கனகி புராணம்
கவிதைகள்
Backகனகி புராணம்
நட்டுவச் சுப்பையனார்
----------------------------------------
கனகி புராணம்
இயற்றியவர், ஈழத்துப் புலவர்,
நட்டுவச் சுப்பையனார்
இலங்கைக்கு வித்தியாதிகாரியாயிருந்து இளைப்பாறிய,
திரு., க. ச. அருள்நந்தி அவர்களின் முன்னுரையுடனும்,
புலவர், சிவங். கருணாலய பாண்டியனார் அவர்களின்
விரிவுரையுடனும், கூடியது.
பதிப்பாசிரியர்,
வட்டுக்கோட்டை, மு. இராமலிங்கம்
(Folklorist)
சுதந்திரன் அச்சகம்
கொழும்பு - 12
Copyright]
1961
[விலை சதம் 50.
------------------------------------------------
Available of
V. Narenthiran Esq.,
15, Hamer's Avenue,
Colimbo - 6.
------------------------------------------------
முன்னுரை
செந்தமிழ்ச் செல்வியானவள் பல்லாயிரம் ஆண்டுகளாக இனிது நடம் புரிந்து வருகின்ற யாழ்ப்பாணப் பழம் பதியின் கண்ணே, இன்னிசைக் கவிவாணர் பலர் தோன்றிக் காலப் பெரும் பரப்பில் தம்மடிச்சுவட்டைப் பதித்துப் போய் மறைந்தனர். அன்னாருட் புலவர் (நட்டுவச்) சுப்பையனார் ஒருவரென்பதைப் பலரறியார். இப் புலவர் யாத்ததாக நாம் அறியக் கிடக்கின்ற நூல் ஒன்றேயாகும். ஏறக்குறைய நானூறு விருத்தப் பாக்களாலானது இப் பனுவலெனக் கூறுவர். அதனில் அதிபெரும் பாகம் எமக்கெட்டிலது; மறைந்தொழிந்து போயிற்றெனலாம். தமிழ்ப் பற்றுடையார் தம் நினைவினில் முன்பின் மூன்று தலைமுறையாக தவழ்ந்து வந்த ஒரு சில செய்யுட்கள் மாத்திரம் நவாலியூர் ந. சி. கந்தையா பிள்ளை அவர்களின் அரிய தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றாக அச்சேறிச் சென்ற இருபது ஆண்டுகளாக நடமாடி வருகின்றன.
இந் நூலின் பெயர் கனகி புராணம். கனகி சயமரம் (சுயம்வரம்) என்னும் பெயரும் அதற்குண்டு, கனகி என்பாள் கவினார் வண்ணார்பண்ணைச் சிற்றூரில், இப் புலவர் காலத்தில், வாழ்ந்த கட்டழகியாம் ஒரு கணிகை மாது. இப் பொது மகளோடு புலவரவர்கள், பிரசித்தி பெற்ற அக் காலத்தவர் பலரைப் போன்று, தொடர்பு பூண்டு சில காலங் கழித்தனர் என்பர். இத் தொடர்பின் விளைவாகப் பெற்ற அவலத் தீயினாற் புடமிடப்பட்டுப் புதுவாழ்வெய்தி, தாம் பட்ட பெரும்பாட்டை மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு நல்லறிவுறுத்தும் வேட்கையுந்த இக் காப்பியத்தை யாத்தனர் போலும்.
பாட்டுடைத் தலைவியோ ஒரு பரத்தை; நூற் பொருளோ அன்னாளின் கண்கவர் கட்டழகும் உளப்பான்மையும், அவற்றோடு, விளக்கை நாடிப் போய் நாசமுறும் விட்டிலைப் போல், விரும்பி அவளை அடைந்தார் தம் குணாகுணங்களும் அவளோடவர்கள் துய்த்த சிற்றின்ப வாழ்வின் வெம்பேறும். எனினும், இந் நூலினுக்குக் கவியலங்காரப் பண்பு உண்டென்பதை மறுக்க முடியாது. இன்னிசை, சொற்சுவை, நகைச்சுவை, அழுகைச் சுவை உவப்பான் உவமைகளாம். இவையெல்லாம் ஆங்கு நன்கமைந்திருக்கக் காணலாம். ஆதலின், அதனை எம் முன்னோர் எமக்கு அளித்துப் போந்த இன்காவியங்களோடு சேர்த்துப் போற்றிப் பேணுதல் தக்கதென உளத்திற் கொண்டு, அதற்காக உழைத்தனர் இரு தமிழன்பர்கள். ஒருவர் மேற் கூறிய கந்தையா பிள்ளை அவர்கள். மற்றவர், வட்டுக்கோட்டை வாசரும், கொழும்பு வருமான வரிக் கந்தோரிற் கடமையாற்றி வருகின்றவருமான, மு. இராமலிங்கம் அவர்களாவர்.
இவர், நாட்டுப் பாடலென்னும் நயந்திகழ் துறையினுட் புகுந்து பல்லாண்டுகளாக எமதிலங்கை வள நாட்டில் தமிழ் வழங்கும் ஊரெல்லாந் தேடித் தேடிப் பெற்றுத் துருவித் துருவியாய்ந்து சேகரிக்கும் நலம் படைத்த நாட்டுப் பழம் பாடல்களை வானொலி வாயிலாகவும், பிறருடைய பொருளுதவி யாதுமின்றி அச்சேற்றியும், ஆர்வத்தோடு நாட்டிற் பரவச் செய்து வருகின்றனர். அஃதன்றி, இப் பாடல்களின் உட் பொருளையும், அவை தோன்றி வழங்குதற்கு வாய்ப்பான நாட்டு வழக்கங்களையும், நாட்டவர் தம் உளப்பான்மைகளையும், நன்காராய்ந்து தஞ் சிந்தையில் தெளிவுற்ற கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். இவ்வாறு இடையறாது தமிழ்த் தொண்டாற்றி வருமிவர், கனகி புராணப் பிரதியொன்று கிடைத்ததும் அதனைப் பற்றி என்னோடு கலந்துரையாடி, இரண்டாம் பதிப்பொன்று அவசியமெனக் கூற, யானும் அவர்களது கருத்தைப் போற்றி முன்னுரையொன்றை எழுதியுதவுதற்கு இசைந்தேன்.
புதிய பதிப்பொன்று வேண்டுமென்பதற்கு நியாயங்கள் இரண்டுள. ஒன்று முதற் பதிப்பிலுள்ள சுயம்வரப் படலத்தில் இல்லாத ஒன்பது செய்யுட்கள் வெளிப்படிருத்தல். மற்றது முதற் பதிப்பிலுள்ள நாட்டுப் படலச் செய்யுட்கள் பதினாறும் சுப்பையனார் அவர்களுடையனவன்றென்பது ஐயப்பாட்டுக்கு இடனின்றித் தெளிவானமை. இராமலிங்கம் அவர்களுக்குப் பிறிதொரு பிரதியுங் கிடைத்தது. அதனிலும் இந்த நாட்டுப் படலப் பாக்களுள் ஒன்றேனுமில்லை. இதனை எனக்கவர்கள் எடுத்துக் காட்டியவுடன் பழையவொரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. இற்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கந்தையா பிள்ளை அவர்களின் பதிப்புப் பிரதியொன்று எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துச் சுவைத்த யான் நாட்டுப் படலத்திலுள்ள
"புல்லைமேய்ந் தங்குநின்று திமிர்புரி யிடபக் கன்று
முல்லைசார் வழியதாக முடிமிசை குடைகைக் கொண்டு
செல்லுவார் தம்மைக் கண்டு சினந்துவா லெடுத்து மூசிக்
கல்லையுங் கயிற்றி னோடு காட்டிடை யிழுத்துச் செல்லும்"
என்னும் நான்காஞ் செய்யுளை, 1946ஆம் ஆண்டில் வானொலியிற் பேசும்போதொருமுறை, எடுத்து அதன் அழகை விரித்து விளக்கினேன். விளக்கி நாட் பலவாகுமுன் யானெதிர் நோக்காத ஒரு கடிதம் வந்தது. அதனை யெழுதியவர் நீர்வேலி வாசகரும், அக் காலத்தில் விவாகம் பிறப்பிறப்பாம் இவற்றைப் பதியும் பணியாற்றி இப்பொழுது இளைப்பாறியிருக்கும் சித்சபேசன் அவர்களாவர். அவர் எழுதிய கடிதத்திற் பின்வருமாறு கூறியிருந்தனர்:
"1914 வரையிற் கனகி புராணத்துச் செய்யுட்களை அதிக சிரமப்பட்டு ஊரூராய்த் திரிந்து சம்பாதித்தேன். அப்பாடலில் எனக்கு அதிவிருப்பு அப்போதிருந்தது. 1935 வரையில் ந. சி. கந்தையா அவர்களின் சினேகம் கிடைத்தது. அவருடன் கனகி புராணம் பற்றிய சம்பாஷணை நடைபெற்றது. சிறீ. ந. சி. க. அவர்கள் அப் பிரதிகளை அச்சிட விரும்பியமையினால் அவற்றையெழுதிக் கொடுத்தேன்.
துருவாச முனிவர் '...தேவரில் யார் யாரை கருதி நீ வரவழைத்தனை யவரவர் கணத்து நின் கரஞ் சேர்வர். தம்மை யொப்பதோர் மகவையுந் தருகுவர்...' என்று கூறி உபதேசித்த மந்திரத்தை, குந்தி தேவி சோதனை பார்க்கும் பொருட்டு உச்சரித்தமை போல் நானும் என்னாலியற்றப்பட்ட சில பாடல்களை கனகி புராணத்துடன் சேர்த்தனுப்பினேன். அப்படிச் செய்தமை களவன்று. என் புன் பாடலுக்கும் ஏதும் நிறையுண்டோ என்பதை அறியவே அப்படிச் செய்தேன். குந்தி கன்னனைப் பேழையுளடைத்து கங்கையில் விட, பேழை அத்தினபுரி அரண்மனையை அடைந்தது. 'புல்லை மேய்ந்து' என்னும் முதலையுடைய பாட்டைப் பற்றித் தாங்கள் றேடியோவில் பேசியதை யான் அறிந்துள்ளேன். இப் பாடல் நீர்வேலித் தலைமையாசிரியரும் நானும் ஒரு முறை அயலூருக்குச் சென்ற போது செம்மாபாட்டு வெளியில் எங்களைக் கண்டு சீறிச் சினந்து ஓடிய ஒரு நாம்பன் மாட்டைப் பற்றியதாகும்.
என்பாட்டிற் பாடிய என் பாட்டின் நிறையை அறியும் பொருட்டு அறிஞராகிய தங்களை ஏமாற்றிய ஒரு குற்றத்துக்கு ஆளானேன்."
இதை வாசித்ததும், கனகி புராணக் கவிகளுள் ஒன்றென அச்சேறிய இக் கவியானது புலவர் சுப்பையனார் அவர்கள் இயற்றியதென எண்ணி யான் ஏமாந்திருந்தேனே என்னுஞ் சிந்தனை ஒரு புறம் உளத்தை வாட்ட, மறுபுறம் அதனை உள்ளபடி இயற்றியவரும் ஒரு புலவரன்றோ என்னும் வியப்போடு கூடிய இன்பவுள்ளுணர்வு எழுந்து என்னைத் தேற்றியது. சில நண்பருக்கு இதை நான் கூறியதை விட வேறு யாதும் இதுவரையுஞ் செய்திலேன். இந்த இரண்டாம் பதிப்புக்கு யான் முன்னுரை எழுதத் தொடங்கு முன்னர், சித்சபேசன் அவர்களுக்கு என் கருத்தைக் கடித மூலந் தெரிவித்தேன். நாட்டுப் படலச் செய்யுட்கள் பதினாறுந் தங்களுடையனவே எனவும், தாம் தேடிப் பெற்ற கனகி புராணச் செய்யுட்கள் பன்னிரண்டோடு அவற்றையுஞ் சேர்த்து, கந்தையா பிள்ளை அவர்களுக்குக் கொடுத்தனர் எனவும் அறிவித்து உடனே பதில் தந்தனர். அழகான கவிகளைப் பாட வல்ல இயற் புலவர் இவரென்பதை முன்னரே அறிந்துள்ள யான் வியப்புறவேயில்லை. மற்றையோரும் வியப்புறா வண்ணம், 1946ஆம் ஆண்டில் அவர்கள் எனக்கு அன்போடனுப்பிய பொன் போன்ற செய்யுட்களுள் ஒன்றை ஈண்டுத் தருகின்றேன்:
"கள்ளித் தடியை முறித்தடுக்கி மூட்டிக் கனலைப் பிடுங்கிமர
வள்ளிக் கிழங்கை வைத்துமிசை வாட்டி யுரித்துக் கடித்துண்டு
துள்ளித் திரிந்து விளையாடித் தோழருடனா னிரைமேய்க்கும்
பள்ளிச் சிறுவர் பயிலிடங்கள் பலவும் பாங்க ருளகானம்"
"புல்லை மேய்ந் தங்கு நின்று ......." என்னும் செய்யுளுக்கும் இதற்குமுள்ள ஒற்றுமையைச் சொற் சுவை பொருட் சுவை இரண்டையும் ஒப்பு நோக்கிக் கண்டு, முதலாம் பதிப்பினுட் புகுந்து விளங்கும் நாட்டுப் படலச் செய்யுட்களெல்லாம் சித்சபேசன் அவர்களுடையனவோ என்னும் ஐயப்பாட்டை இன்னமுமுடையோர் அதனைத் தீர்த்துக் கொள்ளுவார்களாக.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வயோதிபரான தமிழன்பர் ஒருவரோடு யான் கலந்துரையாடிய போது, வெளிவந்த பிரதிகள் ஒன்றிலேனும் இல்லாத ஒரு செய்யுளை அவரெனக்குச் சொன்னார். அதாவது:
"நன்னிய ருறியறுந்தார் நடுவிலார் பூண்டுகொண்டார்
சின்னியோ டொன்றிவிட்டான் செங்கையொன் றிலாதசொத்தி
முன்னுளோர் பாட்டைக் கண்டு(கேட்டு) முத்தருங் கைசலித்தார்
*நன்னிய கனகிபாடு நடுராசி யாயிற்றன்றே"
(* 'நன்னிய' என்பது 'நன்னுதல்' அல்லது 'நன்னியல்' என்பதன் பேதமாக இருக்கலாமோ என்று எண்ண இடமுண்டு. கனகியின் இயலுக்குப் புலவர் 'நல்' என்ற அடை கொடுத்திருப்பார் என்று கொள்ளுதல் பொருத்தமுடைத்தன்று. ஆதலின் 'நன்னுதல்' என்றே கொள்ளலாம் போலும்)
இக்கவி சுயம்வரப் படலத்துக்கு உரியதாகத் தோற்றவில்லை. கனகியை அடைந்து அவளாற் கட்டுண்டு வாழ்ந்து பின் கட்டையறுத்து வெளியேறியவர் நால்வர் அவளைக் கை விட்டதைக் கூறுகின்ற இச் செய்யுள் வெட்டை காண் படலத்தின் முற்பகுதியில் உள்ளதாக, அன்றேல் கைக்கெட்டாத பிறிதொரு படலத்துக்கு உரியதாக இருக்கலாம்.
கனகி புராணச் செய்யுட்கள் வேறெவையேனும் யாருக்கும் எட்டுமாயின் அவர்கள் அவற்றைக் கலத் தீ கொண்டொழிகு முன்னர் இப் பதிப்பின் கருத்தாவான இராமலிங்கம் அவர்களுக்குக் குறித்தனுப்பி வைத்தால், அவை சிதைந்து போகாமல் நின்று நிலவும் வழியை அவர்கள் தேடி வைப்பார்கள். யாவும் வல்ல இறைவனருளால் அவர்களுக்கு எல்லா நலன்களுமுண்டாகுக.
க. ச. அருள்நந்தி
------------------------------------------------------------
முகவுரை
கனகி புராணம் பழைய பதினெண் புராணங்களுள் ஒன்றன்று. வடநூல் மொழிபெயர்ப்புமன்று. ஈழநாடு என்னும் இலங்கையின் வடபாற் செந்தமிழ்ப் பட்டினமாகிய யாழ்ப்பாணத்திலே கி. பி. 19-ம் நூற்றாண்டிலே பிறந்து புலமையால் புகழெய்திச் சென்ற புலவர் நட்டுவச் சுப்பையனார் தாமே புதிதாய் இயற்றிய புராணமாகும். புராணம் என்னும் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள்.
பாட்டுடைத் தலைவியோ நாட்டியக் கலையால் நாட்டமெய்திய கனகி என்னுங் கணிகை ஆவள். இவள் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன் இலாவணியத்தாலும் கலை வன்மையாலும் இலங்கை, இந்திய ஆடவர் பலரைத் தன் ஆணைக்குள்ளாக்கினள் என்றும், பிறவாறும், இப்புராணங் கூறும்.
இந்நூல் முழுவதும் ஒருங்கு கிடையாமையால், காலத்துக்குக் காலம் கிடைக்கும் பாக்களை வெளியிடும் பேற்றையே பெற்றுள்ளோம். முதலில், பெரியார் ஜே. ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை அவர்கள், 1886ம் ஆண்டில் தமக்குக் கிடைத்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலையும் வெளியிட்டனர். அதன் பின்னர், பல நூலாசிரியர், நவாலியூர் திரு. ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் தமக்குத் தெரியவந்த கவிகளை 1937ம் ஆண்டு வெளியிட்டனர். நாமும் நமக்குத் திருவாளர் பி. தர்மலிங்கம் அவர்கள் அளிப்பால் வந்த பாக்களை இதுகாலை வெளியிடுகின்றோம். முழு விவரத்தையும் நூலகத்தே காண்க.
இதுவரை வெளிவராத கனகி புராணச் செய்யுட்கள், புலவரவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்கள், முதலியனவற்றை இதுகாறும் தெரிய வந்தவர்களும் இனித் தெரிய வருபவர்களும் எமக்கு எழுதியுதவினால், யாவையுந் தொகுத்துப் பெரிய முழு நூலாக வெளியிடுவோம். சான்றோர் சோல்லாயினும், பிறர் சொல்லாயினும், அவற்றில் புலமை காணின், அவற்றைக் காத்துக் கலைச் செல்வமாக்குவது எல்லோர் கடனுமாம்.
வவுனியா நகர சங்கத் தலைவர், திரு. பி. தர்மலிங்கம் அவர்கள் நம் நாட்டுப் புலவர் நட்டுவச் சுப்பையனார் பாடலைக் கண்டெடுத்து அதனைப் பொன்னேபோற் போற்றியது பெரிதே. அங்ஙனம் போற்றிய அவர் கையெழுத்துப் பிரதியை நாம் விழைந்த போது அதனையே எமக்கு மனமுவந்து ஈந்தது அதனிலும் பெரிதே. அத் தண்ணளியுடையார்க்கு ஒருவேம் செலுத்தும் நன்றி எத்துணையாம். அவர் இப் பாடலைப் பெற்றுப் போற்றிய செயலும், அதனை உபயோகிக்குமாறு எமக்கு அளித்த செயலும், நம் நாட்டு வரலாறு உள்ள வரையும் பெருமக்கள் யாவராலும் பாராட்டப்படும்.
இப் பாடல்களிலுள்ள வழுக்களைந்து பொழிப்புரை குறிப்புரைகளும் சொல்லியுதவிய புலவர் சிவங். கருணாலய பாண்டியனார் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி உரியது. எம்மை இப் பணியில் பெரிதும் ஊக்கிய அன்பர், அரசாங்க கணக்குப் பரிசோதகர், தலையாளி. திரு. வ. கந்தையா அவர்களுக்கும் எமது நன்றி உரியது.
மு. இராமலிங்கம்
"AYODHYA"
No. 15, Hamer's Avenue
COLOMBO - 6
1-8-49
--------------------------------------------------------
ஈழத்துப் புலவர் நட்டுவச் சுப்பையனார்
இயற்றிய
கனகி புராணம்
1. நூலாசிரியர் வரலாறு
உதயதாரகைப் பத்திராதிபர், திரு. J. R. ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்கள் தாம் 1886ம் ஆண்டு மானிப்பாய் மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்த பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலில் கனகி புராண ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதியை இங்ஙனம் தந்துள்ளார்.
"யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை மேளகாரப் பகுதியைச் சேர்ந்த இவர் தம் சுய சாதித் தொழிலிற் பயின்றிராதபோதும் வழக்கமாய் "நட்டுவச் சுப்பையன்" எனப் பட்டார். சிறுவயதிலே பதிதனாகி இவர் தெல்லிப்பழையிலே வாழ்ந்த அமெரிக்க மிஷினரிமாரைச் சேர்ந்து கிறீஸ்து மதானுசாரியானார். மறுகால் அம்மதம் விட்டு மல்லாகக் கோயிற்பற்றைச் சார்ந்த ஏழாலைக் குறிச்சியிலே கல்யாணஞ்செய்து, அவ்வூரைத் தம் உறைபதியாக்கினார்.
"இவரை நாம் கண்டிருந்தும் இவருடைய கல்வி சாமர்த்தியங்களைக் குறித்து யாதும் உணர்ந்தோம் அல்லேம். இலக்கண இலக்கியங்களிற் பயின்றவரோ, அன்றி வாணி வாக்கில் உறையப்பெற்றவரோ யாதும் அறியோமாயினும், வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் தாசிகளுள் ஒருத்தியும், இற்றைக்குச் சிலகாலத்தின் முன் இறந்தவளுமாகிய கனகி என்பவள் பேரிற் "கனகி சயமரம்" என பாடிய ஓர் பாடலால் நல்ல சரள நடைப் புலவராய் இருந்தார் இவர் என அறிகிறோம்.
"கனகி சயமரம்" எனும் பாடலில் முன்பின் நானூறு விருத்தங்கள் உண்டென்று கேள்விப் பட்டோம். விருத்தங்கள் ஒவ்வொன்றும் பாரத காவியத்துத் திரெளபதி மாலையிட்ட சருக்க விருத்தங்கள் போல்வன. பாடல் மாதிரிக்கு எமது ஞாபகத்திலிருக்கும் விருத்தங்களுள் ஒன்றை இங்கு தருகிறோம்.
"காட்டுக் குயிலைக் கடிதோட்டிக்
கனத்த நாவி னெய் தடவி,
மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனகமின்னே!
ஓட்டைக்காதினுடனிருந்தங்
குவந்தே புடவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்பனிவன்காணே."
"கிறீஸ்தாப்தம் 1816ம் ஆண்டே அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்த காலமாதலாலும், இவர் மகனொருவன் வேலணையில் விவாகஞ் செய்திருந்து சில காலத்துள் இறந்தனனாதலாலும், இவர் காலம் தற்காலந்தான். "கனகி சயமரம்" எனும் பாடலை விடப் பின்னும் ஏதும் பாடியிருந்தனரோ என்பதும் தெரிய வரவில்லை"
2. முன் வெளிவந்த பிரதியிற் கண்டவை
நீர்வேலி வாசரும், தமிழறிஞரும், திருவாளரும், ஆகிய C. சிற்சபேசன் அவர்கள் தமது ஞாபகத்திலிருந்து எழுதியளித்த இருபத்தொன்பது பாடல்களை நவாலியூர் திரு. ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் 1937ம் ஆண்டு "கனகி புராணம்" என்னும் பெயருடன் வெளியிட்டார்கள்.
அப்போது அச்சேறிய பாடல்களின் விவரம் வருமாறு:
பிள்ளையார் காப்பு பாடல் 1
நாட்டுப் படலம் " 9
மகளிர் புனலாடச் செல்லல் " 7
சுயம்வரப் படலம் " 11
வெட்டைகாண் படலம் " 1
முற்றும் " 29
3. பின் வந்த பிரதியிற் கண்டவை
வவுனியா நகர சங்கத் தலைவர், திரு. P. தர்மலிங்கம் அவர்கள் எமக்களித்த கனகி புராணக் கையெழுத்துப் பிரதியொன்றன்கணுள்ள பாடல்களின் விவரம் வருமாறு:
பிள்ளையார் காப்பு பாடல் 1
நாட்டுப் படலம் " 2
சுயம்வரப் படலம் " 19
வெட்டைகாண் படலம் " 3
முற்றும் " 25
இக் கையெழுத்துப் பிரதி காகிதத்தில் உண்டு.
----------------------------------------------------------
பிள்ளையார் காப்பு
1.
சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும்
குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப்
பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே
அழகான பார்ப்பனர் தெருவானது மேம்பட்டு விளங்கும் வண்ணார்பண்ணை ஊருக்குத் தலைவனாயிருக்கும் வைத்தீஸ்வரன் என்னும் திருப்பெயர் கொண்டு வீற்றிருக்கும் சிவபெருமானுக்குப் பெருமை வாய்ந்ததொரு நடனஞ் செய்கின்ற, வஞ்சனை பொதிந்த மனமுடையவளாகிய, கொடிபோலத் துவளும் இடையுடைய கனகி என்னும் பொதுமகளைப் பற்றி எடுத்துக்கொண்ட இந்நூலுக்கு வண்ணையூரிலே பித்துடையவனாய்த் திரிகின்ற அராலிப் பிள்ளையான் (இடையூறின்றி நிறைவேற்றும்) பாதுகாவலாகும்
"சித்திரம்" என்றது குறிப்பால் மெய் போலச் சொல்லும் பொய்யையுடைய எனப் பார்ப்பனரை விசேடித்தவாறாம். "கனத்த நடனம்" என்றது கனகியின் உடம்பின் தோற்றங் குறித்துப் போலும். "நடனஞ் செய்யும் குத்திர மனத்தள்" என்றது கோயிலுக்குள்ள பொது மகளிருள்ளும் இழிந்த மனமுடையவள் என்ற வாறாம். "அராலிப் பிள்ளையான்" என்றது மூத்த பிள்ளையார் என்னும் ஓசைபட, அராலியிலிருந்து வந்து வண்ணார்பண்ணையிலே திரிந்து கொண்டிருந்த பிள்ளை என்னும் பெய்ருடைய வண்ணாரப் பித்தன் என்று சொல்லுவர். இதனாலும் இந் நூல் நகைச்சுவைப் பொருட்டு எடுத்துக் கொண்டதென்பது வெளியாகின்றது. கனகியைச் சிறப்பித்துக் கூறியவாற்றால் இந் நூலைக் கற்றலின் பயனும் பெறப்பட்டது. அஃதாவது பொதுமகளிரது வஞ்சமனமுடைமையும், தம்மைக் கூடினார்க்கு வறுமையும் நோயும் கொடுத்துக் கெடுத்தலுடைமையும், அறிந்து அவர்களைக் காளையர் கடிந்து ஒழுகுதல்.
-----------------------------------------------------
நாட்டுப் படலம்
கையெழுத்துப் பிரதியிலுள்ள நாட்டுப் படலப் பாடல்கள் இரண்டும் அச்சுப் பிரதியில் நாட்டுப் படலத்தின் கீழ் இல்லாமல், பதிப்பாசிரியரின் முகவுரையில் காணப்படுகின்றன.
2.
தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்
பருத்து அடிவிரிந்து மேலோங்கி விம்மிச் செழித்து இரண்டும் தம்முள் ஒன்றோடொன்று மென்மேலும் நெருக்கி முனைந்து நிற்பது போல ஒத்திருந்து தம்முடைய கண்களாலே செய்தற்கரிய தவஞ்செய்த முனிவருடைய உயிரைப் பருகியது போலத் தோன்றி முத்துமாலை முதலா வடங்களுக்குள் அடங்காமல், இரட்டித்துப் போட்ட இறவுக்கையையும் கிழித்து, மதம் பொழியும் யானைக் கொம்பைக் காட்டிலும் குத்துவதுபோல நிமிர்ந்து, மேலாடைக்கு மேலும் புலப்படுகின்ற, தேமல் வரிசைகள் பரந்து புடைத்த இரண்டு பாரமான கொங்கைகளை யுடையவள் (கனகி).
இமையாத கறுத்த கண்களென முலைக்கண்களை முகக் கண்களுக்கு வேறுபட்ட கண்களென விதந்தோதினார். சுணங்கு என்பதற்கு வெளிப்படைப் பொருள் அழகுத் தேமல், குறிப்புப் பொருள் நோய்த் தேமல். இவ்வாறு இவள் கொங்கைகளையும் பிறவற்றையும் விரித்தோதுவது இவள் அத்தினி யென்னும் நாலாஞ் சாதிப் பெண்களினும் இழிந்து, ஒரு சாதியினும் படாத பெண் என்னும் கருத்துப் பற்றி.
3.
நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி, நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசைய, வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.
மாராசகேசரி* என்னும் மன்னவன் ஆளும் யாழ்ப்பாண நாட்டிலே ஒரு மங்கை (கனகி) தன்னுடைய கொங்கைகளாகிய குடங்கள் அசையும் படியாக (தெரு வழியே) நடந்து போனாள். (அப்பொழுது அவளுடைய) உல்லாச ஒயில் நடையைக் கண்டு அரசர்களும் (அவளுக்குப் பின்னே) தொடர்ந்து போனார்கள். முற்றுந் துறந்த முனிவர்களும் யோக சமாதியை விட்டு அவளைப் பற்றிய தியானஞ் செய்தார்கள். சுத்த சைவ மடாதிபதிகளெல்லாம் தங்களுடைய மடத்தைக் கதவடைத்துவிட்டு, சிவ பூசையையும் தம் பெட்டகத்துள் கட்டி வைத்து விட்டார்கள்.
*இவன் பரராசசேகரனுடைய மருகனும் இரகுவம்சம் பாடியவனும் ஆகிய அரசகேசரி தானா என்பது ஆராயத்தக்கது.
பிற் செய்யுள் தனிப்பாடற்றிரட்டிலுங் காணப்படுகின்றது.
----------------------------------------------
சுயம்வரப் படலம்
அச்சேறிய சுயம்வரப் படலச் செய்யுட்கள் 11 என முன்னர்க் கூறினோம். அவற்றுள் ஒன்று பாதிச் செய்யுள். மற்றைப் பத்துக்கும் பாடபேதங்களுடன் நேர் பத்துச் செய்யுட்கள் கையெழுத்துப் பிரதியிலுள்ளன. அந்தப் பத்துச் செய்யுட்களையும் இங்கு தருகின்றோம். பாட வேற்றுமை தெளிவுற அச்சுப் பிரதியின் பத்துச் செய்யுட்களையும் அநுபந்தத்தில் தருகின்றோம்.
4.
ஈட்டுந் தனத்தையே விரும்பி,
யிரண்டு தனமுந் தான் கொடுத்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பும்,
முகில்போலளகக் கனக மின்னே!
நாட்டுப் புறத்திலிருப்போரில்,
நல்லவுடையும், பொய்ம் மொழியும்,
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாரும், பெண்ணாரே.
(இப் படலத்தில் வரும் கவிகள் அனைத்தும் தோழி கூற்று)
(காமுகரிடம்) தான் சம்பாதிக்கின்ற தனத்தை மட்டுமே ஆசைப் பட்டு (அத் தனத்தைக் கொடுக்கும் அவர்களுக்கு) தான் (தன்னுடைய) இரண்டு கன தனங்களையும் கொடுத்து (அக் காமுகர் தன்னிடம்) மூட்டுகின்ற காமத் தீயை (அவர்களுக்குத்) தான் எழுப்புகின்ற, மேகம் போலக் கறுத்த கூந்தலையுடைய, கனகமாகிய மின்னே! பட்டிக் காடுகளில் வாழ்கின்ற மக்களுள்ளே (உடம்பிலே) நல்ல உடையையும் (வாயிலே) பொய்ச் சொல்லையும் காட்டித் தம் சிறு குறும்பைக் காட்டுகின்ற மானிப்பாயிலிருந்து வந்த பெரியாரை, பெண்ணாரே, உங்கள் (திருக்) கண்களால் பார்த்தருளுங்கள்.
இங்ஙனம் இருபாலாரையும் கனகியின் தோழி உயர்த்திச் சொன்னது இழிவு பற்றிய இகழ்ச்சிக் குறிப்பு. இரண்டு தனங்களில் வாங்கும் தனமாவது கைப்பொருள். கொடுக்குந் தனமாவன கொங்கைகள். தனங் கொடுத்துத் தனம் வாங்குதல் வட்டி வியாபாரம்; பண்ட மாற்றுமாம்.
5.
காட்டுக் குயிலைக் குடியோட்டிக்,
கனத்த நாவி னெய் தடவி,
மாட்டு மினிய சொல்லுடைய
மானே, கனக மரகதமே!
ஓட்டைக் காதினுடனிருப்போன்
ஒளி சேர் புடவை விற்கின்ற,
நாட்டுக் கோட்டையார் தமக்குள்,
நல்லாண்டப்ப னல்லாளே.
குயிலைக் காட்டுக்குக் குடியோடும்படி செய்து, தடித்த நாக்கிலே தேன் தடவினாற்போல ஆட்களைத் தன் கைக்குள் அகப்படுத்துகின்ற சுவையான சொற்களையுடைய மானே! கனகியாகிய மரகத ரத்தினமே! பெண்களுட் சிறந்த பெண்ணே! (இவ்விடத்திலே) தொள்ளைக் காதுகளுடனே இருக்கின்றவன் ஒளிநிறம் பொருந்திய ஆடைகள் விற்கின்ற நாட்டுக் கோட்ட்டைச் செட்டியார்களுள் நல்லாண்டப்பன் என்று புகழப் படுபவன்.
குயிலைக் காட்டுக்குக் குடியோட்டியது என்றது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. மானே, மரகதமே, நல்லாளே, என இந்நூலில் அடுக்கி வருவது ஆர்வ மொழிச் சுவை என்பதோர் அணி. "ஒட்டைக் காது" என்றாற் போல்வரும் அடைகள் எல்லாம் தன்மை நவிற்சி அணியும் நகைச்சுவை அணியுமாம்.
6.
சொல்லால் மயக்கி, யாடவர் தஞ்
சூழ்ச்சி யறிந்து, காம நிலை
எல்லார் தமக்கு மூட்டுவிக்கும்
இருள் போலளகக் கனக மின்னே!
பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப்
பூட்டுந் திறலினுடனிருப்போர்
மல்லாகத்தில் வீரரிவர்;
மற்றோர் நவாலி யூராரே.
(ஆடவர்களைத் தம்) சொற்களாலே (தம்மை நம்பியும் காமவசப்பட்டும்) மயங்கும்படி செய்து, அவ்வாடவர்களுடைய தந்திரங்களைத் தெரிந்து கொண்டு, அவர் எல்லாருக்கும் காம நிலைமையை மூளச் செய்கின்ற, இருள் போலக் கண்ணுக்கு இருண்டு தோன்றுகின்ற கூந்தலையுடைய, கனக மின்னே! கேடு செய்கின்றவர்களுக்கு கேடுகளைப் பூணச் செய்கின்ற வெற்றியுடனிருப்பவர்களில் இவர் மல்லாகத்தில் வாழும் வீரர். மற்றவர் நவாலியூரிலிருந்து வந்தவர்.
ஆடவர்கள் இவளுக்குச் செய்யுந் தந்திரமாவது தங்களைக் காம அநுபவத்தில் ஏமாற்றித் தப்பவிடாதபடி தழுவு பொருட்டுச் செயல்.
7.
நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலும் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனைய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.
சங்கு ஈன்ற முத்துப் போலச் சிறந்த குலத்தில் பிறந்த சிறந்த பெண்ணே! புகழப் படுகின்ற திருப் பாற் கடைந்த மத்தாகிய மந்தரமலையே போன்ற கொங்கைகளையுடைய கனகே! மன்மதனுடைய பூ அம்புகளை வளர்க்கின்றவளே! பத்துப் பேரோடு பதினொன்றாம் பேராக இங்கு சுயம்வரக் கூட்டத்தில் வந்திருக்கும் அவர் சூரியகுலத்துக்கே முடிமணிபோலச் சிறந்த புத்தூர் மணியகாரன் சின்னையன் என்பான். அவனுக்குப் பின் இருக்கின்றவன் தம்பூடையான் என்று சொல்லப்படுபவன்.
மாரன் கணையை வளர்ப்பவள் என்றது விலங்குகள் போலப் போகத்துக்கல்லது இல்வாழ்க்கைக்குரியள் அல்லள் என்பது கருத்து.
8.
தாமரை முகையுங், கோங்கின தரும்பும்,
தந்தியின் கொம்புடன் சிமிழுங்,
காமரு சூதின் கருவியுங், குடமும்,
காமனார் மகுடமுங் கடிந்தே,
சேமமாய் வென்று, கூவிளம் பழத்தைச்
சேர்ந்திடு தனமுடைக் கனகே!
நாம மிங்கிவர்க்குக் களஞ்சியக்
குருக்கள், நங்கை நீ காணுதியென்றாள்.
தாமரையினது அரும்பையும், கோங்கமரத்தின் மொட்டுக்களையும் யானையின் கொம்புகளையும், செப்புச் சிமிழையும், விருப்பம் உண்டாகின்ற சூதாடு கருவியையும், மன்மதனாருடைய பொன்முடியையும் சினந்து வெறுத்து, நன்றாக வென்று, வில்வப்பழத்தை நட்புக் கூடுகின்ற கொங்கைகளையுடைய கனகே! இவ்விடத்திலே யிருக்கும் இவருக்குப் பெயர் களஞ்சியக் குருக்கள் என்பது பெண்களிற் சிறந்தவளே! நீ இவரை ஏறிட்டுப் பார் என்று தோழி காட்டிச் சொன்னாள்.
9.
அரிபாற் கடலைக் கடைந்த தினத்
ததிலே யெழுந்த மலர்த்திருவும்
உருவுக் கிலை நிகரென்றுரைக்கும்
ஒளி சேரழகே, கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்;
பின்னோன் தம்பி இவனாமே
திருமால் திருப்பாற்கடலை அமுதெழக் கடைந்த நாளிலே அக்கடலிற் பிறந்த செந்தாமரைப் பூத் திருமகளும் நின் வடிவுக்கு ஒப்பில்லை என்று சொல்லப்படும் ஒளிதிரண்ட அழகே, கனக மின்னே! தெருவிலே சனியன் போல இருந்து கொண்டு உன்னைத் தேடித் தேடி மயங்குகின்ற சிவப்பிரகாசன் என்னும் பெயர் படைத்தவன் இவன். இவனுக்குப் பின் இருப்பவன் இவன் தம்பி.
தமையனும் தம்பியும் கனகியிடம் போக்குவரவுடையவர் என்பது காட்டி வரன்முறையில்லாதவளென்னும் அருவருப்புத் தோற்றுவித்தவாறு.
10.
தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்,
மால் பற்றிய நெஞ்சினனாகி,
வந்தான், கனகே, மன்றலுக்கு,
நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றனிவன் காண், நேரிழையே!
உனக்குத் தகுந்த நகை பூண்ட பெண்ணே! ஒரு பனம்பழம் பெற்றுத் தின்பதற்காக, பனையடி நிலத்திலே மக்கள் பலர் கூடி, வேலுங் கத்திகளுமெடுத்துப் பனம்பழத்தைப் பார்த்து வீசி மிகவும் வெற்றியாகப் போர் செய்கின்ற வள நாடுடைய இவன், மையல் பூண்ட மனமுடையவனாகி, நின் திருமணத்திற்கு வந்தான். கனகே! நீல, கருமையான, கார்கால மேகத்தின் நிறமுடைய நியூற்றன் என்பவன் இவன் தான்.
11
ஊரார் சுணங்கு தோற்றாமல்
உயர் சாந்தணிந்து, வடம் பூட்டி,
வாரான் மறைக்குந் தனக் கனகே!
வரி வண்டூத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவை வளர்
நெய்த நிலத்தான், வங்க நிறை
ஊராத்துறைக்கு மணிய மிவன்,
உடையா ரருணாசலத்தின் மகன்.
ஊரிலுள்ளார்க்கு நோய்த் தேமல் தெரியாதபடிக்கு, உயர்ந்த சந்தனம் பூசி, முத்தாரமணிந்து, இறவுக்கைகளாலே மறைக்கப்படுகின்ற கொங்கைகளையுடைய கனகே! வண்டுகள் வரிப்பாட்டை ஊத, அரும்பு மலர்கின்ற, நீர் வளத்தால் பொலிவு பெற்ற சரவணையென்னும் ஊரில் வளர்ந்த நெய்த நிலத் தலைமகன். கப்பல்கள் நிறைந்து நிற்கும் ஊராத்துறை ஊருக்கு மணியகாரன். இவன் அருணாசல உடையார் மகன்.
இங்கே கனகி இறவுக்கை முதலியன அணிவது மற்றை மகளிர் அணியுங் கருத்துக்கு வேறுபட்ட கருத்துடையதாதல் கண்டு நகைக்கத்தக்கது.
12
தொட்டுப் பிடிக்கத் தனமேனும்
தோளே யெனினுந் தான் கொடுக்கும்
மட்டுப் புரண்ட குழலாளே!
மாரன் வில்லைக் குனிப்பவளே!
எட்டுத் திக்கு முழு தாளு
மிதயத்துடனே யிங்கிருப்போன்
வட்டுக்கோட்டை நெற் கணக்கில்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.
தொட்டுப் பற்றுவதற்குக் கொங்கைகளையாவது தோள்களையாவது கொடுக்கின்ற தேனோடு புரண்டு விழுந்த கூந்தலையுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! எட்டுத் திசையின் நிலம் முழுதினையும் ஆழுகின்ற எண்ணத்தோடு இங்கு இருக்கின்றவன் வட்டுக்கோட்டையிலே வருகின்ற அரசிறையாகிய நெற்கணக்குத் தொழிலிலே பிழைத்து வருகின்ற சுப்புவென்பவன் காணும் என்று தோழி கனகிக்குச் சுட்டிக் காட்டினாள்.
எட்டுத் திக்கு முழுதாளும் இதயம் என்றது பொய்க் கணக்கெழுதிப் பொருள் சேர்க்கும் எண்ணத்தைக் குறிப்பிடுகின்றது. நெற்கணக்கில் வாழுஞ் சுப்பு என்றது அப்பொருளெல்லாம் நமக்குக் கிடைக்கும் என்ற குறிப்புடையது. காணும் = தெளிவுப் பொருளில் வந்த முன்னிலை அசை.
13
பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே.
மலர்கள் அடுக்கிய பஞ்சணை மேலே ஆடவர்களை அழகாக இருக்க வைத்து, அவர்தம் கைப் பொருளைக் கவர்வதற்கு, கொங்கைகளுக்குப் பாதுகாப்பாயிருக்கின்ற இறவுக்கைகளைப் பாதி திறந்து காட்டுகின்ற கனகே! அழகாக நடக்கின்ற பெட்டை அன்னமே! தன்னை மிகவும் பார்ப்பனர்கள் சூழ்ந்திருக்க தாமரைப் பூப்போல முகம் மலர்ந்து, இங்கு தங்கியிருக்கின்ற இவன், கோப்பாயில் வாழும் முத்துக்குமாரு என்று சொல்லப்படுகின்றவனும், வாலிபர்களுக்குள் போர்க்காளை போலச் சிறந்தவனும் ஆவன்.
இனி, சுயம்வரப் படலத்தில் இதுவரை வெளிவாராத ஒன்பது செய்யுட்கள் கையெழுத்துப் பிரதியிலுள்ளன. அவற்றையும் இங்குத் தருகின்றோம்.
14
மறுவற் றிலங்கு மதிமுகத்தில்
வாள்சேர்ந் தனைய வுண்கண்ணாய்
நிறையச் சொருகும் பூங்குழற்கு
நிகர்வே றில்லாக் கனகமின்னே!
அறிவுக் கினியான் அவனிதனில்
யார்க்கு முதவி செயவிரும்புங்
கறுவற்றம்பி யெனும் பெயரோன்
கண்ணன் றனக்குச் சரிவந்தோன்.
கறையின்றி விளங்குகின்ற சந்திரனாகிய முகத்திலே, இரண்டு வாள்கள் சேர்ந்திருந்தாற் போன்ற, மையூட்ட உண்ட, கண்களும், நிரம்பச் சொருகுகின்ற பூக்களையுடைய கூந்தலுக்கு, அக்கூந்தலே ஒப்பாவதல்லது, வேறு ஒப்பாவதில்லாத கனக மின்னே! அறிவுக்கு இனிமையாயிருப்பவன் உலகத்தில் எல்லோருக்கும் உதவிசெய்ய விரும்புகின்ற கறுவற்றம்பி என வழங்கும் பெயருடையவன். அக் கருநிறத்தாலே துவாரகைக்கண்ணபிரானுக்கு ஒப்பாகப் பிறந்தவன்.
இன்னோரன்னவையெல்லாம் புகழ்வது போல இகழ்தல் என்னும் அணியாம். மற்றப் பாட்டுக்களிலும் கனகிக்கும் பிறருக்கும் இவ்வாறு கூறிச் செல்லுமாற்றைக் கண்டுகொள்க.
15
பொன்னைப் பொருவு மருமத்திற்
புடைகொண் டெழுந்த வனமுலையாய்,
மின்னைச் சிரிக்கு நுண்ணிடையாய்,
வேய்த்தோட் கனகே யிவணிருப்போன்
தன்னைப் போல வேறொருவர்
தரணி தலத்தி லுள்ளாரோ?
வென்னப் பேசும் நன்னியிவன்
இடறுப் பூச்சு மெய்யானே.
நிறத்தினாலே பொன்னைப் போன்ற மார்பிலே புடைப்புக் கொண்டெழுந்த அழகான முலையுடையவளே! மின்னை இகழ்ந்து சிரிப்பது போல மின்னினும் நுண்ணிய இடையழகு வாய்ந்தவளே! மூங்கில் போலத் திரண்டு உருண்ட தோள்களையுடைய கனகே! இவ்விடத்திலேயிருக்கின்றவன் உலகத்தில் தன்னைப் போலப் பிறரொருவர் இருக்கின்றார்களோ என்று பேசத் தகுந்த நன்னி என்பவன் - இவன் இடறுப் பூச்சினையுடைய உடம்புடையவனாயிருக்கின்றான்.
இடறுப்பூச்சு = சந்தனத்தை குறுக்கும் நெடுக்குமாக கீழிருந்து மேல் நோக்கிப் பூசுதல். தன்னைப் போல வேறொருவர் தரணி தலத்திலுள்ளாரோ என்பதன் குறிப்பாவது கழுதைக்குக் கழுதையல்லது ஒப்பில்லை என்றாற் போல்வது.
16
மானினைக் கயலை வனத்தினிற் றுரத்தி,
மறலிக்குக் கொலைத் தொழில் காட்டிப்
பானலை யோட்டி வடுவினை வாட்டிப்
பருத்த செவ்வேலையும் பழித்துக்
கூனல்வாள் நஞ்சி னமுதினோடுறவு
கொண்டிடும் விழியுடைக் கனகே!
தேனின நீங்கா மலரணி புயத்துச்
செல்வநாயக மிவன் தேவே.
பெண் தெய்வமே! புள்ளி மானையும் கயல் மீனையும் வனத்திலேயோட்டி, கூற்றுவனுக்குக் கொலைத் தொழிலைக் கற்பித்துக் காட்டி கருங்குவளைப் பூவைப் புறங் கொடுத்தோடச் செய்து, மாம்பிஞ்சினைத் தோற்று வாடும்படி செய்து தடித்த சிவந்த வேற்படைக் கலத்தையும் இகழ்ந்து, வளைவினையுடைய கொடும்வாளோடும் நஞ்சினோடும் அமுதினோடும் உறவு முறை கொள்ளுகின்ற கண்களையுடைய கனகே! தேன் வண்டுக் கூட்டம் பிரியாது மொய்த்திருக்கின்ற மலர்மாலையணிந்த தோள்களையுடைய செல்வநாயகம் என்பவன் இவன். தேவன் போல்பவன்.
வனம் என்றது சிலேடை. இரட்டுற மொழிதல். மானுக்குக் காட்டரவும் கயலுக்கு நீரரவும் பொருள் கொள்க. அவற்றை வனத்திலே துரத்துதல் என்றது தற்குறிப்பேற்ற அணி. துரத்துதல் என்றது துரத்துதல் முதலான செயல். தே=தெய்வம் என்று தோழி கனகியை விழிக்கின்றாள்.
17
மானைக் கயலை வேல் வாளை
மறுநீர்க் கடலைக் குவளையை நற்
கானிற் கமலந் தனைவெல்லும்
கண்ணாய் கனகே யிவணிருப்போன்,
ஞானக் குணமும் நல்லறிவும்
நலஞ்சேர் புகழு மிகவுடையோன்,
ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன்கா ணென்பாரே.
மானையும், கயல் மீனையும், வேலையும், வாளையும், சுழலுகின்ற நீரையுடைய கடலையும், கருங்குவளைப் பூவையும், நல்ல சோலையிலுள்ள தாமரைப் பூவையும், வென்று சிறந்த கண்களையுடையவளே! கனகே! இங்கிருக்கின்றவன் கல்வி அறிவுத் தன்மையும் நல்ல இயற்கை அறிவும் நன்மை பொருந்திய கீர்த்தியும் மிகவுடையவன். ஆனைக்கோட்டையில் வாழும் வேளாளன். இவனைத்தான் ஊரார் ஆறுமுகன் என்று சொல்வார் காண்.
'ஆறுமுகன் என்பார் காண்' என மொழி மாற்றுக. காண் = முன்னிலை அசை.
18
கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.
முத்தமிட்டுக் கடிப்பதற்கு தன் தனத்தை ஆடவர்க்குக் கொடுத்து, அவர் கொடுத்த தனத்தைத் தான் வாங்குகின்ற, அரைத்த மஞ்சளிலே புரண்டாற் போல் மஞ்சள் ஒட்டிய முகமுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! உலோபத்தன்மையும் வஞ்சனையும் வேறு கெட்ட எண்ணங்களும் நிரம்பிய மனமுடையவன் வஞ்சகஞ் செய்கின்ற இரக்கமற்ற பாவி பெரியதம்பி என்பவன். இவன் தன் பெற்றோருக்கு வரத்தினால் பிறந்த வைத்தியத் தொழிலாளி.
"கொடுத தனத்தைத் தான் வாங்கும்" என்பதற்கு ஆடவர்க்குத் தான் கொடுத்த தனத்தைத் தான் மீளவும் வாங்கிக் கொள்ளுகின்ற எனவும் பொருள் கொள்ளலாம். இவ் வைத்தியன் பொதுமகளிருடைய நட்பினால் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு மருந்து கொடுப்பவன் போலும்.
19
வண்டார் மாலைக் குழலாளே!
மதிசேர்ந்தனைய முகத்தாளே!
கண்டார் வணங்குங் கண்ணாளே!
கனகென் றுரைக்குங் காரிகையே!
உண்டார் போக மிவனைப்போ
லுளரோ விந்த வூர்தனிலே,
தண்டார் புனையும் பண்டார
மென்றா ரந்தத் தாதியரே.
வண்டுகள் ஒலிக்கின்ற மாலைசூடின கூந்தலுடையவளே! சந்திரன் வந்தாற் போன்ற முகமுடையவளே! தன்னைக் கண்டார் தன்னை அடிபணிந்து குற்றேவல் செய்வதற்குக் காரணமான கண்ணுடையவளே! கனகென்று அன்போடு சொல்லப்படுகின்ற பெண்ணே! இங்கிருக்கின்றவனைப் போல இந்த ஊரில் போகம் அனுபவித்தவர்கள் இருக்கின்றார்களோ (இல்லை). குளிர்ந்த மாலை கட்டுகின்ற பண்டாரம் என்று கனகிக்குச் சொன்னார்கள் அந்தத் தோழியர்கள்.
இந்தப் பண்டாரம் இதே வேலையாயிருந்திருப்பான் போலும்.
20
செப்பைப் பழித்துக் கலசத்தைச்
சிரித்துத் தெங்கி னிளநீரை
யொப்பப் புடைத்த தனக் கனகே!
யுன்னைப் புணரு மவாவுடையோன்
எப்போதெனினு முனதேவ
லெங்கே யென்று திரியுமிவன்
சுப்பிரமணியன் பெற்றெடுத்த
சூன னிவன்காண் சுரிகுழலே.
நுனிசுருண்ட கூந்தலையுடையவளே! செப்புச் சிமிழை அழகிலே இகழ்ந்து செப்புக்குடத்தை இகழ்ந்து சிரித்து தென்னையின் இளநீரைப் போல அழகுபடைத்த கொங்கைகளையுடைய கனகே! இவன் உன்னைச் சேர வேண்டும் என்னும் ஆசையுடையவனாய் எப்பொழுதானாலும் உன்னுடைய கட்டளை எவ்விடத்துக் கிடைக்கும் என்று திரிந்தலைகின்றான். இவன் காண் சுப்பிரமணியன் பெற்று வளர்த்த நொண்டிக்கையன்.
சூனன் இயற்பெயருமாம். திரியுமிவன் என்னுமிடத்து திரியும் என்பதை முற்றாக்கி இவன் என்பதை எழுவாயாக்குக.
21
மானினைப் பழித்த கண்ணும்
வடிவினுக் குவமை யில்லாத்
தேனினு மினிய செஞ்சொற் றெரி
வையே கனகே கேண்மோ
ஊனுணும் பரிதி வேல் வாளொளி
பெற வீங்கிருப்போன்
தானை சூழுடுவில் வாழும் தன் கை
யொன்றில்லா வேந்தே.
மானைப் பழித்தாற் போன்ற அழகிய கண்களையும், தேனைக் காட்டிலும் இனிமை மிகுந்த நேர்மையான சொற்களையும், உடைய, வடிவுக்கு ஒப்புமையில்லாத பெண்ணே! கனகே! கேள். பகைவருடைய உடம்பிறைச்சியை உண்ணுகின்ற சூரியன் போல ஒளி விடுகின்ற, வேலோடும் வாளோடும் ஒளியுண்டாக இவ்விடத்திலே இருக்கின்றவன், படைகள் புடை சூழப் பெற்ற, உடுவில் வாழுகின்ற, தனக்கு ஒரு கையில்லாத, அரசனாவான்.
கையில்லாதவனுக்கு வேலும் வாளும் கூறிய குறிப்புக் கண்டு கொள்க. கனகிக்கு "செஞ்சொல்" உடைமை கூறுதல்: கற்சோற்றை நற்சோறு என்றது போல்வது.
22
கனத்துப் புடைத்துப் பருத்து விம்முங்
கதிர்ப் பூண் முலையாய், கனக மின்னே!
மனத்துக் கிசைந்த மணவாள
னிவன்றா(ன்) இந்த மகிதலத்தில்
தனத்துக் கிவனே; சரச மொழி
தனக்குமிவனே; தான் கொள்ளுஞ்
சினத்துக் கிவனே! திருமலைச்சின்
னையனிவன் காண் சேயிழையே.
பாரமாகி வீங்கி தடித்து விம்முகின்ற, ஒளியுடைய நகைகளணிந்த கொங்கைகளுடையவளே! கனக மின்னே! உன் மனத்துக்குப் பொருந்தின மாப்பிள்ளை இங்கிருக்கின்ற இவதான். இந்த உலகத்தில் பணத்துக்கு இவனே முதன்மையானவன், சரச சல்லாப மொழி பேசுவதற்கும் இவனே சிறந்தவன். தான் கொள்ளுகின்ற கோபத்துக்கு இவனே தலையானவன். செம்பொன் நகையுடையவளே! திருமலைச் சின்னையன் என்பவன் இவன் காண்.
பொருட் பெண்டாகிய கனகி தன் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவன் போலும். சரசமொழி - காமச் சுவை தரு மொழி.
---------------------------------------
வெட்டை காண் படலம்
கையெழுத்துப் பிரதியிலுள்ள வெட்டை காண் படலச் செய்யுட்கள் மூன்றும் வருமாறு.
23
வெட்டை யென்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி யாடவர்
பொட்டுக் கட்டிய பூவையினா லென்று
முட்டுப்பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.
கனகியைக் காதலித்த ஒவ்வோர் ஆடவர்களும் 'வெட்டை'யென வழங்கு நோய் கிடைக்கப் பெற்று, தம் நிலைதடுமாறி, அழிந்து, தம் வாழ்நாள் வரையும் அந்தக் கோயிலில் தாலிகட்டி, பூவைபோலப் பேசு மொழியினளாகிய கனகியினாலே, சிறு நீர் பெய்வதற்குக் கூட முடியாதவாறு வலிநோவுற்று, துன்பப்பட்டார்கள்.
24
செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.
செட்டித் தெருவாகிய தேர்த் தெருவிலே வாழுகின்ற பொதுமகளிருள், பகட்டுத் தொழிலுடையவளாகிய கனகியை சேர்ந்தவர்கள், துன்பப் படுகுழியிலே தடுமாறி விழுந்து, தலைவிரித்த கோலமாய் சிறு நீர் பெய்வதற்குங் கூட முடியாதவாறு வலிநோவுற்று, துன்பப்பட்டார்கள்.
தலைவிரிகோலம் = செத்தார்க்கு அழுகின்றவர் கோலம்.
25
மேகங்கள் யாவு முயர் விண்ணீங்கி வேசையர்தந்
தேகங்களில் வாசஞ் செய்கையான் - மாகமிசை
யாசைக்குங் கார்காணோ மவ்வேசையார் கொடுப்பர்
காசைக் கொடுப்பார்க்குக் காண்.
மேகங்களெல்லாம் உயர்ந்த வானத்தை விட்டு நீங்கி, பொருட் பெண்டிருடைய உடம்புகளிலே குடியிருப்புச் செய்ததாலே, மேல் ஆகாயத்தில் பார்க்க வேண்டும் என்னும் ஆசைக்குக் கூட மேகத்தையா பார்க்கின்றிலோம். ஆயினும் காண வேண்டுமென்றிருந்தால், அவ்வேசையர்க்குக் காசைக் கொடுப்பவர்களுக்கு அவ்வேசையர் தாமே அம்மேகங்களைக் கொடுப்பார்கள்.
மேகம் = சிலேடை. நோய் மேகமும், வான் மேகமும். இவற்றாலே காமுகர்களுக்கு இடித்துரைத்து, அறிவு கொளுத்தியவாறாயிற்று.
இவற்றுள் முதலாவது செய்யுள் அச்சு நூலில் வெட்டைகாண் படலத்தின் கீழ் தனிச் செய்யுளாகத் திகழ்கின்றது. இரண்டாவது செய்யுள் இதுவரை வெளிவராதது. மூன்றாவது வெண்பாவாதலுமல்லாமல் முதலிரண்டுடன் தொடர்புடையதாகவுங் காணப்படவில்லை. அச்சு நூலில் இது முகவுரையிலுள்ளது. திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பதிப்பித்த தனிப் பாடற்றிரட்டிலே இது வேதநாயகம் பிள்ளை பாடல்களுள் ஒன்றாய் வந்துள்ளது.
* * *
இற்றைக்கு ஒரு நூறு ஆண்டுகளின் முன்னர், வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் எனப்படும் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில், கோயில் முறைப்படி தேவதாசிகளும் நட்டுவர்களும் கோயிலடியாராய் வைகினார். அவருள் கனகம்மா என்று சொல்லப்பட்டவளும் ஒருத்தி. அவள் தன் முறையினின்றும் வழுவி ஒழுகத் தொடங்கினள். அக்காலத்தில் கோயிலில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த நட்டுவச் சுப்பையா தாம் அவள் மீது இப்பாடலைப் பாடினார். மாடுமுகத்தால் பொது மகளிர் வாழ்க்கையின் இழிவும், அவரை விழைவோரது கயமையும், நன்கு விளக்கமுறச் செய்தார். பொது மகளிர்க்கும் இளைஞர்க்கும் அறிவு கொளுத்தினால் அன்னார் திருந்தி நடப்பர் என எண்ணினார் போலும்.
இவற்றைப் பாடும்போது நட்டுவனார் வெட்டை என்னும் கொடிய நோய்க்கு ஆளாகி அந்நாளில் அந்நோய் தீர்ப்பதில் பேர்பெற்ற ஓர் வைத்தியரைச் சரண் புகுந்து "உப்பும் சோறும்" ஆகிய பத்தியத்துடன் மருந்துண்டு வந்தனர் என்பர். இக் கூற்று நம்பத்தக்கதன்று.
கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் நம் புலவர் சுப்பையனார். பத்தியத்துடன் மருந்துண்ட நாற்பது நாட்களிலும் நாளுக்கு ஒரு பாடலாக நாற்பது பாடல்கள் பாடினார் என்ப. இக் கூற்றும் எம்மால் நம்பத் தக்கதன்று.
இப்பாடல்கள் முழுவதையும் எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாப் பரிசு கொடுப்பதாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன், யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தோடு தொடர்புடைய சிலருக்குத் தெரிவித்தபோது, இக் கையெழுத்துப் பிரதியிலுள்ள பாடல்கள் திரட்டப்பட்டனவெனத் தெரிய வருகின்றது. இப் பாடல்கள் அனைத்தும் அகப்படாமையை நினைதொறும் நினைதொறும் எமக்கு வருத்த மிகுகிறது.
-------------------------------------------------------
அநுபந்தம்
1
ஈட்டுந் தனத்தைத் தான் விரும்பி,
இரண்டு தனமுந் தானீந்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பு
மொழிசே ரழகே கனக மின்னே!
நாட்டுப் புறத்தி லிருப்போரில்
நல்லுடையும், பொய் மொழியுங்
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
2
காட்டுக் குயிலைக் கடி தோட்டிக்
கனத்த நாவி னெய் தடவி
மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனக மின்னே!
ஓட்டைக் காதி னுடனிருந்
தங்குவந்தே புடவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்ப னிவன் காணே.
3
சொல்லால் மயக்கி ஆடவர்தஞ்
சூழ்ச்சி யறிந்து காம நிலை
யில்லாதவர்க்கு மெழுப்புவிக்கு(ம்)
இருள்சே ரளகக் கனக மின்னே!
பொல்லா மனமும் அழுக்காறும்
பொய்யும் புரட்டுமே மலிந்த
மல்லாகத்து வீரரிவர்
மற்றோர் நவாலி யூராரே.
4
நத்தே யின்ற முத்தனையாய்
நவிலுந் திருப் பாற் கடல் கடைந்த
மத்தே யனைய ஸ்தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோ டொன்றிங் கிவரெனப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன்
புறத்தோன் தம்பி யுடையானே.
5
தாமரை முகையுங் கோங்கின தரும்பும்
தந்தியின் கொம்புடன் சிமிளுங்
காமர் சூதாடு கருவியு மெழில் சேர்
காமனார் மகுடமுந் தடிந்தே
ஏமமாகிய கூவிளங் கனி நிகராய்
எழில் சேர் அழகே கன மின்னே
நாமமிங்கிவர்க்கே களஞ்சியக்
குருக்கள் நங்கை நீ காணுதியென்றாள்.
6
அரிபாற் கடலைக் கடைந்த தினத்திலே
யெழுந்த மலர்த் திருவும்
உருவுக் கிலை நிகரென்ன வுரைக்கு
மொழிசே சேரழகே கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்
பின்னோன் தம்பி இவனாமே
7
தாலக் கனி யொன்றினுக் காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்
மால்பற்றிய நெஞ்சினனாகி வந்தான்
கனகே நின் மன்றலுக்கு
நீலக் கருங் கார் மேக நிற
நியூற்ற னிவன் காண், நேரிழையே.
8
ஊராற் சுணங்கு தொடராம லுயர்
சாந்தணிந்து வடம் பூட்டி
வாரால் மறைக்குந் ஸ்தனக் கனகே!
வரிவண் குமுத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
நெய்த நிலத்துக் கிறையாகும்
ஊராத்துறையின் மணியம் மற்றிவன்
காணென்ற னொண்ணுதலே.
9
தொட்டுப் பிடிக்கத் தனத்தோடு
தோளை யீகுந் திறமுடைய
மட்டுக் கடங்காத் திறம் படைத்த
மானே தேனே கனக மின்னே!
பட்டுப் புடவை தனிற் கொணர்ந்து
பரிவாகப் பணத்தை யீகின்ற
வட்டுக்கோட்டை நெற் கணக்கன்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.
10
பூப் பாயலி லாடவரைப் பொலிவோ
டிருத்திப் பொருள் கவரக்
காப்பாய கச்சுதனை நீக்குக்
கன்றே கனக மின்னே!
பாப்பார் மிகவுந் தமைச் சூழப்
பங்கேருகம் போல் வீற்றிருக்கும்
கோப்பாய் மணிய மிவர் தம்மைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
இவை திரு. ந. ந. சி. கந்தையாபிள்ளையவர்களால் அச்சேற்றிய நூலிற் கண்டனவாம்.
----------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக