என் கதை
வரலாறு
Backஎன் கதை
கே.டானியல்
மூலிகை
‘சிகரம்’
புங்குடுதீவு - 3
-------------------------------------------------------------
‘மூலிகை’ வெளியீடு: எண் - 3
முதற்பதிப்பு: நவம்பர் - 1986
(ஊ) உரிமை : பதிப்பாசிரியருக்கு.
விலை: ரூபா 10.00
அச்சிட்டோர்:
சுவர்ணா பிரின்டிங் வேர்க்ஸ்
கே.கே.எஸ்.வீதி,
யாழ்ப்பாணம்.
---------------------------------------------------
முன்னுரை
தோழர் டானியலின் ‘என் கதை’க்கு முன்னுரை கேட்டார் நண்பர் இளங்கோவன். எனக்கு என்ன தகமை? அவரையும் என்னையும் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது!
தோழர் டானியலுடன் பல்லாண்டு காலம் நெருக்கமாகப்பழகியவன். அரசியல், பொருளாதார, சமூக, கலை இலக்கிய விஷயங்களில் தோழர் டானியலுடன் ஒத்தகருத்துக் கொண்டவன்: ஒரே அரசியல், கலை இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவன். அண்மைய ஆறு ஆண்டுகளில் ஏறக்குறையத் தினசரி தோழர் டானியலுடன் கலந்துரையாடி, அவருடைய பணிகளில் உதவி புரிந்தவர்களில் ஒருவன்.
இந்த வகையில் முன்னுரை எழுதத் துணிகின்றேன்.
தோழர் டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோர் மகத்தான மனிதன்: கம்யூனிஸ் இயக்கத்தின் நீண்டகால ஆதரவாளன்: தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவன்: அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சஞ்சலங்களையும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பான தோர் இலக்கியவாதி.
தோழர் டானியல் களம் பல கண்ட புரட்சிப்போராளி: தோழர் டானியலின் வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை: பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. மக்களின் நல்வாழ்வுக்காக அவர் தன்னையே எரித்துக் கொண்டு அரசியல், சமூக, இலக்கிய பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு குறிப்பிட்ட காலம் மக்கள் தொண்டில் ஈடுபட்ட பலரை வாழ்க்கை கண்டிருக்கிறது. ஆனால் அறிவு பெற்ற காலம் தொடக்கம் வாழ்க்கையின் இறுதி மூச்சுவரை இலட்சியத்துக்காக வாழ்ந்த சீரிய மனிதர் மிகச்சிலரே அவர்களுள் டானியலும் ஒருவர்.
மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும்: இலக்கியம் அரசியலுக்கு - பாட்டாளி வர்க்க அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும். தோழர் டானியல் இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல சிறு கதைகளையும், நாடகங்களையும், நாவல்களையும் எழுதியுள்ளார்.
தோழர் டானியல் எழுதிய படைப்புகளில் சில இன்னும் அச்சுருப் பெறாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் பிரசுரமாகி மக்களுக்குப் பயன்பட வேண்டும். என்பதே என் போன்றோரின் அவா.
தற்பொழுது எனது நண்பர் இளங்கோவன், தோழர் டானியல் தனது இலக்கிய வாழ்வு பற்றி எழுதிய கட்டுரை ‘என்கதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார்.
நண்பர் இளங்கோவன் தோழர் டானியலின் அபிமானியும் நண்பருமாவார். அவர் இலக்கியத்தில் தோழர் டானியல் வழி நிற்பவர். தோழர் டானியலின் இறுதி நாட்களில் அவருடன் தஞ்சாவூரில் இருந்து அவருக்கு உதவிபுரியும் பாக்கியம் நண்பர் இளங்கோவனுக்கு கிடைத்தது.
தோழர் டானியலின் அன்புக்கு உரித்தான நண்பர் இளங்கோவன் இந்த நூலை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகும். இந்தப் பயனுள்ள பணிக்கு மக்களின் நல்லாதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
வீ.சின்னத்தம்பி
வட்டுக்கோட்டை
11 - 10 - 86
---------------------------------------------------
என் கதை
எழுத்து எனக்குத் தொழில் அல்ல் பொழுதுபோக்குமல்ல ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகால எல்லைக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் இவைகளோடு ஒட்டிய காரண காரியங்களுக்காகவும் செலவு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை.
கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப் புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 20 வரையிலே நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள், கிராமப்புறங்களுக்கு இன்றியமையாததாயும் இருந்தமையால் எனது பெரும்பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்திருக்கவேண்டியதாயிற்று. அது கிராமப்புறங்களில் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவியாகவும் இருந்தது.
கிராமப்புறத்து மக்களிடம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. அரசியலைப் பொதுமக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவும், அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்று, தவறானவைகளை நிராகரித்தும் தான் அரசியல் அனுபவங்களைப் பெறவும் வேண்டும். அன்று தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் சரியான அரசியல் போதனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழ் நூல்கள் மிகவும் அருந்தலாகவே இருந்தது. இந்த நிலமை, நாட்டையும், மக்களையும், கிராமங்களையும் படித்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே அரசியல் முதலீடாகக்கொள்ள எனக்கு ஏற்பட்ட வாய்ப்பு, என்னை மேலும் மேலும் கிராமப்புறங்களை ஊடுருவிப் பல்வேறுபட்;ட அனுபவங்களை மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு உற்சாகத்தைத் தந்தது எனலாம்.
இன்று உலகின் பல பகுதிகளின் அரசியல் - இயக்க அனுபவங்கள் ஆயிரக்கணக்கில் நூல்வடிவு பெற்றிருக்கின்றன. இவைகளையெல்லாம் அரைஅவியலாக விழுங்கிவிட்டு, இவைகள் யாவும் அந்தந்த நாட்டு நிலைமைக்கும், பிரதேச நிலைமைகளுக்கும், உற்பத்திமுறை அடிப்படை உறவுகளின் தன்மைக்கேற்பவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. என்பதனை மறந்து அவைகளை அப்படி அப்படியே நமது நாட்டின் அரசியலாக நிர்ணயித்துக் கொண்டு சாதாரண மக்களைப் பலவிதமான தத்துவ விசாரங்களுக்கு உட்படுத்தும் காலம் போலல்ல எனது அரசியல் பிரவேசகாலம்.
நகர்ப்புற மனிதனின் வாழ்க்கைக்கும், கிராப்புற மனிதனின் வாழ்க்கைக்கும் பல்வேறு விதங்களிலான வேறுபாடுகள் உண்டு. நகர்ப்புற மனிதர்களின் வாழ்க்கையை வகைக்க ஒன்றோ இரண்டோ விதங்களுக்குள் அடக்கி விடலாம். ஆனால் கிராமப்புற மனிதர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்ட வகைகளுக்கு உட்படுத்தி விடுவது கடினமான காரியமாகும்.
அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக அவன் எடுக்கும் வழி முறைகளைப் பலவிதங்களுக்குள்ளும், படுத்தெழும்பும் குடிசைக்காக அவன்படும் அவஸ்தைகளையும், குந்தியிருக்கும் நிலத்திற்காகவும், பலவிதங்களில் அவனுக்கு மேலாக இருக்கும் வழிவந்த ஆதிக்க அடக்கு முறைகளுக்குள் அவன் அழுந்திக் தவிக்கும் விதங்களையும், இன்னும் வாழ்க்கையோடு ஒட்டிய ஏனையவைகளுக்காக அவன்படும் அவஸ்தைகளையும் வகைக்குப் பலநூறுகளாகப் பார்க்க முடியும். இவைகளில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவே கிரகித்து, இந்த வாழ்க்கைக்கான காரணகாரியங்களைக் காணமுயல்வதும். கண்டவற்றை அவர்களிடமே ஒழுங்குபடுத்திக் கூறுவது. இலேசுபட்ட ஒன்றல்ல என்பது எனது அனுபவங்கள் தந்த உண்மையாகும்.
பள்ளிப் படிப்பை 5ம் வகுப்புடன் முடித்துக்கொண்டிருந்த எனக்கு அதற்கு உற்பட்ட அளவுக்கு எழுதவும், பேசவும் தெரிந்திருந்தது. எந்தவித வேற்றுமொழியையும் படிக்க, அல்லது குறைந்தபட்சம் பேசிக்கொள்ளவாவது எனக்கு ஆர்வம் பிறக்கவில்லை. இதற்கான காரணத்தைச் சுருக்கத்தில் கூறிவிடவேண்டுமானால் எனது குடும்பதின் வறுமைநிலை; இன்னும் கூறப்போனால் நாளொன்றுக்கு ஒரு நேரச்சோற்றுக்கே வழியில்லாத நிலை, சாதி அடக்கு முறைகளுக்கு உட்பட்டு பட்ட அவஸ்தைகள், இவைகளுக்காக ஏங்கி ஏங்கி;ச் செத்துக்கொண்டிருக்கும் நேரத்தைத் தவிர மிகுதி நேரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
எனது குடும்பத்தொழில் சீலை வெளுப்பு. இதைச்சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான்; அதைவிடவும் ‘தமிழர்’களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதானால் ‘கட்டாடி’ என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப்பாக நான்கூறவேண்டும்? சமூக அடக்கு முறைக்குள் மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை எனது வாசர்களை அறியவைப்பதற்காகவும், ‘இந்தாள் நெடுகச் சாதியைத்தான் எழுதுது: ஏன் இப்படிச் செய்யுது?’ என்று என்மீது கேலிக்கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.
“நீர் சொல்லுற விஷயம் முந்தி இருக்கேல்லை எண்டு நாங்கள் சொல்லேல்லை. இப்ப தமிழருக்கை அதொண்டுமில்லை” ஒருவிதமான நசியல் நியாயம் சொல்லுபவர்கள்தான், நான் வாழும் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்தப் பெரும்பான்மையினரில் ஒருவர் தன்னும் தள்ளுபடி இல்லாமல் எல்லோர் வீட்டிலும் அன்றாட வாழ்க்கையோடு சாதி சங்கமமாகி நி;ற்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளங்கிக்காட்;டமுடியும். ஆயினும் இக்கட்டுரை வேறு திசைக்குத் திரும்பிவிடும். என்பதனால் அதை விட்டுவிடுகிறேன்.
ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம்கார்க்கியினுடைய நூல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவைகளில் சில வற்றை நான் படித்தேன். முதன் முதலில் கார்க்கியின் “தந்தையின் காதலி” என்ற நாவலையும், “அமெரிக்காவிலே” என்ற அவரின் கட்டுரை நூலையும் படித்தேன். விஷயங்களைச் சொல்லும் போது கார்க்கியால் ஆளப்பட்ட முறைகள், அவைகளில் இருந்த எளிமை எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. “தந்தையின் காதலி” என்ற அவரின் நாவலைப்படித்த போது ஏற்பட்ட உந்தலினால் “வீராங்கனைகளில் ஒருத்தி” என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். இது வரை அக்கதை நான்கு தடவைகள் மறுபிரசுரமாகியுள்ளது. என்றுடைய சிறுகதைகளில் எனக்குப் பிடித்தமான முதல் கதை அது. அக்கதையில் என்னால் பாவிக்கப்பட்ட சொல் பிரயோகமுறையும், எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளின் புறப்பாடும் எனது வேறெந்தக் கதையிலும் இருப்பதாக நான் கருதவில்லை.
மாக்ஸிம் கார்க்கியின் “தாய்” நாவலை நான் படித்தேன். நீண்ட காலமாக அது என்மனதில் கிடந்தது. ரஷ்ய நாட்டின் விடுதலைக்கான நடைமுறைச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அந்தத் தாயைப்போன்று நமது நாட்டினதும், சமூகத்தினதும் விடுதலைக்காக அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்து வழி நடத்தக்கூடிய ஒருபாத்திரம் ஏன் பிறக்கக்கூடாது என எண்ணினேன்; தேடினேன்; சம்பங்களைச் சேகரித்தேன்; அதே தாய்போன்று எனது கண்ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்துவிட்டேன். அவரின் நடைமுறை வாழ்க்கை முறைகளை அவதானிக்க, அவர் பேசும் சொல் முறைகளைச் சேகரிக்க, அவரின் உடை நடை பாவனைகளை அறிந்து கொள்ள, மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் படித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன். அவருடைய யாழ்ப்பாண நடைமுறை வாழ்க்கையோடு மாக்ஸிம்கார்க்கியின் தாயையும் சேர்த்துக் கணக்கிட்டு, சமப்படுத்தி, நான் கற்றுகொண்ட அனுபவங்களையும் சேர்த்து “இராசாண்ணர்” என்ற அவரை “ஐயாண்ணர்” ஆக்கினேன். “பஞ்சமர்” என்ற நாவல் பிறந்து விட்டது.
யாழ்ப்பாணத்து வாழ்க்கைமுறை, யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப்பாணத்து உடை நடை பாவனை, யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு, யாழ்ப்பாணத்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடமுறைகள், யாழ்ப்பாணத்து மண்ணின் அவலங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றில் எதையுமே பிற நீங்கலாகி நிற்கவிடாமல் பஞ்சமரில் சகலதையுமே உள்ளடக்கியதில், நான் கார்க்கியே வழி நடத்தல்காரனாக ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆயினும் பஞ்சமரில் என்னால் பிறப்பிக்கப்பட்ட பாத்திரங்களில் யாழ்ப்பாண மண்ணின் இயல்புகளுக்கு மாறான பல குறைபாடுகள் இருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது. இதற்குப் பின்னாலும் எனக்கு இப்படி ஒரு நாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப்பாட்டால், யாழ்ப்பாண மண்ணில் நடந்த, நான் பார்த்த, நான் அறிந்த என்னால் அறியப்பட்டவர்கள் அறிந்த பல சம்பங்களைத் திணித்ததின்மூலம், நாவல் என்ற உருவத்துக்கப்பால் “பஞ்சமர் ஒரு சம்பவக்கோர்வை” என்ற குற்றச்சாட்டை மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன் என்றே கூற வேண்டும்… இந்தப் பஞ்சமர் நூலுக்குப் பின்பு “உருவம் என்பது எடுத்துக்கொள்ளப்படும் கருப்பொருளாலும், அதை வெளிக்கொணர்வதற்கான ஆள்வினாலும் தன்போக்கிலேயே தான் அமைவதாகும்; இவைகள்தன் இச்சையாகவே இந்த உருவம் என்பதனை அமைத்துக்கொள்கின்றன” என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன்.
பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப்பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்சகோணங்கள், தண்ணீர் ஆகியவைகளும், முருங்கையிலைக்கஞ்சி, மையக்குறி, சொக்கட்டான் ஆகிய தொடர் நாவல்களும் உருவத்தைப் பொறுத்தமட்டில் எனது பஞ்சமரின் பிறப்பிலிருந்து அந்த வழியைப் பின்பற்றியவைகளேயாகும்.
பஞ்சமரில் 35க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கோவிந்தனில் 20க்கு மேற்பட்ட பாத்திரங்களும், அடிமைகளில் 40க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கானலில் 30க்கு மேற்பட்ட பாத்திரங்களும், பஞ்சகோணங்களில் 28க்கு மேற்பட்ட பாத்திரங்களும் வருகின்றன. இவைகளில் உலாவிவரும் ஒவ்வொரு பாத்திரங்களின் இயல்பான முறைகளைக் கவனிப்பதில் நான் மிகவும் கவனமாகவே இருந்துவந்துள்ளேன். ஆயினும் எனது கவனத்திற்கு அப்பாலும் சில பாத்திரங்கள் சென்றுள்ள தவறுகளுக்குப் போலித்தனமான சமாதனங்களை சொல்வதைவிட அவைகளை என் தலைமையிலே சுமத்தி விமர்சித்துக் கொள்ள நான் தவறுவதில்லை.
ஒன்றை எழுத முற்படும்போது அந்த ஒன்று என்ன என்ற கேள்விக்கு முடிவுகட்டிக் கொள்வதோடு அந்தப்பிரச்சனை பின்பு பெரிதாக இருப்பதில்லை. நான் எழுதமுற்படும் அந்த அடிக்கரு அல்லது நாதம் முன் முனைப்பு பெறுவதற்கான பிரதேசங்களையும், பாத்திரங்களையும், அந்த அடிநாதம் மனதுக்குள் வருவதற்கான சந்தர்பசூழ்நிலையை உண்டாக்கிய பின்னணியைச் சுற்றிச் சுற்றியே சேகரித்துக்கொள்கின்றேன். அத்தோடு அந்தப் பின்னணியில் வதியும் மனிதர்களைப்படிக்க முயல்கின்றேன். பெரும் பகுதி நேரத்தை அதிலேயே செலவு செய்கிறேன். இந்தவேளை அந்தப் பின்னணியில் வசிக்கும் மக்களின் பேச்சு முறைகளைக் கவனிக்கின்றேன். அந்தப் பேச்சுவழக்குகளுக்கிடையே இருக்கும் மிகவும் செறிவான சொல் தொடர்களை உள்வாங்கிக்கொள்வதில் நான் என்றும் தவறியதில்லை.
ஒரு நாவலுக்குத் தலைச்சனாகக் கொள்ளப்படும் ஒரு பாத்திரம் சகல நிறைவுகளும் கொண்ட அப்பழுக்கற்ற பாத்திரமாக இருக்கவேண்டும் என்பது (சட்டப்படி சொல்லப்படாது விட்டாலும்) இதுகாலவரை வழிவழி வந்த ஒன்றாகும். எனது நாவல்கள், சிறுகதைகள் சகலத்திலும் இது மீறப்பட்டுள்ளது. இப்போது நடைமுறையிலுள்ள சமூக அமைப்புக்காரணமாக எல்லோர் மீதும் தன்னாதிக்கம் செய்யக்கூடிய தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எனது பாத்திரங்களை நான் விடுவிப்பதில்லை. தனி ஒருமனிதன் மேல் சகல இலட்சணங்களையும் ஏற்றி இவர்தான் இந்நாவலின் கதைத்தலைவன் என்று. யாரையும் நான் குறிகாட்டுவதில்லையாயினும், சிலபாத்திரங்கள் இயல்பாகவே அந்தத் தலைச்சன் அந்தஸ்துக்கு உயர்ந்து விடுகின்றன. என்பதை வைத்துக் கொண்டு பார்த்தாலும் கூட, பஞ்சமரின் ஐயாண்ணரும், போராளிகள் காத்திருக்கின்றனரின் சந்தியாவும் கோவிந்தனின் எதிர்மறைக்காத அந்தஸ்தைப் பெறும் சண்முகம்பிள்ளையும் அடிமைகளின் கந்தனும், கானலில் ஞானமுத்துப்பாதிரியாரும், பஞ்சகோணங்களின் சுப்பையை வாத்தியாரும் பல வேறுபட்ட குறைபாடுகளுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதை நான்வேண்டுமென்றே செய்கின்றேன் என்பதுதான் பலரின் குற்றச்சாட்டு. இதற்கு நான் கூறும் பதில் “இந்தச் சமூக அமைப்பில் எந்த ஒரு மனிதனும் நிறைவானவனாக இருக்கவே முடியாது!” என்பது தான்.
பஞ்சமரின் ஐயாண்ணார் ஒரு கள்ளுக்கடையின் வாடிக்கைகாரராகவே பிறப்பிக்கப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சூது விளையாடுவதும், வேறோர் சந்தர்பத்தில் அவர் குடிகாரர்களுடன் கூடிக் கூழ்காச்சிக் குடித்து மகிழ்வதும், பல சந்தர்பங்களில் அவர் கொச்சைகள் பேசி வம்பளப்பதும் பலருக்குப் பிடிக்கவில்லை. “ஒரு கதைத்தலைவனை இப்படிச் சீர் கெட்டநிலைக்கு உட்படுத்தலாமா?” என்று என்னிடம் கேட்டவர்களும், விமர்சனம் எழுதியவர்களும் உண்டு. இவர்களுக்கெல்லாம் நான் அப்போது சொன்ன மொட்டையான பதில் “எனது ஐயாண்ணர் அப்படிப்பட்டவர்தான்” என்பதுதான். அதே போன்ற இன்னொரு கேள்வியையும் பலர் எழுப்பினார்கள்.
“பஞ்சமரில் வரும் உயர்ஜாதிப் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்களே! ஆனால் அதில் வரும் பஞ்சமப்பெண் ஒருத்தியைத் தன்னும் அப்படிச் சித்தரிக்கவில்லையே ஏன்?” இதுதான் அந்தக் கேள்வியாகும்.
“என்னுடைய பஞ்சமரில் வந்த கமலாம்பிகை அம்மாளும், மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பிறந்து விட்டதாக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறீர்கள்? நான் பஞ்சமரைப்படைத்தது சகலவசதிகளும் கொண்ட கமலாம்பிகை அம்மாளினதும் மாம்பழத்தினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெருஞ்சுகபோக ஏக போகத்தை அம்பலப்படுத்துவதற்கே அன்றி, கொதிக்கும் வயிற்றுக்காக உடலையே விற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளிலும் தங்களைத்தாங்களே கட்டி அவிழ்த்துக் கொள்ளும் பஞ்சைப் பெண்களை அம்பலத்தில் கொண்டுவருவதற்காக அல்ல் இது எனது வேலையுமல்ல!” என்றுதான் பதில் சொன்னேன்.
“போராளிகள் காத்திருக்கின்றனர்” என்ற எனது நாவலில் சந்தியா என்ற வயோதிபனை நாவல் முடிவுவரை கொண்டுவந்திருக்கிறேன். அந்தச்சந்தியாதான் கதாநாயகன் என்று பலர் கூறுகிறார்கள். “கோவிந்தன்” என்ற எனது அடுத்த நாவலில் “கோவிந்தன்” என்ற ஒரு நாயையும், கோவிந்தன் என்று ஒரு சீவல் தொழிலாளியையும் கொண்டு வந்திருக்கிறேன். கோவிந்தன் என்ற நாயினைக் கடைசி வரை கொண்டு வந்தமையால் அதையே கதாபாத்திரமாகக் கொள்கிறார்கள். சீவல்காரக் கோவிந்தன் இடையே வந்து இடையே போய்விடுகிறான். ஆனால் இந்த இரு கோவிந்தன்களில் யார் கதைத்தலைவன் என்பதை நான் தீர்மானிக்கவில்லை. வாசகர்களே அதைத்தீர்மானித்தார்கள். போராளிகளில் வந்த சந்தியாவும், கோவிந்தனில் வந்த இரு கோவிந்தன்களும் பல குறைபாடுகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
“அடிமைகள்” என்ற எனது அடுத்த நாவலில் ‘கந்தன்’ என்ற பாத்திரத்தை மூளைத்தெளிவற்ற வெருளியாகவே படைத்தேன். ஆனால் அதே வெருளிக் கந்தன் தான், அடிமைகளின் தலைவனாகி விட்டான். அந்தக் கந்தனை போர்த்தேங்காய் அடிகாரனாக, சேவலடிக்காரனாக, இன்னும் பல தாழ்ந்த செயல்பாடுகளுக்கு உட்பட்டவனாக ஆக்கிவிட்டிருக்கிறேன்.
“சானல்” என்ற எனது அடுத்த நாவலில் ‘ஞான முத்தர்’ என்ற ஒரு பாதிரியாரைப் படைத்தேன். கிறிஸ்துவத்தைப் பரப்புவதன் மூலமாக சமூக அமைப்பு மறைகளையே தகர்த்து விடமுடியுமென்று அவர் நம்பினார். ஆனால் அவரால் அதைத் சாதிக்க முடிந்ததா? அவரிடம் இருந்த குறைபாடுகளே அவரைச் சமூக அவலங்களுக்கு இட்டுச் சென்றதைக் காட்டியபோது அவரைப் புனிதமானவராக ஆக்க எனது பேனாவுக்கு முடியவில்லை.
“பஞ்ச கோணங்கள்” என்ற நாவலில் சுப்பையா வாத்தியார் ஒருவரைப் பிறப்பித்தேன். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியானதற்கும் பிழையானதற்குமிடையே அவர்படும் அவஸ்தையைச் சித்தரிப்பதில் அந்தப் பாத்திரத்தைப் புனிதனாக்கிவிட என்னால் முடியவில்லை.
எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பல்வேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக சுழி ஓடிச் செல்வதுவே வாழ்க்கையாகிவிட்டது. பெருமளவில் இந்தச் சுழிஓட்டத்தையே சரிவரச் செய்து முடிப்பதில் தான் மனிதனின் கவனமெல்லாம். பல காவியங்கள் அவன்கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாவற்றையும் அவன் தேவையெனக் கருதுவதுமில்லை.
என்னுடைய நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொன்றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். அவைகளைப் படிக்கும் போது தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள கனதியைப்புரிந்து கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண்மையை என்னால் கற்றுக் கொள்ளமுடிகிறது. அதாவது “என்னால் கிரகிக்கப்படும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளாக இருப்பதால் தான், அதை எழுத்தில் படிக்கும் போது அது மற்றவர்களுக்குக் கனதியைக் கொடுக்கிறது” என்பதாகும்.
“சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக்கின்றன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தி;ல் கொடுத்து விடவேண்டுமா?” என்ற ஒரு கேள்வி இயல்பாகவே உங்கள் மனதில் எழ இடமிருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். “தனிமனிதனதும், அவனுக்கூடாக அவன் வாழும் சமூகத்தினதும், அல்லது அதற்கும் மேலாக முழு உலகத்தினதும் பொதுவான மனுசீக உணர்வினை இலேசாகவேனும் தட்டிவிடக்கூடிய நாதக் கூர்களைக்கொண்டவைகளாக எவை எனக்குப் படுகின்றனவோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது” என்பதாகும்.
இருபது ஆண்டுகளுக்கு முன் நான் “அசை” என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் “பொன்னம்மாள்” என்ற ஒருவிபச்சாரியின் கதை அது. அவளுக்கு நடுவயதாக இருக்கும் போது நான் அவளைக் கண்டிருக்கிறேன்; பேசியிருக்கிறேன்; அவளையும் அவளின் வாழ்க்கை முறைகளையும் அவதானித்திருக்கிறேன். பெரிதும் பொய்க்கலப்பின்றி அவளின் வாழ்க்கையை எழுதமுற்பட்டு, அதை எழுதிப்பிரசுரித்தபின் “அந்தக் கதையில் சற்றேனும்பொய்க்கலப்பில்லை” என்று அவளுடன் நெருக்கமாகப் பழகிய பலர் கூறிய போது நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். உண்மைகளை உண்மையின்படி, ஒரு விபசாரியின் வாழ்க்கையை எழுதும் போது எப்படி எல்லாம் எழுதியிருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனால் இன்றுவரை அந்தக்கதையில் விரசம் இருந்தது என்று யாரும் குறிப்பிட்டுச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச்சொல்வது என் பதி;ல் என்னை வழி நடத்தியது. “எதைச்சொல்வது” என்பதில் நான் வைத்துள்ள கொள்கையேயாகும்.
எனது சிருஷ்டிகளில் நான் பார்த்துப் பேசிப்பழகாத பாத்திரங்களை நான் உள்ளடக்குவதில்லை. எனது படைப்புகளில் கற்பனைப் பாத்திரங்கள் இருப்பதே இல்லை. இதனால் பாத்திரப்படைப்புக்களில் எனக்கு அதிகம் சிக்கலும் சிரமமும் ஏற்பட்டதில்லை.
எனது பஞ்சமரில் சின்னாச்சி என்ற ஒரு பாத்திரம் வருகிறது அந்தச் சின்னாச்சி எனது பிறந்த ஊரில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்தவன். பஞ்சமர் எழுதத்தொடங்கி அது முடிவுக்கு வந்த காலப்பகுதிக்குள் அந்தச் சின்னாச்சியை நான் பல்வேறு சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன்.
பஞ்சமரில் எந்த இடத்திலும் அந்தச் சின்னாச்சியின் தோற்றத்தை, நான் தனியாகச் சித்தரிக்கவில்லை. அவளின் வழமையான அன்றாட நிகழ்வுகளைப் பிசகின்றிச் சித்தரித்ததன் மூலம் அவளின் தோற்றத்தை வாசகர்கள் மனதில் படிவைத்ததுடன், அவளின் மேல் ஆசிரியனாகிய எனது எந்தத்தலையீடும் செலுத்தாமல் பேசவைத்ததன்மூலமே அவளைப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னாச்சியாக ஆக்கிவிட்டேன். “என்னடா மோனை என்னைவைச்சுக்கதை ஒன்று எழுதியிருக்கிறியாம். அதில் என்ரை குறுநாட்டுச் சீலைக்கொய்யகத்தைக்கூட அச்சுப்பிசகாமல் எழுதியிருக்கிறாயெண்டு பொடியள் கதைக்கிறாங்கள்”. இப்படி அந்தச் சின்னாச்சியே என்னிடம் வாய்விட்டுக் கேட்குமளவுக்கு அவளை நான் வென்று விட்டதில் எனக்குப் பரமதிருப்தி.
எப்போதும் கிராமங்களையே எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதில் என்மீது பலருக்கு வெறுப்பு. “இதுகளை விட இந்தாளுக்கு வேறை ஒண்டும் எழுதத் தெரியாது” என்று எனது காதுக்குக் கேட்கும்படி பலர் பேசியிருக்கிறார்கள். அதை நான் மறுத்து ஒருவார்த்தை பேசியதில்லை. அவர்கள் உள்ளதையே சொல்கிறார்கள். உண்மையாகவே எனக்கு அப்படி எழுதவராததுதான். இதை ஒப்புக்கொள்வதில் நான் வெட்கப்படவில்லை. உதாரணத்துக்கு ஒன்று:-
சமீபத்தில் யாழ்ப்பாணத்து நகரத்து நடுப்பகுதியால் நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு வீட்டுவாசலில் ஒரு சிறு கூட்டம் கூடி நின்றது. அந்த வீட்டின் உட்புறம் இருந்து அழுகுரல் வந்தபொழுதுதான் அது ஒரு இழவு வீடு என்று அறிந்து கொண்டேன்.
சாவீட்டுக்கு மேளம் தட்டும் சாம்பான் கூட்டம் ஒன்று வாயிலை அடைத்துக் கொண்டு நின்றது. அவன் உள்ளே போய் இருந்து மேளத்தட்ட இடமில்லாததினால் அதிலேயே நின்ற நிலையில் மேளம் தட்டும்படி பலரும் வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், “நம்மாளையாக்கும், நான் பச்சைக்கிடுகிலை இருக்காமல் றோட்டிலை நிண்டு தட்டமாட்டனாக்கும்” என்ற அந்தச் சாம்பான் கூட்டத் தலைவன் மறுத்துக்கொண்டிருந்ததையும் நான் அவதானித்தேன். இது ஒரு விசித்திரமான தர்;க்கமாக எனக்குப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணிநேரம் வரையில் அங்கேயே நான் நின்று விட்டேன். கட்டாடி என்ற வண்ணான் வந்தான். உள்ளே போய் அவன் வெள்ளை கட்;ட இடமில்லை. பின்பு பரியாரி என்ற அம்பட்டன், அவனும் உள்ளே போய் தனது தொண்டு துரவுகளைச் செய்யமுடியவில்லை. பாடை கட்டுபவன் வந்தான். அவன் பாடையை வைத்துக் கட்ட இடமில்லை. நான் கண்ட இவ்வளவையும் வைத்துக் கொண்டு ஒரு சிறுகதையை எழுதினேன். ஒரு நீண்ட சிறுகதை அது. “மயான காண்டம்” என்ற அந்தச் சிறுகதை பட்டினத்துச் சூழ்நிலையில் எழுதப்பட்ட போதும் கிராமப்புறவாழ்க்கையின் மிச்ச சொச்சங்களால் பாதிப்படைந்தமையால், அது முற்று முழுதாகவே ஒரு கிராமத்துக் கதையாகவே அமைந்துவிட்டது. நான் என்ன செய்ய? எனது சுபாவம் அப்படி. எனக்கு அப்படித்தான் எழுத வருகிறது. இக்கதையைப்படித்த ஒரு பிரபல விமர்சகர் “இதுவரை இப்படிப்பட்;ட கிராமியச் சித்தரிப்பு ஒன்றைத் தான் படித்ததில்லை” என்று கூறியது இன்றும் என் காதுக்குள் கேட்கிறது”
ஒரு நாவலில் காட்டப்படுவதான காலம். அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வுமுறை, பேச்சுமுறை, பழக்கவழக்கங்கள், நாவலின் காலநகர்ச்சியின் புலப்பாடுகள், இயல்பான நடை முறைகளோடு அந்த நாவலை நிலையிலிலிருந்து இயங்கியல் வரை இட்டுவருதல், அந்தக் கால நடமுறைகளுக்கேற்ப உலக வியாபகமான பரிணாம வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குணாம்சங்களை வெளிக்கொண்டுவருதல் ஆகியவைகளில் நான் தவறியிருக்கிறேனா என்பதனை நாவல் அச்சுக்குப்போகுமுன் பலரிடம் அதைப் படிக்கக் கொடுத்து, படிப்பவர்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கிக்கொள்வதில் நான் தவறுவதில்லை. அச்சேறுவதற்கு முன் அவைகளைப்படிப்பதற்கு, 75 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், ஒருகுடும்பப் பெண், ஒரு உயர்பள்ளி மாணவன், ஒரு உடல் உழைப்பாளி, வர்க்க சமூக அமைப்பினைத் தெளிவுறப் படித்த ஒருவர் உட்படக்குறைந்தது எட்டு பேர்கள் வரையிலாவது இருப்பர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து மொத்தமாகச் சொன்னால் “ஒவ்வொரு படைப்பிலும் டானியல் என்ற பெயர் ஒரு சம்பிரதாயத்திற்காகவே அன்றி வேறெதற்காகவுமல்ல. உண்மையாகவே இவைகளின் எஜமானர்கள் நான் மேலே குறிப்பிட்டவர்களேயாகும்.
எனது நாவலில் மாந்தர்களே அதற்கான மொழியையும், கருவூலங்களையும், உடை நடை பாவனைகளையும் தருவ தோடல்லாமல், தாங்களாகவே உருவத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். கடைசியில் குறிப்பிட்ட வாசகர்கள் சரிபிழைகளைப் பார்த்துக் குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர்! ‘ ‘ என்றுதான் கூறலாம்.
சரியான மூலிகைகளைச் சேகரித்துத்தர பல மூலிகை நிபுணர்களும், அவர்களால் தரப்பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம்போட்டு எடுக்க நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியனின் வேலை அதில் மிகச்சிறிய அளவு தான். வேண்டுமானால் “இது எனது மாத்திரை” என்று அவன் சொல்லிக் கொள்ளலாம்.
நலிந்த மனிதர்களின் வாழ்க்கை, அந்தவாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் நடவடிக்;கைகள், இடங்களுக்கும் காலத்திற்கும், சூழ்நிலைக்கேற்பவும் வௌ;வேறு வகைப்படினும் மொத்தத்தில் அவைகளைப் “போராட்டங்கள்” என்பதற்குள்ளேயே அடக்க வேண்டும். அந்தப்போராட்டங்கள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டால் அது நிட்சயமாக வரலாறு ஆகப் பரிணாமம் பெறாமல் இருக்கவே முடியாது. பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்சகோணங்கள், தண்ணீர் ஆகிய இந்த நாவல்களை படிப்படிவர்கள் இந்தப்பரிணாமத்தைக் காண்பார்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முழுமையான (சாதாரண மக்களின் போராட்டங்கள் உள்ளடங்கிய) வரலாற்றைக்காண விரும்புவர்களுக்கு இவை கைகொடுத்து உதவும் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அதேபோல காலத்தால் அருகிப்போன சொற்றொடர்களையும் புதிது புதிதாக உண்டாக்கப்படும் பிரயோகங்களையும், ஆகவும் குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கை முறையும் அறிந்து கொள்ளவும் பயன்படக் கூடும்.
தற்போது எனக்குவயது 58த் தாண்டிவிட்டது. மலைபோல 6 பிள்ளைகளையும், 4 பேரன் பேத்திகளையும் கண்டுவிட்டேன். அதுமட்டுமல்ல, அன்றாடவாழ்க்கைக்காகப் போராடுபவர்களோடு சேர்ந்து நானும் எனது வாழ்க்கைக்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது.
எனது இத்தனை ஆண்டுகால இலக்கிய - வாழ்க்கை அனுபவங்களின் நான் பலதைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுள் எனது சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வு இத்தனை வருடகால இலக்கிய அனுபவங்களுக்கு மேலான இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
எனக்கு அப்போது வயது சுமார் 15 வரையில் இருக்கும். ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப் போன்று ஒருநேரச் சோற்றுக்கே ஆலாய்பறக்கும் வாழ்க்கை. காலை பழைய கஞ்சியுடனும், மதியவேளை கிழங்கு வகைகளுடனும் வாழ்க்கை போக, சோறு என்ற ஒன்று இரவில்தான் கிடைக்கும் அதுவும் அர்த்த ஜாமவேளையில்தான்!
எனது அப்பன் ஒரு நிரந்தரக் குடிகாரர். அவர் இரவுச் சோற்றுக்கான அரிசியை என் அம்மாளிடம் கொண்டு வந்து வீசிவிட்டு மண்திண்னையில் புரண்டு விடுவார். அம்மா சோறு காச்சுவாள். குழந்தைகளின் கொதிக்கும் வயிற்றுக்காகக் கஞ்சியை வடித்து முதலில் குடிக்கவைப்பாள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக சோறு அவித்து குழைந்து விட்டது. அப்பாவுக்கு அம்மா சோறு பரிமாறினபோது சோறு குழைந்திருந்ததைக் கண்டு அவருக்கு கோபம் பிறந்து விட்டது. மது வெறியில் அவர் ஒரு கவிதையே பாடிவிட்டார்.
அம்மாவுக்கு பெயர் மரியாள். அப்பருக்கோ கை யெழுத்துப் போடவோ தெரியாது. ஆனாலும் அவர் ஒரு கவிதை பாடினார். அர்த்த ஜாமத்தில் பாடினார்.
“சுந்தர மரியாள் செய்த
சூதை நான் அறியேனோ
கஞ்சிக்காக வல்லவோ
சோற்றைக் குழையவிட்டாள்”
என் அம்மாவாகிய மரியாள் செய்த செயலை எவ்வளவு அற்புதமாக, ஆனா அறியாத அப்புவால் பாடமுடிந்திருக்கிறது.
“அனுபவத்திலிருந்து பிறப்பதுதான் உயிர் உள்ள இலக்கியமாக முடியும்”
-----------------------------------------------------
டானியல் நினைவுகள்………..
கடந்த ஜனவரி முதலாம் திகதி மூன்று மணியிருக்கும், சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டிருக்கும் போது ‘கேற்’றில் சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தேன். தோழர் டானியலும் தோழர் சின்னத்தம்பியும் நின்றனர். திகைப்பும் மகிழ்வும் மோதும் உணர்வுடன் அவர்களை உள்ளே அழைத்து வந்தேன்.
‘டிசம்பர் 24ம் திகதி இந்தியா போறன் அங்கு வந்தா தஞ்சாவூரில சந்தி…’ என்றவர்… இப்ப இந்தியாவில் இருப்பார் எண்டு நினைச்சன் இங்க வந்து நிற்கிறாரே ….’ என்பது தான் எனது திகைப்பின் காரணம்.
சாப்பிடச் சொன்னேன்… ‘நல்ல கறி இருக்கு’ என்றேன்.
‘இனி எப்ப வந்து சாப்பிடப்போறேனோ தெரியா…… கொஞ்சம் கொண்டா …..’ என்றார். சின்னத்தம்பி கோப்பியே போதும் என்றுவிட்டார்.
இறைச்சிக்கறியை ருசித்துக் சாப்பிட்டுக்கொண்டு…… இடைக்கிடை ஏதோ யோசனை… சோற்றைக் குழைகிறார் கண்கலங்குகிறது…..
‘இளங்கோ… உன்னிட்ட ஒரு உதவி கேட்டு வந்தனான். அடுத்த மாதம் இந்தியா போற எண்டு சொன்னனி தானே…. இப்ப என்ர நிலைமையைப் பாத்து… …என்னோடயே வரவேணும்…’ என்றார்.
எனக்கு அது கஷ்டமாக இருந்தது. இந்தியாவில் ‘மூலிகை’ சம்மந்தமாக அழைப்பு இருந்துதான். ஆனால் உடன் புறப்படக்கூடிய சூழ்நிலை எனக்கில்லை. எனது நிலைமையை சிறிது சொன்னேன். அவர் விடவில்லை. மேலும் தொடர்ந்தார்.
‘நீ என்ர பெத்தபிள்ளை மாதிரி நீ என்னோட வராட்டி நான் இந்த கிழமையிலேயே செத்துப் போயிருவன். அதை உன்னால காணமுடியுமா? நீ அல்லது சின்னத்தம்பி தான் என்னோட வரவேணும். சின்னத்தம்பியின்ர குடும்ப நிலைமையில அவரால வரமுடியல்லை. நீ வாறது தான் எனக்கு எல்லா வழியிலும் உதவி. நீ வராட்டா பிறகு நீ சரியா கவலைப்படுவாய். நான் செத்துப் போயிருவன்’.
என் மனைவியைப் பார்த்துக் கூறுகிறார். ‘பிள்ளை …. என்னை திருச்சிவரை கூட்டிக்கொண்டு போனால் போதும். அதிகமாப் போனா ஒரு கிழமையில இளங்கோ திரும்பியிருவார். அல்லது தன்ரை ‘மூலிகை’ அலுவல்களை அங்க பார்த்துக்கொண்டு கெதியா வந்திருவார்.
எனக்கு………. கண் தானம் கேட்கிறன் பிள்ளை……………. இளங்கோ………வரவேணும்பிள்ளை….
மனைவிக்கும் கண் கலங்கி விட்டது. ‘அவர் உங்களுடன் வருவார். கவலைப்படாதீங்க’…. மனைவி கூறினார்.
ரிக்கற், விசா மற்றும் பல பிரச்சனைகளையும் சமாளித்து ஜனவரி 30-ம் திகதி புறப்படத் தயாரானோம். டானியல் தன் மதிப்புக்குரிய தோழர் சண்முகதாசனிடம் படிக்கக்கொடுத்திருந்த ‘பஞ்சகோணங்கள்’ நாவலைப்பெற்றுக் கொண்டு அவர் குறிப்பிட்ட திருத்தங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார். அந்த நாவல் முடிவு குறித்து தோழர் சண் குறிப்பிட்ட திருத்தங்கள் சரியென்றே என்னிடம் டானியல் அபிப்பிராயம் கேட்டபோதும் சொன்னேன். அதன்படி பின்னர் கும்பகோணத்தில் ‘தோழமை’ வெளியீட்டு நிறுவன பதிப்பாசிரியர் கவிஞர் பொதியவெற்பன் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்நாவல் முடிவில் மாற்றம் செய்து பொதியவெற்பனிடம் ஒப்படைத்ததும் ஞாபகமிருக்கிறது.
புறப்படுவதற்கு முதல்நாள், டானியல்பால் தோழமை கலந்த அன்பும், பாசமிக்க சில்லையூர் செல்வராசன் வேண்டுகோளுக்கிணங்க அவரது வீட்டில் தங்கினோம் இரவு மூன்று மணிவரை சில்லையூர் சப்பாணி கொட்டி நிலத்தில் உட்கார்ந்து கொண்டு சிகரெட்டுகளை அடுக்கடுக்காகப் புகைத்துக்கொண்டு டானியலுடன் பழைய நினைவுகளை இரை மீட்டு உரையாடிக் கொண்டிருந்தார். மிக இளம் வயதிலேயே சுதந்திரன், வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடங்களில் கடமையாற்றியவர் சில்லையூர். அக்காலங்களில், தொடர்ந்து எழுதுமாறு தூண்டி டானியல், கைலாசபதி போன்றோருக்கு எழுதிய கடிதங்களைப்பற்றியும், அவர்கள் எழுதியதை எவ்வாறு பிரசுரித்தோம் என்பது பற்றியும் சில்லையூர் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டது சுவையாயிருந்தது.
எழுத்துலகில் சாதனை படைக்கும் திறமை பலவும் பெற்ற சில்லையூரின் எழுத்துக்கள் நூலுருவில் வராதது பெருங்குறை தான் என்றவாறு டானியல் சொன்னார் இருவரும் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த சகல விடயங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதே அற்புதமான கவிதையை உணர்வோடு ரசிப்பதுபோலாகும்.
காலையில் டாக்ஸியில் ஏறுகையில் ‘பத்திரமாய் போய்ச்சேர்ந்து, வருத்தத்தைக் குணப்படுத்திக் கொண்டு வாங்கோ’ என்று சில்லையூரும் மனைவியும் கூறும்போது ‘வந்து சேர்ந்தா கண்டுகொள்ளுங்கோ’ என்று டானியல் கூறிய வார்த்தைகள்….
முப்பதாம் திகதி மாலை திருச்சி போய் சேர்ந்தோம். மறுநாள் தஞ்சாவூர் போய்ச்சேர்ந்தோம். டானியலின் நெருங்கிய நண்பரும், பிரபல விமர்சகருமான பேராசிரியர் மார்க்கஸ் வீட்டில் தங்கினோம்.
புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் தனபாலனிடம் டானியலைக் கூட்டிச் சென்று வைத்திய பரிசோதனை செய்வித்தோம். இரத்தம், சிறுநீர், கண் மற்றும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டரின் ஆலோசனைப்படி, நவீன வசதிகள் கொண்ட தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். அவரது கிட்னி, கண் என்பன நீரழிவு நோய் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய டாக்டர், ‘இத்தகைய பாதிப்புற்றவர்கள் மயக்கநிலையில் கட்டிலில் இருக்கவேண்டுமே: இவர் எப்படி நடந்தே வந்தார், என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அருகில் நின்ற பேராசிரியர் மார்க்ஸ் திகைப்புடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். அது தான் டானியலின் மனோவலிமை!
பத்து நாட்கள் சிகிச்சையின்பின் நீரிழிவு நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது குறித்து டாக்டரே ஆச்சரியப்பட்டார். காலைமாலை ‘இன்சுலின்’: ஒவ்வொரு வேளையும் ஏழு எட்டு குளிகைகளும் விழுங்க வேண்டும்.
பிரபல கண் மருத்துவமனையான ‘மதுரை அரவிந் கண் மருத்துவமனை’ யில் சிகிச்சைபெற நண்பர்கள் முயற்சியினால் உடன் அனுமதி கிடைத்தது. அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். ஒருகண் பார்வை முற்றாகச் சிதைந்துவிட்டதாகக் கூறி, மற்றக்கண் பார்வையைக் காப்பாற்றவென ‘லேசர்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் தஞ்சை திரும்பினார். சென்னையிலிருந்து அழைப்பு வந்தது. அங்கு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சிறந்த கண் மருத்துவ மனைகளில் ஒன்றான சென்னை ‘சங்கர் நேத்திராலயா’விலும் ஆலோசனை பெறவும் ஒழுங்கு செய்யப்பட்டது. மதுரை அரவிந் கண் மருத்துவமனை டாக்டர்கள் செய்த அதே சிகிச்சை போதுமானதெனவும், அதற்குமேல் எதுவும் செய்து பிரயோசனம் இல்லையெனவும் சங்கர் நேத்திராலயா டாக்டர்கள் கூறினார்கள்.
சென்னை முத்துச்சாமி அரங்கில் 25-02-86 மாலை நடந்த இலக்கியக் கூட்டத்தில் டானியல் சிறப்புரையாற்றினார். கலாநிதி து.மூர்த்தி, கலாநிதி கோ.கேசவன், பேராசிரியர்கள் ந.தெய்வசுந்தரம், அக்கினிபுத்திரன், அ.மார்க்ஸ், திரு.செ.கணேசலிங்கன், திரு.ப.சிவகுமார், ‘நீண்டபயணம்’ சுந்தரம் ஆகியோருடன் யானும் அக் கூட்டத்தில் உரையாற்றினேன்.
இரவு பத்துமணிவரையும் வைத்திய ஆலோசனைகளையும் புறக்கணித்து மிகுந்த உற்சாகத்துடன் அக்கூட்டத்தில் டானியல் கலந்துரையாடினார் மறுநாள் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் நாம் தங்கியிருந்த ஹேட்டலுக்கு வந்து டானியலின் உடல்நலம் குறித்து மிகுந்த ஆதங்கத்தோடு ஒரு மணிநேரம்வரை உரையாடினார். உடல்நலம் பேணுமாறும். ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டுமென்றும் கூறினார். அப்போது டானியல் கூறிய வார்த்தைகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பின்னர்தான் எம்மைச் சிந்திக்கவைத்துக் கவலையுறவைத்தன. கணேசலிங்கன் அவ்வார்த்தைகளை நினைவுகூர்ந்து கண்கலங்கியது இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
‘இன்னும் கொஞ்சநாள்தானே…. அதுவரைக்கும் வழமைபோல என்ர வேலையைச்செய்ய வேண்டியதுதானே?. விசேஷமா என்ன ஓய்வு எனக்கு வேண்டியிருக்கு’ என்ற வாறுதான் அவர் அப்போது கூறியிருந்தார். இரவு இரண்டு மணிவரை விழித்திருந்து நண்பர்களுடன் பேசுவார். அன்று இரவு 10 மணி தொடக்கம் 2 மணிவரை ‘கண்ணாடி’ பத்திரிகை ஆசிரிய குழுவினருக்குப் பேட்டி கொடுத்தார்; மனந்திறந்து இலக்கிய சம்பாஷனை செய்தார்.
அடுத்து பாண்டிச்சேரி புறப்பட்டோம். 1-3-86 மாலை பாண்டிச்சேரிக் கூட்டத்தில் தன் இலக்கிய அனுபங்களைப் பற்றிப் பேசினார். யானும் பேசினேன். பாரதி சிந்தனைப்பேரவை ஒழுங்கு செய்திருந்த இக் கூட்டம் டானியலை மிகவும் கவர்ந்த தரமான இலக்கிய கூட்டமாகும். நல்ல இலக்கிய இதயங்களை - நண்பர்களைக் தேடிக் கொண்டார். அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களும் அவரது நண்பர்களே அவருக்கு ஏற்றவிதத்தில் உணவு (வைத்திய ஆலோசனைப்படி சமைத்து) தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்து கொடுத்தனர். இரவு இரண்டு மணிவரை உரையாடல்கள் நடக்கும். எழுத்தாளர்கள் ஞானம், இரவிக்குமார், அஸ்வஹோஷ் ஆகியோருட்படப் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டிருப்பர்.
கும்பகோணத்தில் 5ம் திகதி மாலை ‘கைலாசபதி இலக்கியவட்டம்’ ஒழுங்கு செய்த கூட்டத்தில் டானியலும், யானும் சிறப்புறையாற்றினோம். மணிக்கொடி எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு, டானியலின் ‘அடிமைகள்’ நாவல் குறித்துப் பேசினார். தான் படித்த படைப்புக்களில் டானியலின் படைப்புக்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அவரது கூர்மையான சமுதாயப்பார்வை தன்னை வியப்பிலாத்தியதென்றும் டானியலைப் பெரிதும் பாராட்டிப் பேசினார்.
‘தோழமை’ வெளியீட்டு நிறுவனப் பதிப்பாசிரியர் கவிஞர் மு.பொதியவெற்பன் வீட்டில் தங்கியிருந்து இலக்கிய - அரசியல் நண்பர்களுடன் அளவளாவினார்.
ஐந்து நாட்களின் பின் தஞ்சை திரும்பிய டானியல், சிதைவுற்றிருந்த கண்ணில் சிறிது வெளிச்சம் வருகிறது: அதில் சிறிது ‘காட்ராக்ட்’ உள்ளதென டாக்டர் சொன்னார் தானே; அதை அறுவைச்சிகிச்சை செய்து பார்ப்போம்’ என்றவாறு வலியுறுத்திச் சொல்லத் தொடங்கினார். அவரது ‘கானல்’ நாவல் அச்சாகி முடியாததினாலும் மற்றும் சில காணங்களாலும் நாடு திரும்பும் நாள் பின்போடப்பட்டே வந்தது. அந்த கண் அறுவைச்சிகிச்சையை நானும், பேராசிரியர் மார்க்ஸ_ம், நண்பர் வேலுச்சாமி மற்றும் நண்பர்களும் அவ்வளவாக விரும்பவில்லை. இருப்பினும் டானியல், அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துபார்ப்போம் என்று வலியுறுத்திக் கூறியதினால் எம்மால் அதைத் தடுக்கமுடியவில்;லை. கண் டாக்டர் இராமையா, அதில் 25மூ தான் நம்பிக்கையுண்டெனக் கூறி அறுவச்சிகிச்சை செய்ய முன்வந்தார்.
மீண்டும் தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 20ம்திகதி காலை அந்தக்கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் டானியல் மிக உற்சாகமாகவே காணப்பட்டார். நண்பர்கள் வந்து 12 மணிவரை கூட பேசிக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் பேசுவதைக் குறைக்குமாறும், ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் கூறுவதை அவர் சிறுதும் விரும்பவில்லை. அவ்வாறு கூறினால். அது தன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு போன்றதாகக் கருதி சிலவேளை கவலைப்படுவார். அவரது உடலில் சிறிது மாற்றம் ஏற்பட்டு வருவதாக டாக்டர் கூறினார். ‘கிட்னி’ வேலை செய்வது குறைந்து வருவதாக கூறினார். அதன் பாதிப்புக்கள் அதிகமாகத் தென்பட்டன அவர் எந்த வேதனையையும் காட்டிக் கொள்ளமாட்டார். உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்தார். 23ம்திகதி காலை 8.30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். இரு டாக்டர்களும் தாதிமாரும் உடன் நின்று சிகிச்சையளித்தனர். ஆயினும் 8.40 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.
அவர் உடல் தஞ்சை வடக்கு வீதியிலுள்ள பேராசிரியர் மார்க்ஸ் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள நண்பர்களும், இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன் செய்தி கொடுக்கப்பட்டது. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினசரி உட்பட பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. வானொலி மாநிலச் செய்தியிலும், டில்லி ஆகாஷவாணிச் செய்தியிலும் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் இலக்கிய - அரசியல் நண்பர்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர். உடலை இலங்கைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும், அது உடன் சாத்தியமாகப்படவில்லையாதலினாலும், உடலைப் பாதுகாத்து வைக்கும் வசதி அங்கு இல்லையாதலினாலும், அங்கேயே அடக்கம் செய்வதென முடிவுசெய்யப்பட்டது. 24ம் திகதி மாலை முன்னூறுக்கு மேற்பட்ட இலக்கிய - அரசியல் நண்பர்கள் பின்தொடர செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில், செங்கொடி போர்க்கப்பட்ட டானியல் உடல் தஞ்சை இராஜகோரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரபலஎழுத்தாளர்கள், பேராசிரியர்கள் அரசியல் தோழர்கள் பலர் அஞ்சலி உரைநிகழ்த்தினர்.
ஒரு புரட்சியாளனுக்கான அனைத்து மரியாதைகளுடனும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளதெனவும், அவரது படைப்புக்கள் யாவும் தொடர்ந்து அங்கு வெளியிடப்படவுள்ளனவென்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளில் ‘தோழமை’, ‘சிலிக்குயில்’ வெளியீட்டு நிறுவனங்களும், புரட்சி பண்பாட்டு இயக்கமும் ஈடுபட்டுள்ளன.
தஞ்சை தமிழ்பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவினருடனும், சித்தமருத்துவக் கல்லூரியிலும் எனது ‘மூலிகை’ ஆராய்ச்சி சம்மந்தமான அலுவல்களை முடித்துக் கொண்டு கனக்கும் இதயத்துடன் ஏப்ரல் 5ம் நாடுதிரும்பினேன்.
அங்கு கூட்டங்களில் எனது உரைகளைக் கேட்ட நண்பர்கள் அவற்றைப் பாராட்டி டானியலுக்குச் சொன்னபோது அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சைத் தொடுவன.
‘இளங்கோவுடன் தான் 1981ல் சென்னை வந்தேன். சி.எல்.எஸ்’ கருத்தரங்கிலும் மற்றும் சில கூட்டங்களிலும் அவன் பேச்சின் பின்னர் பலர் பஞ்சமர் முதல்பாகத்தைப் படிக்க ஆவலுற்றனர். பஞ்சமர் இரண்டாம் பாகமும் சேர்ந்து இங்கு வெளியிட அழைப்புக்கள் வந்தன. அவனோடு வருவது நாலைந்து பேரோடு வருவதுபோல எனக்கு தெம்பு தரும். ஒரு நல்ல தோழனாய், பெற்ற மகன்போல என்னைக் கவனமாய்க் கவனித்துக்கொள்ளும் வைத்தியனாய், இலக்கிய - அரசியல் பேச்சாளனாய் எனக்குப் பெரிதும் உதவி. அவனோடு இங்கு வருவதில் மாத்திரமல்ல, அங்கு நாட்டில் கூட எங்கும் அவனோடு போவதில் எனக்கு தெம்பு அதிகம்’ என்றவாறு கூறியிருந்தார்.
என் கல்லூரி நாட்களிலேயே டானியல் சிறுகதைகளை வாசித்திருந்தேன். ஆனால் 1972ம் ஆண்டளவில் தான் எனது மூத்த சகோதரர் எழுத்தாளர் நாவேந்தன்மூலம் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாவேந்தனின் இலக்கியப் பணியின் வெள்ளிவிழாவில் கலந்து கொள் ஏழாலைக்கு வந்திருந்த டானியலுடனும், கவிஞர் புதுவை இரத்தின துரையுடனும் நிறையப் பேசினேன். பின்னர் புதுவை தொழில் நிமித்தம் எனது ஊரான புங்குடுதீவில் தங்கியிருந்தபோது தினசரி மாலைப்பொழுதுகள் இலக்கியப் பொழுதுகளாக அமையும். அந்தப் பொழுதுகளிலெல்லாம் பேச்சுக்களில் டானியல் வந்துபோவார். பின்னர் 1974ல் திருமலையில் நடைபெற்ற புரட்சிகர கலை இலக்கிய எழுத்தாளர் மாநாட்டில், டானியலுடனும், சில்லையூர் செல்வராசனுடனும் நிறையப் பேசக்கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்த சந்திப்பாகும். பின்னர் டானியலுடனான தோழமை வளர்ந்தது.
கலை இலக்கிய - அரசியல் போராட்ட எந்த நடவடிக்கைகளில் அவர் இறங்கினாலும், அதில் முன்னணியில் நிற்கும் ஒருவனாக என்னை அவர் நெறிப்படுத்தினார். இதன் தாக்கம் கலை இலக்கிய - அரசியல் பிரமுகர்களிடையேயும் எதிரொலித்தது. ‘இவன் வளர்ந்து விடுவான்’ என்று, காழ்ப்புணர்வு - இயலாமை - தன்னம்பிக்கையற்ற நிலைகொண்ட சிலர் இருட்டடிப்புச் செய்யவும் முனைந்ததுண்டு. ஆனால் திறமையறிந்து தட்டிக்கொடுத்து, அரவணைத்துச் செல்லும் தோழமை - நண்புணர்வு, மனிதாபிமானம் அவருடன் பழகிய யாராலும் மறந்துவிடமுடியாது. ஒரு ராஜதந்திரிக்குரிய திறமையோடும், தலைமைத்துவத்தன்மையோடும் பல்வேறு சந்தர்பங்களில், இலக்கிய - அரசியல் - சமூகவிடுதலைப் போராட்டச் சந்தர்ப்பவாதப் போக்குகளை அவர் முறியடித்திருக்கிறார்.
டானியலுடன் சேர்ந்து நான் வடபகுதியில் போகாத கிராமங்கள் இல்லையெனலாம். அவர் கலந்துகொண்டு பேசும் அதிகமான கூட்டங்களில் எனக்கும் பேசவோ அல்லது கவியரங்கில் கலந்துகொள்ளவோ இடம் கிடைக்கும். நான் கிராமங்களை அவருடன் சேர்ந்து படித்தேன். அவரது கூர்மையான, ஆழமான பார்வை யாருக்கும் வராது. ஒரு முறை எங்கள் வீடு வந்த போது தகப்பனாருடன் நிறையக் கதைத்துவிட்டுச் சென்றவர். அந்தக் கதைப்பில் எனது தகப்பனாருடைய கதை - சொல் மாதிரியே ‘பஞ்சமர்’ நாவலில் ஒரு இடத்தில் அவரையும் கொண்டுவந்துவிட்டார்.
டானியல் இங்கும்சரி இந்தியாவிலும்சரி கூறுவார்; நான் மக்களிடம் படிக்கிறேன். அதைப்புடமிட்டு மக்களிடம் கொடுக்கிறேன். நான் முதலிடம் அரசியலுக்கே கொடுக்கிறேன். அதன் பிறகே இலக்கியம். எனக்கு ஓர் அரசியல் உண்டு. அதற்கு உந்து சக்தியாக இலக்கியம் படைக்கிறேன்; என்பார்.
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கோட்பாட்டு ரீதியாகப் பிரிவுகள், பூசல்கள், பூகம்பங்கள் ஏற்பட்டபோதெல்லாம் சரியான கொள்கைவழியில் துணிச்சலோடு செய்யப்பட்டவர். போராட்டப் பாதையை முன்னெடுத்தவர். அவர் படைப்புகள் அவரது அரசியலை எடுத்துச் சொல்லாமலில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். உழைப்பால் உயர்ந்தவர். இறுதிவரை உழைத்துக் கொண்டிருந்தவர்: எழுதிக்கொண்டிருந்தவர். இந்தியாவில் இறுதி நேரத்தில்கூட அவர் எழுதி முடித்த குறுநாவலொன்று பேராசிரியர் மார்க்ஸ் வீட்டு மேசையில் இருக்கிறது. வாழ்வில் சொகுசுகளைப் புறக்கணித்துத் தன் இலட்சியத்துக்காக இறுதிவரை வாழ்ந்தவர். பதினான்கு வருடங்களுக்கு முன் பார்த்த டானியலாகவே இறுதிவரை தனது வாழ்க்கை முறைகளில் எனக்குத் தெரிந்தார்.
அடித்தள சமூகத்தில் பிறந்த, ஐந்தாம் வகுப்புப் படித்த அறிவு ஜீவிகளின் மேல்மட்ட துலாக்கோல்பிடிக்கும் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளங்களில் சுமக்கிறார்கள் ஆய்வாளர்கள் மெச்சுகிறார்கள். பலமொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. ‘சொல் அகராதிக்கு’ டானியல் படைப்புகலிருந்து சொல் சேகரிக்கப்படுகிறது.
‘இந்தியாவில் ஆந்திராவில்தான் ஒடுக்கப்பட்ட மக்களி;;ன் பிரச்சனைகளை நன்முறையில் சித்தரிக்கும் சிறந்த படைப்புகள் - ‘தலித் இலக்கியப் படைப்புக்கள்’ வெளிவந்துள்ளன. தமிழில் அவ்வாறு வெளிவரவில்லை, - என்ற குரல் நாங்கள் இந்தியாவிலிருக்கும்போது வெளிவந்தது. அதற்கு மக்கள் கவிஞனொருவர் பதிலளித்தார். ‘தமிழில் வெளிவரவில்லை என்று சொல்வது அபத்தம். தமிழ் நாட்டில் வெளிவரவில்லை. ஆனால் ஈழத்துப் படைப்பாளியான டானியலின் படைப்புக்கள் அவர்கள் குறிப்பிடும் ‘தலித் இலக்கியப்படைப்புக்கள்’ எல்லாவற்றிலும் சிறந்த என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று பதில் கொடுத்தார். இந்த வகையில் இலங்கை இந்தியப் படைப்பாளிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை - போராட்டங்களை சிறந்த முறையில் எழுத்தில் வடித்த மக்கள் எழுத்தாளனான டானியல், ஒரு போராளியாகவும் திகழ்ந்தார்.
வடபகுதியில் சமூகஅநீதிகள் - அடக்கு முறைகள் ஓரளவு தகர்த்தெறியப்பட்டதற்கு ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ தலைமை கொடுத்து வழிநடத்தியது வரலாற்று உண்மை. அதில் பெரும்பங்களிப்பு நல்கி உழைத்தவர்; போராடியவர்; தன் உழைப்பு - பொருள் உதவிகளை நல்கியவர் டானியல்.
‘நிலவுடமை ஆதிக்கத்தின் மேல் கட்டப்பட்ட சாதிமுறையை அகற்றுதல், அதைப்பாதுகாத்து நிற்கும் அரசு இயந்திரத்தை மாற்றுதல், சகல ஆதிபத்திய சிந்தனைகளையும் சாடி அழித்தல், அதற்கான போராட்டப் பாதை, புரட்சியே அடக்குமுறை அழிய, சகல மக்களுக்குமான விடுதலைக்கு வழி’ என நம்பியவர். அதனையே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை சொன்னவர்; தன் எழுத்துக்களில் படைத்தவர் டானியல்.
மக்கள் விடுதலை இலட்சியத்தை நேசித்த மக்கள்எழுத்தாளன் டானியலின் இழப்பு முற்போக்கு உலகிற்கும், சகல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் நேசித்த இலட்சியங்கள், கொள்கைகள், படைப்புக்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்கு என்றும் வழி காட்டும்.
- வி.ரி.இளங்கோவன்.
11-10-86
------------------------------------------------------------------
இலக்கியத்தில்….
அரசியலில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் மூவகைப் போக்குகள் உள்ளன.
• ஆளும் வர்க்கத்துக்குச் சாதகமான போக்கு.
• சமரச - சீர்திருத்த வாதப்போக்கு.
• எழுச்சியுற்று, தவிர்க்கமுடியாதபடி போராடி வரும் உழைக்கும் மக்களுடன் இணைந்து வளரும் போக்கு.
மூன்றாவதுவகை நிலைப்பாட்டில் நின்று போராடி, எழுதி வளர்ந்தவரே கே.டானியல்.
- ‘சித்தன்’
------------------------------------------------------------
விற்பனையாகின்றன
அரிய மருத்துவ நூல்கள்
• ‘நோய் நீக்கும் மூலிகைகள்’
• ‘ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள்’
இவை ‘மூலிகை’ வெளியீடுகள்.
எங்கும் கிடைக்கும்
விபரங்களுக்கு:
ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
கே.கே.எஸ்.வீதி,
யாழ்ப்பாணம்.
---------------------------------------------------------
நன்றி
இந்நூல் வெளிவர பெரிதும் உதவிய
கோப்பாய் ‘றொக் என்ஜினியர்ஸ்’ உரிமையாளர்-
டானியலின் இனிய நண்பர்
திரு.வே.சித்திவிநாயகர்.
திருமதி. சுரதா இராசரத்தினம் (ஆசிரியை)
திரு.எஸ். பாக்கியநாதன் ஆகியோருக்கும்,
நூல் வெளியிட அனுமதியளித்த
டானியல் குடும்பத்தாருக்கும்,
முன்னுரை வழங்கிய தோழர்
வீ.சின்னத்தம்பி அவர்களுக்கும்
எனது நன்றி.
- ‘மூலிகை’
----------------------------------------------------------------------
டானியல் படைப்புகள்
நூலுருவில்………
• டானியல் கதைகள்
• உலகங்கள் வெல்லப்படுகின்றன
• பஞ்சமர் (இரு பாகங்கள்)
• போராளிகள் காத்திருக்கின்றனர்
• கோவிந்தன்
• அடிமைகள்
• கானல்
• பஞ்சகோணங்கள் (அச்சில்)
• தண்ணீர் (அச்சில்)
---
கருத்துகள்
கருத்துரையிடுக