தேதியிடா குறிப்புகள்
பொது அறிவு
Backதேதியிடா குறிப்புகள்
வின்சென்ட் காபோ
உள்ளடக்கம்
தேதியிடா குறிப்புகள்
ஆசிரியர் உரை
நூல் அறிமுக உரை
தேதியிடா குறிப்புகள்
1. கூத்து முடிவதில்லை
2. அவதாரத்திற்கு சர்டிஃபிகேட் வேணுமா?
3. காயும் வயிறும், கழியும் நாளும்
4. பாரியாளின் மடி
5. நண்பனா.. நண்பரா… அண்ணனா ???
6. நான்காம் காட்சிக்கான இலக்கியப்பிரதிகள்
7. மெய்ஞானி பேசுகிறார்
8. ஆலமரத்து விழுதுகள்
9. சொல்லாததும் சத்தியமே
10. ஏழாம் உலகத்தின் கடவுள்
11. வன்ம நதியில் நான் பயணிக்கிறேன்
12. என்ன சொல்லிப் பாடுவதோ?
13. மழைப்பாடல்
14. பாடலும் தேடலும்
15. இருக்குதா இல்லையா?
16. ஊடிப்பிணங்கிய உள்ளங்கள்
17. துயரத்தின் காயாத வடு
18. நான்காவது காட்சி
19. நம்பர் 1 எழுத்தாளர் ஏகாங்கியிடம் நேர்காணல்
20. கரிச்சான் குஞ்சு பற்றி
21. மற்றொரு கௌரவக் கொலை
22. ஏகாங்கியின் எக்ஸ்ப்ளோசிவ் எகத்தாளப்பேட்டி
23. தேர்வுகள்…தேய்வு…தேறாத மனம்
24. மேல்காற்றும் கீழ்காற்றும் வீசிய பொழுதது
25. அன்புள்ள3
26. அது இது அடுத்தது?
27. ஆட்டநாயகன் யார்?
28. உறைந்துபோன புன்னகை
29. திருடன் எப்படி இருப்பான்?
30. நான்காம் காட்சி தி குட் தி பேட் தி அக்லி
31. பூந்தி இல்லாத லட்டு சாப்பிடுங்களேன்!
32. கையைக் கழுவுங்க ஐயா!
ஆசிரியரை பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
தேதியிடா குறிப்புகள்
நூலின் தலைப்பு : தேதியிடா குறிப்புகள்
ஆசிரியர் : வின்சென்ட் காபோ
ஆக்கத்தலைமை : ச.ஜெ அன்பரசு
நூல் தொகுப்பில் உதவி : அரசமார், ப்ரான்சிஸ் கார்த்திக்
தட்டச்சுப்பணிகள் உதவி : பூங்கோதை, ஜோஸபின்
வெளியீட்டு அனுசரணை : komalimedai.blogspot.in
அட்டைவடிவமைப்பு : தி ஆரா பிரஸ்
மின்னஞ்சல் : sjarasukarthick@rediffmail.com
மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் – vsr.jayendran@gmail.com
காப்புரிமை: Creative Common Attributes Non – Commercial No Derivatives International License 4.0 எனும் உரிமத்தின் கீழ் அனைவரும் இதனைப்படிக்க, பகிர, பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்நூலை வேறு எங்கு பயன்படுத்தினாலும் மின்னஞ்சல் முகவரி மற்றும் வலைப்பூ முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
இம்முறையில் வெளியான பல நூல்களை Http:/Freetamilebooks.com எனும் தளத்தில் எளிமையாக இலவசமாக தரவிறக்கி படிக்க முடியும். மேலும் எளிய முறையில் நூல்களை பதிப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு யாரும் தங்கள் நூல்களை மின்னூலாக பதிப்பிக்க முடியும்.
2
ஆசிரியர் உரை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடா குறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது!
பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்போல இவையும் அழிந்துபோயிருக்கும் சூழலில் காப்பாற்றப்பட்ட குறிப்புகளாகும். இதை எழுதியவர் இன்று இல்லாதபோதும் காலத்திற்கேற்ப தொகுத்தளிக்க முயற்சித்திருக்கிறேன். வெளியீட்டு அனுசரனையாளரான komalimedai.blogspot.in வலைப்பூவிற்கும், அழகாக அட்டைவடிவமைத்த தி ஆரா பிரஸ் குழுவினருக்கும் என்றும் எனதன்பு உரித்தானது.
பிரியங்களுடன்
வின்சென்ட் காபோ
3
நூல் அறிமுக உரை
இந்த நூல் சமூகத்தின் பல்வேறு இறுக்கமான தன்மை விதிகளால் மூர்ச்சித்த ஒருவனின் வாழ்க்கையை முன்னும் பின்னுமாக பேசுகிற கட்டுரை வடிவிலான எழுத்துக்களை கொண்ட நெடுஞ்சிறுகதை போல வசீகரிக்கிற தன்மையினைக் கொண்டுள்ள எழுத்துக்களாகும். சிலவேளைகளில் படிக்கும்போது டைரிக்குறிப்புகள் போன்று தோன்றும். பின் அவை வேறு தனி வாழ்வை பேசி திடீரென மொத்தமாக ஏதோ ஒன்றை கூறுவது போலாகி செல்லும் இந்த வடிவம் வித்தியாசமான ஒன்று. துக்கத்தில் திளைக்கிற ஒரு இதயத்தின் தீராத வலியையும், அதேபோல் எல்லாவற்றையும் கேலியாக, கிண்டலாக எடுத்துக்கொண்டு பகடியான முறையில் பயணிக்கும் எழுத்தையும் காணமுடியும். இந்த முரணான தன்மைதான் இதில் சுவாரசியமே. இதை தொகுத்தளித்த வின்சென்ட் எனது பெரும் நன்றிக்குரியவர். அறச்சலூர் ப்ரகாஷ், வெள்ளோடு மெய்யருள், தாராபுரம் இரா.முருகானந்தம், எழுத்தாளர் என். ஸ்ரீராம், மற்றும் இதற்கு முன்பு இரு நூல்களை மின்னூலாக்கி பதிப்பித்து உதவிய freetamilebooks.com வலைதள நண்பர் திரு. சீனிவாசன் ஆகியோரின் உற்சாகமும், ஊக்குவிப்பும் இல்லையென்றால் இந்நூல் சாத்தியமாகி இருக்காது. வேறென்ன? வாசியுங்கள். வாழ்வைக் கொண்டாடுங்கள்.
ப்ரியங்களுடன்
ச.ஜெ. அன்பரசு
4
தேதியிடா குறிப்புகள்
Un edited version
படிக்கும் முன்…
இங்கு எழுதப்படும் அனைத்து எழுத்துக்களும் எந்த மனிதர்களையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி தங்களை குறிப்பிடுவன என்று யாராவது உணர்ந்தால் அது திட்டமிட்டே எழுதப்பட்ட ஒன்றே. இதனைத் தொடர்ந்து படிக்கின்ற ஒருவர் சிறந்த செவ்விலக்கியத் தன்மை கொண்ட எழுத்தை படித்துக் கொண்டிருக்கும் ஒரு பரவசத்தை உணர முடியும் என்று பலர் கூறும் கனவை நான் காண நேர்ந்தது தற்செயலானதல்ல என்பதை உணர்கிறேன் நான். செவ்விலக்கிய வாசகர்களுக்கான முழுமையான பிரதி இந்த எழுத்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பேன்.
– கோமாளி
1
கூத்து முடிவதில்லை
இடம்: ஈரோடு ஆர்.டி.ஓ ஆபீஸ்
காலம்: காலை பத்து மணிக்கு மேல்
இன்று எப்படியோ எல்எல்ஆர் போட்டுவிட்டு வந்துவிட்டேன். என் முகத்தைப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று தோன்றுகிறது. நான் ஆர்டிஓ ஆபீசில் நுழைந்து எல்எல்ஆர் உரிமம் தரும் அறைக்கு நுழைந்ததும் பார்த்தது மொட்டைத்தலைக்காரரைத்தான்.
‘’ சார் எல்எல்ஆர் இன்னைக்கு தர்றன்னீங்க?’’
அவர் வாலிபராக மாறும் வயதான இருபத்தெட்டு வயதின் மத்திமத்தில் இருக்கக்கூடும். எளிமையாக பேச்சிலும் படு சிக்கனமானவராக இருந்தார்.
Ò¢ மொதல்ல ஒட்காருப்பா, போ அந்த பெஞ்சிலதா போ ’’ என்ற படி அரசு அலுவலகத்தில் என்றும் இல்லாத பரபரப்பை உண்டாக்கி தான் வேலை செய்வதாக ஒரு காட்டு காட்டிக்கொண்டிருந்தார்.
எனது திருட்டு முழி ஊர்பிரசித்தி பெற்றது. அதனையே அப்போது கைக்கொண்டேன். இதை வாங்கவே மூன்று நாள் ஆகிவிட்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டிரைவிங் ஸ்கூல் கூட்டம் வந்துவிடுமே! தனியாக எல்எல்ஆர் எடுக்க வரும் நபர்களுக்கு எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதிலான நாளைக்கு வாப்பா என்பதுதான் நமக்கு கிடைக்குமோ என்று பெரும்பீதி வயிற்றில் ஊர்ந்துகொண்டிருந்தது.
சிவப்பான மொட்டைத்தலைக்காரர் இடுப்பு தசை வெளியே பிதுங்கி வழிந்துகொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு எல்எல்ஆர் தேர்வு எழுத தன் அறிவையே அர்ப்பணம் செய்து கைபிடித்து தச்சர் போல திரையில் இழைத்து கொண்டிருந்தார்.
தன் வாழ்வில் இது பெரும் சாதனை என்ற உணர்வை அவரின் முகத்தில் பெருகிய பிரகாசத்திலிருந்து கண்டுபிடித்தேன். பின் வெற்றி பெற்ற களைப்பில் பெண்ணை விட இவருக்கு அதிக வியர்வை உடலில் பூத்திருக்க இருக்கைக்கு திரும்பினார்.
தன் மேசையில் இருந்த கோப்புகளை தட்டிவைத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். நான் மிகுந்த ஏக்கத்தோடு, மறுபடியும் ஏதாவது ஒரு பெண் வந்துவிடக்கூடாது என்று ஆவேச கருமாரியம்மனை இரண்டு எலுமிச்சம்பழத்தை வேல்கம்பில் குத்துகிறேன் என்று பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு வேண்டிக்கொண்டிருந்தேன்.
அவருக்கு எனது பொறுமை பெரும் மகிழ்ச்சியை, வள்ளலின் வாரிசு என்ற பெருமையை நீக்கமற ஏற்படுத்த, தலை நிமிர்த்தி பார்த்து,
‘’ தம்பி பேரென்ன, பழனிச்சாமியா? ’’
‘’ ஆமாங்க’’
‘’ இங்க வா, வந்து கையெழுத்து போட்டுட்டு இத எடுத்துக்க’’
ஆத்தா நான் எல்எல்ஆர் வாங்கீட்டேன் என்று கத்தவேண்டும் போல் இருந்தது.செரி இன்னும் லைசன்ஸ் வாங்கலியே என்று சமாதானப்படுத்திக் கொண்டு கிளம்பினேன்.
என்னுடைய ஏன் எங்களது குடும்ப பாரம்பரிய பலவீனமே எதுவாக இருந்தாலும், ஊர்மத்தியில் உள்ள தண்ணீர் டேங்கில் ஏறி உலகத்துக்கே அறிவித்து திகிலூட்டுவதுதான். இன்றைய காலம் வரையில் என் அப்பன் இதில் அவுட்ஸ்டேண்டிங் பர்பாமன்ஸில் பின்னி வருகிறார்.
‘’ ஏம்ப்பா அவருகிட்ட சொன்னீங்க? ’’
‘’ இப்ப என்ன பொய்யா அது உண்மையத்தான சொன்னன், என்ன திருட்டுவாரா என்ன? ’’ என்று கூறி பின்னர், கொன்றை வேந்தன், திருக்குறளிலிருந்து திரிபடுகடாம் வரை பொருளுரை கூறுவார். அப்போதுதான் எனக்கு ஆத்திரம் கொடைக்கானல் எப்.எம் தகரவாயன்கள் மேல் திரும்பும். கம்முனு இருக்கிறானுகளா இந்த நாயுவோ, எட்டாவது படிச்ச மனுசனுக்கு எத்தன கத்து குடுத்துட்டானுவ…
எப்போதுமே நாம் ஒரு திட்டத்தில் இருந்தால் என் அப்பன் அதை ஒரு காம்பினேசன் திட்டமாக மாற்றி தன் பெருமையை நிலைநாட்டுவதில் வல்லவர்.
‘’ அப்பா பெரிய வண்டிய எடுத்துக்கிட்டு போறங்பா ‘’
‘’ எடுத்துட்டு போ, தம்பி. மீசக்காரப் பெரியப்பா வர்றன்னு சொன்னாப்பில, அவரு ஏதோ எல்எல்ஆர் போடோணுமாமா, வர்றன்னாப்பில கூட்டிக்கிட்டு போயிரே ‘’ என்றார்.
எனக்கு கடும் எரிச்சலாக இருந்தது. மீசக்காரப் பெரியப்பா ஏன் குறுக்கே வந்து விழுந்து எல்லாத்தையும் யூ டர்ன் போட்டு உடைக்கிறார்!!!.
அப்பனின் சிறப்பே ஒரு வேலை முடிந்து நாம் ஓய்வெடுக்க சிறிதும் வாய்ப்பே கொடுக்க மாட்டார். பைக்கை எடுத்து நிறுத்தி, ஹெல்மெட்டை எடுத்தேன்.
‘’ தம்பி இரு, மீசக்காரரு, இப்ப வந்துருவாரு, அவருக்கு இந்த பாமு எல்லா நெரப்பத் தெரியாதாமா கொஞ்சம் பண்ணிக் குடுத்தர்றியா ? ’’
நான் பார்ம் நிரப்ப எந்த உதவியும் யாரும் செய்யவில்லை. ஆனால் இவருக்கு நான் செய்யவேண்டுமாம். எல்எல்ஆர் வாங்குவதே மூன்று நாள் விழா போல் கொண்டாடிய ஒரே ஆள் நான்தான்.
மீசக்காரர் பார்த்தால் செவன் அப் தலைக்கு எண்ணெய் வைக்காமல் ஒரு பையன் வருவானே அதுபோலவே இருப்பார்.வெள்ளைச்சட்டை, வேட்டி என மிருதங்கம் வாசிப்பது போல் ஒரு கெட்டப். பைக்கில் ஏறியதும் மணியைப் பார்த்தால் ஒன்பது முப்பது ஆகிவிட்டிருந்தது. பத்து மணிக்கு ஆபீஸ் போய் சேர்ந்ததும், பார்ம் வாங்கி நிரப்பத்தொடங்கினேன்.
‘’ பெரீப்பா பிறந்த தேதி சொல்லுங்க ?’’
‘’ அதெல்லாம் தெரியிலியேப்பா ‘’
ரேஷன் கார்டில் பிறந்த தேதி என்ற இடத்தில் ஏகப்பட்ட எக்ஸ்களாக நிரம்பியிருந்தது. முகவரியை எழுதி கையெழுத்து போடச்சொன்னபோது, மீசக்காரர் பீடியை குடித்தவாறே, ‘’ அதெல்லாம் நமக்கு வராதுப்பா, மொதல்லயே போட்டு பழகோணும் அப்பத்தே முடியும்’’ அப்போதுதான் என் இண்டெலிஜென்ஸ் மூளைக்கு உறைத்தது. பெரியப்பாவிற்கு படிக்கத் தெரியாது. எழுதவும் தெரியாது. கைரேகைதான்.
சரி விட்டுவிடுவோம் என போட்டோ கேட்டேன். போட்டோவை அவ்வளவு சிக்கனமாக இந்தியாவில் எடுக்கமுடியும் அன்றுதான் தெரிந்தது. பெருவிரல் நகம் அளவு வைத்திருந்தார்.
‘’ பெரீப்பா இதென்ன போட்டோ இவ்வளவு சின்னதா.. இத வெச்சுக்கிட்டு….?? ‘’
‘’ ஏங் கண்ணு இத வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதா? ‘’
‘’ கொஞ்சம் பெரிய போட்டாவா வேணுங்க பெரீப்பா ‘’
‘’ அதெல்லாம் இல்லயேப்பா, இப்ப என்ன பண்றது? ’’
‘’ ரேஷன்கார்டு ஜெராக்ஸ், ஓட்டர் ஐடி ஜெராக்ஸ் வெச்சிருக்கீங்களா? ’’
‘’ இல்லயேப்பா, உங்கப்பன் இதுதே எடுத்துக்கிட்டு வரச்சொன்னாப்பல ‘’
கடையில் போய்க் கேட்டேன் ஜெராக்ஸ் எடுக்க.
‘’ தம்பி இப்ப எங்க கரண்டு இருக்குது? பன்னண்டு மணிக்குத்தே வரும்’’
பதினொரு மணிக்கு இரு சக்கர வாகனங்களுக்கான நேரம் முடிந்துவிடும். பின் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டிப்பார்க்க சென்று விடுவார்கள்.
‘’ பெரீப்பா நீங்க இன்னிக்கு எல்எல்ஆர் போட முடியாது. டிரைவிங் ஸ்கூல் போய் வாங்கறக்கு பாருங்க ‘’
இதற்கப்புறம் என்ன நடந்தது மறுபடியும் முதலில் இருந்து படியுங்களேன்.
2
அவதாரத்திற்கு சர்டிஃபிகேட் வேணுமா?
மாமன் வீட்டிற்கு போனாலே பெரும் நிம்மதி சூழ்ந்தது போல உணர்வுக்கு ஆட்படுவேன். இப்போது காலம் மாற, மாற மின்சார வெளிச்சம் எல்லாவற்றையும் ஆபாசமாக்கிவிட்டது. இருள் எவ்வளவு விஷயங்களை மனதிலிருந்து கொண்டுவருகிறது. பகல் அனைத்தையும் அமைதியாக்கிவிடுகிறது. கண்கூசும் வெளிச்சம் எப்போதும் இருளைவிட பயமுறுத்துவதாக இருக்கிறது. அப்போதுதானே வீடுறங்கும் மிருகங்கள் வெளியே வருகின்றன.
மூன்று கிலோ பெறுமானமுள்ள மீன் குழம்பு வைத்திருந்தால் நன்றாகயிருந்திருக்க கூடும். பொரித்து தட்டில் போட்டார்கள். மீன் பிடிக்க துரைசித்தப்பா, செல்வண்ணன் என இருவரும் வலையோடு வந்திருந்தார்கள். இருவரும் பிடித்த மீன்களை சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
நாடகத்தில் நடிக்கும் சீன முக நடிகர் வந்திருந்தார். அவரும் உறவின் முறை என்றாலும் நம்பவே முடியாது. அவர் மட்டும் நூடுல்ஸ் பாக்கெட்டோடு விளம்பரத்தில் நின்றால் அசல் சீனாக்காரன் போலவே இருப்பார். மீசை கூட மாஸ்டர் டீச் மீ குங்பூ வகையறாதான்.
நடிகர் தன் திரையுலகப் பிரவேசம் எப்படி வெட்டியாகப் போனது, தான் நடிகனானது, நாடகத்தில் தன் திறமையை முதன் முதலாக காட்டி பாராட்டு பெற்றது என நீண்ட நேரம் பேசி பின் வக்கிர உதிரத்திடம் உதவி கிடைக்கும் என நம்புவதாய் கூறினார். எனக்கோ சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. வக்கிர உதிரம் இல்லாத வாக்குறுதியை தன் குருவான கங்காணிச் சித்தனை விட சடுதியில் தர வல்லவர். நம்பிக் கெட்டவர்கள் பலரும் ஊரில் வெயிலுக்கு வெறியேறி திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
நடிகர் தனக்கு நாடக மன்றம் ஒன்று கொடுத்த சிறந்த நடிகர் என்ற ஒப்பந்த விக்கிரக பத்திரத்தைக் காட்டினார். அடுத்தமுறை மடித்தால் நான் தாங்கமாட்டேன் என்று அக்காகிதம் பேசுவது போலிருந்தது. செல்லோடேபின் அன்பினால் உயிர்பிழைத்திருந்தது. இவர் சினிமாவுக்கு வந்தால் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதில் இருந்தது நம்பிக்கையா, அவநம்பிக்கையா என்றே தெரியவில்லை. ஒரு நெடுந்தொடரிலாவது நடித்துவிட்டுத்தான் நான் இறப்பேன் என்று நாடக வசனம் ஒன்றைப் படித்துக் காட்டினார் ஏறத்தாழ அறுபது வயதை எட்டிவிட்ட சண்முகம் என்கின்ற ‘நடிகர்’
தனியன் செல்கின்ற பாதை
இரவுகளின் காற்றில் தனியே
எரியும் உடல் தனிமையை
உணரவில்லை. விம்மி அழுது
அரற்றும் விம்மல் நிற்கவில்லை.
தனித்த உக்கிரவெம்மையில்
நகங்களின் பிறாண்டலில்
குருதிக் கவிச்சி கசிகிறது.
கண்ணாடித்துகள்களும், உப்பும்
நிறைந்த சாலையில் என்னைத் தேய்த்து
சிரித்துக்கொண்டே இழுபடுகிறேன்.
கரங்கள் இயல்பாக நாசி பொத்த,
கனவுகளின் கனம் சங்கிலிபோல் தரையில்
பிணைக்கிறது.
மிச்சமுள்ள சொற்களை எழுத
குருதி மெல்ல ஆசுவாசமாக வெளியேறுகிறது.
இதயத்தின் ஒலி பெரும் பறையாய் ஒலிக்க
ஒரு எறும்பு என் கண்களைப் பார்த்துக்கொண்டே
இருக்கிறது.
– சரயு
இறுக்கப்படும் வாழ்வு
அழுகையின் தீர்க்கம்
தீனமாக பெருகிய பொழுது
உனது தொலைக்காட்சியின்
ஒலி கூட்டப்படுகிறது.
ஒலி கூடியும், குறைந்தும் கூட
தாக்கும் என்பதை உணர்ந்தபோது,
கழுத்துக்கும், கயிற்றுக்கும் அளவு
குறைந்திருந்தது.
பாடலின் ஒலி என் காதுகளில் கேட்டபோது
வாயிடுக்கில் குருதியின் உப்புச்சுவை
கரித்தது.
அடுத்தநாள் ஒலி கூட்டும் விளையாட்டு
இல்லை.
3
காயும் வயிறும், கழியும் நாளும்
காலையில் தினகரன் கொடுமுடிக்குப் போய் வாங்கிவந்தேன். பின் சமையல் செய்தேன். சிறிது படித்தேன். பெரும் அலுப்பு என்னைச் சுற்றி பின்னல்களாய் இறுக்க தொடங்கியிருந்தது. உள்ளே பெரும் கடும் வெறுப்பு என்னையே எரித்துவருவது போல் தோன்றியது.
அலைபேசியின் அழைப்பொலி கடும் எரிச்சலை மனதில் வழிய விடுகிறது. சலனமில்லாத இரவுகளின் தோள்கள் கடுமையாக குலுக்கி எழுப்பப் படுகிறது. அழைப்பு ஏற்றவுடன் வக்கிரத்தின் ‘என்ன செய்கிறாய்’, ‘எங்கே இருக்கிறயாய்’ என்றொரு பாச பின்னணி புலனாய்வுக் கேள்வி.
திருமணமான அவருக்கு செய்ய பல வேலைகள் இருக்கக் கூடும். எனக்கு என்ன இருக்கும். இப்போது பாசம் என்றாலே பேசுவது என்றாகிவிட்டது. சலிப்பூட்டும் கேள்விகள் தொடர்கின்றன. தந்தை என்னைப் பார்த்து கேட்கும் ஒரே கேள்வி சோறு வெச்சயா என்பதுதான்.
நீங்கள் பல கேள்விகள் கேட்கிறீர்கள். நான் ஒரே கேள்வி மட்டுமே கேட்கிறேன். நானென்ன அதிசயம் நிகழ்த்தவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நான் உங்களது கையின் விரலல்ல. பொம்மையுமல்ல. வெட்டியானைத் தவிர்த்து வெட்டியான் யாருமில்லை என்று போதனை வேறு. இறையன்புதானே இதெல்லாம் செய்வார். உங்களுக்கெதற்கு இந்த வேலை. வயிறு மட்டும் பசிக்காமல் இருந்தால் இவ்வளவு சங்கடங்களை நான் சந்தித்திருக்க மாட்டேன். காரணமில்லாது விளைவேது?
உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் முதல் இடம்
வகிக்கும் ஏகாங்கியின் எக்ஸ்ப்ளோசிவ் நேர்காணல்
குட்டை நதி இதழிலிருந்து… குஞ்ஞுக்கி மணி
உங்கள் கதைகளில் வடிவங்களைவிட வசனங்கள் ஈர்ப்பது போல் உள்ளதே, இது எப்படி?
என் எழுத்துக்களில் வடிவம் பற்றி சிறிதும் நான் கவனம் கொள்வதில்லை. மரமேறும் சமூகம் பற்றிய கதைகளை பகுதியின் யதார்த்த பேச்சாக முடிந்தவரை மாறாமல் பார்த்துக்கொள்கிறேன். உரையாடல்களில் முழு கவனமாக திருத்தி எழுதுவேன். தொடர்ந்த திருத்தம் உரையாடல்களை செம்மையாக்குகிறது என்று நம்புகிறேன்.
உங்கள் கதைகளில் வசைகள் கடும் உக்கிரத்துடன் உள்ளதே, பகடி சிறிதும் இல்லாமல் கடுமையான மனநிலை உருவாக்குகிறதே?
இது என் தவறே. இனி பகடிகளும் அங்கதமும் புது சாயலில் இடம்பெறும். மிகத்தீவிரமான வசைகளின் உக்கிரம் கலைந்துவிடக்கூடாது என்றுதான் பகடியைச்சேர்க்கவில்லை. எனது கதையின் மனிதர்கள் அனைவரும் கடும் சோதனையான மனநிலையிலும் கனவு போன்ற உலகில் கால்களின் வெம்மை தணித்து திரிபவர்கள். அவர்களை கூறும்போது பகடி நிலைமையை நீர்த்துபோகச்செய்துவிடும் என்று நினைத்தேன். இனி என் எழுத்துக்கள் பல வகைகளைத் தொட்டு தொடரும்.
4
பாரியாளின் மடி
கோமாளிப்பையன்
டி. எம் சௌந்தர்ராஜனின் குரலில் உன் கண்ணில் நீர் வழிந்தால் எனும் பாடல் வெள்ளமென இரவு நேரத்தை மிதக்க வைக்கிறது. கசிந்துருகச்செய்கிறது.
வக்கிரத்திற்கு நான், பாஸ்கரன் என அனைவரும் உடனிருந்த போதும், அவரின் மனதிற்கு மைலாடி மங்கையின் மடி சூடு தேவைப்பட்டது. அவரின் உள்மனத்தேவை காமம் பற்றியதா இல்லையா என்பது சிறிது ஐயமான ஒன்றாக இருந்தது.
அவரின் கவனம் மிகவும் சிதறத்தொடங்கியிருந்த பொழுது அது. பாசிப்பருப்பு குழம்பு போஸ்டருக்கு ஒட்டும் பசையையும் மூத்ததாக மாறிவிட, வாயில் அப்லோடு செய்வதற்கும், காலையில் டவுண்லோடு செய்வதற்கும் கடும் பிரயத்தனம் வேண்டியிருந்தது. எங்களது அன்பு அவருக்கு அரசின் காலத்திற்கொவ்வாத குறைந்த மானியம் போல் மாறிவிட்டது போல.
நடந்து முடிந்த திருமணம் எனக்கு உவப்பில்லை. மணம் புரிந்தவர்கள் நன்றாக வாழ்ந்தால் சரி. பெண்ணின் உடல் ஆணுக்கு கிடைப்பதே பெரும் தவத்தின் பின்னான வரம் போலத்தான். எத்தனை நுழைவுத்தேர்வுகள், தகுதிகள் தேர்வுகள், தாண்டிக்குதிக்க பல பலகைகள், அம்மாடியோவ்….
திறப்பில் உட்புகும் காற்று எனும் உலகத்தில் மிகச்சிறந்த பெக்கர் பரிசிற்கான சிறுகதையை எழுதியாயிற்று. இனி அடுத்து கைகாரரின் கைங்கர்ய லேகிய புராணத்தை எழுத முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன்.
கண்ணதாசனின் காலங்களில் அவள் வசந்தம் பாடல் கண்கள் செருக கேட்டுக்கொண்டே உறங்குகிறேன். டேக் ஆப் தி பிளேன். இரவுக்காட்சி தொடங்கிவிட்டது. போய்வரவா……
5
நண்பனா.. நண்பரா… அண்ணனா ???
பாலஅகோரி
ஆயில்ய அகோரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உண்மையில் கவிமன குழந்தை. இறகு மனம் கொண்டவர். ரசிக்கின்ற ரசனை பெருகிய மனிதர். நாம் சாதாரணமாக பார்க்கும் ஒன்றை அவர் வேறு மாதிரி அட இப்படியும் இருக்கலாமா என்று ரசித்துப் பார்ப்பது எனக்கு கடும் பொறாமையை ஏற்படுத்தியது. அனைவரிடமும் மிக நேர்மையாக, மனதை உணர்ந்து பேசும் சுபாவிதான் அவர்.
எனக்கு நண்பர்கள் அனைவரும் ஐந்து அல்லது ஆறு வயது மூத்தவர்களாகவே அமைகிறார்கள். இது எப்படி அமைகிறது என்று நான் யோசிக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. சக வயது நண்பர்களின் சினிமா விவகாரங்கள், அபத்த விஷயங்கள் எனக்கு கடும் அலுப்பை, என் ஆன்மாவின் சாறை உறிஞ்சி மண்ணில் துப்பி என்னை கடும் ஒற்றைத்தலைவலியில் தள்ளுகிறது.
தூங்காத கண்ணென்று ஒன்று பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்டிசைன் புத்தகம் ஒன்று வாங்கவேண்டும். பணமிருக்கிறதா என்று பார்ப்போம்.
காலத்தே நன்றி கூறலாமா?
அனைத்துமே ஒரு குறிப்பிட்ட காலம்தான். பின் விலகிவிடும். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு நன்றியை குறிப்பிட்ட காலத்திலேயே தெரிவித்துவிடுங்கள். பின் காலம் எப்படி அமையுமோ?
அருவியின் வீழ்ச்சியைக்கண்டு எத்தனை பேர் மகிழ்ந்துபோகிறார்கள். கவலைகளை மறக்கிறார்கள். அதுபோல வாழவேண்டும். குறைந்தபட்சம் சுனையாக முயற்சிக்கலாமே!
கல்யாணம் கண்ணீர் களேபரம்
கலவரம் ஓய்ந்த குடியிருப்பு பகுதிபோல இல்லம் தோன்றுகிறது. வக்கிரத்தின் திருமணம் முடிந்தது பெரும் தலைவலி நீங்கியது போல் புத்துணர்ச்சியைத் தரும் என்று நினைக்கிறேன். எறும்புகள் வைத்திருந்த கடலை மிட்டாய், முறுக்கு என நிதானமாக உண்டு செரித்துக்கொண்டிருந்ததையும் கூட என்னால் கவனிக்க முடியாத படி வேலை. வக்கிரம் எப்போதும் எந்த வேலையிலும் கௌரவத்தோற்றத்தைத்தான் விரும்புவார்.
மூன்று நாட்களும் ஏதோ பெரும் வாகனப் போக்குவரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்ட உணர்வு. மூக்கு ஊசியாய் இருந்தால் முட்டாள்தனமாக கோபப்படுவார்களாம். அனுபவ உண்மை!
பெண்களை புரிந்துகொள்வது குறித்து எப்போதும் போல பெஸ்ட் செல்லர் லிஸ்டில் பல புத்தகங்களை அமெரிக்கர்கள் எழுதிவிட்டாலும் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்கும் உள்ளங்களைத்தானே நாம் கொண்டுள்ளோம். எத்தனை வரையறைக்குள்ளும் அடங்காதது பெண்ணின் மனம் என ஏன் நமக்கு புரிவதேயில்லை. ஏதோ அல்காரிதம் போல் சில விஷயங்களை செய்தால் படுக்கைக்கு தயாராகிவிடுவாள் பெண் என்பது சரியான வாதமா, எண்ணமா விஸ்வேஸ்வரா காப்பாத்து! ப்ரியா தம்பி மற்றும் டாக்டர் ஷாலினி நமக்கு ஏதாவது புரியவைப்பார்கள் என்று நம்புகிறேன்.
அடவாதம், கால்களை தரையில் உதைத்தழும் பிடிவாதப் போக்கு என குழந்தைகளின் அதே மனநிலை இன்று பாத்திரங்களை உடைப்பது வரை புதிய சாத்தியங்களை எட்டியிருக்கிறது.
சொல்லின் மறைமுகப் பொருளை உணர்ந்துகொண்டு செயலாற்ற வேண்டும், உடன்பிறந்தானைவிட மிகச்சிறந்த செயல்வல்லமை உடையவனாக தன்னை மாற்றிக்கொள்ளுதல் வேண்டும் என்ற அனுபவ தரிசனங்கள் எனக்கு வக்கிரத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.
உணர்வு பூர்வமாக, அறிவுப்பூர்வமாக என்று ஆணையும், பெண்ணையும் பிரிக்கிறார்கள். பெரிய ஆராய்ச்சியெல்லாம் நான் செய்யத் தேவையில்லை. அக்கம், பக்கம் ஆயிரத்தையும் பார்க்கிறோமல்லவா!
ஆயில்ய அகோரியிடம் பேசினால், அதுவும் பெண்களைப் பற்றி என்றால் நைட் ஷிப்ட் கூட ஓவர் டைம் உரையாற்றி நம்மை மெய்ஞான கடலில் சேர்க்க கடும் முயற்சி மேற்கொள்வார். எனது ஐயமெல்லாம் அப்போது மரபான லங்கோடினைத் தரிப்பதா அல்லது வக்கிரம் வழங்கிய ஜாக்கியை என்பதாக என் மனம் சிந்தனைநதியில் கால் நனைக்கிறது.
6
நான்காம் காட்சிக்கான இலக்கியப்பிரதிகள்
நூலகவாசி
கைக்கட்சிக்காரர் இருபத்தொரு நிமிடங்கள் செல்பேசி வழியாக சமகால இலக்கிய நூல்களைக் குறிப்பிட்டுப் பேசினார். மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்பதை கூறவும் வேண்டுமா!
குறிப்பிட்ட ஆண்டுகளில் வெளிவரும் நூல்களை வாசித்து விமர்சிக்கும் அளவு நான் எதையும் படிப்பதில்லை. திரைப்படம் ஆக்குவதற்கான தகுதி என்பதை திரைமொழி தெரிந்தவர் எதிலிருந்தும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். திருப்பூராரிடம் நான் பரிந்துரை செய்தது காடு எனும் ஜெயமோகன் எழுதிய நாவலைத்தான். கூடவே ஆதவனின் சிறுகதைகள் அல்லது அவர் எழுதிய என் பெயர் ராமசேஷன் எனும் நாவலையும் கருத்தில் கொள்ள முடியும். அறிவுஜீவித்தனமான நுணுக்கமான பகடி, அங்கதச்சுவையினை இவரது எழுத்தில் தரிசிக்க முடியும். திரைமொழி தெரிந்தவரின் பார்வைக்கு இது ஒத்து வரவேண்டுமே.
பேச்சில் பெரிய ஆளுமை கிடையாது எனக்கு. கடிதம் மூலமாக இன்னும் தெளிவாக சில நூல்களை கூறிவிடமுடியலாம். உரையாடல் அதுவும் திருப்பூராரிடம் என்றால் பதட்டத்தை அளவிட முடியவில்லை.
திரைக்கதை அமைப்பது, அதற்கான உதவிகளைத் தேடுவது என்பதில் வேண்டுமானால் நான் உதவி செய்யமுடியும். ஆனால் முழுமையாக அல்ல. அது அதிக பாரமான வேலை. என் தோள்களும், மனமும் கொள்ளும் உணர்ச்சி வேகத்தை என் உடல் தாங்குவதில்லை. ஒரு சிறுகதை எழுதினாலே கடும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்படுகிறேன்.
ஓரம் சாயும் படைப்பு மனம்
நாகம்மாள் எனும் ஷண்முகசுந்தரம் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
படைப்பாளிகளின் மனதை அவரது படைப்பை விட டிவியில் அமர்ந்து பேசும் பேச்சு அதிகம் கூறிவிடமுடியாது. குறிப்பிட்ட வயதின் பின் ஏனோ முழுக்க தன் சாதி சார்ந்த ஆதிக்கம் கூறுவதாகவே மாறிவிடும் படைப்பு மனங்களை காணமுடிகிறது.
நூலகத்தில் நாளை நூல்கள் எடுக்க வேண்டும். வாசிப்பு என்னை சுற்றுப்புறத்திலிருந்து, சமயத்தில் என்னிடமிருந்து என்னை காப்பாற்றுகிறது. பல்வேறு வாழ்வனுபவங்களின் உலகில் சஞ்சரித்துக்கொண்டுள்ளேன். இதை புத்தகங்கள் மூலம் சாதித்த அண்ணாநகர் எழுத்தாளருக்கும், கைகாரருக்கும் நன்றிகள் கோடி.
தவிப்புகளும் முயற்சிகளும்
வாழ்க்கையின் சுவாரசியமே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறியாது இருப்பதே. இதைவிட ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் எங்கு காணமுடியும்.
‘கோல்ட் பொண்ணு’ இதழில் பணி புரிய ஆட்கள் தேவை என்றிருந்த எழுத்துக்களை கண்ணில் பட்டது. அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் என்னமோ அதற்கு இசைவான வேலைகள் தொடங்கலாமென்று நினைக்கிறேன் கிடைத்தால் பார்ப்போம்.
இனி நான் தனியாக வாழ்ந்து திரியவேண்டும். எனக்கென்று ஒரு அணைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் அது கட்டாயமல்ல.
நிறைய வாய்ப்புகள் கண்முன்னே ஆனால் எதில் கவனம் கொள்வது என்று தயக்கம், கூச்சம் மனம் இறுக்கி கொல்கிறது.
பணத்தின் தேவை உணர்கிறேன். வேலை மூலம் கிடைத்தால் மிக மகிழ்ச்சி. தங்குமிடம், பயணச்செலவுகள் தான் கடும் நிராசையை உணர்த்துகிறது.
அடுத்த ஆண்டு பிறக்க இரு மணி நேரங்களே மிச்சமுள்ளது. தலித் தெருக்களில் சிம்பு ஆண்டை உற்சாகமாக வரவேற்று பாடிக்கொண்டிருக்கிறார். இப்போது கன்னித்தீவு பாடலுக்கு அமீர் ஆடத்தொடங்கிவிட்டார்.
7
மெய்ஞானி பேசுகிறார்
-நம்பிகிருஷ்ணன்
நம்பிக்கை நமக்கு இருக்கிறதா என்பது நம் செயலின் ஈடுபாடு, வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கின்றன. ஆனால் நம்பிக்கையை பிறருக்கு கொடுப்பது இருக்கிறதே.. அதற்கு இரண்டு சொம்பு சீரகத்தண்ணீர் தேவைப்படுகிறதே. டெம்போ குறைய, குறைய ஏற்றவேண்டிய கொடும் தவம் அது.
நம்பிக்கை வறட்சியின் சாயலைத் தவிர்த்துவிட்டு, அவர்களைப் பற்றி அவர்களுக்கே கூறி நம்பிக்கையூட்ட எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா?
முடிந்தவரை நண்பர்கள் கடுப்படித்து ஏக எரிச்சலை ஏற்படுத்தினாலும் இதமான சொற்களையே கூறிவருகிறேன். இவர்களாவது மிஞ்ச வேண்டுமல்லவா?
முடிந்தவரை உற்சாகம் தொனிக்க பேசுகிறேன். முயற்சிக்கிறேன். அவைதானே மனதில் பிறக்கவேண்டும். சுயவாதையை குறைத்து புலம்பல்களை குறைத்துக்கொள்கிறேன். இருவருக்குமான பொதுவான ஒன்றைக் கண்டுபிடித்துப் பேசவே அதிகம் உழைக்கிறேன். முப்பொழுதுகளும் கற்பனைகளே என்று கற்பனை ஓடுகிறது.
ஒரு விஷயம் செய்யப்போகிறேன் என்றால் அது பற்றிய அடுத்தடுத்த காட்சிகள் மிக வேகமாக மனதில் ஒரு கோர்வையாக ஓடிவிடுகிறது. பின் அதுவே நிகழ்ந்தால் எந்த ஆச்சர்யமும் ஏற்படுவதில்லை.
நஞ்சின் வேகம் போல கற்பனை வேகம் பெற்று நாளங்களில் பாய்கிறது. உச்சமடையும்போது கண்களின் தெளிவு குன்றி தள்ளாடி சரியும் வரையில் கற்பனையின் அதீதாதீதம் குறைவதே இல்லை.
8
ஆலமரத்து விழுதுகள்
- ஏகாங்கி
ஆகிருதி மீது
திடீரென ஒரு நேசம்
பிறந்தது.
ஆலமரத்தின்
அடர்த்தி கூடிய வளர்ச்சி
ஆச்சர்யம் கூட்டிக்
கொண்டே இருந்தது.
ஒவ்வொரு பார்வையிலும்
விழுது பிடித்து தூரியாடிய
களிப்பு பறத்தலின் மீதான
மையலூறிய பொழுதது.
விழுதுகளின் மேல்தூக்கி
வானம் நோக்கி பறக்க
அலைந்து கைவழுக்கி
மண்தொட்டும், வலி மறந்து
விழுது தேடி ஓடும் வெட்கமறியாத பருவத்தின்
நெடும் விழுதின் சிறு பிரியே அது.
அந்த பத்து ரூபாய் எங்கே?
தண்டிராமப்பன்
பால் வாங்க போனபோது, பால் வாங்கிவிட்டு திரும்பியபோது சைக்கிளை தாமரைப்பாளையம் நோக்கி அந்த வழியில் செல்லலாம் என்று நினைத்தேன். பெடலை மிதிக்க கீழே பார்த்தேன். ஏதோ தாள் போல கீழே கிடந்தது. பணமா இல்லை குழந்தைகளின் மிட்டாய்க்கு தரும் போலி பணமாக என்று சந்தேகமாக இருந்தது.
குனிந்து புரட்டிப்பார்த்தேன். பத்துரூபாய்தான் கசங்கலாகிக் கிடந்தது. எடுத்தவுடனே என்ன செய்வது என்று குழப்பம். கொன்றைவேந்தன், திருக்குறளின் அறநெறி தொந்தரவுகள் வேறு. அவற்றின் மீது ஒரு பிடி மண்ணள்ளிப் போட்டுவிட்டு, கடையில் ஏதாவது வாங்கலாமா இல்லை ஏர்டெல் ரீசார்ஜ் செய்யலாமா என்று ஏகப்பட்ட யோசனைகள். பத்துரூபாயின் பதினோராயிரம் சிந்தனைகளைப் பாருங்களேன்.
சின்னதாக ஒரு விஷயம் தோன்றியது. பத்து ரூபாய் சிவன் ஏந்திய கபால ஓடு போல் வேலை செய்கிறது. பத்து ரூபாய் தாளினை ஒருவன் ஒரு கடைத்தெருவில் கண்டெடுக்கிறான். அதாவது மற்றவர் காணாமல். சட்டைப்பையில் பத்திரப்படுத்துகிறான். அவன் சட்டைப்பையினுள் வைத்திருக்கும் ஒவ்வொரு பத்துரூபாயும் காணாமல் போக இந்த பத்து ரூபாய் மட்டும் அப்படியே இருக்கிறது.
செலவழிக்க நினைத்து கடையில் ஏதாவது வாங்கினாலும், அந்த பத்து ரூபாய் பையில் அப்படியே இருக்கிறது. கொடுத்தாலும் திருப்பி எப்படி பையில் வருகிறது என்று சந்தேகம் எழ, அதை பயத்துடன் கீழே போட்டுவிட்டு பெருமூச்செறிந்து விட்டு செல்கிறான். விழுந்த பத்து மெல்ல அசைவுற்று இருக்கிறது. ரூபாயினை மற்றொரு கை அணைத்து எடுக்கிறது இதோடு காட்சிகள் என் மனதில் நின்றுவிட்டன. இவ்வளவும் என் மனதில் ஓடியது ஐந்தே நிமிடங்களுக்கும் குறைவான நேரம்தான்.
9
சொல்லாததும் சத்தியமே
கட்டகுஞ்சுமோன்
உண்மையிலேயே இன்டிசைன் சாப்ட்வேரில் திறமை இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு வேலை கிடைத்திருக்க கூடும்தான். ஆனால் எதுவும் நடைபெற மனதில் ஆழமான ஒரு ஆவல் இருக்கவேண்டும். வேண்டாம் என்று என்னால் எப்படி சொல்லமுடிந்தது என்பது எப்படி என்று இன்னும் எனக்கு புரியவில்லை.
வக்கிரத்திற்கு நான் எப்படியும் வேலைக்கு சென்றுவிடுவதை, அதுவும் விரைவில் அது கிடைத்துவிடுவதை ஏற்றிருக்கமாட்டார். மகிழ்ச்சியான மனது அது. பயன்படுத்தி விந்து வழிந்து கிடக்கும் தளர்ந்த ஆணுறைகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.
பயன்பாட்டிற்குப் பின் குப்பையாகும் அவை போலத்தானே நானும் இன்று எறியப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பல அனுபவங்கள். ஆனால் யாரும், யாரையும் ஒப்பீடு செய்ய முடியாது. நான் என் அகத்தூண்டல் காரணமாகவே பெரிதும் எழுதுகிறேன். அவ்வளவே.
கூறுபவனின் வயது, சாதி எல்லாம் பார்த்து இறுதியில் தான் அவை ஏற்கப்படுகின்றன. உன்னதங்களை கீழ் சாதியில் பிறந்த ஒருவனின் மனதில் இயற்கை விதைத்திருக்காதா என்ன? உன்னதத்திற்கான வாய்ப்புகள் பன்றிக்கொட்டிலில் குறைவா? நான் எழுதியது கட்டுரை, நினைவுக்குறிப்புகள் போல. கதையல்ல முயற்சித்தால் ஆக்கிக்கொள்ளலாம்.
கடுமையான மனச்சோர்வின் இடையே எழுதியதுதான் ‘துயரத்தாரை’ எனும் அனுபவக்கதை. இதன் மூலம் எனது தவறை நான் மறைப்பதாகவும், இதையெல்லாம் எழுதலாமா என்று அண்ணாநகர் எழுத்தும், வக்கிர ரொமான்டிக் எழுத்தும் கூறுகின்றன.
வார்த்தைகளை விட மிகவும் பாதிப்பு வாய்ந்த ஒன்றை நான் கண்டதில்லை. வார்த்தைகள் எவரையும் சடுதியில் விளக்கிவிடுகிறது. அவரின் குணம், பழக்கம், பெற்ற அறிவு என எல்லாமும்தான்.
மகிழ்ச்சியில் போட்டி இருக்கலாமே தவிர, துயரத்திலும் கண்ணீரிலும், வலியிலும் அல்ல. துயரத்தாரை திடீரென எழுதத் தோன்றியது. எழுதியபின் சில தவிர்க்கவேண்டிய கடும் வசைகளை குறைத்தும்,சில உரையாடல்களின் கடுமையைத் தவிர்க்க முடியவில்லை. இதன் மூலம் நான் கூறவிரும்புவது ஏதுமில்லை. அது ஒரு அனுபவம். நான் பிறரை வெறுக்கிறேனோ என்று கூட ஐயம் ஏற்பட்டது. உண்மையில் நான் என்னைத்தான் கடுமையாக வெறுத்தேன். அதை உணர சிறிது காலம் ஆகிவிட்டது.
சில தவறான பழக்கங்கள் மற்றும் கூறிய சொற்களுக்கான தண்டனைகள் போலவே அவை படுகின்றன.
மிகுந்த உணர்வெழுச்சியான இதை எழுதியே ஆகவேண்டும் என்று கடும் கொந்தளிப்பான நிலையில் 15பி மற்றும் துயரத்தாரையை எழுதினேன்.
துயரத்தாரையின் பல பகுதிகளை எழுதும்போது கடும் படபடப்பு, வலி வேதனை என மீண்டும் அவற்றை அனுபவிக்க நேர்ந்த அனுபவம் அதைக்குறிப்பிடும் பொழுதிலும் நடுக்கத்தை ஊட்டுகிறது.
என்னதான் சார் உங்க பிரச்சனை???
எனக்கு தெரியவில்லை என்பதுதான் என் பெரிய பிரச்சனையாக உள்ளது. கோல்டுபெண் இதழுக்கு நிருபர் வேலைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை, எதனால் என்றும் தெரியவில்லை.
சுயகுறிப்பில் உடல்நலக்குறைவால் வேலையை விட்டு விட்டேன் என்று மிக நேர்மையாக அநேகமாக இளிச்சவாய்த்தனமாக எழுதி வைத்தது எப்போதும் போல பலனைக்கொடுக்கும் என்று நம்புகிறேன்.
நான் உண்ணும் அரிசியில் எனது பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று நம்பினாலும், அவ்வளவு நுணுக்கமாக அரிசியைக் கவனிக்க வெல்லாம் சென்னியங்கிரி அரிசி ஆலைக்காரர் விடுவதில்லை.
இனக்குழு வங்கிக்கான தேர்வு படிக்க மனம் வருவதேயில்லை. கம்ப்யூட்டர் பழுதடைந்து கிடக்கிறது. மனதினை ஒரு நிலையில் வைக்க முடியவில்லை. நழுவி ஓடிக்கொண்டேயிருக்கிறது.
வக்கிரத்தின் சிரிப்பில், தாய் வைக்கும் சோற்றுத்தட்டில், தந்தையின் முகம் பாரா மௌனத்தில் பல கேள்விகள் உள்ளன போன்று தோன்றுகிறது.
சிலசமயம் எனக்குள் ஏற்படும் கடும் ஆங்காரம் என்னை எரித்துத் தின்கிறது. மிருகத்தை கொன்று கொன்று உயிர்ப்பித்து விடுகிறேன். ஏன் என்று இன்றுவரையிலும் தெரியவில்லை.
10
ஏழாம் உலகத்தின் கடவுள்
சுழலில் சிக்கி
கண்களில் அப்பிய
துரும்புகளை எடுக்க
இயலாது கண்களை
மூடியும் திறப்பில்லாது
கையினால் துழாவி
மணல் போல அளைந்து
நழுவி வழிகிறது
காலம்.
கூக்குரலிட்டும் கடவுள்
புன்னகையுடன் கூறுகிறார்
மரித்துபோ என்று.
- ஏகாங்கி
மாய வாழ்வடா மதுசூதனா
தொடர்ந்து வக்கிரத்தின் தொலைபேசி அழைப்புகள் கடும் எரிச்சலைத் தருகின்றன. தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைக்கிறானா? இல்லை செய்து கொள்ளத் தூண்டுகிறானா?
தினம் தினம் அதிசயங்களை சுவைக்கின்ற வாழ்வு என்னுடையதா என்ன? என்ன நினைக்கிறார்கள் இவர்கள்?
பற்றிக் கொள்ள ஏதுமிலையடா
நீலவண்ண கிருஷ்ணா!
குழலிசைப்பில் சிந்தை மயங்கும்
நேரமே என் மாயவாழ்வடா
மதுசூதனனே கண்ணா!
11
வன்ம நதியில் நான் பயணிக்கிறேன்
நீங்கள் கூறாத கூறவிரும்பிய சொற்களை கண்டுணர அதிக காலம் ஆகிவிடவில்லை. நன்றி கூறுவேன் என் பிறப்பொக்கும். யாரும் கற்றுத்தராத பாடங்களை தங்களின் செயல்களின் வழி தாமதமாகவேனும் புரிந்துகொண்டுவிட்டேன்.
வலிகளை, வேதனைகளை, அதனை விட கூடுதலாக துவேஷம் நிரம்பி வழிவதாக என் எழுத்தை நீங்கள் உணர்ந்திருக்க கூடும். அதைக் கூட நான் சுயம்புவாய் உருவாக்கவில்லை. தங்களிடமிருந்து கடன் வாங்கியதே. இப்படி பல்கிப் பெருகி மனம் முழுக்க அமிலம் போல் அரித்துக்கிடக்கிறது.
பல நினைவுகளின் நாற்சந்தி குப்பைகளிலிருந்து எழுகிறது எனது உயிர்பிழைக்க இரக்கும் மீதமிருக்கும் வாழ்வு. கசப்பேறிய வார்த்தைகள் எள்ளளவும் தங்களை அசைத்திருக்க முடியாது. தங்களின் நல்லிதயம் அப்படி ஒரு பாதுகாப்பு அமைப்பை கொண்டிருக்கிறது. சிறந்த நண்பர்கள் அல்லது சில வேலைகளுக்கான நண்பர்கள் என தங்களைப்போல பிரித்து வைத்துப்பார்த்தாலும் எனக்கு ஒரு கைவிரலிலே இரண்டு பூர்த்தியாகுமா என்பது ஐயம்தான்.
சுடலையில் எரியும் பிணத்திலிருந்து பீச்சியடித்து நிறைக்கும் நிணநீரைப் போல எல்லாம் எதிர்பார்த்து நடப்பதில்லை. செயல்களிலிருந்து உயர கிளைகளில் ஊசலாடி உயிரற்று ஆடுகிறது உடல்.
துயரத்தில் எப்போதுமே போட்டி இருந்து வருகிறது ஏன்? ஏனெனில் வாழ்வில் நிகழ்வது முழுவதும் துன்பங்களும் துயரங்களும்தானா? பின் ஏன்தான் வாழவேண்டும் என உயிர்கள் விரும்புகின்றன என்றால் வாழ்வின் மீதான தீராத கவர்ச்சிதான். ஏதோ ஒரு அதிசயம் நிகழாதா? நாளை வரை இருப்போமே? என்ற வறண்ட நம்பிக்கையின் நுனியில் தொங்குகிறது மிச்சமுள்ள உயிர்.
தன் நண்பர்களை ஒருவர் எப்படி அமைத்துக்கொள்கிறார் என்றால் தன் பேச்சுக்கு மறுத்து பேசாத விமர்சனத்தை கூறாத ஆட்களைத்தானே நண்பர்களாக ஏற்கிறார்கள்.
சுயகர்வம் அடிபடாது தப்பும். தான் வேரூன்றி வளர ஒரே வாய்ப்பு தன்னைப் போலவே உள்ளவனை நட்பு பூண தேர்வது.
ஒருவனின் கருத்தை மறுத்து பாருங்கள். அக்கணமே அவனின் வட்டத்தில் இருந்து வெளியேறி இருப்பீர்கள். முதலில் மனதளவில் பின் மெல்ல புறத்திலிருந்தும். உண்மை தனித்துத்தானே இருக்கும். அதைக்கொண்டவனும் அப்படியேதானா?
உங்களுக்கான விஷயங்களை நீங்கள் மெல்ல உருவாக்கிக்கொண்டீர்கள். அப்போது நான் அழுதுகொண்டே தெருவில் அலைந்துகொண்டிருந்தேன். மகாபலிபுரத்திற்கு என்ன உடை என்று தேர்ந்துகொண்டிருந்த போது, உங்களது வார்த்தைகளால் எனது குடல் அறுபட்டு துடித்துக்கொண்டிருந்தது.
இனி இணைவதும் இல்லை இயைவதும் இல்லை. இறைவன் நிறைவேற்றுவது ஒரு உயிரின் தேவைகளை மட்டுமே. ஆசைகளை அல்ல என்று நீங்கள் கூறி, பிரியாணியை ருசித்தபோது என் உடலில் துவாரங்களில் பசி துடித்து வெளிவந்து கொண்டிருந்தது.
வருந்த ஏதுமில்லை
இனிமேல் இதுவுமில்லை
கண்ணற்றவனுக்கு வழி
காட்ட விளக்கு எதற்கு?
அனைத்தும் சரியாக இருந்தும் நான்தான் சரியாக இல்லையோ என்று படுகிறது. நினைவுகளின் நிழல் ஒழிந்து நிகழ்கால ஒளி பரவுவதேயில்லை இப்போதெல்லாம்.
வெளிச்சம் ஆபாசமாக கண் கூசுகிறது. இருளும், மாலையும் மனதிற்கு உவப்பமானதாக இருக்கிறது. இதிலே நான் விரைவில் கரைந்துபோய்விடுவேன் என்று நினைக்கிறேன்.
மரமேறி இளைப்பாறி
சண்முகம் மாமாவுடன் தெளுவு மரத்திற்குப்போனேன். மொத்தம் இருபத்தைந்து மரங்கள். பாளையை எப்படித் தட்டுவது, அதை ஒன்று சேர்ந்தாற்போல ஆக்குவது, கத்தியை கூர் தீட்டுவது என்று சிலவற்றைக் கற்க முயற்சித்தேன்.
குப்பண்ண சாமிக்கு பொங்கல் வைக்க வாழைப்பழம், சூடம், தனியாத்தூள், கறிமசால் பொடி, என வாங்கிவைத்துவிட்டு வந்து மீண்டும் வந்து மரமேற மாமனுடன் கிளம்பினோம்.
மதியம் சோற்றை மாமன் கரைத்துத் தர, தொட்டுக்கொள்ள எண்ணெயில் வறுத்த உப்பிட்ட வெங்காயம். அற்புதச் சுவை.
12
என்ன சொல்லிப் பாடுவதோ?
-காதல் குண்டர்
இந்தப்பக்கம் கடுகளவு மனதில் ஏற்பட்ட களிப்புகளை, கனவுகளை பகிர்கிறேன். முதலில் என்னை பெரிதும் தடுமாறச்செய்த அவளது ஏற்ற இறக்க உடல் வனப்புகள் அல்ல என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
பைரவனின் கையில் உள்ள மண்டைஓடு போல தன்னைப் பார்க்கும் அனைவரையும் கண்ணியில் புகுந்த கீரி தப்பமுடியாது பிடிபடுவது போல கண்டுபிடித்து சிறையிலிடும் அவளது தீர்க்கமான இரக்கமில்லாத விழிகளை கூறியே ஆகவேண்டும்.
முழுவதுமாக ஒருவரை அறிவதற்கு முன்னேயே கண்கள் பாதி அவரைப்பற்றி பாதி கூறிவிடும். ஆனால் இன்று வரை அவளைப் பார்த்த நினைவு ஏற்பட்டால் ஆக்கினையில் தோன்றுவது போல விசால நெற்றியும், மென் புருவங்களின் கீழே எது ஒன்றையும் எளிதாக உள்ளிழுத்துக் கொள்ளும் பிரளய வாய் போல எளிய கண்கள் சற்று பெரிய இதோ இதோ இப்போது சிரித்துவிடுவேன் என்று சொல்வது போல இருக்கும். எதனையும் ஆழ்ந்து யோசித்துதான் பேசுவேன் என்று திறக்காத கதவு போல என அசைய மறுக்கும் இரு இதழ்கள் கொண்டிருப்பதுதான் நினைவுக்கு வருகிறது.
அவளிடம் அனைவரிடமும் பேசும் எதனையும் உப்புசப்பற்ற உப்புமாவைக்கூட கிளற மனதிற்கு தோன்றுவதில்லை. சிறு முக்கல் முனகல்களைக் கூட வெளிப்படுத்த வில்லை. எதுவும் பேசவே தோன்றுவதில்லை. அவளைப் பார்த்தாலே போதும் நிறைவாகி அறைக்கு கிளம்பிவிடுவேன்.
ஆயிரம் ஆண்களுக்கு 946 பெண்களை கொண்டுள்ள தேசத்தில் இன்னும் அந்த ராட்சஸிக்கு காதல் விண்ணப்பம் அனுப்பாமல் யாராவது இருப்பானா என்ன? இருந்தால் இனி இப்புவியில் அவன் பிழைப்பானா?
காந்தம் ஈர்க்கும் இரும்புத்துகள்கள் போல எத்தனை இதயங்கள் கல்லூரியில் வகுப்பில் அமரும் அவள் இருக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதோ யார் கண்டது?
சாலையில் பார்க்கும் பார்வைகளின் எல்லைமீறலை இலங்கை கப்பற்படைபோல உடனடியாக தடுத்து சுடிதாரின் துப்பட்டாவை கீழிறக்கி, அலட்சிய பார்வையை மேலேற்றி மிதப்பாக நேர்கோட்டில் பயணிப்பவளாயிற்றே அவள்.
களவும் காதலும்
நெஞ்சை அறைந்து
கொல்லுதடி அதில்
ஆணிகளாய் உன் பார்வைகள்
அமரக் கெஞ்சுதடி
-ஆரண்யபரிபாடல் 34:4
அருகில் வந்தும் குருதி வழிய
தரையில் இறைந்திருப்பவனிடம்
சிரித்து பார்வை கொண்டு நெஞ்சில்
ஆணி அறைந்து குருதிச் சிவப்பு
கொன்றை சூடும் வன மலையத்தி
அவள்.
-ஆரண்யபரிபாடல் 21:2
வேலையிலிருந்து விலகும்போது அவள் இரண்டொருமுறை தட்டுப்பட்டாள் அவ்வளவே. நான் காலை ஆறுமணிக்கு வருவேன். அவள் கச்சேரி சாலையில் மதியம் பனிரெண்டிற்கு பல மனங்களை மண்ணில் வீழ்த்தி சரித்தபடி மிதந்து அலட்சியம் படர வருவாள்.
எதற்கும் பெயர் சூட்ட விரும்புகிறேன் என்றாலும் ஜோஸபினுக்குப் பிறகு நான் எதனையும் முடிவு செய்வதை விட்டுவிட்டேன்.
பின்னாளில் நினைத்துப்பார்க்க ஒரு முகம் கிடைத்தது. அவ்வளவே அவ்வளவுதான். எதையும் உறுதியாக சொல்ல என்னிடம் எதுவுமில்லை.
நான் கடைக்குள் நுழைந்துவிட்டு அவளிருக்கும் தருணத்தில் வெளியேறும்போது, முதுகில் ஏதோ பார்வையின் சுடரொளியின் வெப்பம் தெறித்து தகிப்பது போல் உணர்ந்தேன். கற்பனைகளும், உணர்வுகளின் வேகமும் எனக்கு என் சகோதரனைவிட அதிகமோ என்று பயமே ஏற்பட்டது.
மணி பனிரெண்டு இருக்கும். அதிகம் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது, ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்துவிட்டது. சிரித்த முகத்தை இதுதான் சரியான இளித்த முகம் என்று நம்பி பணத்தையும், வெள்ளை கேன் ஒன்றையும கையில் திணித்தார் ஸ்டோர் மேனேஜர். அப்போது டக் பண்ணியிருந்தேனா கேனைக் கையில் பிடிக்க என்னமோ மாதிரியிருந்தது.
வெயில் சாலையை நெளிந்த போகச் செய்து கொண்டு இருந்தது. ‘அதிகம்’ கடையில் ஏசி கிடையாது. ஏதோ இருக்கின்ற காந்தி கால மின்விசிறிகள் ஓடும். ஓட மறுக்கவும் அதற்கு உரிமையுண்டு என்பதை உணர அதிக நேரம் விரயமாகவில்லை. எப்போதும் உஷ்ணம் சுழன்றுகொண்டே இருக்கும்.
வெளியே டீசல் கேனோடு இறங்கினேன். வண்டி ஓட்டத்தெரிந்தால் ஏதாவது வண்டியை எடுத்துக்கொண்டு போகலாம். இங்குதான் போலீஸ்காரர்கள் முக்கிற்கு முக்கு நின்று பல தஸ்தாவேஜூகள் கேட்டு காலையில் பாத்ரூம் போனது தவிர்த்து அனைத்தையும் விசாரிக்கிறார்கள். எதுக்குங்க என ஆடம்பரம் தவிர்த்து சாலையில் இறங்கிவிட்டேன்.
போலீஸ் குவார்டர்ஸைத் தாண்டி ஏதோ கிறித்துவ சபை அருகே நடந்துகொண்டிருந்த போது மீண்டும் அந்த கண்களைப் பார்த்தேன். என்னடா ஏதோவொன்று இவ்வளவு தீர்க்கமான பார்வையை எடுக்க முடியவில்லையே என்று பார்த்தால் அதே பெத்த பெத்த கண்கள்.
என்னை மீள அளவெடுத்தது போல பார்த்தன. எனக்கு வயிற்றில் மணி ஓட்டல் புரோட்டா மாஸ்டர் மாவு பிசைவது போல உணர்வு எழுந்தது. காலையில் ஆறுமணிக்கே டவுன்லோடு செய்துவிட்டோமே அப்புறம் ஏன் இந்த சத்தம்? என்று எண்ணம் புல்லட் ரயில் போல பயணித்தது.
தப்பிக்க முடியாத படி லாவா என்மேல் வழிந்து உடல் பொசுங்குவது போல இருந்தது. அவள் கடந்து போனதை ஐந்து நிமிடங்கள் ஆனபின்னே உணர்ந்தேன். வெள்ளை உடையில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்ப்பதை நான் விரும்பியதால் கூட இது நிகழ்ந்திருக்கலாம். நடக்கிறதை அனைத்தையும் மனம் பாதி கற்பனையில் நிரப்பிக்கொள்கிறதே! நான் அப்படித்தான் உளமார நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.
பச்சையும், வான் நீலமும் அவள் மென இளஞ் சிவப்பு வண்ண உடலுக்கு என்ன ஒரு கச்சிதம், பாம்பின் உடல் பளபளப்பு போல. அனைத்தையும் மறைத்து ஆரஞ்சு உடை கொடுத்துவிட்டார்கள் அவளுக்கு மட்டுமல்ல அனைத்து நபர்களுக்கும்.
அவளின் பெரு கண்களை சட்டமிட்டு வீட்டில் மாட்டவேண்டும்.
13
மழைப்பாடல்
அந்த நாள் போல இந்த நாளிலும் மழை
அந்நாளும் இன்றும் ஒன்றல்ல
எனினும் பெய்த மழை
புள்ளியாகிப் போன அந்நாளை
இன்றோடு இணைக்கின்றது
நெளிந்து முறிந்த கம்பி மின்னல்களை விடவும்
வெள்ளையாய் ஒரு புன்னகை
காலத்தின் உதடுகளில்
2
மீண்டும் மழை
வராதென எண்ணியிருந்த வினாடியில்
ஆகாயம் பிளந்து பொழிய
இரவு நீர்த்துளிகளெனத் தாரைகளெனச் சொட்டுகிறது.
விட்டு விட்டு ஒளிரும் மின்னல்கள்
உயிர்வதை ஒளிர
காதுகளை திருகும் இடியோசையில்
யாருடையதோ அழுகைகள் அடங்கிவிடும்
இன்று பெருகிய குருதியைப் பொழியும் மழை
கழுவிட சுயம் தொலைத்து நடப்போம்
3
மூக்கு நுனியில் நுழைந்ததொரு துளி
பின் முகமெங்கும் ஈரம் தந்து
வந்தது மை நீர்த்திரை பிளந்து வரைகையில்
கடலுக்குள் பயணித்த உணர்வு
என் முன் விரிந்த வெளியில்
நானும் காற்றும் நீரும்
குளிர்ந்து சிலிர்த்த
என்னுடலில் பட்டு வழிந்த நீரின் அதீதம்
நமது நேசம் போல
மழைக்கோட்டை மீறி மார்பில் வழிந்த ஒரு துளியால்
ஈரம் கசியும் உன் விரல் தொடுகையுணர்ந்தேன்.
4
கருநிறம் முகில் நிறம்
வெண்ணிறம் மழைநிறம்
மென்னீல குறுமின்னல் நிறம்
இடியின் நிறம் ஒலி நிறம்
இன்றெனது நிறம் மழையின் நிறம்
என் கனவுகளின் நிறம் ஈரநிறம்
5
ஓவியம் ஒன்று அதில்
மழையில் நனையும் வீடு
வீட்டின் யன்னலூடு தெறிக்கும் சாரலில்
நனைந்து கொண்டிருந்தது
யாருமற்ற அறையொன்று
நன்றி: வினோதினியின் ‘முகமூடி செய்பவள்’ தொகுப்பிலிருந்து.
14
பாடலும் தேடலும்
இனிப்பு மிட்டாய்க்காரன்
‘ஆகாஷ்வாணி’ என்ற இந்திப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் அதில் வரும் பெண்ணின் சிரிப்பை நினைத்தால் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது. முழுக்க சிரிப்பாக மாறும் அனைத்து சாத்தியங்களும் கொண்ட புன்னகையாக மலர்ந்துகொண்டிருக்கிற தன்மையில் உள்ளதற்கான சூழல் என்னவாக இருக்க முடியும்!!!
காதலில் முழுக்க தன்னை இழந்து அதில் ஆழ்ந்த மனம்தான் அப்படி இருக்கமுடியுமா? இல்லை அப்படி அவள் இருந்த தன்மையில் தான் அப்பாடல்காட்சி எடுக்க பட்டிருக்கிறதா என்ன?
மிக இயல்பாக பார்த்துக்கொண்டே இருக்கலாம் எனும்படியான பாடல் காட்சி அது. பெருகியோடும் சிரிப்பில்லாமல் அப்பாடலில் ஒரு நொடி கூடி அவள் இல்லை. மண் மழையில் நெகிழ்ந்திருந்திருப்பது போல் அவள் மனம் காதலில் அல்லது வேறெதாவது ஒன்றில் கனிந்து நெகிழ்ந்திருக்கிறதோ என்னமோ?
தன்னை பின்தொடரும் கொண்டாடும் ஆண் ஒருவன், ஒரு உயிர் கிடைத்துவிட்டது என்ற பெருமிதம் வழிந்தோடுகிறதா அவள் மனதில்?? அற்புதமான பாடல். பாடல்வெற்றிக்கு காரணம் இயக்குநரின் புத்திசாலித்தனம் என்பதும் நுஸ்ரத் பாரூச்சா என்ற அந்த பெண்ணின் நடிப்பும் காரணம்.
பிணக்கும் ஆமணக்கும்
காய்ச்சலுக்கு உறைந்த தயிர் போன்ற மருந்தை என் தந்தை வலுக்கட்டாயமாக விரைவில் குணமாகட்டும் என்று மருந்து புட்டியையே என் வாயில் கவிழ்த்துவைப்பார். உடனே தரையில் வாந்தியெடுப்பேன்.
கருங்கல் சுவற்றில் தலையை முட்டினால் எப்படியிருக்கும் அப்படியிருக்கிறது தேர்விற்கு படிப்பது என்பது.
விரைவில் வீட கடந்தும், நகரில் இருக்கவும் ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும். மனதில் சுரக்கும் சொற்களை எண்ணவே முடியவில்லை. பல்கிப்பெருகி என்னை திகைக்க வைக்கிறது. தலை பெரும் பாரம் கொண்டு நொடிக்கு நொடி வலியாகி பித்து பிடித்தவன் போலாகிறது.
இப்பொழுது எழுதும் நோட்டுகளில் எழுதாமல் விட்டிருந்தால் புதுப்பாளையம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பேன். இறந்துபோ அல்லது கண்ணில் இருந்து அழிந்துபோ என்ற பேச்சுக்களை நான் என்ன செய்ய?
கைபேசியின் அழைப்புகள் கடும் அனுதாபத்துடன் ஒலிக்கிறது போல படுகிறது. அழைப்புகள் நேரம் செல்ல செல்ல எரிச்சலை கூட்டுகின்றன. எப்படித்தான் இந்த மனிதர்களோடு புழங்குவது என்றே புரிவதில்லை.
குப்பண்ணசாமி ஏங் குலத்த காப்பாத்த வேணுஞ்சாமி!!!
மாமன் வீட்டில் குப்பண்ணசாமி பொங்கல் கொண்டாட்டம். சாமிகல்லை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து திருநீறு, சந்தனம் பக்கத்தில் வைத்து பின் நேர்ந்து விட்ட சேவலைப்பிடித்து கத்தியை எடுத்துக்கொண்டு காலை அத்தை பிடித்துக்கொள்ள மேலே நான் உதறாமல் பிடிக்க அறிவுறுத்தப்பட்டேன். சேவலின் ரத்தம் சூடாக குப்பண்ணசாமியின் தலையில் படிந்து தரையில் வடிந்தது.
பின் சேவலின் உடலில் பொங்குகளை சுத்தம் செய்து தீயில் கருக்கினோம். பின் கறி அரிந்து சாமிக்கு முதல் படையல். சாப்பிடும்போது மணி 12 ஐத் தாண்டிவிட்டது. சாப்பிட்டு விட்டு படுத்தால் உறக்கத்தின் நிழல் கூட என்மேல் படியவில்லை.
இது ஒரு காலை வேளை
பனியின் இறுக்கம் சூரியனின் வெளிச்சத்தால் தளர்வுற்று சிறுசிறு நீர்த்திவலைகளாக மாறி வடிகிறது. மெல்ல இரும்புக்கதவின் வழியே உட்புகும் காற்று மெல்ல விசும்பும் மனதின் துக்கத்தை விரட்டி தள்ளுகிறது.
சாணி தெளித்து பின் வாசல் கூட்டும் சீவமாரின் சத்தம் கயிற்றில் கட்டப்பட்டு அவிழ்த்துவிட புரட்சி செய்யும் சேவலின் கூவலுக்கு இசைவாக ஒலிக்கிறது. கால்களிரண்டும் குளிர்ந்த நீரில் வைத்திருந்தது போல் உணர்வுகள் மரத்துப்போனது போல் இருக்கிறது. உள்ளே கடும் இரைச்சலாக தலையில் இருக்கிறது. ஆனால் வெளியே சற்று குறைவு.
நான் அதிகம் பேசுவதில்லை. ஆனால் எனக்குமாக பேசுபவர்கள் என் அருகிலே இருக்கிறார்கள். உடலின் பலவீனம் என்னை உருட்டித்தள்ளுகிறது.
15
இருக்குதா இல்லையா?
-மினி மீ
வக்கிரம் அலைபேசியில் அழைத்து ‘’கொஞ்சம் பணம் வேணும் எங்கிட்ட இருந்ததெல்லாம் அட்வான்சுக்கு குடுத்திட்டேன். நீ ஏதாவது பணம் வெச்சிருக்கறயா, இருந்தா குடு அப்பறமா ட்ரான்ஸ்பர் பண்ணிவுடறன்’’ என்றார்.
வக்கிரத்தின் ட்ரான்ஸ்பர் கதையெல்லாம் நம்புகிற நிலையில் இன்றில்லை என்றாலும் அவரின் தைரியத்தை பார்த்து வியப்புதான். மாமனும் அத்தையும் தெளுவு காய்ச்சிக்கொண்டு அருகிலேதான் இருந்தார்கள். வக்கிரத்திற்கு இருப்பது போல பொய் பேச எனக்கென்ன அவசியம்.
‘’என்கிட்ட இருக்கறது ஐநூறுதான், வேறெதுவுமில்லை’’
உடனே வக்கிரம் ‘’ செரி செரி வுடு நா பாத்துக்கறன்’’
என்ன சொல்றே உங்க அண்ணமாரு என்ற அத்தையிடம்
‘’ அவரு சொல்றதுக்கு என்ன? நெறயா சொல்லுவாப்பல. நம்மளுக்குத்தே காது அடைக்குது. பணம் வேணுமாமா அக்கவுண்டுல போட்டுடச் சொல்றாப்பல ‘’
நானும் எதுவும் பேசவில்லை. அவர்களும் அதை வழிமொழிந்தார்கள்.
16
ஊடிப்பிணங்கிய உள்ளங்கள்
-அன்பரசு சண்முகம்
சில மனிதர்களுடன் இன்று எனக்கு எவ்வித தொடர்பு இல்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் அளித்த ஆதரவு என்பது பெரும் உதவியாக, நம்பிக்கையாக இருந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
என்.ஸ்ரீராம்
அண்ணாநகரில் கம்பன் காலனியில் வசித்துவரும் தாராபுரம் அருகிலுள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான இவர் தாராபுர மரபான விஷயங்களை எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். என் சகோதரர் இவர் சாயலில் எழுதி ஒரு சிறுகதையை பதிப்பித்துக்கொண்டார் என்பது இவர் எழுத்தின் பெருமை பேசும் ஒன்றே.
கொங்குபகுதி சார்ந்த பேச்சுவழக்குகள், நம்பிக்கைகள், சிறுமை, அபத்தம், களிப்பு, துயரம் என பலவகை விஷயங்களையும் நுட்பங்களையும் எளிய முறையில் எழுதிச் செல்வது இவர் பாணி எழுத்து.
பலரையும் ஆதரித்து அரவணைத்து சோறிட்டு நம்பிக்கை கூறி அனுப்புவார். பல்வேறு விதமான புத்தகங்களை வாசிக்கத் தந்து தொடர்ந்து என்னை எழுத வைக்க பெரும் முயற்சி செய்தவர் இவர் என்பதை மனந்திறந்து கூறுகிறேன். இதில் எந்த வெட்கமும் எனக்கில்லை.
பலரையும் வேலை வாங்குவதில் நல்ல ஆளுமைத்திறன் கொண்டவர். புத்தகங்கள் படிக்க கொடுத்தால் இவர் கூறும் பல நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே திரும்ப புத்தகங்கள் கிடைக்கும். தனிப்பட்ட எந்த கோபம் என்றாலும் எனக்கு புத்தகம் தராமல் விட்டதே இல்லை. தான் படிக்காத, புதிய, க்ளாசிக் நாவல்கள் மேலும் பல சவாலான தான் படிக்க முடியாத நூல்களை தந்து என்னை படிக்க கூறியவர். நான் நிச்சயம் எழுதுவேன் என்று வெகுவாக நம்பிய மனிதர் அக்காலத்தில் இவர் ஒருவர்தான் என்பதை கூறிக்கொள்கிறேன்.
இவரிடம் புத்தகங்களை வாங்கிய பலர் திருப்பி கொண்டுவந்து தராத நிலையில் எடுத்த புத்தகங்களை நான் இவரிடம் என்ன என்ன எடுத்தேன் என்று ஒருமுறை கூறிவிடுவதோடு, எழுதியும் வைத்துக்கொள்ள அறிவுறுத்துவேன். ஏனெனில் ஒருமுறை புத்தகத்தை காணவில்லை என்று கூறி நீதான் எடுத்துக்கொண்டு தரவில்லை என்னை ஏமாற்றிவிட்டாய் என்று அரைமணிநேரம் கடும் வசையை வீசினார். அதிலிருந்து எனக்கான எல்லையை கம்பிவேலியிட்டு அமைத்து சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேசி விடைபெறுவேன்.
ஸ்ரீராம் அவர்களை வெறுப்பேற்றுவது மிக எளிது. அவர் பேசுவதை கேட்காமல் வேறுபக்கம் பார்த்தால் அல்லது பதில் பேசாது இருந்தால் பேசும் பதட்டமாகிவிடுவார். தன் எழுத்துக்காக பல அங்கீகாரங்களை பெற்ற இவர் தன் எழுத்தின் மேம்பட்ட நிலைக்கு பெரிதும் முயற்சிக்கிறாரா என்றால் உயிர் எழுத்து, அந்திமழை போன்றா இதழ்களில் வெளிவந்துள்ள கதைகளைப் படித்தால் அப்படியெல்லாம் இல்லை என்று புரிய அதிக நேரம் ஆகாது. தாராபுரம் பகுதியின் முக்கியமான எழுத்தாளர் ஸ்ரீராம் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
நான் இவருக்கு தோராயமாக ஐம்பது கடிதங்களுக்கு மேல் எழுதியிருப்பேன். ஆனால் பதிலுக்கு எவ்வித கடிதங்களும் எழுதவில்லை என்றாலும் அதற்கு அவரின் இடையறாத தொலைக்காட்சி நிறுவனத்தின் வேலைகள் காரணமாக இருக்கக்கூடும். மேலும் கிடைக்கும் ஞாயிறு ஒருநாளில் தன் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கவேண்டிய நெருக்கடியில் இருப்பார். அதே ஞாயிறில்தான் தன் சிறுகதைகளை வேகவேகமாக எழுதி முடித்து அனுப்பி வைப்பார்.
நான் இவரது சிறுகதைகளை விமர்சித்து என் மனதில் தோன்றிய விஷயங்களை எழுதி அனுப்பியதால் இன்று என்னை பெரும்பாலும் தவிர்த்துவிட்டார். என் சகோதரரிடம் தன் சிறுகதைக்கான விருது வாங்கும்போது கூட என்னைப் பற்றி, நான் எழுதிய விமர்சனங்களைக் குறித்து வருத்தமாக சங்கடத்துடன் பகிர்ந்து கொண்டாராம். படைப்புதான் முக்கியம். படைப்பாளியை அறிவதே படைப்பை வைத்துத்தான் என்று அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய கடிதங்களை அவர் நான் அவரை சந்திக்கும் ஏதாவதொரு ஞாயிறு வரை காத்திருந்து இப்படி எழுதீட்டயேடா என அரைமணிநேரம் பேசி பின் சிறுகதை எழுத முயற்சி செய் என்பதோடு அவரின் பேச்சுக்கள் நிறைவடையும்.
அவர் என்னை புறக்கணித்தாலும், எனக்கு எந்த இடத்திலும் என்.ஸ்ரீராம் அவர்களின் பெயரைச் சொல்வதில் எவ்வித தயக்கமுமில்லை. சென்னையின் இரக்கமற்ற மனநிலை கொந்தளிப்பான பல காலகட்டங்களில் அவரின் வீட்டில் நல்ல சோறு சாப்பிடலாம் என்றே போனதுண்டு. அவர் என்னிடம் படிக்க தந்த பல புத்தகங்கள் சிறந்த செவ்விலக்கியங்கள். தமிழின் ஆகச்சிறந்த நூல்களை ஆண்டுதோறும் முழுக்க வாசிக்கிறாரோ இல்லையோ வாங்கி பரணில் வைத்துவிடுவார். தொடர்ந்து படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் வாசிப்பது, அதிலும் உளநிலை சார்ந்த நூல்களில் தனிப்பற்று உண்டு. முக்கியமான பல ஆன்மிக நூல்கள் இவரிடம் கிடைக்கும். பல பழைய புத்தகக் கடைகள் என எங்கெங்கோ அலைந்து திரிந்து புத்தகங்களை சேகரித்தவருக்கு புத்தகங்கள் காணாமல் போனால் கோபம் வரத்தானே செய்யும்? இவர் தந்த புத்தகங்கள் என்னை செம்மையாக்கின. புத்தகங்களை எப்படி தேர்வு செய்வது என்று இவரிடமிருந்தே கற்றேன். சென்னையில் இரு ஆண்டுகள் இவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சாப்பிடும் சாப்பாடு ஒன்றை வைத்தே, நினைத்துக்கொண்டே வாரத்தினை ஓட்டிய காலம் இன்றும் மறக்க முடியவில்லை. இதற்காக பல கடிதங்களில் புத்தகங்களுக்காகவும், நல்ல சோறுக்கும் பல நன்றிகள் தெரிவித்திருக்கிறேன் என்றாலும் நன்றி பல இங்கேயும் கூறித்தான் ஆகவேண்டும்.
பயகிருஷ்ணன்( பெயர், இதழ்கள் சர்வநிச்சயமாக மாற்றப்பட்டுள்ளது)
நான் முதலில் வேலை செய்த லத்தீன் கம்ப்யூட்டர், மலர்தொழில் பத்திரிகையின் ஆசிரியர் அப்புறம் நிறுவனர், பதிப்பாளர். இப்போது அப்படித்தானே இருக்கமுடியும்!. இவரின் தகப்பனார் ஏழு பத்திரிகைகள் நடத்திவந்திருக்கிறார். ஆனால் இவர் தன் நிர்வாகத்திறமையால் அதனை இரண்டாக மாற்றி வெற்றிகரமாக வீறுநடை போடுகிறார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் குழர்தமிழ் பதிப்பகம் எனும் மூன்று மாடி பில்டிங் கட்டிடத்தை தனக்கே சொந்தமாக கொண்டவர். நல்ல வசதி கொண்டவர் என்றாலும் ஊழியர்களுக்கு ஒரு ரூபாய் அதிகம் கொடுத்துவிடக்கூடாது என்று மிக கவனமாக தேநீர் கூட ஒன்று தான் ஒருநாளைக்கு என்று சீர்திருத்தத்தை அமல்செய்ய முற்பட்ட திட்டகமிஷன் தலைவராக இருந்திருக்கும் அனைத்து தகுதிகளும் கொண்டவர்.
பகுத்தறிவுவாதம் பேசி கொள்ளை மன்னிக்கவும் கொள்கைக்காக பத்திரிகை நடத்துகிறேன் என்று வேலை செய்யும் ஊழியர்களிடம் மூன்று பேரில் ஒருவருக்கு சிறிது நம்பிக்கை குறைந்தாலும் நன்னம்பிக்கை வகுப்பு எடுத்து அவரை அடிமை வேலை செய்ய மனதளவிலும், உடலளவிலும் தயார் படுத்துவார். சேவை, அர்ப்பணிப்பு உணர்வு என்றால் முதலாளிக்கு இருந்தால் பரவாயில்லை ஆனால் சொற்பக் கூலி வாங்கும் பத்திரிகைக்காரனுக்கு நிச்சயம் இருந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தும் இன்றைய சமகால மிகச்சரியான பகுத்தறிவுவாதி.
நான் எனக்கு என்ன தெரியும் என்று அறிந்துகொண்டது இவரிடத்தில்தான். ஒருவரை அவரின் பலவீனங்களைக் கொண்டே எப்படி வளைத்து பிடித்து தனக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். செயல்படுத்தி வென்றவர். நான் மொழிபெயர்த்த ஒரு கட்டுரை மூல ஆசிரியரின் பெயரை மட்டும் கொண்டு வெளிவந்தது இவரின் நல்லெண்ணத்திற்கு முதல் சான்று.
பத்திரிகையில் வேலை செய்யும் ஒருவரின் பெயரும் பத்திரிகையில் அச்சிடப்படாது. ஆறுஆண்டுகளாக வேலை செய்து வரும் உதவி ஆசிரியர் என்று நம்பும் ஒரு பரிதாப ஆத்மா உட்பட. நிறுவனர் , பதிப்பாளர், ஆசிரியர் தனது பெயர் மட்டுமே வரவேண்டும் என்பதில் மிகப்பிடிவாதமாக இருக்கும் சேவைச் செம்மல்.
கடுமையான பூஞ்சைத்தொற்றினாலும், நெஞ்சில் கட்டிய சளியாலும் என்னை இறந்துவிட்டால் என்ன எனும் மன நிலைக்கு அழைத்துச்சென்ற காலகட்டம் அது. வேலையும் என்னை சிந்திக்கவிடாது தொடர்ந்து கட்டுரைகளை செம்மையாக்குவது, புதிய கட்டுரைகளை எழுதுவது, மெய்ப்பு பார்ப்பது, ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது என்று பரபரப்பான நிலைமை. நோய் என்னை அலைகழித்து சிதைத்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கு சிறிது ஓய்வு கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் கையில் பேருந்தில் செல்லவும் பணமில்லாத சூழல். மைலாப்பூரிலிருந்து ஆயிரம் விளக்கு பகுதிக்கு நடந்து சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு அங்கிருந்து கிளம்பி மைலாப்பூர் வந்து சேருவேன். ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்றார் ஆசிரியர்.
பூஞ்சைத்தொற்றினால் தோலில் ஏற்பட்ட படர்தாமரையின் பரப்பு என் மோசமான உணவுப்பழக்கத்தினால் அதிகரித்துக்கொண்டே வந்தது. காரணம் ஐரோப்பியன் போல பன்னும், பாலும், ஓட்சும் உணவாக எடுத்துக்கொள்ளும் வேலை நேர சிக்கல்தான். அந்த நெருக்கடியில்தான் என் மொழிபெயர்ப்பு கட்டுரை அட்டைப் படக்கட்டுரையாக வந்தது. அது மகிழ்ச்சிதான் என்றாலும், கையில் பணமில்லாத நிலை என்னை மனநிலை சிதைவுக்கு இட்டுச்சென்றது. என்ன சூழ்நிலை, எங்கு இருக்கிறேன் என்றே தெரியாது தூக்ககலக்கம் போன்ற நிலையில் பல வேலைகளை செய்து வந்தேன்.
பின் வேலையின் செழுமையைப் பார்த்து மகிழ்ந்த ஆசிரியர் மலர்தொழிலின் முழுப்பொறுப்பையும் எனக்கே அளித்தாலும், அங்கு உள்ளே ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கு அது கடும் வேதனையை அளித்தது என்பதை அவர்களது பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றில் இருந்து உணர்ந்துகொண்டேன். இது ஒரு குழுவாக செய்யும் வேலை. எப்படி தனியாக செய்வது? எப்போதும் மிக அதிகாரமாக நடக்கும் வண்டிமை நிறம் கொண்ட பெண்ணின் போக்கு முதல்நாளில் இருந்தே எனக்கு பிடிக்கவில்லை. இதழுக்கான எந்த புதிய முயற்சியினையும் கடுமையாக ஆட்சேபித்தே பேசுவாள் அவள்.அதிகம் பேசாத என் தன்மை அங்கிருந்த அந்த அலுவலகப்பெண் ஒருவரின் கவனிப்பிற்கும் கேலிக்கும் என்னை ஆட்படுத்தியது. ஏறத்தாழ கடும்பனிப்போர் போல என் பேசாத தன்மையை புரிந்துகொண்டார் அவர். மேலும் வேலையை வேகமாக செய்யும் போக்கும், புதுமையான எந்த திறனும் அவரிடம் கிடையாது. அலுவலக நிர்வாகத்தினூடே இதழ் பணிகளையும் செய்துவந்தார் அவர். பிராட்வே சென்று வர ஆசிரியர் கூறி விளம்பரம் தேட என்னைப் பயன்படுத்த முயற்சிக்க நினைத்தார். என்னிடம் ஒரு ரூபாய் கூட சட்டைப்பையில் இல்லை. அலுவலகப் பெண்ணோ கடும் மோதல் போக்கோடு இருந்தார். இத்தனைக்கும் அவரிடம் ஒருவார்த்தை கூட நான் அதிகம் பேசியதில்லை அலுவலக விஷயம் தாண்டி. எனக்கோ விலகி ஓடிவிடு என்ற குரல் உள்ளே கேட்டுக்கொண்டே இருந்தது. குரலின் விஸ்தீரணம் பலபக்கங்களிலும் அதிகமாகிக் கொண்டே உக்கிரமாகி வந்த பொழுதில் ஆசிரியரே நீங்க கிளம்புங்க என்று விடுவித்துவிட்டார். காரணம் பிராட்வே போகாத காரணம்தான். அன்று கண்ணீர் பெருக தலையணை நனைய கரைந்தழுதேன். பின் மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கு பணிபுரிந்த பலரும் பல வித மனநோயில், வாழ்கைப்பிரச்சனைகளில் சிக்கியிருந்தார்கள். ஒருவனுக்கு காதல் திருமணம் முடிந்து மனைவி கருத்து வேறுபாட்டினால் தன் அப்பா வீட்டிற்குபோய்விட்ட சிக்கல். இன்னொருவனுக்கு காதலி தன்னை விட்டு விலகிவிட்டதனால் மதுபாட்டிலை தன் தலையில் அடித்து சுயவதையில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் நிலை. இந்த இருவரையும் பார்த்தும் மற்றொருவனோ இந்த நிலைகளை ஏற்படுத்திக்கொள்ள அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து இரண்டு பெண்களை பின் தொடர்ந்துவிட்டே அலுவலகம் வரும் நிலை. பெண்ணுக்கோ நெடுந்தொடரில் வரும் பெண்கள்,ஆண்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்ற பரிதவிப்பும், தன்னைக்குறித்த அதீத பெருமிதமும், கடும் அகங்காரத்தினால் பிறரின் வேலைகளை குலைக்கும் தன்னிச்சையான போக்கும் என இவர்கள்தான் இதழ்களை உருவாக்குகிறார்கள். இவர்களை ஆறுதல் கூறுவது போல் நடித்து அவர்களை தனக்காக பயன்படுத்திக்கொண்டு தன் வீட்டின் டைல்சை அப்போதைய ட்ரெண்டிற்கேற்ப ஆறு மாதத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் சுரண்டல் பகுத்தறிவுவாதி தான் கொண்ட அற உணர்வை தமிழகத்திற்கு பரப்பும் ஆசிரிய பதிப்பாளர்.
17
துயரத்தின் காயாத வடு
-ஸமீரா சித்திக்
ஆண்டன் செகாவ் சிறுகதைகள் படிக்க படிக்க ஒருபுதிய உலகம் கண்முன் விரிகிறது. மனித வாழ்வில் உள்ள மாறாத குரூரம், துயரம், உறவுகள் அழிந்த தனிமை, வாய்விட்டு அழக்கூடிய நிலையிலும் சுயகௌரவம் விட்டுவிடக்கூடாதது என அனைத்துமே மனிதனை எவ்வித இக்கட்டுகளில் புரட்டிப்போடுகிறது என்பது இவரது கதைகளின் தொகுப்பை வாசித்ததும் மூலமாக இருக்கலாம் என்று தோன்றியது.
வாழ்வில் இன்பம் என்ற ஒன்று உள்ளது என்ற மாயையை உடைக்கும் கதைமாந்தர்கள் தங்கள் வாழ்வின் அபத்தத்தை, அவலத்தை ஏதோ ஒருவகையில் சொல்கிறார்கள் பின் அதனால் என்னவென்று கேள்வியோடு வாழவும் செய்கிறார்கள்.
பந்தயம் இதில் முக்கியமான பல விஷயங்களை கூறுவதாக உணர்கிறேன். பதினைந்து வருடங்கள் ஒருவன் சிறைவாழ்வை ஏற்றுக்கொண்டு வாழ்வின் அபத்தங்கள், மாயைகளை சாயம் போகும் மண்ணுலக சொர்க்கங்களை வெறுத்து பந்தயத்தொகையினை மறுத்து தப்பிச்செல்கிறான். இது படிக்கும் காலம் தாண்டி நமக்கு என்று படித்தாலும் அவை உணர்த்துவது ஒவ்வொன்றாக மாறுகிறது.
எருமை வாய் மெல்லுதலும் குறையாத கால் நடுக்கமும்
-கனிராவுத்தன்
மாத்ரு கி பிஜிலி மண்டோலா என்ற படத்தின் பாடல்கள் எப்போதும் போல விஷால் பரத்வாஜின் இசையில் பரவாயில்லை ரகம் இறுதியில் வரும் ரோஸ் நிற எருமை எதற்காக என்பதற்காகவே படம் பார்க்க வேண்டுமா என்று ஒரு யோசனை.
படம் நம்பிக்கையான இயக்குநர் இயக்கியிருக்கிறார் என்று பார்க்கலாம் என்று நம்புகிறேன். குறியீட்டுத்தன்மை என்கிற புரியாத படமாக இருந்துவிடக்கூடாது என்றுதான் பயம். அப்புறம் ஏகாங்கி, ஸமீரா உள்ளிட்டோரை எல்லாம் விளக்கம் கேட்க வேண்டி வந்துவிடும்.
சித்த மருத்துவத்தில் வெந்நீருடன் விளக்கெண்ணெய் கலந்து வேகமாக ஆற்றிக் குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று அரசு சித்த மருத்துவத்திலகம் நம்மு சத்தி பயதே… சொன்னாப்பல. குடித்தால் இன்னும் பீச்சியடித்துக்கொண்டு வரவில்லையே என்று தாமதித்து பார்த்தபோது பொழுது போய்விட்டது. டோஸ் பத்துலப்பா என்று லூசு மணி கவுண்டர் கொடுக்கிறான்.
மரமேறிய கதை வெட்கக்கேடு. முதல் அடியிலேயே கால் கை மனம் சொன்னபடி கேட்க மறுக்கிறது. மேலெழும்ப வில்லை. மாமனுக்கு சிரிச்சா போச்சு ரவுண்டுப்பா என்று கூறவேண்டும் போல் இருந்தது எனக்கு. சிரித்து வயிறு வலியே கண்டுவிட்டது என் பலவந்த மரம் ஏறும் வைபவம் நடைபெற்ற போக்குகளைக் கண்டு. செரி வார காலு கையெல்லாம் நடுங்குது போயிரலாம் என்று காப்பாற்றிவிட்டார். என்னையல்ல கணேஷ் கவுண்டர் வீட்டு மரத்தை. பிறாண்டிட்டமுல்ல.
வாழநினைக்கும் வான்கா
-ஸமீரா சித்திக்
வான்கா கதை ஒரு சிறுவனின் நிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. கதையின் ஒரு இடம் கூட அறிவுஜீவித்தனம் இடம்பெறாத தன்மைதான் இதில் முக்கியம். வான்காவின் மீது இறுதி வரிகளில் வெளிப்படும் பெருங்கருணை தன்னிச்சையாக நமது மனதிலிருந்தும் ஏற்படுவது இயல்பான ஒன்றே.
நம்பிக்கையின் வலுவான அடித்தளத்தில் நின்று கொண்டுருப்பதாக வான்கா நினைக்கிறான். ஆனால் வாழ்வின் அடித்தளங்கள் எப்போதும் உறுதியானவை அல்ல. அவன் நம்பிக்கையோ பெரிதும் கரையான் அரித்துவிட்ட விட்டம்போலவும், அதை நம்பிய வீடு போலவும் உள்ளது.
நான் கோமாளி
எளிதாக நடக்க எதுவும் முக்கியமற்றது ஆனது ஒன்றுமில்லை எனது வாழ்வில். அனைத்து நாட்களுமே ஏப்ரல் ஒன்றாகவே இருப்பது போல ஏமாற்றம் வறட்சியான நம்பிக்கைதான் மிஞ்சுகிறது. ஏதோ பெரியதாக பின்னால் என்று நம்ப நான் சகோதரன் போல அல்ல.
18
நான்காவது காட்சி
நீ தானே என் பொன்வசந்தம்
ஈரோஸ்டார்
அன்பு சகனுக்கு,
மிகுந்த உணர்வெழுச்சி என் மனதையும் அடிக்கடி பாதித்துவிடுகிறது. கனவுலகில் இருக்கும் சுதந்திரம் நிஜத்தில் சிறிதும் இல்லை. சமாளித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னையில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்னும் படம் பார்த்தேன். ஸ்டைலிஷ் ஆங்கிலப்படத்தை நகல் செய்து படம் எடுக்கும் இயக்குநரின் கையில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும், பெண்ணின் மனது குறித்த எண்ணிக்கொண்டிருக்கும் போது என்னையறியாமல் கண்ணீர் பெருகிவழிகிறது. அன்பிற்கான ஏங்குதல் படத்தில் நன்றாக வெளிப்பட்டுள்ளது. நித்யா எனும் பெண் கதா பாத்திரத்திற்கான வாய்ப்பு வேறெந்த பாத்திரத்திற்கும் வாய்க்கவில்லை என்பேன்.
பரபரவென நகரும் காட்சிகளைவிட நிதானமாக நகரும் காட்சிகள்அ எனக்கு பிடித்திருக்கிறது என்றால் லூசு மணி கடுமையாக கிண்டல் செய்வான் ‘’கேமராவ நாட்டிவைச்சுட்டாங்கப்பா’’ என்பான். இன்னொன்று இந்தப்படம் வணிகரீதியாக வருவாய் அதிகம் ஈட்டியிருக்காது. ஆனால் நஷ்டம் வராதமாதிரி ஏற்பாடு செய்துகொண்டிருப்பார்கள்.
பெண்களின் மீதான கூடுதல் பிரியத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் பெண்களிடமிருந்து தனியே இருந்ததும் கூட காரணமாக இருக்கலாம்.போதும் இனி காட்சி…
நித்யா வசதியான பணக்காரப்பெண் என்றாலும், சிறுவயதில் நட்பான வருணை மீண்டும் பள்ளியில் சந்திக்கும் போது அவளுக்கு மகிழ்ச்சி பெருகுகிறது. அவன் வாங்கித்தரும் காஃபியை ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறாள். அவளின் பித்தான மனநிலை அவள் ஒரு சுயசார்பு இல்லாதவள் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், ஆனால் தன் வாழ்விற்கான அனைத்திலும் சிறந்தவளாகவே இருக்கிறாள்.
வருண் காதலித்துக்கொண்டிருக்கும் போது கிடைக்கும் நேரம் எல்லாம் நித்யாவோடு செலவழிக்கிறான். ஆனால் ஆணுக்கு என்று பல நிர்பந்தங்கள் உண்டே. அவனை மேற்படிப்பாக எம்பிஏ படித்து ஒரு வேலையில் சேர வீட்டில் ஆலோசனை கூறுகிறார்கள். அதனை தன் அப்பாவின் கடிதத்தின் வாயிலாக அறிகிறான். தன் குடும்பத்தின் நிலையையும், தன்னை எதிர்பார்த்திருக்கும் அப்பாவின் நிலையையும் எண்ணி எம்பிஏவிற்கான நுழைவுத்தேர்வை எழுத முடிவெடுத்து தீவிரமாக படிக்கத்தொடங்குகிறான். இதனால் நித்யாவை சந்திக்க அதிக நேரங்கள் கிடைப்பதில்லை.
ஆனால் நித்யாவிற்கு வருணின் இந்த செயல்பாடு பெரியதாக தோன்றுவதில்லை. தன்னோடு ஏன் வருண் அதிக நேரம் செலவிடவில்லை என்று கவலையுறுகிறாள். வருண் தன்னை தவிர்க்கிறான் என்று அவனிடம் சண்டை போடுகிறாள். அவளோடு இருக்கும் நேரங்களிலும் வருணுக்கு படிக்கவேண்டிய விஷயங்களே நினைவுக்கு வருவதால், அவளோடு எதையும் பேச இயல்பாக கவனம் தவறுகிறது. ஆனால் வருண் தன் நிலையைக்குறித்து வெளிப்படையாக பேசுவதேயில்லை. பின் நித்யா கோபமாக போய்விடுகிறாள்.
இது பற்றி நிறைய பேசலாம். வருண் நடுத்தரமான பொருளாதார நிலை கொண்ட குடும்பம் சார்ந்தவன். அவன் அப்பா, தன் மனைவியை சிங்கப்பூர் கூட்டிச்செல்ல முடியவில்லை என்று தன் திருமணத்திற்கு முந்தைய சத்தியம் குறித்து அடிக்கடி மனம் வருந்துபவர்.
நான் கடைக்கும்போகும்போது சட்டைப்பையை தடவி பலமுறை சோதித்துவிட்டு உள்ளே செல்வேன். விரும்பும் இரண்டே விஷயத்தை பணம் சேர்த்தும், மற்றொன்றை மூன்றுநாள் சாப்பிடாமல் இருந்தும் வாங்கியிருக்கிறேன். ஒன்று பத்தாம்வகுப்பு தேர்வெழுதிய ரினால்ட்ஸ் பேனாவும், மாரியம்மன் திருவிழாவில் வாங்கிய வீடியோ கேமும். நான் வருணின் நிலையை பார்ப்பது என்னுடன் பொருத்தி என்பதை தவறு என்று நினைக்கிறேன்.
நித்யாவை வருண் விரும்பினாலும் கூட அவனுக்கு தனது உடையும், தான் உண்ணும் உணவும், தான் காதலிக்கும் நித்யா பற்றிய ஒரு பதட்டமும், தான் அவளுக்கு பொருத்தமில்லை என்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
நித்யாவின் கார், அவளின் வசதி குறித்த ஒரு எரிச்சல், பொருமல், வருணிடம் எப்போதும் ஒரு நிம்மதியின்மையை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் இயல்பாக வரும் காதலி தன் உடைமை மனோபாவமும் ஏற்படுகிறது.
இறுதிக்காட்சியில் திருமண நாளின் முந்தையநாளின் இரவில் வருண், நித்யாவிடம் சாவியைக் கொடுத்து ஓட்டச்சொல்ல, அவள் தயங்கி நிற்க, ‘’ கடன கழிச்சிட்டதா நெனச்சுக்கோ, எத்தன தடவ உன்னோட காரை ஓட்டக்கொடுத்திருப்ப ‘’ என்று பேசும் ஒரு வசனம் போதும் வருணின் மனநிலையை, மனதிலிருந்ததை யூகிக்க மற்றும் புரிந்துகொள்ள.
பெண்ணின் மனதைக்கவர பல பார்முலாக்கள் உள்ளன என்று சிலர் என் சகோதரன் உட்பட கொக்கரிக்கிறார்கள். ஆனால் தோழர்களே பெண் ஒரு உயிர் அல்லவா! . பந்தயத்தில் ஜெயிப்பது போல் பார்முலா என்றெல்லாம் பேசுவது எந்த மனநிலையை உணர்த்துவது என்று கூறுபவர் புரிந்துகொண்டால் சரிதான்.
ஆணும் பெண்ணும் மூளை அமைப்பில் பல வேறுபாடுகள் கொண்டவர்கள். அனைத்தைப் பற்றியும் புத்தகங்கள் எழுதி காசு பார்க்கும் அமெரிக்கர்கள் இதற்கும் பல பொதி புத்தகங்கள் எழுதி விட்டார்கள். அறிவுரீதியாக ஆணும், உணர்வுரீதியாக பெண்ணும் என்றும் சுருக்கமாக அவர்கள் கூறுகிறார்கள். அனைத்திற்கும் விதிவிலக்காக ஏதாவது பெண்கள் இருப்பார்கள் என்று எனது அனுபவத்திலிருந்து உணர்கிறேன். குறுகல் புத்திகொண்ட, அடவாதம் கொண்ட பெண்களை சந்திருத்திருக்கிறேன். அவர்களின் அரசியல் தந்திரங்களால் கடும் மன உளைச்சல் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் இது நித்யாவிற்கான படம் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். அவள் தொடர்ந்து வருணைப்பற்றியே நினைக்கிறாள். நம்முடைய வெற்றி, தோல்விகளை, வருத்தங்களை பகிர நம்பகமான தோள்களைத்தேடித்தானே வாழ்வே செல்கிறது. பல காட்சிகளில் நித்யாவிற்குத்தான் புள்ளிகள் அதிகம் குவிகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் வாழ்நாளுக்கான படம் இதுதான் என்பேன். தெலுங்கில் பாடலுக்கு மட்டும்தான் பெண்கள் அதிலும் இடுப்பசைக்கத்தான் தேவைப்படுகிறார்கள்.நிரூபிக்க, சம்பாதிக்க என்று இருவகைகள் உண்டு ஒவ்வொருவருக்கும். இதில் நித்யா இதில் தேர்ந்தெடுத்திருப்பது முதலாவதை.
நித்யாவின் உண்மை, வெகுளித்தனம் அவ்வளவு அழகு. மகிழ்ச்சியில் வருணோடு கத்துவது, சொல்றதுக்கு எதுவுமே இல்லையா என பெருங்காதலில் பயணித்து காமத்தின் கரை ஒதுங்கும் உடல் மொழி என நித்யா..நினைவெல்லாம் நித்யாதான்.
எதுவும் சொல்லாமல் ஒரு இதயத்திற்காக இன்னொரு இதயம் கண்ணீர் வடிப்பதில்லையா, வருந்தித் துடிப்பதில்லையா, தன்னிச்சையாக வழுவி விழும் உடலை தாங்கிப்பிடிக்க எழும் அன்புகொண்ட இரு இதயங்களின் பொன்மாலைப்பொழுதில் கேட்கும் பாடல்தான் ‘நீதானே என் பொன்வசந்தம்.
19
நம்பர் 1 எழுத்தாளர் ஏகாங்கியிடம் நேர்காணல்
-ஈயக்குதிரை
ஐயா யாரும் எறங்கவா சொல்லப்போறாங்க எதுக்கு இந்த நம்பர் 1 ன்னு வலுக்கட்டாயமாக போடச்சொல்றீங்க?
இந்த சமகாலத்தில் நம்மை நாமே விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழல். அதனால்தான். தேவையில்லாம முச்சந்தியில் காறித்துப்பி எல்லாரையும் பேசவைப்பது, எதையாவது பத்தி அடிமுட்டாள்தனமாக கட்டுரை எழுதி எசகுபிசகாக சர்ச்சையில் சிக்குவது இதெல்லாம் இல்லையென்றால் ஏதாவது எழுத்தாளர் பட்டியல் போட்டு உரக்கப்பேசுவது அப்படி இப்படின்னு ஏதாவது செய்யணும்பா… இல்லையென்றால் நாம் எழுத்திற்கு எதிரானவர்கள் மனதில் கூட இருக்கமாட்டோம்.
எழுத்துக்கான உந்துதல்களை நீங்கள் எங்கிருந்து பெறுகிறீர்கள்?
சிறுநீர் வெளியேற அடிவயிற்றில் பை நிரம்பியிருக்கும் உணர்வு உந்துதல்போல கதை என்றால் மனித வாழ்விலிருந்துதான். அதிக மனிதர்களை சந்தித்தால் நிறைய கதைகள் கிடைக்கும் என்றாலும் நான் அப்படி சந்திக்கிறவனில்லை ஆனாலும் பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் கதையின் மையம் சரியாக அமைகிறதோ இல்லையோ அதன் உரையாடல்கள் கூர்மையாக அமைகிறது. இதனை முன்னோடி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளில் பார்க்க முடியும்.
தங்களுடைய எழுத்தை தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும் சூழலில் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே?
இது எழுத்தாளனின் தவறில்லை. இன்றைய பரபரப்பான சூழலில் மக்களை கவனிக்க வைக்கவேண்டும். இதற்காகத்தான் ஆங்கில எழுத்தாளர்போல அதிக விலைக்கு விற்கும் புத்தகத்தை விளம்பரப்படுத்த அவர் தட்டிவிடும் பேட்டிகள் ஒத்தது போல ஏதாவது ஒன்றை செய்வது. நான் யாரிடமும் என் படைப்புகளுக்கு மதிப்புரை எழுதி வாங்குவதில்லை. நானே எழுதி அதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து விடுவேன்.தமிழ் சூழலில் பஜ்ஜி கூட வாங்குவார்கள் போல தின்பதற்கு. ஆனால் படிக்க புத்தகங்கள் வாங்குவதில்லை. இதற்கு பல பொருளாதார காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால் இந்த சினிமா ஆட்களின் ஆட்சியில் எதுதான் துலங்கியது? எல்லாம் மண்மூடிப்போய்விட்டது மக்களின் அறம், உணர்வு, செயல் என எல்லாமே.
குண்டர் சட்டத்தில் போட்டாத்தான் அடங்குவீங்க போல. சரி உங்கள் எழுத்தின் அடிநாதம் என்ன?
இளையராஜாவின் ரீரெக்கார்டிங்தான். இப்படி மட்டித்தனமாக கேள்வி கேட்பதை விட்டுவிட்டு படைப்புகளை வாசித்துவிட்டு தங்களின் அனுபவங்களுக்கு அதனை புரிந்துகொள்ளுதலே நல்லது. சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பாடநூலில் உள்ளது போல் பேசவிரும்பவில்லை. அறம், அறமற்றது என்பதை முக்கியமாக கூற விழைகிறேன். ஆனால் நம்பிக்கையோடு, அது இல்லாது என தேர்ந்தெடுப்பது எழுத்தாளனே ஒழிய வாசகன் அல்ல. பகடி, அங்கதம் என்று எழுத லூசுமணி மற்றும் டைட் ராஜின் காபி காரம் கச்சேரி நிகழ்ச்சியா இது. குண்டர் சட்டமா அந்த சட்டத்தின் பிடியில் இந்த ஒல்லிக்குச்சி மாட்டிக்கிட்டனா? ஐயாமாரே பயாடிவி பாருங்கள். குமது கம்ஜியார் கஷ்டப்பட்டு படித்துவிடுங்கள். அம்மா வாழ்க.
20
கரிச்சான் குஞ்சு பற்றி
-குட்டிராஜன்
கரிச்சான்குஞ்சு பற்றிய கட்டுரை ஒன்றை காலச்சுவடில் படித்தேன். புத்தகம் உதவி சிபிசரவணன் எனும் கல்யாண வீடியோ நண்பர் ஒருவர்.
பசித்த மானிடம் என்ற கிளாசிக் நாவல் வரிசையில் உள்ள நூலை படித்தேன். ஓரினப்புணர்ச்சிக்கு தொடர்ந்து செல்வந்தர்களால் பயன்படுத்தப்படும் ஒருவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டு கண்தெரியாத பெண்ணிற்கும், குழந்தை ஒன்றோடும் நட்பாகி வாழ்கிறான்.
அவரின் தனித்த தன்மை அவரை சாமியாக கருதி மற்றவர்களை வணங்கவைக்கிறது. இந்த கதை கவனமாக கையாண்டதினால் வியாபாரத்திற்கான உந்துதல்களை நாவலில் எங்கும் பார்த்திட முடியாது. அந்த காலத்திலே இதுபோன்ற சிக்கலான விஷயங்களை எடுத்துக்கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைத்து அதனை நாவலாக செம்மையாக மாற்றியிருப்பதற்கு நன்றி கூறவேண்டும். இதனை வா.மு கோமு எழுதியிருந்தால் சிறந்த விற்பனையான ஒரே நூல் என்ற சாதனையை எட்டிப்பிடித்திருக்கும் அத்தனை வாய்ப்புகள் உள்ளன.
கரிச்சான் குஞ்சு குறித்த பல விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார் கட்டுரையாளர். அவரின் குடும்பநிலைகளைக்குறித்தும் தெரிய வரும் கருத்துக்கள் அப்படித்தான் இருக்கமுடியும் என்ற நிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றன். தன் எழுத்தின் வழியே தனக்கான ஆசுவாசத்தை ஏற்படுத்திக்கொண்ட விச்ராந்தியான எழுத்தாளர் இவர் என்று கூறலாம்.
ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை
-பழனிபேரன்
கடும் எரிச்சலாக இருக்கிறது. கம்ப்யூட்டர் வேலை செய்யும்போது டிவிடி டிரைவ் வேலை செய்யமாட்டேன்கிறது. டிரைவ் வேலை செய்தால் சிபீயு வேலை செய்வதில்லை. இதெல்லாம் சரியாக இருக்கும் போது மனம் ஒத்திசைவு கொள்வதில்லை. வேலை செய்ய விரும்பும்போது மின்சாரம் இருப்பதில்லை. தூக்கி சாலையில் விட்டெறிய மனதில் வெறி பிறக்கிறது. ஆனால் என்ன பண்ணுவது பாதர் ஆப் தி நேஷன் வாங்கிக்கொடுத்தது.
கோல்டு லேடியில் எந்த பதிலும் இல்லை. மீண்டும் கடும் விரக்தியில் மனம் நிறைகிறது. இம்அண்ட்சி நிறுவனத்திற்கான ரெஸ்யூம் தயாரிக்க அதிக நேரம் செலவானது. அதன் தளம் போய் முகவரியைக் கண்டுபிடிக்கவேண்டும். விரைவில் அனுப்பிவிட வேண்டும்.
வார்த்தைகள் யோசிக்க யோசிக்க மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. த.நா குமாரசாமியின் மொழிபெயர்ப்புகளை கண்டுபிடித்திருக்கிறேன் நூலகத்தில். சகோதரனுக்கு டிசிஎஸ்ஸில் வேலை கிடைக்கவில்லை. அவரது வேலைவாய்ப்பு ஏனோ கடந்துபோய்விட்டது. என்னையும் ஏதோ விண்ணப்பிக்க கூறினார்.
சகோதரர் கூட எப்படியோ உள்ளே போய்விடுவார். ஆனால் நான் உள்ளே நுழைவதே மிக கடினம். ஷூ, ஷர்ட், பேன்ட் என இன் செய்து இதெல்லாம் ஆகிற காரியமா சாமி…
சா. கந்தசாமியின் சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.ஃ உரையாடல்கள் ஈர்ப்பு ஏற்படுத்தும்படி உள்ளன. ஏதாவது ஒரு சொல் புதிதாக நம்பிக்கையோடு இருக்கிறது.
21
மற்றொரு கௌரவக் கொலை
-சம்பரன்
இன்று தினத்தந்தியில் ஒரு செய்தி. படித்ததும் அப்படியே கடும் பதட்டமாகிவிட்டது. நந்தினி என்ற கல்லூரி செல்லும் பெண்ணை சிவகிரி அருகே அப்படியே கொன்று எரித்துவிட்டார்கள். ஒரு கால் மட்டும் அப்படியே தசை எரிய தூக்கியிருந்தது. பீதியில் சிறுநீர் வந்துவிடும்போல் இருந்தது.
பெண் நல்ல வசதியான வீடு என்று பால் சொசைட்டியில் பேசிக்கொண்டார்கள். கோவையில் பொறியியல் படிப்பை இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்த பெண்ணாம் அவள். அக்கா பொறியியலாளராக பெங்களூரில் பணியாற்றுகிறாளாம். நந்தினி கோவை செல்ல பேருந்தில் செல்வதாக கூறிவிட்டு தன் அம்மாவை அனுப்பிவிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து கோவை சென்று விட்டதாக அலைபேசியில் பேசியிருக்கிறாள். ஆனால் அடுத்தநாள் சிவகிரி ஜி.ஹெச் அருகே புதர்களுக்கு அருகில் கிடக்கிறாள். என்னவென்று சொல்வது? முகம் மட்டும் தீய்ந்து போகவில்லை. கோவை அரசு மருத்துவமனை சென்றிருக்கிறது உடல். அவள் தலித் மாணவன் ஒருவனை காதலித்ததாகவும், அதற்காகத்தான் அவளது தந்தை தன் ஜாதி மானம் காக்க தன் மகளையே பலியிட்டதாக வலுவுடன் செய்திகள் கூறப்படுகின்றன. வழக்குகளை மிக எளிதில் பணம் வைத்தும், ஜாதிக்கார அதிகாரிகளை வைத்தும் முறியடித்துவிட முடியும் எனும்போது.. இறந்த பெண்ணுக்காக தலித் மாணவன் சிக்க வைக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று நம்புகிறேன்.
பரிசுகள் வழங்குவது …
-லோக்கல் ப்ரூஸ்லீ
தாராபுரத்து கைகாரர் வீட்டுக்குப் போய் அவருடைய புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு அவருக்கென்று பேனா, மைக்குப்பி ஆகியவற்றையும் பரிசளித்துவிட்டு வந்தேன்.
பாஸ்கரன் அண்ணாவுக்கு ஐசிஐசிஐ வங்கியில் ஐயோ என்று சந்தோஷத்தில் கத்தும்படி நாற்பதாயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவருக்கு இருக்கும் செலவுக்கு இது அதிகமில்லை.
அஞ்சப்பரில் சகோதரருக்கும், எனக்கும் பிரியாணி வாங்கிக்கொடுத்தார் ஆடிட்டர் பாஸ்கரன். நிகழ்ந்தது சி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றபோது. அதனால் அவரை கௌரவிக்க ஜென்கதைகள் எனும் தொகுப்பை அவருக்கு பரிசளித்தேன். கொடுப்பதில்தான் மகிழ்ச்சி.
22
ஏகாங்கியின் எக்ஸ்ப்ளோசிவ் எகத்தாளப்பேட்டி
-இரும்புத்தலை
உங்கள் எழுத்துக்கள் பிரசுரிக்காமல் போன நிகழ்வு உண்டா?
அதனால்தான் ஒவ்வொருவரும் ஒரு பதிப்பகத்தை சிநேகித்து வருகிறார்கள். எனக்கு நிறைய அப்படி நிகழ்ந்திருக்கிறது. நமக்கு அண்ணாநகர் எழுத்தாளர்தான் முன்னோடி. தொகுப்பிற்கு கதையை சேர்த்து வைத்துவிடவேண்டியதுதான். ஆனால் நான் கதைகளை தொடர்ந்து திருத்திக்கொண்டிருப்பேன். அதற்கான வாய்ப்பு என்றே பிரசுரிக்க இயலாத நிலைமைகளை நினைக்கிறேன்.
குறிப்பிட்ட இதழ்களில் உங்களது படைப்புகள் வெளியிடப்படுவதே இல்லை அது ஏன்?
என்னை ஏதோ நோய் போல ஒதுக்கிவிடுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்குத்தான் அது அதிகம் உள்ளது. அந்தக் கூட்டம் தானே எழுதி தானே பிரசுரித்துக்கொள்ளும். அது என்னவொரு பைத்தியக்கார மனநிலை பாருங்கள். பாதி ஆட்கள் தன் எழுத்தை தானே பிரசுரிக்கவே ஒரு இதழை நடத்துகிறார்கள்.
எழுதுவதற்கான தூண்டுதல்களா எதை நினைக்கிறீர்கள்?
ஒரு அனுபவம் மனதில் ஏற்படுத்தும் உள்ளார்ந்த தவிப்புதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். பிரம்ம பிரயத்தனம் எல்லாம் எதுவும் கிடையாது. எழுத்து தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும். மிகுந்த உளவெழுச்சியில் எழுத்துக்கள் தானே ஒரு வடிவத்தை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கிறீர்களா? இல்லை சுயமோகிதானா?
காலத்தின் சலுகை பெறாமல் என்னை நீடித்துக்கொள்ள விரும்புவதால் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன். இந்நாளைய எழுத்தாளர்களோடு, முன்னோடிகளான எழுத்தாளர்களின் செவ்விலக்கிய படைப்புகளை படிக்க விரும்பி அதற்காகவே நேரத்தை பெரிதும் செலவிடுகிறேன். எழுத்தாளனுக்கு மொழி மிகவும் முக்கியம். சொன்னால் நம்பமாட்டீர்கள். வேர்க்கடலை வாங்கும் காகித த்தையும் கூட படித்துவிட்டே எறிகிறேன்.
எழுத்தாளர்களோடு இணக்க உறவு உண்டா? இல்லை அங்கேயும் வம்புதானா?
எழுத்தாளர்களோடு பெரிய இணக்கம் வெறுப்பு என்றில்லாமல் படைப்பின் வழியாக படைப்பாளியைக் கண்டுணர்கிறேன். பல படைப்பாளிகளோடு பேச வாய்ப்பு கிடைத்தாலும் நான் அதை பெரிதும் விரும்புவதில்லை. அவர்களோடு நான் அதிக நேரம் பேசிக்கொண்டுதானே இருக்கிறேன் தேநீரோடு, சில சமயம் உணவோடு.
திடீரென மின்னூல் மோகம் ஏன் தலைவரே?
புத்தகமாக எத்தனை பேர் வாங்கிப்படிக்கப் போகிறார்கள் என்றுதான் மின்னூலாக வெளியிட முயற்சித்தேன். தொடர்ந்து அவை தொடரும். புதியவற்றை இருகரம் நீட்டி வரவேற்பது என் குணம். தவறுகள் இருக்கலாம். ஸ்மார்ட்போன் வழியாக எழுத்துக்கள் மக்களை அடைந்தால் நல்லதுதானே! எழுத்துக்கள் ஒன்றும் யாருடைய பரம்பரை சொத்துமல்ல. காற்றில் பரவட்டும் சொற்கள் பலருக்கும்.
23
தேர்வுகள்…தேய்வு…தேறாத மனம்
-பிகிலு காடி
இனக்குழு வங்கிக்கான தேர்வு எனக்கென்னமோ விண்ணப்பத்தினை விற்கும் ஒரு வியாபார முயற்சியாகத்தான் படுகிறது. இபிஇடி கல்லூரியில் நடைபெறுகிறது. இண்டியன் போலீஸ் வீட்டிற்குச்சென்றுவிட்டு அப்படியே தேர்விற்கும் செல்லக்கூடும் என்று நம்புகிறேன்.
இன்னும் 9 நாட்கள் உள்ளன தேர்விற்கு என்றபோதும் படிக்கிறேன் அவ்வளவே. முயற்சி, உழைப்பு என்றெல்லாம் கேட்டாலே உடனுக்குடன் மூளையில் அலர்ஜி ஏற்பட்டு விடும்போல இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பிலான சங்கிலியில் என்னை கட்டிப்போட வக்கிரம் முதற்கொண்டு அனைவரும் வெறிகொண்டு அலைகின்றனர். அனேகமாக இந்த தேர்விற்குப் பின் என்னால் தேர்வே எழுதமுடியாது போகலாம். நடப்பது சிறப்பாக நடக்கட்டும். நான் தொடர்ந்து எதற்காவது முயற்சிப்பேன்.
ஆங்கில ’ஹிந்து’ படிக்க ஒருநாள் தேவைப்படுகிறது. சினிமா செய்திகள் படிக்க எளிதாக இருக்கிறது. டைம்ஸ் படிச்சவன்லாம் எதுக்குடா ஹிந்து படிக்கிறீங்கன்னு லூசுமணி கேட்கிறான். நல்லாப் பேசறீங்க மணி வெல் வெல் என்று நகர்ந்துவிட்டேன். உண்மை எவ்வளவு பாரம்!
அழைக்கிறவர்களெல்லாம் படிபடிபடி என்று மந்திரம் போல் உச்சரித்துக் கொல்கிறார்கள். டேய் எனக்கு என்மேல் இல்லாத நம்பிக்கை உங்களுக்கு எங்கிருந்துடா வருது?
சொல்லாததும் உண்மை பிரகாஷ்ராஜ் எழுதி விகடனில் வெளிவந்தது நினைவிருக்கிறதா? விஜயில் பிரகாஷ் பேச பார்த்துக்கொண்டிருக்கிறேன். வீடு பல ஏக்கர் நிலம் வாங்கி கட்டியிருப்பார் போல. அற்புதமான வீடு. நிறைய மரங்கள். சமையல் அறை வீட்டிலிருந்து தனியாக இருக்கிறது. சாப்பிடும் அறை அழகாக மண்டபம் போல இருக்கிறது. குறையாத பறவைகள். மெல்ல வழியும் நீர்நிலைகளில் சிறகசைத்து மிதப்பாக செல்லும் வாத்துக்கள் என மனநிலையை அதிகாலை பறவைபோல மாற்றுகிற மாயம் நிகழ்கிறது.
முதலில் பார்க்கும்போது ஈஷாவில் எடுக்கப்பட்டதோ என்று நினைத்தேன். ஆனால் அவரது வீடு வடிவமைப்பு, சூழல் என ஒரு வனம் போல காட்சியளிக்கிறது. சினிமா போன்ற செயற்கையான உலகத்திலிருந்து வெளியேறி தனக்குள் தன்னை பொருத்திக்கொள்ள இதெல்லாம் நிச்சயம் பிரகாஷூக்கு தேவைப்படக்கூடும்.
நடக்க நீண்ட சிமெண்ட் பாதை. புல்வெளி அதிகம். சுவர்கள் குறைவு. வீடியோவின் தொடக்கத்திலேயே சுவர்கள் எனக்குப் பிடிக்காது என்று கூறிவிடுகிறார் பிரகாஷ். சுவர் முக்கியமான மனநிலைகளை மாற்றியமைக்கும் ஒன்றாக கடந்த காலத்தில் இருந்தே இருக்கிறது என்று நினைக்கிறேன். தனக்கென ஒன்றை சுவர் வைத்து தடுத்துக்கொள்ளும் போக்கு மனிதனுக்கு தன்னை உள்ளூர பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் கொள்ளலாம். அதுவே அதிகரித்தால் நோயாக மாறுகிறது. ஆமாவா.. இருக்கட்டும்.
24
மேல்காற்றும் கீழ்காற்றும் வீசிய பொழுதது
அண்ணாநகர் எழுத்தாளர் சென்னையிலிருந்து தொடர்புகொண்டார். வெகுநாட்களுக்குப் பின்னான அழைப்பு அது. கதைகளை எழுத ஊக்கம் விதைத்தார். தொடர்ந்து பல நூல்களை வாசித்தும் வருகிறார் என்று அவரின் பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன்.
ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார் என்று திரு. வக்கிரம் கூறினார். அத்தனையையும் வாசித்துவிட முடியுமா என்று தெரியவில்லை. நூலகத்தில் செய்தித்தாள் மட்டும் படிக்கிறேன்.
சலிப்பான கடிதங்கள்
திரு. வக்கிரத்தின் கடிதங்கள் எப்போதும் போல பணிபற்றிய விவரணைச்சரித்திரம், கிடைக்கும் வசதிகள், செழிப்பு பற்றி தனி அஞ்சலட்டை. பின் கவிதை, சிறிது தன் சொந்த அனுபவங்களின் காய்ந்து போன உதாரணங்கள் என ஒன்றுக்கும் ஆகாத எழுத்துக்கள்.
பெரிய எதிர்பார்ப்பெல்லாம் எது குறித்தும் இல்லை. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளினால்தான் கால்கள் மண்ணில் அழுந்த புதைந்து நான் தவிக்கவேண்டியிருக்கிறது. எனது புத்தி, உணர்வு எல்லாம் சிறிது எக்ஸ்ட்ரீம் அல்லவா?
யாருக்கும் எந்த அறிவுரையையும் நான் வழங்கவோ, எனக்கு யோசனை வழங்குங்கள் என்று யாரிடமும் நான் கேட்பதுமில்லை; தருவதுமில்லை. ஊரைவழி காட்டலாம்; கூடவே பயணிக்க முடியுமா என்ன?
25
அன்புள்ள3
-அரசுகார்த்திக்
நான் மூன்று நபர்களுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறேன். ஒன்று கை(க்)காரர், அண்ணாநகர் எழுத்தாளர், மற்றும் திரு. வக்கிரம். இதில் முதல் நபர் ஒரு கடித த்திற்கு நான்கு கடிதம் எழுதி அனுப்புவார். மற்றவர்களில் அண்ணாநகரார் எதையும் பெரியதாக கண்டு கொள்ளமாட்டார். கதை வந்தால் குறுஞ்செய்தி அனுப்புவார். படித்தால் விமர்சனம் கேட்பார். கேட்டால் அடுத்து பேசவே மாட்டார். அப்படி நங்கூரம் போட்டது நச் என்பது மாதிரி பேசிவிடுவதால் எழுத்தாளர் புலம்பு புலம்பு என்று புலம்பி என்னைக் குற்றவுணர்வுக்குள்ளாக்க முயற்சிப்பார்.
கைகட்சிக்காரரிடமிருந்துதான் கடிதம் எழுதுவதற்கான உத்வேகம் பெற்றேன். என் எழுத்துக்களின் மூலம் அவர்தான். அவருக்குத்தான் என் அனைத்து அர்ப்பணிப்புகளும். சிறந்த ஆளுமைகொண்டவர்.
கடிதம் எழுதுவது, அனுப்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதையும் மறைக்கமுடியாது. கை(க்)காரரிற்கும், திரு. வக்கிரத்திற்கும் கடிதங்கள் அனுப்பிவிட்டேன்.
திரு. வக்கிரத்திற்கு எழுதும் எழுத்துக்களை சேகரித்தால் இறையன்பிற்கு செம டஃப் கொடுக்கும் எழுத்தாளராக வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதுவும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும் நான் பேசுகிறேன். நம்ப முடிகிறதா?
சுயமுன்னேற்ற கடிதம் என சூடம் அணைத்து சத்தியம் செய்யும் அளவு திறனாக என் அத்தனை தந்திரங்களையும் குவித்து அல்லது பிதுக்கி எழுத்துப் பிரதியாக்கி அனுப்பினால் இருவாரங்களாகியும் போய்சேரவில்லை. ஊரின் கீழ்க்கோடியில் எந்த கடிதத்தையும் அஞ்சல் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.
தேர்வை முந்தும் வயிற்று உடைசல்
-பாவாணன்
தேர்வு நெருங்க, நெருங்க பதட்டம் கூடி வருகிறது. நாளை நான் அந்த குறிப்பிட்ட இடத்தில் தேர்வெழுதிக்கொண்டிருக்க கூடும்.என் முதல் போட்டித்தேர்வு. மிகுந்த அனுபவசாலிகளான தோல்வியடைந்தவர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.
பேப்பர்பையனிடம் வாங்கிய நூல்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். புதியவற்றை படிக்க முயற்சிப்பதில் பலனேதுமில்லை.
தினகரனில் வெளிவந்த எவ்வித முழுவிவரமும் இல்லாத தகவலிலிருந்து தபால் துறை வேலைவாய்ப்பு ஒன்றைப்பார்த்தேன். திராவிட ஒளியிடம் சொன்னேன் என்றாலும் அவர் பெரிய ஆர்வம் காட்டவில்லை. விரக்தியாக இருக்கலாம்.
அவரிடம் அதிகமாக நாக்கில்பேதி வந்தது போல் உளறிக்கொட்டினேன். மனது சிறிது புழுக்கத்திலிருந்து விடுபட்டதுபோலிருந்தது.
திராவிட ஒளிக்கும், வக்கிரத்திற்கும் கூறிய வார்த்தைகளை ஒன்று சேர்த்தால் பெரிய புத்தகமாக போடலாம். அத்தனை சொல்லியும் இவர்கள் சிறிதும் உணர்வேயின்றி இன்னும் கொஞ்சம் சொன்னாத்தான் என்ன என்று பாவ மூஞ்சியோடு நிற்கிறார்கள். ஆத்தாடி…
அதிகாலைப்பனியில் ஒரு பயணம்
-அம்பலக்காரன்
இனக்குழு வங்கித்தேர்வு எழுத தாயுடன் கிளம்பினேன். வெற்றி!!! அமோகமான வெற்றியுடன் வங்கி பணம் சம்பாதித்து விட்டது. நானோ என் பணத்தை தேவையில்லாமல் சூதாட்டத்தில் இழந்துவிட்டேன்.
தேர்வு முறைகளில் எந்தவித பயிற்சியும் இல்லாமல் கலந்துகொண்ட முதல் தேர்வில் நேரத்தை எப்படி ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பல ஊர்களிலிருந்து தர்மபுரி பக்கமெல்லாம் வந்து தேர்வு எழுதினார்கள். இருநூறுக்கும் ஏன் அதற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட பெரிய தேர்வுதான் அது.
இந்தியன் போலீஸ் வீட்டுக்கு ஆறு மணிக்கு போய் சேர்ந்தபோது அவர் வீட்டு நாய் தவிர யாரும் விழித்திருக்கவில்லை. அவரின் அம்மாயி முதலில் வெளியே வர, அதுவரை காத்திருந்த நாங்கள் அவரை நெருங்க அம்மாவின் முகம் பார்த்துவிட்டு பின்னே எங்களை வீட்டுக்குள் அனுமதித்தார். சிறிது நேரம் பேசிவிட்டு இபிஇடி கல்லூரிக்கு கிளம்பினேன்.
26
அது இது அடுத்தது?
-அட்டைப்பூச்சி
அடுத்த பணியினை தொடங்கிவிட்டேன். என்னவென்று பின்னாளில் நானே கூறுவேன். ஆவேசமான பேச்சுக்கள், உறுதிமொழி எல்லாம் அற்பமான அபத்த தொனி கொண்டு ஒலிக்கின்றன.
எதைத்செய்தாலும் அதன் இடையில் ஆழமான நம்பிக்கை வறட்சி இடையீடு செய்கிறது. இதுவாவது நம்மைக் காக்குமா என்று கிடந்து மாய்கிறது மனது.
போட்டித்தேர்வில் வெற்றி என்பது என்னைப்போல சோம்பேறிகளுக்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்துகொண்டுவிட்டேன். எப்படி வாழ்க்கை இவ்வளவு கவர்ச்சிகரமாக நம்மை ஈர்க்கிறது?
எதிலிருந்தும் பணம் வேகமாக விடுபட்டு ஒளி வேகத்தில் பறந்து ஓடுகிறது. எப்போதுமே நம்மீது நாமே இரக்கமுறும் சூழல் நமது முன்னேற்றவாழ்வுக்கு மட்டுமல்ல அடுத்த நாளை எதிர்நோக்கும் யாருக்கும் சாபமாகத்தான் அமைகிறது.
ஒரு சூதாட்டத்தில் தோற்றுப்போனவனின் மனநிலை திரும்பவும் நப்பாசையாக அனைத்தையும் அடுத்ததில் மீட்டெடுக்கலாம் என்றுதானே இருக்கும்? அதுபோலவே விண்ணப்பங்கள், கொரியர், புகைப்படங்கள், அதற்கான படிப்பு என நடக்காத ஒன்றை நாளையே நடந்துவிட்டால் என்ன என்பது போல ஏதேதோ செய்துகொண்டிருக்கிறேன்.
எதற்கு இந்த நீண்ட வாழ்வு.. போதும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் காத்திருத்தல் பெரும் பதட்டத்தையையும், கை நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கிருஷ்ணனைக் காதலனாகக் கொண்டு பாடப்படும் பாடல்களில் மனம் விழுந்தால் எழுவதே இல்லை. கண்களில் கண்ணீர் பெருக ஷங்கர் எஸான் லாயின் இசையில் கமலின் அபிநயப் பாடலாக வரும் பாடலை நாற்காலியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நீண்ட உறக்கம் இப்போதெல்லாம் தேவைப்படுகிறது. கனவுகளை யதார்த்த சூடு இல்லாமல் விருப்பம்போல வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளலாம் இல்லையா…
வெளிச்சம் மகிழ்ச்சியா? இருட்டிலே வழிதேடி நடக்கப்பழகியவனுக்கு தோன்றும் வெளிச்சம் கண்ணை குருடாக்கிவிடுகிறது. மயங்க வைத்து கீழே வீழ்த்துகிறது.
தத்தளிப்பான், தடுமாறுவான், கீழே விழுவான், பின் எழுவான், ஒருபோதும் வீழ்ந்தே இருக்க மாட்டான் அவன்.
நாய்போல அலைந்து திரியும், எதற்கென ஏன் என அறியாத புரியாத அலைச்சல் உருவாகிறது. இவை அனைத்தும் நானே உருவாக்கிக் கொண்டதுதான்.
ஒவ்வொன்றும் எதிரான ஒன்றாகவே பெரும் நிராசையான சூழல்களின் சங்கமமாக தொடருகிறது.
27
ஆட்டநாயகன் யார்?
-கைத்தடி
திராவிட ஒளியின் பேச்சைக்கேட்காமல் இருந்திருக்கலாம். விஷம் நச்சாய் உடலில் ஏறி விடுகிறது. வேறு எதுவும் தேவையில்லை.
‘’ நம்மு லைப்ரரி எப்படி கரக்டா தெறக்கறாங்களாப்பா?’’ என்றேன்.
‘’ அதெல்லாம் கெடக்குது. அங்க ஒரு ஐட்டம் வருது நமக்கு கரக்ட் ஆயிருமாட்ட தெரியுது. உருண்டு தெரண்டு அப்பப்பா.. செம ஐட்டங்க அது ’’ என்று நாக்கை சப்புகொட்டினான்.
கையெழுத்து போடும்போது அவனின் குரல் காதில் கேட்க, அவர் முகத்தைப்பார்த்தேன். போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
‘’ நீங்க ரம்யாவோட அண்ணனா?..’’
நான் புரியாமல் டிரேட்மார்க் முழியைப் பயன்படுத்த,
‘’ அதாங்க பன்னன்டாவது படிக்குதுல்ல தெரியாதா? ’’ என கேள்வியாய் கேட்க,
‘’ அண்ணனோட பொண்ணுங்க, அண்ணன் முறைதாங்க ஆவுது ‘’ என ஒரு வழியாய் பேச்சை முடித்து, இதழ்களைப் பார்த்தேன். அவர் இசையினைத் தொடர்ந்தார்.
முகம் நல்ல விலாசமாக இருந்தது. அவர் முகத்தைப் பார்த்தால் அவ்வளவு சுறுசுறுப்பானவராக தெரியவில்லை என்றாலும் சுதாரிப்பானவராக தெரிந்தது. பேசுவதில் பெரு விருப்பம் கொண்டவராக இருந்தார். எனக்குத்தான் தயக்கமாக இருந்தது. எனக்கு பெரும் குழப்பமாக இருந்தது இவரைத்தான் கூறினானா? அவரைப் பார்த்தால் அப்படி எதையும் கூறவே முடியாது. திராவிடத்துக்கு கர்வ்தான் முக்கியம். அது உண்மைதான். ஆனால் இவர்களா என்று தயக்கம் இருந்துகொண்டிருந்தது. நான் ஆட்டநாயகனாக இருக்க விரும்பவில்லை. அமெரிக்க மாப்பிள்ளை போன்ற கேமியோ ரோல்தான் பாஸ் நம்மோட இடம். திராவிட ஒளி போன்ற களப்போராளிகள் மட்டும்தான் ஏதாவது செய்யமுடியும்.
28
உறைந்துபோன புன்னகை
-ஜோஸபின் பிராஸனன்
மனம் கனத்து பெருவெளியில் அலைகிறது. எதன்பொருட்டோ சிந்திக்க குடலில் அலைவுற்று சீறும் அமிலங்களின் பாய்ச்சலை உணர்கிறேன். தொடர்ந்து அலைவுறுவதிலே காலம் கடக்கிறதோ என்னவோ?
எளிதில் நகர்த்தக்கூடிய காயாக இருக்கிறேன். யாரும் எளிதில் பயன்படுத்திக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் அடிமையாக இருக்கிறேன் என்று தோன்றுகிறது. எதன் பொருட்டும் அமைதியாகாது தொண்டைத்திமில் துடித்துக்கொண்டே இருக்கிறது.
சேற்றில் மறைவாய் புதைந்திருக்கும் முள் போல குத்தியது தெரியாமல் சீழ் கோர்த்து துடிக்கவைக்கும் தன்மையினை வார்த்தைகளில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். கடுக்கிறது. சீழ் வழிகிறது. வெட்டி எறிகிறேன்.
கிழிந்து கொட்டி வழியும் குருதியை நெற்றித்திலகமாக வழித்து தின்று வாழ எத்தனை மனங்கள் கரங்கள் சடுதியில் நீண்டு மறைகின்றன.
உறைந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவனின் சிறு கோமணத்துண்டும் அன்பின் பெயரால் உருவப்படுகிறது. அன்பும் சுரண்டலுக்கான கருவியோ!!!
அமில கொதிப்பில் நுரைத்து கறுப்பாக மாறி வெளியே துளித்துளியாக வழிகிறது குருதி. மல நாற்றம் சொற்களைப்போலவே.
கண்கள் அன்பை பொழிகிறேன் என்றாலும், உதடுகள் கடும் சாபங்களை விடுவிக்கிறது. பெரும் அயர்வு சூழ நிலம் குழியாய் என்னை இழுத்து தன்னில் பிணைக்கிறது.
வரிசையாக அடுக்கப்பட்ட பொருள் சிறிது நேரமென்றாலும் பயத்தையே தருகிறது என்ற மெய்யருளின் கவிதை போலவே பல பயங்கள் உருவாகி மனமெங்கும் நிறைகிறது. எதிரே வரும் வாகனங்களின் எண்களை தொடர்ந்து மனதில் குறித்துக்கொள்கிறேன். இவை அனிச்சை செயல்போல நிகழ்ந்துமுடிகிறது.
குரூர வெப்பத்தில் என் இதயம் வழுவி மீட்க போராடி களைத்து துவள்கிறது. ஒலியினால் அசைக்கப்படாத மனதை அடைய மதுப்புட்டிகள், ஆணுறைகள் நிரம்பிய குன்று நம்பிக்கை கூறியது. இடதுகாலை தொடையில் வைத்து வலதுகாலை நிலத்தில் பதிக்க மெல்ல விரைக்கத்தொடங்கியது குறி.
29
திருடன் எப்படி இருப்பான்?
‘’ ஏம்மா அங்கங்க திருட்டு, கொள்ள, கழுத்த அறுத்துப்புட்டு ஓடீரானுவ நீ இப்படி தங்கத்த போட்டுட்டு அதுவும் தனியா உக்காந்திருக்கறயே ‘’ ஆர்.பி கவுண்டர் தன் பொதுநலனை வார்த்தையில் அடுக்கிவைக்க,
‘’ கவரிங்க போட்டா ஏதோ ஒத்துக்காம கழுத்து பூரா புண்ணு எந்திரிக்குதுங்க என்ன பண்றது?’’ என குண்டு நூலகர் கூறினார்.
‘’ இப்பிடி போட்டுக்கிட்டிருந்தா பிரச்சன ஒனக்குத்தான்னு சொல்றன் ‘’ என்றவரிடம் ‘’ ஆமாங்க யாரு இந்தப்பய நா பாத்ததே இல்லயே? ‘’ என்று நூலகப்பெண் கைநீட்டினார் என்னிடம்.
ஆர்.பி கவுண்டர் என்னை அப்போதுதான் பார்த்திருப்பார் போல. ‘’ அட என்னப்பா நீயா, நா பாக்கவே இல்ல பாரு. என்ன லீவுக்கு வந்தியா? என்றவர் அந்தப்பெண்ணிடம் திரும்பி, ‘’ அட ஏம்மா இந்தப்பயனப் பாத்துத்தே சந்தேகப்படறயா இது நல்லாவா இருக்குது. இவங்கப்பாகிட்டதே நா பாஞ்சு வருஷமா டேக்டரு ஓட்டறன். பய கலகலன்னு பேசறவனில்ல. ஆனா நல்ல பயந்தே பாத்துக்கோ. பயப்படாதே என்று தைரியம் கூற அப்பெண் சிறிது சமாதானம் கொண்டு பாடல்கேட்கத்தொடங்கினார்.
இந்த சந்தேகம் தோன்ற அணிந்திருக்கும் கொடும் ரத்தம் உறிஞ்சி செய்யப்பட்டிருக்கும் தங்கமும் ஒரு காரணம். மனதில் தங்கம் ஆபரணமாக உடலில் அணிந்திருக்கும் தருணம் தோன்றும் எண்ணங்களை எண்ணவே முடியாது. கணக்கில்லாது சுரக்கும் இந்த சுரப்புகளை கட்டுப்படுத்தமுடியாது போகும் நிலை எதற்கு என்று பயணத்தை, என்னை சுதந்திரமாக வைத்துக்கொள்ள நான் என் உடலில் அர்ணாக்கயிறுதாண்டி வேறு எந்த உலோகத்தையும் அணிவதை தவிர்த்துவிட்டேன்.
மற்றவரின் மனதில் தோன்றும் எண்ணங்களைக் குறித்து மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். முதலில் சிறு அதிர்ச்சியாக இருந்தாலும் நேரடியாக அவர் பேசிய விதம் மகிழ்ச்சியாகவே இருந்தது.
இனியும் பல அனுபவங்கள் எனக்கு கிடைக்கப்போகின்றன என்று நம்புகிறேன். பல என்னால் பின்னால் நினைத்துப்பார்க்க அஞ்சும்படியும் இருக்கலாம். என்னை இவை குறிப்பிட்ட இடம் நோக்கி நகர்த்தும் என்று நம்புகிறேன்.
எதுபற்றியும் முழுக்க நினைக்கத்தான் முடிகிறதே ஒழிய செய்ய முடியவில்லை. தொடர்ந்து நகர்ந்துகொண்டேயிருக்கும் பொருள் போல போகும் இடம் இருள் நிரம்பியதும், கூடவே பன்றிகள், நாய்கள் துணையுடன் நடப்பதுபோல நீண்ட கனவுகளின் இரைச்சல் குறையாது பயணிக்கிறேன்.
30
நான்காம் காட்சி தி குட் தி பேட் தி அக்லி
இதில் மூன்றுபேரின் குணங்கள் பற்றி முதலிலேயே கூறிவிடுவதால் யார் இவர்கள் என்பது பற்றிய சந்தேகம் படம் முழுக்க வருவதேயில்லை.
ஒரு நகரத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவனைப் பிடித்து செரிஃபிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான சன்மானத்தொகையைப் பெற்றுக்கொண்டு, பின் அவனை தூக்கிலிடும்போது, அதிலிருந்து காப்பாற்றி அவனிடமும் பணம் வாங்கி வாழ்வது பிளாண்டியின்(கிழக்கு கட்ட) பாணி.
யாரை கொல்லக்கூறுகிறார்களோ அவர்களிடம் உன்னைக் கொல்லப்போகிறேன் என்று பயமுறுத்தி பணம் வாங்கிக்கொண்டு அவனைக்கொன்றுவிட்டு தனக்கு இந்த வேலையைக் கொடுத்தவனையும் கொன்றுவிட்டு மொத்தபணத்தையும் எடுத்துக்கொள்ளும் பாணி பேட் என்பவனுடையது.
கொலை, கொள்ளை என எதில் ஈடுபட்டாலும் அதில் தனக்கான பெரும் சுயநலம் கொண்டுள்ள பேராசைக்காரன்தான் அக்லி டியூகோ என்பவனுடையது.
கிழக்கு கட்டயின் நடிப்பு என்பது முழுக்க காட்சிகள்தான். மெல்ல சுருட்டை இடதும் வலமாக நகர்த்து புகைப்பிடிப்பது என அசத்தல் மேனரிசம் அண்ணனுக்கு.
படத்தின் அதிகபட்ச வசனங்களை அக்லிக்கே ஒதுக்கிவைத்துவிட்டார்கள். பேசித்தள்ளுகிறார் மனிதன். தன் தம்பியை கடுமையாகப்பேசுவது, கிழக்கு கட்டயிடம் தம்பி பற்றி பெருமை பேசுவது, புதையலைத்தேடி அலைவது, பழிவாங்க அலைவது என பிரமாதமான உடல்மொழியால் படம் முழுக்க சாதிப்பதும் அக்லிதான்.
31
பூந்தி இல்லாத லட்டு சாப்பிடுங்களேன்!
-திலீப் தடெகம்பே
மாவட்ட தலைமை தபால் அலுவலகத்திற்கு வேலைக்கான நேர்முகத்தேர்விற்காக சென்றேன். பின் வெகுநேரம் காத்திருந்து ஒன்றரை மணிக்கு காளைமாடு சிலை அருகில் நின்று பேருந்து பிடித்து வந்துவிட்டேன்.
அப்போது நீ கலந்துகொண்ட நேர்காணல் என்னாச்சுப்பா என்கிறீர்களா? அரசின் தாமதத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரே ஓட்டம். வந்தே விட்டேன். குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். அதற்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள் என்றால் எவ்வளவு எளிதாக வேலை முடியும். அதெல்லாம் சரி. வருமானம் எப்படி தபால் துறை பெறுவது? குறைந்தபட்சம் முதல் அதிக பட்சம் வரை மதிப்பெண் எடுத்த அனைத்து முட்டாள்களையும், அறிவாளிகளையும் ஒன்றாக விண்ணப்பிக்கச்செய்து ரிஜிஸ்டர் போஸ்டில் அனுப்பச் செய்தால் வருமானம் கொழிக்காது. ஸ்டாம்புகளை விற்க என்ன ஒரு ஐடியா சார்ஜி!
அறையில் பெண்கள் எழுபதுபேருக்கு மேல் இருப்பார்கள். காலை பத்து மணிக்கு கட்டாயம் தொடங்கத்தான் வேண்டுமா என்பது போல பணியாளர்கள் உள்ளே வந்தனர். பெண்கள் தங்களோடு அப்பா, அம்மா, அம்மம்மா என பெருங்கூட்டத்தை யாருக்கெல்லாம் பாடலை அர்ப்பணிக்கிறேன் என்று எப்.எம்மில் கூறுவார்களோ அவர்களை யெல்லாம் அழைத்திருந்தார்கள். கதிரைகள் அங்கு போதவில்லை.
கதிரைகளை தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்துபோட்டு உட்கார்ந்திருப்பதுபோன்ற நினைப்பில் அடுத்து பழரசம் கொடுப்பார்களோ என்ற கனவில் உட்கார்ந்திருந்தார்கள் பெற்றவர்கள். எழச்சொல்லியும் யாரும் எழவேயில்லை. முகத்தை வேறுபக்கத்தில் வைத்துக்கொண்டு கவனிக்காதது போலிருந்தார்கள்.
என்னை அழைக்கும்போது மணி பனிரெண்டேகால் ஆகிவிட்டது. கூப்பிட்டால் உடனே உள்ளே போகமுடியுமா என்ன? அடுத்து ஒரு கதிரையில் அமரக்கூறினார்கள்.
பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ தனது தோழிக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏதோ விவாதம் போல பேசிக்கொண்டிருந்தார்கள்
அமர வைக்கப்பட்ட எனக்குப்பின் பலரும் உள்ளே போய்விட்டு வந்துவிட்டார்கள். சரி, வேலை கிடைக்காவிட்டாலும் உள்ளே போய் ஒருதடவை பார்த்துவிட்டாச்சும் வந்துவிடலாமே என்று ஒரு நப்பாசை.
பியூனிடம் போய் ‘’ ஏனுங்க ‘’ என்றேன். மக்களுக்கு எப்படி முட்டாள் அரசு அலுவலர்கள் எதிரியாகிறார்கள் என்பதை கடைக்கோடி அலுவலனின் குணம், பழக்கத்திலிருந்து கண்டறியலாம். எதிர்பார்த்த அலட்சிய பாவனை வழிய, ‘’ என்ன கூப்புட்டனா? ‘’ என்றார்.
‘’ இல்லைங்க நேரமாயிருச்சு எப்ப உள்ள வுடுவீங்க ‘’ என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணிவாய் கேட்டேன்.
‘’ பேரு வரிசயில வரும் போயி உக்காரு போ ‘’ எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இதனைக் கூறினார். முந்நூற்றுப்பத்து, முந்நூற்றுஅம்பது என எடுத்தவனைக் கூப்பிட்டு, அவன் கண்முன்னால் நானூற்று தொண்ணூற்று ஒன்பது எடுத்தவனை தேர்வு செய்வது என்ன நியாயம்? அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டும் என்றால் நாங்கள் எதற்கய்யா விண்ணப்பிக்கிறோம். அலுவலர் பெயர் கண்ணன் அல்லவா. பெண்களிடம் காட்டும் லீலைகளை நம்மிடமும் காட்டுகிறார். கிளம்பி வரும்வரை என்பெயர் அழைக்கப்படவேயில்லை. தன்மகள் பிறந்த நாளிற்காக ஊழியர் ஒருவர் லட்டு, ஜிலேபி, மிக்சர் என எடுத்துக்கொண்டு நம்பிக்கை கண்ணணின் அருளாசி பெற என் முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்தார்.
மிகக்கடுமையான வேலையை செய்வது போல் கம்ப்யூட்டரில் எதையோ கொட்டாவி விட்டு பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இப்போது மிகவும் வேகமாக மிக்சரை, லட்டை, ஜிலேபியை வாயில் வேகமாக தள்ள குறைந்த பட்ச ஊதியம் கூட வேண்டாமென்று செயலூக்கத்தோடு முயன்றுகொண்டிருந்தார்கள். காண்பதற்கரிய காட்சிகளைக் கண்டதால் அன்று எனக்கு வயிறு பசிக்கவேயில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
32
கையைக் கழுவுங்க ஐயா!
வீட்டிற்கு வந்ததும் தபால் அலுவலக காகிதங்களை, காகிதங்களை தீயிட்டு அழித்தேன். அப்போதுதான் இதயத்தின் மீதிருந்த பெரும் பாரம் விலகியது.
பணம் கொடுத்தால்தான் வேலை என்றால் சொல்லித் தொலையவேண்டியதுதானே ங்#*-@$%&(-…$##*-@$%&… நான் ஏன் தேவையில்லாமல் அலையவேண்டும்? நம்பிக்கை கண்ணன் நெஞ்சுக்கு நீதியா இது? நீங்க பார்க்கிற வேடிக்கைக்கு நாங்கள் சோளப்பொரியா என்ன?
நம்பி கட்டும் ஏதோ ஒரு முறுக்குகம்பி நிறுவனத்தில் வேலை செய்யும் யுனேஷ்குமார் என்பவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் வளாகத்தேர்வு மூலம் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாயிரம் சம்பாதிக்கிற இவர் அரசு வேலைதான் சொகுசாக வாழ ஒரே வழி என பல்வேறு புள்ளிவிவரங்களை கூறி தேற்றத்தின் நிரூபணத்தையும் மிஞ்சி பேசினார். காதடைத்துப்போனது அன்றுதான்.
பகுதி இரண்டு
கதைகள் கதைகள் கதைகள் கதைகள்
திறப்பில் உட்புகும் காற்று
ஸமீராசித்திக்
ஏறத்தாழ மணி 9.15ஐத் தாண்டியிருந்தது.தாராபுரம் கிளம்புவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்த பொழுதில் அம்மாவின் உடல்நிலை அவனுக்கு பயமேற்படுத்திக்கொண்டிருந்தது. பதினைந்து நாட்கள் தேங்காய்வெட்டு உடலை மட்டுமல்லாமல் மனதையும் ஒருசேர கரைத்திருந்தது.
அம்மா எப்போதும் இதுதான் நேரம் என்று எதுவும் நினைத்து கிளம்பியதில்லை.நிதானமும் நேர்த்தியும் கலைந்து அவன் கண்டதேயில்லை.
பேருந்திற்கான நேரம் ஆக ஆக பதட்டம் சாரைப்பாம்பின் தப்பித்தல் வேகமாக
அவனுடலில் ஏறிக்கொண்டிருந்தது.
‘’அம்மா கொஞ்சோ சீக்கரந்தா வாங்களே எனக்கு பஸ்ஸூக்கு நேரமாவுதல்லோ’’
அவன்முகத்தை வெறித்து ஒரு நொடி பார்த்தவள்,
‘’ நா இங்க காச்சலோட கெடக்கற என்ன ஏதுன்னு கேட்கறக்கு எனக்கு நாதியில்ல ? உங்களுக்கெல்லாம் நெஞ்சுல ஈரமிருக்குதாடா? ’’
அம்மா திட்டத்தொடங்கினால் அவ்வளவு லேசாக விட்டுவிடமாட்டாள். ஆத்தாவுக்கும் ,அவளுக்கும் சண்டை வந்துவிட்டால் பதினாறு வயதில் தொடங்கிய கல்யாணத்திலிருந்து அனைத்தும் தொடங்கும்.
‘’ இந்த மூளி முண்டைக்கும் பீயி வழிச்ச. சண்டாளனுக்கும் சேத்து வழிச்சு நா கண்டதென்ன? இன்னைக்கு எல்லாத்துக்கு கணக்கு போட்டா மாசம் பத்தாயிரம் வராது! நாற முண்ட அத்தன வார்த்த பேசறா! ஒரு வார்த்த கேட்கோணுமே சண்டாளக் கொறவனுவ! அவம் பய நீ எப்படி இருப்பே நாயி! ’’
அவன் மெல்லத்திரும்பி ஆத்தாவைப் பார்த்தான்.கேட்டும் கேட்காதது போல் முகத்தை சுளித்துக்கொண்டு கடும் வசவுகளை முணு முணுத்துக்கொண்டு அடுப்பை பற்றவைத்துக் கொண்டிருந்தாள்.அம்மா வீட்டைப் பூட்டத்தொடங்க அவன் ஸ்கூட்டரை கொட்டத்திலிருந்து வெளியே உருட்டிக் கொண்டுவந்தான்.
‘’அம்மா கெளம்பற நேரத்துல வண்டிய நிறுத்து ஒண்ணுக்கு போறன்னா நிறுத்தமாட்டனாமா சொல்லீட்டன்’’
அம்மா செருப்பைக்காலில் போட்டுக்கொண்டே’’போவுல சாமி, அவசரமுன்னு போறதுதா. நீ என்ன புரட்டாம்பாளையத்து வரயிலு கொணாந்து வுட்டீன்னா போதும்.’’ என்று சொல்லிவிட்டு அவனுடைய முகம் பார்த்தாள்.அவளின் உடல்நிலை கர்ப்பத்தடை அறுவை சிகிச்சையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டேயிருந்தது.
நாற்பத்தைந்து வயது வார்த்தையில் சொன்னாலும் உடல் இன்னும் பதினைந்தை கூட்டிச்சொன்னது. சிறிது தொலைவு நடந்தாலும் வீங்கிக்கொண்டு வதைக்கும் கால்களின் நீர் சுரப்பை ஒவ்வொரு அடி நகரும் போதும் முகம் சுருங்கிதளர்வதை கண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.
ஸ்கூட்டரில் கிளம்பி மாட்டாஸ்பத்திரி வர, காட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். கல்வெட்டுப்பாளைய இட்டேரித் தடத்தில் மலம் கழிக்கச்செல்லும் பெண்கள் ஆட்களினால் உட்காருவதும் எழுவதுமாக இருந்தார்கள்.
மாடு,கன்றுகளை பிடித்துக்கொண்டு வரும் குடியானவர்கள் மருத்துவரின் வருகைக்காக ஆஸ்பத்திரி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆஸ்பத்திரியினுள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக சாலையில் இறக்கப்பட்டிருந்த மணலில் பழுப்பும், கருப்புநிறமும் கலந்த இரண்டு நாய்கள் விளையாடிக் கொண்டிருந்தன.அருகிலிருந்த சுப்பையகவுண்டர் தொண்டுப்பட்டியில் அவரின் பேரன் செம்மந்தழையை டிவிஎஸ் எக்ஸலில் வைத்துக் கொண்டிருந்தார். பசுக்களில் வாலிலிருந்த புண்ணை கொத்திவிட்டு, இரு காக்கைகள் பறந்து கூரை மேலே அமர்ந்தன.
சாலையின் இருபுறமும் பசுக்களின் சாணி கொட்டப்பட்டிருக்க இடமே சிறிது சூடேறியது போலிருந்தது.
புரட்டாம்பாளையம் நிறுத்தத்தில் நான்கு பேர்தான் நின்றிருந்தார்கள். காலைவேளை பரபரப்பில் குழந்தைகளை பிடிக்கும் மஞ்சள் நிற வேன்கள் மிக வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. மாரியம்மன் கோயிலருகே வண்டியை நிறுத்தும் நேரம் ஆனந்த பேருந்து அதிஆனந்தமாக வந்து நின்றது. அம்மா வேகமாக வண்டியை விட்டிறங்கி சாலையை கடக்க முற்படுகையில் மஞ்சள் வேன்களின் வேகத்தைக்கண்டு அயர்ந்து நின்றுவிட்டாள். பேருந்து குத்தாட்ட பாடலுடன் கிளம்பிச்சென்றது.
‘’பாரு பஸ்ஸூ போயிருச்சு. எல்லாமே உங்க எழவு எடுத்துத்தே! இனி எப்ப பஸ்ஸூ கெடச்சு நா போயி….’’ என்று அம்மா வசைக்கத்தொடங்கினாள்.
வாகனங்களின் சக்கரங்களின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன்
‘’ஆஸ்பத்திரி வரயில நானே கொண்டாந்து வுடறன்.புலம்பாதீங்க என்றான்.
காற்று
சாலையில் கலந்து வேகமாக செல்ல காற்று வேகமாக முகத்தில் பனித்துளியின் ஜில்லிப்போடு அடித்தது.ஸ்கூட்டரில் அம்மாவின் இடுப்பைப்பிடித்திருந்த பள்ளிச்சிறுமி ஒருவள் அவனைக்கடக்கும்போது பார்த்து சிரித்தாள்.ஏனோ பிரியக்காவின் நினைவு உடல்முழுவதும் வழிவதாய் உணர்ந்தான்.நீருக்கும் நுரைக்கும் உள்ளது போல எப்போதும் ஒரு பந்தம் பிரியக்காவுக்கும் அவளது உற்சாகம் ஊற்றெடுக்கும் சிரிப்புக்கும்.
பொன்பரப்பியில் திருமண பத்திரிக்கை கொடுக்கப்போன தருணத்தில் பார்த்தபோது,
‘’வா கார்த்தி வா உக்காரு’’ என்று பிரியக்கா சொன்னபோது வலியை மறைத்துக்கொண்ட சிரிப்பு மட்டுமே அங்கே மிச்சமிருந்தது.கூரையும் பாதி ஓடுமாய் கலந்திருந்த வில்லை வீட்டின் முன்பகுதி பூச்செடிகளால் நிரம்பியிருந்தது. முன் நீண்டிருந்த திண்ணையில் சிறுகுழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அக்காவை தேடவே இரண்டு மணிநேரங்கள் செலவிட்டிருந்தோம்.
‘’சரசு சாயந்தரமாத்தா வருமா? ஏம்பிரியா நீமட்டுந்தா இங்கிருக்கற. குமாரு என்ன வந்துட்டு போயிருவாப்பலயா?’’ என்று அம்மா கேட்டபோது அக்கா தேநீரில் சர்க்கரையை கரைத்து எழும் நுரைக்குமிழிகளை பார்த்தபடி இருந்தாள்.
‘’ அம்மா வர்றக்கு சாயந்தரமாயிரும்.அவரு லீவு நாளுல வந்துட்டு போவாரு.அவருக்கு அங்கதானங்கத்த வேலயிருக்குது ’’ என்றவாறு தேநீரை டம்ளரில் ஊற்றி அம்மாவிடம் நீட்டினாள். அம்மா ஒருகையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஒருகையில் டம்ளரை வைத்து குடித்துக்கொண்டே
’’ ஏம்பிரியா பாப்பா இப்ப வந்துருவாளா? இல்ல நீ போயிதே கூட்டிக்கிட்டு வரோணுமா?’’
‘’ போயி கூட்டிக்கிட்டுத்தா வரோணுங்கத்த. சாயந்தரமாயிருச்சுன்னா அது ஒரு வேலைங்க ’’
என்று பீரோவில் ஏதோ தேடத் தொடங்கினாள்.கையில் பெரிய ஆல்பம் போல் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு
’’ ஏங்கத்த கார்த்தி நல்லா வளத்தியாயிட்டே குமாரவடவே ’’ என்று தோளைப்பற்றினாள்.மெல்ல கையை இழுத்துதன் கையில் வைத்தான்.இளஞ்சூட்டின் வெம்மையை உணர்ந்தவன் அந்தக்கரத்தின் நோய்மையையும் உணர்ந்தான்.கண்களின் கீழ் உள்ளொடுங்கிப்போன முகம் உயிர்ப்பின் ஈரத்தை சிறிதாக இழந்துவருகிறதாகவே தோன்றியது.காற்றடித்தால் கம்பியில் போட்டிருக்கும் துணியின் பதட்ட அலைகழிப்பு அக்காவின் உடலுக்கும் உ.டைக்கும் பொருந்தியே வந்தது.
அம்மாவிடம் இருந்த கல்யாண ஆல்பத்தை பார்த்தான்.அவனைப் பார்த்த பிரியக்கா
‘’கார்த்தி நீ எங்க கல்யாணத்துக்கு வந்தயா இல்லயா? சுந்தரம் வந்திருப்பானில்ல எப்படி இருப்பாம் பாரு! அத்த சுந்தருக்கு சத கீது புடிச்சிருக்குதா’’ எல்லாருமே திருமணத்திற்கு முன்னிருந்த காலத்தைத்தான் விரும்புகிறார்களோ என்னவோ. இதைப்பற்றிப் பேசும் போதுமட்டுந்தான் அக்காவின் முகம் ஒளிருவது போலிருந்தது.
சுந்தர் நீளமான முதல் பட்டன் திறந்த சட்டையும் நீலநிற ஜீன்ஸ்பேண்டுமாக கலைந்த தலையும் சோகையான கண்களுமாய் அலுப்பாய் தெரிந்தான்.
‘’ எங்க நானும் பாக்கறன் ‘’ என்று அம்மா கைநீட்ட ஆல்பத்தைக் கொடுத்துவிட்டு பிரியக்காவைப் பார்த்தான். மிக்சர் தட்டுகளை அவனிடம் நீட்டிய ஒரு தட்டை வாங்கிக்கொண்டு ‘’அக்கா, உங்கொடம்பு ரொம்ப எளச்ச மாரி இருக்குதுங்கா என்னாச்சுங்கா’’
‘’ ஆமாங் கார்த்தி ஒடம்பு முன்ன மாரி இல்ல சின்னவோ பொறந்ததிலிருந்து என்னமோ திடீருனு சக்கர கொறஞ்சிருச்சின்னாங்க அது மறுக்கா சரியே ஆவுல. இப்போ காலயில அப்பறம் சாயந்தரமுன்னு ரெண்டு தடவ ஊசிபோட்டுக்கிட்டு இருக்கறன் ’’
சிறுவயதில் பார்த்த பிரியக்காவின் சிரித்தமுகமும், இப்போதைய வலி பொறுத்துக்கொள்ளும் முகமும் மீனின் வயிற்றில் கட்டிய கல்போல நினைவுகளை உள்ளழுத்திச்சென்றது.
2
லாரியின் அதிக பாரத்தினால் தாரில் டயர்கள் பலவாறாக குழம்பி சாலை இறங்கிப்போய்த்தெரிந்தது. அடர்சிவப்பு உடையணிந்த பெண்கள் இருமருங்கிலும் செல்ல, பள்ளி வாகனங்கள், மணல் லாரிகள் என சாலை கடும் புழுக்கத்திற்கு உள்ளாகியிருந்தது. திராவிட, பொதுவுடைமைக் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இற்றுப்போனாலும் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. டாஸ்மாக் திறக்க பலரும் வாசலில் அமர்ந்திருந்த கூட்டத்தை விட கவுண்டர் மெஸ்ஸில் கொஞ்சம் குறைவுதான். கைகாட்டியில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் நீர் முதியவளின் சருமமாய் சுருங்கியிருந்தது.
‘’டேய் பாத்து ஓட்டு. ரோட்டுல குறுக்க வராம் பாரு, ஆரன அடுச்சுப்போ’’.அம்மா கத்த வேகத்தைக் குறைத்தவன் மெதுவாக சந்தைக்கடை மேட்டில் ஏறினான்.சக்தி மாமாவின் கடை திறக்கப்பட்டிருந்தது. ஆனால் கடையில் யாருமில்லை.
‘’ மாமன காணாமே! என்னம்மா பண்றீங்க? எறங்கிகறீங்களா? இல்ல ஆஸ்பத்திரி வரயிலுமே கொணாந்து வுடுட்டுமா? ’’
‘’ அய்யோ என்னாலல்லா அவ்வளவு தூரம் நடக்க முடியாது. நீ கொணாந்து வுட்டுறு ’’ என்று பதறியபடி வண்டியில் ஏறினாள்.மூங்கில் கடை தாண்டி அறச்சலூர் ரோட்டில் பால்காரர் வீட்டுக்கருகே சக்திவேல் மாமா நின்றிருந்தார். வண்டியை அவரருகே கொண்டுபோய் நிறுத்தினேன். செஞ்சாந்து நிறச்சட்டையும், கருப்புநிற பேண்ட்டும் தளர்வாய் அணிந்திருந்தார். எங்களைப்பார்த்ததும் நெற்றியைச்சுருக்கி விரித்தார். சக்திவேல் மாமாதான் அவனுக்கு இருந்த மூன்று தாய் மாமாக்களிலே மிகவும் ஒல்லியானவர்.
‘’ஏக்கா ஏதாவது சோலியா வந்தயா?’’
‘’ ஒடம்புதாஞ் சத்தி பாடாப்படுத்துது.காச்சலு ரண்டு நாளா. ஊசிபோட்டுக்கலாமுன்னு வந்தன் ’’
‘’ செரி நீ ஆஸ்பத்திரிக்கு போயி இருக்கறயா நா வூட்டுக்குப்போய் வண்டிய எடுத்துக்கிட்டு வந்தர்றன் ’’ என்றபடி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அவன் வண்டியை மெதுவாக ஓட்டவேண்டியிருந்தது, எதிரே வந்த காலனிக்காரரின் கருமாதிக் கொண்டாட்டம் காரணமாக. பரபிரம்ம பொருளை அறிந்துகொண்ட இறந்துபோனவரின் புன்னகை ப்ளக்ஸ் பேனரில் ஊரே கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னிமலை போகும் சி10 மருத்துவமனை வளைவில் திரும்பிக்கொண்டிருந்தது. இடதுபுறமிருந்த பழனி மெஸ்ஸில் கூலி ஆட்கள் குழுவாக நின்றிருந்தனர். பெரிய ஆலமரத்தின் ஒரமாக வண்டியை நிறுத்தியவன் ‘’ அம்மா ஆஸ்பத்திரி வந்தாச்சு. எறங்கிக்கங்க நா கெளம்பட்டுமா? ’’
‘’ ஏண்டா ஒனக்கெல்லாம் நா ராப்பகலா முழிச்சு நோவு பாத்துக்கிட்டனேடா. இப்போ வேல முடிஞ்சுப்போச்சுனா ச்சீயினு போயரனாடா நா ஒங்களுக்கு ’’ அம்மாவின் கண்களில் கண்ணீர் மினுமினுத்தது. அவனுக்கும் எச்சில் கீழிறங்க மறுத்து நாக்கு எழும்ப மறுத்தது.
‘’ எங்கூடத்தான இருக்கச்சொல்றன். எல்லார்த்துக்குமே அவங்கவங்க வேல முக்கியமாயிருச்சு … அப்படித்தாண்டா ’’
‘’ அம்மா நா ஒங்கள கொணாந்து ஆஸ்பத்திரியில் உட்டுட்டன். இதோட என்ன வுட்டுருங்களேன். ’’என சொல்ல சொல்ல நாக்கு குழறியது அவனுக்கு.
‘’ செரி நா ஒண்ணு கேக்கறன். நோயி வந்தா மட்டும் என்னோட அண்ணந்தம்பிகிட்ட தாட்டிவுடறீங்களே! அவனுக்கு ஒண்ணு வந்து பக்கத்திலிருந்து நா பாத்ததில்ல.வெட்கமா இருக்குது எனக்கு, நம்மூட்டு சனத்த நெனச்சா…… ச்சீ சண்டாளப் பாவிகளா……..’’ என்றபடி புறநோயாளிகளுக்கான சீட்டு வாங்கும் இடத்தை நோக்கிப் போனாள்.
மருத்துவமனையில் பிறந்த குழந்தையைக் கூட்டிப்போக காரில் வந்த உறவினர்கூட்டத்தைப் பார்த்தான். மகிழ்ச்சியும் பிரியமுமாய் சிறு கூட்டம் சத்தமாய் பேசியபடி அனைவரையும் கவனிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். உள்நோயாளிகளின் பிரிவில் கூட்டமாயிருந்தது. நான்கு ஆலமரங்களினடியிலும் சிமெண்ட் திட்டு வளைவாய் அமைத்திருந்தார்கள். விழுதுகளில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளுக்காக மணல் பரப்பப்பட்டு ஏற்ற இறக்க பலகையில் சிறுவனும் அவன் தங்கையும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.சுருக்கென மணிக்கட்டில் சுளக்கை கடித்த கடியில் கை கடுத்து நடுங்கியது அவனுக்கு.கை உதறி நிமிர்ந்தபோது சக்தி மாமா வண்டியில் வந்து இறங்கினார்.
‘’ அப்பறண்டா குட்டி,அக்கரக்காரரு கீது பேசுனாங்களா? ’’
“ என்னத்தைங் மாமா சொல்றது,விசேஷத்துக்கு போனா வார்த்தய பேசிட்டு,வூட்டுக்கு வந்து சமாதானம் பேசறாங்க,என்ன மனுசங்களோங்க மாமா ’’
‘’ இல்ல குட்டி அதெல்லாம் செரியாப்போயிரும் ஏதோ கோவத்துல பேசியிருப்பாங்க வுடு ’’ என்று மாமா சொன்னபோதும் அவன் எதையும் மறக்கவுமில்லை. நடந்தவை ஆறவுமில்லை.
திறப்பு
அவன் அண்ணனுக்கு திருமணம் செய்வதிலிருந்துதான் எல்லாம் தொடங்கியது. ஜாதகம் இல்லையென்றும் பூ போட்டு பார்த்து பொருத்தம் சரியாகயிருக்கிறது என்றார்கள் அக்கரைபெண்வீட்டார்கள். திருமணவரவேற்பின் போதே அவர்களுக்குள் போர் வெடித்தது. முகம் கொடுத்து யாரிடமும் பேசாத சொந்தங்கள்தானா அண்ணனுக்கு! என்று நினைத்தபடி,அண்ணனின் மாமனாரை அழைக்கப்போய் வாசலில் உள்நுழையும் தருணத்தில் புழுத்த நாய் குறுக்கே போகாத வசைகளும்,ஒருவர் வலியில் அலறும் கலவையாய் கேட்டது. மாமனாரைத்தான் அண்ணனின் மச்சினன் விநாயகம் அவர் அலற அலற உதைத்து மிதித்துக் கொண்டிருந்தான். அவன் அவர்களைப்பார்த்ததும் ‘’பத்து நிமிஷத்துல வந்தர்றங்க. நீங்க போங்க’’ என்றார்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த அண்ணனின் சின்ன மாமியார் கூட்டம்.
திருமணத்தின் அடுத்தநாள் தீபாவளி. அண்ணனும்,அண்ணியும் சேர்ந்து மாமனார் வீட்டுக்கு கிளம்பினார்கள். வேலூர் போகும் பேருந்து கே7 ல் கொடுமுடியில் ஏறி நொய்யல் போகும்போது பேருந்து பஞ்சராகிவிட்டது.
‘’கீதா எனக்கென்னமோ இது சரியாப்படுல. கெளம்புன வண்டி திடீருனு இப்புடி நிக்குது. நாம திரும்பி போயிருவமா’’
‘’என்ன மாமா நீயி. இதுக்கு போயி சயனம்பாக்கற. எங்கம்மாதே வூட்டுக்கு வரச்சொல்லுச்சல்ல போனுல.அப்பொறமென்ன,வேற பஸ்ஸூ பாரு மாமா’’
கவுண்டன் காட்டுப்புதூரில் போய் இறங்கியபோது தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டிருந்தன.இடது புறமிருந்த பிள்ளையார் கோயிலின் பூஜையில் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். சாலையின் இருபுறமும் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். சாலையில் கோயிலுக்கு போகும் தம்பதிகளின் முகத்தில் உற்சாகம் பொலிந்திருந்தது. சுந்தரத்திற்கு உள்ளுக்குள் பதற்றம் தன்னிச்சையாய் நிரம்பி நெளிந்தது. சுற்றிலும் கவுண்டர்கள் வீடு அதன் நடுவில் சிறிய ஆஸ்பெட்டாஸ் ஓடு போட்ட வீடுதான் அவன் மாமியார் வீடு. சிறிய ஓலை வேய்ந்த கொட்டடியில் எருமை கரும்புத்தோகையை மென்றபடி நின்றிருந்தது. அண்ணியின் தம்பி விநாயகம் வேலை செய்து கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் வேலைகளை மணல் சிமெண்ட் குவியல்கள் காட்டிக்கொண்டிருந்தன. சூழலே ஏதோ மனித நடமாட்டமே இல்லாத வீடு போல அருகில் இயந்திரச் சத்தங்கள் மட்டுமே கேட்டது.
‘’அம்மா எங்கிருக்கற?’’
‘’வா சாமி! வாங்க மாப்புள’’ என வலிந்த சிரிப்பை உதட்டில் காட்டினாள் மாமியார். வாசலிலிருந்த சேரில் உட்கார்ந்தான்.
‘’அம்மா தம்பி இருக்கறானா காணாம்?’’
‘’உள்ள டீவி பாத்துக்கிட்டிருந்தாம் பாரு கீதா, நைட்டு லேட்டாத்தாம் வந்தானுங்களா படுத்திருப்பானுங்க’’ என்றபடி அவனுக்கு மாமியார் தண்ணியைத்கொடுத்துவிட்டு யோசிப்பது போல் நின்றாள்.
உள்ளே இருந்த அறையில் டிவி இயங்கும் சத்தம் சுந்தரத்திற்கே கேட்டது.எதுவும் பேசாமல் சொம்பை மாமியாரிடம் தந்தான். கீதா உள்ளே போனவள் திரும்பி அவனைப் பார்க்கக்கூட இல்லை. மாமியார் டிவி இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
‘’ அடேய் வெநாயகம் மாப்புள வந்திருக்கறாரு, இங்கதா எல போடோணும் டீவி அப்பறம் பாத்துக்கலாம் கொஞ்சம் எந்திரி ’’
நன்றாக ஆறடிக்கு வளர்ந்திருந்த பல போக்குவரத்து சாதனங்களில் பயணப்பட்டு ரவுடிகளை நொறுக்கும் நாயகனின் சாயலை துப்பறியும் சாம்புவின் மூக்குதான் கெடுத்தது. நன்றாக லுங்கியை மடித்துவிட்டுக்கொண்ட விநாயகம் ‘’ நா எதுக்கு வெளிய போயி உக்கோரோணும்.மாப்புளக்கி சோறு வெளிய வெச்சு போட்டா உள்ள எறங்காதா நம்மு நாயிக்கு அப்புடித்தான போடறோ கேட்கறன் ’’
‘’மொத விசேஷமுடா உங்க அக்காவுக்கு! மாப்பள வேற வந்திருக்கறாரு இப்படி பேசறயேடா மெதுவாக பேசு’’ என்ற மாமியாரின் பேச்சு அறையின் கதவுக்கு வலதுபுறம் உட்கார்ந்திருந்த சுந்தரத்திற்கு நன்றாகவே கேட்டது. கை பதட்டத்தினால் நடுங்கியது.பதட்டத்துடன் சேரிலிருந்து எழுந்தான்.
“” அம்மா என்னாச்சு? தம்பி என்ன வெளியவே காணா! டேய் தம்பி அவரு சாப்புடுட்டு அப்பறமா வந்து டீவி பாரு எவ்வளவு நேரந்தா அவரு சேருலயே உக்கோருவாரு ’’
‘’ இங்க பாருடி ஆந்த மூக்கி! பண்ணாட்டு பண்ற வேலயெல்லாம் நீ போன வூட்டோட நிறுத்திக்க.இது ஏ வூடு! எங்க வச்சு சோறு போடறமோ தின்னுட்டு கெளம்பீரோணும் லொள்ளு பேசறத உம் புருஷனோட வெச்சுக்க ’’
இதைக்கேட்ட சுந்தரத்திற்கு கண்ணீர் வழிந்ததை கட்டுப்படுத்த முடியவில்லை.பார்வை மங்கலாகி எண்ணெயை கண்ணில் ஊற்றியது போல காட்சிகள் வெளுத்தது. மெல்ல தடுமாறி நடக்கத்தொடங்கினான். கீதா தம்பியிடம் தோளைத் தட்டிக்கொடுத்து அம்மாவை பார்த்து மெல்ல சிரித்துவிட்டு, ’’ வா மாமா போயிருவோம். இதுக்கு அப்பறம் என்ன இருக்குது, நாம நம்மூட்டுக்கு போயிரலாம் ” என்று சோகமாக சொன்னபடி தன் அம்மாவை அடுத்தது நீ என சைகை காட்டினாள்.
‘’ போறயாடி முண்டே போ அவனோடவே போயிரு இங்க வந்தறாத. நாங்கல்லாதே உன்ன வளத்தி ஆளாக்குனோ மறந்துட்டு முந்தாநாளு பாத்தவனோட ஒடறா ஓடுகாலி நாயி ‘’
என்று எங்கேயோ கடைக்கு போய்விட்டு வந்த கீதாவின் அக்கா பார்வதி வசைத்தாள். பின் அவள் அம்மாவும் ஏதோ பேசினாள். சுந்தரம் அப்படி தளர்ந்து போய் நடந்தான். கீதா அவளது அம்மாவிடமும், அக்காவிடமும் கட்டைவிரலை மேலேதூக்கி வெற்றிக்குறி காட்டிவிட்டு அவனை பின்னொற்றி நடந்தாள்.
வெளி
அவளை அண்ணனுக்கு முன் புரிந்துகொண்டுவிட்டேன் ஆனால் என்ன சிறிது தாமதமாகிவிட்டது மற்றவர்களுக்கு. அதற்குள் வீட்டின் பொருளாதாரத்தையும், எங்களுக்கிடையே இருந்த பிளவுகளைப்பயன்படுத்தி தன் வீட்டிற்கு இங்கிருந்து பல பொருட்களை, பணத்தை கடத்துவதில் இறங்கிவிட்டாள் அவனது மனைவி.
அதற்கு தடை செய்த எந்த உறவையும் அவள் இரக்கமில்லாது வெட்டியெறிந்தாள். சுந்தரம் தன் மனைவியோடு சென்னை சென்று ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டது. அதற்குள்ளாகவே அவன் பெயரில் எல்ஐசி போடவைத்து, அதற்கு பணம் கட்ட அவளது மாமனாரை வளைத்தாள். பிறகு எவ்வளவு செலவு வைக்கமுடியுமோ அவ்வளவு செலவு செய்யவைக்க புது புது காரணங்கள் கண்டுபிடிப்பாள். ஐந்து பேர் இருக்கும் வீட்டுக்கு ஒரு மிக்சர் பாக்கெட்டை வாங்கும் எனது அப்பா மருமகள் என்று ஏகத்திற்கும் செலவழிக்க, சாப்பிடுவதற்கு சாப்பாடே இல்லை என்று தன் குடும்ப நிலையை ஒப்பாரி வைத்தவள் திருமணமானபின் நல்ல உணவையும் வேண்டாம் நிராகரித்து அம்மா, ஆத்தா என்று வீட்டு மனிதர்களை கடுமையாக வெடுக்கென பேசியபடி தன் உடன்பிறந்தாளுடன் போனிலே தொடர்ந்து பேசியபடியிருந்தாள்.
அம்மாவிற்கு உடலை விட தான் பார்த்து செய்த திருமணத்தினால் ஏ பெரியவன் எதுவும் பேசாமல் இருப்பதுதான் பெரிய நோயாகிவிட்டது என்று அவனுக்கு புரியாமலில்லை. அம்மா சத்தி மாமனுடன் பேசிக்கொண்டிருக்க மருத்துவமனையின் வெளிப்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றான். ஈரோடு செல்லும் பேருந்து வந்து நிற்க பயணிகள் வேகமாக ஏறினார்கள். பெண் குழந்தை சாளரத்தின் வெளியே தன்தலையை நீட்டி அவனுக்கு கைஆட்டியபடி சிரித்தது. இவனும் கையை ஆட்ட பேருந்து மெல்ல நகரத்தொடங்கியது. வானம் மேகங்களற்று இருந்தது பொழுதில் வீசிய காற்று பெரும் ஆசுவாசமாக இருந்தது.
கதை இரண்டு
குறுங்கதை
பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு
ஒரு பயணம்
-ஏகாங்கி
சென்னையில் இருந்த வேலையைவிட்டு வந்து ஒரு வாரமாகியிருந்தது. மனம் முழுவதும் அந்த வேலையின் கசப்பை ஆழமாக இறங்கிட மெல்ல கனமாகிகொண்டிருந்தது. இலக்கியவாதியாக இருந்து பின் சிறந்த வியாபாரியாகி பல தொலைக்காட்சி நேர்காணல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி மேதாவித்தனத்தை செவ்வனே உரக்க தலையாட்டி அறைகூவுபவர் நான் வேலை செய்த இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர்.! நான் வேலைக்கு சேரும் இடங்களிலெல்லாம் இந்த இருவேட நாடகங்களை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
இனி வேறு ஏதாவது வேலை தேடவேண்டும் என்ற நினைத்து மெல்ல இமைகளை திறந்தபோது, வெளிச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது வானில். ஏறுவெயில் மெல்ல தன்பரப்பை சுவற்றில் அதிகரித்தபடி இருந்தது. தென்னந்தோப்பில் காக்கைகள் குரலெழுப்பி ஊருக்கே இவைதான் அலாரமோ என நினைக்க வைத்துக்கொண்டிருந்தன. எழுவதற்கே மிகச் சோம்பலாக இருந்தது. ஈரோட்டில் ஒரு வேலையில் சேர்த்துவிடுவதாக அண்ணன் சொல்லியிருந்தான். ஒரு வீடியோ கடையில்தான் வேலை என்று சிபி அண்ணா சொல்லியிருந்தார். மெல்ல கட்டிலிலிருந்து போர்வை விலக்கி எழுந்தேன். நினைவு முழுவதும் வேலை பற்றியே இருந்தது. ஒவ்வொருவாpடம் என்னைப்பற்றிய விளக்கங்களை சொல்லி அலுப்பாய் இருந்தது. கட்டிலை எடுத்து சுவற்றில் சாய்த்து வைத்தேன். ஆசாரத்தில் போர்வை வைக்க மெதுவாக தூக்க கலக்கத்தோடு நடந்தேன். ஆத்தா எழுந்து பல் விலக்கிக்கொண்டிருந்தது. எச்சிலை துப்பிவிட்டு குற்றம் நடந்தது என்ன? பாணியில் விசாரிக்க ஆரம்பித்தது. பதில்களையெல்லாம் ரெண்டுதடவை சொல்லவேண்டும் அதுக்கு.
“குட்டி எப்படா வேலைக்கு போவோணும்?”
“ஆத்தா இப்பத்தான வந்தன். அதுக்குள்ள எப்ப போவீனு கேக்கற? இப்படி ஓவரா கேள்வி கேட்டதுனாலதான் எங்க அய்யன் உன்னைவிட்டு ஓடிட்டாரு ”
ஆத்தா இதற்கெல்லாம் அசருவதாகவே இல்லை. அடுத்த கேள்வியைப்போட்டது.
“எத்தன்ரூபா சம்பளம் தருவாங்களாம் நீ செய்யற வேலைக்கு”
“ நான் உன்னும் வேலயிலயே சேருல. என்ன வேலயின்னு கூட உன்னும் தெரியில. அதுக்குள்ள சம்பளம் எவ்வளவுன்னு கேட்கற? உனக்கு உன்னமுமே வாய் அடங்கமாட்டேங்குதே காசு வாங்குனதும் கறிவாங்கித் தரோணுமா? ”
“சரிதான் போ உங்கிட்ட கேக்கறன் பாரு நா ஒரு கிறுக்கி! மொட்ட நாடாம் பேரன் வேற எப்படி பேசுவே! ஏழு ஊரு நாயம் கண்டவனோட பேசுவ எங்கூட பேசறக்கு என்ன இருக்கு” என்றவாறு கையில் சின்னக்குடத்துடன் செடிக்கு தண்ணீர் ஊற்ற கிளம்பிவிட்டது.
வெளியே வந்து சீமப்புல் காட்டைப்பார்த்தவாறு பல் விளக்கிக்கொண்டிருந்தபோது கொடுமுடிக்கு அம்மன் மினிபஸ் வேகமாக கடந்து சென்றது. காட்டுவேலைக்கு கரட்டாம்பாளையத்து பெண்கள் ஒருவரோருவரோடு குழுவாக பேசியபடி கடந்து சென்றனர். சீமப்புல் காட்டுக்குள் நாய் ஒன்று வேகமாக ஓடியது. முருகேச கவுண்டர் வரும் புல்லட்டின் ஓசை கேட்டது. உடனே வேகமாக உள்ளே ஓடினேன். ஒருவரின் சிறு விவரம் கூட விடாது அமெரிக்காவின் சிஐஏக்கு அடுத்து விசாரிப்பதில் இவரளவு தேர்ச்சி பெற்றவர்கள் சுற்றுவட்டாரத்தில் யாருமில்லை பாலாமணி சித்தியை தவிர.
பாலாமணி ஏறத்தாழ எங்களது கிராமத்தின் தூதரக அதிகாரியாக செயல்பட்டு வந்ததுடன் அதை எங்களது மனதில் பதிவு செய்வதிலும் வெற்றி பெற்றிருந்தார். வழுவங்காடு வருபவர்களின் அனைத்து விபரங்களும் அவர்களின் வாய்மூலமாகவே கறந்துவிடுவார். அவர் குடத்தோடு கிளம்பினாலே தேங்காய் பொறுக்க கிளம்பிவிட்டார் என்பதை நாங்கள் உணர அதிக காலமாகவில்லை.
அப்பன் கிணத்துமுக்கு அருகில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சைக்கிள் கிரீச்சிட மெதுவாக என்னை கடந்து வீட்டு கொட்டத்திற்கு சென்றார். அப்பன் நான் வந்ததிலிருந்து என்னிடம் இரண்டொரு வார்த்தை பேசுவதோடு நிறுத்திக்கொண்டார். நான் சென்னையிலேயே வேலையில் சேரவேண்டும், அங்கேயே நான் நிரந்தர வாழ வேண்டும் என்பதுதான் அவரின் பிரார்த்தனையாக இருந்தது. நேருக்கு நேராக இருவரும் பார்ப்பதை கூட அண்மையில் தவிர்த்துவந்தோம்.
குளித்துவிட்டு துண்டை தலையில் துவட்டிக்கொண்டு ஆசாரத்திற்கு வந்தேன். அப்பன் ஆசாரத்தில் பேப்பா; படித்துக்கொண்டிருந்தாh;.
லுங்கியை கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தேன். அம்மா சாப்பாடு கொண்டு வந்தாள்.
“அம்மா அந்த பேன போடுமா” என்றேன்.
“உங்களுக்கும் சோறு கொண்டாரதா? ” என்ற கேள்விக்கு அம்மாவை புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தவர் “கொட்டத்தூட்டுக்காரரை போய் பாக்கோணும் சோறு கொண்டா ” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.
“ ஏந்தம்பி மறுபடியும் மெட்ராசுகீது போறயா? ”
“ இல்லைங்பா நா இங்கயே ஏதாவது வேல பாத்துக்கிட்டு இருக்கலாம்னு பாக்கறன் ”
நான் சொன்னதை கேட்டதும் அப்பனின் முகம் சுருங்கிவிட்டது. அடுத்து வந்த வார்த்தைகள் நம்பிக்கையின் சிறு கீற்றுமின்றி ஒலித்தன.
“செரி இங்க நீ படிச்ச படிப்புக்கு வேல இருக்குமா? சம்பளமுமே கம்மியாதான தருவாங்க”
“ பையன் இங்கயே நம்மோட இருக்குட்டுமே ஒடம்பும் அவனுக்கும் ஒத்துக்க மாட்டேங்குது ” என்றது அம்மா இடையில்.
“இங்க இருக்கறவங்களை இவனால சமாளிக்கமுடியுமா? மெட்ராசுலேயே வேல பாத்து செட்டில் ஆயிருவான்னு நெனச்சன். நீ இங்க வேலக்கி போறன்னு சொல்ற”
“அண்ணன் ஒரு வேலக்கி சொல்லிருக்கானுங்பா. அதைப்போய் பாக்கறங்பா எப்படி இருக்குதுன்னு…”
அப்பன் வேகமாக இடைமறித்து
“தம்பி இங்க பாரு நம்முளுது தேங்காவெட்டு ஒரு மாசமாட்ட நடக்கும். ஆளுகளும் இல்ல. நீ வந்தியின்னா சம்பளம் தந்தர்றன். என்னாலயும் இப்பல்லாம் முன்னமாறி வேல செய்யறக்கு முடியறதில்ல. எனக்கும் ஒத்தாசையா இருக்கும்”
நான் எந்த பதிலும் சொல்லாமல் வட்டலை எடுத்துக்கொண்டு கழுவ பைப்புக்கு போனேன். சட்டையையும் ஜீன்ஸையும் மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.
“ அம்மா நா கௌம்பறங்மா ”
“ டேய் இப்ப போற எடத்திலாச்சும் கொஞ்சம் தகிரியமா பேசி சம்பளத்த கரக்டா பேசி சரியா வாங்கு. வாய்க்குள்ளயே மொனவாம சத்தமா பேசு ”
ரோட்டுக்கு வந்தேன். சுப்பைய கவுண்டாpன் பேரன் முன்னால் டிராக்டா; ஓட்டிக்கொண்டு வர சுப்பைய கவுண்டர் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர்கள் வேகமாக கடந்து சென்றதும் கிணற்று முக்கில் மாதாரி ஏசு பாப்பா வந்துகொண்டிருந்தது. நான் கிணற்றினருகே போனதும் யாரென சற்று நின்று பார்த்து முகம் தெளிந்து புன்னகைத்தது.
“ஏசப்பா! அட ஐயா எப்ப வந்தே சாமி? நல்லாருக்கியா?”
“ஸ்தோத்திரம!; ஸ்தோத்திரம!; எப்படியிருக்கீங்க? அல்லேலூயா அழுவாச்சி கூட்டமெல்லாம் ஒழுங்கா நடக்குதா?”
“கிண்டலு பண்றயாய்யா! நீ சொன்னாலுஞ் சொல்லுலினாலும் கர்த்தருனாலதான் உலகமே சுத்துது தெரிஞ்சுக்கோ”
“ ஆடு மேய்ச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கறவர புடிச்சு சிலுவயில அறஞ்சு ரத்தமொழுவ வுட்டுட்டு அதக்குடு இதக்குடுன்னு ஏன் அழுது பொலம்பறீங்க? ”
“ஆண்டவர்தான் சாமி என் தெய்வம். நீயே என் பரமபிதாவை கும்பிடுவ பாரு. செரி நா வாறன் ”
பேசிவிட்டு முக்கு கிணற்றை பார்த்தேன். கிணற்றின் ஒரு பாதி இடிந்து சரிந்து விழுந்திருந்தது. கிணற்று சுவற்றை ஒட்டியிருந்த செம்மண் ஈரமுடன் கள்ளிச்செடியோடு மினுமினுத்தது. கிணற்றின் சுவர்பகுதியை சுற்றி மலம் ஏகமாக விரவி கிடந்தது. மல நாற்றம் காற்றில் ஆதிக்கத்துடன் பரவி மூக்கில் ஏறி குமட்டியது. அந்த இடத்தை கடக்கும் எண்ணத்துடன் வேகமாக நடந்தேன். ரோடு முழுவதும் சிதைவுற்று குண்டும் குழியாய் கிடந்தது. மாட்டாஸ்பத்திரி கொறையில் வெளிக்கிருக்கும் ஆட்களின் நடமாட்டம் சற்று குறைந்திருந்தது.
முச்சந்திக்கு வந்து வெட்டுப்பாளையம் போகும் வழியை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் வெளிக்கிருந்து கொண்டிருந்தவள் வேகமாக சேலையை கீழிறக்கி முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தாள். செவிடியாயா சூளையின் அடியில் தென்ன மட்டைகளையும் பனங்கொட்டைகளையும் தள்ளிக்கொண்டிருந்தாள். சூளையிலிருந்து எழுந்த எரிச்சல் மணம்கொண்ட வெண்புகை மெதுமெதுவாக பரவி அந்த இடத்தை குளிர்பிரதேசம் போல் மாற்றிக்கொண்டிருந்தது. மாட்டாஸ்பத்திரியில் அப்போதுதான் டாக்டர் வந்து ஸ்கூட்டியில் இறங்கியிருந்தார். மாட்டாஸ்பத்திரியின் எதிரே தேங்காகாரரின் தோப்பில் கொய்யா கன்றுகள் பெரியதாக வளர்ந்துவிட்டிருந்தன. வாட்சில் மணி 8:35 ஆகியிருந்தது. எட்டேமுக்காலுக்கு 15பி வந்துவிடும் என்று அம்மா சொல்லியிருந்தது நினைவுக்கு வர வேகமாக நடந்தேன். அப்போதே பார்வைக்கு மாரியம்மன் கோயிலின் குதிரை தெரிய ஆரம்பத்திருந்தது. கோயிலின் சிற்பங்களின் பெயிண்ட் உதிர ஆரம்பித்திருந்தது. புரட்டாம்பாளைய வேட்டுவ கவுண்டர்களிடையேயான ஆதிக்கப் போட்டியினால் இரண்டு வருடங்களாக பொங்கலில்லாமல் மெல்ல பொலிவிழந்து உட்கார்ந்திருந்தாள் மாரியம்மன். ஸ்டாப்பில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். சாலையில்தான் அன்றைக்கான பரபரப்பே மனிதனில் உருவாகி அதை உணரவும் முடிகிறது. கரும்புலோடு ஏற்றிய லாரிகள் பெரும் திணறலோடு போய்க்கொண்டிருந்தன. பள்ளி வண்டிகள் அவற்றை ஓவர்டேக் செய்து குழந்தைகளை மூட்டைகளைப்போல ஏற்றிக்கொண்டு பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. இருபுறமும் பார்த்துக்கொண்டே போய் சிமெண்ட் பலகையில் உட்கார்ந்தேன். பக்கத்தில் அண்ணனின் ப்ரெண்ட் தீனதயாளனும் செவிலி செல்வியக்காவும் நின்றிருந்தாh;கள். பார்த்தால் ஏதாவது கேட்பார்கள் என 15பி வரும் வழியைப்பார்த்தே உட்கார்ந்திருந்தேன்.
“டேய் கருவாயா எப்படா மெட்ராசுலேந்து வந்தே?”
கூப்பிட்டது யாரென தெரியாதா என்ன? செல்வியக்காதான்.
“ வந்து ஒரு வாரமாவுதுங்க ”
“மெட்ராசுலதான படிச்சீனு சொன்னாங்க,இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கற?”
“வேலக்கி எக்ஸ்பீரியன்ஸ் கேட்கறாங்க செரி இங்க கொஞ்ச நாளு ஏதாவது வேல செஞ்சுட்டு அப்பறம் போலாம்னுட்டுனுங்க…ஒரு வீடியோ கடைக்கு வேலக்கி போறனுங்க”
“சம்பளம் எவ்வளவு தா;றாங்கடா?”
“ஐயாயிரம் தாறாங்க”
சொல்லிமுடித்தவுடனே அவா; போவதற்கான ஈரோட்டுக்கான சேரன் பஸ் வந்தது. உடனே ஓடிப்போய் ஏறி கூட்டத்தில் ஒருவரானார். அப்பாடா என வடக்கே திரும்பிப் பார்க்கையில் 15பி பெரியகாண்டியம்மன் கோயிலருகில் வந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்தான் கணபதிபாளையத்தில் மருந்துகடைகாரரை இடித்து வம்பில் சிக்கியிருந்தது. அதற்குள் வந்துருச்சே என சற்று தெம்புடன் தெற்கே பார்த்தேன். வியாபாரி ஒருவர் பெரிய வெள்ளை மூட்டையுடன் டிவிஎஸில் வந்து இறங்கி மூட்டையை கீழே தள்ளிக்கொண்டிருந்தார். தன் மகளை 15பிக்கு கொண்டு வந்துவிடவந்த வடிவேலண்ணனை உதவிக்கு அழைத்தார்.
15பி மெதுவாக புரட்டாம்பாளைய இறக்கத்தில் ஒரு யு டர்ன் அடித்து திரும்பியது. லாரிகள் இரண்டு ஓவர்டேக் எடுத்துக்கொண்டு வந்ததால் எங்களுக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்றது. பக்கத்திலேயே வரும் என நானும்,ஒரு சிறுமியும் நிற்க, கண்டக்டர் படிக்கட்டில் நின்றபடி “ கண்ணு வந்து ஏறுங்க சீக்கறம் ” என்றார்.
வேகமாக பின்புறமாக வந்து நின்றேன். டிவிஎஸில் வந்தவர் வெள்ளை மூட்டையை தம் கட்டி நெஞ்சோடு அணைத்து மேலேற்றிக்கொண்டு இருந்தார். ஸ்டெப்னி இருந்த இடத்தில் மூட்டையை போட்டுவிட்டு அழுக்கை தட்டிவிட்டு நிமிர்ந்து சட்டை பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பதை பார்த்த கண்டக்டா;
“ஏனுங்க நீங்க வல்லையா? லக்கேஜ் எப்படி எடுப்பீங்க?”
“இந்த வண்டி ரயில்வே ஜங்சனு போவுமாங்க? ஜங்சனுல ஆளு இருக்கறாங்க”
“லக்கேஜ் இவ்வளவு பெருசா கிடக்குது நா இத எப்ப எறக்கி எப்ப வண்டிய எடுக்கறது, நீங்க லக்கேஜ எடுத்துக்குங்க”
“ஏனுங்க டிரைவரு நீங்களாவது சொல்லுங்க ஆளுங்க வந்து எடுத்துக்குவாங்கன்னு சொன்னாலும் கண்டக்டர் கேட்க மாட்டேங்கறாரு”
“செரி செரி கரக்டா போன அடிச்சு அவருக்கு சொல்லிருங்க கடசில என்னப்போட்டு சீராழிக்கக்கூடாது சொல்லீட்டன் ஆமா! என அடம்பிடித்த கண்டக்டர் அவர் முன்னாலேயே போன் செய்து சொல்லிய பின்னே அவரை கீழிறங்க விட்டார். அவர் இறங்கியபின் பஸ் மெதுவாக நகரத்துவங்கி செங்காலிகாட்டுபள்ளம் வந்தபின் டிக்கெட் கொடுக்க என் பக்கத்தில் வந்தார். நீளமான முகம், சற்று தொந்தியான உடம்பில் பேன்ட் கணுக்காலுக்கு மேலேறியிருக்க காலில் பேரகானின் ரப்பர் செருப்பு.
“எங்க கண்ணு ஈரோட்டுக்கா?”
ஆமாங்க என்றதும் எச்சிலைத்தொட்டு சர்ரென டிக்கெட்டை கிழித்துதந்துவிட்டு பின்சீட்டில் உட்கார்ந்துகொண்டார். செங்காலிகாட்டுபாலத்தில் இரண்டுபேர் கால்கழுவிக் கொண்டிருந்தார்கள். கறிக்கோழியின் கழிவுகளுக்கு வைத்த நெருப்பு புகைந்து கருவல்வாடை அடித்துகொண்டிருந்தது. பஸ் மெதுவாக வண்ணார் காலனி முக்கு கடந்து மரைப்பாளையம் நோக்கி முன்னேறத் துவங்கியது. தோண்டிபோட்டிருந்த குழிகளிலும் நரவல்களாய் நிரம்பிக்கிடந்தன. மரைப்பாளையத்தின் புதிய அடையாளமாக பேக்கரி ஒன்றும் ஏ.டி.எம் ஒன்றும் உருவாகியிருந்தன. பேக்கரிக்கு சற்று தள்ளி கை இல்லாத வெள்ளைபனியனும் கறுப்பு பெர்முடாசுமாய் புரட்சிநாயகன் முரடன் செந்தில் முத்தையன் வலசு ஊரின் ஒற்றை முகமாய் நின்றிருந்தார். அங்கு வருகிற எல்லோரும் அவரை ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னே கோவணத்தைக் கட்டிக்கொண்டிருக்கிற ஊரில் ஸ்லீவ்லெஸ் பனியனும், பெர்முடாசும் அணிந்து தனது ஆப்பிரிக்க நிற உடலின் புஜபலத்தை காட்டியபடி நின்றுகொண்டிருந்தால் சும்மாவா! நான் வேகமாக தலையை உள்ளிழுத்துக்கொண்டேன். ஆள் மட்டுமா பேச்சு இன்னும் முரட்டுத்தனமாக இருக்கும். பஸ்சில் ஆட்கள் வேகமாக ஏறத்துவங்கியிருந்தனா;.
“அட ஏறு வழிவுட்டாத்தான ஏற முடியிம்”;
“எனக்கு வழி வுடுங்க”
“அட மெதுவா ஏறு கால எதுக்கு முதிக்கற”
நெரிசலின் மொழியாக குரல்கள் ஒலித்தன. வேகமாக ஏறி சீட்களை பிடிக்க அலைந்தார்கள். தியானத்தில் கூட இவ்வளவு களிப்பு ஏற்பட்டிருக்காது. அவ்வளவு மகிழ்ச்சியும் அடேய் புடேய் என பதறி சீட் போட்டாலே போதும் கிடைத்துவிடுகிறது. அவ்வளவு கனிவு, இரக்கம் எல்லாம் அதன்பின்தான் வாய்க்கால் தண்ணீர் போல பெருக்கெடுத்து வர மெல்ல சயனத்தில் ஆழ்கிறார்கள்.
“அடசீக்கறம் ஏறுங்கப்பா நேரமாவுதுல்ல” என பள்ளிக்கூட பையன்களை முடுக்கினார். பள்ளிப்பையன்களுக்கு பின் பெரிய மூட்டையோடு ஒருவர் ஏறினார்.
மூட்டையை அரும்பாடுபட்டு தள்ளிக்கொண்டுவந்தவரிடம் கண்டக்டர்,
“ இப்புடி வழிய மறைச்சிக்கிட்டு நின்னீனா மத்தவங்கல்லாம் உம் பொடனி மேல காலு வச்சிதாம் வரோணும்,உள்ள கொண்டுபோயி ஸ்டெப்னி டயரு மேல போடு இல்லனா சீட்டுக்கு அடியில தள்ளிவுட்ரு ”
மூட்டையை எனக்கு பின்னாலிருந்த சீட்டினடியில் தள்ளிவிட்டு நிமிர்ந்தவரிடம்
“லக்கேஜ் பார்க்குக்குத்தான? ” என்றபடி டிக்கெட்டை கிழித்துகொடுத்துவிட்டு முன்னாடி டிக்கட்டு.. டிக்கெட்டு.. என்றபடி கிளம்பி பின்சீட்டின் கம்பியில் சாய்ந்து நின்றார். கடைசி சீட்டிலிருந்தவர் பேச்சை துவக்கி வைத்தார்.
“ஏனுங்க கண்டக்டரே ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜைக்குனாலும் பஸ்ச கழுவுவீங்களா? வண்டி ரொம்ப குப்பையா கிடக்குதுங்களே!”
“இத எல்லாம் எப்படி கழுவறது? காவிரியாத்துல கொண்டி தள்ளிர வேண்டிதுதான். வேறவழி? அவ்வளவு அழுக்கு!” என்ற கண்டக்டரை விடாமல்
“ஏனுங்க ரயில்வே ஜங்சனு நேரு ஒரு டவுன்பஸ் டயர் கழண்டு ஓடுச்சாம் உண்மையா?”
சடாரென சுதாhpத்த கண்டக்டா; “அப்படியெல்லாம் இல்ல. வண்டி கொஞ்சம் கண்டிசனா இல்லையாட்ட ரோட்டு தடுப்பு மேல கொண்டோயி லைட்டா இடிச்சுபுட்டான் அந்த டிரைவரு”
மேலும் கேள்வி கேட்க வாயெடுப்பதற்குள் டிக்கெட் எழுதுவதில் மும்முரமானார்.
லஷ்மிபுரத்தை தாண்டி போய்க்கொண்டிருந்தது. உள்ளே கட்டியிருந்த விநாயகரின் கோயிலை பார்த்ததும் ஏகத்துக்கும் கொதித்தார் என் பக்கத்திலிருந்தவர்.
“ காசு இல்லாம படிக்கறக்கு சிரமப்படற புள்ளைவளுக்கு ஒருரூவா தரமாட்டானுவோ! கோயில்னா அள்ளி வீசறான் பாரு அதுவும் டைல்ஸு! காசு கொடுக்குறவனுக்கு பைல்ஸு இருந்தாலும் பாத்ரூமு புல்லா டைல்ஸு .என்ன செய்யறம்னு பாக்கறவனுக்கும் தெரீல, செய்யறவனுக்கும் தெரீல ” என்று கம்மிய குரலில் முணுமுணுத்தார்.
15பி மெதுவாக பெட்ரோல்பங்கை கடந்து பனப்பாளையம் நோக்கி நகரத் துவங்கி இருந்தது. பெட்ரோல் பங்கை கடந்ததும் டாஸ்மாக் கடை உள்ளதைச்சொல்லும் வண்ணம் இருபுறங்களிலும் வாட்டர் பாக்கெட்டுகளும் பிளாஸ்டிக்கப்புகளுமாய் இறைந்துகிடந்தன.
டாஸ்மாக்கை ஒட்டி செம்மண்ணில் ஜட்டி தெரிய வெள்ளை வேட்டி மண்ணில் புரள போதையில் மயங்கிகிடந்தார் ஒருவர்.
“பிராந்திக்கடை வந்ததிலிருந்து ஏக்சிடென்டு அதிகமாயிருச்சுங்க. தண்ணி போட்டுட்டு அவஞ் சாவறதுமில்லாம நம்ம மேலயுமில்ல கொண்டாந்து உடறான்” என்றார் அருகிலிருந்த கறுப்பாக ஒடிசலானவார்.
பின்னாடி டிக்கெட்டேய்…டிக்கட்டு என ஏலமிட்ட கண்டக்டர் பேச்சில் கலந்துகொண்டு சமூகநீதிபோராளியாகி கொந்தளித்தார்.
“பிராந்திக்கடையை கவர்மென்டே நடத்துது. தண்ணிய போட்டுட்டு ரோட்டுக்கு வந்தா குடிச்சிருக்கறான்னு பைனு போட்டு பணம் புடுங்கறாங்க. எப்படி பாருங்க ரெண்டு வருமானமல்லோ! சரக்கையும் வித்துட்டு நம்மு சட்டையும் புடிக்கறாங்க என்ன கவர்மென்டோ?”
இதைக்கேட்டுக்கொண்டிருந்த அதிமுக விசுவாசி நீயா நானாவில் குதித்தார்.
“கண்டக்டரே எஸ்மாவை மறந்துடீரோ! இப்ப உங்களுக்கு போனஸு தாறதும் எங்க அம்மாதான். மறந்தராதீங்க ஆமா ” என ஏகத்துக்கும் எகிற
ஏ அப்பா முன்னாடி டிக்கட்டு இருக்குதாப்பா? டிக்கெட்டேடேடேய்;…. வனப்பாளையம் எறங்குதா? எனக்கேட்டபடி மெல்ல நழுவி கண்டக்டா; முன்னாடி போனார்.
வனப்பாளையம் ஸ்டாப்பில் 15பி வேகம் குறைந்து நின்றது.காட்டு வேலைக்கு போகும் பெண்கள் ஏற சாப்பாட்டுக்கூடையோடும் பான்ஸும் வியர்வையும் கலந்த நெடியாய் பஸ்ஸில் பரவியது. பஸ்ஸில் ஏறிய பெண்களில் இருவர் என் முன்னால் இருந்த சீட்டில் உட்கார்ந்து கூடையை கீழே வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள்.
“என்ன பூரணா எப்பவுமே நேரமே வந்துருவே இன்னைக்கி ஏ நேரமாயிருச்சு? வீட்டுல வேலயா?”
“ உடம்பு முடியில பொன்னக்கா.காலயில எந்திரிச்சு சோறு வக்கறதே சிரமமா இருக்குது. எம் புருசன் வெங்காயம் அரியறவகிட்டபோயி இளிச்சிக்கிட்டு நின்னுக்கறான். ஏதாவது வேல செய்யலாமுல. ஏதாவது கேட்டா என்னப்போட்டு அடிக்கறான்.நான் என்னதாம் பண்றது? ”
“செரி, பூரணா உம் பயன் என்ன பண்றான்?”
“பயந்தான அந்த கட்டித்தினி கொழம்பு வக்கிற குண்டாவவுல சோறு வெச்சிருக்கறான்.என்னதாம் நா பண்றது? எனக்கு ஒண்ணும் உருப்படியில்ல பொன்னக்கா என்றபடி பூரணா வெளியே பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
பின்சீட்டில் உட்கார்ந்திருந்தவர்கள் செல்போனில் பாட்டுகேட்டபடி வந்தனர். டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த கண்டக்டர் செல்போனைப் பார்த்தபடி
“ஏய்யா இது சைனா போனுதான?”
“ஆமாங்ணா நேத்துதா வாங்குனோம் 1200ரூபாயுங்க.”
“என்னய்யா வாங்கறதுதா வாங்கறீங்க கம்பெனிச்செட்டா வாங்கறதுதான?”
“அண்ணா கம்பெனிச்செட்டு 2000 ரூவா போடோணும் கொரியா செட்டுல 1200 ரூவாயுக்கே எல்லா வசதியும் இருக்குது.”
“அது கரக்டுதான் தம்பிகளா எங்கிட்டயே நாலு செட்டாட்ட கிடக்குது. ஏதாவது ஒண்ணு அதுல போய்க்கிட்டே இருக்குது”
“ஆமாங்க கொஞ்சநாளு யூஸ் பண்ணிட்டு தூக்கிபோட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டிதா”
“அதுஞ்செரிதாம்பா புதுசுபுதுசா போனு வந்துக்கிட்டே இருக்குதே.மாசம் ஒரு போனு டிவில அந்த பல்லன் பேரு என்ன ஆ..மாதவன் வாங்கச்சொல்றான் அப்பறமென்ன நடத்துங்க”
பஸ்ஸில் மருந்தடிக்கும் நெடியின் வீச்சம் அதிகரித்துக்கொண்டுவந்தது. மெல்ல கம்பனையன்புதூர் நிறுத்தத்தில் நின்றது. வெங்காய வயல்களுக்கு முகத்தில் துணி கட்டிக்கொண்டு மருந்தடித்துக்கொண்டு இருந்தார்கள். வெங்காயம் லோடு ஏற்றிய டிராக்டர்கள் வேகமாக பஸ்சைக்கடந்து போய்க்கொண்டிருந்தன.
இரண்டு பைகளில் கனமான இரும்புசாமான்கள் போல சிரமப்பட்டு ஏறினார் பஸ்ஸில். பின்னாடி ஒருவர் நெற்றி நிறைய சந்தனம் குங்குமத்துடன் ருத்ராட்சத்துடன் ஏறினார். இரும்புச்சாமான்காரர் பைகளை சீட்டில் நிறைத்தார். பைகளை வைத்துவிட்டு மெதுவாக எழுந்தார். பக்கத்திலிருந்த சீட்காராரிடம் கையை நீட்டியபடி
“அய்யா எம்பையன் ஒரு புள்ளய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டானுங்க கருந்துறைப்பக்கம் போயிப்பாக்கறக்கு கூட பணம் இல்லங்க தர்மம் பண்ணுங்க சாமி” என ஒவ்வொரு சீட்டுக்கும் வர ஆரம்பித்தார்.ஆள் வற்றலாய் தலையில் சிவப்புதுண்டு கட்டியிருந்தார்.கண்கள் சிவந்து கிடந்ததை பாh;த்ததுமே தண்ணி போடறதுக்கு பஸ்ஸிலியே ஏறி காசு வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாரே என நினைத்துகொண்டிருந்தேன்.
முன்னால் போய் டிக்கெட் போட்டுவிட்டு பின்னால் வந்து அவரிடம் டிக்கெட் கேட்கவும் சிவப்புதுண்டுக்காரர் தன் கதையை சொல்லவும் ரணகளமானது கண்டக்டர் முகம்.
“ யோவ் என்னய்யா நெனச்சிட்டிருக்கே காசு இல்லாம ஏறிட்டு எகத்தாளப்பழம பேசறயா அடுத்த ஸ்டாப்புல எறங்கிரு ஆமா ”
என்னமோ முனகிவிட்டு இறங்கும் வழியில் படிக்கு அருகிலேயே நின்றுகொண்டார். எல்லோரும் அவரது முகத்தையே பார்த்துகொண்டிருந்தார்கள். பின் சிறிது நேரம் சென்றதும் சீட்டிலிருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு கருமாண்டம்பாளையம் ஸ்டாப் வந்து நிற்கவும் இறங்கிக்கொண்டார். நாலு பேர் வேகமாக ஓடி வந்து ஏறினார்கள். விருமாண்டம்பாளையத்தின் சாலைகள் நன்கு நீண்டு விரிவாக இருந்தது. பஸ்ஸ்டாப்பினருகில் வந்து நின்ற மஞ்சலூர் வழி செல்லும் தனியார் பஸ்ஸில் தலைமுடி திரிதிரியாய் தொங்கியபடி சேலை கிழிந்து அலங்கோலமாகி இருந்த முதியவள் சுருங்கிய முலைகள் பெண்டுலமாய் ஆட பிச்சை கேட்டபடி அலைந்து கொண்டிருந்தாள்.
ஒருவாய் நல்ல சோற்றுக்காக ஸ்ரீராம் அண்ணனின் வீட்டுக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. வயிறு குளிர்ந்தால்தான் புத்தியால் வேறு ஏதாவது யோசிக்கவே முடிகிறது. இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் அழுகிய முட்டைவாடையின் அடர்த்தி கூடுவது விகேஎம் முட்டைப்பண்ணை தொழிற்சாலை அருகில் பஸ் சமீபிப்பதை உணர்த்தியது. ஏழ்மையில் இருப்பவர்களை உடலளவிலும் மனதளவிலும் கசக்கி பிழிந்து வேலை வாங்கும் இந்திய நாஜிகளின் கொட்டடி அது.
அவரின் அச்சேவையைப் பாராட்டி அரசு வழங்கியிருந்த விருது குறித்த பிரமாண்ட பேனர் கட்டவுட் அருகிலேயே இருந்தது. பிரமாண்டமான பெரிய கட்டிடம் அனைத்தையும் உள்ளடக்கியபடி வெள்ளைநிறத்தில் நின்றிருந்தது. கட்டம் போட்ட சட்டையோடு கொம்பனையில் ஏறியவர் பாலிதீனில் மடக்கிய டிபன்பாக்சோடு தயங்கி படிக்கட்டில் நின்று முட்டைப்பண்ணை எதிரேயே இறங்கினார். சோளங்காபாளையம் செல்லும் வழியில் பாலம் தோண்டும் வேலை நடந்து வந்ததால் இரண்டு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்ததால் பஸ் ஏறி இறங்கியது.சோளங்காபாளையத்தில் பஸ் நின்றபோது இரண்டுபேர் ஏறினார்கள்.
கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்தவர் தன் அருகிலிருந்த நண்பரிடம் பேச தொடங்கினார்.
“ஏண்டா சுரேசு பிரபாகரன் பயன சுட்டுகொன்னாங்க அத நேத்து பாத்தியா?”
“கணபதியண்ணா அவம் பயன சுட்டுக்கொல்றத டிவில போட்டாங்களா? எப்போ? பேப்பர்ல எதும் போடுலியே!”
“பேப்பர்ல போட்டா சும்மா வுடுவானுவளா கைகார நாய்வ”
“அப்ப எதுலீங்ணா பாத்தீங்ணா கன் நியூஸா,பயா நியூஸா?”
“அவனுவளுக்கு அவந்தப்ப மறைச்சு அடுத்தவன நோண்டறதே வேல அவம் போடுவானா இதையெல்லாம். நா வூட்டுல சேனல் 4 னு ஒரு சேனல்ல பாத்தன். அதுல இரண்டுநாளக்கி முன்னாடியே போட்டானுவ இதுமாரி ஒரு வீடியோ போடறம்னு. அலாரம் வெச்சிருந்து நைட்டு ஒரு மணிக்காட்ட பாத்தன்.”
“சேனல் 4 ஆ! அந்த சேனல்லாம் எடுக்குதா உங்கூட்டுல. எங்கூட்டுல அந்த சேனல்லாம் தெரியறதில்லீங்களே”
“டேய் சுரேசு அந்த சேனலுக்கெல்லாம் நா பணம் கட்டறன்டா. பங்கிலாந்து நாட்டு சேனலு அந்த ஊரு டைமுபடி காலைலில போட்டாங்களாட்ட. எப்படியோ பாத்துட்டன்”
“ஏனுங்க அந்த வீடியோவுல எனனங்கண்ணா போட்டாங்க?”
“பிரபாகரம்புள்ளய நெஞ்சுலயே சுட்டு கொல்றானுவோ மிலிட்டரிகாரங்க சாமி பாக்கவே முடில. எல்லாம் கண்டாரோலி முண்ட மானியாபேடினாலதா..”
“நம்மூரு டிவில எல்லா எப்ப போடுவாங்க?”
“குலைஞரு,பயா,கன்னுலல்லாம் போடமாட்டானுவ. போட்டா ஜெனரேஷன் டிவியில கீது போடுவான். இந்தியாவுல கைகாரன் ஆட்சி நடக்குது அவ்வளவு சீக்கறம் போடவுற்றுவானா?”
“ஏங்ணா கண்ண கட்டி சுடுவானுவளாமா அப்படியெல்லாம் வந்துதா?”
“மொத்தம் ஒருமணி நேரமாட்ட போட்டானுவ இதுவரயில என்னென்ன பண்ணியிருக்கறான்னு பயங்கரஞ் சாமி பயங்கர கோரம். அதிலீம் ஏதோ ஒரு அழகான பொண்ணு மிலிட்டாரகானுவ சுத்தி நின்னு மேல வுழுந்து அலங்கோலம் பண்றானுவ அப்பறம் அம்மணமா நிற்கவச்சு சுட்டுகொல்றானுவ. அவம் பண்ற சின்னத்தனத்தை அவனுவளே வீடியோ எடுக்கறானுவ.”
ஏறத்தாழ அந்த சேனல் நாலுக்காரர் போட்ட கூச்சலில் பஸ்ஸே திகைத்து அவரையே திரும்பி பார்த்தபடி இருந்தார்கள்.கேள்வி கேட்டு உசுப்பேற்றியதால் வைகோ போல உணர்ச்சிவசப்பட்டு அழும்நிலைக்கே வந்துவிட்டார். அப்போதான் பஸ்ஸில் ஏறியவர் சேனல் நாலை மேலும் உசுப்பேற்றினார்.
“ஏனுங்க அந்த வீடியோ எல்லாம் உண்மையா என்ன?”
“பின்ன புரடையா பேசிக்கிட்டு இருக்கறன்.அழுகோ ஒரு சிடி வெளியிட்டார் தெரியுமா எலக்சன் டைமுல அதும் எங்கிட்ட இருக்குது.”
“கணபதியண்ணா அந்த சிடில என்ன சொல்றாங்க”
“அதுல என்னன்னா அழுகோ பேசுவாப்ல அத முதல்ல கொஞ்ச நேரம் போடுவாங்க. அப்பறம் பலோன்ல மிலிட்டரிக்காரனுவ நம்மாளுவளை குண்டுபோட்டு கொல்றதுன்னு ஓடும்.”
பஸ்ஸில் இடம்கிடைக்காமல் கடைசியில் நின்று கொண்டு வந்தவர்களெல்லாம் பொழுதுபோக அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு வந்தனர். அவரும் சளைக்காமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தார். இவரையே தீவிரமாக பார்த்தபடி வந்த கண்ணாடி போட்டிருந்தவர் சந்தேகமாய் தீர்க்கமாய் கேட்டார்.
“தமிழ்நாட்டுல அகதியா கெடக்கறவன பத்தியெல்லாம் உங்களுக்கு அக்கறையில்ல அவனும்தான் பட்டினில சாவறான். அத எல்லா வுட்டுட்டு இலங்கையில தமிழர்கள கஷ்டப்படறாங்கன்னு வீடியோ பாருங்கிறீங்க”
கேள்வி கேட்டவரை ஏளனமாய் பார்த்தவர் பின் பேசினார்.
“தம்பி எல்லாம் செரிதான். இங்கிருக்கறவனுக்கும் வயித்துபாடு பிரச்சனைதா. ஆனா அவனுக்கு அவம் புள்ளயோட மானமும் உயிர்வாழற பாடுமே பிரச்சனை. நா வேணா நாளைக்கு டிவிடி கேசட்டு கொண்டாந்து தாறன். பாத்துட்டு அப்பறமா பேசு.”
ஓலப்பாளையம் பெட்ரோல் பங்கில் சேனல்காரர் இறங்கிக்கொண்டதும் பஸ்சில் பெரும் அமைதி சூழ்ந்தது.
15பி மெதுவாக போக்குவரத்தில் ஊர்ந்தது. காற்றே டீசல்,பெட்ரோலின் கலவையாக மாறி மூக்கை அடைப்பதுபோலிருந்தது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறட்சியை முகத்தில் இறைத்து போனது. ஈரோடு ஜங்சனில் வடமாநில ஆட்கள் குவியலாய் ஏறினார்கள். 15பி மெதுவாக காளைமாட்டுசிலை தாண்டி பன்னீர்செல்வம் பார்க் மார்கெட்டிற்கு போய் நின்றது. கண்டக்டர் பின்படிக்கட்டில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு பெண் தலையில் சுமையும் கையிரண்டில் இரு சுமைகளுமாய் ஏற வந்தாள். கண்டக்டர் நகரவே இல்லை.
“ஏனுங்க கொஞ்ச நவுருங்க சொமயோட ஏறோணுமுல்ல”
“நீ ஏறவே வேண்டாம் இவ்வளவு சொமயோட எப்பிடி எறங்குவே போனொடனே திரும்போணும். நீ வேற பஸ்சு புடிச்சு வா. சீக்கறம் எறங்குன்னா ராங்கு பண்ணுவே”
எனச்சொல்லி கண்டக்டர் விசிலூத 15பி நிற்காமல் சென்றது. மெல்ல சத்திரோட்டில் இணைந்து பஸ்ஸ்டாண்டில் தயங்கி தயங்கி நுழைந்தது. டவுன்பஸ்ஸ்டாண்டில் 15பிக்காக நின்றவர்கள் பஸ்ஸை பார்த்ததும் பக்கத்தில் வர ஆரம்பித்தார்கள். பஸ் நிற்கவும் மெதுவாக இறங்கினேன். நேரே சிந்தாமணி பார்த்து நடக்க ஆரம்பிக்க மழையின் மென்தூறல்கள் சட்டையில் விழத்தொடங்கியது.
தொடரும்….
1
ஆசிரியரை பற்றி
வின்சென்ட் காபோ
வின்சென்ட் காபோ என்றழைக்கப்படும் இவர் ‘கல்லாப்பொட்டி சிங்காரத்தின்’ தீவிர ரசிகர் என்பதால் அவரின் பெயரையே தன் பின்னால் சேர்த்துக்கொண்டார். சிங்காரம் என்று கூட பல இடங்களிலும் கையெழுத்துபோட்டார் என்றாலும், சிங்காரம் யார் என்று கேட்டு, இவரை அடித்து விரட்டிவிட்டாலும் தன் புகைப்படத்தைக்கூட போடாமல் சிங்காரத்தின் புகைப்படத்தையே தன் அடையாளமாக பயன்படுத்தி வரும் இவர், 2006 ல் வளர்மலர் பதிப்பகத்தில் எழுதிய பின்காலனிய நாவலின் (தந்தை இறக்கும் நிலம்) மேஜிக் ரியலிசம்,மோனோ ரியலிசம் உள்ளிட்ட பாணிய புதிய உத்திகளை திருமால் கண்ணன் என்பவர் குறியீடுகளை புரிந்துகொண்டு இவரைப் பாராட்டி எழுதிய பின்தான், உலகிற்கே இப்படி ஒரு எழுத்தாளர் இமயம் இருக்கிறது என்று தெரியவந்து யாரும் ஆரத்தியெல்லாம் எடுக்கவில்லை. அவரே தன்னைப் புரிந்துகொண்டு பல இதழ்களுக்கு ஏதாவது சில்லரையாக எழுதி அனுப்புவார். மொழிபெயர்ப்புகளின் மேல் ஆவல் கொண்டிருந்ததால் பல கட்டுரைகளையும் எழுதிவருகிறார். தான் எழுதுவதை விட மற்றவர்களின் கண்டுகொள்ளாத எழுத்துக்களை தொகுப்பதையே பெரிதும் விரும்பும் ஒரு பின்நவீனத்துவ சமகால பிழைக்கத்தெரியாத எழுத்தாள ஆன்மா பிறரால் கூறப்படும் இவர் கூலித்தொழிலாளியாக வனமலைப்sஇபாளையத்தில் வசித்துவருகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக