காணாமல் போன நண்பர்
புனைக்கதைகள்
Backகாணாமல் போன நண்பர்
தருமி
உள்ளடக்கம்
காணாமல் போன நண்பர்கள்
1. சிவகுமார்… எங்கேடா இருக்கே? –
2. யாருக்கும் ‘அடிபணியாதவன்’ என்ன ஆனான்?
3. ராஜா ..காணாமல் போகவில்லை; இல்லாமலே போய்ட்டான்...
4. ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல?
5. தம்மடிக்க’ போவோமா ... ?
6. கணக்குப் புலி’ சூர்ய நாராயணன்
7. கோபாலும் நாராயணனும் ...
8. காணாமல் போன நண்பர்கள் - 9
9. இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு
10. கருப்பு ராமசாமி
11. தப்பு செஞ்சா பயந்துகிட்டே செய்யணும் !
12. சயன்டிஸ்ட் ராமசாமி
13. டாக்டர் கேசவன்
14. பயந்தான்கொள்ளி பிரபாகரன்
15. அப்பாவி ஆறுமுகம் போராளியான கதை
16. மீண்டும் காணாமல் போன நண்பர்கள் தந்த சோகம்
17. தம்பியான அண்ணாச்சி!
18. இங்கே பதிவுலகில் காணாமல் போன பதிவர்கள்
Free Tamil Ebooks – எங்களைப் பற்றி
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
1
காணாமல் போன நண்பர்கள்
அதீதம் இணைய இதழில் வெளிவந்த தொடர்.
ஆசிரியர் – தருமி
மின்னஞ்சல்: dharumi2@gmail.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன்
மின்னஞ்சல் : Sivamurugan.perumal@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
1
சிவகுமார்… எங்கேடா இருக்கே? –
*
*
1952-ல் ………..
தாராசிங் இறந்த போது தினசரிகளில் வந்த செய்தி இந்தியாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ் கன்னாவிற்கு வந்ததை விட அதிகமாக இருந்தது எனக்கு ஒரு ஆச்சரியம்தான் — எப்படி தாராசிங்கிற்கு இவ்வளவு கவரேஜ் என்று.
இந்த இரு செய்திகளும் வாழ்க்கையில் பழைய பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்க வைத்தன. ராஜேஷ் கன்னா ’ஆராதனா’ என்ற படத்தில் போட்டு பிரபலமான கலர் குர்தாக்களை (தைரியமாக) அணிந்து அந்தக் காலத்தில் ஊர் சுற்றியது, அதனால் நடந்த ஒரு சண்டையும் நினைவிற்கு வருகிறது. தாராசிங் நினைவுகள் அதற்கு ரொம்ப முந்தியது. முதல் நிகழ்வு கல்லூரியில் வேலை பார்த்த போது, எழுபதுகளின் ஆரம்பத்தில் நடந்தது. தாராசிங் காலம் நான் மூன்றாவது, நான்காவது வகுப்பு படித்த போது நடந்தது.
மூன்றாம், நான்காம் வகுப்பு படித்த போது தாராசிங் பெயர் எங்கள் மத்தியில் பிரபலம். அப்போது மதுரையில் பல இந்திய, வெளிநாட்டு பயில்வான்களின் போட்டிப் பந்தயங்கள் நடைபெற்று வந்தன. கிங்காங், ‘செந்தேள்’ … இப்படிப் பல பெயர்கள். இப்போது WWF மாதிரி அப்போ இது!
எங்கள் பள்ளியில் ஒரு நாள் திடீரென்று மதியத்தில் பயங்கர சலசலப்பு. எல்லோரும் பக்கத்திலிருக்கும் பெரிய மாதா கோவிலுக்குப் படையெடுத்தார்கள். மாணவர்கள் மட்டுமல்ல … ஆசிரியர்களும் தான். எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களையும் கூட்டிக் கொண்டு ஓடினார். கோவில் பூட்டியிருந்தது. ஆனால் ஜன்னல் வழியே நாங்கள் பார்த்த போது ‘செந்தேள்’ – இவர் ஒரு அயல்நாட்டு பயில்வான்; ஆஸ்த்ரேலியா என்று நினைவு – மட்டும் கோவிலுக்குள் ஜெபம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் தொடர் கதையாக அந்தப் பயில்வான்களின் சண்டைகள் பற்றி பெரியவர்கள் வீட்டில் சொன்னதையெல்லாம் வைத்து மாணவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பன் ‘கிடுக்கிப் பிடி’ அல்லது ‘நண்டுப் பிடி’ என்று ஒன்று சொல்லிக் கொடுத்தான். என் பின்னால் நின்றுகொண்டு, என் கைகளுக்குக் கீழே அவன் கைகளைக் கொண்டு போய் … அப்படியே அவன் தன் கைகளை என் கழுத்துக்குப் பின்னால் சேர்த்து பிடித்துக் கொண்டான். என்னைத் தப்பிக்கச் சொன்னான். முயன்றேன். முடியவில்லை. பாடம் நடத்தினான். அப்படியே குனிந்து பின்னால் இருப்பவனை முதுகுக்கு மேல் தூக்கி அந்தப் பக்கம் டமார்னு போடணும் என்றான். இப்போது அவன் அந்தப் பிடியை என்னிடம் போட மாட்டேன் என்று சொல்லி விட்டான். ட்ரெய்லருக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்காமல் போனது.
வகுப்பில் என் நண்பன் சிவகுமார். எங்கள் வீடும் அவன் வீடும் நீண்ட ஒரே தெருவில் இருந்தது. இருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து ஒன்றாகத் திரும்பிப் போவோம். நல்ல நண்பன். அவன் அம்மா ஒரு பள்ளியின் ஆசிரியரோ .. தலைமை ஆசிரியரோ தெரியவில்லை. ஆனால் குடை பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டைத் தாண்டி போவார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் தான். டீச்சராச்சே …!
சிவகுமார் மட்டுமல்ல அவனது அம்மாவும் கொஞ்சம் குட்டைதான். சிவகுமாரிடம் நான் படித்த ‘புதுப் பாடத்தை’ நடத்திக் காண்பிக்க ஆசை வந்தது. நான் அவனைக் கிடுக்கிப் பிடியில் இறுக்கிப் பிடித்தேன். தப்பிக்கச் சொன்னேன். அவனால் முடியவில்லை. அடுத்து அவன் என்னைப் பிடித்தான். என்னை விட அவன் குட்டை என்பதால் என்னால் அவனை என் முதுகுக்குப் பின்னால் தூக்கி முன்னால் டொம் என்று போட முடிந்தது. ஆனாலும் பயல் ரொம்பவே டொமால் ஆகிவிட்டான். பாவி … இப்படியா விழுவான். தூக்கிப் போட்டதும் அப்படியே ’பொத்தடீர்னு’ விழுந்து தொலைத்தான். நல்ல அடி .. அவனுக்குக் கொஞ்சம் அழுகை; எனக்கு நிறைய சிரிப்பு. சிரிச்சிக்கிட்டே வெற்றிக் களிப்பில் இருந்துட்டேன்.
அதுக்குப் பிறகு பள்ளி அன்று முடியும் வரை பேசினான். ஆனால் .. கள்ளப்பயல் … வீட்டிற்குப் போனதும் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அடுத்த நாள் அவர்கள் அம்மா பள்ளிக் கூடத்திற்கே வந்து விட்டார்கள் சிவகுமார் அவன் அம்மா என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னான். போனேன். . நன்கு திட்டினார்கள். ஏன் அவனை அப்படி கீழே தள்ளினாய் என்று கடிந்து கொண்டார்கள். அதைவிட உலகத்திலேயே அதிகம் பயப்படும் தண்டனை ஒன்றைச் சொன்னார்கள்; அதாவது இப்படியெல்லாம் செய்தால் உன் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து விடுவேன் என்றார்கள். அது வயிற்றில் புளியைக் கரைத்தது.
அன்றிலிருந்து சிவகுமாரிடம் நான் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வாழ்க்கையில் உடைந்த முதல் நட்பு இதுதான் … ஆனால் இன்னும் நானும் அவனும் நட்பாயிருந்தது; நாங்கள் ’குஸ்தி’ போட்ட அந்த வேப்ப மரத்தடி; ஓடிப்போய் கோவிலுக்குள் சேர்ந்து எட்டிப் பார்த்தது … எல்லாமே பசுமையாக நினைவில் இருக்கிறது.
இப்போதும் தூய மரியன்னை கோவிலுக்குப் போனால் (கோவிலுக்குப் போற அந்த நல்ல காரியம்லாம் அடிக்கடி செய்வோம்ல .. தங்க்ஸூக்கு ட்ரைவர் வேலை பார்க்கும் போது ….) அந்தக் கோவிலைச் சுற்றி வருவது வழக்கம். அந்த மரம், காம்பவுன்ட் சுவர் இப்போது இல்லை. ஆனால் நினைவுகளில் அவைகள் இன்னும் இருக்கின்றன!
சிவகுமார்… எங்கேடா இருக்கே?
2
யாருக்கும் ‘அடிபணியாதவன்’ என்ன ஆனான்?
1953- ல் ……….
முதல் வகுப்பிலிருந்து முதலாண்டு முதுகலை வரை மதுரை தெற்குவாசல் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். பெரிய குடும்பம்; சின்ன வீடு. இன்னும் இரு குடும்பங்களோடு ஒட்டுக் குடித்தனம். இப்போதைய நிலைக்கு அந்த வீட்டை நினைக்கும் போது அதை ஒரு ’எலிவளை’ என்றுதான் சொல்ல முடியும். எப்படி அங்கே அத்தனை வருஷம் வாழ்ந்தோம் என்று நினைத்தால் இன்றும் ஆச்சரியம். ஆனாலும் இன்றும் பலரும் அதே போன்ற ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னொரு வேதனையான விஷயம். சரி… வீட்டு விஷயம் இன்னொரு தடவை பார்ப்போம்.
எங்கள் வீடு மாதிரியே அண்ணன் தம்பி வீடுகளாய் மூன்று வீடுகள் அடுத்தடுத்து இருக்கும். எங்கள் வீடு கடைசித் தம்பியின் வீடு. எங்கள் வீட்டுக்கு ஒரு புறம் இன்னொரு அண்ணனின் வீடு. அந்த வீட்டிலேயும் எங்கள் வீடு போலவே பல குடிகள். எங்கள் வீட்டு உரிமையாளர்கள் தெலுங்கு பேசுவார்கள். (மீக்கு ஒய்ட்டி ஒய்ட்டி தெலுகு தெலுசு …!) எங்கள் மூன்று வீடுகளை விட்டு விட்டால் மற்ற வீடுகள் ஏறத்தாழ இஸ்லாமியர்களின் வீடுகள்.
நாங்கள் தான் இப்படி அத்தனை காலமாக ஒரே வீட்டில் இருந்தோம். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டில் இன்னொரு குடித்தனக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். என் வயதில் ஒரு பையன். சிகப்பா, ஒல்லியா இருப்பான். பெயர் ஆஸாத். அவனின் அத்தா ரெயில்வேயில் வேலை பார்த்தார். அப்பா, மகன் இருவருமே ரொம்ப சாந்தமானவர்கள். ஆஸாத்தின் அப்பா என்னிடம் அடிக்கடி பேசுவார். ரொம்ப மெல்லிய குரல். சாந்தமாகப் பேசுவார். என் மூலம் என் அப்பாவும் அவரும் நண்பர்களானார்கள்.
ஆஸாத் ரொம்ப சாஃப்டான பயதான். ஆனால் ’ஆஸாத் ’ என்ற பெயருக்கு அர்த்தம் ‘அடிபணியாதவன்’ அப்டிம்பான். இந்த மாதிரி பெயரையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும் போது மட்டும் பய கொஞ்சம் முறப்பா காமிச்சுக்குவான். அம்புட்டுதான்! அவன் அப்பாவும் அவனைத் திட்டும் போதெல்லாம் ‘பேரு வச்சதுக்கு ஏத்த மாதிரி ஊருக்கும், வீட்டுக்கும் அடங்காதவனா போய்ட்டான்’ அப்டிம்பார். ஆனால் பய அப்படியெல்லாம் இல்லை. நல்ல பயல். சீக்கிரமே என்னோட நல்ல நண்பனாய்ட்டான்.
ஆஸாத்துக்கு, எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில், தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்த்தாற்போல் இருந்த அந்தத் தெருவில் ஒரு நண்பர் இருந்தார். அவர் வயதில் எங்களுக்கெல்லாம் மூத்தவர். அப்போதே பள்ளிப்படிப்பை முடித்து விட்டிருந்தார். ஆஸாத் என்னைச் சில முறை அவரைப் பார்க்கக் கூட்டிப்போனான். எங்களைப் போல் பசங்களை ஒன்று சேர்த்து ஏதோ ஒரு கழகம் ஆரம்பிக்க வேண்டுமென்றார். ஒரு கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கலாம் என்றார். நாலைந்து பேர் சேர்ந்து ஏதோ ஒரு பெயரை வைத்தோம். அடுத்த நாளே நான் வீட்டில் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கலர் பென்சில்கள் வைத்து அந்தப் பெயரை ‘அழகாக’ எழுதி, கலரடித்து வைத்திருந்தேன். ஆஸாத் அது ரொம்ப நல்லா இருக்கு. ’வா, பாய்ட்ட காமிப்போம்’ என்றான். நானும் அவனும் அவரைப் பார்க்கப் போனோம். ’நன்றாக இருக்கு .. ஆனா இப்போ கழகம் எல்லாம் வேண்டாம்’னுட்டார். ஒரே சோகமா போச்சு. வரைஞ்சதை உடனே கிழிச்சிப் போட்டுட்டேன்.
அந்த வருஷ கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. இப்போ கடை பூரா அழகழகா செய்த ஸ்டார்கள் எல்லாம் இருக்குமே .. அது மாதிரியெல்லாம் அப்போ கிடையாது. எல்லாம் மூங்கில் குச்சிகள் வைத்து நாமளே செய்வது தான். அந்த வருஷம் எனக்கு ஸ்டார் செய்யணும்னு ஆசை. ஆஸாத்திடம் சொன்னேன். அவனுக்கு அந்த ‘வித்தை’ தெரியும்னான். இன்னொரு நண்பன் வெங்கட் என்னும் வெங்கடேசன். அவனும் எங்களோடு சேர்ந்துக்கிட்டான்.
கிறிஸ்துமஸுக்கு பத்து நாளைக்கு முன்பே ஒரு நீள மூங்கில் பட்டை ஒன்று விலைக்கு வாங்கினோம். அதை தண்ணீரில் போட்டு பதமாக்கணும் என்றார்கள். எங்கள் வீட்டில் குளிக்கிற இடத்தில் ஒரு ஓரத்தில் போட்டு வைத்தோம். எப்படி போட்டாலும் முழுப்பட்டையும் நனையற வழியைக் காணோம். நாலைந்து நாள் தண்ணீரில் கிடந்தது. பிறகு அதை சீவி, சின்ன துண்டுகளாக ஆக்கினோம். ஆறு குச்சிகளை ஒரே மாதிரி சீவி எடுத்து … அதை ஸ்டார் மாதிரி தரையில் படம வரைந்து … அதன் மேல் இந்தக் குச்சிகளை வைத்து .. ஓரங்களைக் கட்டி … இப்போ ஒரு சைட் ஸ்டார் ரெடி. அதே மாதிரி இன்னொரு ஸ்டார் கட்டி … இரண்டு ஸ்டாரையும் ஒன்றாகக் கட்டி …. அம்மாடி.. உலகமே வெறுத்துப் போச்சு. அதிலேயும் கடைசியாக அந்த இரண்டு ஸ்டாரையும் ஒட்டி ஒட்டிப் பார்த்தோம். என்ன டெக்னிகல் பிரச்சனையோ .. எங்களால் முடியலை. அதைக் கட்டி அதற்கு மேல் கலர் கண்ணாடி பேப்பர் ஒட்டணும். நமக்காகிற வேலையில்லைன்னு பாதியிலேயே உட்டுட்டோம். அதற்குள் நாள் கணக்கா நாங்க மல்லாடுறதைப் பாத்து பெருசுக சண்டைக்கு வந்திருச்சிங்க … வழக்கமா இருக்கிற பல்லவிதான் ..’படிக்கிற வழியக் காணோம் .. அதுக்குள்ள என்ன ஸ்டாரு’ அப்டின்னு கோவிச்சிக்கிட்டாங்க. கிறிஸ்துமஸுக்கு முன்னால வேற ’அரைப் பரிட்சை’ வந்திரும். அதைப் படிக்கப் போங்கன்னு விரட்டி விட்டுட்டாங்க. ஆனா எங்க மூணு பேருக்கும் ஒரு ட்ரெய்னிங் கிடச்சிப் போச்சு. அதனால் எப்படியும் அடுத்த வருஷம் கட்டாயம் நல்ல ஒரு ஸ்டார் செஞ்சிரலாம்னு ஒரு நம்பிக்கையோடு எங்க ‘ஸ்டார் ப்ரோஜெக்ட்’டை சோகமாக நிறுத்திட்டோம். அதிலும் ஒரு சின்ன சோகம். அடுத்த வருஷம் வந்தது.
ஆஸாத் வேறு பள்ளியில் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் அப்பா தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்காள். (அப்போ மதுரையில் அது தான் பெரிய்ய்ய பள்ளி. அதனோடு அப்போது S.S.L.C. தேர்வுகளில் போட்டியிடுவது இன்னும் ஒரே ஒரு பள்ளிக்கூடம் தான். செளராஷ்ட்ரா பள்ளி.) நான் ஆஸாத்திடம் சொல்லி, ஆஸாத் அவங்க அத்தாட்ட சொல்லி, அவர் எங்க அப்பாட்ட சொல்லி … ஆஸாத் ஆறாம் வகுப்பிற்கு எங்கள் பள்ளிக்கே, எனது செக்ஷனுக்கே வந்திர்ரது என முடிவு செஞ்சிருந்தோம்.
ஆனா அடுத்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே அவங்க அத்தாவுக்கு செங்கோட்டைக்கு ட்ரான்ஸ்பர் வந்திருச்சி. திடீர்னு அப்படியே உட்டுட்டுப் போய்ட்டான்.
நான் எங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் போகும்போது தென்காசியில் இறங்கி அதன் பின் பஸ்ஸில் போவோம். தென்காசிக்கு அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆஸாத் ஞாபகம் வரும். ஆனால் அவன் மதுரையை விட்டுப் போன பின் நான் அவனைப் பார்க்கவேயில்லை. அந்த கிறிஸ்துமஸுக்குப் பிறகு நானும் வெஙகட்டும் நாலைந்து தடவை ஸ்டார் சேர்ந்து செஞ்சோம். அப்போவெல்லாம் கட்டாயமா ஆஸாத்தை ஞாபகம் வச்சிக்கிட்டதுண்டு. இப்பவும் கூட கிறிஸ்துமஸ் ஸ்டார் வீட்ல கட்டும்போது முதலில் நாங்க செஞ்ச, செய்ய முனைந்த ஸ்டார் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் பல முறை ஆஸாத்தை நினைத்திருக்கிறேன்.
3
ராஜா ..காணாமல் போகவில்லை; இல்லாமலே போய்ட்டான்...
*
1954- ல் …………… ..
நாங்கள் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளியிலேயே ‘இங்கிலிபீசு’ மீடியம் என்ற பாடத்திட்டம் ஏதும் கிடையாது. ஆறாம் வகுப்பு – அப்போ அதற்குப் பெயர் I Form – வரும்போது தான் a..b..c..d.. எல்லாம் சொல்லித் தருவார்கள். ஆனால் நான் படிச்சது ஐந்தாம் வகுப்பு A பிரிவு. நல்லா படிக்கிற பசங்களுக்கான வகுப்பு என்று பள்ளிக்கூடத்தில் பெயர். அதனால் தானோ என்னவோ நாங்கள் ஐந்தாம் வகுப்பின் கடைசியிலேயே எங்களுக்கு a..b..c..d.. சொல்லிக் கொடுத்தார்கள். father, mother, brother, sister …இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். நாங்களும் மற்ற க்ளாஸ் பசங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டோம். What is your name? What is your father’s name? எம்புட்டு எம்புட்டு படிச்சோம்! மத்த வகுப்பு பசங்க இருக்கும் போது நாங்க சத்தமா ஒருத்தொருக்கு ஒருத்தர் இங்கிலிபீசுல்ல பேசுவோம். மத்த பசங்களுக்கு நிச்சயம் காது வழி புகை வந்திருக்கணும்.
என் ஐந்தாம் க்ளாஸ் வாத்தியார் லூக்காஸ். நல்ல உயரம்; பயங்கர ஒல்லி;எப்பவும் சிரிச்ச முகம். தோள்பட்டை லேசா தூக்கி இருக்கும். அதனால் அவர் ரொம்ப வித்தியாசமா தோன்றுவார். என் மேலே அவருக்கு ரொம்ப பிரியம். பசங்களை அடிக்க வகுப்பு ஓரத்தில் ஒரு பிரம்பு வைத்திருப்பார். பசங்களை அடிக்க வேண்டுமானால் அந்த பிரம்பை என்னைத் தான் எடுத்துத் தரச் சொல்வார். அதுவே ஒரு பெரிய கிரடிட். சில பசங்களுக்கு என் மீது பொறாமையும் கூட. ஆனால் பிரம்பை எடுத்துக் கொடுக்கும் எனக்கே அந்த பிரம்பாலேயே ஒரு நாள் நல்லா அடிபட்டேன். அப்படி என்ன தப்பு செஞ்சி அடிவாங்கினேன்னு தெரிஞ்சுக்கணுமா …. அந்தக் காலத்தில டிக்டேஷன் சொல்லுவாங்க .. அத நாங்க எங்க ஸ்லேட்ல எழுதணும். அதுக்குப் பிறகு வாத்தியார் தப்பு திருத்துவார். அப்போ ஸ்லேட்ல ஒரு பக்கத்துக்கு ரெண்டு தப்பு அனுமதி. அதுக்கு மேல இருந்தா பிரம்படி. தப்பு எண்ணிக்கைக்கு ஏத்தமாதிரி அடிக்கணக்கு உண்டு. நான் இந்த தமிழ் டிக்டேஷனில் அடி வாங்கியது இல்லை. அதனால தான் பிரம்பை எடுத்துக் கொடுக்கிற வேலையைக் கூட எங்க வாத்தியார் எனக்குக் கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் நானும் ஒரு நாள் ஓங்கி சில அடிகள் வாங்கினேன். அப்படி ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னது … என்ன தப்புன்னு தெரியணுமா? அது வேறு ஒரு கதை.
சரி .. அடி வாங்கின அந்த ஒரு நாளை விட்டுருவோம். அதைத் தவிர நான் தமிழ் டிக்டேஷனில் தப்பு வாங்கினதில்லையல்லவா … அதனால் வாத்தியார் பிரம்பை எடுத்துத் தரும் prestigious வேலையை எனக்குக் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பு எடுக்கும் போது சில பகுதிகளை வாசிக்க என்னைக் கூப்பிடுவார். நான் போய் அவர் மேசைக்குப் பக்கத்தில் போய் அந்தப் பகுதிகளை வாசிக்கணும். பசங்க மனசுல இதெல்லாம் ஒரு உறுத்தலா இருந்துச்சோ என்னமோ… ஆனால் ஒரு நாள் ஒரு மாணவன் ஆசிரியருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான்.
அவன் பெயர் ராஜா. பெரிய பையனாக இருப்பான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு குறை உண்டு. அவனது கண் இமைகள் நம்மைப் போல் திறந்து குறுகாது. அவை எப்போதுமே முக்கால்வாசி மூடியே இருக்கும். சிறு பாகம் வழியாகத்தான் அவனால் பார்க்க முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்குப் பார்வையில் கோளாறு ஏதுமில்லை. ஆனாலும் இந்தக் குறையினால் அவனுக்குப் பட்டப் பெயரெல்லாம் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரைச் சொன்னதும் சண்டைக்குப் போவான். பெரிய பையன் என்பதால் எல்லோருக்குமே அவனிடம் ஒரு பயம் உண்டு. உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பின் ஒவ்வொரு வருஷமும்’இந்தக் கோடை விடுமுறையில் கண்ணுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன்’ என்று வழக்கமாக பல ஆண்டுகள் சொல்லி வந்தான்.ஆனால் கடைசி வரை அப்படியேதும் செய்யவில்லை.
அவன் ஒரு நாள் லூக்காஸ் வாத்தியாரிடம், ‘ஏன் சார் .. எப்பவும் ஜார்ஜை மட்டும் வாசிக்கக் கூப்பிடுகிறீர்கள்?’ என்றான். துணிச்சல்காரப் பயல் தான்.
லூக்காஸ், ‘அவன் ஒழுங்காக வாசிப்பான்; அதனால் தான்’ என்றார்.
’நானும் நல்லா வாசிப்பேன். வேணும்னா அவனோடு போட்டி வச்சிக்கிறேன்’.
‘ஆகா … வச்சிக்கலாமே’ என்றார் லூக்காஸ்.
அவரே போட்டியும் விதிகளையும் சொன்னார். அவரது மேசைக்குப் பக்கத்தில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டும். நடுவில் அவர் இருந்து ஒரே சமயத்தில் இருவர் முதுகிலும் தட்டுவார். ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அவரது அடுத்த தட்டில் வாசிப்பவன் நிறுத்த, அடுத்தவன் வாசிக்க ஆரம்பிக்கணும். நடுவில் திக்கல், தவறுகள் இருந்தால் மதிப்பெண் குறைவு. இந்தத் தப்புகளை முன் பெஞ்சில் சில மாணவர்களை வைத்துக் குறித்துக் கொள்ளலாம். ஜட்ஜூகள் அவர்கள் தான்! யாருக்கு குறைந்த தப்புகள் இருக்கின்றனவோ அவன் தான் வின்னர் என்றார்.
எனக்குக் கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் சரியென்று சொல்லிவிட்டேன். ராஜா அதோடு விடுவானா? போட்டிக்கு நாங்கள் இருவரும் பந்தயம் கட்டணும் என்றான். அவனே பந்தயப் பணத்தையும் சொன்னான். ஆளுக்கு ஓரணா பந்தயம் என்றான். அப்போ ஒரு அணா அப்டின்னா அது பெரிய காசு. நமக்கேது அம்புட்டு பாக்கெட் மணி. என்னால முடியாதுன்னேன். அப்போ இரண்டு நண்பர்கள். எனக்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். அனேகமாக அவர்கள் பெயர் வெற்றிவேல்,. கதிரேசன் என்று நினைக்கிறேன். வெற்றிவேல் அழகாக, கருப்பாக என் உயரத்தில்இருப்பான். கதிரேசன் ஒல்லியான உயரமான பையன். பாவம் அவர்கள்! வாழ்க்கையில் அப்பவே அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்கள். அவ்ர்கள் இருவரும் எனக்காக ஓரணா ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.
சார் முன் பெஞ்சில் நாலைந்து மாணவர்களை உட்காரவைத்து அவர்களிடம் எப்படி தப்புகளைக் குறிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து தயாராக்கினார். வெற்றிவேல்,. கதிரேசன் இருவரும் ஜட்ஜாக இருக்கக் கூடாது என்றும் சொல்லி விட்டார். வகுப்பே களை கட்டி இருந்தது. போட்டி ஆரம்பித்தது. பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. இருவரும் வாசித்தோம். தவறுகள் குறிக்கப்பட்டன. போட்டி முடிவடைந்தது. ஜட்ஜூகள் ஆசிரியரின் மேசைக்கு பக்கத்தில் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் இடத்திற்கு வந்து விட்டோம். ஜட்ஜுகள் கணக்குப்படி எங்கள் தப்புகள், தடுமாற்றங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டன.
பயத்தோடு இருந்தேன். ஆனாலும் ‘வெற்றி எனக்குத்தான்’ என்று ஆசிரியர் சொன்னது தெரிந்தது. வகுப்பில் எனக்காக ஒரு கை தட்டல் இருந்தது. அந்தக் காலத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணக் கூட ஆள் இருந்திருக்கு! ராஜா ரொம்ப ஜென்டிலாக முன் வந்தான். எனக்குத் தெரியாத மரியாதையெல்லாம் அவனுக்குத் தெரிந்திருந்தது. கை கொடுத்தான். பந்தயக் காசு ஓரணாவை வாத்தியாரிடம் இருவருமே கொடுத்திருந்தோம். சார் அதில் ஓரணாவை என்னிடம் ராஜாவைக் கொடுக்கச் சொன்னார். இன்னொரு ஓரணாவை எனது ‘பைனான்சியர்களிடம்’ திருப்பிக் கொடுத்தார். அதிலும் ஒரு சிக்கல் வந்தது. ‘பைனான்சியர்கள்’ என் பந்தயக் காசில் பங்கு கேட்டார்கள். சார் தீர்ப்பு சொல்லிட்டார்: ‘அந்தக் காசு அவனுக்கு மட்டும் தான்’. ராஜாவிடம் சார் கேட்டார்: ‘என்னடா … இனிமே அவனையே வாசிக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். ராஜா உற்சாகமாக சரிஎன்றான்.
படிப்பில் நான் ஜெயிச்ச ஒரே நிகழ்வு இது ஒன்றுதான் என நினைக்கிறேன்!
அதன் பின் ராஜா ஒரே பள்ளியில் இருந்தாலும் வேற வேற செக்ஷன்.நல்ல பெரிய உருவமாக வளர்ந்தான். கொஞ்சம் முரட்டுப் பையலாகவே தெரிந்தான். அவன் கண்ணை வைத்துப் பலரும் அவனைக் கேலி செய்வதுண்டு. அவர்களிடம் முரட்டுத்தனமாக இருந்தான். ஆனால் உண்மையிலேயே அவன் பயங்கர சாப்ட் என்பது எனக்கு 29 வயதிற்குப் பிறகுதான் தெரிந்தது. அதாவது என் மாமனார் வீட்டிற்கு பக்கத்தில் தான் அவன் இருந்தான். என் மாமனாருக்கு அவன் ஒரு நண்பன் மாதிரி.முரட்டுத்தனமா ஒரு மீசை வைத்திருப்பான்.பெரிய மீசை. முனைகள் பிரஷ் மாதிரி பெருசா கன்னத்தை மூடியிருக்கும். என் முதல் மகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் கத்தினாள். சில நாட்களில் இருவரும் பயங்கர நண்பர்களாகி விட்டார்கள், மீசையை வைத்தே அவளைச் சிரிப்பு மூட்டுவான். அவளுக்கு அது ஒரு பெரிய விளையாட்டாகிப் போனது.
அவன் கண்கள் சிறு வயதிலேயே தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டன. பள்ளிப் படிப்பு முடியும் வரை அதிகமாக ஏதும் இல்லை. அதன் பின் பார்வை குறைய ஆரம்பித்து விட்டது. எதையும் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும். கண்ணாடி போட்டுக்கோ என்று எல்லோரும் வற்புறுத்துவோம். ஆனால் கடைசி வரை போட்டுக்கொள்ளவேயில்லை. என் திருமணத்திற்கு முன் நாங்கள் அவ்வப்போது பார்த்துக் கொண்டது உண்டு. ஆனால் அதிகமாக நட்பு பாராட்டியதில்லை. என் திருமணத்திற்குப் பின் அடிக்கடி சந்திப்பதுண்டு. எங்கள் போட்டியை எனக்கு முழுவதுமாக நினைவு படுத்தியதே அவன்தான். நாங்கள் அன்று போட்டியில் வாங்கிய மதிப்பெண்களில் என்னைவிட அவன் இரு மடங்கு தப்புகள் செய்ததாகச் சொன்னான். உண்மை என்னவோ .. சும்மா என்னைத் தூக்கி வைப்பதற்காகக் கூட சொல்லியிருப்பான். பயல் அப்படிப்பட்டவன். என் மாமனார் வீட்டில் வைத்து இதைச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்துவது அவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. கொஞ்ச நாள் என்னை கேரம் விளையாட ஒரு கிளப்பிற்கு அழைத்துச் செல்வான். கண் பார்வையில் கோளாறு இருந்தும் அவன் மிக நன்றாக விளையாடுவான். செஞ்சுரி போடுறதெல்லாம் அவனுக்கு எளிது.
அவன் திருமணமாகாத அக்காவிற்குத் துணையாக இருக்க வேண்டுமென்று திருமணமே வேண்டாமென்றிருந்து விட்டான். எல்லோருக்கும் உதவுவதில் மன்னன். யாருக்காகவும் எங்கே வேண்டுமானாலும் அலைந்து கஷ்டப்பட தயாராக இருப்பான். என் மாமனாரின் கடைசி காலத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தான். மருத்துவ மனையில் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு இரவில் அவரோடு இருந்து நன்கு கவனித்துக் கொண்டான். அவருக்கும் அவன் இருப்பதே பிடித்தது. மாமனார் காலத்திற்குப் பிறகு எப்போதாவது அவனிடமிருந்து தொலை பேசி வரும். பேசிக் கொள்வோம்.
அறுபதை நாங்கள் எட்டிப் பிடித்த பின் எப்போதாவது பார்த்துக்கொள்வோம். பெரிய உருவம். திடகாத்திரமான உடம்பு. பெரிய மீசை. ஆனால் ஐம்பதுகளிலேயே சர்க்கரை வியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் அவனது பழைய தோரணை ஏதுமில்லாமல் போய் விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் திடீரென்று போய்ச்சேர்ந்திட்டான் என்ற செய்தி சில நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது..
*
4
ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல?
1957-ல் ….
கோடை விடுமுறையென்றால் உடனே பிறந்த மண்ணுக்கு ஓடியது ஒரு காலம். எங்கள் வீட்டைப் போலவே மதுரையிலிருந்து பெரிய பெரியப்பாவின் குடும்பம்; பாளையங்கோட்டையிலிருந்து சின்ன பெரியப்பாவின் குடும்பம். ஏறத்தாழ இந்த சமயத்தில் தான் ஊரில் அம்மன் கொடை நடக்கும். அதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஊரை நிறைத்திருப்போம். மதுரையில் ’பூட்டிக் கிடந்த’ வாழ்க்கை – வீடும் இத்தனூண்டு இருக்கும். மிஞ்சிப் போனால் வெளியே போய் தார் ரோட்டில் விளையாடலாம். ஆனால் இங்கே ஊருக்கு வந்தாலோ ‘திறந்த வாழ்க்கை’! ஊரே நமது என்ற எண்ணம் வந்திருமே. எங்கே போனாலும் உறவினர். அதுவும் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு; கவனிப்பு; விசாரிப்பு. வீடும் பெரிது; ஊரும், காடும் விரிந்தது. எல்லாமே நிறைந்து கிடக்கும் ‘திறந்த வாழ்வு’!
எல்லா உறவினர்களும் சந்திக்கும் நாட்கள். அது பெரியவர்களுக்கு எப்படியிருந்ததோ .. நாங்க .. சின்னஞ்சிறுசுகளுக்கு ஏக சந்தோஷம். விளையாட்டுகளுக்கும் குறைவில்லை. சிறு வயதில் எல்லோரும் சேர்ந்து ஒளிந்து விளையாடி .. பின் வயதாக வயதாக விளையாட்டுகளும் மாறின. பிள்ளையார் பந்து (எறிப் பந்து); குச்சி தூக்கி விளையாடுதல்; தேர்ந்தெடுத்த அகத்திக்குச்சியின் முனையை வெட்டிச் சரிசெய்து ஹாக்கி மட்டை தயார் செய்து, பனங்கொட்டையை பந்தாக்கி விளையாடியது; ஓடைகளில் ஓணானை விரட்டி அடித்து வேட்டையாடியது; கிட்டிப் புள்ளு; கருங்கல்லை தேய்த்து தேய்த்து செய்த குண்டு வைத்து கோலி விளையாட்டு; புளிய மரங்களில் மரக்குரங்கு விளையாட்டு; நொங்கில் வண்டி செய்து ஓட்டியது; விட்டில் பிடித்து சுட்டு தின்பது; … அது மட்டுமா, மே மாதம் மாதா மாதம் – அதாவது மேரி மாதாவின் மாதம் – மாலைகளில் அத்தை நடத்திய ஜெபக்கூட்டம்; அது முடிந்ததும் கையில் அரிக்கேன் விளக்கோடு இருட்டுக்குள் வரிசையாக நடந்து கிறித்துவ உறவினர்கள் வீட்டுக்குப் போய், ஜெபம் செய்து விட்டு அவர்கள் தரும் கருப்பட்டிக் காப்பியில் முறுக்கை ஊற வைத்து தின்ற மகிழ்ச்சி … அடேயப்பா .. Variety was the spice of life then! கொஞ்சம் வயசானதும் காட்டுக்குள் போய் திருட்டுப் பீடி குடித்துப் பழகியது … இளமையின் ராஜ்ஜியமாக அந்த நாட்கள் கழிந்தன.
வழக்கமாக இப்படி விளையாட்டுகளில் மூழ்கிப் போனாலும் அவ்வப்போது சில இடிகளும் தலை மேல் வந்து இறங்கும். இன்னைக்கு எல்லோரும் வேட்டைக்குப் போவோம்னு நண்பர்களோடு முடிவெடுத்து மதியச் சாப்பாட்டிற்குப் பின் மெல்ல கிளம்பும் போது அப்பா ஆளை நிறுத்தி, ஊரிலிருந்து எடுத்து வந்திருக்கும் Wren & Martin ஆங்கில இலக்கண புத்தகத்தை எடுத்து அதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது என்னும் போது வரும் கோபம் … ம்ம் .. அந்தக் கோபத்தையும் வெளியே காண்பிக்கவா முடியும். கடவுளேன்னு படிக்க உக்காரணும்!
ஆனால் ஒரு வருஷம் மிக மகிழ்ச்சியாகப் போனது. என் பாட்டையா அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். ஊருக்குப் பக்கத்தில் நல்லூர் என்ற ஊரில் ஒரு பெரிய பள்ளி; உயர் நிலைப்பள்ளி; ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஆரம்பித்த பள்ளி. அந்த ஊரிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரம் தான் எங்கள் ஊர் – காசியாபுரம். நல்லூர், கொஞ்சம் அரசியலால் பெயர் வாங்கிய ஆலடி, எங்கள் ஊர் காசியாபுரம் – மூன்றும் ஆயுத எழுத்து மாதிரி அடுத்தடுத்து இருக்கும். நல்லூரில் இருந்த அந்தப் பெரிய பள்ளி .. அடுத்து எங்கள் ஊரில் பாட்டையாவின் பள்ளி. பக்கத்தில் வேறு பள்ளி ஏதும் கிடையாது. அதனால் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் எங்கள் பள்ளிக்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அந்தப் பள்ளிக்கு three-wheeler-ல் போய் வண்டியை பள்ளியின் நடுவில் இருந்த வாதமடக்கி மரத்து நிழலில் park செய்து நான் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை அந்தப் பள்ளியில் ‘படித்தேன்’. எனக்கு இருந்த நான்கு அத்தைகளும் அப்பள்ளியில் ஆசிரியர்களாக அவ்வப்போது இருந்தார்கள். ஏன் அந்த வயதிலேயே, மூன்று வயதிலேயே நான் அப்படி மாஞ்சு மாஞ்சு பள்ளிக்கூடம் போனேன்னு வேறு ஒரு பதிவில் எழுதியிருக்கிறென்.
அந்தப் பள்ளியில் ஒரு கோடை விடுமுறையில் பெரிதாக ஒரு விழா நடந்தது. இன்னும் சில நிகழ்வுகள் நினைவில் உள்ளன. ஒரு கண்காட்சி, சின்னச் சின்ன விளையாட்டுகள் என்று பகலெல்லாம் நடந்தன. மாலையில் தான் ஒரு பெரிய நிகழ்ச்சி – நாடகம் ஒன்று நடந்தது. நான் தான் ஹீரோ! அடிச்சி தூள் கிளப்பிட்டோம்ல! நாடகம் பார்த்த என் அப்பம்மா என் ‘உணர்ச்சி மிக்க நடிப்பில்’ அப்படியே அழுதுட்டாங்கல்லா ..! நாடகம் பற்றி இங்கே ஒண்ணும் சொல்லலை. ஏன்னா அது பற்றி ஏற்கெனவே வேறு ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். கண்ணீரையெல்லாம் அடக்கி வச்சிக்கிட்டு நீங்களே அதை அங்கே வாசிச்சிக்கங்கோ …சரியா? … அது ஒரு பக்கம் இருக்கட்டும். கண்ணீரையெல்லாம் தொடச்சிக்கிட்டு நம்ம கதைக்கு வருவோம்.
Prodical son என்ற பைபிள் கதை. அந்த நாடகத்தில கிளப் முதலாளியா வந்தானே வைத்தியலிங்கம், அவன் தான் இந்த நாடகத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பனானான். அது வரை எனக்கு அவனைத் தெரியாது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் உண்டு. ஆனால் கொஞ்சம் பெரிய பையனாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கள் பள்ளியில் படித்து முடித்து, பின் நல்லூர் உயர் நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்த வைத்தியலிங்கத்தை அத்தை பிடித்து இழுத்து வைத்திருந்தார்கள். மற்ற முக்கால்வாசி கதாபாத்திரங்களைத்தான் டவுன் பிள்ளைகளான நாங்கள் அமுக்கிக் கொண்டோமே..!
நாடகம் முடிந்த அடுத்த நாள் வைத்தியலிங்கத்திடம், ‘ஏண்டா! அப்படி கால் சட்டையையும் கழட்டச் சொன்ன?’ என்று கேட்டேன். இருந்தாலும் எனக்கு மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஏன்னா அந்த சீன் அப்படி இருந்த்தால் தானே அப்பம்மா அப்படி அழுதுட்டாங்க! அந்த நாளிலிருந்து அவன் எனக்கு நல்ல ஒரு நண்பனாகி விட்டான். திருநெல்வேலிப் பழக்கத்தில் ‘ஏலே!’ என்று கூப்பிடும் பழக்கம் இருந்தாலும் நான் அந்த வயதில், ஏன் அதற்குப் பிறகும் அப்படி யாரையும் கூப்பிட்டதில்லை. வைத்தியலிங்கமும் நானும் அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் ‘ஏலே’ என்று கூப்பிட ஆரம்பித்தோம். நான் அப்படி ’ஏலே’ என்று அன்போடு கூப்பிட்டது அவன் ஒருத்தனைத்தான். (இப்போ பேரப் பசங்களை அப்பப்போ ‘ஏலே’ன்னு கூப்பிடுறது நல்லா இருக்கு!) ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அவன் வீட்டுக்குத் தான் ஓடுவேன். ஊரில் இருக்கும் வரை அவன் கூடவே இருப்பேன். ஆனாலும் என்ன, இந்த மாதிரி இருந்தது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே.
ஒரு விடுமுறையில் ஊருக்குப் போனதும் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டில் மட்டுமல்ல ஊரிலேயே இல்லை. அவனை சென்னைக்கு அவன் வீட்டார் அனுப்பி விட்டார்கள். படிக்கிறதாகச் சொன்னார்கள். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவன் படிப்பை விட்டு விட்டு காவல் துறையில் கான்ஸ்டேபிளாகச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிலும் யாரும் இல்லை. எல்லோரும் சென்னை வாசிகள் ஆகிவிட்டார்கள் போலும்.
நாடகத்தில் என் ‘ட்ரவுசரை உருவிட்டான்’; ஆனால் இப்போ அவனும் அந்தக்கால போலீஸ்காரராக அரை ட்ரவுசர் சீருடை உள்ள வேலைக்கே போய்ட்டான். என்னே ஒரு dramatic irony!!! ஜீ பூம்பா போட்டு பழைய ஆட்களைக் கண்முன் கொண்டு வரும் மந்திரம் தெரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! வைத்தியை எதிரே கொண்டு வந்து, ‘ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல?’ என்று உரத்துக் கேட்டு விடலாமே!
*
இப்பதிவிட்டு சில நாளில் எங்கள் ஊர் பதிவர் வேல்முருகன் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்களூரில் அவரது வீடு வைத்தியலிங்கத்தின் வீட்டிற்குப் பக்கத்து வீடு என்றார். கிராமத்தில் பக்கத்து வீடு என்றால் நிச்சயமாக உறவாகத்தானிருக்கும். அவர் மூலம் முயன்று கடைசியில் வைத்தியைக் கண்டு பிடித்து விட்டேன்.
வேல்முருகன் கொடுத்த ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு அங்கிருந்து வைத்தியின் எண்ணைக் கண்டுபிடித்தேன். அம்புட்டு மகிழ்ச்சி … உடனே தொடர்பு கொண்டேன். வா .. போ .. என்று பேச ஆசை. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து வைத்தி ரொம்ப மரியாதையாகப் பேசியதால் எனக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று. வைத்தியின் தம்பி தான் காவல் துறைக்குப் போயிருந்திருக்கிறார். வைத்தி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று சென்னையில் அத்திப்பெட்டு என்னுமிடத்தில் சொந்த வீட்டில் மக்கள். பேரப் பிள்ளைகளோடு இருப்பதாகச் சொன்னார். அவரோடு பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது – போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்தது போல் இருந்தது.
5
தம்மடிக்க’ போவோமா ... ?
1959-ல் …..
அது என்ன மாயமோ .. மந்திரமோ தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே யாரும் புகைக்கும் போது வரும் வாசனை (நாற்றம்…??) மிகவும் பிடித்தது. அந்தக் காலத்தில் திரையரங்குகளில் புகைப்பிடிக்கத் தடையேதும் இல்லாததால் என்னை மாதிரி ஆட்களுக்கு உள்ளே நுழைந்ததும் வரும் புகை மண்டலம் ரொம்பவே பிடிக்கும். அதைவிட படம் ஆரம்பித்ததும் அங்கங்கிருந்து புகை மண்டலங்கள் ப்ரொஜெக்டரின் ஒளி ஓட்டத்தில் தெரிய ஆரம்பிக்குமே அந்தக் காட்சி கூட ரொம்ப பிடிக்கும். அப்படியே அந்த ஒளி வட்டத்தின் அடியில் குவிந்து ஆரம்பிக்கும் புகை அப்படியே மெல்ல மேலே எழுந்து .. பிரிந்து .. மெல்லிய மேகமாகப் போகுமே … அதையெல்லாம் பார்த்து ரசிக்கணும்; முகர்ந்து அனுபவிக்கணும்.
இப்படி இருந்த நமக்கு எப்படியாவது புகைக்க வேண்டுமென்ற ஆவல் சின்ன வயசிலேயே வராமல் போய்விடுமா? வந்தது. ஆனால் எப்போன்னு நினைவில் இல்லை. ஆனால் ஒரு இடம், நேரம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு இந்துக்கோவில் பக்கத்தில் மேளம் அடிப்பதற்கோ எதற்கோ ஒரு உயர மேடை கட்டியிருப்பார்கள். நான் அதில் உட்கார்ந்திருக்கிறேன். கோவிலில் ஏதோ விசேஷம் போலும். கீழே நல்ல வெளிச்சம். எனக்கு ‘புகைத் தாகம்’ வந்திருக்கும் போலும்! ஒரு பேப்பரைச் சுருட்டி பீடி மாதிரி உருட்டி, ஒரு தீக்குச்சியை உரசி பற்ற வைத்தேன். பற்ற வைக்கும் போது மூச்சை உள்ளே இழுக்கணும் அப்டின்ற ‘இயற்பியல்’ மட்டும் தெரிந்திருந்தது. அதே போல் இழுத்தேன். அம்மாடி … தொண்டைக்குள் தீப்பிடிச்சது மாதிரி அம்புட்டு புகை .. இருமல் … கண்ணீர் .. இப்படியாச்சு என் முதல் புகைப்பிடித்த திருவிழா! எந்த வயசு என்று எதுவும் நினைவில்லை. ஏதோ ஒரு சிறு வயது. .. ஏதோ ஒரு கிராமத்து நிகழ்வு – இது மட்டுமே நினைவில் உள்ளது. எங்கே, எப்போது … ? எதுவும் நினைவில்லை.
நாமளும் வளர ஆரம்பிக்க வேண்டாமா? வளர்ந்து வரும் காலத்தில் இதற்கெல்லாம் மதுரை சரியில்லை என்று உணர்ந்து, நமது அடுத்த ‘போர்க்களம்’ நமது சொந்த ஊர்தான் என்று நிர்ணயம் பண்ணியிருந்தேன். எங்கள் ஊர்ப்பக்கம் வீட்டில் பெண்கள் எல்லோரும் அனேகமாக பீடி சுற்றுவார்கள். வீட்டிலோ, வீதியிலோ, முற்றத்திலோ நாலைந்து பேர் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே பீடி சுற்றுவதை ஊரில் எங்கும் காணலாம்.
நான் சின்னப்பயலாக இருந்த அந்தக் காலத்தில் எங்கள் பாட்டையா வீட்டில் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள். below our prestige …! வீட்டில் பாட்டையா காலங்கார்த்தால எழுந்திருச்சி, வயல் வேலைக்கு ஆட்களை விரட்டி அனுப்புவதில் குறியாக இருப்பார். நான் எழுந்திருக்கும் போதே அப்பாம்மா பெரிய பானை ஒன்றில் மோர் கடையும் ஒலி கேட்கும். பெரிய மத்து வைத்து கயிறு போட்டு கடைந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அத்தைமார்கள் வரிசையாக பாட்டையா நடத்திய பள்ளியில் ஆசிரியைகள். குடும்பம் அப்போது உச்சத்தில் இருந்தது.
