மனதேசப் பாடல்
பொது அறிவு
Backமனதேசப் பாடல்
ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன்
உள்ளடக்கம்
மனதேசப் பாடல்
ஆரோக்கியக்குறிப்பு
பயணிப்போமா
ஆசிரியர்கள் உரை
நூல் அறிமுக உரை
1. நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு - சோனி எம் போனி
2. கிரிவலம் செல்வோமாப்பா? - குண்ட் முனீஸ்ராஜ்
3. நிற்காத கரைச்சலப்பா ! - செட் புரோட்டாக்காரன்
4. சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ! - மெட்ரோ கார்னர் ‘முனி’
5. உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன் - ஹனிரியாஸ்
6. பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும் - கஸரக்கட்டன்
7. விடாத கான்பிடன்ஸ் விஸ்வரூப விக்டரி - தைவான் மேட்
8. மறைப்பதற்கு ஒன்றுமில்லை - பௌர்ணமி பித்தன்
9. கவிதை கொஞ்சம்… காபி கொஞ்சம் -
10. லூஸ் அண்ட் டைட் தொகுத்தளிக்கும் - காபி. காரம்.. கச்சேரி….
11. ஷேரிங் முக்கியம், டீச்சர் சொல்லலியா சார்..!!! - ராசகெழங்கே
12. இருபது ரூபா குடு(த்த) கதை - ஸ்டீபன்ஸ்பீல்கந்தன்
13. எப்படி உணருகிறீர்கள்? - 70எம்எம் குஞ்ஞுக்குட்டன்
14. கங்காணிச்சித்தனோடு ஒரு பயணம் - பழனான்
15. தேநீர் கோப்பைகளும், விறுவிறுப்பான கதைகளும் - இருளொளி
16. மதுபானக்கடை ரிட்டர்ன்ஸ் - சிண்டன்
17. அறிதலின் கணம் - ஸமீரா சித்திக்
18. பக்கத்துவீட்டுப்பெண் - குஸ்கா ராஜ்
19. சிலம்பக்குச்சியினை எடுத்த கலைத்தாய் - தத்துக்கொழந்த
20. ஆண்டன் செகாவிற்கு விருது
21. கட்டிக்கொள்ள வேண்டும் - கேய்
22. தாம்பூலப்பை ரெண்டு வேணுமப்பா!!! - சித்தனடிமை
23. மனசாட்சி மீது ஒரு பிடி மண்ணள்ளிப்போடு!!! - பெருமாநகரப் பார்ப்பனன்
24. கவிதை குண்டர்கள்
25. தீர்க்கதரிசனம் - அஷ்டமுனி
26. செய்திகள் வாசிப்பது… - சவுண்ட் நேசன்
27. வீட்டு முறை உணவுன்னா - இடிகம்சன்
28. விருது எனக்கு சோளக்கருதுய்யா - வாருகாலன்
29. பொதுநலப்போராளி கலைத்தொப்பி விடுவது பீட்டரா? புகையா? - லோக்கல் ப்ரூஸ்லீ
30. தொக்கூ இருக்குதா? இயங்குதா? - கெடமல்லன்
31. தேநீர்க்காரரின் வெற்றி - ஆர்.எஸ்.எஸ்
32. தங்கமீன்களாவோமா - ஆதபன்
33. காட்டுப்பள்ளி எப்போது திறப்பீர்கள் ஐயா? - ஜரிகண்ட்ராஜ்
34. லூஸ் அண்ட டைட் தொகுத்தளிக்கும் காபி காரம் கச்சேரி
35. ஹிட்லருக்கும், போடிக்குமான உறவு - ரோஸ்பெட்டி
36. ஜெய்ராம்! ஜெய்பீம்! - ஈரோஸ்டார்
37. வர்க்கீஸ்குரியன் குறித்த பதிவுகள் - ஈரோட்டான்
38. கலைத்தொப்பியின் வாசலில் நிற்கிறேன் - ஸமீரா
39. மிஸ்டர் தேசிய லேகியம் - ஜெயதேவன்
40. பேப்பர்காரனின் வெற்றி - ஸமீரா ஜூனியர்
41. நம்பிக்கை இழந்த தேசியத்தொண்டர் - குண்டுமணி
42. ஒரு கைமண்தான்! - ராய்ட்டர்
43. காபி காரம் கச்சேரி - ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட்
44. கலைத்தொப்பியும், கூழாங்கல்லும் - சூரணக்குப்பி
45. வன்முறையான உணவாளன் - ஷார்ப் மணி
46. இணையவெளி - சூரமொக்கை
47. உற்றுப்பார்த்திருந்த இரவு - சித்தபிரான்
48. இருத்தலில் இருந்து இறப்பிற்கு எப்படி பயணிப்பது? - அட்டாதுட்டி
49. தொக்கூ ஒரு சுருக்கமான அறிமுகம்: தத்துவங்கள், வழிமுறைகள், தந்திரங்கள், தப்புவது குறித்த முழுமையான கையேடு - ஈகிள்ஸ் ஐ புலனாய்வுப்பிரிவு
50. காபி..காரம் கச்சேரி - ஆக்கம்: லாய்ட்டர் லூன்
51. என்னவொரு தேடல் சாமி! - ஒரு துப்பறியும் படலம் - ஈகிள்ஸ் ஐ ராமதாஸ்
52. மாளாத புரட்சியும், புளியஞ்சோற்று மூட்டையும் - ஏக்தமிழன்
53. நெஞ்சதிரும் ஒலி - கலாமூதி
54. தொன்மை வழி சோமபானம் தயாரிப்பது எப்படி? - மொட்டச்சங்கிலி குட்டி
55. நிராகரிக்காதீங்கடா டேய்! - நிராகரித்தது யார்? எப்படி? எதற்கு? ஓர் அலசல் பகுதி- ஜகஜ்ஜாலன்
56. கோமாளி மேடை எதற்கானது??? - பழனிநாடார்பேரன்
57. நடுகல் மனிதன் - பழனிச்சாமி ஜூனியர்
58. கங்காணிச்சித்தன் பற்றிய கடுதாசி - ஆட்டுக்குட்டி ‘நியூஸ்’ பீட்டர்
59. கால்களுக்கு விருது - துணுக்குப்பட்சி
60. அவென்ஞ்சர் பயணம் - மெட்ரோடூரிஸ்ட் மணி
61. வானமே கூரையான கதை சொல்லவா? - தூக்குச்சட்டிகொமாரு
Free Tamil Ebooks – எங்களைப் பற்றி
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்
1
மனதேசப் பாடல்
ஆக்கம்:ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன்
தொகுப்பு: அரசுகார்த்திக் , கிறிஸ் டோல்ட்
வகை: குறுங்கட்டுரைகள்
ஆக்கத்தலைமை: ராஜா சம்மார், கார்த்திக் வால்மீகி, ரஞ்சன் மஹர்
பதிப்பாளர் : தி ஆரா பிரஸ், இந்தியா.
தட்டச்சுப்பணி: அச்சுதை, ரோஸலின் ஸ்ரைக்
புகைப்படம் உதவி: பின்ட்ரெஸ்ட் இணையதளம்.
அட்டைவடிவமைப்பு: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா.
ஒருங்கிணைப்பு: ஹெரிடேஜ் தமிழன்,கித்தான் முத்து,ஸ்பீடு செந்தில்.
வலைப்பூ அனுசரணை: Komalimedai.blogspot.in
மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com
கிரியேட்டிவ் காமன்ஸ் 4.0 2014 உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம். இவ்வெழுத்துக்களை பயன்படுத்தும் போது வலைப்பூ முகவரி, மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும்.
எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை
இப்பதிவில் காணப்படும் குறியீடுகள் பெயர்கள் யாரையேனும் சுட்டிக்காயப்படுத்துமானால் அது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே. தொடர்ந்து இவ்வெழுத்தை படியுங்கள். சிறந்த செவ்விலக்கிய தன்மையை அடைய முனையும் எல்லையில்லாத்தன்மை கொண்ட இப்பிரதி வாசகனின் மனதிற்கு மிகச்சிறந்த நெருக்கத்தை தரும் இலக்கியம் என்பதில் எழுதும்போது கூட எழுத்தாளர் நம்பிக்கை கொண்டிருக்கமாட்டார். பாக்கியம் பெற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள். இதை படித்தபின் நீங்கள் வாழவிரும்பமாட்டீர்கள். அவ்வளவு இன்பம் இதில் இமயநதி போல கட்டற்று ஓடி விழுவதை அனுபவதரிசனமாக உணரமுடியும்.
-சுயமோகி வர்ஷன் 2.0
2
ஆரோக்கியக்குறிப்பு
இதை எழுதியவரை கண்டுபிடித்து என் கையாலேயே கொல்லவேண்டும் என்று ஆத்திரம், ஆவேசம், கோபம் வருபவர்களுக்கு மூச்சா யோக தந்த்ராவினை அறிமுகம் செய்யவிருக்கிறோம். நன்றாக அடிவயிறு அர்ணாக்கயிறில் அழுத்தப்படும்வரை தண்ணீர் குடியுங்கள். பிறகு நூறுவரை எண்ணுங்கள். அதற்குள் சிறுநீர் வயிற்றில் முட்டத் தொடங்காவிட்டால் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். நாளடைவில் இதுவே பெரிய வேலையாக போய்விட மற்றபடி கோபத்திற்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்த நூலைப்படிக்கும் வரை இதனை கண்டிப்பாக தொடரவேண்டும். நன்றி!
சிவகிரி அரசு சித்தமருத்துவர் அடிசில் நம்பிராஜன்
3
பயணிப்போமா
நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு
கிரிவலம் செல்வோமாப்பா?
நிற்காத கரைச்சலப்பா !
சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!
பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்
விடாத கான்பிடன்ஸ் விஸ்வரூப விக்டரி
உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்
மறைப்பதற்கு ஒன்றுமில்லை
கவிதை கொஞ்சம்… காபி கொஞ்சம்….
காபி. காரம்.. கச்சேரி….
ஷேரிங் முக்கியம், டீச்சர் சொல்லலியா சார்
இருபது ரூபா குடு(த்த) கதை
எப்படி உணருகிறீர்கள்?
கங்காணிச்சித்தனோடு ஒரு பயணம்
தேநீர் கோப்பைகளும், ஒரு விறுவிறுப்பான கதைகளும்
மதுபானக்கடை ரிட்டர்ன்ஸ்
அறிதலின் கணம்
பக்கத்துவீட்டுப்பெண்
சிலம்பக்குச்சியினை எடுத்த கலைத்தாய்
ஆண்டன் செகாவிற்கு விருது
கட்டிக்கொள்ள வேண்டும்
தாம்பூலப்பை ரெண்டு வேணுமப்பா!!!
மனசாட்சி மீது ஒரு பிடி மண்ணள்ளிப்போடு!!!
கவிதை குண்டர்கள்
தீர்க்கதரிசனம்
செய்திகள் வாசிப்பது…
வீட்டு முறை உணவுன்னா…..
விருது எனக்கு சோளக்கருதுய்யா
பொதுநலப்போராளி கலைத்தொப்பி விடுவது பீட்டரா? புகையா?
தொக்கூ இருக்குதா? இயங்குதா?
தேநீர்க்காரரின் வெற்றி
தங்கமீன்களாவோமா
காட்டுப்பள்ளி எப்போது திறப்பீர்கள் ஐயா?
காபி.. காரம்.. கச்சேரி
ஹிட்லருக்கும், போடிக்குமான உறவு
ஜெய்ராம்! ஜெய்பீம்!
வர்கீஸ் குரியன் குறித்த பதிவுகள்
கலைத்தொப்பியின் வாசலில் நிற்கிறேன்
மிஸ்டர் தேசிய லேகியம்
பேப்பர்காரனின் வெற்றி
நம்பிக்கை இழந்த தேசியத்தொண்டர்
ஒரு கை மண்தான்
காபி.. காரம்.. கச்சேரி
கலைத்தொப்பியும், கூழாங்கல்லும்
வன்முறையான உணவாளன்
இணையவெளி
உற்றுப்பார்த்திருந்த இரவு
இருத்தலிருந்து இறப்பிற்கு ஒரு பயணம்
தொக்கூ சுருக்கமான அறிமுகம்
காபி. காரம்.. கச்சேரி
என்னவொரு தேடல் சாமி!
மாளாத புரட்சியும், புளியஞ்சோற்று மூட்டையும்
நெஞ்சதிரும் ஒலி
சோமபானத்தின் தொன்மை தயாரிப்பு முறை
நிராகரிக்காதீங்கடா டேய்!
கோமாளி மேடை எதற்கானது?
நடுகல் மனிதன்
கங்காணிச்சித்தன் பற்றிய கடுதாசி
கால்களுக்கு விருது
அவெஞ்சர் பயணம்
வானமே கூரையான கதை
4
ஆசிரியர்கள் உரை
இந்த நூல் இதுவரை இல்லாத ஒரு தன்மையைக்கொண்டுள்ளது. வெளிப்படையான சில விமர்சனங்களை வைக்க முயல்கின்றது. இது யாருடைய மனதிலும், யாரைப்பற்றியுமான மோசமான கருத்தை உருவாக்குவதை நோக்கமாக கொள்ளவில்லை. குறிப்பிட்ட சூழலில் சிலரின் அறிவு, அவர்களின் வெளிவரும் ஆன்மாவின் தன்மை பற்றியது. எந்த முன்முடிவுகளோடு எழுதப்படவில்லை என்பதே இதை வாசிக்க ஒரு காரணமாக கொள்ளலாம். குறையாத அங்கதமும், சுய எள்ளலும்தான் இவற்றின் அம்சங்களாக வாசிப்பவர்கள் கூறக்கூடும்.
எங்கள் இருவருக்குமே இது ஒரு புதிய அனுபவம் என்று கூறலாம். லாய்ட்டர் லூன் ஒரு உல்லாச பேர்வழி பெரும்பாலும் அவர் படு கிண்டலான சம்பாஷனைகளை உருவாக்க மெனக்கெட்டார். பெண்களின் பேச்சு கேட்டால் ஒரே ஓட்டம்தான். அப்புறம் எங்கே எழுதுவது? அதனால்தான் மனதேசப்பாடல் கேட்க இவ்வளவு நாட்களாகிவிட்டது.
இருவரும் இணைந்து எழுதியதில் இது குறிப்பிட்ட வடிவம் பெற்றிருக்கிறது. வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். இதை எழுத உதவிய சபர்மதி அறக்கட்டளை தலைவர் இரா. முருகானந்தம், எழுத்தாளர் என்.ஸ்ரீராம், வெளியிட்ட ஆரா பிரஸ் குழுவினருக்கும் நன்றி.
ப்ரியங்களுடன்
ஜேம்ஸ் பாம்பிரே
லாய்ட்டர் லூன்
5
நூல் அறிமுக உரை
இந்த நூல் நான் இலக்கிய வகையைச்சேர்ந்தது. அதாவது தனது வாழ்க்கைச்சம்பவங்களை தொடர்புபடுத்தி எழுதுவதுபோலவே செல்லும் தன்னை எழுதுதல் குறுங்கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.
ஒருவரின் வாழ்வில் நிகழும் அரசியல் தொடர்பான விஷயங்களையும், லட்சியங்களை உறுதியான தொனியில் எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இரு வேறுபட்ட நபர்களிடையே நடப்பதாக அமையும் காபி..காரம்.. கச்சேரி வாழ்வியல் நன்னெறித் தொடர் கூறுகிறது.
நேரடியாக எதனையும் கூறாமல் ஒரு கதை உரையாடல் வழியே குறிப்பிட்ட சிலரின் குணங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சில கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. சில மனிதர்களின் விட்டேத்தியான போக்கு பற்றிய விவரணையாக மதுபானக்கடை கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பிட்ட லட்சியவாதம் பேசும் மனிதர்களின் மறுபக்கத்தை காட்டும்விதமாக கலைத்தொப்பியின் தொடரும் விவரணைகள் உள்ளன.
ஏறத்தாழ மிக துயரமான கட்டுரைகளை இதில் வாசிக்க இடமில்லை. கொண்டாட்டமான தன்மை முன்னிலும் இதில் அதிகம். தினகரன் வெள்ளிமலர் கே.என்.சிவராமன், ஐந்து ரூபாய் டைம்பாஸ் ஆர்.சரண் ஆகியோர்களின் எழுத்தின் அதிதீவிர ரசிகரான லாய்ட்டர் லூனின் பங்களிப்பில், வேறெப்படி இந்த நூல் அமையும்? பல கட்டுரைகள் பல விஷயங்களை கடுமையான பரிகாசத்தொனியோடு பேசிச்செல்கிறது குறிப்பாக சோம்பானக்குறிப்பின் கடைசி பிராக்கெட்டில் உள்ள குறிப்பு. வங்க எழுத்தாளர்களை குறிப்பாக பந்தோபாத்தியாய வகைகளை விரும்பிபடிக்கும் ஜேம்ஸ் எழுதிய கட்டுரைகள் அந்த சாயல் கொண்டதாக இருக்கக்கூடும். பலபெயர்களை புனைந்துதான் எழுதுவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு எழுதுபவர் இவர். வாசியுங்கள். நன்றி!
சார்லி ட்ராம்ப்
1
நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு - சோனி எம் போனி
நீ உருப்படி ஆகணும்னா குயில நம்பாதே என ஏவல், பில்லி, சூனியக்காரரின் மறுபிறப்பு என சத்தியம் பண்ணாத குறையாக ஆயில்யம் கூறியதால் இந்த வாதனையே வேண்டாம் என்று ஸமீரா முடிவெடுத்து, போறண்டா பதிப்பகத்துக்கு போறண்டா என அடுத்த தெலுங்கு தமிழ் டப் பட டைட்டிலை உதிர்த்துவிட்டு சென்றார். லாலே லா…ல..லா லாலே என்ற கும்பெனி பாட்டை பாடி கிளம்ப வைத்து மகிழ்ந்தோம். மாலை திரும்பி வந்தபோது வேலை பற்றிக் கேட்க பேய்முழி விழித்து வேலையின் முடிவை தெரியப்படுத்தியவர், திடீரென நினைவு வந்தது போல ‘டீ நல்லார்ந்துது’ என்றார்.
‘’ யோவ் டீயக்குடிக்க நீயி ஏய்யா தி.நகரு போவோணும். இங்க குடிக்க முடியாதா? இல்ல கெடைக்காதா? முக்குல சாத்தூரு தெய்வீகச்சிரிப்புகிட்டயே வாசமா குடிச்சிருக்கலாமல்ல ’’ என்றான் ஈரோட்டான்.
எதற்கும் அசைந்து கொடுக்காத ஸமீரா தன் பயணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
அலைபேசியின் மின்கலசக்தியூட்டி( சார்ஜர் எவ்வளவு எளிமைன்னு புரியுதா) உடைந்துபோனதால் நேரம் தெரிய அலைபேசி மினுங்கவில்லை. கதிரோனின் வெளிச்சம் கொண்டு பாப்பம்மாள் ஆத்தாபோல நேரம் கணிக்க முயன்றேன்( தேர்தல் விதி அமலில் சூரியன் வருதுப்பா) குத்துமதிப்பாக மணியை நினைத்து 12பி பேருந்தில் ஏறி லஸ்கார்னர் வந்ததன் பின் தான் சகோதரர் வீட்டுக்குள் போக முடியாதபடி சாவியை தானே கொண்டுவந்தது தெரியவந்தது. செரி பாத்துக்கலாம்டா என் தோளில் தட்டியபடி இருந்ததை அருகிலிருந்தவர் அந்த மிருகம் நம்மு பக்கத்துலதான் இருக்கு என்று வெளிறி உட்கார்ந்திருந்தார்.
ஏதோ ஒரு சமூகம் முன்னே போவதை ஆட்டோ ஓட்டுநர் நினைவிலிருத்தினார். பதிப்பகத்தில் கண்ணாடியில் நம்பிக்கையிழக்காது பேசியதை பின்தொடர முடியுமா என்று பயமாக இருந்தது. தியரியில் நான் சென்டம் வாங்க இரண்டு மதிப்பெண்தான் குறைவாக இருக்கும் என்றாலும், செய்முறையில் தேர்ச்சி மதிப்பெண்ணைப் பெறுவதே நான்சிபிரைடேவின் பேன்டசி கனவுகளை மீறி கனவு காணவேண்டியதாக இருந்தது.
கல்லாப்பொட்டி சிங்காரத்தின் உறவைப்போல நம்பவைக்கும் எனது முகத்தை ஏதோ தப்பிருக்கு புடிக்கறன் என்று மனதுக்குள் சொல்லியபடி என் முகத்தை பார்த்தபடியே கடந்து பயணச்சீட்டை கொடுத்தார். மெட்டல் டிடெக்டர்லாம் தோத்துரும்டா என்கிட்ட என்னும் அலட்சியம் நிறைந்திருந்தது அவர் முகத்தில்.பாண்டி பஜார் நிறுத்தத்தில் இறங்கி நடந்தபோது அத்தனைபெண்களும் எனக்காக காத்திருந்து கலைந்து போவது போல் உணர்ந்தேன். (ஆசயப் பாரு நாய்க்கு என்று லூசு என் கடைவாயில் குத்துகிறான் அப்ஜக்சன் யுவர் ஆனர்!) பறவைகளின் குறிப்பாக காகத்தின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்பதை தோள்பட்டையில் அதன் எச்சத்தின் மூலம் அறிந்தேன். சென்னையில் இருந்த இரண்டு ஆண்டில் பல சட்டைகளில் இந்த அடையாளம் மிச்சம் உண்டு என்பதை பின்னர் கண்டறிந்தேன்.
ஆட்டோவாலாவிடம் இடம் கேட்டுக்கொண்டு சித்தப்பா பெண் பதிப்பகம் சென்று, சேது சொக்கலிங்கத்திடம் பேச முயற்சித்தேன். எந்த வேலையும் அங்கில்லை என்று கூறிவிட்டார்கள். முதலாளி நிமிர்ந்தே பார்க்கவில்லை.
பின் உளவு கறுப்புத்தொப்பி பதிப்பகம் சென்றபோது, அது பதிப்பகமா என்று ஒரு சந்தேகம் எழுந்தது. லுங்கி கட்டிக்கொண்டு ஏதோ தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கும் ஆட்கள் இருந்தார்கள். அனைத்து வேலைக்கும் ஆட்கள் உள்ளதாக அஜீரணம் உள்ளதாக நம்பும் முகபாவனையுடன் நம்பும் ஒருவர் கூறினார்.
பிறகு நல்லநூல் வெளியீட்டாளர்களிடம் செல்ல முயன்றேன். அதற்கு முன் வனிதா பதிப்பகம் செல்ல முயன்றபோது, கொர் என சீரான தாளலய ஒலி என் காதில் கேட்டது. பதினொரு மணி இருக்கும் அப்போதே உறக்க ஒலியா? ஐயத்துடன் பலமுறை மேடம் என்ற விளியை பயன்படுத்த முதலாளி வந்துவிட்டாரோ என்று பயத்துடன் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் பதட்டத்துடன் எழுந்து, நீயா என்ற பார்வையுடன் என்னைப்பற்றிக் கேட்க, வேலைக்கான ஏதாவது அறிகுறி உள்ளே இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கே இருக்கும் ஒரு புத்தகம் கூட வாசிப்பதற்கான ஆர்வம் ஏற்படுத்துமா என்றால் இல்லவே இல்லை என்பேன். நீங்கள் வீட்டில் தட்டச்சு செய்யுமாறு பேசி சம்பளம் பெறலாம் என்றார்கள். நான் சென்னையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். அங்கே எனது சுயவிவரக்குறிப்புகளை தந்துவிட்டு நகர்ந்தேன்.
நல்லநூல் பதிப்பக கட்டிடம் பெரியது. காவலர்களால் வாசலிலேயே தடுக்கப்படுவேனோ என்று ஐயம் எழ வாய்ப்பில்லை. காவலர் எந்த நேரமும் யாருப்பா நீ? என்று கூப்பிட்டு விடுவாரோ என்று பயந்துகொண்டே நடந்தேன். எப்போதும் போல சிறுநீர் வெளியே கசிந்துவிடுமோ என்று வேறு ஒரு நடுக்கம். அங்கு சுவரில் செருப்பை கழட்டிவிட்டு செல் என்று கூறவே ஒரு பெரிய பத்தி எழுதப்பட்டிருந்தது. இரண்டு முறை பார்க்கலாம் என்ற நம்பிக்கை தரும் பெண்ணொருவள் என்னைப் பார்த்துவிட்டு பத்துரூபாய் கடன் கேட்டுவிடுவானோ என்று பாவித்து என்னமோ போடா என்ற முகச்சுளிப்புடன் நகர்ந்தாள். உள்ளே நுழைந்த என்னிடம் கேள்வி கேட்டவர் பொங்கல் உண்டிருப்பார் போல, காஃபி குடித்தால் தேவலை என்று கூறும் முகத்தில் அவ்வளவு அதிருப்தி. கதிரையில் உட்கார பணிக்கப்பட்டேன்.
அறையின் சுவர்களில் புத்தகங்கள் அனுப்ப வசதியாக பல கட்டுகளாக பொதியப்பட்டிருந்தன. பத்தடி நடந்தால் ஏதாவது விநாயகர் சிலைமீது கட்டாயம் இடித்துத்தான் நிற்கவேண்டும் என்ற நிர்பந்தம் அவ்வலுவலகத்தில் இருந்தது. எங்கும் நீக்கமற விபூதி மணந்தது. ஆட்களின் ஊதியத்தை விட சாம்பிராணி, ஊதுபத்தி, விபூதிக்கான செலவு அதிகம் வரும் என்று திடமாகப் பட்டது. நல்ல ஐந்து இன்ச் பவுடர் பூச்சோடு, சிறந்த புடவை என்று அவரே நம்பும் உடையை அணிந்து நடிகை ரேகாவின் சாயலில் ஒரு பெண்மணி என் எதிரே உட்கார்ந்து எந்த ஊரில் பெண் பார்த்து எப்போது திருமணம் செய்வாய்? என்ற கேள்வி வரை பலதையும் கேட்டார்.
விவாதம் ரணகள கட்டத்தை எட்டியது. இவர்தான் நிறுவனரின் மனைவி என்று இருக்குமோ என்று நினைக்கையில் வெள்ளுடை வேந்தர் ஒருவர் வந்தார். நமது ஸ்லாட் முடிந்தது என்று நினைத்து அவரிடம் ஏதோ கூற, நான் அவர் பின்னால் செல்ல பணிக்கப்பட்டேன். அறை ஏதோ போட்டோ ஸ்டூடியோ இருட்டறை போல இருந்தது. மேசையின் மேல் சிக்கனமாய் ஒரே ஒரு விளக்கு எரிந்தது. சுயவிவரக்குறிப்பை தினந்தந்தி சுவாரசியத்துடன் வேகமாக பார்த்தவர் அதிலிருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
இருபது நிமிடங்களில் பல கேள்விகள் கேட்டுவிட்டு, ‘’ நாஞ் சொல்றேன் தம்பி, நம்ம கட தெரியுமா, அங்க ஸ்ரீனிவாச பிரபுன்னு ஒருத்தரு இருப்பாரு அவரப்போயி பாருங்க ’’ என்றார். நியூ புக் லேண்ட் புத்தகம் விற்கிற கடை அதில் எனக்கென்ன வேலை இருக்கும்? என்று நின்றேன். உடனே வெ.வே ‘’ அம்மா பயனுக்கு ஒரு காபி கொடுங்க என்று தொலைபேசியில் கூறியவர், ‘’ தம்பி போயிப்பாருங்க அடச்சொல்றேன் தைரியமாப் போங்க ’’ என்று போர்முனைக்கு தள்ளிவிடுவது போல் கூறினார்.
வெளியே வந்து வேகமாக கிளம்ப முயற்சிக்க, ‘’ தம்பி டீயக்குடிச்சிட்டு போ ’’ என்று சாயல் ரேகா கூற தட்டமுடியுமா பெண்மணியின் வார்த்தையை ! மறுபடியும் அதே இரண்டு முறை பார்க்கலாம் பெண், இரண்டாவது முறை என்னை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
ஸ்ரீனிவாச பிரபு ஒரு பொங்கல் தின்று காஃபி குடிக்கும் அக்மார்க் திவ்யமான பிராமணர் போல, நூறு ரூபாய் கடன் கேட்கிறானே என்பதுபோல் படு சந்தேகமாய் நீங்க? ஏன்? இங்கே? என தனித்தனியாக கேட்டு பரிதவித்தார். பிறகு கூப்பிடுகிறேன் என்றார். எவ்வளவு தூரத்திலிருந்து என்று கேட்காமல் வந்துவிட்டேன். அந்த புத்தகக் கடையில் கழிவறையில் ஏனோ வறுத்த உளுந்தின் வாசம் வந்துகொண்டிருப்பது போல் தோன்றியது.
2
கிரிவலம் செல்வோமாப்பா? - குண்ட் முனீஸ்ராஜ்
ஸமீரா திடீரென திருவண்ணாமலை போய்விட்டார். கனவு மாதிரியில்ல இருக்குது. மெட்ராசுல சும்மா பன்ன தின்னுட்டு அலஞ்சுட்டு இருந்தாரு. அப்பத்தான கதயில ஒரு திருப்பம். அவரோட அண்ண சம்சாரம் ஏதோ கெட்டவார்த்தயில் மெசேஜ் அனுப்ப கோவணம் கட்டாம வண்டி ஏறிட்டாப்புல ஸமீரான்னு வெள்ளோடு இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் சொல்லுது. ஆமா மல புல்லா பிச்சக்காரனுவ திரியறானுவ. இதுல ஸமீரா மட்டும் என்ன? இந்தாளோட அண்ணமாரு நல்ல வெவரம். யார எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சவரு. இந்த ஸமீரா பேசறது, எழுதறதுன்னு புத்திசாலி மாறி தெரியும். ஆனா ஒண்ணும் புரியாத பைத்தியக்கார வெகுளிப்பய. அதனாலதே அந்த வாழ வந்த புள்ளயெல்லாம் இந்தாள அந்த அசிங்கம் பண்ணுது. அண்ணமாரு வூட்டுல பொருளெல்லாம் எடுத்துவைக்க கூப்பிட, இந்தாளு சட்டுனு பரதேசி,பண்டாரத்துக்கு வூட்டுல எடமுண்டானு கேட்டுவைக்க அண்ணமாரு தலய தூக்கிக்கூட பாக்குல. விஷயம் தெரிஞ்சிருச்சேன்னு ச்சீனு போயிருச்சு. ஏய்யா வக்கரோ உன்ற ஹீரோயின எல்லோரும் ஏத்துக்கோணுமா என்ன? அவளும் அவ எலி மூஞ்சியும். ஒடுங்கின டால்டா டப்பி. காயலாங் கடக்காரனே சும்மா போட்டுட்டு போவச்சொல்லுவான். சீக்கரத்துல வளயத்தோண்டிட்டா வூட்டுக்குள்ளாரயே!
ஸமீரா திங்கிறதுல ஒண்ணும் நல்ல ஆளுமில்ல. கங்காணிச்சித்தர் சாதாரணமில்ல. எல்லாரையும் நல்லா யூஸ் பண்ணிக்கறதுல இந்தாளு அண்ணமாரை வெட மேல இருப்பாப்பல. கரண்டு இல்லாம சீக்கடில அப்படியே கெடந்துருக்காப்பல இந்தாளு. சித்தரு சோறு இல்லாம எப்படி உசுரோட இருக்கறதுன்னு ஏதோ வித்தகளையல்லா சொல்லிக்குடுக்க பாத்திருக்கறாரு. காத்த சாப்பிட்டு உசுரோட இருக்கற வித்தய கங்காணிச்சித்தன் டிரை பண்ணீட்டு இருக்கறாரு. இது தற்போதைய நெலமைதான். அப்பறமா இன்னும் மோசமாவுமப்பா.
ராத்திரியாச்சுன்னா சீக்கடி சங்கப்பாட்டல்லா காதுல பாடுதுப்பா இந்த கொகையில. சித்தன் சில சமயம் வந்து தேங்கா தின்னுட்டு படுப்பாரு. மலச்சிக்கலாமாப்பா. காத்தக்குடிக்கறவருக்கே ஏதோ சிக்கலு வருது பாருங்க மக்கா.
3
நிற்காத கரைச்சலப்பா ! - செட் புரோட்டாக்காரன்
நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடும் என்று நான்கு கண்ணன் நினைத்திருக்கவில்லை. நெல்லை தீபம் என்ற இனக்குழு உணவகத்தில் உணவு சாப்பிட்டபோதும், அவனின் கடாபுடா சத்தம் பிறருக்கு கேட்குமளவு அதிகரித்துவிட்டது.
காலையில் இட்லி சாப்பிடத்தொடங்கியபோதே பெவிக்கால் கம்பெனியுடன் இனக்குழு ஓட்டல்காரர் ஏதோ டைஅப் வைத்திருப்பாரோ என்று நினைக்கும்படி இட்லி வாழை இலையில் கையில் பிய்க்க பிய்க்க வழுக்கி ஓடியது. நான்கு கண்ணன் ஓட்டல்காரரைப் பார்த்தபோது, நாளைக்கு உலகம் உறுதியாக அழிந்துவிடும் என்பது போல் தனுஷ் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். கையில் பிட்டு சாப்பிட முடியாத பரிமாண முதிர்ச்சியைப் பெற்ற இட்லியை உள்ளே போட பெரும் முயற்சி தேவைப்பட்டது.
சட்னி, சாம்பார் என்று பெயரிடப்பட்ட எதனோடும் இட்லி சேராது தனித்தியங்கும் முடிவைக் கொண்டிருந்தது. வழுக்கிச் செல்லும் இட்லியைப் பிடிக்க இடது கையையும் பயன்படுத்தலாமா என்ற சிந்தித்துக்கொண்டே நான்கு கண்ணன் உணவு உண்டார்.
தாராபுர எழுத்தாளரின் அணுக்கத்தொண்டர் துணை இயக்குநர் குமேஷ், கும்சா, பரமகுரு ஆகியோருடன் ரமணாஸ்ரமம் போனதால் உடல் உஷ்ணவாதத்தால் சிரமப்பட்டதே ஒழிய நடந்தே இறையனுபவ அனுபூதியை டோக்கன் போட்டு வாங்கிவிடும் கங்காணிச் சித்தன் போல கைகூடி வரவில்லை. இதனால் பெல்விஸ் அண்டர் புரடக்ஷனே பாதிக்கப்பட்டுவிட்டது. உணவுன்பதை இரண்டு வேளை தள்ளிவைக்க முடிவெடுத்துவிட்டார் நான்குகண்ணனார் அவர்கள்.
4
சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ! - மெட்ரோ கார்னர் ‘முனி’
மெட்ரோ கார்னர் ‘முனி’
வின்சென்ட் காபோ (வி.காபோ), புத்தக மொழிபெயர்ப்பு ஒன்றிற்காக மடிக்கணினி ஒன்றினைப் பெற அனுகந்தன் என்னும் கடும் முரட்டுத்தனமும், துணிச்சலான அன்பும் கொண்ட துணை இயக்குநர் ஒருவரை சந்தித்தார். அவரின் அறையில் தங்க இடம் கிடைத்துவிட்டது. அறை பற்றிக்கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் அனுகந்தன். பின் பேசியது இதுதான். ‘’ சோறு தின்னியான்னா கூட கேட்க மாட்டீங்கறான் என்ன ஊருடா இது? மிஷினு மாரி ஓடறானுவ, ஒடியாரானுவ ’’
பேபி ஏலப்பன் எனும் இயக்குநர் ஒருவரிடம்தான் அனுகந்தன் வேலை செய்கிறாராம். அவரிடம் கூட்டிச்சென்றார். பேபியின்அறை முழுக்க பல்வேறு சினிமா போஸ்டர் கட்டிங்குகளாலேயே தன் அறையின் சுண்ணாம்புச்செலவை தவிர்த்திருந்தார். சுண்ணாம்பிற்கு இடம் விட்டால்தானே! அறையின் ஒவ்வொரு கதவுகளிலும் ஒரு வாசகம் குறும்பாக எழுதப்பட்டிருந்தது. உ.தா கழிவறையில் தினசரி நான்கு காட்சிகள் என்ற வாசகம்.
நந்தம்பாக்கம் வர்த்தசபை சென்றிருந்த அனுபவம் வேறுமாதிரி. தினகரன் நாளிதழ் நடத்திய கல்வி குறித்த கண்காட்சி நடைபெற்றது. அனுகந்தன் குர்தா உடுத்தி படு சீரியசாக முகம் வைத்து இருந்ததால் எம்.ஜி.ஆர் கல்லூரி கருப்புக் கோட் ஒன்று ஓடிவந்து தேனிலவு ஜோடிகளிடம் கேட்பது போல் ஹவ் டூ யூ பீல்? என்றார். அனு அலட்டிக்கொள்ளாமால் பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம் என்றார். வி. காபோ, ஸமீரா என்றால் இந்நேரம் கழிவறைக்கு சென்று வந்து பதில்சொல்கிறேன் என்று பத்து நிமிடம் நேரம் கேட்டிருப்பார் என்பதை நினைத்து சிரித்தார். இலவசமாய் தினகரன் நாளிதழ் ஒன்று கிடைத்தது.
5
உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன் - ஹனிரியாஸ்
அனுகந்தனுடன் இயல்பாகவே வி.காபோவிற்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கும்படி நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆய்வு செய்யவெல்லாம் எனக்கு விருப்பமில்லை. சமூகத்தின் மீது மாறாத கோபம் கனலும் ஒவ்வொரு உயிரும் எனக்கு நண்பர்களே என வி.காபோ காற்றில் சபதமெடுப்பார். அவருக்கு அ.கவை மிகப்பிடிக்கும். ஆனால் இவருடன் இருப்பது தொடர்ந்து நம்மை நாமே துன்பத்தில் சிக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றே அர்த்தமாகும். வேசிகள், பிச்சைக்காரர்களிடம், எவரிடமும் எளிதாகப் பேசி பிரியம் கொள்ளும் துணிச்சல்காரர். மூச்சுவிடுவதற்கு அடுத்து புகைபிடிப்பது தான் முக்கியம் என்று நம்பி கடைபிடித்து கழிவறையில் புகையாய் நிற்க வைத்திருக்கும் மனித நேயம் கொண்ட நெஞ்சு அ.கவுடையது என்பார் வி. காபோ.
புகையிலிருந்து தப்பிக்க வி.காபோ வேகமாக வெளியே வந்தார். வேகமாக மூச்சை விட்டார். மனச்சமநிலை பத்துக்கு பத்து என்ற அறையில்தான் சமநிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் வி.காபோ.
அறையின் வெம்மை கடுமையாக வி.காபோவை வதைத்துவிட்டது போல. மனம் தவிப்பிலேயே இருந்தது. உள்ளங்கால்களில் இறங்கி வழிந்துகொண்டிருந்தது வெம்மை. முரண் பிறப்பு அருகிலேயே இருந்தது தெரியாமல் வெகுநேரம் நடந்து அவரைப் பார்க்க சென்றதாக வி.காபோ கூறினார். பாரியாளிடம் ஏதோ வாங்கியிருப்பார் போல கண்கள் ஜூனியர் விஜயகாந்த் போல காட்டியது. உடல் ஏனோ ஒரு மாதிரியாயிருக்கிறது அவருக்கு. கள்ளமுள்ளம் கரைந்தழட்டும். அவதி சிறிது குறையலாமல்லவா? மாற்றம் ஏற்பட்டுத்தானே தீரவேண்டும்; கங்காணிச்சித்தனின் பட்டறையில் பாடங்களைக் கற்ற சிஷ்யருக்கு.
6
பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும் - கஸரக்கட்டன்
பகிர்தல் பல்வேறு அபாயங்கள் குறித்தும் பேசலாம். ஆனால் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. பாதுகாப்பின்மை இருக்கிறது. நம் மனம் எப்போதும் ஒரு பாதுகாப்பு தேடுகிற ஒன்றாக இருக்கிறது. சாய்ந்து கொள்ள மொட்டைமாடி சுவர் தேவைப்படுகிறது.
சென்னையில் லோகேஷ் என்னும் திரைப்பட போஸ்டர்களை வடிவமைக்கும் ஒருவரை சந்தித்தேன். ஆள் மிக இறுக்கமானவர் போல. நிறைய பேர் வாழ்க்கையில் கபடி விளையாடியிருக்கிறார்கள் இதைச் சொல்லக் காரணம் அவரின் சினிமா தளம்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை என்று பயமாக இருந்தது. எப்போதும் போல நான் பேசி என்னை நானே கிண்டல் பகடியாக பேசினாலும் நகரத்திற்குரிய போக்கில் எந்த பதிலும் பேசாமல் அதிகபட்சமாக ‘ம்’ என்றார்.
ஒவ்வொரு மனிதனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவன்தான். பகலை சமாளித்துவிடலாம். ஆனால் இரவு அப்படி அல்ல. மனதை கலங்கடிக்கக் கூடியது. அப்படியே மனதினுள்ளிருக்கும் அனைத்தையும் ஓட விடும் கண்முன்னே. அதனால் இரவு நேரத்தில் ஒரு மனிதனை அணுக முயற்சி செய்தால் பலன் கிடைக்கக்கூடும். நான் இரவில் கண்ட மனிதர்களின் சந்திப்புகளே இதன் ஆதாரமாக உள்ளது. சிலருக்க நாட்களாகலாம். ஏதோ ஒரு நேரம். ஒரு மனதின் ரகசியங்களெல்லாம் அப்படியே மெல்ல திறந்து வழிகிறது. அதை திறந்து மனதோடு நீங்களிருந்தால் அறியலாம். இல்லாவிட்டாலும் பிரச்சனையில்லை. மனிதர்களை அறிபவன் அதன் வழியே தன்னையேதான அறிகிறான். பகிர்தல் பல ஆபத்துகளை உருவாக்கலாம். அதுதான் அதன் இயல்பே. அப்படித்தானே இருக்கமுடியும்.
7
விடாத கான்பிடன்ஸ் விஸ்வரூப விக்டரி - தைவான் மேட்
நீங்க சென்னைக்கு போனீங்கன்னா பத்திரிக்கைய எப்படி பாத்துக்குவீங்க?
போயிட்டு வந்தர்றதுதான, இங்கயே எல்லா வேலயையும் செஞ்சுக்கலாம் இப்பல்லா.
சென்னைன்னா உங்களுக்கு நீங்க விரும்பற பொருள், ஆட்கள், புத்தகங்கள் எல்லாமே கெடைக்குமே?
அப்படி முன்னாடி ஒரு நெலம இருந்தது. ஆனா இப்ப அப்படிக் கெடையாது. ஏன்னா தொழிற்நுட்பம் அப்படி போயிட்டிருக்குது.
முன்னாடி நீங்க மெய் அண்ணா எல்லாருமே சென்னைல இருந்தீங்க இப்ப எல்லோருமே ஊருல இருக்கீங்க என்ற கேள்வியின் பொருள், தொனி சரியா என்று அப்பறமாக சொல்லுகிறேன்.
திரும்பி வந்துட்டமுன்னு சொல்லமுடியாது. ஆனால செய்யற விஷயத்த சென்னைலதா செய்யோணும்னு கெடையாது. வேணும்னா போய்ட்டு அப்பறம் திரும்பி வந்தர்றலாம். ஒண்ணும் பிரச்சனையில்ல.
என்று சொல்லியவர் வேறு யாருமில்லை. கான்பிடன்ஸ் சென்னிமலை சத்தியார்த்தி கவுண்டர்தான். எழுத்தோலை இதழின் நிறுவனர். இதுவே போதும் ஆசிரியரும் இவர்தான் என்று புரிந்துகொள்ள. பேசிவிட்டு பின்னர் கங்காணிச்சித்தருடன் ஷேர் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டார். நான் சென்னையிலிருந்து வந்துவிட்டது குறித்து ஏதோ அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கேள்வி, தொனி இவற்றில் என்னுடைய விரக்தியான மனதின் சாயை தோன்றிவிட்டதா என்று என்னால் அறிய முடியவில்லை. மிக கவனமாக இருக்கவேண்டும் வார்த்தைகளில். அதைவிட அதிக கவனமாக உறவுகளிடம் பேச வேண்டும்.
8
மறைப்பதற்கு ஒன்றுமில்லை - பௌர்ணமி பித்தன்
இந்த வார்த்தையை வின்சென்ட் கூறியதும் எழுத்தோலை ‘’ அப்படீன்னா நிச்சயம் ஏதோ ஒண்ணு இருக்குது. இரண்டு பேர்கிட்டயும் ஏதோ ஒண்ணு சொல்லாம வெச்சிருப்பீங்க என்று கூறியது வின்சென்டிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
என்ன இந்தாளு பெரிசா ஜோசியம் சொல்றாப்பல போலயே. இப்படி ஆதாரமில்லாம பேசறாரு என நினைத்தபடி பேச்சில் கவனம் கொள்ளவேண்டி ஸமீரா கூறியதை நினைவுபடுத்திக்கொண்டார்.
மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பேச்சை அவர் வாழ்வின் உணர்ந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசவேண்டும் என்று மறைமுகமாக கங்காணிசித்தர் எச்சரித்தார். எழுத்தோலையும் அதை மறைமுகமாக வலியுறுத்தினார்.
பேச்சு என்பது ஒரு வலைமாதிரி. விரித்த நாமே அதில் விழும் வாய்ப்பு அதிகம் எனவே சாமர்த்தியமாக இருவர் பேசும்போது மற்றவர்கள் குறித்து அதிகம் பேசுவது இதன் பொருட்டுதான். பிரச்சனை இல்லாமல் பேசலாம் அல்லவா! திருப்பூராரின் ஆளுமை பற்றி பேசும்போது, எழுத்தோலை குறுக்கிட்டு ‘’ நானும் பாத்துட்டன். எங்கிட்ட பேசுன இருபது பேருக்குமேல அவரப்பத்தி ஏதோ ஒண்ணு சொல்லறாங்க ஆனா ஒண்ணுதா புரியமாட்டேங்குது நீங்க எல்லா எதுக்கு அவரப் புரிஞ்சுக்க முயற்சி பண்றீங்க? சைலண்டா இருக்கறது அவனோட இயல்பாக இருக்கலாமுல. உங்க போக்குப்படி நீங்க வாழலாமே?
இதற்கு என்னால் உண்மையாக பதில் சொல்ல முடிந்தால் ஒருவன் பாதுகாப்பின்மைதான். நான் என்னைப்பற்றி உங்களிடம் கூறுகிறேன் என்றால் நீங்கள் என்மேல் நம்பிக்கை கொண்டு உங்களைப்பற்றி ஏதாவது கூறியிருப்பீர்கள். இது அந்நியோன்யம் சார்ந்த ஒன்று. நான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வழிப்போக்கன் வழியில் காணும் பெயர் தெரியாத மரம் போல பாவிப்பது இல்லை. நான் வழிப்போக்கனாக இருந்தால் மரம் பற்றிக்கேட்பேன். பெயரை தேடி அறிவேன். நிழலில் ஆறுவேன். மனிதர்களை உள்வாங்க முயற்சிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு முகமூடி மாட்ட விரும்புவதில்லை. எழுத்தோலையிடம் பேசுவது போல்தான் திருப்பூராரிடம், அண்ணாநகர் எழுத்தாளரிடம் பேசுவேன். இதுவரை அப்படித்தான். இனி எப்படியோ?
ஆனால் ஒன்று. என் மனதின் குப்பைகளை இனி யாரிடமும் இறைக்க கூடாது. ஒரு மரத்திடம், கொடியிடம், செடியிடம் கூட பகிரலாம். மற்றோரு மனித மனம் என்பது குப்பைக்கிடங்கு அல்ல. அதனை நான் புரிந்துகொண்டுவிட்டேன். ஸமீரா மாதிரி இலக்கியப்போராளிக்கு இதெல்லாம் ச்சீ என்றிருக்கும். அவர் வார்த்தைகளில் கற்பனையில் வாழ்பவர். நானோ யதார்த்த மனிதர்களின் பேச்சுகளில் மனமிழப்பவன். வாழ்வே சிறந்தாயிருக்கும்போது, இலக்கியம் எதற்கு எழுத என்ன தேவை என்றிருப்பவன் நான். நான் இப்படிக்கேட்பது ஸமீராவுக்கு தெரிந்துவிட்டால் பத்து பக்கத்திற்கு எழுதி பிரதி எடுத்து தரவா?!!! என்பான். அவரவர் காலடி நதிதானே ஓடும் நதியிலும் கைக்கு கிடைக்கிறது!!! கல்யாணி எப்போதுமே நம்பிக்கை தருகிறதில் முன்னாடி நிற்கிறார்.
9
கவிதை கொஞ்சம்… காபி கொஞ்சம் -
இன்று என்னை பரதேசி என்று கூறி கடுமையாக வெறுக்கும் தம்பதி சமேத உறவொன்று அன்று படுக்கையில் தனியாக காய்ச்சலில் கிடந்தபோது கஞ்சியை வாயில் ஊட்டிவிட்டு, அதன் பின் அந்த நல்லுள்ளம் கூற கூற எழுதியது.
இறந்தவீடுகள் தொடக்கம்
பாழடைந்து பூட்டிக்கிடக்கின்ற
வீடுகளில் கோட்டான்கள்
கிசுகிசுக்கும்
வௌவால் எச்சங்களும் தவிர ஒரு நூற்றாண்டு
தலைமுறையின் மௌனம் வேரோடிக்கிடக்கிறது.
காரை பெயர்ந்து கரையான்கள்
அரிக்கப்பட்ட கதவுகளைத் தாண்டி
மேல்நோக்கி வளரும் கொடிகள்
உள்ளே தலைநீட்டிப் பார்க்கின்றன.
கனத்த மௌனம் அந்த வீடுகளை
கடக்கும் போதெல்லாம் மனதில் குவிகிறது.
யாருமற்ற தனிமை அறைகளில் வெப்பக்காற்று உள்நுழைந்து
வெளியேற முடியாது தவிக்கிறது
எல்லாம் தொலைத்துவிட்டதன்
எச்சமாய் உடைந்த சாளரங்கள்
தெருநோக்கி நீண்டிருக்கின்றன.
யாருமற்ற வீடுகளில் ஏதுமில்லை
என சொல்லிவிட முடியாது.
வாழ்ந்து கெட்டவர்களின் விம்மல்கள்
அங்கு மிச்சமிருக்கும்
இன்னும் காலம் காலமாய்….
– சுந்தரகுமாரன்
தற்கொலை வீடுகளின் முடிவு
விரிசல் எய்திய வீடுகளில்
உயிர்கள் உறைந்திருக்கும்
கவனியுங்கள்…
சுவடுகள் அழிந்த வீடுகள்
சுகதுக்கங்களை பத்திரப்படுத்தும்
காலத்தின் படிமங்கள்.
யாரும் கூறாமலே
பறவையின் எச்சத்தில்
மரம் வளர்க்கிறது
இறந்த வீடொன்று…
– ஷான் .ஜே
மருதாணி இரவுகள்
மாலைநேரம் மருதாணி மரம் தேடி
ஓடுவோம் இலை பறிக்க…
பக்குவங்கள் பலரும் கூற
ஆட்டுரலில் மனதின் இடிபடும் இலைகளில்
களிப்பு சாறாய் பெருகும்
சோறு தின்று விட்டு காத்திருக்க
குப்பி குப்பியாய் கைவிரல்களில்
பூச நாசியில் மணம் ஏற, குளிர் மனதில்
பரவும்.
நல்ல சிவப்பு அதிர்ஷ்டமாம்…
மாநகரத்தில் சிவப்பு ஏறியும் கைகளில்
இல்லவே இல்லை அப்பத்தா இட்ட
உயிர்ப்பின்
மருதாணி இரவின் நேசவாசனை
– சுந்தரகுமாரன்
கதை சொல்லட்டுமா?
கதை கேட்டறியா
குழந்தைகளின்
கனவுகளில் வருவதில்லை
தேவதைகள்
2
உள்ளார்ந்த துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்
என்ன செய்ய முடியும் நான்?
எனது நம்பிக்கைகளை உடைத்தெறிவது
குறித்து
ஒரு துளி வருத்தமில்லை
உன்னிடம்.
எனது புன்னகைக்கு
பின்னிருக்கும் வலி
ஒருபோதும் புரியப்போவதில்லை
உனக்கு.
– ஜோதி
10
லூஸ் அண்ட் டைட் தொகுத்தளிக்கும் - காபி. காரம்.. கச்சேரி….
‘’ டேய் என்ன கலர் கலரா குர்தா போட்டுக்கிட்டு இருக்கற? ’’ என்று டைட் அப்போதுதான் உள்ளே வந்துகொண்டே கேட்க,
‘’ பிரதமரே ஏதாவது விஷயம் செய்யறத விட டிரஸ்ஸத்தான் மாத்தி போட்டு போட்டோ ஷூட் எடுக்கறாரு நாமளும் பெரியாளு ஆக வேண்டாமா? செரி நீங்களும் சீக்கரமா இந்த ரத்தசெவப்பு குர்தா போடுங்க, நானும் கமலா ஆரஞ்சு குர்தா போட்டுக்கறேன் ’’ என்று லூஸ் கர்ம சிரத்தையாகப் பேச,
டைட் ஏக கடுப்பானார். ‘’ ஏய் வென்று அந்தாளு போட்டோ எடுத்துட்டு கழட்டி வெச்சிருவாரு. அப்பிடி போட்டிருந்தாலும் ஏசி ரூமுல இருப்பாப்பல நீ இந்த வெய்யில கோமணத்தயே கழட்டி எறிஞ்சிக்கிட்டு இருக்கறவங்கிட்ட போயி குர்தா போடுன்னு அந்தப்பக்கம் போடா கொய்யால ’’ என்று டைட் எகிறினார். லூஸ் நிலைமைகளை சமாளிக்கும் திருட்டு முழியை உருட்டியபடி,
‘’ ஏய் என்னய்யா நீயி அகில உலக தாமர கட்சி வருங்கால தலைவர்கிட்ட பேசறோமுன்னு மரியாத துளி கூட இல்ல ’’ என்று சொல்ல, ‘’ அவங்கிட்டயல்லா சேராத மந்திரஞ் சொல்லச் சொல்லுவானுவ, உனக்கு செட்டாவாது. ஏதாவது தீனி கொடுத்தா ஒடனே அவம் பக்கம் பேச ஆரம்பிக்கறேடா இது எல்லா நியாயமா? ’’
‘’ ஆமா நீ செவப்பு கட்சிக்காரங்கிட்ட போவ, அவனுக எப்பவுமே பன்னும் டீயுந்தான தர்றானுவ, அதக்கூட மேக்ஸ் மேக்ஸ் னு பயமுறுத்தறானுவ. பள்ளிக்கொடத்துல அந்த பரிட்சீம்போதுதா செவுறேறி தப்பிச்சு வந்தன். ஆனா இவனுவ லட்டு, பாயாசமுன்னு தர்றானுகப்பா ’’
‘’ அது மேக்ஸ் இல்லடா மார்க்ஸ். சாமி வேல எடுத்து உங் கவட்டயில் சொருவீருவானுவடா இந்த ஆரஞ்சுக்கூட்டம் வேண்டாம் அவஞ்சகவாசம் பாத்துக்கோ… ’’
‘’ ஆமாண்டா லூசு போடி ஏதோ கைய விரிச்சு விரிச்சு அடுத்தவனோட கண்ண குத்தீர மாரி பேசறாப்பல… எக்சைஸூ கீது மேடையில பண்றாரா என்ன? ’’
‘’ வேல அதிகம்ல. யோகா பண்றதுக்கு நேரமிருந்திருக்காது. பாவமப்பா நம்மாளு. அதே நேரங்கெடைக்கறப்ப செஞ்சுக்கறதுதே. இதென்ன ஒரே கம்ளைன்டு மாதிரி சொல்றீங்க டைட் ‘’ டைட் நாளிதழ் படிப்ப முயற்சித்தார். லூஸ் சந்தேகமாய் அவரை பார்த்தான்.
காபி காரம் கச்சேரி – தீவிரமான கலந்துரையாடலை உருவாக்கும் பகுதிக்கு அனுசரணை வழங்குபவர்கள் மெட்ரோ மணி, கில்லர் கபாலி, கவுத்தி சித்தன்.
‘’ இன்னாடா கவுத்தி மெட்ராசுக்கு வந்தியே இவ்வளவு சுருக்கா கெளம்பிட்ட. நம்மளுக்கு ஒரு சவுண்டு விட்டிருந்தா தெருவே கலகலன்னு இருந்திருக்குமேடா ’’ என மெட்ரோ மணி தன் ஆருயிர் நண்பனான ஹெர்குலிஸ் வண்டியில் வந்திறங்கியபடி கேட்டார்.
கில்லர் கபாலி அதைக்கடுமையாக மறுத்தபடி ‘’ இங்க பாருடா இந்த பயல நம்பினினா அம்மா மெஸ்சுக்கு கூட்டிட்டுப்போய் இட்லி வாங்கத்தருவாம் பாரு . ஆனா நம்மளுக்கு ஒரு தெருவே செம சப்போர்ட்டு கருவாட்டுக்கொழம்பு எப்படி இருக்குது? ’’ என கையை கவுத்தியின் மூக்கில் வைத்து தேய்த்தான்.
கபாலியின் கையை விலக்கியபடி, ‘’ அப்பா ஆருயிரு தோழர்களே, உங்கள பாக்காதது தப்புதா. நம்மள சொந்தமல்லா வெலக்கி வுட்டு நாளாவுது. அனுவோட ரூமுக்கு போயிட்டேன். எந்தப்பக்கம் திரும்பினாலும் உடனே செவுருடா.. உக்காந்து வேல பாத்தா பேண்டெல்லாம் ஒரு பொங்கச்சோறு ’’ என்ற கவுத்தியை படு சந்தேகமாக பார்த்த கி.கபாலி ‘’ என்ன பேண்டுல பொங்கல எதுனா டீவில கீது ஏதாவது புது ஐட்டம் பாத்தயா என்ன? ‘’ என்றவனை எரிச்சலாக பார்த்த மெட்ரோ ‘’யோவ் வெளக்கெண்ணெய் வெண்டக்காயி, அதுக்கெல்லா கொஞ்சனாலும் படிச்சிருக்கோணுமப்பா கபாலி, ஆமா லேகியமித்திரன்கிட்ட எத்தன மருந்து டப்பா வித்தே?
கி.க முகம் விகாரமாகியது. ஐயோ சாமி அவனல்லா மனுசனா என்ன?
‘’ காலயில திங்கறக்கு, தின்னது வெளிய வர்றதுக்கு, மறுபடி பசிக்கறக்கு, குசுவு வராத இருக்கறக்கு, வெளிக்கு அடைக்கமாக இளக்கத்துக்கு, கைகாலு வலுவா இருக்கறதுக்கு ஒவ்வொரு வெரைட்டியா கேட்டா நா என்ன பண்ணுவன்? இந்த வேகத்துல போனா திங்கறதும், வெளிக்கி போறதும் லேகியமாத்தே இருக்குமப்பா!!!‘’
மெட்ரோ மணி கி.க வைப் பார்க்காமல் வாயில் முனகிக்கொண்டே, ‘’ஏய்யா திருவண்ணாமலையில கங்காணி சித்தன் சோறு போட்டாப்பலயா.. இருக்க இருக்க அந்தாளு மாரியோ ஒடக்கமாரி ஆயிராத.. தம்பேரு பெருசா வரோணும்னு என்ன வேணும்னா பண்ணுவாப்பல…பாத்தியா அந்தாளுனால பாதிக்கப்பட்டவன் ஒருத்த எழுதி வெச்ச லெட்டரு ஒண்ண… ஆத்தாடி படுமோசமானவனாட்ட இருக்குதே..’’
கி.கா கவுத்தி கடுமையாக யோசிப்பது போன்றதைப் பார்த்து ஆத்தாடி ஆபத்து என்று ‘’ சும்மா இரு நயினா, மணி எதுக்குலே இம்புட்டு சீரியசா பேசறே… ஏதோ கூகூன்னு படமாமே.. பார்த்தவனல்லா கர்ச்சீப்பு நனையற அளவு அழுவறானுவளாம். அப்பிடி என்னடே படத்துல. எதுக்குடே இந்த அழுவாச்சி? ’’ என்ற கி.க வை முறைத்த
மெ.மணி ‘’ ஏதோ தெரியாம வந்துட்டமுன்னு உக்காந்திருந்திருப்பானுவ. அழுவாச்சி காச இப்படி தொலச்சுக் கட்டீட்டமுன்னுதே.. வேறென்ன. குனிஞ்சு நில்லுனு கடல்பழம் ஒரு படம் எடுத்தாப்பல. அரசாங்க செய்திப்படமாரி. நாம அழுவுலியா?
கவுத்தி தன்நெற்றியைத் தட்டியபடி ‘’ இங்க காதலிச்சு கல்யாணம் பண்றது எல்லாம் கஷ்டமப்பா.. படத்துல சேத்தி வெச்சா படம் ஹிட்டாயிருது. சம்பாரிக்க ஈஸியான வழி. கூகூ படத்துக்கு 150 ரூவா ஆயிருச்சு தெரியுமா மணியப்பா? ’’ என்றபடி பேசிய கவுத்தியை அதோ அங்க வருது மோசமான விலங்கு என்ற பார்வையுடன் பார்த்தார்கள் மணியும், கபாலியும் மெல்ல விடைபெற்றுக் கிளம்பினான் கவுத்திமலை.
11
ஷேரிங் முக்கியம், டீச்சர் சொல்லலியா சார்..!!! - ராசகெழங்கே
கங்காணிச்சித்தரின் நண்பரான தற்போது நாங்கள் எங்கள் வீடுபோல பாவிக்கும் வீட்டிற்கு உண்மையான வாடகைதாரர் பேசும் பேச்சுக்கள் டணால், டிங்கு, டணால் என்றிருக்கிறது. காலையில் சர்க்கரை போட்ட பன்னுக்கு பதில் சாண்ட்விச் உப்பு பன்னை வாங்கி வந்து தின்ற க.சித்தருக்கு மூன்றுமுறை தர்மபுரி,சுறா’ வகையறா படங்களைப் பார்த்தால் ஏற்படும் தலைச்சுற்றலும், மிரட்சியும் ஏற்பட்டிருக்கிறது.
அருகிலிருந்த எழுத்தோலை எப்படி நித்தியானந்திலிருந்து எழுவது என்று யோசித்தபடி எழலாமா, புரளலாமா என்று வாழும்கலை சத்திய வகுப்பை மேற்கொண்டபடி கடும் சிந்தனை வயத்திலிருந்தார்.
சமையலுக்கு எல்லோரும் வெங்காயம் அரிவோம். ஆனால் அங்கிருந்த சித்தரின் நண்பரும், நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் இருபக்க ஒழுக்க சாசனம் படிப்பவருமான பாண்டு சாமிகள் பச்சை மிளகாயை சுமார் இருபது மட்டுமே அரிந்து, தக்காளி வேணுமா? தாமே கேள்வி கேட்டபடி இருந்தார். சித்தர் கண்ணிலே சைகை செய்ய எழுத்தோலை மிகச்சரியாக அதைப்பெற்று சிரித்தார். கர்ம சிரத்தையோடு பச்சை மிளகாயை எடுத்து சட்டியில் இட்டு வணக்கத்தொடங்கினார் பாண்டு சாமிகள். கண்கள் வெளியே வந்துவிடும்போல முழித்தார் க.சித்தர்.
பன்ன எடுங்க உத்தரவிட்ட பாண்டுவிற்கு எழுபது வயதிருக்கும். கூந்தல் வழிந்து தோள்பட்டையில் இறங்கி வீழ்ந்து கிடந்தது. அறுவை சிகிச்சை தடங்கள் உடலில் தாறுமாறாக இருந்தது. வயிற்றில், முழங்கையில் என உடலை அசைக்கும் எல்லா இடங்களிலும் இருந்தன தடயங்கள்.
நேராக கரண்டியில் சிவப்பாக எடுத்துக்கொண்டிருந்ததை கண்ட சித்தர் அழகுபார்வதி அழைக்க, அடடா என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். சிக்கியது நானும், அண்ணையன் எழுத்தோலையும்தான். கரண்டியில் தெரிந்தது மிளகாய்தான்.எப்படிப்பார்த்தாலும் ஒரு வார பேதிக்கான மருந்து என்பதை உணர்ந்துகொண்டேன்.
‘’ஷேரிங் முக்கியம் தம்பி, பன்ன எடுங்க, சும்மா சின்னதா ஒரு காரம் வேண்டாமா, கையக்காட்டுங்க என்று வலுக்கட்டாயமாக மிளகாய் பிரட்டலை கையில் பன் வழியே தந்துவிட முயற்சித்தார் பாண்டு சாமிகள்.
ஆகா அடுத்த நித்தியானந்த ஆசனங்கள் நமக்கு கழிவறையில்தான் என்பதை அறிந்த எழுத்தோலையின் முகத்தில் அவர் வாழ்நாளின் அதிகபட்ச பயத்தை அந்த கணத்தில் சந்தித்தேன்.
‘’ இல்லீங்கய்யா, வேண்டாம். வேண்டாம். நீங்களே சாப்புடுங்க ‘’ என்று அவர் பேசினாரா, பயத்தில் கத்தினாரா என்று எனக்கு வித்தியாசமே தெரியவில்லை.
ஏதாவது பேசினால் மிளகாய் பொரியலோடு, ஒரு மணிநேர அனுபவ பகிர்தல் நிச்சயம் என்பதை உணர்ந்தவனாக எழுத்தோலையோடு வாயை மூடி பேசிக்கொண்டிருந்தேன்.
எனக்கு இதுபோன்ற பேரிடர் மேலாண்மை தருணங்களில் வயிற்றினுள்ளே டிஸ்கவரியின் சிறப்பு ஒளிபரப்பு தொடங்கிவிடும். கரகரவென வயிற்றில் ஏதோ சட்டியில் பொரிவது போன்ற சத்தங்கள் கேட்டது.
உப்பும், மாவின் புளிப்பும் உச்சமாக திட்டத்தில் பருப்பு பொடியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் ‘’ சாப்பிடுங்க தம்பி ’’ என்ற அவரின் குரலில் தெரியாமல் கண்ணிவெடியில் காலை வைக்கிறோம் என்று தெரியாமல் காலையல்ல வாயை வைத்துவிட்டேன். இன்று கழிவறைக்கு செல்வது நான்கு காட்சிகளைத்தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போது கூட பாண்டு சாமிகள் முன்னே அமர்ந்து மிளகாய் பொரியலை தின்றபடி, மிளகாயில் அடுத்து என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதாக பட்டது. அடுத்து மிளகாய் சாம்பார், மிளகாய் பாயாசம் என்று கூட அடுத்தடுத்த ஆபத்துகள் வரலாம் என மனம் உச்சரிக்க, கழிவறைக்கு சென்றேன்.
12
இருபது ரூபா குடு(த்த) கதை - ஸ்டீபன்ஸ்பீல்கந்தன்
சித்தர் ஏதோ கொள்ளையடிக்கும் என்ஜிஓ ஒன்றுக்கு இதழ் தயாரிக்கும் பணிகளை செய்துவரச்செய்தார். இதழின்பெயர் ‘கூனகம்’ ஆசிரியர் குழுவில் நமது திருப்பெயர் சேர்த்தியே ஆகவேண்டும் என்று சித்தர் கூறியபோது தெரிந்துவிட்டது. ஒரு பைசா இந்தாளு தரமாட்டான் என்று.
ரமணாஸ்ரமம் வளாகத்தில் கண்ணெரிய சிரமப்பட்டு, பகல் வெளிச்சத்தில் செய்த வேலை வெற்றியடைந்தது. க.சித்தர் இரவு எதுவும் சாப்பிடவில்லை. முகம் மலர்ச்சி சிறிதும் குறையாமல் வேலை செய்கிறார். சமுதாயப்பணி அல்லவா?
நேத்து பாண்டு ஐயா உன்னப்பத்தி பிராது குடுத்திருக்கிறார் என்று கூறிவிட்டு பஞ்சாயத்துக்கு சொம்பு தேடும் பாவனை சித்தரிடம் தென்பட்டது. என்னவாம் என்றேன். ‘’ நீ ஏதோ பணங்குடுக்கறக்கு தயங்கினியாமா நேத்து ஹோட்டல்ல ‘’
‘’ அவரு கேட்டாரு. ஒடனே தேடி குடுத்துட்டனே ‘’
‘’ பணத்த திருப்பிக்கேட்டயா? ’’
‘’ பணம் வேணுமா? இந்தா புடின்னாரு, இருந்தா குடுங்கன்னேன் ‘’
‘’ எதுக்கு அவருகிட்டப்போயி… தண்ணியடிச்சிட்டு என்ன போட்டு குமுறுக்கஞ்சி காச்சறாப்பல, வாயில நொர தள்ளிருச்சு தெரியுமாடா ஒனக்கு?’’
‘’அவரு என்ன நெனைக்கிறாருன்னு எனக்கென்ன தெரியும்?’’
‘’கவனமா பேசு, வயசானவரு பாத்துக்க’’
‘’எங்கிட்ட சொல்லச் சொல்லுங்க, எதுக்கு உங்ககிட்ட சொல்றாப்பல?’’
‘’விஷயம் தெரிஞ்சிருச்சில்ல ஒனக்கு அவ்வளவுதான வுடு’’ என்று அதுவரை அழைப்புகளை தவிர்த்தவர் மீண்டும் அழைப்புகளை ஏற்று சமூகப் பணிகளுக்கு திரும்பினார்.
13
எப்படி உணருகிறீர்கள்? - 70எம்எம் குஞ்ஞுக்குட்டன்
பேபிகுச்சியப்பன் இதைக்கேட்டார். இயல்பான ஒரு அங்கீகரிப்பு வேண்டி அலையும் மனிதர்கள்தாமே நாமும். சமாதானம் செய்துகொண்டு சமரசமான காட்சிகளினூடேதான் இயக்குநர் கனவுகளை செயல்படுத்திக்கொள்ள முடியும். இது யதார்த்தம்.
இடைவேளை திரையரங்கில் விட்டதும் நண்பர்கள் கேட்கிறார்கள் எப்படி இருந்தது படம்? இன்னும் படம்பார்த்து முடியவில்லை என்றேன். இடைவேளை என்பது வணிகத்திற்கான நிமிஷங்கள். படம் முழுமையும் பார்த்துவிட்டு பேசுவோம். அனுபவத்தை பகிர்தல் என்பது சரியாக இருக்கும்.
எழுத்து, பிம்பம் என இரண்டையும் சமரசமில்லாது ஒரு பகிர்தலாக நேர்மையாக கருத்துக்களை கூறக்கூட ஒரு பெரும் தயக்கம் நிலவுகிறது. நட்பு கெட்டுவிடும். நானும் இதுபோல சில நட்புகளை பரிகாச விமர்சனத்தினால் இழந்திருக்கிறேன். படைப்புகளின் வழியே படைப்பாளியை இனங்கண்டுகொள்ள முயற்சிக்கிறேன். இது சரியான பாதையா என்று தெரியவில்லை. இயல்பாக நடக்கிறதை ஏற்றுக்கொள்கிறேன்.
திணிக்க முயற்சிக்கும் வன்முறை உறவுகளை உடைத்துவிடும். நண்பர்கள் என்று எனது வீட்டுக்கு ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்களென பயமாகத்தான் இருக்கிறது. அவர்களிடம் மற்றவர்களிடம் தாக்குதலுக்குட்படும்போதெல்லாம் எதுக்கு உனக்கு இந்த வேல? நல்லாருக்குதுன்னு சொல்லீருடா என்கிறார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். அட வண்டுருட்டாம்பழங்களா! சூப்பர் சிங்கரு ஜட்ஜெல்லாம் அந்த வார்த்தய பல சீஸனுக்கு முன்னாடியே தாண்டிவந்துட்டாங்கடா! அப்டேட்டு வேணாமாடா என்று சொல்லி முடிக்கவில்லை. எனக்கருகில் அமர்ந்திருந்தவனின் கண்கள் கேப்டனைவிட சிவந்துகொண்டிருப்பதுபோல் பட்டது. கட்டுரைக்கு இதாம்பா ரெட்லைட். வண்டிய நிறுத்திக்குவோம்.
14
கங்காணிச்சித்தனோடு ஒரு பயணம் - பழனான்
கங்காணியார் தினமும் சாப்பிட்டுவிட்டு ஷேர் ஆட்டோவில் ஏறி ரமணாஸ்ரமம் சென்று பலமுறை ரமணரை வலம்வந்துவிட்டு அங்கிருந்து டிசைனர் தோழர் பங்கரண்ணா வீட்டுக்குப்போவார். உப்பேறி வேர்வைத்தடங்கள் பதிந்துபோன சட்டையின் நிறம் என்னவென்று யாருமே சொல்லமுடியாதபடி மாறிய சட்டையும், பழுப்பிலிருந்து மஞ்சளாகி கொண்டிருக்கும் வேட்டியையும் ரோஸ் நிற பையையும் தூக்கிக்கொண்டு கிரிவலப்பாதையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு பரதேசிதான் என்றால் அது நிச்சயம் கங்காணிச்சித்தன்தான்.
வயிற்றில் பசி இரைச்சலோடும், எதுவும் நிச்சயமில்லாத கணங்களைக்கொண்ட வாழ்விலும் கங்காணியினால் ஒரு குரங்கு தன் குட்டியை சுமந்து செல்வதை, சாமியார் குளிப்பதை, உடமை பற்றிய பயமின்றி ஒருவர் உறங்குவதையும், குழந்தைகளைப் பார்த்தால் புன்சிரிப்பு கொள்வதும், ரசிப்பதும், சிரிப்பதையும் பார்த்து எனக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரே சமயத்தில் ஏற்பட்டது.
‘’ புகார் சொல்றவங்களுக்கு அது புதுசா இருக்குண்டா, ஆனா தெனந்தெனம் அப்பா குடிச்சிட்டு வர்றது, அம்மா போட்டு அடிக்கறது, பொருள் வாங்கறக்கு கடஞ்சொல்றதுன்னு நெறயா அவமானங்கள பாத்தாச்சுப்பா, சரி அத வுடுடா ’’
இப்படித்தான் முடியும் அவரைப்பற்றி ஏதேனும் கேட்டால். அடுத்து அச்சில் இருக்கும் புத்தகங்கள், நூல் அறிமுகங்கள், புதிய செய்திகள், நான் செய்யவேண்டிய வேலைகள் என பட்டியலிட்டு கூறுவார். இதில் பாதி கனவா என்று கூட ஆகாயம் வரை காரியங்களை அடுக்குவார். கங்காணிச்சித்தனுக்கு என்றே திட்டமிட்டு ஒருவன் அதிக நேரம் உழைக்கும் பேட்டரியைக் கண்டுபிடிக்கவேண்டும்; எந்த நேரத்திலும் ஏதோ ஒரு அடிமை கைபேசியில் அழைத்துக்கொண்டேயிருப்பான். பத்து நிமிஷன்டா தம்பி என்று பேசத்தொடங்கும் க.சி பின் தொடரும் ஒரு சிறு இடைவேளையில் ‘’ செரி தம்பி அந்த ட்ரான்ஸ்லேஷனை முடிச்சிறு என்ன? ‘’ என்று வேட்டிக்குள் லட்சுமி வெடியை வீசிஎறிந்துவிட்டு தலையை குனிந்து அப்படியே கேட்டைத்தாண்டி சென்றுவிடுவார். அவரின் தலையைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். ‘’ இந்த மாரி ஆளுகவெல்லாம் இல்லீனா இந்த சமுதாயம் என்னதானப்பா ஆகிறது?’’ என்று பழனிச்சாமியின் மனக்குரல் கேட்டது.
15
தேநீர் கோப்பைகளும், விறுவிறுப்பான கதைகளும் - இருளொளி
கையில் ஏந்துகின்ற நொடியிலிருந்து தேநீர்க்கோப்பைகள் நம்மை உரையாட வைக்கும் வசீகரம் பெற்றிருக்கின்றன. அவை தீர்ந்து விடும் கடைசி நேரம் வரை நம்மை வினோத மனநிலையில் சஞ்சரிக்க வைக்கிறது இல்லையா? தேநீரின் சுவையே கடைசி துளி சர்க்கரை நாக்கின் சுவைமொட்டுக்களில் இனிப்பாக கசிந்து உள்ளிறங்கும் பொழுதுதான்.
யாரு இந்த கும்சா?
இதுபோலத்தான் ‘பன்டிவி’ போகனை சந்தித்ததும் நிகழ்ந்தது. அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கும்சாவைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் அவரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவவேண்டும். அப்படி சிறந்தவர்களாகயிருந்தால் மட்டும்தான் அவர்களை அவர் நண்பராக, நட்பாக வைத்துக்கொள்ள சம்மதிப்பார். இன்றுவரையிலும் அவரின் உறவுகள் பொருளாதாரம், இலக்கியம், ஈய இரும்பு உள்ளிட்ட இதரவற்றிற்கு என தனித்தனியாக ஒரு கூட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களாக தன் மனதில் வைத்திருக்கிறார். அவர்களை எந்த சமயத்திற்கு எப்படி பயன்படுத்தவேண்டுமென்று அவரே அறிவார்.
இயக்குநர் ‘பன்டிவி’ போகன்
இயக்குநராக பன்டிவியில் பணிபுரிந்து தற்போது திரைப்படம் எடுக்க முழுமுயற்சியாக முயலும் ஒரு நாளைய வஸ்தாது இயக்குநர் இவர் என்று அவரும் நம்புவதால் நானும் நம்பவேண்டிய கட்டாயம் உண்டாகிவிட்டது. சாத்தூர் காபிக்கடைக்கு அவர் வருவதாக கூறியதால் அந்நேரத்திற்கு நான் எந்த வரங்களும் பெறவேண்டியில்லாததால், உடனே கும்சாவோடு கிளம்பினேன். சிரித்தமாதிரி முகத்தை கண்டிருப்பீர்கள். ஆனால் எப்போதுமே அப்படியிருக்கும் ஒரு முகத்தை பார்க்கவேண்டுமெனில் மயிலாப்பூர் பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாத்தூர் காபிக்கடைக்குத்தான் வரவேண்டும். தூங்கும்போது கூட சிரித்தபடியாக இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன். நல்லதுதான். அங்கு நின்றபோதுதான் ‘பன்’ போகன் தோளில் பையோடு மிகவும் பதற்றமான உடல்மொழியோடு வந்து சேர்ந்தார். இதோ கோபப்பட்டுவிடுவேன் என்று கூறிவிடும் அளவு உணர்ச்சி பொங்கிய நிலையில் அவரின் முகபாவங்கள், உடல்மொழி இருந்தன.
கும்சாவிற்கு புகழைச் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசையிருந்தாலும், தற்போது தன் மூன்று வேளை உணவை கேஎப்சியில் சாப்பிடும் அளவு கணிசமாக பணம் ஊதியமாக பெறுவதால், தூக்கம் வர கதைகளைப் படிப்பதோடு சரி, மற்றபடி மன்மத சஞ்சீவி தளங்களை தேடியபடி கைபேசியில் அலைவதுதான் அவருக்கு மிகப்பிடித்தமானது.
சீஃப்ரூட் இயக்கத்தில் ஒரு வன்கொடுமை
அப்போது ‘ஸ்ட்ரெய்ட் ஸ்டேண்ட்அப்’ என்ற கடல்பழம் இயக்கிய அதிபயங்கர படம் வந்திருந்தது. கும்சா ஏதோ தண்டனையைத் எனக்குத்தர எண்ணியிருப்பார் போல அழைத்து சென்றுவிட்டார். கூடவே நாட்டிற்கு நல்லபடம் பண்ண நினைக்கும் து.இ ஒருவர் தன் இளம் மனைவியோடு வேறு. இயக்குநர் கடல்பழத்தின் படத்தைப்பார்த்து சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் அதிர்ச்சியாகி விட்டன. படத்தின் வசனங்களுக்கிடையே நாமே ஏதோவொன்று பேசி ஒப்பேற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை.
எங்கள் படம்பார்த்த அனுபவத்தைக்கேட்ட பன்போகன் கடுமையாக சீற்றம் கொண்டு ‘’ பாத்தீங்களா கும்சா கடல்பழம் பண்ணுனத, குப்பை சார் படம் ஒண்ணுமில்ல. ஊழல், ஊழல்ங்கிறான் அதுதாம் பிரச்சனையா என்ன இப்ப? ’’ நிதர்சனம். எனக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது.
கும்சா உணர்ச்சி பீறிடும் நிலைகளை சுலபமாக சமாளிப்பார். மெல்லிய சிரிப்பால் பதில் கூறாது தேநீரை உறிஞ்சினார். கண்களை சுருக்கி விரித்தபடி இன்று இதைவிட மோசமான பொழுது அமையாதுபோல என்று யோசித்தார்.
‘’ அண்ணா எனக்கென்னமோ கடல்பழம் மைக்கிலே நேரடியாக நம்மோட பேசறமாரி இருக்குது. உங்களுக்கு எப்படி?’’ என்றேன். சுனாமியை தேங்காய்ஒலை எப்படி தடுக்கமுடியும்! தன் நண்பனான கும்சாவிற்கு மண்டை கொள்ளாத அளவு சினிமா அறிவை தேநீர் முடிவதற்குள்ளாக புகட்டிவிட பன்போகன் காலம் நிர்ணயித்ததுதான் அபாயமாகிவிட்டது. காதில் நுரை தள்ளிவிட்டது கும்சாவிற்கு.
‘’ நீங்க சொல்லுங்க கும்சா, நாஞ் சொல்றது பொய்யா? ’’ என்றவரை எதுவும் புரியாமல் கடைவீதியில் சென்ற ஒரு பெண்ணின் புட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கும்சா ‘’ இயக்குநரு நெறயா விஷயம் சொல்றாருங்க, படம் ஓடீரும் ‘’ என்று போகிற போக்கில் சொல்ல, பன்மோகன் மூக்கு விடைத்துவிட்டது.
‘’ கும்சா என்ன நீங்க கார்ப்பரேட்டாயிட்டீங்களே தல ஒரு மயிரும் அந்தாளு செய்யுல. 22 கோடி ரூபாய் செலவு எவ்வளவு வரும் சொல்லுங்க பாப்போம்? ‘’
கும்சா மிகச்சிக்கலான கட்டத்தில் என்னைப்பார்ப்பார். விரைவீக்கம் வந்தவன் சிறுநீர் போக பழனிமலை ஆண்டவனிடம் கூட வேண்டிக்கொள்ளப் போவான் இல்லையா?
‘’ நஷ்டமெல்லா ஆவாதுங்க, சம்பாரிக்கறக்கு சினிமாவுல பல வழி இருக்குது ‘’ கேள்வியும் பதிலுமாக பன்மோகனே கூறிவிட்டு, ஆகா இங்க ஒரு கேரக்டர் என்று என்னைப்பார்த்தார். ‘’ ஆமா படத்துல உங்களுக்கு என்ன புடிக்கல அதச்சொல்லுங்க ‘’
கும்சாவின் கோப்பை வேகமாக காலியாகிக்கொண்டிருக்கிறதை உணர்ந்தேன்.
‘’ ஐ.டி பீல்டே வேலைக்காக மீசையை வழிச்சுக்கற ஆளுக. அதே சமரசம்தான? அப்பறமா டி.வி மூலமா பெரிய புரட்சி பண்ணமுடியும்னு சொல்ல முடியாது. அரசாங்கம் நெனச்சா என்ன வேணுனா பண்ணமுடியும். செயற்கைகோளு மூலமாத்தான டிவி ஒளிபரப்பாவுது. அத நிறுத்தீர முடியாதா என்ன? ஊழல் பத்தி எடுத்த இந்தப்படம் விளக்குமாறு கட்சிக்கு வேணா உதவலாம். அதத் தாண்டி பல பிரச்சனைகள் இருக்கற நமக்கு பெரிசா ஒண்ணும் இல்ல ’’
தன்னை விட அதிகமாக பேசும் ஒருவனைக்கண்ட பன்போகன் திகைத்தபடி ‘’ நீங்க நெறயா படிக்கறீங்க, அதான் ‘’ என்று பிரச்சனையின் ஆணிவேரைப்பிடித்துவிட்ட திருப்தியோடு சிரித்தார். தன்பேச்சை கேள்விகளில்லாமல் கேட்கும் ஒருவரை விரும்புகிறாரோ என்னவோ என்று சந்தேகமாக இருந்தது. கும்சாவிற்கு இருந்த முன்னிலையே அதை நிரூபித்தது.
செரிமானத்திற்கு தேநீர் நல்லதா?
அறுபத்து மூவர் திருவிழா சமயம்தான் அவர் வந்திருந்தது. கும்சா ஆத்தாடியோவ் என்று அமெரிக்காக்காரன் நிறுவனத்திற்கு வேகமாக கிளம்பிப்போக, நாங்கள் சிறிது நேரம் அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது தன் கதையைக்கூறட்டுமா என்றார். நான் யதார்த்தமாக ‘’ ஒரு டீ குடிப்போம். கத நல்லா செரிமானமாக வேண்டாமா? ஈஸியாக இருக்கும் ‘’ என்று கூற பன்மோகன் முகத்தில் எரிந்த பிலிப்ஸ் எல்இடி பீஸ் போனது அப்போதுதான். அப்புறம் கதை பற்றி பேசவேண்டுமோ! மனுசனப்பா அவன். சர்க்கரை பொங்கலை வாங்கித்தின்றபடியே மயிலை குளத்திலிருந்து லஸ் போய் பஸ்ஸில் அனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.
16
மதுபானக்கடை ரிட்டர்ன்ஸ் - சிண்டன்
இரவில் கிருஷ்ணன் வைத்த வீடு எனும் கல்யாணி எழுதிய சிறுகதைத் தொகுப்பைப் படித்து நெக்குருகி நெகிழ்ந்து கிடந்தபோது, சிவா. சிவா என்று ஒரு குரல் வெளியில் இரைந்தது. தாழை நீக்கியதும், கருப்பாய் தாடி கொண்ட உருவம் வேகமாய் உள்ளே ஏகியதும் ‘சிவா இல்ல’ என்று கேட்டவாறே உள்ளே சென்று படுக்க இடம் தேடியது. ‘’இங்க படுங்க’’ நான் போர்வையை எடுத்தவாறு கூறுவதற்குள்ளாகவே புத்தகக் கட்டுக்கள் கொண்ட அறையின் தரையில் சரிந்துவிழுந்த தொப் சத்தம் காதில் கேட்டுவிட்டது.
யார் இது? அந்தாளு பாட்டுக்கு உள்ளே வந்து படுத்துக்கிட்டான்? சித்தனோட ஆத்மார்த்த நட்பு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, ‘’ கிரிவலம் போவணும் பாஸூ, நேரமே எழுப்பி விடுங்க’’ என்று அவரின் குரல் கேட்டது. அறை முழுக்க ஏதோ நெடியடித்து நிறைவதாக பட்டது. மதுபானத்தின் நீக்கமற நிறையும் வெம்மையான நெடி.
அறையில் எரிந்த மெழுகுவர்த்தியினை அணைத்துவைத்துவிட்டு, இருள்சூழ் அறையாக்கி படுத்தேன். வந்தவரின் பெயர் கூட தெரியவில்லையே என்று லேட்டரல் திங்கிங் அப்போதுதான் உதயமானது. ஆள் பார்க்க சித்தனின் நட்பு என்று அர்த்தம் கொள்ளுமளவு உடையும், பழக்கமும், சிந்தனையும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு பேபி டால் சன்னிலியோனைத் துணைக்கழைத்துக்கொண்டு உறங்க எண்ணினேன். நான்சி பிரைடேவின் எழுத்து, இன்னும் பல பெண்களை கைபிடித்து இழுத்து மூன்றாவது காலை முட்டுக்கொடுத்து தூங்கிப்போனேன்.
உறக்கம் கலைந்து எழுந்தபோது, தொட்டாலே அழுக்கு ஒட்டி சொறிசிரங்கு வந்துவிடும் வல்லிய வாய்ப்புகள் பல இருக்கும் துண்டினைக் கட்டியபடி நின்ற மதுபானக்கடையைப்பார்த்து, ‘’ ஏங்ணா கெளம்பறீங்களா?’’ என்றேன்.
‘’ தம்பி இங்க கரண்டு எப்ப வரும்?’’
‘’யாருக்குங்ணா தெரியும், நா வந்ததிலிருந்தே கரண்டு இல்லீங்களே!’’
‘’ செரி தம்பி, நா கிரிவலம் போறன், நீ ரூமுலதான இருப்பே, வந்தர்றேன் எங்காலும் வெளியே போயிராத. பேக்கு உள்ளே இருக்குது’’
வேகமாக கிளம்பியவர் கதவின் மேல் மோதி வெளியேறினார். எனக்கோ பெரும் சந்தேகம். கிரிவலத்திற்கா இவ்வளவு வேகம்? இவ்வளவு வெறி? குறையக்குறைய ஏற்றிக்கொள்ள போவது போலத்தோன்றியது.
கிரிவலத்திற்கு ஐந்துமணி நேரம் ஆகும் என்று வாழும் மெய்ஞானி பாண்டு சித்தர் வாழும் உதாரணமாக உணர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் மதுபானமன்னன் ஆறுமணிக்கு காலில் நெருப்பு பறக்க கதவருகே வந்து நின்றபடி’’ சிவா, சிவா’’ என்று ஒலமிட்டார். கதவு தாழ் வைக்காமலேதான் இருந்தது.
‘’ ஏங்ணா இவ்வளவு நேரம்?’’
‘’ அங்கங்க ரெஸ்ட் எடுத்துட்டு நடந்தன்ல அதான் லேட்டாயிருச்சு என்று சட்டையைக் கழற்றி டேபிளில் வைத்துவிட்டு மயிரடர்ந்த உடம்பை தரைக்கு கொடுத்து படுத்துவிட்டார். ‘’ ஒருமணி நேரங்கழிச்சு எழுப்பி வுடப்பா’’ என்றார்.
எனக்கு எப்போதுமே சில மிதப்பு குணங்கள் உண்டு. எனக்க அம்மை உட்பட பலரும் லொள்ளு புடிச்ச நாயி என்று எரிச்சலாக கூறுவார்கள்.
உண்மை கலந்த நாட்குறிப்புகள் படித்துக்கொண்டிருந்தேன். ‘’ தம்பி பசிக்குது, எங்கிட்ட காசில்ல, வடபோண்டா கீது சாப்பிட்டு நா கெளம்பறேன் ’’ என்றவரை நிதானமாக பார்த்தேன். எந்தப்பொறுப்புக்கும் உட்படாத கண்கள், தன் நம்பிக்கையை தெரிவித்தன. எதையும் சமாளிக்கும் அவரின் தைரியத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
தயங்காது பணமில்லை என்று சாப்பிட பணம் கேட்கும் தைரியம்.நெஞ்சுத்தினவு. உரம். அலட்சியமான குரல். எனக்கு சாத்தியமாக என்று நினைத்தேன்.ம்ஹூம்!!!
எனக்கு பெரும் சங்கடம் தோன்றியது. கங்காணிச்சித்தன் தந்த பணம் இது. எனக்கு மட்டுமான பணம் இல்லை. ஆயிரம் ரூபாய் இருந்தது. வடை சாப்பிடுவதற்கு என்னிடம் பணம் கேட்பவர் எப்படி ஊருக்கு கிளம்ப பணம் கொண்டிருப்பார்? என்று ஐயம் தோன்றியது.
‘’ எஞ் சொந்த ஊரு நாகர்கோயிலு, சென்னைல படம் ஒண்ணு எடுத்துட்டிருக்கேன். நிலம், நீர், காற்று அப்பிடின்னு பேரு. மதுபானக்கடைன்னு ஒரு படம் வந்தது தெரியுமா? அதுல நான் கதையும், திரைக்கதையும் எழுதியிருந்தேன். அந்தப்படத்திற்கும் அவருக்கும் ஒரே சம்பந்தம் படத்தில் வரும் பாத்திரம் போலவே அவரும் சரக்கு பிரியர் என்பதுதான்.
‘’ சென்னைல ஒரு பிரச்சன, அதான் புரொடியூசர் கிட்ட கூட சொல்லாம வந்துட்டேன். எனக்கு ஊரு சுத்தறன்னா ரொம்ப புடிக்கும். என்று சிரித்துக்கொண்டே சொல்பவரை என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பமாக பார்த்தேன்.
‘’ ஒரு 110 ரூபா வேணும். சிவாட்ட சொல்லீற்றன். பணத்த கொடுத்தீங்கண்ணா ஊரு போயி சேந்துருவேன். போனும் கூட அவசரத்துல எடுத்துட்டு வரல. 110 ரூபா போதும்’’ என்று மந்திரம் போல கூறியவரை திகைப்பாக பார்த்தேன். எனக்கும் அவருக்கும் அரைமணிநேரம் கூட பழக்கம் இல்லை. பணம் கேட்கிறார். திரும்பித்தருதல் என்பதெல்லாம் தேவைப்படாது என்று எவ்வளவு நம்பிக்கை. சரியான ********தான் போல.
கங்காணியை அழைத்து விஷயத்தைக்கூற, 150 ரூபாய் கொடு என்றார். எனக்கு ஆள் எப்படியும் குடித்துவிட்டு மூத்திரச்சந்தில்தான கிடப்பாரோ என்று தோன்றியது. சரி சாப்பிடுவோம் என்று கடைக்கு போனால் தள்ளுவண்டிக்காரர் இல்லை. லாரிக்காரர்கள் மட்டும் அதிகம் உணவருந்தும் ஆவி பறக்கும் ஓட்டல் கடையில் சென்றால் ஒரு தோசையை நிம்மதியாக பிய்த்து திங்க முடியாத சூடு. (ஹோட்டல் பேரு தீபமாம், அதுக்காக உக்கார சேரு கீழ கூடவா சூடா இருக்கும்) எவன் குறைவாக தின்கிறானோ அவன்தான் நிச்சயம் சாப்பிடுவதற்கு பணம் கொடுப்பான் இல்லையா, அதுவேதான் நிகழ்ந்தது.
ஆயிரம் ரூபாயை சில்லரை மாற்ற பேருந்து நிலையத்தை தீர்மானித்தேன். என்னிடமிருந்த பணத்தை எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே இருந்தார் மதுபான மன்னன். பின் மதுபானக்கடையில் சில்லரை மாற்றிக்கொடுத்துவிட்டு ‘’இதல்லா பிராக்டிகல் நாலேஜூ’’ என்று ஏகத்திற்கும் பெருமை அடித்துக்கொண்டார். அது இருந்து இவர் என்ன சாதித்துவிட்டார் என்று கடும்கோபம் எழுந்தது. ‘’ 200 ரூபாயா குடு. பஸ்ல போறக்கு பத்தாது. அப்பறம் ஒரு பத்து ரூவா சில்லரையா குடு. நூறு ரூபாயா குடுத்தா கண்டக்டரு திட்டுவான்’’ என்று 210 ரூபாய் வாங்கிக்கொண்டார் மதுபான மன்னன்.
சாப்பிட்டதில் அவர்கணக்கு 25 ரூபாயாக ஆகி இருந்தது. பிறகு குடிபோதையில் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறப்போய் இறங்கினார். ‘’ஒரு குவார்டர் அடிச்சிட்டுப் போவமா, ஒரு மாதிரி இருக்கு’’ ஒரு கெட்டவார்த்தை என் மனதில் சுருதி பிசகாது ஆவேசமாக எழுந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘’ ஒரு 50 ரூபா கூட குடுத்திரு என்ன சொல்றே’’ என்று மேலே அடுக்கிக்கொண்டே போனவரை வேண்டாம் என்று சொல்லி வந்தேன். செலவு வைக்க கடுமையாக யோசித்தபடியே வந்தார். மோரு குடிக்கலாமா என்று கேட்டபடி, கிங்ஸ் ஒன்று வாங்கி ஒரு வாய் புகை, ஒரு வாய் மோர் என்று குடித்தார். ஏதாவது பேசித்தொலைக்க வேண்டி நம்மாழ்வார் பற்றி ஏகலைவன் பத்திரிகையில் எழுதியிருப்பதைச் அப்போதா சொல்லித்தொலைக்க வேண்டும்?
அப்படியா என்று புகைத்தபடி கேட்டவர், ‘’ புத்தகத்த வாங்கணுமே என்னன்னு பாக்க வேண்டாமா?’’ என்றவரை திகிலோடு பார்த்தேன். மோருக்கும், சிகரெட்டுக்கும் பணம் பதினாலு ரூபாய் கொடுத்துவிட்டு, இதற்கு ஒரு தந்திரம் செய்தார். ‘’எங்கிட்ட சில்லற இல்லை.உங்கிட்ட இருக்கில்ல. நீயே கொடுத்தறயா?’’ என்று அந்தப்புறமாய் திருப்பிக்கொண்டார்.
மதுபான மன்னன் பேருந்தில் ஏறி உட்கார்ந்தபின் நான் கணக்கு போட்டுப்பார்த்தபின் காந்தியின் அனாமத்தான வரா கணக்காக 250 ரூபாய் ஆகியிருந்தது.
17
அறிதலின் கணம் - ஸமீரா சித்திக்
கேள்வியும் பதிலும் அவரே.
தொகுப்பு: ஸ்மால் சில்லி
திரைப்படம் குறித்த தங்களது விமர்சனங்கள் அரச பரம்பரை, ஆண்டன் செகாவ், போன்றோரால் கடும் கண்டனங்களைப் பெறுகிறதே?
இது இயல்பாகவே நடைபெறக்கூடிய ஒன்றுதான். பெயர்கள் மட்டும் மாறும். எனது எழுத்துக்களும் கருத்துக்களும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின என்பது உண்மைதான். நான் மறுக்கவில்லை. பிம்பம் காண்பவருக்கு பல வாய்ப்புகளை, திறப்புகளை வழங்குகிறது. நான் எப்படி அதைப்புரிந்து கொண்டேன் என்று மட்டும் நான் தெரிவித்தேன். அவர்களின் அனுபவம் சார்ந்து வேறுவிதமாக காட்சியளிக்கலாம். நான் கண்டதை நீ காணவில்லை ஏன் என்பது சரியான வாதம் அல்ல. பகிர்தல் வேறு. குயுக்தியாக தன் புத்தியை மேலே உயர்த்திக்காட்டுவது வேறு.
மகாபாரதத்தை முன்வைத்து ஜெயமோகன் முப்பது நாவல்வரிசை வெளியிடுகிறார் எப்படி சாத்தியம் இது?
நம் முன்னோர்களின் அளப்பரிய கற்பனை சக்தியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவை இன்றும் மீள எழுத எழுத்தாளர்களுக்கு பல வாசல்களை திறந்துவைத்துள்ளது. உக்கிரமான எண்ணங்களை மனதில் பீறிட வைக்கும் எழுத்து ஜெவினுடையது. ஜெவின் நூல்களை ஆழமாக உணர்ந்து கற்க வேண்டியதாகவே நான் கருதுகிறேன். பல அடையாளக்குறியீடுகளை களைந்துவிட்டு அவரது எழுத்தை படிக்கும் விசால மனம் நமக்கு வேண்டும். சுஜாதா படிப்பவர்களுக்கு ஜெ கசக்கத்தான் செய்வார்.
கடும் பரிகாசத்தொனியோடு புலிகேசி திரைவிமர்சனம் செய்கிறாரே. ஆபத்தில்லையா இது?
பணம் செலவழித்து படம் பார்ப்பவனுக்கு அதை எழுத மறுப்பு ஏன்? ஆர்.எம் போன்றோர் தூங்க தியேட்டர் செல்கிறார்கள். புலிகேசி படத்தின் எண்டு கார்ட் வரை ஏதோ தொலைத்துவிட்டதைப்போல் தேடுகிறார். எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. படம் நஷ்டமடைய இன்று சூழல் இல்லை. இங்கு எவ்வித புரிதலும் இல்லாமல் அனைத்து குப்பைகளும் வெற்றியடைகின்றன.
கட்டுரை மொழிபெயர்ப்பு ஏன் செய்கிறீர்கள்? சிறுகதை எழுதியவரல்லவா?
நான் எதற்கு தாராபுரத்தார் போல எழுதி குவிக்கவேண்டும்? அவரும் புத்திசாலித்தனமாக விகடனுக்கு எழுதி பணம் பெறுகிறார். அதுபோலத்தான் கட்டுரை மொழிபெயர்ப்பும். கங்காணிச்சித்தன் பணம் தருகிறார். செய்கிறேன். இதில் சொல்ல ஏதுமில்லை. நான் எழுதிய புத்தகம் என்று என் கட்டுரையை காட்டினாலே யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள் என் தாய் உட்பட. தரமான சில விஷயங்களை செய்தாலே போதும்.
கதைகள் படித்ததில் தங்களுக்கு பிடித்த நூல் ஒன்றையும் எழுத்தாளர் ஒருவரையும் கூறுங்கள்.
அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகளுக்கு நான் அடிமை. எள்ளலும் , அங்கதமும் கூடிய எழுத்து அவருடையது. புன்சிரிப்பில்லாமல் அவரது கதைகளை படிக்கவே முடியாது. அறிதலை நிகழ்த்துகிற இவர் தமிழின் சொத்து என்றே கூறுவேன்.
18
பக்கத்துவீட்டுப்பெண் - குஸ்கா ராஜ்
வீட்டின் அருகே ஒரே பரபரப்பு. என் தங்கை முறை வரும் பெண் தன் நாற்பது வயதான மாமனை மணக்கும் பேராபத்தை தடுக்கும் பொருட்டு அருகிலுள்ள ஊரைச்சேர்ந்த ஒருவரை காதலித்து மணந்துகொண்டு விட்டார்.
பரபரப்பிற்கு ஏங்கிக்கிடக்கும் மனிதர்கள்தானே அனைவருமே. உற்சாகமாகிவிட்டது எங்களது சொந்த பந்தங்களுக்கு. அட அந்தப்புள்ளதே, உனக்கு தெரியாதா, பள்ளிக்கொட போயிட்டு வந்திக்கிட்டிருந்ததே ஆடு ஓட்டிக்கிட்டு வருமல்லோ அந்த ஆத்தாவோட பேத்திதே, என்று சொல்லி இன்ஸ்டன் அப்டேட் தந்து ஸமீராவீன் தாய் ஆவலாதி பறக்க அலைந்தாள்.
ஸமீராவின் சொந்தக்காரரின் கதையோ இன்னும் முடை நாற்றம் எடுப்பது என்றாலும், ஏலே அடுத்தவனுக்கு கஷ்டம்னா! சக்கரய எடு, வாயில போடு. ஆத்தா சொல்லியிருக்குல்லா! என்னா உற்சாகமப்பா. பய யாரு? என்ன சாதி? நிகழ்ச்சி நடந்த தேதி? இன்ன பல சிறப்பு செய்திகளை தார்சாலையில் சொம்பு வைக்காத குறையாத பேசி, அடிபம்பு தண்ணி நிறைத்து குடித்துவிட்டு பேசினார். ஆத்தாடியோவ். இவங்கள்ளா இருந்தா சன்டிவி இன்னேரம் பி.பி.சியாட்ட மாறியிருக்குமே. செய்வீர்களா? செய்வீர்களா?
குஸ்கா நியூஸ் என்ன சொல்லுதுன்னா, மாமங்காரன்னா கட்டுனா, அந்தப்புள்ள காலயில அள்ளற சாணிக்குப்ப காசு கூட அவளுக்கு கிடைக்காது. நிம்மதியா இருக்கமுடியாது அந்த சவங்களோட. தங்கள் வீட்டுப்புள்ளய கூட்டிட்டு வரப்போயிருப்பவர்கள் அனைவருமே பெண்டு பிள்ளைகளை அனுப்பிவுட்டு காலையிலேயே குடித்து தீர்ப்பவர்கள். ஆனா என்ன அந்தப்புள்ள கட்டுனவன் ஒழுங்கா இருக்கோணும் இல்லன்னா கஷ்டம்தானப்பா! அப்பத்தே அஞ்சப்பரு ஹோட்டலு இறாலு பிரியாணி மாரி வாழ்க்கை மணக்கும்.
19
சிலம்பக்குச்சியினை எடுத்த கலைத்தாய் - தத்துக்கொழந்த
ஆள் நல்ல கிரேன் மனோகர் போல இருப்பார். கட்டைகுட்டையான உடல்தான் என்றாலும் நல்ல வலுவான உறுதியான தேகம் நம்பிக்கை மிளிருகின்ற முகம் அவருக்கு. நமக்குத்தான் பேச்சு என்றாலே உதறல்தான்.
‘’தோழர் சாப்பிட்டீங்களா?’’
‘’ எப்போ?’’ என கோணலான சிரிப்புடன் கேட்டார்.
முட்டைபோண்டாவும், டீயும்தான் காலை உணவு.
‘’கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதாங்க’’
‘’ அப்ப சாப்புட்டுடீங்க?’’
எங்கள் அப்பத்தான சத்தியமாக இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவரது துணைவி என் முகத்தில் பேய் போல அலைந்த கண்களைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
கங்காணிக்கு மேற்கோளைத்தேடி எடுப்பதிலே உயிரே போய்விடும் போல் இருந்தது. இதோ இப்போது வெளிக்கு வந்துவிடும் என்று பயந்தபடி சேகுவேரா லுபூம்பா, களறி என்று தமிழர் வாழ்வியலுக்கு சர்வதேச சொற்களை தேடிப்பிடிக்க முயன்று கொண்டிருந்தார். எப்போதுமே நான் கடவுள் வேடத்தில் இருப்பார். ஏதோ பெண் கூறித்தான் செம ஷார்ப்பாக தலைமுடி வெட்டி பாலிஷாக இருந்தார். இரண்டாவது முறையாக சுக்கு காபியை கையில் வைத்தபோதுதான் சிலம்பத்தலைவர் மாதேஸ்வரன்தான் என்னிடம் கேள்வி கேட்டவர் என்று தெரிந்தது. கூடவே சிலம்ப வகையறா மாணவர்கள் அண்ணாச்சியை சுற்றி வந்து வைக்கும் ப்ளெக்ஸ் பேனருக்கு நாலுக்கு ஆறு, ஆறுக்கு எட்டு ஏதோ செயற்கைக்கோள் விஞ்ஞானக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். பொரிக்காரர் நானும் வரவா என்பது போல குரல் கொடுக்க மாதேஸ் அண்ணாச்சி பொரி வாங்கலாமாடா என்று தன் சிஷ்யர்களிடம் கேட்டார்.
வாய்ப்பிற்குத்தானே காத்திருக்கிறோம் என்று சிஷ்யர்கள் பாய்ந்து சென்று வாங்கினார்கள். அந்த ஓட்டத்தை உசேன்போல்ட் கூட ஓடியிருக்கவில்லை என்றால் பாருங்கள். மாதேஸ்வரன் அவர்களை பார்த்தால் ஏதோ நெல்லைஸ்டோரில் பொட்டுக்கடலை மடித்துதருபவர் போல் இருந்தாலும் பல புகைப்படங்களில் சிலம்பக்குச்சியை வைத்துக்கொண்டு உருமாலை கட்டியபடி போட்டோஷீட் நடத்தி பயமுறுத்தி பார்ப்பவனையெல்லாம் அண்ணன்டா.. என நம்பிக்கையில் வைத்திருந்தார்.
கலைத்தாய் அறக்கட்டளை வழியே பல மாணவர்களுக்கு விலையில்லாமல் சிலம்பு சொல்லித்தருகிறாராம். மிக நம்பிக்கையான இளைஞர் படை ஒன்று ஈரோடு மாநகரில் திரள்கிறது.
20
ஆண்டன் செகாவிற்கு விருது
தாராபுரத்து ஆண்டன் செகாவிற்கு படித்தவர்களின் மேல் புழுதியை மேல் அள்ளித்தெளித்தாற்போல சிறுகதை எழுதித்தள்ளியதற்காக கயமை இதழ் உஜாதா விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது. கும்சா விழாவிற்கு சென்று வந்தார். ஆண்டன் செகாவ் விருதுவாங்குவதை பார்க்கவில்லை என்று கூறினார். கூடவே நீ லெட்டரு எழுதாத. செகாவ் புலம்பித்தள்ளறாரு. அவர் எழுதிய கதையை படித்துவிட்டு நான் வருத்தப்படவில்லையா? என்றபோது பதிலில்லை.
விருதிற்காக எழுதுவது சிறந்த எழுத்தாக நிச்சயம் இருக்கமுடியாது. எழுத்தாளருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான். காலம் தாண்டியும் ஒரு படைப்பு வாழுவது எழுத்துக்கான சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.
உண்மையான உழைப்பிற்கு விருது என்பதெல்லாம் கடந்துபோன இறந்துபோன நினைவுகளாகி விட்டன. தெரிந்தவர், சாதி, நட்பு, பதிப்பாளர் இப்படித்தானே விருதுகள் கிடைக்கின்றன. மீதமிருக்கும் வாழ்வுதான் எப்போதும் சிக்கலே. இப்போதெல்லாம் குஜய் டிவியில் தாம்பூலப்பை போல விருதுகள் தரப்படுகின்றன. அனைவருக்கும் வழங்கிவிட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை. இதுதான்யா சமதர்மம் அப்படீங்கறது! தாராபுரத்து எழுத்தாளர் விருது பெற்றதிற்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
21
கட்டிக்கொள்ள வேண்டும் - கேய்
கங்காணியின் நண்பரான இரா. குந்தானத்தை சந்தித்து பேசினேன். வேலூரில் மாரத்தான போட்டி தொடங்க உள்ளாராம். முப்பது நாள் இருக்க அதற்கான ப்ளெக்ஸ் வாசகங்கள் ப்ரவுச்சர் வடிவமைக்க கங்காணியின் உதவியை நாடி வந்தேன் என்றார். கங்காணியோ இடதுகளில் சகவாசத்திற்கு பரிகாரம் தேடவே நேரமில்லை. மூன்று நாட்கள் குந்தானம் தங்கியிருந்துவிட்டு ஒரு இரவு பதினொரு மணிபோல கிளம்பிச்சென்றார்.
நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொண்டார். பெரியார், மாட்டுக்கறி, சிவன், கிரிவலம், நம்பிக்கை, உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு, வேலை, இளமை என அத்தனை தலைப்புமே குமுதத்தில் வந்தால் எப்படியிருக்கும் அவ்வளவு எளிமையாகத்தான்.
சுப.சூரபாண்டியன்(குலைஞர் டிவி புகழ்) அவரின் உதவியாளராக ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார் மூன்று ஆண்டுகள். பின் நெல்லையில் ஒரு நூலகம் ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கிறார். மிக எளிமையான களப்பணி செய்யக்கூடியவர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருமுறை பணியாற்றியவர் இவர்.
முப்பத்தாறு வயதாகும் இவர் எது குறித்தும் தன் அனுபவத்தில் உணர்ந்தவற்றை மட்டுமே பேசுகிறார். அதுவே இவரது பேச்சினைக் கேட்கத்தூண்டுகிறது.
22
தாம்பூலப்பை ரெண்டு வேணுமப்பா!!! - சித்தனடிமை
கங்காணியுடன் பணிசெய்வது என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் நிறுத்துவார் என்று அவருக்கே தெரியாது? கல்யாண வீட்டு மக்கள் வெளிவரும் இடத்தில் ஆத்திச்சூடி, அகநானூறு, பிள்ளைத்தமிழ் எனத் தேடிப்பிடித்து துணிப்பைகளில் அச்சடித்து அதில் தேங்காயைப்போட்டு தர நம்மை அழைப்பார். இறுதியில் மிஞ்சுவது கல்யாண வீட்டு சாப்பாட்டு மகிழ்ச்சி மட்டும்தான். அதையும் சீக்கிரமாக சாப்பிட்டு வரவேணும் என்பார். அட இங்க நின்ன கங்காணி எங்கப்பா என்றால் பக்கத்து மண்டபங்களிலும் தாம்பூலப்பைக்கு இன்சார்ஜ் ஆகி, மக்களுக்கு பை வழங்கி சேவையாற்றிக்கொண்டிருந்தார். நம்மு மண்டபம் இது இல்ல சித்தரே வாங்க போவோம் என்றால் தாம்பூலப்பை ஒண்ணுதான? இது நமக்கு போதைபோல என்று என்று ஏதோ கவிதை வரிகளை, லத்தீன் பாரசீக வரிகளை கூறுவார்.
ஆண்டா.. ஆ ண்டா … ஆ.. செல்வம் வந்திருடா என்று பேசும்போது மட்டும் அருகில்போகக்கூடாது அவரது சிஷ்யன் குருணை செல்வம் கூறினார். ஏனுங்க அது ஓர் உயிர்க்கொல்லி நோய் போல. பத்திரமாக பாத்துக்கங்க என்றபடி கிளம்பினார் செல்வம்.
23
மனசாட்சி மீது ஒரு பிடி மண்ணள்ளிப்போடு!!! - பெருமாநகரப் பார்ப்பனன்
நீங்கள் எல்லோரும் வெட்கப்படத்தான் வேண்டும். என்னைப்பாருங்கள். எனக்கு பன்னாட்டு வங்கியில் கடும் சம்பாத்திய வேலை இருக்கிறது. நான் இந்த வேலையைப் பெற என் அப்பன் நிறைய செலவு செய்தான் உண்மைதான் அதனாலென்ன, இன்று இருட்டில் கண்மங்கி கிடக்கிறான் கிராமத்து வீட்டில். மக்கிச்சாவட்டும் தாயோழி.
எனக்கு கல்யாணம் செய்து வைத்து தன் சேமிப்புகளை சோறாய் வைத்து இறைத்தது இன்று பராரிகளாய் கிடப்பவர்கள்தான். என் பணத்திற்கு அவர்கள் வாழ்வு தகுதி உடையதா? இன்றைய நிலையில் எச்சிலைகளை நக்கும் நாய்களைப்போலத்தான் அவர்கள். நான் இன்று பெறும் பணம் அவர்கள் கொடுத்த பணத்தின் அடிப்படையில் அதிகம்தான்.
நான் இப்படி என்னை உயர்த்திக்கொள்ள உதவிய ஒரு புள்ளை பூச்சியை இதோ கேஎப்சியில் பக்கெட் சிக்கனை சுவைத்துக்கொண்டே யோசிக்கிறேன். அட! பக்கத்து டேபிளில் இருப்பவளின் முன்பக்க செழுமை என் கவனத்தை தன்பால் இடையறாது இழுக்கிறது. தன்னியல்பாக என் குறி ஜாக்கியினுள் விரைக்கிறது.
திட்டமிட்டு அவனை என் இருப்பிடத்திற்கு படிக்க அழைத்தேன். குருட்டு பயல் நம்பி வந்தான். எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உண்டு செரித்தேன். தேநீர் உள்ளவரைதான் கப்பிற்கு பெருமை. இல்லாதபோது கசக்கி எறியவேண்டியதுதான். படிப்பை முடித்தவுடன் வேலை தேடி திரிந்தான். அப்போது எனக்கு பார்த்திருந்தவள் பார்க்க விகாரமாக இருந்தாலும், என்னால் அவளது உடலை கையாளமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னை பயன்படுத்திக் கொண்டவளை பழிவாங்க அவளது திருமணத்திற்கு முன்பே இவளை மணம் செய்ய முடிவெடுத்தேன்.
எனது தம்பி வேறு இங்கேயே தங்கியிருந்தது எனக்கு கடுமையான எரிச்சலாக இருந்தது. இந்த பரதேசி நாயிற்கு நான் செலவு செய்யவேண்டுமா என்ன? அவனை சிறுவயதிலேயே பலமுறை கடுமையாக காயப்படுத்தி, அடித்திருக்கிறேன் என்றாலும் அவனை முழுமையாக மனதின் நம்பிக்கையை இழக்கச்செய்து தற்கொலை செய்துகொள்ள வைக்க முடியவில்லை. அதற்கு சரியான ஆளை என் மனைவிதான் என்று விரைவில் புரிந்துகொண்டேன்.
மாநகரில் இருந்து வந்து திருமணத்திற்கு சரியாக வந்துவிட்டேன் என்றாலும் பத்திரிக்கை கொடுப்பது எல்லாம் முகம் கறுத்துவிடும் என்பதால் என் தம்பியை வைத்து உதவி செய்வதாக கூறி காரியம் சாதித்துக்கொண்டேன். முதலிரவில் வெகுநேரமாக இனக்குழு நாய்களிடம் மொய் பணம் வாங்க நின்றுகொண்டிருந்ததால் சோர்ந்து போய் விட்டேன்; உடலுறவிற்காக தின்ற பல லேகியங்கள் எனக்கு கண்ணில் பல தேவதைகளைப் பறக்க விட கண் அயர்ந்து விட்டேன். இதை வெகுநேரமாக கவனித்து சுவரில் சாய்ந்து கவனித்து எரிச்சலான என் உலகப்புகழ்பெற்ற மூக்கு மனைவி எனது ஆண்மை குறித்து பேசியவை பற்றி உலகப்புகழ்பெற்ற மரு.சிவராஜ் அவர்களின் வாயில் கூட கேட்டதில்லை. பின் இயங்குவதற்கு வேறு என்ன வார்த்தை தேவை. இப்போதே டிஸ்னியில் வரும் சூனியக்காரி போல இருக்கிறாள். குணமும் அப்படியே. சரி, இரவிற்கு என அங்கீகரிக்கப்பட்ட நீண்ட கால விபச்சாரி இவள் என்று வைத்துக்கொண்டு நாகரிகத்திற்கு ஏற்றவளை அலுவலகத்தில் கண்டுகொண்டேன். அலுவலகப்பெண் உடையை கழற்றாதபோதே பெரும் எழுச்சியினை கனவுகளில் எழுப்ப வல்லவள். மனைவியின் உடலோ வெடித்துபோன நிலம்போல.
என் அதிகாரம், சம்பளம் எல்லாம் குறிப்பிட்ட எல்லையிலேயே அடங்கி விடுகிறதே என்ன செய்வது? இலக்கியம்தான் என்க கண்ணில் பட்டது. தெரிந்த மண்ணின் மைந்தனான எழுத்தாளரின் கதைகளைத் திரும்ப திரும்ப படித்து அதிலிருந்து மலிவான ஒரு பிரதியை தயார் செய்து, சில காதல் கடித விஷயங்களை சேர்த்து, கருணை, காதல் நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்த்தேன். சரி வெளியிட ஒரு இதழ் வேண்டுமே. பத்திரிக்கையில் உள்ள மதுபானப்பறவை ஒருவன் உதவிக்கு வந்தான் நிபந்தனைகளோடு. குற்றெழுத்து இதழில் கதை வெளியாக, மண்ணின் மைந்தனான எழுத்தாளரே மிரண்டுபோய் என்னை மாதிரியே எழுதியிருக்கறயே என்று கூறுமளவு நகலின் சேர்மானம் மிகத்தெளிவாக வந்திருந்தது. அவரின் அதிர்ச்சியை ரசித்தபடியே, அவரின் வீட்டில் வட்டலில் இருந்த ரசத்தை உறிஞ்சிக்குடித்தேன்.
தந்திரம் பழகுங்கள் நண்பர்களே. அப்போதுதான் எங்கேயும் பிழைக்கமுடியும். அவனா? இவனா? என கருத்துபிழைப்பு நடத்தும் நிகழ்ச்சியல் ஆசிரிய தலித் எழுத்தாளரை வியப்படைய வைத்தது, பன்னாட்டு வங்கியில் பணிபுரிவதோடு, சாயல் கதைகளை எழுதி தக்க வைத்திருந்த இலக்கியபிம்பம்தான். யாரையும் பயன்படுத்திக்கொண்டு புகழ், பணம் கொண்ட ஏணியில் ஏறிவிடவேண்டும். மனசாட்சியா? மயிறு உதிர்ந்து போச்சு என்று என்றாவது கவலைப்படுவீர்களா? நாம் முன்னேற யாரையும் ரத்தம் கசியாது காயம் படாது அடித்து உடனே சாகாதவாறு நொறுக்கவேண்டும். இதை எனக்கு அறச்சலூர் குரு எனக்கு கற்றுக்கொடுத்ததோடு, இன்று வரையும் பயன்படுத்தி விஸ்வரூப வெற்றிகளை பெற்றுவருகிறார். அவர் தளம் புத்தியும் விரிந்த வன்மமான, வக்கிரமானது.
என் இளையவனின் நம்பிக்கையை குலைக்க பல விஷயங்கள் செய்தேன். கிடைக்கின்ற வாய்ப்புகளிலெல்லாம் கடும் வார்த்தைகளினால் துவைத்தெடுத்தேன். அவனின் நம்பிக்கையை வற்றச்செய்யவேண்டும் என்பதுதான் முதல் அஜென்டா. பின்னர் உடல் வலிமையை. அதை நான் அழிக்கவேண்டியதில்லை. அவன் முதலிலேயே சோனிப்பயல்தான். வேண்டுமென்றே தாமதமாக எழுந்து சோறு எதுவும் தயாரிக்காமல் வகுப்பிற்கு செல்லுமாறு செய்தேன். பிஸ்கட் வாங்கிச் சாப்பிட இருபது ரூபாய் தருவேன். இரவு வரை அவன் அதைக்கொண்டே சமாளிக்கவேண்டும். பஸ்ஸில் ஏறவெல்லாம் நான் விடுவேனா! நாயிக்கு இது ஒரு கேடா, நடந்து செல்ல வைத்து மிச்ச சக்தியை அழித்தேன். ச்சீ இதெல்லாம் நினைத்தால் சிக்கன் சாப்பிடமுடியுமா சொல்லுங்கள். இருங்கள் ஏதோ ஒரு காம்போ ஆபர் இருக்கிறதாம். வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன்.
வகுப்பிற்கு போய்விட்டு வந்தபின் என் துணிகளை கவனமாக துவைக்கச்சொல்லிவிடுவேன். நான் ஏன் துவைக்கவேண்டும்? அடிமை இருக்க முதலாளி ஏன் வேலை செய்யவேண்டும்? பைத்தியக்காரன் நான் சொல்லுவதையெல்லாம் நம்பினான். அப்பனோ நான் சொல்லுவதையெல்லாம் நம்பி பணத்தை தாராளமாக அனுப்ப நான் என் பிற்கால வாழ்க்கைக்காக அதை சேமித்து வைத்தேன். இந்தப் பரதேசி பயலுக்கு எதற்கு கொடுக்கவேண்டும்? சாவட்டும் சவலைப்பயல்.
அவனை ஊருக்கு துரத்தியபின், ஏனோ டேனியலின் பாடல்களைக்கேட்க வேண்டும் போல் இருந்தது. குற்றவுணர்வை மறக்க இவனை விட சிறந்த உதாரணம் வேறு எங்கும் இல்லை. தன் இனம் சாக எங்கோ சாமி சிலை வேலை செய்து கொடுத்தானாம். சரி அவன் பணம். நான் இல்லையா? மிலிட்டரி ஹோட்டலில் கறிச்சோறு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். கைபேசியில் காமம் கிளர்ச்சி பரிமாறுகிறவர்களின் தளங்களை பார்வையிட்டேன். குறையாத ஆசை. ரத்தம் சுண்டும் வரை இல்லையா? முன்பு காதலித்த பெண்ணுக்கு சிசு கருவிலே கலைந்து போய்விட்டதாம். சாவட்டும் தேவா..பெண்.அன்று என் அறைத்தோழர்களுக்கு கேக் வாங்கிக்கொடுத்ததோடு, கல்லூரி நண்பர்கள் மற்றும் அவளுக்கு நெருக்கமாக இருக்கும் மற்ற நண்பர்களை அழைத்து விசாரித்தேன். இருந்தும் என் மகிழ்ச்சி குரலில் தெரிந்துவிட்டது.
மறுமுனையில் சில நொடி மௌனங்களுக்கு பிறகு சம்பிரதாயமாக பேசி வைத்துவிட்டான் என் நெருங்கிய கவிதை நண்பன். பின் அதனை பலரிடமும் சாடைமாடையாக பகிர்ந்துகொண்ட பின்தான் எனக்கு நிம்மதியான தூக்கம் வந்தது. எனக்கு கிடைத்திருக்க வேண்டிய உடலல்லவா அது? ஒரு முறை சந்தில் நெருங்கியபோது, பீரியட் என்றாள். ‘’எத்தன நாளா ஒனக்கு ஒழுகுது?’’ என்றேன். அவள் திரும்பிக்கொண்டாள். செலவுக்கு நானு, கிட்டவந்தா லீக் ஆவற கத… இன்னைக்கு டால்டா விக்கறவனோட ************ முடிந்தவரை அவள் உள்நுழையும் இடங்களில் அவளுடன் நான் இருக்கும் போட்டோக்களை அனுப்பினேன். வேண்டுமென்றே இரவில் அவள் எண்ணுக்கு அழைப்பது, ஆபாசமாக எழுதி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது என்று செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நான் கெட்டவன் என்று நினைக்காதீர்கள். மாநகரின் வெயிலுக்கும் சூழலுக்கு அப்படி ஒரு குணம் உண்டு. என் மேல் மட்டுமா பிழை!!!
மாநகரத்தில் குற்றவுணர்வை மறைப்பதற்கு என்று பல கட்டிடங்கள் பெரிதாக கட்டியுள்ளனர். பூங்கா செல்லுங்கள். மால் செல்லுங்கள். ஐநாக்ஸில் திரைப்படம் பாருங்கள். கைபேசியில் பிரேசர் தளம் பாருங்கள். என் கால்களில் புதிய பன்னாட்டு ஷூ ஐந்து நாட்களுக்கு முன்பு வாங்கியது அணிந்திருக்கிறேன். அடுத்தவாரம் வேறு வாங்க முடிவு செய்திருக்கிறேன். கைகள் வழிய பணம் பெறுகிறேன். என் கால்கள் சராசரி மனிதரை விட ஒரு அடி மேலே மண்ணிலிருந்து இருக்கிறது. இதோ அவள் பனியனில் மார்பகங்களை பந்தாக கருதி விளையாட அழைக்கும் வாசகம் இருக்கிறது. என்ன மாதிரியான திரட்சி! அப்பா அதற்குத்தான் மால் வந்து உயரமான இடத்தில் இருந்து கீழே வரும் பெண்களை செங்குத்தாக பார்க்க வேண்டும். திகைப்புதான். பெரும் திகைப்பு. எதைபற்றியும் எனக்கு கவலையில்லை. எனக்கு மதிப்பு தர பன்னாட்டு வேலை இருக்கிறது. மற்றவர்கள் மதிக்க எழுத்தாளனாக ஒரு பிம்பம் உருவாக்கிக்கொண்டது இருக்கிறது. வேறென்ன? அந்த பைத்தியக்கார நாய்கள் எங்காவது செத்தொழிந்தால் சரிதான்.
24
கவிதை குண்டர்கள்
அடித்து மழை பெய்த நாளிலும்
தொட்டிச்செடிகுக்கு
தேவைப்படுகிறது சிறிது நீர்.
குப்பையை குப்பைத்தொட்டியில்
போடு என்றார் ஆசிரியர்.
எனது கை தயங்காது
கவிழ்த்தது ஆசானின்
சிரசில்.
எப்படி இவரால்
சிரிக்கமுடிகிறது.
உதடுகளே இல்லாது
பல் தெரியும் ரண
இளிப்பு.
பேச வழியேயில்லை
கண்கள் உறைந்து
பொம்மையாய்…
கைகள் இடையறாது
எனது நெஞ்சில்
பாய்ச்சுகிறது கூரிய
வாளை…
குற்றம் ஏதுமில்லை
என் கண்களை மட்டும்
பார்த்துவிடாதே…
தற்கொலைப்பாடல்கள் தொகுதி – 1
25
தீர்க்கதரிசனம் - அஷ்டமுனி
குக்கூவிற்கு எதையும் அறியும் திறமை உள்ளது. அகோரி, போலீஸ் இருவரின் பேச்சு தன் பழையகாலத்தை பற்றியதாகத்தான் இருக்கும் என்று கண்டறிந்தபின் இரண்டு மூன்று நாட்கள் அதைப்பற்றி பேசி ஏதாவது தகவல்களை அவரது சிஷ்யன் போல கொக்கி போட முயன்றார். ஆனால் ஸமீரா எதுவுமே பேசவில்லை.
குக்கூ தாம்பூலப்பை கொடுக்க திருச்சி சென்றிருக்கிறார். துவைத்த வேட்டியில் ஒன்றைக்கட்டிக்கொண்டு ஓடியவர் இன்னும் வேட்டியைத்துவைத்திருக்க மாட்டார் என்பது ஆவேசகருமாரியம்மன் தலைமேல் ஆணையாக உண்மை. வாடகைப்பணம் தருவதற்கு காலை 10 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து வந்துவிடுகிறார் வீட்டு முதலாளியான முன்னாள் பொதுப்பணித்துறை. வாடகை எங்களிடம் கேட்க மட்டும்தான் வாயே திறக்க அனுமதி உண்டு. அவர் சம்சாரம்தான் அங்கே ஸ்டெபிலைசரை கருக்கும் ஹைவோல்டேஜ் உயர்மின்னழுத்தக்கம்பி மின்சாரம். அம்மணி பேச ஆரம்பித்தால் அண்ணாமலையாரே திருவண்ணாமலையிலிருந்து வேறு தலத்துக்கு போய்விடுவார் என்றால் பாருங்களேன். என் காதின் பொங்குமுடிகள் கூட கருகி உதிர்ந்துவிட்டன என்றால் பாருங்க பாஸ்… அம்புட்டு பேச்சும் அத்தன கோவமப்பா! ஆட்டோ வால்யூம் வேலை செய்யாதது அவர்கள் வீட்டு டிவியில் மட்டுமல்ல என்று அந்த குந்தாணி வாயிலும்தான் என்று கங்காணிச்சித்தன் சொன்னார்.
தினமும் காலையில் 11 மணிக்கு விழா நாள் பட்டிமன்றம் போல மாறாமல் தொடங்கும் அம்மணியின் ஒப்பாரிப்பாட்டு பக்கத்து வீட்டு பெண்ணிடம். விருபாக்ஷி குகையில் தியானம் செய்பவர்களுக்கே வேப்பிலை பூசை நடத்தியதுபோல் இருக்கும்.
தன் இரு மகள்களின் போக்கு குறித்து பேச ஆரம்பித்தால்… என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என லட்சுமியே கூறினால் தான் நிற்கும்போல.
26
செய்திகள் வாசிப்பது… - சவுண்ட் நேசன்
திருவண்ணாமலையில் இரவு முழுவதும் மழை பெய்தது. சிறிது குளுமையானது போல் இருந்தாலும், அறையின் உருக்கம் குறையவில்லை.
தள்ளுவண்டிக்காரர் வண்டியை தள்ள முடியாத காரணத்தால் வரவில்லை. இனக்குழு உணவகத்தில் ஸமீரா உணவுண்டது பரபரப்பான நிகழ்வானது.
மொழிபெயர்ப்பு பணி உன்னதமானது கங்காணிச்சித்தன் கூறியபோது 13 பக்கத்தை ஸமீரா மொழிபெயர்த்து தன் சோம்பேறித்தனத்தை முறியடித்து உள்ளூர் சாதனையை பொடாரன் புக்கில் பதிவு செய்தார்.
கொரியன் சீரியல்களை நியூ எரா டிவி தமிழாக்கம் செய்யப்போவதாய் செய்தி நாளிதழில் வந்திருப்பதாக பரதேசி, வக்கிரத்திடம் அழைத்து தெரிவித்தார்.
உயிரெழுத்தில் நஞ்சுண்டன் கதை திரைப்படம் போல் விரிகிறது. ஓரளவு நேர்த்தியான கதை எனலாம். காட்சியாக மலர சாத்தியம் கொண்ட கதை என தன் கண்டுபிடிப்பை லாய்டர் லூன் இன்று கழிவறையில் டவுன்லோடின்போது நிகழ்த்தினார்.
இனக்குழு உணவகத்தில் கல்தோசை ரோஸ்ட்டுக்கு எவ்வளவோ தேவுலப்பா என கில்லர் கபாலி தன் சமூக தளத்தில் பதிந்ததை வாசித்த புரட்சிப்போராளிகள் அணி அதிர்ச்சியில் உறைந்தது.
நியூஸ் முடிஞ்சிருப்பா!!!
27
வீட்டு முறை உணவுன்னா - இடிகம்சன்
கையைக் கழுவிவிட்டு நீங்களாக போய் என்ன இருக்கிறது என்று கேட்கவேண்டும் என்று சொன்னாலும், நம் அம்மா போல இதுதான் சாப்பிடு என்று அதிகாரத்தோடு விற்காமல் கிடக்கும் பண்டத்தை தட்டில் போட்டுக்கொண்டு தண்ணீர் உட்பட எடுத்துக்கொண்டு மேசைக்கு வரவேண்டும். வீட்டில் இதைத்தானேப்பா செய்வீர்கள்?
சாம்பார் இல்லையென்றாலும் அப்படியே சாப்பிட்டுவிடுங்கள். உணவகத்து சிப்பந்தி நம் அம்மா போல ஒருவேலை முடிந்தது என்று உணவகத்தை கழுவிட சிறிது நேரம் ஆனாலும் தொடங்கிவிடுவார்.
உணவகத்து உரிமையாளரின் குழந்தை உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் டம்ளர் நீரை எடுத்து விளையாடும், கையில் அள்ளி தெளிக்கும். வீட்டில் உறவினர்களின் குழந்தைகள் வந்தால் இதெல்லாம் செய்யும்தானே?
தின்ற உணவின் மிச்சப்பணம் நாளைக்குத்தான் கிடைக்கும் நாளைக்கு இங்கே வரமாட்டீர்கள் என்று அவருக்கு அலாரம் அடித்திருக்கும். இதற்கு நீங்கள் கேயாஸ் தியரி படித்திருக்க அவசியமில்லை.
நாளடைவில் நீங்கள் தட்டில் இலைவைத்து சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு மற்றவர்களுக்கும் சிப்பந்தியாக உழைக்க நேரிடும். விடுங்க சகோ, வீட்டில் நாம் மற்றவர்களுக்கு உணவு பரிமாறுவது இல்லையா என்ன?
சரி, இந்த உணவகத்தில் போர்டில் என்ன போட்டிருந்தது தெரியுமா? வீட்டுமுறை உணவகம். போவோமா?
28
விருது எனக்கு சோளக்கருதுய்யா - வாருகாலன்
பெரியெழுத்து சிற்றிதழில்…
தாங்கள் கடுமையாக படைப்பை விமர்சிக்கும் கொங்கு சந்நிதானம் விருது வாங்கியிருக்கிறார் கவனித்தீரா?
ஸமீரா போன்ற புள்ளை பூச்சிகள் வேண்டுமானால் அவரது படைப்பை பகவத்கீதை போல வாசித்து பயபக்தி கொள்ளலாம். அவர் படைப்புகள் சில நன்றாக இருந்தாலும் பொழுதுபோக்கு கதைகளை விட்டுவிட்டு கவனம் வைத்து நிறைவாக கதைகளை குறைவாக எழுதலாம். இல்லையென்றால் இன்று இரண்டு, நேற்று இரண்டு என்ற வருங்காலத்தொகுப்பிற்கு கதைகளை சேர்க்கலாம் எந்த வித விளைவுகளும் இல்லாமலே. அதுவே அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஐயா விருது பற்றி…
இடைமறித்து.. அதை வாங்கி என் கக்கத்தில் வைத்து வருகிற போகிறவரையெல்லாம் மிரட்சிக்குட்படுத்துவதா? அது ஒரு பைத்தியக்காரத்தனம். எழுத்து என்பது பாராட்டுக்கோ, விருதுக்கானதோ உறுதியாக எழுதப்படுவதல்ல. விருது இன்று தாம்பூலப்பை போல ஆகிவிட்டது. அனைவரும் வாங்கிக்கொள்ளலாம்.சோளக்கருது கூட பருவத்தில்தான் கிடைக்கிறது. ஆனால் விருதுவழங்குவது இப்போது யாருக்கு பொழுதுபோக்கு கிடைக்கிறதோ அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கொங்கு சந்நிதானம் உங்களது கருத்திற்கு சங்கடம் தெரிவித்தாராமே?
உண்மைகள் அப்படித்தானிருக்கும். பொய் மிகுந்த மகிழ்ச்சி தரும்படியானதாக இருக்கும். அந்த திரையும் ஒரு நாள் கழன்றுவிழும். அவரது உதவியையோ, சிபாரிசோ, அன்பளிப்பு பெறவோ எதையும் முயற்சித்து அவரின் நட்பை பயன்படுத்தாதபோது எதற்கு பயப்படவேண்டும்? அவரின் மீதான மரியாதை எப்போதும் எனக்குண்டு. இல்லாதுபோகும்போது நான் அவருக்கு கடிதங்கள் எழுத என்ன அவசியம் வந்தது?
பிஎன்ஒய் பன்னாடு தன் பிள்ளை திரையில் ஜொலிப்பான் என்று ஆரூடம் பார்த்தாராமே?
பலருக்கும் பலவிதமான ஆசைகள், நிறைவேறாத பேராசைகள். தன் மனதில், புத்தியில் இருப்பதைப்பேசுகிறவர்கள், செயல்படுத்துகிறவர்கள் பிரச்சனையில்லை. தால் ஏரியில் பயணம்போனாலும், இவர்கள் காவிரி ஆற்றினை நினைத்துக்கொண்டிருப்பார்கள். அழுகிப்போன மனங்கள். இவர்கள் புத்தி என்பது எப்போதும் அடுத்த நுகர்வை நோக்கி திருப்தியுறாமல் ஒவ்வொன்றுக்கும் யாரைப் பயன்படுத்துவது என்று அலைந்துகொண்டிருக்கும்.
ஆயில்ய அகோரியின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒவ்வொருவரைப்பற்றி கருத்து கூறுவதே மோசமான ஒன்று. அதுதான் நம் வேலையா என்ன? அவருடைய வாழ்வை அவர் அனுபவித்து வாழ்கிறார். சிறு சொல் கூட பெரும் காயத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் அவரிடத்தில் உண்டு. தனக்கான ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் வரை இப்படித்தான். பலதையும் அவர் எழுதலாம். ஆணவம், அகங்காரம் என்பார். இந்த உலகத்தில் கால் பதித்திருக்கும்வரை அவையெல்லாம் தேவைதான் என்பேன்.
பிஎன்ஒய் பன்னாடு உதவி இயக்குநர்களிடம் பழகி வருகிறாரே என்னவாக இருக்கலாம்?
அடுத்த பலியாடு அதுதான் என்று நினைக்கிறேன். தனக்கான லாபம் இல்லாத இடத்தில் பன்னாடு இருக்காது. தனக்கு பயன்படும் என்று தோன்றும் யாரையும் விலைகொடுத்து வாங்க இன்று பணம் இருக்கிறது. எழுதுகிற ரொமான்டிக் குப்பைகள் மூலம் யாரையும் எளிதில் இழிவுபடுத்துகிற அழுகிப்போன மனம்தான் அது.
இந்தியன் போலீஸ் அரசியல் விமர்சனங்களில் பொறிபறக்கிறது? பார்த்தீர்களா?
நம் வாழ்வு அதனுடன்தானே பின்னிப்பிணைந்திருக்கிறது. அவர் விருப்பப் பட்ட வாழ்வினை அமைத்துக்கொள்ள சூழல் அமைந்திருக்கிறது. தனக்குப்பிடித்த படங்களைப் பார்க்கிறார். பிடித்த பாடல்களைக்கேட்கிறார். எந்த வேலை செய்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதானே முக்கியம்.
கைக்கட்சி ஆர். எம் தன் எழுத்துக்களை கைவிட்டுவிட்டாரே?
அதற்குத்தான் ஸமீரா போன்ற புள்ளை பூச்சிகள் இருக்கின்றனவே. அவர்கள் அவர் எழுத்தை இந்த நூற்றாண்டின் உன்னத எழுத்து என்று பேசிவருகிறார்கள். அப்புறமென்ன அந்த புலிட்சரை நம்ம பழனியப்பங்கடையில் அடிச்சு தொப்பம்பட்டி கூட்டத்தில இந்த மூணுகரைவேட்டிக்கு கொடுத்துவிடலாம். மனுசன்தான் புள்ளிவிவரத்த காலயிலிருந்தே மனப்பாடம் பண்றாப்பலயே. ஊக்கப்படுத்தி உசுப்பேத்த வேண்டாமா! கொடுத்துவிட்ருவோம். எப்பவாவது யாராவது பையன் ஏதோ ஒரு புள்ளய ஓடிப்போய் கல்யாணம் பண்ணனும்னா கைகாரர வுட்டா வேற யாரு நமக்கு சிக்குவா. அப்ப கடன கழிச்சிரலாம். தெலுங்குல பிரம்மானந்தம்னா தமிழுக்கு நம்ம ஆர்.எம். வாட் எ ஐடியா சார்ஜி.
தீவிரப்புரட்சி தன் எழுத்துக்களை மட்டும் வெளியிட ஏதோ பதிப்பகம் தொடங்குகிறாராமே?
அவர் முடிவு. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. அவரது கதைகள் எந்த தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்பட வேறு வழி என்ன இருக்கிறது? அற்புத சொல்மொழியை தன் உழைப்பில் பெற்றிருக்கிறார். அதில் ஒரு சொல்லை எடுத்துவிட்டாலும், வாக்கியமே செயலிழந்துவிடும். அப்படி ஒரு கட்டமைப்பு.
ஸமீராவின் நண்பர் சொட்டவாலக்குட்டி எழுதிய ஒரு சோறு கதையைப் படித்தீரா?
நான் ஸமீராவின் எழுத்துக்களையே முழுக்க வாசிக்கவில்லை. கதை என்பது அனுபவங்கள் கொண்டு நெய்யப்படுவது. அது தொடர்ந்து திருத்தங்களினால் செம்மை செய்யப்படவேண்டும்.
இலக்கிய நோக்கம்தான் என்ன?
விருதுகள் நிச்சயம் அல்ல. தன்போக்கில் தன்னியல்பாக உருவாக்கிக்கொள்கிறது. அவ்வளவுதான். மக்கா இது ஒன்றும் வரையறை கிடையாது. எதற்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று கிடையாது.
29
பொதுநலப்போராளி கலைத்தொப்பி விடுவது பீட்டரா? புகையா? - லோக்கல் ப்ரூஸ்லீ
தொக்கூ பள்ளியின் நோக்கம் பற்றி கலைத்தொப்பி அண்ணன் கூறியபோது, எனக்கு அப்போதே பேதி ஏற்படுமோ என்று பயமாக இருந்தது. தொக்கூவில் சிறுவர்களும், பெரியவர்களும் வசிப்பார்கள் என்று கூறப்படுவது பிறப்பு இறப்பு இரண்டையும் குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கலைத்தொப்பி கூறியதை காலச்சுவடில் பதிப்பித்தால் நிச்சயம் நாலுபக்கம் நிச்சயமாக வரும். இருத்தலில் இருந்து இருப்பிற்கு திருப்பும்போது நிச்சயம் என் வாழ்வு முடிந்திருக்கும்.
கலைத்தொப்பி பேசுவதை கேட்டிருப்பீர்களோ என்னவோ நேருக்குநேர் ஒருவன் தன் காதலியை மிகநெருக்கமாக நெருங்கி முத்தம் கொடுக்கும் தூரத்தில் வைத்து பேசினால் எப்படி இருக்கும். அது மாதிரி கண்களை உருட்டி உளவியல் வைத்தியர் போல பேசி மிரட்சி உண்டுபண்ணுவார். வசீகரமான கண்களை கூறியே ஆகவேண்டும்.
தொக்கூவில் பயிலும் அனைவரும் அவர்கள் உருவாக்கும் அனைத்தும் அவர்களாலேயே உருவாக்கப்படவேண்டும் என்று கூறியதோடு, நீ கண்டிப்பா வரோணும்யா என்றார். முதலில் மாட்டுக்கொட்டாய் ஒன்று அமைத்து பின் தங்குவதற்கான குடில் அமைக்கவேண்டும் என்று சிந்தனைப்புகையை ஊதினார். பின் நூலகம் பற்றி விரிவாகப்பேசி, மொழிபெயர்ப்பு பற்றியும், என்னைப்பற்றியும் கேட்டறிந்தார். ஒன்றைத்தேர்ந்தெடுத்து அதில் ஆழமாக பயணித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று தேநீர் குடிக்கும்போது சொன்னார். கண்களைப்பார்த்துக்கொண்டும், கைகளைப்பிடித்துக்கொண்டும் எத்தனைபேர் பேசுகிறார்கள், சொல்லுங்கள். நெகிழ்ச்சி அப்படியே உச்சி முடி முதல் அடி நகம் வரை ஊறி வழிந்த நாள்
30
தொக்கூ இருக்குதா? இயங்குதா? - கெடமல்லன்
ஸ்காலின் போனில் அழைத்து முச்சந்தியில் எம்ஆர்எப் டயர்க்கடையருகே நிற்கச்சொன்னார். என்னடா இது என்று அங்கே போய் நின்றால் யாருமில்லை. சாலைகளெங்கும் மனிதர்கள். சாமி கும்பிட அவ்வளவு கூட்டம். வெள்ளை தேநீர்சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் தளர்ந்த நடையோடு வந்தார். பெயர் திருநாவுக்கரசராம். விழுப்புரம் என்றார். பெயரை முதலில் சரியாக கவனிக்கவில்லை.
விவசாயம் செய்துகொண்டு வக்கீல் வேலையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தோடு விழுப்புரத்தில் இருக்கிறார் இவர். தொக்கூவை பார்க்க பெரும் ஆர்வம் மூண்டது அதனால் அப்படியே இங்கே வந்தேன் என்று கூறினார். அவருடன் வந்தவருக்கு பாயை விரித்துப்போட அவர் உறக்கமே பாக்கியமப்பா என கண்ணயர்ந்துவிட்டார். தொக்கூ பற்றிய பல்வேறு விளக்கங்களை கேட்டார் என்றாலும் அவர் கண்களில் இருந்த எந்த ஒரு நம்பிக்கைக்கான விஷயத்தையும் நான் பார்க்கவில்லை. வழக்குரைஞரின் எப்போதைக்குமான சந்தேகம் அவரது மனதிலும் இருக்கிறதோ என்னமோ?
புத்தகங்களை பார்த்துவிட்டு பணம் தந்தா வாங்கிப்பீங்களா? என்றார். புத்தகமாகவோ, பொருளாகவோ கொடுத்தால் சிக்கலில்லை என்றேன். பிறகு தொலைபேசி எண்கள் கேட்டுக்குறித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஏதோ ஒரு நம்பிக்கையின்மை அவர் முகத்தில் தலைகாட்டியது. அது முதலிலேயே தெரிந்தது. சரி, போனாப்போகட்டும் தொக்கூ எனக்கு பிடிக்கும் என்றார். அது பற்றிய அறிமுகத்தை எனது ஊரில் ஏற்படுத்துவேன் என்றார். கிளம்புகிறேன் என்றபோது சொல்ல எனக்கு எதுவும் இருக்கவில்லை. சித்தன் புத்தகத்த கொடுத்துட்ட பணத்த வாங்கியிருக்கலாண்டா.. ஆ..ண்டா என்றார். சரிதான்.
31
தேநீர்க்காரரின் வெற்றி - ஆர்.எஸ்.எஸ்
மதவெறி உண்டு. ரத்தவெறி உண்டு. அங்கிள் சாமை சந்திக்க விசா இல்லை. என பல்வேறு அட்டிகள் உள்ளன. சர்ச்சைகள் இருந்தாலும் பிரதமராக அரியணை ஏறவிருப்பது போடி என்பது உறுதியாகிவிட்டது.
ஆட்சியாளர்களினால் தொழிலாளிகளுக்கு பெரிய நன்மை ஒன்றுமில்லை. அவர்கள் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று மைக்கில் முழங்கத்தான் போகிறார்கள். எப்போதும் போல ஏதாவது பேசினால் நீ ஒரு காவி தீவிரவாதி என வம்புக்கு இழுக்கிறார்கள் வெள்ளியங்கிரி நாத்திகர்கள். சில அறிவுஜீவிகளுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் மக்களுக்கு விரும்பமென்னவோ ஆம்பல்தான். வேறென்ன வாய்ப்பிருக்கிறது? துடைப்பம் எல்லாம் இங்கே விலைபோகாது. ஜனநாயகப்புளுகு எல்லாம் பத்திரிகை விற்க உதவும். முழுக்க அதிகாரம் ஒருவரின் கைக்குள்தான் இருக்கப்போகிறது. சர்வாதிகாரம்தான் மிச்சமாகிறது. அதைத்தான் அனைத்து நாடுகளும் வரவேற்கிறார்கள்.
பலரும் தேநீர் விற்பவர் ஏதாவது செய்வார் என்று வாக்களித்திருக்கிறார்கள். பல ஊடகங்களும் இனி தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு மௌனமாக காவி ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள். எனக்கு பயமெல்லாம் இனி ஒரு கூட்டம் கூறும் சாமிகளைத்தான் நாம் வணங்கவேண்டும் என்கிற நிர்பந்தம் வருமா? என்பதுதான்.
எல்லாவற்றையும் மாற்றியமைக்கப்போகிற நாள் வந்துவிட்டது. ஆம்பல் கட்சிக்கு என்றுமே பெரிய லட்சியக்கனவு எப்போதுமே இருந்தது கிடையாது. பிஎன்ஒய் போலத்தான் பணம் நிறைய கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் செய்வார்கள். நல்ல விஷயம் செய்வதற்கு முன் திருநீறு இட்டுக்கொள்வார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். வாழ்த்துக்கள் போடி. தயவுசெய்து வெளிநாடு சுற்றி வராமல் கிராமம் சுற்றி, வளர்ச்சி பெற உழைக்க முயலுங்கள்.
32
தங்கமீன்களாவோமா - ஆதபன்
தங்கமீன்கள் அப்படி இப்படி என்று பல்வேறு கருத்துக்கள் கிளம்பியிருக்கின்றன. படத்தினை சீர்குலைக்க பகடன் உள்ளிட்ட பல ஊடகங்களும், கூளமாதாரி எழுத்தாளர் முதற்கொண்டு போட்டி போட்டனர். ஆனால் படம் எப்படியோ வாய்மொழி விளம்பரத்தால் காப்பாற்றப்பட்டுவிட்டது. தேசிய விருதும் பெற்றுவிட்டது. இப்போது எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள் இந்த வெகுஜன சினிமா விசுவாசி விமர்சகர்கள்.
பிம்பங்களை எப்படியும் புரிந்துகொள்ளமுடியும் என்பதுதான் திரைப்படத்தின் பலமும், பலவீனமும். தங்கமீன்கள் படத்தின் திரைமொழி குறித்து பேசும் திரைவிமர்சகர்கள் ஏன் தளபதி படத்தின் மேன்மைகள் குறித்து ஏதும் கவலைப்படாமல் மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள். தங்கள் இதழுக்கு பேட்டி கிடைக்காது, புகைப்படங்கள் கிடைக்காது என்றா?
எவ்வளவு இமாலய விஷயங்களைக் குறியீடாக கொண்ட படங்களை ஒருவன் இயக்கினாலும், படம் பார்ப்பவனின் அனுபவம் பொருத்தே அதிலுள்ள விஷயங்கள் உள்வாங்கிக்கொள்ளப்படுகின்றன. அதுதான் நிதர்சனம். என்னதான் விமர்சனம் எழுதினாலும், அது எழுதுபவனின் அனுபவத்தை பொறுத்த கருத்து மட்டுமே. அனைவருக்கும் பொருந்தும், பொருத்தமான கருத்து ஒன்றை உருவாக்க முடியாது.
தங்கமீன்களாகிவிடுவது குறித்து கல்யாணி செல்லம்மாவிடம் ஏன் அப்படிக்கூறுகிறான் என்று கேட்கிறார்கள். பதில் இப்படியும் கொள்ளலாம்.
எந்த குழந்தையும் தன் கஷ்டங்களை அறிய தகப்பன் நிச்சயம் விரும்புவதில்லை. இன்றும் எத்தனை பேர் தன் சிரமங்களை தங்கள் குழந்தைகளிடம் பகிர்கிறார்கள்? விமர்சிப்பவர்கள் தர்க்கமாக குழந்தைகளிடம் ஏன் அதனைக்கூறக்கூடாது என்று கேட்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஏன் சிறுவயதில் அவமானங்களை, துயரங்களை பயிற்றுவிக்கவேண்டுமா என்ன? அவள் தன் கனவு உலகத்தில்,ஏன் சில ஆண்டுகளாவது வாழக்கூடாது? அவள் வாழ்க்கை அவள் தேர்வில் அமைவது நல்லதுதானே! செல்லம்மா எதுவுமே அறியாதவள் அல்ல. பள்ளிப்பாடங்களில் சுமாராக இருக்கலாம். எல்லாவற்றையும் தன்போக்கில் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்கிறாள். இந்த சமூகத்தில் கேள்வி கேட்பவரை யாருக்கு பிடிக்கிறது? உடனே உட்காரவைத்துவிடுகிறோம். தவிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம்.
தங்கமீன்கள் தன் பெண்ணை விரும்பும் வறிய தகப்பனின் கையாலாகத்தனத்தை, பணமில்லாத தரித்திரத்தை பேசுகிறது. அதோடு கற்ற அறிவுஜீவிகள் முன்முடிவுகளோடு செல்லம்மாவை அணுகி, முட்டாள் என்று அவளது தாத்தா உள்பட முடிவிற்கு வர, 12 வது படித்த கல்யாணி அவளுக்கு ஏற்றவிதத்தில் வன்முறையே இல்லாமல் பாடம் கற்றுத்தருகிறான் என்பதுதான் இங்கே முக்கியமானது. செல்லம்மா மீது அனைவரும் அவளின் மீதான சமூகத்தின் பார்வை, விமர்சனத்தை கண்டு தாய் உள்பட கோபமுறும்போது கல்யாணி அவளை பரிவாக அணுகுகிறான். நிகரற்ற அன்பு அனைத்தையும் ஏற்கிறது. யாரையும் புறக்கணிப்பதில்லை. பொருட்களின் வழியேதான் ஒருவரின் அன்பு கவனிக்கப்படுகிறது என்ற நிர்பந்த உலகத்தில் ஒரு விளம்பரத்தில் காட்டும் நாய் ஒன்று செல்லம்மாவின் கவனம் ஈர்க்கிறது. அப்பாவிடம் அதை வாங்கிவர கூறுகிறாள்.
குழந்தைகளின் உலகம் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ஏன் தற்போதைய நமது வாழ்க்கை பாலைபோல சுடுகிறது, தகிக்கிறது. ஏனெனில் அனைத்தையும் அடக்கிக்கொள்கிறோம், ஆச்சர்யப்படுதலை தவிர்த்துவிட்டோம். நிகழும் அனைத்தும் சாதாரணம்போல சலனமில்லாத கண்களால் பார்த்து பழகுகிறோம். நமது உறவுகள், ஆசிரியர்கள் தங்களது குறுகிய, சூனியமான அறிவால் நமக்கு பழக்குவது அதைத்தானே?
செல்லம்மாவிற்கு பெரிய பொருட்கள் தேவையில்லை. அவளின் பின்னாளைய வாழ்வில் தன் தந்தையின் வெப்பம் மிகுந்த உள்ளங்கைச்சூடு தன் முதுகில் இருப்பதை என்றும் நினைத்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னில் நினைவுகள் மூலம் நிரம்பி வழியும் தகப்பனை பின்னாளில் நன்றியாக நினைத்துக்கொள்வாள். அதோடு. அவன் சைக்கிளை, தங்க மீன்களை, தன்னை தகப்பன் எப்படி சூடுதாங்காமல் தன் கால்களில் அவள் கால்களை தாங்கிக்கொண்டான் என்று உணருவாள். அதற்கான வாய்ப்பை கல்யாணி தன் வாழ்வில் வழங்கினான் என்று ஏற்படும் குற்றவுணர்வுகள்தான் இந்த விமர்சகர்களை குறுகுறுக்க வைக்கிறதோ என்னமோ?
33
காட்டுப்பள்ளி எப்போது திறப்பீர்கள் ஐயா? - ஜரிகண்ட்ராஜ்
காட்டுப்பள்ளியின் செயல்பாடுகள் பற்றிய பதட்டத்தில் இருக்கிறேன் என்று ஸமீராவிடம் கலைத்தொப்பி கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மளிகைக்கடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். ஸமீரா அவரைப்பார்த்துவிட்டு, சாப்பிட என கூற, ஸமீரா வரும்போது, கலைத்தொப்பி மதுபானப்புட்டிகளை பொறுக்கி வைத்துக்கொண்டிருந்தார். எதற்கு எனும்போது, பள்ளிக்குத்தான் விளக்குக்கு பயன்படும் என்றார். ஸமீரா அக்மார்க் ஆண்பாவம் பாண்டியராஜ் போல முழித்தார். தணிந்த குரலில் கடுமையான இலக்கிய விசாரத்தினை பேசும் கலைத்தொப்பி ஆச்சர்யமானவர். தேநீர்காரனின் வெற்றி பற்றி பேசினார். எலைட் கார்ப்பரேட் காந்தி குல்லா கட்சி தோற்றதற்கான தார்மீக காரணங்களை கலைத்தொப்பி அடுக்கியபோது அதன் தலைவரான வாலுக்கு கூட அதெல்லாம் தோன்றியிருக்குமா என்று பயந்துபோனார் ஸமீரா. பேச்சு மலைகளில் உள்ளே நுழைவது குறித்து தொடங்கியது. கடைக்காரர் ஒருவர் தனக்கு விருப்பமான தலைப்பாக இதை எடுத்துக்கொண்டார். ஒருவரையும் தன்பேச்சில் உள்ளே விடவில்லை. கங்காணிச்சித்தன் வர இருநாட்களாகும் என்று கூறிய போது கலைத்தொப்பி ஆழமாக ஸமீராவை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். அது அப்படித்தான்.
34
லூஸ் அண்ட டைட் தொகுத்தளிக்கும் காபி காரம் கச்சேரி
ஆக்கம்: லாய்ட்டர் லூன்
வேலும், காவியும் வெற்றி
காவிக்கட்சிக்காரர்கள் கொடுத்த லட்டை சோறு போலாக்கி தட்டில்வைத்து தின்றுகொண்டே குதித்துக்கொண்டு வந்தார் லூஸ். குதித்த குதியில் டைட் தன் ஜியோனி போனில் நடத்திக்கொண்டிருந்த காவியை நம்பாதே எனும் போராட்ட எழுத்துக்களின் மேல் பூந்தி விழுந்தது.
டேய் ஏண்டா, லட்டு தின்னதே இல்லையா என் புது செல்போனு நார் சூப்புதே குடிக்கும். லட்டெல்லாம் திங்காது. போனுமேல கொணாந்து கொட்டறே? அறிவிருக்குதாடா?
என்னப்பா நீயி, அந்தக்கட்சி ஜெயிச்சவுடனே உனக்கு தாங்க முடியில போல, எப்படி வேலும், காவியும் நாட்டிற்கே துணை. போடி வின்னிங், ரைசிங் ஸ்டார் இனி அவருதானப்பா, நாங்கூட உறுப்பினர் கார்டு வாங்கலாம்னு பாக்கறன். உங்க கட்சிதே போட்டிருக்கிற அர்ணாக்கொடி கலரு எல்லாம் கேட்கறீங்களே? நியாயமாப்பா? என மிச்ச மீதி லட்டை டைட்டிடம் வேணுமா என்று ஜாடை காட்டிவிட்டு தானே உள்ளுக்குள் தள்ளிவிட்டு சேரை இழுத்துப்போட்டு உட்கார்கிறார்.
அவனுவள நம்பாத, எங்க எத வச்சுருப்பான்னு தெரியாது. உண்டியல் வெச்சு பணம் கேப்பானுவ. தருலீனா வேல எடுத்த குத்த வருவானுவ.. இதெல்லாம் தேவையா உனக்கு?
அதனால நமக்கு என்ன நாம எல்லாருமே அவனுவளோட சேர்ந்து தோஸ்த்தானா ஆயிருவோம் என்று லூஸ் உருட்டிவிட்ட குடம் போல சிரிக்க, மெர்சலாகிறார் டைட்.
தோஸ்த்தானாவா? வேண்டாமப்பா! சன்னி புள்ள துணையே இப்போதைக்கு போதும். எதுக்கு அதெல்லாம். ஏண்டா கை என்னோட சின்னமுன்னா யாரு வேணா இழுப்பீங்களா? அதுவும் ஆம்பளைங்களோட. இட்ஸ் நாட் எ காம்பர்டபிள் யூ நோ ? இதை கடுமையா எதிர்க்கிறேன் என அவனா? இவனா? நிகழ்ச்சி ஆவேசத்தை முகத்தில் கொண்டுவருகிறார் டைட்.
நீ அப்படி நினைச்சயா! ஓகே. நம்ம கட்டுமரக்காரரு சோத்த மிக்சில அரச்சு குடிச்சு பேசியுமே ஜெயிக்க முடியிலயேப்பா? அஹ்ஹா… அஹ்ஹா என சேரில் இருந்து கீழே உருண்டு விழுந்து சிரிக்கிறார் லூஸ்.
நீ இப்படி எகத்தாளம் பேசறது அந்த முரட்டுக்கும்பலுக்கு தெரிஞ்சிது.. கட்டுமரத்துல கல்லக்கட்டி உள்ள விட்ருவானுவ பாத்துக்க.. இரண்டு திராவிடமுமே அதுல வெகு சாமர்த்தியமான ஆளுக. பாத்துக்க என அடுத்த செய்திக்கு வந்து தன் கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார் டைட்.
கங்காணிச்சித்தன்தா கார்ப்பரேட் காந்தி குல்லாவுக்கு ஓட்டு போடச்சொன்னாப்புல இப்படி அந்தகட்சிக்கு எல்லோரும் சாணி அடிச்சிட்டாங்களேப்பா! என லூஸ் உருக, கடுப்பாகிறார் டைட்.
சோறில்லாம சாவறவஞ் சாவறான் சும்மா ஊழல் ஊழல்னு குரங்கு குல்லாவ மாட்டிட்டு பேட்டி தட்டுனா.. போடியோட மார்கெட்டிங் யார்க்கருல கார்ப்பரேட் காந்தி குல்லா அவுட்டு. என்ன பண்றது? இனி அடுத்த இன்னிங்ஸ்தான பாப்போம்.
கேப்டனை ஒத்து கண்சிவக்க, ஏய், அப்ப லஞ்சம் வாங்கறது தப்பில்லைங்கற, உன்னயமாதிரி… என வசனம் பேச முயற்சிக்க பாதி வசனம் மறந்துபோகிறது. திகைக்கிறார் லூஸ்.
அதே, சுயமாக யோசிச்சு பேசோணுங்கறது, பிரேசர்ஸ் டாட் காம் படத்துக்கு பஃபர் ஆவுற இடையில கேப்டன் படத்த பாத்தா இப்படித்தான ஆவும் என டைட் இதையே அடுத்த கருத்தாக டைம்லைனில் பதிய திட்டமிடுகிறார்.
கண்கள் மெட்ராஸ் ஐக்காரனாக மாற, லூஸ் நீ ஒரு அகில மக்கள் துரோகி… எனச்சொல்ல,
அடப்பார்றா உலகத்து லெவல்ல போயிட்டமப்பா.. எங்க தலைமுறையில் இது பெரிய சாதனையப்பா.. என பூரித்துப்போகிறார் டைட்.
கட்டுமரத்தலைவரு சொல்வாரு. இன்னைக்கு சேதி, நாளைக்கு ஹிஸ்டரி அப்படீன்னு, தெரியுமா உனக்கு. நாங்கள்ளா அந்தப் பராம்பரியமப்பா!
இன்றைய புருடா நாளைய அண்டப்புளுகு போட்டு கட்டுமரத்து பத்திரிக்கையும், அடிமைக்கட்சிப்பத்திரிக்கையும் வருதே அதச்சொல்றயா.. அட ஏய்யா இப்படி அப்பாவியா இருக்கறே இன்னுமாய்யா அதயெல்லா நம்பற?
ஆகா புள்ளிவிவரத்தை வெச்சு மடக்கிட்டானே என்று வயிறெரிந்த லூஸ், நீ ஒரு காவி மண்டையன், சிமி, எருமை முன்னணி என வாட்டியெடுக்கிறார்.
போடா நீ ஒரு பிரியாணி பொறுக்கி, நாங்கள்ளா இந்த ஊர்ல வாழத்தெரிஞ்சவங்கப்பா கிளம்பு என அடுத்த வேளை கோட்டக்கல் லேகியம் சாப்பிட நகர்ந்தார்.
லூஸ் கெத்துமணி அறைக்கு ஈரக்காத்து ஜன்னலைச்சாத்து அத்தென்டிக் ப்ரெஞ்ச்பட காணொளிகளை காண விரைந்தார்.
35
ஹிட்லருக்கும், போடிக்குமான உறவு - ரோஸ்பெட்டி
கலைத்தொப்பிக்காரரோடு ஒரு விவாதம் ஏற்பட்டது. ஹிட்லர் கெட்டவன், மோசம் என்றெல்லாம் முழுக்க தீர்மானித்துவிட முடியாது. நல்ல விஷயங்களும் உள்ளன என்று சாமிநாத சர்மா எழுதிய ஹிட்லர் சுயசரிதையை முன்வைத்து சிலவற்றை யோசித்து புரிந்துகொண்டு ஸமீரா கூறினார்.
ஆனால் கலைத்தொப்பிக்கு ஏகப்பட்ட ஆவேசம் கிளர்ந்தெழுந்துவிட்டது. ஒலிம்பிக் விளையாட்டில் கூட கறுப்பின வீரனுக்கு கைகொடுக்க மறுத்தவன்தான் அந்த ஹிட்லர் தெரியுமா? என்றார். ஹிட்லரின் மீது முழுக்க ஒட்டுமொத்த வாழ்விற்கான வெறுப்பை அவர் கொண்டிருந்ததால் மேலும் ஸமீரா நீயா? நானா? சாடலை நிகழ்த்தவில்லை.
ஹிட்லரால் அழிந்தவர்களை விட பைபிளால் பல அறிவாளிகள், ஒட்டுமொத்தமாக உலகம் சந்திக்கும் சவால்கள் அதிகம். இதைச்சொன்னால் உங்கள் நிறம் காவி என்கிறார்கள். எப்படி ஒருவரை முழுக்க இதுதான் என்று அடையாளப்படுத்த முடியும்? அப்படி ஒருவர் உருவாகிறார் என்றால் அதற்கு சமூகத்தின் பங்கு சிறிதும் இல்லையா? அறிவு, புத்தி இவற்றின் நோக்கத்தை சமூகமும் அதன் சூழலும் மாற்றியமைக்கிறது உண்மைதானே!
சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவுகள் பெரியவன் ஆனபிறகும் உங்களை பின்தொடரும். மனதில் உறைந்த நஞ்சல்லவா, காயம் அல்லவா. ஹிட்லருக்கும் அதுபோல ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. போரில் தளபதியாக பணியாற்றியவர் போரின் பின் பட்டினியால் வாடி, ஒரு ரொட்டித்துண்டுக்காக பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம் ஒரு யூதர் உணவகத்தில் உணவை பாதி சாப்பிட்டுவிட்டு, அதன் விலையாக 2000ரூபாய் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். ஏன் இப்படி என்ற கேள்விக்கு ஒரு கோணத்திலான தேடலின் விடையாக ஹிட்லரின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. வென்றவர்கள் எழுதுகிற வரலாறுதானே இங்கே அனைவரின் கையிலும் இருக்கிறது. தோற்றவர்களின் முனகல் கூட இங்கே எடுபடுவதில்லை.
36
ஜெய்ராம்! ஜெய்பீம்! - ஈரோஸ்டார்
பேப்பர் பையன் எப்போது ஸமீராவிடம் பேசினாலும், ஸமீரா முன்பு என்றோ உளறி வைத்தோ எந்த புத்தகத்திலோ கடன் வாங்கி சொற்களை கூறி அப்பப்பா.. அடடடா கூறுவது அவருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிடுகிறது. அவனோடு பேசுவதற்கு அவர் பெரும் பிரயத்தனங்களோடு தனக்கு இல்லாத நம்பிக்கைகளையெல்லாம் திரட்டி சுயமுன்னேற்ற பேருரைகளை இரண்டு மூன்று மணிநேரத்திற்கு நிகழ்த்திவிடுகிறார். அவற்றை புத்தகமாக போட்டால் என்ன என்று கேட்டபோது, சீரகத்தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். வேறு கேள்விகள் நம்மிடம் என்ன இருக்கப்போகிறது?
அவனுக்கு அண்மைய நிகழ்வுகள் எதுவும் உவப்பானதில்லை என்று ஸமீரா நினைக்க பல நிகழ்ச்சிகள் காரணமாக உள்ளன. முதலாவது, அவனது தங்கையை காதலிக்கும் பையன் வீட்டார் கல்யாணத்திற்கு அவசரப்படுத்துகிறார்கள். பே.பையனுக்கு கல்யாணச்செலவுகளை தாங்கும் சக்தியில்லை. இன்னும் வேலையும் நிச்சயமாகவில்லை. ஸமீராவிற்கு இந்த பொறுப்புகள் குறித்து பெரும் மனவிலக்கம் ஏற்பட்டுள்ளதை எங்கள் பத்திரிகை உளவுப்பிரிவு கண்டறிந்துள்ளது. பாருங்கள். இந்த மாலையில் எங்கேயிருப்பார் தெரியுமா? கூழாங்கல் வீட்டினருகில் பச்சையம்மன் கோயில் பாலத்திட்டில் உட்கார்ந்து காட்டை பார்த்துக்கொண்டு இருப்பார். வானத்தை பார்த்து புலம்புவார். எதுவரை போலீஸ்காரர்கள் வந்து பொடனியில் போடும்வரை மட்டுமே.
இதுவரையிலுமான அனைத்து பிரச்சனைகள் சிக்கல்களை அவனேதான் தீர்த்துக்கொண்டிருக்கிறான். இப்போதும், அவனுடையதை அவன்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும் என ஸமீரா ஜே.கேயையும் மிஞ்சிய அறிவுரைகளை அள்ளிவிட்டார். எனக்கு ஸமீரா பேசுவது கனவில் ஏதோ வானத்தில் குரல் கேட்பது போல் விளங்குவதே இல்லை. ஆனால் குடிபோதையில் இருப்பவன், ரெண்டு பொண்டாட்டி கட்டினவன் என்று சிக்கல், சிரமம், கஷ்டம், கந்தக ரசாயனம் பூசுபவன் முதற்கொண்டு இந்த ஆளிடமே யோசனை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவரோ, கெடச்சிது சான்ஸ், அள்ளிவுட்றா பழனிச்சாமி என்று பேசுபேசுஎன பேசுகிறார்.
– உள்ளூர் அசல் செய்திக்குறிப்பு.
37
வர்க்கீஸ்குரியன் குறித்த பதிவுகள் - ஈரோட்டான்
கைக்கட்சிக்காரரிடம் வர்கீஸ் குறித்த மொழிபெயர்ப்பை ஸமீரா கேட்டார். பின்பு, அவரே அற்புதமாக தெரிந்த விஷயங்களை எழுதிவிடுவார் என்று தோன்ற, அதையே ஸமீராவும் பின்னர் கூறியபோது, அவர் எப்போதும்போல எந்த உறுதியும் இல்லாத பதிலைக்கூறினார். கங்காணிச்சித்தன் ஒத்துக்கொண்டால் குரியன் பற்றிய நல்ல ஒரு பதிவாக பதிப்பகத்தின் மூலம் செய்யமுடியும். ஆனால் அவர்கள் தங்கள் பெயரையே முன்னுக்கு கொண்டுவர எண்ணுபவர்கள். எப்படி முடியும் சொல்லுங்கள்?
கைக்கட்சிப்போராளி சிறந்த எழுத்தாளர், தன் ஆர்வத்தினால் சிறந்த நூல்களின் வாசிப்பினால் தன்னை திடமாக உருவாக்கிக்கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் தேர்ந்த மொழியில் கூற வந்த விஷயங்களை தெளிவாக எடுத்துவைப்பன. எந்தவொரு கடினமான விஷயம் புரியாத ஆட்களைக்கூட அமைதியாக கவனிக்கவைக்கும் சொற்களை எழுதுவது மட்டுமல்லாமல் பேசவும் செய்யும் துணிச்சல்காரர்.
கிடைக்கிற வாய்ப்புகளில் கைக்கட்சிகாரர் போன்ற சிறந்த படைப்பாளிகளை கௌரவப்படுத்த ஆசை உண்டு என்றாலும் எந்தப்பணியிலும் இல்லாத உதவாக்கரையான ஸமீரா என்ன செய்துவிடமுடியும்? மனச்சோர்வினை குறைக்க சிறு உரைகளை அவர் கடிதம் வழியே போராளிக்கு அனுப்புவதுண்டு. பிரசுர வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர் எழுத்து தடைப்பட்டு போவது பெரிய இழப்பு என்று முந்தைய கடிதத்தில் ஸமீரா எழுதியிருந்ததாக கூறினார்.
38
கலைத்தொப்பியின் வாசலில் நிற்கிறேன் - ஸமீரா
ஒவ்வொரு முறையும் கலைத்தொப்பிக்காரரின் வீட்டு வாசலில் மனதில் கடும் அழுத்தத்துடன் நின்றிருக்கிறேன். அவரது வாசல் கதவு எப்போதுமே சாத்தப்பட்டிருக்கும். நாற்காலிகள் வெளியே காலியாக கிடக்கும். உள்ளே அவர் பேசிக்கொண்டிருப்பார். நான் உடனே தயக்கம் மேலிட சிறிது நேரம் பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பிவிடுவேன்.
பச்சையம்மன் கோவிலினருகே உள்ள இரு பாலச்சுவர்களில் ஒன்றில் அமர்ந்து மழை வருவது போலான வானத்தை பார்த்தவாறே இருப்பேன். இதயம் அருகே இல்லாத போது எவ்வளவு சத்தமாக பேசவேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சாபம் இருப்பதாக நினைக்கிறேன். கலைத்தொப்பியை எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தன்னை மற்றவரிடமிருந்து தனித்துக்காட்ட தொப்பி அணிகிறார். சித்தர் போல, அர்ப்பணிப்பு என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலே அதற்கானவற்றை அவர் திட்டமிட்டு கூட செய்யலாம் இல்லையா? அவர் மனதில் எதையோ அழுத்தமாக கொண்டிருக்கிறார். ஆனால் அது என்னவென முழுக்க கண்டறிய முடியவில்லை.
ஒருவரின் சிந்தனை வழியே சமூகத்திற்கான சிந்தனை உருவாகிறது. பின்னாளில் அது ஒரு குழுவான செயல்பாடாக மாறுகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பு பிறகு தன்னைக்காப்பாற்றுவதற்காக தனிப்பட்ட மனிதர்களை தியாகம் செய்யத்தயாராகிறது. அது இன்றுவரை நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். தன்னலமில்லாது செயல்பாட்டை கொண்டுசெல்ல தலையில் தொப்பி அணிவது மட்டும் போதாது. அதைத்தாண்டிய விசாலமான மனதை நாம் பெறுவது என்பது அனுபவங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பெறலாம்.
39
மிஸ்டர் தேசிய லேகியம் - ஜெயதேவன்
யார் இவர்? புள்ளிவிவரத்தை அடுக்கிறார். வந்தால் போதும். டி.வி, இன்ன பிற பரிசுகளை வாங்காமல் வரமாட்டார். மாற்றுசிந்தனை, மங்காத்தங்கம், கோட்டக்கல் ராஜா, சமூகநீதிப்போராளி, லேகியகாந்தி, கைகாரவேந்தன், சூரணச்சுந்தரன், அறக்கட்டளை அரசு என சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்.எம் தனது பள்ளிப்படிப்பிலே தன் எதிர்காலத்தை ஆசிரியரின் கண்ணில் குத்தி தெரிவித்தார். பனிரெண்டாவது வணிகம் படித்துவிட்டு, மருத்துவம் படித்துவிட்டு, மருத்துவம் படித்துவிட்டு பொறியியல் படிக்கலாம் என்று பொறியியலை மன்னித்துவிட்டு மருத்துவம் சேர கட் ஆப் மார்க் கூட்டிக்கொண்டிருந்தார். போனாப்போவுது என்று பள்ளியில் பாஸ்மார்க் போட்டது தெரிந்து மருத்துவத்தை தவிர்த்துவிட்டு, அடுத்த டார்கெட் பொறியியல்தான் என்று அதை படிக்கமுயன்றபோது, அந்த பாடங்களை எவ்வளவு முயன்றும் புரிந்துகொள்ள முடியாது லபாஷ்ட மருதம் லேகியத்தை வாங்கித்தின்றபோது தெரிந்துகொண்டார்.
அப்போதுதான் மலமிளக்கி மருந்தை தவறாக தின்றுவிட்டோமா என்று யோசிக்கும்போது, பத்துதடவை டவுன்லோடு ஆகியிருந்தது. அப்லோடு வேண்டாமா என்று பேதியிலிருந்து மீள நிவி திரிபலா சாற்றினை கோப்பையில் ஊற்றிக்குடித்து மலர்ச்சி பெற முயன்றார். அதற்குள் புரட்சிக்கட்சி மரகதமணி அழைத்தார். ‘’ சன்னி புள்ள படம் வந்திருக்குது. கேசட்டு வாங்கி வெச்சுட்டேன். முப்பிடாதி தைலமா, மூணுதழ தைலமா சொன்னியல்லோ. அதக்கொண்டாந்தீன்னா, எனக்கு எனக்கு பயங்கரமா யூஸ் ஆகும். எரக்டிகல் டிஸ்பங்ஷன் ஆனா நெலமய எப்படிய்யா சமாளிப்பேன்; ஆண்டவா கோட்டக்கல்லோன்தான் துணை என பேச, ஆர்.எம் எக்கச்சக்கமாக பதறினார். ‘’ அய்யோ, படத்த பாத்தறாதீங்க, நானும் வந்தர்றேன். உங்களுக்கு அதுதானே வேணும். டபுள் ஸ்ட்ராங் சோலமலயில வாங்கிட்டு வந்தர்றேன்.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’’ அதற்குள் போனில் எக்குத்தப்பான காணொளி இரைச்சல்கள் கசிய, ஆகா, சிரிக்கறது பச்சபுள்ள மாதிரி, பண்றதெல்லாம் சிவராஜ் சிகாமணி மாதிரி என்றபடி வேட்டியை மாற்றி ஜீன்ஸை அணிந்துகொண்டு அஸ்வகந்தந்தாதி லேகியத்தை இரண்டு கரண்டி வாயிற்குள் இறக்கி, தண்ணீர் குடித்துவிட்டு,அஸ்மா சென்டை எல்லாபக்கங்களிலும் அடித்துக்கொண்டு 110சிசி புரவியை கிளப்பினார். டீக்கடையில் வெந்நீரை அள்ளிக்குடித்துவிட்டு, நாக்கை சப்பியபடி, வண்டியில் கிளம்பினார்.
40
பேப்பர்காரனின் வெற்றி - ஸமீரா ஜூனியர்
ஆம். பேப்பர்பையன் உதவி புள்ளியலாளராக பணியில் அமர்ந்துவிட்டார். செய்தியை அழைத்து தெரிவித்தபோது போனவாரத்தில் அவன் இருந்த மனநிலையை நினைத்தேன். எல்லாம் அவ்வளவு எளிதாக மாறிவிட்டது. ஆச்சர்யம்தான். வேலை கிடைத்துவிட்டது என்றதும் அவனின் பொறுப்புகளை சுமைகளை ஏற்க இயற்கை எப்படி அவரை மெல்ல தயார் படுத்துகிறது என்று நினைத்தேன்.
எனக்கு அவர் வேலைக்குச்சென்றது பெரிய மகிழ்ச்சி. அவன் எவ்வளவு நாள் இதற்காக காத்து கிடந்தார் என்று நானறிவேன். அதற்கான முயற்சி, உழைப்பு, கிடைத்த வசைகள், நம்பிக்கையின்மை இடையோ போராடிக்கொண்டிருந்தார். அவனின் போராட்ட காலத்தில் பெரிய உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், அவரோடு உடனிருந்திருக்கிறேன். தோற்றுப்போனதை கண்டுகொள்ளாமல் விடுகிற இந்த சமூகம் வெற்றி பெற கையாண்ட வழிகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது எப்படி?
இனி அவர் தன் கடன்களை அடைத்துவிட்டு சிறிது நிம்மதியாக இருக்கலாம். இதன் பின் பெரும் நெருக்கடிகள், போராட்டங்கள் உள்ளனதான். ஆனால் அவர் அதனையும் சமாளித்து வென்றுவர வாழ்த்துக்களை கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
41
நம்பிக்கை இழந்த தேசியத்தொண்டர் - குண்டுமணி
கைக்கட்சி நேயன் தன் எழுத்தின் மீதான் நம்பிக்கையை இழந்துவிட்டார். இது கூட தவறு. அவர் அதனை காகிதம் வழியே செய்யவிரும்புவதில்லை. திருமணம் குறித்த நெருக்கடிகள் இருக்கலாம். பல மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்.
எழுத்து என்ற ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்திற்கு நகரும் சமயம் இதுதான் என்று தீர்க்கமாக நம்புகிறார். எனக்கென்னமோ அதில் நம்பிக்கை இல்லை. அவர் முயற்சி தவறென்பதில்லை.இது என் கருத்துதான். யாரும் எழுதுகிறார்கள். உழைக்கிறார்கள். என்ன மரியாதை கிடைத்துவிட்டது? என்று கூறுகிறார். உண்மைதான். ஆனால் தேர்ந்த சிறப்பான எழுத்தை தேர்ந்து படிக்கிறவர்கள் இன்றும் உண்டு. என்றுமே உண்டு.
இந்தமுறை அவர் பற்றி ஸமீரா எழுதியிருந்தது இவைதான், நம்பிக்கை இழந்த ஒரு ஆன்மாவை சந்தித்தேன். ஜோ.டி குரூஸ் பற்றிப்பேசினேன். பல்வேறு கோணங்களை அவர் பேசும்போது அறிய முடியும். அதுதான் அவரிடம் நம்மைத்தொடர்ந்து உரையாட ஆர்வமூட்டுகிற ஒன்று. அவர் சற்று சோர்வாக காணப்பட்டதால் நான் விரைவிலேயே திரும்பிவந்துவிட்டேன் என்று தன்நாட்குறிப்பில் எழுதியிருந்தார். பாருங்கள் ஒருவரது டயரியைத்திருடி படிப்பதில் எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது என்று.
42
ஒரு கைமண்தான்! - ராய்ட்டர்
விகடனில் பாரதி தம்பி எழுதுகிற கற்க கசடற விற்க அதற்குத்தக குறிப்பிட்ட இக்கட்டான தருணத்தில் எழுதப்படுகிற சரியாக விலைபோகிற, அதே தருணத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற கட்டுரையுமாகும். இது குறித்து ஆர்.எம் இது நம் நாட்டிற்கு மட்டுமல்ல பல நாடுகளிலும் உலகமயம், தாராளமயம் சூழல் உண்டு. அது கொள்கை அல்ல என்று கூறினார்.
உண்மையாகவும் இருக்கலாம். இதில் குறிப்பிடுவது கல்வி என்ற விஷயத்தில் தனியார் பள்ளிகள் அதிகமாவதல்ல. அதில் சேர்க்கும் மக்களின் நுகர்வுப்பசி பெரிதாகிக்கொண்டே போவதுதான். கல்வியில் சிறந்த இடம் வகிக்கும் பல நாடுகள் கல்விமுறையை பின்பற்ற நினைக்கும் நாடு பின்லாந்து. அங்கு காகிதத்தில்தான் எழுதி கற்பிக்கிறார்கள். தொழில்நுட்பங்கள் நமது பணியை எளிதாக்குகின்றன. ஆனால் அது பார்க்க அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இங்கேதான் நடைபெறுகிறது இல்லையா? தனித்துவத்திறன்கள், மற்றவர்களை விட மேலே என்பது காலம் செல்ல ஒரு இனவெறி போலத்தானே மாறுகிறது.
அரசு ஏறத்தாழ அனைத்தையும் கைவிட்டுவருகிற நிலையில் நாம் என்ன செய்வது? ஆர்வமிருப்பவர்கள் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர முயற்சிக்கவேண்டியதுதான். சமத்துவம் பேசியவர்களை விட பேசாதவர்களாக செயல்பட்டவர்களினால்தான் நாம் பல விஷயங்களை இன்று அனுபவிக்கிறோம். அவரவர்க்கு ஒரு தர்மம். அறம் என்பது எங்கே எழப்போகிறது?
அரசு செய்யாததை தனியார் எப்படி அர்ப்பணிப்போடு செய்வார்கள்? இறுதிக்கு வந்துவிட்டது அரசு குறித்த நம்பிக்கைகள் அனைத்துமே. இதோ பாடுவோமா தேசியம் காப்பாற்ற, ஜனகனமண அதிநாயக ஜயகே!
43
காபி காரம் கச்சேரி - ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட்
டைட் தன் ஆரோக்கியம் பேண அங்கிதாதி லேகியத்தை மூச்சுமுட்ட தின்றுவிட்டு, பிராமி தைலம் ஒன்றை தலைக்கு தடவிக்கொண்டு இருந்தார். லூஸ் தின்பதற்கு லேகியத்திலே கூட இனிப்பாக ஏதாவது இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார்.
‘’தம்பி, அங்கே முறுக்கு எல்லாம் இருக்காது. மூளை நல்லா வேல செய்யறக்கு இந்தா இந்த லேகியத்த கொஞ்சம் சாப்பட்றயா?’’ என்ற கேள்விக்கு திகில் பட எபக்ட்டில் பார்வையை பார்த்த லூஸ் அடுத்த டிராஜடிக்கு தாவுகிறார்.
‘’ஆமா, டிராபிக் சிக்னல்ல எட்டி வுழுந்து ஒரு ஸ்கூட்டர் ஆன்டிய மேல வுழுந்து கொல்லப்பாத்தீங்களாமா தகவல் தாராபுரம் டைம்ஸ்ல பாத்தனப்பா?’’ முகம்கொள்ளாத சந்தோஷத்தோட லூஸ் சொல்ல,
இப்ப அதிர்ச்சி லேகிய நாதன் டைட்டிற்கு…’’எல்லாமே ஓரிதழ் தாமரையோட நேரடியான விளைவு, பின்னாடி நல்லா இருந்துதுன்னு முன்னாடி பாத்தா கண்றாவி.. 110சிசி புரவி, அதோட நம்மு கம்பெனி லேடின்னு இணைய பாத்துத்தே அப்படி ஒரு விபத்து, ஆனா அதுக்குள்ள பேப்பர்ல வந்துருச்சா என்ன? பாத்தயா எல்லாமே கையோட மகிமைதான? ’’
‘’ஆமா, வெள்ளத்தொப்பிய ஜெயில்ல போட்டுட்டாங்க போல.. என்ன ஊழல் ஊழல்னாரு இப்ப தட்டேந்திக்கிட்டு சோறு சோறு ம்பாரு இல்ல டைட் சார்’’
‘’அங்க நிறைய ஊழல்கீது நடந்திருக்கும் அதயும் சேர்த்து கண்டுபிடிக்குட்டுமே கறை நல்லதுதானப்பா’’ என பத்து கைகளின் சக்தி போல கையை விரித்துகாட்டுகிறார் டைட்.
‘’ இப்படியே எகத்தாளத்த எக்ஸ்டண்ட பண்ணிணீனா சீக்கரமே ரெண்டு கையிலுமே ஆணி அடிச்சிருவானுவப்பா, களமாட நான் தயாரா இல்லையப்பா! ’’
‘’வரும்போது செந்தமிழன் கோமானுக்கு கனெக்க்ஷன் குடுத்துருவோம். அண்ணன் பாத்துக்குவாறு, குடும்பத்தோடு சேர்ந்து போராடுவாரு. போராடி… என கண்சிமிட்டுகிறார் டைட்.
‘’ டபுள் மீனிங் இந்ததொடர்ல அனுமதி இல்லப்பா, அதா அந்த முட்டுச்சந்துக்கு வர்றேன். நிஜமாவே சொல்லுவியல்லோ?’’ என ஆர்வத்தில் முகம் பிரகாசிக்கிறது லூசுக்கு.
‘’ போராடி நம்மளை காப்பாத்துவாருன்னு சொல்றன் ’’ என மூச்சுவாங்கி நிறுத்துகிறார் டைட்.
‘’ போய்யா நீயும் உன்னோட லேகியமும் என தேன் மிட்டாய் பாக்கெட்டை வெறிகொண்டு பிய்த்து சாப்பிடுகிறார் லூஸ். அவரின் வேகம் பார்த்து திகிலாகிறார் டைட்.
44
கலைத்தொப்பியும், கூழாங்கல்லும் - சூரணக்குப்பி
தொப்பிக்காரருக்கும், கூழாங்கல்லுக்குமான நேசமான தொட்டுத்தொடரும் அட்டு உறவை தொக்கூ பற்றிய பேச்சின்போது, தெரிந்துகொண்டேன். கலைத்தொப்பி பற்றி தனிப்பட்ட மாதிரி நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும், ஸமீராவிற்கு இரண்டு முறை சோறிட்டவர். கனவுக்குள் கனவு கண்டுகொண்டே என தன் ஓல்டு ஹோண்டாவில் பயணிப்பவர். இதை சத்திய அருளாளனும் அப்பீல் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். கலைத்தொப்பியின் கண்களை பார்த்து பேசினால் தலைசுற்றிப்போகும். அங்கே பார்ப்பார். காலர் நுனியைப்பார்ப்பார். தரையைப்பார்ப்பார். திடீரென கண்களைப்பார்ப்பார். டீக்கடைக்காரர் வயிற்றைப்பார்ப்பார். இப்படியே மயக்கமருந்து கொடுக்காமலே நமக்கு மயக்கம் வந்துவிடும்.
கூழாங்கல்லுக்கு கலைத்தொப்பிக்காரரை பிடித்திருப்பது ஏதோ சில உதவிகள் செய்திருப்பது என்பதால்தான் என்பது தெரியாத ஒன்று கிடையாது. கலைத்தொப்பிக்காரரின் அன்புதான் என்னை இங்கே தங்க வைத்திருக்கிறது என்று கூறினார். அன்புதான் எல்லோரையும் பேதமில்லாமல் நதிநீர் போல நனைத்து உயிர்ப்புள்ளவர்களாக்குகிறது.
பணமில்லை என்றாலும் மனதை இலகுவாக வைத்துக்கொள்வது கூழாங்கல்லுக்கு சற்றும் பழக்கமில்லாதது போல படுகிறது. விரைவிலேயே கோபம் கொண்டு விடுகிறார். இருந்தாலும் இதையெல்லாம் ஸமீரா சற்றும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
45
வன்முறையான உணவாளன் - ஷார்ப் மணி
கூழாங்கல்லின் வீட்டிற்கு ஓசூரார் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் லட்சியவாதம் பேசும் கடுமையான மனநிலைக்கொதிப்பு கொண்ட இளகிய மனதுக்காரர் இவர். கோபம் வந்துவிட்டால், தக்காளி சட்னிதாண்டா என்று வார்த்தை மட்டுமல்ல அடி உதையிலும் முன்னணியில் நிற்பவர் இவர். சமையற்கலைஞர் என்பது இங்கு குறிப்பிடவேண்டியது முக்கியமானது.
கடுமையான மனப்பிறழ்வு ஏற்படும் அளவு பல நிகழ்ச்சிகள் நடந்தும் அதை சமாளித்து உயிரோடு அவர் இருப்பதே பெரிய விஷயம்தான். அவருடைய சிந்தனைகளில் குறிப்பிட்ட அளவு ஆர்வம் உண்டென்றாலும் எது முடிகிற இடம் கடும் வன்முறையாக, பெரும் திணிப்பாக மாறி விடும் சூழலில் என்ன செய்வது?
எனக்கு ஓசூராரைப்பிடிக்கும் என்பதை அவரும் உணர்ந்திருப்பார். அவரிடம் இருக்கும் துணிச்சல் இன்றுவரையும் என்னிடம் இல்லை. இது முக்கியமான காரணம். மற்றபடி மிக தீர்க்கமாக எல்லோரையும் பெரும் விவாதத்திற்கு இழுக்கும் தீவிரத்தன்மை எப்போதும் அவரிடம் உண்டு. சிகரெட் புகை இழுத்து இழுத்து போட்டிருக்கும் குர்தாவினுள் உடல் மெல்ல சுருங்கி வருவது போல் இருந்தது.
தன் லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு ஓசூரார் கிளம்பிவிட்டார். அதன் முன்தினம் இரவு மது அருந்தியிருந்தார். ஓசூராருக்கு மதுவும், சிகரெட்டும் அமைந்துவிட்டது. அப்படித்தான் இருக்கும் ஒன்றும் சொல்ல முடியாது.
46
இணையவெளி - சூரமொக்கை
கூழாங்கற்களின் வீட்டில் இருப்பதால் எப்படியோ, இணைய இணைப்பு வாய்ப்பு கிடைத்ததால், சில படங்கள், இயக்குநர்கள் குறித்த விவரங்களை வேர்டு கோப்புகளாக மாற்றி வைத்துள்ளேன்.
படிக்க புத்தகங்களே இல்லாத நிலையில் ஏதாவது செய்யவேண்டாமா,பேயோன் பக்கம் சென்று கிடைத்த நூல்களை தரவிறக்கம் செய்தேன். ஸமீரா எழுதியுள்ள நூலை ஒரு தளத்தில் கொடுத்து மின்னூலாக மாற்றிக்கொள்ளலாமா என்று நினைத்துள்ளேன்.
தனியாக புத்தகம் போட்டு விற்பது எல்லாம் முடியாத ஒன்று. ஸமீராவும் இதற்கு அனுமதியளித்துவிட்டார். பிறகென்ன? அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் வெளியில் பரவும்.
அமைப்பில் இயங்குவது குறித்து கடும் சங்கடம் ஸமீராவிற்கு இருக்கிறது. அது அவரின் முகத்திலேயே நான் பார்த்தேன். தனிநபரின் குற்றச்சாட்டு அவரின் நிர்வாகத்தின் கீழுள்ள அமைப்பின் நம்பகத்தன்மையை குலைக்க போதுமானது என்று கூழாங்கல் கண்ணீர் விட்டு கரைந்தார்.
கூழாங்கல்லும்,கலைத்தொப்பியும் இணைந்த புள்ளி முக்கியமானது. பணம் என்ற சொல்லையே கேட்காமல் தான் அன்பு என்ற பெயரில் சங்கிலி போட்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்து உறிஞ்சப்படுவதை உணராதவர். பொதுநல ஆன்மா பள்ளிக்காக ஊர் முழுக்க கடன் வாங்குகிறார் என்று என்னவொரு புகழ்ச்சிப்பாடல்கள், கலைத்தொப்பி பிள்ளைத்தமிழ் பலரும் இயற்றுகிறார்கள். இவருக்காகத்தான் நான் வேலை செய்கிறேன் கங்காணிக்காக அல்ல என்கிறார் கூழாங்கல். நிஜமாகவும் இருக்கலாம்
47
உற்றுப்பார்த்திருந்த இரவு - சித்தபிரான்
தொக்கூ புகைப்படம் வீட்டிற்கு வந்த பிறகு இரவு விழித்திருப்பது என்பது மெல்ல பழக்கமாகிவிட்டது என்று வின்சென்ட் கூறிக்கொண்டிருந்தார். புகைப்படம் நேரம் பார்த்து வேலை செய்பவர் அல்ல. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவர் எந்த மனக் கோளாறுகளுக்கும் உட்படவில்லை என்பதுதான்.
ஸமீரா கணினியில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தபோது, புகைப்படம் பேச ஆரம்பித்தார்.
‘’இங்க பாருடா, இந்த போட்டாவல்லா சித்தர் கிட்ட காட்டீராத எனக்கு வேணுமுடா புரியுதா?‘’
‘’ தங்களுக்கு வேணும்னா எடுத்துக்கிட்டு நன்றினு அவரு பேர போட்டுர்றோமுன்னு சொல்றாங்க, வேற என்ன? ’’ என்று சற்று மிதப்புடன் பேசிவிட்டார் வின்சென்ட்.
கிளஸ்டர் குண்டு வெடித்தது. ‘’ நன்றினு போட்டா போட்டோ எடுத்தவனோட வயிறு பசிக்காது. அப்படித்தானடா?’’ உடனே வின்சென்ட் அமைப்பைலிருந்தால் தன் டப்பா இடுப்பில் நிற்காது என்று தனித்தே நிற்க முயற்சித்தார்.
‘’ஏண்டா நீங்கல்லா போட்டோவை ஆயிரம் குறை சொல்லுவீங்க, ஆனா பணம் மட்டும் தர மாட்டீங்க #@******’’ என்று புகைப்படம் சுமார் அரைமணிநேரத்திற்குமேல் வின்சென்டை ஒட்டுமொத்தமாக தனக்கு பணம் தராதவர்களாக நினைத்து கிளறி கிளறி வறுத்தெடுத்தார்.
வின்சென்ட் தணிந்த குரலில் ‘’ எங்கிட்ட பணமிருந்தா புக்குக்கு உங்க படம் தேவைப்பட்டா பணம் கொடுத்து வாங்கிக்குவங்க. ஆனா இப்ப இருக்கறவங்கிட்ட பணமிருக்கற மாதிரி தெரியிலயே பேரத்தான போடணும். வேறென்ன போடறது? என்று கூறியபின், புகைப்படம் சிறிதுநேரம் எதுவுமே பேசவில்லை.
‘’ நா மூணுவேள நல்லா சாப்பட்றவன் தெரியுமா? இன்னைக்கு என்னமோ இவ்வளவு டிரையா இருக்குது? அப்படி கூட சாப்பட்றதுக்கு வழியில்லாம போயிருச்சேன்னு அப்படிபேசிட்டேன். எல்லாமே இயலாமதான, வேறென்ன? யாருகிட்டயாவது கொட்டித்தான ஆவணும்‘’ என்றபடி சிறியதாய் கசப்புவழிய புன்னகைத்துவிட்டு போய்விட்டார்.
குப்பைத்தொட்டிபோல பலவும் வின்சென்டிற்கு மேலே காற்றில் பரப்பதுபோல இருந்தது. இந்த இயலாமையிலிருந்து மனதை மீட்க நானென்ன செய்துவிட முடியும்? நாம் பசிக்கு புதிதானவனல்ல ஆனால் புகைப்படம் தவிக்கிறார் என்று நினைத்துக்கொண்டார் வின்சென்ட். கங்காணி .சி கடலூர் அங்கிருந்து வேதாரண்யம் போய் பின் அங்கிருந்து எங்காவது போய்க்கொண்டிருப்பார். என்னாகுமோ என்று நினைத்தபடியே மலையை எட்டி பார்த்தபடி இருந்தார் வின்சென்ட்.
48
இருத்தலில் இருந்து இறப்பிற்கு எப்படி பயணிப்பது? - அட்டாதுட்டி
தன்னலமில்லாத கலைத்தொப்பி மிகச்சிறந்த கட்டிடக்கலை ஆலோசகர். ஒன்றை வடிவமைப்பது குறித்து பலரையும் வருத்தினாலும் இறுதியில் சில்வர் ஜூப்லி நாயகன் என்னமோ, சில்மிஷ பொன்மனச்செம்மல் போல கலைத்தொப்பி கும்பாதான். கும்பா பேசுவதை மிக கூர்ந்த காதுகளைக்கொண்ட ஏறத்தாழ நாயின் செவித்திறன் நுட்பம் கொண்டவர்கள் கேட்க முடியும். அப்படி ஒரு சினிமா கிசுகிசுவைப்போல மிக அருகே முகம் வைத்து பேசுவார். திடீரென உடல் குலுங்கும். என்னவென்று பார்த்தால் அட காமெடிப்பா.. சிரிக்கவேண்டும். நீங்கள் புரிந்துகொண்டு சிரிக்கும்போது கும்பா ஆழ்ந்து உலக சமாதானத்தைக்குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இப்ப உங்க முகம் எப்படியிருக்கும் ஐய்யோ! என்ன மாதிரிதான?
தொக்கூ சித்தர் மாற்றிய தொண்டு நிறுவனம் பற்றிய சந்தேகத்தை கும்பாவிடம் கேட்க முயன்றபோது, அவர் கூறிய பதில் இதுதான். ‘’ செய் அல்லது செத்து மடியணும் புரியுதாய்யா, அப்படி வேல செய்யணும். நம்ம லட்சியத்துக்காக பலர் சாவலாம், ஏன்னா அது அப்படித்தான். எல்லா கேள்விக்கும் இங்க பதிலில்ல. சித்தனோ, நானோ இங்க பெருசா பணம் சம்பாதிக்க போறதில்ல. சோறு இல்லாம சித்தன் ஏ இப்படி சுத்தணும்? நல்ல வேலக்கி போயிருக்கலாமில்ல? சோறு இல்லாம, டிரஸ் கூட இல்லாம பரதேசி மாரி சுத்திட்டிருக்கான். அவங்க அம்மாவுக்கு கேன்சரு, தெரியுமா ஒனக்கு, ஆனா, அவங்களோட அவனிருக்கல, ஏன்….? மத்தவங்க எப்படியோ, ஆனா, நாம ஒத்துமையா இருக்கணும். பள்ளிக்கூடத்த நல்ல முறயில கட்டமைக்கலாம். கொட்டாய் போட்டு வேல ஆரம்பிக்கணும். பிற்கால சந்ததிக்கு நம் பரிசு இதுதான். சித்தன் ஏதாவது வீடு வாங்கீட்டானா, பணம் சேத்தி? பவாவாடீஸ்க்கு எந்த ஒரு வெளம்பரமும் தேவையில்ல, அவங்க பெரிய ஆளுங்க, அவங்ககிட்ட இல்லாததா? ‘’ இந்தப்பேச்சுக்கிடையில் தலை சுத்திப்போவது போல 360 டிகிரியில் ஒரு பார்வை. அப்போது உங்கள் பார்வை சிந்தனை எல்லாமே கிறங்கிப்போன நிலையில் நீங்கள் எதனையும் நம்புகிற அடிமை நிலைக்கு வந்துவிடுவீர்கள். இதனை நைல் நதி அருகே கியாமிஸ் நகரில் பிறந்த அபாதடீஸ் எனும் துறவி உளவியலின் தத்துவ விளக்கம் எனும் நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
‘’அர்ப்பணிப்போட தற்கொலை செஞ்சுக்கிற மனநிலை கொண்ட ஆட்கள்தான் நமக்குத்தேவை. அப்படிப்பட்டவுங்கதா பள்ளியைக்கட்ட முடியும். ஏறத்தாழ தற்கொலைப்படை மாதிரி. தொக்கூ சித்தர் அப்படி பண்ணுனாருன்னா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். 90% தொக்கூ நண்பர்கள் தன்னோட பணம்னு கவலைப்படாம செலவழிச்சு உருவாக்கினதுதான் இது. பவாவாடீஸ் பத்தி போடாம இருக்கறதுமானல அவங்களுக்கு எந்தப்பிரச்சனையும் வரப்போறது இல்ல. இத இருட்டடிப்பா நெனைக்க வேண்டியது இல்ல. தொக்கூ சித்தர் பண்ணுனதுக்கு ஏதோ வேற காரணம் இருக்கும். நம்பிக்கை இழக்காதீங்க. பாத்துக்கலாம். செரியா ‘’என்று இரண்டாவது சிகரெட்டை பிடித்தபடி, ‘அடையாளங்கறதுல நாம எப்பவுமே சிக்க கூடாது’ என்றவர் ஆழமாக புகையை இழுத்து விட்டதின் வளையத்தில் எனது வாழ்கையே சுருளாகி மறைந்தது போல இருந்தது. புதைகுழிக்குள்ள ரெண்டு காலையும் சேத்தி வச்சுட்டம்போலயே என்று உள்ளே நோக்கியாவின் நான்கு வகை அலாரங்களும் ஒன்றுபோல அலறின.
ஜே.கேயின் இரண்டு சொற்பொழிவை ஐந்து நிமிட இடைவேளை கூட இல்லாமல் கேட்டால் எப்படி இருக்கும்? பிரேக் விடலாமே என்று கூட கேட்டுவிட உள்நாக்கு துடித்தது. இன்னொரு சிகரெட் ஆர்டர் செய்தார் பொதுநல கலைத்தொப்பி. இன்னொன்னா, ஒரு சிகரெட்டுக்கே ஒரு மணிநேரத்துக்கும் மேலாயிருச்சே, இன்னொன்னு போனா மாரத்தான் உரையில்ல நடத்துவாப்பல, வயிற்றில் நீராவி எஞ்சினின் பயணம் போகும் சத்தம் கேட்டது. சிகரெட்டோடு, பிஸ்கட்டையும் வாங்கி எனக்கு கொடுத்துவிட்டு, மிகத்தீவிரமான பாவனையோடு சாலையைப்பார்த்தார். அடுத்த பூதம் கிளம்புவது இப்படித்தான். பிறகு என்னைப்பார்த்தார். அப்புறம் 360 டிகிரி பார்வை; டீக்கடை பித்தளை பாய்லர், டம்ளர், அதில் உட்காரும் ஈ, டீ ஆற்றும்போது அதில் பெருகி வரும் நுரை, கடைக்கு வரும் ஆட்களின் பெருவிரல் நகம் முதல் உச்சந்தலை முடி வரை ஒரு அலசல், சாலை, தொப்பியை சரியாக பொருத்துவது, என் சட்டையின் பட்டனைப்பார்த்து விட்டு பேச ஆரம்பித்தார்.
‘’ ரொம்ப காம்ளக்சா யோசிக்காதீங்க, அது ரொம்ப சிக்கலாயிரும். அதிக படிப்பு, அதிக இளைப்பு. யோசிக்கறதும் அப்படித்தான். அது நமக்கு வேண்டாம். நீங்க இத எங்கிட்ட கேட்டீங்க, பரவால்ல, நா கிளியர் பண்ணீர்றன்’’ என்றவர் இருத்தலிலிருந்து இருப்பிற்கு ஒரு பின்நவீனத்துவ காலனிய, மற்றும் சர்லியலிச அம்சங்கள் நொதிக்கும் உரையை நிகழ்த்தினார். எதிரிலிருப்பவரை அடியோடு ஒன்றுமில்லாமல் செய்துவிடும், அடுத்தமுறை யோசிக்கவே கூடாது என்று தோன்றும் உலகப்புகழ்பெறக்கூடிய உள்ளூர் உரை அது.
குறிப்பு:
எதிரிலிருப்பவரை வசீகரிக்க வைக்கும் கண்களைக்கொண்டவர் கலைத்தொப்பி. அதோடு பேசும் வார்த்தைகளும் மென்மையாக கடுமையாக குத்தும் வகையில் பேசுவார். தன்னை எதிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாதது போலத்தெரிந்தாலும், மற்றவர்களை மிக மலினமாக மனதில் எண்ணுபவர் என்பதை தொக்கூ அமைப்பில் இருந்து தன் உழைப்பை, தன் பணத்தை ஏன் தன்னையே அர்ப்பணித்து இன்று விலகி நின்று அமைதியாக வாழும் பல நண்பர்கள் அறிவார்கள். ஆனாலும் கூட பலரிடமும் சித்தனைப்போல அதிக எதிர்ப்புகளை கலைத்தொப்பி சந்திக்கவில்லை என்பதற்கான காரணம் எளியதுதான். நேரடியான அவரது பேச்சுக்கள், சிந்தனைகளை ஆயில்ய அகோரி உட்பட உள்ளது உள்ளபடியே சந்திக்கவேயில்லை என்பதுதான் காரணம். கலைத்தொப்பி தன்னை ஒருவர் சந்திக்கவரும் முன்னே ஆராய்ச்சி புகைப்படம் உள்ளிட்ட சாம்பிராணி கூட்டம் அவர் பற்றிய ஒரு குறும்படத்தை வெகு நறுமணத்தோடு காட்டுவார்கள்.
அன்பிற்காக இரக்கிற கூட்டத்திற்கு அவர்கள் எதிர்பார்க்கும் ஒருவரின் சிறிய புன்னகை கூட அவர்களை வீழ்த்திவிடும் என்பதுதான் இதிலுள்ள தந்திரம். கலைத்தொப்பிக்கு சூடம் காட்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கும் வேப்பிலை அடிக்கும் மகராசர்களே, பாவ மண்ணில் பிறந்த மகான்களே, என்னையொத்த அடிமைகளை பரிசுத்தமாக்கும் கர்த்தா பரிசுதன்களே, ஒன்றே ஒன்றை கூறுங்கள். இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஒரு அமைப்பை விட்டு முன்பு அர்ப்பணிப்போடு பணிசெய்த பலரும் ஏன் விலகிப்போனார்கள் என்ற உண்மையை மனம் திறந்து உங்களால் பேச முடியுமா?
பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்த கலைத்தொப்பி உண்மையில் கர்த்தரின் புறத்தூய்மையை விட அகத்தூய்மை முக்கியம் என்று உணர்ந்துதான் அம்மதத்தினை பின்பற்றுகிறாரா? அன்பை உலகத்திற்கானது என்று வரித்துக்கொண்டு நம்பிக்கையும், அன்பும் கொண்டு துதிக்கும் ஒருவனின் பிராத்தனைக்கு இறைவனுக்கு கேட்கும் என்று நம்புகிறேன். அன்பே உலகத்திற்கானது என்று கூறும் மரியாளின் மகனது வழிகாட்டுதலை பெற தடையாய் நிற்பது அனைத்தையும் வெறுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அகங்காரத்தொப்பிதான். இறைவனின் அன்பை காண கண்களை மறைக்கும் அகங்கார அழுக்கை நீக்கினால்தானே எளியவர்களின் மனம் புரியும். அவர்களிடம் இருக்கும் இறைவனும் தெரியும். நம்மிடம் உள்ள இறைவனைப்பற்றி நமக்கும் தெரியும்.
49
தொக்கூ ஒரு சுருக்கமான அறிமுகம்: தத்துவங்கள், வழிமுறைகள், தந்திரங்கள், தப்புவது குறித்த முழுமையான கையேடு - ஈகிள்ஸ் ஐ புலனாய்வுப்பிரிவு
தொக்கூ என்ற அமைப்பில் பணி செய்ததாக கூறியதும், ஆயில்ய அகோரிக்கு உடலே தூக்கிவாரிப்போட்டது. வேண்டாம், அதிலிருந்து விலகிவிடு, இடுப்பில் இருக்கும் கோவணத்தை அடிக்கடி பார்த்துக்கொள் என்று பல மொழிகளில் பேசி, புரியாதவற்றிற்கு சப்டைடில் போட்டார். இந்தியன் போலீசோ, உயிரோட வந்தா பாத்துக்கலாம் என்று அக்மார்க் குளோசப் சிரிப்பை உதிர்த்தார். அன்றைய நிகழ்ச்சி நிகழும்வரை அந்த வார்தைகளுக்கு உயிர் இருக்கும் என்று நம்பவில்லை.
வைல்டு ஸ்கூல் தொடங்க 6 ஏக்கர் நிலம் பதினெட்டு லட்ச ரூபாய் பணத்திற்கு மிக நேர்மை, அர்ப்பணிப்பு, சேவை, மாற்றம் ஆகியவற்றை முழு உடலாக, ஆன்மாவாக கொண்டு வாழும் கலைத்தொப்பியின் பெயரில் வாங்கப்பட்டது. இல்லையென்றாலும் அவரே தன் சாம்பிராணிக்கூட்டத்தின் மூலம் சேர்த்திக்கொள்ள வற்புறுத்துவார். கலைத்தொப்பி தொக்கூவில் ஒண்டி வாழும் பரதேசி ஒருவனுக்கு தன் வீட்டு வாசலில் வைத்து ஒருமுறையும், பின் உணவகத்தில் ஒருமுறையும், உணவிட்டிருக்கிறதோடு, அவனுக்கு நூறு ரூபாயையும் வச்சுக்கோ என்று பெருந்தன்மையோடு ஈந்திருக்கிறார்.
தன்னலமில்லாத கலைத்தொப்பி இருத்தலிலிருந்து இருப்பிற்கு என தொடங்கும் பேருரையையிலிருந்து நம் சிந்தனையை மீட்க இரு வழிமுறைகளை கையாளவேண்டும் என அனுபவித்தவரான ஸமீரா நமக்கு ஒரு சில டிப்ஸ்களை கொடுக்கிறார். என்னவாம்?
சேரில் நம்மை உட்காரவைத்து அவர் பேசத்தொடங்கிவிட்டால், முக்காலியில் ஒருவரை உட்காரவைத்து அவர் உடலின் விதைகளை கீழே தணிக்கச்செய்து புவிஈர்ப்பு விசையோடு இணக்கமாக செய்து, சிறுசிறு கற்களை கரடுமுரடாக தேர்ந்தெடுத்தது, வைத்து கட்டிய சிறு கைக்குட்டைத்துணி அல்லது கோணிச்சாக்கு சிறியது வைத்து முக்காலியின் கீழே விதைகளை நோக்கி வேகமாக வலிவு கொண்டு விசிறினால் விதைகளை தணித்திருப்பவனுக்கு எப்படி ஒரு சுகானுபவம் கிடைக்கும்! அப்படித்தான் இருத்தலிலிருந்து இருப்பிற்கு சென்று அங்கிருந்து அடுத்ததாக இறப்பிற்கு நம்மை வழிநடத்தும் தற்கொலைக்குத்தூண்டும் கலைத்தொப்பியின் பேச்சும் மெல்ல இருத்தி இறுக்கும் என தன் டயரிக்குறிப்புகளில் நாளில்லாமல் எழுதி வைத்திருந்தார் தொக்கூ அமைப்பின் முன்னாள் பலியாடு ஒருவர்.
வேதனையைத்தணிக்க இரண்டு டம்ளர் நீரை சீரான இடைவெளியில் அருந்திவிட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தேங்காயை இருவேளை உண்டுவரவேண்டும் என்று கூறிய ஸமீராவிடம் எப்படி நீங்கள் இவ்வளவு சரியாக தேங்காய் மட்டும் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, சித்தன் கலைத்தொப்பியை சந்தித்துவிட்டு வருகிற எல்லாப்பொழுதுகளிலும் அவருக்கு மலம் குடலில் கட்டிக்கொள்ளும். உடனே என்னை தேங்காய் வாங்கிவரச் சொல்லுவார். அதைத்தின்று இருவேளை காற்றை மட்டும் உண்டு சமுதாயத்திற்கான அடுத்த உழைப்பு, பலிகொடுக்க பலியாடு தேடி அலைவதற்கான சக்தியை அதன்பின்னே பெற்று குதித்தெழுந்து கிளம்புவார் பங்கர் அண்ணா வீட்டிற்கு. எனக்கு அப்போதெல்லாம் தெரியாது அவர் கலைத்தொப்பியின் இருத்தலிலிருந்து இருப்பிற்கு, பிறகு இறப்பிற்கு வழிநடத்தும் பேருரையைக் கேட்டுத்தான் அவருக்கு மலம் கட்டி சாகும் நிலைக்குச்சென்று வருகிறார் என்று நான் அப்பேருரையை ஒருநாள் கேட்கும் வரையில் நம்பவில்லை. ஒரு விலையில்லா தேநீருக்காக உயிரை பணயம் வைத்து விளையாடிய விளையாட்டு அது என்றார் ஸமீரா.
ஆள் பிடிப்பது இதில் முக்கியமாக கூறப்படுகிறது. இதனை ஆராய்ச்சி புகைப்படம் விரிவாக உள்ளங்கை ரேகை போல விளக்குகிறார். ‘’ ஆள் பிடிக்கறது தொக்கூவுல ரொம்ப முக்கியமானது, ஏன்னா அப்பத்தான் நெறயா ஆட்கள வேல செய்யறக்கு காசில்லாம சேவைங்கற பேருல புடிக்க முடியும். கங்காணிச்சித்தனோட வேலதா இந்த ஆள் பிடிக்கறது. இதுக்கு தயாராவதுங்கறது சாமானியப்பட்டதில்ல. நெறயா கல்யாண்ஜியோட கவிதை படிக்கறது, ஞானக்கூத்தன், சு.ரா இவங்களயெல்லாம் விடாம படிக்கணும். குறிப்பாக தத்துவநூல்கள் ஓஷோவோடதெல்லாமே படிக்கணும். அப்பத்தா வேளாண் விஞ்ஞானி கூட்டத்தில பேச்ச கேட்கறவனல்லா கர்ச்சீப் கந்தலாகற அளவு அழுக வைக்கர முடியும். அந்தளவு நெகிழ்ச்சி பெருகறா மாதிரி அள்ளிவுட்றா பழனிச்சாமி காசா, பணமாங்கற மாதிரி பேசோணும். இந்த விஷயத்துல கங்காணிச்சித்தன் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் டிரினிட்டி, அம்பேத்கர் பிரிட்ஜ் உள்பட பல பல்கலைக்கழகங்கள், பாலங்கள், முட்டுச்சந்து, மூத்திரச்சந்து எல்லாத்துலயும் முதுகலைக்கு மூத்த கலை பட்டமெல்லாம் வாங்குனவரு. இதற்கு பல ஆதாரங்கள் யூடியூப் காணொளிகள்ல நீங்க பாக்கலாம்’’ என்று பல காணொளிகளைக்காட்டி, அந்த இணைய முகவரிகளைக் குறித்துக்கொள்கிறீர்களா என்று கேட்கிறார். நாம் மறுக்க, மறுக்க அவற்றை தாளில் குறித்துக்கொடுத்து, காணொளி ஒன்றை இயக்குகிறார். காணொளியில் ஒல்லியாக நவீனத்திருவள்ளுவர் போல இது மனிதன் தானா அல்லது எலும்புக்கூடா என்று சந்தேகப்படும்படி லோக்கல் ப்ரூஸ்லீ சீடன் போல ஒருவர் நின்று, பேசப்பேச அங்கிருக்கும் பலருக்கும் ஒரு குடம் ஆகும் அளவு கண்ணீர் தளும்பி வழிகிறது. அவரின் பேச்சைத்தாண்டி ஒரு தேம்பல் கேட்க, அது யாருக்கு என்றால் நமது ஆராய்ச்சி புகைப்படத்திற்குத்தான். கண்ணீர் பெருகி வழிய, நடிகர் பாண்டு போல ஆ… கத்தியபடி அழுகிறார். கண்ணீரைத்துடைக்க நாம் கொடுத்த கைக்குட்டையே காய ரெண்டு நாளாகும்படி நனைந்து நம்மிடம் வருகிறது.
‘’ இதெல்லாம் வேளாண் விஞ்ஞானி இருந்தவரைதான். இப்ப ஆள் புடிக்கிறது கஷ்டமாப்போச்சு. இப்பவும் ஆள்தேடி கடுக்காய் லேகியத்தோட கவிமனம் எங்கியோ வெளில போயிருக்குது. ஆள் எல்லாம் நல்லவர்தான். ஆனா என்ன வாங்கற பணத்துக்கு எந்த கணக்கும் இருக்காது, பலபேருக்கு முன்னேறுடா ராஸ்கல் அப்படீங்கறா மாதிரி ஏத்திவுட்டுறுவாரு, அவ்வளவுதா இறக்கிவுடறதுக்கு போலீசுதே வரணும்’’ என்று சிரிக்கிறார் ஆ.புகைப்படம். என்னங்க, சொல்றீங்க, ஏன் போலீஸ் வரணும்? என்று கேட்டால், ‘’பச்ச புள்ளயா இருக்கீங்களே ப்ரோ, அவந்தா என்ன பண்றதுன்னு தெரியாம சித்தரோட ‘ஏத்திவிடப்பா’ கோரஸ் பாட்டுல மாட்டி ஓவர் கான்பிடன்சுல் வாழ்க்கைக்கே ஒல வச்சுக்கிட்டு தூக்கு மாட்டிக்குவானே?, போலீசுலதான கயித்துல இருந்து பொணத்த இறக்கோணும்’’ ஞானச்சிரிப்பை உதிர்க்கிறார் ஆ.புகைப்படம்.
சரிங்க, முதல்ல இந்த அமைப்பில் பலர் இருந்தாங்களே அவங்க பாதிப்பேரை ஏன் சித்தனைத்தவிர யாரையும் காணவில்லையே? என நாம் கேட்க, அவர் கூறியது நம்மை தடுமாற, திகைக்க வைத்தது.
‘’ டீயைக்குடிச்சப்பறம் கப்ப என்ன கையிலயா வெச்சுருப்போம்?, தூக்கி கடாசீருமல்ல, அப்படித்தானுங்க, அவனுகள பயன்படுத்தியாச்சு தூக்கி வீசிப்புட்டாரு நம்ம சித்தரு.அப்பறம் யாராவது வர்றவங்க அவங்களப்பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கிட்டா தொக்கூவுக்கே கூ..கூ தே, அதனால வெளில விரட்டி வுட்டவங்க எல்லார்த்த பத்தியும் கண்ட மேனிக்கு ஒருத்தன்கிட்ட ஒருத்தன் பயங்கரமாக பேசி, மோசமானவங்கள காட்ட முயற்சி பண்ணுவாரு சித்தன். இல்லீனா அவரு இங்க இருக்க முடியுமா? ஆயில்ய அகோரி, பவீனுனு, வெரலாமானு பலருக்கு இத பண்ணியிருக்கறாரு, அரசியல்ல அண்ண மட்டும் இறங்கினா மத்தவனெல்ல வி.ஆர். எஸ் வாங்கிரோணும். சித்தர் எங்கயும் லேகியம் தின்னுட்டாவது பின்னி பொளப்பாப்பல, தெரியுமா என்ன ஜஸ்ட் அது மிஸ்ஸாயிருச்சு பட் அது லட்சியம் இன்னைக்கு பண்றது நிச்சயம் எப்படி ?‘’ என்று சித்தருக்கு பாலாபிஷேகம் பண்ணுகிறார் ஆ.புகைப்படம்.
நல்ல குணம் ஏதாவது சொல்லுங்களேன் என்றபோது, ‘’ என்ன கையில புத்தகம் ஏதாவது வச்சிருந்தா நிலக்கடல விக்கறவனுக்கு கூட என்ன ஏதுன்னு கேட்காம குடுத்துருவாரு, பணமும் அப்படித்தா, அது பொன்மனச்செம்மலோட டெக்னிக்தானப்பா. இப்ப சித்தரு பேண்ட் போட ஆரம்பிச்சிருக்கறாரு. எவனும் ஆபிசுக்குள்ள உடமாட்டீங்கறான். தோற்றம் ரொம்ம்ப முக்கியண்டா ஆ..ண்டா .. ஆ அப்படீன்னு சொன்னார்‘’ என்று அட்சரம் பிசகாமல் நடித்து காட்டுகிறார்.
அர்ப்பணிப்பு, சேவை ன்னு கிளம்புகிறவர்களை தயவு செய்து கேள்வி கேட்காமல் நம்பாதீர்கள். இன்னொன்று எதையும் இதுபோன்ற ஆட்கொல்லி தற்கொலைப்படை அமைப்புகளிடம் பணத்தை பொருளாக கொடுங்கள். முடிந்தவரை நல்ல புத்தகமாக. அதையும் கொடுக்கமாலிருப்பது அதி உத்தமம். இவர்களெல்லாம் உத்தம போர்வை வில்லன்கள். அப்படி கொடுத்தேதான் ஆகவேண்டும் எனும் சமூகசேவை வெறியா? உங்கள் அருகில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுங்கள். அது இவர்களை நம்புவதை விட எவ்வளவோ மேலானது. சிறிய சொல் ஒன்று, சேவை என்று கிளம்பியவர்களால் இந்த பூமி பட்டது போதும்.
உலகத்தை அழித்துவிடும் தீவிரத்தன்மையை கைவிடுங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள். தங்களின் கருணையை இரக்கத்தை தூண்ட இதுபோன்ற அமைப்புகள் எத்தனைபேரை வதைக்கின்றன என்பதை அறிவீர்களா நீங்கள்?
அறிவுஜீவி குண்டர்
ஏதோ பார்க்க நகர முனிசிபலில் டஸ்ட் டில்லர் ஓட்டுகிறார் போல என்று நினைத்துக்கொண்டாலும், அதில் பாதி சரி. 360 டிகிரியில் ஒரு குப்பையைக் கண்டறிந்து, அதை அகற்றுவதில் முனைந்து இருக்கும் எம்சிஏ பட்டதாரி இவர். பருமனில் கல்யாண கேட்டரிங் எடுத்து செய்பவர் போல நினைக்கவைத்தாலும், சமையலும் நன்றாகவே செய்யக்கூடியவர். தொக்கூ அமைப்பின் இணையவழி, சமூக இணையதளவழி விளம்பரம் செய்யும் அறிவுஜீவி குண்டர் இவர்தான். முகத்தில் பூனை ஏறி தூங்கினாலும் இவருக்கு தெரியாத அளவு தூங்குவார். இருக்கின்ற இடத்தில் அனைத்தையும் செய்ய ஆசையுண்டு. எண்ணமும் அதுதான். நிறைய ஆங்கில நூல்களை வாசிப்பார். பல அறிவியல், அரசியல் கருத்தரங்குகளில் முகம்கோணாது கலந்துகொள்ளுபவர். கம்யூட்டர் கோடிங் எழுதும் பணியில் இருந்தவர். ஓஷோ எழுதியதை ஆங்கிலத்திலும், தமிழும் வாசித்துவிட்டு அதுபற்றி விவாதிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.
தன்னைப்பற்றி பலரிடமும் நேரங்காலம் தெரியாமல் பேசுவதில் பெரும் விருப்பம் உண்டு. ஏதாவது, பேசி அந்த இறுக்கமான இடத்தில் சிரிப்பு சிக்கிமுக்கி வேலைகளை செய்வது இவர்தான். மனித புல்டோசர்போல எதையும் தூக்குவது, எறிவது என்றால் அவ்வளவு பிரியம். வேகம் அந்த வண்டியைப்போலத்தான். கனம் அதிகம் அல்லவா?
நீள்முடிச்சித்தன்
சிறிது அபாயகரமான எதிலும் தலையிடும் போக்கு கொண்ட மனிதர் இவர். பேச்சு ஒரு மாதிரியாக இருக்கும். தனக்கு தெரியாதது உலகிலேயே இல்லை, இனிமேல்தான் பிறக்கவேண்டும் என்பது போல பேசுவார். அல்லது மிரட்டுவார் இரண்டுமே ஒன்றுதான். உலகத்திற்கே யோசனை சொல்லும் அங்கிள் சாம் வேலைதான் இவருடையது. உப்பு பற்றி பிரச்சாரம் செய்ய உலகத்திலேயே இவரைப்போல ஒரு சித்தவைத்திய சிகாமணியைப் பார்க்கமுடியாது. இவர் சமையல் செய்தார் என்றால் யாருக்குமே மலம் குடலில் கட்டாது. எல்லோருக்குமே காரக்குழம்பு வைத்து அதன் மூலமே விளக்கெண்ணெய் உபயோகம் குறைத்து வயிற்றைக்கழுவும் புதிய மலமிளக்கி முறைக்கு காப்புரிமை வாங்க முயற்சித்துவருகிறார். இவரிடம் யோசனைகேட்டால் ஹிட்லரின் குடிப்பிறப்போ என்று சந்தேகம் கொள்ளுமளவு தன் சிந்தனைகளை அள்ளிக்கொட்டி நம்மை ஆப்பையில் தூக்கி ருசி பார்ப்பார். தொக்கூவின் செய்தித்தொடர்பாளர் என தன்னைத்தானே ஆழமாக நம்புகிற ஆகிருதி இவர். சித்தனின் கொத்தடிமைகளில் வல்லிய அடிமை சித்த மருத்துவர் இவர்தான் என்று கூறும்போதே, பேச்சு காரணமாக சிறு குடலில் உருவாகும் வாயுவை அமுக்க ஒரு மூலிகை இருக்கிறது என கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டில் இறங்கிவிடுவார். எது குறித்தும் இருபத்தாறு பக்க கோட்பாடுகளை கூறுவார். தான் மட்டுமே பேசவேண்டும் என்று மற்றவர்கள் கேட்டால்போதும் என்று நினைக்கும் காருண்ய கனி இவர். சமையல் அடிமை என்பதால் யாரும் எதையும் கூறுவதில்லை. ஏதாவது சொன்னால் சோற்றில் விஷம் வைத்துவிடுவாரே!
50
காபி..காரம் கச்சேரி - ஆக்கம்: லாய்ட்டர் லூன்
டைட் ஆழமான இந்த சமுதாயம் நாம் இல்லையென்றால் என்ன ஆயிருக்கும்? என்று சிந்தனையில் சமைந்திருந்தபோது, லூசின் குதூகல குரல் கேட்டது. ஆ.. கட்டுமரம், ஆ.. மஞ்சத்துண்டு, ஆ.. கடலு என கானாமெட்டில் சித்தரைப்போல பாடிவந்தார்.
‘’பாத்தீங்களா டைட் தம்பி, கட்சு எப்படி கடுச்சிட்டான் பாத்தீகளா?’’
உடனே டைட் ‘’கட்சு இல்லடா கட்ஜூடா ஆரிய மண்டையா, அதென்னடா உங்களுக்கு மட்டும் இந்த தமிழ் மேல அப்படி ஒரு வெறி?’’
‘’இந்தாப்பாரு என்னப்பத்தி என் தலீவரப்பத்தி அவதூறு பண்ணுணீனா நா புரட்டொலிக்கு கடிதம் எழுதி உன்ன பத்தி கண்டபடி எழுதவப்பேன், அப்பறம் எதுக்கு வழக்குரைஞர் அணி, போடுவோமுல கேச யாருகிட்ட?
‘’ஆமா, தபால் அட்டையெல்லாம் கெடைக்கறதில்லையாமா? நிரந்தர முதல்வருக்கும், கட்டுமரத்துக்கும் மட்டும் எப்படி குறையாம இருக்குதாம்?’’
‘’ யோவ் என்ன தைரியம்யா உனக்கு, கொழுப்பு அப்படீங்கறயா? மவுண்ட்ரோட்ல மறியல், நாலு பஸ்ஸ ரெண்டு லிட்டர் பெட்ரோல் ஊத்தி கொழுத்துவம்டா ’’ என பெரும் கோபத்தில் திமிறினார் லூஸ்.
‘’டேய் இட்லிய ஏண்டா இடியாப்பமாக்கி அதிரசம் பிழியற? போஸ்ட் கார்ட சொன்னன்டா’’ என பம்மினார் டைட்.
‘’இங்கபாரு, தேசிய கட்சி ஏதாவது புத்தகத்த படிச்சிட்டு ஏதாவது லோலாயமா பேசினே …. வீட்டுக்கு ஆட்டோ வந்துரும் பாத்துக்க’’
‘’ஒத்த வார்த்தைக்கு எதுக்குடா.. ஆட்டோவல்லாம்.. நா பஸ்லயே போய்க்கறன்’’ என தன்னடக்கமாக மாறினார் டைட்.
‘’நீ ஏறிப்போறக்கு இல்ல நைனா ஆட்டோ, உம்மேல ஏறி முதிக்கற ஆளுக வருவாங்க பஸ்ல வந்தா எனர்ஜி லாசாயிடுமல்ல, பீ கேர்லஸ் தேசியம்’’ என்று ஜிலேபியை வாயில் அப்பி முழுங்கினார் லூஸ்.
ஆகா, வாயத்திறந்தா நம்மு மேல வான்தாக்குதல் அளவுக்கு வில்லங்கம் வளருதே என யோசித்தவரை சிந்தனையை கலைக்கிறார் லூஸ் கழுதைக்குரலில்.
‘’ஆட்டோ மட்டுமல்ல, ஷாக்கா படையும் தயாராயிச்சு, அவனவனெல்லாம் தம் பேரப்புள்ள வெச்சுருக்கற, முன்னாடி தான் பள்ளிக்கொடத்துக்கு போட்டுபோன துணிய தேடி எடுத்து போட்டுக்கிட்டு குச்சிய எடுத்துக்கிட்ட வந்து தெருவுல நிக்கிறானுகப்பா… இனி நீ காந்தின்னா ரத்தவாந்திதாம் பாத்துக்க’’
‘’எனக்கு இன்னுமே கட்டுமரம், கடலு, தண்ணி ஹேங்ஓவரே தீரலியேப்பா’’ என சியாவனப்பிரகாசத்தை வாயில் வழித்துப்போட்டு வெந்நீர் தேடி ஓடுகிறார் டைட்.
‘’ஹலோ மிஸ்டர் ஹெரிடேஜ் திராவிடன், ஏ இந்தப்புலம்பல் நாங்களே கட்டுமரத்த கல்ல கட்டி கடல்ல போடலாமுன்னு இருக்கறோம், நிச்சயம் மேல வராதுல்ல?’’ அப்பாவியாய் பேசுகிறார் லூஸ்.
‘’ திராவிடன் எல்லாம் செத்துட்டான்டா, அவம்பேரச்சொல்லி பொழைக்கறவனல்லா நம்மளுக்கு ஒரு ரூபாயில் இட்லி தின்னுட்டு ஆனந்தபவன்ல 30 ரூபாய்க்கு காபி குடிக்கிறான்டா, நீ நாயாட நரியாட நிகழ்ச்சியில யாருக்கு ஓட்டுபோடோணும்னு எங்கிட்ட கேட்கற’’ என உணர்ச்சியில் மாரத்தான் தலைவரையும் மிஞ்சுகிறார் டைட்.
‘’ அது டைட்டு நீ தெனமும் பேப்பரு படிக்கற என்னாச்சு, உனக்கு நெஞ்சுவலி வருது, ஆனா, என்னப்பாரேன் ஜாடி நம்பர் ஏக் பாக்கறன், வாழ்றனப்பா, இதெல்லாமே சலிச்சுக்கற விஷயமா, ஏ எமோஷன் நம்மு கடமப்பா, நிகழ்ச்சீன்னா யாராவது பாக்கவேண்டாமா? நீயே சொல்லு?’’
காலந்தாண்டா, பேசு…பேசு செரி அந்த ஷெல்பு பக்கத்துல இருக்கற அவரோதிரேகண லேகியத்த எடு சாப்புட்ற நேரமாச்சு என கூற லூஸ் திமிறி ஓடியதில் அமுல் புரோ பான டம்ளர் தரைநோக்கி சடுதியில் நெருங்கியது.
51
என்னவொரு தேடல் சாமி! - ஒரு துப்பறியும் படலம் - ஈகிள்ஸ் ஐ ராமதாஸ்
ஸமீராவிற்கு தபாலில் புத்தகங்களோடு ஏதோ தேடல் பற்றி ஒரு புத்தகம் வந்திருந்ததாம். எப்படி என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள் தங்களின் மின்னூலினைப்பார்த்துவிட்டு யாரோ அனுப்பியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துச்சொன்னோம். ஸமீரா அதைத் திறந்து பார்த்தால் அப்புத்தகத்தின் முன்னட்டையிலேயே அன்பனே சந்தா இரண்டுவருடம் 200 அனுப்பிவை என்கிறார். படித்தால் செந்தமிழிலக்கியம் தொல்காப்பியத்திலிருந்து சிறியபகுதியை பிட்டு வைத்தது மாதிரி இருந்திருக்கிறது. உடனே எங்களது புலனாய்வு பகுதியினை நாடியிருக்கிறார்.
ஆனால் நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது, அவர் புத்தகத்தை பாகுல் தல்வாரிஸ் என்ற பெயரில் அனுப்பியிருக்கிறார். ஸமீராவின் நண்பரான தபால்காரர் சின்னக்குறி என்ன எங்கிட்ட கூட சொல்லாம பேர மாத்தீட்டயேப்பா…என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்வது? இலவசமாக கொடுத்தால் கூட கைசக்தி கண்ணன் கூட வாங்கமாட்டேங்கிறான் என்று ஸமீரா வருத்தப்படுகிறார். ஆமாம், யார் பலியாவது இதுபோன்ற புத்தகத்திற்கு? சந்தாத்தொகையைக் கேட்டதோடு, கட்டுரை ஒன்றினையும் அனுப்பிவைக்க கேட்டிருப்பது அவருக்கு நெஞ்சுவலியைத்தரும் என்பதால் மறைத்துவிட்டோம்.
தமிழ் இலக்கணப்பகுதி போல ஒரு புத்தகத்தினை உருவாக்கி அதற்கு ஏதோ தேடல் என்று தலைப்பிட்டு கட்டுரை அனுப்பு என்றால், ஏம்ப்பா ஏய் அது இலக்கிய புக்கா இல்ல ஆட்டோகிராப் புத்தகமா? என துக்கம் நெஞ்சையடைக்க பைப்பில் புகையிலையை நசுக்கிப்போட்டு, தீப்பெட்டியை வைஜயந்தின் மகள் ஷாம்பவியிடம் கடன் வாங்கினேன்.
என்னவேணா இருக்கட்டும். இதோ ஒரு கிளையண்ட் வருகிறாள். என்ன அபாயகரமான வளைவு நெளிவு அழகு. அய்யோ நரேந்திரனிடம் போகிறாளே? செரி இதை ஒரு மணி நேரம் கழித்துப்பார்ப்போம். முதலில் இந்தப்பெண்ணை கேமிராவில் பார்த்துவிட்டு வருகிறேன். ஹேய் ஜான், இங்கே வா!
52
மாளாத புரட்சியும், புளியஞ்சோற்று மூட்டையும் - ஏக்தமிழன்
தீவிரப்புரட்சிநாயகன்(தீ.பு.நா) வீட்டிற்கு வந்தபோது, தேசியத்தின் புத்தகங்களை படிக்க கொடுத்தேன். ஆனால் பாருங்கள். மிக நிதானமாக தன் பணிக்கிடையே படிக்கிறார் போல. அவரையும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புத்தகம் வந்து சேருமா என்று பயமானது தீ.பு.நா ன் பேச்சில்தான். தனக்குப் பிடித்த புத்தகங்கள் யாராவது நண்பர்கள் கொடுத்தால் அவர்களுக்கு திருப்பித்தரமாட்டேன். ஏன் தரவேண்டும்? எனக்கு பிடித்திருக்கிறதே! என்று கூற, எனக்கு திக்கென்றானது. வயிற்றில் கோவை எக்ஸ்பிரஸ் ஹார்ன் அடித்துக்கொண்டு செல்வதை உணர்ந்தேன். அப்போதுதான் மார்க்வஸ் எழுதிய நூற்றாண்டுத்தனிமை நூலை அவரின் கையில் கொடுத்திருந்தேன்.
புத்தகம் படிப்பது காலத்தை சார்ந்தது என்று கார்த்திக் வால்மீகி கூறியது நினைவுக்கு வந்தது. ஆகா, அவன் பேச்சுவாக்கில் சொன்ன பன்ச் எல்லாம் நடக்குது, ஹிட் ஆகுது என்று எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. ஒருதடவை தவறவிட்டுட்டா அவ்வளவுதாம்பா பொண்ணுஞ்செரி, புஸ்தகமும் செரி என்று புது திகில் காமிக்ஸ் போல பேசினார் அரசமார்.
களப்பணி, தீவிரப்புரட்சி எல்லாம் கடுமையான ஒற்றைத்தலைவலி ஆட்கள் என்று ஸமீரா சொன்னபோது, பேராயக்கட்சி போராளிக்கு புத்தகத்தை தந்துவிடமுடியுமா? என்று திகில் அந்தக்கண்களில் தெரிந்தது.
53
நெஞ்சதிரும் ஒலி - கலாமூதி
புத்தகத்திருவிழாவில் புத்தகம் வாங்க பார்த்துக்கொண்டு இருக்கையில் நிலநடுக்கம் வந்ததுபோல உணர்வெழ, இந்தியன் போலீசைக்கேட்டேன். ‘’ என்னாச்சுங்க’’ என்று. ‘’அடப்பாவி தலைவர் இடிமுழக்கம் பேசறாரு, உனக்குத்தெரியாதா?அவருதே விழாவ நடத்துறதே’’ என்றவர் ஃபேஸ்புக்கில் கவிதை எழுதியபடி, பெண்களின் அசைவுகளையும் சென்சார் போல கவனித்துக்கொண்டு வந்தார். மீண்டும் ஒருமுறை தரை அதிர்ந்தடங்கியது.கடைகளின் மெல்லிய மர அட்டைகள் எல்லாம் நெளிந்து நீள்வதாக தோன்றியது.
‘’முக்கிப்பேசறதுல நம்மு தலைவர் போடியையும் மிஞ்சீறுவாரு’’ என்று இந்தியன் போலீஸ் சொல்லி முடிக்கவில்லை. தலைவர் இடிமுழக்கம் கத்துனாரு பாருங்க!, அடேங்கப்பா 64 ஸ்பீக்கர் தியேட்டர் எல்லாம் என்னத்துக்கானது!! கொய்யால, அப்படியே கொய்ங்குது காது, நிலமே வளையறாப்பல இருக்குதுன்னா பாருங்களேன் தலைவரு பேச்சோட எழுச்சியின் வலிமை என்ன சொல்றது நானு! ஸ்பீக்கர்களே கழிந்துவிடும் பயத்தில் அம்புட்டு பவர் அண்ணனோட பேச்சு. மைக்கே நொறுங்கிப்போய்விடும் தன்மை கொண்ட உணர்வெழுச்சிப்பேச்சு பொதுவுடைமையாளனின் தனிச்சொத்து என்று பேராயக்கட்சி கூறினார். இருக்கட்டும் அதுக்காக வருகிறவர்களையெல்லாம் பயமுறுத்தவேண்டுமா என்ன? மெர்சலாகுதல்ல தலீவா!
இந்தியன் போலீஸ்காரர் மீட்டர் மட்டும் வைத்திருந்தால் பெண்களை அளந்தே விடும் முனைப்பில் கணக்கிட்டுக்கொண்டு இருந்தார். சித்தர் பதிப்பகம் வேறு எப்போதும் போல மாறுவேஷப்போட்டிக்கு தயாராக இருப்பது போல் நின்றார்கள். ஹெரிடேஜ் தமிழனின் பசு தொண்டுப்பட்டி போல ஸ்டால் இருந்தது. மேடம் ‘அ’ கம்பீரமாக நாங்க இருக்கோம் என்று கையைக்கட்டி ஸ்டாலின் மத்தியில் ஹீரோயின் சென்ட்ரிக் படம்போல நின்றார். சித்தருக்கு எப்போது கும்பி எரிச்சல் தாளாது போகிறதோ அப்போது எல்லாம் எவனையாவது கூப்பிட்டு, நம்மைப்பற்றி, இவர் இந்த சைக்கிள நல்லா பெண்டு எடுப்பாரு. அது வீலு பெண்ட் எடுக்கிற அழகு இருக்குதே என வத்தி விடுவார். எதிரில் இருப்பவனுக்கு விழி பிதுங்கிவிடும். அதுதானே அதுதானே வேணும். மாரத்தான் னு சொன்னாவே, அது ஆப்பிரிக்காவுல இருக்கற நாடுதான என்று கேட்கிற அறிவுச்சுண்ணாம்புகளாச்சே யாருகிட்ட? ஆண்டா ஆ.ஆ ஆ..னு சித்தன் சவுண்டு கேட்டாலே போதும்; இப்பல்லா அலர்ட் ஆகி ஒரே ஓட்டம்.
54
தொன்மை வழி சோமபானம் தயாரிப்பது எப்படி? - மொட்டச்சங்கிலி குட்டி
இந்தக்குறிப்புகள் 1967 ல் சென்னை தி.நகர் விஸ்வநாதச்செட்டியார் & சன்ஸ் நிறுவனத்தினரால் பதிப்பிக்கப்பட்ட தமிழக தொன்மை பானங்கள் எனும் காளியப்பதாஸ் என்பவரால் எழுதப்பட்ட நூலினைத்தழுவி, இக்காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது.
வேலமரத்துப்பட்டை அரைக்கிலோ.
வெல்லம் ஐந்து கிலோ.
நீர் ஒரு குடம்.
காடித்தண்ணீர் (முன்பு வெல்லம், பட்டை, ஊறிய பழையது) காடித்தண்ணீர் இல்லாதபோது, கள்ளினை கலந்துகொள்ளவேண்டும்.
காடித்தண்ணீர் அல்லது கள் கலந்த வேலம்பட்டையோடு ஊறப்போடும் தண்ணீரை 5 அல்லது 6 நாட்கள் கழித்து நன்றாக விளையும் சத்தம் கேட்டவுடன், அதனை எடுத்து தீயில் வைக்கவேண்டும்.
நெருப்புமூட்டும் முன் ஊறல்பானையின் மேல் ஒரு பானையை வைத்து அதன் கீழ்ப்பகுதியை துளையிட்டு, சிறு பானைத்துண்டுகளாக மூன்று துண்டு வைத்து துளையை அடைத்துவிடவேண்டும். இதன்மேல் சோமபானம் நீராவித்துளியாக பெருகி சொட்டுவதை சேமிக்க ஒரு பாத்திரத்தை வைக்கவேண்டும். இந்த பானையின் மேலே இன்னொரு பானையில் சாதாரண நீரை (குளிர்ந்தது) ஊற்றி வைக்கவேண்டும். இந்த மூன்று பானைகளையும் சிறு இடைவெளி கூட இல்லாமல் துணியினால் நன்றாக கட்டிவிடவேண்டும்.
ஊறல் பானையில் உள்ள ரசத்திற்கு ஏற்ப மேற்பானையில் 5 முறை தண்ணீர் ஊற்றவேண்டி வரலாம். அதற்குமேல் தண்ணீர் ஊற்றினால் சோமபானத்தின் தன்மை நீர்போல காரம் குறைந்து போய்விடும். ஐந்து 180 மி.லி பாட்டில்கள் சுத்தமான வேதிப்பொருட்கள் கலக்காத சோமபானம் இம்முறையில் கிடைக்கும். ஊறல் பானையில் உள்ள மீதியுள்ள ரசம் போன்ற நீர் சேமிக்கப்பட்டால், அடுத்தமுறை, சோம்பானத்தினை தயாரிக்க உதவும் காடித்தண்ணீராகும். எனவே முழுக்க நெருப்பில் காய்ச்சி அனைத்தையும் சுண்டவிட்டுவிடக்கூடாது. இரண்டாவது பானையின் பாத்திரத்தில் சேர்ந்திருக்கும் நீரே குடிக்கவேண்டிய பானமாகும்.
இது பற்றி, அத்தொழிலை முன்பு தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருந்த தொண்ணூற்று இரண்டு வயது பழனியம்மாள் கூறுவதாவது, ‘’ இது எங்க முன்னோர், மூத்தவங்க செஞ்ச தொழில்தான். பானத்துல எந்த வேதிப்பொருளும் சேர்க்கமாட்டோம். குடிக்கிறவங்க கொடுக்கிற காசுக்கு சரியான பொருள தரோணுங்கறது எங்க நெனப்பா இருந்துது. அப்பறம் பிராந்திக்கடைக்காரனுவ, சொந்தக்காரனுவ பொறாமை, ஏவாரப்போட்டியினால சம்பாரிச்ச பணத்த எல்லாம் ஜெயிலுக்குள்ள போன பயன, தம்பி பயன சாமீனு எடுக்க கோர்ட்டு, கேசுன்னு அலஞ்சே எல்லாமே போயிருச்சு. பணத்த மண்ணுல போட்டு ஏதாவது பண்ணியிருந்தா எங்க நெலம வேற மாதிரி இருந்திருக்குந்தே. நம்மளுக்கு வாழறக்கு யாரு புத்தி சொல்ல இருந்தா தம்பி?, கோளு சொல்லிக் கெடுக்கறதுன்னாத்தே இங்கே போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க. நம்மு கைய நம்போணுங்க, அதுதே எப்பவுமே நெஜம், நம்மள காப்பாத்தறதும் அதுதே, அந்தத் தொழிலு பண்ணுன பலபேர பலிகேட்டிருச்சு, சாபமான தொழிலுனு அத வுட்டுட்டோம். அதோட போலீசுக்காரங்கிட்ட வாங்கின அடியெல்லா கொஞ்சநஞ்சமில்ல சாமி! ஒவ்வொண்ணையும் நாமளா அடிபட்டு தெரிஞ்சுகிட்டு சரி செய்யும்போது, காலம் ஓடீருச்சுய்யா. இன்னைக்கு நா நிம்மதியா இருக்கறன்னா, அந்த விஷயத்த எல்லா வுட்டுட்டனாலதே..’’ என வலியோடு சிரிக்கிறார் பழனியம்மாள்; பெருகும் நினைவுகளினால் கண்களில் அதனையும் மீறி வழிகிறது கண்ணீர்.
(இக்குறுங்கட்டுரை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே. இவை கோமாளிமேடையின் ஒட்டுமொத்த குரல் அல்ல, இதன் எதிர்வினைகளுக்கு நாங்கள் சர்வநிச்சயமாக பொறுப்பில்லை, எங்களது நோக்கத்தை இக்கருத்துக்கள் பிரதிபலிப்பதல்ல என நைஸாக கழன்று கொள்வோம் என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்)
55
நிராகரிக்காதீங்கடா டேய்! - நிராகரித்தது யார்? எப்படி? எதற்கு? ஓர் அலசல் பகுதி- ஜகஜ்ஜாலன்
‘’தம்பி, நெட்டுல அந்தப்புத்தகத்த.. அதே ஃப்ரீ ப்ரம் ஸ்கூல போட்டுட்டயாமா? மதர் இந்தியாக்காரனுவ கதறு கதறுன்னு கதறுறான். என்னதாண்டா பண்ணுன. நெட்ல போட்டா எங்கிட்ட சொல்லவேண்டாமாடா.. உம்பாட்டுக்கு வர்றே.. போறே.. டேய், நீயெல்லாம் நெறயா படிச்சவண்டா. நான்லா சாதாரண பலவீனமானவன்டா.. என்ன ஏண்டா நிராகரிக்கற.. வலிக்குதுடா… டேய்.. எனக்கு எத்தன பிரச்சன இருக்குது தெரியுமா? எத்தனைல சிக்கிட்டு கஷ்டப்படறேன் தெரியுமா?’’ சித்தர் கைபேசியில் கதறுகதறுவென கதறி படபடவென அள்ளித்தெளித்தார் வார்த்தைகளை.
‘’தேசியம் வந்தாரு, பேசறக்குப்போனன். அவ்வளவுதே!’’
‘’ அவரையும் கூட்டிட்டு டீ குடிக்க போயிருக்கலாமே ஏங்கூப்புடல?’
‘’………………………………………………………………………………’’
‘’ஸ்டாலுக்குப்போனன், நீங்க இல்ல நானென்ன பண்றது?’’
‘’போன் பண்ணியிருக்கலாமுல்ல?’’
போனை அவர் வைத்துவிட்டார். இதே கேள்வியை ஏன் நான் கேட்டிருக்க கூடாது? கேட்டிருந்தால் என்ன சமாளிப்பு வந்திருக்கும் என்று ஸமீரா பொரிந்தார். பின் அவர் எங்கோ நூலகம் போனபின் அவரது டயரியை எடுத்து படித்துப்பார்த்தேன்.
எனக்குத்தெரியும். அனுமதி கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்று. என் உழைப்பை ஒரு குழு தனது சுயநலத்திற்கு எதற்கு பயன்படுத்தவேண்டும். என் எழுத்து மனிதர்கள் அனைவருக்குமானது.
தொக்கூவின் கோடிங் அறிவுஜீவியிடம் இதுபற்றி கூறிவிட்டே செய்தேன். அவர் பொதுநலப்போராளியிடம் கூறாததற்கு நானா பொறுப்பு.
ஐயா, சித்தரே, ஒரு ரூபாய்க்கும் உங்களை நம்பி இருக்கும் நான் உங்களை நிராகரிப்பதா? எப்படி முடியும்? விடுவீர்களா? உங்களைத்தாண்டி ஒருவன் வந்துவிடத்தான் முடியுமா? கலைத்தொப்பியின் அகங்காரத்தினால் 45 கி.மீ மேல் நெடுஞ்சாலையில் ஜவ்வாது மலையிலிருந்து நடந்து வந்தேனே யாரால்? எனது பெற்றோர் குடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு என்னை தவிக்கவிட்ட பொதுநல நல்லுள்ளங்கள் பற்றி நான் என்ன சொல்வது? நிராகரித்துவிட்டீர்கள் என்று தங்களது பதத்தையே நானும் இங்கு பயன்படுத்தலாமா? கலைத்தொப்பியி தங்களிடம் என்னை மன்னித்துவிடு என்று என்னிடம் சொல்லச் சொல்லி நாடகமாடியதைப்பற்றி கைபேசியில் கதை போல கேட்கும் நீங்கள் அவரென்ன எனக்கு இழைத்தார் என்று கேட்க ஒரு நொடி கூட தயாராக இல்லை ஏன்? நேர்மையாக பேசவேண்டும் இல்லையா அதுதானே ஐயா சுந்தர ராமசாமி கூறிய எழுத்தோடு இணைந்த எழுத்தாளனின் அறம், அந்தக்கவிதை, அந்த மேற்கோள் இதெல்லாம் யாரை ஏமாற்றப் பயன்படுத்துகிறீர்கள்?
அர்ப்பணிப்பு, சேவை, லட்சியம், இருத்தல், இருப்பு எல்லாமே ஏதோ கலைத்தொப்பிக்கோ உங்களுக்கோ மட்டுமானதல்ல. இந்த பரந்துவிரிந்த தேசத்தில் எந்த ஊடகத்தின் வெளிச்சமும் இல்லாமல் பலரும் அவ்வாறு இருந்திருக்கிறார்கள். விமர்சனங்கள் இல்லாத அமைப்பு எப்படி வளரமுடியும்? எந்தக்கேள்வியும் கேட்காமல் பணியவேண்டுமென பாசிஸத்தன்மையோடு நீங்களும், கலைத்தொப்பியும் நினைக்கலாம். சில மனப்பிறழ்வு கொண்ட கூட்டம் வேண்டுமானால் அதைச் செய்யலாம். நான் ஏன் அதைப் பின்பற்றவேண்டும்? சுதந்திரமான சிந்தனையில்தான் நன்மை பிறக்க முடியும். மற்ற சக மனிதர்களுக்கும் உதவ முடியும் என்று நம்புகிறேன். உறுதியாக கூறுவது ஒன்றே ஒன்றுதான. அகங்காரம் இருக்கும் இடத்தில் அன்பு சர்வ நிச்சயம் இருக்காது. இருக்க முடியாது. புத்தகங்களை சர்வ நிச்சயமாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. இணையத்தில் மின்னூல் நண்பர்களுக்கு கொடுத்தது கொடுத்ததுதான்.
உங்களுக்கு பெரிய அளவில் நண்பர்கள், பிரபலங்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம். உங்களுக்கு பல நுட்பமான திறன்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது. விளைவு வன்மம் வளருகிறது.
எங்கு குரூரங்கள், வன்முறைகள், போர்கள் நடைபெறுகின்றனவோ அங்கு பின்னாட்களில் கலை உயிர்த்தெழுந்து உன்னத இடத்தை அடையும் என்பார்கள். கவிஒளியின் உள்ளத்தில் நிகழ்வதென்னவோ? பராபரமே அறியும்?
பழங்குடிச்சிறுவன் விஜியிடம் கூறினேன் ‘’நா ரொம்பநாளு இங்க இருக்கமாட்டேன் ’’ என்று கூறி இரண்டு நாட்களுக்குள் நான் நிராகரிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு தன்னலமில்லாத கலைத்தொப்பியால் வெளியேற்றப்பட்டேன்.
லக்ஷ்மிபதியும் வெகுநாட்கள் உங்களோடு இருக்கமாட்டார். விரைவில் அவர் தன்னை விடுவித்துக்கொள்ள அண்ணாமலையார் அருள்புரிய வேண்டுகிறேன். பலதும் வெடிக்க சமயம் பார்த்திருக்கிறது அவ்வளவுதான்.
நான் தொடர்ந்து ஒரு இடத்தில் ஒரே வேலையை செய்துகொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் நீங்கள் கொடுத்தவற்றை விட மதிப்பானவற்றை உருவாக்கி தந்திருக்கிறேன். மனிதர்களை விட பெரிதாக தாங்கள் மதிக்கும் பணத்தையும் கூறவிரும்புகிறேன். பள்ளிக்கு வெளியே வானம் பால் ஒரு உயிர்க்கொல்லி என்ற இருநூல்களுக்கும் நீங்கள் தமிழில் மொழிபெயர்த்ததற்காக நிச்சயம் பணம் தரப்போவதில்லை. மறுபதிப்பு என்று சென்றுகொண்டே இருக்கப்போகும் இந்நூல்களில் பள்ளிக்கு வெளியே வானம் புத்தகம் பற்றி நீங்கள் கவலைப்படுவது லாபத்தில் ஏற்படும் நஷ்டம் என்பது யாருக்குத்தான் தெரியாது. மின்னூல் பெரிய வெற்றி பெற்ற வடிவம் என்று கூற முடியாது. ஆனால் இது காலத்திற்கான வடிவம் என்பதை நான் மறுக்கவில்லை. காலத்தோடு பயணம் செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. பேப்பர் பேக் எடிஷனும் நன்றாகவே பள்ளிக்கு வெளியே வானம் விற்கும் அதன் உள்ளடக்கம் அப்படி. அதோடு தங்களின் வியாபாரப்புத்தி எப்படியும் லாபம் பார்க்க உழைக்கும். உங்களுடைய முகம் பார்த்துப் பேச எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தன்னலமில்லாத பொதுநல உள்ளங்களுக்கு எப்படியோ நானறியேன். கற்றதும் பெற்றதும் பயனுள்ளதுதான். எதைப்பற்றியும் புகார் சொல்ல என்ன இருக்கிறது? நன்றி!
நானோர் பரதேசி
நல்லோர் கால்தூசி
56
கோமாளி மேடை எதற்கானது??? - பழனிநாடார்பேரன்
ஆங்கிலக்கட்டுரைகளை சூழல் அல்லது சமுதாயத்திற்கான வெவ்வேறு கோணங்களை உருவாக்குகின்ற மனிதர்களை அறிமுகப்படுத்துவதற்காக கோமாளிமேடை வலைப்பூ சில நண்பர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்பது சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கக்கூடியது.
முதலில் சில மற்ற வலைப்பூக்களின் கட்டுரைகள் வெளியிடப்படும் பின்னர் முழுக்க தனக்கேயான மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வலைப்பூ அமையும் என்று நம்புகிறேன்.
பல் இல்லாத எங்கப்பத்தா பேசும் லொள்ளு கவுண்டர்கெல்லாம் என்னால் ஒரு வார்த்தை, ஒரு பன்ச் பேச முடியவில்லை. வெளக்கமாறு கிழித்து சம்பாதிக்கிற தைரியம். வியாழன் என்றால் பன்னிக்கறி, ஞாயிறு என்றால் ஆட்டுக்கறி, இதற்கிடையே கட்டுகட்டாய் பன் என்று குடலில் ஊறின நெய்ப்பு பல்லுக்கிடையே சிக்கிய கறித்துணுக்கை குத்தியபடி லோலாயம் பேசுகிற தன்மை பிறப்பிலிருந்தே வந்தது இப்போது ஊமைக்குத்து குத்துகிறது.
57
நடுகல் மனிதன் - பழனிச்சாமி ஜூனியர்
நூல்வெளியீட்டு விழாக்களில் துதிகள் எப்போதும் இருக்கும் என்பதால் நான்போகவே மாட்டேன். ஆனால் சென்னிமலை சுற்றுவட்டாரப் பேச்சுக்களை வாழ்கையாக நம்முன் வைக்கும் எழுத்தாளர் வா.மு. கோமு புதிதாகதொடங்கியிருக்கும் நடுகல் பதிப்பகத்தின் நான்கு புத்தகங்கள் வெளியீட்டில் நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், லக்ஷ்மி சரவணக்குமார் எனப்பலரும் கலந்துகொண்டார்கள். களப்பணி புரட்சிக்காரர் அழைத்த காரணத்தால் விழாவிற்குப் போனேன். விழாவிற்கு முன்னே சிறிதாக லிக்யூட் பலரும் அருந்தியிருந்தார்கள். விழா முடிந்துவிட்டபின், குறையாக விடக்கூடாதே என்று மீண்டும் டாஸ்மாக் சரணம் கச்சாமி என்று கிளம்பிவிட்டார்கள். தீவிரப்புரட்சி, கூத்தன், வா.மு. கோமு, செல்லமுத்து குப்புசாமி நடைபோடத்தொடங்கியிருந்தனர். சைட்டிஷ் தின்னும் என்னைப்போன்ற சைவப்பட்சிகளுக்கு அங்கே என்ன வேலை? தம்பி நீங்க கெளம்புங்க என்றார் தீவிரப்புரட்சி.
முருகேச பாண்டியன் பேசியது நன்றாக இருந்தது. தோள்மேல் கையைப்போட்டுக்கொண்டு பேசுவார்களே அதுபோல, இயல்பானதாக இருந்தது. பெருமாள் முருகன் இதோ திருச்செங்கோடு பஸ் கிளம்பிவிடும் … இதோ போய்விடும் என்று பயமுறுத்தியிருப்பார்கள் போல. படபடப்புடனே பேசினார். லக்ஷ்மி சரவணக்குமாருக்கு குக்கூ இயக்குநர் மீது ஏக கடுப்பு. நறுக்கென குத்திக்காட்டிப்பேசி அதையும் ஆமாங்க என்று நியாயப்படுத்தி நண்பர்களிடம் பேசினார்.
செல்லமுத்து குப்புசாமி எழுதிய இரவல் காதலி எனும் நாவல் ஒன்றை நான் வாசித்திருக்கிறேன். எப்படி புத்தகத்தை விற்பனை செய்வது என்று ரகசியத்தைக்கூறினார். உண்மையிலே இனி எழுதுபவர்களுக்கு நிச்சயம் பயன்படும் வழிமுறைகள்தான். அவர் பாவம், திக்கித்திக்கிப்பேசி தடுமாறிப்போய்விட்டார். கரட்டுப்புலிக்கு கடும் கோவம் வந்துவிட்டது. எட்டிப்பிடித்து அடக்கி வைத்தேன். புத்தகம் எப்படியிருக்குமோ, ஆனால் தேநீர் நன்றாக இருந்தது.
தஞ்சை ப்ரகாஷின் கள்ளம் நாவல் பற்றி அவரது நண்பர் ஒருவர் பேசினார். சிறந்த பேச்சாக அந்த நாளில் அதனையும், முருகேச பாண்டியன் பேசியதையும் எடுத்துக்கொள்ள முடியும். இறுதியாக, வா.மு. கோமு தான் பார்த்துவந்த வேலைகளையெல்லாம் கூறி, அதை எப்படி விட்டு விலகி வந்தேன் என்று கூறி தான் முதலில் சிரித்து பின் மற்றவர்களை சிரிக்கவைத்தார்.
58
கங்காணிச்சித்தன் பற்றிய கடுதாசி - ஆட்டுக்குட்டி ‘நியூஸ்’ பீட்டர்
ஆயில்ய அகோரி அனுப்பிய சித்தர் பற்றிய கடிதம் முதலில் படிக்க சில எழுத்துரு பிரச்சனைகள் இருந்தது என்றாலும் பிறகு, வீட்டில்கொண்டு வந்து படித்தேன்.
சித்தன் பற்றிய அனைத்தும் தெரிந்த கவனித்த ஒருவர் மட்டும்தான்இதனை எழுதியிருக்க முடியும் என்பது உடனே புரிந்தது. ஆராய்ச்சி புகைப்படம் இதனை வெளிப்படையாக புலம்பித் தீர்த்துவிட்டார். ஏறத்தாழ அவரும் விலகின மாதிரிதான்.
கலைத்தொப்பியின் லட்சியங்களுக்கு அவர் உழைப்பது சரி. மற்றவர்கள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு ஏன் தேயவேண்டும்? ஏன் குறிப்பிட்ட பெண்ணின் பெயர் அனைத்து சித்தர் ஈடுபடும் பணிகளிலும் வருகிறது தெரியுமா? என்று ஆராய்ச்சி புகைப்படம் சிரித்துக்கொண்டே கேட்டார். லேட் ஸ்கூப் நியூஸ் பீட்டராச்சே? தெரியவில்லை என்றேன். ஆட்டுக்குட்டிடா நீயி. அறுத்துருவாங்க கொஞ்ச நாள்ல என்றார். ஸமீராவைத்தான் முதலிலேயே அறுத்தாச்சேப்பா!
‘’விலங்குப்பண்ணையின் ஆட்சியாளர்களாக பன்றிகள் தம்மை நியமித்துக்கொள்ளும். அது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் தொக்கூ இயங்குகிறதோ? வேலை செய்பவன் கேள்வி கேட்காமல் அடிமை வேலை செய்யவேண்டும். போடுவதை தின்றுவிட்டு, அர்ப்பணிப்பாக அடுத்தவர்கள் முன்னேற நாம் உழைக்கவேண்டும். ஏதாவது கேள்வி எழுப்பினால் உடனே அவர்களைப்பற்றி அவதூறு அனைத்து இடங்களிலும் பரப்பப்பட்டு வெளியே துரத்தப்படுவார்கள்’’ என்று ஸமீராவின் குறிப்பிலிருந்து அறிந்தேன்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு தாண்டிய ஆன்மாக்களின் கையில் ஒரு அமைப்பு இயங்குவது வரம்தான். அப்படி யாரும் தொக்கூவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்தக்கடிதம் தெளிவாக கூறுகிறது. தன்னை நம்புபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை பரிசளிப்பார்கள் சித்தரும் இதர தன்னமில்லா பேரொளிகளும் என்று கூறப்பட்டுள்ளது. ஸமீராவின் நாட்குறிப்பிலிருந்து இது உண்மையாகவே இருக்கக்கூடும் என்று உணர்கிறேன். கீழ்மையான எண்ணம் கொண்டவர்களின் விளையாட்டுக்களமாக பலரும் உருண்டோடுகிறார்கள். சோதனைக்காலம்தான் இது.
59
கால்களுக்கு விருது - துணுக்குப்பட்சி
கால்கள் நாவலுக்காக அபிலாஷ் சந்திரன் யுவபுரஷ்கார் விருதினை வென்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்ருதாவில் அழகிய சிங்கரின் எதையாவது சொல்லட்டுமா என்ற தொடருக்குப்பின் படிப்பது அபிலாஷின் அறிந்தும் அறியாமலும் தொடர்தான். பிறகு ராம் முரளியின் ஆங்கில திரைப்பட இயக்குநர்கள் குறித்த தமிழ் மொழிபெயர்ப்பை வாசிப்பேன்.
அபிலாஷின் எழுத்துக்கள் தனியாக எந்த புத்தகமாக அவருடையதை வாசித்தது இல்லை என்றாலும், அம்ருதாவை தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன. அவை இயல்பானதாக, ஆழமானதாக இருக்கின்றன. வசீகரித்து சொல்லுக்குள் சிக்கவைக்கின்ற தன்மையை அவை மாறாது கொண்டிருக்கின்றன என்பேன். வேலை கிடைக்காது இருக்கும் மனநிலை குறித்து எழுதிய கட்டுரையை என்றுமே மறக்க முடியாது. விதைக்க காத்திருக்கும், விதையை எதிர்ப்பார்த்திருக்கும் நிலம் போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்.
மிக அந்தரங்கமாக மனதோடு உரையாடும் கட்டுரைகள் இவை என்பேன். புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் இரா. நடராஜன் அவர்களும் விருது பெற்றிருக்கிறார். ஆனால் அவரோடு விருது பெற்ற அபிலாஷ் பற்றி ஒரு வரி அவர்களின் இதழில் எழுதவில்லை. இதுதான் அவர்களின் நேர்மையான வழிமுறையா என்ன? அவர்களும் குழு வாதத்தில் சிக்கிவிட்டார்கள் போல. காலம் அப்படி வேறு என்ன சொல்வது?
60
அவென்ஞ்சர் பயணம் - மெட்ரோடூரிஸ்ட் மணி
திட்டமிட்டு கிளம்பும் பயணங்களை விட எதிர்பாராத பயணங்கள் நமக்குத்தருகிற எதனையும் ஒருவித பயம் படபடப்புடன் ஏற்கிறோம் இல்லையா, குஸ்கா அழைத்ததும் அப்படித்தான் நினைத்தேன். பேருந்து வர அரை மணிநேரத்திற்கும் அதிகமாகிவிட, வியர்வை சட்டை, கால்சட்டை என பயணித்து பாதங்கள் வழியே பயணித்தது.
குஸ்கா ஒரு டால்டா டப்பா போல எதுவுமே இல்லாததை புலம்பித்தள்ளிவிட்டு, பிறகு அசட்டுச்சிரிப்புடன் தெலுங்குப்படம் பற்றிப்பேசுவான். அல்லு அர்ஜூனை தெலுங்கிலும், தனுஷை தமிழிலும் பூஜை செய்பவன். பாடல்களில் காதல் தோல்விப்பாடல்களை பலருக்கும் போட்டுக்காட்டி கொல்வது புதுவகை பழிவாங்கல் முறைதானே! கூடவே இவரும் தன் காக்கா குரலால் பல சங்கதிகள், பல ஸ்வரங்களை மீட்ட, ஆரோகண, அவரோகண இசைக்கச்சேரி அந்த இடத்திலேயே தொடங்கும். கிழங்கு தின்ற நாயின் மூச்சிரைப்போடு பாடி, பாலகிருஷ்ணா வராத நடனத்தை வா வா என்பாரே அதுபோல பாட முடியாத பாட்டை பாடி பலரையும் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது அன்னாரது ஹாபி.
அவனது புதிய வண்டியான இரண்டாவது கைமாற்றல் அவெஞ்சரில் பயணம் செய்தோம். வண்டி தாழ்ந்தபடி அமைந்திருந்ததால் பல வண்டிகள் எங்களை விட உயரமாக இருந்தன. லாரிகள் அருகே செல்லும்போது, டயர்கள் நொடியில் என் தெய்வ பக்தியை உச்சத்திற்கு கொண்டு சென்றன. மைலேஜ் 25 கி.மீ கிடைக்கிறது என்றான் குஸ்கா. கைபேசி அழைப்புகள் நல்ல சாப்பாட்டினை ஆனந்தாஸில் சாப்பிட விடவில்லை. கடனை அவனின் அம்மா நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, பாதி சாப்பிட்டிலேயே எழுந்துவிட்டான். அங்கு சாப்பாடு எழுபத்தைந்து ரூபாய். க்ளைமேக்ஸை எட்டுவதில் நம்மை மிஞ்ச யார் உண்டு? அவனுடைய பாயாசத்தையும் நானேதான் எங்கடா பாயாசம் என்று தேடி குடித்தேன். ஏன் பாயாசம் குடிக்கவில்லை என்று அவனுடையதையும் குடித்துவிட்டுத்தான் கேட்டேன். குடிக்கும் முன் கேட்டால் நம்மையும் 20 நிமிட விளக்கம் கூறி மெலோடிராமா செய்து பாயாசத்தை குடிக்க விட மாட்டான். நம்மைப்போலவேதானே நமது நண்பனும். விளக்கம் சொல்லும்போது குடித்தால் ‘நான் முக்கியமா, பாயாசம் முக்கியமா’ என்பான். நிச்சயமா பாயாசம்தான் ஏன்னா சீக்கரம் குடிக்காட்டி கெட்டிரும்ல. சொல்லவா முடியும்?
விளக்கம் கேட்டதற்கே முழு பாயாசமும் செரிமானமாகிவிட்ட ஏப்பம் வந்துவிட்டது. குஸ்கா எப்படிப்பேசுவான் என்றால் நமக்கு தெரிந்த ஒன்றையே தான் புதிதாக கண்டுபிடித்தது போல பேசி அயர்ச்சி ஏற்படுத்துவான். இவனிடம் நண்பனாக இருக்க ஒரே ஒரு தகுதி போதும். அவன் எதைச்சொன்னாலும் காது கொடுத்து கேட்டால் போதும். அல்லது அப்படி நடியுங்கள் அது இன்னும் பிரமாதமாக இருக்கும்.
கோவை பயணம் விலையில்லாது கிடைக்கிறதே என்று போனால் இவன் ‘உளறுவதெல்லாம் லோலாயம்’ நிகழ்ச்சிக்கு டிரையல் ஷோ பார்த்தால் தாங்க முடியுமா?
கரகராஜ் என்று பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தோம். அவர் அசல் திருநீறைப்பூசினால் மாரியம்மன் கோயில் பூசாரிபோலவே இருப்பார். எப்போதும் இப்போதுதான் தூங்கி எழுந்தது போன்ற ஒரு மயக்கமான முகம். அவரிடம் நிலம் குறித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். நான் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணை அவதானித்துக்கொண்டிருந்தேன். அனாடமிபடி இங்கு இரு முயல்கள் விழித்திருக்கவேண்டுமே என்றால் அங்கு சமதளமாக இருந்தது. இடுப்பும், கழுத்தும் எந்த வேறுபாடும் கொள்ளாது இருந்ததைக்கண்டு அதிர்ச்சியானேன். நீலமும், பச்சையுமாக ஒன்றுடன் ஒன்று கலந்த மயில் தோகை நிறச்சுடிதார் கண்ணைவிட்டு போகிறதா என்ன? ஏத்த இறக்கமில்லாத கேஸ்சிலிண்டர் போல ஒரு பெண்ணப்பா! என்று சமுதாயத்திற்கான பெருமூச்சை வெளியிட்டுவிட்டு டூநட்ஸ் பேக்கரிக்கு கிளம்பினோம். அடுத்த கடமை காத்திருக்கிறது போகவேண்டாமா?
என்னுடைய பெயர் கொண்ட அந்தப்பேக்கரி சமையற்கலைஞரை அங்கு சந்தித்தேன். ச்சூ.. ச்சூ மணி அந்தாண்ட போ என்று அதட்ட முடியாது. அவரின் ஆகிருதியான பாடி அப்படி ஒரு விசாலம். சமைக்கறாரா, இல்ல இவரே சாப்புட்றாரா என்று டவுட்டு எனக்கு. மேலே விழுந்தால் மலை விழுந்து மங்கை சாவு நியூஸ் கள்ளக்காதல் பத்திரிக்கையில் கட்டம் கட்டி வந்திரும் பாஸூ. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் அவருக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதைக் கூறிவிட்டு, அது விரைவில் நடக்கப்போகிறதை பெருமையுடன் அறிவித்தார்.
தன் தம்பிக்கான வேலையையும் அங்கு உறுதி செய்துவிடவேண்டும் என ஓவைசி பிரதர்களின் பாசத்தையும் மிஞ்சினார் பேக்கரி மணி.
அதற்குள் குஸ்கா, ரெண்டு சமோசா, ரெண்டு டிராபிக்கோனாவை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு வந்தார். சமோசாவை வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு பேக்கரி மணியை லைட்டாக கவனித்து, முழு கவனத்தையும் அங்கே சமோசா கொடுத்த ஒரு ஒடுக்கு விழுந்த வெளிறிய நிறம் பெண்ணை அங்கம் அங்கமாக பொருத்தம் பார்த்துக்கொண்டிருந்தான் குஸ்கா . அதைக்கவனித்த பேக்கரி மணி என்னையும் அவனையும் கவனித்து உதட்டை 360 டிகிரியில் கடித்தார். பிறகு,
‘’டேய், குஸ்கா ரொம்ப துடிக்காத. ஆயிரம் னா வந்துருவா, வேணுமா என்ன?’’ கேட்க, பரவசம் பெற்ற குஸ்கா அருண் சமோசாவின் மீது அவ்வளவு மெதுவாக வலிக்குமோ என்று சாஸினைத்தடவினான். அப்படியே வாயில் வைத்து உழும்பித்திங்க ஆரம்பித்தான்.
குஸ்காவின் ஆர்வத்தை பார்த்த பேக்கரி மணி ‘’யோவ் அப்படியெல்லா ஆண்டவனயே நேரில் பாத்த மாரி எக்ஸ்பிரசன் குடுக்காத. எல்லாமே கீழ வீங்கிப்போன வேஸ்டுங்கதா, தெரியுமா?’’ ஆனால் குஸ்கா தனி கனவில் இருந்தார். அவர் பார்க்கும் பார்வையில் அந்த ரம்யா எனும் பெண்ணின் உடைகள் தீய்ந்துகூட போகலாம் என்று பயம் எனக்கு ஏற்படத்தொடங்கியது.
‘’டேய் ஏதாவது சாப்புட்றா, அவகிட்ட போய் ஏதாவது வாங்குவோம். எனக்கொண்ணும் பிரச்சனையில்ல’’ என்று எப்போதுமே கூறாத வார்த்தைகளையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான்.
பேக்கரி மணியின் தம்பிக்கு உள்ளே ஏதோ வேலை இருந்ததால் விரைவிலேயே உள்ளே போய்விட்டார். கவர்ச்சிகரமான ஆள் என்று கூறமுடியும். மலர்ச்சிகரமான ஆள் அவர்.
குஸ்கா வின் சோலார் தோழர்கள்தான் இந்த பேக்கரி மணி பிரதர்ஸ். பேக்கரி இவர்களுக்கு கொடுத்திருந்த அறைக்கு இரவு வந்து தங்குவது பின் கேமரா காலையில் ஆன் செய்வதற்கு முன் கிளம்பிவிடுவது குஸ்காவிற்கு பழக்கமாகியிருந்தது.
கோவையிலிருந்து தடதடக்கும் சத்தி பயணம், பின் அங்கிருந்து கோபி பயணம். கோபியிலிருந்து தன்னாசிபாளையம் அருகேயுள்ள நிலம் ஒன்றிற்கு பயணித்தோம். அந்த நில உரிமையாளரான திருமணம் ஆகாத கவுண்டர் ஒருவரோடு சென்றோம். 12 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறவர் என்று நம்பவே முடியாது. இருக்கின்ற சொத்திற்கு ஏற்பக்கூட வீடு இல்லை. பழைய டி.வி.எஸ் சாம்ப் வைத்திருந்தார். அதில் கோபிக்குவரவே ஒரு மணிநேரம் ஆகும்.
நிலம் பார்க்கப்போனபோது, அந்த வண்டியும் போடா வெண்ணைகளா, விட்ருங்கடா என்னை என்று பஞ்சராகி நின்றுவிட்டது. 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் பரப்பில் கிரானைட் கல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா உறவின் முறைகள். யார் நிலத்தை வாங்க முயற்சித்தாலும் பல தடைகள், இடைஞ்சல்கள் செய்து தடுத்து நிறுத்திவிடுகிறார்களாம். மனம் பொருமிப்பேசினார் கவுண்டர். திட சித்தமாக ஒன்றை செய்கிறவர் போல தெரியவில்லை. பல விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது போல. தவிப்பாய் இருந்தார்.
எதிர்காற்று முகத்தில் அடிக்க காதில் ஜிவ் வென காற்று புக கண்ணில் நீர் வழிய செய்த மோட்டார் சைக்கிள் பயணம் இது.
இப்பயணத்தில் சந்தித்த மனிதர்கள் குறைவுதான் என்றாலும் சூழலும், மண்ணும் பலதரப்பட்டவை. பயணத்திற்கு உடல்நலம் மிக முக்கியம். கம்மங்கூழ், கேப்பை என்று குடிப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது என் பரிந்துரை. தண்ணீர் உடலுக்கு ஒத்துவரவில்லை என்றால் அது பெரும்பிரச்சனையை ஏற்படுத்தும்.
டூநட் பேக்கரியில் தின்ற பர்கர், சாண்ட்விட்ச்களில் கோழிக்கறி கலந்திருக்கிறது என்று குஸ்கா சொல்லித்தான் எனக்கு தெரியும். அந்தளவு மசாலா,சேர்மானங்கள் இருந்தன. அதை அவன் நான் தின்று செரித்த அடுத்தநாள் சொன்னான். நான் சொல்லவில்லை, நமது நண்பர்கள் எப்படி இருப்பார்கள் என்று. அது அப்படித்தான்.
நீலநிறச்சட்டை முழுக்க உப்பு படர்ந்துவிட்டது. தலைமுடி முழுக்க வறண்டுவிட்டது. பயணத்தில் அதிகம் நீர் குடிக்காததனால் உஷ்ணவாதம் அதிகமாகிவிட்டது. உணவையும், நீரையும் சரியாக செய்துகொண்டால் எந்தப்பயணமும் வெற்றியே.
61
வானமே கூரையான கதை சொல்லவா? - தூக்குச்சட்டிகொமாரு
நான்கு சங்கீதாக்களில் ஒரு சங்கீதாவுக்கு திருமணம் என்று கைபேசி அழைப்பு கூறியது. நத்தகாடையூர் சரஸ்வதி மகால் வரச்சொன்னார். சங்கீதா ஒரு பொதுவான பெயர் என்றபடியால் அதில் ஈடுபாடு எனக்கு இல்லை. அதிலும் கல்லூரியில் நான்கைந்து சங்கீதாக்கள் இருந்தார்கள். நிறம், முகம், உடல் என பல அடையாளங்கள் இருந்தன அவர்களை குறிப்பிட்டு பேசுவதற்கு என்றே. முடிந்தவரை தான் யார் என்று நினைவுபடுத்த முயற்சித்தார் இந்தப்பெண். எனக்கு ஞாபகம் வருவது இரண்டாவது. நம்மையெல்லாம் அழைக்கிறார்கள் பாருங்கள் போதுமே! திருமணத்திற்கு இதற்கெனவே செல்லலாம் யார் இந்த சங்கீதா என்று தெரிந்துகொள்ளவே. சாகச திரில் உள்ளதல்லவா?
பாதி வழியில் நெளியும் மண்புழு நல்லதம்பியைப் பார்த்தேன். அவன் மலர்ச்சியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்போதும் கண்ணில் நீர் தளும்பி இப்போதே விழுந்து விடுகிறேன் பார் என்று எதிரேயுள்ளவரை கவனமாக பேச வற்புறுத்தும் முகம் அவனுடையது.
அப்போது எப்போதும் மௌனவிரதம் கடைபிடிக்கும் சோனிப்பையன் சிணுங்கினான். நியூவிஷன் பத்திரிகையிலிருந்து நேர்காணலுக்கு வரச்சொல்லி ஒருவர் அழைத்தார். எங்கேயிருக்கிறீர்கள் என்று இருமுறை கேட்க, நான் திருமணத்திற்கு செல்வதை கேனத்தனமாக உளறிவைத்தேன். திருமணத்திற்குச் சென்று பார்த்தால் உள்ளூர் கடவுளின் எந்துபல் காதலி. முதல்வேலை என்ன பந்தி பாய்வதுதானே! நான் என் தாயுடன், கூடவே ஒரு அகிலநாயகனுடன் பாய்ந்தேன். ஓகே. ஒருதடவை சாப்பிடலாம். என்னை கிண்டல் செய்வதையே குறிக்கோளாக கொண்ட ராட்டைசுற்றிபாளையத்தானை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிக்கீருச்சேய் என்று குதித்தோடி வந்தான். அப்பறம், செம கைவேலயாட்ட? எளச்சிக்கிட்டே போறயே? என்றான். ரா.சு கூடவே இரண்டு இலை சோறு தின்ற அகிலநாதன், ‘’ ஆறுபடி கொண்டாறக்கு முயற்சி பண்றாப்புல’’ என்றான்.
‘’ஆமா, என்னோட போன் நம்பரு இந்தப் பாப்பாவுக்கு எப்படிடா தெரியும்?’’ என்றேன்.
‘’ நாந்தே குடுத்தேன். உன்னோட நம்பரு வேற யாருகிட்ட இருக்குது?’’ என சிரித்தான் ரா.சு. பின் ஆமா, பாப்பாவா, யாரு இந்த லேடியா? இவ செம கேடியாச்சே! இன்னும் ஆறுமாசத்துல இன்னொரு பாப்பா வந்துரும் பாரு. மாப்பள அந்தளவு வீரியவித்து ‘’ என்று சித்தமரு. சிவராஜ் பெரியப்பா போலவே பேசினான்.
ரா.சு வைவிட்டு பிரியவே மனசில்லை. நிறைய பேசவேண்டும். வெளிப்படையாக பேசுவான். நாசுக்கு பார்த்தால் அறுத்து பேச்சில் தொங்கவிட்டுவிடுவான். சென்னை கிளம்பவேண்டும்.
தாய் தந்த பணத்தை வாங்கிக்கொண்டு தாமரைப்பாளையம் கிளம்பினேன். ரயிலில் கூட்டம் நிரம்பி வழிய ரிசர்வ் பெட்டியில் ஏறவேண்டியதானது. எனக்கென்று உருவாகும் வில்லன்களை ஸ்பைடர்மேன் கூட சந்தித்திருக்கமுடியாது. சிலர் எனது மூடாத வாயினாலும், பார்வையாலும் டாமாகி என்னை ஜெர்ரியாக்கி அடித்து துவைக்கிறார்கள். அன்று ரிசர்வ் பெட்டி டீடீஆர் அசல் பெப்சி விஜயன்போல அப்போதுதான் முகத்தில் நாய் கடித்து ஆபரேசன் பண்ணினவர் போல இருந்தார். இதற்கான காரணத்தை ஆழமாக பரிசீலிக்கும்போது, மலச்சிக்கலாக இருக்கலாம் என்று சித்தமரு. அடிசில் நம்பிராஜன் கூறுகிறார்.
படிக்கட்டு அருகில் எப்போதும் கழிவறை அமர்ந்துதான் பயணிப்பது எப்போதும் அதுதான் நமது இடம். அன்று அந்த டீடீஆர் வந்தவுடன், ‘’ ஏ ஏ இங்கே எதுக்கு நிக்கற’’ என்று கேட்டவரின் கண்கள் பேய் பிடித்தவர் போல முறுக்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. முகம் மட்டும் உடலில் தனியாக பெரிதாக இருந்தது. உடல் பருமன் ஜிம் பாய்ஸ் போல எங்கெங்கோ புடைத்து வீங்கியிருந்தது.
‘’எதுவரைக்கும்?’’
‘’சென்னை வரைக்கும்’’
‘’டிக்கட்ட எடு’’
சலவாய் ஒழுகி கறிக்காக காத்திருக்கும் நாயின் முகம் நினைவில் வருவதை என்னால் தவிர்க்கமுடியாதுபோனது அப்போதுதான். எதையும் பார்க்கவில்லை. ‘’நேராக டிக்கெட்டில் 98 ரூபாய் என்று எழுதி, தமிழ் தெரியுமா என்ன எழுதியிருக்கறன் பாத்தியா’’ என்று நாய் எச்சில் ஒழுக பேசியது.
நூறு ரூபாயைக்கொடுக்க வேகமாக வாயில் கவ்வியபடி ஒரே ஓட்டம். மிச்ச இரண்டு ரூபாய் கிடைக்கவில்லை. மற்றொரு கதவினருகில் சென்று அமர்ந்துவிட்டேன். பயணம் நீண்டது. சென்ட்ரலில் கேப்டன் வாசிம்கானை பிடிக்கும் ஜம்பிங், சேசிங், பயரிங் பைட்டிங்கையெல்லாம் தாண்டி விஷயங்களை மக்கள் செய்வார்கள்.
ஒரு இருக்கைக்காக நாம் நடத்தும் சமர் இருக்கிறதே சுதந்திரத்திற்கு கூட இப்படி அர்ப்பணிப்பான தீவிரம் இல்லை. உயிரை ரோமத்திற்கு இணையாக மதித்து ரயில்பெட்டிக்குள் தாவி விழுந்துவிடவேண்டியதுதான். இதெல்லாம் நமது மரபான பயணப்பாரம்பரியம்.
ரயில் கிளம்ப இரண்டு நிமிடம் இருக்கும்போது, செகண்ட் கிளாசில் கதிரை தேடி வரும் அதி நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே அப்பா, அட்ஜஸ்ட் பண்ணுங்க, என்று தன்மனைவி குழந்தையோடு வந்து இறைஞ்சுவது, இடம் கிடைத்துவிட்டால் ஏழை வடமாநிலத்தவர்களை கடுமையாக வசை பாடுவது, சுத்தம் இல்லை என்று கூறிக்கொண்டே தீனிப்பாக்கெட்டு காகிதங்களை வீசி எறிவது என்று ரயிலில் களமாடுவதில் நமக்கு மிஞ்சி ஊரு உலகில் ஒருவன் பிறந்துவிடுவானா? அதிலும் சில பேர் எங்காவது ஊருக்கு டூர் போகிறார்களா அல்லது வீட்டையே காலிசெய்துகொண்டே போகிறார்களா என்று திகிலாக இருக்கும் அவர்கள் தூக்கி வரும் பெட்டிகள் அசாதாரணமானவை. அவற்றை தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுக்குட்படுத்தும் அளவு திணிக்கப்பட்டிருக்கும் அவர்களது பொருட்கள் பாதி பயணிகளின் உடல்மேல்தான் சுமத்தப்பட்டிருக்கும். அதிலும் ஒரு மார்வாடிப்பெண் தன் அண்டா இடுப்பில் திரும்பி இடித்தாள் பாருங்கள். முதுகுத்தண்டுவடத்தில் மின்னிய கொடி போல பரவிய ஓடிய வலியில் எனக்கு கர்த்தர், அல்லா, முருகன் த்ரீடி ஐமேக்ஸில் காட்சியளித்தார்கள்.
ஐய்யப்பன்தாங்கல் பஸ்ஸில் ஏறி வடபழனி பேருந்துநிலையத்தில் இறங்கி, பின்ஒய் பன்னாடின் வீட்டிற்கு நடந்துபோனேன். 2 கி.மீ தொலைவு இருக்கலாம். வருகிறேன். வருகிறேன். வருகிறேன் என்று கூறியவர் என் கண்ணில் அதுவரை தட்டுப்படவே இல்லை. பிறகுதான் தெரிந்தது தன் வீட்டுமுக்கு கூட தாண்டவில்லையென. செட்டிநாடு ஹோட்டலில் எக்ரைஸ் வாங்கித்தந்தார் பின்ஒய் பன்னாடு. என் தட்டை வாய்க்கு ஒருதரம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டார் அருகிலிருந்த மேசைக்காரர் ஒருவர்.
பிஎன்ஒய் பன்னாடின் முகத்தில் பீதி கிளைத்துக் கிடந்தது. என்னைத் தங்க வைப்பது குறித்துத்தான் என்று புரிந்துகொண்டேன். காலையில் நேர்காணல் என்று கூறினேன். இடம் பற்றிக்கேட்க நான் போய்விடுவேன் என்றேன். ‘’எத்திராஜ் கல்யாண மண்டபம் பக்கத்தில்’’ என்றார் பிஎன்ஒய் பன்னாடு
முகமது என்ற நண்பரை அழைக்க, அவர் வரவேயில்லை. எனவே நித்தியானந்தம் என்ற அல்டாப் மன்னன் ஒருவரின் அறையில் தங்கவைக்கப்பட்டேன். அவர் கண்ணாடியை தூங்கும் போது கூட அணிந்து நான்சி பிரைடே கனவுகளை பார்ப்பவர் போல தோன்றியது.
அறையில் நுழைந்ததிலிருந்து, பத்து மணி வரை ஃப்ரீயாக இருங்க பாஸ், ஃப்ரீயா இருங்க பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு அவர் சொல்லுவது ஒன்றும் புரியவில்லை. ஒரு அறை அதோடு இணைந்த பாத்ரூம்,கழிவறை அவ்வளவுதான். ஒருவர் புழங்குவதற்கு மிக ஏற்றது.
மேன்ஷன் என்பதை அப்போதுதான் பார்க்கிறேன். முழுக்க பயமுறுத்தல்களினால்தான் மேன்ஷன் நடத்தப்படுகிறது போல. வெளி நபர்களுக்குத்தடா, யாரையும் நம்பாதீர்கள், சொந்தப்பூட்டு அறைக்குப்போட்டுக்கொள்ளுங்கள் என்பது சிறிய உதாரணங்கள். ஜெயமோகனின் எழுத்துக்கள் போல இவை மிக நீண்டவை. இது ஏதோ போபியாவினால் வரும் பிரச்சனை என்று நினைக்கிறேன்.
நித்தியானந்தம் உறங்கிப்போனபின், சர்வ ஆனந்தமாக உறங்கிப்போனேன். எழுந்தபோது, பின்ஒய் பன்னாடு ‘’சீக்கரமாக கீழ வா’’ என்றழைத்தார். முகம் கழுவி கிளம்புவதற்குள் இரு அழைப்புகள். பின்ஒய்தான். கீழே போனதும் தேநீர்கடை மாரத்தான் கொடி காட்டாமல் தொடங்கியது. அரைக்கிலோமீட்டருக்கும் மேலே போனது.
‘’சிம்ஹா,கருணா, கார்த்திக் சுப்புராஜ் எல்லாமே இங்கதா நின்னு டீக்குடிச்சாங்க’’ என்று பெருமையாக கூறினார் பின்ஒய்.
சிறிது, நேரத்தில் அவரது வீடு இருந்த தெருவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தோம்.
‘’ஏதாவது புதுசா எழுதினியா?’’
‘’இல்ல கொழந்தைய பாத்துக்கறக்கே நேரஞ்செரியா இருக்குது என்ன பண்றது?’’ என்றார் பிஎன்ஒய்.
‘’நீ எதுக்கு ஆண்டன் செகாவுக்கு லெட்டரெல்லாம் எழுதறே? அந்தாளு பொலம்பு பொலம்புன்னு பொலம்பறாப்பல அப்பிடி என்னதாண்டா எழுதுனே?’’
‘’அவரு வேணா நா எழுதறதே கண்ட உதவி இயக்குநர்கிட்ட காட்டலாம். ஆனா நா அப்பிடியில்ல, இது தனிப்பட்டது. அதுபத்தி என்கிட்ட கேட்காத’’
‘’நா பண்ணுனதவிட ஒவ்வொருத்தனும் அவன்னோட ப்ரெண்டுக்கு என்னென்ன பண்றானுக தெரியுமா?’’ என்று நான் பேச,
உடனே சுதாரித்த பிஎன்ஒய், ‘’யாரு, ப்ரெண்டு என்னோட ப்ரெண்ஸ் எல்லோருமே எங்கூடத்தான இருக்காங்க?’’
நிச்சயம் கேட்டிருக்க ஒரு உந்துதல் எனக்கு ஏற்பட்டது எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று.
பிஎன்ஒய்யை பொறுத்தவரை பிரச்சனையைப் பார்த்துவிட்டால் ஒரே ஓட்டம்தான். நின்று பார்ப்பதெல்லாம் கிடையாது.
‘’செரி, தம்பிய நா பாத்துக்கிட்டாத்தே அவ சமைக்க முடியும். வரட்டுமா?’’ என்று கைபேசியை உற்றுப்பார்த்தவாறு கிளம்பினார்.
அறைக்குப்போனால் கதவு தாளிடப்பட்டிருந்தது. வெளியே வந்து நின்றபோது, நித்தியானந்தம் பளிச்சிடும் கண்ணாடியோடு வந்திறங்கினார். புட்டத்தை பார் டான்ஸர் போல ஆட்டியபடி மிக நாசுக்காக வந்து படியில் ஏறினார். நான் பின்தொடர்ந்தான்.
‘’தம்பி, முகமது எப்ப வருவான்னு உங்கண்ணன் சொன்னாரா? நாளைக்கு காலையில ரூமுக்கு ஒருத்தர் வந்துருவாரு, அதுக்குள்ள நீ கெளம்பற மாரி பாத்துக்க, ஏன்னா ஓனரு ஒரு டைப்பான ஆளு. வள்ளுன்னு வுழுவான் ‘’ சிறிது இடைவெளி விட்டு, ‘தப்பா நெனச்சுக்காத நெலம அப்படி’ என்றார் நித்தி.
என் நிலைமையும் எதையும் ஏற்க மறுக்க என்று எந்த வாய்ப்புமில்லாது இருந்தது. பிஎன்ஒய்க்கு அழைத்து இதைச்சொன்னதும், அறைக்கு வந்தார். நான்கு நாட்கள் மலம் கழிக்காதவன் போல இருந்தது அவர் முகம்.
முகமதுக்கு அழைத்தார். பன்டிவி போகனுக்கு அழைத்தார். இன்ன பிற முயற்சிகளையும் செய்தார். வெகு பதட்டமாக ஏதோ என்னிடம் சொல்ல முயற்சித்தார். மிஷன் இம்பாஸிபிள் ஆகியபோது சாலையில் ஒரத்தில் இருந்த மூடிய கடை அருகே உட்கார்ந்திருந்தேன்.
பெரும் தோல்வியோடு , அவரது மனைவியின் அனுமதி பெற்று வீட்டு மொட்டை மாடியில் அமரவைத்துவிட்டு கிளம்பிவிட்டார். போர்வைகளை கொண்டு வந்து தந்தார். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு தூங்கினேன். இரவு ஒரு மணி இருக்கும். மழைக்காற்று வேகமாக அடித்து கனமான துளிகள் தன் எடையினை பூமிக்கு தந்த இரவது. துணிகள், பேக் எடுத்துக்கொண்டு படிக்கட்டுகளுக்கிடையில் இடைவெளியில் உட்கார்ந்துகொண்டேன். பிஎன்ஒய் ‘’ உள்ளவந்துபடு. அவதா என்ன எழுப்பிவுட்டு அனுப்பி வெச்சா’’ என்றார். ‘’ரொம்ப சந்தோஷம் நீ அப்படியே போய் படு. நா அப்படியே தூங்கிட்டு காலயில கெளம்பீர்றன்’’ என்று கூறிவிட, அவர் கிளம்பிவிட்டார். மழை நீர் அப்படியே பெருகி வந்து என்போர்வையை நனைத்தது. மின்னல் இடி சமயங்களில் உடல் என்னை மீறி அதிர்ந்தடங்கியது. சிறிது நேரம்தான். எழுந்து மணி பார்த்தால் 5 மணி. பிஎன்ஒய்க்கு அழைப்பு ஒன்றை கொடுத்துவிட்டு போர்வைகளை மடித்துவைத்துவிட்டு, சீப்பு எடுத்து தலையை சீவிவிட்டுகொண்டு கிளம்பினேன். கேட்டிலிருந்து வெளியே சென்றபோது, பிஎன்ஒய் வேகமாக கதவைத்திறந்து திருதிருவென முழித்தபடி வெளியே வந்தார்.
மழைநீர் ஆங்காங்கே வட்டுவட்டாய் தேங்கியிருந்தது. பின் மெதுவாக தேநீர் அருந்தியபின் 12ஜி பேருந்தைப்பிடிக்க நிறுத்தம் தேடி நடந்தேன். தேங்கிநின்ற மழைநீரிடம் இருந்து அதிக நேரம் தப்பிக்க முடியவில்லை. அடைந்துகிடந்த மழைநீரில் கால்கள் கணுக்காலைத்தாண்டியும் நனைந்துவிட்டன. நிறுத்தத்தில் பொறியியல் மாணவர்கள் பலரும் நின்றிருந்தனர். ஒருவரிடம் பஸ் நிற்குமிடத்தைக் கேட்க, 12 ஜியினைப்பிடித்து, ஆழ்வார்பேட்டை இறங்கினேன். எத்திராஜ் திருமண மண்டபத்தைக் கண்டறிந்து ஆட்டோ ஒட்டுநர்களிடம் விசாரித்து நியூ விஷன் பத்திரிகை அலுவலகத்தை அடைந்தபோது, எதையாவது எடுத்துட்டுபோய்டுவானோ என்று திகிலில் மிரட்சியோடு துண்டுதுண்டாக பேசினார் வாயில் காவலர் ஒருவர். பின் ஆயில்ய அகோரி பேசினார். இவரிடம் எதுபேசினாலும், இமயமலையோகி போல பேசுவார். முதிர்ச்சியான எல்லை ஒன்றில் தத்துவ விசாரம், வேத விசாரம் பேசலாமா என்று யோசிப்பவர். இவர் பற்றி தனியாக கட்டுரை ஒன்று எழுதக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரு சிறிய கடை ஒன்றில் நாலு இட்லியும், ஒரு வடையும் சாப்பிட்டேன். எட்டுபேர் நுழைந்தால் அந்தக்கடையில் யாரும் உள்ளே நுழைய முடியாது. அப்படி குகைபோல இருந்தது. சாம்கோ ஹோட்டல் அருகே இருந்த பயணிகள் நிழற்குடை அருகே அமர்ந்துகொண்டேன். வானம் பார்த்தேன். மேகங்கள் விலகுவதும் கூடுவதுமாக இருந்த பொழுதது. அப்போது காலைக்கான பரபரப்பு கூடவில்லை. மணி ஏழாகியிருந்தது. எனக்கு அப்போது சிரிப்பு பெருகி வழிந்தது. ஒரு இளம்பெண் வந்து நின்றபிறகுதான் அந்த நிறுத்தமே ஒளி பெற்றது. வண்டி ஓட்டுகிற ஒருவர் விடாமல் கடைக்கண்ணினால் கூட பார்த்துவிட்டுத்தான் சென்றார்கள். அவள் இடுப்பு வரை முழுக்க பின்னியிராத கூந்தல் காற்றில் பறந்தது. அவளைப்பார்க்காமல் ஒரு பார்வை கூட இல்லை என்பேன். பிறகு என்னருகில் வந்து நின்றுவிட்டு, முகம் சுளித்தபடி கீழேயே இறங்கிப்போனாள். ஒரு சட்டையும், பேண்ட்டும் மஞ்சள் நிறத்தோடு கீழே கிடந்தது. ஈக்கள் பெருகி மொய்த்தபடி இருந்தன. நிறுத்தத்தின் பின்புறம் குப்பைக்கிடங்கு இருந்தது. பள்ளி செல்கின்ற குழந்தைகளைப்பார்த்தவாறு இருந்தேன். கடுமையான மல நாற்றம் வர, நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே மலம் சிதறி கிடந்தது. பத்துமணிக்கு வேழன் சுப்பிரமணிக்கு அழைத்தேன். ‘’ஐயோ கடவுளே நான் 12 மணிக்கு மேலேதான் வருவேன். நீங்க 2 மணிக்கு மேல வாங்களேன் ப்ளீஸ்’’ என்றார்.
எனக்கு கடுமையான இயலாமை கோபம். ‘’ ஐயா,நா இங்க உக்காறதுக்கு கூட இடமில்ல கொஞ்சம் முன்னாடியே ஏதாவது வர முடியாதா? என்றேன். மீண்டும் ‘ஐயோ கடவுளே’ அழைப்பைத் துண்டித்து விட்டேன். நாகேஸ்வரராவ் பார்க் கிளம்ப திட்டமிருந்தது. பிஎன்ஒய் தந்த நூறு ரூபாய் மானியத்தில் ஒரு படம்ஒன்று வாங்கிக்கொண்டு ஊருக்குப்போக டிக்கெட் எடுக்க லஸ் கார்னர் கிளம்பினேன். பிறகு பார்க் வந்தால் பாதிப்பேரின் வீடே இதுதான் என்று தெரிந்தது. பலபேர் இருந்தார்கள். எனக்கோ மலம் கழிக்க அவசரமாக இருந்தது. பிஎன்ஒய் அனைத்திற்கும் இயங்கும் ஒரு எந்திரம் போல. அவரிடம் என்ன சொல்வது?
பார்க்கில் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டு வந்த ஒருவரை ‘’அண்ணா, இங்க பாத்ரூம் எங்க இருக்குது?’’ என்று கேட்க, ‘’நேரா போயி ரைட் எடுப்பா ’’ என்று கூறியபடி, குச்சியை சுழற்றியபடி சென்றார்.
வயிற்றில் ஏதோ மூன்றாம் உலகப்போருக்கான காலாட்படை உதைந்து கொடுத்து போவது போல தோன்றியது. வயிற்றைப்பிடித்துக்கொண்டு கழிவறையைத்தேடி சென்றால் எனக்கு முன்னமே ஒருத்தர் துண்டுபோட்டு நின்றிருந்தார். ‘’பாருய்யா,உள்ள போனான் இன்னும் காணாம், ஆராய்ச்சி ஏதோ பண்றார் போல’’ என்று பேசினார் அந்த ஆசாமி.
தண்ணீருக்கான அலைச்சலில் 1880 ல் யாரோ ஒரு பிரபுவுக்காக செய்த அடிபம்பு ஒன்றில்தான் தண்ணீர் அடித்து குடிக்க வேண்டுமாம். இரண்டுமுறை அழுத்தியபின் மூன்றாவது தடவை அழுத்தும்போது தண்ணீர் வரவில்லை கைபிடி வந்துவிட்டது. அதுவாச்சும் வந்துதே என்று எனக்கு ஒரு சந்தோஷம். குடிபோதை குஷியால் ஒருவர் அதற்கு தேற்றம்,நிரூபணம் எல்லாம் தந்தார்.
வேழன்சுப்பை சந்தித்தபோது, அவர் இடது சாரி மார்க்சியர் என்று தெரிந்துகொண்டேன். அவரின் வார்த்தைகள் அவ்வளவு நம்பிக்கை தரவில்லை. நல்ல ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்தார். பணம் வேணுமா ? என்று கேட்டார். சட்டைக்கு பாரமிருந்தா கொடுங்களேன் என்று கேட்டிருப்பேன். இருந்தாலும் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவருடைய கருத்துக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சாதி பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு என்னை அழைத்திருக்கிறார் எப்படி எனது வீடு மயிலாப்பூரில் இருப்பதாக குறிப்பிட்டி இருந்ததால். பின் சில பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்து, சென்ட்ரலுக்கு பஸ் பிடித்தேன். அங்கு ஒரு பெண்ணை சிநேகித்தேன். ரொம்ப ஆசைப்படக்கூடாது. அவருக்கு என் அம்மா வயது. சொந்த ஊர் கோவை. ஆனால் இப்போது வியாபாரம் செய்வது குஜராத்தில். போடிபற்றி பெருமிதமாகப்பேசினார். ஆனால் மின்சாரம் எப்போதும் கிடைக்கிறது என்றார் கூடவே கட்டணம் இங்கே இருப்பதை விட அதிகம்தான் என்று ஒத்துக்கொண்டார். ரயில் வந்தவுடன் ஏறி இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிரில் நான்கு இளம்பெண்கள் எனலாமா பள்ளிச்சிறுமிகள் என்று கூறலாமா வந்து அமர்ந்தார்கள். இரவு வெகுநேரம் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டுமே வந்தார்கள். வானமே கூரையாகக் கொண்ட பலர் சென்னையில் இருப்பதை அறிய வைத்தது இந்த பயணம்தான். யாரும் வாழ்க்கை முழுவதும் யாருக்கும் ஒத்தாசை செய்யமுடியாது என்று புரிந்துக்கொள்ள உதவியது இப்பயணம். மனிதர்களிடம் நிறைய பழகவேண்டும். இது தன்னியல்பாக பயணத்தில் உருவாகும். நிர்பந்தத்தில் நமது மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாமே அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். ‘வாழ்க்கை அழகானது என்று சொல்லமுடியவில்லை. தன் போக்கில் இயல்பானது’ என்று ஆர்.எம்மின் வார்த்தைகளில் கூறலாம். வீடு, நிழல், பாதுகாப்பு குறித்தெல்லாம் நாம் இவை ஏதும் சரிவர அமையாத பாதுக்காப்பே இல்லாத ஆபத்தான தருணத்தில் காத்திரமாக உணர்கிறோம். இது மன உளைச்சலை இன்னும் அதிகமாக்குகிறது. எத்தனை மனிதர்கள் உறங்குகிறார்கள் பூங்காக்களில். அமர சாலை ஓரங்களில் இருக்கைகளும், கழிவறைகளும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இந்த தேசத்தில் கோயில்கள் மட்டும்தான் அவசியப்படாத இடங்களிலும் ஆக்கிரமித்து எழுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக