குடிசை


புனைக்கதைகள்

Back

குடிசை
ஏற்காடு இளங்கோ


குடிசை

ஏற்காடு இளங்கோ

 

 

 

Contents

குடிசை

ஆசிரியர் அறிமுகம்

முன்னுரை

1. அத்தியாயம் 1

2. அத்தியாயம்     2

3. அத்தியாயம்     3

4. அத்தியாயம்     4

5. அத்தியாயம்     5

6. அத்தியாயம்     6

7. அத்தியாயம் 7

8. அத்தியாயம்     8

9. அத்தியாயம்     9

10. அத்தியாயம் 10

11. அத்தியாயம்     11

12. அத்தியாயம்     12

Free Tamil Ebooks – எங்களைப் பற்றி

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

1


குடிசை

உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ

மின்னஞ்சல்: yercaudelango@gmail.com

மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த்

மின்னஞ்சல்: vasanth1717@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

2


ஆசிரியர் அறிமுகம்

ஏற்காடு இளங்கோ


yercaudelango@gmail.com

944 351 7926

http://ta.wikipedia.org/s/3pgz

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்காடு இளங்கோ

ஏற்காடு இளங்கோ

பிறப்பு மார்ச் 19, 1961

ஏற்காடு

ஏற்காடு இளங்கோ (பிறப்பு: மார்ச் 19, 1961) ஓர் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

பொருளடக்கம்


[மறை]

1 வாழ்க்கைக் குறிப்பு

2 பணியும் நூல்களும்

3 பிற பொதுப் பணிகள்

4 ஆதாரம்

வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ]


தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், இளைய மகன் ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர்.

பணியும் நூல்களும் [ தொகு ]


நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்பியவை.

‘பழங்கள்’ என்னும் புத்தகம் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது .

’செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்’ என்ற நூலும் ’அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்பட்டன.

‘விண்வெளி ஆயிரம்’ ‘நீரில் நடக்கலாம்’ போன்ற நூல்களையும் கலிலியோ, ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

சிறிய அளவிலும் பெரிய அளவிலும் 65 புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருடைய மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது[1]

வ.எண் புத்தகம் பதிப்பகம் வெளியான காலம்

1 அதிசய தாவரங்கள் அறிவியல் வெளியீடு மார்ச் 2000

2 சிறிதும் – பெரியதும் [2] அறிவியல் வெளியீடு ஜூன் 2001

3 அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் [3] சாரதா பதிப்பகம் டிசம்பர் 2002

4 விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்[3] சாரதா பதிப்பகம் நவம்பர் 2003

5 அதிஷ்டக் கற்களும், அறிவியல் உண்மைகளும் [3] சீதை பதிப்பகம் டிசம்பர் 2004

6 உலகை மாற்றிய விஞ்ஞானிகள் [3] சீதை பதிப்பகம் டிசம்பர் 2004

7 பழங்கள் அறிவியல் வெளியீடு செப்டம்பர் 2005

8 கண்ணாடியின் கதை [3] சீதை பதிப்பகம் நவம்பர் 2005

9 காய்கறிகளின் பண்பும், பயனும் [3] சீதை பதிப்பகம் டிசம்பர் 2005

10 இயற்கை அதிசயங்கள் பாவை பதிப்பகம் மார்ச் 2007

11 அறிவியலும், அற்புதங்களும் பாவை பதிப்பகம் மார்ச் 2007

12 ஏழரைச் சனி அறிவியல் வெளியீடு ஏப்ரல் 2007

13 நோபல் பரிசு பெற்ற பெண்கள் [4] மதி நிலையம் பதிப்பகம் மே 2007

14 வியக்க வைக்கும் குகைகள் யுரேகா பதிப்பகம் 2007

15 நிலவில் ஓர் உணவகம் பாவை பதிப்பகம் அக்டோபர் 2007

16 நீரில் நடக்கலாம் வாங்க பாவை பதிப்பகம் நவம்பர் 2007

17 யூரி ககாரின் பாவை பதிப்பகம் நவம்பர் 2007

18 நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் பாவை பதிப்பகம் மார்ச் 2008

19 பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பாவை பதிப்பகம் மார்ச் 2008

20 செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும் அறிவியல் வெளியீடு மார்ச் 2009

21 இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் சீதை பதிப்பகம் மே 2009

22 தாமஸ் ஆல்வா எடிசன் பாவை பதிப்பகம் ஜூலை 2009

23 கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி [5] சாரதா பதிப்பகம் ஜூலை 2009

24 மனித வாழ்வில் மரங்கள் சீதை பதிப்பகம் செப்டம்பர் 2009

25 வெற்றி கலிலியோவிற்கே சீதை பதிப்பகம் டிசம்பர் 2009

26 ஸ்டெம் செல்கள் பாவை பதிப்பகம் ஆகஸ்ட் 2009

27 லூயி பாஸ்டர் பாவை பதிப்பகம் ஆகஸ்ட் 2009

28 ஐசக் நியூட்டன் சீதை பதிப்பகம் டிசம்பர் 2009

29 பெண் வானவியல் அறிஞர்கள் [6] சீதை பதிப்பகம் டிசம்பர் 2009

30 நவீன அதிசயங்கள் [3] பாவை பதிப்பகம் ஜூலை 2010

31 வாழவிட்டு வாழ்வோம் [3] பாவை பதிப்பகம் ஜூலை 2010

32 விந்தையான விலங்குகள் பாவை பதிப்பகம் ஆகஸ்ட் 2010

33 மைக்கேல் பாரடே ராமையா பதிப்பகம் அக்டோபர் 2010

34 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யுரேகா டிசம்பர் 2010

35 விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் அறிவியல் வெளியீடு ஜூலை 2011

36 இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா அறிவியல் வெளியீடு ஜூலை 2011

37 விண்வெளிப் பயணம் அறிவியல் வெளியீடு ஜூலை 2011

38 நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அறிவியல் வெளியீடு ஜூலை 2011

39 கல்பனா சாவ்லா [3] ராமையா பதிப்பகம் ஜூலை 2011

40 கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா பாவை பதிப்பகம் செப்டம்பர் 2011

41 உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் அறிவியல் வெளியீடு ஜனவரி 2012

42 தமிழக பாரம்பரியச் சின்னங்கள் தில்லை பதிப்பகம் மே 2012

43 தன்னம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் [7] மங்கை பதிப்பகம் ஆகஸ்ட் 2012

44 பூகம்பமும், சுனாமியும் சீதை பதிப்பகம் ஆகஸ்ட் 2012

45 ஓசோன் படலத்தில் ஓட்டை மங்கை பதிப்பகம் ஆகஸ்ட் 2012

46 பூமியின் வடிவம் ஜீயோயிடு நவம்பர் 2012

47 சுற்றுச்சூழல் ஒரு பார்வை சீதை பதிப்பகம் நவம்பர் 2012

48 நோபல் குடும்பம் [3] பாவை பதிப்பகம் 2012

49 நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் பாவை பதிப்பகம் 2012

50 அறிவியல் களஞ்சியம் விண்வெளி 1000 பாரதி புத்தகாலயம் டிசம்பர் 2012

51 அணு முதல் அண்டம் வரை சீதை பதிப்பகம்

52 குடிசை பாவை பதிப்பகம்

53 சர்வதேச தினங்கள் பாகம் 1 & 2 பாவை பதிப்பகம்

54 தானியங்கள் பாவை பதிப்பகம்

55 விண்வெளி ஆய்வு நிலையம் பாவை பதிப்பகம்

56 மனிதன் ஏன் குரங்கிலிருந்து மீண்டும் பிறக்கவில்லை

57 மனித பேரினத்தின் வரலாறு

58 உடல் உறுப்பு மாற்றுச் சாதனைகள்

59 அதிசயம் நிறைந்த மனித உடல் சீதை பதிப்பகம்

60 உடல் நலம் காத்திடுக

பிற பொதுப் பணிகள் [ தொகு ]


1987 ஆம் ஆண்டு முதல் அறிவியல் இயக்கத்தில் முனைப்பானவராக உள்ளார். தற்பொழுது சேலம் மாவட்டத் தலைவராக உள்ளார்.

மாணவர்களுக்கான மாத இதழ் ‘துளிர்’ ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.

பொதுவிடத்தில் எச்சில் துப்புதல் சுகாதாரக் கேடு என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கி மூன்று லட்சம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பரப்புரை இயக்கம் நடத்தினார்.

மைதாவினால் செய்யப்படும் பரோட்டா சாப்பிடுவதால் உடல் நலம் கெடும் என்பதை விளக்கி வருகிறார்.

பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகளை ஒரு வாரத்திற்கு மேல்பயன்படுத்தல் கூடாது என்று பரப்புரை செய்தார்.

ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அறிவொளி இயக்கம் சார்பாக நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.

மந்திரவாதிகள், போலிச் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வித்தைகளையும் கடவுள் பெயரைச் சொல்லி பரப்பும் மூடச்செயல்களையும் ‘பொய்’ என்று அறிவியல் அடிப்படையில் நிரூபித்து வரும் தம் மனைவிக்குத் துணை நிற்கிறார்.

மாணவர்களைப் பள்ளிகளில் சந்தித்து வானவியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார்.

தம் இறப்பிற்குப் பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் [ தொகு ]


Jump up↑ மைதா மாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு – தினமணி Jul 15, 2013 3:15 AM

Jump up↑ சிறிதும் – பெரியதும். அறிவியல் வெளியீடு.

↑ Jump up to:3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 3.9 “உங்களது தேடுதல் :- ஏற்காடு இளங்கோ“. நூல் உலகம். பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.

Jump up↑ நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள் தினமலர் புத்தகங்கள் பார்த்த நாள் பிப்ரவரி 11, 2014

Jump up↑ ஏற்காடு இளங்கோ. “கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசேரி“. வரலாறு. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.

Jump up↑ ஏற்காடு இளங்கோ. பெண் வானவியல் அறிஞர்கள். சீதை பதிப்பகம்.

Jump up↑ ஸ்டீபன் ஹாக்கிங்: தன்னம்பிக்கையின் நாயகன். மங்கை வெளியீடு.

3


முன்னுரை


அடிப்படைத் தேவைக்காக போராடக்கூடிய மக்களைப் பார்த்து இவர்களுக்கு வேறு வேலைகள் கிடையாது என கிண்டலடிப்பவர்களும், கேளிக்கை செய்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு நாம் அனுபவித்து வரும் உரிமைகள் அனைத்தும் போராடி பெற்றவைகள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யாராவது போராடி, தியாகம் செய்து சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தால் சுகமாக வாழத்தயாராக இருப்பார். ஆனால் அவர் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளமாட்டார். நமக்கு போராட்டமெல்லாம் எதற்கு என்பார்.

மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடுக்க உடை, வாழ இருப்பிடம் போன்றவைதான். இவைகள் மனித சமூகத்திற்கு கிடைக்கும் வரை போராட்டம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றுவரும் மக்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒரு இருப்பிடம் தேவை என்பதற்காக புறம்போக்கு நிலத்தில் குடிசை போடுகிறார்கள். அவர்களுக்கு மாடி வீடு தேவையில்லை. குடிசையே போதும் என்கின்றனர். போட்ட குடிசைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். இதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

போராடக்கூடிய மக்களிடையே இருக்கும் ஒற்றுமை, கூட்டம் கூடி விவாதித்து முடிவெடுப்பது, நல்லது கெட்டது பற்றி பேசுவது, தனக்குள்ள உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுதல் போன்றவற்றை அவர்களிடம் காணமுடிந்தது. வாய்பேச முடியாத ஊமைகளாக இருந்த மக்களை வாய்பேசுபவர்களாக மாற்றுவது போராட்டம்தான் என்பதைக் காணமுடிந்தது. போராட்டம்தான் ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது என்பதையும் தெரிந்த கொள்ளமுடிந்தது. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “குடிசை” என்கிற குறுநாவலை எழுதியுள்ளேன்.

இந்த குறுநாவலை செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ளு. நவசிவாயம் அவர்களுக்கும் தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுலீதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. சமூகத்தில் நிலவும் ஒரு அடிப்படைப் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள “குடிசை” என்கிற குறுநாவலை மின்னூலாக வெளியிடும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-ஏற்காடு இளங்கோ

1


அத்தியாயம் 1


சூரியனின் கதிர்கள் கன்னத்தைத் தீய்த்துக் கொண்டு இருந்தது. தீப்பந்தத்தை கன்னத்தின் அருகில் கொண்டு வந்ததுபோல ஒரு காந்தல். ஏப்ரல் மாதத்து கொளுத்தும் வெயில். அக்னி நட்சத்திரத்து கத்திரி வெயில். காற்று வெப்பமடைந்து நீர் ஆடுவதுபோல கண்ணிற்குத் தெரிந்தது. நெற்றியிலிருந்து வியர்வை ஆறாக கன்னத்தின் வழியாக இறங்கியது. கண்கள் எரிந்தன. உடல் முழுவதும் சுட்டு எரிப்பது போன்ற எரிச்சல், வியர்வையால் பனியன் திட்டுத் திட்டாக நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது. செருப்பு வாரின் சூட்டால் உள்ளங்கால் எரிச்சல் எடுத்தது. பஸ் நிலையத்தை நோக்கி, முருகேசன் வேகமாக நடந்து வந்தான்.

பஸ்ஸின் இருக்கைகள்கூட சூடேறி இருந்தன. பஸ் கூரையிலிருந்து வெப்பம் கீழ்நோக்கிப் பரவி வண்டியினுள் புழுக்கத்தை ஏற்படுத்தியது. புழுக்கம் தாங்காமல் வண்டியை எடுத்துத் தொலைக்கமாட்டானா… டிரைவர்மீது கோபம் ஏற்பட்டது. வண்டி ஒரு குலுக்கு குலுக்கி, முக்கி, முனகி பஸ் நிலையத்தைவிட்டு வெளியே வந்து தனது வேகத்தைக்கூட்டிக் கரும்பாதையில் பாய்ந்தது. வெப்பக்காற்று ஜன்னல் வழியாக உள்ளே சீறி வந்தது. வண்டி செல்வது இதமாக இருந்தாலும் அனல்காற்று மிருதுவான கன்னத்தை வாட்டியது. வண்டி சமதளத்திலிருந்து ஒரு வளைவை கடந்து மேல்நோக்கி ஏறத்தொடங்கியது. மலைப்பாதையின் துவக்கம். மாரியம்மன் கோவிலுக்கு பிடித்து வைத்த மாவுபோன்ற அமைப்புகொண்ட கரடுகள். உயர்ந்து சென்று தாழ்ந்து சரியும் சரிவுகள். அதைத் தொடர்ந்து மீண்டும் உயர்ந்து தாழ்ந்து சரியும் மலைகள். நூற்றுக்கும் மேற்பட்ட கரடுகளின் சங்கிலிக் கூட்டுத்தான் இம்மலைப்பகுதி.

பாம்பைப் போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. பாதையை ஒட்டி துருத்திக்கொண்டிருக்கும் கரும்பாறைகள். வெயிலின் கொடுமை தாளாமல் புதர்ச்செடிகளின் இலைகள் வாடி வதங்கி தொங்கிபோய் நின்றன. சில எலும்பும்தோலுமாக நின்றன. சம்பாத்திக் கள்ளியும், திருகுகள்ளியும், இண்டன் முள்புதரும் அதிகமாக இருந்தன.மலையின் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் புளியமரங்களைக் காண முடியவில்லை. முள் இல்லாத காட்டு மரங்கள், பசுமையான இதய வடிவம் கொண்ட இலைகளை உடைய மரங்கள், மரம் முழுவதும் சிவப்புப் பூக்களைக் கொண்ட காட்டு இல்லம் மரம் கைகளை விரித்து நிமிர்ந்து நின்றது. கொன்னை மரத்தின் மஞ்சள் பூக்கள் காற்றில் சரவிளக்கைப்போல ஊசலாடிக்கொண்டிருந்தன. பாலை மரத்தில் வெண்மையான நட்சத்திர மலர்கள் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. கதம்ப மாலையைப்போல இவைகள் கலந்து சாலையின் இருபுறமும் நின்றன.

அவனை அறியாமல் சட்டைப்பையில் இருந்த டிக்கட்டை எடுத்து உள்ளங்கையால் உருட்டினான். அதை காதில் செருகிக் குடைந்தான். அதில்தான் எத்தனை சுகம். முகத்தில் மல்லிகையின் மலர்ச்சி. துண்டு பேப்பரோ, நெருப்புக்குச்சியோ அவனுக்கு தென்பட்டால் எடுத்து காதை குடைவான். இது அவனுடை பழக்கம். அவனுடைய மனைவி திட்டியிருக்கிறாள். இந்தப் பழக்கத்தை கைவிட முயற்சிசெய்து கொண்டுதான் இருக்கிறான். அது ஏனோ அவனால் முடியவில்லை. அவனுக்கு திருப்தி ஏற்பட்டது. தூக்கி எறியப் போனான். டிக்கட் என்ற உணர்வு ஏற்பட்டதால் சுருண்டு இருந்த டிக்கட்டை சட்டைப் பையில் போட்டான். வண்டி கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தது. வளையும்போது தலை சுற்றுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. வளைவின் பக்கத்தில் படுபாதாளம் தெரிந்தது. தவறி விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது. வண்டி உறுமிக்கொண்டு முன்னேறியது. ஏற்றத்தில் நீண்ட மூச்சை இழுத்துவிட்டு முன்னேறியது. நாயை எதிர்த்து நிற்கும் பன்றியின் சீற்றம். என்ஜினின் உறுமல் சத்தம் கூட்டிக் குறைத்து முன்னேறியது.

மலைக்குப் போவோரும் வருவோரும் போடும் பொருட்களை தின்னப் பழகி சோம்பேறியாக்கப்பட்ட குரங்குகள் தவனைக்கட்டில் உட்கார்ந்திருந்தன. யாராவது ஏதாவது போட மாட்டார்களா… எதிர்பார்ப்புடன் வண்டியை பார்த்தன. ஒரு தாய் குரங்கு மட்டும் குட்டிக்கு பேன் பார்ப்பதிலே கவனம் செலுத்திக்கொண்டிருந்தது.“குரங்கு… குரங்கு” வண்டியிலிருந்து குரங்கை பார்த்த சந்தோஷத்தில் இரண்டு குழந்தைகள் கையை நீட்டி கத்தினார்கள்.வெப்பக்காற்றின் சூடு தணிந்து சுகமான குளிர்காற்று ஜன்னலில் உள்ளே பாய்ந்துகொண்டிருந்தது. இதமான காற்று அவனை தூங்க வைத்துவிட்டது.வண்டி ஒரு வளைவை கடக்கும்போது திடீர் பிரேக்கில் குலுங்கி நின்றது. எதிரில் பாரத்தோடு லாரி நின்றது. “வனம் இல்லையேல் நம் இனம் இல்லை”… வனத்துறையின் விளம்பரம் பாறையில் எழுதப்பட்டிருந்தது. அதை ஒட்டியே மரக்கட்டைகளை ஏற்றிய லாரி நின்றது. ‘ஓ’… இந்த இடத்திற்கு வந்து விட்டதா… வண்டி வந்த இடத்தை ஊகித்தான்.வண்டி தன்னுடைய பிணக்கை நீக்கி பழைய நிலைக்கு வந்தது. அது தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. பயணிகள் மலைச்சாரலின் அழகை பார்த்துக் கொண்டே வந்தனர்.ஜன்னல் உள்ளே பாய்ந்து வந்த காற்றினிலே ஒரு மாற்றம். வெப்பம் முற்றிலும் குறைந்து குளுமையான காற்றாக இருந்தது. காப்பித் தோட்டத்தின் துவக்கம். சரிவுகளில் பசுமையான காப்பிச்செடிகள் முடி வெட்டியது போல அழகாக இருந்தன. வான்நோக்கி உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் சவுக்கு எனப்படும் சில்வர் ஓக் மரங்கள். அதன் இலைகள் வெள்ளியைப் போல் சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. காப்பிச்செடிக்கு நிழல் கொடுக்கும் கல்யாண முருங்கை. அதன் செந்நிறப் பூக்களிலிருந்து அண்டங்காக்காய் தேனை உறிஞ்சிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு சிவப்பு குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதுபோல தெரிந்தது.

மூக்கை துளைக்கும் நறுமணம், மல்லிகைப் பூவைவிட பலமடங்கு வாசனை. தேன் கலந்த சுவை அதிலே இருந்தது. இலைக்காம்பின் இடுக்குகளில் கொத்துகொத்தாக காப்பி பூத்திருந்தது. பார்க்கும் இடமெல்லாம் பூக்கள்.“சே… என்ன அழகா இருக்கு… இது மாதிரி மல்லிகைச் செடியில் பூ பூத்தா எப்படி இருக்கும்”… ஆச்சரியத்தில் முன் சீட் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண் தன் கணவனிடம் கூறினாள்.கண்ணை மூடிக்கொண்டு வந்தான். காற்றின் குளுமை உடல் எங்கும் பரவியது. கன்னத்தில் மென்மையானத் தோலை குளிர வைத்தது. எலுமிச்சம் பழத்தால் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தது போன்ற இதமான குளிர்ச்சி. இதய வலியைப் போக்கும் இதமான காற்று. வண்டி ஏரியை ஒட்டி வந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.

சிறிய தீவை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் ஏரி. அகன்று குறுகி முட்டை போன்றிருந்தது. சூரிய கதிர்களால் தண்ணீர் வெள்ளியைப்போல் மின்னிக்கொண்டிருந்தது. நீரைச் சுற்றி பசும்புல் தரை. இந்த இயற்கையின் அழகே அனைவரையும் இழுத்தது.அவன் உடலில், கண்ணில் இருந்த எரிச்சல் எங்கு போனதோ தெரியவில்லை. கைக்குழந்தையை வீட்டில் விட்டு வேலைக்குச் சென்ற தாய் வேலையை முடித்துவிட்டு குழந்தையை காண ஓடிவரும் அன்பைப் போன்று இந்த குளுமையின் இதத்திற்காகவே ஓடிவந்தான்.

வாழ்க்கையை ஓட்டுவதற்காக பிழைப்பை தேடித்தான் இந்த மலைக்கு வந்தான். குளுமையில் தங்கிப் பழகியதால் வெய்யிலை அவனால் தாங்க முடியவில்லை. சொந்த ஊரில் ஒருமணி நேரம்கூட தங்க மனம் வருவதில்லை. தவிர்க்க முடியாமல் தங்க வேண்டி வந்தால் வெய்யிலை நொந்துகொண்டே இருப்பான்.

பஸ் ஒரு குலுக்கு குலுக்கி நின்றது. புதிய பஸ் நிலையம். “பஸ் நிலையம் இங்கே… கழிப்பிடம் எங்கே?”சார்லஸ் எழுதி வைத்த போர்டு அனைவரையும் வரவேற்றது. உல்லாசபுரியின் பிரச்சினை என்ன என்பதை அது காட்டிக்கொண்டிருந்தது. “ஆம்… இவ்வளவு பேர் வர்றாங்க… கக்கூஸ் இல்லனா எப்படி…” அருகில் வந்தவருடன் சொல்லிக் கொண்டே முருகேசன் நடந்தான்.

2


அத்தியாயம்     2


குளிர்ந்த பூமியை சூடேற்ற சூரியன் தன் வேலையை துவக்கி இருந்தான். நாவல் மரத்தில் பச்சைக் காய்களும், கருஞ்சிவப்பு பழங்களும் கொத்துக்கொத்தாக காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. மைனாவும், அண்டங்காக்கையும் பழங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அண்டங்காக்காய் தன்னுடைய அடித்தொண்டையில் கா… கா… ஒலி எழுப்பி தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டது. நீண்ட வாலும், கருஞ்சிவப்பு பறவையான செம்பூத்து பறவை பறந்து வந்து மரக்கிளையில் அமர்ந்தது. பச்சை நிற தொட்டில் குருவி இரையுடன் நாவல் மரக் கிளைப் பொந்தில் நுழைந்தது.உன்னி முள் புதரில் கொண்டலாத்தி பறவை தன் ஜோடியை அழைக்க அழைப்பு ஒலி எழுப்பி கிளைவிட்டு கிளை தாவியது.

நாவல் மரத்தில் பழங்கள் பழுத்திருந்தாலும், தனக்குப் பிடித்த புழு, பூச்சிகளை வேட்டையாட மரங்கொத்திப் பறவை மரப்பட்டையை தட்டிக்கொண்டிருந்தது. தண்ணீர் காய் மரத்துப் பூக்கள் வெடித்து சிவப்பாக மரம் முழுவதும் இருந்தன. அதன் பூ மொட்டுகளில் இருந்த நீரை பீச்சுக்குழல்போல் பீச்சி ராமு விளையாடிக்கொண்டிருந்தான்.

வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கும் கூம்பு மரங்களில் இருந்து வியர்வைத் துளிகள் சிந்திக் கொண்டிருந்தன. அதன் அடிநிலம் நீர்த்துளிகள் பட்டு மழை பெய்த நிலமாகக் காணப்பட்டது.

கன்றுக்குட்டி உயரத்திற்கு வளர்ந்திருக்கும் அல்சேஷன் நாயின் கொடூரமான குரல் விளையாடிக் கொண்டிருக்கும் ராமுவை பயமுற வைத்தது.

மொட்டைக் கரடின் சரிவுகளில் பாறை துருத்திக்கொண்டிருந்தது. கருத்துப்போய் இருக்கும் இப்பாறையில் வெள்ளை எழுத்துகளில் பைபிளின் கருத்துகள், ஏசுபிரானின் போதனைகள்.

“என்ன முருகேசா… கல்லறையை அப்படி பார்த்துகொண்டே இருக்க…” சார்லஸ் கேட்டான்.

“இதைப் பார்த்தால் இருநூறு வருசத்துக்கு முன்னாடியே ஆங்கிலேயர்கள் இங்கு வந்திருப்பாங்க போலத் தெரியுது.”

“ஆமாம்… நிலப்பகுதியில் வெய்யில் தாங்காமல் மலைக்கு வந்திட்டாங்க.”“அப்படினா காப்பித் தோட்டத்தை இவங்கதான் ஆரம்பிச்சிருப்பாங்க…”

“காப்பி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற சமயத்தில், காப்பி பயிரிடும் ஆங்கிலேயருக்கு அவங்க அரசாங்கம் நிலம் கொடுத்து உதவி செய்ததாம். அப்படித்தான் காப்பித் தோட்டம் வந்தது… அவங்க நம்ம நாட்டை விட்டு போகும்போதுதான் நம்ம முதலாளிங்க இந்தத் தோட்டத்தையெல்லாம் வாங்கிக் கிட்டாங்க…”

“உங்க குடும்பம் எல்லாம் அவர்கள் காலத்தில் தான் மலைக்கு வந்தீங்களா?…”“காப்பித் தோட்டம் அமைக்க, கூலி வேலை செய்ய ஆட்கள் இங்கு கிடைக்கல… அதனால் நிலப்பகுதியில் இருந்து இங்கு வந்து சேர்ந்தாங்க… எங்க தாத்தா சின்னபையனா இருக்கும்போதே இங்கு வந்தோமாம். நாங்க வர்றதுக்கு முன்னாடியே வெள்ளக்காரங்களுக்கு வேலை செய்ய ஏற்கனவே பல குடும்பம் இங்கு வந்திருச்சாம்.”“நிலப்பகுதியில் ஒழுங்கா வேலை கிடைக்கல… அப்புறம் வேலை கிடைக்கற பக்கம் தானே போவனும்…”

“அதுமட்டுமல்ல… வெள்ளக்காரன் சாதி வித்தியாசம் பார்க்க மாட்டான்… நிலப்பகுதியில் சாதிக் கொடுமை தாங்காமல் துரைமார்கிட்ட வேலைக்கு வந்திட்டாங்க…”

“அதனால்தான் இங்குசாதி வித்தியாசமே இல்லையா?” “ஆமாம்…” துரைமார்களிடம் விசுவாசமாக இருந்தவர்களுக்கு அவர்கள் நாட்டை விட்டுப் போகும்போது பணமும், சிறு உதவியும் செய்துட்டு போனாங்க. சரி நான் சர்ச்சுக்கு போறேன். அப்புறம் பேசலாம்…”

3


அத்தியாயம்     3


இறக்கமான அந்த வீதியில் எதிர் எதிரான வீடுகள் இருபுறமும் இருந்தன. கிழிந்த சீலையாட்டம் உடைந்த வீதி. விறகுக் கட்டைகளைப் போட்டு உடைத்ததால் ஏற்பட்ட பள்ளங்களே அவைகள். வீட்டின் சுவர்களில் விறகு கட்டுகள் காவல் காத்து நின்றன. காலைப் பொழுதிற்கான உயிரோட்டம், பன்றிகள் சாக்கடையில் தலையை விட்டுக் கொண்டிருந்தன. கோழி தன் குஞ்சுகளுக்கு இரையைக் கிளறி விட்டு அன்பாக அழைத்தது. சேவல்தன் ஜோடியை சுற்றிச் சுற்றி வந்தது.ஞாயிற்றுக்கிழமை காலை… வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற அவதி யாரிடமும் இல்லை. மற்ற வேலைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம்… எழுந்திருக்க மனம் இல்லாமல் உருண்டுஉருண்டு படுத்திருக்கும் கூலித் தொழிலாளிகள் நிறைந்த பகுதி.

ஒருவார துணிகளை துவைக்க வேண்டும். வீட்டை சாணம் போட்டு மொழுக வேண்டும். உட்கார கூட இன்றைக்கு நேரம் கிடைக்காது. மேரி முனகிக்கொண்டே வேலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் கெட்ட வார்த்தைகள். “ஏண்டி… என்ன சத்தம் வருது…” உருண்டு படுத்துக்கொண்டே முருகேசன் கேட்டான்.

“குழாயில் தண்ணீர் பிடிக்கிற சண்டையா இருக்கும்.”“குழாய் இருக்கிற பக்கத்திலிருந்து சத்தம் வரலை… வெளியே போய்ப் பார்…”

“கடைசி வீட்டில் குடியிருக்கும் சிலோன் ராமசாமிக்கும், கந்தசாமி அண்ணனுக்கும் சண்டை…”புதுநாயை பார்த்துக் கடித்துக் குதறத் துடிக்கும் தெருநாயின் சீற்றம் தெரிந்தது. வீட்டின் வாசலிலிருந்து வேடிக்கை பார்ப்பவரை தலை குனிய வைக்கும் வார்த்தைகள். எப்போது வேண்டுமானாலும் அடிதடி சண்டையாக மாறும் ஆக்ரோசம். கந்தசாமியும், ராமசாமியும் கோதாவில் இருந்தாhர்கள்.“போடா நன்றி கெட்டவனே… உனக்கு நான் வேலை செய்யற எஸ்டேட்டில் வேலை வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஏழு வருசம் குடியிருக்க வீடும் கொடுத்தேண்டா” செய்த உதவியை கந்தசாமி சொல்லிக் காட்டினான்.

“சும்மா வா வீடு கொடுத்த… வாடகை வாங்கலையா?” ராமசாமி பதிலுக்கு பேசினான்.

“ஆமாம்… மாசம் இரண்டாயிரம்… மூவாயிரம் வாடகை தர்ற… பெரிசா வாடகை தர்றதை பேசறான்…”

“இந்த ஓட்டை வீட்டுக்கு இன்னும் எவ்வளவு கொடுக்கறது… வருசா வருசம் வாடகை கூட்டித் தானே கொடுக்கறேன்…”

“ஓட்டை வீட்டில் உன்னை யாருடா இருக்கச் சொன்னது. ஒண்டக் குடிசை இல்லை… சவடால் பேசறே…” தன்னுடைய வீட்டை கேவலமாக பேசினதால் கந்தசாமியால் தாங்க முடியவில்லை. கோபத்தால் பல்லைக் கடித்தான்.“பாவம்… நீ உழைச்சு சம்பாரிச்ச வீடு… வெள்ளைக்காரனுக்கு எடுபிடி வேலை செய்ததில் கிடைத்த பிச்சை தானே…” ராமசாமி பதிலுக்கு கேட்டான்.

“என்னடா சொன்ன…” ராமசாமி கேவலமாக சொன்னதைத் தாங்க முடியாமல் விறகுக் கட்டையை தூக்கிக்கொண்டு ராமசாமியை அடிக்க ஓடினான்.

“தம்பி இரு தம்பி” பக்கத்து வீட்டு பெரியவர் கந்தசாமியை தடுத்தார்.

பக்கத்தில் கிடந்த கல்லை கையில் எடுத்துக்கொண்டு ராமசாமி நின்றான். முத்தாயி அவனை தடுத்துக்கொண்டிருந்தாள்.“நீங்களே சொல்லுங்க… வீட்டைக் காலி பண்ணச் சொல்லி மூனுமாசம் ஆவுது… இன்னும் காலி செய்யலனா எப்படி…?”“அவன் வீட்டை நான் என்ன செய்யறேன் மாமா…? வீடு கிடைச்சதும் காலி செய்துடறேன்…”“எப்ப காலி செய்யறதாம்…” கோபம் சற்று தணிந்து இருந்தது.“வீடு கிடைச்சாத்தான் காலி செய்யமுடியும்…”ராமசாமியின் பதில் கந்தசாமிக்கு ஒத்துவரவில்லை. மீண்டும் கோபம் அவனுக்கு ஏறியது.” “வீடு கிடைக்கலைனா காலி செய்யமாட்டாயாடா?”

“ஆமாண்டா… காலி செய்யமுடியாது… உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்…” பல் தூக்கிய ராமசாமியின் வாயிலிருந்து வார்த்தைகள் சிதறி போய் வெளிவந்தன.

ராமசாமி சவால் விட்டதை அவனால் தாங்க முடியவில்லை. ஆத்திரத்தில் ராமசாமியின் வீட்டினுள் புகுந்து பாத்திரத்தை வெளியே எடுத்து எரிந்தான்.அமைதியாக இருந்த முத்தாயி ஆத்திரம் அடைந்தாள். “டே… ஏண்டா இப்படி தலையெடுப்பில் அழியற.” அண்ணா… அண்ணா… என வார்த்தைக்கு வார்த்தை பேசறவள் வாடா… போடா… என மரியாதை இல்லாமல் பேசினாள்.

தன்னுடைய புருசனை மரியாதையில்லாமல் பேசியதை வசந்தாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சீலையைத் தூக்கி செருகிக்கொண்டு ஓடிவந்தாள். “என்னடி சொன்ன… பொறம்போக்கு நாயே…”“எதுக்குடி உன் புருசன் பாத்திரத்தை தூக்கி எறிஞ்சான்”.“ஆமாண்டி… வீட்டை காலி செய்யச் சொன்னா காலி செய்ய வேண்டியது தானே… காலி செய்யலைனா எல்லாம்தான் செய்வோம்” ஏழு வருசமாக கொஞ்சி குலாவியவர்கள் கோதாவில் இறங்கினார்கள்.“ஏண்டி… இப்படி சண்டைக்கு லங்குலங்குனு ஆடற…” முத்தாயி பழித்துக் காட்டினாள்.

“ஏய்… வாயை அளந்து பேசு…”, சண்டைக்குப் பெயர்போனவள், அவளிடம் வாயைக்கொடுத்து யாரும் மீண்டது கிடையாது… கெட்ட வார்த்தையை கூச்சமில்லாமல் கொட்டிக்கொண்டே இருப்பாள்.முத்தாயினால் பதில் கொடுக்க முடியவில்லை” போடீ நொண்டியை வைச்சிருக்கிறவளே…” ஒரு போடு போட்டாள்.

“என்னடி சொன்ன… நாதேரி… உன்னாட்டமா மேஸ்திரியோட பல்லை இளிச்சிக் கிட்டு இருக்கேன்…” பதிலுக்கு ஒரு போடு.ஏழு வருசமாக பழகியவர்கள் ஒரேநொடியில் தங்களை கொச்சைப்படுத்திக் கொண்டார்கள். சண்டை என்று ஒன்று வந்தபிறகு அதில் ஈவிரக்கம் வைத்துப் பார்க்க முடியுமா? ஓன்றும் இல்லாததற்கு கண்ணும் காதும் வைத்துப் பேசுவதுதானே வழக்கம்.

அடிதடியும், மயிர்பிடி சண்டையுமாக மாறும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.பரமசிவமும், பெரியவரும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

“தம்பி நீ செஞ்சது சரியில்லை. வீட்டில புகுந்து பாத்திரத்தைத் தூக்கி எரிஞ்சது தப்பு…” பெரியவர் பேசினார்.ராமசாமிக்கு தெம்பு ஏற்பட்டது… “என்னதான் சொந்த வீடு வைச்சிருந்தாலும் இப்படி தலையெடுப்பா இருக்கக் கூடாது…”“வீடு இல்லாதவனுக்குத் தானே நீ சப்போட் செய்வ…” பெரியவர் தன்மீது குற்றம் சொன்னதை தாங்காமல் கந்தசாமி பெரியவர் மீது கோபப்பட்டான்.

“என்னதான் வீடு இருந்தாலும் இப்படி அடாவடித்தனமாக நடக்கக்கூடாது…” தனக்கு வீடு இல்லாததை மறைமுகமாக சொன்னதை பெரியவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“வீட்டுக்காரன் உடனேவா காலி செய்யச் சொன்னான். எவ்வளவு நாளைக்குத்தான் பொறுத்துக் கொள்கிறது.” பரமசிவம் கந்தசாமிக்கு ஆதரவாக பேசினார்.

ராமசாமியின் கோபம் பரமசிவம் பக்கமும், கந்தசாமியின் கோபம் பெரியவர் மீதும் திரும்பியது.

சண்டை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ராமு “அம்மா சோறு போடு… பசிக்குது…” என அடம்பிடித்தான்.முத்தாயின் கோபம் திசைமாறியது… மயிரைப் பிடித்து ஆட்டுக்கல்லை ஆட்டுவதுபோல் சுற்றி முதுகில் குத்துவிட்டாள். “சரியனே! நீ பொறந்த நேரம் சரியில்லைடா… தரித்திரமே… சோறு வேண்டுமாம் சோறு…

உட்காரத்துக்கு இடமில்லை… செத்துத்தொலைய வேண்டியதுதானே…” இல்லாமையின் தாக்கம் அந்த பிஞ்சுவை தாக்கியது.“அவனை ஏம்மா அடிக்கிற…” பக்கத்தில் இருப்பவர்கள் தடுத்தனர்.

அவள் கோபம் தணிந்து பையனை கட்டிப்பிடித்து கதறினாள். அவளின் அழுகை பாக்கியத்தையும், அனைவரையும் அமைதிப்படுத்தியது.

4


அத்தியாயம்     4


“என்ன முருகேசா… ஒரு மாதிரியா இருக்க…” டீ போட்டுக்கொண்டே அலி கேட்டான்.“ஒன்னுமில்ல… என் சின்னமச்சான் கொஞ்சம் அசிங்கமா திட்டிட்டான். இன்னுமேல அங்கு இருக்கிறது லாயக்கில்லை”…“ஆமாம்பா… மாமனாரு வீட்டில தங்கியிருந்தா மரியாதை கொரையும்தானே…”மாமனாரு வீடு கொஞ்சம் பெரிது. கல்யாணம் ஆனதிலிருந்து மூனுவருசமாக மாமனாரு வீட்டிலே தங்கிட்டான்… பெரிய மச்சான் வெளி ஊரிலே வேலையில் இருக்கான். அங்கேயே குடும்பத்தோட தங்கிட்டான். சின்னவன் படிச்சிக்கிட்டு இருக்கான். மாமனாரு குடும்பத்துக்கு ஒத்தாசையாகி இருக்க மகளை தனியே அனுப்பாமல் வைச்சிருந்தாங்க…“எங்க மாமனாரு, மாமியார் எதுவும் சொல்லல”… அவன் அசிங்கமா சொன்னபிறகு அங்கு தங்கியிருக்கிறது நல்லதல்ல… ஏதாவது வீடு இருந்தா சொல் அலி”.“அட… எவன்டா நீ ஒன்னு… வீடு என்ன சும்மாவா கிடக்குது… நானே நாயா பேயா அலையறேன்”… ராமசாமி வீடு கிடைக்காத விரக்தியில் பேசினான்.“உனக்கு என்ன பிரச்சினை. நீயும், கந்தசாமியும் ரொம்ப நெருக்கமாச்சே…” சார்லஸ் கேட்டான்.“எல்லாம் பண ஆசை… வீட்டக் காலி பண்ணச் சொல்லி போனவாரம் சாமான்களை எல்லாம் வெளியே எரிஞ்சிட்டான். பத்துநாளில் வீட்டைக் காலி செய்யறேனு வீராப்பா பேசிட்டேன். என்ன செய்யறதுனே தெரியலே…”“முருகேசா… உன் பொழப்புகூட பராவாயில்லை. நீ அரசு பண்ணையில் வேலை செய்யற. இரண்டு பேருதான்” என்னை பாரு நாலு பிள்ளைகள். எவனாச்சும் புதுசா வீடு கட்டினா வேலை கிடைக்குது. ஏதோ கதவு, ஜன்னல் ரிப்பேர் வேலை மாசத்துக்கு ஒன்னோ இரண்டோ கிடைக்குது. வீட்டு வாடகையை ஒழுங்கா கொடுக்க முடியல. வீட்டைக் காலி செய்ய சொல்றாங்க…” சார்லஸ் தன் பிரச்சினையை கூறினான்.

“எனக்கும் அதே பிரச்சனைதான். கடைக்கு வாடகை தரனும். வீட்டுக்கு வாடகை தரனும். இப்ப வீட்டை கூட பிடிச்சிடலாம். ஆனால் அட்வான்ஸை நினைச்சாத்தான் பயமா இருக்கு. பத்தாயிரம், பதினைந்தாயிரமுனு கேட்கறான். அதுக்கு எங்க போறது”. அலி புலம்பினான்.“நாம என்ன பாங்க்கிலா வேலை செய்யறோம். இவ்வளவு அட்வான்ஸ் கொடுக்கறதுக்கு”… முருகேசன் கொதித்தான்.“பாங்கில வேலை செய்தா மட்டும் கொடுக்க முடியுமா: ஏதோ மூனுமாத அட்வான்ஸ், நாலுமாத நாலுமாத அட்வான்ஸினா பரவாயில்லை. வாடகை இல்லாமல் அட்வான்ஸ்க்கு வட்டி என்னாச்சு”… சார்லஸ் கேட்டான்.

“நமக்குது ஒரு சொந்த வீடு இல்லாமல் எவ்வளவு பிரச்சினை பாரு. ஏதாவது ஒரு இடத்தில குடிசை போட்டுட்டா பரவாயில்லை. ஏதாவது புறம்போக்கு இடம் இருந்த பாகு முருகேசா.” ராமசாமி சொன்னான்.“அதோ பெரிசு போவுது. அவரை கேட்டா தெரியும்…”“மாமா… இங்க வாங்க…” ராமசாமி கூப்பிட்டான். அலி டீ போட்டுக்கொடுத்தான்.

“மாமா… நாங்க.. நீங்க எல்லாம் வீடு இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஏதாவது புறம்போக்கு நிலம் இருந்தா சொல்லு.. குடிசை போடுவோம்… ராமசாமி பெரியவரிடம் கேட்டான்.”

பெரியவர் சொல்லப் போவதை அனைவரும் ஆவலோடு பார்த்தார்கள்.“புறம்போக்கு நிலமா..? அந்த கரடு சும்மாதானே கிடக்கு… எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதலா அது சும்மாதான் கிடக்கு…”

“சரி நாளை காலையில் இறங்கிட வேண்டியதுதான்”. ராமசாமி கூறினான்.பெரியவருக்கும் சந்தோசமாக இருந்தது.

5


அத்தியாயம்     5


சந்தைக் கூட்டத்தின் ஆரவாரம். அந்த கரடுப் பகுதியிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. புகையின் இடையே ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கத்தியுடன் இருந்தனர். அங்கு இருந்த புதர் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.காலம் காலமாக புதர் மண்டிக்கிடந்த இடம்… கேட்க நாதியற்று கிடந்த நிலம்… இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது யாருக்கும் தெரியாது இருந்த நிலத்தை இது எனக்கு சொந்தம்… இது என்னுடையது என சத்தம் போட்டு பிரித்துக்கொண்டிருந்தனர்.இந்த மூன்று நாட்களில்தான் எவ்வளவு மாற்றம்.

தகவல் கிடைக்கக்கிடைக்க வேலைக்கு செல்லாமல் நிலத்தை பிடிக்க வந்தனர்.இரவோடு இரவாக மரக்கொம்புகள் வனப்பகுதியில் வெட்டிக்கொண்டு வந்திருந்தனர். தென்னங்கீற்றுகள் அங்கே கட்டுகளாகக் கிடந்தன.“மேரி அந்தக் கீற்றை எடு”… எலும்புக்கூடாக இருக்கும் கூரையின்மீது முருகேசன் இருந்தான். தென்னங்கீற்றை வேய்ந்துகொண்டிருந்தான். உதவிக்கு சின்னமச்சானும் உடன் இருந்தான். அவன் மீது இருந்த கோபம் மறைந்துவிட்டது.சார்லஸ், அலி, பெரியவர், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் கூரை வேய்ந்துகொண்டிருந்தனர். இரவோடுஇரவாக, கொம்புகள் வெட்டிவந்து, தென்னங்கீற்று வாங்கிவந்து குடிசைகள் போட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் இறங்கி இருந்தது. சொந்த வீடு கட்டுவதிலே ஏகப்பட்ட மகிழ்ச்சி. கடன் வாங்கி குடிசை போட்டுக்கொண்டிருந்தாலும் சொந்த வீடு கட்டுவதில்தான் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.

“முருகேசா… அங்கு பாரு… சுந்தரம் வர்றான்”… பக்கத்து கூரைமீது இருந்துகொண்டு சார்லஸ் சொன்னான்.“அவன் எதுக்கு இங்கு வர்றான்…”

“ஏதாவது குட்டிக்கலாட்டா செஞ்சாலும் செய்வான்…”வெள்ளை வேண்டியும், கழுத்துல துண்டுமாக வந்தான்.அவனுடன் மணி, கோபால் இருவரும் வந்தார்கள். கூரைமீது இருக்கும் முருகேசனையும் மற்றவர்களையும் அலட்சியமாக பார்த்துக்கொண்டே மேல்நோக்கி நடந்தார்கள்.“ஏ கோபால் இங்க வா…” சுந்தரம் கூப்பிட்டான். கையில் இருந்த காகிதத்தை விரித்துக் காட்டினான். “இந்த வரைபடத்தைப் பார்… இதுதான் புறம்போக்கு நிலம்… நீங்க புடிக்சிருக்கிற நிலம் புறம்போக்கு நிலம் இல்லை… இதுக்கு மேலே உள்ள ஐஞ்சு ஏக்கர் நிலம்தான் புறம்போக்கு நிலம்”…சுந்தரம் சொல்வதைக் கேட்டு அங்கிருப்பவர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். சுந்தரம் என்ன பேசுகிறான் என்பதிலே அனைவரின் கவனமும் இருந்தது.

“இதோ பாருங்க… அந்த இடத்தில் நான் அளந்து கல்போட்டு கொடுக்கிறேன். முதலமைச்சரைப் பார்த்து உங்களுக்கு பட்டா வாங்கித் தருகிறேன். என்ன சொல்றீங்க”…

சுற்றி நின்றவர்கள் “சரி” என சத்தமாக கூறினார்கள். எப்படியோ குடியிருக்க ஒரு இடம் வேண்டும்.“ஒவ்வொருவருக்கும் அளந்து கல்போட்டு கொடுக்க ஆயிரம் ரூபா கொடுக்கனும்…” மணி ஆவேசமாக கூறினான்.முகத்தில் சந்தோசம் இல்லாமல் சரி என்றார்கள். “நீங்க இதுவரை வெட்டியதெல்லாம் வீணாப்போய்ச்சு. ஆரம்பத்திலே என்னைப் பார்த்திருந்தா சுலபமா முடிச்சிருப்பேன்… சரி வாங்க…” கையில் அளப்பதற்கு ‘டேப்புடன்’ நடந்தான். அவன் பின்னால் கூட்டம் நகர்ந்தது.“இந்த சார்லஸ் பேச்சைக் கேட்டு வெட்டியதெல்லாம் வீணா போச்சு”… சார்லஸ்சை பார்த்து திட்டிக்கொண்டே கோபால் நடந்தான்.சார்லஸ் முகம் சிவந்தது. ஆனால் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

“நாம் இடம் பார்த்து வெட்ட வந்த பிறகுதானே இவனுங்க வந்தாங்க. அதுக்கு முன்னாடி எங்க போனாங்க… சொல்லு மாப்பிள்ளை”… பெரிசு சொன்னது.

“இவனுங்களுக்கு இதே பொழப்புத்தான்…” ராமசாமி பதில் சொன்னான்.“ஆளுக்கு இரண்டு சென்டு நிலம்தான்… இந்த இடத்தில் ஒரு கல் வை… அந்த இடத்தில் ஒரு கல் வை. யாரும் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. நிலத்தை முதலில் பிரிப்போம். அப்புறமா ஒவ்வொருவருக்கும் நிலத்தைக் காட்டுவோம். “சுந்தரம் பேசிக்கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்தான். ஈ மொய்ப்பதுபோல கூட்டம் அவனைச் சுற்றி நின்றன.முருகேசனிடம் இருப்பவர்கள் தவித்து விடுபட்டனர். “அதுமட்டும் எப்படி புறம்போக்கு நிலமாக இருக்கும்” ஆறுதலாக ராஜேந்திரன் பேசினான்.“என்ன ஆனாலும் பரவாவயில்லை. இங்கேயே குடிசை போடுவோம்”. அலி துணிச்சலாக பேசினான்.“அண்ணே டவுனுக்கு போலீஸ் வந்திருக்கண்ணே…” அரக்க பறக்க ஓடிவந்து சொன்னான் மனோகரன்.“போலீஸ் வந்திருக்கா?…”“ஆமாம்… ஒரு வண்டி நிறைய வந்திருக்காங்க… குடிசை போடறவங்களை புடிச்சுக்கிட்டு போறதா டவுனில் பேசிக்கிறாங்க…

“அங்கு இருப்பவர்களுக்கு புளியைக் கரைத்தது. சுந்தரத்தை சுற்றி நின்ற கூட்டம் கரைந்தது. சுந்தரமும் அவனுடன் இருப்பவர்கள் இடத்தைவிட்டு நகர்ந்தது யாருக்கும் தெரியவில்லை.

போலீஸ் வந்திருக்கும் சந்தோசத்தில் கந்தசாமியும் வீடு வாடகைக்கு விட்டவர்கள் சிலரும் வேடிக்கை பார்க்க அங்கு வந்தனர்.“கந்தசாமி… இவனுங்களுக்கு இனிமேல் வீடு விடக்கூடாது. தெருவுலத்தான் நிக்க வைக்கணும்.” பெருமாள் பேசினான்.“ஆமாம்… ராஜேந்திரனுக்கு வீடு விடறேனு சொல்லித்தான் ராமசாமிக்கிட்ட சண்டைக்கு போனேன். ஆனால் அவனைப்பாரு கொட்டாய் போட்டுக்கிட்டு இருக்கான். கவர்மெண்ட் நிலத்தில் குடிசை போட்டால் சும்மா விடுவானா?”…“போலீஸ்காரன் புடிச்சிக்கிட்டு போவட்டும்”

“இப்ப என்ன முருகேசா செய்யலாம்…” ராமசாமி கேட்டான்.

“எல்லாரும் ஓடி போய்ட்டான்கள்” கட்டின வீட்டை விட்டு எப்படி போறது”.

“நாம போகவேண்டாம்… போலீஸ் வரட்டும்… எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை.. அதனால் இங்கு குடிசை போட்டோம் என சொல்றது”.. பெரிசு தைரியம் ஊட்டியது.

“ஆமாம் என்ன வந்தாலும் பார்க்கலாம்…” இராஜேந்திரன் தைரியமாகப் பேசினான்.

போலீஸ் வரவே இல்லை. முருகேசன், சார்லஸ், அலி, ராஜேந்திரன் இவர்கள் போட்ட குடிசையின் பின்பகுதியில் நாள்தோறும் புதிய குடிசைகள் காளான் முளைப்பதுபோல் முளைத்துக்கொண்டே இருந்தது.

6


அத்தியாயம்     6


“என்ன அண்ணா வாங்கி வர்றீங்க…” நெருப்புக்குச்சியில் காதை குடைந்தவாறே ராமசாமியை பார்த்துக்கேட்டான்.“அரிசி வாங்கி வர்றேன் முருகேசா…”“எங்க காட்டு பார்க்கலாம்…”

குண்டுகுண்டாக பழுப்பேறிப்போய் இருந்தது. அதன் வாசனை, நிறம் அனைத்தையும் பார்த்தவுடனேயே இது எங்கு கிடைக்கும் என்பது தெரியும். “ரேசனில் வாங்கிக்கிட்டு வர்றீங்களா?”

“எந்த ரேசனில் போடறான். கடையில்தான் வாங்கி வர்றேன். “தலையை சொரிந்துகொண்டே ராமசாமி சொன்னான். “ரேசன் அரிசிமாதிரி தெரியுது.” அரிசியை எடுத்து முகர்ந்து பார்த்தான் முருகேசன்.“ரேசன் அரிசிதான். எல்லாம் கடைக்காரனுக்கு விற்பனை செஞ்சிருக்கான். நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டேன். ரேசன் கார்டு இல்லாமல் தரமாட்டேன் எனச் சொல்லிட்டான்.”

“கடைக்கு மட்டும் எப்படி கொடுக்கறான்…” பெரியவர் கேட்டுக்கொண்டே வந்தார்.“கடைக்குப் போட்டால் மொத்தமாக பணம் கிடைக்குது… நமக்குக் கொடுத்தால் மொத்தமா கிடைக்குமா?” ராமசாமியே பதில் சொன்னான்.

“உனக்குத்தான் மாணிக்கம் வாத்தியார் கார்டு கொடுப்பாரே…” அது என்னாச்சு…” முருகேசன் கேட்டான்.“இப்ப விற்கற விலைவாசியில் யாரும் கார்டு கொடுக்கிறது இல்லை. அரிசியை இவங்க இட்லிப்போட வாங்கிக்கிறாங்கோ…”“ரேசன் கார்டு இல்லாததால், இலவசமாக கிடைக்கிற ரேசன் அரிசியையே நாம் அதிகம் விலை கொடுத்து வாங்றோம் பார்த்தியா?” பெரிசு ராமசாமியிடம் கவலையாகக் கேட்டது.“முன்புதான் வாடகை வீட்டில் இருந்தோம்… கார்டு வாங்க முடியல… இப்பவாச்சும் கேட்டுப் பார்க்கிறது…”

“ரேசன் கார்டு நான் கேட்டுப் பார்த்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தர்றேங்கறான்.”“ஆயிரம் ரூபாயா…? நாம் எங்கு போறது.” ராமசாமி ஆச்சரியமாக கேட்டான்.

“லஞ்சம் மறைமுகமாக கேட்ட காலம்போய், நேரடியாக கொடுத்தால்தான் செய்வேன் என்கிற நிலையல்லவா வந்திருச்சு…” பெரியவர் கோபத்துடன் சொன்னார்.

“எத்தனை நாளைக்கு கார்டுக்காக அடுத்தவங்களை கெஞ்சறது. ரேசன் கடைக்காரனை காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கமாட்டேங்கறான். ரேசன் கார்டு வாங்கறதுக்கு ஏதாவது யோசனை செய்தால் பரவாயில்லை…” ராமசாமி பேசிக்கொண்டிருந்தான்.

இவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நாவல் மரத்தடியில் கூட்டம் கூடியது.“ரேசன் கார்டுக்கு என்ன செய்யலாம்” பெரியவர் கேட்டார்.“ரேசன் கார்டு வேண்டி எல்லாரும் மகஜர் எழுதிக் கொடுப்போம்” முருகேசன் யோசனை கூறினான்.“எழுதிக் கொடுக்கலாம்… நாம் குடியிருக்கும் இடத்திற்கு ஒரு பெயர் வேண்டாமா?…” ராஜேந்திரன் கேட்டான்.

“ஆமாம்… அண்ணன் சொல்றது சரி… இந்த இடத்திற்கு சரியான பெயர் இல்லாததால் லட்டர்கூட ஒழுங்கா வந்து சேரதில்லை…” கல்லூரியில் படிக்கும் சுரேஷ் கூறினான்.

“எனக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரு பெயர் வைச்சா நல்லாயிருக்கும்னு மனசுல தோனுச்சி… அதுக்கான நேரமும், காலமும் வரவேண்டாமா.” பெரியவர் ஆமோதித்தார்.

“என்ன பெயர் வைக்கலாம்… முருகேசன் கேட்டான் “நம்ம முதலமைச்சர் பெயர் வைக்கலாமா?”… கோபால் கேட்டான்.“யோவ்… சும்மா இரு… அதெல்லாம் வேண்டாம்…” ராஜேந்திரன் முறைத்தான்.“இந்த அரசியல் தலைவர் பெயர் எல்லாம் வேண்டாம்… இங்க பல அரசியல் கட்சியை ஆதரிப்பவர்கள் இருக்காங்கா… அதனால் வேண்டாம்… ஏதாவது சாமி பெயர் வைக்கலாமே…” பெரியவர் ஆலோசனை கூறினான்.

“இங்க ஒரு சாமி கும்பிடறவங்களா இருக்கோம்.” கோபமாக பெரியவரைப் பார்த்து ராமசாமி கேட்டான்.“ஆமாம் அரசியல் தலைவர் பெயரோ, சாமி பெயரோ வேண்டாம். இது நம் ஒற்றுமைக்கே ஆபத்தா போய் முடிஞ்சுடும்… வேறு ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்க…” முருகேசன் தலையை சொரிந்து கொண்டே கேட்டான்.

“ஏன் பாரதி பெயர் வைக்கக்கூடாது. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த சகஜத்தினை அழித்திடுவோம் எனப் பாடியவன் அல்லவா?…” அலி கூறினான்.

“பாரதியா?… அது யாராடா…” சந்திரன் கேட்டான். “நீ சும்மா இருடா… உனக்கு ரஜினி, கமல் இப்படித்தான் தெரியும்…” முருகேசன் கோபமாக பேசினான்.

“ஆமாம்பா… பாரதி நகர்னு பெயர் வைப்போம்…” பெரியவர் சத்தமாக கூறினார். அனைவரின் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி…“சரி… நாளைக்கு வீட்டுக்கு ஒருவர் மகஜருடன் தாசில்தார் ஆபீஸிற்குப் போவோம்…” முருகேசன் ஒரு கட்டளை பிறப்பித்தவாறு எழுந்து நடந்தான்.

7


அத்தியாயம் 7


வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கூடியிருந்தனர். குடும்ப அட்டை வழங்கும் அதிகாரி வந்தவுடன் அவர் அறைக்குள் அனைவரும் சென்றனர்.“இவ்வளவு பேரும் ஒட்டு மொத்தமாக வந்தால் எப்படி பேசுவது… யாராவது இரண்டு பேர் வாங்க” என்றார் அதிகாரி.எல்லோரும் வெளியே நின்றார்கள். முருகேசன், சார்லஸ், அலி, பெரியவர் ஆகியோர் மட்டும் உள்ளே இருந்தனர்.

“இப்ப கார்டு கொடுக்கமுடியாது… அதுவும் இவ்வளவு பேருக்குக் கொடுக்கமுடியாது… ஏதோ ஒன்று… இரண்டுனா கொடுக்கலாம்…”“சார் நீங்க பார்த்து கொடுக்கலாம் சார்… எங்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் நாங்க ரொம்பவும் கஷ்டப்படுறோம். நாங்க வாங்கி வர்ற கூலியில், கடைகளில் வாங்கி சாப்பிட முடியுமா?” என்றான் முருகேசன்.

“ஐயா மனசு வச்சா எல்லோருக்கும் கிடைக்கும் சார்…” சார்லஸ் அடக்கத்துடன் கூறினான்.

அதிகாரி மௌனமாக தனக்குள் கணக்கு போட்டார். ஒரு அட்டைக்கு ஐநூறு ரூபா வைச்சிக்கிட்டாலும் ஐம்பதாயிரம் தேறும்.“சரி… இப்ப அடையாள அட்டை கொடுக்கறதுனா சிரமம் தான். அட்டைக்கு ஐநூறு ரூபா ஏற்பாடு செய்தால் கொடுத்துடலாம்.”“என்ன சார், ஐநூறு ரூபாயா?” முருகேசன் கேட்டான்.“உனக்கே தெரியும். அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு கொடுக்கிறோம். நீயே போன தடவை ஆயிரம் ரூபா தருகிறேன். பார்த்து கொடுனு சொன்னே இல்ல…”ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரியை சந்தித்தபோது அடையாள அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன். பார்த்து கொடுங்க சார் எனக் கேட்டது உண்மைதான். அப்போது ஐநூறு ரூபாய் கொடுத்தா தர்றேன், இல்லாட்டி இல்லை என அதிகாரி மறுத்துவிட்டார்.

ஆனால் இப்போது முருகேசன் மாறி இருந்தான். பாரதிநகர் பெயர் வைத்து ஒருநாள்தான் ஆகிறது. அதனுடைய வேகம் அனைவரிடமும் இருந்தது.

“நாங்கெல்லாம் ஏழைகள் சார்… எங்களால் அவ்வளவு கொடுக்கமுடியாது. நீங்க இரக்கப்பட்டு போட்டு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க…” பெரியவர் வாய்திறந்தார்.

“இப்ப யாருக்கும் கொடுக்கக்கூடாது என ஆணை இருக்கு. ஏதோ நீங்க கேட்கிறீங்கனு சிரமம் எடுத்து கொடுக்கலாம்னு பார்த்தா பணம் இல்லீங்கறீங்க…”

“ஏதோ ஐம்பதோ, நூறோ தர்றோம் சார்… ஏற்பாடு செய்யுங்க சார்…” அலி கெஞ்சினான்.“அதெல்லாம் முடியாதப்பா…”

“சார் பணம் கொடுத்தாத்தான் முடியுமா?…” முருகேசன் கோபமாக கேட்டான்.“என்னால் இவ்வளவு பேருக்கு கொடுக்கமுடியாது. நீங்க மாவட்ட அதிகாரியை வேண்டுமானால் பாருங்க”… இவனுங்க எங்க போய் மாவட்ட அதிகாரியை பார்க்கப் போறான்கள். நாலு தடவை இழுக்கடிச்சா வழிக்கு வர்றான்கள்… தனக்குள் சொல்லிக்கொண்டார்.

“என்ன சொல்றார் அதிகாரி” வெளியே இருந்த ராமசாமி கேட்டார்.“பணம் ஒரு அட்டைக்கு ஐநூறு கேட்கிறார்… கொடுக்கமுடியாது எனச் சொன்னதுக்கு தரமுடியாது என்கிறார்” முருகேசன் சொன்னான்.“ஒரு அட்டைக்கு ஐம்பது ரூபா தருகிறேன் எனக் கேட்டுப் பார்க்கவேண்டியதுதானே…” ஒரு பெரியம்மா சொன்னது.

“எல்லாம் சொல்லி பார்த்தாச்சு… முடியாது என்கிறார்” அலி சொன்னான்.“அப்ப என்ன செய்யலாம்…” ராமசாமி கேட்டான்.“மாவட்ட அதிகாரியை எல்லோரும் போய் பார்க்கலாம்” என்றான் முருகேசன்.“ஆமாம்… ஒருநாள் கெட்டது கெட்டுருச்சி… இப்பவே போகலாம்… புறப்படுங்க…” பெரியவர் கூறினார்.பஸ்ஸை விட்டு இறங்கிய கூட்டம் நேராக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குடும்ப அட்டை வழங்கும் அதிகாரி அறைக்குச் சென்றனர்.“ஐயா எங்களுக்கு குடும்ப அட்டை கிடையாது… குடும்ப அட்டை கொடுக்க சொல்லுங்க…” முருகேசன் சொன்னான்.“எவ்வளவு பேருக்கு இல்லை…”“இருநூறு பேருக்குமேல் கிடையாதுங்க… “சார்லஸ் சொன்னான்.“இருநூறு பேருக்கு இல்லையா!” அதிகாரி ஆச்சரியமாகக் கேட்டார்.

“இவ்வளவு நாளா ஏன் வாங்கல…” என்றார்.“எங்களுக்கு சொந்த வீடு கிடையாது… வாடகை வீட்டுல இருந்தோம்… அதனால் வாங்க முடியல…” என்றார் பெரியவர்.

“உங்க வட்டார அதிகாரி என்ன சொன்னார்”“இவ்வளவு பேருக்கு கொடுக்கமுடியாது… நீங்க கொடுக்கச் சொன்னா கொடுக்கிறேன் என்றார்…” முருகேசன் சொன்னான்.

“இவ்வளவு பேருக்கு கொடுக்கறதுனா கஷ்டம்தான்”… ம்… தனக்குள் யோசித்தார்.“பத்து வருசமா அட்டை கிடையாதுங்க… நீங்க பார்த்து கொடுங்கய்யா” சார்லஸ் கெஞ்சினான்.

“பணம் ஐநூறு கொடுத்தா எல்லோருக்கும் தர்றேன் என்கிறார் சார்… பணம் கொடுக்கமுடியாது எனச் சொன்னதால்தான் சார் உங்களை பார்க்கச் சொல்லிட்டார்” என்றார் அலி.

அதிகாரி உடனே தொலைபேசியில் பேசினார்.

“என்னப்பா நீங்க இருக்கறது புறம்போக்கு நிலமாமே?”ஆமாம் சார்…” அனைவரும் தலையாட்டினார்.“வீட்டுக்கு கதவு எண்ணும், வரிகட்டின ரசீதும் வேண்டும். அது இருந்தா விண்ணப்பம் கொடுங்கள்” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.“சார்… பெரிய மனசு செய்து போட்டு கொடுங்க சார்…” பெரியவர் கெஞ்சினார்.“வீட்டுக்கு கதவு எண் இல்லாமல் கொடுக்க கூடாதுங்க… கதவு எண் இருந்தாதான் கொடுக்கனும்… இது தான் சட்டம்…” என்றார் அதிகாரி முடிவாக…

8


அத்தியாயம்     8


இந்த இரண்டு வருடத்தில் இருநூறு குடிசைகளுக்குமேல் தோன்றிவிட்டன. குடிசையைச் சுற்றி காய்கறி தோட்டங்கள் போட்டிருந்தனர். ஆடுகளும், பன்றிகளும்கூட வளர்த்துக் கொண்டிருந்தனர்.

வீடு இருப்பவர்கள்கூட குடிசை போட்டிருந்தனர். புறம்போக்கு நிலம்தானே… பட்டா கிடைத்தால் ஒரு வீடு கிடைக்குமே என்ற ஆசை.ஓரே குடும்பத்தில் எத்தனை பேர் குடியிருக்க முடியும். மகன்கள் இங்கு வந்து குடிசை போட்டு குடியிருந்தனர்.இங்கு குடியிருப்பவர்கள், கரை வேஸ்டிக்காரர்களை மதிப்பது இல்லை. அதனால் கரைவேஸ்டிகளுக்கு இந்தப் பகுதி மக்களை கண்டாலே பிடிப்பதில்லை.இது பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான நிலம். இதில் குடிசை போட்டது தவறு. உடனே காலி செய்ய வேண்டும் என ஊர் சாட்டப்பட்டது.

“அண்ணா கேட்டாயா?” எல்லோரையும் காலி செய்யச் சொல்லி ஊர் சாட்டறாங்க…” என்றான் கந்தசாமி.“செய்யட்டும் எவ்வளவு திமிரா நடக்கறான்கள்… பதிலுக்கு பரமசிவம்.

“ஆமாம்… இது அரசாங்க சொத்தல்ல… சும்மா விடுவானா…”“இனிமேல் வீடு கெடைக்காமல் நம்ம காலில் வந்துதான் விழவேண்டும்…”

இங்கு குடியிருப்பவர்களால் ஓடைநீர் நாசமாகிறது. இதனால் ஏரித் தண்ணீர் பாழாகிறது. இதனால் தான் காலி செய்ய சொல்கிறோம் என அதிகாரிகள் கூறினார்கள்.

“இந்த இடத்தில் கல்லூரி கட்டப் போறாங்க… பழச்சாறு கம்பெனி வரப்போகுது…” அதற்காகத்தான் காலி செய்ய சொல்றாங்க என ஆளும் அரசியல் கட்சிக்காரர்கள் சொன்னார்கள்.

“ஏப்பா முருகேசா இதைக் கேட்டியா? இது பஞ்சாயத்து நிலமாம். இப்ப காலி செய்ய சொல்றாங்க…” பெரியவர் சொன்னார்.“ஆமாம் பெரிசு… இப்பத்தான் இவங்களுக்கு இது பஞ்சாயத்து நிலமுனே தெரியுது…”இங்கு குடிசை போட்டவங்களுக்கு இது புறம்போக்கு நிலம்னு தெரியும், ஆனால் என்ன புறம்போக்கு… யாருக்கு சொந்தம் என்பது தெரியாது.

“இந்த மலை தோன்றினது முதல் இது சும்மாதான் கேட்க நாதியற்று கிடந்தது. இப்ப இதுல கல்லூரி கட்றான்களாம்” என்றான் சார்லஸ்.“காலி செய்துட்டு எங்கு போறது… எங்கு வீடு கிடைக்கப்போவுது. பெரியவர் கவலையுடன் கூறினார்.“இங்கே செத்தாக்கூட பரவாயில்லை… மீண்டும் அவனுங்கிட்டே போய் அவமானப்பட முடியாது…” ராமசாமி சொன்னான்.

“ஆமாம்… ராமசாமி சொல்றது சரிதான்…” பெரியவர் ஆமோதித்தார்.

“சும்மா இருந்தாத்தானே… ரேசன் கார்டு வேண்டும்… அது வேண்டும், இது வேண்டும், லஞ்சம் கேட்கறான் என சொன்னீங்க… இப்ப பிரிக்க சொல்றான்” என்றான் கோபமாக கோபால்.

“நாம கேட்டது என்னய்யா தப்பு… நீயும்தானே ரேசன் கார்டு இல்லனு கூட வந்தே…” என்றான் அலி.“நமக்கு எதுக்கு போராட்டம் எல்லாம்…” நாமே ஒண்டக் குடிசையில்லாத பரதேசீங்க…” நீங்க சும்மா இருந்தா நமக்கு இப்ப பிரச்சினை வந்திருக்காது.“யோவ் அவன் கார்டுக்கு ஐநூறு ரூபா கேட்டானே அது நியாயமா?…” முருகேசன் ஆவேசப்பட்டான்.“கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க கொடுத்துட்டு வாங்கட்டும்… கொடுக்க முடியாதவங்க சும்மா இருக்க வேண்டியதுதான்…”“ஏப்பா நீ சொல்றது உனக்கே நியாயமா தெரியுதா?” சரி சரி… இப்ப காலி செய்ய சொல்றான். என்ன செய்யலாம்…? பெரியவர் அனைவரையும் பார்த்துக் கேட்டார்.“சரி தாசில்தாரைப் போய் பார்ப்போம்… வாங்க…”

இதுல என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இது பஞ்சாயத்து நிலம்… நீங்க போய் பஞ்சாயத்து ஆனையாளரை பாருங்க… ஒரே வார்த்தையில் தாசில்தார் சொல்லிவிட்டார்.

“இது பஞ்சாயத்து புறம்போக்கு… யாரை கேட்டு இதுல குடிசைப் போட்டீங்க…” ஆணையாளர் கேட்டார்.

யாரும் வாய் திறக்கவில்லை.“இன்னும் இரண்டு நாளில் காலி செஞ்சுடனும்… இல்லாட்டி போலீஸ்தான் வரும்…”“என்ன சார் திடீர்னு இப்படி சொன்னா எப்படி சார்… நாங்க இரண்டு வருசமாக குடி இருக்கோம்… குடிசை போடும்போது போடக் கூடாது என சொல்லியிருந்தா போட்டிருக்க மாட்டோம் என்றான் முருகேசன்.“அப்ப நான் இல்லை… நான் இருந்தா சொல்லி இருப்பேன்… எங்க நிலத்தை ஆக்கிரமித்தது தப்பு… காலி பண்ணிடுங்க…”“உங்கள் நிலத்தில் ஓட்டல் கட்டியிருக்கான். அவனை எல்லாம் உங்களால் காலி செய்ய முடியல…” அலி பொறுமையிழந்து கூறினான்.

“என்னப்பா… என்ன பேசறே…” ஆணையாளர் கோபப்பட்டார். “ஆமாம் சார்… அவன் அவன் இருநூறு, முன்னூறு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சிருக்கான். அதை உங்களால் தடுக்க முடியலை…” என்றான் முருகேசன்.“நாங்க… இருநூறு பேரு சேர்ந்து கொஞ்ச நிலத்துல குடிசைப் போட்டது… ஆக்கிரமிப்பு என்கிறீங்க…” அலி கேட்டான்.அதிகாரியால் இதற்கு பதில் கொடுக்க முடியவில்லை…” சரி… நான் என்ன செய்யறது… மாவட்ட ஆட்சித் தலைவர் காலி செய்யவேண்டாம்னு சொல்லிட்டா நான் எதுவும் செய்யல… சரி போங்க…” ஆணையாளர் வெளியே அனுப்பி வைத்தார்.“அதிகாரிங்கிட்ட தயவா கேட்கனும்… இப்படி எல்லாம் கேட்டா எப்படி…” மீண்டும் கோபால் தன் எதிர்ப்பை தெரிவித்தான்.

“நீ சும்மா இருண்ணா… காலில் போய் விழனுமா? என்றான் சுரேஷ்.“நம்ம தேவைக்கு காலில் கூடதான் விழனும்…”“நீ விழு… எங்களால் முடியாது… புறப்படுங்க மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு…” என்றான் சுரேஷ். இவன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தான்… அதனால் யாருக்கும் வளைந்து கொடுக்க அவன் மனசு இடம் கொடுக்கவில்லை.

“நேரம் ஆவுது… இப்ப போய் பார்க்க முடியுமா?… என்றார் பெரியவர்.“பார்க்கலாம்… இல்லாட்டி அவர் பங்களாவிற்கு போகலாம்…” என்றான் சுரேஷ்.“பஸ்ஸிற்கு நேரம் ஆகுது… வாங்க சீக்கிரம்…” முருகேசன் அவசரப்பட்டான்.பங்களாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் இருந்தார்.

“என்னப்பா இவ்வளவுபேர் வந்திருக்கீங்க… என்ன பிரச்சினை.”“ஐயா எங்களை குடிசையை விட்டு இரண்டு நாளில் காலிசெய்ய சொல்றாறு ஆணையாளர்…” என்றான் முருகேசன். மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.“ஓ அந்த நிலப்பிரச்சினையா? இது புறம்போக்கு நிலமில்லையே. இது பஞ்சாயத்து பட்டா நிலமாச்சே… ம்…”

“ஐயா பார்த்து மனசு வைச்சா கொடுக்க முடியும்…” பெரியவர் கெஞ்சினார்.“பெரியவரே… அது புறம்போக்கு நிலமா இருந்தா கொடுத்துடலாம். ஆனால் அது பஞ்சாயத்துக்கு சொந்தமானது…”

திடீரென்று எங்களை காலி செய்ய சொன்னா எங்க ஐயா நாங்க போறது…” பெரியவர் கேட்டார்.சரியான கேள்வி… ஆட்சித்தலைவர் யோசித்தார். இதற்கு பதில் சொல்லத் தடுமாறினார்.

“பஞ்சாயத்து புறம்போக்கை நத்தம் புறம்போக்கா மாற்றிக் கொடுத்தீங்கினா… தாசில்தாரால் எங்களுக்கு நிலம் கொடுக்கமுடியும் ஐயா” என்றான் முருகேசன்.

மாவட்ட ஆட்சித்தலைவர் யோசனையில் இருந்தார். இன்னும் கொஞ்ச நாளிலே மாறுதல் கிடைக்கப் போவுது… காலி செய்து ஏன் கெட்டப்பெயர் எடுக்கனும்… புதுசா வர்றவங்க பார்த்துக்கட்டும்.

“சரி கவனிக்கிறேன்… மகஜரை கொடுத்துட்டுப் போங்க…”“ஐயா நீங்க தான் பார்த்து ஏற்பாடு செய்யனும்…”“ம்…” சிரித்தார்.“மவராசனா இருப்பீங்க… இருபது வருசமா இந்தக் குடிசை இல்லாமல் கஷ்டப்பட்டோம்… இப்பத்தான் கொஞ்ச நாளா நிம்மதியா குடியிருக்கோம்… அதைக் கெடுத்துடாதீங்க சாமி… குப்பாயி கிழவி அழாத குறையாக கெஞ்சியது…

“சரிம்மா… நான் ஏற்பாடு செய்றேன்… போங்க…”“ஐயா தான் செய்யறனுட்டாரு… போங்க… போங்க…” கடைநிலை ஊழியர் கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையாக அனைவரையும் வெளியேற்றினார்.

9


அத்தியாயம்     9


மாவட்ட ஆட்சித்தலைவர் பிரிக்க வேண்டாம் எனச் சொன்னாரோ இல்லையோ தெரியாது. முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு உண்டான கோஷ்டியில் ஆளுங்கட்சி இரண்டாக உடைந்துவிட்டது. அப்போது ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையும், பரபரப்பும் குடிசையை பிரிக்கப்படவேண்டும் என்ற நிலை பின்னுக்கு வந்தது. ஆட்சியும் கலைந்து விட்டது. அதனால் குடிசையை யாரும் பிரிக்க வரவில்லை. எதிர்க்கட்சியினர் சந்தோசப்பட்டார்களோ இல்லையோ, இந்த பாரதி நகர் குடிசைவாசிகள் சந்தோசப்பட்டனர்.

பதவிக்காக சட்டசபை கொலை செய்யப்பட்டபோது பாரதிநகர் மக்களுக்கு பலன் கிடைத்தது.தேர்தல் அறிவிக்கப்பட்டது… கரை வேஷ்டிகள் படையெடுக்கத் துவங்கினர். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு பட்டா கொடுக்கிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்றனர். முன்பு குடிசையைப் பிரிக்க மறைமுக வேலை செய்தவர்கள் எல்லோரும், குடிசைக்கு பட்டா வாங்கித் தருகிறோம் என முன் வந்தனர்.வாக்காளர் பட்டியல் தயாராகி இருந்தது.

“ஏம்பா… முருகேசா… வாக்காளர் பட்டியலில் நம்மப்பேர் யாருதும் இல்லையாம்…” அலி சொன்னான்.“யாரு சொன்னா…”“நானே பார்த்தேன்… நம்ம பாரதிநகர் மக்களுக்கு யாருக்கும் ஓட்டு இல்லை…” சார்லஸ் சொன்னான்.“ஏன்னு கேட்டுப் பார்த்தியா…?“கேட்டேன். கதவில் எண் இல்லையாம். அதனால் முகவரி கிடையாது…” என்றான் சார்லஸ்.

“நாம் என்ன நாடோடிகளா? நமக்கு ஓட்டு இல்லைனு சொல்றதுக்கு” முருகேசன் கோபம் கொண்டான்.“நம்மகிட்ட ஓட்டு இருக்குனுதான் அவன்அவன் நம்மை சுத்தி வர்றான். ஓட்டு இல்லாட்டி நம்மகிட்ட எவனும் வரமாட்டான்… அப்புறம் நம்மை காலி செய்துடுவாங்க” என்றார் பெரியவர்.

“ஆமாம்…”“யோவ் சும்மா இருங்க… அது இதுனு செய்து காலி செய்ய சொல்லிட போறான்…” கோபால் வாய் திறந்தான்.“யோவ் நீ என்னைக்காவது ஒத்துப்போய் இருக்கிறாயா?” எப்ப பாரு அது வேண்டாம்… இது வேண்டாம்னு சொல்லிக்கிட்டிரு…” அலி கோபால்மீது கோபப்பட்டான்.“என்னமோ செய்யுங்க… காலி மட்டும் செய்யச் சொல்லட்டும், அப்புறம் பேசிக்கிறேன் உங்களை…”

“சரி… சரி… விடுப்பா…” பெரியவர் சமாதானப்படுத்தினார்.“இப்ப என்ன செய்யலாம்…?” முருகேசன் கேட்டான்.“வானொலியில் தினமும் சொல்றான்… வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லைனா வட்டாச்சியரிடம் விண்ணப்பம் கொடுங்க என்று” ராமசாமி சொன்னான்.“சரி எல்லோரும் விண்ணப்பம் எழுதுங்க… நாம் போய் பார்க்கலாம்” முருகேசன் கட்டளையிட்டான்.

“வாங்க… என்ன விசயம்… நீங்க பிரச்சினை இல்லாமல் வரமாட்டீங்களே…” தாசில்தாருக்கு இவர்களைப்பற்றி நன்கு தெரியும். அடிக்கடி வருவதால் வாப்பா, போப்பா என பேசியவர் இப்போது வாங்க, போங்க என மரியாதையாக பேசினார்.

“சார்… எங்களுக்கு ஓட்டு இல்லையாம் சார்…” என்றான் முருகேசன்.“ஓட்டு இல்லையா…” ஆச்சரியமாக பார்த்தார்.“ஆமாம் சார்” சார்லஸ், அலி ஒரு சேர தலையை ஆட்டினார்கள். தாசில்தார் அலுவலக உதவியாளரைக் கூப்பிட்டார்.“சார்…”“போய் நம்ம வாக்காளர் பட்டியலை சரிசெய்யற எழுத்தரை கூட்டி வா”.“சார், வணக்கம் சார்…”“ஓ… வாங்க…”“என்ன பத்திரிக்கை நிரூபர் திடீர்னு வந்திருக்கிங்க…”“தேர்தல் சமயம் சார்… பாரதிநகர் மக்களுக்கு ஓட்டு இல்லைனு கேள்விப்பட்டேன். அதான் தெரிந்துகொண்டு செய்திபோடலாம் என வந்தேன்.”

“கொஞ்சம் பொறுங்க… இந்த எழுத்தர் வர்றார். அவரைக் கேட்டாத் தெரியும்.”“இந்த பாரதிநகர் எந்த வார்டில் வருது…”“எட்டாம் எண் வார்டுசார்”“இவங்க பேர் எல்லாம் வாக்காளர் பட்டியலில் வருதா…”“பட்டியலில் இல்ல சார்…”“இல்லையா… நல்லா பார்த்தேன் சார்… நீங்க கூட பாருங்க சார்” தாசில்தார் பட்டியலை திருப்பி பார்த்துக்கொண்டு வந்தார்… ஆமாம் ஏன் ஓட்டுக் கணக்கு எடுக்க “போகலையா?”“சார் அது புறம்போக்கு நிலம்…”“புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தா ஓட்டு கிடையாதா?” முருகேசன் கோபமாக கேட்டான்.“அதுக்கு இல்ல… கதவில் எண் கிடையாது… அதுதான்…” எழுத்தர் சொன்னார்.

“சார்… நாங்க இந்த நாட்டு குடிமகன் இல்லையா?” மீண்டும் முருகேசன் கேட்டான்.தாசில்தார் யோசித்தார்… ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை… அது இல்லை என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.“சரி நீங்க போய் அந்தப் பகுதியில் கணக்கு எடுங்க” எழுத்தருக்கு உத்தரவிட்டார்.“சார் கதவில் எண் இல்லையே, வாக்காளர் பட்டியலில் கதவு எண் வேண்டும் சார்…”“நீ கதவு எண் போட்டு, கணக்கு எடுங்க…”“சார் அது பஞ்சாயத்து புறம்போக்கு நிலமாச்சே…”“அது அவங்க பார்த்துக்குவாங்க… நீங்க ஓட்டு பிரச்சினையை பாருங்க…”

“சரி சார்…”“முருகேசா…”“சார்”“அவரு ஓட்டு கணக்கு எடுக்க வர்றார்… அவருகூட இருந்து சீக்கிரம் முடியுங்க… வீட்டுக்கு ஒரு பக்கமாக இருந்து எண் போடுங்க…”“சரி சார்…” ரொம்பவும் நன்றி சார்… நாங்க வர்றோம் சார்…” அனைவரும் ஒரு சேர சொல்லி விட்டுப் புறப்பட்டனர்.“சார் நானும் வர்றேன் சார்…”“சரிங்க… பத்திரிக்கையில் எதுவும் அசிங்கமாக போட்டுறாதீங்க…

“அப்படி எல்லாம் செய்யமாட்டேன் சார்…” நிருபர் சொல்லிக் கொண்டே புறப்பட்டார்.

10


அத்தியாயம் 10


குடிசைப் பகுதியைச் சுற்றி உன்னி செடிகள் வளர்ந்து இருந்தன. மண் ரோட்டிலிருந்து ஒற்றையடிப் பாதைகள் மட்டுமே குடிசைகளுக்குச் சென்றன. ஒற்றையடி பாதைகளின் இருபுறமும் உன்னிச்செடிகள் வளர்ந்து பாதையை மூடும் அளவிற்கு இருந்தன.முள்குத்தி செடிகள் மண்ரோட்டின் ஓரத்திலும், ஒற்றையடிப்பாதையின் ஓரத்திலும் வளர்ந்து இருந்தன. நடக்கும்போது வேஷ்டியிலும், சீலையிலும் மாட்டிக்கொண்டு பயணம் செய்தன.புதர்களில் ஆங்காங்கே பன்றிகள் படுத்திருந்தன. அவைகள் வேர்களை தோண்டியதால் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன.

முயல்களின் புலக்கைகள் கிடந்தன. காட்டு முயல்கள் இரவு நேரங்களில் வந்து மேய்ந்ததற்கான அடையாளங்கள் இவை.இங்கு குடியிருக்கும் பெருமாள் தினமும் இரவு நேரத்தில் முயலுக்கு கன்னி வைப்பதுதான் வழக்கம். ஒரு சில நாளில் முயல் அகப்படும். சில நாட்கள் கன்னியை அறுத்துக்கொண்டு முயல் ஓடிவிடும். ஒருநாள் குரங்கு மாட்டியும் உள்ளது.

பெருமாள் மனைவி சத்தம் கேட்டு ஊரே கூடிவிட்டது “என்னது… என்ன ஆச்சு…” முருகேசன் கேட்டான்.

“காலில் ஏதா கடிச்சிருச்சு…”“பாம்பா இருக்குமோ…” ஏதாவது கடித்திருந்தாலும் சட்டென்று நினைவிற்கு வருவது பாம்பு தானே…இதைக் கேட்டவுடன் பெருமாளுக்கு பயம் ஏற்பட்டது.

“என்னுடைய கோழி அடைக்கும் இடத்தில் போனவாரம்கூட ஒரு பாம்பு அடித்தேன்…” என்றான் ராமசாமி.“யோவ் சும்மா இரு… எந்த நேரத்தில் என்ன சொல்றதுனு தெரியலை” முருகேசன் அதட்டினான்.“யோவ் பயப்படாதே… ஒன்னும் இல்ல… பாம்பு கடிச்சிருந்தா பல் பட்ட காயம் இருக்கும்… இது வேறு…” விசம் ஏறாமல் தடுக்க காலில் கட்டுப் போட்டுக்கொண்டே சொன்னான் சார்லஸ்.“பாம்பு கடிச்சு சாகறவனை விட பயத்தால் சாகிறவன்தான் அதிகம்…” மீண்டும் ராமசாமி வாயை திறந்தான்.“நீ போய் பாடம் போடற பெரியசாமியை கூட்டிவா” என்றார் பெரியவர்.

ராமசாமி ஓடினான்…பெருமாள் மனைவி ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டிக்கொண்டே இருந்தது.“ஏம்மா நீ சும்மா இரு… அவனுக்கு ஒன்னும் ஆகல… ஏன் நீ கத்தி அவனுக்கு பயத்தை உண்டாக்கிற…” பெரியவர் சண்டை போட்டார்.“எப்ப பாரு இராத்திரினா புதர் பக்கமே திரியறே… சொன்னா கேட்கிறாயா… இப்ப பாம்போ என்னமோ கடிச்சுருச்சு…” மனைவி பெருமாளைத் திட்டித் தீர்த்தது.கால் வலியாலும், பயத்தாலும் பெருமாள் சோர்வாக இருந்தான்.சுரேஷ் ஓடிவந்தான்… “என்ன ஆச்சு… மாமா”.

“பாம்போ, என்னமோ கடிச்சுருச்சு…” பெருமாள் வலி பொருக்க முடியாமல் சொன்னான்.“சரி புறப்படுங்க மருத்துவமனைக்கு…”

“இரு தம்பி… பாடம் போட பெரியசாமியை கூட்டி வரச்சொல்லி இருக்கேன்…” என்றார் பெரியவர்.“மருத்துவமனைக்கு உடனே போகாமல்… பாடம் போடறீங்களாம். பாடம்…” கோபப்பட்டான் சுரேஷ்.“பெரியசாமி வீட்டில் இல்ல மாமா…” ராமசாமி பெரியவரிடம் சொன்னான்.“சரி… சரி… மருத்துவமனைக்கு புறப்படுங்க…”“இந்த நேரத்தில் மருத்துவமனையில் யாரும் இருக்கமாட்டாங்க. பேசாமல் டாக்டர் வீட்டிற்கே போகலாம்…” சார்லஸ் சொன்னான்.அரசு மருத்துவமனை இருந்தும் டாக்டர் இரவில் மருத்துவமனையில் இருப்பதில்லை. இரவு நேரத்தில் சென்றால் டாக்டர் அதிகம் பணம் வசூல் செய்வார்.“பாம்பு கடிச்சிருக்க போல தெரியுது… என்னிடமும் மருந்து இல்லை. மருத்துவமனையிலும் மருந்து இல்லை… நீங்க பெரிய மருத்துமனைக்குத்தான் போகவேண்டும்” என்றார் டாக்டர்.“சரி மருத்துவமனைக்கு வாங்க… எழுதிக் கொடுக்கிறேன்…”மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் தங்கும் அறையில் மின்விளக்குகள் எரியவில்லை. மண்ணெண்ணெய் விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.அரசு மருத்துவமனையா அல்லது கசாப்புக் கடையா என்ற சந்தேகம்தான் வந்தது.

“பாம்புக் கடிக்கு மருந்து வைக்க போதிய பாதுகாப்பு வசதி இல்லை… முதலுதவிக்கு ஊசி போட்டிருக்கேன். நீங்க உடனே தலைமை மருத்துவமனைக்கு போங்க…”

வாடகை கார் பிடித்து, தலைமை மருத்துவ மனையில் பெருமாள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான்.

11


அத்தியாயம்     11


பெருமாள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டான். செத்துபிழைத்துவிட்டோம் என்கிற நிம்மதி. அவனைப் பார்க்க அவன் வீட்டு வாசலில் கூட்டம் கூடியிருந்தது.அவன் வீட்டு எதிரில் உள்ள நாவல் மரத்தில் மைனாவும், குருவிகளும் நாவல் பழங்களை வேட்டையாடிக்கொண்டிருந்தன.“ஏண்ணா நம்ம மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு மருந்தே இல்லையே… அதற்கு ஏதாவது செஞ்சா…” என்றான் சுரேஷ்.“செய்வீங்கடா… செய்வீங்க… ஏண்டா உங்களுக்கு வேற பொழப்பே கிடையாதா?… கோபால் கோபப்பட்டான்.

“நீ சும்மா இரு… பாம்பு கடிச்சதால் பெருமாள் செத்திருந்தா அவன் குடும்பம் அல்லவா இன்றைக்கு நடுத்தெருவில் நிக்கும்…” என்றான் ராமசாமி.“நானா புதைபுதையாப் போகச் சொன்னேன்…”

“குழந்தை எல்லாம் இருக்கு… அதுங்களை கடிச்சிருந்தா என்ன ஆவறது.”

“ஆமாம்… வீட்டைச் சுற்றி புதர் இருக்கு அதை வெட்டாமல் மருத்துவமனையில் மருந்து இல்லையாம்… அதற்கு ஏதோ செய்யனுமாம்…”“அண்ணன் சொல்றதும் சரிதான்… ஆனால் வேலை செய்யற இடத்துல பாம்பு கடிச்சிருச்சின்னா அப்புறம் அரசு மருத்துவமனைக்குத்தானே போகணும்…” என்றான் சுரேஷ்.இவர்கள் பேசுவதையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த முருகேசன்…” இப்ப என்ன செய்யலாமேனு சொல்றீங்க…”“பாம்புக்கடிக்கு மருந்து கேட்டுட்டா போதுமா. நாய்க்கடிக்கும் மருந்து வேண்டும். வீட்டுக்கு வீடு நாய் வளர்க்கிறாங்க. என் பையனை நாய் கடிச்சிருச்சு… மருத்துவமனைக்குப் போனா மருந்து இல்லங்கிறான்…” அலி சொன்னான்.“சரி என்ன செய்யலாம்னு சொல்லுங்க…” முருகேசன் கேட்டான்.

“அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் மருத்துவமனையில் இருக்கவேண்டும். மகஜர் கொடுப்போம்… உண்ணாவிரதம் இருப்போம்…” என்றான் சுரேஷ்.

“இந்த ஊரில் எவனுக்கும் இல்லாத அக்கறை நமக்கு மட்டும் எதற்கு?”… கோபமாகக் கேட்டான் கோபால்.“நாம் பாதிச்சிருக்கோம்… அதனால்தான்” என்றான் அலி.

“ஏம்பா அதோட, கம்பத்தில் மின்சார விளக்குக்கு ஏற்பாடு செய்யுங்க… நான் நேத்து ராத்திரி வீட்டைவிட்டு வெளியே வரும்போது கீழே விழுந்திட்டேன்…” என்றது குப்பாயி கிழவி.

“ஆமாம்… புழு, பூச்சி எல்லாம் திரியுது… குழந்தைகளை ஏதாவது தீண்டிருச்சினா என்ன செய்யறது…” பெருமாள் வாய் திறந்தான்.

“கம்பங்கள் நமது வீட்டுப் பக்கம்தானே போகிறது. மின்விளக்கு போட்டுத்தர கேட்போம்…” என்றான் சார்லஸ்.“ஆமாம் இவரு பட்டா நிலத்தில் குடியிருக்காரு. இவருக்கு மின்விளக்கு போட்டுத் தருவாங்க…” நக்கலாக சொன்னான் கோபால்.ஏண்ணா மின்விளக்கு கேட்பது தப்பா?” என்றான் சுரேஷ்.“குந்த இடம் கொடுத்தா, படுக்க இடம் கேட்கற கதையா இருக்கு…”

“இந்தா பாரு, ஜனங்கள் குடியிருக்கிற இடத்துக்கு இப்ப சூரிய மின்விளக்கு எல்லாம் போட்டு தர்றாங்க… நாம முன்னூறு குடும்பம் இங்க இருக்கோம்… மின்கம்பம் நம்ம வீட்டுக்கு மேலத்தான் போகிறது. ஐந்து கம்பத்துக்கு விளக்கு போடறது கஷ்டமான காரியம் இல்லையே…” முருகேசன் சொன்னான்.“ஆமாம்… கேட்போம்…” பெரியவர் சம்மதித்தார்.

நாம் இந்த இடத்திற்கும், ஒன்றிரண்டு குடிசைக்கும் மின்சாரம் வாங்குவது மூலமே இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்” என்றான் முருகேசன்.

“எவ்வளவு நாளைக்கு இப்படி இருட்டிலே சின்னப்படறது…” குப்பாயி கிளவி பெருமூச்சு விட்டது.“ஏ கிழடு சும்மா இருக்கமாட்டியா… மின்சாரவசதி கேட்கப்போய் இடத்தை காலி செய்ய சொல்லிட்டா என்ன செய்யறது.” கோபால் கிழவிமீது கோபப்பட்டான்.

“நீங்க சும்மா இருங்க… நாம் என்னமோ கேட்டதும் அவன் பிரிக்க வர்றமாதிரி சொல்றீங்க… மின்சாரம் பெற எத்தனை முறை யார் யாரை சந்திக்கிறமோ தெரியல. ஆனால் மின்சாரம் கிடைக்கிற வரைக்கும் நாம் இதை விட்டுவிடக்கூடாது” என கோபால் மனைவி கண்ணம்மாள் பேசினாள்.

கண்ணம்மாள் பேசியதைக் கேட்டு அனைவரும் அசந்துவிட்டனர். வாய் பேசாத இந்த பெண்ணிற்கு எப்படி இந்த தைரியம் வந்தது. அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அவளையும், அவர்களையும் மாற்றியதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது.

12


அத்தியாயம்     12


மழை பெய்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகிறது. மீண்டும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மழை வரலாம். வானம் மப்பும் மந்தாரமாகவே காணப்பட்டது.

தொடர்ந்து அடிக்கடி மழை பெய்ததால் குடிசையில் ஏற்பட்ட ஒழுகல் சுவர் எல்லாம் தாரை தாரையாக செம்பழுப்புக் கோடுகள் இருந்தன. குடிசையின் வெளிப்பகுதியில் சில இடங்களில் ஊற்றுநீர் கசிந்துகொண்டிருந்தது. அதனால் வீட்டின் உள் ஓதம் தாக்கி சுவரும், தரையும் ஈரம் கோத்து இருந்தது.

மார்கழி மாதத்து கடும்குளிர் இவர்களை வாட்டியது. இரவெல்லாம் நாயும், நரியும் ஊளை இடுவதுபோல் ஊதைக் காற்று ஊளை இட்டுக்கொண்டிருந்தது. வெண்மையான மஞ்சு குடிசைகளை மூடி மறைத்து இருந்தது. முன்னால் நிற்பவர்களைக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது.காப்பி பழ அறுவடைக்காலம், மற்ற நாட்களை விட அதிக பணம் கூலியாக பெற்றனர். எந்த அளவிற்கு காப்பிப் பழங்கள் பறிக்க முடிகிறதோ அந்த அளவிற்கு பணம் கூடுதலாக கிடைத்தது. அதனால் இயந்திரமாக மாறியிருந்தனர். இந்த சமயத்தில் நாலுகாசு சம்பாரிக்க வேண்டும். சித்திரை மாத காலத்தில் வேலை இருக்காது. அதற்கான தேவைகளுக்கு இப்ப கொஞ்சம் பணம் சேர்த்து வைக்க வேண்டுமே.

உழைப்பின் களைப்பால் தொட்டாச்சினுங்கிபோல துவண்டு கிடந்தனர். சூரியனின் உதயத்தை மழைமேகம் மூடி மறைத்திருந்தன. விடியலுக்கான ஆரவாரம் எதுவும் காணமுடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் ஓய்வு. குளிரும், களைப்பும் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனால் விடிந்துவிட்டது என்று மட்டும் தெரிந்தது.

தமிழ் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது… வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டாவும், வீடும் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் கட்டித் தருவதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.கோபால் துள்ளிக் குதித்து எழுந்தான்… “ஏய்… என்ன செய்யற… இங்கு வந்து செய்தியைக் கேளு…”மேலும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை அமைதியாகக் கேட்டனர்.

முதலமைச்சர் இந்த ஆண்டு இறுதிக்குள் முப்பதாயிரம் வீடுகளை கட்டித் தருவதாக சட்டசபையில் தெரிவித்தார்…

எத்தனை இனிப்பான செய்தி… தங்களின் கஷ்டங்களைப் போக்கும் அறிவிப்பு… கொம்புத்தேனை சாப்பிட்ட தித்திப்பு…“இப்ப கேட்டியேடி… நம்ம அரசாங்கம் நமக்கு நல்லதுதான் செய்யும்… இனி மேலாவது சும்மா இருக்கச் சொல்லு அந்த பசங்களை…”“இப்ப ஏங்க… அவங்களை நினைக்கிறீங்கள்…” கண்ணம்மாள் அமைதியாகக் கேட்டாள்.“இல்ல… எப்பப்பாரு போராட்டம் செய்யலாம்… போராட்டம் செய்யலாம்னுதானே அந்த முருகேசன், சார்லஸ் எல்லாம் சொல்வான்”“சரி காலையில் நமக்கு எதுக்கு சண்டை… விடுங்க…” தான் கேட்ட இந்த செய்தியை சொல்ல கோபால் வெளியே வந்தான்.

“டம்.. டம்” சத்தம் மட்டும் குடிசைப் பகுதியில் அடித்தது. அதனுடைய சத்தம் அறைகுறையாக காதில் விழுந்தது. அது நெருங்கி வந்து கொண்டிருந்தது.

“வருகிற இருபத்திமூன்றாம் தேதிக்குள் இங்கு குடிசை போட்டவர்கள் குடிசையை பிரித்திட வேண்டும். இல்லை என்றால் போலீஸை வைத்துப் பிரிப்போம்… இது பஞ்சாயத்து அலுவலக உத்தரவு… உத்தரவு” என அலுவலக அறிவிப்பை சத்தமாக கத்தினான்.அவன் ஒவ்வொரு குடிசைவாசியின் காதில் விழும்படி குடிசையை சுற்றிச் சுற்றி “டம் டம்” அடித்து இதையே திருப்பித்திருப்பிச் சொன்னான்.“இது பஞ்சாயத்து புறம்போக்கு நிலம்… இதை ஆக்கிரமித்தது குற்றம்… உடனே காலி செய்யவேண்டும்”. டம்… டம்…

கோழித்தூக்கம் போட்டவர்கள் எல்லாம் “டம்… டம்” சத்தம் செய்தவனிடம் வந்து சேர்ந்தனர்.“ஏழு வருசமா குடியிருந்திட்டோம்… இப்ப திடீர்னு ஏன் காலி செய்யச் சொல்றீங்க…” முருகேசன் கேட்டான்.“பஞ்சாயத்தில் பணம் இல்லையாம்… தனியாருக்கு விற்க முடிவு செய்திருக்காங்க.”“உங்க பஞ்சாயத்தில் பணம் இல்லைனா அதுக்கு எங்க வயித்திலையா அடிக்கிறது…” கோபப்பட்டான் சார்லஸ்.“நீங்க அவங்களை கேளுங்க… காலிச் செய்யச் சொல்லி டம்.. டம்… போட சொன்னாங்க. போட்டுட்டேன்… என்னை விடுங்க” எனக் கூறிக்கொண்டே நழுவிவிட்டார்.

அனைவரின் முகமும் சோகம் கவ்வி இருந்தது. என்ன செய்வது என ஒன்றும் புரியாமல் கொதித்திருந்தனர்.

“ஏப்பா முருகேசா பேசாமல் அப்படியே நின்னா எப்படி… என்ன செய்யலாம் சொல்…” பெரியவர் அமைதியை கலைத்தார்.“எனக்கு ஒரு யோசனை”“சொல் சார்லஸ்” என்றான் முருகேசன்.

“நம்மகிட்டத்தான் ரேசன் கார்டு இருக்கு… இதை வைத்துக் கோர்ட்டில் குடிசையைப் பிரிக்கக்கூடாது என தடை உத்தரவு வாங்கிட்டா…”“ஆமாம் அதுவும் செய்யலாம்… வீட்டுக்கு நூறோ, இருநூறோ வசூல் செய்து செய்யலாமே…”“ஐநூறுகூட கொடுக்கலாம்…” ராமசாமி சொன்னான்.“பாவிங்க… இந்த சமயத்தில் பிரிக்கிறதா வந்து நிற்கறானே… நாலுகாசு சம்பாதிக்கிற காலமாச்சே…” பெருமாள் மனைவி சொன்னாள்.“காசு கெடக்குது… இப்ப மழைக்காலம்… குளிர்காலம்… இப்ப நாம் எங்க போறது… எவன் வீடு தருவான்…” குப்பாயி கிழவி புலம்பியது.

“கோர்ட்டில் தடை உத்தரவு கிடைக்கலைனா என்ன செய்யறது”… அலி சந்தேகத்துடன் கேட்டான்.“குடிசையை பிரிச்சா தடுக்கறது…” என்றான் முருகேசன்.

“நம்மை சிறையில் தள்ளிட்டு பிரிச்சா…” சார்லஸ் கேட்டான்…

“நம் குழந்தை குட்டிகள் எல்லோரையும் உள்ளே தள்ளிட்டு பிரிச்சா… பிரிக்கட்டும்…” ராமசாமி ஆவேசப்பட்டான்.“போலீஸை வைச்சு பிரிக்கறானு சொன்னான். துப்பாக்கியால் சுட்டால் என்ன செய்யறது…” பெருமாள் கேட்டான்.“சுடுவான்… சுடறவன் உயிரோடு இருக்கமாட்டான்… என்னை சுட்டுக்கொன்று விட்டு, வேண்டுமானால், இந்தக் குடிசையைப் பிரிக்கட்டும் தோழரே”, என்றான் கோபால்…வார்த்தைவந்த பக்கம் அனைவரின் பார்வை திரும்பியது… மனதிலே ஒரு புதிய தெம்புடன் வீட்டிற்குச் சென்றனர்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam