எது நல்ல பள்ளி பேசலாம் வாங்க!
பொது அறிவு
Backஎது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!
இல. சண்முகசுந்தரம்
உள்ளடக்கம்
எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!
பதிப்புரை
மின் நூல் பங்களிப்பு
இல.சண்முகசுந்தரம்
1. அத்தியாயம் 1
2. அத்தியாயம் 2
3. அத்தியாயம் 3
4. அத்தியாயம் 4
5. அத்தியாயம் 5
6. அத்தியாயம் 6
7. அத்தியாயம் 7
8. அத்தியாயம் 8
9. அத்தியாயம் 9
10. அத்தியாயம் 10
11. அத்தியாயம் 11
12. அத்தியாயம் 12
13. அத்தியாயம் 13
14. அத்தியாமம் 14
15. அந்நியாமம் 15
16. அத்தியாமம் 16
17. அந்தியாமம் 17
18. அத்தியாயம் 18
19. அத்தியாயம் 19
20. பின் அட்டை
எங்களைப் பற்றி
1
எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!
எது நல்ல பள்ளி ?
பேசலாம் வாங்க !
இல . சண்முகசுந்தரம்
மின் நூல் வெளியீடு
வெளியீடு – Freetamilebooks.com
உரிமை –Creative Commons Attribution 4.0 International License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
2
பதிப்புரை
அ ரசு பள்ளி என்றாலே மோசம் . பிள்ளைய அரசு பள்ளியில் படிக்க வைத்தால் என் கௌரவத்துக்கு பெரும் இழுக்கு தனியார் மெட்ரிக்பள்ளிகளே சிறந்தது எவ்வளவு கஸ்டப்பட்டாவது கடனவுடன வாங்கியாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விட்டுட்டா போதும் பிள்ளைகளோட எதிர்காலம் சுபிட்சமாயிடும் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறாங்க !
இது எவ்வளவு பெரிய மோசடியான கருத்து மோசமான செயல் இந்த பொது கருத்து எப்படி உருவானது ? தனியார் பள்ளி முதலாளிகளும் அரசும் தான் திட்டமிட்டு இக்கருத்தை உருவாக்கினர் . அரசு கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து விலகதுவங்கியதுமே கல்வியில் தனியார் மய நடவடிக்கைகள் தீவிரமானது உன்மையில் தனியார் பள்ளிகள் சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்குகிறதா ? தேசப்பற்று உள்ள சிந்திக்கும் திறன்படைத்த மானவனையா உருவாக்குகிறது என்றால் நிச்சயமாக இல்லை . சிந்திக்கும் திறனற்ற இயந்திரங்களையே இப்பள்ளிகள் உருவாக்குகின்றது . சிறு பிரச்சனையை கூட நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் . குரூரமான வன்முறை கலாச்சாரமும் வளர்ந்து விட்டது . ஆம் தனியார் மற்றும் ரெசிடன்சி ( உண்டு உறைவிட ) பள்ளி மாணவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
தகுதிவாந்த ஆசிரியர்கள் முழுமையான கட்டமைப்பு வசதிகள் , பெரும்பாலான தனியார் , பள்ளிகளிலும் இல்லை என்பதுவே உண்மை . அரசின் விதிக்கு மாறான கட்டண கொள்ளை இவற்றையெல்லாம் பகுத்து அறியவோ கேள்வி கேட்கவோ கூட நமது பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை . ஏனென்றால் அப்பள்ளி குறித்து மிகைப்படுத்தலும் விளம்பரங்களும் வேறு வகையான சித்திரங்களை உருவாக்கிவிடுகின்றன . இதனால் கிராமப்புற அரசு பள்ளி உட்பட மாணவர் சேர்கை மிகப்பெருமளவில் சரியத் துவங்கியுள்ளது . கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு விட்டன . மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன .
இந்நிலைக்கு யார் காரணம் ? ஒரு காலத்தில் மாணவர் எண்ணிக்கையால் நிரம்பி வழிந்த அரசு பள்ளிகளில் இன்று பத்து இருபது பேரோடு மட்டும் காத்துவாங்குகின்றன . புதிய அரசு பள்ளிகளை துவங்கிட விரும்பாத அரசு சத்தமில்லாமல் மாணவர் எண்ணிக்கை இல்லையென்று சொல்லி பள்ளிகளை மூ டிவருகிறது . வேதனையளிக்கிறது . மறுபுறம் இலவச மடிக்கணினி உட்பட 14 வகையான இலவச நலத்திட்டங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி சாதனை படைத்தாக சொல்லிக்கொல்லும் . அதிமுக அரசால் ஏன் ? அரசு பள்ளிகளை சரிவிலிருந்து தடுக்க முடியவில்லை . உன்மையான பிரச்சனைகளை , அடிப்படை காரணிகளை ஆய்ந்து அறிந்து களைவதற்கு மாறாக தனியார் பள்ளிகளை போல் அங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது .
இதனால் அரசு பள்ளிகளில் தொடரும் மாணவர் சரிவை தடுக்கமுடியாது . தாய்மொழி வழி கல்வி என்பதற்கு மாறாக அறிவியல் நடைமுறைக்கு எதிராக தமிழ் மொழியை வகுப்பறையிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது . அதிமுக அரசு . தமிழ் சமூகத்துக்கு இதைவிட மற்றொரு துரோகத்தை செய்துவிட முடியாது . ஒரு அரசு பள்ளியை கூட மூடுவதற்கு அனுமதிக்க கூடாது . அப்படி மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதற்கான நிர்பந்தங்களையும் சமசரமற்ற போராட்டங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது .
தற்போது மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பா . ஜ . க கல்வி அமைப்பின் மீது இரண்டு வகையான தாக்குதல்களை தொடுத்து வருகிறது . கல்வி வணிகமயத்தை தீவிரப்படுத்துவதோடு பாடத்திட்டத்தில் இந்துத்துவ மதவெறி கருத்துக்களை திணித்து பொய்யையும் , புரட்டையும் வரலாறாக மாற்றிட முயற்சிக்கும் பாசிச அரசின் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டி வலுமிக்க இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது . மேலும் சரிவிலிருந்து அரசுபள்ளிகளை மீட்டெடுத்திட அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்வோம் .
அரசு பள்ளிகளை பாதுகாக்க பலப்படுத்த …
இப்பிரசுரத்தை ஆயுதமாக அனைவரிடமும்
கொண்டு சேர்போம் …
ஜோ . ராஜ்மோகன்
இந்திய மாணவர் சங்கம்
மாநிலச் செயலாளர் .
3
மின் நூல் பங்களிப்பு
மின் நூல் ஆக்கம்,மூலங்கள் பெற்றது
GNUஅன்வர்
gnuanwar@gmail.com
gnunanban.blogspot.com
மின் நூல் ஆக்கத்தில் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்
4
இல.சண்முகசுந்தரம்
மாநிலத் துணைத்தலைவர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு
ஆசிரியர் இளைஞர் முழக்கம் மாத இதழ்
முன்னாள் மாநில செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
இவர் ஒரு மரபு வழி அக்கு ஹீலர்
தொடர்புக்கு
gowthamansm@gmail.com
1
அத்தியாயம் 1
“இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத் தாழ்வுகள் கொண்டது . இது கொடிய அநீதி மட்டுமல்ல ; வேகமாக வளரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமற்றதும் திறனற்றதுமாகும்’’ – அமர்த்திய சென் .
இந்த உலகத்திலேயே சிறந்த ஆட்சி எங்கு நடக்கிறது ? உலகத்திலேயே சிறந்த கல்வி எந்த நாட்டில் தரப்படுகிறது ?
கொஞ்சம் பொறுங்கள் . கேள்வியில் ஒரு சின்ன திருத்தம் . கேள்வியை இப்படி வாசியுங்கள் .
இந்தப் பிரபஞ்சத்திலேயே சிறந்த ஆட்சி எங்கு நடக்கிறது ?
என்னங்க கேள்வி இது என்றுதானே குழம்புகிறீர்கள் . பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதனே கிடையாதே , அப்புறம் எப்படிங்க அங்கெல்லாம் ஆட்சி இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கலாம் .
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா கிண்டலா வேணா பதில் சொல்லலாம் . ஆனா உண்மையான பதிலெல்லாம் சொல்ல முடியாதுங்க என்றும் நீங்கள் நினைக்கலாம் .
ஆனால் , பாருங்கள் . தமிழகத்தின் ஒரு தொலைக்காட்சி விளம்பரம் இப்படிப் பதில் சொல்கிறது .
வேற்றுக் கிரகவாசிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள் . இருவரும் மாபெரும் அறிவியலாளர்கள் ( சைன்டிஸ்ட்னு சொன்னா புரியுமே ).
பூமிக் கிரகத்தில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்றும் , அதைப் பார்த்து வர அக்கிரகவாசி ஒருவரை அனுப்புவது என்றும் முடிவெடுக்கிறார்கள் .
அதன் படி , அக்கிரகவாசி ஒருவரை பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் . வேற்றுக்கிரக உடையிலிருந்து மாயஜாலம் மூலம் நம் உடைக்கு மாறும் அவரை ஒரு மாணவி பார்த்துவிடுகிறார் . அவரைத் தன் வீட்டினுள் அழைத்துப்போய் , தற்போதைய ஆட்சியைப் பற்றிப் புகழ்வதோடு , தனக்கு என்னவெல்லாம் விலையில்லாமல் தரப்பட்டிருக்கிறது என்றும் பட்டியலிடுகிறார் .
இதுக்கு மேலே இதைப் பேசினால் அரசியலாகிவிடும் . எனவே , நாம் இத்தோடு நிறுத்திக் கொள்வோமாக .
உண்மைதான் . அம்மாணவி சொல்வதுபோல அவ்வளவு இலவசங்களும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ , மாணவியர் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் தரப்படுவது உண்மைதான் . அப்படியெனில் , அரசுப் பள்ளிகளில் என்ன நடந்திருக்க வேண்டும் ?
தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர்களிடையே அதிக விருப்பம் இருக்க வேண்டும் . பள்ளிகளில் கடும் போட்டா போட்டி இருக்க வேண்டும் . அம்மா நான் அரசுப் பள்ளியில்தான் படிப்பேன் என்று ஒவ்வொரு மாணவ , மாணவியரும் ஒத்தைக்காலில் நின்று பிடிவாதம் பிடிக்க வேண்டும் . ஆனால் , அப்படி எங்கேனும் நடந்திருப்பதாய் ஏதும் கேள்விப்பட்டதுண்டா நீங்கள் ?
அமைச்சர்கள் , பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் , சாதனைகளைப் பட்டியலிடும் கட்சிக்காரர்கள் வரை எவரும் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவதில்லையே , அது ஏன் ? அத விடுங்க . ஒரு தினக்கூலி தொழிலாளி கூட தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவதில்லையே , ஏன் ? தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்தாலும் பரவாயில்லை , கடன உடன வாங்கியாது , தனியார் பள்ளியில் நன்கொடை கொடுத்தேனும் இடம் வாங்க அலைகிறாரே , அது ஏன் ?
இத்தனைக்கும் , தனியார் பள்ளிகளில் எடுத்ததுக்கெல்லாம் காசு பிடுங்குவார்கள் என்று தமிழகத்தின் எந்த வயதில் உள்ள ஆண்கள் , பெண்களைக் கேட்டாலும் தெரிந்திருப்பார்கள் . கல்வி பெரும் வியாபாரமாய் மாற்றப்பட்டிருப்பதையும் ஒட்டுமொத்த தமிழகமே அறியும் . குழந்தைகளை கசக்கிப்பிழிவார்கள் என்றும் எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும் . ஆக , தனியார் பள்ளியில் இவ்வளவு கொடுமைகள் இருந்தும் , அரசுப் பள்ளியில் அவ்வளவு இலவசங்கள் இருந்தும் ஏன் அரசுப் பள்ளிகளை பெற்றோர்களும் விரும்பவில்லை , மாணவ – மாணவியர்களும் விரும்பவில்லை ?
கலைஞர் ஆட்சியில் கல்வித்துறையின் சாதனைகள் என ஒருவர் பட்டியலிடுகிறார் . மற்றொருவரோ , எனது ஆட்சியில் நானே செய்த கல்வித்துறையின் சாதனைகள் என பட்டியலிடுகிறார் . நமது சந்தேகம் என்னவென்றால் ..?
2
அத்தியாயம் 2
தமிழகத்து மாணவர்களையும் , பெற்றோர்களையும் அரசுப் பள்ளிகளை விட்டு விரட்டியது யாருடைய சாதனை என்பதுதான் . அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் வெறுக்கும் நிலை இவர் ஆட்சியில் ஏற்பட்டதா இல்லையெனில் , அவர் ஆட்சியில் ஏற்பட்டதா ?
ஆம் . பென்சில் கொடுத்ததும் , அழிரப்பர் கொடுத்ததும் கூட அரசின் சாதனையெனில் , இலட்சக்கணக்கான பெற்றோர்களுக்கும் , மாணவ – மாணவியர்களுக்கும் அரசுப் பள்ளியின் மீது வெறுப்பை உருவாக்கியதும் அரசின் சாதனைதானே !
அரசு நல்லாதாங்க பள்ளிக்கூடங்களை நடத்துது , விபரம் தெரியாத பெற்றோர்கள்தான் மோகத்தில் தனியார் பள்ளிக்கூடங்களை தேடி ஓடுகிறார்கள் என்று சிலர் பதில் சொல்லக்கூடும் . கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுல பாதிய படிப்புக்கே செலவழிக்கிற அளவுக்கு பாழாய்ப்போன மோகம் அனைத்துப் பெற்றோர்களுக்கும் இருக்கும் என்பது முழுவதும் நம்புவதற்குரியது அல்ல . அப்படியெனில் , வேறு என்ன காரணம் ?
அரசுப் பள்ளிகள் தரமற்றதா இருக்கிறதா , அங்கு படிக்கும் மாணவரில் பெரும்பாலோர் தேர்ச்சி அடைவதில்லையா ? தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமானதா ? தனியார் பள்ளியில் அனைவரும் 90 சத மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா ? தனியார் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடுகிறதா ? ஆங்கிலத்தில் பொளந்துகட்டும் அறிவு தனியார் பள்ளியில் அள்ளி வழங்கப்படுகிறதா ?
அரசுப்பள்ளிகளில் இல்லாத எது தனியார் பள்ளிகளில் கிடைக்கிறது ? ஏன் இந்த மோகம் ? ஏதாவது ஒரு காரணம் கூட இல்லாமலா , இலட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு மோகம் வரும் ? எனவே , காரணத்தைக் கட்டாயம் கண்டறியவேண்டும் .
சரி , அரசு – தனியார் பள்ளிகளுக்கிடையில் அப்படி என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் வாருங்கள் .
முதலில் , ஒரு தனியார் பள்ளிக்குச் சென்று பார்ப்போம் . அங்கே பாருங்கள் அரசுப்பள்ளிகளை அதிகளவில் திறந்த காமாரஜர் பெயரிலேயே ஒரு தனியார் பள்ளி . அங்கு செல்வோம் . சுற்றிலும் வண்ணமயமான காம்பவுண்ட் சுவர் . சுவற்றில் , நிறைய ஓவியங்கள் , வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன . வாசலில் இரண்டு காவலாளிகள் . அத்தோடு , நம்மை வரவேற்கும் பிரம்மாண்டமான பெயர்ப்பலகை மற்றும் பள்ளியின் பெருமை சொல்லும் விளம்பரப் பலகைகள் . பாருங்கள் , சுற்றுச்சுவர் எத்தனை உயரமாய் , வர்ணமிக்கதாய் இருக்கிறதென்று !
சரி , உள்ளே செல்லலாம் .
சுத்தமான வராண்டாக்கள் . அடுக்குமாடிக் கட்டிடங்கள் . வண்ணமயமான , பளிச்சென்ற சுவர்கள் . என்னென்ன வகுப்பறை என்று ஒவ்வொரு வகுப்பறையிலும் எழுத்துகள் . தனித்தனி கழிப்பறைகள் , கேண்டீன் என ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு வாருங்கள் .
அடுத்ததாய் வகுப்பறைக்கும் சென்று பார்ப்போம் .
பளிச்சென்று கரும்பலகை . நல்ல இருக்கைகள் . மேஜைகள் . குறைந்தது ஒரு வகுப்புக்கு ஒரு காற்றாடி வேறு . மழலையர் வகுப்புகள் எனில் , ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பு இருக்கை – ஒரு மேஜை . சுவரெங்கும் வண்ணமயமான எழுத்துகள் மற்றும் பாடம் தொடர்பான சுவரொட்டிகள் .
சரி . இப்போது ஒரு அரசுப்பள்ளிக்குப் போவோமா !
சுற்றுச்சுவர் பக்கமா நடந்து வராதீங்க . ஒரே அசிங்கம் . இந்தப் பள்ளிக்கு என்னங்க பெயர் , எங்க இருக்கிறதென்றே தெரியவில்லையே ? ஓ ! சுவத்துல எழுதி வைச்சிருக்காங்களே , அதான் பெயரா ! பாதி எழுத்துகள் காணவில்லையே , ஒருவேளை இதுதான் இப்போதைய டிசைனா இருக்குமோ !
வாங்க உள்ளே போகலாம் .
கவனமா காலை வையுங்க என எச்சரிக்கும் வராண்டாக்கள் . பல பத்தாண்டுகளுக்கு முன்பு வெள்ளையாய் இருந்திருக்கலாம் என நம்ப வைக்கும் சுவர்கள் . கரும்பலகையா , குழிப்பலகையா எனக்குழம்ப வைக்கும் வகுப்பறைக்
3
அத்தியாயம் 3
கரும்பலகைகள் . இத்துப் பிடித்த இருக்கைகள் . வெடித்துக்கிடக்கும் மேஜைகள் . வெயிலோ , மழையோ பாரபட்சமில்லாமல் ஒழுகும் மேற்கூரைகள் . கதவில்லா கழிப்பறைகள் . தண்ணீர் தேங்கி பாசியும் , பாசமும் பிடித்து நிற்கும் குழாயடிகள் .
வாருங்கள் , அங்கே நிற்கும் மாணவனிடம் சில சந்தேகங்களைக் கேட்போம் .
ஏனுங்க தம்பி , சுற்றுச்சுவர் ஏன் இப்படி அசிங்கமா கிடக்குது ?
பல பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவரே இல்லாத நிலையில , இங்க அப்படி அந்தப் பெயருல ஒரு சுவரு , பள்ளிக்கூடத்தைச் சுத்தி இருக்கிறதேன்னு ஆச்சரியப்படுங்க சார் . சந்தோசப்படுங்க .
குடிதண்ணீர் உண்டாப்பா ?
பாட்டில்ல சில பேர் கொண்டாந்துருவாங்க சார் . நாங்களே காசு போட்டு . பானை வாங்கி வைச்சு , பைப்ல தண்ணீர் வர்றப்போ கொண்டாந்து ஊத்தி வைச்சுக்குவோம் சார் .
அப்போ , குடிதண்ணீர் ஏற்பாடோ , கேண்டீனோ கிடையாதாப்பா ?
சார் , பள்ளிக்கு பக்கத்துலே அவ்வளவு பெரிய டாஸ்மாக்கும் , பாரும் இருக்கும்போது தனியா பள்ளிக்கூடத்துக்கு எதுக்குன்னு யோசிச்சிருப்பாங்க சார் . அரசு வருமானத்தை பெருக்கணும்னா நாங்களும் குடிச்சுத்தான் ஆகணும்னு அவங்க நினைக்கிறாங்க சார் .
சரிப்பா , அத விடுப்பா . கழிப்பறை தனியா இருக்கா ?
சார் , ஆம்பளப் பசங்களுக்கு தனியா கழிப்பறை எதுக்கு சார் ? அதுக்குதான் சுற்றுச்சுவரும் , மைதானமும் இருக்குதுல்லே , அங்கபோய் அடிச்சுக்குவோம் . இந்தப் பொம்பளப்பசங்களுக்குதான் சார் , ரொம்பக் கஷ்டம் , கழிப்பறை இருக்கு . ஆனா , சுத்தமா இருக்காது சார் . பல நாள் தண்ணியே வராது சார் . அவங்க அடக்கிக் கிடுவாங்க சார் .
ஏம்மா , சானிட்டரி நாப்கின்னெல்லாம் அரசே தருதுன்னு சொல்லுறாங்களே , அப்ப சுத்தமான கழிப்பறை இல்லேன்னா எப்படிம்மா ? என்று ஒரு மாணவியுடமே கேட்டிருவோம் . வாங்க .
விலையில்லாத நாப்கின் கொடுத்தது என் அரசுதான்னு சொன்னா அதை அவங்களோட சாதனையுன்னு நினைக்கிறாங்க சார் . ஆனா , சுகாதாரமான கழிப்பறையை முக்கியமா யாருமே நினைக்கிறதில்லியே சார் . நாப்கின் அழிப்பான் கொண்ட சிறப்பான கழிப்பறை வசதின்னு சொன்னாங்க சார் . ஆனா , எப்போ வருமுன்னு சொல்லலை சார் .
தலைகுனிந்து கொண்டே பதில் சொன்ன மாணவியின் வேதனை நிறைந்த அந்த முகம் , உங்கள் பக்கத்து வீட்டின் சிறுமியைக்கூட நினைவுபடுத்தலாம் . நன்கு பாருங்கள் . அந்த முகத்தில் எத்தனை அவமானம் என்று ! ஆம் . இப்படியான அரசுப்பள்ளியில் படித்தால் அத்தனை அவமானம் என்ற நினைப்பு பெரும்பாலான மாணவ , மாணவியருக்கு இன்றிருக்கிறது .
அரசுப்பள்ளியில் வேலை என்றால் ஓடி வருகிறார்கள் . ஆனால் , அரசுப்பள்ளியில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்றால் ஓடிவிடுகிறார்கள் . அரசின் பள்ளியில் படிப்பது அத்தனை அவமானமாய் எப்போது மாறியது ?
அப்போ , அரசுப்பள்ளியை விட தனியார் பள்ளிதான் சிறப்பானதுன்னும் உடனே முடிவுக்கு வந்துவிடாதீர்கள் . இரண்டையும் கொஞ்சம் அலசி , ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வரலாம் . வாருங்கள் . பொறுமையாய் ஒவ்வொன்றாய் பேசலாம் .
முதல்ல , தனியார் பள்ளியில சீட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க . அப்பா , அம்மா படிச்சிருக்கணும் , நல்லா சம்பாதிக்கணும் , கேட்டப்போவெல்லாம் பணம் கட்டத் தயார்னு சேருதப்பவே கெத்து காட்டணும் . எந்தக் கேள்வியும் கேக்காம , எந்த விபரமும் கேக்காம , எந்த இரசீதும் கேக்காம , கேட்ட தொகையை சொன்ன தேதிக்குள்ளே கட்டணும் .
ப்ரீ . கே . ஜி . யில் இருந்து எட்டாது வரை சட்டப்படி பாஸ் . யாரும் பெயில் ஆக்க முடியாது . ஆனால் , ஒன்பதாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தாலும் . ஒன்பதாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்தால் என்ன செய்கிறார்கள் ?
4
அத்தியாயம் 4
உங்க பையன் / பொண்ணு எங்க பள்ளியில படிச்சா எங்களுக்கு செண்டம் ரிசல்ட் கிடைக்காது , பள்ளி பெயர் கெட்டுரும் . எனவே , இந்தாங்க மாற்றுச் சான்றிதழ் என்று கையில் திணித்து வேறு பள்ளிக்குச் செல்லுங்கள் என்று விலையில்லா ஆலோசனை அளித்து வெளியேற்றிவிடுகிறார்கள் . அதாவது , தனியார் பள்ளியைப் பொறுத்த வரை சாதாரண மாணவர்களையோ அல்லது குறை மதிப்பெண் பெறும் மாணவர்களையோ பள்ளிக்குள் அனுமதிப்பதேயில்லை .
ஆனால் , அரசுப்பள்ளியில் அப்படி இல்லை . முட்டை வாங்கும் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு , நூறு சத தேர்ச்சி நோக்கி முன்னேறுகிறார்களே , அதன் பெயர்தானே கல்வித்தரம் ! இதன் பெயர்தானே கல்விச்சேவை . கறக்கும் வரை பணம் கறந்துவிட்டு , உங்க பையன் சரியா படிக்கமாட்டிக்கான் என அப்பா , அம்மாவை குத்தம் சொல்லுறதை கல்விச்சேவைன்னு ஏற்றுக் கொள்ள முடியுமா உங்களால் ?
ஆம் . அரசுப்பள்ளிகள் சராசரியாய் தொடர்ந்து 84 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியைப் பெற்று , தற்போது 90 சதவிகிதம் என முன்னேறியுள்ளனர் என்பது பத்திரிக்கைச் செய்தியாகும் . குறிப்பாய் , சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 90 சதவிகித தேர்ச்சியும் , அவற்றில் நான்கு மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியும் காட்டியுள்ளன எனில் , அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது . அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் , மாணவர்களையும் தரம் குறைந்தவர்களாய் நினைத்துவிடவும் முடியாது .
ஆனால் , தனியார் பள்ளிகளில் என்ன நிலைமை ? அங்கே படிக்கும் எல்லா மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்களா ? தனியார் பள்ளியின் எல்லா மாணவர்களும் 90 சதவிகித மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா ? அங்கிருந்து வரும் எல்லா மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் , சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கும் போய்விடுகிறார்களா ? ஒழுக்கத்திலும் , திறமையிலும் உயர்ந்துவிடுகிறார்களா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் .
தனியார் பள்ளிகள் சிறந்தவை எனில் , அங்கிருந்து எத்தனை மாணவர்கள் ஐ . ஐ . டிக்கும் , என் . ஐ . டிக்கும் சென்றிருக்கிறார்கள் ? ஒரு மாணவர் 900 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும் , தமிழகம் எங்கும் தினசரிகளில் புகைப்படத்துடன் விளம்பரமும் , மாவட்டம் முழுவதும் ஊரெங்கும் விளம்பரப் பேனரும் வைக்கும் தனியார் பள்ளிகள் இந்த விபரங்களை என்றாவது சொல்லியிருக்கிறார்களா ? இருந்தால்தானே சொல்லுவதற்கு ! மேலும் , மாநிலத்தின் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்களும் அல்ல . அதில் அதிகம் அரசுப்பள்ளி மாணவர்களும் உண்டு . ஆனால் , அரசுப்பள்ளிகள் அதை விளம்பரப்படுத்துவதும் இல்லை . பேனர் வைத்துக் கொண்டாடுவதும் இல்லை .
உதாரணத்துக்கு , 887 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் , 113 அரசு மேனிலைப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள் . அதுமட்டுமல்ல , இயற்பியலில் 2710 மாணவர்கள் , கணிதத்தில் 3882 மாணவர்கள் , வேதியியலில் 1693 மாணவர்கள் , உயிரியலில் 652 மாணவர்கள் , வணிகவியலில் 2587 மாணவர்கள் , கணக்குப்பதிவியலில் 2403 மாணவர்கள் , வணிகக் கணிதத்தில் 605 மாணவர்கள் என நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளன அரசுப்பள்ளிகள் .
இன்னொன்னு தெரியுமாங்க உங்களுக்கு ? 2013– _ 14 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழகத்தின் முதல் மூன்று இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் . இதிலும் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒரு தகவல் உண்டு . ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களும் பலர் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர் என்பதேயாகும் . 27 பேர் ஆங்கிலத்திலேயே செண்டம் வாங்கி அசத்தியுள்ளனர் . 6712 பேர் அறிவியலிலும் , 2129 பேர் சமூக அறிவியலிலும் , 1056 பேர் கணிதத்திலும் வாங்கியுள்ளனர் என்றால் அரசுப் பள்ளிகளில் தரம் என்னவென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் .
ஆச்சரியமா இருக்கே ! இதையெல்லாம் ஏங்க அரசுப்பள்ளிகள் விளம்பரம் செய்யல என்றுதானே கேட்கிறீர்கள் . உண்மைதான் . ஆனால் , சாக்பீஸ் வாங்குறதுக்கே பசங்களுக்கு அபராதம் போட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு பல பள்ளிக் கூடங்களில் . இந்த நிலையில் விளம்பரம் செய்யுறதுக்கு வேற காசுக்கு எங்க போக ?
ஆனால் , தனியார் பள்ளிகளில் விளம்பரம் தாங்க மூலதனமே . எந்தப் பள்ளிக்கூட விளம்பரத்தப் பார்த்தாலும் ஏதோ தமிழ்நாட்டுலேயே அதுதான் நம்பர் ஒன்னு மாதிரிதான் விளம்பரம் செய்வார்கள் . நூத்துக்கு எண்பது மார்க் வாங்கின மாணவன் / மாணவி புகைப்படம் வரை போட்டு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள் .
புள்ளிவிபரமெல்லாம் சரிதாங்க , ஆனா , தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தானே அதிகம் பேர் நல்ல மார்க் வாங்குறாங்க , அதனாலதானே எல்லாரும் அங்க ஓடுறாங்க என்றும் சிலர் கேட்கலாம் .
அப்படி சிலர் நினைப்பது உண்மைதான் . ஆனால் , ஒப்பீட்டுப்பார்த்தால் அரசுப்பள்ளிகளே அதிலும் சிறப்பானவை . ஏனெனில் , தனியார் பள்ளியில் படிக்கும் இத்தகைய மாணவ , மாணவியர்களில் பெரும்பாலோர் நல்ல கல்விப் பின்னணியில் இருந்து வருவோர் ஆவர் . பல தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு காலத்திலேயே பத்தாம் வகுப்பையும் , பதினோறாம் வகுப்பு காலத்திலேயே பன்னிரெண்டாம் வகுப்பையும் துவங்கி விடுகிறார்கள் . இரண்டு வருடத்துக்கு பொதுத்தேர்வுக்கு தயார் செய்யப்படும் இவர்களுக்கு தனியார் பள்ளியில் கூடுதல் பயிற்சியோடு , டியூசன் ஏற்பாடுகளும் பெற்றோர்களால் கிடைக்கின்றன . ஆனால் , அரசுப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் சாதாரண மதிப்பெண்ணில் இருந்து உயர்ந்த மதிப்பெண்ணுக்கு முன்னேறியவர்கள் ஆவர் . அத்தோடு சிறப்பு வகுப்புகளும் , சிறப்புப் பயிற்சிகளும் , டியூசன் ஏற்பாடுகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை .
ஒரு சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் கூடுதல் முயற்சியால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன . அந்தப்பள்ளிகளைப் பார்த்தால் அதன் பிரதிபலிப்பு நிச்சயம் தெரியும் .
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . அனைத்து அரசுப்பள்ளியிலும் சிறப்பு வகுப்புகளும் , சிறப்புப் பயிற்சிகளும் கொடுப்பதற்கான ஏற்பாடு இருந்தால் ..? அரசுப்பள்ளியில் இன்றைக்கு உள்ள ஆசிரியர்களின் திறமையோடு ஒப்பிடும் போது , இவ்வாய்ப்புகள் அனைத்து அரசுப்பள்ளியிலும் அளிக்கப்பட்டால் மாநிலத்தின் உயர்ந்த இடங்களை அரசுப்பள்ளிகள் மட்டுமே பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை .
அரசிடம் அதற்கான திட்டங்கள் இல்லை என்பது ஒருபுறம் . மறுபுறம் ஆசிரியர்களும் அதற்காக முன்வர வேண்டும் . அரசுப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துவிட்டோம் என்றாலே ஓய்வு பெறும் வரை சம்பளமும் , பதவி உயர்வும் உறுதி என்ற மனநிலையில் இருந்தால் ஆசிரியர்களால் அது சாத்தியமல்ல . பள்ளியை கோவிலாகக் கருதி உழைக்கும் ஆசிரியர்கள் அநேகம் என்றாலும் , கடமைக்காக வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகம் . ஆனால் , உண்மை என்னவென்றால் , தனியார் பள்ளி ஆசிரியர்களை விடவும் , அரசுப்பள்ளி ஆசிரியர்களால் தான் அதிகம் சாதிக்க முடியும் . நல்ல மாணவர்களை அவர்களால் தான் உருவாக்கவும் இயலும் .
ஏனெனில் , அரசுப்பள்ளியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் முறையான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் . திறமையுள்ளவர்கள் . ஆனால் , தனியார் பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் முறையான ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் அல்ல . பட்டப்படிப்போ , பட்டமேற்படிப்போ மட்டுமே படித்தவர்கள் தான் அதிகம் . திறமையுள்ளவர்கள் உண்டெனினும் , அவர்கள் யாரும் ஒரு பள்ளியில் நிரந்தரமாய் பணியாற்றுவதில்லை . அத்தோடு வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றினால் மாதச்சம்பளம் கிடைக்கும் என அவர்களில் பலர் அப்பணியை ஒரு சம்பளமாக மட்டுமே பார்க்கிறார்கள் .
மேலும் , தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவித புத்தாக்கப் பயிற்சியும் தரப்படுவதில்லை . புதுப்புது கற்றல் முறைகளும் சொல்லித் தரப்படுவதில்லை . ஆனால் , அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்துவிதமான பயிற்சிகளும் அரசால் தரப்படுகின்றன . மேலும் , தனியார் பள்ளியில் ஒரு ஆண்டு முடியுமுன்னே ஆசிரியர்கள் வேறு வேலை தேடிப் போய் விடுகின்றனர் . ஒரே பாடத்தை பல ஆசிரியர்கள் எடுக்கும் அவலநிலை . ஆனால் , அரசுப்பள்ளியில் கல்வியாண்டின் இடையில் அப்படியாக ஆசிரியர் மாறுதல் நிகழ்வதில்லை . எப்போதேனும் மட்டுமே ஆசிரியர் இடமாறுதல் . அதுவும் கல்வியாண்டின் துவக்கத்தில் தான் .
ஆக , ” ஆசிரியரின் தரமே சிறந்த கல்விக்கு அடிப்படைத்தேவை’’ என்ற அளவுகோலில் பார்த்தால் , அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்பது நன்கு புரியும் . ஆனால் , அரசோ ஆசிரியர் பணியை அடிப்படை விதையாய் கருதுவதேயில்லை . முக்கியப் பிரச்னை என்னவென்றால் , அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசால் கௌரவமாய் நடத்தப்படுவதில்லை என்பதேயாகும் .
5
அத்தியாயம் 5
அனைத்துக் கணக்கெடுப்பிற்கும் , அனைத்துத் திட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்படுவது யாரென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான் . ஏதாவது ஒரு திட்டத்தைச் சொல்லி ஒவ்வொரு மாதமும் ஏதாவது பயிற்சி என்றும் , கட்டாயப் பணி என்றும் அவர்கள் படும் பாடு இருக்கிறதே , அதை முதலில் ஒழிக்கவேண்டும் . சமூகத்தின் மிகுந்த கௌரவத்துக்குரியவர்கள் ஆசிரியர்கள்தான் என்ற நிலையை அரசு உருவாக்கவேண்டும் . எனவே , அவர்களை அரசுப்பணியாளர்களாய் மட்டுமே கருதும் அரசின் மனநிலையில் முதலில் மாற்றம் வரவேண்டும் .
தனியார் பள்ளிகளை பெற்றோர் தேடிச்செல்வதற்கு அடிப்படைக் காரணமே இரண்டு தான் . ஒன்று . தனியார் பள்ளியின் கவர்ச்சித்தன்மை . மற்றொன்று , அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத அவலநிலை தான் .
அதென்னங்க , கவர்ச்சித்தன்மை என்று தானே கேட்கிறீர்கள் . கொஞ்சம் பொறுங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம் . முதலில் ஆசிரியர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாய் பார்த்துவிடுவோம் .
எந்த தனியார் பள்ளியாவது ஓராசிரியர் பள்ளி அல்லது ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்டு இயங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? என்னங்க கிறுக்குத்தனமாய் கேட்கிறீர்கள் என்று தானே தோன்றுகிறது . ஆனால் , அரசுப்பள்ளியில் அப்படி நிறைய இருக்கிறது . அதுவும் அதிகாரப்பூர்வமாய் அரசாலேயே ஓராசிரியர் பள்ளி , ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்ட பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்றால் நீங்களே சொல்லுங்கள் அரசின் இந்த அறிவிப்பை கிறுக்குத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல என ?
உதாரணத்துக்கு , 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசு ஆய்வின்படி , தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார் . அப்பள்ளிகளில் மட்டும் 83641 மாணவர்கள் படிக்கிறார்கள் . மேலும் , 16421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர் . அது மட்டுமல்ல 16 அரசுப்பள்ளிகளில் ஆசிரியரே இல்லை எனில் , இதை அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு என்று தானே சொல்லமுடியும் !
ஆம் , ஐந்தாம் வகுப்பு வரை அல்லது எட்டாம் வகுப்பு வரை இருக்கும் ஒரு பள்ளியின் அனைத்து மாணவ , மாணவிகளுக்கும் ஒருவர் தான் ஆசிரியர் என்றால் அம்மாணவர்களை இந்த அரசு எப்படிப் புறக்கணிக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . இதைத் தீண்டாமை என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்ல ?
ஆசிரியர்களே போதுமான அளவில் இல்லாத அப்பள்ளிகளில் கட்டிடமும் , கழிப்பறை வசதிகளும் , கரும்பலகையும் எப்படியிருக்கும் ? அதைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் அருமைச்செல்வங்களை அங்கே விட மனம் வருமா ? நாங்கள் பென்சில் தருகிறோம் , பாக்ஸ் தருகிறோம் , அழிரப்பர் தருகிறோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் சாதனைப்பட்டியல் வாசித்துக்கொள்ளலாம் . ஆனால் , அரசுப்பள்ளிகள் இலவசங்களால் முன்னேறுமா ?
ஆனால் , அரசு இதற்கு என்ன காரணம் சொல்லுகிறது தெரியுமா ? அதாவது , மாணவர் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் தான் அங்கு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறதாம் . ஆகா , என்ன சிக்கன நடவடிக்கை பாருங்கள் ! மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து , கூடுதல் ஆசிரியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி , தரத்தை அதிகப்படுத்தி மாணவர்கள் – பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தால் அந்த அரசை அரசுப்பள்ளியில் அக்கறையுள்ள அரசு எனச்சொல்லமுடியும் . ஆனால் , இதுதான் சாக்கென ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைப்போம் என்றும் , பள்ளியையே இழுத்து மூடு என்றும் சொன்னால் அந்த அரசை அரசுப்பள்ளிக்கு எதிரான அரசு என்றுதானே சொல்லமுடியும் !
ஆம் . கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன . அங்குள்ள பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் போவதைத் தவிர வேறென்ன வழி இப்போது ?
ஓராசிரியர் பள்ளி , ஈராசிரியர் பள்ளி என 18674 பள்ளிகளை மேலே பார்த்தோமே , அந்தப்பள்ளிகள் எல்லாமே மரணத்தின் வாசலில் உள்ளவைதான் . அங்கிருக்கும் ஆசிரியர்கள் முயற்சியால் மட்டுமே அப்பள்ளிகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும் . தங்களது சொந்தப்பணத்தைப்போட்டு ஆக்கப்பூர்வமாய் உழைக்கும் அவ்வாசிரியர்களும் இல்லையெனில் , இன்னும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் இப்போது மூடப்பட்டிருக்கும் .
6
அத்தியாயம் 6
இப்படி வருடந்தோறும் பல பள்ளிகளை மூடிக்கொண்டிருக்கும் அரசு , பெரும்பாலும் புதியதாய் திறப்பதில்லை என்பதும் வேதனைக்குரிய உண்மையாகும் . ஆம் . உங்கள் ஊரில் புதியதாக ஏதாவது அரசுப்பள்ளி துவங்கப்பட்டதாக உங்கள் நினைவில் உள்ளதா என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் .
1.6.1991 லிருந்துதான் தனியார் சுயநிதிப்பள்ளிகள் துவங்க அனுமதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது . ஆனால் , இந்த இருபத்துமூன்று ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளோடு சவால் விட்டு எப்படி வளரமுடிகிறது ? ஒரு தனிநபரின் பள்ளி தரமாய் இருக்கும் . ஆனால் சகல அதிகாரமும் கொண்ட ஒரு மாநில அரசு துவங்கும் பள்ளி சீர்கெடும் என்றால் , அதற்குக் காரணம் அரசாகத்தானே இருக்கமுடியும் ? ஒவ்வொரு ஊரிலும் புதிது புதிதாய் தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுக்கொண்டே இருக்கையில் அரசுப்பள்ளிகள் மட்டும் ஏன் பெருமளவில் துவங்கப்படுவதில்லை ? கடந்த மூன்றாண்டுகளில் புதிதாய் துவங்கப்பட்டது வெறும் 54 தொடக்கப்பள்ளிகள் தான் . அதுவும் கூட சும்மா திறக்கப்படவில்லை . ஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி இருக்கவேண்டும் என கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச்சட்டம் கூறுவதால் துவங்கப்பட்டதுதான் . ஆனால் , மூடப்பட்டதோ பல நூறு .
கீழே உள்ள இரண்டு விபரங்களைப் பாருங்கள் . ஒன்று பள்ளிகள் பற்றியான பட்டியல் மற்றொன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறித்த வரைபடம் .
பள்ளிகளின் எண்ணிக்கை
வ . – பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்
எண் உதவி பெறும்
1. தொடக்கப்பள்ளிகள் 23928 5053 6196 35177
2. நடுநிலைப் பள்ளிகள் 7260 1556 934 9750
3. உயர்நிலைப் பள்ளிகள் 3044 633 1925 5602
4. மேல்நிலைப் பள்ளிகள் 2727 1165 2407 6299
மொத்தம் 36959 8407 11462 56828
ஆசிரியர்களின் எண்ணிக்கை
வ . பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்
எண் உதவி பெறும்
1. தொடக்கப்பள்ளிகள் 64855 23446 54866 143167
2. நடுநிலைப் பள்ளிகள் 50508 15312 12919 78739
3. உயர்நிலைப் பள்ளிகள் 27891 6855 39466 74212
4. மேல்நிலைப் பள்ளிகள் 73616 36820 102773 213209
மொத்தம் 216870 82433 210024 509327
மாணவர்களின் எண்ணிக்கை
வ . பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்
எண் உதவி பெறும்
1. தொடக்கப்பள்ளிகள் 1487031 658685 814640 2960356
2. நடுநிலைப் பள்ளிகள் 1249738 523460 235384 2008582
3. உயர்நிலைப் பள்ளிகள் 684169 277480 873875 1835524
4. மேல்நிலைப் பள்ளிகள் 2234690 1652978 2673010 6560678
மொத்தம் 5655628 3112603 4596909 13365140
அதாவது , இரண்டு விசயங்கள் தெளிவாய்ப் புரியும் .. இன்றும் எண்ணிக்கையில் அதிகம் இருப்பது அரசுப்பள்ளிகள் தான் . ஆனால் , எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவே உள்ள தனியார் பள்ளிகள் கிட்டத்தட்ட
7
அத்தியாயம் 7
அரசுப்பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களைக் கவர்ந்துள்ளது . ஆனால் , அரசுப்பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தாலும் மாணவர் எண்ணிக்கையில் அதன் பிரதிபலிப்பு இல்லை , மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது எனினும் , இன்று வரை மாணவர்கள் எண்ணிக்கையும் அரசுப்பள்ளியில் தான் அதிகம் . ஆனால் , ஆசிரியர்கள் எண்ணிக்கை ?
மேலே உள்ள விபரத்தில் இருந்து ஒரு உதாரணம் . 23928 அரசு ஆரம்பப்பள்ளிகளில் 1487031 மாணவர்கள் படிக்கிறார்கள் . ஆனால் , ஆசிரியர்களோ வெறும் 64855 மட்டுமே . ஆனால் , 6196 தனியார் பள்ளிகளில் 54866 ஆசிரியர்கள் இருக்கிறார்கள் . அதாவது தனியார் பள்ளிகளை விட சுமார் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் குறைவாக உள்ளனர் . ஒப்பிட்டுப் பார்த்தால் , இன்னும் ஒரு எண்பதாயிரம் ஆசிரியர்கள் அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் எடுக்கலாம் .
அதே போன்று , மேல்நிலை வகுப்புகளில் பாருங்கள் . 2727 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 73616 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர் . ஆனால் , 2407 தனியார் பள்ளிகளிலோ 102773 ஆசிரியர்கள் என அரசுப்பள்ளிகளை விட இரண்டு மடங்கு அதிகம் . ஆக , அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் ஆசிரியர் புதியதாக எடுக்கலாம் .
ஆக , இந்த விபரங்களை மட்டும் ஒப்பிட்டால் அரசுப்பள்ளிகளில் சுமார் ஒரு இலட்சத்து , முப்பதாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம் . மாணவர்கள் குறைவாகத்தானே உள்ளனர் என்ற காரணம் பொறுத்தமற்ற வாதம் ஆகும் . ஆசிரியர்களே இல்லாத பள்ளிக்கு மாணவர்கள் எங்கிருந்து வருவார்கள் ? மாணவர்கள் வரட்டும் , அப்புறம் ஆசிரியர்களை நியமிக்கலாம் என்றால் , அது புத்திசாலித்தனமான காரியமாய் இருக்குமா ?
மேலும் , 300 பேர் கொண்ட ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் , மாணவர் எண்ணிக்கை 40 கூடினால் மட்டும் தான் ஒரு ஆசிரியர் புதிதாக வருவார் . மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அவர் வேறு பள்ளிக்குச் சென்று விடுவார் என கணக்கு சொல்லிக்கொண்டிருந்தால் , அந்தப் பள்ளியைத்தேடி பெற்றோர்கள் எப்படி வருவார்கள் ? ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருந்தால் தானே அப்பள்ளி பெற்றோர்களால் விரும்பப்படும் பள்ளியாக மாறும் .
மேலும் , தற்போது 1;40 என்ற ஆசிரியர் ; மாணவர் விகிதாச்சாரம் பின்பற்றப்படுவதாக சொல்லப்படுகிறது . அதாவது , அதன் அர்த்தம் என்னவென்றால் , 79 மாணவர்கள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் தான் என்பதாகும் . எண்பதைத் தாண்டினால் தான் இரண்டு ஆசிரியர் தேவை என்பதாகக் கணக்கிடப்படுமாம் . என்னே அக்கறை அரசுப்பள்ளிகள் மீது ! ஆக , ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் என்ற நடைமுறையும் அரசுப்பள்ளிகளில் இல்லையெனில் , இது அநீதியா இல்லையா ?
ஆனால் , தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன ? தகுதியான ஆசிரியர்களை எடுப்பதில்லை எனினும் , ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் என நியமித்து விடுகின்றனர் . ஆசிரியர் தினம் என ஒரு விழாவும் கொண்டாடி அதில் ஆசிரியர்களை ஆடவும் , பாடவும் வேறு வைத்துவிடுகின்றனர் . சில பள்ளிகளிலோ பெற்றோர்களையும் அழைத்து , ஆசிரியர் தின விழாவை அமர்க்களப் படுத்திவிடுகின்றனர் .
அதோடு மட்டும் விடுவதில்லை . ஓவியம் , நடனம் , பாடல் , நீச்சல் , யோகா , சிலம்பம் , கராத்தே , கைவினைக் கலைகள் என ஏகத்துக்கும் ஆசிரியர்களை நியமித்துவிடுகின்றனர் . கூடுதல் கல்விசார் இணை நடவடிக்கைகள் ( எக்டிரா கோ கரிகுலர் ஆக்விடிஸ் ) எனப்படும் தனித்திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாய் சொல்லி , அதை வைத்தே பெற்றோர்களையும் கவர்ந்து , அதற்கென அதிகப்பணமும் பிடுங்கிவிடுகின்றனர் . இன்றைய சூழலில் , இதெல்லாம் மிக அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் தன்னுடைய குழந்தைகளுக்கு இதெல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் தனியார் பள்ளியின் இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஈர்க்கப்படுகின்றனர் .
இங்குதான் தனியார் பள்ளியின் கவர்ச்சித்திட்டங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன . அதாவது , பெற்றோர்களை பள்ளியின் செயல்பாடுகளுக்குள் ஈர்த்துக் கவர்வது என்பதாகும் . ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து விழாக்களாவது வைத்து பெற்றோர்களை அழைத்துவிடுகிறார்கள் .
8
அத்தியாயம் 8
குழந்தைகளின் தனித்திறமைகளை மேடையேற்றுவது , பரிசளிப்பது எனக்கொண்டாட்டங்கள் மிகுந்த இந்நிகழ்ச்சிகளில் ஊரின் பல பிரபலங்களும் பங்கேற்பதால் , அவ்விழாக்கள் சிறப்பான விழாக்களாக மாற்றப்பட்டு பெற்றோர்கள் ஈர்க்கப்படுகின்றனர் . தனியார் பள்ளியின் கல்லாவும் நிரம்புது .
அமைச்சர் தொடங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் , கல்வியதிகாரிகள் முதல் காவல்துறை துணை ஆய்வாளர் வரை அதில் அதிகம் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பெரும்பாலும் அரசு அதிகாரிகள் தான் . ஆனால் , அரசுப்பள்ளிகளில் ஏன் இத்தகைய விழாக்களை இவர்கள் நடத்துவதில்லை ? அங்கிருக்கும் மாணவர்களுக்கு எனத் திறமைகளே இல்லையா என்ன ? அவர்கள் மட்டும் மேடையேறக்கூடாதா என்ன ? சில பள்ளிகளில் ஆசிரியர்களின் ஆர்வம் மற்றும் தனி முயற்சியின் அடிப்படையில் இதெல்லாம் நடைபெறுகின்றன எனினும் , அரசு இதற்கென நிதி ஒதுக்கி , திட்டங்களை வகுத்து முயற்சித்தால் அரசுப்பள்ளிகளில் மக்கள் விழாக்களை நடத்திட இயலும் அல்லவா !
நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . 2002 ல் வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த இப்பள்ளியில் இன்று 217. மெட்ரிக் பள்ளியில் இருந்து மட்டும் 25 மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . காரணம் என்ன தெரியுமா ?
ஆண்டு தோறும் பெற்றோர் பங்கெடுக்கும் விழாக்கள் , மாணவர்களின் படைப்புத்திறனை மேம்படுத்தும் அறிவியல் கண்காட்சிகள் , விளையாட்டு விழாக்கள் , 1000 புத்தகங்கள் உள்ள நூலகம் என்பதோடு வகுப்பறையில் வட்ட வடிவிலான மேஜைகள் , நாற்காலிகள் , மின்விசிறிகள் என்பதும் உள்ளதுதான் . உங்களுக்கே புரிந்திருக்குமே , இத்தனையும் அரசு கொடுத்தது இல்லையென்று ! ஆம் . இது எதையும் அரசு செய்யவில்லை . அரசு செய்ததெல்லாம் இது ஒராசிரியர் பள்ளி என்று அறிவித்த அறிவிப்பு மட்டுமே . அப்போது இங்கு வந்த திருமிகு . விஜயலலிதாவின் சொந்தப் பணத்தில் இருந்து துவங்கிய முயற்சியில் இணைந்த ஊர்மக்களின் பங்கெடுப்பே இத்தனை சிறப்புக்கும் அடிப்படையாகும் . கட்டிடம் கட்ட தலைமை ஆசிரியை விஜயலலிதா , இவரது கணவர் சுதிர்குமார் ஆகியோரும் தலா ரூ .1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர் .
இப்படியான பள்ளியில் படிக்கும் மாணவியரும் உயர்ந்த குணத்துடன் தான் நிச்சயம் வெளிவருவர் . உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்த கலையரசி என்றொரு மாணவி வாரணாசி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு பெற்று சிறப்பு பெறுகிறார் . பள்ளியில் நடக்கும் பாராட்டு விழாவில் நிதி குவிகிறது . ஆனால் , அந்த ஏழை மாணவி என்ன செய்தார் தெரியுமா ? அத்தனை நிதியையும் பள்ளிக்கே நிதியாய் வழங்கினார் . 142 மாணவர்கள் உள்ள இப்பள்ளியில் 5 கணினிகள் உள்ளது . ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்கு இவர்களே ஒரு கையேடும் தயாரித்துள்ளனர் . ஆனால் , இந்த செலவுக்கெல்லாம் இவர்களே வெளியில் இருந்து வசூலித்துக் கொள்கின்றனர் .
இப்படியான முயற்சிகளை எடுக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஆனால் , அரசின் உதவியும் , கவனிப்பும் இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் முயற்சித்தால் முழுப்பலனும் கிடைக்காதல்லவா . அந்த ஆசிரியர் இருக்கும் வரை அதைச்செய்வார் , அவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டால் ..?
ஆம் . ஒரு ஜனநாயக தேசத்தில் , குறிப்பாக இந்த நவயுகத்தில் , பெற்றோர்களின் இத்தகைய பங்களிப்பு கல்விநிலையங்களில் மிக அவசியம் ஆகும் . ஆனால் , என்ன நடக்கிறது அரசுப்பள்ளிகளில் ?
ஓவியம் , கிராப்ட் போன்ற பயிற்சிகளுக்குக் கூட முறையான ஆசிரியர்கள் கிடையாது . இதற்கென தகுதி படைத்த ஆசிரியர்களை பகுதிநேர ஊழியர்களாக நியமித்து இதிலும் சிக்கன தரித்திரம் பிடிக்கிறது தமிழக அரசு . அவர்களை முழுநேர ஆசிரியர்களாய் நியமித்திட வேண்டும் . ஓவியம் , நடனம் , பாடல் , நீச்சல் , யோகா , சிலம்பம் , கராத்தே , கைவினைக் கலைகள் ஆகியவற்றையும் அரசுப்பள்ளியில் அளித்து , அங்கு பயிலும் ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையையும் மேம்படுத்துவதும் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாய் நிச்சயம் மாற்றப்பட வேண்டும் .
9
அத்தியாயம் 9
வசூலிப்பதற்கு மட்டுமே இப்பெயர் அரசுப்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் , இதன் நோக்கம் குறித்து ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வியமைச்சர் சட்டமன்றத்தில் என்ன சொல்கிறார் தெரியுமா ?
பள்ளி வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது முதல் கற்றல் , கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல் வரை இக்கழகங்களின் பணி தானாம் . ஆனால் , நடைமுறையில் என்ன செய்கிறார்கள் ? ஆளும் கட்சிக்காரர்களின் கரங்களில் இருக்கிறது இந்தக் கழகம் . சமீபத்திய கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச்சட்டம் கூட பள்ளிகளில் பெற்றோர்களுக்கான உரிய பங்களிப்பும் , மரியாதையும் தரப்பட வேண்டும் என்கிறது .
அச்சட்டத்தின் அடிப்படையில் 08.11.2011 அன்று G.O.(Ms) No.173 என்ற அரசாணையை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது . அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா ?
பகுதி .5. பள்ளி நிர்வாகக்குழு எனும் தலைப்பில் 14 மற்றும் 15 என்ற விதிகளில் கீழ்கண்டவாறு உள்ளது .
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கவேண்டுமாம் . அதில் 75 சதம் பெற்றோர்கள் தான் இருக்கவேண்டும் என்பதோடு , அதில் 50 சதம் பெண் பெற்றோர்கள் இருக்கவேண்டும் எனவும் தெளிவாகக் கூறுகிறது அந்த விதி . மேலும் , பள்ளியின் நிர்வாகக்குழுவுக்கு தலைவராகவும் , துணைத்தலைவராகவும் பெற்றோர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது . அதாவது , பள்ளிக்கு தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும் பொறுப்பு மக்கள் சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது . ஒரு ஜனநாயக நாட்டில் இது தானே சரியாக இருக்க முடியும் !
இது அமலானால் அரசுப்பள்ளிகள் அனைத்தும் தங்கள் பள்ளிகள் என்ற மனநிலைக்கு பெற்றோர்களையும் , சமூகத்தையும் கொண்டு வர இயலுமே ! அரசு ஏன் இந்த விதிகளை அமலாக்கவில்லை என்று தானே நினைக்கிறீர்கள் !
ஆனால் , அரசு என்ன சொல்கிறது என்றால் , அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்தில் கல்விக்கொள்கையில் எழுத்துப்பூர்வமாகவே கூறுகிறது . அது மட்டுமல்ல அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறதாம் . அதாவது , 2013 ஆம் ஆண்டில் 1,33,605 பெற்றோர்களுக்கு 4.08 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டதாம் . இந்தாண்டு 2,21,700 உறுப்பினர்களுக்கு 6.65 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறதாம் . பயிற்சி யாருக்கு அளித்தார்கள் என்பதும் பணத்தை எப்படி அழித்தார்கள் என்பதும் அவருக்குத்தான் தெரியும் . யாருக்கு என்கிறீர்களா ? சட்டமன்றத்தில் அறிவித்த கல்வியமைச்சருக்குத்தான் தெரியும் .
பள்ளி நிர்வாகக் குழுவிற்கான கடமைகளையும் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள் . இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இக்குழு கூடி , பள்ளியின் சேர்க்கை முதலான அனைத்து நிர்வாகச்செயல்கள் குறித்தும் திட்டமிட வேண்டுமாம் . அதோடு , பள்ளி வளர்ச்சித் திட்டம் எனும் ஒரு திட்டத்தை மூன்றாண்டுகாலத்திட்டமாக தயாரித்து பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமாம் . ஆசிரியர் தேவை , நிதித் தேவை , மாணவர் உரிமைகள் , குழந்தைகள் உரிமைகள் என்பதோடு உள்ளாட்சி நிர்வாகத்தோடு பேசி தேவையான உதவிகள் பெறுவது வரை பள்ளி குறித்த அனைத்து விசயங்களிலும் தலையிடும் உரிமையும் , அதிகாரமும் பெற்றோர்களுக்கு இருக்கிறது என்று அரசின் சட்டமே கூறுகிறது . அத்தோடு உள்ளூர் பிரபலம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியையும் சேர்த்துக்கொள்ளலாம் .
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . இது போன்ற பள்ளி நிர்வாகக் குழுக்களை ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் உருவாக்கி , அதில் ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியரும் , கல்வியதிகாரிகளும் , உள்ளூர் பிரபலங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப்பிரதிநிதிகளும் உட்கார்ந்து விவாதித்தால் , அரசுப்பள்ளிகளின் வளர்ச்சி அபரிதமாய் இருக்குமா , இல்லையா ? பள்ளியின் ஒவ்வொரு தேவையும் உள்ளூர் சமூகத்தின் தேவையாக கருத்தில் கொள்ளப்படுமா இல்லையா ? ஆனால் , மூன்று வருடங்கள் முடிந்த பின்னும் இன்று வரை ஒரு அரசுப்பள்ளியில் கூட பெற்றோர்களைக்கொண்ட பள்ளி நிர்வாக்குழுவாக அமலாக்கப்படவில்லையே ஏன் ? காரணம் என்ன ?
10
அத்தியாயம் 10
ஆதார் அட்டை எனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள் . அரசின் நலத்திட்டங்கள் பெற அதைக் கட்டாயம் என்று அறிவித்தார்கள் . ஆனால் , அது கட்டாயமல்ல என உச்சநீதிமன்றம் கூறியபின்னர் , ஆமாமாம் கட்டாயமில்லை என மத்திய அரசும் அறிவித்தது , மாநில அரசும் அறிவித்தது . நடைமுறையிலோ , பள்ளி மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வாங்குவதற்குக் கூட அதைக் கட்டாயம் என மிரட்டிக்கேட்கிறார்கள் . ஆனால் , அரசுப்பள்ளிகளை பொறுத்தவரையில் அரசு இயற்றிய அனைத்து சட்டங்களும் அனாதையாய் கிடக்கிறது . ஏனிந்த நிலை ?
வேறொன்றுமில்லை . அரசுப்பள்ளிகள் வளர்ச்சியடைந்தால் யாருக்கு பாதிப்பு வரும் ? நாம் நினைப்போம் தனியார் பள்ளிகளுக்கு என்று . சரியான பதில் தான் . ஆனால் , அந்த தனியார் பள்ளிகளை நடத்துவது யார் ? மகாத்மா காந்தி , காமராஜர் பெயர் முதல் கலைமகள் பெயர் வரை தாங்கி நிற்கும் அப்பள்ளிகளை அரசியல் அதிகாரத்தின் துணை இல்லாமல் யாரேனும் நடத்த இயலுமா ?
ஆளும் கட்சிக்காரர்களாய் இருப்போர் மற்றும் இருந்தோர் தான் சொந்தப்பெயரிலும் , பினாமி பெயரிலும் கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் . தனியார் பள்ளியாய் இருந்தாலும் , கல்லூரியாய் இருந்தாலும் இவர்கள் தானே நடத்துகிறார்கள் .
அதுவும் சாதாரணக்கொள்ளையா நடக்கிறது ? ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒரு வணிகவளாகம் போன்றல்லவா இயங்குகிறது . பாடப்புத்தகங்கள் , ஸ்டேசனரிஸ் , ஷு கடை , துணிக்கடை , டெய்லர் கடை , போக்குவரத்து ஏற்பாடு என அனைத்தும் கிடைக்கும் வணிகவளாகமாக மட்டுமல்ல . காலை உணவும் , மதிய உணவும் பள்ளியில் தான் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கான வியாபாரங்கள் அல்லவா களை கட்டியிருக்கிறது இப்போது தமிழகத்தில் .
நன்கொடை தடுப்புச்சட்டம் என்றோர் சட்டம் கூட தமிழ்நாட்டில் 1992 ல் போட்டார்கள் . சுயநிதிப்பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டமும் கூட 2011 முதல் அமலில் உள்ளதாக கூறுகிறார்கள் . தனியார் பள்ளிகளில் அரசு தீர்மானித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை என்றும் , நன்கொடை வசூலித்தால் நடவடிக்கை பாயும் என்றும் வருடந்தோறும் அறிவிக்கத்தான் செய்கிறார்கள் .
சொல்லுங்கள் . ஏதேனும் ஒரு பள்ளி மீதாவது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா ? அப்படியெனில் ஒரு பள்ளியில் கூட நன்கொடை வாங்குவதில்லையா ? அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு தீர்மானித்த கட்டணத்தையா வசூலிக்கிறார்கள் ? இல்லை . இந்த இரண்டு சட்டங்களும் மட்டுமல்ல , தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை எல்லாச்சட்டங்களும் காற்றில்தான் பறக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும் . ஆனால் , ஏன் நடவடிக்கை இல்லை ?
ஆட்சியாளர்களாய் அவர்களே இருக்கையில் யார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ? ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்பதெல்லாம் இதிலே கிடையாது . இன்னைக்கு நீ , நாளைக்கு நான் என்ற கணக்கில் இவர்களுக்குள் என்றுமே ஒத்தாசை உண்டு . இவர்கள் தானே மீண்டும் , மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையும் இப்போது வரை தமிழகத்தில் உள்ளது . அப்படியெனில் , அரசுப்பள்ளிகளை வளரவிட்டுவிடுவார்களா என்ன ?
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க , அரசுப்பள்ளியில படிக்கிற குழந்தைக்கு சோத்துல இருந்து செருப்பு வரைக்கும் எல்லாமே இலவசமாக் கொடுக்குது அரசு . அப்புறமும் அரசுக்கு அக்கறையே இல்லேங்கிறீங்களே என்றும் சிலர் வருத்தப்படக்கூடும் .
உண்மைதான் . அநேக இலவசங்கள் அரசுப்பள்ளியில் தரப்படுவது உண்மைதான் . ஆனால் , அவ்வளவு இலவசம் தருவதும் உண்மையான உணர்வின் அடிப்படையில் என்றால் , அரசு என்ன செய்திருக்கவேண்டும் ?
தமிழகத்தின் அனைத்துக்குழந்தைகளுக்கும் இலவசமான , தரமான , சமமான கல்வியை வழங்கியிருக்கவேண்டும் . அமைச்சர் வீட்டுப்பிள்ளைக்கும் , ஆட்டோ தொழிலாளி வீட்டுப்பிள்ளைக்கும் சமமான பள்ளிக்கல்வியை ஏற்படுத்தியிருக்கவேண்டும் . ஆனால் , இங்கென்ன நடக்கிறது ?
ஏழைகளுக்கும் , எளியவர்களுக்கும் ஒரு பள்ளி . காசுள்ளவனுக்கு காசுக்கேற்ற பள்ளி . அதிலும் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் பாருங்கள் . சர்வதேசப் பள்ளியில் இருந்து பல விதமான பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன .
11
அத்தியாயம் 11
உங்களுக்கு எவ்வளவு காசுள்ளதோ அதற்கேற்ப உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கல்வி கொடுத்துக்கொள்ளலாம் . உங்களுக்கு காசிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும் . இல்லையெனில் , வேறென்ன வழி ?
கருணை உள்ளத்தோடு , தாயுள்ளத்தோடு , தந்தையுள்ளத்தோடு , இரக்க உள்ளம் படைத்த ஆட்சியாளர்கள் , மனம் நிறைந்து அள்ளிக்கொடுக்கும் பென்சிலையும் , செருப்பையும் இன்னபிற அட்லஸ் மேப்பையும் பெற்றுக்கொண்டு அரசுப்பள்ளியில் படிக்கவேண்டியது தான் .
சொல்லுங்கள் . இதுதான் அரசுப்பள்ளிகளை முன்னேற்றும் முறையா ? அரசுப்பள்ளிகளை முன்னேற்ற அரசு ஒன்றும் புதிய திட்டங்களல்லாம் போட வேண்டியதில்லை . ஏற்கனவே அரசு போட்ட திட்டங்களையும் , சட்டங்களையும் , அரசாணைகளையும் நிறைவேற்றினாலே போதும் .
உதாரணத்துக்கு சிலவற்றைப் பார்ப்போம் .
ஒரு அரசுப்பள்ளியையும் , தனியார் பள்ளியையும் நேரடியாய் சென்று பார்த்தோமல்லவா . இப்போது அதே பள்ளிகளுக்கு மீண்டும் செல்வோம் . வாருங்கள் .
தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரும் , கழிப்பறையும் , கேண்டீனும் , நடைபாதையும் கொஞ்சம் சுத்தமாய் இருப்பது உண்மைதான் . ஆனால் , அந்த அடுக்குமாடிக்கட்டிடங்களை கொஞ்சம் உற்றுப்பாருங்கள் . அது பாதுகாப்பானது தானா என்று பல பள்ளிகளுக்கும் சென்று ஆய்ந்து பாருங்கள் . ஒரு உண்மை புரியும் .
தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போன்று கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன தனியார் பள்ளிகளில் . மாடிகளுக்கான படிகள் குறுகியதாய் , நடைபாதைகளும் குறுகியதாய் தான் இருக்கின்றன பெரும்பாலான பள்ளிகளில் . இ எஜிகேசன் அதாவது , கணினி மூலம் கல்வி கொடுக்கிறார்களாம் . நெக்ஸ் ஜெனரேசன் எஜுகேசன் , அதாவது , அடுத்த தலைமுறைக்கல்வி என்றும் அட்டகாசமாய் ஒரு பேனர் நமது குழந்தைகளையெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள் . பாருங்கள் . அந்தப் பேனருக்கே காசு கொடுக்கலாம் போங்கள் .
சரி . அதெல்லாம் பள்ளியில் எங்கே இருக்கிறது தேடிப்பாருங்களேன் . உண்மை புரியும் . இ லேப் , அதாவது கணினி ஆய்வகம் என்ற ஒரு அறை இருக்கும் . ( குளிர் சாதான அறையில் என்று நீங்களே போட்டு வாசித்துக்கொள்ளுங்கள் .) அந்த அறையில் கொஞ்சம் கணினிகள் வைத்திருப்பார்கள் . அதில் ஒரு திரையும் தொங்கவிட்டிருப்பார்கள் . அதற்கென ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கூட செய்திருப்பார்கள் . ஆனால் , கணினிக்கல்வி ?
கொடுப்பார்கள் . அவ்வப்போது ஒவ்வொரு குழந்தையையும் அதில் உட்கார வைத்து சில பள்ளிகளில் கொஞ்சம் சொல்லியும் கொடுப்பார்கள் . ஆனால் , அடுத்த தலைமுறைக்கான கல்வி என்பதெல்லாம் வெறும் கப்சா தான் . எல்லா வகுப்பறைகளிலும் கணினிப்பலகை மூலம் கல்வி கொடுப்பதாய் சொல்லும் விளம்பரங்கள் எல்லாமே பொய்தான் . காசன்றி வேறு நோக்கமில்லா கலப்புப் பொய்கள் அவை .
ஒரு ஆசிரியையை நிறுத்தி அவர்களின் சம்பளம் என்ன என்று கேட்டுப்பாருங்கள் . அந்தக் கொடுமையை எதுக்கு கேக்கணும் ? அதுதான் எல்லாத் தமிழருக்கும் , எல்லாத் தமிழச்சிகளுக்கும் தெரியும் என்கிறீர்களா ? ஆமாம் . இரண்டாயிரம் துவங்கி வழங்கப்படும் அந்த ஊதியத்தைப் பெறும் அவர்கள் , ஒரு ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கும் என்றால் அந்தப்பள்ளியைத்தானே தேடிச்செல்வார்கள் . அது தானே இயல்பு . நியாயமும் அதுதானே . படித்தவர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு பள்ளி எப்படி நேர்மையான பள்ளியாக இருக்கமுடியும் ? அந்தப்பள்ளியில் நீதியை சொல்லித்தருவார்களா ?
எந்தப்பள்ளியிலாவது அங்குள்ள அனைத்து ஆசிரியர்களின் கல்வித்தகுதியும் பெற்றோர்களுக்கு தரப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள் . கேட்டால் போதும் , ஏதோ ஆசிரியர்களை அவமானப்படுத்தியது போன்று நிர்வாகங்களே கிளப்பிவிடுவார்கள் பிரச்னையை . அது இருக்கு , இது இருக்கு , இங்க இருக்கு , அங்க இருக்கு , தென்னிந்தியாவில இங்க மட்டும் தான் இருக்கு , உலகத்தரத்துக்கு இருக்கு என்றெல்லாம் விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் , ஆசிரியர்களின் கல்வித்தகுதியை மட்டும் ஏன் வெளியிடுவதில்லை ?
12
அத்தியாயம் 12
எதிர்புறத்தில் இருக்கிறது . விளையாட வேண்டுமெனில் , அதாவது விளையாட வேண்டுமெனில் , கவனமாக வாசியுங்கள் , விளையாடித்தான் ஆகவேண்டுமெனில் , அந்த நெடுஞ்சாலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும் .
ஆனால் , பாருங்கள் இப்படியான தனியார் பள்ளிகள் எல்லாம் , விளையாட்டுவிழாக்களை மட்டும் சீரும் , சிறப்புமாய் நடத்திவிடுவார்கள் . ஏதாவது , தனியார் நிலத்தில் விழாழை நிச்சயித்து , பெற்றோர்களுக்கு வண்ண அழைப்பிதழ் வழங்கி , செண்ட் தெளித்து வரவேற்று அமர்க்களப்படுத்திவிடுகிறார்கள் . பயிற்சியே கொடுக்காமல் போட்டிகள் நடத்தி , விழா மட்டும் எப்படித்தான் நடத்த முடிகிறதோ ? அப்புறம் குழந்தைங்க என்ன செய்யும் ? டிவியிலே விளையாடும் . செல்போனில விளையாடும் . கம்யூட்டரிலே விளையாடும் . லீவு போட்டுட்டு டிவியிலே கிரிக்கெட் பார்க்கும் . ஆமாங்க , மைதானங்களில் விளையாடவும் , ஓடியாடியும் விளையாடி பழக்கப்படாத குழந்தைகள் என்ன தான் செய்யமுடியும் ? அப்பா , அம்மா செல்போனில் தானே விளையாட முடியும் ?
என்னங்க இது தனியார் பள்ளிகளைப் பற்றி அள்ளிவிடுறீங்க , தரமா இல்லேன்னா அப்புறம் எப்படிங்க இப்படி கூட்டம் சேருது அப்படின்னும் சிலர் கேட்கலாம் .
இதுக்குப் பதில் தேடுமுன் தன் குழந்தையின் மீது அன்பும் , கனவும் கொண்டிருக்கும் ஒரு பெற்றோரின் ஆசைகள் எப்படியிருக்கும் எனப்பார்ப்போம் .
குறிப்பாக , 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் . ஆம் . கடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய பெற்றோரின் ஆசைகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய பெற்றோரின் மனநிலை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது . என் குழந்தைக்கு எல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தான் இன்று அதிகம் . அப்போனா , அன்னைக்கிருந்த பெற்றோறெல்லாம் அப்படி இல்லையா என்று குண்டக்க மண்டக்க கேட்டிராதீங்க , அப்போயிருந்த பெற்றோர்களைப் பொறுத்தவரையில் , என்னால் இயன்றதை என் குழந்தைக்குத் தருவேன் என்று தான் நினைத்தார்கள் . ஆனால் , இன்று அப்படியல்ல , எல் . கே . ஜி படிப்பதற்கே கடன் வாங்கி செலவழிக்கும் பெற்றோர் வரை இன்று நாம் பார்க்கமுடிகிறதே . இந்த மனநிலை புதிதல்லவா ?
ஆம் . உங்கள் குழந்தைக்கு கூந்தல் சரியாக வளரவில்லையெனில் , நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்புகொள்ளவில்லை என அர்த்தம் . ஆக , உங்கள் குழந்தையின் கூந்தலுக்கு நீங்கள் போஷாக்களிக்கவேண்டுமெனில் , அந்த எண்ணெயையை வாங்கிக்கொடுத்தே ஆகவேண்டும் . ஆம் . நீங்கள் காம்பிளான் வாங்கித்தரவில்லையெனில் உங்கள் குழந்தையை நீங்கள் நேசிக்கவில்லையென்றே அர்த்தம் . தேர்வுக்காக கண் முழித்துப் படிக்கும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுக்கவில்லையெனில் , அவன் அதிக மதிப்பெண் வாங்க நீங்கள் ஆசை கொள்ளவில்லையென்று அர்த்தம் .
இப்படியாக தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒவ்வொரு பெற்றோருக்குள்ளும் குற்ற உணர்வை ஏற்படுத்தி , ஏற்படுத்தியே வியாபார யூகத்தின் நுகர்வோராக மட்டுமே மாற்றி வைத்திருக்கும் நிலையில் , கல்வியையும் ஒரு நுகர்வுப்பொருளாய் தனியார் பள்ளிகள் சொல்லுகையில் பெற்றோர்கள் கவரப்படுவது இயல்பாகிவிடுகிறது . அரசுப்பள்ளியில் படித்து இன்று அரசு வேலையில் இருக்கும் அந்தப்பெற்றோர் , நான் தான் சம்பாதிக்கிறேனே என்று நினைத்து , என் பையனாவது தனியார் பள்ளியில் படிக்கட்டும் என்று பாசக்கடமையுணர்வோடு முடிவெடுத்துவிடுகிறார் .
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் , அரசுப்பள்ளியில் படித்த காரணத்தினால் வாழ்வை இழந்தோர் என தனிப்பட்டியல் ஏதும் இருக்கிறதா என்ன தமிழ்நாட்டில் ? அரசுப்பள்ளியில் படித்தால் எங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று ஏதாவது பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்திருக்கிறதா என்ன ? அரசுப்பள்ளி மாணவர்களை வளாக நேர்முகத்தேர்விலும் , வேலை வாய்ப்பிலும் பொருட்படுத்தமாட்டோம் என ஏதாவது பன்னாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறதா என்ன ? இன்றைக்கிருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை , அரசுப்பள்ளிகளில் படித்தோர் தான் . அப்புறம் , அரசுப்பள்ளிகள் மீது ஏனிந்த வெறுப்பு ? இவ்விடத்தில் பெற்றோர்கள் தங்கள் மனநிலையை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் .
13
அத்தியாயம் 13
நமது வரிப்பணத்தில் , நமது அரசால் , நமக்கென ஒரு பள்ளி நடத்தப்படுகையில் நாம் ஏன் காசுகொடுத்து நம்ம பிள்ளைய தனியார் பள்ளியில சேர்க்கணும் ? அதுவும் , எந்த சட்டத்தையும் மதிக்காத பள்ளிக்கூடத்துல , கல்வியை வியாபாரமா நடத்துற பள்ளிக்கூடத்துல எதுக்கு நம்ம குழந்தைய சேர்க்கணும் ? இது பெற்றோர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி . அரச மட்டும் குறை சொல்லிக்கிட்டே இருக்காம , அந்த அரச தேர்ந்தெடுக்கும் பெற்றோர்களும் கொஞ்சம் யோசிக்கணுமா இல்லீங்களா ?
எல்லாம் சரிதாங்க . ஆனால் , அரசுப்பள்ளியில் படித்தால் குழந்தைகள் கெட்டுப்போய்விடுகிறார்களே என்றும் சிலர் ஆதங்கப்படலாம் . ஆம் . இன்று பலர் அப்படியும் நினைக்கிறார்கள் . ஏதோ அரசுப்பள்ளியில் படித்தால் குழந்தைகளுக்கு லோக்கல் லேங்குவேஜ் ( இதுக்கு உள்ளூர் மொழி என்று அர்த்தமில்லேங்க , கெட்ட வார்த்தைன்னு அர்த்தமாம் ) வந்துவிடும் என்று நினைக்கும் பெற்றோர்களும் அதிகம் . இது ஆதாரமற்ற ஒரு எண்ணமாகும் , இன்னும் சொல்லப்போனால் , திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு மோசடிப் பிரச்சாரமாகும் .
என்னமோ , மெட்ரிக்பள்ளியில எல்லாம் குபேரன் வீட்டுக்குழந்தைங்க மட்டும் தான் படிக்கிற மாதிரியும் , அரசுப்பள்ளியில எல்லாம் ஒண்ணுமில்லாதவங்க வீட்டுக்குழந்தைங்க மட்டும் தான் படிக்கிற மாதிரியும் பேசப்படுவது இந்தியா போன்ற ஏழைகள் நாட்டில் எவ்வளவு பெரிய மோசடி என்று நினைத்துப்பாருங்கள் . ஒரே தெருவுல , ஒரே ஊருக்குள்ளே , அடுத்தடுத்த வீட்டுல உள்ள குழந்தைங்க தான் அரசுப்பள்ளியிலும் படிக்குது , தனியார் பள்ளியிலும் படிக்குது . அதில , எப்படிங்க மொழி மட்டும் மாறும் ? கெட்ட வார்த்தைகளுக்கு என தனிப்பாடம் ஏதும் அரசுப்பள்ளியில் இருக்கிறதா என்ன ? தனியார் பள்ளியில படிக்கிற எல்லாக்குழந்தையும் அமெரிக்கன் ஆங்கிலத்திலா பேசுகின்றன ? பெற்றோர் மற்றும் சமூகத்துடன் உள்ள மொழியில் இருந்துதானே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர் . இதில் அரசுப்பள்ளிகளை குறை சொல்வதில் என்ன பலன் ?
இன்னும் சொல்லப்போனால் , தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் தான் நுகர்வுவெறி அதிகமாக காணப்படுகிறது . அத்தோடு , ஆரோக்கியமற்ற எண்ணமும் , உடல்நலமும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் தனியார் பள்ளியில் தான் அதிகம் . மேலும் , சமூக உணர்விலிருந்து விலகி நிற்பதும் , சுய எண்ணமும் அதிகம் வளர்க்கப்படுவது தனியார் பள்ளியில் தான் . ஆனால் , அரசுப்பள்ளிகள் அப்படியல்ல . அதன் கட்டமைப்பிலேயே அவை பொது எண்ணத்தை வளர்க்கும் இயல்புடையவை .
மேலும் , சில செய்திகளையும் கொஞ்சம் அசை போட்டுப்பாருங்கள் . தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே அதிக தற்கொலைகளும் , அதிக குற்றச்செயல்களும் , வீட்டை விட்டு ஓடிப்போகுதலும் அதிகமாகி வருகிறதே , காரணம் என்ன ? தனியார் பள்ளிகள் மாணவர்களை குழந்தைகளாகவே கருதுவதில்லை . பாடத்தை ஊட்டி விடுபவர் ஆசிரியர் . அதை வாயிலும் , காதிலும் நிறைய வாங்கி , மதிப்பெண்களாக உற்பத்தி செய்பவனே சிறந்த மாணவன் . இது தானே தனியார் பள்ளியின் கொள்கை . இதில் ஒரு மாணவனின் சமூக ஆளுமையும் , சமூகப்பொறுப்பும் எங்கே இருக்கிறது ? மதிப்பெண்ணை மட்டுமே மனதில் கொண்டு வளர்க்கப்படுகையில் தாங்கள் படும் வேதனைகளால் உருக்குலைந்து போகும் அக்குழந்தைகள் கடைசியில் குற்றச்செயல்களுக்கும் தள்ளப்படுகிறார்கள் .
பொறியியல் கல்லூரிகளில் தற்கொலைக்கு உள்ளாகும் மாணவ , மாணவியரில் அதிகம்பேர் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தோர் தான் என்பதுதானே உண்மை !
குறிப்பாக , இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கொள்ளை மற்றும் கொலைச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பகுதி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆவர் . இவர்கள் அனைவருமே தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என்பதை சொல்லித்தர வேண்டியதில்லை . ஆக , அரசுப்பள்ளிகள் குறித்து மட்டும் தவறாக நினைக்கும் பெற்றோர்கள் தங்களின் எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் .
அது மட்டுமல்ல , தனியார் பள்ளிகளின் நிகழ்ந்த படுகொலைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் . கும்பகோணம் சரஸ்வதி பெயரிலும் , கிருஷ்ணா பெயரிலும் ஒரே வளாகத்தில் செயல்பட்ட பள்ளியில் 94 குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டதே , அது கல்வி வியாபாரத்தின் விளைவுதானே ?
14
அத்தியாமம் 14
இரண்டுமே அரசின் அறிக்கைதான் . எனில் , எது பொய் ? ஏன் பொய் சொல்கிறார்கள் ? இன்னுமோர் தமிழக அரசு விபரம் தெரிவிப்பதன்படி பார்த்தால் , மூன்றாண்டுக்கு முன்பு வரை ஐம்பது சதவீத அரசுப்பள்ளிகளில் கழிப்பறையே கிடையாதாம் . அம்மாவின் மற்றுமோர் சாதனையாகத்தான் கழிப்பறை கட்டினார்களாம் . அப்படியெனில் , இத்தனை ஆண்டுகாலம் ஏன் கட்டாமல் விட்டார்கள் , அது யாருக்கு சாதனை , யாருக்கு வேதனை என்றெல்லாம் கேள்வி கேட்காமல் வாசித்து முடியுங்கள் . ஆக , இன்றைய தேதி வரையும் நீங்கள் வாசிக்கும் இக்கணம் வரை 15 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையெனில் , என்ன தான் செய்கிறது பள்ளிக்கல்வித்துறை ? இத்தனைக்கும் தமிழக அரசின் விதிகளிலேயே மிகத்தெளிவாக கழிப்பறை வசதிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளபோதும் , ஏன் அரசுப்பள்ளிகள் மீது இத்தனைப் புறக்கணிப்பு ?
இப்போதுதான் ஸ்வாச் பாரத் வந்துவிட்டதே இனி பள்ளிகள் சுத்தமாகிவிடும் என்றும் சிலர் நினைக்கலாம் . மாணவர்களே வகுப்பறையையும் , கழிப்பறையையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லாத எந்தத் திட்டமானலும் சரி வரட்டும் தவறில்லை . ஆனால் , துப்புறவுத்தொழிலாளர்களை போதிய அளவு நியமிக்காமல் , சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்பது பம்மாத்துதானே .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை நிலை எண் : 270 யை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் . அரசு , மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் என 22.10.2012 அன்றே வெளியிடப்பட்டதுதான் இது . எட்டுத்தலைப்புகளில் சில முக்கியமானவற்றை இங்கு தருகிறோம் .
கட்டிடங்கள் என்ற முதல் தலைப்பில் , பள்ளிக்குள் எந்தவிதமான திறந்த கிணறுகளும் , குழிகளும் இருக்கக்கூடாது என்று கூறுகிறது . மாடிப்படிகளில் பாதுகாப்பான தடுப்புச்சுவர் உயரமாக இருக்கவேண்டும் எனக்கூறுகிறது .
இரண்டாவதாக குடிநீர் என்ற தலைப்பில் கீழ்வருமாறு மூன்று விதிகள் உள்ளது .
I. குடிநீர் ; பாதுகாப்பான குடிநீர் தரப்பட வேண்டும் , குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும் . எப்போது யாரால் எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் . குடிநீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் .
II . மேலும் 20 மணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர்க்குழாய்கள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்
III. பாத்திரங்கள் கழுவ , கை , கால்கள் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் . தரை வழுக்கல் இன்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் .
மூன்றாவதாக , கழிப்பறைகள் எனும் தலைப்பிலும் மூன்று விதிகள் உள்ளன .
I. 20 மாணவர்களுக்கு 1 சிறு நீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் , புதிய அளவில் , போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் . இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும் . கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் . குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்பட வேண்டும் . தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது . கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம் .
II. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்
III. தண்ணீர்த்தொட்டிகள் மாணாக்கர்களால் திறக்க முடியாதபடி மூடப்பட்டு இருக்க வேண்டும் . மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்பு குழந்தைகள் , நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் .
15
அந்நியாமம் 15
ஆக , 200 மாணவர்களே இருந்தாலும் 10 சிறுநீர் கழிப்பறைகள் வேண்டும் என்று அரசாணை சொல்லுகிறது . எந்தப்பள்ளியில் இத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . அட ,20 மாணவிகளுக்கு ஒன்னு வேண்டாம் . 200 மாணவிகளுக்கு ஒன்றாவது இருக்கிறதா எனில் , பெயருக்கு கூட ஒரு கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகள் அநேகம் இருக்கிறதே . அரசு தானே இதற்குக் காரணம் ? அப்பட்டமான மனித உரிமை – குழந்தை உரிமை மீறல் இல்லையா இது ? அது மட்டுமல்ல , ஆசிரியர்களுக்குக் கூட கழிப்பறை இல்லாத பள்ளிகளும் தமிழகத்தில் அநேகம் இருக்கத்தான் செய்கின்றன . ஏன் , சென்னையில் கூட இக்கொடுமையான சூழல் இருக்கையில் , அரசாணை என்பதன் அர்த்தம் என்ன ?
மேலும் , நான்காவதாக , மின்சாரம் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டதையும் வாசியுங்கள் .
(4) மின்சாரம் ;
I. அனைத்து இடங்களிலும் மின்சார இணைப்புகள் , மின் சாவி ( ஸ்விட்சஸ் ) போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் .
II. பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுது நீக்கி , அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் ( licensed electrical inspectors) சான்று பெற்றிருக்க வேண்டும் .
III. உடைந்த / சிதிலமடைந்த கட்டடங்கள் , சுவர்கள் , அறுந்த / துண்டித்த நிலையில் மின்சார ஒயர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும் . அதுகாறும் மாணவர்கள் / பணியாளர்கள் அவ்விடம் செல்லாமல் இருக்க பாதுகாப்பான முறையில் உரிய தடுப்பு அமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் .
(5) இருக்கைகள்
I. மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் பின்புறம் முதுகு சாய்வகம் உள்ள முறையில் அமைக்கப்பட வேண்டும் .
II. பெஞ்சுகள் , டெஸ்குகள் ஆகியவற்றில் கூரிய முனைகள் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும் . எக்காரணங்கொண்டும் அமர்ந்தால் ஆடக்கூடிய மற்றும் உடைந்த நிலையிலான இருக்கைகள் பயன்படுத்தக்கூடாது . அவை உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும் .
(6) முதலுதவி
I.
பள்ளிகளில் ஆபத்துக்காலங்களில் முதலுதவி செய்ய ஏதுவாக முதலுதவி பெட்டிகள் அனைத்து மருத்துவ பொருட்களுடன் அமைக்கப்படல் வேண்டும் . மேலும் , காலாவதியான மருந்துகள் ஏதும் சேமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் .
II. பள்ளி மாணவர்களின் இரத்த வகை , நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள் , மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல்நலம் சார்ந்த பதிவுகள் பேணப்பட வேண்டும் .
III. ஓட்டுனர் / உதவியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்திட வேண்டும் .
யப்பா , கண்ணை சுத்துதே என்கிறீர்களா ! முதுகு சாய்வகம் உள்ள பெஞ்சுகள் அமைக்கப்பட வேண்டுமாம் . ஆனால் , பல பள்ளிகளில் வகுப்பறையே இல்லையே என்ன செய்ய ? மரத்தடி வகுப்புகளுக்கு பெஞ்சாவது , டெஸ்காவது , போர்டாவது ! வகுப்பறையிருப்பின் பல பள்ளிகளில் குண்டும் , குழியுமான தரையில் உட்கார்ந்துதான் படித்துக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள் .
அதிலும் , இந்த முதலுதவி விதிகள் இருக்கிறதே , அதிகாரிகளுக்கு கூச்சமே இல்லை போலிருக்கிறதே , இப்படியெல்லாம் எழுதுவதற்கு ! காலாவதியான மருந்துகள் இல்லை என்பது வேறு உறுதி செய்யப்படவேண்டுமாம் .
இது மட்டுமல்ல , இன்னும் பல விதிகளும் அதில் உள்ளன . அதையும் பார்த்துவிட்டு , அதைப்பற்றிப் பேசுவோம் .
வளாகம் / வகுப்பறை :
16
அத்தியாமம் 16
இந்த அரசாணை போடப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன . சொல்லுங்கள் . எத்தனைப்பள்ளிகளில் அமலாக்கப்படுகின்றன இவைகள் எல்லாம் . அமலாக்கப்பட்டிருந்தால் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதியே இல்லாமல் இருந்திருக்குமா ?
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இந்த அரசாணையில் பல வரிகள் சொல்லப்பட்டுள்ளன . ஆனால் , அரசுப்பள்ளிகளில் ஏன் வாயிற்காவலாளிகள் கூட நியமிக்கப்படுவதில்லை ? பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தான் நூலகங்களும் இயங்குகின்றன . பள்ளிக்கல்விக்கும் , நூலகங்களுக்கும் உள்ள இணைப்பின் அவசியம் இது . ஆனால் , அரசுப்பள்ளிகளுக்கும் , உள்ளூர் நூலகங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது ? ஏன் ஏற்படுத்த இயலாதா ? அப்படி ஏற்படுத்தினால் மாணவர்களுக்கு மிக்க பயன் தருமே !
இந்தத்தொடர்பெல்லாம் இருக்கட்டும் அய்யா , அரசுப்பள்ளிக்கூடங்களில் நூலகங்களே இல்லையே , அதை முதலில் சொல்லுங்கள் . அப்புறம் நூலகங்களை , அரசுப்பள்ளியோடு இணைக்கும் திட்டத்தைப் பேசலாம் என்று தானே சொல்கிறீர்கள் . அதுவும் சரிதான் . முதல்ல , அரசுப்பள்ளிகளில் இருக்கும் நூலகங்களை அரசு செப்பனிடட்டும் . இன்றைய நவீன கல்வித்துறையின் வளர்ச்சியில் பள்ளியின் ஒரு அங்கமாக நூலகங்கள் இருக்கவேண்டியது அவசியமாகும் . பாடப்புத்தகங்களோடு தொடர்புடைய ஏராளமான புத்தகங்கள் மாணவர்களுக்காக அங்கு வைக்கப்பட வேண்டும் . ஏன் அரசு இதை சிந்திக்கவில்லை ?
மடிக்கணினிகள் கொடுக்கிறார்கள் . இருக்கட்டும் நல்லதுதான் . ஆனால் , எத்தனைப்பள்ளிகளில் கணினி ஆய்வகம் இருக்கிறது ?
எத்தனைப் பள்ளிகளில் பிளம்பரும் , எலக்டீரிசியனும் நியமிக்கப் பட்டுள்ளனர் ? எத்தனைப் பள்ளிகளில் நடத்தாட்டிகள் ( ஆயாக்கள் ) நியமிக்கப்பட்டுள்ளனர் ? தலைமை ஆசிரியரே இல்லாமல் பள்ளிகள் இருக்கையில் , யாருயா இது பிளம்பரு , ஆயான்னுக்கிட்டு என்கிறீர்களா . பொறுங்கள் .
இன்னுமோர் முக்கியமான விசயத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள் . இந்த அரசாணையையும் அரசு சும்மா போடவில்லை . உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் போடப்பட்டதுதான் . அதாவது , இந்த அரசாணைக்குப் பின்னர் தான் ஓரளவு சில பள்ளிகளிலாவது இவ்வசதிகள் செய்யப்பட்டன என்பதே உண்மையாகும் . மேலும் கட்டாய மற்றும் இலவசக் கல்வியுரிமைச்சட்டமும் இது போன்ற அடிப்படை வசதிகளை வரையறுத்துள்ளது . மேலும் , அடிப்படை வசதிகள் பள்ளியில் இல்லையெனில் கல்வியுரிமையை அளித்ததாக பொருள் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இருக்கிறது . இவ்வளவு சட்டம் இருந்தும் விதிகள் இருந்தும் , ஏன் அரசுப்பள்ளிகளை அரசே புறக்கணிக்கவேண்டும் ?
அதாவது , என் ஆட்சியில் இதைச்செய்தேன் , என் ஆட்சியில் இப்படி சாதித்தேன் , நான் வழங்கினேன் , நான் தானம் செய்தேன் , இலவசமாக் கொடுத்தேன் , விலையில்லாமல் கொடுத்தேன் , நான் கொடுத்தேன் , நான் .. நான் .. நான் … என்பதற்காகத்தான் இங்கு ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும் . இந்த திட்டங்களால் அரசுப்பள்ளிகளில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதே உண்மை .
உதாரணத்துக்கு , இந்த மூன்றாண்டில் 54 அரசு தொடக்கப்பள்ளிகள் மட்டுமே புதிதாய் துவங்கப்பட்டவை . ஆனால் , ஈராண்டில் மட்டும் 279 சுயநிதி மேனிலைப் பள்ளிகளும் , 175 சுயநிதி உயர்நிலைப் பள்ளிகளும் , 224 சுயநிதி நடுநிலைப்பள்ளிகளும் பெருகியிருக்கிறது என அரசின் புள்ளிவிபரமே கூறுகிறது . ஆனால் , அரசு மேனிலைப்பள்ளிகளையோ , அரசு உயர்நிலைப்பள்ளிகளையோ எங்கு இல்லை எனக்கண்டறிந்து அங்கு புதிதாய் துவங்குவதில்லை . இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதோடு சரி . இதன் விளைவென்ன ?
197268 மாணவர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளியில் மட்டும் இந்த ஈராண்டில் குறைந்திருக்கிறது . இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் 245855 மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது . ( ஒப்பீடு ; செயல்முறைத்திட்டம் மற்றும் புள்ளிவிபரக்கையேடு 2012-13 மற்றும் 2014-15 ஆகியவை ; வெளியீடு ; தமிழக அரசு )
17
அந்தியாமம் 17
இப்போது சொல்லுங்கள் இலவசங்களால் பயன் உண்டா ? இலவசங்கள் தருவதால் கல்வித்தரத்தை அதிகப்படுத்த இயலுமா ? இலவசங்களால் மட்டும் அரசுப்பள்ளிகள் முன்னேறுமா ?
உதாரணத்துக்கு , மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை எடுத்துக்கொள்வோம் . திட்டம் பொதுவான நோக்கில் நல்லதிட்டம் என்றாலும் , கணினியைப் பெற்ற மாணவர்களில் எத்தனை பேருக்கு கல்விநோக்கத்திற்காக பயன்பட்டுள்ளது என்ற விபரத்தை யோசித்தால் உங்கள் பதில் என்ன ? பதினொன்றாம் வகுப்பு நுழைகையில் மடிக்கணினியை அளித்து , ஒரு பகுதி மேல்நிலைகல்வியை கணினிக்கல்வியாக மேம்பட்ட முறையில் அளித்திருந்தால் அத்திட்டம் பயனுள்ள திட்டம் .
நான்காண்டில் மட்டும் ரூபாய் 3642.79 கோடி செலவில் 21.56 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கமுடியும் எனில் , ஏன் அத்தனை வகுப்பறைகளையும் கணினி மயமாய் மாற்றிட இயலாது ? இப்பணத்தினைக்கொண்டு அனைத்து வகுப்பறைகளையும் மேம்படுத்தியிருக்கலாமே , அதை ஏன் செய்யவில்லை அரசு ? அரசுப்பணத்தை எடுத்து தன்னை புண்ணியவானாகவும் , இரக்க குணம் கொண்டோராகவும் காட்டிக்கொள்ள நினைக்கும் ஆட்சியாளர்கள் அந்தப்பணத்தை வைத்து கல்விக்கான வளர்ச்சித்திட்டங்களை ஏன் முறையாய் திட்டமிடுவதில்லை ?
இன்னும் சொல்லப்போனால் , அரசே மடிக்கணினியை உற்பத்தி செய்தால் , அனைத்து மாணவர்களுக்கும் இதைவிடத் தரமான மடிக்கணினியை வழங்க முடியும் . அதே நேரத்தில் திட்டமும் நிரந்தரமான ஒன்றாக கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் . வேலைவாய்ப்பும் பெருகியிருக்கும் . ஆனால் , அப்படிச்செய்யாமல் , என் ஆட்சியில் என்னால் தரப்படும் இலவசத் திட்டம் என்ற பெயரில் ஏன் இதைச்செய்ய வேண்டும் ?
ஆக , கல்வி வளர்ச்சி எனும் நோக்கில் , அரசுப்பள்ளிகளை மேம்படுத்துதல் எனும் அணுகுமுறையில் செய்யப்படும் திட்டங்கள் அல்ல என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் . வாக்குவங்கியை மட்டுமே குறிவைத்து உருவாக்கப்படும் இத்திட்டங்களால் கல்வித்துறையில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மையாகும் .
குறிப்பாக , அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் மட்டும் இலவசங்களுக்காக சுமார் 1.80 இலட்சம் கோடிகள் செலவிடப்பட்டுள்ளன . ஆனால் , அதே நேரத்தில் கல்விக்காக செலவிடப்பட்ட தொகை என்பது இதே நான்காண்டு காலத்தில் மொத்தம் சுமார் 58000 கோடிகள் மட்டுமே ( கல்விக்கான அனைத்து இலவசங்களும் இதில் அடக்கம் ). அப்படியெனில் , கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள் .
இலவசங்கள் என்ற மாய அரசியலை ஒழித்தால் , கவர்ச்சி அரசியலை கைவிட்டால் , கல்விக்கு நிதி கிடைக்குமா கிடைக்காதா என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . மிக்ஸி , கிரைண்டர் , டிவி ஆகியவை இலவசம் என மக்களுக்கு ஒரு மாயையைக் காட்டுகின்றனர் . ஆனால் , இதெல்லாம் சேர்ந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவு ஐந்து வருடத்தில் மொத்தம் ரூ . பத்தாயிரம் தான் . ஆனால் , கல்விக்கு ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பமும் செலவழிக்கும் தொகை குறைந்த பட்சம் சுமார் .20 ஆயிரம் அல்லவா .
ஆக , தமிழகத்தின் அனைத்துப்பள்ளிகளும் அரசுப்பள்ளிகள் தான் என்ற நிலையை ஏற்படுத்தினால் , ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் சுமார் .20 ஆயிரம் மிச்சப்படுமே . இதை ஏன் பெற்றோர்கள் யோசிப்பதில்லை ?
ஆனா , அரசு மழலைகளுக்கான வகுப்புகளை துவங்கும்னு சொல்லுறாங்க , இப்ப கூட பாருங்க , ஆங்கில வழிக்கல்வியை அரசுப்பள்ளிகளில் வழங்கும் திட்டத்தை அரசு துவங்கியிருக்கு . இதெல்லாம் அரசுக்கு இருக்கும் அக்கறையால் தானே என்றும் சிலர் கேட்கலாம் .
உங்க கேள்வி நியாயமான கேள்விதான் . ஆனா , அரசின் அக்கறை நியாயமானதல்ல . உதாரணத்துக்கு , ஆங்கில வழிக்கல்வி துவங்கிவிட்டால் கல்வியின் மீது அக்கறை இருப்பதாய் அர்த்தமா ? ஏற்கனவே , தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே ஆங்கிலம் பேசவும் , எழுதவும் தெரியவில்லை என்பதுதானே பிரச்னையே ! பொறியியல் கல்லூரிக்கு சென்ற பின்னும் , அவர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரியாததால் தானே தற்கொலைகளே அதிகரிக்குது ? காரணம் , நம் நாட்டில் ஆங்கிலம் சொல்லித்தரும் முறைதான் . அதை ஒரு மொழி
18
அத்தியாயம் 18
ஏனெனில் , ஆசிரியர்களுக்கு சம்பளம் தருகிறோம் என்ற பெயரில்தான் அத்தனைக்கொள்ளையும் அங்கு நடக்கிறது . கல்வியைச் சேவையாய் செய்வோர் பள்ளியை நடத்தட்டும் . இல்லையெனில் , அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அறிவிப்பை அரசு அறிவிக்குமெனில் , தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும் .
அதோடு , மெட்ரிக் பள்ளிகள் – சர்வதேசப் பள்ளிகள் , மத்தியக்கல்வி வாரியப்பள்ளிகள் என பலவிதமான பள்ளிகளும் ஒழியும் . அனைவருக்கும் சமமான – சீரான கல்வி எனும் சமச்சீர் கல்வி நிலை உருவாகும் . காசிருப்பவனுக்கு தனிக்கல்வி எனும் ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படும் . ஆக , அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் , ஒரே கல்வி முறை என்கையில் அரசுப்பள்ளிகளை தரத்தில் உயர்ந்த பள்ளிகளாக நிச்சயம் மாற்ற இயலும் .
ஆக , ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ . 36 ஆயிரம் கோடி என்பதைச் செலவழிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் ? இலவசங்களுக்காக சுமார் ஐம்பதாயிரம் கோடியை வருடந்தோறும் செலவழிக்கும் அரசு அனைவருக்கும் சமமான – சீரான கல்விக்காக 36 ஆயிரம் கோடியை ஏன் ஒதுக்கக்கூடாது ? கல்விக்காக வசூலிக்கப்படும் இரண்டு சதவீத வரியை ஏன் முழுமையாய் கல்விக்கு ஒதுக்குவதில்லை ? கேட்டால் இவ்வளவு பெரிய செலவை அரசு செய்ய இயலாது என்பார்கள் . ஆனால் , ஏன் செலவழிக்க முடியாது எனக்காரணம் கேட்டால் மட்டும் சொல்லவே மாட்டார்கள் .
ஏதோ குத்துமதிப்பா ஒரு கணக்குபோட்டு சொல்லும் கணக்கும் அல்ல இது . இந்தியாவில் அமைக்கப்பட்ட கல்வி ஆணையங்களும் , கல்வியாளர்களும் , பல அமைப்புகளும் சொல்லும் கணக்குதான் இது . மாநில அரசு கல்விக்கு என முப்பது சத நிதியும் , மத்திய அரசு பத்து சத நிதியும் ஒதுக்கவேண்டும் என்பதுதான் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையாகும் . ஆனால் , 66 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் , அரசின் வருமானமும் , பட்ஜெட் தொகையும் பல மடங்கு உயர்ந்துள்ள சூழலிலும் , ஏன் கல்விக்கென தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை ?
ஆம் . அரசு இதை ஒரு செலவாக மட்டுமே பார்க்கிறது . ஆனால் , இது தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம் ஆகும் . மிக்ஸி கொடுப்பதால் குடும்பம் முன்னேறும் என்று நினைக்கும் அரசு , அக்குடும்பத்தின் தலைமுறை தலைமுறைக்குமான கல்வியை இலவசமாக அளிப்பதற்கான உத்திரவாதத்தை மட்டும் உருவாக்க ஏன் தயங்குகிறது ? எதற்கெடுத்தாலும் , சிங்கப்பூர் , அமெரிக்கா எனச்சொல்லும் ஆட்சியாளர்கள் அங்கு பள்ளிக்கல்வி என்பது முழுக்க , முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் , அரசின் செலவில் தான் தரப்படுகிறது என்பதை தெரியாதவர்களா என்ன ?
அமைச்சர் வீட்டுப்பிள்ளையாய் இருந்தாலும் சரி , கூலித்தொழிலாளி வீட்டுப்பிள்ளையாய் இருந்தாலும் சரி , அந்தக் குழந்தையின் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் பள்ளி எதுவோ அங்குதான் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நடைமுறையே உலகின் பல நாடுகளில் உள்ள நடைமுறை என்பதைத் தெரியாதவர்களா என்ன ? வீட்டை மாற்றிச்சென்றாலும் , உயர்கல்விக்கு சென்றாலும் எந்த இடத்தில் வசிக்கிறோமோ அந்த இடத்தில் உள்ள பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கான இடம் உறுதி என்ற நிலையிருந்தால் பெற்றோர்கள் ஏன் அங்குமிங்கும் அலையப்போகிறார்கள் ? ஆம் . இதுதான் உலக நாடுகளில் உள்ள பள்ளிக்கல்வி முறையாகும் .
பல நாடுகளில் பள்ளிக் கல்வியின் தரத்தை ஒப்பிடும் பி . ஐ . எஸ் . ஏ . என்ற உலகளாவிய கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 74 நாடுகளில் இந்தியாவின் இடம் 73. இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கும் அனைத்து நாடுகளும் பேதங்களற்ற , இலவசப் பொதுப் பள்ளிகள் வழியாக மட்டுமே கல்வி அளிக்கும் நாடுகள் . இந்த நாடுகள் சோஷலிஸ நாடுகள் அல்ல ; முதலாளித்துவ நாடுகள்தான் . சமத்துவத்தில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகள் ஏன் அனைத்துக் குழந்தைகளும் சமமான , இலவசக் கல்வி பெறும் அமைப்பை பல காலமாக ஏற்றிருக்கின்றன ?
காரணம் , ஒரு நாட்டின் மனித வளம் முழுவதும் ஆற்றல் பெற்ற சக்தியாக எழ வேண்டுமென்றால் , அனைத்துக் குழந்தைகளும் சமதரக் கல்வி பெற வேண்டும் . இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடித்தளமே இத்தகைய கல்வி அமைப்புதான் .
19
அத்தியாயம் 19
இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகுவதன் நாசகர விளைவுகள் , மனித வள வளர்ச்சியில் 174 நாடுகளில் இந்தியா 136- வது இடம் ; சமூக முன்னேற்றத்தில் 132 நாடுகளில் 102- வது இடம் ; உழைக்கும் மக்களில் நவீனத் திறன் கொண்டோர் இந்தியாவில் 6.7%, சீனாவில் 50%, ஐரோப்பிய யூனியனில் 75%.
முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் . முனைவர் . வசந்திதேவியின் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் ?
ஆம் . அருகமைப்பள்ளியில் அனைவருக்கும் சமமான , சீரான பொதுக்கல்வி என்ற நடைமுறை நம் நாட்டிலும் வந்தால் எப்படியிருக்கும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் . அவர் குழந்தை அங்கே படிக்கிறது , இவர் குழந்தை இங்கே படிக்கிறது , எனவே என் குழந்தையை அங்கே சேர்க்கிறேன் என்று தானே ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமான பள்ளியைத்தேடி ஓடுகின்றனர் . ஒரே விதமான பொதுக்கல்விதான் என்றால் யாரும் ஓடப்போவதில்லை . பதட்டப்படப்போவதில்லை . அதுமட்டுமல்ல , ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிக்கல்விக்காக என இன்று செலவிடப்படும் பல இலட்சங்கள் மிச்சம் . அதாவது , ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்கள் மிச்சம் . மூன்று வயதிலேயே பத்துப்பதினைந்து கிலோமீட்டர் தூரம் பயணம் சென்று படிக்கும் கொடுமைக்கும் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் .
ஆம் . உலகத்திலேயே பள்ளிக்கல்வியில் வியாபாரம் செழித்தோங்குவது இங்குதான் . கல்விக்கு அதிபதி சரஸ்வதி என நம்பி பெரும்பான்மை மக்கள் வணங்கும் ஒரு நாட்டில் தான் காசுக்கேற்ற கல்வி என கல்வி ஒரு பெரும் வியாபாரப்பொருளாய் விற்கப்படுகிறது . கல்வியை கடவுளின் அருள் என்று நம்புவது ஒருபுறம் , காசுக்கேற்ப கிடைக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் என என்னவிதமான முரண்பாடு இது ? எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது ?
தனியாரே வேண்டாம் என்று சொல்லி அரசு மட்டுமே விற்கும் என்று சொல்லி , இலக்கு தீர்மானித்து டாஸ்மாக் திறக்கும் அரசு , குடிகாரர்களுக்காக முதலில் பார் திறந்தது . இப்போது எலைட் பார் வரை திறந்து போதை வளர்க்கும் அரசு , ஏன் கல்வியை வளர்க்க மட்டும் திட்டமிடவில்லை ? அரசுப்பள்ளிகளை வளர்ப்பதற்கும் , மேம்படுத்துவதற்கும் இப்படியான திட்டமிடல்களை ஏன் செய்யவில்லை ? ஆக , டாஸ்மாக்கில் இருக்கும் ஆர்வம் அரசுப்பள்ளி வளர்ச்சியில் இல்லை என்பது தெளிவு . அரசிடம் இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு பெற்றோர்களை மட்டும் குறை சொல்வது எப்படி சரியாக இருக்கும் ?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம் . வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் சம்மாய் அளிக்கப்பட்டிருப்பதாய் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் , அடிப்படை வாழ் உரிமையான கல்வியை அனைவருக்கும் சமமாய் அளிக்காமல் , அதைக் காசுக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம் எனில் , இத்தேசத்தில் ஜனநாயகம் என்பதன் அர்த்தம்தான் என்ன ? வாக்களிப்பதை விட வேறென்ன உரிமைகள் சமமாய் வழங்கப்பட்டிருக்கின்றன இத்தேசத்தில் ?
நவோதயா பள்ளிகள் என மத்திய அரசால் நடத்தப்படும் அறிவுசார் மையப்பள்ளிகளும் ( செண்டர் ஆப் எக்சலன்ஸ் ), கேந்திரிய வித்யாலாயா என மத்திய அரசால் சிறப்பாய் நடத்தப்படும் பள்ளிகளும் கூட அரசுப்பள்ளிகள் தானே . அப்பள்ளிகளை சிறப்பாய் நடத்த முடியும் எனில் , மாநில அரசின் பள்ளிகளை மட்டும் ஏன் சிறப்பாய் நடத்த இயலாது ?
முடியும் . நிச்சயமாய் முடியும் . அமைச்சர் வீட்டுப்பிள்ளையும் , அரசு அதிகாரிகள் வீட்டுப்பிள்ளையும் படிக்கும் பள்ளிகளாய் அரசுப்பள்ளிகள் மாறினால் , நிச்சயம் முடியும் . இந்நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை .
கல்வியின் மீதான பொதுமக்களின் கவனம் அதிகமாகிவரும் காலமிது . எவ்வளவு செலவழித்தாலும் பரவாயில்லை , நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மக்களுக்கு கல்வியின் மீது கவனம் இருக்கிறது . தனியாரை நாடும் இம்மக்கள் , நிச்சயம் ஒருநாள் உணர்வார்கள் . தனியார் பள்ளியின் இலாபவெறிக்கு தீனிபோட்டு முடியாது என்று உணரும் அந்த நாளில் , அரசுப் பள்ளிகள் நமது பள்ளிகள் என பெரும்குரல் எழுப்புவார்கள் .
அப்போது , அருகமைப் பள்ளிகள் எனும் பொதுப் பள்ளிக்கான குரல் போர்க்குரலாய் ஒலிக்கும் . அதன் இன்றைய தொடக்கம் தான் அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கான இக்குரல் .
கல்வி முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் : அனைவரும் கல்வி பெறுதல் , அதன் தரம் , சமத்துவம் . இதன் ஒரு பக்கம் சரிந்தாலும் , முக்கோணமே உடைந்துவிடும் .’’ கல்வியாளர்
ஜே . பி . நாயக்
* * *
கருத்துகள்
கருத்துரையிடுக