கடைசிப் பக்கம்
பொது அறிவு
Backகடைசிப் பக்கம்
ஐயப்பன் கிருஷ்ண்ன்
Contents
கடைசிப் பக்கம்
1. கலங்கடிக்கச் செய்யும் நாவல்கள் ஐயப்பன் கிருஷ்ணன்
2. சிரிப்போ சிரிப்பு ஐயப்பன் கிருஷ்ணன்
3. தருமன் நல்லவரா ? கெட்டவரா ? ஐயப்பன் கிருஷ்ணன்
4. உண்மையான காதல் ஐயப்பன் கிருஷ்ணன்
5. தரும அடி! ஐயப்பன் கிருஷ்ணன்
6. பாதகம் செய்பவரைக் கண்டால் ஐயப்பன் கிருஷ்ணன்
7. வார்த்தைகள் ஐயப்பன் கிருஷ்ணன்
8. ஆசை முகம் மறந்து போச்சே!. ஐயப்பன் கிருஷ்ணன்
9. சும்மா இரு, சொல் அற! ஐயப்பன் கிருஷ்ணன்
10. திரும்பத் திரும்ப ஐயப்பன் கிருஷ்ணன்
11. கடவுள் ஐயப்பன் கிருஷ்ணன்
12. நல்லறம் ஐயப்பன் கிருஷ்ணன்
13. “பல்”லாண்டு “பல்”லாண்டு... ஐயப்பன் கிருஷ்ணன்
14. நோய்நாடி.. நோய் முதல் நாடி… ஐயப்பன் கிருஷ்ணன்
15. அதான் எனக்குத் தெரியுமே ! ஐயப்பன் கிருஷ்ணன்
16. பகவான் இரமணரும், வடிவேலுவும் கூடவே ஒரு சங்கு சக்கரமும் ஐயப்பன் கிருஷ்ணன்
17. அடையாளப் போலிகள் ஐயப்பன் கிருஷ்ணன்
18. டெர்ரர்ஃபேஸ் தெகிரிய சாமி! ஐயப்பன் கிருஷ்ணன்
19. தலையாட்டி பொம்மை ஐயப்பன் கிருஷ்ணன்
20. நம்பினார் கெடுவதில்லை…. ஐயப்பன் கிருஷ்ணன்
21. கடைசிப் பக்கம் ஐயப்பன் கிருஷ்ணன்
ஆசிரியர் பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
கடைசிப் பக்கம்
பண்புடன் மற்றும் அதீதம் இணைய இதழ்களின் ‘கடைசிப் பக்கம்’ கட்டுரைகளின் தொகுப்பு.
ஆசிரியர் : ஐயப்பன் கிருஷ்ண்ன்
உரிமை : Creative Commons Attribution 4.0 International License.
படம்: http://www.flickr.com/photos/everdred/18613691/sizes/o/
மின்னூலாக்கம் : இராஜேஸ்வரி [ sraji.me@gmail.com ]
வெளியீடு : FreeTamilEbooks.com
1
கலங்கடிக்கச் செய்யும் நாவல்கள்
ஐயப்பன் கிருஷ்ணன்
சில நேரம் கலங்கடிக்கச் செய்யும் நாவல்களைப் படித்து ஏதோ பித்துப் பிடித்தாற் போல் நின்றிருக்கிறீர்களா ? அப்படியான தருணம் வெகுநாளைக்கு அப்புறம் மீண்டும் வாய்த்தது. 2001ல் என்று நினைக்கிறேன். கல்கியின் கதைகளில் சிவகாமியின் சபதம் படித்து சில நாட்களுக்குள் பாகல்கோட்டை என்ற இடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திரும்ப வரும் போது மேனேஜருக்கு ஏதோ நல்ல மூடு போல. பதாமி, பட்டத்துகல், அய்ஹோளே போன்ற கர்நாடக புராதான இடங்களைப் பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னார். பெங்களுர் திரும்பும் வழியில் தான் அவை என்பதாலும் பயணத்திட்டத்தில் அதிகம் மாறுதல் இல்லை என்பதாலும் அனைவரும் ஒப்புக் கொண்டோம்.
பதாமி, இன்றைய வாதாபி. சிவகாமியின் சபதம் கதையில் மிக முக்கிய இடம். பல குகைச் சிற்பங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் நினைவுகள் முழுக்க சிவகாமி வியாபித்திருந்தாள். இந்த இடத்தில் சிவகாமி நின்றிருப்பாளா ? இந்த இடத்தில் நாக நந்தி நின்று சிவகாமியை ஆசையும் பார்த்திருப்பானா ? இங்கே இருக்கும் ஏதோ ஒரு புத்தனின் காலடியை சிவகாமி தன் கண்ணீரால் கழுவி இருக்கக் கூடும் இல்லையா ? இந்த ஊரின் எத்தனை முச்சந்திகளில் சிவகாமி தன் ஆடத்தை அரங்கேற்றி இருப்பாள் என பலவாறாக எண்ண ஓட்டத்தில் மேலும் கீழும் என அலைந்திருந்திருக்கிறேன். என்னவோ உணர்ந்த என் மேனேஜர் என்னை சற்று ஆசுவாசப் படுத்திய பின் இது பெங்களூர் சேரும் வரைக்குமான கேலி கிண்டலுடன் கூடிய பேசு பொருளாகிப் போனது.
அது போல பொன்னியின் செல்வன் படித்து முடித்து மணிமேகலைக்காக வருந்தி கிடந்தது பல காலம். கிட்டத் தட்ட அனைத்தையும் ஒரு ஆறேழு முறை படித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் மணி மேகலை மேல் அத்தனை வருத்தம் ஏற்பட்டது. அதையும் மீறி அவள் மீது சொல்ல இயலாத கோபம். என்ன அப்படி ஒரு காதல் வந்தியத் தேவன் மீது என்று சமயத்தில் வந்தியத் தேவன் மேல் வெறுப்பேற்பட வைக்கும் ஒரு கதாப் பாத்திரம். அவளின் நிலையை கவிதையாய் எழுதி வைத்தேன்.
நின்றதும் என்னுள் நின்றதும்
உன்னுருவம்தானே
தின்றதும் எனைத் தின்றதும்
உன் நினைவுகள் தானே
எண்ணி இருந்தேன் உன்னை
என்னருமைக் காதலனாய்
கண்ணிமைக்கும் நேரத்தில் தான்
நீ காணாமலே போனாய்.
கல்லில் வடித்த சிற்பமதாய்
கன்னி மனம் உனைப் பதிக்க
நீ இல்லை எனும்போது
யார் வருவார் அதைச் சிதைக்க
உலகை விட்டுச் செல்லத்தான் நான்
வெகுதூரம் ஓடிப்போனேன்
இறுதிக்கால இறுதியிலே
உனைக் காணாது வாடலானேன்.
வானுலகு ஏகுகிறேன்
வடிவழகு வந்தியரே
விழி கலங்கி அழுதிடினும்
நிற்காது என்னுயிரே
பழியென்று நினைக்காதீர்
என்முடிவை உம் மனம் கொண்டு
நீடூழி வாழியவே நீர்
குந்தவையை மணம் கண்டு.
பின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற முனைப்பு பூங்குழலியோடு நின்று போனது நல்லதே. படிக்கும் சிலராவது பிழைத்துப் போகட்டும்.
இந்த இரு நாவல்களையும் படித்து இருந்த போது கிடைத்த நெகிழ்ச்சியான தருணம் நேற்று மீண்டும் வாய்த்தது. ஏற்கனவே ஒரு எட்டு வருஷத்துக்கு முந்தி படித்திருந்த புத்தகம் தான். முதல் முறை படித்த போதும் தற்போது போதும் இருக்கும் அனுபவம், மனநிலை வேறுபாடு என எல்லாம் சேர்ந்து வேறுவிதமான உலகத்தையே உருவாக்கி வைத்திருந்தது.
குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.
கவிதையும் கதையும் என கலந்து உள்ளிழுத்து சமயத்தில் காயத்திரியாய், விசுவாய், நடேசமுதலியாய் என ஒவ்வொரு கதா பாத்திரத்திலும் நம்மை உள்ளிழுத்து… ஹிம்சித்தது. படிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாத்திரத்தில் தம்மை பொறுத்திப் பார்ப்பர். சங்கீதத்தை வெறுக்கும் பெண்ணும், சங்கீதத்தில் லயிக்கும் ஆணும் சந்திக்கும் வேளையில் ஆணை நோக்கி நீ ஒரு முட்டாள் என்று பெண் சொல்லும் போது சவுக்கால் அடி வாங்கும் குதிரையாய் நம்மையும் உணரவைக்கிறார் பால குமாரன்.
நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்.
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி.
கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.
இரும்பு குதிரை. ஒவ்வொரு கவிதையும் உணர்த்தும் உணர்ச்சிகள்.. ம்ம்ம்… இப்படியான கதையை தொடர்வண்டியில் வரும்போது படிக்க கையில் எடுத்திருக்கக் கூடாது தான். பலவித உணர்ச்சி பாவங்களைப் பார்த்து எதிரில் அமர்ந்திருக்கும் ஆள் பயந்து போய் விடக்கூடாதில்லையா ?? அதற்காகவே படியின் அருகில் நின்று படித்துக் கொண்டு வந்தேன். எனக்கு அந்த தொடர் வண்டியே ஒரு குதிரையாக தோன்றியது. அந்த தடக் தடக் சத்தம் குதிரையின் குளம்படிகள். குதிரைகள் எங்கும் வியாபித்திருக்கிறது. வண்டியின் உள் எங்கோ குழந்தை அழுதது. அட குதிரை அழக்கூடச் செய்யுமா அது கனைக்கத்தானே செய்யும் ? என்று எண்ணிப் பார்க்கத் தூண்டியது. வண்டி நிற்கும் போதெல்லாம் யாரோ கடிவாளம் பிடித்திழுத்து நிறுத்தினாற்போல், ஓசை எழுப்பி கத்தும் போதெல்லாம் சவுக்கால் அடிப்பட்ட குதிரையாய் இரயில் வண்டி… அட என்ன இது… என்ன மாதிரியான மனநிலைக்கு என்னைத் தள்ளிச் செல்கிறது இந்த நாவல் என்று படிப்பதை கொஞ்ச நேரம் தள்ளிப் போட்டு வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தேன்.
மிக அருமையான நாவல். மீண்டும் ஏற்கனவே பாலகுமாரனின் பந்தயப் புறா, மெர்குரிப் பூக்கள், ஆனந்த வயல், நிலாவே வா என அவரின் பல நாவல்களை தேடிப் படிக்கத் தோன்றுகிறது. உங்களின் ஏதோ ஒரு இரயில் பயணத்தில் பந்தயப் புறா ஏதும் வண்டியினுள் பறந்துக் கொண்டிருந்தால், குதிரை குளம்படி சத்தம் கேட்டால்… நன்றாக கவனியுங்கள். யாரேனும் இரும்பு குதிரையோ அல்லது பந்தய புறாவோ படித்துக் கொண்டிருக்கக் கூடும்.
2
சிரிப்போ சிரிப்பு
ஐயப்பன் கிருஷ்ணன்
சிரிப்போ சிரிப்பு
சிரிப்பு பலவகைப்படும்னு நகைச்சுவை மன்னர் என்.எஸ் கிருஷ்ணன் அத்தனை விதத்தையும் தன் பாடல்ல கொண்டு வந்திருப்பார். சிரிப்புங்கறது மிகப் பெரிய தொத்து வியாதிங்க. உதாரணத்துக்கு சொல்லனும்னா.. நீங்க காலைல எழுந்த உடனே பாக்கற மக்களிடம் சினேகமான ஒரு சிரிப்பை வெளிப்படுத்திப் பாருங்க. அது ஒவ்வொருத்தரா தொத்தி பல பேரைச் சென்றடையும். அதே நேரத்துல சிரிக்கவே சிரிக்காத பிரதமரும் நாடாண்ட பூமி தானே நம் நாடு. சரி நாம விஷயத்துக்கு வருவோம்.
தெனாலி ராமன் கதைல, தெனாலி ராமனுக்கு காளி காட்சி அளித்தாங்களாம். எப்படின்னா அதி பயங்கர ரூபினியா, எட்டு தலையோட , மண்டையோட்டு மாலைகள் கொண்டு, பல கைகளில் பல ஆயுதம் கொண்டு வந்த காட்சி. காளியோட எட்டுத் தலையப் பார்த்ததும் பயப்படாம தெனாலி ராமன் கட கடன்னு சிரிச்சாராம். மூக்குல சளி பிடிச்சா ஒரு தலை இருக்கிற நாங்களே கஸ்டப் படறோம், எட்டுத் தலை இருக்கிற நீங்க என்ன பண்ணுவீங்கன்னு. அப்ப காளியும் தன்னை மறந்து சிரிச்சாங்களாம். அப்புறம் வரம் வரம் எல்லாம் தந்து அவரை மேலேத்துனதெல்லாம் பெரிய கதை.
ப்ரத்யங்கரா தேவி பற்றிய பாடல் ஒன்றில் “அட்டஹாஸின்யை நம: ” என்று சொல்லப் பட்டிருக்கும். பட்டைப் போன்று மென்மையாக சிரிப்பவர்க்கு பேர் லலிதா என்று சொல்வார்களாம்.
ஒரு தலை வச்சுட்டு சிலர் சிரிச்சாலே நமக்கு பகீர்னு இருக்கு. இதுல அதர்வண பத்ரகாளி என அழைக்கப் படும் பிரத்தியங்கரா தேவிக்கு ஆயிரம் தலையாம். அவங்க சிரிச்சா எப்படி இருக்கும் யோசிச்சுப் பாருங்க.
சிரிக்கும் போது தாமரைப் போல மலர்வது கமல ஹாசம். அப்பர் பாடிய பாட்டுல ஒரு வரி வரும் பாருங்க.
குனித்தப் புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
குமிழ் சிரிப்பும்..
யோசிச்சுப் பாருங்க என்ன ஒரு அழகு. அதுவும் பெண்களின் முகத்தில் பூக்கும் குமிழ் சிரிப்புக்குச் சொல்லவா வேணும் ?
சரி அதென்ன குமிழ் சிரிப்பு ?
புதுசா பிறந்தக் குழந்தையை அப்பா வச்சு கொஞ்சிட்டு இருக்காரு. தலைக்கு மேல தூக்கிக் கொஞ்சும் போது குழந்தை உச்சாப் போயிடும். அப்ப அதைப் பாக்கிற குழந்தையோட அம்மா உரத்தும் சிரிக்காம, சிரிப்பை அடக்கவும் மாட்டாம சிரிப்பாங்களே… அதை விட அழகு சிரிப்பு எங்க காணக் கிடைக்கும் ? அதாங்க குமிழ் சிரிப்பு.
இதழ்களில் இப்ப உடைஞ்சு வெளிய வரவா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சான்னு குமிழ் உடையக் காத்திருப்பது போல் காத்திருக்கும் சிரிப்பு குமிழ்சிரிப்பல்லவா ?
ஆனா கம்பர் ஒரு சிரிப்பைக் காட்டுகிறார் நமக்கு. சிரித்தது யாருன்னு தெரியுங்களா ? சிங்கம். எப்படிப் பட்ட சிங்கம். சிவந்த கண்கள் கொண்ட சிங்கம்.
‘நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்று!” என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.
இங்க இருக்கானா உன் நாராயணன் .. இங்க இங்க என்று தூணைத் தன் கதைகளினால் அகங்காரம் தட்டும் போது தூணைப் பிளந்து வெளிவந்து திசை திறந்து இந்த அண்டம் என்னும் உலகத்தை தன் நகத்தால் கீறி சிரித்ததாம் அந்தச் செங்கட்சீயம். கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியை கற்பனைச் செய்து பாருங்கள்… மனம் சிலிர்க்கிறதல்லவா ?.
நகைச்சுவை மேடைல ஒருத்தர் மிகச் சிறப்பா பல நகைச்சுவைகளை அள்ளி வழங்கிட்டிருந்தார். அப்படி பல ஜோக் சொல்லிட்டிருக்குமொது முன் வரிசைல ஒருத்தர் வாய ரொம்ப கெட்டியா மூடிக்கிட்டு நீ என்ன பண்ணாலும் உம்முன்னே உக்காந்திருந்தார். எல்லாரையும் சிரிக்க வச்சுட்டோமே இந்த மனுஷனை நாம சிரிக்க வைக்க முடியலையேன்னு எவ்வளவோ முயற்சி பண்ணார். ஹ்ம்ஹூம் அந்த மனுஷன் அசைஞ்சு குடுக்கல. விடு விடுன்னு கீழ இறங்கி வந்தார் அவர் கைய விலக்கி உன்ன சிரிக்க வைக்காம போறேனா பாருன்னு கிச்சு கிச்சு மூட்டினார். அவ்ளோ தான். அவர் வாயத் தொறந்து சிரிக்க ஆரம்பிசாரோ இல்லையோ நகைச்சுவை சொன்னவரோட சிரிப்பு காணாம போச்சு. ஏன்னா சிரிச்சவர் ரொம்ப நேரமா வெத்திலைய வாய்ல போட்டு குதப்பிக்கிட்டு அதை துப்பாம அடக்கிட்டு உக்கார்ந்திருக்கார். சிரிக்க ஆரம்பிச்ச உடனே அந்த எச்சில் ரத்தக் கரையாட்டம் நகைச்சுவையாளர் சட்டை மேல விழ அவர் நகைச்சுவை சொல்ற தொழிலையே விட்டுட்டார் அத்தோட. எனக்கு என்ன சந்தேகம்னா இந்த சிரிப்பு எந்தவகைல வருதுன்னு தான். உங்களுக்காவது தெரியுமா ?
3
தருமன் நல்லவரா ? கெட்டவரா ?
ஐயப்பன் கிருஷ்ணன்
தருமன் நல்லவரா ? கெட்டவரா ?
தருமரும் சராசரி மனிதர். அவரிடம் நல்ல குணம் மற்றவர்களை விடக் கூட இருந்தது. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடினால் தருமர் மற்றவர்களைக் காட்டிலும் மேலே நிற்கிறார்.
தருமனை விதுரன் வந்து சூதுக்கு அழைக்கிறார். தருமர் பேசும் அறங்கள் பாருங்க
அரசச் சிறப்பு, பராக்கிரமம், பலம், சேனை, அழகு, வெற்றி , குடி பிறப்பின் மேன்மை, மானம், செல்வம் பெருமை, வம்சம், இன்பம், ஓளி, நற்குணம், ஒழுக்கம், புகழ், கல்வி இது எல்லாமே அழிஞ்சு போய்டுமே சித்தப்பா. இப்படி வஞ்சனையா சூதாடக் கூப்புடறானே அந்த துரியோதனன். நம் குருகுலத்துக்குத் தகுமா.? மனக்கவலையில் தானே மாட்டிக்கொள்ளும் வகை அல்லவா இந்தச் சூதாட்டம். இப்படிக் கள்ளச் சூது ஆடறதுக்கு மொடாக் கள்ளை அப்படியே குடிச்சுட்டலாமே? பெரும் ஞானிகளும் முனிவர்களும், ரிஷிகளும் மாபதகச் செயல் என்று இந்தை சூதை ஒதுக்கி வைத்திருக்கிறார்களே. அப்படிப்பட்ட சூதுக்கு என்னை ஏன் இந்தச் சகுனி அழைக்கிறான். அப்படின்னு எல்லாம் பேசறார்.
பாஞ்சாலி சபதத்துல
………
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
‘மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயோதனன் றன்னை. 126
‘கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
சூத்திர மான சதிபல செய்தான்!
சொல்லப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான். 127
அந்த துரியன் இப்படிப் பண்றானே, எங்களுக்கு நல்லது பண்றவன் இல்லை அந்த சுயோதனன். ஏற்கனவே எங்களைக் கொல்ல திட்டம் போட்டவன். அவனால நாங்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல ஐயா… வேந்தர்கள் சூதை நாடிடலாமா ? அது தவறில்லையா?
யாரு சொல்றது இதெல்லாம் ? பின்னாடி சூதுக்கு ஒத்துக்கிட்ட அதே தருமன் தான். விதுரன் சொல்றாரு, ” தருமா எத்தனையோ நீதிய எங்கண்ணன் எடுத்து சொன்னான். அந்த புத்தி கெட்ட துரியோதனனாவது கேக்கறதாவது. என்ன என்னப்பா செய்யச் சொல்ற. நான் வெறும் அம்பு. தூதுவன். இதுல உனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச் செய்” யுன்னு சொல்லிடறார்.
நாம ஒண்ணு புரிஞ்சுக்கனும். தருமனுக்கு எதுவுமே முக்கியம் இல்லை. தாயோ தந்தையோ அண்ணன் தம்பி… யாவையும் விட தருமமே முக்கியம்.
‘தந்தையும் வரப்பணிந் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்,
சிந்தை யன்றினி இல்லை’-எது
சேரினும் நலமெனத் தெளிந்து விட்டேன்,
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131
இதுவரைக்கும் பேசிய வீரப் பேச்சு சட்டுன்னு மாறிடுச்சு. பெரியப்பா வர சொல்றார். சித்தப்பா வந்துக் கூப்புடறார். இனி நான் வரமாட்டேன் சொல்ல முடியுமா? ஒரே அந்தர்பல்ட்டி. சரி பீமா உன் கருத்து என்னன்னு கேட்க பீமன்
உர்ர் உர்ருன்னு. அவனுக்கும் துரியோதனனுக்கும் ஏழாம் பொருத்தமில்லையா ? சரியா திட்டறான். வளரும் பகையை சூது கொண்டு அல்ல, முளையிலேயே போரிட்டு அழிக்கனும். அண்ணா உனக்கு நான் சொல்ல வேண்டுமா. அப்படினு பீமன் பேச தருமன் ” பீமா என்ன பேச்சு பேசற நீ? முன்னாடி இராமன்னு ஒருத்தன் இருந்தான் தெரியுமா? அவன் என்ன செஞ்சான் தெரியுமா? அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டா அதை மறுத்து பேச மாட்டான். நீ என்னடான்னா பெரியப்பா சொல்லியனுப்ப சித்தப்பா வந்து கூப்ட அவங்க ரெண்டு பேரையும் மதிக்க மாட்டேங்கிறே ” அப்படின்னு ஒரேபோடு. அதுக்கு மேல பீமனாலும் பேச முடியல.தருமர் எல்லார் கிட்டயும் ஒபினியன் கேட்டார் அர்சுனன், நகுலன் தங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அண்ணன் சொல்லுக்கு நாங்கள் பணிவதாகச் சொல்கிறார்கள்.
சகாதேவனிடம் கேட்கிறார்.
” அண்ணா.. யார் வந்து அழைத்தது ”
” பெரியப்பா சொல்லி நம் சித்தப்பா அழைத்திருக்கிறார் ”
” அண்ணா தவறாக என்ன வேண்டாம். யார் வந்து அழைத்தது ”
” நம் பெரியப்பா சொல்லி சித்தப்பா தான் தேரில் வந்தார். என்ன சகாதேவா கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறாய் ”
” மன்னியுங்கள் அண்ணா, அழைத்தது பெரியப்பாவோ தேரில் ஏறி வந்தது சித்தப்பாவோ இல்லை”
” பின் யார் தான் அழைத்தது ?”
சகாதேவன் சொல்கிறான்.
” விதி முன்னின்று செலுத்த , அது சித்தப்பனின் பக்கத்தில் உட்கார்ந்து இங்கு வந்திருக்கிறது. விதி வெளியே நமக்காக காத்திருக்கிறது ”
எல்லார் சொன்னதையும் கேட்டு விட்டு தருமர் மறுபடி சொல்றார் பாருங்க
” நியாய வழியில் சென்றால் நமக்கு என்றுமே புகழ் தான். நம் மீது மாறாத அன்பு கொண்டிருக்கும்(??) பெரியப்பா சொல்லி அழைத்திருக்கும் போது நாம் போகாமலிருந்தால் நமக்கு மிகப் பெரிய பழி வந்து சேரும். ஆகவே நாம்
போகிறோம் ”
அண்ணன் கட்டளையை மீறி யாருக்குமே பழக்கமில்லையே. அவ்ளோ தான். எல்லாரும் பொட்டிப் படுக்கைக் கட்டி தயாராய்ட்டாங்க.
எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
‘முன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென்றிபெறுந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ?ஆண்டான் ஆணை
யன்றிஅடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே!பாண்டவர்தம் ஆவி நீயே! 143
துன்பமுரும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ?நின்பா லுள்ள
அன்புமிகையா லன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில் லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழி,நின்சொல்
வழிச்செல்வோம்,”எனக்கூறி வணங்கிச் சென்றார். 144
உலகத்துக்கு வெளிச்சம் காட்ட தோன்றிய உத்தமனல்லவா நீ அண்ணே. பாண்டவர்களின் ஆவி அல்லவா. உங்களை மீறி ஏதேனும் செய்வோமா நாங்கள். உங்களுக்கு துன்பமேற்படும் வகையில் உங்களை மறுத்துப் பேசினோம் என்று நினைத்துக்கொள்ளாதே அண்ணே. உம் அடிமை நாங்கள். இங்கயே சாசனம் எழுதிக் குடுத்துட்டாங்க. உன் அடிமை நாங்கள் நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ அப்படின்னு. உன்மேலுள்ள அன்பினால் சொன்னோம். மற்ற படி உன்னை எதிர்த்து பேசியது எங்களின் அறிவின்மையே. நீ அறியாத தர்மமா. எங்கள் சொல் பொறுத்து நீ வழி நடத்து. அவ்வழி நாங்கள் நடப்போம்னு எல்லாரும் அவர் பின்னாடி அப்படின்னு கிளம்பி நின்னுட்டாங்க.
இங்க ஏன் தருமன் ஒத்துக் கொண்டார் ? தந்தை அழைப்பை மகன் மறுக்கக் கூடாது என்பது மட்டுமல்ல. இயல்பிலேயே தருமனுக்கு சூதில் நாட்டம் உண்டு. மேலும் அரச தர்மப் படி சூதுப் போரோ அல்லது ஏதேனும் பந்தயமோ, அழைப்பை மறுத்தல் என்பது அவமானப் படுத்தலுக்குச் சமம். அல்லது தோல்வியை ஒப்புதலுக்குச் சமம். இதில் தருமன் தவறேதும் இருக்கிறதா ? இருக்கலாம் சூதில் உண்டான நாட்டம் தவறு தானே ?
4
உண்மையான காதல்
ஐயப்பன் கிருஷ்ணன்
ஒரு பெரிய கம்பெனியோட முதலாளி அவர் ஒரு அம்பத்தஞ்சு வயசுன்னு வச்சுக்கோங்களேன். அவர் ஆஃபீஸ்ல அவரைக் கண்டாவே எல்லாருக்கும் சிம்ம சொப்பனம். ஒரு முறை அவசர வேலையாக அவரைத் தேடி ஆஃபீஸ்ல இருந்து மேனேஜர் ஒருத்தர் வந்தார். அவர் வந்த நேரம் முதலாளி தன்னோட பேரனை முதுகில வச்சு ஆனை அம்பாரின்னு பாடிட்டு இருந்தார். மேனேஜருக்கு ஒரே ஆச்சரியம். என்னது இது ஆஃபீஸ்ல சும்மா சிங்கமாட்டம் இருக்கிறவரு இங்க இப்படி இருக்காரேன்னுட்டு. அவர்ட்டயே கேட்டுட்டார். சார் எப்படி இப்படி உங்களால முடியுதுன்னு கேட்டார். அதுக்கு அந்த முதலாளி சொன்ன பதில் என்ன தெரியுங்களா. வீட்டுக்கு வந்ததும் மனசைக் கழட்டி வச்சுடுவேன்னாராம்.
அதெப்படிங்க மனசை கழட்டி வைக்கறது ? அதென்ன கழுத்துல போட்டிருக்கிற செயினா ? இல்லை கைல கட்டி இருக்கிற கடிகாரமா ? அது ஒரு மனப் பயிற்சி. தான் இருக்கும் இடத்துக்கு ஏற்ற மாதிரி மனதைப் பக்குவப் படுத்திக் கொள்ளுவது. அதாவது ஒரு டாக்டர் அறுவை சிகிச்சை செய்யும் அதே மனநிலையிலே எப்போதும் இருந்தால் என்னாகும் ? அல்லது ஒரு காவல் துறை அதிகாரி தன் குழந்தையிடம் சென்று குற்றவாளிகளிடம் நடப்பது போல விறைப்பாக நடந்துக் கொள்ள முடியாதில்லையா ? அது தான். பொதுவாகவே சிலருக்கு இந்தத் தன்மை இருக்கும். ஆனால் சிலர் இருக்காங்கங்க. எப்போதும் கஞ்சிய குடிச்சுட்டு விறைப்பாகவே இருப்பாங்க. அப்படி இலகுவான மனநிலை இல்லை என்றால் அது மன நோயில் சென்று முடியும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
புரட்சி புரட்சி என்று இருப்பவர்களாகட்டும் இலக்கியம் இலக்கியம் என்று இருப்பவர்களாகட்டும். அஞ்சு வயசு குழந்தையை வைத்து ” புரட்சி ஓங்குக” என்று போதிப்பதும், ” ஜீரோ டிகிரி” கதையை சொல்லுவதும் என ஒரு விளிம்பில் வாழ்க்கையை கடத்துபவர்கள் தேவையான நேரத்தில் மனதைக் கழட்டி வைக்கா விட்டால் அது பின்னாளில் அவருக்கும் குழந்தைக்குமே பாதிப்பாக முடியும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் கூற்று. அதே நேரத்தில் நல்ல விஷயங்களை மனதில் விதைத்து வைத்தால் அவை வளர்ந்து விருட்சமாகி பலன் தரும் என்கிறார்கள். அதாவது எதுவாக நீ மாற நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறிப் போவாய் என்று சொல்வார்களே அது தான்.
சீதையும் பற்றி ஒரு செவி வழிக் கதை உண்டு. வனவாசத்தின் போது ஒருமுறை ஸ்ரீராமனும் சீதா பிராட்டியாரும் தனித்திருக்கையில் மரத்தின் மீது ஒரு பட்டுப் பூச்சிக் கூட்டைப் பார்த்தாராம். அந்தக் கூட்டில் இருந்து புழுவாக இருந்தது வெளியே பூச்சியாய் பறந்து சென்றது. அதைப் பார்த்ததும் சீதா பிராட்டியார் அழ ஆரம்பித்துவிட்டாராம். ஸ்ரீராமனுக்கு என்ன ஏது என்று தெரியாமல் கொஞ்சம் சிரமப் பட்டு பிராட்டியாரை சமாதானம் செய்து என்ன காரணம் என்று கேட்டாராம். அப்போது பிராட்டியார் சொன்னாராம்..
“பட்டுப் புழு, தான் பட்டுப் பூச்சியாக வேண்டும் என்று சதா நினைத்துக் கொண்டிருந்ததால் அது பூச்சியாகி இப்போஇது பறந்து விட்டது ”
“ஆம் அதற்கென்ன இப்போது”
“என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் .. சதா ஸ்ரீராமா என்று உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் நான் ஒரு நாள் நீங்களாகவே மாறிப்போய்விடுவேனே அதனால் தான் எனக்கு அழுகை வந்துவிட்டது”
“அப்படியும் ஏதும் பிரச்சினை வராது, காரணம் நான் சதா சீதா சீதா என்று உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் நானும் சீதாவாகி இருப்பேன். ஆக மொத்தத்தில் நம் வாழ்வில் எந்த மாற்றமும் இருக்காது”
இதுவல்லவா உண்மையானக் காதல்?
5
தரும அடி!
ஐயப்பன் கிருஷ்ணன்
ஒருத்தரு ஆஃபீஸ் கிளம்பற நேரமா பார்த்து அவங்க சக தர்ம பத்தினி சொன்னாங்க.
” இன்னைக்கு மாசம் 1ம் தேதி ஆச்சுது நாவகம் இருக்கா ? ”
“ஹ்ம்ம்”
” சம்பளத் தேதி நாவகம் இருக்கா ”
” ஹ்ம்ம் ”
” எனக்கு ரெண்டு பவுன்ல தோடு வாங்கனும்னு சொல்லிருந்தேனே நாவகம் இருக்கா ”
” ஏண்டி புள்ளைக்கு ஸ்கூலு ஃபீஸ் கட்டலையே இன்னும் ”
” ஆமா நான் எப்ப எனக்கு எதாவது வேணும்னு கேக்கறேன் பாருங்க அப்ப தான் உங்களுக்கு புள்ளைக்கு ஃபீஸு, கரண்ட்டு பில்லு எல்லாம் நாவகம் வரும் ”
” தங்கம் விக்கிற வெலையில இப்ப எப்படி… ”
” நான் கெளம்பறேன் எங்கம்மா ஊட்டுக்கு…. எல்லாத்துக்கும் இப்படியே எறைஞ்சுக்கினே இருந்தேன்னா என் உசுரே போய்டும் ”
” இப்ப என்ன நான் ஆஃபீஸ் போகவா வேண்டாமா ”
” போங்க ஆஃபீஸ்க்குன்னா போங்க எங்கயாவது போங்க.. நான் போய் தொலையறேன் அப்ப தான் உங்க எல்லாருக்கும் நிம்மதி ”
” சாயந்திரம் வந்து பேசறேன்… போதுமா ”
” வந்தா வாங்க வராட்டி போங்க ”
இப்படியே ஆஃபீஸ் போக முடியுங்களா ? கெஞ்சி தாஜா பண்ணி எப்படியோ கத்தி முடிச்ச இந்த உளைச்சல்ல அவருக்கு ஆஃபீஸு போறதுக்கு லேட்டாயிடுச்சு. ஆத்திரமோ ஆத்திரம். அதே ஆத்திரத்துல பைக்க உதைச்சா பெட்ரோல் இல்லாம வண்டியும் ஸ்டார்ட் ஆகல. அவசர அவசரமா ஆட்டோ பிடிக்க ஓடுனாரு. அங்க வழியில ஒருத்தனை நாலு பேரு போட்டு சாத்து சாத்துன்னு சாத்திட்டு இருந்தாங்க. இவரு விடு விடுன்னு போனார். என்ன ஏதுன்னு கேக்கல.
” இவன் எப்பவுமே இப்படித்தான் சார் ” அப்படின்னு தன் பங்குக்கு தானமா நாலு அடிய அடிச்சுட்டு கெளம்பிட்டார். ஏன்னா வீட்ல அடிக்க முடியாது பாருங்க. ஏன்னா பாவம் இவர் கை உடைஞ்ச பின்னாடி வேலை செய்ய முடியாதுல்ல. வீட்டு ஆத்திரத்தை வெளியாளுக்கு தருமமா, இப்படி அவர் தானமா குடுத்த அந்த அடி தான் தரும அடின்னு நினைக்கிறேன். மேலும் இது மாதிரி தரும அடி குடுக்கறதும் வாங்கறதும் நமக்கென்ன புதுசுங்களா ?
முந்தைய கட்சி செஞ்சதுன்னு இப்போதைய ஆட்சியாளர்கள் தூக்கி எறியறதும், அடுத்து வர்றவர் இவர் செஞ்சதை தூக்கி எறியறதுமா பந்தாடும்போது நடுவில தரும அடி வாங்கறது நாம தானுங்களே. முன்னாடி ஆட்சியில வந்த புத்தகங்கள் சரியில்லைன்னு மூணு மாசத்துக்கும் மேலா அவதிப்படுற நம்ம மக்கள் வாங்குறது தரும அடி இல்லாம வேற என்ன?
இப்படி தரும அடி எல்லாம் என்னமோ இப்பத் தான் வந்ததுன்னு நினைக்காதீங்க. புராண காலத்துலயே இருந்திருக்கு. மதுரையில வைகையாறு உடைப்பெடுத்து ஓடுது. வீட்டுக்கு ஒருத்தர் கட்டாயமா வந்து கரைய அடைக்கச் சொல்லி ஆணையிட்டுப் போறார் பாண்டிய மன்னர். அந்த நேரத்துல் ஒரு விடலைப் பையனாட்டம் ஒருத்தர் உடைப்பை அடைக்கிறேன்னு மண்ணெடுக்கிறார். அடைப்பில போடறேன்னு போட்டு உடைப்பை பெருசாக்குறார். நடுவில இடுப்பில் கட்டி வைச்ச பிட்டு எடுத்து திங்கறார். எல்லாருக்கும் தர்றார். கைக் கொட்டிச் சிரிக்கிறார். எல்லாருக்கும் பயம் அது பைத்தியமோன்னு. அது யாருன்னு விசாரிச்சா ஒரு பிட்டு சுடும் பாட்டி தன்னால முடியலைன்னு வேலைக்கு வச்சப் பையனாம்.
கொட்டு மண் சுமந்து செல்வர் கூடையை உடைப்பில் வீழத்
தட்டுவார் எடுப்பார் போலத் தாவி வீழ்ந்து அலையில் ஓட
விட்டு ஒரு மரத்தைப் பற்றி மிதப்பார் திண் கரையில் ஏற
முட்டுவார் சுழியில் ஆழ்வார் சேண் சென்று முளைப்பார் மீள்வர்.
காவலாளிகள் அவரைப் பார்த்த மாத்திரத்துல அவரை எதிர்க்க தோணலை. அப்படி ஒரு தேஜஸு. ஓடிப்போயி மன்னர் கிட்ட சொல்றாங்க. மன்னரும் வந்து பாக்கறார் அவனோட சேட்டையை. மன்னர் அவரைப் பார்த்ததும் சுரீர்னு கோவம் தலைக்கேறிடுச்சு. கையில இருந்த பிரம்பை எடுத்து போட்டார் ஒரு போடு அவர் மேல.
கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு வாங்கி
அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக்
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு
மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த சோதி.
பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது
ஆண் தகை அமைச்சர் மேனி மேல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது
ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம்
பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு.
பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம் படைத்த நாள் மீனும்
இரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும் ஐம் பூதமும் காரும்
சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன் அடித் தழும்பு.
வானவர் மனிதர் நரகர் புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி
ஆன பல் சரமும் மலை மரம் கொடி புல் ஆதி ஆம் அசரமும் பட்ட
ஊன் அடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிர் இல் ஒவியமும்
தான் அடி பட்ட சரா சர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு.
அடிச்சது அவரைத்தான். ஆனா வலியால துடிச்சது உலக ஜீவராசிகள் அத்தனையும். அப்பறம் தான் தெரிஞ்சது அது சிவ பெருமான்னு. இது மாதிரி முடியாதவங்களை வேலை செய்ய வைக்கிற பாண்டிய நாடு எப்படி நல்லா இருக்கும் ? அதை மன்னனுக்கு உணர்த்த அவர் வந்து நடிச்சாராம்.
இதை அருமையாக கண்ணதாசன் தன் எளிய இனிய தமிழில் பாடலாய் வடிவமைத்திருக்கிறார். அதில் இருந்து ஒரு பகுதி பார்ப்போம்
”
ஆடல் காணிரோ…. விளையாடல் காணீரோ
…
ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே
கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)
”
பாருங்க…. தப்பு பண்ணது மன்னன். இந்த சிவபெருமான் என்ன செஞ்சிருக்கனும் ? மன்னனை தண்டிச்சிருக்கனும். அது அவர் பண்ணலை. அடைப்பை உடைச்சு உடைச்சு விளையாடினது விடலைப் பையன். அடிச்சது மன்னன். ஆனா அடி ஏன் எல்லாருக்கும் விழுந்துச்சுன்னு கேட்டா…. எனக்கும் மட்டுமா விழனும் அடி… எப்ப பார்த்தாலும் எல்லா உயிர்லயும் இருக்கேன்னு சொல்றீங்களே…. நான் வாங்குனா போதுமா… நீங்களும் வாங்குங்கன்னு தான் வாங்குன அடியை தருமம் தவறாம உலகத்து உயிரனைத்திற்கும் பகிர்ந்துக்கிட்டாராம் பெருமான். இப்ப தெரியுதுங்களா தரும அடிய ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் யாருன்னு ?
6
பாதகம் செய்பவரைக் கண்டால்
ஐயப்பன் கிருஷ்ணன்
போன வாரம் விளையாடிக் கொண்டிருந்த மகள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வந்து நின்றா ள். எது கேட்டாலும் ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததால் எனக்கு சந்தேகம் வந்து விசாரித்ததில் விளையாடும் போது கால் தடுக்கி விழுந்ததில் முட்டியில் லேசாய் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாய் இது போன்று ஏதும் நடந்தால் உடனடியாக என்னிடம் சொல்லுபவள் இப்படி மறைக்க என்ன காரணம் ?
அடிப்பட்டதைப் பார்த்த ஒரு பெருசு ” விழுந்தியா… போ உங்க அப்பா கொம்பு வச்சுட்டு இருக்காங்க… கால்லயே ரெண்டு போடறாங்க. பார்த்து விளையாடறதில்ல ? ” என்று சொல்லி இருக்கிறார்கள். என்ன மாதிரியான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று யோசிக்க வைத்தது. குழந்தைகளுக்குப் படும் காயங்கள் என்றில்லை, பொதுவாகவே இது போன்றவற்றை பெற்றோர்களுக்கு சொல்லாமல் மறைக்கத் தூண்டும் இது போன்ற பேச்சுகள் அந்த குழந்தைகள் எதிர்காலம் தடம் மாறும் என்பது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை ? இவர்கள் போன்றவர்களின் குழந்தைகள் எப்படி வளர்ந்திருக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது.
நேரடியாக அப்படிச் சொன்னவரிடம் சென்று கொஞ்சம் காட்டமாய் பேசிவிட்டு வந்தேன். இதுவரை என் பெண் என்னிடம் பொய் சொல்லி நின்றதில்லை. அப்படியான சூழ்நிலையை நான் அவளுக்கு உருவாக்கவில்லை. ஆனால் உங்களால் இப்போது பொய் சொல்லி நிற்கிறாள். இதற்கு முழு காரணம் நீங்களே என்றேன். அவர் முகம் சற்றே கறுத்தது. பின் என்னையே குற்றம் சொன்னார். ” உன் பெண் பொய் சொன்னால் என்னிடம் ஏன் வந்து கத்தற, போ உன் பொண்ணை கண்டிச்சு வளர்த்துக்கோ ” என்றார். அதற்கு மேல் அவரிடம் பேசுவது உசிதமல்ல என்று திரும்பி வந்துவிட்டேன்.
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் – நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
என்ன ஒரு அருமையான வரிகள் இல்லையா இவை ?
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே
அன்னை எப்படி வளர்த்தென்ன, சுற்றி இருக்கும் சூழல் இப்படி இருந்தால் அந்த சமூகம் எப்படி மேம்படும் என்ற கவலை எழுகிறது. இருந்தும் பெற்றோர்கள் உரிய கவனிப்பு பிள்ளைகளிடம் தரும் பட்சத்தில் இவை போன்ற பிரச்சினைகளை புறந்தள்ளி குழந்தைகளை வளர்க்க முடியும்.
பெரியவர்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணல் நபிகள் நாயகம் வாழ்க்கையில் இருந்து ஒரு எடுத்துக் காட்டு சொல்வதுண்டு.
ஒரு பெண் தன் குழந்தையை நபிகளாரிடம் அழைத்து வந்தார்.
” ஐயா, இவன் எப்போதும் இனிப்புப் பண்டங்களைத் தின்று கொண்டே இருக்கிறான். அதனால் சரியாக பசி எடுப்பதில்லை, இவன் பற்கள் பாழாகின்றன. நீங்கள் தான் சரியான புத்திமதி சொல்லி இவனைத் திருத்த வேண்டும் ” என்றார்.
நபிகளார் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார். மறுநாள் சென்ற போது அந்தப் பையனுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கி அவனை சரி படுத்தினார்,
அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
” ஐயா, இதை நீங்கள் நேற்றே செய்திருக்கலாமே? ”
நபிகளார் சொன்னார்.
“நேற்று நீங்கள் அழைத்து வந்த போது நான் கொஞ்சம் இனிப்பைத் தின்று கொண்டிருந்தேன். நான் இனிப்புத் தின்று கொண்டே, குழந்தைக்கு இப்படிச் செய்யாதே என்று அறிவுரைக் கூறினால் அது சரிபடாதல்லவா ? குழந்தை ஏற்க மாட்டானல்லவா ? அதனால் தான் இன்று வரச் சொன்னேன். நாம் செய்வதைத் தானே குழந்தைகள் திரும்பச் செய்கின்றன, ஆகவே முதலில் நம்மை சரி செய்துக் கொள்வது நம் கடமை அல்லவா ”
அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் அல்லவா ?
7
வார்த்தைகள்
ஐயப்பன் கிருஷ்ணன்
நாம் பேசும் வார்த்தைகள் நல்லதாகவே பேசவேண்டும் என்பதை முன்னோர்கள் அடிக்கடி சொல்லுவதில் எவ்வளவு உள்ளர்த்தம் இருக்கிறது இல்லையா ? பெரியவங்க வீட்ல குழந்தைங்கள திட்றதுமே கூட வாழ்த்தா தான் இருக்கும்.
அந்த நாசமத்து போறவன் இருக்கானே… இன்னும் தூங்கிட்டு இருக்கான் அப்படிம்பாங்க. நாசம் அற்று போகிறவன் என்று வைவதைப் போ வாழ்த்தும் பாங்கு நம் முன்னோர்களிடம் இருந்தது. இப்போது எடுத்த எடுப்பிலேயே கெட்டவார்த்தை பேசக் கற்றுக் கொள்ளும் சமூகம் எப்படி இருக்கும் ?
அதாவது தவறாய் மற்றவர்களை விமரிசித்துப் பேசும் வார்த்தைகளில் கூட கண்ணியம் தேவைப் படுகிறது. திருக்குறள் சொல்வதும் அதைத் தானே ?
தீயினால் சுட்டப்புண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
ஒருத்தர் நம்மை நாலு அடி அடிச்சுட்டாலுமே மனசு கொஞ்ச நாள்ல மறந்திடும். ஆனா வாய் வார்த்தையாய் நாம் சொல்லும் சொற்கள் ஏற்படுத்தும் இரணம் எத்தனை காலமும் ஆறாதது. இராமாயணத்துல இராமனைப் போல ஒரு உத்தமனைக் காண முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எதிரி வந்தாள். மந்தரை என்பவள். சிறுவயதில் இராமன் கூனியின் வளைந்த முதுகை கேலி செய்து அதன் மேல் வில்லில் சிறு சிறு மண் உருண்டைகளை வைத்து எறிவானாம். அதை கம்பர் சொல்லும் அழகைப் பாருங்கள்.
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 49
இந்த சொல்நயத்தை கவனியுங்கள். ” பண்டை நாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டை ” என்கிறார் கம்பர். பொதுவாக வில்லில் இருந்து “எதுவும்” எய்யப் படும் அல்லது எறியப்படும். ஆனால் இவர் ” உமிழ் உண்டை” என்கிறார்.
எய்யப்படுவதும் எறியப்படுவதும் உடலில் காயம் ஏற்படுத்தும். ஆனால் “உமிழ்வது” மனதில் காயத்தை ஏற்படுத்தும். இராமன் வில்லில் இருந்து உமிழப் பட்ட உண்டைகள் கூனிக்கு உடலளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் மனதளவில் அதிக காயம் ஏற்படுத்தியது. அதை எண்ணினாள். இராமனுக்கு தீங்கு செய்ய ஆரம்பித்தாள். வார்த்தைகள் வாய் வார்த்தைகளாக மட்டுமே இல்லை. செயலாகவும் வெளிப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம்.
வெறும் குழந்தை விளையாட்டுத்தானே என்று கூனியால் ஏற்க முடியாமல் போனதுக்கு காரணம் அவளின் ஊனத்தை அவர்கள் குத்திக் காட்டினார்கள் என்று தானிருக்க வேண்டும். ஆனால் இதே கம்பரோ மந்தரையை கூனி என்கிறார் பாருங்கள்.
அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். 47
அயோத்தியா மாநகரம் பொன்னெழில் பூண்டு குலுங்குகிறதாம். ஆனால் மனத்தில் கூனல் கொண்ட மந்தரை அதைக் கண்டு வெறுப்பும் கோபமும் கொண்ட் நின்றாளாம். கம்பனின் சொல்லாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவையே இல்லையா ?.
இது போலவே திரு நீல கண்டர் பத்தியும் ஒரு கதை உண்டு. திரு நீலகண்டர் ஒரு குயவர். சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தரும் பணியை செய்து கொண்டிருக்கிருப்பவர். ஒரு முறை விதி வசத்தால் மதி இழந்து பரத்தையர் வீடு சென்று தன் வீடு திரும்பும் போது அவரின் மனைவி கோபத்தில் ” எம்மைத் தீண்டாதீர் ” திருநீல கண்டம் என்று இறைவன் மேல் ஆணையிட்டு விடுகிறார்.
இந்த ஒரு வார்த்தை அவரின் வாழ்வை மாற்றியது. எம்மை என்று பன்மையில் சொன்னதினால் இனி எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டேன் அப்படின்னு உறுதியா நிற்கிறார். பின்பு இறைவன் அவரிடம் திருவிளையாடல் நடத்தி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது தனிக் கதை. இங்கே சொல்ல வந்தது இது தான். நாம் சொல்லும் வார்த்தைகள் நன்றோ தீதோ அதற்குண்டான பலன் கண்டிப்பாக உண்டு. ஆகவே நாம எப்பவுமே சொல்லும் செயலும் நல்ல விதத்தில் அமைத்துக் கொண்டால் அதற்கு எப்போதுமே பலன் உண்டு என்பது பெரியவர்களின் வாக்கு.
ஒரு வீட்டுக்கு விருந்தாளி வரார். வந்ததுமே அவருக்கு பலகாரம் காஃபி அது இதுன்னு குடுத்து உபசரிக்கிறாங்க. அப்ப அந்த வீட்டுப் பையன் அவங்கப்பா காதுல கிசுகிசுக்கறான். உடனே அவங்கப்பா என்னடா இது கெட்டப் பழக்கம், நாலு பேர் முன்னாடி. என்ன விஷயம் சொல்லு அப்படின்னார். அப்ப அந்தப் பையன் சொன்ன வார்த்தைய கேட்ட அந்த விருந்தாளி அதுக்கப்புறம் அந்த வீட்டுப் பக்கம் திரும்பவே இல்லைன்னா பாருங்களேன். அப்படி என்ன சொன்னான் ? அவங்க அப்பாவப் பார்த்து
” இன்னைக்கு ஒரு தீனிப் பண்டாரம் வருதுன்னு சொன்னியே அது இந்த மாமா தானா ” அப்படின்னு கேட்டானாம்.
8
ஆசை முகம் மறந்து போச்சே!.
ஐயப்பன் கிருஷ்ணன்
ஆசை முகம் மறந்து போச்சே இதை
யாரிடம் சொல்வேனடி தோழி…
பாரதியின் இந்தப் பாடலை இணையத்தில் பகிர்ந்த போது நண்பர் ஒருவர் கேட்டார். அதென்னங்க ஆசை முகம் நினைவு முகம்? பாசம் இருக்குதாம் ஆனா முகம் மறந்து போச்சாம். என்ன கதைங்க இதுன்னு.
ஒருவர் மேல் ஆசை வைப்பதற்கும் நேசம் கொள்வதற்கும் உருவம் ஒரு தடையா என்ன ? மாபாரதமும் இராமாயாணமும் இல்லை என்று தெளிவாகவே சொல்லுகிறது.
இதென்ன மாபாரதக் கதை என்றால்
வில்லி புத்தூராரார் எழுதுகிறார். மஹா பாரதத்துல ஒரு சருக்கம் பழம் பொருந்து சருக்கம். அதுல அமித்திர முனிவர்னு ஒருத்தர் தொடர்ந்து உலக நன்மைக்காக தவம் செய்பவர். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை தன் தவத்தைக் கலைத்து பின் அருகிருக்கும் மரத்தில் இருக்கும் நெல்லிக் கனி அதுவும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பழுக்கும் பழம், அதை உண்டு மீண்டும் தன் தவத்தை தொடங்குவார். ( ஒரு ஃபுல் மீல்ஸ் கட்டிட்டு தவம் செய்யப்பிடாதா ? ).
அந்தப் பக்கம் பாண்டவங்க வராங்க. அங்க அந்த பழம் பார்த்த உடனே திரவுபதி ” எனக்கு அந்தப் பழம் வேண்டும்”னு அருச்சுனன் கிட்ட கேக்கறாங்க. இந்த பெண்களுக்கு இதே வேலையாப் போச்சுங்க. எதாவது ஏடா கூடமா ஆசைப் பட்டு அதை கணவர்களிடம் கேட்டுவாங்கி அப்புறம் துன்பத்துக்கு உள்ளாகறது. வேண்டாம்னா விடுவாங்களா ? இருக்கவே இருக்கு பலவித ஆயுதம். கடைசியா கண்ணீர் பிரம்மாஸ்த்திரம்.
“இக் கனி எனக்கு நீ நல்கு!’என்று, வில் எடுத்துக்கொண்ட,
மைக் கனிக் களவு மானும் வடிவுடை, விசயனோடு
மெய்க் கனிவு உடைமை தோன்ற, விளம்பினாள்-வீசு தென்றல்
முக் கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை.
எனக்கு அந்த பழம் வேணுங்கறாங்க. திரவுபதி கேட்க, அதை அர்ஜ்ஜுனன் மறுப்பதாவது. அதுவும் போயும் ஒரு நெல்லிக் கனி
இதைப் பார்த்த அமித்திர முனிவர் பதறி இது பன்னிரண்டு வருட காத்திருப்பு, அவரோட அடுத்த பன்னிரண்டு வருடத்திற்கான உணவு அப்படின்னு சொல்றார் . உண்மை தெரிஞ்சதும் பாண்டவர்கள் பதறுகிறார்கள் . மறுபடி மரத்தில் பொருந்த வேண்டும் இல்லையெனில் முனிவர் திங்க மாட்டார். அந்த பாவம் இவங்களைச் சேரும். ஒருவேளை முனிவர் சாபம் குடுத்தாலும் குடுத்துடுவாரு. ஆக மொத்தத்துல ரொம்ப ஆபத்துல இருக்காங்க.
பின்பு சகாதேவனின் ஆலோசனைப் படி கண்ணனைக் கூப்டறாங்க. கேட்டவர் குரலுக்கு கண்ணன் வந்தான். இந்த பழம் நல்லா இருக்கே ஏன் சாப்டாம கைல வச்சிருக்கீங்கன்னு கண்ணன் சொல்றான்.
“அது இல்லை கண்ணா அதில் ஒரு பிரச்சினை”
” என்ன எப்படி சமமாய் பங்கிடுவதென்றா? எடுத்துவாருங்கள் கத்தியை நான் பங்கீடு செய்கிறேன்.”
” அய்யோ கண்ணா விளையாட நேரமில்லை. இது அமித்ர முனிவருக்கானது” அப்படின்னு சொல்லி முழுக் கதையும் சொல்றாங்க.
கண்ணன் மேலும் விளையாடுகிறான்.
” தருமா, இனி துரியோதனனுடன் சண்டை போட்டு தானா முடிவு தெரிய வேண்டும், அமித்திர முனிவர் சாபம் ஒன்று போதுமே பாண்டவர்கள் அழிவிற்கு ”
” கண்ணா, நீயே துணை. நீ தான் வழி காட்ட வேண்டும்”
” சரி சரி. இந்தப் பழம் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் உள்ளத்தில் உறைந்திருக்கும் உண்மையை சொல்லுங்கள். உற்றது சொன்னால் அற்றது பொருந்தும் ”
ஒவ்வொருத்தரும் சொல்லனும்.
தருமன் சொல்றான் – ” துரியோதனன் மேல எனக்கு கோபம் இல்லை கண்ணா. முக்கியமா எனக்கு நான் ஜெயிக்கனுங்கற ஆசை இல்லை கண்ணா எனக்கு தர்மம் ஜெயிக்கனும்”. பழம் கொஞ்சம் மேல உசந்து போச்சுது.
அடுத்து பீமனின் சொல்லுவதைப் பாருங்க.
‘பிறர் மனையவரைப் பெற்ற தாய் எனவும், பிறர்
பொருள் எட்டியே எனவும்,
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர்
துயர் என் துயர் எனவும்,
இறுதியே வரினும், என் மனக் கிடக்கை, எம்பிரான்! இவை’
என உரைத்தான்-
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர்
வாயுவின் மைந்தன்.
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. பிறன்மனை நோக்கினேல்லன்னன் நான். பாருங்க. இவ்வளவு பெரிய திடகாத்திரமான ஆளு பல ஆயிரம் ஆனை பலம் கொண்டவன். அவன் சொல்றது பிறர் பொருள் வேண்டேன். பிறன் மனை வேண்டேன். பிறர் வசை வேண்டேன். ஆனா பிறர் துயரத்தை விரும்பி என் துயரென ஏற்றுக் கொள்வேன்.
அது தாங்க பீமன். என்னைப் பொருத்த வரையில் மஹா பாரதத்தில் தருமனைவிட, அர்சுனனை விட பீமன் உண்மையில் உத்தமன். ஒரு ஃபாஸ்ட் ஃபார்வார்ட் செஞ்சு நேரடியா பாஞ்சாலி என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.
பழம் மரத்தில் பொருந்துவதற்கு சற்றே தான் இடைவெளி. கடைசியாக பாஞ்சாலியிடம் கேட்கிறான் கண்ணன் அவளின் உள்ளக் கிடக்கையைச் சொல்லச் சொல்லி.
எனக்கென்ன தனியா கருத்திருக்கு, பாண்டவர் ஐவரின் நலனைத் தவிர வேற என்ன கேட்கப் போறேன்னு சொல்றாங்க. பழம் ஒட்ட மாட்டேங்குது. கண்ணன் கொக்கிப் போடறான். பாரும்மா நீ இப்படி பொய் சொல்லிட்டு இருந்தா முனிவர் அப்புறம் சாபம் குடுத்துடுவார். அப்புறம் என்னை நொந்து பிரயோசனம் இல்லைன்னு.
அதுக்கு பாஞ்சாலி சொல்றாங்க. ஐந்து பொறிகள் போல, ஐந்து புலன்களைப் எனக்கு கணவன்மார்கள் இருந்தாலும் ஆறாவதாய் வேறு ஒருவன் எனக்கு புருஷனா இல்லையேன்னு என் மனம் உருகும் அப்படின்னாங்க. உடனே பழம் மேல ஒட்டிக்கிச்சாம்.
“ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிக ளாகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேரிதயம்”
அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்.
பூமியில் பெண்கள் தான் விரும்பியது குணங்கள் கொண்ட கணவன் கிடைக்காமல் போனாலும் தான் கொண்ட ஒரு கணவனுடனே வாழ்வர். ஆனால் ஐம்பொறிகளைப் போல, ஐம்புலன்களைப் போல ஐந்து கணவன்கள் இருக்க வேறொரு கணவன் வேண்டுமா ? ஆம் வேண்டுகிறது என் உள்ளம். இந்த ஐவரைத் தாண்டிய ஆறாவாதாய் ஒரு ஆடவனை மனம் நாடுகிறது.
சிலர் தம் அரைகுறை அறிவாலும், இழிவு நோக்கிலும் அல்லது அறியாமையினாலுன் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அந்த ஆறாவது புருஷன் “கர்ணன்” என்று கூறுவார்கள். கவனிக்க – மேல் சொன்னப் பாட்டில் எங்கேயுமே கர்ணன் என்ற பெயர் குறிப்பிடப் படவில்லை. வேறொரு ஆடவனின் பெயரும் சொல்லப் படவில்லை. மேலும் வசிட்டனின் மனைவியான அருந்ததிக்கு இணையானவள் என்று வில்லிப்புத்தூரார் சொல்லி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக அந்த ஆறாவது புருஷன் என்று பாஞ்சாலி சொன்னது யாரை ? அந்த ஆறாவது புருஷனுக்கும் பாரதி சொல்லும் ஆசை முகத்துக்கும் என்ன சம்பந்தம் ?
அந்த ஆறாவது புருஷன் கர்ணன் ஏன் இல்லைங்கறது பத்தி யோசிப்போம்.
கர்ணனை ஒரே அடியாக இழிவுபடுத்தவில்லை இதிகாசம். அவனுக்குறிய சில நல்ல குணங்களை எடுத்துக் கூறத் தவறவில்லை. அவன் ஈகை, கருணை என பலவும் சொல்கிறது கூடவே வீரமும்.
ஆனாலும் கர்ணன் பொய் சொல்லி வில் வித்தை கற்றவன். அங்கே ஒழுக்கம் தவறிப்போனது. கர்ணனின் பிறப்பைக் காட்டி துரோணர் அத்திர வித்தைகளை கற்று தர மறுத்தார். அதன் காரணமாய் பரசுராமரிடம் பொய் சொன்னான். பரசுராமரின் சபதம் தெரிந்திருந்தும் அதை செய்தது தவறு. ஒழுக்கம் தவறிய செயலே ஆகும். விராட பருவத்தில் அர்ஜுனன் ஒருவனாய் நின்று அனைவரையும் துரத்தி அடித்தான். அதில் கர்ணனும் அடங்குவான். அந்த நேரத்தில் விராட புத்திரன் அனைத்து மன்னர்களின் உடைகளை வெற்றிச்சின்னமாக எடுத்து செல்லுவான்.
கர்ணன் பாதி யுத்தத்திலேயே களத்தை விட்டு ஓடிப்போகிறான். ஆக விராடன் மகன் எடுத்துச் செல்லும் உடைகளில் கர்ணனின் உடைகள் அடங்காது.யுத்தகளத்தில் அபிமன்யுவின் அத்திரங்களுக்குப் பயந்து தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் இவனும் ஒருவன்.
எல்லாவற்றிற்கும் மேலாக சுயம்வரத்தின் போது கர்ணன் வில் வளைத்து நாணேற்ற உளுந்தளவு இடைவெளி தான் மிச்சம். பார்க்கும் பாஞ்சாலி பதறுகிறாள். ” சூதன் மகன் வில்லில் நாணேற்றினாலும் இவனை நான் மணக்க மாட்டேன்” என்று சபையறிய கூறுகிறாள். கர்ணனும் தோல்வியைத் தழுவி அவமானத்தில் வீழ்கிறான். அதன் காரணமாகவே சூதுப் போரின் போது துகில் உரிக என்று துரியனுக்கு எடுத்துக் கொடுத்து உற்சாகமூட்டி மேலும் செய் என்று துச்சாதனனிடம் ஊக்கமளித்தவன். உலகத்திலேயே கர்ணனை அதிகம் வெறுத்தவர்களில் முதலிடம் என்றால் அது பாஞ்சாலிக்குத்தான் இருக்க வேண்டும். தன்னை இப்படி எல்லாம் அவமானப்படுத்திய ஒருவனை ஒரு பெண் நினைத்தால் என்று சொன்னால் இந்த கதையை எந்த வகையில் சேர்ப்பது?
அருச்சுனன் பற்றிய பிம்பம் அவளுக்குள் உருவேற்றப் பட்டிருக்கிறது. அர்ச்சுனன் பற்றிய ஆசை முகம் அவளுக்குள் அவளால் வரையப் பட்டது. அவள் மனதில் அர்ச்சுனன் பெரிய வில்லாளன். அவனை எதிர்த்து நிற்க ஒருவனும் கிடையாது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொருவருக்கும் தன் கணவன் குறித்த பிம்பம் மனதில் இருக்கும். வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்து அசதியா சாப்ட உக்காருவான். அப்ப சாப்பாடு எடுத்து வச்சுட்டு அம்மினி சொல்லுவாங்க.
” ஹ்ம்ம்.. அங்க அங்க பொண்டாட்டிக்கு எப்படி எல்லாம் நகையும் நட்டுமா வாங்கி வந்து குடுக்குறாங்க… நீங்களும் இருக்கீங்களே… சாப்டுங்க”
அவனா அசருவான்? மெல்ல பிசைஞ்சு ஒரு வாய் சோறு உள்ள போகும். அடுத்து
” எங்க மாமாவுக்கு என்ன குடுக்கறதா சொன்னாங்க. இப்ப தெரியுமா, அவரு தம் பொண்டாட்டிக்கு பட்டுப் பொடவ என்ன, நெக்லஸ் வாங்கிக் குடுக்கறதென்ன… என்னையப் புடிச்சு இந்த பாழுங் கெணத்துல தள்ளிட்டாங்க … சாப்டுங்க ”
கொஞ்சம் லைட்டா கலக்கத்தோட அய்யா ரெண்டாவது வாய் சோறு கையில எடுப்பார்.
” நான் என்ன கேட்டேன், காரு பங்களான்னா கேட்டேன். போத்தீஸ்ல ரெண்டு பட்டுப் புடவ, ஒரு பத்து சவரன்ல அட்டிகை இது கூட வாங்கிக் குடுக்கத் துப்பில்ல. எதிர் வீட்டுக் கோமளாவுக்கு அவங்க புருஷன் இருவது பவுன்ல நகைப் போட்டாராம். நேத்து பீத்திக்கிட்டா… ஹ்ம்ம்… நீங்க சாப்டுங்க ”
இனி சாப்பாடு இறங்கும் ?
அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற பிம்பம் இருக்கிறது. அந்த பிம்பத்தின் பிரதிகளை தன் கணவனிடம் எதிர்
பார்க்கிறாள்.
காட்டில் தனித்திருக்கும் போது ஜெயத்ரதன் அவளை தேரில் கடத்திச் செல்ல முற்படுகிறான். ஆனால் பாதி வழியிலேயே பாண்டவர்கள் மேல் அச்சம் கொண்டு நடு காட்டில் விட்டுவிட்டு மேலே தொடர முயற்சிக்கும் போது விவரம் தெரிந்து அங்கு வரும் காண்டீவனும், பீமனும் துரத்திச் சென்று அவனைப் பிடித்து வருகிறார்கள். கொல்லவில்லை. காரணம் தருமன் அனுப்பும் போதே சொல்லி அனுப்புகிறான். உயிரோட கொண்டுவான்னு. பாஞ்சாலிக்கு ஆச்சரியம். அருச்சுனன் அவனை கொல்லாமல் விட்டது கண்டு அவளுக்கு ஆச்சரியம். ஆனாலும் பீமன் அவனைச் சும்மா விடாமல் ஐந்து குடுமிகளை பிறை அம்பு கொண்டு ஏற்படுத்துகிறான். ஜெயத்ரதன் தருமனைப் பார்த்ததும் ” நான் பாண்டவர்களின் அடிமை என்று காலில் விழுந்து விடுகிறான் “. தருமனும் தன்னிடம் சரண் என்று வந்தவனை கொல்லக் கூடாது என்று அர்ஜுனன் பீமன் காவலில் காட்டு எல்லை வரை அனுப்பி வைக்கிறான்.
அதே போல சூதுப் போரின் போது துச்சாதனன் துகிலை உரியும் போது கணவர்களைப் பார்த்து கதறுகிறாள். அப்போது ரோஷம் கொண்டு எழுந்து போக முற்பட்ட பீமனையும் அர்ஜுனன் தடுத்து சொல்கிறான்.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங காண்போம்;இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’என்றான்.”
இதென்னங்க நியதி ? தன் மனைவியை ஒருத்தன் மானபங்கப் படுத்துகிறான். அப்போதா பார்த்து பார்த்து பேசுவீர்கள் தருமமும் நியாயமும்? பாஞ்சாலியின் எதிர்பார்ப்பு அங்கே பொய்த்தது. தன்னைக் கணவர்கள் காப்பாற்றுவார்கள் முக்கியமாக அர்ச்சுனன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கைப் போய் பரந்தாமா என்று கதறுகிறாள். அவளுக்கு அந்த நேரத்தில் வரவேண்டிய ஆசை முகம் எங்கே போனது ? தன்னைக் காப்பார்கள் என்று பார்த்த அந்த ஆசைகணவர்கள் பற்றிய உருவகம் சுக்கு நூறாய் சிதைந்து போனபின்னே மாதவா, கேசவா நாராயணா என்று அரற்றுகிறாள். கண்ணன் சேலை தந்து காக்கிறான்.
இப்போது பழம் பொருந்து சருக்கத்தில் அவள் கூறியவற்றை மீண்டும் நினைவுப் படுத்திப் பார்ப்போம்
ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிக ளாகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேரிதயம்
அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்.
ஐந்து பொறிகள் போல ஐவர் இருந்தென்னப் பயன் ? தேவையான நேரத்தில் என்னைக் காக்கவென்று ஒருவரும் இல்லையே. வெகு முக்கியமாய் அர்ஜ்ஜுனன். அப்படி வரவேண்டிய இவர்களின் பராக்கிரமம் எல்லாம் சேர்த்துக் கட்டி வைத்த என் கனவு பிம்பமான புருஷன் இவர்களில் யாரும் அப்போது இல்லையே என்கிறாள். வீறு கொண்டெழுந்து பகைவரை துவம்சம் செய்து தன்னைக் காக்க ஒருவருமே இல்லை. அவள் கொண்ட அந்த எதிர் பார்ப்பு, ஆசையான அந்த ஆறாம் கணவன் பற்றிய அந்த ஆசை முகம் எங்கே ? அது அர்ஜ்ஜுனனா? தருமனா ? பீமனா இல்லை நகுல சகாதேவர்களா ? யாராகவோ இருந்திருக்கலாம். ஒருவரேனும் பகை வென்று திரவுபதியைக் காத்திருந்தால் அத்தனை அன்பும் அவர்களிடம் போயிருக்கும். ஆனால் யாரும் வரவில்லை. இவள் என்னியிருந்த புருஷர்களாக இவர்கள் இருந்திருக்கவில்லை. அந்த எண்ணத்தின் படியான புருஷன் ஆறாவது புருஷனாகவாவது வந்திருந்து எதிரிகளை கொன்றழித்து காத்திருக்கலாம். அந்த ஆறாவது புருஷன் அந்த நேரத்தில் இல்லையே ?
இதில் கர்ணனுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ?. சிலர் கொழுநன் என்பதற்கு கொழுந்தனார் என்று அர்த்தம் கொண்டு அந்த கொழுந்தனார் கர்ணன் தான் என்று முடிவு செய்கிறார்கள். கொழுநன் என்றால் கணவன் என்று அர்த்தம். உதாரணத்திற்கு கீழ்கண்ட பாடலைப் பார்க்கவும்.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ
ஆனா பாஞ்சாலிக்கு தான் நினைத்த அந்த வீர பிம்பம் யாருக்கும் பொருந்தவில்லை யாருக்கும். குறிப்பாக அர்ச்சுனனுக்கு. ஏனென்றால் அவனுக்காகவேப் பிறந்தவள் அல்லவா பாஞ்சாலி ” துரோணரைக் கொல்லவும் அர்ஜ்ஜுனன் தோள் புல்லவும்” என்று திரவுபதன் வேண்டிப் பெற்ற மகவு அல்லவா பாஞ்சாலி. இப்போது அர்ச்சுனன் மீதான பிம்பம் கலைந்து போனது. பரந்தாமனே துணையானான். அதனால் தான் சூதுப் போரில் சபதம் செய்யும் போது கூட ” துரியன் துச்சாதனன் தொடை பிளந்து வரும் இரத்தத்தை கூந்தலில் தோய்த்து பின் தலை சீவி முடிப்பேன் ” என்று பீமன் மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறாள்.
ஆசை முகம் மறந்துப் போச்சு. ஆனாலும் அர்ச்சுனனின் மீதான நேசம் மறக்கவில்லை. ஆனால் அவள் கண்ணில் தெரிகிறதொரு தோற்றம் அங்கே அவள் கொண்ட பிம்பத்தின் சாயலில் யாரும் இல்லை.
இப்போது சொல்லுங்கள் ஆசை கொள்வதற்கு ஒரு உருவம் தேவையா ?
அவள் மனதில் கொண்ட ஆசை முகம் அது தன் கணவர்கள் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பம். அவள் மனதில் கொண்ட அந்த ஆசை முகம் மறைஞ்சு போனது. அது ஒரு சோக நிகழ்வு.
நான் இங்க சொல்லவருவது ஆசை முகம் என்பது ஒருவரை பார்த்து தான் வரவேண்டும் என்று இல்லை. மானசீகமாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். பாஞ்சாலி அப்படித்தான் கொண்டாள்.
ஆசை முகம் மறந்து போச்சே ? இதை யாரிடம் சொல்வேனடி தோழி ?
சொல்வதற்கு கண்ணனை விட்டால் வேறு யார் துணை. எப்பொழுதுமே அவர்களைக் காத்தருளக் கண்ணனைத் தவிர்த்து வேறு யார். மேலும் காட்டில் அலைந்து பகைவெறியேறி கிடக்கும் பாண்டவர்களை மேலும் வெறியேற்ற இந்த வார்த்தைகள் போதாதா ?
மற்றும் ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு தாயின் பிள்ளை, அவனுடைய பத்தாவது வயதில் தொலைந்து போய்விட்டான். அப்போது அவனுடைய முகம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அவள் அவன் மீது கொண்ட நேசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. கிட்டதட்ட இருபது வருடங்கள் கடந்து போனது. அப்போது அவள் மனதில் அந்த மகனின் சிறுவயது முகம் சற்ற்றேறக் குறைய மறந்தே போயிருக்கும். ஆனாலும் அவள் கொண்ட நேசம் அதிகமாயிருக்கிறது சற்றும் குறையவில்லை.
அப்போது ஒருத்தர் அவரிடம் கேட்கிறார். ” ஏம்மா பத்து வயசில காணாம போன மகனையே நினைச்சுட்டு இருக்கீங்களே அவன் முகம் இன்னும் நினைவில் இருக்கிறதா ?” என்று. அவரின் பதில் என்னவாக இருக்கும் ? ஏதோ புகை படிஞ்சா மாதிரி நினைவிருக்கும்மா.. அவன் கல கலன்னு சிரிப்பாம் பாரு. நாளெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம்” அப்படிம்பாங்க.
அந்த நேரத்தில் அவன் மகன் ஒரு நாள் பார்க்க வருகிறான். எப்படி ? ஒரு சிறை மீண்ட குற்றவாளியாக. அவன் முகம் பார்க்கும் போது அந்த அம்மா நினைப்பாங்க. இவனா என் மகன். இருக்கும்போல. அழகாத்தான் இருக்கான். ஆனா அன்னைக்கு நான் பார்த்த அந்த சிரிப்பு அங்க காணோமே, ஏன் இப்படி காலம் மாற்றி விட்டது ? இவன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்வருத்தப் படுவாள்.
வரிக்கு வரி இதை அப்படியே நாம் ஒப்பிட முடியாது ஆனாலும் ஒரு உதாரணத்துக்காக இப்படி எடுத்துக் கொள்ளலாம்.
இதைப் போலவே உருவம் காணாமலே ஒருவர் மேல் அன்பு கொள்ள முடியும் என்று நிரூபித்தவர்கள் இருவர். ஒருவர் சபரி , மற்றொருவர் அகலிகை. இருவரும் இராமனைக் காணாமல் இராம நாமத்தை மட்டுமே மனதிற் கொண்டு அவன் மீது ஆசைக் கொண்டவர்கள். அவர்களும் சொல்லி இருக்கக் கூடும்.
” ஆசை முகம் மறந்து போச்சே… இதை யாரிடம் சொல்வேனடி தோழி ”
ஆசை முகம்னா என்ன அது எப்படி மறந்து போகும்னு பாத்தோம். அதாவது தன் ஆசைகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்ட பிம்பம். என் காதலன் இப்படி இப்ப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பிம்பம். சரி அதென்ன நினைவு முகம் ?
இந்த ஆண்டாளம்மா இருக்காங்களே… கண்ணனைப் பற்றி நிறைய கனவு கண்டவர்கள். வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்க கனவு கண்டவர்கள். அவர்களுக்கு ஆசை முகமும் உண்டு நினைவு முகமும் கண்டவர்கள். அதென்னங்க மறுபடி மறுபடி நினைவு முகம் ?
ஒரு நேரடி உதாரணம் பாப்போம். நான் இணையத்துல எழுத வந்தப்போ, சும்மா இல்லாம சித்தர் பாடல்கள் ஜென் கவிதைகள் ஜென் கதைகள்னு ஒரு கட்டிங் ஒரு ஒட்டிங் பண்ணி பாவ்லா பண்ணிட்டு இருப்பேன். அப்போ எனக்கு இணையத்தில் வைரமணிகளென கிடைத்த அக்காங்க சக்தி பிரபா ஷைலஜா வை எல்லாம் மீட் பண்ணல. முத முறையா ஷக்தி பிரபா அக்காவை மீட் பண்ணப்ப அவங்க முதல்ல திகைச்சுப் போயி பாத்துட்டு அப்புறம்
” அடடே … நான் ஐயப்பன் அப்படிங்கற பேரும், நீ எழுதற விஷயங்களையும் வச்சு என்ன கற்பனை செஞ்சு இருந்தேன் தெரியுமா” ன்னு கேட்டுட்டு சொன்னாங்க
“தோள்ல நீள ஜோல்னா பை, முகத்துல ஒரு மாச தாடி, நெத்தி நிறைய பட்ட, கழுத்துல உருத்திராட்சக் கொட்ட இப்படியா இருக்கிற ஒரு நாற்பது அல்லது அம்பது வயசு ஆளுன்னு நினைச்சேன். சத்தியமா இப்படி இருப்பன்னு எதிர் பார்க்கவே இல்லை”
அதாவது, ஒருத்தரின் குணாதிசயங்களைக் கேள்விப் பட்டு அவர்களைப் பார்க்குமுன் நாம் நம்முள் ஏற்படுத்திக் கொள்கிறோமே ஒரு உருவம். அதை நினைவு முகம் அப்படின்னு சொல்லலாம் இல்லையா ?
சரி பாட்டுக்கு வருவோம்.
ஆசை முகம் மறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியு தொரு தோற்றம் – அதில்
கண்ண னழகு முழு தில்லை
நண்ணு முக வடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
இது ஏன் தெரியுங்களா ?
ஓய்வு மொழிதலுமில் லாமல் — அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் — அந்த
மாயன் புகழினையெப் போதும்
நாயகி , நாயகனைப் பற்றிய அவன் உறவவையும், அவன் புகழையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால், மற்ற எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவளின் ஆசை முகமும் மறந்து போச்சு. நேச முகமும் மறந்து போச்சு. இராம இராம இராம என்று தினமும் எல்லாவற்றிலும் இராமனின் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்த சபரியிடம் குகனைக் கொண்டு போய் நிறுத்தி, பாருங்க பாட்டி இவரு தான் இராமன் அப்படின்னாலும் அதே அன்போட கனிகளைக் கொடுத்திருப்பாங்க. காரணம் அவர்களுக்கு நேசம் மறக்கவில்லை நெஞ்சம். ஆசை முகமும் நினைவு முகம் ஆரம்பத்தில இருந்திருக்கலாம். ஆனால் போக போக அவர்களுக்குத் தேவைப்பட்டது இராமனின் நாமமும் அதன் மீதான ஆசையுமே நேசமுமே தவிர இராமன் என்ற ஆசை முகமும் நினைவு முகமும் இல்லை. அதே நிலை தான் இந்த பாடலின் நாயகிக்கும்.
நாயகிக்கு தன்னால் உருவாக்கப் பட்ட கண்ணனின் முகம் வேறு. அதில் எப்போதும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் முகம். கண்ணில் தெரியும் தோற்றத்தில் அவள் நினைத்த கண்ணனின் அழகு முழுதும் இல்லை. இராமனின் தோள் கண்டார் தோளே கண்டார் போல அவள் கொண்ட கண்ணனின் முழு அழகை எங்கே காண்பது ?. எந்த முகத்தில் போய் சூரியச் சந்திரர்களையும் பழிக்கும் குளிர்ந்த மனம் மயக்கும் சிரிப்பைக் காண முடியும்? அப்படியே மிச்சம் இருக்கிற வரிகளையும் பாக்கலாமே.
கண்கள் புரிந்து விட்ட பாவம் — உயிர்க்
கண்ண னுரு மறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே — ஒரு
பேதையை முன்பு கண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி.
ஆமாங்க. மனசு எப்பவுமே கண்ணனின் நினைவில் இருக்கு. உருவம் என்பது மறக்கக் கூடியது. ஆனால் அன்பு அப்படி இல்லை. உரு தேயும். கண்கள் எதிரே அந்த உருவங்கள் இல்லாமல் போனால் நாளடைவில் அதன் காட்சி மங்கும். புகைப் படிந்தால் எப்படி இருக்குமோ ஓவியம் அது போல மெல்ல மெல்ல மறைந்து போகும். ஆனால் தினமும் அவன் புகழையே பேசி பேசி பழகி அந்த நினைவிலேயே இருக்கும் போது நேசம் மறக்கவில்லை. மனது புண்ணியம் செய்து அந்த நினைவை இழக்க வில்லை. ஆனால் கண்கள் பாவம் செய்து அவனைப் பற்றி உருவாக்கிய அந்த உருவத்தை மறந்து போனது. அது எழுதி வைத்த ஓவியமாகவும் இருக்கலாம். அந்த ஓவியம் தாளினில் மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை.
அதெல்லாம் சரி அதென்ன உயிர்க் கண்ணன்னு சொல்றாரே ? பெண்ணொருத்தி ஒருவனை காதலன் என்று வரித்தபின், அவன் தன் உயிருக்கும் மேலானவன் ஆகிறான் அல்லவா ? நாயகியின் காதலன் கண்ணன் என்ற போது அவன் உயிர்க் கண்ணன் தானே ? காதலனை மறக்கும் பேதை உலகத்தில் உண்டோ என்ன என்னைப் போல் அப்படி என்று கேட்கும் அந்த நாயகிக்கு என்ன பதில் ?
தேனை மறந்திருக்கும் வண்டுமில்லை, ஒளி மறந்த பூவும் இல்லை. அதனால் தானே ஆண்டாள் கோவிந்தனின் நினைவு முகத்தையும் ஆசை முகத்தையும் மறக்காமல் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளைப் புகுதக் கனாக் கண்டாள். ஆனா நாயகிக்கு அதெல்லாம் கூட மறந்து போனதன் காரணம் என்னவாக இருக்கும் ? அடுத்த சில வரிகளையும் படித்து விட்டு யோசிப்போம்.
கண்ணன் முக மறந்து போனால் – இந்த
கண்க ளிருந்து பய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?
இது ஒரு சலிப்பு ஆனால் சலிப்பில்லை. தன் ஆனந்தத்தை அல்லது தன் காதலை தோழியிடம் சொல்லும் முறை இது.
இப்ப தனக்கு தானே திட்டம் அறிமுகம் படுத்திய பல விருதுகள் கொண்ட விழா நாயகர்கள் இருக்காங்க இல்லையா தமிழ் நாட்டில. அதுபோல சிலர் உண்டு.
தமிழ் ஆர்வலர் ஒருத்தர் கிட்ட சொன்னாங்க. அய்யா நீங்க ஆற்றிய தமிழ்த் தொண்டு மிகவும் அரிதானது. உங்களுக்கு செந்தமிழ் செவ்வேள் அப்படின்னு ஒரு பட்டம் குடுக்கலாம்னு இருக்கோம். அப்படின்னு சொல்றாங்க. உடனே அவர் என்ன சொல்லுவார்னு எதிர் பாக்கறீங்க
” அப்படியா.. ரொம்ப சந்தோஷம். இப்பவே குடுக்கறீங்களா.. இன்னும் ஒன் ஹவர் கழிச்சு குடுக்கறீங்களா”ன்னா கேப்பார். அப்படிக் கேட்க முடியாது அவரால். மெதுவா ஆரம்பிப்பார்
” ஹிஹி… எனக்கெதுக்குங்க பட்டம் பதவி எல்லாம்… ஆமா எங்க வச்சு குடுக்கப் போறீங்க ”
” நாரத கான சபால வச்சு உங்களுக்கு பட்டம் வழங்கலாம்னு இருக்கோம்யா ”
” அடடே கொஞ்சம் காஸ்ட்லியான இடமாச்சேப்பா.. எதுக்கு இவ்வளவு செலவு பண்றீங்க நான் என்னத்த அப்படி பண்ணிட்டேன். டிஃபன் காஃபிக்கு அறுசுவை நடராஜன் தானெ சொல்லிருக்கீங்க ”
” ஆமங்கய்யா ”
” என்னமோ போங்கப்பா.. எனக்கு இந்த பதவி பட்டம் விருது எல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும்ல… அப்புறம் ஏன் இதெல்லாம். அப்புறம் அந்த செந்தமிழ் செவ்வேள்னு சொல்றது பழசா இருக்கு. கொஞ்சம் மாத்தி முத்தமிழ் வேந்தன் அப்படின்னு மாத்திடுங்க. அச்சடிக்கும் போது கலர் பிரிண்ட் தானே போடுவீங்க. ”
” ஆமாங்கய்யா… பேனருக்கு கூட சொல்லிட்டோம் ”
” எல்லாம் உங்களுக்காகத் தான். எனக்கு இந்த விருதுகளில் நாட்டமே இல்லை. இனிமே நான் வேண்டாம்னாலும் நீங்க நிறுத்தவா போறீங்க… விழா அன்னைக்கு காலைல ஏசி காரு அனுப்புங்க. கட்டாயம் வந்துடறேன் ”
உண்மையிலே இவருக்கு விருதில் நாட்டம் இல்லையா ? அவர் வார்த்தைகள் இல்லை என்கிறது. ஆனால் உள்ளொளிந்திருக்கும் பொருள் வேறு குறிப்பு சொல்கிறது.
இது போல தான் நாயகியும், கண்ணன் முக அழகு மறந்து போச்சுங்கற மாதிரி சிணுங்கறது. அவன் உருவமே மறந்து போச்சுன்னு எதுல பார்த்தாலும் அவன் சிரிப்பு மாதிரி இல்லைன்னு சொல்றது. அவளுக்கு கண்ணனைப் பார்க்கனும், நேரடியா சொல்லலாம் தான். இருந்தாலும் தோழி கேலி பண்ண மாட்டாளா ? எங்க பார்த்தாலும் பழிச்சுக் காட்டி சிரிப்பாளே? அதுக்கு என்ன செய்யறது ?
ஊர்ல பாட்டிமார்கள் சொல்லுவாங்க. தன் பையன பாக்கனும்னா டேய் வாடா உன்னை பாக்கனும் அப்படின்னா சொல்லுவாங்க. ஹ்ம்ஹூம். மருமவ என்ன சொல்லுவாளோ? இந்தக் கெழத்துக்கு இன்னும் இவரைக் கொழந்தைன்னு நெனைச்சுக்கிட்டு பாடா படுத்துதும்பாளோன்னு நினைச்சுக்கிட்டு
” டேய் பேரனப் பாத்து ரொம்ப நாளாச்சுடா… எதப்பாத்தாலும் அவன மாதிரியே இருக்குடா கொண்டாந்து காட்டிட்டு போடான்னு ” சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி தன் தோழி கிட்ட இவ சொல்றா. எனக்கு கண்ணன் முகம் மறந்து போச்சுடி, அவன் வண்ணப் படம் கூட என் கிட்ட இல்லை. எப்படி வாழப் போறேன் நான்? அதனால நீ என்ன பண்ற தெரியுமா என் தோழியே
” கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
என்னம் உரைத்து விடில் தங்கமே தங்கம்
இனி ஏதேனும் செய்வோமடி தங்கமே தங்கம் “
9
சும்மா இரு, சொல் அற!
ஐயப்பன் கிருஷ்ணன்
“மனம் ஒரு குரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு ”
கண்ணதாசனின் வரிகள் பாடலாக டி.எம்.எஸ்ஸின் குரலில் என் கணினியில் ஒலித்துக் கொண்டிருந்தது. உண்மை தான். மனித மனம் என்றும் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. எதையும் வெகு இலகுவில் நம்பிவிடுவதில்லை. எத்தனை முயற்சித்தாலும் அது தன்னிலையில் ஒருமித்து இருப்பதில்லை. அப்படி ஒருமித்திருப்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கு மட்டுமே வாய்க்கும் போலிருக்கிறது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட பல நினைவுகள் இங்கும் அங்குமாய் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது.
அருணகிரி நாதர், சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தமக்கையின் வளர்ப்பில் வளர்ந்தவர். போகங்களில் நாட்டம் கொண்டு தீ வழியில் சென்று தொழுநோயால் இடர்பட்டுக் கிடந்த போதும் அவரின் காமம் தணியவில்லை. ஆனால் தொழுநோய்க்காட்பவரை எத்தனைப் பணம் கொடுத்தாலும் பரத்தையர் ஏற்கமாட்டார். இவரிடம் பணம் வேறு இல்லை. அவரின் தமக்கையார் இவரை திருத்த எடுத்த செயல்கள் யாவும் தோல்வியிலே முடிந்தது. கடைசியாக உனக்குத் தேவை பெண் தானே. நானும் பெண்தான் என்னை எடுத்துக் கொள் என்று தமக்கை அரற்றிய போது புத்தியில் தெளிவேற்பட்டது. கண்கெட்ட பின் செய்யும் சூரிய வணக்கம் போல உடல் தொழுநோயால் சிதைந்த பின் திருவண்ணாமலை மூன்றாம் கோபுரத்தின் மேலேறி குதிக்கிறார்.
ஆனால் அவனன்றி அணுவும் அசையாது எனும் போது இவரின் முயற்சி முருகப் பெருமானின் சித்தமின்றி நடைபெருமா என்ன ? முருகா என்று கதறிக் கொண்டே விழும் அருணகிரி நாதரை கந்தன் ஏந்தி நிற்கிறான். அப்போது அருணகிரியாருக்கு முருகன் உபதேசிக்கிறான். அது என்ன என்பதை அருணைகிரியாரின் பாடல் மூலமே பார்ப்போமா ?
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.
புள்ளைங்க அப்பா இல்லாட்டி அம்மாவை உரிச்சுட்டு வந்திருக்கும். இந்த முருகன் இருக்கானில்ல அப்படியே அவங்க மாமன் கிருஷ்ணனை மாதிரி. என்ன பண்ணாங்கறீங்க ? மான் வயிற்றில் பிறந்தவளான வள்ளிய களவாடிட்டான். அப்படி திருடும் திருடனான பெருமான் முருகனுக்கு பிறப்பு இறப்பு எதுவுமே இல்லைங்க. அந்த முருகன் எமக்கு சொன்ன உபதேசம் என்ன தெரியுமா ? சும்மா இரு.. பேச்சற்றிரு. ஆனா அதற்கு பொருள் அடியேன் அறியலையே .. என்று அருணகிரி நாதர் பாடி இருக்கிறார்.
சும்மா இருத்தல் என்றால் என்ன? செயலெதுவும் செய்யாமல் இருப்பதா ? சும்மா இருத்தலும் சொல்லற்றிருத்தலும் நம்மில் இன்று எத்தனை சாத்தியம் ? ஆனால் அருணகிரி நாதர் அதை சாதித்திருக்கிறார். அந்தச் சாதனைக்குப் பின் தெளிந்தவர். முழு ஞானம் அடைந்தவர். அவர் அளித்த திருப்புகழ் அத்தனைக்கும் சாட்சியாய் நம்மிடை இருக்கிறது.
பட்டினத்தாரும் இப்படித்தான் புலம்பி இருக்கிறார்
“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!”
தாயுமானவரும் விட்டாரா ? அவரும் “சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே” என்று புலம்பி விட்டு பின், சும்மா இருக்க அறிந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கிறார் கேளுங்கள்.
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.
– தாயுமானவர்.
யானையை அடக்கலாம், குதிரையை அடக்கலாம், சிங்கத்தின் முதுகில் ஏறி செல்லலாம். இரசவாதம் செய்யலாம். எப்பவும் இளமையோட இருக்கலாம். தண்ணீர் மேல் நடக்கலாம். தீயில் நிற்கலாம்.. தன்னிகர் இல்லாத சித்தி பெறலாம். இதெல்லாம் எப்ப நடக்கும் ? சும்மா இருக்கும் திறம் அறிஞ்சா நடக்குமாம்.
உண்மையில் அலைபாயும் மனதால் எதையும் முழுமையாக சாதிக்க முடியாது. ஒரு ஜென் கதை உண்டு. ஜென் துறவி ஒருத்தரிடம் சீடனாக ஒருவன் சேர விரும்பினான். ஆனால் குரு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது அங்கே இருக்கும் காலத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரண்டு வார்த்தைகள் பேச அனுமதி உண்டு. மற்ற நேரத்தில் மௌனம் மட்டுமே பயில வேண்டும் என்பதாய் அந்த நிபந்தனை இருந்தது. சேரும் ஆர்வத்தில் அவனும் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு சேர்ந்து ஆறு மாதம் கழித்து அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை குருவிடம் சென்று சொன்னான்.
” படுக்கை கரடுமுரடு ” அவ்வளவு தான். மீண்டும் பாடசாலைக்கு திரும்ப அனுப்பப் பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்பு கொடுக்கப் பட்டது.
சீடன் சொன்னான்
” சாப்பாடு பிடிக்கல” சொல்லி முடிந்ததும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்த தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை வேகமாக உதிர்த்தான்
” நான் போகிறேன் ”
இப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவன் என்ன கற்க முடியும் சொல்லுங்க. குரு ” போய்வா தம்பி. நீ இங்கிருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாய் கொண்டிருந்தாய். உன்னால் இங்கே மேலும் பயில்வது என்பது இயலாது ” என்றார்.
இதைத்தான் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜ்ஜுனனுக்கு சொல்கிறான் யோகநிலையில் நில். யோகம் செயல்களிலே திறமையானது என்று. குழந்தையின் மனது நிஷ்கலங்கமற்றது. உணவின் போது உணவு மட்டுமே அதற்கு நினைவில் இருக்கும். தூக்கத்தின் போது அலைபாயா மனமும் கொள்கிறது. அதனால் தான் குழந்தைகள் நித்திரை என்று வரும் போது படுத்த உடன் சட்டென்று தூங்க முடிகிறது. பைபிளில் ” நீங்கள் குழந்தைகள் போலானாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியாது” என்று சொல்வதும் இதைத் தான். இதயச் சுத்தி வேண்டும். தூய்மை இல்லா இதயத்தில் தெளிவேற்பட்டாற்போல் தெரிந்தாலும் மீண்டும் குழம்பி விடும்.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥
என்கிறான் கண்ணன். அதாவது , அர்ச்சுனா, யோகத்தில் நின்று உன் கடமையை செய். வெற்றியோ தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்வது வேண்டாம். மன ஒருமித்தலோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் என்று அறிவுறுத்துகிறான்.
எளிய உதாரணத்தோடு சொல்வதென்றால் ஜென் குருவிடம் ஒருத்தர் கேட்டாராம். ஜென் என்றால் என்ன என்று. அதற்கு அவர் சொன்னார் ” உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்” என்றார். யோசித்து பாருங்கள். நம்மில் எத்தனை பேர் நாம் உண்ணும் போது உணவில் கவனமும், உறங்கும் போது வேறெதுவும் நினைவுகளின்றி உறங்கவும் செய்கிறோம்.
ஆனால் பாருங்க இந்த அடங்கா மனசு எல்லாவற்றிற்கும் ஆசைப்படும். எதிலும் திருப்தி அடையாது. ஒருவனுக்கு அவன் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஊர் ஊராக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்லி தவிர்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் எல்லோரும் நம்பிக்கை இழந்து இருந்த நிலையில் இவனே தேடி கண்டுபிடித்து இவன் நினைத்தபடியான அழகு, உயரம், கருங்கூந்தல் என எல்லா வகையிலும் தான் நினைத்தவகையில் இருந்த பெண்ணை தேர்ந்தெடுத்தான். திருமணமும் நடந்து முடிந்தது.
அந்த காலத்தில் வருசத்துக்கு ஒரு முறை பாரதப் பிரசங்கம் செய்யும் வழக்கம் உண்டு என்பார்கள். அப்படியாவது மக்கள் ஏதேனும் காதில் போடுவார்கள் என்று நம்பிக்கை போல. பிரசங்கம் ஆரம்பிப்பதை ஊருக்கே அறிவிக்கும் வரையில் மூன்று முறை வெடி வைத்து அறிவிப்பார்கள். இந்தப் பிள்ளையாண்டான் அந்தப் பெண்ணை மணம் முடித்து ஊருக்கு திரும்பும் போது தெரியாமல் அந்த வெடி வைக்கும் பக்கத்தில் வந்துவிட்டான். வெடி படார் படார் என்று வெடித்தது. இவன் காதைப் பொத்திக் கொண்டு நகர்ந்தான். கொஞ்ச தூரம் போனதும் மணப் பெண் இவனிடம் கேட்டாள்.
” ஏங்க அங்க பொகை வரும் போது நீங்க ஏன் காதைப் பொத்துனீங்க ? பொகை வந்தா மூக்கைத்தானே பொத்தனும் “
10
திரும்பத் திரும்ப
ஐயப்பன் கிருஷ்ணன்
ஒன்றைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைப்பது. அது நமக்கு கெடுதல் செய்யும் அல்லது நன்மை செய்யும் என்று தொடர்ந்து அது பற்றியே யோசிப்பது. நல்லதோ கெட்டதோ அதைப் பற்றிக் கொண்டு விட மறுப்பது. உண்டுறங்கி திண்டு பேண்டு புணருங்காலையும் அதையே நினைப்பது – மன நோய்க்கூற்றின் ஆரம்பக் கட்டம் என்கிறது மருத்துவம்.
திரும்பத் திரும்ப கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பது, பூட்டிய பூட்டை திரும்பத் திரும்ப இழுத்துப் பார்ப்பது, யார் எது சொன்னாலும் அதில் ஏதோ என்னைக் குறித்து தவறாக பேசுகிறார்கள் என்று யோசிப்பது, யார் எதை சொன்னாலும் அதில் தான் நினைத்த ஒன்றை மட்டுமே தேடுவது என்று தொடர்கிறது இந்த நோயின் அறிகுறி.
சிலர் பிறக்கும் போதே இந்த நோயுடனே பிறந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குறிய விஷயம். மூளைப் பகுதியில் ஏற்படும் இரசாயன மாற்றமே இதற்கு காரணமாம். அந்த இரசாயணத்தை சமநிலைக்கு கொண்டுவந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள்.
சில அறிகுறிகள் :
* மன அமைதிக்கு மிகவும் கஷ்டப்படுவது. தேவையற்ற எண்ணங்களோ, பிம்பங்களோ மனதில் தோன்றி வெளியேறாமல் மன அமைதியை குலைப்பது.
* சிறு சிறு அற்ப விஷயங்களைக் கண்டும் மனம் வருந்துவது.
* எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள அதீதப் பிரயத்தனம் செய்வது.
* ஏதோ ஒரு பயத்தினை மனதில் கொள்வது. அது நெருப்பாகவோ அல்லது கிருமியைப் பற்றியதோ, நீரைப் பற்றியதோ, ஏதோ பயம் மனதில் எப்பொழுதும் ஆட்கொண்டிருக்கும்.
* மனதுக்குள்ளேயோ அல்லது வாய்விட்டு உரத்தோ சில வார்த்தைகளை, வாக்கியங்களை அல்லது ஓசைகளை எழுப்பிக் கொண்டே இருப்பது.
* தான் சரி என்று நினைக்கும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது.
* தான் நினைத்த வகையிலே தான் வேலை நடக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த வேலையை தான் நினைத்த வகையிலே நடக்கும் வரை திரும்பத் திரும்ப செய்விப்பது.
* வழக்கமான தினவாழ்கை முறையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலோ, தன்னுடைய ” பெர்சனல் ஸ்பேஸ் ” க்குள் யாரேனும் உள்நுழைந்ததாக கருதியோ அடிக்கடி மனச் சீற்றம் கொள்வது.
* யாரேனும் ஒருவரைப் பார்த்தால் அவரைப் போலவே நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது
* தான் வாழும் சுற்றுப் புறத்தில் இருக்கும் பலவற்றை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பது. அந்த எண்ணிக்கை மாறுபட்டால் அதனால் மன அழுத்தம் கொள்வது.
* செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்வது, சரி செய்வது, மீண்டும் செய்வது அதை மீண்டும் சரி செய்வது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்த போதிலும் அதை மீண்டும் சரி பார்ப்பது. அது இன்னும் சரியாக செய்யப்படவில்லை என்ற எண்ணம் எழும்.
* ஏதாவது ஒன்று பேசும் போதும் எழுதும் போதும் அல்லது நினைக்கும் போதாகிலுமாகட்டும் கெட்ட வார்த்தைகள் வலிய திணிப்பது.
*ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது.
* தான் சொல்ல நினைத்த ஒன்றை சரியாக சொல்ல இயலாமல் போவது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே பல முறை ஒத்திகைப் பார்த்தாலும் சொல்ல வரும்போதும் தடுமாறி சொல்லாமல் விடுவது.
இந்த ஆரம்ப நிலை ஒன்றும் வருந்த தக்க நிலை அல்ல. ஆனால் இது தொடர்ந்து கொண்டே போகுமானால் அது மனநோயில் கொண்டு விடலாம். இதில் ஏதோ ஒரு அறிகுறி நம்மில் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அது மனநோய் என்று அர்த்தம் ஆகிவிடாது. ஆனால் அந்த அறிகுறி உங்களின் சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடும்போதோ அல்லது தொடர்ந்து எப்போதும் இருக்கிறது என்று நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ நினைக்கும் போது அதை சரி செய்ய முழுமனதுடன் முன் வந்தாலே போதும். அனைத்தும் சுகமே.
ஒருத்தன் யாரையோ நினைச்சுட்டே இருக்கிறது வேறு. ஆனா என்னையேன் நினைக்கவில்லை என்று ஒருத்தரை வற்புறுத்தறது வேறு இல்லையா ?. ஒருத்தன் தன் காதலி கூட உக்கார்ந்து சாப்டுட்டு இருக்கான். அந்த காதலிக்கு திடீர்னு புரையேறிட்டுது. உடனே காதலன் சும்மா இல்லாம நான் தான் திரும்ப நினைச்சேன்னு சொன்னான். உடனே காதலிக்கு வந்ததே கோபம்…
உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்தீர் என்றென்னப்
புல்லாள் புலத்தக் கனள்.
என்னைய மறந்திருக்க அதனாலத்தானே திரும்ப நினைச்சிருக்க… என்னை மறக்கற அளவுக்கு போயாச்சா அப்படின்னு கோச்சுக்கிட்டு போய்ட்டாங்களாம். இதுவும் நோய் கூற்றில் வருமான்னா ? வரும் ஆனா அந்த நோய்க்கு வேற பேருங்க. அதுக்குப் பேர் ஊடல். அதே போல ஒருவரின் பிரிவை நினைத்து நினைத்து வேதனைப் படுதலும் இந்த நோய்க்கூற்றில் வராது.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ.
வெளியே போன கணவன் வீடு திரும்புவான்னு ஏதோ சத்தம் கேட்டா, உடனே கதவைத் திறந்து பாப்பாங்களாம். அடடே அந்த சத்தம் அவர் வந்ததால வந்தது இல்லைன்னு மறுபடி கதவடைப்பாங்களாம். இப்படி திறந்து மூடி திறந்து மூடி, விடியறதுக்கு முன்னாடியே அந்த கதவின் மரத்தாலான குடுமி தேஞ்சுட்டதாம். இதெல்லாம் ஏக்கம், கணவனைப் பற்றிய எதிர் பார்ப்பு. இதுவும் அதே நோய்க்கூறா என்றால் இருக்கலாம். ஆனால் நாயகனைக் கண்டதும் உடனடியாக குணமாகக் கூடிய நோய். இது தவறே இல்லை.
இப்படித்தான் பாருங்க ஒருத்தர் மருத்துவரிடம் சென்று முறையிட்டார்.
” டாக்டர்.. நான் எப்பவுமே என் மனசுக்குள்ள கிரிக்கெட் ஆடறதப் பத்தியே நினைச்சுட்டிருக்கேன். நேத்து கூட பாருங்க சச்சின் டபுள் செஞ்சுரி போடறதுக்குள்ள அவுட் ஆகிட்டார். ரொம்ப மனசு கஸ்டமாய்டுச்சு. பிரட்லீ போட்ட ஸ்பீட்ல ஸ்டம்ப்பு அப்படியே எகிறிடுச்சு ”
” அடடே.. கவலையே வேண்டாம். சரி பண்ணிடலாம். அப்படி உக்காருங்க. இந்த தண்ணி கொஞ்சம் குடிங்க. ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்தீங்கன்னா சச்சின் நூறாவது செஞ்சுரி போடப் போறார். அது முடிஞ்சதும் உங்களை கவனிக்கிறேன்” அப்படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிக்கிட்டாராம்.
11
கடவுள்
ஐயப்பன் கிருஷ்ணன்
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பல ஆயிரம் மறுப்புகள் கூறிவிடலாம். ஆனால் கண்ணதாசன் சொன்னது போல் கடவுளின் நினைப்பு வராமல் யாரும் இருக்க முடியாது. ஜனனத்தின் போதே உணர்ந்த ஞானக் குழந்தைகளும் உண்டு. பட்டுத் தெரிந்து இறக்கும் போது அல்லது இருக்கும்போதே உணரத் துடிக்கும் மக்களும் உண்டு. அல்லது குறைந்த பட்சம் எதிர்க்கவாவது கடவுளை நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
உலகத்தில் துயரங்களே இல்லாத மனிதன் என்பவன் இருக்க முடியாது. எல்லா மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு துயரம் ஏதோ ஒருவகையில் ஜனித்து நிற்கிறது. அந்த துயரம் எல்லை கடந்து தாள இயலாமல் நிற்கும் போது அதை இறக்கி வைக்க கடவுள் நமக்குத் தேவைப் படுகிறார். ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? சரணாகதி தத்துவம் மிகவும் எளிமையானது.
பாரதத்தில் ஓரிடம். சூதாட்ட சருக்கம். பகடையில் தோற்றான் தருமன். தன்னை இழந்து, தன் தம்பிகளை இழந்து பின் மனைவியையும் வைத்திழந்த இழிநிலையில் இருக்கிறான். வெற்றி பெற்ற ஆணவம் கொக்கரிக்கிறது. மேலும் மேலும் என்று ஆர்ப்பரிக்கிறது. கொண்டுவா பாஞ்சாலியை, இந்த மன்றத்தில் அவள் வந்து நிற்கட்டும். பார்த்திந்த பார் என்னைப் புகழட்டும் என்று பேயாட்டம் ஆடுகிறது.
பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு சபையில் நிற்கையில் ஆணவம் தன் குன்றின் மேலேறி இன்னும் ஆட்டம் போடுகிறது. மார்பில் துணி மறைக்கும் பழக்கம் அடிமைகளுக்கு உறியதல்ல, அவள் ஆடைகளை உறித்தெரி என்று ஊளையிடும் ஓநாயாய் மாறுகிறது.
கையறு நிலையில் அழுகிறாள். பெரியோர்களை நோக்கி நீதி கேட்கிறாள். தன்னை மணந்த கணவர்களாவது இதை எதிர்த்துக் காப்பாற்றுவார் என்று தன் சேலையைக் கையால் பிடித்துக் கொண்டு அரற்றுகிறாள். அனைவரும் அமைதியாய் இருக்கிறார்கள். அதுவரை இல்லாத கடவுளின் நினைவு அவளுக்கு அப்போது வருகிறது. கேசவா மாதவா கோவிந்தா நீயே சரண் என்கிறாள். உறிய உறிய சேலையாய் தருகிறான் அந்த கோவிந்தன்.
சரணாகதி தத்துவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக பரவலாகச் சொல்லப் படும் கதை இது. ஆதிமூலமே என்று அலறிய யானையின் கதையும் பரிபூர்ண சரணாகதியின் உதாரணம் அல்லவா.
ஆனால் பரிபூர்ண சரணாகதி யாரிடம் இருக்கிறது இப்போது ? பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் வேடிக்கையாகவும் ஒரு கதை சொல்வதுண்டு.
ஒரு சலவைத் தொழிலாளி துணியை ஆற்றங்கரையில் காயவைத்திருந்தார். அந்த பக்கம் ஒரு ரிஷி தெரியாமல் அந்த துணியை மிதித்த வாறு நடந்து சென்றுவிட்டார். சலவைத் தொழிளாளிக்கு வந்ததே கோபம். ஆத்திரத்தில் திட்டிக் கொண்டு கையில் கொம்பெடுத்துக் கொண்டு ஓடினார். அந்த ரிஷியோ அய்யோ கேசவா மாதவா நாராயாணா என்று அலறினார்.
மேலே இதெல்லாம் பார்த்த நாராயணன் அவசர அவசரமாக ஓடி வந்தவர் சற்று நேரத்தில் திரும்ப வைகுந்த்தம் சென்று விட்டாராம். அதை பார்த்த லட்சுமி கேட்டார். அவ்ளோ அவசரமா ஓடினீங்க. அதே வேகத்துல திரும்ப வந்துட்டீங்களேன்னு கேட்டாராம். அதுக்கு நாராயணன் சொன்னாராம்
” என்னை நம்பி ஒரு பக்தன் காப்பாத்துன்னு கூப்டான். நானும் போனேன் ”
” ஓ அவ்ளோ சீக்கிறம் காப்பாத்திட்டு வந்துட்டீங்களா… யூ ஆர் தி க்ரேட் ”
” அட நீ வேற… அவன் அதுக்குள்ள என்னை நம்பாம கல்லெடுத்து சண்டை போடப் போய்ட்டான். இனிமே நமக்கென்ன வேலைன்னு திரும்பி வந்துட்டேன்” அப்படின்னாராம்..
12
நல்லறம்
ஐயப்பன் கிருஷ்ணன்
உலகத்தில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது. நாம் ” நமக்கு எதுவெல்லாம் தோதுவாக இருக்கிறதோ “ அதுவெல்லாம் நல்லது என்று தான் பெரும்பாலும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் பொதுவாக சொல்லப் படுவது “ வாழ்க்கை, தர்மம், மகிழ்ச்சி, அன்பு நீதி இவைகளின் தொடர்ச்சி ” என இவற்றிற்கெல்லாம் பங்கம் வராமல் எது இருக்கிறதோ அதுவே நல்லது என்றும் மற்றவர்களுக்கு மனதாலோ உடலாலோ அழிவு, துன்பம் விளைவிக்கக் கூடிய வன்முறைகள் எதுவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் தீமை என்றுமாய் இருக்கிறது.
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அப்படின்னு வள்ளுவரும் சில குறள்களில் பயமுறுத்துகிறார்.
ஆனால் நன்மை எல்லாம் நன்மையா என்றால் அதிலும் பல பேதங்கள் தோன்றிடுது. ஒருவனின் நல்லது இன்னொருவனுக்குக் கெட்டதாகிப் போவது தான் உலக நியதியாக இருக்கிறது. உதாரணத்துக்கு புலால் உண்ணுதல் ஒருத்தனுக்கு தவறு. இன்னொருத்தனுக்கு அது சரி. மானை வேட்டையாடுதல் மான் கூட்டத்திற்கு அதர்மம், தீது. ஆனால் அதுவே புலிக்கும் சிங்கத்துக்கும் விதிக்கப் பட்ட தர்மம். கொல்லாமை என்று இருப்பவனும் கூட வயிற்றுக்கு இல்லாமை என்று வந்துவிட்டால் தன் நிலை மாறிவிடுவான். இது தான் நியதி.!
ஒருத்தர் அழுதுட்டு இருந்தார். அந்தப்பக்கம் வந்த நண்பர் ” ஏங்க அழறீங்கன்னு ” கேட்டார்.
இவரும் ” எங்கம்மா இறந்துட்டாங்க ” அப்படின்னார்.
சரி ஆறுதலுக்காக.. அடடே.. இந்த ஊருல யாரு வந்தாலும் சோறு இல்லைன்னு சொன்னதில்லையே மகராசி. அப்படியாப் பட்டவங்க இறந்துட்டாங்களா ? அவங்க உனக்கு மட்டும் அம்மா இல்லைப்பா.. எனக்கும் அம்மா. உன் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் ” அப்படின்னார் நண்பர்.
நல்ல வார்த்தைகள், நல்ல விஷயம். ஒரு மனிதனுக்கு ஆறுதல் கிடைக்கிறது.
இதைப் பார்த்த இன்னொருத்தர், தன் வீட்டுக்குப் போற வழியில ஒருத்தன் அழுதுட்டு இருந்ததை பாத்துட்டு ” ஏம்பா அழற ” அப்படின்னு கேக்க அவரும் ” எம் பொண்டாட்டி இறந்துட்டாங்கன்னு ” சொல்ல.. இவரு, முன்ன ஒருத்தர் அம்மா இறந்ததுக்கு சொன்ன அதே நல்ல வார்த்தைகளை இங்கே பொருத்தி சொல்ல முடியுமா ? அப்படிச் சொன்னா அவர் நிலை என்னாகும்னு பாருங்க. முந்தின இடத்தில் நல்வார்த்தைகள், இங்கே சரியில்லை.
பேராசிரியர், முனைவர் அறிவொளின்னு ஒருத்தர், அவர் இப்படித்தான் தன் பேச்சையே ஆரம்பிப்பார்.” ஆகவே எதுவெல்லாம் நல்லதென்று இருக்கிறதோ அதுவெல்லாம் எப்போதும் நல்லதாகவே இருப்பதில்லை. ”
நமக்கு கெதக்குங்கும். என்ன இப்படிச் சொல்றாரேன்னு. அவரு சொல்லுவாரு
” இப்ப ஒருத்தன் இறந்துட்டான்னு வச்சுக்குவோம். அவனை புதைச்சோ இல்ல எரிச்சோ முடிஞ்சு பதிமூன்றாம் நாளன்னைக்கு காரியம் பண்ணுவாங்க. அன்னைக்கு சில மந்திரங்கள் எல்லாம் சொல்லுவாங்க. அந்த மந்திரம் புனிதமானது. இறந்தவனை மோட்சத்துக்கு அனுப்பக் கூடிய மந்திரம். ஆகவே நல்ல மந்திரம், இதைப் போயி யாராச்சும் தீதும்பாங்களோ? ” அப்படிம்பார்.
” ஆமா ஆமா. நல்ல மந்திரம் தான். இதுல என்ன தீது இருக்கு. மோட்சத்துக்கு அனுப்பக் கூடிய மந்திரம் மஹா மந்திரம் ” எதிராளி வலையில வந்து மாட்டுவார்..
” ஏங்க அதான் உயர்ந்த மந்திரமாச்சே, மஹா மந்திரமாச்சே, மோட்சத்தையே தரக்கூடியதாச்சே அதை ஏன் கல்யாணத்துல சொல்லக் கூடாது ” அப்படின்னு கேட்டுட்டு கடைசில இப்படி முடிப்பார் …
” எதுவெல்லாம் எதுவாக இருக்கிறதோ, அதுவெல்லாம் அதுவே இல்லை “ அப்படின்னு.
ஆக ஒரு இடத்தில் மிக உயர்ந்த நல்லதாக இருந்த ஒன்று, இன்னொரு இடத்தில் உள்ளே கூட புக முடியாத தீதாகிவிடுகிறது. ஆகவே நல்லதும் கெட்டதும் பார்ப்பவர் கண்ணில் என்று சொல்லலாமா ?
ஹ்ம்ம் அப்படியும் சொல்ல விட மாட்டேங்கிறாங்க. ஆயிரத்தெட்டு நீதி நூல்கள் எழுதி ” இதுவெல்லாம் தான் நல்லது ” அப்படின்னு நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போய்ட்டாங்க.
தர்ம நியாயம்னு இருக்கு, தருமனின் நியாயம்னு ஒண்ணு இருக்கு. அது என்ன தருமனின் நியாயம்னு கேட்கறீங்களா…
வனவாசத்தின் போது காட்டில் தண்ணீர் இன்றி பாண்டவர்கள் தவிக்கும் போது தூரத்தில் இருக்கும் ஒரு பொய்கையை மரத்தின் மீதேறி கண்டு பிடிக்கிறான் சகாதேவன். அவனே நீர் எடுத்து வருகிறேன் என்று போகிறான். போனவன் திரும்பவில்லை. அடுத்து நகுலன், அடுத்து அர்ஜுனன், அடுத்து பீமன் என போன யாரும் திரும்பாத போது தருமனே போகிறான். அங்கே அனைவரும் இறந்து கிடக்கிறார்கள். ஒரு யட்சன் எச்சரிக்கிறான். இவர்களை நான் தான் கொன்றேன், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த நீரைக் குடிப்பவர்கள் யாராக இருந்தாலும் இறந்தாகவேண்டும். நீயாவது பதில் சொல்கிறாயா என்று கேட்கிறான் யட்சன்.
தருமனும் யட்சனும் உரையாடிய, நூறு கேள்விகள் யட்சப் பிரசன்னம் என்று தனி நீதி போதனையாகவே நிற்கிறது. அதெல்லாம் ஆன பின்னால் யட்சன் ” உன் அறமும், திறமும் அறிந்து மகிழ்ந்தோம். இப்போது நீ நீர் அருந்தலாம். மேலும், உனக்கு ஒரு வரம் தருகிறேன். உன் தம்பியர்களில் ஒருவனை உயிர்ப்பிக்கிறேன். அது யாரென்று நீ முடிவு செய் ” என்ற போதில் தருமன் நகுலனைக் கேட்கிறான். அதிர்ந்து போன யட்சன் கேட்கிறான். அர்ச்சுனனோ பீமனோ துணையின்றி இந்தக் காட்டை விட்டு வெளியேற உன்னால் முடியாதே தருமா ஏன் நகுலன் என்று கேட்க அதற்கு தருமன் தரும் பதில் எத்தனை அறம் வாய்ந்தது என்று பாருங்களேன்.
” என் தந்தைக்கு இரு மனைவியர், மூத்தவர், என் தாயான குந்திக்கு பீமன், அர்ச்சுனன் மற்றும் நான், இளைய தாய்க்கு நகுலன் சகாதேவன் என இருவர். முதல் தாய்க்கு நான் ஒருவன் உயிரோடு இருக்கிறேன். அடுத்த தாய்க்கு யாரேனும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா. ஆகவே தான் நகுலனைக் கேட்கிறேன் ” என்கிறார்.
இன்னோரு இடம்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது அனைவரும் வணங்கி நிற்கிறார்கள். பீஷ்மர் பல உபதேசங்களை வழங்குகிறார். அதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தருமர், இத்தனை நல்லுபதேசங்கள் எனக்கு நினைவில் வராமல் போய்விடுமே பிற்காலத்தில் என்று சொல்லும் போது கண்ணன் சொல்கிறான்
” தருமா, உங்களில் யாரொருவன் தூயவரோ அவர் சென்று பீஷ்மரின் கழுத்து ஸ்படிக மாலையைப் பெற்றுக் கொள்ளுங்கள் ” என்று. அதற்கு தருமர் தேர்ந்தெடுப்பது சகாதேவனை. கண்ணன் கேள்வி கொக்கியாய் விழுகிறது. ” உன்னையும் விடத் தூயவனா சகாதேவன் ”
தருமன் சொல்கிறான். ” கண்ணா, கள்ளங்கபடம் அறியாதவன் சகாதேவென், சாத்திரங்கள் அறிந்தவன். யாரையும் எதிரி என்று எண்ணாத நல்லவன். துரியோதனனே வந்து களபலிக்கு நாள் கேட்ட போதும் எதிரி என்று ஒதுக்காமல் நாள் குறித்துக் கொடுத்தவன். இவனை விடத் தூயவன் யார் இருக்க மூடியும்.”
பாராபட்சமற்ற அறம் என்பது இதை விட வேறு எது இருக்க முடியும் என்று சொல்லுங்கள்.
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது பீமனின் நல்லறம்.
“பிறர் மனையவரைப் பெற்ற தாய் எனவும், பிறர் பொருள் எட்டியே எனவும்,
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர் துயர் என் துயர் எனவும்,
இறுதியே வரினும், என் மனக் கிடக்கை, எம்பிரான்! இவை’என உரைத்தான்-
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன்.
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. பிறன்மனை நோக்கினேல்லன்னன் நான். பாருங்க, இவ்வளவு பெரிய திடகாத்திரமான ஆளு பல ஆயிரம் ஆனை பலம் கொண்டவன். அவன் சொல்றது பிறர் பொருள் வேண்டேன். பிறன் மனை வேண்டேன். பிறர் வசை வேண்டேன். ஆனா பிறர் துயரத்தை விரும்பி என் துயரென ஏற்றுக் கொள்வேன்.
அது போலவே பிறர்க்கு தொல்லைத் தராத, மனசாட்சியின் படி நியாயம் என்று தோன்றக் கூடிய, எந்தவொரு நியாயமும், பிறருக்குத் துன்பம் விளைவிக்காத, மன்னுயிர் பலவற்றிற்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானுங்களே ? என்ன சொல்றீங்க
13
“பல்”லாண்டு “பல்”லாண்டு...
ஐயப்பன் கிருஷ்ணன்
உங்களில் எத்தனை பேருக்கு இந்த நம்பிக்கை உண்டு? எனக்கு சிறு வயதில் பல் விழுந்தால் அதை வானத்திற்கு காட்டாமல் சென்று புதைத்து வைக்கும் பழக்கம் இருந்தது. பல் ஆடும் போதே ஒரு குறுகுறுப்பு இருக்கும். பிடித்து இழுத்துவிடலாமா இல்லை தானாக விழட்டுமா என்றெல்லாம். பல்லை புதைத்தால் காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் ஒரு முறை கூட பல் விழுந்த போது காசு கிடைத்ததில்லை என்பது சோகமான விஷயம் தான்.
இந்த பல்லுக்கும் எனக்கும் சின்ன பிணக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது. கிராமத்தில் இருந்த போது , வெயிலின் உக்கிரம் காரணமாக உடலின் நீர் வற்றி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் போகும். அதை தீர்ப்பதற்கு டாக்டரிடம் சென்றால் அவர் என்ன என்னவோ மருந்தெல்லாம் டப்பியில் இருந்து எடுத்து தருவார். கூடவே ஒரு ஊசி போட்டுவிடுவார்.
அப்போதெல்லாம் சும்மா ” பயம்மா இருக்கு சார் ” அப்படின்னாலும், “அவ்ளோ தானே.. இந்த ஊசி போட்டா எல்லாம் சரியாய்டும் ” என்பார் எங்களூர் அரசாங்க டாக்டர். இந்த ஊசிக்கு பயந்து கிடந்த வேளையில் தான் வெகு எளிதான மருந்து ஒன்று கிடைத்தது. வேறொன்றும் இல்லை அது. புளியங்கொட்டை தான். புளியங்கொட்டையை தோல் நீக்காமல் வாயில் போட்டு ஊற வைத்து மெது மெதுவாக தின்றால் போதும். புளியங்கொட்டை முழுவதும் காலியாகும் முன்பு பிரச்சினை தீர்ந்து விடும். அப்படி ஆரம்பித்த புளியங்கொட்டை மோகம், வறுத்த புளியங்கொட்டை, பச்சை புளியங்கொட்டை என தின்ன ஆரம்பிக்க, வேகமாகத் தின்பதற்கு இரண்டு பற்களிடையே மாடு அசை போடுவது போல பற்களைத் தேய்த்து தேய்த்து கீழ் பக்கம் ஒரு பல் தேய்ந்து போய் கூச்சமாக இருக்கும்.
இன்னொரு முறை ஏதோ ஒரு கல்யாண பந்தியில் சாப்பிடும் போது மொச்சைக் கொட்டையை விட பெரிய கல் ஒன்று வெகு இலாவகமாய் “ஷேப்” செய்யப் பட்டு பொரியலில் இருந்தது என் பல்லுக்கு வேட்டு வைக்க. அதை நான் கவனிக்காமல் எடுத்து கடித்து வைக்க இடது கடைவாய்ப்பல் ஒன்றின் உள் பக்கம் கொஞ்சம் பெயர்த்துக் கொண்டு வந்தது. உடைந்த அந்த இடத்தில் கூர் கூராக நாக்கில் அடிபடும். இவை இரண்டும் சரி செய்ய என்று அப்போது பக்கத்தில் பல் டாக்டரிடம் போனால் அவர் கேட்ட தொகைக்கு என்னிடம் பெரிய சொத்து ஏதும் இருந்திடவில்லை. விற்று அவருக்கு கொடுக்க. அந்த சமயத்தில் அறிமுகமானவர் தான் அமர் க்ளினிக்கின் “டாக்டர் ரியாஸதுல்லா”
அதிக கூட்டமாய் இருந்த க்ளினிக்கில் கிட்ட தட்ட ஒரு மணிக்கும் மேல் காத்திருந்து உள்ளே போனதும் \ டாக்டர் மிருதுவாக சிரித்தார். பிரச்சினைகளைக் கேட்டார். “அடடே ஒரு பிரச்சினையும் இல்லை” என்று சொல்லி கொண்டே எல்லாம் சரி செய்தார். பின்பு ஒரு பல் சொத்தை இப்போது தான் ஆரம்பம் என்று கண்டறிந்து அதற்கு “ஸில்வர் ஃபில்லிங்” எல்லாம் வைத்தார். 2003ல் இதெல்லாம் அவர் செய்து முடித்து இதற்கு அவர் வாங்கிய கட்டணம் நூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே. இன்று வரைக்கும் அந்த ஃபில்லிங் எந்த பிரச்சினையும் இன்றி இருக்கின்றது. மேலும் சமீபத்தில் வேறு பிரச்சினைக்காக போயிருந்த போது வாங்கின “ஆலோசனை அமவுண்ட்டு” – இருவது ரூபாய் தான்.
அது கிடக்கட்டும், என் மகளுக்கு கொஞ்ச நாளாகவே கீழிரண்டு பற்கள் ஆடிக் கொண்டிருந்தன. உண்மையில் இதை நான் ” ஆடு பற்கள் ” என்று வினைத்தொகையில் தான் சொல்லி இருக்கவேண்டும். ஏனென்றால் அது பாட்டுக்கு நாட்டியப் பேரொளி மாதிரி ஆடின, ஆடின, ஆடிக் கொண்டே இருந்தன பல நாட்களாக. சரி என்ன தான் ஆகி இருக்கிறது என்று வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தால்.. ஆடிய பற்கள் ஆடியவாறே இருக்க, அதனடியில் இரண்டு பற்கள் ஏற்கனவே தலை காட்டிக் கொண்டிருந்தது. கோணலாய் இருந்தாலும் என் மகளுடையதாக்கும்.
ஒரு நல்ல முகூர்த்த நாள் வெள்ளிக்கிழமையாக பார்த்து முதன் முதலாய் குழந்தையைக் கூட்டிப் போய் பல் டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஏனென்றால் அன்று தான் கொஞ்சம் வேலைக் குறைவாக இருந்தது. அமர் கிளினிக் வெள்ளிக் கிழமை திறக்க மாட்டார்கள் என்பதால் பக்கத்தில் வேறு ஒருவரிடம் காண்பிக்கலாம் என்று கேட்டுக் கொண்டு வரப் போனேன். .. பல் மருத்துவம் தெரிந்தால் விரைவில் கோடீஸ்வரராகலாம் என்பதை அவர் எனக்கு உணர்த்தினார். ஆகவே ஒரு நாள் தாமதித்தாலும் என் பிரிய அமர் கிளினிக்குக்கே போகலாம் என்று முடிவெடுத்தோம்.
இந்த தடவை டாக்டர் ரியாஸதுல்லா இல்லை. அவரின் மனைவி, அவரும் பல் மருத்துவர், அவர் தான் கவனித்தார். அதே தன் மக்களை கவனிக்கும் வாஞ்சை கூடிய கனிவான கவனிப்பு. போனது தான் போனோம் என்று மனைவிக்கு எனக்கு என எல்லாருக்கும் பொதுவாக சோதித்து, பின்பு மகளின் “ஆடுபல்” லிரண்டை பிடுங்கி எடுத்துவிட்டு ஃபீஸ் எவ்வளவு என்று கேட்டால். மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தம் அவர் வாங்கிய தொகை நூறு ரூபாய் மட்டுமே. ஒரே ஒரு குறை என்ன என்றால், என் மகள் அந்த பற்களை கொண்டு வந்து புதைத்து வைத்து காசு கிடைக்குமா என்று பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.
வீடு திரும்பும் போது திருவள்ளுவர் சொன்ன குறள் என் காதில் (மட்டும் )கணீரென ஒலித்தது.
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
**
பெங்களூர் வாசிகளுக்கு இந்த பல் மருத்துவமனையை சிபாரிசு செய்வதில் எனக்கு சிறிதும் தயக்கமே இல்லை.
முகவரி.
Amar Dental Clinic
BNS complex 1st main road ,
Yeshwantpur, Bangalore,
Karnataka ( West ) – 560022
Land Mark : Yeshwantpur
080-23472293
14
நோய்நாடி.. நோய் முதல் நாடி…
ஐயப்பன் கிருஷ்ணன்
இது கொஞ்சம் முந்தியக் கதை. டிப்ளோமா படித்துக் கொண்டிருந்த நேரம், இடது காதில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு காதின் சவ்வில் ஓட்டை விழுந்திருந்தது. இரண்டு மூன்று இடத்தில் காண்பித்ததில் ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்கள். ஆபரேஷன் செய்யும் வசதியோ அல்லது செய்துக் கொள்ளும் தைரியமோ எனக்கு அப்போது இருக்கவில்லை. பின்பு உறவினர் ஒருவர் ஆலோசனையின் பேரில் வேலூர் பாகாயத்தில் ” ஆனந்தா க்ளினிக் ” என்ற ஒரு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்தேன்.
மருத்துவர் மிகவும் வயதானவர். ஆங்கிலேயர். தமிழ் ரொம்பத் தடுமாறி தான் பேசினார். பெரும்பாலான மருந்துகள் மருத்துவமனையிலேயே தயார் செய்யப் பட்டவை. காதுக்கு மருந்து எல்லாம் அங்கேயே தயாரித்துக் கொடுத்தார். கொஞ்சம் விட்டமின் மாத்திரைகள் மட்டும் வெளியே வாங்க வேண்டி இருந்தது. மிகவும் குறைந்த விலையில். இரண்டு வாரத்தில் பிரச்சினை முழுதும் சரியாகிப் போனது. ஆனாலும் ஒரு மாதம் வரைக்கும் கண்காணித்து அவருக்கு முழு திருப்தி ஆன பின்னரே எல்லாம் ஓகே என்றார்.
இன்று அவரும் இல்லை. அந்த க்ளினிக்கும் இல்லை. குறைந்த விலைக்கு மருந்து கொடுத்து கட்டுப் படியாகவில்லையோ அல்லது வேறு காரணமோ அந்த மருத்துவர் இறந்தபின் அந்த க்ளினிக்கை மூடிவிட்டார்கள் என்று சமீபத்தில் கேள்விப் பட்டேன். ரொம்பவும் வருத்தமாக இருந்தது. அது போன்று சேவை மனப்பான்மையும், பணம் குறித்து பேயாய் அலையாத மருத்துவர்களை இனி எங்கே சென்று தேடுவது ?
**
பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து சம்பாதித்ததில் சேமித்த பணத்தில் எனக்கு பைக் வாங்க முடிந்தது. முப்பதாயிரம் ரூபாய். ஒரு காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் ஒரு ரூபாவைக் கூட கண்ணில் காணாமல் இருந்து இது வாங்கியது பெரிய சாதனை. பொதுவாகவே நான் பைக்கில் தான் அலுவலகம் போய் வருவது. ஒரு இரவு காற்று அதிகமா அடிச்ச நேரம் கண்ணில் ஏதோ தும்பு விழுந்து கண்ணைக் கசக்கி வீட்டுக்கு வந்து பார்த்த போது கண் ரொம்பவும் சிவந்து போயிருந்தது. சற்று பயமாக இருந்தது எனக்கு. எனவே வழக்கமான என்னுடைய ஃபேமிலி டாக்டரிடம் போவதற்கு நேரம் ஆகும் என்பதால் பக்கத்தில் சற்றே பிரபலமான கண் டாக்டரிடம் சென்றேன். அவர் கிட்ட தட்ட அரைமணி நேரம் சோதித்து விட்டு, பல கேள்விகள் கேட்டு பின் மருந்து எழுதி கொடுத்து விட்டு சொன்னார்
” கண் இன்ஃபெக்ஷன் ஆகிருக்கு, இந்த மருந்தை தொடர்ந்து ஒரு வாரம் எடுத்துக்கோங்க. ஆனாலும் உங்களின் பார்வயில் பாதி திறன் குறைந்து தான் இருக்கும். இன்ஃபெக்ஷன் அதிகமாயிருக்கு ”
எந்த மருத்துவ அறிவுமே இல்லாத எனக்கே இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று தோன்றியது. அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளின் விலை கிட்ட தட்ட ஆயிரத்தைத் தொட்டது. அவரின் ஃபீஸ் 250 வாங்கிக் கொண்டார். ஏனோ இது சரியில்லை என்று எனக்குத் தோன்றியது. என்னுடைய ஃபேமிலி டாக்டர் கொஞ்சம் தூரம் ஆனாலும் பரவாயில்லை, நேரமானாலும் பரவாயில்லை என்று இரவு 11 மணிக்கு அவரிடம் சென்றேன். ( முதலில் இருந்த இடத்தில் இருந்த டாக்டர். இப்போது இருக்கும் இடத்திற்கும் அவரின் இடத்திற்கும் 10 கிமீ அப்ராக்ஸ் ). என்ன பிரச்சினை என்றார். சொன்னேன். கண்ணை சோதித்தார்.
” கண்ணை ரொம்ப கசக்கிட்ட. அதான் ரெட்டாயிருக்கு. ”
ஒரு ட்யூப் மருந்து எழுதிக் கொடுத்தார் – அதன் விலை 4 ரூபாய். மறு நாள் காலையில் என் கண் பிரச்சினை ஏதும் இல்லை முழுக்க சரியாகி இருந்தது.
**
“ஏண்டா பல் ஆஸ்பத்திர்ல இருந்து ஓடி வந்துட்ட ? ”
” அதுவாடா.. அந்த நர்ஸ் ஒண்ணும் பயப்படாதீங்க. ஒரு பல்லு தான் புடுங்கப் போறோம். இது பயப்பட வேண்டிய விஷயமே இல்லை. ரொம்ப பயம்மா இருந்தா கண்ண மூடிக்கோங்கன்னாங்க ”
” அதுல என்னடா தப்பு ”
” தப்பு ஒண்ணுமில்ல தான். ஆனா அவங்க சொன்னது எனக்கு பல்லு புடுங்க வந்த டாக்டர் கிட்ட “
15
அதான் எனக்குத் தெரியுமே !
ஐயப்பன் கிருஷ்ணன்
” பூரி உருளைக் கிழங்கை இன்னைக்கு செய்யலாம் ”
” அது எனக்குச் செய்யத் தெரியாதுங்களே ”
” நான் சொல்றேன் ”
” சரி உங்க பக்குவப் பிரகாரம் சொல்லுங்க, அப்படியே செஞ்சுடறேன் ”
” முதல்ல மாவை எடுத்து குண்டான்ல வச்சுக்கிடனும் ”
” அதான் எனக்குத் தெரியுமே ”
” அது தலையில தண்ணி ஊத்தி கொஞ்சம் உப்புப் போடுட்டுப் பிசையனும்”
” அதான் எனக்குத் தெரியுமே ”
” சின்னச் சின்ன உருண்டையா உருட்டி அதை அதை குழவி வச்சு உருட்டனும் ”
“அதான் எனக்குத் தெரியுமே ”
” அப்புறம்”
” அது தானுங்களே தெரியாது ”
டணால் தங்கவேலுவின் இந்த நகைச்சுவையைப் போலவே நம்மிடம் பலர் இருக்கிறார்கள். எதைச் சொல்லுங்க ” அதான் எனக்குத் தெரியுமே” என்பது போலவே பேச ஆரம்பிப்பார்கள். இவர்கள் பேசுவதைப் பார்த்தால் உலகத்தில் இவர்களுக்குத் தெரியாத விஷயமே இருக்காது. ஆனால் தேவை, செயல்பாடு என்று வரும்போது இவர்கள் அந்த வட்டாரத்திலேயே கிடைக்க மாட்டார்கள். இருந்தாலும், கிடைத்தாலும் ” ஹேய் தள்ளு தள்ளு ” என்று மற்றவர்களுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருப்பார்களே தவிர்த்து ஒரு காரியமும் நடக்காது.
இவர்களிடம் பேசுவது என்பது தலையைக் கொண்டு போய் சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு சமம் எனலாம்.
” சார் இந்த கோட் வேலை செய்யல ” என்று யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்க்கும் போது இவர்கள் காதில் கேட்டால் போச்சு.
” என்ன சார் இது கூட தெரியலை” ன்னு ஆரம்பிச்சு பத்து நிமிஷத்தில் முடிக்க வேண்டியத இன்னும் இடியாப்பச் சிக்கலாக்கி விடுவார்கள்.
இன்னும் சிலர் பிறருக்கு யோசனை வழங்குவது மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டவர்கள்
” சார் லைட்டா தலைவலிக்கு.. நான் வீட்டுக்குப் போறேனே ”
” அச்சச்சோ … தலைவலின்னு அப்படியே விட்றாதீங்க. அப்படித்தான் பாருங்களேன். எனக்கு ஒரு முறை தலைவலின்னு டாக்டர் கிட் போனேன். அவரு எடுத்த எடுப்புல ஒண்ணுமே இல்லைன்னுட்டாருங்க”
” அப்புறம் ”
” நான் விடலையே… எனக்குத் தெரியாத மெடிக்கல் இஸ்யூஸா…. இது மைக்ரெய்னா இருக்கலாம், மூளைக் கட்டியா இருக்கலாம்.. அப்படி இப்படின்னு கேட்டதும் டாக்டருக்கு புத்தி வந்து ஸ்கேன் எடுக்கச் சொன்னார். ”
” ஓ ஸ்கேன் பாத்து டாக்டர் என்ன சொன்னரு ”
” தலைல ஒண்ணும் இல்லைன்னுட்டார் ”
இதைச் சொல்ல டாக்டர் வேண்டுமா என்ன?
ஒன்றுமே தெரியாது என்றால் சரி. தெரிந்ததைத் தெரிந்தது என்றும் தெரியாததை தெரியாது என்றும் சொல்வதும் சரி. ஆனால் எல்லாம் ” அதான் எனக்குத் தெரியுமே ” என்ற உணர்வுடன் பேசுபவர்களைக் கண்டால் ” சற்றே விலகி இரும் பிள்ளாய் ” என்று தான் சொல்ல வேண்டும்.
“என்ன சார் .. ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரை வைத்தியன். அது மாதிரி தான் சார் இவங்க கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவாங்க ” என்றார் ஒரு நண்பர்.
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது பழமொழி. அதாவது சித்த மருத்துவத்தில் கற்பதாகட்டும் பழகும் போதாகட்டும் பெரும்பாலானவை வேர் முதல் சமூலமும் பச்சிலைகளைச் சார்ந்தது. அந்த பச்சிலைகளைக் கொணர பல செடிகளை அழித்தாகவேண்டி இருந்தது. அப்படி ஆயிரம் செடிகளையாவது, அதன் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்றார்கள். அவ்வளவு பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் தலைவலி போய் திருகுவலி வரும் வகையில் தான் மருந்து கிடைக்கும்.
ஒரு முறை முல்லா வெளியூருக்குச் சென்றிருந்தார். முல்லா சிறந்த அறிஞர் என்று அந்த ஊர் மக்கள் கேள்விப் பட்டதால் அவரை மேடைக்கு பேச அழைத்தார்கள். பலமுறை அவர் மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. நேரே மேடைக்குச் சென்றார்.
” இன்றை நான் எதைப் பற்றிப் பேசப் போறேன்னு தெரியுமா ” என்றார்
எல்லாரும் தெரியாது என்று சொல்ல முல்லா சொன்னார்
” எதுவும் தெரியாத உங்களிடம் பேசி என்ன பிரயோசனம்” என்று மேடை இறங்கிப் போகப் போனார். அப்போது மீண்டும் அவரைப் பேசச் சொல்லி வற்புறுத்தினார்கள் அவர் மீண்டும் மேடையில் சென்று
” இன்று நான் எதைப் பேசப் போகிறேன் தெரியுமா ” என்றார்.
எல்லாரும் தெரியும் என்று இந்த முறைச் சொன்னார்கள்.
” எல்லாம் தெரிந்த உங்களிடம் நான் என்ன பேச இருக்கிறது ” என்று மேடை இறங்கிப் போய்விட்டார். ஊர்க்காரர்கள் விடுவதாய் இல்லை. மீண்டும் அவரை வற்புறுத்தி அழைத்தார்கள். அவர்கள் ஏற்கனவே இவர் என்ன கேட்கப் போகிறார் என்று ஊகித்து அதற்கேற்றார் போல தங்களை தயார் படுத்திக் கொண்டார்கள். முல்லா மேடை ஏறிக் கேட்டார்
” இன்று நான் எதைப் பேசப் போகிறேன் தெரியுமா ”
பாதிப் பேர் தெரியும் என்றும் மீதிப்ப் ஏர் தெரியாது என்றும் சொன்னார்கள். இப்போது முல்லாவால் என்ன செய்ய முடியும் என்பது போல பார்த்தார்கள். முல்லா அவர்களை அமைதியாகப் பார்த்தார் பின்பு
” தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள் ” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று போய்விட்டார்.
இந்தக் கதையைக் கேட்ட நண்பர் தனக்குத் தலைவலி வந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் அவருக்கு மருந்து சொல்லிவிட்டு வந்துவிடுகிறேனே !
16
பகவான் இரமணரும், வடிவேலுவும் கூடவே ஒரு சங்கு சக்கரமும்
ஐயப்பன் கிருஷ்ணன்
1948ம் வருடம், பகவான் இரமணரின் கையில் சிறு கட்டி தோன்றியது. அதில் புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பதாக கருதி ஆஸ்ரமத்தில் இருந்த மருத்துவர் அந்த கட்டியை அறுவை சிகிச்சையால் அகற்றிவிட்டார். மீண்டும் அந்தக் கட்டி உருவானது. மீண்டும் அகற்றப்பட்டது. அப்போது அந்த மருத்துவர் கட்டி எழும்பி இருக்கும் கையைத் தோள் பகுதியில் இருந்து அகற்றிவிட்டால் நோய் மற்ற இடங்களுக்குப் பரவாது, உயிர் காக்க இதை அனுமதிக்கவேண்டும் என்று மன்றாடுகிறார். இரமணர் மறுத்துவிடுகிறார்.
மேலும் இதுபோன்று இரண்டுமுறை கட்டி வந்து 1949ம் ஆண்டு அகற்றப்பட்டன. பக்தர்கள் அவரிடம் அழுது தொழுது கேட்கிறார்கள். நீங்கள், எங்களுக்காக உங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று.
” இந்த உடலின் மேல் ஏன் இத்தனை அன்பு வைக்கிறீர்கள் ? விடுங்கள், அது போகட்டும். ஆனால் நான் இங்கே தான் இருக்கிறேன் ” என்றார். அவருக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையின் போது அவர் எந்த வலிமறுப்பு மருந்தோ அல்லது மயக்க மருந்தோ எடுத்துக் கொள்ளவில்லை என்கிறது இரமணரைப் பற்றிய ஒரு குறிப்பு.
பக்தர்கள் ” அந்த அறுவைச் சிகிச்சையின் போது உங்களுக்கு வலிக்கவில்லையா ” என்று இரமணரிடம் கேட்ட போது அவரின் பதில்
” உடலுக்கு வலித்தது. ஆனால் அந்த உடலா நான் ?” என்பதாக இருந்ததாம்.
****
ஒரு படத்தில் வடிவேலு தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு கிழவி வடிவேலுவைக் கூப்பிட்டுச் சொல்லும்.
” டேய் இந்த நாய.. தூன்னு சொல்லி தொரத்தி விட்டுப் போடா”ன்னு. உடனே, வடிவேலுவும் நாயைத் திட்டி அந்த நாயைக் காலால் வேறு உதைத்துத் தள்ளுவார். சட்டென்று அந்த நாய் எகிறி வடிவேலுவைக் கடித்துவிடும்.
****
ஒரு பயிற்சி நிலையம். அதன் பயிற்சியாளர்,
” உங்களுக்கு உடம்பில் ஏதும் வலி இருப்பின் அதை எதிர்க்காதீர்கள். அந்த வலியை ஆழ்ந்து அனுபவியுங்கள். அந்த வலிக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சங்கல்பம் செய்யுங்கள். அது உங்களுடைய வலி இல்லை. ஆகவே அதை நீங்கள் சொந்தம் கொண்டாடாதீர்கள். எங்கே சொல்லுங்கள், I dont own this pain and it doesnt Belong to me. I realise and expense it right now. ”
எனத் தன்னிடம் வருபவர்களுக்கு ஒரு மந்திரோபாதேசம் போல சொல்ல வைப்பார்.அவரின் ஆலோசனையைக் கேட்டு நடந்த வந்தவர்களில், இருபது வருடங்களாக ஒற்றைத் தலைவலியுடன் அவதி பட்ட யுவதி ஒருவர் தலைவலி முற்றிலும் நீங்கியதாக சான்றுரைத்தார்.
***
என்னடா இது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்கள் தானே ? இந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றிணைத்தது தீபாவளி அன்று ஒரு சங்கு சக்கரம்.
தரையில் மகள் கொளுத்திய சங்கு சக்கரம் எரிய மறுத்து உம்மென்று கிடந்தது. எனக்கு வடிவேலுவின் மேற்கூறிய நகைச்சுவை அசந்தர்ப்பமாக நினைவுக்கு வர அந்த டயலாக்கை சொல்லிக் கொண்டே அந்த சங்கு சக்கரத்தை எட்டி உதைத்தேன். பின் அதை மறந்து விட்டு வேறு பட்டாசுகளை கொளுத்திக் கொண்டிருக்கும் போது, அண்ணன் மகள் அந்த சங்கு சக்கரத்தை விளக்கில் பற்ற வைக்க முயன்றாள். அதைப் பிடுங்கி தூரப் போடும் முன் அதில் இருந்த நெருப்பை அணைக்க தரையில் தட்ட
” பூம்…. ”
கடித்துவிட்டது.. ப்ச்… கையிலே அந்த சங்கு சக்கரம் வெடித்துவிட்டது. கவனிக்க.. எரியவில்லை. வெடித்துவிட்டது. அது வெடித்த வேகத்தில் நெருப்பு தலையில் விழுந்ததைக் கூட கவனிக்கவில்லை. கையை உடனடியாக தண்ணீரில் வைத்து அலச ஆரம்பித்து விட்டேன். பின்பு தான் எங்கோ முடி பொசுங்கும் வாசம் வந்தது. தலையிலிருந்த நெருப்பைத் தள்ளி விடுவதற்குள் சற்று தலை முடி அக்னியின் ஆக்ரோஷத்தில் காணாமல் போனது.வெடித்த உடனே அப்படி ஒன்றும் வலி இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு கையை நீரிலே வைத்திருந்தேன். கையை வெளியில் எடுத்த கொஞ்ச நேரத்தில் எரிச்சல் ஆரம்பித்தது. தாங்க முடியாத எரிச்சல். போரோ ப்ளஸ் ஆயிண்ட்மெண்ட் போட்டுக்கொண்டு பக்கத்தில் இருந்த நர்சிங் ஹோம் சென்றதும்,
” கண்ட கண்ட மருந்து போட்டு இருக்கிற காயத்தையும் பெருசாக்கிடறீங்களே.. நெருப்புக் காயத்துக்கு முதல்ல பர்னால் போடனும் சார் ”
என்று அட்வைசில் ஆரம்பித்து இரண்டு ஊசிக் குத்தி கொஞ்சம் மருந்து எழுதிக் கொடுத்து மேலே ஆயிண்ட்மெண்ட் தடவிய பின்னால் வெளியே வந்தால்.. முதலில் தாங்க முடியாத எரிச்சல் என்று சொன்னேன் இல்லையா அது வெறுமே ஒரு சதவிகிதம் தான் இருக்க முடியும் என்ற அளவிற்கு அப்படி ஒரு எரிச்சல். வலி ஏதும் இல்லை. ஆனால் ஏதோ திராவகம் கொட்டியது போல அத்தனை எரிச்சல்.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் பற்றிய எண்ணம் வந்தது. எவ்வளவு துடித்திருப்பார்கள் அந்த குழந்தைகள் என்று.
எரிச்சல் கூடிக் கொண்டே போனது. ஃபேன் போட்டால் எரிச்சல் குறையும் என்று நினைத்து ஃபேனை சுழல விட, காற்று படும் போது சில்லென்றும் கொஞ்சம் காற்று அந்தப் பக்கம் நகர்ந்ததும் முன்பை விட அதிகமாகவும் எரிச்சல் கூடியது.
அசந்தர்ப்பமாக இல்லாமல் நன்றாகவே பகவான் இரமணர் நினைவுக்கு வந்தார். அவர் எப்படி தன் வலியை தவிர்த்திருக்க முடியும் என்று யோசனை ஓடியது. பின்பு பயிற்சி அரங்கத்தின் பயிற்சியாளர் சொன்னது நினைவுக்கு வந்தது
” இந்த வலி என்னுடையது அல்ல. இதை நான் எதிர்க்கவில்லை. ஆகவே இதை நான் மனப்பூர்வமாக அனுபவித்து கழித்து விடுகிறேன். ஆனால் இதை சொந்தம் கொண்டாட மாட்டேன் ”
பல முறை மனதில் இதைச் சொல்லிக் கொண்டே இருந்ததில் வலி சற்று குறைந்தது போல இருந்தது.
***
வாழ்க்கை பல பாடங்களை ஆங்காங்கே வைத்திருக்கிறது. சில தன் அனுபவங்களாக, சில பிறர் அனுபவங்களாக. ஒரு கட்டத்தில் வலியை தள்ளி வைக்க பகவான் இரமணரும், பயிற்சியாளரும் உதவி இருக்கிறார்கள். அனைத்தையும் கோத்து எடுத்து தொடுக்கும் போது வாழ்வில் தீய அனுபவங்களும் கூட நல்ல அனுபவங்களாகவே மாறிவிடுகிறது. தீப்புண் இந்த மட்டில் மேல் காயத்துடன் போனதே என்று மகிழவும் முடிந்தது.ஆஃப்டர் ஆல்.. இது நம்ம வாழ்க்கை சார். என்ன வருதுன்னு ஆன மட்டும் பார்த்துடலாம்.. என்னங்கறீங்க ?
17
அடையாளப் போலிகள்
ஐயப்பன் கிருஷ்ணன்
“வணக்கம் எழுத்துப் புயல் டாக்டர் ஏகாம்பர சார் “
“வருக ஐயா, வணக்கம். டாக்டர் என்பதை முனைவர் என்றும், சார் என்பதை ஐயா என்றும் அழைத்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஏனென்றால் தமிழ் என் மூச்சு. தமிழ் என் பேச்சு. கையில் இருப்பது வாச்சு. அது நின்னா நேரம் போச்சு ”
” மன்னிக்கனும் முனைவர் ஏகாம்பரம் ஐயா. ஆமா வாச்சு என்பது ஆங்கில வார்த்தையாச்சே ? அது மட்டும் நீங்கள் ஆங்கிலத்தில் சொல்லலாமா ?”
” இல்லை சார், அதுவும் தமிழ் வார்த்தை தான் என்பதை என் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து எழுதி வைத்திருக்கிறேன். ”
” அடடே, மிக சீரிய பணி ஐயா. சற்றே விளக்கமாக விளக்குவீர்களா ? ”
” தமிழில் காலத்தை நாழிகை, விநாடி, நிமிடம் என்றெல்லாம் பிரிக்கிறோம் இல்லையா அது என்ன ? நேரத்தை வார்த்தல். வார்த்த நேரத்தை சட்டென்று படித்துப் புரிந்துக் கொள்வது தான் வார்த்து நேரம் சொல் என்பது. அதை ஆங்கிலேயன் தவறாக உச்சரித்து வாட்ச்சு என்று சொல்லிவிட்டான். ஆகவே வாச்சு என்பது தமிழ் சொல் தான் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் இல்லையா சார் ? ”
“…. ம்ம்…. ஹ்ஹ்… ம்ம். ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை போலத்தான் இருக்கிறது. ”
” உண்மை போல என்று சொல்லாதீர்கள். அது தான் உண்மை. இது போல பல ஆங்கிலப் பெயர்களின் ஆதார மூலம் தமிழ் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி எழுதி இருக்கிறேன். அப்புறம் இதையெல்லாம் நான் செய்வதன் முக்கிய காரணமே தமிழின் வளர்ச்சிக்காகத்தான் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் சார். ”
” ஓ அப்படியா ? தமிழ் வளர்ச்சிக்காக நீங்க என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க ஏகாம்பரம் ”
” கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல எழுதி இருக்கிறேன், பல பத்திரிகைகளுக்கு கேள்விகள் அனுப்பி இருக்கிறேன். தினமும் உக்கார்ந்து மேற்சொன்னது போல எல்லாமே தமிழ் என்ற ஆராய்ச்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறேன் ”
” வாழ்க. இலக்கிய உரையாடல் செய்யலாம் என்று வந்தேன். முக்கியமாக எனக்கு ஒரு சந்தேகம் இராமாயணத்தில் வாலி செய்தது சரியா என்று… உங்களிடம் அது குறித்து கேட்கலாம் என்று தான் வந்தேன். பேச்சு சுவாரசியத்தில் அது மறந்து போய்விட்டது ”
“வாலி நல்ல பாடலாசிரியர். ஆனால் இராமாயணத்திற்கு அவர் பாட்டு எழுதினாரா என்று தெரியாது. அவர் எழுதிய பாடலை இந்த கேசட் ப்ளேயரில் போட்டுக் காட்டினால் நான் கேட்டு பின்பு அதற்கேற்றார் போல பதில் சொல்ல முடியும் ”
” ஐயன்மீர் மன்னிக்க. நான் சொல்ல வந்தது கம்ப ராமாயண வாலி ”
” ஓ கம்பராமாயணமா ? அதெல்லாம் யார் சார் படிப்பாங்க. என்னமோ நாலு நாலு லைன் அப்படின்னு பத்தாயிரம் பாட்டு எழுது வச்ச்சுட்டு அத படி படின்னா ? யார் படிப்பாங்க சொல்லுங்க ? ”
” சரி பாரதியின் பாஞ்சாலி சபதம் குறித்துப் பேசலாமா ”
“ என்ன சார் நீங்க பழைய பஞ்சாங்கமாவே இருக்கீங்க ? இலக்கியம் பத்தி பேசனும்னா எல்லாம் பழைய கஞ்சிய குடிச்சாத்தான் பேசுவேன்னு சொல்றா மாதிரி சொல்றீங்க. இலக்கியம் பேச என்னோட கவிதைகள் தொகுப்பு கொண்டுவரேன் அதை படிங்க. அதுல இருந்து விவாதிக்கலாம். அத விட்டுட்டு பாரதி, கம்பன், மணிமேகலை, சிலப்பதிகாரம்னு எல்லாம் பேசாதீங்க. அதெல்லாம் நான் படிச்சதும் இல்லை படிக்கிறதும் இல்லை படிக்கப் போவதும் இல்லை”
” ஙே…. ”
” பின்ன என்ன சார், அதை படிச்சா தமிழ் வளந்துடுமா? தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடு படனும் சார். இதெல்லாம் படிச்சுட்டு இருந்தா சோம்பேறித்தனம் கூடிப் போய்டும். என்னையே எடுத்துக்கோங்க. நான் தமிழ் வளர்ச்சிக்காக தினமும் ரெண்டு கவிதை எழுதறேன். நாலு நாளைக்கு ஒருமுறையாவது கதை / கட்டுரைன்னு எழுதிட்டு இருக்கேன். இதெல்லாம் செய்யாம நீங்க கம்பன் பாரதின்னே உக்காந்துட்டு இருந்தீங்கன்னா தமிழ் எப்படி சார் வளரும் ? தெரியாமத்தான் கேக்கறேன் சொல்லுங்க சார் ”
” … அது அது… மன்னிக்கனும் மறந்தே போச்சு எனக்கு ஒரு அவசர வேலைக்காக மனைவி வரச்சொல்லி இருந்தாங்க. மறந்து போய்ட்டேன். நான் பின்னொரு நாள் உங்களை சந்திக்கவா ”
” அடடே… வைஃப் சொல்லே மந்திரம் சார். அவங்க சொன்னத செய்ங்க. நாளைக்கு வாங்க இலக்கியம் பத்தி விரிவா பேசுவோம். என்னோட இந்த ரெண்டு கதைத் தொகுப்பை படிச்சுப் பாருங்க. உங்களுக்கும் தமிழ் மேல அப்படி ஒரு பற்றும் வெறியும் வரும் சார். தமிழ் வளரனும்னா இதெல்லாம் செஞ்சாகனும் சார். வேணும்னா நீங்க தமிழ் எழுத்துலக வட்டாரத்துல கேட்டுப்பாருங்களேன் என்னோட எழுத்துகளைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு ”
” நேத்தே கேட்டேங்க. நீங்க கதை, கவிதை எழுத ஆரம்பிச்ச நாள் தொடங்கி இன்னைக்கு மட்டும் தமிழ் ஆறடி வளர்ந்திருக்காம். நான் வரட்டுங்களா…. பின்னொரு நாள் பார்ப்போம் ”
****
18
டெர்ரர்ஃபேஸ் தெகிரிய சாமி!
ஐயப்பன் கிருஷ்ணன்
இணையத்தில் எழுதுபவர்கள் பலவகை உண்டு. அருமையான எழுத்தாளர்கள், மொக்கை, மொக்கை அண்ட் ஒன்லி மொக்கை, ரெண்டு கெட்டான் – கொஞ்சம் மொக்கை. லைட்டா அரசியல். சண்டை வர மாதிரி இருந்தா மீண்டும் மொக்கை.
பாயிண்ட் பை பாயிண்ட்டா பிரிக்கலாம்..
பதிவர்கள், பஸ்ஸர்கள், குழும எழுத்தாளர்கள். :
1 – வகை ஒண்ணு – மொக்கை, மொக்கை அண்ட் ஒன்லி மொக்கை
2 – வகை ரெண்டு – ரெண்டு கெட்டான் – கொஞ்சம் மொக்கை. லைட்டா அரசியல். சண்டை வர மாதிரி இருந்தா மீண்டும் மொக்கை.
2.5 – வகை ரெண்டு புள்ளி அஞ்சு – இது கொஞ்சம் டெர்ரர் மாதிரி மூஞ்ச உர்ருன்னு காட்டும். எதிரி இன்னும் உர்ருன்னா கூண்டுக்குள்ள பதுங்கிடும். சாது தான். பாக்க டெர்ரர் மாதிரி தெரியும்.
2.75 – வகை ரெண்டு புள்ளி ஏழு அஞ்சு – மூக்குப் புடி முனுசாமி. இவர் பேச ஆரம்பிச்சா சாப்பிட்டதெல்லாம் வாந்தி வரும். மூக்குன்னு ஒண்ணு இருந்தா அது துர்நாற்றத்தை உணரவே என்ற கொள்கை உடையவர்கள்.
3 – இவங்களை எல்லாம் தாண்டி டெர்ரர்ஃபேஸ் தெகிரிய சாமி என்ற பெயர் பொருத்தம் கொண்டு சில பேர் இருப்பாங்க. அவர்களில் ஒருவர் நம்மிடம் பேசுகிறார். அவர் பேசுவதை நேரடியா கேக்கலாம் வாங்க.
எனக்கு என்னா சார் தெரியாது. எனக்கு தெரியாத்து உனக்கு தெரிஞ்சுச்சா ? நான் சொல்றது தான் சரி. நீ சொல்றதெல்லாமா… நவுறு தூர. தமிய்னா என்னான்னு தெரியுமா உனக்கு. தமியன்னா என்னான்னு தெரியுமா? கள் தோட்ன்றி மன் தோன்றா முன் தோண்டிரிய மூத்த (எழுத்துப் பிழை இல்லை) குடி. ஆனா ஏழாம் அறிவுல என்னா சார் காமிக்கிறான். அவன் காமிச்சா போதி தர்மர் பெரியாளா… சினிமாக் காரன் சார் அவன் சொல்றதெல்லாம் நம்ப மாட்டேன். ஆனா தமியனைப் பத்தி எதுனா பேசுனீங்க… அவ்ளோ தான். போதி தர்மன் தமியனே கிடயாது சார். அவன் ஒரு பல்வலர் காலத்து ஆலு. பல்வலர் எல்லாம் தமியரா ? எனக்கு முலு எஸ்.டி.டி தெரியும் சார். அவன் போதையோட இருந்ததால அந்தால சீனா காரனுக்கு கிஃப்ட்டு குடுத்து அனுப்பிட்டாங்க. சார் அங்க போயி சும்மா ஃபிலிம் காட்டி பெரியாளாய்டுச்சு. ஹிஸ்டிடி எங்கிட்டியேவா ?
ஆனா எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான் சார். அவங்கள ஒளிச்சுக் கட்டிட்டா எல்லாம் சரியாய்டும் சார். ஜாதின்னு புடிச்சுக்கினு அலையறதே அவங்க தான். பாருங்க எங்கூட்ல சாதியே கெடியாது சார். எங்கம்மா பயக்கத்துல வேற ஜாதி ஆளு வந்தா தொரத்திடும். குடிக்கிறது தண்ணி கூட குடுக்காது. எங்கம்மா இருக்கச் சொல்ல நானும் குடுக்க மாட்டேன் சார். ஏன்னா வயசானவங்க பாருங்க அவங்களை ஒண்ணும் கேக்க முடியாது சார். அப்டியே பயகி போச்சி சார். சாமி எல்லாம் கும்புடும் சார் எங்க அம்மா. எனக்கு நெத்தில துன்னூறு எல்லாம் வச்சி உடும். நானும் வச்சிக்குவேன். எனுக்கு அந்த வாசனை புடிக்கும். முருகா… நீங்க என்னமோ நான் கடவுளை நம்பறேன் நெனச்சிக்கினீங்க போல கீது. ஈஸ்வரா…. தெய்வமே அப்படில்லாம் இல்லை சார். எங்க அம்மாவ கூட்டிக்கினு கோயிலுக்கு போறதால அப்பிடி நென்ச்சிட்ட போல கீது. அது சும்மா அங்க ஒரு ஜோசியரு இருக்காரு அவர் கிட்ட பேசிக்கினு இருப்பேன். ஆனா எனக்கு இப்ப ஏல்ர சனியாம் சார். அதான் இப்பிடி ஆட்டி வைக்குது. ரொம்ப கஸ்டமா கீது சார்.
எனக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மை நேர்மை அவ்ளோ தான். ஆனாலும் இந்த கவுருமெண்டு பண்றது அநியாயம் சார். எதுக்கெத்தாலும் டாக்ஸுன்றான். நான் கில்லாடியாச்சே… டாக்ஸே கட்றதில்ல சார். ஏன்னா நேர்மை முக்கியம் சார். கவுர்மெண்டு கிட்ட அது இல்லை. பெட்ரோல் வெல ஏத்தறான் சார் சும்மா சும்மா? யாரு கேப்பாங்க. நாங்கேப்பன். கேட்டனே நேத்து எம்பொண்டாட்டி கிட்ட. ஏன் பெட்ரோல் வெல இப்பிடி ஏத்தறான்னு உட்டேன் பாருங்க சவுண்டு. பயுந்து போய்ட்டா சார். ஹாஹா..
ஆனா ஒண்ணு சார். ஹிஸ்டிடி எல்லாம் என் கிட்ட எல்லாரும் பிச்ச வாங்குனும். ஹலோ சார் எங்க போறீங்க… இருங்க ஹலோ யோவ்.. இருய்யா…. ஹலோவ்….
19
தலையாட்டி பொம்மை
ஐயப்பன் கிருஷ்ணன்
தஞ்சையின் சிறப்புகளில் ஒன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. ராஜாவும் ராணியும் என்று அடிப்பக்கம் கனமாகவும், மேற்புறம் எடைகுறைத்தும் செய்யப் படும் இந்த பொம்மைகள் புவியீர்ப்பு அறிவியலை அந்த நாளிலேயே நம் மூதாதையர்கள் கண்டறிந்து அதற்கேற்றார்போல செய்திருப்பது பெருமைக்குறிய விஷயம் தானே ?. geographical indication of goods act- 1999. என்ற சட்டத்தின் படி இந்த பொம்மைகள் தஞ்சையைக் குறிக்கும் என்று ஏற்கப்பட்டிருக்கிறது
பல கொலுக்களில் தஞ்சாவூர் பொம்மைகள் இல்லை என்றால் அது கொலுவாகவே ஏற்கப் படாது என்றும் சொல்லலாம். அவ்வளவு பிரசித்திப் பெற்றது.
இதில் ஆதி வகை பொம்மைக்கும் தற்போது தலையாட்டி பொம்மைகள் என்று வருபவைக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆரம்ப காலக் கட்டத்தில் உருண்டை வடிவான ( ராஜா ராணி பொம்மைகள் ) மட்டுமே அதுவும் களிமண்ணில் மட்டுமே செய்யப் பட்டாலும் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் / காகிதக் கூழ் என பல வகைகளில் செய்யப் பட்டு, பல உருமாற்றங்களும் பெற்று உலக அளவில் தமிழனின் பெருமையைப் பறை சாற்ற இவை பரவி நிற்கின்றன.
நல்ல விஷயம் தான் இல்லையா. சரி நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா ? சிலரிடம் பேசும் போது நாம் வெறும் தலையாட்டிகளாகத் தான் இருப்போம். அவர் பேச நாம் கேட்க தப்பு தப்பு… அவர் பேச நாம் தலையாட்ட, நாம் தலையாட்ட அவர் பேச என பேசிக் கொண்டே இருப்போம்.
” அவரு எப்பவுமே அப்படித்தான் சார். தான் சொல்றது தான் சரின்னு சொல்லுவார். நம்மள பேசவே விடமாட்டார். நீங்களும் கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் சொல்றது சரி தானே ”
” அது வந்து சார்.. ”
” அதான் சார். இப்ப நீங்க ஒத்துக்கிட்ட மாதிரியே அவரைப் பத்தி நிறைய பேர் என் கிட்ட ஒத்துக்கிட்டிருக்காங்க. எத்தனை முறை சொல்லியும் மாற மாட்டேங்கிறார். இப்படிப் பட்டவங்களை திருத்த முடியாதுங்கறேன். என்ன நான் சொல்றது ”
” இருக்கலாம் சார்.. ஆனா ”
“ அவ்ளோ தான் சார். நீங்க சொன்ன மாதிரி அவர் திருந்தவே மாட்டார். பாவம் அவர் வீட்டில இருக்கிறவங்க. அவர் மட்டும் பேசுவார் மத்தவங்க எல்லாம் கேட்டுட்டே இருப்பாங்க ”
“… ”
” ஆனாலும் நீங்க ரொம்ப சைலண்டு சார். நான் பாட்டுட்டு பேசிட்டே இருக்கேன். அப்பப்ப ஒண்ணு ரெண்டு வார்த்தைய தவிர வேற எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க ”
ஆனால் இதே ஆள் நம்மைப் பற்றி வேறு ஒருவரிடம் சென்று ஊமைக்கோட்டான், சரியா பேசக் கூடத் தெரியாத, மூடி மறைக்கிற கல்லுளி மங்கன் என்று சொல்லவும் கூடும். ஒரு வட்டம் வரைந்து அந்த வட்டத்துக்குள் நம் பார்வையை அவர்களுக்கு ஏற்றார் போல அடக்குவது தான் இவர்கள் போன்றவர்களின் நோக்கம். அது அறிந்து செய்கிறார்களா, அல்லது அறியாமையில் செய்கிறார்களா என்பதெல்லாம் அடுத்த பட்சம். மேலும் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. நம்முடைய ஆமோதிப்போ அல்லது எதிர்ப்போ நமக்காக அவர்களே பூர்த்தி செய்துக் கொள்வார்கள். ஆனால் இது நல்லதா ?
முருகேசன் மிகப்பெரிய தையல் காரர். அந்த வட்டாரத்தில் அவரைப் போன்ற வேலைப்பாடுகளுடன் செய்யக் கூடியவர்கள் இல்லை என்ற அளவுக்கு பேர் பெற்றவர். குமரேசன் என்பவர் அவரிடம் தனக்கு சட்டை தைத்துத் தரச் சொல்லி, மிகவும் விலை உயர்ந்த துணியைக் கொண்டு போய் கொடுத்தார். முருகேசன் ரெண்டு வாரம் உழைத்து அவருக்கு சட்டை தைத்துக் கொடுத்தார். அந்த சட்டையை அணிந்த குமரேசனுக்கு ஒரு பக்க கை குட்டையாகவும், முதுகுப் பகுதியில் இறுக்கிப் பிடிப்பதுபோலவும் தோள் பட்டை ரொம்ப அகலமாகவும் பொருத்தமின்றியும் இருப்பதை உணர்ந்து முருகேசனிடம் சென்று இப்படி செய்து விட்டீர்களே. இதை சரி செய்து தாருங்கள் என்றார்.
முருகேசன் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு “ ஐயா, இது மிகவும் விலை உயர்ந்த துணி, இதில் மீண்டும் கை வைத்தால் அழகு கெட்டு விடும். இப்போது என்ன உங்களுக்கு சட்டையின் ஒரு கை குட்டையாகத் தோன்றுகிறது அல்லவா அந்தக் கையை சற்றே உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். இறுக்கிப் பிடிக்கும் முதுகுப் பகுதியை தளர்த்த உங்கள் வயிற்றுப் பகுதியை சற்றே இறுக்கிக் கொண்டு சற்றே முன் பக்கம் வளைந்து கொண்டால் அங்கே சரியாகிவிடும். தோள்பட்டையை சற்றே உயர்த்திப் பிடித்தார் போல நடந்து பாருங்கள். இந்த சட்டை எத்தனை பாந்தமாக உங்களுக்கு பொருந்துகிறது என்று தெரியும் என்று சொன்னார். ”
குமரேசனும் அப்படியே செய்து வீட்டுக்கு போகும் வழியில் ஒருத்தர் நிறுத்திக் கேட்டார். ” இந்தச் சட்டையை தைத்தது முருகேசனாகத் தான் இருக்கவேண்டும் ” என்று.
குமரேசனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள் என்று வியந்தார்.
அதற்கு அந்த வழிப் போக்கர் சொன்னார். கூன் விழுந்து கை உள்ளிழுத்துக் கொண்ட உங்களுக்கு இவ்வளவு அழகாக துணி தைத்துக் கொடுக்க அவரை விட யாரிருக்கிறார்கள் என்று.
மற்றவர்களின் கருத்துகளுக்காக நம் கருத்துகளை செதுக்கி வாழும் போது, நாமும் அந்த குமரேசனாகவே மாறிப் போகிறோம் இல்லையா ? நீங்கள், நீங்களாகவே வாழவிரும்புகிறீர்களா அல்லது குமரேசனாக வாழ உங்களுக்கு விருப்பமா ? முடிவு உங்கள் கையில் தான்.
20
நம்பினார் கெடுவதில்லை….
ஐயப்பன் கிருஷ்ணன்
சில வாரங்களுக்கு முன்பு, ஊருக்குச் சென்றிருந்த போது மகள் தடுக்கி விழுந்து காலில் சிராய்ப்பு ஏற்படுத்திக் கொண்டாள். அப்போது நடந்த ஒரு சம்பவம்.
முட்டியில் ரத்தம் வெளி வந்துக் கொண்டிருந்தது. ஆச்சரியமாய் அவள் அழவில்லை. மாறாக டெட்டால் கலந்த நீரை என்னிடம் இருந்து வாங்கி தானே பஞ்சு வைத்து துடைத்துக் கொண்டாள். அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழித்து பைக்கில் வெளியே கிளம்பினோம்.
” அப்பா, முட்டி மேல துணி படுது வலிக்கும். ”
” அடடே வலிக்காதும்மா.. ”
” இல்ல வலிக்கும் ”
வலி மனதிலா? உடலிலா ? வலியை விட வலியின் மீதான எண்ணமே மிக அதிக வலியைத் தருகிறது. உடல் வலியையும் மீறி மனதில் எழும் எண்ணங்களே போதும் கண்ணீரை வரவழைக்க. இப்போது அழுகை தொடங்கியது.
” சரி என்ன பண்ணலாம் ? ”
” குட்டி டப்பா பவுடர் போடு. அப்ப தான் சரியாகும் ”
அவள் சொல்லும் குட்டி டப்பா பவுடர் “ஆன்ட்டி செப்டிக்” பவுடர். கைவசம் இல்லை. பக்கத்தில் மருந்து கடையும் இல்லை. மருந்து கடை தேடி அங்கே அந்த பவுடர் வாங்கும் வரை அழுகை தொடர்ந்தது.
” குட்டி டப்பா பவுடர்” வாங்கினதும் அழுகை நின்னாச்சு.
“பவுடர் திறந்து போடவா ”
“வேண்டாம். அப்படியே இருக்கட்டும். வேணும்போது போட்டுக்கறேன்.”
“வலிக்குதுன்னு அழுதியே”
” அதான் பவுடர் இருக்குதே .. வலிச்சா போட்டுக்கறேன் ”
ஆஹா.. எத்தனை அழகாய் கடவுளின் தேவையை குழந்தை உணர்த்தி விட்டாள் ? கடவுள் இருக்கிறாரா இல்லையா சர்ச்சை வேண்டாம். என் மனதின் வலியை இறக்கி வைக்க ஓரிடம் வேண்டி இருக்கிறது. என் வலியை நிவர்த்தி செய்ய என்னுடன் யாரோ இருக்கிறார் என்ற உணர்வு பல நேரம் அந்த வலியை நிவாரணம் செய்கிறது. எல்லாம் இழந்து இயலாமையில் இருப்பவர்களுக்கும் தன் வேதனையைத் தாங்க, துயர் நீக்க “யாரோ” தேவைப் படுகிறார்கள். அந்த யாரோ இருக்கிறார்கள் என்ற நினைவே அவர்களுக்கு மீண்டு வரும் வலிமையும், ஊக்கமும் அளிக்கிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்ற பழமொழியும் எழுந்தது இதன் பொருட்டே அல்லவா ?
” கண்ணா.. எழுந்திரு… நான் துரியோதனன் வந்திருக்கிறேன்”
கண்ணனின் தலைப்பக்கம் ஆணவம் கொக்கரித்தது. கண்ணன் கண் திறந்து பார்க்கிறான். கால்மாட்டில் அர்ஜ்ஜுனன் அமர்ந்திருக்கிறான். துரியோதனனும் அர்ஜ்ஜுனனும் கண்ணனிடம் போரில் உதவி செய்யக் கேட்டு வந்திருக்கிறார்கள். முதலில் வந்தவன் துரியோதனன். ஆனால் கண்ணன் கள்ள உறக்கம் முடிந்து கண் திறந்து பார்த்ததோ அர்ஜ்ஜுனனை. வேண்டுமென்றே உருவாக்கிக் கொண்ட தர்ம சங்கடம்.
” துரியோதனா, நீ முதலில் வந்தாய் சரி. ஆனால் நான் முதலில் பார்த்தது அர்ஜ்ஜுனனை. ஆகவே நான் இப்போது இருவருக்குமே உதவி செய்தாக வேண்டும். இப்படி செய்கிறேனே… என் படைகள் அனைத்தும் ஒரு பக்கம். ஆயுதம் தாங்காமல் வெறும் தேரோட்டியாய் நான் ஒரு பக்கம். யாருக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் ”
கள்ளனின் மாயவலை விரிகிறது.
” ஹா… போரிடாமல் நீ எதற்கு என்னுடன்… உன் படைகளை அனுப்பு கண்ணா அது போதும் எனக்கு ” துரியோதனன் அவசரமாய் முந்திக் கொண்டு பதில் சொன்னான்.
” அடடே… என்ன அர்ஜுனா, அருமையான வாய்ப்பை தவறவிட்டாயே ? என் படைகளைப் பற்றி நீ அறிவாயல்லவா. அதன் திறம் அறிவாயல்லவா ”
மாயவலை மேலும் இறுகியது.
அர்ஜுனன் எந்த சலனமும் இன்றி சொன்னான்.
” நீ போரிட வேண்டாம் கண்ணா. என் பக்கத்தில் என்னுடன் சாரதியாய் இருப்பதாய் ஒப்புக் கொள் அது போதும்.”
கண்ணனின் மீது அர்ஜுனனுக்கு அத்தனை நம்பிக்கை. அவன் பக்கத்தில் இருந்தால் போதும். நோய் தீர்க்கும் மருந்து அவன். உயிர் காக்கும் சஞ்சீவினி. அவன் அருகாமை வலிமை தரும். அந்த நம்பிக்கை வீணானதா என்ன ?
உளவியல் படியும் இது ஏற்கப்பட்டதே. நம்பிக்கை மனதில் இருந்தால் போதும். பெரும்பாலானவற்றை நம்மால் சாதிக்க முடியும் என்கிறது உளவியல் மருத்துவம். ஒருவனுக்கு இருட்டில் வெளியே போவதென்றால் ரொம்பவும் பயம். உளவியல் நிபுணர் ஒரு நீளமான கொம்பை எடுத்து அதில் ஏதோ மந்திரம் போல் செபித்து அதில் குங்குமம் மஞ்சள் தடவி அவன் கையில் கொடுத்து சொன்னார்.
” உனக்கு பயம் வரும் போதெல்லாம் இதை எடுத்து உன் கண் முன் அசைத்துக் கொள். பயம் போய்விடும் ” என்றார்.
சிறிது காலம் கழித்து அவனுக்கு பயம் முற்றிலுமாக போய்விட்டது. அவர் கொடுத்தது என்னமோ வெறும் சாதாரண கம்பு தான் என்றாலும் நம்பிக்கை அவனை முற்றிலும் குணப்படுத்தியது. நண்பர் ஒருவருக்கும் இதே பிரச்சினை இருந்தது. அவருக்கும் இதே வைத்தியம் சொன்னேன். இரண்டு நாள் கழித்து மண்டையில் அவர் கட்டோடு வந்தார்.
” ஏன் சார் என்னாச்சு ”
” அட போங்க சார்.. நீங்க வேற. பயம் வரும்போது குச்சிய வச்சு ஆட்ட சொன்னீங்க. அதான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் ”
” அச்சச்சோ அப்படி என்ன ஆச்சு சொல்லுங்க சார்.”
” நேத்து வீட்டுக்கு போனதும், கண்ணு முன்னாடி பயம் வந்தது. பயத்துக்கு முன்னாடி இதை ஆட்டுனா பயம் போய்டும்னு ஆட்டுனேன். அந்த கொம்பாலேயே பயம் என்னை மண்டைல போடு போடுன்னு போட்டுடுச்சு சார்”
” என்ன சார் சொல்றீங்க ”
” அட … என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம் சார்.. ”
” தப்பு பண்ணிட்டீங்களே சார். இந்த மந்திரம் வெறும் பயத்துக்கு மட்டும் தான் வேலை செய்யும். பத்ரகாளிக்கு முன்னாடி இதெல்லாம் என்ன சார் பெருசு… ”
சொல்லிவிட்டு நான் மெதுவாக நழுவினேன். நான் சொன்னதுல் ஏதும் தவறு இருக்கிறதா? நீங்களே சொல்லுங்களேன் ?
21
கடைசிப் பக்கம்
ஐயப்பன் கிருஷ்ணன்
மனசு விசித்திரமானது இல்லைங்களா ? கொஞ்சம் இல்லைங்க ரொம்பவே விசித்திரமானது. அது எந்த நேரத்தில் எப்படிச் சாயும் என்பதை சொல்றது சிரமமானது. நம் செயல்களில் பெரும்பாலானவை நன்மையிலோ தீமையிலோ, வெற்றியிலோ தோல்வியிலோ முடிவது மனதின் நிலமையைப் பொறுத்து தான் இல்லைங்களா ?
NLP எனப்படும் Neuro Lingual Program சொல்லும் கருத்து என்ன அப்படின்னு பார்ப்போம். நாம் மூளை புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்லும் கட்டளைகள், வார்த்தைகள் மனதில் பதிவதோடு இல்லாமல் ஆழ்மனதில் சென்று தங்கிவிடும். கூடவே அது தேவையான கட்டளைகளை உடலுக்கோ அல்லது மூளைக்கோ கொடுத்துவிடும் என்கிறார்கள் அத்துறை வல்லுனர்கள். சில மன சிக்கல்களில் இருந்து விடுபட இந்த முறை நன்கு வேலை செய்கிறதாம். எதிராளி எப்போதும் தவறு, நான் எப்போதும் சரி என்ற எண்ணம் நேர்மறையா என்றால் நிச்சயம் மாற்றப் படவேண்டிய எதிர்மறை எண்ணம் இது. அப்படியானவர்களுக்கும் இது போன்ற பயிற்சி நல்ல பலன் தரும். அதனால தான் எதையுமே நேர்மறையா பேசனும் அப்படின்னு நமக்கு பெரியவர்கள் சொல்லிக் குடுக்கறாங்க.
அனுமனுக்கு பலம் இருக்கிறது. ஆனால் அதை அவர் உணராதவராக இருந்த வரை அவர் மதியூகம் மிக்க ஒரு மந்தி அம்மட்டே. ஆனா ஜாம்பவான் அவரோட பராக்கிரமத்தை சொல்லும் போது அனுமனால் செயற்கரிய செயல் செய்யும் பலம் வந்து சேர்கிறது. அதே போல இராமனை எடுத்துக் கொண்டால் அதி பலசாலி. ஆனால் தன் தம்பிக்கு ஒன்று என்று வந்த போது அப்படியே அத்தனை சக்தியும் வடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான். அப்போது இந்திரசித்து அல்ல, அவன் படை வீரன் யாரேனும் வந்திருந்தாலும் இராமனை எளிதில் வெற்றிக் கொண்டிருக்க முடியும். காரணம் இராமனின் மனதில் இருந்த வலு வற்றிப் போயிருந்தது மீண்டும் தன் தம்பி உயிர்த்தெழும் வரைக்கும்.
அதைத்தான் நம்மால் முடியும் என்ற எண்ணமே பாதி பலம் என்பார்கள். அப்படியான ஒருவன் தான் வாலி. அவனின் பலம் தன்னால் முடியும் என்பது. எதிராளியின் பலகீனம் வாலியால் முடியும் தன் பலம் அவனால் அபகரிக்கப் படுகிறது என்ற எண்ணம். எப்போது எதிராளி தன் பலம் இழப்பதாக நினைக்கிறானோ அப்போதே அவன் பாதி தோல்வி அடைகிறான். இதற்கு நேரடி வாழ்வியல் உதாரணம் சொல்ல முடியும்.
சில வருடங்களுக்கு முன்னால நேரமேலாண்மை வகுப்புக்குச் போயிருந்தேன். அதில் ஒரு அங்கமாக “நேர்மறை/எதிர்மறை” பற்றிய பகுதி வந்தது. இன்ஸ்ட்ரக்டர் எதிர் மறை எண்ணம் எப்படி நம் உடலையும் பாதிக்கும் என்பதை செயல்முறையில் காண்பித்தார்.
நல்ல பலசாலியான ஒருவனை அழைத்து கையை நீட்டச் சொல்லி வேறொருவன் மூலம் அந்தக் கையை இழுக்கச் சொன்னார். ஹ்ம்ஹூம். அவனால் முடியவே இல்லை. பின்பு காகிதத்தில் ஏதோ எழுதி கொடுத்து இதை மூன்று நான்கு முறை படி என்றார். பின் அதே போல கையை நீட்டச் சொல்லி இழுக்கும் போது வெகு இலகுவாக கையை கீழே இழுக்க முடிந்தது.
அந்த காகிதத்தில் அவர் எழுதி இருந்தது
” நான் என் உடலின் சக்தியை இழந்து கொண்டிருக்கிறேன்”
அது படிக்கும் வரைக்கும் நன்றாக பலசாலியாக இருந்த அந்த மனிதன் சட்டென்று பலம் குன்றிப் போகக் காரணமானது எதிர்மறை எண்ணமன்றி வேறென்ன ?.
இப்படித்தான் பாருங்க ஒரு வக்கீல் கட்சி காரங்க கிட்ட சொல்லிட்டிருந்தார். எல்லாமும் முடியும் முடியாதது எதுவுமே இல்லைன்னு.
பக்கத்துல இருந்த அவரோட பையன் சொன்னான். ஆமா முடியாதுங்கற வார்த்தை எங்கப்பா அகராதில இல்லவே இல்லைன்னு. இவருக்கு ஒரே சந்தோஷம். மத்தவங்க முன்னாடி நம்ம பையன் எப்படி ஒசத்தியா பேசறான்னு. கட்சிக் காரங்க எல்லாம் போனதும் பையனக் கூப்டு நல்லா சொன்ன தம்பி. ஆமா உன்னை அப்படி சொல்லத் தூண்டினது என்ன ? என்னோட திறமையா அப்படின்னு கேட்டார். அதுக்கு பையன் சொன்னான்.
” அதெல்லாம் ஒண்ணுமில்ல… நேத்து அகராதிய பொரட்டிட்டு இருக்கும் போது முடியாதுங்கற வார்த்தை இருந்த பக்கத்தையெல்லாம் நாந்தான் கிழிச்சுட்டேன் ” அப்படின்னு.
1
ஆசிரியர் பற்றி
ஐயப்பன் கிருஷ்ணன்
ஜீவ்ஸ் என அறியப்படும் ஐயப்பன் கிருஷ்ணன் பிறந்து வளர்ந்தது வேலூர். பணி நிமித்தம் வசிப்பது பெங்களூர். நண்பர்களுடன் இணைந்து, தமிழில் புகைப்படக்கலைக்கான தளத்தை photography-in-tamil.blogspot.com நான்காண்டுகளாக நடத்தி வருகிறார். கல்கியில் இவர் எடுத்த படங்கள் இருமுறை வெளியாகியுள்ளன. அதீதம், பண்புடன், வல்லமை, இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதிவரும் இவரது படைப்புகள் யூத்ஃபுல் விகடன், உயிரோசை ஆகிய தளங்களிலும் அமுதசுரபி, வடக்குவாசல், கல்கி பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. நகைச்சுவை எழுத்திலும் வல்லவர். படைப்புகளை ‘எண்ணங்கள் இனியவை’ [http://kaladi.blogspot.in/] வலைப்பூவில் தொகுத்து வருகிறார்.
jeevaa@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக