பாரதியின் வேதமுகம்


தத்துவம்

Back

பாரதியின் வேதமுகம்
சு.கோதண்டராமன்


பாரதியின் வேதமுகம்

சு.கோதண்டராமன்

 

 

 

உள்ளடக்கம்


பாரதியின் வேதமுகம்

பாரதி முன்னுரை

1. ஒன்று பரம் பொருள்

2. சூழ்ந்ததெல்லாம் கடவுள்

3. அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

4. பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

5. சாதிகள் இல்லையடி பாப்பா

6. எத்தனை கோடி இன்பம்

7. ஓம்

8. சொல் புதிது

9. இப்போதே முக்தி

10. இனி ஒரு விதி செய்வோம்

11. தேன் வந்து பாயுது காதினிலே

12. கற்பக விநாயகக் கடவுளே போற்றி

13. நம்புவதே வழி

14. கவிவாணர்க்கு நல்லமுது

15. வாயுவாகி வெளியை அளந்தனை

16. செங்கதிர்த் தேவன்

17. வேதம் புதுமை செய்

18. பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

19. நையப் புடை

20. பேயவள் காண் எங்கள் அன்னை

21. மோதி மிதித்துவிடு பாப்பா

22. செய்க தவம்

23. தீக்குள் விரலை வைத்தால்

24. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !

25. ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?

26. பயன் எண்ணாமல் உழை, பக்தி செய்து பிழை

Free Tamil Ebooks – எங்களைப் பற்றி

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

1


பாரதியின் வேதமுகம்

உருவாக்கம்: சு.கோதண்டராமன்

மின்னஞ்சல்:kothandaramans@yahoo.co.in

மேலட்டை உருவாக்கம்: Lenin Gurusamy

மின்னஞ்சல்: guruleninn@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

2


பாரதி முன்னுரை


பாரதி என்றாலே முண்டாசும் கொடுவாள் மீசையும் கறுப்புக் கோட்டும் கொண்ட உருவம் தான் நினைவுக்கு வருகிறது. அது போல அவரது கவிதைகளைப் பற்றி நினைக்கும்போது அவரது தெய்வபக்தி, தேசபக்தி, சமுதாய மறுமலர்ச்சி நாட்டம், பெண் விடுதலையில் ஆர்வம் ஆகியவை தான் முதலில் புலப்படுகின்றன. கறுப்புக் கோட்டின் பின்புலமாக ஒரு வெள்ளைச் சட்டை இருந்தது போல, இத்தனை பண்புகளுக்கும் பின்புலமாக அமைந்திருந்தது வேதங்களில் அவர் கொண்டிருந்த பற்று.

தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் பக்கங்களில் காண்போம்.

1


ஒன்று பரம் பொருள்


பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்

வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

வேதமறியாதே

நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

நான்மறை கூறிடுமே- ஆங்கோர்

நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

நான்மறை கண்டிலதே.

வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் -பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டாமெனல் கேளீரோ” என்று பாரதி கேட்கிறார்.

நாம் என்ன செய்கிறோம்? “மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.” இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

“ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே

தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

ஓர் பொருளானது தெய்வம்

என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

அல்லா அல்லா அல்லா

இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

விண்டுரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான வெளியென நின்றனை

அண்டம் கோடி வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

தேவரும் தானாய் திருமகள் பாரதி

உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

தேவதேவா சிவனே கண்ணா

வேலா சாத்தா விநாயகா மாடா

இருளா சூரியா இந்துவே சக்தியே

வாணீ காளீ மாமகளேயோ

ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள்,தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

உலகின்பக் கேணிஎன்றே

நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

நாயகிதன் திருக்கை

2


சூழ்ந்ததெல்லாம் கடவுள்


கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது. “தமிழா, தெய்வத்தைநம்பு. பயப்படாதே, உனக்குநல்லகாலம்வருகின்றது….. வேதங்களைநம்பு. அவற்றின்பொருளைத்தெரிந்துகொண்டுபின்நம்பு. புராணங்களைக்கேட்டுப்பயனடைந்துகொள். புராணங்களைவேதங்களாகநினைத்துமடமைகள்பேசிவிலங்குகள்போலநடந்துகொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ என்ற கருத்தை அதில் காண்கிறார்.

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே

சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க

நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்

நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்

வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை

மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை

அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை

அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை

கீழான பன்றியினைத் தேளைக் கண்டு

தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி

சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்

கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்

மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்

விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

“நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்…” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர் ;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம் ;

வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர் ,

வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம் ;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று

பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்

நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்

நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே ?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை ;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் ;

பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர் ;

வெயிலளிக்கும் இரவி , மதி , விண்மீன் , மேகம்

மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் ;

எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்ததுஎல்லாம்கடவுள்.

சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே

சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில் .

தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.

இவ்வுலகம் ஒன்று

ஆண் , பெண் , மனிதர் , தேவர் ,

பாம்பு , பறவை , காற்று , கடல் ,

உயிர் , இறப்பு இவை அனைத்தும் ஒன்றே

ஞாயிறு , வீட்டுச் சுவர் , ஈ , மலை , அருவி ,

குழல் , கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே

இன்பம் , துன்பம் , பாட்டு ,

வண்ணான் , குருவி , மின்னல் , பருத்தி

இஃதெல்லாம் ஒன்று

மூடன் , புலவன் ,

இரும்பு , வெட்டுக்கிளி

இவை ஒரு பொருள்

வேதம் , கடல்மீன் , புயற் காற்று , மல்லிகை மலர்

இவை ஒரு பொருளின் பல தோற்றம்

உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று

இந்த ஒன்றின் பெயர் – தான்

தானே தெய்வம்

தான் அமுதம் இறவாதது

பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

காக்கைச் சிறகினிலே நந்தாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்

தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்

மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

கானிழல் வளரும் மரமெலாம் நான் .

காற்றும் புனலும் கடலுமே நான் ,

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான் ,

வெட்ட வெளியின் விரிவெலாம் நான் ,

மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்

வாரியிலுள்ள உயிரெலாம் நான் .

கம்பனிசைத்த கவியெலாம் நான் ,

காருகர் தீட்டும் உருவெலாம் நான் ,

இம்பர் வியக்கின்ற மாட கூடம்

எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதரிசையுளேன் நான்

இன்பத் திரள்கள் அனைத்துமே நான் ,

புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான் ,

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான் .

மந்திரங் கோடி இயக்குவோன் நான்

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்

தந்திரங் கோடி சமைத்துளேன் நான் ,

சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் .

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

அவை பிழையாமே சுழற்றுவோன் நான் ,

கண்ட பல சக்திக் கணமெலாம்நான் ,

காரணமாகிக் கதித்துளோன் நான் .

நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ,

ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான் ,

ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

3


அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்


இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?

இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?

இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.

அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.

கடவுள்உலகத்தைப்படைத்தார்என்றுஎல்லோரும்சொல்கிறார்கள். எதைக்கொண்டுபடைத்தார்என்றவினாவுக்குவிடையாகஅத்வைதம்கூறுகிறது–கடவுள்எதைக்கொண்டும்உலகைப்படைக்கவில்லை. தானேபிரபஞ்சமாகத்தோற்றம்காட்டிஅருளினார். அப்படிஎன்றால்இங்குக்காணப்படும்மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள்எல்லாமேகடவுளின்வெவ்வேறுதோற்றங்கள்தாமே. அப்படிஇருக்க, மானிடரில்சிலரைப்பகைவர்என்றுகூறிவெறுக்கிறோமேஅதுசரியா? சரிஅல்ல. அதனால்தான்பாரதிகூறுகிறார்–

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே – பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.

இனி அப்பாடலைப் பார்ப்போம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ ?

குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ ?

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ ?

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ ?

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ ?

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ ?

போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்

நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ ?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய் .

4


பூரண ஞானம் பொலிந்த நன்னாடு


“ பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக , துன்பமு மிடிமையு நோவும்

சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

இன்புற்றுவாழ்க ”

என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.

அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.

எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்

எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

“ சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ , ஆக்கமுண்டோ ?

காவிய நூல்கள் , ஞானக் கலைகள் , வேதங்களுண்டோ ? ”

என்று கேட்கிறார். மேலும் மற்றோரிடத்தில்,

“ வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி ? ”

என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

“ மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு

ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் ”

எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற உயர் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்

கடவுளின் மக்களென் றுணர்தல்

இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்

கிழிபடு போர் கொலை தண்டம்

பின்னியே கிடக்கும் அரசியலதனிற்

பிணைத்திடத் துணிந்தனை , பெருமான்

5


சாதிகள் இல்லையடி பாப்பா


இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி .

பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை

நாசமுறப் புரிந்தனர் மூடர்

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

“ பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள் . பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள் . சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச : ( நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன ) எனப் பகவான் சொல்லியிருக்கிறார் .

“ பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை . ஸகல தேசங்களிலும் உண்டு . ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது . பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது . அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள் , உபநிஷத்துகள் , புராணங்கள் , இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி . இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது . பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது . அது பற்றியே அந்நாட்டினர் வறுமை , நோய் , அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள் . ”

இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

‘ஒற்றைக்குடும்பம்தனிலேபொருள்ஓங்கவளர்ப்பவன்தந்தை, மற்றைக்கருமங்கள்செய்தேமனைவாழ்ந்திடச்செய்பவள்அன்னை, ஏவல்கள்செய்பவர்மக்கள்’ என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை

பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்

சாந்தின் நிறமொரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்

பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை

யாவும் ஒரே தரமன்றோ

இந்த நிறம் சிறிதென்றும் இஃது

ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்

மானிடர் வேற்றுமை இல்லை

சாதிபோல்அல்லாமல்வர்ணம்மாற்றிக்கொள்ளக்கூடியதுஎன்பதைஅவர்வலியுறுத்துகிறார். அவரதுஞானரதத்தில்தர்மலோகம்என்றபகுதியில்கதாநாயகன்கூறுகிறான்:–

“ எனது பிதா க்ஷத்திரியர் . நான் பிராமணன் . என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன் . மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி , ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன் . ”

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்

வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்

தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு

தன்னில் செழித்திடும் வையம் .

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்

கொண்டு வைய முழுதும் பயனுறப்

பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம் .

………………………………………. ஆயிரம் சாதி

வகுப்பவர் வகுத்து மாய்க . நீரனைவரும்

தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றையே சார்ந்தவராவீர் .

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

“ காக்கை குருவி எங்கள் சாதி

காடும் மலையும் எங்கள் கூட்டம் ”

என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், “கண்ணபிரான்ஜாதிவேற்றுமையும்அறிவுவேற்றுமையும்பார்க்கக்கூடாதுஎன்பதுமட்டுமேஅன்றிஎல்லாஉயிர்களுக்குள்ளேயும்எவ்விதவேற்றுமையும்பாராதுஇருத்தலேஞானிகளுக்குலட்சணம்” என்கிறார்.

“ பாம்பும் நாராயணன் , நரியும் நாராயணன் , பார்ப்பானும் கடவுளின் ரூபம் , பறையனும் கடவுளின் ரூபம் . இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம் . எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம் . ”

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.

6


எத்தனை கோடி இன்பம்


வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

மது வாதா ருதாயதே

மது க்ஷரந்தி ஸிந்தவ:

மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

மது நக்தம் உதோஷஸி

மதுமத் பார்த்திவகும் ரஜ:

மது த்யௌ ரஸ்து ந: பிதா

மதுமாந்நோ வனஸ்பதி:

மதுமாகும் அஸ்து சூர்ய:

மாத்வீர் காவோ பவந்துந:

பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. “நல்லதும்தீயதும்செய்திடும்சக்திநலத்தைநமக்குஅளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். “துன்பமேஇயற்கைஎன்னும்சொல்லைமறந்திடுவோம், இன்பமேவேண்டிநிற்போம்யாதும்அவள்தருவாள்” என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது

ஞாயிறு நன்று திங்களும் நன்று

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன

மழை இனிது மின்னல் இனிது இடி இனிது

கடல் இனிது மலை இனிது காடு இனிது

ஆறுகள் இனியன

இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

7


ஓம்


வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்..

இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம்என்பதுபிரணவமந்திரம். இந்தமந்திரத்துக்குஆகமங்கள்கோடிவகைகளில்பொருள்சொல்கின்றன. ப்ரணவம்என்றசொல்எப்போதும்புதுமையானதுஎன்றபொருள்தருவது.”

வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

புதியது காணில் புலனழிந்திடுவாய்

புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்

புதுமை காணோம் எனப் பொருமுவாய்

பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

8


சொல் புதிது


வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

9


இப்போதே முக்தி


தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்

பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

இத்தரை மீதினில் இந்த நாளில்

இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்

சுத்த அறிவு நிலையில் களிப்பவர்

தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம் ”

“கவலைப்படுதலேகருநரகம்மா, கவலையற்றிருத்தலேமுக்தி” என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?

முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

வைகறையாகு முன் பாடி விழிப்புற்று

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக்குருவி போலே

சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,

……………….. பாடுபடல்வேண்டா

ஊனுடலை வருத்தாதீர் , உணவு இயற்கை கொடுக்கும்

உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்

பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே

நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல

நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா

காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா

கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா

சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு

சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்

அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்

பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்

பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு

நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்

சிந்தையே இம்மூன்றும் செய் .

இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.

10


இனி ஒரு விதி செய்வோம்


பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும் தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்

பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்

பரிதவித்தே உயிர் துடிதுடித்தே

துஞ்சி மடிகின்றாரே இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே

என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார் .

பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ?

இந்நிலைவளரவிட்டால்என்னஆகும் ? ரஷ்யப்புரட்சியைச்சுட்டிக்காட்டுகிறார். அங்கு

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் தேவதேவா

ஞானாகாசத்து நடுவே நின்று நான்

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக . துன்பமும் மிடிமையும் நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

இன்புற்று வாழ்க என்பேன் . இதனை நீ

திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி

அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே .

“மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.

11


தேன் வந்து பாயுது காதினிலே


பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ்நாடெனும்போதினிலேஇன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே’ என்பது. காதிலே தேன் பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா, நாவில் என்றல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

‘உள்ளத்தில்உண்மைஒளிஉண்டாயின்வாக்கினிலேஒளிஉண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலேபருந்துகளும்கருடபக்ஷிகளும்வட்டமிட்டுவெயிலைத்தின்றுகொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது புலவர்க்குள்ள உரிமையைப் பயன்படுத்தி, புதுமையாக இருக்க வேண்டும் என்பதனால் அல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று . அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது . அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது . அன்று , அது சரியான உவமை ஆகமாட்டாது . உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை . இது என்ன ஒலி , எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன் . எனது அறிவிற்குப் புலப்படவில்லை .

இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே , அது எங்கிருந்து வருகிறது என்றேன் . மேலே பார் என்றனள் . நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன் .

அவருடைய கிரணங்கள் என்றாள் .

சந்திர கிரணங்களா , சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன் .

சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை . அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது . உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது . ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள் .

இதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. வேத ரிஷிகளைப் போல் பாரதி அத்தகைய ஒரு அருமையான கவியாக இருந்தார். அவரது உள்ளம் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே தோய்ந்திருந்தது. அதனால் அவருக்கு எதைப் பார்த்தாலும் எதைக் கேட்டாலும் ஆனந்தமே அனுபவமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. எனவே புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் அனுபவிக்கும் பரவச நிலையிலே அவர் இருந்தார் என்பது தெரிகிறது.

12


கற்பக விநாயகக் கடவுளே போற்றி


பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த

பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

தானேயாகிய தனி முதற் கடவுள்

என்று வாழ்த்துகிறார்.

பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

வெள்ளாடை தரித்த விட்டுணு என்று

செப்பிய மந்திரத் தேவனை

முப்பொழுதேத்திப் பணிவது முறையே .

மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

பரம் பொருளேயோ பரம் பொருளேயோ

ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

தேவ தேவா சிவனே கண்ணா

வேலா சாத்தா விநாயகா மாடா

இருளா சூரியா இந்துவே சக்தியே

வாணீ காளீ மாமகளேயோ

இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

தேவரும் தானாய் திருமகள் பாரதி

உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் .

புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனதிற் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும்போது நின் மவுன

நிலை வந்திட நீ அருள் செய்வாய்

கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும் தர நீ கடவாயே

‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.

13


நம்புவதே வழி


இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

நம்புவதே வழி என்ற மறை தனை

நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார் .

இன்னொரு பாடலில்

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்

என்கிறார்.

வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம்.

சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். சிரத்தையின் அடிப்படை- குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில் நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு .

சிரத்தையை அதற்கான இதய தாகத்தை அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தையே எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

அம்பிகையைச் சரண் புகுந்தால்

அதிக நலம் பெறலாம் .

நம்புவதே வழி என்ற மறை தனை

நாம் இன்று நம்பி விட்டோம் .

14


கவிவாணர்க்கு நல்லமுது


அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், “ஆம். உயர்ந்தகவிதையின்நெறிஅது. கவியின்இஷ்டதேவதையின்காந்திஅவனுடையஉள்ளத்தில்வீசும். அந்தஒளிபாட்டிலேதெரியும்.”

இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அதில் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் இருப்பது பாரதியின் விளக்கம்.

அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.

1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)

2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.

3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)

4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)

5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.

6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.

7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)

8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)

9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.

இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்

நீக்கிக் கொடுப்பவனை – உயிர்

நீளத் தருபவனை – ஒளிர்

நேர்மைப் பெருங் கனலை – நித்தம்

அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்

ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்

ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்

ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று

மண்டி எழும் தழலைக் – கவி

வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்

வண்ணம் தெரிந்தவனை – நல்ல

தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்

தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு

தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்

ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

15


வாயுவாகி வெளியை அளந்தனை


வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர் மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம்.

வேத்தில் வரும் ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ (காற்றே, நீயே கண் கண்ட தெய்வம்) என்பதற்கு விளக்கமாகப் பாரதி பதினைந்து அழகிய வசன கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சில மட்டும் கீழே சுருக்கித் தருகிறேன்

1 ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் . ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது . எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்னேகம் . நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு . ஒரு கயிறா சொன்னேன் ? இரண்டு கயிறு உண்டு . ஒன்று ஆண் . மற்றொன்று பெண் . கணவனும் மனைவியும் . ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர் . பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை . அவை இரண்டும் ஒன்றை ஒன்று காமப் பார்வை பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரஸப் போக்கிலே இருந்தன . இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறிவிட்டது .

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன் . நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது . கந்தன் என் வரவை எதிர் நோக்கி இருந்தது . எங்கேடா போயிருந்தாய் வைதீகம் ? சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாயே என்றது . அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறது என்று கேட்டேன் . ஆகா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன் ? காற்றுத் தேவன் தோன்றினான் . அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன் . வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது .

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

காற்றே போற்றி நீயே கண் கண்ட தெய்வம் .

அவன் தோன்றிய போதிலே வான முழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது . ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன் . காற்றுத் தேவன் சொல்வதாயினன் - மகனே ஏதடா கேட்டாய் ? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா ? இல்லை . அது செத்துப் போய் விட்டது . நான் ப்ராணசக்தி . என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும் . என் உறவு இல்லாதது சவம் . நான் ப்ராணன் . என்னாலே அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது . சுகம் பெற்றது . சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க - இறக்க - விட்டு விட்டேன் . துயிலும் சாவு தான் . சாவும் துயிலே . நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை . மாலையில் வந்து ஊதுவேன் . அது மறுபடி பிழைத்து விடும் . நான் விழிக்கச் செய்கிறேன் . அசையச் செய்கிறேன் . நான் சக்தி குமாரன் . என்னை வணங்கி வாழ்க .

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி

2 நடுக் கடல் . தனிக் கப்பல் . வானமே சினந்து வருவது போன்ற புயற் காற்று . ஹதம் . இரு நூறு உயிர்கள் அழிந்தன . ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும் . சக்தி காற்றாகி விடுகிறாள் . காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான் . அவற்றில் உயிர் பெய்கிறான் . காற்றே நீரில் சூறாவளி காட்டி , வானத்தில் மின்னலேற்றி , நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி , நீரைத் தூளாக்கி , தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான் . காற்றே யுக முடிவு செய்கின்றான் . காற்றே காக்கின்றான் . அவன் நம்மைக் காத்திடுக .

3 வீமனும் அனுமனும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும் . உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம் . உயிர் தான் காற்று . தோன்றுதல் , வளர்தல் , மாறுதல் , மறைதல் எல்லாம் உயிர்ச் செயல் . உயிரை வாழ்த்துகின்றோம் .

4 எறும்பு உண்ணுகிறது , உறங்குகின்றது , மணம் செய்து கொள்கின்றது , குழந்தை பெறுகின்றது , ஓடுகிறது , தேடுகிறது , போர் செய்கிறது , நாடு காக்கிறது . இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம் . மகா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள் .

5 காற்றுக்குஅஞ்சிஉலகத்திலேஇன்பத்துடன்வாழமுடியாது. மலைக்காற்றுநல்லது. கடற்காற்றுமருந்து. வான்காற்றுநன்று. ஊர்க்காற்றைமனிதர்பகைவனாக்கிவிடுகின்றனர். அவன்வரும்வழியிலேஎவ்விதமானஅசுத்தமும்கூடாது. அவன்வரும்வழியிலேசோலைகளும்பூந்தோட்டங்களும்செய்துவைப்போம். அவன்சக்திகுமாரன். மகாராணியின்மைந்தன். அவனுக்குநல்வரவுகூறுகின்றோம். அவன்வாழ்க. (சுற்றுச் சூழல் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுக்கு அன்றே வேத அடிப்படையில் வித்திட்டவர் பாரதி)

6 நொய்ந்த வீடு , நொய்ந்த உடல் , நொய்ந்த உயிர் , நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கி விடுவான் . ஆதலால் மானிடரே வாருங்கள் . வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம் . உடலை உறுதி கொள்ளப் பழகுவோம் . உயிரை வலிமையுற நிறுத்துவோம் . உள்ளத்தை உறுதி செய்வோம் .

7 காற்றைப் புகழ நம்மால் முடியாது . அவன் புகழ் தீராது . அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரம்ம என்று போற்றுகிறார்கள் . ப்ராண வாயுவைத் தொழுகின்றோம் . அவன் நம்மைக் காத்திடுக . அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க . வ்யானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க . உதானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க . காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம் . உயிரை வணங்குகின்றோம் . உயிர் வாழ்க . புலவர்களே , காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம் .

நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

16


செங்கதிர்த் தேவன்


பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன.

காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் அணிவித்ததை நாம் அறிவோம்.

பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம் என்றும் அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்றும் கூறுகிறார். எனவே பாரதி விரும்பியது என்னவென்றால், எல்லாச் சாதியினரும் யக்ஞம் செய்வதற்குரிய தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

யக்ஞம் என்பது தீ வளர்த்துச் செய்யப்படும் வேள்வி மட்டும் அல்ல, தெய்வ ஆராதனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் குறிக்கும் என்கிறார். எல்லோரும் தெய்வத்தை ஆராதிக்கத் தகுதி பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அந்தணர்கள் செய்கின்ற ஜபத்தில் பயன்படும் காயத்ரி மந்திரத்தைப் பாரதி அழகான தமிழில் தருகிறார் கேளுங்கள்.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக .

பாரதிக்கு ஓம் என்னும் பிரணவத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஒலிக்கு என்று ஒரு தனிச் சக்தி இருப்பதை அறிந்த அவர் மந்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்த போதும் ஓங்கார ஒலியை விடாமல் அதைச் சமத்காரமாக மந்திரத்தின் நடுவில் நுழைத்திருப்பதைக் கவனியுங்கள்.

காயத்ரி மந்திரம் தவிர சூரியனைப் போற்றும் மந்திரங்கள் பல வேதத்தில் உள்ளன. அதனால் பாரதியார் சூரியனைக் குறிப்பிடும்போது சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி என்று பாராட்டுகிறார்.

“ காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுகள் உதய சூரியனை நோக்கி ஓதப்படுகின்றன . சூரியன் பரமாத்மாவின் ஞான ஒளி . இந்த தேவன் நான்கு அம்சங்கள் உடையவன் . மித்திரன் , வருணன் , அர்யமான் , பகன் . இவருள்ளே மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன் . வருணன் அதன் அனந்த நிலை ( எல்லையற்ற தன்மை ) ஆவான் . அர்யமான் வலிமைத் தேவன் . பகன் அவ்வொளியின் இன்ப உணர்ச்சியாக நிற்பவன் .

“ முழுமுதற் கடவுளுக்கு ஒளியே விழி . ஒளியையே சூரியன் என்று போற்றுகிறோம் . பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்தி தான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது . அதன் அன்பு வடிவத்தை அதாவது தெய்வீக அன்பையே மித்திரன் என்று வாழ்த்துகிறோம் .

இந்த முன்னுரைக்குப் பின் பாரதி அந்தணர்கள் தினசரி செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பொருள் தருகிறார். எந்த மந்திரம் சொன்னாலும் பொருள் தெரியாமல் வெறுமே ஒலியைத் தியானம் செய்வதால் பயனில்லை என்பது அவரது கருத்து. அந்தக் கருத்துகளைத் தன் பாடல்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மந்திரங்களின் பொருளையும் அவற்றைப் பாரதி தன் பாடல்களில் புகுத்தி இருக்கும் அழகையும் காண்போம்.

மந்திரத்தின் பொருள் :

மக்களைக் காப்பவன் சூரியன். அவனது புகழத் தக்க அழிவற்ற மனம் கவரும் பெருமைகளைத் தியானிக்கிறேன். சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களைநடத்திவைக்கிறார். பூமியையும் வானுலகத்தையும் தாங்கும் சூரியன் ஜீவராசிகளைக் கண்கொட்டாமல்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாரதியின் பாடல்

மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்

வாழி நோக்கிடும் வள்ளிய தேவா

காதல் கொண்டனை போலு மண் மீதே

கண் பிறழ்வின்றி நோக்குகின்றாயே

மந்திரத்தின் பொருள்

அழியாத பலன் பெறுவதற்காக அவருக்கு நெய் ஹவிஸ் அளிக்கிறோம். சூரியனே யார் உம்மை நியமத்துடன் ஆராதிக்கிறானோ அவன் பரிபூர்ண தர்ம பலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் காக்கப்பட்டவன் நோய்வாய்ப்படான். பாவம்இவனைத்தூரத்திலிருந்துகூடத்துன்புறுத்தாது.

பாரதியின் பாடல் :

கவலைகள் சிறுமை நோய் கைதவம் வறுமைத் துன்பம்

அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையாகும்

இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேய்கள்

நலமுறு ஞானபானு நண்ணுக ; தொலைக பேய்கள்

மந்திரத்தின் பொருள்

ஆன்ம ஜோதியாலும் பிரகாசத்தாலும் தேவர்களையும் மனிதர்களையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி வரும் சூரியன் பொன்மயமானதேரில் உலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

பாரதியின் பாடல்

பரிதியே பொருள் யாவற்கு முதலே

பானுவே பொன்செய் பேரொளித் திரளே

மந்திரத்தின் பொருள்

இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கும் உயர்ந்த ஜோதி, தேவர்களைக் காப்பவர். இவரைப் பார்ப்பதால் நாம் உத்தமமான ஆத்ம ஜோதியை அடைவோம். அந்த பிரசித்தமான, அனைத்தையும் அறிகிற சூரியனை கிரணக்குதிரைகள்உலகோரின்தரிசனத்திற்காகஉயரத்தாங்கிச்செல்கின்றன.

பாரதியின் பாடல்

கடலின் மீது கதிர்களை வீசி

கடுகி வான்மிசை ஏறுதி ஐயா

மந்திரத்தின் பொருள்

மித்திரன் வருணன் அக்னி இவர்களது கண்ணாக விளங்கும் சூரியன் விசித்ரமான சர்வ தேவ ஸ்வரூபி. அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தேவ லோகம், பூலோகம், அந்தரிக்ஷம் எங்கும் வியாபிக்கிறவர், கிழக்கில் உதிப்பவர், தேவர்களுக்கு நன்மை செய்பவர், கண் போன்றவர். இவரை நூறாண்டு காலம் வணங்குவோம், வாழ்வோம், உறவினருடன்குலாவுவோம், மகிழ்வோம், கீர்த்திபெறுவோம், இனியன கேட்போம், இனியன பேசுவோம், தீமைகளை வென்று நிற்போம்.

பாரதியின் பாடல்

திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்

மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

வருவது ஞானத்தாலே வையகமுழுது மெங்கள்

பெருமை தானிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு .

மந்திரத்தின் பொருள்

சூரியனைக் காண விரும்புகிறோம். விரும்பியபலனைஅளிப்பவரும் சிவந்த கண்ணரும் எல்லாம் அறிந்தவரும் எத்திக்கிலும் பிரகாசிப்பவரும் பெரிய கடலின் நீரின் நடுவிலிருந்து காலையில் உதிப்பவரும் ஆன சூரியன் முழு மனதுடன் என்னைப் புனிதன் ஆக்குவாராக.

பாரதியின் பாடல்

பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே

எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்

திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

நண்ணிடும் ஞான பானு அதனை நாம் நன்கு போற்றின்

இவற்றிலிருந்து பாரதி சந்தியா வந்தனத்தைப் பொருளுணர்ந்து போற்றியதை அறிய முடிகிறது.

17


வேதம் புதுமை செய்


இடைக்காலம் வரை ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்த வேதங்களை மேலை நாட்டவர் கண்டுபிடித்து மிகுந்த முயற்சியுடன் கற்று மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஸாயணாசார்யர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை தான். ஸாயணரோ வேதங்களுக்கு வேள்விக் கண்ணோட்டத்துடனேயே உரை எழுதி உள்ளார். வேறு வகையான உரைகள் கிடைக்காத நிலையில் மேலை நாட்டவர் இதனையே வேதத்தின் உண்மையான கருத்து என்று கருதி அதன் அடிப்படையில் சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

இவர்கள்கூறுவதாவது, “பண்டையஆரியர்கள்மின்னல், நீர், காற்று, தீமுதலானஇயற்கைத்தெய்வங்களைவணங்கினர். இந்தத்தெய்வங்களைமகிழ்விக்கவேள்விகள்செய்தனர். இவற்றில்இவர்கள்தீவளர்த்துஅதில்விலங்குகளைப்பலியிட்டும்சோமரசம்என்னும்போதைதரும்பானங்களைஅளித்தும்வழிபட்டனர். தங்களைவிரோதிகளிடமிருந்துகாப்பாற்றுமாறுஇவர்கள்தேவர்களைவேண்டினர். விரோதிகள்எனஅவர்கள்குறிப்பிடுவதுஇந்தவேள்விமுறைக்குமாறுபட்டகூட்டத்தினரானதிராவிடர்என்னும்கூட்டத்தாரை.”

ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையான ஆரியர் குடியேற்றம், திராவிடர்களுடன் போர் முதலிய கொள்கைகள் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்து ஆளுவதற்கு வசதியாக இருந்தது. அவர்களது இந்தக் கண்டுபிடிப்புகளை மறு பரிசீலனை இன்றி ஒப்புக்கொண்ட நம் நாட்டு ஆசிரியர்களும் அக் கருத்துகளையே உண்மை என்பதாகப் பரப்பி வந்துள்ளனர்.

இவ்வாறு வேதங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதால் பலரும் வேதத்தை இகழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் ஆன்மிகக் குறியீட்டு முறையில் வேதத்திற்குப் பொருள் கண்டு இது வரை தெளிவு படுத்தப்படாத பகுதிகளில் சிறந்த ஆன்மிகக் கருத்துகள் அடங்கி இருப்பதை வெளிப்படுத்தினர்.

ஆன்மிகக் குறீயீடு என்பது என்ன? வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வி என்பது மனிதன் இறை நிலை அடையச் செய்யும் முயற்சியைக் குறிக்கும். இந்திரன் என்பது இடி மின்னல் தெய்வம் அல்ல. அது விஞ்ஞான சக்தியை அதாவது தெய்விகத் தன்மை கொண்ட மனத்தைக் குறிக்கிறது. அக்னி என்பது தீ அல்ல. அது ஞான சக்தி என்னும் அறிவுத் துணிவை அதாவது மேல்நிலை அடையவேண்டும் என்னும் இறை நாட்டத்தைச் சுட்டும். அவ்வாறே சூரியன் என்பது அறிவாகிய ஒளியையும், கோ (பசு) என்பது அதன் கிரணங்களையும் குறிக்கும். வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ் எனப்படும் நெய்யுணவிற்கு ஞானத் தெளிவு என்று பொருள் கொள்ள வேண்டும். விருத்திரன் என்பது ஆரியருக்கு விரோதமான திராவிடர் இனத் தலைவன் அல்ல. அதன் வேர்ச் சொல்லான விருத் என்பது மறைத்தல் என்னும் பொருள் உடையது. அது அறிவை மறைக்கும் அஞ்ஞானத்தைக் குறிக்கிறது.

அரவிந்தர் தன் கற்பனையை வேத மந்திரங்களில் புகுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். ஸாயணருக்குக் காலத்தால் முந்தியவரான யாஸ்கர் என்பவர் வேதத்திற்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். அவர் சொற்களின் வேர் வரை சென்று பொருள் காண்பவர். அவரது வழி நின்றே அரவிந்தரும் இந்திரன் முதலான சொற்களுக்குப் புதிய பொருள் தருகிறார்.

சடங்குகளைப் போற்றும் கொள்கை உடைய ஸாயணரும் சில இடங்களில் இத்தகைய குறியீட்டுப் பொருள் தருகிறார். பல இடங்களில் சடங்குகளுக்குப் பயன்படும் வகையில் வலிந்து பொருள் கொள்கிறார். இந்த முரண்பாட்டை நீக்குகிறார் அரவிந்தர். மேலும் பல சூக்தங்களில் ஸாயணரும் அவரை ஒட்டி மொழிபெயர்த்த மேலை நாட்டவரும் தரும் பொருள் புரியாத புதிராக உள்ளது. அரவிந்தரின் குறியீடு தான் அதைச் சரியாக விளக்குகிறது.

உதாரணத்திற்கு ரிக் வேதம் 1-32 இன் மொழிபெயர்ப்பு இது.

“ 1 இந்திரனுடைய வீரச் செயல்களை இங்கு சொல்லுகின்றேன் . அவன் வஜ்ரி . மின்னல் அவனுக்குப் படை . அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகின்றேன் . பாம்பைக் கொன்றான் . மலைகளின் சார்புகளை உடைத்தான் .

“ 2 மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்து விட்டான் . வானத்தாலாகிய வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான் . நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக் கொண்டு செல்கின்றன , இரைந்து கொண்டு செல்லும் ஆவினம் போல .

“ 3 இந்திரன் ஏறு போன்றான் . மூன்று படிகளிலே மதுவுண்டான் . அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது .

“ 4 அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு மற்ற மாயாவிகளின் மாயைகளை எல்லாம் வென்றான் . பின்பு சூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான் . அதன் பிறகு இந்திரா , உனக்கோர் பகைவனுமில்லை .

“ 5 மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை . அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான் . பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான் .

“ 6 போர்த் தொழில் அறியாதவன் விருத்திரன் . இவன் நேர்மை நாடுவோனும் மகாவீரனுமாகிய இந்திரனைப் போருக்கு அழைத்தான் . இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை . சிதறுகிற தனது திறமைகளை இந்திர சத்ரு ஒன்று சேர்க்க முயன்றான் .

“ 7 காலும் கையும் இல்லாதவன் விருத்திரன் . இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான் . அவனுடைய வயிரப் படை இவனை மலையின் மீது கொன்றது . பலவற்றிலே விளங்குவோன் இந்திரன் . ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல அவனை விருத்திரன் பகைத்தான் , சிதறி வீழ்ந்தான் .

“ 8 ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே விருத்திரன் கிடந்தான் . இவன் மீது நதிகள் சென்றன . அவை மனதின் மேல் ஏறிச் சென்றன . முன்னர் அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான் . இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான் .

“ 9 விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள் . தாய் மேலும் மகன் கீழுமாயினர் . இந்திரன் அவள் மீது வீசியிருந்த படையை மீட்டுக்கொண்டான் . கன்றுடன் கிடக்கும் பசுவைப் போலே கிடந்தனள் தாநு .

“ 10 தங்கு தடையில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது . விருத்திரனது உடல் மறைவைக் கண்டு நதிகள் விரிந்து பெருகின . இந்திரனைப் பகை கொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான் .

“ 11 கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்துக் கொண்டான் . அவை பகைவனுக்குப் பத்தினிகள் ஆயின . அவற்றைப் பாம்பு காத்தது . நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட்டிருந்தது . விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான் .

“ 12 இந்திரா , முதற் பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான் . அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க் காவலன் ஆயினை . கதிர்களை வென்றாய் , சூரா , மதுவை வென்றாய் . ஏழு நதிகளையும் பெருகும்படி விடுவித்தாய் .

“ 13 இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில் பகைவன் விளைவித்த மின்னலும் தென்றலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை . பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன . அவற்றையும் இந்திரன் வென்றான் .

“ 14 இந்திரா , பகைவனை அழித்தபிறகு , அச்சத்தோடு செல்லும் பருந்து போல , நீ எதன் பொருட்டாகத் தொண்ணூற்று ஒன்பது நதிகளையும் உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்கிறாய் ? நீ கண்டு மனம் அஞ்சத் தகுந்த போராளி பாம்பினிடத்தில் ஏது ?

“ 15 செல்வன நிற்பன அனைத்திற்கும் இந்திரனே அரசன் . இவன் வயிரப் படையைக் கைக் கொண்டான் . சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன் . தொழில் செய்வோரை எல்லாம் இவனே ஆளுகின்றான் . ஆரக் கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போல இவன் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றான் .

மேலே கண்ட மொழி ஆக்கம் நமக்கு எதுவும் விளங்காது இருப்பதில் வியப்பு இல்லை. பாம்பு நதியைக் குகையில் அடைத்து வைத்திருந்தது, இந்திரன் அதைக் கொன்று நதிகளை விடுவித்தான் என்பது குழந்தைக் கதை போல உள்ளது. இதில் என்ன ஆன்மீகத் தத்துவம் இருக்கிறது, இது போன்ற கதைகளைக் கொண்ட வேதத்தைக் கொண்டாடுகிறார்களே என்று நமக்குத் தோன்றும். அதன் உண்மையான பொருளை அறிய அரவிந்தர் வழி நின்று பாரதி அளிக்கும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

“இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி. இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு விருத்திரன் என்பது பெயர். (விருத்திரன்= மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள், அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம், அதாவது பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்குத் தாநு என்று பெயர். (தாநு= பிரிப்பது)

“நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண், காற்று வானம் என. வானத்தின் மேலே உண்மை உலகம் இருக்கிறது. அந்த உண்மை உலகத்திலிருந்து நமது அறிவிலே ஞான ஒளியின் கிரணங்களும் தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

“அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாயவொட்டாதபடி விருத்திராசுரனும், பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நம்முள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற்கூறப்பட்ட தேவநதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கி வைத்து அவை நமது அறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

“இந்த விருத்திரனை வேதம் பாம்பு என்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கை கால் கிடையாது. வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

“இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால் அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று தேவநதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் மண் காற்று வான் (உடல் உயிர் அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலை பெற்று அமிர்த பானம் (சோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மகரிஷிகளின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்கு அறிந்து கொண்டால் மந்திரங்களின் பொருள் தெளிவு படும்.”

பாரதியின் இந்த விளக்கத்துக்குப் பின் இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு புதிய பொருள் விளங்குகிறது அல்லவா? இது போல மேலும் சில சூக்தங்களுக்குப் பாரதி புதிய பொருள் தருகிறார். அவர் மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் நான்கு வேதங்களையும் முழுமையாக மொழிபெயர்த்து வேதம் புதுமை செய்திருப்பார்.

18


பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்


பாரில் எறும்பும் உயிர் பிழைக்கப் படும் பாடு முழுவதும் அறிந்திலீரோ என்றார் கவிமணி. ஆம், உலகில் ஒவ்வொரு பிராணியும் உயிர் வாழவே விரும்புகிறது.

“ அநியாய மரணமெய்தல் கொடுமை அன்றோ ?

தேனானஉயிரைவிட்டுச்சாகலாமோ?” என்று பாரதி கேட்கும் போது, உயிருக்கும் உடம்புக்கும் உள்ள இந்த இயல்பான பாசமே வெளிப்படுகிறது.

“நோவுவேண்டேன், நூறாண்டுவேண்டினேன்” என்றும்,

“ கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும்தரநீகடவாயே” என்றும்

“ நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம் ”

என்றும் வேண்டும்போது எல்லோரையும் போலத் தான் பாரதியும் நீண்ட ஆயுளை விரும்புகிறார் என்று நினைக்கிறோம்.

ஆனால் பாரதி பிற்காலத்தில் பாடிய பாடல்களில் ஒரு மாற்றம் தெரிகிறது. அவர் நீண்ட ஆயுள் கேட்காமல் சாகாமல் இருக்கும் அமர நிலை வேண்டும் என்று கேட்கிறார். மண்ணில் தெரியும் வானத்தை வசப்படுத்தவும், செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் என்றில்லாமல் ‘இத்தரைமீதிலேஇப்போதேமுக்திசேர்ந்திடநாடிச்சுத்தஅறிவுநிலையிற்’ களிக்கவும் விரும்புகிறார். சாகாவரம் வேண்டியது மட்டுமல்ல, அதைத் தான் அடைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

“ நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசாரியன் மாண்டான்

அதற்கடுத்த இராமானுஜனும் போனான்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கருணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

மலிவு கண்டீர் இவ்வுண்மை , பொய் கூறேன் யான் ,

மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே . ”

இந்தப் பாடல் சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.

முதல் கேள்வி

பார்மீதுநான்சாகாதிருப்பேன் என்று பாரதி மனதாரத் தான் பாடினாரா அல்லது புலவர்க்குள்ள உரிமையைப் பயன்படுத்தி மிகைப்படுத்திக் கூறினாரா?

இப்படி நாம் சந்தேகப்படுவோம் என்று ஊகித்தோ என்னவோ ‘பொய் கூறேன்’ என்று இரு முறை சத்தியப் பிரமாணம் செய்கிறார் பாரதி. சாகாமல் இருப்பது சாத்தியம் என்று அவர் சத்தியமாக நம்பினார். திருமூலர் கூறியது போல திடம்பட மெய்ஞானம் சேர்வதற்காக அவர் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து கொண்டு விட்டதாக நம்பினார்.

“ நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கை தனை அழித்து விட்டால்

அபபோது சாவும் அங்கே அழிந்து போகும் . ”

இதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் வேறு காட்டுகிறார். அக்காலத்திய பிரபல விஞ்ஞானி ஜகதீச சந்திர வசு கூறுவதாக அவர் கூறுகிறார்,

“ நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் .

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் . ”

எனவே கோபம் முதலான தீய குணங்களை, அசுரர்களை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும், விடம் உண்டும் சாகாமல் இருக்கலாம் என்பது அவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவருக்கு எப்படி வந்தது?

புதுச்சேரியில் அவர் தங்கி இருந்த போது அவருக்குச் சில ஞானிகளின் தொடர்பு ஏற்படுகிறது. குள்ளச்சாமி, கோவிந்த ஸ்வாமி, யாழ்ப்பாணத்து சுவாமி இவர்கள் எல்லோருமே பெரும் யோகிகள். இவர்களில் குள்ளச்சாமி அஷ்டாங்க யோக சித்தி பெற்றவர். ‘வானத்தைஇவ்வுலகிலிருந்துதீண்டும்வகைஉணர்த்திக்காத்தபிரான்’ என்றும் ‘காயகற்பம்செய்துவிட்டான்அவன்வாழ்நாளைக்கணக்கிட்டுவயதுரைப்பார்யாருமில்லை’ என்றும் ‘குப்பாயஞானத்தால்மரணமென்றகுளிர்நீக்கிஎனைக்காத்தான்’ என்றும் பாரதி அவரைப் போற்றுகிறார்.

குள்ளச்சாமிஇவருக்குச்

“ சக்தி தேவி வயப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும் ” என்றும்

“நீகுறிப்பைநீக்கிஅநந்தமாம்தொழில்செய்தால்அமரனாவாய்” என்றும்

“ வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி

மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்

தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே

தெரிவது போல உனக்குள்ளே சிவனைக் காண்பாய் ”

என்றும் உபதேசிக்கிறார். அதாவது முன் சொன்ன தீய குணங்களை நீக்கி மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தால் உள்ளத்தில் ஈசனைக் காணலாம். தன்னை மறந்து ஈசன் வசப்பட்டு வாழ்ந்தால் மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம்.

சாமியார்களைப் பார்த்ததும் கண்மூடித்தனமான பக்தி கொள்பவரல்லர் பாரதி.

“ ………………….. தன்னுடை

அறிவினுக்குப் புலப்படல் இன்றியே

தேயமீது எவரோ சொலும் சொல்லினைச்

செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம்

தீய பக்தி இயற்கையும் வாய்ந்திலன் ”

என்று அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதால் இதை அறியலாம்.

மனிதன் அமரத் தன்மை அடைதலே வேத ரகசியம் என்று கூறிய அரவிந்தரின் தொடர்பும் அவரது சிந்தனைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை அவரது பகவத்கீதை முன்னுரையிலிருந்து அறியலாம்.

சாகாதிருத்தல் , மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் – இதுவே கீதையின் ரஸம் . அமரத் தன்மை - இதுவே வேத ரஹஸ்யம் . இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன .

நித்ய ஜீவிகளாய் மண் மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்ய ஜீவன் முக்தராவர் . அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று கடவுள் போதித்திருக்கிறார் . அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார் .

இந்தஞானிகளைப்பற்றிநன்குஅறிந்துஅவர்கள்கூறும்முறைகளைநன்குஆராய்ந்து, உண்மைஎன்றுதன்அனுபவத்தில்கண்டபிறகுதான்அவர்

‘ மண்ணின் மீதிருந்து வானத்தைத் தீண்ட முடியும் ’ ,

‘ தேவசக்திகளை நம்முள் நிலை பெறச் செய்யலாம் ’ ,

‘ உயிர் வெள்ளம் கரையடங்கிப் பாயும் ’ ,

‘ உயிர் நித்தம் நவமெனச் சுடர்தரும் ’ ,

‘அத்வைதநிலைகண்டால்மரணமில்லை’ என்றும் நம்புகிறார்.

இரண்டாவது கேள்வி

ராமன் முதலான அவதார புருஷர்களுக்குத் தெரியாத ஒரு கலை தனக்குத் தெரிந்து விட்டதாகப் பாரதி ஆணவத்துடன் மார் தட்டுகிறாரா?

இல்லை. பாரதியை முழுமையாக அறிந்தவர்கள் அவரிடம் ஆணவத்தைக் காண முடியாது. அவதார புருஷர்கள் சாகாக் கலையை அறிந்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் தங்கள் அவதார நோக்கம் முடிந்தவுடன் தங்களைக் கூற்றுக்கு இரையாக்கிக் கொண்டனர். ஆனால் நான் அதைப் பயன்படுத்துவேன் என்ற கருத்தில் தான் அவர் அதைக் கூறுகிறார். எதற்காக?

அவருக்குநிறைவேற்றவேண்டியகடமைஒன்றுஇருந்தது. பாட்டுத்திறத்தாலேஇந்தவையத்தைப்பாலித்திடும்கடமைதான்அது. இந்நாட்டைத்

“ தொல்லை தீர்த்து உயர்வு , கல்வி , வெற்றி ,

சூழும் வீரம் , அறிவு , ஆண்மை ,

கூடும் திரவியத்தின் வகைகள் , திறல்

கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் இவை

நாடும்படிக்கு வினை செய்து இந்த

நாட்டார் கீர்த்தி எங்கும் ஓங்கக் கலி

சாடும்திறன்” பெற்றுக் கிருத யுகத்தினை நிலை நாட்டும் மகத்தான பணி அது. அதற்கு நூறாண்டு, இருநூறாண்டு என்று கால எல்லை கொண்ட வாழ்வு போதாது. இப் பணி நிறைவேறும் வரை அது எவ்வளவு காலமானாலும் சாகாமல் இருந்து ‘விசையுறுபந்தினைப்போல்உளம்வேண்டியபடி’ செல்லக் கூடியதும், ‘அரிவாளைக்கொண்டுபிளந்தாலும்கட்டுறுதிமாறாததும்’, ‘அம்புக்கும்தீக்கும்விடத்துக்கும்நோவுக்கும்அச்சமில்லாததுமான’ உடல் பெற்று வாழவே விரும்புகிறார். தன் நலத்துக்காக அல்ல, மாநிலம் பயனுற வாழ்வதற்கே.

ராமனும் கிருஷ்ணனும் பயன்படுத்தாத சாகாக் கலையை நான் பயன்படுத்துவேன் என்று கூறினாலும் அவர்களை இவர் தாழ்வாக நினைக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று “சாகாவரம்அருள்வாய், ராமா” என்று ராமனையே இவர் வேண்டுவது தான்.

மூன்றாவது கேள்வி

அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ என்று வினவிய பாரதி, தான் அந்நிலையை அடைந்தாரா?

“ நான் புதியன் , நான் கடவுள் , நலிவிலாதோன்

என்றிந்த உலகின் மிசை வானோர் போலே

இயன்றிடுவார் சித்தரென்பார் ”

என்று சித்தருக்கு இலக்கணம் கூறிய அவர் வேறு ஒரு பாடலில் தன்னையும் ஒரு சித்தனாகக் கூறிக் கொள்கிறார். எனவே நான் கடவுள் என்ற அத்வைத நிலையை அவர் அடைந்திருந்தார் என்று ஊகிக்கலாம்.

பிரகலாதன் கதையை அத்வைத நோக்கில் சொல்லி வரும்போது “இந்தஎழுதுகோல்தெய்வம். இந்தஎழுத்தும்தெய்வம்” என்று கூறுவது அவரது அத்வைத மனநிலையைக் காட்டுகிறது.

“வானில்பறக்கும்புள்ளெல்லாம்நான்,” என்று அவர் பாடியது அத்வைத நிலையில் இருந்தே.

“ இன்பமாகி நின்றாய் காளி என்னுளே புகுந்தாய்

பின்பு உன்னை அல்லால் பிறிது நானுமுண்டோ ”

என்று கேட்பதிலிருந்து இறைப் பேராற்றலுடன் இரண்டறக் கலந்த சமாதி நிலையைச் சில சமயங்களிலாவது அவர் அடைந்திருந்தார் என்பதை அறியலாம்.

நான்காவது கேள்வி

பாரதி கண்ட அத்வைத நிலை அவரை மரணமடையாமல் இருக்கச் செய்ததா?

இல்லை. அற்பாயுளில் அவர் மரணம் அடைந்து விட்டார். தவறு எங்கே நடந்தது?

“ ……………………… நிலத்தின் மீது

போராக நோயாக மரணமாகப்

போந்திதனை அழித்திடுவாள் புணர்ச்சி கொண்டால்

நேராக மோன மகானந்த வாழ்வை

நிலத்தின்மிசைஅளித்துஅமரத்தன்மைஈவாள்” என்று அவர் நம்பிய பராசக்தி அவரைக் கைவிட்டு விட்டாளா?

அல்லது பொறுமையை நெடுநாள் காத்த தருமன் இறுதியிலே பொறுமை நெறி தவறி விட்டான் என்பது போல இவரும் முன் அடித்து விரட்டிய தீய குணங்களுக்கு இடம் கொடுத்து விட்டாரா?

அல்லது நம் கண்களிலிருந்து அவரது ஊன உடல் மறைந்தாலும்,

“ பொந்திலே உள்ளாராம் , வனத்தில் எங்கோ

புதர்களிலே இருப்பாராம் , பொதியை மீதே

சந்திலே சவுத்தியிலே நிழலைப் போல

சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் ”

என்று அவரால் வர்ணிக்கப்பட்ட சித்தர்களைப் போல இவரும் சற்றே அங்கங்கே தென்படுகின்றாரா?

எல்லாவற்றிற்கும் விடை ‘இல்லை’ என்பது தான்.

உண்மை என்னவென்றால் விதி வலியது. தன்னை எள்ளி நகையாடி, பூமியில் கிருத யுகத்தை நிலைநாட்ட, அடங்காத ஆர்வமும் அளவிலாச் சக்தியும் உடையவனாக ஒருவன் வளர்ந்து வருவதை அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாரதியும் விதியின் வலிமையை உணர்ந்தே இருந்தார்.

“ ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ

உண்மை தன்னிலோர் பாதி உணர்ந்திட்டேன் ”

பாதி உண்மையை உணர்ந்து கொண்டு யமனுக்குச் சவால் விடும் பாரதியைப் பார்த்து விதி நகைத்திருக்க வேண்டும்.

தான் ஞானியரிடமிருந்து கற்றுக் கொன்ட அறிவு மட்டும் தனக்குச் சாகா நிலை தந்து விடாது என்பதை பாரதி உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் பாடுகிறார்,

“ சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று ,

சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் ”

“ முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை ”

நமது ஆராய்ச்சி, அறிவு (சதுர்) இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது சக்தியின் அருள் என்று அவர் சக்தியைச் சரணடையும்போது “எல்லாத் தர்மங்களையும் விட்டு விட்டு என்னைச் சரண் அடைக” என்று கீதாநாதன் சொன்னதை அப்படியே கடைப்பிடித்த பாரதியைக் காண்கிறோம்.

கீதையை முழுதும் ஓதி உணர்ந்த பாரதி ஒரு கால கட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் கீதையின் மற்றொரு கருத்தை, அதாவது ‘தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் தீங்கு வருமோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்று கண்ணன் சொன்னதை மறந்து விட்டார்.

இந்த நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்கும்போது ‘அதற்கு இந்த ஆயுள் போதாது, சாகா நிலை பெற்றுத் தான் அதைச் சாதிக்க முடியும், சக்தியைப் பூரணமாகச் சரணடைந்து விட்டதால் அவள் அதை எனக்கு நிச்சயம் அருள்வாள்’ என்று அவர் நம்பினார்.

சக்தியின் லீலைகளை யாரே முழுமையாக அறிய முடியும்? இந்திய மக்களைக் காப்பாற்றச் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதி உள்ளிட்ட பல சித்தர்களை அனுப்பிய பராசக்தி அவ்வக்காலத் தேவைக்கு ஏற்ப மேலும் அவதார புருஷர்களை அனுப்பிக் கொண்டேயிருப்பாள், அவர்களது வரிசை பாரதியுடன் முற்றுப் பெறாது என்பதை அவர் சற்று மறந்த நேரத்தில் பிறந்தவை தான் “நான் சாகாதிருப்பேன்” என்ற வார்த்தைகள்.

ஒன்று மட்டும் உறுதியாகக் கூறலாம். பாரதிக்கு வருங்காலம் உணரும் திறன் இருந்தது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அன்றே அவர் பாடிய பள்ளு இதை உறுதிப்படுத்துகிறது. தான் அற்பாயுளில் மாளப் போகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். தன் பாடல்களி்ல் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் நீண்ட ஆயுள், சாகா வரம் வேண்டுவதன் காரணம் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

மரணமும் அஞ்சேன், நோயினை அஞ்சேன் என்று அவர் எவ்வளவு தைரியமாகப் பேசினாலும் அவ்வளவு விரைவில் மரணத்தை ஏற்றுக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. தேனானஉயிரைவிட்டுச்சாகலாமோ என்ற சொற்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

இவ்வுலகம்இனியது, இதிலுள்ளவான்இனியது என்று இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு அணுவையும் ரசித்துத் துய்த்தவர் பாரதி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று வியந்து இறைவனுக்கு நன்றி கூறும் அவர் இவ்வுலகை விட்டு மறைய விரும்பாததில் ஆச்சரியம் இல்லை. பல வேடிக்கை மனிதரைப் போல தேடிச் சோறு நிதம் தின்று வாழ்க்கை நடத்தியிருந்தால் கொடுங் கூற்றுக்கு இரையென மாய்வதை அவர் விரும்பியிருக்கக் கூடும். அவருக்கோ எல்லாம் இன்ப மயம். தீக்குள் விரலை வைத்த போதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் பெற்றவர் அவர்.

இவ்வாறாக, வாழவேண்டும் என்ற தீவிர விருப்பமும் அநியாய மரணம் எய்தப் போகிறோம் என்ற உள்ளுணர்வும் மோதியதால் ஏற்பட்ட போராட்டம் தான் பாரதியைப் பல இடங்களில் நீண்ட ஆயுள் பற்றிப் புலம்ப வைத்திருக்கிறது.

ஆனால் பாரதியின் விருப்பம் வீண் போகவில்லை. அவரது ஒவ்வொரு பாடலிலும், கட்டுரையிலும் அவரது ஆன்மா உயிர்த் துடிப்புடன் விளங்குவதைக் காண்கிறோம்.

19


நையப் புடை


மகாகவி பாரதி வேதங்களைப் பொருளுணர்ந்து கற்றவர் என்றும் அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்தவர் என்றும் கண்டோம். ஆனால் நான் பெற்ற அத்வைத இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. வேதாந்தம் என்பது அதற்கு உரிய தாகமும் வயதும் சூழ்நி்லைகளும் வாய்க்கப் பெற்றோருக்கு மட்டுமே உரியது. மற்றவர் உலகக் கடமைகளிலிருந்து தப்புவதற்காக வேதாந்தத்தில் புகுந்து ஒளிந்து கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்து.

“ எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான் . ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது . ”

வயதான பிறகு கடோபநிஷத்தையும் சுந்தர காண்டத்தையும பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று கூறின பாரதி இளைஞர்களுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் கூறும் அறிவுரைகள் அவரது புதிய ஆத்திசூடியில் உள்ளன. மற்ற விஷயங்களில் புதுமை செய்தது போல, வேதாந்தத்தையும் உலகியலையும் ஒருங்கே போற்றியதன் மூலமும் பாரதி புதுமை செய்துள்ளார்.

அவருடைய புதிய ஆத்திசூடியில் காணப்படும் நையப் புடை என்ற வாசகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம்! அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.

பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது யாரை நையப் புடைக்கக் கூறுகிறார்?

பாரதியை முழுமையாகப் படித்தால் இதன் உட்பொருள் தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப் புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ

பயம் கொள்ளலாகாது பாப்பா ,

மோதி மிதித்து விடு பாப்பா அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

பாரதியாரின் அச்சமில்லை பாட்டு பிரசித்தமானது.

இச்சகத் துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மற்றவர்கள் தன்னைத் துச்சமாக எண்ணித் தூற்றினாலும், பொருள் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், வேசையர் வலை வீசினாலும், நண்பரே துரோகம் செய்த போதிலும், பெரும் படை தன்னைக் கொல்ல வந்து நின்றாலும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிறார்.

அச்சத்தை அழித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வே கிடைக்குமாம்.

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

மனிதருக்கு இயல்பாக ஏற்பட்ட அச்சத்தை நீக்கித் தனக்கு அருள வேண்டும் என மகாசக்தியை வேண்டுகிறார்

ஐயம் தீர்த்து விடல் வேண்டும் புலை

அச்சம் போயொழிதல் வேண்டும்

மகாசக்தியின் பாதங்களைச் சரணடைந்து விட்டதால் தன் அச்சம் நீங்கிவிட்டதாகக் கூறி மார் தட்டுகிறார் கேளுங்கள்.

மரணமும் அஞ்சேன் நோயினை அஞ்சேன்

மார வெம்பேயினை அஞ்சேன்

அக்கால மக்களின் கோழைத்தனத்தைப் பார்த்து,

அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே

என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்

காலா என் காலருகே வாடா

சற்றே உனை மிதிக்கிறேன்

என்றும்

யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே

உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை

என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

தொன்மைக்கு அஞ்சேல்

கீழோர்க்கு அஞ்சேல்

தீயோர்க்கு அஞ்சேல்

பேய்களுக்கு அஞ்சேல்

தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.

ஆறுவது சினம், நயம்பட உரை — ஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

ரௌத்திரம் பழகு

வெடிப்புறப் பேசு

கொடுமையை எதிர்த்து நில்

சீறுவார்ச் சீறு

என்ற வாசகங்களாலும்

தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி

நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா

என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது!

ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் அச்சம் தவிர்த்து வாழ வேண்டும் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார்.

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் .

நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

உடலினை உறுதி செய்

ஊண் மிக விரும்பு

இளைப்பது இகழ்ச்சி என்றும்

அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

நொய்ந்ததுசாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

காற்றுத்தேவன்மெல்லியதீயைஅவித்துவிடுவான், வலியதீயைவளர்ப்பான். எனவேநொய்ந்தஉடல், நொய்ந்தஉள்ளம்இவற்றைஒழித்துவிட்டுஉயிரைவலிமையுறநிறுத்துவோம்வாருங்கள் என்று முழங்குகிறது.

நமது மூன்றாவது எதிரி மௌட்டியம் (மூடத்தனம்). அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்– அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

சோதிடம் தனை இகழ்

தொன்மைக்கு அஞ்சேல்

பிணத்தினைப் போற்றேல்

புதியன விரும்பு

மௌட்டியம் தனைக் கொல்

வேதம் புதிது செய்

நமது நாலாவது எதிரி சோம்பல்.

ஓய்தல் ஒழி

நாளெல்லாம் வினை செய்

யவனர் போல் முயற்சி கொள்

கெடுப்பதுசோர்வு என்றும்

சோம்பல்மிகக்கெடுதிபாப்பாஎன்றும்தொழிலிலேசோம்பலைப்போல்இழிவில்லைஎன்றும்கூறியஅவர்

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா

மாக்களுக்கோர்கணமும்வாழத்தகுதிஉண்டோ என்று சாடுகிறார்.

அச்சத்தை ஒழிக்கவேண்டும், வலிமையைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதிக்கு எப்படி ஏற்பட்டது? சந்தேகமில்லாமல் வேதத்திலிருந்து தான். இது தொடர்பாக விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.

“வலிமை, வலிமை-இதுதான் உபநிடதத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறும் செய்தி. நினைவில் வைக்க வேண்டிய ஒரு பெரும் விஷயம் இதுவே. என் வாழ்க்கையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட மிகப் பெரும் பாடம் இதுவே. உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.

“ஆம், உலகிலேயே அபீ: (பயப்படாதே) என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிஷத் ஒன்று தான். உலகின் வேறு எந்த சமய இலக்கியத்திலும் கடவுளின் தன்மையாகவோ மனிதனின் தன்மையாகவோ அச்சமின்மை கூறப்படவில்லை.

“உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோத- எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதே. இளைஞர்களே, எழுந்திருங்கள், விழியுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. வாய்ப்புகள் நம் கண் முன்னே விரிந்து தயாராகக் காட்சி தருகின்றன. தைரியமாக இருங்கள். அஞ்சாதீர்கள். நம்முடைய சமய இலக்கியத்தில் மட்டும் தான் அச்சமின்மை என்ற சொல் ஆண்டவனின் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் அச்சமற்றவர்களாக ஆக வேண்டும். வேலை முடிந்துவிடும்.

“உண்மையான வேதாந்தி ஆவதற்கு முதல் படி அச்சமற்று இருக்க வேண்டும். பலவீனம் தொலைய வேண்டும். இது மிகவும் கடினம் தான். உலகப் பற்றை முற்றிலும் துறந்தவர்கள் கூடச் சில சமயம் மனதின் அந்தரங்கத்திற்குள் பலவீனத்தை உணர்வார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சராசரி மனிதனைப் பற்றிக் கேட்பானேன்? அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஆயிரம் ஆயிரம் விஷயங்களுக்கு அடிமையாகப் பயந்து பயந்து வாழ்கின்றனர்.”

பாரதியின் அச்சமில்லை என்ற பாட்டுக்கும், வலிமை கொண்ட தோளினாய் வா வா வா என்ற வரிகளுக்கும் வேர் எங்கிருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?

வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்–அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.

20


பேயவள் காண் எங்கள் அன்னை


புதுவையை வாழிடமாகக் கொண்ட பாரதி அதன் தொலைத் திட்டுப் பகுதியான காரைக்காலுக்கு வந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையாரின் பாடல்களை அவர் படித்திருக்கக் கூடும். ஆனால் அவர் அவர் கம்பன், இளங்கோ, வள்ளுவன் தவிரப் பிற புலவர்களையோ எந்த ஒரு நாயன்மாரையோ போற்றியதில்லை. என்றாலும், பாரதியின் ஒரு குறிப்பிட்ட பாடல் அம்மையாரைப் புகழ்ந்து பாடப்பட்டதோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. வெற்றி கொண்ட தாய் என்ற தலைப்பிலான பாடலின் முதல் நான்கு பாக்களைப் பாருங்கள்.

பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும்

பித்துடையாள் காண் எங்கள் அன்னை

காயழல் ஏந்திய பித்தன் தன்னைக்

காதலிப்பாள் எங்கள் அன்னை

இன்னிசையாம் இன்பக் கடலில் எழுந்

தெற்றும் அலைத் திரள் வெள்ளம்

தன்னிடை மூழ்கித் திளைப்பாள் அங்குத்

தாவிக் குதிப்பாள் எம் அன்னை .

தீஞ்சொற் கவிதை யஞ்சோலை தனில்

தெய்விக நன்மணம் வீசும்

தேஞ்சொரி மாமலர் சூடி மதுத்

தேக்கி நடிப்பவள் எம் அன்னை .

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை

வேல் கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்

தோதி உலகெங்கும் விதைப்பாள் .

பேய்க் கோலத்தை விரும்பி ஏற்றவர் அம்மையார். பேயாடும் கானில் பிறங்கக் கனலேந்தித் தீயாடும் பெம்மான் மேல் அவருக்குக் காதல், பிறந்து மொழி பயின்ற போதே ஏற்பட்டுவிட்டது. இக் காதல் கசிந்து பெருகிக் கடலென மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்ததால், மணிவாசகர் கூறுவது போல, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்பதில் முடிவடைந்தது. அவரது பாடல்களில் இறைவனிடம் ஆரா அன்பு, பணிவு, வியப்பு, பெருமகிழ்வு, நகைச்சுவை என்று பல்வேறுபட்ட உணர்ச்சிகள் கணத்துக்கு கணம் மாறி மாறி வருவதைக் காண்போர் இவர் பித்துக் கொண்டவர் என்று கருதியதில் வியப்பு என்னே!

தமிழிசையின் முன்னோடி அம்மையார். ஆலங்காட்டில் அப்பன் ஆடும் ஆட்டத்தை விவரிக்கப் புகுந்த அவர் பல இசைக் கருவிகளைப் பட்டியலிடுகிறார். இன்றைய ஸரிகமபதநி- க்கு இணையான தமிழ்ச் சுரப் பெயர்களான துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகியவற்றை நாம் அறிய உதவும் பழைமையான நூல் அவரது பாடல்களே. எனவே அவர் இசையில் புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பதை நாம் ஐயமின்றி ஊகிக்கலாம். இறைவனின் பேயாய நற்கணத்தில் ஒன்றாய அவர் இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துப் பாடிய பாடல்கள் அவர் தாவிக் குதித்து ஆடியதை நம் கண் முன் கொண்டு நிறுத்துகின்றன.

அம்மையாரின் கவிதைச் சிறப்போ சொல்லொணாதது. அதில் இல்லாத சுவை இல்லை. இல்லாத அணி இல்லை. அவரது பாடல்கள் அத்தனையும் தெய்விக நன் மணம் வீசும் தேன் சொரி மாமலர்களே, ஐயமில்லை.

வேதியனை, வேதப் பொருளானை, வேதத்திற்கு ஆதியனைப் புகழ்ந்து அவர் பாடிய பாடல்கள் சாதாரண மக்கள் எளிதில் கற்க முடியாத ஓதரும் சாத்திரம் கோடியின் உண்மையை எளிமைப் படுத்தித் தருகின்றன. ‘ஏழைகளே, எந்தை அராப் பூண்டு உழலும் அம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறம் எளியது தான், வாருங்கள்’ என்று கூவி அவர் பக்தி விதைகளை உலகெங்கும் விதைக்கிறார்.

இந்த நான்கு பாடல்களும் பாரதி அம்மையாரைத் தான் பாடி இருப்பாரோ என்று மயக்கம் தந்தாலும் ஐந்தாவதாகிய நிறைவுப் பாடல் நம்மை அதிலிருந்து மீட்கிறது.

பாரதப் போரெனில் எளிதோ விறற்

பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்

மாரதர் கோடி வந்தாலும் கணம்

மாய்த்துக் குருதியில் திளைப்பாள் .

சந்தேகமில்லை. பாரதி குறிப்பிடுவது பாரத அன்னையைத் தான். என்றாலும் நமக்கு அம்மையாரைப் பற்றிச் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அல்லவா?

21


மோதி மிதித்துவிடு பாப்பா


பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

பாதகம் செய்பவரைக் கண்டால்நீ

பயம் கொள்ளலாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

பாதகம்செய்யும்மனிதரைத்தண்டிக்கவேண்டுமாம். பாதகம்செய்யும்புலியைத்தண்டிக்காததுமட்டுமல்ல, அதைக்கும்பிடவுமவேண்டுமாம். சாதிக்கொருநீதியா? மகாகவியின்வாக்கில்முரண்பாடா ?

இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம்.

22


செய்க தவம்


எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி காட்டும் வழி என்ன?

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே , தவம் செய்தால்

எய்த விரும்பியதை எய்தலாம்

தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம். துருவன், பகீரதன், அர்ஜுனன் முதலானோர் தவம் செய்து விரும்பியதை அடைந்தனர். அவர்களைப் போல நாமும் கானகம் சென்று கனி கிழங்குகளைப் புசித்து நீரிடையேயும் நெருப்பிடையேயும் ஒற்றைக் காலில் நின்று இரவு பகல் விடாது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டுமா? (தவம் என்றால் இப்படித் தான் என்று கேட்டு வந்திருக்கிறோம்.) அப்படிச் செய்வதற்கு வேண்டிய மனத் திண்மை நம்மிடம் இல்லை.

அஞ்ச வேண்டாம். எளிமையான தவம் ஒன்று இருக்கிறது. அது தான் அன்பு செய்வது. வையகத்தில்அன்பிற்சிறந்ததவமில்லை என்கிறார் பாரதி. இது எளிமையானது மட்டுமல்ல, முனிவரின் தவத்தை விட மேம்பட்டதும் ஆகும்.

துறந்தார் பெருமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்

குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்

அறந் தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்

சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே .

எளியோரைக் காத்து உணவளித்து நல்லோர் வாழ்க என இறைவனிடம் வேண்டுவது, இல்லறம் துறந்து கானகம் சென்று முனிவர் செய்யும் தவத்தை விட மேம்பட்டது ஆகும் என்கிறார் பாரதி.

மிக எளிதான வழியாக இருக்கிறதே, எல்லோரும் இவ்வாறு அன்பு செய்வதன் மூலம் எய்த விரும்பியதை எய்தி விடலாமே.

இதைப் பாரதி மற்றோரிடத்திலும் கூறுகிறார்.

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்

வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்

வானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்

வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே

யானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்

என் மதத்தைக் கைக்கொண்மின் , பாடுபடல் வேண்டா

ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்

உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

அன்பு செய்து கொண்டிருந்தால் போதும். உழ வேண்டாம், விதை போட வேண்டாம். எல்லாப் பயிர் வகைகளும் செழித்து ஓங்கும்.

வள்ளுவரும் இதையே கூறுகிறார், விருந்தோம்பி விட்டு மீதி இருப்பதைப் புசிப்பவன் தன் நிலத்திற்கு விதையே போட வேண்டாம், விளைந்து விடும்.

விவிலியமும் ஏசுநாதர் கூற்றாக இதைக் கூறுகிறது-

“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதும் இல்லை, அறுக்கிறதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.

“இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கும் கூடக் கொடுக்கப்படும்.”

கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உழைக்காமல் தேவனுடைய நீதியைத் தேடி அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு கிடைக்கும் என்று நம்புவதற்கு நம்முடைய அனுபவமும் பகுத்தறிவும் இடையூறாக உள்ளனவே?

ஏசுநாதர், வள்ளுவர், பாரதி கூறியபடி உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வேண்டுமானால் வளரலாம். ஆடைகள், வீடுகள் தானாகவே முளைக்குமா?

மீண்டும்பாரதியிடமேபோவோம். அன்பேதவம்என்றுசொன்னபாரதிவேறோரிடத்தில்தவமேயோகம், யோகமேதவம்என்கிறார். அதாவதுஅன்பு, தவம், யோகம்இவைஒருபொருள்சொற்கள். யோகத்தைவிளக்குகிறார்–

ஊருக்கு உழைத்தல் யோகம் .

அன்பு செய்தல் என்றால் ஊருக்கு உழைத்தல் என்பது பொருள். ஊருக்காக உழைத்தால் அது உழைப்பாகத் தோன்றாது, உடலை வருத்தாது. தன்னலமின்றிப் பொதுப்பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும்.

பாரதியியால் பெரிதும் போற்றப்பட்ட பகவத்கீதையின் இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.

யக்ஞ சிஷ்டாசின: ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை:

புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பச்யந்த்யாத்ம காரணாத்

யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். எவர் தமக்காகச் சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தை உண்கின்றனர்.

இங்கு யாகம் எனப்படுவது பிறர் நன்மைக்காகச் செய்யப்படும செயல்களைக் குறிக்கிறது. எனவே உழைக்கத் தான் வேண்டும், ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக என்பதே பாரதியின் கொள்கை என்பதை அறிகிறோம். இது தொடர்பாக வினோபா கூறுகிறார் – “தாய் குழந்தைக்கு வேண்டிய போஷணையைச் செய்கிறாள். நான் என்ன செய்து விட்டேன் ஒன்றுமே செய்யவில்லையே, எனக்கு இது ஒரு பாரமா என்று அவள் கேட்கிறாள். மனிதன் இதய பூர்வமாய்க் கர்மம் செய்கையில் வேதனை, கஷ்டம், ஆயாசம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.”

பிறர் நலனுக்காக உழைக்கும்போது உடம்போ மனமோ பாதிக்கப்படுவதில்லை, எனவே அது உழைப்பே அல்ல.

எனவே அன்பு செய்யுங்கள். சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனக் கருதி எல்லாவற்றிடத்தும் அன்பு செய்யுங்கள். பிறர் நன்மை மட்டும் கருதி உழையுங்கள். உங்கள் வயிற்றுப் பாட்டை இறைவன் கவனித்துக் கொள்வான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுவே தவம். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் வழியும் அதுவே.

23


தீக்குள் விரலை வைத்தால்


பாரதியின் கவிதைகளைப் படித்துக் கொண்டே கண்ணயர்ந்தேன். கனவில் முண்டாசு தெரிந்தது. கம்பீரமான குரலில் பாட்டொலியும் கேட்டது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத்

தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

அவர் பாடி முடித்ததும் நான் அவருடன் வார்த்தையாடத் தொடங்கினேன்.

குருவே, வணக்கம். ஐயம் தீர்த்து விட வேண்டும். மிகைப்படுத்துவது என்பது புலவர்களுக்குள்ள உரிமை தான் என்றாலும், அது அளவுக்கு மீறலாமா? தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? பொய்மை இகழ் என்று உபதேசித்த தாங்களே பொய் கூறலாமா?

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்

மடிந்தாலும் பொய் கூறேன் மானிடர்க்கே

அப்படியானால் நீங்கள் அஞ்சாமல் தீக்குள் விரலை வைத்ததுண்டா?

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்

ஒம் சக்தி ஓம் சக்தி ஓம்

தீ தங்களைச் சுடுவதில்லையா? அல்லது தீமிதி மிதிப்பவர்கள் போல, சூட்டை உணராத அளவுக்கு உணர்ச்சி வேகம் அடைகிறீர்களா?

காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே

கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே

தீயோ சுடுகிறது என்கிறீர்கள். சூடாகவும் குளிர்ச்சியாகவும் விளங்குவது தெய்வமே என்று தங்கள் மனம் நம்பினாலும் தீக்குள் வைத்த விரல் இரணமாகி விடுமே, இன்பமா தோன்றும்?

இரணமும் சுகமும் பழியும் நற்புகழும்

யாவுமோர் பொருளெனக் கொள்வேன்

ஒரு விரல் இரணமாவது பற்றித் தாங்கள் பொருட்படுத்தாது இருக்கலாம். ஒரு புலி துரத்தி வந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவீர்களா, மாட்டீர்களா?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் .

தீயும் பராசக்தி, புலியும் பராசக்தி என்று தாங்கள் நம்பலாம். அதனால் அஞ்சாமல் இருக்கலாம். துன்பத்தைச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது எப்படி இன்பமாக இருக்கும்?

இன்பமாகி நின்றாய் காளி என்னுளே புகுந்தாய்

பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானுமுண்டோ ?

இந்த மனநிலை தங்களுக்கு எப்படி வந்தது?

சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும் .

சுருதி சொன்ன இக்கருத்தைச் சங்கரர் அத்வைதம் என்ற பெயரில் உபதேசித்ததாகச் சொல்கிறார்கள். நான் படிப்பறியாத பாமரன். எனக்குப் புரியும்படியாகத் தாங்கள் அதை விளக்கவேண்டும்.

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்

கீழான பன்றியினைத் தேளைக் கண்டு

தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி

சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும் .

கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

நான் வெறும் மண்ணாங்கட்டி . எந்த வித்தையும் அறியாத எளியேன் . விண் போன்று உயர்நது நிற்கும் தங்களைப் போன்ற குருமார்களைத் தெய்வமாக நினைக்க என்னால் முடிகிறது . மற்றவற்றைத் தெய்வமாகக் கருத முடியவில்லையே .

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர் ;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம் ;

வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர் ,

வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம் ;

நானும்தெய்வமா? ஆஹா, வானத்தில் பறப்பது போல உணர்கிறேன், கவியரசே.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர் ;

வெயிலளிக்கும் இரவி , மதி , விண்மீன் , மேகம்

மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் ;

எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

கேட்கவே புல்லரிக்கிறது. நானும் தெய்வம், என்னைச் சூழ்ந்துள்ள உயிர்கள், பொருள்கள் யாவும் தெய்வம். இனி எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை, பகையும் இல்லை. அஞ்சுதல் இல்லை, கோபமும் இல்லை. கவலைகள், துன்பங்கள் மறைந்தன. அன்பு ஒன்றே எங்கும் நிரம்பி இருப்பதைக் காண்கிறேன்.

அன்பென்று கொட்டு முரசே அதில்

ஆக்கமுண்டாமென்று கொட்டு

துன்பங்கள் யாவுமே போகும் வெறும்

சூதுப் பிரிவுகள் போனால்

என்னைப் புதிய உயிராக்கி எனக்கு

ஏதும் கவலையறச் செய்து மதி

தன்னை மிகத் தெளிவு செய்து

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்தீர்கள்

நன்றி, குருவே, மீண்டும் வணங்குகிறேன்.

24


ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !


பாரதியின் குயில் பாட்டு அவருடைய படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தது. முதலாவதாக, இது செய்யுள் வடிவிலான கதைப் பாட்டு. பாரதி பல தலைப்புகளில் மரபுக் கவிதைகளும் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். பல கதைகளும் உரைநடை வடிவில் எழுதியுள்ளார். ஆனால் இது ஒன்று தான் பாடல் வடிவில் சொல்லப்பட்ட கதை.

பாரதியின் ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது சமூகத்திற்கான ஒரு செய்தி வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இக்கதையில் நீதிகளை வெளிப்படையாகத் தெரிவிக்காதது மட்டுமல்ல. முடிவில் ஒரு மர்மமான முடிச்சையும் வைத்திருக்கிறார்.

சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

எனவே ஏதோ செய்தி மறைந்துள்ளது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன என்று அறிய, அந்தப் பாடலை முழுமையாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் பாரதியின் மற்ற படைப்புகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்ல இருக்கும் விளக்கம் நம் கற்பனையில் பிறந்ததாக இருக்கக் கூடாது. பாரதியின் பிற படைப்புகளில் காணப்படும் அவரது உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் குயில் பாட்டில் மறைந்துள்ள செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம். முதலில் அந்தக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

கவிஞர் ஒரு நாள் ஒரு மாந்தோப்பில் உலவிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குயில்களில் ஒன்று மட்டும் மற்றவற்றை விடச் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தது. கானத்தால் ஈர்க்கப்பட்டு அதன் மேல் காதல் கொண்டார் கவிஞர். தனக்கு ஏற்ற ஒரு காதலரைத் தேடிக் கொண்டிருந்த குயிலும் கவிஞருடன் இன் மொழிகள் பேசி, நான்காம் நாள் வருமாறு கேட்டுக் கொண்டது.

காதல் நினைவால் பித்துப் பிடித்தவர் போல் ஆன கவிஞர், மறு நாளே தோப்பிற்குச் சென்றார். அங்கு அந்தக் குயில் ஒரு குரங்குடன் காதல் வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவிலிருந்து காண்கிறார். வஞ்சகக் குயிலையும் குரங்கையும் கொல்லக் கருதி வாளை வீசுகிறார். அவை தப்பி விடுகின்றன.

காதல் நினைவு வாட்டவே மறு நாளும் தோப்பிற்குச் செல்கிறார். அங்கு அந்த வஞ்சகக் குயில் ஒரு மாட்டுடன் காதல் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பதைக்கிறார். மாட்டைக் கொல்ல வாளை வீச, அது தப்பிவிடுகிறது.

நான்காம் நாள் குயில் இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. கவிஞர் தான் கண்ட அதன் வஞ்சக நடத்தைகளைக் கூறி அதைக் கொல்லக் கருதுகிறார். குயிலோ தன் கதையை முழுவதும் கேட்டு விட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிறது. குயில் தன் பூர்வ ஜன்மக் கதையைக் கூறுகிறது.

வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர நாட்டில் ஓர் மலையில் பிறந்து சின்னக் குயிலி என்னும் பெயருடன் வளர்ந்தாள் அவள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவளை மணக்க விரும்பினான் அவளது மாமன் மகனான மாடன் என்பான். பொன்னை, மலரை, புதுத் தேனைக் கொண்டு வந்து நித்தம் கொடுத்து நினைவெல்லாம் அவளாக அவன் சித்தம் வருந்தியதால், அவள் மாலையிட வாக்களித்தாள்; மையலினால் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள்.

இதை அறியாத அவளுடைய தந்தை அவளுக்கு நெட்டைக் குரங்கன் என்னும் இளைஞனைக் கணவனாக்க நிச்சயித்தான். இந்நிலையில் அவள் ஒரு இளவரசனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனும் “நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பிற பெண்ணை நினையேன். இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம், நின் வீட்டிலுள்ளோர்பால் என் மனதைச் சொல்வேன். எனது நிலை உரைப்பேன், வேத நெறியில் விவாகம் உனைச் செய்து கொள்வேன்” என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்ட அவளை அவன் அணைத்து இதழ் பருகும் நேரத்தில் குரங்கனும் மாடனும் பார்த்துப் பதைபதைத்து இளவரசனை வாளால் வெட்டினர். அவனும் இவர்களைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான்.

சின்னக்குயிலிகுயிலாகப்பிறந்தாள். அவள்ஒருமுனிவரைச்சந்தித்தபோதுஅவர்அவளதுமுற்பிறப்புக்கதையையும்கூறிவருங்காலத்தையும்உரைத்தார். மாடனும்குரங்கனும்பேயாகப்பிறந்துஅவளைப்பின்தொடர்வார்கள்என்றும்அவளதுநெஞ்சம்கவர்ந்தஇளவரசன்தொண்டைநாட்டில்ஒருமாந்தோப்பில்அவளதுபாட்டால்கவரப்பட்டுஅவளைச்சந்தித்துமணப்பான்என்றும்அவர்கூறினார்.

முனிவர் கூறியபடியே, அவளுடைய முற்பிறப்புக் காதலனே கவிஞராக வந்துள்ளதைத் தான் உணர்ந்ததாக அவள் உரைக்க, கவிஞர் அக் குயிலை அணைத்து இன்பவெறி கொண்டு முத்தமிட்டார். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கு நின்றாள்; பெண்ணவளைக் கண்டு பெருங்களி கொண்டார் அவர். இப்படி மகிழ்ச்சியாக முடிகிறது கதை.

இனி, கதையில்வெளிப்படையாகத்தெரியும்முக்கியக்கருத்துகளைக்கவனிப்போம்.

பெண்மையின் தெய்விகம்

பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார். இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.

காதலின் உயர்வு

சின்னக்குயிலியைக்கேட்காமல்அவளுடையதந்தைஅவளைநெட்டைக்குரங்கனுக்குமணம்முடிக்கநிச்சயிக்கிறான். அவளுடையஇரக்கசுபாவத்தைப்பயன்படுத்தி, மாமன்மகன்மாடன்தன்னைமணக்குமாறுவற்புறுத்துகிறான். மனம்அவனிடம்ஈடுபடாவிட்டாலும்அவள்கருணையினால்அவனைமணக்கச்சம்மதிக்கிறாள். (நம்சமுதாயத்தில்பெண்ணின்இயல்பானநாட்டம்பற்றிக்கவலைப்படாமல்வேறுபலகாரணங்களுக்காகஅவளதுமணவாழ்வைப்பலிஆக்குவதுஇங்குக்காட்டப்படுகிறது.) சேரஇளவரசனிடம்மட்டுமேஅவளுக்குஉண்மையானகாதல்ஏற்படுகிறது. அதுஅந்தப்பிறவியில்நிறைவேறாவிட்டாலும்அடுத்தபிறவியிலாவதுநிறைவேறுவதுகுறித்துநமக்குமகிழ்ச்சிஏற்படுகிறது. காதல்செய்வீர்உலகத்தீரே; அஃதன்றோஇவ்வுலகத்தலைமைஇன்பம்என்றுஅவர்காதலைஉயர்த்துவதுஇங்கும்எதிரொலிக்கிறது.

கற்பின் மாட்சி

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.

”ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர், மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;

கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?

வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?

பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்

நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,

பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்

பெண் குலப் பீழை

மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,

பெண்ணென்றுபூமிதனில்பிறந்துவிட்டால்மிகப்

பீழைஇருக்குதடிதங்கமேதங்கம்

என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

நகைச் சுவை

சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,

ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்

பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்

பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.

வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்

என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.

அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.

பேடைக் குயிலிதனைப் பேசியது: – ”வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?

மண்ணிலுயிர்க்கெல்லாந்தலைவரெனமானிடரே,

எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல், கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம். மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?

ஆனவரையும்அவர்முயன்றுபார்த்தாலும், பட்டுமயிர்மூடப்படாததமதுடலை எட்டுடையால்மூடிஎதிருமக்குவந்தாலும், மீசையையும்தாடியையும்விந்தைசெய்துவானரர்தம்

ஆசைமுகத்தினைப்போல்ஆக்கமுயன்றிடினும் ஆடிக்குதிக்கும்அழகிலுமைநேர்வதற்கே கூடிக்குடித்துக்குதித்தாலும், கோபுரத்தில் ஏறத்தெரியாமல்ஏணிவைத்துச்சென்றாலும், வேறெத்தைச்செய்தாலும்வேகமுறப்பாய்வதிலே

வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?

பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் – வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

ஒளியைப் போற்றல்

இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில் என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.

பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்

பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே

…….

வேண்டுமடி எப்போதும் விடுதலை

என்ற வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார். எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.

‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம், பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்? சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய். ‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். ‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். ** அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய். தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ? இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்; உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே உரைத்திடுவோம், ”பல்லாண்டு வாழ்க!” என்றே.

‘பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ! என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி! நீலப் பொய்கைகள்!-அடடா, நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடி! எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும், எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது.

காலையிளம்பரிதிவீசுங்கதிர்களிலே நீலக்கடலோர்நெருப்பெதிரேசேர்மணிபோல் மோகனமாஞ்சோதிபொருந்திமுறைதவறா வேகத்திரைகளினால்வேதப்பொருள்பாடி வந்துதழுவும்வளஞ்சார்கரையுடைய

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,

நடுவில்ஓரிடத்தில்

சோலையிடை, செஞ்ஞாயிற்றொண்கதிரால் பச்சைமரமெல்லாம்பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.

கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,

…….

மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம், காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.

தங்கமுருக்கித்தழல்குறைத்துத்தேனாக்கி எங்கும்பரப்பியதோர்இங்கிதமோ? வான்வெளியைச் சோதிகவர்ந்துசுடர்மயமாம்விந்தையினை ஓதிப்புகழ்வார்உவமையொன்றுகாண்பாரோ? கண்ணையினிதென்றுரைப்பார்; கண்ணுக்குக்கண்ணாகி

விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ?

மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?

புல்லைநகையுறுத்திப்பூவைவியப்பாக்கி

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.

இசையின் பெருமை

குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

காதல், காதல், காதல், .

காதல் போயிற் காதல் போயிற்

சாதல், சாதல், சாதல்.

இது பல்லவி. இவ்வாறே மேலும் ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

வயது முற்றிய பின்னுறு காதலே

மாசுடைத்தது, தெய்விகமன்று காண்

இயலு புன்மை உடலுக்கின்பெனும்

எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

ஸரஸ்வதிகாதல், லட்சுமிகாதல், காளிகாதல்என்றுதெய்வங்களின்மீதும்காதல்கொண்டவர்பாரதி. இத்தகையஅன்பின்விளைவுஇறைஅருளும்வாழ்வில்இன்பமும். அந்தஇன்பம்எல்லைகடவாததாகஇருக்கவேண்டும். எல்லைமீறினால்துன்பம்ஏற்படும்.

வாழ்வில்இன்பம்தரும்பொருள்களிலேதலையாயதுஇசை. நாதம்பண்ணோடும்தாளத்தோடும்கலந்துவரும்போதுஅதுஇசையாகிஇன்பம்தருகிறது. அதுகாதலின்இணைபிரியாதஅங்கமாகஅமைகிறது. பாட்டுக்கலந்திடவேஒருபத்தினிப்பெண்வேண்டும்என்றுபாரதிமற்றொருஇடத்தில்பாடுகிறார்.

மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும் என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

இத்தகைய உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது. ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார். இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

ஆண்குயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்.

இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,

நீலப்பெருங்கடலெந்நேரமுமேதானிசைக்கும் ஓலத்திடையேஉதிக்கும்இசையினிலும், மானுடப்பெண்கள்வளருமொருகாதலினால் ஊனுருகப்பாடுவதில்ஊறிடுந்தேன்வாரியிலும், ஏற்றநீர்ப்பாட்டின்இசையினிலும், நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

ஆசைததும்பிஅமுதூறப்பாடியதே: – காட்டின்விலங்கறியும், கைக்குழந்தைதானறியும், பாட்டின்சுவையதனைப்பாம்பறியும்என்றுரைப்பார். வற்றற்குரங்குமதிமயங்கிக்கள்ளினிலே முற்றும்வெறிபோல்முழுவெறிகொண்டாங்ஙனே

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் ”ஆவி யுருகுதடி, ஆஹா ஹா” என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும் ”ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!

பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன், காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன், இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்”

இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை. அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்; பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய். காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?

உள்ளந்தான்கவ்வஒருசிறிதுங்கூடாத கொள்ளைப்பெரியவுருக்கொண்டபலகோடி வட்டவுருளைகள்போல்வானத்தில்அண்டங்கள் எட்டநிரப்பியவைஎப்போதும்ஓட்டுகின்றாய்; எல்லாமசைவில்இருப்பதற்கேசக்திகளைப்

பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ! காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்! சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!

சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே, ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

………….கவிதைக்கனிபிழிந்த சாற்றினிலே, பண்கூத்தெனுமிவற்றின்சாரமெலாம் ஏற்றி, அதனோடேஇன்னமுதைத்தான்கலந்து, காதல்வெயிலிலேகாயவைத்தகட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.

குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர். பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்

சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்

சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்

சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

முதல்சந்திப்பில்மரத்தருகேபோய்நின்றுபேடேதிரவியமேஎன்றுகவிஞர்பேசத்தொடங்குவதும், அடுத்தசந்திப்பில்

காதலருள்புரிவீர், காதலில்லையென்றிடிலோ

சாதலருளித்தமதுகையால்கொன்றிடுவீர்

என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

துவக்கத்தில்மனிதவுருநீங்கிக்குயிலுருவம்வாராதோஎன்றுகவிஞர்ஏங்குகிறார். கதைமுடிவில்

அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது.

பெண்ணவளைக்கண்டுபெருங்களிகொண்டாங்ஙனே நண்ணித்தழுவிநறுங்கள்ளிதழினையே முத்தமிட்டுமுத்தமிட்டுமோகப்பெருமயக்கில் சித்தம்மயங்கிச்சிலபோழ்திருந்தேன்

என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

25


ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?


விதியா, மதியா? இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

ஊழிற்பெருவலியாவுளமற்றொன்று

சூழினும் தான் முந்துறும்

என்றுவிதியின்வலிமைபேசியஅவர்

ஊழையும்உப்பக்கம்காண்பர்உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்

என்று முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

இது பற்றிப் பாரதியின் கருத்து என்ன? அவரது பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம்.

பாரதப் போராகிய பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் எல்லோருமே பலி ஆகிறார்கள். பாண்டவரைச் சூதாட அழைக்கப் போகிறேன் என்றும் அதற்குத் தந்தை இணங்காவிட்டால் உயிர் விடுவேன் என்றும் துரியோதனன் மிரட்டுகிறான். பிள்ளை மீதுள்ள பாசத்தால் அவனுடைய சதித் திட்டத்திற்கு வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க நேர்ந்த போது திருதராட்டிரன் கூறுகிறான்,

‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு

வேறு செய்வார் புவிமீ துளரோ?

…………

‘விதி! விதி! விதி! மகனே! –இனி

வேறெது சொல்லுவன் அட மகனே!

கதியுறுங் கால னன்றோ-இந்தக்

கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?

கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்

கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;

வதியுறு மனை செல்வாய்,’ –என்று

வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.

விதுரனுக்கு வருங்காலம் தெரிகிறது. ஆனால் அவனாலும் துரியோதனனின் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அவனுடைய ஆலோசனைகள் நலம் பயப்பவை என்று அறிந்தும் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் திருதராட்டிரனின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதை உணர்ந்து, திருதராட்டிரன் கூறுகிறான்,

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர், ‘சென்று வருகுதி, தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன். வென்று படுத்தனன் வெவ்விதி என்னை; மேலை விளைவுகள் நீஅறி யாயோ? அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.

அண்ணன் கூறியபடி விதுரன் துரியோதனனுடைய அழைப்பில் சூழ்ச்சி உள்ளது என்பதைத் தருமனுக்குத் தெரிவிக்கிறான். தருமனோ, ஆபத்து வரும் என்று அறிந்தும், தந்தை அழைத்திருக்கும் போது போகாமல் இருப்பது தவறு என நினைக்கிறான். தந்தையே சூழ்ச்சி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தும், தம்பிகள் தடுத்தும் தருமன் தன் மனதை மாற்றிக் கொள்ள வில்லை. துன்பம் வரும் என்ற அச்சத்தால் கொள்கை தவறுவது சான்றாண்மை ஆகாது என்று கருதுகிறான். இது விதியின் செயல் என்று அழைப்பை ஏற்றுக் கொள்கிறான்.

‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ் சாத்திர மன்றிது சத்தியம்-நின்று மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள் வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

………

……..நெஞ்சில் ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம் உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி போன்று நடக்கும் உலகென்றே-கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர்.

ஊரை விட்டுப் பாண்டவர் தங்கள் துன்பக் களம் நோக்கிச் செல்கையில் கவிக் கூற்றாக வருவது விதியின் வலிமை பற்றிய இக்கருத்து.

நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ

நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;

வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;

வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;

கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

கீழ்மேலாம், மேல் கீழாம்; கிழக்கு மேற்காம்;

புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

போற்றிடுவார், விதிவகுத்த போழ்தி னன்றே.

சூதாட்டத்தில் தான் தோற்று விடுவோம் என்பது தருமனுக்குத் தெரிகிறது. என்றாலும் சூதாட அழைக்கப்படும்போது மன்னர்கள் மறுக்கக் கூடாது என்ற மரபை அவன் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வேறு வழியின்றி சூதாட அவன் இணங்குகிறான்.

வெய்யதான்விதியைநினைந்தான்விலக்கொணாதறம்என்பதுணர்ந்தோன்;

இவ்வாறு பாஞ்சாலி சபதக் கதை முழுவதும் அறிஞர்கள், நல்லவர்கள் பலர் வர இருக்கும் பேரழிவை உணர்ந்தும், உணர்த்தியும் தடுக்க முடியாமல், ஒவ்வொரு நிலையிலும் போரை நோக்கிக் கதை நகர்வதைக் காணும்போது விதியின் வெல்லவொண்ணா வலிமை புலப்படுகிறது.

இதைக் கொண்டு பாரதி விதியை நம்பினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது வியாசர் கூறியதன் மொழிபெயர்ப்பே என்று முன்னுரையில் அவரே கூறுவதால் இது வியாசருடைய கருத்தே அன்றிப் பாரதியின் கருத்து அல்ல என்று அறியலாம்.

ஆனால் தன் சுய சரிதையில் ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ? என்று அவர் கேட்கும்போது விதி வலியது, வெல்ல முடியாதது என்று அவர் நம்பியதை உணர முடிகிறது.

ஆம். பாரதி விதியின் வலிமையை உணர்ந்திருந்தார். அது இறைவனின் மந்திரி என்று அவர் கூறுகிறார். கண்ணனைத் தந்தையாக உருவகித்த பாடலில்,

– ஒரு மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே – பின்பு முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

செய்த தவறுக்குத் தண்டனையாகத் துன்பத்தை தனது மந்திரியாகிய விதி தரும்போது இறைவன் குறுக்கிடுவதில்லை.

நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

ஆனால் பாரதி பாடிய பாடல்களில் விதிக்குக் கட்டுப்பட்டு வாளா இராமல் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கஞ்சி குடிப்பதற்கிலாத நிலையில் அதன் காரணங்களை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபடாத எளியோரைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார். துன்பம் வரும்போது இது விதிவசத்தால் வந்தது, எது வரினும் அனுபவித்தே தீருவேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருத்தல் தகாது என்பதைக் காட்டும் அறிவுரைகள் பல அவருடைய ஆத்திசூடியில் உள்ளன.

கொடுமையை எதிர்த்து நில்.

சீறுவோர்ச் சீறு.

செய்வதுதுணிந்துசெய்.

சௌரியந் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

தேசத்தைக் காத்தல்செய்.

நாளெலாம் வினைசெய்.

பணத்தினைப் பெருக்கு.

மிடிமையில்அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலேமுகத்துநில்.

யவனர்போல்முயற்சிகொள்.

ராஜஸம் பயில்.

ரௌத்திரம் பழகு.

லௌகிகம் ஆற்று.

வீரியம் பெருக்கு.

வெடிப்புறப் பேசு.

வையத் தலைமைகொள்

பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி தெருவில் இழுத்துச் செல்லப்படும்போது மக்கள் அதைத் தடுக்க முயலாமல் புலம்பினர் என்று அவர்களை இகழ்கிறார்.

ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?

வீரமிலாநாய்கள்,விலங்காம்இளவரசன்

தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே,

பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்

பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ”?

விதியின் பேரில் பழியைப் போட்டு விட்டு முயற்சியின்றி இருப்பவர்களை இறைவன் இகழ்வான் என்றும் அன்பு செய்தால், அதாவது பிறர் துயர் நீக்க முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குப் பலன் கொடுப்பான் என்றும் கூறுகிறார்.

துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்

காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நி்யமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

வெற்றி செயலுக்குண்டு, விதியின் நியமம் என்று

கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ?

ஆனால் சில சமயங்களில் முயற்சி பலன் தராமல் போவதும் உண்டு.

……….. கிணற்றினுள்ளே

மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்

முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும்

ஏழ்கடல் ஓடியுமோர் பயன்

எய்திட வழியின்றி இருப்பதுவும்

உண்டு.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி என்பதால் இறைவனைச் சரணடைக என்கிறார் பாரதி. இறைவனிடம் பக்தி செய்தால் நிச்சயம் பலனுண்டு. உண்மையான பக்தியின் மூலம் துன்பங்கள் யாவும் நீங்கும். முன்னைத் தீய வினைப் பயன்கள் இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் என்று வேண்டினால் திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம். கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை. அதற்கு அடிப்படையாக கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

அப்படியும் துன்பம் தொடருமானால், சக்தி சோதனை செய்கிறாள் என்று உணர்க. பொறுமையுடன் இரு. நம்பிக்கை இழந்து பக்தியை விட்டு விடாதே. அவள் நிச்சயம் காப்பாள் என்ற சொல்லே துயர் போக்கும்.

சக்திசிலசோதனைகள்செய்தால்அவள்

தண்ணருள்என்றேமனதுதேறு

பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்

வையகத்துக்கில்லை, மனமே, நினக்கு நலம்

செய்யக் கருதி இவை செப்புவேன்- பொய்யில்லை

எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற

சொல்லால் அழியும் துயர்

பாரதியின்இவ்வழிவேதத்தையும்கீதையையும்ஆதாரமாகக்கொண்டது. பக்திநெறிவேதநெறிக்குவிரோதமானதுஅல்ல. அறியாதார்சிலர்வேதம்என்பதுவேள்விமுறையைமட்டுமேகொண்டதென்றும்பக்திஎன்பதுவேதச்சார்புஇல்லாதவழிஎன்றும்கூறுவர். இவர்களுக்குப்பாரதிபதில்கூறுகிறார்.

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது, விக்கிரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது, அத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. ….சரணாகதியே வழி. வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

கீதையில் கண்ணனின் உபதேசமாகப் பாரதி கூறுகிறார், பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான், பக்தி பண்ணிப் பிழைக்கச் சொன்னான்.

இவ்வாறு விதி வலியது என்பதை உணர்ந்தாலும், பக்தியின் மூலமும் முயற்சியின் மூலமும் அதைப் புறங்காண முடியும் என்று நம்புவதே வாழும் நெறி என்று பாரதி வழிகாட்டுகிறார்.

இந்தப் பக்தி நெறியே பாரதியின் பாடல்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

26


பயன் எண்ணாமல் உழை, பக்தி செய்து பிழை


பாரதியை உலகியலிலும் ஆன்மிகத்திலும் வழிநடத்தியது வேதங்களின் சாரமாகிய பகவத்கீதை. அதைத் தமிழில் மொழிபெயர்த்த பாரதி அதற்கு ஒரு அழகான முன்னுரையும் கொடுத்திருக்கிறார். அதன் சுருக்கத்தை இனி வரும் பக்கங்களில் காணலாம்.

கீதை ஒரு கர்ம சாஸ்திரம்

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை 2-50)

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலும் தெளிவாக மாசு மறுவின்றி வைத்திருத்தல், கவலை நினைப்புகளும் அவற்றுக்கு ஆதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும்.

இது யோக சாஸ்திரம்

அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே. அப்பால், யோகம் பண்ணு. தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

‘ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும்படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம், ‘முக்தியாவது யாது?’

எல்லாத் துயரங்களும் எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய்.

”ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு.

இது ஞான சாஸ்திரம்

கடவுள் சொல்லுகிறார் :- ”லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்” (கீதை 4-10)

இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்படப்பட்டிருக்கிறது. ”ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்” என்று கடவுள் சொல்லுகிறார்.

எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை, 5-10)

சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தைச் செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகாச் செயல்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.

”கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்” (கீதை 5-18) என்று பகவான் சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’, இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

இது மோக்ஷ சாஸ்திரம்

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இது தான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.

அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

இது பக்தி சாஸ்திரம்

நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, “ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்” என்ற உறுதியான நம்பிக்கை. இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-

“எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-66)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச் சிவாயவே” என்ற நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரம பக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம்.

எல்லாம் கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றூணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும் என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்.

இந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ஙனமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச் சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ் சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய் விடவேண்டுமென்பது கருத்தன்று.

இது அமரத்வ சாஸ்திரம்

குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!” (கீதை 2-14)

“ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்” (கீதை 2-15)

இஃதே பகவத் கீதையின் சிகரம். சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.

நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் – வெம்மை, இன்பம் – துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம்.

இது கொலை நூல் அல்ல

துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

க்ஷத்திரிய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூமண்டலத்தார் அனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.

பகவத் கீதைக்கு – சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும் வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்’ என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம்.

இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு – ஒரே சத்துரு – அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.

புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் – அதாவது வேற்றுமை உணர்ச்சி – ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.

‘தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?’ எனில் – தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத்தான் நன்மையுடையதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப் போது பகையாம்.

எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போதும் கடவுளாகுமன்றோ? ‘எப்பொருள் யாது செய்யுமாயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை’ யென்னும் விதி மாறாதன்றோ? எனில் – அவ்வுரை மெய்யே. எனினும், நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிரமாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.

அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாகச் சமைக்கப் பட்டிருக்கின்றன. மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறந்து விடுவதில் பயனில்லை.

கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.

ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் இலதாம்.

அஞ்ஞானம் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்? என்று கேட்டால் -நீ ‘எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய துன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப் படாதே.

கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் – ‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’ (கீதை 10-8)

எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத் தகார். நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

ஸந்யாஸ நூல் அல்ல

இனி, வேறு சிலர் பகவத் கீதையை ஸந்யாஸ நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச்சரியமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் ஸந்யாஸியல்லன், சொல்லியவனும் ஸந்யாஸியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர்.

கீதையிலே பகவான் சொல்லுகிறான் – ”அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, ‘அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” என.

ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் – ”நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்” என.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான்.

பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமை இல்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.

குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ளே வழக்கமாக நடைபெற்றுவந்தது. பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று.

பாரததேசத்தில்புத்தமதம்ஜீவகாருண்யம், சர்வஜனசமத்துவம்என்றஇருதர்மங்களையும்நெடுந்தூரம்ஊன்றும்படிசெய்தது. ஆனால், உலகவாழ்க்கையாகியஜகத்தில்ஒளிபோன்றவளாகியபத்தினியைத்துறந்தவர்களேமேலோர்என்றுவைத்து, அவர்களுக்குக்கீழேமற்றஉலகத்தைஅடக்கிவைத்துஉலகமெல்லாம்பொய்மயம்என்றும், துக்கமயம்என்றும்பிதற்றிக்கொண்டுவாழ்நாள்கழிப்பதேஞானநெறியாகஏற்படுத்திமனிதநாகரிகத்தைநாசஞ்செய்யமுயன்றதாகியகுற்றம்புத்தமதத்துக்குஉண்டு.

அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.

பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று. புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும் கற்பனைச் சக்தியின் தெளிவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில் வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்க வேண்டும்.

இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் ‘மாயா’ என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று.

இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய். ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. ‘இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்’ என்ற கட்சி ஏற்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை.

மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III