மறைந்த நாகரிகங்கள்
வரலாறு
Back
மறைந்த நாகரிகங்கள்
ந.சி. கந்தையா
1. மறைந்த நாகரிகங்கள்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. மறைந்த நாகரிகங்கள்
மறைந்த நாகரிகங்கள்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : மறைந்த நாகரிகங்கள்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
மறைந்த நாகரிகங்கள்
முன்னுரை
இவ்வுலகின் பழைய நாகரிகங்களை எல்லாம் ஆராய்ந்து நோக்கின் அவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படை உண்டு என்பது தெள்ளதில் தோன்றும் அவ்வடிப்படைதான் யாது என அறிதல் ஆராய்ச்சி வல்லார்க் கெல்லாம் பெரு மயக்கம் அளிப்பதாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின்னர், பழஞ் சரித்திர ஆராய்ச்சியிற் றலைமைசான்ற டாக்டர் பிராங்போர்ட் போன்ற சிலர் சிந்துவெளி நாகரிகமே பழைய நாக ரிகங்களுக்கு எல்லாம் அடிப்படையாகவுள்ளதெனத் தமது கருத்தினைத் தயக்கமின்றி வெளியிட்டனர். சிந்துவெளி நாகரிகம், ஆராய்ச்சியில் திராவிடருடைய நாகரிகமாகவும், திராவிடருள்ளும் தமிழருடையதாகவும் காணப்படுதல் மிக வியப்பளிப்பதே யாகும். பழைய நாகரிக மக்களின் வரலாறுகளை ஒரு சிறிதளவாவது அறிந்திருப்பினன்றோ அவை தம்மை ஒப்பிட்டு அவைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல் சாலும். இச் சிறிய நூல் அவ்வழியில் ஊக்குதற்கு எழுந்த ஒரு சிறு நூலாகும். ஆகவே, “குண நாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” கற்றறிந்தார் கடன்.
சென்னை
6.1.1948
ந..சி.கந்தையா
மறைந்த நாகரிகங்கள்
தோற்றுவாய்
ஒரு காலத்தில் மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து வந்தார்கள். காலத்தில் அவர்கள் சிறிது சிறிதாகத் திருத்தமடைந்து உயர்நிலை அடைந்தார்கள். இன்றைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன்னரேயே செவ்விய நாகரிகம் அடைந்த மக்கள் அழகிய நகரங்களமைத்து வாழ்ந்தார்கள் என்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி வெளியிடுகின்றது. அக்கால நாகரிக மக்கள் வாழ்ந்த நகரங்கள் இன்று மண்மேடுகளாகக் காட்சி அளிக்கின்றன. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கியபோதே நாகரிகம் வளர்ச்சியடைந்தது. பண்டு நாகரிகம் பெற்று விளங்கிய நாடுகள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே இருந்தன.
பழைய நாகரிகத்துக்குப் பேர்போன இடங்கள் எல்லம், சுமேரியா, பாபிலோன், எகிப்து, கிரேத்தா1 முதலியவை. இந்நாடுகளின் நாகரிகத்துக்கும் மக்களுக்கும் ஒரு பொது அடிப்படை இருப்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும், பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளரும் எடுத்து விளக்கியுள்ளார்கள். இந்திய மக்களின் பழைய நாகரிகத்தை விளக்கும் பழம்பொருள்கள் சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதரோ, சங்குதரோ முதலிய இடங்களில் செய்யப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியால் கிடைத்தன. இந் நகரங்களின் காலம் ஏறக்குறைய கி.மு. 3,500 என ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். மைசூரில் சிற்றால்ட்ரக் என்னும் இடத்திலும் மொகஞ்சதரோவை ஒத்த புராதன நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந் நகரத்தின் காலம் கி.மு. 40ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.
2சுமேரிய மக்களும் இந்திய மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நீண்ட காலமாக வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகளால் இம் முடிவு மேலும் வலியுறுவதாயிற்று. இதனால் இந்திய நாட்டினின்றே மேற்குத் தேசங்களுக்கு நாகரிகம் சென்றதெனத் துணியப்படுகின்றது. இவ்வாறு மிகப் பழமையும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய நாடுகளின் நாகரிகத்தைக் குறித்து இந் நூல் கூறுகின்றது.
எல்லம்
பாரசீகத்தின் தென்மேற்கில் பாரசீகக் குடாக்கடல் உள்ளது. தைகிரஸ், யுபிராதஸ் என்னும் இரு ஆறுகள் ஒன்றுசேர்ந்து அக் குடாக் கடலுள் வீழ்கின்றன. இக்குடாவுக்கு மேலே ஆற்றின் கிழக்கில் சூசானா என்னும் பட்டினம் இருக்கின்றது. இது முற்காலத்தில் சூசா என்னும் பெயர் பெற்று விளங்கிற்று. இது எல்லம்1 எனப் பெயரிட்டு யூதர் வழங்கிய நாட்டின் மத்தியில் உள்ளது. எவ்வினத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படாத ஒரு மக்கட் கூட்டத்தினர் அங்கு வாழ்ந் தார்கள்.2 வரலாற்றில் முதல் புகழ் படைத்த நாகரிகத்தை இவர்கள் உண்டு பண்ணினார்கள். பிரான்சியப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கு இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சின்னங்களைக் கண்டு எடுத்தார்கள். கி.மு. 45ஆம் நூற்றாண்டில் அங்கு உயர்ந்த நாகரிகம் பரவியிருந்ததென்பதற்குச் சான்றுகள் உள்ளன.
எல்லம் மக்கள் அக்காலத்தில், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் முதலிய அலைந்து திரியும் வாழ்க்கையினின்றும் உயர்ந்து, நிலையாக ஓரிடத் தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்கள் செம்பு ஆயுதங்களைப் பயன்படுத்தினர்; தானியங்கள் விளைவித்தனர். விலங்குகளை வளர்த்தனர்; ஓவிய வடிவான எழுத்துகளைப் பயன்படுத்தினர்; பலவகை அணிகலன்களை அணிந்தனர்; முகம் பார்க்கும் கண்ணாடியைப் பற்றி அறிந்திருந்தனர்; எகிப்து முதல் இந்தியா வரையில் வாணிபம் நடத்தினர். அவர்கள் தீத்தட்டிக் கற்களால் செய்து பயன்படுத்திய புதிய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. கல்லைக் குடைந்து செய்த அழகிய சாடிகளும் காணப்படுகின்றன. அவை மீது, சதுரம், முக்கோணம், நாற்கோணம் போன்ற வடிவங்கள், விலங்குகள், செடிகள் முதலியவை எழுதப்பட்டுள்ளன. அம் மக்கள் செய்து பயன் படுத்திய பொருள்களிற் சில உலக மக்களாற் செய்யப்பட்ட மிக அழகிய பொருள்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கன. குயவனுடைய சக்கரத்தையும், வண்டிகளின் சக்கரத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எல்லம் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. எல்லம், சுமேரியாவையும் பாபிலோனையும் வெற்றி கொண்டது; பின்பு அந் நாடுகள் முறையே எல்லத்தை வெற்றிகொண்டன. சூசா என்னும் நகர் சுமேரிய, பாபிலோனிய எகிப்திய, அசீரிய, பாரசீக, கிரேக்க, உரோம ஆட்சிகளின் கீழ் ஆறாயிரம் ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கிற்று. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையில் அது சூசான் என்னும் பெயரோடு நிலைபெற்றது.
பல காலங்களில் அது திரண்ட செல்வமுடையதாக ஓங்கிற்று. அசுர் பானிப்பால் (கி.மு. 646) என்னும் அசீரிய அரசன் எல்லத்தைக் கைப்பற்றி அதனைச் சூறையாடி, நிறைந்த தங்கம், வெள்ளி, மணி, விலையேறப்பெற்ற உடைகள், சிம்மாசனம், தேர் முதலியவைகளையும், விலை மதிக்க வொண்ணாத பிற பண்டங்களையும் நினேவாவுக்குக் கொண்டு சென்றார்.
சுமேரியா
பாரசீகக் குடாக்கடலில் யூபிராதஸ் தைகிரஸ் என்னும் இரு ஆறுகளும் ஒன்றுசேர்ந்து வந்து விழுதலைக் காணலாம். அங்கிருந்து மேலே நோக்கிச் சென்றால் ஒன்றாகச் செல்லும் ஆறு குர்னா என்னும் இடத்தில் கிளைவிட்டுப் பிரிகின்றது. தைகிரஸ் ஆற்றுக்குமேல் சிறிது தூரம் முதல் கழிமுகம் வரையில் மேற்கில் உள்ள நாடு சுமேரியா எனப்படும். இந் நாட்டின் பழைய பெயர் யாது என அறியமுடியவில்லை. நூறு ஆண்டுகளின் முன்னரேயே இந் நாட்டைப் பற்றி அறியப்பட்டது. பழைய உரோமரும், கிரேக்கரும் சுமேரியாவைப் பற்றி அறியார். ஏரதோதசு1 அதைப்பற்றிச் சிறிதும் கேள்விப்படவில்லை. பாபிலோனிய வரலாறு எழுதிய பெரோசசு2 என்னும் பாபிலோனியர் சில பழங்கதைகள் மூலம் அதனை அறிந்திருந்தார். பெரோசசுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் சுமேரியா கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பேட்1 என்பார் அங்கு வாழ்ந்த மக்களைச் “சுமேரியர்” என்னும் பெயரால் குறிப்பிட்டார்.
மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழைய சிந்துவெளி நகரங்களிற் புதைபொருள் ஆராய்ச்சி செய்யப்படுவதன் முன்பு சுமேரிய நாகரிகமே உலகில் மிகப் பழமையுடையதெனக் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களுக்கு அடிப்படை சுமேரிய நாகரிகம் என அறியப்படுகின்றது. சுமேரியரின் நாகரிகம் கி.மு. 4,500இல் உச்சநிலை அடைந்திருந்தது. சுமேரியர் அந் நாட்டின் ஆதிக் குடிகளல்லர். அவர்கள் பிற நாடுகளினின்றும் வந்து குடியயேறியவர்களாவர். தாம் வரும்பொழுதே பயிர்ச்செய்கை, உலோகங்களில் வேலை செய்தல், எழுத்து எழுதுதல் போன்ற நாகரிகங்களைப் பெற்றிருந்தார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். சுமேரிய நாகரிகத்தைக் காட்டும் பழம்பொருள்களை ஒத்தவை சிந்துவெளி களில் கிடைத்துள்ளன. ஆகவே, இரு நாகரிகங்களும் ஒரு பொது உற்பத்திக் குரியவை என்று கருதப்படலாயின. பிராங்போர்ட்2 என்னும் ஆசிரியர் சுமேரிய நாகரிகம் மிக முற்பட்டதென்றும், அதற்கு அடுத்த படியிலுள்ளது எகிப்திய நாகரிகமென்றும், சுமேரிய நாகரிகத்துக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளிப் பழம்பொருள்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு எழுதிய டாக்டர் ஹால் சுமேரியர் சிந்து ஆற்றுப் பக்கங்களினின்றும் சென்றவர்கள் ஆவார் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள்ளார். ஹெரஸ் பாதிரியார் சிந்துவெளியினின்றும் சென்றவர்களே மேற்கு ஆசிய மக்களாவர் எனக் கூறியுள்ளார். இக் கருத்தே இன்று வலிவடைந்து வருகின்றது.
சுமேரியர்
இவர்களின் தோற்றம் இன்று தக்காணத்தில் திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் மக்களின் தோற்றத்தை ஒத்துள்ளது என டாக்டர் ஹால் கூறியிருக்கின்றார். ஆடவரிற் பலர் தாடி வளர்த்தார்கள்; சிலர் முகத்தை முற்றாக மழித்தார்கள்; பலர் மேல் உதட்டு மயிர்களை மழித்தார்கள்; அழகிய கம்பளி ஆடைகளை உடுத்தார்கள்; அவர்கள் அரைக்குமேல் உடலை மூடவில்லை. நாகரிகம் ஏற ஏற அவர்கள் உடை கழுத்துவரையும் சென்றது. ஆண் பெண் வேலையாட்கள் வீட்டில் வேலை செய்யும்போது அரைக்கு மேல் யாதும் அணியவில்லை. மக்கள் தொப்பி இட்டார்கள்; காலுக்கு மிதியடி தரித்தார்கள்; செல்வ மகளிர் மிருதுவான தோலினால் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட செருப்பை அணிந்தார்கள்; மாலை, வளை, கைவிரல் மோதிரம், காதணி முதலிய பலவகை அணிகளை அணிந்தனர்.
கி.மு. 2,300இல் சுமேரியரின் நாகரிகம் பழமையடைந்துள்ளது. அக் காலத்தில் சுமேரியப் புலவர்களும் அறிஞர்களும் தங்கள் பழைய வரலாறு களை ஒழுங்குபடுத்திவைக்க முயன்றுவந்தனர். உலகப் படைப்பைப்பற்றிய வரலாறு, பழைய அரசன் ஒருவன் செய்த பாவத்துக்காகப் பெரிய வெள்ளப் பெருக்கு நேர்ந்த வரலாறு போன்றவைகளைப்பற்றிப் புலவர்கள் பாடி னார்கள். பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு பாபிலோனிய, எபிரேயருள் வழங்கிப் பின்பு கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டுக் கதைகளுள் சேர்ந்துள்ளது.
குருமாராகிய சுமேரிய வரலாற்றாசிரியர்கள் அவர்களின் பழமையை மிக அதிகப்படுத்திக் கூறினர். உலகப் படைப்பிலிருந்து பெரிய வெள்ளப் பெருக்கு வரை உள்ள 432,000 ஆண்டுகள்வரை அரசர் பலர் ஆட்சி புரிந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். குருமார் தமது நாகரிகத்தின் பழமையைச் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருக்கலாம். நிப்பூர் நகர் அழிபாடு நிலமட்டத்திலிருந்து அறுபத்தாறு அடிகளின் கீழ் உள்ளது. அதன் கீழ் அறுபத்தாறு அடிகளுக்கு அக்காட்டின் சார்கன் அரசனின் கட்டடங்கள் காணப்படுகின்றன. நிப்பூரின் பழமை கி.மு. 5,262 வரையில்தான். கிஷ் நகரில் கி.மு. 4,500லும், ஊர் நகரில் கி.மு. 3,500லும் பல அரச பரம்பரைகளிலுள்ள அரசர் ஆட்சிபுரிந்தார்கள் இவ்விரு நகரங்களின் ஆட்சிக் காலங்களிலும் செமித்தியர்1, செமித்தியரல்லாதார் என்னும் அரசர்களுக்கிடையில் போட்டி யிருந்துவந்தது. முதலாம் சார்கன், ஹமுரபி முதலியோர் செமித்தியராவர்.
கோயிற் குருமார் கி.மு. 3,000முதல் களிமண் ஏடுகளில் எழுதிவைத்த குறிப்புகள் ஊரில் காணப்பட்டன. அவை இலகாஷ், உருக் முதலிய நகரங் களை ஆண்ட அரசர்களின் முடிசூட்டு, வெற்றி, மரணம் முதலியவைகளைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிடுகின்ற நிகழ்ச்சிகள் மிக ஏற்றனவாகக் காணப்படுகின்றன. இலகாஷ் நகரை ஆண்ட உருக்ககினா2 சில சீர்த் திருத்தங்களைச் செய்தான். குருமார் செல்வரிடமும் வறியவரிடமும் இருந்து பொருளை உறிஞ்சுவதைத் தடுக்கப் பல சட்டங்கள் செய்யப்பட்டன. தலைமைக் குரு காடுகளில் மரங்களை வெட்டுதல் கூடாது; அங்குக் கிடைக் கும் பழங்களுக்கு வரி தண்டுதலும் கூடாது; பிணங்களைப் புதைப்பதற்கு உள்ள வரி ஐந்தில் ஒன்றாகக் குறைக்கப்படுதல் வேண்டும். கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வருவாய், ஆடுமாடு முதலியவைகளைக் குருமார் பங்கிடுதல் ஆகாது எனக் களிமண் ஏட்டில் எழுதப்பட்ட ஒரு பட்டையம் கூறுகின்றது. இவ்வாறு குருமாருக்கு மாறாகச் சட்டஞ் செய்த உருக்ககினாவை உலூகல் காகிசி என்னும் அரசன் வீழ்த்தி, நகரைக் கொள்ளையிட்டான்; கோவில்கள் அழிக்கப்பட்டன; மக்கள் வீதிகளிற் கொல்லப்பட்டனர். கோவில்களின் கடவுட் சிலைகள் எடுத்துச் செல்லப் பட்டன. இலகாஷ் நகரின் பெரிய, தாய்க் கடவுட் சிலை எடுத்துச் செல்லப்பட்டதைக் குறித்து வருந்தித் தின்கிரதாமு என்னும் புலவர் ஒருவர் பாடிய பாடல்கள் களிமண் ஏடுகளில் காணப்படுகின்றன.
முதலாம் சார்கன்
சுமேரியரின் இலகாஷ் நகருக்கு இருநூறு மைல் தூரத்தில் சார்கன் என்னும் செமித்திய அரசன் அகேட்1 என்னும் நகரையமைத்து அக்காட்2 என்னும் இராச்சியத்தைத் தோற்றுவித்தான். சூசாவில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் சார்கனுடைய உருவம் வெட்டப்பட்டுள்ளது. அதில் அவன் நீண்ட தாடியோடும் அதிகாரமும் செருக்கும் நிறைந்த தோற்றத்தோடும் காட்சி யளிக்கின்றான். சார்கன் அரசமரபினனல்லன். அவனுடைய தாய் கோவிலில் தேவதாசி. அவள் யாரும் அறியாது இவனைப் பெற்றுக் கூடையில் வைத்துப் புற்களால் மறைத்து ஆற்றில் விட்டாள். அரசனுடைய வேலையாள் ஒருவன் அக் குழந்தையைக் கண்டெடுத்தான். வளர்ந்தபோது சார்கன் அரசனின் கிண்ணம் தாங்குபவனாக வேலை பார்த்தான். அவன் அரசனின் தயவினால் அதிகாரமுடையவனானான். இறுதியில் அவன் கலகம் செய்து அரசனை வீழ்த்திச் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவன் தன்னை உலகத்துக்கு அரசன் எனக் கூறிக்கொண்டான்; பல பட்டினங்களைப் பிடித்தான்; நகரங்களைக் கொள்ளையடித்தான். அவனால் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் இலகாஷ் நகரை வென்று சூறையாடிய உலூகல்காகிசி என்பவனாவன்.
இப் பெரியஅரசன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்னும் நான்கு திசைகளிலும் படை எடுத்துச் சென்றான்; எல்லத்தை வென்றான்; வெற்றியின் அடையாளமாகத் தனது வாளைப் பாரசீகக் குடாக்கடலில் கழுவினான். மேற்கு ஆசியாவைக் கடந்து மத்தியதரைக் கடலை அடைந்தான். அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அக் காலத்தில் பலவகைப் பழங்கதைகள் தோன்றி அவனைக் கடவுளாகச் செய்துவிட்டன. அவனுடைய மரணகாலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள் கலகம் செய்தன.
அவனுக்குப்பின் அவனுடைய மூன்று குமாரர் ஒருவருக்குப்பின் ஒருவராகச் சிம்மாசனம் ஏறினர்.
கி.மு. இருபத்தாறாம் நூற்றாண்டில் இலகாஷ் மறுபடியும் செல்வச் செழிப்புற்றது. அக் காலத்தில் குதேயா3 என்னும் அரசன் ஆட்சி புரிந்தான். இவன் கோவில்களைக் கட்டினான்; பழைய இலக்கியக் கல்விக்கு ஆதரவளித்தான். வலியவர்களை அடக்கி மெலியர்களுக்கு இரக்கம் காட்டினான்.
சாலதியரின்4 ஊர் நகரம் கி.மு. 3,500முதல் கி.மு. 700 வரையில் உயர்நிலையில் இருந்தது. ஊர்என்கூர் அரசன் மேற்கு ஆசியாவைத் தனது ஆணைக்கு உட்படுத்தினான். யூபிராதஸ் ஆறுவழியாகச் செய்யப்பட்ட வாணிகத்தால் ஊர் செல்வம் அடைந்தது. நகர்கள் கோவில்களால் அழகு பெற்றன. ஊர்என்கூர்1 தனது ஆணைக்குட்பட்ட லார்சா, உருக், நிப்பூர் முதலிய நகரங்களையும் கட்டினான். இவனுடைய மகன் துங்கி ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விரைவில் இச் சிறப்புகள் மங்கின. போர்ப் போக்குடைய எல்லம் மக்கள் கிழக்கிலிருந்தும், அமோரியர்2 மேற்கிலிருந் தும் வந்து ஊர் நகரைச் சூறையாடினர். சமாதானத்தைக் குலைத்து அரசனை யும் சிறைப்பிடித்தனர். அமோரியரும் எல்லத்தினரும் சுமேரியாவை 2,000 ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்தார்கள். பின்பு வடக்கினின்றும் ஹமுரபி என்னும் பாபிலோனியன் வெளித் தோன்றினான்; அவன் உருக், ஐசின் முதலிய நகர்களைப் பிடித்தான்; எல்லம்மீது படை எடுத்து அந் நாட்டரசனைச் சிறைப்படுத்தினான்; அமோரிய அசீரிய நாடுகளில் தனது ஆணையை நாட்டினான். பாரசீகர் தலைஎடுக்கும் வரையில் செமித்தியரே தைகிரஸ் யூபிராதஸ் ஆறுகளுக்கிடைப்பட்ட நாடுகளை ஆண்டார்கள். சுமேரியரைப் பற்றி வேறு யாதும் அறியமுடியவில்லை. சுமேரிய நாகரிகம் வளர்ந்து யூபிராதஸ், தைகிரஸ் ஆறுகளின் வழியே மேல்நோக்கிச் சென்று, பாபிலோன், அசீரியா முதலிய நாடுகளிலும் பரவுவதாயிற்று.
பொருளாதாரம்
பயிர்ச் செய்கை
சுமேரியாவின் சீர்திருத்தம் மாரிக்காலத்தில் ஆறுகள் வெள்ளம்முட்டி வழிவதால் உண்டானது. சுமேரியர் வெள்ளத்தைக் கால்வாய்களிற் செலுத்தி வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்தார்கள். கி.மு. 50ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் இவ்வாறு புரிய அறிந்திருந்தார்கள் எனத் தெரிகிறது. வயல்களில் கோதுமை, வாற்கோதுமை முதலிய தானியங்கள் விளைந்தன; பேரீந்தும் காய்கனிகள் உதவும் பலவகைச் செடிகளும் செழித்து வளர்ந்தன. கலப்பையில் எருதுகளைப் பூட்டி உழவும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
கைத்தொழில்
சுமேரியர் செம்பையும் தங்கத்தையும் பயன்படுத்தினர். இவ் விரண்டு உலோகங்களையும் கலந்து வெண்கலத்தை உண்டாக்கவும் அவர்கள் அறிந் திருந்தார்கள். இரும்பினாலும் ஆயுதங்கள் செய்யப்பட்டன. அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் பல தீத்தட்டிக் கற்களால் செய்யப்பட்டவை. தானியத் தாள்களைக் கொய்யும் அரிவாள் போன்ற சில கருவிகள் களிமண்ணினாற் செய்யப்பட்டன. ஊசி, துளைக்கும் கருவி போன்றவை சில தந்தத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்டன. அரசினர் கண்காணிப்பின் கீழ் நெசவுத் தொழில் அதிகம் நடைபெற்றது. வீடுகள் நாணல் தண்டுகளால் கட்டப்பட்டன. நின்று சுழலும் கதவின் தாள் குழிந்த கல்லின்மீது வைக்கப்பட்டது. தரை களிமண் இட்டு அடித்து மட்டம் செய்யப்பட்டது. நாணல்களின் தலைப்பு களை வளைத்துக் கட்டுவதால் கூரைவில் வளைவினதாயிருந்தது. சில சமயங் களில் குறுக்கே மரங்கள் இட்டுத் தட்டையாக அமைக்கப்பட்ட கூரைமீது களிமண் பரப்பப்பட்டது. சுவர்கள் வைக்கோலும் களிமண்ணும் கலந்த கலவையால் பூசப்பட்டன. வீடுகளில் ஆடு, மாடு, பன்றி முதலியவை வளர்க்கப்பட்டன. குடிக்கும் நீர் கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்டது.
வாணிபம்
பண்டங்கள் நீர்வழியாகச் சென்றன. சுமேரியாவில் கல் கிடைப்பது அரிது. ஆகவே அவை பிற இடங்களிலிருந்து கடல்வழியே ஆற்றுக் கழிமுகம் வரையும் கொண்டு வரப்பட்டன; பின்பு கால்வாய்கள் வழியாக நகருக்குக் கொண்டு போகப்பட்டன. இந்தியாவுக்கும் சுமேரியாவுக்கும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது. இந்தியாவிற் காணப்பட்டவை போன்ற முத்திரைகள் பல சுமேரியாவிற் கண்டுபிடிக்கப்பட்டன. சுமேரியர் நாணயத்தைப் பயன்படுத்தவில்லை. வாணிபம் பண்டமாற்று முறையில் நடைபெற்றது, பொன்னும் வெள்ளியும் குறிக்கப்பட்ட விலையுடையனவா யிருந்தன. அவை பண்டங்களின் விலைக்குப் பதில் கொடுக்கப்பட்டன. சுமேரியாவில் வாணிபத் தொடர்பான பல களிமண் ஏடுகள் கிடைத்தன. அவைகளைக் கொண்டு சுமேரியர் நடத்திய வாணிபத்தைப் பற்றிய செய்திகள் பல அறியக்கூடுகின்றன.
சுமேரியரின் சமாதிகளுள் பொன், வெள்ளி அணிகலன்கள், ஏனங்கள், ஆயுதங்கள். பயிரிடும் கருவிகள் போல்வன காணப்பட்டன.
மக்களின் பிரிவுகள்
செல்வரும் வறியரும் பல பிரிவினராயிருந்தனர். அடிமை வழக்கு வலிமை பெற்றிருந்தது. செல்வருக்கும் வறியருக்குமிடையில் ஒரு வகுப்பினர் வாழ்ந்தனர். இவர்கள் சிறிய வாணிபம் செய்வோர், மருத்துவர், குருமார் என்போராவர். மருத்துவம் உயர்வடைந்திருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து பயன்படுத்தப்பட்டது. மருந்து சமயத்தோடு சம்பந்தப் படுத்தப்பட்டிருந்தது. நோய்கள் ஆவிகளின் கோளாறினால் உண்டாகின்ற தென்றும், அவைகளை ஓட்டினாலன்றி நோயை அகற்றமுடியாதென்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்கள் மாதத்தைச் சந்திர அளவையாகக் கணித் தனர். ஒவ்வொரு நகரத்தினரும் மாதங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இட்டு வழங்கினார்கள்.
ஆட்சி
ஒவ்வொரு நகரிலும் தனித்தனி அரசன் இருந்து ஆண்டான். அவன் பதேசி எனப்பட்டான். இதற்குப் பூசாரி அரசன் என்பது பொருள். ஆளுகையின் ஒவ்வொரு பகுதியும் சமயத்தால் கட்டுப்படுத்தப்பட் டிருந்தது. கி.மு. 2,800லேயே வாணிபம் பலமடைந்திருந்தது. அப்பொழுது சிற்றரசர்களுக்கெல்லாம் தலைவனாகிய பேரரசன் தோன்றினான். அவன் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ நேர்ந்தது. எந்த நேரத்திலும் அவனை இன்னொருவன் வீழ்த்தி அவன் இடத்தை அடைதல் கூடும். அரசன் வீற்றிருக்கும் மண்டபத்துக்கு இரு வாசல்கள் இருந்தன. அவை ஒருவன் மாத்திரம் செல்லக்கூடிய ஒடுக்க முடையன. அரசனைக் காண்பதற்கு ஒருவன் மாத்திரம் ஒரு காலத்தில் அனுமதிக்கப்படுவான். அவன் உள்ளே செல்வதன் முன் அவனிடத்தில் ஆயுதங்கள் இருக் கின்றனவா என்று வாயில் காவலன் சோதனை செய்வான். அரசன் வழிபடும் கோவிலும் மறைவில் இருந்தது.
போர்க்காலங்களில் அரசன் வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதந் தாங்கிய வீரர்களின் முன்னே தேர்மீது சென்றான். வாணிபப் பாதைகள், வாணிபப் பண்டங்கள் என்பவை காரணமாகப் பெரும்பாலும் போர்கள் நிகழ்ந் தன. மெனித்தாஸ் என்னும் அக்கேடிய அரசன் தான் எல்லத்தின் மீது படை எடுப்பது அங்குள்ள வெள்ளிச் சுரங்கங்களையும், சிலைகள் செய்யும் கற்களையும் கைப்பற்று வதற்கெனக் கூறினான். போரில் தோற்றவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்; விற்பது அதிக ஊதியம் அளியாதெனக் கண்டால் அவர்கள் போர்க்களத்திலேயே கொல்லப்பட்டார்கள். போரில் பிடிபட்டவர்களில் பத்திலொரு பகுதியினர் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டனர்.
சமூக ஒழுங்கு காணியாளன் ஆட்சிமுறையால் காக்கப் பட்டு வந்தது. போர்களில் வெற்றி உண்டானபோது, நிலங்கள் திறமையுடைய பிரபுக்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. அந் நிலங்களுக்கு வரி தவிர்க்கப்பட்டது. இவ்வகை அதிகாரிகள் நாட்டில் ஒழுங்கைப் பாதுகாத்தார்கள்; அரசனுக்குப் போர் வீரரை அளித்தார்கள். வரிகள் மூலம் அரச வருவாய் சேர்க்கப்பட்டுக் களஞ்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது.
அரசர், காணியாளர், அதிகாரிகள் ஆளுகையைப்பற்றி பல சட்டங்கள் இருந்தன. இவைகளே ஹமுரபியின்1 சட்டங்களுக்கு அடிப் படையானவை. செமித்திய சட்டம் பெண்ணின் கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதித்தது; ஆனால் சுமேரிய சட்டம் கணவனை இன்னொரு மனைவியைக் கொள்ளும்படி அனுமதித்ததுடன், முந்தியவளைப் பிந்திய வளுக்குக் கீழாக வைத்திருக்கும்படி விதித்தது.
வாணிபம், திருமணம், கடன் கொடுத்தல், கடன் வாங்குதல், கொள்வன, விற்பன போன்றவைகளுக்கெல்லாம் சட்டங்கள் இருந்தன. கோயில்களில் வழக்குகள் கேட்டுத் தீர்ப்பு அளிக்கப்பட்டன. நியாயத் தீர்ப்பாளர் குருமாராக விருந்தனர். ஒவ்வொரு வழக்கும் முதலில் நடுவர் கையில் விடப்பட்டது. நியாயந் தீர்க்கும் இடத்துக்குச் செல்வதன்முன் வழக்குக்கு இடமின்றித் தீர்த்துவைப்பது அவர்கள் கடமையாகும்.
சமயம்
ஊர்என்கூர் என்னும் அரசன் தனது சட்டங்களைச் சமாஷ் என்னும் கடவுள் அருளிச் செய்தார் எனக் கூறினான். சுமேரியh வில் கடவுளர் பலராகப் பெருகினர். ஒவ் வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு தலைமைத் தெய்வம் இருந்தது. மக்களின் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் நன்மை புரியும் தனித் தனித் தெய்வங்கள் பல இருந்தன. சுமேரியர் தோன்றிய காலம் முதல் ஞாயிறு வணக்கமும் வளர்ச்சியடைந்து வந்தது. சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் இராக் காலத்தில் வட கடலில் துயின்றார்; அவர் வெளியே வரும்படி விடியற் காலம் கதவைத் திறந்துவிட்டது. செங்குத்தான வானத்தின்மீது தனது தேரைச் செலுத்திக் கொண்டு நெருப்புத் தணல்போல் அவர் மேலே சென்றார். எல்லில் என்னும் கடவுளுக்கும் அவர் மனைவியாகிய நின்லில்லுக்கும் நிப்பூரில் கோவில்கள் இருந்தன. உருக் நகரில் இன்னி என்னும் தரைக் கடவுளாகிய கன்னி வழிபடப்பட்டார். செமித்தியரும் அக்கேடியரும் இக் கடவுளை இஸ்தார் என அழைத்தனர். கிஷ், இலகாஷ் என்னும் நகர்களில் தொலரோசா என்னும் தாய்க்கடவுள் வழிபடப்பட்டார். வானத்தில் ஆவிகள் நிறைந்திருக்கின்றனர்; தேவர்கள் (angels) மக்களைப் பாதுகாக்கின்றனர்; பைசாசுகள் தேவரைத் துரத்தி மக்களைப் பிடித்து வருத்துகின்றன என மக்கள் நம்பினார்கள்.
கோயில்களில் பல தெய்வங்கள் இருந்தன. அவைகளுக்கு உணவும் காணிக்கைகளும் கொடுக்கப்பட்டன. மாடு, ஆடு, புறா, கோழி, தாரா, மீன், பேரீந்தின் பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காய், வெண்ணெய், எண்ணெய், பலகாரம் முதலியன தெய்வங்களுக்கு விருப்பமுடையன என்று களிமண் பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகைக் காணிக்கைகளைத் தெய்வங்கள் பெறுவதால் சுமேரிய கோவிற் குருமார் அதிக செல்வத்தை ஈட்டி அதனால் அதிகாரம் உடையவர்களானார்கள். பெரும்பாலான கருமங்களில் அவர்களே ஆட்சி புரிவோராயிருந்தனர். அவர்கள் எவ்வளவுக்குக் கோயிற் பூசாரிகளாக விருந்தார்கள், எவ்வளவுக்கு ஆட்சி புரிபவர்களாயிருந்தார்கள் என்று அறியமுடியவில்லை. உருக்ககினா என்னும் அரசன் குருமார் செல்வரிடமும் வறியரிடமும் பணத்தைக் கவர்வதைக் கண்டித்து அவர்களின் அதிகாரத்தைக் குலைத்தான். அவன் மரணமானபோது குருமார் பழைய நிலைமையை எய்தினர்.
சுமேரியரின் சமாதிகளில் உணவும் ஆயுதங்களும் வைக்கப் பட்டிருந்தன. இதனால் அவர்கள் மரணத்துக்குப் பின்னும் உயிர் அழியா திருப்பதை நம்பினார்கள் எனத் தெரிகின்றது.
வாழ்க்கை
குருமார் கல்வியோடு பழங்கதைகளையும் சிறுவர்களுக்குப் படிப்பித் தார்கள். பழங்கதைகள் அவர்களது ஆட்சிக்கு வலிமை அளித்தன. ஒவ்வொரு கோயிலிலும் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. பழைய களிமண் ஏடுகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதுர அளவை, கன அளவை வாய்பாடுகளும் கோணலளவைப் பற்றிய பயிற்சிகளும் காணப்படுகின்றன.
கோயில்களில் தேவதாசிகள் இருந்தார்கள். திருமணத்தைப்பற்றிய சட்டங்கள் இருந்தன. தந்தையாலளிக்கப்பட்ட சீதனப்பொருள் பெண்ணின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தது. கணவனைப் போல மனைவிக்கும் பிள்ளைக ளிடத்தில் சம உரிமை உண்டு. கணவனின் தொடர்பின்றித் தனது சொந்த அடிமைகளை வைத்திருக்கவோ, அவர்களை விற்றுவிடவோ அவளுக்கு அதிகார முண்டு. பெண்கள் அரசி போன்ற நிலை வரையில் உயர்ந்து நகரை ஆளவும் முடியும். கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வறிய பெண்களின் வாழ்க்கை செம்மையுறவில்லை. செல்வ மகளிர் உயர்ந்த உல்லாச வாழ்க்கை நடத்தினர். அவர்கள் மேனியில் அலங்காரப் பொருள்களையும் பலவகை அணிகலன்களையும் பயன்படுத்தினர். சமாதிகளில் இவ்வகைப் பொருள்கள் காணப்பட்டன.
எழுத்துகள்
சுமேரிய எழுத்துகள் மிக வியப்பளிப்பன அவர்களின் எழுத் தெழுதும் முறை மிகப் பண்பட்டிருந்தது. இலக்கியப் பாடல்கள், சமயப் பாடல்கள், வாணிபத் தொடர்பான எழுத்துகள் பல காணப்படுகின்றன. கி.மு. 36ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் எழுத அறிந்திருந்தார்கள். கி.மு. 32ஆம் நூற்றாண்டில் எழுதுதற்குக் களிமண் ஏடுகள் பயன்படுத்தப்பட்டன. களிமண் ஏடுகளில் ஆப்பு வடிவமான முனையுடைய குச்சியினால் எழுத்துகள் எழுதப்பட்டன. இவ்வகையான பொருள்களைக் கொண்டே அரசாங்க ஆவணங்கள், கொள்வன, விற்பன, உடன்படிக்கை ஆவணங்கள் போல்வன எழுதிக் காப்பாற்றப்பட்டன. எழுதிய பின்பு களிமண் ஏடுகள் வெய்யிலில் அல்லது நெருப்பிலிட்டு உலர்த்தப்பட்டன. ஆகவே, அவர் களின் ஆவணங்கள், நூல்கள் முதலியன நிலைக்கக் கூடியன வாயிருந்தன. சுமேரிய எழுத்துகள் ஆப்பு வடிவமாயிருந்தமையின் அவை ஆப் பெழுத்துகள் எனப்பட்டன.
சுமேரிய எழுத்துகள் வலமிருந்து இடம் வாசிக்கப்பட்டன: பாபிலோனிய எழுத்துகள் இடமிருந்து வலம் எழுதப்பட்டன. ஆப் பெழுத்துகள் சுமேரிய மட்பாண்டங்களிற் காணப்படும் ஓவிய எழுத்துக் களின் சுருக்கு எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் பல நூற்றாண்டுகளாக விரைந்து எழுதப்படும் போது ஓவிய வடிவங்களை இழந்து கீற்று வடிவங் களை அடைந்தன.
எழுத்து நிலை இலக்கிய நிலையை அடையப் பல நூற்றாண்டு களாகும். நெடுங்காலம் வாணிபத்துக்கு எழுத்து துணைபுரிந்தது. ஒப்பந்தங் கள் பற்றுச் சீட்டு, பண்டங்களின் விலை போல்வன எழுதிவைக்கப்பட்டன. மந்திர வித்தை முறைகள் கிரியை முறைகள், சமயத் தொடர்பான பழங் கதைகள், துதிகள், பாடல்கள் முதலியவை மறைந்து போகாமலும் மாறுபடா மலும் இருக்கும்படி அவை எழுதிவைக்கப்பட்டன. கி.மு. 2,700லேயே சுமேரியாவில் பெரிய நூல் நிலையங்களிருந்தன. தெல்லோ என்னும் பழைய நகரில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்குப் பெரிய நூல்நிலையம் ஒன்று இருந்தது.
கி.மு. 20ஆம் நூற்றாண்டில் சுமேரிய வரலாற்றாசிரியர்கள் பழைய வரலாறுகளை ஒழுங்குபடுத்தி எழுதினார்கள். நிகழ்கால வரலாறுகளையும் எழுதிவைத்தார்கள். அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவைகளின் பகுதிகள் பாபிலோனிய அரசரின் வரலாறுகளின் இடையிடையே காணப்படுகின்றன.
கட்டடம்
சுமேரியாவில் எழுத்துகள் வளர்ச்சியடைந்தமை போலவே கட்டடக் கலையும் வளர்ச்சியடைந்தது. சுமேரியர் நாணல் தண்டுகளைச் சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ நட்டார்கள். அவைகளின் தலைப்புகளை வளைத்து வில்வடிவு அல்லது அரை வட்டவடிவு உண்டாகும் படி கட்டினார்கள். நிப்பூரில் வில் வடிவில் அமைக்கப்பட்ட கால்வாய் ஒன்று காணப்படுகின்றது. அதன் காலம் கி.மு. 3,500ஆக இருக்கலாம். வில் வடிவுடைய கதவுகள் ஊர் அழிபாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. அவை கி.மு. 2,000 அளவிலமைக்கப்பட்டனவாகலாம். அங்குக் கட்டடங் களில் காணப்படும் வில்கள் (arches) இன்றைய விற்களேயாகும்.
செல்வர் திடர்களில் அரண்மனை போன்ற மாளிகைகளை அமைத்து வாழ்ந்தார்கள். சில திடர்கள் நில மட்டத்திலிருந்து நாற்பது அடிக்குமேல் உள்ளன. சிறப்பாக அமைக்கப்பட்ட பாதையாலன்றி வீட்டுக்கு ஏறிச் செல்ல முடியாமல் இருந்தது. இவ்வாறு சுமேரியச் செல்வன் ஒவ்வொருவனுடைய வீடும் கோட்டை போலிருந்தது. சுவரின் வெளிப்புறம் சிவப்பு நிறமுடைய தாயிருந்தது. சதுரம், வளைவு, முக்கோணம் போன்ற சூளையிலிட்ட களிமண் வடிவங்களால் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உட்சுவர் சாந்திட்டு மட்டஞ் செய்து, சாயம் பூசப்பட்டிருந்தது. வீட்டின் நடுவில் முற்றமும், முற்றத்தின் நாற்புறத்திலும் வீடும் இருந்தன. செல்வர்கள் மாத்திரம் வீடுகளுக்குச் சாளரங்களைப் பயன்படுத்தினர். தண்ணீர் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. நகரின் அழுக்குநீர் வெளியே செல்லக் கால்வாய்கள் இருந்தன. வீட்டில் தளவாடங்கள் அதிகம் இருக்கவில்லை. சில படுக்கைகள் உலோகங்களும் தந்தமும் அழுத்தி அலங்கரிக்கப்பட்டன. கைகள் வைத்து ஆறக்கூடிய நாற் காலிகளின்1 பாதங்கள் சிங்கத்தின் பாதங்கள் போன்று செய்யப்பட்டிருந்தன.
கோயில்கள் அமைப்பதற்குக் கற்கள் பிற இடங்களினின்றும் கொண்டுவரப்பட்டன. அவை செம்பினாற் செய்யப்பட்டனவாயும், கம்பளி யின் மேல் விலையுயர்ந்த உலோகங்களைப் பதித்துச் செய்யப்பட்டனவாயும் உள்ள வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டன. ஊரில் உள்ள நன்னார் ஆலயத்தில் சிறிது நீலநிறம் கொடுக்கப்பட்டனவாயும், மினுக்கம் கொடுக்கப் பட்டனவாயும் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சுவரின் உட்புறம் சலவைக் கல், கல்நார், நிறக்கற்கள், பொன் முதலியவை அழுத்திய மரச் சட்டங்களால் மறைக்கப்பட்டன. நகரத்தின் முதன்மையான கோயில், மேட்டின்மீது கட்டப்படவில்லை; கோயில்கள்மீது மூன்று, நான்கு அல்லது ஏழு மாடிகள் இருந்தன. அம் மாடிகளை அடைவதற்கு வெளிப்புறமாகச் சங்குப் புரிபோற் சுழன்று செல்லும் படிக்கட்டுடைய பாதை இருந்தது. மிக உயரமான மாடியில் நகரத்தின் பெரிய தெய்வம் வீற்றிருக்கும். படை எடுப்புக் காலங்களில் கோயில் அரணாகவும் பயன்பட்டது.
கோயில்கள் வீரர், கடவுளர் போன்ற சிற்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. தெல் எல் உபேயிட்2 அழிபாட்டில் செம்பி னாற் செய்யப்பட்ட இடபம் ஒன்று காணப்பட்டது. இது சுமேரியரின் பழைய சின்னங்களுள் ஒன்று. ஊர் அழிபாட்டில் சபாட் அரசியின் கல்லறையில் வெள்ளியாற் செய்யப்பட்ட பசுவின் தலை கண்டெடுக்கப்பட்டது.
சுமேரியர் தண்டு சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்தார்கள். பொற்கொல்லர் பொன்னில் அழகிய வேலைகள் செய்தனர். ஊர் அழிபாட்டில் பொன்னினாற் செய்யப்பட்ட பல ஏனங்கள் காணப் பட்டன. அவைகளின் காலம் கி.மு. 4000 ஆக இருக்கலாம். அங்குக் கல்லில் வெட்டப்பட்ட உருளை வடிவான முத்திரைகளும் கிடைத்தன. இவைகளைச் சுமேரிய மக்கள் தமது கையெழுத்துகளைப் பொறிப்பதற்குப் பயன்படுத் தினர். சுமேரியரின் நாகரிகமே எகிப்திற்குப் பரவியதென்றும் எகிப்திய நாகரிகத்துக்கு அடிப்படை சுமேரிய நாகரிகமே யென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
எகிப்து
ஆப்பிரிக்காவிலே நீல ஆறு என்னும் பெரிய நதி ஒன்று உண்டு. இது பாலைவனத்துக் கூடாகச் சென்று மத்தியதரைக் கடலுள் விழுகின்றது. இதன் இரு ஓரங்களிலும் ஏறக்குறையத் தனித்தனி பன்னிரண்டு மைல் அகலம் வரையில் உள்ள கீலமான தரை பயிர்பச்சை யுடையதாய்ச் செழிப்படைந் துள்ளது. அப் பகுதி எகிப்து எனப்படுகின்றது. ஆற்றின் முகத்துவாரத்தை அடுத்த பகுதி கீழ் எகிப்து எனவும் வழங்கின. இவ் வாற்றோரங்களில் மிகப் பழங்காலம் முதல் மக்கள் குடியேறியிருந்தார்கள். அவர்களைப்பற்றிய வரலாறு அறியப்படவில்லை.
கி.மு. 50ஆம் நூற்றாண்டில் பண்டு எனப்பட்ட ஒரு நாட்டி னின்றும் புதிய மக்கட் கூட்டத் தினர் சிலர் வந்து இவ்வாற்றோரங் களிற் குடியேறினர். பண்டுநாடு செங்கடலுக்குக் கிழக்கேயுள்ள இக்கால எரித்திரியா, சொமாலி லந்து என்னும் இடங்கள் எனக் கருதப்பட்டது. பண்டு என்று குறிக்கப்பட்ட நாடு மலை யாளக் கரைகள் என இக்கால ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.1
பண்டு நாட்டினின்றும் வந்து நீல ஆற்றுக் கழிமுகத் தீவில்2 குடியேறிய மக்கள் வடக்கி னின்றும் தெற்கு நோக்கிப் பரவி னார்கள். பண்டு நாட்டினின்றும் வந்த மக்களுக்குத் தலைவர் ஓரஸ்3. அவரின் அடையாளம் கழுகு. பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்களிடையே ஆட்சி முறையை நாட்டியவர் இவர் ஆகலாம். ஓரசின் தலைமையில் வந்த மக்கள் மேல் எகிப்தைக் கைப்பற்ற எவ்வளவு காலம் சென்றதெனத் தெரியவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஆட்சிகள் தோன்றியிருந்தன.
வடக்குத் தெற்கு இராச்சியங்கள் என்பன பல சிற்றரசர் நாடுகளின் இணைப்புக்களேயாகும். சிறிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களைப் பற்றியோ அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியோ யாதும் தெரியவில்லை. அவர்கள் காலத்தில் கையாளப்பட்ட கைவேலைப் பொருள்கள் கற்காலத் தவை. அவை வியக்கத்தக்க அழகுடையன. அக் காலத்தில் உலோக வகை களில் செம்பு பயன்படுத்தப்பட்டது. ஓரசின் தலைமையில் வந்தவர்களின் வெற்றிக்குக் காரணம் உலோக முனைகள் இறுக்கப்பட்ட ஆயுதங்கள் எனப் பிற்காலக் கற்பனைக் கதைகளிற் காணப்படுகின்றது.
ஐந்தாவது அரச பரம்பரையினர் பெயர்கள் முறைப்படுத்தி எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எழுதுவதற்கு முற்பட்ட சில குறிப்புகள் இருந்தன வாகலாம். அரசர் பெயர்களைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் குறிக்கப்படவில்லை, தெற்கே முதலில் ஆண்ட அரசனைப்பற்றிச் சிறிது அறிகின்றோம். இவனை கி.மு. 34ஆம் நூற்றாண்டில் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் இணைத்தான். இவன் ஓரசின் மரபில் தோன்றியவன் எனக் கூறப்படுகின்றது.
எகிப்தியக் கட்டடங்களிலும் ஞாபகச் சிலைகளிலும் காணப்பட்ட எழுத்துகள் வாசிக்கப்படுவதன் முன்பு எபிரேயரின் சமய நூல்களைக் கொண்டும், எரதோதசு1 எழுதியவைகளைக் கொண்டும் எகிப்திய வரலாறுகள் அறியப்பட்டன. முதல் எகிப்திய பரம்பரையைத் தோற்றுவித்தவர் மேன்ஸ்2 எனப்படுகின்றார். வடநாடு தென்னாட்டுக்கு உட்பட்டிருக்கவில்லை; ஆனால் அது தெற்கே உள்ள அரசனுக்கு அடங்கியிருந்தது. தென்னாட்டு அரசன் தனது மரபு வடநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தது எனக் கூறினான். இவன் இரு நாடுகளுக்கும் தலைவன் ஆனான்.
இவன் அல்லது இவனுக்குப்பின் வந்த அரசன் வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் மத்தியில் அபிடொஸ்3 என்னும் நகரை அமைத்தான். இது மூன்றாம் அரச பரம்பரைக் கால நிகழ்ச்சி. ஆறாவது அரச பரம்பரைக் காலத் தில் அது மெம்பிஸ் நகரை ஒத்த சிறப்படைந்திருந்தது. மெம்பிஸ் நகர் என்சிப்-மேர்பேபா4 என்னும் அரசனால் கட்டப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது.
முதல் இரு அரச பரம்பரையினரும் சிறிதேறக்குறைய 400 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். இரண்டாவது அரச பரம்பரையினர் காலத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் யாதும் காணப்படவில்லை. தென்னாட்டு அரசனின் வெற்றியோடு இரண்டாவது பரம்பரை முடிவடைகின்றது. வெற்றியாளனாகிய காசிகெம் தனது பெயரைக் காசிகெமூய் என மாற்றிக்கொண்டு அரசுரிமைக் குரிய பெண்ணை மணந்து மூன்றாவது அரச பரம்பரையைத் தோற்றுவித் தான். இவன் முதற் பரோவா1 எனப்படுவன்.
காசி கெமூயின் காலம் கி.மு. 2,980. இவனிலிருந்து வலிய பல அரசர் தோன்றி ஆட்சிபுரிந்தார்கள். இவனுடைய உருவச்சிலை ஓரஸ் வணக்கத் தினரின் முதன்மை இடமாகிய ஹிரகோன் போலிஸ்2 என்னும் கழுகு நகரத்திலுள்ள சமாதியில் காணப்பட்டது. காசி கெமூயின் சமாதி ஒடுங்கிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல் ஒன்றின் மீது ஒன்றாகக் கற்பாளங்களை வைத்துக் கட்டப்பட்டது. இதுவே முதல் பிரமிட்3 சமாதி எனப்படுகின்றது. இதன்பின் சினெவெரு4 என்னும் நான்காவது பரம்பரையில் வந்த அரசன் பெரிய பிரமிட் சமாதியைக் கட்டினான். சினவெருவுக்குப் புதல்வன் இல்லை. அவனுக்குப் பின் குபுவா5 ஆட்சிபுரிந்தான். இவன் நாலாவது பரம்பரையை நாட்டியவனாவன். இவன் எவ்வாறு ஆட்சிக்கு வந்தான் என்று தெரிய வில்லை; ஒருபோது திருமண இணைப்பினால் வந்திருக்கலாம். இவனுடைய மகன் கவ்றி6. கவ்றியின் மகன் மென்கூரா. இவர்கள் கிசே7 என்னும் நகரத்தில் பெரிய பிரமிட் சமாதியையும் பெரிய மனித முகச் சிங்கத்தையும் அமைத்தார்கள் என்பதைவிட வேறு யாதும் தெரியவில்லை. இவர்களைச் சியப்ஸ், மிசீரினஸ் என எரதோதசு குறிப்பிட்டுள்ளார்.
கிசேயில் அமைக்கப்பட் டுள்ள பெரிய பிரமிட் சமாதியின் உயரம் 484 அடி. இது 13½ ‘ஏக்கர்’ தரையை மூடியிருக்கின்றது. இதைக் கட்டுவதற்கு ஒவ்வொன்றும் இரண் டரை “டன்” பாரமுள்ள 2,300,000 சுண்ணாம்புக் கற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில கற்கள் 150 டன் பாரமுள்ளன. இதனைக் கட்டி முடிப்பதற்கு 100,000 அடிமைகள் இருபது ஆண்டுகள் உழைத்தார்கள்.
இரண்டாவது பிரமிட் சமாதிக்கு முன்னால் வெட்டப்பட்டுள்ள மனிதமுகச் சிங்கத்தின் உயரம் 75அடி. நீளம் 150 அடி. அதன் முகத்தின் குறுக்கு அளவு 18 அடி 8 அங்குலம். அதன் மூக்கின் நீளம் 5 அடி 7 அங்குலம்.
பயிர்ச்செய்கை
இப்பொழுது நைல் நதிக் கழிமுகத்தில் காணப்படும் துருத்திகள் முன்பு குடாக்கடலாக விருந்தன. இப்போது இத் துருத்திகளில் அறுபது இலட்சம் மக்கள் பருத்தியைப் பயிரிட்டு ஏராளமான பஞ்சை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
நீல ஆறு ஆண்டில் ஒருமுறை பெருக்கெடுக்கின்றது. அப் பெருக்கு முன்பின் நூறு நாட்களுக்கு நிலைக்கும்; ஆற்றுநீர் இவ்வாறு அணைகடந்து பெருகுவதால் பாலைநிலம் செழிப்படைகின்றது. அங்கு நாகரிகம் மிகமிக முற்காலத்தில் தோன்றியிருந்ததற்குக் காரணம் இதுவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எகிப்திய மக்கள் ஆறு பெருகும் காலங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது வழக்கம். இன்றும் கெய்ரோ வீதிகளில், பிரசித்தம் செய்வோர் ஆற்றுப் பெருக்கின் நிலையைப்பற்றித் தினம் காலையில் அறிவிப்பார்கள். வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது வயல்களை அழித்துவிடும் என மக்கள் அறிந்திருந்தார்கள். வரலாறு தொடங் காத காலத்திலேயே மக்கள் ஒன்றை ஒன்று குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து செல்லும்படி பல அகழிகளை வெட்டினார்கள். மேற்கொண்டு பெருகும் நீர் அகழிகளில் தங்கிற்று. ஆற்றுப் பெருக்குக் குறைந்தபோது நீர்இறை கூடை களால் இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சப்பட்டது. கோதுமை நீல ஆற்றை அடுத்த நிலங்களில் தானாக விளைவ தில்லை. ஆகவே, மிகப் பழைய காலத்திலேயே எகிப்தியர் பருவ காலங்களில் விளையும் தானியங்களைப் பயிரிட அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது.
எகிப்திய நாடு பயிர்ச் செய்கைக்கு மிக வாய்ப்புடையதாயிருந்தது. அதிக வேலை புரியாமலே தானியம் விளைவிக்கப்பட்டது. மற்றைய நாட்டவர் நிலத்தைக் கலப்பையால் உழுதும், மண்வெட்டியால் கொத்தியும் அதிகம் உழைத்துத் தானியத்தை விளைவித்தனர். நீலநதி பெருகியபோது வயல்களில் நீர் பெருகிற்று. வெள்ளம் வற்றியபோது ஒவ்வொருவனும் தனது வயலை விதைத்தான். தானியங்கள் மண்ணில் புதையும்படி உழக்கப் பன்றிகள் விடப்பட்டன. பின்பு அறுப்புக் காலத்தை அவர்கள் எதிர்பார்த் திருந்தார்கள்.
மரங்களில் ஏறிப் பழங்கள் பறிக்கும்படி குரங்குகள் பழக்கப்பட் டிருந்தன. நீல ஆறு பெருகி வயல்களில் நீர் பாய்ந்தபோது ஆயிரக்கணக் கான மீன்கள் குளங்களில் தங்கின. மீன் பிடிக்கப் பயன்படுத்திய வலைகளை மக்கள் இராக் காலங்களில் கொசு வலைகளாகப் பயன்படுத்தினர். ஆற்று நீர் பாய்ச்சுவதால் குடிகள் இலாபம் அடையவில்லை. எல்லா நிலங்களும் அரசனுக்குரியன. அவைகளைப் பயன்படுத்துவோர் அரசனுக்கு வருவாயில் பத்திலொன்றை வரியாகக் கொடுத்தனர். சிற்றரசர் போன்ற பிரபுக்களுக்கும் செல்வருக்கும் சொந்தமான பெரிய நிலங்கள் இருந்தன. இவ்வகை நிலம் ஒன்றில் பதினையாயிரம் பசுக்கள் நின்றன. இதைக்கொண்டு ஒவ்வொரு நிலத்தின் பரப்பும் எவ்வளவென்று நாம் உய்த்து அறியலாம். தானியவகை, இறைச்சி, மீன் என்பன முக்கிய உணவுகளா யிருந்தன. செல்வர் உணவுக்கு மேல் முந்திரிகைச் சாற்றைக் குடித்தார்கள். பொதுமக்கள் கோதுமையில் வடித்த மதுவைப் பருகினார்கள்.
குடிகளின் வாழ்க்கை வருந்தத்தக்கதாக இருந்தது. கால்வாய் வெட்டுதல், வீதிகள் அமைத்தல், அரசினர் நிலங்களைத் திருத்துதல், பிரமிட் சமாதிகள் கட்டுவதற்குப் பெரிய கற்களை இழுத்தல், கோயில், அரண்மனை அமைத்தல் போன்றவைகளுக்கு மக்கள் கூலியின்றி வேலை செய்தல் கட்டாயமாக இருந்தது. வயல் வேலை செய்யும் கூலியாட்கள் தமது வறுமையில் திருப்தியடைந்திருந்தார்கள். அவர்களுட் பெரும் பகுதியினர் அடிமைகளாவர். இவர்களுட் பலர் போர்களில் பிடித்து அடிமைகளாக்கப் பட்டவர்; சிலர் கடனுக்காக அடிமைகளாக்கப் பட்டவர். சில சமயங்களில் அடிமைகளைப் பிடிப்பதற்குத் தொலைவிடங்களுக்கு ஆயுதம் தாங்கிய கூட்டங்கள் சென்றன. அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களும் சிறுவர்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டார்கள்.
கைத்தொழில்கள்
குடிகள் வேலை செய்தபோது செல்வம் மிகுந்தது. கைத்தொழிலும் வாணிபமும் புரிவோருக்கு உணவுப்பொருள்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன. எகிப்தில் உலோகம் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் அதனை அராபியாவிலும் நியூபியாவிலும் இருந்து பெற்றனர்.
எகிப்திய அரசர் போரிற் சிறைபிடிக்கப் பட்டவர்களையும், சிறைத் தண்டனை பெற்றவர்களையும் சிறைச்சாலைகளில் கூட்டங்களாக அடைத்து வைத்தனர். இவர்கள் தனிமையாகவும், சில சமயங்களில் குடும்பங்களோடும் பொன் சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்கப்பட்டனர். அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகப் பழிவாங்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது. பழைய அரச பரம்பரைக் காலத்திலேயே எகிப்தியர் செம்பைத் தகரத்தோடு கலந்து வெண்கலம் செய்ய அறிந்திருந்தனர். வாள், தலைக்கவசம், கேடயம் முதலியவும், வெண்கல வண்டிச் சக்கரங்கள், உருளைகள், மிண்டிகள், கம்பிகள், ஆப்புகள், சங்குப் புரிஆணிகள், கற்களை அறுக்கும் அரிவாள்கள் போன்றவை வெண்கலத்தினால் செய்யப்பட்டன. மரவேலை செய்வதில் அவர்கள் திறமை அடைந்திருந்தனர். மரக்கலம், வண்டி, நாற்காலி, கட்டில், சவப்பெட்டி போன்ற அழகிய பொருள்கள் செய்யப்பட்டன. விலங்குகளின் தோலிலிருந்து ஆடை, அம்பறாத் தூணி, கேடகம், மணை போன்ற பொருள்கள் செய்யப்பட்டன. சமாதிச் சுவர் ஒன்றில் ஒருவன் தோல் பதனிடும் காட்சி எழுதப்பட்டுள்ளது. தோல் பதனிடுபவனின் கையில் வைத் திருப்பதுபோன்ற கத்தியை இன்றும் எகிப்தில் தோல் வேலை செய்வோர் பயன்படுத்துகின்றனர்.
பைபிரஸ் என்னும் நாணலிலிருந்து கயிறுகள், பாய்கள், செருப்பு, கடுதாசி முதலியவை செய்யப்பட்டன. பொருள்களுக்குச் சாயம் பூசுதல், மரப்பொருளுக்குப் பசைக்கூழ் (வார்னிஷ்) பூசுதல் போன்ற தொழில்கள் அறியப்பட்டிருந்தன. அழகிய சணல் ஆடைகள் நெய்யப்பட்டன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்ட ஆடைகளைப் பட்டோ சணலோ என்று அறிவதற்குப் பூதக்கண்ணாடி மூலம் பார்க்கவேண்டி யிருக்கின்றது. முற்கால எகிப்தியரின் கை நெசவுத் துணிகள் இக்கால இயந்திர நெசவுத் துணிகள் போன்றவை. நீராவிப் பொறிகள் கண்டு பிடிக்கப்படுவதன் முன் வாழ்ந்த சமீபகால மக்கள் பழைய எகிப்தியரிலும் பார்க்க எவ்வகை யிலாவது அதிக திறமையுடையவர்களல்லர்.
வேலை புரிவோரில், ஒரு பகுதியினர் அடிமை களும், மற்றொரு பகுதியினர் அடிமைகளல்லா தோருமாயிருந்தனர். இன்று இந்தியாவில் காணப் படுதல்போல ஒவ்வொரு தொழில் செய்வோரும் ஒவ்வொரு சாதியினராயிருந்தனர். பிள்ளைகள் தந்தை செய்த தொழிலையே செய்தார்கள். பெரிய போர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பெரிய நிலங்களில் வேலை செய்வதற்கும் கட்டடங்கள் அமைப்பதற்கும் பயன் படுத்தப்பட்டனர். மூன்றாம் இராம்சே என்னும் அரசன் தனது ஆட்சியில் 113,000 அடிமைகளைக் கோவில் களுக்குக் கொடுத்தான். கைத்தொழில் புரியும் அடிமை களல்லாத தொழிலாளர் கண்காணி ஒருவனின்கீழ்க் கூட்டாக வேலை செய்தார்கள். கூட்டாக வேலை செய்வ தால் கிடைக்கும் ஊதியம் தனித்தனி ஒவ்வொரு வருக்கும் பகுந்து அளிக்கப்பட்டது. வேலையாட்கள் வேலைக்குச் செல்லாது இடையிடையே கூட்டாக நின்றுவிடுவது பொதுநிகழ்ச்சி.
எகிப்தியரின் கட்டடமமைக்கும் முறை கிரேக்கர் உரோமர் அறிந்திருந்தவைகளிலும் மேலானது. மூன்றாம் செனுசறெற் என்னும் அரசன் ஆற்று நீரைத் தடுத்துக் குளமாக்குவதற்கு 27 மைல் நீளமுள்ள பெருஞ்சுவர் ஒன்றை எடுத்தான். இதனால் 25,000 ஏக்கர் நிலம் நீர்பாய்ச்சிப் பயிர் செய்வதற்கு ஏற்றதாக்கப்பட்டது. நீல ஆற்றையும் செங்கடலையும் இணைக்கும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. ஆயிரம் ‘டன்’ பாரத்துக்கு மேற்பட்ட கற்றூண்கள் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பெரிய கற்பாளங்கள் கொழுப்புப் பூசிய குற்றிகள் மீது வைத்து ஆயிரக் கணக்கான அடிமைகளால் இழுத்துச் செல்லப்பட்டன. பொறிகள் அருமை யாக இருந்தன. ஆட்களின் வேலை மலிவாக இருந்தது. சமாதிச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டுள்ள ஓவியத்தில் இரண்டு பெரிய கற்றூண்கள் ஏற்றப் பட்ட மரக்கலத்தை, எண்ணூறுபேர் தண்டு வலித்து ஓட்டும் இருபத்தேழு மரக்கலங்கள் இழுத்துச் செல்லும் காட்சி காணப்படுகின்றது. நூறு அடி நீளமும் ஐம்பதுஅடி அகலமுமுள்ள மரக்கலங்கள் நீலநதியிலிருந்து செங் கடலுக்குச் சென்று மத்தியதரைக் கடலை அடைந்தன. நிலத்தில் சுமைகள் மக்களால் கொண்டு செல்லப்பட்டன. பிற்காலங்களில் கழுதைகள் பயன் படுத்தப்பட்டன. தாலமிகள் காலம்வரையில் ஒட்டகங்கள் காணப்பட வில்லை. வறிய மக்கள் நடந்து அல்லது ஒட்டகத்தின் மீது சென்றார்கள்; செல்வர் அடிமைகளால் சுமக்கும் சாய்வு நாற்காலியில் இருந்து சென்றார்கள். பிற்காலங்களில் தேர்கள் பயன்படுத்தப் பட்டன.
எகிப்தில் ஒழுங்கான அஞ்சல் போக்குவரத்து நடைபெற்றது. போக்கு வரத்து மிகக் கடுமையாக இருந்தது. நன்றாயமைக்கப்படாத சில வீதிகளே இருந்தன. வாணிக முறை மிகப் பழம் போக்காக இருந்தது. அயல்நாட்டு வாணிகம் சிறிது சிறிதாக வளர்ந்தது. வழிகளில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச் சாவடிகளில் சுங்கம் பெறப்பட்டது. எகிப்து அயல் நாடுகளிலிருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கைத்தொழில் பண்டங்களை வெளிநாடுகளுக்குப் போக்கிற்று. சிரியா, கிரேத்தா, சைபிரஸ் முதலிய நாடுகளின் வணிகர் எகிப்தியச் சந்தைகளில் கூடினர். பினீசிய மரக்கலங்கள் நீல ஆற்று வழியாகத் தீப்ஸ் நகரை அடைந்தன.
நாணயப் புழக்கம் வளர்ச்சி அடைய வில்லை. அரசாங்க வேலையாளரின் சம்பளங்கள், தானியம், உரொட்டி, மது போன்ற வகைகளில் கொடுக்கப்பட்டன. எகிப்திய அரசரின் கருவூலத்தில் பணம் இருக்கவில்லை. அது வயல்களிலும், கடைகளிலும் கிடைக்கும் ஆயிரக்கணக் கான பண்டங்களின் பண்டகசாலையாக இருந்தது. மூன்றாம் துத்மோஸ்1 என்ப வனுக்குப்பின் பண்டங்களின் விலை, மோதிரங்கள் அல்லது பொன் துண்டுகள் வகையில் கொடுக்கப்பட்டது. விலைகளின் அளவுக்கு இவைகள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் அரசாங்கத்தாரால் விலை குறிப்பிடப்பட்ட நாணயங்கள் வழங்கவில்லை. கடன் கொடுத்து வாங்கும் முறை அதிகம் வளர்ச்சியடைந்திருந்தது. இதற்கு ஆவணங்கள் எழுதப்பட்டன. ஆவணங்கள் எழுதும் எழுத்தாளர் பலர் இருந்தனர். எகிப்திய எழுத்தாளன், தன் கையில் வைத்திருப்பதைவிடச் சிறப்பாகக் காதில் ஒரு எழுதுகோலை வைத்துக்கொண்டும் அட்டணைக் கால் கட்டிக்கொண்டும் இருப்பான்.
அரசாங்கம்
எழுத்தாளரையுடைய நிலையங்கள் மூலம் எகிப்திய அரசரும் பிரபுக்களும் நாட்டில் ஒழுங்கையும் நியாயத்தையும் காப்பாற்றி வந்தார்கள். பழைய எழுத்துப் பொறித்த பட்டையங்களில் அவ்வகை எழுத்தாளர் மக்கள் தொகையைக் கணக்கு எடுத்தல், வருமான வரி தொடர்பான கணக்குகளைச் சோதித்தல் முதலியவைகளைச் செய்தார்கள் என்பது கூறப்பட்டுள்ளது. நீல ஆற்றுப்பெருக்கை அளப்பதற்கு எழுத்தாளர் சிலர் இருந்தனர்; அதனைக் கொண்டு அவ்வாண்டின் தானிய விளைவையும், அரசாங்கத்தின் வருங்கால வருவாயையும் கணக்குச் செய்து வருவாய்க் கேற்ப அரசாங்கப் பிரிவு களுக்கு முன்னமே செலவு ஒதுக்கப்பட்டது. எழுத்தாளர் சிலர் வாணிகத்தை மேற்பார்த்தார்கள். வரலாற்றின் தொடக்கத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வகைப் பொருளாதாரத் திட்டம் உண்டாயிருந்தது.
கொடுத்தல், வாங்குதல், நிலம், குற்றம் தொடர் பான சட்டங்கள் மிக வளர்ச்சி யடைந்திருந்தன. ஐந்தாவது அரச பரம்பரைக் காலத்தில் தனிப்பட்ட சொத்துரிமை பற்றிய சட்டங்கள் மிகச் சிக்கலாக இருந்தன. நமது காலத்தைப் போல எல்லோருக்கும் நியாயம் ஒரேவகையாக இருந்தது. நியாயாதிபதி, வழக்காளி எதிரிகளின் வாக்குமூலங்களை எழுதி ஒப்பிட்டுப் பார்த்துத் தீர்ப்புச் செய்தான். பொய்ச் சத்தியஞ் செய்தவனுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. சிற்றரசர் நாடுகளில் சிறிய நியாயத் தீர்ப்பு இடங்களும், மெம்பிஸ், தீப்ஸ், ஹெலியோ பொலிஸ் முதலியவிடங்களில் பெரிய நியாயத் தீர்ப்பு இடங்களும் இருந்தன. குற்றவாளிகளிடத்திலிருந்து உண்மை பெறும்பொருட்டு வேதனை கொடுக்கப்பட்டது. கம்பினால் அடித்தல் பொதுவான தண்டனையாக இருந்தது. மூக்கு, காது, கை, நா முதலிய உறுப்புகள் வெட்டவும்பட்டன. சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்குதல், திருகிக் கொல்லுதல், தலையைக் கொய்தல், தூணில் கட்டி நெருப்பினால் கொளுத்துதல் போன்ற தண்டனைகளும் விதிக்கப்பட்டன. சதையை அரித்துத் தின்னும்படி உடல் முழுவதும் ஒருவகை மருந்தைப் பூசிவிடுவது தண்டனைகள் எல்லாவற்றுள்ளும் கொடியதாகும். உயர்ந்த வகுப்பினர் பலர், மக்கள் முன்னிலையில் கொலைத்தண்டனை அடை யாமல் தம்மைத்தாமே கொன்றுகொள்ளும்படி அனுமதிக்கப்பட்டார்கள். இக்காலக் காவலர் (போலீஸ்) போன்றவர்கள் இருக்கவில்லை.
எகிப்து, வனாந்தரத்துக்கும் கடலுக்கும் இடையில் இருந்தமையால் அதனைக் காப்பதற்குப் பெரும்படை வேண்டியிருக்கவில்லை. அரசனுக்கு அடுத்தபடியில் பெரிய தலைவன் அமைச்சனாக இருந்தான். இவன் முதல் மந்திரியாகவும் கருவூலத் தலைவனாகவும் கடமை ஆற்றினான். அரசனின் நியாயத் தீர்ப்பே எல்லாத் தீர்ப்புகளுக்கும் முடிவாயிருந்தது. நேரக்கூடிய பெரிய பொருட்செலவைக் கட்சியினர் பொருட்படுத்தவில்லையாயின் வழக்கு அரசன் முன் கொண்டுவரப்பட்டது. அவன் நாட்டைச் சுற்றிப் பயணஞ் செய்தபோது காணியாளராகிய பிரபுக்கள் அவனைத் தமது எல்லைகளில் எதிர்கொண்டு காணிக்கைகள் வழங்கி மரியாதை செய்தனர். இரண்டாம் அமென் அரொப் என்னும் அரசனுக்குப் பிரபு ஒருவன் பொன்னாலும், வெள்ளியாலும் செய்த வண்டிகளையும், தந்தத்தாலும், கருங்காலி மரத்தினாலும் செய்த பாவைகளையும்; அணிகலன்களையும், போர் ஆயுதங்களையும், 680 கேடகங்களையும், 140 வெண்கல ஈட்டிகளை யும், விலை உயர்ந்த உலோகங்களால் செய்த பலவகை ஏனங்களையும் கொடுத்தான். இவ் விபரம் பழைய பட்டையம் ஒன்றிற் பொறிக்கப்பட் டுள்ளது. அரசனுக்குத் துணைபுரியும் பெருமக்கள் சபை ஒன்று இருந்தது. அரசன் குருமாரின் துணையைப் பெற்றுத், தான் கடவுளின் வழித்தோன்றல் எனக் கூறினான். இறந்தபின் அவன் கடவுளாக மாறுகின்றான் என்னும் நம்பிக்கை இருந்து வந்தது.
அரசன் கடவுள் போன்ற தோற்றப்பொலிவோடிருந்தான். அவனைச் சூழ்ந்து மெய்காப்பாளர் நின்றனர். அவர்களில் சிலர் படைத்தலைவர்; சிலர் அரசனுக்கு ஆடைகட்டி அலங்கரிப்பவர்; பலர் உயர்ந்த பதவிகளி லுள்ளோராவர். அவனுடைய மேனியை அலங்கரிக்கும் பொருள்களை மேற்பார்ப்பதற்கு இருபது கருமகாரர் இருந்தார்கள். நாவிதன் அவனுடைய முகத்தை மழித்து மயிரைக் கத்தரித்தான். தலையை அலங்கரிப்பவர்கள் அவனை நீராட்டித் தலையில் முடியை வைத்தார்கள்; சிலர் அவனுடைய நகங்களை மினுக்கினார்கள்; வாசனை ஊட்டுவோர் அவன் உடலுக்கு நறுமணம் ஊட்டினர்; கண்ணிமைக்கு மை தீட்டினர்; இதழ்களுக்கும் கன்னங்களுக்கும் சிவப்பு நிறம் பூசினர்.
ஒழுக்கம்
அரசன் பெரும்பாலும் தன் சகோதரியை மணந்தான். மக்களிடையும் இவ்வகைத் திருமணங்கள் பரவின. கிறித்துவுக்குப்பின் இரண்டாம் நூற்றாண்டில் எகிப்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இவ்வகை வழக்கம் உடையவர்களாயிருந்தனர். அவன் மனைவியரல்லாத பெண்களும் அரசனுடைய அந்தப்புரத்தில் இருந்தார்கள். அவர்கள் போர்க் காலங்களில் பகைவர் நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்களும், பிரபுக்களின் குமாரிகளும், சிற்றரசரால் கொடுக்கப்பட்டவர்களுமாவர். மூன்றாம் அமென்ஹொரெப் என்பவனுக்கு நஹரினா நாட்டு அரசன் தனது மூத்த குமாரியையும் முந்நூறு கன்னிப் பெண்களையும் கொடுத்தான். பிரபுக்களின் நிலைமைக்கேற்ப அவர்களிடையேயும் இவ்வகை ஆடம்பரங்கள் இருந்தன.
நடுத்தரமான வருவாயுடைய மக்கள் ஒரே பெண்ணை மணந்தனர். இக் கால ஆடவர் மகளிர் ஒழுக்கங்கள் போலவே அக்கால எகிப்திய ஆடவர் மகளிரின் ஒழுக்கங்கள் உயர்ந்த பண்புடையனவாயிருந்தன. முற்காலத்தில் திருமண நீக்கங்கள் மிக அருமையாக இருந்தன. பிந்திய அரச பரம்பரைக் காலத்தில் திருமண நீக்கங்கள் பொது நிகழ்ச்சியாக இருந்து வந்தன. ஒருவன் மனைவியைத் திருமண நீக்கம் செய்தால் அவன் குடும்பச் சொத்தில் நியாயமான ஒரு பகுதியைப் பெண்ணுக்குக் கொடுக்கவேண்டி யிருந்தது. இன்று பல நாடுகளிற் காணப்படுவது போலவே பெண்களின் நிலை உயர்வடைந் திருந்தது. முற்காலத்திலாவது இக்காலத்திலாவது எச்சாதியா ராவது எகிப்தியரைப் போலப் பெண்களுக்கு உயர்நிலை அளிக்கவில்லை. எகிப்திய ஓவியங்களில் பெண்கள் வீதிகளிலே தனியே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பதாகவும், பொது இடங்களில் உணவு உண்பதாகவும், கைத் தொழில், வாணிகங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் காட்சியளிக்கின்றனர். பெண்களை வீட்டில் கட்டுப்படுத்தி வைக்கும் கிரேக்கர் இவர்களின் விடுதலையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். எகிப்தியக் கணவர் தம் மனைவியருக்குக் கீழ்ப்படிவதாகக் கலியாண உடன்படிக்கையில் கையெழுத் திட்டார்கள். தாயாட்சி முறையினால் எகிப்தியப் பெண்களின் நிலை சிறிது சிறிதாக உயர்வடைந்தது. பெண், வீட்டுக்குத் தலைவியாயிருந்தாள். சொத் துரிமையும் பெண் வழியாகவே இருந்துவந்தது. திருமணப் பதிவு காலத்திற் கணவன் தனது சொத்தையும் வருங்காலத் தேட்டத்தையும் பெண்ணுக்கே எழுதி வைத்தான். தாய்மூலம் பெண்ணைச் சேரும் சொத்துக்கு ஆசைப் பட்டே எகிப்தியர் சகோதரியை மணந்தார்கள். தாய்மூலம் குடும்பத்தை அடையும் சொத்தை அல்லது தாயத்தை அயலவன் ஆண்டனுபவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. தாலமிகள் என்னும் பிற்கால எகிப்திய அரசர் காலத்தில் கிரேக்கர் வழக்கங்கள் பரவியிருந்தன. அதனால் திருமண நீக்கத்தைப் பற்றிய உரிமை கணவனுக்கு மாத்திரம் அளிக்கப்பட்டது. இம் மாற்றம் உயர் குடும்பங்களில் மாத்திரம் கையாளப்பட்டது. பொதுமக்கள் தாயாட்சி முறையைப் பின்பற்றினார்கள். கோவில்களில் தேவதாசிகள் இருந்தனர். எகிப்தியர் தமது பழைய பழக்க வழக்கங்களையே நீண்டகாலம் பின்பற்றி வந்தனர். போர்வீரர் தாம் கொன்ற பகைவரின் வலக்கைகளை வெட்டிவந்து எழுத்தாளனிடத்தில் காட்டிப் பதிவு செய்தார்கள். மக்கள் சொக்கட்டான் போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடினர். இக்கால விளையாட்டுப் பொருள்கள் போன்ற கோலி, பந்து, பம்பரம் போன்றவைகளைச் சிறுவர் வைத்து விளையாடினார்கள். மற்போர், குத்துச்சண்டை, மாட்டுச் சண்டை முதலியவை மக்களின் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன.
விருந்துக் காலங்களில் விருந்தாளிகளுக்கு ஏவலர் நறுமணம் பூசினார்கள்; பூமாலைகள் இட்டார்கள்; மது வகைகள் கொடுத்தார்கள். எகிப்திய ஓவியங்களில் ஆண்கள் சிவப்பு நிறமாகவும், பெண்கள் மஞ்சள் நிறமாகவும் எழுதப்பட்டுள்ளனர். பெண்கள் இக்கால முறையில் கூந்தலைக் கட்டையாக வெட்டியிருந்தார்கள். ஆடவர் பொய் மயிரை அணிவதற்கு வாய்ப்பாகத் தலையையும் மழித்துக் கொண்டார்கள். அரசன் பெரிய பொய் மயிர் அணிந்தான்; அவனுடைய முகத்துக்குச் சிவப்புப்பொடி பூசப்பட்டது; இதழ்களுக்குச் சிவப்புச் சாயம் ஊட்டப்பட்டது; நகத்துக்குக் கறுப்புச்சாயம் பூசப்பட்டது; தலைமயிருக்கு நெய் தடவப்பட்டது; கண்ணுக்கு மை தீட்டப்பட்டது. செல்வப் பெண்களை அடக்கஞ் செய்த சமாதி அறைகளுள் இருவகைச் சிவப்புச் சுண்ணங்களையும் எழுவகை நறுமணத் தைலங்களை யும் வைத்தார்கள். இவையல்லாத வேறு மேனி மினுக்குக்குள்ள பொருள்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மயிர் மழிக்கும் கத்தி, மயிர் சுருட்டி, கொண்டை ஊசி, சீப்பு, சுண்ணம் வைக்கும் சிமிழ்கள், மரம், தகரம், கல்நார் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட தட்டுகள், கரண்டிகள் என்பவை. ஆடைகளுக்கும் மேனிக்கும் பலவகை மணப்பொருள்கள் ஊட்டப்பட்டன. வீடுகள், கரிய போளம், பிற மணப்பொருள்கள் என்பவை களால் நறும்புகை ஊட்டப்பட்டன.
எகிப்தில் ஆண் பெண் என்னும் இருபாற் சிறுவரும் பன்னிரண்டு பதிமூன்று வயதுகள் வரையில் நிர்வாணமாகச் சென்றனர். அவர்கள்; கழுத்து மாலையும் காதணியும் அணிந்தனர். பெண் குழந்தை களின் அரையில் மணிகள் கோத்த வடம் அணியப் பட்டது. பொதுமக்களும் வேலையாள்களும் அரையில் ஒரு உடை மாத்திரம் உடுத்திருந்தனர். பழைய எகிப்தில் ஆடவரும் மகளிரும் அரைக்குமேல் நிர்வாணமாகச் சென்றனர். உடை, முழங்கால் வரையும் மறையும்படி அரையில் கட்டப்பட்ட குறுகிய வெண் சணலாடை யாகும். நாணம் பழக்கத்தால் உண்டாவதேயன்றி இயற்கையாக உண்டாவதன்று. முதல் அரச பரம்பரைக் காலக் குருமாரும் அரையில் ஆடையை உடுத்தினர். செல்வம் ஏற ஏற உடையும் அதிகப்பட்டது. வண்டி செலுத்துவோரும் பரிவாரங்களும் ஆடம்பரமான உடை அணிந்துகொண்டு தமது தலைவர்களின் தேர்கள் செல்வதற்கு வழியை ஆயத்தஞ் செய்யும்படி வீதிகளில் ஓடிச் சென்றார்கள். செல்வச் செழிப்புண்டான காலத்துப் பெண்கள் இறுக்கமாக உடுக்கும் உடைக்குப் பதில் தளர்ந்த அங்கியை அணிந்தார்கள். உடை யில் பல வகையான தையல் வேலைப்பாடுகள், சுருக்குகள், பாம்புகள் போன்ற வடிவங்கள் வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டன.
இருபாலாரும் அணிகலன்களை விரும்பினர். கழுத்து, மார்பு, மணிக்கட்டு, புயம், கெண்டைக்கால் முதலியவைகளில் அணிகள் அணியப்பட்டன. ஒவ்வொரு எழுதுவோனும் அல்லது வணிகனும் வெள்ளி அல்லது பொன்னினாற் செய்த முத்திரையை வைத்திருந்தான்; ஒவ்வொரு ஆடவனும் மோதிரமணிந்திருந்தான். ஒவ்வொரு பெண்ணும் அலங் கரிக்கப்பட்ட சங்கிலி அணிந்திருந்தார்கள். பதினெட்டாவது அரச பரம்பரைக் காலத்தில் ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி எல்லோரும் காதில் துளையிட்டுக் காதணி அணிந்தார்கள். இருபாலாரும் விலை உயர்ந்த கற்கள் கோத்த மாலைகளையும் பிற நகைகளையும் அணிந்தார்கள். அக்கால எகிப்தியப் பெண், மேனி மினுக்குத் தொடர்பாக இக்காலப் பெண்ணிடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாதும் இல்லை.
கல்வி
இன்றைய உரோமானியக் கத்தோலிக்கக் கோயில்களையொப்பப் பள்ளிக் கூடங்கள் கோயிலோடு இணைக்கப்பட்டிருந்தன. குருமார் செல்வரின் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தார்கள். பழைய பள்ளிக்கூட அழிபாடு ஒன்றில் அக் காலத்தில் எண்ணப் பயன்படுத்திய சிப்பிகள் காணப்படுகின்றன. ஆசிரியரின் வேலை அரசாங்கத்துக்கு எழுத்து வேலை உதவும் எழுத்தாளரை உண்டாக்குவதே. மாணாக்கருக்கு எழுச்சி உண்டாகும் பொருட்டு ஆசிரியர் கல்வியைப்பற்றி ஊக்கம் எழுப்பக்கூடிய கட்டுரைகள் எழுதினார். “உலகில் ஒருவனுக்குக் கீழ் அடங்கி வாழாத தொழிலாளி இல்லை; படித்தவன் தன்னைத்தானே ஆள் கின்றான்” என ஒரு பைபிரஸ் ஏட்டில் காணப்படுகின்றது.
பழங்கால மாணவர் பயன்படுத்திய பயிற்சி ஏடுகள் காணப்படு கின்றன. ஓரத்தில் விடப்பட்டுள்ள எழுதப்படாத பகுதியில் ஆசிரியர் திருத்தம் செய்திருக்கின்றார். முக்கியக் கல்வி வாசகம் எழுதுதல். அது சூளை யிட்ட களிமண் தட்டு அல்லது சுண்ணாம்புக்கல் தட்டுகளில் எழுதப்பட்டது. கல்வி வாணிக சம்பந்தமாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் மாணவர் தம் குற்றங்களுக்கு முதுகில் அடிக்கப்பட்டார்கள்.
அரசாங்கக் கருவூலத்தோடு இணைக்கப்பட்டிருந்த உயர்ந்த பள்ளியில் கோயில் தொடர்பாக மாணவருக்கு உயர்ந்த கல்வி அளிக்கப்பட்டது அரசினர் கல்விச்சாலையில் இளம் எழுத்தாளர்களுக்கு ஆட்சிமுறை போதிக்கப்பட்டது. கல்வி முடிந்ததும் அவர்கள் கருமத் தலைவர்களின்1 கீழ் சிலகாலம் பழக்கம் பெற்றனர். இவ்வாறு கல்வி முறை எகிப்திலும் பாபிலோனிலும் வளர்ச்சி யடைந்தது.
உயர்தரக் கல்வி பயிலும் மாணவர் கடுதாசியைப் பயன்படுத்தினர். அக் காலக் கடுதாசிகள் பைபிரஸ் என்னும் நாணலைப் பிளந்து குறுக்கும் நெடுக்குமாக வைத்து அழுத்தப்பட்டவை. ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட பைபிரஸ் கையெழுத்துப்படிகள் இன்றும் அப்படியே இருக் கின்றன. இத் தாள்கள் ஒன்றின்பின் ஒன்றாக இடப்புறமாக ஒட்டப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டன. இவ்வகைப் புத்தகங்கள் சில நாற்பது அடி நீளம் வரையிலுள்ளன. புகையால் உண்டாகும் கரி, மரப்பிசின் முதலியவைகளைத் தண்ணீரில் கரைத்து மசி செய்யப்பட்டது. எழுதும் குச்சி நாணல் தண்டினால் செய்யப்பட்டது. அது நிறமசிகள் பூசும் தூரிகை1 போன்றது. இவர்களின் மொழி ஆசிய நாட்டிலிருந்து வந்ததெனத் தெரிகின்றது. மிகப் பழைய எழுத்துகள் ஓவிய வடிவுடையன. ஓவிய எழுத்துகள் என்பன பொருள்களை உணர்த்த அப் பொருள்களின் வடிவாக எழுதப்படும் ஓவியங்கள். வீட்டை உணர்த்த நீண்ட சதுர மெழுதி நீளமான ஒரு பக்கத்தில் ஒரு வெளிவிடப் பட்டது. பட வடிவிலிருந்து எண்ணங்களைக் குறிக்கும் குறியீடுகள் உண் டாயின. இக் குறியீடுகள் அவ் வடிவுடைய பொருள்களைக் குறிக்கவில்லை. சில கருத்துகளைக் குறித்தன. சிங்கத்தின் முன்புறம் ஆளும் தன்மையைக் குறித்தது. குளவி அரசத் தன்மையைக் குறித்தது. வாற்பேத்தை2 ஆயிரத்தைக் குறித்தது. நல்லது பொல்லாதது போன்ற மனத்தினால் மாத்திரம் அறியப்படும் தன்மைகளைக் குறிப்பதற்குப் பேச்சு வழக்கில் சில ஒலிக்குறிகள் இருந்தன. இவ் வொலிக்குறிகள் உணர்த்துவன போன்ற பெயர்களுடைய சில பொருள்களுமிருந்தன. ஆகவே, மனத்தினால் அறியப்படும் தன்மைகளை விளக்குவதற்கும் அப் பருப்பொருள்கள் எழுதிக் காட்டப்பட்டன. நொவேர் என்பது நல்லது என்பதை உணர்த்தும். குழலுக்கும் நொவேர் என்று பெயர். ஆகவே நல்லது என்பதை உணர்த்தக் குழல் எழுதிக் காட்டப்பட்டது.
கோயிற் குருமார் ஓவிய எழுத்துகளிலிருந்து ஒருவகைச் சுருக் கெழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது கிரேக்க மொழியில் ஹெராடிக் (Heratic) எனப்பட்டது. இவ்வெழுத்தைப் பொது மக்கள் வாணிகத்தின் பொருட்டும், ஆவணங்கள் எழுதும் பொருட்டும் பயன்படுத்தினர். இதிலும் சுருக்கமான இன்னொரு வகை எழுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இது டெமொடிக் (Demotic) எனப்பட்டது. இதனை எல்லாப் பொதுமக்களும் பயன்படுத்தினர்.
இலக்கியம்
எகிப்தியரின் இலக்கியங்கள் ‘ஹெராட்டிக்’ எழுத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. நாலாவது அரச பரம்பரைக் காலத்து எழுத்தாளன் ஒருவனின் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அங்கு அடக்கஞ் செய்யப்பட்டவன் புத்தக நிலையத்தின் எழுத்தாளன் எனக் குறிக்கப்பட் டுள்ளது; அப்புத்தக ஆலயம் பழைய நூல் நிலையமோ அரசாங்க மூல ஆவண நிலையமோ என்று அறியமுடியவில்லை. சமாதி நூல்கள் எனப் பட்ட பழைய நூல்களே கிடைத்துள்ளன. இவை ஐந்தாம் ஆறாம் அரச பரம்பரையினரின் சமாதிச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. கி.மு. 2,000 முதல் எகிப்தில் பல நூல் நிலையங்கள் இருந்தன. நூல்கள் பைபிரஸ் தாளில் எழுதப் பட்டவை. அவை சுருட்டிச் சாடிகளில் வைத்துத் தட்டுகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. நூல்களின் பெயர்கள் சாடிகளில் எழுதி ஒட்டப் பட்டுள்ளன. இவ்வகைச் சாடி ஒன்றிற் காணப்பட்ட நூல் ஒன்றில் சின்பாட் என்னும் கடலோடியின் கதை காணப்படுகின்றது. எகிப்தியரின் இலக்கியங் களில் கதைகள் பல காணப்படுகின்றன. அவர்களின் பழைய இலக்கியங்கள் சமயத் தொடர்புடையன. பிற்கால இலக்கியங்களில் காதல், சமயம் முதலியன சம்பந்தப் பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. எகிப்தியர் இசையைப்பற்றி நன்கு அறிந் திருந்தார்கள்; பாட்டில் இசையும் உணர்ச்சியும் சிறந்தவை என அவர்களால் கொள்ளப்பட்டது. இவைகள் அமைந்தபோது அவைகளின் வெளித்தோற்றம் கவனிக்கப்படவில்லை. சில சமயங்களில் பாடல்களின் அடிகளின் முதற் சொற்கள் ஒரேவகையாக இருந்தன; சில பாடல்களின் சொற்கள் ஒரே வகையாக இருந்தன; ஆனால் சொற்களின் பொருள் வேறுபட்டிருந்தன.
எகிப்தில் வரலாறு மிகப் பழங்காலம் முதல் எழுதப்பட்டுவந்தது. எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட அரசரும் வரலாறுகளை எழுதி வந்தனர். படை எடுப்புக் காலங்களில் வரலாறு எழுதுவோர் அரசனுடன் சென்றார்கள். அவர்கள் அரசரின் வெற்றியைப் புகழ்ந்து எழுதினார்கள். வரலாறு எழுதுவது அழகுக் கலைபோல் கருதப்பட்டது. கி.மு. 2,500இல் எகிப்திய அரசரின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. எல்ல நாடு களிலும்போல எகிப்திலும் மொழி மாறத் தொடங்கிற்று. நெடுங்காலம் பழைய மொழியிலேயே நூல்கள் எழுதப்பட்டுவந்தன. மாணவர் அம் மொழியின் இலக்கணத்தையும் நிகண்டையும் கற்று அவைகளை மொழிபெயர்த்தார்கள். கி.மு. 14வது நூற்றாண்டில் புலவர்கள் புரட்சிசெய்து நூல்களை மக்கள் வழங்கும் மொழியில் எழுத ஆரம்பித்தார்கள். பின்னும் ஒரு முறை எழுத்து நடையும் பேச்சு நடையும் வேறு வேறாக மாறுபட்டன. அக் காலத்தில் பழைய இலக்கியங்கள் பேச்சு நடையில் மொழிபெயர்க்கப்பட்டன. இவ் வழக் காறும் மாற்றங்களும் கிரேக்க அராபிய உரோமன் மக்களிடையும் நிகழ்ந்தன.
கணிதமும் விஞ்ஞானமும்
எகிப்தில் கல்வி கற்றவர்கள் பெரிதும் குருமாராவர். இவர்கள் வாழ்க்கை கொந்தளிப்பின்றி இருந்தது. அவர்களுக்குக் கோயில்களில் எல்லா வாய்ப்புகளும் இருந்தன. எல்லா வகையான மூட நம்பிக்கைக ளிடையே அவர்களே விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தார்கள். அவர்களின் பழங்கதைகளில் தொத்1 என்னும் அறிவுக் கடவுள் எகிப்தை 3,000 ஆண்டு ஆண்டார் எனக் காணப்படுகின்றது. அவர் ஆட்சிக்காலத்தில் முன்பின் கி.மு. 18,000 வரையில் விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர்கள் நம்புகிறார்கள். இக் கடவுள் விஞ்ஞானத்தைப்பற்றி இருபத்தையாயிரம் பகுதிகளடங்கிய நூல் எழுதிவைத்தார்.
எகிப்திய வரலாற்று ஆரம்ப காலத்தில் கணக்கு அதிக வளர்ச்சி யடைந்திருந்தது. பிரமிட் சமாதி கட்டுவதற்கு அளவைப்பற்றிய கணக்கு அதிகம் தேவைப்பட்டது. எகிப்தியர் நைல் ஆற்று ஓரங்களில் தங்கிருந்தமை யால் அவர்கள் அவ்வாற்றின் வற்றுப் பெருக்குகளை அளந்து குறிப்பிட்டு வந்தார்கள். அளவுகாரரும் எழுத்தாளரும் எப்பொழுதும் ஆற்றினால் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களை அளந்து கணக்குச் செய்தார்கள். இதனால் நில அளவை தொடர்பான கல்வி வளர்ச்சியடைந்தது. இக் கல்வி எகிப்திலேயே உண்டானதென்பதை எல்லாப் பழைய மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
வான ஆராய்ச்சியாளர் கோயில்களிலிருந்து வான சோதிகளை நோக் கினார்கள். அவர்கள் பூமி தட்டையான நீண்ட சதுர வடிவுடையதென்றும் அதன் நான்கு மூலைகளிலும் மலைகளிருந்து வானத்தைத் தாங்குகின்றன என்றும் கருதினார்கள். அவர்கள் கிரகணங்களைக் குறித்துவைக்கவில்லை.
குருமார் தாம் அறிந்திருந்த வான சாத்திரக் கல்வியை மற்றவர்கள் அறியாதபடி மறைத்துக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வேறுபடுத்தி அறிந்தனர்; கிரகங்களும், நட்சத்திரங்களும் மக்களுக்கு நேரும் நன்மை தீமைகளுக்குக் காரணமாயுள்ளன என்று கருதினார்கள்.
அவர்கள் ஆண்டை மூன்று பருவ காலங்களாகப் பிரித்தனர். ஒன்று நீலநதியின் பெருக்குவற்றுங் காலம்; மற்றது பயிரிடுங் காலம்; மூன்றாவது அறுப்புக்காலம். அவர்களின் ஒவ்வொரு மாதமும் முப்பது நாள்கள் கொண்டது. பன்னிரண்டு மாதங்களுக்குப்பின் ஐந்து நாள்கள் சேர்க்கப் பட்டன. ஓர் ஆண்டு 365¼ நாள்களாகக் கொண்டு நாலு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளைச் சேர்த்து 366 நாள் ஓர் ஆண்டு எனக் கணக்கிடும் முறை யூலியர் சீசர் காலத்தில் (கி.மு. 46) உண்டாயிற்று.
எகிப்தியர், உடலைத் தைலமிட்டுப் பக்குவஞ் செய்து வந்தமையால் இவர்கள் மனித உடலைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவில்லை. இரத்தக் குழாய்கள், காற்றையும் நீரையும் சில நீர்ப்பொருள்களையும் கொண்டு சென்றன வென்றும், இருதயமும் குடலும் மனத்தின் உறைவிடமென்றும் நம்பினார்கள். எகிப்திய மருத்துவர் நெற்றி பிடரி கை கால் என்பவைகளைத் தொட்டுப் பார்த்து இருதயம் தொழிற்படுவதை அறிந்தார்கள்.
எகிப்திலே மருத்துவம் குருமாரிடத்தில் ஆரம்பித்தது. அவர்களின் நம்பிக்கைகள் மந்திர வித்தையில் தோய்ந்திருந்தன. மருந்துக் குளிகை களிலும் பார்க்கத் தாயத்துகளே நோயைப் போக்குவன என்றும், நோய்கள் பேய்கள் பிடிப்பதால் உண்டாகின்றன வென்றும் நம்பினார்கள். நோய்கள் மந்திர வித்தையால் போக்கப்பட்டன. ஒவ்வொரு மருத்துவனும் ஒவ்வொரு நோய்க்கு மருத்துவம் செய்தான். ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. ஒரு பைபிரஸ் ஏட்டில் பாம்புக்கடி முதல் பிள்ளையைப் பெற்ற பெண்ணுக்கு உண்டாகும் சுரம் வரையிலுமுள்ள நோய்களுக்கு எழுநூறு மருந்துகள் கூறப்படுகின்றன. சுத்தத்தினால் நோயைப் போக்கலாம் என எகிப்தியர் நம்பினார்கள். குளித்து முழுகி உடம்பைச் சுத்தமாக வைத்திருத்தல், விரதமிருத்தல், வாயாலும் வயிற்றாலும் போக மருந்து உட்கொள்ளுதல் போன்ற முறைகளை அவர்கள் கையாண்டார்கள். எகிப்தியர் திங்களில் மூன்று நாள்கள் அடுத்து வயிற்றால் போகும்படி மருந்து உண்டார்கள் என்றும், வாந்தி எடுக்கும் மருந்தையும் உட்கொண்டார்கள் என்றும், மலவாசல் மூலம் குழாய் வைத்து மலத்தை எடுக்கும் முறையைக் கையாண்டார்கள் என்றும் எரதோதசு கூறியுள்ளார்.
கட்டடம், ஓவியம், இசை முதலியன
பழைய கலைகளுள் கட்டடக் கலை முக்கியமுடையது. அது சமாதிக் கட்டடங்களை அலங்கரிப்பதிலும் வீடுகளின் வெளிப்புறங்களை அலங்கரிப் பதிலும் தொடங்கி வளர்ச்சியடைந்தது. வீடுகள் பெரும்பாலும் களிமண்ணால் கட்டப்பட்டன. மர வேலைப்பாடுகளும் இருந்தன. வீட்டைச் சுற்றி முற்றமும் முற்றத்தைச் சுற்றிச் சுவரும் இருந்தன. வெளி முற்றத்திலிருந்து கூரைக்குப் படிக்கட்டுகள் சென்றன. குடியிருப்பவர்கள் நாற்புறங்களிலுமுள்ள அறைகளுக்கு அப் படிகளால் இறங்கிச் சென்றார்கள். செல்வர்களின் வீடுகளோடு தோட்டங்கள் இணைந்திருந்தன. நகரங்களில் பொதுமக்கள் தங்கும் சோலைகள் இருந்தன. வீட்டுச் சுவர்களில் நிறமூட்டிய பாய்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. நிலத்துக்கு முரடான துணி விரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அதன்மீது இருந்தார்கள். பழைய எகிப்தியர் ஆறு அங்குலம் உயரமுள்ள மணைமீது குந்தியிருந்து உணவு உண்டார்கள். செல்வர் மெத்தை இடப்பட்ட நாற்காலிகளைப் பயன்படுத்தினர்.
கட்டடம் அமைக்கும் கல் மிக விலையுடையதாயிருந்தது. அரசரும் குருமாரும் கட்டடங்களைக் கல்லினால் அமைத்தார்கள். பிரபுக்கள் அதிகப் பணத்தையும் கட்டடம் அமைத்தற்கு வேண்டிய பொருள்களையும் கோவில் களுக்குக் கொடுத்தனர். பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் பிரமிட் சமாதி கட்டும் வழக்கம் நின்றுபோயிற்று. குநுப்கொதப (கி.மு.2,180) என்னும் அரசன் தூண்கள் பலவற்றை வரிசையாக நாட்டி விநோதமான சமாதி ஒன்றை அமைத்தான். இதைப் பின்பற்றி நைல் நதியின் மேற்குச் சரிவுகளில் ஆயிரம் வகையான கட்டடங்கள் எழுந்தன. வரலாற்றில் எகிப்தியரே மிகப்பெரிய கட்டடம் அமைப்போராயிருந்தனர். இவர்கள் பெரிய கற்சிற்பிகளுமாவர். செப்ரின் (Chepren) அரசனின் பிரமிட் சமாதிக்கு முன்னால் காணப்படும் மனிதமுகச் சிங்கம் எகிப்தியரின் சிற்பத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றது. இறந்தவரின் உருவச் சிலைகள் பெரும்பாலும் சமாதிக்குள் வைப்பதற்காகச் செய்யப்பட்டன. சிலைகள் செய்யவேண்டிய முறைகள் சமய சம்பந்தம் பெற்றிருந்தன. அவர்கள் உலோகம், கல் என்பவை களில் கடவுளர், அரசர், அடிமைகளின் வடிவங்களையும், விலங்குகளும், பறவைகளின் உருவங்களையும், வியக்கத் தக்கனவாகச் செய்தனர். சமாதிச் சுவர்களில் மிக அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. மரக்கலங்கள், மரஞ்செடிகள், பறவைகள், ஊர்வன, விளைநிலங்கள், மலைகள், கடல் உயிர்கள் போல்வன அவைகளுட் சில.
நெசவாளர் பலவகை ஆடைகளை நெய்தனர். வீடுகளில் பயன் படுத்தப்படும் பலவகை மரத்தளவாடங்கள் செய்யப்பட்டன. நாற்காலிகள் பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டன. ஆபரணச் சிமிழ், மணப்பொருள்களை இட்டு வைக்கும் பேழைகள் போன்ற அழகிய பொருள் கள் செய்யப்பட்டன. வெள்ளி, பொன், வெண்கலம், பளிங்கு முதலியவை களாற் செய்யப்பட்ட ஏனங்கள் மேசைகள் மீது வைக்கப்பட்டன.
கழுத்தணி, முடி, மோதிரம், முகம் பார்க்கும் கண்ணாடி, சங்கிலி முதலியவை வெள்ளி, பொன் முதலியவைகளாலும் நிறக்கற்களாலும் செய்யப்பட்டன. வீட்டு வேலை முடிந்ததும் பெண்கள் யாழ், குழல், வீணை முதலியவைகளை வாசித்தனர். கோயில்களிலும் அரண் மனைகளிலும் பாட்டு, கூத்து முதலியவை நடைபெற்றன. அரசன் இவைகளைப் பார்த்தும் கேட்டும் களிப்பதற்குப் பாடுவோரையும் ஆடுவோரையும் ஆயத்தஞ் செய்கின்ற வர்கள் பலர் இருந்தனர்.
சமயம்
எகிப்தியர் சமயத்தை எல்லாவற்றுக்கும் மேலாகக் கொண்டார்கள். இந்திய நாட்டிற்போல எகிப்திலும் தெய்வங்கள் மிகப் பலவாயிருந்தன. எகிப்தியரின் பெரிய கடவுள் விண். விண்ணில் இயங்கும் மீன்கள் வலிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. ஹதர் என்னும் பெரிய பசுக்கடவுள் விண்ணின் மீது நின்றது. அதன் பாதங்களில் தரை கிடந்தது. அதன் வயிற்றில் பதினாயிரம் விண்மீன்கள் கிடந்து அழகு செய்தன. நோம்ஸ் எனப்பட்ட சிற்றரசர்களின் தெய்வங்களும் அவைகளைப்பற்றிய பழங்கதைகளும் வெவ்வேறாக இருந்தன. விண் தெய்வம் சுப எனப்பட்டது. அது தரைமீது மெதுவாகப் படுத்திருந்தது. தரை, நூயிட் (Nuit) என்னும் பெண் தெய்வம் எனப்பட்டது. வானம், பூமி என்னும் இரண்டின் சேர்க்கையினால் எல்லாப் பொருள்களும் தோன்றின. இராசி களும் விண்மீன்களும் பெரிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. சாகு என்னும் கடவுள் தெய்வங்களை ஒரு நாளில் மூன்று முறை விழுங்கிற்று. இவ்வெட் என்னும் பெரிய தெய்வம் ஒன்று சந்திரனை விழுங்கிற்று. தேவர்கள் கோபித்தமையால் அது சந்திரனை வெளியே கக்கிற்று. கிரகணம் உண்டாவதை எகிப்தியர் இவ்வாறு விளக்கினர். ஞாயிறும் திங்களும் பெரிய தெய்வங்கள். ஞாயிறு இரா அல்லது ரீ எனப்பட்டது. அது ஒவ்வொரு காலையிலும் தோன்றும்; தெய்வத் தன்மையுடைய தோணியில் சென்று ஆகாச வீதியைக் கடக்கும்; ஒவ்வொரு மாலையும் மேற்கே மறைந்து போகும். ஞாயிறு ஆண்கன்று வடிவிலும் வழிபடப்பட்டது. வானத்துக் கூடாகத் தினம் பறந்து செல்லும் கழுகாகவும் கொள்ளப்பட்டது. கழுகு எகிப்திய சமய அரச அடையாளமாகும். எகிப்தியர் பல செடிகளைத் தூய்மை யுடையனவாகக் கருதினர். வனாந்தரத்தில் நிழல் செய்யும் பேரீந்து, பசுந்தரை களிற் காணப்படும் நீரூற்று, இளைப்பாறத் தகுந்த சோலைகள், மணலில் வளரும் அத்தி முதலியன பரிசுத்த முடையன. எகிப்தியர் அவைகளுக்கு வெள்ளரிக்காய், முந்திரிகைப் பழம், அத்திப்பழம் முதலியவைகளைப் பலியாகக் கொடுத்து வழிபட்டனர். வெண்காயத்தை அவர்கள் தெய்வமாகக் கொண்டனர்.
எருது, முதலை, கழுகு, பசு, வாத்து, வெள்ளாடு, ஆட்டுக்கடா, பூனை, நாய், கோழிக் குஞ்சு, தூக்கணங்குருவி, நரி, பாம்பு முதலியவை கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்டன. அவை கோயிலில் அலைந்து திரியும். கோயிலுக்குரிய விலங்குகள் வழிபடப்பட்டன. அவை இன்று இந்தியக் கோயில்களில் அலைந்து திரியும் கோயில் மாடுகள் போன்றவை.
ஆடும் எருதும் ஒசிரிஸ் என்னும் தெய்வத்தின் பிறப்புகளாகக் கருதப்பட்டன. இசிஸ் எகிப்தியரின் தாய்க்கடவுள். இரா என்னும் கடவுள் தெற்கே வாழ்ந்த மக்களால் அமன் எனப்பட்டது. ஒசிரிஸ், இசிஸ், ஓரஸ் என்னும் தெய்வங்கள் எகிப்தியரின் பெரிய கடவுளராவர். இரா, அமன், பிதா என்போர் எகிப்தியரின் மும்மூர்த்திகள். அரசனும் ஒரு தெய்வமாக இருந்தான். அவனுடைய கையில் கழுகும், நெற்றியில் பாம்பும் இருந்தன. அரசன் குருமாருக்குத் தலைவன். பெரிய விழாக்களில் அவனே ஊர்வலங்களின் முன்பு சென்றான். அவனைக் கடவுள் என மக்கள் நம்பினமையால் அவர்கள் அவனுக்குப் பணிந்து அடங்கி நடந்தார்கள். அவன் தனது வலிமையைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் உண்டாகவில்லை. குருமார் அரசனின் துணைவர்களாகவும், அரசாங்க உளவாளர்களாகவும் இருந்தனர். இவர்கள் மந்திர வித்தை தொடர்பான பல கிரியைகளை வகுத்திருந்தார்கள். மக்கள் கடவுளைக் கிட்டுவதற்குத் தாம் இன்றியமையாதவர்கள் எனக் கொண்டனர். குருவின் மகன் குருவாக இருக்க வேண்டும் என்னும் சட்டம் இருக்க வில்லை; ஆயினும் குருவின் மகன் குருவாக வந்தமையால் அவ் வகுப்புப் பெருகிற்று. அரசரின் ஆதரவினாலும் பொது மக்களின் பக்தியினாலும் குருமார், செல்வமும் அதிகாரமும் உடையவர்களாயினர். அவர்கள் காணியாளராகிய பிரபுக்களிலும், அரச குடும்பத்தினரிலும் பார்க்க மேலான நிலையில் இருந்தனர். தெய்வங்களுக்கு இடப்படும் பலிகள், காணிக்கை இவைகளால் அவர்களுக்கு நிறைய உணவு கிடைத்தது. கோயில் அவர்களின் விசாலமான வீடுகளாக இருந்தது. கிரியைகள் புரிவதாலும், கோயில் நிலங்களாலும் அவர்களுக்கு நிரம்பிய வருவாய் கிடைத்தது. இவர்களுக்கு எல்லா வரிகளும் நீக்கப்பட்டிருந்தன. போரில் சேவித்தல், கட்டாய வேலைகள் முதலியன இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடிய அதிகாரமும் செல்வமும் உடையவர்களாயிருந்தனர். கல்வி இவர்கள் வசம் இருந்தது. கல்வியைக் காப்பவர்கள் இவர்களே. இவர்கள் இளைஞருக்குக் கல்வி யளித்தார்கள். இவர்களுக்கு அதிகாரம் உண்டா வதற்கு இது முக்கிய காரணமாகும்.
எகிப்தியர் இறந்தவர்களின் உடல்களைப் பக்குவஞ்செய்து புதைத்து வைத்தார்கள். இவர்கள் நம்பிக்கைகளிலிருந்தே இறந்தவர் உயிர்த்தெழுதல் என்னும் கொள்கை கிறித்துவ மதத்திற் பரவிற்று. பரு உடலோடு சேர்ந்து நொய்ய உடல் ஒன்று இருக்கின்றதென்றும், மரண காலத்தில், பறவை கூட்டை விட்டுப் பறந்துபோதல் போல் அது உடலை விட்டுப் பறந்து செல்கின்ற தென்றும் இவர்கள் நம்பினார்கள். அந் நுண்ணிய உடல் கா எனப்பட்டது. கா வில் உயிர் தங்கியிருந்தது. கா வும் உயிரும் இறப்பதில்லை. உடலைப் பாதுகாத்து வைத்தால் கா நீண்ட காலம் இருக்கும்.
பாவம் சிறிது மில்லாத இறந்தவர்கள் கா உடலில் ஒசிரிஸ் என்னும் கடவுளுக்கு முன் வந்தால் எல்லா மகிழ்ச்சிகளும் உள்ள உலகில் எப் பொழுதும் வாழவிடப்படுவர். ஒசிரிசை அடைவதற்கு ஓடத்தில் ஏறிச்செல்லு தல் வேண்டும். பாவமில்லாத ஆடவரையும் மகளிரையும் மாத்திரம் ஓடக் காரன் ஓடத்தில் ஏற்றுவான். ஒசிரிஸ் என்னும் தெய்வத்துக்குமுன் சென்ற வுடன் அத் தெய்வம் ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும்; அவர்கள் சொன்ன உண்மையை அறிவதற்கு அவர்களின் இருதயத்தை ஒரு தட்டிலும் மற்ற தட்டில் ஒரு இறகையும் வைத்து நிறுக்கும். இந்தச் சோதனையில் தவறினவர்கள் எப்பொழுதும் சமாதி அறையில் தங்கும்படி திரும்ப அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் பசி தாகம் முதலியவைகளால் வருந்திக்கொண்டும் முதலைகளால் துன்பம் அடைந்துகொண்டும் தங்குவார்கள். ஞாயிற்றின் ஒளியைக் காணும்படி அவர்கள் வெளியே வருதல் முடியாது.
இச் சோதனையில் தேறுவதற்குக் குருமார் பல வழிகளை அறிந்திருந் தார்கள். சமாதி அறையில் பசி தாகத்துக்கு வேண்டிய உணவு, நீர் முதலியவை களையும் உதவிக்கு வேண்டிய வேலையாள்களையும் விட்டுவைப்பது ஒன்று. மற்றொன்று சமாதி அறையில் மீன், பருந்து, பாம்பு, வண்டு முதலிய வைகளைப் போல் செய்த உருவங்களை வைத்தல். குருமாரால் நன்கு மந்திரிக்கப்பட்டால் இவை எல்லாப் பகைகளையும், தீமைகளையும் ஓட்டும். இன்னொருமுறை மரணப் புத்தகத்தைப் புதைப்பது. இப் புத்தகத்தில் பல மந்திரங்களும் துதிகளும் எழுதப்பட்டுள்ளன. இவை ஒசிரிஸ் தெய்வத்தை மகிழ்விக்கத்தக்கன.
குருமார் நீதிகளை மக்களுக்குப் போதிப்பதற்குப் பதிலாகத் தாயத்துகளை விற்றார்கள்; மந்திர வித்தைகள் சம்பந்தமான கிரியைகள் புரிந்தார்கள். மரணமடைந்தவருக்கு வழியில் நேரும் நூற்றுக்கணக்கான இடையூறுகளை மரணப்புத்தகத்தால் வெல்லலாம் என அந் நூல் கூறுகின்றது. நேர்மையாக வாழ்தலிலும் பார்க்க மந்திரங்களை உச்சரிப்பதால் அதிக நன்மை உண்டாகும் என மக்கள் நம்பினார்கள்.
தேவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு எதிராக மந்திரங்களைப் பயன்படுத்தினர். எகிப்தியரின் இலக்கியங்கள் மந்திர வித்தைக்காரரைப்பற்றி அதிகம் கூறுகின்றன. அவர்கள் மந்திரத்தினால் குளங்களை வற்றச் செய்தார்கள்; துணியுண்ட உறுப்புகளை உரிய இடங்களில் பொருந்தும்படிச் செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் தீய ஆவிகளை ஓட்டும்படி ஒரு கடவுள் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் யாதும் ஒரு தெய்வத்துக்கு உரித்தாய் இருந்தன. ஒருவன் பிறந்த நாளையும் நேரத்தையும் கொண்டு வாழ்நாளில் அவனுக்கு என்ன நேரும் என்று அறியப்பட்டது. இறந்தவர்களை அவர்கள் செல்லும் உலகில் நன்மைப்படுத்தும் மந்திரங்கள் பல இருந்தன.
இக்கந்தன் என்னும் அரசன்
கி.மு. 1,380இல் இக்கந்தன் என்னும் அரசன் பட்டத்துக்கு வந்தான். இவன் நாலாம் அம்கொதெப் எனவும் அழைக்கப்பட்டான். பட்ட மெய்தியதும் இவன் கோயிற் குருமாருக்கு மாறாகப் புரட்சி செய்தான். கோயில்களில் ஆடுகள் பலியிடப்படுவதையும், வியபிசாரங்கள் நடப்பதை யும் வெறுத்தான். குருமார் மந்திரவித்தை, தாயத்துகள் விற்றல் முதலியவை களைக் கொண்டு வாணிபம் புரிதல், வெளிப்பாடு கூறுதல் முதலியவை அரசாங்க ஊழல்கள் என்றும், குருமாரின் வார்த்தைகள் மக்களுக்குத் தீமை விளைவிப்பன என்றும் துணிந்தான்; பல கடவுளர் வணக்கம் தீயது என்று அறைந்தான்; அதன் என்னும் ஒரே கடவுள் மாத்திரம் வழிபடப்படுதல் வேண்டுமெனக் கட்டளை செய்தான். அதன் கடவுள் எல்லா நல்ல குணங் களும், எல்லா ஆற்றலும், எங்கும் நிறைந்திருக்கும் இயல்பும் உடையர் எனக் கொள்ளப்பட்டார். அதன் வழிபாட்டுக் குரியனவல்லாத எல்லாக் கோயில் களையும் மூடும்படி அரசன் கட்டளையிட்டான்; தீப்ஸ் நகரம் புனிதமுடைய தன்று எனக்கொண்டு அகேரான் என்னும் நகரை அமைத்து அதைத் தலைநக ராகக் கொண்டான். குடிகள் குருமாரின் கட்டுகளினின்றும் விடுபட்டுச் சேமமாக வாழ்ந்தார்கள். செல்வமும் அதிகாரமும் மிகுந்த குருமாரை அரசன் ஒரே அடியில் வீழ்த்திவிட்டான். குருமார் திரை மறைவிலிருந்து அரசனுக்கு மாறாகச் சதி ஆலோசனைகள் செய்தனர்.
தூதன் காபன்
இக்கந்தன் மரணமான இரண்டு ஆண்டுகளின்பின் அவன் மகளின் கணவனான தூதன் காபன் ஆட்சியை ஏற்றான். இவன் குருமாரின் நண்பனாயிருந்தான். இப்பொழுது குருமார் முந்திய அரசன் செய்ததற்கு மாறாகத் தமது கொள்கைகளை நாட்டினர். இவனுடைய சமாதியில் அளவில்லாத விலையுயர்ந்த பொருள்கள் கிடைத்தன. அச் சமாதியில் கிடைத்த பொருள்களின் மதிப்பு 30,000 தங்க நாணயம் வரையிலாகும். இவனுடைய ஆட்சிபற்றி யாதும் தெரியவில்லை. இவனுக்குப்பின் ஹர்ம ஹால் ஆட்சி புரிந்தான்; முதலாம் சேதி என்பவன் இவனுக்குப்பின் அரசனா னான். கர்நாக் என்னும் இடத்தில் அபிசிபெல் மலையில் கட்டப்பட்ட இவ் வரசனின் சமாதி சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவனுக்குப்பின் இரண்டாம் இராம்சே ஆட்சி புரிந்தான். அவன் பாலத்தீனை வெற்றிகொண்டு அங்குநின்றும் பல யூதரை அடிமைகளாகக் கொண்டுவந்தான். பைபிளின் பழைய ஏற்பாட்டிலே யாத்திரை ஆகமத்தில் சொல்லப்படும் எகிப்திய அரசன் இவன் என்று கருதப்படுபவன். இறக்கும்போது இவனுக்கு நூறு புதல்வரும் ஐம்பது புதல்வியரும் இருந்தனர். இவனுடைய பிள்ளைகள் மிகப் பலராயிருந்தமையின் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்கள் தனிக் கூட்டத்தினராகப் பெருகியிருந்தார்கள்.
அரசனுடைய அதிகாரத்திலும் பார்க்க இன்னொரு கூட்டத்தினரின் அதிகாரம் மேலாக இருந்தது. அக் கூட்டத்தினர் குருமாராவர். எல்லா நாடு களிலும் அரசருக்கும் குருமாருக்குமிடையில் அதிகாரத்தின் பொருட்டுப் போட்டி யிருந்து வந்தது. ஒவ்வொரு போரிலும் கிடைக்கும் கொள்ளைப் பொருளின் பெரும் பகுதி குருமாருக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் இராம்சே காலத்தில் அவர்களிடம் 107,000 அடிமைகள் இருந்தார்கள். இது எகிப்திய சனத்தொகையில் முப்பதிலொருபகுதி; 750,000 ஏக்கர் நிலம் அவர்கள்வசம் இருந்தது. இது எகிப்தில் பயிரிடும் நிலம் முழுமையிலும் ஏழில் ஒரு பங்கு. அவர்களிடம் 500,000 ஆடுமாடுகளிருந்தன. அவர்கள் எகிப்திலும் சிரியாவிலுமுள்ள 169 நகரங்களின் வருவாயைப் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குருமாருக்கு 32,000 கிலோகிராம் பொன்னும், பத்து இலட்சம் கிலோகிராம் வெள்ளியும், 18,50,000 மூட்டை தானியங்களும் கொடுக்கப்பட்டன. கருவூலத்தைப் பார்த்தபோது வேலையாள்களுக்குக் கூலி கொடுக்க யாதும் எஞ்சியிருக்கவில்லை.
இந்நிலையில் அரசர் குருமாரின் அடிமைகளாதல் இயல்பேயாகும். இராம்சிட் காலத்தில் முதன்மைக் குரு அவனுடைய செங்கோலைப் பிடுங்கித் தானே ஆட்சிபுரிந்தான். அக் காலத்தில் பெரிய கோயில்கள் எழுந்தன. மூடக் கொள்கைகள் செழிப்படைந்தன. எல்லா வகையான முடிவு செய்வதற்கும் குருமார் நிமித்தம் பார்ப்பதைச் சிறப்பாகக் கொண்டனர். அயல்நாட்டவர் எகிப்தின் மீது படை எடுக்க ஆயத்தம் செய்யும் காலத்தில் நாட்டின் செல்வம் முழுமையும் குருமாரால் உறிஞ்சப்பட்டுவிட்டது.
எகிப்தின் வீழ்ச்சி
பாபிலோன், அசீரியா, பாரசீகம் முதலிய நாடுகள் பலமடைந்தன. எகிப்தோடு போட்டியிட்ட நாடுகள் ஒவ்வொன்றும் எகிப்தை வென்றன. கி.மு. 954இல் மேற்கு எல்லைப் பக்கங்களிலுள்ள இலிபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 722இல் எத்தியோப்பியர் தெற்கினின்றும் வந்து தம்மை முன் அடிமைப் படுத்திய எகிப்தியரைப் பழிவாங்கினர். கி.மு. 674இல் அசீரியர் எகிப்தை வென்று அதைத் தமது திறை நாடாக்கினர். கி.பி. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 322இல் அலக்சாந்தர் எகிப்தை மாசிடோன் இராச்சியத்தின் பகுதியாக்கினார். கி.மு. 30இல் எகிப்து, உரோம இராச்சியத்தின் பகுதியாக மாறிச் சரித்திரத்திலிருந்து மறைந்தது. கி.பி. 650இல் முகம்மதியர் எகிப்தை வென்று கெய்ரோ நகரை அமைத்தார்கள். இப்பொழுது எகிப்தியர் அராபியரோடு கலந்தார்கள். அவர்களின் மொழியும் அரபி மொழியோடு கலந் துள்ளது. எகிப்து, இப்பொழுது முசிலிம்களுடைய அதிகாரத்தில் இருக்கின்றது.
பாபிலோன்
சுமேரியாவும் அக்கேடியாவும் சேர்ந்த நாடு பாபிலோனியாவாகும். யூபிராதஸ் தைகிரஸ் ஆற்று ஓரங்களில் கிடக்கும் அழிபாடுகளை இன்று காண்போர்கள் அவ்விடம் செல்வமும் அதிகாரமும் நிறைந்த மக்களின் தலைநகராக இருந்ததென ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். பாபிலோனியா சாலதியா1 என்றும் அறியப்படும். பாபிலோனின் முதலரசன் ஹமுரபி (கி.மு. 2,123 - கி.மு. 2,081). இவன் செமித்திய குலத்தவன். அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்பட்டனர். இவனுக்குச் சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் சட்டங்களை அருளிச்செய்யும் காட்சியும், அச் சட்டங்கள் எழுதப்பட்ட கற்றூண் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் துணை கொண்டு அக்காலத்தில் வழங்கிய சட்டங்கள், மக்கள் வாழ்க்கை முதலிய பல செய்திகள் அறியப்படுகின்றன.
பாபிலோனிய மக்கள்2 செமித்தியர் போன்ற தோற்றமும், இருண்ட மயிரும், தாடியும் உடையவர்களாயிருந்தனர். ஆண் பெண் என்னும் இரு பாலாரும் மயிரை நீளமாக வளரவிட்டனர். இரு பாலாரும் பாதம் வரையும் மறைக்கக்கூடிய வெண்சணலாடை உடுத்தார்கள்; உடலுக்கு நறுமணம் பூசினார்கள்; பெண்கள் இடது தோள் வெளியே தெரியும்படி விட்டார்கள். ஆடவர்கள் இரு தோள்களையும் மறைத்துச் சட்டையிட்டார்கள். செல்வம் வளர்ந்தபோது ஆடைகளுக்குப் பலவகை நிறங்கள் ஊட்டப்பட்டன; கோடு, வட்டம், புள்ளிபோன்ற பலவகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன; மக்கள் காலுக்கு அழகிய செருப்புத் தரித்தனர்; ஆடவர் தலையில் பாகை வைத்தார்கள்; பெண்கள், கழுத்து மாலை, கைவளை முதலிய அணிகள் அணிந்தனர். ஆடவர் கையில் அழகிய கைத்தடிகளைக் கொண்டு திரிந்தனர். அவைகளின் தலைகளில் அழகிய வடிவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவர் களின் அரைப்பட்டியில் அழகாக வெட்டப்பட்ட முத்திரைகள் தொங்கின. இவை அவர்களின் கையெழுத்தாகப் பயன்பட்டன. குருமார் தமது தோற்றத்தை மறைப்பதற்கு உச்சியில் நீண்ட முனையுடைய தொப்பியை அணிந்தனர். நாகரிகத்தை உண்டாக்கும் அதிக செல்வம் அழிவுக்கு ஏது வாகும். செல்வத்தினால் கலைகள் வளர்கின்றன; மக்கள் உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்கின்றனர். அதனால் மக்களின் போர்க்குணம் மழுங்கி விடுகின்றது. அப்பொழுது வலியுடையவர்களும் பசியுடையவர்களுமாகிய வெளியே யுள்ளவர்கள் படை எடுக்கிறார்கள். பாபிலோனின் கிழக்கு எல்லையில் காசைரீசர் (Kassites) என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பாபிலோனியரின் செல்வத்தைக் கண்டு பொறாமையடைந்தார்கள். ஹமுரபி இறந்து எட்டு ஆண்டுகளுள் இவர்கள் பல தடவை பாபிலோன்மீது படை எடுத்து நாட்டைச் சூறையாடினார்கள். இறுதியில் அவர்கள் வெற்றியாளராய் அங்கு அமர்ந்தார்கள். அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் காசரீசர்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். அடுத்த நானூறு ஆண்டுகளில் ஆட்சி குழப்பம் அடைந்திருந்தது. அப்பொழுது அசீரியர் பாபிலோனை வென்று அதனை நினேவாவின் ஆட்சிக்குட்படுத்தினர். பாபிலோனியர் கலகம் செய்தபோது சென்னாச்செரிப் என்னும் அசீரிய அரசன் பாபிலோனை முற்றாக அழித்தான். மீதியர் தலையெடுத்தபோது அசீரியரின் பலம் குறைந் திருந்தது. நபோபொலசார் என்னும் பாபிலேனியன் மீதியரின் துணையைப் பெற்றுப் பாபிலோனை அசீரியரிடமிருந்து விடுத்தான். இவனுக்குப் பின் இவன் குமாரனாகிய நெபுசட்னேசர்(Nebuchadnezar) ஆட்சிபுரிந்தான். இவனே பழைய ஏழு வியப்புகளில் ஒன்று எனப்பட்ட தொங்கு தோட் டத்தை(Hanging gardens) அமைத்தான்.
தொழிலாளர்
பாபிலோனின் ஒருபகுதி காடாக இருந்தது. நெருங்கி வளர்ந்த புற்களினிடையே பாம்புகள் திரிந்தன. பாபிலோனிய அரசர் காடுகளில் சென்று சிங்கங்களோடு நேரிற் போர்செய்து அவைகளை வேட்டையாடினர். இது அரசரின் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது.
நிலத்தின் பெரும்பகுதி வாரக்காரராலும் அடிமைகளாலும் பயிரிடப் பட்டது. சில பகுதி நிலத்துக்குரிய குடிகளால் பயிரிடப்பட்டது. புதிய கற்காலத்திற்போல நிலம் பாரையினாலும் மண்வெட்டியினாலும் கிளறப் பட்டது. பிற்காலத்தில் கலப்பை பயன்படுத்தப்பட்டது. ஆற்றுவெள்ளம் வயலுட் பாயாதபடி ஒவ்வொரு வயலையும் சுற்றிப் பெரிய வரம்புகள் கட்டப் பட்டிருந்தன. ஆறு பெருகும்போது வெளியே வழிந்துஓடும் வெள்ளம் கால்வாய்கள் மூலம் குளங்களில் தேக்கி வைக்கப்பட்டது; வேண்டிய காலங்களில் மடைகளைத் திறந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. ஏற்றங்களால் இறைத்து நீர் பாய்ச்சுவதும் வழக்கமாயிருந்தது. நீர் தேக்கி வைக்கப்பட்ட குளம் ஒன்றின் சுற்றளவு 140 மைல்.
வயல்களில் பலவகைத் தானியங்கள் விளைந்தன; பலவகைப் பழ மரங்கள் செழித்து ஓங்கின. முந்திரிகை, ‘அலிவ்’ முதலியன பாபிலோனி லிருந்து கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிற் பரவின. நாட்டில் செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்கள் அரித்தெடுக்கப்பட்டன; மண்ணெண் ணையும் எடுக்கப்பட்டது. ஹமுரபி காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்களுக்குப் பதில் வெண்கல ஆயுதங்கள் செய்யப்பட்டன. உலோகங் களை உருக்கி வார்க்கும் தொழில் அறியப்பட்டிருந்தது. இவை வெளிநாடு களுக்குக் கொண்டுபோகப்பட்டன. வீடுகள், வைக்கோல் கலந்த களிமண்ணி னாலும், களிமண்ணில் அரிந்து காயவிடப்பட்ட கற்களினாலும், செங்கற்களாலும் எடுக்கப்பட்டன.
உள்நாட்டுப் போக்குவரத்துக்குக் கழுதை பூட்டிய வண்டிகள் பயன் படுத்தப்பட்டன. கி.மு. 2,100இல் எழுதிய பட்டையமொன்றில் குதிரையைப் பற்றி முதன்முதல் சொல்லப்பட்டுள்ளது. அது கிழக்குத்தேசக் கழுதை எனப்பட்டது. மத்தியதரை நாடுகளின் வணிகர் பாபிலோன் நகரில் கூடி னார்கள். பாபிலோனியர் நாணயங்களைப் பயன்படுத்தவில்லை; கோதுமை, தானியம், பொன்துண்டு, வெள்ளி முதலியவை நாணயங்களுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டன. கடன் வாங்கியவன் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிடின் அவனுடைய அடிமைகளை அல்லது பிள்ளைகளைக் கடன்காரன் பிடித்துக்கொள்ளப் பாபிலோனியச் சட்டம் அனுமதித்தது. ஆனால் அவன் அவர்களை மூன்று ஆண்டுகளுக்குமேல் வைத்திருத்தல் கூடாது. போர்களில் அகப்பட்ட பகைவர் அடிமையாக்கப்பட்டனர். பிற நாடுகளிற் சென்று கிராமங்களைத் தாக்கி அடிமைகளைப் பிடித்து வாணிகம் புரிவோரும் இருந்தனர். பட்டினங்களிலுள்ள வேலைகள் அடிமைகளால் செய்யப்பட்டன. பெண் அடிமைகள் தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் தலைவனின் தயவில் தங்கியிருந்தார்கள்; தலைவன் மூலம் பிள்ளைகளைப் பெற்றார்கள். அடிமைகள் கடனுக்காக ஈடு வைக்கவும் விற்கவும் பட்டனர். அவர்கள் இருப்பதிலும் இறந்துபோதல் இலாபம் எனத் தலைவன் நினைத் தால் அவன் அவர்களைக் கொன்றுவிடலாம். தப்பி ஓடிய அடிமையை ஒருவரும் வீட்டில் மறைத்து வைத்திருத்தல் கூடாது. அவ் வடிமையைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. அடிமைகள் அல்லாத பொதுமக்களைப்போல இவர்களும் போருக்கு அல்லது பொது வேலைகளுக்குத் திரட்டப்பட்டார்கள். அடிமை ஒருவன் அடிமை யல்லாத பெண்ணை மணந்தால் அவனுடைய பிள்ளைகள் அடிமைகளாக மாட்டார்கள். தலைவன் விரும்பினால் அடிமையை விடுதலை செய்யலாம்.
சட்டம்
அரசனால் பாபிலோன் ஆளப்பட்டது. காணியாளராகிய பிரபுக்கள் அரசனுடைய துணைவர்களாகவிருந்தனர். அப் பிரபுக்களின் அதிகாரம் சிறிதுசிறிதாக மறைதலும் வணிகராகிய செல்வரின் அதிகாரம் அதிகரித்தது. இவர்கள் அரசனுக்கும் பொதுமக்களும் இடைப்பட்ட நிலையிலுள்ளவர் களாவார். அரசனுக்குப் பின் நாடு அவன் விரும்பிய அவன் புதல்வர்களுள் ஒருவனைச் சேர்ந்தது. ஆட்சி அரசனால் அமைக்கப்பட்ட பிரபுக்கள் சபையால் நடத்தப்பட்டது.
ஹமுரபி அரசனின் சட்டங்கள் கையாளப்பட்டன. தெய்வத்தின் பெயரால் நடத்தப்படும் சில சோதனைகளால் சில குற்றங்கள் முடிவு செய்யப்பட்டன. ஒருவன் மந்திர வித்தைக்காரனென்றோ, ஒருத்தி பரத்தை என்றோ குற்றஞ் சாட்டப்பட்டால் அவர்கள் யூபிராதஸ் ஆற்றில் எறியப் பட்டார்கள். நன்றாக நீந்தக் கூடியவர் சார்பில் கடவுள் இருந்தார். மந்திர வித்தைக்காரன் நீரில் மூழ்கி இறவாவிடின் குற்றஞ் சாட்டியவனின் சொத்தை அவன் பெற்றான். பரத்தைக் குற்றஞ் சாட்டப்பட்டவள் இறந்துவிட்டால், அவள் பரத்தையாவாள்! பிழைத்தால் குற்றமற்றவளாவாள். குருமார் நீதிபதி களாவர். கோயில்களில் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டன. ஒருவன் இன்னொரு வனின் கண்ணையோ பல்லையோ ஊனப் படுத்தினால் அவனுக்கு அதே தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வீடு விழுந்து அதனை வாங்கியவனைக் கொன்றுவிட்டால், அதனைக் கட்டினவன் அல்லது கட்டுவித்தவன் மரண தண்டனை பெற்றான். சிறுமி ஒருத்தியை ஒருவன் அடித்துக் கொன்றுவிட்டால் அவனுடைய சிறுமி அவ்வாறு கொல்லப்பட்டாள். காலத்தில் தண்டனை களுக்குப் பதில் பணம் நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. தந்தையை ஒருவன் அடித்தால் அவனுடைய கைகள் வெட்டப்பட்டன. சத்திர வைத்தியங் காரண மாக நோயாளி இறந்தால் அல்லது அவனுடைய கண்கள் பழுது அடைந் தால் மருத்துவனின் கைவிரல்கள் நறுக்கப்பட்டன. கற்பழித்தல், பெண் களைக் கடத்திச் செல்லுதல், கொள்ளை, திருடு, வேறு கணவனை மணத் தற்குக் கணவனைப் பெண் கொலை செய்தல், பெண்குரு மதுக்கடைகளில் நுழைதல், ஓடிப்போன அடிமையை வீட்டில் வைத்திருத்தல், போரில் பயந்து ஓடுதல், வீட்டுப் பெண் கவனக்குறைவாயிருத்தல் அல்லது சிக்கனமில்லாது செலவு செய்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹமுரபியின் சட்டத்தில் கொத்தர், செங்கல் சூளையிடுவோர், தையற்காரர், கற்கொத்தர், தச்சர் ஓடக்காரன், இடையன், கூலியாள் முதலியோரின் கூலிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சமபங்காக அடைந்தது. கணவன் இறந்தபின் பெண் தனது மரணம் வரையில் குடும்பத் தலைவியாக இருந்தாள். குருமார் எழுத்தாளராக வேலைகள் புரிந்தனர். ஒருவன் மற்றொருவனைக் கொலைக்குற்றஞ் சாட்டி அக் குற்றத்தை உறுதிப் படுத்தாவிட்டால் குற்றஞ் சாட்டியவன் கொலைத்தண்டனை அடைந்தான். அரசனுடைய நீதிபதிகள் அடங்கிய விசாரணை சபை ஒன்று பாபிலோன் பட்டினத்தில் இருந்தது. சில சமயங்களில் அரசனே மேல் விசாரணைகளை நடத்தினான்.
தெய்வங்கள்
அரசனுடைய அதிகாரம் சட்டங்களாலும், அதிகாரிகளாலும், குருமாராலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அரசன் கடவுளின் சார்பாளனாக (Agent) இருந்தான். கடவுள் பெயரால் வரிகள் விதிக்கப்பட்டன. குருமாரால் அரச அதிகாரம் வழங்கப்படும் வரையில் அரசனை உண்மையான அரசனாக மக்கள் கருதவில்லை. இவ்வகை அதிகாரம் வழங்கும் பொது குருமார் மார்டுக் என்னும் கடவுளை அலங்கரித்து அதனை ஊர்வலம் செய்தார்கள். அப்பொழுது அரசன் குருவைப்போல் உடை உடுத்தப்பட்டான். சுமேரிய பற்றேசி என்னும் கோயிற் குருமாராகிய சிற்றரசர் முதல் நெபுச்சட்னேசர் வரையில் நாடு குருமார் அதிகாரத்துக் குட்பட்டிருந்தது. தலைமுறைதோறும் கோயில்களின் செல்வம் வளர்ந்தது. தெய்வங்களின் தயவைப் பெறும் பொருட்டு அரசர் கோயில்களைக் கட்டினார்கள்; அவைகளுக்கு வேண்டிய அடிமைகளையும், தளவாடங்ளையும் கொடுத்தார்கள்; பெரிய நிலங்களை அவைகளுக்கு மானியங்களாக விட்டார்கள். போர்களில் சிறைபிடித்த அடிமைகளின் முதற் பகுதி கோயிலுக்குக் கொடுக்கப் பட்டது; கொள்ளைப் பொருள்களும் அவ்வாறு கொடுக்கப்பட்டன. பேரீந்தின் பழம், தானியம் போன்ற பொருள்கள், சில நிலங்களிலிருந்து கோயில்களுக்குக் கிடைத்தன. இவ்வாறு கிடைக்கத் தவறியபோது நிலங்கள் கோயில்களால் மேற்பார்க்கப் பட்டன. இவ்வாறு நிலங்கள் குருமாரின் கைக்கு மாறின. செல்வரும் வறியரும் இவ்வுலக வாழ்வில் தமது செம்மையை விரும்பிக் கோவில் களுக்கு அதிகப் பொருளைக் கொடுத்தார்கள். கோயிற் களஞ்சியங்களில் பொன், வெள்ளி, வயிரம், மணிகள் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் குவிந்தன. குருமார் இச் செல்வத்தைத் தாம் நேராகப் பயன்படுத்த முடியா திருந்தது. ஆகவே அவர்கள் பயிர்த்தொழில், கைத்தொழில் நடத்துவோ ராகவும், வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவோராகவு மிருந்தனர். அவர் களிடத்தில் பெரிய நிலங்கள் இருந்தன. அவைகளில் வேலை செய்வதற்கு அடிமைகளும் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளை மற்றவர்களிடத்தில் வேலை செய்யும்படி விட்டுக் கூலி பெற்றனர். குருமார் பெரிய வணிகராயு மிருந்தனர்; கோயிலிற் கிடைக்கும் காணிக்கைப் பொருள்கள் கோயிலிலுள்ள கடைகளுக்கு விற்கப்பட்டன. பலர் தமது உடமைகளை அவர்களிடம் நம்பிக்கை யிருந்ததால் கொடுத்து வைத்தார்கள். அவர்கள் ஆவணங்கள் எழுதுவோராகவும், வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிப்போராகவும் இருந்தனர்.
சில சமயங்களில் அரசன் கோயிற் பணத்தைப் பயன்படுத்தினான். ஆனால் இது ஆபத்தான செயலாக விருந்தது. கோயிற் சொத்தில் ஒரு துரும்புதானும் பயன்படுத்துகின்றவர்கள் மீது குருமார் கொடிய சாபங்களைப் பொழிந்தார்கள் அரசனுக்குப் பொதுமக்களிடமுள்ள அதிகாரத்திலும் மேலாகக் குருமாருக்கு இருந்தது. அரசன் இறந்துபோகின்றவன். கடவுளர் எப்பொழுதும் இருப்பவர். குருமார் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்களல்லர். அவர்களுக்கு வரிகளுமில்லை; போரில் கலப்பதால் நேரும் துன்பமும் இல்லை. வணிகர் நாட்டைச் செல்வத்தால் செழிப்படையச் செய்தார்கள். குருமார் அதனை அநுபவித்தார்கள்.
பாபிலோனில் பல தெய்வங்கள் இருந்தன. கிறித்துவுக்குமுன் ஒன்ப தாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அங்கு 65,000 கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு பட்டினத்திலும், கிராமத்திலும் பல தெய்வங்கள் இருந் தன. ஞாயிற்றுக் கடவுள் சமாஷ் எனவும், திங்கட் கடவுள் நன்னர் எனவும் கூறப்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத் தெய்வம் இருந்தது. அவை களுக்குக் காலையிலும் மாலையிலும் பலியிடப்பட்டது. முன்பு ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப்பட்ட மார்டுக் இப்பொழுது தேவர்களுக்கு அரசன் ஆனான்.
சுவர்க்கத்தில் தேவர்கள் மாத்திரம் வாழ்ந்தார்கள். இறந்தவர் அரலு என்னும் நரகத்தில், கையும் காலும் கட்டுண்டு குளிரால் நடுங்கிக்கொண்டும், பசி தாகங்களால் வருந்திக்கொண்டும் இருந்தார்கள். இவர்களின் புதல்வர் சமாதியில் காலந்தோறும் உணவை வைத்தாலன்றி இவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இவ்வுலகில் கெட்ட வாழ்க்கை நடத்தியவர்களுக்கு அதிக தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இவர்களின் உடலில் குட்ட நோயும் பிற நோய்களும் உண்டாயின.
பிணங்கள் நில அறைகளில் புதைக்கப்பட்டன; சில கொளுத்தப் பட்டன. பிணங்கள் தைலமிட்டுப் பக்குவஞ் செய்யப்படவில்லை. கூலிக்கு அழுவோர் அவைகளைக் கழுவி, வாசனை பூசி, உடுத்தி, கண்ணுக்கு மை எழுதி விரல்களில் மோதிரமிட்டு அலங்கரித்தார்கள். பெண் பிணங்களின் பக்கத்தே வாசனைப் புட்டிகள், சீப்பு, மை தீட்டுங் குச்சி, கண்ணுக்குத் தீட்டும் மை முதலியன வைக்கப்பட்டன. நல்ல முறையாகப் பிணங்கள் புதைக்கப் படாவிட்டால் இறந்தவர் இருப்பவர்களுக்குத் துன்பம் விளைவிப்பர்; உணவுக்காக அலைந்து திரிவர்; நாட்டில் கொள்ளை நோயை உண்டாக்குவர் என எண்ணினர். இவ் வச்சங் காரணமாகவே பாபிலோனிய மக்கள் குருமாருக்கும் கடவுளருக்கும் நல்ல உணவுகளை அளித்து வந்தார்கள்.
கடவுளுக்கு உணவும் நீரும் கொடுக்கப்பட்டன; ஆட்டுக்குட்டி பலி யிடப்பட்டது. ஆட்டுக்குட்டி மனிதனுக்குப் பதில் இடப்படும் பலி. குருமார் புரியும் பலவகைக் கிரியைகளோடு பலியும் இடப்பட்டது. ஒழுங்குபட்ட வாழ்க்கையிலும் பார்க்க முறையான கிரியையே மேலானது எனக் கொள் ளப்பட்டது. ஒருவனுடைய கடமை கோவில்களுக்கு முறையாகப் பலிக ளிட்டுச் சரியான துதிகள் பாடுவதாகும். ஒருவன் விழுந்து கிடக்கும் எதிரியின் கண்களைப் பிடுங்கிவிடலாம்; கைகளை வெட்டி விடலாம்; அவனுடைய இறைச்சியை அறுத்து வறுக்கலாம்; அவைகளைக் குறித்துக் கடவுள் வெறுப்படைய மாட்டார். குருமார் கடவுளுக்கு எதிரில் சாம்பிராணிப் புகை இட்டார்கள்; கடவுளரை அழகிய உடைகளாலும் அணிகலன்களாலும் அலங்கரித்தார்கள்; குருமார் அவர்கள்மீது பல துதிகளைப் பாடினர். சில சமயங்களில் பலர் ஒன்றுசேர்ந்து நின்று பாடினர்.
பாபிலோனிய சமய நூல்களும் துதிகளும் சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. கத்தோலிக்கக் கிறித்துவக் கோயில்களில் இலத்தின் மொழி பயன்படுத்தப்படுவதுபோல, சுமேரிய மொழி பயன்படுத்தப்பட்டது. துதிகள் பூதங்களை ஓட்டின. இவை பழைய மந்திர வித்தை தொடர்பாக எழுந்தவை. பூதங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தாயத்துகள், மந்திரங்கள் எழுதிய உலோகத் துண்டுகள் கடவுளரின் வடிவங் கள் முதலியன உடம்பில் அணியப்பட்டன; சிறிய கற்கள் கயிற்றில் அல்லது சங்கிலியில் கோத்துக் கழுத்தில் கட்டப்பட்டன. கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய கயிறுகள் நோக்கத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டன. பரிசுத்த மான தைகிரஸ், யூபிராதஸ் ஆறுகளின் நீரைத் தெளிப்பதாலும் பூதங்கள் விலகின. அசுர் பானிப்பாலின் நூல்நிலையத்தில் கிடைத்த களிமண் ஏடு களில், சோதிடம், கனவின் பலன், சகுனங்களின் பலன் போன்றவைகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பலியிடப்பட்ட விலங்கின் ஈரலைப் பார்த்துப் பாபிலோனியக் குருமார் வருங் காரியம் கூறினார்கள். இவ் வழக்கம் கிரேக்கக் குருமாராலும் கையாளப்பட்டது. நிமித்தம் பார்ப்பவனாவது கோவிற் குருவாவது சகுனம் பார்த்துப் பலன் கூறுவதன் முன் அரசன் போருக்குச் செல்லமாட்டான்.
இலக்கியம்
பாபிலோனிய வாணிகம் சட்ட சம்பந்தமான ஒழுங்கு பெற்றிருந்தது. மெம்பிஸ், தீப்ஸ் நகரங்களிலிருந்தது போலப் பாபிலோனில் எழுத்தாளர் பலர் இருந்தார்கள். அவர்கள் ஈரமான களிமண் தட்டுக்களில் நுனி முக்கோணமாக வெட்டப்பட்ட எழுதுகோலால் எழுதினார்கள். எழுதப் பட்டது திருமுகமாயின் அது களிமண் உறையில் இட்டு எழுதியவனின் முத்திரை மேலே பொறிக்கப்பட்டது. கோயில்களிலும் பிறவிடங்களிலும் நூல்நிலையங்கள் இருந்தன. களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட நூல்கள் சாடிகளில் அடுக்கி ஒழுங்குபடுத்தித் தட்டுக்களில் நிரையாக வைக்கப் பட்டன. போர்சிப்பா நூல் நிலையத்திலிருந்து நூல்கள் படியெடுத்து அசுர் பானிப்பாலின் நூல் நிலையத்தில் வைக்கப்பட்டன. அசீரியாவில் காணப் பட்ட 30,000 களிமண் ஏடுகளின் மூலம் பாபிலோனியரின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் அறியப்பட்டன.
நீண்ட காலம் பாபிலோனிய எழுத்துகள் வாசிக்கப்படாமல் இருந்தன. ஹென்றி இரவிலின்சன் என்னும் ஆங்கிலர் பன்னிரண்டு ஆண்டுகளாக முயன்று 1847இல் அவ் வெழுத்துகளை வாசித்தார். பாபிலோனிய எழுத்துகள் சுமேரிய அக்கேடிய எழுத்துகளின் செமித்திய முறையான வளர்ச்சியால் தோன்றியவை. தொடக்கத்தில் நூல்கள் சுமேரிய மொழியில் எழுதப்பட்டன. காலத்தில் அம் மொழி மாறுதலடைந்தது. பழைய புனித மொழியாகிய சுமேரியத்திலிருந்து நூல்களைப் பாபிலோனிய மொழிப்படுத்துவதற்கு அகராதிகளும் இலக்கணங்களும் செய்யப்பட்டிருந்தன. நினேவா நூல் நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் ஏடுகள் பெரும்பாலும் சுமேரிய, பாபிலோனிய அசீரிய மொழி அகராதிகளாகக் காணப்படுகின்றன. அவ் வகராதிகள் அக்காட் அரசனாகிய சார்கன் காலத்தில் செய்யப்பட்டவை.
சுமேரியத்திலும் பாபிலோனியத்திலும் எழுத்துகள் சொல்லின் பகுதி களாக இருந்தன. பாபிலோனியத்துக்குச் சொந்தமான எழுத்துக்கள் இல்லை; சொல்லின் பகுதிகளை உணர்த்த 300 அடையாளங்கள் வரையில் இருந்தன. இவ்வடையாளங்கள் மூலம் கணக்கு, சமயம், வாணிகம் போன்ற பாடங்கள் கோயிற் குருமாரால் மாணவருக்குப் பயிற்றப்பட்டன. அழிபாடு ஒன்றில் பள்ளிக்கூட மாணவர் பார்த்து எழுதிய நீதிவாக்கியங்கள் காணப்பட்டுள்ளன. பாபிலோனிய எழுத்துகள் வாணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. விலங்குகளைப் பற்றிய கற்பனைக் கதைகள், பாடல்கள், சமயக் கிரியைகள், விளக்கங்கள் போன்றவை எழுதப்பட்ட ஏடுகள் பல கிடைத்துள்ளன. அரசாங்க வரலாறுகள், அரசரின் சமயப்பற்று, அவர்களின் வெற்றிகள் போன்றவைகளைக் கூறுகின்றன. பெரோசஸ் (கி.மு.280) என்னும் பாபிலோனிய வரலாற்றாசிரியர் படைப்புக் காலம் முதல் மனிதனுடைய வரலாற்றைக் கூறியுள்ளார். பாபிலோனின் முதல் அரசன் கடவுளால் தெரியப் பட்டான். அவன் பெரிய வெள்ளப்பெருக்கு வரையில் 36,000 ஆண்டுகள் ஆண்டானென்றும் உலகம் தொடங்கி 691,200 ஆண்டுகளாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கம்
கோயில்களில் தேவதாசிகள் இருந்தனர். மணங்கள் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டன. மணமகன் பெண்ணின் தந்தைக்கு வெகுமதி அளித் தான். பெண்ணின் தந்தை பெண்ணுக்கு அவ் வெகுமதியிலும் பார்க்க அதிக பெறுமதியுள்ள சீதனம் கொடுத்தான். பாபிலோனியன் ஒருவன் ஒரு பெண்ணையே மணந்தான். வியபிசாரக் குற்றத்தோடு சம்பந்தப்பட்ட இரு பாலாரும் ஆற்றில் எறியப்பட்டார்கள். ஒருவன் பெண்ணின் சீதனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் திருமண நீக்கம் செய்துகொள்ளலாம். கணவன் கொடுமையாக நடத்துகின்றான், விசுவாச மில்லாதிருக்கின்றான் எனப் பெண் அத்தாட்சிப் படுத்தினால் அவள் கணவனைக் திருமண நீக்கம் செய்து கொள்ளலாம்.
பெண்கள் ஆடவரைப்போல வெளியே சென்றார்கள். பெண்களிடம் சொத்து இருந்தது. அவர்கள் அதனைத் தாம் விரும்பியவாறு செய்ய உரிமை பெற்றிருந்தார்கள். பெண்கள் சிலர் வாணிகம் புரிந்தனர்; சிலர் எழுத்தாளராக இருந்தனர். உயர் குடும்பங்களில் பெண்கள் வீட்டில் தனியிடங்களில் வாழ்ந்தனர். அவர்கள் வெளியே சென்றபோது அண்ணகரும் வேலையாள்களும் உடன் சென்றனர். தாழ்ந்த வகுப்பினர் அடிமைகள் போல் வாழ்ந்தனர். எகிப்தியர், பாபிலோனிய மக்களை அதிக நாகரிகம் அடையாதவர்கள் எனக் கருதினர்.
கலைகள்
பாபிலோனியரின் வாணிகம், பொழுதுபோக்கு, கடவுள் பத்தி முதலிய வைகளை வெளியிடும் சின்னங்கள் காணப்படுகின்றன. மினுக்கஞ் செய்யப் பட்ட செங்கற்கள், வெண்கலம், இரும்பு, வெள்ளி முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட பொருள்கள், நுட்பமான தையல் வேலைகள், மிருதுவான துணிகள், அழகிய சாயம் ஊட்டிய உடைகள், கம்பளங்கள், மேஜைகள், படுக்கைகள், நாற்காலி போன்றவை பாபிலோனியரின் நாகரிகத்தை விளக்கு கின்றன. பலவகை அணிகலன்கள் காணப்படுகின்றன. தெய்வ உருவங்கள் பொன்னாற் செய்யப்பட்டன. இசைக் கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. குழல், யாழ், வீணை, மேளம், கொம்பு, நாணற்குழல், எக்காளம், கைத்தாளம், மத்தளம் என்பன அவைகளுட் சில. கோயில்களிலும், அரண்மனைகளிலும், செல்வரின் விருந்துகளிலும் பாடகர் தனித்தும், பலர் ஒன்று கூடியும் பாடினார்கள்.
பாபிலோனில் ஓவியம் எழுதுதல் தனிக் கலையாக வளரவில்லை. சுவர்களில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை எகிப்திய சமாதிச் சுவர் களிற் காணப்படுகின்றவைபோல நிறங்களால் எழுதப்படவில்லை. சிற்பக் கலையும் நன்றாக வளர்ச்சியடையவில்லை. உருவங்களின் முக இரேகைகள் பெரும்பாலும் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. போரிற் பிடிக்கப் பட்டவர்களைக் காட்டும் சிற்பங்களின் முகங்கள் ஒரே வகையாகக் காணப் படுகின்றன.
பாபிலோனியக் கட்டடங்கள் தரைக்கு மேலே சில அடிகளே உயர்ந் திருக்கின்றன. கோயில்களையோ அரண்மனைகளையோ காட்டும் ஓவியங் களும் சிற்பங்களும் கிடைக்கவில்லை. வீடுகள் களிமண்ணால் கட்டப் பட்டன. செல்வர் செங்கல்லைப் பயன்படுத்தினர். வீடுகளுக்குச் சன்னல்கள் இருக்கவில்லை. வீடுகளின் கதவுகள் வீதியை நோக்கி இருக்கவில்லை. உள் முற்றத்தை நோக்கியிருந்தன. மூன்று அல்லது நான்கு மாடிகளுடைய வீடுகளும் இருந்தன. கோயில் வீடுகளைப்போலவே சதுரமாக விருந்தது. கோயிலின் மேலே ஏறிச் செல்வதற்கு சங்குப் புரிபோல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட வழி வெளியே இருந்தது. இது இக் கடவுளின் உயரமான வீடாகும். வான ஆராய்ச்சித் தொடர்பாகவும் இது பயன்படுத்தப்பட்டது. அதன் உச்சியிலிருந்து குருமார் விண்மீன்களை நோக்கினார்கள். போர்சிப்பா விலிருந்த இவ்வகைக் கோபுரம் ஏழு மண்டலங்களின் இருப்பிடம் எனக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. ஒவ்வொரு மாடியும் வெவ்வேறு நிறம் தீட்டப்பட்டிருந்தது. கீழே உள்ள மாடி சனிக்கு உரியது. இது கறுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. அதற்கு மேலுள்ளது வெள்ளிக்குரியது. அது வெள்ளையா யிருந்தது. மூன்றாவது மாடி வியாழனுக் குரியது. இம் மாடி கருஞ்சிவப்பு நிறம் ஊட்டப்பட்டது. புதனுக்குரிய நாலாவது மாடி நீல நிறமுடையது. ஐந்தாவது பச்சை கலந்த சிவப்பு நிறமுடையது. இது செவ்வாய்க்குரியது. ஆறாவது மாடி வெள்ளி நிறம் பூசப்பட்டிருந்தது. இது திங்களுக்குரியது. ஏழாவது மாடி பொன்னிறமானது. இது ஞாயிற்றுக்குரியது. இவ்வாறு ஒவ்வொரு மாடியும் வாரத்தின் ஒவ்வோர் நாளைக் குறிப்பதா யிருந்தது.
செங்கற்கள் சிலவற்றின் வெளிப்புறங்கள் மினுக்கஞ்செய்து நிறங்கள் பூசப்பட்டிருந்தன. அவைகளில் விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டிருந்தன. வெளிப்பக்கம் அழுத்தஞ் செய்யப்பட்டது அழகுக்காக மாத்திரமன்று, வெய்யில் மழைகளால் அவை பழுதடையாமல் இருப்பதற்குமாகும்.
விஞ்ஞானம்
வாணிகத்தால் கணக்கு வளர்ச்சி யடைந்தது. கணக்கு சமயத்தோடும், வான ஆராய்ச்சியோடும் தொடர்பு பெற்றிருந்தது. நீதிபதிகள், அரசாங்க நிர்வாகிகள், பயிர்த்தொழிலுக்குத் தலைவர், வருங்காலம் சொல்வோர், வான ஆராய்ச்சியாளர் எல்லோரும் குருமாராகவே யிருந்தனர். அவர்களே விஞ்ஞானம் தோன்றுவதற்குக் காரணராயிருந்தார்கள். அவர்கள் அறிந்திருந்த விஞ்ஞான முறைகளைக் கிரேக்கர் சமயத் தொடர்பாகக் கையாண்டனர்.
பாபிலோனியக் கணிதம் வட்டத்தை 360 பாகைகளாகவும், ஆண்டை 360 நாட்களாகவும் பிரித்தது. இதிலிருந்தே அறுபதாகக் கணக்கிடும் வழக்கு உண்டாயிற்று. அறுபதாகக் கணக்கிடுவதிலிருந்து பன்னிரண்டாகக் கணக்கிடும் வழக்குப் பிற்காலத்தில் தெரிந்தது. நில அளவைப்பற்றிய கணக்கும் பாபிலோனில் வளர்ச்சியடைந்திருந்தது. வான ஆராய்ச்சியில் பாபிலோனியர் புகழ்பெற்று விளங்கினார்கள். பாபிலோனியர் வனாந்தரத்துக் கூடாகச் செல்லும் வணிகர் கூட்டத்துக்கும் கடல் வழியாகச் செல்லும் கப்பல் களுக்கும் வழிகாட்டுவதற்கு வான ஆராய்ச்சி செய்யவில்லை; மக்களுக்கு நேரும் வாய்ப்பு, வாய்ப்பின்மைகளை அறிவதற்கு ஆராய்ந்தார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகவும், ஒவ்வொரு கிரகத்தின் செலவும் வருங்காரியத்தை அறிவிப்பதாகவும் கொள்ளப்பட்டன. சோதிட மறிந்த குருமார் அரசரிடமும், பொது மக்களிடமு மிருந்து அதிக ஊதியம் பெற்றனர்; சார்கன் காலத்தில் சோதிட நூல்கள் எழுதப் பட்டன என்று பழைய வரலாறு கூறுகின்றது. நிறைந்த சோதிடப் பழக்கமின்றி ஊதியத்திற்காகச் சோதிடம் கூறுகின்றவர்களைப் பற்றிக் குருமார் குறை கூறினார்கள். நெபுசட்னேசர் காலத்தில் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கு முள்ள வேறு பாடு அறியப்பட்டிருந்தது. பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதை பன்னிரண்டு வீடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பாகை ‘மினிட்’களாகவும், ‘மினிட்’ நொடி களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அறுபது மினிட் ஒரு பாகை எனவும் 60 நொடி அல்லது ‘செகண்ட்’ ஒரு மினிட் எனவும் கணக்குச் செய்யப்பட்டன. நேரம் நாழிகை வட்டம் (Water-Clock) சூரிய நிழல் வட்டம் (Sun-dial) ஆகிய இவைகளால் அளக்கப்பட்டது.
ஆண்டு பன்னிரண்டு சந்திர மாதங்களாகப் பிரிக்கப்பட்டது. முதல் ஆறு மாதங்கள் முப்பது நாளும், பின் ஆறு மாதங்கள் 29 நாட்களும் கொண்டவை. ஆகவே ஆண்டில் 354 நாள்கள் இருந்தன. இடை இடையே ஒரு மாதம் சேர்த்துக் கணக்குச் செய்யப்பட்டது. மாதத்தில் நான்கு வாரங்கள் உண்டு. சந்திரன் எழும் நேரத்திலிருந்து நாள் கணக்குச் செய்யப்பட்டது.
மருந்தும், சோதிடமும் சமயத் தொடர்பு பெற்றிருந்தன. ஹமுரபி அரசன் காலத்தில் மருத்துவம் சமயத்தினின்றும் பிரிக்கப்பட்டது. அக் காலத்தில் மருத்துவர் பலர் இருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியும், தமது கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கள் அடைய வேண்டிய தண்டனை களும் சட்டங்களில் காணப்படுகின்றன. மருத்துவன் ஒருவனை வீட்டுக்கு அழைக்குமொருவன் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை அறிந்திருந்தான். நோயாளி வறியவனானால் கூலி குறைக்கப்பட்டது. மருத்துவன் முறையாக மருத்துவம் செய்யாவிட்டால் அவன் நோயாளிக்கு நட்ட ஈடு செய்ய வேண்டியிருந்தது. சில சமயங்களில் மருத்துவனின் கைவிரல்கள் வெட்டப்பட்டன. மருத்துவரிலும் பார்க்க மந்திர வித்தைக்காரருக்கு அதிக மதிப்பு உண்டாயிருந்தது. நோய் பாவத்தினால் உண்டாவது என்று கருதப்பட்டது. ஆகவே அது துதி, மந்திர வித்தைகளால் போக்கப்பட்டது. மருந்துகள் உடலைச் சுத்தஞ் செய்வன என்று கருதப் படவில்லை. உள்ளே இருக்கும் பூதத்தைப் பயமுறுத்துகின்றது எனக் கருதப் பட்டது. மிக அருவருக்கத்தக்க பொருள்கள் சேர்த்து அரைத்த மருந்துகள் ஒளடதமாகப் பயன்படுத்தப்பட்டன. சாதாரண மருந்துச் சரக்குகள் பச்சை இறைச்சி, பாம்பின் இறைச்சி, மரத்தூள் முதலியன. இவை சாராயமும் எண்ணெயும் ஊற்றி அரைக்கப்பட்டன. அழுகிய உணவு, எலும்புத்தூள், கொழுப்பு, அழுக்கு முதலியனவும் விலங்குகளின் அல்லது மனிதனின் மல மூத்திரங்களும் சேர்த்து அரைக்கப்பட்ட கூட்டுகள் மருந்தாகப் பயன்படுத் தப்பட்டன. பூதத்தைத் திருப்திப்படுத்தும் பொருட்டுப் பால், தேன், வெண்ணெய், நறுமணமுள்ள மூலிகைகள் உட்கொள்ளும்படி கொடுக்கப் பட்டன. மருந்துகளால் நோய் குணமடையாவிடின் நோயாளி சந்தைக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கு அவ்வகை நோய் அடைந்து குணப் பட்டவர்கள் தாமறிந்த மருந்துகளை அவனுக்குக் கூறினார்கள்.
பாபிலோனின் விழுகை
பாபிலோனின் கடைசி அரசன் நெபுசட்னேசர். இவன் 54 கோயில் களைக் கட்டினான். இவன் தனது வாழ்நாளின் இறுதி நான்கு ஆண்டுகளில் பைத்தியம் கொண்டிருந்தான். கி.மு. 562இல் இவன் மரணமடைந்தான். இவன் மரண மடைந்த முப்பது ஆண்டுகளுள் பாபிலோன் இராச்சியம் துண்டு துண்டாகச் சிதறுண்டது. இவனுக்குப் பின் ஆட்சி நடத்திய போனிடஸ் என்பவன் இராச்சியத்தில் கருத்துச் செலுத்தாது சுமேரியாவிலுள்ள அழிபாடு களை வெட்டி ஆராய்ச்சி செய்வதில் காலத்தைப் போக்கினான். இராணுவத் தில் குழப்ப முண்டாயிற்று. வாணிகத்திலும் களியாட்டங்களிலும் பழகிய மக்கள் போரை மறந்தார்கள். குருமார் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றித் தமது பைகளை நிரப்பினர். இப்பொழுது சைரஸ் என்னும் பாரசீக அரசன் பாபிலோனை வெற்றிகொண்டான். இரண்டு தலைமுறைகளாகப் பாபிலோன் பாரசீகர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்பு அலக்சாந்தர் வெற்றியாளனாகிப் பாபிலோனை ஆண்டான். பாபிலோனியரிடமிருந்தே கிரேக்கர்கள், கணக்கு, வானசாத்திரம், மருந்து, இலக்கணம்,நிகண்டு, சரித்திரம், தத்துவ சாத்திரம் முதலியவைகளைப் பெற்றனர். உரோமர் கிரேக்கரிடமிருந்து இவைகளைப் பெற்றனர். கிரேக்க மொழியில் உலோகங்கள், இராசிகள், நிறைகள், அளவை கள், இசைக்கருவிகள், மருந்துச் சரக்குகளைக் குறிக்க வழங்கும் பெயர்கள் பெரும்பாலும் பாபிலோனிய மொழிக்குரியனவே. கிரேக்கக் கட்டக்கலை எகிப்திய, கிரீத்திய, பாபிலோனியக் கட்டடக் கலைகளைப் பின்பற்றி எழுந்தது. சுற்றி வரப் படிக்கட்டுக்களுடைய பாபிலோனிய கோபுரங்களைப் பின்பற்றி முகமதிய கோயிற் கட்டடங்கள் அமைக்கப் பட்டன. ஹமிரபியின் சட்டங்களிலிருந்து உரோமரின் நியாயச் சட்டங்கள் உதித்தன.
சிந்துவெளி
சிந்து என்பது இந்தியாவின் வடமேற்கிலுள்ள ஓர் ஆறு. இவ்வாற்றின் பெயரையே நாவலந்தீவு என்று பெயர் பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேச மக்கள் பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் அழிபாடுகள் 1 பல காணப்படுகின்றன. அவைகளுள் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலுள்ள அழிபாடுகள் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப் பட்டன. இவை அழிந்து மண்மேடாக மாறிய இரண்டு பெரிய நகரங்களாகக் காணப்பட்டன. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் வரலாறுகளை அறிந்து கொள்வதற்கேற்ற பல பழம் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்கு முன்பு ஐரோப்பிய அமெரிக்க ஆராய்ச்சியாளர், யூபிராதஸ் தைகிரஸ் ஆறுகளும் நீல நதியும் நீர் பாய்ச்சுகின்ற மெசபதோமியா, அசீரியா, எகிப்து முதலிய நாடுகளே நாகரிகத்தின் தொட்டில் எனக் கருதி வந்தார்கள். அந் நாகரிகங்களின் பழமையை ஒப்பிடும்போது இந்திய நாகரிகம் பச்சிளங்குழவி எனக் கருதப்பட்டது. ஆகவே, இந்திய வரலாற்றை அலக்சாந்தரின் படை எடுப்பு அல்லது மௌரிய அரச பரம்பரை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது வழக்கமாயிருந்து வந்தது. சிந்துவெளியிலே அரப்பா, மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள் கள், இந்திய நாகரிகத்தின் பழமையை மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளின் தொன்மையோடு ஒத்ததாக மாற்றியுள்ளன. சிந்து வெளிப் புதைபொருள் ஆராய்ச்சி யிற் கிடைத்த பழம் பொருள்கள் பல சுமேரியாவிற் கிடைத்த பழம் பொருள்களை ஒத்தவை. ஆகவே சிந்து நாகரிகம் என்பது இந்து-சுமேரிய நாகரிகம் எனக் கொள்ளப்படுவதாயிற்று. மேலும் கிடைத்த பழம்பொருள்கள் சிந்து நாகரிகம் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பழைய நாகரிகம் என்பதைக் காட்டின. சிந்து வெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3,500 வரையில் என்று கருதப்படுகிறது.
அரப்பா என்னும் பழைய அழிபாடு பஞ்சாப் மாகாணத்தில் இரவி ஆற்றுக்கு அண்மையிலுள்ளது. இரவி ஆறு சிந்து நதியின் ஒரு கிளை. அரப்பா, மொகஞ்சதரோவுக்கு வடக்கே நானூறு மைல் தூரத்திலுள்ளது. அரப்பா அழிபாடு 1920க்கும் 1921க்கு மிடையில் முதன்முதல் அகழ்ந்து பார்க்கப்பட்டது.
மொகஞ்சதரோ இலார்கானாவுக்கு வடக்கே இருபத்தைந்து மைல் தூரத்தில் உள்ளது. மொகஞ்சதரோ என்பதற்கு இறந்தவர்களின் மேடு என்று பொருள். இவ்அழிபாடு 240 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டிருக்கிறது. இதில் தோண்டி ஆராயப்பட்ட பகுதி 13 ஏக்கர்களே. சிந்து ஆறு மொகஞ்சதரோ வுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. முற்காலத்தில் அது மொகஞ்சதரோவின் பக்கத்தில் சென்றிருக்கலாம். இந் நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டிருந்தது. சிந்து ஆறு காலந்தோறும் உயர்ந்து வந்தமையால் மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத் தார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. ஏழாவது படை கற்கால இறுதியிலும் உலோக கால ஆரம்பத்திலும் அமைக்கப்பட்ட கட்டடங்களை உடையது.
வீதிகள்: மொகஞ்சதரோவில் அகன்ற பெரிய வீதிகள் வடக்கிலிருந்து தெற்கே செல்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சம தூரத்திலுள்ளன. பெரிய வீதிகளிலிருந்து சிறிய வீதிகள் கிளைவிட்டுச் செல்கின்றன. கிளை வீதிகள் இவ்வாறு செல்வதால் நகர் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஒடுங்கிய வீதிகள் பல செல்கின்றன. அவைகளின் ஓரங்களில் வீடுகள் நெருங்கியுள்ளன. ஒவ்வொரு சிறிய வீதியிலும் பொதுக்கிணறு உண்டு. பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறு காணப்படுகின்றது.
வீடுகள்: வீடுகள் பல பெருமையுடையனவாகக் காணப்படுகின்றன. இரண்டு அறைகளுக்குக் குறைவாயுள்ள வீடுகள் காணப்படவில்லை. சில வீடுகள் அரண்மனைகள்போல் பெரியன. வீடுகள் விசாலமாகவும் கற்கள் பதிக்கப்பட்ட குளிக்கும் அறையுடையனவாகவும் காணப்படுகின்றன. பாபிலோனிலும் மொகஞ்சதரோவிலும் நடுவில் முற்றமும் முற்றத்தைச் சுற்றி நாற்புறமும் அறைகளுமாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முற்றத்துக்குச் செங்கற்கள் பதிக்கப்பட்டன. மேன்மாடி புழங்கவும், நித்திரை கொள்ளவும், குளிக்கவும், கீழ்மாடி சமைக்கவும், பண்டங்களைச் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டன. வீதியிலிருந்து வீட்டுக்குச் செல்ல ஒரு வாயில் மாத்திரம் இருந்தது. சுவருக்கு வெளியே யாதும் இருக்கவில்லை.
கிணறுகள்: கிணறுகளின் அகலம் பலவாறு இருந்தது. சில கிணறு களின் குறுக்களவு ஏழு அடி இரண்டு அங்குலம். மிகச் சிறிய கிணற்றின் குறுக்களவு ஓர் அடி ஓர் அங்குலம். சாதாரண கிணற்றின் குறுக்களவு இரண்டு அடி இரண்டு அங்குலம். பெரிய நீராடும் கேணியின் பக்கத்தே காணப்படும் கிணற்றின் குறுக்களவு ஆறு அடி இரண்டு அங்குலம். பெரும் பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கிணறு இருந்தது. பொதுக் கிணறுகள் இரண்டு வீடுகளின் மத்தியில் இருந்தன. கிணற்றைச் சுற்றிச் செங்கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. செங்கற்களை ஒன்றோடொன்று சேர்த்துப் பிடிக்கச் செய்வதற்குக் களிமண் பயன்படுத்தப்பட்டது. கிணற்றுக் கட்டு ஓரங்களில் கயிறு உராய்ந்த அடையாளம் காணப்படுவதால், ஏனங் களைக் கயிற்றில் கட்டிக் கையினால் இழுத்துத் தண்ணீர் எடுக்கப் பட்டதெனத் தெரிகின்றது.
குளிக்கும் அறை: ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாகக் குளிக்கும் அறைகள் இருந்தன. அவைகளைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது தண்ணீர் சுவறிச் செல்லமுடியாமல் மேலே ஒருவகைக் கறுப்புப் பொருள் பூசப் பட்டிருந்தது. குளிக்குமறை வீட்டின் வாயிற் பக்கமாக விருந்தது. அதனைச் சுற்றிச் செங்கற் பதிக்கப்பட்ட தரை ஒரு மூலையை நோக்கிச் சரிவாக இருந்தது. மேல் வீட்டில் குளிக்கும் அறை இருந்ததென்பதை மேலே யிருந்து கீழே செங்குத்தாகச் செல்லும் குழாய்களைக் கொண்டு அறியப்பட்டது.
தரை: வீட்டின் தரை செங்கற் பதிக்கப்பட்டிருந்தது; அல்லது மண் இட்டு அடித்து மட்டஞ் செய்யப்பட்டிருந்தது. மண் இட்டு அடித்துத் தரையை மட்டஞ் செய்வது பொது நிகழ்ச்சி. சில வீடுகளுக்குச் சூளையிடாத களிமண் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கதவுகள்: கதவுகள் மரத்தினால் செய்யப்பட்டவை. சுவர் முடிவு எய்து மிடத்துக் கதவு வைக்கப்பட்டிருந்தது; அது சுவரின் மத்தியில் வைக்கப்பட வில்லை. கதவு நிலையின் அகலம் மூன்று அடி மூன்று அங்குலம் முதல் மூன்று அடி பத்து அங்குலம் வரையில் இருந்தது.
சன்னல்கள்: சாதாரண வீடுகளுக்குப் பெரும்பாலும் வெளிச்சுவர் களில் சன்னல்கள் இருக்கவில்லை. சன்னல்கள் சுவரில் விடப்பட்ட வெளிகள்போல இருந்தன. பெரிய நீராடும் கேணியைச் சுற்றி அமைக்கப் பட்ட சுவரில் சன்னல்கள் பதிக்கப்பட்டுள்ளன.
படிக்கட்டுகள்: பெரும்பாலும் எல்லா வீடுகளுக்கும் மேலே ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் உண்டு. அவை சுவரின் எதிரே அல்லது இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் செங்குத்தாக அமைக்கப் பட்டுள்ளன. படிக்கட்டுகள் கூரைக்கு மாத்திரமன்று; மேல்மாடிக்கும் செல் கின்றன. வீதியிலிருந்து மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளும் காணப் படுகின்றன. அவ்வகைப் படிக்கட்டுகள் உள்ள வீடுகளில் வெவ்வேறு குடும்பத்தினர் வாழ்ந்தார்கள் ஆகலாம். படிக்கட்டுகள் ஒடுங்கியவையாக வும், படி ஒவ்வொன்றும் பதினொரு அங்குல உயரமும் ஆறு முதல் எட்டு அங்குல அகலமு முடையதாக உள்ளது.
கூரை: கூரைகள் தட்டையானவை. அவை மரத்தினால் அமைக்கப் பட்டவை. சில வீடுகளின் சுவர்களில் மரங்கள் இடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன. மரங்கள்மீது பலகைகள் இடப்பட்டன. வறிய மக்கள் மரங்கள் மீது நாணற்பாயை விரித்து அதன்மேல் மரத்தூளும் உமியும் கலந்து குழைத்த களிமண்ணை இட்டு மெழுகி மட்டஞ் செய்தார்கள்.
சுவர்கள்: வீட்டுச் சுவர் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அகலமான சுவர்களின் வெளிப்புறத்துக்கும் உட்புறத்துக்கும் இடையே களிமண் இட்டு நிரப்பப்பட்டது. வெளிச்சுவர்கள் உள்ளே சரிந்து செல்லும்படி அமைக்கப் பட்டன.
கதவில்லாத அறைகள், மலக்கூடங்கள்: கதவில்லாத சில அறைகள் காணப்படுகின்றன. இவை நிலத்துக்குக் கீழ் உள்ள அறைகளாக அல்லது மலக் கூடங்களாக இருக்கலாம். இரண்டு மலக் கூடங்களைத் தவிர வேறு மலக் கூடங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கழிவு நீர் செல்லும் கால்வாய்: சிந்துவெளி நகரங்களில் கழிவுநீர் வெளியே செல்வதற்குக் கற்பதித்த வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மறுநாடுகளில் விளங்கிய அக் கால நகரங்களில் இவை காணப்படவில்லை. எல்லா வீடுகளுக்கும் வீதிப் பக்கமுள்ள சுவரில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் விடப்பட்டிருந்தன. இவை வழியாக அழுக்கு நீர் வெளியே யுள்ள கால்வாயிற் சென்று விழுந்தது. அழுக்கு நீர் விழுமிடத்தில் பாரமான பொருள்கள் தங்கி நிற்கும்படி கற்பதித்த குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீதியிலும் 18 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை ஆழமுள்ள கால்வாய்கள் இருந்தன. இவற்றின் மேலே செங்கற்கள் இட்டு இவை மூடப்பட்டுள்ளன. இச் செங்கற்கள் வேண்டியபோது எடுக்கக்கூடியன. சிறிய கால்வாய்களில் செல்லும் கழிவு நீர் பெரிய வாய்க்காலிற் சென்று விழுந்தது. இவ் வாய்க்கால்களும் அழுக்குத் தங்கி நிற்கும் குழிகளும் இடை யிடை சுத்தஞ் செய்யப்பட்டன. வாய்க்கால்கள் சுத்தஞ் செய்யப்பட்ட இடத்தில் மணல் காணப்படுகின்றது. மொகஞ்சதரோக் கட்டடங்களில் காணப்படும் தூண்கள் சதுரமானவை. சிந்துவெளி நகரங்களின் கட்டட அமைப்புப் பாபிலோனிய அல்லது எகிப்திய கட்டட அமைப்பைவிட அதிகம் வளர்ச்சி யடைந்திருந்தது என டாக்டர் பிராங்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய தானியக் களஞ்சியமும் கட்டடங்களும்: அரப்பாவில் 169 அடி நீளமும், 135 அடி அகலமுமுள்ள தானியக் களஞ்சியமொன்று காணப் படுகின்றது. இரண்டு வரிசைகளில் தனித்தனி ஒவ்வொன்றிலும் ஏழு வீடுகள் அடங்கிய பதினான்கு கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் விரண்டு நிரைகளையும் ஒரு பாதை பிரிக்கின்றது. இப் பாதையை ஆறு பாதைகள் குறுக்கே பிரிக்கின்றன. இதனால் ஒவ்வொரு கட்டடத்தையும் சுற்றி வெளி இருக்கின்றது. ஒவ்வொரு வீட்டுக் கும் ஒரு முற்றமும் இரண்டு அறை களும் உண்டு. சிறிய அறை வாயிற் பக்கத்திலும் பெரிய அறை முற்றத்துக்குப் பின்னாலும் உள்ளன. சில இடங்களில் விளக்குத் தூண்கள் காணப்படுகின்றன. இதனால் வீதிகளுக்கு வெளிச்சம் இடப் பட்டதெனத் தெரிகின்றது. வீதிகளுக்கு அப்புறத்தில் காணப்படும் அழுக்குக் குவியல்களால் நகர் நன்கு சுத்தஞ் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. சில இடங்களில் அழுக்குக்குப் பதில் சட்டி பானை உடைவுகளும் அழுகிய இலை தழைகளும் காணப்படுகின்றன.
சிற்பம்: உருவங்கள் மிருதுவான கற்களில் வெட்டப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்ட மனித உருவங்களில் ஒன்று, அலங்கரிக்கப்பட்ட போர்வையை இடது தோளுக்கு மேலால் வந்து வலது புயத்துக்குக் கீழே செல்லும்படி அணிந்திருக்கின்றது. அதற்குக் குறுகிய தாடியும் கன்ன மீசை யும் காணப்படுகின்றன. தலை மயிர் நடுவே வகிர்ந்து விடப்பட்டுள்ளது. தலையைச் சுற்றி நாடா ஒன்று கட்டப்பட்டுள்ளது.
சிந்துவெளியிற் கண்டு பிடிக்கப்பட்டவைகளுள் முத்திரைகள், உடம்பில் அணியும் பொருள்கள் போன்றவை முதன்மையுடையன. சிறிய உருவங்களின் கால்களும் கைகளும் உடைந்துள்ளன. மக்கள் வடிவங்களிற் பல பெண் உருவங்களாகும். அரையில் கட்டப்பட்ட ஒடுக்கமான துணியில்லாவிடில் அவை நிர்வாணத் தோற்றம் அளிப்பனவாகும். பெரும்பாலும் எல்லா வடிவங்களும் அணிகலன்கள் அணிந்துள்ளன. அணில், குரங்கு முதலியவை நிறக் கற்களிலும் ஆமை ஓட்டிலும் வெட்டப்பட்டுள்ளன. நிறக்கல்லில் வெட்டப்பட்ட அணில் இரண்டு அங்குல உயரமுள்ளது. அணிலின் வால் நிமிர்ந்து நிற்கின்றது. அது முன்னங் கால்கள் இரண்டினாலும் எதையோ பிடித்திருக்கின்றது.
வெண்கலத்தினாற் செய்யப்பட்ட நாட்டியப் பெண்ணின்வடிவம் ஒன்று மிகவும் கவர்ச்சிக்குரியதா யுள்ளது. அவள் கை மூட்டுவரையும் வளையங்களை அணிந்திருக்கிறாள். நீலநிறக் கல்லில் வெட்டப்பட்ட ஒரு மனித வடிவம் அட்டணைக் காலிட்டுக்கொண்டு கட்டிலின் மீது இருக் கின்றது. இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொருவர் முழங்கால் படிந்து நின்று வணங்குகின்றனர். பின்புறத்தில் ஒரு பாம்பு உள்ளது. இன்று சிந்துவிற் காணப்படும் மக்கள் மொகஞ்சதரோ மக்களைவிட வேறானவர்களல்லர் எனச் சர் ஆர்தர் கீத் கூறியுள்ளார்.
ஆடவர் இடது தோளுக்கு மேலால் வந்து இடது புயத்துக்குக் கீழே செல்லும்படி போர்வை அணிந்திருந்தார்கள். இவ்வழக்கே நாளடைவில் பூணூல் அணியும் வழக்காக மாறிற்று. இன்று உடுக்கும் ‘வேட்டி’ போன்ற உடையை ஆடவர் அரையில் அணிந்தனர். பஞ்சினாலும் கம்பளியினாலும் உடைகள் செய்யப்பட்டன. ஊசிகள் காணப்படுகின்றன. மக்கள் தைக்கப் பட்ட உடைகளையும் அணிந்தார்கள் ஆகலாம்.
ஆடவர் தலையில் மயிரை வளரவிட்டுக் குறுக வெட்டியிருந்தார்கள். சிலர் மயிரைப் பின்புறத்தில் குடுமியாக முடிந்து நாடாவினாற் கட்டினார்கள். இன்று மலையாளிப் பெண்கள் முடிவதுபோல் மயிர் உச்சியில் முடியப் பட்டது. சில உருவங்களின் மயிர் பின்புறமாகத் தொங்குகின்றது. ஆடவர் மேலுதடுகளின் மயிரை மழித்தார்கள் அல்லது மயிரை ஒட்ட வெட்டி னார்கள்.
ஆபரணங்கள்: ஆடவரும் மகளிரும் ஆபரணங்கள் அணிந் தார்கள். கழுத்தணி, தலைக்குக் கட்டும் நாடா, மோதிரம், புயவணி முதலியவை ஆண்க ளாலும் பெண்களாலும் பயன்படுத்தப்பட்டன. காலணி, காது வளையங்கள், தோடு, அலங்கரிக்கப்பட்ட ஊசிகள், மூக்கு வளையம் முதலியவைகளைப் பெண்கள் பயன்படுத்தினர். செல்வர் பொன், வெள்ளி, நிறக்கற்கள், தந்தம், விலையுயர்ந்த கற்கள் முதலியவைகளாற் செய்த ஆபரணங்களைப் பயன்படுத்தினர். ஓடு, எலும்பு, செம்பு, சூளையிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்ட நகைகள் வறிய மக்களால் பயன் படுத்தப்பட்டன. பெண்கள் அரை யில் அணியும் பட்டிகைகள் மணி கோத்த வடங்களால் செய்யப் பட்டன. அவைகளின் முகப்புக் கள் பொன், செம்பு முதலியவை களாலானவை. மணிகளைக் கோத்து மாலைகள் செய்யப் பட்டன. வயிரக் கற்களையும் மணிகளையும் துளையிடுவதற்குப் போதிய திறமை வேண்டும். செம்பில் செய்யப்பட்ட நாட்டியப் பெண் கைமுட்ட வளைகள் அணிந்திருக்கின்றாள். கைவளைகள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், நிறக் கற்கள், சூளை யிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்டன. அழகிய கைவேலை செய்யப்பட்ட நிறக்கற்களும் தலைமுடிக்குச் செருகும் பலவகை ஊசிகளும் காணப்பட்டன. அவை வெண்கலம், செம்பு, எலும்பு, நிறக்கற்கள், சுண்ணாம்புக்கல் முதலியவைகளாற் செய்யப்பட்டவை. தலைக்குச் செருகும் ஊசியில் மூன்று குரங்குகள் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டிருப்பதாகிய காட்சி காணப்படுகின்றது.
மேனி மினுக்குப் பொருள்கள்: சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத்த மேனி மினுக்குப் பொருள்கள் பல கிஷ், ஊர் முதலிய இடங்களில் கிடைத்தவை போன்றவை. மேனிமினுக்குப் பொருள்கள் வைக்கும் பெட்டிகள் மரத்தினாற் செய்யப்பட்டன. நிறக்கற்களினாற் செய்யப்பட்டன வும் நான்கு அறைகள் உள்ளனவுமாகிய பெட்டி களும் காணப்படுகின்றன. இவ்வகைப் பேழைகள் கிரேத்தாவில் மாத்திரம் காணப்பட்டன. முகம் பார்க்கும் கண்ணாடி வெண்கலத்தினாற் செய்யப்பட்டது. அது நீண்ட வட்ட வடிவுடையது. கண்ணுக்கு மைதீட்டும் குச்சிகள் வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட சீப்புகள் காணப்பட்டன. மயிர் மழிக்கும் கத்திகள் செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டன.
வீட்டுப் பொருள்கள்: கல், ஓடு, நிறக்கல், தந்தம், உலோகம் முதலியவைகளால் வீட்டுப்பொருள்கள் செய்யப்பட்டன. கல் ஆயுதங் களுக்குப் பதில் உலோக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறக்கல், வேலைப்பாடுடைய ஏனங்கள் செய்தற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டது. வீட்டு ஏனங்கள் பெரும்பாலும் மண்ணினாற் செய்யப்பட்டன. அடுக்களை யில் பயன்படுத்தும் ஏனங்கள், கிண்ணங்கள், தட்டுக்கள், சாடிகள், பானை சட்டிகள் முதலிய பலவகையின. நீர் அருந்தும் ஏனங்களின் அடிப்பாகம் முனையுடையது. நீர் உண்ணும் ஏனங்கள் பல, கிணற்றைச் சுற்றி உடைந்து கிடப்பதால் அவை ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப் பட்டன எனத் தெரிகின்றது. ஊசியும், துளையிடும் கருவிகளும் செம்பினாலும் தந்தத்தினாலும் செய்யப் பட்டன. கோடரி, அரிவாள், கத்தி, மீன் பிடிக்கும் தூண்டில், குடையும் கருவிகள் போல்வன வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. வலைகளை நீரில் ஆழ்த்துவதற்கு ஈயத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. படுக்கைகளும் சாய்வு நாற்காலிகளும் முன் அறையில் வைக்கப்பட்டன. சில நாற்காலிகளின் பாதங்கள் நாழிகை வட்டம் போலவும், இடபத்தின் கால் போலவும் செய்யப் பட்டன. இடபக்கால் உள்ள நாற்காலிகள் எகிப்திய முதல் அரசபரம்பரைக் காலம் முதலாகக் காணப்படுகின்றன. விளக்குகள், ஓடு, மண், செம்பு முதலியவைகளால் செய்யப்பட்டன. வீதிகளிலும் விளக்குகள் இருந்தன. மெழுகுத் திரி வைத்து எரிக்குந் தாள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
வேளாண்மை: கோதுமையும், வாற்கோதுமையும், நெல்லும் விளை விக்கப்பட்டன. மண்வெட்டிக்குப் பதில் கலப்பை பயன்படுத்தப்பட்டதோ என்பது அறிய முடியவில்லை. பேரீந்தின்பழ விதைகள் மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் காணப்பட்டன. இதனால் அங்குப் பேரீந்து வளர்ந்ததெனத் தெரிகின்றது.
உணவு: கோதுமை, வாற்கோதுமை, அரிசி, காய்கனிகள், பால் முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. அரப்பாவில் பயறும் எள்ளும் பயிரிடப்பட்டன மாடு, ஆடு, பன்றி கோழி, ஆமை முதலியவை களின் இறைச்சியும், மீன், மீன்-கருவாடு, கடல் உயிர்கள் முதலியனவும் உணவாகக் கொள்ளப்பட்டன.
வீட்டு விலங்குகள்: மாடு, எருமை, ஆடு, யானை, பன்றி, ஒட்டகம், நாய் முதலியன வீட்டில் வளர்க்கப்பட்டன. மண்ணினாற் செய்யப்பட்ட எருமை, காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல், அணில் முதலிய விளையாட்டுப் பொருள்கள் காணப்படுகின்றன. இதனால் அக்கால மக்கள் இவைகளைப் பற்றி அறிந்திருந்தார்கள் என விளங்குகின்றது. கழுதை, பூனை, கீரி, மயில், கோழி முதலியனவும் அவர்களால் அறியப்பட்டிருந்தன.
விளையாட்டுகள்: சதுரங்கம், கோலி முதலியவை முக்கிய விளையாட்டுகளாகும். சதுரங்கம் ஆடும் காய்கள் பல காணப்பட்டன. அவை களிமண்ணினாற் செய்யப்பட்டவை.
விளையாட்டுப் பொருள்கள்: மண்ணினால் செய்யப்பட்ட மனிதர், விலங்குகள், தலையாட்டும் விலங்குகள், கோழி, புறா வடிவான ஊது குழல்கள், கிலுகிலுப்பை, சிறுவர் விளையாடும் பானை சட்டி, இரண்டு சக்கரங்களில் வைக்கப்பட்டுக் கயிறு கோத்து இழுப்பதற்குக் கழுத்தில் துளை இடப்பட்ட ஆட்டுக் கடா, விளையாட்டு வண்டி முதலியவை விளையாட்டுப் பொருள்களிற் சில. இங்குக் காணப்பட்ட விளையாட்டு வண்டிகள் கி.மு. 3,200இல் ஊர் என்னும் மேற்கு ஆசிய நகரிலே கல்லிற் பொறிக்கப் பட்ட தேர் போன்றன. இவை உள் நாட்டிலேயே செய்யப்பட்டன வென்பது சங்கு தரோவிற் காணப்பட்ட விளையாட்டுப் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது.
போக்குவரத்து: பழைய சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய வண்டிகள் இன்று பஞ்சாப்பிலும் சிந்துவிலும் பயன்படுத்தப்படும் வண்டிகளை ஒத்தவை. அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பினாற் செய்த வண்டியினால் அக்கால வண்டி, வெய்யிலையும் மழையையும் தாங்க மேலே மேற்கட்டி கட்டப்பட்ட இன்றைய ‘எக்கா’ வண்டி போன்றதெனத் தெரிகின்றது.
நிறையும் அளவும்: சிந்துவெளி மக்கள் பல வகையான நிறைகளை வழங்கினர். பெரிய நிறைகள் கூரிய தலை உடையனவாயும் கயிறு கோக்கக் கூடிய துளையுடையனவாயும் இருந்தன. சிறிய நிறைகள் இருண்ட நரை நிறக் கற்களாற் செய்யப்பட்டவை. அவை ‘பீப்பா’1 வடிவானவை. எல்லம், மெசபெதோமியா நிறைகளும் இவ்வகையினவே.
நெசவு: மொகஞ்சதரோ வீடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் காணப் பட்டன. பஞ்சு, கம்பளிகளில் நூல் நூற்றல் பொது நிகழ்ச்சியாக இருந்தது. விலை ஏறப்பெற்ற நிறக்கற்களிலும் செய்யப்பட்ட நூல் நூற்கும் கதிர்கள் காணப்பட்டன. இதனால் செல்வரும் வறியரும் நூல் நூற்றார்கள் எனத் தெரிகின்றது. ஆடைகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டன.
போர் ஆயுதங்கள்: கோடரி, ஈட்டி, வேல், வில், அம்பு, தண்டு, கவண், வாள், கேடகம் முதலியன போரில் பயன்படுத்தப்பட்டன: கோடரிகள் சூசாவிற் கிடைத்தவை போன்றன. வாள்கள் செம்பினாற் செய்யப்பட்டவை. அவைகளுக்கு இரு பக்கங்களிலும் அலகு உண்டு. இவை அக் காலத்தில் எகிப்தில் காணப்பட்ட அவ்வகைப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தகுந்தவை. மெய்உறை அல்லது கவசம் தோலினாற் செய்யப்பட்டது.
மருந்து: சிந்துவெளி அழிபாடுகளில் சிலாசத்து என்னும் மருந்து காணப்பட்டது. இது நீரிழிவு, பசியின்மை, வாதம், ஈரற் கோளாறு முதலியவை களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. மருந்தின் பொருட்டு மான் கொம்பும் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்பும் மருந்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது. மந்திரவாதம், தாயத்துப் போன்றவை நோயை ஆற்றத்தக்கன என்று மக்கள் நம்பினார்கள்.
வாணிகம்: வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்பு உண்டாயிருந்தது. சுமேரியாவோடு சிந்து நாடு தொடர்பு பெற்றிருந்ததைக் காட்டும் சான்றுகள் மிகப் பல உள்ளன. எகிப்தோடும் கிரேத்தா (Crete)வோடும் வாணிகம் நடைபெற்றது. முத்திரை ஒன்றில் மரக்கலம் காணப் படுகின்றது. பழைய மீனோவ முத்திரை, சுமேரிய உருளை வடிவான முத்திரை, எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட மட்பாண்டங்கள் என்பவைகளிற் காணப்படுவதுபோல் இம் மரக்கலம் மேலே உயர்ந்து வளைந்த முன்பின் புறங்களை யுடையது. இதற்குப் பாய்மர மில்லை. நடுவே ஓர் அறை இருக்கிறது. மரக்கலம் செலுத்துவோன் சுக்கானுக்குப் பக்கத்தே இருக்கின்றான். மொகஞ்சதரோ, ஊர், கிஷ், எகிப்து முதலிய நாடுகளுக்கிடையில் வாணிக உறவு இருந்தது.
கைத்தொழில்: சிந்துவெளி மக்கள் எல்லா வகை மட்பாண்டங் களையும் செய்தார்கள். சிலவற்றுக்கு நிறம் பூசப்பட்டன; சிலவற்றில் மினுக்கம் கொடுக்கப் பட்டன. மேலே குமிழியுள்ள முத்திரைகள், பாவைகள் முதலியன அழகாகச் செய்யப்பட்டுள்ளன. பொன், வெள்ளி, விலை உயர்ந்த கற்களில் செய்யப்பட்ட ஆபரண வகைகள் அக்காலப் பொற்கொல்லனின் கைவேலைத் திறமையைக் காட்டுவன. முத்திரைகளிற் செதுக்கப்பட்ட எழுத்துகள், புலி, யானை, மாடு, மரம், செடி முதலியவை அக்காலச் சிற்பனின் கைவினை மாட்சியை வெளியிடுவன. கட்டடங்களைக் கொண்டு கொத்த ருடையவும், ஆடையைக் கொண்டு நெசவாளருடையவும் திறமைகளை அறிதல் அமையும்.
மக்கள்: ஆரியர் வருகைக்குமுன் வடநாடு முழுமையும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள் எனப் பெறப்படுகின்றமையாலும், இன்றும் பலுசிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழி திராவிடத்துக்கு இனமுடையதாய்க் காணப்படுதலாலும், பிற காரணங்களாலும் மொகஞ்சதரோ மக்கள் திராவிடரேயாவர் எனத் துணியப்பட்டுள்ளது. ஹெரஸ் பாதிரியார் ஒலி முறையாக வாசித்த பழைய சிந்து வெளி எழுத்துகளின் ஒலி முறையான உச்சரிப்புகளில் பெரும்பாலானவை தமிழ்ச் சொற்களாக உள்ளன.
மொழி: சிந்துவெளி மக்கள் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு குறியீட்டை வழங்கினர். சீனமொழியில் வழங்கும் எழுத்துகள் இவ்வகையினவே. மேற்கு ஆசிய, எகிப்திய, சின்ன ஆசிய, சிந்துவெளி எழுத்துகள் ஒரே அடிப்படையி னின்றும் சிற்சில வேறுபாடுகளுடன் வளர்ச்சி யடைந்துள்ளவைகளே எனச் சேர் யான் மார்சல், டாக்டர் பிராங்போர்ட், ஹெரஸ் பாதிரியார் முதலி யோரும் வேறு பலரும் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் காணப்பட்ட எழுத்துகளில் 150 எழுத்துகள் வரையில் மொகஞ்சதரோ எழுத்துகளாகக் காணப்படுகின்றன. மொகஞ்சதரோ எழுத்துகளினின்று வட இந்திய தென்னிந்திய எழுத்துகளும் தோன்றின. பினீசிய எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு உண்டு. பினீசிய எழுத்திலிருந்து கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின. மொகஞ்சதரோ எழுத்துகளை ஒத்தவை ஹைதராபாத்திலும் திருநெல்வேலியிலும் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட பானை சட்டிகளிலும், இலங்கையிலும் காணப்படு கின்றன.
“சிவப்புக் கல்லில் வெட்டப்பட்டதும் திறமையான வேலைப்பாடு உடையதுமான சிறுவனின் உருவம் ஒன்று அரப்பாவிற் கிடைத்தது. அதனை நோக்குமிடத்து அது கிரேக்கர் கி.மு. நாலாம் நூற்றாண்டிற் செய்த கை வேலைப்பாடு போலத் தோன்றும்; ஆனால் அது கி.மு. 3,000 வரையில் செய்யப்பட்டது. இவ் வுருவத்தைக் கொண்டு அறியவருவது, சிற்பக் கலையின் வளர்ச்சியைச் சரித்திர மூலம் அறிய முடியாதென்பதேயாகும். இவ்வுலகம் முழுமையிலும் இந்தியரே மிகப் பழைய சிற்பிகளாவர் எனத் தெரியவருகின்றது.”1
------------------------------------------------------------------------
“மொகஞ்சதரோவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு முத்திரையில் வெட்டப்பட்ட இடபத்தின் வடிவம் மிகவும் உயிர்ப்பு உடையதாகக் காணப்படுகின்றது. இதனைக் காணும் ஒருவர் சிற்பக்கலை வளர்வதில்லை; ஆனால் அது தனது போக்கை மாற்றிக் கொள்கின்றது எனத் தனக்குள்ளே முடிவு செய்து கொள்வர்.”2
------------------------------------------------------------------------
மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி, புத்தர் பிறப்பதற்கு முற்பட்ட கால நிலைமைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத் தாரின் சாசனப் பரிசோதகராயிருந்த ஹிரந்த சாத்திரி கூறியிருப்பது வருமாறு: மொகஞ்சதரோ நகரில் வாழ்ந்த மக்கள் நன்கு அமைத்த விசால மான கட்டடங்களோடு ஒப்பிடத்தக்கவை, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட எகிப்திலோ மெசபெதோமியாவிலோ வேறு எவ்விடத்திலோ இருக்க வில்லை. அங்குள்ள குளிக்கும் அறைகளும், கழிவு நீர் ஓடும் வாய்க்கால் களும் அங்கு வாழ்ந்த மக்கள் உலக நாகரிக மக்களால் மாத்திரம் அறியப் படும் வாய்ப்புகளையும், உல்லாச வாழ்க்கையையும் உடையராயிருந்தார் களென்பதை அறிவிக்கின்றன. இது. கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி.”3
கருத்துகள்
கருத்துரையிடுக