மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்


தத்துவம்

Back

மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்
ஜேம்ஸ் ஆலன்


மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்

ஜேம்ஸ் ஆலன்

தமிழில் - சே.அருணாசலம்

 

 

 

உள்ளடக்கம்


மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்

1. முன்னுரை

2. மனக்கண்ணில் தோன்றும் எண்ணங்கள்

3. புறக்கண்ணில் தோன்றும் உலகம்

4. பழக்கவழக்கங்கள் , அவற்றிற்கு அடிமையாவதும் மீள்வதும்

5. உடம்பின் இயல்பு

6. ஏழ்மை

7. மனிதனின் ஆன்மீக தன்னாட்சி

8. வெற்றி உறுதியே : தோல்விக்கு அடிபணியாதே

freetamilebooks எங்களைப் பற்றி

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

1


மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்


Man: King of Mind,Body and Circumstance (1911)

James Allen

மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன் (2013)

ஜேம்ஸ்ஆலன்

(தமிழில் சே.அருணாசலம் )

மின்அஞ்சல்முகவரி: arun2010g@gmail.com

மூலங்கள் பெற்றது

GNUஅன்வர்

அட்டை படம்

மனோஜ் குமார்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

1


முன்னுரை


முன்னுரை

நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்வில் தெளிவு கொள்ள வேண்டும். ஒரு பள்ளிச் சிறுவனுக்கு கூட்டல் கழித்தல் பாடங்களைக் கற்பது போன்றதே அது. அதைக் கற்ற பின் அனைத்துச் சிரமங்களும் நீங்கி மிகச் சுலபமாய் காணப்படும். பிரச்சினை வீட்டிலோ நாட்டிலோ அதன் அடி முதல் காரணம் மனத் தெளிவின்மையும் அறியாமையும் ஆகும். ஒவ்வொரு மனமும் தெளிவடைந்தால் அது ஒருங்கே கூடி கூட்டத்தில் பிரதிபலிக்கும். மனித இனம் தற்போது கடினமான பாடங்களை கற்கும் நிலையில் உள்ளது.அதன் அறியாமையே அந்தப் பாடங்கள் கடினமானதாகத் தோன்றுவதற்கு காரணமாகும். மனிதன் சரியான வாழ்வை தெளிவு செய்து வாழும்போது , தன்னுடைய சக்தியையும் , செயலாற்றலையும் , ஞானத்தோடு பயன்படுத்தும் போது வாழ்வின் பாடத்திற்கு சரியான விடையை அறிந்து கொள்வான். அது அது வாழ்வின் எல்லாத் துன்பங்களுக்கும் விடை கொடுக்கும். அவ்வுயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்கள் பிரச்சினைகள் சென்றடைய முடியாத உயர் நிலையில் வாழ்கின்றனர்.

உள்ளும் புறமும் மேலும் கீழும் பிரபஞ்ச சக்தி பெருக்கெடுத்தவாறும் இழையோடியும் காணப்படுகிறது. உயர்ஞானம் உடையவர்கள் தன்னைப் பயன்படுத்துமாறு விழைகின்றது. உள்ளவை எல்லாம் நல் பொருள்களே. அவை தவறான வழியில் பயன்படுத்தப்படுவதே தீமைக்குக் காரணம். நன்முறையில் பயன்படுத்தப்பட்டால் நன்மை விளையும்.

2


மனக்கண்ணில் தோன்றும் எண்ணங்கள்


மனக்கண்ணில் தோன்றும் எண்ணங்கள்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனமே காரணம். அவற்றை. .உண்டாக்குவதும் வைத்துக்கொள்வதும் மனமே. அவை புறச்சூழ்நிலைகளால் உருவானவை அல்ல. உள் மனதின் பிரதிபலிப்பு. அவற்றிற்குக் காரணம் கடவுளோ சாத்தானோ சூழ்நிலையோ அல்ல. எண்ணங்களே. எண்ணங்கள் ஊடுருவிய செயல்களைத் தொடர்ந்து இன்பமோ துன்பமோ மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை வந்து அடைகிறது. செயல்கள் என்பது கண்களுக்கு தெரியும் எண்ணங்களின் உருவமே.மனத்தின் வேரூன்றிய எண்ணங்கள் நம் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் தீர்மானிக்கின்றன. நம் பழக்க வழக்கங்களின் மூலமாக நாம் இன்பத்தையும் துன்பத்தையும் அறுவடை செய்கிறோம். தன்னுடைய வாழ்வின் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புபவன், அதற்கு ஏற்றபடி தன் எண்ணங்களையும், மனப்பார்வையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட வாழ்வில் உள்ள தீய பழக்கங்களிலிருந்த விடுபட்டு, வேரூன்றிய தீய எண்ணங்களைக் களைந்தால் துன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வான். நல் எண்ணங்களை விதைத்து நற்பழக்கங்களை வழக்கங்கள் ஆக்கிக் கொண்டு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்வான்.

ஒருவன் தன் நலத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சக்தியை இழந்து விடுகிறான். பலரின், பலவற்றின் நலத்தை விரும்பி அடைய முற்படும்போது துக்கம் அவனை நெருங்க முடியாது. எங்கே தகுந்த காரணங்கள் இருக்கிறதோ அங்கே விளைவுகளும் காணப்படும். மனிதனால் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் மூலகாரணத்தை அறிந்து அதை மாற்ற முடியும். தீய எண்ணங்களை விட்டு விலகி உள்ளத்தைப் பரிசுத்தமாக்கி குணத்தால் மென்மேலும் உயரலாம்.தன்னை உயர்நிலைக்கு தயார்படுத்திக் கொள்வது பேருவகை அளிக்கும் ஒரு தவமாகும்.

‘மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.’————34

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களாலே வளைக்கப்பட்டிருக்கிறான். அவற்றை அவன் பரந்து விரிந்ததாகச் செய்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம். குறுகியதாகச் செய்து அதற்குள் அகப்பட்டுக் கொள்ளலாம். இழிந்தவற்றைத் துறந்து சிறந்தவற்றைப் பற்றிக் கொள்ளலாம். வஞ்சகமான எண்ணங்களை நினைப்பிலே இருந்து தூர எறிந்து பேரானந்தமான பேரன்பான எண்ணங்களைப் போற்றலாம். இவற்றை அவன் தொடர்ந்தால் அழகும் ஆற்றலும் நிறைந்த புதிய தளத்தில் பிரவேசிப்பான். பரிபூரணமான உலகை உணரத் தொடங்குவான் .

.

மக்கள் தங்கள் எண்ணங்களின் நிலைக்கு ஏற்ப கீழ் நிலையிலோ மேல் நிலையிலோ வாழ்கிறார்கள். இருள் நிறைந்து குறுகியதாய் அல்லது ஒளி மிகுந்து பரந்து விரிந்ததாய்க் அந்த நிலை காணப்படுகிறது. காணும் அனைத்திலும் மனிதன் தன் எண்ணத்தின் சாயலையே காண்பான்.

சந்தேகமும் , பேராசையும் , பொறாமையும் நிறைந்த ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் தென்படும் உலகம் எந்தச் சிறப்பும் இன்றி சூதுவாது நிறைந்து காணப்படும். தன்னிடம் எந்தச் சிறப்பும் நற்குணமும் இல்லாததால் உலகிலும் மற்றவரிடத்திலும் எந்த சிறப்பையும் நற்குணத்தையும் அவனால் காண இயலாது. தன்னுடைய கடவுளைக் கூட அவனிடம் இலஞ்சம் பெற்று அவனுக்குக் காரியங்களை சாதித்துக் கொடுப்பவராக எண்ணுகிறான்.எந்த உள்ளத் தூய்மையையும் கடவுளை நாடுவதற்குத் தேவையானதாக அவன் எண்ணவில்லை. தன்னைப் போலவே மற்றவர்களும் கேடுகெட்டவர்களாக அவன் பார்வை முடிவுகட்டுகிறது.மிகத் தூய தன்னலமற்ற வார்த்தைகளிலும் செயல்களிலும் களங்கத்தைக் கற்பிக்கிறான்.

சந்தேகக் குணமில்லாத பரந்த மனமும் தாராள குணமும் உடைய மனிதனை இப்பொழுது கருதுங்கள். அவனது உலகம் எவ்வளவு ஆனந்தமாக மகிழ்ச்சியாகக் காட்சி அளிக்கிறது . அனைத்து உயிர்களிலும் மனிதர்களிலும் ஒரு தெய்வீகத்தைக் காண்கிறான். அனைவரையும் உண்மையாக ஏற்கிறான். அவர்களும் அவனிடத்து உண்மையாகவே நடந்து கொள்கிறார்கள். மிகக் கொடியவர்களும் அவன் முன்னிலையில் தங்கள் இயல்பை மறந்து ஒரு கணம் அவனைப் போலவே மாறி விடுகிறார்கள். திடீர் என்று தங்களுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை எண்ணி வியந்து தாங்களும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ வாய்ப்பு இருப்பதை எண்ணி மகிழ்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட சிறிய குணம் படைத்தவனும், பெரிய குணம் படைத்தவனும் இருவேறு உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தாலும் அவர்களது உணர்வலைகள் முற்றிலும் வேறு வேறான பாதையில் செல்கின்றன. இருவரது செயல்களிலும் ஒற்றுமைகள் அரிதாகக்கூட காண முடியாது. சரி / தவறு எனத் தீர்மானிக்கும் பார்வை முற்றிலும் வேறுபடுகிறது. அவர்கள் ஒரே பொருளைப் பார்த்தாலும் அவை இருவருக்கும் வேறு வேறு விதமாக காட்சியளிக்கின்றன.

ஒருவன் நரகத்தில் வாழ்கிறான்.ஒருவன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.இறப்பு என்பது அவர்களிடையே காணப்படும் இடைவெளியை அதிகப்படுத்தி விட முடியாது.ஒருவனுக்கோ இந்த உலகம் என்பது திருடர்களின் கூடாரம். மற்றவனுக்கோ அது தேவதைகளின் கோவில். ஒருவன் தன்னிடமிருந்து எவரும் திருடிவிடக் கூடாது , தன்னை ஏமாற்றிவிடக் கூடாது என்று தன் வசம் எப்போதும் ஒரு கைத்துப்பாக்கியை பாதுகாப்பிற்கு வைத்துக் கொள்கிறான்.( தன்னுடைய உள் மனத்தை தான் தான் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்.) மற்றவனோ பேரழகையும் , பேராற்றலையும் , பேரறிவையும் , பேரின்பத்தையும் அடையாளம் கண்டு வரவேற்கக் காத்திருக்கிறான். அவனது நண்பர்கள் உன்னதமானவர்கள். அவர்களும் அவனில் ஒரு பகுதியே. அவனது எண்ணங்களிலும் உணர்விலும் கலந்துள்ளனர். அவனது உள்ளத்திலிருந்து வெளிப்படும் பெருந்தன்மை வெள்ளத்தில் எல்லோரும் நனைகின்றனர்.அவனைப் போற்றுபவர்களின் உள்ளங்களிலிருந்து அது பல மடங்காக பெருகி மீண்டும் அவனை வந்து அடைகிறது.

மனித சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை மறுக்க முடியாது. அவர்களது உள்ளங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்துள்ள எண்ணங்களும் பழக்க வழக்கங்களுமே அவற்றிற்கு காரணமாகும். சீர்த்திருத்தவாதி அந்த ஏற்ற தாழ்வுகளுக்கு

எதிராக போர்க்குரலை உயர்த்தலாம்.எண்ணங்களின் தன்மையால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினை அக்கூக்குரல்கள் சரி செய்து விட முடியாது. எண்ணங்களை செயற்கையாக சமநிலைபடுத்த முடியாது.மேலோட்டமான எண்ணங்கள் வாழ்வின் தன்மையை மாற்றாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக எழும் எண்ணங்களின் விளைவே வாழ்வின் அடிப்படையாகின்றது.

நீதீயைக் கடைபிடிப்பவனும் , அநீதியைக் கடைபிடிப்பவனும் ஒரே நிலையில் காணப்பட முடியாது.அந்த ஏற்றத் தாழ்வினை காழ்ப்புணர்ச்சியோ தற்பெருமையோ ஏற்படுத்தவில்லை.வாழ்வின் அஸ்திவாரத்திற்குத் தேவையான அறிவும் அறியாமையும் நற்பண்புகளும் தீய பண்புகளும் நன்மையையும் தீமையும் ஆன எண்ணங்களும் பழக்கங்களுமே காரணம். கொடியவர்களும் , நற்குணங்கள் இல்லாதவர்களும் மேன்மக்களின் வட்டத்தில் நுழைய முடியாததற்குக் காரணம் தங்களுடைய மன இயல்பே.தன் மன இயல்பை அவன் படிப்படியாக மாற்றி பொறுமையாக அவன் தன்னை உயர்த்திக் கொண்டால் அவன் இயற்கையாகவே அவன் தன நிலையை உயர்த்திக் கொண்டு மேன்மக்களில் ஒருவனாகிவிடுவான். இதை விடுத்து செயற்கையான வழியில் ஒரு வழியில் மிரட்டியோ, இறைஞ்சியோ குறுக்குவழியிலோ ஏதேனும் வழியில் மேல் நிலையை அடைந்து அங்கே நிரந்தரமாக வாழ முடியாது.

சொர்கத்தின் (நற்பண்புகளின்) வாசல் கதவை வன்முறையால் திறக்க முடியாது. நற்பண்புகளை ஆராதிக்க விரும்புபவனை நற்பண்புகள் தேடிச் சென்று நண்பனாகக் கொள்ளும்.. ஒரு தீயவன் தீய செயல்களில் ஈடுபடுபவர்களுடனேயே நட்பு கொள்கிறான் . மனிதர்கள் தங்கள் குணங்களுக்கு ஏற்ப ஒன்றை பிரதிபலிக்கும் கண்ணாடிகளே. எல்லா மனிதர்களும் , உலகையும் மற்ற மனிதர்களையும் நோக்கும் போது,தன்னை காண்பவனை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியையே காண்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய குறுகிய எண்ணங்களால் சிறை வைக்கப்பட்டுள்ளான் அல்லது பரந்து விரிந்த எண்ணங்களால் விடுவிக்கப்பட்டுள்ளான் . அவனுடைய எண்ணத்தின் எல்லையை கடந்து இருப்பவை அவனைப் பொறுத்தவரை இல்லாதவைகளே. அவற்றை இருப்பதாக உண்மையாக அவனால் ஏற்க முடியாது. குறுகிய எண்ணங்களுக்குள் சிக்கியவன் பரந்த எண்ணங் கொண்டவன் மனதைப் புரிந்து கொள்ள முடியாது. படிப்படியாக தன்னை அர்ப்பணித்து அந்த நிலையை அவன் அடைய முடியும். பரந்த எண்ணங் கொண்டவன் குறுகிய எண்ணங் கொண்டவனுக்கு நேரக்கூடிய மனநிலைகளையும், அனுபவங்களையும் இம்மியளவும் குறைவில்லாமல் உள்ளவாறே உணர்ந்து கொள்ள முடியும்.அந்தக் குறுகிய எண்ணங்களைக் கடந்து மீண்டு பரந்த எல்லைக்குள் வந்துள்ளதால் அந்த அனுபவங்கள் , மன நிலைகள் அவனுள் நிரந்தரமாகப் பதிவாகியுள்ளன.தேய்பிறையில் தொடங்கி வளர்பிறையாகி முழு நிலவு ஆவது போல தன்னுடைய எண்ணங்களைப் பண்படுத்திக் கொண்டவன் ஒரு உயர்நிலையை நெருங்கும்போது பழியையும் பாவத்தையும் எவர் மீதும் சுமத்தாமல் நடப்பவை அனைத்தையும் எந்த சலனமுமின்றி அவனால் ஏற்க இயலும். தன்னுடைய நிலையை உயர்வாக எண்ணுவதற்குப் பதில் அவன் மேலும், பல மடங்கு உயர்ந்த சிகரங்களைக் கண்டு அந்த சிகரங்களை நோக்கிப் பயணத்தைத் தொடங்குவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வான்.

பல வகுப்புகளில் படிக்கும் சிறுவர்களைப் போல மனிதர்களும் தங்களுடைய புத்தி, ஞானம் போன்றவற்றுக்கு ஏற்ப அதற்குத் தகுந்த நிலையில் வாழ்கின்றனர். முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பாடங்களை விளங்கிக் கொள்ள முடியாது. அப்பாடங்கள் அவனுடைய புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு வெகு தூரத்திலிருக்கிறது. அவன் படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாக படிக்க வேண்டிய பாடங்களை படித்து உணர்ந்து ஆறாம் வகுப்பை அடையும்போது அப்பாடங்கள் அவனுக்கு எளிமையாக இருக்கின்றன.

வாழ்க்கையிலும் பல வகுப்புகள் இருக்கின்றன. வகுப்புகளை எல்லாம் கடந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பேராசை- சுயநலத்தால் கேடு கெட்ட செயல்களைச் செய்பவர்களால், களங்கமற்ற சலனமற்ற தூய்மையான பேராழமான உள்ளங்களையுடைய தன்னலமற்றவர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாது. உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால் நல்ல செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் , நல்ல எண்ணங்களுக்கு தங்களுள் இடமளித்தால், முயற்சியும் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளும் மனோபாவமும் இருந்தால் உயரிய நிலையை அடைய முடியும். அந்த நிலைகளுக்கும் மேல், இவ்வுலகத்திற்கு வழிகாட்டும் பொருட்டு துன்பக்கடலில் சுழலும் உலகத்தைக் கரை சேர்க்க, மீட்டு எடுக்க, புத்துயிர் ஊட்ட சற்குருக்களும் ஞானிகளும் இரட்சகர்களுமாகியவர்களை , புனிதர்களை, இவ்வுலகத்தின் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் ஆராதிக்கிறார்கள். மாணவர்களிடையே பல வகுப்புகள் இருப்பதைப் போல் ஆசான்களிடையேயும் பல வகுப்புகள் இருக்கின்றன. குருவினுடைய சிம்மாசனத்தில் அமர்ந்ததால் ஒருவன் சிறந்த குருவாகி விட முடியாது. அவை ஏதும் இன்றி தன்னுடைய உள்ளத்தில் உள்ள பேரன்பால் பேரொளியால் துன்பக்கடலில் சிக்கியவரை கரை சேர்க்க எண்ணுகின்ற மனம் மட்டுமல்ல, அதற்குரிய நுட்பமும் திறனும் உள்ளவர்கள் குருவாய் வழிகாட்டி உலகத்தை உய்விப்பார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ப உயர்வானவனாகவோ தாழ்ந்தவனாகவோ சான்றோனாகவோ தரங்கெட்டவனாகவோ இருக்கிறான். அவனது நிலைக்கு அவனது எண்ணங்களே இம்மியளவும் குறையாமல் காரணங்களாக உள்ளன. தன்னுடைய எண்ணங்களால் கட்டப்பட்டுள்ள எல்லைச் சுவருக்கு உள்ளே மட்டும் தான் அவனால் உலாவ முடியும். அதுதான் அவனது உலகம். அந்த உலகத்திற்குரிய பழக்கங்களை பழகிக் கொள்கிறான்.அவன் கொண்ட எண்ணங்கள் செயல்வடிவம் பெற அவனது உலகம் அவனுக்கு எல்லா வழிகளிலும் ஒத்திசைவு செய்கின்றது. ஒருவனை எவரும் கட்டாயப்படுத்தி தாழ் நிலையில் கொண்டு சேர்க்க முடியாது. தன் எண்ணங்களைப் பண்படுத்தி சிறகை விரித்து சிகரங்களை அடையலாம்.தீயவற்றைப் பற்றாமல் உறுதியுடன் அவற்றின் பிடியை உதறி, நன்மையைக் கடைப்பிடித்து, குறுகிய எண்ணங்களை விட்டொழித்து தன் எண்ண உலகை பரந்து விரிந்ததாக மாற்றி குளுமையான இதமான காற்றின் இடையே வானில் பறக்கலாம்..

3


புறக்கண்ணில் தோன்றும் உலகம்


புறக்கண்ணில் தோன்றும் உலகம்

வெளியில் தோன்றும் உலகமானது உள்ளத்தில் உலவும் எண்ணங்களின் வெளிப்பாடே . உள் உருவாகிய ஒன்றே வெளிப்படும். உள் இருப்பவை வெளியில் இருப்பவற்றுக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கும். பரந்து விரிந்தது குறுகியதை தன்னுள் அரவணைத்துக் கொள்ளும். பொருள் என்பது மனதின் மற்றொரு பகுதியாகும். எண்ணங்களின் தொடர்க் கண்ணியே சூழ்நிலைகளும் பொருள்களும். சூழ்நிலைகள் உருவாவதற்கு , ஏற்படுவதற்குத் தேவையான உந்து சக்தியை வழங்குவது எண்ணங்களே. புறச் சூழ்நிலைகளுக்கும் உடன் இருக்கும் மனிதர்களின் மனோ பாவங்களுக்கும் , செயல்களுக்கும் , நடவடிக்கைகளுக்கும் தன்னுள் இருக்கும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவனை எல்லா வகையிலும் செம்மைப்படுத்தவே அவை அவ்வாறு அரங்கேறுகின்றன . மனிதன் சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டவன் அல்ல. அந்த நிமிடம் எந்தச் சூழலில் இருக்கிறானோ அது அவனுடைய வளர்ச்சிக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவுகின்றது. சூழ்நிலைகளுடன் ஒன்று கலந்த அவன் அதன் ஒரு பகுதி. இங்கே சூழ்நிலை என்பது மனிதர்கள், பொருள்கள், சொற்கள், செயல்கள், மனோபாவங்கள் என அனைத்தையும் குறிக்கின்றது. எண்ணங்களின் அடிப்படை விதியே, கொண்ட எண்ணங்கள் வடிவம் பெற , வளர்ச்சி பெற, ஆக வேண்டிய, ஏற்பட வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது தான்.

கட்டுப்பாடற்ற தன்னுடைய எண்ணங்களும் ஆசைகளும் ஈடேற தன் சூழலை ஒருவனால் மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால், தன் எண்ணங்களையும் ஆசைகளையும் கட்டுக்குள் வைத்து வழி நடத்திக் கொள்ள முடியும். பிறர் மீது தான் கொண்டுள்ள பார்வையை , மனோபாவத்தை , எண்ண ஓட்டத்தை மாற்றிக் கொண்டால், திருத்திக் கொண்டால், பிறர் அதற்கேற்ப வேறொரு புதிய பரிமாணத்தில் தோற்றமளிப்பார்கள். பிறர் தன்னுடன் செயல்படும் விதத்தை ஒருவனால் நிர்ணயம் செய்ய முடியாது. ஆனால் தான் பிறருடன் பணிபுரியும் விதத்தை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். தன்னுடைய சூழ்நிலை என்னும் சுவரை ஒருவனால் உடைத்து வெளியேற முடியாது. ஆனால் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அவன் தன்னைப் பண்படுத்திக் கொள்ள முடியும். அல்லது அந்தச் சூழலில் இருந்து மீளும் விதமாக தன் எண்ணங்களை விரிவாக்கிக் கொண்டால் , வேறு திசையில் செலுத்தினால் புதியதொரு சூழ்நிலை அவனுக்கு ஏற்படும்.

சூழல்கள் எண்ணங்களைத் தொடர்கின்றன. எண்ணங்களை மாற்றிக் கொண்டால் சூழல்கள் அதன் விளைவாக புதிய விதமாக மாறும், தோன்றும். நேராக உள்ள நிலைக் கண்ணாடி தன் முன் வரும் பிம்பத்தை அதே போல் பிரதிபலிக்கும். வளைந்தோ நெளிந்தோ உள்ள நிலைக்கண்ணாடி சிறியதை மிகைப்படுத்தியும் நேராக உள்ளதை கோணலாகவும் காட்டும். குழப்பமான மனது காணும் அனைத்திலும் குழப்பத்தையே காணும். மனம் ஒரு ஒழுங்கிற்கு கிழ்படிந்து தெளிவாக சாந்த நிலையில் இருக்கட்டும்.மனங்கள் பளிங்கு போன்று எவ்வித மாசும் படியாமல் இருந்தால் நீரலைகள் அற்ற எரிபோல் விளங்கினால் இவ்வுலகம் பேரழகுடையதாகக் காட்சி தரும்.

தன்னுடைய மனம் என்னும் உலகத்தை ஆள்வதற்கு , கட்டுப் படுத்துவதற்கு , அதனை பரிசுத்தமாக்குவதற்கு ,அதனை சீரிய முறையில் வழி நடத்துவதற்கு எல்லாவித சக்தியும் மனிதனிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிறர் மனங்களை ஆள்வதற்கோ , கட்டுப்படுத்துவதற்கோ, செல்வாக்கை செலுத்துவதற்கோ, வழி நடத்துவதற்கோ அவனுக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே சக்தி அவனிடம் தரப்பட்டுள்ளது. அதுவும் பிறர் அனுமதித்தால் அன்றி அதற்கும் பயன்பாடு இல்லை. தன் வாழ்வைக் கூர்ந்து கவனித்தால் இந்த உண்மையை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். பல்வேறு உயிர்களும் பொருட்களும் மனிதர்களும் ஒரே முழுமையின் பல்வேறு கூறுகளே. தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் இன்றியமையாத உயிராக இருப்பதை விளங்கிக் கொள்வான். உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. மற்ற உயிர்களின் பங்களிப்பு ஒத்துழைப்பு இல்லாமல் எதனையும் சாராமல் எதுவும் தனித்து வாழ முடியாது.

நம் செயல்கள் நம் உடன் வாழ்பவரைச் சென்று அடைகின்றன. அவர்கள் அதற்கு ஏற்றவாறு மறு செயல் புரிகிறார்கள். நாம் செய்வது அவர்களுக்கு இடையூறாகத் தோன்றினால் அவர்கள் அதற்குத் தகுந்தவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை , முன் எச்சரிக்கைகளை ஏற்படுத்துவார்கள். மனித உடம்பானது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது போல முழு மனித சமூகம் என்னும் உடம்பானது அதன் தேவைக்குத் துணை புரியாதவற்றை வெளியேற்றத் துடிக்கும். உங்களது தவறான செயல்கள் ஒவ்வொன்றும் வாழும் இந்த பூமியின் எங்கோ ஒரு பகுதியில் ஒரு பாதிப்பை , ஒரு காயத்தை ஏற்படுத்தியுள்ளன அந்த பாதிப்பை நீக்குவதற்கு , காயத்தை ஆற்றுவதற்கு இயற்கை முயற்சிகின்றது. அந்த முயற்சியின் பின் விளைவாக வலியும் துன்பமும் உங்களைத் தொடர்கின்றன..

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.—————319

வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அந்த இயற்கை விதியான -காரணங்களும் அதற்கு ஏற்ற விளைவுகளும் என்பது தனி மனிதனிடம் செயல் படுவதைப் போலவே முழு மனித சமுகத்திடமும், இந்த முழு பிரபஞ்சத்திடமும் செயல்படுகின்றது. [இந்த முழு பிரபஞ்சமும் ஒன்று கூடி (விரும்பியோ, விரும்பாமலோ ) செய்த வினையின் பயனை அனுபவிக்கின்றது.]

எந்தச் செயலும் பொருட்படுத்தப் படாமல் தள்ளி வைக்கப்படுவது இல்லை. நீங்கள் மிக ரகசியமாகச் செய்த செயலும் முழுமையின் ஒரு பகுதியாக வந்து அடைகின்றன . நல் வினையாக இருந்தால் ஆனந்தத்தையும் , தீவினையாக இருந்தால் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு எண்ணமும் செயலும் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப் படுகின்றன. தீர்ப்புகள் வெகுமானங்களாக தண்டனைகளாகத் திரும்புகிறது. இந்தக் காரணத்தினால் உங்கள் செயல்களுக்கு நீங்கள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அது இந்த முழு மனித இனத்திற்கும், முழு பிரபஞ்சத்திற்கும் சொந்தமானது.

உங்களது செயலைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை, சம்பவங்களை, மற்றவர்களின் எதிர்கொள்ளும் விதத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாது. கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்களது அந்தச் செயலின் ஆரம்பமும் தொடர்வும் முடிவும் உங்கள் கையில் தான் உள்ளது.. சீரிய முறையில் தவறின்றி முழு மனத்தோடு ஒன்றி தீவிரமாக செயலைத் செய்து முடிக்கும் ஆற்றலும் சக்தியும் உங்களிடம் உள்ளது. தன் கைக்கு எட்டிய செயலை சரிவரச் செய்வதே ஒவ்வொருவருடைய இன்றியமையாத கடமையும் சாதனையும் ஆகும்.

புறத்தே நிகழும் சம்பவங்களால் மற்றவர்களது கருத்துகளையும் , பங்களிப்பையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையின் மறு பக்கம் மற்றவர்களது கருத்தும் பங்களிப்பும் உங்களை கட்டுப்படுத்தவோ , காயப்படுத்தவோ முடியாது. உங்களைக் கட்டிப் போட்டுள்ள சங்கிலிகளும், அதை உடைத்து எறிய கூடிய ஆற்றலும் உங்கள் உள்ளே தான் இருக்கின்றன. பிறர் மூலமாக உங்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும் வருத்தங்களுக்கும் உண்மையான காரணம் உங்களுடைய மனோபாவமும் நீங்கள் செய்த செயல்களுமே ஆகும். எய்தவன் இருக்க அம்பை நோக முடியுமா? அவர்கள் அம்பு போன்றவர்கள்.எய்தவர்கள் நீங்கள் தான். காயப்படுபவர்களும் நீங்கள் தான்.

விதி என்பது வினையின் பயன். வாழ்வின் கனிகளை இனிப்போ புளிப்போ ஒவ்வொருவனும் தன் வினைப் பயனுக்கேற்ப பெற்றுக் கொள்கிறான். நெறி தவறாதவன் முழு சுதந்திரத்தோடு வாழ்கிறான். எவராலும் அவனை காயப்படுத்தவோ அவனை அழிக்கவோ அவன் மன நிம்மதியை சீர்குலைக்கவோ முடியாது. அவன் மற்றவர்களது இயல்பை, சூழ்நிலையை அறிந்து பரந்த மனத்தோடு எதிர் கொள்கிறான். மற்றவர்கள் அவன் மீது தீங்கு இழைக்க முற்படும்போது அவர்களது சக்தி முறியடிக்கப் படுகிறது . அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி அவனைத் தீண்டாமல் அவர்களையே திரும்பத் தாக்குகிறது. அவனுள் உறையும் , அவனில் இருந்து வெளிப்படும் நன்மையே அவனது ஆதார சக்தி ஆகும். அவனது ஆனந்தத்தை அளிக்கும் வற்றாத ஊற்றாகும். சலனமற்ற சாந்த மனமே அதன் வேர். அதன் மலரே மகிழ்ச்சி .

ஒருவன் தன்னைக் குறித்த பிறரது செயலில் தீங்கை – பாதிப்பை காணும்போது உதாரணத்திற்குப் புறங் கூறுவது , அவர்கள் புறங் கூறுவதால் அவனது மனோபாவத்தால் அவன் பாதிப்புக்கு உள்ளாகின்றானேயன்றி அவர்கள் புறங் கூறியதால் மட்டுமே அவன் பாதிப்புக்கு உள்ளாகி விடுவதில்லை.. அவனது மன உளைச்சலும் துக்கமும் அவனுள்ளேயே வேர்விட்டு வளர்ந்தன. செயல்களின் ஆற்றலையும் தன்மையையும் அவன் இன்னும் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. தன்னைப் பற்றிப் பிறர் கூறும் அவதூறானது தனக்கு ஒரு நிரந்தரக் களங்கத்தை ஏற்படுத்தி விடுமோ, தன் குண இயல்பை அது மாற்றி விடுமோ என அஞ்சுகிறான். ஆனால் புறம் பேசியவர்களது வார்த்தை அவற்றை சாதிப்பதற்கு ஒரு துளி சக்தியையும் பெற்றிருக்க வில்லை. அவை உண்மையில் புறம் பேசியவர்கள் குணத்தை கீழே இழுக்கவோ அவர்களுக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்தவோதான் சக்தி பெற்றுள்ளன.

பிறர் பேசும் புறமானது தன்னை பாதித்து விட்டதாக எண்ணி மனிதன் ஆர்ப்பரிக்கிறான், துடிக்கிறான். புறங் கூறியவர்களுக்கு தகுந்த பதிலடியைத் தருவதற்கு பெருமுயற்சி எடுக்கிறான். அவன் இவ்வாறு செய்கின்ற பெரு முயற்சியே புறங் கூறப்பட்ட வார்த்தைகளுக்கு பலமளிக்கின்றது. உண்மையோ என்கிற தோற்றத்தை அளிக்கின்றது. அவன் மன நிம்மதியை இழந்ததற்கும் அவன் மனம் ஆர்ப்பரிப்பதற்கும் காரணம் அவன் மீது பிறர் கூறிய புறஞ்சொல் அல்ல, அந்த புறஞ்சொல்லை அவன் எதிர் கொண்ட விதம் தான். நெறிகளை கடைபிடிப்பவன் இந்தக் கூற்றின் உண்மையை நிரூபித்து உள்ளான். அவன் மீது பிறர் கூறும் பழிச்சொல் அவனுள் எந்தக் கலக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதனை ஒரு பொருட்டாக அவன் கருதவில்லை. அது போன்ற எண்ணங்கள் அவன் மனதுள் எழுவதில்லை. அது போன்ற எண்ணங்கள் உலாவும் தளத்தை அவன் கடந்து விட்டான். தன் மீது பிறர் கூறிய பழியை தனக்கு ஏற்பட்ட களங்கமாக , அவதூறாக, தனது பெயருக்கு மாசு கற்பிக்கப்பட்டதாக அவன் எண்ணவில்லை. அறியாமையில் உழல்பவர்களின் செயலாகவே அவன் இதை கருதுகிறான். அந்தச் செயலைத் தன்னுள் புகுவதற்கு அனுமதிக்காததால் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களிலிருந்தும் விடுபடுகிறான். கற்களை வீசி கதிரவனை திசை திருப்ப முடியாது. அதைப் போலவே வீண் பழியை அவன் கருதுகிறான். இக்கருத்தை வலியுறுத்தவே புத்தர் தன் இறுதி நாள் வரை தன் சீடர்களுக்குக் கூறிய அறிவுரை , “எவன் ஒருவன் மனத்தில் நான் ஏமாற்றப்பட்டேன், நான் அவமானப்பட்டேன் , நான் அடிபட்டேன் என்ற எண்ணங்கள் எழுகிறதோ அவன் இன்னும் மெய்ப்பொருளை உணரவில்லை ” .

பிறரது சொற்களையும் செயல்களையும் போன்றதே புறத்தே நிகழ்வன யாவுமே .சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் , அவற்றை உற்று நோக்கினால் அவை நல்லதும் அல்ல ,கெட்டதும் அல்ல. நம்முடைய உள்ளத் தெளிவாலும் , மனோபாவத்தாலும் அவற்றை நன்மையானதாகவோ தீமையானதாகவோ பாவித்துக் கொள்கிறோம். மனிதன் தன்னுள் , தன்னால் அரும்பெரும் சாதனைகளை செய்ய முடியும், ஆனால் தன்னுடைய சூழ்நிலை அதற்கு தடையாக இருப்பதாக எண்ணுகிறான். பணமும் பதவியும் நேரமும் இருந்தால் , குடும்ப வாழ்வில் சிக்கல்கள் இல்லாமலிருந்தால் , பெரும் சாதனைகளை சாதிக்க முடியும் என்று கருதுகிறான் . ஆனால் இவை எதுவுமே அவன் குறுக்கே நிற்கவில்லை.

தன் மனத்தில் அவற்றிற்கு உள்ள அளவைவிட பல மடங்கு சக்தி இருப்பதாகக் கருதுகிறான். அவற்றிற்கு அவன் அடிபணியவில்லை. அவற்றின் மீது தான் கொண்ட கருத்திற்கு தன் பலவீனத்தால் அடி பணிகிறான் . சரியான மனோபாவத்தை கைக்கொள்ளாமல் இருப்பதுதான் அவனுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. தன்னுடைய சூழ்நிலையை தன்னுடைய முதலாக , மூலப்பொருளாக ஏற்றால்; தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றினால் ; தன் இன்றியமையாத தேவைகளே அவன் செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் ;இடையூறுகள் உதவிகளாக மாறும். அனைத்துக் கூறுகளையும் விட மனிதனே அதி முக்கியமானவன். அவன் மனம் தெளிவானதாக கலக்கமின்றி இயங்கினால் தன் சூழ்நிலை குறித்து எவ்வித முணுமுணுப்போ சலிப்போ இன்றி அவற்றைக் கடந்து முன்னேறுவான்.தன்னுடைய சூழ்நிலை குறித்து முணுமுணுப்பும் சலிப்பும் சோர்வும் கொள்பவன் ஒரு முழு மனிதனுக்குரிய தன்மையை அடையவில்லை. தேவைகள் அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும். அவன் தன் முழு திறமையை ஆற்றலை பயன்படுத்தும்போது அவை அவனிடம் அடி பணிந்து விடும். சூழ்நிலை என்பது பலவீனனுக்கு ஒரு கடுமையான எஜமானன். வலிமை மிகுந்தவனுக்கோ பணிவான ஆற்றல் மிகுந்த வேலைக்காரன்.

வெளிச் சூழ்நிலைகளோ சம்பவங்களோ நம்மை சங்கிலியால் கட்டிப் போடவோ பிணைக்கவோ இல்லை. அவை குறித்து நாம் கொண்ட எண்ணங்களே நம்மை அவற்றோடு பிணைக்கவோ விடுவிக்கவோ செய்கின்றன .நாம் உருவாக்கிய சங்கிலிகளால் நம்மைப் பிணைத்துக் கொண்டு சிறைக் கதவுக்குள் சென்று கைதிகளாக நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம் அல்லது சங்கிலிகளை உடைத்தெறிந்து மாளிகைகளை உருவாக்கி காற்றைப் போல் சுதந்திரத்தை எல்லா சூழ்நிலைச் சம்பவங்களிலும் அனுபவிக்கலாம். ”என் சூழ்நிலைகள் என்னைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவை என்று எண்ணினால் , அந்த எண்ணம் என்னைக் கட்டிப் போடும். என் வாழ்வாலும் எண்ணத்தாலும் அவற்றை மீறி என்னால் வெளிவர முடியும் என்று நினைத்தால் அந்த எண்ணமே என்னை விடுவித்துவிடும்”. ஒருவன் தன் எண்ணங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவை தன்னை அடிமை வாழ்விற்கு இட்டுச் செல்கின்றதா அல்லது மீட்கின்றதா ? என்று உற்று நோக்கி தன்னை அடிமைப் படுத்தும் எண்ணங்களை விட்டொழித்து விடுவிக்கும் எண்ணங்களை பின்பற்ற வேண்டும்.

பிற மனிதர்கள் , பிறர் கருத்துக்கள், வறுமை, துன்பங்கள் ,நன்பர்கள் விட்டு விலகுவது,பிறரின் ஆதரவு நீங்குவது போன்ற இவற்றைக் கண்டு நாம் அஞ்சினால் நாம் அடிமை வாழ்வில் அகப்பட்டுள்ளோம். மெய்ப்பொருள் உணர்ந்தவர்களது , நீதி நேர்மை வழுவாதவர்களது நிலையான மகிழ்ச்சியை நாம் உணர்ந்து கொள்ள முடியாது. நம் எண்ணங்கள் பரிசுத்தமாக இருந்தால் வாழ்வைக் கண்டு எவ்விதமான அச்சமும் கலக்கமும் கொள்ளாமல் இருந்தால் அனைத்தையும் நம் உதவிக்கு , முன்னேற்றத்துக்கு வந்தவையாகக் கருதி சரியாக அணுகினால் , நம் வாழ்வின் குறிக்கோளை அடைந்தே தீருவோம் . அதனை தடுக்கும் சக்தி எவற்றுக்கும் கிடையாது..

4


பழக்கவழக்கங்கள் , அவற்றிற்கு அடிமையாவதும் மீள்வதும்


பழக்கவழக்கங்கள் , அவற்றிற்கு அடிமையாவதும் மீள்வதும்

மனிதன் தான் கடைப்பிடிக்கும் பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவன். பின்பு எவ்வாறு சுதந்திரமானவன் என்று கூற முடியும்? வாழ்வையோ வாழ்வின் நீதி, நியாய அறக் கோட்பாடுகளையோ மனிதன் உருவாக்கவில்லை. இந்த நீதி நியாய அறக்கோட்பாடுகள் வாழ்வில் எவ்வாறு செயல்படுகின்றன என்று விளங்கிக் கொள்ள முடியும். அவற்றை முழு மனத்தோடு ஏற்றுத் தன் வாழ்வில் ஒழுக்கமாக ஆக்கிக் கொள்ளலாம். சமூக வாழ்விற்குப் பயன்படும் சட்ட திட்டங்களை மனிதனால் உருவாக்க இயலும். வாழ்வை கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களை ஒருபோதும் அவனால் உருவாக்க முடியாது.வாழ்வின் நுட்பமான நீதி நியாயங்களை பகுத்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த நுட்பமான பிரபஞ்ச நீதியை எவராலும் உருவாக்க முடியாது. எவராலும் அழிக்கவும் முடியாது. மனிதன் அவைகளை உருவாக்கி செயல்படுத்தவில்லை. அவை செயல்படும் விதத்தை உணர்ந்து பயன்பெறுகிறான் . பாதுகாப்பு அடைகிறான். அந்த பிரபஞ்ச நீதியை உணராமல் இருப்பதுதான் வாழ்வின் பெருந்துன்பத்திற்கு ஆணிவேர். அவற்றை உணர மறுப்பது அறியாமையையும் அடிமைத்தனத்தையும் பறைசாற்றுகிறது. யார் சுதந்திரமானவன்? நாட்டின் சட்ட திட்டங்களை ஏற்று நடக்காத திருடனா அல்லது அவற்றை ஏற்று நடக்கும் நியாயமான குடிமகனா ? அதேபோல் யார் சுதந்திரமானவன்? ,மனம் போன போக்கில் அவை நன்மையா தீமையா என்று ஆராயாமல் வாழ முற்படும் முட்டாளா அல்லது ஆராய்ந்து நன்மையைத் தேர்ந்தெடுத்து வாழ முற்படும் புத்திசாலியா ?

இயற்கையாகவே, மனிதன் பழக்கங்களுக்கு ஆட்பட்டவன் . இதை அவன் ஒருபோதும் மாற்ற முடியாது. ஆனால் அவன் பழக்கங்களை அவனால் மாற்றிக் கொள்ள முடியும். அவனைக் கட்டுப் படுத்தும் இயற்கை விதிகளை அவன் மாற்றி வாழ முடியாது. ஆனால் அந்த விதிகளுக்கு தக்கவாறு அவன் தன்னை மாற்றிக் கொள்ளலாம். எந்த மனிதனும் பூமியின் புவிஈர்ப்பு விதியை மாற்றுதற்கு முற்படுவதில்லை. அது செயல்படும் விதத்தை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு நடக்கிறான். மதிற்சுவரில் ஏறி அவன் நடப்பது இல்லை. தரையின் மீதோ தட்டையான பாதையிலோ தான் நடக்கிறான். உயரே இருந்து பாதுகாப்பு சாதனங்கள் இன்றி குதிப்பதும் இல்லை.

புவிஈர்ப்பு விதியை எவ்வாறு மனிதனால் புறந்தள்ள முடியாதோ அதைப் போலவே தன் பழக்கங்களின் வசமானவன் என்ற விதியையும் அவனால் புறந்தள்ள முடியாது. தான் பழக்கங்களின் வசமானவன் என்ற விதியை உணர்ந்து தன் பழக்கங்களைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடித்து அந்த விதியை தனக்குச் சாதகமாகவோ,பாதகமாகவோ மாற்றிக் கொள்ளலாம். ஐம்புலன்களுக்குப் புலப்படும் ஆற்றலையும் அந்த ஆற்றல் உருவாவதற்கான காரணத்தையும் அறிந்து அதைப் பயன்படுத்த விழைபவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் கண்டு பிடிப்பாளர்களாகவும் ஆகின்றனர்.

ஐம்புலன்களுக்கு புலப்படாத ஆற்றலை உணர்ந்து கொள்பவர்கள் அறிந்து கொள்பவர்கள் மெய்யறிவு பெற்றவர்களாகின்றனர். தீய மனிதன் தீய பழக்கங்களுக்கு அடிமையானவன். நல்ல மனிதனோ நற்பழக்கங்களை கடைபிடிப்பவன். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், பழக்கங்கள் செயல்படுகின்ற விதியை அவனால் மாற்ற முடியாது, அது இவ்வாறு செயல்பட வேண்டும் என்று கட்டளை இட முடியாது , ஆனால் அந்த விதியின் வலிமை உணர்ந்து நல் ஒழுக்கங்களை கடைப்பிடித்து பழக்கங்களாக ஆக்கிக் கொண்டுள்ளான். அரியபெரு நற்செயல்களை அவன் புரிவதற்கு ஒவ்வொரு முறையும் கட்டளையையோ , ஆணைகளையோ பிறப்பித்துக் கொண்டு அவற்றை சிரமேற்றுச் செயல்படுத்துவதில்லை. நற்பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அவற்றின் வசமாகி நற்செயல்கள் புரிவது அவனுக்கு எளிதாக அமைகிறது.

தீய பழக்கங்களையும் தீய எண்ணங்களையும் கொண்டவன் தீயவனாகிறான். நற்பழக்கங்களையும் நல் எண்ணங்களையும் கொண்டவன் நல்லவனாகிறான். தீயவற்றை விட்டொழிந்து நல்லனவற்றை கடைப்பிடிக்கும் போது தீயவன் நன்மையானவனாக உருமாறுகிறான். அவன் விதியை மாற்றவில்லை. தன்னை மாற்றிக் கொள்கிறான். தன் எண்ணங்களுக்குத் தன் பழக்கங்களுக்கு தான் வசமானவன் என்ற உண்மையை உணர்ந்து அதற்கேற்ப தன்னை வடிவமைத்து கொள்கிறான். தன் சுயநல இழிநிலைக்கு அழைத்துச் செல்லும் ,தூண்டும் ஆசைகளை, செயல்களைப் புறந்தள்ளி உயரிய கோட்பாடுகளுக்குத் தலை வணங்குகின்றான் .மேலான கோட்பாடுகளுக்குத் தலை வணங்கியதால் கீழானவற்றைப் புறந்தள்ளும் ஆற்றல் அவனிடம் ததும்பி வழிகிறது. தான் பழக்கங்களின் வசமானவன் என்ற விதி மாற்றப்படவில்லை. தன் பழக்கங்களை மாற்றிக் கொண்டு அந்த விதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.

பழக்கம் என்பது மீண்டும் மீண்டும் தொடர்வது. மனிதன் முன்பு எண்ணிய எண்ணங்களை, முன்பு செய்த செயல்களை மீண்டும் மீண்டும் தொடர்கிறான். அவை தன்னுள் ஒன்று கலந்து விடும் வரை , தன்னில் ஒரு பகுதியாக மாறும் வரை , திறமை என்பது நிலைபெற்று விட்ட பழக்கமாகும். மனத்தில் படிப்படியாக படிந்ததே வெளியே படிப்படியாக உருவாகிறது. மனிதனது இன்றைய நிலை என்பது, தான் கொண்ட எண்ணங்களையும் செயல்களையும் பல லட்சம் முறை தொடர்ந்ததே ஆகும்.அவன் ஏற்கனவே முழு முதலாக உருவாக்கப்பட்டு விடப்பட்டவன் அல்ல. தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பவன். அவனது குணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவனிடமே கொடுக்கப்பட்டுள்ளது. அவன் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிக்கும் எண்ணங்களும், செயல்களும் அவனது பழக்கங்களாக அவனாகவே மாறிவிடுகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் மேற்கொண்ட எண்ணங்களின், செயல்களின் வடிவமாகத் திகழ்கிறான். தன்னை அறியாமலே அவன் முயற்சியின்றி அவனுள் இருந்து வெளிப்படும் அவனது குணங்கள் , இயல்புகள் எல்லாம் நெடுங்காலமாக அவன் தொடர்ந்து கடைப்பிடித்த எண்ணங்களும் செயல்களுமே ஆகும். பழக்கங்களின் இயற்கை விதியே அதுதான். அது தொடர்ந்து பின் பற்றப்படுவதால் அவனது பெரு முயற்சி ஏதுமின்றி இயல்பாகவே மாறி வெளிப் படும். இறுதியில் அவனே தடுக்க நினைத்தாலும் முற்சித்தாலும் அதையும் மீறி வெளிப்படும். நற்பழக்கங்கள் , தீய பழக்கங்கள் இரண்டுக்குமே இவை பொருந்தும். அவை தீயனவாக இருந்தால் கெட்டவனாக,வஞ்சகனாக காட்சியளிக்கிறான். நல்லவையாக இருந்தால் நல்லவனாக காட்சியளிக்கிறான்.

எல்லா மனிதர்களும் , தங்கள் பழக்கங்களின் கட்டுப்பாட்டிலேயே வாழ்கிறார்கள். இனியும் தொடர்ந்து அவ்வாறே வாழ்வார்கள். அவை நற்பழக்கமோ தீய பழக்கமோ (அது இங்கு பொருள் அல்ல). அவர்கள் மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணங்களும் கைக்கொள்ளும் செயல்களும் அவர்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளாகும். நல்லறிவு உடையவர்கள் இதை உணர்ந்து நற்பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். அதன் விளைவாக இன்பத்தையும் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றனர். இதை உணராமல் தீய பழக்கங்களைத் தொடர்ந்த வண்ணம் வாழ்பவர்கள் துன்பத்திலும் அடிமைத் தனத்திலும் உழல்கின்றனர்.

பழக்கங்களின் இந்த நியதி நன்மையின் பொருட்டே . இது தீய பழக்கங்களை மேற்கொள்பவர்களை அடிமைச் சங்கிலியில் பூட்டியும் , நற்பழக்கங்களை மேற்கொள்பவர்களை நல் திசையிலும் நிலைபெறச் செய்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் ஆராய்ந்து ஆராய்ந்து தேர்ந்தேடுப்பதற்குத் தேவையின்றி அவர்கள் உணர்வில் ஒன்றிவிட்டபடியால் அவர்களையும் அறியாமல் உள்ளுணர்வின் வழிகாட்டுதலால் அரும்பெரும் செயல்களை எந்தவிதப் பெருமுயற்சியும் இன்றி முழு சுதந்திரத்துடன் , முழு மனத்துடன், மகிழ்ச்சியுடன் அவர்களால் புரிய முடிகிறது.

வாழ்வின் இந்தத் தன்னாலேயே இயங்கும் தன்மையை {Automatism ,தானியங்கி தன்மையை / தன்னிச்சை செயல்களை ( தன்னையறியாமல் செயல்படுவது போலத் தோன்றும்) } நோக்குபவர்கள், மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதியை அவர்களால் மீற முடியாது. விடாது முயற்சி செய்வது வீண் வேலை என்று கருதுகின்றனர். ஒருவன் பிறக்கும்போதே நல்லவனாகவோ தீயவனாகவோ பிறந்துள்ளான் என்றும், கண்ணுக்குப் புலப்படாத சக்திகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்றும் கருதுகின்றனர்.

பலவித சக்திகளினால் ஆட்டுவிக்கப்படும் கருவிதான் மனிதன் என்பது ஓரளவு உண்மைதான். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் அந்தப் பல வித சக்திகளை உருவாக்கியவனும் அதே மனிதன்தான். அவை எந்த இலக்குமின்றி சுற்றித் திரிவன அல்ல. அவற்றை அவனால் வழி நடத்த முடியும். புதிய பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமானால் தேர்ந்தெடுத்து மாற்றி அமைத்துத் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும்.

மனிதன் அவனுக்கே உரிய குண நலன்களோடும் பண்புகளோடும் பிறந்துள்ளான் என்பது உண்மைதான் என்றாலும் அந்த குண நலன்களும் பண்புகளும் எண்ணிலடங்கா பிறவிகளினால் அவன் மேற்கொண்ட எண்ணங்களின் முயற்சிகளின் விளைவாக அவனுக்கு இப்பிறவியில் அமைந்துள்ளது. அந்தக் குண நலன்கள் இந்தப் பிறவியில் அவனுக்கு நேரும் அனுபவங்களால் மேலும் மாற்றங்களுக்கு உள்ளாகும்..

தீய குணங்களையோ அல்லது தீய பழக்கங்களையோ கூர்ந்து ஆராய்ந்தால் அவை இரண்டுமே ஒன்றுதான். ஒருவன் அத்தீயவைகளை கைவிட முடியாமல் அவற்றின் பிடியில் சிக்கித் தவித்து எத்தகைய துயரங்களை அனுபவித்தாலும் அவன் மனநலம் பாதிப்புக்கு உள்ளாகாதவரை அவன் அவற்றின் பிடியிலிருந்து விடுபடத் துணிந்தால் அவனுக்குப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தீய குணத்திற்கு எதிர் மறையான நற்குணங்களைப் பயில வேண்டும். முன்பு தீய குணங்கள் அவனை ஆட்கொண்டும் இடையறாத துன்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக இருந்ததைப் போல் , நாளடைவில் நற்குணங்கள், நற்பழக்கங்கள் அவனை ஆட்கொண்டு வற்றாத மகிழ்ச்சிக்கு ஊற்றாக இருக்கும். அந் நற்பழக்கங்களை அவன் கைவிடுவதற்கு அவனுக்குத் தேவையோ விருப்பமோ ஏற்படாது..

தன்னுள் உருவாக்கிக்கொண்ட பழக்கங்களை மனிதனால் கைவிடவும் முடியும்; சீரமைத்துக் கொள்ளவும் முடியும்; வேறொன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.அவனுக்கு வேண்டியது அதற்கான மன உறுதியும் முயற்சியும் விருப்பமுமே. பழக்கங்கள் தனக்கு இன்பம் தருகின்ற வரை அவற்றை கைவிட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு ஏற்படாது. அவை எப்பொழுது துன்பத்தைத் தர தொடங்குகிறதோ அப்பொழுதுதான் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியைத் தேடுவான். எந்த மனிதனும் உதவிகள் அவனை எட்டா வண்ணம் எங்கும் விட்டுவிடப்பட வில்லை. எந்த விதியின் கீழ் தான் அடிமை வயப்பட்டானோ அதே விதியின் கீழ் தன்னை அவன் விடுவித்துக் கொள்ளலாம். இதை உணர்ந்து கொள்ள முதலில் அவன் இதைச் செயல்படுத்த வேண்டும். தீர்க்கமாக முடிவெடுத்து எப்பாடுபட்டாவது தன்னை தாழ்நிலைக்கு அழைத்துச் செல்லும் எண்ணங்களையும் பழக்கங்களையும் உதறித் தள்ள வேண்டும். இயன்ற வரை முயற்சி செய்து சிறந்த எண்ணங்களையும் நற் பழக்கங்களையும் கைக்கொள்ள வேண்டும். இதை அவன் உடனே சாதிக்க முடியாமல் போகலாம். அதற்கு ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகள் என்றாலும் அவன் மனம் கலங்கி முயற்சியைக் கைவிடக் கூடாது. பழைய பழக்கங்கள் உடைவதற்கும் புதுப் பழக்கங்கள் ஏற்படுவதற்கும் காலம் தேவைப்படுகிறது. ஆனால் பழக்கத்தின் நியதி மாற்ற முடியாதது. தவிர்க்க முடியாதது.

இடைவிடாத முயற்சியும் மனம் தளராத பொறுமையும் முயற்சி கைகூடும் என்று உறுதியுடனிருந்தால் வெற்றி தேடி வரும்.

ஒரு இடையூறான சூழ்நிலை , எதிர்மறையான சிந்தனை இவைகளே மனதில் ஆழமாக வேரூன்றும்போது , ஒரு இனிய சூழ்நிலை, நேர்மறையான சிந்தனைகளை கைக்கொண்டால் அவை இன்னும் ஆழமாக வேரூன்றி மனதில் பதியும். தன்னுடைய தவறுகளையும் தன் துக்கத்திற்குக் காரணமான தன் குணங்களையும் தன்னிடமிருந்து நீக்குவதற்கு சக்தியில்லை என்று நினைத்தால் , என்னால் முடியாது என்று நினைத்தால், அவனால் முடியாது. என்னால் முடியாது என்கிற எண்ணமானது மனத்தின் ஆழத்திலிருந்து களையப்பட வேண்டும். செல்ல வேண்டிய பாதையில் குறுக்கே விழுந்த மிக பெரிய தடைக்கல் அந்த கெட்ட பழக்கம் என்று கூறக் கூடாது. கெட்ட பழக்கத்தை முறியடிக்க முடியாது என்கின்ற எண்ணம் தான் அந்தப் மிக பெரிய தடைக்கல் என்று கூறுவது தான் சரி.

தன்னால் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து மீள முடியாது என்று எண்ணும் வரை அவன் எவ்வாறு அதிலிருந்து மீள முடியும் . தன்னால் அதிலிருந்து மீள முடியும் என்று எண்ணும்போது அவனை தடுக்கக் கூடிய சக்திதான் எது ? என்னால் என் தீய பழக்கங்களிலிருந்து , தீய இயல்புகளிலிருந்து மீள முடியாது என்கிற எண்ணம் மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரை அவன் அத்தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறான். அவ்வெண்ணத்தை ஆழமாக முழுதும் எல்லா திரைகளையும் விலக்கி ஆராய்ந்தால் அது அவன் தீங்கின் பால் கொண்ட நம்பிக்கை, நன்மையின் பால் கொண்ட அவ நம்பிக்கை என்று விளங்கும். தன்னால் தன் தீய பழக்கங்களிலிருந்து , தீய எண்ணங்களிலிருந்து மீள முடியாது என்று நினைத்தால் அவன் தீமைக்கு தலை வணங்குகிறான். நன்மையை நிராகரிக்கிறான் என்று அர்த்தம்.

தீங்கின்பால் நம்பிக்கை கொண்டால் அடிமையாய் சிதைப்படுவான். நன்மையின் மேல் நம்பிக்கை கொண்டால் அவன் தன்னை விடுவித்துக் கொள்ளலாம். ஒரு திருந்திய உள்ளம் – திருந்திய மனோபாவம் குணங்களை, பழக்கங்களை திருத்தி வாழ்க்கையை மாற்றி அமைக்கும். தன்னை விடுவிக்கக் கூடிய ஒரே மனிதன் அவன் ஒருவன் மட்டுமே. தன் வீழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டவனும் அவன் தான். அவனே தான் தன்னுடைய மீட்சியையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் .மனிதன் பல யுகங்களாக இன்று வரை தொடர்ந்து காத்துக் கொண்டே இருக்கிறான், தன்னை மீட்பதற்கு எவரேனும் வருவார்களா என்று. ஆனால் எவரும் வராமல் சிக்கித் தவிக்கிறான். பேராற்றல் மிகு மீட்பன் அவனுள்ளேதான் இருக்கிறான். அந்த மீட்பன் தான் உண்மையின் மெய்ப் பொருளின் மெய்யறிவின் சாரம். நன்மையின் சாரம். அந்த மீட்கும் சக்தியானது எப்பொழுதும் நற் பழக்கங்களிலும் , நல் எண்ணங்களிலும் நற் செயல்களிலும் அவற்றின் விளைவுகளிலும் குடி கொண்டிருக்கிறது.

மனிதனுடைய தவறான எண்ணங்களே அவனை அடிமைப்படுத்துகின்றன. அவன் வெளியே இருக்கும் எந்த ஓன்றும் அவனை அடிமைப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இதை உணர்ந்து அவன் தன் தவறான எண்ணங்களை விடுத்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம். முதலாவதும் முக்கியமானதுமாக

என்னால் முன்னேற முடியாது.

என் தீய பழக்கங்களிலிருந்து என்னால் மீள முடியாது.

என் இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.

சுய கட்டுப்பாடுடன் என்னை நான் நிர்வகித்துக் கொள்ள முடியாது.

என் பாவங்களிலிருந்து என்னால் விடுபட முடியாது.

என்று இது போன்ற அடிமை வயப்படுத்தும் எண்ணங்களை விட்டொழித்தாக வேண்டும் .

இந்த ”முடியாது” என்கிற எண்ணம் அவன் மனதில் தான் படிந்துள்ளது.வேறு எங்கும் இல்லை.

இவை போன்ற முடியாது என்னும் எதிர்மறை எண்ணங்கள் களைந்து எறியப்பட்டு அவற்றினிடத்தில் முடியும் என்னும் நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்பட்டு, நடப்பட்டு நீரூற்றி வேலியிட்டுப் பாதுகாத்து அவை வேர்விட்டு வலிய மரமாகும் வரை வளர ,அது நமக்குச் சரியான பாதையையும் மகிழ்ச்சியான வாழ்வையும் கனிகளாக அளிக்கும்.

பழக்கங்களே நம்மை அடிமைப் படுத்துகின்றன. பழக்கங்களே நம்மை விடுவிக்கின்றன. எண்ணங்கள் தான் முதலில் பிறக்கின்றன.பின்பு மெல்ல அவை செயல்களாக மாறி நிலைப்பெறும் பழக்கமாக உருவெடுக்கின்றன. எண்ணங்களை மாற்றி அமைத்தால் அதைத் தொடரும் செயல் தன்னாலேயே மாறும். தீய எண்ணங்களில் உழன்றால் அவை மேலும் மேலும் நம்மை இறுகப்பற்றி அடிமை வயப்படுத்தும். நல் எண்ணங்கள் பூத்துக் குலுங்கினால் அடிமை விலங்குகள் உடைக்கப்பட்டு சுதந்திரமாய் விரிவாகிக் கொண்டே இருக்கும் எல்லைக்குள் செல்ல முடியும்.

5


உடம்பின் இயல்பு


உடம்பின் இயல்பு

உடம்பை பல்வேறு முறைகளில் குணப்படுத்துவதற்கு , ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இன்று எண்ணில் அடங்கா உடல்நிலை நல்வாழ்வு நிலையங்கள் மற்றும் மருத்துவமுறைகள் உள்ளன. இந்த உண்மை சுட்டிக்காட்டுவது எது என்று நோக்கினால் இந்த உடம்பானது பல வகையான நோய்களுக்கும் , வலிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகின்றது. அதே போன்று எண்ணிலடங்கா சமயங்களும் , போதனைகளும் நீதி நெறிகளும் உலகமெங்கும் காணப்படுவதன் காரணம், மனித மனம் படும் துன்பங்களை , சோதனைகளை , கவலைகளைக் கடப்பதற்கும் துணை நின்று அவனை வழி நடத்துவதற்கும் ஆகும். ஒவ்வொரு சமயமும் போதனையும் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு ஆறுதல் அளிக்கின்றன. அவனுடைய துன்பத்தை முழுதாகத் துடைத்து எறிய முடியவில்லை என்றாலும்,ஓரளவு குறைக்கின்ற படியால் அந்த மருத்துவ முறைகளின் தேவை உறுதி செய்யப்படுகிறது . இவ்வளவு மருத்துவ முறைகள் இருந்தும் நோய்களும் வலிகளும் நம்மை விட்டு நீங்காமல் இருப்பது போல் , இவ்வளவு சமயங்களும் போதனைகளும் இருந்தும் பாவமும் துக்கமும் நம்மை விட்டு நீங்கவில்லை.

பாவத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் மன ஆழத்தில் வேரூன்றி இருப்பது போலவே நோய்களுக்கும் வலிகளுக்கும் ஆன காரணம் கூட மன ஆழத்தில் வேரூன்றியிருக்கின்றன.அவற்றை மருந்து மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விட முடியாது. நம் உடலை வருத்தும் நோய்களுக்கும் வலிகளுக்கும் தகுந்த மனம் சார்ந்த காரணம் எங்கோ ஆழத்திலேயே இருக்கும். இவ்வாறு கூறுவதால் உடல் சார்ந்த விஷயங்கள் நோய்களுக்குக் காரணமல்ல என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அந்த உடல் சார்ந்த விஷயங்கள் வினை விளைவு என்னும் நீண்ட சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியாகச் செயல்படுகின்றன. ஒரு முக்கிய கருவியாகச் செயல்படுகின்றன. ஒரு உயிருக்கு இறப்பைக் கொண்டு வந்த நுண்கிருமி அசுத்தத்தின் கருவியாகும். அந்த அசுத்தம் என்பது மனத்தின் ஒழுங்கின்மையைக் காண்பிக்கின்றது. வெளியே காணப்படும் பொருட்களின் சூழ்நிலைகளில் ஒழுகும் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் அந்தப் பொருட்களை, சூழ் நிலையை கையாளும் மனங்களைச் சார்ந்திருக்கின்றன. உடலைத் தாக்கும் நோய்களுக்கு நுட்பமான காரணம் மனித மனங்களில் தங்கியிருக்கும் அவ நெறிகளாகும் . பல்வேறு விதமான வன்மையான ஆசைகளினால் மனித மனம் கலக்கமுற்று , அலைக்கழிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அவனுடைய உடலும் பல்வேறு வகைகளில் தாக்கப்படுகின்றது. அவன் மனம் நிம்மதியின்றி உடல் நலமின்றி உபாதைகளுடன் காணப்படுகின்றது.

விலங்குகள் அடர்ந்த காடுகளில் தங்கள் இயற்கைச் சூழ்நிலையில் மன குழப்பம் மனசஞ்சலம் ஏதுமின்றி மனமொன்றி மனமிசைந்து வாழ்வதே அவைகள் நோய்கள் ஏதுமின்றி காணப்படுவதற்கு காரணமாகும். அவை தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. நீதி, நியாயங்கள், குற்றங்கள் , பாவங்கள் போன்றவற்றின் அர்த்தமும் இவைகளுக்குத் தெரியாது. மனித மனங்களை ஆட்கொள்ளும் மனவுறுத்தல் , மன வருத்தம், துக்கம்,ஏமாற்றம் போன்ற ஏராளமான மனம் சார்ந்த எண்ணங்கள் அவைகளுக்கு நேராததால் விலங்குகளின் உடல்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் உணரும்போது , மெய்ஞ்ஞானத்தை எட்டும்போது உள் மனம் போராட்டங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு இருப்பான். பாவங்களும் பாவங்களைப் பற்றிய உணர்வும் அவனை அணுகாது.மனவுறுத்தலையும் , துக்கங்களையும் துடைத்து எறிந்திருப்பான். இவ்வாறு அவன் சலனமற்று சாந்த நிலையில் பேரமைதியுடன் மனமொன்றி மனமிசைந்து வாழும்போது அவன் உடல் மெல்ல ஆரோக்கிய நிலையை அடையும்.

உடல் என்பது மனதின் உருவமே. அதில் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணங்களின் சுவடுகளைக் காண முடியும். புறமானது அகத்திற்குக் கட்டுப்படும். உடலின் இன்னல்களுக்கு வித்திடும் மனக்காரணங்களை எதிர்காலங்களில் மெய்யறிவு படைத்த விஞ்ஞானிகள் கண்டறிவர்.

மனம் நிம்மதியாக, அமைதியாக, நிறைவாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். வழிவகை செய்யும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் . மந்திரத்தைப் போல், ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்று பொருள் கொள்ள கூடாது.நோய்களை அறவே போக்கிவிடும் என்று பொருள் கொள்ள கூடாது. ஆனால் மனம் அமைதியாக இளைப்பாறுதலுடன் சலனமின்றி நெறிமுறைகளுடன் வாழும்போது அது உடலையும் உள்ளடக்கிய நல்வாழ்விற்கான அடித்தளமாகச் செயல்படுகிறது. உடலின் சக்திகள் வீணடிக்கப்படாமல் சேகரிக்கப்பட்டு தேவையான திசையில் சென்று சரி செய்யப்படுகின்றது. இம்மனோபாவம் நோய்களை அறவே ஒழித்து ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கவில்லை என்றாலும் அந்நோய்கள் உடலைத் துன்புறுத்துகையில் இம்மனோபாவங்கள் ஒரு பாதுகாப்புக் கவசத்தை உடலளவிலும் மனதளவிலும் வழங்குகின்றன.

உடலளவில் துன்பப்படும் ஒருவன் நீதிநெறிகளை, நியாயதர்மங்களை பின்பற்ற தொடங்கினால் உடனே அவன் குணமாகிவிடுவான் என்று கூறபடவில்லை. உண்மையில் அவன் பின்பற்றத் தொடங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நோயின் தீவிரம், அதிகமாகி அவனைத் துன்புறுத்தும், . உடலானது நீதி நெறிகள்,நியாயதர்மங்கள் பின்பற்றபடுவதன் விளைவாக ஒரு நெருக்கடி நிலையைச் சந்திக்கும். இச்சீரிய வாழ்க்கை முறை இத்தனை காலம் தங்கியிருந்த நச்சுப் பொருட்களை வெளியேற்றத் துடிக்கும். தீ நெறியை விடுத்து அவன் நன்னெறியைத் தேர்ந்தெடுக்கும்போது , கண்டிப்பாக அவன் ஒரு சோதனையான காலத்தைக் கடக்க வேண்டி இருக்கும். விதி விலக்காக சிலருக்கு இச்சோதனைகள் நேராது. விதி விலக்காக சிலர் உடனே குணம் பெறுவர் . மற்றவர்கள் உடனடியாக ஆரோக்கியத்தைப் பெறவில்லை என்றாலும் ஒரு சோதனையான காலத்தை ஏற்றுக் கொண்டு பொறுத்து இருந்து அதைக் கடந்து விட்டால் நல்வாழ்விற்கான பாதையை , வழியைக் கண்டறிவர்.

மனதில் உயர் நெறிகள் தழைத்து ஓங்கினால் உடம்பானது தன் தேவைக்கு மீறிய முக்கியத்துவத்தை இழந்து இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். அதிகாரம் செய்யும் நிலையிலிருந்து இறங்கி அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு துணை புரியும் விதமாக மாறும். ஒரு நோயோ , வலியோ முழு குணம் பெறவில்லை என்றாலும் மனமானது அதன் பிடிக்குள் சிக்காமல் மேல் எழும்ப லாம். அந்த நோய் அவனைத் தொடர்ந்து தாக்கிய வண்ணம் இருந்தாலும் மகிழ்ச்சியாக, உறுதியாக, பயனுள்ளவனாக வாழலாம். மகிழ்ச்சியான பயனுள்ள வாழ்க்கை நோய் வாய்ப்பட்டவர்களால் வாழ முடியாது என்ற மருத்துவர்கள் , நல்வாழ்வு சிகிச்சை திறனாளிகள் கூற்றை பொய்யாக்கும் விதமாக எண்ணி லடங்கா மக்கள் பெரும் சாதனைகளைப் படைத்து அரிய செயல்களைப் புரிந்து திறமைகளையும் ஆற்றல்களையும் பல்வேறு துறைகளிலும் வெளிப்படுத்தி உடம்பில் ஏற்பட்ட குறையையும் நோயையும் மீறி வாழ்ந்து காட்டியுள்ளனனர். தற்போது வாழும் சான்றாக பலர் உள்ளனர்.சில நேரங்களில் இவ்வாறு உடலின் குறையே ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தி , தடையாக இருப்பதற்கு பதில் ஊக்கமாக மாறித் துணை புரிகின்றது. பயனுள்ள மகிழ்ச்சியான நோயற்ற வாழ்வை விரும்புபவன் உள்ளத்தை உடலுக்கு முன் போற்ற வேண்டும்.

உள்ள தெளிவுடையவர்கள் , உடலானது எவ்வகையிலேனும் பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும் மனதளவில் கவலைக் கொள்ளாமல் அந்த வலியும் நோயும் இல்லாத உணர்வோடு வாழ முயல்கின்றனர். இவ்வாறு உடம்பை மறந்து வாழ்வது, மனதைத் தெளிவாக உறுதியாக வைத்து இருப்பதற்கு உதவுவதோடு , உடம்பும் குணம் பெறுவதற்கு சிறந்த தூண்டுகோலாகும். குறைபாடற்ற உடல் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும் குறைபாடற்ற மனத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நல் மனமே நல் தேகத்தை நமக்கு வழங்கும்.

நோயுற்ற மனம் நோயுற்ற உடலை விட வருத்த்த்குரியது. பரிதாபத்துக் குரியது. அது எப்படியும் உடலை நோய்கள் ஆக்கிரமிக்க வழிவகை செய்து விடும். உள்ளத்தில் சோர்ந்து போனவர்களே உடலில் சோர்ந்து போனவர்களைக் காட்டிலும் இரக்கத்துக்குரியவர்கள் . அனைத்து மருத்துவர்களும் எல்லா வகையான சோர்வைப் பற்றியும் அறிவர். சோர்வு கொண்டவர்கள் செய்ய வேண்டியது தங்கள் நிலை விட்டு மேலெழுந்து , தங்கள் மனதை வலிமையாய் மாற்றி , தன்னலம் துறந்து, மகிழ்ச்சியான மனப்பாங்கை கைக்கொண்டு தங்கள் தேகம் எந்தக் குறையோ நோயோ இல்லாமல் இருப்பதை உணர்ந்து கொள்வது தான்.

தன்னைப் பற்றி தன்னிரக்க( சுய பச்சாதாபம்) எண்ணங்கள் , தன் உணவு, தன் உடம்பு என்று எப்போதும் தன்னைக் குறித்தே இடைவிடாது சிந்திப்பவர்கள் தாங்கள் மனிதர்கள் என்று கூறப்பட வேண்டுமானால் அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவித சத்துக்களும் நிறைந்த உணவை உண்ணும் மனிதர்கள் சிலர், அந்த உணவு தங்களுக்கு ஊறு விளைவித்துவிடும் என்று அச்சப்படுவார்கள். அவர்கள் முதலில் தங்கள் மனதை வலிமையாக்கிக் கொள்ளட்டும். பின்பு உடல் வலிமையைப் பற்றி சிந்திக்கட்டும். எல்லோருடைய வீடுகளிலும் பயன்பாட்டில் இல்லாத சில அரிய உணவுப் பொருட்களே தன்னுடைய உடல்நலத்தைப் பாதுகாக்கும் என்று நினைப்பவன் தன் உடலுக்கு தானே சிறு சிறு கேடு வரவழைத்துக் கொடுக்கிறான்.

சைவ உணவு உண்ணும் சிலர் நான் உருளைக்கிழங்கை சாப்பிட அச்சப்படுகிறேன் , இந்தப் பழம் எனக்கு அஜீரணத்தை ஏற்படுத்தும்; ஆப்பிள் பழம் எனக்கு பித்தத்தை ஏற்படுத்தும்; தானியங்கள், முளைப்பயிர்கள் விஷத்தைப் போன்றவை.; பச்சைக் காய்கறிகள் என்றாலே எனக்குப் பிடிக்காது என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகிறவர்கள் தாங்கள் சைவ உணவு உண்ணும் கொள்கையையே இழிவுபடுத்துகிறார்கள். இவை போன்ற தேவையற்ற பயமோ எண்ணங்களோ ஏதுமின்றி இறைச்சி உணவு உண்பவர்கள் பார்வையில் ஏளனத்துக்கு உள்ளாகிறார்கள்.

பசியுடன் இருக்கும்போது ,உணவு தேவைப்படும் போது பூமி விளைவித்து அளித்துள்ள உணவுகள் அந்த நோயை ஏற்படுத்தும் இந்த நோயை ஏற்படுத்தும் என்று எண்ணி பயப்படுவது இயற்கையையும் அதன் வாரி வழங்கும் தன்மையையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதையே காட்டுகிறது. உணவுப் பொருட்களின் தலையாய பணி அதை உண்ணும் உயிர்களின் தளர்வை நீக்கி சக்தியையும், ஊட்டத்தையும் வழங்கி உடம்பை பாதுகாப்பதே. உடம்பிற்கு ஊறு விளைவிப்பதல்ல. இந்த உணவு , அந்த நோயை ஏற்படுத்தும் அந்த உணவு , இந்த நோயை ஏற்படுத்தும் என்றெல்லாம் இயற்கை உவந்து அளித்த தூய உணவுகளை தவிர்த்து இன்று மிக தீவிரமான உணவுக் கட்டுப்பாடு முறையில் உடல்நலத்தை அடைய முற்படுபவர்கள் உள்ளம் தெளிவில்லாத ஒரு மாயையில் உழல்கிறார்கள். இவர்களைப் போன்ற உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் ஒருவர் தன்னுடைய பிணிகளுக்கெல்லாம் தான் உண்ணும் பிரட்டே காரணம் என்று கூறுகிறார். அளவுக்கதிகமாக தான் உண்ணும் பிரட் என்று கூடக் கூறவில்லை. ஆணி அடித்தாற்போல் அந்த பிரட்டே தன்னுடைய (தன்னைப் போன்ற பலருடைய ) உடல் பிணிகளுக்கெல்லாம் காரணம் என்று கூறுகிறார். இருந்தும் அவர் உட்கொண்ட பிரட்டானது பல பருப்பு வகைகள் கொண்டு வீட்டிலேயே தயார்படுத்தப்பட்ட சத்து நிறைந்த பிரட் ஆகும். விஷமற்ற உணவுப் பொருட்களின் மீது பழி போடுவதற்கு முன் மனிதர்கள் தங்கள் தவறுகளை, இழிவான எண்ணங்களை , தங்கள் மட்டற்ற நுகர்வுத் தன்மையை, அளவுக்கு மீறிய அனுபவித்தலைக் கைவிடட்டும்.

ஒருவன் தன்னுடைய சிறு சிறு பிரச்சினைகளில் உழன்று கொண்டே இருப்பது அவனது பலவீனமான மனதைக் காண்பிக்கின்றது. அதில் உழன்று கொண்டே இருப்பது அது குறித்துப் பேசுவதற்கு வழி வகுக்கும். அவ்வாறு பேசுவது அவனை அறியாமலே மனத்தில் ஆழப் பதிந்து உற்சாகத்தை, ஊக்கத்தை இழந்து, சோர்வையும் தன்னிரக்கத்தையும் பெறச் செய்துவிடும் . துன்பத்தையும் நோயையும் அசைபோடுவதை விட மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அசைபோடுவது சுலபமானது, அழகானது மட்டுமல்ல லாபகரமானதும்கூட.

நம்மை வெறுப்பவர்களை நாம் வெறுக்காமல் அன்போடு வாழ்வோம்.

வெறுப்பை உமிழ்பவர்கள் இடையே வெறுப்பை உமிழாமல் வாழ்வோம்.

துன்பம் தருபவர்களின் துன்பத்தை ஏற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

துன்பப்படுபவர்கள் இடையே துன்ப்பப்படாமல் வாழ்வோம்.

பேராசை ஊட்டுபவர்களால் பாதிப்பு அடையா வண்ணம் பேராசை இன்றி மகிழ்ச்சியாக வாழ்வோம் .

பேராசை கொண்டவர்கள் இடையே பேராசை இன்றி வாழ்வோம்.

உடல் நல்வாழ்விற்கும் மன மகிழ்ச்சிக்கும் அறநெறிகளை கடை பிடித்தலே சிறந்த அடித்தளமாகும். அவை குண நலன்களை, நற்பண்புகளை, நல் பழக்கவழக்கங்களை , நல் மனோபாவங்களை சீர்படுத்திய வண்ணம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் எப்போதும் கவனித்தவாறு அரண் போல் பாதுகாக்கும். கவனமின்றிச் செய்யலாம் என்று எண்ணப்படுகிற மிகச் சாதாரண செயலைக் கூட உளமார அறிவாற்றலோடு ஈடுபாட்டுடன் செய்வதற்கு அவனைஅது இட்டுச் செல்கிறது. எந்தவித அடிப்படையோ அனுபவமோ இன்றி உணவுகளின் மீது கொண்ட கருத்துகளை, அச்சங்களை நீக்கி, உண்ணும் முறைமையை சீரமைத்து , உள்ளம் வலிமை பெறவ, தன்னிரக்க சுயபச்சாதாப உணர்வை இழக்க வழி செய்கின்றது. தன் நாவின் ருசியை ஈடேற்ற எப்போதும் மூழ்கிக் கொண்டிருப்பதைத் தடுத்து இயற்கை அளித்த அனைத்து உணவுகளும், உடலுக்கு நன்மை அளிப்பவையே, ஊறு விளைவிப்பன அல்ல என்று உணரச் செய்யும்.

இவ்வாறு நாம் உடல் நலத்தை விரும்பினால், உள்ளத்தில் அறநெறிகளை தழைத்தோங்கச் செய்தால் அவை நம் உடலையும் உள்ளத்தையும் காக்கும் அரணாகத் திகழும். உள்ளத்தில் செம்மையானவர்கள் உடலிலும் செம்மையானவர்களாக இருப்பர் . நிலையான அறநெறிகளுக்கு உட்படாமல் நாளும் பொழுதும் மாறும் கருத்துக்கள் அபிப்பிராயங்களை கொண்டு வாழ்வது குழப்பத்தில் வாழ்வதாகும்.அறநெறிகளுக்கு உட்பட்டு நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வது , இன்றியமையாத ஒவ்வொன்றிற்கும் அதனதன் உரிய இடத்தை வழங்கி வாழ்வது தெளிந்த பார்வையோடு வாழ்வதாகும்.

. அறநெறிகளை உள்ளத்தில் பின்பற்றும் போது மட்டுமே அறநெறிகளின் செயல்பாட்டை உணர முடியும். அவ்உள்ளங்களுக்கு மட்டுமே உள்ளுணர்வும், காரணங்களை ஆழ ஊடுருவிப் பார்க்கும் தன்மையும் , நிலைமைக்கு ஏற்றவாறு வேண்டிய கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஆற்றலும், காந்தமானது இரும்புத் துகள்களை தன் வசம் இழுப்பது போல் கைகூடும்.

உடம்பை குணப்படுத்துவதை விட அதை மீறி எழுவது இன்னும் சிறந்தது. உடம்பினால் ஆட்டு விக்கப்படும் பொம்மையாக இராமல் அந்த உடம்பை கட்டளையிடும் தலைவனாக இருக்க வேண்டும். அந்த உடம்பை தவறாக பயன்படுத்துவதும் , அதைக் குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பதும், அறநெறிகளையும் மீறி அந்த உடம்பின் ஆசைகளைப் நிறைவேற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உடம்பின் சுகபோகங்களைக் கட்டுப்படுத்தி அளவை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடம்பின் கூடவே தொடரும் வலிகளாலும் , வியாதிகளாலும் , பிரச்சினைகளாலும் பாதிப்படையாமல் வாழவேண்டும். இது உடம்பை குணப் படுத்துவதை விடச் சிறந்தது. உடம்பை குணப்படுத்துவதற்கு மிகப் பாதுகாப்பான வழியும் இதுவே. உள்ள உறுதியையும் மெய்யறிவின் பாதுகாப்பையும் வழங்கும் ஒரு நிரந்தரத் தீர்வாகும்.

6


ஏழ்மை


ஏழ்மை

போற்றுதற்குரிய சான்றோர்கள், பெரிய மனிதர்கள் பலரும் தங்கள் செல்வங்களைத் துறந்து ஏழ்மை நிலையை விரும்பி நாடியுள்ளனர். அது தங்கள் குறிக்கோளை எட்டுவதற்குத் துணை புரியும் என்று பன்னெடுங்காலமாகவே பலரும் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க, ஏழ்மை நிலை ஏன் ஒரு விரும்பத் தகாத ஒன்றாக பெருந்தீமையாக கருதப்படுகி

றது ? பெரும் சான்றோர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழ்மை நிலை, வரப்பிரசாதமாக கருதப்பட்ட ஏழ்மை நிலை ஏனைய மனித குலத்திற்கு ஏன் ஒரு நோயாக, ஒரு துன்பமாக காட்சியளிக்கின்றது ?

இதன் விளக்கம் மிகவும் வெளிப்படையானது. முதல் உதாரணத்தில் ஏழ்மை நிலை என்பது பொருள் செல்வம் இன்மையை குறிக்கின்றது. ஆனால் அங்கே அருள் செல்வம் நிறைந்து வழிகின்றது. அவர்களது ஏழ்மை நிலையில் தீங்கின் சுவடைக் கூட காண முடியாது. அவர்களது பொருளற்ற நிலை இனிதாக அழகாகத் தோன்றும். செல்வச் செழிப்பையும் மதிப்பையும் மரியாதையையும் விட உயர்ந்ததாக சிறந்ததாகத் தோன்றும். அந்த சான்றோர்களது வாழ்வு முறையைக் கண்டு வியந்து ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வாழ்விலும் அதனைப் பின்பற்றுகின்றனர். மற்றொரு உதாரணத்தில் நாம் காணும் பெரு நகரங்களின் ஏழ்மை நிலை எல்லாவிதமான வெறுக்கத்தக்க தீயவைகளான நா கூசும் வார்த்தைகள், குடி, போதை, அசுத்தம், சுறுசுறுப்பின்மை அல்லது சோம்பேறித்தனம் , நேர்மையின்மை, சட்டத்திற்குப் புறம்பான குற்றங்கள் போன்றவைகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எது உண்மையான கொடுமை ? ஏழ்மை நிலையா அல்லது பாவக் குற்றங்களா ? இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாவக் குற்றங்களே. இந்த ஏழ்மை நிலையிலிருந்து இந்தக் குற்றங்களை விலக்கி பார்க்கும் போது அவலட்சனமான ஒன்றாக இருந்ததிலிருந்து அழகான ஒன்றாக காட்சியளிக்கும். பெருந்தீமையாக தோற்றமளிப்பதிலிருந்து மாறி பெரும் நன்மைக்கு ஒன்றுக்கு மாற்றப்படக்கூடிய ஒன்றாக எளிதில் தோன்றும்.

சீன ஞானி கன்பூஷியஸ், தன்னுடைய செல்வச் சிறப்புகள் நிறைந்த சீடர்களிடம் ;- உண்பதற்கு சோறையும் நீரையும் மட்டுமே, உறைவதற்குக் கூரை வீடு மட்டுமே கொண்டு இருந்து தன் நிலை குறித்து தன்னிரக்கமோ முணுமுணுப்போ இன்றி இருந்த ஹென் – ஹீவீ என்ற சீடனைத்தான் முன் மாதிரியாக காட்டி விரும்பினார். பெரும்பாலானவர்களுக்கு துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தும் ஏழ்மை நிலை ஹென் -ஹீவீக்கு எந்தவித அச்சத்தையோ கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை .உயரிய குணம் கொண்ட ஒருவனை ஏழ்மை நிலையால் சிறுமைப் படுத்த முடியாது. அவன் மேலும் உயர்வதற்கே அது துணை புரியும். ஜொலிக்கும் தங்க வைர நகைகளை கருநீல வண்ண பின்புறத்தில் வைத்தால் அவை மேலும் ஜொலிப்பது போல உயரிய குணம் கொண்ட ஹென் -ஹீவீக்கு அது மேலும் சிறப்புச் சேர்த்தது.

சமூக சீர்திருத்தவாதிகள் ஏழ்மை (வறுமை) நிலை தான் பாவச்செயல்களுக்கு காரணம் என்று கருதுகிறார்கள். அதே சீர்திருத்தவாதிகள் செல்வந்தர்களின் தீய ஒழுக்கத்திற்கும், அவர்களின் செல்வமே காரணம் என்கிறார்கள். எங்கே தகுந்த காரணம் இருக்கின்றதோ அங்கே அதற்கு ஏற்ற விளைவு ஏற்படும். சீர்திருத்தவாதிகளின் கூற்று உண்மை என்றால் செல்வச்செழிப்பின் காரணமாக தீய ஒழுக்கம் ஏற்படும். வறுமையின் காரணமான பாவச்செயல்களினால் இழிநிலை ஏற்படும்.எல்லா செல்வந்தர்களும் ஒழுக்கம் கெட்டவர்களாகிவிடுவார்கள். எல்லா ஏழைகளும் இழி நிலைக்கு ஆளாக வேண்டும்.

தீங்கு இழைக்கும் தன்மை கொண்டவன் எந்தச் சூழ்நிலையிலும் தீங்கி ழைப்பான் ;- அவன் ஏழையாக இருந்தாலும் , பணக்காரனாக இருந்தாலும், இரண்டிற்கும் இடைப்பட்டு இருந்தாலும். நற்செயல்கள் புரிபவன் எந்தச் சூழ் நிலையிலும் நற்செயல்களையே புரிவான். சூழ்நிலை தன் உச்சநிலையை எட்டும்போது அது அந்த இதயத்தில் அந்த நாள் வரை சந்தர்பத்தை எதிர்பாரத்து தங்கி இருந்த தீமையை தான் வெளிக் கொண்டு வர முடியுமே அன்றி அந்த உச்சகட்ட சூழ்நிலையாலும் தீமையை (திடீரென்று) உருவாக்கி செயல்படுத்த முடியாது.

தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ ஏதுமின்றி உயர்ந்த வருமானத்தை உடையவர்கள் கூட தங்களை எழைகளாக கருதிக் கொள்கின்றனர். தங்கள் துன்பத்திற்குத் தாங்கள் ஏழைகளாக இருப்பதுதான் காரணம் என்று கருதுகின்றனர். ஆனால் அவர்களின் துன்பத்திற்கு உண்மையான காரணம் அவர்களது மன உணர்வுகள் தான். ஏழ்மை நிலை ஒருவனை துக்கத்திற்கு உள்ளாக்காது. ஆனால் பணத்தின் மீது ஒருவன் கொண்ட தாகம் துக்கத்தை ஏற்படுத்தும்.ஏழ்மை என்பது பெரும்பாலும் மனதிலே தான் இருக்கின்றது. கையில் உள்ள பணத்தினால் அல்ல. பேராசை என்பது மனத்தின் ஏழ்மையைப் பறை சாற்றுகின்றது. பணத்தின் மீது கொண்ட தாகம் தணியாத வரை அவன் தன்னை ஏழையாகவே கருதிக்கொள்வான். கருமியான கோடீஸ்வரன் சல்லிக் காசில்லாத ஏழையைப் போன்றே தன்னை உணர்வான்.

மற்றொரு புறத்தில் வறுமையில் வாடும் ஏழைகள் தங்கள் நிலை குறித்து வருத்தப்படாமல் திருப்தியாக வாழ்கின்றனர். சுத்தமற்ற சூழ்நிலையில், சீர்க்கேட்டிற்கு இடையில் , ஒழுங்கின்மைக்கு இடையில், சோம்பேறித் தனத்தோடு, தீயவழி களில் தன் சுகத்தைத் தேடுவதும் , தீய எண்ணங்களில் உழல்வதும், நா கூசும் வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்திய வண்ணம் இருப்பதும், சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வருத்தப்படாமல் திருப்தியாக வாழ்கிறேன் என்று கூறுவதும் பெரும் வருத்தத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மனம் உயர்வானவைகளைக் குறித்த அறிவின்மையால் தாழ்வானவைகளை கைப்பற்றிக் கொண்டுள்ளது. அதற்கான தீர்வும் மனதிற்குள் தான் இருக்கின்றது.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுள் உற்று நோக்கி வெளிச்சூழ் நிலையை கண்டிப்பதை நிந்திப்பதை விடுத்து, அந்தச் சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக இருந்த தன்னுள் உறையும் எண்ணங்களை சிறந்தவையாக மாற்றிக் கொள்ளட்டும். ஒருவன் உளத் தூய்மையோடு விழிப்போடு இருந்தால், அவன் ஒருபோதும் அசுத்தத்திற்கும் சீர்கேட்டிற்கும் இடையேயும் வாழ்வதற்கு விரும்பமாட்டான். அவன் தன் மனத்தை ஒழுங்குபடுத்திய காரணத்தால் அவன் வீடு ஒழுங்காக மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும். அவன் தன்னைச் சரிப்படுத்திக் கொண்ட காரணத்தால் அவன் முன் தென்படும் சுற்றுப் புறமும் சரியாகி இருக்கின்றது என்பதை அவன் உணர்ந்து கொள்வான். (சூரியனைக் கண்டவுடன் மலரும் தாமரைபோல). ஏன் அவனை அடுத்து உள்ளவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.அவனது திருந்திய இதயம் அவனது வாழ்க்கையை திருத்தி அமைக்கின்றது.

ஏழ்மை நிலையில் , தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் ,இழிவுப் படுத்திக் கொள்ளாமல், சுய கவுரவத்தோடு பலர் வாழ்கின்றனர். அவர்களில் பலர் ஏழையாக வாழவே விரும்புகின்றனர். அவர்கள் தொழிலில் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனர். போதுமென்ற மனத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வதைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்புவது இல்லை. அந்த நிலையில் மன நிறைவை காண முடியாதவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள , குறிக்கோளை அடைய தங்கள் ஏழ்மை நிலையையே முதல் படிக்கல்லாகக் கொண்டு தங்கள் திறமைகளையும் , ஆற்றல்களையும் முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமும், கடமையில் கவனமும் கொண்டு வாழ்ந்தால் அவர்கள் அடைய எண்ணிய உயர் பொறுப்புகளோடு கூடிய வாழ்வை அடைய முடியும்.

கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது, உண்மையில், ஒருவனை ஏழ்மை நிலையில் இருந்து மீட்பதோடு நின்று போய் விடுவதல்ல. அதுதான் செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும், நிலையான மகிழ்ச்சிக்கும் மட்டுமல்ல, குற்றம் குறைகளைக் களைந்து அவன் தன்னை முழுமைப்படுத்திக் கொள்வதற்கும் அழைத்துச் செல்லும் ராஜபாதையாகும். இந்த ஒன்றை ஆழமாய் உணர்ந்து கொண்டால் வாழ்வின் அனைத்து உயர்ந்தவைகளுக்கும் சிறந்தவைகளுக்கும் அதுதான் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது என்பது ஊக்கம், ஆர்வம், செய்யும் வேலையில் சிதறாத ஒருமித்த கவனம் , குறிக்கோள், துணிவு, நம்பிக்கை, மன உறுதி, தன்னம்பிக்கை, பெருந்தன்மைக்கு அடையாளமான தன்னை விட்டுக் கொடுக்கும் தன்மை என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஒரு துறையில் வெற்றி பெற்றவரிடம் அவர் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், விடியும் முன்பே எழுந்திருப்பதும் தன் தொழிலில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதுமாகும் என்று கூறினார். மற்றவர்களது கடமையில் தலையிடாமல் தன்னுடைய கடமையில் முழு கவனத்தை செலுத்துகிறவனிடம் வெற்றிகளும் நன்மதிப்பும், தன்பால் பிறரை ஈர்க்கும் தன்மையும் தேடி வரும்.

இங்கே குறுக்கிடலாம், வழக்கமாக குறுக்கிடவும் படுகிறது. ஏழ்மையில் உழலும் பெரும்பாலானவர்கள் தொழிற்சாலைகளிலும் , பட்டறைகளிலும் பணி புரியும் தொழிலாளிகள். அவர்கள் தங்களை ஒரு சிறந்த பணிக்குத் தயார்படுத் திக் கொள்ள நேரமோ வாய்ப்போ இல்லை என்று. இது தவறானதாகும். .நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்போதும் பொதுவானதாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழைகள், தங்கள் பொருளாதார நிலையில் மன நிறைவு கொண்டவர்கள். தங்கள் கடமைகளை சரிவரச் செய்து தெளிவான நிலையில் மகிழ்ச்சியாக தங்கள் வீடுகளில் வாழட்டும்.

தங்கள் பொருளாதார நிலையில் திருப்தி கொள்ளாதவர்கள் ,இப்பொழுது இருக்கும் நிலையை விட உயர்ந்த பொறுப்புகளை ஏற்று நிறைவேற்ற முடியும் என்று நினைப்பவர்கள் தங்களுக்குக் கிடைத்த நேரத்தில் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். கடுமையான உடல் உழைப்பாளிகளான ஏழைகளே மற்றவர்களை விட, தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கா வண்ணம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். தன்னுடைய ஏழ்மை நிலையை தகர்த்து எறிந்து வெளிவரத் துடிக்கும் இளைஞன் தன் நேரத்தையும் சக்தியையும் தேவையின்றி வீணடிக்கும் குடி, புகையிலை, மற்றும் பிற போதைப் பொருட்கள், பாலியல் குற்றங்கள், பின் இரவு வரை இசையரங்குகள், கிளப்புகள், சீட்டாட்டங்கள் என்று துளியும் நேரத்தை வீணடிக்கக் கூடாது. தனக்கு கிடைக்கப் பெற்ற நேரத்தை தான் விரும்பும் அடுத்த கட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு , தகுதி பெறுவதற்குத் தேவையான திறமைகளையும், நுணுக்கங்களையும் கல்வியையும் கற்க வேண்டும்.

இந்த முறையைப் பின் பற்றி பலர் பெயரும் புகழும் பெற்று பெரிய மனிதர்களாகி உள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்க்கும் போது உணர்ந்து கொள்ளலாம். அந்தப் பெரிய மனிதர்களில் சிலர், வறுமைக் கோட்டின் கொடிய நிலையிலிருந்து தங்களின் உழைப்பால் மிக உயரிய சிகரத்தை அடைந்தவர்கள். தேவை ஏற்படும் நேரம் தான் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள , உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் , உ,ருவாகும் நேரமும் அது தான் என்று நிரூபணமாகின்கிறது. தேவை ஏற்படும் நேரத்தில் வாய்ப்புகள் கிடைக்காது என்று சிலர் கற்பனையில் முடிவு செய்து அறிவிப்பது உண்மையல்ல. ஏழ்மை கொடிதாக இருக்கும்போது அதன் பிடியில் இருந்து மீண்டு சாதிக்கத் துடிப்பவர்களின் முயற்சியின் பலன் பல மடங்காக அதிகரிக்கும்.

ஏழ்மை தீங்கை விளைவிக்க கூடியது அல்லது விளைவிக்க கூடியது அல்ல என்பது அதில் வாழ்பவர்களின் குணநலனையும் மனநிலையையும் பொறுத்ததே.செல்வமும் தீங்கானதா தீங்கற்றதா என்பதும் அதைப் போன்றதே. டால்ஸ்டாய் தன் செல்வம் தன்னை ஒரு எல்லையை மீற அனுமதிக்காததால் ஏழ்மை நிலைக்கு ஏங்கினார். குற்றங்களும் எவ்விடத் தில் நிகழ்ந்தாலும் அவை குற்றமே. அந்தக் குற்றமானது அதை மேற்கொண்ட தனி மனிதனையும் இழிவுபடுத்துகிறது. அது நடைபெற்ற சமூகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. ஏழ்மை குறித்து அலசி ஆராய்ந்தால் அது நம்மை தனி மனிதனிடம் , அவன் இதயத்திடமே அழைத்துச் செல்லும். நம் சமூக சீர் திருத்தவாதிகள் செல்வந்தர்களைக் கண்டனம் செய்வது போல குற்றங்களைக் கண்டனம் செய்தால், குறைவான ஊதியம் வழங்குவதை ஒழிக்க நினைப்பது போல தவறாக வாழும் நிலையை ஒழிக்க நினைத்தால், நாகரிகம் உச்சத்தை எட்டிய இந்தக் காலத்திலும் கரும்புள்ளியாக இருக்கின்ற இவ்வறுமையை ஒழிக்க குரல் கொடுத்தவர்கள் ஆவார்கள்.

வறுமை முற்றிலுமாக ஒழிவதற்கு முன் மனித இதயம் அந்த நிகழ்வில் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும். மனித இதயமானது பேராசையையும் தன்னலத்தையும் துடைத்து எறிந்து இருக்கும். குடி, போதை, அசுத்தம், சோம்பேறித்தனம், புலன் இன்ப சுகங்களில் மூழ்கி திளைத்தல் ஆகியவை பூமியில் இருந்தே விரட்டப்பட்டு இருக்கும். தம் ஏழ்மை நிலையோ, செல்வச் செழிப்பு நிலையோ இரண்டையும் குறித்து எவருக்கும் ஆர்வம் இருக்காது. எல்லோரும் தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியோடும் ஈடுப்பாட்டோடும் ( உள்ளத் தூய்மை கொண்டவர்கள் இம் மகிழ்ச்சியை முன்பே உணர்ந்திருப்பார்கள்.) முழுதாக நிறைவேற்றி தங்கள் உழைப்பின் ஊதியத்தில் தன் மானத்தோடும் மன நிம்மதியோடும் வாழ்வார்கள்.

7


மனிதனின் ஆன்மீக தன்னாட்சி


மனிதனின் ஆன்மீக தன்னாட்சி

தன் மனதையும் தன் வாழ்வையும் ஆள்வதற்கு முழு சுதந்திரமும் உரிமையும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவனது ஆளுகைக்குட்பட்ட அவனது அரசாங்கம் இம்முழு பிரபஞ்சத்தோடும் தொடர்புடையது. அந்த அரசாங்கத்தால் தனித்து இயங்க முடியாது. எல்லா மனிதர்களோடும் இயற்கையோடும் தற்போது நிகழும் நிகழ்ச்சிகளோடும் ஆழமான நெருங்கிய தொடர்புடையது .எனவே தன் ராஜ்ஜியத்தைத் திறம்பட ஆள விரும்பினால் வாழ்வின் ஞானத்தையும் அவன் பெற்றிருக்க வேண்டும். அந்த ஞானமானது உயர்ந்த அறிவை, உள்ளுணர்வை, நன்மையையும் தீமையையும் பகுத்துணரும் ஆற்றலை , நன்மை தீமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டவைகளை, செயல்களின் விளைவுகளை உணரும் தன்மையை என பல உயர்ந்த பரிசுகளை வழங்குகின்றது.

தற்போது மனிதன் கலக்கமான எண்ணங்களின் பிடியில் சிக்கியுள்ளான். தன்னுடைய இந்த இறுக்கமான எண்ணங்களை அவன் ஆள்வதே அவன் வாழ்வினை அவன் வெற்றிகரமாக ஆள்வதற்கு ஒப்பாகும். இந்த உலகத்தில் வெளிப்பொருட்களை ஆளமுடியும், தங்களை தாங்கள் ஆள முடியாது என்று ஞானமற்றவர்கள் நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியை வெளியே புற பொருட்களில் தேடுகிறார்கள். புறப்பொருட்களை மாற்றியமைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். புறப்பொருட்களால் நிலையான மகிழ்ச்சியையோ ஞானத்தையோ வழங்க முடியாது. பாவ மூட்டைகளைச் சுமந்த உடம்பிற்கு ஒரு களிம்பினைப் பூசி நல்வாழ்வை வழங்க முடியாது. ஞானம் உடையவர்கள் தன் மனது தன் கட்டளைக்கு கீழ் படிவதே உண்மையான வெற்றி ,அதன் பின்பே வெளிப் பொருட்களின் மீது தங்கள் ஆளுகை உறுதியாகும் என்று உணர்ந்தவர்கள்.ஆன்மீக அருளில் அமைதியான வலிமையில் தங்கள் உள்ளிருந்து எழும் மகிழ்ச்சியை உணருவார்கள்; அவர்கள் பாவங்களை கைவிடுவார்கள். உள்ளத்தைத் தூய்மையாக்கி உடலினை உறுதியாக்கி உடம்பின் தேவையற்ற ஆசைகளை நீக்குவார்கள்.

மனிதனால் தன் மனதை ஆள முடியும். அவனே அதன் தலைவன். அவன் அங்கே ஆட்சி செலுத்தும் வரை , அதன் தலைவனாகும் வரை , அவனுடைய வாழ்வு ஒரு நிறைவின்றி அரைகுறையாகவே காணப்படும். மனிதனது இயல்புகள் எல்லாம் அவனது மனதின் ஆற்றல்களே. அந்த மன ஆற்றல்களைச் செம்மைப்படுத்திக் கட்டளையிடும் அரியாசனமே அவனது உள்ளம். காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் உடம்பு பொறுப்பாக முடியாது.. அந்த உடம்பை ஆள்வது என்பது பசி , மற்ற தீவிர உணர்வுகள் என்று மன உணர்வுகளை ஒழுங்குபடுத்துவதாகும்.தங்கள் மனதின் தாழ்ந்த எண்ணங்களுக்கு அடிபணியாமல் நல் எண்ணங்களுக்கு கீழ்படிந்து , சீரைமைத்து அவற்றை நல்திசையில் செலுத்துவதே மனிதர்கள் அனைவரும் விரைவாகவோ அல்லது காலம் கடந்த பின்பும் தப்ப முடியாமல் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியே தீரவேண்டிய இன்றியமையாத மாபெரும் பணியாகும். பன்னெடுங்காலமாக மனிதன் வெளிப்பொருட்களின் அடிமையாகத் தன்னை பாவித்துக் கொள்கிறான் . ஒருநாள் அவன் வாழ்வில் வரும். அவன் அகக்கண் திறக்கின்றது. அப்பொழுது அவன் இத்தனை காலமும் தன்னுடைய கட்டுப்படாத, களங்கமான தன் உணர்வுகளுக்கும் ஆசைகளுக்குமே அடிமையாக இருந்ததை உணர்ந்து கொள்கிறான்.அந்த நாளில் அவனது ஆன்மீக சக்தியால் உள்ளத்தின் அரியாசனத்தில் அமர்கிறான். ஐம்புலன்களின் ஆசைகளுக்கும் மனதின் மாயைக்கும் அடிமையாகாமல் அவைகளை அடக்கி ஆள்கிறான். அவன் ஆட்சி செலுத்த வேண்டிய அவனுடைய அரசாங்கத்தில் இத்தனை காலமும் ஒரு பிச்சைக்காரனைப் போல சுற்றித் திரிந்தான். இப்போது உணர்ந்து கொள்கிறான். அதன் தலைவன் அவன் தான் என்று , அந்த ராஜ்ஜியத்தைச் சீரமைத்து, ஒழுங்குபடுத்தி, ஒழிக்க வேண்டியவைகளை ஒழித்து, கட்டளை பிறப்பித்து அமைதியை நிலை நாட்டுகிறான்.

ஒரு தலைவனுக்கு உரிய கடமைகளை, பொறுப்புகளை அவன் தன் ஆன்மீக தன்னாட்சியில் நிறைவேற்றும்போது , பல யுகங்களிலும் தங்கள் மனதை ஆண்ட புனிதர்களின் ஆன்ம வழிகாட்டுதலை அவன் பெறுகிறான். அறியாமை, துயரம், மன உறுத்தல் என அனைத்தையும் கடந்து மெய்யறிவை அடைகிறான்.

8


வெற்றி உறுதியே : தோல்விக்கு அடிபணியாதே


வெற்றி உறுதியே : தோல்விக்கு அடிபணியாதே

தன் மனத்தை வெல்லும் உன்னத பணியை ஏற்றுக் கொண்டவர்கள், எவ்வகையான தீங்கிற்கும் அடி பணிய மாட்டார்கள். நன்மை ஒன்றிற்கே அடி பணிவார்கள். தீங்கிற்கு அடி பணிவது ஒரு மிகத் தாழ்வான பலவீனம். நன்மைக்குத் தலை வணங்குவது மிகப் பெரும் வலிமையாகும். துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து, அறியாமையிலிருந்து, பாவங்களிலிருந்து, குற்றங்களிலிருந்து மீள முடியாமல் அவற்றிற்கு தலை வணங்குவது , ” நான் கைவிடுகிறேன். நான் தோல்வி அடைந்து விட்டேன். வாழ்க்கை தீங்கானது. நான் அதற்கு அடி பணிகிறேன் ” என்று சொல்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு ஒதுங்குபவர்கள் சமயங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள். நன்மையின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இன்மையை நேரிடையாகக் காண்பிக்கிறார்கள். தீமையை இப்பிரபஞ்சத்திலேயே மிகப் பெரும் சக்தி நிறைந்ததாகக் கருதுகிறார்கள்.அவ்வாறு அடி பணிவது அவர்களது தன்னல துக்ககர வாழ்வைக் காட்டுகின்றது. மனச் சலனங்களுக்கு எதிராக தங்களது துணிவின்மையைக் காட்டுகின்றது. நன்மை நிறைந்த மனதின் மகிழ்ச்சியையும் அமைதியையும் அவர்கள் உணரும் தன்மையற்று விளங்குகிறார்கள்.

மனிதன் தோல்வியும் துக்கமும் அவனை தொடர்வதற்க்காக

உருவாக்கப்பட்டவன் அல்ல. இறுதியாக அவைகளை வென்று மகிழ்ச்சியடைவதற்காகப் படைக்கப்பட்டவன். இந்த பிரபஞ்சத்தின் எல்லா ஆன்மீக விதிகளும் நன்மையை, நல்லவைகளை, நல்லவர்களைப் பாதுகாக்கும் அரண்களாகும். தீங்கிற்கு எந்த விதியும் கிடையாது. அதன் முழு இயல்பே துன்பத்தையும் துக்கத்தையும் வழங்குவதுதான்.

தீயக் குணங்களின் விளைவை உணர்ந்து அவற்றை விலக்கி நற்குணங்களை வளர்த்துக் கொள்வதற்குத் தற்போதைய கல்வி முறையில் மிக மெல்லிய நுண்ணிய பாடங்கள் ஏதும் இல்லை. நம் சமயத் தலைவர்கள் கூட இவைகள் குறித்த ஞானமும் அறிவும் அனுபவமும் இல்லாமல் போதிக்கும் தன்மையின்றி இருக்கிறார்கள். நீதி நெறிகளைப் பற்றிய தெளிவு பெரும்பான்மையான மனித குலத்திற்கு , தங்களை அறியாமல் சுழலில் சிக்கி , முட்டி மோதி,

மனகாயங்களாலும் போராட்டங்களாலுமே கிடைக்கின்றது. ஒரு காலம் வரும். அப்போது நற்பண்புகளை நற்குணங்களை வளர்த்துக் கொள்வது கல்வியின் பகுதியாக மாறும். அந்த நாளில் களங்கமற்ற மனமும் உள்ளத்தூய்மையுடன் நீதிநெறிகளை நெஞ்சில் பதித்தவர்களே போதனை செய்வார்கள். அவர்கள் நற்குணங்கள் வளர்வதற்கு சிறந்த வழிமுறைகளைக் வழங்குவார்கள். எதிர்கால சமயங்களின் கடமையும் அதுவாகத்தான் இருக்கும்.

தீங்கை, தீமையை மனிதனால் வெல்ல முடியும். பாவங்களை விலக்க முடியும். நன்மையை நிரந்தரமாக நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டு ஆனந்தத்தையும் நிம்மதியையும் அனுபவிக்க முடியும். சமயங்களையும் மதங்களையும் தோற்றுவித்தவர்களின் முக்கிய போதனை இதுதான். மெய்ஞானமில்லாதவர்கள் இப்போதனைகளைத் திரித்து வேறுபடுத்தினாலும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களின் போதனை, வரும் காலங்களில் மெய்ஞ்ஞானம் பெறப்போகின்றவர்களின் போதனை அதுவாகத்தான் இருக்கும். உண்மை என்றும் நிரந்தரமானது.

இந்தத் தீயதை வெல்வது என்பது புறத்தே உள்ள தீயதைக் குறித்து அல்ல . தீய மனிதர்களையோ , தீய ஆவிகளையோ, தீய பொருட்களையோ குறித்தும் அல்ல. உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்கள், தீய ஆசைகள், தீய செயல்கள் போன்ற தீயதைக் குறித்தே ஆகும். எல்லா மனிதர்களும் தங்கள் இதயங்களி லிருந்து தீயவைகளை அழித்து விட்டால் எவராலும் எங்கேயும் ” அங்கே தீங்கு” என்று சுட்டிக் காட்ட முடியாது. எல்லா மனிதர்களும் உள்ளத்தால் நல்லவர்களாகி இருக்கும் அந்தப் பெருநாளில் தீமையின் சுவடும் பூமியிலிருந்து அழிந்து போய் இருக்கும். பாவங்களையும் துக்கங்களையும் எவரும் என்ன வென்று அறியாதிருப்பார்கள். பிரபஞ்சம் முழுதும் பேரானந்தமே என்றும் நிறைந்திருக்கும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III