இராபின்சன் குரூசோ
வரலாறு
Back
இராபின்சன் குரூசோ
ந.சி. கந்தையா
இராபின்சன் குரூசோ
1. இராபின்சன் குரூசோ
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. இராபின்சன் குரூசோ
நூற்குறிப்பு
நூற்பெயர் : இராபின்சன் குரூசோ
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16 + 88 = 104
படிகள் : 1000
விலை : உரு. 45
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
இராபின்சன் குரூசோ
எனது பெயர் இராபின்சன் குரூசோ. நான் இங்கிலாந்திலே யார்க்குப் பட்டினத்தில் 1632ஆம் ஆண்டு பிறந்தேன். சிறுவனாயிருந்த போது எனக்குக் கடற்பயணம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் உண்டு. இதனை அறிந்த என் பெற்றோர் அபாயத்துக்கு ஏதுவான இவ்வெண்ணத்தை விட்டு வீட்டில் இருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சொற்படி நான் சில காலம் வீட்டிலிருந்தேன்.
இவ்வுலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்றேன். அவன் அப் போது தன் தந்தையின் கப்பலில் இலண்ட னுக்குப் போகப் புறப் பட்டுக் கொண்டிருந்தான். அவன் என்னையும் தன்னுடன் வரும்படி அழைத்தான்; பயணத்துக்கு யாதும் செலவு வேண்டியதில்லையென்றும் சொன்னான். நான் என் பெற்றோருக்கு அறிவியாமலே கப்பலில் ஏறிப் பயணஞ் செய்தேன்.
கப்பல் பாய்விரித்துச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் கழிந்ததும் புயற்காற்று வேகமாய் அடித்தது. கடல் கொந்தளித்துப் பயங்கரமாய் மூழங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்னுடனிருந்தவர் பயந்து நடுங் கினர். நானும் பெரிதும் பயந்தேன்; என் தந்தையார் கூறிய புத்திமதிகளைக் கேட்டிருந்தால், நான் இவ்வகை ஆபத்துக்குள்ளாயிருக்கமாட்டேன் என்று நினைத்துக் கலங்கினேன்; இவ்வபாயத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனித் தந்தையார் சொற்படி நடந்து கொள்வேன் என்று பலவாறு எண்ணிக் கொண் டிருந்தேன். புயுல் நின்று, கடல் அமைதி அடைந்தது. என் மனத்திலிருந்த பயம் போய்ப் பயணத்தில் இன்பம் பிறந்தது. ஐந்து நாட்கள் சிறிதும் குழப்ப மின்றிக் கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. பின்பு மிகக் கொடிய புயல் அடித்தது. திரைகள் தட்டுகளின் மேல் நீரை இறைத்தன. கப்பலில் ஒரு வெடிப்பு உண்டாயிற்று. அது வழியாக நீர் உள்ளே வந்துகொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் எங்கள் கப்பலுக்கு அருகில் நின்ற மற்றொரு கப்பலிலிருந்து படகு ஒன்று உதவிக்கு வந்தது. உடனே நாங்க ளெல்லோரும் ஓர் ஆபத்துமின்றி எங்கள் கப்பலினின்று இறங்கி, அக்கப்பலில் ஏறினோம்; அக்கப்பலிலேறித் தப்பிப் பிழைத்துக் கரையை அடைந்தோம். கரையில் கும்பலாய்க் கூடியிருந்த மக்கள், எங்களுக்கு உதவியளிக்க ஆயத்தமாயிருந்தார்கள். அவர்கள் எங்களுக்குப் பொருளுதவி செய்து நாங்கள் வந்த வழியே ஹல் நகருக்காவது இலண்டன் நகருக்காவது சொல்லலாமென்று சொன்னார்கள்.
அதன் பின்பு நாங்கள் ஏறி வந்த கப்பலதிகாரி, “நீங்கள் யார்? எவ்வூருக்குப் போகிறீர்கள்? உங்கள் தொழிலென்ன?” என்று ஒவ்வொரு வராகக் கேட்டு வந்தார். அவர் என்னை இவ்வாறு கேள்விகள் கேட்டபோது நான், “கடற்பயணம் எப்படிப்பட்டதென்பதை அறிந்துகொள்ளப் பயணஞ் செய்கிறேனே தவிர, எனக்குத் தொழில் இல்லை,” என்று பதில் கூறினேன். அவர் என் மீது கோபம் கொண்டார்; பெற்றோரின் அனுமதியின்றிப் பயணஞ் செய்தபடியாலேதான் புயல் உண்டாயிற்று எனக் கூறினார்; “இனி உன்னைக் கப்பலில் ஏற்ற முடியாது,” என்றும் சொன்னார். நான் திரும்பி வீடு போய்ச் சேர விரும்பாதவனாய்த் தரை வழியாக இலண்டன் நகரை வந்தடைந்தேன்.
நான் இலண்டனை வந்தடைந்த சில நாட்களின் பின்பு அங்கிருந்து ஆப்பிரிக்காக் கரைகளுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறினேன். நான் ஆப்பிரிக்காவை அடைந்து, அங்குள்ள காட்டு மக்களோடு செய்த வியாபாரத்தில் சிறிது தங்கம் கிடைத்தது. நான் அதனை இலண்டனுக்குக் கொண்டு வந்து விற்றுவிட்டு, மறுபடியும் வாணிகம் செய்யும் பொருட்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன்.
எங்களுடைய கப்பலைக் கடற் கொள்ளைக்காரரின் கப்பல் பின் தொடர்ந்தது. நாங்கள் எங்கள் பீரங்கிகளால் அதனை நோக்கிச் சுட்டோம். கடற்கொள்ளைக்காரர் எங்கள் கப்பலை உடைத்துக் கப்பலிலிருந்தவருள் சிலரைக் கொன்றார்கள்; சிலரைக் கைகளைப் பின் புறமாகக் கட்டி அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு மொராக்கோவுக்குச் சென்றார்கள். அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்களுள் யானும் ஒருவன்.
2. நான் அடிமை ஆனது
கொள்ளைக்காரரின் மாலுமி என்னை அடிமையாக்கிக் கொண்டார். நான் என் தலைவனிடம் இருந்து கடுமையான வேலைகளைச் செய்தேன். இந்நிலைமையிலிருந்து எப்படித் தப்பலாம் என நான் எப்போதும் ஆலோசனை செய்தேன்.
மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் தலைவர் என்னை அழைத்துச் செல்வார். நான் மீன் பிடிப்பதில் மிகவும் கெட்டிக்காரன். இரண்டு அடிமை களை அழைத்துக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும்படி ஒரு நாள் அவர் என்னிடம் கூறினார். அப்பொழுது எனக்கு மனத்தில் ஒரு வகை எழுச்சி உண்டாயிற்று. அன்றுதான் எனக்குத் தப்பி ஓடக் கூடிய வசதி இருந்தது. படகில் அதிக உணவு இருந்தது.
அடிமைகள் சிறிது நேரம் மீன் பிடித்தார்கள். ஆனால், நான் ஒன்றை யும் பிடிக்கவில்லை. எனது தூண்டிலில் மீன்கள் அகப்பட்ட போது நான் அவைகளை வேண்டுமென்றே போக விட்டேன். “இங்கு மீன் அகப்படாது; நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும்,” என நான் என்னுடன் இருந்த அடிமைகளுக்குச் சொன்னேன். நாங்கள் சிறிது தூரம் படகைச் செலுத்திக்கொண்டு சென்றோம். தூரத்தே சென்றதும் நான் அடிமைகளுள் ஒருவனைப் பிடித்துத் தூக்கிக் கடலில் எறிந்து, “நீ நன்றாக நீந்திக் கரையை அடைவாய். நான் உனக்குத் தீமை செய்யமாட்டேன்,” என்று சொன்னேன். அவன் கரையை நோக்கி நீந்திச் சென்றான். பின்பு நான் சூரி என்னும் மற்ற அடிமையைப் பார்த்து, “நீ என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயா, அல்லது உன்னையும் கடலில் எறியட்டுமா?” என்று கேட்டேன். அவன், “விசுவாச மாய் இருப்பேன்,” எனக் கூறினான். என் தலைவர் எங்களைத் தேடிப் படகுகளை அனுப்பக் கூடும் எனப் பயந்து, நாங்கள் விரைவாகப் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம்.
ஐந்து நாட்களின் பின் எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது; நான் தரையை நோக்கிப் படகைத் திரும்பினேன். கரையைக் கிட்டியதும் நாங்கள் கறுப்பு நிற மக்களைக் கண்டோம். உணவு வேண்டுமென்று நான் கையினாற் சைகை காட்டினேன். அவர்களுள் இரண்டு பேர் ஓடிச் சென்று இறைச்சியும் தானிய உணவும் கொண்டு வந்தனர். என்னிடம் தண்ணீர் இல்லை என்பதை அறிவிப்பதற்கு நான் என் சாடிகளுள் ஒன்றைக் கவிழ்த்துக் காட்டினேன். அதனைக் கண்டதும் இரண்டு நீகிரோவர் பெரிய சாடியில் தண்ணீர் கொண்டு வந்தனர்.
நீகிரோவரை விட்டு நாங்கள் மறுபடியும் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம். எங்குச் செல்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளாமல் நாங்கள் பதினொரு நாட்கள் பயணஞ் செய்தோம்.
ஒரு நாள் மத்தியானம் என்னுடனிருந்த அடிமை, “ஐயா! ஐயா! ஒரு மரக்கலம் பாய் விரித்துச் செல்கிறது!” என்று சத்தமிட்டுச் சொன்னான். உண்மையில் அது ஒரு மரக்கலமே. நாங்கள் மரக்கலத்திலிருந்தவர் களுக்குச் சில சைகைகளைக் காட்டி, ஒரு துப்பாக்கியால் வெடி தீர்த்துச் சத்தம் செய்தோம். அவர்கள் எங்களைக் கண்டார்கள். நாங்கள் அவர்களுக்கு அருகே செல்லும் வரையும் அவர்கள் தாமதித்து நின்றார்கள்; பின்பு மரக்கலத் தலைவன் எங்களைத் தனது மரக்கலத்தில் ஏற்றினான்.
நான் அவனிடம் எனது வரலாற்றைக் கூறினேன். அவன் தான் பிரேசிலுக்குப் போவதாகவும், என்னையும் உடன் அழைத்துச் செல்வதாக வும் கூறினான். நான் எனது படகையும் அதிலிருந்த எல்லாவற்றையும் அவனுக்கு உபகாரமாகக் கொடுத்தேன். “இவைகளை நான் பணமின்றிப் பெற்றுக் கொள்ளமாட்டேன்; உனக்குப் பிரேசில் நாட்டில் பணம் தேவையாயிருக்கும்,” எனக் கூறி, அவன் எனக்குப் பணம் கொடுத்தான். அவன் சூரியை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்தான். நான் சில நாட்களில் பிரேசில் நாட்டை அடைந்தேன்.நான் அங்கு நான்கு ஆண்டுகள் பயிரிடுபவனாய் இருந்து செல்வனானேன்.
3. மரக்கலம் உடைந்து போனது
அப்பொழுது வணிகர் சிலர் என்னைச் சந்தித்தனர். அவர்கள் என்னை ஆப்பிரிக்காக் கரைக்குச் சென்று அங்கு நீகிரோவர் விரும்பும் மணிகள், கத்திகள், கத்திரிக்கோல்கள், கோடரிகள், விளையாட்டுப் பொருட்கள், கண்ணாடித் துண்டுகள் முதலியவைகளைக் கொடுத்துப் பொன்தூள், தந்தம் முதலியவைகளை வாங்கி வாணிகம் செய்யும்படிச் சொன்னார்கள்.
ஆகவே, ஒரு கப்பலை அமர்த்திக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். பன்னிரண்டு நாட்கள் சிறிதும் குழப்பமின்றி மரக்கலம் சென்றது. பின்பு சடுதியில் புயற்காற்றுக் கிளம்பி எங்களை எங்கெங்கோ கொண்டு சென்றது. நாங்கள் உதவியற்றவர்களாய்க் கடலில் மிதந்து கொண்டிருந்தோம். மரக்கலத்துள் நீர் வரத் தொடங்கினதும் நாங்கள் உயிர் பிழைப்பதில் நம்பிக்கையை இழந்தோம். விரைவில் மரக்கலம் மணல் மேட்டில் ஏறுண்டது. கடற்றிரை எங்களுக்கு மேலாய்ப் புரண்டது.
நாங்கள் ஒரு சிறிய படகைக் கீழே இறக்கினோம். உடனே ஒரு பெரிய திரை எங்களைக் கடலுக்குள் இழுத்துக் கொண்டு போய்விட்டது. என் நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. பெரிய அலை ஒன்று என்னைக் கரைக்கு அடித்துக் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நான் கரையை அடைந்தேன். என் உயிரைப் புதுமையாகக் காப்பாற்றினதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன்.
என் நண்பர்களைக் காணலாம் என்னும் நோக்கத்துடன் நான் இங்குமங்கும் நடந்து சென்றுப் பார்த்தேன். அவர்களின் அடையாளம் ஒன்றும் காணப்படவில்லை; மூன்று தொப்பிகளும் இரண்டு சப்பாத்துகளும் மாத்திரம் காணப்பட்டன. நான் ஒருவன் மாத்திரம் தப்பிப் பிழைத்தேன்.
நான் நன்றாக நனைந்து போயிருந்தேன். எனக்கு உண்பதற்கு உணவும் குடிப்பதற்கு நீரும் இல்லை. அங்குக் காட்டு விலங்குகள் உறைய லாம். அவைகளை வேட்டையாடுவதற்கு என்னிடம் ஆயுதங்கள் எவையு மில்லை. மாலை நேரம் வந்தது. நான் எவ்விடத்தில் பத்திரமாகத் தங்க முடியும்? ஒரு தழைத்த மரம் என் கண்ணுக்குத் தெரிந்தது. அம்மரத்திலேறி இருந்து இராப்பொழுதைக் கழிக்கலாம் என நினைத்தேன். முதலில் நான் ஒரு நீரோட்டத்தைக் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் நீரைக் குடித்தேன்; பின்பு மரத்தில் ஏறி விழாதபடி ஒரு நல்ல இடத்தில் இருந்து விரைவில் தூங்கி விட்டேன்.
நான் விழித்த போது பட்டப்பகலாயிருந்தது. எனது களை தீர்ந்து போயிற்று. புயல் ஓய்ந்து விட்டது. கடல் அமைதியாயிருந்தது. கடல் அலைகள் மரக்கலத்தைத் தரைக்குக் கிட்டக் கொண்டுவந்து விட்டிருந்தன. அது பாறைகளின் மேல் நிமிர்ந்து நிற்பது போலக் காணப்பட்டது. நான் அங்குச் செல்ல விரும்பினேன். கப்பல் தட்டுகளில் உணவும் துணியும் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்.
கடல் வற்றும் நேரத்தில் கப்பலிலிருந்து கால் மைல் தொலைவுக்கு நான் நடந்து போகக் கூடியதாய் இருந்தது. பின்பு எனது மேற் சட்டையையும் சப்பாத்தையும் கழற்றி விட்டு நீரில் நீந்திச் சென்றேன்.
ஒரு சிறிய கயிறு மரக்கலத்தின் பக்கத்தே மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பிடித்துக் கொண்டு மரக்கலத்தில் ஏறினேன். தட்டில் அதிக தண்ணீர் நின்றது; உணவு உலர்ந்து போயிருந்தது; அதிக பசியாயிருந்தமையால், நான் அதிகம் உண்டேன். அங்குள்ள பொருள்கள் சிலவற்றைக் கரைக்குக் கொண்டு செல்வதற்கு எனக்கு ஒரு படகு வேண்டியிருந்தது.
படகு வேண்டுமென்று விரும்பிக் கொண்டு சோம்பியிருப்பதால் பயனில்லை. என்னால் படகு செய்ய முடியாது; எனக்குக் கட்டு மரமே போதுமானதாயிருந்தது. மரக்கலத்திலிருந்த மரப்பலகையையும் பாய்மரத் துண்டையும் கொண்டு ஒரு கட்டுமரத்தைக் கட்ட நினைத்தேன். நான் அவைகளில் கயிற்றைக் கட்டிக் கீழே விட்டேன். பின்பு நான் கீழே இறங்கி அவைகளைச் சேர்த்துக் கட்டினேன்.
பின்பு நான் கப்பற்காரருடைய மூன்று பெரிய மரப்பெட்டிகளைக் கட்டுமரத்தின் மீது இறக்கி வைத்தேன்; அவைகளுள் அரிசி, உரொட்டி, தயிர்க்கட்டி, இறைச்சி, துணிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து முதலியவை களை வைத்தேன். அங்கிருந்த ஒரு நாயையும் இரண்டு பூனைகளையும் எடுத்துப் பெட்டியில் விட்டேன். கட்டுமரத்தைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வருவது இலகுவன்று. அதிட்டவசமாகக் கடல் அமைதியா யிருந்தது. அலைகள் கரையை நோக்கி அடித்துக் கொண்டிருந்தன. நான் பழைய துடுப்பின் துணையைக் கொண்டு கரையை அடைந்தேன்.
எனது அடுத்த வேலை பொருள்களைப் பத்திரமாக வைப்பதற்கேற்ற இடத்தைக் கண்டுபிடிப்பது. சமீபத்தில் ஒரு செங்குத்தான குன்று இருந்தது. நான் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அக்குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றேன். அங்கு நின்று பார்த்த போது நான் ஒரு தீவில் நிற்பதை அறிந்தேன். அங்கு வீடோ ஆளோ காணப்படவில்லை, நான் கொண்டு வந்த பொருள் களை இறக்கி வைப்பதில் நான் அன்றைய பொழுதைச் செலவிட்டேன்.
காட்டு விலங்குகள் என்னைக் கொன்று தின்றுவிடும் என்னும் பயத்தினால் நான் வெளியே நிலத்தில் படுத்து உறங்கப் பயந்தேன். ஆகவே, நான் பெட்டிகளைச் சுற்றி அடுக்கி வைத்துப் பலகைகளைக் கொண்டும் பாய்ச் சீலைகளைக் கொண்டும் ஒரு குடிசையைக் கட்டினேன். நான் மிகவும் களைப்பு அடைந்தமையால் படுத்து நித்திரை கொண்டேன்.
அடுத்த நாள் மறுபடியும் நான் மரக்கலம் உடைந்த இடத்துக்கு நீந்திச் சென்று, இன்னொரு கட்டுமரத்தைச் செய்தேன். அதில் ஆணிகள், கோடரிகள், ஆடைகள், படுக்கை முதலானவைகளை வைத்து அவைகளைக் கரைக்குக் கொண்டு வந்தேன். நான் வெளியே சென்றபொழுது எனது உணவுப் பொருளை எவையேனும் உண்டுவிடுமோ எனப் பயந்தேன்; ஆனால், நான் விட்டுச் சென்றபடியே அவை எல்லாம் இருந்தன. காட்டுப் பூனை ஒன்று பெட்டிக்கு மேலே உட்கார்ந்திருந்தது. நான் கிட்டப் போனதும் அது ஓடித் தூரச் சென்று என்னைத் திரும்பிப் பார்த்தது. நான் எனது துப்பாக்கியை அதற்கு நேரே நீட்டினேன்; ஆனால், அது பயப்படவில்லை. நான் அதற்கு முன்னால் உரொட்டித் துண்டை எறிந்தேன். அது அதைத் தின்றது; பின்பு அது போய்விட்டது.
நான் இப்பொழுது மிகவும் பாதுகாப்பான கூடாரத்தைச் செய்தேன்; நான் படுக்கையில் ஒன்றை நிலத்தில் விரித்துக் கொண்டு படுத்துத் தூங்கினேன்.
பதினோரு நாட்களாகக் கடல் பெருக்கின்றி வற்றியிருந்தது. நான் மரக்கலத்தில் ஏறி இன்னும் வேண்டிய பலவற்றைக் கொண்டு வந்தேன். ஒரு முறை எனது கட்டுமரம் புரண்டு போயிற்று. ஆனால், பெரிய தீமை ஒன்றும் நேரவில்லை. பின்பு காற்று அதிகம் அடித்தது. மரக்கலத்தைப் பார்க்க முடிய வில்லை. திரைகள் அதைச் சுக்கல் சுக்கலாக உடைத்துவிட்டன.
4. குடியில்லாத் தீவு
காட்டு மனிதர் அல்லது காட்டு விலங்குகள் எனது கூடாரத்துள் நுழையக் கூடும் என நினைந்து நான் எப்பொழுதும் பயந்து கொண்டிருந் தேன். எனது கூடாரம் கடலுக்கு அருகில் இருந்தமையால், நிலம் ஈரமாய் இருந்தது. ஆகவே, நான் கடலுக்குப் பக்கத்தில் நல்ல தண்ணீருள்ள ஓர் இடத்தைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைக்குப் பக்கத்தில் மட்ட மான நிலம் காணப்பட்டது. அதன் பின்புறமிருந்த பாறை சிறிது குடை வுள்ளதாய் இருந்தது. அங்கு நான் எனது கூடாரத்தை அடித்தேன்.
மலைக்கு முன் இரண்டு வரிசையாக முளைகளை அடித்தேன். அம்முளைகளை எல்லாம் சுற்றித் தந்திக் கம்பியை வரிந்து கட்டினேன். இக்கம்பியை நான் முன்பு மரக்கலத்தினின்று கொண்டு வந்திருந்தேன். இவ்வேலையைச் செய்து முடிக்க எனக்குப் பல நாட்களாயின.
வேலியால் சூழப்பட்ட இடத்திற்குச் செல்ல வாயில் இல்லை. நான் ஏணியைச் சார்த்தி வைத்து, அதன் வழியாக வேலியின் உச்சியை அடைந்து, ஏணியை எடுத்து உள்ளே வைத்தேன். ஏணி வெளியேயிருந்தால் பகைவர் எவராவது எனது கூடாரத்துள் வந்துவிடுவர் என அஞ்சினேன்.
நான் என் பொருள்களை எல்லாம் வேலிக்கு உள்ளே கொண்டு சென்று வைத்து மரக்கலத்தினின்றும் கொண்டு வந்த பாய்த்துணியால் ஒரு பெரிய கூடாரத்தை அமைத்தேன். பிறகு பின்புறத்திலிருந்த பாறையில் ஒரு
குகையைக் குடைந்து கல்லையும் மண்ணையும் வேலிக்குள் உள்ள தரையில் பரப்பினேன். இதனால் தரை உயரமாயிற்று. குகை எனது வீட்டுக்கு ஓர் அறை போன்று இருந்தது.
ஒரு நாள் புயற்காற்று வீசி இடியும் மின்னலும் உண்டாயின. இதனால் வெடி மருந்து தீப்பிடித்து வெடித்து விடுமோ எனப் பயந்தேன். புயல் தனிந்த பின்பு நான் பைகளையும் பெட்டிகளையும் செய்தேன். அவை களில் வெடிமருந்தைக் கொட்டி நிரப்பி, அவைகளைப் பாறையிலிருந்த வெடிப்புகளில் வைத்து மறைத்தேன்.
நான் ஒவ்வொரு நாளும் எனது நாயுடன் வெளியே சென்றேன். அங்கு ஆடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அவை மிகவும் விரைவாய் ஓடினமையால், நான் அவைகளைச் சுட முடியவில்லை.
எத்தனை நாட்கள் கழிந்தன என்பதை அறியும் பொருட்டு நான் கடற்கரையில் ஒரு கம்பத்தை நாட்டி, அதில் வெட்டுகள் இட்டு, நாட்களைக் குறிப்பிட்டு வந்தேன். நான் அத் தீவின் கரையை 1659ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முப்பதாம் நாள் அடைந்தேன். நான் ஒவ்வொரு நாளை யும் குறிக்க ஒவ்வொரு குறுகிய வெட்டையும், ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்க நீண்ட வெட்டையும் வெட்டி வந்தேன்.
நாய் எனக்கு நம்பிக்கையுள்ள நண்பனாயிருந்தது. நாய் என்னோடு பேசாவிடினும் அது நான் சொல்லும் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டது. அது தினமும் பறவையையோ, வேறு ஏதாவது விலங்கையோ பிடித்துக்கொண்டு வந்தது.
வேலி உறுதியுள்ளதாயிருந்த போதிலும், நான் மிகவும் பத்திரமா
யிருக்கிறேனென்று நம்பவில்லை. நான் வேலியின்மேல் சுற்றிலும் புல்லைப் பரப்பினேன். அது வேலியைச் சுற்றித் தரையிருப்பது போன்ற தோற்றம் அளித்தது. இரண்டு ஆண்டுகள் கழிவதன் முன் நான் மரத்தினால் ஒரு கூரை செய்து, அதனைத் தழைகளால் வேய்ந்தேன்.
தீவில் வெயில் அதிக சூடாயிருந்தது. ஆகவே, நான் காலையில் வேலை செய்தேன்; மத்தியானத்தில் படுத்திருந்தேன்; மறுபடியும் பின்நேரத்தில் வேலை செய்தேன். ஒவ்வொரு நாட்காலையிலும் நான் எனது நாயுடனும் துப்பாக்கியுடனும் வெளியே சென்றேன்.
எனது தேவைக்குரிய பல பொருள்களை நானே செய்து கொண் டேன். முதலில் ஒரு மேசையையும் பின்பு ஒரு நாற்காலியையும் செய்தேன். இப்பொழுது நான் உணவை மேசையில் வைத்து நாற்காலியிலிருந்து உண்டேன்.
பலகைகள் ஆய்விட்டன; எனது வேலை கடுமையாயிருந்தது. நான் மரங்களை வெட்டிக் கோடரியினால் சமஞ்செய்ய வேண்டியிருந்தது. ஒரு மரத்திலிருந்து ஒரு பலகை மாத்திரமே செய்ய முடிந்தது. இவ்வாறு செய்வதற்கு அதிக காலம் தேவையாய் இருந்தது.
5. என் வேலைகள்
நான் எனது குகையைப் பெரிதாக்க நினைத்தேன். அவ் வாறு செய்வதற்கு எனக்கு கட்டபாரை, பிக்காசு, கூடை முதலி யவை தேவையாயின. வயிரமான மரம் ஒன்றைத் தறித்து அதி லிருந்து கட்டபாரை யைச் செய்துகொண் டேன். நான் மூன்று வாரம் உறுதியாக வேலை செய்து, குகையைப் பெரி தாக்கினேன். ஒருமுறை குகையின் கூரையிலிருந்து மண் விழுந்தது. ஆகவே, நான் மரங்களை மேலே வைத்து அவைகளைத் தாங்க வயிரமான கழிகளைத் தூண்களாக நாட்டினேன். அவை எனது வீட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்தன. அத் தூண்களில் நான் பல பொருள்களைத் தொங்கவிட்டேன்.
பின்பு நான் என்னுடைய குகையின் பக்கங்களில் சில தட்டுகளை அமைத்து, அவைகளில் என் ஆயுதங்களை வைத்தேன். சுவரில் மரமுளை களை இறுக்கி, அவைகளில் துப்பாக்கிகளையும் வேறு பொருள்களையும் தொங்கவிட்டேன். வேலை முடிந்ததும் தினமும் நான் நாற்காலியிலிருந்து என் தினசரிக் குறிப்புகளை எழுதுவேன்.
ஒருமுறை நான் துப்பாக்கியால் ஆட்டுக்குட்டி ஒன்றை நோக்கிச் சுட்டபோது அதன் கால் முறிந்து போயிற்று. நான் அதனைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அதற்குத் தீனி கொடுத்தேன். நாள் செல்லச் செல்ல அது நன்றாகப் பழக்கமடைந்து, என் குகையின் அருகில் நின்று புல் மேய்ந்தது.
மலையிலுள்ள வெடிப்புகளில் பறவைகளின் கூடுகள் இருப்பதை நான் பல முறைக் கண்டேன். சில சமயங்களில் நான் பறவைக் குஞ்சுகளைப் பிடித்து, அவைகளை உணவின் பொருட்டுப் பயன்படுத்தினேன்.
என்னிடம் விளக்கு இல்லாமையால் பொழுது போனதும் நான் படுத்துக் கொள்வேன். அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; ஆகவே, நான் ஒரு விளக்கைச் செய்யத் தொடங்கினேன். நான் களிமண்ணில் ஒரு சிறு அகல் செய்து அதை வெயிலில் காய வைத்தேன். அதில் நான் ஆட்டுக் கொழுப்பை எண்ணெயாக இட்டுக் கயிற்றுத் துண்டைத் திரியாகப் பயன் படுத்தினேன். விளக்கு நல்ல ஒளி தரவில்லை. விளக்கில்லாமல் இருப்பதைப் பார்க்க இது நன்றாயிருந்தது.
ஒரு நாள் நான் வேலை செய்துகொண்டிருக்கும் போது கப்பலி லிருந்து கொண்டு வந்த ஒரு கோணி எனது கண்ணிற்பட்டது. அக் கோணி யில் முன்பு தானியமிடப்பட்டிருந்தது. அதில் அப்பொழுது உமியைத் தவிர வேறொன்றையும் நான் காணவில்லை. நான் கோணியை உதறி உமியை எனது குகைக்கு அருகில் கொட்டிவிட்டு, அதைப்பற்றி மறந்து போனேன். சில நாட்களுக்குப் பின் நான் அவ்விடத்தைப் பார்த்த போது அங்குச் சில முளைகள் கிளம்பியிருந்தன. அவை வளர்ந்த பின் கதிர்கள் விட்டன. அவை வாற் கோதுமை என்பதை அறிந்து நான் மிகவும் வியப் படைந்தேன். அவைகளுக்கருகில் நெற்கதிர்களும் காணப்பட்டன. நான் உதறிக் கொட்டியவைகளுள் சில வாற்கோதுமையும் நெல்லும் இருந்தன வென்பதும் அவைகளிலிருந்து அவை முளைத்து வளர்ந்தனவென்பதும் அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.
அத்தானியங்கள் விளைந்ததும் மறுபடியும் விதைக்கும் பொருட்டு அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்தேன்.
6. பூமி நடுக்கம்
அப்பொழுது பயம் விளைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று. நான் எனது குகையின் வாயிலில் நின்றேன். சடுதியாக முகட்டிலிருந்தும் மலைச்சரிவிலிருந்தும் மண் கீழே விழுந்தது. குகைக்கு முட்டுக் கொடுத் திருந்த இரண்டு கழிகளும் பிளந்து போயின. நான் பயந்து ஏணியின் மூலம் சுவரின் மேல் ஏறி நின்றேன்; அப்படிச் செய்திராவிட்டால் மண்ணால் மூடப்பட்டிருப்பேன்.
நான் கீழே இறங்கி நின்ற போது நிலம் நடுங்கிற்று. பூமி நடுக்கம் உண்டாயிருக்கின்ற தென்பதை நான் அறிந்தேன். சிறிது தூரத்தில் பெரிய பாறை ஒன்று உரத்த சத்தத்தோடு நிலத்தில் உருண்டு விழுந்தது; கடல் பயங்கரமாக அலைகளை மோதிக் கொண்டிருந்தது.
நான் பயத்தினால் இறந்தவன் போலானேன். சிறிது நேரத்தில் வான மிருண்டது; புயல் அடித்தது; கடல் அலைகள் நுரைமயமாய்த் தோன்றின; மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இவ்வாறு மூன்று மணி நேரம் நிகழ்ந்த பின் பெருமழை பெய்தது. அப்பொழுது நான் குகைக்குள் சென்று ஒதுங்கினேன்; குகை இடிந்து விழுந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். மலைச்சரிவு அல்லாத இன்னோர் இடத்தில் வேறொரு குடிசையைக் கட்டலாம் என்று எண்ணினேன்.
நான் இரண்டு நாட்களாக எனது கோடரியைக் கூராக்கிக் கொண் டிருந்தேன். மூன்றாவது நாள் நான் கடலைப் பார்த்த போது முன் உடைந்து போன மரக்கலம் கரைக்கு அருகில் மணலில் ஏறுண்டு கிடந்தது. நீர் வற்றிய காலத்தில் நான் நடந்து சென்று அதனை அடையக் கூடியதாயிருந் தது. நான் பூமி நடுக்கத்தைப் பற்றியும் வேறு குடிசை கட்டுவதைப் பற்றியும் மறந்து போனேன். நான் அப்பொழுது எனது வாள், மரவயிரக் கட்டபாரை என்பவைகளின் உதவியைக் கொண்டு மரக்கலத்தை உடைத்து, அதன் துண்டுகளைக் கரைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருந்தேன். இவ்வாறு செய்தபின் என்னிடம் அதிக இரும்புகளும் பாரைகளும் இருந்தன.
ஒரு நாள் நான் ஒரு கடல் ஆமையைக் கண்டேன். நான் முதன் முதலில் கண்ட கடலாமை அதுவே. அத் தீவின் மறு பக்கத்தில் மிகப்பல ஆமைகள் வாழ்வதைப் பின்பு அறிந்தேன். நான் அதன் இறைச்சியைச் சமைத்து உண்டேன். அதன் இறைச்சி மிகவும் சுவையுடையதாயிருந்தது. பின்பு எனது துன்பமான காலம் வந்தது. நான் நோயடைந்தேன். எனக்குக் குளிர் உண்டாகித் தலை வலித்துக் காய்ச்சல் வந்த போது நான் மிகவும் பலவீனமடைந்திருந்தேன். நான் தனியே இருந்தேன்; அடிக்கடி கனவுகள் கண்டு பயந்தேன். ஒரு வாரத்திற்குப் பின் காய்ச்சல் விட்டது. நான் மறுபடி யும் பலமடைந்தேன். பெட்டி ஒன்றில் பைபிள் புத்தகம் ஒன்று இருந்தது. நான் அதனை எடுத்துப் படித்துக் கடவுளை எனக்கு உதவி அளிக்கும்படி வேண்டிக் கொண்டேன்.
7. தீவு முழுவதையுங் கண்டறிதல்
நான் அத்தீவில் பத்து மாதகாலம் கழித்தபின் நெடுந்தூரம் நடந்து சென்று காணாத இடங்களைக் காணலாம் என நினைத்தேன். நான் ஜூலை மாதம் முதல் நாளில் புறப்பட்டேன். நான் முதலில்என் கட்டுமரத்தை கொண்டுவந்த கரைப் பக்கமாகச் சென்றேன். கரையில் இன்பமயமான பசுந்தரை காணப்பட்டது. உயரமான இடங்களில் புகையிலைச் செடிகளும் கரும்பும் வளர்ந்திருந்தன்.
நான் இன்னும் தொலைவிற்சென்றேன். அங்கு மரங்கள் நெருங்கிய அழகிய பள்ளத்தாக்கு ஒன்று தென்பட்டது. அங்கு கொடிமுந்திரிகள் மரக் கொம்புகளில் படர்ந்து காய்த்துப் பழுத்திருந்தன. அவைகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன் அப் பழங்களைப் பறித்து வெயிலில் காய வைத்து வற்றலாக்கிப் பயன்படுத்தப் பின்பு அறிந்துகொண்டேன்.
நான் எனது உறைவிடத்தினின்றும் அதிக தூரம் வந்துவிட்டமை யால். மீண்டும் அங்கு திரும்பி செல்ல முடியவில்லை. நான் இரவில் மரத்தில் ஏறி இருந்து. நித்திரை செய்தேன். அடுத்த நாள் காலையில் நான் இன்னும் சிறிது தூரம் சென்றேன் அவ் விடங்கள் மரங்கள் நட்டு உண்டாக்கி தோட் டங்கள் போலப் பச்சைப்பசேலென்றிருந்தன எலுமிச்சை கிச்சிலி முதலிய பழ மரங்களும் செடிகளும் பள்ளத்தாக்குகளில் வளர்ந்திருந்தன.
நான் கொடி முந்திரிப் பழங்களையும் எலுமிச்சம் பழங்களையும் பறித்து நிலத்தில் கும்பலாகக் குவித்துப் பின் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் நான் எலுமிச்சைக் செடிகளுள்ள இடத்துக்குச் சென்றேன் முன்பு நான் பறித்து வைத்துச் சென்ற பழங்கள் கால்களால் மிதிக் கப்பட்டுக் கிடந்தன சிலவற்றை எவையோ பிராணிகள் உண்டுவிட்டன அவை யாவை என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இம் முறை நான் கொடிமுந்திரிக் குலைகளைப் பறித்துக் காயும்படி மரங்களில் கட்டித் தொங்க விட்டுவிட்டு என்னால் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய பழங்களை வீட்டுக்குக் கொண்டு சென்றேன்.
நான் அவ்விடத்துக்குப் பல முறை சென்று திரும்பினேன்; எனது கூடாரத்தை அவ்விடத்துக்கு மாற்றலாமோ என்று சிந்தித்தேன். அவ்விடத் துக்குச் சென்றால் நான் கடற்கரையைப் பார்க்க முடியாதென்பதும், கடற் கரையில் எப்போதாவது மரக்கலம் ஒன்று காணப்பட்டால் அது என்னை அழைத்துச் செல்லும் என்பதும் எனது நம்பிக்கை; அவை வீணாகி விடுமென்றும் நினைத்தேன்.
நான் அவ்விடத்தில் கோடைகாலத்தில் வசிப்பதற்கேற்ற ஒரு வீட்டைக் கட்டலாமென்று நினைத்தேன். நான் வட்டமான இரட்டை வேலியை அமைத்து, இடைவெளிகளைச் சிறிய மிலாறுகளை வைத்து மறைத்தேன்.
ஆகஸ்டு முதலாம் நாள் நான் கட்டித்தொங்கவிட்ட கொடி முந்திரிப் பழ வற்றல்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். அடுத்த நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. இரண்டு மாதம் வரையில் மழை அடிக்கடி பெய்தது. நான் வைத்திருந்த இறைச்சி செலவாகிவிட்டது. நான் ஓர் ஆட்டைக் கொன்றேன். இன்னொருநாள் ஒரு கடலாமையைப் பிடித்தேன். அவற்றின் இறைச்சியை உண்டு நான் மழைகாலம் முழுவதையும் கழித்தேன்.
அப்பொழுது என் பூனைகளில் ஒன்று காணாமற்போய்விட்டது. அது இறந்திருக்கலாமென்று நான் நினைத்தேன். ஆகஸ்டு மாத முடிவில் அது மூன்று குட்டிகளோடு வந்தது. நான் அவைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தேன். பூனை பின்னும் குட்டிகள் போட்டபோது பூனைக் குடும்பம் பெரிதாகிவிட்டது. அப்பொழுது நான் அவைகளை எனது உறைவிடத்தி னின்றும் வெளியே துரத்திவிட நேர்ந்தது.
8. பயிர் இடுதலும் இடங்களைக் கண்டுபிடித்தலும்
என் தீவில் ஆண்டில் இரண்டு முறை மழை காலமும், இரண்டு முறை கோடை காலமும் உண்டு என்பதை நான் அறிந்தேன்.
நான் வாற்கோதுமையையும் நெல்லையும் பத்திரப்படுத்தி வைத் திருந்தேன். இரண்டு மாதகாலம் மழை பெய்த பின்பு நான் சில தானியங் களை விதைத்தேன். எனது கட்டபாரையால் நிலத்தை எவ்வளவு கிண்ட முடியுமோ, அவ்வளவுக்குக் கிண்டிய பின்பே நான் அவ்வாறு செய்தேன். நான் ஒவ்வொரு தானிய வகையிலும் ஒவ்வொரு பிடியளவு வைத்திருந் தேன். இது நன்மையாகவே முடிந்தது, நான் பருவமல்லாத காலத்தில் விதைகளை விதைத்தேன். நான்கு மாதம் மழை பெய்யாதபடியால் அடுத்த மழைகாலம் வருமுன் அவை முளைக்கவில்லை. மழைகாலம் வருவதன் முன் விதைகளை விதைக்க வேண்டும் என்னும் அனுபவம் அப்பொழுது எனக்கு உண்டாயிற்று. மழைகாலத்துக்குப் போதுமான உணவை நான் வழக்கமாகச் சேகரித்து வைத்தேன். எனக்குச் சில கூடைகள் வேண்டியிருந் தன. நான் மிலாறுகளை எடுத்துக் கூடைகளாக முடைந்தேன்.
எனது தீவில் முன் காணாத பகுதி களைக் காணவேண்டு மென நான் விரும்பி னேன். நான் துப்பாக்கி ஒன்றையும் கோடரியை யும் எடுத்துக் கொண்டு, எனது நாயுடன் அடுத்த கடற்கரைப் பக்கஞ் சென்றேன். அங் கிருந்து நான் தொலைவில் தரையைப் பார்த்தேன். அது அமெரிக்காகவோ அல்லது மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தீவுக் கூட்டங் களாகவோ இருக்கலாமென நான் நினைத்தேன்.
அங்குள்ள காடுகள், பூக்கள், பசுந்தரைகள் மிக அழகாயிருந்தன. கடற்கரையில் ஆமைகளும் பெங்குவின் என்னும் பறக்க மாட்டாத பறவைகளும் காணப்பட்டன; முயல், நரி, ஆடு முதலிய விலங்குகள் காடுகளில் திரிந்தன. மரங்களில் கிளிகள் உட்கார்ந்திருந்தன. நான் கிளிக்குஞ்சு ஒன்றைப் பிடித்துச் சென்று அதைப் பேசப் பழக்கினேன். நான் இன்னொரு வழியாக வீட்டுக்குச் செல்ல முயன்றேன்; நான் வழி தப்பிப் பல நாட்கள் அலைந்து திரிந்தேன். கடைசியாக நான் எனது கோடைகால வீட்டுக்கருகில் வந்து, அங்கிருந்து குகையை அடைந்தேன்.
வாற்கோதுமையும் நெல்லும் நன்றாய் வளர்ந்திருந்தன. காட்டு ஆடு களும் முயல்களும் பக்கத்திலிருந்த புல்லை மேய்ந்திருந்ததைப் பார்த் தேன். அவை எனது தானியப் பயிர்களையும் அழித்துவிடக் கூடுமெனப் பயந்தேன். அதைத் தடுப்பதற்காகப் பயிரைச் சுற்றி வேலி இட்டேன். இவ்வாறு செய்வதற்கு மூன்று வாரங்களாயின. அக் காலத்தில் நான் சில ஆடு களைக் கொன்றேன். நாயைத் தடி ஒன்றில் கட்டி இரவில் காவல் காக்கும்படி விட்டிருந்தேன்.
பறவைகள் தானியக் கதிர்களைத் தின்றன. நான் பல பறவைகளைச் சுட்டு வீழ்த்தினேன். மற்றப் பறவைகளுக்கு அச்சம் உண்டாக்கி எச்சரிப் பதற்காக அவைகளில் சிலவற்றை நீண்ட தடி ஒன்றில் கட்டிப் பக்கத்தில் தொங்கவிட்டிருந்தேன்.
தானியம் விளைந்தது. நான் வாள் ஒன்றினுதவியால் அறுவடை செய்தேன். அடுத்த பருவகாலம் வருவதன் முன் விதைக்கும் நிலத்தைச் சுற்றி வேலி இட்டுக் கூரிய தடியால் நிலத்தைக் கிண்டினேன்; மறுபடியும் விதைகளை விதைத்தேன்.
9. இருப்பிடத்தைச் சீர்படுத்துதல்
அடுத்த மழைகாலத்தில் நான் களிமண்ணால் சாடிகள் செய்தேன். முதன்முதல் நான் செய்த அழகில்லாத சாடியைப் பார்த்தால் நீங்கள் நகைப்பீர்கள். மிகவும் பிரயாசைப்பட்டு நான் இரண்டு சாடிகளைச் செய்து வெயிலிற் காய வைத்தேன். அவைகளில் நான் தானியங்களைப் போட்டு வைத்தேன். சமைப்பதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ, அவை பயனற்றவை. இறைச்சியை வைத்துச் சமைக்கக் கூடிய ஒரு பானையைச் சில நாட்களில் செய்யலாமென நினைத்தேன்.
அதை செய்யும் விதத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன். எனது களிமண் தட்டின் ஒரு துண்டு அடுப்புச் சாம்பலில் கிடந்தது. அது நெருப்பில் வெந்து சிவப்பாய் இருந்தது. பின்பு நான் சாடிகளைச் செய்து அவைகளைச் சுற்றி நெருப்பு மூட்டி எரித்தேன். அவை வெந்து வைரம் அடைந்தன.
உரொட்டி செய்யப் போதுமான தானியம் என்னிடம் இருந்தது. நான் மரத்தைக் குடைந்து ஒரு சிறு உரல் செய்தேன். அதில் தானியத்தை இட்டுச் சிறு உலக்கையால் அதனை இடித்து மாவாக்கினேன். அதனை உரொட்டி யாகச் சுட்டேன்.
மூன்று ஆண்டுகள் இவ்வாறு அத் தீவில் கழிந்தன. அடுத்த கரையில் தெரிந்த தரையைப்பற்றி அறிந்துகொள்ள எனக்கு அதிக பிரியம் இருந்தது. ஆனால், என்னிடத்தில் தோணி இல்லை.
மரக்கலத்திலிருந்த தோணியைப் பார்த்தேன். அது அலையால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுக் கீழ்மேலாய்க் கிடந்தது. நான் அதை நிமிர்த்த மிகவும் முயன்றேன். ஓர் அங்குலங்கூட அதை என்னால் நிமிர்த்த முடியவில்லை.
நானே ஒரு தோணியைச் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். நான் காட்டுக்குச் சென்று பெரிய மரம் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அதைத் தறித்து வீழ்த்துவதற்கு மூன்று வாரம் சென்றது. அதன் கொம்புகளைத் தறிப்பதற்கு இரண்டு வாரம் கழிந்தன. அதைக் குடைந்து தோணியாக்குவதற்கு நான்கு மாதங்கள் வேலை செய்தேன்.
அது இருபத்தாறு பேரைக் கொள்ளக் கூடிய நல்ல தோணி. நான் அதைக் கடலுக்குக் கொண்டு போக வேண்டியிருந்தது. அது நான் அசைக்க முடியாத அவ்வளவு பாரமுடையதாயிருந்தது. அது தண்ணீரிலிருந்து இரு நூறு முழத் தூரத்தில் கிடந்தது. நான் எல்லா வகையான உபாயங்களையும் ஆலோசித்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோணிக்கு அருகில் தண்ணீரைக் கொண்டுவர வாய்க்கால் ஒன்றை வெட்டவும் தொடங்கினேன். தோணி செல்லக்கூடிய அகலமும் ஆழமுமுடைய வாய்க்காலை வெட்டப் பத்து ஆண்டுகளாகுமனெத் தோன்றிற்று. ஆகவே, நான் அவ் வேலையைக் கைவிட்டுவிட்டேன்.
என்னிடத்தில் அதிக உணவும் இருப்பதற்கு வீடும் இருந்தன. அதிக காலம் கடந்தமையால் மரக்கலத்திலிருந்து கொண்டு வந்த பல பொருள்கள் மட்கிப் போயின. எனது மையும் ஆய்விட்டது; ஆடைகளும் கந்தை யாயின. நான் கொன்ற ஆடுகளின் தோலிலிருந்து புதிய உடைகளைச் செய்து கொண்டேன். ஆட்டுத் தோலினால் ஒரு குடையும் செய்தேன். விரித்துச் சுருக்கக் கூடியதாக ஒரு குடை செய்து கொள்வதன் முன் யான் பலவற்றைப் பழுதாக்கிவிட்டேன். இவ்வாறு நான் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்புத் தேடிக்கொண்டேன்.
10. எனது கடற்பயணம்
நான் இன்னொரு தோணி செய்ய நினைத்தேன். நான் கடற்கரைக்கு மிகக் கிட்ட நின்ற ஒரு மரத்தைத் தறித்து, இன்னொரு தோணி செய்தேன். தோணி செய்து முடிந்ததும் கடலிலிருந்து தோணி வரைக்கும் ஒரு வெட்டு வாய்க்கால் செய்தேன். இவ்வாறு செய்வதற்கு இரண்டு ஆண்டுகளாயின. நான் பாய் மரத்தையும் பாய்ச்சீலையையும் அமைத்தேன். எனக்கு நிழல் தரும்படி எனது குடையை மேலே கட்டினேன். இத் தோணியில் நான் பல முறை கடலிற் சென்றேன்; ஆனால், தொலைவிற் செல்ல மனம் துணிய வில்லை.
நான் எனது தீவைச் சுற்றிப் பயணஞ் செய்ய விரும்பி, நவம்பர் மாதம் ஆறாம் நாள் புறப்பட்டேன். தொடக்கத்தில் யாதும் குழப்பம் உண்டாக வில்லை. கரைப்பகுதியில் பாறைகள் அதிகம் இருந்தமையால், நான் தரையிலிருந்து அதிக தூரம் சென்றேன்.
நான் ஓர் இடத்தில் தோணியைக் கட்டி விட்டுக் கரைக்குச் சென்றேன். அங்கு ஒரு மலையில் ஏறித் தீவின் காட்சிகளைப் பார்த்தேன். தீவின் பக்கத்தே அபாயத்துக்கு இடமான நீரோட்டங்கள் இருப்பதைக் கண்டேன். காற்று ஓய்ந்திருந்த போது மறுபடியும் கடலிற் செல்லத் துணிந்தேன். கரையி லிருந்து சிறிது தூரஞ்சென்றதும் எனது தோணி வேகமான நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்டது. நான் துடுப்பினால் வலிக்க முயன்றேன். ஆனால், நீரோட்டம் என்னைக் கரையிலிருந்து அதிக தூரம் கொண்டு சென்றது.
சடுதியாகக் காற்று வீசிற்று, நான் எனது தோணிப்பாயை விரித்துக் கட்டினேன். இப்பொழுது இன்னொரு நீரோட்டம் என்னைக் கரைக்குக் கொண்டு செல்வதைக் கண்டு நான் மகிழ்ந்தேன். சில மணி நேரத்தில் எனது தோணி கரையை அடைந்தது.
கரையை அடைந்ததும் நான் முழங்கால் படியிட்டு என்னைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்ததற்காகக் கடவுளைத் துதித்தேன். நான் மணற்சரிவில் இரவில் தூங்கி மறுநாட் காலையில் எழுந்தேன். நான் தோணியைக் கரையில் விட்டு விட்டு நடந்து வீட்டுக்குச் செல்லலாமென நினைத்தேன்.
வீடு அடைந்ததும் மிகவும் களைப்பாய் இருந்தது ; உடனே நான் படுத்து நித்திரை போயினேன். சடுதியாக, “ரொபின் கூட்! ரொபின் கூட்!” எனக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டு நான் விழித்தெழுந்தேன். நான் கனாக் காணுகின்றேனென நினைத்தேன்; பயத்தினால் துடித்தெழுந்தேன். வேலியில் இருந்து அவ்வாறு சத்தமிட்ட கிளியைக் கண்டு நான் சிரித்தேன். கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனைக் கூப்பிட்டேன். அது எனது கையில் வந்திருந்தது.
11. அமைதியான வாழ்க்கை
துணிச்சலான வேலைக்குப் பின் நான் அமைதியாய் வாழ்ந்தேன். நான் களிமண்ணால் புகை பிடிக்கும் சுங்கான் ஒன்றைச் செய்தேன். அது பார்வைக்கு அழகில்லாததா யிருந்தபோதிலும், புகையை நன்றாக இழுக்கக் கூடியதாயிருந்தது. தீவில் புகையிலை வேண்டிய அளவு இருந்தது.
அப்பொழுது வெடிமருந்து குறைந்து போயிற்று. இது எனது மனத் தில் குழப்பம் விளைத்தது. வெடிமருந்து முடிந்து போனால் நான் ஆடு களைச் சுட முடியாது. ஆகவே, நான் ஆடுகளைப் பிடித்து வளர்க்க நினைத் தேன். அவை மிகவும் மூர்க்கமுடையனவாயிருந்தன. அவைகளை எப்படிப் பிடிப்பதென்பது எனக்குத் தெரியவில்லை. அவை மேயும் இடத்தில் நான் பெரிய குழி ஒன்றைத் தோண்டினேன். குழிக்குமேல் கழிகளைப் பரப்பி, அவற்றின் மீது தானியங்களைப் பரப்பினேன். ஆடுகள் அவற்றைத் தின்ன முயன்றதும் குழியில் விழுந்தன.
இவ்வாறு நான் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் ஓர் ஆட்டையும் பிடித்தேன். ஆடு மிகவும் மூர்க்கமாயிருந்தது. ஆகவே, நான் அதன் அருகில் போகப் பயந்தேன். நான் அதைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டு, மூன்று குட்டிகளையும் பிடித்தேன். அவைகளைக் கயிற்றாற் கட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் அவை தின்னும்படி தானியத்தை வைத்தேன். நான் புல் நிலத்தைச் சுற்றி வேலியடைத்தேன். அதனூடாக ஒரு நீருற்று ஓடிக் கொண்டிருந்தது. இங்குமங்கும் நிழல் மரங்களும் நின்றன. அங்கு நான் ஆட்டுக் குட்டிகளை விட்டு வளர்த்தேன்.
சில ஆண்டுகளில் அவை ஐம்பது ஆடுகளளவில் பெருகின; நான் நாளடைவில் அவைகளிலிருந்து பால் கறக்கவும். பாலிலிருந்து தயிர்கட்டி செய்யவும், அதிலிருந்து வெண்ணெய் எடுக்கவும் அறிந்து கொண்டேன்.
நானும் எனது குடும்பமும் உணவு நேரத்தில் இருக்கும் வகையைப் பார்த்தால், நீங்கள் சிரிப்பீர்கள். நான் தீவின் அரசன் போன்றிருந்தேன். ‘பொல்’ என்னும் கிளி எனது தோளில் வந்திருக்கும். என்னோடு பேசக் கூடியது அது ஒன்றுதான். எனது நாய் கிழமாய்ப் போய்விட்டது. அது என் இடப்பக்கத்தில் குந்தியிருக்கும். இரண்டு பூனைகள் மேசையின் பக்கங்களில் இருக்கும். ஒவ்வொன்றும் அடிக்கடி நான் போடும் உணவை எதிர் பார்த்திருக்கும்.
நான், முன் விட்டிருந்த தோணியைப் பார்க்க வேண்டுமென்று நினைத் தேன். நான் கடற்கரை வழியாக நடந்து சென்றேன். நான் ஒரு கையில் குடை யையும், மற்றொரு கையில் துப்பாக்கியையும் வைத்திருந்தேன். நான் இரண்டு நாட்களின் பின் ஒரு புதிய காட்சியைக் கண்டேன். அது உடனே எனக்குப் பெரிய பயத்தை உண்டாயிற்று. மணலில் மனித அடிச்சுவடுகள் காணப்பட்டன.
12. பயங்கரம்
சிறிது நேரம் நான் திகைத்துப்போய் நின்றேன். நான் சுற்றிச்சுற்றி எல்லா இடங்களையும் பார்த்தேன். ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஒரு மனிதனையும் காணவில்லை. மறுபடியும் நான் காலடிகளைப் பார்த்தேன். அவை அங்கே இருந்தன. அவை அங்கு எப்படி வந்தன என்பதை என்னால் நினைத்து அறிய முடியவில்லை. நான் பயந்து உடனே வீட்டுக்குத் திரும்பி ஓடினேன். என்னை யாரோ தொடர்ந்து வருவது போல வழியிலே எதிர்ப்பட்ட புதர்கள் எல்லாம் எனக்குத் தோன்றின.
என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை; நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லவுமில்லை. யாரோ ஒரு காட்டு மனிதன் என்னைப் பிடித்துவிடுவானென நான் பயந்தேன். அந்தக் கால் அடையாளங்கள் என்னுடையவையாய் இருக்கலாமோ என்பதை அறியும் பொருட்டுச் சிறிது தைரியத்துடன் நான் மறுபடியும் அங்குச் சென்றேன். நான் எனது காலடியை வைத்து அவற்றை அளந்து பார்த்தேன். எனது காலடி அவ்வளவு பெரிதாய் இருக்கவில்லை. அந்த அடிகள் ஒரு காட்டு மனிதனுடையனவா யிருக்கலாமென்றும் அவன் கரையிலே இருக்க லாம் என்றும் நான் நினைத்துப் பயந்தேன்.
இப்பொழுது நான் எனது வீட்டை முன்னி லும் காவலுடையதாக்க எண்ணினேன். நான் அதைச்சுற்றி இன்னும் ஒரு வேலி இட்டேன். அதில் ஆறு துப்பாக்கிகளை வைத்தேன். அவசியம் நேர்ந்தால் நான் அவைகளை எல்லாம் ஒரே முறையில் சுடக்கூடும். பின்பு நான் அந்த வேலியைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டேன். அவை நாளடைவில் பெரிய மரங்களாய் வளர்ந்தன.
என் ஆடுகளை எவராவது திருடிக் கொண்டு போகலாம் எனவும் எனக்கு அச்சம் இருந்தது. நான் பல இடங்களைச் சுற்றி வேலி அடைத்தேன்; ஒவ்வொன்றிலும் சில ஆடுகளை விட்டேன். என்றைக்கேனும் ஒரு நாள் என் எதிரி ஒருவனைச் சந்திக்க நேரும் என்னும் பயத்தினாலேயே நான் இவைகளை எல்லாம் செய்தேன். நான் அத் தீவில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன்.
அத்தீவிற்கு எதிரே உள்ள இடத்தைக் குறித்து நான் மிகவும் பயந் தேன். அதற்குக் காரணம், நான் ஒரு நாள் கடற்கரையில் நெருப்பெரிக்கப் பட்டிருந்ததையும், பக்கத்தே மனித எலும்புகள் இருந்ததையும் கண்டதே யாகும். அவைகளைப் பார்த்தவுடன் மனித இறைச்சியை உண்பவர் அங்கு மனிதரை உண்டு விருந்து கொண்டாடினர் என்பது எனக்கு நன்றாய் விளங்கி விட்டது. அப்பொழுது எனக்கு மண்ணில் காணப்பட்ட அடிச்சுவடுகளைப் பற்றியும் விளங்கிவிட்டது. காட்டு மனிதர் தோணிகள் மூலம் அங்கு வந்து விருந்து கொண்டாடிய பின்பு போயிருக்கலாம் என்று நான் துணிந்தேன்.
பின்பு நான் அவ்விடத்தில் சிறிது நேரமும் நிற்க விரும்பவில்லை. நான் விரைவாகக் கூடாரத்துக்குச் சென்றேன். நான் முன்னிலும் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தேன். நான் துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லை; ஒரு போது காட்டு மனிதர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுவிடுவர் எனப் பயந்தேன். ஆகையால், நான் துப்பாக்கியும் வாளும் இல்லாமல் வெளியே போவதில்லை.
நான் நெருப்பை மூட்டி எரிக்கவும் இல்லை. நெருப்பை மூட்டி எரித்தால், புகை மேலே கிளம்பும் என்னும் பயம் எனக்கு இருந்தது. நான் மரத்தைக் கரியாக எரித்து வைத்துக் கொண்டு, அதை மூட்டி எரித்துச் சமையல் செய்தேன். கரியிலிருந்து புகை கிளம்பமாட்டாது. கடற்கரைக்குப் பக்கத்தே உள்ள மரத்தில் இரண்டு துப்பாக்கிகளை வைத்துக் கட்டியிருந் தேன். அம் மரம் நான் எலும்புகளைக் கண்ட இடத்துக்கு அருகிலுள்ளது. மனித இறைச்சியை உண்ணும் கொடியவர்களுட் சிலரைக் கொல்ல வேண்டு மென்பது எனது விருப்பம்.
நான் ஒவ்வொரு நாட்காலையிலும் மலை உச்சிக்குச் சென்று, கடலை நோக்கினேன். அங்குத் தோணிகளையோ, காட்டு மனிதரையோ நான் பார்க்கவில்லை.
நான் ஒரு நாள் புதர்களை வெட்டிக் கொண்டு போகும் போது ஒரு குகையை அடைந்தேன். நான் அதனுள் புகுந்து, இங்குமங்குஞ் சென்று, ஆராய்ந்து பார்த்தேன். குகையில் இரண்டு வெளிச்சமான கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. நான் உடனே வெளியில் வந்தேன்.
நான் அதிகம் பயந்து விட்டேன். மறுபடியும் நான் தைரியம் அடைந் தேன். ஒரு பெரிய கொள்ளியை எடுத்துக்கொண்டு குகைக்குள் நுழைந் தேன். அங்கு மிகுதியாய் அழும் சத்தம் கேட்டது கொள்ளியைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு சென்றேன். அங்கு உதவியற்று ஓர் ஆடு சாகுந்தறு வாயில் கிடந்தது. என் துயரம் மறைந்து போயிற்று. அது இன்னும் அதிக நேரம் உயிர்பிழைத்திராது என்று அறிந்ததும் நான் குகையின் மறு இடங் களை ஆராயத் தொடங்கினேன். தாழ்வான ஓர் இடத்தை அடைந்ததும் நான் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்பால் குகையின் முகடு உயர மாய் இருந்தது. அப்பொழுது புதுமையான ஒரு காட்சி எனது கண்ணிற் பட்டது. வைரக்கற்களின் ஒளியைப் போன்ற ஒளி எல்லா இடங்களிலும் காணப்பட்டது. அது ஒரு மாய வித்தை உள்ள குகை போலக் காணப் பட்டது.
நான் அக் குகையைக் கண்டுபிடித்ததைப் பற்றி மகிழ்ந்தேன். நான் மறைந்திருப்பதற்கும், என்னுடைய பொருள்களைப் பத்திரமாக வைப்பதற் கும் அது நல்ல இடம். அடுத்த நாள் நான் வெடிமருந்தையும் சில பொருள் களையும் கொண்டுவந்து அங்கு வைத்தேன்.
ஆடு இறந்து போயிற்று. நான் அதை அயலிலே ஓர் இடத்தில் புதைத்துவிட்டேன்.
13. காட்டு மனிதர்
அப்பொழுது நான் எனது இருபத்து மூன்றாவது ஆண்டு வாழ்க்கையை அத் தீவில் கழித்துவிட்டேன். காட்டு மனிதரைப் பற்றிய பய மில்லாவிட்டால், எனது வாழ்க்கை மிகவும் இன்பமானதாய் இருந்திருக்கும். எனது நாய் வயது வந்து இறந்து போயிற்று. எனது கிளி அதிகம் பேசிக் கொண்டிருந்தது. என்னிடம் பல பழகின ஆடுகள் இருந்தன. நான் அவை களுக்கு என் கையினால் தீனி கொடுப்பேன். என்னிடம் வேறு சில கிளி களும் இருந்தன.
ஆனால், அவை ‘பொல்’ என்னும் கிளியைப் போல நன்றாகப் பேச மாட்டா. சில பழகிய கோழிகளும் எனது வீட்டுக்கு அருகேயிருந்த சிறிய மரங்களில் வாழ்ந்தன.
எனது வீட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள கடற்கரையில் நெருப் பெரிவதை ஒரு நாள் நான் பார்த்து, ஆச்சரியமடைந்தேன். நான் பயத்தி னால் சிறிது தாமதித்து நின்று, பின்பு வீட்டுக்கு ஓடி, வெளியே இருந்த ஏணியை உள்ளே எடுத்து வைத்துவிட்டேன். இரண்டு மணி நேரம் நான் அசையவில்லை. நெடுநேரம் அங்குத் தங்கியிருக்கவும் என்னால் முடிய வில்லை. நான் வேலியைக் கடந்து கீழே இறங்கி, எனது தொலைவு நோக்கி ஆடி மூலம் பார்த்தேன். அங்கு ஒன்பது காட்டு மனிதர் நெருப்பைச் சுற்றி யிருந்து தம் கைதிகளின் இறைச்சியை உண்டு கொண்டிருந்தார்கள். அவர் களின் தோணிகள் கரையிலே கிடந்தன. மனித இறைச்சியை உண்பவர் தமது உணவை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் தோணிகளில் சென்றனர்.
அடுத்த முறை அவர்கள் வந்தால் அவர்கள் கைதிகளுள் ஒருவனை மீட்க வேண்டுமென்றும், அவனுடைய உதவியைக் கொண்டு நான் அத் தீவை விட்டுப் போக வேண்டுமென்றும் நினைத்தேன்.
மே மாதத்தின் நடுப்பகுதியில் பெரிய புயல் அடித்தது; பெரிய இடி முழக்கமும் உண்டாயிற்று. நான் எனது கூடாரத்திலிருந்து படித்துக் கொண் டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான் துடிதுடித்து எழுந்து மலை உச்சிக்குச் சென்றேன். அப்போது இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. அது எனது தோணி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தி லிருந்து வந்ததென்பது எனக்குத் தெரிந்தது. மரக்கலம் ஒன்று ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
நான் உலர்ந்த விறகைக் குவித்து மலை உச்சியில் நெருப்பெரித்தேன். உடனே பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மரக்கலத்திலிருந்தவர்கள் எனது வெளிச்சத்தைப் பார்த்திருத்தல் கூடும். பல வெடிச்சத்தங்கள் கேட்டன. நான் இரவு முழுவதும் விறகை எரித்துக் கொண்டிருந்தேன். விடியும் வரையும் மரக்கலத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. காலையில் அது பாறையில் மோதி உடைந்து போயிருப்பதைக் கண்டேன். அந்த மரக்கலத் திலிருந்தவர் எல்லாரும் கடலுள் ஆழ்ந்திருப்பர் என்று நினைத்தேன்.
கடல் அடங்கியிருந்தது. நான் எனது தோணியில் மரக்கலம் உடைந்த இடத்திற்குச் சென்றேன். ஒரு நாய் என்னை அடைவதற்கு நீந்தி வந்தது. அது நான் கொடுத்த உணவை உண்டு தோணிக்குள் படுத்துக்கொண்டது.
மரக்கலத்திலிருந்த எல்லாப் பொருள்களும் கடல் நீரால் பழுதடைந் திருந்தன. நான் சில ‘உணவின்’ பீப்பாக்களையும், இனிப்பு வகைகளையும் வேறு சில பொருள்களையும் எடுத்துக்கொண்டு நாயுடன் கூடாரத்துக்குத் திரும்பி வந்தேன்.
14. அடிமையைத் தப்ப வைத்தல்
பதினெட்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ஐந்து தோணிகள் கடற்கரை மணலில் கிடப்பதைக் கண்டு, நான் திடுக்கிட்டேன். ஒவ்வொரு தோணியிலும் நாலு அல்லது ஐந்து பேர் வந்திருப்பர் என்பது எனக்குத் தெரியும். தனிமையாக அவர்களை எல்லாம் தாக்க நான் துணியவில்லை. அவர்கள் வந்தால், போர் செய்வதற்குத் தயாராக நான் எனது கூடாரத்தி லிருந்தேன். ஒருவரும் வரவில்லை. நான் மிகவும் எச்சரிக்கையோடு மலை உச்சிக்குச் சென்றேன். நெருப்பைச் சுற்றி முப்பது காட்டு மனிதர்கள் துள்ளிக் கூத்தாடுவதைப் பார்த்தேன், பின்பு அவர்கள் இரண்டு மனிதர்களைத் தோணியிலிருந்து இழுத்து வந்தார்கள்; ஒருவனை உடனே கொன்றுவிட் டார்கள். அவர்கள் ஒருவனைக் கொல்லும்போது மற்றவன் தப்பியோட முயன்று எனது கூடாரத்தை நோக்கி விரைவாக ஓடி வந்தான்.
எல்லாரும் அவனைப் பின் தொடர்வர் என்று நினைத்து, நான் பயந்தேன்; இரண்டு பேர் மாத்திரம் அவனைப் பின் தொடர்ந்தனர். நான் அவனைத் தப்ப வைக்க வேண்டுமென விரும்பினேன்.
நான் இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குறுக்கு வழியாகத் துரத்துகின்றவர்களுக்கும் ஓடி வருகின்றவனுக்கும் இடையில் சென்றேன். நான் காட்டு மனிதருக்கு நேரே ஓடி, ஒருவனைத் துப்பாக்கியால் அடித்து வீழ்த்தினேன். மற்றொரு காட்டு மனிதன் என்மேல் எய்வதற்காக வில்லில் அம்பைத் தொடுத்தான். நான் உடனே அவனைச் சுட்டேன். அவன் காயம் பட்டு விழுந்தான்.
ஓடி வந்தவன் என் துப்பாக்கியிலிருந்து புகை வருவதைக் கண்டு பயந்தான். அவன், முன் ஒரு போதும் துப்பாக்கியைக் காணாதவன், அவன் அசையாது நின்றான். நான் அவனைக்கிட்ட வரும்படி அழைத்தேன். அவன் கிட்ட வந்து முழங்கால் இட்டு நிலத்தை முத்தமிட்டுத் தனது தலையை என் பாதங்களில் வைத்தான். இதனால், தான் எனக்கு அடிமையாய் இருப் பான் என்பதை அவன் குறிப்பிட்டான்.
நான் அவனை எழும்படி சொன்னேன். அவன் எழுந்து என்னுடன் பேசினான். அவன் பேசியது எனக்கு விளங்கவில்லை. இறந்து போன காட்டு மனிதரை மற்றவர்கள் காணாதபடி மணலில் புதைப்பது நல்லது என்பதை அவன் சைகையால் தெரிவித்தான். அவர்களைப் புதைத்தபின் முன்பு நான் ஆட்டைக் கண்ட குகைக்கு அவனை அழைத்துச் சென்றேன்.
நான் அவனுக்கு உண்ண உரொட்டியும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தேன்; படுப்ப தற்கு வைக்கோலினால் ஒரு படுக்கையைச் செய்து கொடுத்தேன். அவன் நித்திரை செய்யும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
15. ‘வெள்ளிக்கிழமை’
அவன் இருபத்தாறு வயதுடைய அழகிய வாலிபன். அவனுடைய முகம் பெருந்தன்மையைக் காட்டுவதாயும். மயிர் நீளமாயும் இருந்தன. அவன் நீகிரோவனல்லன். அவனது தோல் நல்ல கறுப்புடையது அன்று. அவனது மூக்குச் சிறியது; இதழ்கள் மெல்லியவை; பற்கள் தந்தம் போல வெண்மையானவை. அவன் எழுந்தபோது நான் ஆடுகளைக் கறந்து கொண்டிருந்தேன். அவன் என்னிடம் வந்து, தான் எனக்கு அடிமையாய் இருப்பதாகச் சைகையால் தெரிவித்தான். அவன் வெள்ளிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டபடியால், இனி அவன் பெயர் ‘வெள்ளிக்கிழமை’ என்பதை அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன்.
நான் அவனைச் சிறிது சிறிதாகச் சில சொற்களைப் பேசப் பயிற்றி னேன். அவன் பாலைக் குடிக்கலாமென்றும், ஒரு போதும் மனித இறைச் சியை உண்ணுதல் கூடாதென்றும், அப்படிச் செய்தால் நான் அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேனென்றும் அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன்.
அவனுக்கு என்னுடைய உடையைப் போன்ற ஓர் உடையைச் செய்து கொடுத்தேன். அவன் அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். தொடக்கத்தில் அவன் சுவருக்கு வெளியே படுத்து உறங்கினான். பின்பு நான் அவனிடத்தில் சந்தேகம் கொள்ளாமையால் அவன் என் அருகில் படுத்து உறங்கினான்.
நான் நாளுக்கு நாள் அவனைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அவன் விரைவில் பேசக் கற்றக்கொண்டான். அப்பொழுது எனது வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாயிருந்தது.
நான் ஆடு ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை முதல் முறையாகப் பார்த்தபோது அவன் நடுங்கினான். நான் அவனைப் பயப் படாமல் இருக்கும்படி சொல்லித் துப்பாக்கி வேலை செய்யும் வகையை அவனுக்குக் காட்டினேன்.
ஆட்டிறைச்சியைச் சமைப்பதற்கு அவன் பழகிக்கொண்டான். மாலை நேரங்களில் நான் மற்றைய நாடுகளைப் பற்றிய செய்திகளை அவனுடன் பேசுவேன்.
ஒரு நாள் நாங்கள் கடற்கரை ஓரமாய் நடந்து வந்தோம். அப் பொழுது நான் ஏறி வந்த போது உடைந்து போன மரக்கலத் துண்டுகளை அவனுக்குக் காட்டினேன். அப்போது ‘வெள்ளிக்கிழமை’ என்னைப் பார்த்து, “எனது நாட்டில் இதைப் போல இரண்டு மரக்கலங்கள் இருக்கின் றன. அவைகளில் தாடியையுடைய வெள்ளை மனிதர்கள் பயணம் செய்து வந்தார்கள். அவர்களை என் நாட்டு மக்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்றான். அவர்களுள் பதினேழு பேர் பாறையில் மோதி உடைந்த மரக்கலத் திலிருந்து படகேறிச் சென்றவராயிருக்கலாமென நான் சந்தேகித்தேன்.
அவ் வெள்ளை மனிதரை எப்படிப் பார்க்க முடியுமென நான் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு படகைச் செய்துகொண்டு அவனோடு ஐரோப்பாத் தேசத்துக்குச் செல்ல நான் எண்ணியிருப்பதாக அவனுக்குச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவன் கவலை அடைந்தான். அவன் சிறிது நேரம் என்னோடு பேசவில்லை. பின்பு, “நீ ஏன் என்னோடு பேசவில்லை” என நான் அவனைக் கேட்டேன். அவன், “எனக்கு ஐரோப்பாத் தேசம் போக விருப்பம் இல்லை; நாம் இருவரும் எங்கள் தேசம் போகலாம்” எனக் கூறினான்.
காட்டு மக்கள் வாழும் இடத்துக்கு எப்படிப் போவது என்று நான் நினைத்தேன். நான் ஆலோசிப்பதைக் கண்ட அவன், “நீங்கள் எங்கள் தேசத்துக்கு வரலாம். அங்குத் திருத்தமின்றி வாழும் மக்களைத் திருத்தி, நல்வழிக்குக் கொண்டு வரலாம்,” என்று சொன்னான். நான் அவன் எண்ணப்படியே நடப்பதாகக் கூறினேன். இருவரும் மறுநாள் முதல் பெரிய படகு ஒன்று செய்யத் தொடங்கினோம். ‘வெள்ளிக்கிழமை’ எனக்கு மிகுந்த உதவி செய்தான். ஒரு மாதத்துக்குள் பெரிய படகு ஒன்றைச் செய்து முடித்தேன். பின்பு மிக்க வருத்தத்தோடு கால்வாய் வழியாக அதனைக் கடலுக்குக் கொண்டு போனேன். அதற்குப் பாய்மரம், துடுப்பு, திசையறி கருவி முதலியவைகளை எல்லாம் அமைத்தேன்.
16. மேலும் காட்டு மனிதர் வருகையும் கைதிகளைத் தப்ப வைத்தலும்
மழை காலம் கழிந்ததும் நான் ‘வெள்ளிக்கிழமை’ யின் தேசத்துக்குச் செல்வதற்காகப் படகில் உணவுகளைப் பத்திரஞ் செய்தேன். ஒரு நாள் காலை நேரத்தில் நான் மிகவும் வேலையாயிருந்தேன். நான் ஆமை ஒன்றைப் பிடித்து வரும்படி அவனிடம் சொன்னேன். சிறிது நேரத்தில் அவன், ‘எசமானரே, இது என்ன துக்கம்! நாம் இதற்கு என்ன செய்வது?’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். மனித இறைச்சி தின்பவர்கள் தன்னைப் பிடித்துத் தின்ன வந்திருக்கிறார்கள் என நினைத்து, அவன் மிகவும் பயமடைந்தான். நாம் இருவரும் அவர்களை எதிர்த்துப் போர் செய்வோம்’ என்று நான் அவனுக்குச் சொன்னேன்.
அவன் துப்பாக்கிகளுக்கு மருந்து இட்டான். நான் கைத் துப்பாக்கி, வாள், கோடரிகளை ஆயத்தம் செய்தேன். பின்பு இருவரும் புறப்பட்டோம். அங்கு இருபத்தொரு காட்டு மனிதரும் மூன்று கைதிகளும் காணப்பட்ட னர். கைதிகளுள் ஒருவன் வெள்ளையனாயிருந்தான். சுற்றுப்பாதை வழியாக நாங்கள் கடற்கரைக்கு அருகில் வந்தோம்.
நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் காட்டு மனிதர் கூட்டத்தை நோக்கிச் சுட்டோம். அவர்கள் காயம் படாமலும், இறந்து போகாமலும் எந்த வழியாக ஓடுவது என்று அறியாமல் துள்ளிப் பாய்ந்தார்கள். பின்னும் ஒரு முறை நாங்கள் சுட்டுச் சிலரைக் கொன்றோம்; சிலரைக் காயப்படுத்தினோம். பின்பு நாங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடினோம். ‘வெள்ளிக்கிழமை’ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு நின்றான்; நான் வெள்ளை மனிதன் கட்டுகளை அறுத்து அவனை விடுதலை செய்தேன். விரைவாக நான் அவன் கையில் ஒரு வாளையும், ஒரு துப்பாக்கியையும் கொடுத்தேன். தப்பிப்பிழைத்த காட்டு மனிதர்கள் தங்கள் தோணிகளில் ஏறிக் துடுப்புகளை வலித்துக் கொண்டு சென்றார்கள்.
காட்டு மனிதர் கரையில் விட்டுச் சென்ற தோணி ஒன்றினால் அவர்களைத் துரத்தும்படி ‘வெள்ளிக்கிழமை’ என்னிடம் கூறினான். நான் எனக்கு அருகே கிடந்த தோணி ஒன்றில் பாய்ந்து ஏறினேன். அங்கு ஒரு கிழவன் கையும் காலும் கட்டுண்டபடி அரை உயிருடன் இருப்பதைக் கண்டு, நான் மிகவும் வியப்படைந்தேன்; உடனே அவனுடைய கட்டுகளை அறுத்துவிட்டேன். அவன் எழுந்திருக்கப் பலமற்றவனாய் இருந்தான். அவன் கறுப்பு மனிதன். ஆபத்து ஒன்றுமில்லை என்பதை அவனுக்குக் கூறும்படி ‘வெள்ளிக்கிழமை’க்குக் கட்டளை இட்டேன். அவனுக்குச் சிறிது உணவும் கொடுத்தேன். ‘வெள்ளிக்கிழமை’ அருகே வந்து கிழவன் முகத்தைப் பார்த்தான். உடனே அவன் சத்தமிட்டான்; கிழவனை முத்தமிட்டுக் கட்டித் தழுவினான்; துள்ளிக் குதித்தான். அக் கைதி ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையாய் இருந்ததே அதற்குக் காரணம்.
‘வெள்ளிக்கிழமை’ வீட்டுக்கு ஓடி, ஒரு சாடியில் தண்ணீர் கொண்டு வந்தான். இரு கைதிகளும் தண்ணீர் குடித்துச் சிறிது களை தெளிந்தார்கள். வெள்ளை மனிதன் இஸ்பானியா நாட்டவன் என்பதை நான் அறிய லானேன்.
இருவரும் நடக்க முடியாதவராயிருந்தனர். ‘வெள்ளிக்கிழமை’ அவர்களைத் தூக்கித் தோணியில் ஏற்றி, எங்கள் கூடாரத்துக்கருகே கொண்டு வந்தான். பின்பு நாங்கள் சென்றோம். அவர்களை வேலிக்கு மேல் தூக்கிச் செல்ல எங்களால் முடியவில்லை; ஆகவே, நாங்கள் வெளியில் ஒரு கூடாரத்தை அடித்தோம்; அங்கு வைக்கோலினால் படுக்கை செய்து, அவர் களுக்கு கம்பளியும் கொடுத்தோம். அவர்கள் அங்கு ஆறுதலாக நித்திரை செய்தார்கள்.
இஸ்பானியா தேசத்தவன் நன்கு குணமடைந்த பின், “நான் உடைந்து போன மரக் கலத்தில் இருந்தவர்களுள் ஒருவன்,” எனச் சொன்னான். மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தேசத்திற்குப் படகு சென்ற போது அவனும் வேறு பதினேழு பேரும் சிக்கிக் கொண்டனர்.
நான் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமென்றும், அவர்கள் எங்களுடைய தீவுக்கு வந்தால் எங்கள் நாட்டுக்குச் செல்லக்கூடிய பெரிய மரக்கலம் ஒன்றைக் கட்டலாம் என்றும் கூறினேன். ஆகவே, நாங்கள் மற்ற வர்களையும் பார்த்து அழைத்து வரும்படி இஸ்பானியனையும், ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையையும் அனுப்ப உத்தேசித்தோம்.
அவர்கள் வந்தால், அவர்கள் உண்பதற்குப் போதிய உணவு எங்களிடம் இருத்தல் வேண்டும். ஆகவே, நாங்கள் அதிக தானியத்தை விதைத்தோம். இஸ்பானியனும் ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் அறுவடை முடிந்தவுடன் உணவையும் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு பயணப்பட்டார்கள்.
17. ஆங்கிலேயரின் மரக்கலம்
அவர்களின் வருகையை எட்டு நாட்கள் எதிர்பார்த்தோம். அப் பொழுது வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது: நான் ஒரு நாள் நல்ல நித்திரையில் இருந்தேன். அப்பொழுது ‘வெள்ளிக்கிழமை’, “எசமான், எசமான், அவர்கள் வந்துவிட்டார்கள்!” எனச் சத்தமிட்டான்.
நான் துள்ளி எழுந்து கடலை நோக்கின போது கரைக்குச் சமீபத்தில் ஒரு படகு தெரிந்தது. கவனமாகப் பார்த்ததும் நாங்கள் எதிர்பார்த்திருப்ப வர்கள் அவர்களல்லர் என்பதை அறிந்தோம். நான் ‘வெள்ளிக்கிழமை’ யை அழைத்து, அவர்கள் நண்பர்களா அல்லது பகைவர்களா என்பதை அறியும் வரையில் மறைந்திருக்கும்படி சொன்னேன். நாங்கள் மலை உச்சியில் ஏறித் தொலைவு நோக்கி ஆடியால் பார்த்தோம்.
தொலைவில் ஓர் ஆங்கில மரக்கலம் நின்றது. அம் மரக்கலத்தி னின்று ஒரு படகு எங்கள் தீவை நோக்கி வந்தது. அதிலிருந்தவர்கள் தரையில் இறங்கினார்கள். மொத்தம் பதினொருவர் இருந்தனர். மூன்று பேர் கைதிகள் போலக் கட்டப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் உயிரை மன்னித்துவிடும்படி மன்றாடுபவர்கள் போலக் காணப்பட்டார்கள்.
கைதிகள் கரையில் கிடந்தார்கள் ; மற்றவர்கள் உள் நோக்கிச் சென்றார்கள். அது எவ்வகையான இடமென்பதை அறிவதற்கு அவர்கள் சென்றார்கள் போலத் தெரிந்தது. சிறிது நேரத்திற்குப்பின் அவர்கள் களைத்துப் போய்ப் படுத்து நித்திரை செய்தார்கள்.
பின்பு ‘வெள்ளிக்கிழமை’யும் நானும் மூன்று கைதிகளுக்கும் உதவியளிக்கத் துணிந்தோம். நான் அவர்களருகில் சென்று, அவர்களை, “நீங்களேன் இப்படிக் கிடக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் எனது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். எனது வினோதமான உடையைக் கண்டதும் அவர்கள் இன்னும் பதின்மடங்கு பயம் அடைந்தார்கள்.
“பயப்படாதீர்கள்! நான் உங்கள் நண்பன். நீங்கள் ஏன் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன்.
அவர்களுள் ஒருவன், “நான் இம் மரக் கலத்தின் தலைவன். என் னுடைய வேலையாட்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் கப்பலைப் பறித்துக் கொண்டார்கள். இத் தீவில் விட்டுச் செல்லும் பொருட்டு அவர்கள் எங்களை இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் இவ்விடத்திலேயே இறந்து விடுவோம் என அஞ்சுகின்றோம்! எங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை!” என்றான்.
அவன் இவ்வாறு சொன்னதும், “நான் உங்களைக் காப்பாற்றினால் நீங்கள் எனது சொற்படி நடந்து என்னையும் என் வேலையாளையும் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்வீர்களோ?” எனக் கேட்டேன்.
“நான் இதை மிக்க மகிழ்ச்சியுடன் செய்வேன்!” என மரக்கலத் தலைவன் கூறினான். நான் உடனே மூன்று பேர்களின் கட்டுகளையும் அறுத்துவிட்டு, ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு துப்பாக்கியைக் கொடுத்தேன். அப்பொழுது நித்திரை செய்தவர்களுட் சிலர் விழித்தெழுந் தனர். நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்; இருவர் இறந்தனர்; மற்றவர்கள் இரக்கம் காட்டும்படி மன்றாடினார்கள். “எங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிவ தாக உறுதி கூறினால், நாங்கள் உங்களை உயிருடன் விட்டு வைப்போம்,” என்று கூறினோம். அதற்கு அவர்கள் உடன்பட்டார்கள். நாங்கள் அவர் களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. நாங்கள் அவர்களைக் கட்டி வைத்து விட்டுப் படகுக்குச் சென்று, அதிலுள்ளவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, அவர்கள் படகில் ஏறித் தப்பி ஓடிவிடாதபடி அதில் ஒரு தொளை செய்தோம்.
நான் மரக்கலத் தலைவனையும் மற்றும் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு நல்ல உணவு அளித்து, நான் செய்து வைத்திருந்தவைகளை எல்லாம் அவர்களுக்குக் காட்டினேன். எனது விநோதமான வரலாற்றைக் கேட்டு அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள்.
மரக்கலத்தில் இன்னும் இருபத்தாறு பேர் இருந்தனர். அவர்கள் ஒரு முறை துப்பாக்கியைச் சுட்டு வெடி தீர்த்துக் கரையிலுள்ளவர்களைத் திரும்பி வரும்படி கொடியைக்காட்டினார்கள். அவர்களை எப்படி வெல்லலாம் என்று நானும் மரக்கலத் தலைவனும் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஒருவரும் மரக்கலத்துக்குத் திரும்பிப் போகவில்லை. பலமுறை துப்பாக்கி யால் வெடி தீர்த்த பின் அவர்களுள் பத்துப்பேர் படகு ஒன்றில் ஏறிக்கரையை நோக்கி வந்தார்கள். அவர்கள் இறங்கி மற்றப் படகுக்குச் சென்றார்கள். அது பழுது பட்டிருப்பதைக் கண்டு, அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களைக் கூப்பிட்டார்கள். நான் ‘வெள்ளிக்கிழமை’யையும் மற்றவர்களையும் அவர்களுக்கு மறுமொழியாகச் சத்தமிடும்படிச் சொன் னேன். அவர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் தங்கள் நண்பர்களைக் காணும் பொருட்டுச் சென்றார்கள்.
‘வெள்ளிக்கிழமை’யும் மற்றவர்களும் மலையிலுள்ள காடுகளில் சத்தம் இட்டுக் கொண்டு சென்றார்கள். படகிலிருந்து வந்தவர்கள் இனி இரவில் தங்கள் படகுக்குத் திரும்ப முடியாதபடி களைப்படைந்தபோது அவர்கள் சத்தமிடுதலை நிறுத்தினார்கள். நாங்கள் விரைவில் அவர்களை எல்லாம் பிடித்துக் கட்டி எங்கள் குகைக்குக் கொண்டு போனோம்.
18. தீவை விட்டுப் புறப்படுதல்
அடுத்த நாள் நாங்கள் படகைப் பழுது பார்த்தோம்; மரக்கலத்தில் இருப்பவர்களையும் மரக்கலத்தையும் பிடித்துக் கொள்வதற்கு வழி வகைளை ஆலோசித்தோம். நாங்கள் பிடித்து வைத்திருந்தவர்கள் பெரிய குற்றம் செய்தவர்களென்றும், மரக்கலத்தையும் மரக்கலத்திலுள்ளவர் களையும் பிடிப்பதற்கு உதவி புரிந்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்க ளென்றும் மரக்கலத் தலைவன் சொன்னான்.
அவர்கள் அவ்வாறு செய்ய இசைந்து, ஒரு படகில் ஏறிப் புறப்பட் டார்கள். நானும் ‘வெள்ளிக்கிழமை’யும் கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
மரக்கலத் தலைவன் இரவு நேரத்தில் மரக்கலத்தை அடைந்தான். சிறிது போராட்டத்தின் பின் மரக்கலத் தலைவன் மரக்கலத்திலிருந்தவர் களை வென்று, மரக்கலத்தைக் கைப்பற்றினான்; தனது அனுகூலத்தின் அறிகுறியாக ஏழு வெடி வெடிக்கும்படி சொன்னான்.
நான் பார்த்துக்கொண்டு நின்று களைத்துப் போனமையால், அயர்ந்து தூங்கிவிட்டேன். “கவர்னர், கவர்னர்” என்று மரக்கலத் தலைவன் கூப்பிட்ட சத்தத்தைக் கேட்ட பொழுது நான் எழுந்திருந்தேன். நான் எழுந்ததும், “அதோ நிற்கிற மரக்கலம் உம்முடையதே; நாங்களும் அப்படியே,” என்று அவன் சொன்னான்.
அவன் மரக்கலத்தைக் கரைக்கு அருகில் கொண்டு வந்துவிட்டான். எனது பிறந்த நாட்டுக்குச் செல்வதற்கு மரக்கலம் கிடைத்துவிட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியில் மூழ்கினேன். மரக்கலத் தலைவன் செய்தவைகளுக்காக நான் அவனுக்கு நன்றி கூறினேன்; எனக்கு உதவி அளித்த கடவுளைத் துதித்தேன்.
மரக்கலத் தலைவன் இறைச்சி, சர்க்கரை, உரொட்டி, கொடிமுந்திரி இரசம் முதலிய பலவற்றைக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் கரையிலிருந்து நல்விருந்து உண்டோம். அவன் அழகிய உடைகளைத் தந்தான். அவைகளை உடுத்து, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
‘வெள்ளிக்கிழமை’யும் மரக்கலத் தலைவனும், நானும் கப்பலுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்தோம். நான் எனது பணம், தொப்பி, குடை, கிளி முதலியவைகளை எடுத்துக் கொண்டேன். எங்களுடன் இருந்தவருள் ஐந்து பேர் நம்பத் தகுந்தவரல்லர் என நினைத்தபடியால் நாங்கள் அவர்களை அத் தீவிலேயே விட்டுச் சென்றோம்.
புறப்படுமுன் நான் எனது வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அவர்களுக்கு நானிருந்த கூடாரம் முதலியவைகளையும் காட்டினேன். நான் எவ்வாறு சமைத்தேன், தானியம் விதைத்தேன், கொடி முந்திரிப் பழங்களை உலர்த்தினேன், என்பவற்றை எல்லாம் அவர்கள் அறிந்தார்கள். ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் இஸ்பானியரும் எப்போதாவது திரும்பி வந்தால், எங்கள் பயணத்தைப் பற்றி அறிவிக்கும்படி அவர் களிடம் சொன்னேன்.
பின்பு நாங்கள் மரக்கலத்தில் ஏறி, விரைவில் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டோம். நாங்கள் ஆறு மாதம் பயணஞ்செய்தோம். பல ஆண்டுகளுக்குப் பின் நான் மறுபடியும் எனது நாட்டைப் பார்த்தேன்.
‘வெள்ளிக்கிழமை’ என் வேலைக்காரனாகவும் நண்பனாகவும் எப்பொழுதும் என்னோடு இருந்தான். நான் என் தந்தையாரைக் காணும் பொருட்டு யார்க்ஷயருக்குச் சென்றேன். என் இரண்டு சகோதரிகளைத்தவிர என் மற்றைய உறவினர் எல்லாரும் இறந்துவிட்டனர்.
நான் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு ஆயிரம் தங்க நாணயம் வரையிலிருந்தது. பிரேசிலிலுள்ள கரும்புப் பண்ணையிலிருந்து பெருந் தொகை எனக்கு வந்தது. அப்பொழுது நான் செல்வனாய் விளங்கினேன். நான் இன்னும் பல துணிச்சலான காரியங்கள் செய்த போதும் நான் தனிமை யாய்த் தீவில் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவில்லை.
1. O.C.Gangoly.
1. Siam. 2. Mikong. 3. Malay Archipelago. 4. Sunda Islands. 5. Java.
2. Tysangal
3. Confucius.
4. When the Aryans passed the Afghan passes, India was inhabited by a dark and short statured but civilized race called the Dravidians. These Dravidians had extensive commercial relations with Babylon, Phoenicia and the countries beyond the Arabian Sea. Their trade consisted of such articles of luxury as Indian cidar, muslin, precious stones, pea-cocks, aloes etc. The fact that a piece of Malabar teak was found in the palace of the king of Chaldea 3,000 B.C. and the similarity between the Hebrew word for peacock viz. Toki and the modern Tamil and Malayalam word viz. Tuki and such glaring similarity between many an Indian and a Greek or a Hebrew word is too striking to be over-looked as a mere matter of coincidence ….. During this long period, the Aryans, in their long struggle with the aboriginal tribes, had adopted the policy of give and take.
Outline of Economic History of India. pp.8 & 12-M. P.Lohana.
5. இது தமிழ்ப்பெரும் புலவர் சோமசுந்தர பாரதியாரவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த ஓர் கட்டுரையின் சுருக்கம்.
6. முக்காலமும் அறியும் அறிஞர்.
7. அகத்தியர் என்பதே அக°த° எனத் தப்பாக வாசிக்கப்பட்டதென யோவுதுபிரில் என்பார் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். The Mythic Society Journal : XIX P.180
8. பழைய ஐரோப்பிய மக்கள் அன்னியரை பார்பேரியர் (Barbarians) என வழங்கினார். அவ் வகை வழக்கையே மிலேச்சர் என்னும் சொல்லும் குறிக்கும்.
9. Tamil Studies, P.397.
10. One of the most illuminating suggestions of his (Partigers) is that the Agastyas, Vasisthas, and Viswamitras mentioned in the Sanskrit works were not each one man who baffles the reader by appearing and reappearing in every age from that of Iksvaku to that of Sri Krishna. (History of the Tamil - P. liv-P.T.S. Iyengar).
11. Ibid - pp.54, 55. 2. Ibid p.224.
12. Cambridge History of India. p.596-L D.Barnett.
13. Encylopaedia Britannica.
14. Seythians, Agathyrse, a people of Thracian origin, who in the earliest historical times occupied the plain of Maris (Maros) in the region now known as Transylvania. Like the Gallic Druids they recited their laws in a kind of sing-song to prevent their being forgotton, a practice still in existence in the days of Aristole-E. Britannica.
15. Atlas of Ancient and Classical Geography - Index p.6, map1. Everyman’s Library, Edited by Ernest Rhys.3.
16. God Varuna himself was an Asura (Dravidian - Vedic Kings and Rishis came to have Astra blood in them as is indicated by the colour. Sages like Vashistha, Agastya and Viswamitra were given the same father Mitra Varuna - History of Pre-Musalman, India - p.172.
17. அகத்தியர் குடகு மலையிலிருந்து பின் பொதிய மலைக்கு வந்தாராதலின் அவர் குடமுனி யெனப்பட்டாரென்றும் இவ்வரலாற்றை மறந்த பிற்கால மக்கள் ‘குடகு’ என்பதைக் குடம் எனக்கொண்டு பொருந்தாத பல கற்பனைக் கதைகளை அவர் பிறப்போடு சம்பந்தப் படுத்திக் கட்டி வழங்கினார்கள் என்றும் பண்டிதர் சவரிராயனவர்கள் கூறியுள்ளார்.
குறிப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக