ஜூடித்தின் படிவமே என்று கூறப்படுகின்றது.
5. இலண்டன் செல்லல்
ஷேக்ஸ்பியர் கிட்டத்தட்ட, 25 ஆண்டளவில் ஸ்ட்ராட்ஃபோர்டை விட்டு இலண்டனுக்கு வந்தார். அவர் ஏன் ஸ்ட்ராட்ஃபோர்டை விட்டு வந்தார் என்பதுபற்றியும், இலண்டனில் வந்து முதல் முதலில் எத்தொழிலில் அமர்ந்தார் என்பது பற்றியும் வேறுவேறான செய்திகள் கூறப்படுகின்றன. ஷேக்ஸ்பியருக்கடுத்த தலைமுறையில் ஸ்ட்ராட்ஃபோர்டில் வாழ்ந்த ஜான் டௌடல் (John Dowdall) என்பவர் “ஷேக்ஸ்பியர் இந்நகரில் ஊன் வினைஞர் கடை ஒன்றில் முதற் பயிற்சியாளரா யிருந்தார். முதலாளியுடன் சச்சர விட்டதன் பயனாக இலண்டனுக்கு ஓடிப்போய் அங்கே நாடகசாலை ஒன்றில் கையாளாய் அமர்ந்தார்” என்று எழுதியுள்ளார். ‘திருவாளர் ஷேக்ஸ்பியரது வாழ்வும் காலமும்’ என்ற நூலில் ‘ரோ’ என்பவர் கூறுவது வேறு வகை. "ஸ்ட்ராட்ஃபோர்டின் பெரு நிலக் கிழவரான ஸர் தாமஸ் லூயி என்பவரது காவற்காட்டில் ஷேக்ஸ்பியரும், அவர் தோழர் சிலரும் எல்லை மீறிச் சென்று வேட்டையாடினர். ஸர் தாமஸ் அவர்கள் மீது வழக்குத் தொடர, ஷேக்ஸ்பியர் ஸர் தாமஸ்மீது வசைப்பாக்கள் எழுதி வெளியிட்டார். அது கண்டு வெகுண்ட அவர், பின்னும் கடுமையான நடவடிக்கைகளில் முனைந்தார். அவற்றினின்று தப்பும் எண்ணத்துடன் ஷேக்ஸ்பியர் லண்டன் நகருக்கு ஓடிச் சென்றார்’’ என்று அவர் எழுதுகின்றார்.
இலண்டனில் அவர் முதல் முதலிலேயே நாடகாசிரியராய் அமர்ந்து விடவில்லை. ஜான் டௌடல் குறிப்பிட்டபடி, அவர் முதலில் நாடக சாலையில் கையாளாகச் சேர்ந்து நடிகர்களுடன் படிப்படியாகப் பழகி இறுதியில் தாமும் ஒரு நடிகரானார். அதன்பின் அவர் நடிகர் பகுதிகளைப் படியெடுத்தும், பழம் படிகளைப் புதுக்கியும் கூட்டிக் குறைத்து மாற்றியும் பழகினார். 1593இல் அவர் இவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்று நாடக மேடையில் செல்வாக்கடைந்ததனால், அந்நாளைய சிறந்த நாடகாசிரியர்களின் நாடகங்களை மேடைக்குத் தக்கபடி திருத்தவும், அவர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதவும் தொடங்கினார். ஷேக்ஸ்பியரின் தொடக்க நாடகங்களான ‘ஆறாம் ஹென்றி’, ‘மூன்றாம் ரிச்சர்டு’, ‘டைட்டஸ் அன்ட் ரானிக்கஸ்’ என்னும் மூன்றிலும் அவர் வேறொருவருடன் சேர்ந்துழைத்த உண்மை புலப்படுகின்றது. இத்தகைய உழைப்பில் அவர் வெற்றி கண்டார் என்பதில் ஐயமில்லை.
நாடகமேடைகளுடன் அவருக்கிருந்த நேரடியான பழக்கத்தின் பயனாக, அன்றைய பேர்பெற்ற நாடகாசிரியர் நாடகங்களையுந் திரித்து நல்ல மேடை நாடகங்களாக்கி அவர் புகழடைந்தார். இதனை ஒரு வகையிற் பிறர் புகழைக் கவரும் வேலையாக எண்ணினர் கிரீன் என்ற அந்நாளைய நாடகப் புலவர். 1592இல் அவர் இறக்குந் தறுவாயில் ஷேக்ஸ்பியரைப் பற்றி மனமுளைந்து கூறும் சொற்கள் இதனை வலியுறுத்து கின்றன. ‘’தம்மினும் மிக்கார் நாடகங்களைத் திரித்து மாற்றித் தமதெனக் கூறி வீம்படித்துக் கொள்ளும் வீணர் - ஆம், நடிகரிடையே நடிகராயிருந்து அரை நடிகராகவும் அரை நாடக ஆசிரியராகவும் புகழ்தேடும் போலிகள் உளர். அவர்க ளிடையே அன்னத்தின் தூவிகளைத் தாங்கித் திரியும் காகம், புலித்தோல் போர்த்துத் திரியும் வேசரி ஒன்று உளது’’ என்று அவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு வரியைக் குத்திக்காட்டிக் கூறினர்.
6. பாடல்கள்
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதுவதற்கு முன்னும் எழுதுங் காலத்தும் இயற்றிய பாடல் தொகுதிகள் சில. அவற்றுள் ‘’வீனஸும் அடோனிஸும்’’ என்ற தொகுதி, தொடக்கத்திலேயே 1593இல் வெளியிடப் பட்டது. இது சொல்லணிகளும் சொல் வளமும் மிக்கதாய் இன்னோசைக் களஞ்சியமாய் இலங்கு கின்றது. பாடகர் உலகில் நுழையும்போதே இத்தனை உயர்வுடைய பாடலை இயற்றிய கவிஞர் மிகச் சிலர்.
அவரது அடுத்த பாடல் ‘லுக்ரீஸின் மான அழிவு’ என்பது. இதுவும் செறிந்த பாட்டியல் நடை உடையதே. ஆனால் முன்னைய தொகுதியைவிட இதனில் மக்கள் வாழ்க்கையின் துயர்நிலை அதற்குரிய அவலச் சுவையுடன் நன்கெடுத்துக் காட்டப்படுகின்றது. இது பாட்டியல் நாடகங்களுள் ஒன்றான ’டைட்டஸ் அன்ட்ரானிக்க’ஸை நினைவூட்டுவதாகும்.
ஷேக்ஸ்பியரின் மூன்றாவது பாடல் தொகுதி தொடர் ‘பாத் தொகுதி’ (Sonnets) ஆம். இஃது இத்தாலிய முறைப்படி காதலையே சிறப்பாகக் குறிக்கும் பதினான்கடிப் பாவகையாலானது. வெளியிடுவதற்காக இது ஷேக்ஸ்பியரால் எழுதப்பெற்ற தன்று. உள்ளக் கிளர்ச்சியால் அவ்வப்போது தமக்கும் தம்மோடு நெருங்கிய நண்பர் குழாத்திற்கும் மட்டுமாக எழுதப் பெற்றது. வெளியீட்டாளர் ஒருவர் வகையில் எப்படியோ சிக்கி, அவரால் அஃது ஒரு சார்த்துரை (Dedication)யுடன் வெளிவந்தது. ஷேக்ஸ்பியர் அவ் வெளியீட்டை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. வெளியிட்டவர் பெயருந் தெரியவில்லை. பெயருக்கு மாறாகச் சார்த்துரையில் தம் கையொப்ப மிடுகையில் அவர் டி.டி. (T.T.) என்ற எழுத்துக்களைமட்டுங் குறித்தனர். அதுமட்டுமன்று, நூலின் சாத்தாளர் பெயருந் தரப்படாமல் அதுவும் டப்ள்யூ. எச். (W.H.) என்று எழுத்துக்களாற் குறிக்கப்பட்டது. நம் ஆவலை மேலும் தூண்டும் முறையில் அந்த டப்ள்யூ. எச். என்பவரே அத் தொடர் பாக்கள் எழுதத் தூண்டுதலாயிருந்தவர் என்றும் அச் சார்த்துரை தெரிவிக்கின்றது.
தொடர்ப்பாக்களிற் பலவும், முற்பகுதியில் நட்பையுங் காதலையும் சிறப்பிக்கின்றன: பிற்பகுதியில் காரழகியான காதலி யொருத்தியின் கல்நெஞ்சக் கொடுமையைப் பற்றியும் நண்பர் ஒருவரின் நன்றிகோரலைப் பற்றியும் வாசிப்பவர் மனத்தை ஆழ்ந்து ஈர்க்கும் வகையில் உருக்கமாக விரித்துரைக்கின்றன. இத் தொடர்ப்பாக்களிற் கூறப்பட்ட காதல் முறிவும், நட்பு முறிவுந்தாம் ஷேக்ஸ்பியர் உள்ளத்தின் ஆழத்தைக் கிளறி எழுப்பி அவரது நடுவாழ்வுக் காலத்துத் துன்பியல் நாடகங்களுக்குக் காரணமாயிருந்தன என்று எண்ணவேண்டும். ‘அடங்காப்பிடாரி’, ‘அதேன்ஸ் நகர்ச் செல்வன் தைமன்’ என்ற இரண்டு நாடகங்களும், காதல் முறிவு, நட்பு முறிவு என்பவற்றால் ஷேக்ஸ்பியர் மனநைந்து தமது கலைத்திறங்கூடச் சிதையும் படி அமைதி கெட்ட நிலையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. ஷேக்ஸ்பியர் கையும் உளமும் பண்படாத காலத்தில் எழுதப்பட்ட நாடகங்களினும்விட இவ்விரண்டுங் கீழ்நிலைப் பட்டு விட்டதற்கு, இதனினும் வேறு காரணம் காண்டலரிது.
7. முதற் பயிற்சிகள்
ஷேக்ஸ்பியரின் முதல் மூன்று நாடகங்களிலும் அவர் பிறருடன் ஒத்துழைத்தது மட்டுமன்று: அவற்றில் அவர் எழுதிய பகுதியிலும் அவர் முற்றிலும் தற்சார்பும் தன்னிலையும் பெறாது பிறரைப் பின்பற்றவே முயலுகின்றார். யாப்பு முறையில் கிரீனையும், அணிகள் சொல்லடுக்குகள் வகையில் லிலியையும் பின்பற்றுவதுடன் நாடகப் போக்கிலும் அவர் இப் பருவத்தில் மார்லோவின் சுவடுகளைத் தழுவுகின்றார். மார்லோவின் கதை யுறுப்பினரைப்போலவே இவருடைய கதை யுறுப்பினரும் ஓங்கி யறைந்து பேசியும், கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் மிகைபட எடுத்துக் காட்டியும் இட நிரப்புகின்றனர். தங்கால மக்கள் விருப்பத்திற்கிணங்க மார்லோ கொலைகளையும் ஆரவாரக் காட்சிகளையும் தம் நாடகத்தில் நிறைத்தனர். ஷேக்ஸ்பியரும் இந் நாடகங்களில் இப் பகட்டான முறை களையே பின்பற்றுகின்றார். ஆயினும், அவர் கையின் நயமும் உணர்ச்சிகளின் உள்ளார்ந்த ஆழமும் இங்கும் அவருடைய எதிர்காலச் சிறப்பைச் சுட்டிக்காட்டுவனவாய் விளங்குகின்றன.
தன்னிலை அடைந்தபின் எழுதப்பட்ட முதற்படியான நாடகங்கள், ‘மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்’, ‘வெரோணாவின் இரு செல்வர்கள்’, ‘காதற் சீரழிவு’, ‘ரோமியோவும் ஜூலியட்டும்’, ‘நடுவேனிற் கனவு’ ஆகிய ஐந்துமேயாம். இவற்றுள் முதன் மூன்றிலும் பாமுறை கிட்டத் தட்ட கிரீனின் பாமுறையாகவே இருக்கின்றது. ஒவ்வோரடியும் ஒரு முடிந்த வாசகமாய்க் கிட்டத்தட்ட ஒரே படித்தாகத் தோற்றுகின்றது. கதை உறுப்பினர் இயற்கைக் கொவ்வா வண்ணம் இரட்டை இரட்டையாய் வருவதுடன் பிற்கால நாடகங்களைப் போல் பண்பு வேறுபாடுகளின்றிப் பெயர் மட்டிலும் வேறுபட்டுக் காண்கின்றனர். கோமாளிகள் வெறுஞ் சொல் புரட்டுக்களில் மட்டுமே கிடந்துழலுகின்றனர். ஆயினும் கடைசி இரண்டு நாடகங்களும் இரண்டு வகையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்க ளுள்ளும் உலக இலக்கியத்துள்ளுமே தலைசிறந்து விளங்குகின்றன. ‘ரோமியோவும் ஜூலியட்டும்’ பாட்டியல்பிலும் ‘காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்’ என்ற காதல் நிலையை விளக்கும் முறையிலும் முக்காலத்திலும் ஒப்பற்றதாக விளங்குகின்றன. ’நடுவேனிற் கனவு’ம் வனதெய்வ உலகின் ஒப்பற்ற படைப்பில் இணையற்றதே. கதையுறுப்பினரின் பண்பாட்டு வகையிலும் இது முன்னைய எல்லா நாடகங்களையும் விட மிகவும் சிறப்புடையது.
8. நாடகங்கள்
ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் களிநிலை அல்லது இன்பியல்கள் என்றும், உயர்நிலை அல்லது துன்பியல்கள் என்றும் பழைய வெளி யீடுகளில் பிரித்திருந்தனர். இப்பாகுபாடு பண்டைய கிரேக்கரிட மிருந்து புலவருலகம் மேற்கொண்ட ஒன்று ஆகும். உயர்நிலைகள் மலையாள நாட்டில் இன்னும் ஆடப் படும் ஒட்டந்துள்ளல் அல்லது சாக்கியர் கூத்துப் (பழந் தமிழ்ச் சாக்கையர் கூத்து) போன்றது: களிநிலைகள் வெறுங்கேலிக் கூத்துகள். நன்மை தீமை பாராமலே ஸாக்ரதேஸ் போன்ற அறிஞரையுங் கூடக் கேலிக்கூத்துகள் எதிர்த்து நகையாடின. ஷேக்ஸ்பியரிடம் கிரேக்க உயர்நிலைகளிலும் மேம்பட்ட உயர்நிலை நாடகங்கள் உள்ளன. ஆனால், அன்பும் அருளும் அற்ற கிரேக்கக் கேலிக்கூத்து வகைக்கு அவரிடம் இட மில்லை எனலாம். எனவே, ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் இன்ப நிறைந்த நாடகங்களைக் களிநிலைகள் என்பதை விட இன்பியல்கள் என்பதே பொருத்தமுடையதாகும்.
இன்பியல், துன்பியல் என்ற பெயர்களால் இவை முற்றிலும் இன்பமோ முற்றிலுந் துன்பமோ தருவன என்று எண்ணிவிடக் கூடாது. இன்பியல்களுள் கிட்டத்தட்டக் கலப்பற்ற இன்பியல் ‘மனம் போல வாழ்வு’ ஒன்றே. துன்பியல் அல்லது உயர்நிலைகளுள் கலப்பற்ற துன்பியல் அல்லது உயர்நிலைகளுள் கலப்பற்ற துன்பியல் ‘ஒதெல்லோ’ ஒன்றே. பிறவற்றுள் இன்பியலில் இன்ப மிகுந்து இன்ப முடிவும் துன்பியலில் துன்பமிகுந்து துன்பமுடிவும் அமையப் பெறும். வாழ்க்கையின் இறுதியில் எழுதிய நாடகங்கள் துன்பச் செறிவுடன் இன்பமுடிவும் கனிவும் பெற்று வருதலின் இவை இன்ப-துன்பியல் எனப்படுகின்றன. இதனை யாம் முழு நிலைகள் அல்லது முதிர் நிலைகள் என்போம்.
இம் மூன்றனையும் நீக்கி நான்காம் வகை ஒன்றும் ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்தது. அதுவே வரலாற்று நாடகங்கள். மக்களிடமுள்ள நாட்டுப்பற்றையும் அரசியலார் பக்கம் மக்கள் உறவை மிகைப்படுத்தும் ஆர்வத்தையும் பயன்படுத்தியவை இவை: அன்றைய அரசர் வழி ட்யூடர் கால்வழி. அதற்குமுன் லங்காஸ் திரியன், யார்க்கிஸ்ட் ஆகிய இரு கால் வழிகளிடையே நிகழ்ந்த அல்லிமலர்ச் சண்டை (War of the Roses) ட்யூடர் வழியினரின் வன்மைமிக்க அரசியலால் ஒழிந்தது. இதனை மக்களுக்கு நினைவூட்டுவது அரசியலாருக்கு உகந்ததாயிருந்தது.
(a) முதற் காலம்
ஷேக்ஸ்பியர் மார்லோவைப் பின்பற்றி எழுதிய முதன் மூன்று நாடகங்களுள் ‘ஆறாம் ஹென்ரி’யும் ’மூன்றாம் ரிச்சர்ட்டும்’ பெயரளவில் வரலாறுகள். ‘டைட்டஸ் அன்ட்ரானிக்கஸ்’ துன்பியல்.
முதற்படியான நாடகங்கள் ஐந்தனுள்ளும் ‘ரோமியோவும் ஜூலியெட்டும்’ மட்டுமே துன்பியல் நாடகம் ஆகும். பிற இன்பியல் நாடகங்கள். ‘நடு வேனிற் கனவு’ தனிப்பட்ட இசை நாடகம் ஆகும். இவ் வகையில் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் இஃது ஒன்றே. பிற்காலத்தில் ‘மில்ட்டன்’ எழுதிய கோமஸும், ‘கே’ என்பார் 18ஆம் நூற்றாண்டில் எழுதிய ‘பெக்கர்ஸ் ஆபரா’ அல்லது ‘இரவலர் இசையாட்டம்’ என்பதும் மட்டுமே இத்துறையில் சிறப்புப்பெற்ற ஆங்கில நூல்களாகும்.
ஷேக்ஸ்பியரின் நடுவாழ்க்கைக் காலத்தை ஒட்டிய முழுமுதல் இன்பியல் நாடகங்கள் எட்டு. இவற்றுள் துன்பத்தின் அறிவு பெற்ற கனிந்த இன்பநிலை காணப்பெறுகின்றது. இந் நாடகங்களில் முதற்படியான நாடகங்களை விடப் பாமுறையும், சொற்செறிவும், நாடக அமைப்பும், வாழ்க்கையுணர்வும் மேம்பட்டிருப்பதைக் காணலாம். இவற்றுட் சிலவற்றில் துன்பத்தின் தொடர்பு வெளிப்படையாகவும் சிலவற்றில் மறைந்தும் நிற்கின்றது. கிட்டத்தட்ட துன்பியலாய் இறுதியிற் சற்றே இன்பியல் பூச்சுப் பூசப் பெற்றது ‘வெனிஸ் வணிகன்’, உள்ளூறத் துன்பங் கனிந்து இன்ப மிகுப்பது ‘பன்னிரண்டாம் இரவு’. துன்பம் புதைந்து குமுறுவது ‘சரிக்குச் சரி.’ துன்புத்தின்மீது தாவிக் கிட்டத்தட்ட இன்ப வண்ணமாய் உலாவுவது ‘மனம்போல வாழ்வு’.
இந்நடு வாழ்க்கைக்கால நாடகங்களுள் ‘நான்காம் ஹென்றி’யும் ’ஐந்தாம் ஹென்றி’யும் வரலாறுகள். மேற்கூறிய இன்பியல்களுள் ’வெனிஸ் வணிகன்’, ‘வின்ட்ஸாரின் இன்நகை மாதர்’ ஆகிய இரண்டும் துன்பியல் நாடகங்களின் தொடக்க மாகிய 1600ஆம் ஆண்டுக்கு முந்தியவை. அதன் பின்னும் துன்பியல் நாடகங்களுக்கு இடையிடை எழுதப்பட்டவையே. ‘மனம்போல வாழ்வு’, ‘நன்கு முடிவுறின் நலமேயனைத்தும்’, ‘பன்னிரண்டாம் இரவு’, ‘சரிக்குச் சரி’ ஆகியவை. சிறந்த துன்பியல் நாடகங்களை அடுத் தடுத்து இச்சிறந்த இன்பியல் நாடகங்கள் எழுதப்பட்ட தொன்றே ‘உண்மை யின்பமுந் துன்பமும் ஒன்றிய உடன் பிறப்புக்கள்’ என்பதற்குச் சான்று எனலாம்.
(b) இடைக் காலம்
ஷேக்ஸ்பியரின் நடுக்காலத் துன்பியல் நாடகங்கள், நாடக அமைப்பிலும் சரி, பொருட் செறிவிலும் நேர்மையிலும் சொல்வளத்திலும் சரி, அன்றி இவையத்தனையிலும் சரி, சமமாக ஒத்த மொழி நடையிலும் சரி, மாந்தர் உள்ளத்தின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்தறியும் ஆற்றலிலும் சரி, ஷேக்ஸ்பியர் நூல்களிடையேயும் பிறர் பிறநாட்டினர் நூல்களிடையேயுங் கூட, ஒப்புயர்வற்ற தனிப்பெருந் தகுதியுடையன. இத் தன்மை வாய்ந்த இவ்வகன்ற துன்பியல் மாளிகைக்கு ‘ஜூலியஸ் ஸீஸ’ரே முன்வாயிலும், முதற்படியும் ஆகும். ’ஹாம்லெத்’ அதன் இடமகன்ற முற்றம். ‘ஒதெல்லோ’ அதன் கோபுரவாயில். ‘மாக்பெத்’ அதன் கொலை மன்றம். ‘லியர்மன்ன’னோ அதன் வானளாவிய உப்பரிகையும் எழுநிலை மாடங்களும். ’கோரியோ லான’ஸூம் ’அந்தோணி’யும் ’கிளியொப் பாத்ராவும்’ அதன் புறமதிலும் பூங்காவும் ஆகும். ’திராய்ல’ஸும் ’கிரெஸிதா’வும் அதன் பழம்பொருட் சேம அறை.
துன்பியல்களான இவ்வெட்டனுள்ளும் ஹாம்லெத், ஒதெல்லோ, மாக்பெத், லியர் ஆகிய நான்குமே ஷேக்ஸ்பியரின் ஒப்பற்ற நான்மாடக் கூடங்கள் எனக் கொள்வர். ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியாளரிற் சிறந்த பேராசிரியர் பிராட்லி (Prof. Bradley).
(c) கடைக் காலம்
துன்பியல்களைவிடக் கடைசி நாட்களில் எழுதப்பட்ட ‘புயற்காற்று,’ ‘கார்காலக்கதை’, ‘ஹிம்பலின்’ ஆகிய மூன்று முதிர்நிலை நாடகங்களும், துன்பநிலை குறைந்து எல்லாவகை மக்களிடமும் பரந்த அருளும், பெண்டிர் குழந்தைகள் இளைஞர்கள் ஆகியவர்களிடம் ஒத்துணர்வு காட்டுந் தந்தை உள்ளமும் மிகுந்து காணப்படுகின்றன. நாடக அமைப்புச் சற்றுத் தளர்ச்சியுறினும் முன்னிலும் உயர்ந்த இனிய பாட்டியல்கள் இடையிடையே வந்து நாடகங்களிற் படியும் நம் கவனத்தை உயர்வு படுத்துகின்றன. முன்னையிலும் இப்போது அவரிடம் சொற்செறிவு மிகுதி. சில இடங்களில் இது அளவுகடந்து மயங்கவைத்தல் என்னும் வழுவிற்கு இடந்தருகின்றது. உரையாடலிலும் காட்சிகள் இணைப்பிலும் இக்கடைக் காலத்தின் கைத்திறம் எல்லையற்றது.
அவர் குற்றமாவன, அவர் கையினும் மிகுதியாக உள்ளம் விரைவதும், அமைப்பு முறையில் தற்செருக்காலும், சோம்பலாலும், நேரமின்மையாலும் ஏற்படும் கவனக் குறைகளுமேயாம். இக் குறைகளை மிகைப்படுத்தினர், பாட்டிலும் உரை நடையின் நேர்மையையும் எளிமை நயத்தையும் வேண்டிய 18ஆம் நூற்றாண்டுக் கவிஞர். அவர்கள் அவரை ‘வழுக்கி விழுந்த வரகவிஞர்’ எனக் கூறி அவர் பாட்டினியல்பை வியந்து புலமையை ஏளனஞ் செய்தனர்.
(d) ஓய்வுக் காலம்
1609-க்குப் பின் அவர் தாமாக நாடகம் எழுதவில்லை. எழுத வேண்டும் நிலையும் அஞ்ஞான்று இல்லை. 1593லிருந்து 1609 வரை 17 ஆண்டுகளுக்குள் அவர் கிட்டத்தட்ட 35 நாடகங்கள் எழுதிக் குவித்தார். அவர் நாடகங்களுக்கிருந்த மதிப்பினால் அடிக்கடி நாடகங்கள் வேண்டு மென்று மக்களும் நாடக அரங்கினருங் கேட்டனர். நாடக மேடையின் வேண்டுகோளுக் கிணங்கியும் அவர் விரைந்து விரைந்து எழுதியுங் கூட, இயற்கை யாற்றலின் வன்மையால் அவருடைய நாடகங்கள் ஒரு சிறிதும் பாட்டியற் செழுமை குன்றாது எழிலுற்றுப் பொலிந்தன. எப்படியும் மனிதர் மனிதர்தானே! பிற்காலத்திற் செல்வநிலை திருந்திய பின், தம்மிலும் இளைஞரான புதிய நாடகாசிரியரை அவர் பழக்கி அவர்கள் கையில் தந்தொழிலை ஒப்புவித்தார். ஷேக்ஸ்பியரிடம் பழகிய இளைய ஆசிரியர் ‘ஃபிளெச்சர்’ ஆவார். அவருடன் ஷேக்ஸ்பியர் ‘எட்டாம் ஹென்றி’, ‘பெரிக்ளிஸ்’ ஆகிய நாடகங்களை எழுதினார். இவ்விரண்டும் 1609-1610 ஆகிய ஆண்டுகளுக்குரியன.
ஷேக்ஸ்பியருடைய இளமைக் கால நாடகங்களுடனேயே அவர்மீது வென்றியஞ் செல்வி புன்முறுவல் கொண்டாள். 1600க்குப் பின் அவர் பெயரால் அவர் தந்தையின் நிலை உயர்ந்தது. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எலிஸபெத் அரசியின் கிரீனிச் மாளிகையில் நடிக்கப்பெற்றன. அவர் நாடகக் கழகமாகிய ‘வட்டமாடம்’ அரசியின் முழுத்துணை பெற்றது. ‘நடுவேனிற் கன’வில் அவர் எலிஸபெத் அரசியின் கன்னிமையையும், வேறிடங்களில் அவருக்குப் பின் அரசரான முதல் ஜேம்ஸின் தெய்வீக மருத்துவத் திறனையும் எதிர் நோக்காற்றலையும் பற்றிக் குறிப்பறிந்து புகழ்ந்து, அவர்கள் ஆதரவை அடைந்துள்ளனர். ’நான்காம் ஹென்றி’ நாடகத்தைப் பார்வையிட்டு, ஃபால்ஸ்டாஃபைக் காதலனாகக் காண வேண்டும் என்று முதலாம் ஜேம்ஸ் விரும்பினதற்கிணங்கவே ‘வின்ட் ஸாரின் இன் நகைமாதர்’ எழுதப்பட்டதாம். அவ்வாறே முதல் ஜேம்ஸ் விருப்பத்தை ஒட்டியே ‘மாக்பெத்’தும் இயற்றப் பெற்றது. ஷேக்ஸ்பியர் பாட்டியலில் மூழ்கிய எலிஸபெத் அவருடன் தேம்ஸ் ஆற்றில் படகில் உலவி மகிழ்ந்ததாகப் பென் ஜான்ஸன் என்ற அவர்காலப் பெரும் புலவர் கூறுகின்றார். அரசருடன் போட்டியிட்டுப் பெருமக்களும் அவருக்கு உதவி செய்தனர்.’‘வீனஸும் அடானிஸும்’’ ஸதாம்ப்டன் பெருமான் பேருக்குச் சார்த்தப்பட்டது. அவர் நாடகங்களின் முதல் கோவை கூட அவரிடம் நட்புப்பூண்டு காலஞ்சென்ற பெம்புரோக் பெருமான், மான்ட்கோமரி பெருமான் ஆகிய இருவர் பேரால் வெளியிடப்பட்டது. இங்ஙனம் பெரியோர் ஆதரவு பெற்று ஷேக்ஸ்பியர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தம் இறுதி நாட்களைக் கழித்து 1612ஆம் ஆண்டு இவ்வுலகு நீத்துப் புகழுலகேகினர்.
அவருக்குப்பின் அவர் புதல்வி சூசன்னா 1649-லும், ஜூடித் 1662-லும் இறந்தார்கள்.
1623-இல் அவர் நாடகங்களின் கோவையான முதல் வெளியீடு ஏற்பட்டது.
இங்ஙனமாக உலகெலாம் புகழ்பரப்பும் ஆங்கில நாடக ஞாயிறு ஆங்கில நாட்டில் தன் வாழ்நாளைக் கழித்தது.
மில்ட்டன்
** இறைபணிக்கே தம்மை ஆட்படுத்திய ஆங்கிலக் கவிஞர்**
1. இளமையும் கல்வியும்
ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக் கடுத்தவரும், ஷேக்ஸ்பியருக்குக் கிட்டத்தட்ட ஒப்பானவரும் ஆன கவிஞர் பிரான் மில்ட்டனே யாவர்.
ஷேக்ஸ்பியர் எழுதியவை முப்பது நாடகங்களும் ஒன்றிரண்டு சிறு காப்பியங்களுமே. அவற்றுள் இறவாச் சிறப்புப்பெற்றவை நாடகங்களுள் பத்து அல்லது பன்னிரண்டு தலை சிறந்த நாடகங்களேயாகும். இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் எழுதும் இறையருள் பெற்ற இக்கவிஞர் பிரான் தாம் எழுதியதை இரண்டாம் முறை பாராத அளவு விரைவில் எழுதியமையால் எழுதிய நூல்களின் பெருமை யத்தனையும் அவர் இயற்கையறிவின் பெருமையே யாகும்.
ஆனால் மில்ட்டன் சிறு காப்பியங்களும் எழுதியுள்ளார்; பெருங் காப்பியங்களும் எழுதியுள்ளார்; இரங்கற்பாக்களும், நாடகங்களும் எழுதியுள்ளார். போக உரைநூல்களும் எண்ணில. அந்நாளைய பிற நாட்டுப் புலவர்களுடன் அந்நாளைய புலவர் பொது மொழியாகிய இலத்தீனத்தில் நூல் வெளியீட்டு மூலம் சொற்போர் புரிந்தும் உள்ளார். இவர் ஷேக்ஸ்பியர் போன்றே அருட்கவி என்பதில் ஐயமில்லை யாயினும், அருளுடன் அறிவையும் முயற்சியையும் ஒருங்கே பயன்படுத்தி அருளுக் கோர் அருந்திறன் தந்தவர் ஆவர். இவர் முதல் முதல் எழுதிய கவிதைகளில் கூட உயர்ந்த செம்மைப்பாடு உள்ளதென்பதில் ஐயமில்லை. ஆனால் பிற்காலக் கவிதையில் இதனோடு கூட ஆழமும் பொருட் செறிவும் வினையாண்மையும் அகலமும் உள்ளன. இவர் எழுதிய ஒவ்வொரு வரியும் உணர்ச்சி வேகத்தில் உருவாக்கப் பெற்றுப் பின் அறிவாற்றல் கொண்டு நன்கு திருத்தமும் நயமும் பெற்று விளங்குவது. எனவே ஷேக்ஸ்பியர் நூல்களில் காணப்படும் சிறு பிழைகளும், மட்ட உரைப் பகுதிகளும் இவரது கவிதையில் கிடையா.
இவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் அவற்றின் துறையில் ஆங்கில இலக்கிய உலகில் ஒப்புயர்வற்று விளங்குபவை ஆகும். நாடக உலகில் கூட ஷேக்ஸ்பியர் முயற்சிக்குப் புறம்பான ஓர் துறையில் இவர் எழுதியதனால் அதுவும் ஒப்புயர்வற்றதாகவே விளங்குகிறது.
ஜான் மில்ட்டனின் தந்தையாரும் ஜான் மில்ட்டன் என்ற பெயரையே உடையவர். இவர் பத்திர எழுத்தாளராயிருந்தார். இளமையிலேயே இவர் தம் தந்தையுடன் சமய வேறுபாட்டால் பிரிந்து தம் முயற்சியினால் தனிப்பட வாழ்ந்தவர். கொஞ்ச நாட்களுக்குள்ளாக இவர் கையில் சற்றுப் பொருள் ஏற்பட்டது. அதனையும் தொழிலில் ஈடுபடுத்தித் தம் கட்சிக் காரருக்கு அவ்வப்போது வட்டிக்குக் கடன் கொடுத்தும் வந்தார். இவருக்குத் தம் தொழிலைவிட நூல்களில்தான் ஆர்வம் மிகுதி. பாட்டுக்கள் எழுதுவதிலும் அப்படியே. உழைப்பின் கடுமையை நன்கறிந்தவராதலால் தம் பிள்ளை புலவராயிருக்க வேண்டும் என்று இவர் மிகுந்த முன்கருதலுடைய வராயிருந்து வந்தார். ஆனால் அவர்கூடத் தம் மகனார் உலகின் முதற் பெரும் புலவர் வரிசையுள் ஒருவர் ஆவார் என்று நினைத்திருக்கமாட்டார்.
கவிஞர் ஜான் மில்ட்டன் 1608 டிஸம்பர் 9-இல் பிறந்தவர். வல்லுநர் ஜான் காலெட் என்பவரால் நிறுவப்பெற்ற ஸெயின்ட் பால் பள்ளிக் கூடத்தில் இவர் பயின்றார். அதன் தலைமை ஆசிரியர் அலக்ஸான்டர் கில் என்பவர் திறமைமிக்க ஆசிரியரேயாயினும், அத்திறமையால் அடைந்த புகழைப் போலவே பிரம்படிக்கும் புகழ் வாங்கியவர். ஜான் இத்தகையரது பள்ளியில் நன்கு உழைத்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆனால் அது போதாமல் வீட்டிலும் அவருக்கு வேறு ஆசிரியர்கள் வைத்துத் தந்தையார் நூலறிவின் பல துறைகளையும் இவருக்குப் புகட்ட முனைந்தார், ஜான் மில்ட்டனுக்கும் நூல்களில் தந்தையைப் போன்றே விருப்பமும், தந்தையின் முற்போக்கு வாய்ந்த சீர்திருத்த சமயத்தில் (Extreme Protestatism or Puritantism) பற்றும் இருந்தமையால் இவ் ஓயா முயற்சியிடையும் தளரா ஊக்கமுடையவராயினார்.
‘’எனது இளமை முதற்கொண்டே தந்தையார் இடையறா ஊக்கத்துடன் எனக்கு மொழிகளின் அறிவையும் அறிவியல் துறைகளின் அறிவை யும் புகட்டிவந்தார். பள்ளியிலும் வீட்டிலும் எனக்குப் பல ஆசிரியர்கள் பல துறைகளில் பயிற்சி தரும்படி அத் தந்தையார் (இறைவன் அவருக்கு இன்னருள் புரிக) அமர்த்தி யிருந்தனர். உயர்தனிச் செம்மொழிகளில் வல்லவனாக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் இருந்தமையினால் நான் முயன்று உழைப்பைப் பன்மடங்காக்கினேன்’’ என்று அவரே கூறுகிறார்.
பள்ளிப்பயிற்சி முடிந்தபின் மில்ட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்து கல்லூரியில் பயிற்சி பெறச் சென்றார். இக் காலத்தில் மில்ட்டன் இளமையும் வனப்பும் மிக்கவராயும், பொன்மைமிக்க நீண்ட முடி உடையவராயும் இருந்தனராம். அதனுடன் (இத்தகைய வெளி யழகுடன் பொதுப்படையாகக் காணுதற் கரிதான) இறைவன் பற்றும் உடையவரா யிருந்ததனால் உடனொத்த மாணவரிடையே இவர் ‘கிறிஸ்து கல்லூரியின் இளம் பிராட்டி’ என நகைத்திறம்பட அழைக்கப்பட்டார்.
இலக்கிய உலகில் பிறக்கும்பொழுதே அவர் இளங்குயிலாகப் பிறந்திருக்க வேண்டும். அதினும் பிற குயில்களைப் போன்ற குயில் அல்லர் இவர். இவர் வேறு இறைப்பணியிலேயே நின்ற நேர்மையுடைய குயில் என்னல் வேண்டும். பொன்னை ஒத்த உயர் அறிவு புதுமலரின் மணத்தை ஒத்த இனிமையுடன் கலந்து, இரண்டும் சேரப் பொன்மலர் நாற்றமுடைய தாயிற்று. விவிலிய நூலின் அருட் பாட்டுப்பகுதி 136-க்கு அவர் செய்த மொழி பெயர்ப்பு, மொழி பெயர்ப்பென்று சொல்ல முடியாதபடி தனி நயமுடையதாயிருப்பது காண்க:-
‘’மன்னும் எம் இறை இன் அருள் மாறின்றிப்
பின்னி நின்றது பேசும் உயிர்களை;
அன்ன தாகலின் அன்னவன் வான்புகழ்
பன்னிப் பன்னிப் பராவுவம் வாரிரே’’*
Let us with a gladsome mind
Praise the Lord, for He is kind;
For His mercies aye endure,
Ever faithful, ever sure.
என்றவாறு காண்க.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளம் புலவர் (B.A.) பெரும் புலவர் (M.A.) என்ற பட்டங்களைப் பெற்றபின் மில்ட்டன் தம் தந்தையார் அப்போது குடிமாறிய இடமாகிய பக்கிங்ஹாம்ஷயரிலுள்ள ஹார்ட்டனுக்கு வந்தார்.
கவிதையே தமது வாழ்க்கைப் பணி என்பதைக் கல்லூரியிலேயே இவர் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். ‘கிறிஸ்து பிறந்த நாள் காலைக் கொண்டாட்டம்’ (Ode on the morning of Christ’s Nativity) என்னும் நடனப் பாட்டு அல்லது கும்மி அங்கே அவர் எழுதியது ஆகும். ‘உமது வாழ்க்கையில் நீர் செய்யப் போவது யாது?’ என உசாவிய நண்பர் ஒருவர்க்கு எழுதிய கடிதத்தில், ‘’என் நினைப்பா’‘! அஃது இறவாப் புகழுடைய ஈசனைப் பற்றியது! இதை உன் காதில் மட்டுமே இப்போது கூறுகிறேன். இப்பெரும் பணிக்கென இப்பொழுதே என் இறகுகளை யான் கோதிக் கத்தரித்துக் கொள்கிறேன்’’ என்று அவர் கூறுகிறார்.
2. கவிதையின் செவ்வி
இக்காலத்தில் இவர் நாட்டுப்புறத்தில் வாழ்ந்தது இவரது கவிதையின் செவ்விக்கு ஒத்ததாகவே இருந்தது. அதற்கேற்ப அவரும் தமது உறைவிடத்தை அழகுபட அமைத்துக் கொண்டனர். இனிய காட்சிகளும் இன்னொலிகளும் இனிய மணமும், மெல்லிய தென்றலும் நறுங்கனிகளும் நிறைந்து அஃது அழகுத் தெய்வத்தின் உறைவிடமோ என்ன விளங்கிற்று.
இக்காலத்தில் இவர் எழுதிய கவிதைகளிலெல்லாம் இத்தென்றல் மணத்தையும் இவ்வின்னிசையையும் காணலாம். இவற்றுள் முதன்மையானது கோமஸ் (Comus) என்பது. இதில் யாழொலிக்கும் இனிமையூட்டும் பாட்டுக்கள் பல உள்ளன. இளைஞர் களியாட்ட உணர்ச்சியை இது நன்கு புலப்படுத்து கின்றது. களிமகன் (L’Allegro), நிறைமகன் (Il Pensoroso) என்ற தலைப்புடைய இரு கவிதைகள் ஒன்றுக்கொன்று இணைப் புடைய இரு மணிகள். முதலது களிப்புடைய ஒருவன் ஒருநாட் பொழுதை எங்ஙனம் போக்கி எங்ஙனம் துய்க்கிறான் என்பதையும், பின்னது அதேபோல நிறைவும் அறிவும் உடைய ஒருவன் எங்ஙனம் அப் பொழுதைக் கழிக்கிறான் என்பதையும் காட்டுகின்றன. ஒவ்வொருவனது மனப்பான்மைக்கும் ஒத்தபடி காட்சிகள், கருத்துக்கள் இருவேறு வகையாகத் திரிக்கப்பட்டு இருவேறுவகைத் தெய்வத் தொகுதிகளின் செயல்களாகச் சுவைபட வரையப்பட்டுள்ளன.
லிஸிடஸ் என்ற இரங்கற்பா ஒன்றும் அர்க்கேடிஸ் (முல்லையங் கானம்) ஒன்றும் முல்லைத் திணைக்குரிய ஓவியங்கள் ஆகும். இவற்றுள் முன்னது மில்ட்டனுடைய நண்பர் எட்வர்டு கிங் என்பவரது பிரிவா லேற்பட்ட நினைவுகளைத் தருகிறது. ஆங்கில இலக்கியத்தின் இரங்கற் பாக்களுள் இது தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
3. நாடு சூழ் வரல்
நம் நாட்டில் சமயப் பற்றுடையார் காசி, இராமேச்சுரம் செல்வது போல இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகளில் இலக்கியம், நாகரிகம், கலை ஆகியவற்றுள் பற்றுடையார் அவற்றை ஐரோப்பாவுக்குத் தாய் நாடுகளான இத்தாலி, கிரேக்கம் முதலிய பல நாடுகளைச் சுற்றிப் பார்வையிடுவர். எனவே கலையினும் அறிவினும் மேம்பட விரும்பிய மில்ட்டனுக் கும் அத்தகைய விருப்பம் இருந்தது இயற்கையே. தந்தையும் தமது குறுகிய வருவாயிடையேயும் இதற்கான செலவை மனமார அவருக்குத் தந்தனர்.
உயர்தனிச் செம்மொழியாகிய இலத்தீனம், தற்காலத் தாய்மொழிகளுள் முதற்படியிலுள்ள இத்தாலியம் ஆகிய இவ்விரு மொழிகளிலு முள்ள இலக்கிய வெள்ளத்தை அள்ளிப் பருகிய மில்ட்டனுக்கு இத்தாலி நாட்டின் பெருநகரங்களான ஜெனோவா, லெக்ஹார்ன், பீஸா, ஃபிளாரன்சு, ரோம், வெனிஸ் முதலியவை வெறும் நகரங்களாக அல்லாமல் விர்கில், ஹோரேசு, ஜூவனல், தந்தே, பெட்ரார்க் முதலியோரின் நினை வூட்டு களாகவே விளங்கின. வானஇயல் வல்லுநரான கலீலியோவையும், டச்சு நாட்டிலுள்ள க்ரோட்டியஸ் என்ற பேர்போன வரலாற்றாசிரியரையும் மில்ட்டன் கண்டது இப்பயணத்தின் போதே யாகும்.
மில்ட்டன் இத்தாலி நாட்டிலிருக்கும்போது இங்கிலாந்தில் அரசரது முடியரசுக்கு எதிராகப் பாராளுமன்றத் துரிமையாளர் போர் தொடங்கினர் என்பது கேட்டார். மில்ட்டன் பாராளுமன்றத்தின் மிக முற்போக்கான கட்சித் தலைவரான கிராம்வெலின் நண்பர். எனவே அப்போரில் பங்கு கொள்ள வேண்டுமென விரைந்து தாய்நாடு வந்தார். ஆனால் இவர் படைப்போருள் என்றும் கலந்ததாகத் தெரியவில்லை. அவர் தம் கட்சிக்குச் செய்த துணையெல்லாம் கலைப்போரும் சொற்போருமே.
4. அரசியல் வாழ்வும் உரைநடை நூல்களும்
1640 முதல் 1660 வரை இருபதாண்டுகளாக மில்ட்டன் காவியத் தெய்வத்திற்குத் தற்காலிகமாக வணக்கம் செய்துவிட்டு அரசியல் துறையிலேயே ஆழ்ந்து ஈடுபட்டுச் சொற்போர்த் தாள்களும், உரை நூல்களுமே எழுதுவாராயினர். இத்தகைய சிறு நூல்கள் இருபத்தைந்து வரை உள. அவற்றுட் சில அவர் பெயர் தாங்கின. சில புனைபெயரும் சில மறை பெயரும் தாங்கின. இவற்றுள் தலைமை வாய்ந்தது, ‘அரியோபகிட்டிகா’ என்பது. இது ‘’பேச்சுரிமை’’ பற்றியது. கிரேக்க நாட்டின் பழந்தலைநகரான அதேன்ஸின் நாட்டாண்மை மன்றமாகிய அரியோப்பகஸின் பெயரடி யாக வந்தது இப்பெயர். இதன் கொள்கை மிக உயரியது. நடைமுறையில் இன்றும் அருமையாய்ப் பேரிலக்காய் நிற்கத்தக்கது. ‘’நிலமாதுக்குப் பொறையாக வாழ்வோர் எத்தனையோ பேர் உளர்; ஆசிரியர் அத்தகையர் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையின் முதிர்ந்த மணிகளே நல் நூல்கள் ஆகும். உலக வாழ்வின் மிக்கதோர் பெருவாழ்விற்குரிய திறவுகோல்கள் ஆகும் தகுதியுடையவை அவை’’ என்பது போன்ற பல அரிய நல்லுரைகள் இதில் அடங்கியுள்ளன. இதற்கொப்பான இன்னோர் உரைநடை நூல் கல்வியின் உரிமைபற்றியதாகும். இது தம் புதல்வியர்க்கு அவர் கல்வி கற்பிக்கும்போது எழுந்த நினைவுகளாம்.
இந்நூல்களின் உரைநடை மிகவும் செழுமையும் நயமும் உடையது. ஆயினும் அடிக்கடி அது கடுமை என்னும் ஒரு வழுவிற்கு மட்டும் ஆளாயிருந்தது. மில்ட்டன் இந்நூல்களை அரசியல், வாழ்வியல் பணிகளுக்காகச் செய்தனரே யன்றி நூல்கள் என்ற இலக்கிய நோக்கால் எழுதவில்லை. இதையே அவரும் ‘’எனது வலக்கை கவிதைக்கும் இறைவன் புகழுக்கும் மட்டுமே உரியதாகலின், இந்நூல்களில் என் இடக்கையின் ஆற்றலையே காணலாகும்’’ எனக் கூறினர்.
இங்ஙனம் வலக்கை வாளா இருந்த காலத்தில் அது வளராது அங்ஙனமே இருந்துவிடவில்லை. முன்னம் அவர் கவிதையில் எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் காணப்படும் மென்மையும், நயமும் மட்டுமே தலைசிறந்திருந்தன. அரசியல், வாழ்வியல் முதலிய வினைத் துறைகளி லீடுபட்டு உலகமக்களுடைய உள்ள நிலைகள், எண்ணப் போக்குகள் ஆகியவற்றில் தோய்ந்து அவற்றின் உள்ளுறை நுட்பங்களை யும் பொருள் திட்பங்களையும் அறிந்தபின்தான் மில்ட்டன் கவிதை ஹோமர், கம்பர், காளிதாசர், தந்தே முதலியவர்களின் கவிதைகளுக் கொப்பாக மென்மையும், உரமும், சொல் நயமும், பொருள் நயமும் செறிந்து விளங்கலாயிற்று.
இல் பென்ஸரோஸோ (நிறைமகன்) என்ற கவிதையில் இவரே குறிப்பிட்டபடி துன்பமே இவருக்கு உயர் அறிவுக் கண்ணைத் தந்து இவர் கவிதையையும் தெய்வீகக்கவிதை யாக்கிற்று என்னலாம். அத்துன்பங்களுள் அவர் கண்ணொளி யிழந்தது ஒன்று. கற்பரசியாய், அவருக்கு வலக்கையாய் இருந்த அவருடைய இரண்டாம் மனைவி இறந்தது இன்னொன்று. அவருடைய மூன்று புதல்வியரும் அவருக்கு உதவி செய்தனராயினும், அவர்கள் என்றும் அவர் இரண்டாம் மனைவி யவ்வளவு அவர் குறிப்பறிந்தவரல்லர். அவரது மூன்றாவது துயர் அவரது கட்சி வீழ்ச்சியுற்றதே யாகும்.
இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் தம் கருத்தை முற்றும் போக்கியிருந்த இக் கவிஞர் பெருமான், தம் வாழ்க்கையின் நடுப்பகுதியில் இங்ஙனம் இவ் அறப்போர்களில் ஈடுபட்டுப் பெருவாரியாக எழுதவும் வாசிக்கவும் நேர்ந்தமையால், அவற்றால் கண் தெரியாதபடி கண்ணின் ஒளியையே இழந்தார். போதாக்குறைக்கு அரசியல்புயல் மாறியடித்து அவர் நண்பர் கிராம்வெலின் ஆட்சி வீழ்ச்சியுற்றுப் பழைய முடியரசின் கான்முளை யாகிய இரண்டாம் சார்ல்ஸ் அரசர் பட்டமேற்றார். அத்துடன் மில்ட்டன் அரசியல்பணி அகன்றது. இதனினும் பெருங்கேடு அவர் கட்சியாளர் பலருக்கு ஏற்பட்டதெனினும் அவரது கல்விப் புகழ் அவரது உலகியல் வாழ்வின் இகழினின்று அவரைப் பாதுகாத்தது.
5. கண்ணொளி யிழந்தபின் கருத்தொளி சிறந்தது
செம்மையினும் கடுமையிலே பெரியோரது பெருமையை நன்கு காண்டலாகும். கண் போயினும் கண்ணினும் மிக்க எண்ணையும் எழுத்தையுமே பெரிதாக எண்ணிப் போற்றினர் மில்ட்டன். அவரது வாசிப்பு இதற்குப் பின் குறைவதற்கு மாறாகக் கூடிற்று. தமக்கு வேண்டுபவற்றை எல்லாம் தம் புதல்வியர், மாணவர் முதலியவர்கள் உதவியால் வாசித்துக் கேட்டுக்கொண்டார். கண்ணொளியிழந்த பின்னர்தான் மில்ட்டன் முதல் தரமான கவிதைகள் முற்றிலும் இயற்றினார் என்பது ஆங்கில மக்கள் அனைவர்க்கும் இறும்பூது தரும் செய்தி ஆகும். இதுபற்றி அவர் மனமுளைந்ததேயில்லை. இதற்குக் காரணம் அவருக்கிருந்த மாறா இறைவன் பற்றேயாகும். இறைவன் கொடுத்த கொடை; இறைவன் எடுத்தனர் என அவர் இதனை விடுத்தனர். தமது இறைபணி இதனால் குறைந்து விடுமோ என்று மட்டும் அவர் அஞ்சினார். அவ்வகையிலும் அவருடைய பற்றும் ஊக்கமும் அவருக்கு உதவி அவர் ஒப்புயர்வற்ற வெற்றி பெறும்படி செய்தன. தமது கண்ணொளி போனதுபற்றி அவர் எழுதிய 14 அடியுள்ள தொடர்ப்பா (Sonnet) கவியழகிற்கும், கருத்துயர்விற்கும் பேர்போனது.
‘’படியில் வாழ்வினில் பகுதிசென் றிடுவதன் முன்னர்
அடியன் இன்னொளி இழந்தனன்; அகத்துள்ஓர் ஆற்றல்
குடியிருந்தது; மறைப்பதற் கரியது; கோதில்
அடிகட் கேபணி புரிந்திட அமைந்ததிங்கு, இதனால்
முடிவு நாள், அவன் மனங்கொள முனைந்திடல் கண்டும்
’‘படிவ ழங்குறு பண்ணவன் பகலொளி மறுத்தல்
கடவ தோ’’ எனக் கருத்துறக் கொடுகலங் குள்ளத்
தடத்து வான் பொறை எழுந்தவன் தண்ணருள் காட்டும்
‘’பேறெ லாம்தரும் பெற்றியன்; பிறரிடம் வேண்டும்
ஆறி லான்; அவன் ஆணையைத் தாங்குதல் அறனே;
மாறில் மாமுடி மன்னவர் வீறினன்; மனக்கோள்
தேறின், நானிலம் ஏழ்கடல் தேவரும் கடப்பர்;
ஈறி லான்குறிப் பறிந்திடக் காத்துநிற் பதுவும்,
வேறில்; முன்னவர் மெய்ப்பணிக் கிணையெனக் கொளலே!’’
When I consider how my light is spent
Ere half my days in this dark world and wide,
And that one talent which his death to hide
Lodged with me useless though my soul more bent
To serve therewith my Maker and present
My true account, lest He returning chide;
‘’Doth god exact day-labour, light denied?’’
I fondly ask;-But Patience, to prevent
That murmur, soon replies; ‘God doth not need
Either man’s work or His own gifts; who best
Bear his mild yoke, they serve Him best; His state
Is kingly; thousands at His bidding speed
And post o’er land and Ocean without rest;-
They also serve who only stand and wait’’
6. துறக்கவீழ்ச்சியின் மாட்சி
மில்ட்டனது மிகச் சிறந்த இலக்கியப்பணி அவரது துறக்கவீழ்ச்சி (Paradise Lost) ஆகும். அவரது பள்ளி வாழ்க்கை நாள் முதற்கொண்டே இத்தகையதோர் பெரும் பணிக்கே தம் வாழ்நாள் முழுமையையும் ஈடுபடுத்த வேண்டுமென்று அவர் உறுதிகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அத்தகைய பணிக்கு அவர் எடுத்துக்கொண்ட முதற்பொருள் ‘ஆர்தரும் அவரது நூறு மெய்வீரரும்’ என்ற பழைய ஆங்கிலநாட்டுக் கதைத் தொகுதியாகும். மில்ட்டன் இதனை எழுதாது விட்டனர். நெடுநாள் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் விக்டோரியாப் பேர் அரசியாரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த கவிஞர் டெனிஸன் இதே பொருள் மேல் மில்ட்டன் எழுதிய துறக்க வீழ்ச்சி, துறக்க மீட்சி ஆகியவற்றைப் பின்பற்றி ஆர்தர் செலவு (Passing of Arthur), ஆர்தர் வரவு (Coming of Arthur) என இரு காப்பியங்கள் இயற்றினார். இவற்றுட் சில பகுதிகள் சிறந்த கவிதைகளே. ஆயினும் பெருங்காப்பியம் எழுதும் வகையில் மில்ட்டன் ஒருவருக்கன்றி ஆங்கிலக் கவிஞர் எவர்க்கும் வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.
துறக்க வீழ்ச்சியின் கதை விவிலிய நூலில் கூறப்பட்ட மனிதனின் வீழ்ச்சிக் கதையே ஆகும். இறைவன் இயற்றிய துறக்கம் அல்லது பொன் னுலகில் முதல் மனிதன் ஆதாமும், முதல் மாது ஏவாளும் வாழ்ந்ததும்; இறைவனாணை மீறிய இறைவனின் பகைவனாகிய சைத்தானது உரைக் கிணங்கி அறிவு மரத்தின் கனியை அவர்கள் உண்டதும், அதன் பயனாக உலகில் தீவினை, நோய், முதுமை, சாக்காடு ஆகியவை ஏற்பட்டதும் இக்கதையின் விவரங்கள்.
இந்நூலின் முதல் எடுத்த ‘’மனிதன்றன் முதற் பிறழ்வையும்’’ என்ற எடுப்புடன், ‘’தேவரும் வீரரும்’’ என்றெடுத்த ஹோமரது இலியதும், ‘’கிடந்தது வடக்கண் ஆங்கே’’ என்றெடுத்த காளிதாசனது குமார சம்பவமும், ‘’உலகம் யாவையும்’’ என்றெடுத்த கம்பர் இராமாயணமும், ‘’உலகெலாம்’’ என்றெடுத்த பெரிய புராணமும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிற் சிறப்புடைய தாயினும், பொருட் செறிவிலும் ஓசை முழக்கிலும் பெருமித நடையிலும் இவை எல்லாம் பெரிதும் பொது ஒப்புமை யுடையன என்பதை அவற்றை வாசிப்போர் எளிதில் காணலாம். இவற்றில் காணும் இயற்கைக் காட்சிகள், மனித உணர்ச்சிகள், உயர் கருத்துக்கள் ஆசியவற்றைத் தொகுத்து ஒருங்கே தமிழ் மொழியில் வெளியிட்டால் பிறநாட்டினரே போன்று தமிழ் நாட்டினரும் அவற்றை ஒப்புமைப்படுத்தி உலகமுதற் கவிகளின் நலன்களைப் பருகுவர் என்பது உறுதி.
7. துறக்க மீட்சியும் முடிவும்
மில்ட்டனின் நண்பருள் ‘’குவேக்கர்கள்’’ அல்லது நண்பர் கழகத்தைச் சேர்ந்த தாமஸ் எல்வுட் என்பவர் மில்ட்டனுக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் எழுதிய நூலின் நயத்தையும் சிறப்பையும் பாராட்டியதோடு துறக்கத்தின் வீழ்ச்சியைப்பற்றி இவ்வளவு எழுதியும் அதன் மீட்சிபற்றி ஒன்றும் காணோமே என்றாராம். அதன் பொருத்தத்தை உணர்ந்து மில்ட்டன் பின்னர் துறக்கமீட்சி எழுதினார். முதுமையாலோ, போதியநாள் மனத்தில் உறையாததாலோ, எக்காரணத்தாலோ துறக்க வீழ்ச்சியில் கண்ட உயர்வும் பெருமிதமும் துறக்கமீட்சியில் மிகுதி காணவில்லை.
துறக்கவீழ்ச்சி 1667இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலே யருக்கு அழியாக் கருவூலமாய் விளங்கும். இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு இதனால் கிடைத்தது 60 பொன் மட்டுமே. அவர் தங்கியிருந்த வீடு 1666இல் தீயில் எரிந்து பாதி கருகிற்று. அவர் எழுதிய கடைசி நூல் (துறக்க வீழ்ச்சி, துறக்கமீட்சி இவை நீங்கலாக) ஸாம்ஸன் அகனிஸ்தேஸ் அல்லது மற்போர்வீரன் ஸாம்ஸன் என்னும் துன்பியல் நாடகமே (Tragedy)யாகும்.
இறக்கும்போதும் விவிலியநூல் வாசிப்பும், இசை கேட்கும் பழக்கமும், இறைவன் நினைப்பும் அவரை விட்டு நீங்கவில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த வேட்ஸ்வர்த் என்ற பெருங்கவிஞர் இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில்,
ஈண்டு மில்ட்டன்! நீ எம்மிடை இருந்திடல் விழைவேம்;
இங்கி லாந்துனை அழைத்தனள்; புதுவர வின்றி
யாண்டு மெம்முயிர் வாழ்க்கைகெட் டிழிந்தது; சமயம்,
இணையில் வீரமும், கல்வியும் இல்லறம் தானும்,
மாண்ட ஆங்கில மக்களின் இனியநல் அமைதி,
மறையத் தன்னலச் சூழலுட் பட்டனம் யாமே.
மீண்டு வந்தெமக் கினியும் ஓர் புத்துயிர் அருள்வாய்!
மீண்டும் நல்லறம் ஒழுக்கமும் ஆண்மையும் தருவாய்!
துருவ மீனெனத் தோற்றும்நின் வாழ்க்கையிங் கெமக்கே!
தூய வானென அமைதியும் பெருமையும் உடையாய்!
மருவு நீள்கடல் முழக்கென முழங்கும்நின் மொழிகள்!
மனிதர் வாழ்விடை மனிதனாய் வாழ்ந்தபுத் தேள் நீ!
திருவும் மேன்மையும் சீருறக் கொண்டனை எனினும்
உருவில் எந்தமக் கெளியையு மாயினை பெரிதே.
Milton, thou shouldst be living at this hour
England hath need of thee : she is a fen
Of stagnant waters : altar, sword and pen
Fireside, the heroic wealth of hall and bower,
Have forfeited their ancient English dower
Of inward happiness. We are selfish men!
Oh! raise us up, return to us again;
And give us manner, virtue, freedom, power.
Thy soul was like a star and dwelt apart :
Thou hadst a voice whose sound was like the sea
Pure us the naked heavens, majestic, free;
So didst thou travel on life’s common way
In cheerful godliness : while yet thy heart
The lowliest duties on herself did lay.
-Wordsworth.
என்று எழுதியுள்ளார்.
சாமுவெல் ஜான்ஸன்
** ஆங்கில இலக்கிய உலகின் விளக்கம் போன்றவர்**
1. இளமையும் கல்வியும்
ஆங்கில இலக்கிய உலகில் வல்லுநர் (Doctor) சாமுவெல் ஜான்ஸனின் புகழ் குன்றின்மேலிட்ட விளக்கம்போன்றது. ஆனால், அவரது புகழில் ஒரு புதுமை உண்டு. அவர் புகழ் அவர் எழுதிய நூல்களால் வந்ததன்று; ஏனெனில், இன்று அவருடைய நூல்களெதனையும் எவரும் அவ்வளவாகப் படிப்பதில்லை. ஆனால், அவரைப் பெரிதும் போற்றிய அவர் மாணவர் ஜேம்ஸ் பாஸ்வெல் என்பவரால் எழுதப்பெற்ற அவரது வாழ்க்கை வரலாற்றி னாலேயே அவரது புகழுடம்பு நின்று நிலவுகின்ற தென்னலாம்.
ஆனால், ஒரு நூலால் அதன் ஆசிரியருக்குத்தான் புகழ் ஏற்பட வழியுண்டேயன்றி, அந்நூலின் தலைவருக்குப் புகழ் ஏற்படுமா? ஏற்பட்டாலும் அப்புகழ் இலக்கியத் துறை சார்ந்த புகழாகுமா? என்ற கேள்விகள் எழலாம். இதற்கு விடை யாதெனில், ஜேம்ஸ் பாஸ்வெல் எழுதிய நூலின் பெருமை அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதால் அன்று; அந்நூலுள் சிறந்ததொரு தலைவருடைய வாழ்க்கை விவரங்களும், வாய் மொழிகளும் ஆசிரியர் புனைவோ மறைப்போ திரிபோ எதுவும் இன்றித் தெளிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே. வாழ்க்கை வரலாற்றுலகில் பாஸ்வெலுக்குக் கிடைத்த உயர் இடமெல்லாம் அவரது வரலாறு ‘’அடுத்தது காட்டும் பளிங்கு போல்’’ இருந்த தென்பதேயாம். இவைபோக அதில் தோன்றிய வனப்பத்தினையும் நூல் தலைவராகிய ஜான்ஸனது வாழ்க்கை வனப்பும், அவரது வாய்மொழிகளின் வனப்பும் சுவையுமேயாம்.
ஸாமுவெல் ஜான்ஸன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் நாளில் லிச்பீல்டு என்னுமிடத்தில் பிறந்தவர். இவர் குழந்தைப் பொழுதிலேயே ‘’அரசர் பழி’’ என வழங்கும் நோய்வாய்ப்பட்டுக் கண்ணொளி மழுங்கப் பெற்றார். அந்நாட்களில் ஆங்கில நாட்டில் அரசர் கைதொட்டால் இந்நோய் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படியே இவரும் மூன்றாண்டு நடக்கையில் (அல்லது முப்பதாவது திங்களில்) லிச்பீல்டி லிருந்து லண்டன் வரை எடுத்துச் செல்லப்பட்டு ஆன் அரசியின் கையால் தொடப்பெற்றார். அப்படியும் நோய் நீங்கினபாடில்லை. அதன் அழிவுக் குறிகளால் அவர் முகம் என்றென்றைக்கும் அருவருப்புத் தோற்றமுடைய தாக ஆக்கப்பட்டது.
பள்ளிக்கூட வாழ்க்கையில் ஜான்ஸன் எப்பொழுதும் முதல் இடத்தவராகவே இருந்துவந்தார். பின்நாட்களில் அவரது ஒப்புயர்வற்ற திருந்திய இலத்தீன் அறிவு எப்படி ஏற்பட்டதென்று அவரிடம் ஒருவர் கேட்டபோது அவர் ‘’ஆசிரியர் நன்றாக அதை அடித்து ஏற்றினார்’’ என்றார். இதிலிருந்து அடிக்கும் அறிவுக்கும் பொருத்தமிருந்தது என்று அவர் நினைத்தனர் என்றே எண்ணவேண்டும்.
ஜான்ஸன் நினைவாற்றலும் உழைப்பு வன்மையும் அந்நாளைய மக்களால் வியக்கத்தக்கதாயிருந்தன. ஆயினும், உண்மையில் அவர் உடலியற்கையாலும் பழக்கத்தாலும் சோம்பேறி யென்பதும் தெரிகிறது. தமது இயற்கையான சோம்பற் குணத்திற்கு இடந்தராமல் உடலை வருத்தி உழைத்தே அவர் உயர்நிலையடைந்தனர் என்று நினைக்க அவரது ஊக்கத் தின் அளவு போற்றத்தக்கதே என்பது தெளிவு. அவர் எழுதிய நூல்களில் ஆராய்ச்சி நூல்கள் மட்டுமே இன்று வாசிக்கப்படுகின்றன. ஆயினும், அவர் தம் ஏழைமை நிலையில் தற்காலிக அறிவுரைகளான நூல்களும் செய்தித்தாள் கட்டுரைகளும் எண்ணற்றவை எழுதிக் குவித்துள்ளார்.
2. கொடிது கொடிது வறுமை கொடிது
இளமையிலேயே ஜான்சனது வாழ்வு கடுமையுடையதாய், வறுமை மிக்கதாய் இருந்தது. ஆனால் வறுமை அவரது முயற்சியை மிகுதிப்படுத்திய தேயன்றி, அவரது உறுதியை முறித்ததே கிடையாது. வறிஞரிடைப் பொதுப்படையாகக் காணமுடியாத திண்மையும் தன்னாண்மையும் அவரிடம் இருந்தன. ஒருகால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் பயிலும்போது வறுமை காரணமாகக் காலணி (செருப்பு)கள் கிழிந்து விரல்களெல்லாம் வெளியே தெரிவது கண்டு பரிவுற்ற நண்பர் சிலர் புதிய காலணி இணை ஒன்று வாங்கி அவர் அறைப்பக்கம் போட்டு வைத்தனர். அதைக் கண்ணுற்றதும் அவருக்கு அது பெரிய அவமதிப்பாகப் பட்டது. அவர் அதனை உடனே எடுத்துத் தொலைவில் எறிந்துவிட்டுப் பழங் காலணிகளுடனேயே காலங்கழித்தாராம்.
‘’கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது வறுமையிற் செம்மை’’
அன்றோ! அத்தகைய கொடிய வறுமை யென்னும் பாலையினும், தூய்மை மிக்க சுனை நீரூற்றின் செம்மையைப் பேணிய பெரியாரான ஜான்சனை உலகு போற்றுவதில் வியப்பென்ன?
ஜான்சன் தந்தை ஒரு புத்தகக் கடை வைத்திருந்தவர். அவரது வருவாய் மிகக் குறைவு. அதன் மூலம் மிகவும் அருமையாகவே ஜான்சன் தமது பல்கலைக்கழகச் செலவுகளைச் செய்துவந்தார். அப்படியும் கடைசியில் தேர்வுக்கான தொகையைக் கொடுக்க முடியாது படித்த படிப்பின் பயனாக எண்ணப்படும் பட்டம் வாங்காமலே அவர் தம் இடத்துக்கு மீண்டும் வர நேர்ந்தது.
தமது ஊரில் ஜான்ஸன் ஒரு பள்ளிக்கூடம் நிறுவ எண்ணி இரவு பகலாய் உழைத்தார். இதில் அவர் வெற்றிகாணவில்லை அவருடைய மாணவர்கள் அவர் அறிவின் பெருமையை அறிந்திருக்க முடியாது. அவர் நற்குணமோ எனில், அவர்களது கேலிக்கு இடந்தருவதாக மட்டும் இருந்தது. ஜான்ஸனது பாரிய அருவருப்புள்ள உருவமும் நடையும் எளிய உளமும் அவர்கள் நகைக்கு விருந்தாய் உதவின. அவரிடம் இக்காலத்தில் படித்த எளிய மாணவருள் ஒருவர் டேவிட் காரிக்கு ஆவர். ஜான்ஸன் இலண்டனுக்குப் போகும்போது கூடவே போய் என்றும் அவருடன் தோழராயிருந்தவருள் இவரும் ஒருவர். இலக்கிய உலகில் ஜான்ஸன் அடைந்த உயர்நிலையை இவரும் நடிகர் உலகில் அடைந்து ஷேக்ஸ்பியர் நாடகங் களுக்குப் புத்துயிர் ஊட்டிய நடிகர் அரசு ஆயினர்.
3. ஒழுக்க நிலை
ஜான்ஸனது வாழ்க்கையில் ஒழுக்கமும் நடுநிலையும் அன்பும் உயர் வீரமும் ஒருங்கே செறிந்து விளங்குகின்றன. அவர் தாய் தந்தையரிடத்தில் காட்டிய பற்று நம் நாட்டுக் கதைகளில் காண்பதைவிட உருக்கந் தரத்தக்கது ஆகும். தாயின் சில கடன்களுக்கும் அவர் இறுதிக் கடன் ஆற்றும் செலவிற்கும் ஆக அவர் ஒரே வாரத்துக்குள்ளாக எழுதிய அறிவுக்கதை நூல் (Philosophic novel) ராஸ்ஸலஸ் (Rasselas) என்பது. இதனால் அவருக்கு நூறு பொன்கள் கிடைத்தன. இந்நூலின் துறையில் அஃதாவது ஆய்வியல் புனைகதையில் (Philosophical novel) இஃது இன்னும் சிறப்பு மிக்கதெனவே கருதப்படுகிறது.
இறைவனை யன்றி வேறெவருக்கும் இவர் நல்லவராய் நடக்க முயன்றவர் அல்லர். அவர் முதியவரான பின்னர் நிகழ்ந்த வியக்கத்தகும் செய்தி ஒன்று உளது. ஒருகால் ஸ்டாஃபோர்டுஷய (Stafford shire)ரிலுள்ள உட்டாக்ஸ்டர் (Uttoxter) என்ற நகரின் சந்தையிடத்தில் அவர் தலையில் குல்லாவும் காலுக்குக் காலணியும் இல்லாமல் மழையில் நனைந்து கொண்டு கடவுளை வணங்குபவர் போன்று நின்றனராம். சந்தைக்குச் செல்லும் ஆடவர், மாதர் முதலிய பலரும் இதனைக் கண்டு வியந்து கூடினர். சில சிறுவர்கள் கேலியும் செய்தனர். ஆனால், அவர் அங்ஙனமே வாளா நின்றுவிட்டுச் சில நாழிகை சென்றபின் யாரிடமும் யாதும் கூறாமல் தம் வழியே போயினர். தாம் இங்ஙனம் நின்ற காரணத்தை அவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால், ஒரு நாள் தற்செயலாகப் பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டும் கடமைகளைப்பற்றிப் பேசுகையில் அவர் காரணத்தை வெளியிட்டுக் கூறினார். ‘’பொதுப்படையாக நான் என் கடமைகளில் தவறியதாகச் சொல்ல முடியாது. ஆயினும், ஒரே ஒரு தடவை மட்டும் ஆணை மீறியதுண்டு. உட்டாக்ஸ்டர் சந்தைக்குப் போக என் தந்தையார் விரும்பியபோது அவர் கூடச் செல்லமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். இதற்குக் காரணம் தற்பெருமையேயாகும். பெரிய மனிதனான பின் அச்சந்தைப் பக்கம் போனபோது எனக்கு இந்த நினைவு வந்தது. உடனே எனது தவற்றை உணர்ந்து வருந்தினேன். அதற்கான கழுவாய் அதே இடத்தில் தற்பெருமை இழந்து வருந்துவதே என்று நினைத்தேன். அவ்விடம் மழை பெய்து சேறாகக் கிடக்கும் நாள் பார்த்து நான் அங்கே சென்று தலையணியும் காலணியும் இன்றி நின்று அத் தற்பெருமையை அடக்கினேன். ஆணைமீறியதால் ஏற்பட்ட குற்றம் இத்தகைய ஒறுப்பால் நீங்கி யிருக்கும் என்று எண்ணுகிறேன்’’ என்று அவர் கூறுகிறார்.
நாடகங்களுள் காணும் தந்தை யன்பு, ஒழுக்கம் முதலியவற்றிற்கும் இதற்கும் எவ்வளவு தொலை பாருங்கள்!
4. மணமும் லண்டன் வாழ்வும்
ஜான்ஸன் 1735இல் திருவாட்டி போர்ட்டர் என்ற கைம்பெண்ணை மணந்துகொண்டார். அப்போது அவருக்கு இருபத்தாறு ஆண்டு. அவர் மனைவி அவரினும் இருபதாண்டு மூத்தவர். இவ்வளவு ஆண்டு வேற்றுமை யிருந்தும் இம்மணவாழ்வில் எத்தகைய குறைபாடும் இல்லாததும், அவருடைய வறுமையும் கடுமையும் மிக்க வாழ்வில் அது வெண்ணில வெனத் தூய அமைதியை யன்றி வேறெத்தகைய மாறுதலும் செய்ய வில்லை என்பதும் கவனிக்கத்தக்கவை.
யாம் மேலே குறிப்பிட்டபடி டேவிட் காரிக்குடன் ஜான்ஸன் லண்டனுக்கு 1737 இல் மணமான இரண்டாண்டு களின் பின் சென்றார். அது முதல் இறுதி வரை அவர் வாழ்க்கையும் இலக்கிய உழைப்பும் எல்லாம் இந்த லண்டன் நகருக்குள்ளேயேயாகும். (லண்டன் நகருக்குள்ளேயே பிறந்து வாழ்ந்த புலவரும், லண்டன் நகரையே தமது உலகமாகக் கொண்டு போற்றிய புலவரும் பலர் உளர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.) லண்டன் நகரையும் அதில் வாழும் மக்களின் வாழ்வையும் ஜான்ஸன் அறிந்த அளவு எவரும் அறிந்திருக்க முடியாது. அங்கே அவர் மிக இழிந்த விடுதிகள் முதல், அரசரும் நுழைவு பெற விரும்பும் உயர் இடங்கள் வரை எல்லாவகை வாழ்க்கைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்பது அவரது வரலாற்றினால் விளங்கும். பின் நாட்களில் ‘’லண்டன்’’ என்ற செய்யுள் நூலால் அந்நகர் பற்றிய தம் அறிவையும், அதன்மீதுள்ள தம் பற்றையும் அவர் விளக்கி யுள்ளார்.
ஜான்ஸனது பெயருடன் பிற்காலத்தார் ‘விடுதி’ என்ற பெயரையும் ஒன்றுபடுத்தியே மனத்துட் கொண்டனர். அந்நாளைய ஆங்கில நாட்டு விடுதிகள் சிற்றுண்டி விடுதிகளாக மட்டும் இல்லை; நுண்புல மக்கள் தம்முட் குழுமி நகுதலுக்கும் இடமாய் அமைந்திருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் இலக்கியத்துட் பெரும்பகுதி இவ்விடுதிகளின் பயனாகவே ஏற்பட்டது. அங்கே தான் புதிதாக ஏற்பட்ட செய்தித்தாள் களுக்கு எழுது வோர் செய்திகளும் சுவைதரு குறிப்புக்களும் பெறுவர்; அவற்றை மக்கள் வாசித்து மகிழ்ந்ததும் அதனை ஆராய்ந்ததும் அந்த இடத்தில்தான். இத்தகைய விடுதி வாழ்வு உண்மையில் உயர்தர வாழ்வு, புலவர் வாழ்வு எனவே எண்ணத்தகும். ஜான்ஸன் இத்தகைய வாழ்வின் தலைவர் ஆனதனாலேயே அவர் பெயருடன் ‘’விடுதி வாழ்வு’’ சேர்த்தெண்ணப் பட்டது.
ஆனால், ஜான்ஸன் முதலில் அறிந்ததும், அவர் விருப்பத்திற்கு உகந்ததும், அவர் பிற்காலம் நினைந்து நினைந்து சொல்லிச்சொல்லித் தாமும் தோழரும் பிறரும் ஓயாது தெவிட்டாமல் துய்த்த வரலாற்றுப் பகுதிகளுக்கு முதலாயிருந்ததும் ஆன ‘விடுதிகள்’ இத்தகைய உயர் விடுதிகள் அல்ல. அவை இழிந்தவையும், மாசடைந்தவையும், தணிந்து, கிழிந்த திரையும், உடைந்த ஓடுகளும் உடையவையும் ஆன ஏழை விடுதிகளேயாம். இவ் விடுதிகளில் தாம் கண்ட உயிருணர்ச்சி தரும் செயல்முறை வாழ்வு முதலியவை நல்வாழ்வில் தமக்குக் கிடைக்கவில்லை என அவர் கூறுவதுண்டு. முதலில் இவற்றை அவர் அணுக நேர்ந்தது அவர் வறுமை யாலேயாயினும், பின்னால் அவற்றை மிகவும் விரும்பிப் பாராட்டியே பேசுவாராயினர். இவற்றுள் ஒன்றைப்பற்றி அவர் கூறுவது வருமாறு:
‘’அருகில் புதுத்தெருவில் உள்ள ’பைன் ஆப்பிள்’ (அன்னாசிப்பழம்) என்ற விடுதியில் காசு கொடுத்து உண்டேன். நிரம்பத் தோழரும் இருந்தனர். அவர்களில் பலர் தொலைதூரம் சென்று பார்த்தவர்கள். அவர்கள் அவ் விடத்திலேயே வழக்கமாக வந்து பழகுபவர்களாயினும் ஒருவர் பெயரை ஒருவர் அறியாதவர்கள். அவர்கள் ஒரு வெள்ளி கொடுத்து இனிய நறை (Wine) பருகினர். ஆனால், நானோ ஆறு காசுக்கு இறைச்சித் துண்டொன்றும், ஒரு காசுக்கு அப்பமும் வாங்கினேன். பணியாளுக்கு ஒரு காசு கொடுத்தேன். ஆக எட்டுக் காசுக்குள் அவர்கள் உண்டதைவிட எனக்கு நல்ல உணவு கிடைத்தது. ஏனெனில், நான் பணியாளருக்குக் காசு கொடுத்தேன், அவர்கள் கொடுக்கவில்லை.’’
இக்கூற்றின் இறுதி வாக்கியத்தில் ஜான்ஸனுடைய கூர் அறிவு, ஆழ்ந்த கனிவு, இனிய நகைச்சுவை ஆகிய அனைத்தும் ஒருங்கே நிலவக் காணலாம்.
காசு (Penny) என்பது இன்று நம் நாட்டு அணாவுக்குச் சரியான மதிப்புள்ளது. அதற்கொப்ப வெள்ளி (Shilling) 12 அணா பணம் (Crown) ரூ.15-12-0. ஆனால், அன்றைய மதிப்பில் காசைப் பை என்றும், வெள்ளியை அணா என்றும் பொன்னை ரூபாய் என்றும் கொள்ளுதல் தக்கது ஆம்.
5. இலக்கியப் பணி
ஜான்ஸனது ஏழைமைத்தன்மைக் கிணங்க அவரது முதல் இலக்கியப்பணி கூலி உழைப்பாகவே இருந்தது. இன்னது எழுதுவது, இன்ன வகையில் எழுதுவது என்ற வரையறை ஒன்றும் அவருக்கில்லை. எதெது வேண்டப்பட்டது, எதெது அன்றைய நிலைமைக் கொத்ததோ அதனையே எழுதித்தள்ளி அவர் ஊதியம் பெற்றுவந்தார். இவற்றில் பெரும்பாலானவை செய்தித்தாள்களுக்கு வரைந்த கட்டுரைகள் ஆகும். எட்வர்டால் அச்சிடப் பட்ட ‘’நன்மக்கள் வெளியீடு’’ (Gentlemen’s Magazine) என்ற செய்தித் தாளிற்கு அவர், முதல் முதலில் எழுதி வந்தார். பின் நாட்களில் 1750 முதல் 1752 வரை இவர் தாமே ராம்ப்ளர் (Rambler=அலைந்து திரிவோன்) என்ற தாளையும், 1758இல் ஐட்லர் (Idler=சோம்பேறி) என்ற தாளையும் வெளியிட்டு வந்தார். இவற்றுள் எழுதிய கட்டுரைகளிற் சில இன்னும் உவகையுடன் வாசிக்கப்படுபவை. ஆம் அவற்றுள் ‘’டிக் மினிம்’’ என்ற புதுப்பகட்டினத்தாரது வசைப்புனைவு மிகவும் சுவைதரும் கட்டுரைத் தொகுதியாம்.
ஜான்ஸன் தமது தோற்றம் அருவருப்பானது என்பதை யுணர்ந்து தம் நண்பர்களையன்றி வேறு யாருடனும் மிகுதி கலப்பதில்லை. முன் நாட்களில் இதனுடன் ஏழைமையை மறைக்கும் விருப்பமும் சேர்ந்திருந்தது. பலகால் குடிக்கூலி கொடுக்க முடியாமல் தங்க இடமின்றி இரவு முழுமையும் தெருக்களில் வந்து திரிந்து கழித்தார். அக்காலத்தில் ஸாவேஜ் என்ற ஒரு நண்பர் அவர் வறுமையை அவருடன் பகிர்ந்து துய்க்கும் தோழராயிருந்தார். இக்காலத்தில் அவரது வரும்படி ஒரு கிழமைக்கு ஒரு பெரும்பொன் (Guinea) ஆகும். ஓர் அரைப்பணம் கூட (half-crown) அவருக்கு இப்போது குதிரைக் கொம்பு போன்றிருந்தது.
தமது 29 ஆம் ஆண்டில் இவர் இன்னும் ஒரு தடவை ஆசிரியத் தொழிலுக்குப் போக எண்ணினார். நாட்டுப்புறத்தில் திங்களொன்றுக்கு 60 பொன் ஊதியத்தில் அல்லது அதனிலும் கூடக் குறைவாக ஓர் ஆசிரியர் நிலை கிடைத்தால் நல்லதென்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், அவருக்கு நற்பேறில்லாமை யாலும், ஆங்கில இலக்கிய உலகிற்கு நற்பேறிருந்தமையாலும் அஃது கிட்டவில்லை.
செல்வச் செருக்கும் உயர்குடிமைச் செருக்கும் மிக்க லண்டன் மாது ஒருத்தி முதலில் அவரை அவமதித்துக் கடுமையுட்படுத்தினார்; அதனால் மனக் கசப்போ மனமுறிவோ அடையாது மீண்டும் முயலும் அவர் ஊக்கத்தையும் மாறாப் பற்றையும் கண்டு அவள் அவரைக் கைதூக்கித் தன் உகந்த கணவனாகப் பின் ஏற்றுக்கொண்டார். அவரே யாம் மேற் குறிப்பிட்ட திருவாட்டி போர்ட்டர் ஆவார்.
வழக்கம்போல் ஜான்ஸன் ஒருநாள் விடுதியில் திரை மறைவில் (பிறர் பார்வையிற்படாமல்) இருந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஜான்ஸன் கட்டுரைகளுக்கு உயிர்தந்த ‘நன்மக்கள் வெளியீட்டின்’ உரிமை யாளரான திரு. கேவ் ஒரு நண்பருடன் உண்டியருந்துவாராயினர். அந் நண்பர் கேவின் செய்தித்தாளைப்பற்றிப் பேசுகையில் அதில் ஜான்ஸன் என்பார் எழுதிய கட்டுரைகள் மிகவும் செம்மையுடையவை எனப் பலவாறாகப் புகழ்ந்தார். ஈன்ற துன்ப மனைத்தையும் குழவி முகம் கண்டவுடன் மறக்கும் தாய் போலத் தம் நூலின் புகழ் கேட்டு அன்று அவர் தம் வறுமை எல்லாம் மறந்து ஒரு வயிற்றுக்கு இரு வயிறு உணவு அருந்தினர் என்று கேவ் அதே நண்பரிடம் மற்றொரு சமயம் கூறினராம்.
6. ஜான்ஸனும் செஸ்டர்ஃபீல்டும்
ஜான்ஸனது தற்காப்பையும் தன்னாண்மையையும் விளக்கும் இன்னொரு பேர்போன வரலாறு உளது. தாம் வறுமையுற்ற நாட்களில் தம் நூல்களை வெளியிட உதவும்படி அடிக்கடி செஸ்டர்ஃபீல்டு பெரு மகனாரை அவர் அடுத்ததுண்டு. ஆனால், அவர் ஜான்ஸன் பக்கம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பின் நாளில் ஜான்ஸன் பெயர் எங்கும் புகழ்க் கதிர்வீசி ஒளிவிடும் காலங்களில் அதே செஸ்டர்ஃபீல்டு பெருமகனார் அவர் எழுதிவரும் பெரு நூலாகிய ‘’அகரவரிசை’’க்கு முன்னுரை தந்துதவ முனைந்து வந்தார். ஜான்ஸன் இதனை ஆசிரியத் தொழிலுக்கும் இலக்கியத் துறைக்கும் செய்த அவமதிப்பு என மனத்துட்கொண்டு தம் முழு வன்மை யுடனும், ஆனால் பெருந்தன்மை யிழவாமல், தம் மறுப்பையும் ஏளனத்தையும் அவர் மீது வீசினார். இவ் அமயம் அவர் எழுதிய கடிதம் ஆங்கில இலக்கியத்திலேயே தனிச் சிறப்புற்றதோர் கடிதமாய் விளங்குகிறது. இக் கடிதம் வருமாறு:-
’’துரையவர்களே! வள்ளல்களாவோர், ஒருவன் நீரில் கிடந்து தத்தளிக்கும்போது பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவன் கரையேறப் போவதைப் பார்த்து அவனுயிரைக் காப்பாற்ற விரைபவர் தாமா?
தங்களுக்கு ஏற்பட்ட கடைக்கண் பார்வை முன்னால் ஏற்பட்டிருந்தால் அது கருணையின்பாற்பட்டிருக்கும்; என் ஆவல் கசப்பாக மாறி அப் பார்வையால் நான் மகிழ்வடைய முடியாத நிலை வந்தபின்தான் அது தங்களால் அருளப்படுகிறது. புகழுக்காக நான் தங்கள் துணையை வேண்டினேன்; புகழின் பிடி எட்டியபின் தங்கள் துணை எதற்கு? நன்மையைச் செய்யும் தகுதியில்லாத இடத்து நன்மையைப் பெற்று நன்றி செலுத்து வானேன்? வள்ளல்கள் துணையின்றியே வெற்றியடையும்படி கடவுள் என்னை விட்டிருக்கவும் அவ்வெற்றியை நான் வள்ளல்களுக்குக் கொடையாக வழங்குவ தெப்படி?
ஒன்றுமற்ற நிலையில் துணையின்றிப் பிழைத்த யான் அரைகுறை யான வெற்றியேனும் கிடைத்தபின் பிறர் துணையை நாடிப் பெரும்புகழ் பெறுவதைவிடப் பிறர் துணையின்றிச் சிறுபுகழ் பெறுவதே பெரிதெனக் கருதுவேன்.’’
கல்வியின் பெருமையையும் கல்வியின் பெருமையை மதியாத செல்வத்தின் சிறுமையையும் இக் கடிதம் திறமும் நயமும்பட எடுத்துக் காட்டுகின்றது.
7. கபிலரை ஒத்த அருளாளர்
பிறர் துணையின்றி வறுமைப் பேயுடன் போராடும் நிலையிலும் ஜான்ஸன் பிற ஏழைமக்களிடமும் தம்மைப் போன்ற புலவரிடமும் பற்றும் மதிப்பும் வைத்து அவர்களுக்குத் தம்மாலான உதவியனைத்தையும் நாக்கடிப்பாக வாய்ப்பறை யறையாது செயல் முறையிலேயே செய்பவர். இவ்வகையில் இவரைச் சங்ககாலத்து வாழ்ந்த தமிழ்ப் புலவர் பெருமானாகிய பொய்யாநாவிற் கபிலருடன் ஒப்பிடலாகும்.
ஜான்ஸன் காலத்திருந்த புலவருள் அவருக்கிணையான புலவர் கோல்டுஸ்மித் ஆவர். இவரும் ஜான்ஸனைப் போன்று வறுமையிலேயே கிடந்துழன்றவர். ஜான்ஸனைப்போலவே பரிவும் இரக்கமும் பிறர்க்குதவி செய்யும் குணமும் படைத்தவர். ஆனால், ஜான்ஸனுக்கிருந்த உலகியல் அறிவும் ஆற்றலும் பொருள்வகைத் திறமும் அவரிடம் கிடையாது. கையில் பணம் இருந்தால் நெஞ்சகத்து வஞ்சகமின்றி நலிந்தோருக்கும் நண்பர் களுக்கும் ஈந்து தாமும் ஐம்புலனாரத் துய்ப்பார். இல்லாதபோது கையால் வயிற்றைப் பிசைந்துகொண்டு கலங்கி நிற்பார்.
ஒருகால் வரிபிரிப்போன் வரிவாங்கியே தீருவதென அவர் வாயிலில் காவலிருந்துவிட்டான். கோல்டுஸ்மித்துக்குக் கையில் பணம் இல்லை. வீட்டிலோ உண்ண உணவுகூட இல்லை. நாள் முழுவதும் வீட்டினுள் பட்டினி கிடந்தார். ஜான்ஸனிடம் போய்க் கேட்கலாம் என்றாலோ காலனைப்போல் நிற்கிறான் வரிகாரன். இந்நிலையில் ஒரு துண்டை எழுதி அனுப்பினர். ஜான்ஸன் தம்மிடம் இருந்த பொற்காசைக் கொடுத்தனுப்பி விட்டு, ஆனமட்டும் விரைவில் தாமும் வந்தனர். வந்து வரிப் பணத்தையும் வேறு கடன்களையும் தாமே ஏற்று அதற்கீடாகக் கோல்டுஸ்மித் எழுதி எறிந்திருந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு போய்த் தமக்கு அறிமுகமான புத்தகவெளியீட்டாள ரொருவரிடம் கொடுத்து 60 பொன் வாங்கித் தந்தார். இக்கதை இன்று ஆங்கிலேயர் எத்தனை தடவை வாசித்தும் நிறை வடையாப் புனைவு மணியாகிய ‘’வைக்கர் ஆப் வேக்பீல்டு’’ என்பதாம்! என்னே புலவர் வறுமை! என்னே புலவர் பெருமை!!
இன்னொரு நாள் இரவு நெடுநேரமானபின் ஜான்ஸன் தம் உறைவிடத்திற்குத் திரும்பி வரும்போது வழியில் நடுத்தெருவில் ஓர் ஏழை மாது விழுந்து கிடப்பது கண்டு அவளை முதுகில் தூக்கிக்கொண்டு வந்து, உணர்வு வருத்தி, உணவு கொடுத்ததுடன் அவளுக்கு வேறு துணை யில்லாதது கண்டு நெடுநாள் தம் செலவில் உதவி செய்தும் வந்தார்.
பிறர் வருந்தப் பாரா இப்பெரியாருக்குத் தம் வகையிலும் வருத்தங்கள் இல்லாமல் இல்லை. ஒரு தடவை அவருடைய கடன்கள் குவிந்து அவர் கடன்காரர்கள் கையில் சிக்கி ஒரே நாளில் இரு தடவை சிறை சென்றார். இரு தடவையும் நண்பர் சிலர் உதவியால் மீட்கப்பட்டார். ஊர்ப் பிள்ளைகள் தலையில் எண்ணெய் வார்த்து வளர்ப்பவர் பிள்ளைகளை வளர்க்க, இறைவன் ஒருவன் உளன் அன்றோ?
8. அகர வரிசை
ஆங்கில மொழியில் முதல் முதல் ‘அகர வரிசை’ ஏற்பட்டதன் முழுப் பெருமையும் ஜான்ஸனையே சாரும். இதனை அவர் ஏழாண்டில் செய்து முடித்தார். இதில் அவர் காட்டிய விடாமுயற்சி அவரது வறுமையை என்றென்றைக்கும் மீட்டு வராதபடி அடித்துத் துரத்தியது. பிற நாடுகளில் அரசியலார் எண்ணற்ற பொருட்செலவில் எத்தனையோ ஆண்டுகள், எத்தனையோ புலவர்கள், எழுத்தாளர், படியாளர் முதலியோரது கூட்டு முயற்சியாலும், கழகங்களின் முயற்சியாலும் செய்து முடிக்கும் இந்நூலை, அவர் தனிமையாக ஏழே ஆண்டுகளில் உழைத்து வெற்றி பெற்றது கேட்டதும் ஆங்கில மக்கள் அனைவரும் இறும்பூதெய்தி அவரை வானளாவப் புகழலாயினர். நாடெங்கும் அவரைக் காணப் புலவரும் கோமகன் முதற் பல உயர்குடி மக்களும் பெருமக்களும் வருவாராயினர். இதற் கிடையில் பொதுமக்களோ அவர் அறிவின் பெருமை மட்டுமன்று. குணத்திலும் பெருமையுடையார் என்பது கண்டு அவரைத் தெய்வத்திற் கடுத்தபடியாக நெஞ்சினுட் கொண்டு பாராட்டினர்.
தற்போது ஆங்கில மொழியில் எத்தனையோ அகர வரிசைகள் ஒன்றுக்கொன்று முன்னேற்றமுடையவையும் சிறந்தவையும் ஆக ஏற்பட்டு விட்டன. ஜான்ஸனது அகர வரிசையை இப்போது பொதுப்பட யாரும் பயன்படுத்த வேண்டுமென்றில்லை. ஆனால், அதன் பெயரும் புகழும் என்றும் அழியாதன. அதனுடன் அதன் பகுதிகள் நகைச் சுவைக்காகவும், அவற்றுட் பொதிந்துகிடக்கும் அவருடைய வாழ்க்கைத் துணுக்குகளுக் காகவும் இன்றும் பலரால் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றன. அவற்றுட் சில வருமாறு:
சுருட்டு-ஒருபுறம், நெருப்பு ஒருபுறம் அறிவிலியையும் உடைய பொருள்.
அகர வரிசை ஆசிரியன்-கூலிக்குழைக்கும் அப்பாவி.
ஓட்டு மா-இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காத்லாந்தில் மனிதர்களும் உண்ணும் ஓர் உணவுப் பொருள்.
அகர வரிசைகளுக்கு இத்தகைய துணுக்குகள் சிறப்புத் தருவன அல்லவாயினும், இவற்றின் சுவையருமை நோக்கி ஆராய்ச்சியாளர் அவற்றைப் பொறுக்கிக் காட்டுகின்றனர்.
9. ஒப்பற்ற உரையாடல் வல்லார்
வறுமை நாட்களில்கூட ஜான்ஸன் வாழ்வில் நட்புக்கும் நண்பர்களுக்கும் இடம் இருந்தது. நல்வாழ்வு நாட்களிலோ கேட்கவேண்டுவதில்லை. அதிலும் அவர் வாய்திறந்த போதெல்லாம் அறிவுக் கடலுள் ஆழ்ந்து அவர் சேமித்துவைத்த முத்துக்களும் மணிகளும் சிதறும்போது அவற்றைத் துய்க்க விரும்பி அவரை வந்தடையாதார் யார்? கோல்டுஸ்மித் போன்ற புலவர்கள், காரிக் போன்ற நடிகர், ரெய்னால்ட்ஸ் போன்ற கலைஞர் ஆகிய பலரும் அவரைச் சுற்றிக் குழுமியிருந்து அவர் உரையமுதை ஆர்வத்துடன் செவியேற்று மகிழ்ந்தனர். ஆனால், இவர்கள் அனைவரிடை யேயும் உட்கார்ந்து தம்மை முந்துறக்காட்டாமல் அவ்வளவு பேச்சையும் கேட்டிருந்து பின்னர் அவற்றைச் சுவைபடத் தொகுத்து ஜான்ஸனின் வரலாறாக வெளியிட்ட ஒருவர் உளர். அவரே நாம் இக்கட்டுரைத் தலைப்பில் குறிப்பிட்ட பாஸ்வெல் ஆவர்.
10. ஜேம்ஸ் பாஸ்வெல்
ஜேம்ஸ் பாஸ்வெல் ஸ்காத்லாந்திலுள்ள ஒரு வழக்கறிஞர். ஜான்ஸ னின் புகழைக் கேள்வியுற்று அப் புகழிலேயே தமது உள்ளத்தைப் பறிகொடுத்தவர் அவர். இத்தகைய பெரிய மனிதரைப் பார்ப்பதே பெரும் பேறென நினைத்து, அவர் ஸ்காத்லாந்தின் தலைநகராகிய எடின்பரிலிருந்து பல நூற்றுக்கணக்கான கல் தொலை கடந்து லண்டன் வந்து பெரு முயற்சியின் பயனாய் ஜான்ஸனைப் பார்த்தார். அவருடன் ஜான்ஸன் பழகிய கதை மிக விந்தையானது.
ஜான்ஸனுக்கு ஸ்காத்லாந்து என்றால் போதும்; உடனே அதனை ஏளனமாகப் பேசித் தாமும் நகைத்துப் பிறரையும் நகைக்கப் பண்ணுவார். எனவே, தாம் ஸ்காத்லாந்துப் பேர்வழி என்று அறிந்தால் எங்கே தம்மையும் ஏளனம் பண்ணுவாரோ என்று பாஸ்வெலுக்கு அச்சம்.
இந்நிலையில் ஒரு நண்பர் அவரை ஜான்ஸனுக்கு அறிமுகம் செய்துவைக்கும்போதே அவர் ஸ்காத்லாந்துக்காரர் என்று அறிமுகம் செய்து வைத்துவிட்டார். உடனே பாஸ்வெல்:-
‘’ஐயா, நான் ஸ்காத்லாந்திலிருந்து வருவது உண்மையே; அதனை நான் எவ்வாறு தவிர்க்கக் கூடும்?’’ என்றார். உடனே ஜான்ஸன் ‘’ஆம், அதுதான் நீரும் உம் நாட்டாரும் என்றும் தவிர்க்கக்கூடாத செய்தியா யிற்றே’’ என்றாராம். (ஸ்காத்லாந்து மக்கள் தம் நாட்டில் பிழைக்க வழியில்லாததனால் இங்கிலாந்துக்கு வந்தேயாகவேண்டும் என்பது குறிப்பு) இதைக்கேட்ட அனைவரும் நகைத்தனர். பாஸ்வெல் இனி வாயெடுக்க முடியாதென்று வாளா இருந்ததே அவருக்கு நன்மையாக முடிந்தது. அன்று முதல் ஜான்ஸன் அவரைத் தம்முடைய மாணவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் மிகுந்த நட்புறவு கொண்டார்.
ஜான்ஸனின் புகழ் முதலில் பொது மக்களிடையேதான் பரவியது. விரைவில் ஆங்கில நாட்டுக் கல்லூரிகள் வரையிலும் அரசர் வரையிலும் அஃது எட்டிற்று. டப்லினிலுள்ள மூவிறைக் கல்லூரி (Trinity College) அவருக்குச் சட்ட வல்லுநர் (Doctor of Laws) என்ற பட்டம் நல்கிற்று. ஆங்கில நாட்டரசராகிய மூன்றாம் ஜார்ஜ் அவருக்கு ஆண்டுக்கு 300 பொன் உதவிச் சம்பளமாகக் கொடுத்ததுடன் நேரடியாக அவருக்குப் பேட்டியளித்து அவரை நன்கு மதித்தனர். அவரது 66ஆம் ஆண்டில் ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகமும் அவருக்குச் சட்ட வல்லுநர் பட்டம் தந்தது. ஜான்ஸன் எழுதிய நூல்களுள் இன்றும் இறவாப் புகழுடையது அவரது ‘புலவர் வரலாறுகள்’ ஆகும். இதில் அவர் நண்பராகிய ஸாவேஜியின் வரலாறு முதலில் எழுதப்பெற்றது. பின் மில்ட்டன் முதல் தொடங்கித் தம் காலத்துக்குமுன் இருந்த டிரைடன், போப் முதலியோர் வரலாறுகள் வரை ஆராயப்பட்டன.
11. வடநாட்டுப் பயணம்
முதுமையில் ஜான்ஸன் ஸ்காத்லாந்தின் வட பகுதிகளைப் பார்க்க எண்ணிப் பாஸ்வெலுடன் சென்றார். பயணத்தைப் பற்றிப் பாஸ்வெல் ‘ஹெப்ரிடீஸ் பயணங்கள்’ என்றொரு சுவைதரும் நூல் எழுதியுள்ளார்.
இப்பயணத்தில் வடநாட்டின் பல பெருமக்கள் அவர்களை வரவேற்று நன்கு மதித்தனர். ஆயினும், பல இடங்களில் ஏழைகளின் குடிசைகளிலும் தங்க நேர்ந்தது. ஐயோனாவில் அவர் போதிய போர்வைகள் கூட இன்றி, வைக்கோற் சாக்குகளின் இடையே தூங்கநேர்ந்தது. அத்தகைய நேரத்தில் அவர் சற்றும் உறுதி பெயரா ஊக்கத்துடன் இவ்வுயரிய கருத்தை எழுதியுள்ளார்.
‘’சுற்றுச் சார்புகளின் தாக்கிலிருந்து மனத்தைப் பிரித்துத் தனியாக உணர்வதென்பது எளிதில் முடியாதது. அங்ஙனம் முடிந்தால்கூட அஃது அறிவுடைமை ஆவதெங்ஙனம்? புலனறிவின் ஆட்சியினின்றும் விடுபட்டு, முக்காலத்தினும் உண்மையாம் மெய்ந்நிலையை நிகழ் காலமாகிய திரையை விலக்கி அறிவதே மெய் அறிவின் உயர்வு ஆகும். எனினும், இதனால் யானோ, என்னுடைய நண்பர்களோ இவ் அறிவியல் உண்மை ஒன்றனையே கருதிக்கூட உணர்ச்சிகளைப் புறக்கணிக்கா திருப்போமாக. மரதோன் போர்க்களத்திலும் ஐயோனாவின் பழம் பெருமைகளினிடையிலும் நாட்டுப் பற்றின்றித் திரிபவரது அறிவைக் கண்டு யாம் அழுக்காறடைய மாட்டோம்.’’
இவ்விடத்தில் ஜான்ஸன் ஒன்றுக்கொன்று முரணானவை போல் தோற்றக்கூடும் இரு பேருண்மைகளை நடுநிலையுடன் குறித்துள்ளார். தமது புறநிலைக் கடுமையிலும் இத்தகைய அகநிலை உயர்வு உடைய ஜான்ஸனைப் புகழேந்தியின் சொற்களால் ‘’மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும், ஒத்திருக்கும் உள்ளத்து உரவோன்’’ என்று கூறலாகும் அன்றோ!
சொல்வன்மை இருவகைப்படும். ஒன்று கூட்டங்களில் சொற் பொழிவு நடாத்தும் ஆற்றல், இன்னொன்று நெருங்கிய நண்பரிடையே சமயத்துக்கு ஒத்தபடி பேசி அவர்களுக்கு நல்லுணர்வும் இன்பமும் ஒருங்கே பயக்கும் நுண்ணுரை பகரும் ஆற்றல். பின் கூறிய ஆற்றலிலும் மக்கட்கு இலக்கிய மாக விளங்கும் உயர்குணமுடைமையிலும் உலக இலக்கியத்திலேயே ஜான்ஸன் முதல்வராக எண்ணப்படு கிறார்.
ஸர். வால்ட்டர் ஸ்காட்
** புனைகதை மன்னர்**
1. பொதுமையுள் புதுமை
ஸர் வால்ட்டர் ஸ்காட்டைப் புனைகதை உலகின் ஷேக்ஸ்பியர் என்று கூறலாகும்.
வரலாற்றுச் சார்பான புனைகதைகள் எழுதுவதிலும், பொதுமையுள் வியப்பெனும் புதுமைச்சுவை தோன்றப் புனைகதைகள் எழுதுவதிலும், ஆங்கில இலக்கியத்தில் மட்டுமன்று; உலக இலக்கியத்திலேயே இவருக்கு ஈடில்லை என்னலாம்.
இலக்கிய உலகிற்கு ஒரு திருவருட்பேறெனக் கருதக்கூடிய இப்பெரியார், தமது 31ஆம் ஆண்டு வரை இலக்கியப் பெருமைக்கான குறிகள் எதுவும் இல்லாதவராய் இருந்தனர் என்பதும், அறிவிலும் செயலாண்மையிலும் மிக்க இவருடைய தந்தையாரால், பாட்டுப்பாடி இரந்துண்பதைத் தவிர வேறெத்தகைய நற்பணிக்கும் உதவாதவர் என வெறுத்துரைக்கப் பெற்றவர் என்பதும் இயற்கையின் புதிர்களுள் வைத்தெண்ணத் தக்க செய்திகளேயாகும்.
ஜான்ஸனது வாழ்க்கையைச் சுவைபடப் பாஸ்வெல் என்பார் எழுதியதுபோல ஸ்காட்டின் வாழ்க்கையையும் நயம்பட அவர் மருகரான லாக்கார்ட் என்பவர் எழுதியுள்ளார்.
ஸர் வால்ட்டர் ஸ்காட் 1771ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் எடின்பர் நகரில் கல்லூரித் திருப்பு (College Wynd) என்னும் பகுதியில் பிறந்தார். இவர் தாய் தந்தையரிருவரும் ஸ்காத்லாந்தின் பழமையான வேளாண் குடியில் பிறந்தவர்கள். தாய்வழிப் பாட்டனார் ஒரு மருத்துவர். தந்தையாரோ ஓர் எழுத் தாளராயிருந்தார்.
சிறுவராயிருக்கும்போது அவர் நோயால் அடிக்கடித் துன்ப மடைந்தார். அதோடு பிறவியிலேயே அவர் கால் சற்று நொண்டி என்றும் தோற்றுகிறது. ஸ்காட்டின் புகழ் பெருகுந்தோறும் இச்சிறு குறைபாடும் மிகைபடுத்தப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியில் இஃது அவர் நடக்கமுடியாத நொண்டி என்றும், நலிந்த உடல் உடையவர் என்றும் ஒரு தப்பெண்ணத்தைப் பொதுமக்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். அவர் நாள்தோறும் முப்பது கல் எளிதாக நடக்கக் கூடியவர். குதிரை யேற்றம், வேட்டையாடல் ஆகியவற்றில் அவருக்கிருந்த பற்றுதலும், திறனும் மிகுதி. மேலும் சிலம்ப முதலிய பழங்காலப் பயிற்சி முறைகளிலும், களியாட்டங்களிலும் அவர் ஊக்கங் கொண்டவர் என்பதை யும் ஓர்தல் வேண்டும்.
2. இளமை
இளமையிற் கண்ட நோய் அவருக்கு ஒரு பெரிய நன்மையைத் தந்தது. திறந்த வெளியும் தூய காற்றும் அவர் உடலுக்கு நலமாயிருக்குமென மருத்துவர் கூறினதால், அவர் நாட்டுப்புறத்தில் ஸாண்டி நோ என்ற அவருடைய பாட்டனார் இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். இவ்விடத்திலிருந்து அவர் எளிதில் மலை, கானாறு, அருவி, கடற்கரை முதலிய இயற்கைக் காட்சிகளை நேரில் சென்று காணமுடிந்தது. ஸ்காத்லாந்து, இங்கிலாந்து இவற்றினிடைப்பட்ட நாட்டின் மக்கள், மக்கள் வாழ்வு, நில இயல்பு, உயிர் இயல்பு ஆகிய அனைத்தையும் உண்மையும், உவப்பும் ஒருங்கே அமையும்படி வரைந்து இலக்கிய உலகிடையே அவற்றுக்கோர் இறவா உரு அளித்தவர் இவரே.
ஸாண்டி நோவில் நரைத்த ஒரு முதிய மாட்டிடையர் ஒருவர் இவருக்குப் பழக்கமானார். இவர் வாய்மொழி மூலமாகவே ஸ்காட் தம் நாட்டில் வழங்கும் பல பழங்கதைகளையும், நாடோடிப் பாட்டுக்களையும் கேட்டார். குழந்தையாயிருக்கும்போதே ஸ்காட்டுக்குப் பழம் பொருட் பற்றும், புனைவியல் ஆற்றலும் மிகுதியாய் இருந்தது. ஆகவே, இக்கதைகள் அவர் மனத்தில் ஆழ்ந்து பதிந்ததுடன் கருப்பொருள் நிறைந்து மழையால் நனைந்து பதமான நிலத்தில் இட்ட, முற்றிக்காய்ந்த விதைகள் போன்று விரைவில் முளைத்து வளர்ந்து ஓங்கலாயின. அவருடைய பாட்டுக்களும் உலகத்தையே அள்ளி வாரும் அவருடைய புனைகதைகளும் இவ்விதைப்பின் பயனாய் ஏற்பட்ட அறுவடையேயாகும்.
3. இயற்கை யார்வமும் பழம்பொருட் பற்றும்
இயற்கையின் வியத்தகு காட்சிகளிடையே அவர் எவ்வளவு தம்மையே இழந்தவர் என்பதைக் காட்டச் சுவைதரு செய்தி ஒன்று உளது. புயலும் மழையும் மிகுந்த ஒருநாள் ஸ்காட்டை வீட்டில் காணாமல் எங்கும் தேடும்படி நேர்ந்தது. இறுதியில் அந்த மழையையும் காற்றையும் பொருட் படுத்தாமல் அவர் ஒரு பாறைமீது சாய்ந்து நின்றுகொண்டு பளீர் பளீர் என மின்னி அடிவானத்தைக் குறுக்கும் நெடுக்குமாகப் பிளந்து கொண்டிருந்த மின்னற் கொடிகளைப் பார்த்து ‘மிக அழகு, மிக அழகு, இன்னொரு முறை பார்ப்போம்; இன்னொரு முறை; சரி, அதுதான் சரி’ என்று அவற்றை ஊக்குவது மாதிரிப் பிதற்றிக்கொண்டிருந்ததை மக்கள் கண்டனராம்.
இத்தகைய இயற்கை யார்வத்துடன் பழம்பொருட் பற்றும், பழங்கால வாழ்க்கைக் காட்சிகளைப் புனைந்தியற்றி முன்னிலைப்படுத்தும் ஆற்றலும் சேர்ந்து அவருக்கு நாட்டு வரலாற்றில் ஒரு பெரும் பற்றையும், நாட்டுக் காட்சிகளில் ஒரு புதுவகை உயிர்ப்பையும் கொடுத்தன. அவரது பிறப்பிடமாகிய இடை நாடு பல பழைய போர்களுக்கு நிலைக்கள மாயிருந்தது. அவ்விடங்களைச் சென்று பார்வையிடுவதும், அச்சண்டை களைப்பற்றித் தாம் படித்த செய்திகளையும் மக்களையும் மனக்கண் முன்னே அவ்விடத்தினுடன் பிணைத்து உருவகப்படுத்தி அக்காட்சியிலீடுபடுத்தி இன்புறுவதும் அவருக்கு வழக்கம். அதேபோல நாடோடிப் பாக்கள், கதைகள் இவைகளையும் நாட்டுப்புற மக்களிடம் நேரில் கேட்டறி வதும், அவற்றிற்கு நிலைக்களமான இடங்களுடன் அவற்றைப் பிணைத்து உருவகப்படுத்துவதும் அவர்க்குப் பொழுது போக்குகளா யிருந்தன. இத்தகைய நோக்கங்களுக்காக அவர் பல சமயம் பல கல் தொலை செல்வதுமுண்டு.
1745இல் போர் நடந்த இடமாகிய பிரஸ்டன் பான்ஸைப் பார்க்கப் போகும்போது அவருடன் கூட டால்கெட்டி என்ற ஒரு பழைய படைஞர் சென்றனராம். மான்ட்ரொஸின் பழங்கதை (Legend of Montrose) என்ற புனைகதையில் இத்தோழரையும் கூட வரைந்துதவியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இன்னொரு தடவை இதேமாதிரி முயற்சிகளில் இவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, எடின்பரிலிருந்து 30 கல் தொலைவரை சென்றுவிட்டார். உணவு வேளையானபின்தான் வீடு செல்ல இன்னும் 30 கல் தொலைவு உள்ளது என்ற உணர்ச்சி வந்தது. விடுதியில் உண்ணக் கையில் அரை வெள்ளி (6 பென்சு) கூட இல்லை; என் செய்வது? வீடுகளில் சென்று குடிக்க நீர் கேட்டு வாங்கி அதைக் கொண்டாவது வயிற்றை நிறைப்போம் என்று தொடங்கினாராம். ஆனால் தாய்ப்பாலுடன் அன்புப் பாலும் சேர்த்துண்ட அந்நாட்டு மாதர் அவர் நிலையைக் குறிப்பா லுணர்ந்து நீருக்கு மாறாகப் பாலே கொடுத்துதவினராம்.
4. குடும்ப வாழ்வு
உலகியல் அறிவு வாய்ந்த இவர் தந்தைக்கு இவை யனைத்தும் பித்தலாட்டங்களாகவே பட்டன. அவர் ஸ்காட்டைக் கெல்ஸோவிலும் எடின்பரிலும் பள்ளியிற் பயிற்றுவித்த பின்னர்ப் பல்கலைக் கழகத்துக் கனுப்பிச் சட்டப் பயிற்சியும் செய்வித்தார். சட்டப் பயிற்சியிலோ அப்பயிற்சிக்குப் பின் சட்டத் தொழிலிலோ அவர் ஊக்கங்காட்டாமல் பொதுமக்கள் கூட்டுறவிலும் களியாட்டங்களிலும் காலங் கழிப்பது கண்டு அவர் மனமழிந்தார். ஸ்காட்டோ தந்தை மனத்தைப் புண்படுத்தப்படா தென்றே வேண்டா வெறுப்பாகத் தம் தொழிலைச் செய்துவந்தார். தொழிலில் இறங்கி 5 ஆண்டுகளுக்குப் பின்னும் அவருக்கு அதில் ஆண்டு ஒன்றுக்கு 144 பொன் மட்டுமே ஊதியமாக வந்தன. இலக்கிய உலகில் வெற்றிகண்ட பின்னரே தொழிலிலும் அவருக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆயினும், அவருக்கு அத்தொழிலில் சற்றும் விருப்ப மில்லையாதலால் தந்தை இறந்தபின் அதனை விட்டு விட்டார். அப்பொழுதும் இலக்கியம் ஒன்றாலேயே பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் வழக்கு மன்றத்தில் (Court of Session) எழுத்தாளராக அமர்ந்து ஆண்டுக்கு 1,300 பொன் பெற்றார். புனைகதை வெளியிடத் தொடங்கிய பின்தான் இலக்கிய மொன்றையே தம் முழுப்பணியாகக் கொள்ள முடிந்தது.
1797 கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அவர் சார்லட்டி கார்ப் பெண்டர் என்ற மாதைக் காதலித்தார். முதல் முதலில் கில்ஸ்லன்டு என்னும் சிற்றூரில் வைத்துக் குதிரைமீது அவர் ஊர்ந்து செல்லும்போது அவ் அம்மையார் எதிரே வருவது கண்டார். அதன்பின் அதே இரவில் எதிர் பாராத முறையில் ஒரு நடனக் கூட்டத்தில் இருவரும் கலந்து ஒருவரை யொருவர் மீண்டும் கண்ணுற்றுக் காதல் கொண்டனர். மறுநாள் இரவு ஸ்காட் அவரைக் குறித்தே ஓயாது பேசிக்கொண்டிருந்து இரவு ஒரு மணிவரைத் தூங்கா திருந்தனர் என்று ஒரு நண்பர் கூறியுள்ளார். மணமானபின் இருவரும் சிறிது காலம் எடின்பரில் வாழ்ந்தனர். அதன்பின் எஸ்க் (Esk) ஆற்றின் கரையில் லாஸ்ஸவேடு (Lassawade) என்னுமிடத்தில் ஒரு குடில் கட்டி வாழ்ந்தனர்.
நட்பும் பிறர்க்கு உதவுதலும் அவர் வாழ்க்கையின் ஆழ்ந்த குறிக்கோள்கள். உண்மையில் இவ்வுயர் குணங்களே அவர் வாழ்க்கையின் பல இன்னல்களுக்கும் அவர் கடைசிக் கடனுக்கும் காரணமாய் அமைந்தன. அவருடைய இலக்கிய முயற்சிகளில் பெரும்பாலானவை கூடப் பிறரது முன்னேற்றத்தை உன்னி ஏற்பட்டவையேயாகும்.
5. பழம் பாடல்கள்
இன்று ஸ்காட்டின் பெயர் உலகில் உச்சநிலையில் இருப்பது உரை நடைத் துறையில், அதிலும் புனைகதைப் பகுதியிலாயினும், அத்துறையில் அவர் தாமாக முயலவில்லை; அவரது எண்ணமெல்லாம் முதன் முதலில் பழம் பாட்டுக்கள், பழங்கதைகள் ஆகியவற்றைத் தொகுப்பதிலேயே யிருந்தது. இவற்றில் முதல் தொகுதியை அச்சிட்டவர் அவர்தம் பழைய பள்ளித்தோழரான ஜேம்ஸ் பாலன்டைன் (James Ballantyne) ஆவர். இவருக்கு உதவி செய்யும் எண்ணமே இத்துறையில் அவரை ஊக்கிய தென்பது கீழ்வரும் அவரது கடிதத்தால் விளங்கும்.
‘’பல ஆண்டுகளாக நான் இவ் இடை நாட்டுப் பழம் பாடல்களைத் தொகுத்துக்கொண்டு வருகிறேன். அவை அனைத்தும் சேர்த்து ஒரு சிறு நூலாக வெளியிட்டால் ஒரு நாலைந்து வெள்ளிக்கு (4 or 5 Shillings) விற்குமென்று நினைக்கிறேன். எடின்பருக்குச் செல்லும்போது இதுபற்றி வெளியீட்டாளர் சிலருடன் பேசி அவர்கள் இவ்வகையில் ஊக்கங் காட்டினால் அவற்றை வெளியிடுவேன். அப்போது அவற்றைத் தங்கள் அச்சகத்திலேயே பதிப்பிக்க வேண்டிவரும்.’’
பாலன்டைன் இதனை ஆவலுடன் ஏற்றனர் என்பதில் ஐயமில்லை. இம்முயற்சியில் இவ்விருவருடைய பொருள் நிலையும் மாறியது ஒரு புறம்-இன்னொரு புறம் இலக்கிய உலகின் பொருட் குவைக்கு ஒரு தலைமையான பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டது.
இப் ‘’பாணர் பாட்டுக்க’’ளே ஸ்காட்டின் முதல் இலக்கிய முயற்சி. இதனால் அவர் முதலில் 100 பொன்னும், பின் பதிப்புரிமைக்காக 500 பொன்னுமே பெற்றனர். எனினும் அவர் திறனை இஃது அவருக்கு விளக்கிற்று.
இதன்பின் அவர் ‘இறுதிப் பாணனது பா’ (Lay of the Last Ministrel) என்ற நூல் எழுதினார். இஃது உடன்தானே பெரும் புகழ் பெற்றுவிட்டது. இதனால் அவருக்கு மொத்தம் 769 பொன் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மார்மியன்’, ‘ஏரிக்கரைப் பிராட்டி’ (Marmion, Lady of the Lake) முதலிய பாட்டுக்கள் வெளிவந்தன. இவை இன்றும் நல்ல பாட்டுக்களாகக் கணிக்கப் படினும், ஆங்கிலக் கவிதையுலகில் இரண்டாம் படியானவை என்றே கருதப்படுகின்றன. ஆனால் அவர் காலத்தில் அவை வானளாவப் புகழப் பட்டன. அவற்றின் புகழால் அவருக்கு அரசவைக் கவிஞன் ஆகும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் அத்தகைய பகட்டான அரசியல் வாழ்வு தமக்குப் பிடிக்காதென மறுத்துவிட்டார்.
6. புனைகதை உலகம்-வேவர்லி
ஸ்காட் முதல் முதல் இலக்கிய உலகில் புகுந்தது ஒரு பழந்தோழரை உதவும் முகத்தாலேயே என்று காட்டினோம். அவர் புனைகதை ஆசிரிய ரானது இன்னும் புதுமையான செய்தி ஆகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனைகதைகள் எழுதுவோர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிப் பல பகுதிகள் வெளியிடுவது வழக்கம். இங்ஙனமே தாம் சேர்த்த ஸ்காத்லாந்தின் பழங்கதைகள், பழைய வரலாற்றுத் துணுக்குகள் ஆகியவைகள் உள்ளடங்கிய ஒரு நீண்ட புனை கதை எழுத வேண்டுமென அவர் நினைத்து அதில் ஒரு பகுதி எழுதி முடித்தார். அதன்பின் எக்காரணத்தாலோ அதை மறந்து விட்டார். அது பெட்டியினடியில் புதையுண்டு ஒன்பது ஆண்டுகள் கிடந்தது. ஒரு நாள் மீன்தூண்டிலின் கொக்கி ஒன்றைத் தேடுகையில் அது தற்செயலாகத் தென்பட்டது. அதனை ஏன் முடித்துவிடக் கூடாது என்ற புதுமையான ஓர் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அவ் ஆர்வத்தில் ஒரே யடியாய் உட்கார்ந்து மீதி இரண்டு பகுதிகளையும் மூன்று வாரங்களுக்குள் முடித்துவிட்டார்.
இந்நூலை வெளியிடுகையில் ஸ்காட் தாம் ஆசிரியர் என்று தெரியாமலிருக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்துக் கொண்டார். ஆசிரியர் கையெழுத்துத் தெரியாமல் வேறொருவர் கையால் படியெடுக்கப் பட்டது. நூல் வெளிவந்து நற்புகழடைந்த பின்னும் கூட நண்பர்கள் தவிரப் பிறருக்குத் தாம் ஆசிரியர் அல்லர் என்றே கூறிவந்தார். இதற்குக் காரணம் நன்கு விளங்கவில்லை. அதில் வரைந்துள்ள உருக்கள் தம்மைக் குறித்தவை என ஒரு சிலர் நினைக்கக்கூடுமெனத் தாம் அஞ்சினதாக அவர் கூறுகின்றார்.
இந்நூல் ‘வேவர்லி’ என்ற பெயரால் வெளிவந்தது. இந்நூலுக்கு மொத்தம் 700 பொன் கொடுக்க வெளியீட்டாளர் இசைந்தனர். ஸ்காட் 1000 பொன் கேட்டனர். வெளியீட்டாளர் அதற்கிணங்காததால் ஊதியத்தில் சரி பகுதி தருவதாக உடன்பட்டனர். இதனால் வெளியீட்டாளருக்குப் பெருத்த ஊதியக் குறைவே ஏற்பட்டதென்று சொல்ல வேண்டுவதில்லை.
இந்நூல் வெளிவந்தபோது ஸ்காட்டின் ஆண்டு 43. அதன் பின் 17 ஆண்டுகள் அவர் வாழ்ந்தனர். அதற்குள் அவர் எழுதிக் குவித்த புனை கதைகள் எண்ணில. இவை பெரும்பாலும் இடைநாடு, ஸ்காத்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றின் வாழ்க்கையைப் பற்றியவையும், பழைய வரலாற்றை ஒட்டியவையுமேயாம். இவற்றுள் மிகவும் சிறந்தது ‘ஐவன்ஹோ’வேயாகும். ’அமுதசஞ்சீவி’ (டலிஸ்மன்), ‘ராப்ராய்’, ‘மிட்லாதிய நாட்டின் உள்ளம்,’ ‘பெர்த்தின் அழகிய கன்னி,’ ‘பீவரில் அவ் தி பீக்’ (கொடு முடிப் பீவரில்), ‘குவெண்டின் டர்வார்டு,’ ‘கடற்கொள்ளைக்காரன்,’ (Pirate) ‘நைகலின் வாழ்வு தாழ்வுகள்’ (Fortunes of Negel) ஆகியவை அவரது பிற அரிய புனைகதைகள் ஆம். ஸ்காட் எத்தனையோ கவலைகளிடையேயும் துன்பங்களிடையேயும் சற்றும் தளராது மிக விரைவாய் எழுதுவார் என்பது தெளிவு. நாள் ஒன்றுக்கு அச்சுப் பக்கங்கள் பதினாறுக்குக் குறைந்து அவர் எழுதிய நாட்களே கிடையாது. ஆனால் இவ்வளவு விரைவாய் எழுதும் போதும் அவர் அமைதியுடனும் நன்கு ஆராய்ந்துமே எழுதுபவர். ‘கடற் கொள்ளைக்காரன்,’ ‘நைகலின் வாழ்வு தாழ்வுகள்,’ ‘பீவரில் அவ் தி பீக்’ ஆகிய முப்பெரு நூல்களும் சில சிறு நூல்களும் சேர்ந்து இவர் ஒரே ஆண்டில் (1822) எழுதினவை என்று கூறப்படுகின்றன.
7. ஆபட்ஸ்ஃபோர்டு
ஸ்காட்டின் ஆர்வத்தை ஈர்த்து அழிவுக்கும் அடிகோலிய அரிய இருதன்மையுடையவை ஆபட்ஸ்ஃபோர்டு (Abbotstord) என்ற அவருடைய பெருநிலக் கிழமையும் (ஜமீன்) மாளிகையும் ஆகும். இதனை அவர் நூறு ஏக்கர் கொண்ட ஒரு மனை அளவில் 4,000 பொன் கொடுத்து வாங்கினார். ஸ்காட்டின் புகழும் செல்வமும் வளருந்தோறும் இதுவும் அவர் அவாவின் அளவே அளவாக வளர்ந்து இறுதியில் 1000 ஏக்கர் அளவு நிலமாயிற்று. மனை மாளிகையாய், மாளிகை ஓர் அரண்மனையாயிற்று. அதிலுள்ள குன்றுகளில் காடுகள் வளர்க்கப்பட்டன. அருவிகளும் கானாறுகளும் ஸ்காட்டின் கவிதைப் புனைவுக் கிணங்கத் திருத்தப் பெற்றன. அப்பெருநிலக் கிழமையின் மக்களோ அவர் அன்பூற்றின் ஆழத்தையும் அரிய உதவிக் கையின் நீளத்தையும் அளவிட்டுணர்ந்து அவரைக் குறுநில மன்னராகவும் தந்தையாகவும் பாராட்டினர்.
என்ன பாராட்டியுமென்ன? ஸ்காட்டின் பெருந்தன்மைக் கிலக்காய் விளங்கிய அவருடைய பிற முயற்சிகளுங்கூட அவருக்கு ‘மோகினி’ யாகவும் ‘உலகளந்த பெருமா’ளாகவுமே விளங்கின. இப்பெரு நிலக் கிழமையையும் மாளிகையையும் வாங்கவும் மேம்படுத்தவும் அவர்தம் வருவாயை முழுவதும் பயன்படுத்தியதோடு கடனும் வாங்கினர். அதோடு வருவாயின் இன்னொரு பகுதியால் ’பாலன்டைன் கழகம்’ என்ற பதிப்பகம் ஒன்றை நடத்தி அதன் மூலம் தம் நண்பருக்குப் பணி உதவியதோடன்றி வரம்பற்றுத் தம்மையடுத்த ஆசிரியர்கள் நூல்களை எல்லாம் வெளியிடவும் தலைப்பட்டனர். கடவுள் அருளுக்குத்தான் எல்லை இல்லாமலிருக்க முடியுமேயன்றி மனிதன் அருளுக்கு ஓர் எல்லை இருக்க வேண்டுதல் இன்றியமையாத தன்றோ? உதவி வேண்டினோர் பெருகினர். அதற்கொப்ப ஸ்காட் உள்ளமும் கொடையும் விரிந்தன. அவரை மதித்த கழகமும் அதற்கொப்பத் தன் தொண்டைப் பெருக்கிற்று. ஆனால் பொருள்நிலை இவ் எல்லையற்ற விரிவுக்கிடம் தராமல் கழகம் முறிவடைந்தது.
போதாக்குறைக்கு இதற்குள் ஸ்காட் ‘ஸர்’ பட்டம் பெற்றுப் பெரு மகனாக வாழ்ந்துவந்தார். பாலன்டைன் கழகம் வீழ்ந்ததும் உயரிய வாழ்வும் அவருக்கு ஒரு தளையாயிற்று. கடன்காரர்கள் பெருநிலக் கிழமையைக் கைக்கொண்டு பின்னும் 1,17,000 பொன் கடன் இருந்தது.
8. முடிவு
கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையின் மெய்ச் சுவையைக் காட்டிய பெருமானது பெரும் பெயர்க் கழகம் வீழ்ந்து முறிவுற்றதெனக் கேட்ட அவருடைய வாசகர்களிடையே துயரமும், அவருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணமும் அலை அலையாகப் பரந்து மோதின. அவர் நூல்கள் முன்னையினும் பதின்மடங்காக விற்றன. ‘உட்ஸ்டாக்’ என்ற நூலால் 8000 பொன் கிடைத்தது. இறக்குமுன் அவர் தம் உழைப்பால் எல்லாம் இழந்தோம் என நினைத்த கடன்காரருக்கு 40,000 பொன் கொடுத்துவிட்டார்.
எனினும் இவ் உழைப்பாலும் முதுமையாலும் அவர் உடல் நலிவுற்றுக் கடனை முற்றும் தீர்க்கவில்லையே என்ற ஏக்கத்துடனேயே உலக வாழ்வு நீங்கும்படியாயிற்று.
அவருக்கு இரு புதல்வரும் இரு புதல்வியரும் இருந்தனர். அவர் வாழ்க்கை எழுதிய பெரியாரான அவர் மருகரும் அதன்பின் அவர் இரு புதல்வரும் அவருடைய மீந்த நூல்களின் பதிப்புரிமையால் அவர் கடனை முற்றிலுந் தீர்த்து அவரது இறவாப் புகழென்னும் பொன்னுடம்பிற்கு ஏற்பட்ட கடன்கொடா ஏக்கமாகிய வெப்பத்தையும் தமது அன்பு வெள்ளத்தால் தீர்த்தனர்.
ஆங்கில நாட்டில் ஸ்காட்டுக்கு முந்திப் புனைகதைகள் மிகுதி இல்லை. அவற்றுட் சிறந்தவை கை விரலில் எண்ணக்கூடியவையே. உலகின் பிறநாடுகளிலும் அப்படியே. புனைகதை என்பதை இலக்கியத்தின் இன்றியமையாச் சிறப்புடைய பகுதியாகச் செய்த பெருமை ஸ்காட்டினு டையதே. ஆங்கில நாட்டில் மட்டுமன்று; பிற நாடுகளிலுங்கூடத் தற்காலப் புனைகதை முறையின் தனிப்பெருமைகளுக்கு முதற் காரணமானவர் இவரே யாதலின் இவரைப் புனைகதைத் தந்தை எனக் கூறத் தடையில்லை.
சார்ல்ஸ் டிக்கன்ஸ்
** சொற்போர் வீரர்**
1. துன்பப்பள்ளி
இளமை முதற்கொண்டே சொல்லுதற்கரிய வறுமைத் துன்பத்திற்காளாகிப் பின் அத்துன்பத்தையறிந்த காரணத்தினாலே ஏழைகள் வாழ்க்கை நிலை, அவர்கள் துயர்கள் முதலியவற்றைத் தீப்பொறி பறக்கும் எழுத்துக்களில் எழுதி அவர்களுக்காகப் போர் நடத்தி இறுதியில் அதன் வெற்றியால் தாமும் வெற்றியும் புகழும் செல்வமும் அடைந்த பெரியார் சார்லஸ் டிக்கன்ஸ் ஆவர்.
இவர் 1812ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் போர்ட்ஸ்மத்தி னருகிலுள்ள லான்ட்போர்ட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஜான் டிக்கன்ஸ் ஆவர். இவருடைய முதற்பிள்ளை பெண் மகவு. அதற்கடுத்த பிள்ளையே சார்ல்ஸ் ஆவர். ஜான் டிக்கன்ஸ் ஸாமர்ஸெட் ஹவுஸ் என்ற வாணிபக் கூட்டுறவுக் கழகத்தில் எழுத்தாளராயிருந்தார்.
சார்ல்ஸின் இரண்டாம் ஆண்டில் அவர் தந்தை லண்டனுக்கும் அதன்பின் சாதமுக்கும் மாற்றப்பட்டார். இவ்விடத்தில் சார்ல்ஸ் சில ஆண்டுகள் ஒழுங்காகப் பள்ளிக்கூடஞ் சென்று படித்தார். அவர் குடும்பமும் இது சமயம் நல்ல நிலையிலிருந்தது. இதன் பின் குடும்பநிலை கெட்டு அவர் வாழ்க்கையின் பெரும்பகுதி வறிய பாலைவனம் போலாயிற்று. அப் பாலைவனத்தினிடையே இவ்வின்பப் பகுதியின் நினைவு பாலை நடுவில் காணப்படும் நறுஞ்சுனைப் பகுதி போன்றிருந்தது.
சார்ல்ஸ் பத்தாண்டுப் பருவமெய்தியபோது அவருடைய குடும்பத்தினர் மீண்டும் லண்டன் வந்தனர். இதுமுதல் அவரது வாழ்க்கையின் கடுமையினும் கடுமையான துன்பங்களும் இறுதியில் வந்த வெற்றியும் எல்லாம் இந்த லண்டனிலேயே அவருக்கு ஏற்பட்டன. இச்சமயம் தந்தை கடன்பட்டுக் குடும்பப் பொருள்நிலை சீர்கேடடையவே சார்ல்ஸ் பள்ளிக் கூடத்திற்குப் போவது முடியாமற் போயிற்று. அதோடுமட்டுமன்றி அவர் தோல் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யவும் அனுப்பப்பட்டார். போதாக்குறைக்கு அவர் தாய் தந்தையர் மார்ஷல்ஸியில் கடனுக்காகச் சிறையில் வைக்கப்பட்டனர்.
2. தொழிற்சாலை வாழ்வு
இன்பத்தைக் காணாதவர் படுந்துன்பத்தினும் அதனை ஒருகால் கண்டவர் படுந்துன்பமே தாங்கொணாதது. சார்ல்ஸின் வாழ்க்கைக் கொடுமை எத்தகையோரையும் மனமுறியச் செய்யத்தக்கது. ஆனால் அவரது இயற்கை உணர்ச்சியை அவர் கெடாது வைத்திருந்து ஓய்வு கிடைத்த ஞாயிற்றுக் கிழமையை மட்டிலும் நல்வழியில் செலவு செய்தார். புலரிக் காலையில் எழுந்து வேறோரிடம் வேலை செய்துவந்த தம்முடைய தமக்கையை அழைத்துக் கொண்டு அவர் மார்ஷல்ஸீக்குச் சென்று தம் தந்தையரைப் பார்த்தும், தம்பியர் தங்கையருடன் விளையாடியும், களிப்புடன் நேரம் போக்குவர். அன்று இரவு குடும்பத்தினின்றும் பிரிந்து, வழியில் தமக்கையை அவரது பள்ளியில் விட்டுவிட்டு அவர், தொழிற் சாலை அருகிலுள்ள தம் தனியறைக்கு வந்து சேர்வார்.
இரவெல்லாம் தனிமையிலும் மனத்துயரிலும், ஓய்ந்த சமயம் உறக்கத்திலும் கழியும். காலையானதும் தொழிற்சாலைக்குச் சென்று வெட்டுதல் ஒட்டுதல் முதலிய சில்லறை வேலைகளை ஓயாது இரவுவரையிற் செய்துகொண்டிருக்க வேண்டும். பின்னாட்களில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவர் மனத்திலும் உறைக்கும்படியாக அவர் ஏழை மக்கள் துயரங்களை எழுத வன்மையடைந்ததில் வியப்பொன்றுமில்லை. அதற்கான பயிற்சியாகவே அவருடைய இந்நாளைய துன்பமனைத்தும் அமைந்தது.
இக்காலத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் அவர் வாழ்க்கை வரலாறு எழுதிய ஃபார்ஸ்டர் அவர் தம்மிடம் கூறியதாகச் சுவைதருஞ் செய்தி ஒன்று தருகிறார். ஒருநாள் அவர் உண்ண நல்லுணவின்றி வழியில் வாங்கிய உலர்ந்த அப்பம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. அதன் பின் வழியிலுள்ள ஒரு சிற்றுண்டிச்சாலை சென்று ஒரு கோப்பை இனிய நறவு கொடுக்கும்படி கேட்டார். அந்நாள் அவர் குல்லாயின் உச்சிகூட அங்கிருந்த மேசையளவு எட்டவில்லை யாயினும், அவர் பெரிய மனிதரிடங் காணமுடியாத அளவு நயத்துடன் பேசியது கேட்டு விடுதிக்காரர் தம் மனைவியை யழைத்து அவரை உள்ளே வரும்படி கூறி, உணவும் நறவும் வழங்கும்படி சொன்னார். அம்மாதும் அவரது நாகரிகத் தோற்றங்கண்டு மகிழ்வுற்று அவருக்கு வேண்டியதை அன்புடன் வழங்கித் தாய் போல் அவரை வாரி எடுத்து உச்சிமோந்து முத்தந் தந்து அனுப்பினாராம்.
இருண்ட இந்நாட்களிலெல்லாம் இதற்குமுன் பள்ளியிற் கழித்த நாட்களின் நினைவு கனவுபோல் அடிக்கடி மனத்தில் இருந்துவந்தது. அவரது மனம் முற்றிலும் கசப்படையாமல் தடுத்தவை முற்கால இன்பம், பிற்காலத் துன்பம் ஆக இரண்டினிடையேயும் உள்ள நாடகச்சுவை யறிவும் நயமுமேயாகும். நேரம் வாய்த்தபோது அவர் உறவினர் நண்பர் ஆகியவர் மகிழத் தில்லானாப் பாடல்கள் பாடுவார்; அல்லது தம்மை ஒத்த சிறுவருடன் விளையாடுவார்.
3. மீட்டும் கல்விச்சாலை
சில நாட்களுக்குப்பின் தாய் தந்தையரின் பொருள்நிலை சற்றுச் சீர்ப்படவே அவர் தொழிற்சாலையிலிருந்து விலகி மறுபடியும் பள்ளியிற் சேர்ந்தார். இந்நாள் அவர் படித்த பள்ளி அமைந்துள்ள இடத்தை இன்றும் எளிதிற் காணலாம். அப்பள்ளிக்கூடம் ஹாம்ப்ஸ்டெட் ரோடில் கிரான்பித் தெருவில் இருந்தது. அதற்கு அருகில் ஸாமர்ஸ் டௌனில் ஜான்ஸன் தெருவில் அவரும் அவருடைய தாய் தந்தையரும் தங்கிய வீடு இப்போது ஏழைகளுக்குக் கல்வி நிலையமாக விளங்குகிறது.
தொழிற்சாலை வாழ்வுக்குப்பின் பொன் நகர் வாழ்வே என்று தோற்றத்தக்க இப்பள்ளி வாழ்வு ஈராண்டுகள் நடைபெற்றது. இந்நாளில் தான் அவர் சிறு கதைகள் எழுதுதல், சிறுவருடன் நாடகம் போடல் முதலிய வகைகளில் தமது பின்னையப் பெரும்பணிக்குத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டார். பள்ளியில் அவர் விரைவில் மேம்பாடடைந்து 14ஆம் ஆண்டில் வெளி வந்ததும் லிங்கன்ஸ் இன்(Lincohn’s Inn) என்ற இடத்தில் நியூஸ்குவயரில் வழக்கறிஞர் நிலையத்து எழுத்தாளர் பணியில் அமர்ந்தார். இக்கீழ்த்தர எழுத்தாளர் பணியில் முதன் முதல் அவருக்கு வாரம் ஒன்றுக்கு பதின்மூன்றரை வெள்ளிகள் (ஷில்லிங்குகள்) வருவாயாக வந்தன.
துன்பத்தின் எல்லை கண்டவர் இன்பத்திற்கடிமையாகிச் சோம்பல் கொள்ளாது இன்பத்திற்கும் எல்லை காண முயல்வாரன்றோ? அதன்படி டிக்கன்ஸ் தமது எழுத்தாளர் பணியை நிலவரமாகப் பெற்று ஓய்வு கொண்டு விடாமல் சுருக்கெழுத்துப் பயில்வதன் மூலம் விரைவில் முன்வர எண்ணினார். அதன்பின் வழக்கு மன்றங்களில் உ ழைக்க முயன்று இரண்டாண்டு அத்துறையிலும் ஒழுங்கான வரும்படியின்றிக் கழித்தார். தாம் எதிர்பார்த்த அளவு விரைவில் மேம்பாடு கிட்டாததை எண்ணிச் சோர்வு கொண்டு ஒரு தடவை நாடகத் துறைக்குச் செல்ல நினைத்து விகடராகத் தாமும் தமைக்கையும் செல்லக் கூட ஏற்பாடு செய்தார். தெய்வம் வேறு வகையில் வாழ்க்கையைத் திருப்ப எண்ணியபடியால் இது நடைபெறவில்லை போலும்!
4. செய்தித்தாள்களும் இலக்கியப் பணியும்
19ஆம், 21ஆம் ஆண்டுகளில் அவர் ‘மார்னிங் கிரானிக்கிள்’ முதலிய செய்தித்தாள்களுக்குக் குறிப்பெழுதுவோர் (Reporter) ஆக அமர்ந்தார். இத்துறையிலும் அவர் தம் தொழிலை யாவரும் வியக்கும் வண்ணம் திருத்தமாகச் செய்தார். அந்நாள் கடிதப் போக்குவரத்து குதிரை வண்டிகளிலேயே நடை பெற்றதால், அவர் வழியில் காணுஞ் செய்திகளைக் கூர்ந்து நோக்கிப் பிற்காலப் பணியில் பயன்படுத்தும்படி உள்ளத் தடத்தில் சேகரித்து வைத்துக்கொண்டார்.
இச்சமயம் செய்தித்தாள்களுக்குத் தாமும் எழுத வேண்டுமென்னும் பேராவல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அதற்கான துணிவு இல்லாததால் நேர் பெயருடனன்றிப் புனை பெயருடன் ஒரு சிறுகதை எழுதி அதனை உறையிலிட்டு யாரும் அறியாது மறைவாகச் சென்று ஒரு தபால் பெட்டியி லிட்டனர். அடுத்த தடவை தற்செயலாய் ‘’மந்த்லீ மாக்ஸீன்’’ என்ற செய்தித் தாளை நோக்குகையில், தமது கதை புனை பெயருடன் அதில் காணப்படுவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர்.
செய்தித்தாள் தமது கட்டுரையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில், பொருள் கைம்மாறு கேட்கக்கூடச் செய்யாமல் ‘பாஸ்’ (Boz) என்ற புனை பெயருடன் பல கட்டுரைகள் எழுதி, அப்பெயருக்கு ஒரு நல்ல செல்வாக்கை ஏற்படுத்தி, அதன்பின் பொருள் திட்டம் வகுக்க முயன்றார். ஆனால், அந்தச் செய்தித்தாள் நன்னிலையிலில்லாததால் அதன் ஆசிரியர் தாம் பொருள் கொடுக்கும் நிலையிலில்லை என்று கூறிவிட்டார். ஆனால் அவர் பெயர் செல்வாக்குப் பெற்றுவிட்டமையால் சின்னாட்களில் தானே அவர் கட்டுரைக்கு அவர் கேட்ட தொகையிலும் பன்னிருமடங்கு தொகை அவருக்குக் கிட்டிற்று. ‘’ஈவனிங் கிரானிக்கிள்’’ என்ற செய்தித்தாளுடன் அவர் உறவு வைத்துக்கொண்டு ‘’பாஸின் கைவரிசைகள்’’ (Sketches of Boz) என்கிற சிறு கட்டுரைகளை அதன் மூலமாக வெளியிட்டார். 1836இல் இதனை இரண்டு பகுதிகளாகப் படங்களுடன் க்ரூக்ஷாங்க் என்பவரது உதவியுடன் வெளியிட்டு வெற்றியின் முதற்படியிலேறினார்.
5. பிக்விக் பேப்பர்
இப்போது அவர் பிக்விக் பேப்பர் என்ற செய்தித் தாள் ஒன்றை வெளியிட்டார். விளம்பரத் திட்டம் ஏற்படாத அந்நாள், செய்தித்தாள் வளர்ச்சி மிகவும் பிற்போக்காகவே இருந்திருக்க முடியும். ஆகவே, முதலில் பலவகையில் புதுமைவாய்ந்த ‘’பிக்விக்’’கைப் பொதுமக்கள் விரும்பி ஏற்க நாள் செல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, அதற்கு ஏற்பட்ட விரைந்த வளர்ச்சியும் புகழும் உண்மையில் டிக்கன்ஸோ, அவருடைய வெளியீட்டாளரோ கனவிலுங் கூடக் கருதியிராதவை ஆகும். டிக்கன்ஸ் அவர்களிடமிருந்து திங்கள்தோறும் 15 பொன் பெறுவதாகத் திட்டஞ் செய்து எழுதிவந்தார். அதுவுங்கூட முதல் இரண்டு திங்கள் பணத்தை முன்கூட்டி வாங்க வேண்டிய அளவு வறுமை நிலையில் அவர் இருந்தார்.
முதல் வெளியீட்டில் 400 படிகளே அச்சிடப்பட்டன. ஆனால், 5ஆம் வெளியீடு வெளிவர இருக்கையில் அவர்கட்கு மகிழ்ச்சியும் வியப்புந் தரத்தக்க, ஆனால் தற்காலிகமாக அவர்களுக்கு இக்கட்டு உண்டுபண்ணிய செய்தி ஒன்று நிகழ்ந்தது. அதில் வரையப்பட்டிருந்த ஸாம் வெல்லரின் முழு விவரங்களையும் அறியும் ஆவலினால் முதலில் அச்சிடப் பட்டதை விடப் பதின்மடங்கு படிகள் வேண்டிவந்தன. 15ஆம் வெளியீட்டில் 45,000 படிகள் விற்றன. டிக்கன்ஸின் செல்வாக்கும் புகழும் இப்போது வானளாவின. அவர் நூல் வெளியீட்டாளர் பெருஞ்செல்வந் திரட்டினார். ஆனால், அவருக்குச் செலுத்த வேண்டிய பணம் புகழ் வருமென எதிர்பாராத காலத்திட்டப்படி அமைந்ததாதலால் சிலநாள் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், இவ்விடையூறும் விரைவில் ஒழிந்தது. நிக்கோலஸ் நிக்கிள்பீ என்ற புனைகதையின்போது அதனை முடிக்கவேண்டி வந்த 20 திங்களிலும் திங்கள்தோறும் அவருக்கு 150 பொன் கிடைத்தனவாம்.
6. புனைகதை வெள்ளம்
பாஸின் கைவரிசைகள் 1835-36இலும், பிக்விக் பேப்பர்கள் 1837இலும் வெளியிடப்பட்டன. பின் ஆலிவர் டுவிஸ்டு 1838இலும், மேற்கூறப்பட்ட நிக்கோலஸ் நிக்கிள்பீ 1839இலும் பழம் பொருட் கடை (Old curiosity Shop) 1840-41இலும், மார்ட்டின் சஸ்ஸில்விட் 1844இலும், டாம்பி அண்டு சன் 1848இலும், ப்ளீக் ஹவுஸ் 1853இலும், பேர் ஆர்வங்கள் (Great Expectations) 1861இலும் வெளி வந்தன. அவரது மிகச் சிறந்த புனை கதையாகக் கருதப்படும் டேவிட் காப்பர்ஃபீல்டு 1880இல் எழுதப்பெற்றது. ‘’இரு நகர்களின் கதை’’ என்னும் நூல், பிரெஞ்சுப் புரட்சியை ஒட்டி 1859இல் எழுதப்பெற்ற நெஞ்சை அள்ளும் துணிகரச் செய்திகள் அடங்கிய புனை கதை ஆகும்.
இவற்றைத் தவிர அவர் பல செய்தித்தாள்களுக்கு எழுதியும், பல செய்தித்தாள்களைத் தொடங்கி நடத்தியும் வந்தார். 1846இல் அவர் நாட் செய்திகள் (Daily News) என்ற செய்தித்தாளில் முதல் ஆசிரியர் ஆனார். வீட்டு மொழிகள் (House-hold Words) ஆண்டு முற்றும் (All the year round) என்ற தாள்களில் அவருடைய மிகச் சிறந்த இனிய நேரப்போக்குக் கதைத் தொகுதிகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைப் பாட்டுக்களும் வெளிவந்தன.
நூல்கள் எழுதுவதோடு கூட அவற்றின் நடுப்பகுதிகளைப் பொது மக்க ள் முன் படித்துக் காட்டுந் தொழிலையும் அவர் அடிக்கடி மேற் கொண்டார். சிறப்பாக இம் முறையில் அவருக்கு அமெரிக்காவில் வெற்றி ஏற்பட்டது. 1842-லும் 1867-68-லும் அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளிலும் அங்கு 300 பொன் முதல் 2000 பொன் வரை கிடைத்து வந்ததாம். இறக்கும்போது அவரது செல்வநிலை 100,000 பொன் என மதிக்கப்பட்டதாம்.
7. வெற்றி வாழ்க்கை
ஆனால், டிக்கன்ஸின் பெருமை அவர் ஈட்டிய பொருளின் பெருமையேயன்று. அவர் நூல்கள் அனைத்திலுமுள்ள கதைத் தலைவர்கள் புனைவுருக்களேயாயினும் உண்மையான வாழ்க்கை ஓவியங்களே போல்வர். நகைச்சுவை, வாய்மை, ஆழ்ந்த பரிவு ஆகிய மெல்லிய பட்டுக் கயிறுகளால் அவர் தம்முடன் படிப்போர் குழுவைப் பிணித்துக்கொள்ளும் அரிய ஆற்றலுடையவர். இவ்வளவுக்கும் மேலாக அவர் எழுதிய நூல்களத்தனையும் பெரும் பொருளீட்டுவதற்காகவோ அல்லது பிறர் இன்பத்திற்காகவோ மட்டும் எழுதப்படவில்லை. அவை ஒவ்வொன்றிலும் அவரது ஒவ்வொரு ஆழ்ந்த கருத்து, அல்லது உண்மை. அல்லது அறிவுரை கதையுடன் கதையாய்ப் படிப்போர் மனத்துட்சென்று அதனை உருக்கி நல்ல வழியில் தம்மையறியாமலே உய்க்கும் தன்மையுடையதாய்க் கிடக்கின்றது. அவருடைய நூல்களின் ஆற்றலால் இன்று அவர் காலத்து ஏழைகள், சிறுவர்கள் பட்ட கொடுமைகள் பல ஒழிந்தன. ஏழைகளுக்கென வாழ்ந்த மிகச் சிறந்த பெரியார்களுள் அவர் ஒருவர் ஆவர்.
சார்ல்ஸ் லாம்
** நல்லியல் வாய்ந்த கட்டுரை மன்னர்**
கட்டுரை என்பது எழுதுவோன் கருத்தை அவன் கருதும் முறையும் அவன் உணர்ச்சியுந் தோன்ற உரைக்கும் உரையாம். இவற்றுட் சில உணர்ச்சியை மிகுதி வெளிப்படுத்தாது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தும். வேறு சில இரண்டையும் ஒருங்கே வெளிப்படுத்தும். இவ்விரண்டு வகைகளுள் பிந்திய வகையே சிறப்புடையதாகக் கொள்ளப்படுகின்றது.
இத்தகைய கட்டுரைகள் எழுதும் ஆசிரியர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் லாம். ஆங்கில மொழியில் ஹாஸ்லிட்டும், பிரெஞ்சு மொழியில் மந்தேனும் இவருக்கு அண்மையுடைய பிற கட்டுரை ஆசிரியர்கள். முதற்கூறிய வகைக் கட்டுரையில் சிறப்புக்கொண்டவர் அடிஸன் ஆவர்.
சார்ல்ஸ் லாமின் வாழ்க்கை கட்டுரைக்கெனவே அமைந்தது என்னலாகும். வாழ்க்கையிலுள்ள பல இன்னல்களும் அவரைப் பண்படுத்தி அவர் வாழ்வை உலகியல் முறையில் குறுக்கி இலக்கிய வகையில் உயர்வுறச் செய்தன. இவ்வின்னல்கள் அவர் பிறரைப்போல் வாழாமல் பண்ணின; ஆனால், பிறர் தமது விரைந்த முன்னேற்ற வாழ்வின் சுழலிற்பட்டுக் காண முடியாத வாழ்வின் அமைதிகளையும், புறநிலைப் பொருள்களில் உளஞ் சென்றவர் கருத்திற்படாத அகநிலைப் போக்குகளின் நுணுக்கங்களையும், அறிவுலகில் ஓடிய உணர்வுடையோர் மேற்போக்கான பார்வையிற் படாத, உணர்ச்சியுலகின் ஆழ்ந்த நுட்பங்களையும் தேடிச் சேர்த்துப் பழவமுது போன்றதும், பழங்கறி போன்றதும், பழந்தேன் போன்றதும், பழமரபுப் போன்றதுமான பழம் புதுச்சுவை ஒன்றை நமக்குத் தந்துள்ளார்.
சார்ல்ஸ் லாம் 1775 பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் முடிமன்னர் பணியாளர் தெரு(Crown Office Row)வில் பிறந்தவர். ஏழை நூலாசிரியரும் பெரும்படியாக நூல் வெளியிடுவோரும் வாழும் ப்ளீட் தெரு (Fleet Street) இதன் அருகில்தான் உள்ளது. ஆயினும், அத் தெருவுக்கு மாறாக லாம் பிறந்து வளர்ந்த இத்தெரு அமைதி குடிகொண்டது; பழமை நிலவுவது; பழங் கோயில்களும் வரலாற்றுச் சார்புடைய மாடகூடங்களும் ஊற்றுக்களும், ஆற்றுத் துறைகளும் நிறைந்தது. ‘’ஆற்றுத்துறை என்பது நான் வழங்கும் சொல் ஆயினும், அது பிறர் பார்வைக்கு ஆறன்று; சிற்றோடைதான். ஆனால் என் உணர்ச்சிக்கு முழு இடம் தருவதாயின் அதை ஆறு என்று சொன்னாற் போதாது; ஆறுகளின் அரசு என்னல் வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.
சார்ல்ஸ் லாம் ‘மடத்துக்கும் மடத்துக்கும் இடையே வாழ்ந்தவர்’ என்று சொல்வதுமுண்டு. அஃதாவது இயற்கையாலும், சுற்றுச் சார்புகளின் தாக்கினாலும் அவர் நாகரிகப் போக்கிலிருந்து விலகி நின்று பழமைப் பட்டுத் தம்மையொத்த பழமையான சுற்றுச் சார்புகளையே விரும்ப லாயினர். அவருடைய உடல் நலிவு, நாவடக்கம் முதலிய குணங்களும் இப் பண்பையே வலியுறுத்தின.
இளமையில் சார்ல்ஸ் லாம் படித்த பள்ளிக்கூடம் புதுவாயில் தெரு (N EW G ATE S TREET)வில் உள்ள நீலச் சட்டைப் பள்ளிக்கூடம் ஆகும். க்ரே ஃப்ரையர்ஸ்* (சாம்பல் நிறத் தோழர் கழகம்) என்ற சமயக் கழகத்தாரின் மடத்திடையே 1225இல் நிறுவப்பட்டது. பின் அம்மடம் எட்டாம் ஹென்றி யால் அழிக்கப்பட்ட பிறகு ஆறாம் எட்வர்டால் மீண்டும் 1552இல் நிறுவப் பெற்றது. அண்மைக்காலத்தில் 1902இல் இது லாம் படித்த இடத்திலிருந்து ஹார்ஷமுக்கு மாற்றப்பட்டது.
இன்று இப்பள்ளிக்கூடம் இலக்கிய அன்பர்களுக்குக் கண்காட்சி இடமாய் விளங்குகின்றது. இதன் தளம் லாம், காலரிட்ஜ், லே ஹண்ட் முதலியவர்களின் அடிச்சுவடுகள் தோய்ந்த இடம் எனப் போற்றப்படுகிறது. லாம் இப்பள்ளிக்கூடத்தைப்பற்றி எழுதுகையில், ’உடலுக்கு ஊக்கம் அளிக்கும் குதிரைப் பாய்ச்சல், கரடி யாட்டம் முதலியவற்றுள் அப் பள்ளியைச் சேர்ந்த எங்களுடைய உயர்வு ஒரு புறம்; புதூர் (Newington)ப் பக்கம் புத்தாற்றில் (New River) காலை மாலை என்றின்றி ஆடை என்ற கவலைகூட இல்லாமல் பாடியாடிக் குளித்துக் கூத்தாடுவதன் இன்பம் ஒரு புறம்; அங்ஙனம் பாடியாடி ஓய்ந்தபோது ஒட்டிய வயிற்றுடனும், தபதப என்றெரியும் பசித் தீயுடனும் இனிய உணவை அமுதெனக் கருதி உண்ண வரும் ஆர்வம் ஒரு புறமாக அப்பள்ளி வாழ்வின் இன்பத்தை நினைந்து நினைந்து மகிழும் உரிமையை நான் என்றும் இழக்க முடியாது. எனக் கூறியுள்ளார்.
லாமின் குடும்ப வாழ்வின் இன்னல்கள் யாவர் மனத்திலும் இரக்கத்தை உண்டுபண்ணத்தக்கவை. அதேபோன்று குடும்ப வாழ்வில் அவர் நடந்து கொண்ட முறைமையும் யாவர் மனத்தையும் கனிய வைத்துக் கரையச் செய்யத்தக்கவை. அவருடன் பிறந்தார் ஆடவர் ஒருவர், பெண் ஒருவர். முன்னவர் உடல் நலிவுக்கு இரையானவர். கால் ஊறுபட்டவர். பின்னவர் ஆன மேரி லாம் எக்காரணத்தாலோ திடீரென்று மூளைக் கோளாறு கொண்டு தந்தையின் மண்டையில் அடித்து ஊறுபடுத்திய துடன் தாயையுங் குத்திக் கொன்றுவிட்டார். வழக்கு மன்றத்தில் அவர் மூளைக்கோளாறு உறுதிப்படுத்தப் பட்டு அவர் அத்தகையோருக்கு ஏற்பட்ட பித்து விடுதியில் சேர்க்கப்பட்டார்.
இதன்பின் குடும்பப் பொறுப்பு முழுமையும் லாமையே சேர்ந்தது. இச்சமயம் அவர் தம்முடைய பழைய பள்ளித்தோழராகிய கால்ரிட்ஜுக்கு எழுதிய கடிதத்தில் ‘’அந்த மாலைப் பொழுதை நான் எப்படித் தாங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் அத்தை முற்றிலும் உணர்வற்று இறந்து விட்டாளோ என்று நினைக்கும் நிலையில் கிடந்தார். தந்தை இன்னொரு புறம் அவருக்கு உயிருக்குயிரானவரும், அவரை உயிருக் குயிராய் நேசித்தவருமான புதல்வியரால் ஏற்பட்ட மண்டை உடைவுடன் கட்டுக் கட்டப்பெற்றுக் கிடந்தார். தாயோ அதே புதல்வியரால் குத்துண்டு மாண்டு பிணமாய் அருகில் ஓர் அறையில் கிடந்தார். என் உடன்பிறந்தார் (அவருடைய குறைபாடுகளைக்கூட அன்புடனன்றி என்னால் நினைக்க முடியவில்லை) என்றுமுள்ள நலிவுடன் இன்று கால் ஊறடைந்ததால் எத்தகைய குடும்பக் கடனையும் ஏற்குந் தகுதியற்றவராயிருந்தார். இந் நிலையில் இத்தனை பொறுப்பையுந் துயரையும் தாங்க உரந்தந்த சமய உணர்வை நான் என்னென்றுரைப்பது!’’ என்று வரைந்துள்ளார்.
லாமின் உயர்குணத்தை அறியும் வகையில் வாசகர்கள் லாமின் நிலையில் தாம் இருந்ததாக நினைத்துப் பார்ப்பார் களாக! அப்படி இருந்தால் எத்தனை பேர் லாமைப்போல் அப்பொறுப்பைப் பொறுப்பாக மட்டும் கொள்ளாமல் விருப்பாகக்கொண்டு அதிலேயே தம் வாழ்க்கையை முற்றும் படியவைப்பர்? அதிலும் பெண்பாலரான உடன்பிறந்தார் பித்துக் கொண்ட வராய் அரசியல் பித்துவிடுதியில் சேர்க்கப்பட்டு விட்டால் என்ன உடன் பிறப்பானாலும் சனி தொலைந்ததெனத் தள்ளியிருப்பதைத்தானே நாம் உலகிற் காண்கிறோம்! உடன்பிறப்பாருக்கு ஒரு கை கொடுத்து உதவுவது மட்டுமே கடனென நாம் நினைக்கிறோமே யன்றி, உடன் பிறந்தாருக்காக நாம் நம் மனைவாழ்க்கையையும் நம் இன்பங்களையுந் துறந்து அவர்களுக்காகவே வாழ விரும்புவோமா?
இங்ஙனம் வாழ்ந்த தன்னலமறுப்பு லாமினது தன்னலமறுப்பு என்றால் போதாது; பெருந்தகைமை என்னல்வேண்டும். ஏனெனில், தன்னல மறுப்பில் பற்றுதலைக் கடமைக்காக மறுப்பது மட்டும் முடியுமன்றிப் பற்றுதலை மாற்றமுடியாது. லாமினிடம் இவ்வுணர்ச்சி தன்னலமறுப்பாக வந்ததன்று; இயற்கையமைப்பாக ஏற்பட்டதேயாகும்.
இவ்வுயர்ந்த பற்றுக்கு மேரி லாமும் தகுதியுடையவரே என்பதில் ஐயமில்லை. பித்தந் தெளிந்தபொழுதெல்லாம் அவர் தம்மைப் பித்து விடுதியினின்றும் மீட்டு வீட்டுக்குடித்தனம் தந்த உடன்பிறந்தார்மீதே தமது முழு அன்பையும் சொரிந்தார். அச்சமயங்களில் அவர் வீட்டுப் பணியை முற்றிலும் சரிவரப் பார்த்து லாமிற்கு உடன்பிறந்தார் மட்டுமல்லர்; அவர் தாய், அவர் நண்பர் ஆகிய எல்லா நிலைகளையும் தம்மகத்தே கொண்டு விளங்கினார். இவ்வளவோடு மட்டும் நின்றுவிட்டால் கூட அவர் பெண்களுள் ஒப்பற்ற மாணிக்கம் என்று கூறுவதில் ஐயமிராது. ஆனால் அவர் இந்நிலையினும் மிக்க உயர்வுடையவர். எழுதும் ஆற்றலில் சார்ல்ஸ் அரியரோ, மேரி அரியரோ என்று எவருங் கூறமுடியாதவண்ணம் அவர் சார்ல்ஸுடன் ஒத்த ஆற்றல் உடையவர். அவ்விருவரும் சேர்ந் தெழுதிய நூல்கள் பல. ‘ஷேக்ஸ்பியர் கதைகள்,’ ‘திருவாட்டி லீஸ்டரின் பள்ளிக்கூடம்,’ ‘முற்றிலும் புத்தம் புதியவையான சிறுவர்க்கான பாக்கள்’ ஆகியவற்றுட் பெரும் பகுதியும் அவர் எழுதியதேயாகும். உண்மையில், லாமின் கட்டுரைகளில் காணப்படும் நல்லுணர்ச்சிக்குக் கூட அவர் உறவும் தோழமையுமே காரணம்.
பித்தத் தெளிவுள்ள காலத்தும் சார்ல்ஸுக்கு மேரியைப்பற்றிய கவலை இடையறாது இருந்துகொண்டே யிருந்தது. இன்ன சமயமென் றின்றிப் பித்து மீண்டு வருவதுண்டு. பெண்பாலராகிய அவரை அந் நிலையில் வைத்துப் பாதுகாப்பதற்குத் தம் மணவாழ்வு இடந்தராதென்ற அவர் என்றும் அரைமனிதராயிருந்து வந்தார். திங்கட் கணக்கில், சில சமயம் ஒன்றிரண்டாண்டுக் கணக்கில் தெளிவுடன் இருந்த காலையில் மேரியே அவர் மணத்தைப்பற்றிய நினைவும் அதற்குத் தக்கபடி தாம் பிரியவேண்டுமென்னும் முயற்சியும் எடுக்கத் தொடங்குவர். ஆனால், சார்ல்ஸ் அப் பேச்சையே எடுக்க இணங்குவதில்லை. இணங்காததன் காரணம் மேலே கூறப்பட்ட படி அஃது அடிக்கடித் திரும்புவதுதான். முதுமை ஏற ஏறத் தெளிவு ஏற்படுதல் குறைவாகவும் பித்தம் ஏற்படுதல் கூடுதலாகவும் ஆயின.
இத்தகைய தங்கைக்காகவும் பிறருக்காகவுமே சார்ல்ஸ் லாம் பொறுமையே உருவாகக்கொண்டு தென்கடல் வாணிபக் கழகத்தில் சில காலம் பயின்று பின் 17ஆம் ஆண்டுமுதல் 35 ஆண்டுகளாகக் கிழக்கிந்திய வாணிபக் கழகத்தில் உழைத்தார். அவரே இவ்வாழ்க்கையைப் ‘பேரேட்டுக் கோட்டைக்குட்பட்ட சிறை’ என்று கூறுகிறார். ஆனால், தம் குடும்பத்திற்காக அவர் உழைத்ததால், அச்சிறை அவருக்குச் சர்க்கரைக் கோட்டை யுட்பட்ட சிறையாகவே இருந்ததென்று கூறவேண்டும்.
‘என் தங்கைக்காகத்தான் நான் உழைக்கிறேன்; தாய்க்காகத்தான் உழைக்கிறேன்; மனைவி மக்களுக்காகத்தான் உழைக்கிறேன்,’ என்று பகட்டாகப் பேசுவோர் எத்தனையோ பேரை நாம் காணலாகும். ஆனால், தங்கைக்காகக்கூட, தாய்க்காகக்கூட, மனைவி மக்களுக்காகக்கூட, இவ்வளவுக்குத் தன்னை மறுத்தவர், தன்னை மறந்தவர் வேறு இரார் என்பது உறுதி. தன் நலமற்ற, உண்மையான, பகட்டற்ற இயற்கையான அன்பிற்கு ஆசிரியரிடை மட்டுமன்று, பிற மக்களிடை கூட இதனினும் மிக்க, இதற்கிணையாக இல்லது; இதற்கு அண்மையான ஓர் இலக்கிய வாழ்க்கை அகப்படமாட்டாது. எங்கும் நிறைந்து நிற்கும் காற்று இயற்கை யாதலால் நாம் பெரும்பாலும் அதனை நினைப்பதில்லை. அம்மாதிரியே தமக்கு இயற்கை யான இக்குணத்தை லாம் வாயால் சொல்வது மில்லை; மனத்தால் நினைப்பதுமில்லை.
‘சொல்லாம லேபெரியர்; சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே-நல்ல
குலாமாலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்’
என்ற பாட்டிற் கூறப்பட்ட மூவகை மனிதருள் லாம் பலாவைப்போல் சொல்லாமலே செய்யும் பெரியவர் வகையைச் சேர்ந்தவர். இன்று உலகில் சொல்லியும் செய்யாதவர் பலர்; சொல்லிச் செய்பவர்கூட ஒரு சிலரே. இந்நிலையில் லாமின் இயற்கையுயர்வின் மாண்பு இத்தகையதென்பதைக் கூறாமலே குறிப்பாலுணரலாகும்.
கட்டுரைகளின் நயம்
லாமின் கட்டுரைகளில் காணும் நயமும் சுவையும் வாழ்க்கையின் சாறும் ஒருவகையில் அவரது வாணிபக் கழகப் பணிக்கு மாற்றாக ஏற்பட்டதேயாம். விடிந்து பொழுதடையும் வரை ஏடுகளுக்குள் ஓர் ஏடு ஆக, எழுதுகோல்களின் இரைச்சலுள் தானும் ஓர் எழுதுகோலாக, உணர்ச்சியற்ற பேர் இலக்கங்களுள் தானும் ஒரு சிற்றிலக்கமாக உழைத்த அவருக்கு அவ்வப்போது கிடைத்த சிறு ஓய்வு நேரமே வாழும் நேரமாய் அமைந்தது. பிறர் ஆண்டுக்கணக்கில் துய்க்கும் இன்பமனைத்தும் அவர் அந்த நொடிக்கணக்கான நேரத்தில் துய்க்கவேண்டி யிருந்தது. அங்ஙனம் துய்ப்பதற்கும் பிறரது வாழ்க்கையிலுள்ள புறநிலைப் பொருள்கள் எதுவும் அவருக்கில்லை. நண்பர் ஒன்றிரண்டு பேருக்கு மேலில்லை. மனை வாழ்க்கையென்பது உடன்பிறந்தாருக்குச் செய்யும் பணி அளவே. ஆகவே அவரது வேட்கை முற்றிலும் வெளியுலகில் இடமில்லாததால் அகநோக் கிற்று. அவ்வுலகில் அவர் கண்ட செல்வம் புற உலகினும் சிறந்ததாயிருந்தது. புற உலகைவிட அவரது அக உலகு நினைத்த நினைத்த வேளை நினைத்த நினைத்த வகையில் அவருக்குத்தோன்றி அவர் குறிப்பறிந்து அவருக்கு இன்பமூட்டுந் தகுதியுடையதாயிருந்தது. எனவே அவர் அதிலே முற்றும் ஈடுபட்டு அதில் பிறர் எவருங் காணாப் பரப்புகளைக் காணவும், பிறர் என்றுங் கருதாத ஆழத்தில் மூழ்கவும், பிறருக் கெட்டாத மூலைகளை எட்டி யணுகவும் முடிந்ததில் வியப்பொன்றுமில்லை.
லாமின் மிகச் சிறந்த நூல் ‘ஈலியாவின் கட்டுரைகளே’ யாகும். இக்கட்டுரைகளை வாசிப்போருக்கு லாம் எழுதிய ஒரு கட்டுரையை நாம் படிக்கிறோம் என்ற நினைப்பைவிட லாமினுடன்கூட வாழ்க்கையின் அரண் மனைக்குள் கூடங் கூடமாக, அறையறையாகக் கடந்து சென்று திரையிட்டு மூடி மங்கிய ஒளியுடைய ஓர் உள்ளறைக்கு அவருடன் நண்பர் என்னும் உரிமையுடன் சென்று, ஒளிவு மறைவின்றி அவருடன் உரை யாடுகிறோம் என்ற நினைவே ஏற்படும். இக்கட்டுரைகளில் நாம் அவரது உள்ளத்தின் உட்கிடக்கை முழுமையும் தெளிவாக அறிகிறோம். அவர் கண்ட காட்சி, கேட்ட கேள்வி, அறிந்த அறிவு, உணர்ந்த உணர்ச்சி ஆகியவற்றை அவருடைய உள்ளத்தின் ஒரு பகுதி எப்படி அறியுமோ அப்படியே நாமும் அறிகிறோம்.
ஈலியா என்ற பெயர் இக்கட்டுரைகளை முதன் முதலில் லண்டன் திங்கள் வெளியீட்டில் (London Magazine) வெளியிடத் தொடங்கியபோது அவர் புனைந்துகொண்ட புனை பெயர் ஆகும். அஃது இன்முறுவல் பூத்த இயல்பினையுடைய அவருடைய வெளிநாட்டு நண்பர் ஒருவர் பெயரினின்று எடுத்தாளப்பட்டதென்று கூறப்படுகிறது.
நாட்கடந்த மனிதர்
மேரியுடன் குடித்தனம் பண்ணுவதும் வாணிபக் கழகத்தின் பேரேடுகள் ஏறிடுவதும் அவர் வாழ்க்கையுட்படிந்து அவரது நாள்முறை வழக்கமாய்ப் போய் விட்டன. முதன்முதலில் அவர் கழக எழுத்து வேலையை வெறுத்தவர் என்பதில் ஐயமில்லை. அதைப் பற்றி அவர் கூறும் வெறுப்புரைகள் பல. குடும்ப நிலையையும் உடன்பிறந்தார் நிலையையும் எண்ணிப் பாராவிடில் அதனை அவர் பொறுத்துக்கொண்டிருக்கவே மாட்டார் என்பது தெளிவு. ஆயினும் நாளடைவில் அஃது அவர் இயற்கையோடொட்டி வளர்ந்து விட்டது. அதுவும் நன்மையாகவே அமைந்தது. அவரது ஓய்வுக்கு அஃது ஓர் உயிரையும் ஒரு பொருளையும் தந்தது. அவரது நாள்முறை நடையிலும் அஃது ஓர் ஒழுங்கை ஏற்படுத்திற்று. எனவே அவர் வெறுப்பதாகக் கூறிய அப்பணியிலிருந்து அவர் விலக நேர்ந்தபோது அஃது இன்பமாகப் படாமல் அவர் எதிர்பார்த்ததற்கு எதிராகத் துன்ப மாகவே பட்டது. அதுவரை மக்கள் வாழ்க்கையில் புகாது விலகியிருந்த அவருக்கு அவ்வளவு ஆண்டு சென்றதன் பின் வாழ்க்கையில் புதிதாய்ப் புக முடியவில்லை. எனவே பகலும் இரவும் விடாது வேலையின்றி வாளா இருப்பதால் அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பே ஏற்பட்டது. இதனை அவரே ‘நாட்கடந்த மனிதர்’ என்ற கட்டுரையில் விரித்துரைத்துள்ளார். அவர் இறக்கும்போது அவருக்கு ஆண்டு ஐம்பது. வாழ்க்கையின் வெறுப்பி னாலேயே அவர் இவ்வளவு விரைவில் இறக்க வேண்டி நேர்ந்தது.
லண்டன் வாழ்வு
தொழிலிலிருந்து விலகுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சார்ல்ஸும் மேரியும் இஸ்லிங்டனிலுள்ள ஒரு குடிலுக்கு மாறினர். இது லண்டனிலிருந்தாலும் ஓரளவு நாட்டுப்புறத்தை ஒத்திருந்தது. நகர் நடுவிலேயே கிட்டத்தட்ட வாழ்நாள் முழுமையும் செலவு செய்த இவர் இப்போதுதான் முதன் முதலில் ஒரு தோட்டத்தை வீட்டினருகே பெற்றார். இவ்விடத்துக்கு அடிக்கடி அவருடைய நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். ஒரு தடவை நூல்களிடையிலேயே நாட்போக்கி வந்த நண்பராகிய ஜார்ஜ் டயர். (George Dyer) என்பவர் அவர் வீட்டை வந்து பார்த்து விட்டு அதன் அழகையே நினைத்துக்கொண்டு சென்றவர் தம்மை மறந்து புத்தாற்றில் இறங்கிவிட்டாராம். (ஆங்கில நாட்டு மக்கள் நம் நாட்டினரைப்போல் ஆற்று நீருள் முழுக முடியாது. நீரின் குளிர்ச்சி அங்கு அவ்வளவு மிகுதி. அதோடு அவர்கள் அங்ஙனம் மூழ்கியபின் உடையை உடன் மாற்றவேண்டும். நம் உடையைப்போல் அது தொங்கலானதும் ஒற்றையானதும் அன்று; ஆதலின் எளிதில் உடலில் பனிப்பு ஏற்படுத்தும் என்பதை ஓர்க.) இதனை அறிந்த மேரி உடன் அவரை இழுத்து வந்து உடை மாற்றிப் போர்வை கொண்டு போர்த்தினார். அப்படி இருந்தும் பனிக்காய்ச்சல் முற்றிவிட அவர் அவருக்குச் சாராயமும் நீருங் கலந்து புகட்டினார். அச்சமயம் சார்ல்ஸ் வீடு வந்து உடனிருந்து உதவி செய்தாராம்.
தொழில் விட்டபின் அவரது வாழ்க்கை முறை அவருக்குப் பிடிக்காததற்கு இன்னோர் அறிகுறி அவர் அடிக்கடி வீடு மாறியதாகும். இஸ்லிங்டனுக்கு வந்த சில நாட்களுக்குள் அவ்விடம் விட்டு அவர் என்ஃபீல்டில் சென்று குடிபுகுந்தார். இப்புது வீட்டுக்கு அவர் வருவதைப் பார்த்திருந்த நகைத்திறன் மிக்க ஒருவர் அதனை விரித்துரைத்துள்ளார். அதில் அவ் வீட்டைத் தாம் குடிக்கூலிக்கு எடுக்கப்போவதால் அவ்வீட்டில் ‘இவ்வீடு குடிக்கூலிக்கு விடப்படும்’ என்றெழுதித் தொங்கவிட்ட பலகையை அகற்றி, அவரது நாயின் வாயில் அதைக் கொடுத்துக்கொண்டு வந்தார் என்று கூறுகிறார். இவ்விடத்தில் இவர் மூன்றாண்டுகள் வாழ்ந்தார். ‘ஈலியாவின் இறுதிக் கட்டுரைகள்’ இங்கே வைத்துத்தான் எழுதப்பட்டன. இக்கட்டுரைகள் 1833இல் வெளியிடப்பட்டன.
சிலநாட் கழித்து அவர் மறுபடியும் லண்டனுக்கு வந்தார். அப்போது அவர் ‘தெருக்கள் கடைகளெல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால், என்னுடைய நண்பர்களைத்தான் காணவில்லை’ என்று கூறினார். அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய ஹாஸ்லிட்டும் கால்ரிட்ஜும் இதற்கிடையில் இறந்துவிட்டனர்.
இறுதி நாட்கள்
இறுதி நாட்களில் மேரியின் சீர்கேடு மிகுதியாய் விட்டது. அப்போது அவர்கள் வால்டன்ஸ் என்பார் வைத்திருந்த மருந்து விடுதிக்குச் சென்று தங்கினர். தாம் எங்கே இறந்து தங்கையைத் தவிக்கவிடுவோமோ என்ற அச்சம் அவருக்கிருந்தது. இருவரும் இதே நினைவை வெளியிட்டும் ஒருவருக்கொருவர் கூறுவதுண்டு. ஆனால், யார் முதலில் இறந்தாலும் அடுத்தவர் துயரப்படுவரே என்று இருவரும் கவலைப்படுவதும் உண்டு. இறுதியில் 1834இல் அவர் ஒரு நாள் சறுக்கி விழுந்து அதே காரணமாய் நலிவுற்று இறந்தார். அப்போது தங்கைகூட ஆறுதல் தரக் கொடுத்துவைக்க இல்லை. ஏனெனில், அவர் மனம் அப்போது சிதறிய நிலையில் இருந்தது. ஆனால், இந் நிலையிலும் அவர் சார்ல்ஸ் இன்ன இடத்தில் அடக்கஞ் செய்யப்பட விரும்பினார் என்பதை நினைவு மாறாமல் காட்டினராம்.
ஆங்கில மொழியின் தனிப்பெருஞ் சிறப்புக்களிடையே, யாராலும் புனைந்து பின்பற்ற முடியாதவற்றுள்ளும், பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாதவற்றுள்ளும் சார்ல்ஸ் லாமின் இனிய கட்டுரைத் தொகுதியும் ஒன்று என்பதில் ஐயமில்லை. அவற்றைப் படிப்போர் அதன் சொல்லழகில் மட்டுமன்றி நேரிய நுண்ணாடையின் படியிற் காணும் உடலழகேபோல் அவற்றில் கரந்துகிடக்கும் அவரது குண அழகின் திறங்கண்டு உவப் படைந்து அவரிடம் மாறாப் பற்றுக்கொள்வர் என்பது உறுதி.
பைரன்
** கிரேக்க நாட்டுக்காக உயிர்துறந்த ஆங்கிலக் கவிஞர் பெருமான்**
1. உள்ளக் குறை
ஜார்ஜ் கார்டன் பைரன் பெரிய ஆங்கில நாட்டுப் பண்ணைக் குடும்ப மொன்றில் கிளைக்குடியிற் பிறந்தவர். பிறக்கும்போது அவர் குடி எளிய நிலையிலேயே இருந்தது. ஆனால், பண்ணையின் நேர் உரிமையாளர் அனைவரும் இறந்தமையால் அவர் திடீரென்று பண்ணை உரிமையாள ரானார்.
பைரன் பிறந்தது 1788ஆம் ஆண்டு சனவரி 22ஆம் நாளில் ஆகும். அவருடைய தாய் கார்டன் குடும்பத்தில் பிறந்தவள். அவருடைய தந்தை ஜான் பைரன் ஆவர். ஜார்ஜ் கார்டன் பைரன் பிறந்த சில நாட்களுக்குள் அவர் தாய் தம் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார். பிரிந்தும் சில நாட்கள் அவர்களிருவரும் அபர்டீனின் தெரு ஒன்றின் இரண்டு கோடிகளிலும் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். அவ்விரு வீடுகளுக்கும் இடையே கொஞ்ச நாள் உருளை நாற்காலியில் வைத்துப் பைரன் அங்குமிங்கும் தள்ளிக்கொண்டு போகப்பட்டு வந்தார்.
அதன்பின் தந்தையார் தமது பங்காகக் கிடைத்த குடும்பச் செல்வமனைத்தையும் வீண் செலவு செய்து விட்டு 1791இல் இறந்து போனார். பின் 1793இல் பைரனுடைய ஒன்றுவிட்ட உடன்பிறந்தாரான ஜார்ஜ் ஆன்ஸன் பைரன் இறந்தார். இவர் இறந்ததனால் பைரனே பண்ணைக் குடும்பத்தின் உரிமையாளர் ஆயினர். 1798இல் ஐந்தாம் பைரன் பெரு மகனாரான வில்லியம் இறந்ததும் அவர் பண்ணைத் தலைமையேற்று ஆறாம் பைரன் பெருமகனார் ஆனார்.
இங்ஙனம் உயர் குடியும் செல்வமும் வாய்த்தும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியோ அமைதியோ சற்றுமில்லாமற் போய்விட்டது. அதற்குக் காரணங்கள் பல.
அவற்றுள் தலைமையானது அவருடைய தாய் அவரை வளர்த்த முறையேயாகும். அவர் கணவரிடத்தில் நடந்து கொண்டதுபோலவே பிள்ளையினிடத்தும் ஒரு நேரம் மிகுதியான பற்றுதலும், ஒரு நேரம் மிகுதியான கடுமையுங் காட்டிவந்தார். இதனால் அவர் ஒருபுறம் இளக்கமான நெஞ்சுடையவராகவும், இன்னொருபுறம் ஒழுங்கு முறையும் கட்டுப்பாடும் அற்றவராகவும் வளர்ந்தார்.
அவரது உள்ளத்தில் என்றுங் கசப்பையும் வெறுப்பையும் அளித்த இன்னொரு செய்தி அவரது காலில் ஒன்று சற்றே நொண்டியாயிருந்தது தான். இவ்வொரு குறையை அகற்றிப் பார்த்தால் அவர் உடலமைப்பு வனப்புங் கவர்ச்சியுமுடையதே யாகும். ஆனால் அக்கவர்ச்சியால் அவர் மனம் நிறைவடையா வண்ணம் இந்த ஒரு குறைவு அவர் மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. உண்மையில் இக்குறைகூட வெளித் தோற்றத்தில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஏனெனில், அவர் அதனைக் காட்டாமல் மிகவுந் திறமையுடன் காலைச் சீராக வைத்து நடப்பார். இங்ஙனம் நடப்பதால் அவருக்கு மிகுந்த உடல் நோவு இருந்தபோதிலும் அவர் அதனைச் சட்டை பண்ணுவதில்லை. வெளிமதிப்பைக் காப்பாற்றும் வகையில் அத் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு போவதில் அவர் எவ்வளவோ ஆண்மையுடையவரா யிருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், வெளியில் தோற்றா விடினும் இக்குறை அவர் உள்ளத்தில் மட்டும் நீங்காதிருந்து அவரது வாழ்க்கை இன்பத்தைக் கெடுத்து வந்தது.
இச் சிறுசிறு செய்திகள் அவருக்கு எவ்வளவு தீங்கை விளைவித்தாலும், இவற்றால்கூட அவரது இன்பம் பாழ்பட்டிருக்காது. ஆனால், அவர் செய்துகொண்ட மண உறவுகள் அனைத்திலும் அவரது ஊழ் அவருக்கு மிகவுந் தீங்காகவே இருந்தது.
2. முதற்கோணல்
பைரன் பள்ளியில் படிக்கும் நாட்களில் மேரி ஆன்சாபொர்த் என்ற அழகியை அவர் விரும்பிக் காதலித்தார். இவர் பெரும்பண்ணை ஒன்றின் உரிமை கொண்டவர். அவரது பண்ணையும் பைரனது பண்ணையும் ஒன்றையொன்று அடுத்துக்கிடந்தன. அவற்றின் எல்லைகளை ஒட்டி நெடுநாள் பைரன் குடும்பத்தாரும் அவர் குடும்பத்தாருடன் சண்டை யிட்டுப் பகைமைபூண்டிருந்தனர். ஆண்டினை நோக்கப் பேரறிவு வாய்ந்த பைரன் அவரை மணந்துகொள்வதால் இரு குடும்பங்களும் பண்ணைகளும் ஒன்றாய் விடும் என்று நினைத்தார். ஆனால், மேரி ஆன் அவர் காதலைப் பொருட்படுத்தவில்லை. அதோடு மட்டுமன்றி, அவரை அடிக்கடித் தம் தோழியரிடம் அவமதிப்பாகப் பேசி அவரைப் புண் படுத்தினார். இறுதியில் அவர் மனது புண்படும்படி மிகவுங் கீழ்த்தரமான ஒருவனை அவர் மணந்துகொண்டார். பிற்காலத்தில் அவரது மணவாழ்வு கேடடைந்து பைரனைத் தாம் அவமதித்த குற்றத்திற்கு மிகவுந் தம்மை நொந்து கொண்டார். முதன்முதல் ஏற்பட்ட இக்காதல் முறிவு அவருக்கு என்றும் வருத்தத்தைத் தந்தது. நெடுநாட் பின்னர்க்கூடத் தாம் அவரையே பெண்மையின் சிறப்புக்கோர் இலக்காகக் கொண்டதாக அவர் கூறியதுண்டு.
3. பெருமையும் சிறுமையும்
இதன்பின் பைரன் கிரேக்க நாட்டிலும் துருக்கியிலும் அலைந்து திரிந்து பலவகைத் துணிகரச் செயல்களிலும் பண்புடைமக்கள் இயற்கைக்கு மாறான கூட்டுறவுகளிலும் ஈடுபட்டுப் பலவகை அலர் தூற்றல்களுக்கும் ஆளாயினர். பிறருடைய ஏளனமும் இகழுரையும் இவருக்கு மீண்டும் அதே நெறியில் செல்லும் வீறு கொடுத்ததே யன்றி அமைதி தரவில்லை.
இந்நிலையில் இரண்டாம் முறை மணஞ் செய்துகொள்வதே நல்ல தென நண்பர் சிலர் கூறினர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு செல்வி மில்பாங்கு என்ற நடிகை மாதினிடம் பற்றுடையரானார். நண்பர் சிலர் இவ்வுறவு நல்லதன்றென்று வேறு வகையில் அவரைத் திருப்ப முயன்றும், அது நடைபெறாது ஊழ்வினைப் பயனால் செல்வி மில்பாங்கையே அவர் விரும்பி அடையும்படி நேர்ந்தது.
1816இல் அவர்களுக்கு ஒரு பெண்மகவு பிறந்தது. அதற்குள்ளாக அவர்கள் உறவு முற்றிலும் முடிவடைந்தது. பைரன் பெருமாட்டி மண மறுப்புக்காக வழக்குத் தொடுத்தார். இதற்கு அவர் காட்டிய காரணமும் அதன் தெளிவுக்காகக் கொணர்ந்த சான்றும் புதுமை வாய்ந்தவை. அஃதாவது பைரன் மூளைக் கோளாறுடையவர் என்று அவர் குற்றஞ் சாட்டி அதற்குச் சான்றாக அவர் ஒருகால் தமது கைக்கடிகாரத்தை அடுப்பில் எறிந்து பின் தூளாக்கினர் என்று குறைகூறினார். எப்படியோ வழக்கு மன்றத்திலும் முழு ஆராய்ச்சியால் பைரன் குற்றமுடையவரே என்று தெளிவாக்கப்பட்டு அவருக்கெதிரான தீர்ப்பு தரப்பட்டது.
இப் பேரவமதிப்பால் பைரன் மனம் முற்றிலும் முறிந்தது. ஆங்கில நாட்டு மக்கள் தமது துன்பத்தையே பெருங்குற்றமாகக் கொண்டு, தம்மை அவமதித்ததாக அவர் உணர்ந்தார். தாய்நாட்டிடம் இயற்கையாக இவருக்குப் பற்று இருந்த தெனினும் நாட்டு மக்களையும் அரசியலையும் இவர் தம் நூல்களுள் குறைகூறும்படி நேர்ந்தது பெரிதும் இதனாலேயே யாகும்.
இத்தகைய சிறுமைப்பட்ட வாழ்க்கையிலும் கூடப் பைரன் அறிவும், கவிப் புலமையும், விடுதலை உணர்ச்சியும், கலைத் திறனும் நன்கு விளங்குகின்றன. ஆங்கில மக்கள் அவரது பெருமையை உணர்வதற்கு அவருடைய வாழ்க்கைச் செய்திகளும் அவற்றை ஒட்டிய கோளுரைகளும் தடையா யிருந்தன. ஆனால், ஐரோப்பாவின் தலைநிலப்பகுதிகளில் எங்கும் பைரனது புகழும் அவரது கவிதையின் புகழும் மற்றெல்லா ஆங்கிலக் கவிஞரின் புகழினும் பன்மடங்காகப் பேரொளி வீசின.
4. கவிதையும் சுற்றுப்பயணமும்
கவிதையில் அவருக்கிருந்த ஆர்வம் பள்ளியிற் பயிலும் நாட்களிலேயே மிகுந்திருந்தது. கேம்பிரிட்ஜில் வைத்துக் கவிதைகளடங்கிய பல ஏடுகளை அவர் இயற்றினார். இவற்றுள் ஒன்றைத் தம் செலவிலேயே அவர் வெளியிடவுஞ் செய்தார். மீதி அழிக்கப்பெற்றன. 1807இல் ‘’சோம்பல் நேர எண்ணங்கள்’’ என்ற தொகை நூலை வெளியிட்டார். ஆராய்ச்சியாளர் இதனை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதினர். அதனால் வெகுண்டு அவர், ‘’ஆங்கிலக் கவிஞரும் ஸ்காட்டிய மதிப்புரையாளரும்’’ என்ற நூலை எழுதினார். ஆயினும் தம் குறுகிய நண்பர் குழாத்தினுள்ளன்றி அவருக்குக் கவிஞர் என்ற பெயர் நிலவரமாகவில்லை.
இதன்பின் பைரன் கிரீசு, துருக்கி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணஞ் செய்தார். அதுபோது தாம் கண்டது, கேட்டது, நினைந்தது, அறிந்தது ஆகிய அனைத்தையும் அழகுபடக் கோத்து, ‘’ஹெரால்டு வீரரின் பயணம்’’ (Child Harold’s Pilgrimage) என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். இங்கிலாந்திற்கு வந்தபின் இதன் முதலிரு பிரிவுகள் ஜாண் மரே என்பவரது முயற்சியால் வெளியிடப்பட்டன. இவ்வொரு வெளியீட்டால் அவர் பெரிய கவிஞர் உலகில் என்றும் மாறாப் புகழ்பெற்றது. இவ்வாறு திடீரென ஒரு நூலால் புகழ் ஏற்படுதல் அரிது. இதுபற்றி அவரே ’’நான் ஒரு நாள் உறங்கி எழுந்ததுதான் குறை; இருந்தாற்போலிருந்து உலகம் என் பெயரை உரக்கப் புகழ்வதைக் கேட்டு வியப்படைந்தேன்? என்று கூறியுள்ளார்.
அவரது இரண்டாவது மணவாழ்வின்பின் ஏற்பட்ட மணமுறிவால் அவர் இங்கிலாந்தை விட்டுப் போய் இத்தாலி நாட்டில் ஷெல்லி என்ற கவிஞர் பிரானுடனும், திரெலானி என்ற நண்பருடனும் சிலநாட் கழித்தார். இங்கிருக்கையில் படகில் தனியே உலாவச் சென்றபோது ஒருநாள் ஷெல்லி கடலுள் மூழ்கி இறந்துபோனார். தென் (ஐரோப்பிய) நாட்டவர் பழைய வழக்கப்படி அவர் உடல் எரிக்கப்பட்டபோது பைரன் அவருடன் இருந்தார். இதன்பின் அவர் ஊக்கம் மிகக் குன்றியதென்னல் வேண்டும்.
இத்தாலியில் இருக்கும்போதுதான் ஜுவான் வீரன் (டான் ஜுவான்) என்ற நெடுந் தொடர் கதையை எழுதினார். இதில் இளமை முறுக்கின் வயப் பட்டுப் பலவிடங்களில் ஜுவான் வீரன் சென்று நிகழ்த்திய காதற் கதைகள், துணிகரச் செயல்கள் ஆகியவை விரித்துரைக்கப்படுகின்றன. கதைப் போக்கில் தமிழ்நாட்டுச் சீவக சிந்தாமணிக் கதையையும் நூலமைப்பில் விக்கிரமாதித்தன் கதையையும் இது நினைப்பூட்டவல்லது.
‘’ஹெரால்டு வீரன்’’ என்ற நூலின் பிற்பகுதி அஃதாவது பின் இரு பிரிவுகள், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் இயற்கைக்காட்சிகள், பிரான்சு நாட்டின் பெருவீரரான நெப்போலியன் போர்ப்பெருமைகள் முதலியவற்றின் விரிவுரைகள் செறிந்தவை. இதனை இன்றும் புலவரும் மாணவரும் உச்சிமேற் கொள்கின்றனர். கடல், மலை முதலிய இயற்கையின் அருந்திறக்காட்சிகளும் விடுதலை உணர்ச்சி ததும்பும் பாடல்களும் இதில் மிகுதி.
5. விடுதலை யார்வமும், கிரேக்க நாட்டுப் போர்களும்
விடுதலை உணர்ச்சியும் வீரமும் உயர் நாகரிகமும் மிக்க பழைய நாடுகளிடம், சிறப்பாகப் பழம்பெருஞ் சிறப்புவாய்ந்த கிரேக்க நாட்டிடம் அவருக்கிருந்த பற்றும் ஆர்வமும் சொல்லுந்தரமன்று. அந்நாள் அந்நாடு துருக்கிநாட்டவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. அதன் விடுதலைக்காக அவர் அடிக்கடி பாடுபட்டு இயக்கங்களும் சிறு போர்களும் நிகழ்த்தினர். அந் நாட்டு மக்களிடை, சிறப்பாக இளைஞரிடை அவர் மிகுந்த செல்வாக்குடைய தலைவராக விளங்கினர். ஆயினும் இத்துறையில் அவர் வெற்றி காணவில்லை. இத்துறையில் இவருடைய ஆர்வமும் பெருமையும் நன்கு நினைத்தின்புறத் தக்கவை.
நாட்செல்லச்செல்ல, பைரனது உடல் குடியாலும் மிகுதி உழைப் பாலும் கெட்டுப் பருமனடையத் தொடங்கிற்று. இறுதியில் 1824இல் முஸலாங்கியில் வைத்துக் காய்ச்சலால் அவர் இறந்தார். காய்ச்சல் கண்டவுடன் அந்நாட்டைவிட்டு அகலும்படி மருத்துவர்கள் கூறியும், ‘’எனது கிரேக்க நாட்டிற்கு உழைக்கும் வாய்ப்பு உள்ளளவும் நான் என் உயிரை ஒரு பொருட்டா யெண்ணி அப்புறம் செல்லேன்,’’ என்று அவர் பிடிவாதமா யிருந்துவிட்டார். மனைவி, மக்கள் ஆகியவர்கள் பெயர் சொல்லிக் கொண்டே அவர் உயிர் நீத்தாராம்.
பைரன் பெருமகனாரது தனி வாழ்வில் தோல்வியும் சிறுமையும் காண்கிறோம். அவர் பொது வாழ்விலோ, தோல்விகளிலும் பெருமை துலங்குகிறது. அவரது கவிதையில் என்றும் மாறா இளமை யுணர்ச்சியும் ஆர்வமும், விடுதலை விடாயும் வீரமும் திகழ்கின்றன. அமைந்த உணர்ச்சிகளே உடைய ஆங்கில மக்களிடை இதன் முழுஆற்றல் அறியப் படுவதில்லையாயினும் ஐரோப்பா எங்கணும் அமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறெந்த ஆங்கிலக் கவிஞரையும்விட அவரது கவிக்கே முதலிடந் தரப்பட்டது.
டெனிஸன்
** கவிதையுலகின் முடிசூடா மன்னன்**
1. பிறப்பும் இளமையும்
மூன்று தலைமுறைகளாக இங்கிலாந்து நாட்டை ஆண்ட விக்டோரியாப் பேரரசியின் ஆட்சியின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் வாழ்ந்த பெருங்கவிஞர்கள் டெனிஸனும் பிரௌனிங்கும் ஆவர். அவர்களுள் பிரௌனிங் கவிதை, கடுநடையும் ஆழ்ந்த கருத்தும் உடையது. எனவே, அவர் கவிதையின் முழுப்பயன் புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் மட்டுமே எட்டுவதாயிருந்தது. ஆனால் டெனிஸனோ அரசவை முதல் அங்காடிவரை அனைவரும் புகழ்ந்து பாராட்டும் முறையில் அந்நாளைய கவிதை உலகில் முடிசூடா மன்னராய் விளங்கியவர்.
பொதுவில் அரசவைக் கவிஞராகும் பேறு பெற்றவர் சமயத்துக் கேற்ப எதுகை மோனையுடன் பசப்பும் எழுத்தாளர்களாகவே யிருப்பது வழக்கம். உள்ளார்வ மிக்க நற்கவிஞர்கள் பெரும்பாலும் அரசவைக் கவிஞர்களாவ தில்லை. எனினும், டெனிஸன் ஒருவர் வகையில் பொதுப்பட ஒத்துவராத இவ்விரு பண்புகளும் ஒத்து வந்தன. அவர் அரசவை நட்புக்களைப்பற்றிப் பாடிய பாடல்கள்கூட அரசவையினர் மட்டுமே யல்லாமல் மற்றவர்களும், பிற்காலத்தவரும் போற்றும் தகுதியுடையவை யாகவே இருக்கின்றன. இம்மாதிரி காலச்சிறப்போடு கவிதைச் சிறப்பும் மிக்க அவர் பாடல்களுள், விக்டோரியா அரசியின் மூத்த புதல்வர் எட்வர்டுக்கு மணப்பெண்ணாக இங்கிலாந்துக்கு வந்த டென்மார்க் இளவரசி அலெக்ஸாண்ட்ராவுக்கு அவர் அளித்த மணவாழ்த்தும், நெப்போலியனை நிலப்போர்களில் வென்ற வெல்லிங்டன் கோமகன் இறந்தபோது இயற்றிப் பாடிய இரங்கற்பாவும் சிறந்தவை ஆகும்.
ஆங்கில மக்களிற் பெரும்பாலானவர்கள் 1500 ஆண்டுகளுக்குமுன் ஜெர்மனி நாட்டிலிருந்து குடியேறிய சாக்ஸனிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். பின்னாட்களில் கடல் கொள்ளைக்காரர்களான டேனியரும், நார்மனியரும் இங்கிலாந்துக்கு வந்து ஸாக்ஸனியர் அல்லது பழைய ஆங்கிலேயருடன் கலந்தனர். டெனிஸன் குடியினர் இங்கிலாந்தில் 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் வந்து குடியேறிய டேனியர் கால்வழியினர் என்று கூறப்படுகிறது. டெனிஸனின் முன்னோர்களில் ஒருவரான லான்ஸிலட் டெனிஸன் இங்கிலாந்து மக்களின் அழைப்பின் பேரில் அந்நாட்டு அரசுரிமை கோரி வந்த மூன்றாம் வில்லியமை வரவேற்றவருள் ஒருவராகக் காணப்படுகிறார்.
டெனிஸன் தந்தையாகிய டாக்டர் ஜார்ஜ் டெனிஸன் தன்னாண்மை மிக்கவராதலால் தம் சமயத்தலைவர்களுடன் முரண்டிச் சமயப்பணியை இழந்தார். இச்செய்தி அவர் வாழ்நாள் முழுவதும் அவர் உள்ளத்தில் தங்கி அவர் முகத்துக்குச் சற்றுக் கடுமையான தோற்றந் தந்தது. டெனிஸன் தாய் கடவுட்பற்று மிக்கவர். கண்கவர் வனப்புடன் பிறர் சீற்றத்தை நொடியில் மாற்றும் இன்முறுவலும் நகைத்திறமும் உடையவர். விலங்குகளிடமும் கீழின உயிர்களிடமும் ’அஞ்சிறை’ப் பறவைகளிடமும் அவர் பரிவும் இரக்கமும் உடையவர். இப்பண்பு டெனிஸனிடம் படிந்து அவர் கவிதை களிலும் காணப்படுகிறது.
ஆல்ஃபிரெட் டெனிஸன் 1809ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ல் பிறந்தவர். அவர் தந்தைக்குப் பிள்ளைகள் பன்னிருவர் இருந்தனர். அவர்களுள் இவர் நான்காவது புதல்வர். இவர் உடன்பிறந்தார்களுள் சார்ல்ஸ் இவருடன் பள்ளிக்குச் சென்றவர். ஃபிரெடெரிக் இவர் சேர்வதற்கு முன்னாலேயே பள்ளியில் மேம்பட்டுத் திறமையுடையவரா யிருந்தவர். ‘உடன்பிறந்தார் இருவரின் பாடல்கள்’ என்ற கல்லூரிக் கால வெளியீட்டில் இம்மூவர் கைத்திறமும் உண்டு என்று கூறப்படுகிறது.
சிறுவராயிருக்கும்போதே டெனிஸன் இயற்கையழகின் கவர்ச்சியில் மிகவும் ஈடுபட்டவராயிருந்தார். அவர் லிங்கன்ஷயரின் சதுப்பு நிலங்கள், அகன்ற கரிசல் வெளிகள், ஓடைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றினி டையே சுற்றித் திரிவார். அவ்விடங்களிலுள்ள பூ வகைகள், புல் வகைகள், புள்ளினங்கள் ஆகிய எல்லாவற்றிலும் அவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியவர். ஷேக்ஸ்பியரின் நடுவேனிற் கனவில் குறிப்பிடப்பெறும் மாய மலரைப் பற்றிய ‘பூ’ என்ற தனிப்பாடலிலும் ‘ஈனக் ஆர்டன்’ போன்ற பெரும் பாடல் களில் ஆங்காங்குச் சிதறுண்டு கிடக்கும் இயற்கை ஒவியங்களிலும் இதனைக் காணலாகும்.
சிறு பருவத்திலேயே டெனிஸனிடம் காணப்பட்ட இன்னொரு பண்பு கதை கூறுவதிலுள்ள ஆர்வமாகும். டெனிஸன் கவிதைகளின் சிறந்த கூறு அவற்றில் காணும் இயற்கை வனப்புக்களும் ஓசையினிமையும், மனித உணர்ச்சிகளின் பண்பாடுமே யாகும். ஆனால், அவர் பாடல்களில் பெரும் பாலானவை சிறுகதை யுருவிலும் கதைத்தொகுதி யுருவிலுமே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆங்கில மொழியின் தொடக்கக் காலக் கவிஞராகிய சாஸரைப் போலவோ, இத்தாலிய எழுத்தாளராகிய பொக்காச்சியோவைப் போலவோ அவர் கதைப்பாடல்கள் கதைச் சிறப்பு உடையவையல்ல; கவிதைச் சிறப்பே உடையவை. எனவே அவற்றைப்பாடற் கதைகள் என்பதினும் கதைப்பாடல்கள் என்பதே பொருத்த முடையது.
இளமையிலேயே டெனிஸனுக்குச் செய்யுள் யாக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவர் குடும்பத்தார் ஒரு நேரப்போக்குத் தொழில் என்று மட்டுமே கருதியிருந்தனர் என்று தெரிகிறது. அவர் பாட்டியார் உலகு நீத்தபோது பாட்டனார் அதுபற்றி ஒரு பாட்டு எழுதினால் அரைப் பொன் தருவதாகக் கூறினாராம். அத்துடன் அவர் விளையாட்டாக, ‘நீ பாட் டெழுதிப் பொன் பெறுவது இதுதான் முதல் தடவையாக இருக்கும்; இதுவே உறுதியாகக் கடைசித் தடவையாகவும் இருக்கும்’ என்றாராம். இக்கூற்றின் பிற்பகுதி எவ்வளவு பொய்யானது என்பதை அவர் அறிந்திருக்கமாட்டார். ஆல்ஃபிரட் டெனிஸனுக்குப் பிற்பட்டு அவர் புதல்வர் அவர் வாழ்க்கையை எழுதும்போது அவர் இளமையில் யாத்த சில செய்யுட் களையும் வெளியிட்டனர். அவை உயர்தரக் கவிதைகளல்லவாயினும் பருவத்தை நோக்கப் போற்றத்தக்கவை என்றே கொள்ளப் படலாகும்.
2. கல்லூரி வாழ்வு
டெனிஸன் கல்லூரிப் புலமைசான்ற கவிஞர் அல்லர். ஆயினும், அவரது கவிதை வாழ்க்கையை உருவாக்க அவருடைய கல்லூரி வாழ்க்கை பயன்பட்ட தென்பதில் ஐயமில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த அந்நாளைய பெரியாராகிய வேட்ஸ்வொர்த், கால்ரிட்ஜ் போன்ற கவிஞர்க ளுடனும், கார்லைல் போன்ற எழுத்தாளர்களுடனும், உரையாளர்க ளுடனும் அவர் ஊடாடினார். அவருடைய முற்காலக் கவிதைகளும் பெரும்பாலும் அந்நாளைய இளைஞரிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த கவிஞர் ஆகிய கீட்ஸையும் ஓரளவு ஷெல்லியையுமே பின்பற்றுபவையாயிருந்தன.
ஆல்ஃபிரெடும் சார்ல்ஸும் ஒருங்கே 1828ஆம் ஆண்டு பிப்ரவரி 20இல் கேம்ப்ரிட்ஜிலுள்ள மூவிறைக் கல்லூரியிற் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தமையனாரான பிரெடெரிக் அதே கல்லூரியில் சிறப்புவாய்ந்த மாணவராயிருந்துவந்தார். அந்நாளில் அக்கல்லூரியில் இலக்கிய ஆராய்ச்சி யாளர் பலரும் அரசியலறிஞர் பலரும் பயின்று வந்தனர். அவர்களிடையே டெனிஸன் எளிதில் தலைவராக விளங்கினார். இதற்கு எல்லா வகையிலும் அவர் தகுதியானவராகவே இருந்தார். அவர் வீறும் பெருமிதமு மிக்க தோற்றமுடையவர். ஆறு அடி உயரமும், அகன்ற மார்பும், உரமிக்க நீண்ட கால் கைகளும், ஷேக்ஸ்பியர் முகமொத்த பரந்துயர்ந்த முகமும், ஆழ்ந்த கண்களும், கறுத்துச் சுருண்ட தலை மயிரும் கொண்ட அவர் தோற்றம் அவருக்கு இளைஞரிடையே முதன்மை தந்தது. அத்துடன் அவர் ஆடல் பாடல் விளையாட்டுக்களிலும் ஈடற்றவராய் விளங்கினார்.
மூவிறைக் கல்லூரியில் பிற்காலத்தில் ஆசிரியராய் விளங்கிய தாம்ப்ஸன் என்பவர் டெனிஸனை முதன் முதலில் பார்த்தபோதே ‘அவர் பெருங் கவிஞராவார்’ என்று கண்டு கொண்டதாகக் கூறினராம். ‘’தோட்டக் காரன் மகள்’’ என்ற பாடலில் இராப்பாடிப் பறவை(Nightingale)யின் கண்களில் நிலவொளியின் சாயலைக் கண்டதாக ஒரு குறிப்புக் காணப் படுகிறது. இது பள்ளி நாட்களில் அவர் உண்மையிலேயே பள்ளியை அடுத்த சோலைகளில் கண்ட காட்சி என்று தெரிகிறது. இக்கருத்து தவறன்று என்பதை அவர் எழுதிய தொடர்ப்பா (Sonnet) ஒன்றிலும் இதே குறிப்பு காணப்படுவதால் அறியலாம். அவர் பள்ளித் தோழரும் பின் நாட்களில் அவரது பெருநூலாகிய ‘’முன்னைய நினைவு’’ (In Memoriam) என்பதன் பாட்டுடைத் தலைவருமான ஹாலம் என்பவர் இத் தொடர் பாவைக் குறித்துப் பேசுகையில் அதற்குக் கோல்கொண்டாவின் வைர வயல்களில் ஒன்றைப் பரிசாக அளிக்கலாம் என்று கூறினாராம். எப்படியும் வெளி உலகில் புகழ் பெறுவதற்கு நெடுநாள் முன்னரே கல்லூரி உலகிற்குள் அவர் கவிதை மாணவரால் மிக உயர்வாகப் பாராட்டப் பட்டிருந்தது என்று தெரிகிறது. எப்படியெனில், கல்லூரியின் மாணவர் கழகத்தில் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள்களுள் 1832 ஆம் ஆண்டிலேயே ‘’டெனிஸன் பெரிய கவிஞரா? மில்ட்டன் பெரிய கவிஞரா?’’ என்று தொலை நோக்குக் கொண்ட தலைப்புக் காணப்படுகிறது.
கவிதை உலகில் டெனிஸன் பேரால் முதன்முதல் வெளிவந்தது. 1827இல் இயற்றப்பட்ட ‘இரு உடன்பிறந்தாரின் பாட்டுக்கள்’ என்பதே. மேற்குறிப்பிட்டபடி இஃது ஆல்ஃபிரெட் டெனிஸனுடன் அவர் உடன் பிறந்தார் சார்ல்ஸும் ஃபிரெடெரிக்கும் கூடி எழுதியது. இதில் பெரும்பகுதி வெறும் சொல்லடுக்கானது. சில தெளிவாகவே முன்னைய பேர்போன புலவர்களைப் பார்த்து அச்சடித்தவை போன்றிருந்தன. ஆனால், இந்நூலுக்கும் இதற்கடுத்த நூலாகிய 1830ஆம் ஆண்டைய கவிதைகளுக்கும் இடையிலுள்ள மிகச் சுருக்கமான காலத்திற்குள் அவர் கவிதையாற்றல் யாவரும் வியக்கும்படி விரைவில் வளர்ச்சியடைந்தது. இப்போது அவர் யாரையும் பின்பற்றாது தனிச் சிறப்புடனும் புதுமை யுடனும் விளங்கினார். சொல் கவர்ச்சியும் பாடல் ஓசையும் இப்போதே அவர் முதல் தரக் கவிஞர் என்பதை யாவருக்கும் எடுத்துக்காட்டின. இந்நூலில் அடங்கிய ‘மேரியானா,’ ‘அராபிய இரவுகள்’ ஆகியவை செம்பாகமான பாக்களின் உருவில் படிப்பவர் மனதைக் கவர்ந்து இன்பமளிப்பவை.
3. இளமைக் காலக் கவிதைகள்
1830ஆம் ஆண்டுக் கவிதைகள் வெளிவந்ததன் பின் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக டெனிஸன் இன்னொரு கவிதைத் தொகுதியை வெளியிட்டார். இதுவே புகழ்மிக்க 1832ஆம் ஆண்டுக் கவிதைகளாகும். இந்நூலின் பாடல்களுள் பல முதல்தரமானவை. சொல்லழகின் செல்வ மிக்கவை; புலனுணர்வுக்கு இன்பம் தந்து உள்ளங் கவர்பவை; உவமையும் உருவகமும் நிறைந்து ஷேக்ஸ்பியரின் முதற்காலக் கவிதைகளையும், கீட்ஸின் கவிதைகளையும் நினைப்பூட்டுபவை. அவற்றுள் பல புனைவியலின் மாய உலகக் கவர்ச்சியும், கனாநிலையின் மயக்கமும் நிறைந்தவை. இப்பாடல்களில் ஒன்று ‘கலைக்கோயில்’ என்பது. வாழ்விற்கு அப்பாற் பட்டது கலை என்ற அக்காலத்தில் புதிதாகத் தோன்றிய கலைவாணர் கொள்கையைக் கண்டிக்க எழுந்தது அது. அதிலுள்ள விரிவுரைகள் பொதுப்படத் தெளிவும் திருத்தமும் வாய்ந்தவை. சிறப்பாகச் செதுக்கு உருவங்கள் பற்றிய விரிவுரைகள் முதற்பொருளை உளக்கண்முன் திறம்பட எழுப்பும் தன்மை வாய்ந்தவை. ‘மே அரசி’ என்ற பாடல் இதனினும் சிறப்புடையது. டெனிஸன் பாடல்கள் எல்லாவற்றி னுள்ளும் இளைஞர் மிகுதியும் விரும்பி வாசிக்கும் நூல் இதுவே. ‘அழகிய மங்கையர் கனா’ என்பதும் ‘தாமரை அயில்வோர்’ என்பதும் அவ்வத் துறைகளில் ஒப்புயர்வற்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. பின்னது டெனிஸன் சில ஆண்டுகளுக்குப்பின் எழுதிய யுலிஸிஸ் என்பதற்கு நேர்மாறானது. ‘தாமரை அயில்வோ’ருள்ளும் ’யுலிஸி’ஸிலும் பாட்டுடைத் தலைவன் ஒருவனே. ஆனால், இவ்விரண்டிலுங் காணும் உலகங்களும் வேறு வேறானவை. ’தாமரை அயில்வோ’ ருள் யுலிஸிஸ் புதுமையானதோர் தீவின் பக்கமாகச் செல்கிறான். அங்கே அப்பர் இறைவனடி நிழலினைப் பற்றிக் கூறியபடியே,
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும்………
நிறைந்திருந்தன. மாலையும் மதியமும் என்றும் மாறாது ஒரு நிலையில் நின்ற இத்தீவில் எங்கும் தாமரைப் பொய்கைகள் நிறைந்திருந்தன. தாமரைப் பூவின் பூந்துகள் காற்றிலும் கரையிலும் நீரிலும் எல்லாம் நிறைந்திருந்தன. அதன் தெய்வீக ஆற்றலால் அந்நாட்டின் மக்களுக்குப் பசி என்பது மில்லை; பசிக்காக முயற்சி செய்யவேண்டிய நிலையுமில்லை. ஆனால், அதன் மயக்கத்தால் தளர்ச்சியடைந்து மயங்கிக் கிடந்த அவர்கள் உடலின் ஒவ்வோருறுப்பும் பூம்பந்தரின் நிழலிலே குளிர்ந்த ஓடையின் பாங்கரிலே செயலற்றுக்கிடந்து ஓய்வின் இன்பம் துய்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் தாம் செயலற்ற இன்பத்தை நுகர்வதுடன் நில்லாது யுலிஸிஸையும் அவன் தோழர்களையும் உடன்வந்து அதே இன்பம் நுகருமாறு அழைத்தனர். யுலிஸிஸ் அச்சோம்பல் வாழ்வை ஏற்கத் தயங்குவது கண்டு அவர்கள் அவனுடன் செயலற்ற வாழ்வே மேம்பட்டதென மாயாவி வேதாந்தம் பேசி வாதிட்டனர்.
இவ்வேதாந்தத்துக்கு நேர்மாறான நிலையிலுள்ளது ‘யுலிஸிஸ்’ என்ற கவிதை. இங்கே யுலிஸிஸ் தன் வாழ்வு முற்றிலும் வெற்றிகளும் அருஞ் செயல்களுமாற்றி, இறுதியில் தன் நாட்டில் வந்து நெடுநாள் தன் இயல்புகளை எல்லாம் அடக்கிக்கொண்டு அமைதியாக ஆட்சிபுரிந்தான். ஆனால், அம்முதுமையிலும் அவனால் அகநிறைவு கொண்ட அச்சிறு மக்களிடையே வாழ முடியவில்லை. ஆகவே, அவன் விரைவில் தன் மகனுக்கு முடிசூட்டுவித்து அவனே அவர்களை ஆளும்படி விட்டுவிட்டு முடிவற்ற செயல் நிறைந்த தன் குறிக்கோள் வாழ்க்கைக்குச் செல்ல முயன்றான். முயன்று அவன் ஓய்வற்ற அம்முயற்சியில் தன் பித்துடன் பங்குகொண்ட பித்தர்களாகிய தன் தோழரை அழைத்தான்.
பொதுப்படையான மக்கள் வாழ்க்கையின் சிறுமையை யுலிஸிஸ் வாழ்க்கையின் மட்டற்ற உயர்வுடன் ஒப்பிட்டுக்காட்டி டெனிஸன் யுலிஸிஸின் பெருமிதத்தையும், ஈடும் எடுப்பும் அற்ற உயர்நிலையையும் நமக்கு விளக்குகிறார்.
டெனிஸனின் மாய உலகின் இன்னுமோர் அரிய படைப்பு ‘ஷாலெட் சீமாட்டி’ என்பது. மந்திரம் என்று ஒன்று உண்டென நம்பு பவருமுண்டு; நம்பாதவருமுண்டு. ஆனால், டெனிஸன் தன் கவிதையின் தொடக்கத்திலேயே நம் கண்முன் மந்திரத்தால் கட்டுண்ட ஓர் உலகைக் காட்டுகிறார். அவருடைய உலகைவிட்டு வெளி வரும்வரை நம் உலகின் பகுத்தறிவு வாதத்தை நாம் மறந்து அம் மந்திர உலகையே இயற்கை என ஏற்றுக் கொள்பவர் ஆகிறோம். ஆனால், அத்தகைய மந்திர உலகினிடையே வாழும் மந்திரத் தலைவியாகிய ஷாலட் சீமாட்டியிடம் எப்படியோ நம் மனத்தில் கனிவும் இரக்கமும் ஏற்பட்டு, அவளும் நம் உள்ளத்தில் மனித உணர்ச்சிகளைத் தூண்டுகிறாள். டெனிஸன் பாடல்களில் முன்னும் பின்னும் கலைஞன் படைப்பு என்ற முறையில் இதனுக்கு ஈடான பாடல் கிடையாது என்னலாம். மேலும் இது பிற்காலத்தில் டெனிஸன் பல்லாண்டுகள் தொடர்ந்து எழுதிய ஆர்தர் கதைத்தொடரின் ஒரு பகுதியைச் சித்திரிப்பது மாகும். ஆர்தர் கதையின் பல பகுதிகளையும் டெனிஸன் விரிவாக எழுதிய போதிலும் சொல்லழகிலும் கலை நிறைவிலும் மருட்சியிலும் இதனை அவர் என்றும் அணுகியதில்லை என்றே பலரும் கொள்கின்றனர்.
டெனிஸனின் 1832ஆம் ஆண்டுப் பாடல்களில் இன்னொரு சிறந்த புனைவு, ‘ஆலைக்காரன் புதல்வி’ என்பதாகும். மேரியானாவைப்போலவே இதிலும் இயற்கைச் சூழலுடன் மக்களது உள்ள உணர்ச்சியும் கலை ஓவியத்தில் முற்றிலும் இணைந்து விளங்குகின்றது. இக்காரணத்தால் அறிவாராய்ச்சி மிக்க அறிஞர் முதல் சின்னஞ் சிறுவர் வரை அது கவரும் தன்மையுடையதாய் அமைந்துள்ளது.
‘கேட்குதியோ ஐய உளம் உலைவற்று நின்றிடினும்’
‘முன்னை நாளினில் விடுதலைச் செல்வி மாமலைக்கண்’
என்று தொடங்கும் சிறுபாக்கள் இரண்டும் இக்கவிதையங் கோவையின் ஒப்பற்ற இரு முத்துக்களாகும்.
கலைப்புனைவு வகையில் 1832இல் டெனிஸன் கவிதைகள் உச்ச நிலையை யடைந்தன எனலாம். உண்மையில் கால மாறுதலால் மாறுபடாத நிலையான புகழுடைய டெனிஸன் கவிதைகள் 1832க்கும் 1842க்கும் இடையில் எழுதப்பட்டவையே யாகும். அதற்குப் பின்னும் அவர் பாடல்களிடையே நறுஞ் சுனைகளும் மலர்ப்பூந்தடங்களும் நிறைந்துள்ளனவாயினும் முதற்காலச் சிறுபாக்களில் காணப்பட்ட நிறையழகு அவற்றி லில்லை. கருத்திலும் முதற்காலக் கவிதைகள் பொது வாழ்க்கையில் நுழையாமல் புனைவு வாழ்க்கையிலேயே நின்றிருந்தன. ஆதலால், எல்லாக்காலத்திலும் இவை ஒரே நிலையான புகழ் பெற்றன.
பிற்பட்ட பாடல்களோ, டெனிஸன் கால வாழ்க்கையையும் அக்கால மக்கள் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் படம் பிடித்துக் காட்டுபவை யாயிருந்தன. இக்காலம் விக்டோரியா அரசியாரின் ஆட்சியின் நடுப் பகுதியாகும். ஆங்கிலப் பேரரசு உலகின் பாதியைத் திறைகொண்டு வெற்றி நறவுண்டு வெறியார்ந்து இறுமாந்திருந்த காலம் அது. அறிவியல் மேம்பாட்டால் வாணிப வாழ்விலும் செல்வத்திலும் மிதந்த அக்கால மக்கள் சமயம், கலை ஆகியவற்றில் மனம் செலுத்தாது அறிவியலையும், செல்வத்தையும் மட்டுமே வழிபட்டு வந்தனர். அக்காலக் கவிஞர் எவரினும் டெனிஸனே தலைமைக் கவிஞனாயிருந்து இவ்வுணர்ச்சிகளையெல்லாம் கலை உருப்படுத்திக் காட்டினார். ஆனால், கால மாறுதலினிடையே இக் கருத்துக்களும் மாறின. வெற்றி இறுமாப்பு மாறிப் போர்ப் புயல்களும் குழப்பமும் ஏற்படத் தொடங்கிய காலமாகிய இருபதாம் நூற்றாண்டு முதிருந்தோறும் டெனிஸனுடைய பிற்காலப் பாடல்களின் செல்வாக்கும் சற்றுக் குறையத் தொடங்கின. ஆயினும் புற அழகையேயன்றி அக அழகாகிய பொருளாழத்தையும் நோக்குபவருக்கு டெனிஸனின் முற்காலக் கவிதைகள் ஆழமற்ற சொற்சித்திரங்கள் மட்டுமே யாகும். அவற்றில் கீட்ஸ், ஷேக்ஸ்பியர், கம்பன் ஆகியவர்களின் கற்பனை இன்பம் உண்டு. மில்ட்டனின் உயர்வும் பிரௌனிங்கின் செறிவும் சங்கஇலக்கியத்தின் இயற்கை நயமும் அவற்றுள் அகப் படமாட்டா. அவற்றை ஆங்காங்காக வேனும் பிற்காலக் கவிதைகளிலேயே காண வேண்டும். சுருங்கச் சொன்னால் டெனிஸனின் முற்காலக் கவிதைகள் கீட்ஸ், ஷெல்லி ஆகியவர் கள் கவிதைகளுடனும், மில்ட்டன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்களின் முற்காலக் கவிதைகளுடனுஞ் சேர்க்கத்தக்கவை. பிற்காலக் கவிதைகளோ மில்ட்டன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்களின் பிற்காலக் கவிதைகளை ஒத்தவை யல்லவாயினும் அவற்றுடன் சேர்க்கத்தக்கவையே யாகும்.
டெனிஸன் பள்ளி வாழ்வு நாட்களில் உடற்பயிற்சியில் பற்றுடையவ ராயிருந்தார் என்று மேலே கூறினோம். அதனுடன் பைரன், ஷெல்லி முதலிய கவிஞர்களின் பாடல்களிலும், அவற்றுட் கண்ட விடுதலை யார்வத்திலும் அவர் மிகவும் ஈடுபட்டார். ஈடுபட்டுப் பைரனைப்போலவே பிறநாடுகளின் விடுதலைப் போர்களில் கலந்துகொள்ள இளைஞராகிய அவருக்கு ஆர்வம் மிகுதியும் ஏற்பட்டது. கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் மாணவர்களின் ஆர்வமும் இதற் கொத்ததாகவே யிருந்தது. 1830இல் டெனிஸனும் ஹாலமும் சேர்ந்து ஸ்பெயின் வடபகுதியில் பிரினீஸ் மலையருகில் சமயத் துறையில் கொடுங் கோன்மையுடைய அரசனான ஃபெர்டினான்டுக் கெதிராக டாரிகோஸ் என்பவன் தொடங்கிய கிளர்ச்சியில் கலந்துகொண்டனர். இக் கிளர்ச்சியி லீடுபட்டு அவர்கள் அதனைச் சார்ந்த மறைவுக் கழகங்களில் ஊடாடி வந்தனர். அவர்களுடைய நண்பர் சிற்சில சமயம் வாரக்கணக்கில் அவர்களைக் காணாது இறந்தனர் என்று நினைத்ததும் உண்டு. திரும்பி வரும் வழியில் அவர்கள் ஃபிரான்ஸ் வழியாக வந்தனர். டெனிஸன் பிற நாடுகளில் தம்மை ஆங்கிலேயர் என்று எவரும் அறியாத அளவு பொதுமை நோக்குடையவராய் நடந்து கொண்டாராயினும் அவர்தம் நாட்டின் சூழலையே பெரிதும் விரும்பிப் போற்றினார். இதுவகையில் தமக்குமுன்னிருந்த ஷெல்லி, கீட்ஸ் முதலிய ஏரிக்கவிஞர் களிடமிருந்தும் பிற்காலங்களில் உலக இயக்கங்களி லீடுபட்டவரான ஆர்னால்ட், மாரிஸ் போன்ற கவிஞர்களிடமிருந்தும் அவர் வேறுபட்டவர். அவர் மனஉயர்வு, விரிவு, நயம் ஆகியவை யெல்லாம் ஓரளவில் ஆங்கில நாட்டு எல்லையையும் விக்டோரியாவின் ஆட்சிக்கால எல்லையையுமே தம் எல்லையாகக் கொண்டிருந்தன.
4. ஹாலமின் பிரிவு
1832ஆம் ஆண்டுக் கவிதை நூலுக்கும், 1842ஆம் ஆண்டுக் கவிதை நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் டெனிஸன் வாழ்க்கையிலும், அவர் கவிதையின் வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி நிகழ்ந்தது. அதுவே அவர் நண்பர் ஆர்தர் ஹாலமின் பிரிவாகும். இறக்கும் போது ஹாலம் மிகவும் இளைஞராகவே இருந்தார். அவர் அறிவாற்றலும் நட்புணர்ச்சியும் உடையவர். இளமையில் இறவாதிருந்தால் வளர்ந்தபின் அவர் வாழ்க்கையில் வெற்றி கண்டிருக்கக்கூடும். ஆனால், டெனிஸன் முதலிய நண்பர்கள் அன்பு கனிந்த உள்ளத்திரையில் அவர் பிரிவால் அவர் உருவம் பன்மடங்கு பெரிதாக்கப்பட்டது. டெனிஸன் மனத்தில் ஹாலமின் பிரிவால் ஏற்பட்ட துயரம் பல எண்ண அலைகளை ஏற்படுத்திற்று. பிற கவிஞர்கள் இத்தகைய எண்ணங்களைப் பாவாக எழுதி வெளியிட்டுள்ளனர். மில்ட்டன் இத்தகைய நண்பர் ஒருவர் பிரிவை லிஸிடஸ் என்ற பாடலில் தெரிவித்திருக்கிறார். ஆனால் டெனிஸன் ஹாலமின் நினைவுடன் தம் வரலாற்றையும், உலக வரலாற்றையும் விரித்துரைத்ததுடன் ஓர் இருபது ஆண்டுகளாகத் தாம் நினைத்தவற்றையெல்லாம் ஹாலம் நினைவு என்ற நூலில் கோத்து மணிக்கோவையாக்கி ஒரு பெரும் தொடர்ப்பாவைப் புனைந்தார். இதுவே ‘முன்னைய நினைவுகள்’ என்ற நூலாகும். டெனிஸன் காலத்திலும், அதனை அடுத்தும் இதுவே டெனிஸனின் மிகச் சிறந்த நூலாகக் கருதப்பட்டது. ஏனெனில், இதிற் காணப்பட்ட கருத்துக்களும் உணர்ச்சிகளும் அக்காலத்துப் பொது மக்களிடையேயும், அறிவுடைய மக்களிடையேயும் பரவியிருந்த கருத்துக்களும் உணர்ச்சிகளுமாகும். ஆனால், பிற்காலத்தவர் உள்ளத்தில் இக்கருத்துக்கள் ஆழ்ந்து பதியாமல் போயின. அதனுடன் கருத்து மேம்பட்ட இடத்தில் கவிதை செறிவின்றி இருப்பதும், நெடு நீளமான இந்நூலில் கலை ஒருமைப்பாடு இல்லாதிருப்பதும் பிற்காலத்திலேயே சுவைஞரால் கவனிக்கப் பட்டன. ஆயினும் இதனினும், பிற்காலத்து நீண்ட நூல்களிலும் ஆங்காங்கு என்றும் நின்று நிலவத்தக்க பாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள்
‘’பழையன கழிதலும், புதியன புகுதலும்
வழுவல; கால வகையி னானே’’
என்ற கருத்துவாய்ந்த பாடல் ஒன்று; இன்னொன்று பாரதியார்,
‘’வலிமையற்ற தோளினாய்! போ, போ, போ-’’
என்றும்,
‘’ஒளிபடைத்த கண்ணினாய்! வா, வா, வா-’’
என்றும் பழைய பாரதத்தைப் பழித்துப் புதிய பாரதத்தை வருவிக்க எண்ணியதுபோல், டெனிஸனும்
‘’பழைமை போ, போ என்று அடிமணியை!
புதுமை வா, வா என்று அடிமணியை!’’
என்ற பாடலைப் பாடினார். 1842ஆம் ஆண்டுக் கவிதைகளிற் பல 1830, 1832இல் எழுதியவற்றின் திருத்தங்கள்; சில புதியவை.
கவிஞர்களில் கைதேர்ந்த கலைஞர் டெனிஸன். போப் என்ற பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிஞர், ‘’புலமை என்பது புரையறுத் தொதுக்கிடும் புதுமை,’’ என்று கூறியது அவர் வரையில் முற்றிலும் உண்மை யாகும். தாம் எழுதிய எக் கவிதையையும் மீட்டும் மீட்டும் அவர் திருத்திக் கொண்டு தானிருந்தார். ஆயினும் உணர்ச்சி வயப்பட்ட எதிலும் அவர் திருத்தாத 1832ஆம் ஆண்டு கவிதைகள்தாம் மிகச் சிறந்தவை யென்று சுவைஞர் பலர் கூறுகின்றனர்.
புதிய பாக்களுள் சில 1830-1832ஆம் ஆண்டுப் பாக்களினும் உணர்ச்சியும், நயமும் பெற்றிருப்பதுடன், அவற்றினும் பொருள் நயமும் எளிமையும் சிறந்து விளங்குகின்றன. பலவற்றில் அவர் முன்னையினும் தெளிவான நடையும் எளிமையும் ஊட்டி, மிகையான பகுதிகளை அகற்றிப் பொருள் திட்பமும் சொற்றிறமும் அமைத்துள்ளார்.
இந்நூலின் சிறந்த பகுதிகள் ‘ஆங்கிலப் பழம் பாடல்கள்,’ ‘ஸெயின்ட் ஸைமன் ஸ்டைலைட்ஸ்’, ‘லாக்ஸ்லீஹால்,’ ‘மார்ட்டி ஆர்தர்,’ ‘ஸர் லான்ஸி லாட்டும் கினிவியர் பேரரசியும்’ என்பவையாகும். இவற்றுள் ‘லாக்ஸ் லிஹால்’ கோழைத்தனத்தை வன்மையாகக் கண்டித்து இளைஞரை வீர வாழ்க்கைக்குத் தூண்டுகிறது. முதியவருடைய தோல்வி மனப்பான்மையை யறைந்து கண்டித்து இளைஞர் கனாக்களைக் கனலொக்கும் சொற்களால் தீட்டுவதில் இப் பாடல் சிறப்புடையது. மார்ட்டி ஆர்தர், ஆர்தர் கதையின் கடைசிப் பகுதியாகும். பிற்காலத்தில் ‘ஆர்தரின் பிரிவு’ என்ற பாடலுள் இஃது இணைக்கப் பெற்றது. கதைப்புனைவிலும் பாடல் நயத்திலும் இது 1832இல் எழுதப்பெற்ற சிறந்த பாடல்களுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது. ஆர்தர் கதை முழுவதிலும் பிற்காலத்தில் மிகச் சிறந்த பகுதி இதுவே. இதற்கு அடுத்தபடியாக ‘ஸர் லான்ஸிலாட்டும் கினிவியர் அரசியும்’ என்ற நூல் ஆர்தர் கதைக்குத் துன்ப உணர்ச்சியும், கனிவும் தரும் பகுதியாகும். லான்ஸிலாட்டின் வாழ்வில் வீரமும் கோழைத்தனமும் போரிடுகின்றன. ஒழுக்கமும் உணர்ச்சியும் போட்டியிடுகின்றன. உணர்ச்சியும் கோழைத் தனமும் பொய்மையின் போர்வையில் சிலகாலம் வெற்றியடை கின்றன. ஆனால், மறைந்து நின்றழிக்கும் தெய்வீகப்பழி இறுதியில் அவர்களிருவரையும் மட்டுமின்றி ஆர்தர் ஆட்சி முழுமையுமே சீர்குலைக்கின்றது.
1842லேயே டெனிஸன் புகழ் கவிதை வானில் வீறுடன் பறக்கத் தொடங்கிய தென்னலாம். அவ்வோராண்டிற்குள் அவர் கவிதைகள் நாலு முறை பதிப்பிக்கப்பட்டன. எங்கும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் சொற் போர்களும் உரைகளும் நிறைந்தன. கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தேர்வுகளில் அவருடைய பாக்கள் ஒப்பிப்புப் பாடமாகவும், இலத்தீன், கிரேக்க மொழிகளில் மொழிபெயர்ப்பாகவும் பலவகையிலும் கையாளப்பட்டன. மாணவரும் பிறரும் அவற்றை மனப்பாடம் பண்ணவும் தொடங்கினர். மேலும் அந்நாளைய பேர்போன எழுத்தாளரும் இலக்கிய அறிஞருமான கார்லைல் அவரைப் பற்றிக் கூறுகையில் ‘டெனிஸன் கவிதையில் மனிதர் இதய நாடியின் துடிப்பைக் காணலாம். அரிமாவின் ஆற்றலும் குயிலின் இனிமையும் உடையவை அவர் பாடல்கள்’ என்று குறிப்பிட்டார்.
1847இல் டெனிஸன் ‘இளவரசி’ என்ற நீண்ட பாடல் நூலை வெளியிட்டார். இது பெண்கள் தனித்து வாழ முடியாதென்பதையும், அன்பு நிறைந்த இல்லறத்தின் மேலான நல்லற மில்லையென்பதையும் வலியுறுத்தும் கதை ஆகும். இதன் போக்கும் கருத்துக்களும் ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் ‘காதற்சீரழிவு’ என்பதன் கதையையும் கருத்துக்களையும் நினைவூட்டுபவை ஆகும். இதில், செந்தொடையில் எழுதப்பெற்ற ‘’கண்ணீர், வெறுங் கண்ணீர்’’ என்ற சிறுபாவும், ‘’மலையினுச்சி நின்றிறங்குதி என்னரும் பாவாய்,’’ என்பது போன்ற பாடல்களும் மிகவும் உருக்கமானவை. ‘’இன்னும் யாதும் நீ வேண்டற்க; எறிகடல் நிலவம், ஈர்ப்பினும்’’ என்பது போன்ற பாடல்களும் மிகவும் உருக்கமானவை.
5. மண வாழ்வு
டெனிஸன் தம் துணைவியாகிய எமிலி ஸெல்வுட்டை முதன் முதலாகக் காட்டிற் பயணம் செய்யும்போது கண்டார். எமிலிக்கு அப்போது 17 ஆண்டுகள். மலையும் ஓடையும் கொடி செடிகளும் அமைந்த சூழலினிடையே தோன்றிய அவள் எழில் கண்டு வியந்து அவர்,
‘’அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு’’
என்ற குறளுரைக் கொத்த உரை பகர்ந்து நின்றனராம்! சில ஆண்டுகளுக்குப் பின் எமிலி ஸெல்வுட்டின் தங்கை லூயிஸாவைச் சார்ல்ஸ் டெனிஸன் மணந்தார். இதன் பின் ஆல்ஃப்ரெட் டெனிஸன் எமிலி ஸெல்வுட்டுடன் இன்னும் நெருக்கமான நட்பு கொண்டு மண உறுதியும் செய்து கொண்டார். ஆனால், மணஞ்செய்யுமுன் போதிய வருவாய் வேண்டுமென்பதற்காக அவர்கள் பத்தாண்டுகளுக்குமேல் காத்திருந்தனர். இலக்கற்ற அவர் வாழ்க்கையில் இஃது ஓர் இலக்காய் அமைந்தது.
எமிலியின் தாய் தம் சிறு குடியையும் சிறு வருவாயையும் அவர்களுடன் பங்கு கொள்வதாகக் கூறியும் அவர்கள் அதை ஏற்கவில்லை. அப்போது, ‘முன்னைய நினைவுகள்’ என்ற பாவின்மீது பாக்ஸன் என்ற புத்தக வணிகர் ஊதியத்தில் ஒரு பங்கு தந்தார். அஃது அவர்களுடைய மண உறுதியைப் புதுப் பித்துக்கொள்ள உதவிற்று. 1851 ஜுன் 13இல் அவர்கள் ஷிப்லேக்கில் மணம்புரிந்து கொண்டனர். மணமக்கள் மண வாழ்வில் எதிர்பார்க்கும் கனவு முற்றும் அவர்கள் வாழ்வில் நனவாயிற்று. அம் மண வாழ்வைக் குறிக்கும்போது அவர் ‘’அவரை நான் மணந்தபோது இறை யுலகின் அமைதி என் வாழ்விற்புகுந்து குடிகொண்டது,’’ என்று கூறியுள்ளார்.
மண வாழ்விற்குச் சிலநாள் பின்வரை குடியிருக்க நல்ல வீடு தேடிக் கொண்டு அவர்கள் முதலில் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தார்கள். பின் அவர்கள் ஸஸ்ஸெக்ஸ் வட்டத்தில் வார்னிங்லிட் என்ற இடத்தில் அகன்ற புறவெளியை நோக்கிய காற்றோட்டமான பெரிய அறைகளையுடைய ஒரு வீட்டை வாடகை பேசி அதில் குடியேறினர். ‘அதன் வாயில்களின் வழியாக வும் பலகணிகள் வழியாகவும் காற்றோடி ணைந்து பறவைகளின் இன்னிசை ஒலிகளும் வந்து எங்கள் வாழ்விற் களிப்பூட்டின’ என்று அவர் அவ் வீட்டைப்பற்றிக் கூறினார். ஆயினும், திறந்த பாதுகாப்பற்ற வெளியி லிருந்த அவ்வீட்டில் திடீரென்று புயல் மிகுந்த இரவொன்றில் பலகணிகள் தவிடுபட்டுப் படுக்கையறைச் சுவரொன்றும் விழுந்து விடவே, இனி அதில் குடியிருத்தலாகாது என்றெண்ணினார். எண்ணி இரவோ டிரவே குளிப்பதற் காக வைத்திருந்த உருளை நாற்காலியில் மனையாட்டியை வைத்திழுத்துக் கொண்டு அவர் அப் பகுதியின் கரடுமுரடான பாதைகளினூடாகச் சென்று கக்ஃபீல்டு என்னுமிடத்தையடைந்து இறுதியில் ட்விக்கென்ஹாமில் வீடமைத்துக் கொண்டார்.
ஆங்கிலேயருள் உயர் குடியினர் மண வாழ்வுக்குப்பின் ஐரோப்பாக் கண்டத்தின் தென்பகுதிகளில் சென்று சிலநாள் கழிப்பதுண்டு. கதிரவன் பொன்னொளியுடன் கானாறும் ஓடையும் ஏரியும் கண்கவர் கலை மாடங்களும் கலைஞர் கூடங்களும் தேவதாரு மரங்களும் முந்திரிக் கொடிப் பந்தர்களும் நிறைந்த அவ்வழகிய நாடுகளிடையே மணமக்கள் கழிக்கும் இன்ப நாட்களை ஆங்கில மொழியில் ‘தேனிலவு’க் காலம் (Honey moon) என்று குறிப்பர். டெனிஸனும் அத்தகைய தேனிலவின்பத்தை நாடி இத்தாலிக்கும் ஃபிரான்ஸுக்கும் சென்றார். மேனாட்டின் கலைக்கூடமாகிய இவ்வித்தாலி நாட்டில் தாம் கண்டுணர்ந்தவற்றையெல்லாம் எடின்பர்க் வந்தபின் எழுதிச் சேர்த்து, ’டெய்ஸி’ (பொன்னிற நிலப்பூ) என்ற பாடல் ஒன்றும் வரைந்தார். இத்தாலிய நாட்டைப்பற்றிய இப்பாவை அவர் இத்தாலி நாட்டில் வழங்கும் ‘அல்கயிக்’ என்ற பாவினத்திலேயே அமைத்தார். இப்பயணத்தை அடுத்த காலத்தில் இதேபோலப் பிறநாட்டுப் பாமுறைகளை ஒட்டியும், தம் மனப் பண்புப்படி தன்னாண்மையுடனும் அவர் புதுப்புதுப் பா வகைகளைக் கையாண்டார். அவற்றுள் ‘விர்கில் (லத்தீனக் கவிஞர்) மீது நடனப்பா’ (Ode), ‘வெல்லிங்டன் பிரிவுமீது நடனப்பா’ என்பவை தலைசிறந் தவை. இவற்றுள் பின்னது இலக்கண அறிஞர் வகைப்படுத்த எந்தப் பாவிலும் பாவினத்திலும் சேராமல் கண்டகண்டபடி யாக்கப்பட்ட தென்று இலக்கிய விரிவுரையாளர் அதனைச் சிலநாள் குறைகூறி எதிர்த்தனர். ஆனால், அது கண்டகண்டபடி யாக்கப்பட்ட தன்று. ஒவ்வொரு வரியிலும் அமைந்த கருத்தின் பண்புக்கொத்த சந்தம் அமைத்து யாக்கப்பட்டதே என இன்று அது போற்றப் படுகிறது. வெல்லிங்டன் இப்பாவில் ‘உலக வெற்றியாளனை வெற்றி கண்டவன்’ என்று போற்றப்படுகிறார். உலக வெற்றியாளன் என்று இங்கே குறிப்பிட்டது வெல்லிங்டனால் இறுதியில் வெல்லப்பட்ட உலகப் பெருவீரனும், பேரரசர் கோமானுமாகிய நெப்போலியனையே யாகும்.
டெனிஸனின் அடுத்த பாடல் ‘மாடு’ என்பதாம். ‘மாடு’ என்பது மட்டில்டா என்ற பெண்பாற் பெயரின் சுருக்கம். இப்பாடலில் ‘இளவரசியை’ விடப் பன்மடங்கு மிகுதியாக இளைஞர் உலகின் வெறி வீறிட்டெழுகின்றது. வழக்கம் போலவே ஆங்காங்குச் சிதறிக்கிடக்கும் பாடல்களில் இது முழுவதும் கனிவுற்றுக் காணப்படுகிறது. 18 ஆண்டுக்கும் 25 ஆண்டுக்கும் இடைப்பட்டவர்கள் காதல் வாழ்விலும் புற வாழ்விலும் படும் இன்பதுன்ப உணர்ச்சிகளின் எல்லா வகைகளும் எல்லாப் படிகளும் இந்நூலில் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. உலக இலக்கியத்திலேயே மிகச் சில கவிஞர்கள் மட்டுமே இயற்கைக்கு மாறான நிலையாகிய பித்தர் நிலையை உண்மைக் கொத்ததாகப் புனைந்துகூற முயன்றுள்ளனர். அங்ஙனம் முயன்றவருள் ஷேக்ஸ்பியர் ஒருவர். அவருடைய ‘ஹாம்லெத்’ நாடகத்தி லுள்ள ஒஃபீலியாவின் பித்தும், ‘லியர்’ நாடகத்திலுள்ள லியர் அரசனின் பித்தும் மருத்துவ அறிஞராலும் உளநூல் அறிஞராலும் பித்தர் நிலையைச் செவ்வனே விளக்குபவை எனக் கொள்ளப் படுகின்றன. ‘மா’டிலும் கதைத் தலைவன் பித்துக்கொண்டலைகிறதைக் கவிஞர் தீட்டிக்காட்டுவது ஷேக்ஸ்பியருடைய காட்சிகளுக் கொப்பானது. காதல் வகையிலோவெனில் மெரிடித்தின் புனைவுக் கதையாகிய ரிச்சர்ட் பிவரிலில் மெரிடித்தின் புனைவுக் கதையாகிய ரிச்சர்ட் பிவரிலில் ’கண்டதும் காதல்,’ என்பதன் ஒப்பற்ற ஓவியம் மட்டுமே காட்டப்படுகிறது; ஆனால் ’மா’டில் அதன் எல்லா வகை நிலைகளின் ஓவியங்களும் மலிந்து கிடக்கின்றன. அவற்றுட் பேர்போன பாடல் ஒன்றின் முதற்பா (தமிழ் மொழிபெயர்ப்பு) வருமாறு:-
காவகத்தே வாராய்! என்
கண்மணி மாடணங்கே!
கரியஇரா எனும் கூகை
கடுகி வந்ததிங்கே!
காவகத்தே சாராய்! என்
கருத்திவர் மாடணங்கே!
கடிவாயி லிடைத்தனியே
கடைகாத்து நின்றேன்;
பூவகத்தே நறுந்தாது
போய்ப்பரவ எங்கும்
புனைமுளரி இதழ் வாடிப்
புறங்கிடந்த தன்றே.
ஆங்கில மொழியின் பாக்களும் பாவினங்களும் இத்தனை வேறு வேறு நிலைப்பட்ட உணர்ச்சிகளை எடுத்துக் காட்டத்தக்கவையா என்று யாவரும் வியக்கத்தக்க வகையில் ’மா’டில் பல்வகை உணர்ச்சிகளுக்கியையப் பல்வகைச் சந்தங்கள் நிறைந்த பாடல்கள் காணப்படுகின்றன.
6. ஆர்தர் கதைத்தொகுதி
மில்ட்டன் ஆங்கில மொழிக்கு விளக்கந்தரும் எத்தனையோ பாடல்கள் எழுதியும், அப் பாடல்களுக்கும் விளக்கந்தரும் பெருங்காவியம் ஒன்று எழுதுவதையே அவர் தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண் டிருந்தார். அதுபோலவே டெனிஸனும் தம் வாழ்க்கையின் முழு மெய்ப் பயனாம் பெருங் காப்பியம் ஒன்று எழுதவேண்டும் என்று முயன்று வாழ்நாள் தொடக்கத்திலும் இடையிலும் முதுமையிலும் பல நாட்களை அம்முயற்சியில் செலவு செய்தார். அவருடைய இப்பெரு முயற்சிக் கிலக்கானது உண்மையில் மில்ட்டன் முதலில் தெரிந்தெடுத்துப் பின் விவிலியக் கதையை எண்ணி விலக்கிய ஆங்கிலேயரின் பழம் பெருங் கதையாகிய ’ஆர்தர் வரவும் செலவு’மே ஆகும். இதை 20 ஆண்டு எழுதுவ தென அவர் திட்டம் இட்டிருந்தார். உண்மையில் அது 50 ஆண்டுக்காலம் பிடித்தது. நீண்ட இக்கால அளவினுள் டெனிஸன் கவிதையின் இயல்பில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றின் பயனாக ஆர்தர் கதையின் பகுதிகள் ஒரேமாதிரியாயிராமல், முன் எழுதியவை உணர்ச்சியும் கலைப் பண்பாடும் மிக்கவையாயும், பிந்தி எழுதியவை ஆராய்ச்சிப் போக்கு உடையவையாயும், இடைப்பட்டவை கதைப்போக்காகவும் இருக்கின்றன. ஆகவே மில்ட்டனின் துறக்க நீக்கத்தில் காணப்பெறும் சீரிய ஒருமைப் பாட்டை டெனிஸன் காப்பியத்தில் காணமுடியாது. டெனிஸன் காப்பியம் அழகிய முத்துமணிக் குப்பை; மில்ட்டனதோ மணிகள் அழுத்திய பூணாரம். டெனிஸன் நூல் ஓவியங்களின் தொகுதி; மில்ட்டனது பேரோவியம், அழகினாலும் பெருமிதத்தாலும் மக்களைத் தம் நிலை மறக்கச் செய்யும் பெரிய கூடகோபுரமமைந்த மாடமாளிகை. சுருங்கச் சொன்னால் மில்ட்டன் காட்டுவது பெருமையின் அழகு; டெனிஸனது சிறுதிற அழகாகிய சித்திர அழகு.
மேற்கூறியபடி 1832-லேயே ‘ஷாலட் சீமாட்டி’யும், 1842இல் ’மார்ட்டி ஆர்தரும்,’ ‘ஸர் லான்ஸிலாட்டும் அரசி ஜினிவியரும்’ ஆகியவை எழுதப்பெற்றன. 1855இல் ஆர்தர் காவியத்தின் மொத்த உரு திட்டப்படுத்தப் பட்டது. 1859இல் (முன்னைய துண்டுகள் நீங்கலாக) அதன் முதல் தொகுதியாகிய ‘எனிட்,’ ‘விவியன்,’ ‘கினிவீயர்,’ ‘ஈலெய்ன்’ ஆகியவை வெளிவந்தன. இதன் பின் சிலகாலம் ஆர்தர் கதைத்தொகுதியினின்றும் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார். 1868இல் ‘தெய்வீகக் கிண்ண’மும் (Holy Grail) ’ஆர்தர் வரவு’ ‘பெல்லியாஸும் எதாரும்,’ ‘ஆர்தர் செலவு’ ஆகியவையும், 1871இல் ‘இறுதி அரங்கு’ம் (Last Tournament), 1872இல் ’காரத்தும் லினட்டும்’ (Gareth & Lynette) எழுதப்பெற்றன. 1885இல் ‘பலினும் பலானும்’ என்ற பாடலுடன் ஆர்தர் கதை பன்னிரு பிரிவுகளும் முடிவுற்றன.
ஆர்தர் கதையில் பழமைச் சுவையும் இனிமையும் வீரச்சுவையும் மிகுந்திருப்பதுடன் ஆடவர், பெண்டிர், அரசர், வீரர் ஆகியவர்கள் வகையில் டெனிஸன் கொண்ட உயர் குறிக்கோட் கருத்துக்களும் விளக்கப்படுகின்றன. அதோடு ஆங்காங்கே தோற்றும் குறிப்புக்களிலிருந்து கதைக்கு ஓர் உள்ளுறை பொருளும் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஒழுக்கச் சார்பில் ஓர் உயர்ந்த வீரனுடைய கனா நனவாகும் நிலையையும், அதன் வெற்றியையும், ஒரே ஒரு துணைவன் பொய்ம்மையினால் இறுதியில் அஃது அழிவதையும் அது குறிக்கின்றது. அறிவுச் சார்பில் பார்த்தால் ‘ஆர்தர்’ சமய உணர்வையும், ‘வட்டப் பலகை’ கலை நிலையங்களையும், ‘மெர்லின்’ அறிவியல் திறத்தையும், ‘மோட்ரெட்’ ஐயத்தையும், ‘மூன்று அரசி’களும் கடவுட்பற்று, நல்லார்வம், அற உணர்வு ஆகியவற்றையும், ’கேமிலட் நகரம்’ மக்கள் உயர்தர வாழ்வையும், ‘தெய்வீகக் கிண்ணம்’ இறைவன் அருளையும் குறிக்கும். ஆனால் இப்பொருளை நோக்காமலே கதை இன்பத்தையும் கவிதை இன்பத்தையும் ஒருவர் துய்க்கக்கூடும்.
ஆர்தர் கதையாவது:- குழப்பமும் தீமையும் நிறைந்த பிரிட்டனில் திடீரென ஆர்தர் என்ற வீரன் வந்து அரசாட்சியைக் கைக்கொண்டு வட்டப் பலகை ஒன்றை அமைத்து அதைச்சுற்றி உண்மை, வீரம், அருள் ஆகிய வழிகளில் உலகிற்கும், சிறப்பாக, நல்லோர்க்கும், மெலிந்தோர், மெல்லியலார், ஏழைகள் ஆகியவர்கட்கும் மக்கட்பணியாற்ற உறுதி கொண்ட நூறு வீரரைச் சேர்த்து அவர்கள் வாயிலாகப் பிரிட்டானிய உலகெங்கணும் தீமையகற்றிப் புகழொளி வீசி ஆளுகின்றான். ஆனால், நூற்றுவருள் ஒருவனாகிய லான்ஸிலட், அரசி கினிவீயரிடம் கொண்ட தகா நட்பினால் இவ்வரிய தெய்வீக ஆட்சியில் இழுக்கும் குழப்பமும் ஏற்படுகின்றன. உட்பகை வனான மோட்ரெட் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்தரின் வீரரை அழித்து ஆர்தரையும் போரில் வெல்கிறான். ஆர்தர் மூன்று கன்னியரால் உலகில் கொண்டுவரப்பட்டதற் கிணங்க, அவர்களால் கொண்டு செல்லப்படுகிறான். ஆனால், உலகில் மறம் நலியும் போது மீட்டும் வருவதாகத் தன் இறுதித் தோழனாகிய பெடிவீயரிடம் அவன் கூறிச் செல்கிறான்.
7. பிற்காலப் பாடல்கள்
ஆர்தர் கதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கிடையில் 1864இல் ‘ஈனக் ஆர்டன்’ என்ற அழகிய நெய்தல் நிலக் கவிதை ஒன்று எழுதப்பட்டது. இதில் கதை மட்டுமன்றி உரை யாடல்களும் நடையும் சொல்லாட்சியும் விரிவுரைகளும் யாவும் நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருள்களிலிருந்தும் உரிப் பொருள்களிலிருந்தும் வழுவாது அமைந்திருப்பது பாராட்டுதற் குரியது. இதனுடன் திணையியல்பு மாறாத தன்மையில் ஒப்புமைப்படுத்தத் தக்க நூல் ஆங்கிலத்தில் மில்ட்டனின் ’ஆர்க்கேடியா’வும், கிரேக்க இலக்கியத்திலுள்ள சிறந்த முல்லை நிலக் கவிஞர்களின் பாடல்களும், தமிழ்ச் சங்க இலக்கியத்தைச் சார்ந்த முல்லைப் பாட்டு முதலியவையுமே யாகும். ஆனால் மற்ற இருவகை இலக்கியங்களிலும், மில்ட்டனின் கவிதையிலும் கூட, காதலும் திணைக்கு உரிமைப்படும்படி கூறப்படவில்லை. டெனிஸன் நூலில் காதலரும் காதற்கதையும் திணை வாழ்வை முற்றிலும் படம் பிடிக்கும் முறையில் வரையப்பட்டுள்ளன.
இதே காலத்தில்தான் ‘பூ’, ‘அலக்ஸான்ட்ரா அரசியின் வரவேற்புப்பா’ ஆகியவையும் ‘வடநாட்டுழவன்’ (பழைய நடை), ‘வடநாட்டுழவன்’ (புதிய நடை)-ஆகிய பல்வேறு வகைப் பாக்கள் எழுதப்பட்டன. மேற் குறிப்பிட்ட படி ‘அலக்ஸான்ட்ரா அரசி’ அரசியல் சிறப்புடையதாயினும், நாட்டு மக்கள் உள்ளத்திலும் நாட்டார்வம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்புவதாகும்.
‘வடநாட்டுழவன்’ எல்லைப்புற உழவர் வாழ்க்கையுடன் அவர்கள் பேச்சையும் படம் பிடிப்பது.
1876 முதல் 1892 வரை டெனிஸன் கருத்து நாடகத்தில் சென்றது. ஷேக்ஸ்பியர், மார்லோ ஆகியவர்களைப்போல ஆங்கில வரலாற்றை நாடக உருவில் தர அவர் முயன்றார். ஹாரால்டு (1876), பெக்கெட் (1899), மேரி அரசி (1875) ஆகியவையும் ’காடுறைவோர் (Foresters 1892)என்பதும் இத்தகைய நாடகங்கள்.
இறுதிக்காலத்தில் டெனிஸன் பழையபடி வாழ்க்கைத் தொடக்கத்தில் எழுதியதுபோன்ற சிறு பாக்களும் பாடல்களும் எழுத முனைந்தார். 1880இல் ‘பழம் பாடல்கள்,’ ‘டிரிஸியாஸ்’, ‘டெமிட்டர்’, ‘ஈனானின் இறுதி’ ஆகியவை எழுதப்பட்டன. பழம்பாடல்களில் இரண்டாவதாக ‘லாக்ஸ்லி ஹால்’ என்ற இன்னொரு பாடலும் ‘ரிவெஞ்ச்’ என்ற கடற்போர் பற்றிய நாட்டார்வ மூட்டும் சிறு பாடலும் ‘லக்னோவின் பாதுகாப்பு’ ‘ஆக்பர் கனவு’ ‘முதற்பூசல்’ ஆகிய பலவும் அடங்கியுள்ளன. ‘ஆக்பரின் கனவு’ சமய ஒற்றுமை நாடி வட இந்தியப் பேரரசர் ஆக்பர் அமைத்த பல் சமய மண்டலத்தைப் பற்றியது. ‘ஈனான்’ ‘ஈனக் ஆர்டன்’ போன்று எளிய வாழ்க்கையில் ஏற்படும் துயர்களின் உருக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
டெனிஸன் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் செய்திகள் மிகச் சில. அவையும் பொதுமைச் சிறப்புடையவையேயன்றிப் பிற ஆசிரியர்கள் வாழ்க்கைகளைப்போலத் தனிப்பட்ட சிறப்புடை யவை அல்ல. ஆனால், அவர் கவிதை பொதுமை யிலும் தனிமை யிலும் சிறப்புடையது. அவர் காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் - எழுத்துக்கெழுத்து பொன்னெடை மதிப்புடையவை யாகக் கருதப்பட்டன. அவர் இளமைக் காலப் பாக்களை விட அக்கால அறிவுலக வாழ்விலும் கருத்துக்களிலும் மூழ்கிச் செம் பாகமான கவிதை உருவில் தந்த அவருடைய பிற்காலப் பாக்களே அவர் நாளில் போற்றப்பட்டன. அந்நாளில் சிலர் கூறிய குறைகூட ‘மாடு’ முதலிய பாடல்களின் தலைமறிந்து காணப்பட்ட இளமை உணர்ச்சிகளை மட்டுமேயாம். ஆனால், அவர் காலத்துக்கு இப்பால் இக் கருத்துக்கள் ஆற்றலிழந்தன. அதோடு நீண்ட பாடல்களில் ஆற்றல் கெடாது பாடும் திறம் டெனிஸனிடம் இல்லை என்பதும் பிற்காலத்தில் நன்கு கவனிக்கப் பட்டது; படவே அவருடைய பிற்கால இடைக்காலப் பாக்களின் மதிப்புச் சற்று உயர்ந்து தாழ்ந்து மாறத் தொடங்கிற்று. அப்போதுதான் அவர் இளமைக்காலப் பாட்டுக்களின் என்றும் மாறா இயற்கைச் சிறப்பு வெளிப்பட்டது. உண்மையில் ‘முன்னைய நினைவுகள்’ ‘மாடு’ முதலிய நீண்ட பாக்கள் எழுதியிராவிடினும்கூட டெனிஸன் கீட்ஸுடன் ஒப்பாக வைத்தெண்ணத்தக்க இயற்கைப் பெருங் கவிஞரேயாயிருப்பர் என்பது உறுதி. அது மட்டுமன்று; கீட்ஸிடமில்லா இரு பெருஞ் சிறப்புக்கள் அவரிடம் உள்ளன. அவர் போன்ற கலைஞர் தம் கவிதைகளை ஓயாது செப்பனிட்டுத் திருத்தி இனித் திருத்த முடியா நிறைவு தருபவர். அதோடு புதிய அறிவியல் ஆராய்ச்சியின் திறங்கண்டு அதனைக் கவிதை உலகிற்குத் தருபவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு மாபெருங் கவிஞர் நிறைந்த நூற்றாண்டாயினும் அதில் அவர் நடுநாயகமாய் எல்லா வகைப்பட்ட கவிஞருக்கும் இணைப்புப் பாலமாய் விளங்கினார் என்பதில் ஐயமில்லை
** மணிவிழா வாழ்த்துரை**
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம்.
தமிழின் மூலத்தை ஆய்ந்தவர்
அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார்.
மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”…. பெரிய அறிவு!" என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்!
இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத்துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார்.
சுதிக்குள் பாடும் இசைவாணர்
அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார்.
ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார்.
அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள்.
நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது!
இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.
கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள்
மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்!
இங்கோ… … ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது!
இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்!
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும்.
அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப்பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!
இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதி யிருக்கிறார்.
மறதி ஆகும் மரபு
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.
‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது.
‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது.
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை.
நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்!
உண்மை வரலாறு உருவாகட்டும்
இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும்.
இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்.
** (சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற**
** பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார்**
br அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி
** அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய**
** பாராட்டுரை.**
** நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.)**
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் முத்துக்கள் 10
தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1. குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம், சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.
2. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றா. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.
3. திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணி யாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.
4. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.
5. சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.
6. தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சி களில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் குமுரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.
7. ‘சரித்திரம் பேசகிறது’ ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.
8. அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.
9. ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றம், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.
10. அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.
** அப்பாத்துரையார் அறிவைப் பேணாத அரசு!**
அறிவு பல துறையினது; எனவே அறிஞர்களும் பல துறையினர் ஆவர். தமிழ் எனும் மொழித்துறையும் அதன் புலமைத் துறையும் பற்பல. தமிழில் கலைகளும், பண்பியல்களும், புறத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். தமிழின் மொழியியலும், சொல்லியலும் ஒலியியலும் அதன் அகத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். இசை, இயல், நாடகம் என்பன கலைத்துறை அறிவு நிலைகள். அவற்றுள் இலக்கியமும் இலக்கணமும் இயல்துறையைச் சார்ந்தவை. அறநூல்களும் வாழ்வியல் நூல்களும் பண்பியலைச் சார்ந்தவை. மொழியியலும் அது சார்ந்த இனவியலும் வரலாற்றைச் சார்ந்தவை. இன்னோரன்ன பலதுறைத் தமிழ் அறிவியலில் தனித்தனித் துறையறிவும், பல்துறை அறிவும் சான்ற பேரறிஞர்கள் பலர் அன்றுந் தேன்றினர்; இன்றுந் தோன்றி இருந்து சிறந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே படித்தாய் வளர்ந்தவருமிலர்; வாழ்ந்தவரும் இலர். அவர்களை அடையாளங் கண்டு கொண்டவரும் கொள்பவரும் மிகச் சிலரே!
வாழ்க்கை என்பது வெறும் உயிர் வாழ்தல், பொருளியல் துய்ப்புகளில் மேம்படுதல் என்பன மட்டுமே பொருள் பெறுமாயின், அறிவு வாழ்க்கையே பொருளற்றதாகப் போய்விடும். அறிஞர்களோ பிறவியிலேயே உயர் உணர்வு பெற்றவர்களாக, வாழ்வியலில் அக்கறை கொள்ளாமல், அறிவுத் துறைகளிலேயே தம்மை மூழ்கடித்துக் கொண்ட முழு மாந்தர்களாக வாழ்ந்து சிறப்பவர்களாவர். எனவே அன்றும் இன்றும் என்றும், வறுமை அவர்களுக்கு உயிருடைமையாகவே உள்ளது.
அவ்வறிஞர்கள் வரிசையில் நம் தமிழறிஞர்கள் தொன்று தொட்டு வறுமையிலேயே செம்மையைக் கண்டவர்களாக இருந்து வருவதை வரலாறு உறுதி கூறும். அறிவு முனைப்பால் முழுமை பெற்றவர்களாதலின், அவர்கள் தம் ஊனுடம்பு ஓம்பும் வெற்று வாழ்ககைக்காக, எதற்காகவும் எவரிடத்தும் எப்பொழுதும் கூனல் எய்தாக் கொள்கையாளர்களாக இருந்து, தாம் பேசும் தண்டமிழ்க்கும் தாம் வாழும் இனத்துக்கும், தாம் பிறந்த நிலத்துக்கும் அரிய பல தொண்டுகளாற்றி, இறுதி வரை, வாழ்வியலுக்கு உறுதி பயப்பதாம் பொருள் நிலையில் ஓர் இம்மியும் உயராது, வறுமையிலேயே வாழ்ந்து வெறுமையிலேயே மறைவோராக இருக்கின்றனர்.
அவ்வருந்தமிழ்ச் சான்றோர்களுள், அண்மைக் காலத்தே நம்மிடையே தோன்றியிருந்து அரிய பல அறிவுத் தொண்டாற்றி, இறுதியில் கலங்கிய நெஞ்சொடும், கண்ணீர் விழியொடும், காலச் சுழலில் மாய்ந்து போனவர்களான இரு பெரும் புலவர்கள் என்றென்றும் இவ்வினமும் நிலமும் நினைக்கத் தக்க சான்றோர்கள் ஆவர். அவர்கள் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும் ஆவார்கள். இவருள் பாவாணரை என் வாழ்வில் நாற்பத்தைந்தாண்டுக் காலம் அருகிருந்து பார்த்தேன்; பன்மொழிப் புலவரை கடந்த முப்பதாண்டுகளாக என் அகத்திருந்து பார்த்தேன்.
இவர்கள் இருவரும் இவ்விருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேரு மலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும், குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெரு மக்கள்! மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்களை விண்மீன்கள் என்றால், இவர்கள் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணாளர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டுத் தவம் இயற்றிய தீந்தமிழ்த்துறவோர்கள்.
பாவாணர்க்கும் பன்மொழிப் புலவர்க்கும் நெருங்கிய உளத்தொடர்பும், கொள்கைத் தொடர்பும், அறிவுத் தொடர்பும் உண்டு. உழைப்பில் இருவரும் ஊக்கம் இழக்காத ஓர் ஏர் உழவர்கள், யாருக்கும் அஞ்சாத வல்லரிமாக்கள்! தண்டமிழ்த் தாயின் தவப்பெரும் புதல்வர்கள்; வறுமையில் செம்மை காத்த பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட நல் உரவோர்கள்!
தமிழகத்தில் பொதுவான அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் பற்பலர் அவ்வப்போது தோன்றுகின்றனர்; பல அருஞ்செயல்களைக் கூடச் செய்கின்றனர்; செய்தும் வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர், அறிவுத் திறத்தினர் அல்லர். அவரவர்களுக்கு அவரவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் ஒரு பிழைப்புக் கருவி. அவர்கள் தமிழைப் படித்தனர்; அல்லது கற்றனர்; அதில் புலமை பெற்றனர்; அல்லது ஆசிரியத் தன்மை பெற்றனர்; வாழ்வுற்றனர். ஆனால், பாவாணரைப் போலும், அப்பாத்துரையார் போலும் தமிழ் அறிஞர்களும் பெரும் கொள்கைப் புலவர்களும் எப்பொழுதோ ஒருமுறை, ஓரிரு கால கட்டத்திற்குள்தாம் பிறந்து தம்மால் தமிழையும் தமிழால் தம்மையும் மேம்படுத்தும் அரும்பெறல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அல்லது ஆற்றி வரும் தொண்டுக்குப் புலவர்கள் பிறர் அத்தனையரும் இணைந்து ஆற்றிய அல்லது ஆற்றிவரும் தொண்டும் ஈடாகாது என்று உறுதியாய் மெய்ப்பித்துக் காட்ட முடியும்.
அத்தகைய கொள்கைப் புலவோர்கள் தமிழுக்கு ஆற்றியது தான் - ஆற்றி வருவதுதான் தொண்டு-என்னும் பெருமை பெறக் கூடியது. புறநிலையில் அவர்போல் வைத்து எண்ணக் கூடிய புலவர்கள் பிறர் செய்வது பணி; தமிழ்ப் பணி! அல்லது ஆசிரியப் பணி; பேராசிரியப் பணி! எனவே தமிழும், தமிழினமும் தமிழ்நாடும பாவாணர், அப்பாத்துரையார் போலும் தனிமுதல் பேராசிரியர்களால் - அவர்கள் வாழ்க்கையையே ஈடு வைத்து ஆற்றிய தொண்டால் - பெருமை யுற்றன; நிலைமை பெற்றன; சிறப்புப் பெற்று வருகின்றன.
இவர்களுள் பாவாணர் தமிழ்மொழி ஆய்வில் தனிக்குன்றம் எனச் சிறந்து விளங்கினார். பன்மொழிப் புலவர் திராவிட மொழி ஆய்விலும் வரலாற்றிலும் தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் மேம்பாடு உறச் செய்தார். ஆனால் நம் நெடு வரலாற்று மூடக்கடைப்பிடியால் இருவரும் குன்றின் மேலிட்ட விளக்காக வாழாமல், குடத்துள் சுடர்ந்த விளக்குப் போல் நலங்குன்றி, வளங்குன்றி வறுமையிலேயே பெருமூச்செறிந்து உயிர் தவிர்க்கலாயினர். இது கழிபெரும் இரங்கல்! நாம் கழித்துக் கட்ட வேண்டிய புலமைப் புறக்கணிப்பு! இப்பிழைப்புக்கு நாமும் நம்மையாளும் அரசும் பெருந்தண்டனை ஏற்கத் தக்கவர்கள்! நாணித் தலைகுனிய வேண்டியவர்கள்!
பாவாணர் மறைந்த பொழுது அவர் செய்ய வேண்டிய பணி, முற்றுப் பெறாமல் பரந்துபட்டு நின்றது. அவர் ஏறத்தாழ இருபத்தைந்து நூல்கள் எழுதி இத்தமிழுலகு பயன்பெறத் தந்து சென்றார். ஆனால் பன்மொழிப் புலவரோ ஏறத்தாழ நூற்று எண்பது நூல்களுக்குப் பேராசிரியராக விருந்து அறிவாளுமை செய்து மறைந்தார். இருவரும் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய அறிவு நூல்கள் பல உள. அம் முடிக்கப்பெறா நூல்கள் இவ்விருவர் பாங்கிலிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெறாமற் போனது நம் போகூழே! நாமேதாம் அவர்கள் தம் பணியில் முற்றுப் பெறாமற் சென்றதற்கு முழுக் காரணர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும். இது நமக்கு மட்டுமன்று. நம் மொழிக்கு இனத்திற்கும் நாட்டிற்கும் நாமே ஏற்படுத்திக் கொண்ட பெரும் பேரிழப்பாகும்! எதிர்காலம் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது.
நம் பெருமைக்குரிய பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்கள் பாவாணர் மறைந்த எட்டாண்டுகள் கழித்து மறைந்துள்ளார். பாவாணர் மறைந்த பின்னை நாமும் நம் அரசும் விழித்துக் கொண்டிருந்தாலும் நம் பன்மொழிப் புலவரை இன்னும் சில காலத்திற்குப் புரந்து பேணி அவர் எச்ச அறிவாட்சியை நீட்டித்திருக்க வழி செய்திருக்கலாம். அதன் வழி அவர் அறிவால் இம்மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டிய அறிவுக் கருவூலங்களைக் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாம் தாம் போற்றிக் கொள்ள வேண்டிய பெரும் புலமையை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, அப் புதை மேடையில் நின்று மறைந்து போன புலவர்க்குப் போற்றுதலுரையும், விழா வேடிக்கையும் செய்து நிறைவுறுவோர்கள் ஆயிற்றே! என் செய்வது?
இனி, பன்மொழிப் புலவர் தம் வாழ்வியல் நிலைகளை நன்றியுடன் நினைந்து வியந்து போற்றுதல் செய்வோம்.
புலவரவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் சிற்றூரில் 24.6.1907 ஆம் ஆண்டுப் பிறந்தார் பெற்றோர் முத்தம்மாளும் காசிநாதரும் ஆவர். சிறு அகவைப் பொழுதிருந்தே தமிழுணர்வும் தமிழின உணர்வும் அவருள் காழ் கொண்டிருந்தன. எதையும் விரைந்து கற்கும் ஆர்வமும், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் திறமும் இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவராகையால், அவர் தமிழுடன் ஆங்கிலம், சமசுக்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளையும் பள்ளிப் பருவத்திலேயே எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்திலேயே மதிதகு இளங்கலை ஆங்கிலப்பட்டம்B.A.(Hon’s) பெற்றார். பின்னர் தமிழில் முதுகலை (M.A.) தேர்வுற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெறுவதற்கு முன்னரேயே இந்தியில் விசாரத் (B.A.வுக்குச் சமமானது) பட்டம் பெற்றது பெருவியப்பே!
பின்னர், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி போலும் திராவிட மொழிகளையும், அரபு, சப்பான் ஈபுறு, மலாய் ஆகிய ஆசிய மொழிகளையும், பிரெஞ்சு, செர்மன், உருசிய, இத்தாலி முதலிய ஐரோப்பிய மொழிகளையும் ஆர்வத்தால் தொடர்ந்து கற்றுப் பன்மொழிப் புலவர் என்ற தனிச் சிறப்புப் பெற்றார். தமிழகத்தில் பன்மொழிப் புலவர் என்று அழைக்கும் தகுதி பெற்றவர் நம் பெருமதிப்பிற்குரிய கா. அப்பாத்துரையார் ஒருவரே. இனி வருங்காலத்தில்கூட இப்பன்மொழிப் புலமைத் தகுதிபெறம் ஒருவர் தோன்றுவார் என்பதற் குறுதியில்லை. ஒரு மொழிப் புலமை எய்துவதற்கே ஒருவர் வாழ்நாள் முழுமையும் செலவிட்டாலும் போதாது என்னும் நிலை இயல்பானதாயிருக்க, பன்மொழிப் புலமை பெறுவதென்பது செய்தற்கரிய செயலே அன்றோ?
நம் பேரறிஞர் அவர்கள் தொடக்கத்தில் அரசுப் பணியாளர், ஆசிரியர், இதழாசிரியர் எனப் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நூலாசிரியர் என்னும் நிலையில் இவர் தமிழகத்தின் தனிநிலைப் பேராசிரியராக விளங்குவது பெருமைப் படத்தக்கது. இதுவரை வெளிவந்த அவருடைய நூற்களே ஏறத்தாழ 180 அளவில் இருக்கும். (சரியான கணக்கு எடுக்கப் பெற்று வருகிறது.) இலக்கியம், வரலாறு, மொழியாய்வு, மக்கள் வரலாறு, திருக்குறள், சமயம், மெய்ப் பொருளியல், ஆராய்ச்சி முதலிய பல்வேறு துறைகளில் பல அரிய நூல்களை இத் தமிழ் மொழிக்கும், இம்மக்களுக்கும் ஆக்கி வழங்கிய பெரும் பேராசிரியர், அவர்.
அவர் எழுதிய நூல்களுள் மிக முகாமையானவை; மொழியியலில், தென்மொழி, வளரும் தமிழ், மொழிவளம், India’s Language Problem (மறைமலையடிகளாரின் அரிய முன்னுரையைக் கொண்ட ஆங்கில நூல்), கால்டுவெல் ஒப்பிலக்கணம் முதலியன; வரலாற்றியலில், தமிழக வரலாறு, இந்திய நாகரிகத்தின் திராவிடப் பண்பு, வருங்காலத் தமிழகம், குமரிக்கண்டம், தென்னாடு, தமிழ் முழக்கம், தமிழன் உரிமை, இதுதான் திராவிடநாடு, தாயகத்தின் அமைப்பு, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், இருகடற்கால்கள், இந்திய மக்கள் விடுதலை வரலாறு, சரித்திரம் பேசுகிறது. கொங்குத் தமிழக வரலாறு (மூன்று பகுதிகள்), கெஞ்சிக்கதை முதலியன; மாந்தவியலில், நல்வாழ்வுக் கட்டுரைகள், வாழும் வகை, சங்க காலப் புலவர், சமதர்ம விளக்கம், இல்லறமாண்பு, சங்க இலக்கிய மாண்பு, மக்களும் அமைப்புகளும், தென்னகப் பண்பு, முதலியன; இலக்கிய வியலில், சங்க இலக்கிய மாண்பு, செந்தமிழ்ச் செல்வம், சிலம்பு வழங்கும் செல்வம், உலக இலக்கியங்கள். மேனாட்டு இலக்கியக் கதைகள் (இரண்டு பகுதிகள்), அன்னை அருங்குறள் முதலியன. திருக்குறள் தொடர்பாக - வள்ளுவர் நிழல், திருக்குறள் மணி விளக்க உரை (6 பாகங்கள்) திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, (ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் (Mind and Thought of Thiruvalluvar) முதலியன; அறிஞர்கள் வரலாற்று வரிசையில், ஆங்கிலப் புலவர் வரலாறு. அறிவுலக மேதை பெர்னார்டுசா, ஓவியக் கலைஞர் இரவி வர்மா, சேன்அயர், பெஞ்சமின் பிராங்ளின், அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன், தளவாய் அரியநாதர், கிருட்டிண தேவராயர், சுபாசு சந்திரபோசு, வில்லியம் கூப்பரின் கடிதம், டேவிட் லிவிங்சுடன், ஐதர் அலி முதலியன; பொதுமை நூல்கள்-குடியரசு, பொதுவுடைமை, சமூக ஒப்பந்தம், முதலீடு (Capital), போதும் முதலாளித்துவம், மே விழா முழக்கம், உலகம் சுற்றுகிறது, உயிரின் இயல்பு, அறிவுக்கடல், இன்பத்துள் இன்பம் முதலியன; கதை நூல்கள் - இரு நகரக் கதை, சேக்சுபியர் கதைக் கொத்து (நான்கு பாகங்கள்), விருந்து வரிசை, மாமனார் வீடு, முத்துமாலை, கடல் மறவர், கல்மனிதன், துன்பக்கேணி, நூர்சகான், மன்பதைக் கதைகள் (6 பாகங்கள்), விந்தைக் கதைகள் (4 பாகங்கள்), யாழ் நங்கை, மலைநாட்டுமங்கை, யுத்தக் கதைகள் முதலியன.
இனி, எழுத்தாக்கக் கொடுமுடியாகத் திகழும் நூல்கள், இவருடைய திருக்குறள் மணிவிளக்க உரை-6 பகுதிகளும், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பும் (ஏறத்தாழ 1000 பக்கங்கள்), ஆகும். இனி, அவர் துணையாசிரியராக இருந்து தொகுத்தது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான ‘ஆங்கிலத் தமிழ் அகராதி’ ஒரு செயற்கரிய செயலாகும். இதன் தலைமைத் தொகுப்பாசிரியராகத் திகழ்ந்தவர் மறைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பா. அ. சிதம்பரநாதனார் என்றாலும், அதன் முழுப் பணியும் நம் பன்மொழிப் புலவர் அவர்களையே சாரும் என்பதை அறிந்தார் அறிவர். இனி, இதன் அடிப்படையில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த ‘ஆங்கிலத் தமிழ்க் கையகராதி’ என்னும் ஏறத்தாழ 700 பக்கச் சில வெளியீடு மிகு பயனுடைய அரிய அறிவு நூலாகும்.
இத்தனை நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருந் தாலும், இவற்றாலெல்லாம் இவர்க்குக் கிடைத்த அறிவுக் கூலியோ மிக மிக எளிய சிறு சிறு தொகைகளே! இவர் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பதிப்பகங்களால் இவர் பெரிதும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர் நூல்களை வெளியீடு செய்து கொள்ளையடித்த சில பதிப்பகங்கள் இவர்க்கு அறிவுக் கூலியாகக் கொடுத்தவை 100, 200 உருபாக்களும், மிகச் சில வெளியீட்டு நூல்களுமே! இவரின் கழக, ஆங்கிலத் தமிழ்க் கையரகராதிக்கு, அப்பதிப்பகத்தார் இவருக்குக் கொடுத்த தொகை வெறும் 300 உருபாவே என்றால், நம் நாட்டு வணிக நூல் வெளியீட்டகங்கள் புலவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு புலமையை விலை பேசும் நிலையினை என்னவென்று சொல்வது? இங்கு எப்படி அறிவு வளரும்? அறிஞர்கள் எப்படி வாழமுடியும்? கொள்ளையில் தலையாய கொள்ளை அறிவுக்கொள்ளையே! நம் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் தனிநிலை வாழ்க்கை மிக மிக இரங்கத்தக்கது என்பதைத் தெரிவிக்க மிகமிக வருத்தப் படுகிறோம். இவரின் மூளையை உறிஞ்சிக் கொழுத்த வெளியீட்டாளர்கள் இன்றைக்குப் பெருஞ்செல்வம் படைத்த பெரும் முதலாளிகளாய் உள்ள நிலையில், இவர் மறைந்த காலை வீட்டாருக்கு இவர் வைத்துச் சென்றது ஏறத்தாழ ஐந்து இலக்க உருபா கடன் சுமையே என்றால் இவரின் அவல வாழ்க்கையை எண்ணி எவ்வாறு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்?
இவர் உயிரோடிருக்கும் பொழுது இவருக்குக் கிடைத்த பெருமைகள் பல. ஆனால் அவை வெறும் பெருமைகளும் பட்டங்களும் பாராட்டுகளுமே! 1961இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக இறுதி வரை இருந்துள்ளார். 1970இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புறுப்பினராகக் கலந்து கொண்டார். பின் மதுரையில் நடந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் இந்தியத் தலைமையமைச்சரால் பொற்கிழியும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1973இல் செந்தமிழ்ச் செல்வர் பட்டமும், சேலம் தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் சான்றோர் பட்டமும், தமிழன்பர் பட்டமும் பெற்றார். 1981 சனவரி 26இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி பட்டமும் நம் பன்மொழிப் புலவர்க்கு அளிக்கப்பெற்றது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவர்க்கு திரு.வி.க. விருதையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதே ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் இவருக்குப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தையும் அளித்தது. ஆனால், இவை எல்லாவற்றினும் பெருமைப் படக் கூடிய செய்தி இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலை, அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைத்துள்ளதே!
இத்தனைப் பட்டங்களும் பெருமைகளையும் பெற்றுக் கொண்ட ஒரு பெரும் புலவர் அவற்றை வைத்துத் தமிழ் வணிகம் செய்யத் தெரியாத காரணத்தால், வாழ்வின் இறுதிக் கட்டம் வரை வறுமையிலேயே உழன்றார் என்பதும், இவர் மறைந்த பின் இவரின் விலைமதிப்பற்ற அறிவுடம்பும், எளிய ஓர் ஏழை மகனுக்கு வாய்க்கும் பூமலர்ப் பாடையில் கூட இன்றிப் புனைவு செய்யப் பெறாத ஒரு வெற்றுத் தென்னங்கிற்றுப் படுக்கையிலேயே கிடத்தி வைக்கப் பெற்றுத் தூக்கிச் சென்று சாவண்டியிலேற்றப் பெற்றதென்பதும் எத்துணைக் கொடுமை யான செய்திகள் என்பதை எண்ணிப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். இனி, இதனினும் கொடுமை இவர் பொதுச் சுடுகாட்டில் எல்லா ஏழை எளியவர்களைப் போலவே வெறும் எருவாட்டியால் வைத்துத் தீ மூட்டப்பெற்றது. ஐயகோ! இன்றிருந்து நாளை ஒன்றுமில்லாமற் போகும் அரசியல் தலைவர்களுக்குக்கூட கடற்கரை போலும் சிறப்பிடங்களில் புதைக்கப்பெறும் வாய்ப்பும், ஆரவாரப் புதை மேடைகளும் மணிமண்டபங்களும் கிடைப்பது இயல்பாய் இருக்க, அப்பாத்துரையார், பாவாணர் போலும் பேரறிவுப் பெருமக்கள் பொது இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் புதைக்கப் பெறுவதும், சுடப் பெறுவதும் எத்துணை கொடுமையானவை! இங்கிலாந்தில் அறிஞர்கள், புலவர்கள், பாவலர்களுக்கு West Minister Abbey என்னும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய அடக்கவிடம் இருப்பது இங்கு சிந்திக்கற் பாலது!
அறிஞர்கள் மறைந்த பிறகு அவர்களை வெகுவாகப் போற்றிப் பேசுவதும், பாராட்டி வானளாவப் புகழ்வதும் நம் தந்நலத்தையும் மன இறுக்கத்தையுமே காட்டும். அறிஞர்கள் தனியாக வாழ்ந்து வளர்ந்து விடுவதில்லை. அனைவரும் குடும்பம் என்ற வயலிலேயே வளர்கின்ற பயிர்களாகவே இருப்பர். எவ்வளவுக்கெவ்வளவு அறிஞர்கள் தம் தனிநலத்தை மறந்து, பொது நலனுக்காக - மக்களுக்காக - தாம் பிறந்த மொழிக்காக - இனத்துக்காக - நாட்டுக்காகத் தங்களைப் பலியிட்டுக் கொள்கிறார்களோ - ஈகப்படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குடும்பங்கள் நசிந்துப் போகின்றன என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்! இந்த உண்மை நம் பன்மொழிப் புலவர் வாழ்வில் நூற்றுக்கு நூறு மெய்யாகி நிற்கிறது.
அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு ஏராளமான கடன் சுமைகள். அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை அரசும் மக்களும் தாங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவருடைய நூல்களை மறுபதிப்புச் செய்தும் அச்சாகாத நூல்களை வெளிப்படுத்தியும், அவற்றை அரசுடைமையாக்கியும் அவருடைய அளப்பரிய அறிவுக்கு அரண் செய்தல் தமிழரசின் கடமையாகும்! அதன் வழி, தன்னை உண்மையாகத் தமிழ் நலமும் தமிழர் நலமும் கருதும் அரசாக மெய்ப்பித்துக் காட்டுதல் வேண்டும். அல்லாக்கால் எதிர்காலம் இன்றைய அரசையும் மக்களையும் குறைகாணவும் குற்றங்கூறவுமே செய்யும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்! வாழ்க பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் அரும் புகழ்!
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)
- தென்மொழி
** பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்****
**** (24.7.1907-26-5-1989)**
‘அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை ’முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும்.
அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர் களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட ‘அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்து விட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள்,
நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார்.
ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம்.
குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், ‘குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார்.
பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம்.
’ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது.
தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர்.
1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன்.
சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், ‘திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், ‘பாரத தேவி’, ‘சினிமா உலகம்’, ‘லோகோபகாரி’, ‘தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன்.
இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி ‘காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், ‘குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன்.
நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன்.
இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன்.
அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப் பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங் களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன்.
இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன்.
இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது.
1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன்.
அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது.
இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான ‘லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், ‘விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது.
பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, ‘இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.
1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது.
ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது.
தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி ‘ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார்.
இயக்கத் தொடர்பு
அப்பாத்துரையாரின் முன்னோர் ‘பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம்.
தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர்.
இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது.
தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், ‘பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது.
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், ‘விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார்.
சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு.
தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் ‘தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் ‘திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான்.
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, ‘திருக்குறள் மணிவிளக்கஉரை’ ‘காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர்.
அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார்.
-முனைவர் இளமாறன்
யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037,
சூன் 2006, பக். 18-22
** ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு…?**
வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
விடை: நிறைய படிக்க வேண்டும். ‘இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் ‘இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று.
பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின.
இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும்.
‘நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது!
திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்!
‘ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் ‘ஒட்டகம்’ என்பதையும், ‘தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, ‘ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்!
காதல் திருமணம்
செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்!
தமிழுக்காக மயக்கம்
ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது.
சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு
பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார்.
முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. ‘ஞான வாசிட்டம்’, ‘கைவல்ய நவநீதம்’, ‘நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன்.
முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார்.
அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று.
இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு
‘முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே!
விடை: ’சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர்.
’இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்" என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.
(குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.)
- நேர்க்காணல் ‘முகம்’ மாமணி
யாதும் ஊரே மாத இதழ்,
வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31
கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி
பன்மொழிப் புலமை
தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர்.
தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர்.
இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது.
திருக்குறள் உரை
அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார்.
அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு ‘முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார்.
1965 முதல் 1971 வரை ‘முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது.
ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை
1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது.
தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்!
திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்.
பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் ‘தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது.
வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார்.
“தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். ‘தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே" என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும்.
தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது-
பிறையெனத் தேய்ந்து நின்ற
…….. ………… ………..
பயிரது காக்கும் வேலி
படர்ந்ததை அழித்ததே போல்
செயிருறு சமய வாழ்வு
சீருற அமைந்த பேதம்
அயர்வுறு மனித வாழ்வை
அழித்த தீங்கிதனை நீக்கி
உயிருறச் செய்த கீர்த்தி
ஓங்கு சித்திரைக் கோ மாற்கே!
என்று கூறுகிறார்.
வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார்.
‘தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது.
ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு ’மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே.
பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப் பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார்.
வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார்.
"கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது.
இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது".
1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார்.
வான்புகழ் மணிமேகலை
மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி ‘மணிமேகலை’, ‘வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார்.
இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் ‘இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் ‘துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார்.
உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி ’புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது" என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
யாதும் ஊரே மாத இதழ்,
வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42
கணியம் அறக்கட்டளை
கருத்துகள்
கருத்துரையிடுக