முதல் கட்டு மெத்தையில் ஆறு ஏழு அடி உயரத்திற்கு நெல் குலுவைகள் சில நிற்கும். எல்லாவற்றிலும் நெல். அதற்கு மேலே உள்ள மெத்தையின் கூரை நடுவே ஒரு ஓட்டை. அங்கே காயப்போடும் நெல் மழை நாளில் நனைந்து விடக்கூடாதே என்று போட்ட ஒரு ஓட்டை. மழை வந்ததும் காயப்போட்ட நெல்லை கூட்டி, அந்த ஓட்டை மூலம் கீழே தள்ளிய ஒரு நாள் அனுபவம் இன்னும் நினைவிலிருக்கிறது. சரி … அப்படியெல்லாம் இருந்த வீடு எல்லாமுமாய் மாறி இப்போது இருக்கும் நிலையைச் சமீபத்தில் பார்க்கும் போது சோகமே மிஞ்சியது. பாட்டையா காலத்தில் நின்றிருந்த பீடி சுற்றல் இப்போது உறவு வீடுகளில் வழக்கமாகி விட்டது. மூன்று தலைமுறைகளில் இந்த பீடி சுற்றல் ஒரு reference point போல் ஆகி விட்டது. ம் ..ம்.. பாட்டையா வீட்டுப் பொருளாதாரம் அப்படி ஆகிப் போச்சே என்று சமீபத்தில் ஊருக்குப் போனபோது தோன்றியது. அப்படியே அம்மா ஊருக்குப் போனால் அங்கே எல்லாமே அப்படியே மாறி இருந்தது. அங்கே இருந்த செழிப்பு மனதுக்கு மகிழ்ச்சி. சரி …. நாம புகை விஷயத்துக்கு மறுபடியும் வருவோம்.
நானும், மதுரையிலிருந்தே வரும் பெரியப்பா வீட்டு அண்ணனும் ஒரு விடுமுறையில் பீடி குடித்து விடுவது என்று முடிவெடுத்தோம். ஊருக்கு வந்தாச்சு. கடையில் போய் பீடி வாங்கினால் அடுத்த நிமிடமே வீட்டுக்கு செய்தி வந்து விடும். ஊரில் அனைவரும் சொந்தக்காரர்கள் தானே… ! என்ன செய்வது …? ஆபத்பாந்தவனாக வந்தான் ஜான்சன். எங்கள் வயதுக்காரன். அவர்கள் வீட்டில் பீடி சுற்றுவார்களாம். நான் ஒரு கட்டு பீடி எடுத்துட்டு வந்திர்ரேன் என்றான். அடுத்து தீப்பெட்டி, அதுவும் யாரோ வீட்டிலிருந்து ‘சுட்டு’ விட்டு வருகிறோம் என்றார்கள்.
அடுத்து இடம் தேடும் படலம். யார் வீட்டு மாடியிலாவது வைத்துக் கொள்வோமா என்றுதான் முதலில் நினைத்தோம். அதுவும் பெரிய பாட்டையா வீடு – வாழைப்பழக் குலை வீடு – நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். பெரிய வீடு. மேலே போய்விட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனா யாராவது பார்த்து விட்டால் …? ஆக, அந்த இடம் வேண்டாம் என நினைத்தோம். பாட்டையா வீட்டுப் பள்ளிக்கூடத்திற்கு கிழக்குப் பக்கம் ஒரு ஓடை .. அதைத் தாண்டி ஒரு புளிய விளை. அந்த ஓடையில் தான் நாங்கள் வழக்கமாக ‘வேட்டைக்குப்’ போவோம். அங்கே போகலாம் என முடிவு செய்தோம். நாலைந்து பேர் – நான், அண்ணன் (Sam Joseph), ஜான்சன் … இன்னும் இரண்டு மூன்று பேர் போனோம். யார் யாரென்று நினைவில் இல்லை. ஜான்சன் நல்ல பையன்! ஏனென்றால் ‘நான் பீடி எடுத்து வந்து கொடுக்கிறேன். ஆனால் நான் குடிக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டான்.
புளிய விளைக்குப் போனோம். ஒரு புளிய மரத்தடியில் உட்கார்ந்து, அங்கிருந்து ஒரு நோட்டம் விடுவோம். பார்வையில் ஏதும் படவில்லையென்றால் பீடி பற்ற வைப்போம். காற்று, பயம், புதிய பழக்கம் – எல்லாம் சேர்ந்து பற்ற வைப்பதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகப் போனது. ஏதும் சத்தம் கேட்டால் பீடியை அங்கேயே போட்டு விட்டு அடுத்த இடத்திற்கு ஓடுவோம். இப்படியாக ஓடி ஓடி பீடி குடித்தோம். நாற்றம் தெரியக்கூடாதென்பதற்காக புளிய இலைகளை மேய்ந்தோம். பல மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினோம்.
ஆனாலும் இந்த ‘பீடி உற்சவம்’ எனக்கும் அண்ணனுக்கும் திருப்தி அளிக்கவில்லை. பீடியோடு நின்றால் நம் தகுதிக்கு என்னாவது என்று ஒரு நினைப்போ என்னவோ? சிகரெட் குடித்து விட வேண்டும் என்று நானும் அவனும் ஒரு திட்டம் தீட்டினோம்.
எங்கள் ஊரிலிருந்து ஓரிரு மைலில் ஆலங்குளம் என்றொரு பெரிய ஊர். அங்கு எங்களை யாருக்கும் தெரிந்திருக்காது. ஆக அங்கே போய் சிகரெட் வாங்கி விடலாம். அங்கே போய் சிகரெட், தீப்பெட்டி, வாசனை போக மிட்டாய் எல்லாம் கொள்முதல் செய்து விட்டு, இரண்டு ஊருக்கும் நடுவில் சாலையைத் தாண்டி ஒரு கிணறு – ஏறி இறங்க வசதியான படிகளோடு – தெரியும். அங்கே போய் ‘அடித்து விட’ திட்டம் தீட்டினோம். காசு எப்படி ‘சம்பாதித்தோமோ’ தெரியவில்லை. காசை எடுத்துக் கொண்டு ஆலங்குளம் போனோம். கடையில் நான் தான்சிகரெட் வாங்க வேண்டும் என்பது ‘அண்ணனின் ஆணை’! ஏனென்றால் நான் சின்னப் பையனாம் – அவனுக்கு என்னை விட இரு வயது அதிகம் – அதனால் யாரும் என்னைச் சந்தேகிக்க மாட்டார்களாம்.
கிணற்றுக்கு வந்தோம். சிகரெட் … ம்.. பற்ற வைத்தோம். சிகரெட்டின் முதல் பிரச்சனையைச் சந்தித்தோம். பீடியை நல்லா கடித்து வைத்துக் கொள்ள முடியும். இங்கே சிகரெட்டை வாயில் வைத்து இழுப்பதற்குள் முனை எச்சிலால் ஈரமாக … இழுத்தால் இருமல் வர … எப்படியோ ஒரு வழியாக ஒன்றிரண்டு சிகரெட் இழுத்துக் கொண்டிருந்திருப்போம்.
திடீரென்று தலைக்கு மேல் இரு உறவினர்கள் – மச்சான்கள் – வந்து நின்றார்கள். எங்களுக்கு ஏழெட்டு வயது மூத்தவர்கள். கிணற்றுக்குள் இறங்கி வந்தார்கள். ‘ஏண்டா … இப்படி சிகரெட் குடித்துக் கெட்டுப் போறீங்க’ன்னு ஒரே அட்வைஸ் மயம். மீதி இருந்த சிகரெட்டைத் தண்ணிக்குள் வீசியெறியச் சொன்னார்கள். சிகரெட் பாக்கெட்டைக் கிழித்து, அவர்கள் வைத்திருந்த பேனாவை வைத்து, ‘நாங்கள் இனி சிகரெட் குடிக்க மாட்டோம்’ என்று எழுதி அதன் கீழ் எங்களைக் கையெழுத்து போடச் சொன்னார்கள். கையெழுத்து போட்டதும், அந்த அட்டையைச் சுக்கு நூறாகக் கிழித்து கிணற்றுக்குள் போட்டார்கள். ‘இந்த அட்டைகளையெல்லாம் நீங்கள் ஒன்றாக்கினால் இனி நீங்கள் சிகரெட் குடிக்கலாம். அது முடியாவிட்டால் இனி நீங்கள் சிகரெட்டைத்தொடக் கூடாது’. என்று ஒரு புதிய சட்டம் போட்டார்கள். அதை மீறி சிகரெட் குடித்தால் என்னென்னமோ நடக்கும் என்று சொல்லி பயங்காட்டினார்கள்.
நல்ல பிள்ளைகளாய் இருவரும் கையெழுத்துப் போட்டு, அதைக் கிழித்துக் கிணற்றில் போட்டு வெளியே வந்தோம். அதென்னமோ என் அண்ணன் அந்த சட்டத்தைத் தாண்டாமல் சிகரெட்டை விட்டுட்டான். நாம தான் பயங்கர புரட்சியாளனாச்சே! கொஞ்ச நாள் சிகரெட் பக்கம் போகவில்லை. ஆனாலும், ஆசை விடவில்லை. மெல்ல அங்கங்கே, அப்பப்போ அப்டின்னு ஆரம்பிச்சி …. 26 வருஷம் குடிச்சி … 1990 ஜனவரி 6-ம் தேதி இரவு 10 மணி வரை ….. சுகமாக, அனுபவிச்சி, ஆனந்தமா குடிச்சிக்கிட்டு … இருமிக்கொண்டு இருந்தேன்.
ஆரம்பத்தில் பீடி கொடித்து உற்சாகப்படுத்திய ஜான்சனும் ஓரிரு ஆண்டுகளில் ஊரிலிருந்து சென்னை பயணமானான். புளிய விளை பீடிப் போராட்டத்திற்குப் பிறகு அவனோடு ஏதும் தொடர்பில்லாது போயிற்று. ஆனாலும் பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது என்ற நினைப்பு வரும் போதெல்லாம் ஜான்சனும் புளிய விளையும் மனசுக்குள் காட்சிகளாக விரியும். அதோடு சத்தியம் வாங்கிய மச்சான்களும் மனசுக்குள் வந்து தரிசனம் கொடுப்பார்கள்.
6
கணக்குப் புலி’ சூர்ய நாராயணன்
St. Mary’s Church
1955 – ‘58 ….
நம்ம கணக்குப் புலியைப் பற்றி சொல்றதுக்கு முன்னால் இன்னொரு பழைய கணக்கு வழக்கு பற்றி உங்களுக்குச் சொல்லணுமே .. இப்போவெல்லாம் +2-ன்னு பன்னிரண்டு வருஷம் படிக்கிறாங்களே .. நாங்க படிக்கும் போது +1 – பதினோரு வருஷம் தான் இருந்திச்சி. அதாவது பள்ளிக்கூடப் படிப்பு 5+6=11 வருஷம் தான். அதில் முதல் ஐந்து ஆண்டுகள் சின்னப் பள்ளிக்கூடம் .. அதாவது எலிமெண்டரி பள்ளிக்கூடம் / ஆரம்பப் பள்ளி. I to V Standards வரை அந்தப் பள்ளியில். அடுத்து உயர்நிலைப் பள்ளி. அதில் I to VI Forms. ஆறாவது ’பார்ம்’ முடிப்பது S.S.L.C. தேர்வுகளோடு. அதன்பின் கல்லூரியில் P.U.C. அடுத்து பட்டப் படிப்புகள்.
எந்த வகுப்பிலிருந்து சூரிய நாராயணன் எனக்கு வகுப்புத் தோழனாக இருந்தானென்று நினைவில்லை. ஆனால் III, IV & V பார்ம் படிக்கும் போது உடன் இருந்தது நல்லா நினைவில் இருக்கிறது. இந்த மூன்று பார்ம்களில் முதல் இரண்டு வருஷமும் எனக்கும் அவனுக்கும் போட்டியிருந்தது. எனக்கு எப்பவுமே ஒரு ராசி. உடன் படிக்கும் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நல்ல பெயர் .. நல்லா படிக்கிற பையன் என்று பெயர் இருக்கும். ஆனால் தேர்வுகளில் அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறது மாதிரி இருக்காது. கடைசி வரை இப்படித் தான். ஆனால், அது இந்தக் கணக்குப் பாடத்தில் ஆரம்பத்திலேயே கோணலாப் போச்சு.
மூன்றாம் பார்ம், அதாவது 8 வது வகுப்பில் இருக்கும் போது கணக்குக்கு எங்களுக்கு வந்த ஆசிரியர் பெயர்: சவுக்கடி சவரிமுத்து. கீழே வேட்டி. மேலே சட்டை போட்டு கோட்டு போட்டிருப்பார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு வைத்திருப்பார்; அதை வைத்து அடிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் எந்த சவுக்கும் பார்த்ததில்லை. கேட்டால் முன்பெல்லாம வைத்திருந்தார் என்று சீனியர்கள் சொல்லி விடுவார்கள். அவருக்கு நானும், சூரிய நாராயணனும் செல்லப் பிள்ளைகள். ஏன்னா … அம்புட்டு நல்லா கணக்கு போடுவோம். எங்க கணக்குப் புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 16 கணக்குகள் இருக்கும். அதற்கு முன்னால் இரண்டு மாதிரி கணக்குகள் இருக்கும். அந்தப் பதினாறு கணக்குகளில் முதல் மூன்றும் மிக எளிய கணக்குகளாக இருக்கும். கடைசி மூன்றும் மிகவும் கஷ்டமான கணக்குகளாக இருக்கும். ஒவ்வொரு கணக்கிலும் ஏதாவது ஒரு ‘பொடி’ இருக்கும்.
சவுக்கடி சார் வழக்கம் என்னன்னா, மாதிரி கணக்கை முதலில் சொல்லித் தருவார். அதன்பின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள முதல் இரு கணக்குகளும், கடைசி மூன்று கணக்குகளும் போடச் சொல்வார். நானும், சூரிய நாராயணனும் எப்போதும் வகுப்பை விட நாலைந்து அத்தியாயங்கள் முன்னால் போயிருப்போம். சாரும் எங்களைப் பார்த்து ’என்னடா .. இந்த அத்தியாயம் முடிச்சிட்டீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ஆமான்னு சொன்னதும் எங்களைக் கண்டுக்க மாட்டார். அதன்பின் ஒவ்வொரு கணக்குகளையும் அவர் சரி பார்க்கும் போது, எங்களைப் பார்த்து, ‘சரியா போட்டிருக்கீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ‘ஆமா’ன்னு சொன்னதும் தலையை ஆட்டுவார். அப்படி ஒரு ராஜ வாழ்க்கை….
எனக்கு கணக்கு போட ரொம்ப பிடிக்கும். (இப்ப கூட மனக்கணக்கெல்லாம் போட பிடிக்கும். ஒரு ‘டேஸ்ட்’ அதில் உண்டு.) அதுல இப்படி ஒரு போட்டியா? ரொம்ப ஜாலியா போட்டி போட்டுட்டு பண்ணிக்கிட்டு இருப்போம். அது எங்களிடையே நல்ல நட்பையும் வளர்த்திச்சு. இந்தப் போட்டி ஆங்கிலத்திலும் இருந்தது. அதிலும் இலக்கணம்னா ரெண்டு பேத்துக்கும் ரொம்ப பிடிக்கும். (கணக்குக்கும், ஆங்கில இலக்கண அறிவுக்கும் முழுக் காரணம் எங்க அப்பாதான். கணக்கிலேயும், ஆங்கிலத்திலேயும் பயங்கர வாத்தியார். பள்ளிக் கூடத்திலே அப்பாவுக்கு ரொம்ப பேரு .அப்பாவும் எங்க புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் தானே வேலை பார்த்தார்கள்.) அப்போவெல்லாம் இப்போது மாணவர்களைக் கெடுக்கிற ‘பயிற்சிப் புத்தகம்’ எல்லாம் கிடையாது. புத்தகத்தில் உள்ள கேள்வி, பதில்கள் தான். ஆனால் கணக்கு மாதிரி இதில் வகுப்புக்கு முன்னால் போவது என்பது இருக்காது.
இப்படி மூன்றாம் பார்மிலும் நான்காவது பார்மிலும் எனக்கும் சூரிய நாராயணனுக்கும் நடுவில் இரண்டு பாடத்திலும் எங்கள் வகுப்பின் முதல், இரண்டாம் இடத்திற்கான போட்டியிருந்தது. நான்காவது பார்ம் கணக்காசிரியர் நினைவில் இல்லை. வாழ்க்கை இப்படி நல்லா போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஐந்தாம் பார்ம் வந்தோம். இப்போது இருப்பது போல பல பிரிவுகள் அப்போது கிடையாது. ஆனால் ஒரே ஒரு பிரிவு உண்டு. கணக்குப் பாடத்தில் மட்டும் General maths & composite maths என்று இரு பிரிவுகள் இருக்கும். கணக்கு வராத கேசுகளுக்கு முதல் பிரிவு. கணக்குப் புலிகளுக்கு இரண்டாவது பிரிவு. என் தலைவிதி முழுவதுமாக மாறியதற்கு இப்பிரிவு ஒரு பெரிய காரணம்.
நானும் composite maths எடுத்தேன். General maths மாதிரி இல்லாமல், இங்கு அல்ஜீப்ரா, ஜ்யோமெட்ரி, தியரம், ரைடர் என்று என்னென்னமோ இருந்தது. வகுப்புக்கு வந்த ஆசிரியர் யாகப்பன். ஒல்லியா, உயரமா இருப்பார். டை இல்லாமல் கோட், பாண்ட்ஸ் என்று வருவார். அவர் வகுப்புக்கு வந்ததும் நான் அவருக்கு வைத்த பட்டப் பெயர்: ஆப்ரஹாம் லிங்கன். அவரு மாதிரியே இவரும் இருந்ததார். முதல் நாள் முதல் பெஞ்சில் இருந்த நான் மெல்ல அவர் கோட்டை ஒரு ஓரத்தில் பிடித்து இழுத்தது நினைவில் இருக்கிறது. முதலில் ரொம்ப லைட்டாக அவரை எடுத்துக் கொண்டேன். ஆனால் விதி அவர் மூலமாக வேறு மாதிரி என்னைப் பார்த்து பயங்கரமாகச் சிரித்தது.
யாகப்பன் புதியதாக வந்த ஆசிரியர். என் அப்பாவிற்கும் அவருக்கும் நன்கு பழக்கம். ஆக யாகப்பன் என்னைத் தன் ‘செல்லப் பிள்ளை’யாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அதுவே எனக்கு கணக்கில் மங்களம் பாட ஆரம்பித்து விட்டது. பார்ப்பதற்கு முதலில் சாதாரணமாகத் தோன்றிய யாகப்பன் சரியான ஸ்ட்ரிக்ட் வாத்தியார். நீளக் கையை நீட்டி, விரல்களை மடக்கி குட்டுவதற்குத் தயாராக என் தலை மீது கையை வைத்துக் கொண்டு என்னிடம் கேள்வி கேட்பார். அதாவது, அது தான் அவரது செல்லப்பிள்ளைக்கு அவர் கொடுக்கும் பரிசு. அவர் கேள்வி கேட்கும் போது கேள்வி மனசுக்குள் இறங்காது. அவரது கொட்டுதான் என் மண்டைக்குள் இறங்கும்.
என்ன பிரச்சனைன்னா, சிறு வயதிலிருந்தே மனப்பாடம் பண்ற ‘அருட்சக்தி’ என் பக்கம் வந்ததேயில்லை. மனப்பாடப் பகுதின்னாலே நான் முழுசா அவுட்! ஆனால் composite maths-ல் நிறைய மனப்பாடப் பகுதிகள் இருந்தன. தியரம் – ஒரு வார்த்தை மாறாமல் மனப்பாடமாக அதைப் படிக்கணுமாம். அதப் படிச்சாதான் ரைடர் போட முடியுமாம். அல்ஜீப்ரா … கடவுளே … (a+b)2-க்கு விடை மனப்பாடம் பண்ணினேன். ஆனால் (a+b)3-க்கும், (a+b+c)2-க்கும், (a+b+c)3-க்கும் நானெங்கே போவது! மனசுக்குப் பிடிச்ச கணக்கு இப்போ முழுசுமா பிடிக்காம போச்சு. ஒண்ணும் ஏறலை. ஏறத்தாழ இது என் படிப்பு முழுசையுமே சுனாமியா தாக்கியிருச்சி. என்னமோ தேத்தினேன். சூரிய நாராயணன் நட்பும் குறைஞ்சி போச்சு. S.S.L.C.-ல் ஏதோ .. எப்படியோ …மார்க்கமில்லாத மார்க் வாங்கி தேறினேன்.
அந்தக் காலம் மாதிரியே பள்ளியின் முன்னே இன்னும் ஒரு கடை.
காலங்கள் மாறுவதில்லை!
ஒன்பதாம் வகுப்பு வரை வகுப்பில் I was somebody; ஆனால் என் கணக்கு ஆர்வம் போனபின் I became a nobody. இது என் மேல் படிப்பையும் நிறைய மாற்றியது. அங்கும் நினைத்ததைப் படிக்க முடியாத parental pressure. எப்படியோ வண்டி ஓடி … இங்க வந்து பரிதாபமா நிக்குது! எப்படி இருந்த நான் composite maths-யினால் இப்படி ஆகி விட்டேன்!
சூரிய நாராயணன் நல்லா படிச்சி, S.S.L.C. முடிச்சதும் என்ஜியனீரிங் கல்லூரியில் சேர்ந்தது தெரியும். அவனது வீடு எங்க பள்ளிக் கூடத்திலிருந்து நேரே போனா .. சிந்தாமணி தியேட்டர் வரும். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் அம்சவள்ளி பிரியாணி கடை. அதைத் தாண்டியதும் முனிச்சாலை ரோடு வருமே .. அந்த தெரு முக்கில் தான் அவன் வீடு. ஒரு ஸ்ப்ரிங்க் கதவு போட்டிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் அவன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வரும். ஆனால் அவன் என்ஜினீயர்…. நம்ம சாதா டிகிரி … அப்டின்னு மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடும். அப்படியே உட்டுட்டேன்.
அவன் நிச்சயமா பெரிய ஆளா ஆகியிருந்திருப்பான்.
நல்லா இருடே .. !
7
கோபாலும் நாராயணனும் ...
1958 – 60 …..
1960-ல் S.S.L.C. தேர்வு எழுதினோம். ஆனால் அப்போது மாணவர்களான எங்களுக்கோ … இல்லை .. எங்கள் பெற்றோருக்கோ ஸ்பெஷலாக ’தேர்வுக் காய்ச்சல்’ ஏதும் வரவில்லை! அதெல்லாம் இப்போ உள்ள மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் தான். எங்கள் காலத்தில் அப்படியேதும் பெரிய ‘அழுத்தம்’ ஏதும் கிடையாது. படித்தோம் .. அரசுத் தேர்வு என்பது மட்டும் அடிக்கடி எங்கள் பேச்சில் இருக்கும். முனைந்து படிக்க வேண்டுமென்றெல்லாம் என் போன்ற மக்குப் பசங்களுக்கு அதிகம் தெரியாது. மற்ற வகுப்புகளை விடஇன்னும் கொஞ்சம் சீரியசாக இருந்தோம். அவ்வளவே …
படிப்பது அதிகமாக சாலை விளக்குகளுக்கு அடியில் தான். பாதி நேரம் அரட்டையும் விளையாட்டும் இருக்கும். எல்லாம் எங்கள் தெருப் பசங்களின்கூட்டாகத்தானிருக்கும். S.S.L.C. தேர்வுக்காக இன்னும் சிலநண்பர்களின் தொடர்பு கிடைத்தது. கோபாலும், நாராயணனும். இருவருமே என் வகுப்புத் தோழர்கள். நாராயணன் என்னை விட நன்றாகப் படிப்பான். கோபால் என்னைவிட கொஞ்சம் கம்மி. நாராயணன் கொஞ்சம் பணக்காரப் பையன். கோபால் என்னை விட சிறிது கம்மி. கோபாலும் நாராயணனும் என்னைவிட நெருங்கிய நண்பர்கள். கோபால், நாராயணன் வீட்டுக்குப் படிக்க வர ஆரம்பித்தான். நானும் சில நாள் அங்கே நாராயணன் வீட்டுக்கும் போவேன்.
பல நாள் கோபால் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னோடு படுத்துக் கொள்வான். அவன் சுத்த பயந்தாங்கோளி. அவனை அடிக்கடி பயமுறுத்துவேன். எங்கள் பக்கத்து வீட்டு மெத்தையில் ஒரு ஆள் தற்கொலை பண்ணிக் கொண்டதாகச் சொல்வார்கள். முதலில் எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அங்கேயே இருந்த்தால் அந்தப் பேய் எனக்கு தோஸ்த் ஆகி விட்டதா … இல்லை .. நான் அதோடு பழகி விட்டேனோ தெரியவில்லை. எனக்குப் பயம் போய் விட்டது. கோபால் தூங்க ஆரம்பிக்கும் நேரம் பார்த்து அந்த தற்கொலை பற்றிப் பேசுவேன். கோபால் எழுந்திருந்து உட்கார்ந்து கையெடுத்துக் கும்பிடுவான். அவன் தூங்கி நான் உடனே தூங்காவிட்டால் இடுப்பில் இருக்கும் பெல்டை எடுத்து கூறையில் இருந்து தொங்க விட்டு அவனை எழுப்பி .. பாம்புன்னு சொல்லி .. கத்தவைப்பதும் ஒரு ஜாலி! படிக்க வந்த நண்பனை இப்படி அலற விடுவதில் அப்படி ஒரு சந்தோஷம்!
கோபாலோடு சில நாள் நாராயணன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் இருந்ததோ சரியான ஒண்டுக் குடித்தனம். என்னைப் போல் ஆட்களுக்கு நாராயணன் வீடு ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவன் வீடு தெற்கு வெளி வீதியிலிருந்து தாயுமானம் பிள்ளை மருத்துவ மனைக்கு ஒரு சந்து போகுமே .. அந்த மூலையில் மெயின் ரோட்டில் தான் அவன் வீடு. நான் வழக்கமாக மளிகைச் சாமான்கள் வாங்கப் போகும் அருணாசல அண்ணாச்சியின் கடைக்கு நேர் எதிரே அவன் வீடு. உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் ஒரு பெரிய சமையலறை. அடுத்து ஒரு பெரிய வெற்றிடம் கூரை ஏதுமில்லாமல் இருக்கும். அதன் பின் அவன் வீடு. நாலைந்து படிகள் வைத்து உயரமாக, கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதற்குள் அதிகம் போனதில்லை. ஆனால் இடது பக்கம் ஒரு படிக்கட்டு மெத்தைக்குச் செல்லும். அதில் ஒரு பெரிய அறை. அதுதான் நாராயணனின் அறை. அவனுக்குப் படிக்க நிறைய வசதி இருக்கும். ஏன் நமக்கெல்லாம் இப்படி வசதியெல்லாம் இல்லை என்ற எண்ணம் அந்த அறைக்குள் நுழையும்போது எனக்குத் தோன்றும்.
மேற்குப் பக்கம் ஒரு ஜன்னல் இருக்கும். அதற்கருகில் ஒரு பாய் விரித்து வைத்திருக்கும். இந்த வேலை, சமையல் வேலையெல்லாம் பார்ப்பதற்கு அவர்கள் வீட்டில் ஒரு பெரிய வேலைக்கார அண்ணன் இருப்பார். அந்தப் பாயில் கணக்குப் பிள்ளை மேசைன்னு ஒண்ணு சொல்லுவாங்களே .. அது ஒண்ணு இருக்கும். மேல் மூடி சாய்வாக இருக்கும். அதைத் திறந்தால் உள்ளே நமது புத்தகமெல்லாம் வச்சுக்கலாம். அந்த மேசையின் ஓரத்தில் ஒரு சின்ன க்ளிப் ஒண்ணு இருக்கும். மேசையின் இடது பக்க ஓரத்தில் இருக்கும். அந்த க்ளிப்பில் ஒரு சின்ன குண்டு பல்பும் அதைச் சுற்றி ஒரு சின்ன ஷேடும் இருக்கும். அந்த ஷேடிலிருந்து இரண்டு கம்பி வளையங்கள் இருக்கும். அவைகளை பல்பின் மேல் அமுக்கினால் அப்படியே க்ளிப் மாதிரி ஒட்டிக்கும். வேண்டிய பக்கம் அதைத் திருப்பலாம். அட .. இதெல்லாம் பெருசா ..? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படாது! ஏன்னா நான் சொல்றது 52 வருஷத்துக்கு முந்திய விஷயம். அப்போ இதெல்லாம் பெரிய அதிசயம். அந்த மாதிரி சின்ன குண்டு பல்பெல்லாம் ரொம்ப அரிது. கட்டாயம் அது ஒரு ‘வெளிநாட்டுச் சரக்காகத்’ தான் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் ட்யூப் லைட் கூட கிடையாது.
ட்யூப் லைட் அப்டின்னதும் இன்னொண்ணும் நினைவுக்கு வருது. அந்தக் காலத்தில பஸ்ஸில் ராத்திரியெல்லாம் சின்னச் சின்ன பல்பு விளக்குகள் தானிருக்கும். கண்டக்டர்கள் எல்லாம் அந்த லைட் கிட்ட வந்து தான் டிக்கெட் எல்லாம் போடுவார்கள். கொஞ்ச ஆண்டுகள் போன பிறகு முதல் தடவையாக ட்யூப் லைட் போட்டு பஸ் போனதைப் பார்த்த போது மிக அதிசயமாக இருந்தது. என்னவோ .. அழகா .. லைட் போட்ட ஒரு பெரிய வீடு அப்படியே ரோட்டில் ஓடுவது போல் தெரிந்தது இன்னும் நினைவில் உள்ளது.
சரி … நாம நாராயணன் வீட்டுக்கு, அங்கிருந்த விளக்கிற்கு வருவோம் … அந்த விளக்கைப் பார்க்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த லைட் போட்டால் அந்த மேசையில் மட்டும் வெளிச்சம் அடிக்கும். இந்த மாதிரி லைட் எல்லாம் வாங்கிக் கொடுத்தால் நாமும் நாராயணன் மாதிரி நல்லா படிக்கலாம்னு ஒரு பக்கம் மைன்ட் வாய்ஸ் கேக்கும்!
அவ்வப்போது நாராயணன் வீட்டுக்கு கோபாலுடன் படிக்கப் போயிருந்தாலும் நாராயணனுடன் படித்ததை விட அவனோடு விளையாடியது தான் அதிகம். நாராயணன வீட்டுக்கு எதிரில்,அண்ணாச்சி கடைக்கு அடுத்ததாக ஒரு கார்ப்பரேஷன் பள்ளி இருந்தது. அந்தப் பள்ளிக்கூட வாசல் தான் எங்களுக்கு ஒரு‘விளையாட்டு மைதானம்’!
கோலிக்குண்டு, பம்பரம் எல்லாம் அங்குதான் விளையாடுவோம்.கோலிக்குண்டு விளையாட்டில் பேந்தா என்று ஒரு விளையாட்டுதான் அடிக்கடி விளையாடுவோம். அதில் நாராயணன் பயங்கர எக்ஸ்பெர்ட்.. பேந்தா எப்படி விளையாடணும் தெரியுமா? ஒரு சதுரம் அதுக்குள்ள குறுக்கா ஒரு கோடு .. தரையில வரைவோம்.
அதிலிருந்து ஒரு பத்து அடி தாண்டி ஒரு கோடு. அங்க இருந்து குண்டுகளை உருட்டி விடணும். யார் கோலிக் குண்டு அந்தச் சதுரத்திற்கு அருகில் இருக்கிறதோ அவன் ஜெயிச்சவன். மத்தவங்க குண்டு எல்லாம் அந்த சதுரத்திற்குள் வைத்து விட வேண்டும். ஜெயித்தவன் தன் குண்டு வச்சி,சதுரத்திற்குள் இருக்கும் குண்டுகளை சதுரத்திற்கு வெளியே வரும்படி அடிக்கணும். குண்டு வெளியே வந்ததும் ஜெயிச்சவன் சொல்ற ஆளுக மட்டும் குண்டை எடுத்துக்குவோம். கடைசியா ஒருத்தன் மாட்டிக்குவான். அவன் குண்டை மற்றவர்கள் மாற்றி மாற்றியடித்து அந்தச் சதுரத்திலிருந்து விரட்டி விடணும். யாராவது குறி வைத்து அடிக்கும் போது அடிக்காவிட்டால் அவன் அவுட்.. தோத்தவன் கடைசியில் முட்டிக் கையால் அந்தக் குண்டை சதுரம் வரைக்கு ‘தேக்கணும்’. நாராயணன் கோலிக்குண்டை அடிக்கும் போது அவனது வலது நடுவிரல் நல்லா வளையும். ஏறக்குறைய புறங்கையை தொடுறது மாதிரி வளையும். அதனால தூரத்தில் உள்ள குண்டையெல்லாம் குறியா அடிச்சிருவான். அதுனால அவ்னோடு சைடு சேர்ரதுல பேந்தா விளையாடும்போது போட்டியாக இருக்கும்.
அதோடு எனக்கு அப்போ ஒரு தியரி: நாராயணனின் கையெழுத்து நல்லாயிருக்கும். அவன் விரல் அப்படி அழகா வளையறதுனால தான் அவனால அழகா எழுத முடியுது என்பது என் அப்போதைய தியரி!
மூணு பேரும் S.S.L.C. முடிச்சோம். வேற வேற கல்லூரியில் சேர்ந்தோம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு கோபாலைச் சந்தித்தேன். நாராயணன் கலைக் கல்லூரியில் ஒரு ஆண்டு முடித்து விட்டு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்றும் அதிகம் தொடர்பில் இல்லையென்றும் சொன்னான்.
பின்னாளில் பார்த்த போது கோபால் அரசு நூலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினான். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து கோபாலைப் பார்த்தேன். மதுரை, சிம்மக்கல்லில் உள்ள தலைமை நூலகத்தில் பொறுப்பாளராக – Librarian –இருப்பதாக்க் கூறினான். நாராயணன் பற்றி ஏதும் தகவல் உண்டா என்று கேட்டேன். கோபாலுக்கு ஏதும் தெரியவில்லை. நான் ஒருமையில் கோபாலுடன் பேசினேன். கோபாலுக்கு அப்படிப் பேச மனம் வரவில்லை. மரியாதையாகப் பேசினா(ன்)ர் !
ஏனோ .. என்னை மாதிரி இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் இப்படி நல்ல மனிதர்களாக மாறிப் போனார்கள் …!
*
8
காணாமல் போன நண்பர்கள் - 9
*
பள்ளிக்கூடத்தில் எத்தனை எத்தனை நண்பர்கள். ஆனால் இப்போது, காலம் கடந்த காலத்தில் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வெகு சில பெயர்கள் மட்டுமே நினைவுக்குள் வருகின்றன. பெயர்கள் இல்லாத சில முகங்களும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் ஆரம்ப வகுப்புகளில் நினைவுக்கு வந்த அளவு கூட உயர் பள்ளி நாட்களில் பெயர்கள் நினைவுக்கு வரவில்லையே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்படிகொஞ்சம் நினைவுக்கு வரும் சில நண்பர்களின் தொகுப்பு தான் இது.
ஆறாம் பார்மில் எனக்கு அடுத்ததாக பெஞ்சில் அமர்ந்திருந்தவனின் முதல் பெயர் நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது பெயர் பார்க்கர். சிகப்பா,உயரமா, ஒல்லியா இருப்பான். பய .. செம காட்டான். என் கூட அடிக்கடி சண்டை போடுவான். பக்கத்தில் வேறு இருப்பானா … எப்போதும் என்னை நெருக்கி இடித்துக் கொண்டு எனக்கு அடுத்த பக்கம் இருப்பவனோடு என்னை மோத விடுவான். ஆனால் என்னை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் இடம் மாறுகிறேன் என்றால் நாலைந்து நாளைக்கு ஒழுங்காக இருப்பான். பிறகு பழைய கதையை ஆரம்பித்து விடுவான். நிறைய ‘கதை’ விடுவான். ஒரு. கதை மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. பல் விளக்க பேஸ்ட் தீர்ந்து போய் விட்டால் நீம் சோப்பில் பிரஷை நனைத்து தேய்த்துக் கொள்வேன் என்பான். உண்மையோ என்னவோ தெரியாது … ஆனால் அவன் பல் நல்ல வெள்ளையாகத் தானிருக்கும்!
எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு பெரிய ‘பையன்’ இருப்பார். அவரது பெயர் அப்துல்லா. எங்கள் தெருப்பக்கம் இருந்து தான் வருவார். ஒரு வேளை வயதும் அவருக்கு அதிகமாக இருக்கலாம். வகுப்பில் வெகு சிலரிடம் மட்டுமே பேசுவார். எங்களுக்கெல்லாம் அவர் தொடர்பில்லாத மனிதர். ஆசிரியர்கள் கூட அவரை அதிகமாகத் திட்ட மாட்டார்கள். ஆனால் பள்ளிக்கூடம் படித்து முடிந்ததும் அவரை நான் அடிக்கடி பார்ப்பேன். தெற்குவாசல் மார்க்கெட்டில் முதல் கடை அவர்களுடையதாக அப்போது இருந்தது. மாம்பழம் விற்பார்கள், இவர் கடையில் இருக்க மாட்டார். எப்போதாவது கடைக்கு வெளியே முதலாளியாக நிற்பார். நான் அந்தப் பக்கம் போனாலும் அவர் என்னைக் கண்டுக்க மாட்டார். நானும் ஒதுங்கிவந்து விடுவேன். தெற்குமாரட்டு மார்க்கெட்டை அவர் டென்டர் எடுத்திருப்பார் போலும். தினமும் ஒர் சின்ன காக்கிப் பை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தெருவில் இருக்கும் ஒவ்வொரு கடையாக காசு வசூலித்துக் கொண்டிருப்பார். நாங்கள் பள்ளி முடித்து ஓரிரு வருஷங்களில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த போஸ்ட் ஆபிசுக்கு எதிர்த்தாற் போல் ஒரே மாதிரியாக இரண்டு பெரிய வீடுகள் கட்டினார்கள். கட்டியதும் ஒரு நிக்காஹ் … நமது வகுப்புத் தோழருக்குத் தான். உள்ளதே ‘பெரிய’ ஆளாக இருப்பார். திருமணம் ஆனதும் இன்னும் பெரிய ஆளாக மாறி விட்டார். அதன்பின் அவர் என் வகுப்புத் தோழர் என்பதை நான் மறந்தும் விட்டேன்;மறைத்தும் விட்டேன்.
எங்கள் வகுப்பில் ஒரு வட இந்தியப் பையன். பெயர் என்னவோ ஒரு லால். மதுரையில் ஒரு பெரிய ரெடிட்மேட் கடை அவர்களுடையது. இவரை ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் லயன்ஸ் கிளப் ஒன்றிற்கு நான் பேச்சாளனாகப் போயிருந்த போது பார்த்தேன். மீட்டிங் முடிந்து காபி சாப்பிடும்போது அவர் பெயரைச் சரியாகச் சொல்லி நாங்களிருவரும் வகுப்புத் தோழர்கள் என்றேன். அவருக்கு நினைவில்லை. அன்று நான் ஷூ போட்டிருந்தேன். அவர் செருப்பு போட்டிருந்தார். அட … எதற்கு இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? பள்ளியில் படிக்கும்போது இவன்அடிக்கடி கருப்பு ஷூ போட்டு வகுப்பிற்கு வருவான். எட்டாவது வகுப்பில் என் அப்பாவிடமும் இவன் ஒரு மாணவன். ஒரு முறை என் அப்பாவிடம் எனக்கும் அவனை மாதிரி ஷூ ஒண்ணு வாங்கிக் கொடுங்கள் என்றேன். என் அப்பா, ‘அடச் சீ … போடா … உன் அப்பன் ஒரு மாசத்தில் சம்பாதிக்கிறதை, அவன் அப்பன் ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கிறான். அவன் மாதிரி ஷு கேக்குதா உனக்கு!’ என்றார், அவரை லயன்ஸ் மீட்டிங்கில் பார்த்ததும் இந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வந்தது.
அருட்பிரகாசம் அப்டின்னு ஒரு நண்பன். இவனை எனக்குப் பள்ளியில் படிக்கும்போது தெரியாது. அவன் வேறு செக்ஷன். பள்ளி முடித்து நான் கல்லூரி போன போது படிக்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு பள்ளி வளாகத்திற்கு வந்து விடுவேன். என்னைப் பார்த்து பரிதாபப் பட்ட ஒரு ஃபாதர் எனக்குப் படிக்க ஒரு அறை கொடுத்தார். அப்போது என்னோடு பள்ளியை முடித்த அருட்பிரகாசம் அரட்டை அடிக்க அந்த அறைக்குவருவான். அவன் அப்போது பள்ளியில் வேலைக்கு சேர்ந்து விட்டான். ஏழ்மை தான் காரணம். அவனுக்குப் படிக்க நிறைய ஆசை. வழியில்லாது போயிற்று., நன்றாகப் பாடுவான். அதிலும் அவன் பாடும் ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற சீர்காழி பாடிய, படத்தில் சுடுகாட்டில் பாடும் அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அதைப் பாடச் சொல்லிக் கேட்பேன்.அது ஒரு காலம் …!
இன்னொரு நண்பன். செளந்திர ராஜன். அவனும் எட்டாவது வகுப்பில் அப்பாவிடம் ட்யூஷன் படித்தான். எனக்கும் க்ளாஸ் மேட். சாதாரண பையன் தான். ஆனால் அவன் ஒன்பதாவது வகுப்பு போனவுடன் குழந்தையில்லாத அவன் பெரியப்பா அவனை தத்து எடுத்துக் கொண்டார். ஒரு வருஷத்தில் என்ன மாற்றம். தியேட்டர் ஓனர் .. அது இதுன்னு பெரிய ஆளாக ஆகி விட்டான். பின்னாளில் ஒரு கல்லூரியையே ஆரம்பித்து மதுரையின் பெரிய ஆளாகி விட்டார். ஆண்டுப் பிறப்பன்று ஓரிரு ஆண்டுகள் வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்து, டைரி,காலண்டர் எல்லாம் கொடுத்துவிட்டுப் போன பழக்கம் இருந்தது. பின்னால் நின்று போனது
மதுரையில் உள்ள ஒரு பெரிய பேக்கரியின் உரிமையாளரின் மகன். என்னைவிட ஓரிரு ஆண்டுகள் மூத்தவர். அவரின் பெயர் … சரி.. அது எதற்கு இங்கு? அவர் எங்கள் வீட்டுக்கு அப்பாவிடம் ட்யூஷன் பயில வருவார். அந்தக் காலத்தில் வரும் சைக்கிள்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மூணே மூணு வகையாக வேண்டுமானால் பிரிக்கலாம். 24 இஞ்ச்; 22 இஞ்ச்; & 18 இஞ்ச். அனேகமாக எல்லா சைக்கிளும் 22 இஞ்ச் தான். சிலர் பெரிய வண்டியாக, உயரமாக 24 இஞ்ச் வைத்திருப்பார்கள். இப்போது அது இல்லாமலே போய் விட்ட்து. இந்த 18 இஞ்ச் சைக்கிள்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரேர். பணக்கார வீட்டுப் பசங்க மட்டும் வைத்திருப்பாங்க; அதனால் இந்த சைக்கிளுக்குக் ரொம்ப மதிப்பு.. இந்த அண்ணன் எங்கள் வீட்டுக்கு அந்த சைக்கிளில் தான் வருவார். எனக்கு அப்போ 22 இஞ்ச் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டு மட்டும் ஓட்டத் தெரியும். இந்த சைக்கிள் ஓட்ட செம ஆசை. ஆனால் அந்த அண்ண்னிடம் கேட்டு வாங்கினால் அப்பாவுக்குத் தெரிந்தால் செமையா எனக்கு ஏதாவது கிடைக்கும். ஒரு நாள் அவர் வந்து சைக்கிளை வாசலில் நிப்பாட்டும் போது நான் ஜொள்ளு விட்டு நிற்பதைப் பார்த்து விட்டார். ’சைக்கிள் ஓட்றியா?’ன்னு கேட்டார். வேண்டாம்னு சும்மானாச்சுக்கும் சொன்னேன். ‘இல்லடா … ஓட்டு … அப்பாட்ட சொல்ல்லை’ன்னார். ஆஹா … சைக்கிளை வாங்கி குரங்குப் பெடலிலேயே ஓட்ட ஆரம்பித்தேன். சின்ன சைக்கிளா .. அது கஷ்டமாயிருந்த்து. அப்படியே சும்மா ஜாலியா காலை பார் மேலே போட்டேன். பயமா போச்சு … ஆனா நல்லா ஓட்ட முடிந்தது. அப்டியே சீட்ல ஏறி உட்கார்ந்த்தேன். அட்டே … அன்னைக்குத்தான் முதல் தடவையா சைக்கிளை முழுசா சீட்ல உட்கார்ந்து ஓட்டப் பழகினேன்.
*
9
இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு
1960 -61 ஆண்டில் ….
படிப்பு முழுவதுமே வீட்டில் இருந்து படித்தது தான் – ஒரே ஒரு வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து படித்தேன். 1960-61 – Pre-University Course. ’நவீனத்துவம் அப்டின்னா ரொம்ப ரீசன்டானவிஷயம்னு அர்த்தம். பிறகு அதில எப்படி பின்நவீனத்துவம்னு ஒண்ணு இருக்கும்?’ அப்டின்னு ஒரு பெரிய எழுத்தாளர் – 1980ல் – கேட்டார். ரொம்ப நியாயமான கேள்வியாக அது இருந்துச்சு. அது மாதிரிதான் இதுவும். இந்த வகுப்பை நடத்துவது Universityதான். ஆனால் அதுக்குப் பேரு மட்டும் Pre-University. எப்படியோ இதுவும் பின் நவீனத்துவம் மாதிரி ஒரு Oxymoron !
படிச்சது St. Xavier’s College, Palaymkottai. பெரிய ஆளுக எல்லாம் க்ளாஸ்மேட்டாக இருந்திருக்காங்கன்னு பின்னால தெரிஞ்சுது. ரொம்ப green horn ஆக இருந்த ஆண்டுகள் – எல்லா விஷயத்திலும். கால் சட்டை பத்தாமப் போய், நீளக் கால்சட்டை அதிகமாக இல்லாமல், ஈடு கட்ட நாலு முழ வேஷ்டி ஒண்ணு ரெண்டு .. அதையும் கட்டத் தெரியாது; கட்டினாலும் முதல் நாளே கட்டத் தெரியாம கட்டி, கால் கிட்ட வேட்டி கிழிந்து விடும். என்னத்தையோ போட்டுக்கிட்டு ஒப்பேத்தின ஆண்டு. இதில் ஹாஸ்டல் வாழ்க்கை வேறு, உலகமும் புரியாம, வாழ்க்கையும் பிடிபடாமல் ரொம்ப வித்தியாசமா இருந்த வருஷம். இதில் புதிதாக ஹாஸ்டல் வாழ்க்கை.வீட்டோடும் ரொம்ப ஒட்டு இல்லாமல் இருந்த
வருஷம். என்னை நானே நினச்சிப் பார்த்தா ரொம்ப பாவமான பையனாக இருந்திருக்கிறேன்.
Britto Hostel – இது கத்தோலிக்க கிறித்துவ மாணவர்களுக்கானது. அதனால் காசு கொஞ்சம் கம்மி. அதோடு சாப்பாடு சமாச்சாரமும் கொஞ்சம் கம்மின்னு சொல்லுவாங்க. ஆனாலும் மொதல் மொதல்ல வீட்டை விட்டு வெளியே சாப்பிடுற அனுபவம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலையில் ஊத்தப்பம் போடுவாங்க. ஆளுக்கு மூணோ .. நாலோ போடுவாங்க. அதைத் தட்டில் வச்சதும் நடுவிலே ஒரு குழி போடுவோம். அதில தண்ணியா ஒரு கறிக்குழம்பு ஊத்துவாங்க. எப்டின்னே தெரியாது. கறித்துண்டுகள் கடுகு சைஸில் அப்பப்போ கையிலேயோ வாயிலேயோ தட்டுப் படும்.ஆனால் எங்க எல்லோருக்கும் அது ரொம்ப பிடிக்கும். இன்னும் ஞாபகத்தில் இருக்குன்னா .. பார்த்துக்குங்களேன்!
மொதல்ல கொஞ்ச நாளைக்கு போடுற சாப்பாடு பத்தாது. ஆனால் சீனியர் அண்ணன்கள் சாப்பிட முடியாம மிச்சம் வைப்பாங்க. அதில் அப்படியே ஐக்கியமாகி சில P.U.C. பசங்க அந்த அண்ணன்மார்களோடு சாப்பிட சேர்ந்து போவோம். பூரி வச்சா அதில ஒண்ணு .. ரெண்டு நம்ம ப்ளேட்டுக்கு வந்திரும். அதே மாதிரி இட்லிலேயும் பங்கு வந்திரும். ஆனால் இதெல்லாம் அரைப் பரிட்சை வரைதான் .. அதுக்குப் பிறகு அவங்க வைக்கிறதே போதும்னு எங்களுக்கும் ஆயிடும். மீன் குழம்புன்னு ஒண்ணு வைப்பாங்க; வீட்ல அந்த மாதிரி மீன் சாப்பிட்டதில்லை. அதாவது ஒரே ஒரு துண்டு மீன் வைப்பாங்க. அதில் முள் .. கிள் எதுவும் இருக்காது. என்ன மீனோ.. அது மாதிரி முள் இல்லாத மீன் வீட்ல சாப்பிட்டதேயில்லை. சரி .. சாப்பாடு பத்தி இப்ப என்ன .. நம்ம கதைக்குப் போவோம் …
கழிவறை வரிசையாக இருக்கும். ‘தம்’மடிக்கிற ஆளுகளுக்குன்னு சில அறைகள் உண்டு. தீக்குச்சி .. தீப்பெட்டி சைடு எல்லாம் அங்கங்க இருக்கும். ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போனேன். இழுக்கிற சுகத்தை விட வார்டன் சாமியார் வந்து பார்த்திருவாரோன்ற பயம் ரொம்ப. அதினால் அங்கே தம் அடிக்கிறதை விட்டாச்சு. குளிக்கிறது எல்லாம் வெளியில ஒரு பெரிய தொட்டி இருக்கும். எப்போதும் தண்ணி நிறைஞ்சிருக்கும். மொத ரெண்டு போணி தண்ணி ஊத்துறது எல்லாமே ஒரே ஸ்டைல் தான். டொம்முன்னு பெரிய சத்தத்தோடு போணியை அடித்து குளிர்ந்த நீரை மேல ஊத்திக்குவோம்.
நண்பர்கள் அப்டின்னும் ரொம்ப கொஞ்ச பேருதான். ஹாஸ்டலில் தேவராஜ் அப்டின்னு ஒருத்தன். என் வகுப்பு கிடையாது. ஆனால் என் விடுதியறையிலிருந்து நாலைந்து அறை தாண்டி இருப்பான். விளையாட்டு நேரத்தில் ஒண்ணா இருப்போம். ரிங் டென்னிஸ் சேர்ந்து விளையாடுவோம். சாப்பிடச் செல்லும் போது சேர்ந்து போகும் நண்பன். ஒரு விடுமுறைக்கு வீட்டுக்கு போய்ட்டு வந்த அவன் ஒருநோட்டைக் குடுத்துப் படி அப்டின்னான். ஒரு கதை எழுதியிருந்தான். ஒரே காதல் கதை தான். நம்ம சினிமாவும் கதைகளும் காதலைத் தாண்டி எப்போதோன் வெளிய போயிருக்கு …? வாசிச்சேன். நல்லா புரிஞ்சுது. பய எதுலேயோ உழுந்துட்டான். சொந்தக்காரப் பொண்ணு. ஆனாலும் எங்க பழக்கத்தில அதையெல்லாம் அவன்கிட்ட நான் கேட்கவில்லை. ஆனா கதை வாசித்ததும் அதைப் பற்றிக் கேட்டான்.
அவன் சாப்பாடு சாப்பிட உட்கார அந்தப் பெண் பரிமாறுகிறாள். கழுத்துச் சங்கிலி அவன் கண்முன்னால் ஆடுகிறது. … இப்படியெல்லாம் போகும். நான் அந்தக் கதையைத் தொடர்ந்து .. அந்தச் சங்கிலி .. இன்ன பிற .. சில ‘உணர்ச்சி பூர்வமான’ after thoughts பத்திச் சொன்னேன். அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிது. என் கதையைத் தொடர்ந்து அதை எழுதுன்னான். நானும் எழுதினேன். அதை வாங்கிட்டு போய், அதுவும் அடுத்த லீவுக்கு வீட்டுக்குப் போய்ட்டு வந்ததும், மறுபடி அவன் எழுதி என்னிடம் கொடுக்க … நான் தொடர … மறுபடி அவன் எழுத … ஆகா .. அப்டி இப்டின்னு ரெண்டு குயர் நோட்டு ஒண்ணு நிறம்புறது மாதிரி ஒரு ‘மகா காவியம்’ ரெண்டு பேரும் சேர்ந்து படைச்சோம். ஒரே ஒரு வாசகன் எங்களுக்கு. தேவராஜின் ரூம் மேட். அவனும் ஆஹா .. ஓஹோன்னான். என்னிடம் தனியா அவன், ‘இந்தப் பய தேவராஜ் காதல்ல உழுந்துட்டான் .. அதைப் பத்தி எழுதுறான் … நீ எப்டிடா.. எதிலயும் உழாமலே வெளுத்துக் கட்டுற?’ அப்டின்னான்.
இப்படிப்பட்ட ஒரு ’மஹா காவிய’த்தை யார் வெச்சுக்கிறதுன்னு ஒரு பேச்சு வந்தது. தேவராஜ் அது தனக்கு வேணும்னுட்டான். எழுத ஆரம்பித்ததும் அவன். முக்கிய சரக்கெல்லாம் அவனுடையது. நான் எப்படி அதைக் கேட்க முடியும்? இந்தக் காலம் மாதிரி இருந்திருந்தா at least ஒரு photocopy எடுத்திருப்போம். அதெல்லாம் அந்தக் காலத்தில் ஏது. அதனால் நான் படைத்த ஒரு மஹா காவியத்தின் நகல் கூட என்னிடம் இல்லாது போயிற்று. நண்பனின் தொடர்பும் இல்லாது போயிற்று.
ச்சே .. தமிழ் இலக்கிய உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு …?!
மலரும் ஒரு எழுத்தாளன் அங்கே செத்து விட்டான் என்பது தான் ஒரு மாபெரும் சோகம்.
அப்போ நம்ம படைப்பெல்லாம் அப்படி ஆச்சுன்னா …
…… இப்போ நம்ம நிலைமை இப்படி ஆகிப் போச்சு !!!
10
கருப்பு ராமசாமி
1961-’64 ம் ஆண்டுகளில் …
P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. எனக்கு அப்போது மிகவும் பிடித்த பாடம். ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. ஆசிரியராக இருந்தும் B.A.-யை விட B.Sc. பெரிது என்ற எண்ணம் அவர்களுக்கு. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘காதலிக்க நேரமில்லை பட்த்தில் சொல்றது மாதிரி – சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிருக்கான்.)
பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன். நான் சேரும் போது கல்லூரி ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகியிருந்தது. வகுப்பில் சேர்ப்பதற்கான கடைசி நாளன்று தான் நான் சேர்ந்தேன். இதற்குள் கல்லூரி வகுப்பில் எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள் – என்னையும் எனக்கு முன் ஓரிரு நாட்களுக்கு முன் சேர்ந்த யோகேந்திரனையும் தவிர. யோகேந்திரன் இலங்கையிலிருந்து வந்தவர். பெரிய ஆள். நல்ல திடகாத்திரமான உடம்பு. எங்களை விட எல்லாம் வயது அவருக்கு அதிகமாக இருக்கும். எனக்கு வகுப்பில் கடைசி எண். எனக்கு முந்திய எண் அவருடையது. செய்முறை வகுப்புகளில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம், அதனால் எங்களுக்குள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நட்பு உண்டு. இன்னொரு காரணமும் பின்னால் வந்து சேர்ந்தது. கல்லூரியில் இருக்கும் போதே வைகை ஆற்றுக்குள்ளிருந்து சினிமா பாட்டு சத்தம் அடிக்கடி கேட்கும். நம்ம நண்பருக்கு சரோஜாதேவின்னா அப்படி ஒரு உசுரு. அதுவும் அவர் நடக்கிறதை பின்னால இருந்து காண்பிப்பாங்களே … அதுன்னா தலைவருக்கு அம்புட்டு ‘இது’ ! அவர் நடித்த பாட்டுன்னா போதும் … என்னைக் கூப்பிடுவார் … எப்டி என்பார் .. இசை மயக்கத்தில் கொஞ்ச நேரம் இருப்பார்.
மேஜர் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் எங்களோடு Physics, Chemistry பசங்களுக்கும் ஒன்றாக தமிழ் ஆங்கில வகுப்புகள் இருக்கும். நாங்கள் அந்த வகுப்புகளில் உட்காருவதை வைத்தே யார் நல்லா படிக்கிற பசங்கன்னு சொல்லிடலாம்! ஏன்னா … இரு வரிசை பெஞ்சுகளில் Physics மொதல்ல உக்காந்திருப்பாங்க; அடுத்து Chemistry; நாங்க எல்லோரும் கடைசி பெஞ்சுகளில். எங்களைப் பார்த்தால் அந்தப் பசங்களுக்கே கொஞ்சம் தெனாவெட்டாக இருக்கும்.
நான் சேர்ந்து சில நாட்களிலேயே எங்களுக்குக் காலாண்டுத் தேர்வு வந்து விட்டது. வகுப்பில் இதுவரை நான் ஒரு தனிக்காட்டுப் பறவை மாதிரிதான். அதிகம் நண்பர்கள் கிடையாது. இரண்டே இரண்டு நண்பர்கள். ஒருவர் பக்கத்துத் தெரு. பெயர் மாணிக்க வாசகம். நாங்கள் இருவரும் சைக்கிளில் கல்லூரிக்கு ஒன்றாக வர ஆரம்பித்தோம். அதன் மூலம் நண்பரானார். (ரொம்ப வருஷத்துக்கு முன்பே அவர் இறந்த செய்தி வந்தது.) இன்னொருவன் ராமசாமி. எங்கள் வகுப்பில் அப்போது மொத்தம் 3 ராமசாமிகள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்தோம். நம்ம தோஸ்த் ராமசாமி நல்ல கருப்பு. அதனால் அவனுக்குப் பெயர் கருப்பு ராமசாமி. இன்னொருத்தர் சிகப்பா இருப்பார். கொஞ்சம் வயது எங்களை விட கூட இருக்கலாம். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். ஆனால் எப்போதும் சிரித்த முகம். அவருக்குப் பெயர் சிகப்பு ராமசாமி. இன்னொருத்தன். அவனுக்கு வைத்த பெயர் scientist ராமசாமி; ஏன்னா எல்லா வாத்தியாரிடமும் நிறைய கேள்வி கேட்பான். நல்லா படிக்கணும் … முதுகலை போகணும் … கல்லூரி வாத்தியாராக வேண்டும் … இதெல்லாம் அவனது ஆசைகள். எல்லோரிடமும் இதைச் சொல்வான். சரி … அவன் என்ன ஆனான் என்பதைப் பிறகு சொல்கிறேன்.
காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் நான் பயந்தது zoology practical-க்கு மட்டும் தான். ஏனெனில் தேர்வுக்குள் எனக்கு இரண்டே இரு வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதில் ஒரே ஒரு practical – தவளையில் arterial system & venous system இரண்டு மட்டுமே செய்திருந்தார்கள். ஆனால் இதில் நான் venous system மட்டும் செய்திருந்தேன். அதிலும் எனக்கு ஒரு தகராறு. நான் செய்தது அதுவா .. இதுவான்னு ஒரு தகராறு. அதாவது எது arteries எது veins என்று குழப்பம். தவக்காளையில் எது மேல் பக்கம் (dorsal) எது கீழ் பக்கம் (ventral) என்றும் ஒரு தகராறு. எது எதுன்னு தெரியாம எது எதை நான் செய்றது அப்டின்னு ஒரே குழப்பம்.
தேர்வு அன்னைக்கி யோகேந்திரனிடம் சொல்லியிருந்தேன். சந்தேகம் கேட்பேன் என்று சொல்லியிருந்தேன். arterial system செய்யச் சொல்லிக் கேள்வி வந்ததும் யோகேந்திரனிடம் எதைச் செய்யணும்; மேலேயா கீழேயா என்று கேட்டேன். அவர் மேலே என்றார். அதாவது அவர் dorsal என்ற பொருளில் சொல்ல, நான் தவக்காளையை ஓப்பன் செய்ததும் மேலே உள்ள (ventral) உள்ள venous system செய்து வைத்து விட்டு வந்திட்டேன்.
மதிப்பெண்கள் வந்தன. மேஜரில் ஆசிரியர் சொல்லும் போது fifty and fifteen என்றார். அதாவது தியரியில் 50; செய்முறையில் வெறும் 15. ஊத்திக்கிரிச்சி. ஆனாலும் நம்ம புகழ் அதற்குள் ‘திசையெங்கும்’ பறந்து விட்டது. ஏன்னா .. தமிழில் எல்லோரும் ஓரளவு மதிப்பெண்கள் வாங்கியிருந்தோம் . ஆனால் ஆங்கிலத்தில் பலருக்கும் ‘ஊத்திக்கிச்சி’! எங்கள் வகுப்பில் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் ரொம்ப மோசமான மார்க். ஆனா … நான் மட்டும் இரண்டாவது மார்க் – அதாவது Physics, Chemistry, zoology மூன்று வகுப்பிலும் இரண்டாவது மார்க். முதல் மார்க் ஒரு Physics பயல். மேஜரில் 50 மார்க் நல்ல மார்க்காகவே இருந்தது. (ஐம்பது மார்க் என்பதெல்லாம் நல்ல மதிப்பெண்கள் என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு எங்கே தெரியப் போகுது!)
என்னடா .. நேத்து வந்த பயல் இப்படி மார்க் வாங்கிட்டானேன்னு எங்க வகுப்பில் எல்லோருக்கும் ரொம்ப ‘இது’! அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மார்க் வாங்கினது நம்மள எங்கேயோ தூக்கிட்டுப் போயிரிச்சி. நம்ம கருப்பு ராமசாமிக்கு இப்போ இன்னும் கூட நெருங்கிட்டான். பால சுப்ரமணியன் என்ற பாலு என்பவனுக்கும் ஆசிரியர் ஆக வேண்டுமென்ற ஆவல் நிறைய. அதற்காகவே அவன் அடிக்கடி ஆங்கிலத்தில் பேச முயல்வான். (அவன் படித்து முடித்து ஆசிரியராக ஆனான் என்பதும் தெரியும்.) அவனுக்கும் என்னிடம் புதியதாக நட்பு பிறந்தது.
நானும் சும்மா சொல்லக் கூடாது. மொழிப்பற்று எக்கச் சக்கம் தான். நான் ஆங்கிலம், தமிழ் இரண்டிற்கும் எடுத்த முயற்சிகளை என் மேஜர் பாடத்திற்குக் கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சம் பெரிய ஆளாக ஆயிருந்திருப்பேன். ஆனால் எனக்கோ ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வழக்கமாக இறுதித் தேர்வில C Grade தான் போடுவார்கள். B grade கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு ஆங்கிலத்தில் B grade; தமிழில் A grade வாங்கி விட வேண்டுமென்று ஆவல் அதிகம். அதற்காகவே இரு பாடங்களில் மிகுந்த சிரத்தை எடுத்தேன்.
தமிழ், ஆங்கில வகுப்புகள் அனேகமாக எல்லோரும் சேர்ந்து பெரிய வகுப்பாக இருப்பதால் கொஞ்சம் கலாட்டாக்கள் இருக்கும். அதுவும் தமிழ் வகுப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் எனக்கு வந்ததில் செய்யுள் எடுத்த ஆசிரியரிடம் பாச்சா பலிக்காது. ரொம்ப அழகாகப் பாடி பாடம் எடுப்பார். ஒரு செய்யுளை ராகத்தோடு பாடிவிட்டு, அதே ராகத்தில் உள்ள ஒரு சினிமாப் பாட்டையும் பாடுவார். இன்னொரு ஆசிரியர். அவர் பின்னாளில் கல்லூரியின் முதல்வரானார். அவர் வகுப்பில் கொஞ்சம் கலகலப்பு இருக்கும் – மாணவர்களிடையே. ஒரு நாள் எல்லோரும் ஏதேதோ கத்திக் கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆசிரியர் நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் வந்து என் அருகில் நின்று, என்னைப் பார்க்காமலேயே, ‘நீங்கள் எல்லாம் முதல் வகுப்பு வாங்கக் கூடிய மாணவன் என்று நினைத்திருந்தேன் … நீங்களுமா இப்படி’, என்றார். அதிலிருந்து அவர் வகுப்பில் ரொம்ப நல்ல மாணவன். இன்னும் இரு பேராசிரியரர்கள். அவர்கள் இருவரும் அப்பா, பிள்ளைகள். பிள்ளை ஆசிரியர் கல்லூரி விட்டு விலகி சென்னை சென்று இறுதியில் துணை வேந்தர் அது இதுன்னு பெரிய ஆளாக ஆனார். அப்பா-ஆசிரியர் நிறைய நூல்கள் எல்லாம் எழுதியவர் தான். ஆனாலும் அவர் வகுப்பென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.
ஆங்கில ஆசிரியர்களில் நான் மாடலாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் பேரா. சக்தி வேல். வகுப்பில் பாடம் மட்டும் இருக்காது. அவர் வகுப்பில் அமர்ந்திருப்பதே நன்கிருக்கும். இவரை நான் பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது என் பெயரைச் சொல்லி எப்படி இருக்கீங்க என்று கேட்டார். ஜன்மம் சாபல்யமடைந்தது! அவ்வளவு மகிழ்ச்சி. அத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவில் வைத்திருக்கிறாரே என்று மிக சந்தோஷப்பட்டேன்.
இவரையும் இன்னொருஆசிரியரையும் நான் ரொம்ப கொடுமைப் படுத்துவேன் ! வேறொன்றுமில்லை. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்பதற்காக இரு bazar notes வாங்கி, அதை வைத்து நானாக essays எழுதி திருத்தி வாங்குவேன். ஒரு நோட்ஸ் – EASY GUIDE – சுப்ரமணியன் B.A., L.T. – இவர் பள்ளிக்கூடங்களில் நோட்ஸ் போடுவதில் வல்லவர். கல்லூரிக்கு போடும் நோட்ஸ் ரொம்ப ரொம்ப சிம்பிளாக இருக்கும். இன்னொரு நோட்ஸ் – MINERVA GUIDE – பரசுராமன் M.A. – இவரது நோட்ஸ் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒவ்வொரு வாக்கியத்திலும் நாலைந்து வர்த்தைகள் புரியாத வார்த்தைகளாக இருக்கும் படி ‘பயங்கரமா‘ எழுதியிருப்பார். Shakespeare-க்கு Banerji அப்டின்னு பெரிய ஆளு .. அதோடு இன்னொரு நோட்ஸ். ஆசிரியர் BARNES என்றோ என்னவோ ஒரு பெயர். திருவள்ளுவருக்கு பரிமேலழகர் மாதிரி Shakespeare-க்கு இவர் என்பார்கள். இவைகளையெல்லாம் வாங்கி எல்லாவற்றையும் வாசித்து, நானாக ஒரு கட்டுரை எழுதி ஆசிரியர்களிடம் எழுதிக் கொடுத்து, அவர்களை அனத்து என்று அனத்தி திருத்தி வாங்குவேன்.
ஆங்கிலத்திற்கு இத்தனை நோட்ஸ் வாங்குவேன். அப்போது தமிழுக்கு கோனார் நோட்ஸ் மிகப் பிரபல்யம். நான் தமிழுக்கு மட்டும் எந்த நோட்ஸும் வாங்க மாட்டேன். தமிழுக்குத் தனி நோட்டு போட்டு நானே பொழிப்புரையும் மற்றவைகளையும் எழுதிய சிரத்தையுள்ள ஒரே தமிழ் மாணவனாக இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். தேர்வுகளிலும் முதல் பக்கத்தில் ஐந்து இலக்கணக் குறிப்புகள் கேட்பார்கள். அதில் மார்க் குறைக்க முடியாது. ஐந்தும் முதல் பக்கதில் எழுதி சுளையாக 10 மார்க் வாங்குவது ஒரு வழக்கம்.
இப்படியெல்லாம் இரு மொழிகளுக்கும் சிரத்தை எடுத்துப் படித்தேன்….
ஆனாலும் இவ்வளவு சிரத்தை எடுத்தும் இறுதியில் பாதிக் கிணறு தான் தாண்டினேன். ஆங்கிலத்தில் C Grade தான். ஆனால் தமிழில் கல்லூரியிலேயே இருவர் மட்டும் முதல் வகுப்பு – A grade – வாங்கினோம். இன்னொருவர் ஆங்கிலத் துறை மாணவன். அவர் இன்னும் நன்கு படித்து I.A.S. ஆனதாக அறிந்தேன். நான் வழக்கம் போல தரிசு ஆய்ட்டேன்.
நம்முடைய மொழிப்புலமையால் (!) என்னிடம் கருப்பு ராமசாமிக்கு ஏக ஈர்ப்பு. ரிகார்ட் நோட்ல படமும் அவனை விட நல்லா நான் வரைவேன். படிப்பில் உதவி கேட்பான். டிகிரி முடித்ததும் B.Ed. முடித்து ஆசிரியரானான். நான் கல்லூரி செல்லும் சந்தைப் பேட்டையில் தான் குடியிருந்தான். அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் படிப்போடு இருவருக்கும் தொடர்பின்றிப் போனது. படிக்கும் போது அடிக்கடி வீட்டிற்கும் வருவான். என் வீட்டிற்குப் பக்கத்தில் எனக்கு இருந்த distraction அவனுக்கும் தெரிந்ததா … அப்போ கேட்டான்: ‘ஏண்டா … இதையெல்லாம் வச்சிக்கிட்டே இப்படி படிக்கிறியே .. இதுவும் இல்லாட்டி ரொம்ப நல்லா படிப்பியோ?’
தெரியலையே ’ப்பா … !
11
தப்பு செஞ்சா பயந்துகிட்டே செய்யணும் !
1961 – 62 ஆண்டில் …
P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் – காதலிக்க நேரமில்லை.)
பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன்.
P.U.C. விடுதியில் என்னோடு படித்த மாணவன் ஒருவனை தற்செயலாக மதுரை தூய மரியன்னை கோவிலில் சந்தித்தேன். அவனின் இரண்டாவது பெயர் மைக்கிள். முதல் பெயரும் ஏதோ ஒரு ஆங்கிலப் பெயர். என்னைப் போல் நல்லவனாக (!) அவனும் சாமி கும்பிட அங்கே வந்திருந்தான். பழைய அறிமுகத்தையும், நட்பையையும் அங்கே புதுப்பித்துக் கொண்டோம். எங்கள் வீட்டுக்கும் அழைத்திருந்தேன். அதன்பின் அவன் அவ்வப்போது கோவிலுக்கும் வீட்டுக்கும் வர ஆரம்பித்தான்.
அவன் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். ஆள் செம குச்சி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. தம் அடிக்க ஆரம்பித்திருந்தான். எங்கேயாவது சேர்ந்து, ஒளிந்திருந்து அடிப்போம். அதற்காகவே அவனும் அடிக்கடி கோவிலுக்கும் இதற்கும் சேர்ந்து வர ஆரம்பித்திருந்தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அதில் உள்ள ஒரு குறுக்குச் சந்துதான் எங்கள் புகைப்பிடமாக இருந்தது.
ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் எங்கள் மறைவிடம் தேடிப் போய்க்கொண்டு இருந்தோம். இருட்டத் தொடங்கிய மாலை நேரம். தெற்குவாசல் பக்கத்தில் ஒரு டீக்கடையின் வாசலில் ஒரு போலீஸ்காரர் நிற்பது தெரிந்தது. அப்போதெல்லாம் சைக்கிளில் விளக்கு இல்லையென்றால் போலீஸ் புடிச்சுக்கும். என் வண்டியில் டைனமோ இருந்தது. ஆனால் அவன் சைக்கிளில் டைனமோ லைட்டோ மண்ணெண்ணெய் விளக்கோ எதுவும் இல்லை. அதற்காகவே நானும் என் சைக்கிளில் விளக்கைப் போடவில்லை.
சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ‘தல’யப் பார்த்ததும் மரியாதையாக இறங்கி சைக்கிள்களை உருட்டிக் கொண்டு வந்தோம். ஆனால் தல எங்களைக் கண்ணி வச்சி பிடிச்சிட்டார். ‘யார்ரா நீங்க?’ அப்டின்னார். மைக்கிள் வேகமாக ‘இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்’ என்றான். அப்போதெல்லாம் மக்களிடையே மருத்துவக் கல்லூரி மாணவர் என்றால் பெரிய கித்தாப்பு தான். தல அதுக்கு மேல எங்கட்ட பேச விரும்பலை; எங்க ‘ஸ்டேட்டஸ்’ அப்டி ஆகிப் போச்சு!.
ஆனாலும் ’வாங்க .. ஸ்டேஷனுக்கு வந்து ஐயாட்ட சொல்லிட்டு போங்க’ அப்டின்னு பக்கத்தில் இருக்கிற தெற்குவாசல் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். நாங்க ரெண்டு பேரும் தலைக்குப் பின்னால் போகும் போது அட்ரஸ் எல்லாம் கேட்டா பெயரை மாற்றிக் கொடுத்துர்ரதுன்னு பேசி முடிவு பண்ணிட்டோம்.
அங்க போனா ‘ஐயா’ இல்ல. ரைட்டர் மட்டும் இருந்தார். இப்போ எங்களுக்கு ரைட்டர் தலையாயிட்டார். ’என்ன கேசு?’ என்றார்; ’லைட் இல்லாம போனாங்க’ என்றார் போலீஸ்காரர். ‘நீங்க யாரு … என்ன செய்றீங்க?” என்று எங்களைப் பார்த்து ரைட்டர் கேட்டார். ‘மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோம்’. ரைட்டர் இது பெரிய கேஸ் அப்டின்னு நினச்சுட்டார் போலும். உங்க முகவரி கொடுத்துட்டு போங்க .. நாளைக்கு வந்து ஐயாவைப் பார்க்க வாங்க’ அப்டின்னார். எங்கள் பெயர், முகவரி எல்லாம் கேட்டார்.
நான் ஏற்கெனவே அந்த சமாச்சாரங்களை ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஒரு பெயர், ஒரு இனிஷியல், இனிஷியலுக்கு ஏத்த மாதிரி ஒரு அப்பா பெயர் … இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விருதுநகருக்கு அப்பாவுடன் சென்று வந்திருந்தேன். அங்கே ஒரு தெப்பக்குளம் பார்த்திருந்தேன். வடிவேலுவிடம் பார்த்திபன் துபாய் முகவரி சொன்னது மாதிரி நானும், வீட்டு நம்பர், தெப்பக்குளம் மேலத்தெரு, விருது நகர் அப்டின்னு சொல்லிட்டேன். எழுதிக்கிட்டார்.
ஆனால் அடுத்து நம்ம நண்பனைக் கேட்டார். பயல் எதுவும் யோசிச்சி வைக்கலை போலும். தனது சரியான இனிஷியலைச் சொல்லித் தொலைத்தான். அடுத்தது அப்பா பெயர் கேட்க இவன் ஏதோ ஒரு பெயர் சொன்னான். எனக்கு உதைப்பு. அப்பா பெயரும் இனிஷியலும் ஒத்துப் போகலைன்னு இன்னைக்கு தலயும், நாளைக்கு ‘ஐயா’வும் கண்டு பிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயம். ஆனால் இப்போ தல கண்டு பிடிக்கலை.
’போய்ட்டு நாளைக்கு வந்து ஐயாவைப் பாருங்க’ என்றார் ரைட்டர்.
வெளியே வந்ததும் ‘ஏண்டா இப்படி மடத்தனம் பண்ணுன ..?’ அப்டின்னு கேட்டேன்.
’ஏண்டா .. என்னாச்சு?’ என்றான்.
‘இனிஷியல் ஒண்ணு; அப்பா பேரு வேற … நாளைக்கு இன்ஸ்பெக்டர் மாட்டப் போறார்’ என்றேன்.
’அட போடா … நாளைக்கு வந்தாதான …’
‘அப்போ வர வேண்டாமா?’
எனக்குப் பயம். வீடு வேற பக்கத்தில இருக்கு. மறுபடி போலீஸ் கண்ணுல பட்டா என்ன ஆகும்னு பயம்.
’அட போடா! அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்றான் தைரியமாக. ஆனால் அவன் தைரியமெல்லாம் எப்டின்னு தெரியுமா …? அதுக்குப் பிறகு வீட்டுக்கு வருவதை உட்டுட்டான். அவனை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. போலீஸ்காரங்க புண்ணியத்தில் ஒரு நண்பன் காணாமல் போய்ட்டான்!!
*
அந்தக் காலத்தில் சாலைகளில் விளக்கு அதிகம் இருக்காது, சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் விபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவே
இந்த லைட் எல்லாம் பார்த்திருக்கீங்களா? கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய்யும், மண்ணெண்ணெயும் சேர்த்து போட்டு எரிய வைக்கணும். காத்து வேகமா அடிச்சா அணைஞ்சிரும். அத ‘உயிரோடு காப்பாத்தி’ போறதே பெரிய வேலை !!!
சைக்கிளில் கட்டாயம் லைட் தேவை. அப்போ இதெல்லாம் எனக்குப் புரியலை.
அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு பெரிய வித்தியாசம். நாங்களும் அப்போவெல்லாம் தப்பு செஞ்சோம். லைட் இல்லாம இரவில் சைக்கிள் ஓட்றது … டபுள்ஸ் போறது … NO ENTRY-ல் போறது …. ஆனால் தப்பு செய்றோம் அப்டின்ற பயத்தில் பயந்து பயந்து போவோம். மனசாட்சி குத்தும்.
இப்போ மக்களுக்கு இது மாதிரி தப்பு செய்யும் போது கொஞ்சம் கூட பயம் இல்லையே.
ஏன் ?
12
சயன்டிஸ்ட் ராமசாமி
1961-’64 ம் ஆண்டுகளில் …
எதையோ படிக்க ஆசைப்பட்டு, எதோ ஒரு துறையில் சேர்ந்து இளங்கலைப் பட்டப் படிப்பையும், முதுகலைப் பட்டப் படைப்பையும் இந்த ஐந்து ஆண்டுகளில் முடித்தேன். இளங்கலையில் முன்பே சொன்னது போல் சயன்டிஸ்ட் ராமசாமி ஒரு நல்ல நண்பனாகவும், படிப்பில் ஒரு போட்டியாளனாகவும் இருந்தான். மேஜர் பாடங்களில் என்னைத் தோற்கடிப்பது என்றால் அவனுக்கு அம்புட்டு ஆசை. கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான். வகுப்பில் நிறைய கேள்வி கேட்பது இவனும், இன்னொரு நண்பன் -பால சுப்ரமணியன், ஏற்கெனவே ஆசிரியராக வேண்டுமென்ற ஆவலில் ஆங்கிலத்தில் அடிக்கடி பேச முயலும் நண்பன் என்று கூறியிருந்தேனே அவன் தான் – இந்த இருவரும் தான். இந்த இருவரில் பாலு அதிகம் என்னோடு பழகியதில்லை. ஆனால் நம்ம சயன்டிஸ்ட் ராமசாமி என்னோடு நல்ல நட்போடு இருந்தான்.
இளங்கலை முடித்ததும் நானும் இன்னும் இரு வகுப்புத் தோழர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு முட்டு முட்டினோம். அதைப் பற்றி பிறகு பேசுவோம். அந்த சோகக் கதை முடிந்ததும் மீண்டும் தியாகராஜர் கல்லூரியிலேயே முதுகலைக்குச் சேர்ந்தேன். அந்த ஆண்டு நான் மட்டுமே முதுகலை வகுப்பில் அங்கேயே படித்த ஒரே பழைய மாணவன்.
இதுவரை தொடர்பில் இல்லாதிருந்த P.G. Professor, Dr. கண்ணன் என்னை ஓரிரு ‘வால் தனமான நேரங்களில்’ பார்த்து விட்டார். என்னைப் பற்றி பிற ஆசிரியர்களிடமும், என் சீனியர் மாணவர்களிடமும் நிறைய புகார் பட்டியல் கொடுத்திருக்கிறார். முதலாண்டில் அவரைக் கண்டாலே எனக்கு அரட்டியாகி விட்டது. பலரும் என்னை மிகவும் பயமுறுத்தி வந்தார்கள். ஆனால் முதலாண்டில் அவரிடம் மிகவும் பயந்து போயிருந்தேன். அந்த ஆண்டின் மதிப்பெண்கள் எங்களுக்குக் கிடைக்காது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் தான் மதிப்பெண்கள் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் என் முதலாண்டு மதிப்பெண்கள் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். தலைவர் காதிற்கும் அது போயிருக்கிறது, இதனால் இரண்டாமாண்டிலிருந்து நான் தலைவரின் செல்லப் பிள்ளையாகி விட்டேன். எதற்கும் தலைவர் என்னைத்தான் கூப்பிடுவார். நிறைய செல்லம் … நிறைய உரிமை … அதனாலேயே அந்தக் கல்லூரியிலேயே நான் ஆசிரியனாகச் சேர வேண்டுமென்று அவரே எனக்காக முயற்சித்தார். ஜாதியோ .. காலமோ … கடவுளோ (???) .. வேறு விதமாக முயற்சிக்க எனக்கு அங்கு வேலை கிடைக்காமல் போயிற்று.
இளங்கலை முடித்து விட்டு சயன்டிஸ்ட் ராமசாமி ஓராண்டு ஆசிரியர் வேலைக்குப் போய் விட்டு, அதன்பின் என் ஜூனியராக முதுகலைக்கு வந்தான். Ph.D. என்ற குறிக்கோளோடு படிக்க ஆரம்பித்தான். முதுகலை முடிந்ததும் நான் கல்லூரி ஆசிரியனாக தஞ்சைக்கருகில் உள்ள பூண்டி வாண்டையார் கல்லூரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன்.
முதுகலை முடிந்த பிறகு எனக்கும் சயன்டிஸ்ட் ராமசாமிக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் அவன் என்னைத் தேடி நான் அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்ப்பது தெரிந்து ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தான். சயன்டிஸ்ட் ராமசாமி இப்போது போலீஸ்கார ராமசாமியாக ஆகியிருந்தான். கல்யாணம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒரு D.S.P. ஆகியிருந்தான். போலீஸ்காரனாகவே என்னைப் பார்க்க கல்லூரிக்கு தனது ஜீப்பில் வந்திருந்தான். எங்கள் துறைக்குப் பக்கத்தில் இருவரும் ஜீப்புக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்கு என்னைப் பார்த்துப் பொறாமை! இப்படி ஒருஆசிரியனாக ஆகாமல் போய் விட்டேனே என்று கவலைப் பட்டான். எனக்கு அவனைப் பார்த்து- இப்படியெல்லாம் பெரிய ’ஆப்பிசராக’ இல்லாமல் போய்விட்டோமே என்று – பொறாமை !!
அவன் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற பின் நண்பர் ஒருவர் ‘யாரது’ என்றார். சொன்னேன். அவர், ‘நீங்க ரெண்டு பேரும் பேசாம வேலையை மாத்திக்கலாம்’ என்றார்.
’ஏன்?’
‘இல்லை .. ரெண்டு பேரும் நிற்கும் போது அவர் நல்ல மனுஷன் மாதிரி கையைக் கட்டிக்கிட்டு softஆன ஆள் மாதிரி நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நீ … பெருசா அந்த ஜீப்பே உன்னுடையது மாதிரி சாஞ்சு நின்னுக்கிட்டு பந்தா பண்ணிக்கிட்டு இருந்தது மாதிரி தெரிந்தது. அவரு வாத்தியாரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’ அப்டின்னார்.
அவரிடம் அவனது ஆசை, கவலை பற்றிச் சொன்னேன்.
அதற்குப் பிறகு சயன்டிஸ்ட் ராமசாமியை … இல்லை .. இல்லை … போலீஸ் ராமசாமியைப் பார்க்கவேயில்லை. பெரிய அதிகாரியாக ஆகி இப்போது ஓய்வு பெற்றிருப்பான்.
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் …!!!
13
டாக்டர் கேசவன்
1961 – 64-ல் ………..
B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் – மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை – cranial nerves – எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.
மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் … மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா … நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா … இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் – ஒரு காம்போ எஃபெக்ட் – சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா … அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.
மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக – demonstrator – இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது – B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.
அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா … நல்லா பசிக்குது’ என்றான்.
நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர் சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.
நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி… ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார். சோகமாக மதுரை வந்தோம்.
கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ..
அவனுக்கென்னப்பா …
அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா… அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!
முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாகஅவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.
We, the seniors with our Juniors – 1965-66
இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எங்க குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் – மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.
பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு – முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் – எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.
தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.
வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.
படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.
ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.
‘புது கார்’டா’ என்றேன்.
‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.
’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,
‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.
இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.
அவனுக்கென்னப்பா … புத்தகம் எல்லாம் போட்டவன். எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?
14
பயந்தான்கொள்ளி பிரபாகரன்
1966 – 70-ம் ஆண்டுகளில் ….
முதுகலை முடிச்சாச்சி. ஒரு விஷயத்தைப் பல தடவை நானும் சொல்லியாச்சி .. அது என்னன்னா, படிச்சி முடிச்சிட்டோமே அடுத்த என்னென்ன வழி வகைகள் வாழ்க்கையில் இருக்கு; எந்த வழியில் போனால் நல்லது; இல்லை, நமக்குன்னு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தேடல் … ஆசை இருக்கிறதா? வேறு போட்டித் தேர்வுகள் எழுத முடியுமா? … இந்த மாதிரி சிந்தனைகள் ஏதுமில்லாமல் மொட்டையாக குடும்பத் தொழிலே ஆசிரியர் தொழில் என்பது போல் அது ஒன்றை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு கல்லூரி ஆசிரியர் தொழிலை மட்டுமே பற்றி யோசித்துக் கொண்டு, அந்த வேலையை மட்டும் தேடிக்கொண்டு இருந்து தொலைத்தேன். மற்ற வழிகள், முயற்சிகள் பற்றி எனக்கும் ஏதும் தெரியவில்லை. ஆசிரியராக இருந்தும் என் தந்தைக்கும் அதில் என்னை வழிப்படுத்தத் தெரியவில்லை. இதுவரை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களில் யாரேனும் ஒருவர்கூட வாழ்க்கையின் பல பக்கங்களை எடுத்துச் சொல்லி வழிப்படுத்தவேயில்லை. இந்த சோகம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்தது. என் மாணவர்கள் என்னைக் குறை சொல்லாமலிருக்க சில முயற்சிகளை என் தொழிலில் எடுத்து வந்திருக்கிறேன். வாழ்வில் குறிக்கோள், அதற்கான முயற்சிகள் என்று மாணவர்களுக்கு அடிக்கடி சொல்வதைத் தவறாமல் செய்து வந்தேன். என் ஆசிரியர்கள் மீது எனக்கிருந்த வருத்தத்தை என் மாணவர்கள் என்னிடம் கொள்ளாத அளவு இதைப் பற்றி அடிக்கடி பேசுவேன். அது என் கடமையென்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்து வந்தேன். வேறு சில தனிப்பட்ட முயற்சிகளையும் எடுத்து வந்தேன்.
முதுகலை முடித்ததும் எப்படியும் மதுரையில் வேலை வேண்டாமென ஒரு ஆசை. குறைந்தது ஒரு 100 மைல் தாண்டி வேலை கிடைக்க வேண்டுமென நினைத்தேன். அதே போல் தஞ்சையில் ஒரு காலியிடம் என்றறிந்து விரைந்தேன். மிக நல்ல துறைத் தலைவர். பார்த்ததுமே வந்திருங்க துறைக்கு என்றார். கல்லூரி முதல்வரிடம் போகச் சொன்னார். அவர் பெயர் பேராசிரியர் முருகன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். என் மதிப்பெண் பட்டியல்களைக் கொடுத்தேன். முதலில் என் இளங்கலைப் பட்டியலைப் பார்த்தார். தமிழில் முதல் வகுப்பு என்பதைப் பார்த்ததும் வேறு மதிப்பெண்களையே பார்க்கவில்லை. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். இருந்தும் இன்னொரு படியும் இருந்தது. வீரைய்யா வாண்டையார் என்பவர் தான் கல்லூரியின் தாளாளர்; உரிமையாளர். கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் அவர் வீடு. அவரைப் பார்த்து வர ஒரு துணையோடு என்னை அனுப்பினார்கள். அதற்கு முன் விலங்கியல் பேராசிரியர் அவரது ‘டை’ ஒன்றைக் கொடுத்து கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அன்றுதான் பழைய ஜமீன் தோரணைகளைப் பார்த்தேன். தாளாளரைப் பார்க்கப் போனால் .. அங்கே பெரும் அமைதி. யாரும் பேசாமல் சைகைகளினாலேயே அதிகம் பேசுவதாகப் பட்டது. அவருக்காகக் காத்திருந்து அவரைப் பார்க்கப் போனேன். சீரியஸாகச் சில கேள்விகள். பதில் சொன்னேன். மீண்டும் கல்லூரி. துறை தலைமைப் பேராசிரியர் எனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார். அப்பாடா … ஆனால் only as demonstrator. இந்த வருடத்திற்கு மட்டும் என்றார்கள். ஆனால் இந்தக் கதை பல ஆண்டுகள் தொடர்ந்தன என்பது ஒரு தனிக் கவலைப் படலம். ஆனால் அன்று அதைப் பற்றிக் கவலைப்படக்கூட எனக்குத் தெரியவில்லையோ??!!
வேலைக்குச் சேர்ந்து ஓரிரு நாட்கள். மதியச் சாப்பாடு அங்குள்ள மாணவர் விடுதியில். முதல் நாள் துறை நண்பர்கள் கூட்டிச் சென்றார்கள். சாப்பிட்டு முடிந்ததும் விடுதியின் மேற்பார்வையாளர்கள் அறைக்குச் சென்றோம். பெரிய அறை. மூன்று கட்டில்கள். மூன்று மேற்பார்வையாளர்கள் என்றார்கள். அதில் எங்கள் துறையின் ஜகச்சந்திரன் என்பவனும் ஒருவன். அவன்தான் என்னை அவன் அறைக்குக் கூட்டிச் சென்றான். அந்த அறையில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப ரிக்கார்ட் பிளேயர், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கும். . அப்போவெல்லாம எல்லாம் அகலமான ரிக்கார்டுகள். மாலையில் சிறிது நேரம் பாடல்கள் போடுவார்கள். காலையும் மாலையும் ஆங்கிலச் செய்திகள் ரேடியோவிலிருந்து போட்டு விடுவார்கள். யார் கேட்பாளர்களோ … யாருக்குப் புரியுமோ!? அதைப் போட்டால் விடுதியில் இரு இடங்களில் உள்ள ஸ்பீக்கர்களில் அலரும். பத்துப் பதினைந்து ரிக்கார்டுகள் இருக்கும். ஆனால் மதியம் உணவு வேளையில் பாட்டுகளைப் போட்டு அந்த அறைக்குள் போட்டுக் கொள்ளலாம்.
ஒரு நாள் மதியம் சாப்பிடத் தனியாக விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தேன். பின்னாலில் இருந்து ஒரு அழைப்பு. M.A. Economics முடித்து விட்டு ஆங்கிலத் துறையில் சித்தாள் வேலை பார்ப்பது அப்போதெல்லாம் ஒரு வழக்கம். அதாவது ஆங்கிலம் எம்.ஏ. முடித்தால் சட்டென்று அப்போது ஆங்கிலத்துறையில் வேலை கிடைக்கும். எக்கச் சக்க டிமாண்ட். ஆனால் M.A. Economics முடித்தால் அவ்வளவு எளிதில் வேலை கிடைக்காது. அதனால் ஆங்கிலத்துறையில் சித்தாள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆஹா.. சித்தாள் வேலைன்னா என்னன்னு சொல்லவில்லையே. P.G. முடித்திருந்தாலும் lecturer வேலை கிடைக்காததால் அறிவியல் துறைகளில் demonstrator வேலைக்கோ, மொழித் துறைகளில் tutor வேலையோ கிடைக்கும். இவர்கள் எல்லோரும் lecturer வேலைக்குத் தகுதி படைத்திருந்தாலும், அந்த வேலை கிடைக்காததால் tutor அல்லது demonstrator வேலைக்குச் சேர்ந்திருப்போம். ஆனால் துறைகளில் lecturer ஆக இருப்பவர்கள் இவர்களைக் கீழ்த் தரத்தில் வைத்து நடத்துவார்கள். அவர்களெல்லாம் கொத்தனார்கள் என்றால், tutor, demonstrator எல்லோரும் சித்தாள்களாக நடத்தப்படும் பரிதாபம் தொடர்ந்து நடக்கும். நானும் lecturer பதவிக்கு வந்திருந்தாலும் அப்போது காலியாக இருந்த சித்தாள் வேலையில் தான் சேர்ந்தேன்.
மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோமா? பிரபாகரன் என்று ஒருவன். ஒல்லியாக, ஜாலியாக இருக்கும் ஒருவன். அன்றுதான் அவனை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவன் என்னைப் பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்துள்ளான். ’எங்கே போகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆங்கிலம் தான்! பதில் சொன்னேன். பின் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். தான் விடுதியில் மேற்பார்வையாளராகவும் இருப்பதாகக் கூறினான். ஓரிரு நிமிடங்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். பயங்கர ‘A’ கேள்வி. யாரும் பழகிய நாலைந்து நிமிடங்களில் கேட்கக்கூடாத கேள்வி என்று வைத்துக் கொள்வோமே! அப்படி ஒரு கேள்வி. ஒரு சில வினாடிகள் கழித்து அவன் கேள்விக்கு straight forward பதில் ஒன்றை சட்டென்று கொடுத்தேன். என் பதில் அவன் கேள்வியை விட ரொம்ப வெளிப்படை. பயல் ஆடி விட்டான். ’தலைவா .. நீ எங்கேயோ போய்ட்ட…’ என்று தமிழில் ஒற்றைப்படை மரியாதையுடன் பேச ஆரம்பித்தான். பயல் வழக்கமாக புதிதாக வரும் என்னை மாதிரி இளம் வயசு ஆளுகட்ட பழக ஆரம்பித்ததும் இந்தக் கேள்வியைக் கேட்பானாம். வழக்கமாக அவர்கள் அனைவரும் வெருண்டு ஒதுங்கி விடுவார்களாம். அவனைப் பார்த்தாலே பயத்துடன் ஒதுங்கி விடுவார்களாம். என்னைக் கேட்ட்தும் நான் பட்டென்று பதில் சொன்னது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்ட்து என்றான்.same vibes …!
அதன் பின் நல்ல நட்பு. அக்கல்லூரியில் அப்போது இருந்து வந்த வழக்கம் நண்பர்கள் ஒரு டீம் போட்டுக்கிட்டு மத்தவங்களைச் சதாய்க்கிறது. இதில் பயங்கர தீவிரவாதி இவன். அதோடு 1965-ல் தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக மாணவர்கள் மத்தியில் நடந்தது. அதில் மதுரையில் கொஞ்சம் அதிகமாகவே நடந்தது. ஜீப்பெல்லாம் எரிச்சோம்ல … அதிலும் எங்கள் தியாகராசர் கல்லூரியின் மாணவர்களான காமராசர், காளிமுத்து என்ற இருவரும் தான் இந்தியச் சட்ட்த்தை எறித்து, கைதாகி … பின்னாளில் அதனாலேயே பெரும் இடங்களுக்கு வந்தார்கள். முன்னவர் ஒரு கவிஞராகவும், அடுத்தவர் அமைச்சர், சட்டசபைத் தலைவர் என்றும் ‘முன்னேறி’ விட்டார்கள். அதனால் நான் சேர்ந்த அக்கல்லூரியில் மதுரைக்காரர்களுக்கு ஒரு ‘தனி இடம்’ – அதைப் பயம் என்றும் சொல்லலாம் – உண்டு; அதிலும் நான் தியாகராசர் கல்லூரி மாணவனா .. எனக்கு இரட்டை கிரீடம் சூட்டி விட்டது போலாயிற்று.
இந்தப் பின்னணியில் பிரபாகரன் என்னிடம் ரொம்பவே ஒட்டி விட்டான். ஆனால் பின்னால் தான் தெரிந்தது இந்தப் பயல் வாய்ப்பேச்சில் வீரன். ஆனால் சரியான பயந்த பயல் என்று. என்னடாவென்றால் அவனுக்குத் திருமணம் சொந்தத்திலேயே முடிந்திருந்தது. பெண் படிப்பை முடிக்கவும், இவன் சித்தாள் வேலையிலிருந்து கொத்தனார் வேலைக்கு உயரவும் பெற்றோர்கள் முடிவு செய்து இருவரையும் பிரித்தே வைத்திருந்தனர். பயலுக்கு சாந்தி முகூர்த்தம்னா என்னன்னு தெரியாம உக்காந்துகிட்டிருந்தான். அவன் விடுமுறைக்கு வீடு போகும் முன் நாங்கள் அவனை கொஞ்சம் திரியேத்தி அனுப்புவோம். பெரும் வெற்றி முழக்கத்தோடு திரும்பி வருவான். என்னடான்னு கேட்டால், ஒரு தடவை ‘எப்படி படிக்கிற?’ அப்டின்னு கேள்வி கேட்டு, அது என்னமோ பெரிய இமய மலையைத் தொட்ட மகிழ்ச்சியோடு சொல்வான். அடுத்த தடவை கைவிரல்களை லேசாகத் தொட்டுட்டேன் என்பான். பாவப்பட்டபயல் தான்.
அவன் விடைத்தாள் திருத்துவதும் வேடிக்கையாக இருக்கும். அங்கங்கே விடைத்தாளிலோ, கட்டுரை நோட்டிலோ ஒரு பெரிய வட்டம் போடுவான். என்னடான்னு கேட்டா .. இந்தப் பெரிய ரவுண்டுக்குள் எப்படியும் ஒரு தப்பு இருக்கும்’டா… கேட்டா அதைக் காண்பிப்பேன். ஆனாலும் ஒரு பயலும் எங்கிட்ட வரமாட்டான்’டா என்பான்.
மதியம் சாப்பாடு முடித்து அவர்கள் அறைக்குச் செல்லும் மக்களை ஏதாவது கலாட்டா பண்ணுவது அல்வா சாப்பிடுறது மாதிரி. இந்த மாதிரி வேடிக்கை வேலைகளுக்காகவே என்னை மாதிரி ஆட்களோடு ஜோடி சேர்ந்துக்குவான். அவனோடு இருந்தால் நேரம் போறதே தெரியாத மாதிரி அரட்டை அடிப்பான். ஆனாலும் clean guy. அடுத்த இரண்டு வருடம் கழித்து கொத்தனார் வேலையும் மனைவியும் அவனுக்குக் கிடைத்தார்கள்!!
15
அப்பாவி ஆறுமுகம் போராளியான கதை
பூண்டிக் கல்லூரியில் நான்காண்டுகள் விரைவாக நழுவிச் சென்றன. வித்தியாசமான வாழ்க்கை. பொதுவாகக் கல்லூரிகளில் துறை சார்ந்த நட்பே அதிகமாக இருக்கும். ஆனால் இக்கல்லூரியில் நான் வேலை பார்க்கும்போது – 1966-70 – உறவுகள் வேறுமாதிரியாக மாறியிருக்கும். காலையும் மாலையும் தஞ்சையிலிருந்து தான் பெரும்பாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வருவோம். குடிகாடு என்ற ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரைக் கிலோ மீட்டர் கல்லூரிக்கு நடக்கவேண்டும். சிலர் குடிகாட்டின் கிழக்குத் திசையிலிருந்து வருவார்கள். காலையும் மாலையும் போக்குவரத்து எல்லாமே ரயில் வண்டிகள் மூலம் தான். மாணவர்களுக்கு ரொம்ப வசதி. செயினைப் பிடித்து இழுத்து, ரயிலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பல சமயங்களில் காரணமே இல்லாமல் நிறுத்தி விடுவார்கள். யாராவது ஒரு மாணவன் சுவர் ஏறிக் குதித்து ரயிலைப் பிடிக்க ஓடிவருவதைப் பார்த்த மாணவர் குழாமிற்கு, ஆஹா! இப்படி ஒரு மாணவன் தன் கல்விச் சூழலை ஒரு நாள்கூட இழக்கலாமா?’ என்ற ஆதங்கத்தில் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை இழுத்து விடுவார்கள். ஆசிரியர்கள் யாரும் அப்படி ஓடி வந்தால் மாணவர்கள் அப்படியெல்லாம் உதவி, ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் ஒரு சோகம்.
இந்த ரயில் போனால் தான் கல்லூரி. இல்லையென்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் எங்கோ ரயில் பாதையில் நின்று கொண்டிருப்போம். நான் இருக்கும்வரை இந்தச் சூழலே இருந்தது. இது மாணவர்களுக்கு ரொம்ப வசதி. யாருக்கோ ஒருவனுக்கு நம் மெக்கலே கல்வியின் மீது ஏதோ ஒரு கோபம் என்றாலும் ரயில் நின்றுவிடும். ஆசிரியர்களில் பலரும், ‘அடடா .. இன்று என் வகுப்பு போச்சே!”, என்று ஆதங்கப்படுவார்கள். அது உண்மையோ என்னவோ தெரியாது. ஆனாலும் தப்பித் தவறி ஆசிரியனான நானும் என் நண்பர்களும் அது மாதிரி சோகத்தில் எங்களை ஆழ்த்திக் கொண்டதேயில்லை. நான் அக்கல்லூரியை விட்டு போனபின், ஆசிரியர்களுக்கு என்று தனியாக ஒரு பஸ் போக்குவரத்து ஏற்பாடுசெய்து விட்டார்களாம். இப்போது ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்து தானே ஆக வேண்டும். இதனால் மாணவர்களுக்கு ரயிலில் செய்யும் பராக்கிரமங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன.
ஆனால் நானிருந்த வேளையில் ரயிலும், வகுப்புகளும் சென்டிமென்டலான ஒரு டச்சோடு தான் இருந்தார்கள். இப்படி ரயிலில் வந்து கொண்டிருப்பதால் துறை சார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டாரங்களில் ஒன்று சேர்ந்து வருவது வழக்கமாக இருந்தது. பொதுவாக bachelors கூட்டம் தனிக்கூட்டமாக இருக்கும். மத்த ‘பெருசுகள்’ எல்லாம் தனி வட்டங்களில் வருவார்கள். துறைத் தலைவர்களிடமிருந்து சிறுசுகள் விலகியே இருப்பதும் வழக்கம். ஆகவே துறைசார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டங்களே பெரிதான இடம் வகித்தன. இது அரட்டை அடிக்க ஏதுவான வசதியாக இருக்கும். பொதுவாக முதலில் உள்ள ரயில் வண்டிகளில் மாணவர்களின் ராஜாங்கம். அதன்பின் ஓரிரு வண்டிகளில் இளம் ஆசிரியர்கள். கடைசி வண்டியில் பெருசுகள். இப்படியாகத்தான் இருக்கும் ரயில் ராஜாங்கம்.
நான் பார்த்த வரை எங்கள் இளைஞர் கூட்டத்தில் அப்போதெல்லாம் நிறைய பேர் சரியான ’காசு துரத்திகளாக’ இருப்பதைப் பார்த்துள்ளேன். பலரும் இளங்கலை முடித்து சித்தாள் வேலையில் இருப்பவர்கள். ஏறத்தாழ ஒரு தற்காலிக வேலை. அவ்வளவே. இதனால் பலருக்கு ஆசிரியர் தொழில் ஒரு சைட் கிக் தான். கையில் வேறு சில தொழில்களைச் செய்து கொண்டு கல்லூரி வேலையையும் செய்து வந்தனர். பட்டுச் சேலை விற்பவர்கள் நிறைய இருந்ததாக நினைவு. இவர்கள் எல்லோருமே கொஞ்சம் சீரியசான ஆட்கள். இவர்களுக்கு எங்களைப் போன்ற வேறு சிலரைக் கண்டால் கொஞ்சம் அரட்டிதான். யார் காலையாவது வாருவது, வேலை பற்றி சீரியசாகப் பேசுவது என்றிருக்கும் எங்களை அவர்கள் ஒதுக்க முனைவதும், நாங்கள் வேண்டுமென்றே அவர்களைக் கலாய்ப்பதுவும் தொடர் நிகழ்ச்சி. அவர்களைக் கலாய்ப்பது எப்படி அவ்வளவு எளிதாக இருந்தது; எப்படி அவர்கள் அப்படி ‘டமால்’ என்று எங்களிடம் விழுந்து தொலைத்தார்கள் என்பது எனக்கு இன்று வரை பெரிய ஆச்சரியம் தான்.
போன பதிவில் மதிய உணவு நேரத்தைப் பற்றியெழுதியிருந்தேன். அந்த நேரத்தில் பல துறை இளைஞர்களும் சாப்பாட்டிற்காக விடுதி வந்து, அதன் பின் இந்த அறைக்குச் ‘சிரம பரிகாரம்’ – அப்புறம் எப்படி தம் அடிக்கிறது? – செய்ய வந்து விடுவோம். ஏற்கெனவே சொன்னது போல். மதியம் சினிமா பாட்டு வைத்துக் கேட்பது வழக்கம், அதோடு சொந்தக் கதை சோகக் கதைன்னு ஒருத்தர் ஒருத்தரை கலாட்டா செய்து கொண்டிருப்போம். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஆங்கிலத் துறைக்கு ஒரு புதிய நண்பர் வந்தார். மிக மிக நல்ல மனிதர். அப்போது தான் இளங்கலை முடித்து விட்டு ஆங்கிலத்துறையில் சித்தாளாக – ட்யூட்டராக – வந்து சேர்ந்திருந்தார். ஆறுமுகம் என்று பெயர். மதுரைக்காரர்தான். அதுவும் தியாகராசர் கல்லுரியின் பக்கத்திலுள்ள அனுப்பானடிதான் சொந்த இடம். அட நம்ம ஊர் மதுரைக்காரரே என்று நினைத்து நான் அவரிடம் பேச ஆரம்பித்தால் மனிதர் பயந்து ஒதுங்குவார். நமக்கு அம்புட்டு நல்ல பெயர் அப்போதே இருந்திருக்கு!
ஆறுமுகம் ரொம்ப நல்ல மனிதர் என்று சொன்னேனில்லையா? அதனாலேயே அவரை எல்லோரும் ரொம்பவே காலை வாருவார்கள். அவரும் பாவம் போல சிரித்து மழுப்புவார். ஆனால அவர் மழுப்ப முடியாமல் ஒரு விஷயத்தில் எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார். செக்ஸ் என்றாலே ஆறுமுகத்திற்கு அலர்ஜி. பத்தாதா நம்ம மக்களுக்கு. எதையாவது சொல்லி அவரைக் கஷ்டப்படுத்துவார்கள். எனக்கு எப்போதுமே நாம் ஏதாவது சொல்லி, அதைத் திருப்பிச் சொல்லும் அளவுள்ள மக்களை மட்டும் கலாய்ப்பதில் மட்டும் தான் ஆர்வம். அடிக்கிற ஆளும் கொஞ்சமாவது நம்மைத் திருப்பி தாக்கினால் தானே அந்த விளையாட்டுச் சண்டை நன்றாக இருக்கும்! ஆறுமுகம் அப்படிப்பட்ட ஆளில்லை. ஒரு மாதிரி பாவம் போல் சிரித்து மழுப்புவார். அதனால் அவரைக் கலாய்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. மதியம் அவர் வந்ததும் அவரை ஏதாவது சொல்லி கலாட்டா பண்ணுவார்கள்.
இதில் வசமாக ஒரு விஷயத்தில் ஆறுமுகம் மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு சினிமாப்பாட்டு – அப்போதைய ஹிட் பாட்டு அது – மிகவும் அலர்ஜியாகி விட்டது. ‘இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்’ என்ற பாட்டு அது. அதற்கு அப்போதைய செக்ஸ் நடிகை ஒருவர் – பெயர் நினைவில் இல்லை – ஒருவர் இதற்கு ‘அபிநயம்’ பிடிப்பார். அட .. இரட்டை அர்த்தம் உள்ள பாடல் என்று வைத்துக் கொள்வோமே! ஒரு பக்கம் பயங்கர தத்துவம்; இன்னொரு பக்கம் நிறைய செக்ஸ். இந்தப் பாட்டைப் போட்டதும் ஆறுமுகம் காதை இறுகப் பொத்திக் கொள்வார். நண்பர்கள் பாட்டை நிறுத்தி விடுவார்கள். ஆறுமுகம் கையை எடுத்ததும் மறுபடியும் அதே பாட்டு தாலாட்டும். மறுபடி ஆறுமுகம் அதே வேலையைத் தொடர்வார். இந்த விளையாட்டு அனேகமாக ஆறுமுகம் அறைக்கு வரும் நாளெல்லாம் நடக்கும். அவர் அவ்வளவு எளிதாக அந்த அறையையும் தாண்டி விட முடியாதபடி நண்பர்கள் அவரை அணைபோட்டு அறைக்கு கொண்டு வந்து விடுவார்கள்!
எனக்குப் பாவமாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது. இந்தச் சமயத்தில் ஆறுமுகம் தங்கியிருந்த அறையைக் காலி செய்ய வேண்டியதிருந்தது. உடனே இன்னொரு அறை வேண்டும் அவருக்கு. தயங்கியபடி என்னிடம் வந்தார். ஒரு அவசர உதவியென்றார். கொஞ்ச நாளைக்கு மட்டும் என்றார். நான் சரியென்றேன். அறை நண்பரானார். அவருக்கு பல நல்ல கொள்கைகள். அதில் ஒன்று சினிமாவிற்கு இரவு ஆட்டத்திற்குப் போகக் கூடாது என்பது. எனக்கு அது தான் வசதி. சனிக்கிழமை ராத்திரி படம் போய்ட்டு வந்து ஞாயிறு எம்புட்டு தூங்க முடியுமோ அம்புட்டு தூங்கலாமே .. அதனால் என் வசதி இரவு சினிமா தான். ஆறுமுகத்தின் armour-ல் முதல் ‘கட்டுடைப்பு’ இது தான். ’ஆமாங்க .. இந்த சிஸ்டம் நல்லா இருக்கு’ என்பது ஆறுமுகத்திடமிருந்து எனக்கு வந்த முதல் ஆறுதலான பாராட்டு இது!
ஆனால் இதைவிட எனக்கு ஆறுமுகம் மதியம் விடுதியறையில் படும்பாடு தான் நினைவிலேயே இருந்தது. நாலைந்து நாள் விடுமுறை வேறு வந்தது. அந்த சமயத்தில் அவரை மெல்ல உருவேற்றினேன்.
”ஏன்’யா உங்களுக்கு அந்தப் பாட்டு பிடிக்கலை?”
“அது கெட்ட விஷயம் சொல்லுது. அதான்”
“வெறும் பாட்டாக அதை ஏன் கேட்கக் கூடாது?”
“அசிங்கமா அந்தப் பாட்டுக்கு அந்தப் பொம்பளை ஆடுதுல்லா?”
”அதை ஏன் நீங்க நினைக்கிறீங்க. பாட்டை மட்டும் கேளுங்க. நல்ல அர்த்தம் அதில் இருக்குல்ல?”
”அதை நினைக்காம எப்படி பாட்டைக் கேட்கிறது?”
நான் ரெண்டு மூணு பாட்டை எடுத்து உட்டேன். இப்போ எல்லாம் உங்களுக்கு நடனமா நினைவுக்கு வருது? நீங்க நினைச்சா அது வந்து தொலையும். இல்லாட்டி பாட்டு மட்டும் தானே கேக்கும்” என்றேன். ஆறுமுகத்தால ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டேன். ”ஏன் ஆறுமுகம்! உங்களை அந்தப் பாட்டை வைத்துக் கேலி செய்வது பிடிக்குதா?”
“என்னங்க .. இப்படிக் கேட்டுட்டீங்க .. இல்லவே இல்லைங்க’.
”அப்போ அதை நிப்பாட்டணுமா வேண்டாமா?” என்று கேட்டேன்.
“கட்டாயமா நிப்பாட்டணுங்க”.
“நான் ஒண்ணு சொல்றேன். கேளுங்க. பய புள்ளைக உங்களைக் கேலி பண்றதையே உட்ருவாங்க” அப்டின்னேன்.
”சொல்லுங்க. செஞ்சுருவோம்” அப்டின்னார் தைரியமாக.
“கொஞ்சம் உங்களுக்குக் கஷ்டம் தான். சிரமப்பட்டு ஒரு நாள் ஒரு நாடகம் போட்டா சரியாயிரும்” என்றேன்.
“சொல்லுங்க …”
“அடுத்த வாரம் காலேஜ் போறம்ல. அன்னைக்கு மதியம் அந்த அறைக்குப் போனதும் யாரையாவது பாத்து ..’அந்தப் பாட்டை போடுங்க’ அப்டின்னு காஷுவலாகச் சொல்லுங்க. பாட்டைப் போடுவாங்க. ரசிக்கிறது மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு நீங்க என்னத்தையாவது நினச்சுக்குங்க. ஆனா .. தலையை நல்லா ஆட்டணும்” என்றேன்.
ஒரு வழியா அறையில் உக்காந்து நிறைய “போதித்து” அவரை என் வழிக்குக் கொண்டு வந்தேன்.
அந்தத் திருநாளும் வந்தது. மதியச்சாப்பாடு முடிந்ததும் நான் அவருக்கு முன்னாலே போய் அந்த அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு தம் அடித்துக் கொண்டு இருந்தேன். நம்ம ஆறுமுகம் வந்தார். கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டார். பாட்டு போட்டிக்கிட்டு இருந்த நண்பரிடம், ‘என்னப்பா இந்தப் பாட்டு … நம்ம பாட்டைப் போடுங்க’ப்பா” என்றார். முகத்திலோ அப்படி ஒரு புன்னகை. ஆனால் ஆறுமுகம் சொன்னதைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கெல்லாம் ஒரே ஷாக்! சரின்னு பாட்டையும் போட்டாங்க. காதைப் பொத்திக்கொள்வதற்குப் பதில் ஆறுமுகம் தலையை ஆட்டிக் கொண்டே புத்தகத்தில் கண்களை மேய விட்டார். மக்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. என்னப்பா ஆச்சு ஆறுமுகத்துக்கு என்று ஆச்சரியம். அதைக் கேள்வியாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் இதையெல்லாம் கண்டுக்கவேயில்லை. நண்பர்களிடமிருந்து திடீரென்று ஒரு குரல்: ‘நினச்சேன் .. இந்தப் பயல் ரூம் மேட் ஆயிட்டாரில்ல ஆறுமுகம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்’. குரல் கொடுத்தவனைப் பார்த்தேன். முன்பு சொல்லியிருந்தேனே … பிரபாகரன். அவன் என்னைக் கையைக் காட்டிக் கொண்டிருந்தான். ‘அட போப்பா … நான் ஒண்ணும் சொல்லலையே’ன்னு அப்பாவியா மூஞ்சை வச்சுக்க முயற்சி செஞ்சி சொன்னேன்.
எப்படியோ ஆறுமுகத்தைக் கலாய்ச்ச ஆளுகளுக்கு இப்போ அந்த வேலை இல்லாம போயிரிச்சி!
நான் அந்தக் கல்லூரியை விட்ட பிறகு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகம் என் மதுரை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் முதுகலை முடித்து திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் ஆறுமுகத்தைப் பற்றி இன்னொரு நண்பர் சொன்னது மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
ஆறுமுகம் இப்போதெல்லாம் ஆசிரியர் கழகத்தில் மிகவும் முக்கியமான ஆளாக இருக்கிறார் என்றும், ஆசிரியர் போராட்டங்களில் தீவிரமாக முன்னால் நிற்கிறார் என்ற தகவலே அது. ஆறுமுகம் பெரும் போராளி என்பது எனக்கு மிகவும் இனிப்பாகவும், திருப்தியாகவும் இருந்தது.
16
மீண்டும் காணாமல் போன நண்பர்கள் தந்த சோகம்
நண்பர்கள் காணாமல் போவது வாழ்க்கையில் இயல்பு தான். ஆனால் காணாமல் போன நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்த பின் அவர்கள் நம்மிடமிருந்து மறுபடியும் வேண்டுமென்றே காணாமல் போவது பெரும் அதிர்ச்சியாகவும், சோகமாகவும் முடிகிறது.
பூண்டி கல்லூரியில் வேலை பார்த்த போது நல்ல நண்பர்களாக இருந்தவர்களில் சிலரின் முகவரி, தொலைபேசி, இணைய முகவரி என்று கொஞ்சம் தேடியலைந்தேன். சில சோகங்கள் தான் பின்னே வந்தன. என்னோடு வாடா .. போடா .. என்று பழகியவன் அக்கல்லூரியின் முதல்வராக இருந்திருக்கிறான். அவனைப் பற்றி ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் போய் அவனிடம் கேட்ட போது அவனுக்கு என் பெயரே மறந்து போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன். இன்னொரு நண்பன். என்னோடு தஞ்சையில் அறை நண்பனாக வேறு இருந்தான். நானும் அவனும் அந்தக் காலத்திலேயே – 1966-70 – blog எழுதி வந்திருந்திருக்கிறோம். எங்களுக்குள் அப்படி ஒரு பழக்கம். நான் அப்போது ஏதாவது துண்டுப் பேப்பர்களில் எழுதும் வழக்கம் இருந்தது. இந்த நண்பன் தன் பழக்கத்தை எனக்கும் சொல்லிக் கொடுத்தான். பேப்பரில் எழுதாமல் ஒரு நோட்டில் எழுதும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தான். பாதி உண்மை; பாதி கதை என்று பலவும் இருக்கும். பஸ்ஸில் பார்த்த பெண்கள் முதல் அக்கவுண்டில் சாப்பிடும் டிபன் வரை எல்லாம் எழுதுவதுண்டு. நல்ல பிடித்த சினிமா பார்த்துவிட்டு வந்தால் இரவு நிச்சயமாக ஒரு ’திரைப்படத் திறனாய்வு’ எழுதி விடுவோம்.
இரு மலர்கள் (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா) படமும், விவசாயி (எம்.ஜி.ஆர்.) படமும் ஒரே நாளில் எதிர் எதிர் தியேட்டர்களில் போட்டிருந்தார்கள். இரண்டையும் பார்த்தோம். இரு மலர்கள் கடைசி நாளன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கப் போனோம். கூட்டமேயில்லை. ஆனால் விசவாயு … சாரி .. விவசாயிக்கு பெரும் கூட்டம். படம் பார்த்து விட்டு வந்து எங்கள் ‘வயித்தெரிச்சலை’ எழுதித் தொலைத்தோம்.
நான் ஒரு நோட்டு எழுதினால் அவன் இரண்டு மூன்று எழுதி விடுவான். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். காபி குடித்தால் தம்ளரின் விளிம்பு வரை ஊற்றிக் குடிக்க வேண்டும். சரியான விளிம்பு மனிதன்! அதே போல் தம்மடிக்கும் போது புகையை இழுத்தால் கன்னம் அப்படியே டொக்கு வாங்கி விடும். ஆழமான இழுப்பு!
இன்னொரு நண்பன். ரயிலில் கல்லூரி போகும் போது நானும் இவனும் சேர்ந்தால் மற்ற நண்பர்கள் எல்லோரும் கொஞ்சம் பயப்படுவார்கள். அவர்கள் காலை வாருவதில் எங்களுக்கு அப்படி ஒரு அளப்பறிய இன்பம்! நாங்கள் ஒரு கம்பார்ட்மென்டில் ஏறினால் பலர் அந்த கம்பார்ட்மென்டையே மாற்றும் அளவுக்கு எங்கள் புகழ் ரயிலளவு நீண்டிருந்தது. இதற்காகவே நானும் அவனும் ரயிலில் கடைசியாகத்தான் ஏறுவோம். மதியம் இவனுக்கு சாப்பாடு வந்து விடும். கேரியரில் மேல் தட்டில் ஒரு சின்னக் கிண்ணத்தில் நெய் வரும். நான் விடுதிக்குச் சாப்பிடப் போகும் நேரத்தில் அந்தக் கிண்ணத்தை ஸ்வாகா செய்வது அடிக்கடி நடக்கும்.
நான் கல்லூரி மாறிப் போனபின் இவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிற்று. பின் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் தொலைபேசி எண்களுக்கு முயற்சித்து அவைகளும் கிடைத்தன. இருவருக்கும் மகிழ்ச்சியோடு தொலை பேசினேன். அதே வைப்ஸ்’ – அலைவரிசை – அந்தப் பக்கம் இல்லாதது போல் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். என் தொலைபேசி அழைப்பிற்குப் பின் அவர்களிடமிருந்து ஏதும் அழைப்பு வரவில்லை. சில நாட்கள் கழித்து இருவருக்கும் மறுபடி தொலை பேசினேன். ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இருவருமே என் தொலைபேசி எண்ணை save கூட செய்து கொள்ளவில்லை.
இரண்டாம் முறையும் பேசிய பின்னும் அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. கட்டாயமாக இணையத்தில் இருப்பான் என்று நினைத்த நண்பனுக்கு இணைய முகவரி கேட்டு sms அனுப்பினேன். சேற்றில் எறிந்த கல் …
மூன்றாவதாக இன்னொரு நண்பன். அவன் வேலையில் ஓய்வு பெற்ற பின் மதுரையில் இருப்பதாக அறிந்து ஆவலோடு land line தொலைபேசி எண் கிடைக்க அழைத்தேன். அருகாமையில் தான் இருந்தான். சில நாட்கள் கழித்து மறுபடி அழைத்தேன். அந்த எண்ணில் யாருமில்லையென்ற தகவல் வந்தது.
மூன்று நண்பர்கள். அவர்கள் பக்கமிருந்து எந்தவித ஈடுபாடும் இல்லாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. வாழ்க்கையின் சுமைகளில் அவர்களுக்கு பழைய நண்பர்களின் உறவு இப்போது தேவையில்லாமல் போயிற்று என்று எடுத்துக் கொண்டேன். என் பழைய தொலைபேசியோடு அவர்கள் எண்களும் காணாமல் போய் விட்டன. இப்போது நான் ஆசைப்பட்டாலும் உடனே தொலைபேச முடியாது என்றானது.
காணாமல் போய் மீண்டும் கிடைத்த நண்பர்கள் இப்போது மறுபடியும் நிஜமாகவே காணாமலேயே போய்விட்டார்கள் …
17
தம்பியான அண்ணாச்சி!
”சித்தாள் வேலை”யைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அந்தக் காலத்தில் கல்லூரியில் lecturer post-க்கு முன்னால் tutor அல்லது demonstrator என்ற பணியிடங்கள் உண்டு. இந்த பணியிடங்களுக்கு இளங்கலை முடித்திருந்தால் கூட வேலை கிடைக்கும். ஆனால் முதுகலை முடித்து lecturer ஆக முடியாமல் / கிடைக்காமல் tutor அல்லது demonstrator பணியிடங்களுக்கும் போவது உண்டு. இதில் உள்ள சோகம் என்னவென்றால் இந்த இரு பணியிடங்களில் இருப்பவர்கள் மீது lecturerகளுக்கு மரியாதை பொதுவாக இருப்பதில்லை. துறையில் உள்ள “சின்ன வேலை”களுக்கு இந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆகவே அதில் இருந்த நாங்கள் எங்களை ‘சித்தாள்கள்’ என்று அழைத்துக் கொள்வதுண்டு. கொத்தனார் சொல்றதையெல்லாம் கேட்கணுமே …
இந்த சித்தாட்களில் பலர் lecturer பதவிகளில் இருப்பவர்களை விட அதிக மதிப்பெண்களோ, அதிகத் திறமையோ கொண்டவர்களாக இருக்கலாம். இருந்தாலும் மரியாதை என்னவோ குறைவு தான். இப்படி சித்தாள்களாக இருப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இன்னொரு இடைஞ்சல் இருக்கும். இவர்களை எல்லா கல்லூரிகளிலும் தற்காலிக பணிகளில் மட்டுமே வைத்திருப்பார்கள். 10 A என்று அந்தப் பணியிடங்களுக்குப் பெயர். ஆகவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவர்களை கல்லூரியிலிருந்து ‘கழட்டி’ விட்டுவிடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் அவர்கள் வேலையில் எடுத்துக் கொள்ளப்படலாம். ஒரு வேளை வேலை தொடராமலும் போகலாம். இதெல்லாம் முந்திய ஆண்டில் அவர்கள் ‘சேவை’ எந்த அளவு இருந்தது என்பதைப் பொறுத்தது. இந்த ‘சேவை’ என்பது அவர்களின் வேலைத் திறமையாக இருக்கலாம்.அல்லது துறையில் தலைமைக்குச் செய்யும் ‘சேவையாகவும்’ இருக்கலாம். அது துறைத் தலைவர் வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு வாழை மரம் தூக்கிவருவது .. காய்கறி வாங்கி வருவது … போன்ற பணிகளாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆரம்பிக்கும் காலங்களில் ‘சித்தாள்கள்’ பரிதாபமாக கல்லூரியையும், அவர்களின் துறைத்தலைவரின் அறையையும் ‘மந்திரித்து விட்ட கோழிகள்’ மாதிரி சுற்றிச் சுற்றி வருவார்கள். அனேகமாக துறைத்தலைவரின் கையில் தான் இவர்களுக்கு ஒரு கத்தியோ, கைப்பிடி அரிசியோ இருக்கும். துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லையெனில் கத்தியை வீசி விடுவார். பாவப்பட்டால் அந்த ஆண்டுக்கு மட்டும் மறுபடி பதவி – கைப்பிடி அரிசி – போடுவார்.
எனக்கு வேலை கிடைக்கும்போது lecturer பதவிக்குத்தான் போனேன். ஆனால் அப்போது அந்த பணிக்கு இடம் இல்லை; இன்னும் சில மாதங்களுக்கு மட்டும் demonstrator வேலையில் சேர்ந்தால் அடுத்த ஆண்டே lecturer பதவி என்றார்கள். சரியென்று சேர்ந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் சென்ற ஆண்டு lecturer இல்லாமலே வேலை செய்தீர்களே அதேபோல் தொடர்ந்து இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் துறையிலும், துறைத்தலைவரிடமும் முதலிலே இருந்தே நல்ல பெயர் வாங்கி விட்டேன். படிக்கும் போது கல்லூரியில் துறைத்தலைவருக்கு செல்லப்பிள்ளை என்றிருந்தேன். அதே போல் இங்கே துறைத் தலைவருக்கும் செல்லப் பிள்ளையாக ஆகியிருந்தேன். அருமையான துறைத்தலைவர். அவரைப்போல் யாரையும் அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாத அளவுக்கு மிக நல்ல பேராசிரியர். பேராசிரியர் நாராயணன். இருந்தும் எனக்கு வாய்ப்பில்லை. ஆகவே demonstrator ஆக நான்கு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் இருந்தேன்.
சித்தாள் என்ற வேலை; ஆனால் மரியாதையும், அன்பும் நிறையவே எனக்கு துறையில் நிறையவே கிடைத்து வந்தது. என்ன நேரமோ .. என்னவோ .. நம்ம ஆங்கிலத்திற்கும் அங்கு ஒரு மரியாதை கிடைத்தது. அதுவும் ஆங்கிலத்துறையில் தனி மரியாதை. ஏனெனில் அங்கிருந்த ஆங்கிலத் துறைத்தலைவர் இலங்கையிலிருந்து வந்தவர். நல்ல பண்பாளர். பேராசிரியர் ஆரோக்கிய சாமி. அவர் ஒரு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னன்னா … கல்லூரி வளாகத்தில் அவரிடம் ஆசிரியர்கள் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால் விரட்டி விடுவார். ஆனால் நான் அவரோடு கல்லூரியில் மட்டுமல்லாது ரயிலிலும் ஒன்றாக, சமமாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பேன். அதைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கே ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை எனக்கு அனுசரணையாக்கிக் கொண்டேன்!
ஆங்கிலத்துறையில் நிறைய tutors இருப்பார்கள். இதில் சிலர் மட்டும் B.A. ஆங்கிலம் படித்திருப்பார்கள். இவர்களில் பலரும் ‘இங்கிலீஸ்கார குட்டிகள்’ என்ற நினைப்பில் அலைவார்கள். இவர்களோடு M.A. Economics படித்தவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்குமே ஆங்கிலத் துறையில் step-motherly treatment மட்டும் தான் கிடைக்கும். அதாவது இவர்கள் சித்தாள்கள் மட்டுமல்ல .. orphaned சித்தாள்கள்! என் சப்போர்ட் எப்பவுமே இந்த இரண்டாம் குழுவின் பக்கம் தான். அதனால் முந்திய க்ரூப் நம்மிடம் கொஞ்சம் வாலாட்டும். ஆனால் நமக்கு அவங்க துறைத் தலைவரே தோஸ்த் ஆச்சே .. அதனால் என்னிடம் ரொம்பவும் வாலாட்ட மாட்டார்கள். ஆட்டிய வாலை ஒட்ட நறுக்கிய சில நிகழ்ச்சிகளும் – எல்லாம் academic விஷயங்கள் தான் – நடந்து, நம்ம கொடியை வானளாவ பரவ விட்டிருந்தேன்!
உதாரணமாக, ஒரு நாள் ஆங்கிலத்துறைக்குள் காலடி வைத்தேன். நம்ம orphaned சித்தாள் ஒருவர் catch என்பதற்கு -past tense என்ன என்று கேட்டார். Catched-ன்னு யார் சொன்னா என்று சட்டென்று கேட்டேன். ஒரு ‘இங்கிலீஸ்கார குட்டி’ ரொம்ப பதட்டமாக, ‘ஏன்.. அது தப்பா?’ என்றார். இல்ல எங்க வாத்தியார் catch-க்கு caught தான்னு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றேன். அதெல்லாம் உங்களுக்கெல்லாம் தெரியாது … அது old English’ என்றார். அவருக்கு தெரியாது என்று நினைத்தே, ‘Oh! Archaic English?’ என்றேன். மனுஷனுக்கு நிஜமாவே அது தெரியலை. அப்போது சரியாக ஆங்கிலத் துறைத் தலைவரும் வந்தார். நம்ம தோஸ்தாச்சே… அவரிடம் catch-க்கு past tense catched தானா என்று கேட்டேன். Which fool said so?’ என்றார். ஆளைக்காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் சித்தாள்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.
நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டில் முருகேசன் என்ற ஒருவன் ஆங்கிலத்துறைக்கு வேலைக்கு வந்தான். இவன் M.A. Economics. ஆங்கிலத்துறையில் tutor ஆகச் சேர்ந்தான். P.U.C.யில் நாங்கள் ஒரே கல்லூரி – St.Xavier’s. இவன் வேலைக்குச் சேர்ந்த பின் தான் எங்களுக்கு இது தெரிந்தது. ஆள் படு உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். நான் அவனுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் தோள் வரைதான் குச்சியாய் ஒட்டிக்கொண்டு இருப்பேன். இவன் சின்ன வயசுக்காரன் என்றாலும் உருவத்தால் பெரிய ஆள் போல் இருப்பான். சுத்த நயம் கருப்பு. நெல்லைக்காரன். அவனை உடல், நிறம், ஊர் எல்லாம் வைத்து கல்லூரியில் அவனை ஏறத்தாழ பலரும் ‘அண்ணாச்சி’ என்று அழைத்து வந்தார்கள். இப்போ தொலைக்காட்சியில் அண்ணாச்சின்னு ஒருத்தர் காமடி நிகழ்ச்சி நடத்தி வர்ராரே அவர் மாதிரியே இருப்பான். நம்ம ஒரு வித்தியாசமான ஆளு இல்லையா … அதனால் நான் மட்டும் அவனை ‘தம்பி’ என்று அழைப்பேன்.
முதலாண்டு வேலை பார்த்தான். இரண்டாம் ஆண்டு நான் சொன்னது மாதிரி மந்திரிச்சி விட்ட கோழியாக அலைந்தான். வேலை நிச்சயமாக ஆகும் வரை அவன் இருந்தது என் அறையில் தான். காலையில் எழுந்து குளித்து விட்டு நெற்றியில் முகப்பவுடரை வைத்து ஒரு கீற்று போட்டுக் கொள்வான்.
’இது எதுக்குடா ..?’ என்பேன். அவன் அப்போவே சாமியெல்லாம் கும்பிட மாட்டான்னு தெரியும்.
‘உனக்கு ஒண்ணும் தெரியாதுடா … நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி திருநீர் வச்சா கெத்தா தெரியும். உன் ரூம்ல திருநீர் இல்ல. அதான் பவுடர்’ என்பான்.
சொன்னது மாதிரியே அந்தக் கீற்று அவனுக்குப் பொருத்தமா இருக்கும். கல்லூரி போகும் முன்னே அவனைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அப்படி வருபவர்கள் எல்லோருமே அந்த ஆண்டு தன் பையனுக்கு எங்கள் கல்லூரியில் இடம் தேடி வருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இவன் மேல் அம்புட்டு நம்பிக்கையோடு பேசிவிட்டு, தங்கள் பையனின் விண்ணப்ப விவரங்களைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் முன்னாலேயே அந்தப் பையனின் பெயர் போன்ற குறிப்புகளை இவனும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வான். கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன் என்பான். ஆனால் உண்மையில் அவனுக்கு அப்போது கல்லூரியிலேயே வேலை கிடைத்திருக்காது.
’இதெல்லாம் எதுக்குடா..?’ என்றால், ‘என்ன பண்ணச் சொல்ற… எனக்கு வேலையே இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணுமா … என்பான்.
அதே போல் அப்பப்போ அந்த லிஸ்டை எடுத்து சில பெயர்களுக்கு முன்னால் டிக் போட்டுக் கொள்வான். அதாவது அவன் அந்தப் பையனைப் பற்றி துறைத்தலைவருக்கு சொல்லி விட்டானாம். அதே போல் யாராவது ‘சார் .. பையனுக்கு இடம் கிடச்சிருச்சி சார்’ என்றால் உடனே அந்தப் பெயரை அடித்துக் கொள்வான்.
அவனுக்கு உடல் பருமனால் கிடைத்த பெருமை அது. ஆனால் ஆளுக அந்தப் பக்கம் நகர்ந்தால் தனக்கு வேலை கிடைக்குமா இல்லையா என்ற சோகத்தில் இருப்பான். இப்படியாக இரு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து தெற்கே வள்ளியூர் என்ற ஊரில் இருந்த புதுக்கல்லூரிக்கு lecturer வேலை கிடைத்து சென்றான். போகும் முன் சேர்ந்து ஒருபோட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவேயில்லை …..
18
இங்கே பதிவுலகில் காணாமல் போன பதிவர்கள்
அது .. இதுன்னு 10 வருஷம் முடிஞ்சி போச்சு – நான் பதிவராகி.
24.4.2005-ல் முதல் பதிவிட்டிருக்கிறேன். என்ன எழுதணும்னு அன்னைக்கும் தெரியலை; இன்னைக்கும் தெரியலை. ஆனால் இன்னும் விடாம எழுதிட்டு வந்திருக்கிறேன்.
ஆரம்பிச்ச வருஷம் ரொம்ப உன்னிப்பா இருந்திருப்பேன் போலும். 118 பதிவுகள். நிறைய சொந்தக் கதை சோகக் கதை எழுதியிருக்கிறேன். மதங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டேன். மதங்களைப் பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்? காட்ட சாட்டமாத்தான் இருந்தது.
2006 – இந்த ஆண்டும் கொஞ்சம் முக்கியமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிர்த்து நிறைய பதிவுகள்; அடுத்து என்னை நீதி மன்றத்திற்கு இழுப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘இடப் பங்கீடு’ பற்றிய பதிவுகள்.
2007, 2008,2009 – வேகம் குறைந்த காலம் போல் தெரிகிறது.
2010 – இன்னும் கொஞ்சம் அதிகப் பதிவுகள்.
2011-லிருந்து பதிவுகள் குறைவு தான்.
2012 – 78; 2013 – 84; 2014 – 115; 2015 – இது வரை – 26
பழைய பதிவுகளையும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஒரு வேற்றுமை நன்கு தெரிந்தது. பழைய காலத்தில் பின்னூட்ட எண்ணிக்கைகள் அதிகம். இதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எழுதிய பதிவுகளின் ‘சூடு’ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து அப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் பொதுவாகவே பதிவுலகத்தில் அதிகம். ஆனால் இப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் எல்லோருக்குமே மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன்.
எண்ணிக்கைகளை விட பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நிறைய பின்னூட்டங்கள் வெறுமனே ஒரு கருத்தைச் சொல்லிச் செல்வதற்குப் பதில் தனிப்பட்ட அன்பைப் பல பின்னூட்டங்களில் பார்க்க முடிந்தது. ஏதோ எழுதியிருக்கிறாய் .. நானும் ஏதாவது சொல்லிவிட்டுப் போகிறேன் என்றில்லாமல் எல்லாமே ஈரத்தோடு இருப்பதாகப் பட்டது. Many comments had a very personal touch. I could feel the warmth even when I read it now. மக்கள் நெருங்கியிருந்ததாகத் தோன்றுகிறது. பல சச்சரவுகள் இருந்தாலும் .. the stay was pleasant. அதுக்காக இப்போது மோசம்னு சொல்லலை. it is just neutral now! எல்லோரும் வர்ரோம் … போறோம் அப்டின்றது மாதிரி.
அப்போ இருந்த நண்பர்களில் பலரை இப்போது ‘பார்க்கவே’ முடியவில்லை. போரடித்து ஒதுங்கி விட்டார்களா .. இல்லை.. வாழ்க்கையில் இன்னும் முக்கியமானவைகளில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்து விட்டார்களா? சிலரை மீண்டும் இழுக்கக்கூட முயற்சித்தேன். அட .. போங்கய்யா .. பொழைக்கிற வழியைப் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.
அன்றும் இன்றும் அதே இளமையை எழுத்துக்களில் தொடர்ந்து ஓட விடுவது நம்ம துளசி டீச்சர் மட்டும் தான் என்று நினைக்கின்றேன். கூடாமல் குறையாமல் தன் அனுபவங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் போல் நெடுநாட்களாக பதிவுலகில் நின்று நல்ல பதிவுகள் கொடுக்கும் பதிவர் வேறு யாராவது உள்ளார்களா? எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை.
நெடுநாளாக ’காணாமல்’ போயிருந்த ஜிரா இப்போ வந்து அப்பப்போ எழுதுகிறார். ரொம்ப லேட்டஸ்ட்டா வந்தது $செல்வன். நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்து உள்நாட்டு விஷயங்களில் காட்டிய நாட்டமோ என்னவோ தெரியவைல்லை.
பதிவுகளிலேயே இருவர் எழுத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களைப் பற்றி முன்பே பல முறை சொல்லியுள்ளேன். ஒருவர் இளவஞ்சி.
Oh! .. no .. not Agassi ..!
ஆனா அகாசி மாதிரி ….
இவரின் பல பதிவுகளில் முதல் பத்தியை சிரித்துக் கொண்டே படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பதிவை வாசித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் இறங்கி ஓடும். என்ன கலையோ .. மனுஷனுக்கு மனச உருக்குற கலை கைவந்த கலை. நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கும். அந்த வகைப் பதிவுகளும் நிறைய எழுதியிருக்கிறார்.
மொட்டும் மலரும்
நிழல்படங்கள் எடுப்பதிலும் வல்லவர். இன்னும் கோவிலுக்குப் போகும் காரைக்குடிப் பெண்களின் தலையில் இருந்த மல்லிகைச் சரப் படம் கண்முன் நிற்கிறது. இவரது கடைசிப் பதிவு: June 22, 2010
அடுத்தவர் செல்வநாயகி. இவரைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. காரணம் அவரின் தமிழ். ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அழகில் முக்குளித்து மிக்க அழகோடு பிறக்கும். அவரது கவிதை, உரைநடை .. எல்லாமே தனி அழகு. பின்னூட்டங்களில் கூட அவரின் தமிழ் நடைக்கு அழகுண்டு. இவரது பதிவுகள் பற்றிப் பேச, எழுத நல்ல தமிழ் வேண்டும். என்னிடம் அது இல்லை. ஆகவே ‘கழண்டு கொள்கிறேன்’!! இவரது கடைசிப் பதிவு – ஜூலை 13, 2012.
இவர்கள் இருவரும் அதிகம் எழுதாதது தமிழுக்கு இழப்பு.. Don’t attach any trace of exaggeration to this. I MEAN it.
இன்னும் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.
பலருக்கு ஒரு நல்ல ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்த காசி …
முதன் முதல் பதிவெழுத வந்த போது உதவிய மதி கந்த சாமி …
தன் ஒரே ஒரு பதிவால் – இந்து மதம் பற்றிய பதிவு – பலர் மனத்தில் இடம் பிடித்த தங்க மணி …அப்பதிவை பின்னாளில் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பதிவுகளையும் காணோம்.
கடும் பின்னூட்டம் மட்டும் இடும் சுடலை மாடன் …
அறிவு சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுதும் பத்மா அரவிந்தன் …
தமிழ் .. திராவிடம் என்று பதிவுலகில் முழங்கிய முத்து தமிழினி ..
அக்கரைச் சீமையில் இருந்து ஈழத்தமிழர் பற்றிய பல கட்டுரைகளும், நூல்களும் எழுதிய திரு …
பாடப்புத்தகத்தில் வைக்கும் அளவிற்கு மிகத் தரமான கட்டுரைகள் – ஈழம், காஷ்மீர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரைகள் – எழுதிய தமிழ் சசி …
இதுவரை ஒரு பதிவை வாசித்து மிகச் சத்தம் போட்டு சிரித்தேனென்றால் அது வரவனையானின் பதிவுக்குத் தான்.
flash வைத்து பல புதிர் போட்டிகள் நடத்திய பெனாத்தல் சுரேஷ் …
சுறுசுறுப்புக்கே பெயர் வாங்கிய பொன்ஸ் …
நகைச்சுவை, மாமியார் கதை, கும்மிப் பதிவுகள் – என்று பலவற்றையும் கலந்து கட்டிய கண்மணி …
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஒன்றை வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்த இளைஞர் குழாம் …
வெண்பா மன்னன் & குறுக்கெழுத்துப் போட்டி என்று உலுக்கியெடுத்த இலவசக் கொத்தனார் …
என்னை பெரியப்பா என்றழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் ராமநாதன் …
சினிமாக்குள் நுழைய முயற்சித்த கதைகளையெல்லாம் எழுதிய வெளிகண்ட நாதர் …
இனிமையான நட்போடு இருந்த நெல்லை சிவா …
இந்து மதத்தினைப் பற்றி நிறைய எழுதிய நேசகுமார் …
நல்ல கருத்துக்களைத் தரமில்லாத வார்த்தைகளால் தந்தமைக்காக தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட ஆரோக்கியம் …
சமயத்தொடர்புள்ள பதிவுகளில் நாட்டம் காட்டிய வசந்தன் …
என்னைத் தாத்தா என்றழைத்த மழை ஷ்ரேயா …
‘நல்லா இருங்கடே!!!’ என்று எல்லோருக்கும் ஆசி வழங்கும் ஆசீப் மீரான்…
தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டி இன்னும் என்னை மிகுந்த பிரமிப்பில் வைத்திருக்கும் ராமச்சந்திரன் உஷா
…
என்னோடு மதப் பதிவுகளில் வழக்கமாக ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னோடு வாதாடிய இஸ்லாமியப் பதிவர்களில் மிக மட்டமான ‘மனிதன்’ – பின் வந்த நல்லடியார் –> இறை நேசன் –> நண்பன் –> (இஸ்லாமியப் பதிவர்கள் அனைவரும் புனைப்பெயரில் மட்டுமே எழுதி வந்தபோது தன் சொந்தப் பெயரில் நான் சந்தித்த முதல் இஸ்லாமியப் பதிவர்) சுல்தான் போன்றவர்கள் …
என் கருத்துக்களோடு பலமுறை ஒத்திருந்த inomeno
அடிக்கடி என்னோடு ‘சண்டை’ போட்ட வஜ்ரா …, முகமூடி …
மாற்றுக் கருத்துகளை அளித்த மதுரைக்காரர் கால்கரி சிவா …
நிச்சயமாக இன்னும் பலர் உண்டு. இவர்களும் என் காணாமல் போன நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்கள் தான். காணாமல் போன இவர்களையெல்லாம் மீண்டும் பதிவுகளில் ‘பார்க்கும்’ நிலை வந்தால் மிக்க மகிழ்ச்சி.
ல் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.
தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?
உள்ளது.
பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.
1. www.vinavu.com
2. www.badriseshadri.in
3. http://maattru.com
4. kaniyam.com
5. blog.ravidreams.net
எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?
இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
<துவக்கம்>
உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].
தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.
இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.
எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.
http://creativecommons.org/licenses/
நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
e-mail : freetamilebooksteam@gmail.com
FB : https://www.facebook.com/FreeTamilEbooks
G +: https://plus.google.com/communities/108817760492177970948
நன்றி.
</முடிவு>
மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.
முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.
கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ?
அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.
மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.
தவிர்க்க வேண்டியவைகள் யாவை?
இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?
நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
email : freetamilebooksteam@gmail.com
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?
Shrinivasan tshrinivasan@gmail.com
Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org
Arun arun@fsftn.org
இரவி
Supported by
Free Software Foundation TamilNadu, www.fsftn.org
Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/
2
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம்.
1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/
தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I
2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –
http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101
https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses
உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம்.
http://creativecommons.org/choose/
3.
மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற
பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.
நூலின் பெயர்
நூல் அறிமுக உரை
நூல் ஆசிரியர் அறிமுக உரை
உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)
இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
——————————————————————————————————–
நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? –
தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks
நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக