சிந்துவெளித் தமிழர்
வரலாறு
Back
சிந்துவெளித் தமிழர்
ந.சி. கந்தையா
சிந்துவெளித் தமிழர்
1. சிந்துவெளித் தமிழர்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. சிந்துவெளித் தமிழர்
நூற்குறிப்பு
நூற்பெயர் : சிந்துவெளித் தமிழர்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
சிந்துவெளித் தமிழர்
முன்னுரை
இவ் வுலகில் மூன்று நாகரிக அலைகள் தோன்றிப் பரவின என்றும், அவைகளுள் முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும், பேராசிரியர் பிறாங் போட் என்னும் சிறந்த ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் ஆரியர் இந்திய நாட்டை அடைவதற்குப பல ஆயிரம் ஆண்டுகளின் முன் தோன்றி வளர்ச்சி யடைந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும், அத் திராவிட மக்களின் நாகரிகத்தை அடிப்படை யாகக் கொண்டதுவே ஆரிய நாகரிகம் என்பதும், மேல்நாட்டறிஞர் ஆராய்ந்து கண்டு வெளியிட்ட உண்மைகளாகும். இவ் வுண்மைகளை ஆரியப் பற்றுடைய இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள இணங்காதவர்க ளாய், உண்மைக்கு மாறுபட்ட கருத்துகளை இடையிடையே வெளி யிட்டு வருகின்றனர். அன்னோர் ஆராய்ச்சிகள் பொருளில் கூற்றுகளே யாமெனக் காட்டுதற்கும், சிந்துவெளி மக்கள் தமிழரே என்பதை நாட்டுதற்கும், சிந்துவெளி மக்களின் நேர் தொடர்புள்ளதே திராவிட நாகரிகம் என்பதை விளக்குதற்கும், இச் சிறிய நூல் வெளிவருகின்ற தென்க. வடநாட்டவர்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் இன்று ஆரிய திராவிடப் போராட்டம் நடக்கவில்லை; இந்திய சனத்தொகை யில் நூற்றுக்கு நான்கு வீதமுடைய தென்னாட்டின் ஒரு கூட்டத்தாருக் கும் ஏனைய மக்களுக்கு மிடையேதான் இப் போராட்டம் காணப்படு கின்றது. இதற்குக் காரணம் அவர்கள் தாம் ஆரியரென்று கூறிக்கொள்வ தோடு, தாம் மற்றைய மக்களினும் பார்க்கச் சிறந்தவர்களாவதற்குப் பிறப்புரிமை பெற்றவர்கள் எனச் சாதிக்கின்றமையாகும். வரலாற்று முகத்தான் அவர்கள் தன்மதிப்புள்ள திராவிட மக்களால் எவ்வகை மதிப்பும் பெறுதற்குரியவர்களாகார்.
சிந்துவெளி மக்கள் எங்கிருந்து அவ் விடத்தை (சிந்துவெளியை) அடைந்தார்கள் என்னும் ஆராய்ச்சி ஆவல் விளைவிப்பதாயிருக்கின்றது. மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிந்துவெளிப் புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன் ஹெரன், ஹக்ஸ்லி போன்ற ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியுள்ள தாகும். மத்திய தரை நாடுகளிலிருந்தே மக்கள் இந்திய நாட்டில் வந்து குடியேறினார்கள் என்றும் அவர்களின் ஒரு பிரிவினரே திராவிடர் என்றும், திராவிடரும் சுமேரியரும் மிக நெருங்கிய உறவுடையவர்க ளென்றும் ஆராய்ச்சியாளர் சில காலம் கருதுவாராயினர். இன்று இந்திய மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என ஆராய்ச்சியாளர் சாதிக்கின்றனர். திராவிடரின் நாகரிகம் வடக்கினின் றும் தெற்கே பரவியதன்று. தெற்கினின்றே வடக்கு நோக்கிப் பரவியதென மக்லீன், பர்கூசன், ரெகோசின் முதலிய பல ஆராய்ச்சியாளர் நவின்றுள் ளார்கள். சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளிற் காணப்பட்ட எழுத்து களை ஒத்தவை தென்னிந்தியா, இலங்கை முதலிய இடங்களிற் காணப் பட்டன. இவைகளைக் கொண்டும் சிந்து வெளி நாகரிகம் தெற்கினின்று வடக்கே சென்றதென நாம் நன்கு துணிதல் சாலும். ஆகவே ஆதி நாகரிகம் தெற்கினின்றும் வடக்கு நோக்கிச் சென்று சிந்துவெளியை அடைந்து, அங்குநின்றும் பாரசீகத்துக் கூடாக மேற்கு ஆசியாவை அடைந்து, எகிப்தைச் சேர்ந்தது எனக் கூறலாம். இந் நாடுகளின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வகையின. இந் நாடுகளின் நாகரிகங்களைப்பற்றிய வரலாற்றை இனி வெளிவரும் நமது நாகரிகம் என்னும் நமது நூலிற் காண்க.
சென்னை
1-5-47
ந.சி.கந்தையா
சிந்துவெளித் தமிழர்
தோற்றுவாய்
மக்கள் இவ்வுலகில் பத்து அல்லது இருபது இலட்சம் ஆண்டு களுக்கு முன் தோன்றி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மிகப் பழைய வரலாறுகள் அவர்களின் மண்டை ஓடுகள், என்புகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் முதலியவைகளைக் கொண்டு அறியப்படு கின்றன; அவை ஏட்டில் எழுதி வைக்கப்படாதவை. மக்கள் உயர்நிலை எய்தி நாகரிகம் பெற்ற காலம் எது என உறுதியாகக் கூறமுடியாது. இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளின் முன், மக்கள் நாடு நகரங்களை யும், மாட மாளிகைகளையும் அமைத்துச் செவ்விய ஆட்சி முறையையும் வகுத்து வாழ்ந்தார்கள் என்று அறிதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. இன்றைய மக்களின் நாகரிகம் என்பது பழைய மக்களின் நாகரிக வளர்ச்சியே. சில இயற்கை செயற்கைக் காரணங்களால் இன்றைய நாகரிகத்துக்கும் பழைய நாகரிகத்துக்கும் சிற்சில வேறுபாடுகள் காணப் படுகின்றன.
பழைய நாகரிகத்துக்குரிய சான்றுகள் எகிப்திலும், ஐபிராத்து, யூபிரதீசு, தைகிரசு ஆறுகளை அடுத்த நாடுகளிலும் காணப்படுகின்றன. ஆகவே எகிப்து அல்லது தைகிரஸ் ஆற்றோரங்களே மக்களின் நாகரித் துக்குப் பிறப்பிட மென்று நீண்ட நாள் கருதப்படலாயிற்று. மக்கள் இன ஆராய்ச்சியாளர் பல அடிப்படையான காரணங்களைக் கொண்டு இந்தியா தொடக்கம் மேற்கு ஆசியா எகிப்து வரையில் ஒரு இன மக்களே வாழ்ந்தார்கள் எனக் கருதினார்கள். எகிப்தியர், சுமேரியர், திராவிடர் என்போர் ஒரே முன்னோரினின்றும் தோன்றிப் பிரிந்தவர்கள் என்னும் கருத்து மேற்றிசை அறிஞர் பலரால் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹால் என்பார் அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிவருவதன் முன் எழுதியிருப்பது வருமாறு.
1“சுமேரிய மக்களின் நாகரிகம் எல்லாவகையாலும் நிறைவடைந் தது போலத் திடீரென நமக்குத் தோன்றுகின்றது; ஆனால் அது வெளி நாடுகளிலிருந்து மெசபெதோமியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இது சில அயற் சான்றுகளால் நமக்கு நன்கு வெளிச்சமாகின்றது. அவர்களின் நாகரிகம் வளர்ச்சி பெற்றது பாபிலோன் நாட்டிலன்று; அவ் வளர்ச்சி பாரசீக மலைகளுக்குக் கிழக்கேயுள்ள வேறொரு நாட்டில் உண்டா யிருக்கலாம். சுமேரியரின் உடற்கூறு அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மற்றைய சாதியாரின் உடற்கூற்றுக்கு வேறுபட்டிருந்தது. இது அவர் களின் உருவச் சிலைகளைக் கொண்டு அறிய வருகின்றது. அவர்களின் மொழி, செமித்தியர், ஆரியர் என்போரின் மொழிகளுக்கு வேறுபட்டது. அவர்களின் உடற்றோற்றம் திராவிட மொழிகளைப் பேசிக்கொண்டு தக்கணத்தில் வாழும் இந்தியன் ஒருவனின் தோற்றத்தை ஒத்தது; மொழி அமைப்பு இந்திய மொழிகளைப் போன்றது.
இன்றைய இந்தியன் ஒருவனுடைய முக அமைப்புப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன் முன்னோருடைய முக அமைப்பை ஒத்துள்ளது. இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. தரை வழியாக அல்லது கடல் வழியாக இந்தியாவிலிருந்து பாரசீகத்தின் வழியாக யூபிரதீசு, தைகிரசு ஆறுகள் பாய்கின்ற நாட்டிற் சென்று குடியேறிய மக்கள் சுமேரியர் என்று துணிந்து கூறலாம். அவர்களின் நாகரிகம் வளர்ச்சி எய்திய இடம் இந்தியாவே. அவ்விடம் சிந்து ஆற்றை அடுத்த இடங்கள் ஆகலாம்; அவர்கள் எழுத்துகள் இங்குப் படவடிவில் தொடங்கி வளர்ச்சி எய்திய பின்பு, சிறிய சுருக்கெழுத்துகளாக மாறியிருக்க வேண் டும். இவ் வெழுத்துகள் பாபிலோன் நாட்டுக்குக் கொண்டு போகப்பட் டன; அங்கு அவை களிமண் தட்டுகளில் சதுர வடிவுள்ள எழுதுகோ லால் எழுதப்பட்டமையால் கூரிய முனையின் வடிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆதியில் மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சியடைந்த நாடு களில் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. சுமேரியர் இந்திய மக்களை ஒத்திருந்தார்கள் என்பதை நாம் கருத்திற் கொள்ளும்போது, கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்கு நாகரிகத்தைக் கொண்டு சென்ற செமித்தியரும் ஆரியரும் அல்லாத சாதியார், இந்தியர் என்று கூறுதல் இயல்பேயாகும்.’’
அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி சம்பந்த மான கருத்துகளை நன்கு ஆய்வு செய்த ஜி.ஆர். ஹண்டர், சர். ஜான் மார்சல், ஆர்.தி. பானர்ஜி, ஹெரஸ் பாதிரியார் போன்ற மேல்நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் முடிவுகள் டாக்டர். ஹால் கூறியவை களை வலியுறுத்துகின்றன.
இவை போன்ற ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசியா, எகிப்து பாரசீகம் இந்தியா இந்துமாக்கடல் பசிபிக் கடல்களில் உள்ள தீவுக்கூட் டங்கள் அடங்கிய ஒரு பெரிய வட்டத்தில், ஒரே மொழியும் ஒரேவகை நாகரிகமும் நிலவின என்பன போன்ற உண்மைகள் வெளியாகின்றன.1 இந் நிலைமை யுண்டாயிருந்த காலத்தில் ஆரிய மக்கள் இந்திய நாட்டை அடையவில்லை.
இந்திய நாட்டில், ஆரியர் வருகைக்கு முன் பழைய நாகரிகம் ஒன்று இருந்ததென்பது வேத பாடல்களாலும் பிற அயற் சான்றுகளா லும் மொழி ஆராய்ச்சியினாலும் அறியப்பட்டிருந்ததே யன்றி, அதனைக் கண்கூடாக விளக்கும் பழைய சான்றுகள் எவையும் காணப்படவில்லை. மனிதன் தோன்றி நிலத்தில் அடி எடுத்து வைக்கத் தொடங்கிய காலம் முதல், மக்கள் இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும், அவர்கள் அங்குப் படிப்படியே நாகரிகம் அடைந்து வந்ததற்குரிய சான்றுகள், அவர்கள் செய்து பயன்படுத்திய ஆயுதங்களாலும் பிறவற்றா லும் அறியப்படுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவாராயினர்.
இந்திய நாட்டில் பல மொழிகள் வழங்குகின்றன. அவை திராவி டம், முண்டா, ஆரியம் எனப் பிரிக்கப்படுகின்றன; வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தன வெனவும், தென்னாட்டில் வழங் கும் மொழிகள் திராவிட மொழிகள் எனவும் படுகின்றன. திராவிட மொழி களில் பல ஆரியச் சொற்கள் காணப்படுகின்றன. திராவிட மக்களின் சமய நூல்கள் எனப்பட்டன சில வடமொழியிற் காணப்படுகின்றன. சமய மொழி சமக்கிருத மாயுமிருக்கின்றது. இவை போன்ற சிலவற்றை நோக்கித் திராவிட மொழிகள் ஆரிய மொழியிலிருந்து தோன்றின; ஆரியர் வருமுன் இந்தியாவில் காட்டு மக்கள் போன்ற நாகரிகமற்றோர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை ஆரியர் வென்று தெற்கே துரத்தினார்கள். அவர்களை ஆரியப் பிராமணர் சிறிதுசிறிதாக நாகரிகப் படுத்தினர்; என்பன போன்ற கருத்துகளே இந்திய மக்களின் பழைய புதிய வரலாற்றாசிரியர்களிடம் நீண்ட காலம் இருந்து வந்தது. இக் கருத் துகள் தவறுடையன என்பதை உணர்ந்த பற்பல திராவிட அறிஞர் அவை களை அடிக்கடி கண்டித்து வந்தனர். ஆயினும் அவர்கள் பேச்சு வலியுற வில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் ஆயிற்று. மேல் நாட்டறிஞர் நீண்ட காலம் ஆரியருடைய நாகரிகம் திராவிடருடையதே, வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தும், அப் பாடல்களை வேதங்களாக வகுத்தும், நீதிநூல்களைச் செய்தும், அவர்கள் மொழிக்கு இலக்கண மமைத்தும் ஆரியரையும் ஆரிய மொழியையும் செம்மையுறச் செய்த வர்கள் திராவிடர்களே என எழுதி வருவாராயினர். அவை போன்றவை, ஆங்கிலத்தி லெழுதப்படுவதாலும், மேல் நாடுகளில் வெளிவரும் பெரு நூல்களில் அடங்கியுள்ளமையாலும் அவைகளைத் தமிழ் மக்கள் படித்து உண்மை காண்டல் அரிதாயிற்று.
ஆரியர் மேலானவர்கள், ஆரியம் மேலானது என வரலாறு எழுதப்படுவதால் ஒரு கூட்டத்தினருக்கு ஒரு வாய்ப்பு உண்டாயிருந்தது. அவர்கள் ஆரிய மொழி கடவுள் மொழி; அம் மொழியைப் பயிலும் தாமே திராவிடருக்குக் குருமாராக இருக்கத் தகுந்தவர் எனத் தம் கூற்றுகளை நம்பும்படி மக்களைச் செய்து சமூகங்களில் முதல் இடத்தை அடைந்தனர்.1 அதனால் அவர்கள் மெய்வருத்தமின்றி நல்வாழ்வு நடத்தும் முறையுண்டாயிருந்தது. இவர்களே ஆங்கிலங் கற்று அரசியல் துறைகளிலும், பத்திரிகைத் துறைகளிலும் நிரம்பியுள்ளார்கள். இக் கூட்டத்தினர் சிலரே பெரும்பாலும் இந்திய நாட்டுச் சரித்திரங்களையும் எழுதுவாராயினர். அவர்கள் எழுதியவற்றுள் தமிழருக்குப் பெருமை அளிக்கும் பகுதிகள் விடப்பட்டுள்ளன. ஆரியரிலும் பார்க்கத் தமிழரே சிறந்தவர்; தமிழ், ஆரியத்தினும் முந்தியது; சிறந்தது என்னும் கருத்துகள் வலிபெற்றால், பொய்க் காரணங்களால் உயர்நிலை அடைந்து நல்வாழ்வு பெற்றுவரும் கூட்டத்தினரின் வாழ்வுக்கு இழுக்காகு மன்றோ! இக் கருத்துப் பற்றியே அக் கூட்டத்தினர் எழுதும் ஆராய்ச்சி நூல்களில், தமிழரின் உயர்வுகள் தோன்றவேண்டிய பகுதிகள் வெளிவருவதில்லை யாகும். தென்னிந்திய மக்களின் உண்மை வரலாறுகள் வெளிவரவில்லை எனப் பலர் கூறுவதற்குக் காரணம் இதுவே.
1922-க்கும் 1927-க்கு மிடையில், சிந்து மாகாணத்திலே சிந்து நதிக்கு அண்மையில் காணப்பட்ட மொகஞ்சதரோ என்னும் இடிபாட்டுத் திடரும், சிந்து நதியின் கிளைகளில் ஒன்றாகிய இரவி ஆற்றின் பக்கத்தே யுள்ள அரப்பா என்னும் இடிபாட்டுத் திடரும் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரால் அகழப்பட்டன. அவ் விரண்டு மேடுகளும் ஆரியர் வருகைக்கு நெடுங் காலத்தின் முன், இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் பழைய நகரங்களாகக் காணப்பட்டன. அவ் வாராய்ச்சியை நடத்திய சர். ஜான் மார்சல் என்பார் அரப்பா மொகஞ்சதரோ நகரங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள், கட்டடங்கள் முதலியவைகளைக் கொண்டு அந் நகரங்களையும், அந் நகரங்களில் வாழ்ந்த மக்களையும் பற்றி மூன்று பகுதிகள் அடங்கிய பெரிய நூல் ஒன்றை 1931இல் வெளி யிட்டார். அதில் அவர் அந் நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் சுமேரிய பாபிலோனிய மக்களுக்குமிடையில் வாணிகப் போக்குவரத்து இருந்த தென்றும், அந் நாடுகளில் வழங்கிய எழுத்துகளுக்கும் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளுக்கும் ஒற்றுமை உண்டு என்றும், அந் நகரங்களில் வாழ்ந்தோர் திராவிட மக்களாயிருத்தல் கூடுமென்றும், அவர்கள் மத்திய தரைச் சாதியினரே என்றும், அந் நகரங்களின் நாகரிகம் ஆரியருடையது அன்று என்றும் கூறியுள்ளார்.
இவ் வாராய்ச்சி உலகமக்களிடையே பெரிய விழிப்பை உண்டாக் கிற்று. உலக மக்களுக்கு நாகரிகத்தை உதவியவர்கள், இந்திய மக்களாதல் கூடும் எனப் பல மேல் நாட்டாசிரியர்கள் கருதினார்கள். ஜி.ஆர். ஹண்டர் என்னும் பேராசிரியர் அப் பழைய நகரங்களின் நாகரிகம், திராவிட மக்களுடையதாகும் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள் ளார். பேராசிரியர் லாங்டன், பிராமி எழுத்துகள் மொகஞ்சதரோ எழுத்துகளின் திரிபுகள் என்று கண்டுபிடித்தார். ஹெரஸ் பாதிரியார், மொகஞ்சதரோப் முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகள் தமிழ் எழுத்துகளின் ஆதி எழுத்துகள் என்பதை, அவைகளை ஒலி முறையாக வாசித்துக் காட்டினார். அத்தோடு சிந்துவெளி மக்கள் திராவிடரே என்று கூறுவதற்கு ஏற்ற பல காரணங்களையும் வெளியிட்டார்.
இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, செர்மனி, பிரான்ஸ் முதலிய மேல் நாட்டினர் எல்லோரும் சிந்துவெளி நாகரிகம் திராவிடருடையது என்று நன்கு அறிவர். அவ்வாறே அவர்கள் தமது நூல்களில் எழுதி வருகின்றனர். இந்திய நாட்டினருக்குப் பெரும்பாலும் சிந்துவெளி நாகரித்தைப் பற்றித் தெரியாது. பல்கலைக்கழகங்கள் மூலம்தான் இவ் வகை ஆராய்ச்சிகள் வெளிவர வேண்டுமென்று எதிர்பார்த்தலாகாது. அவர்கள் இவ் வாராய்ச்சியில் இறங்காமைக்குச் சில அடிப்படையான காரணங்களுண்டு.
ஆரியர்தான் உலகத்தில் மேலானவர்கள். அவர்களே உலகுக்கு நாகரிகத்தைக் கொடுத்தவர்கள் என்று இதுவரையும் நம்பிவந்த ஒரு கூட்டத்தினருக்கு அரப்பா மொகஞ்சதரோப் புதை பொருளாராய்ச்சி தலையடியாயிருக்கின்றது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆயினும் அவருட் சிலர் மொகஞ்சதரோவில் ஆரிய ருடைய நாகரிகத்துக்கு அடையாளங்கள் காணப்படுகின்றன. வேதங் களில் அப்படிக் கூறப்பட்டுள்ளது, இப்படிக் கூறப்பட்டுள்ளது எனச் சில பல கூறுவாராயினர். அவர்களின் நோக்கத்தை மேற்றிசை அறிஞர் நன்கு அறிவர். ஹெரஸ் பாதிரியார், ஜி.ஆர். ஹண்டர் போன்ற பேராசிரியர் கள், அவர்கள் கூற்றுகளின் ஒவ்வாமையை நன்கு கண்டித்துள்ளார்கள்.
உலகத்துக்கே விழிப்பை யுண்டாக்கிய மொகஞ்சதரோ நாகரிகத் தைப் பற்றிப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து பரீட்சைகளுக்குரிய நூல்கள் எழுதலாம். அவைகளை வரலாற்றுப் பாடமாக வைக்கலாம். வரலாற்றை எதற்காகப் பயில்வது? மாணவர் தமது பழமையின் செம் மையை உணர்ந்து, தம்மையும், அவ் வழியில் ஆக்கிக்கொள்ள முயலும் பொருட்டன்றோ? மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியருடையது என்று வந்திருக்குமானால், அதைப்பற்றிப் பல நூல்கள் இதுவரையில் தமிழில் வெளிவந்திருக்கும். அவை பரீட்சைகளுக்குப் பாடமாகவும் வந்திருக்கும். தமிழன் பழங்காலத்தவன். அவன், நீண்ட காலம் எருவிடாமல் பயிரிட்ட நிலம்போல ஓய்ந்துவிட்டான். அவனிடத்தில் உணர்ச்சி குன்றிவிட்டது; தனது மொழியை வளர்க்க வேண்டும்; தனது சாதியை வளர்க்க வேண் டும். சுயமதிப்புப் பெறவேண்டும் என்னும் உணர்ச்சி குன்றிவிட்டது. இன்று அரசியலிலும் அவன் கடையிடத்தைத் தாங்கி நிற்கின்றான். தமிழ் மக்கள் தம் குறைகளை உணர்ந்து முன்னேற வேண்டுமென்பது இந் நூலின் நோக்கம்.
சிந்துவெளி அழிபாடுகள்
சிந்து என்பது இந்தியாவின் வடக்கே உள்ள ஒரு ஆறு. சிந்து என்பதற்குச் சிந்துதல் என்று பொருள். இவ் வாற்றின் பெயரையே, நாவலந் தீவு என்று பெயர்பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேசத்த வர்கள், பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் பல இடிபாடுகள் காணப் படுகின்றன. அவைகளில் மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களி லுள்ள பெரிய மேடுகள் 1922இல் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப்பட்டன. அம் மேடுகள் பழைய இரண்டு நகரங்களின் அழிபாடு களாகக் காணப்பட்டன; அங்குப்
பலவகைப் பழம்பொருள்கள் கிடைத்தன.
மொகஞ்சதரோ என்னும் மேடு, சிந்து மாகாணத்தில் உள்ளது. இவ் விடிபாடு ஒரு சதுர மைல் அளவினது. சுற்றுப்புறங்கள் புதைந் திருப்பதால் இது இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம். மொகஞ்சதரோ காலத்திலும் பார்க்கச் சிந்து ஆற்றின் அடிப்பாகம் இன்று இருபது அடி உயர்ந்துள்ளது. மொகஞ்சதரோ என்பதற்குச் சிந்து மொழியில் இறந்த வர்களின் நகரம் என்று பொருள். இம் மேட்டின் நீளம் 1300 அடி வரையில். அகலம் 600 அடி வரையில். சிந்து ஆறு மொகஞ்சதரோவுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரத்தில் ஓடுகின்றது. முற்காலத்தில் அது அதன் பக்கத்தாற் சென்றிருக்கலாம். மொகஞ்சதரோ நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டது. சிந்து ஆறு, காலந்தோறும் உயர்ந்து வந்த மையால், மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இதுவரையும் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டவை மேல் ஆறு படைகளே. மேல் மூன்று படைகள் பிற்காலத்தன. கீழ் நான்கு படைகளும் முற்காலத்தன. இவ் அழிபாடு நாற்பது அடிவரையும் அகழப்பட்டது. அதற்குமேல் நீர் ஊற்று வருகின்றது. அதனால் மேலும் கிண்டுவது இயலாதிருக்கின்றது.
அரப்பா பஞ்சாப் மாகாணத்திலே சிந்து ஆற்றின் கிளைகளுள் ஒன்றாகிய இரவி ஆற்றில் உள்ளது. இவ் அழிபாடு மொகஞ்சத ரோவைவிடப் பெரியது. இவ் விரண்டு இடங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூற்றைம்பது மைல் வரையில். மொகஞ்தரோவிற் காணப் பட்டன போன்ற பழம்பொருள்கள் இங்கும் காணப்பட்டன.
சிந்துவெளி நாகரிகத்தின் பழமை
வாபிரி1 என்பார் பின்வருமாறு கூறியுள்ளார். மொகஞ்சதரோ அழிபாடு அகழப்படவில்லை. ஆனால் சுரண்டிப் பார்க்கப்பட்டது. அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நாகரிக காலம் கி.மு. 2700க்கு முற்பட்ட தன்று என்று கருதப்படுகின்றது. இந் நாகரிகம் மிக வளர்ச்சி அடைந் துள்ளதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நாகரிகம் வளர்ச்சி யடை வதற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றிருக்கலாம் என்று கருதக் கூடியதாயிருக்கின்றது. இது அங்குத் தானே தோன்றி வளர்ச்சி யடைந்த நாகரிகம். மெசபெதோமியா, கிரேத்தா (Crete) முதலிய நாடுகளோடு இந்தியா தொடர்பு வைத்திருந்த தென்று துணிவதற்கேற்ற பல சான்றுகள் காணப்படுகின்றன. இந் நாகரிகத்தின் பழமை கி.மு. 4000 வரையிற் செல்கின்றது. இப் பழைய நாகரிகம் வேறு எங்காவது தொடங்கி இங்கு வந்திருக்க முடியாது. இந்திய நாகரிகம் இந்தியாவி லேயே தொடங்கிற்று எனத் துணியலாம்.
சிந்துவெளி நகரங்களின் காலம்
அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் வெண்கலம், செம்பு என்னும் உலோகங்களாற் செய்யப்பட்ட பல பொருள்கள் காணப்பட்டன. சில கல் ஆயுதங்களும் காணப்பட்டன. இரும்பு ஆயுதங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் இரும்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை எனத் தெரிகின்றது. கல்லாயுதங்கள் காணப் பட்டமையின் அக் கால மக்கள் கற்கால இறுதியிலும் உலோகக் கால தொடக்கத்திலும் வாழ்ந்தார்கள் எனக் கூறலாம். அரப்பா மொகஞ் சதரோ முதலிய இடங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள் மெசபெத் தோமியாவிற் கண்டு எடுக்கப்பட்ட பழம் பொருள்களை ஒத்துள்ளமை யால் சுமேரியா, பாபிலோனியா முதலிய நாடுகளுக்கும், சிந்து நாட்டுக் கும் தொடர்பிருந்து வந்ததெனத் துணியப்படுகின்றது. அரப்பா மொகஞ் சதரோ நகரங்களின் காலம் கி.மு. 3000 வரையில் என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இவ்வாறு துணிவதற்குப் பல சான்றுகள் கிடைத் துள்ளன. கிரேத்தா (Crete), சுமேரியா, பாபிலோன், சிந்து முதலிய நாடு களின் நாகரிகம் ஒருவகையாக இருப்பதோடு மக்களும் ஒரே குலத்தின ராகக் காணப்படுகின்றனர் என்று குலநூலார் கூறுகின்றனர்.
நகரும் நகரமைப்பும்
அரப்பா, மொகஞ்சதரோ நகரங்கள் சூளையிட்ட களிமண் கற்களால் (செங்கற்கள்) கட்டப்பட்டுள்ளன. மொகஞ்சதரோவின் மேல் படையிலுள்ள நாகரிகம் கி.மு. 2550 வரையில் என்றும் அடிப்படையி லுள்ளது கி.மு. 3000 வரையில் என்றும் கருதப்படுகின்றன. அரப்பா, மொகஞ்சதரோப் பட்டினங்களைக் கட்டியவர்கள் ஆரியர் வருகைக்கு ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் எனத் துணியலாம். இதிற் சிறிதும் ஐயம் இல்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட பழம்பொருள்கள் பாபிலோனிற் காணப்பட்டவைகளை ஒத்தன. சுமேரி யாவிற் கிடைத்த சில பொருள்களும் சிலவும் அவ் வகையினவே. ஆகவே சுமேரியர், பாபிலோனியர் சிந்துவெளி மக்கள் ஆகியோர் ஒரு பொது உற்பத்தியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். அரப்பா, மொகஞ்சதரோ முதலிய இடங்களில் தொடர்பாக எழுதப்பட்ட நீண்ட பட்டையங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் தோல், மரம், ஓலை என்பவைகளை எழுதப் பயன்படுத்தினார்கள் ஆகலாம்.
மொகஞ்சதரோ மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என அறியமுடிய வில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள். அவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் இருந்தார்கள் என்று கூறலாம். இது அவர்களின் நன்கு அமைக்கப்பட்ட நகரம், மர வழிபாடு, இலிங்க வழிபாடு முதலிய சின்னங்களைக் கொண்டு அறிதல் கூடும். இவை போன்ற வழிபாடுகள் மேற்கு ஆசியாவிலும் காணப்பட்டன. நகரங்கள் தீயினால் வெந்தும் அழிந்தும் காணப்படாமையால் இந் நகரங்களில் வாழ்ந்த மக்கள் அடிக்கடி போர்களிற் கலந்து கொள்ளாது சமாதானமாக வாழ்ந்தார்கள் எனத் தெரிகின்றது. மொகஞ்சதரோவில் நிலத்துக்குச் சாந்து இடப்பட்டதும், நிரையாக அறைகள் உடையது மாகிய சந்தையும், அரப்பாவில் மிகப் பெரிய தானியக் களஞ்சியமும் காணப்பட்டன. இந் நகரங்களிலுள்ள கட்டடங்கள் சிதைந்த நிலையிற் காணப்படுகின்றன. இவ் வழிந்த நகரங்களுக்கு அயலே வாழும் மக்கள் கட்டடங்கள் அமைப்பதற்கு இவ் விடிபாடுகளிலிருந்தும் செங்கற்களை எடுத்தமையே இதற்குக் காரணமாகும். இந் நகரங்கள் வெள்ளப் பெருக்கி னால் அழிந்தன என்று கூறலாம்.
வீதிகள்
மொகஞ்சதரோக் கட்டடங்கள் அரப்பாக் கட்டடங்களினும் பார்க்க அழியாமல் இருக்கின்றன. வீதிகள் நேராகச் செல்கின்றன. அவைகளின் குறுக்காக வேறு வீதிகள் நேரே செல்கின்றன. இவைகளை நோக்கும்போது அரசினரின் சட்டதிட்டங்களுக்கு அமைய நகர் அமைக்கப்பட்டிருக்கின்ற தெனத் தெரிகின்றது. கட்டடங்கள் தெருப் பக்கம் வெளியே தள்ளியிராமையால், மொகஞ்சதரோவில் கட்டடங் களைப் பற்றிய சட்டங்கள் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. காலம் போகப்போக வீதிகள் அகலம் அடைந்திருக்கின்றன. வீதிகள் எல்லாம் கிழக்கிலிருந்து மேற்கும், வடக்கிலிருந்து தெற்குமாகச் செல்கின் றன. மொகஞ்சதரோ நகரின் வீதிகள் முப்பத்து மூன்று அடி அகல முடையன. இதிலும் பார்க்க அகலமுள்ள சில வீதிகளும் காணப்படு கின்றன. சிறிய வீதிகள் பெரும்பாலும் பதினெட்டு அடி அகலமுடையன. பதின்மூன்று அடி முதல் ஒன்பது அடிவரையில் அகலமுள்ள வீதிகளும் காணப்படுகின்றன. தெரு ஓரங்களில் வீட்டை மறைத்துப் பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பெரிய வீதியின் ஓரத்திலுள்ள சுவர் பதினெட்டு அடி உயரமுள்ளது. குறுக்குத் தெருவிலுள்ளவை இருபத்தைந்து அடி உயர முடையன. நகரத்தின் அடித்தளம் இதுவரையிற் கண்டுபிடிக்கப்பட வில்லை.
வீடுகள்
சில கட்டடங்களின் தளங்கள் (அத்திபாரம்) சூளையிட்டனவும் சூளையிடாதனவுமான களிமண் கற்களால் இடப்பட்டிருக்கின்றன. குளிக்கும் அறைகளுக்கு மினுக்கம் செய்யப்பட்ட செங்கல் பதிக்கப்பட் டுள்ளன. கட்டடங்களுக்குச் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மாடிகள் வேலைப்பாடுடைய செங்கற்களாலும் மர வேலைகளா லும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அக்காலச் சிறிய வீட்டின் தரை 30 அடி நீளமும் 27 அடி அகலமும் உடையதாயிருந்தது. ஒரு வீட்டுக்கு நாலு அல்லது ஐந்து அறைகள் இருந்தன. பெரிய வீடுகளின் பருமை இதன் இருமடியாக இருந்தது. மொகஞ்சதரோவில் சில வீடுகள் அடுத்த வீட்டுச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கின்றன. சுவர்களின் கனத்தைக் கொண்டு வீதிகளுக்கு இரண்டு அல்லது அதிக மாடிகள் இருந்தன என்று கூறலாம். சுவர்களின் உயரத்தில் சதுரமான துவாரங்கள் காணப்படுகின்றன. அவைகளில் உத்திரங்கள் இடப்பட்டிருக்கலாம். உத்திரங்களுக்கு மேலே நாணற்பாய் பரப்பி அதன்மீது களிமண் பரவி மட்டஞ் செய்யப்பட்டது. இதுவே அவ் வீடுகளின் கூரையாகும். பல வீடுகளின் படிக்கட்டுகள் இன்றும் காணப்படுகின்றன. சில வீடுகளுக்குப் படிக்கட்டுகள் காணப்பட வில்லை. ஆகவே சில வீடுகளுக்கு மரத்தினாற் செய்யப்பட்ட படிக்கட் டுகள் இருந்தன என்று தெரிகின்றது. படிக்கட்டுகள் மிக ஒடுக்கமானவை. பல வீடுகளுக்கு தெருப்புறத்தும் படிக்கட்டுகள் இருக்கின்றன. மாடி களில் வாழ்ந்த வெவ்வேறு குடும்பத்தினர் இப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். வீட்டின் கூரைகள் தட்டையாக இருந்தன. நாற்புறத்தும் பதிவான சுவர் இருந்தது. கூரையில் விழும் மழைநீர் செங்கற் குழாய்ப் பீலி அல்லது மரப் பீலி வழியே வீதியில் விழுந்தது. வெய்யிற் காலங்களில் மக்கள் கூரைமீது படுத்து நித்திரை கொண்டார் கள். வீட்டின் கதவுகள் பெரும்பாலும் மூன்றடி நாலு அங்குலம் அகல முடையவை. சில கதவுகள் ஏழு அடி பத்து அங்குலம் அகலமுடையன. வட்டமான திரண்ட தூண்கள் காணப்படவில்லை. சதுரமான தூண் களே காணப்படுகின்றன. வறியவர்களின் வீடுகளின் தரை, களிமண் இட்டு மட்டஞ்செய்து சாணியால் மெழுகப்பட்டிருந்தது.
சில வீட்டுச் சுவர்களில் அழகிய அறைகள் காணப்படுகின்றன. அவைகளின் மரச் சட்டங்கள் இறுக்கித் தட்டுகளமைக்கப்பட்டன வாகலாம். சமையல் பெரும்பாலும் முற்றத்தில் செய்யப்பட்டது. வீடுக ளில் சமையலறைகளும் காணப்படுகின்றன. அவைகளில் செங்கற்களால் உயர்ந்த மேடை கட்டப்பட்டிருந்தது. அங்கு விறகு வைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் குளிக்கும் அறை இருந்தது. அது தெருப்புறமாக அமைக்கப்பட்டது. தண்ணீர் வெளியே செல்லும் வாய்ப்புக் கருதி அது இவ்வாறு அமைக்கப்படுவதாயிற்று. வீடுகளுக்கு மலக் கூடங்களும் இருந்தன. அவை தெருச் சுவருக்கும் குளிக்கும் அறைக்கும் இடையில் அமைக்கப்பட்டன. தெருவுக்குப் பக்கத்தே அமைக்கப்பட்ட தண்ணீரோ டும் மண் குழாய்கள் பொருத்தித் தெரியாமல் அழுத்தஞ் செய்யப்பட் டிருந்தன. வீட்டு முற்றங்களில் அம்மிகள் காணப்படுகின்றன. முற்றத்தில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வறிய மக்கள் நகரத்தில் இருக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் நகர்ப்புறத்தே சிறு குடிசைகள் கட்டி வாழ்ந் தார்கள்.
ஒவ்வொரு வீதியிலும் செங்கற் பதித்த வாய்க்கால்கள் இருந்தன. சிறிய வீதிகளுக்கும் இவ்வாறு இருந்தன. வீடுகளிலிருந்து செல்லும் வாய்க்கால்கள் வீதியிலுள்ள பெரிய கால்வாய் வரையிற் சென்றன. வீதிகளிற் செல்லும் வாய்க்கால்கள் செங்கற்களால் மூடப்பட்டிருந்தன. வீடுகளினின்று செல்லும் அழுக்குநீர் செங்கற் பதித்த ஒரு குழியில் விழுந்து நிரம்பிய பின்பே, வீதியிலுள்ள வாய்க்காலுக்குச் சென்றது. அவ்வாறு நீர், குழியில் விழுவதால் பாரமான பொருள்கள் அதனுள் தங்கிவிடும். கற்பதித்த குழிகளை அமைக்கமாட்டாத வறியவர்கள் பெரிய சாடிகளைப் பயன்படுத்தினர். கிணற்றைச் சுற்றிச் செங்கற் பதிக் கப்பட்டிருந்தது. கிணறுகளின் குறுக்களவு மூன்று அடிமுதல் ஏழு அடி அளவில் உள்ளது. ஹரப்பாவில் தானியக் களஞ்சியம் என்று கருதப்படும் பெரிய கட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல சுவர்கள் ஒன்றுக்கு ஒன்று நேராகச் சமதூரத்தில் ஓடுகின்றன. அவை களின் இடையே இருபத்து மூன்று அடி வெளி இருக்கின்றது. சுவரின் கனம் ஒன்பதடி. மொகஞ்சதரோவில் 242 அடி நீளமும் 112 அடி அகலமும் ஐந்தடிக் கனமுமுள்ள சுவர்களையும், தெற்கிலும் மேற்கிலும் பெரிய பாதை களையு முடையதாகிய ஒரு கட்டடம் காணப்படுகின்றது. அதில் பல அறைகள் இருக்கின்றன. அங்குள்ள பெரிய நீராடும் கேணிக்கு அண்மையி லிருப்பதால், இது ஒருபோது பொதுமக்கள் தங்கும் மடமா யிருக்கலாம். இதற்கு அண்மையில் இன்னொரு கட்டடம் காணப்படு கின்றது. அது ஓர் அரண்மனையா யிருக்கலாம். அவ் வழகிய கட்டடத் துக்கு இரண்டு உள் முற்றங்கள் இருக்கின்றன. அது 220 அடி நீளமும் 115 அடி அகலமுமுடையது. சுவர்கள் ஐந்து அடிக் கனமுடையன. அக் கட்டடத்தில் மூன்று கிணறுகள் காணப்படுகின்றன.
நீராடும் கேணி
மொகஞ்சதரோவில் நீராடும் கேணி ஒன்று காணப்படுகின்றது. அதன் உட்புறங்களும் கரைகளும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அதன் நீளம் 39 அடி 3 அங்குலம்; 23 அடி 2 அங்குலம். அக் கேணிக்கு இரண்டு பக்கங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றன. படிக்கட்டுக்குக் கீழே முடிவு அடையும் இடத்தில் பதினாறு அங்குலம் உயரமும் 39 அங்குலம் அகலமும் உள்ள ஒரு மேடை காணப்படுகின்றது. இது சிறுவர் அபாயமின்றி நின்று நீராடுவதற்காகவாகலாம். வெளியே கேணியின் நாற்புறத்தும் மக்கள் உலாவக்கூடியதும் பதினைந்தடி அகலமுள்ளது மான செங்கற் பதிக்கப்பட்ட நடைபாதை காணப்படுகின்றது. நாற்புறத் தும் ஏழு அடி அகலமுள்ள அறைகள் இருக்கின்றன. கேணியின் நீர் அதன் தெற்கு மூலையில் அடியில் உள்ள துவாரம் வழியாக வெளியே போக்கப்பட்டது. அந் நீர் இரண்டு அடி நாலு அங்குலம் அகலமுள்ள மதகு வழியாகச் சென்றது. அம் மதகு ஒரு மனிதன் நிமிர்ந்து செல்லக் கூடியதாக இருந்தது. அம் மதகு எங்குச் சென்று முடிவடைகின்றது என்று அறிய முடியாமல் இடிபாடுகள் மூடியிருக்கின்றன. குளத்தின் கிழக்கில் உள்ள அறையில் ஒரு கிணறு காணப்படுகின்றது. அதனை வீதியாற் செல்பவர்களும், கேணியிலுள்ளவர்களும் இலகுவில் அடைய லாம். கேணியின் நீர் வெளியே போக்கப்பட்ட போது இக் கிணற்று நீரால் அது நிரப்பப்பட்டிருக்கலாம். கேணியின் உட்பக்கத்தே வைத்துக் கட்டப்பட்ட செங்கற்களின் முன்புறத்தில் கல்நார் தடவப்பட்ட பூச்சு காணப்படுகின்றது. கேணிக்குப் புறத்தில் நீராடுவோர் தங்கியிருக்கும் அறைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அறையின் தளத்துக்கும் கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அறைகளின் கூரைக்கு ஏறிச்செல்லக் கூடிய தாகப் படிக்கட்டுகள் இருந்தன. இவ் வறைகள் குருமார் இருப்பதற்காக அமைக்கப்பட்டன வாகலாம். தென்மேற்கு மூலையில் நீண்ட வட்ட மான ஒரு கிணறு காணப்படுகின்றது. தண்ணீர் இறைக்கும்போது கயிறு உராய்ந்ததால் உண்டான அடையாளங்கள் கிணற்றுச் சுவர்ப் பக்கங் களிற் காணப்படுகின்றன. இக் கேணி பொதுமக்களும், குருமாரும் நீராடு வதற்காக அமைக்கப்பட்டதாகலாம். இப்பொழுது இதற்கு அண்மையில் புத்த தூபி இருக்கின்ற இடத்தின் கீழ் முன்பு பெரிய கோயில் இருந்திருக்க லாம். இது கடவுளின் மீன் வாழும் கேணியாகவும் இருந்ததாகலாம்.
சமயம்
மொகஞ்சதரோவில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டிய ஒரு மனித வடிவம் காணப்பட்டது. அது இடது தோளுக்கு மேலாகப் போர்த்து வலப்பக்கம் வரும்படியாக மேலாடை அணிந்திருக்கின்றது. இவ் வகை வடிவங்கள் அரப்பாவிலும் மொகஞ்சதரோவிலும் காணப் பட்டன. அவ் வடிவத்துக்குக் குறுகிய தாடி மயிர் உண்டு. மேல் உதட்டு மயிர் மழிக்கப்பட்டுள்ளது. இவ் வகை வடிவங்கள் சுமேரியாவிலுங் காணப்பட்டன. இவ் வடிவம் ஒரு குருவைக் குறிப்பதாகலாம். இவ் வடிவின் கண்கள் மூடியிருக்கின்றன. இது யோகத்தைக் குறிக்கின்ற தெனச் சிலர் கூறுகின்றனர். இவ் வகை வடிவங்கள் கிஷ், ஊர் (மேற்கு ஆசியா) என்னும் இடங்களிலும் காணப்பட்டன. அங்குக் காணப்பட்ட சூளையிட்ட மண் பாவைகளைக் கொண்டு அக் காலத் தெய்வங்களைப் பற்றி நாம் சிறிது அறியலாம். பல மண்பாவைகள் பெண்தெய்வ வடிவங்க ளாகக் காணப்படுகின்றன. அத் தெய்வங்கள் அரையில் ஒரு ஒடுங்கிய துணியுடையனவாக மாத்திரம் காணப்படுகின்றன. அவை பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன; விசிறி போன்ற தலை அணியை யும் அணிந்திருக்கின்றன. இரண்டு பக்கங்களிலும் கிண்ணங்கள் போன்ற பொருள்கள் காணப்படுகின்றன. இவைகளில் வழிபடுவோர் மணப் பொருள்களை எரித்திருக்கலாம்.
மண் பாவைகள், பெண் கடவுளரின் வடிவங்கள் என்று நம்புவதற்குக் காரணமுண்டு. பெயர் அறியப்படாத அவ் வடிவங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வைத்து வழிபடப்பட்டன. ஆண் கடவுளர் தலைமீது மாட்டுக்கொம்பு அல்லது ஆட்டுக்கொம்பு அணிந்திருக்கின்ற னர். இவ் விரண்டு விலங்குகளும் புனிதமுடையன என்று தெரிகின்றது. முத்திரைகளிற் காணப்படும் வடிவங்கள் கடவுளர் வடிவங்களாகத் தெரி கின்றன. ஆண் தெய்வங்கள் தலைமயிரை நீள வளரவிட்டிருக்கின்றன.
ஒரு முத்திரையில் அட்டணைக்காலிட்டு இருக்கும் மூன்று முகமுடைய ஒரு மனித வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சுற்றி இரண்டு மான்கள், ஒரு காண்டாமிருகம், ஒரு யானை, ஒரு புலி, ஒரு எருமை முதலிய விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. மனித வடிவத்தின் கைகளில் பல வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சர்.ஜான் மார்சல் என்பார் இவ் வடிவம் பசுபதி என்னும் சிவன் கடவுளைக் குறிக்கின்றதெனத் துணிந்துள்ளார்.
இக் கடவுளின் வடிவம் பொறித்த மூன்று முத்திரைகள் காணப் பட்டன. இரண்டு முத்திரைகளில், பசுபதிக் கடவுளின் வடிவம் கட்டிலின் மீது இருக்கிறது. மூன்றாவதில் உள்ளது, நிலத்தின்மீது இருக்கின்றது. மொகஞ்சதரோ மக்கள் தாய்க்கடவுளைக் கன்னிக் கடவுளாகவே வணங்கினார்கள். ஓர் அணிகலனில் அரச மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தாய்க்கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. இன்று மக்கள் வணங்கும் இலிங்கங்கள் போன்றவை அரப்பா மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டன. மீனை வாயில் வைத்திருக்கும் முதலையின் வடிவங்கள் அணிகலன்களில் காணப்படுகின்றன. முதலை ஆற்றுத் தெய்வமாகலாம். அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலும் பாம்புகளின் வடிவங்களும் காணப்பட்டன. நிறம் பூசிய சட்டிப் பானை களிலும் அவைகள் தீட்டப்பட்டுள்ளன. முத்திரைகளில் சுவத்திகமும் காணப்படுகின்றன. வெண்கலத்திற் செய்யப்பட்ட நாட்டியப் பெண் ணின் வடிவம் ஒன்று காணப்பட்டது. அது அக் காலக் கோயில் தேவரடி யாளைக் குறிப்பது ஆகலாம் எனக் கருதப்படுகின்றது.
தாய்க்கடவுள், சிவன் கடவுள் வணக்கங்கள், இலிங்க வணக்கம் முதலாயின ஆரியருக்கு முற்பட்ட தமிழ் மக்களுக்கு உரியனவென்று ஆராய்ச்சியினால் நன்கு தெளிவாகின்றன. அவ்வாறாகவும் பழங் கொள்கை யுடைய இந்திய ஆராய்ச்சியாளர் சிலர் அவை வேத கால ஆரியருக்குரியன என்று இடை இடையே வாதிப்பதுண்டு. அவர்கள் கூற்றுகள் இதுவரையில் ஆராய்ச்சி உலகில் இடம்பெறவில்லை. அவ் வழிபாடுகள் ஆரியருக்கு முற்பட்ட மக்களுக்கே உரியன என்பதை விளக்கி, இந்திய வரலாற்று இதழில் 1அறிஞர் ஒருவர் எழுதியிருப்பதின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். “தாய்க்கடவுள் வணக்கம் சிறப்பாக ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே பரவியிருந்தது. ஆரிய வேதங்களிற் சொல்லப்படும் தாய்க்கடவுளருக்குப் பெருமை உண்டானது ஆண் கடவுளர் வழியாகவாகும். அவர்கள் தனியே உயர்வு பெறவில்லை. மூன்று முகமுடைய சிவன் வடிவம் பெரிதும் காணப்படுகின்றது. சிவன், மகேசு வரன், சதாசிவன் என்னும் வடிவங்களில், ஒன்று, மூன்று ஐந்து முகங்க ளோடு எழுந்தருளுவர் என ஆகமங்கள் கூறுகின்றன. மூன்று முகத்தோடு காணப்படும் கடவுள் சிவனோடு தொடர்புடையவர் என்ப தில் ஐயம் இல்லை. அவ் வடிவம் யோக நிலையில் இருப்பது இதனை நன்கு வலி யுறுத்துகின்றது. தக்கணாமூர்த்தி வடிவில் கடவுள் காட்டு வாழ்க்கை யினராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.”
“சூலம் சிவனின் முற்கால அடையாளமாக இருக்கலாம். இவ் வடையாளத்தையுடைய மனித வடிவங்கள் மொகஞ்சதரோவிற் காணப் படுகின்றன. இவ் வகை வடிவங்கள் சுமர், பாபிலோன் என்னும் இடங் களிலும் காணப்பட்டன.’’
“புத்த, தர்ம, சங்க எனப் புத்த சமயத்தினர் சூலத்தை மூன்றாகக் கொண்டனர். யோக மூர்த்தியின் பாதங்களில் காணப்பட்ட மான்கள் தக்கணா மூர்த்தியின் காட்டு வாழ்க்கையைக் காட்டுகின்றது. தரும சக்கரத்தில் மான்கள் புத்தரின் ஆசனத்தின் கீழ் காணப்படுகின்றன. அவர் தான் புதிதாகக் கண்ட சமயக் கொள்கையைப் போதிக்கின்றார். முத்திரை களில் காணப்பட்ட சிவனின் வடிவைப் பின்பற்றிப் புதிய பிற்கால வடிவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.”
“இந்திய நாகரிகத்தில் ஆரியருக்கு முற்பட்ட மக்களின் அடிப் படை” என இந்திய “குவாட்டர்லி” வரலாற்று இதழில், சூர்2 என்னும் அறிஞர் கூறியிருப்பது வருமாறு:
இருக்கு வேத ஆரியர் தாய்க்கடவுளைப் பற்றி அறியார். அவர் களின் மேலான கடவுள் ஆண் கடவுளே. இருக்கு வேதத்தில் காணப்படும் உருத்திரன் சிவனின் பிற்கால வடிவமாகும். சமக்கிருதத்தில் உருத்திரன் என்பதற்குச் சிவப்பு என்று பொருள். இது சிவப்பு என்னும் பொருள் தரும் சிவன் பெயராயிருக்கின்றது. உருத்திரன் இருக்கு வேதத்தில் உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்படவில்லை. இருக்கு வேதத்தில் உருத் திரன் மீது மூன்று பதிகங்கள் மாத்திரம் உள்ளன. உருத்திரனும் அக்கினியும் ஒருவராகக் கூறப்பட்டுள்ளார்கள்.
உடையும் அணியும்
அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் காணப்பட்ட பெண் வடிவங்கள் பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்படுகின்றன. சிலவற்றின் உடை முழங்காலுக்கு மேல் வரையும் இருக்கின்றது. அரையிற் கட்டி யிருக்கும் ஆடைக்கு மேல் பட்டிகை அணியப்பட்டுள்ளது. அது நூலில் மணிகளைக் கோத்துச் செய்யப்பட்டது போல இருக்கின்றது. ஆண் வடிவங்களும் பெண் வடிவங்களும் விசிறி போன்ற ஒருவகைத் தலை அணியை அணிந்திருக்கின்றன. இது துணியினால் செய்யப்பட்டதாக லாம். அவ் வடிவங்கள் அணிந்திருக்கும் இன்னொரு வகைக் கழுத்தணி பல வகைக் கழுத்தணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துப் பொருத் திச் செய்யப்பட்டது. இது போன்றதை இன்று ஆப்பிரிக்காவின் சில பகுதியிலும் கிழக்கு இந்தியாவிலுமுள்ள மக்கள் அணிகிறார்கள். மாலை, கைவளை முதலியவைகளையும் பெண்கள் அணிந்தார்கள். முழங்காலுக் குக் கீழ்வரையும் ஆடை உடுத்திய ஒரு வடிவம் காணப்பட்டது. இன் னொரு வடிவம் நீண்ட உடை உடுத்தி அரையில் நாடாக் கட்டியிருக் கிறது. சில வடிவங்கள் முடியில் சீப்பு அணிந்திருக்கின்றன.
ஒரு ஆடவனின் உடை, அரையில் ஒன்றும் அதன்மேல் பட்டி போல் கட்டும் ஒடுங்கிய இன்னொன்றுமா யுள்ளது. சிலர் வலத்தோளின் மேலாக வந்து இடத் தோளின் கீழ் முடிவடையும்படி போர்வையை அணிந்தார்கள். அவர்கள் குறுகிய தாடியும் கன்ன மீசையும் வளர்த் திருந்தார்கள்.
உலோகங்களில் செய்த பொருள்கள்
செல்வர்களின் அணிகலன்கள் வெள்ளியிலும், தங்கத்திலும், நிறக் கற்கள், தந்தம் முதலியவைகளால் செய்யப்பட்டன. வறியவர்கள் ஓடுகளினால் செய்ததும், களிமண்ணிற் செய்து சூளையிடப்பட்டனவு மாகிய அணிகளை அணிந்தார்கள்.
பொன், வெள்ளி என்பவைகளை மாத்திரமல்ல; செம்பு, தகரம், ஈயம் முதலிய உலோகங்களையும் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்கள். செம்பினால் போர்க் கருவிகளும், பிற கருவிகளும், சமைக்கும் ஏனங் களும் செய்யப்பட்டன. இவை எல்லாம் உலோகத்தை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டன. மயிர் மழிக்கும் கத்தி, உளி, அரிவாள், கை வளை, ஏனங்கள், மணிகள், பொத்தான் போன்ற பொருள்கள் செய்வ தற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
சிந்துவெளி மக்களின் சிற்பத் திறன்
சிந்துவெளி அழிபாடுகளில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. அவைகளில் மாடு, எருமை, யானை, ஆடு, காண்டாமிருகம், மான், நாய், அணில், குரங்கு போன்ற விலங்குகளின் வடிவங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ் வடிவங்கள் மிகத் திறமையுடைய கைவேலைப்பாடுகளாகக் காணப்படு கின்றன. மொகஞ்சதரோ மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் பல வடிவின. பொதுவான சூளையிட்ட மட்பாண்டங்க ளல்லாமல், நிறங் கொடுக்கப்பட்டதுவும் காணப்படுகின்றன. அவைகள்மீது பலவகை யான கொடிகள், விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டுள்ளன. அக் காலம் வழங்கிய கட்டில், முக்காலி போன்ற வீட்டுப்பொருள்களும், பெண்கள் அணிந்த பல வகை அணிகலன்களும், மக்கள் பயன்படுத்திய சமாதான கால, யுத்த கால ஆயுதங்களும், சிறுவரின் விளையாட்டுப் பொருள்களும், மண்பாவைகளும், வீடுகளும், அக்கால மக்களின் கைவேலைத் திறமையை விளக்குவன.
சிந்துவெளி மக்கள் அறிந்திருந்த விலங்குகள்
அக்கால மக்கள் அறிந்திருந்த விலங்குகள் இமில் உள்ள மாடு, எருமை, யானை, ஒட்டகம், நாய், கழுதை, ஆடு, மலைஆடு, குரங்கு, புலி, காண்டாமிருகம், மான், பன்றி, முதலை முதலியன. கீரி, பாம்பு, அணில், கிளி, கோழி, மயில், முயல் முதலியனவும் அறியப்பட்டிருந்தன.
மக்களின் வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும்
மக்கள் நன்கு அமைக்கப்பட்ட நகரில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள். நகர் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வட்டங்களுக்கும் காவல் காக்கும் இடங்கள் இருந்தன. வணிகர் கூட்டங்கள் பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொகஞ்சதரோவில் பல நாட்டு வணிகர் தங்கி யிருந்தார்கள். அதனாலேயே அங்குக் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் பலவகையாக வுள்ளன.
கோதுமையும், வாளியும் அதிகம் விளைவிக்கப்பட்டன. நெல்லும் விளைவிக்கப்பட்டது. தானிய வகைகளையும், மீன், மாடு, பன்றி, ஆடு முதலியவைகளின் இறைச்சிகளையும் மக்கள் உண்டார்கள். முதலை, ஆமை என்பவைகளின் இறைச்சிகளும், மீன் கருவாடும் பயன்படுத்தப் பட்டன.
பெண்கள் கண்ணுக்கு மை தீட்டினார்கள். முகத்துக்கு ஒருவகை பொடியைத் தடவினார்கள். தந்தத்தினாற் செய்யப்பட்ட சீப்புகளும், பிற சீப்புகளும் பயன்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்குப் பெரும்பாலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஓடுகளாற் செய்யப்பட்டவை, களிமண்ணாற் செய்து சூளையிடப்பட்டவை, தந்தத்தாற் செய்யப் பட்டவை போன்ற பலவகை விளையாட்டுப் பொருள்களைச் சிறுவர் வைத்து விளையாடினர். மக்களின் பொழுதுபோக்கு, வேட்டையாடுதல், மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை போல்வன. பண்டங்களை நிறுப்ப தற்குத் தராசுகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டியம், இசை முதலிய கலைகளும் மக்களால் விரும்பப்பட்டன. நரம்பு கட்டிய யாழ், மேளம், சல்லரி, கொம்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
மொகஞ்சதரோவில் குருமார், அரசர், மந்திரவாதிகள், வணிகர், படகோட்டிகள், மீன்பிடிகாரர், வீட்டு வேலைக்காரர், தண்ணீர் எடுப்போர், சங்கறுப்போர், குயவர், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் வேலை செய்யும் கம்மாளர், கொத்தர், செங்கற் சூளை யிடுவோர், முத்திரைகள் வெட்டுவோர் முதலியவர்கள் வாழ்ந்தார்கள்.
மொழி
சிந்துவெளி மக்கள் ஒட்டுச் சொற்கள் உடைய ஒரு வகை மொழியை வழங்கினார்கள். அம் மொழி சுமேரிய மொழிக்கு இனமுடை யது என்று கருதப்பட்டது. மொகஞ்சதரோ அரப்பா முதலிய இடங் களிற் கிடைத்த முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகளை ஒத்தவை பசிபிக் கடலில் உள்ள ஈஸ்டர் தீவுகள், பாபிலோன், சுமேரியா, இலிபியா, கிரேத்தா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இவ் வெழுத்துகளை நன்கு ஆராய்ந்த சேர் யோன் மார்சல், பேராசிரியர் லாங்டன் என்போர் ஈஸ்டர் தீவுகள் முதல் இந்தியா, சுமேரியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துகள் எல்லாம் ஒரே பொது உற்பத்திக்குரியன வென்றும், அவை, அவைகளை வழங்கிய மக்களின் கருத்துகளுக்கு அமையச் சிற்சில மாறுபாடுகளை அடைந்துள் ளன என்றும் கூறியுள்ளார்கள். பசிபிக் கடல் முதல், மேற்கு ஆசியா எகிப்து கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே தொடக்கத்துக் குரியனவாயின், அம் மொழிகளும் ஒரே தொடக்கத்துக் குரியன என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை.
பசிபிக் தீவுகள், சிந்துவெளி, சுமேரியா முதலிய இடங்களில் காணப்பட்ட எழுத்துகள் பல ஒரே வகையாக உள்ளன. இதனால் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளே அவ் விடங்களிலும் வழங்கினவென் றும், சிந்துவெளி எழுத்துகளை ஒலிமுறையாக வாசிக்கவும், அவ் வொலி முறையான உச்சரிப்புகளின் பொருள்களைப் பசிபிக் தீவுகள் முதல் மேற்கு ஆசியா வரையிலுள்ள மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் ஆராய்ச்சிவல்லார் கருதுகின்றனர்.
நீண்ட காலம் பிராமி எழுத்துகளின் தொடக்கம் அறியப்படா திருந்தது. பிராமி எழுத்துகளை ஒத்த எழுத்துகளே பினீசியரின் எழுத் துகள். இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள் என்றும், பின்பு அவர்கள் பினீசிய வணிகரிடமிருந்து கி.மு. 800 வரையில் எழுத்தெழுதும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் ஆராய்ச்சி யாளர் எழுதுவாராயினர். சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின், பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளினின்றுந் தோன்றி யவையென உறுதிப்படுவதாயிற்று. பேராசிரியர் லாங்டன் இக் கருத்தை நாட்டியுள்ளார். பினீசிய எழுத்துகள் பிராமி எழுத்துகளினின்றும் பிறந்தன வென்றும், அவை பினீசிய வணிகரால் இந்திய நாட்டினின்றும் கொண்டுபோகப்பட்டதென்றும் துணியப்படுகின்றன. பினீசிய எழுத்து களினின்றும் கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து இன்றைய ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின.
சிந்துவெளியில் வழங்கிய எழுத்துகள் இன்று நாம் வழங்கும் எழுத்துகள் போன்றனவல்ல. ஒரு சொல்லையோ கருத்தையோ குறிப்ப தற்கு ஒரு குறியீடு வழங்கிற்று. இவ் வகை எழுத்துகளே சுமேரியாவிலும் வழங்கின. சீனருடைய எழுத்துகள் இவ் வகையினவே. சிந்துவெளி முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகளை ஹெரஸ் பாதிரியார் என்னும் ஸ்பானிய தேசத்தவர் வாசித்துள்ளார். அவ் வாசிப்புகளிற் காணப்படும் சொற்கள் பெரும்பாலும் இன்றைய தமிழிற் காணப்படு வன. இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தமிழ் இன்றைய தமிழிலிருந்து அதிகம் வேறுபட்டிருந்ததென்று கூற முடியவில்லை. ஈஸ்டர் தீவுகள் முதல் மேற்கு ஆசியா, கிரேத்தாத் தீவுகள் வரையிலுள்ள நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே வகையாகக் காணப்பட்டாலும், மொகஞ்சதரோ எழுத்துக்களின் ஒலி முறையான வாசிப்பு தமிழாயிருந்தாலும், பெறப்படுவது என்ன? முற்காலத்தில் மிக மிக அகன்ற நிலப்பரப்பில் ஒரே மொழியும், ஒரே எழுத்தும், ஒரே கொள்கைகளும் உடைய மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அன்றோ?
பிராமி ஆரியருடைய எழுத்து என்றும், அதைப் பார்த்தே தமிழர் எழுத்துகளை ஆக்கிக்கொண்டார்கள் என்றும் ஆரியக் கட்சியினர் வாதம் புரிந்து வந்தனர். இன்றைய ஆராய்ச்சியில், ஆரியர் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள்; அவர்களுக்கு எழுத்தெழுதக் கற்பித்த வர்கள் தமிழர்களே என்னும் உண்மைகள் நாட்டப்பட்டுள்ளன. ஆரிய மொழியிற் காணப்படும் சில சிறந்த நூல்களும் அவர்களுக்கு அறிவு கொளுத்தும்படி தமிழ் அறிஞரால் செய்து உதவப்பட்டனவே. பிற்காலத் தில் படையெடுப்பினால் வெற்றியாளராக வந்த அராபியர் எப்படி இந்திய நாட்டுக்கு அந்நியர் எனக் கருதப்பட்டு வந்தார்களோ. அவ்வாறே ஆரியரும் அந்நியரெனவே கருதப்பட்டு வருவாராயினர். பிற்கால நிகண்டு நூல்களிலும் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் ஆரியர் தமிழர் என்னும் கட்சியினருக் கிடையில், இந்து முசுலிம் மனப்பான்மை இருந்து வருதலை நாம் காணலாம்.
சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதே
அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையதே என்பதை முதற்கண் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர் கூறியுள்ளவற்றை இங்குத் தருகின்றோம். ஆன்றோர் கூற்றுகளால் அப் பழைய நகரங்களின் நாகரிகம் தமிழருடையதென்று சிறுவர்க்கும் எளிதில் விளங்கும்.
“சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் ஆரியருக்கு முற்பட்டோர். ஆகவே அவர்களுடைய மொழியும் ஆரியருக்கு முற்பட்டதாதல் வேண்டும். மூன்று காரணங்களைக் கொண்டு நாம் இவ்வாறு கருதலாம். (1) ஆரியர் வருகைக்கு முன் வடஇந்தியா முழுமையிலும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள். இச் சமவெளியின் நாகரிகத்தை ஒத்த ஓர் நாகரிகத்தை அக் காலத்தில் அடைந்திருக்கக் கூடியவர்கள் திராவிடர் களே யாவர். (2) கிர்தார் மலைத்தொடருக்கு அப்புறத்தில், சிந்துவெளிக்கு அண்மையிலே பலுச்சிஸ்தானத்தில் வாழும் பிராகூயர் இன்றுவரையும் திராவிட மொழி தொடர்பான மொழியையே வழங்குகின்றனர். இது ஆரியர் வருகைக்கு முன் அங்குத் திராவிட மொழி வழங்கிய தென்பதற்கு அறிகுறி ஆகலாம். (3) திராவிடம் ஒட்டுச் சொற்களை யுடையதாதலால், அம் மொழியை இணைக்கும் மொழிகள், சிந்துவெளி மக்கள் வழங்கிய மொழியும் மேற்கு ஆசியாவிலே சுமேரிய மக்கள் வழங்கிய மொழியுமா கும் என்று கொள்ளுதல் பிழையாகாது” - சர் ஜான் மார்சல்.1
“திராவிட மொழியை வழங்கும் மக்களே பலுச்சிஸ்தானம், வட இந்தியா, வங்காளம் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பது மறுக் கப்படாத உண்மையாகக் கொள்ளப்படுகின்றது.” - எஸ்.கே. சட்டேர்ஜி2
“திராவிட மக்களைத் தொடர்பாகக் கிரேத்தா (Crete) இலைசியா முதல் சிந்துவெளி தென்னிந்தியா வரையில் நாகரிக வகை அளவிலாது நாம் தொடர்புபடுத்திக் காணலாம். இம் மக்களின் நாகரிகம் உலோக காலத்தொடக்கத்திலும் பசிபிக் தீவுகள் வரையில் பரவியிருந்தது. தென் னமெரிக்காவிலுள்ள பீரு வரையிற் சென்றிருந்ததெனவும் கூறலாம்.” - அர்.தி. பனோசி3
“ஆரியர் தென்னிந்தியாவில் தமது மொழியை நாட்ட முடியா திருந்தது வியப்புக்குரியது. அவர்கள் வட இந்தியாவில் தமது எண் ணத்தை நிறைவேற்றினார்கள். ஆரியர் வருவதன் முன் திராவிட மொழி வட இந்தியாவில் வழங்கியதென்பதில் ஐயம் இன்று. இது, பலுச்சிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் பல திராவிடச் சொற்கள் காணப்படுவதைக் கொண்டு நன்கு துணியப்படும். அச் சொற்கள் திராவிடச் சொற்களாயிருப்பது மாத்திரமல்லாமல், அச் சொற்களுக் குரிய கருத்தையும் உடையனவாயிருக்கின்றன. சமக்கிருதத்தில் பல திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். இதனால் கொள்ளப்படும் முடிவு, வடநாட்டில் ஆரியர் வருகைக்கு முன் திராவிட மொழி வழங்கியது என்பதே யாகும். இந்திய நாட்டில் வழங்கும் மற்றைய மொழிகளை ஆராயும்போதும் இம் முடிவே உண்டாகின்றது. ஆகவே, வடஇந்தியாவில் திராவிட மொழி வழங்கிற்று என்பதைக் குறித்துச் சிறிதும் ஐயப்பட வேண்டியதில்லை” - எம்.டி. பண்டார்க்கர்4
“புதிய கற்காலத்தில், விந்திய மலையை அடுத்த இடங்களல்லாத இந்தியா முழுமையிலும் திராவிட மொழியே வழங்கிற்று. சமக்கிருத பிராகிருதச் சொற்களைப் பெற்றமையால் பழைய மொழியே வட இந்தியாவில் பல பெயர்களைப் பெற்று வழங்குகின்றது. வட இந்திய மக்கள் திராவிடத்துக்கு இனமான மொழிகளையே வழங்கி வந்தார்கள் என நான் துணிகின்றேன். மொழிகளைச் சொல்லால் மாத்திரமன்று; அமைப்பினால் அறிய வேண்டும்.” - பி.தி. சீனிவாச ஐயங்கார்1
“இன்று சமக்கிருத இனத்தைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வட இந்திய மொழிகள், இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்துள்ளன. வட இந்திய தென்னிந்திய மொழிகளிலுள்ள வசனங்களைச் சொல்லுக்குச் சொல் அமைத்து ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இலகு வில் மொழி பெயர்க்கலாம். இதனால் தமிழுக்கு இனமான மொழியைப் பேசிய மக்களே இந்தியா முழுமையிலும் வாழ்ந்த மக்களாவர் என விளங்குகின்றது.” - பி.தி. சீனிவாச ஐயங்கார்
“ஆரியர் வருகைக்கு முன் திராவிடர் சிந்துவெளியில் வாழ்ந் தார்கள் என்பதற்கு நியாயமான காரணங்கள் புலப்படுகின்றன. பலுச் சிஸ்தானத்தில் பிராகூயர் வழங்கும் மொழி திராவிடத்துக்கு இனமா யிருப்பதால் இது நன்கு அறியப்படும். இது மற்றச் சான்றுகளை விடச் சிறந்தது. ஹைதராபாத்து, சென்னை முதலிய இடங்களில் கிளறிக் கண்டு பிடிக்கப்பட்ட சமாதிகளிற் காணப்பட்ட பொருள்களில் மொகஞ் சதரோ, அரப்பா முதலிய இடங்களில் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் காணப்பட்டன. இவ் விடங்கள் திராவிட மொழி வழக்குக் குரிய நாடுகளாகும். திராவிடர் சிந்துவில் கி.மு. 1100க்கு முன் வாழ்ந் தார்கள். அவர்களிடமிருந்தே சிந்து நாகரிகம் ஆரியர்2 கைக்கு மாறிற்று.
“ஆரியர் மத்திய ஆசியாவிலே காட்டு வாழ்க்கையினராயிருந்த காலத்தில், இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் செமித்தியரை ஒத்த நாகரிக முடையவர்களாயிருந்தனர். சாலமன், ஹிரம் என்னும் அரசர் இம் மக்களோடு வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததோடு, திராவிடச் சொற்களையும் தமது மொழிகளில் சேர்த்து வழங்கினர்” - ஜி.ஆர். ஹன்டர்.
“சர். ஜான் மார்சல் கூறியதுபோலவே பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும் முடிவு செய்துள்ளார்கள். ஹெரஸ் பாதிரியார், பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆராய்ச்சிப் புலமை நடத்துகின்றார். அவர் சிந்துவெளிப் பழைய நகரங்களிற் கிடைத்த பட்டையங்களை வாசித்துச் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று நாட்டியுள்ளார். இவ்வாறு நாட்டிய பெருமை அவருக்கே உரியது. சிந்துவெளியில் மாத்திரமன்று. தெற்கிலும் திராவிடர் வாழ்ந்தனர். வடக்கே திராவிட மக்கள் உன்னத நாகரிகமுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது வால்கா ஆற்றங்கரையை அடுத்த நாடுகளில் வாழ்ந்து கொண் டிருந்த மக்கள், அவர்களைத் தமது மிருக பலத்தால் வென்று அவர் களின் நாகரிக முறைகளைப் பின்பற்றினார்கள் என்றும் அவர் கூறியுள் ளார். பிற்காலங்களில் ஆரியர் நாகரிகம் என ஒன்று எழுந்தது. அது ஆரியர் தமிழர் நாகரிகங்கள் கலந்த அமைப்புடையது.” - சர்க்காரி1
“1931இல் சர். ஜான் மார்சலின் பெரிய நூல் வெளிவந்தது. அதில் மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியருக்கு முற்பட்டவர்கள் என்றும், பிற்காலங்களில் திராவிடர் எனப்பட்ட மக்கள் இனத்தை அவர்கள் சேர்ந்தவர்கள் என்றும் உறுதியாக நாட்டப்பட்டுள்ளது. இதைப் பற்றிய வாதங்கள் இன்னும் ஒழியவில்லை. இந்தியாவிலுள்ள சிலர் இக் கருத்தை எதிர்த்தார்கள். அவர்கள் மறுத்தமைக்கு முதன்மை யான காரணம், மொகஞ்சதரோ நாகரிகம் போன்ற உன்னதமானது, திராவிடருடையதாயிருக்க முடியாதெனக் கருதியதாகும். ஆகவே அது ஆரியருடையது என்று அவர்கள் சாதித்தார்கள். மொகஞ்சதரோவிற் காணப்பட்ட இலிங்கங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர் என் பதைக் காட்டவில்லை என்றும், இவ் வணக்கம் இருக்கு வேத காலத்தில் அரும்பியிருந்து மொகஞ்சதரோ காலத்தில் முற்றாக வளர்ச்சியடைந் துள்ளது என்றும், ஆகவே மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியர் என்றும் மொகஞ்சதரோ மக்கள் ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் வந்தவர்களாவர் என்றும் கூறுவாராயினர். இதுவரையும் மொகஞ்சதரோ எழுத்துகளைப் பற்றி வந்த ஆராய்ச்சிகளுள் முதன்மையுடையது ஜி. ஆர். ஹன்டர் செய் துள்ளதேயாகும். அவர் மொகஞ்சதரோ அரப்பா என்னும் நகரங்கள், திராவிடரால் கட்டப்பட்டவை என்றே கூறியுள்ளார். இதனால் மொகஞ் சதரோ நாகரிக காலத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளின் முன், ஆரியர் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் என்று ஒரு காலத்தில் நாட்டமுடி யுமா யிருப்பினும் அந் நாகரிகம் ஆரியருடையதன்று என்றே உறுதிப் படும்.
“திராவிடர் தென்னிந்தியாவுக் குரியவர்கள் என்று நாம் நினைத் துப் பழகி விட்டோம். அதனால் அவர்கள் வடஇந்தியாவில் வாழ்ந் தார்கள் என்று கூறி, நாம் நம்பச் செய்தல் கடினமாயுள்ளது. திரா விடர்கள் தாமும், தம் முன்னோர் வட இந்தியாவில் பெருமை பெற்று வாழ்ந்தார்கள் என்று கூறவில்லை. இருக்கு வேதம் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் நேர்ந்த போர்களைப்பற்றிக் கூறுகின்றது. இதிகாச காலத்தில் பல திராவிடக் கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். காந்தாரர், மச்சர், நாகர், கருடர், மகிஷர், பலிகர் முதலிய சாதியினரைக் கொண்டு வட இந்தியரில் அதிக திராவிட இரத்தம் ஓடிக்கொண் டிருந்தது என்று அறிகின்றோம். வடக்கே வழங்கும் பிராகூய், ஒரியா முதலிய மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியா முழுமையும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டும். திராவிடர் இந்திய நாட்டிலேயே வாழ்ந்தார்கள்.” - ஹெரஸ் பாதிரியார்.1
மொகஞ்சதரோ மக்கள் ஆரியரா? திராவிடரா?
(ஹெரஸ் பாதிரியார் - Rev. H. Heras. S.J.)
மொகஞ்சதரோ நாகரிகம் திராவிடருடையதன்று என ஆரியப் பற்றுடையார் பலர் இடையிடையே எழுதி வருகின்றனர் என்றும், அவர்களுடைய ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி அறிஞரால் இதுவரையில் ஒப்புக்கொள்ளப்படவில்லை எனவும் பிறிதோரிடத்திற் காட்டியுள் ளோம். அவ்வாறு எழுதியவர்களுள் டாக்டர் லக்சுமன் சரூப் (Dr. Laxman Sarup) என்பார் ஒருவராவர். அவர் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரிய ருடையது எனக் கூறியதை மறுத்து ஹெரஸ் பாதிரியார்2 ‘இந்திய வரலாற்று இதழில்’, எழுதி யிருப்பது மிக இன்பம் விளைப்பதா யிருக் கின்றது. அதன் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம்.
பேராசிரியர் ஆர்.டி. பானர்ஜியும், சர். ஜான் மார்சலும் மற்றும் இந்திய ஐரோப்பிய ஆராய்ச்சியாளரும் காட்டியவைகளுக்கு மாறான கொள்கை ஒன்றை நிறுத்துவது சரூப்புக்கு வில்லங்கமாகும். ஆனால் சரூப்பின் உண்மை யல்லாத கருத்துகள், அவ்வாறு செய்தல் எளிதுபோற் காணப்படலாம்.
ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அங்குத் தாசுக்கள் அல்லது தாசர் என்று அழைக்கப்பட்ட ஒரு சாதியார் வாழ்ந்தார்கள் என்றும், மொகஞ்சதரோ நாகரிகம் கிராம நாகரிகமல்லாத நகர நாகரிக மென்றும் சரூப் சொல்லுகின்றார். பிராமண காலத்துக்கு முன் ஆரியரிடையே நகர நாகரிகம் இல்லை எனவும், அவர் புகல்கின்றார். ஆகவே, மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்த தென்பது அவர் முடிவு.
இருக்கு வேத காலத்தில் ஆரியருடைய நாகரிகம் கிராம நாகரிக மாக இருந்ததென்பது உண்மையே. இருக்கு வேத இருடிகள் தாசரின் புரங்களைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அவை கிராம நாகரிகத்தினிடையே காணப்பட்ட நகர நாகரிகங்களாகும். ஆகவே நாம் இருக்கு வேத காலத் தில் ஆரியரிடையே நகர நாகரிகம் உண்டாகவில்லை எனத் துணிந்து கூறலாம். நகர நாகரிகமுடைய தாசர்களிடமிருந்தே ஆரியரும் நாகரிகத் தைக் கற்று உயர்வடைந்தார்கள். சரூப் கொண்டு வந்த நியாயங்களே சிந்துவெளி நாகரிகம் தாசுக்களுடைய தென்று நன்கு காட்டுகின்றன.
வாணிகம் பயிர்ச் செய்கைக்குப் பிற்பட்ட வளர்ச்சி எனச் சரூப்பு கூறியது உண்மையே. இதனால் மொகஞ்சதரோ நாகரிகம் இருக்கு வேத காலத்துக்குப் பிந்தியதெனச் சரூப் கருதுகின்றார். இருக்கு வேத காலத் தில் ஆரியர் பயிரிடுவோராக இருந்தனர். இருக்கு வேதத்தில் வாணிகத் தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வணிகராகிய பாணியர் பெருஞ் செல்வத் தைத் தொகுத்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்கள் ஆரியரின் ஒளியுடைய தேவரை வணங்காதும், இருடிகளுக்குத் தக்கணை கொடாது மிருந்தார்கள் என்றும் இருக்கு வேதம் கூறுகின்றது. பாணியர் (Panis) என்பார் தாசுக்களில் ஒரு பிரிவினரென்று எல்லா ஆராய்ச்சி யாளரும் கூறியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு முன் இந்திய வாணிகம் ஓங்கியிருந்ததென்பதை எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்கின்ற னர். ஹேவிட் (G.F. Hewitt) என்னும் ஆசிரியர், ஆரியருக்கு முற்பட்ட திராவிடரின் நாகரிகத்தைப்பற்றி மிக நியாயமான முறையிற் கூறியுள் ளார். அவர் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு: “அதிக வியாபாரப் பண்டங்களை இந்தியா வெளிநாட்டுக்கு அனுப்பும் படி செய்தவர்கள் ஆரியர் அல்லர் என்பதற்கேற்ற ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. திராவிடர், ஆரியர் வருகைக்கு முன்னரே உள்நாட்டு வெளிநாட்டு நாகரிகத்தை நாட்டியுள்ளார்கள். இவ் வகை வாணிகத்தை உயர்ந்த நாகரிகமுடைய மக்களே தொடங்கியிருக்க முடியும். மாபாரதத் தில் கூறப்பட்டுள்ளவை போன்ற பல பட்டினங்கள் இருந்தனவாதல் வேண்டும். வணிகர் உலோக வகைகள், காடுபடுபொருள்கள், விளை பொருள்கள் கைத்தொழிற் பண்டங்கள் முதலிய பண்டங்களில் வாணிகம் நடத்தினர். கொத்தரும், தச்சரும் இல்லாது பட்டினங்களைக் கட்டமுடியாது. நுண்ணிய மசிலின் ஆடைகளும், முரடான துணிகளும் அக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவைகளை நெய்யும் நெசவாளர் பட்டினங்களில் கூட்டமாக வாழ்ந்திருக்க வேண்டும். இரும்பினால் ஈட்டி, மரந் தறிக்கும் கோடரி, பயிரிடுவதற்குப் பயன்படும் மண் வெட்டி, கொழு, தச்சு வேலைக்குரிய ஆயுதங்கள் முதலியன செய்யப்பட்டன. பலவகை அணிகலன்களைச் செய்யும் பொற்கொல்லரும் நகரில் வாழ்ந்திருக்க வேண்டும். பலவகை அணி கலன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. துணிகளுக்குச் சாய மூட்டுவோரும் அங்கு வாழ்ந்தனர். அவர்கள் தாவரப் பொருள்களி லிருந்து சாயம் பெறும் முறையை அறிந்திருந்தார்கள். பானை, சட்டி முதலிய மட்பாண்டங்களைச் செய்வோரும், பலவகைப் பண்டங்களைக் கொண்டு விற்கும் வணிகரும் இருந்தார்கள். இத் தொழில்களில் ஒன்றை யும் ஆரியர் ஏற்று நடத்தவில்லை.
“உலோகங்களை அளிக்கும் சுரங்கங்கள் அயல் நாட்டு வாணி கரின் கவர்ச்சிக் குரியனவாயிருந்தன. உலோகங்களை அரித்தெடுக்கும் சுரங்க வேலை என்பது பூமிக்கு மேல் உள்ள கற்படைகளை மேலால் சுரண்டுவதன்று; நிலத்தைக் குடைந்து ஆழ அகழ்வது. இத் தொழிலுக்கு மிகுந்த திறமையும், அரித்தெடுக்கும் மண்ணோடு கலந்துள்ள உலோகத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் அறிவும் வேண்டும்.”
“பயிர்த் தொழில் வளர்ச்சியடையாதிருந்தால் பெருந்தொகை வணிகர், தொழிலாளர், சுரங்க வேலையாளர், காடுபடு பொருள்களைச் சேகரிப்போர் முதலியோர் இருக்க முடியாது. மிளகு, எண்ணெய், நெய் முதலியன வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.”
“இருக்கு வேத காலத்தில் வீரர் தேர்களில் இருந்து போர் செய் தார்கள். தேர்கள் செய்வதன் முன் வண்டிகள் செய்ய மக்கள் அறிந்திருக்க வேண்டும். மிகப் பழைய சாதகக் கதைகளுள் இரண்டனுள் காசியி லிருந்து ஐந்நூறு வண்டிகள் வியாபாரப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இவை போன்ற பல கதைகள் காணப்படுகின்றன. இக் கதைகள் எழுதுவதன் நீண்ட காலத்துக்கு முன், இவ் வகைப் போக்குவரத்துகள் இருந்தனவாதல் வேண்டும். ஆகவே ஆரியர் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த திராவிடர் வாணிகராக இருந்தார்கள். இதனால் மொகஞ் சதரோ நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டதென்று துணியப்படுகின்றது. வேத கால ஆரியரின் சந்ததியார் அம் மக்களிடமிருந்து வாணிக முறைகளைப் பயின்றார்கள்.”
சமயம்
மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்தினும் பார்க்க வேத காலத்துக்கு அண்மையிலுள்ளது என்று சரூப் கூறுகின்றார்.
இதனை உறுதிப்படுத்துவதற்கு அவர் சிவனைப்பற்றி எடுத்துக் கொண்டார். சிவனைப்பற்றிய அடையாளங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இருக்கு வேத காலத்தில் சிவன் சிறு தெய்வம் எனக் காட்டிவிட்டு, அத் தெய்வம் எப்படிப் புராண காலம் வரையில் படிப்படி யாக பெரிய தெய்வமாக வளர்ச்சியடைந்துள்ளதெனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் ஆரியர்களிடையே சிவ வழிபாடு இருந்த தென்று இன்றுவரையும் எந்த ஆராய்ச்சியாளராலும் காட்ட முடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகவும் இருக்கு வேதத்திற் கூறப்பட வில்லை. சிவா என்னும் சொல் உருத்திரனுக்கு அடையாக ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்றாகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள்படுகின்றது. இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத் தில் சிவன் மூர்க்க குணமுடையவராகவும் சில வேளைகளில் சாந்த முடையவராகவும் கூறப்பட்டுள்ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேசுரமூர்த்திக்குரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில் இதற்கு இணை காண முடியவில்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத்தனவென்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியச் சார்பான சிவமதம் வளர்ச்சியடைந்திருந்தது. அங்குக் காணப்பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்ட எவையேனும் ஆரியருக்கு உரியனவல்ல. அவைகளுட் சில பிராமண காலத்தனவாயின், அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரன் என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி?
வேத கால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின்ற னர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்த தென்று கூறமுடியாது. வேத கால இருடிகள் இலிங்க வணக்கத் தைக் கண்டித்தார்கள். அவர்களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சியடைந்திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. அது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ்சதரோ காலத்திய வணக்கத்தைக் கண்டித்தவர்கள் மொகஞ்சதரோ மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவ மேத யாகங்கள் இலிங்க சம்பந்தமானவை என்று கூற முடியாது. அவை இடக்கரானவை. இருக்கு வேத ஆரியர் எழுத்தைப் பற்றி அறியார்கள். ஆகவே மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்தது என சரூப் கூறுகின்றார். பறவை, மீன், பூ, மனிதர், வீடுகள், கட்டில்கள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கும் எழுத்துகள் பிராமண காலத்தன என்று கூறமுடியாது. இருக்கு வேத காலத்திலும் எழுத்தெழுத அறிந்தவர்கள் இருந்தார்கள். ஆரியர் கூறும் பாணியர் (Panis) ஆரியரல்லாதவர். அவர்கள் காலத்தில் ‘கிராதியர்’ எனப்பட்டார்கள். ‘கிராதின்’ என்பது எழுத்தைக் குறிக்கும். இவர்கள் வாணிகத் தொடர்பான கணக்கை எழுதி வைத்திருந்தார்கள். மொகஞ்சதரோ கால முத்திரைகளையும் சூமரிற் காணப்பட்ட முத்திரைகளையும் நோக்கும்போது மொகஞ்சதரோ எழுத்துகள் இருக்கு வேதத்துக்கு முற்பட்டவை என நன்கு தோன்றும். தமிழர் வழங்கிய ஒருவகை எழுத்து, பட எழுத்து என, யாப்பருங்கல விருத்தியில் ஓரிடத்திற் காணப்படுகிறது.
மொகஞ்சதரோ அரப்பா நாகரிகம் கி.மு. 3000 வரையிலுள்ளது. மித்தனி கிதைதி நாடுகளில் 1500 வரையில் ஆரியத் தெய்வங்கள் காணப் படுகின்றன என்று சரூப் கூறுகின்றார். கலியுகம். கி.மு. 12,100 வரையில் தொடங்குகின்ற தென்றும், அது உதிட்டிரன் இராச்சியம் இழந்தபின் உண்டானதென்றும், இருக்கு வேதம் உதிட்டிரன் இராச்சியம் இழப்ப தற்கு முற்பட்டதென்றும் ஆகவே இருக்கு வேதம் கி.மு. 12,100க்கு முற்பட்ட தென்றும் அவர் கூறியுள்ளார்.
டாக்டர். கீத் (Dr. Barriedale Keith) என்பார் பல வகையான நியாயங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்து இருக்கு வேதம் கி.மு. 1300க் கும் கி.மு. 1000க்கும் இடையிற் செய்யப்பட்டதென முடிவு கட்டியுள் ளார். வேத காலம் கி.மு. 2000 எனக் கூறுதல் தவறு என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இருக்கு வேத காலத்தில் மதில்களால் சூழப்பட்ட நகரங்ளைக் கட்டி வாழ்ந்தவர்கள் திராவிடரே. மயன் என்னும் திராவிடச் சிற்பியால் கட்டப்பட்ட உதிட்டிரனின் அரண்மனையிலேயே உயிர், மரணம் என்பவைகளைப்பற்றி ஆராயும் உபநிடத ஞானங்கள் தோன்றின.
மொகஞ்சதரோ முத்திரையில் காணப்படும் சிவன் வடிவம்1
ஆரியரின் உருத்திரன், பிற்காலத்தில் சிவன் வடிவை அடைந் திருந்தார் என்பது தெளிவு. இலக்கிய காலத்தில் சொல்லப்படும் சிவனைப் பற்றிய சிறப்புகள், வேத காலத்தில் அறியப்படாதிருந்தன. உருத்திரன் வேதத்தில் புயற் கடவுளாகக் காணப்படுகின்றார். பிற்காலத் தில் சிவனுக்குக் கூறப்படும் சிறப்புகள் ஒன்றும் உருத்திரனுக்குக் கூறப்பட் டிருக்கவில்லை. சிவனின் ஆதிகால வடிவை நாம் கி.மு. 3000இல் காண்கின்றோம். மொகஞ்சதரோ காலம் கி.மு. 3000 என்பதைச் செற்ரன் லாயிட் என்பார் தெல் அஸ்மார் (Tell asmar) என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையை ஒத்த ஒரு முத்திரையில், இந்திய யானை, காண்டாமிருகம், முதலை முதலியவை பொறிக்கப்பட் டிருந்தமை கொண்டு நன்கு துணிந்துள்ளார்.
பழைய ஹங்கேரிய எழுத்தும் பிராமியும்2
பழைய துருக்கி ஹங்கேரிய எழுத்துகளுக்கும் பிராமி எழுத்து களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதியமை, இயலாதது போல் தொடக்கத்தில் தோன்றலாம்; ஆனால் தொடர்பு காணுதல் கடினமா யிருக்கவில்லை. பேராசிரியர் நேமெத் (Professor Nemeth) என்பார், துருக்கித்தானம், மத்திய ஆசியா, மங்கோலியா முதலிய இடங்களில் இவ் வெழுத்தொலிகள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். அக் காலத் தில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதி இந்திய நாகரிகச் சார்பு பெற் றிருந்ததென்றும், துருக்கித்தானம் மத்திய ஆசியா முதலிய இடங்களின் பகுதிகள் புத்த மதத்தைத் தழுவி யிருந்தன வென்றும் நாம் எடுத்துக் காட்டுகின்றோம். அண்மையில் அவ் விடங்களில் கரோஸ்தி, பிராமி எழுத்துகளில் வரையப்பட்ட கையெழுத்துச் சுவடிகள் பல கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளில் மிகப் பிற்காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவில் கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டு வரையில், பிராமி எழுத்துகள் வழங்கின என்று நாம் தீர்மானமாகக் கூறலாம். ஆசிய நாகரிக ஒற்றுமை மேற்கே, டான்யூப் நதிவரையில் இருந்ததென நம்புவதற்குத் தக்க காரணங்கள் உண்டு.
சிவன் ஆரியருக்கு முற்பட்ட கடவுள்3
யோகத்தைப் பற்றிய சாதனையும், கருத்தும் முற்கால பிற்கால வேத மதத்துக்குப் புறம்பானவை. சண்டா (Chanda) என்பார் யோகத் தைப் பற்றிய கருத்துகளைச் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்க ளென்பதை, அங்குக் கிடைத்த முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் வடிவத்தைக் கொண்டு தெள்ளிதில் அறியலாம் எனக் கூறி யுள்ளார். அக் கால மக்கள் தம் கடவுளுக்கு யோகி ஒருவரின் வடிவைக் கொடுத்ததோடு அவருக்குத் தவத்தையும் உரிமையாக்கினார்கள். கடவுள் படைத்தலாகிய தொழிலைப் பெறுவதற்குத் தவம் செய்யவேண்டுமென அவர்கள் நம்பியிருக்கலாம். மனிதன் தன்னளவில் கடவுளைப் பற்றியும் நினைக்கலானான். கடவுளர் தவஞ் செய்தலால் உயர்நிலை அடைந்தனர் என, அவன் நினைத்தான். இக் கருத்தினாலேயே இந்திய மக்கள் கடவுளை யோகியின் வடிவில் வழிபடலானார்கள். சாங்கியத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. யோகத்தைப் பற்றிய தத்துவக் கருத்து, கடவுள் கொள்கையோடு, சாங்கியக் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதாயுள்ளது. யோகத்தைப்போலச் சாங்கியமும் வேத சம்பந்தமில்லாதது என்று கருதப்படுகின்றது. யோகத்தில், ஆரியரல்லாத மக்களின் கருத்துகள் உள்ளன என்று நெடுங்காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியருடைய கருத்துகள் எல்லாம் மேலானவை; அல்லாதன இழிந் தவை என்னும் தவறான கருத்தினால் இம் மேலான கருத்துகள் ஆரிய ரிடமிருந்தன்றி வரமுடியாது என மக்கள் நம்புவாராயினர்; ஆனால் அக் கருத்துகளில் ஆரியச் சார்பு இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வணக்கம் இருந்த தென்பதற்குத் தனிப் பட்ட சான்றுகள் உண்டு. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல இலிங்கங் களைக் கொண்டு இருக்கு வேத சம்கிதையில் ‘சிசினதேவர்’ எனக் குறிப் பிட்டுள்ளோர் ஆரியரின் பகைவரையே எனத் தெரிகின்றது.
ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ எழுத்துகள்1
பசிபிக் கடலிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ முத்திரை களிற் காணப்பட்டன போன்ற எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளைக் குறித்த விளக்கம் வருமாறு:
ஜி.ஆர். ஹண்டரின், “அரப்பா மொகஞ்சதரோ எழுத்துகளும், அவைகளுக்கும் - மற்றைய எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு” என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் சிந்து, ஈஸ்டர் தீவு எழுத்துகளுக்குள்ள ஒற்றுமைகளைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியதில்லை எனப் பேரா சிரியர் இலாங்டன் என்பார் கூறியுள்ளார். எப்படி இவ் விந்திய எழுத்துகள் மிகத் தொலைவிலுள்ள ஈஸ்டர் தீவுக்குச் சென்றனவென்று எவராலும் கூற முடியாது. மரக்கட்டைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்ற ஈஸ்டர் தீவு எழுத்துகளின் காலம் அறியமுடியவில்லை. சிந்துவெளியிற் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் சூமர், சூசா தைகிரஸ் ஆற்றை அடுத்த இடங்கள் என்பவைகளிற் காணப்பட்டன. “பொலினீசிய ஆராய்ச்சிச் சங்கச் சார்பில் வெளிவரும் இதழில் சிந்துவெளி எழுத்துக ளோடு ஒற்றுமையுடையனவாகக் காணப்படும், ஈஸ்டர் தீவு எழுத்துகள் படமமைத்துக் காட்டப்பட்டுள்ளன. அவைகளை முன் பக்கத்திற் காண்க.
இந்தியா நாகரிகத்தின் தொட்டில் - டாக்டர் பிறாங்போர்ட்
(Dr. Frank fort) கூறுவது
கிரேக்கப் பழங்கதைகளுக்கு அடிப்படை மெசபெத்தோமியாவிற் காணப்படுகின்றது. மெசபெத்தோமியாவில் இமிலுள்ள இடபத்தின் வடிவம் காணப்பட்டது. இந்திய இடபம் மெசபெத்தோமியரால் வழிபடப்பட்டது. எகிப்திய நாகரிகம் மெசபெத்தோமிய நாகரிகத்தி லிருந்து தொடங்கிற்று. மெசபொதோமிய நாகரிகம் இன்னொரு இடத்திலிருந்து வந்தது என்று புலப்படும். அது பாரசீக பீடபூமியாக லாம். அவ் விடத்தை நன்கு ஆராய்ந்து சென்றால் நாம் சிந்துவெளியை அடைகின்றோம். இந் நாகரிகத்திலிருந்தே மெசபெத்தேமிய நாகரிகமும், எகிப்திய நாகரிகமும் தோன்றின.2
கருத்துகள்
கருத்துரையிடுக