காதல் தந்த தேவதைக்கு
கவிதைகள்
Backகாதல் தந்த தேவதைக்கு
ஜெகதீஸ்வரன் நடராஜன்
உள்ளடக்கம்
காதல் தந்த தேவதைக்கு
காணிக்கை
என்னுரை
1. காதலின் காத்திருப்பு
2. மனித பட்டாம்பூச்சி
3. வெள்ளிக் கிழமை
4. பாவிகள்
5. விந்தை
6. கோயில்
7. காதல் தோற்பதில்லை
8. சுவை
9. உன் பெற்றோர்கள் கவிஞர்கள்
10. தேடுதல் வேட்டை
11. பூ பிடித்திருக்கிறது
12. தொடக்கம்
13. மாறியது
14. நீ
15. கடவுள் சொன்னான்
16. பாவம் ரோஜாக்கள்!
17. காதல் கனி
18. அன்னையான காதல்
19. கனவு
20. உண்மையாகும் பொய்கள்
21. காதல் பெரியது
22. தந்துவிடு
23. காதல்கரு
24. எழுதாக் கவிதை
25. உடைந்து போகிறாய்
26. வாழ்தல்
27. நீ உடனிருக்கையில்
28. கஞ்சன்
29. காய்ச்சல்
30. அழகு
31. காதல்
32. தனிமை
33. ஹைக்கூ கவிதை - 1
34. ஹைக்கூ கவிதை - 2
ஜெகதீஸ்வரனைப் பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
1
காதல் தந்த தேவதைக்கு
உருவாக்கம் / மேலட்டை உருவாக்கம் : ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல்: sivamurugan.perumal@gmail.com
வெளியீடு – பிரீ தமிழ் ஈ புக்கஸ் குழு
http://freetamilebooks.com/
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
2
காதல் தந்த தேவதைக்கு
இந்நூல் காணிக்கை!
3
என்னுரை
உயிரானது தனக்கான பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் குழந்தையாகப் பிறப்பதைப் போல ஒவ்வொரு படைப்புகளும் தன்னை வெளிப்படுத்த படைப்பாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அது கவிதையாகவோ, கதையாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ வெளிபட்ட பின்னர், தன்னை ரசித்துத் தேர்ந்தெடுப்பவனை நோக்கி தவமியற்றிக் காத்திருக்கிறது. அதன் தவப் பலனால் அப்படைப்பினை கொண்டாடும் ரசிகன் கிடைக்கிறான்.
இந்நூலில் இருக்கும் கவிதைகள் தங்களை வெளிப்படுத்த என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவே எனக்குப் படுகிறது. அதனால் என் பணி எளிதாக முடிவடைந்துவிட்டது. இனி அக்கவிதைகள் தங்களுக்கான ரசிகர்களைத் தவமிருந்து பெற்றுக் கொள்ளட்டும்.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தந்த காதல் மனைவி பிரியாவிற்கும், மின்னூலாக்கம் செய்ய உதவிய திரு.சீனிவாசன் அவர்களுக்கும், மின்னுலாக்கிய சிவமுருகன் பெருமாள் அவர்களுக்கும், வெளியிட்ட பிரீதமிழ்ஈபுக்ஸ் குழுவிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன் நடராஜன்.
sagotharan.jagadeeswaran@gmail.com
1
காதலின் காத்திருப்பு
ஒரு நாள்
மழையோடு வந்தாய்!
மறு நாள்
மலரோடு வந்தாய்!
உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாகப் பொய் சொல்கிறேன்!
என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!
2
கை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்கு
கல் குத்தும் போது வலிக்குமென
கவலை கொண்டேன்
ஆனால்…
அவளது பாதங்கள் பட்டு
கற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனது!.
நீயென நானும்
நானென நீயும்
கைப்பேசியை அனைக்காமல்
இருக்கிறோம்
அன்று கொடுத்த முத்தத்திலும்
இதுபோலவே
நீயென நானும்
நானென நீயும் இருந்துவிட்டோம்!
3
நீ வருவாய் என்பதற்காக
அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்
அம்பாள்!.
4
பாவிகள்
எல்லா இடங்களிலும்
காதல் புனிதமானது! – ஆனால்
காதலர்கள் தான்
பாவிகளாக்கப்படுகின்றார்கள்!
5
நீ
கிள்ளும் போது மட்டும்
சிரிக்கின்றன பூக்கள்!
6
கோயில்
வெளியே நானும்
உள்ளே கடவுளும்
காத்திருக்கிறோம்
உன் வருகைக்காக!.
7
வேறொருவன் கட்டிய தாளி
உன் மார்பில் உரிமையுடன் புரள
கோவிலுக்கு வந்து நிற்கின்றாய்!
“அண்ணே வான்னே போகலாம்” என்கிறாள் என் தங்கை
“ம் போகலாம்” என்கின்றான் உன் கணவன்
எல்லோருடைய மனதிலும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேம்
இன்னும் “காதலர்”களாய்!…
8
சுவை
பல சுவை பழகியவன் – எனினும்
வேறெங்கும் சுவைத்தில்லை
உன் சுவை
பல் சுவை
9
நீ கவிதை
உன் தங்கை ஹைக்கூ
உன் அண்ணன் தான்
மரபுக் கவிதை…
புரிந்து கொள்ளவே முடியவில்லை!
10
தேடுதல் வேட்டை
பிறந்த இடம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறது
என் காதல் !
11
ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!
12
தொடக்கம்
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
புதியதாக தொடங்குகிறது
உனக்கான என் காதல்!
13
வெட்கம் சிந்தும் பார்வை
நகை கடிக்கும் பற்கள்
மனதினை மயக்கும் தாவணி
நீ அப்படியே இருக்கிறாய்!
நான்கு வருட நகரவாழ்க்கையில்
நான் தான் மாறிவிட்டேன்!
14
நீ
சுற்றுகின்ற ஒவ்வொறு முறையும்
தூய்மையாகிக் கொண்டே போகிறது
துளசி!
15
தார்கொதிக்கும் ரோட்டுல
தவிச்சுநான் வாரேயில
மிதிவண்டி கைபுடிச்சு
ஏன்புள்ள நடந்துவாரன்னு
எதிர்வந்து நீ கேட்க
அப்பன் வண்டில
நடுவுல இருக்கிற கம்பில
பாவாடை தேக்கிகொள்ள
பாவி மனுசனுங்க பார்வைதப்ப
நடந்துவரத நான் சொல்ல
இதெல்லாம் ஒரு சேதியான்னு
வெரசா வெல்டிங் கடையில
நடுகம்பி நீக்கி கொடுத்து
நெஞ்சில எடம் புடிச்ச
பொம்பள மனசறிஞ்சு
கஷ்டம் தீர்த்துபோரவனே
கடவுளுன்னு நான் சொன்னேன்
கணவன்னு கடவுள் சொன்னான்
16
உன் வருகையை எதிர்பார்த்து
என் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்
வாடிப்போய் விட்டன்!
சீக்கிரம் வந்து விடு
பாவம் ரோஜாக்கள்!
17
காதல் கனி
நன்கு காய்த்த மரத்தில்
கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!
கல்களே கிடைத்துக் கொண்டிருந்தன
நீ பரிதாப் பட்டபோதுதான்
கிடைத்தது… காதல்கனி!
18
தாளாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்து
தூங்க வைக்கிறது காதல்!
உன்னைப் பற்றி
கனவு காணச் சொல்லி!
19
கனவு
எல்லோரும் உறங்குவதற்காக
கனவு காண்கின்றார்கள்!
கனவு காண்பதற்காக
நான் உறங்குகிறேன்!
நீ கனவில் வருவாயென!
20
நீ உண்மையை மட்டுமே
சொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!
உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்
காதல் தேவதையால்
உண்மையாக்கப் படுதலை அறியாமல்!
தொலைவிலிருக்கும்
குளத்திற்குச் சென்று
வெண் தாமரையை
நீ பார்க்கத் தேவையில்லை!
அருகில் இருக்கும்
கண்ணாடியைப் பார்த்தாலே போதும்!
21
புரிந்து கொள்ளடி
கடவுளை விடவும்
காதல் பெரியது!
கடவுளாலும் சண்டை
காதலாலும் சண்டை
விவாதம் வீனாது!
பிரிவதற்கான சண்டை
கடவுளுடையது!
சேர்வதற்கான சண்டை
காதலுடையது!
22
தந்துவிடு
ஆடையின்றி அம்மனமாய்
அலைகிறது என்காதல்
உடுத்துக்கொள்ளத் தந்துவிடு
உந்தன் காதலை !
23
என்மனதின் மகரதப்பொடிகளை
சுமந்த வண்டுகள்
எப்பொழுது வேண்டுமானாலும்
உன்னிடம் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு !
24
எழுதாக் கவிதை
படிப்பறிவில்லாத ஒருவனும் கவிதை எழுதியிருக்கிறான்
என்றேன் நான்
யார் என ஆவலாய் கேட்டாய்
உன் அப்பன் தான் என்றேன்
அடிக்க ஓடி வந்தாய்…
நான் சொன்னது மெய்யென சொன்னது உலகம்!
25
உடைந்த என்னை
காதல் கொண்டு ஒட்டிவிட்டு
உடைந்து போகிறாய்
26
வாழ்தல்
நீ
உன் இல் தொலைத்து
என் இல் வந்திருக்கிறாய்
வாழ்வதற்கு
நான்
உன்னில் தொலைந்து
என்னில் வாழ
வந்திருக்கிறேன்
27
கண்களில் கசிந்தோடும்
மழைநீரும்
இதழோர குறுநகையும்
ஓர் தருணத்திலேயே
சாத்தியப்படுகின்றன
நீ உடனிருக்கையில்
உன் மூச்சுக்காற்று
முத்தமிட்டதில் எழுந்த
மகிழ்ச்சியில்
பறந்து போகிறது
பலூன்
28
மேடையில் பேசும்போது
வள்ளலாக வார்த்தைகளைத் தந்துவிட்டு
உன்னிடம் பேசும்போது மட்டும்
கஞ்சனாக மாறிவிடுகிறது
என் தாய்மொழி!
29
காய்ச்சல்
மழையில் நனையாதே
காய்ச்சல் வந்துவிடும் என்றேன்
‘எனக்கா’ என்றாய் ஆவலாய்
இல்லை மழைக்கு!
30
சிலர் பெயர் அழகு
இன்னும் சிலர்
பெயருக்கு அழகு – ஆனால்
உன்னால் பெயருக்கு பேரழகு
உன்னைக் கைப்பேசியில் அழைக்கச்சொல்லி
அடம்பிடித்த காதலை
தலையில் கொட்டி விரட்டிவிட்டேன்
அது முறைத்தபடியே அமர்ந்திருக்கிறது
நாம் பேசுகையில்
31
எனக்காகச் சண்டையிடுகையில்
நீ சொல்லும் தடித்த வார்த்தையில்
தவமிருக்கிறது காதல்
இந்தக் காதலர்களெல்லாம்
அப்படி என்னத்தான்
மணிக்கணக்கில் பேசுகிறார்கள்
என யோசிப்பவர்கள்
யோசனையை நிறுத்திவிட்டு
காதலிப்பது நலம்
32
தனிமைதேடி
இருளில் மறைந்து கொள்கிறேன்
இருந்தும்
என்னைத் தேடி வந்துவிடுகின்றன
உந்தன் நினைவுகள்
என் உலகத்தில்
நீ மட்டுமே இருக்கிறாய்
உன் தனிமையைப் போக்க
நானும் உடனிருக்கிறேன்
33
பிரபஞ்ச வெளியில்
பித்துப் பிடித்தலையும்
எரி கோள் போலிருந்தவனை
சூரியனைச் சுற்றும் பூமியாய்
நீள்வட்டப் பாதையில்
உன்னை
சுற்றவைத்தது காதலே.
உன்னை அழைக்க
நான் சேகரித்து வைத்திருக்கும்
புனைப் பெயர்களில்
எத்தனையை நீ அறிவாய்!
காதலுடன்
உன்னைப் பெண்பார்த்து வந்த பின்னர்
என் நடுசிற்றன்னை
உன் நெற்றியிலிருந்த
தழும்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்
என் கடைச்சிற்றன்னை
உன் கருங்கூந்தலின்
உயரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்
என் இளையோன்
உன் இமையின் கீழிருந்த
கருவளையம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்
உன்னைப் பார்த்த அனைவருமே
உன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்
நான் மட்டும்
உன் காதலுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
பள்ளிக்கூடத்தின் இரும்புக் கதவுக்கு வெளியே
ஏராளமான அன்னைகள் அணிவகுத்திருந்தாலும்
வகுப்பறை விட்டு வெளியேறும் சிறுவனுக்கு
தன் அன்னை மட்டுமே தெரிவது போல
குவிந்து கிடந்த மணப்பெண் புகைப்படங்களில்
நீ மட்டுமே எனக்குத் தெரிந்தாய்!
என்னால் சிறந்த கவிதையொன்றை
படைக்க முடியாமல் இருக்கலாம்! – ஆனால்
அக்கவிதையைச் சிறந்த படைப்பிடம்
சேர்த்திட முடியும்! என்றே
உன்னிடம் கொண்டுவந்திருக்கிறேன்
சரியாகச் சமைக்காத
ஒரு தினத்தில்
உண்ணக் கொடுத்தாய்
உன்னை
அன்றையிலிருந்து உனக்கு
சரியாகவே சமைக்கத் தெரியவில்லை
இரவு பேசிவிட்டு
உறங்கச் சென்றுவிடுகிறாய்
அதன் பின்
நானும் காதலும்
கதைத்துக் கொண்டிருக்கிறோம்
பெண்கள் வரிசையில்
நின்றிருக்கிறாய் நீ
ஆண்கள் வரிசையில்
அமர்ந்துன்னைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன் நான்
அவ்வப்போது வந்து
தாயின் மடிமுட்டி
பாலருந்தும் ஆட்டுக்குட்டியென
உன் தாவணி
காற்றில் தவழ்ந்து
தழுவிச்செல்கிறது என்னை
காதலருந்தியபடியே!
மணல் அள்ளிப் போகும்
கடல் அலை!
கிள்ளிக் கூட போகுமென்பதை
கரையில் நின்றிலிருந்த நீ
அலை கண்டு பயந்தபொழுது
அறிந்து கொண்டேன்.
இரு கையையும்
மேல் தூக்கி இணைத்து
நீ சோம்பல் முறிப்பதைக்
காணும் பொழுதெல்லாம்
என் சோம்பல் முறிந்துவிடுகிறது
இருப்புக்கில்லை மறுப்பு
மாற்றுப் புடவையின்றி
குளியறையிலிருந்து கூச்சலிடுகிறாய்
புதிய பதார்த்தம் செய்ததாய்
சமயலைறையிலிருந்து சத்தமிடுகிறாய்
குரல் கேட்டும் மௌனிக்கிறேன்
எத்தனை முறை சொன்னாலும்
நீ ஊருக்கு சென்றிருப்பதை
ஏற்றுக்கொள்ளவதேயில்லை என் மனது
குடை வேண்டாம்
வாசலில் காத்திருக்கும்
மழை ஏமாந்து போய்விடும்
நடுநிசியை கடந்து
நாம் பேசிக்கொண்டிருக்கையில்
இடையே விழும் இடைவெளியில்
என்ன பேசுவதென
எண்ணிக் கொண்டிருந்தால்
ஏதாவது பேசேன் என
சிந்தனையைக் கலைத்து விடுகிறாய்
அது சிறகடித்து பறந்துவிடுகிறது
முன்பெல்லாம்
மழை பிடிக்கும்
நனைதலுக்காக
இப்பொழுதெல்லாம்
இடியே பிடிக்கிறது
இறுக நீ அணைப்பதற்காக
என்னைப் பிடிக்குமா
உன் கரம் பிடித்தேன்
என்னைப் பிடிக்குமா என்றாய்
உன் விரல் கடித்தேன்
என்னைப் பிடிக்குமா என்றாய்
உன் இடை ஒடித்தேன்
என்னைப் பிடிக்குமா என்றாய்
இன்னும் இன்னும்
எத்தனை முறைத்தான்
என்னைக் கேட்பாய்
என்னைப் பிடிக்குமாவென
உன்னைப் பிடிக்காமலா
என்னைப் பிடித்தேன்.
சர்க்கரை இல்லாமல்
நீ தரும் தேநீரின்
சாக்கு என்னவென தெரியும்
உன் இதழருந்தியவன் மட்டுமல்ல
உன் இதயமருந்தியவனும் நான்
பின்னிருந்து அனைத்தபடி
நான் உடன்வருவதற்காகவே
கற்றுத்தேர்ந்த வாகனத்தினை
தரிகெட்டு ஓடவிட்டுக் கொண்டிருக்கிறாய்
உனக்குத் தெரியும்
தரிகெட்டு போவது
வாகனமட்டுமல்லவென
காதல் சலித்துப் போய்
வெறுத்து ஒதுக்கிப் போகிறேன்
அது அறியாமல் வந்து
அரவணைத்துப் போகிறாய்
சலிப்பெல்லாம் செத்துப் போகிறது
நீ
கரும்பலகையில்
வரைந்து
சென்ற
காதல்மேல்
விளம்பிக்
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை
என் இதழ் கவ்வி
வார்த்தைகள் நீ
உறிஞ்சிய பிறகு
எஞ்சியிருக்கும் மௌனமே
எண்ணற்ற இக்கவிதைகள்
கண்ணத்தில் முத்தம் தந்து
கண்ணில் நீர் சுமந்து
கைகளைக் காற்றில் அசைத்து
விடை தந்து அனுப்புகிறாய்
தினம் தினம்
பிரிகையிலும் இப்பிரிகை
உனக்குப் பிடிபடாததன் விடையறியேன்
கண்களில் தூக்கம் வழிய
எனக்குத் தூக்கம் வருகிறதென
என்னிடம் கூற கைப்பேசியில்
அழைத்துவிட்டு….
இப்போது தூக்கம் போயிடுச்சு
தூக்கம் வரும் வரை
பேசிக்கொண்டு இரு என்றாய்
உன் தூக்கத்தினைத் தூக்கிப் போன
காக்கைஇந்நேரம் எந்நரியிடம்
பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும்?
நான்
கவிதையெழுதுவதாக நினைத்து
கிறுக்கி வைத்திருக்கிறேனடி…
கிறுக்கி…
“இங்க வா கடிச்சு வைக்கிறேன்” என
நீ தவறுக்கு தரும் தண்டனைக்காவே
கண்ணத்தினைக் கொழு கொழுவென
வைத்திருக்க வைத்தியரிடம்
அலைந்து கொண்டிருக்கிறேன்
எத்தருணத்தில்
உன் பின்புறமிருந்த
இரு இறகுகளை
மறைத்துவைக்கத் தீர்மானித்தாய்
உடைகளைத்து தேடிய பின்பும்
ஒரு தடையமும் கிடைக்கவில்லை
என் தேவதையே
நான் தவழ்ந்து தவழ்ந்து
தரையைப் பாடாய் படுத்திய
கணத்திலெல்லாம்
நீ என்னைச் சொர்க்த்தில் தேடிவிட்டு
மண்ணில் பிறந்திருப்பாய்
பட்டு போல
மென்மையான மேனியுடைய
அந்த ஆளுயர பொம்மை
வேண்டுமெனஅடம்பிடிக்கிறாய்
வாங்கித்தருதலில்
உடன்பாடில்லை எனக்கு
உடன் அனைத்திட நானிருக்க
உனக்கெதுக்கு அப்பொம்மை
தினம்
அலுவலுக்கு செல்கையில்
உந்தன்
அழுகையை கடந்தே
செல்லவேண்டியிருக்கிறது,
புத்திசாலித்தனமான
காதலர்களுக்கும்
முட்டாள்தனம்
தேவைப்படுகிறது
காதல் செய்ய
உன் அன்பினை அறிய
வார்த்தைகள் தேவையில்லை
கண்ணுக்கடியில்
கடல் கனக்கும் நீரை மறைத்து
இதழைச் சிரிக்க வைத்து
விடைதந்தனுப்பும் அத்தருணம் போதும்
விடிகாலை குளிரில்
வெடவெடத்து போயிருந்தேன்
உன்போர்வையின் மிச்சத்தை தந்தாய்
இன்னும் அதிகமானது குளிர்
34
ஹைக்கூ கவிதை - 2
சிறுநேர பிரிவுக்கே
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அருகிலுள்ளோர் மனம்கசிய வைத்து
பித்துப்பிடித்தலைகிறாய்
உன்னை
ஓர் நாள்
என் இல்லாமை
சந்திக்குமே
அப்போது இந்தப் பிரபஞ்சத்தை
என்ன செய்வாயோ
காதல் வழியும்
காதல் வழியது
காதல் வலியை
கண்ணிருந்து மறைப்பது
துயிலெழுப்ப
தேனீர் கோப்பையுடன் வருகிறாய்
அதிலிருந்த ஆவி
உன் காதலால்
பரிசுத்த ஆவியாகி
பரமப் பிதாவினைக் காண சென்றிருக்கிறது
நீயாக நீயும்
நானாக நானும்
இனி எப்போதும்
இருக்கப்போவதில்லை
நீ முத்த சாக்கில்
அள்ளி அனுப்பிய
சொற்களையெல்லாம்
ஓரிடத்தில் கொட்டி
சிலவற்றை எடுத்து தொடுத்து
கவிதையாக்கி கொண்டிருக்கிறேன்
அதிகம் பேசிய நாட்கள்
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
பேசாமல் போன அந்த நாட்களில்தான்
உன் காதல் அதிகமாகப் பேசியது
கவிதையாக!
புல்லோபூவோ
கையில்கிடைப்பதைஎடுத்து
கற்றமந்திரம்சொல்லி
ஏவினால்
பிரம்மஆயுதமாம்
எடுத்துரைக்கிறது
இந்துதொன்மவியல்
அன்றென்னைப்பார்த்து
கடைக்கண்ணால்ஏவிச்சென்றாயே
அதுதானோ
உனக்குத் தத்து கொடுக்கவே
என்னைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்
என் அன்னை!
நேற்றுவரை நீ
சாதாரணப் பெண்ணாக இருந்திருக்கலாம்
ஆனால்
இன்று முதல்
நீ தேவதை
என் காதல் தேவதை
என் கவிதையைப் படித்துவிட்டு
நீ செய்யும் விமர்சனத்திற்காகவே
யுகம் யுகமாய்க் கவிதை எழுத
நான் தயாராய் இருக்கிறேன்
கடவுளுக்கு வெட்டுவதற்காக
ஆட்டை வளர்ப்பது போல
உனக்குக் கொடுப்பதற்காகவே
இதயத்தை வளர்த்தவன் நான்
நான் நானாகத்தான் இருந்தேன்
நீ என்னைக் கடக்கும் வரை
என்னைக் கவிதை எழுதுபவனாகவும்
உன்னைக் கவிதையாகவும்
மாற்றிவிட்டது காதல்
காதல் வரும் முன்
கவிதை எழுதுவதாக
தமிழைக் கட்டாயப்படுத்தினேன்
காதல் வந்த பின்
கவிதை எழுத
தமிழ் என்னைக் கட்டாயப்படுத்துகிறது.
நம் காதலைப் பிரிக்க
கடவுள்களை அழைக்கின்றனர்
நம்முடைய உறவுகள்
அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது
உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்ததே அவர்தான் என்பதை
ஏன் என்னைப் பற்றியே
கவிதை எழுதுகிறீர்கள்
இந்த உலகத்தைப் பற்றி
ஏதாவது எழுத கூடாதா
என்றாய் ஏக்கத்துடன்
நானும் உலகத்தைப் பற்றிதான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஆனால் அதன் முழுமையும்
நீதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாய்
என் மனதின் மகரதப் பொடிகள்
சுமந்த வண்டுகள்
உன்னிடம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு
நான் காதலிக்கும் நேரத்தைவிட
கவிதை எழுதும் நேரம்தான் அதிகமென
குறைப்பட்டுக் கொண்டாய் என்னிடம்
என்ன செய்ய
போகிறபோக்கில் என்னுள் ஆயிரம் விதைகளை
விதைத்துச் சென்றுவிடுகிறாய்
அறுவடை செய்வதற்குள்
எனக்குப் போதும் போதும் என்றாகிவிடுகிறது
அதற்குள் நிகழ்ந்து விடுகிறது
நம் சந்திப்பு
காதல் மட்டுமல்ல
காதலிப்பவர்களும் அழகு
வருவோர் போவோர் பின்னெல்லாம்
ஆதரிக்க வேண்டி
காலடியில் ஓடிச் செல்லும்
ஓர் ஆதரவற்ற நாய்க்குட்டிபோல
உந்தன் பின்னே
ஓடிச்செல்கிறது எந்தன் இதயம்
ஒரு முறை உன் கொலுசொலி
என்னை மீட்டெடுத்தது
மறுமுறை உன் வலையலொலி
என்னை மீட்டுதந்தது
என்ன காரணமோ தெரியவில்லை
மீண்டும் மீண்டும் தொலைந்துவிடுகிறேன்\
உன் அழகில
என்
பிறந்தநாளுக்கு
நீ
வெறுங்கைகளுடன்
வந்தாலே போதும்
உன்னை விட
சிறந்தபரிசு வேறேது
எதையும் மிகைப்படுத்தியே
எழுதிய என்பேனாக்கள்
திகைத்து நிற்கின்றன
உன் அழகை
மேலும் எப்படி
மிகைப்படுத்துவதென அறியாமல்?
காதல் சுமந்திடும் கனவு
கனவு சுமந்திடும் இரவு
இரவு சுமந்திடும் நிலவு
நிலவு சுமந்திடும் அழகு
அழகு சுமந்திடும் நீ
அனைவரும் இருந்தும்
அநாதையாக இருக்கிறேன்
அருகில் நீயில்லா
தருணங்களில்
ஓரு மழைநாளில்
உன் மடியிலேயே
உறங்கிவிடும்
வரம்தா
என்னைப் பற்றிதான்
இத்தனை கவிதையுமா என்கிறாய்
உன்னைப் பற்றியதால்தான்
இத்தனை கவிதையும் என்கிறேன்
1
ஜெகதீஸ்வரனைப் பற்றி
இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூர் எனும் கிராமத்தில் நடராஜன் மருதாம்பாள் தம்பதியனருக்கு மகனாக பிறந்தவர். பள்ளிப் படிப்பினைகாட்டுப்புத்தூரிலும், பட்டையப் படிப்பினை காரைக்காலிலும் முடித்தார். தற்போது சென்னையில் மென்பொருள் எழுதுனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இணையத்தில் கல்லூரிக் காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அதனால் சகோதரன், கடவுள் எம்ஜிஆர் என எண்ணற்ற வலைப்பூக்களிலும், சிறுகதைகள், கீற்று போன்ற வலைதளங்களில் இவரது படைப்புகள் உள்ளன. பிளிக்கர் வலைதளத்தில் இவரது ஓவியங்கள் கட்டற்ற முறையில் பகிரப்பட்டுள்ளன. அவற்றினை வர்த்தக ரீதியல்லாத அனைத்திற்கும் இலவசாகப் பயன்படுத்திக் கொள்ளாம்.
இவர் தமிழ் விக்கிப்பீடியில் இந்து தொன்மவியல், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளை எழுதிக் கொண்டுள்ளார். மேலும் தமிழ் மென்நூல்களை வெளியிடும் பிரீதமிழ்ஈபுக்ஸ் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
ஜெகதீஸ்வரனைத் தொடர்பு கொள்ள –
மின்னஞ்சல் – sagotharan.jagadeeswaran@gmail.com
முகநூல் – https://www.facebook.com/JegadeeswaranNatarajan
டிவிட்டர் – https://twitter.com/sagotharan_jaga
கருத்துகள்
கருத்துரையிடுக