ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
வரலாறு
Back
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
வரலாறு
புலவர் கா. கோவிந்தன்
தமிழர் பண்பாடு
புலவர் கா. கோவிந்தன், எம்.ஏ.,
திருநெல்வேலித், தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
154, டி.டி.கே. சாலை, சென்னை - 18.
நூல் விவர அட்டவணை
நூலின் பெயர் - தமிழர் பண்பாடு பொருள் - வரலாறு ஆசிரியர் பெயர் - புலவர் கா. கோவிந்தன் வெளியீட்டு எண் - 2025 பதிப்பாண்டு - முதல் பதிப்பு 1999 பதிப்பாளர் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -18 உரிமை - கழகம் மொழி - தமிழ் நூலின் அளவு - கிரெளன் தாள் - 10.9 kg. கட்டமைப்பு - அட்டைக் கட்டு அச்செழுத்து - 10 pt மொத்தப் பக்கங்கள் - 283 விலை - ரூ.20 அச்சிட்டோர் - அப்பர் அச்சகம், செ 108. கணிப்பொறி அச்சு - திருவள்ளுவர் வரைகலையகம் சென்னை - 94. 472 22 05
பொருளடக்கம்
1. முன்னுரை
2. தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை
3. கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்
4. கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம்
5. ஆகமங்களின் தோற்றம்
6. வடஇந்தியாவும் தென்இந்தியாவும் கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை
7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000- 500
8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு. 1 வரை
9. வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்
10. தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை
11. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை
12. தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின் முதல் நுழைவு
13. மக்கள் வாழ்க்கை கி.பி. முதல் ஐந்நூறு ஆண்டுகள்
தமிழர் பண்பாடு
(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)
1.முன்னுரை
வரலாற்றின் குறிக்கோள்
வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.
இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறு பட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு, ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் உளவான நாடுகளோடு கொண்டிருந்த உறவுநிலை, குறியீட்டு நிலையாம் எளிய தொடக்க நிலையிலிருந்து, அரிதின் முயன்று பயின்றாலல்லது, எளிதில் விளக்கம் பெறமாட்டா. இலக்கிய இலக்கண மரபுகள், முடிந்த முடிபாக முழுமையாக்கப்படும் வரையான, அவர்தம் இலக்கிய வளர்ச்சியின் விரிவுரை விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்பதின் பொருள் என்றால், தொல்லூழிக் காலத்திலிருந்து, கி.பி. 600 வரையான காலத்திற்கான தமிழர்களின் வரலாற்றினைத் திரும்ப வரைதற்குத் தேவைப்படும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் உள்ளன, அவ்வரலாற்றுக்கதை மறுபடியும், வரையப்படுவது முயலப்பட்டுள்ளது இந்நூலில்.
மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்ந்தனவாகிய கற்களால் ஆன படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும் பொருட்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, அப்பழம்பெரும் நாட்களில் தமிழர்கள் நடத்திய வாழ்க்கைநிலை பற்றிய ஒரு மதிப்பீடு சென்னைப் பல்கலைக் கழகம், 1926ல் வெளியிட்ட “இந்தியாவின் கற்காலம்” என்ற என் நூலில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய இரும்புக் காலத்தைச் சேர்ந்தனவாய படைக்கலங்களாலும், தொழிற்கருவிகளாலும் சிறிய அளவிலும், வடநாட்டு ஆரிய நாகரிகத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர், அவர்கள் வழங்கிய சொற்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவால் மிகப்பெரிய அளவிலும் தெரியவரும். அவர்களின் சமூக, சமய, அரசியல் தொழிலியல் வாழ்வு நிலைகள், சென்னைப் பல்கலைக்கழகம் 1929ல் வெளியிட்ட “ஆரியத்திற்கு முந்திய தமிழர் நாகரீகம்” என்ற என் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (அவர்களின் பழம் இலக்கியச் சார்புடையவும், வேறு வகைச் சார்புடையவும் ஆய கால வெள்ளத்தின் அழிவுக்கு ஆட்பட்டுப் போகாமல், என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமஸ்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் இலத்தீன் தொன்மை வாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக் கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறு தொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.
வரலாற்று மூலங்கள்
தனி ஒருவர், மற்றும் சமூக வாழ்வின் குறிக்கோள் ஒழுக்கம் பற்றிய ஆரியரின் பழங்கருத்துகளைக் கொண்டிருப்பதான, மந்திரங்கள், பிராமணம் என்ற பொருளில் நான் கொள்வதான வேத இலக்கியம் (இரண்டுமே ஒரு சேர இருந்து வேதங்கள் எனப்படுவன வாகி) மற்றும் சூத்திரம், அதுபோலவே இராமாயணம், மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பெளத்த, அர்த்தமாக ஜெயின் பழம்பெரும் பாலி மொழியிலான இலக்கியங்கள், அதாவது, ஆரிய வரலாற்று மூலங்கள் அனைத்தும், வரலாற்றுச் செய்திகளுக்காக முழுமையாகத் துருவித் துருவி ஆராயப்பட்டு விட்டன. இவை போலும் வரலாற்று மூலங்களிலிருந்து பெறப்படும் செய்திகள் ஆரியர்கள், தமிழர்களோடு கொண்ட தொடர்பினை மட்டுமே விளக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
வட இந்தியப் பழங்கதைகளைக் குறிப்பாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பழங்கதைகளை எடுத்தாளும் நிலையில், நான். திருவாளர் பர்கிதர் அவர்களின் நுணுகிய ஆய்வு முறையினையும் முடிவுகளையும், பெரும்பாலும் முழுமையாகப் பின்பற்றியுள்ளேன். இக்குவாகு காலத்திற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் காலத்திற்கும் இடையில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்து வந்து காட்சி அளித்துப் படிப்பவரைக் குழப்பத்திற் குள்ளாக்குவோர்களாய அகஸ்தியர் ஒரே அகஸ்தியர் அல்லர், வசிஷ்டர், ஒரே வசிஷ்டர் அல்லர், விசுவாமித்திரர், ஒரே விசுவாமித்திரர் அல்லர். அந்தந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு பெயர் கொண்டு வாழ்ந்த பலராவர். அப்பெயர்கள் தனித்தனி மனிதர்களைக் குறிப்பன அல்ல. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு குடிப்பெயரைக் குறிப்பனவாம் என்பது, திருவாளர் பர்கிதர் அவர்களின் பல்வேறு கருத்துகளில் நனிமிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்முடிவு, குழப்ப நிலையைக் குறைத்துத் தெளிவு நிலையினைத் தோற்றுவித்ததோடு, வட இந்திய நாடுகளில், பழங்காலத்தே அடுத்தடுத்து அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிப் பெரும்பாலும் சரியானதொரு பட்டியலை, பொதுவாகப் பின்பற்றும் இப்பட்டியலைத் திருவாளர் பர்கிதர் அவர்கள் தயாரிக்கத் துணையும் புரிந்தது. (இப்பட்டியல்) வேதகாலத்தில் தென்னாட்டில் ஆரிய நாகரீகம் மெல்ல மெல்லப் பரவிய நிலையினைக் கண்டுகொள்ள எனக்கும் துணை நின்றது.
மெஸபடோமிய, எகிப்தியக் கல்வெட்டுக்கள் கிரேக்க இலத்தீன் மொழி இலக்கியங்கள் போலும் இந்திய நாட்டைச் சேராதனவாகிய வரலாற்றுச் சான்றுகள், தனக்கு மேற்கே உள்ள நாடுகளோடு இந்தியா கொண்டிருந்த வாணிபத் தொடர்பினை மட்டுமே குறிப்பிடுகின்றன. செங்கடற் செலவு என்ற பெரிபுலுஸ் நூலின் தம்முடைய பதிப்பில், திருவாளர் ஸ்காப் அவர்களாலும், “உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிகம்” என்ற தம் நூலில், திருவாளர் லார்மிங்டன் அவர்களாலும், இந்த வரலாற்றுச் சான்றுகள் முற்றவும் ஆராயப்பட்டு, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அந்நூல்களில் கூறப்பட்டிருக்கும் எழுத்து வடிவிலான நல்ல ஆவண அடிப்படையிலான செய்திகளை, இந்தியாவின் சார்பில் கிடைக்கக்கூடிய சிறு செய்திகளோடும் ஒப்புக்காட்டி நூற்றாண்டு நூற்றாண்டு வாரியாக வரிசைப்படுத்தியுள்ளேன்.
ஆனால், இந்நூலுக்கு உறுதிவாய்ந்த சான்றுக் களஞ்சியமாக நான் மேற்கொண்டது, கி.பி. 600க்கு முந்திய காலத்துத் தமிழ் இலக்கியமே ஆகும். பெரும்பாலான என் ஆராய்ச்சி முடிவிற்கு அடிப்படை ஆதாரமாக, உண்மையில் நான் மேற்கொண்ட நனிமிகப்பழைய நூல், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும், அந்நூல், அது எழுதப்படுவதற்கு முந்தித் தோன்றிய இலக்கியங்களுக்கான இலக்கண மரபுகளை நேரிதாக எடுத்து விளக்கவே எண்ணியுள்ளது, அவ்விலக்கணை மரபுகளை அந்நூல் எழுந்த காலத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களின் உண்மையான பழக்க வழக்கங்களாகவே நான் மதிக்கின்றேன். பண்டைத் தமிழரின் எண்ணித் தொலையா இலக்கியப் படைப்புகளின் ஒரு சிறு பகுதியாய் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற தலைப்புகளில் தொகை நூற்களில் தொகுக்கப் பெற்றிருக்கும், வேறு வேறுபட்ட நூற்றாண்டுகளில் எழுதப்பட்டனவாய் அப்பாக்கள் பலவும் தரும், வரலாற்றுச் சான்றுகளே தெளிவான, உறுதி வாய்ந்த நேரிடைக் கூற்றுகளாகும், இச்செய்யுள்கள் இரு பெரும் அறிஞர் பெருமக்களால் இதற்கு முன்பே வரலாற்று ஆய்வுக்கும் ஓர் அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன.
சொல்லேருழவு செய்யப்படாமல் வெற்றுக்கரம்பாகவே இருந்து வந்த, தமிழிலக்கியத்திறன் ஆய்வு என்ற மண்ணில், திருவாளர் வி.கனகசபை அவர்கள் முதல் உழவு செய்து, பண்டைய தமிழரசர்களின் வரலாறு பற்றிய ஆய்வினை முதன்மையாகவும், அக்கால மக்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வினை இடைப்பிறவரலாகவும் மேற்கொள்ளும், “1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்” என்ற தம்முடைய நூலைக் கொணர்ந்துள்ளார், முதுபெரும் தமிழ் அறிஞராக அவர் இருந்தும், பழந்தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதி அவர் காலத்தில் அச்சிடப்படாமையால் அத்துறையில், முழுமையாக வெற்றி காண இயலாமையால் அவர் வருந்தினார், அதனால், நம்புதற்கியலா வரலாற்றுக் கட்டுக்கதைகள் சில இடம் பெற்றுவிடத்தக்க, பல தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்க நேர்ந்துவிட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளை நூற்றாண்டு வாரியாகப் பெருமளவில் கொண்டிருப்பனவாகவும் (அப்பழங்காலச் சமுதாய வாழ்வியல் முறை பற்றிய) வரலாற்றுச் செய்திகளையோ அதன் வளர்ச்சி நிலை பற்றிய ஆய்வினையோ அவர் மேற்கொண்டாரில்லை.
உண்மையில் அவ்விலக்கியங்களில் இரண்டறக் கலந்து கிடக்கும் இத்துணைச் செல்வங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என எண்ணிக் கலக்கப் படுமளவான வரலாற்றுச் செல்வங்கள் மிகப்பலவாம், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மட்டும் கல்லி எடுக்காமல் வரலாற்றுச் செய்திகளில் ஒரு கால் கூறினைக்கூட பயன்படுத்தவில்லை என்றே நான் அஞ்சுகின்றேன். வரலாற்றுச் செய்திகளாக, ஆய்ந்து கண்டு நான் கூறியிருப்பன பெரும்பாலும் முழுக்க முழுக்கப் புதிய செய்திகளாகவே, என்னுடைய ஒவ்வொரு முடிவையும் அரண் செய்யும் சான்றாகத் தமிழ் இலக்கியத்தில் காணலாம். செய்திகளை அவற்றின் மூலவடிவிலேயே தருவதை, ஒவ்வொரு அதிகாரத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கொண்டுவிடும் வகையில் அளித்திருப்பதன் மூலம், என் நூலைப் படிக்கும் தமிழ் அறியாதவர்களை அலைக்கழிக்க அல்லற்படச் செய்து, முந்திய எழுத்தாளர்கள் செய்யாது விட்ட ஒன்றை நான் செய்துள்ளேன்.
இந்நூலுக்காக நான் மொழி பெயர்த்திருக்கும் தமிழ் இலக்கிய மேற்கோள் பாக்கள் பழஞ்சொற்களையும், வழக்கிறந்து போன இலக்கண மரபுகளையும் பெருமளவில் கொண்டுள்ளன என்பதைக் கூற வேண்டியது பெரும்பாலும் தேவையற்றது. மூலங்களுக்கு உரை வகுக்கும் நிலையில் உரையாசிரியர்களும் சிற்சில இடங்களில் மிகமிக அரிதாக என்றாலும் வழிதவறிச் சென்றிருப்பதால், அவர்கள் உரை, தவறான உரையாக இருக்கக்கூடும் என நான் எண்ணிவிடும் இடங்களில் அவர்கள் கூறுவதிலிருந்து வேறுபட, நான் தயங்கியதில்லை.
தமிழும் ஆங்கிலமும் மொழி அமைப்பில், ஒன்றிலிருந்து ஒன்று மிகப் பெரிய அளவில் வேறுபட்டு இருப்பதால், எடுத்தாளும் செய்யுள்கள் எளிமையில் பொருள் விளங்கக்கூடியனவாக இருப்பினும், அவற்றை மொழி பெயர்ப்பது கடினமாகவே உளது. மேலும் தமிழ்ப் புலவர்கள், குறிப்பாக கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டினரான பிற்காலப் புலவர்கள், தம்முடைய செய்யுட்களில், சொற்றொடர்க்கு மேல் சொற்றொடர்களையும், அடைமொழிக்கு மேல் அடைமொழியினையும் அடுக்கிக் குவிப்பதில் அளவின்றி ஆர்வம் காட்டியிருப்பது நேரிடை மொழி பெயர்ப்பைப் பெரும்பாலும் இயலாததாக ஆக்கியுளது. ஆனால் இம்மொழிபெயர்ப்புகள் ஒரு வரலாற்றுப் பயன் குறித்து ஆதலின், அவ்வப்போது மீறி, பொருள் விளக்க நிலை மொழிபெயர்ப்பு முறையினை மேற்கொண்டுள்ளேன். ஆயினும், அம்மொழி பெயர்ப்பு, படித்துப் பொருள் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றே என்பதை உணர்த்தும் என நம்புகின்றேன். என்னுடைய மொழிபெயர்ப்பு எங்கெல்லாம் பிழைபட்டிருப்பதாக உணர்கின்றனரோ, அவை அனைத்தையும் என் நோக்கிற்குக் கொண்டுவருமாறு தமிழறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன், எங்ஙனமாயினும், செய்யுள் மூலத்தை எந்த இடத்திலும் பொருட்பிழைபட உணர்த்தியிருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆண்டுகள் வழி நிகழ்ச்சி நிரல்
ஆண்டுகள் வழி நிகழ்ச்சிநிரல், வரலாற்றின் கண்ணாயின் பண்டைய இந்திய வரலாறு எப்போதும் குருடாகவே இருக்கும். உண்மைகள் அதாவது கணக்குப் பிறழாத, சரியான தேதிகள், மிகமிக அருகேயே தேவைப்படும் என்பதால் மக்கள் வாழ்வியல் வளர்ச்சி பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வாய்வுக்கு அடுத்தடுத்து இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சிகள் அளவிலேயே மனநிறைவு கொள்வர். பழைய இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் அறுதியிட்டு முடிவு செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறே தொடர்ந்து இருக்கும். அதனால் நாட்டுப்பற்று மிகுந்த தற்புகழ்ச்சியாளர்க்கும், ஒன்றைப் பலபடப் பெரிதாக்கிக் காட்டும் பொய்க் கூற்றினர்க்கும் போதிய வாய்ப்பினை அளித்து வந்துள்ளது, அளித்து வருகிறது.
கிருத்துவத் தலைமைக்குரு திருவாளர் அஷர் அவர்களின் ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல் செலுத்திய மேலாதிக்க விளைவால் உலகம் கி.மு. 40004ல் தோற்றுவிக்கப்பட்டது என நம்பியிருந்த காலத்தில், வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200 ஆக முடிவு செய்யப்பட்டது. அந்நாளிலிருந்து மண்ணியல் ஆய்வாளர்கள் மனிதனின் கடந்தகால வரலாற்றிற்குக் குறைந்தது நூறாயிரம் ஆண்டுகளாவது ஒதுக்கப்பட ‘வேண்டும் என வாதிட்டு வந்துள்ளனர் என்றாலும், ஆரிய நாகரீகத்தின் செல்வாக்கு சிறிதளவு தானும் காணக்கூடாத கி.மு. 3000க்கும் முந்தியதான சயிந்தவன் நாகரீகத்தின் அடிச்சுவடுகள், அரப்பா மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப் பட்டன என்றாலும், கடந்த நூறு ஆண்டு கால அளவில் சிறிதும் நம்புதற்கு இயலாத நனிமிகப் பிற்பட்ட காலத்தை வேதகாலந் தொடக்கத்திற்கு ஒதுக்கி விட்ட தேக்கநிலை, ஐரோப்பிய வரலாற்றுப் பேராசிரியர் களை மறுசிந்தனை செய்யத் தடுத்துவிட்டது.
திருவாளர் பர்கிதர் அவர்களின் பட்டியலிலிருந்து, பாரதப் போருக்கு முன்னர், 90 தலைமுறைகளைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி புரிந்தனர் என அறிகிறோம். பல்வேறு ஆய்வுகள், நிலைநாட்ட முனைவதுபோல், அப்போர் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாயின், வேதகாலம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு மிக முற்பட்ட காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும்.
ஆரியரின் ஒற்றைத்தி வழிபாட்டுமுறை, வேதகாலத்து முத்தீவழிபாட்டு முறைக்கு முன்னே, மிக நீண்ட காலத்திற்குச் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும். இவ்வகையால், முன்னுரை
———————————
ஆரியரின் தீ வழிபாட்டு நெறியின் தொடக்கத்திற்கு கி.மு. 3000ஐ நாம் அடைகிறோம். அந்தப் புதிர் ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேத காலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி.மு. 3000ல் தொடங்கிய தாகவும். நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அறவோடு நிறைவு கொள்கிறேன்.
ஸ்ரீ இராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி.மு. 2000 எனக் கருதுகின்றேன். ஸ்ரீ இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. ஸ்ரீ இராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம்மதிப்பீடு ஸ்ரீகிருஷ்ணனின் இறப்போடும், வேதமந்திரங்களை இயற்றி வந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால் முட்டி.வுக்கு நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் பட்டியல், இன்றியமையா நிலையில் சரியான தல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காண முயல்வதே நம்பிக்கை யற்றதாகி விட்டதான நிகழச்சிகளின் சரியான நாட்களை அன்று.
தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக் கொள்ளத்தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதி செய்யப் பட்டுவிட்டது. எந்தக் காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த, ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப் பெற, சில கல்வெட்டுகள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ அடையும் வரை, அதிகபட்சம், நாம் பெறக்கூடியது தெளிவில்லாத சில நிகழ்ச்சிகளின் வரிசைப்பட்டியல்தான்.
படி எடுத்தல்
சமஸ்கிருதச் சொற்களை, உரோமன் எழுத்து வடிவில் எழுதியது பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் கடைப்படித்த அதே முறைதான். தமிழ்ச் சொற்களுக்காக மேலும் சில எழுத்துக்களை மேற்கொண்டுள்ளேன். அவை யாவன; 'ஃ'ற்கு 'H'; 'ஏ’ வுக்கு 'E'; ‘ஓ’ வுக்கு ‘O’ ‘ற’ கர மெய்க்கு ‘u’. ‘ழ’ கர இன்றைய ஒலிப்பு நகரத்திற்கு முறையில் ‘ன’ கரத்தை வேறு பிரித்துக் காண முடிய வில்லையாகவே னகரத்திற்க்குத் தனிக்குறியீடு எதையும் பயன்படுத்தவில்லை. தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவது, தனிச்சிக்கலைத் தோற்றுவிக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் பல மெய்யெழுத்துக்களைக் குறிக்கவரும் குறியீடுகள் இரண்டு ஒலிகளைக் குறிக்கும் பணியினைப் புரிகின்றன. உரோமன் எழுத்தில் எழுதுவது ஒலிப்பு முறையோடு வேறுபட்டதாகி விடின் அச்சொல் தன் பொருளையே இழந்துவிடுகிறது. உரோமன் எழுத்தில் அளித்துள்ளேன்.
நான் மேற்கொண்ட ஒலிப்புமுறை பெரிதும் சரியான ஒன்று, ஒவ்வொரு தமிழனும் அதைப் பின்பற்றலாம் அல்லது உணர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். நான் சந்திக்க நேர்ந்த மற்றொரு சிக்கல், ஒரே சொல் சமஸ்கிருத வடிவிலும், தமிழ்வடிவிலும் காணப்படும் போது அதை எழுத்துவடிவில் தரும் நிலையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது என்ற உண்மை நிலையாகும். சூழ்நிலை, ஒருவரை சமஸ்கிருதத்தில் சிந்திக்கவைக்கும் போது, இவைபோலும் சொற்களைச் சமஸ்கிருத எழுத்துகளிலும், தமிழில் சிந்திக்க வைக்கும்போது, தமிழ் எழுத்துகளிலும் தந்துள்ளேன், இம்முறை, அவ்விரு மொழிகளில், ஒரு மொழியைத் தெரியாத வாசகர் களைத் தடுமாறச் செய்யக்கூடும் என்றாலும் இம்முரண்பாட்டு நிலையைத் தவிர்த்துவிடல் கூடும் என நான் நினைக்கவில்லை.
2. தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை
தமிழர், தென்னிந்திய மண்ணுக்குரியவர்
ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன் விளைவாகத் தோன்றிய ஒரு நாகரீகம், அம்மக்கள் வாழும் நில இயல் கூறுபாட்டுக் காரணம் அடிப்படையில் எழுந்ததேயல்லது, வென்று அடிமைகோடல், வாணிகம், மற்றும் பிற அறவழி மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டுவிட்ட வெளி நாட்டவரின் ஆதிக்க விளைவு போலும் வரலாற்றுக்கான அடிப்படையில் எழுந்ததாகாது.
தொல்லூழிக் காலத்தில், மனித வாழ்க்கையில், இயற்கைச் சூழ்நிலை செலுத்திய ஆட்சியின் விளைவாக மனித நாகரீகம் தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்ற வளர்ச்சி நிலையினைக் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்துக்கடியில் வியத்தகு - கனிவளச் செல்வங்களையும் நிலப்பரப்பின் மேல், எண்ணிக் காணமாட்டாது வேறு வேறுபட்ட மாவடை, மரவடைகளையும், ஒருபால், பெருநீர்ப்பரப்பையும், பிறிதொருபால் பெருநிலப் பரப்பையும் கொண்டதாய தட்பவெப்ப நிலையினையும் கொண்டு, மனித இனத்தின் வளர்ச்சியில், அதிலும் அவனுடைய தொடக்கநிலை வளரச்சிப் பருவத்தில், ஒப்புயர்வற்ற நிலையில் துணை நிற்பதாக இருந்தும், வளங்கொழிக்கும் இந்திய நாடு, தன் மைந்தர்களின் வாழ்க்கை நிலைக்கும், தன் வரலாற்று ஏடுகளுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நாகரீக நலத்திற்கும், தன் எல்லைக்கு அப்பாற்பட்ட வறண்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன வற்றையே சார்ந்திருக்க வேண்டியுளது என்பது வெள்ளிடை மலையாகும் என்றே இந்திய வரலாற்று ஆசிரியர் பலரும் கருதுவதாகத் தெரிகிறது.
சில வரலாற்று ஆசிரியர்கள், திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய்கள் வழியாக நம்பிக்கைமிக்க நல்ல வழிகாட்டி களின் துணையோடு கொண்டுவந்து, எடுத்த எடுப்பிலேயே முழுமை பெற்ற வெளிநாட்டு நாகரீகத்தோடு காவிரி அல்லது வைகைக்கரைகளில் குடியமர்த்துகின்றனர். தமிழ்ச்சொற் களோடு ஒரு சார் உறவுடைய சொற்கள் சிலவற்றை, வட இந்தியாவின் ஒரு மூலையில் வழங்கும் பிராஹிமொழி கொண்டிருப்பது ஒன்றே அவர்தம், மிகப்பெரிய இக் கற்பனைக்கு, அவர்கள் நம்பும் மிகச்சிறிய அகச்சான்று. தமிழ்மொழி அல்லது அதனோடு உறவுடைய ஒரு மொழி, பண்டைக்காலத்தில், அவ்வடமேற்கு மாநிலங்கள் வரை வழக்கில் இருந்துள்ளது என்பதே இதிலிருந்து பெறக்கூடிய முறையான முடிவு ஆகும்.
ஒரு மொழிக் குடும்பத்தின் ஒரு மொழியின் ஒரு வாக்கியத் தொடரை, மொழியியல் மரபைச் சிறிதும் மீறாமல், அத்தொடரில் உள்ள சொல்லுக்குச் சொல் மாற்றி வழங்குவதன் மூலமே, வேற்று மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியின் வாக்கியத் தொடராக மொழி பெயர்த்துக் கொள்ளுவதற்கு ஏற்புடையதாகும் வகையில், வட இந்தியாவில், இன்று வழக்கில் இருக்கும், சமஸ்கிருதம் அல்லது கெளடியன் இனத்தைச் சேர்ந்த மொழிகள் பலவும், திராவிட இன மொழிகளில் உள்ளது போன்ற இலக்கண அமைப்பு முறைகளையும், சொற்றொடர் அமைப்பு முறை களையும் கொண்டுள்ளன என்ற உண்மை நிலையாலும், மேற்கூறிய முடிவு அரண் செய்யப்படுகிறது.
கூறிய இவ்வுண்மைகள் தமிழ்மொழியோடு உறவுடைய மொழிகளை வழங்கிவந்த மக்கள் ஒரு காலத்தில் இந்தியப் பெருநிலப்பரப்பு முழுதும் வாழ்ந்து வந்தனர் என்பதை உறுதி செய்யுமேயல்லாது, அம்மக்கள், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்யா இந்தியப் பழங்குடிகள், இம்மண்ணின் மாந்தர் அல்லர் என்பதை நம்மை நம்பவைக்கத்தக்க அகச்சான்று ஒன்றுகூட இன்று வரை தரப்படவில்லை.
மேலும், தென்னிந்தியாவில், இதுவரை, அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைக் காலத்தைச் சார்ந்த கலைப் பொருட்களும், வரலாற்று நினைவுச் சின்னங்களும் தொடக்க நிலையாகிய பழங்கற்காலம் முதல் புத்தம் புது நிலையாகிய உலோக காலம் வரை எவ்வித இயற்கை நிலை பிறழ்வு காரணமாகவும், இடையற்றுப் போவதற்கு உள்ளாக்கப்படாத நாகரீகத்தின் முறையான வளர்ச்சி, இந்நாட்டில் இருந்து வந்தது என்பதை நிலைநாட்டும் அழியாக் களஞ்சியத் தொகுப்பாய் அமைந்துள்ளன (இக்கூற்றிற்கான அகச் சான்றுகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் கற்காலம் என்ற என் நூலில் காண்க.
இந்நாகரீகத்தின் வளர்ச்சிப் பருவ நிலை முழுவதும், தமிழ் மொழி, தென்னிந்தியாவில் வழக்காற்றில் இருந்து வந்துள்ளது. இந்நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும் மொழி வடிவில் உணர்த்தத் தேவைப்படும் சொற்கள், தமிழ் மொழியின் தொடக்க நிலை மொழயமைப்பிலேயே இடம் பெற்றுள்ளன. அப்பண்டைக் கால பழக்க வழக்கங்கள், தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கிய ஏடுகளில், போற்றிக் காக்கப்படுவது நீண்டகாலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதற்கான எண்ணற்ற அகச் சான்றுகளுக்கு “ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம்” என்ற என் நாலைக் காண்க). ஆகவே, தமிழர், தென்னிந்தியாவின் பழம் பெருங்குடிகளாவர் என்பது முழுதும் உண்மையாம் எனக் கொள்ளலாம்.
ஐந்நிலங்கள்
நிலப்பரப்பின் வாழத் தகுதி வாய்ந்த பகுதிகள், ஐந்து இயற்கைக்கூறுகளாகப் பிரிக்கப்படலாம் என்பதைப் பண்டைத் தமழர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும், அவர்கள், திணை என்னும் பெயரிட்டனர். திணை எனும் அச்சொல், ஒரு நிலப்பரப்பு எனும் பொருள் தருவதாய் திண் அல்லது திட் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாகத் தோன்றுகிறது. திணை என்ற அச்சொல், பொதுவாக நிலம் என்ற பொருளிலும் ஆளப்படுகிறது. பண்டைத் தமிழர்கள், நிலப்பரப்பு, ஐந்து இயற்கைக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை மட்டும் அறிந்திருந்தாரல்லர். மனித வாழ்வின் செயல்பாட்டு முறைகள், ஒவ்வொரு மனித இனமும் எந்த இயற்கைச் சூழலில் வளர்ச்சி பெற்றதோ அந்த இயற்கைச் சூழலின் இயல்புகளோடு ஒத்திருந்தன என்பதையும் அறிந்திருந்தனர்.
அந்த ஐந்து நிலப்பகுதிகளாவன, மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி, நீரற்று வறண்ட நிலப்பகுதியாகிய பாலை. மலைக்கும் மடுவிற்கும் இடைப்பட்ட காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகிய முல்லை, ஆற்றுப்படுகை நிலமாம் மருதம், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல், நிலப்பரப்பின் இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் சிறுசிறு அளவிலேனும் காணப்படுகின்றன. தென்னிந்தியர் ஒரு நிலப்பிரிவிலிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குப் பரவி வாழ்ந்தமையால், அந்நிலப்பரப்பு ஒவ்வொன்றும் உருவாக்கி அளித்த நாகரீகத்தை, அவர் படிப்படியாக வளர்த்துள்ளனர்.
மனித இன நூல் வல்லுநர், வேறுவேறுபட்ட மூவகை மனித நாகரீகத்தின் இயல்பினைக் காட்டவல்ல முப்பெரும் இடங்களான. முப்பெரும் நிலப்பிரிவுகளைக் குறிப்பிட்டுள் ளனர். அவ்வகை நாகரீகம், மத்திய தரைக்கடல் நாகரீகம், ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம், நார்டிக் எனப்படும் வடமேற்கு ஐரோப்பிய நாகரீகம் என அழைக்கப்பட்டன. மத்திய தரைக்கடலைச் சார்ந்து நிலவிய நாகரீகத்தையும், ஆல்ப்ஸ் மலையின் இருபக்கத்தும் நிலவிய நாகரீகத்தையும் , ஆராயத் தொடங்கியபோதுதான், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் அம்மக்கள் வாழும் சுற்றுச்சூழல் செலுத்தும் ஆட்சியின் இயல்பு உணரப்பட்டது. ஆகவே, முதல் இரு நாகரீகங்களும் அவ்வாறு பெயரிடப்பட்டன. மூன்றாவது இயல்பினைக் காட்டவல்ல இடப்பகுதி, யுரேஷியா எனப்படும் பிரிவுறாத ஆசிய ஐரோப்பியப் பெருநிலப் பரப்பின் வடபகுதியைச் சார்ந்தது. ஆகவே, மூன்றாவது நாகரீகம் அவ்வாறு பெயரிடப்பட்டது. தமிழ்ப்பெயர் சூட்டுவதாயின் மத்திய தரைக்கடல் நாகரீகம், நெய்தலாம். ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம் குறிஞ்சியாம். நார்டிக் நாகரீகம் முல்லையாம்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாகத் தொழில்மயமாக்கப்பட்டு பண்டைக்காலத்து ஐரோப்பிய மக்களுக்கு ஆறும், அது ஓடும் பள்ளத்தாக்காம் நிலப்பரப்பும் செலுத்திய ஆட்சித்திறன் அறவே மூடி மறைக்கப்பட்டுவிட்டமையால், மிக மிக முக்கிய நாகரீக மாகிய மருதம் என அழைக்கப்படும் ஆற்றுவெளி நாகரீகம் அறவே புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பரந்து கிடப்பது போன்று ஐரோப்பாவில் பாலைவனம் எதுவும் இல்லை. அராபிய நாடோடி இனத்தவரின் நாகரீக இயல்பினைக் காட்டவல்லது பாலை வனம். மக்கள் இனப்பண்பாட்டு நிலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கடைக்கண் பார்வையை, இது, ஒரு சிறிதே பெற்றுள்ளது.
மனிதன் பண்டு கடந்துவந்த நாகரீகத்தின் படிக்கட்டுகள் ஐந்து. அவையாவன: வேட்டையாடல், நாடோடி வாழ்க்கை, கால்நடை மேய்த்தல், கடல் மேற்சேறல், தொழில்மயமும் கலந்த உழவுத்தொழில் மேற்கோடல்: இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதத் திணைகளுக்கு நிகராகும். ஒவ்வொரு நிலப்பிரிவையும் சார்ந்த, இயற்கை வளங்களின் இயல்புகள், அவ்வந் நிலத்துக்குரிய நாகரீக வளர்ச்சிக்குத் தூண்டுதலாய் அமைந்தன.
வேடன்
எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். அம் மலைநாட்டின் அடிவாரத்தில், தண்டகன் என்ற அரசன் பெயரிடப்பட்ட, தன் நிலைபேற்றிற்காக, ஆதி மனிதன் மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தில், அவனோடு போட்டியிட்டு வந்த, பருத்த உருவ அமைப்பு உடையவாய், அவன் பகை விலங்குகளாம் சிங்கம், புலி, யானை, காட்டெருமை, மலைப் பாம்புகளையும், அவைபோன்றே மனித உயிர்களை மாய்ப்பதில், அப்பெரு விலங்குகளிலும் கொடுமை வாய்ந்த, ஆனால், மிக நுண்ணிய உயிரினங்களாகிய பூச்சிப் பூஞ்சானங்களையும் பெருமளவில் கொண்டிருந்த வெப்ப மண்டலப் பருமரக்காடுகள் இடம் பெற்றிருந்தன.
குறிஞ்சியில், ஞாயிற்றின் வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் தன் பகை விலங்குகளிலிருந்தும், ஆதி மனிதன், தன்னை எளிதில் காத்துக் கொள்ளும், புகலிடங்களைப் பெரும் பாறைகளின் இடுக்குகளிடையேயும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மலைக்குகைகளுக்கிடையேயும் எளிதில் கண்டுகொண்டான். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்குப் பானையை, இன்னமும் அவன் கண்டுகொண்டானல்லன், இயற்கை நீரூற்றுகள், அவனுக்கு நீர் வழங்கத் தவறிவிடும் போது, மலை நாட்டில் கணக்கின்றிக் காணப்படும் பள்ளங்களில் நீர்த் தேக்கங்களைக் கண்டு பயன் கொண்டான்.
காலின் கீழிருந்து எளிதில் எடுத்துக்கொண்ட கூழாங்கல், அவனுக்குத் தொடக்கநிலைத் தொழிற்கருவியாகப் பயன்பட்டது. பல்வேறு வடிவங்களில் ஏராளமாகக் கிடைத்த கல்வகைகள், புதியன காணும் அவன் அறிவிற்கு ஊக்கம் ஊட்டின. அவனும் அவனுக்குத் தேவைப்பட்ட கோடரி, குத்தீட்டி, வெட்டுவாள், மண்வெட்டி முதலானவற்றை வடித்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான். பழங்கற்காலம் என அழைக்கப்படும் மனித நாகரீகத்தின் தொடக்கநிலை, இந்த மண்ணில், இவ்வகையில் உருப்பெற்றது. இக்காலத்தைச் சேர்ந்தனவாகிய பழங்காலக் கலைப்பொருட்கள், கடப்பை, நெல்லூர், வடார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பெருமளவில் பரவிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் சிறப்பாகக் காணப்படுகின்றன.
குறிஞ்சியில் பண்டைமனிதன், தொடக்கத்தில் கனி, கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, கிழங்கு வகைகளை உண்டே உயிர் வாழ்ந்திருந்தான். பருவநிலை மாறுதல் காரணமாக, இவ்வுணவுப்பொருள் கிடைப்பதில் ஏற்பட்டு விட்ட முரண்பாட்டு நிலை, அவன் உணவு வகையில் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்துக் கொள்ளத் தூண்டிற்று. விலங்குப் பகைவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு மேலாக இவ்வுணவுத் தேவையே, அவனை வேட்டையில் வல்லுநனாக ஆக்கிற்று. ஆகவே, மனிதனின் முதல் தொழில், வேட்டையாடுதலாய் அமைந்தது. பழங்கற்காலக் கருவிகளெல்லாம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இவ்வுண்மை, தொடக்க காலத்து வேடுவன், உலகின் பல பாகங்களிலும் அலைந்து திரிந்த பெரிய நாடோடியாம் என்பதை உறுதி செய்கிறது.
குறிஞ்சி நிலத்தின் சுற்றுச் சூழ்நிலை, மனித நாகரீகத்தின் வேட்டுவர் வாழ்வில் வில் - அம்பு, தீ மூட்டுதல் என்ற மேலும் இரு அரிய பெரிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணவும். வழிவகுத்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த குறிஞ்சி நிலங்களில் மூங்கில் ஏராளமாக விளைகிறது. குறவர் என அழைக்கப்படும் அந்நிலத்து வாழ் மக்கள், மூங்கிலின் - பிளவுபட்ட கழிக்களின் வளைந்துகொடுக்கும் இயல்பை நுண்ணியதாக அறிந்து, அவற்றை வளைத்து, அவற்றின் இரு முனைகளையும், உலர்ந்து நீண்ட கொடிகள் கொண்டு இறுக்கிப் பிணித்து, அவற்றினின்றும் நீண்ட முட்களை, இருந்த இடத்திலிருந்தே தொலைவிடங்களுக்கு விரைந்து செலுத்த அறிந்து கொண்டனர். தாரியஸ் , ஸெர்ஸஸ் என்ற மாவீரர்களின் படைவரிசையில் பெரிதும் பாராட்டப்பெற்ற பிரிவு, இந்திய விற்படையினர் தாம், இந்திய நாட்டு வேடுவன், புலியைத் தன் வில்லிலிருந்து செலுத்தும் ஒரே அம்பினால் இன்றும் கொன்று விடுவான் என்ற செய்திகள் மூலம், தம் தொழிலில் எக்காலத்தும் சிறந்தவர் என்ற பாராட்டினைப் பெற்றுவிட்ட இந்தியாவின் மலை நாட்டு மக்கள், மேற்கொண்ட, விற்படையின் தோற்றம் இதுதான்.
பண்டைக்காலத்துக் குறவர்களின் மற்றொரு கண்டு பிடிப்பு, மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாம் தீ மூட்டுதல், பழைய கற்காலத்துத் தொடக்க நிலையில், குறிஞ்சிவாழ் மக்கள் கடுமையான புயற்காற்று வீசுங்கால் மூங்கிற்கழிகள் ஒன்றோடொன்று கடுமையாக உராய்த்துக் கொள்ளும் போது, தீப்பொறிகள் எழக்கண்டு இரண்டு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று தேய்ப்பதன் மூலம் நெருப்பை உண்டாக்கலாம் என்பதைக் கண்டு கொண்டனர். நெருப்பை , அவன் முதன்முதலாகப் பயன் படுத்தியது, தான் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை வதக்குவதற்கே.
வேட்டுவ மகளிர்
அக்குடியிருப்பில், ஆடவர், வேட்டை குறித்து வெளியே சென்றிருக்கும்போது மகளிர், கனிபறித்தல், கிழங்ககழ்தல், தங்கள் வாழிடங்களைச் சூழ, நிறைய விளைந்திருக்கும் புல்லரிசி, மூங்கிலரிசி, தினை அரிசிகளைத் திரட்டிக் கொணர்ந்து களஞ்சியங்களை நிரப்பிக்கோடல் போன்ற வற்றில் ஈடுபட்டிருப்பர்.
தங்கள் குழந்தைகளை வளர்ப்பது, மகளிரின் மற்றொரு பணியாம். அந்த நாகரீகப்பருவத்தில், மனிதன் வீடுகட்டத் தெரிந்து கொள்ளவில்லை. வெயில் மழைகளிலிருந்து காத்துக் கொள்ள, பருமரங்கள், பெரும்பாறைகள், இயற்கைக்குகைகள் அளிக்கும் புகலிடம் தவிர்த்து வேறு புகிலடம் தேட வேண்டிய தேவை இல்லாத அளவு, தென்னிந்திய தட்பவெப்பநிலை துணை புரிந்தமையால் வீடுகள் அருகியே தேவைப்பட்டன. தங்குவதற்கான இடத்திற்காக அல்லாமல் உணவுப் பொருட்கள் வடிவிலான பழங்காலச் செல்வத்தை ஈட்டி வைப்பதற்காகவே வீடுகள் முதன்முதலாகக் கட்டப் பட்டன. உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் தேவையைப் பழங்கால மனிதன் இன்னமும் உணரவில்லை. ஓரிடத்தில் நிலைத்து இராமல் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் நாடோடி வாழ்க்கை முறையின் தேவை, நிலையான குடியிருப்பு இல்லாக் குறைபாடு ஆகிய இவை ஆண்மகன் வாழ்வில், குடும்ப வாழ்வு பற்றிய இயல்பான உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. ஆகவேதான் குடும்பத்தில் பெண்ணே தலைவியாம் வாழ்க்கைமுறை, பழங்குடி மக்களிடையே முதலில் இடம் பெற்று வளர்ந்தது.
இவ்வகை வாழ்க்கைமுறை அமைப்பிற்கு, மற்றுமொரு சூழ்நிலையும் ஊக்கம் அளித்தது. ஆதிமனிதன் விரிவான மணச் சடங்குகளால் சிக்கவைக்கப்படவில்லை. கண்டதும் காதல், உடனடியாக ஏற்றுக்கோடல், இவற்றைத் தொடர்ந்து பையப்பைய இடம்பெற்றுவிட்ட பண்டை முறையிருந்தே திருமணச் சடங்காக உருப்பெற்றது. திருமண உறவு நிலையான ஒழுக்கமாக எல்லாக் காலத்தும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். கூறிய இக்காரணமும், தனக்கெனச் சொத்துரிமை கொள்ளும் முறை வளர்ச்சி பெறாத நிலையும், நிலையான குடியிருப்பு முறையில் பற்று இன்மையும், பெண்ணே குடும்பத் தலைவியாம் முறை, மிக நீண்ட காலம் நிலைத்திருந்தமைக்கு ஊக்கம் ஊட்டுவவாயின.
தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் ஆசை எப்போதும் மனிதனுக்குச் சிறப்பளிப்பதாம். அதிலும் குறிப்பாக மகளிரின் பெருவழக்கமாம். குறவர் மகளிர். இன்று போலவே, அன்றும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி எடுத்து, தங்கள் மாந்தர்களை ஒப்பனை செய்ய, அணிந்து கொள்ளும் மாலையாக, அவற்றைக் கோப்பதிலேயே தங்கள் ஓய்வு நேரங்களைக் கழித்தனர். அவர்களின் காதலர் வேட்டையில் தாம் கொன்று வீழ்த்திய புலியின் பல்போலும் வெற்றிச் சின்னங்களை அவர்களுக்கு அளிப்பர். அவர்களின் கழுத்தில் அணிந்து கொள்ளும் அதுவே, பிற்காலத்தில், ஒரு கயிற்றில் அல்லது கழுத்து அணியில் தொங்கவிடப்பட்டு, கணவன்மார் உயிரோடிருக்கப்பெற்ற மணமான மகளிரின் அடையாளச் சின்னமாகத் தென்னிந்தியாவில், பெரிதும் சிறப்பிக்கப்படும் தாலி ஆயிற்று. மற்றுமொரு வகை உடல் அணி, தென்னிந்திய மலைவாழ் மக்களாகிய பழங்குடியினரிடையே இன்றும் அழியாதிருக் கும் வழக்கமான பல இலைகளை, உலர்ந்த கொடி கொண்டு ஆடை போல் தைத்து இடையைச் சுற்றி அணிந்து கொள்ளும் தழையாடையாம்.
பாலைநிலத்து வாழ்வார்
வறண்ட மணல் பரந்த நிலமாகிய பாலை, உலக நிலப்பரப்பில் வாழ்வதற்குரிய பகுதிகளில் ஒன்றாக, மிகமிக அருகியே மதிக்கப்படும். கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, முரட்டுவேடுவன் பாலை நிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக் கொள்ள வற்புறுத்தப்படுவான். வீரச் செயல் புரியும் ஆர்வத்துடன் பிறந்து விட்டவர் உள்ளத்தில், பாலையின் அழைப்பு, ஓர் எதிரொலியை ஏற்படுத்திற்று. நாடுவிட்டு நாடு செல்லும் ஓர் நாடோடி வாழ்க்கையில் காட்டும் அளவிறந்த ஆர்வமும், முறுக்கேறிய உடலும், உரம் வாய்ந்த உள்ளமும் வாய்க்கப்பெற்ற பலருடைய வாழ்க்கை யில் உணர்ச்சி ஊட்டிய தலையாய உந்து ஆற்றலாம்.
ஒரு சிறுகாலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம் வாய்ந்த, வீரம் வாய்ந்த மறவர். வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர்கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும். களிறு என்ற சொல்லும், வலிமை தரும் குடிவகைகளாகிய மதுவைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும்) பாலை வளமிலா நிலமாதலாலும், ஆண்டு வாழ் மக்கள் படைக்கலம் ஏந்துவதில் சிறந்து விளங்கினமையாலும், மற்றவர்களும் கள்வர்களும், பிற்காலத் தில் படைவீரர் தொழிலையும், அண்டை நிலங்களில் வாழும் உடலுரம் இல்லாத, ஆனால் செல்வத்தில் சிறந்திருந்தவர் களைக் கொள்ளையடித்து உண்ணும் கொடுந்தொழிலையும் மேற்கொண்டுவிடவே மறம் என்ற சொல், கொடுமை எனும் பொருள் குறிப்பதாகவும், கள்வர் என்ற சொல், திருடர் எனும் பொருள் குறிப்பதாகவும் மாறி விட்டன.
ஆனால் தொடக்க நிலையில் மனிதர், வீரச் செயல் புரிவதில் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவே பாலைநில வாழ்வை மேற்கொண்டனர். ஆடவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து வாழ்க்கை, பழங்குடி மக்கள் வாழ்வில், குடும்பத் தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது.
ஆயர்
குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய, மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப் பிடித்தனர்.
இது, மனித வாழ்க்கை முன்னேற்றமாம், ஏணியில் இரண்டாம் படிக்கு, அதாவது மேய்ச்சல் நாகரீகத்திற்குக் , கொண்டு சென்றது. முல்லையில், கால்நடைகள், விரைவாகப் பெருகின. பழங்குடி வாழ்விலிருந்து, குடும்ப வாழ்வுமுறை முகிழ்த்ததற்கு, எந்தத் தனியுடைமை தத்துவமுறை துணை செய்ததோ, அத்தத்துவமுறை, கால்நடைச் செல்வப் பெருக்கால் உருப்பெறலாயிற்று.
முதல் காட்சியிலேயே காதலர் ஒன்றுபடுதல், திருமணச் சடங்குகளால் கட்டுப்படுத்தப்படாமை, புலிப்பல் தாலியையும், இடையில் அணிந்து கொள்ளத் தைத்த தழை ஆடையையும் அளிப்பது ஒன்றினாலேயே திருமணம் முறைப்படுத்தப்படுதலாய், இயற்கை வழித்திருமணம் என அழைக்கப்பட்ட பழங்கால மணமுறை, பழந்தமிழ் இலக்கியங்களில் களவு என அழைக்கப்பட்டது. அது மேய்ச்சல் நிலப்பகுதியாம் முல்லையில், காதலர் ஒன்றுபடுவதற்கு முன்னர், திருமணச் சடங்குகள் இடம்பெற வேண்டுவதான கற்பு எனும் வடிவில் மெல்ல மெல்ல மாற்றி அமைக்கப்பட்டது. காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவது, நிகழ்வதற்கு முன்னர், மலர்களாலும் இலைகளாலும் அழகு செய்யப்பட்டதும் ஆயர்களின் இயல்பான குடியிருப்பாவதுமாகிய பந்தலின் கீழ், அப்பழங்குடி ஆயர் மகளிர் ஆகிய அனைவர்க்கும் விருந்தளிக்கும் நிகழச்சியே திருமணச் சடங்கு முறையில் சிறப்பான பகுதியாம். குடும்பத்தந்தை, கணக்கின்றிப் பெருகும் கால்நடைகளை உடையவராகி, அக்கால்நடைச் செல்வம் வழங்கும் பெருஞ்செல்வாக் கினைப் பெற்றுவிடுவதால், கற்பு என்ற அத்திருமண முறையும், தனியுடைமை முறை வளர்ச்சியும், குடும்பத் தலைமை ஆடவர்க்காம் சமுதாய மறுமலர்ச்சி முறைக்கு வழிவகுத்துவிட்டன.
சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்நிலங்கள், கால்நடை மந்தை ஒன்றைப் பேணுவதற்குப் போதுமானதாக ஆகாது போமளவு சிறுத்துவிடும் ஆதலாலும், பழங்குடி யினர் பல்வேறு உட்பிரிவினராகப் பிரிவுண்டதனாலான குடும்பம், அக்குடும்பத்தவர் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே . குழுவாக ஆக்கப்பட்டால்தான், போட்டிகளைக் கடந்து நிலைபெற்று நிற்கும் ஆதலாலும், கூட்டுக்குடும்ப முறை தோன்றலாயிற்று. பெரிய குடும்பத்தின் தலைவனாக இருந்தவன், அரசனாக நிலை உயர்வு பெற்றான். தமிழ்மொழியில் அரசனைக்குறிக்க வழங்கும் கோன் என்ற சொல், ஆயர் மகன் எனும் பொருள்படும். அதுபோலவே அரசியைக் குறிக்கும் ஆய்ச்சி என்ற சொல் ஆயர் மகள் எனும் பொருள்படும் என்ற உண்மை நிலையால், தமிழ்நாட்டில் முதன்முதலில், முல்லையில், கால்நடை மேய்ப்பாளராகிய ஆயரிடையேதான், அரசு முறை தோன்றிற்று என்பது தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு விட்டது. கோன் என்ற சொல், ஆயர்களின் அடையாளச் சின்னமாம் கைத்தடியைக் குறிக்கும் கோல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகத் தெரிகிறது. அரச ஆணையின் சின்னமாகிவிட்ட அரசர்கைச் செங்கோல் ஆடுமாடுகளை மேய்க்க உதவும் வெறும் கோலே ஆகும்.
மத்திய ஆசிய அடுக்குகளில் உள்ளது போன்ற, இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளின் கால்நடை மேய்ப்பு வாழ்க்கை, தென்னிந்திய மேய்ப்பாளரிடம் முல்லை நிலத்து ஆயர் வாழ்க்கையிலிருந்து, கூடாரங்களைப் பயன் கொள்ளுதல், ஒரு மேய் நிலப்பகுதியிலிருந்து பிறிதொரு மேய்நிலப் பகுதிக்கு எனக் கால்நடை மேய்க்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருத்தல் ஆகிய இரு நிலைகளின் வேறுபடுகிறது.
ஆண்டு முழுதும், தட்பவெப்பநிலை ஒரே சீராக இருப்பதால் தென்னிந்தியாவில், கூடாரங்களின் கண்டுபிடிப்பு தேவையற்றதாகிறது. உடைந்த பானை ஓடு மூடப்பட்ட மூங்கில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட உலர்ந்த கொம்புகளாலான பந்தல் மீது, வேயப்பட்ட விசிறி வடிவிலான ஒரு சில பனை ஓலைகள், ஒரு மனிதனுக்கும் அவன் கால்நடைக்கும் காப்பளிக்கப் போதுமானதாக நிரூபிக்கப்பட்டுவிட்டன. நிலத்தின் வளமும், காலந்தோறும் பெய்யும் பருவமழையும், ஆண்டுக்கு ஒரே நிலத்தில் புல் பூண்டு விளைவை உறுதிசெய்தன. ஆகவே, வடக்கத்திய அடுக்குகளில் உள்ளதுபோல், ஒரு குடியிருப்பைச் சூழ இருந்த புல், கால்நடைகளால் மேயப்பட்டு விட்ட போதோ, கோடை ஞாயிற்றால் எரிக்கப்பட்டுவிட்ட போதோ, கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு புதிய மேய்ச்சலிடம் தேடிச் செல்ல வேண்டியது தேவையற்றதாகி விட்டது. ஆகவே தென்னிந்திய கால்நடை வளர்ப்பு வாழ்க்கை அரைகுறையான நாடோடி வாழ்க்கையன்று. அது நாகரீக வசதிகளை வளர்த்துக் கொள்ள வல்லதான நிரந்தர வாழ்க்கையாம். காட்டில் கால்நடைகளின் ஓய்வுநிலை அளித்த அமைதி வாழ்க்கை , குழல் எனும் இசைக்கருவியைக் காண வழிவகுத்தது. நீளவாட்டில் ஒரு சில துளைகள் இடப்பட்ட சிறுமூங்கில் துண்டே குழல். கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க, நீண்ட நெடுநேரம் காத்திருப்பதால் ஏற்படும் ஆயரின் மனச்சோர்வைப் போக்கவல்ல இனிய இசை அதினின்றும் எழும்.
ஆயர்களின் ஒரு பிரிவினராகிய குறும்பர் என்பார், ஆடுகளில் குறுகிய கால்களும் உடல் முழுவதும் அடர்ந்து நீண்ட மயிரும் உடைய இனமாம் குறும்பாடுகளை வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில், இன்று நீராவி இயந்திரங்கள் கட்டுப்பாடின்றி நிறுவப்பட்டு, விசைத்தறிகள் மூலம் கம்பளி நெய்யப்படுதல், ஏனைய கைவினைஞர்களைப் போலவே, குறும்பர்களின் அன்றாட வாழ்க்கைக்காம் உணவினைப் பெறும் ஆண்டாண்டு கால வழிமுறையினை இழக்கச் செய்துவிட்டது. என்றாலும், குறும்பர், தங்கள் ஆடுகள் அளிக்கும் மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றிருந்தனர். சென்னை மாநிலத்தின் முல்லைப்பகுதிகளில் இன்றும் குடிவாழ்ந்து கொண்டு தங்கள் இனம் வழிவழி மேற்கொண்டு வந்த குலத்தொழிலாம் கம்பளி நெசவை மேற் கொண்டுள்ளனர்.
மீனவர் இனம்
மக்கள், அடுத்துக் குடியேறிய இடம், கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல். உயிர்பெற்று விட்டது போல் ஓங்கி எழுந்து ஓய்ந்து அடங்கும் அலை ஓயாக்கடலின் பெருநீர்ப்பரப்பு, தாம் அளிக்கவல்ல பேரிடர்ப்பாடுகள் பால் காதல் கொண்டு, உண்டற்கினிய மீனாம், என்றும் குறையற்றுப் போகாத தன் பெரும் செல்வத்தை வாரிக் கொண்டு வரத்துணிந்து தொழில் படுமாறு பரந்த அகன்ற மார்பும் அழகுறச் செதுக்கி வைத்தாற்போலும் சதைப் பிடிப்பும் கொண்டு, வீரச்செயல் விரும்பும் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்தது. கடலோரத்தில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். கடற்கரைச் சூழல், அங்கு வாழ்பவராகிய பரதவர்களைப், படகு கட்டுவோராகவும், மீனவர்களாகவும் ஆக்கிவிட்டது. மிதப்பதற்கு ஏற்ப, ஒன்றாக இணைக்கப்பட்ட பருத்து நீண்ட இரு மரத்துண்டுகளால் ஆன, பழங்காலத் தெப்பங்களே, முதன்முதலாகக் கண்ட படகுகளாம். பிரம்பினால் பின்னப்பட்டுக் கடல், விலங்கின் தோலால் மூடப்பட்ட கூடையாம் தோணி, அல்லது பரிசில் அடுத்து இடம் பெற்றது.
இந்நிலத்து முக்கிய விளைபொருள்கள் மீனும், உப்பும் ஆம். பரதவர் அவற்றை அகநாடுகளுக்குக் கொண்டுசென்று, பிற உணவுப் பொருள்களுக்காகப் பண்டமாற்று முறையில் தரவேண்டியதாயிற்று, அவர்களின் இச்சுற்றுச்சூழல், பரதவர்களை வணிகர்களாக ஆக்கிற்று. அப்பரதவர் அவர்களின் வழிவந்தவராய, இன்றைய பலிஜிகளைப் போலவே தங்கள் விற்பனைப் பொருள்களை, இரட்டை மூட்டைகளாகக் கட்டிப் பொதி எருதுகளின் முதுகுகளில் ஏற்றிக் கொண்டு சதுப்புநிலப்பாதைகளை வருந்திக் கடந்து, ஆற்றுப்பாய்ச்சலால் வளம் பெற்ற நாட்டு விளைபொருட்களுக்காக மாற்றுப் பண்டமாகக் கொடுப்பர். இப்பரதவர். குடியிலிருந்தே மேற்கே ஆப்பிரிக்க, அராபிய நாடுகளுக்கும், கிழக்கே மலாய், சீன நாடுகளுக்கும், இந்திய வணிகப் பொருள்களைப் படகுகளில் கொண்டு சென்ற பண்டைய இந்திய மாலுமிகள் தோன்றினர்.
உழவர்
முல்லைக்கும் நெய்தலுக்கும் இடைப்பட்ட, தாழ்வான சமவெளியாம் மருதமே, மக்கள், இறுதியாகக் குடிவாழத் தொடங்கிய நிலப்பகுதியாம். அது நிகழ்ந்தது பழங்கற்கால இறுதியில், புதிய கற்கால நாகரீக காலத்தோடு இன்றைய புதிய நாகரீக வாழ்க்கை தொடங்கிவிட்டது. கால்நடை வளர்க்கும் முல்லை நாகரீகப்பருவத்தில் தொடங்கிவிட்ட மரம், செடி, கொடிகளைக் குறிப்பாக நெல், வாழை, கரும்பு, மா ஆகியவற்றை மனித வாழ்விற்குப் பயன்கொள்ளும் நிலை, இம் மருத நாகரீக நிலையில் முழுமை அடைந்து விட்டது.
மருதத்தில், மண்ணின் விளைவாற்றல், அம்மண்ணுக்குரிய வனாம் உழவனுக்கு நிலத்தை உழுதபின்னர், நெல், முதலாம் - உணவுப் பொருட்களை விளைவிக்கும் முறையினைக் கற்றுத்தந்தது. ஆறுகளின் இரு பக்கங்களிலும், படிப்படி யாகத் தாழ்ந்து செல்லும் நில அமைப்பு, தங்கள் விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டும் நீரைக் கொண்டு செல்லும் முறையினை, வெள்ளத்தை, அது விரும்புமாறு ஓடவிடாது, தாம் விரும்புமாறு கொண்டு சென்று, வெள்ளநீரை ஆட்சி கொள்ளவல்லராகிய வெள்ளாளர்க்குக் கற்றுத் தந்தது. மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்துப், பாசனக் கால்வாய்கள் மூலம் தங்கள் விளை நிலங்களுக்குச் செலுத்தவும், கிணறுகளிலிருந்தும், நீர் ஊறும் கசங்களில் லிருந்தும் நீரேற்றுவான் மூலம் நீரை மேலே கொணர்ந்து, தாங்கள் பயிரிடும் நிலத்துண்டுகளுக்குப் பாசனம் அளிக்க வல்லவரும், பெய் எனக் கூறும்போது பெய்யுமாறு கார்மேகங்கள் மீது ஆட்சி செலுத்த வல்லவருமாகிய காராளர் ஆற்றுப்படுகைக்கு அப்பாற்பட்ட மேட்டுப்பகுதி களில் வாழ்ந்திருந்தனர்.
தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர் பெறும் காட்டின் அழிந்த புல் பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச் செடியின் பிறப்பிடம். புதிய கற்காலத்து மனிதன், பருத்தியை நூலாக நூற்கவும், அந்நூலை ஆடையாக நெய்யவும் கற்றுக் கொண்டான்.
தம்முடைய தேவைக்கு மேல் குவிந்துவிட்ட உணவுப் பொருட்களையும், பருத்தி ஆடைகளையும் சேர்த்து வைக்க, மாந்தர், மரத்தாலான வீடுகளை, இப்போது கட்டத் தொடங்கினர். தேவைக்கு மேல் குவிந்துவிட்ட பொருட்களை மருத நிலத்தில் எளிதில் கிடைக்காத பொருட்களுக்காகப் பரதவரிடமிருந்து உப்பு மீன் போன்றவற்றிற்கும் இடையரிடமிருந்து, பால், பால் படுபொருள் சிறப்பாக நெய் போன்றவற்றிற்கும், குறவரிடமிருந்தும், கற்கள், கற்களாலான தொழிற்கருவிகள் (இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரும்பு, இரும்பாலான தொழிற்கருவிகள்) போன்றவற்றிற்கும் விலையாகக் கொடுக்கும் பண்டமாற்று வாணிகம், பொருட்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நிலவழியாகக் கொண்டு செல்லும் வண்டிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. நாகரீக வளர்ச்சிச் சக்கரம் முழுமை பெற்று விட்டது. புதுக்கற்கால நாகரீகக் காலத்திற்குப் பின்னர் உணவுகளும், புதிய மரம், செடி கொடி எவையும் வழக்கத்தில் கொண்டுவரப்படவில்லை, மேனியை மறைத்துக் கொள்ளும் ஆடையை உருவாக்க, புதிய தொழிற்முறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே மருத நிலத்தைச் சார்ந்த புதுக்கற்கால நாகரீகத்தின் முற்ற வளர்ந்த நிலையும் அந்நிலத்துக் கலையும், தொழில்களும், நாகரீகத்தின் கடைசி உண்மையில் மிகப்பெரிய படிக்கட்டைக் காட்டுவ ஆயின.
பழங்காலத்தில் இரும்பு முதல், நம் காலத்தில் அலுமினியம் வரையிலான கனிவளக் கண்டுபிடிப்பும், நீராவி, எண்ணெய் ஆவி ஆகியவற்றால் இயங்கும் இயந்திரங்களும், மின்சாரத்தால் இயங்கும் விசைப் பொறிகளும் பழைய முறையிலான உழவுத்தொழில் உற்பத்திகளை விரைவும் எளிமையும் படுத்திப் போக்குவரத்தை விரைவுபடுத்த உதவு புரிந்தனவே அல்லது, புதிய உணவுப்பொருள் எதையும் உற்பத்தி செய்யவோ, வெயில், மழை, பருவந்தோறும் மாறும் வெப்ப தட்ப நிலைகளிலிருந்து உடலை மூடி மறைக்கும், புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவோ இல்லை.
இந்த வளர்ச்சி முதன்முதலில் எங்கே இடம் பெற்றது?
மனித வாழ்க்கைக்குத் தகுதியுடைய நிலப்பகுதியின் இந்த ஐந்து. உட்பிரிவுகளும் நிலப்பரப்பில் சிறுசிறு அளவில் ஒன்றையொன்று தொடர்ந்தாற்போல், இந்தியாவில், விந்திய மலைக்குத் தெற்கில் இடம் பெற்றுள்ளன. அதனால் மக்கள் தொகைப் பெருக்கமும், உணவுப்பொருட்கள் இயல்பாகக் கிடைத்து வருவதில் நிகழும் மாற்றமும், பல்வேறு கால கட்டத்தில் மக்கள் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்குக் குடிபெயர்ந்தமையும், அதைத் தொடர்ந்து, மாறிய வாழ்க்கைச் சூழ்நிலை வழங்கிய தூண்டுதல் உணர்ச்சிக்கு ஏற்ப, வேடர், நாடோடி, மேய்ப்பாளர், கடலோடி, உழவர் என்ற வேறு வேறுபட்ட மனித நாகரீக வளர்ச்சியையும், இப்பகுதியில் எவ்வாறு உருவாக்கிவிட்டன என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வேறு வகையில் கூறுவதாயின், உலகப் பெருநிலப்பரப்பில் வரையறுக்கப்பட்ட இச்சிறு பகுதியில் மனித வளர்ச்சி பற்றிய ஆய்வு மனித நாகரீக வளர்ச்சியில், நில இயல் கூறுபாடு செலுத்தும் ஆட்சியின் அளவைக் கணக்கிட்டு, வரைபடத்தில் காட்டுவதுபோல் தெளிவாக வரையறுத்துக் காட்டிவிடலாம். இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகள் மிகப் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு, கார்ப்பேத்தியன் முதல், அல்டாய்ஸ் அடிவரையான பரந்து கிடக்கும் பெருநிலப்பரப்பில் முல்லைத்திணையும், பயரினிஸ் முதல் இமயமும் அதற்கு அப்பாலும் வரையான பெருமலைப்பகுதியில் உலக மாதாவின் இடையைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் ஒட்டி யாணம் என்ற அணிபோல் குறிஞ்சித் திணையும், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்களைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் நெய்தல் திணையும், மிகப்பெரிய பாலைவனமாம் சகாராவும், அரேபியா, பர்ஷியா, மங்கோலியா நாடுகளில் அதன் தொடர்ச்சியுமாகிய பகுதியில் பாலைத் திணையும் இடம் பெற்றுள்ளன.
படிப்படியாகக் கடந்து வந்த நாகரீக வளர்ச்சி, முதன்முதலில் தென் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடங்கி, அங்கிருந்து வெகு தொலைவிற்கு அப்பால் உள்ள பெரிய நிலப்பரப்பிற்கும் பரவிற்றா? அல்லது நிலையெதிர் மாறாக நிகழ்ந்ததா? இப்புதிர், இன்றைய நிலையில் விடுவிக்க மாட்டா ஒன்று என்றாலும் மக்கள் கூட்டம், ஒரு நிலப்பிரிவில் லிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குக் குடிபெயர்வதும் அதன் பயனாய், மேலும் மேலும் உயர்ந்த நாகரிக வளர்ச்சியும், எல்லை காண இயலாப் பரந்த நிலப்பரப்பில் காட்டிலும், , மக்கள் குடி பெயர்ச்சி எளிதில் இடம் பெறத்தக்கதான, குறிப்பிட்ட சிறுநிலப்பகுதிகளில் நிகழ்வதே இயல்பாம் என்பது குறிப்பிடப்படலாம்.
இயற்கையின் ஆய்வுக்கூடமும், தமக்குக் கிடைக்கக்கூடிய நில இயல் ஆற்றல் துணையோடு, மனித நாகரீகம் குறித்து, அவ்வியற்கை நடத்திய முதல் சோதனையும், ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்புகளின், இயற்கை அமைப்பையொட்டி எழுந்த, மிகப்பெரிய நிலப்பிரிவுகளில் அல்லாமல் தட்சிண பாதா என வழங்கும், விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள இந்தியப் பகுதியில்தான் நடைபெற்றன என்று கருத்தில் கொண்டால், மனிதனின் பழைய வரலாற்றினை அறிய அது நமக்குப் பெரிதும் துணை நிற்கும்.
இந்த நாகரீகங்களை இயற்கை அன்னை மிகப்பெரிய அளவில் இந்திய எல்லைக்கு அப்பால் உருவாக்கிப் பின்னர், தென்னிந்தியாவை மனித இன ஆராய்ச்சிப் பொருள்களின் அரும்பொருட்காட்சி சாலையாக நிறைவு செய்வதற்காக, அந்நாகரீகம் ஒவ்வொன்றினுடைய சிறிய அளவிலான வடிவங்களைத் தென்னாட்டில் அரும்பாடுபட்டுப் புகுத்திற்று என்பதினும், பண்டைக்காலத்தைச் சேர்ந்த இப் பல்வேறு நாகரீகங்களும், தம்மில் தோன்றிய தம் இளந்தோன்றல்களை, இந்திய மண்ணில் சிறிய அளவில் பெற, இயற்கை எதில் வெற்றி கண்டதோ, அதை, அவ்வியற்கை பெரிய அளவில் மறுவலும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வகையில், இந்திய நாட்டுக்கு வெளியே, உரிய தகுதி வாய்ந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது என்பதே பெரும்பாலும் ஏற்கக்கூடியதாம். இக்கருத்தும், ஒருவகையில் யூகம்தான். ஒரே இயல்பான நிலை இயல் ஆட்சிபுரியும், உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில், இயற்கை. ஒரே மாதிரியான நாகரீகங்களை, ஒன்றிற் கொன்று தொடர்பில்லா நிலையில் உருவாக்கிற்று என்பதாகும் நிலைமை மாறக்கூடும்.
பழந்தமிழ்ப்பாக்கள்
உணவு ஆக்கலும், ஆடை நெய்தலும் இல்லாமல் மனிதனின் பிறிதொரு பெரிய கண்டுபிடிப்பு சொல்லாடல், உரையாடல், ஓசை ஒழுங்குடையதாகவும் இருக்கலாம். ஓசை ஒழுங்கற்றதாகவும் இருக்கலாம். பெரும்பாலோர் கருதுவது போல், உரைநடை செய்யுள் நடையை முந்தியதா அல்லது பெரும்பாலும் அதுவே உண்மை நிலையாதல் பாதி ஓசையொழுங்குடையதாகவும், பாதி ஓசையொழுங்கற்ற தாகவும் கலந்து இருந்த மூலமுதல் உரையாடலின் பிற்பட்ட காலத்து ஒரு வேறுபட்ட நிலைகள்தாமா, உரைநடையும், செய்யுளும் என்பதைத் துணிந்து முடிவு கூறுவது, அத்துணை எளிதன்று. ஆனால் இலக்கிய வளர்ச்சியில், செய்யுள் நடை உரைநடையை மிகப் பழங்காலத்திலிருந்தே முந்தியுளது என்பது முற்றிலும் உண்மையாம்.
பண், பாண் என்ற இரு சொற்களும் அவற்றிலிருந்து பாடு - வினைச்சொல், பாட்டு - பெயர்ச்சொல் தமிழின் மிகப் பழைய மொழிநிலைக்கு உரியவாகித், தமிழர்களின் தொடக்க காலத்து இன்பப் பொழுதுபோக்குகளில், இசை வழங்கலும் ஒன்று என்பதை உறுதி செய்கின்றன. தொடக்கத்தில், இசைவாணர்களாகவும், பின்னர்க் கால்நடை வளர்ப்பு, நாகரீகப் பருவத்தில், அரசு நிலை இடங்கொண்டபோது, அரசவைக் கலைஞர்களாகவும், அரசன் புகழ்பாடுபவராகவும், வாழ்ந்த பாணர், தமிழர்களில், மிகப் பழைய, நன்கு பாராட்டப்பெற்றது. ஆனால் சிறிய அளவிலேயே பரிசு அளிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தனர். தூய தனித்தமிழ் நாகரீகம் சிறந்து விளங்கிய போது, அப்பழங்காலப் பாணர், அரசர்களின் நண்பர்களாகவும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவோர்களாகவும் விளங்கினர்.
ஆனால், வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய நாகரிகம், தென்னிந்திய நாகரீகத்தோடு கலந்துவிட்ட வரலாற்றுக் காலத்தில், இறைச்சியை அதிலும் மாட்டிறைச்சியை அளவுக்கு மீறி உண்பதிலும், வெறியூட்டு மதுவகைகளைக் குடிப்பதிலும், அப்பாணர்கள் கொண்டுவிட்ட இடையறவு படாத் தீயொழுக்கம், தென் இந்தியாவில் மிகவும் தீண்டத் தகாத, இழிந்த இனத்தவருள் ஒருவராம் சமுதாய இழி நிலையை அவர்க்குத் தந்துவிட்டது.
மிகமிகத் தொன்மைக்காலத்துத் தமிழர், வரலாறு என ஏது ஒன்றும் இல்லாமலே, இவ்வகையில் வளர்ச்சி பெற்றனர். நாகரீக வளர்ச்சி குறித்த அளவுகோலில், அவர்கள் சிறது சிறிதாக அடைந்த வளர்ச்சி நிலையை, அவர்களுடைய மொழியிலிருந்தும் வரலாற்றுக்கு முந்திய அவர்களின் நாகரீகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். உலக இலக்கியங்களில், நன்மிகப் பழைய இலக்கியங்களாம் வேதங் களிலும், உலகின் மிகப் பழைய வரலாற்று மூலங்களாம் மெசபடோமியப் பள்ளத்தாக்குக் கல்வெட்டுகளிலும், வட இந்தியாவோடும் அதற்கு அப்பாலும், அவர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம் அறியப்பட்டதும், அவர்கள், வரலாற்றில் முதன்முதலாகத் தெரியவந்தனர்.
3. கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்
இலக்கிய மரபுகளும் மக்கள் வாழ்க்கை முறையும்
இராமாயணத்திலிருந்து பழந்தமிழர் நாகரீகம் குறித்து மிகச் சிலவற்றை மட்டுமே பெற இயலும். இப்பொருள் பொறுத்தவரையில், இராமாயணம், மிகப் பெருமளவில் ஒரு தலைப்பட்ட அகச்சான்றாகவே இருக்க முடியும் என்பதை நினைவு கோடல் வேண்டும். நினைத்தாலே திகில் ஊட்டும் பகைவர்களாகவே ராக்ஷதர்களை, ஆரியர்கள் கருதினர். ஆதலின் அவர்கள், அதற்கேற்ப உடலமைப்பில், மனிதரைத் தின்னும் அரக்கராகவும், கொடுமையின் கோர உருவமாகவும், அவ்வாரியர்களால், இயல்பாகவே வருணிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு அடுத்த காலத் தமிழ்ப்பாக்களின் இலக்கிய மரபுகளை ஆராய்வதிலிருந்து நன்மிகப் பழங்காலத்துத் தமிழர் நாகரீகம் பற்றிய மிகவும் உண்மையான விளக்கத் தினைப் பெறலாம். இலக்கிய மரபு எனக் கூறும்போது, திறனாய்வில் நாமே வகுத்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள் எனும் பொருளுடையதாக நான் கொள்ளவில்லை. தமிழிலக்கிய மரபுகள் என்பதை, ஹொராஸ் அவர்களால் விளக்கிக் கூறப்பட்ட விதிமுறைகள் போலவும், வீரகாவியப் பாக்களுக்கான அரிஸ்டாடில் விதிமுறைகள் போலவும், கவிஞர்களால், கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்ட, பிற்காலத் திறனாய்வாளர்களால் முறைப்படுத்தப்பட்டன ஆகா. பழைய தமிழிலக்கிய மரபுகள், மனித வாழ்க்கையின் மீது இயற்கைச் சூழலின் செயல்பாடுகள் வளர்த்துவிட்ட பழைய வழக்கங்களின், கல் போலும், திண்ணிய பெரும் பிழம்பாம். இலக்கிய மரபுகள். அதிலும் குறிப்பாக, மிகவும் பிற்பட்ட காலத்தே வலிந்து இயற்றப்பட்ட, சமஸ்கிருத, தமிழ்ப்பாக்கள் எழுவதற்கு மிகமிக முற்பட்ட காலத்தில் இருந்த, கலப்பற்ற, தூய, பழைய இலக்கிய மரபுகள், மக்களின் இயற்கையோடியைந்த உண்மையான பழக்க வழக்க ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் வானம்பாடிகளைப் போலத் , தங்களை மறந்து பாடினர். அவர் பாக்கள், அக்கால மக்கள் நடத்திய வாழ்க்கையினை உள்ளது உள்ளவாறே காட்டும் உண்மையான காலக் கண்ணாடியாக இருந்தன. பழைய இலக்கிய மரபுகளைத் தோற்றுவித்த வாழ்க்கை முறைகள் வேறுபட்டு, பாக்களின் கற்பனைப் பொருள்களெல்லாம் வெறும் இலக்கிய மரபுகளாகிவிட்ட நிலையிலும், பிற்காலப் பாவலர்கள், பழங்காலத்தைச் சேர்ந்த, வழிவழி வந்த இலக்கியக் கற்பனைகளை விடாமல் மேற்கொண்டு வருகின்றனர், உதாரணத்திற்குப் பண்டை நாள்களில் கால்நடைகளே மக்களின் செல்வமாக அமைந்தன. இனத்தலைவர்கள், ஒருவர், பிறிதொருவர் கால்நடையைக் களவாடும்போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் எழுந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடும் போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடுவதில் போர் தொடங்குவதாகப் பாடல் புனைவது மனித வரலாற்றின் வளர்ச்சி நிலையில், ஒரு கட்டத்து உண்மை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. பிற்காலத்தில், போருக்கு வேறு பல காரணங்களும் உருவாகிவிட்டன. ஆனால், இலக்கிய மரபோ, பாவலனைப் போர்களின் மாறாத் தொடக்கமாக, தொடக்ககால ஆனினை கவர்தலையே பாட வைக்கிறது. அவ்வாறே, கி.பி. ஆறாவது நூற்றாண்டில், வலிந்து பாடப்பெறும் தமிழ்ப் பாடல்கள் தோன்றிவிட்ட காலத்திற்கு முன்வரையும் பிற்காலப் பாடல்களில், காதல், போர் பற்றிய இருவகைப் பாடல்களை இயற்றுவதை எண்ணில் அடங்கா. இலக்கிய இலக்கண விதிமுறைகள், விடாப்பிடியாக முறைப்படுத்தி வந்துள்ளன.
இவ்விலக்கிய மரபுகளிலிருந்து, மக்கள் மேற்கொண்டிருந்த உண்மை வாழ்க்கை நிலையைப் பாவாணர்கள் பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டிய அக்காலங்களுக்குக் கற்பனையில் பின்நோக்கிச் செல்லலாம். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, பாக்கள் எழுவதற்கு முற்பட்டதான ஒரு காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று, இந்தியர்கள், இந்நனிமிகு பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை - மின்னலின் ஒளிக்கீற்றுக்கள் போல் அங்குமிங்குமாகக் காணக் கிடைக்கும் காட்சியைப் பெறலாம். நன்மிகப் பழங்காலத்தை, இவ்வாறு நுழைந்து பார்ப்பதன் மூலம், தென்னிந்தியர்களின் கி.மு. 2000 அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக் கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர் அந்நனிமிகச் சேய்மைக் கண்ணதாய பழங்காலத்தில் வளர்ச்சி வேகம், வானூர்தி , கம்பியில்லாத் தந்திகளின் காலமாம் இன்றைய வளர்ச்சி வேகத்திலும் மிகமிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சுவிடுவதற்கும் இடைவெளியில்லா விரைவான மாற்றமும் வழுக்குப் பனிப் பாறைகளின் ஆறு போலப் புலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் பண்டைய நாட்களின் மெதுவான, சிந்தனைச் செயல்பாடுகளும் இருகோடித் துருவங்கள் போலும் வேறுபாடுடையன. ஆகவே, கி.மு. 2000இல் எது உண்மை நிகழ்ச்சியோ, அதுவே, அதனினும் நனிமிகவும் பிற்பட்ட பழங்காலத்திலும், உண்மை நிகழ்ச்சியாகும். எண்ணுதற்கும் அப்பாற்பட்ட அப்பழங்காலத்தில், மனிதன், ஏனைய உயிரினங்களைப் போலவே, முழுக்க முழுக்க, நில இயல் கூறுபாடுகளுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தான். அவன் வாழ்க்கை, பெரும்பாலும், அவனுடைய சுற்றுச்சூழல் நிலைகளுக்கு உடன்பாடான விளைவினதாகி, அவ்வகையில், இயற்கையின் கட்டுப்பாடுகளைக் கடக்கக் கற்றுக் கொண்டு, துருவப் பனிப்பாறைகளோடு வெற்றிகரமாகப் போரிடவும், வான்வெளியின் மேல்நிலைகளுக்குப் பறப்பதன் மூலம், நிலைத்து ஈர்ப்பாற்றல் விதிகளின் எல்லையைக் கடக்கவும் செய்யும் இன்றைய வாழ்க்கையோடு உளம் கொளத்தக்க மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும். காதற்பாக்களின் இலக்கிய மரபுகள், உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து பிறந்தனவே
உலக நிலப்பரப்பின் மக்கள் வாழத்தக்க பகுதிகள், ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கி, வேட்டையாடி உயிர் வாழ்ந்த, மரம் செடி, சொடிகளைச் சிறிய அளவிலேயே கொண்ட சிறு மலைப்பகுதி, தண்ணீர் கருதி, மரம், செடி, கொடிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகி, மனிதன், முதன்முதலில், வீர ஒழுக்கங்களையும், கொள்ளையடித்து வாழும் உள்ளுணர்வையும் வளர்த்துக் கொண்ட மணல்செறிந்த பாலை; மனித வாழ்க்கையில் ஆனிரை மேய்க்கும் கூட்டத்தை, முதன் முதலில் கண்ட காட்டுப்பகுதி, மனிதன். மீன் பிடிக்கவும், படகுகளில் கடல்மேல் செல்லவும், உணவுப் பொருள்களுக்காக, மீனையும், உப்பையும் பண்ட மாற்றம் செய்யவும் கற்றுக் கொண்ட கடற்கரைப் பகுதி ; உழவும் நெசவும் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆற்றுப்பள்ளத் தாக்கு எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் ஐந்து திணைகளாக அது பிரிக்கப்பட்டது, என்பது முதல் அதிகாரத்தில் முன்பே குறிப்பிடப்பட்டது. ஒரு நாகரீகத்திலிருந்து மற்றொரு நாகரீகத்திற்கு, மனிதன் மேற்கொண்ட பயணம், காலத்தின் நீண்ட பருவங்களை எடுத்துக் கொண்டது. ஒரு நிலப்பகுதி யிலிருந்து பிறிதொரு நிலப்பகுதிக்கு மனிதனின் குடி பெயர்ச்சியே இதற்குத் தலையாய காரணம். ஆனால் அடுத்து வேறு வகை நாகரீகம் தன்னில் இடங்கொள்ளும் போது, ஒவ்வொரு நிலப்பகுதியும், தத்தமக்குரிய நாகரீகத்தை விடாமல் மேற்கொண்டிருந்தது. அவ்வகையில், மனித நாகரீகத்தின், முதல் நிலை உருப்பெற்ற, குறிஞ்சி அல்லது மலைநாட்டில், மனிதன், பாதி நாடோடி வாழ்க்கையாம், வேடன் வாழ்க்கையை நடத்தி வந்தான். காதல் உறவு, சமுதாய மரபுகளால் தடுக்கப்படவில்லை, கண்டதும் கொண்ட காதலைத் தொடர்ந்து உடனடிக் கூடலே அக்கால வாழ்க்கைச் சட்டமாம். குலமுறைப்படியான விருந்து பின் தொடர மணந்த இருவரைப் பொதுமக்கள் வரவேற்கும் திருமண விழா. மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது. ஆனால், மணவிழாவிற்கு முந்திய காலாகாலமாக இருந்து வரும் வழக்கமாம். களவுக்காதல் ஒழுக்கம் மலைநாட்டுப் பழங்குடியினரிடையே இக்காலத்தும் இடம் பெற்று இருப்பதுபோல், கைவிடப்படாமல் அவ்வாறே கடை பிடிக்கப்பட்டது. மலைநாட்டு ஆடவரும் பெண்டிரும் குறைந்த ஆடையில் நிறைவு கண்டனர். மனிதனை மறைக்க, கழுத்திலிருந்து தொங்கும், எண்ணற்ற கிளிஞ்சல் சரடுகள் (பிற்காலத்தில் அரைக்கச்சை அணியாம் மேகலை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்த) மலர்களாலும் இலைகளாலும் ஆன மாலைகள், இவையே போதுமானவையாயின. குறிஞ்சிநாட்டு உட்பகுதியில் வாழும் குறவரிடையே, இந்த ஆடை கைவிடப்படாமல் இன்றும் உளது. இக்குறவர் மலைகளிலிருந்து இறங்கிக் கீழ் நாடுகளுக்கு வரும்போது, உடை வகையில் மேற்கொள்ளும் ஒரே மாற்றம், மலர்களாலும் இலைகளாலும் ஆன அரைக்கச்சைக்குப் பதிலாகக் கிழிந்த துணியின் சிறு துண்டை மேற்கொள்வது ஒன்றே. குறவரிடையே பாக்கள் முதல் முதலில் எழுந்தபோது, பாவாணர்கள் மலைநாட்டுத் தலைவர்களின், புணர்ச்சிக்கு முந்திய கள்ளக்காதலை, அவர்கள் தங்கள் காதலியர்க்குத் தழை உடை எனப்படும் இலை ஆடைகளையும், அம்மலை நாட்டுத் தலைவர்கள் வேட்டையில் கொன்ற புலிகளின் பற்களையும் கொடுப்பதையே இயல்பாகப் பாடினர். இப்பற்கள், மாலையாகக் கோக்கப்பட்டு கழுத்திலிருந்து தொங்க அணியப்பட்டு, புலிப்பல் தாலி என அழைக்கப்படும். (புலிப்பல்லால் செய்யப்பட்டு, மணம் ஆவதற்கு அறிகுறியாகக் கழுத்திலிருந்து தொங்கும், இப்புலிப்பல் தாலி, இளஞ்சிறுவர்களாலும் அணியப் பட்டது) பிற்காலத்தில் இதிலிருந்தே பொன்தாலி உருப்பெற்றது. பிற்காலத்தில் புணர்ச்சிக்கு முந்திய களவுக்காதல், குறிஞ்சித் திணைப்பாடல் கள் என்ற ஒருவகை பாடல்களுக்கு மட்டுமே கருப்பொரு ளாதல் வேண்டும். மலைநாட்டு மாவின் மரவினங்களோடும், இலை ஆடைகளைத் தருவதோடும், காதல் நோய்க்கு, அப்பெண்ணைக் கொண்டுவிட்ட மலைநாட்டுக் கடவுளாம் முருகனையே காரணம் காட்டி , வெறியாடல் மூலம், அந்நோய் தீர்த்தலோடும் மட்டுமே தொடர்புபடுத்தல் வேண்டும் என்பது இலக்கியமாகிவிட்டது. உண்மைக்காதல் ஒழுக்கத்தின் ஒரே சீரான போக்கில் அமையாத இந்நிகழ்ச்சிகளெல்லாம், குறிஞ்சித்திணைப் பாக்களின் கருப்பொருளாக வகைப்படுத்தி வகுக்கப்பட்டன.
அதுபோலவே, கால்நடைகளைக் காத்தற் பொருட்டு ஆயன் பிரிந்து செல்வது போலவும் சிறு பிரிவுகளால் நேரும் கடுந்துயரும், இருவரும் பின்னர் இணைந்த வழிப் பிறக்கும் பெருமகிழ்ச்சியும் (காட்டோடும் காடு சார்ந்த நிலத்தோடும் தொடர்புடையதான முல்லைத் திணைப் பாடல்களின் கருப்பொருள்களாக) முடிவு செய்யப்பட்டன. முல்லைத் திணைப்பாக்கள், தம்முடைய கற்பனைகளை, அம்மேய்ப் புலத்து இயற்கைப் பொருள்கள் பழக்கவழக்கங்களிருந்தே பெற்றுக் கொண்டன.
நெய்தல் திணைப்பாடல்கள், மீன்பிடி பெருந்தொழில் இன்றியமையாததாக ஆக்கிவிட்ட நெடும் பிரிவு, உலர்ந்த மீனாம் கருவாட்டு நாற்றத்தை இடைவிடாது வெளிப்படுத்தும், கருமை நிறம் மின்னும் மேனி அழகியாள் பால் அன்புகாட்டல் ஆகியவற்றைப் பாடற் பொருளாக்குகின்றன. வறண்ட பாலைத்திணைப்பாடல்கள், பெருமணல் பரந்து, இடையீடின்றி நீண்ட, வறண்ட நிலப்பரப்பில் வாழ்வோரின், கொள்ளையடித்துண்ணும் வாழ்க்கையின் இடை நிகழ்வாம் நெடும் பிரிவின் தொடர்பாகப் பிறந்தன. ஆகவே, நெடும் பிரிவு தரும் கடுந்துயர் பாலைபாக்களின் கருப்பொருள் ஆயின.
தமிழ்க் கவிதை உலகின் ஆட்சி எல்லைக்குள் அவல நிகழ்ச்சி எனப்படுவன, தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே, பழந்தமிழர் மனப்போக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய துன்பியல் பாக்களின் மிக நெருங்கிய அணுகு நிலை இவ்வளவே.
முடிவாக, முறையான திருமணம், அத்திருமண உறவைத் தொடர்ந்த அன்பு வாழ்க்கையாம் கற்பு நெறி, அதன் பாதையில் முள் உறுத்தும், பரத்தையர் ஒழுக்கத்தால், மனைவாழ்க்கையின் சீர்கேடு, அதன் விளைவாம் , மணங்கொண்ட காதலரிடையே ஊடல், அவ்வூடலைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சி தருகூடல் ஆகியவை, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பாடல்களாம். மருதத்திணைப்பாக்களின் கருப்பொருள்களாம். நீர் நிறைந்த நெல்வயல்களில் சிலமாதக் கடின உழைப்பை அடுத்து, நெற்கதிர் முற்றும் பருவத்திலும், நெல்மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு உழவிற்குப் பக்குவப்பட்டுக் கிடக்குமாறு நிலம், ஓய்வுக்கு விடப்பட்ட பின்னரும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு தொடர்ந்து கிடைக்கும் உழவுத் தொழில் நடைபெறும் நிலப்பகுதியில், நாகரீகத்தின் மெருகேற்ற மலர்ந்து வளர்ந்ததை உணர்ந்து கொள்வது எளிது. இவ்வோய்வுப் பருவத்தில், காதலர்களின் ஊடலும், இன்பலீலைகளுமே, கிடைக்கக்கூடிய இன்பப்பொழுது போக்குகளாகும்.
நில இயல்புக்கு ஏற்ப அமையும் போர்ப்பாடல் மரபுகள்
காதல் அல்லாமல், பாக்களின் மற்றொரு கருப்பொருள் போர். குறிஞ்சி நிலத்தில், போர், வெட்சி எனப்படும் ஆனிரை கவர்தலில் அடங்கியிருந்தது. ஆனிரை கவரப்படையெடுத்துச் செல்வார்வெட்சி மலர்களால் ஆன மாலை அணிந்து கொள்வர் ஆதலின், அப்போர், வெட்சி என அழைக்கப்பட்டது. கவர்ந்து சென்றாரிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக்கோடல், அது போலும் ஒரு காரணத்தால், கரந்தை எனப் பெயரிடப்பட்டது, அடுத்து இருந்த காட்டு நிலம். தற்காப்புப் போர் நிலையில், இயற்கை முதல்தரமாக அமைந்து அதனால் காவற்காடு என அழைக்கப்பட்டது. வஞ்சி மாலை அணிந்த படைத் தலைவர்கள், காட்டு நிலத்துள் படையெடுத்துச் சென்றனர்; இது வஞ்சித்திணை என அழைக்கப்பட்டது. அரசர்கள், தங்கள் தலைநகர்களை, ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதாவது மருதத்தில் நிறுவிய போது, தங்கள் காப்பிற்காகக் கோட்டைகளைக் கட்டினார்கள்; முற்றுகையும், அது தொடர்பான செயல்களும் போர்முறைகளில் ஓர் அங்கமாகி விட்டன. இந்நடவடிக்கைகளின் போது, உழிஞைக்கொடி அணிந்து கொள்ளப்பட்டது. அதனால் அந்நடவடிக்கைகளை விளக்கும் பாடல்கள் உழிஞை என்ற இனத்தின் கீழ் வந்தன. போர்த் தந்திரங்களைப் பேராண்மைகளை மேற்கொள்ள நேரிடும். எதிர் எதிர் நின்று செய்யும் போர்கள், மரங்கள் செறிந்த காட்டு நிலங்களுக்கும், விளை நிலங்களுக்கும் வெகு தொலைவிலான, திறந்த போர்க் களத்திலேயே இயலுமாதலின், நெய்தல் என அழைக்கப்படும் கடற்கரைக்கு அணித்தாக உள்ள அகன்ற சம நிலங்களோடு தொடர்புடையதாகி, இந்நிகழ்ச்சிகளில், தும்பை மாலைகள் அணிந்து கொள்ளப்பட்டமையால், தும்பை என அழைக்கப்பட்டன. இறுதியாகப் பாலை நிலத்தோடு தொடர்புடைய காதலர்களின் பிரிவோடு ஒத்திருப்பது, பாவாணர்கள், வாகை மலர் மாலை அணிந்து கொண்டு, போரின் அவலம் போர்களிலிருந்து விளையும் நாட்டழிவுகளைப் பாடுவேது போலவே, வெற்றிகளையும் பாடும், வாகை ஆகும்.
பல்வேறு வகைப்பட்ட இத்திணைப் பாடல்களெல்லாம் மலர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது ஈண்டுக் குறிப்பிடல் வேண்டும். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிலத்தின் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த விளைபொருளாம். இம்மலர்களால் ஆன மாலைகள், காதல் துறையின் அல்லது போர்த் துறையின், விளக்கப்படும் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் சின்னமாக அணிந்து கொள்ளப்பட்டன. மலர்கள் போர்க்கள நிகழ்ச்சியின் போது, போர் வீரர்களை இனம் பிரித்து உணர்த்தும் சீரணிகளாக அமைந்தன. பழந்தமிழர்கள், மலர்களில் பேரின்பம் கண்டனர்; தங்களைத் தங்கள் தொழிற் கருவிகளை, ஏனைய உடமைகளைத் தங்கள் வீடுகளைப் பந்தல்களை, நன்மிகப் பழங்காலம் தொட்டே, இலைகளாலும், மலர்களாலும் அழகு செய்தனர்.
கொடிகள், இலைகள், மலர்கள், விலங்குகள் போலும் வடிவங்களைச் செதுக்குவதன் மூலம், தங்களுடைய தொழிற்கருவிகள் வீடுகள், தட்டுமுட்டுப் பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை அழகு செய்ததற்கும், இயற்கைப் பொருள்கள் மீது கொண்ட அதே காதல் தான் காரணமாம். இன்றைய நாட்களில்தான், தமிழர் வீடுகளில், அழகிழந்த அணிநலன் இழந்த, விசைப் பொறிகள் வனைந்து குவிக்கும் பண்டங்கள், அணி அழகுமிக்க பண்டைய பண்டங்களுக்கு மாற்றாக இடம் பெற்றன. இன்றைய நவநாகரீக வாழ்க்கையை மேற்கொண்டு விட்டோர் உள்ளங்களிலிருந்து, கவின் கலை யுணர்வைத் துடைத்து அழித்து விடுகின்றன. தங்கள் பாடல்களில் போலவே, தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் எண்ணங்களை, அடையாள வடிவில் வெளிப்பட உணர்த் தும், மலர்களின் மொழி ஒன்றைத் தமிழர் வளர்த்தனர்.
இலக்கிய மரபுகளின் முறையான வளர்ச்சி
பாக்களின் இவைபோலும் பல்வேறு மரபுகளெல்லாம், தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கியவாறே, (இனி - வெளிவரவிருக்கும், பண்டைத் தமிழர்கள் (Ancient Tamils ) என்ற என் நூலில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே அவ்விலக்கண நூலில் விளக்கிக் கூறப்பட்டிருக்கும் இலக்கிய , மரபுகள், கீழே குறிப்பிட்டிருக்கும் கால கட்ட வரிசை யில்தான் வளர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்றையே ஈண்டுக் கருத்தில் கொண்டுள்ளேன்.
1. மனித நாகரீகத்தின் ஐந்து படிநிலைகளும், இயற்கை நிலப்பகுதிகள் ஐந்திலும் உருப்பெற்று மெல்ல மெல்ல வளர்ந்த காலகட்டம். (இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எண்ணப்பட வேண்டிய மிக நீண்ட கால கட்டமாதல் வேண்டும்.)
2. பாவாணர்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், பாடத் தொடங்கி அந்நிலப்பகுதியில் மக்கள் வாழ்க்கை நிலைகள் அந்நிலங்களின் மாவடை, மரவடைகள், சுற்றுக்சூழலுக்கு எதிர் ஏற்று வளர்ந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தங்கள் பாக்களில் தங்களை அறியாதே எதிர் ஒலிக்கும் காலகட்டம்.
3. ஒரு பாட்டு, ஐவகை நிலப்பகுதியில் எந்நிலப்பகுதியில் பாடப்பட்டிருந்தாலும், அது குறிப்பிட்ட ஒரு ஒழுக்கம் பற்றிக் கூறுவதாயின், அதை அந்நிகழ்ச்சிக்கு உரிய திணைக்கே உரியதாக ஆக்கச் செய்யும், மாற்றுதற்கியலா இலக்கிய மரபுகளாகப் பாவணர்களின் பாடற்பணிகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டம். இயற்கை நிலப்பிரிவு, மற்றும் அந்நிலத்து நிகழ்ச்சிகளைக் கூறும், ஒருவகைப் பாடல் என்ற இருபொருள்களை ஒரு நிலையில் இயல்பாகக் குறித்த, திணை என்ற அச்சொல், இப்போது, இலக்கிய மரபாக, ஐந்து இயற்கை நிலப்பிரிவுகளில், ஒரு - நிலப்பிரிவோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
இம் மரபுகளெல்லாம் தொல்காப்பியனார் இயற்றிய தமிழ் இலக்கணமாம். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்படாத காலத்தில இயற்றப்பட்டு, இன்றுவரை அழியாமல் இருக்கும் மிகப் பழைய தமிழ் நூலாம் இந்நூல், செய்யுள் இலக்கணம் பற்றிய, இப்போது ஒன்றுகூடக் கிடைக்காத, பழைய விதிமுறைகள் பலவற்றைச் சுட்டுகிறது. அவ்விலக்கணம் தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்த, பெரும்பகுதி அல்லது முழுவதும் அழிந்துபோன தமிழ்ச் செய்யுள் இலக்கியப் பெருந்தொகுதி பண்டு இருந்ததை ஊகிக்கச் செய்கிறது.
காதல், போர் ஆகிய நெறிகளில் நிகழும், பாடல் புனைவதற்கு உரிய கருப்பொருள்களாகும், நூற்றுக்கணக் கான நிகழ்ச்சிகளைத் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார்.
இலக்கண ஆசிரியன், காதல், போர் பற்றிய ஒழுக்கங்களில், நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து முன்னதாகவே ஆராய்ந்து வகைப்படுத்தி இலக்கணம் - வகுத்தான். அதன்பின், பாவாணர்கள், அவ்விலக்கண ஆசிரியன் ஆராய்ந்து வகைப்படுத்திய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்று குறித்தும் பாக்களைப் புனைந்தனர் எனில், எள்ளி நகையாட்டிற்குரியது. ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும், தம் காலத்திற்கும் முன் வாழ்ந்த பாவாணர்களால் பாடப்பெற்ற ஒரு சில பாக்களையாவது, தொல்காப்பியனார், தம் உள்ளத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அழிந்துபடாமல் இப்போது கிடைக்கும் பழம்பாக்கள் அனைத்துமே, தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தனவே. தொல்காப்பிய உரையாசிரியர்கள், தொல்காப்பிய விதிகள் பலவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப், பிற்காலத்தைச் சேர்ந்த இப்பாக்களில் காணல் அரிது என்பதை உணர்கின்றனர். சில இடங்களில், அவர்கள் காட்டும் பொருள் விளக்க மேற்கோள்கள் பொருத்தமற்றவை ஆகின்றன; பல நேரங்களில், தொல் காப்பிய விதிகளுக்கான மேற்கோள்களைக் கண்டுகொள்ளு மாறு படிப்பவர்க்கே விட்டு விடுகின்றனர். கூறிய இவ்வெல்லாவற்றிலுமிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர், மிகப் பரந்த தமிழ் இலக்கியம் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. இவ்விலக்கியம் வளர்ந்த காலம், ஐந்நூறு ஆண்டுகள் என்பது, கூட்டல், குறைத்தல் இல்லா, ஓர் அளவான மதிப்பீடாம்.
இவ்விலக்கியம், அதனுடைய, அழிக்கலாகா, உரம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டுவிட்ட பாவின மரபுகளோடு இணைந்து தோன்றுவதற்கு முன்னர், இந்த மரபுகளெல்லாம், வெறும் மரபுகளாக இல்லாமல், உண்மை நிகழச்சிகளாக இருந்தது. உதாரணத்திற்குப் புலவன், காதல் பிறப்பதை, மலைநாட்டுக்கு உரியதாக, பா மரபுக்காகக் கற்பித்துக் கூறாமல், தன்னுடைய பாக்களில் ஐந்து இயற்கை நிலக்கூறுகளின் உண்மை வாழ்க்கை நிலகளை, உள்ளது உள்ளவாறே எதிரொலித்த வேறு ஒரு இலக்கியம் இருந்திருக்க வேண்டும், அந்த மிகத் தொலைநாட்களில், காதலர்களின் தற்காலப்பிரிவு, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய நிலங்களுக்கு உரியதாக மரபுக்காக ஏற்றிப் பாடாமல், அந்நிலங்களில் வாழ்ந்து அந்நிலங்களைப் பாடிய புலவன், அந்நிலம் ஒவ்வொன்றிலும், தான் கண்ணெதிரில் கண்ட, காதலர்கள் பிரிவால் நேரும் கருத்துரையை விளக்கிக் கூறினான், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாய்க் கொண்ட மரபுவழிப்பாடல்களுக்கு முற்பட்டதான , இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு, ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளாகா. இவ்வகையில் தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம் 43 எல்லையாக, ஏறத்தாழ கி.மு. 1000ஐ அடைகிறோம். இவ்வகைப் பாக்களின் வளர்ச்சிக்கு வழி செய்து, அப்பாக்களில் எதிர் ஒளி காட்டும் நாகரீகம் வளர்ச்சி பெறுவதற்கும் பல நூறு ஆண்டுகளை எடுத்துக் . கொண்டிருக்க வேண்டும். ஆகவே, தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்தை, அவர்கள், கிறித்துவுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்க வேண்டும் என காள்ளலாம்.
பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள்
பாவாணர்கள், பண்டைக்காலம் தொட்டே, பரிசில் பெறும் நோக்கோடுதான் பாடினார்கள். ஆகவே, அவர்களுடைய பாட்டுடைத் தலைவர்களெல்லாம், பழங்குடி இனத் தலைவர்களே. போர் இத்தலைவர்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நிகழ்ச்சி களின்போது மட்டுமே, ஆற்றல்மிகு அருஞ்செயல் ஆற்றும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு வாய்க்கும். ஆனால், போரில் ஆற்றும் அருஞ்செயல்களுக்கான பெருமையெல்லாம், பொதுவாகப் போர்ப்படைத் தலைவர்களையே சென்று சேரும். ஏழையின் காதலைப் பாடினால் பரிசு கிட்டாது. ஆகவே காதற் பாக்களின் பாட்டுடைத் தலைவர்களும் அரசர்களே. அவ்வகைப்பாட்டுடைத் தலைவர்களும் அவர் வழிவந்தவர் களும், அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடைய சொல்லால் பெயரிடப்பட்டனர். "திணைகளுக்குரிய பழங்குடித் தலைவர்களின் பெயர்கள், பெயர் அதாவது : பண்பு, வினை, அதாவது செயல் ஆகிய இரண்டை அடிப்படையாகக் கொண்டு வருவனவாம், என்றும், ஆயர், வேட்டுவர் என்ற, திணைவாழ் மக்களுக்குரிய பெயர்கள், அத்திணைவாழ் மக்களின் தலைவர்களுக்கும் பொருந்தும்" என்றும் ஏனைய நிலங்களில் வாழும் மக்களைக் குறிக்க வரும் திணைப் பெயர்களை ஆராய்ந்து காணின், அவையும் இவை போன்றனவே. அவை, அத்திணை மக்களின் தலைவர்க்கும் பொருந்தும் என்றெல்லாம் கூறுகிறார் தொல்காப்பியனார்.
“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலப் பெயரே”
“ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”
“ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை
ஆனா வகைய திணைநிலப் பெயரே”
(தொல். அகத்திணை இயல் - 20,21,22)
பழங்குடி மக்களின் இனப்பெயர்களாக இருந்த அப்பெயர்களெல்லாம், இப்போது, சாதிப் பெயர்களாகி விட்டன, உ-ம். குறவர், பரதவர், இடையர், வெள்ளாளர். குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியிலேயே வாழ்ந்து, அப்பழங்குடியினரிடையே இயற்கைச் சூழல், விதித்துவிட்ட தொழில்களுக்கே உரிய பழக்க வழக்கங்களை மேற் கொண்டவரிடையே, தங்கள் தங்கள் இனத்தவர்க்குள்ளாகவே திருமண உறவு கொள்ளும் முறை, இடம் பெற்று விடுவது இயல்பே. இவ்வகையான உறவுக்கட்டுப்பாடல்லாமல், பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் பால், இவ்வினப் பெண்டிர் காட்டும் பற்றுமே, பழங்குடி இனம் பிற்காலத்தே சாதியாக மாறியதற்குக் காரணமாம். பழங்குடி இனத்தவர் தலைவன் அல்லது அரசனின் செல்வாக்கும், பழங்குடியினர் பழக்க வழக்கங்களை அழியா நிலைபேறுடையதாக ஆக்கத் துணை நின்றது. ஆட்சிமுறை அறிவு, வளர்ந்திருந்தது, அல்லது நூல்வழியிலோ, நடைமுறை யிலோ, ஒருவகை ஆட்சிமுறை பின்பற்றப்பட்டது என்பதை உணர்த்த, பண்டைத் தமிழ்ப்பாக்களிலோ, தொல்காப்பியப் பொருளதிகாரத்திலோ எதுவும் இல்லையாகவே, பழங்குடித் தலைவனின் அரசுரிமை, நாகரீக வளர்ச்சி பெறாக் காட்டுத்தன் இயல்பினதாகும்.
ஒவ்வொரு நிலத்துக்குமான கவி மரபுகள்
பல்வேறு நிலங்களுக்கும் உரிய தெய்வங்கள் அந்நிலங்களுக்கு உரிய கருப்பொருள்களில், முதல்வனவாகக் கூறப்படுகின்றன. திறனாய்வுக்காக, அவை, உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும். அவை தவிர்த்த ஏனைய கருப்பொருள்கள், அந்நிலம் ஒவ்வொன்றிற்கும், அந்நிலம் பற்றிய பாக்களுக்கும் உரியனவாய், உணவுப் பொருள்கள், மாவினங்கள், மரவினங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழ்கள் முதலியனவாம்.
தெய்வம், உணாவே, மா,மரம்,புள், பறை,
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 18.
அக்கருப்பொருள்களை வரிசைப்படுத்திக் காண்பது, பழந்தமிழ்ப்புலவர்கள், எத்துணை நுண்ணிய நோக்கர்கள், இயற்கையோடு உண்மையான உறவு கொண்டிருப்பதில் எத்துணை ஆர்வமுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. முல்லைக்கு உரிய உணவு, வரகும், சாமையும் அவரையும் மாவினம்: மானும், முயலும், மரம் : கொன்றையும், குருந்தும். பறவை ; காட்டுக் கோழியும், கெளதாரியும். தொழில் : நிரை மேயத்தலும், வரகு, சாமை திரட்டலும். பொழுதுபோக்கு : ஏறுதழுவல். மலர்; இந்நிலத்துக்குத் தனிப்பெயர் தந்த முல்லையும், பிடவும், தளவும் தோன்றியும், நீர்: காட்டாறு.
குறிஞ்சிக்குப் பொருந்தும் உணவு: ஐவனம் எனப்படும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும், தினையும் . மாவினம் : புலியும், யானையும், கரடியும், காட்டுப்பன்றியும். மரம்: அகிலும், ஆரமும் தேக்கும், திமிசும், வேங்கையும். பறவை : கிளியும் மயிலும், தொழில் : தேன் அழித்தலும், தினை விளைத்தலும், கிளிகடிதலும், வேட்டையாடலும். மலர்கள்: குறிஞ்சியும், காந்தளும், சுனைக் குவளையும். நீர்: அருவி நீரும் சுனை நீரும். மருதத்துக்குரிய உணவு: செந்நெல்லும், வெண்ணெல்லும். மாவினம்: எருமையும் நீர் நாயும். மரம்: மருதமும், காஞ்சியும், வஞ்சிக் கொடியும். பறவை: தாராவும் நீர்க்கோழியும், அன்னமும், அல்லிசைப் புள்ளும். தொழில் : நடுதலும், களைகட்டலும், அரிதலும் கடாவிடுதலும். மலர் : தாமரையும் கழுநீரும். நீர்: ஆற்று நீரும், கிணற்று நீரும், குளத்து நீரும்.
நெய்தல் திணைக்குரிய உணவு உப்பு, மீன் விற்றுப் பெற்ற பண்டங்கள். மாவினம்: உப்பு மூட்டை சுமக்கும் பொதிமாடு.. மரம் : புன்னையும் ஞரழலும், கண்டலும். பறவை : கடற்காக்கை. தொழில் : மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், அவற்றை விற்றலும். மலர்: கைதையும், நெய்தலும். நீர்: மணற்கிணறும், உவர்க்குழியும்.
பாலைக்குப் பொருந்தும் உணவு : ஆலனைத்தும், சூறையாடியும் கொண்ட பொருள்கள் மாவினம்: வலுவிழந்த யானையும், புலியும், செந்நாயும். மரம்: வற்றிய இலுப்பை , ஓமை, உழிஞை, ஞெமை, பாலை கள்ளி தாழை முதலியன. பறவை : கழுகும், பருந்தும், புறாவும். தொழில் : ஆறலைத்தலும், சூறைகோடலும். மலர்கள்: மரா, குரா, பாதிரி ஆகியவை நீர்: அறுநீர்க்கூவலும் சுனையும். இப்பொருள் களும், தொழில்களும், அவ்வவற்றின் திணைகளுக்குரிய பாக்களில் இடம் பெற்றிருப்பதற்கான எடுத்துக்காட்டுகள், அடுத்துவரும் பல அதிகாரங்களில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் செய்யுட்களில் காணலாம்.
சமயம்
மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன்தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத் தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவரவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லா வற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும் அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன். இச்சமய வழிமுறைகளெல்லாம் சமயச் சார்புடைய மாயமந்திர வழிபாடுகள், சமயங்களுக்கிடையே, உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை காணல், பாராட்டும், காணிக்கை வழங்கலுமாகிய முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனிதன், கட்டளைகளுக்கு, இயற்கையின் ஆற்றல்களுக்குப் பணியுமாறு வற்புறுத்தும் வழிமுறையாம் மாயாஜால அநாகரீக காட்டுமுறை பிற்பட்ட நாகரீக நிலையைச் சார்ந்ததாம். இச்சமயச் சடங்கு முறை என்பது, சமயச் சார்பான விருந்து (இது, உண்ணா நோன்பைத் தொடர்தலும் கூடும்) சமயச்சார்பான பாடல் கூட்டாகவும் தனித்தும் சமயச் சார்பான ஆடல்களை உள்ளடக்கியதாம். பிற்காலத்தில், விருந்து, பாடல், ஆடல், நாடகம் ஆகியவை, சமய, நெறியிலிருந்து பறிக்கப்பட்டு, உடனடி இன்ப நுகர்வுக்காக மேற் கொள்ளும் செயல்களாக ஆக்கப்பட்டுவிட்டன. ஆனால், இவ்வேறுபாடு, நிலைபேறுகொள்ள, நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது.
மனித வாழ்க்கை வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே, அவன், சில கடவுள் அல்லது கடவுள்களை வணங்கி வந்தான் . என்பதில் ஐயம் இல்லை.
அப்பழங்காலத்தில் குடிப்பெயர்களில் அக்குடிகளுக்கு " உரிய அடையாளச் சின்னங்களைக் காணவல்ல, இருளில், வன்னியர் போலும், பல்வேறு குழுக்களாக மக்கள் பிரிக்கப் பட்டனர். சமஸ்கிருத இலக்கியத்தில் வானரர், (குரங்குப் பழங்குடி) கஜர் (வெள்ளாட்டுப் பழங்குடி) கருடர் (கருடப்பழங்குடி) மட்சர் (மீன் பழங்குடி) விருஷ்ணர் (செம்மறியாட்டுப் பழங்குடி நாகர் (பாம்புப் பழங்குடி ) என்ற அடையாளச் சின்னக் குடிபெயர்களைக் காண்கிறோம். இவர்களில் நாகர்கள், வரலாற்றுக் காலத்தில், வடகிழக்கு, வடமேற்கு, மத்திய, தென்னிந்திய மாநிலங்களில் வாழக் காண்கிறோம். ஆதலின், அவர்கள், பரவலாக வாழ்ந்தவர் களாகத் தெரிகிறது. நாகவழிபாட்டு முறை பெரும்பாலும், மலைநாட்டுக் குகைவாழ் மக்களிடையே தோன்றியதாகும். குலமரபு காட்டும் அடையாளச் சின்னக் கடவுள்களே! அல்லாமல், மரங்கள், ஆறுகள், மலைகளில் வாழும் கடவுள், காவல் தெய்வங்கள், கிராம தேவதைகள், எல்லையம்மன்கள், துயர் தரும் பேய்கள், எண்ணற்ற ஆவிகள், பல்வேறு சிறு தெய்வங்களையும் மக்கள் வழிபட்டனர். இந்தப் பழைய கடவுள் வழிபாட்டு முறைகளில், பெரும்பாலானவை, மக்களில், சமுதாய நிலையில் தாழ்ந்திருப்பவர்களிடையே, தங்களுடைய நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கரடுமுரடான நிலையில், இன்றும் இடம் பெற்றுள்ளன. சமுதாயத்தில் மேல்தட்டில் நிற்கும் மக்களும் துன்பக் காலங்களில், பேய், பிசாசு போலும் ஆவிகளின் துணை நாடிச் செல்வதை அடியோடு விட்டு விட்டாரல்லர்.
இவற்றில் ஒருசிலவழிபாட்டு முறைகள், ஒரு படி உயர்ந்த நாகரீக நிலையை உணர்த்தும், உயர்ந்த வழிபாட்டு முறைகளால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அவ்வகையில், நாகவழிபாடு, முருக வழிபாட்டோடு இணைந்து ஒன்றாகி விட்டது. அம்முருகன் ஆரியர்களின் சுப்பிரமணியனோடு மீண்டும் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிட்டான், காரணம், பக்தனின் ஊனக் கண்களுக்குச் சுப்பிரமணிய சுவாமி, பாம்பு வடிவிலேயே காட்சி அளிக்கிறான். முருக பக்தன் அவன் துணை வேண்டித் தொழும் போது, பாம்பு தோன்றுவது, அக்கடவுள், அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விட்டது என்பதே பொருளாம். மர வழிபாட்டுமுறை, சிவவழிபாட்டு முறையோடு கலந்துவிட்டது. இப்போதுள்ள சிவன் கோயில்களில், மிகவும் புகழ்பெற்ற கோயில்களெல்லாம், ஏதோ ஒரு நிலையில், சில மரங்களோடு, நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. அதுபோலவே, உடலுக்கு நலம் தரும் துளசி வழிபாடும், விஷ்ணு வழிபாட்டோடு கலந்துவிட்டது. நாக வழிபாட்டிலிருந்து, சிவன், எண்ணற்ற பாம்பாபரணங்களைப் பெற்றான். விஷ்ணு, ஆயிரம் தலைகளைக் கொண்ட படுக்கையைப் பெற்றான். புத்தர் தாமே ஒரு நாகர் ஆகிவிட்டார். பல புத்த, ஜெயினக் கடவுள்கள், ஐந்து தலை நாக வடிவினராகி விட்டனர்.
ஆனால் “ஆஜமிகம்” எனப்படும், நாகரிக நிலையால் உயர்ந்த இவ்வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, உள்நாட்டுப் பேய்கள், மரம், ஆறு, மலைகளில் குடிகொண்டிருக்கும் ஆவிகளைக் காட்டிலும் உயர்ந்த கடவுள்கள் நாட்டில் தோன்றி வளர்ந்து நின்றன. இக்கடவுள்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், அவ்வந்நிலங்களின் நில இயல்புகளுக்கு ஏற்ப, தனித்தனியே தோன்றி வளர்ந்தன. மலைநாட்டுத் தெய்வம் செம்மேனிக் கடவுள், அதாவது சேயோன். அவன், புணர்ச்சிக்கு முந்திய தான களவுக்காதல் காவலனாம் முருகன் எனவும் அழைக்கப் பட்டான். அவனை வழிபடுவார், அவனுக்காகப் பலி கொடுத்த ஆட்டின் செங்குருதி கலந்த சோற்று உருண்டைகளை அவனுக்குப் படைத்தனர். அவன் ஒரு வேடுவன். வேல் ஏந்துவான். அதனால், வேலன் என அழைக்கப்பட்டான். அவனை வழிபடும் அர்ச்சகனாம் பூசாரியும் வேலன் என அழைக்கப்பட்டான். மகளிரிடையே, அவன், காதல் நோயைத் தோற்றுவிப்பான். மகளிர் அம் முருகனால் அலைக்கழிக்கப் படும்போது, வேலன், பெண்களின் காதல் நோய் தீர்க்க, மாயாஜால வழிபாட்டு முறைகளை மேற்கொள்வன். வேலன், முருகனோடு கலந்து தெய்வம் வரப்பெற்று அவனோடு உரையாடும் பொழுது, அவனும், தெய்வீக வெறிக்கு உள்ளாகி, வெறியாட்டம் எனப்படும் பேயாட்டம் ஆடுவதும் பாடுவதும் செய்வன். இவ்வெறியாட்டத்தில், மகளிரும் பங்கு கொள்வர். ஆடவர் அல்லது மகளிர் பூசாரிகள், கடவுள் ஏறி, அக்கடவுள் ஆட்சிக் கீழ் இருக்கும் போது ஆடுவதும், பாடுவதும் மட்டும் செய்வதில்லை. இருண்டு போன இறந்த காலத்தைப் படித்துக் .. காட்டுவர். எதிர்காலத்தே வருவது அறிந்து கூறுவர். எந்தப் பேய் எந்த நோயைத் தந்தது என நோய்க் காரணம் கண்டு கூறுவர். உடலையும் உள்ளத்தையும் உடைமையாகக் கொண்டுவிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பர். நோய் தீர்க்கும் முறை, தெய்வத்தன்மை மட்டுமே வாய்ந்தது அன்று, மலைநாடு, நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பெருமளவில் கொண்டது. ஆகவே, வேலன், தேவராட்டிகளின் வெறி யாடல் நிகழ்ச்சி, அம்மூலிகைகளாலும் அரண் செய்யப் பட்டது. ஆகவே, பழங்காலப் பூசாரி , மருத்துவனும் ஆவன். ஆயிரமாயிரம் சமயத் தத்துவங்கள் வளர்ந்து விட்டிருக்கும். இன்றும், பேய்களை வழிபடுவோரும், மருத்துவருமாக இணைந்த தாழ்த்தப்பட்ட இனத்தவராம் குறவர், சமுதாயத்தில் உயர்நிலை பெற்றவரிடையேயும், இலைமறைவு காய்மறைவாகச் சிறந்த வாணிகத்தை நடத்தி வருகின்றனர்.
மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால், பால் படு பொருள்கள், சில சமயம், இவற்றொடு கலந்த சோறு, அவன் படையல்களாம்.
மீண்டும் கூடலால் பிறக்கும் இன்பத்தைப் பெரிதாக்கவே உதவும். காதலர்களின் சிறு பிரிவுக்கான வாய்ப்பினை அளிக்கிறது ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை . ஆதலின், காதல் இன்பத்தை விருப்பம் போல் நுகர, வேட்டையாடும் வாழ்க்கையிலும், ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை, பெரிதும் துணை நிற்கின்றது, வேட்டையாடுவான் போலவோ, எதிர்பாரா இன்னல்கள் நிறைந்த, நெடுந்தொலைவு கடல் மேல் செல்லும் வாழ்க்கை உடையவரைப் போலவோ அல்லாமல், ஆனிரை மேய்ப்பவர் காட்டில் ஓய்வாக இருந்து ஆனிரை ஓம்புவதில் ஈடுபட்டுள்ளமையால், அவர் வாழ்க்கையே மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாம், ஆகவேதான் ஆனிரை ஓம்புவாரின் கார்மேனிக் கடவுளும், இந்தியக் கடவுள்களனைத்திலும் மகிழ்ச்சியால் நிறைந்த கடவுளாவன்.
கடற்கரையைச் சார்ந்த நிலத்துத் தெய்வம், அச்சமூட்டும் கடல் தலைவன் ஆவான். கரிய மேனியராகிய ஆடவரும் மகளிரும், இடுப்பில் தங்கள் குழந்தைகளோடு கடற்கரைக் . கண் திரண்டிருந்து, அன்று பிடித்த புத்தம்புதிய அல்லது , உப்பிட்டு உலர்ந்த மீனையும், ஊனையும் அக்கடல் , தெய்வத்துக்குப் படைக்கும் மீனவ வழிபாட்டாளர்களின் வழிபாட்டுச் சடங்குகளில், அக்கடற் கடவுளின் அடையாளமாகக் கொடிய சுறாமீனின் கொம்பு அமையும். காதல் இன்பம், மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை , கழி நீரில் படர்ந்திருக்கும் அல்லி மலர்களை, அவற்றின் மீதுற்ற ஆசையால் அணிந்து கொண்டு தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் கரிய மேனியராகிய மீனவ இன மகளிரின் . நன்கு வளர்ந்த உடல் உறுப்புகள், மீன் முடைநாறும் நிலையிலும், அவர்களின் இல்லத்து ஆடவர் கடல் மேல் செலவு குறித்துப் போய்விட்ட நிலையில் அண்டை நிலத்துச் சிறந்த ஆடவர், தங்கள் காதலியராம் அம்மகளிரைக் காண்டல் விருப்போடு, தங்கள் வண்டிகள் அல்லது தேர்களில் கடற்கரைக்கு வந்து செல்வர் என்பதைப் பிற்கால இலக்கியங்களில் படிக்கிறோம்.
ஏனைய நிலப்பகுதிகளிலும், நாகரீகம் நனிமிக வளர்ந்துவிட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில், களவுக் காதல், கற்புக்காதலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழர் களிடையே இடம்பெற்றுவிட்ட, ஆரியர்களால் திருத்தப் படுவதற்கு முற்பட்டதால், பழைய திருமணச் சடங்குமுறை, அகநானூறு என்ற தொகை நூலைச் சேர்ந்த இரண்டு செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது. "உழுத்தம் பருப்புக் கலந்து நன்கு குழையச் சமைத்த பொங்கலோடு, பெரிய சோற்றுக் குவியல், பலரும் உண்ட பிறகும் குவிந்து கிடக்கிறது. வரிசையாகக் கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தலின் கீழ், புதுமணல் பரப்பப்பட்டுள்ளது. மனை விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மணமக்கள் மாலைகளால் அணி செய்யப்பட்டுள்ளனர். தீயன விளைவிக்கும் கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற, வெண்பிறைத் திங்கள், சிறந்த புகழ் வாய்ந்த உரோகிணி எனும் நாளோடு கூடிய அந்த நல்ல நாளில் இருள் அகன்ற விடியற்போதில், திருமண ஆரவாரத்தில் மூழ்கிவிட்ட முதிய மகளிர், தலையில் கொண்ட குடங்களிலும், கையிற் கொண்ட பண்டங்களிலும் நீரைக் கொண்டு வந்து, வரிசையாகக் கொடுக்கக் கொடுக்க, மகப்பேறு பெற்று மாண்புடைய தூய அணிகள் அணிந்த மகளிர் நால்வர், 'கற்பு நெறி வழுவாது, நல்ல பல பேறுகளையும் பெற்றுத்தந்து, கணவனைப் பேணும் அன்புடையை - ஆகுக' என வாழ்த்தியவாறே, அத்தண்ணீரால் குளிப்பாட்ட, அந்நீரோடு கலந்து சொரியப்பட்ட நெல்லும் மலரும் மணமகள் கூந்தலில் கிடந்து சிறக்க, திருமணச் சடங்கு இனிதே முடிவுற்ற பின்னர், அன்று இரவு, தமரகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடியிருந்து, மணமகளுக்குப் புதுக்கூறை உடுத்திப் பெரிய மனைக்கிழத்தி ஆகுக’ என வாழ்த்தி அவள் காதலனோடு ஓர் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அவளும் நாண்தரு நடுக்கத்தோடு உள்ளே நடந்தாள்”
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை,
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணமல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்,
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி,
பல்லிருங் கதுப்பில் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரிற் கிழத்தி ஆகு’ எனத் தமர்தர
ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்.”
அகநானூறு 86 : 1:22
கூறிய இப்பண்டைத் தமிழ்த் திருமணச் சடங்கு முறையில், ஆரியக் கலப்பு எதுவும் அறவே இல்லை , தீ ஓம்பல் இல்லை . தீ வலம் வருதல் இல்லை . தட்சணை வாங்கப் புரோகிதர் இல்லை என்பது உணரப்படும். அதே தொகை நூலில், மற்றொரு செய்யுளும், திருமணச் சடங்கு முறையினைக் குறிப்பிடுகிறது. "இறைச்சி கலந்து நெய் மிதக்க ஆக்கிய வெண்சோற்று உணவு, வரையா வண்மையொடு பெரியவர் களுக்கு வழங்கப்பட்டது. பறவைகள் உணர்த்திய நிமித்தமும் நன்றாக இருந்தது. வானம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. திங்கள், குற்றமற்ற உரோகிணியோடு கூடியிருந்தது. மணமனை - அழகு செய்யப்பட்டது. அவர்கள் கடவுளை . வழிபட்டனர். முரசும் மண இசையும் முழங்கலாயிற்று. மகளிர், மலர் போலும் கண்களை இமையாராய் நீராடி அணி செய்யப்பட்ட மணமகளை ஆர்வத்தோடு நோக்கினர். மாசு போகக் கழுவிய நீலமணி போன்ற, பெரிய மலர் இதழ்களாலான வழிபடுகடவுள் வடிவம், வாகையின் கவர்த்த இலைகளோடு கூடிய மலர் மீது, ஆண்டு முதிர்ந்த கன்று மேய்ந்துவிட்ட கார் மேகத்தின் முதல் மழை பெற்றுத் தலைகாட்டிப் பள்ளத்தில் படர்ந்திருக்கும் அறுகம்புல் லோடு வைக்கப்பட்டது. அது, குளிர்ந்த நறுமணம் கொண்ட மலர் அரும்புகளும், வெண்ணூலும் சூட்டப்பட்டு, தூய உடை அணியப்பட்டு, அழகு செய்யப்பட்டது, மணமகள், மழையொலிபோல், மறை ஒலி எழும், புதுமணல் பரப்பப்பட்ட மணற்பந்தற் கீழ் அமர்த்தப்பட்டாள், அணிந்திருக்கும் அணிகளின் சுமையால், அவள் வியர்த்துப் போகத், தோழியர் அவ்வியர்வை போக வீசினர். இவ்வகையில், அவள் சுற்றத்தார், அவளை மணம் செய்து கொடுத்தனர்.
"மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோரப் பேணிப்
புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகட மண்டிய துகள் தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்
படுமண் முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம் பமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலை பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்துமே வரத் துவன்றி
மழைபட் டன்னமணன்மலி பந்தர்
இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக் கீத்த” அகநானூறு 36, 7-18
இவ்விரு செய்யுட்களும், நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் காலத்திலும், பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன. ஆனால், அவை, உண்மையில், மிகமிகப் பழைய காலத்தில் நிலவியிருந்த திருமணச் சடங்கு முறைகளையே விளக்குகின்றன.
திருமண வாழ்க்கை , இவ்வாறு, நல்ல நிமித்தத்தில் தொடங்கினாலும் பெரும்பாலும், ஒரே சீரான வழியில் , ஓடியதில்லை. மண வாழ்க்கையில், உண்மையாக நடந்து கொள்வதிலிருந்து, கணவன்மார்களைத் தவறான வழிக்குத் தூண்டிவிடும் பரத்தையரின் சூழ்ச்சிகளால், கற்புக் காலத்து , அன்பு வாழ்ககை, தற்காலிக, அல்லது நிரந்தர முடிவுக்குப் பல சமயம் ஆளாக்கப்பட்டுவிடும். வயல்களில் கதிர் முற்றிக் கொண்டிருக்கும் காலத்திலும், அறுவடைக்குப் பின்னர், நிலம் தரிசாக விடப்பட்டிருக்கும் காலத்திலும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு நாட்களில் வேலையற்றுக் கிடக்கும் கைகளுக்குச் சில குறும்புகளைக் கொடுத்து விடுகிறது சைத்தான். ஆகவே, விளைநிலப் பகுதிக்கு மட்டுமே தனி உரிமை வாய்ந்த ஒன்று, பரத்தையர். ஒழுக்கமுறை. கோடையில் நீர்வேட்கை மிகுந்து நிலங்களெல்லாம் திணறும்போது, மழை மேகங்களை, இடியேறு (முருகனின் பழைய வேற்படை போலும், கல்லால் ஆன, படைக்கலம் ) எனும் படைக்கலத்தால் பிளந்து மழை பெய்யப்பண்ணும் கார்மேகத்தை ஆட்சி கொள்ளும் கடவுள், இந்நிலத்தின் தெய்வமாம். தன்னை வழிபடும் நிலஉலக ஆடவர், அந்நில உலகப் பரத்தையர்களால் சூழப்பட்டிருப்பது போலவே, இவனும், வானுலகப் பரத்தையர் குழாத்தால் சூழப்பட்டிருக் கும் ஒரு காமக் கடவுளாவான். பொங்கல் என அழைக்கப் படும், பருப்போடு கலந்து ஆக்கிய சோறு, இவன் மிகவும் விரும்பும் படையல், விளைநிலப் பகுதிகளில், அறுவடை விழாவாக, மக்களால், இன்றும் பெரிதும் பாராட்டப் பெறும் * விருந்துப் பெருவிழா இது.
கடைசி நிலப்பகுதி, கொள்ளைக்காரர்களின் வாழிடமாம் பாலை. அடுத்துள்ள மலைநிலத்தைப் போலவே, தாயைக் ; குடும்பத் தலைவியாகக் கொண்ட சமுதாய முறை, நெடுங்காலம் நிலை பெற்றிருக்கும் நிலப்பகுதி, இது. ஆகவே, இந்நிலத் தெய்வம். வெற்றிப் பெண் தெய்வமாம் கொற்றவை. அவள் வழிபாட்டாளராம் கொடுந்தொழில் புரியும் மறவர், அவளுக்கு, மனிதனையும், விலங்குகளையும் கொன்று குருதிப் பலி தருவர். பாலை ஒரு வறண்ட நிலம். அதற்கேற்ப காதலியின் காலடியில் சேர்ப்பதற்குப் பெரும் பொருள் தேடுவான். வேண்டி, இறந்தோர்களின் வெள்ளெலும்புகள் சிதறுண்டு கிடக்கும் மணல் பரந்த நெடு வழியில் பயணம் செய்யும் காலத்தில் காதலிகள் நெடிது பிரிந்து வாழ நேர்வதாம், காதல் அவலத்தோடு, பொறுத்த நிலையில், பெருங்களோடும் களியாட்டங்களோடும், கொற்றவை வழிபடப்படுவாள்.
இந்த ஐந்து கடவுள்களில், நான்கு கடவுள்களைத் தொல்காப்பியனார் வரிசைப்படுத்தியுள்ளார். "மாயோனால் விரும்பப்பட்டது காட்டுவளம்; சேயோனால் விரும்பப் பட்டது மலைநாடு; இனிய நீர் பாயும் புனல் நாடு, கடவுளர்க்குக் கடவுளாம் வேந்தனால் விரும்பபட்டது. வருணனால் விரும்பப்பட்டது, பெருமணல் உலகம். இந்நான்கு உலகமும், முறையே, முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல் என அழைக்கப் பெறும்".
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் -
தொல்காப்பியனார், பழந்தமிழ்க் கடவுள்களை , அவற்றோடு நேரொத்த ஆரியக் கடவுள்களாக அடையாளம் கண்டு, ஆரியர்களுக்குச் சுவர்க்கத்தின் கடவுள், தேவர்க்கு அரசனே ஆதலின், ஆற்றுப் பள்ளத்தாக்குக் கடவுளை , வேந்தன் என்று அழைக்கின்றார். கடல் தெய்வத்திற்கு, வருணன் எனச் சமஸ்கிருதப் பெயர் சூட்டியுள்ளார் என்பது . குறிப்பிடல் தகும். பின் இரண்டின் தமிழ்ப் பெயர்கள் திரும்பக் கிடைக்கவில்லை போலும். அவை, முறையே, சேயோன், கடலோன் என்பனவாகலாம், தொல்காப்பியனார், மக்கள் நிலையாகக் கூடி வாழும் நிலப்பகுதிகளின் பட்டியலில் பாலையைச் சேர்க்கவில்லையாகவே, அப்பாலைக்குரிய கடவுள் பெயர் குறிப்பிடவில்லை.
வட இந்தியாவில் ஐந்து பழங்குடி இனங்கள்
இவ்வைந்து வகையான மனித நாகரீகம், தென்னிந்தியாவைப் போலவே வடஇந்தியாவில், பழங்காலத்தில், அதாவது வேதங்களும், வேத மந்திரங்கள் இயற்றப்படுவதற்கு நிலைக்களமான தீ வழிபாட்டு முறைகளும் எழுவதற்கு முற்பட்ட காலத்தில், வளர்ந்திருக்க வேண்டும். ஆரிய நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, வட இந்திய தஸ்யூக்கள், தென்னிந்திய தஸ்யூக்களைப் போலவே, அதே ஐந்து இனத்தவர்களாகப் பிரிந்திருக்க வேண்டும். வட இந்தியா, தென்னிந்தியாவைப் போலவே அதே ஐந்து, இயற்கை யோடியைந்த நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப்படக் கூடியதே. ஆனால் ஒன்று, அவை தென்னிந்தியப் பிரிவுகளைக் காட்டிலும் பரப்பளவில் பெரியனவாம். அங்கு, அதே நில இயல் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆகவே அதே - விளைவுகளுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் கடவுளின் வாய், தீ; ஆகவே கடவுளுக்குப் படைக்கும் அனைத்தும், கொழுந்துவிட்டு எரியும் தீக்கடவுளின் வாயில் இடுதல் வேண்டும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீ வழிபாட்டு நெறி, வட இந்தியாவில், ஏறத்தாழ, கி.மு. 4000இல் உருவாகிவிட்டது. இவ்வழிபாட்டு நெறி, ஆரிய வழிபாட்டு. நெறி என அழைக்கப்பட்டது. தீ இல்லா வழிபாட்டு நெறியினைப் பின்பற்றிய பழங்குடியினர், தஸ்யூக்கள் எனப்பட்டனர். தீ வழிபாட்டு முறையினைப் பின்பற்றுவோர், தங்கள் படையலைத் தொடர்ந்து கவிவல்ல பார்ப்பனராம் ரிஷிகள் இயற்றிய மந்திரங்களை ஓதும் முறையினை மேற்கொண்டனர். சமஸ்கிருத மொழி எப்படி, எப்போது உருவாயிற்று? யார் இந்த ரிஷிகள்? என்பன கண்டுபிடித்தற்கு இயலா. நமக்குத் தெரிந்த ஒரே உண்மை , சொல் அமைப்பிலும், சொற்றொடர் அமைப்பிலும், அது மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பெருநிலப்பரப்பில் பேசப்பட்டு வரும் மொழிகளோடு உறவுடையதாம் என்பது.
இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டும், இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டினை உணரமாட்டா. வடிகட்டிய அறியாமையால் தூண்டப் பட்டும் மனித இயல் நூல் தன் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் ஆரியர்களின், உலகக் குடிபெயர்ச்சி என்ற தத்துவம் உருப்பெற்றது. ஆனால் வடநாட்டில், ஆரிய நாகரீகம் எழுவதற்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்கள் வாழ்க்கை - முறையினை, ஆரிய நாகரீகத் தோற்றம் எவ்வாறு மாற்றி விட்டது என்ற வினாவிற்கு, விடை காண்பது ஒன்றே ஈண்டு. நம்முடைய நோக்கம்.
அத்தொல்லூழிக் காலத்தில், தங்கள் தமிழ் உடன் பிறப்பாளர்களைப் போலவே, வட இந்திய தஸ்யூக்களும், அவ்வந்நிலத் தெய்வங்களையே வழிபட்டிருக்க வேண்டும். ஆரியத் தீ வழிபாட்டு நெறி, இந்த உள்நாட்டுக் கடவுள்களைத் தங்களுடையனவாக ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தங்களுடைய, புது நெறிப்படி வழிபட்டதா? இதுபற்றி ஆராய இது இடம் அன்று. அத்தொல்லூழிக் காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இந்த ஆரிய வழிபாட்டு நெறி, தென்னிந்தியாவுக்குக் குடிபெயர்ந்தபோது, தென்னிந்திய உள்நாட்டுக் கடவுள்களாக, சேயோன் சுப்பிரமணியனாக, மாயோன், விஷ்ணுகிருஷ்ணனாக, கடல் தெய்வம், வருணனாக, கார்மேகக் கடவுள் இந்திரனாக, பாலைத் தெய்வம் துர்க்கையாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்பது, ஈண்டுக் குறிப்பிடல் கூடும். இந்த ஆரியக் கடவுள்கள் தாமும் பண்டைய தஸ்யூக் கடவுள்களின் மறு அவதாரங்கள் தாமா? வேதகாலத்தில் அக்கடவுள்களில், இந்திரனுக்கே தலைமை அளித்திருப்பது, ஏனைய நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரைக் காட்டிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மக்கள், தலையாய நிலை பெற்றிருந்ததன் விளைவுதானா என்பன ஈண்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா.
வேதச் சொற்றொடர் ஒன்று, மக்கள் ஐந்து பழங்குடியினராகப் பிரிவுண்டிருந்த வரலாற்றுப் பழஞ்செய்தி ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. “பங்கஜனாஹ்” என்பது, அத்தொடர், இப்பொருள் விளங்காத் தொடர், பழைய, புதிய எழுத்தாளர் பலரால், பொருள் காண முயலப்பட்டுளது. ஆனால், மனநிறைவு கொள்ளும் வகையில் பொருள் விளக்க எவராலும் முடியவில்லை. அது, ஆரியத்திற்கு முற்பட்ட, ஐந்து பழங்குடியினரைக் குறிக்க வேண்டும் என்ற ஊகத்தை நான் கூறினேன். ஆனால், தமிழிலக்கியம் பற்றி ஏதும் அறியாத, ஆரியத்துக்கு முந்திய இந்தியாவுக்கும், ஆரிய இந்தியாவுக்கும் இடையில் வரலாற்றுத் தொடர்பின் இன்றியமையாமையினை மதிக்க மறுக்கும் வரலாற்று வல்லுநர்களால், என்னுடைய ஊகத்தின் மதிப்பீட்டை - மதிக்க முடியவில்லை.
“இந்தியாவில் கற்காலம்” (பக்கம் 28-29) என்ற என் நூலினைக் காண்க.
4. கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில்
வெளிநாட்டு வாணிகம்.
வெளிநாட்டு வாணிக வளர்ச்சி
சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளுக்குக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. (CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5:18; 584:5 18:321) மகாபாரத காலத்தில், வட இந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது எதுவுமில்லை. இஃது உண்மையோ அல்லவோ , ஆனால் ஒருபக்கம் தென்னிந்தியா, மறுபக்கம் பாபிலோனியா, அரேபியா, ஆப்பிரிக்க நாடுகள், ஆகிய இவற்றினிடையே, வேதகாலத்தில் நிலைபெற்றிருந்த வாணிக உறவு, கி.மு. இரண்டாயிரத்தில் செழிப்புற வளர்ந்திருந்தது என்பதை உணர்த்த சில அகச்சான்றுகள் உள. வடமேற்கு ஐரோப்பா வின் வடகோடியின் பாலைநிலங்களாம் ஸ்காண்டினேவியா வைச் சார்ந்த, நெட்டையான உருவமும், நெடிய மண்டை ஓடும் கொண்ட வெள்ளை நிறத்துப் பழங்குடியினர் (Nordic Tribe) உரிய தமிழ்ப் பெயரில் கூறுவதானால், வடகோடி நெடிய முல்லை நிலத்து ஆயர் கி.மு. 2000இல் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து, கோதான் முதல் கிழக்கு மத்திய தரைக்கடற்கரை வரையான பண்டை நிலவழி வாணிகத்தை அழித்துவிட்டு, சீனாவுக்கும் மிகப்பழைய நகரங்களுள் ஒன்றான டிராய் (Troy) நகருக்கும் இடையில் நடைபெற்று வந்த பச்சைமாணிக்கம் (Jafe - stone) வாணிகத்தைத் துண்டித்துவிட்டனர். அவர்கள் இந்திய ஆரியரோடு, இன்று நிலவும் பண்பாட்டுச் சார்பான மனித இனநூல் கொள்கைக்கு முரணாக, நான் கருதுவதற்கேற்ப, கொண்ட உறவு எதுவும் இல்லை. வடநாட்டில் இவ்வாறு ஆணையிட்டுத் தடுக்கப் பட்டுவிட்ட வணிக அலை. தெற்கு நோக்கி வீசி, இந்தியாவின், குறிப்பாகத் தென் இந்தியாவின் கடல்வழி வாணிகத்து மேல் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டது.
எகிப்து உடனான வாணிகம்
“வாணிகப் பொருளாகவும், கி.மு. 1580 - 1350இல், பதினே ழாவது அரசகுலத்து ஆட்சியில், திறைப் பொருளாகவும், தந்தம் பெறப்பட்டதற்கான எண்ணற்ற ஆவணச் சான்றுகள் உள்ளன. தந்தம் போலவே, தந்தத்தாலான நாற்காலிகள், மேசைகள், இழுப்பறைப் பெட்டிகள், உருவச்சிலைகளும் பெறப்பட்டன”. (Scoff’s periplus.page:61) இவை பல்வேறு இடங்களிலிருந்து வந்தன. அந்நாட்களில் எகிப்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்தில், பெரிய பொருள் சேமிப்பு இடமாக விளங்கிய, சோமாலிலேண்டைச் சேர்ந்த புன்ட் (punt) அவ்விடங்களில் ஒன்று. இச்செய்தி, பழைய காலத்தில் நிகழ்ந்தது போலவே, தந்தமும், தந்தத் தினாலான பொருள்களும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து நைல் பள்ளத்தாக்கிற்குச் சென்றதை உணர்த்துகிறது.
பதினெட்டாவது அரசர்குலமாகிய தேவன் (The ban) அரசகுலத்து ஆட்சியின் போது, சிறந்த எகிப்துக் கப்பற்படைகள், புன்ட் பகுதிக்கு அனுப்பப்பெற்றன. அவை திரும்பி வரும்போது, நறுமணப் பொருள் செய்யப் பயன்படும் பிசின், கருங்காலி மரம், தந்தம், பொன், லவங்கம் மணம் கமழும் புகைதரும் பொருள்கள், கண் மை, வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகிய பெரும் பொருட் குவியலோடு வந்தன. “சிரியா நாட்டிலிருந்தும், அரேபியா மற்றும் கிழக்கு நாடுகளின் கருவூலங்களின் பெரும் பகுதியாம், மணம் கமழ் புகை தருவான்கள், எண்ணெய், உணவு தானியங்கள், மது, பொன், வெள்ளி, மதிப்புமிக்க கல் வகைகள் ஆண்டுதோறும் செலுத்தப்பட்டன”. பாபிலோனியாவிலிருந்து, மாணிக்கக் கல்வகைகள் வரப்பெற்றன. "கி.மு. 1798-1167 இல் இருபதாவது அரசர் குலத்தில் மூன்றாம் ரமேஸஸ் (Rameses III) என்பான் ஆட்சியன் கீழ், நாட்டின் செல்வவளம் அனைத்தும் அமோன் (Amon) என்பான் மடியில் கொட்டப்பட்டு விட்டதுபோல் காணப்பட்டது. பாபிரஸ் ஆரிஸ் என்பார், (Papyrus Haris) அமோன் என்பான் கல்லறைக்காக "பாபிரஸ் ஆரிஸ்" என்ற பெயரில், தொகுத்து இயற்றிய, தம்முடைய நன்கொடை அறக்கொடைகளின் சிறந்த ஆவணத்தில், ஆண்டுதோறும், "பொன், வெள்ளி, மணிக்கல், உயர்மெருகு ஏற்கும் பச்சநிைறக் . கனிப்பொருள், மதிப்புமிக்க மாணிக்க வகைகள், செம்பு, சிறந்த நார்மடியால் ஆன அரச உடைகள், லவங்கம் 246 நாழி" என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (இம் மேற்கோள்கள், திருவாளர் பிரஸ்டெட் (Breasted) என்பாரின் எகிப்தின் பழைய ஆவணங்கள் (Ancient Records of Egypt) என்பதிலிருந்து எடுக்கப்பட்டன. (Schoffs periplus. p. 121-122) மேலே காட்டிய மேற்கோள்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் பொருள்களில், கருங்காலி, பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே சென்றது என்பது, ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. மணிக்கல் உட்பட, மதிப்புமிக்க கல்வகை கள், பிற்காலத்தில், மேற்கத்தவர்களால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது பின்னர் விளக்கப்படும்.
இவ்வாணிகம், பெரும்பாலும் 18வது அரசர் குல ஆட்சியில், செல்வ வளங்கொழித்திருந்த நாட்களில், எகிப்தோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்த அனைத்து நாடுகளும், ஆமோன் அவர்களுக்கு வழிபாடு செலுத்துவான் வேண்டி வந்து, அலைமோதிய காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும். எகிப்தியர்களால், "லாப்பிஸ் லாஸ~லி " (Lapis-Lazwli) என அழைக்கப்படும் நீலமணிக்கல், எகிப்தியர்களால் நன்மிகப் பழங்காலத்திலிருந்தும், அஸிரியர்களால் அதனினும் பிற்பட்ட காலத்திலிருந்தும் அறியப்பட்டது 'என்கிறார் திருவாளர் குட்சைல்டு (Good Cuild) என்பார்.
சலாமிஸ்ஸின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாஸ் (Epiphanias) என்பார், மோஸஸுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகிப்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மஸ்ஸிலினால் தைக்கப்பட்டவையாம். வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகியவை பொருத்தமட்டில், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பொருள்களும், இவற்றிற்கு இனமான பொருள்களும், மேலை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. ஆதலின், இறக்குமதி செய்யப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இல்லையாயினும், இவற்றில் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து வந்தனவாம் என்பதில் சிறிது உண்மையிருக்கிறது. லவங்கப்பட்டையைப் பொருத்தவரை கி.மு.15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அட்ஷே புஸ்ட் (Hatshe pust) என்ற அரசியாரின் படையெடுப்பு குறித்த, எகிப்து மொழிக் கல்வெட்டுக்கள் எகிப்துக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுவிட்ட, புன்ட் நாட்டின் அற்புதங்களில் ஒன்று, லவங்கப்பட்டை மரம் எனக் குறிப்பிடுகின்றன என்ப து குறிப்பிடப்படலாம். (Scoff’s periplus Page: 82). ஆனால், லவங்கப்பட்டை குறித்த வாணிகத்தின் ஏகபோக உரிமையைத் , தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வதற்காக, அதன் இந்தியப் பிறப்பை, மேற்கத்திய மக்களிடையே மறைத்துவிட்ட அராபிய வணிகர்களால், வலங்கம், இந்தியத் துறைமுகங்களிலிருந்தே, அவ்விடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. லவங்கம், மலபாரிலும், சீனாவிலும் வளர்கிறது. ஆனால், அதை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்ற அராபிய வணிகர்கள் அதன் ஆப்பிரிக்கப் பிறப்புப் பொய்க் கவிதைகளைக் கட்டி வளரவிட்டனர், தெளிவற்ற தன்மையிலும் அறிவுறுத்தும் பகுதி, பிளைனி அவர்களின் எழுத்தில் உளது அவருடைய காலத்தில், மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஒருவகை லவங்கம் குறித்துத் தோம்னா (Thomna) வைத் தலைநகராகக் கொண்டிருந்த அராபியர்களின் அரசன், கெப்னிடே (Kefianitae) என்பான், அரசு ஆணை அல்லது . பொது ஏலம் மூலம் விற்பனையை ஒழுங்குபடுத்தும், முழுக்கட்டுப்பாட்டுரிமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தான் என்றும், அம்மரங்கள், ஆட்சியிலிருப்பபோரின் கொடுஞ் செயல் துணையாலோ அல்லது வெறும் எதிர்பாராச் சூழலாலோ, அறுதியிட்டுச் சொல்ல இயலா நிலையில், கொடிய காட்டு மனிதர்களால் எரிக்கப்பட்டுப் பெற்ற ஒரு பவுண்டு நிறையுள்ள அம்மரத்தின் சாறு, டெனாரி (Denari) என வழங்கும் ஆயிரம் உரோம் வெள்ளி நாணயம் வரை, சில சமயம் ஆயிரத்து ஐந்நூறு நாணயம் வரையும் விலை போயிற்று என்றும் திருவாளர் பிளைனி அவர்கள் கூறுகிறார். திருவாளர் பிளைனி அவர்கள் அளிக்கும் அகச் சான்றுகளில் சில அத்தகைய பேரழிவுக்கு, லவங்கத் தோட்டம் தீப் படித்துக் கொள்ளுமளவு தென்றல் காற்று கடுமையாக வீசுவதைக் காரணம் காட்டுகின்றன. ஈண்டு இரண்டு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக, அரேபிய ஆட்சியாளர் - கள், லவங்க வாணிகத்தின் மீது கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு இரண்டாவதாக லவங்கம் வழங்குவதில் ஏற்பட்டுவிட்ட தோல்விக்கு, உண்மையான காரணத்திற்குப் பதிலாக உதாரணத்திற்கு, இந்தியப் பகுதியிலிருந்து வரும் கடற்பயணத்தின்போது அனுபவித்த, பேரழிவு விளைவித்து விட்ட கொடுங்காற்று போலும் உண்மையான காரணத்திற்குப் பதிலாக, உள்நாட்டுக் காரணம் கற்பித்து, வாதிடும் தவறான விளக்கம். லவங்கம் கிடைக்கக் கூடிய உண்மையான வழிமூலத்தை, இடத்தை வெளியிடாமல், இது போலும் உண்மைக் காரணத்தை மேல் நாட்டு வணிகர்களுக்குக் கொடுக்க இயலாது. செல்வச் சீமானிகளால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நறுமணப் பொருளுக்கு வழக்கமான விலையைக் காட்டிலும், அதிக விலையைக் கொடுக்கக், கிரேக்கர்களைத் தூண்டும் குறிக்கோளுக்காகவே, அப்பொருள் கிடைப்பதில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விட்டு, அத்தட்டுப்பாட்டிற்குப் பொய்யான, ஆனால் அதே நிலையில் நம்பத்தகுந்ததான விளக்கத்தைத் தருவதில் அரேபியர்கள் வல்லவர் என்பதை உண்மையில் நம்பலாம், மேற்கு இந்தியா அல்லது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வாணிக மையங்களுக்கு வழக்கமாக வந்து செல்லும் அரேபிய வணிகர்களுக்காக, வங்காளம், கொரமண்டலம், மலபார், வடமேற்குப் பகுதிகளைச் சார்ந்த இந்தியர்கள், பெரும் பாலான அப்பொருள்களைச் சீனாவிலிருந்தும், இந்தியா விலிருந்தும் கப்பல்களில் கொண்டு வந்திருக்க வேண்டும்” (Warmington Commerce betweeen the Roman Empire and India, Page: 192-193) கிரேக்க, இலத்தீன் மொழி எழுத்தாளர்கள், லவங்கம் முதலாம் பொருள்களின் மூலம் குறித்து எழுதிய . குறிப்புகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதையும், கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டைச் சேர்ந்த எகிப்தியர்கள், சீன, இந்திய லவங்கத்தை ஏடன், சோமாலி கடற்கரைகளில், இந்தியக் கப்பல்களிலிருந்து பெற்றுக் கொண்டனராதலின், எகிப்தியர் நம்பியது போலவும், கிரேக்க வணிகர், பிற்காலத்தே எண்ணியது போலவும், லவங்கம் - புண்ட் நாட்டின் அதிசயப் பொருள்களுள் ஒன்றாகாது . என்பதையும் இது தெளிவாக்கி விட்டது.
புண்ட் நாட்டிலிருந்து எகிப்துக்கு வழங்கப்பட்டனவாக, மேலே குறிப்பிடப்பட்ட கீழ்நாட்டு அரும்பொருள்களுள், எண்ணெய், தானியங்கள் ஆகியவை இடம் பெற்றிருப் பதைக் கண்டோம். அவற்றுள், எண்ணெய் பிற்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து, காலம் தவறாமல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டதாகப், பெரிபுளுஸ் மூலம் நாம் தெரிந்து கொண்ட நல்லெண்ணெய் ஆகும். திருநெய்யாட்டு என்பது, அரசர்களும் மதகுருக்களும் மேற்கொண்ட ஒரு விழா. நறுமணத் தைலம் காய்ச்சுவதற்கும் எண்ணெய் தேவைப் பட்டது. நறுமணத் தைலம் செய்யப்படும் தொழிற்சாலைகள், எகிப்திலும் சிரியாவிலும் இருந்தன. தானியங்கள் என்பதில் அரிசி, பெரும் சோளம், சோணை - மூடிய தினை ஆகியன பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அட்ஸேபுஷ்ட் (Hatshe pust) அரசியாரின் படையெடுப்பும், புண்ட் நாட்டிலிருந்து கருங்காலியைக் கொண்டு வந்தது. இந்தியப் பண்டங்கள் இந்தியா விலிருந்து காலம் தவறாமல் முறையாக எடுத்துச் செல்லப் பட்ட இடம் புண்ட் நாடாகவே, அரசியார், மலபார் காடுகளில் வளர்ந்த நேர்த்தி வாய்ந்த கருங்காலியைப் பெற்றுக் கொண் டதற்குப் பெரிய வாய்ப்பு இருந்தது. (Scoff’s periplus. page:153) பாலஸ்தீனத்துடனான வாணிகம்
கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இஸ்ரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட லவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம். (Exod.xx) நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுளது. இந்தியாவிலிருந்து எகிப்து பெற்ற அனைத்துப் பண்டங்களும், பாலஸ்தீனத்திலும் இறக்குமதி செய்யப்பட்டன எனச் சிரமமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.
சீனாவுடனான வாணிகம்
சீன லவங்கம், இந்தியக் கப்பற்பயணம் மூலம் அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளுக்கு வழி கண்டது என்றால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில், வாணிகப் போக்குவரவு இருந்திருக்க வேண்டும். இவ்வாணிகம் குறித்த எழுத்து மூல ஆவணங்கள் சில அழியாமல் உள்ளன. யுதிஸ்டிரர் பெற்ற திறைப்பொருள்களுள் சீனாவிலிருந்து வந்த பட்டையும், குறிப்பிடுகிறது, மகாபாரதம். (சீன கமுத்பவன் அவுர்னம் - மகாபாரதம் - 2:51:1843) சீன நாட்டு வரலாற்றுப் பதிவேடுகள், கிறிஸ்தவ ஆண்டுத் தொடக்கத்திற்கு முன்னர், ஏறத்தாழ, கி.மு. 12 ஆம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்தில், மலாக்காவோடு கொண்டிருந்த கடற்பயணத்தைக் குறிப்பிடுகின்றன. (Scoff's Periplus Page: 246). அதிலிருந்து மலேயா, இவ்வாணிகத்தின் பொருள் களஞ்சியமாக இருந்து வந்துளது. தமிழ்நாட்டில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பொருளாம் வெற்றிலை, தமிழர்களால் வரையறையின்றித் தின்னப்படுகிறது என்றாலும், ஆதியில் அஃது ஓர் உள்நாட்டுப் பொருளன்று. தமிழில், அதற்குப் பொருத்தமான, இயல்பான இயற்பெயர் இல்லை. அவிக்காமல் உண்ணக்கூடிய ஒரே இலையாக அது இருப்பதால், வெற்றிலை, அதாவது, வெறும் இலை எனச் செயற்கையாலான ஒரு பெயரினாலேயே, “அது குறிக்கப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் பெயர்கள், இடுகுறிப் பெயர், காரணப் பெயர் எனப் பிரித்து வழங்குவதில் காணலாம். பயன் குறித்த ஆய்வுக்கு என்னுடைய ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம் (Pre-Aryan Tamil Culture - page : 13-16) என்ற நூலைக் காண்க). பிற இந்திய மொழிகளிலும், பெரும்பாலும் மலேயா விலிருந்து வந்த அதன் நுழைவு கருதி, அப்பெயர் இடப்பட்டது என்பதைக் காட்டும் வகையில், அது, இலை என்றே அழைக்கப்படுகிறது. (வெற்றிலை உண்ணும் வழக்கத்திற்கான சில பழங்குறிப்புகள், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காணப்படு கின்றன. உண்டு முடித்த கணவனுக்குக் கண்ணகி, பாக்கோடு “கலந்த வெற்றிலை தந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. “உண்டு இனி திருந்த உயர் பேராளற்கு, அம்மென் தினாயலோடு அடைக்காய் ஈத்த” (கொலைக்களக்காதை 5455) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புகளை வைத்துக் கொள்வதற்காக, பல மடிப்புகள் உடையனவாகத் தைக்கப். பட்ட, இன்றும் வழக்கத்தில் இருக்கும் சிறிய பை, அடைப்பை என்ற பெயரில் ஆதி காலத்திலும் பழக்கத்தில் இருந்தது. பொன்னால் செய்யப்பட்ட அடைப்பை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுளது, “சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்” (ஊர்காண் காதை 128) அரசர் களையும், அரசர் நிகர் செல்வர்களையும், வெற்றிலை அடங்கிய பை ஏந்துவார் எனும் பொருளுடையதான, அடைப்பைக்காரர் என அழைக்கப்படும் பணியாளர் எப்போதும் சூழ்ந்து கிடப்பர். அப்பணியாளர் பாசவர் அதாவது, பச்சிலை எனும் பொருளுடையதான பாசு ஏந்துவார் என அழைக்கப்படுவர். அரசனைச் சூழ்ந்திருக்கும், எண்பேராயம் என அழைக்கப்படும் எண்மரில், அவரும் ஒருவராவர் "பாசவர், வாசவர்" - (சிலப்பதிகாரம் - இந்திர விழவூரெடுத்த காதை - 26).
சீனாவுடன் நடைபெற்ற தலையாய வாணிகம், தொடக்கத்தில் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டபட்டு, கற்கண்டுத்தூள் ஆகிய இவ்விரண்டில்தான். வேறு பண்டங்களின் உருவகப்படுத்தி விரித்த பெயர்களே, தமிழில், அவற்றின் பெயர்களாயின. பட்டு எனும் சொல் தொடக்கத்தில மடித்தல் எனும் பொருளுடையதாகவே, பலமுறை மடிக்கப்பட்டு, தோள் மீது அணிந்து கொள்ளும் ஆடை, பட்டு எனப்பட்டது. சீனாவிலிருந்து வந்த ஆடையும், அவ்வாறே மடித்து அணியப்பட்டதால் அப்பெயர் அதற்கும் நீண்டு விட்டது. சீனாவிலிருந்து வந்த ஒன்று எனும் பொருளில் அது சீனம் என்று அழைக்கப்படும். வடமொழியிலிருந்து கடன் வாங்கி வழங்கப்பெறும் சர்க்கரை எனும் சொல், தொடக்கத்தில் மணல் எனும் பொருள் உடையது. கற்கண்டுத் தூள் மணல் போல் காட்சி அளிப்பதால், அப்பெயர், கற்கண்டுத் தூளுக்கும் இடப்பட்டுவிட்டது. தொடக்கத்தில் கரும்பு எனும் பொருளுடையதான அக்காரம் என்ற சொல், ஆகுபெயராக, அக்கரும்பிலிருந்து பெறப்படும் பொருள் களாம் வெல்லம் சர்க்கரைக்கும் பெயராகி விட்டது. 'சீனாவில் உற்பத்தியானது எனும் பொருளில் அது சீனி என்றும் அழைக்கப்படும். பட்டும், சர்க்கரையும், தொடக்கத்தில், நறுமணப்புகை தருபொருள்கள், சிகப்புப் பவழம் (Costus), மிளகு ஆகிய இப்பண்டங்களுக்காக மாற்றிக் கொள்ளப்பட்டன. தென் இந்தியர் சீனாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையில் வணிக இடைத்தரகர்களாகவும் செயல்பட்டனர். வழக்கமான கடல்வழி, கோதன் (Khotan) வழியாகவே இருந்து வந்தது. ஆனால் அடிக்கடி நிகழ்வதுபோல், துருக்கிப் பழங்குடியினரின் திடீர்த்தாக்குதல்கள் காரணத்தால், வணிகப்பாதை, தெற்குக்கு மாறித்து, தமிழ்நாட்டுத் துறைமுகங்கள், மேற்கு ஆசியாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான சந்திக்கும் இடமாகிவிட்டன,
5. ஆகமங்களின் தோற்றம்
வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள்
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘'இந்திய தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது. “ஸ்ரௌத கர்மாவின் “ (அதாவது வேதவழிபாட்டு நெறியின்) பெரும்பகுதி அழிந்தே விட்டது. ‘'அக்னி ஆதானம்,'’ மிகவும் எளிமையாக்கப்பட்ட வாஜபெயம், கருடசயனம், மற்றும் சோமயாகம் போலும், அத்துணைச் சிறப்பிலா வழிபாட்டு நெறிகள் மட்டுமே, ஒருசில மக்களால் அவ்வப்போது மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தீ ஓம்பல் கடமையை மூன்று தலைமுறைகளாகப் புறக்கணித்து விடுவரோ, அப்பார்ப்பனக் குடும்பத்தவர், பார்ப்பனராம் தகுதியை இழந்தவராவர் என்ற விதிமுறையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டவழி நனிமிகக் குறைவான - குடும்பத்தவரே பிராமணர்களாக மதிக்கப்படுமளவு, “ஸ்மார்த்த கர்ம” நெறிதானும் விரைந்து மறையலாயிற்று. இருந்தும் இந்தியா ஆழ்ந்த சமயச் சார்புடையதாகவே உளது; ஆனால் அந்த ஆழ்ந்த சமய உணர்வு, வேதநெறி வழிபாட்டு முறைகளையல்லாமல், ஆகம நெறி வழிபாட்டு முறை அளவிலேயே அமைந்துளது.
ஆகமம் பற்றிக் கூறும்போது, அச்சொல் உணர்த்தும் பல பொருள்களுள், ஆப்தவசனம்’ (அதாவது, முற்றும் உணர்ந்த பெரியோர்களின் மெய்யுரை என்பதும் ஒன்று என்பதையும்), அதிலிருந்தே, ஆகமம் என்பதன் மற்றொரு பொருள் உருப்பெற்றது என்பதையும் ஆப்தவசனங்களில், மிகப் பெரியது அல்லது மிகச் சிறந்தது. வேதம்" ஆதலின், அவ்வேதமும் சில சமயம் ஆகமம் என அழைக்கப்படும் என்பதையும் நான் மறந்துவிடவில்லை. உண்மையில், ஆகமம் என்ற சொல், பழைமையிலிருந்து வந்தது எனும் பொருள் உடையதாகும். ஆனால், ஆகமம் என்பது, சிவ, விஷ்ணு, சக்தி வழிபாட்டு நெறிகளை உணர்த்தும் புத்தகங்களாகிய தந்திரம்' என்பதன் பெயர்களை உணர்த்தும் உண்மைப் பெயராகும். இப்பொருள் நிலையில், ஆகம நெறி வழிபாடுகள், வேதங்களோடு வேறுபட்டனவாம். பௌத்தர்கள், ஜைனர் களின் சமயக் கருத்துக்களும் பழைமையாகவே வருவன ஆதலின், அவையும் ஆகமங்கள் என்றே அழைக்கப்படும். இவ்வாகமங்கள் அனைத்தும் அவற்றின் தொடக்க நிலையில், வேதங்களுக்கு அதாவது கர்ம காண்டங்களுக்கு எதிரிகளாம். சைவ ஆகம நெறி, மகேஸ்வர" நெறி, பாசுபத " நெறி. எனவும் வழங்கப்படும். வைஷ்ணவ" ஆகம நெறி , பாகவதம்" என்றும் (அதாவது இறை சார்புடைய) "சாத்தவதம்" என்றும் (சாத்தவத அரசியல் குடும்பத்தவரே, அவர்களைப் பெரும்பாலும் முதன் முதலில் ஆதரித்தமை யால்), பாஞ்சராத்ரம்" என்றும், வழங்கப்படும். இறுதியில் கூறிய இச்சொல், வேறு ஒரு பொருளையும் குறிக்கும். அது, விஷ்ணுவின் திருமேனியை வழிபடும் சிறப்பு வழிபாட்டு நெறியை உணர்த்தி , அப்பொருள் உணர்த்தும் வகையால், வைகானஸர்கள்" பின்பற்றும் வழிபாட்டு நெறியோடு உணர்த்தப் பயன்படுவதோடு, வைகானஸர்" எனும் இச்சொல், காடு சென்று வாழும் சந்நியாசிகளையும், பொதுவாகக் குறிக்கும்) ஆகம வழிபாட்டு நெறிகள், வைதீக வழிபாட்டு நெறிகளுக்குப் பகையாக அமைந்த பழங்காலத்தில், ஆகமத்திற்கும், வேதத்திற்கும் இடையிலான வேறுபாடு நன்கு உணரப்பட்டது. ஆனால் கடந்த பல நூறு ஆண்டுகாலமாக, அவை இரண்டும் இரண்டறக் கலந்து விட்டமையால், இக்கால மக்களால், அவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு உணரப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அதற்கு மேலும் ஒருபடி சென்று, ஆகம நெறிகள், முடிந்த முடிபாக வேத நெறிகளிலிருந்தே உருப்பெற்றன; வேத உண்மைகளின் விரிவுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன; அல்லது இன்றைய கால நிலைக்கும் ஏற்கும் வகையில் அவ்வேத உண்மைகளைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளன என்ற கொள்கையும் பரவலாக வழங்கலாயிற்று. மந்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்ட முடிவிற்கும், பின்னர், வேதங்கள், ‘'அபௌரு ஷெயம்” அதாவது, காலவெளி எல்லைகளைக் கடந்த புருஷனாகிய ஈஸ்வரனாலும் இயற்றப்படாதன , எனக் கருதப்பட்டன. ஆனால், ஆகமங்கள் (சைவ, சாக்த , வைஷ்ணவ) மட்டும், சிவன் அல்லது விஷ்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்டன வாக உரிமை கோரப்பட்டு அதனால், அவை முறைப்படி “பௌருஷேயம்” என அழைக்கப்படலாயின.
வேத சம்ஹிதாக்களில் கூறப்பட்டிருப்பன எல்லாம், வைதீக சடங்குகளின்போது, ஓதுவதற்கான மந்திரங்களாம். ஆனால், ஆகமங்கள் சிவ அல்லது விஷ்ணு வழிபாட்டு நெறிகளின் விளக்கங்களையும், யோகப் பயிற்சி முறைகளை யும், தத்துவ ஞான ஆராய்ச்சிகளையும் நம்மகத்தே கொண்ட பாடநூல்களாம். மந்திரப் பகுதி, பிராமணப்பகுதி ஆகிய இரண்டையும் கொண்ட, அல்லது கர்மகாண்டம், ஞான காண்டம் ஆகிய இரண்டையும், அல்லது, வேத வேதஸிரஸ் ஆகிய இரண்டையும், குறிக்க, வேதங்கள், ஒரு மீமாம்ஸத்தின் துணையை நாடுகின்றன. ஆனால் ஆகமங்கள், முறையான பாட நூல்களாதலின் ஒரோவழி, தேவைப்படினும் உரை விளக்கம் ஒன்றை மட்டுமே எதிர்நோக்கும்.
ஆகமங்கள், கி.பி. 1000க்குப் பிற்பட்ட காலத்தே வழக்காற்றிற்கு வந்த ‘'பாஷை'’ என்ற மொழிவடிவில் இருக்க, வேதங்கள், சந்தாஸ்” எனப்படும், மிகப்பழைய கிளை மொழியில் உள்ளன. இவ்வளவும், எழுத்து வடிவம் பற்றியனவாம். இனி வழிபாட்டு முறை பற்றியன. வைதீக வழிபாடு, தீ வழிபாடாம். ஒவ்வொரு வழிபாட்டு நிலைக்கும், நெருப்பு மூட்டப்பட வேண்டும், அந்நெருப்பு தீக்கொழுந்தாக எழுப்பப்பட வேண்டும். அத்தீயிடையிலேயே படையல்கள் கொட்டப்பட வேண்டும். ஆகமவழிபாடு, தீயற்ற வழிபாடு, படையல்கள், வணங்கப்படுவதன் முன் வறிதே காட்டப் பட்டுப் பின்னர் எடுத்துக் கொள்ளப்படும். முன்னதில் படையல்கள், தீயிடையே இடப்படுவதால் அவை, கடவுள்களால் உண்ணப்படுகின்றன. பின்னதில் ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படா நுண்ணிய ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளு மாதலின், இறைவழிபாட்டாளன், அப்படையலைத் தானும் உண்டு, தன் உறவினர்க்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிப்பன் ஆதலின் வழிபாட்டாளன், தன் படையல் பொருளில் எதையும் இழப்பதில்லை. வைதீக வழிபாட்டு நெறியில், உலகப் படைப்பு நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனி கடமைகளைக் கொண்ட எண்ணற்ற கடவுள்கள் வழிபடப்பட்டன.
ஆகம வழிபாட்டு நெறியில், விவிலிய நூலில் கூறப்படும் யூதர்களின் கடவுளாகிய "ஜொஹாவ்" (Jehovah) வைப்போல, ஒரே ஒரு கடவுள் தான் வழிபடப்பட்டது. உலகத் தொடர்பான அத்தனை செயல்பாடுகளும், அதன் கைகளிலேயே அடங்கிவிடும். வேதவழிபாட்டு நெறியில் கடவுளுக்குப் படைக்கப்படும் ஒவ்வொரு படையலும்: வேதமந்திரம் தொடரவே படைக்கப்படும் என்பது மட்டுமன்று, வழிபடுவோனின் ஒவ்வொரு செயலும், உதாரணத்திற்குச், சோமபானம் கொண்டுவர வண்டியில் காளைகளைப் பூட்டுவது, அக்காளையைத் துரத்தி ஓட்ட ஒரு கொம்பினை ஒடிப்பது, படையல் பொருள் ஒன்றைக் கையால் பற்றுவது, பாலைக் கொதிக்க வைப்பது, கடைந்து மோர் ஆக்குவது. சுருங்கச் சொல்லின், சிறியனவோ, பெரியனவோ ஆன ஒவ்வொரு செயலும், செய்யுள் வடிவில் அல்லது உரை வடிவிலான ஒரு மந்திரம் ஓதலைத் தொடர்ந்தே நடைபெறும். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியில் வேத மந்திரங்களுக்குச் சட்ட பூர்வமான இடம் எதுவும் இல்லை. ஒருசில இங்கும் அங்கும் ஓதப்படுகின்றன. ஆனால் அதுவும் பெரிதும் முறையற்ற நிலையிலேயே ஓதப்படும். உதாரணத்திற்கு "து" என்ற அசைச்சொல்லோடு தொடங்கும் ஒரு மந்திரம், கடவுளுக்கு மணப்பொருளை அர்ப்பணிக்கப் பயன்படுத்தப்படும். உ-ம். ‘'தூப”. உண்மையில் இம்மந்திரம், ஒரு வண்டியின் நுகத்தடி எடுக்கப்படுவதைக் குறிப்பதாம். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியின் உயிர்ப்பகுதி, வணங்கப் படும் கடவுளைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை, நான் வணங்குகிறேன் எனப் பொருள்படும் ‘நமஹ” என்பதை. இணைத்துத் திரும்பத் திரும்பக் கூறுவதே ஆகும். வைதீக வழிபாட்டு நெறியின் சாரம், படையல்களைத் தீயிடைச் சொரிவதே ஆம். ஆனால், ஆகம வழிபாட்டு நெறியின் சாரம், உபகாரம் ஒன்றே; அதாவது தாம் வழிபடும் கடவுள் திருமேனியை நீராட்டுவது, ஒப்பனை செய்வது, உணவு படைப்பது, உண்மையில், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அல்லது தங்கள் அரசன் ஆகியோர்க்குச் செய்யும் அத்துணை உபசரணைகளையும் செய்வதாம்.
ஆகவே, வைதீக வழிபாட்டு நெறியில் வழிபடும் கடவுளின் காணக்கூடிய வடிவுடைய பிரதிநிதித்துவம் அதாவது தெய்வத்திருமேனி எதுவும் தேவையில்லை. காணக்கூடிய தீ ஒன்றே எல்லாக் கடவுள்களின் பிரதிநிதி ஆகும். ஆகம வழிபாட்டு நெறியில் வழிபடப்படும் ஒரு கடவுள், யாதோ ஒரு வகையில் கட்புலன் ஆகக்கூடிய சில சின்னங்களாக அமைய வேண்டும். அச்சின்னம், மூடநம்பிக்கை சார்ந்த வாள் அல்லது தண்டு, பட்டுப்போன அல்லது உயிருள்ள மரம், கல், ஓடும் அருவி, லிங்கம், சாலகிராமம் அல்லது அனைத் திற்கும் மேலாக, ஒரு படம், அல்லது வழிபடுவோரின் கருத் திற்கு ஏற்ப, உலோகம், கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆன சிலை ஆகியன மூலம் பிரதிட்டை செய்யப்படுதல் வேண்டும்.
வேதாந்தம்
வேதத்தின் முடிந்த முடிவு வேதாந்தம். வைதீகக் கர்மத்தின் முடிந்த முடிவு ஞானம். இறவாப் பெருநிலையை அடைவதற்குரிய மார்க்கம் அறிவுடைமை. “ அவனை அறிவதன் மூலமே, இந்நில உலகில், ஒருவன் இறவாப் பெரு நிலையை அடைகிறான். அவனை அடைவதற்கு இது தவிர்த்து வேறு வழி இல்லை “ ("தம் எவம் வித்வான் அமர்த பஹவதி நான்யஹ பந்தா அயனாய வித்யதே என்கிறது ஸ்ருதி) ஆகம நெறியின் முடிந்த முடிவே பக்தி . இறவாப் பெருநிலையை அடைவதற்கான வழி, அவன் மீது இடைவிடாத் தியானம் ஒன்றே ஆம் (அனன்ய சிந்தா) அல்லது ஸ்ரீகிருஷ்ணன் 'வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கூறுமாறு, ஒருவனைப் பற்றியே சிந்தித்தல், (ஏகபக்தி). உபநிஷதத்தில் கற்பிக்கப்படும் முப்பத்திரண்டு வித்தைகளும், ஒருவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதன் முன்னர், அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு நெறிகளின் வடிவங்களாம்.
ஆகமங்களின், முதலாவதும், இரண்டாவதுமான நூல்கள் (சரியை, கிரியை) சிவன் அல்லது விஷ்ணுவை வழிபடுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் பக்தி நெறியின் கட்டுப்பாட்டு நிலைகள், பல இடங்களில் யோகப் பயிற்சி வடிவிலான தத்துவார்த்த கடமைகளையும் உடன் கொள்ள வேண்டியிருப்பதால், ஆகமங்களின் மூன்றாவது நூல், யோகநிலை பற்றிக் கூறுகிறது. ஈண்டு ஞானம் எனக் கூறப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட ஞானம் அன்று. மாறாக, ஆகம நெறிக் கோட்பாடுகளில் புதையுண்டு கிடக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை விளக்குவது என்ற பொருள் உடையதாம். இந்தத் தத்துவம், வேதாந்தத் தத்துவத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. காரணம், பின்னது, இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால், ஒரேயொரு உண்மைப் பொருளை மட்டுமே, அதாவது பிரம்மாவை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொள்கிறது. முன்னது, முப்பொருள் உண்மைகளை "தத்வ த்ரயம்" அதாவது, ஈஸ்வரன், தனி மனிதன், செயல் ஆகியவைகளை, உண்மைப் பொருள்களாம் என ஏற்றுக் கொள்கிறது.
இவ்வாறு ஒவ்வோர் ஆகமமும், யோகபதம், ஞானபதம் என இரண்டைக் கொண்டுள்ளன என்றாலும், உபநிஷதங்கள், ஞானமார்க்கத்தின் சமயத்திருநூல் தொகுதியாதல் போல, ஆகமங்கள், தொடக்கத்தில், பக்தி மார்க்கத்தின் சமயத் நிருநூல் தொகுதியே ஆகும். ஆகமத் திருமுறை நூல் பலர்க்கு உரியதாம். உபநிஷதம், குறிப்பிட்ட சிலர்க்கு மட்டுமே உரியதாம். ஆகம நெறி எளிய நெறி. உபநிஷத நெறி கடின நெறி. ஸ்ரீ கிருஷ்ணன் பின்வருமாறு கூறுவது காண்க. ‘'அருவுருவாம் இறைவன் மீது இதயத்தை நிறுத்தி வழிபடுவார், அனுபவிக்க வேண்டிய துன்பம் மிகப் பெரிதாம். அகவுணர்வுகளுக்குப் புறஉருவம் கொடுத்து, வழிபடுவார்க்கு, இறைவனை அருவுருவ நிலையில் நிறுத்தி வழிபடும் நெறி, மிகப்பெரிய துன்பத்தைத் தரும்...... (கிலெஸொதிகரஸ் தெஷாம் அவ்யக்தாஸக்த செதஸாம் அவ்யக்தாஹிகதிர் - துக்கம் தெஹவத்பிர் அவாப்யதெ.
பகவத் கீதை - 12:5
வைதீக வழிபாட்டு முறை, மக்களில், நான்கு வருணங்கள் பிரிக்கப்படுவதைத் தேவைப்படுத்திற்று. வேத, வேதாந்தங்களைக் கற்பதிலிருந்து, நான்காவது வருணமக்களை ஒதுக்கி வைப்பதற்கும் கொண்டு சென்றது. மக்களை நான்கு வருணங்களாகப் பிரிப்பது, வருணாஸ்ரம தர்ம வளர்ச்சிக்கும், அந்நான்கு வரணத்தவர்க்கும் ஆஸ்ரமங்களை வகைப்படுத்து வதற்கும் வழி வகுத்துவிட்டது. இதன் விளைவு, சந்நியாசம், பிராமணர் ஒருவர்க்கு மட்டுமே உரிமையுடையது. மோக்ஷம், சந்நியாச வாழ்க்கையில் இடம் பெறும் தனிப்பயிற்சிக்குப் பின்னரே அடையக்கூடும் என்ற கோட்பாடுகளாயின. இக்கோட்பாட்டின் முடிந்த முடிவு, வைதீக நெறிப்படி, மோக்ஷம் பிராமணர்களால் மட்டுமே அடையக் கூடியது என்பதாகிறது.
ஆகம நெறி, இக்கோட்பாட்டுக்கு எதிராக நிற்கிறது. எவன் ஒருவனும், ஏன், ஒரு சண்டாளனும் கூட, விஷ்ணு அல்லது சிவனின் திருமேனி அல்லது சின்னத்தைக் கொண்டு வந்து வைத்துப் பூசை செய்யலாம். சிவனடியார்கள் வரலாறு கூறும் தமிழ்ப் பெரிய புராணம், கோயில்களில், சிவனை வழிபட்ட, இழிகுலத்துச் சைவ அடியார்களைக் குறிப்பிடுகிறது. காளத்தித் திருக்கோயிலில் உள்ள சிவனுக்குக் கண்ணப்ப நாயனார், இறைச்சி உணவைப் படைத்துள்ளார். வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான, பெரும்பாலும் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணன், சீரங்கம் திருக்கோயிலைக் சூழ உள்ள தெய்வத் திருமண்ணில் நடப்பதற்கும் தகுதி அற்றதாம் அளவு இழிவுடையவராகக் கருதப்படும், கால்களைக் கொண்ட இழிகுலத்தவராகக் கருதப்பட்டவர். ஆகமங்கள், நான்கு சாதிக் கொள்கையை ஏற்கவில்லை.
ஆனால் உண்மையில் வேதத்தின் ஒரு பகுதியாகிய வேதாந்தம், சூத்திரர்களுக்குக் காட்டப்படாது மறைக்கப் பட்ட ஒரு நூலாகும். இதை உறுதிப்படுத்தும், ஒரு தனிப் பிரிவையே 'பாதராயணம்" கொண்டுளது, காரணம், சூத்திரர்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும், சடங்கு நெறிகளுக்குத் தகுதி படைத்தவரல்லர், ஆகவே, அவர்கள், வேதங்களை, ஓதவும் கேட்கவும் விலக்கப் பட்டனர். (வேதம் - சூத்திரம் - 1:335-38) ஆகமங்கள் இதற்கு மாறாக, அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன்படி இன்றும் சிவ தீக்ஷை பெற்ற ஒரு பறையன், அத்தீக்ஷையைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகவும் ஆகலாம். ஆகம நெறியாளர்களிடையே சந்நியாச நிலைகளும் பரவலாயின. வைஷ்ணவ சந்நியாசிகள், ஏகாந்திகள்" என்றும், சைவ சந்நியாசிகள், சிவயோகிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
ஆகமங்களின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லா இனத்தவர்க்கும் உரியதான பக்தி நெறி, ஒரு இல்லறத்தானையும், வாழ்க்கைப் பெருங்கடலைக் கடந்து கரை சேர்க்க வல்லதாம் ஆதலின், சந்நியாச நிலை, மோக்ஷம் அடைவதற்கான அடிப்படைத் தேவையன்று. பக்தர்கள் சந்நியாசிகள் ஆகின்றனர் என்றால், அதற்குக் காரணம் யோகப் பயிற்சி, ஆகம நெறியோடு இரண்டறக் கலக்கவில்லை ஆயினும், அதன் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மேலும், யோகப்பயற்சி, சந்நியாச வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளக் கூடியதாயிற்று.
வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி
பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை - கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறி களின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும் உள்ள நல்லனவற்றையெல்லாம் தேர்ந்து தன்னகத்தே கொண்ட ஒருநெறியினைப் பின்பற்றத் தொடங்கிய மக்களால், பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யாகங்களில், உயிருடைக் கால்நடைகளுக்குப் பதிலாக, மாவினால் செய்யப்பட்ட, அவற்றின் வடிவங்களை (“பிஷ்டபஷீ “) மாற்றுப் பொருளாக ஏற்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிட்டது.
பகவத்கீதை, தொடக்கத்தில், ஆகம நெறியாளரின் ஒருபிரிவினராகிய பாகவதர்களின் சமய நூல் தொகுப் போடும், ஸ்ரீகிருஷ்ணன், பாகவதர்களின் பக்திநெறியை, வேதாந்திகளின் ஞானநெறி, சாங்கியர்களின், நனிமிகு நுட்பம் வாய்ந்த இயல்கடந்த ஆய்வு நெறிகளோடு ஒருங்கு இணைத்து, வேறு வேறுபடும் இந்நெறிகள் எல்லாம், ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு கோணங்களாகத் தோன்றும், உயர்ந்த நிலையிலிருந்து பேசத் தொடங்கி, அறிவெல்லை கடந்த இப்பேருண்மையை அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான். என்றாலும், பகவத் கீதை, வேதத்தை, அதாவது கர்மகாண்டத்தை மிகமிகக் கடுமையான சொற்களால், தூற்றிக் கண்டிக்கும் நிலையில், தன்னுடைய ஆகம நெறி இயல்பை வேண்டுமளவு இன்னமும் பெற்றுளது.
“ஓ பார்த்தா! வேதங்கள் பற்றிய வாதங்களில் மகிழ்ச்சி காணும், அறிவிலிகள், அணிநயம் கலந்த இவ்வினிய சொற்களைக் கூறுகின்றனர். கர்ம பாதையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, அவர்களின் உள்ளம் ஆசைகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் ஸ்வர்க்கத்தில் அனுபவிக்கப் போகும் இன்பத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள், மறு பிறவியை எது தருமோ, அதிலும், கர்மத்தின் பயனிலும், எண்ணற்ற சடங்குகளைக் கொண்டுள்ள விழா நிகழ்ச்சிகளிலும், குறியாக நிற்கின்றனர்; இன்ப நுகர்வு அதிகார ஆணை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இன்ப நுகர்வுக்கும், அதிகார. போதைக்கும் அடிமைப்பட்டுப் போன உள்ளத்தோடு, இன்ப நுகர்விலும் அதிகார போதையிலும் ஈடுபாடு கொண்டுவிடும் அவர்களின் புத்தி, அவர்களுக்குச் சிறிதே அறிவினைத் தருமாயினும், அமைதியான தியானத்தில் நிலையாக நிற்காது. வேதம், மூன்று குணங்களால் உருவான பொருள்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அர்ஜ்ஜூனா! அம் முக்குணங் களால் உருவாகும் பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பாயாக இவையல்லாமல், ஆகமங்களுக்கே உரியவாய எண்ணற்ற சொற்கள் பகவத்கீதையில் இடம்பெற்றுள்ளன.
யாமிமாம் புஷ்யிதாம் வாசம் ப்ரவதந்த அவிஷ்கிதஹ
வேதவாத ரத்ஹாஹ பார்த்த ! நான்யத் அஸ்திதி வாதிஹை
காமரத் மாஹ ஸ்வர்க்க பரர்ஹ ஜன்மகர்ம பஹல பிரதாம்
கிரியாவிஸேஷ பஹலாம் போகைஸ்வரிய பஹலம்ப்ரதி
போகைஸ்வர்ய ப்ரஸக்தனாம் தயா அப்ஹ்ருத செதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்திஹி சமாதெளன விதியதெ
த்ரைகுண்ய விஷ்யா வேதா நிஸ்த்ரை
குண்யொ பவராஜுலர்
- பகவத் கீதை - 2 42-45
வைதீகர்கள், இதற்கு மாறாக, ஆகம வழிபாட்டினரை நனிமிக இழிந்தவராகவே மதித்தனர். இது பண்டை ஆரியர்கள், மந்திரம் ஓதும் தஸ்யூக்களை, 'ம்ரித்ரவாஹ' என அழைத்து வந்த ஏளனத்தின் தொடர்பே அல்லது வேறு அன்று. இவ்வெறுப்பு வளர்ச்சியின் அடையாளம் இன்றும் காணக்கூடியதே. வைதீக நெறியும், ஆகம நெறியும், யாமுனாச்சாரியர் காலம் தொட்டே, ஒரே நெறியாக இரண்டறக் கலந்துவிட்டன என்றாலும், சைவம் வைஷ்ண வம் ஆகிய இரு சமயங்களையும் சார்ந்த கோயில் குருக்களைப் பொறுத்தமட்டில், கொடிய வேதாந்திகளால் இழிகுலப் பிராமணர்களாகவே மதிக்கப்பட்டனர். உண்மையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வகையில், எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர்; வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும், ஆகமவழிபாட்டு நெறியை வன்மையாகக் கண்டிக்கிறது. ‘பாசுபதர்கள்’ (வேதாந்த சூத்திரம் - 22:34-41) ‘பாஞ்சராத்ரர்’ (வேதாந்த சூத்திரம் - 22:2; 42 -44) ஆகிய இருவர்களையுமே, பாத்ராயணர், தம்முடைய சூத்திரங்களில் வெளிப்படையாகவே பழித்துள்ளார்.
ஆகம வழிபாட்டு நெறிகள் தோன்றியது எப்போது?
இனி, ஆகம வழிபாட்டு நெறிக் கொள்கைகள், உருப் பெற்றது எப்போது, அவை எங்கிருந்து முகிழ்த்தன என்பன பற்றி ஆராய்கின்றேன். முதற் கேள்வி, விடை காண்பதற்கு அரியது அன்று. அண்மையில் நடந்து முடிந்த உலகப்போரின் போது நடைபெற்றுவிட்ட நினைத்தாலும் நடுங்கத்தக்க பேரழிவு, புதிய வாழ்க்கை நெறிகளைக் கொணரத் தொடங்கியது போல், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உய்த்துணர்ந்து கூறுவது அத்துணை விரைவில் இயலாது.
மகாபாரதப் போரின் மிகப் பெரிய படுகொலைகள், இந்திய நாட்டு வாழ்வியலில், ஓர் ஆழமான மாற்றத்திற்கு வழிவகுத்துவிட்டன. “மந்திர மந்திரத்ரஷ்டாரஹ” ங்களின் கண்காணிப்பாளர்களாகிய ரிஷிகளின் காலம், மீண்டும் வாரா வகையில் மறைந்துவிட்டது. வேதத்தின் கர்மகாண்டம் உறுதி அளித்த ஒன்றேயொன்றான, எல்லாமே கெட்டவைதாம் எனக்கருதும், அழுத்தமான சோர்வு வாதம், அதாவது இம்மையிலும், மறுமையிலும், சுவர்க்கலோகத்தில் போலவே, பூலோகத்திலும், ஐம்பொறி இன்ப நுகர்வின் மீதான கொடிய -வெறுப்புணர்ச்சி, மக்களை அடிமை கொண்டுவிட்டது.
சிந்தனையாளர்கள், நிலைதடுமாறும், இவ்வுலகியலுக்கு இடையில் ('நாமரூபம்") நிலைதடுமாறும் இயல்பு வாய்ந்த ஒரே பொருளான ("அக்ஷரம்") பிரம்ம பரமம் மீதான பல்வேறு வகையான தியான நிலைகளில், கேட்டிலிருந்து . மீள்வதற்கான ஒரு வழியினைத் தேடிக் காணலாயினர். அதன் பயனாய், உபநிஷதத்தின் முப்பத்திரண்டு வித்யாக்கள் பிறந்தன. கர்மகாண்டத்து வழிமுறைகளின் அடிச்சுவடுகள் காண்டொக்யத்திலும், 'பிரஹதாரண்யக' விலும் விளங்க உரைக்கப்படும், வித்யாக்களில் தெளிவுறத் தோன்றுமளவு, உபநிஷதங்கள், கர்மகாண்டத்திலிருந்து படிப்படியாகத் தோன்றி வளர்ச்சி நிலைபெற்றன. என்றாலும், மக்களில் பெரும்பாலோர் உள்ளுறுதி அற்ற நோஞ்சான்களாயினர்.
அவர்களின் உள்ளம், ஓளபநிஷத கொள்கை, பயிற்சிகளின் விழுமிய சிறப்பு நிலையினை அடையும் உணர்வுகளால் நிறைந்து வழியலாயிற்று. அவர்களுக்காகவே முகிழ்த்தன. ஆகமக் கொள்கைகளும் பயிற்சிகளும். இவை, உலகின் சாதாரண வாழ்வின் இயல்புகளோடு பங்கு கொண்டு விட்டன. கடவுள் வழிபாடு என்பது மக்களைப் போற்றும், சிறப்பாக, குருக்கள் மற்றும் அரசர்களைப் போற்றும் வழிபாட்டு நெறியின் மறுபடிவமேயாம். இவ்வாறு, பாரதப், போருக்குப் பிற்பட்ட காலமே, உபநிஷதங்களும், தலையாய ஆகமங்களும் தோன்றிய காலமாம் என்பதைக் காண்கிறோம்.
ஆகமங்களின் மூலம்
ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை, தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக் கொண்டனவும் ஆம் ஆதலின், தஸ்யூ வழிபாட்டு உரிமைகள், வேத காலத்தில் என்ன ஆயின என்ற வினாவை, எவன் ஒருவனும் தனக்குத் தானேயும் கேட்டுக் கொண்டான் அல்லன். ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர் தஸ்யூக் களிடையேயான பகை, இனம் பற்றியதாம் என்பதற்காம் பல்வேறு விளக்கங்களிலும், தஸ்யூக்களை ஆரியர்களோடு இரண்டறக் கலக்கப் பண்ணும் புரியாப் புதிரிலும், முழுமை. யாக ஆழ்ந்து போயிருந்தமையால், ஆரிய வழிபாட்டுமுறை பரவிய பின்னர், தஸ்யூ வழிபாட்டு முறையின் வரலாறு பற்றி ஆய, அவர்கள் ஒரு முறையும் நின்று நோக்கினாரல்லர். இவ்வினாவுக்குப் பொருத்தம் உற விடையளிக்க நம்மால் இயலுவதற்கு, “ஸ்ரெளத” வேள்விகள் எனப்படுபவை, “ர்த்விகா” என அழைக்கப்படும் வேள்வி ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடியது.
வேத வேள்விகளை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தருமளவு, பெருஞ்செல்வம் வாய்ந்த வேந்தர்களும், வேந்தர் நிகர் விழுநிதிச் செல்வர்களும் வணிகர்களும், அவ்வேள்விகள் தரும் கட்புலனாகாப் பலன்களைத்தான் பெற முடியுமேயல்லாது, அவ்வேள்விச் சடங்குகளில் பங்கு கொள்ளக் கூடாது. எல்லோர்க்கும் தெரிந்து சமயம் என அழைக்கப்பட வேண்டியதான பொது மக்களின் சமயச் சடங்குகள் ஆகா என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
மனைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீ வழிபாடுகளில் பயன்படும் மந்திரங்களை அதர்வ வேதம் கொண்டுள் ளது உண்மை. ஆனால், இவ்வழிபாட்டு முறைகள், ஒருவர் விடாமல் மக்கள் எல்லோராலும், ஏதும் அறியாப் பாமரர் களைப் போலவே முற்றவும் அறிந்த உயர்ந்தோர் ஒரு சிலராலும் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்யும் சான்று எதுவும் அறவே இல்லை . வேதகாலம் முழுவதும் சாதாரண பொதுமக்கள் தீ வழிபாட்டு முறையல்லாத, சமய வழிபாட்டு நெறிகளைப் பெற்றே இருக்க வேண்டும். அவை, பண்டைய தஸ்யூ வழிபாட்டு முறைகளாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வழிபாட்டு முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை, பொதுமக்கள் வழிபட்ட கடவுள்கள் யாவை என்பதை அறிந்து கோடற்கான மார்க்கம் ஏதேனும் உண்டா? தமிழ் இந்தியா, வட இந்தியாவைப் போலவே, ஆரிய தீ வழிபாட்டு நெறி தோன்றுவதற்கு முன்னர், தஸ்யூக்களின் தீ வழிபாடற்ற வழிபாட்டு முறையினையே பின்பற்றி வந்தது; பண்டைத் தமிழரின் சமய வழிபாட்டு முறை பற்றிய விளக்கக் குறிப்பு முன்பே கொடுக்கப் பட்டுளது. வடநாட்டுச் சாதாரண மக்கள், வேதகாலம் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்தில் வழிபட்டு வந்தது போலவே, வேதகாலத்திலும், தீ வழிபாடு இல்லாத, உள்நாட்டுக் கடவுள்களையே வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவரவர்களின் இன்றைய வழிபாட்டு நெறியைப் போலவே, தஸ்யூக்களின் வழிபாட்டு நெறி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டா ஆடல் பாடல் தொடர்ந்து வர கடவுள் திருமேனிகளுக்கு உணவு படைத்தலைக் கொண்டிருந்தது. வால்மீகி கூற்றுப்படி, சுக்கிரீவனின் முடி சூட்டு விழா, அவ்வகையில்தான் கொண்டாடப்பட்டது. அந்நாட்களில் முடிசூட்டு விழா, சமயச்சார்பற்றது அன்று. மாறாக சமயச் சார்புடைய ஒரு சடங்கே ஆகும்.
மகாபாரதப் போருக்குப் பின்னர், தீ வழிபாட்டு முறை மறையத் தொடங்கவே பிராமணச் சமய ஆசிரியர்கள், தங்கள் தொழில் அழிந்துபோனதை அறிந்து கொண்டு நாட்டில் அப்போதும் நடைமுறையில் இருந்துவந்த தீ வழிபாடற்ற வழிபாட்டு நெறியில் தங்கள் கருத்தைத் திருப்பியிருத்தல் வேண்டும். பெரும்பாலான மக்களின் இயல்பு, உணர்ச்சி வயப்பட்டுப் போவதே ஆதலின் - கட்புலனாகா நுண்ணிய உலகியல் கடந்த பொருளுணர்ச்சி குறித்த ஆய்வாம் உணர்விலேயே வாழ்ந்துவிடவல்ல உள்ளம் வாய்க்கப் பெற்ற, அறிவார்ந்த உணர்ச்சியினராகிய மக்கள், எக்காலத்தும் ஒரு சிலரே. அம்மக்களுக்குப் பக்தி மார்க்கம் மீதான கவர்ச்சி பிராமணர்களின் கருத்தைப் பக்திவழியில் திருப்பியதற்கான மற்றொரு காணக்கூறு ஆதல் வேண்டும்.
அப்பிராமணர்கள், திரிமூர்த்திக் கொள்கையை, தாங்கிய சமயக் கொள்கையாம் உலகப் பருப்பொருளின் முக்குணக் கொள்கையோடு ஒன்றுபடுத்திட உருவாக்கினர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கும், சிவனின் எண்ணற்ற , ஆனால் தற்காலிக மானிட இயல்பு காட்டும் திருவிளையாடல் களுக்கும் உருவம் கொடுத்து வளர்த்தனர். (பாகவத புராணம் குறைந்தது 22 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது) (பிரம்மா வின் செயல்பாட்டுத்திறன், படைப்புத் தொழிலோடு தீர்ந்து விடுவதால், அவன் உயிர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயலான். ஆகவே, ஆகமங்கள், அவனை இருட்டடிப் புச் செய்துவிட்டன) அப்பிராமணர்கள், 108 வைஷ்ணவ ஆகமங்களையும், 28 சைவ ஆகமங்களையும் இயற்றினர். 77. ஆகமங்களைக் கொண்டிருப்பதாய்ப் பெருமை சாற்றிக் கொள்ளும், சக்திக்கு உரியதான பிறிதொரு ஆகம நெறி பிற்காலத்தே வளர்ச்சி பெற்றது. இக்காலங்களில், சிவ வழிபாடும், கிருஷ்ண வழிபாடும் வழக்காற்றில் இருந்தன என்பதற்குப் பாணினியும் சான்று பகர்கின்றார்.
பையப்பைய, வேதாந்த நெறியும், ஆகம நெறியும், ஒன்றையொன்று ஈர்க்கத் தொடங்கின புராணங்களில் அவை, அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. ஆனால் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடவில்லை, சங்கராச்சாரியார் காலத்திலும் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) அவை, ஒன்றாகி விடவில்லை என்பதை நாம் அறிகிறோம். வேதாந்த சூத்திரங்களை விளக்கிக் கூறும் நிலையில், பாசுபத சமயநெறியும், பாஞ்சராத்ர சமய நெறியும் ஒன்றோடொன்று முரண்பட்டவை எனக் கூறுவதில், அவர் பாத்ராயணரைப் பின்பற்றுகிறார் என்றா லும், அவருடைய ‘'பிரபஞ்ச ஹர்தயம்'’ என்ற நூல். உண்மையான ஆகம நூலே ஆகும்.
செவிவழிச் செய்திப்படி, விஷ்ணு, சிவன் சக்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் ஆகியோர் வழிபாட்டு நெறிகளை முறைப்படுத்தினார். அவற்றிடையே தாம் கண்டு நிறுவிய மதங்கள் பின்பற்றும் வழிபாட்டு முறையினைப் புகுத்தினார் என்ற காரணங்களால், அவர் ஷண்மத ‘ ஸ்தாபனாசாரியர் (அறுவகை மதங்களைக் கண்ட ஆசிரியர்) எனவும் அழைக்கப்பட்டார். இவ்வகையால், தம்முடைய வேதாந்த நூல்களையும், ஆகம நூல்களையும், ஒன்றோடொன்று கலக்க விடாது வேறுபடுத்தியே அவர் வைத்திருந்தார் என்பதைக் காண்கிறோம். பொதுவாக 'விஸிஷ்ட்ஹாத்வைத வேதாந்தம்' என அழைக்கப்படும் வைஷ்ணவ வேதாந்த நெறியைத் தோற்றுவித்த யாமுனாச்சாரியர்தாம், வைஷ்ணவத் தலைமைக்கு, (ப்ராமாண்யம்) அதாவது, வேதத்திற்கு நிகரானது, 'சாத்விக ஆகமம்' என்பதற்கு முதன்முதலில் வாதிட்டவராவர். உண்மையில் இராமானுஜ ஆச்சாரியர்தாம், அவை இரண்டையும் இரண்டற்று ஒன்றுபட இணைத்தவ ராவர். இது, ஆகம நெறிக் கொள்கைகள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்ததற்குப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்தது. தென்னிந்தியாவில், அவை எப்பொழுது, எவ்வாறு பரவியிடங்கொண்டன என்பது பின்னர் ஆராயப்படும்.
ஆரியத்துக்கு முந்திய இந்திய வழிபாட்டு நெறியிலிருந்து முகிழ்த்த ஆகம வழிபாட்டு நெறி, கி.பி. 55 ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியரின் உள்ளத்தை ஆட்கொள்ளவும், வேதாந்த நெறியோடு இரண்டறக் கலந்துவிட்டபோது, மீண்டும் வட இந்தியாவுக்கே பாய்ந்து சென்று, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் இந்து சமயமாகவும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதலின், வட இந்தியாவில் ஆகம நெறிகளின் வளர்ச்சி குறித்து, இவ்வளவு விரிவாக ஆராய வேண்டியதாயிற்று.
6. வட இந்தியாவும் தென் இந்தியாவும்
(கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை )
ஆபஸ்தம்பரும் பௌத்தாயனரும்
சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசி சூத்திரகாரராகிய ஆபஸ்தம்பர், கோதாவரி ஆற்றின் மேலைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யஜுர் வேத தாஷினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டு போகப்படுவாரல்லர். (Sacred Text Books of the East 11, page: XXXVII - XLII) அவரைக், குறைந்தது, மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு போய் நிறுத்த விரும்புகிறேன். காரணம் பாரதப் பெரும் போருக்கு ஐந்து தலைமுறைக்குப் பிற்பட்ட அதாவது, கி.மு. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஸ்வேதகேதுவை, ‘'அவர்’ அதாவது அண்மையில் வாழ்ந்தவராக, அவர் பேசுகிறார். (Pargiter: Ancient Indian Historical Tradition, Page : 330) மேலும், ‘'ஆப்ஸ்தம்பர், பாணினியின் இலக்கண நெறியைப் பின்பற்ற வில்லை”, “அவர் அதை அறிந்திருப்பதும் நடைபெறாத ஒன்றாம் என்றும் திருவாளர் பூலர் கூறுகிறார். (Sacret Text Book of the East. 11, page:XLII) பெரும்பாலும், அவர், பாணினிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவராவர். கி.மு. நான்காம் நூற்றாண்டு வாழ்ந்தவர் பாணினி என்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தையும், திருவாளர்கள் “கோல்டுஸ்டக்கர்’ அவர்களும் பி.ஆர். பந்தர்கார் அவர்களும், தகர்த்துவிட்டு, அவருடைய காலம், கி.மு. ஏழாம் நூற்றாண்டுதான் என்பதை வலுவாக உறுதி செய்யும் எண்ணற்ற சான்றுகளைக் கொடுத்துள்ளனராகவும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலோர், பாணினி கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற தவறான முடிவிலிருந்து, தங்கள், இன்னமும் விடுவித்துக் கொண்டாரல்லர். ஆபஸ்தம்பர், பாணினிக்கு முற்பட்டவராயின், அவருடைய காலம், நான் மேலே கருத்துத் தெரிவித்த காலத்திலும் முற்பட்ட காலமாதல் வேண்டும். ஆபஸ்தம் பரைப் போலவே, "சாகா" என்ற வேதக்கொள்கையின் விளக்கவுரைகாரராகிய பௌதாயனர், அவரைவிட இருநூறாண்டு மூத்தவராவர், இவ்விரு சூத்ரகாரர்களும் (Soothrakaaras) கிருஷ்ண யஜுர் வேதத்தின் கதைத்திரிய" சாகா பிரிவைச் சேர்ந்தவராவர்.
இக்கொள்கை, விந்தியத்திற்குத் தெற்கிலேயே சிறப்பாகப் பரவியிருந்தது. வட இந்தியாவில், இந்நெறியைப் பின்பற்று பவர், கடந்த ஆயிரம் ஆண்டுகால எல்லைக்குள் வடநாட் டிற்குக் குடிபெயர்ந்த தென் இந்தியப் பிராமணர்களின் வழிவந்தவராவர். ஒரு பிரிவு "சாகா"வைப் (வேதக் கொள்கை ஒன்றை பின்பற்றுவோர் அனைவரும், தாங்கள் வாழ்ந்திருந்த இடத்தில் வாழ்ந்திருந்தமைக்கான சிறு அடையாளம் தன்னையும் விட்டுவைக்காமல், வடக்கிலிருந்து தெற்கே குடிபெயர்ந்துவிட்டனர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் நம்மால் இயலாது. ஆதலின், 'தைத்திரீய" சாகா, தனி சாகாவாகப் பிரிந்து வழங்கிய காலந்தொட்டு, அத் தைத்திரீய" சாகா, தென்னிந்திய சாகாவாக ஆகி யிருத்தல் வேண்டும். (பாண்டவர் பக்கம் இருந்து போரிட்ட தென்னாட்டவருள் பதித்திரி" என்பார்களும் இருந்தனர். அவர்களின் சாகா, தைத்ரேயம்" என அழைக்கப்பட்டது என்றும், வைசம்பாயனர், யாக்ஞவல்கியரின் எச்சிலை விழுங்கியது குறித்த கட்டுக்கதை, ஒரு பறவையின் பெயர், சாகா என வழங்கப்படுவதற்கான பிற்காலக் கற்பனை என்றும் எண்ணுகின்றேன். இது போலும் பேரழிவு சார்ந்த நிகழ்ச்சிக்கான சிறுகுறிப்பு தானும் புராணங்களிலோ, அல்லது மரபு வழிச் செய்திகளிலோ காணப்படவில்லை. ஆகவே, கிருஷ்ண யஜுர் வேதம், தஷிண பிராமணர்களின் "சாகா"வாசு ஆதற்குப் போதுமான போக்குவரத்து, கி.மு. 14, கி.மு.13 நூற்றாண்டு காலத்தில், தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் இடையில் இருந்துவந்தது. இச்சமய நெறிக்கான விதிமுறைகளை, முதன்முதலில் வகுத்த ஒருவர், பௌதாயனர் ஆதலின் அவரை, கி.மு 900இல் கொண்டு நிறுத்த விரும்புகின்றேன். இக்காலம், பாரத்தாயனார்க்குப், பொருத்தம் அற்ற பழங்காலமாகத் தோன்றக்கூடும், ஆனால், கோதாவரி ஆற்றங்கரையில், இராமர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியர் இருந்து வந்தனர் என்பதையும், தென்னிந்தியாவை, இராமன் அமைதி நிலவும் இடமாக மாற்றியது, ஆங்கு ஆரியர்கள் மேலும் பரவுவதற்கு வழிசெய்தது என்பதையும், வேதவியாசர் மற்றும் வைசம் பாயனர் காலத்தில், கிருஷ்ண யஜுர் வேத மாணவர்கள், அந்த ஆற்றை அடுத்திருந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இருந்தனர் என்பதையும், அச்சாகாவின், முதுபெரும் சூத்ரகாரர் பௌதாயனர் ஆவர் என்பதையும் நினைவில் கொண்டால், மேலும், பாணினி கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதையும், ஆபஸ்தம்பர், பாணினியின் சமகாலத்தவர் அல்லது சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பதையும், பௌதாயனர், ஆபஸ்தம்பரை விட, குறைந்தது இரண்டு நூற்றாண்டுகாலம் முற்பட்டவர் என்பதையும் ஏற்றுக் கொண்டால், பௌதாயனர் காலம் பற்றிய என்னுடைய மதிப்பீடு எவ்வாறு மறுக்கப்படும் என்பதைக் காண முடியவில்லை. ஆனால், பௌதாயனர், அத்துணைப் பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும், அவர் பெயரால் வழங்கப்படும் சூத்திரங்களுக்கு அப்பழங் காலத்தைக் கொடுக்க இயலாது; ஆபஸ்தம்பரின் சூத்திரங்களைப் போல் அல்லாமல், பெளதாயரின் சூத்திரங்கள், அவரைப் பின்பற்றுவோர்களில், மிகமிகப் பிற்பட்ட காலத்தவரால், பெரும் அளவில் புதியன புகுத்தலுக்கும் திருத்தங்களுக்கும் ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. காரணம் : அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு நெறிகள், அவை மிகமிகப் : பிற்பட்டன ஆதல் கூடுமோ என்ற ஐயுணர்வை எழுப்புமளவு அத்துணை விரிவாக உள்ளன. வான்கோள்களை, அவை ஆட்சிபுரியும் வார நாட்களின் வரிசையில் குறிப்பிட்டிருப்பது, அச்சூத்திரங்கள், பிற்காலத்தில், வரன்முறையின்றித் திருத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
வடஆரியப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான தென்னாட்டவர் பழக்க வழக்கங்கள்
தென்னாட்டுப் பிராமணர்களின் வாழ்க்கைமுறைகளுக்கான விதிகளை வகுக்கும் போது, பௌதாயனர், ஆரிய வர்த்தத்து ஆரியர்களுக்கு, ஒருவகையில் வெறுப்பூட்டுவனவும், தென்னாட்டவர்களுக்கே உரியனவுமாய வழக்கங்களை இயல்பாகவே விவாதிக்கிறார். தென்னிந்தியர்கள், ஆரிய வழிபாட்டு நெறியை ஏற்றுக் கொண்டு, ஆரிய வாழ்க்கை முறைகளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட பின்னரும், கைவிட்டு விடாது, மேற்கொண்டிருந்த பழைய, தஸ்யூவழக்கங்கள் ஐந்து, பௌதாயனரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : சமயதீக்கை பெறாதவரோடு உடன் இருந்து உண்ணல். மகளிரோடு இருந்து உண்ணல் ; பழைய உணவை உண்ணல், ஒருவன், தன் தாய்வழி அம்மான் மகளோடும், தந்தையோடு உடன் பிறந்தாள் மகளோடும், காதல் உறவு கொள்ளுதல்; கூறிய இவ்வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும், அந்நாட்டு நடைமுறை விதியே, அதிகார உரிமை யுடையதாகக் கருதப்பட வேண்டும். (யத்தத் அனுபதென ஸஹபோஜனம், ஸ்திரியா ஸஹபோஜனம், பர்யுஷித போஜனம்; மாதுல் பித்ருஸ்வஸ்ற்துஹிதிர் கமநம் ; இதி... தத்ர தேசப்ராமாண்யம் எவள்யாத் - Baudhayana Dharma Sutras. 1:1, 2, 3, 6) வடநாட்டு வாழ்க்கைச் சட்ட வல்லுநராகிய கௌதமர், உள்நாட்டு வழக்கங்களை, அடிப்படை ஆதார மாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பௌதாயனர் அறிந்திருந்தார். (Mithyaitaditi Gawtaman. 1:1,2,7) அவரால் முடிந்திருந்தால், இப்பழக்க வழக்கங்களைப் பௌதாயனர் அகற்றி இருப்பார் என்பதை இது காட்டுகிறது.
ஆனால், நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் உள்ள ஆரியர்களை, அவர்களின் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடத் தூண்டுவதற்கான வலுவற்றவராக அவர் இருந்தார். பண்டைய பழக்கவழக்கங்கள், அத்துணை எளிதில் அழிந்துவிடுவதில்லை. உண்மையைக் கூறுவதாயின், அவை என்றுமே அழிவதில்லை . மாறாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுவரையும், ஒன்று, இருந்தது இருந்தவாறே, அல்லது சிறிதே திரிந்த நிலையில் இறவாது இடம் பெற்றிருக்கும்.
‘'பௌதாயன தர்ம சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ண ன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘'மாவல பித்ர்ஸ் வரர் துஹித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும். இற்றைய நாளில், தெலுங்கு பிராமணர்களிடையே, உண்மையில், இது கட்டாயமாம்; ஏனைய தென்னிந்திய பிராமணர்களிடையேயும் இதுவே பெரும்பாலான வழக்கமாம். தெலுங்கு பிராமணரல்லா தாரிடையே, தென்னாட்டுப் பிராமணரிடையே நன்கு தெரிந்த வழக்கமாம், ஒருவன் தன் உடன்பிறந்தாள். மகனை மணங்கொள்வது பொதுவான வழக்கமாம். அதனால், பிராமணரல்லாதாரால் பேசப்படும் தெலுங்குக் கிளைமொழியில், ‘'கோடலு” என்ற சொல், உடன்பிறந்தார் மகள் என்றும் பொருள்படும். மனைவி என்றும் பொருள்படும்), உடன் பிறந்தான் மகனுக்கும், உடன் பிறந்தாள் மகளுக்குமிடையேயான திருமணமே, வழக்கமான திருமணமாம்; ஆதலின், அவைபோலும் திருமணம் நிகழாத போது, அவ்வுடன் பிறந்தாள் மக்கள், இழந்த அந்நல்வாய்ப்பினுக்கு ஈடுசெய்துகொள்ள முயல்வர். அது, வேறுபிற சூழ்நிலைகளில், நனிமிகக் கொடிய ஒழுக்கக் கேடோடு கூடிய கயமையாகக் கருதப்படுவதுபோல், கருதப்படுவதில்லை . உடன்பிறந்தான் மகனும் உடன் பிறந்த தாள் மகளும், ஒருவரையொருவர் மணந்து கொள்ளா நிலையிலும், சமுதாயப் பெரும்பழிக்கு ஆளாகா நிலையில், ஒழுக்க நலனைப் புண்படுத்தவல்ல, கேலியொடு கூடிய இன்ப விளையாட்டு, அவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்படுவதும் உண்டு. உடன்பிறந்தார் மக்களிடையேயான திருமண வழக்கத்தில் மற்றொரு விளைவு, தமிழில் “அத்தான்” என்ற ஒரே சொல், தந்தையொடு உடன் பிறந்தாள் மகனை யும், மனைவியொடு உடன் பிறந்தவனையும், தமக்கையின் கணவனையும் ஒரு சேரக்குறிப்பதாம்".
பர்யுஷித போஜனம்" என்பது, பழையது உண்பதாம். ஆக்கிய சோற்றை, ஓர் இரவு, நீரில் இட்டுவைத்து உண்பது; உயிர்ச்சத்தும், ஊட்டச்சத்தும், அரைபட்டுப் போகாப் புழுங்கல் அரிசியாயின், அது ஓர் உடல் நலம் காக்கும் நல்ல வழக்கமாம். இவ்வழக்கம், வடநாட்டு ஆரியர்களால், அருவருப்போடு மதிக்கப்பட்டு, புனிதமற்ற செயலாகக் கருதப்பட்டது. ஆனால், ஆரிய எதிர்ப்பு இருந்தாலும், தமிழர்களால், அது விடாது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், வாழ்க்கைச் சட்டம் வகுப்போர், ஏதும் செய்ய மாட்டா செயல் இழந்து போனதைப் பர்யுஷித அன்னத்திற்கு அதாவது பழைய உணவிற்குப் பதிலாக உடல் உணர்வுகளுக்கு ஊக்கம் ஊட்டுவனவாய், காபி, சூட்டோடு புதிதாகப் பண்ணப்படும் அரிசி ஆப்பம் ஆகியவற்றை, மாற்றுப் பொருளாக்கித் தரும் நவநாகரீகம் செயல்படுத்திவிட்டது.
பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்
இக்காலத்தைச் சேர்ந்த, தென்னிந்திய பிராமணர், வட இந்திய பிராமணர்களைப் போலவே இறைச்சி உண்பவர்களாம். புலால் உண்ணும் விலங்குகள், பழகிய பறவைகள், பழகிய சேவற் கோழி, மற்றும் பன்றி ஆகியவை உண்ணப்படாதவை. ஆடுகள், ஐந்து ஐந்து கால்விரல்களைக் கொண்ட விலங்குகள் பஞ்ச பஞ்ச நகஹாறு முள்ளம்பன்றி, உடும்பு, முயல், முள்ளெலி, ஆமை, பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட ஐந்து விலங்குகள், (த்விகுரிஹை ), " நீல்காய்', புள்ளி இல்லா மான், புள்ளிமான், எருமை, காட்டுப்பன்றி, கால்களால் கிளறித் தின்னும் ஐவகைப் பறவைகள், கௌதாரி, பாறைகளில் கூடுகட்டி வாழும் புறா, "கபிஞ்சா', "வார்த்ஹராண்ஸ, மயில், கஹஸ்ரதம்ஷ்ட்ரி ', "சிலிசிம்', "வர்மி", "ப்ரஹச்சிரஸ்", "மஷ்கரி', "ரொஹிக" மற்றும் ராஜி" போலும் மீன் வகைகள், ஆகிய இவை உண்ணப்படலாம் எனப் பௌதாயனர் கூறுகிறார். இந்நீண்ட பட்டியலோடு, காண்டாமிருகமும், கருப்பு மறிமானும் எதிர்ப்புக்களிடையே சேர்க்கப்பட்டன (Baudhayana Dharma Sutras. 15, 2:18) ஆபஸ்தம்பர், தின்னக்கூடாத விலங்குகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். ஆனால், இறைச்சி உண்பது. பற்றிய அவர் கொள்கைகள், பால் தரும் பசுக்கள், காளைகள் ஆகியனவும் தின்னப்படலாம் எனக் கூறும் தனியான ஒரு சூத்திரத்தைக் கொண்டிருப்பதோடு, மற்ற வகையில், பௌதாயனர் கொள்கையோடு ஒத்துள்ளன. (Apasthamba Dharma Sutras 1,3,17,30) .
‘'வாஜகனேயர்'’ அவர்கள், ‘'காளை மாட்டின் இறைச்சி படையலுக்கு உரியது'’ எனப் பலர் அறிய வெளிப்படுத்திய கருத்தைத் தாம் கூறியதோடு இணைத்துக் கொள்வது பொருந்தும் என ஆபஸ்தம் பாயனர் கருதினார் என்பதிலிருந்து, மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான, உணர்வுபூர்வக் கருத்து தென்னாட்டில், தானாகவே கைவிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (யாஞ்யவல்கியர், ‘'பசு, காளைகளின் இறைச்சி முதிரா இளமையவாயின், அவற்றை உண்போரில் நானும் ஒருவன்” (Sat. Brah. 3:1,2,21) எனக் கூறுகிறார்.
ஆபஸ்தம்பர் கூற்றுப்படி, இறந்த முன்னோர்களை மகிழ்விக்கவும், செய்வோர்க்குப் பல்வேறு வகையான பலன்களை ஈட்டுவதற்கும், ஸ்ரார்த்தங்கள் ஒவ்வொரு மாதத்திலும் பிற்பகுதியில் செய்யப்படுதல் வேண்டும். அவர்கள் மனநிறைவு கொள்ளும் கால அளவு, படைக்கும் இறைச்சியின் வகைக்கேற்ப அமையும். அவ்வகையில், மாட்டிறைச்சி, அவர்களை ஓராண்டு காலத்திற்கு மனநிறைவு கொள்ளச் செய்யும். எருமை இறைச்சி, மேலும் நீண்ட காலத்திற்கும், காண்டா மிருகத்தின் இறைச்சி, அவற்றினும் நீண்ட காலத்திற்கும் மன நிறைவினைத் தரும். ‘சதபலி” என்ற மீன் வகையும், ‘'வார்தரானஸ்” எனப்படும் நாரை இனமும் நீண்ட காலத்திற்கு மனநிறைவைத் தரும். (Yajanavalkia’s Sat. Brah. 27, 16:4,726 - 28, 17:1-3)
தென்னிந்திய பிராமணர்கள், எப்போது, ஏன், இறைச்சி உண்ணலைக் கைவிட்டனர் என்பது ஒரு சுவையூட்டும் நிகழ்ச்சியாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நான் கருதும் தமிழ்ப்புலவர் கபிலர், புலால் நாறும் கொழுத்த கறி இறைச்சித் துண்டங்களை, பூமணம் நாறும் புகை எழத் தீ கொளுத்திச் சமைத்த ஊனையும், துவையலையும், கறியையும், சோற்றையும் உண்டு வருந்தும் செயல் அல்லது, வேறு செயல் அறியாவாகலின், பாடுவார் கைகள் மென்மையுடையவாயின எனக்கூறியுள்ளார். பிறிதோரிடத்தில், தம் பாடற்காம் பரிசிற் பொருளாக, மது இருந்த சாடி வாய் திறப்பவும், ஆட்டுக் கிடாய் வீழ்ப்பவும், சமைக்கப்பட்டுக் குவிந்து கிடக்கும் கொழுவிய துவையலையும், ஊனையும் உடைய சோற்றையுமே" விரும்பியுள்ளார்.
"புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ, ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா வாகலின், நன்றும்
மெல்லிய பெரும் ! --
- பாடுநர் கையே,
மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு"
புறம் - 14:12-19; 1113-13
கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில், விஷ்ணு, சிவன் மீதான பக்திப் பெருவெள்ளம், தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடிற்று. இவ்வழிபாட்டு நெறிகள், சமணர் வழிகாட்டு நெறியோடு போரிட வேண்டியதாயிற்று. சமணத் துறவிகளாம் ஆசிரியர்கள்தாம், சமய உணர்வு. வாய்க்கப் பெறாத் தம் மாணவர்களுக்கு, இறைச்சி உணவினைக் கைவிடுமாறு முதன்முதலில் வற்புறுத்தினர். வைஷ்ணவ, சைவ வழிபாட்டு நெறிகள். இறைச்சி உணவு உண்டலைக் கைவிடாது போனால், சமணவழிபாட்டு நெறிக்கு எதிராக இருந்து, வெற்றி பெறல் இயலாது. ஆகவே, இறைச்சி உண்ணல், கள் உண்ணல் ஆகியவற்றிலிருந்து. ஒதுங்கி நிற்பதைத் தங்களின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக மேற்கொண்டனர். தென் இந்தியாவில் வைஷ்ணவ , சைவ ஆகமங்களின் முதல் ஆசிரியர்களாக விளங்கிய பிராமணர்கள், இறைச்சி உணவினைக் கைவிட்டமைக்கு இதுவே காரணம் என யூகிக்கிறேன்.
வருணங்கள்
தென்னிந்திய சூத்ரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரிய பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம். ஆரியர்களின் நால்ஜாதி அமைப்பு (சாதுர் வர்ணயம்) வேதகாலத்தில், ஆரிய வர்த்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று. மகாபாரதப் போருக்குப் பின்னர் அர்ஜுனன் எதிர்பார்த்தது போல், வட இந்தியாவில் பெரும் சாதிக்குழப்பம் (வர்ணசங்கரம்) நிலை கொண்டுவிட்டது. (பகவத் கீதை 7.47 - 43). தென் இந்தியாவில் சாதுர்வர்ணயம் , எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது என்றும் நடைமுறையில் இருந்தது இல்லை. காரணம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் பிராமணர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முழுமையாக வேறுபட்டே இருந்தது. ஆரியச் சமய நெறிகள், தமிழ்நாட்டில் பரவுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னர், தமிழ்நாட்டு மக்கள் கற்கால அளவில், பாலை, மலை, கடல், காடு ஆறு ஆகிய நிலங்களில் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, முறையே, நாடோடும் மறவர், வேட்டுவர், மீனவர், ஆயர், உழவர் என ஐவகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இப்பழங்குடியினர் ஐவரும், ஆரியப் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளிலிருந்து, பல வட இந்தி... கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை 93 நிலைகளிலும் வேறுபட்ட, தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் வளர்த்துக் கொண் டனர். ஆரிய வாழ்க்கை நெறிகள், தமிழர் வாழ்க்கை நெறிகளைப் பாதிக்க இயலவில்லை . ஆகவே, தமிழரின், அம்மண்ணுக்கே உரிய நாகரீகப் பெருவெள்ளமும், வந்து புகுந்த ஆரிய நாகரீகச் சிற்றருவியும், யமுனையும், கங்கையும், பிரயாகை தொடங்கி, பலகாவதம் இரண்டின் வெள்ளமும், ஒன்றொடொன்று கலக்கப் பெறாமலே, ஓடி வருவது போல், அடுத்தடுத்து ஓடுவவாயின. நமக்கு இப்போது கிடைத்துள்ள தமிழ்ப்பாக்களில், நன்மிகப் பழைய பாக்கள், பலநூறு ஆண்டுக்காலம் வரையும், தமிழ்ப் பிராமணர்கள், தமிழரின் தேசீயப் பெருவாழ்வாம், வெள்ளப் பெருக்கிலிருந்து பெருந் தொலைவு ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர். தமிழ்ப்பாக்களின் போக்கை ஆட்கொண்டிலர் என்பதை உணர்த்துகின்றன.
பாணினியும், தென் இந்தியாவும்
மகாபாரதப் போர் முடிவிற்கும், இந்த அரசு இனம் ஆட்சியமைப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரு - பாஞ்சா லம், மகதம், அவந்தி மற்றும் பிற வட இந்திய நாடுகளில், அரச இனங்கள், வண்ணம் மாற்றிக் காட்டும் கண்காட்சி போல், மாறிமாறி ஆட்சி ஏறிய நிகழ்ச்சியில் தமிழரசர் பங்கு சிறிதே அல்லது அறவே இல்லை எனலாம். ஆகவே, பாணினி போலும், முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த, வட இந்திய சமஸ்கிருத நூலாசிரியர்கள், தென்னாட்டவரை, அறவே குறிப்பிடவில்லை , நான் எண்ணுவது போல், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கிய பாணினி, அஷ்மகம்" ஒன்று தவிர்த்து, நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டாரல்லர். " இதிலிருந்து, திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள் தென்னிந்திய நாடுகளின் பெயர்களே பாணினிக்குத் தெரியாது எனஉய்த்துணர்கிறார். அஷ்டாத்தியாயி' யைக் கற்ற, அறிவார்ந்த ஆசிரியன் எவனும், பாணினி, ஒரு பொறுப்பற்ற, அல்லது ஏதும் அறியாத இலக்கண ஆசிரியன் ஆவன் எனக் கூறுமளவு துணிவு பெற்றவனாக மாட்டான், ஆனால் நாம் பெற்றிருப்பது ஒரு சொல் அன்று. பாண்டியா, சோழா, கேரளா என்று மூன்று சொற்கள். ஆழமாகவும், முழுமையாகவும் ஆய்ந்து காணும் இலக்கண ஆசிரியன் எவனும் அச்சொற்களை அவன் அறிந்திருந்தால், தவறாமல் செய்திருக்க வேண்டிய, அச்சொற்களின் அமைப்பு பற்றிய விளக்கம் பாணினியால் அளிக்கப்படவில்லை. ஆகவே, தென்னிந்திய நாடுகளின் பெயர்கள் பாணினிக்குத் தெரிந்திருக்கவில்லை. அல்லது, வேறு வகையில் கூறுவதாயின், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்றே முறையான முடிவு ஆகும்” எனக் கூறுகிறார்.
பந்தர்க்கார் (Carmichael Lectures: 1918. page :4-7) இக்காரணகாரியங்களின் பொருத்தத்தை என்னால் ஏற்றுப் பாராட்ட இயலாமைக்கு வருந்துகின்றேன். பாணினி, அச்சொற்களை அறிந்திருக்க முடியும்; ஆனால், அவற்றைச் சமஸ்கிருதச் சொற்களாக மதித்திருக்க முடியாது. (உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள்) நாம், இப்போது பஞ்சாப் என்றும், ஆப்கானிஸ்தான் என்றும் பெயரிட்டு அழைப்பனவும், அவற்றிற்குத் தெற்கில் உள்ள மேலும் சிலவுமான, அவர் நேரிடையாகத் தெரிந்திருந்த அண்டை மாவட்டங்களில் உள்ள இடங்கள், ஆறுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டு ஆய்வு செய்திருப்பது நடைபெற்றுளது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய அஷ்டாத்தியாயியை, அவருக்குத் தெரிந்திருந்த இந்திய நிலப்பரப்பில், முழுமையான நில இயல் நூலாக மதிப்பது சரியாகாது. தம்முடைய இலக்கண நூலில் குறிப்பிடாத நாடுகளின் பெயர்கள் அவருக்குத் தெரியாது என்று கூறுவதும், மேலும் ஒரு படி சென்று அவர் காலத்து ஆரியர்கள், அப்பெயர்களை அறிந்திருக்கவில்லை என நிலைநாட்டுவதும், அதைப் பெரும் நகைப்பிற்குரிய ஒன்றாகத் தள்ளிவிடுவனவாம்.
“இந்தியாவின் நனிமிகச் சிறப்பியல்பு வாய்ந்த மரமாம் ஆல், ரிக் வேத்தில் குறிப்பிடப்படவில்லை . ஆகவே, ரிக் வேதப் பாராயணப் பாடல்கள் பாடப் பெற்றபோது, ஆல் போலும் ஒரு மரம் இந்தியாவில் இல்லை என ஒருவன் மிகவும் ஆணித்தரமாக வாதிடவும் கூடும்" எனக் கூறுவதன் மூலம், இவ்வாதத்தை எள்ளி நகையாடியுள்ளார் திருவாளர் பர்கிதர் அவர்க ள் (Pargiter's Ancient Indian Historical Tradition: Page: 625) "அது, ஆல் குறித்தும் உப்பு குறித்தும், இன்றைய ஆய்வாளர் முடிவுப்படி, ஆரியர்கள் சென்று தங்கியிருந்த பாரியாத்திரா . மலைக்குன்றுகள் (ஆரவல்லி மலைத் தொடர்) குறித்தும் ரிக்வேதம் ஊமையாகவே இருப்பதை ஒருவன் கருத்தில் கொண்டவழி , விந்தியமலை, மற்றும் பிற நில இயல் கூறுகள் குறித்து அவை ஏதும் கூறாதிருப்பது, அது, அவற்றை ரிக்வேதம் அறிந்திலது என்பதை உணர்த்துவதாகாது என்று, மேலும் அவர் கூறியுள்ளார். (Pargisers Ancient Indian Historical Traditions - Page : 299). இருவரில், ஒருவர், பெரும்பாலும், பாணினியின் சமகாலத்தவரும், பிறிதொருவர், அவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் சிறப்புற வாழ்ந்தவரும் ஆகிய பௌதாயனரும், ஆபஸ்தம்பரும் தென்னிந்தியாவில் வாழ்ந்து, வாழ்க்கைச் சட்ட திட்டங்களை வரைந்தனர். அவர்கள், ஆரியர்கள் தாம் உறுதியாக, மேலும் பாணினி எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல பெருமை சார்ந்த, முழுமை யான பல்பொருள் அறிவு நிரம்பியவராயின், தங்களுடைய வார்த்திகத்திலும், மகாபாஷ்யத்திலும், பாணினியின் இலக்கணக் கொள்கைகளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை, முறையே காத்தியா யனர்க்கும், பதஞ்சலிக்கும் நேர்ந்திருக்காது.
ஜாதக கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்
பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதை களின் தொகுப்பாகிய ஜாதக கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தர்மவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதை களின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக இருந்திருக்க வேண்டும். அக்கதைகளில் ஒரு சில, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து, அக்காலத்திற்கு முன்னரும் பின்னரும் போலவே, நெருக்கமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. அக்கதைகள், தம் இனத்தைத் தாமே கொன்று தின்னுபவராக நம்பப்படும் பழங்குடியினர் என்றும் பெண் பூதங்கள் என்றும் அழைக்கப்படும் “யக்கினீஸ்கள் ‘'ஸ்ரிபவத்து” நகரில் வாழும் ‘'தம்பண்ணி “ தீபத்தோடு (இலங்கை) நடைபெற்ற வணிகர்களின் கடற்பிரயாணங்கள் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்திற்கு அண்மையில் வணிகர்களின் கலங்கள் உடைந்துவிடும்போது, யக்கினீஸ் என்ற அவர்கள் அவ்வணிகர்களுக்கு உணவும், மதுவும் அளித்து அவரைக் காத்து மணந்து கொள்வதும் செய்து, இறுதியில் அவர்களைத் தின்றுவிடுவதும் செய்வர்.
இந்த யக்கினீக்கள், இரைதேடி, கல்யாணி ஆறு முதல் நாகதீபம் வரை கடற்கரையில் அலைந்து திரிவர். (Valahassa Jataka No.196. நாகதீபம் என்பது, ஈழம் மலபார் கடற்கரைகளைக் குறிக்க வழங்கப்படும் அத்தீவு யக்கினீக்களால் இலங்கையின் நெருக்கமாக அகப்படுத்தப்பட்டிருந்தது. பழங்குடியினர் பற்றிய பழைய இராமாயணக் கட்டுக்கதைகளின் நினைவுச் சின்னம் இவை என்ற உண்மை ஒருபால் இருக்க, ஒரு பிரிவு மக்கள், இலங்கைக்குப் பயணம் செய்து, ஆங்குச் சந்நியாசிகள் ஆயினர். (Hatripala Jataka. 509: Mugapakka Jataka - 538), சிறிய வில்லாளனாகப் பிறந்த புத்தர்தாமும், தக்கசீலத்தில் வேதங்களைக் கற்றுத் தம் கல்வியை நிறைவு செய்துகொண்டு, வாழ்க்கை அனுபவங்களைப் பெற ஆந்திர நாட்டிற்குச் சென்றார். (Bhima Sena Jataka. 80) அவர் ஆங்குப் பெற்ற அனுபவம் குறித்து நாம் பொருட்படுத்தவில்லை. அவருடைய பிறவிகளில் பிறிது ஒன்றில், சேரி என்ற நாட்டில் அவர், ஒரு மண்பாண்டம் வணிகர். அவர் சேரிவன் என அழைக்கப்பட்டார். இச்சேரி, பெரும்பாலும் சேரநாடு ஆம். விலை கூவி விற்கும் வணிகனாக, ஊர் ஊராகச் செல்லும் அவர் பயணத்தில், அவர் தெலவாஹ" ஆற்றைக் கடந்து அந்தபுரா'வை அடைந்தார். அதாவது அந்த ஆந்திர நாடு, சேர நாட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை. (சேரிவாண்ய ஜாடகா எண் - 3)
போதிசத்தரின் பிறிதொரு அவதாரத்தில், அவர் பிராமண மகாகால"ரின் மகன் " அகித்தி" ஆகப் பிறந்தார். அவர் துறவியாக மாறி உடன் பிறந்தவளான "யசவதீ" என்பாளுடன் பெனாரஸிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள ஓரிடத்திற்குப் போய்விட்டார், ஆனால், அவர் மீது அன்புகாட்டுவாரின் அன்புத் தொல்லைகளிலிருந்து விடுபட, அவ்விடத்தை அவராகவே விடுத்து, தமிலா" நாட்டை அடைந்து, காவேரி பட்டணத்திற்கு அருகில் இருந்த, ஒரு மலர்த் தோட்டத்தில் (உய்யானம்) தங்கியிருந்தார். இதிலிருந்து இந்நாட்டுப் புறக்கதைகள் வழக்கில் இருந்த போது, காவேரிப்பட்டணம், சோழர்களின் தலைநகர்களில் ஒன்று (அக்கதையில் சோழர்கள் பெயர் சுட்டிக் கூறப்படவில்லை. என்றாலும்) என்பதும், வட இந்தியக் கிளைமொழிகளில் அது, 'காவெரபட்டன" மாக மாறி வழங்கப்பட்டது என்பதும், ஆற்றுப் பெண் தெய்வத்தின் தந்தை பெயர் கவெரரிஷி" என்றும், கட்டுக்கதை பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது என்பதும் உய்த்துணரப்படும். ஈண்டும் அகித்தி' அன்பு செலுத்து வோரால், அன்புத் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அதனால், ' அஹிதீய" என அழைக்கப்படுவதும், பெரும் பாலும், நாகதீபம்" போன்றதே ஆனதும், தம்ப பண்ணி " (ஈழம்) என்ற தீவிற்கு அண்மையில் நாகர்களின் நாடாம் மல பார்க் கடற்கரையான "காரதீபம்" என்ற இடத்திற்குச் சென்று விட்டார். அங்கு, "அகித்தி" அதாவது போதிசத்தர் நிறை பேரறிவு பெற்று விட்டார். "அகித்தி" ஒருசிலரால், நிலபேறுடைய காரணம் ஏதும் இன்றி, அகஸ்தியராகக் கருதப்பட்டார்.
ஸஹபாஹு
ஜாதகா கதைகளில் காணப்படும், தென்னிந்தியா பற்றிய இவைபோலும் குறிப்புகள், கி.மு. முதல் ஆயிரத்தாம் ஆண்டின் மத்தியில், தென் இந்தியா, வட இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடவில்லை. இந்தியாவின் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையில் அரசியல் அல்லாத பிற உறவுகள், எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே இருந்து வந்தன என்பதை உறுதி செய்கின்றன. புத்தர் இறந்த, பெளத்தர் சொல் நடையில் கூறு தாயின், உலகப் பேரிறைவன் “பரினியான” படுக்கையில் படுத்துவிட்ட அன்று (பரினி பான பஞ்சம்ஹி நிபன்னெ லொகநாயகொ - மகாவம்சம் :7:1) சிங்கப்படை கொண்ட ஸஹாபாஹவின் மகன் விஜயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழுநூறு பேருடன், “லாள'’ (ராத - கிழக்கு வங்காளம்) நாட்டிலிருந்து அவனுடைய தீயொழுக்கத்திற்காக, அவனுடைய தந்தையால் நாடுகடத்தப்பட்டு, சிலோனில் அடியிட்டான். கலத்தில் ஏற்றிக் கடலில் விடப்பட்டான். அவன் கடற்பயணம் பற்றிய நிலவியல், வழக்கம்போல் நம்புதற்கு இயலாத ஒன்றாம் . அவன் வட பம்பாயைச் சேர்ந்த இன்றைய ஸோபராவாம் “ஸப்பர காவில்” கரை இறங்கினான். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரிபுளுஸ் என்பவரால், ஸோபட்மா என்பது கீழ்க்கடலைச் சேர்ந்த துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுளது. ஆதலின், இது பெரும்பாலும் ஒரு தவறு ஆகும். வங்காளக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சிலோனுக்குச் செல்ல வேண்டிய ஒரு கலம், ஸோபாவுக்குச் செல்வது இயலாத ஒன்று. அங்கிருந்து, அவன் மீண்டும் கலம் ஏறிச் சிலோனுக்கு வடக்கில் இருந்த தம்பபண்ணியில் கரை இறங்கினான். ஆங்கு வாழ்ந்திருந்த மக்களாம் ‘'யக்கர்"களை (யக்ஷ) வென்று அழித்து, அந்நாட்டின் அரசன் ஆகிவிட்டான். தனக்கும், தன் உடன் வந்தவர்க்கும் மனைவியர் வேண்டி, பண்டு அரசன் மகளை இசைவிப்பதற்காகவும், ஏனையோர்க்கும் மனைவியர்களைப் பெறும் பொருட்டும், பரிசில் பொருள் களோடு, ஆன்றோர் சிலரை தக்சின (தென் இந்தியா) நாட்டில் உள்ள மதுரைக்கு அனுப்பிவைத்தான். (மதுரை அரச்ன “பண்டவ'’ என அழைக்கப்பட்டான். பதஞ்சலி, பாண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டிய என்ற சொல்லைத் தோற்றுவிப்பது போல, பாலி மொழி எழுத்தாளர்கள், “பாண்டியா” என்ற சொல்லை, அவர்களுக்கு நன்கு தெரிந்த பாண்டவர் என்ற சொல்லாகக் கருதுவர்). எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், அணிகளால் ஒப்பனை செய்யப்பெற்று, யானைகளும், குதிரைகளும், பொதிநிறை வண்டிகளும் பின்தொடர் சிலோன் சென்றனர். இந்தக் கதை, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான . மிகப்பழைய போக்குவரத்து, தொடர்ந்து இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. இது பாண்டியர்களும், வடநாட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகா அந்நியர் அல்லர், மாறாக வழக்கமான நிகழச்சிபோல, பாண்டியர் மகள் ஒருத்தி, விஜயனுடைய கைப்பிடிக்க, ஆணையிட்டுப் பெறுமளவு ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர் என்பதையும் உறுதி செய்கிறது. அர்ச்சுனன், சித்ராங்கதா வையும் மணந்து கொண்டு, நாகர் மகள் உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விஜயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினியாம் "குவண்ண" என்பவளோடு அவன் கொண்ட உறவு, போன்றதன்று. மாறாக, புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே
“ததொ ஸோ விஜயொ ராஜ பண்டுராஜஸ்ஸ துஹிதரம் மஹதா பரிஹாரெண மஹேசித்தே ப்ஹிஸேசயி
-மகாவம்ஸோ - 7:72”
7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 - 500
பாலஸ்தீனமும் இந்தியாவும்
கி.மு. பத்தாம் நூற்றாண்டில், ஷிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க ரத்தினக் கற்களையும் கொடுத்தாள். ஷீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (IKings. X:10). அந்நாட்களில், இப்பண்டங்கள், இந்தியா விலிருந்துதான் மேற்கு நாடுகளுக்குச் சென்றன. இம்மணப் பொருள்களும் நவரத்தினங்களும், அரசியின் கைகளை அடைவதற்கு முன்னர், அவை இந்தியப் படகுகளில், ஆப்பிரிக்கக் கடற்கரையை அடைந்தன என உறுதியாகக் கூறலாம்.
‘'ஒப்ஹியரிலிருந்து ஒப்ஹியர் (Ophir) பொன்னை ஏற்றி வந்த ஹிராம் (Hiram) கப்பல் படையும், அங்கிருந்து ஏராளமான அகில் மரங்களையும், நவரத்தினங்களையும் கொண்டுவந்தது. அரசன், அகில் மரம் கொண்டு, இறைவன் திருக்கோயில், அரசன் பெருங்கோயில்களுக்கான தூண்களையும், இசைவாணர்களுக்கு வில்யாழ், விரல் தெறித்து இசையெழுப்பும் நரப்புக் கருவிகளைச் செய்தான். அதன்பின்னர், அத்துணைப் பெருமளவிலான அகில் மரங்கள் இந்நாள் வரை வரவில்லை, காணப்படவும் இல்லை ,'’ (1 Kings X:11-12). இந்த அகில் மரங்கள், சந்தன மரங்களாக அடையாளம் காணப்பட்டன. அல்முக் (Aimug) என்ற அதன் ஆங்கிலப் பெயர், சமஸ்கிருத வலகு” என்பதன் திரிபாகக் கருதப்பட்டது. தென் இந்தியாவின், சிறப்பாக, மைசூர், கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களின் உள்நாட்டுப் பொருளாம் இச்சந்தன மரம், குஜராத் மாநிலத் துறை முகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, அரேபியா வழியாகச் சிரியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஒபீரிடமிருந்து (Ophir) எடுத்துக்கொண்ட பொன்னில், முழுமையும் இந்திய நாட்டுப் பொன்தானா, அல்லது ஒரு பகுதிதானா என்பது ஒபீர் பற்றிய வாதத்தின் முடிவாம். விளக்கத்தைப் பொறுத்துளது. ஆனால், சாலமன் மிகப் பெரிய அளவிலான பொன் பெற்றிருந்தமையால், அவனுடைய அப்பொற்களஞ்சியத்தின் ஒரு பகுதி. இந்தியா விலிருந்து பெறப்பட்டதாதல் கூடும் (1. Kings. X: 14-17 and 21). "'ஹிராம் (Hiram) கப்பற்படையோடு தார்ஷிஷ் (Tharshish) கப்பற்படையொன்றையும், அரசன் கடலில் பெற்றிருந் தமையால், தார்ஷிஷ் கப்பற்படை மூன்றாண்டுக்கொருமுறை பொன், வெள்ளி, தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில்களோடு, வந்து சென்றது என மேலும் அறிகிறோம் (1 Kings.X.22). அரசன் தந்தத்தினால் ஒரு பெரிய அரியணை செய்து, அதன் மேற்பரப்பைச் சிறந்த பொன் கொண்டு பூசி மெருகிட்டான்" (1. Kings.x.18)
எபிரேய மொழி "ஹபின் ", எகிப்திய மொழி எபு" ஆகிய இரு சொற்களுமே, சமஸ்கிருத "இப்ஹ" என்ற சொல்லி லிருந்து பிறந்தன வாதலையடுத்துத், தந்தத்தைக் குறிக்கும் ஈஷன்" "ஹபின்" என்ற எபிரேய மொழிச் சொல், யானை யின் "பல்" எனும் பொருள் தருவதான "'இப்ஹ தந்த" என்ற சமஸ்கிருதச் சொல்லின் மொழி பெயர்ப்பாகக் கொள்ளப் படுமாதலின், அவ்வாறு வந்த தந்தங்களில் ஒரு பகுதி, இந்தியாவால் கொடுக்கப்பட்டது என்பது உண்மையாதல் கூடும். ('எல்" (el) என்பது, அராபிய மொழியில், சொற்களின் முன் இணைக்கப்படும் இடைச்சொல்லாதலின் "எல்-எபாஸ்" (Elephas) என்ற கிரேக்கச் சொல் எபு (ebu) என்பதிலிருந்து பிறந்ததாம்.) பிற்காலத்தில் நிகழ்ந்தது போலவே, வாலில்லாக் குரங்குகளும், மயில்களும், ஆசைக்கு வளர்க்கும் உயிரினங் களாக, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. எபிரேய மொழி "கோப்" (KOPH) சமஸ்கிருத "கபி" (Kabi) ஆகும். ஏப்" (ape) எனும் சொல், எகிப்தியரால் ‘'கபு” (Kabu) என்ற வடிவில் கடன் வாங்கப்பட்டது. மயிலைக் குறிக்கும் எபிரேய . மொழியின் துக்கி (Thukki) மயில், பேரழகு வாய்ந்த வால் உடையவாதல் கருதி, தமிழில் வால் எனும் பொருளில் வழங்கும் தோகை என்பதன் திரிபாம்.
எபிரேய மக்கள். இந்தியாவிலிருந்து அவற்றின் பெயர்களோடு பெற்ற பிற பொருள்களாவன: சடின் (Sadin) பருத்தி உடைகள். திராவிடச் சிந்துவிலிருந்து பிறந்தது. (முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது) கற்பஸ் (Karpas) பருத்தி. சமஸ்கிருத ‘கற்பாஸ்” (Karpasa) என்பதிலிருந்து பிறந்தது. கடைசியாக, “அஹல்” (Ahal) தமிழ் அகில், சமஸ்கிருத ‘'அகரு'’ கிரேக்க “அகலோச்சும்” (Agallochum) ஆங்கிலத்தில் ‘'ஈகில் உட்’ (Eagle-wood) அலோஸ் ஹாட் (Aloes-Wood) அல்லது “லின் - அலோஸ்” (lign-alloes) (நறுமணச் செடிகள், காழகில், நிலவாகை ஆகியவற்றாலான தங்கள் எல்லா ஆடைகளும்'’ என்கிறது வழிபாட்டுப் பாடல் (All they garaments of myrrah and aloes and cassia - Psaln xlv:8): பாலஸ்தீனத்திற்குச் சென்ற மற்றொரு இந்திய வணிகப் பண்டம், “கருங்காலி”.
திருவாளர் ‘'ஸ்காப்” அவர்கள், நன்மிகப் பழைய, தெளிவான பழைய கட்டளையின் (Old Testament) குறிப்பு , எழெக்கில் (Ezekiel) அதிகாரம் 27 பிரிவு 13இல் வருகிறது. அதில், அது, டயரின் (Tyre) வாணிகப் பண்டங்களுள் ஒன்றாகப் புலப்படுகிறது. டேடன் (Dedan) நாட்டு மக்கள், தங்கள் வணிகர்கள் ஆவர். பல தீவுகள், அவர்களின் வாணிக நிலையங்களாம், தந்தத்தாலும் கருங்காலியாலும் ஆன ஊது கொம்புகளைப் பாத காணிக்கையாகத், தங்களுக்காக, அவர்கள் கொண்டு வந்தனர். (The men of Dedan were thymer - chants; many isles were the merchandise of thie hand; they through thee, fora present, horms of ivory and ehony) டேடன் என்பது பர்ஷய வளைகுடாவின் தென்கரையாகும் என, ஆக்ஸ்போர்டு பதிப்பாசிரியர் கூறும் விளக்கம் சரியானதாயின், மேலே கூறிய இப்பகுதி, கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், இந்தியாவிலிருந்து வரும் கருங்காலி மரத்தின் நிலையான வாணிக நிகழ்வைக் குறிப்பிடுகிறது. கருங்காலி, பாரிகாஸா விலிருந்து (Barygaza) ஒம்மனா (Ommana) அப்லோகஸ் (Apologws) பகுதிகளுக்குக் கடலில் அனுப்பப்பட்டது எனக் கூறும் பெரிபுளுஸ் கூற்றை உறுதி செய்கிறது (Scor's Periplus. P.153), பிற்பட்ட காலத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வாணிகம், பழங்காலத்திலும் இருந்துள்ளது என வாதிடுவதில் உள்ள நியாயத்தின் வலுவை உறுதி செய்வதுமாம்.
இந்தியாவும் அஸ்ரியாவும்
கி.மு. 850 ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் ஷால் மெனெஸர் (Shalmenaser) அவர்களின் ஒற்றைக் கல்லாலான சதுரத் தூபியில், வாலில்லாக் குரங்குகள், இந்திய யானைகளின் உருவங்கள் உள்ளன. அஸிரியப் பேரரசன், மூன்றாம் திக்லத் பிலே சரின் (Tig|ats Pilesar) நிம்நட் (Nimwd) கல்வெட்டுக்கள், அஷரின் (Ashur) பேரறிவு கண்டு கொண்ட காரணத்தால் எங்கள் இறைவா கடல் நாட்டு அரசன், யாகினை (Yakin) மெரோடக் பலடன் (Merodach-baladan) எவ்வாறு வெற்றி கொண்டான் என்பதைக் கூறுகிறது. அவன், தன் நாட்டு அளவிறந்த பொன் தூள்கள், பொற்கலங்கள், பொன்னாலான கழுத்தணி, விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், கடல் படு பொருள் (முத்து) நீர் வளர்பிரம்பு ஒரு பால் வண்ணமும், ஒருபால் பிறிதொரு வண்ணமுமாக வண்ணம் ஊட்டப்பெற்ற ஆடைகள், எல்லாவகையிலுமான ' மணம்தரும் உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் திறைப் பொருளாகக் கொண்டு வந்து கொடுத்து எவ்வாறு பணிந்து போனான் என்பதைக் கூறுகிறது. இங்கே எடுத்துக் கூறிய எல்லாமே, அந்நாளைய, இந்திய ஏற்றுமதிப் பொருள்களாம். பாரசீக வளைகுடாத் துறைமுகங்களைப் பர்ஷய நாட்டிற்குக் கிழக்கில் வெகு தொலைவில் சார்மணியம், இமயம் போலும் இடங்களாக ஆக்குவதையும் அவன் செய்தான். (Scoff's Periplus, Page:160) ‘கடலின் நுழைவிடத்தில் இடம்பெற்ற டைரஸ் என்ற வாணிக நிலையத்தில் (Ezekil. XVII.19) பளிச்சிடும் இரும்பு, தரம் தாழ்ந்த லவங்கப்பட்டை , மருந்தாகப் பயன்படும் மணம் தரும் ஒருவகைப்புல் ஆகிய பொருள்கள் இருந்தன. (இந்திய இரும்பைக் காய்ச்சிப் பக்குவப்படுத்துவது குறித்த கிரேக்க நாட்டுத் தனி ஒப்பந்தம், பிற்காலத்தில் உருவாயிற்று என்கிறது, திருவாளர், வார்மிங்டனின், ‘'இந்தியாவுக்கும் உரோமப் பேரரசுக்குமிடையிலான வாணிகம்” என்ற நூல். (Commerce between the Roman Empire and India - by Warmington. page:258): பளிச்சிடும் இந்திய எஃகு, பழைய காலத்தில், பல்வேறு நாடுகளால், போர்வாட்கள் பண்ணுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது, இலவங்கப்பட்டையின் பழைய பெயர் காஸியா (Cassia) என்பதாம். நறுமணம் கமழும் ஒரு வகைப் புல்லின் பெயர் கலமஸ் (Calamus) என்பதாம்.
நறுமணப் பொருள்கள், ரத்தினக் கற்கள், பொன் ஆகிய பொருட்களைப் போலவே, இப்பொருட்களும் ஷீபா {Sheba) அரசியாரின் வணிகர்களால் இந்தியாவிலிருந்து டயரஸுக்கு Tyrus) எடுத்துச் செல்லப்பட்டன. (ஏழெகில் - 17:22)
கி.மு. 704 - 681ல் ஆட்சி புரிந்திருந்த சென்ன செரிப் (Sennacherib) என்ற அரசன், நிலவே (Ninevch) என்ற நகரை விரிவுபடுத்தி, அதில் தனக்காக ஓர் அரண்மனையைக் கட்டி, ஓர் பெரிய மலர்த்தோட்டத்தையும் எழுப்பி, அத்தோட்டத்தில் ஏனைய மரங்களோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, ஆட்டுமயிர் விளையும் மரங்களையும் (250 ஆண்டுகட்டுப் பிறகு, ஹிரோடோடஸ் (Herodotus) அவர்களால் பருத்திச் செடியைக் குறிக்க வழங்கப்பட்ட ஒரு தொடர்) பயிரிட்டான், (Journal of the Royal Asiatic Society. 1910 page: 403 Pinches.)
‘'இந்திய முன்னோர்கள், உயிரினங்கள் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாப் பகுதிக்கும், ஆப்பிரிக்க, சீன நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். (J.R.A.S. 1920 Page: 147) வண்டிகளை ஈர்க்கவும், பொதிகளைச் சுமக்கவும், ஊர்ந்து சல்லவும் பயன்படுத்தப்பட்ட, முதுகில் திமில் உடைய இந்தியக் கால் நடைகள், பர்ஷிய, சிரியா, ஆப்பிரிக்க நாடுகளின், வீட்டுவளர்ப்புக் கால்நடைகளின் ஒரு பகுதியாம் வண்ணம், நிலவழியாக, மேற்கு நோக்கிப் பரவியது . இயற்கையே, இவ்வகையால், அஸிரியா, மற்றும் அதற்குப் பிற்பட்ட காலக்கலைகளில், அவற்றின் உருவமைப்புகளை நாம் காண்கிறோம்" எனத் திருவாளர் வார்மிங்டன் குறிப்பிடுகிறார். (J.R.A.S. 1910 Page: 149-150) இந்தியர்களால் மேற்குநோக்கி அனுப்பப்பட்ட விலங்குதரு பொருள்களில், சிங்கம், புலி, சிறுத்தைகளின் நேர்த்தியான தோல்களும் இருந்தன என்றும் நாம் நம்பலாம். (J.R.A.S. 1910 Page: 159). குறைந்த அளவான எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, தேவை மிகுதியாகிவிடுவது இயல்பாகிவிட்ட கிழக்கு . ஆப்பிரிக்க நாடுகளுக்கு நெய்யும், எள் எண்ணெய்யும் பிற்காலத்தில் அனுப்பப்பட்டன. கி.பி. முதல் ஆண்டைய உண்மை நிலை இது. பழங்காலத்து நிலையும் இதுவாகவே இருந்திருக்கும்.(Periplus: page: 41)
பிற பண்டங்கள்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவற்றுள், நறுஞ்சுவை மண மருந்துப் பொருள்கள், உணவிற்கு மணம் காரம் ஊட்டும் பொருள்கள் ஆகிய இரண்டும், மிகுந்த மதிப்புடைய விளை பொருள்கள், திருவாளர் வார்மிங்டன் கூறுவதுபோல, அரேபியர், இப்பொருள்களைத் தங்கள் தீபகற்பத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு செல்வது, பல நூற்றாண்டுக்காலம் நடைபெற்றது. பழைய பொயினிஷியன் கப்பல்களில், மிளகே, மிக முக்கியமான வணிகப் பண்டம். நன்மிகப் பழங்காலத்திலிருந்தே, லவங்கப் பட்டை, இந்தியக் கப்பல்களில், சோமாலி கடற்கரைக்கு நேரே கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரேபியா வுக்கும், எகிப்துக்கும் சிரியாவுக்கும் கைமாறிற்று.(J.R.A.S. 1910 Page: 180-187)
இந்தியாவுக்கும் பழைய எகிப்துக்கும் இடையில், நீலம், மற்றும் பிற வண்ணக் கலவைப் பொருள்களில், நீண்ட கால வாணிகம் இருந்து வந்தது என்பது நன்கு தெரிந்த ஒன்று. (J.R.A.S. 1910 Page: 204). கிறிஸ்து ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின்னர், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நேராகவோ, அல்லது அரேபிய, எகிப்திய இடைத் தரகர்கள் வழியாகவோ, உரோமானியர் பெற்றுக் கொண்ட வேறுபிற எண்ணற்ற இந்தியப் பண்டங்கள் பற்றிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளன. இப்பொருள்களின் வணிகப் போக்குவரத்து, மேலும், பழமைவாய்ந்த காலத்திலிருந்தே வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தைச் சேர்ந்த அகச்சான்று எதுவும் நம்மிடையே இல்லை. இந்திய வாணிகம், அப்பழங் காலத்தில் நடைபெற்றது அரேபியாவுடனும், கிழக்காப்பிரிக் காவுடனுமாம். அது பண்டமாற்று முறையிலேயே நடை பெற்றது. தங்கள் பண்டங்களுக்கு மாற்றுப் பொருள்களாக, இந்தியர்கள், பொன், சாம்பிராணி, குங்குலியம், நறுமணப் பொருளுக்குப் பயன்படும் பிசின், ஒட்டு மரப்பிசின் ஆகியவற்றைப் பெற்றனர்.
இந்திய வணிகப் பண்டங்கள், சோமாலிக்கண்ணதான, ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கும், ஸொகொத்ர (Socotra) தீவுக்கும், அனைத்திலும் மேலாக, அராபிய இந்திய வணிகர்களின் சந்திப்பு இடமாகவும் பிற்காலத்தில், கிரேக்க வணிகர்களும் வந்து சந்திக்கும் இடமாகவும், வளம் மிக்க, செல்வச் சிறப்பு வாய்ந்த இடமாகவும் அமைந்த அராபிய நாட்டு ஏடனுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. திருவாளர் வார்மிங்டன் குறிப்பிடு வது போல், சோமாலிச் சந்தை வணிகர்களாம் அராபிய ஆப்பிரிக்க மக்கள், ஸ்பீசெஸ் (Spices) முனையை மையமாகக் கொண்ட, இந்திய, அராபிய, ஆப்பிரிக்கக் கப்பல் போக்குவரத்து மூலம், கேம்பே (Cambay) இந்தியர்களோடு, நெடிது, நீண்ட வணிகப் போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தனர் (J.R.A.S. 1910 Page: 13).
ஏலமும், மற்றும் பிற சீன நாட்டுப் பண்டங்களும் இந்தியக் கப்பல்களில் மேற்காசியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தனவாகவே, இக்கால கட்டத்தில், கொரமண்டல, மலபார் கடற்கரைகள், சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம், வழக்கற்றுப் போகவில்லை என உறுதியாகக் கூறலாம்.
8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை
காத்யாயனரும் பதஞ்சலியும் :
பாணினியின் "அஷ்டாத்யாயீ' குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அதாவது உரைவிளக்கம் எழுதிய காத்யாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ் லெக்ஸிகன் துணை ஆசிரியர் திருவாளர். பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்யாயனார், ஒரு தென்னிந்தியர் ஆவர். அக்குறிப்பு பின்வருமாறு. 'பாணினி அவர்களின் அஷ்டாத்யாயின் வார்த்திக ஆசிரியரான வரருசி (காத்யாயனரின் இயற்பெயர்), ஒரு தென்னாட்டவர் என்ற உண்மை, தென்னாட்டவர், வியாகரண பாஷ்யகாரர் ஆகிய பதஞ்சலியின் தந்திர வடிவங்களில் விருப்புடையவராவர்: (பிரியதத்தித தாக்ஷிணாத்யாஹ) சொல்லும் அதன் பொருளும், அவற்றின் தொடர்பும் நிலை பேறுடையவாயின், அச்சொல், அப்போது உலக வழக்கில் உள்ள பொருளில் வழங்கப்படுமாயின், இலக்கண அறிவு. "லொகவெதெக" என்பதை ஆள்வதற்குப் பதிலாகத் "தத்திதப்ரத்யய'த்தைப் பயன் கொண்டு வரருசி , 'லௌசீகெ வதிகெசு' என்பதை ஆண்டுள்ளார் எனக் கூறும் மஹாபாஷ்யத்தின் முதல் ஆனிகாவில், அபூர்வதர்மம், தியாகதர்மம் குறித்த சரியான சொற்களை ஆளுவதில் விதிமுறை வகுக்கிறது (சிந்த்ஹே சப்தார்த்ஹ சம்பந்திஹே லொகதொரத்ஹப்ரயுக்த சப்தப்ரயொகெ சாஸத்ரென தர்ம நியமஹ யத்ஹா லெளகிகவைதிகெசு) என்ற அறிவிப்பிலிருந்து உண்மையாகிறது. ஒரு சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் மரபே, தென்னிந்தியாவில் உருவாகிவிட்டது. பாணினி நன்மிகச் சேயதான காந்தார் நாட்டில், எழுதிய இலக்கணத்தை அவர்கள் கற்றுத் தெரிந்தனர். அந்நூலின் பொருளுக்கு மேலும் விளக்கம் ஊட்டும் உரைகளை எழுதுமளவு தேர்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்ய இதுவே போதுமானது.
காத்யாயனர், ஒரு தென்னாட்டவராகவே, சமஸ்கிருத இலக்கியங்களில், ‘'பாண்ட்ய ‘’, “சொட'’, “கெரள” என முறையே திரிந்து வழங்கப்படும் “பாண்டிய’, “சோழ”, “சேர” என்ற சொற்கள் பாணினியால் ஆராயப்படவில்லை என்பதை உணர்ந்து, அவற்றின் சொல் அமைப்பு குறித்து, விதிமுறைகளை வகுக்க முனைந்தார். ‘'வழிவழி மரபில் வந்தவர் எனும் பொருள் உடையதான ‘அஞ்” என்ற விகுதி, ஒரு சொல்லின் ஈற்றில் வந்து, அவ்வாறு வருவதால் ஒரு நாட்டினைக் குறிப்பிடும் அதே நிலையில், சத்திரிய இனத்தைச் சேர்ந்த, ஓர் அரசமரபையும் குறிப்பிடும்” எனக் கூறும் ஒரு விதியினைப் பாணினி அவர்கள் இயற்றினார்கள் , [ஜளபத சப்தாத் சத்திரியாத் “அஞ்” (அஷ்டாத்யாயீ 4 : 168)] இவ்விதி, போதுமான பொருள் விளக்கம் உடையதல்லதாகவே, காத்தியாயனர், பல துணைவிதிகளை இணைத்தார் : அவற்றுள் மூன்றாவது விதி, ‘'சத்திரிய அரச இனங்களையும் நாடுகளையும் ஒரு சேர உணர்த்தும் சொற்களைப் பொறுத்த மட்டில், அச்சொற்களை, அவற்றுள் அரசனை உணர்த்தவும் செய்ய வேண்டுமாயின், “மகன்” என்னும் பொருள் உணர்த்து வதான ஒரு விகுதி இணைக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது. (சத்திரிய சமான சப்தாஜ் ஜனபதாத்ஸ்ய ராஜ நியபத்யவத்') அவ்வகையில், பாஞ்சாலர் களின் அரசன் “பாஞ்சாலஹ்'’ என வரும். இவ்விதியும், பாண்டிய என்ற சொல் தோன்றுவதற்கான விளக்கம் தரவல்லதாகாது. ஆகவே, “பாண்டு” என்ற சொல்லைப் பொறுத்தமட்டில், ட்யன் என்ற விகுதி ஆளப்படும். அவ்வகையில் பெறப்படும் சொல் ‘'பாண்ட்ய’ என்பதாம் எனக்கூறும் வேறு ஒரு விதியினைக் காத்யாயனர் வகுத்தார். (பாண்டொர் ட்யன் வக்தவ்யஹ்” (பதஞ்சலியின் வியாக்கரண மகாபாஷ்யத்தின் திரு. கெயி லாரன்ஸ் அவர்களின் பதிப்பு : பகுதி : 2. பக்கம் 269) “சொட'’ மற்றும் வேறு சொற்களின் தோற்றம் குறித்துப், பாணினியின் வேறு ஒரு விதியினை மேற்கொண்டுள்ளார் காத்யாயனர். "காம்போஜ என்ற சொல்லுக்குப் பின்னர் ஈற்றுவிகுதி எதுவும் இல்லை " என்பதே அவ்விதி. இவ்வகையில், ஒரு நாட்டைக்குறிக்கும் "காம்போஜ" என்ற சொல்லிலிருந்து அதன் அரசன் பெயராம் "காம்போஜஹ" என்ற சொல் பெறப்படும். காத்யாயனர், இவ்விதியை, "காம்போஜ மன்றும் பிற சொற்களுக்கு இணைக்கும் "'லுக்' என்ற விகுதி சொட” மற்றும் பிற சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் விரிவுபடுத்தினார். (கம் பொஜா திப்யொலுக் வகனம் சொடாத்யர்த்ஹம்".) இவ்வாத்திகம் (விதி) சொடஹ், கதொஹ், சௌஹ் என்ற சொற்களின் தோற்றத்திற்கு வழி செய்வதாகப் பதஞ்சலி கூறுகிறார். இவ்வகையில், இவ்விரு சொற்களும் அந்நாடுகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து பெறப்பட்டன. ஆனால், பாண்ட்யா என்ற சொல் மட்டும், ஒரு நாட்டின் பெயராகவும் ஓர் அரச இனத்தின் பெயராகவும் ஒரு சேர வழங்கப்பெறும் பாண்டு என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்ற கருத்துடையவர் காத்யாயனரும், பதஞ்சலியும் எனத் தெரிகிறது.
மதுரை சூழ்ந்த நாட்டிற்கு அரசு வழங்கிய பழங்குடி இனம், பாண்டியர்" என அழைக்கப்பட்டனரே அல்லது பாண்டு என அழைக்கப்படவில்லையாதலின், இச்சொற் பிறப்பு முறை ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. உண்மை இயல்பு இதுவாகவும், இச்சொற்பிறப்பு முறைமீது, பாண்டு என அழைக்கப்படும் வடநாட்டு சத்திரிய இனம் ஒன்று தென்னாடு நோக்கிக் குடிபெயர்ந்து, தென்னாட்டிலும், இலங்கையிலும் பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற மிகப் பெரிய கோட்பாட்டினைக் காட்டிவிட்டார் திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள். [Carmichal Lectures : 1918 Page: 9-13)]
காத்யாயனரோ, பதஞ்சலியோ, பாண்டு என்ற சொல், ஒரு வடநாட்டு அரச இனத்தின் பெயர் என்று கூறவில்லை ஆளும் ஓர் அரச இனம், ஒரு நாடு இவற்றைக் குறிப்பதாதலே போதும். ஆளம் அரசர்கள் அனைவருமே சத்திரியர்களாகக் கருதப்பட்டனர் ஆதலன், பாலி மொழியில் "பண்டு" என வரும் "பாண்டு" என்ற சொல்லை, ஒரு சத்திரிய இனத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டதில் பதஞ்சலி பெரியதொரு பிழையினைச் செய்துவிடவில்லை. ஆனால், அதையே அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இனம் அல்லாத ஒரு வெளிநாட்டு இனத்தவர் படையெடுப்பினைக் கட்டிவிடுவது, முற்றிலும் தவறானதாகும், திருவாளர், டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், தம்முடைய கூற்றினை வலுப்படுத்துவதற்காக. மெகஸ்தனிஸ் அவர்களின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டப் பட்டதாகக் கூறப்படும் பொருளற்ற, பொருத்தம் அற்ற ஒரு கட்டுக்கதையினை வலிந்து புகுத்தியுள்ளார். எராக்லெஸ், இந்தியாவில் ஒரு மகளை ஈன்றெடுத்தார். அம்மகளை அவர், பண்டைய எனப் பெயரிட்டு அழைத்தார். அவளுக்குத் தெற்கு நோக்கி நீண்டு, கடல் வரையும் பரவியிருந்த நாட்டை அளித்தார். ஆங்கு, கப்பம் கட்டுவதில் தவறியவர்களை வற்புறுத்தித் திறை செலுத்தும் முறைமைப்பாடு உடையவரின் துணை அரசியார்க்கு எப்போதும் கிடைப்பதற்காக, ஒரு நாளைக்கு ஒரு சிற்றூர், அரண்மனைக் கருவூலத்திற்கான கப்பத்தைக்கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டு, ஆங்கு, அவள் ஆட்சிக்குட்பட்ட மக்களை, 365 ஊர்களுக்குமாகப் பங்கிட்டு அளித்தான்'’ எனக் கூறுகிறது அக்கதை . (Macrindle. Ancient India as described by * Megasthenes and Arrian. - Page : 159.)
இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகஸ்தனிஸ் அவர்களின், எதையும் நம்பும் ஏமாளித்தனத்தை உறுதி செய்யும் மற்றொரு கட்டுக்கதை யல்லது வேறு அன்று. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்திரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்ரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. மெகஸ்தனிஸ், அந்நாட்டைக் கேட்டறிந்திருந்தார், என்ற உண்மையை மட்டுமே, அக்கட்டுக் கதை உறுதி செய்யும். உண்மை நிலை இதுவாகவும், திரு. டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், எராக்லெஸ்ஸின் மகள் மதுரை ஆண்ட கட்டுக்கதையினை நம்புவது மட்டும் அல்லாமல், இந்தியக் கடவுள் இயல்புகளோடு முற்றிலும் - மாறுபடும் டியொனிஸொஸ்', 'எராக்லெஸ்" போலும் கிரேக்கக் கடவுள்களுக்குச் சரிசமமாக, இந்தியக் கடவுள்களை, யூகத்தின் மூலம், எத்தகைய அகச்சான்றும் இல்லாமல், ஆக்க முயன்று தோற்றுப்போன ஆசிரியர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதும் செய்துள்ளார். கிருஷ்ணனின் குழலிலிருந்து எழும், உள்ளம் உருக்கம் இசை, எரக்லெஸின், பருத்த கைத்தடித் தத்துவத்திற்கு எதிர் துருவம் போன்றதாகவும் திரு. பந்தர்க்கார், கிருஷ்ணனை எரெக்லெஸ்க்குச் சரிசமம் ஆக்கிப் பார்க்கிறார். மெகஸ்த னிஸ், முட்டாள்தனத்தின் முடிவுக்கே சென்று, மத்ய தேசத்தில் இருந்தவனாக கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹமியிரரால் உறுதி செய்யப்பெறும் பாண்டஸ் . என்பான் அவ்வராஹமிஹிரரின் காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்கு, ஒரு பேரரசர் மரபினையும், குறுநிலத் தலைவர் மரபினையும் நிறுவினான் என்பதை இன்னமும் நம்புகிறார், இது ஒரு வஞ்சனைக் கற்பனை.!
தமிழர்களால் எப்போதும் மூவேந்தர் என அழைக்கப்படும் சோழ, சேர, பாண்டியர் ஆகிய தமிழ் அரசர் மூவரும் உலகம் தோன்றிய நாள்தொட்டு, அல்லது, சரியாகக் கூறுவதாயின், தமிழ்ப்புலவர்கள் தமிழரசர்களைப் பாடிப் பாராட்டத் தொடங்கிய நாளிலிருந்தே, தமிழ் நாட்டில் அரசோச்சியிருந்தனர் என்பதே, வரலாற்றுக்கு முந்திய மரபு வழிச் செய்தியாம், பல்வேறு அரசகுலங்களைத் தோற்றுவித்ததாகக் கூறப்படும் ஞாயிறு, திங்கள்களிலிருந்து தாங்கள் வந்தவர்களாக உரிமை கொள்ளுமாறு மிகமிகப் பிற்பட்ட காலத்தில், தமிழரசர்களைப் பிராமணர்கள் தூண்டிவிட்டனர். அந்நிலையிலும், அவர்கள் வேற்று மண்ணுக்கு உரியவர்களாகக் கருதப்படாமல், தமிழ்நாட்டு அரசர்களாகவே மதிக்கப்பட்டனர். மேலும், சோழர், சேர, பாண்டியர் என்ற சொற்கள், தமிழ்ப் பழங்குடிப் பெயர்களாம். காவிரிப் பள்ளதாக்கில் வாழ்ந்து, அந்நிலத்துக்குரியதாம் ஆத்திமலரைத் தங்கள் குலச்சின்னமாகக் கொண்ட சோழர் உழவர்களாம் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவராவர். காவிரிப் பேராற்றின் துணை நதிகளின் தோன்றுமிடம் தொடங்கி, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை வரையான, தன் மண்ணுக்குரிய மரமாகப் பனையைக் கொண்டிருக்கும், மலைநாட்டு மக்களாம் குறவர் இனத்தைச் சேர்ந்தவர் சேரர், பனையைத்தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தனர். பாண்டியர், வேம்பினைத் தன் மண்ணுக்குரிய மரமாகவும், மீன்பிடி தொழிலைக் குலத்தொழிலாகவும் கொண்ட, இந்தியாவின் தென்கோடி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களாம் பரதவர் இனத்தவர் ஆவர். கயலும், வேம்பும் அவர்கள் குல அடையாளங்களாம். இன்றைய குறவர், பண்டைக் குறவரினும், நிலையால் தாழ்ந்துவிட்ட வழிவந்தவராதல் வேண்டும்) (பழந்தமிழ் இலக்கியங்களில், பரதவர் என்ற சொல், கடலோடிகள் மற்றும் பாண்டி நாட்டுத் தலைவர்கள் என்ற இரு பொருளும் உடையதாகும். உ.ம்: “தென்பரதவர் மிடல்சாய'’ (புறம்: 378-7)” தென் பரதவர் பேரேறே” (மதுரைக் காஞ்சி : 144) இப்பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களும், தொழில்களும், அவர்கள் வாழ்ந்த சுற்றுச் சூழல், அவர்கள் மீது செலுத்திய ஆட்சியின் நேரிடைப் பயனாம். ஆகவே, அவர் தம் இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு வெளியே உள்ள ஓர் இடத்திலிருந்து வந்தவர்களாக அவர்களைக் கொண்டு வரக் காட்டும் கற்பனை மாடங்கள் அனைத்தும், நேர்மைக்கு மாறான காரணங்களின் எடுத்துக்காட்டுக்களாம்.
மகதப் பேரரசு
கி.மு. 400 அளவில், மகாபத்ம நந்தன், மகதத்தின் அரசன் ஆனான். அவன் சத்திரியர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டான். அவன் காலத்திற்குப் பிறகு சூத்திரர் வழிவந்தவரே, நாட்டில் சிறந்தோங்கியிருந்தனர். அவன் இந்தியா முழுமைக்குமான தனி அரசன் ஆனான். பேரரசின் ஒரே வெற்றிக் கொடைக்கு உரியவன் ஆனான். (சர்வ சத்ராந்த கொன் பஹ் தஹ் ப்ரப்ற்தி ராஜானொ, ப்ஹவிஷ்யஹ் சூத்ர யொனயஹ் எகராத் ச மகாபத்ம எகச் ஹத்ர ஹ்') (Pargiter : Dynasties of Kali Age : Page 25) அந்நாள் முதல், மகத அரசர்கள், ஆரிய நாகரீகத்திற்கு அந்நாள் வரை அடிமைப்படாத மக்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் பெருநிலப்பரப்பு முழுமைக்கும் தனிப்பேரரசர்களாக உரிமை கொண்டனர். தம் உரிமையை நிலைநாட்ட, தட்சிண பாரதத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பு எதையும் கேட்டிலம் ஆதலின், மகதப் பேரரசின் தனி ஆட்சி உண்மை , அசோகன் இறக்கும் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. கலிங்கத்தில், நந்தர்களால், ஒரு பாசனக்கால்வாய் வெட்டப்பட்டிருந்தது . ஆதலின், ஏனைய மாநிலங்களோடு கலிங்கமும், மகத அரசின் கீழ் இருந்தது. ஆகவே, அசோகன், கலிங்கத்தின் மேற்கொண்ட போர், உள்நாட்டுக் கலவரம் காரணமாகவே ஆதல் வேண்டும். அசோகன் அரச ஆணையின் கல்வெட்டுப் படிகள், ஏனைய இடங்களோடு, மைசூர் நாட்டைச் சேர்ந்த சித்தபுரம், ஜதிங்க ராமேஸ்வரம், பிரம்மகிரியிலும், நைஸாம் மாநிலத்தில் உள்ள மஸ்கியிலும், நன்மிக அண்மைக் காலத்தில் கர்னூல் மாவட்டத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது, வடநாட்டுத் தலையாய உள்நாட்டு மொழி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு நீங்கிய தென்னிந்தியர்களால் பொருள் உணரப்பட்டிருந்தது - என்பதையே உணர்த்துகிறது. (இன்று, அடிப்படையில் ஒன்றாகவே கருதப்படும் இந்துஸ்தானி அல்லது இந்தி அல்லது உருது இந்தியாவின் பெரும்பகுதியில் பொருள் உணரப்படுகிறது. இது, வழக்கமாக நம்புவது போல் முகம்மதிய சுல்தான்களின் ஆட்சியால் நேர்ந்தது அன்று. மாறாக, வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில், பல நூறு ஆண்டுகாலமாக இருந்து வந்த, வாணிகம், சமயம், இலக்கியம் ஆகிய துறைகளிலான தொடர்பே காரணமாம்) அவ்வரச ஆணைகள், புலமை சான்றவர்க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டவை அன்று. அதுவாயின், அவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது என உய்த்துணர்ந்து கொள்ளலாம். எழுத்தைப் பொறுத்தமட்டில், அசோகன் எழுத்துகள் எனப்படும் அதே எழுத்துகள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டது. பண்டைக் காலத்தில் வட இந்தியா, தென்னிந்தியாவுக் கிடையேயான போக்குவரவு பெரிதாம். அப்போக்குவரவு, மகாபத்மநந்தன் நாடு முழுமைக்குமான ஒரே அரசன் (ஏகராட்) ஆகிவிட்டான். மகதம் பெற்றிருந்த இவ்வாட்சி மேலாண்மை, மெளரியப் பேரரசர் காலத்தும் தொடர்ந்து இருந்து வந்தது என்ற உண்மை நிகழ்ச்சிகளால், மேலும் பெருகிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது.
கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக் கொளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல் குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தட்சிண பாரதத்திலிருந்து பெருமளவில் வந்தன என்று கெளடில்யர் கூறுகிறார். தட்சிண - பரதத்தில் பற்பல சுரங்கங்கள் வழியாக, மிகச் சிறந்த வாணிகப் பொருள்கள் பெருமளவில் கிடைக்கும் நகரங்கள் வழியாக, பல்வேறு வகை மக்களை ஆங்காங்கே கொண்டுள்ள வழியாகச் செல்லும், நீண்ட வழிப்பயணம் செய்வதற்கு எளிமையானது ஏனைய வழிகளிலும் சிறப்பு வாய்ந்தது”. ("ஸ்த்ஹல பாத பி ஹை மவதொ. தஷிண பத்ஹாஎக்ரெயான்)
ஹய்த்யஸ்வ கந்த்ஹ தந்தாஜின் ரூப்ய ஸ்வர்ன பன்யாஹ் சாரவத்தராங் இத்யாசார்யஹ்
நெதி கெளடில்யஹ் கம்பலாஜினாஸ்வபன்ய வர்ஜாஹ் சாங்ஹவஜ்ரமணிமுக்தாஹ். சுவர்ணபண்யாஸ்கரப்ஹத்ரா. தஷிணாபத்ஹே .
தக்ஷிணாபத்ஹே பி பாஹுகனிஹ் சார்பண்யஹ் ப்ரசித்த கதிர் அல்பவ்யாயா மொ வா வணிக்பதஹ ஸ்ரெயான் (அர்த்த சாஸ்திரம். ஜாலி மற்றும் ஸ்கிமித் வெளியீடு. பகுதி 2 : 12 பக்க ம் 30 - 34)
இது பண்டங்களைக் கொண்டு செல்லும் பழைய முறையினைப், புகைவண்டித் தொடர்களும், லாரிகளும், அழித்து விடாமல் விட்டு வைத்திருக்கம் இடங்களில் இன்றும் நாம் காண்பது போல், 'கிரீச்' எனும் ஒலி ஓயாது எழ, குமரி முதல் பாடலி வரையான, சீர்மிகு , சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் கட்டைவண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம் நடைபெற்ற மிகப் பெரிய வாணிக நிலை பற்றிய காட்சியைக் காட்டுகிறது. வேறு ஓர் இடத்தில் அரசன் கருவூலத்திற்குச் செல்லும் அரும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடும்போது, கெளடல்லியர், தாம்பரபரணி, பாண்டிய காவடகா, மற்றும் சூர்ணா (இது, பிற்காலத்தே, உரையாசிரியரால், முரசி” அதாவது கேரள நாட்டில் உள்ள முசிறிக்கு அணித்தாக ஓடும் ஆறு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது) ஆகிய இடங்களிலிருந்து வந்த ரத்தினங்கள் (அர்த்தசாஸ்திரம் - 11 26:2) பல்வேறு வண்ணங்களில் ஆன வைடூரியங்கள் (மேற்படி 26:30 ) ஓர் உரையாசிரியர் இது, ஸ்திரீராஜ்யத்திலிருந்து அதாவது மலபாரிலிருந்து வந்ததாகக் கொள்வர்) பட்டை தீட்டப் பெற்ற மாணிக்கக்கல்லின் மேனி போல் மெத்தென்றிருக்கும். கருமை நிறம் வாய்ந்த பெளண்ட்ரகக் கம்பளங்கள், (அர்த்த சாஸ்திர மொழி பெயர்ப்பாளராகிய காமா சாஸ்திரி யார் இவைஇ பாண்டி நாட்டுச் செய்பொருள்கள் என்கிறார்) (பக்
90). மற்றும் மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (Arthasastra : Jolly and Schmidt. ii. 26.119)
சந்திரகுப்தனும் தென் இந்தியாவும் :
கி.மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் உலகம் அறிந்த நனிமிகு புகழ்வாய்ந்த சந்திரகுப்தன், ஒரு நூற்றாண்டின் கால்கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப் பேரரசர் பலரையும் போலவே, வைராக்கிய மாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து சமணத்துறவியாகி பத்ரபாகுவின் 12,000 மாணவர்களில் ஒருவராகிவிட்டான். தன் குருவோடும், தன்னொத்த மாணவர்களோடும், மைசூர் மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவண பெல்கோலாவைக் கால்கடுக்க நடந்து அடைந்தான். ஏனையோர் ஆங்கிருந்து பாண்டிய, சோழ நாடுகளுக்குச் சென்றனராக, பத்ரபாகுவும், சந்திரகுப்தனும் அங்கேயே தங்கிவிட்டனர். ஆங்குப் பிச்சைக்காரனாக மாறிவிட்ட அப்பேரரசன், தன் குரு இறக்கும் வரை, அவருக்குத் தேவையானவற்றை அளித்துப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். சந்திரகுப்தன், தன் ஆசிரியருக்குப் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தான். பின்னர்த் , தான் உயிர் வாழ்ந்த பயன் கிட்டிவிட்டது : தன் உடல் தனக்கு இனிப் பயன் இல்லை என உணர்ந்ததும், சமண சமயமுறையாம், பசியோடிருந்து வடக்கிருந்து உயிர் துறத்தலாம் “சல்லெக்ஹனம்” மேற்கொண்டு உயிர் துறந்தான். ஒரு பேரரசின் வாழ்க்கை , மறைவுகள் குறித்து நாம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை, ஆனால், இப்போது சாதுக்கள் என அழைக்கப்படும் ஆயிரக் கணக்கானவர், இன்று வழிபாட்டிடங்களுக்குச் சென்று திரும்பும் பல்லாயிரவர் போல வடநாடு விடுத்துத் தென்னாடு வந்தது பற்றியே கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இச்சமண முனிவர்கள் தமிழ்நாடு மலைச்சரிவுகளில் உள்ள இயற்கையான குகைகளில் வாழ்ந்து, படித்துப் பொருள் காண்பதன் மூலம், தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு ஒளிகாட்டும், கல்வெட்டுக்களை அக்குகைகளில் விட்டுச் சென்றுள்ளனர்.
பெளத்த நாடோடிகள்
சமணர்களைப் போலவே, பெளத்தர்களும் தம் யோக நெறியை அமைதி குலையாமல் பயில்வதற்கு ஏற்ற தனிமை இடங்களைத் தேடி , தென்னிந்தியாவுக்கு அலைந்து திரிந்து வந்து சேர்ந்தனர். அவர்களும், இயற்கைக்குகைகளில் வாழ்ந்து கல்வெட்டுக்களை விட்டுச் சென்றனர். பல இடங்களில், குறிப்பிட்ட ஒரு குகை, சமணர் வாழ்ந்ததா, பெளத்தர் வாழ்ந்ததா என்பதை அறிந்துகொள்வதில் சிறிது சிரமமே. அது போலும் குகைகள், பாண்டிய, சேர நாட்டுப் பல்வேறு மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த சந்நியாசிகளின், தொடக்ககால இக்குடி பெயர்ச்சிக்கு அரசியலோ, சமயம் பரப்பும் ஆர்வமோ, காரணங்களாகா. பண்டைக்கால ரிஷிகளைப் போலவே, கி.மு. ஐந்து மற்றும் நான்காம் நூற்றாண்டு புத்த பிக்குகளும், அரசர்களின் நிறைமனத்தோடு படாத ஆதரவிலிருந்தும், துறவறச் சந்நியாசிகளை வரையறையின்றி மகிழ்விப்பதன் மூலம் மிகப் பலவாய புண்ணியத்தையும், மலிவான தகுதிப்பாட்டையும் பெறத் துடிக்கும், பொறுப்பற்ற மாணவர்களின், பொறுக்கவொண்ணாப் போலிப் புகழ்ப்பாட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளியேறினர். சமணர்களும், பௌத்தர்களும் முறையான மனப்பயிற்சியினை யோக முறை மூலம், மேற்கொள்ளுதல் வேண்டும்; அதன் வெற்றிப் பயிற்சிக்குத் தனிமை தேவை. சமணர்களுக்கு, இவற்றிற்கு மேலாக, சல்லெகனம்" என அழைக்கப்படும் ஒருவகைத் தனிச்சிறப்பு வாய்ந்த முறையாம் வடக்கிருந்து அமைதியாக உயிர் விடுதற்கு ஏற்புடைய மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்ட உறைவிடமும், தேவைப் பட்டது. பண்டைக்காலத்தைச் சேர்ந்த இம் முனிவர்களுக்கு, உயிரைக் காக்கத் துடிக்கும் பேராசை எதுவும் இல்லை. மகாவீரரும், புத்தரும் மக்களைப் பெருங்கூட்டமாக வானுலகிற்கு அனுப்புவனவாகச் சமயங்களைக் கருதவில்லை. கட்டாயமாக்கப்பட்ட பிறப்பு, மறுபிறப்பு எனும் வாழ்க்கைச் சக்கரத்தலிருந்து தனிமனிதனைக் காக்கும் மனப்பியற்சி முறைகளைச் சந்நியாசிகளுக்குக் கற்பித்தலே சமயமாம் எனக் கொண்டனர். இவ்வறவுரையாளர்கள் உலகத்தவர்க்கு உலக வாழ்க்கைக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. துறவிகளுக்குத் துறவற நெறிக்கே விடுத்தனர். அவர்கள் தொழுகை இடங்களை நிறுவினார் அல்லர். நோன்பிடங்களையே கண்டனர். அவர்கள், மாணவர்களின் மனத்தைச் சமயக் கருத்துக்களால் நிரப்பினாரல்லர். மாறாக அவர் உள்ளங்களை, உயிர் உணர்ச்சிகளைத் தூண்டவல்ல அறவுரைகளால் கிளர்ச்சி பெறச் செய்தனர். எப்பொழுதும் ஓயாது இயங்கிக் கொண்டு இருக்கும் அலையலையான அகக்கிளர்ச்சிகள் அடங்கிப்போக, அவற்றின் இடத்தைத் தன்னை மட்டுமே உணரும் நிலைபேறுடைய மனவுணர்வுக்குவியல் வெற்றி கொண்டுவிட்டதோ, எப்பொழுது, கடுமையான புலனடக்க நெறி மேற்கொண்டு, தன் உயிரின் வீடுபெற்றிற்காம் விருப்பம், உலகத்தவர்க்குச் சமயக் கொள்கைகளை அவர் உள்ளம் ஈர்க்கும் சொற்களால் விளக்கி, அவ்வுலகத்து உயிர் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் குப்புறத் தள்ளப்பட்டதோ, எப்பொழுது, உணர்ச்சிக்கு உள்ளாகி, ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் உயிர், மாறா நியதிகளாம், வலிய இரும்புச் சங்கிலிகொண்டு சிறை செய்யப்பட்டுவிட்டதோ, எப்பொழுது, புத்தர் கூறுவது போல மனத்தொடுபடும் கோட்பாடு, கண்ணொடுபடும் கோட்பாட்டால் கெட்டு மங்கிப் போய்விட்டதோ, எப்பொழுது சாங்கியர் கூறுவது போல் புத்தியின் ‘அத்யவசாயம்” மனத்தின் ‘'சங்கல்பவிகல்பங்களால், ஒளிகெட்டு மங்கிப் போய்விட்டதோ, அப்பொழுதே, ஜீனர், புத்தர்களின் போதனைகள் சமணமாகவும், பெளத்தமாகவும் தாழ்நிலை உற்றுவிட்டன: உற்றன : இந்திய மக்களுக்குப் பெருங்கேடாக, மனிதனின் தன்னை மட்டுமே மதிக்கும் அகவுணர்வு மேலும் இரு சமயப் பிரிவுகளை உருவாக்கி விட்டது. அந்நிலையே பௌத்தர்களின் பேரவைகள் கூடலாயின. ஏனைய மக்களின் உயிர்களைக் காக்கும் சமயத்தின் பெயரால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வேட்கையால் உந்தப்பட்ட புத்தத் துறவிகள், நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டனர். முந்திய தலைமுறை களைச் சேர்ந்த புத்த பிக்குகள் போல் அல்லாமல் போர்க் குணம் வாய்ந்த இப்புத்தத் துறவிகள் தங்கள் சமயப் பிரசாரத் திற்கு மகதப் பேரரசின் துணையையும் பயன் கொண்டனர்.
அசோகனும் தமிழ்நாடும்
ஆனால், அசோக வர்த்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, மற்றும் கேரள புத்ரர்களை "அந்த" அதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13வது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றி கொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் தர்மமாம் பல்வேறு வகையான நன்னெறிகளை, மக்களுக்குப் போதிக்கும் சமயத் தூதுவர்களைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதுதான், தர்மவிஜயம் என்பது. இது பண்டைக்கால், இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர் இருதிறத்தவராலும், பல்வேறு நாடுகளுக்குப் பெளத்த சமய போதனையாளர்களை அனுப்பியதாகத் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று, அசோகன், ஒருவர் விடாமல் மக்கள் அனைவர்க்குமான தன் உபதேசங்களைப் 'பெளத்த சத்யானி" என்று எக்காலத்தும் பெயரிட்டு அழைத்ததில்லை. மாறாக, எச்சமயத்தோடும் சாராததான "தர்மம்" என்றே எப்போதும் பெயரிட்டு அழைத்துள்ளான். இரண்டாவது, பௌத்த மதம் பரப்பும் புத்த சந்நியாசிகளைப் பல நாடுகளுக்கும் அனுப்பிய தன் செயலைப் பலரும் அறியச் செய்ய விரும்பியிருந்தால், உஜ்ஜைனியில் தான் ஆளுநராக இருந்த போது மணந்து கொண்ட தேவி வழிப்பிறந்த தன் மகன் மகிந்தனைப் புத்தமதம் பரப்ப ஈழ நாட்டிற்கு அனுப்பியதைக் கல்வெட்டில் பொறித்து இருப்பான். ஆனால், இச்செய்தியை மகாவம்சந் தான் நமக்கு அறிவிக்கிறது. அசோகன், தூதுவர்களை, தர்ம விஜயத்திற்கே அனுப்பினனாக, பல்வேறு நாடுகளுக்குப் புத்தசமயப் பிரசாரகர்களை, மூன்றாவது புத்தப் பேரவை தான் அனுப்பியது. அசோகன், பிராமண இல்லறத்தார், துறவறத்தார், சமய முனிவர்களை மதித்தது போலவே, பெளத்த முனிவர்களையும், மதித்தான் என்பதில் ஐயம் இல்லை, ஆனால், இது பெளத்த சந்நியாசிகளைச் சமயப் பிரசாரகர்களாக அனுப்பியதாகப் பொருளாகாது. இப்பொருள் குறித்தவரை, பெளத்த வரலாற்று அட்டவணை யாகிய மகாவம்சம், ஒருதலைப்பட்ட சான்றே ஆகும். ஆனால், நம்முடைய ஆய்வு அப்பொருள் பற்றியதன்று. அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து, அசோகன் காலத்தில், அவனுடைய முந்தையோர் காலத்தைப் போலவே, தமிழ்நாடு, வட இந்தியாவோடு சுறுசுறுப்பான மிகப் பெரிய போக்கு வரவினைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்வது ஒன்றே போதும்.
இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர்கள், மெளரியப் பேரரசு பற்றியும், பிற்காலத்தே குப்தர்களில் முடியாட்சி பற்றியும் பரவலாகப் பேசுகின்றனர். பேரரசு, பேரரசைச் சார்ந்த எனப் பொருள்படும் (Empire: Imperial) என்ற இவ்வாங் கிலச் சொற்கள், பண்டைக்காலத்தில், இந்திய நாடுகள் ஒன்றோடொன்று கொண்டிருந்த அரசியல் உறவு பற்றி மிகப் பெரிய தவறான கருத்தினையே உணர்த்துகின்றன. இந்திய வரலாற்றில், இவ்வரலாற்றின் போக்கில், தவறான கொள்கையினை ஏற்படுத்தாமல், “எம்பயர்’ (Empire) என்ற சொல்லை ஆள்வது இயலாது. பேரரசு (Empire) என்ற அச்சொல் உணர்த்தும் உள்ளார்ந்த பொருள் அத்தகைத்து. தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் அமைதி நிலைநாட் டால், உரோம் நாட்டுக் குடியுரிமை உரோம் நாட்டுச் சட்டம் ஒழுங்கு முறைகளை மெல்ல மெல்ல விரிவாக்கல், இலத்தீன் மொழியைப் பரப்புதல் ஆகிய இவையே உரோமப் பேரரசு என்பதன் பொருளாம். சட்டம் ஒழுங்கு நிலையில் பிரித்தானியர் முறைகளை நிறுவுதல், நிர்வாகத்தில் ஆங்கிலத்தைப் பயன் கொள்ளுதல், ஆங்கிலமுறைப் பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் பரப்புதல், ஆங்கிலேயர் வர்த்தக முறையின் மிகப் பெரிய விரிவாக்கம், கிறித்துவ சமயப் போதனைகளை மெல்ல மெல்லத் தொடங்கல், பிரித்தானிய நாட்டு மக்களாட்சி முறையின் மெதுவான வளர்ச்சி ஆகிய இவையே பிரித்தானியப் பேரரசு என்பதன் பொருளாம். பண்டை நாட்களில், இந்தியாவில் பேரரசு நிறுவல் என்பது, இவற்றில் எதுவும் அன்று. மரபு வழிபட்ட 56 இந்திய சிறுநாடுகளும், பிராமண ஆசிரியர்கள், அவ்வப்போது எடுத்து விளக்கிக் கூறும் தர்ம சாஸ்திரப்படியே பெரும் பாலும் ஆளப்பட்டு வந்தன. பேராற்றல் வாய்ந்த பேரரசன் ஒருவன், ஒருதனி ஆழி உருட்டுவோன், உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வோன் , உலகெலாம் ஆள்வோன்" , எனக் கூறப்படும் நிலையிலும், அவன் ஆட்சிக் கீழ் அடங்கிய நாடுகளில் ஆட்சி நிர்வாக முறைகளில், அமைச்சர் புரோகிதர் உள்ளிட்ட அரசவை ஐம்பெருங்குழுக்களில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை. போர்க்காலனிகள் எதுவும் ஆங்கு ஏற்படுத்தப்படுவதில்லை. வெற்றி கொண்ட பேரரசனின் சிறுபடைப் பிரிவும் ஆங்கு நிறுத்தப்படுவதில்லை. பெருவீரன் ஒருவன், எண்ணற்ற நாடுகளுக்கும், தன்னைத் தலைவனாகக் கூறிக் கொள்வதும் ஆகிய இவையே; அச்சொற்றொடர் களுக்குப் பொருளாம். தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது அசுவமேதயாகம் இயற்றுவதன் மூலமே பொதுவாக மேற்கொள்ளப்படும். பொதுவாக, யாகத்திற்கு முன்பாகப் படையெடுப்பு எதுவும் நிகழ்வதில்லை. ஆனால், யாகத்தில் பலி கொள்ள இருக்கும் குதிரையை, அவ்வரசனின் மகன், அல்லது மகள் வயிற்று மகன் பொறுப்பில் கட்ட விழ்த்து விடுவதும், அவ்வேள்வி செய்யும் அரசனின் மேலா திக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசன் நாட்டிற்குச் சென்ற அக்குதிரை ஆங்கு அவனால் கட்டப்பட்டு விடுமாயின், அது மீட்பதற்குப் போர் நிகழ்வதும் மட்டுமே வேள்விக்கு முன்பாக நிகழும். ஆனால் பேரரசு ஆட்சி என்பது தனி அரசன் ஒருவனின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்ததே அல்லது, ஓர் அரச இனத்தின் செயலே அன்று. ஆகவே, இந்தியப் பேரரசுகள் குறித்துக் கூறப்படும் பொதுவான கருத்துக்கள் எல்லாம், குறுகிய காலகட்டத்தில் நிற்பன; பொருள் அற்றன.
அசோகனுக்குப் பின்னர் அரியணை ஏறியவரெல்லாம், அரசியல் நெறியாலும், ஒழுக்க நெறியாலும் வலுவிழந் தவர்கள்!. ஆகவே அவன் மறைவினை, மகதம் போன்ற பிற நாட்டு மன்னர்களின் புகழேற்றம் இடங் கொண்டுவிட்டது. அத்தகைய அரசர்களுள் ஒருவன், கலிங்க நாட்டுக் கார்வேலன். அவனுடைய கல்வெட்டுக்கள், அவன் நாட்டிற்கும் மதுரைக் கும் இடையில் நடைபெற்ற வாணிகத்திற்குச் சான்று பகர்கின்றன.
கலிங்கமும் தென் இந்தியாவும்
விதி, எப்போதும் போல விளையாடிவிடவே, அசோகன் கடைப்பிடித்த தர்மம், அவன் இறப்பிற்குப் பின்னர், அவன் பேரரசைச் சிதறுறச் செய்துவிட்டது. அவ்வகையில் தன்னாட்சி பெற்ற நாடுகளில் கலிங்கமும் ஒன்று. அதன் அரசன் காரவேலன் (கி.மு. 200) பாண்டி நாடுவரையும் சென்று பரவிய பெரும் புகழ்ச்சிக்கு உரியவனாகிவிட்டான். அங்கிருந்து குதிரைகள், இன்தினங்கள், முத்துக்கள், நீலக்கல் மட்டுமல்லாமல், அவற்றைச் சுமந்து வந்த யானைகளும் கப்பல்களும் அவனுக்குப் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தன். குதிரைகளையும், யானைகளையும், மாணிக்கங்களையும் ஏற்றிக் கொண்டு, வியத்தகு யானைக் கப்பல்களும் கொண்டு வரப்பட்டன. முத்துக்கள், நீலமணிகளோடு இவற்றையும் பாண்டிய அரசன் அனுப்பிவைத்தான். (அப்ஹுத அசரியம் அத்தினாவன் பாரிபுரம் யு(ப்) தென்ஹ ஹ ஹதி. ரத்ன (மா) நிகம். பண்டராஜா எதானி அனெகானி முதமணிரத்னாளி ஹராபயதி இத்ஹ சத் ச) (ஹதிகும்பா கல்வெட்டுக்கள் ; J.B. 0. R. S. iv. 401)
9. வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்
பாக்களின் தோற்றம் :
பாக்கள், பொதுவாக, கடவுள்களையும், காவலர் களையும் பாராட்டும் புகழுரைகளோடு பிறந்தன. எப்பொழுதெல்லாம், வழிபாட்டு நெறி ஒன்று நிறுவப்படுகிறதோ, அல்லது ஓர் அரசகுலம் தோன்றுகிறதோ, பாணர் முதலாம் புகழ் பாடுவார் அவற்றைப் பாராட்டிப் பாடுவதன் மூலம் அக்கடவுள்களின் அக்காவலர்களின் அரவணைப்பைப் பெறத் தொடங்கினர். வேதங்கள் போலும் சமயப் பாக்களின் திறனாய்வை விடுத்துப் பார்த்தால், எந்த ஒரு மொழியிலும், சமயச்சார்பற்ற பாட்டு, அம்மொழி பேசும் அரசன், பாராட்டத்தக்க போர் வெற்றிகளைப் பெறும்போது பாடத் தொடங்கப் பெறுகிறது என முடிவு கொள்ளலாம். பாணர் முதலாம் இரவலர்கள், இறைச்சி மீன் பாலும், இனிய மதுவின் பாலும் தணியா வேட்கையுடையராய், எப்போதும் அரைப்பட்டினி யோடிருப்பர். காதல், போர் ஆகிய துறைகளில் மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் பெறும் பெஞ்செயல்களைப், பாக்களில் வைத்துப் பாராட்டுவதன் மூலம், இறைச்சியையும், இனிய மதுவையும் பெற முயற்சிப்பர். தமிழ்க் கவிதைக்கலை, பிறந்த வழி தெளிவாக, உறுதியாக, இதுவே.
நன்மிகப் பழம் பாடல்களெல்லாம், உண்மையில் பேச்சு வழக்கிலிருந்த திருந்தாக் கிளைமொழிகளிலேயே இருந்தன. சமஸ்கிருத மொழி, சமஸ்கிருதமாக (அதாவது செப்பம் செய்யப்பெற்று, மரபுவழி நெறிப்படுத்தப்பட்டு, கண்டிப்பான இலக்கண விதிமுறைகளின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலை) திருந்திய வடிவமாக ஆக்கப்பட்டு வேதமந்திரங்களின் யாப்பு முறைகளும், இலக்கிய மரபுகளும் தோன்றுவதற்கு முன்னர்ப், பல நூறு ஆண்டுகாலம் வழக்கில் இருந்திருக்க வேண்டிய சமஸ்கிருத நாடோடிப்பாடல்கள் அழிந்துபட்டது போலவே, அப்பழந் தமிழ்ப் பாடல்களும், அழிந்து போயின. வேத மந்திரங்கள், மாக்ஸ் முல்லர், வெறியுணர்வோடு விளக்குவது போல், ‘'குழந்தை நிலை மானுடத்தின் பொருளற்ற உளறல்” அன்று. அம்மந்திரங்களின் மொழிநடை “புலமை நலம் வாய்ந்த இலக்கிய மொழி நடை’, ‘'மதகுரு, வழிபாட்டு இசைப் பாணர்களுக்கிடையே, தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவரப்பட்ட செயற்கையாக வழக்கிறந்து போனதாக்கப்பட்ட பழம் பெரும் மொழி (A Macdonell. Sans. Lit. P. 20.) வேறு நடையில் சொல்வதானால், வேதமொழி, பாதிரி முதல் பறையன் வரையான, எல்லா நிலையில் உள்ளாராலும் பேசப்பட்ட ஒரு மொழி அன்று. அது ஒரு ‘'தேவ பாஷை'’. அது போலவே, இப்போது நாம் பெற்றிருக்கும் பழந்தமிழ்ப்பாடல்களெல்லாம், ஒப்புநோக்க, பிறபட்ட கால இலக்கிய வளர்ச்சியினைக் காட்டுவனவாம். அவற்றின் மொழிநடை, சாதாரண மக்களின், பேச்சு நடையன்று. நனிமிகத் திருத்தம் பெற்ற, மரபுவழிப்படுத்தப்பட்ட இலக்கிய நடையாகும். இப்பழம்பாடல்கள், யாப்பிலக்கண விதிகளின் கட்டுப்பாட்டிற்கு உறுதியாக அடங்கியிருப்பவை. இலக்கிய மரபுகளின், நனிமிக உயர்ந்த பல்வேறு விதிமுறைகளை விளக்கிக் காட்டவல்லன.
இலக்கியக் கிளைமொழிகள்
தமிழ் அரச இனங்கள் மூன்றம், தென்னிந்தியா, ஸ்ரீ ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். இம்மூன்று இனங்களில், பாண்டிய அரச இனம், மதுரை நாடு என, இன்று நாம் அழைக்கும் பகுதியில் ஆண்டிருந்தது. இந்நாடு, தமிழகத்தின், இருதயம் போலும் மைய இடமாகும். முழுக்க முழுக்க மருதமாகவே (விளை நிலமாகவே) இருக்கும் சோழ நாடு போலவோ, பெரும் பகுதி குறிஞ்சியாக (மலை நாடாக) இருக்கம் சேர நாடு போலவோ அல்லாமல், பாண்டியநாடு, ஐந்திணைக்காதல் பாடல்களும், அவை ஒவ்வொன்றொடும் உறவுடையவாய, ஐந்திணைப் போர்ப் பாடல்களும் எழுவதற்கு ஏற்புடைய, ஐந்திணைக்கும் உரிய வாழிடங்களைக் கொண்டிருந்தது. ஆகவே, தமிழிலக்கிய வளர்ச்சியின் நடுவிடமாக, இலக்கிய நடைத்தமிழ், அதாவது செந்தமிழ் வழங்கும் இடமாக மதுரை சிறந்து உயர்ந்தது வியப்புக்கு உரியதன்று. செந்தமிழ் நாட்டை அடுத்திருந்த, அவ்வந் நிலத்துக்கே உரிய கிளைமொழிகள் வழக்கில் இருந்த பன்னிரண்டு மாவட்டங்கள் குறித்துத் தமிழ் இலக்கணங்கள் ' குறிப்பிடுகின்றன. (செந்தமிழ் சோர்ந்த பன்னிரு நிலம்". தொல்காப்பியம் : சொல்லதிகாரம் : 9:3) நன்கு தெரிந்த ஒரு தமிழ்ப் பாட்டு, அச் செந்தமிழ் வழங்கும் பன்னிரு நாட்டையும், தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா . வடதலை நாடு, சீதநாடு, மலையமா நாடு, சோழ நாடு என வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
"தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி ,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்"
தொல்காப்பிய உரையாசிரியராய சேனாவரையர், தென்கிழக்கிலிருந்து வரிசைப்படுத்தத் தொடங்கி, பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, இறுதியாக அருவாவடதலை நாடு என முடிக்கிறார். இறுதியாகக் கூறப்பட்டது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்த் தொண்டை நாடு என்றும், வட இந்திய எழுத்தாளர்களால் திராவிடம் என்றும் அழைக்கப்பட்ட நாடாகும்.
ஓரிடத்தில் வழங்கும் மொழி, ஏனைய இடங்களில் வழங்கும் மொழிகளைப் போலவே, சிறந்ததும் ஆம். அல்லது சிறப்பற்றதும் ஆம், ஆதலாலும், இலக்கியத்தமிழ், முதன் முதலில், பாண்டி நாட்டில் மேற்கொள்ளப்பட்டது ஆதலாலும், அவ்விலக்கியத் தமிழ், பிற நாடுகளில் பாக்களில் மேற்கொள்ளப்பட்டபோது, ஆங்கு வழக்கிலிருந்த, அந்நிலத்துக்குரிய சொற்கள் சில, அப்பாக்களில் இடம் பெற்றன. ஆதலாலும், தமிழ்நாடு, இவ்வாறு பிரிக்கப்பட்டடிருந்தது கொண்டு, பொதுவாகக் கருதப்படுவது போல, பாண்டிய நாட்டில் வழங்கிய தமிழைவிட உயர்ந்தது என்பது பொருளாகாது.
தொடக்ககாலப் பாக்கள் அனைத்தும் அழிந்துவிட்டன
இப்போது வழக்கில் உள்ள பழைய செய்யுட்களின் பண்பாகிவிட்ட திருந்திய இலக்கண இலக்கிய மரபுகள் எல்லாம் இடம் பெறுவதற்கு முன்பே, எண்ணற்ற பாக்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். நான் அடிக்கடி, மேற்கோள் காட்டும் அந்த ஐந்திணைப்பாக்களில், ஒவ்வொரு திணைப் பாட்டும். அந்தந்தத் திணைக்கே உரிய நிலத்தில், ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கிடையே நிகழ்ந்த மக்கள் குடி பெயர்ச்சி அவ்வந்நிலத்துப் பழங்குடி மக்களின் சிறப்புப் பண்பாடுகளைத் தடம் தெரியாவாறு அறவே அழித்துவிட்டு, பண்பாட்டுக் கலை வளர்ச்சியில், சற்றுச்சூழல் செலுத்தும் ஆதிக்கத்தை மூடி மறைத்துவிட்ட ஏற்றத்தாழ்வற்ற ஒரே நிலையில் நடை போடும் நவநாகரீக வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர், பிறந்தனவாதல் வேண்டும். இவ்வகைப் பழம் பாடல்கள் அனைத்தும், இப்போது அழிந்துவிட்டன. (நன்மிகப் பழம் பாடல்களின் மாதிரிகளாக, இப்போது நாம் பெற்றிருக்கும் பாக்களுக்குக், கிறிஸ்துவ ஆண்டின் தொடக்கத்திற்கு மிக மிக முற்பட்ட காலத்தை வகுக்க இயலாது. அப்பழைய இலக்கியங்களெல்லாம் ஏன் . மறையலாயின? ஹாரப்பா, மொகஞ்சோதரரோக்களில் நிகழ்ந்த அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளால் தெரிய வருவதுபோல், இந்தியர்களுக்குக் கி.மு. 3000 அல்லது 4,000 பேரிலும் மிகப் பழைய காலத்திலேயே எழுதத் தெரிந்திருந்தது என்றாலும், நிலப்படைத் துணைத்தலைவர், திரு. வாடல் ஷோ (Lient col. Waddel show) அவர்களால் பொருளாயப்பட்ட, சிந்து வெளிப்பழைய கல்வெட்டுக்களின் படி, எழுத்துக்கலை, நீண்ட காலம் வரை, அரச வீரர்களின் வெற்றிச் செயல்களை வரிசைப்படுத்தி எண்ணப் பயன் பட்டதேயல்லாமல், இலக்கியப் பணிக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளல் வேண்டும். வேத மந்திரங்களின் தெய்வீகத் தன்மையும் ஆரியவர்த்த ஆரியர்களை நினைவுப்பாறை மீது பொறிக்க அல்லது செய்யுள் வடிவில் தரத் தூண்டவில்லை. சமயச் சார்பற்ற இலக்கியங்கள், இலக்கியத் திறனாய்வாளர்கள், அவற்றின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி, மனித நினைவாற்றல் குறைவால் மறைந்து போவதிலிருந்து, அவற்றைக் காக்க வேண்டிய விருப்பத்தைத் தெரிவித்த நிலையில்தான், ஓலை அல்லது காட்டு மரப்பட்டைகள் மீது எழுதப்பட்டன. இவ்வகையில், மிகவும் பழிக்கப்படு திறனாய்வாளர்களும், நாகரீக வளர்ச்சியில், பயனுள்ள ஒரு செலைச் செய்தவர்களாயினர். சிறந்த திறனாய்வாளராம் தொல்காப்பியர் துணை இல்லாமல், பழந்தமிழர் வாழ்க்கை ஓவியத்தை, மறுவலும் வரைந்திருக்க நம்மால் இயன்றிராது. ஆகவே இலக்கியத் திறனாய்வாளர்கள், குறிப்பாக இந்தியாவில் நாகரீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பணிபுரிந்துள்ளனர். பிற நாடுகளைப் போலவே, தமிழ்நாட்டிலும், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், பறவைகளைப் போலத் தங்களை அறவே மறந்து பாடினார்கள். ஆரியர்கள் , தென்னிந்தியாவில் வந்து வாழத் தொடங்கியது மட்டுமல்லாமல், தமிழ்மொழி, தமிழிலக்கியங்களைக் கற்று அம்மொழி இலக்கணங்களையும் அம்மொழியில் யாக்கப்பட்ட பாக்களையும் ஆராயத் தொடங்கிய பின்னரே இலக்கியத்தின் மீது எழுத்துக்கலை பொறிப்பதான தமிழ் இலக்கியம் எழுத்து வடிவம் பெறத் தொடங்கி, ஒருசில காலம் வரையாவது அழியாதிருக்கும் நிலையைப் பெற்றது.
நனிமிகப் பழைய தமிழ் இலக்கியங்களையெல்லாம் அழிந்து விட்டன. முதன் முதலில் எழுதப்பட்ட தமிழ்ப் பாக்கள் ஒவ்வொன்றும், ஒரு சில வரிகளையே கொண்ட சின்னம் சிறு பாக்களே எனக் கொள்ளலாம். அதற்குப் பிற்பட்ட காலத்திலும், நான்கு வரிகளிலிருந்து இருபது அல்லது முப்பது வரிகளைக் கொண்ட பாக்களே தொடர்ந்து இயற்றப்பட்டன. சில நூறு வரிகளைக் கொண்ட பத்துப்பாட்டுப் பாக்கள், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான், தோன்றத் தலைப்பட்டன. ஆரிய இலக்கியங்கள், தமிழின் மேதகவினை மேலும் வளப்படுத்தத் தொடங்கிய பின்னரே, நீண்ட காவியங்கள் எழலாயின. பரசுராமர்காலந் தொட்டு, தங்களை ஆரியத் தன்மையராக ஆக்கிக் கொண்டதன் காரணத்தால், தங்களைப் பிரம்மராக்கதர் எனக் கூறிக் கொண்ட, ஒரு சில தென்னிந்தியரால், ஆரிய நாகரீகம் பின்பற்றப்பட்ட நிலையிலும், இராம் - இராவணப் போருக்குப் பிறகும், மறுபடியும் மகாபாரதப் போருக்குப் பிறகும், ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றும் தென்னாட்டவர் எண்ணிக்கை உயர்ந்துவிட்ட நிலையிலும், பழந்தமிழ்ப்பாக்கள், ஆரிய ஆதிக்கம் சிறிதும் இன்றி, அதே நிலையில் பல நூறு ஆண்டு காலம் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. காரணம், தென்னாட்டு ஆரியர்களும், பெரும்பாலான தமிழர்களும், வேதகாலத்தில், வட இந்திய ஆரியர்களும், வட இந்திய தஸ்யுக்களும் போலவே, தங்கள் தங்கள் நாகரீகச் சாதனைகளிலும், வழிபாட்டு நெறிகளின் சிறப்புகளிலும், ஒருவரோடு ஒருவர் பெருமிதம் கொண்டு வழாலாயினர்.
சமஸ்கிருதச் செல்வாக்கிலிருந்து விடுபட்ட பழைய தமிழ்ச் செய்யுள் :
தமிழர் வாழ்க்கை , தம்முடைய போக்கின் ஒரே சீரான ஒழுங்கு நடையினைச், சமஸ்கிருதத் தன்மை வாய்ந்த எதனாலும், தீண்டப்படாமல், பல நூறு ஆண்டுகள், கடைப்பிடித்துச் சென்றது. பழைய தமிழ்ச் சொற்களஞ்சியம், தமிழ் மேதைகளின் உள்ளங்களைத் தம்மால் மட்டுமே தொடவல்ல கருத்துக்களை வெளிப்படுத்த, முற்றிலும் தகுதி வாய்ந்ததுவாதலின், பழைய தமிழ் இலக்கியங்களில், ஒரு சில சமஸ்கிருதச் சொற்கள் மட்டுமே இடம் கொண்டன. தமிழர் களில் பெரும்பிரிவினர், ஆரியப் பழக்கவழக்கங்கள், ஆரிய வாழ்க்கைத் தத்துவங்களால் பாதிக்கப்படாமல், தங்கள் பழைய வழிகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஆகவே, தமிழ்நாட்டில், தமிழர் வாழ்க்கை நீரோட்டம் தென்னாட்டு ஆரியர் வாழ்க்கை நீரோட்டம் என்ற, தங்கள் நீர்த் தாரைகளை ஒன்றுகலக்கவிடாத, அடுத்தடுத்த நேர்க் கோட்டில் ஓடிய இரு நீரோட்டங்கள் இருந்தன. தமிழரின் சிறப்பியல்பு, ஆரியரின் சிறப்பியல் போடு, முற்றிலும் வேறு பட்டது. தமிழர், காணும் இந்நிலவுலகை, உண்மை என ஏற்று, உலகவாழ்க்கை இன்பத்தில் மனநிறைவு கண்டனர். அழிக்கலாகாக் காதல் தூண்டுதல், போரின் வெறிகொண்ட மகிழ்ச்சி, மகளிர்பால் பெருங்காதல், பகைவர்பால் பெரும் வெறுப்பு, முறையே, அகம், புறம் என அழைக்கப்படும் இவை அவர் பாட்டின் கருப்பொருளாதற்குப் போதுமானவை ஆகும். ஆரியர்கள், குறிப்பாக ஆக்க அழிவுகளுக்கிடையே ஆன இறுதிப் போராட்டமாம் பாரதப் பெரும் போருக்குப் பிற்பட்ட காலத்து ஆரியர்கள், மண்ணுலக, விண்ணுலக இன்பங்களின் வெற்று ஆரவாரங்களைப் போர்கள், கணப்பொழுது தோன்றி அழியும் காதலின்பம், மேற் கொண்டாரை அழித்துச் சாம்பலாக்கும் போரின்பால் பெருமகிழ்ச்சி ஆகியவற்றின் பால் மிகப்பெரிய வெற்று ஆரவாரங்களை நினைந்து நினைந்து ஏங்குவாராயினர். பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுதற்கான வழிமுறைகளை இடைவிடாது ஆராய்ந்து வந்தனர். அது பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அவர் உள்ளத்தில், என்றும் அழியாப் பெருமாற்ற மாம் வைராக்கிய உணர்வை, அதாவது பற்றற்ற நிலையினைத் தோற்றுவித்துவிட்டது. ஆதலால், அழிபேறுடைய வாழ்க்கை இன்பத்தைத் துறப்பது, கால், இடங்களின் கட்டுப்பாடற்ற, அழியாப் பெருவாழ்வின் நிலைபேறுடைய பேரானந்த நுகர்விற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு, வைஷ்ணவர்கள், சைவ ஆகமிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகிய வைதீகர்களிடையே சந்நியாச வாழ்க்கை முறை வளரலாயிற்று. பழந்தமிழ்ப் புலவர்கள், இந்நிலவுலக வாழ்வினர். அவ்வுணர்வுடையவர் மக்கள் உணர்ந்தவாறே, வாழ்க்கையின் நடைமுறை இயல்புகளை, அழியா ஓவியங்களில் வடித்துக் காட்டினர். வேத காலத்துப் பிந்திய ஆரியர்கள், மண்ணுலக வாழ்வின் பிடிப்பிலிருந்து, பருத்திக் கம்பளம் போல் விடுதலை பெற்றுத் தருவதும், ஞாயிறும், திங்களும், ஏன், மண்ணும் விண்மீன்களும் புகுந்து ஒளிகாட்ட மாட்டாப் பேருலகிற்குச் சென்றவர்க்கு மட்டுமே. மேலான அழியாப் பெருநிலை தரவல்லதுமான, படிப்படியாக வளர்ந்து நிற்கும், கட்புலனாகக் கருத்துக்களுக்கு உரியராயினர். காணும் இந்நில உலகைப் பொறுத்த வரையில், தமிழரின் மனப்போக்கு, எதிலும் நலமே காணும் நம்பிக்கை உடையதாக, ஆரியரின் மனப்போக்கு, எதிலும், துன்பமே காணும் நம்பிக்கை அற்றதாக அமைந்துவிட்டது. அன்றைய தமிழர்கள், கடுமையான சாதிப்பிரிவுகளால் பிரிக்கப்படவில்லை. ஆனால், ஆரியர்கள் நான்கு வருணத் தலைவர்களாகப் பிரிவுற்றிருந்தனர். பழைய தமிழ்ப் பாக்களின் மரபு சமஸ்கிருதப் பாக்களின் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. ஆகவே, பெரும்பாலான தமிழர்களும், தென்னாட்டு ஆரியர்களும், மற்றவர் பண்பாட்டு நாகரீக நிலையைப் பாதிக்காத வகையில், அவரவர்க்குரிய தனி வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரலாயினர். பழந்தமிழ்ப் பாடல்களில் பெரும் பகுதி அழிந்துவிட்டன என்றாலும், கிறித்துவ ஆண்டுக்குப் பிறகும், சில ஆண்டுகாலம், சமஸ்கிருத நாகரீகம், தமிழ்ப்புலவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டுவிடவில்லை என்பதை உறுதி செய்வதற்குப் போதிய பாக்கள் இன்னமும் உள்ளன.
தொகை நூல்கள்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளிலும், பழந்தமிழ்ப்பாக்களில், மறந்து போகாம்ல நினைவில் நின்ற எல்லாப் பாக்களும், பல்வேறு தொகை நூற்களில் ஒன்று தொகுக்கப்பட்டன. நேரிடையாக அல்லது ஒருவகையில் போரோடு தொடர்புடைய நானூறு எண்ணினைக் கொண்ட, வெவ்வேறு அளவுடைய பாக்கள், புறநானூறு என்ற தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பட்டன. அன்பின் ஐந்திணை ஒழுக்கத்தோடு தொடர்புடைய அகப்பாடல்கள், ஒவ்வொரு தொகையிலும் இடம் பெறும் பாக்களின் அடிகள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மூன்று தொகை நூல்களில் தொகுக்கப்பட்டன. ஒவ்வொரு தொகை நூலும் சரியாக , நானூறு, நானூறு பாக்களைக் கொண்டனவாக, குறைவான அடிகளைக் கொண்டவை குறுந்தொகை என்ற தொகையிலும், எண்ணிக்கையில் இடைநிலையான அடிகளைக் கொண்டவை நற்றிணையிலும், நிறைந்த அடிகளைக் கொண்டவை நெடுந்தொகை அல்லது அகநானூற்றிலும் தொகுக்கப்பட்டன. தொகை நூல்களைத் தொகுத்தவர்கள், ஒவ்வொரு தொகைக்கும் ஒன்று கூடுவதோ, ஒன்று குறைவதோ இல்லாமல், செவ்வெண்ணாக, நானூறு பாக்களை எவ்வாறு பெற்றார்கள்? நானூறு என்ற செவ்வெண் கிடைக்க, ஒரு சிலவற்றை அவர்களே இயற்றிக் கொண்டார்களா? அல்லது சிலவற்றைக் கழித்து விட்டார்களா? என்ற வினாக்களுக்கு விடை காண்பது இயலாது. ஒவ்வொரு தொகையிலும் இடம் பெற்றிருக்கும் பாக்கள் அனைத்தும் ஒரே காலத்தன அல்ல. அப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் மொழிநடை கருப்பொருள், உவம உருவக அணிவகைகள், உள்ளுறைப் பொருள்களைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால், அவற்றில் பிற்காலப் பாக்களிலிருந்து பழங்காலப் பாக்களை, வேறுபிரித்துக் காண்பது இயலாத ஒன்றன்று. உதாரணத்திற்குப், பழம் பாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் பெரும்பாலும், அறவே இடம் பெறவில்லை. கூறப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள் ஐந்திணை நிலங்களுக்கே உரிய, பண்டைத் தமிழ்ப் பழக்க வழக்கங்களாம். கூறப்பட்டிருக்கும் மரவடை, மாவடைகள் இந்நிலங்களுக்கே உரியவை : கூறப்பட்டிருக்கும் மூட நம்பிக்கைகளும், தமிழ்த்தன்மை வாய்ந்தவை, ஆரியத் தன்மை வாய்ந்த அன்று. ஆரியக் காவியக் கற்பனைகள் பற்றிய குறிப்பு எதுவும் அறவே இடம் பெறவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அக்காலப் பாவா ணர் எவரும் புராமணர் அல்லர். கி.பி. முதல் ஆயிரத்தாண்டின் முற்பாதியின் இறுதி நூற்றாண்டில், பிராமணர்கள், தமிழ்ப்பாக்களை இயற்றத் தலைப்பட்டனர். அவர்கள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த தமிழிலக்கிய மரபுகளை, உறுதியாகப் பின்பற்றி வந்தாலும், ஆரிய . எண்ணங்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கை கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை. தங்கள் பாக்களில் நுழைந்து இடம் பெற்றுவிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், இப்பொருள் பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு அப்பாக்களில் கிடைக்கும் அகச்சான்றுகளை நுண்ணியதாக மதிப்பீடு செய்து, இந்த ஆயிரத்து அறுநூறு (அகம், புறம், குறுந்தொகை, நற்றிணை) பாக்களில், பழம் பெரும் பாக்களைப் பிற்பட்ட காலத்துப் பாக்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பது விரும்பத்தக்கது. வேண்டத்தக்கது. ஆனால், அத்தகைய விரிவான ஆராய்ச்சி இல்லாமலே கூட, இப்பாக்களை நுணுக்கமாகப் படிக்கும் எவரும் இப்பாக்கள், நீண்ட கால அளவில், குறைந்தது ஐந்நூறு ஆண்டு கால அளவில் பாடப்பட்டுள்ளன என்பதை மன நிறைவோடு காண்பர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அகநானூறு
இத்தொகை நூல்களில், அகநானூறு, உக்கிரப் பெருவழுதி ஆணைப்படி, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூற்றுப்படி, அகப்பொருள் சூத்திரம் அறுபதின் உண்மைப் பொருள் காணும் புலவர் குழாமுக்கு, ஊமையாக இருந்தும் தலைமை தாங்கிய உருத்திர சன்மனால் தொகுக்கப்பட்டது ஆதலின், அது முதன் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் ஆகும். அப்பாக்கள் அனைத்தும், திருமண உறவுக்கு முற்பட்ட , திருமண உறவுக்குப் பிற்பட்ட, காதல் நிகழ்ச்சி களைக் கருப் பொருளாகக் கொண்டுள்ளன. அப்பாக்களில், மூன்று, எழுதியோர் பெயர் அறியப்படாதன. ஏனைய பாக்கள், சிலர் பண்டைக்காலத்தைச் சேர்ந்தவராகவும், ஏனை யோர், நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவராகவும், உள்ள 142 புலவர்களால் பாடப்பட்டுள்ளன. அப்பாக்கள், அவை பாடப்பட்டபோது சிறப்புற்றிருந்த அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய, பாராட்டத்தக்க பேரரசர்கள், பெரிய வள்ளல்களின் வரலாறுகளை எழுதத் துணை புரியவல்ல குறிப்புகளை உள்ளடக்கிய எண்ணற்ற உவமைகளைக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய செய்திகளையும் பெறலாம். இத்தொகையில் உள்ள பாக்கள், 13 அடிகளிலிருந்து 37 அடிகள் வரை என அளவால் வேறுபட்டுள்ளன. முதற்காட்சி யிலேயே கொள்ளும் காதல், அக்காதல் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூறும் குறிஞ்சி, காதலர்களிடையே பல்வேறு காரணம் குறித்து நிகழும் பிரிவுகளையும், பிரிவு இறுதியில் இருவரும் ஒன்றுபடும் கூட்டத்தையும் கூறும் முல்லை, பாலை, நெய்தல், பரத்தையர் இடையீட்டால் மண வாழ்க்கையில் இடம்பெறும் ஊடல், கூடல்களைக் கூறும் மருதம் ஆகிய அகப்பொருள் குறித்த ஐந்து தலைப்புகளும் இத்தொகை நூலில் விளக்கப்பட்டுள்ளன. இப்பாக்கள், ஒருவகை செயற்கை முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1 முதல் 399 வரையான பாக்களில் ஒற்றைப்படை எண்ணுள்ள பாக்கள் பாலைத்திணை குறிக்கின்றன. 4 முதல் 394 வரையான பாக்களில் 4 என்ற எண் கொண்டு முடியும் எண்ணுடைய பாக்கள் முல்லைத் திணை குறிக்கின்றன. அதுபோலவே 6 முதல் 396 வரையான பாக்களில் 6 என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட பாக்கள் மருதத்திணை குறிக்கின்றன. 2 முதல் 398 வரையான பாக்களில், 2, 8, என்ற எண்களில் முடியும் பாக்கள் குறிஞ்சித் திணை குறிக்கின்றன. பத்து என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட பாக்கள் நெய்தல் திணை குறிக்கின்றன. ஆக, இறையனார் அகப்பொருளுக்கு உரைக்கப்பட்ட உரைகளுள் ஏற்புடைய உரை எது என்பதை மதிப்பீடு செய்த அந்த ஊமைப்பிள்ளை, தன் தொகை நூல் பாடல்களை வரிசைப்படுத்தும் போது, ஒரு சீராக எண்ணும் அறிவும் கொண்டிருந்தான் போலும்!
குறுந்தொகையும் நற்றிணையும் :
குறுந்தொகையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் நான்கடி முதல் எட்டடி வரையானவையாகவும், நற்றிணையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள், ஒன்பது முதல் பன்னிரண்டு அடிவரையானவையாகவும் உள்ளன. என்பது ஒன்றினாலேயே அகநானூற்றிலிருந்து இவை வேறுபடுகின்றன. இம்மூன்று தொகை நூல்களையும், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட, அவற்றின் பாக்களின் கருப்பொருளில் எதுவும் இல்லை. எல்லாப் பாக்களுமே, களவு, கற்பு, என்ற இரு நிலைக் காதல்களையும் கூறுகின்றன. அரசர்கள், குறுநில மன்னர்களைக் குறிப்பிடுகின்றன. தமிழர் கொள்கைகள், வாழ்க்கை அமைப்புகள் பற்றிய குறிப்புகள் நிறையக் கொண்டிருந் தாலும், ஆரியக் கடவுள்கள் ஆரிய நம்பிக்கைகளை அருகியே குறிப்பிடுகின்றன. ஐந்திணைப் பாடல்களைத் தொகுத்ததில், இவ்விரண்டிலும் எந்தவிதமான வரிசை முறையும் மேற் கொள்ளப்படவில்லை. நற்றிணை, பன்னாடு தந்த மாறன் வழுதி ஆணையாலும், குறுந்தொகை, பூரிக்கோ ஆணை யாலும் தொகுக்கப்பெற்றன. இருவருமே, பெரும்பாலும் ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த அரசர்களாவர்.
புறநானூறு :
புறநானூற்றுப் பாடல்கள் நானூறும், யாருடைய ஆணையின் கீழ், யாரால் தொகுக்கப்பெற்றன என்பது அறியப்படவில்லை. மற்ற தொகை நூல்களோடு பல வழிகளில் வேறுபடுகின்றன. முதலாவது, அவை, அரசர்கள், குறுநில மன்னர்களின் போர்ச் செயல்கள், தங்களைப் பாடிய, புலவர் பாணர் போன்றார்க்கு அவர்கள் வழங்கிய கொடை வளம் ஆகியவற்றைக் கூறுகின்றன. இரண்டா வதாகப் போர்கள் குறித்துக் கூறுவதோடு, போரில் உயிர் நீத்த அரசர்கள் கொடைவள்ளல்கள் மீதான கையறுநிலைப் பாடல்களையும் கொண்டுளது. முதல் பாதிப்பாக்கள், போர்கள் குறித்தும் அடுத்துள்ள பாதியில் பாதிப்பாக்கள், கையறுநிலை குறித்தும் அடுத்துள்ள பாதியில் பாதிப்பாக்கள், கையறுநிலை குறித்தும், கடைசிக் காற்பகுதி, மேற்கூறிய இருபொருள்கள் மீதுமான பிற்காலத்தே கண்டுபிடிக்கப் பட்ட, கலப்படப் பாடல்களின் பின் இணைப்பாம். மூன்றாவதாக, பெரும்பாலான பாக்களின் கீழ், அப்பாக்கள் பாடப்பட்ட சூழ்நிலையை விளக்கும், கொளு எனப்படும் பின்னுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இக்கொளுக்கள், அவை கூறும் கருத்தின் ஒரு பகுதியை அப்பாக்களைப் படித்து அறிந்துகொண்டதன் மூலமும், ஒரு பகுதியை வழிவழியாக வந்த காதுவழிச் செய்திகள் மூலமும் அறிந்து கொண்ட அத்தொகை நூலைத் தொகுத்தவரின் பிற்காலத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டனவாகத் தெரிகிறது. இத்தொகை நூலுக்குத் தெள்ளாறு எறிந்த நந்திவர்ம பல்லவன் (கி.பி. 830-854) காலத்தில் வாழ்ந்திருந்த, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார், பாடிய, கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும், முன்னுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுளது. இக்கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகம சமயக் கொள்கைகள், கி.பி. 6 முதல் 9 வரையான நூற்றாண்டுகளில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்ட பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிவனாகக் கொண்டு சிவன் புகழ் பாடுகிறது. இப்பெருந்தேவனார், சிவன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்து முன்னுரைப் பாடல்களை அகநானூறுக்கும், ஐங்குறுநூறுக்கும், முருகன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலைக் குறுந் தொகைக்கும், விஷ்ணு சகஸ்ராம ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாக விளங்கும் திருமால் வாழ்த்துப் பாடலை நற்றிணைக்கும் கொடுத். திருப்பதால், இப்பெருந்தேவனார், பழங்காலப் பாடல்களைத் தொகுப்பதில் பெரு முயற்சி மேற்கொண்டார் எனத் தெரிகிறது.
பிற்காலப்பாக்களைக் கொண்ட மற்ற நான்கு தொகைகள் :
இந்நான்கு தொகை நூல்கள் அல்லாமல் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிநூற்றி ஐம்பது என்ற வேறு நான்கு தொகை நூல்களும் உள்ளன. இவை முன்னவை போல, வேறு வேறு ஆசிரியர்களால், பாடப்பட்ட வேறு வேறு பொருள் கொண்ட பாக்கள் கலந்து வரத் தொகுக்கப் பெற்றவை அல்ல. முதலாவதான ஐங்குறுநூறு, ஒவ்வொரு திணைக்கும் அத்திணைப் பொருளை விளக்க, ஓர் ஆசிரிய ரால் பாடப்பெற்ற நூறு நூறு பாக்களாக, ஐந்திணைக்குமாக தொகை, ஒவ்வொரு திணைக்கும் முப்பது என ஐந்து திணைக்குமாக, முன்னைய தொகைகளின் பாவகை போல் அல்லாமல், வேறு பாவகையில் யாக்கப்பட்ட, ஆனால் அதே . பயன் குறித்த நூற்றி ஐம்பது பாக்களைக் கொண்டது. பரிபாடல் என்ற பாவகையில், வைகை, திருமால், முருகன் என்ற தலைப்புகளில் பாடப்பெற்ற பாக்களின் தொகுப்பு, பரிபாடல், பதிற்றுப்பத்து, சேர அரசர்களின் புகழ்பாட இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு ஆகும். இத்தொகை நூல்களில், அவ்வப்போது நிகழ்கிற சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட பாடல்களே இடம் பெற்றிருக்க, முந்தைய நான்கு தொகை நூல்களில், குறிப்பிட்ட ஒரு கொள்கையை விளக்க ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பதால் பிந்திய தொகை நூல்கள் நான்கும், முந்திய தொகை நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன. இலக்கியத் திறனாய்வு குறித்துத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் வகுத்த நெறிகளில் பாக்கள் புனையப்பட வேண்டும் என்ற எண்ணம், பிற்காலத்தில் வழக்கில் வந்தது. மேலும், பிற்கூறிய தொகை நூலை உருவாக்கிய பாக்கள், சிவன், விஷ்ணு குறித்த ஆரியக்கோட்பாடுகளும், ஆகம நெறி போதிக்கும் வழிபாட்டு முறைகளும், தமிழ்நாட்டில் கால் கொண்டு விட்ட காலத்தை, வேறு வகையில் கூறுவதானால், சிந்தனையிலும், வழிபாட்டு முறையிலும், தமிழர்கள், ஆரிய மயமாகிவிட்ட காலத்தைச் சேர்ந்தனவாம். இப்பாக்கள் தமிழ்ச் செய்யுள் மரபுகளை, இன்னமும் கொண்டுள்ளன என்றாலும், அவை கூறும் சமயக் கருத்துக்கள், ஆகமகருத்துக்களுக்கேற்ப மாறுதல் பெற்று விட்டன. ஆகவே, முந்தைய தொகை நூல்களை உருவாக்கிய பாக்களில் சில, பிந்திய தொகை நூல்களைச் சேர்ந்த இப்பாக்களும் பழம்பாடல்களே என எண்ணப்பட்ட பிற்காலத்தே, இத்தொகை நூல்களும், எட்டுத்தொகை நூல்கள் என்ற பொதுப் பெயரைப் பெற்றுவிட்டன.
பத்துப்பாட்டு :
பத்து நெடும் பாக்களைக் கொண்ட, பத்துப்பாட்டு எனும் பெயருடைய மற்றொரு தொகை நூலும் உளது. பத்துப் பாட்டு 103 அடிகள் முதல் 782 அடிகள் வரையுள்ள நீண்ட பாக்களைக் கொண்டது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும், கரிகாலனின் தொடக்க நிலை வாழ்க்கையைப் பாடுவதுமாகிய பொருநராற்றுப்படை கி.பி. 400க்குச் சிறிது முற்பட்ட காலத்தில் பாடப்பட்டது. காலத்தால் முற்பட்ட பாட்டிலிருந்து பிற்பட்ட பாட்டு வரையான இப்பத்துப் பாட்டுப்பாக்களில், சமஸ்கிருதச் சொற்களின் படிப்படியான பெருக்கமும், நாட்டின் பெருகும் ஆரியத்தன்மையும், மிகத் தெளிவாகச் சுட்டிக்காணக் கூடியனவாம் ; மேலும், அப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளோடு, அப்பாட்டு ஒவ்வொன்றும் பாடப்பட்ட காலத்தை உணரும் துணைச்சான்றாகவும், அவை கொள்ளத்தக்கனவாம். பத்துப்பாட்டு, முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அந்த நான்கு தொகை நூல்களோடு, பாக்களின் யாப்பு முறையிலும், இலக்கிய மரபுகளிலும் பெரிய அளவில் வேறுபடுவன அல்ல. ஒவ்வொன்றும் கொண்டிருக்கும் நீளத்தால் மட்டுமே வேறுபடுகின்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான காலத்தில், தமிழர்கள் நடத்திய வாழ்க்கை பற்றிய முழு ஓவியத்தை வரைதற்கு அவை, இன்றியமையா மதிப்புடையவாம்.
பதினெண் கீழ்க்கணக்குப் பாக்கள் :
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ற மூன்றாவது வகை நூல்கள் உள்ளன. அவை, பொதுவாக ஒவ்வொன்றும் இரண்டு முதல் நான்குவரை அல்லது ஐந்து வரையான அடிகளைக் கொண்ட பாக்களைப் பெற்றுள்ளன என்பது இப்பாக்களின் சிறப்பு இயல்பாகும். இப்பதினெட்டு நூல்களில், சில நூல்கள் அகப்புறப்பாடல்கள் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்ற இலக்கண விதிகளை விளக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஆவதற்காகவே பாடப்பட்டுள்ளன. அவை, பழைய மரபுகளைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். ஏனையவை, சிறப்பாக, அவற்றில் தலையாய தாம் திருக்குறள், பழந்தமிழ் இலக்கியங்களில் அறவே இடம் பெறாத, ஒழுக்க நெறி உணர்த்தும் ஒருவகைப்பாக்களை அறிமுகம் செய்கின்றன. ஆன்மீக நோக்கிலிருந்து சிறந்த ஒழுக்க நிலையைக் கற்பிக்கின்றன, கலையுணர் நோக்கிலிருந்து, அணிநலம் வாய்க்கப்பட்ட, கவர்ச்சி அற்ற வறண்ட அறிவுரை வழங்கும், செய்யுட்குரிய புகழ் ‘வடிவிலிருந்து விடுபடாத பாக்களைக் கொண்ட, சமஸ்கிருத மொழியின் தர்ம, அர்த்த சாத்திரங்கள், பொருள்வளம் நிறைந்த சொற்செறிவுமிக்க மொழிநடைச் சூத்திரங்கள் ஆகியவற்றின் இணைப்பாகும். இப்புதுவகை இலக்கியம், பழைய தொகை நூல்கள், பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கு எழுச்சியூட்டிய பாக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டன. வாம். பதினெண் கீழ்க்கணக்கில், அறிவுரை கூறும் நூல்களின் காலம், ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி, எட்டாம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கிறது. 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவீன காலத்தவர்க்கு மேலே குறிப்பிட்ட அனைத்துப் பாக்களுமே, பழம் பாக்கள் தாம். பழைய என்பதன் பொருள் கூறப்படாதவரை, எல்லாமே பழமையானவைதாம். துரதிருஷ்டவசமாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய இம்மூன்று தொகை நூல்களையும், ஒருசேர ஒரே காலத்தை ஒரே நூற்றாண்டைச் சேர்ந்தனவாக மதிப்பதும், அவற்றிலிருந்து, தமிழ் இலக்கியங்களின் படிப்படியான வளர்ச்சி குறித்த வரலாற்றினை அறிய விரும்பும் ஆராய்ச்சியாளர்களால், ஒப்புக் கொள்ளத்தக்கன அல்ல என மறுத்து ஒதுக்கத்தக்கதான வரலாற்றுக்குப் புறம்பான முடிவுகளைக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது.
10. தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி.1 வரை
மலைநாட்டில் காதல் :
கி.மு. 500 முதல் கி.பி.1 வரையான இக்கால கட்டத்தில் தமிழ் அரசர்கள், அரசுகள் பற்றி, வட இந்தியாவிலும் சிலோனிலும் உள்ள, பாலி அல்லது சமஸ்கிருத இலக்கியங்களில் கிடைக்கக்கூடிய குறிப்புகள் அனைத்தும், முந்திய இரு அதிகாரங்களில் எடுத்துக் கூறப்பட்டன. இந்த ஐந்நூறு ஆண்டுகளில், எண்ணற்ற தமிழிலக்கியங்கள் பாடப்பட்டடிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பின்வரும் ஓர் அதிகாரத்தில் குறிப்பிட இருப்பது போல், தமிழ்மொழி குறித்த, வியத்தகு நிலையிலான நனிமிகப் பொருந்தும் இலக்கணங்களை அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இயற்றியிருக்க இயலாது. அந்த இலக்கியங்கள் அறவே அழிந்து போயினவாக நம்பப்படுகிறது. என்றாலும், இப்போதுள்ள தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சில, அக்காலத்தைச் சேர்ந்தனவாதல் கூடும் என நான் எண்ணுகின்றேன். அவற்றுள் ஒருசில, பாடினோர் பெயர் அறியமாட்டார் நிலையின. இதற்குக் காரணம், அவை நன்மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தனவாதலின் தொகை நூல்களில், அவை வரிசைப்படுத்திய காலத்தில், அவற்றைப் பாடியவர் பெயர் மறந்திருக்கக் கூடும். மேலும், அவற்றில் சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெறா நிலையால் அவை, தனிச்சிறப்புடையவாக மதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள், முழுக்க முழுக்கத் தமிழர்க்கே உரியவாம். ஆரியக் கருத்துக்கள் பற்றிய குறிப்பு அவற்றில் அறவே இடம் பெறவேயில்லை. கிடைக்கும் பாக்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டாலும், அவை ஒரு சிலவே ஆயினும், அவற்றை, அக்காலத்திய இலக்கியங்களின் நினைவுச் சின்னங்களாகக் கொள்ளலாம். அவற்றிலிருந்து, தமிழ்நாட்டு ஐந்திணைகளில், ஒவ்வொரு திணைக்கும் உரியவாய சில பாக்களை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அப்பன்னெடுங் காலத்தில் தமிழர் நடத்திய வாழ்க்கை நிலை பற்றிய படக்காட்சியை, மறுவலும் உருவாக்கிக் காணப்படிப்பார்க்கு அவை துணை புரியும். இந்த வாழ்க்கை முறை பெரும்பாலும் அக்காலத்திற்கு முன்பும், அக்காலத்திற்குப் பின்பும், இருந்த வாழ்க்கை முறையேதான் என்பதும் காணப்படும். புறத்தூண்டுதல் இன்றி, அகத்தூண்டுதலால் எழும் இயற்கைக் காதல் நிலை , பின்வரும் சிறுபாட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ‘'என் தாயும் உன் தாயும் ஒருவருக் கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தை யும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? உள்ளத்தால் இப்போது ஒன்றுபட்டு நிற்கும் நானும், நீயும் ஒருவரை யொருவர், எவ்வாறு முன்பு அறிந்திருந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சங்கள், தாமாகவே ஒன்று கலந்து விட்டனம்
"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.'’
குறுந்தொகை : 40
காதலர், என்றும் போலவே, அன்றும் மன உறுதியுடையரல்லராயினர். அதனால் காதலனால் கைவிடப்பட்ட கன்னிப்பெண், அக்கைவிடப்பட்டமையை எண்ணி எண்ணிப், புலம்பத் தொடங்கிவிட்டாள், “நானோ, இவ்விடத்திலேயே இருக்கிறேன். என்னோடு பிரியாமல் ஒன்றியிருந்த என் பெண்மை நலனோ என்றால், தினைப்புனம் காத்து நிற்பார் விடும் கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, காட்டுயானை, தான் கைப்பற்றியிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டதாக, அம்மூங்கில், மீனைக் கவர்ந்து கொண்ட தூண்டிற்கோல் போல, விரைந்து மேலே எழும் இடமாகிய காட்டு நாட்டா னாகிய என் காதலனோடு, நாங்கள் பழகிய அவ்விடத்திற்கு ஓடிவிட்டதே!
யானே, ஈண்டையேனே! என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டி லின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே!
குறுந்தொகை : 54 )
ஊர்வம்பு பேசித் திரியும் அயலில் மகளிர், காதலர் குறித்து அம்பல் உரைக்கலாயினர். ஆதலால், அப்பெண்ணின் வளர்ப்புத் தயாயாம் செவிலியின் மகளாய், அப் பெண்ணோடு வளர்ந்தவளாய தோழி. நம் காதலை இனியும் மறைத்துப் பயன் இல்லை. அதை ஊர் அறிய உலகு அறிய உணர்த்தி விடுதேலே நலம்" என மறைத்து மொழி கிளவியால் கூறத்தொடங்கினாள்: மகளே உன் மார்பை விரும்பும் நம் இனிய தலைவன், மலைவளர் சந்தனம் பூசிய மார்பில் முத்துமாலை அணிந்துகொண்டு, சுனையில் வளர்ந்த குவளையின், வண்டுபட விரிந்த மலர்களால் ஆன கண்ணி யைத் தலையில் புனைந்து கொண்டு, நம் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து செல்கின்றான்; அக்காலத்தில், அவன் வந்து செல்லும் வழியில், மன்றங்களில் வாழும் மரையா வெகுண்டு ஓடுமாறு, அதன் ஆணைக் கொன்றுவிட்டு, சிவந்த கண்ணும், கருத்த உடலும் வாய்ந்த புலி முழங்கும். ஆகவே, நம் களவு ஒழுக்கத்தை மறைக்கும் காலம் இதுவன்று; நம் களவு ஒழுக்கத்தைப் பலர் அறிய நான் கூறிவிடுவேன். அதை நீயும் விரும்பி ஏற்றுக் கொள்வாயாக".
மலைச்சேர் அஞ்செஞ் சாந்தின், ஆர மார்பினன்,
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
ஒருநாள் வந்து நம்மனைப் பெயரும்;
மடவரல் அரிவை? நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும்; அதனால்
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல்; வாழி, வேண்டு; அன்னை நம் கதவே”
- குறுந்தொகை : 321
காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவதின் முன்னர், சமுதாய முறைப்படி இன்றியமையாது நடைபெற வேண்டிய களவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மணிமுடியாம் திருமணத்தைக் காதலன் காலம் கடத்திக் கொண்டே வந்தால், அவன் காதலியை நோக்கி வந்தபோது, தோழி. வரைந்துகொள்வது விடுத்து, இவ்வாறு வருவதைக் கைவிடுக’ எனக் கூறி மறுத்து அனுப்புகிறாள். “ஓ மலை நாடனே! மழை பெய்து ஓய்ந்த மேகங்கள், மலையிலே சென்று இடங்கொண்டுவிட்டன; தேனடைகள் தொங்கும் - மலையுச்சியிலிருந்து, அருவிகள் ஆரவாரம் செய்து கொண்டே உருண்டோடி வீழ்கின்றன; அழகிய மலையில் நிற்கும் வேங்கை மரங்கள் நாட்காலையில் நறுமண மலர்களைக் கொட்டுகின்றன, தன் தோகை அழகோடு, அவ்வேங்கை உதிர்த்த மகரந்தப் பொடிகளாலும் மூழ்கப்பெற்று மகிழ்ந்து ஆடி இளவெயில் இன்பத்தை நுகர்கின்றன மயில்கள். இத்தகு இன்பக் களஞ்சியமாய்த் திகழும் மலைநாட்டுக்கு உரியனாகிய நீயோ, இவளுக்கு நீங்குதல் இல்லாக் காமநோயைத் தந்துள்ளாய். இதை .. யாரிடத்தில் கூறி நோவேன்? வந்து புணர்ந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இனிய சொற்களை இவள் விரும்பு மாறு கூறுகின்றனை; அவ்வாறு கூறும் நீ கூறியவாறே நடந்து மணந்துகொள்வதே, இவள் உயிரைக் காக்கும் வழியாம் என்பதை மட்டும் கூறியதை மறுத்து மயங்கு கின்றனை; இதை நான் யாரிடம் சென்று முறையிடுவேன்?'’
“பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கைதந்த வெற்பு அணி நன்னாள்
பொன்னின் அன்ன பூஞ்சினை நுழைஇக்
கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம்கொள்பு ஞாயிற்று
உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன்
நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய்
யார்க்கு நொந்துரைக்கோ யானே! பன்னாள்
காமர் நனிசொல் சொல்லி
ஏமம் என்று அருளாய், நீமயங் கினையே
- நற்றிணை : 396
இப்பாக்கள், மலைநாட்டுக்குரியதான, மணத்திற்கு முந்திய தான களவுக் காதல் பற்றியனவாம். குறிஞ்சித் திணைக்கு உரியவாம்
முல்லையில் காதலர் :
காடு சார்ந்த நிலத்து மக்கள் ஒழுக்கமாகிய முல்லைத் திணை, சிறு பிரிவின் துயர் ஆற்றமாட்டாது வருந்தி, இருத்த லைக் குறிப்பதாகும். போர் முடிந்து மீளும் காதலன், தேர்ப்பாகனிடம் பின்வருமாறு கூறுகிறான். நம் அரசனும் செய்தற்கரிய போரை முடித்துக் கொண்டான். மலைச் சுனைகளில், மகளிர் கண்போல் ஒளிவிடும் குவளைகள் மலர்ந்துவிட்டன. பரந்து அகன்ற காடெங்கும் வேங்கை, தன் மலர்களை உதிர்க்கலாயின. இம்மெனும் ஒலி எழ, வண்டுகள் எத்திசையும் பறக்கலாயின. பேரூர்களின் அகன்று நீண்ட தெருவு போலும் பெருவழிகளில் நெடிது நடைபோட்ட நம் வீரர்கள் ஆங்காங்கே இருந்து இளைப்பாறலாயினர். வெண்காந்தள் மலரின் பெரிய இதழ்கள், குதிரைகளின் கவிழ்ந்த குளம்புகளால் மிதியுண்டு, வெண்சங்கு உடைந்து சிதறினாற்போல் சிதறுண்டு போயின. இவை கண்டு தோள்வலிக்க விரைந்து மீளும் நம் வருகையை, அழகிய புள்ளிகள் பொருந்திய அல்குலையும், இனிய மொழியையும் உடையளாய்த் தன் மகனை அழாமல் ஆற்றுவான் வேண்டிப் பொய்க்கதைகளைக் கூறிக் கொண்டிருக்கும் நம் காதலிக்கு, நிமித்தம் காட்டும் காக்கைகள் கரைந்து அறிவித்திருக்குமோ?
இறையும் அருந்தொழில் முடித்தெனப், பொறைய
கண்போல் நீலம், சுனைதொறும் மலர,
வீதா வேங்கை வியன் நெடும் புறவின்
இம்மென் பறவையீண்டுகிளை இரிய,
நெடுந்தெருவு அன்ன நேர்கொள் நெடுவழி
இளையர் ஏகுவனர் . பரிப்ப, வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத்
தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள் அறிவுறீஇயன கொல்லோ ? தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள்; ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யாட்கே”
- நற்றிணை : 161.
பிரிந்து வாழும் காலம் நனிமிகக் குறுகியதே ஆயினும், அப்பிரிவு தரும் துயர் தாங்கமாட்டாக் கொடுமை வாய்ந்த தாம். காதலனைப் பிரிந்தாள் ஓர் இளமகள், தன் தோழி முன் இவ்வாறு புலம்புகிறாள். “ஞாயிறு மறைந்துவிட்டான்; முல்லை மலர்ந்து விட்டது; ஞாயிற்றுக் கதிர்களின் கொடுமையும் தணிந்து விட்டது; நம்மைச் செயலற்றவராக் கும் கொடிய இம்மாலைக் காலத்தை, இரவை எல்லையாகக் கொண்டு கடந்துவிடலாம்; ஆனால், தோழி! அவ்வாறு மாலைக் கொடுமையைக் கடந்துவிடுவதால் யாது பயன்? அடுத்துக் கடக்க வேண்டிய இரவு என்னும் கடல் இருக்கிறதே, அது கடத்தற்கரிய கடலினும் பெரிதாக உளதே! அதை எவ்வாறு கடப்பது?'’
‘'எல்லை கழிய, முல்லை மலரக்
கதிர்சினம் தணிந்த கையறு மாலையும்
இரவுவரம் பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம், கடலினும் பெரிதே!”
குறுந்தொகை : 387
நெய்தலில் பிரிவுப் பெருந்துயர் :
பிரிந்துறையும். பெண்ணின் உள்ளத்தை அலைக்கழித்து நோவப்பண்ணும் நெடும் பிரிவு, கடல் சார்ந்த நிலத்து ஒழுக்கமாம் நெய்தல் திணையோடு தொடர்புடையது. வெள்ளை நாரைகள் ஓயாது ஒலிக்கும், இனிய மணம் நாறும் கடற்கரையில், மலர் செறிந்த சோலையில் உள்ள அன்றலர்ந்த புதுமலர்களைக் கலக்கச் செய்து வீசும் அலைகள் வந்து மோதி, உடைந்து பின்னிடும் துறைக்கு உரியவனாகிய தலைவனோடு, பல்லெல்லாம் தோன்ற வாய்விட்டுச் சிரித்து அன்று மகிழ்ந்ததன் பயன், இன்று நம் இயற்கை அழகு அழிய, நம் தோள், நலம் கெட்டு மெலிய, அல்லல்படும் நெஞ்சோடு இரவெல்லாம் உறங்காமல், பசலையுற்று நாம் அழிந்து போவதுதானோ?"
"தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்,
அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது.
பசலை யாகி விளிவது கொல்லோ?
வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்,
பூமலர் பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே.
- குறுந்தொகை : 381
பிரிவுத் துயர் பொறாது துயர் உறும் ஓர் இளமகளை, அவள் தோழி தேற்றும் முறை இது: "தோழி! சுரத்தின்கண் உள்ள இலுப்பை மரத்தின் வெண்ணிறப் பூப்போலும் . மெத்தென்ற தலையை உடைய இறால் மீன்களுடன், திரளாகக் கிடைக்கும் பிற மீன்களையும் அகப்படுத்திக் கொள்ளுமாறு பின்னி விரித்த வலைகளை உடைய பரதவர்களின், வண்மைமிக்க தொழிலில் வல்லவர்களாகிய சிறுவர்கள், காட்டில் மரங்களில் ஏறி நின்று மானியங்களை வெருட்ட விரும்பி விரைந்து செல்லும் வேட்டுவச் சிறார்களைப் போல, மீன்பிடி படகில் ஏறிக்கொண்டு, கடல்பரப்பில் நெடுந் தொலைவு சென்று மரங்களை ஈர்த்துப் பிளக்கும் வாள் போலும் வாயையுடைய சுறா மீன்களுடன், பிற பெரிய மீனினங்களையும் பிடித்து, அவற்றைத் துண்டித்த இறைச்சிகள் நிரப்பிய தோணிகளோடு, மீண்டுவந்து, கடற் காற்று கழன்று அடித்துக் குவித்த மணல்பரப்பில் இறங்கும் உப்பங்கழி சூழ்ந்த நம் பாக்கத்தில், கல்லென ஆரவாரம். எழ, நம் தலைவன் தேர்வந்து நிற்கும். இது உறுதி; ஆகவே, நீ வருந்தாதே”.
‘'அத்த இலுப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகைமீன் பெறீஇயர்,
விரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்,
மரன் மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையர் வேட்டேழுந் தாங்குத்
திமில் மேல் கொண்டு திரைச்சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இடுமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே, தோழி! கொண்கன் தேரே'’
- நற்றிணை, 117
பிரிவால் வருந்தும் காதலர்களோடு, கடற்கரை கொண்டிருக்கும் இம்மரபுத் தொடர்பை விளக்கும் புலவர்கள், அதே நிலையில், அக்கடற்கரைவாழ் மீனவர்கள், அவர்தம் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை விளக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
பாலையில் பெரும் பிரிவு :
பாலை எனப்படும் ஒருவகைப் பாட்டில், ஒன்று. காடுகளுக்கும் அப்பாற்பட்ட தொலை நாடுகளுக்கும் காதலன் சென்றுவிட்டதைக் கூறும். அல்லது, காதலனோடு அவனூர் சென்றுவிட்ட மகளின் தாய், செவிலி போன்றோ ரின் துயரைக் கூறும். முன்னதற்கான ஓர் எடுத்துக்காட்டு இது. வாயிற் கண் வந்து நின்று இரப்பவர்க்கு அவர் விரும்புவன கொடுத்து அவர் இன்மையைப் போக்க வேண்டியது இல்லறத்தார் கடன்; அது செய்ய மாட்டா நிலையுற்ற நமது தலைவர். என் கண்ணையும், தோளையும், தண்ணெனக் குளிர்ந்து மணம் நாறும் கூந்தலையும், திதலை படர்ந்த அழகிய அல்குலையும் பலவாறு புகழ்ந்தபடி, நேற்றும் இங்கேயே இருந்தார். இன்று அவரைக் காணோம். பெரிய நீர்ப்பரப்பு போல் காணப்படும் கானல் நீராம் பேயத்தேரை, மரங்களே இல்லாமல் நீண்ட அப்பொட்டல் காட்டில், மான் கூட்டம் நீரென்று மயங்கி ; அது நோக்கி விரையும் கொடுமை மிக்க, மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர்த் தாழியில், மத்திட்டுக் கலக்கிய காலத்து, வெப்பத்தால் கைகூடாது சிதறிக்கிடக்கும் வெண்ணெய் போல, உப்புப் பூத்துக் கிடக்கும் களர் நிலத்தில் ஓமை மரங்கள் மட்டுமே நெருங்க , வளர்ந்து கிடக்கும் காட்டில், வெயில் நிலைபெற்று நிற்பதால் வெம்மை மிக்க பாலை நிலத்தில் தனியாகச் சென்று கொண்டிருப்பார் என அண்மையில் உள்ள அயலார் கூறு கின்றனர். நான் இக்கொடுமையை எங்ஙனம் ஆற்றுவேன்?"
"கண்ணும், தோளும், தண்ணறும் கதுப்பும்
திதலை அல்குலும் பலபா ராட்டி,
நெருநலும் இவணர் மன்னே; இன்றே,
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீளிடை மான்நசை யுறூஉம்
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன
உவர் எழுகௗரி ஓமையம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்மலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே; தம்வயின்
இரந்தோர் மற்றால் அற்று
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே"
- நற்றிணை : 84.
காதல் திருமணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமுதாய முறைதான் என்றாலும் தன் மகள், தங்களை மறந்து, அவள் விரும்பும் காதலனோடு அவனூர் சென்றுவிடுவதால் ஏற்படும் மனக்கலக்கத்தை எந்தத் தாயும் தாங்கிக்கொள்ள மாட்டாள், தன் அவள் விரும்பும் காதலனை அவளே தெரிந்துகொண்டு மகிழ்வதை அவள் தாய் மறுப்பதில்லை என்றாலும், அண்டை அயலார், அது குறித்துக் கூறும் வம்பு உரைகள் கேட்ட வழிப் பெரிதும் வருந்துவாள். அவ்வகையில் வந்தது இப்புலம்பல். கரிய எருமைக்கு உண்மையில் பிறந்த பெரிய காதுகளை உடைய கன்று, புதுமலர்கள் உதிர்த்த தாதுக்கள் | எருவாகக் குவிக்கப்பட்டிருக்கும் தொழுவத்தில் கிடந்து இனிதே உறங்கத்தக்க வளம் நிறைந்த வாழ்தற்கினிய மாளிகையையும் என்னையும் இங்கே விடுத்து தன்னுடன் வரும் காளை போலும் இளையோன் கூறும் , அளவு கடந்த பொய்யுரைகளில் மயங்கி, நெடுந்தொலைவில் உள்ள அவன் ஊரை அடைய விரும்பி, பசியெடுத்தபோது, உண்ணுவதற்கு வேறு உண்பொருள் கிடைக்காமையால், வழியிடையில் உள்ள நெல்லிமரச் சோலையில் உதிர்ந்து கிடக்கும் முற்றித் தேர்ந்த காய்களைத் தின்று, நீர் வறண்டு கிடக்கும் சுனையில் ஒரு சிறிதே தேங்கி நிற்கும் நீரைக் குடித்து செல்லும், நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்களை உடைய , என் மகளை, பனங்குருத்துக்களைப் பிளந்து பதனிடுவான் வேண்டிப் போட்டுப் பரப்பும், மாலைப் போதில் விரிந்த நிலவெளியிலே சென்று, தேடிப் பின் சென்று காணும் படியாகச் செய்த, இதற்கு முன்னரே, என்னைப் பெரிய கரிய தாழியில் இட்டு அடக்கம் செய்வதற்கு ஏற்ப என் உயிரைக் கொண்டு செல்லாத அந்தக் கூற்றுவன் தன் வலி அழிந்து, அத்தாழியல் இட்டுக் கவிக்குமாறு இறந்து போகக் கடவனாக'’.
“இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி,
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்
செல் பெரும் காளை பொய் மருண்டு, சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த,
குவளை உண்கண் என் மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய
மாலைவிரி நிலவில் பெயர்ப்பறம் காண்டற்கு
மாயிரும் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே”.
- நற்றிணை : 27
காதல் கொண்டாரை அடைவதில் ஏற்பட்டுவிடும் காலக்கழிவின் நீட்சி, காதல் உணர்வை, இயல்புக்கு மாறான வகையில் வெளியிடுவதாம் முறையை வளர்த்துவிட்டது. அதுவே, காதற்பாட்டின் - அகத்துறைப் பாட்டின் - ஒரு பொருளாகவும் ஆகிவிட்டது. காதலில் தோல்வியுற்ற ஒருவன் - மேற்கொள்ளும் நனிமிகக் கொடுமை வாய்ந்த முறை, பனை மடல்களால் ஆன குதிரை மீது அமர்ந்து கொள்ளும் மடலேறுதல் என்பதாம். இதை விளக்க, பிற்காலப் பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்படும். காமநோய் தணித்தற்கு இயலாதவாறு முதிர்ந்துவிட்டால், ஊர்ந்து செல்லும் குதிரை என்று பனைமடலால் ஆன குதிரை மீதும் ஏறிக்கொள்வர்; மாலை என்று சூடத்தகாத, குவிந்த அரும்புகளை உடைய எருக்கமலர்களால் ஆன மாலையையும் சூடிக்கொள்வர். தெருவில், பலர் பழிக்க வலம் வருதலும் செய்வர். அந் நிலையிலும் தம் காதல் நிறைவேறாதாயின் உயிர் விடுவதும் செய்வர்".
மா என, மடலும் ஊர்ப, பூ எனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்க வும் படுவ
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே."
குறுந்தொகை : 17.
நெஞ்சே! அழகு மிகுந்து விளங்கும், அசைந்து அசைந்து செல்லும் நடையுடையவளாகிய நம் காதலி, நம்மீது இரக்கம் கொண்டிலள் இனி நாம் விடும் தூதாக, மிக உயர்ந்த பனை மரத்தில் விளைந்து முதிர்ந்த பெரிய மடல்களால் பண்ணிய குதிரைக்கு, மணிகளைப் பூட்டி, பெரிய மலர் மாலையையும் முறைப்படி சூட்டி, நாம் வெள்ளெலும்புகளை மாலையாக மார்பில் அணிந்து கொண்டு, பார்ப்பவரெல்லாம் இகழுமாறு அம்மடல் மாமேல் அமர்ந்து, ஒருநாள், நம் உயிரோடு பிறந்த நாணத்தையும் கைவிட்டு, அவள் உறையும் ஊர்த்தெருவில் திரிவதுதானோ?
விழுத்தலைப் பெண்ணே விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபில், பூட்டி,
வெள்ளென்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ ?
கவிந்து அவிர் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே'’
- குறுந்தொகை : 782
காதலனை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுத்திருக் கும் ஓரிளம் பெண்ணின் தோழி அவளுக்குப் பின் வருமாறு கூறுகிறாள். ‘'உணவு உண்ணமாட்டா ஒரு குதிரையைப் பனைமடல்களால் பண்ணி, அதற்குச் சிறிய மணிகளைக் கட்டி, முதுகில் இட்ட கலன் நழுவாதவாறு பின்னே கட்டும் வார்க்கச்சினையும் கட்டி, சிறுசிறு அரும்புகளைக் கொண்ட எருக்கமலர் மாலை அணிந்த ஓரிளைஞன் அதில் வீற்றிருக்க: நம் ஊர்க்குறும்பு மிக்க இளஞ்சிறுவர்கள், நம்மூர்த் தெருவில், எம்பின்னே, தொடர்ந்து ஈர்த்து வரலாயினர்; என்னே அவர் செயல்!
‘'சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகிழ் எருக்கம் கண்ணிசூடி,
உண்ணா நல்மா பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள்.”
- நற்றிணை : 220
பெருந்திணை என வழங்கப்படும் இத்தகைய பாடல்கள், இறை வழிபாட்டுப் பாடல்கள் பாடத் தொடங்கிவிட்ட கிபி. 600க்குப் பிறகு, காதலன் கடவுளாக, அவன் மீது கொண்ட காதல் கைகூடாததாகப் பாடப்படும் ‘'மடல்” எனும் ஒருவகைப் பாடலுக்கு வழி செய்துவிட்டன. ஆகவே, அவை மிகவும் சுவையுடையவாயின.
மக்களின் அன்றாட வாழ்க்கை:
மக்களின் காதல் வாழ்க்கை மட்டுமல்லாமல் அக்காலத்திய, அவர்களின் அன்றாட வாழ்க்கை நிலைகளும் அப்பாடல்களில் வரைந்து காட்டப்பட்டிருக்கும். ஆனால், அப்பாடல்களெல்லாம் அழிந்துவிட்டனவாதலின், மக்கள் நடத்திய தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை 151 அன்றாட வாழ்க்கை நிலை பற்றிய ஒரு படத்தை, ஒரு நிலத்தை அடுத்து ஒருநிலமாக, எழுதிக்காண, அடுத்து வந்த காலத்தைச் சேர்ந்த சில பாடல்கள், ஈண்டு எடுத்துக் காட்டப்படுகின்றன. இருவேறு காலங்களில் மக்கள் வாழ்க்கை முறைகளில் பெரிய வேறுபாடு இருக்காது.
மலைநாட்டில்
காதல் ஒழுக்கத்தின் முடிந்த நிலையாம் முறையான திருமணச் சடங்கு விரைவில் நிகழ்ந்துவிடும் என்ற காதலியின் நம்பிக்கை இடம் பெற்றிருக்கும் பின்வரும் பாட்டில், மலை நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை பற்றிய ஒரு விளக்கமும் காணக்கிடைக்கும்.
"தனக்கு வேண்டும் இரையைத் தேடிப் புறப்பட்ட அகன்ற வாயையுடைய ஆண் கரடி , வழியில், மேலே வளைவு வளைவான வரிகள் கிடக்கும் புற்று ஒன்று இருக்கக் கண்டு, அதைப் பெயர்த்து, அதன் உள்ளே அடங்கியிருக்கம் நல்ல பாம்பும் ஒடுங்கி நடுங்கிவிடுமாறு முழங்கி, புற்றினுள் வாய்வைத்துக் கொல்லன் ஊதுகின்ற உலைமூக்கே போல் பெருமூச்செறிந்து அகத்தே குடிகொண்டிருக்கும் ஈசல்களை உறிஞ்சி உண்ணும், இரவில் நடுயாமத்தில் நீ வருவது வழக்கம் என அறிந்து யாம் அஞ்சுகின்றோம் என்று கூறி, அவ்வச்சம் அகலும் வண்ணம், இனியும் காலம் தாழ்த்தாது மணந்து கொள்வாயாக என நாம் இரந்து வேண்டிக்கொண்டால், நாள் நீட்டியாது நல்ல நாளில், நம்மை நம் மலைநாட்டில் மணம் புரிந்து கொண்டு, வேங்கை மலர்களால் ஆன மாலை சூடும் வழக்கம் உடையவர்களாகிய குறவர்கள், எருதுகளைக் கொண்டு கதிர்ப் போரடிக்கும் களத்தைச் செப்பம் செய்தாற் போன்ற அகன்ற பாறையில், புனத்தில் விளைந்த தினைக் கதிர்களைத் துவைத்து அதன் தாளைப் பெரிய போராகப் போடுதற் பொருட்டு, வைகறைப் போதில் எழுந்து கொள்ளுமாறு அவர்களை எழுப்புவான் வேண்டி, களிறு பிளிறிக் குரல் எழுப்பும் அவர் மலை நாட்டுக்கு நம்மோடு செல்ல நிற்பன்; இஃது உறுதி". ‘'இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊது உலைக் குருகின் உள்உயர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்துவரல் இரக்குவ மாயின், நம்மலை
நன்னாள் வதுவை கூடி, நீடின்று
நம்மொடு செல்வர்மன்; தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர், எருது ஏறி களமர்
நிலங்கண்டன்ன அகன்கண் பாசறை
மெனதினை நெடும் போர்புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும் தம் பெருங்கல் நாடே”.
- நற்றிணை : 125
‘'பேயினங்கள் காற்றுப் போல விரைந்து இயங்கா நிற்க, ஊரினர் அனைவரும் உறக்கம் கொண்டு விட்டனர். ஆனால், குறிஞ்சிப் பண்ணைக் கேட்போர் அச்சம் கொள்ளுமாறு பாடும், இவ்வூர்க் காவலராய கானவர் கண்துயில் கொண்டாரல்லர்; வலிய ஆண்யானையோடு போரிட்ட, வாள் போல் வளைந்த கோடுகளையுடைய புலி, மலையடிவாரத்தே இருந்து முழங்கா நிற்கும். வானளாவ அயர்ந்து நிற்கும் மலைச்சரிவுகளில், விரைவில் விடியாது நீண்டு செல்லும் இரவின் ஒரு யாமத்தில், பாம்பும், தன் அழகிய நீலமணியைக் கக்கி வருந்துமாறு, பேரொளிகாட்டி மின்ன, பேரொலி எழ இடித்து மழை பெய்யா நின்றது. அந்தோ! முன்பே மெலிந்திருக் கும் என் தோள்கள் மேலும் மெலிவுற்று நாம் வருந்த நேரினும், அவர், அந்நள்ளிரவில் அக்கொடுவழியில் வாராதிருப்பராயின், அதுவே நனிமிக நன்றாம்”
“கழுது கால் கிளர ஊர்மடிந் தன்றே;
உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியன்நகர்க் கானவர் துஞ்சார்;
வயக்களிறு பொருத்த வாள்வரி வேங்கை
கன்முகைச் சிலம்பில் குழுமும் ; அன்னோ !
மென்தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்,
வாரார் ஆயினோ நன்றுமன்; தில்ல:
உயர்வரை அடுக்கத்து ஒளிருபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி அரவு தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஓங்குவரை யாறே"
- நற்றிணை : 255
மலைநாட்டு மகளிரின் கடமைகளுள் ஒன்று, தினை, கதிர் முற்றும் பருவத்தில் அத்தினைப்புனத்தைக் காத்தல் ஆகும். அதனால்தான், தங்கள் காதலர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பு அம்மகளிர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. தினை முற்றி அறுவடைப்பருவம் வந்துற்றதும், இம்மகளிர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுப் புறம் போகவிடாது காக்கப்படுவர். இது, இற்செறிப்பு எனப்படும். அவ்வாறு இற்செறிக்கப்பட்டாள் ஓர் இளம்பெண்ணின் தோழி இவ்வாறு புலம்புகிறாள்: தோழி! தினையின் கதிர்கள் எல்லாம், விரிந்த அலைகளையுடைய கடல் வற்றிவிட்டாற் போலக், காய்ந்து கொய்யும் பருவம் அடைந்து விட்டன; அந்நிலையை நீ காண்பாயாக; இனி, நமர், அவற்றைக் கொய்துகொண்டு போவதல்லாமல், உன்னை வீட்டில் இட்டு வெளியே போகாவண்ணம் காப்பதும் செய்துவிடுவர் அது உறுதி. பொன் போலும் நிறம் வாய்ந்த மலர்களால் நிறைந்த வேங்கை மரங்கள் வளர்ந்து மணம் நாறும் மலைச்சாரலில், பெரிய மலைநாட்டுக்கு உரியோனாகிய காதலனோடு, தினைப்புனத்தில் தங்கியும் சிவந்த வாய்களை உடையவாகிய கிளிகளைத், தினைக்கதிர்களைக் கொய்து செல்லாவாறு. ஓட்டியும், அடுத்திருக்கும் கரிய மலைச்சாரலில் உள்ள அருவியில் நீர் விளையாடல் புரிந்தும், மலைச்சாரலில் வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தாலான சாந்தை அதன் மணம் - அறிந்து வண்டுகள் வந்து மொய்க்க மேனியெல்லாம் பூசிக்கொண்டும், பெரிதும் விரும்பி மேற்கொண்ட அந்நட்பு, மெல்ல மெல்லச் சிறுகி, முடிவில் அதுதானும் இல்லாவாறு போய்விட்டது போலும் ஒரு காட்சியை நான் மனக்கண் ணால் காணுகின்றேன். அதுகுறித்து நாம் என்னதான் செய்ய இயலும்? ‘'யாங்குச் செய் வாம்கொல்! தோழி! பொன்வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச்,
செவ்வாய்ப் பைங்கிளி ஒப்பி; அவ்வாய்ப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன்; விரிதிரைக்
கடல்பெயர்ந்த தனைய வாகிப்
புலர் பதம் கொண்டன, ஏனல் குரவே.”
- நற்றிணை : 259
பாலைநிலத்தில்
பாலை நிலத்தில் மிக எளிதில் கிடைக்கும் உணவு, விளாம்பழம், “நிலம் பிளவுபடுமாறு மண்ணுள் இறங்கிய வேறாம், பெரிய கிளைகளும், உடும்புகள் அணைந்து கிடப்பது போலும் பொரிந்த செதில்களும் உடைய மிக உயர்ந்த விளாமரத்தின் கிளைகளிலிருந்து அறுபட்டுப் பச்சைக்கம்பளத்தை விரித்தாற்போலும் பசும்புல் விளைந்து கிடக்கும் நிலத்தின் மீது, இளம் சிறார்கள் ஆடி விடுத்த பந்து கிடப்பது போல் வீழ்ந்து பரந்து கிடக்கும் விளாங்கனிகளாம் . உணவு”. பாலை நிலத்து மக்கள், விளாங் கனிகளைத் தங்களுடைய முக்கிய உணவாக மேற்கொள்வர்.
‘'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்த நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர் தாஅம்
வெள்ளில் வல்சி”
- நற்றிணை : 24:1-5
மேய்ச்சல் நிலத்தில்:
மலைநாட்டு மக்கள் நடத்துவது போன்ற இன்ப வாழ்க்கையைக் கால்நடை ஓம்புவோராகிய ஆயர்களும், முல்லை நிலத்தில் நடத்தி இன்புறுவர். புன்செய் நிலங்களாம் கொல்லைகளில் குடிவாழும் ஆயர்களுக்கு உரிமையுடைய தான சிறிய புனத்தில் வளர்ந்து நிற்கம் குறுகிய கிளைகளைக் கொண்ட குரா மரத்தின் குவிந்த கொத்தில் உள்ள வெண்ணிற மலர்கள், ஆடுகளை மேய்க்கும் இடைமகன் அணிந்து மகிழும் வண்ணம் மலரும்".
"கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவியிணர் வான்பூ
ஆடுடை இடையன் சூடப் பூக்கும்"
- நற்றிணை : 266 : 1-3
பாறைபடுதயிர் என்பதுபோல் நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போலும் மெத்தென்ற கையால், தயிர்க்கறை போகக் கழுவிய கையினால் மட்டுமே தொடத் தக்கதான உயர்ந்த ஆடையைக், கணவனுக்காம் உணவை விரைந்து முடிக்கும் ஆர்வ மிகுதியால், கழுவாமேலே எடுத்து உடுத்துக் கொண்டு, குவளை மலர் போன்ற மை உண்ட கண்களுள் தாளிப்புப் புகை புகுந்து தாக்க, தானே சமைத்து முடித்த புளிக்குழம்பைக் கணவன், இனிது இனிது எனக் கூறியவாறே மகிழ்ந்து உண்ணக் கண்ட அவ்விளமகளின் ஒளிவீசும் முகம் புறத்தே புலனாகாவாறு அகத்துக்குள்ளாகவே. அகமிக மகிழும்".
"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் ,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத் ,
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."
-குறுந்தொகை : 167
"தோழி! மதுவை நிரப்பிவைத்திருக்கும் நீலக் குப்பிகளைப் போன்ற குறுகிய வாயையுடைய சுனைகளில் வாழும் பிளந்த வாயையுடைய தேரைகள், கிளியோட்டும் கருவியாகிய தட்டைப்பறை ஒலிபோல் ஓயாது ஒலிக்கும், நாட்டுக்கு உரியவனாகிய நம் காதலன், களவுக்காலமாகிய பழைய திங்களில், முழுமதி நிலவொளியில் என் தோளை ஆரத் தழுவினான். அதனால் அவன் மேனியின் முல்லை மணம் என் தோள்களில் இன்றும் வீசா நிற்கும்”
“மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்,
தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
மணந்தனன் மன் நெடுந் தோளே :
இன்றும் முல்லை முகைநா றும்மே”
-குறுந்தொகை : 193
‘பரல்கற்கள் மலிந்த பாலை நிலத்தில் வளர்ந்து ஓங்கி நிற்கும் மீன் குத்திப் பறவை போலும் முளைகளையுடைய கள்ளிச்செடி மீது படர்ந்து தழைத்திருக்கம் முல்லையின் மணம் மிக்க மலர்களை, எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் தலையை உடையவாகிய ஆட்டுமந்தையை மேய்த்துவரும் வலிய கையையுடைய இடையன் இரவிலே கொய்து பனம் குருத்தின் பிளவினால் தொடுத்த மாலையின் நியமணம், மலைப் போதில் தெருவெங்கும் கமழும் சிறிய குடிகளை யுன்
‘'பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் ததைஇய அலங்கலம் தொடலை
மறுகுடன் கமழும் மாலைச்
சிறுகுடிப் பாக்கம்”
- நற்றிணை : 169 : 4-10
“தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய தலையினை உடைய கரிய எருமையை, அதனிடமிருந்து மிக இனிய பாலை நிரம்பக் கொள்வான் வேண்டி, அவற்றின் கன்றுகளை அத்தொழுவத்திலேயே விட்டுவிட்டு, ஊரில் மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள், அவ்வெருமைகளின் மேல் அமர்ந்து கொண்டு மேய்புலம் நோக்கிக் கொண்டு செல்லும், நிறை இருள் மெல்ல மெல்லக் கழியும் விடியற்காலம்.'’
"மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பால் பயம் கொண்மார், கன்றுவிட்டு
ஊர்க்குரு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலவர் விடியல்"
நற்றிணை : 80 :1-4
கடல் சார்ந்த நிலத்தில் :
கடல் சார்ந்த நிலத்தைச் சேர்ந்த இளமகளிர் நாள்தோறும் முறையாக மேற்கொள்ளும் வாழ்க்கை முறை, அப்பெண்களின் தோழி பாடிய இந்தப் பாட்டிலிருந்து நன்கு தெரியவரும்.
தோழி! நீ வாழ்வாயாக! பெரிய உப்பங்கழிகளில் உள்ள மீன்களாகிய இரையைத் தின்ற பல்வேறு இனப்பறவைகளின் வரிசை வரிசையான கூட்டம், வளைந்த பனைமடல்களிடையே கட்டிய குடம்பைகளில் அடங்கி இராப்பொழுதை நெருங்கியிருந்து கழிக்கும். அப்பனை மரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கும், வெண்மணல் பரந்த கொல்லை கள் சூழ்ந்த கானலிடத்துக்கு உன் தோழி மாரோடு, காலைப் பொழுதிலேயே சென்று, தேன் துளிக்கும், மணம் கமழும் மலர்களை உடைய நெய்தலின், ஒன்றோடொன்று மாறுபடும் உருவம் வாய்ந்த இலைகளைப் பறித்துக் கொணர்ந்து ஆடையாகத் தைத்து அதை உடுத்துக் கொண்டு, சிற்றில் புனைந்து, அது சிறக்கக் கோலமும் இட்டு மகிழ்ந்து விளை யாடி, புலால் நாறும் அலைகளால் மோதுற்று மோதுற்று வளைந்து போன அடியை உடைய கண்டல் மரத்து வேர்களின் இடையே, இணை இணையாகச் செல்லும் சிவந்த நண்டுக் கூட்டங்களின் நடை அழகைக் கண்டு மகிழும், இவைபோலும் சிறுசிறு விளையாடல்களையும் கைவிட்டுப் பெரிதும் வருந்திக் கிடக்கின்றனையே உனக்கு வந்துற்ற , அத்துயருக்கு யாதுதான் காரணம்? கூறாய்தோழி!"
உரையாய்; வாழி! தோழி! இருங்கழி
இரையார் குருகின் நிரைபறைத் தொழுதி,
வாங்குமடல் குடம்பைத், தூங்கிருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கட்கமழ் அலர தண்நறும் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடிப்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல்
செம்பேர் இரணை அலவற் பார்க்கும்
சிறுவிளை யாடலும் அழுங்க,
நினக்குப் பெரும் துயரம் ஆகிய நோயே
நற்றிணை : 123
ஆற்றுப்பள்ளத்தாக்கில்
ஆற்றுப்பள்ளத்தாக்கில் மக்கள் நடத்திய வாழ்க்கை முறையினைப் பின்வரும் பாக்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்:
“தேன்கலந்து மிகுசுவை உடையதாக ஆக்கிய இனிய வெண்ணிறம் கெடாப் பால் உணவை, சிறந்த ஒளிவீசும் பொன்னால் பண்ணப்பட்ட கிண்ணத்தில் இட்டு, அக்கிண் ணத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு, மலர் நிறைந்த பூங்கொடி போலும், மெல்லிய கொம்பை மறு கையில் ஓக்கியவாறே அணுகி, இப்பாலை உண்ணுவாயாக’ எனக் கூறலும், தெள்ளத் தெளிந்த முத்துக்களைப் பரலாக இட்டுப் பண்ணப்பட்ட பொற்சிலம்பு காலிலிருந்து ஒலிக்கப் பாய்ந்து, மெல்ல நரைக்கத் தொடங்குமளவு, அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்த செவிலித்தாய் பின்தொடர்ந்து வந்து பற்றிக் கொள்ளமாட்டாது தளர்ந்து போகுமாறு ஓடி , மனை முன்றிலில் உள்ள மலர்ப்பந்தற் கீழ்ப் போய் நின்று கொண்டு, ‘உண்ணேன்; உணவு வேண்டேன்’ என மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டுப் பருவத்தாள் என் மகள்.”
‘'பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் ,
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்நிப் -
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஓக்குபு புடைப்ப, தெண்ணீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇ மலிந்து ஒலியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி".
- நற்றிணை : 710 : 1-8
மலைகளைச் செய்துவைத்தது போல் காட்சி அளிக்கும் அடி பரந்து மிக உயர்ந்த நெல் நிறைந்திருக்கும் பல கூடுகளையுடைய , ஏர்களில் எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழுவ! மறுநாள் நடைபெற வேண்டிய உழவுப் பணிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து விட்டமையால் கண்ணுறக்கம் கொள்ளாமல் இருந்து, குளிர்ந்த விடியற்போதிலேயே எழுந்து கொண்டு, கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரிய பெரிய துண்டுகள் மிதக்குமாறு பண்ணி வைத்திருக் கும் குழம்போடு உண்பதற்கு ஏற்ப நன்கு தீட்டப்பட்ட அரிசியால் ஆன சோற்றுத் திரளைக், கை நிறைய வாங்கி வாங்க உண்டு முடித்து, நீர் நிறைந்திருக்கும் நன்செயில், நாற்றுக்களை நட, உன்னோடு தொழிலாற்றும் நாற்று நடுவாருடன் நீ செல்கின்றனை.
மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாது, தண்புலர் விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும் மாந்தி நீருறு செறுவில்
நாறுமுடி அழுத்தநின் நடுநரோடு சேறி"
- நற்றிணை : 60 : 1-8
உழவர் மகளின் அன்றாடக் கடமை, உணவு சமைத்தல் - ஆகும். அவள் காதலன், அவள் பெற்றோரின் விருந்தோம்பும் பண்புக்கு ஏற்ப, அம்மனைபுகும் விருந்தினருள் ஒருவனாகச் சென்று, தன் காதலியைக் கண்டு மகிழ்வதோடு, உழவர்வாழ் சிற்றூர்களின் மனை வாழ்க்கையின் மாண்பு எத்தகையது என்பதை நாம் அறியவும் செய்துள்ளான்.
வளைந்து நீண்ட கொம்புகளையுடைய எருமையின் தளர்ந்த நடையுடையவாய இளம் கன்றுகள் வீட்டுத் தூண்கள் தோறும் கட்டப்பட்டுக் காண்பதற்குக் களிப் பூட்டும் நல்ல மனையின் கண், வளைந்த குண்டலங் களைக் காதில் அணிந்து கொண்டிருக்கும், செழித்த உடல் நலம் உடையவளாகிய நம் காதலி, சிறிய கல் மோதிரம் செறிக்கப்பட்ட மெல்லிய விரல்கள் சிவந்து போகுமாறு, வாழையின் குளிர்ந்த இளம் தண்டை , சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அடிசில் ஆக்குதலால், புகை படிந்து சிவந்த கண்களை உடையளாகி, அழகு உண்டாகுமாறு, பிறைவடிவான நெற்றியில் உண்டாகியிருக்கும் சிறுசிறு துளிகளான வியர்வையைத் தன்னுடைய அழகிய சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டு , சமையல் முடிந்தும், கணவன் வந்திலனே என்ற நினைப்பால் நம் மீது கொண்ட சினத்துடன் அட்டிற் சாலையில் இருக்கிறாள். விருந்தினராய் வர விரும்புவார் என்னோடு வருவார்களாக; விருந்தினர். முன்னே, அழகிய மாமை நிறம் வாய்ந்த என் காதலி, என்னைச் சினந்து கண் சிவந்து காட்சி தரமாட்டாள், முள்போலும் சிறிய பற்கள் சிறிதே தோன்றப் புன்னகையே. காட்டுவள்; அவளின் சிரிதே முகத்தை நானும் கண்டு மகிழ்வேன்”
"தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த, காண்தகு நல்இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை ,
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப,
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகை இப்
புகை உண்டு அமர்ந்த கண்ணன், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டிலோளே, அம்மா அரிவை!
எமக்கே, வருகதில் விருந்தே; சிவப்பாளன்று;
சிறிய முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே"
- நற்றிணை - 120
சிற்றூர் ஆட்சிமுறை பண்டைய நாட்களில், தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, முழுக்க முழுக்க சிற்றூர்களைச் சார்ந்தே இருந்தது. சிற்றூர்கள் இப்பொழுதைக் காட்டிலும், அன்று தன்னிறைவு பெற்று விளங்கின. சிற்றூர் ஆட்சிமுறை, எளிதில் விளங்கிக் கொள்ளலாகாச் சட்டங்களை எதிர்நோக்கியிருக்கவில்லை. சட்டங்கள் மூலம், மக்கள் எதை எதிர்பார்த்தனரோ, அதை, அம்மக்களின் பழக்க வழக்கங்களே வழங்கிவிட்டன. ஏதேனும் ஓர் இடையூறு, ஒரு வழக்கு ஏற்பட்டு விட்டால், ஊர்ப்பெரியவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் செய்வதுபோல், ஊர்நடுவே நிற்கும் மரத்தடியில், பொதுவாக, ஆலமரத்தடியில் கூடியிருந்து, ஒரு கலயம் கள்ளுக்கு, அவ்வழக்கினைத் தீர்த்துவிடுவர். அத்தகு மரங்களின் அடியில் இருக்கும் திறந்தவெளி, பொதியில், பொதியம், பொதுவில், மன்று, மன்றம்" என்றெல்லாம் அழைக்கப்படும். மன்றம், என்றால் பொதுவாக ஊர்ப் பொதுவிடம் எனப்படும். ஊர்க்கால்நடைகள் ஆங்கே மடக்கி வைக்கப்படும். கன்றுகளை அழைக்கும் 'அம்மா எனும் குரல் எழுப்பியவாறே மன்றில் புகுந்து நிறைந்துவிடும். ('கன்றுபயிர் குரல் மன்று நிறைபுகுதரும்" (அகநானூறு: 14:11) இதே வரி, குறிஞ்சிப்பாட்டிலும், எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றுளது. (குறிஞ்சிப்பாட்டு : 278) கால்நடைகள், வரிசை வரிசையாக மன்றுள் நுழைவதையும், கொல்லேறு : எனும் காளைகள், அம்மன்றத்தில் திரிவதையும் புறநானூற்று வரிகள் உணர்த்துகின்றன. மன்று நிறையும் நிரை (புறம் : 387 : 24), "கொல்லேறு திரிதருமன்றம்" (புறம் : 309:4) மரம் செடி, கொடிகள் அற்ற, மேடு பள்ளம் இல்லாத திறந்த வெளிகளும், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி வைக்கப் படும், அத்தகு இடங்களும் மன்றம் என அழைக்கப்படும். ஆங்கு மகளிர் செல்வதும், குரவை போலும் கூத்தாடுவதும் செய்வர். "மென்தோள் மகளிர் மன்றம் பேணார்" (புறம் : 375:12) மன்று தொறும் நின்ற குரவை, (மதுரைக்காஞ்சி : 615) பெரியாழ்வார் திருமொழி, மன்றில் குரவை ஆடிய திருமாலைக் குறிப்பிடுகிறது. ‘'மன்றில் குரவை பிணைந்த மால்” (1 : 2 : 2:12)
இது போலும் திறந்த வெளிகளில், அவ்வந்நிலத்துக்கே உரிய மரங்கள் வளர்க்கப்படும் பாண்டியர்க்கு உரிய மன்றத்தில் வேம்பு வளர்க்கப்பட்டு, தங்கள் தலைமாலைக்கு வேண்டும் தழை அம்மரத்திலிருந்து கொய்யப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன். ஊர் மன்றத்தே இருக்கும் வேம்பின் பெரிய கிளைகளில் உள்ள தளிர்களை உழிஞைக் கொடியோடு கலந்து கட்டிய தலை மாலை அணிந்து போருக்குப் புறப்பட்டான்.
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடுமிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
- புறம் : 76 : 4-6
வேம்பு நிற்கும் ஊர்மன்றத்தில் உள்ள குளத்துக் குளிர் நீரில் மூழ்கி அம்மரத்து ஒள்ளிய தழைகளை அணிந்து கொண்டான்: “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து” (புறம்: 79 : 1-2) பல்வேறு நிலங்களைச் சேர்ந்த மன்றங்களில், அவ்வந்நிலத்துக்கு உரியவாய் நிற்கும் பல்வேறு மரங்களாவன. 1. பலா : “மன்றப் பலவின் மாச்சினை,” ‘'மன்றப்பலவின் மால்வரை” (புறம் : 128-1: 476:5) 2. விளாம்: ‘'மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்” : (புறம்: 181:1) 3. இலந்தை : “இரத்தி நீடிய அகன்றலை மன்றம் ; “ . “மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்” (புறம்: 34:12, 325 : 10-11) புன்னை : ‘'மன்றப் புன்னை மாச்சினை “ (புறம் : 49:8)
பொதியில், மன்றம் என்ற சொற்கள், ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடியிருந்து, ஊர் நிகழ்ச்சிகளைப் பேசித் தீர்க்கும் மரத்து நீழல், பொதுவாக ஆலமரத்து நீழல் என்றும் பொருள் படும். அம்மரம், ஊர்முகப்பில் நிற்கும். பிற்காலத்தவராய மாமூலனாரும் அத்தகு மரத்தடி மன்றம், இன்று இருப்பது, போலவே, தம் காலத்தும் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ‘'முன்னூர்ப் பொதியில்” (புறம்: 390:19) “தொன்முது ஆலத்து அரும்பணைப் பொதியில்" (அகம்: 251:8) நகரங்கள் எழுந்ததும், அரசர்கள், முதலில் ஒரு பொதுக்குடிசையை, அடுத்து, ஒரு பொது வீட்டை அல்லது நகர் அரங்கைக் கட்டினார்கள். அவையும் பண்டைப் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அதில், கந்து அல்லது கந்தம் எனப்படும் மரக் கிளை நடப்பட்டு, அம்மரத்துண்டில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படும் கடவுள், தண்ணுமை முழக்கத்திற்கிடையே வழிபடப் பெறும். "பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை" (புறம் : 89:7). இவ்வரங்குகளில், ஆரியர்களிடையே, நிகழ்ந்தது போலவே, பண்டைக் காலத்தில் சமய நிகழ்ச்சிகளோடு நடைபெற்றதான சூதாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கீழ்வரும் பாட்டு, அவ்வாறு பாழுற்றுக் கைவிடப்பட்ட ஒரு கோயில் பற்றிய விளக்கமாம். "வீடுதோறும் மீன் சுடுதலால் புலால் நாற்றத்தோடு கலந்து எழும் புகையின் நீண்ட ஒழுங்கு, வயலருகே நிற்கும் மருதமரத்து வளைந்த கோடுகளில் சென்று சூழ்ந்து கொள்ளும் பெரிய வருவாய் இப்போது இல்லையாகிப் போகவே, முழவு முதலாயின முழங்க, பலியிட்டு வழிபட்ட கடவுள் எல்லாம், தாம் குடியிருந்த கந்தகங்களை விட்டுப் போய்விட்டன. அதனால் பாழுற்றுப் போன ஊர் மன்றங்களில் பண்டெல்லாம், நரைதிரையுற்ற முதியோர் ஓய்வாக அமர்ந்து சூதாடுங்கால், சூதாடுகருவிகள் வீழ்ந்து வீழ்ந்து பண்ணிவிட்ட குழிகள், உடலெல்லாம் புள்ளிகளைக் கொண்ட காட்டுக் கோழிகள் இட்ட முட்டைகளால் நிறைந்துவிடும்"
"மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின். வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்,
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லில் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனம்"
புறம் - 52-9-16;
இது போலவே பாழுற்றுப் போன பொதியிலில் உள்ள பள்ளங்களிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை நற்றிணை குறிப்பிடுகிறது. ‘'மன்றத்துக் கல்லுடைப் படுவிற் கலுழி” (39 :3-4) அதே தொகை நூலில், ‘'முருங்கை மரத்தில், வேனிற் காலத்தில் காய்ந்து முற்றிய நெற்று போன்ற அழகு இல்லாத விரல்களையுடைய , அச்சம் ஊட்டும், பேரொலி எழுப்பும் வாயையுடைய பேய், வளப்பத்தைப் பண்டு உடையதாகி இருந்த ஊரின்கண் உள்ள, தெய்வத்தை வழிபட்டு இடும் பலிச்சோற்றை உண்ணுவான் விரும்பிப் பாழ்மன்றம் நோக்கி மோதி எழும்”, துன்பமிக்க மாலைப்பொழுது விளக்கப் பட்டுள்ளது. “வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
நற்றிணை : 73 : 1-4
மேலும் பிற்பட்ட காலங்களில், ஊர்மன்றமாகப் பெரிய மாளிகைகள் கட்டப்பட்டு, மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவான் வேண்டிவரும் புலவர்களும் பிற இரவலர்களும் தங்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. மரத்தாலான பல கம்பங்களைக் கொண்ட நகர் அரங்கின் ஒரு பக்கம், பள்ளியாகப் பயன்பட்டதைப் புறநானூறு காட்டுகிறது, "பல்கால் பொதியில் ஒருசிறை பள்ளி ஆக” (புறம் : 375 : 2-3) "மன்றுபடு பரிசிலர்” (புறம்:135: 17) நகரில் உள்ள, மன்றம், பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத்திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. மன்றமும் பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத் திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. "மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்" (திருமுருகாற்றுப்படை : 226) வழக்கறுக்கும் நடுவர் மன்றமாகவும் விளங்கிய உறையூர் நகர் அரங்கம், புறநானூற்றில் (220 : 7) “மூதூர் மன்றம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றாலும் உரை ஆசிரியர் ஒருவர், மன்றம் என்பதற்குக் குதிரைகள் ஓடும் செண்டுவெளி" எனப் பொருள் கூறியுள்ளார்.
அறம் வழங்கும் ஊர்ப்பெரியவர்கள் கூடும் ஆலமரத்திலும், ஊர் முதியோர் ஓய்வு கொள்ளும் பழைய குடில்களிலும் நடப்பட்ட கந்து எனும் மரக்கழிகளிலும் இடம் பெற்றிருந்த கடவுள் எது என்னும் வினா விடை காணமாட்டாதே நிற்கிறது. இவ்வினாவிற்கு விடை காண்பதற்கு முன்னர், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் இக்காலத்திற்கு மிகமிக முற்பட்ட காலமாகிய கற்கால கட்டத்தில், ஐயத்திற்கு இடம் இன்றி வழிபடுவதற்காக என்றே கல் லிங்கங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடல் பொருந்தும். உலோகக் காலம் (வட இந்தியாவில் செப்புக் காலம், தென் இந்தியாவில் இரும்புக்காலம் தொடங்கிய பின்னரும் கல் இலிங்க வடிவங்கள் தொடர்ந்து வழிபட்டு வரலாயின. லிங்கம் போல் தோற்றம் அளிக்கும். சில பொருட்கள், ஹாரப்பா, மோகன் ஜோதரோக்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயரத்தில் அரை அங்குலத்திலிருந்து ஓர் அடிவரை வேறுபடும் சதுரங்க விளையாட்டுக்காய்கள் போலும் வடிவுடையன; இரண்டு, குறுக்கே அரை அங்குலத்திலிருந்து 3 அடி அல்லது 4 அடி உயரம் உள்ள வட்டக்கல் வடிவுடையன. "அவற்றுள் சில காணப்பட்ட சூழ்நிலையோடு, அது தொடர்பான பொருள் களின் தொகுதியினையும் இணைத்துப் பார்க்கும்போது, அவ்வுண்மைகள் வழிபாட்டு முறைக்கு உரிய, யாதோ சில பொருள்கள் அங்கு இருந்தன என்ற முடிவிற்குச் சிறு சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. அவ்வட்டக்கல், மெஸபடோமியாவில் காணக்கிடைத்த ஒரு பொருளோடு ஒருமைப்பாடுடையதான செண்டு அல்லது தண்டாயுதத்தின் தலையாக இருக்கலாம் என்ற கருத்தும் கூறப்பட்டது. ஆனால் நூலாசிரியரின் கருத்துப்படி, பலபடியாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம், வட்டக்கல், யோனி ஆகும். சதுரங்கக்காய் போலும் பொருள் லிங்கம் ஆகும் என்பதே ஆம். யோனியும் லிங்கமும், வடகோடி முதல் தென்கோடிவரை, கீழ்க்கோடி முதல் மேற்கோடி வரையான இந்தியா முழுவதும், சிவனைக் குறிக்க எல்லோர்க்கும் விளங்கும் வடிவமாகும். லிங்க வழிபாடு, ஆரியர் வருகைக்கு மிகவும் முற்பட்ட, நன்மிகப் பழைய வழிபாட்டு முறையாம் என்பதில் எவ்வித வினாவிற்கும் இடம் இல்லை.'’ என்கிறார் திருவாளர் ஜான் மார்ஷெல் அவர்கள். (Archaeological Survey of India. Annual Report. 1925-26, page:79)
தென்னிந்தியாவில், கி.பி. 500க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாடல்களில், சிவன், ஆலமர் செல்வனாகவே கூறப்பட்டுள்ளான் என்பது ஈண்டுக் குறிப்பிடல் பொருந்தும், புறநானூறு பாட்டு ஒன்று, ஆலமரத்தைக் கடவுளுக்கு உரியதாகக் கூறுகிறது. ‘கடவுள் ஆலம்'’ (1:7) வேறுசில பாடல்கள், சிவனை, ஆலில் உறையும் இறைவனாம் எனத் தெளிவாக உணர்த்துகின்றன. “ஆலமர் செல்வன்'’ (சிறுபாணாற்றுப்படை: 1:97; கலித்தொகை : 81:9:83:45), "ஆல்கெழு கடவுள்” (திருமுருகாற்றுப்படை : 256). இப்பாடல்கள், ஆரியக் கருத்துகள், தமிழ்ப்பாடல்களிடையே இடம் பெறத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்தவை என்றாலும் கந்து எனப்படும் கம்பத்தில் இடம் பெற்ற கடவுளும், ஆலமரத்தில் இடம் பெற்ற கடவுளும் ஒன்றே. பண்டைத் தமிழ் இலக்கிய காலத்தில் சிவன், ஒரு நிலத்தின் தெய்வமாக இடம் பெறவில்லை. அவன் ஒரு சிறு தெய்வமே முருகனுக்குத் தந்தையாக உணர்ந்து முடிவாக, ஐந்து ஆறு நூற்றாண்டுகளில், சைவ ஆகம நெறி, தமிழ்நாட்டில் பரவியபோது பெருந்தெய்வம் ஆயினான். வட இந்திய ருத்ரன், தொடக்கத்தில், ஒரு மலைநாட்டுத் தலைவன் மகளை மணந்து கொண்ட ஒரு மலைக்கடவுளாவன். ஆகவே அவன் தங்கள் தவ ஒழுக்கத்தை மேற்கொள்வான் வேண்டி - மலைகளில் சென்று தங்கும் யோகியர்களுக்குக் கடவுளாகி விட்டான். தென்னாட்டிற்கு அவன் குடிபெயர்ந்ததும், சிவவழிபாடு சிறந்து வளர்ச்சியைப் பெற்று விட்டது. ஆனால் அது நிகழ்வதற்கு முன்னர், கிடைக்கக் கூடிய நனிமிகப் பழைய தமிழ்ப்பாடல்களில் காணப்படுவது போல், தமிழ் நாட்டில், அவன் ஆலமரத்துக் கடவுளாகவே இருந்துள்ளான், ஒருவேளை, ஆலமரத்து நிழலில் ஒரு லிங்கம் நடப்பட்டிருக்கக்கூடும். அங்ஙனம் இல்லை என்றால், அவன் ஆலமர் செல்வனாக ஆகியிருக்க முடியாது. மருதம், இலந்தை, நாவல் போலும் மரத்தடிகளிலும், லிங்கம் வைக்கப்பட்டது. சிவ வழிபாடு பெருகி, அம்மரங்களை உள்ளடக்கிச் சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கிய ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவையெல்லாம் புகழ் பெற்ற வழிபாட்டிடங்களாகி விட்டன. இப்போது தென்னாட்டில், மிகவும் புகழ் பெற்று விளங்கும் சிவன் கோயில்களில், இவையும் இடம் பெற்றுள்ளன. புனித மரங்களிலிருந்து வெட்டப்பட்டு, இம்மரம், அம்மரத்தடி லிங்க வடிவம் ஆகிய இரண்டின் இறைத்தன்மையும் கொண்டுவிட்ட கோயில் குடில்களில் நடப்பட்டு, கந்து எனப்படும் அக்கழிகளும், லிங்கமாகக் கருதியே நடப்பட்டிருக்கக் கூடும்.
நகரங்களின் தோற்றம்
ஒரு நிலத்துப் பண்டங்களைப் பிற நிலங்களின் பண்டங்களுக்கு விலையாகப் பண்டமாற்றம் செய்து கொண்டதன் விளைவாகவே, தொடக்கத்தில் நகரங்கள் தோன்றலாயின. கடற்கரை நாட்டின் பொருளாம் உப்பு, ஏனைய நாடுகளில், இன்றியமையாப் பொருளாகிவிட்டது. அதனால் நனிமிகப் பழங்காலத்திலிருந்தே, உப்பைச் சில சமயம் உலர்ந்த மீனையும் ஏற்றிக் கொண்ட, தள்ளாடித்தள்ளாடிச் செல்லும் கட்டை வண்டிகளின் வரிசை, மண் சாலைகளைக் கடந்து, மலை நாட்டின் அடிவரைக்கண்ணதான உள்நாடுகளுக்குச் செல்லலாயின. உப்பு வண்டிகளும், உப்பு வணிகரும் புலவர்களால், அடிக்கடி கூறப்பட்டனர். "குன்றின் மீது தோன்றும் உப்பு வணிகர் தலைவன்", "குன்றில் தோன்றும் குலவுமணல் சேர்ப்ப" (அகம் : 310:10) (குறிப்பு : 'குலவுமணல்" என்ற தொடரைக் குவ, உமணர்" எனச் சொற்சிதைவு செய்து அவ்வாறு பொருள் கொண்டுள்ளார். அது தவறு. குன்றுபோல் தோன்றும், மணல்மேடுகள் நிறைந்த கடற்கரை, தலைவனே என்பதுதான் அத்தொடர் உணர்த்தும் பொருளாகும். அதே அகத்தில், பாலையில் பயணம் கொண்ட உப்பு வணிகர், ஆங்கே மூன்று கற்களால் செய்து கொண்ட அடுப்பு உணர்த்தப்பட்டுளது. “உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பு” (அகம் : 119 : 8). அப்பாக்கள் கூறும் விளக்கத் திலிருந்து, பண்டங்கள் வண்டி வண்டியாக, ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு போகப்பட்டன என்பது தெரிகிறது. கடலைச் சார்ந்த நிலத்தில், கழிநீரால் விளைந்த உப்பை ஏற்றிக் கொண்டு, மலைநாட்டை நோக்கிச் செல்லும் வண்டியின், ஆரக்கால்களையுடைய சக்கரம் பள்ளத்தில் பாய்ந்துவிடும்போது, தன் உரங்கொண்டு அத்தளர்ச்சி தீர்த்து ஈர்த்துச் செல்லும், பெரும்பாரம் தாங்கவல்ல மிக்க வலியுடைய காளைக்கு ஓர் அரசன் ஒப்புக் கூறப்பட்டுள்ளான்.
"கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்”
- புறம் : 60 : 6-9
இடைவழியில் முரிவுற்றுப் போயின், ஆங்கு உதவுவதற்காகத் தனியாக ஓர் அச்சு உடன் கொண்டு செல்லுமளவு வண்டிகளில் பெரும்பாரம் ஏற்றப்படும்; அவ்வாறு தனியே எடுத்துச் செல்லும் அச்சு ‘'சேம் அச்சு” எனப்படும். எருதுகள் இளையன: நுகத்தடியில் இதற்கு முன் பூட்டி அறியாதன. வண்டியிலோ பண்டப் பொதிகள் மிகப் பெருமளவில் ஏற்றப்பட்டுள்ளன. மேடு நோக்கி ஏறும் போதோ, பள்ளம் நோக்கிப் பாயும் போதோ ஏதேனும் ஆகக் கூடும் அதை முன்கூட்டி அறிதல் இயலாது. எதற்கும் தனியே ஓர் அச்சு உடன் கொண்டு சேரல் நல்லது என எண்ணும் உமணர், உள்ள அச்சின் கீழே, வேறோர் அச்சைத் தனியே பிரித்துக் கொண்டு செல்வர் என்கிறது புறநானூற்றுப் பாட்டு ஒன்று.
‘எருதே இளைய நுகம்உண ராவே; :
சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே;
அவல் இழியினம், மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார்? என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம் அச்சு”
புறம் : 102 : 1-5
உப்பு வண்டிகள் ஒழுங்காகச் செல்வது, இளம் சிறார்களுக்குக் களிப்பூட்டும் கண்காட்சியாம். இனிய நீர் நிறைந்து, மிக்க அழகுடையதான சுனையில் பூத்த செங்கழுநீரின் மொட்டு அவிழ்ந்த மலர்ந்த மலர்களைப் புற இதழ்களை நீக்கிவிட்டு முழு மலர்களால் ஆன ஆடை அசையும் அல்குலையும், பேரழகு வாய்ந்து அருள் ஒழுகும் கண்களையும், இனிய இள நகையினையும் உடைய இளமகளிர், புல் ருெங்க முளைத்துக் கவர்த்த வழியினையும், நெருங்க முள்வைத்துச் செய்த வேலியினையும், பஞ்சு நிறைந்த முற்றத்தினையும் உடைய வீட்டின் ஒருபால் உள்ள பீர்க்கங் கொடியும், சுரைக்கொடியும் படர்ந்து கிடக்கும், ஈச்ச மரத்து இலைகளையும் கொண்ட குப்பை மீது ஏறி நின்று, உமணர் வண்டிகளை, ஒன்று இரண்டு என எண்ணிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றுளது. "தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பு அவிழ்முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்துஎழில் மழைக்கண்; இன்னகை மகளிர்,
புன்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சு முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலைக் குப்பைஏறி, உமணர்
உப்பொய் ஒழுகை எண்ணும்"
- புறம் : 116: 1-8
ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கு உப்பைக் கொண்டு செல்வது இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்றது என்றால், மற்றப் பண்டங்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம். அவ்வாறே, அரிசியும் பருத்தி ஆடைகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வறண்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. பயறு வகைகளும் பால்படு பொருள்களும் முல்லைப் பகுதியிலிருந்து நன்செய் நிலப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. தினை, தேன், மற்றும் மலைபடுபொருள்கள், மற்றப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இப்பண்டங்கள் முல்லை, குறிஞ்சி போலும் மேட்டு நிலமும் தாழ்வான நிலப்பரப்பும் இணையும் இடங்களில், பெருமளவில் பண்டமாற்றம் செய்யப்பட்டன. அத்தகு பண்டமாற்றுமிடங்களெல்லாம் பெருநகரங்களாக வளர்ந்துவிட்டன.
ஆகவே, வறண்ட நிலமாம் புன்செய் நிலப்பகுதியிலும், நீர்வளம் மிக்க நன்செய் நிலப்பகுதியும் இணையும், அதாவது, ஆறு, தன் இடைநிலைப் போக்கைக் கைவிடுத்து, சமநிலத்தில் அமைதியாக ஓடத் தொடங்கிய இடத்தில், முதன்முதலாக நகரங்கள் எழலாயின. சோழர் தலைநகர் மதுரை ஆகிய பழம்பெரும் நகரங்களின் தோற்றத்திற்கு இதுவே காரணம். இந்நகரங்கள், பருத்தி விளையும் பகுதிகளிலிருந்து பருத்தி கொண்டு வரப்பட்டு, எங்கு ஆடையாக நெய்யப்படுமோ, அந்த இடங்களில், இன்றே போல், பண்டும், ஆடை, நெசவுக்குப் பெயர்பெற்றிருந்த இடங்களில், இடம் பெற்று உள்ளன. இவ்விடங்களில் வளர்ந்து பெருகிய வாணிகம், தமிழரசர்களின் தலைநகராம் பெருமையை, அந்நகரங்கள் தொடக்கத்திலேயே பெறத் துணை புரிந்தன. இந்நகரங்கள் குறித்த விளக்கம் பழம்பாடல்களில் இடம் பெறவில்லை.
முக்கிய துறைமுகங்கள்
இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெளிநாட்டு வாணிகம், அடுத்த நூற்றாண்டில் பெரிபுளூஸ் ஆசிரியராலும், தாலமியாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்ட எண்ணற்ற துறைமுகங்கள் இடம் பெறத் துணைபுரிந்தது. முந்திய அதிகாரத்தில் எடுத்துக் காட்டிய பெத்த ஜாதகா கதையிலிருந்து, கி.மு. முதல் ஆயிரத்தாண்டில், காவிரிப் பூம்பட்டினம், சோழ அரசர்களின் மிகப் பெரிய துறைமுகமாகவும், அவர்களின் இரண்டாவது தலைநகராகவும் திகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டோம். சமஸ்கிருத எழுத்தாளர்களால் பாண்டியரின் நுழைவாயில் எனும் பொருளில், ‘'பாண்டிய கவாடம்” என அழைக்கப்பட்ட கொற்கை, பாண்டியர் தலைநகராம் பெருமையை மதுரையிலிருந்து பறித்துக் கொண்டு, பாண்டியர் தலைநகர், அண்மையில், மதுரைக்கு மாற்றப்பட்டது எனத் தாலமி கூறும் காலம் வரை, தக்க வைத்துக் கொண்டிருந்தது. கொற்கையின் முக்கியத்தும், பண்டையோரால் பெரிதும் புகழப்பட்ட முத்து வாணிகத்தின் நிலைக்களமாய் உண்மையிலேயே இடம் பெற்றது. சேரர்களின் முக்கியத் துறைமுகங்கள். மேற்கு ஆசியாவுக்கும், எகிப்துக்கும், அவற்றிற்கு அப்பாலும், மிளகையும், மற்றும் மணம் தரு உணவுப் பண்டங்களையும் ஏற்றுமதி செய்த முசிறியும், தொண்டியுமாம்.
அரசர்கள்
நாகரீக வாழ்வு காணா அப்பழங்காலத்தில், அரசனுக் கான நிர்வாகப் பணிகள் மிகச்சிலவே; ஆட்சி முறையில் ' தேவைப்படும் ஒரு சிலவும், ஊர் அறங்கூர் அவைகளால், நன்மிகப் பழைய முறைக்கேற்ப நிறைவேற்றப்பட்டன. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்கள், ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் நாடு பிடிப்பதற்காக என்று இல்லாமல் தங்கள் வீரத்தை பறைசாற்றவும், பிற அரசர்களைக் காட்டிலும், தாமே பெரியவன், பேரரசன் என்ற நிலையை நாட்டவுமே நடைபெற்றன. அம்மூன்று நாடுகளின் எல்லைகள் ஒரு நிலையிலேயே இருந்தன. களத்தில் வெற்றி கண்டிருந்தாலும் எல்லைகள் மாற்றம் பெறவில்லை. அமராவதி ஆறு, காவிரியோடு கலக்கும் மூன்று முக்கோணங்களின் பொதுவான முனையில் சந்திக்கின்றன. அந்த இடத்தில், மூவேந்தர்களின் வழிபாடுகளை ஒரு சேரப் பெற்றவளும், அன்புக்கடவுள் - வளம் - வழங்கும் கடவுள் என்றெல்லாம் பாராட்டப் பெறுபவளுமான செல்லாயி என்ற பெண் தெய்வத்துக்கு, ஒரு சிறு கோயில் நிற்கிறது. அக்கோயில் நிற்கும் இடம், எனக்கு உரியது, என யாரும் வாதாட மாட்டா ஒருவர்க்கே உரிய இடமாக உளது. அவ்விடத்தில் காவிரியோடு கலக்கும், "கரைபோட்டானாறு" என்ற பொருள் பொதிந்த பெயருடைய ஒரு சிற்றாறு, இரு நாடுகளுக்குமிடையே எல்லை வகுத்து, மேற்குக் கடற்கரை வரை நீண்டிருக்கும் சோழ நாட்டிலிருந்து பிரிக்கிறது, காவிரியில் அக்கரையில், பண்டு இருந்ததற்கான அடிச்சுவடு இன்றும் காணப்படும், செயற்கையாலான ஒரு மேடு, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையைக் குறிப்பிடுகிறது. (புறநானூறு 47 ஆம் எண் செய்யுட்குக் கீழ்வரும் கொளுவிலும், மணிமேகலை, 19 ஆம் காதை 126 ஆம் வரியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி இறந்த காரியாறே, இந்தக் கரை போட்டானாறாதல் கூடும். பின்னர்க் கூறிய மணிமேகலைப் பகுதியில் சோழ நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள காரியாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்று குறிப்பிடத்தக்கது) சோழ நாட்டின் தலைநகர், உறையூர், ஆற்றின் கீழ்ப்பகுதியில் உளது. சேர நாட்டின் தலைநகர் கரூர் ஆற்றின் மேற்பகுதியில் உள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை, ஆற்றிற்குத் தெற்கில் உளது.
அரசர்களின் தலையாய பணி, நாட்டை ஆடுமாடுகளைக் கொள்ளையடித்துச் செல்பவரிடமிருந்து காத்தல், கால்நடை கள், ஒன்று, மறவர், கள்ளர்களின் இனத்தலைவர்களாம் கொள்ளைக் கூட்டத்தலைவர்களால் கடத்திச் செல்லப்படும். அல்லது, அந்நாட்டு அரசனோடு விடுத்த அறைகூவலாக, மற்றொரு நாட்டு அரசனால் கடத்திச் செல்லப்படும். இவ்விரண்டில் எது குறித்துப் போர் மேற்கொண்டாலும், அரசன் தன் குலத்துக்கு உரிய மாலையோடு, சோழனாயின், ஆத்திமாலையோடு, பாண்டியனாயின் வேப்ப மாலையோடு, சேரனாயின் பனைமாலையோடு, தான் குறித்துச் செல்லும் போருக்கு உரிய அடையாள மாலையையும், அணிந்து செல்வர். நாடு காவலை அடுத்து அரசனுக்கு உரிய பிறிதொரு தலையாய கடமை, தம் பாக்கள் மூலம் தன் புகழ் பாடும் புலவர் போலும் இரவலர்களை அழைத்துத் தன்னைச் சூழ வைத்துக் கொண்டு, அவர்கள் பாராட்டு கேட்டு மகிழ்ந்து பரிசாக, நல்ல உணவும், மதுவும், நிறைபொருளும் கொடுத்தல். கீழ்வரும் செய்யுள், சிறிது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த தேயாயிலும், அரசர்களின் இக்கடமைகளைத் தெளிவாக உணர்த்துகிறது. அவையே, அக்காலத்தும் இருந்த உண்மையான நிலையாகும். "குறையாத வண்மையும், பகை அழிக்கும் பேராண்மையும் வாய்ந்த தலைவ, உன் படையைச் சேர்ந்த யானைகள் மலைகள் போல் காட்சி அளிக்கின்றன. நின் நாற்படையின் ஆரவாரப்பேரொலி, கடல் அலைபோல் முழுங்குகிறது : கூரிய முனையை உடைய உன் வேற்படை மின்னல் போல் ஒளி வீசுகிறது. இத்தகு பெரு நிலையால் உலகத்துப் பேரரசர்களெல்லாம் உளம் ஒடுங்குவதற்கு ஏதுவாய பேராற்றலோடு திகழ்கின்றனை : நினக்கோ நின் நாட்டிற்கோ வரக்கூடிய குற்றம் எதுவும், இல்லையாயிற்று; இந்நிலை, உன் குடிக்கு வழிவழியாக வரும் பெருமையாகும். அதனால், உலகத்து ஆறுகள் எல்லாம், மலைகளிலிருந்து வீழ்ந்து விரைந்து கடலை நோக்கி அடைவது போல், புலவர்களும் இரவலர்களும் உன்னை நோக்கி வருவாராயினர்".
"ஆனா ஈகை, அடுபோர் அண்ணல்!
யானையும் மலையின் தோன்றும்; பெரும!
நின் தானையும் கடல் என முழங்கும்; கூர்நுனை,
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலைபணிக்கும் ஆற்றலை; ஆதலின்
புரைதீர்ந்தன்று; புதுவதோ அன்றே;
..........................
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே".
(புறம் : 42 : 7-6; 19-21)
வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை
தாரியஸ் ஆட்சியில்
கி.மு. 606-ல் அஸ்ஸிரியப் பேரரசு கவிழ்க்கப்பட்டது. அது நிகழ்ந்ததும், பாபிலோன், ஆசிய வாணிகத் தலைமையிடமாக ஆகிவிட்டது. யவனர், யூதர் பொய்னீஷியர், இந்தியர், சீனர், என்ற உலக வணிக இனங்கள், தங்கள் வணிகப் பண்டங்களைப் , பாபிலோனிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றன. ‘அயெஸ் செய்லஸ் (Aeschylus) என்பார் ‘'எல்லா வகை மக்களும் வேறறக் கலந்துவிட்ட ஒரு பெருங்கூட்டம்” (Painminikton hoclon) என அழைக்குமளவு, பாபிலோன் நகரத்து மக்கள் கலந்துவிட்டனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வளம் பெற்றிருந்த தென்னிந்திய வணிகர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், நிப்பூரில் (Nippur) இருந்து முராஷ-வுக்கும், (Murushu), அவர் மகனுக்கும் உரிமையுடையதான பெரிய வர்த்தக நிறுவனத்தின் வணிகத் தொடர்புடைய பட்டயங்களில், வணிகர் தொடர்பான குறிப்புகளைக் காண்கிறோம். (J.R.A.S. 1917, P. 237 Kennedy) கி.மு.538ல் ஸைரஸ் (Cyrus), பாபிலோனியப் பேரரசை அழித்துவிட்டான். அவன் வழிவந்த மதிப்பார்ந்த தாரியஸ் (Dariwas) கி.மு. 20 ஆம் நூற்றாண்டு போலும் காரத்தில் ஸெஸோஸ் - டிரியெஸ் (Sesostrises) என்ற ஒருவனால் முதன் முதலாக வெட்டப்பட்டு, கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் 18வது அரச மரபினர் ஆட்சியின் கீழ், மீண்டும் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாயைக் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பக்தியைத் திறப்பதன் மூலம், கடல், வணிக வளர்ச்சிக்குத் துணை புரிந்தான். அவன், வடமேற்கு இந்தியாவைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டான். அது, இந்துகுஷ் மலையின் குறுக்காகப், பால்க் பகுதிக்கும், அங்கிருந்து எக்ஸைன் (Ewxine) பகுதிக்குச் சென்ற, பாலைவனத்தைக், கூட்டமாகக் கடக்கும் வணிகச் சாத்துமுறை புத்துயிர் பெற வழிவகுத்து விட்டது. அது, கார்மேனியன் (Karmanian) பாலையைத் தொட்டுச் செல்வதாகி, அங்கிருந்து மெஸபடோமியா வழியாக அன்டியோக் (Antioch) நகருக்கும் சென்றது. இதன் முக்கிய விளைவு, பட்டு, முதன்முதலாக, மேற்கு நாடுகளைச் சென்றடைந்தது. "கிரேக்கர்கள், பட்டை அலெக்ஸாண் டரின் படையெடுப்பு மூலம் அறிந்து கொண்டனர் எனக் கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு முன்பே, பர்ஷயா மூலம், அது அவர்களை அடைந்திருக்கக்கூடும்." (Schoff's Periplus. P. 264.) இந்நிலவழி வாணிகம், தாரியஸுக்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்துவிட்டது. எகிப்தை வெற்றி கொண்ட பின்னர், அலெக்ஸாண்டர், இந்தியாவுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையில், பெரிய வாணிக நிலையமாக விரைவாக வளர்ந்து விட்ட அலெக்ஸாண்டிரியாப் பெருநகரை : உருவாக்கினான். பின்னர், அம்மாவீரன் டயர் நகரைச் சூறையாடி அழித்து அதன் பண்டை வாணிகத்தையும் பாழ்படுத்தி விட்டான். இது மேற்கு நோக்கிப் பெருகிக் கொண்டிருந்த இந்திய வணிகப் பெருக்கை ஓரளவு அணைபோட்டுத் தடுத்து விட்டது. அலெக்ஸாண்டர் இறப்பிற்குப் பிறகு, அஸரியாவைச் சட்ட திட்டங்கள் அற்றுப்போன குழப்பநிலை, ஆட்சிபுரியத் தொடங்கி விட்டது. பார்த்தியாவில், ஒரு புதிய பேரரசு எழுந்தது. சித்தியப் பழங்குடியினர், பாக்ட்ரியா (Bactria) மீதான, தம் திடீர்த் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். இந்நிகழ்ச்சிகள், நிலவழி வாணிகத்தில் அழிவுக்கு வழிவகுத்து விட்டன. இந்த விளைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, எகிப்தின் நலனுக்காகச் செங்கடல் வாணிக வளர்ச்சிக்கு, அருமுயற்சி எடுத்துக் கொள்ளுமாறு பிலடெல்பிஸுக்கு (Philadelphus) கி.பி. 285 - 246ல், அழைப்பு விடுத்தார். முதல் தாலமி, சூயஸ் கால்வாய், ஓரளவு திறக்கப்பட்டு, வாணிகப்போக்கு வரவிற்கு வழி செய்யப்பட்டது. வணிகச் சாத்து செல்லும், தங்கும் இடங்களுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் வசதி செய்து தரப்பட்ட, பல்வேறு வழித்தடங்கள், கடலுக்கும், நைல் நதிக்கும் இடையே திறக்கப்பட்டன. அவ்வழித்தடங்கள் முடியும் இடங்களிலெல்லாம், துறைகளால் கண்காணிக்கப்பட்டன. தன் முந்தைய செல்வவளத்தையும் புகழையும் எகிப்து, ஓரளவு திரும்பப் பெற்று விட்டது. தாலமியின் நகர்வலத்தில் பிலெடெல்பஸ் நகரில் இந்திய மகளிர், இந்திய வேட்டை நாய்கள், இந்தியக் காக்கைகள், ஒட்டகங்கள் மீது ஏற்றப்பட்ட, இந்திய மணப்பொருள்கள் காணப்பட்டன.
கிரேக்க இடைத்தரகர்களும், நடுவர் இருவர் குழு ஆட்சிக்கு உட்பட்ட ரோமும்
கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில், ஐரோப்பாவுடனான, இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள், பெரும் இடைத்தரகர்களாக இருந்தனர். உலகப் பெருநாடு களுக்கு இடையிலான, இந்த விரிவான வாணிகப் பண்டங் களின் தமிழ்ப்பெயர்கள், கிரேக்கப் பழங்குடியினரின் தூய கிரேக்க எல்லெனெஸ் மொழியால் (Helenes) கடன் வாங்கப் பட்டன. திருவாளர்கள் ஸோப்ஹோக்கில்ஸ், (Sophocles ) அரிஸ்டோபன்ஸ் (Aristophanes) ஆகியோர் எழுத்துக்களில், அவை இடம் பெறத் தொடங்கின. அவையாவன, தமிழ் அரிசியிலிருந்து “ஒரைஸ்” (Oryza) இலவங்கப்பட்டையாம் கருவாவிலிருந்து, ‘'கர்பியொன்'’ (Karpion) தமிழ் இஞ்சிவேர், சமஸ்கிருத ஸ்ரிங்கிடுவாரா விலிருந்து (Sringivera) “ஜிக்கி ‘பெரொஸ்” வால்மிளகைக் குறிக்கும் தமிழ் திப்பிலியிலிருந்து ‘'பெப்பெரி;” (Peperi), இது இப்போது, ஐரோப்பிய மொழிகளில், கருப்பு மிளகைக் குறிக்கவும் ஆகிவிட்டது. பண்டைக்காலத்தில் கோவை மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தமிழ் வைடூரியத்திலிருந்து ‘பெரில்லோஸ்’ (Beryllos) இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்து உரோமானியர். அவர்களுடைய, பண்டைய எளிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்தனர். பகட்டு வாழ்க்கையில் அவா கொண்டிலர். ஆகவே, நடுவர் இருவர் குழு (Consular) ஆட்சியின் தொடக்க காலத்தில், இந்தியப் பண்டங்கள், உரோமாபுரியை அடையவில்லை. அந்நாட்களில், இந்தியா இறக்குமதி செய்தனவற்றில் உரோம நாணயம் இடம் பெறவில்லையாகவே, அக்காலை நடைபெற்ற சிறு வாணிகத்திலும், வாங்கிய பண்டங்கள், உரோம நாட்டுப் பணம் கொடுத்து வாங்கப்படவில்ல.. பல நூறு ஆண்டு காலமாக இருந்துவந்த பழைய தடத்திலேயே வாணிகம் நடைபெற்றிருக்கக் கூடும். நடைபெற்றிருந்தது. ஆனால், நடுவர் இருவர் குழு ஆட்சியின் பிற்பகுதிவரை, உரோம அரசு, கிழக்கு நோக்கி விரிவடையவில்லை. துணிவுமிக்க உரோம வணிகர்களுக்குப் பல்மைரா (Palmyra) தன்னுடைய கதவு களைத் திறக்கவில்லை. ஜூலியஸ் சீசரால் , அலெக்ஸாண் டிரியா, கி.மு. 47 இல், கைக்கொள்ளப்பட்டது என்றாலும், கடல் வாணிகம் அராபியப்படகுகளில், கடற்கொள்ளைக் காரர்களின் பிடியில் சிக்குண்டிருந்த கடற்கரையை ஒட்டி நடைபெற்று வந்தமையால், அக்காலை வாணிகம், சிறிய அளவில், நிலையற்ற தன்மையிலேயே நடைபெற்று வந்தது. அக்காலத்தில், ஐரோப்பாவுக்கு, இந்தியாவிலிருந்து, என்னென்ன ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவை. பெரும்பாலும் உரோமுக்குச் செல்வதில்லை. கிரேக்கத்திற்கே சென்றன. [J. R. A. S. 1904: Page : 593 - 94. Sewell] திருவாளர் ஸ்வெல் அவர் ஆட்சிக்காலத்து நாணங்களில், இதுவரை ஒருசில நாணயங்களே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன என்ற உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாம்.
இக்கால கட்டத்தின் இறுதியில், மத்திய தரைக்கடல் மக்கள் மீது, அடுத்தடுத்துக் கொண்ட வெற்றியும், நடத்திய கொள்ளையும், உரோமப் பேரரசின் கருவூலத்திற்கு ஒப்புக்காட்ட இயலாப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தன. கீழ் நாடுகளைச் சேர்ந்த, மதிப்புமிக்க வணிகப் பண்டங்கள் மீதான சுவை, ஒரே இரவில் வளர்ந்துவிட்டது. சிற்றாசியா, சிரியா நாடுகளை வென்று கொண்டாரைச் , சிறப்பித்து மக்கள் எடுத்த விழாக்கள், மக்கள் ஆர்ப்பரிப்புக் குக் காரணமாகிவிட்ட பெருஞ்செல்வத்தால் சுடரொளி வீசிச் சிறப்புற்ற" (Scoffs periplus.page: 5] பழைய சிக்கன், எளிய வாழ்க்கைமுறை, பகட்டு வாழ்வின் கவர்ச்சி முன் நிற்கமாட்டாது, நெடுங்காலத்திற்கு முன்பே விடைபெற்றுக் கொண்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், தூரக்கிழக்கு வணிகப் பண்டங்கள், கணிசமான அளவு, உரோமை வந்தடையலாயின்”, [Warminston J. R.A.S., 1940. page 4 sweli.]
உரோமப் பேரரசின் தொடக்கத்தில்
அகஸ்டஸ் (Augustus) எகிப்தை, கி.மு., 30இல் வெற்றி கொண்டு, இந்தியாவுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில், ஒரு நேரிடைக் கடல் வாணிக வளர்ச்சிக்கு முயன்றான். கி.மு. 25இல், ஏறத்தாழ 120 கப்பல்கள், ஹோர்மஸ்ஸிலிருந்து (Hormus), இந்தியாவுக்குப் பயணம் செய்ததைத் தாம் பார்த்ததாகத், திரு. ஸ்டிராபோ (Stabo) கூறுகிறார். [Morindle Ancient India, page 6] “இந்தியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து அரசியல் தூதுவர்கள் அகஸ்டஸ்பால் சென்றனர். இந்தியத் தூதுவர்கள், அடிக்கடி வந்ததாக அவனே கூறுகிறான்” [Warmington Commerce between the Roman Empire and India. page : 35] அக்காலச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தனித்தனித் தூதுவர்களை அனுப்பியதாக, திருவாளர் வார்மிங்டன் கூறுகிறார். (Warmington Commerce between the Roman Empire and India. p. 37] இது. அகஸ்ட ஸ் காலத்தில் இந்தியா, உரோமுடன் நடத்திய வாணிக அளவு மிகப்பெரிய அளவினதாய்ப் பெருக வழி செய்தது. இவ்வாணிகம் குறித்துத் திருவாளர் வார்மிங்டன் அவர்கள், “உரோமுக்கும் இந்தியாவுக்கு மிடையிலான வாணிக அளவை மதிப்பிட்டுப் பார்த்தால், அகஸ்டஸின் உண்மையான தொடக்கநிலை ஆட்சிக் காலத்தின் போதே, அது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வாணிகம் எப்போதும் இயல்பாக இருக்கும், அந்த அளவு அடைந்துவிட்ட, குறிப்பிடத்தக்க அப்பெருநிலையை நாம் கண்ணெதிராகக் காணக்கூடும். தொடக்க நாளிலிருந்தே, இந்தியப் பண்டங்களின் வருகைப் பெருக்கத்திற்குப் பேரரசின் பண்டங்களைக் கொடுத்துச் சரிஈடு செய்ய முடியாது போயிற்று. அதன் - விளைவு பண்டங்களுக்குப் பதிலாக, உரோமானியர், சென்றால் திரும்பிவராத, அடித்த நாணயப் பணங்களை வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 179 வெளி யேற்றினர். [Warmington. Page : 381 நாணயப் பணங்களை ஏற்றுமதி செய்வதில், தொடக்கத்தில் ஒரு மோசடி வெளிப்படையாகவே செய்ய முயலப்பட்டது. அகஸ்டஸ் நாணயத்திற்குப் பதிலாக, அவனுடைய தத்துப் பிள்ளைகளாம், கையஸ் (Gaius) லூசியஸ் (Lucius) என்பார் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொன்னுக்குப் பதில் முற்றிலும் பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் கைம்மாறின. உள்நாட்டு மக்கள், போலி நாணயங்களிலிருந்து, உண்மையான உரோம நாணயங்களை, இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத்திற்காகவே அத்தகைய நாணயங்களை , இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத் திற்காகவே அத்தகைய நாணயங்கள் தனியாக அடிக்கப்பட்ட னவாக எர்னஸ்ட் (Ernst) எண்ணுகிறார்" எனக் கூறுகிறார் திருவாளர் வார்மிங்டன் [Warmington p. 139]. ஆனால், தமிழர்கள் கூர்மதிவாய்ந்தவர் என்பதை உறுதி செய்து விட்டனர். காரணம், அற்பத்தனமான அச்சோதனை மீண்டும் முயலப்படவில்லை. இந்நூற்றாண்டு கால அளவில், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் யாவை?
உயிர்விலங்குகளின் ஏற்றுமதி
பண்டைக்காலத்து இந்தியர்கள், உயிர் விலங்குகளைக் கடல்வழியாகப், பர்ஷிய வளைகுடாவிற்கும், ஆப்பிரிக்கா விற்கும், சீனாவுக்கும் அனுப்பி வைத்தனர். இரண்டாம் தாலமியின் மயில்களையும், கிளிகளையும், அனுப்பி வைத்தமைக்கும் அவர்களே, பெரும்பாலும் பொறுப்பாவர். ஏதன்ஸ்க்குச் செல்யூகஸ் (Seleucus) நன்கொடையாக வழங்கிய புலி, சுல்லாவும் (Sulla) பாம்பெயும் (Pampey) காட்சிப் பொருளாகக் காட்டிய சிங்கங்கள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம், மெர்ஸலஸ் (Mercllows) நகரின் ஆடரங்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, கூண்டிலோ குகையிலோ அடைத்துக் காட்டப்பட்ட புலி, ஆகிய விலங்குகள், சில வட இந்தியாவையும் சில தென்னிந்தியா வையும், சேர்ந்தவை, நிலவழியாக அனுப்பப்பட்டனவாம். ஆனால், கிரேக்க எழுத்தாளர்கள் பலரும், தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கும் குரங்குகள், கடல்வழியாகவே சென்றிருக்க வேண்டும். (Warmington 147, 148, 151) அலெக்ஸாண்ட ர் வெற்றிக்குப் பின்னர், சண்டைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட இந்திய யானை, பயரஸ் (Pyrrhus) என்பான், சில யானைகளைக் கி.மு. 28ல், ஐரோப்பாவிலிருந்து இத்தாலிக்கு இடமாற்றி அனுப்பப்பட்டபோது உரோமானியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டது. கார்த்த கினியர்கள் (Carthaginiars) அவற்றை , ஆப்பிரிக்க யானைகளோடு பயன் கொண்டு அவ்விரு இனங்களையும் பழக்க, இந்திய யானைப் பாகர்களை நியமித்தனரா என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், கி.மு. 25ல் பனோர்மோஸ் (Panormos) எனும் இடத்தில் ஹாஸ்ட்ருபால் (Hastrubai) இந்தியர்களால் செலுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. உரோமப் பேரரசோடு நடத்திய இரண்டாம் புனிக் (Punic) போரில், ஹனிபால், ஹாஸ்ட்ருபால் (Hannibal, Hasdrubal) இருவரும் அதுவே செய்தனர். ரபியா (Rapia) எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தாலமியின் லிபியா நாட்டு விலங்குகள், ஆண்டியோ சொஸ் என்பானின் இந்தியப் படைகள் முன் நிற்க முடியவில்லை." (Warmington, Page 151)
இந்திய வேட்டை நாய்கள், வெளிநாட்டவரால், மிகுவிலைக்குரியவாக மதிக்கப்பட்டன. “ஹொரோ டோடஸ் கூற்றுப்படி, தம் காலத்தைச் சேர்ந்த பர்ஷியர், பாபிலோனியாவைச் சுற்றியிருந்த நான்கு பெரிய சிற்றூர்களின் வருவாய்களை, இந்திய வேட்டை நாய்களின் உணவிற்கு என்றே நிதிஒதுக்கம் செய்துவைத்தனர். பர்ஷியாவைச் சேர்ந்த இந்திய வேட்டை நாய்களும், அவைபோலும் வேறுநாய்களும், தாலமி, பிலடெல்பாஸ் வெற்றி ஊர்வலத்தில் காணப்பட்டதாக, திரு. ஸ்டெசியாஸ் (Ctesias) குறிப்பிடுகிறார். கொடிய கரடியோடு நடத்திய போராட்டத்தில், தன் தலைவனைக் காப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த 'டவ்ரான்' (Tawron) என்ற வேட்டைநாய் குறித்துப் பாடிய இரண்டு கையறு நிலைச் செய்யுள்கள் எழுதப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நாணற்புல் தாளினாலான கையெழுத்துப்படி ஒன்றும் கிடைத்துள்ளது". (Warmington. Page : 149) தென் இந்திய வேட்டை நாய்கள், அவற்றின் முரட்டுத்தனத்திற்காகவே நன்கு தெரிந்திருந்தன. பொதுவாக அவை, "கதநாய்" (கடுஞ்சின நாய், விரைந்தோடும் நாய்) என்றே அழைக்கப்படும். அவை, சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு நாய் கட்டப்பட்டிருக்கும் வீட்டினுள் எவரும் எளிதில் புக இயலாது. காவலில் அத்துணைக் கடுமையானது நாய், (தொடர் படு ஞமலி" புறம் : 743) தொடர் நாயாத்த துன்னரும் கடிநகர் (பெரும்பாணாற் றுப்படை -125) தாம் குறித்துச் சென்ற பகைவர்களைத் தப்பாது வெற்றி கொள்ளவல்ல வீரர்களுக்குத் தான் குறித்த விலங்குகளைத் தப்பாது கொள்ளும் வேட்டை நாயை உவமை கூறுமளவு தென்னாட்டு வேட்டை நாய்கள் : சிறந்தனவாக மதிக்கப்பட்டன. செல் நா அன்ன கடுவிறல் சுற்றமொடு கேளாமன்னா கடவுலம் புக்கு. (பெரும்பாண் - 139-140) கரடி வேட்டையில் வேட்டை நாய்கள் பயன்படுத்தப் படுதலை, "உயர்ந்த நாகமரங்கள் அடர்ந்து, கடந்து செல்வதற்கு அரிதாகி விட்ட கவர்த்த காட்டு வழியில், சிறிய கண்ணும் பெரிய சின்னமும் உடைய ஆண் பன்றி, சேற்றில் வீழ்ந்து புரண்டதனால் சேறு பூசப் பெற்ற முதுகில் புழுதியும் படிந்திருக்க அக்கோலத்தோடு விரைந்து ஓடி, சுருக்கவலை விரித்த பிளப்பில் வீழ்ந்து பட்டதாக, அது கண்ட அளவே, வேட்டை நாய்கள், கூட்டமாக விரைந்து, வலையை அழித்து, பன்றி மீது பாய்ந்து கொன்று கொண்ட இறைச்சி போக, எஞ்சிய இறைச்சியைக் கானவர் கொண்டு செல்வர்" என்ற நற்றிணை, விளக்கமாகக் கூறியுளது:
"போகிய நாகப் போக்கரும் கவலைச்
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல்
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்பசிப் படீஇயர், மொய்த்த வன்பு அழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடி.
- நற்றிணை : 82 : 6-11)
வேட்டுவர், காட்டில் வாழ்பவராகவும், விரைந்தோடும் மான் கூட்டத்தையும், துரத்தித் தொலைக்க - வல்ல விரைவினையுடைய கடுஞ்சின நாய்களை உடையவராகவும் கூறப்பட்டு உள்ளனர். "கானுறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்'’ (புறநானூறு : 33 :1) "மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய். வேட்டுவன்". (புறம் : 205 : 8-9) வேட்டைக்குச் சென்ற தலைவன், வேட்டை முடிவுற்றதும், வேட்டை மேற்கொண்டு மூங்கிற்காட்டினுள் நுழைந்து பரவிக் கிடக்கும் தன் வேட்டுவத் துணைவர்களையும் - வேட்டை நாய்களையும், வேட்டை முடிவுற்றது, வாருங்கள் என அழைக்கும் குறிப்போடு கொம்பு எனும் ஊது கருவியை ஊதி ஒலி எழுப்புவன்:
முந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டுவிட்ட கிளிகள், மயில்களின் ஏற்றுமதி இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அதில் ஐயமில்லை, கிரேக்கர்களால் ‘அஸ்பிஸ்’ (Aspis) என அழைக்கப்படும் நாகப்பாம்புகள், மலைப்பாம்பு கள், உள்ளிட்ட பாம்புகள், ஏற்றுமதி செய்யப்பட்ட பிற உயிரினங்களாம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது அடி நீளம் பாம்பு ஒன்றை ஸ்ட்ராபோ எகிப்தில் பார்த்துள்ளார். (Warmington. Page : 157)
விலங்குதரு பொருள்கள்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிகமிக முக்கியமான பொருள்களுள் ஒன்று தந்தம். கிரேக்கர்கள், தங்கள் நாகரீகத்தின் முதிர்ந்த நிலையில், உருவச்சிலைகளில், ஆடையால் மறைக்கப்படாத புறத்தோற்றப் பகுதிகளுக்கு, அதைப் பயன்படுத்தினர். முத்துக்கள், முதன்முதலில், ஜூகுர்தன் (Jugurthine) போரின்போது, உரோமுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, பாம்பே (Pompey) என்பவரால், இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருங்குவியலால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளாக ஆக்கப்பட்டது. "தாலமிகளின் கருவூலங்கள், அகஸ்டஸால், திரும்பக் கொண்டுவரப்பட்டபோது, அப்பேரரசின் வீழ்ச்சியில், அவை, எல்லோர்க்கும் கிடைக்கும் எளிய பொருளாயின. முத்துக்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சிசிரோவின் (Cicero) - காலத்தில், இன்றைய நாணயம் எட்டாயிரம் பவுன் மதிப்புள்ள ஒரு முத்து ஹெஸோப்னன் (AesopwS) மகனால், மெதெல்லா (Metelia) காதிலிருந்து கழற்றப்பட்டு, வறட்சிக் காலத்தில் ஒரு பெரும் பணத்தொகையை விழுங்கினோம் என்ற மனநிறைவு கொள்வான் வேண்டி, வேண்டுமென்றே திட்டமிட்டு விழுங்கப்பட்டது. (Warmington - Page : 163 168169) கிளியோபாட்ரா, தன் மதுவில், பருகுவதற்கு முன்னர், முத்துக்களைக் கரைப்பாள் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அரக்கு வண்ணம் ஊட்டப்பெற்ற பருத்திகள் பர்ஷியாவுக்கு அனுப்பப்பட்டன. தன்னுடைய காலத்தில் பாரசீக அரசனுக்கு, இந்தியர்களால் செவ்வண்டிலிருந்து பெற்ற ஒரு வண்ணக் கலவையால் வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல் அனுப்பப்பட்டதாக, ஸ்தேசியாஸ் (Ctesias) குறித்து வைத்துள்ளார் (Warmington Page : 178).
எகிப்திய ஆவணங்கள், பட்டைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பட்டு, தாரியஸ் (Dariws), ஜெர்ஸெஸ் (Xeroxes)களின் பேரரசின் மூலமாகவே, மத்திய தரைக்கடல் பகுதியை அடைந்தது. அதன் உற்பத்தி பற்றிய சரியான விளக்கத்தை அரிஸ்டாட்டில் கொடுத்துள்ளார். பட்டு தார்களில் சுற்றப்பட்டு, அரிஸ்டாட்டில் காலத்திற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டது. டயரிலும் (Tyre) மற்ற இடங்களிலும், உடைகளாகத் தைக்கப்பட்ட நிலையில் பிளைனியின் கூற்றுப்படி, "ஒரு பெண்ணின் உடலை மூடும் அதே நிலையில், அவளுடைய இயற்கை அழகை வெளிப்படுத்தவல்லதான , உள்ளிருப்பதை வெளிக்காட்டும் மெல்லிய வலை நிகர் ஆடைகள் நெய்யப்பட்டன. (Schoff Perplus, Page: 264-265) கிரேக்க உரோமானிய எழுத்தாளர்களிடையே, பருத்திக்கும் பட்டுக்குமிடையே சிறிது கருத்துக்குழப்பம் இருந்தது. அவர்கள், அவ்விரண்டையுமே, "மரம் தரு விலங்குமயிர்", Treewool) என அழைத்துள்ளனர். மரவினம் தரும் பொருள்கள்
இந்திய ஆடைகள், பாலஸ்தீனியரால், பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதற்கிடையில், இந்தியப் பஞ்சு, அரசு நூற்பு ஆலைகளையும், சாயத் தொழிற்சாலைகளையும், பேரரசுகள், நிறுவியிருந்த ஒரு சில மதகுருக்களாலும் செயல்பட்டுவந்த, எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எகிப்தியர், பருத்தியையும், நார் இழைகளையும் ஒன்று கலந்து பருத்தி ஊடிழையாகவும், நார், பாவு இழையாகவும், கொண்ட ஆடைகளை நெய்தனர். இந்தியப் பஞ்சு, எகிப்தில், பல்வேறு புனிதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. பல்வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல்கள் பனோபிலிஸில் உள்ள (Panoplis) மெம்பிஸ் (Memphis) அருகே காணப்பட்டன. அந்நூல்களில் ஒருசில, அவற்றின் வடிவமைப்பில், இந்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன."(Warmington Page 212)
இலவங்கம், எகிப்திற்காக என்றே, சிறப்பாக ஒதுக்கப்பட்டது போலவே, மிளகு, பாபிலோனியா, பாரசீக வளைகுடா , வாணிகங்களில், வழக்கத்திற்கு மேலான தேவைப்படுபொருளாக இருந்தது. அதனுடைய விறுவிறுப்பான பெருந்தேவை, ‘தாரியஸ்'’ (Darius) ஆட்சியின் கீழ், பாரசீகப் பேரரசு விரிவடைந்தபோது ஏற்பட்டது எனக் கருதுவதற்குக் காரணம் உளது. இந்த வாணிகம், தென் இந்தியக் கப்பல்களில், கடல் வழியாக நடைபெற்றது. நில வழியாக அன்று, எதோப்பியரின் (Aethiopians) மேனி நிறத்தைப் பெரிதும் ஒத்த நிறம் வாய்ந்தவர். தெற்கில், பாரசீகத்திலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் குடிவாழ்பவர், தாரியஸாக்கு என்றும் பணியாதவர் என்ற அளவிலேயே ஹெரோடட்டஸ், (Herodotas) திராவிடர்களைப் பற்றி அறிந்துள்ளார், (Scoff’s Periplus . Page 213) பார்த்தியா (Parthia) வின் குறுக்காக நடைபெற்ற நில வாணிகமும், தாலமிகளால் ஊக்கம் ஊட்டப்பட்ட கடல் வாணிகமும், அறுதியிட்டுக் கூறமாட்டா. ஆண்டாண்டு காலமாக ஏற்கனவே, நடைபெற்றுவந்த இலவங்கம், மற்றும் மணப்பொருள்களின் வாணிகத்தின், பெருமளவிலான | பெருக்கிற்கு வழி செய்து விட்டன. உரோமுக்குத் தேவைப்படும் மிளகை, இக்கால கட்டத்தில், பொயினீஷியர்களும், கார்த்திகினியர்களும் வழங்கிவந்தனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்தியல் - முறைகளைக் கையாண்டவருமான 'இப்போ கிராட்ஸ்' என்பார், மிளகை, "இந்திய நிவாரணி" என அழைக்கிறார். (Warmington. Page 182) அது, குளிர் காய்ச்ச லுக்கும், வெப்பக்காய்ச்சலுக்கும், பயன்படுத்தப்பட்டது. மக்கள், மரபுவழிப் பழக்க வழக்கம் குறித்த ஆராய்ச்சியில், 'ஹெரோடோடஸ்' (Herodotus) அவர் களுக்கு, இது பற்றிக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்றாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டில், 'தியோப் ரஸ்டஸ்' (Theophrastus) அதை ஒரு மருந்தாக அறிந்துள்ளார். டியோஸ் கோரிடஸ் (Dioscorides) கருப்பு, வெள்ளை, வால்மிளகுகளுக்கிடையிலான வேறுபாட்டை உணர்ந்துள்ளார். (Scoff's Periplus. Page 213) இஞ்சியும் மேலை நாடுகளை அடைந்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது ஓர் இந்திய உற்பத்திப் பொருள் என்பதை, மேலைநாட்டவர் உணர்ந்து கொள்ளா வகையில், வெற்றிகரமாக மறைத்துவிட்ட அராபிய இடைத்தரகர்களால் கொண்டு செல்லப்பட்டது. (Warmington Page: 184) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஏன், அதற்கு முன்பேயும் எள்ளெண்ணெய், கிரேக்கர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. தாலமிகள் காலத்தில், அது மதிக்கத்தக்க முக்கியத்துவம் உடையதாகிவிட்டது. (Warmington Page : 206) கிரேக்கக் கோயில்களில் தேங்காய்கள், அதிசயக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன வாதலின், கிரேக்கத்திற்குத் தேங்காய்களும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. (Warmington Page : 217) ஸேபோக்கெல்ஸ் (Sophocells). அரிசி அடைகள் பற்றிப் பேசுகிறார். ஆகவே, கிரேக்கர், அரிசியையும், அதன் பெயரையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றனர். பல்வேறு பயன் கருதி மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மித்ரிடேட்ஸ் மீது (Mithridates) கொண்ட வெற்றி குறித்து எடுத்த விழாவில் இந்தியக் கருங்காலி மரத்தைக் காட்சிப் பொருளாகக் காட்டினான் பாம்பே (Pompey). இந்தியக் கருங்காலி மரம் வாணிகம் நெடிது நிலை பெற்றிருந்த ஒன்று. இதுவும், மற்ற மரங்களும் பாரசீக வளைகுடாப் பகுதிக்கு, இந்திய வணிகர்களால், கொண்டு செல்லப்பட்டன. கருங்காலி, நாற்காலி, மேசை போலும் தட்டுமுட்டுப் பொருள் களுக்காகவும் உருவச்சிலைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக மலபார், கர்னாடகம், திருவாங்கூர் மற்றும் வேறு சில இடங்களிலிருந்து வந்த தேக்கு மரங்களைக் கொண்டு, பாரசீக வளைகுடாவில் ஆட்கள் கப்பல்கள் கட்டுவதை தியோப்ரஸ்டஸ் காட்டு கிறார். (Warmington Page 213-214) “மடரடா'’ (Madarata) என. அறியப்பட்ட, தைத்த படகுகள் என அழைக்கப்பட்ட, அராபியரின் படகுகள், தென்னை நாரினால், அதாவது தேங்காய் மட்டைகளிலிருந்து எடுத்த நாரினால் கட்டப்பட்டன. (Scor’s Periplus Page : 154) இக்கால கட்டத்தில் பல்வேறு வகையனவான இந்தியக் கற்கள், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்றாலும் இந்த வாணிகம்; அடுத்த கால கட்டத்திலேயே பெரிய அளவைப் பெற்றது.
அர்மினியாவில் ஓர் இந்திய வழிபாட்டு முறை
மேற்கு ஆசியாவுடனான இந்த வாணிகத்தின் ஒரு வியத்தகு விளைவு இங்கே விளக்கப்படும். அது, அர்மீனியாவில், ஓர் இந்திய வழிபாட்டு முறையின் நுழைவாகும். அர்மீனியாவைச் சேர்ந்த ‘அரஸ்சிடே” (Arsacide) மரபின் முதல் மன்னனாகிய, முதலாம் வளர்ஷக் (Valarshak) (கி.மு149. 127) காலத்தில், இரு இந்தியத் தலைவர்கள், இயூப்ரட்ஸ் ஆற்றின் மேற்குக் கரையில், வான் (Van) என்ற ஏரிக்குத் தெற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவி, கிருஷ்ணன் பலதேவன் (அர்மீனிய மொழியில் முறையே கிசனி (Gisani), தெமெதெர் (Demeter) வழிபாட்டிற்காகக் கோயில்களைக் கட்டினர். இது வட இந்தியாவிலிருந்து வந்த, ஆரிய வழிபாட்டு முறையின் பெருக்காகுமா? மிக உறுதியாக இல்லை . கிருஷ்ண பலதேவர்கள், திருமாலின் அவதாரங் களாம் எனப் புராணங்கள் கூறினாலும், இவ்விரு கடவுள்களையும் ஒருசேர வழிபடும் தனிவழிபாட்டுமுறை, வட இந்தியாவில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள், இதற்கான எண்ணற்ற அகச்சான்றுகளை அளிக்கின்றன. இவர்களில், முன்னவன் மாயோன் என்ற பெயரால், முல்லை நிலக்கடவுளாவன் கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக் கொடியாகவும், கொண்ட, வெண்ணிறக் கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப்படும் பின்னவன் தொடக்கத்தில் உழவுத்தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன். முன்னவன் கருப்பு வண்ணமும், பின்னவன், வெள்ளை வண்ணமும், தமிழ்ப் புவலர்களின் விருப்பத்திற்குரிய அணி நலங்களாம். கடலில் வளரும் வலம்புரிச் சங்கை ஒக்கும் நிறம் வாய்ந்த, கொலை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையும் உடையவன்" என்றும். "மாசு போகக் கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் நிறம் வாய்ந்த, வானுற உயர்ந்த கருடக்கொடி உடைய, என்றும் வெற்றியே விரும்புவோன்" என்றும், அவர்கள் முறையே பாராட்டப் பெற்றுள்ளனர்.
"கடல்வளர் புரிவனை புரையும் மேனி,
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,
விண்உயர் புட்கொடி விறல் வெய் யோனும்."
புறநானூறு : 56:3-6
"பால் போலும் வெண்ணிறம் வாய்ந்தவன். பனைக் கொடியுடையான்" என்றும், "நீலமணியின் நிறம் வாய்ந்த திருமேனியுடையான்; ஆரியப் படையுடையான்" என்றும் அவர்கள் மேலும் பாராட்டப் பெற்றுள்ளனர்.
"பால் நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின் நேமி யோனம்"
புறநானூறு : 58 : 14 - 15
இவ்விருவர்களின் மேனி நிறங்களுக்கிடையிலான மாறுபாடு, உவமை அணிகளாகப் பரவலாக ஆளப் பட்டுளது. எடுத்துக்காட்டுக்கு : ‘'மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் : வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி, (நற்றிணை : 32:7-2) இராமாவதாரம் தவிர்த்து , திருமாலின் அவதாரங்களில், வேறு எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிப்பிடப்படவில்லையாதலின், இவ்விருவரும், தென் இந்தியாவில், திருமாலின் அவதாரங்களாக அறிமுகம் ஆனவரல்லர்). பலதேவன், எப்போதும் பனஞ்சாறு பருகி வெறிகொண்டு கிடப்பன். பனைமலிந்த பகுதியில், அவன் வளர்ச்சிக்கு அது பொருந்தும். பனை, கங்கை வெளியில் வளர்வதில்லையாகவே, பலதேவ வழிபாடு கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலைவில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலேயே அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.
பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வடநாட்டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.
"வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்”
- சிலப்பதிகாரம் : 5 : 71 - 72
புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம்”
சிலப்பதிகாரம் : 9:10.
“பல தேவன் திருமாலின் படுக்கையாம் அரவின், மறு அவதாரம் என்ப. அவ்வரவு நாகர்களைத் தம்மோடு இரண்டறக் கொண்டு நாகராகிவிடவே, அதுவும் திருமால் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றுவிட்டது. இவை புகார் நகரத்துக் கோயில்கள், மதுரையில் "மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப்பதிகாரம் : 14 : 9) இவ்வெடுத்துக் காட்டுக்கள் எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்தது என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில் பலதேவனுக்குக் கோயில் இல்லை. இவ்வெள்ளைக் கடவுள், தெற்கில்தான் முதன்முதலில் எழுந்தான் என்ற முடிவிற்கு வலிவூட்டுகிறது. தமிழ்நாட்டின் சில சாதியரிடையே 'வெள்ளையன்", வெள்ளான்" என்ற பெயர்கள், இன்றும் பரவலாக இடம் பெற்றுள்ளன. வெள்ளைக் கடவுள் வழிபடப்பெற்று, அவன் பெயர், அவனை வழிபடுவார் மக்களுக்கு இடப்பட்ட காலம் தொட்டு வழக்கில் வந்திருக்க வேண்டும்.) இக்கோயில்களே அல்லாமல் கிருஷ்ணன், பலதேவன் ஆகிய இருவரின் தெய்வத் திருமேனிகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும் கோயில்களும் உள. அத்தகைய கோயில்களுள் ஒன்றாகிய, மதுரைக்கு வெகு தொலைவில் இல்லாத திருமாலிருஞ் சோலைக்கோயில், பரிபாடலில், பதினைந்தாவது பாட்டில் மிக விரிவாக விளக்கப்பட்டுளது. அது, எடுத்துக்காட்டுவதற்கு இயலா, நெடும் பாட்டு, மேலும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அப்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் பலதேவன் தெய்வத்திருமேனி, இப்போது காணாமல் போய்விட்டது. திருமால் வழிபாட்டாளரின் மதிப்பீட்டில், பலதேவன், குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட காலத்தில், அக்கோயில் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டிருக்கக் கூடும். இன்றும் அழியாமல் இருக்கும் ஒருசில கோயில்களில், பலதேவன் திருமேனி, இன்றும் நிற்கிறது. அவை, பிற்காலச் சமய வெறியர்களின் அழிவிலிருந்து தப்பிவிட்டன போலும்.
அந்த இணைந்த வழிபாட்டு முறை, அர்மீனியாவுக்கு வடநாட்டிலிருந்து சென்றதா, தென்னாட்டிலிருந்து சென்றதா என்பது விடையிறுக்க முடியாத நிலை இருக்கும்போது, அது கொடிய வன்முறைச் செயல் ஒன்று மூலம் அழிவுற்றுப் போய்விட்டது. கிறித்துவச் சமயப் பிரசாரகர், முனிவர் கிரிகோரி என்பவர் (St. Gregory) கி. பி. நான்காவது நூற்றாண்டில், புறச்சமயத்திற்கு எதிரான தம்முடைய கொடிய வெறுப்பு காரணமாக, விஷப் (Vishap) எனும் இடத்திலிருந்த இந்தியர் குடியிருப்பிற்கு எதிராகக் கிறித்துவப் பெருங்கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் சென்றார். அதன் விளைவாக நிகழ்ந்த சண்டையில், தலைமை அர்ச்சகர்கள் வெட்டித் தள்ளப்பட்டனர். தெய்வத் திருமேனிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. கோயில்கள் - இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவை நின்ற இடங்களில் மாதா கோயில்கள், கட்டப்பட்டு, சிலுவைகள் நிறுவப்பட்டன. ஆங்குக் குடிவாழ்ந்தவர்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டனர். தம் சமயக் கோட்பாட்டைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்த அர்ச்சகர்களின் மக்கள் நானூற்று முப்பத்தெட்டுப் பேரும், கோயில் பணியாளர்களும், மொட்டை அடிக்கப் பட்டு, தொலைநாடுகளுக்குத் துரத்தப்பட்டு விட்டனர். (J. R. A. S. 1904; Page : 309 - 314. Kennedy)
தூரக்கிழக்கு நாடுகள் உடனான தென்னிந்தியக் கடல் வாணிகம், இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மக்கள் குடி பெயர்ச்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. படைத்துணைத்தலைவர், திருவாளர் கெரினி (Gerine) அவர்கள், கிறித்துவ ஆண்டு தொடக்கத்திற்குப் பல், நூற்றாண்டுகளுக்கு முன்பே, வட இந்தியாவிலிருந்தும், தென் இந்தியாவிலிருந்தும், வணிகர்களும் புதிது காணும் உள்ளஆர்வம் மிக்கவர்களுமான இப்பெரும் வெள்ளம், இந்தோ சீனாவுள் பாயத் தொடங்கி, நிலவழியாக, வர்மா மூலம், அத்தீவகற்பத்தின் வடபகுதியையும், கடல்வழியாக, அதன் தென் கடற்பகுதியையும் அடைந்து, ஆங்கே, தங்கள் குடியிருப்புகளையும், வணிகநிலையங்களையும் நிறுவின” என்று கூறியுள்ளார். [J. R. A. S. 1904. p. 234 - 37) பழைய இந்தியர்களின் இந்நடமாட்டம் குறித்த விரிவான விளக்கத்திற்கு, மேலே கூறியதைக் காண்க.) பிராமணர்களும் பௌத்தர்களுமாகிய ஆரியர், பண்டைய இந்திய நாகரீகத்தையும், தமிழர், வாணிகத்தையும் இங்குக் கொண்டு சென்றனர். சுவர்ண பூமியின் எல்லைக்கு அப்பால், பண்டைக்காலத்தில் பெரிய வணிக மையமாக விளங்கிய மார்தான் (Martaban) எனும் இடத்திற்கு அணித்தாகத், "தக்கோலம்' என்ற இடத்தை , மிலிந்தா பன்ஹ (Milindapanha) குறிப்பிடுகிறது. அவ்விடத்தின் பெயர், சென்னைக்கு அணித்தாக, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஒரு பெரிய போர் , நடைபெற்ற தக்கோலம் என்ற ஊரின் பெயரை நினைவூட்டுவதாக உளது.
சீனாவின் ஆன் மரபுப் பேரரசர் (Han Emperor) ஹுதி (Woti) என்பான், இன்றைய துருக்கர்களின் முன்னோர்களாகிய ஹியுங்-நு (Hiung - Nu) என்பாரைக் கோபி (Gobi) பாலைவனத்திற்கு அப்பால் துரத்திவிட்டான். அதன்பின்னர், ஐரோப்பாவுடனான சீனப் பட்டுவாணிகம், பெரிய அளவினை எட்டிவிட்டது. இவ்வாணிகம் மேற்கொண்ட வழிகளில் ஒன்று, சூயஸ் வளைகுடாவிலிருந்து வந்த யவனவணிகர்கள், சீனப்பட்டைத் தமிழ் இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிய வழியாம். பர்மா, மலேயா, சீனக் கடற்கரை நாடுகளுடனான கடல் வாணிகம், இக்கால கட்டத்தில் வளர்ந்து பெருகிற்று. "கிழக்கிற்கு அனுப்பப்பட்ட மிக முக்கியமான பண்டம், மிளகு. மிளகு குறித்த தொடர்ந்த தேவை, உரோமில் எழுவதற்கு முன்பே, சீனாவில் இடங்கொண்டிருந்தது என்பது ஊகிக்கக் கூடியதே. மலபார் கடற்கரைக்குக், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஏன், அதற்கும் முன்பாக, 'ஜங்' (Jwnk) எனப்படும் தட்டையான அடிப்பாகம் உடைய சீனக் கப்பல்கள் சென்றுவந்ததற்கு இதுவும் ஒரு காரணம். (Scoff's Periplus. Page 213-14) தூரக்கிழக்கிற்கு, மிளகு மட்டுமல்லாமல் நறுமணப் புகைதரு பொருள்களும் அனுப்பப்பட்டு, பட்டிற்கும், சர்க்கரைக்குமாக, கைமாறப்பட்டன.
தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின் முதல் நுழைவு
சமஸ்கிருத நுழைவு
அகத்தியனார், தம்முடைய தமிழிலக்கணத்தை இயற்றிய போது, சமஸ்கிருத நாகரிகம், தமிழிலக்கியத்தை, முதன்முதலில் பாதிக்கத் தலைப்பட்டது. தம்முடைய மலையிடைத் தவப்பள்ளியில், உணர்ச்சிக்கு ஆட்படாத அறிவு நிலை கடந்த, தவநெறி மேற்கொள்வதைக் காட்டிலும், பாண்டி நாட்டுத் தமிழிலக்கியங்களைக் கற்பதால் உளவாம் உணர்ச்சிபூர்வ அனுபவ வாழ்க்கையால் பெரிதும் ஈர்க்கப் பட்ட, பொதியமலையில், இடங்கொண்டிருந்த இந்த அகத்தியர், அகத்தியரின் தபோவனத்தைச் சேர்ந்தவர்களில், மிகமிகப் பிற்பட்டவராவர். பிற்காலப் புராணக் கதைகளில், இவர், இவருக்கு முற்பட்ட அகத்தியர் அனைவருடைய மொத்த உருவமாக்கப்பட்டு, அவ்வகத்தியர்களின் செயல் புகழ் அனைத்தும், இந்த அகத்தியரிடத்திலேயே கொண்டு குவிக்கப்பட்டன. அவர் பெயரைச் சூழக் கட்டிவிடப் பட்டிருக்கும் கதைகளை நாம் நம்புவதானால், தமிழிலக்கியம் கூறும் அந்த அகத்தியனார், நல்லுணர்வுக்கு அப்பாற்பட்ட பொறாமை, கட்டுப்படுத்தலாகாக் கடுங்கோபங்களுக்கு ஆட்படக் கூடிய சாதாரண மனிதராவர். கதைகள், ஒருபுறம் இருக்க, தமிழின் மொழிநடை இயல்புகளில் நுணுக்கமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அகத்தியனார், அம்மொழி பற்றிய இலக்கணத்தை இயற்றினார் என்பது, உண்மை நிகழ்ச்சியாம். அவ்வாறு இயற்றும்போது, சமஸ்கிருத இலக்கணக் கூறுகளெல்லாம், உதாரணத்திற்குப் பெயர்ச் சொற்களோடு இணையும் ஏழு அல்லது எட்டு வேற்றுமை உருபுகள் போல்வன, எல்லா மொழிகளுக்கும் உள்ள பொது நிலையாம் என அவர் கருதுகிறார். உலக மொழிகள், ஒன்றோடொன்று உறவு கொள்ளாத, பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. அடிப்படை அமைப்பிலேயே அவை, ஒன்றோடொன்று மாறுபடுகின்றன. அதனால், ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்புக்குள், வேறு ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்பைத் திணிப்பது இயலாது என்பன போலும் உண்மைகள் அகத்தியனார்க்குத் தெரியா. சமஸ்கிருதம் விரிவான , சொல்லிலக்கண வகைகளைக் கொண்ட தனக்கே உரிய, சொல்லுரு மாற்று மொழி. ஆனால், தமிழ், தனி இரு சொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல எளிய தெளிவான சொல்லிலக்கணத்தையுடைய , ஒரு மொழியாகும். சமஸ்கிருத முற்றுத் தொடர் வாக்கியங்களில், சொல்லுக்குச் சொல் உள்ள , சொற்றொடர் உறவு, அச்சொற்களின் இலக்கண உறவு உணர்த்த, அச்சொற்களின் ஈற்றில் இணைக்கப்படும் விகுதிகளினால் மட்டுமே உணரலாகும். ஆதலின், சொற்கள், வாக்கியத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் கொள்ளலாம் என்பது, அம்மொழிநிலையாகத், தமிழ் சொற்களை வேண்டியவாறெல்லாம், இடம் மாற்றச் செய்ய இயலா, உறுதியான சொற்றொடர் நிலையினைக் கொண்டுளது. சமஸ்கிருத மொழியின் இவ்விகுதிகள், தம் நிலையில் பொருள் உணர்த்தும் சொல்லாக இடம் பெற மாட்டார் சொல்லீறுகளினால் ஆக்கப்பட்டனவாம் ஆதலின், தங்களுக்கெனப் பொருள் இல்லாதன. ஆனால், பொருள் உணர் சொற்களில், உறவினை உணரத் துணைபுரிவன ஆகும். இவைபோலும் சொல்லீற்று விகுதிகளை ஏற்றுக் கொள்வதனால், வேர்ச்சொல், வெறும் மூலமாக மாறி, அம் மூலமும் தனக்குத்தானே தடம் காணமாட்டா மிகப்பெரிய மாறுதலுக்கு ஆளாக்கிவிடுகிறது. இவ்வகையில் தத்' என்ற மூலம், 'அம் என்ற ஈறு ஏற்று "தேஸாம்" என ஆகிறது. ஹன்" என்ற வினைவேர்ச்சொல் பெறும் பல உருமாற்றங்களில் ஒன்று, "ஜக்ஹான என்பது. அதுபோல டஹ்" என்பதன் உருமாற்றம், அட்டொக்" என்பதாம். இவை, விகுதிகள் இணைவால், சொற்களின் இயலும் உருவமும் வேறுபடும் மொழிகளின் அடையாளங்களாம். தமிழ், இதற்கு மாறாகத், தனி இரு சொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல ஒரு சொல்லியல் முறையினைக் கொண்ட ஒரு மொழியாம். தமிழில் பொருள் வேறுபடுத்தும் சொல்லுறுப்புகளாக வருவன 1. அம்மொழியில் தமக்கெனத் தனிப்பொருளும், தனி ஆட்சியும் உடையவாய, ஏழாம் வேற்றுமை உருபுகள் என வழங்கப்படும், ஒடு, பொருட்டு, அது, உடைய, இடை, தலை, திசை எனும் இவையும், இவை போல்வனவும். தமிழிலக்கண ஆசிரியர்கள் இவற்றைச் சொல்லீறுகள் - சொல்லுருபுகள் எனப் பொருத்தமுற அழைப்பர். 2. சிறிதே உருபு திரிந்த, ஒடு, இல், அது, ஆறாம் வேற்றுமைப் பன்மை உருவாம், அவை என்ற பன்மைச் சுட்டின் திரிபு வடிவாம் அ என்பன. எந்தச் சொற்களின் திரிபு வடிவம் என்பதை உணரலாகா வகையில் திரிந்திருக்கும், வேற்றுமை உருபுகள், ஐ., என்ற இரண்டும் பெயர்ச்சொல், எழுவாய், விளி அல்லாத வேற்றுமைகளில் பன்மை வடிவு பெறும் சமஸ்கிருத முறைக்கு முற்றிலும் மாறாகத் தமிழில், பெயர்ச் சொல்லுக்கும், இவ்வேற்றுமை உருபுகளுக்கும் இடையில், பன்மை குறிக்கும் குறியீடுகள், "அவர்களுக்கு" என்பது போல் அழைக்கப்படும் உண்மை நிகழ்ச்சியால் தம் மூலச்சொல் அறியாவாறு திரிந்துவிட்ட ஐ , கு என்ற இவ்வுருபுகளும் ஓரளவு தனித்தன்மை வாய்ந்தனவே என்பது உணரப்படும்.
தமிழும், சமஸ்கிருதமும், இவ்வாறு அமைப்பு நிலையில், முழுக்க முழுக்க முரண்பட்டிருப்பதால், சமஸ்கிருத இலக்கண முடிபுகள், தமிழிலக்கணத்திற்குச் சரியாகப் பொருந்திவாரா. ஆனால், அகத்தியனார், சமஸ்கிருத மொழிக் கூற்றுண்மைகள், தமிழிலும் இடம் பெற்றுள்ள எனக் கருதுகிறார். அதனால், சமஸ்கிருதத்தில் உள்ளதுபோல், தமிழிலும் ஏழு வேற்றுமைகள் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். வேற்றுமை உருபேற்ற சமஸ்கிருதப் பெயர்ச் சொற்களைத் தமிழ்ச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்கிறார். அச்சொற்றொடர்களை, எழுவாய்ப் பொருளில் வரும், பெயர்ச்சொற்கள், அவற்றைத் தொடர்ந்து வருவன என இரண்டாகப் பிரித்து, அவ்விரண்டாம் பிரிவுகளைத் தமிழ் வேற்றுமை உருபுகளாகக் கொள்கிறார். பாணினியைப் பின்பற்றித் தமிழில், அவர், ஏழு வேற்றுமைகளைக் காண்கிறார். சரியாகச் சொல்வதானால், உருவாக்குகிறார். அவர் மாணவர் தொல்காப்பியனார், ஐந்திரம் வழிச் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்களைப் பின்பற்றி, அவற்றை எட்டு ஆக்குகிறார். காதலிபின்' என்பது "காதலி" என்பதன் வேற்றுமை உருபேற்ற பெயராயின், காதலி எதிர்" என்பதும் வேறுமை உருபேற்ற பெயராகாதோ? இம்முறையில் கணக்கிட்டால், தமிழ் மொழியில் உள்ள பெயர்ச்சொற்களிலிருந்து, பெறலாகும் வினையெச்சப் பெயரெச்சத் தொடர்கள் எத்தனை உளவோ, அத்தனை வேற்றுமைகளைத் தமிழ்ப் பெயர்கள் கொண்டிருக்க வேண்டும்.
தமிழில் சமஸ்கிருத ஏழு வேற்றுமைகளை இறக்குமதி செய்தது போலவே, சமஸ்கிருத செயப்பாட்டு வினையையும் அவர், இறக்குமதி செய்துள்ளார். செயப்படுபொருள் குன்றாவினை செயப்படுபொருள் குன்றியவினை ஆகிய எல்லா வினைச் சொற்களும், சமஸ்கிருதத்தில் அடையும், உறுதியான சொல் திரிபே. அம்மொழி, செயப்பாட்டு நிலை, செயப்படுபொருள் குன்றாவினைகள், செயப்பாட்டு வினையாக மாறும் பொழுது, அவ்வினைகள், "சிங்கம் கொல்லப்பட்டது" என்பதில் உள்ளதுபோல், செயப்படு பொருளைச், செய்வினை முதலாம் எழுவாயாக மாற்றும் அப்பணியினைச் செய்கிறது. வினை முதலாம் எழுவாய் தெரியாத போது, அல்லது அவ்வினை முதல் குறிப்பிடத் தேவையில்லாதபோது, அல்லது செயப்படுபொருள் வற்புறுத்தி உணர்த்தத் தேவைப்படும் போது இவ்வாறு வழங்குவது, பயனுடையதாகிறது. செயப்படுபொருள் குன்றிய வினைகளுக்குச் செயப்பாட்டுத் திரிந்த வடிவங்கள் தரப்படும்போது, இது போலும் அடிப்படைப் பயன் எதுவும் காணப்படுவதில்லை; என்றாலும் செயப்பாட்டுவினை ஆட்சியால், எவ்விதச் சிறப்புப் பொருளும் பெறப்படுவதில்லையாகவும், சமஸ்கிருதத்தில், செயப்படுபொருள் குன்றிய செயப்பாட்டு வினையாட்சி, செய்வினை ஆட்சியினும், மொழிநடை உடையதாம். அதன்படி, ஸஹ்ப்ஹ வதி என்பதும், ‘'தெனப்ஹீயதே'’ என்பதும் ஒன்றே. பின்னது, வேறு எம்மொழியில் மொழிபெயர்ப்பது இயலாது என்பதொன்றே, வேறுபாடு, ஆங்கிலம் சமஸ்கிருதத்தோடு உறவுடைய மொழியாயினும், "he is been” என்பது போலும் ஆட்சி, ஆங்கிலத்திலும் பொருளற்றது; நகைப்பிற்குரியது. தமிழ்ச் செயப்பாட்டு வினை அமைப்புகளை, அகத்தியனார் புகுத்தியுள்ளார். இருந்தும், "தாட்ய தெ” என்பதைப் “படு” என்ற வினைச் சொல்லை , “அடி” என்பதன் இறந்தகால வினை யெச்சத்தோடு இணைத்து, ‘'அடிக்கப்பட்டான்'’ என அவரால், மொழிபெயர்க்க முடிந்தாலும், செயப்படுபொருள். குன்றிய செயப்பாட்டு வினையினைத் தமிழுக்குக் கொண்டுவர, அவரால் முடியவில்லை. இரண்டு வினைச் சொற்களை ஒரு சொல்லாகத் தொகைப்படுத்தி, அத்தொகைச் சொல்லின் இருமூலங்களுக்கும், எழுவாய் அல்லது வினைமுதலாக வேறு வேறுபட்ட இருவர்களைக் கொள்வது, காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரண காரிய முறையினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண விதிகளையும் மீறியதாகும். ஆதலின், ‘'அடிக்கப்படும்'’ என்பதை, “அடிக்க” (மற்றொருவன்) அடிக்கும் பொழுது. என்றும், ‘'படு” துன்பம் அனுபவி என்றும் பிரித்துக் காண்பது, தமிழின் சிறப்பியல்புக்கு முரணாம்.'’ அடிக்கப்படும்” என்பதன் மொழிநடைவடிவம், அத்தொகைச் சொல்லின் முற்பகுதி, உருபேலாப் பெயர்ச் சொல்லாக வரும், “அடிபடு “ அல்லது “அடியுண்” என்பதாம். சமஸ்கிருதச் செயல்பாட்டு வினைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தேவைப்பட்ட தாலும், அகத்தியனார் மாணவர், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தை, “எழுத்து எனப்படுவ'’ (தொல்: எழுத்து : 1) எனப் போலிச் செயப் பாட்டு வினையோடு தொடங்குவது போலச் சமஸ்கிருத மொழியில் சிந்தித்துத், தமிழில் எழுதுவார்க்குப் பெரிதும் பயனுடையதாக அமைந்ததாலும், அகத்தியனார், இச்செயல்பாட்டு வினையினைக் கண்டுபிடித்துள்ளார். இயல்பான தமிழ்ப்பேச்சு நடையில், எந்தத் தமிழனும், எந்நிலையிலும் மேற்கொள்ளாததும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் எளிதில் மொழிபெயர்க்க, சமஸ்கிருதப் பண்டிதர்களுக்குத் துணை நிற்கக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், இப்போலி செயப்பாட்டு வினை, நம் காலத்தில் பொருள்களைச் செயப்பாட்டு வடிவங்களில் விளக்கும் ஆங்கிலத்தில் சிந்தித்து, தமிழில் எழுதக் கற்றுக் கொண்ட காரணத்தால், எழுத்து நடைத் தமிழில், அது ஒரு நடைமுறையாகிவிட்டது, படு என்ற, மொழி மரபிற்கு ஏலா ஒரு சொல்லுருபு, பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்தையும், துரதிருஷ்டவசமாகத் தமிழ்ப் பண்டிதர்களின் இலக்கியப் படைப்புகளையும் பாழ்படுத்துகிறது.
தமிழில், சம்ஸ்கிருத நாகரீக முதல் தலையீடுகளில், இவை ஒருசிலவே, அடுத்த தலையீடுகள், சொற்கள், கொள்கைகள், செய்யுட்கற்பனைகள், புராண, மற்றும் பிற கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், விஞ்ஞான, ஒழுக்க, சமயப் பாடங்கள், உரைநடை, பாவகைகள், மற்றும் பிற பிற , காலம் செல்லச் செல்ல, சமஸ்கிருத நாகரீகத்தின் படையெடுப்பு, பிற்காலத் தமிழிலக்கியங்களை மட்டுமே தெரிந்த ஒருவனுக்குச் சிந்தனைகள் போல் அல்லாமல் இயற்கைச் சிந்தனைகளைக் கொண்ட தன்னுடைய மொழிநடை அவன் தாய்மொழியல்லாத வேற்று மொழி போலும். பழக்கமிலா மொழியாகத் தோன்றுமளவு, தமிழிலக்கியம், முழுக்க, முழுக்க வடவர்களின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டுக் கொள்ளுமளவு மிகப் பெரிதாகி விட்டது.
அகத்தியனாருடைய , அவர் பெயரால், அகத்தியம் என அழைக்கப்படும் இலக்கணம் இப்போது இல்லை. ஆனால், ஜமதக்கினியார் மகன் திரணதூமாக்கினியார் இயற்றிய, தொல்காப்பியனார் எனப் பயில அழைக்கப்படும் அவர் மாணவர் இயற்றிய, இலக்கணம் இன்றும் உள்ளது. அது, தெளிவாக, அகத்தியத்தையே மூலமாகக் கொண்டுளது. இத்தமிழ் இலக்கணங்கள், எழுத்து, சொல், யாப்பு, ஆகியன, பற்றி மட்டுமல்லாமல், பாட்டின் கருப்பொருள் குறித்தும் இலக்கணம் வகுப்பது, இவற்றின் தனிச்சிறப்பாம். பாட்டின் கருப்பொருள், இலக்கிய மரபுகள் ஆகியவற்றால், தமிழ்ச் செய்யுள், சமஸ்கிருதச் செய்யுளிலிருந்து அறவே வேறுபடுவது கண்ட இப்பிராமண ஆசிரியர்கள், தம் இலக்கண நூல்களில், இப்பொருள்கள் பற்றிய ஆய்வினையும் மேற்கொள்வது தேவை என உணர்ந்தனர். திரணதூமாக்கினியாரின் நூலாம். அவர் தமிழ்ப் பெயரால் வழங்கும் தொல் காப்பியத்தின் பிற்பகுதிகள், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தமக்கே உரிய தனி இயல்பிற் பாடிய பாடற்பொருள்களாம் அகம், புறம் ஆகியவற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்கின்றன. பொருளதிகாரம் என்ற தொல்காப்பியத்தின் ஈற்றுப் பகுதியிலிருந்து, ஆரியர்களோடு நெருக்கமான தொடர்பு கொள்வதற்கு முன்னர், தமிழர் நடத்திய வாழ்க்கை முறை, தமிழ் உள்ளம், ஆரிய இலக்கியங்களுக்கு ஆட்படாத தற்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் முழுப் படத்தை வரைந்து கொள்ளலாம்.
அது போலும் ஒரு படக்காட்சி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காட்டியிருப்பது போல, ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரிகம்” (pre Aryan Tamil Culture) என்ற என் நூலிலும், இனி வர இருக்கம், பண்டைத் தமிழர் (Ancient Tamilis) என்ற என் நூலிலும் காட்டியிருக்கும் படக்காட்சி களை, முழுமையாக்கும். -
பொருளதிகாரத்தில் ஆரிய நுழைவு
தமிழ்ப் பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில், ஆரியக் கருத்துக்களை இறக்குமதி செய்யும் கவர்ச்சி யிலிருந்து, தொல்காப்பியனார் விடுபடவில்லை. பண்டைத் தமிழ்ப் பாக்களின் மரபுகளை அல்லது விதி முறைகளை விளக்கிக் கூறும்போது, அவர் காலத்தில் வழக்கில் இருந்த, மறைந்தன போக எஞ்சியிருந்த அனைத்துத் தமிழ்ப் பாக்களையும் உறுதியாகப் பின்பற்றியுள்ளார். ஆனாலும், தாம் பெற்றிருந்த, சமஸ்கிருத இலக்கிய அறிவாலும், அரசியல் நெறிமுறைகளும், சமுதாய அமைப்புகளும், தெய்வத்தன்மை யால் வகுக்கப்பெற்றவை என்ற தம் நம்பிக்கையாலும், அவர் அடிக்கடி ஆழ்த்தப்பட்டுள்ளார். சமுதாய உரிமையோடு, பாட்டுடைத் தலைவர்களாம் கல்வி உரிமையும் அனுபவிக்கும் முதல் மூன்று வருணவத்தவர் அடங்கிய நான்கு வருணத்தவர்களாக மக்களைப் பிரிப்பதே சமுதாய அமைப்பின் விதிமுறையாகும் என்பது தொல்காப்பியர்க்கு உரிய கருத்து. ஆனால், அவர் கற்ற தமிழ் பாடல்களில், ஆரியக் கொள்கைப்படி, மிகவும் இழிந்தவர்களான, வேட்டையாடும் இனத்தின் தலைவனும், மீன் பிடிக்கும் இனத்தின் தலைவனும், காதற்பாக்களின் தலைவராவர். இம்முரண்பாட்டை விளக்க, அவர் எடுத்துக் கொள்ள முயற்சி மிகவும் குறைபாடுடையது வேண்டாவிருப்பானது. மேலும், ஆரியச் சமுதாய விதிமுறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண முறைகள் எட்டு உள்ளன. ஆனால், தமிழ்ப் பாக்களில் இரண்டே உள்ளன. இவ்விரு முறைகளையும் ஒன்று எனக்காட்ட, அவர் வீணே முயன்றுள்ளார். தமிழ் அகத்திணை ஒழுக்கம், சமஸ்கிருதக் காம ஒழுக்கத்தைவிட மென்மையானதாம்; தர்ம அர்த்த மோக்ஷங்களைத், தமிழ்ப் புறத்திணை ஒழுக்கங்களில் திணித்துவிட முடியாதாம் என்றாலும், உரையாசிரியர் பலரும் வீணே முயல்வது போலவே, தொல்காப்பியரும், காதலும், போருமே வாழ்க்கையின் குறிக்கோளாம் எனக் கருதும் தமிழர் வாழ்க்கை முறையைத் தர்ம, அர்த்த , காம மோக்ஷமே வாழ்க்கையின் குறிக்கோளரம் எனக்கருதும் ஆரியர். வாழ்க்கை முறையோடு பொருத்திக்காண முயன்றுள்ளார். பொருளதிகாரம், கடைசி அதிகாரத்தில், தம் காலத்தில் தமிழில் இடம்பெறாத, ஆனால், தமக்குத் தெரிந்த சமஸ்கிருத எடுத்துக் காட்டுக்கள் உள்ள, பல இலக்கிய வடிவங்களை விவரித்துக் கூறியுள்ளார். இவையும், இவை போலும் பல இடங்களில் தமிழுக்கு உரியன அல்லாதனவற்றைத் தமிழ்ப்பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில் புகுத்தியுள்ளார். அதனால், தொல்காப்பியர் இவ்வாறு செய்யுமிடங்களில், அவருடைய உரையாசிரியர்களால், அவர் கூற்றிற்குத் தேவையான எடுத்துக் காட்டுகளைத் தமிழிலிருந்து காட்ட முடியாமல் போவது வியப்பினைத் தருவதில்லை. தொல்காப்பியர், தமிழில் புகுத்தும், மற்றும் இரு ஆரியக் கொள்கைகள் பற்றி அவருடைய காலம் குறித்த ஆய்வின்போது தெளிவாகக் கூறப்படும். தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் நுழைவு
அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், தமிழ் நெடுங்கணக்கு ஒலி முறையில் வழங்கப்பட்டுவிட்ட சமஸ்கிருதச் சொற்களாம் தத்பவச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் புகுத்திவிட்டனர். அவ்வகைச் சொற்கள் இடைக்கால உரையாசிரியர்களின் உரையில் எடுத்ததாளப்பட்டிருக்கும் அகத்தியச் சூத்தரங்களிலும் தொல்காப்பிய இலக்கணத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இலக்கண விதிகளைக் குறிக்கவல்ல மரபுச் சொற்களில் பெரும்பாலன வற்றிற்குத் தமிழ்ச் சொற்களைக் காணுமளவு , தமிழின் சிறப்பினை அகத்தியனார், மதித்திருந்தார். கிடைத்திருக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்று வழங்கப்பட்டிருக்கும் சொற்கள் மிகமிகக் குறைவு அல்லது அறவே இல்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல ஒரு . பாடலில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களின் சதவிகிதம், அப்பாடலின் காலத்தை உணர்த்தும் அறிகுறியாம் எனக் கொள்ளுமளவு, அச்சொற்களின் நுழைவு, படிப்படியாகப், பெருகிக் கொண்டே வந்துளது. இவ்வாறு, சமஸ்கிருதச் சொற்கள், தமிழில் மேலும் மேலும் இடம் பெற்று வந்தன என்றாலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்துப் பெரும்பகுதிக் கருப் பொருளாக இருக்கும் தமிழிலக்கிய, மரபுகள், ஆறாவது நூற்றாண்டு வரை விடாமல் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளன.
அகத்தியர் காலம்
அகத்தியனார், அவர் மாணவர் தொல்காப்பியனார் ஆகியோரின் காலம் எது? அகத்தியனார் இலக்கணம், இப்போது இல்லை. ஆனால், தொல்காப்பியனார், அவரை அடிக்கடி எடுத்து ஆளுகிறார். அவர் சூத்திரங்களில் எங்கெல்லாம் என்று கூறுவர் எனப் பொருள்படும் ‘'என்ப'’ என்ற சொல் இடப்பெறுகிறதோ, அங்கெல்லாம் உரையாசிரியர்கள் என்று கூறுவர் ஆசிரியர்” என்றே பொருள் கூறுகின்றனர். தொல்காப்பியர், தம்முடைய இலக்கணத்தை " எழுத்து என்று சொல்லப்படுபவை யாவை என்றால், அவை, அ என்ற எழுத்தில் தொடங்கி, ன் என்ற எழுத்தில் முடியும் முப்பது என்று ஆசிரியர் கூறுவர்" என்ற கூற்றோடு தொடங்குகிறார்.
"எழுத்து எனப்படும்,
அகரம் முதல்,
னகர இறுவாய் முப்பஃது என்ப."
(தொல் : எழுத்து : 1)
ஆகவே, அகத்தியனார் தம்முடைய இலக்கணத்தைத் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்ற எண்ணிலேயே தொடங்கினார் என நாம் கொள்ளலாம். எழுத்து என்ற - சொல், தமிழ் இலக்கண ஆசிரியர்களால், குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நிலையில் ஆளப்பட்டுளது. ஒலியையும், உருவத்தையும் ஒருசேரக் குறிக்கும் வகையில், அது பெயரிடப்பட்டுளது. முன்னது ஒலிவடிவில் உள்ள எழுத்து எனப் பொருள்படும். ஒலிவடிவு எழுத்து' என்றும், பின்னது நேர்க்கோடுகளாகவும் வளைந்த கோடுகளாகவும் வரையப்பட்ட எழுத்து எனப் பொருள்படும். வரிவடிவு எழுத்து" என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் ஒலிவடிவெழுத்து, வரிவடிவெழுத்து என்ற இரண்டையும் ஒருசேரக் குறிக்கும் இயல்புடைய சொல் எதுவும் இல்லாமையால் எழுத்து என்ற அச்சொல்லை அப்பொருள் குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இயலாது. அக்ஷரா என்ற சொல் சமஸ்கிருத ஆசிரியர்களால் இவ்விரு பொருள் குறிக்கும் வகையில், ஆளப்படுகிறது. ஆனால், அக்ஷரா என்ற அச்சொல், கேட்கக்கூடிய ஒலியை உருவாக்கும், காற்றின் அலை அதிர்வின், வானவெளி அடித்தளத்தின் மூலமாம். நிலைபேறுடைய ஒலி எனக்கருதும் மீமாம்சகர், மற்றும் வியாக்கர்னிகாக் கருத்துக்களோடு தொடர்புடையது ஆகலின், எழுத்து என்ற தமிழ்ச்சொல், அக்ஷரா என்பதன் மொழிபெயர்ப்பு ஆகாது.
எழுத்துக்கள் குறித்து அகத்தியனார் கூறும் இலக்கணப் படியே, தமிழ் வரிவடிவெழுத்துக்கள், உருது மொழிக்காகப் பயன்படுத்தப்படும் அராபிய எழுத்துக்கள் தவிர்த்து, இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களையும் போலவே, ‘'பிராமி'’ எனப் பெயர் சூட்டப்பட்ட, அசோகன் கல்வெட்டெழுத்துக்களிலிருந்தே, உருப்பெற்றன என்பதை நாம் அறிவோம். எழுத்தில் வடிக்கப்பெற்ற தமிழ்ச் சொற்களின், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பழைய மாதிரி வடிவங்களின் உதாரணங்கள், பாண்டி நாட்டு மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் நமக்குக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்கள், பித்துப் பிடித்து அலையும் மக்கள் கூட்டத்திலிருந்து, வெகு தொலைவில் உள்ள, இயற்கையான மலைக்குகைகளில் தங்களை அழியாப் பேரின்ப நிலையாம் நிர்வாண நிலைக்குக் கொண்டு சொல்லும், அமைதியான தவநிலையில் வாழ்ந்து வந்த பெளத்த, ஜைன முனிவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் எழுத்து முறை, மிகப்பழைய மாதிரி வடிவங்கள் மட்டுமன்று, பிராமி வடிவெழுத்துக்களை, மிகப் பொருத்தமுறச் சொல்வதானால், தென்னிந்திய மெளரிய வடிவெழுத்துக்களைத், தமிழ் எழுத்து நடைக்கு மேற்கொண்ட தற்காலிக முதல் முயற்சியுமாம். அவை, தனி மெய் எழுத்திற்கும், அகரமொடு இணைந்து வரும் உயிர்மெய் எழுத்திற்கும் இடையில் எளிதில் ஒலிப்பதற்கு வாய்ப்பாக, மெய் எழுத்துக்கள், அகரமொடு இணைந்தே ஒலிக்கப்படும் (மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” (தொல். எழுத்து : 13 எனத் தொல்காப்பியர் கூறுவது போல) எவ்வித வேறுபாடும் காட்டவில்லை; அதாவது மெய் எழுத்தை உணர்த்த, மேலே புள்ளி வைக்கும் முறை இன்னமும் - கொண்டு வரப்படவில்லை. ஆனால், அவை, தமிழுக்கே உரிய சிறப்பு மெய்யாம் “ழ” இரட்டித்தவழி, வலிந்தும் மூக்கொலி எழுத்தாம் “ன” கரம் முன் வரும்போது மெலிந்தும் ஒலிக்கப்படுவதும், நாக்கை உள்மடித்து ஒலித்து எழுவதுமான “ற” நகரத்திற்கு முன்வரும் முக்கொலி எழுத்தைக் குறிக்கத் தன்னால் மட்டுமே இயல்வதும், இன்றை ஒலிப்பு முறையில் புல்லொலி எழுத்தாம் “ந” கரத்திலிருந்து வேறுபாடு காண இயலாததுமாகிய இரு சுழி "ன" ஆகியவற்றைக் குறிக்கும் வரிவடிவங்களைக் கொண்டுள்ளன. ஆகக் கிடைக்கக் கூடிய அகச்சான்றுகளின் படி, கி.மு. மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில், அல்லது, அல்லது, இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், கல்வெட்டு வடிப்பதில், நீடித்துப் பயின்று, அழியாப்பயிற்சி பெற்றுவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால், தமிழ், முதன்முதலில், வரிவடிவில் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களை எழுதி வைப்பதற்குத் : தனியான நெடுங்கணக்கு இல்லாமையே கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு மிகவும் முற்பட்ட காலத்திலேயே, பெருமளவில் இயற்ப்பட்டிருக்க வேண்டியவாய, தமிழ்ப் பாக்கள், மீளவும் பெறமாட்டாவகையில், அழிந்து விட்டதற்குக் காரணமாம். ஆகவே, தமிழ் எழுத்து முறை, எல்லோராலும், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகத்தியனார் வாழ்ந்திருக்க முடியாது என முடிவு செய்கின்றேன். தொல்காப்பிய ஆராய்ச்சி ஆசிரியரும் அவர் மாணவரும் அதற்கு, ஒரு நூற்றாண்டு அல்லது சற்று அதிகப் படியான பிற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளுமாறு நம்மை வற்புறுத்துகிறது. திருமணம், மற்றும் இனிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடைய நாழிகை எனும் பொருளில், ஓரை" என்ற சொல்லைத் தொல்காப்பியர் ஆண்டுள்ளார்.
"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்,
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை"
(-தொல் : பொருள் : களவு : 44)
"தீய ஓரையிலும், தீய நாளிலும், புணர்ச்சியைக் கைவிட வேண்டும் என்ற கொள்கை, மறைந்த ஒழுக்கமாம், களவுக் காலத்தில் தலைவனுக்கு இல்லை"
"ஓரை" என்ற அத்தமிழ்ச் சொல், "அவர்" (Hour) என்ற ஆங்கிலச்சொல்லைப் போலவே முடிந்த முடிவாக ஹொரா (Hora) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்தே பெறப்பட்டதாம். "ஹெரா” என்ற அச்சொல் கிரேக்க மொழியில், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், "பருவம்” என்ற பொதுப் பொருளில் தான் வழங்கப்பட்டது. நாளின் இருபத்துநான்கு கூறுகளில், ஒவ்வொரு கூறும், ஏழு கோள்களில் ஒவ்வொரு கோளின் ஆட்சிக் கீழ், வருவதாகக் கொள்ளப்பட்ட, கி.மு. இரண்டாவது நூற்றாண்டில்தான், ‘'ஹொரா’ என்ற அச்சொல்லுக்கு, நாளின் இருபத்து நான்கு கூற்றில் ஒரு கூற்றை உணர்த்தும் பொருள் தரப்பட்டுள்ளது. ஹொரா என்ற அச்சொல், தான் உணர்த்தும் சோதிடப் பொருட்குறிப்போடு கிமு முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால், ஆட்சி செய்யப்பட்டு வந்த காந்தாரத்திற்குப் பயணம் செய்தது. சமஸ்கிருத நூலாசிரியர்கள் கிரேக்கர்களின் ஜோதிடக்கலையைக் கற்றுக் கொண்டபோது, அது, சமஸ்கிருதத்தில் இடம் கொண்டது. பின்னர், அது, தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்து விட்டது. “ஓரை’ என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பாகும். கி.பி. முதலாண்டிற்கு முன்னர்த் தமிழில் இடம்பெற்றிருக்க முடியாது என்று கொண்டால், அது, ஒரு நடுநிலை மதிப்பீடாம். தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலில், ‘ஓரை என்ற சொல்லை ஆண்டிருந்தாலும், தமிழர்களின் பெரும்பகுதியினர், அதாவது, பார்ப்பனரல்லாதார் ஆரிய நாகரீகத்தால் அடிமை கொள்ளப்பட்டு, அதனால் கோள்கள் குறித்த வானநூல் அறிவைத் தொல்காப்பியர் காலத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்திலேயே பெற்றிருந்தனர்; அல்லது அதில் நம்பிக்கை - கொண்டிருந்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வானநூல் கலையோடு தொடர்புடையன, ஏழு நாட்களைக் கொண்ட வாரமும், ஒவ்வொரு நாளும் ‘ அந்தாளின் முதல் இரண்டரை நாழிகையை ஆட்சி செலுத்தும் - கோளால் பெயரிடப்படுவதுமாம். ஆகவே, வாரத்தின் நாட்களின், கோள் சார்புடைய பெயர்கள் தமிழிலக்கியங்களில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை காணப்படவில்லை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பெறப்படும் . தொல்காப்பியனார் காலத்தை உறுதி செய்யத் துணைபுரியும் பிறிதொரு செய்தியும் உளது. அகத்திணைத்தலைவனின் தோழர்களாகவும், அவன் காதல் ஒழுக்கங்களுக்குத் துணைவர்களாகவும் வருவோருள், பார்ப்பார்களையும் குறிப்பிடுகிறார்.
"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறுவகை யோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" .
"பாணன், கூத்தன, விறலி , பரத்தை ,
யாணம் சான்ற அறிவர், கண்டோர்,
பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா,
முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகை இத்
தொன்னெறி மரபிற் கற்பிற்கு உரியர்"
"பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி,
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே"
தொல். பொருள் : செய்யுள் : 181, 182, 189
அவ்வகையில், காதல் நிகழ்ச்சிகளில் பெருந்துணை புரிபவர்களாகப் பிராமணர்கள் ஆளப்படுவதை, ஆழ்ந்து முடிவு செய்துள்ளார். இது சமஸ்கிருத நாடகத்தின் ஒரு மரபு ஆகும். அகநானூற்றிலோ, அல்லது புறநானூற்றிலோ அத்தகைய குறிப்பு எதையும் காண முடியவில்லையாதலின் தொல்காப்பியனார், அதை ஒரு கொள்கையளவில் கூறியுள்ளாரேயல்லது, ஓர் உண்மை நிகழ்ச்சியாகக் கூறவில்லை என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். புறநானூற்றில், பார்ப்பார் என்ற சொல், நான்கு முறை இடம் பெறுகிறது; அந்தணர் மற்றும் அவர்தம் புலமை பற்றி, மேலும் எட்டுக்குறிப்புகள் உள்ளன.
"ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்"
புறம் : 9:1
"பார்ப்பார்த் தப்பிய கொடுமை"
- புறம் 34 : 3
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும்
பொன்னும் புனல்படச் சொரிந்து”
-புறம் : 367 : 4 - 5
"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கு” - புறம் 2 23 24
“புலன் அழுக்கற்ற அந்தணாளன்”
புறம் : 126 : 17.
"யானே பரிசிலன் மன்னும் அந்தணன்”
- புறம் : 200 : 13.
“அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே”
புறம் : 361 : 4
“கேள்வி முற்றிய வேள்வி அந்தணன்”
-புறம் : 361 : 4.
"ஆக்குரல் காண்பின் அந்தணாளர்'’
-புறம் : 362 : 8
“இறைஞ்சுக பெரும! நின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே”
- புறம் : 6:19 - 20
"ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர்,”
புறம் 26 12 13
"அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்'’
புறம் 93:17.
“வேத வேள்வித் தொழில்”
புறம் : 228 : 9
இவையெல்லாம் அவர்களின் வேதப்புலமை, வேள்வித் தீ, ஏற்றுக் கொண்ட கொடைவளம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனவேயல்லது, காதலர்களிடையே, அவர்கள் மேற்கொண்ட தூது பற்றிக் குறிப்பிடவில்லை. அகநானூற்றில் அக வேள்வி செய்தறியாத ஒரு பார்ப்பானம், "வேளாப் பார்பான்" (அகம் : 24 : 1) அரசர்களிடையே தூதுவத் தொழில் மேற்கொண்டு செல்லுங்கால், மழவர் என்ற ஆறலை கள்வரால் கொல்லப்பட்ட ஒரு பார்ப்பானும், "தூது ஒய் பார்ப்பான். மடி வெள்ளோலை... தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்" (அகம் : 337 : 7-11), குறுந்தொகையில், மணம் ஆகா இளையபார்ப்பான் ஒருவனின் உடைமைகளம், "தண்டொடு பிடித்த, தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக்கற்பின் நின் சொல்" (குறுந்தொகை : 156 : 3-5) கூறப்பட்டுள்ளனர். ஆனால், காதலரிடையே தூது செல்லும் செயல் எதுவும், அவற்றில் குறிப்பிடப்படவில்லை. காதலரிடையே, பார்ப்பனர் தூது செல்லும் மரபினைத் தொல்காப்பியனார், சமஸ்கிருத நாடகத்திலிருந்தே தமிழ்ப் பாக்களுக்குக் கொண்டு வந்திருப்பதால், அவர், முறையான நாடகங்கள், சமஸ்கிருதத்தில் வளர்ந்துவிட்ட பிற்காலத்தில், வாழ்ந்திருக்க வேண்டும். பாஸர (Bhasa) என்பவர்தாம், சமஸ்கிருதப் புலவர்களில் பழமையானவர். அவர், கி.மு. மூன்றாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராவது இயலாது; அந்நாடக மரபைத் தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தில் இணைத்துக் கொள்வதற்குத் துணை செய்வதற்கேற்ப, தென்னிந்தியாவை உடைய, சமஸ்கிருத நாடகங்களின், அவ்விலக்கிய மரபு, சில ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். சொல், யாப்பு உள்ளிட்ட அதன் இலக்கணங்களுக்கு ஆற்றிய முழு நிறைவான அடிப்படைப் பணியுட்பட, தமிழ் நாகரீக வளர்ச்சிக்கு, அகத்தியர் பங்கு, கூறிப் பாராட்டத்தக்க பெருஞ்செயலாகும். ஆனால், பண்டைய கட்டுக்கதையாளர்களும், இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அற்புதத் திருவிளையாடல்களைக் கற்பித்து, அத்தூயவரை மாசுபடுத்த முயன்றுள்ளனர். அவ்வகையில், பழைய தமிழ்ப் புராணங்கள், அவர், சிவன் அல்லது சுப்பிரமணியரிடம் தமிழ் கற்றார். தமிழர்களுக்குத் தமிழைக் கற்பித்தார் என்று கூறுகின்றன. அகத்தியர், தம்மிடையே வந்து காட்சிதரும் வரை தமிழர், எழுத்தறிவவில்லா ஊமையராய் இருந்தனர்? என நான் கருதுகின்றேன். திருவாளர் டி. ஆர். பண்டர்கார் அவர்கள், “அதுவரைக் கண்டறியப்படாதிருந்த தென்னாட் டினுள். திராவிடர்களை நாகரீக மக்களாக மாற்றியவாறே, மேலும் மேலும் ஊடுருவிச் சென்றார்.'’ எனக் கூறுகிறார். "(Carmichal Lecturas. 1918 Page 18) திருவாளர், டி.ஆர். இராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள், தமிழர்களின் சமுதாய இலக்கிய வாழ்க்கை முறையில் அகத்தியர் புகுத்திய புதுமை, வகுத்த மறுசீரமைப்புகள் பற்றிப் பேசுகிறார். (Proceedings and Transactions of Third Oriental Conference 1924 Page 205) இவையனைத்தும் வடிகட்டிய சமயச் சார்பான கட்டுக்கதைகள். மக்கள் வாழ்ந்து வளர்ந்த சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டே எழுந்தமையால், மாற்றவோ, அழிக்கவோ முடியாததான, தமக்கே உரிய இலக்கிய மரபுகளோடு இணைந்து, முழுமையாக வளர்ச்சி பெற்ற, ஓர் இலக்கியத்தையே அகத்தியர் கண்டார். முழுமையாக வளர்ச்சி பெற்ற இலக்கிய நடையோடு கூடிய ஒரு மொழியையும் அவர் கண்டார். அம்மொழி இலக்கியம், குறித்த இலக்கணத்தை இயற்றினார். அவ்வளவே, அதுவல்லது வேறு இல்லை.
அகத்தியர் காலத்திற்கு முன்பே, எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாப்பு குறித்த இலக்கணத்தை அவரால் இயற்றியிருக்க இயலாது. திருந்திய இலக்கிய நடையாம் செந்தமிழ் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழ்ச் செய்யுள் நடையெழுந்த காலத்திற்கும், அகத்தியனார் காலத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், புறத்திணை, அகத்தணைப் பாடல்களால் உருவாகிய எழுச்சி, அவ்வகை இலக்கியங்களை, அவர் காலத்திற்குப் பின்னர் ஐந்நூறு ஆண்டுவரையும், பண்டைய இலக்கியங்கள் நிலைகுலைந்து, சமஸ்கிருதக் கவிதைகளால் ஈர்ப்புண்டு, அகத்தூண்டுதல் பெற்றுப் புதிய தமிழிலக்கியங்கள் தோன்றிப் பழைய கவிதை முறைகளைப் பெரிதும் மறைத்துவிட்ட அக்காலம் வரை, கொண்டு சென்றது. பிற்காலப் புராணக் கதைகள், அகத்தியனார், தமிழைத் தோற்றுவித்தார் எனக் கூறுகின்றன. ஆம்; தமிழ் மொழியுள் , இந்த மொழியிலக்கண , முதல் ஆசிரியரின், நல்வருகையின் கீழ் நடைபெற்ற ஆரிய நுழைவின் பெரும்பயனே, பிற்காலத் தமிழிலக்கியங்கள் என்ற உண்மைக்கரு, இக்கதையுள் அடங்கியுள்ளது எனலாம். ஆகவே, அகத்தியக் கட்டுக்கதைக் களஞ்சியத்துக்குத் தமிழிலக்கியம் பெரும்பங்கு அளிக்க முடியும் என, எவரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அகத்தியக் கட்டுக்கதைகளுக்குத் தமிழ் ஆற்றி யிருக்கும் பங்கு மிகக் குறைவாம் என்பது அறிய, ஏமாற்றம் தருவதாய் உள்ளது. குறுந்தொகையிலும், நற்றிணையிலும், அவர் பற்றிய குறிப்பு எதையும் என்னால் காண முடியவில்லை. புறநானூற்றில், வேதவேள்வி செய்வோரின் வாழிடமாகப் பொதிய மலையைக் கூறும் குறிப்பு ஒன்று உளது. "முத்தீ விளக்கில் துஞ்சும், பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே ." (புறம்: 2 : 23-24) அகம், புறம் என்ற இரு தொகை நூல்களில் பொதியமலை, பாண்டியர்க்கு உரியதாக, ஏழு பாக்களில் விளக்கப்பட்டிருக்க, அதை, அகத்தியர்க்கு உரியதாக்கும் குறிப்பு எதுவும் அவற்றில் இல்லை. அகத்தியனார் காலம், தொகை நூல்களில் மிகப் பழையனவாய, அந்நான்கு தொகை நூல் பாக்களுக்கு நனிமிக அண்மையானது. ஆகவே அவை அவரை மக்களுள் ஒருவராக ஓர் இலக்கண ஆசிரியராகப் பார்த்ததே அல்லது, ஒரு ரிஷியாக மதிக்கவில்லை என்ற உண்மையே, இதற்குக் காரணமாதல் கூடும்.
பாண்டியன் நெடுஞ்செழியனின் அன்புக்குரிய புலவர் மாங்குடி மருதனார் (கிபி. 450) அவனைப் பாராட்டிப் பாடிய மதுரைக் காஞ்சியில், ஒரு பகுதி உரையாசிரியர் நச்சினார்க்கினியரால், அது, அகத்தியரைக் குறிப்பதாகக் காட்டுமளவு சிதைக்கப்பட்டுள்ளது. அது, நெடுஞ்செழியனைப் பார்த்து, "பக்க மலைகளில் வீழ்ந்து ஓடும் அருவிகளைக் கொண்ட மலைக்கு உரியவனே! தென்னவர்களை ஓட்டியவனும், அணுகுவதற்கு அரிய ஆற்றல் வாய்ந்தவனுமாகிய பழம்பெரும் கடவுளுக்கு, அடுத்து இருக்க விரும்புவோனே!'’ எனப் பாராட்டுகிறது.
"தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந!"
- மதுரைக்காஞ்சி : 40-42
இப்பகுதி, பொருள், தெளிவு காணமாட்டாது உளது. "தென்னவன்” என்பது இராவணனைக் குறிக்கும் என்றால், இராமனுக்கு அடுத்தவனாக இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்பது பொருளாதல் வேண்டும். ஆனால், இராவணனைத், தென்னவன் எனக் குறிப்பிடும் ஒரே ஒரு குறிப்பு, அதுவும் மிகவும் பிற்பட்ட பாட்டு ஒன்றில் உளது.
"தென்னவன் மலை எடுக்கச், சேயிழை ஒடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற”
-திருநாவுக்கரசர் தேவாரம் திருக்கச்சி மேற்றளி.
"தென்னவன்" என்பது, பாண்டிய மன்னர்களுக்குப் பொதுவாக இட்டு வழங்கும் ஒரு பட்டப்பெயர். அப்பாட்டு, ஆரியப் புராணக் கதைகள் தமிழ்நாட்டில் பரவ இடம் கொண்டுவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்ட தாயின் அத்தொடரைத் , தென் திசைக் கடவுள் எனக் கூறப்படும் யமனை வென்ற சிவனுக்கு அடுத்த நிலையில் இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்ற பொருள் தரும் வகையில் கொள்ளலாம். ஆனால், சிவனின், இவ்வெற்றிச் செயல், நெடுஞ்செழியன் காலத்து மதுரையில், பலராலும் அறியப்பட்டிருந்தது என, உறுதியாகக் கொள்ளமுடியாது. மேலே கூறப்பட்ட இரு பொருள்களுமே, கட்டுப்பாடற்ற கற்பனைகள்தாம். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க் கினியரின் விளக்கம் படுமோசம். அவர், மூலச் சொற்களையும், சொற்றொடர் களையும் தாம் கூற விரும்பும் பொருளுக்கு ஏற்றவாறு இடம் மாற்றிப் போட்டுத், தென்னவன் என்ற சொல் இராவணனைக் குறிப்பதாகக் கொண்டு, அகத்தியர், தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து, இராவணனை அகற்றினார் எனக் கூறுகிறார். தம் கூற்றுக்கு ஆதரவாக, தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், அகத்தியர், இராவணனை இசையில் வென்றார் எனக்கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். (இராவணனைத் தமிழ் நாட்டையாளாதபடி போக்கின, கிட்டுதற்கரிய வலியினையுடைய, பழமை முதிர்ந்த, அகத்தியன் இராவணன் தென்திசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், அகத்தியனைத், தென்திசையுயர்ந்த நொய்ம்மைபோக, இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான், என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல், பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க." (மதுரைக் காஞ்சி 40 - 42, உரை) என்ற அவர் உரையினைக் காண்க. நச்சினார்க்கினியார் தரும் இப்பொருள் விளக்கம் முழுக்க முழுக்கப் பிழைபட்டது. மதுரைக்காஞ்சி, அகத்தியனாரைக் குறிப்பிடவேயில்லை.
சிலப்பதிகாரம், பழைய தமிழ்ப் புராணக்கதைகளம், ஆரியப் புராணக்கதைகளும், பழைய தமிழ்ப் பழக்க வழக்கங்களும், ஆரியப் பழக்கவழக்கங்களும், வேறு பிரித்துக் காணாவாறு, ஒரே இனத்தைச் சேர்ந்த பிழம்பு வடிவமாக வடிக்கப்பட வில்லையாயினும், ஒன்றோ டொன்று கலக்கத் தொடங்கிவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாட்டு, இந்தப்பாட்டும், தமிழை முதன்முதலில் தோற்று வித்து, மக்களுக்குக் கற்பித்ததாகக் கூறும் அகத்தியப் புராணத்தின் மூலத்தைக் காணப் பெரிய அளவில் துணைபுரியவில்லை . இது, இந்திரன் மகன் சயந்த குமரன், வானுலக ஆடல் மகள் உருப்பசி, ஆகியோரை, அகத்தியர் சபித்ததைக் கூறுவதோடு, அகத்தியர் குறித்த வேறு ஒரு குறிப்பையும் தருகிறது. அது, மாடலன் என்ற பார்ப்பன யாத்திரிகன் குமரியில் நீராடச் செல்வதன் முன், அகத்தியர் இருந்த மலையை வலங் கொண்டதைக் கூறுகிறது.
"தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்'’
- சிலம்பு : அரங்கேற்றுக் காதை :1 - 4
"மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு ,
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”
- சிலம்பு : அடைக்கலக்காதை : 13-15
அடுத்த பெருங்காப்பியமாகிய மணிமேகலை, மேலே கூறிய காப்பியமாம் சிலப்பதிகாரக் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படினும், அது, பழைய தமிழிலக்கிய மரபுகள் எல்லாம், சமஸ்கிருத இலக்கிய மரபுகளால், தமிழிலக்’ கியத்திலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்ட மக்களின் வாழ்க்கை முறை, ஆரிய ஆதிக்கத்தின் கீழ் முழுமையாகக் கொண்டவரப்பட்டுவிட்ட மக்களுக்கு இட்டு வழங்கிய தமிழ்ப் பெயர்களெல்லாம், சமஸ்கிருதப் பெயர்களால் இடம் கொள்ளப்பட்டுவிட்ட காலத்து “நிகழ்ச்சிகளைப் பற்றியே கூறுகிறது. ஆனால், இந்தக் காப்பியமும், அகத்தியர் பற்றிய கதைகளில் ஒரு சிலவற்றையே கொண்டுளது. அவற்றுள் ஒன்று, நீர்வேட்கையுற்ற காந்தமன் என்ற சோழ மன்னன் வேண்ட, அமர முனிவனாம் அகத்தியனடைய நீர்க்குடம் கவிழத் தோன்றிய காவிரிப் பெண்ணைக் குறிப்பிடுகிறது.
"கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட,
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை'’.
- மணிமேகலை : பதிகம். 10-12
ஸ்காந்த புராணம், இந்த வேண்டுகோள் விடுத்ததை, இந்திரனுக்கு ஏற்றுகிறது. சமஸ்கிருதத்தில் காவிரி, காவேரி என அழைக்கப்படுகிறது. காவேரி, கவேரன் என்ற முனிவன் மகளாகக் கூறுப்பட்டுளது. இக்கதை, மணிமேகலையில், "தவாநீர்க் காவிரிப் பாவை தன் தாதை கவேரன்” (மலர்வனம் புக்க காதை : 55-56) "கவேர கன்னி” (பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை : 62) எனக் குறிப்பிடப்பட்டுளது. இக்கதை; ஆக்நேய புராணத்தில் கூறப்பட்டிருப்பதாக, திருவாளர். டாக்டர். உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள் கூறுகிறார். (மணி: 9:52. அடிக்குறிப்பு காண்க) மற்றொன்று, அகத்தியர் ஆணையிட, வானிடைத் தொங்கிக் கொண்டிருந்த அசுரர்க்குரிய கோட்டையை அழித்து, அவ் வெற்றி குறித்துத் தோளில் தொடி அணிந்து, தொடித்தோள் செம்பியன் எனும் பெயர் கொண்ட சோழ மன்னன் ஒருவன், தன் தலைநகரில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்திரவிழாவின் போது வந்திருக்குமாறு, இந்திரனை வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு இசைந்து வந்திருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.
"ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்,
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என் தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைகு என,
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது.
- மணிமேகலை : விழாவறை காதை :3-9
இதன் பொருள் : ஓங்கி உயர்ந்த மலைக்கு உரிய, அரிய தவம் புரிந்த முனிவன் ஆணையிட, வானில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டையை அழித்தல், தொடி அணிந்த தோளினை உடைய சோழன், வானவர். தலைவனாம் இந்திரனை வணங்கி, அவன் முன் நின்று "மண்ணுலகில், எனக்கு உரிய சிறந்த தலைநகரில் பெரியவர்கள் விரும்ப விழாக் கொண்டாடும், இருபத்தெட்டு நாட்களிலும் வந்து நன்கு இருப்பாயாக" என வேண்டிக் கொள்ள, தேவர் தலைவனும் அது நேர்ந்தான் என்பதாம்.
கொண்டாட மறந்துவிட்டதால், தலைநகரைக் கடல் கோளாம் பேரழிவுக்கு உள்ளாக்கிவிட்ட இந்திரவிழா வந்த வரலாறு இது. அப்பாட்டின் பிற்பகுதியில், அகத்தியர் குறித்த மற்றொரு குறிப்பும் இடம் பெற்றுளது. அது, பரசுராமன், க்ஷத்திரிய அரசர்களையெல்லாம் அழித்து வரும்போது, காவிரிப் பூம்பட்டினத்துக் காவல் தெய்வம், மறைந்து கொள்ளுமாறு ஆணையிட, காந்தமன் என்ற அரசனும் துயர் தீர்ந்துவிட்டது என அகத்தியன் அறிவிக்கும் வரை, தலைநகரைக் காக்குமாறு பின்னோனுக்கு ஆணையிட்டு, அம்முனிவர் தவப்பள்ளியில் மறைந்து வாழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.
"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாது ஒளி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்....
............................
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல்”
- மணிமேகலை: சிறைசெய்காதை:25-27 மற்றும் 35-36
இதன் பொருள்: அரசர் குலத்தை அழித்த, மழு என்றவாள் ஏந்திய நெடிய திருமாலாம் பரசுராமன் முன் தோன்றுவது தகாது, நீ மறைந்து கொள் எனக் கன்னித் தெய்வம் ஆணையிட, காந்த மன்னவன் தேவமுனிவனாம் அகத்தியன் கூறும், துயர் தீர்ந்துவிட்டது என்ற சொல் கேட்டு, நான் வரும் வரை ககந்தா! காப்பாயாக என்பதாம்.)
கி.பி. முதலாம் ஆயிரத்தாண்டினைச் சேர்ந்த இந்தக் கதைகள் எதிலும், அகத்தியர், தெய்வ ஆசிரியனிடமிருந்த தமிழைப் பெற்றது அல்லது கற்றதைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பிற்காலத்தே வாழ்ந்த அகத்தியனார், முதல் தமிழிலக்கணத்தை எழுதிய உண்மை நிகழ்ச்சி , முதல் அகத்தியர், தமிழைச் சிவன் அல்லது சுப்பிரமணியரிடமிருந்து கற்றுத் தென்னிந்திய மக்களுக்குக் கற்றுத் தந்தார் என்ற புராணக் கதையாக மாறியது. உரையாசிரியர்கள் பெருகிப் பழங்காலம் குறித்த புராணக்கதைகளைக் கட்டிவிட்ட கிபி. இரண்டாம் ஆயிரத்தாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பாயிரம் எனப்படும் தொல்காப்பிய முன்னுரையில் நச்சினார்க்கினியர் கூறுவதே, புராணக் கதைகளில் படுமோசமானது. அகத்தியனார், தம்முடைய மாணவர், திரணதூமாக்கினியாரைத் தம் மனைவி லோபாமுத்திரையை, விதர்ப்பத்திலிருந்து பொதி மலைக்கு அழைத்துவருமாறு பணித்தார். அதே சமயம் தம் மனைவியை நான்கு கோல் அளவிற்குக் குறைவாக அணுகக்கூடாது என்றும் எச்சரித்தார். லோபா முத்திரையும், திரணதூமாக்கினியும், வெள்ளம் பெருக்கெடுத் தோடும் வைகையைக் கடக்க நேரிட்டபோது, அவள் வெள்ளத்தால் அடித்துச் செல்லாதிருக்கத் தம் கைக்கோலை நீட்டி அதைப் பற்றிக் கொள்ளுமாறு வோபா முத்திரையிடம் கூறினார். அவ்வாறே ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளப் பெருக்கு மிகுதியால் கோலில், ஒரு கோல் அளவே இடை வெளி இருக்க நேரிட்டது. அவ்வகையில் திரணதூமாக்கினி ஆசிரியரின் தடையுத்தரவை மீறிவிட்டார். கடுஞ்சினம் உடைய ஆசிரியர், இதைக் கேள்வியுற்றுதும், 'நீங்கள் இருவரும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" எனச் சாபம் இட்டார். அது கேட்ட மாணவரும் "நாங்கள் செய்யாத பிழைக்கு எங்களைச் சபித்த நீயும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" என எதிர்ச்சாபம் இட்டார். தொல்காப்பியம் இருக்க அகதக்தியம் அழிந்துவிட்டதை விளக்க இக்கதை கூறப்பட்டது போலும்.
13. மக்கள் வாழ்க்கை கி.பி. முதல் ஐந்நூறு ஆண்டுகள்
பழந்தமிழர் முறை இன்னமும் வலுவாக நடைபெற்றது
தங்களிடையே பிராமணர்கள் வாழத் தொடங்கிவிட்ட நிலையிலும், அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் ஆரிய நாகரீகத்தைத் தமிழ் நாட்டில் புகுத்த முயற்சி மேற்கொண்டுவிட்ட நிலையிலும், மக்களில் பெரும்பகுதியினர், ஆரிய நாகரீகம், தங்களிடையே இடம் பெறாதது போலவே வாழலாயினர். பழங்காலத்தில், தங்கள் மூதாதையர் வாழ்ந்த அதே முறையில் வாழ்ந்தனர்; காதல் கொண்டனர். அவர்களின் தொழில்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றில், முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினர். அதாவது, அவை சிறிதும் மாறுபடவேயில்லை. கீழே கொடுத்திருக்கும் எடுத்துக் காட்டுக்கள், கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய, எளிய சிற்றூர் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளப் படிப்பவர்க்கு துணை நிற்கம். சில நூற்றாண்டுகள் கழித்துச், சமஸ்கிருதக் கற்பனைப் பாடல்கள், தமிழர் அறிவை அடிமை கொண்டு, அவர்களின், அழகிய இயற்கையோடியைந்த இனிய பாடல்களை அழிக்கத் தலைப்பட்டபோது கைவிட்டுவிட்ட தங்களைச் சூழ உள்ள எளிய இயற்கையோடியைந்த இனிய பாடல்களை அழிக்கத் தலைப்பட்டபோது கைவிட்டு விட்ட தங்களைச் சூழ உள்ள எளிய இயற்கைக் காட்சிகளிலிருந்தே தம் அகத்தூண்டு தலைத், தாம் பெற்றிருந்த அந்நிலையைச் சமஸ்கிருத நாகரீகத்தோடு தொடர்பு கொண்டுவிட்ட அந்நிலையிலும் தமிழ்ப் பாடல்கள் பெற்று வந்தன என்பதையும் அவை உணர்த்தும்.
மலை நாட்டில் உணவு உற்பத்தி
மக்களின் முக்கியத் தொழில், உணவு உற்பத்தி. அது பல இடங்களில் விளக்கப்பட்டுளது. “வேங்கை மரங்கள் நிறைந்த, வெப்பம் மிக்க சிவந்த மேட்டு நிலத்தில், கார் காலத்துப் பெருமழையால் ஈரப்பக்குவப்பட்ட நிலத்தைக், கீழ்மண் மேல்மண்ணாகி நன்கு புழுதிபடுமாறு பலசால் உழுது, விதைத்து, முளைத்து இளம்பயிராக இருக்கும் போது, காற்று உள் நுழைய வழி செய்யவும், வருத்தமின்றிக் களை அகற்றவும், பயிர் நன்கு தழைப்பதற்கு இடம் தருமாறு, நிலத்து இறுக்கத்தை நெகிழ்விக்கவும் தாளி அடித்து, அது செய்ததன் பயனாய், பயிர் நன்கு செழித்து வளர்ந்திருக்கும் போது களை அகற்றிவிடவே இலைகள் தழைத்துப் பெருகி, அண்மையில் முட்டை இட்ட பெண்மயிலின் அழகிய தோகை போலும் தோற்றம் வாய்ந்த கரிய தண்டுகள் நீண்டு, ஒரு சேரக் கதிர்விட்டு, கதிர்களின் அடியிலும், நுனியிலும் உள்ள மணிகள் ஒருசேர முற்றிக் காய்த்த வரகை அறுக்கவும், தினையைக் கொய்யவும், எள் கறுத்து எள்ளினங்காய் முற்றவும், வளமான கொடிகளில் வெள்ளவரைக் கொத்து, கொய்யும் நிலை எய்த, நிலத்தில் புதைத்துப் புளிப்பேறப் பண்ணிய மதுவைப் புல் வேய்ந்த சிறிய குடிசைகளில் அனைவர்க்கும் வழங்க, கொதிக்கும் நறு நெய்யில் வறுகடலை துள்ள, சோறு ஆக்கி முடிக்கும் அரிய காட்சி ஒரு பாட்டில் விளக்கப்பட்டுளது.
"வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்,
பல்லி ஆடிய, பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின், தோள்தொலிபு நந்தி,
பெண்மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து,
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினை கொய்யாக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளரிக்காய் கோட்பத மாசு,
நிலம் புதைப், பழுனிய மட்டின் தேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறுநெய்க் கடலை இசைப்பச் சோறு அட்டு"
புறம் : 120 : 1-74
மலைநாட்டில், உழுது உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய, இன்றியமையாத ஒன்று அன்று. உழுவது வேண்டாதே, உணவுப் பொருள் கிடைக்கும் நிலை கீழ்வரும் , பாக்களில் விளக்கப்பட்டுளது. “உழுவர் உழுது விளைவிக்க” வேண்டாமல், தாமே விளையும் உணவுப் பொருட்கள் நான்கு உள.. முதலாவது, சின்னஞ்சிறு இலைகளைக் கொண்ட மூங்கில் நெல், இரண்டாவது, பலா, இனிய சுவையுடைக் கனிகளைக் காய்த்துத் தொங்கவிடும். மூன்றாவது, கொழு கொழு என வளர்ந்திருக்கம், வள்ளிக் கொடி, கிழங்குகளை மண்ணுள் விட்டிருக்கும்; நான்காவது, அழகிய நிறம் வாய்ந்த, குரங்குகள் பாய, மலைகள், தன்னிடை கட்டப்பட்டிருக்கும் அடைகளிலிருந்து தேனைச் சொரியும்” "உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே தீஞ்சுவைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடும் குன்றம் தேன் சொரி யும்மே”..
புறம் : 109 : 3-8
"கிளைகள் தோறும், மலை முகடுகள் தோறும் தேனடைகள் கட்டப்பட்டுத் தொங்க, பலா முதலாம் மரங்களில் பழங்கள் குலைகுலையாகத் தொங்க, மலைகளிலிருந்து அருவிகள் மாலை போல் உருண்டோடி வர, கொல்லைகள் . தோறும் வரகு, சாமை, தினைபோலும் பதினாறுவகைக் கூலங்கள் பெருகிவிளைய, இம்மலைநாடு, எக்காலத்தும் பெருவளம் உடையது என, அதன்கண் பல்லாண்டு வாழ்ந்து, அதைப் பிரிந்து போக நேர்ந்தபோது வியந்து பாராட்டும் பெருமையுடையது”..
“பிரசம் தூங்கப், பெரும்பழம் துணர
வரை வெள் ளருவி, மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம் புலம்புக, நாளும்
மல்லற்று அம்ம இம்மலைகெழு வெற்புஎனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாடு"
- நற்றிணை : 93: 1-5
வேடன் வாழ்க்கை
மலை நாட்டு வழியில், இருளில் வருவதால் நேரும் இடையூறுகளுக்கு ஆளாகும் வகையில் இரவில் வாரற்க என்று, ஓரிளம் பெண், தன் காதலனுக்கு எடுத்துக் கூறும் அறிவுரையினை நினைவூட்டும் வகையில், வேடன் ஒருவன் வாழ்க்கையில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை, ஒரு புலவர் விளக்கியுள்ளார். "சிலிர்த்து நிற்கும் மயிர்கள் அடங்கிய கழுத்தினை உடைய ஆண்பன்றி, உணவின்மை யால் தோலாய்வற்றி இளைத்துவிட்ட பெண் பன்றியுடன் சென்று, முற்ற வளர்ந்து தினைக் கதிர்களை அளவின்றித் - தின்று அழித்துவிட்டது கண்ட கானவன், மலைவழியில், செல்லுதற்கு அரிய புழை அருகே பதுங்கியிருந்து, அம்பு. எய்து கொன்ற, வெள்ளிய கொம்புகளைக் கொண்ட அந்த ஆண் பன்றியை அணி செய்து கொண்ட கரிய கூந்தலை உடைய அவன் மனைவி, அறுத்துத், தன் சுற்றத்தார் வீடுகளுக்கெல்லாம் சென்று பகுத்துக் கொடுக்கும் உயர்ந்த மலை நாட்டுக்கு உரிய தலைவனே கடுஞ்சினம் கொண்ட களிற்றியானை, புலியின் வருகையை எதிர்நோக்கிக் காத்து நிற்கும் இரவில், நீ இங்கு வருதலை, நீ அஞ்சுகின்றாயல்லை; ஆனால், நான் பெரிதும் அஞ்சுகின்றேன்; ஆகவே, பாம்பு அடங்கியிருக்கும், ஈரம்பட்ட புற்றைக் கரடிக் கூட்டம் கார்மேகம் போலச் சூழ்ந்து கொண்டு, பறித்து எடுக்கும், மலையகத்துச் சிறுவழியில் இனி வாராதே"
"பிணர்ச்சுவல் பன்றி, தோல்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல்லதர் அருப்புழை அல்கிக், கானவன்
வில்லில் தந்த வெண்கோட்டு ஏற்றைப்
புனையிரும் கதுப்பின் மனையோள், தொண்டிக்
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட!
உரவுச்சின வேழம், உறுபுலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்; அரவின்
ஈரளைப் புற்றம் காரென முற்றி,
இரைதேர் எண்கு இனம் அகழும்
வரைசேர் சிறுநெறி, வாரா தீமே;”
- நற்றிணை : 336
ஆற்றுப்பள்ளத்தாக்கில்
ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலத்தில் எழுந்த ஒரு பாடல்:
"பொய்கையின் மீன் தேர்ந்துண்ட நாரைகள், நெற்கதிர்ப்பு போரில் சென்று உறங்கும். நெய்தல் வருமளவு வளத்தால் அழகு பெற்ற வயலில், நெல் அறுவடை செய்யும் உழவர், முகை அவிழ்ந்து மலர்ந்த இதழ்களையுடைய ஆம்பலின் அகன்ற இலையாலான தொன்னையில், மதுவுண்டு, தெளிந்த கடலலை எழுப்பும் சீரான ஒலிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடி மகிழும், நன்செய் வளமிக்க நாட்டிற்கு உரிய வேந்தே பழம் : உண்ணுவான் விரும்பி, ஆகாயத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலிக்கப் பேரோலி எழுப்பியவாறே சென்று, ஆங்குள்ள பழமரங்கள், பருவம் கழிந்து போகக், காய்ப்பு மாறிவிட்டது கண்டு ஏமாந்து, வருந்தி, வறிதே மீளும் பறவகைளைப் போல, வருவார்க்கு வரையாது வழங்குவன் என்ற உன் புகழ்துரத்த வந்து, உன் புகழ்பாடும் நான், வறிதே மீளக் கடவனோ ?”
"பொய்கை நாரை, போர்வில் சேக்கும்
நெய்தலம் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருன!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப்,
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல,
நின் நசைதர வந்து, நின் இசைநுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ?"
(புறம் : 209 :1-12)
ஒரு தொழில் நடைபெறும் நிலத்தின் பொதுவான குறிக்கோள்களும், மிகமிக எளிய நிகழ்ச்சிகளும், தமிழ்நாட்டுப் புலவர்களிடமிருந்து, அப்புலவர்கள், பிற்காலச் சமஸ்கிருத இலக்கியக் கற்பனைப் பாடல்களின் செல்வாக் கின் அழுத்தமான பிடியுள் சிக்கிக் கொள்வதற்கு முன்னர், நன்மிக இனிய பாடல்களைப் பெற்றிருந்தன. இவ்வாறு பாடுகிறது ஒரு பாட்டு:
"மடை அடைத்திருந்த பல்லாற்றானும் மாண்புற்ற குளத்து நீர், மடைதிறந்துவிட்ட வழி, அக்குளத்தினின்றும், அந்நீரோடு புறம் போந்து, கால்வாயை அடைந்து, சென்று திரும்பிய, பெரிய கொம்பினையுடைய வாளைமீன், அக்கால்வாயிலிருந்து, சேறுபட்டுக் கிடக்கும் வயலுள் புகுந்து ஓடி, ஆங்கு உழுதுகொண்டிருக்கும் எருமைக் கடாக்களின் காற்சேறுபட்ட புள்ளிகளையுடைய மேற்புறத்தோடு, நிலத்தைச் சேறுபட மாறிமாறி உழும் உழவர்களின் கைக் கோலுக்கும் அஞ்சாது செருக்குற்று, சேற்றின் மேல் வரப்பு ஓரமாகவே ஓடி, மேற்கொண்டு போகமாட்டாது தடையுற்றுப் போய், அவ்வரப் படியிலேயே புரளத் தொடங்கும்.
"மாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் ,
கால் அணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை,
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடிப்
பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சால் உழவர் கோல்புடை மதரிப்
பைங்கால் செறுவின் அணைமுதல் புரளும்
நற்றிணை : 340 8-8
ஆற்றுப் பள்ளத்தாக்கு வாழ்க்கைமுறை பற்றிய இன்னொரு செய்யுள் இதோ: "செந்நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போன்ற செந்தாமரை மலர்களின் இடையிடையே, கதிர் முற்றிய செந்நெல்லின் தாளை அரிந்து அரி அரியாகப் போட்டுப் பணி முடிந்த உழவர், தங்களுக்குக் குடங்களைக் கொண்டுவரும் வண்டி, சேற்றில் ஆழ்ந்துவிடின், அதுபோக்கச் சிறந்த கரும்புத்தடிகளை அடுக்கி இடை யெடுக்கும், பாயும் புனலால் வளம்மிக்க ஊரின் தலைவனே! நெற்பொரிகள் போலும், புன்கம்பூ மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற நீர்த்துறைகள் அழகு பெற , ஒளிவீசும் நெற்றியும், நல்மணம் மிக்க மலர்கள் சூடிய, காண்பதற்கு இனிமை தரும் திரண்ட கூந்தலும், மாவடுக்கள் போலும் கண்களும், மார்பில் அசையும் முத்துச் சரமும், இவற்றால் பூம் நுண்ணிய அழகும் உடையாளோர் இளம் பரத்தையொடு, இடையறாது ஓடிக்கொண்டே இருக்கும் புனலில், நேற்று விளையாடி மகிழ்ந்தனை என்று ஊரார் பலரும் கூறுவர். ஆகவே, உறுதியாக, நீ, நாணம் இழந்தவனே”.
"எரி அசைந்தன்னை தாமரை இடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் லினைஞர்,
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்றுரின்,
ஆய்கரும்பு அடுக்கம் பாய்புனல் ஊர:
பெரிய, நாணிலை மன்ற; பொரி எனப்
புன்கு அவிழ் அகன்றுறைப் பொலிய, ஒன்துதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்,
மாழைநோக்கின், காழ் இயல் வனமுலை
எஃகுடை எழில்நலத்து ஒருத்தி யொடு, நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை”.
அகம் : 116 : 1-10
கடற்கரை நிலப்பரப்பில்
கடற்கரை நிலப்பரப்பாம் நெய்தல் நிலத்தின் முக்கியத் தொழில், மீன்பிடித்தல், அத்தொழில், பாடல் புனையும் தம் புலமைக்கு ஏலா இழிவுடைப் பொருளாம் என்று புலவர் கருத வில்லை , ‘'கதிரிட்டு முறுக்கித் திருத்தமாகச் செய்யப்பட்ட வலிய கயிற்றால் பின்னப்பட்ட “ பெரிய பெரிய மீன்பிடி வலைகளை, இடிபோல் முழங்கும் அலைகள் ஓயாக் கடலில் இரும்பொருட்டு, அவ்வலைகள் நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பாகர்களால் பிணித்துக் கொண்டு செல்லப்படும். அடக்குதற்கு சுரிய களிற்றைப் போலப், பரதவர் செலுத்துவர் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் புதுமணல் பரந்த கானற்சோலையில், புன்னை, தன் நுண்ணிய மகரந்தப் பொடிகளை; ஓயாது வீசிக் கொண்டேயிருக்கும். கீழ்க் காற்று வந்து மோதுந்தோறும், நாரைகளின் வெண்ணிற முதுகில் தூவித் தூர்க்கும் தெளிந்த கடற்கரைக்கண் நிற்கும் கண்டல் மரங்களை வேலியாகக் கொண்ட ஊர்"
"வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை
இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறையரும் களிற்றின், பரதவர் ஒய்யும்
போதவிழ், புதுமணல் கானல் புன்னைநுண் தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும், குருகின்
வெண்புறம் ஓசிய வார்க்கம், தெண்கடல் கண்டல் வேலிய உர்".
- நற்றிணை : 74 : 1-4 : 6-10
பின்வரும் அழகிய செய்யுளில், ஒரு மீனவப் பெண் தன் உறவினர், விரைந்து வீடு திரும்பமாட்டார் என்பதைக் கூறித், தன் காதலனைத் தன் மனையில் இரவு தங்கிச் செல்லுமாறு அழைக்கிறாள். "கீழ்க்கடலிலிருந்து எழுந்து, நல்ல செந்நிறக் கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதை ஒளிமயமாக்கிவிட்ட ஞாயிறு மேற்கு மலையில் மறைந்துவிடும், துன்பத்தைத் தூது போல் முன்போக்கிப் பின்னர் வந்து தங்கிவிட்ட துயர்தரு மாலைப் பொழுதை, ஒளிவீசும் வளை அணிந்த மகளிர் தத்தம் மாளிகைகளில், எதிர்கொண்டு வரவேற்க, மீன் கொழுப்பை உருக்கி எடுத்த நெய்வார்த்து ஏற்றிய ஒளிவிளக்குகளின் பேரொளி வீசும் நீல நிறக்கடலில் எழும் அலைகள் மோதும் கரையிடத்தே உள்ள, ஆரவாரப் பேரொலி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் எம் பாக்கத்தில் இன்று இருந்து, எம்மனையில் எம்மோடு தங்கியிருப்பின், உனக்கு ஏதேனும் குறபைாடு உளதாமோ? சிவந்த நூலால், வளைத்து வளைத்து முடியிட்டுச் செய்த அழகிய வலை கேடுற்றுப் போமாறு அறுத்துக் கொண்டு ஓடிவிட்ட, எதிர்ப்படும் எதையும் கொல்லவல்ல சுறாமீனைத் தம் வல்லமையெல்லாம் காட்டி, அகப்படுத்திக் கொள்ளாது எம் சுற்றத்தார் வறிதே வருவார் அல்லர். ஆகவே தங்கிச் சென்மோ"
"குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப்
பகல்கெழு செல்வன் குடமலை மறையப்
புலம்புவந்து இறுத்த புன்கண் மாலை
இலங்குவளை மகளிர் வியன்நகர் அயர,
மீன்நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண்சுடர்,
நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக்
கரைசேர்பு இருந்த கல்என் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ? தெய்ய; செங்கால்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வா ரலரே”
நற்றிணை : 215
நெய்தல் நிலத்து மக்களின் வாழ்க்கை வாய்ப்புகள், ஒரு பாட்டில் விளக்கப்பட்டுள்ளன. "நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர், செங்கதிர் பரப்பிக் காயும் ஞாயிற்றின் வெயில் வெப்பம் தாங்கமாட்டாத போது, தெளிந்த கடல் நீரில் பாய்ந்து களை தீர்வர். திண்ணிய மீன்பிடி படகாம் திமிலை உடைய வலிய பரதவர், உண்டார்க்கு உரம் ஊட்டும் மதுவுண்டு, இனிய குரவைக் கூத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடித் திளைப்பர். கடல் அலைகள் தூவும் தூவலால் தழைத்து வளர்ந்து புன்னையின் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலை அணிந்த ஆடவர், ஒளிவீசும் வளை அணிந்த மகளிர்க்கு நீராடலில் வலக்கை கொடுத்து உதவுவர், வண்டுகள் வந்து மொய்க்க் மலர்ந்த, குளிர்ந்த நறுமணமே நாறிக் கொண்டிருக்கும் கானலில் தழைத்திருக்கும் கடல் முள்ளி மாலை அணிந்த வளை அணிந்த மகளிர், வானளாவ வளர்ந்திருக்கும் பனையின் நுங்கின் இனிய நீரும், பொதிவுற வளர்ந்திருக்கும் கரும்பின் 225மக்கள் வாழ்க்கை .... சாறும், மணல் மேட்டில் நிற்கும் தென்னையின் இனிய இளநீரும் ஆகிய மூன்று நீரையும் கலந்து குடித்துவிட்டு, மழைநீர், ஆற்றுநீர், ஊற்று நீர் என்ற முந்நீராம் கடல் நீரில் பாய்ந்து ஆடுவர்".
"நெல் அரியும் இருந்தொழுவர்,
செஞ்ஞாயிற்று வெயில் முனையின்,
தெண்கடல் திரை மிசைப் பாயுந்து,
திண்திமில் வன் பரதவர்
வெப்புடைய மட்டும் உண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து!
தூவல் கலித்த தேம்பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்,
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்நறும் கானல்
முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
இரும்பனையின் குறும்பைநீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஒங்கு மணல் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு. முந்நீர் பாயும்"
-புறம் : 24:1-16
("முந்நீர் உண்டு - (பனை நுங்கின் நீர், கரும்பின் சாறு, வெங்கின் இளநீர் - ) முந்நீர் (ஆற்றுநீர், ஊற்றுநீர், மழை நீர்) பாயும்" என்ற வரியில் அழகிய சொல்லோவியம் அமைந்திருப்பது காண்க)
தலைவனை, ஓர் இரவு தங்கித் தலைவிக்கு ஆறுதல் அளிக்குமாறு தோழி வற்புறுத்தும் ஒரு செய்யுள், நெய்தல் நிலத்து வாழ்க்கை நிலை, வாழ்க்கை முறைகள் பற்றிய மற்றொரு காட்சியைத் தருகிறது. மீன் உண்ணும் பசிய கால்களை உடைய வெண்ணிறக் கொக்குக் கூட்டம் செவ்வேள் முருகன் மார்பில் கிடந்து ஒளிவிடும் வெண் முத்தாரம் போல, செவ்வானத்தில் எழுந்து வரிசையாக பறந்து. போமாறு, பகற்பொழுதை மெல்ல மெல்லக் கழித்து விட்ட ஞாயிறு, மேற்கு மலையில் சென்று மறைந்து விட்டான். மிக்க நாணத்தையும் மெல்லிய சாயலையும் உடைய சிறியவளாகிய இவளோ, தன் சிறந்த அழகு கெடுமாறு, உன் பிரிவுக்கு ஏங்கி, அழகிய குளிர்ந்த கண்கலங்க ஓயாது அழத் தொடங்கி விட்டாள். தலைவ! அதனாலும், உப்பங்கழியில் உள்ள சுறா மீன் குத்தியதால் புண்ணுற்ற கால்களையுடைய உன் கோவேறு கழுதை, நீர் நிறைந்து கறுத்துத் தோன்றும் நீண்ட கழியைக் கடக்கமாட்டாது மெலிந்து விட்டது. ஆதலாலும், வலிய வில்லேந்தி உன் உடன் வரும் வீரர்களோடு, இவ்விரவில் செல்லாது, இளைப்பாறி, பனைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வெண்மணல் பரந்து கிடக்கும் தோட்டங் களில், தன் துணையை அழைப்பான் வேண்டி, அன்றில் அகவும் அவ்விடத்தில், சின்னம் சிறு பூங்கொத்துக் களையுடைய நெய்தல் வளர்ந்துகிடக்கும், உப்பங்கழி சூழ்ந்த எங்கள் நாட்டின் கண், நீ தங்கிச் செல்வாயாக; அவ்வாறு தங்கிச் செல்வதால் வருவதொரு கேடு ஏதேனும் உண்டோ?”
”நெடுவேள் மார்பின் ஆரம் போலச் ,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்கால் கொக்கின் நிறைபறை உகப்ப
எல்லை பைபயக் கழிப்பிக், குடவயின்
கல் சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு;
மதரெழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணித்த சிறுமென் சாயல்
மாண்நலம் சிதைய, ஏங்கி ஆனாது.
அழல்தொடங் கினளே; பெரும்; அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே, சிதைகுவது உண்டோ ?
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அக்வும் ஆங்கண்,
சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாடே”
அகம் : 120
மணல் பரந்த பாலையில் வறண்ட பாலையில், வாழ்க்கை நிலை மிகவும் கடினமாம்."தூய வெள்ளை ஆடையை விரித்து விட்டாற்போல் தோன்றுமாறு வெயில் விரிந்து காயும், கோடைப் பருவரம் நீண்ட மலைச்சாரலில், கொடிய பசியுடைய செந்நாய், வாடிய மரையாவைக் கொன்று வேண்டு மட்டும் தின்று, விட்டொழித்த எஞ்சிய இறைச்சி நெடுந்தொலைவில் உள்ள - வேற்று நாட்டிலிருந்து, கடத்தற்கு அரிய அப்பாலையைக் கடந்து செல்லும் வழிப் போவோர்க்கு உண்ணும் உணவாகும் கொடுமை மிக்க, வெப்பம் மிகுந்த அரிய வழி"
"முகில் விரித்தன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஒய்பசிச் செந்நாய், உயங்குமரை தொலைச்சி
ஆரீந்தன ஒழிந்த மிச்சில், சேய்நாட்டு
அரும்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை
- நற்றிணை : 43 : 1-6
பாலை, தனக்கே உரிய இனிய அழகிய காட்சிகளைப் பெறாமலில்லை. "வளைந்த சிறகினை உடைய பறவகைளின் உள்ளங்கால் சுவடுகள் வரிசை வரிசையாகப் பொருந்திய, நீர்வற்றிய இடங்கள் தோறும் மெல்லிய நுண்மணல் படிந்து கிடக்க, மெல்லென வீசும் வாடைக்காற்று வறண்டு. மோதியதால், கரும்பின் வெண்ணிறப் பூ, புதல் தோறும் ஒரு சேர விரிந்து, அரசனுக்கு வீசப்படும் கவரி போல் ஆடி அழகு செய்ய, கொண்டல் கொண்டலான மேகங்கள் நீங்கிச் செல்வதால், மாறி மாறிக் கண் விழித்துக் காட்டுவதுபோல், ஞாயிறு தோன்றித் தோன்றி மறைய, பகற்காலம் கழிய, மாலைப் பொழுதொடு இராக்காலம் வந்து சேர்தலும், பனி விழுந்து கால் கொள்ளும்".
"கொடும் சிறை
உள்ளடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈரயிர் தோன்ற
வளராவாடை உளர்புநனி தீண்டலின்,
வேழ வெண்பூ விரிவான பலவுடன்
வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய,
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பதுபோல் விளங்குபு அறைய
எல்லை போகிய பொழுதின் எல்உறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமம்”.
- நற்றிணை : 241 : 1-10
என்றாலும், மக்கள் பெருவாரியாக, அதைக் கடந்து செல்ல வேண்டியிருந்தும், பாலை, பெரிதும் , பாழுற்றே இருந்தது. ‘'பாலை வழியைக் கடந்து செல்லும் மக்கள், அறுத்துப்போட்ட பிரண்டைக் கொடி, இடியால் தாக்குண்டு சிதறுண்ட பசிய பாம்பின் துண்டுகள் போல வழியருகே வறிதே வீழ்ந்து கிடக்கும் அப்பாலைக் காட்டில், உப்பு வணிகர் கூட்டம் விட்டுப் போன கல் அடுப்பில், வலிய வில்லையுடைய ஆறலை கள்வர், ஊனை, மணம் உண்டாகப் புழுக்கி உண்பர்”,
“ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறிகொள
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பின்
நோன்சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்”.
அகம் : 179 : 5-9.
ஆடுமாடுகளின் மேய்புலமாம் முல்லை நிலம்
வாழ்வதற்கு நன்மிக இனிய இடம் முல்லை . "மழை கால் இறங்கிப் பெய்யும் மழைப் பருவத்துப், பெருமழை பெய்து ஓய்ந்த கடைசி நாளன்று, பனைநார் கொண்டு பல காலிட்டுப் பின்னிய மெல்லிய உறி, பால்பானையோடு ஒரு கையில் தொங்க, தீக்கடைகோல் முதலாம் கருவிகளை ஒரு சேர இட்டுச் சுருக்கிய தோல் பையையும், மழைக்கு மறைப்பாகும் பனை ஓலையாலான குடையையும் முதுகில் கட்டிக் கொண்டு, பால்விலை கூறி விற்றுச் செல்லும் இடையன், மேய்புலத்தில், சிறுசிறு துளிகளாக ஓயாது விழுந்து கொண்டே இருக்கும் மழைச்சாரல், தன் உடலின் ஒரு புறத்தை நனைத்துக் கொண்டிருப்பதும், பொருட்படுத்தாமல், கைக்கோலை நிலத்தில் ஊன்றி, ஒரு காலை அதன் மேல் வைத்து, ஓய்வான நிலையில் நின்றவாறே , இதழ்களைக் குவித்து அவன் எழுப்பும் வீளை ஒலியைக் கேட்கம் ஆடுகள், பிறர்க்குரிய புலம் சென்று மேய்ந்துவிடாமல், அவ்வொலிக்கு மயங்கி, அவனைக்சூழ அடங்கி நிற்கும் அம்முல்லை நிலத்தில், இரவு நெடும் பொழுது ஆயினும் விருந்தினர் வந்துவிட்டால் மகிழ்ந்து வரவேற்பவளும், கணவன் கூறிய சொற்பிழையாது இல் இருந்து நல்லறம் ஆற்றும் கற்புடையாளும், மெல்லிய சாயலும் இளமை நலம் மாறா அழகுடையாளும் ஆகிய இல்லத்தரசி வாழ்கின்ற வீடு உளது."
"வான் இடுப்பு சொரிந்த வயங்குபெயல் கடைநாள்
பாணி கொண்ட பல்கால் மெல் உறி,
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத்து இட்ட பால் நொடை இடையன்,
நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டுகால வைத்த ஒடுங்குநிலை, மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே, பொய்யா யாணர்
அல்லில் ஆயினம், விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே."
நற்றிணை : 142
முல்லையில் மிகவும் இன்பம் தரும் பருவம் இளவேனில், "பருவவரவால் இலைகளெல்லாம் பழுத்து உதிர்ந்து போன பிடவமரத்துக் கிளைகளெல்லாம் அரும்பலர்ந்து நிறைந்து விட்டன; புதல்கள் தோறும் படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடிகள் பூத்துக்குலுங்கின ; கொன்றை மரங்கள், பொன் போலும் மலர்களை ஈன்றன. காயாவின் சிறுசிறு கிளைகளில் நீலமணி போலும்" பன்மலர்கள் நிறைந்து விட்டன. இவற்றிற்கெல்லாம் காரணமான கார்காலம் தொடங்கி விட்டது. பெண்மான், மருண்டு மருண்டு விழிக்கும் அழகிய கண்களை உடையவாய தன் குட்டிகளோடு களர்நிலம் நோக்கி ஓடி விடவே, அவற்றின்பால் கொண்ட ஆருாக்காதல் நெஞ்சோடு, அவற்றைத் தேடி அலையும் ஆண்மான் அதோ விரைகிறது; காண்பாயாக.'’
"இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன் எனக் கொன்றை மலர, மணிஎனப்
பன்மலர்க் காயா குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங் கின்றே காலை......
........................
கழிப் பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனன் இருந்து ஓடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே”
- நற்றிணை : 1 - 15 : 6 - 10
கேட்க இனிப்பன, முல்லைக்காட்டு ஒலிகள், “தேனடைகள் கட்டப்பெற்றிருக்கும் நெடிய முடிகளையுடைய மலைச்சாரலில் குவிந்த இலைகளை நெருங்கக் கொண்ட முசுண்டையில், வானத்தில் விளங்கும் மீன் கூட்டம் போலக் 'காட்சி தருமாறு, வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் நள்ளிரவின் நடுயாமத்தில், ஆட்டுக் குட்டிகளை, மழை மறைக்கும் ஓலைப் பாயை முதுகில் கொண்டவாறே, ஒரு சேரக்கொண்டு காத்துக்கிடக்கும் இடையன், இனிய மணம் கமழும் முல்லை ‘ மலர்களைத் தோன்றிப் பூக்களோடு, வண்டுகள் வந்து மொய்க்குமாறு தொடுத்த மாலையை, அதினின்றும் நீர்த் துளிகள் ஓழுக, தலையில் அணிந்து கொண்டு, குளிர் போக்க, எழுப்பிய சிறு தீயில் தன் உள்ளங்கைகளைக் காய வைத்துக்கொண்டே, ஆட்டு மறிகளை விரட்டுவான் வேண்டி எழுப்பும் நீண்ட ஒலி, தினைப்புனத்தை அழிக்கவரும் சிறிய கண்களை உடைய பன்றியின் பெருங்கூட்டத்தை விரட்டுவான் வேண்டி, அத்தினைப் புனத்தைக் காத்துகிடப்பார், அவை வருவது அறிந்து ஊதும், பெரிய கொம்பின் ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும் முல்லைக்காட்டின் இடையே உள்ள நாடு"
"தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பருப்புற இடையன்
தண்கமழ் முல்லை, தோன்றியொடு விரைஇ
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கார்இருள் நெடு விளி,
சிறுதானி பன்றிப் பெருநிரை கடிய
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்".
அகம் : 94 :1 - 11
"வட்டவட்டக் கண்களையும் கூரிய வாயலகையும் உடைய பெண் காக்கை, இளமையால் நடுங்கும் இறகுகளையுடைய தன் குஞ்சுகளை அனைத்தவாறே தன் இனக் காக்கைகளையும் கூவி அழைத்து, குறுகிய கால்களை நட்டுக்கட்டப் பெற்று, உணவுப் பொருட்களை நிறையச் சேர்த்து வைத்திருக்கும் மனைகளின் முன்புறத்தில் இட்டுவைத்திருக்கும், கருணைக் கிழங்கின் பொரிக்கறி யொடு கலந்த, செந்நெல் அரிசியாலான வெண்சோற்றுத் திரளைத் தெய்வங்களுக்கு இடும் பலியொடு கவர்ந்து உண்ணக் கூடியிருக்கும்"
"கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப்பேடை,
ஒருங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து
கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
குருடைப் பலியொடு கவரிய, குறுங்கால்
கூறுடை நன்மனை குழுவின இருக்கும்"
- நற்றிணை : 367 51 - 5
பொதுமக்களின் இவ்வாழ்க்கை விளக்கம் வறுமையில் வாடும் ஒரு வீட்டின் படப்பிடிப்போடு முடியும். சோறு ஆக்குதல், அறவே மறந்து போனமையால், தேய்வுறாது கட்டியது கட்டியபடியே கோடு உயர்ந்து நிற்கும் அடுப்பில், காளான்கள் பூத்துக் கிடக்க, உடலை வாட்டும் பசியால் வருந்திப், பால் வறண்டு போகவே, தோல் மெலிந்து, பால் வரும் துளையும் தூர்ந்து பயனற்றுப் போன முலையில் வாய் வைத்துச் சுவைக்குந்தோறும், பால் வாராமை கண்டு அழத் தொடங்கிவிடும் தன் மகளின் முகத்தைக் காணும்தொறும் நீரால் நிறைந்துவிடும் கண்களாகிவிடும் மனையோள்'’.
"ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் ,
பாஅல் இண்மையின் தோலோடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்
மனையோள்"
- புறம் : 164: 1-7
சிறுதொழில்கள்
இக்கால அளவில், சிற்றூர்களில் இன்று காணப்படும் அத்தனைத் தொழில்களும் செயல்பட வேண்டிய அளவுக்கு, வாழ்க்கைத்தரம் வெகுவாக முன்னேறிவிட்டது. இத் தொழில் கள், புலவர்களுக்கு நல்ல உவமைகளாக உதவலாயின, ‘இரும் பைப் பயன்படுத்திப் பல கருவிகளை வடித்துக் கொடுக்கும் கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பை விசைத்து அடிக் கும் சம்மட்டியின் அடிகளைத் தாங்கி உருக்குலைந்து போகாது நிற்கும் பட்டடைக் கல்லைப் பகைவரால் அழிவுற்றுப் போகா ஒரு பெரு வீரனுக்கு உவமை கூறியுள்ளார் ஒரு புலவர்”.
“இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே”
-புறம் : 170 : 15 - 17
மருத நிலத்தில் குளத்தின் அடைகரையில் வளர்ந்திருக்கும், அரம் போலும் முட்களை உடைய பிரம்புக் கொடி போலும் கொடியை உடைய ஆம்பலின், நீர் குறைய நீர் மட்டத்துக்கு மேல் உயர்ந்து சுருண்டிருக்கும் இலை, அசைந்து அசைந்து வரும் வாடைக்காற்று வீசுந்தொறும், விரிந்து அடங்கும் காட்சிக்குக் கொல்லன் உலைக்களத்தில் காற்று அடிக்க விசைத்து இழுத்துவிடும் துருத்தியை உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்"
"'பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகலடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுலை
விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்"
- அகம் : 96 : 3-7
தீ ஓங்கி எரிந்து அடங்கிய நிலையில், நெய்யில் பக்குவப் பட்டு மிதக்கும் இறைச்சித் துண்டுகளுக்குப் பருத்தி நூற்கும் பெண், கொட்டை நீக்கி அடித்துக்குவித்து வைத்திருக்கும் பருத்திக் குவியல்களை உவமையாக்கியுள்ளார் ஒரு புலவர்,
"பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும்குறை".
-புறம் : 125 : 1-2
இரட்டை இரட்டையாகக் கவைத்த கதிர்களைக் குற்றிப் புடைத்து எடுத்த வரகரிச்சோற்றையும், கால்நடைச் சாணங்களால் ஆன எரு குவிந்து கிடக்கும் தெருவில், காலத்தே விளைந்திருக்கும் வேளையின் வெண்பூக்களை, வெள்ளிய தயிரில் மிதக்க விட்டு ஆய்ச்சியர் ஆக்கிய புளிக் குழம்பயும் வயிறார உண்டு அவரைக் காய்களைக் கொய்யும் தொழிலாளியைப் படம்பிடித்துள்ளார் ஒரு புலவர்.
"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்,
தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்"
புறம் : 215 :1-5
காண்பவர் கருத்தை ஈர்க்கும் தகுதியற்றதான இழி தொழிலும் புலவர்களின் கவியார்வத்தைத் தணித்து விடவில்லை. "ஊரில் விழாத் தொடங்கிவிட்டது. அப்போது பறை கொட்டுதல் போலும் பணி ஆற்ற வேண்டுவது அவன் , கடமை. ஆகவே ஆங்கும் செல்ல வேண்டும். பிள்ளைப் பேற்றிற்கு உரிய காலம். மனைவிக்கு வந்து விட்டது. அப்போது உடனிருந்து அவளுக்கு உதவ வேண்டுவதும் இன்றியமையாதது; ஆகவே, வீட்டிற்கும் செல்ல வேண்டும், இதற்கிடையில் ஞாயிறும் மறையத் தொடங்கிவிட்டான். மழை பெய்யவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கட்டிலுக்குக் கயிறு பின்னும் தொழிற்கடமை மேற்கொண்டு விட்ட அத்தொழிலாளி, அப்பணியை விரைந்து முடித்து விட்டு மேற்கூறிய இருபணிகள் குறித்து விரையத் துடிக்கும் நிலையில், பின்னும் வார்கோத்த அவன் கை ஊசி விரையும் விரைவினைச் சொல்ல இயலாது. அவ்விரைவினைத், தன்னை வெல்வார் யாரேனும் உளரேல் வருக என வஞ்சினம் கூறி வந்திருக்கும் வேற்றூர் வீரனோடு போரிட்டு வெல்லத் துடிக்கும், ஆத்திமாலை அணிந்து, அவ்வூர் வீரனின் உள்ள விரைவிற்கு உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்”. “சாறுதலைக் கொண்டெனப், பெண்ஈற்று உற்றெனப்,
பட்ட மாரி, ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ!
ஊர்கொள வந்த பொருந்னொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தனை போரே"
-புறம் : 82
ஊரில் நிகழ இருக்கும் விழாக்களை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பாளர்களாகப் பழங்காலத்தில் குயவர்களும் பணிபுரிந்துள்ளனர். "அரும்பு கட்டிய கதிர் போல் தோன்றும், ஒளிவீசும் மலர்களைக் கொத்துக் கொத்தாக ஈனும் நொச்சி மாலை அணிந்து, ஆறுபோல் அகன்று நீண்ட தெருவில், ஊரில் உள்ளார் யாவரும் கேட்க, ‘இவ்வூரில், இன்ன நாளில் இன்ன விழா நடைபெறும்; விழாவிற் பங்கு கொள்ள வருக' என அறிவித்துச் செல்லும் அறிவால் முதிர்ந்த குயவனே. ஆம்பல் நெருங்க வளருமளவு வளம்மிக்க வயல்களையும், பொய்கையையும் உடைய ஊருக்கு, விழா அறிவிக்கச் செல்லுவையாயின், அவ்வூர் மகளிரை, 'கூரிய பற்களும் அகன்ற அல்குலும் உடையீர்' என அவர் நலம் பாராட்டி அழைத்து, 'தெறித்து இசை எழுப்புவதற்கு ஏற்புடைய நரம்பு கட்டிய யாழில் பாடத்தகும் பாடல்களை இனிதாக இசைக்கவல்ல உங்களுர்ப் பாணன் செய்யும் துன்பங்களுக்குக் கணக்கில; அவன் உரைப்பன எல்லாம் மெய்யே போல் தோன்றினும், அனைத்தும் பொய்யே; பொய்யை மூடி மறைத்து மெய்யே போல் கூறுவதில் வல்லவன் அப்பாணன். ஆகவே அவன் கூறுவதில் பெரிதும் விழிப்பாய் இருப்பீர்களாக என இதையும் அறிவித்துவர இயலுமோ? அறிவித்து வர வேண்டுகிறேன் எனப் பெண் ஒருத்தி, குயவனைப் பார்த்துக் கூறியதாக ஒரு செய்யுள் :
"கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி,
ஆறுகிடந் தன்ன அகல்நெடும் தெருவில்,
சாறுஎன நுவலும் முதுவாய் குயவ!
இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ!
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோ யாகிக்,
கைகவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ; வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர்! இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே..
- நற்றிணை : 200
குயவன், ஒருவகையில் கோயில் பூசாரியாகவும் இருந்து பலி கொடுப்பதும் செய்வன். பழமையும் வெற்றிச் சிறப்பும் வாய்ந்த மூதூரில் பரந்து அகன்ற ஊர் மன்றத்தில், விழாத் தொடங்குவதற்கு முன்னர், நீல மணி போலும் மலர்க் கொத்துக்களை உடைய நொச்சிமாலை அணிந்த , உருவாலும், உள் அறிவாலும் மூத்த குயவன், தான் இடும்பலியை உண்ணுமாறு, பலி உண்ணும் கடவுளையும், காக்கைகளையும் அழைப்பதைக் கூறுகிறது பிறிதொரு செய்யுள்.
"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்,
பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் .
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்".
- நற்றிணை : 293 : 1-4
குயவனின் மந்திரக் கைத்திறன் இன்னமும் அழித்து. விடவில்லை. குழந்தைகளை, ‘அக்கி’ எனப்படும் தோல் நோய் பற்றிக் கொண்டதும், அவற்றின் தாய்மார், குழந்தைகளைக் குயவனிடம் கொண்டுசெல்ல, அவன் ஒரு குச்சியை, ஒருவகைச் செம்மண் குழம்பில் நனைத்து, அக்கொப்புளங்கள் உள்ள பகுதியைச் சுற்றி, யாளி எனப்படும் ஒரு கற்பனைப் பேயின் உருவத்தை வரையச், சில நாட்களுக்கு கெல்லாம் அந்நோய் மறைந்து போய்விடும்.
உடைகளை வெளுத்துக் கஞ்சியூட்டல், பாடற்பொருளாக அமைவதற்குத் தகுதியற்ற சிறு செயல்களாகப் புலவர்க் நினைக்கவில்லை. "கூத்து முதலாம் களியாட்டங்கள் ஒருபால் நிகழ, ஓயாது விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மூதூர்களில், ஆடை களைப் பருத்தி ஆடை, பட்டாடை என இனம் பிரித்து அழுக்குப் போகத் துவைத்தளிக்கும் தொழிலைக் கையோய்வதில்லாமல் செய்வதால் வறுமை அறியாது வாழும் சலவைத் தொழில் மகள் ஒருத்தி, சின்னம் சிறு பூத்தொழில்கள் கொண்ட சிறந்த ஆடைக்கு, இரவில் சோற்றுக்கஞ்சி ஊட்டும் சிறப்பு ஒரு பாட்டில் கூறப்பட்டுளது".
“ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடை ஓர் பான்மையில் பெருங்கை தூவா
வறன் இல் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகள் கொண்ட புன்பூங் கலிங்கம்”.
நற்றிணை : 90 : 1-4
பாறையில் தினை உலர்த்திக் காத்திருக்கும் ஒரு பெண்ணைப் பாடியுள்ளார் ஒரு புலவர். முன்கை நிறைய வளையல்களையும், பிற உடல் உறுப்புகளில் அவற்றிற்கு உரிய அணிகளையும் அணிந்திருக்கும் உயர்குடி மகளிர், கரிய பெரிய மலை மீது அகன்ற பாறையில் செந்தினை பரப்பிக் காத்து நிற்கின்றனர். "நிறைவளை முன்கை, நேரிழை மகளிர்
இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி"
- குறுந்தொகை : 335: 1-2.
காய்ச்சிய பாலில் மோர் இட்டுத் தயிர் ஆக்குவதும் ஓர் உவமையாகக் கூறப்பட்டுளது. "பெண்மைக்குரிய மடப்பம் உடையளாய ஆய்மகள், தன்கை விரல் முனையால் தொட்டுத் தெறித்த சிறிதளவே ஆன மோர், குடம் நிறைய இருந்த பாலனைத்தையும் தயிராக்கும் நிகழ்ச்சி, களம் புகுந்த ஒரு பெருவீரன் அக்களத்தில் நிறைந்து நிற்கும் நாற்படை அனைத்துக்கும் உயிர் போக்கும் நோயாகி நிற்கும் தன்மைக்கு உவமையாகக் கூறப்பட்டுளது.
"மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே"
- புறம் : 276 :3-5
கடுகு மிளகு முதலாம் தாளிப்புப் பொருட்களைக் கலந்து உணவிற்கு மணம் ஊட்டுவதும் கூறப்பட்டுள்ளது. குய்க்கொள் கொழுந்துவை' (புறம் : 160 : 1) குய்யுடை அடிசில்" (புறம்: 127 : 7)
சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல் போலும் இனிய பொழுதுபோக்குகள் பற்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தச்சன் செய்து கொடுத்த சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில் அமர்ந்து சென்று இன்புறல் இயலாது எனினும், அதைக் கயிறு கொண்டு ஈர்த்துச் சென்று இன்பம் அடையும் சிறுவர் சிறுமியரின் இன்ப விளையாட்டில் இன்பம் கண்டுள்ளார் ஒரு புலவர். தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்.'’
-குறுந்தொகை : 1 :1 - 3
தாம் தொடுத்த மலர்மாலையை அணிந்து கொண்டு, மூங்கில் போலும் பருத்த தோள் உடையேம் என்ற துணிவால் கடல் நீரில் புகுந்து ஆடிய மகளிர், கடற்கரைக் கானல் சோலை யில் பரந்து கிடக்கும் மணலால் சிற்றில் கட்டி விளையாடும் இன்பக் காட்சியைக் காட்டியுள்ளார் ஒரு புலவர்.
"துளைத்த கோதைப் பணைப்பெரும் தோளினர்,
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறுமனை”.
- குறுந்தொகை : 326 : 1-3
ஒளிவீசும் வளைகளை அணிந்த மகளிர், வறுபடாத பச்சை நெல்லை, அவலாக இடித்து முடித்து, அது செய்யத் துணை புரிந்த, கரிய வயிரம் பாய்ந்த மரத்தால் ஆன உலக்கையை முற்றித் தலை சாய்த்து அழகுறக் காட்சி அளிக்கும் நெற்பயிர் நிற்கும் வயல் வரப்பில் படுக்க வைத்து விட்டு விளையாடச் சென்றுவிடும் சிறப்பைக் கூறுகிறது ஒரு செய்யுள்.
“பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும்”.
- குறுந்தொகை : 238 : 13
தன்பால் அன்பு காட்டுவதில் ஒப்புக் காணமாட்டாத தன் தோழியர் கூட்டத்தொடு அருவியில் பாய்ந்து ஆடி- அவ்வாறு ஆடுங்கால், நீரலைகள் தாக்கியதால், தன்னுடைய பெரிய, அழகிய, அன்பொழுகும் கண்கள் சிவந்து போகக் காட்சி அளிக்கும் செல்வத்திருமகளைக் காட்டுகிறது ஒரு செய்யுள். -
“பொருவில் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேரமர் மழைக்கண்".
நற்றிணை : 44 : 1:2
ஊஞ்சல் ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு விளையாட்டு. அழகிய கண்களை உடைய தோழியர் கூட்டம் ஆட்டிவிடுமாறு, கரிய பனை நாரைத் திரித்து முறுக்கிய கயிற்றை நீளமாகத் தொங்கவிட்டுக் கட்டிய ஊஞ்சல் ஒன்றை ஆட்டிக் காட்டுகிறது ஓர் அழகிய செய்யுள். "பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க"
- நற்றிணை : 90 : 6-7
பள்ளி சென்று கல்வி கல்லாத இளஞ்சிறுவர்கள், வேப்ப மரத்து அடியில், நெருங்கத் தழைத்த அதன் இலைகள் தரும், புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழலில், பொற்கொல்லன் பால் உள்ள பொன்னுரைகல்போலும் வடிவில் வட்டமான அரங்கை வரைந்துகொண்டு, நெல்லிக் காய்களை வட்டுக்களாகக் கொண்டு, பாண்டில் ஆடும் அழகும் ஓரிடத்தில் கூறப்பட்டுளது.
வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்"
- நற்றிணை : 3 : 2 - 4
கூரை வேய்ந்த நல்ல மனைக்கு உரியவராகிய குறுந்தொடிகளை அணிந்த மகளிர், தங்கள் மனையின் முன்புறத்தில் பரப்பியிருக்கும் புதுமணலில் அமர்ந்து, கழற்சிக் காய்களைக் கொண்டு கழங்காடிக் களித்திருப்பர்.
"கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்,
மணலாடு கழங்கு".
- நற்றிணை : 79 : 2-3
மகளிர் விளையாட்டாகப் பல இடங்களிலும் கூறப் பட்டிருப்பது ஓரை. பூஞ்சாய்க் கோரை எனும் ஒருவகைக் கோரைப் புல்லால் செய்து மகரந்தப் பொடிகள் பூசிச் செய்த பாவை வைத்து விளையாடு ஆயமொடு, ஓரை ஆடாது". "ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை 68:1-3, 155:1) “ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர்” (புறம் : 176 : 1)
மகளிரின் மற்றொரு விளையாட்டு "அல்லியம்.” ஆண் கோலமும் பெண் கோலமும் உடையவாக இரண்டு பாவைகளைச் செய்து கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.
"வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர்”.
புறம் : 33 : 16 - 18
குருட்டு நம்பிக்கைகள்
இனி, மக்களிடையே நிலவியிருந்த குருட்டு நம்பிக்கைகள் சில. காக்கை கரைந்தால், விருந்து வரும் என்ற நம்பிக்கை, இன்றேபோல் அன்றும் இருந்தது. “கணவன் பிரிவாற்றாத் துன்பக் கவலையால் மெலிந்துவிட்ட என் தோழியின் தோள்கள், அம்மெலிவு நீங்கிப் பண்டே போல் ஆகிச் சிறப்புறுவதற்குத் துணை செய்யும் வகையில், கணவன் வருகையைக் கரைந்து முன் அறிவித்தது காக்கை; அந்நல்லது செய்த காக்கைக்கு இடும் பலியாகத் தொண்டி. நகரத்து வயல்களில் முற்ற விளைந்த வெண்ணெல் அரிசி கொண்டு சுடுசோற்றைத் திண்ணிய தேருக்கு உரிய நள்ளி என்னும் கொடைவள்ளலின் காட்டில் வாழும் ஆயர்களின் பல பசுக்களிடம் கொண்ட நெய்யைக் கலந்து, ஏழு கலத்தில் இட்டு வைத்தாலும், அது செய்த நன்றியை நோக்க, இப்பலி சிறிதாம்” எனக் கூறுகிறாள் தலைவியின் தோழி ஒருத்தி.
"திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே'’
- குறுந்தொகை : 270
சகுனங்களிலான நம்பிக்கை அளவுமீறி இருந்தது. பறவைகளின் போக்கு, அவற்றின் குரல், வர இருக்கும் ஆக்கம், இழப்புக்களை அறிவித்துவிடவல்லன என உறுதியாக நம்பினர். "புள்ளும், பொழுதும் பழித்தல்" (புறம்: 204 : 10). பரிசில் கிடைக்காதபோது, அது தராதுவிடுத்த புரவலனைப் பழிக்காது, தாம் புறப்பட்டு வந்தபோது நிகழ்ந்த புள்நிமித்தம் காலக்கேடுகளையே பழிப்பர். பேய்கள், மரங்களிலும் இடுகாடுகளிலும் வாழும் என்று நம்பினார்கள். பேய், தன் கூட்டத்தோடு ஆடிக்களிக்கும் இடுகாட்டை ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார். (புறம் : 288: 45) போர்க்களத்தில் வீரப்புண் பெற்று இறந்து வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் வீரப் புண்களைத் தோண்டி, அதிலிருந்து பெருகிய செங்குருதியால் சிவந்து போன தன் கைகளால் தனது மயிரைக் கோதி முடித்து, அதனால் கறுத்த தன் மேனியும் செந்நிறங் காட்டும் ஒரு பேய்மகளைக் காட்டுகிறார் ஒரு புலவர்.
"பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி ,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்".
புறம் : 62:2-4
பேய்மகள் பிணத்தைத் தழுவி, அதன் வெள்ளிய நிணத்தைத் தின்னும்; "பேஎய் மகளிர் பிணம் தழுஉப்பற்றி, விளர் ஊன் தின்ற வெம்புலால்" (புறம் : 359 : 4-5) பேய், மகளிரைப் பற்றிக் கொள்ளும்; அவ்வாறு பேயால் பற்றப் பட்ட மகளிர், குதித்து ஆடுவர். "முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும்". (புறம் : 259:5-6) வெண்கடுகைப் புகைத்தால் பேய் ஓடி மறைந்துவிடும். "ஐயவி புகைப்பவும்" (புறம் : 98 : 15) என்றெல்லாம் மக்கள் நம்பி இருந்தனர்.
ஓடுகின்ற ஆற்றின் இடையே உள்ள, துருத்தி என்றும் அழைக்கப் படும் மேட்டில், பல்வேறு இசைக்கருவிகள் இசை எழுப்ப, ஆட்டின் கழுத்தை அறுத்துத், தினையைப் பிரப்பங் கூடையில் பரப்பி வைத்து தாம் வெளிப்படவந்து உலாவல் அல்லது, நோய்களைத் தீர்க்கலாகாத் தெய்வங்கள் ஒருசேர வழிபட்டு இவள் பேயால் பற்றப்பட்டாள் என்ற முடிவிற்கு * வந்து நிற்கும் மகளிரைக் காட்டுகிறார் ஒரு புலவர்.
“மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரஇச்,
செல்லாற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந் தாக.
வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
போய்க் கொளீஇயள் இவள் என'’
குறுந்தொகை : 263 : 1-5
மனித இறைச்சி, குருதிகளை விரும்புவது பேய். அதனால், களத்தில் இறவாது வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் புண்ணைத் தோண்டத் தலைப்பட்டுவிடும். பேய் தொட்ட புண், ஆறுவதும் இல்லை . அவ்வீரன் உயிர் பிழைப்பதும் இலன், இதில் நம்பிக்கை உடைமையால் அவன் மனைவி, பேய், தன் கணவன் இருக்கும் இடத்தையும் அண்டக் கூடாது என்பதால், வீட்டு வாயிலில் இரந்தை, வேப்பந்தழைகளைச் செருகி, யாழ் முதலாம் இசைகளை எழுப்பி, மெல்ல எழுந்து வீட்டை மையிட்டு மெழுகி, வெண் சிறுகடுகை எங்கும் தூவி, ஆம்பல் குழல் ஊதி, மணி அடித்து, காஞ்சிப்பண் பாடி. மாளிகை முற்றிலும் நறுமணப் புகை எழுப்பிக் காப்பன்.
“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக்,
கை பயப்பெயர்த்து, மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பில் கடிந்றை புகை இக்
காக்கம் வம்மோ ?” -
-புறம் : 287 : 1-7
சமய வழிபாடுகள்
தொன்மையான வழிபாட்டு முறைகள், ஐந்தாவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரீகம் (Pre Aryan Tamil Culture) என்ற என்னுடைய நூலிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கே எடுத்துக்காட்டிய கடவுள்களே அல்லாமல், வேறு கடவுள்களையும் தமிழர் வழிபட்டனர். திங்கள், அவற்றின் ஒன்று. கடல் நடுவே, மீன் பிடி படகுகளாம் திமில்களில் ஏற்றப்பட்டுக் காட்சி அளிக்கும் விளக்குகள் போல, செம்மீன்கள் ஒளிவிடும் விசும்பின் உச்சிக்கண், முழுமதி நாளன்று, அம் முழுமதியைக் கண்டு, காட்டுவாழ் மயில் போன்ற, சில வளையல்கள் அணிந்த வளாய் என் விறலியும் நானும் அம்முழுமதி, வளவன் வெண் கொற்றக்குடை போன்றுளது என எண்ணியவாறே தொழுதோம் அல்லவோ? என்ற புலவர் வினாவில், மதி வழிபாடு குறிப்பிடப்பட்டுளது.
"முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ? ...........
வளவன் ..........
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே".
புறம் : 60
("மாக விசும்பு" எனும் இத்தொடர், புறம் : 35, 60, 270, 400, அகம் : 253, மதுரைக்காஞ்சி : 454; பரிபாடல் 47 ஆகிய பல இடங்களில் வந்திருந்தாலும், உரையாசிரியர்கள் அதற்கான தெளிவான பொருளை உணர்த்தினாரல்லர்).
காக்கைக்கு உணவு அளித்தல், ஒவ்வொரு வீட்டிலும், நாள்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு சமயச் சடங்கு. "கதிர்கள் எறித்தலால் நடப்பார் கால்களை வெப்பம். பண்ணுமாறு ஞாயிறு காயும் பகற்பொழுதில், நகரில் உள்ள பெரிய மாளிகைகளுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உணவளித்து ஓம்புவான் வேண்டி, பொற்றொடி அணிந்த அம்மாளிகை வாழ் மகளிர், விருந்தினர்க்கு உணவு படைப்பதன் முன்னர், மாளிகையின் முற்றத்தில் பலியாகப் போட்ட, கொக்கு உகிர் போலும் சோற்றைத் தின்ற காக்கைக் கூட்டம், பொழுது மறைய, மீன் அங்காடி புகுந்து, ஆங்கு நிழலில் குவித்து வைத்திருக்கும் பச்சை மீன்களைக் கவர்ந்து கொண்டு கடற்கரையில் வினை ஒழிந்து ஆடிக் கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரத்தில் சென்று தங்கும். இதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு புலவர்.
"கதிர்கால் வெம்பக், கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வின் நகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உதிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்”.
- நற்றிணை : 258 : 3-9
பழங்காலத்தில், பெரிய தெய்வ வழிபாடுகள், பலிகொடுத்தல், தெய்வத்தன்மை வாய்ந்த ஆடல், பாடல்களை ஒருங்கே கொண்டிருக்கும் அத்தகு ஒரு வழிபாடு கீழ்வருமாறு கூறப்பட்டுளது. “ஓ எனும் பேரொலி எழ, வெள்ளை வெளேரென ஒளி விளங்க ஓடிவரும் அருவிகளால் விளக்கம் பெற்ற மலைச்சாரலில், வேங்கையின் தேன் கமழும் ‘ மலர்களைச் சூடிக்கொண்டு, தொண்டகப்பறை எழுப்பும் ஒலியன் தாளத்திற்கு ஏற்ப, ஆடவரும் பெண்டிரும் தெருக்களில் கலந்து ஆடி மகிழும் சிறுசிறு குடிகளைக் கொண்ட பாக்கத்தில் முருகன் உலாவருதலைக் கூறுகிறது ஒரு செய்யுள்”.
கறங்குவெள் ளருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடித்
தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து இயல் முருகு”.
- அகம் : 118 : 1-5
குன்றுகள் வேலிபோல் நாற்புறமும் நிற்க, இடையே உள்ள சிற்றூரில், மன்றத்தில் நிற்கும் வேங்கை மரங்கள், மன நாளாகிய நல்ல நாளில் பூக்கத் தொடங்க, அவற்றின் மணி மணியான அரும்புகள் மலர்ந்த, பொன் போன்ற மலர்கள் உதிர்ந்து, அகன்ற பாறைகளை அழகு செய்யும் முற்றங்களில், குறவர்கள், தங்கள் மனைகளில், குரவை ஆட்டத்தில் கைதேர்ந்த முதிய மகளிரொடு கைகோத்து, ஆராவாரம் எழக் , குரவை ஆடி விழா எடுப்பதை விளக்குகிறது ஒரு செய்யுள் :
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை விரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவு"
அகம் : 232 : 6:11.
"கழ் நீரில் மீன் ஓடும், மேல் நீரில் கண்போலும் கருங்குவளை மலரும்; உப்பங்கழி நீரால் சூழப்பெற்ற பயிர் விளைந்து நிற்கும் கழனிகளில், அவற்றைக் காப்பவர் பறை அடித்து எழுப்பும் அரித்து எழும் ஓசை கேட்டுப் பறவைகள் ஓடிவிடும். அரும்புகள் மிதக்கவிட்ட கள்ளையும், இனிய தேறலையும் நறவையும் குடித்து மகிழ்ந்த கோசர் குரவை ஆடி மகிழ்வதைக் கூறுகிறது, ஒரு செய்யுள்.
"கீழ்நீரான் மீன்வழங் குந்து;
மீநீரான் கண்ணன்ன மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளைகழனி
அரிப்பறையால் புள் ஒப்பந்து;
நெருடுநீர் கூஉம் மணல் தண்கால்
மென் பறையால் புள் இரியுந்து;
நனைக்கள்ளின். மனைக்கோசர்,
தீந்தேறல் நறவு மகிழ்ந்து
தீங்குரவைக் கொளை தாங்குந்து"
- புறம் : 396:1-9
கோசர் சிறந்த வீரர்; ஆகவே அவர்கள். ஆடிய இக் குரவைக் கூத்து ஒருவகைப் போர்க்கூத்து ஆகும்.
இதனினும் கொடுமை வாய்ந்த ஒரு போர்க்கூத்து, பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. “செங்கரும்பு கழிகள் மீது காற்றில் அசைந்தாடும் செந்நெற்கதிர்களை வேய்ந்து கட்டிய பந்தல், விழா எடுக்கும் இடம் போலப் பற்பல அழகுடையதாகத் தோன்ற, ஓயாது நெல் குற்றும் உலக்கை ஒலியோடு, பல்வேறு ஒலிகள் ஒலிக்கும் ஆங்கு, பொன்னால் செய்த தும்பைப் பூவாம் போர்ப் பூவுடன் பசிய பனம் தோட்டையும் அணிந்து கொண்டு, கடுஞ்சினம் மிக்க வீரர்கள் கடல் ஒலிபோல், ஆரவாரப் பேரொலி எழுப்பியவாறே, குரவைக் கூத்தை, வெறி கொண்டு ஆடுவர்”.
“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு வேறு பொலிவு தோன்றக்,
குற்று ஆனா உலக்கையால்,
கலிச்சும்மை வியல் ஆங்கண்
பொலந்தொட்டுப் பைந்தும்பை
மிசை அலங்குளைய பனைப்போழ் செர்இச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரிற் பெயர்பு பொங்க”
புறம் : 22 : 14-23
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரிய நாகரிகம், தமிழர் உள்ளத்துள் , வெள்ளம் போல் பெருக்கெடுத்துப் பாய்ந்து அவர்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றிவிட்டது. மற்ற செயல்பாடுகளோடு, ஆடல் பாடல்களும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன, பழந்தமிழரின் இயற்கை யோடியைந்த எளிய பண்ணிசை, ஆரியரின் கற்பனைத்திறம் வாய்ந்த பல்வேறு படிகளை உடையவாய மெல்லிசைகளுக்கு இடம் கொடுத்துவிட்டது. அவர்களின் பழைய ஆடல்களின் இடத்தை, ஆரியரின், எளிதில் விளங்கலாகாப் பல்வேறு வகையாகப் பிரிவுண்ட ஆடல்கள் பற்றிக்கொண்டன. பழைய ஆடல், ஒன்று, சொற்களின் துணை வேண்டாமல், மெய்ப் பாட்டின் மூலமாகவே, காதல், வீர உணர்வுகளை வெளிப்படுத்தும்; அல்லது முழுக்க முழுக்க வழிபாடு குறித்த ஆடலாகும். ஆரிய நாகரீகத்தின் இடை நுழைவால், அக்கலையில், பல்வேறு நிலைகள் வளர்ந்து விட்டன. ஆடல் பாடல் குறித்த இலக்கண நூல்களும் எழுதப்படலாயின. ஆனால், அந்நூல்கள், இப்போது அழிந்துவிட்டன. ஆனால் அக்கலைகளைக் குலத் தொழிலாகக் கொண்ட கலைஞர்களால், அவை பயிலப் பெறுவது குறித்த குறிப்புகள் பலவற்றைச் சிலப்பதிகாரம் தருகிறது. அதன் உரையாசிரியர்கள், அவை குறித்த விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். பண்டு ஆடல் நிகழ்ந்த இடம் ஊர் மன்றம். ஆனால், அது சிலப்பதிகாரம் மூன்றாம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போலும் பல்நிலை ஆடரங்காக உருமாறி விட்டது. ஆனால், இம்மாற்றமெல்லாம், பெருநகரங்களில் இடம் பெற்றுள்ளனவே அல்லது சிற்றூர்களில் அன்று. நகரங்கள்
உரோமானிய நாட்டுடன் நடத்திய வாணிகம் பெருமள வில். வளர்ந்துவிட்ட பின்னர், தமிழகத்தில் நகரங்கள் வளமுடையவாகவும், செல்வச் செழிப்பு டையவாகவும் உயர்ந்துவிட்டன. அகநானூற்றுப் பாடல் ஒன்றில், சேர, சோழ, பாண்டியர்களின் தலைநகரங்கள் சுருக்கமாக . விளக்கப்பட்டுள்ளன.
“உறவினர்க்கு உளவாம் கேட்டினைக் களைந்து, அவரைத் தாங்கிக் கொள்ளவும், உறவினராய் உள்ளார், குறைவின்றி உண்ணவும், அயலார், அந்த அயலாராம் நிலை கெட்டுக் கெழுதகை உறவினராக மாறி ஒழுகவும் விரும்பி, அதற்குத் துணை செய்யும் பொருள் ஈட்டும் முயற்சியில் ஊக்கம் மிகக் கொண்டு, அதில் விருப்பமும் மிகுந்து, ஆத்திமாலை அணிபவரும், எதிர்த்தாரை அழிக்கவல்ல போர்முறைகளை அறிந்தவரும் ஆகிய சோழர்க்கு உரியதான, அறங்கூர் அவை இருக்கும் சிறப்பினைக் கொண்ட உறையூரை ஒத்த பெறுதற்கரிய பேரணிகலன்களை அடைந்து நல்லோர் யாவராலும் விரும்பத்தக்கதான செயற்கரிய செயலாம் பொருள் ஈட்டும் பணியை இனிதே முடித்து விட்டோம். ஆகவே, பகைவர் அரண்கள் பலவற்றை வெற்றி கொண்ட, பகைப் படைகளோடு எப்போதும் மாறுபாடு கொள்ளும் நாற்படையினை உடைய , என்றும் புகழ் வாடாத வேப்ப மாலை தரித்த பாண்டியனுக்கு உரிய கூடல்மா நகரின், காலைக் கடைவீதியின் பல்வேறு மணங்களும் ஒருசேர மணக்கும் நல்ல நெற்றியினையும், நீண்ட கரிய கூந்தலினையும், மாமை நிறத்து மேனியினையும் உடைய நம் காதலியுடன், மலையைக் குடைந்து இயற்றியது போலும், வானை அளாவிய நீண்ட மாளிகையில், கடல் நுரையை அடைத்து வைத்தது போன்ற மெல்லிய மலர்களால் ஆன படுக்கை விரித்த, ஓங்கிய கட்டிலில், உயர்ந்த விளக்கின் நெடுஞ்சுடர் ஒளியில் ஆடவர்க்கு உரிய நலமெலாம் உடைய நம் மார்பில், நம் காதலியின் மார்பகத்து அணிகள் வடுக்களைச் செய்யுமாறு, வரிவரியான கோடுகள் நிறைந்த நெற்றியினையும் வலிமிகுதலினால் முழங்கும், வாய்வரை வந்து ஒழுகும் மத நீரினையும், கூற்றுவனுக்கு நிகரான ஆற்றலும் நிலத்தை அறைந்து, பகைவரை அணுகச் சென்று கொல்வதில் தப்பாத, நினைத்தாலே நடுங்கப்பண்ணும், தொங்கும் கையினையும் உடைய கொடிய பெரிய யானைப் படையினையும், நெடிய தேர்ப்படையினையும் உடைய சேரனுக்கு உரிய , செல்வத்தால் சிறந்த மிகப் பெரிய நகரமாகிய கருவூரின் துறையில், தெளிந்த நீர் ஓடும் குளிர்ந்த ஆன் பொருநை ஆறு, உயர்ந்த கரையில் குவித்துள்ள மணலின் எண்ணிக்கையிலும், பலவாக, நாம் தழுவி இன்புறுவோம்; நெஞ்சே! வருவாயாக!
"கேள்கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு, புகல் சிறந்து,
ஆரம் கண்ணி, அடுபோர்ச் சோழர்,
அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன,
பெறலரும் செய்வினை முற்றினம், ஆயின்;
அரண்பல் படர்ந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங் காடி நாறும் நறுநுதல்,
நீள் இரும் கூந்தல், மாஅ யோளொடு,
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை,
நிவந்த பள்ளி, நெடும் சுடர் விளக்கத்து
நிலம் கேழ் ஆகம், பூண்டுப் பொறிப்ப,
முயங்குவம்; சென்மோ ; நெஞ்சே ; வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ்தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி
ஆள்கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும்பகட்டு யானை, நெடுந்தேர்க் கோதை
திருமா வியன்நகர்க் கருவூர் முன் துறைத்
தெண்ணீர் உயர்கரைக் கவைஇய
தண்ஆன் பொருநை மணலினும் பலவே".
-அகம் : 93
அரசர்கள் வாழ்ந்ததால் நகரங்கள், முக்கியத்துவம் பெற்றுவிட்டன. நகரங்கள் பெருகவே, செல்வமும், அரசர் களின் முக்கியத்துவமும் உயர்ந்துவிட்டன. தமிழகத்து மூவேந்தர்களும், பண்டைக்காலத்தில், வேலையற்றுக் கிடக்கும் நாட்களில் பொழுதுபோக்கிற்காகவும், தங்கள் ஆண்மையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் ஏனைய அரசுகளை அடிமை கொண்ட பேரரசாக உயர்வதற்காகவும் ஒருவரோடொருவர் போர் தொடுத்துவந்தனர். ஆகவே, இக்காலப் பாடல்களில், அரசர்களின் கொடை வளப் பாராட்டு இன்னமும் இடம் பெற்றுளது என்றாலும், அவை, அரசர்களின், போர்க்கள் வெற்றிகளைப் பாராட்டலாயின. "பகைவரை வென்று அவர்தம் பட்டத்து யானையின் பொன்னாலான நெற்றிப் பட்டத்தைக் கைக்கொண்டு, அது அழித்துப் பண்ணிய பொற்றாமரை மலரைப் பாடிப் புகழும் பாணன் தலையில் அழகு பெறச் சூட்டிய சிறந்த தலைமை யினையும், போரில் புறம் காட்டாக் கோட்பாட்டினையும் உடைய பெரியோன் வழியில் வந்தவனே! இராப்பொழுது இங்கேயே உறங்கிவிட்டதோ , என ஐயுறுதற்கு ஏற்பப் - பேரிருள் சூழ்ந்த அடர்ந்த சிறு காட்டையும், பறை ஒலி போல் ஒலிக்கும் மலையருவி களையும் உடைய முள்ளூர் மலைக்கு உரிய வேந்தே! முள் போலும் கூரிய பற்களையுடைய பாம்பையும் நடுங்கப் பண்ணும் இடியேறுபோல் போர் முரசு முழங்க, தலைமை தாங்கிவந்த யானையும், அதன் மீது அமர்ந்து போரிட்ட அரசும் களத்தில் ஒருங்கே இறந்துபட, அழித்தற்கரிய அவர் நாற்படைகளைச் சிதற அழித்து, சிறிதும் பொருந்தாத பகை, தன் நாட்டை அணுகவும் விடாது, தடுத்து நிறுத்தும் எல்லையாகத் திகழும் பெண்ணையாறு பாயும் நாட்டிற்கு உரியவனே : உன் புகழைப் பாடவல்லமாயினும், வல்லோமல் லேமாயினம், உன்பால் வந்து உன்புகழ் பாடுவோமாயின், அழிக்கலாகாத் தன்மை யராகிய உன் கிளையொடு நீயும் பெருவாழ்வு வாழ, இந்நிலமிசை உள்ளார் எல்லாரினும் அறிவு ஒழுக்கங்களில் மாசற்ற அந்தணனாகிய கபிலன், பொருள் வேண்டி இரந்து செல்லும் புலவர்களுக்கு இனிப் புகழ்வதற்கு இடமில்லை எனக் கூறுமளவு உன் புகழும், அவன் புகழும் பெருகி நிற்கப்பாடிவிட்டான். அதனால், சினம் மிக்க சேனைக்கு உரியவனாகிய சேரனுக்குரிய மேலைக்கடலில், பிறநாட்டுப் பொற்காசுகளைச் சுமந்து வரும் கடலோடவல்ல பெரிய நாவாய்கள் ஓடிய இடத்தில், வேறு சின்னஞ் சிறு மரக் கலங்கள் ஓடமாட்டாதது போலும் நிலையினராகி விட்டோமாயினும், எம்முடைய வறுமை துரத்த, உன் பெரும்புகழ் ஈர்த்துக் கொண்டுவர வந்து, உன் வளமைக் குணங்களில், சிலவற்றை நாங்களும் பாடிப் பாராட்டினம்".
"ஒன்னார். யானை ஓடைப்பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய, விழுச்சர்,
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே,
நின்வயின் கிளக்குவ மாயின், கங்கல்
துயில் மடிந் தன்ன தூங்குஇருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறலரும் மரபின் நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புவன் அழுக் கற்ற் அந்த ணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடனின்றிப்,
பரந்திசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு,
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது; அனையேம். அத்தை;
இன்மை தூரப்ப, இசைதர வந்து நின்
வண்மையில் தொடுத்தனம் யாமே, முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
அண்ணல் யானையொடு வெந்துகளத்து ஒழிய
அரும் சமம் ததையத் தாக்கி, நன்றும்
ஒன்னாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடு கிழ வோயே".
புறம். 126
போர் முரசுக்கு, அல்லது, கூறுவதாயின், அப்போர் முரசின் உறையும் தெய்வத்தின் ஆவிக்குக், குருதிப்பலி கொடுப்பதே போராகக் கருதப்பட்டது. போர் முரசு, அதற்கென அமைக்கப்படும் தனி இருக்கையில் வைக்கப்படும். ஒரு செய்யுள் இவ்வாறு கூறுகிறது. "முரசுக்குக் குற்றமாம் எனக் கூறப்படும் குற்றம் எதுவும் இல்லாதவாறு வலித்துப் பிணித்த வாரை உடைய, கருமரத்தால் செய்யப்பட்டமை யால், கருமை நிறம் காட்டும் பக்கம் அழகு பெற, மயிலின் தழைத்து நீண்ட தோகை, ஒள்ளிய புள்ளிகள் நிறைந்த நீலமணிபோலும் நிறம் வாய்ந்த மாலை, ஆகியவற்றைப் பொன் போலும் தளிர்களையுடைய உழிஞையொடு அழகுற அணியப்பெற்ற, குருதிப்பலி கொள்ளும் வேட்கையுடையதான பகைவர் உளம் நடுங்க முழங்க வல்லதான போர் முரசம், நீராடி வருவதன் முன்னர் எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போல், மெல்லிய மலர்கள் குவித்து வைக்கப்பட்ட கட்டில் ஒழுங்கு செய்யப்படும்”. "மாசற விசித்த வார்புறு வள்பின்,
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி, ஒண்பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை , உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை”.
-புறம் : 50 7-7
ஒப்பிட்டு நோக்க, கொடுமைமிகா, வேத வழி வேள்வி முறைகள் இடம் பெறத் தொடங்கிவிட்ட இந்நூற்றாண்டின் இறுதியிலும், பாண்டியப் பெருவீரன் ஒருவன் குறித்துப் பின்வரும் போர்ப்பரணிப் பாடலைப் பாட, ரு புலவரைத் தூண்டுமளவு, பழைய வெற்றிப்பலிகள் பால் களவேள்விகள் பால் கொண்ட பெரு வேட்கை, தமிழ் அரசர் உள்ளத்தில், இன்னமும், அத்துணை ஆழமாக வேரூன்றி இருந்தது. “மிக்க ஆழம் உடைய பெரிய கடலில், காற்றால் தாக்கப்பட்ட மரக்கலம் கடல் நீரைக் கிழித்துக்கொண்டு ஓடுவதுபோலப், போர்க்களிறு களம் புகுந்து பகைவர் படையைத் தாக்கிப் பாழடித்துக் களத்தில் இடம் பண்ணிவிட, அவ்வாறு இடம் கண்ட களத்தில் நன்கு தீட்டப்பெற்று ஒளிவீசும் இலை போலும் முனையையுடைய வேலொடு புகுந்து, அரசையும் அழித்துப் பகைவர் படையையும் பாழ்செய்து, அவ்வெற்றிப் புகழ் நாடெங்கும் பரவ, பகைவர் போர் முரசைக் குருதிப் புனலை உலை நீராகக் கொண்டு, உலையில், தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை அணிந்த தோளாகிய துடுப்புக் கொண்டு, துழாவி ஆக்கிய உணவைப் பேய்களுக்குப் படைத்து, அக்களத்தில் கள வேள்வி செய்த, கொல்லும் போர்வல்ல செழிய".
"நளிகடல் இரும் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியலாங்கண்,
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசுப்ட அமர் உழக்கி,
உரைசெல, முரசு வெள்வி,
முடித்தலை அடுப்பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அருபோர்ச் செழிய!"
புறம் : 26:7-17
நகரங்களில் பரத்தமைை
நேரிடை நிலை, உருவக நிலை ஆகிய எந்நிலையில் பொருள் கொண்டாலும், நகர வாழ்க்கை என்றால், நாகரீக வளர்ச்சி என்றே பொருள் : நாகரீகத்தின் தெளிவான முத்திரை, விரும்பத் தகாதது எனக் கருதப்படாதாயின், பரத்தைமை ஒழுக்கம் இடம்பெறுவதேயாம். பரத்தையர் ஆடல் பாடல்களில் நன்கு பயிற்சி பெற்றிருப்பர், கண்கவர் வகையில் உடையணிந்திருப்பர். அழகுற ஒப்பனை செய்து கொள்வர். "விறல்பட ஆடவல்லாளாகிய விறலி, மாணிக்க : மணிக்கோவை எட்டால் ஆன மேகலை அணியால் அழகு பெற்ற அல்குலும், மடப்பம் பொருந்திய மை உண்ட கண்களும், ஒளிவீசும் நெற்றியும் கொண்டு", திகழ்தலைக் கூறுகிறது ஒரு புறநானூற்றுச் செய்யுள்.
"இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண், வாள் நுதல் விறலி”
-புறம் : 89 : 1-2
எளிதில் வயப்படக்கூடிய ஆடவரைத் தங்களோடு, ஆற்றுத்துறையிலும், குளப் படித்துறையிலும் நீராடி மகிழுமாறு தூண்ட வல்லவர் பரத்தையர். ஆடவன் ஒருவனைத் தன் அழகால் மயக்கவல்ல உள்உரம் படைத்த ஒரு பரத்தை, அவன் மனைவிக்குக் கீழ்க்காணும் இறுமாந்த சொற்களைக் கூறி அனுப்பினாள். ‘'என் கூந்தலில் ஆம்பலின் முழுப்பூவை அணிந்து அழகு செய்து கொண்டு, புது வெள்ளம் புரண்டோடும் பெரிய நீர்த்துறையில் புனல் விளையாட்டை விரும்பிச் செல்கின்றேன். அவள் கணவனும், அங்குத் தவறாது வந்து, புனல் விளையாட்டில் என்னோடு பங்கு கொண்டு விடுவானோ என அவள் அஞ்சுவளாயின், கொடிய போர் நிகழும்போது, போர் அறம் பிறழாது போரிட்டுப் பகைவரை அழிக்கவல்ல எழினி என்பானது பெரிய வேற்படை போர்க்களத்திடத்தே உள்ள அவனுடைய பெரிய ஆனிரையைப், பகைவர் கொள்ளாவாறு சூழ நின்று காப்பது போல, தன் கணவன் மார்பு, என்னை அணுகவிடாவாறு, தன் தோழியர் கூட்டத்தோடு அவனைக் காத்துக் கொள்வாளாக’
"கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவ துடைய ளாயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனை ஆன் பெருநிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே'’
குறுந்தொகை : 80
விழா நிகழும் இடங்களில் ஆடவர்க்குக் காம வேட்கை ஊட்டிக் கவர்ந்து கொள்வான் வேண்டிப் பரத்தையர் பெருங்கூட்டமாக வந்திருப்பர். வாளை மீன்கள், நீரில், பிறழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டும், அவற்றைக் கவர்ந்து கொள்ளக் கருதாது, அக்குளத்தில் வாழும் நீர்நாய், நாள்தோறும் துயில் மேற்கொண்டுவிடும் இடமாகிய, வாரி வழங்கும் கைவண்மையுடைய கிள்ளிவளவனுக்கு உரிய , கோயில் வெண்ணியைச் சூழ உள்ள வயல்கள் விளைந்து கிடக்கும், நல்ல நிறம் வாய்ந்த, முற்றிய தழைகளால் ஆன ஆடையை, மெத்தென்ற அகன்ற அல்குல் மேல், அழகு உற உடுத்துக்கொண்டு, நானும் இங்கு நடைபெறும் விழாவிற்குச் செல்ல வேண்டும். புதுப்புது வருவாய்களை உடைய ஊரன், என்னை அங்கு, அக்கோலத்தில் காண்பனாயின், என்னை வரைந்து கொள்ளாது விடுத்துப்போவது அரிதினும் அரிதாகும்". "வாளை, வாளிற் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்,
கைவண் கிள்ளி, வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை
ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ,
விழவிற் செலீஇயல் வேண்டும், மன்னோ !
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே".
நற்றிணை- 390 : 1-8
பரத்தை, ஆடவர் தேடும் வெறியோடு தெருக்களில் வரும்போது, மனைவியர், தத்தம் கணவரை விழிப்போடு காத்துக் கொள்ள வேண்டும். தலைவியை, அவள் தோழி இவ்வாறு எச்சரிக்கிறாள். "கள்ளமிலா நோக்கமைந்த அழகிய கண்கள், மயிர்ச்சாந்தணிந்து மணம் ஊட்டப்பெற்ற கூந்தல், பருத்த தோள்கள், ஒழுங்குற வளர்ந்த வெண்பற்கள், திரண்டு நெருங்கிய துடைகள் ஆகிய இத்தகு சிறப்புகளால் ஒப்புயவர்வற்ற பேரழகியாகிய பரத்தை அழகிய தழையாடை உடுத்தும் விழா நிகழ் களம் பொலிவு பெற வந்து நின்ற விட்டாள். அவள் பார்வையினின்றும் நம் கணவரைக் காக்க, தோழிமீர்; எழுமினோ எழுமின்!"
"மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்றுச், சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அந்தழைத் தைஇத் , துணை இலள்,
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநர்க் காக்கும்"
- நற்றிணை : 170:1-5
ஆடவரை அடிமை கொள்ளும் பரத்தையரின் முயற்சி பற்றிய மற்றொரு காட்சி இதோ; ‘'ஊரில் விழாவும் முடிந்து விட்டது, முழவின் முழக்கமும் அடங்கி விட்டது; இந்நியிைல் இவள் யாது கருதினளோ என்று கேட்பாயே யாயின், கூறுகிறேன் கேள். ஒரு நாள் தழை ஆடை உடுத்து, அத்தழை ஆடை அசையும் அல்குலை உடையவளாய்த் தெருவின்கண் இப்பரத்தை சென்றாள். அவ்வளவே, பழைய வெற்றிகள் பல கொண்ட மலையமான் திருமுடிக்காரி, அவ்வோரிக்கு உரிய நகரின் ஒப்பற்ற பெரிய தெருவில் வெற்றிக்களிப்போடு புகுந்தானாக , அதுகண்ட ஓரியின் மக்கள் ஒன்றுதிரண்டு ஆரவாரப் பேரொலி எழுந்துவிட்டது. அது கேட்டதும், ஆராய்ந்து கொண்ட, சிறந்த வளையல்களை அணிந்த அழகிய மேனியை உடைய இவ்வூர் மகளிரெல்லாம், தங்கள் கணவன்மார்களை, அவள் கண்ணில் படாவாறு காத்துக் கொண்டனர். அதனால் இவர்களும் நன்மை அடைந்தார்கள். நடந்தது இதுதான்”,
“விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று;
எவன்குறித் தனள் கொல் என்றி யாயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்திற்குப் பழவிறல்
ஓரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்கநேரார் புலம்போல்,
கல்லென் றன்றால் ஊரே, அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி.
எழில்மா மேனி மகளிர் -
வீழு மாந்தனர், தம் கொழுநரைக் காத்தே".
நற்றிணை : 320
அளவுக்கு மீறிய பரத்தையர் ஒழுக்கம், இல்லற வாழ்க்கையில் பெரிய பூசலுக்கு வழிவகுத்துவிட்டது. ஊடல் எனப்படும், கணவன் மனைவியர்களுக்கிடையேயான சிறு பூசல், மருதத்திணை சார்ந்த பாடல்களின் கருப்பொருளாகிவிட்டது. கீழ் வரும் பாட்டு அது குறித்தது. "வெள்ளிய நெற்கதிரை அறுவடை செய்யும் உழவர் முழக்கும் தண்ணுமை ஒலிக்கு அஞ்சி, அவ்வயலில் அடங்கியிருந்த பறவைகள் எல்லாம் எழுந்தோடி நெருங்க அமர்தலால், வயல் மீது தாழ வளைந்திருக்கும் கிளைகளையுடைய மருத மரத்தின், பூங்கொத்துக்கள் உதிராநிற்கும், இரவலர்க்குக் கொடைப் பொருளாகத் தேர்களையே வழங்கும் வள்ள லாகிய விரான் என்பானுக்கரிய சிறந்த இருப்பையூர் போன்ற என் அழகெல்லாம் கெடுவதாயினும் கெடுக; என்னை நெருங்க உன்னை விடுவேனல்லேன். நெருங்கவிட்டால் என்வாய் உன்னை விலக்கினும், என் கைகள் உன்னை அணைத்துக் கொள்ளும். ஆனால், நீயோ பரத்தையின் மார்பால் மாசுபட்ட சந்தனம் பூசப்பட்ட மார்பினை உடையாய்; அப்பரத்தை தழுவியதால் வாடிய மாலையினை உடையாய்; அத்தகைய உன்னைத் தொடுவது, தொடத்தகாதன எனக் கழித்துவிட்ட தாழி முதலாம் கலங் களை எடுத்து ஆள்வதற்கு ஒப்பாகும். ஆகவே என் மனைக்கு வாரற்க; உன்னை அணைத்த அப்பரத்தை நெடிது வாழ்க"...
"வெண்நெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல்புள் இரியக், கழனி
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல்கவின் தொலையினும் தொலைக; சார
விடே என்; விடுக்குவ னாயின், கடைஇக்
கவவுக்கை தாங்கும்; மதுகையம் குவவுமுறை
சாடிய சாந்தினை ; வாடிய கோதையை,
ஆசில் கலம் கழீஇ யற்றும்;
வாரல்; வாழிய! கவைஇநின் றோளே”.
நற்றிணை : 350
கணவன் பிழையை, மனைவி, ஒரோவழி மன்னித்து, அவனை ஏற்றுக் கொள்வதும் உண்டு. “பாணனே! அருகே வருக! நல்ல அணிகலன்களை அணிந்த என் மனைவி, சுற்றத்தார் அனைவரும் கூடியிருந்து ஓம்ப, முதல் சூல் உடையாளாகி மகவு ஈன்று, நம் குடிவளர வழிசெய்து, நெய்யோடு கலந்த வெண்சிறுகடுகாம் விதைகளை நம் மாளிகையொகும் விளங்கப் பூச, பாயலில் படுத்திருந்தவளை நெருங்கி அழகிய கூந்தலை உடைய முதுபெண்டுமாகித் துயிலா நின்றனையே! என்னே நின் சிறப்பு! எனப் பலப்பல கூறிப் பாராட்டி மகவு ஈன்று மாண்புற்ற அவள் அழகிய வயிற்றை, என் கைக்குவளை மலரால் தடவிக் கொடுத்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன் போல் சிறிது பொழுது அங்கு நின்றிருந்த என்னை, மெல்ல நோக்கி, முல்லையின் அரும்புகள் போலும் பற்கள் தோன்ற சிறிதே நகைத்துப் பின்னர், வெட்கம் வந்துறவே, நிலமலர் போலும் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டு மகிழ்ந்த காட்சி, எனக்கு நகை தருவதாய் இருந்தது. அது குறித்து நகைத்து மகிழ பாணனே! வருக”.
“வாராய் பாண! நகுகம், நேரிழை கரும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி, நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து, அவ்வரித் திதலை அல்குல் முதுபெண் டாகித், துஞ்சுதியோ? மெல் அஞ்சில் ஓதி ; எனப் பன்மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு, மெல்ல முகை நாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைத்து உவந் ததுவே'’
- நற்றிணை : 370</poem>}} தலைவியின் சினம் பெரும்பாலும் தணிவது இல்லை. கணவன் வாயில் வேண்டிப் பாணர்நண்பனைத் தூது போக்கினும், அது பயன் அளிப்பதில்லை . சினம் மாறா ஒரு மனையாள் கூறுவது இது: பாணனே! மகப்பெற்றதனால் உற்ற வாலாமை நீங்க எழுப்பிய புகையும் படிந்து, புதல்வனுக்குத் தீட்டும் மையும் இழுகி, ஆடையும் அழுக்குப் படிந்துள்ளது. சுணங்கால் அழகு பெற்ற இளைய கொங்கையின் இனிய பால் பெருக, அது கரப்பப் புதல்வனை அணைத்துக் கொண்டமை யால் தோளும் முடை நாற்றம் வீசுகிறது. ஆகவே, இவை போல்வனவற்றால் தூய்மை கெட்டுப் போகாமல் புதுப் பொலிவோடு இருப்பவரும், நல்ல பல அணிகளை - அணிந்தவரும் ஆகிய பரத்தையர் சேரிக்கண் தேரில் திரிந்து கொண்டிருக்கும் உன் தலைவனுக்கு, நான் தகுதியுடையவள் அல்லள். அதனால், பொன்கம்பி போன்ற நரம்புகளைக் கொண்ட யாழில் எழும் இசைக்கு ஏற்ப, இன்குரல் எடுத்துப் பாடுதலில் நீ வல்லவனே ஆயினும், கருதி வந்ததைப் பெறுவான் வேண்டி, என்னைத் தொழுது பாடுவது செய்யற்க குளிர்ந்த நீர்த்துறைகளால் நிறைந்த நல்ல ஊருக்கு உரியோனாகிய உன் தலைவனை இங்கிருந்து கொண்டு சென்று விடுவாயாக. பலராலும் பாராட்டப் பெறும் தகுதியுடையதாகிய என் மனையில் இருந்து நீ பாடாதவாறு, தெருவில் நெடும்பொழுது நிற்குமாறு தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் அந்நிலையை வெறுத்துக் குரல் எழுப்புகின்றன. ஆகவே, நான் விரும்பாத நிலையில், பயனில் சொற்களை மேலும் கூறிக் கொண்டு நிற்க வேண்டாம்".
”நெய்யும் குய்யும் ஆடி, மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லப் புனிறுநா றும்மே;
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேன்; அதனால்
பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ்
எழாஅல், வல்லை ஆயினும்; தொழாஅல்,
கொண்டு செல், பாண! நின் தண்துறை ஊரனை
பாடுமனைப் பாடல் கூடாது, நீடுநிலைப்
புரவியும் பூண்நிலை முனிகுவ;
விரகில் மொழியல்; யாம் வேட்டது இல்வழியே”.
- நற்றிணை : 380.
போற்றா ஒழுக்கம் உடையராகிய பரத்தையரின் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஆடவர் செய்யும் தவறுகளுக்கு அளவே இராது என்பது நோக்கிக், கணவரை ஏற்க மறுக்கும் மனைவியரின் பிடிவாதத்தின் நியாயத்தன்மை உணரப்படும் பரத்தையர் ஒழுக்கம் கொண்ட கணவனால் புறக்கணிக்கப் பட்டாள் ஒருத்திக்கு அவள் தோழி கூறுவது, இது; “அன்னை போலும் அன்புடையாய்! நறிய நெற்றியையுடைய அரிவையே! காதில் குழை அணிந்து மார்பில் மாலை சூடி, கையில் தொடி அணிந்து விழாக் களத்தில் துணங்கை ஆடிக்கொண்டிருக்கும் தலைவனைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடலாம் என்று, என் அறியாமையால் ஆசைப்பட்டு, விழாக்களும் நோக்கிச் சென்று கொண்டிருக் கும்போது, நம்மிடம் அயலான் போல் நடந்துகொள்ளும் அவன், நெடிய பெரிய தெருக்கோடியில், ஒரு வளைவான இடத்தில் வேறு ஒரு வழியாகத் திடுமென வந்து எதிர்ப்பட, அவனை, “மனையாளைப் பிரிந்து பரத்தையர் பின் திரியும் உன்னைக் கண்டித்துக் கேட்பார் யாரேனும் உளரோ? அல்லது ஒருவருமே இலரோ'’ என்று நான் கேட்க, அவன் அதுபற்றி ஏதும் கருதாதான் போல், என்னைப் பார்த்து, ‘உன் நெற்றிப் பசலை நனிமிகு அழகு” என்று கூறினான். பகைவராலும் பாராட்டத்தக்க பெரும் சிறப்புடையான் என்பதை மறந்துவிட்டு, “நண்ப! நீ ஒரு நாணிலி” எனக் கடிந்து கூறிவிட்டேன்”
"அறியாமையின் அன்னை ! அஞ்சிக்
குழையன், கோதையன், குறும்பைத் தொடியன்:
விழவயர் துணங்கை தழுஉகம் செல்ல,
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,
நொதும லாளன் கதும் எனத் தாக்கலின்,
'கேட்போர் உளர்கொல்? இல்லை கொல்? போற்று' என
'யாளது பசலை', என்றனன்; அதன் எதிர்'
“நாணிலை எலுவ!” என்று வந்திசினே;
செறுநரும் விழையும் செம்மலோன், என,
நறுநுதல் அரிவை! போற்றேன்;
சிறுமை பெருமையின் காணாது, துணிந்தே".
- நற்றிணை : 50
துணங்கையாவது, ஆடவரும் பெண்டிரும் பங்கு கொள்ளும் ஒருவகை ஆடல்; ஆடுங்கால், கைகளை வளைத்து ஒருவரையொருவர் தழுவிக்கொள்வர். அது, மக்களைப் போலவே, பேய்களுக்கும் பொதுவானது. ”கண்டாரை உளம் நடுங்கப் பண்ணும் நடையும், கண்டார்க்கு அச்சம் ஊட்டும் உருவமும் உடைய பேய்மகள். செங்குறுதி துழாவிய கூரிய நகங்களைக் கொண்ட விரல்களால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்டுவிட்ட முடை நாற்றம் உடைய கரிய பிணத்தின் தலையைத் தொடியணிந்த கையில் ஏந்திக் கொண்டு, பகைவர்க்கு அச்சம் வருமாறு, எதிர் சென்று அழிக்கும் போர்க் களத்தைப் பாடித் தோள் குலுங்க அப்பிணத்தைத் தின்னும் வாயுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடா நிற்கும்".
"உருகெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்,
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்,
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி, வெருவர
ஏன்று அடு விறற்களம் பாடித்து, தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க".
திருமுருகாற்றுப்படை 57-56
யாழ் இசைக்கும் பாணரும் கூத்து ஆடும் கூத்தரும் கூத்தியரும், நடனமாடும் விறலியரும் ஒன்றுகலந்தே வாழ்வர். ஒருவருக்கு ஒருவர் துணைபுரிந்து கொள்வர். அவர்கள், பெரும்பாலும் பேரரசர்களாலும், குறுநிலத் தலைவர் களாலும் பேணப்படுவர். அவர்களில் ஒரு குழுவினர், ஒருமுறை, பெரிய வில்லாளனாகிய ஒரு குறுநிலத் தலைவனைச் சென்று கண்டனர். அவர்களுள் தலைவன், பாணன். ஆகவே, அவன் ஏனையோரை நோக்கி, ‘'நான் பாடுகிறேன், விறலி; நீங்களெல்லாம் முழவினை முழக்குங்கள், யாழ்களில் பண்ணிசை எழுப்புங்கள் ; களிற்றின் தொங்கும் கைபோலும் தூம்பு எனப்படும் பெருவங்கியத்தை இசையுங்கள்; எல்லரி எனப்படும் சல்லியை வாசியுங்கள். ஆகுளி எனப்படும் சிறுபறையை அறையுங்கள்; பதலை எனப்படும் ஒருகண் மாக்கிணையின் ஒரு பக்கத்தை மெல்லக் கொட்டுங்கள்; நமது தொழில் உணர்த்தும் அடையாளக் கோலாம் மதலை மாக்கோலை என் கை தாருங்கள்'’.
"பாடுவல்; விறலி! ஓர்வண்ணம், நீரும்
மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்;
கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பை என இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தம்மின்".
புறம் : 152 : 13-18
பாட்டுடைத் தலைவன், அவர்களுக்கு இறைச்சி கலந்த உணவும், இனிய மதுவும், பொன்னும் நிறையத் தருவன் என்பது கூறத் தேவை இல்லை. பாணன் கூற்றில் கூறுவதானால், “வேட்டையில் தான் எய்து கொன்ற மானின் நிணத்தோடு கூடிய இறைச்சியாம் பக்குவமாகப் பண்ணப்பட்ட உணவோடு, உருக்கிய ஆன் நெய்போலும் மதுவையும் தந்து, தன் மலையில் கிடைத்த கலப்பில்லாத பொன்னொடு, பல்வகை மணிக்குவியல்களையும், வாங்கிக் கொள்ளுங்கள் என வழிநடையில் வாரி வழங்கினான்”.
"வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான்நிணப் புழுக்கோடு
ஆன் உருக் கன்ன வேரியை நல்கித்,
தன் மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கி யோனே” (புறம் : 152 : 25-30)
கடற்கரைத் துறைமுகங்கள் கிறித்துவ ஊழியின் தொடக்கத்தில், உரோமாபுரியோடு நடைபெற்ற வாணிகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியோடு, கடற்கரை நகரங்களும் மிகவும், முக்கியத்துவம் உடையதாக உயர்ந்துவிட்டன. அவ்வாறே இலக்கியங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரையில் வடகோடியில் குறிப்பிடக்கூடியது, பிற்காலத்தில் மல்லை என்றும், மேலும் பிற்பட்ட காலத்தில் மகாபலிபுரம் என்றும் அழைக்கப் பட்டதான மாவிலங்கைத் துறைமுகமாம். விளையாடும் கூட்டமாகிய சிறந்த தொடி அணிந்த மகளிர், பன்றிகள் உழுது சேறாக்கிய மண்ணைக் கிளறினால் அதன் கண் புலால் நாறும் ஆமை முட்டைகளையும், தேன் நாறும் ஆம்பல் கிழங்குகளையும் பெறும் மண்வளமும், இழும் எனும் ஒலி ஓயாது ஒலிக்குமாறு நீரை வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கம் மதகுகளைக் கொண்ட நீர்வளமும் உடைய பெருமைமிக்க மாவிலங்கை".
ஓரை ஆயத்த ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழும் என ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கை "
-புறம் : 176 : 1-6
இத்துறைமுகம் மற்றுமோர் இடத்தில், மணம் நாறும் மலர்களையுடைய சுரபுன்னை , அகில், சந்தனம் ஆகிய மரங்களை நீராடும் துறையில் நீராடும் மகளிர்களின் தோள்களுக்குத் தெப்பம் ஆகித் துணைபுரியுமாறு, கரைகளைக் குத்தி அழிக்கும் பெருவெள்ளம் அடித்துக் கொண்டுவந்து தரும் ஆற்றுவளம் மிக்கதும், அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்த தொல்பெரும் நகராம் இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய போதே பெற்றதுமாகிய மாவிலங்கை" எனக் கூறப்பட்டுள்ளது.
நறுவீ நாகமும், அகிலும், ஆரமும்
துறையொடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொருபுனல் தரூஉம் போக்கரும் மரபின்
தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய நன்மா
விலங்கை”
- சிறுபாணாற்றுப்படை : 116 - 120
காவிரி கடலொடு கலக்குமிடத்தில், தொல்லூாழிக் காலத்திலிருந்தே புகழ் பெற்றிருந்த புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் இடம் பெற்றுளது. ஆகவே, அது பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அப்புகார்த் துறைமுகம் “ மேலே விரித்த பாயைச் சுருட்ட வேண்டாமலும், ஏற்றிய பாரங்களை இறக்கிவிட வேண்டாமலும், ஆற்று முகத்துத் துறைமுகத்துள் புகுந்த பெரிய கலத்திலிருந்து பணியாட்கள், பண்டங்களை, இடைநிலை நகருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்” சிறப்புடையதாகக் கூறப்பட்டுளது.
"மீப்பாய் களையாது, மிசைப்பரம் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெரும்கலம், தகாஅர்,
இடைப்புலப் பெருவழிச் சொரியும்”
புறம் : 30 : 11-13
பூக்கள் உதிர்ந்து பரந்து கிடக்கும் அகன்ற துறைகளை யுடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர், நுண்மணல் திரளுமாறு மேடாக்கிய வெண் மணற் குவியல்களையும், புதுவருவாய்களையும் உடைய ஊர்களை உடைய செல்வவளம் மிக்க சோழ வேந்தர்களால் புரக்கப்படும் உலகமெல்லாம் பாராட்டும் நன்மை மிக்க நல்ல புகழ் உடையதான நான்மறைகளாம் பழம் நூல்களை அளித்த முக்கண் செல்வன் கோயில் கொண்டிருக்கும் ஆலமுற்றம் என்னும் இடத்தில் அழகுற எடுக்கப்பட்ட பொய்கைகளைச் சூழ்ந்திருக்கும் பூஞ்சோலைகளில், மனையுறை மகளிர், அழகுறச் செய்யப்பட்ட மணற் பாவைகளை வைத்து விளையாடும் துறையினை உடையதும், மகரக் கொடிகளை உச்சியில் கொண்ட வானளாவ உயர்ந்த மதிலையும், முடி அறியப்படாவாறு மிக உயர்ந்த மாளிகைகளையும் உடைய புகார்” என்றும், பூக்கள் மலர்ந்து மணக்கும் நீண்ட உப்பங்கழிகளின், நடுவண், பெரும்புகழ் வாய்ந்த காவிரியின் கரைக்கண் உள்ள நகரம்" என்றும் கூறப்பட்டுளது.
பூவிரி அகல்துறைக் கனைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர்கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர்,
ஞாலம் நாறும் நலங்கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவை துறை
மகர நெற்றி வான்தோய் புரிசைச்,
சிகரம் தோன்றாச் சேண்உணர் நல்இல்
புகா அர்"
-அகம் : 181 : 11-22
பூவிரி நெடுங்கழி நாப்பண்; பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினம்.
அகம் : 205 : 17-12
இரண்டு பாடல்களில் கூறப்பட்டிருக்கும், புறந்தை எனப்படும் புறையாறு, கிழக்குக் கடற்கரையில் உள்ள மற்றொரு துறைமுகப்பட்டினம், பெரிய அலைகள், ஒலியோடு, இயக்கமும் அடங்கியிருந்த, மேகம் சூழ்ந்த இரவில், கொழுத்த மீன்களைப் பிடிக்கும் பரதவர், பரந்த கடலில், தங்கள் மீன்பிடி திமில்களில், கடலின் இருளும் நீங்குமாறு ஏற்றியிருக்கும் விளக்குகள், போரில் புறம் காட்டாக் கோட்பாட்டினை உடைய வேந்தன் பாசறைக்கண் உள்ள, ஒயாது ஆடிக்கொண்டேயிருக்கும் இயல்புடையவாய, போர்யானைகளின் அழகிய முகத்தில் பூட்டியிருக்கும் முகபடங்களின் ஒள்ளிய சுடர்போலத் தோன்றும் இடமாகிய, பாடிவரும் இரவலர்களைப் பிறரிடம் செல்லாவாறு வளைத்துக் கொள்ளவல்ல கைவண்மை வாய்ந்த கோமகனாகிய, குதிரைகள் பூண்ட சிறந்த தேர்ப்படையுடைய பெரியன் என்பானுக்கு உரிய, மலர் விரிந்த கொத்துக்களைக் கொண்ட புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புறந்தை” என்றும், ‘'கள் உண்டு மகிழ்ந்திருப் பவனும், நல்ல தேர் உடையவனும் ஆகிய பெரியன் என்பானுக்கு உரிய , கள் மணக்கும் பொறையாறு” என்றும் கூறப்பட்டுளது.
“பெருந்திரை, முழக்கமொடு இயக்கு அவிந் திருந்த
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடியல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன், விரியினர்
புன்னையம் கானல் புறந்தை முன்துறை”
- அகம் : 100 : 5- 13
‘'நறவுமகிழ் இருக்கை, நற்றேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு”
- நற்றிணை : 131 : 7-8
பாண்டியரின் முக்கிய துறைமுகம், கொற்கை. அது முத்துக்கள் விளைகின்ற பரந்த கடலையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறைமுகம் ; “முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை” (நற்றிணை : 23 : 6) என்றும், வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியர்கள், அறநெறி கெடாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் கொள்ளும் முத்து ‘'மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கைஅம் ‘பெருந்துறை முத்து” (அகம் : 27 : 9-10) என்றும்; வீசும் அலைகள் கொண்டு வந்து குவிக்கும், குளிர்ந்த இனிய ஒளியினையுடைய முத்துக்கள். ஊர்பவர். விரும்புமாறு நடக்கும் குதிரைகளின் கால் வடுக்களை மறைக்கும் நல்ல தேரையுடைய பாண்டியரது கொற்கை. இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம். கவர்நடைப் புரவிக் கால்வடு தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை ' (அகம் : 130 : 9-11) என்றும், வெற்றியே காணும் போரில் வலலவர்களாய் பாண்டியரது, புகழ் மிக்க சிறப்பினையுடைய கொற்கை : முன் துறையில் கிடைக்கும் ஒளிவீசும் முத்துக்கள்: "விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தம்" (அகம் : 207:3-5) என்றும், கடல் நீர்ப் பரப்பில் சென்று, பல மீன்களையும் பிடிப்பவர், அவற்றுடன் சேரக்கொண்ட முத்துச் சிப்பிகளை, நாரால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளின், மகிழ்ச்சி மிக்க விலையாகக் கொடுக்கும். மிக்க புகழ் வாய்ந்த கொற்கை", " பரப்பில் பன் மீன் கொள்வர் முகந்த சிப்பி , நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை (அகம் : 296 : 8-10) என்றும், விளங்கும் பெரிய கடலில், எதிர்த்தாரைக் கொல்லும் சுறாமீன்களை நீக்கிவிட்டு வலம்புரிச் சங்குகளை முழ்கிக் கொணர்ந்த பெரிய மீன்பிடி . படகுகளை உடைய பரதவர், பிடித்த அச்சங்குகளின் கல்லெ னும் ஒலியினை முழுக்க ஆரவாரம் மிக்க கொற்கை நகரத்தார் வரவேற்கக் கரைசேர்வர் என்றும் பாராட்டப் பட்டுளது.
இலங்கு இரும் பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலித்தலைப் பணிலம் ஆர்ப்பக் கல் எனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்".
-அகம் : 350 : 10-13
சேரர்களின் முக்கிய துறைமுகம் முசிறி . "சேரர்க்கு உரிய சுள்ளியாகிய பேரியாற்றின் வெள்ளிய நுரைகள் சிதறி விலகுமாறு, யவனர்கள் கொண்டுவந்த அழகிய வேலைப் பாட்டால் சிறப்புற்ற மரக்கலம், பொற்காசுகளோடு வந்து மிளகுப் பொதிகளோடு மீளும், வளம் மிக்க முசிறி".
சேரலர்,
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'.
மீன் விற்று விலையாகப் பெற்ற நெல்லைக் குவித்து, அந்நெல்லைத் தோணிகளில் ஏற்றிவந்து மனைகளில் நிறைத்து மனைகளில் குவிந்துகிடக்கும் மிளகுப் பொதி ‘களைப் பேரொலி மிக்க கடற்கரையில் தாறுமாறாகப் போட்டு வைப்பர். கலங்களில் வந்த பொற்காசுகளை உப்பங் கழிகளில் நிற்கும் தோணிகளில் கரை சேர்ப்பர். மலைபடு பொருள்களையும் கடல்படு பொருள்களையும் ஒன்று கலந்து, வந்து புகழ் பாடுவார்க்கு வழங்குவர். கள்வளம் மிக்கதும், பொன்மாலை அணிந்த சேரர்க்கு உரியதுமான, முழங்கும் கடல்போல் முரசு முழங்கும் முசிறி . ‘'மீன் தொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து;
மனைக் குவை இய கறி மூடையால்
கலிச் சும்மைய கரைகலக் குந்து;
கலம் தந்த பொற்பரீசம் -
கழித்தோணியால் கரை சேர்க்குந்து;
மலைத்தாரமும் கடல்தாரமும்
அலைப்பெய்து வருநர்க்கு ஈயும் -
புனலம் கள்ளின், பொலந்தார்க் குட்டுவன்,
முழங்கு கடல் முழவின் முசிறி”
புறம் : 343 : 7-10
கடற்கரை வாழ் மக்கள், கடலில் கலங்கள் கவிழ்ந்து போவதை அறிந்திருந்தனர். அதனால்தான் அடுத்துவரும் பாட்டில், அழகிய உவமை இடம் பெற்றுளது. “பாணன் கையில் உள்ள, யாழுக்கு உரிய இலக்கணப் பண்புகளோடு கூடிய நல்ல யாழ், அழகிய வண்டுகள் போல இம் எனும் இசை எழும், நீ வழக்கமாக வரும் தெருவில், நீ வருவதை எதிர் பார்த்து உன் மார்பை, முன்பு தமக்கு உரியதாகப் பெற்றிருந்த, சிறந்த அணிகளை அணிந்திருந்த பரத்தையர் பலரும், நீ கைவிட்டுவிட்ட கவலையால், கண்களிலிருந்து வெப்பம் மிகுந்த கண்ணீர் சொரிந்தவாறே, கொடிய புயல் காற்று கடுமையாக வீசுவதால் துன்புற்றிருந்தபோது, கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலம் கவிழ்ந்துவிட, மேலும் கலக்க முற்றுத் தாமும் ஒரு சேரக் கடலில் வீழ்ந்து ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையை, வீழ்த்த அனைவரும் ஒருசேரப் பற்றிக் கொண்டு, தாம் தாம் தனித்தனி இழுப்பது போல, உன் கைகளைப் பற்றி, அவரவர் நத்தம் பக்கம் இழுக்க, அவரிடை அகப்பட்டு நீ வருந்திய வருத்தத்தை நான் கண்கூடாகக் கண்டேன்: கண்ட என்னால் யாது செய்ய இயலும்?"
"கண்டனென்; மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென் இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி, நின்
மார்புதலைக் கொண்ட மாண் இழை மகளிர்,
கவலே முற்ற செய்து வீழ் அரிப்பனி ,
கால் ஏழுற்ற பைதடு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன்பிறப்பு
பலர் கொள் பலகை போல்
வாங்க வாங்க நின் தூங்கு அஞர் நிலையே"
நற்றிணை : 30
இந்த அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பல செய்யுள்களிலும், இயல்பான அல்லது கற்பனைத் திறமான இந்தியக் கலையின் முழு முதல் மூலமாம் சிறப்பியல்புகளைத் தனியே காணலாம். இந்தியக் கலையின் நோக்கம், தொடக்க நிலையில் அழகு படுத்துவதே ; ஒன்றைப் பார்த்து, அதைப் பின்பற்றுவதன்று. கலைஞன், இலக்கியப் பொருளாகிவிட்ட இயற்கைப் பொருட்களை, 'இற்று' எனல் போல், உள்ளது உள்ளவாறே கூறிவிடுவதை விரும்பவில்ல. மாறாகத், தன் கையில் கிடைத்த அப்பொருளை அழகு செய்வதற்கான அளவிற்கு எல்லையே இல்லை. எடுத்துக் கையாண்ட பொருளின் ஒவ்வொரு சிறு கூறும், இயற்கையோடு கூடிய தாகத் தெளிவாகப் புலப்படவல்ல, அணிகளின் சிறுகூறு களால் அழகு செய்யப்பட்டிருக்கும். ஆகவே, செய்யுள் நடையில், ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கு முன்பும், ஒரு பெயரடைச் சொல் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப் படும் இடை ஒரு தொடராக அமைந்துவிடின், அத்தொடரில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பெயர்ச்சொல்லின் முன்னும் ஒரு பெயரடை கொடுக்கப்படும். இம்முறை , கிரேக்கக் கலைக் கொள்கைகளில் பயிற்சி பெற்றிருக்கும் ஓர் உள்ளத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கி, ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பதை மிகக் கடினமாக்கும் வகையில், முழுச் செய்யுளையும் நோக்கும்போது, ஓவியங்களால் ஒப்பனை செய்யப்பட்ட வாயில் கோபுரம் போல் தோன்றும் வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்தியக் கலைஞர்களின் உள்ளம், வெப்ப மண்டலக் காடுகளில், இலைகள் மலர்கள் ஆகியவற்றின் தங்குதடையற்ற வளமைக்கு அடிமைப்பட்டுப் போனதன் விளைவான, அவை பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அக்காலத்திய இந்தியக் கலை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் நின்றது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1920
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
தலைமை நிலையம் : 154, டி. டி. கே. சாலை, ஆள்வார்பேட்டை, சென்னை - 18.
கிளை நிலையங்கள் :
79, பிரகாசம் சாலை, (பிராடுவே) சென்னை - 108.
91, கீழைத் தேர்த் தெரு, திருநெல்வேலி - 6.
18, ராஜவீதி, கோயமுத்தூர் - 1.
28. நகர் உயர் பள்ளிச் சாலை, கும்பகோணம்-1.
24. நந்தி கோயில் தெரு, திருச்சி - 2.
36. செர்ரி ரோடு, சேலம் - 1..
70/71, தானப்ப முதலி தெரு, மதுரை - 1.
அப்பர் அச்சகம், சென்னை - 600 106.
இந்த மின்னூலைப் பற்றி
உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1].
இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம்.
மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம்.
இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம்
இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு:
TVA ARUN
Balajijagadesh
Guruleninn
J.shobia
Jskcse4
TI Buhari
2409:4072:88E:C1F5:C08A:5ACD:6C65:E180
Arularasan. G
* * *
↑ http://ta.wikisource.org
↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/
↑ http://www.gnu.org/copyleft/fdl.html
கருத்துகள்
கருத்துரையிடுக