British agent
சிறுகதைகள்
Backபிரிட்டிஷ் ஏஜெண்ட்
கதைகள் & கட்டுரைகள்
பேயோன்
நானும் பாரதியும்
மகாகவி பாரதியின் பெயர் சுப்பிரமணியமாக இருந்தாலும் அவர் ஐயங்கார் என்றே நீண்டகாலம் நினைத்திருந்தேன். அவரது நாமம், கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தொடர்பு ஆகியவை சில காரணங்கள். எனினும் 1906இல் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தபோது அந்த மனத்தகவல் மாறியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நானும் எனது நண்பனும் (பெயரெல்லாம் கிடையாது) கோவில் சுவரோவியங்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க நிதி கிடைப்பது போல் இருந்தது. மாதிரிப் படமாக பார்த்தசாரதி கோவில் சுவரோவியங்களைப் பற்றி ஒரு படம் செய்தோம். பார்த்தசாரதி கோவில் பின்வாசலுக்கு எதிரில் துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் இருந்த பாரதியின் சொகுசான வீட்டுக்கு அவருடன் பேச நானும் எனது பெயரற்ற நண்பனும் சென்றோம்.
சமகாலக் கவிதை குறித்துச் சிறிது நேரம் அளவளாவினோம். பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தபோது 'சுப்பிரமணி!' என்று கூப்பிட்டுக்கொண்டே ஒருவர் வீட்டுக்குள் வந்தார். அப்போதுதான் எனக்கு உறைத்தது பாரதியார் வைணவர் அல்ல என்று. உள்ளூர் பாரம்பரியக் கலைகளில் பாரதியின் ஞானம் கேள்விக்குட்படுத்தப்பட முடியாதது என்றாலும் எங்கள் ஆவணப் படத்திற்கு முழுமுற்றான வைணவர் தேவைப்பட்டார். பெரும் சங்கடத்துடன் அவரிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நண்பருடன் விடைபெற்றேன். நல்லவேளையாக பாரதி அடுத்த கணமே எங்களை மறந்துவிட்டு வந்தவரை உபசரிப்பதில் இறங்கிவிட்டார்.
அடுத்து நான் அவரைச் சந்தித்தது 1910இல் இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில். அது பாரதிக்கு இக்கட்டான தருணம். கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் போல் ரகசியமாகச் செயல்பட வேண்டிய நிலையில் அவர் இருந்தார். பிரிட்டிஷ் அரசு 1909 ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்ட மகஜர் மூலம் அவரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு நூறு கசையடிகள் இனாம் அறிவித்த பின்பு சென்னை மாகாணத்தின் பல மூலைகளிலிருந்து மக்கள் அவரைத் தேடத் தொடங்கினார்கள். எனவே வேறு வழியின்றி அவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வீடு மாறினார். அங்கேயும் போய்ச் சும்மா இராமல் சூர்யோதயம் பத்திரிகையை நடத்தினார்.
எனக்குச் சென்னையில் வேலை தேடி அலுத்துப்போனது. புதுச்சேரிக்குச் சென்றால் பாரதியிடம் சூரியோதயத்தில் துணை ஆசிரியராக வேலை பார்க்கலாம் என்று நம்பினேன். அவர் எங்கே தங்கியிருந்தார் என்று எனக்குத் தெரியாது. பாரதிக்குத் தெரிந்த சிலரைத் தொடர்பு கொண்டு அவர் முகவரியைப் பெற முயன்றேன். துரதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி முழுவதும் எனக்கு எப்படியோ பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று பெயர் ஏற்பட்டுவிட்டிருந்தது. எனக்குத் திலகர் மீதுதான் சந்தேகம். திலகர் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார். நான் சுவரொட்டிகள் மூலமான போராட்டத்தை மட்டுமே ஆதரித்தேன். நான் தமிழிலும் அவர் மராத்தியிலுமாகக் காரசாரமான கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு என்னவென்றால் பாரதியின் இடத்தை எனக்குச் சொல்ல யாரும் தயாராக இல்லை. பத்திரிகை வேலைகளை அவர் வீட்டில் இருந்துகொண்டு செய்தார் என்பதால் சூரியோதயத்தின் காரியாலயத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை.
புதுவையில் ஒருவாரகாலம் அலைந்து திரிந்தேன். என் உண்டியலை உடைத்துப் புதுவைக்கு எடுத்துச்சென்ற சில்லறைக் காசுகளில் எலிசபெத் ராணி உருவம் இருந்ததால் அங்கு அது செல்லவில்லை. அந்த நாணயங்களை எடைக்குப் போட்டுச் சிறிது உள்ளூர்ச் சில்லறை தேற்றிச் சில நாட்கள் அதில் சமாளித்தேன். முதல் வாரத்தின் கடைசியில் ஒரு நாள் காலை கண்ணில் பட்ட ஓர் உணவகத்தில் சாப்பிடச் சென்றேன். வாசலில் பாரதி தமது நண்பர்களோடு தீவிர உரையாடலில் ஈடுபட்டிருந்தார். சுதந்திர இந்தியாவில் எங்கெல்லாம் நல்ல காபி கிடைக்கும் என்பது பேச்சின் மையப் பொருளாக இருந்தது. அப்போதுதான் அவரை முதல்முறையாக தாடியில் பார்த்தேன். "தீர்த்தக் கரையினிலே" பாடலை அந்த ஆண்டில் எழுதினார் என்று நினைவு. எனவே அந்தத் தாடிக்குப் பின்னால் ஒரு 'கண்ணம்மா' இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் தாடி மட்டுமே வைத்திருந்தார், மீசை வளர்க்கவில்லை.
என்னைப் பார்த்ததும் உற்சாகமாக "நீ வா!" என்றார் பாரதி. அவர் சொல்லாதிருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். நல்ல பசி. உணவகத்தில் நுழைகையில் "பிராமணாள் மட்டும்" என்ற பலகையைப் பார்த்துத் தயங்கி நின்றேன். நான் எந்த ஜென்மத்திலும் பிராமணனாக இருந்ததில்லை. குறிப்பாக நடப்பு ஜென்மத்தில். பிடிக்காது என்றில்லை. அது என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். பாரதி என் வலது புருவம் போன போக்கைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தார். "பயப்படாதே. சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை போட வருவதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்" என்றார். உள்ளே நிறைய பிரெஞ்சுக்காரர்களும் இருந்தார்கள்.
சில வாய்கள் சோறு உள்ளே சென்ற பின்பு எனக்குப் புத்துயிர் கிடைத்தது. "என்ன சார், தாடியெல்லாம் பலமாக இருக்கிறதே?" என்று விசாரித்தேன். "நன்றாக இருக்கிறதா?" என்றார் பாரதி. மீசை இல்லாமல் தாடி மட்டும் இருந்தால் இஸ்லாமியர் போலிருப்பதாகச் சொன்னேன். பாரதிக்கு முகம் தொங்கிப்போனது. "அப்படியா சொல்கிறாய்?" என்றார். நண்பர்கள் பக்கம் திரும்பி, "இஸ்லாமியன் போலவா இருக்கிறேன்?" என்று கேட்டார். அவர்கள் ஆமோதிக்க, சில நொடிகளுக்குப் பிறகு, "சென்னையிலிருந்து வரும்போது பழைய மீசை ஒன்று கையோடு எடுத்துவந்தேன். ஒருநாள் இப்படி இருந்த பிறகு அதை அணிந்துகொள்கிறேன்" என்று கோட்டுப் பையிலிருந்து ஒரு முறுக்கு மீசையை வெளியே எடுத்துக் காட்டினார். வெள்ளைக்காரனைத் திட்டாமல் பாரதிக்கு சாப்பாடு செரிக்காது என்று அறிந்துகொண்டேன். சாப்பிடும்போது திட்டிக்கொண்டே இருந்தார். இடையிடையே கையில் இருந்த மீசையை கம்பீரமாக முறுக்கிக்கொண்டிருந்தார். பாரதி மீசை இல்லாமல் தாடி மட்டும் வைத்திருந்த அரிய புகைப்படம் ஒன்று இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு காங்கிரஸ் அதை அழித்துவிட்டது. இருந்தாலும் ருஷ்யாவில் க்ரெம்ளின் ஆவணக் காப்பகத்தில் ஒரு பிரதி இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். பாரதிக்கு அந்த உணவகத்தில் அக்கவுன்ட் இருந்ததால் நான் கைக்காசைத் தர நேரவில்லை.
உணவருந்திவிட்டு வெளியே வந்து வேலை பற்றிப் பேச்செடுத்தேன். தமது நண்பர்களைக் காட்டி, "இவர்கள் வேலைக்கு ஆப்பு வைக்க ஆசையா?" என்றார். அவர்கள் அனைவரும் சூரியோதயத்தின் ஊழியர்கள். எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருந்தது. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, "சரி, நீ எழுதியது ஏதாவது வைத்திருக்கிறாயா?" என்று கேட்டார் பாரதி. நான் எப்போதும் ஆத்திர அவசரத்திற்கு ஆகுமென்று பத்துப் பக்கமாவது மடித்து ஜேபியில் வைத்திருப்பேன். 'நம்மை வாசிக்கும் புத்தகங்கள்' என்ற கட்டுரை கைவசம் இருந்தது. கொடுத்தேன். பாரதி அதை அப்போதே முழுமையாகப் படித்தார். பின்பு என்னைப் பார்த்துப் புன்னகைத்து, "பலே!" என்றார். "நாளை நாங்கள் முட்டுக்காடு போகிறோம். நீயும் வாயேன், மேற்கொண்டு பேசுவோம்" என்றவரிடம் தலையாட்டிய என்னிடம் சிறிதும் பணம் இல்லை. இருந்தாலும் ஒப்புக்கொண்டேன். "முட்டுக்காடு வெள்ளையன் பிராந்தியம். மாறுவேஷத்தில் வா. நாங்களும் மாறுவேஷத்தில்தான் வருவோம்" என்று எச்சரித்தார் பாரதி.
மறுநாள் நாங்கள் பேசிக்கொண்டபடி செங்கல்பட்டு ரெட்டைப்பாலம் அருகே பாரதி வேடத்தில் நின்றிருந்தேன். பத்து வயதில் பள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதியாக வேடம் தரித்த பின்பு அது இரண்டாம் முறை. பாரதியும் அவரது சக ஊழியர்களும் மாற்றுருவத்தில் இருந்ததாலோ என்னவோ எங்கும் காணப்படவில்லை. நான் மீசையை முறுக்கிக்கொண்டுவிட்டுக் கையை இறக்கும்போது கோடுபோட்ட கூம்புத் தொப்பியில் போலீஸ்காரர்கள் வந்து பிடித்துவிட்டார்கள். ஒரு வாரம் அந்தமான் சிறையில் இருந்தேன். அதற்குப் பின்பு கடைசி வரை பாரதியைப் பார்க்கவே முடியவில்லை. பாரதி எழுதிய 'புதுச்சேரி கச்சேரி' பாடலில் குறிப்பிடப்படும் டைகர் ஆச்சாரி எனக்கும் பரிச்சயமானவர். அவர் சொன்ன தகவல்: பாரதி என்னை பிரெஞ்சு ஏஜெண்ட் என்று நினைத்திருக்கிறார். அந்தத் தப்பபிப்பிராயத்துடனே 1921இல் மரித்திருக்கிறார். இது நடந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் நான் எங்கு போனாலும் பிரிட்டிஷ் கைக்கூலி போலீசார் என்னை நிழலாகப் பின்தொடர்கிறார்கள்.
குமார் துப்பறிகிறார்
ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை
பெனாயில் மணக்கும் சம்பவ வீட்டிற்குள் கான்ஸ்டபிள் 114உடன் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. வீடு கழுவப்பட்டிருந்தது. பதற்றமான நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் இன்ஸ்பெக்டரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார். 4க்கு 4 பாத்ரூமில் அந்தப் பெரியவர் சடலமாகக் கிடந்தார். காலடியில் ஒரு குளியல் சோப்.
"காலைலேந்து இப்பிடித்தாங்க கெடக்கறாரு. கூப்டா பதிலே இல்ல," பெரியவரின் மனைவி விம்மினார்.
"மிஸஸ் மேடம், உங்க கணவர் கொல்லப்பட்டிருக்காரு" என்றார் குமார்.
மனைவி ஒரு கணம் அதிர்ந்து பின் கதறி அழுதார். "அவரை யாருங்க கொல்லப்போறாங்க?"
"இவருக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?" என்றார் குமார், கீழே கிடந்தவரை லத்தியால் சுட்டிக்காட்டி.
"இல்லீங்க, இவர் யார் வம்புக்கும் போக மாட்டாரு" என்றார் மனைவி அழுதபடி.
குமார் குனிந்து பிணத்தின் பாதங்களைப் பார்த்தார். பிறகு முகத்தை நெருங்கிப் பார்த்தார்.
"பேச்சு மூச்சில்லாம கெடக்கறப்ப ஏன் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ல?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"அவர் கோவிச்சிக்கிட்டு பேசாம இருக்கார்னு நினைச்சேன்..."
"கோவிச்சுக்கிட்டுன்னா அவரோட எதுக்காவது சண்டை போட்டீங்களா?"
"சண்டை இல்லைங்க. ரசத்தை வாயில வெக்க முடியலன்னாரு. அதுக்காகத் திட்டுனேன்."
"மிச்சத்தை நான் சொல்றேன். அவர் மேல இருக்குற கோவத்துல அந்த ரசத்தைக் குடுத்தே அவரைக் கொன்னுட்டீங்க. அப்புறம் அவரை பாத்ரூமுக்கு இழுத்துட்டு வந்து காலடில சோப்பை வச்சீங்க. கைலேந்து சோப்பு வாசனை போக வீட்டைக் கழுவுற சாக்குல பெனாயிலைப் போட்டு கையைக் கழுவிருக்கீங்க. ஆம் ஐ ரைட்?"
அந்த பெண்மணி ஓடப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரைத் தடுத்து நிறுத்தித் தொடர்ந்தார்.
"ஆனா பேஷன்ட்டோட ரெண்டு கால்லயும் சோப்பு வாசனை வர்ல, பிசுபிசுப்பு இல்ல. வாயை நல்லா துடைச்சு விட்டிருக்கீங்க. பட், ரசத்தோட வாசனை உங்களை காட்டிக் குடுத்திருச்சு. அரஸ்ட் ஹெர்!"
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
ஆங்கில நாள்காட்டியின் அருமை
தமிழ், சீன ஆண்டுகளைப் போல் ஆங்கில ஆண்டுகளுக்கு விபவ வருடம், கரடி வருடம் என்று பெயர்கள் எதுவும் இல்லை. வெறும் எண்களை வைத்துத்தான் அவற்றை அடையாளம் காண வேண்டும். ஒரு ஆளைப் பெயர் சொல்லி அழைக்காமல் ரெண்டாயிரம், நாலாயிரம் என்று கூப்பிட்டால் எப்படி இருக்கும், அது போல. அதே சமயத்தில் தமிழ் ஆண்டுப் பெயர்களில் குழப்பங்கள் உண்டு. 'ஸ்ரீமுக' என்பது தமிழ் ஆண்டு. 'சிறிமுக' என்பது இலங்கைத் தமிழ் ஆண்டு. விளம்பி, ஹேவிளம்பி என ஒரே மாதிரி பெயர்களைக் கொண்ட ஆண்டுகளும் உண்டு. ஆங்கில ஆண்டுகளில் 1696, 1969 போன்றவற்றைக் குழப்பிக்கொள்ள மாட்டோம் (வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்போம் என்பது வேறு விஷயம்). ஆனால் ஆண்டுகளை எண்களால் குறிப்பதில் உள்ள வசதி, அவற்றைக் கி.மு., கி.பி. என்று குறிப்பிடலாம். குறிப்பாக அறிவியல் புனைவு எழுதும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'கி.பி. சுத்த தன்யாசி ஆண்டு' என்று எழுதினால் அதன் விநோதமே தனி. அதனால்தான் தீவிரத் தமிழ்ப் பற்று கொண்டவர்கள்கூடத் தேதிகளை 'கஅ-க0-சர்வசித்து' என்கிற ரீதியில் எழுதுவதில்லை. ஆங்கில நாள்காட்டிப்படி அரபு எண்களில் எழுதுகிறார்கள். இது போக, தமிழ் ஆண்டுகளுக்கு 60 பெயர்களே திரும்பத் திரும்ப வரும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு தனித்துவமான எண் இருக்கிறது. ஒரே எண் வெவ்வேறு ஆண்டுகளைக் குறிக்கப் பயன்பட்டுக் குழப்பாது. ஆங்கில நாள்காட்டிக் காலம் முடியும் வரை ஆண்டுகளுக்கு எண் பஞ்சமே இராது. அதோடு ஆங்கில நாள்காட்டிதான் எண்களால் காலத்தின் எல்லையின்மையை உண்மையாகப் பிரதிபலிக்கிறது. தமிழர்கள் ஆங்கில நாள்காட்டியை சுவீகரித்துக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை.
பா.ரா.வின் 'அன்சைஸ்'
(பா. ராகவனின் 'அன்சைஸ்' புத்தகத்தின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரை)
வாசக வாசகியரே, இந்நூலைப் படிக்குமுன் உங்கள் புன்னகை மீசைகளை முறுக்கி விட்டுக்கொள்ளுங்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள். பா. ராகவனின் இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்த நேரமனைத்தும் ஒரு மெல்லிய புன்னகை எனது இதழ்களிரண்டிலும் ஒரு சராசரி எட்டு மாதக் குழந்தை போல் தவழ்ந்தது. காரணம் உள்ளடக்கம். நகைச்சுவை என்ற இவரது எழுத்தின் குறிக்கோள் ஆரம்பத்திலேயே அம்பலப்பட்டு சந்தியைச் சிரிக்கவைக்கும் என நம்புகிறேன். சிரிக்கவைத்து, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைத்து, 'அட ஆமாம், இதற்குச் சிரிக்காமல் அழவா செய்வார்கள்?' என்று மீண்டும் ஒருமுறை சிந்திக்கவைக்கும் கட்டுரைகளின் தொகுப்பிது.
ராகவன் இப்போது தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போய் பெண்களை அழவைப்பதிலும் அவர்களின் ரத்த அழுத்தத்தைப் புகுந்தவீட்டார் போல் ஏற்றிவிடுவதிலும் முழுநேரமாக ஈடுபட்டுவருகிறார். சமீபகாலம் வரை இந்த நபர் ஆனந்தக் கண்ணீரையும் சொரிய வைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்நூலில் காணக் கிடைப்பவை பா.ரா.வின் சிறு சிறு வாழ்வனுபவத் துளிகள். இவை நமக்கு ஏற்படாமல் தப்பித்தோம் என்று நம்மை (பின்னே பிறரையா?) நினைக்கவைக்குமளவு இத்துளிகளை விரிவாக வர்ணிக்கிறார் பா.ரா.
எழுத்தாளர் திரு. பா. ராகவன் தமது மொழிநடையில் சில சுதந்திரங்களை ஏற்றுக்கொள்கிறார். ஆதௌ கீர்த்தனாம்பர நடை, தானியங்கி எழுத்து, மலைப் பிரசங்க நடை ஆகிய மூன்றின் சங்கமம் இவர் நடை. வார்த்தை விளையாட்டுச் சிலேடைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சொந்தத் துன்பங்கள், சுயசுபாவப் போக்குகள், விநோத மனிதர்கள், அன்றாடச் சிக்கல்கள், நகர வாழ்க்கை அவலங்கள், வாழ்க்கைமுறை விசித்திரங்கள் அனைத்தையும் தழுவிப் புத்தக இறுதிக்குச் செல்கிறது புத்தகம். 'டெஸ்க்டாப் மானிட்டரின் முதுகு கர்ப்பம்', 'இனி நான் ஆரோக்கியசாமி', 'சட்டை ஒரு தேசம்' போன்ற உயர்நகைச்சுவைப் பிரயோகங்கள் உங்களுக்கு சிரிப்பைத் தரவில்லை என்றால் அவற்றை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று அர்த்தம். படியுங்கள்.
நகைச்சுவை எழுத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று சுய எள்ளல். நம்மைப் பார்த்து நாம் சிரிக்காவிட்டால் வேறு யார் சிரிக்கப்போகிறார்கள்? சரி, யாரெல்லாம் சிரிக்கப்போகிறார்கள்? பல பேர். ஆனால் யாருக்கும் நம்மைப் பற்றி நம் அளவுக்குத் தெரியாதல்லவா? அதனால் நம் மீதான நம் சிரிப்பில் இயற்கையாகவே நமது கைதான் ஓங்கியிருக்கும். அதில்தான் தொடங்குகிறது தனக்கு மிஞ்சித்தான் தான தருமம். இதில் நூலாசிரியர் கொடையேழு வள்ளல்களில் ஒருவர் (கடையேழு என்பதை நகைச்சுவைக்காக மாற்றி கொடையேழு என்று எழுதியிருக்கிறேன். இங்கு சிரிக்கவும்). இவரது சுயபாடுபொருள்கள் இவரது சொந்த உருவம் ('அன்சைஸ்' என்ற கட்டுரை), நடைமுறை இன்னல்களுக்கு எழுத்தாளக் கையாலாகாத்தனங்கள் ஆற்றும் எதிர்வினை (விசாரணைக்கு வா), அர்த்தமுள்ள அபிலாஷைகளில் அகத்தார் ஆர்வங்காட்டாமை (ஜெய் ஸ்ரீராம்!), மறைமுக நகைக் கலாச்சாரத்திற்கு ஆன்மீக ஆரோக்கியங்களின்பேரில் பலியாதல் (ஜடாமுடிக்கு வழியில்லை), சிந்தாமல் சாப்பிடத் தெரியாமை (பங்கரை) என எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் மற்றவர்களையும் மற்ற விசயங்களையும் எள்ளுகிறார். அண்டைவீட்டார், சினிமாவுக்கு வரும் மருத்துவர்கள், அரசு இயந்திர மனிதர்கள், பொட்டி தட்டும் இயந்திரவாயர்கள், நண்பர்கள், சினிமா-தொலைக்காட்சிக்காரர்கள், சில பெண்கள் எனப் பலரையும் இடிக்கிறார். அவர்களின் உளவியலை அவர் ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஒரு மருத்துவர் தான் அளிக்கும் சிகிச்சைக்கு உட்பட வேண்டிய மனிதர்களைப் பழுதடைந்த இயந்திரங்களாகப் பார்ப்பது போல் பா.ரா. தான் கதையாடும் மனிதர்களைப் பார்க்கிறார் எனப் படுகிறது. எல்லோரும் நடமாடும் விவரணைகள். இங்கே சிந்தனைக்கு வேலை இல்லை, சிரிப்புக்குத்தான் வேலை. ஆனால் இவர்களையும் இவர்கள் தொடர்பான சம்பவங்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த நூலுக்குத் தாரை வார்ப்பதன் மூலம் பணநஷ்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.
பா.ரா.வின் சிரிப்புச் சத்தம் புத்தகம் முழுவதும் கேட்கிறது. இது எத்தகையதான சிரிப்பு எனில், 'நீயும் சேர்ந்து சிரி. ஏனென்றால் இதில் இதற்கு மேலும் ஒன்றும் இல்லை. நம்மால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை' என்ற செய்தியைச் சொல்லும் சிரிப்பு. அதே சமயத்தில் கல்வி, சினிமா, இலக்கியம், இதழியல், இசை, பொருளாதாரம் போன்ற விசயங்களைப் பற்றி சீரியசாகவும் எழுதியிருக்கிறார் இந்தப் புத்தகத்தில். தீவிரக் கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவையாக உள்ளன. தீவிரமான ஆசாமிகளுக்கு அவை பிடிக்கலாம். இவற்றில் விவாதிக்கத்தக்க விசயங்களும் உள்ளன.
இவை அனைத்தினுடாகவும் ஒரு ஓரமாக, ஆனால் தூக்கலாக வெளிப்படுவது பா.ரா.வின் சமகால வைணவ அடையாளம். பல கட்டுரைகளில் வியப்பையோ விசனத்தையோ வெளிப்படுத்த எம்பெருமான் உதவிக்கு அழைக்கப்படுகிறார். வாசிப்பு விரிவு சற்றுக் குறைவாக இருக்கக்கூடியவர்கள் இதென்ன ஒரே வேதாந்த தீபிகையாகக் கொட்டுகிறது என்று வியக்கலாம். பா.ரா. அடுத்து வரும் (தமது) புத்தகங்களில் நகைச்சுவைக்கு விவிலியத் தமிழ் நடையை ஒருகை பார்க்க வேண்டும் என்பது என் அவா.
முக்கியமான ஐஸ்லாந்தியப் படம்
சமீபத்தில் பர்மா பஜாரின் டி.வி.டி. கடை ஒன்றில் பார்த்த ஒரு டி.வி.டி. உறை என்னைக் கவர்ந்தது. அது ஒரு ஐஸ்லாந்தியப் படம். அட்டையில் ஒரு அழகிய பெண் கண்மூடி மெய்மறந்த நிலையில் டி.வி.டி. கடைக்காரரை நோக்கிப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் பின்னணியில் 'பிளர் எபெக்ட்'டில் நீல 'டின்டிங்'கில் கடற்கரை. அவள் தலைக்கு மேல் பல விருதுப் பட டி.வி.டி.களில் இருப்பது போல ஒரு கோதுமை இலை வளையம். அவள் மார்பகங்கள் மீதும் இரு வளையங்கள். பல திரைப்பட விழாக்களில் விருது பெற்றதை அவ்வளையங்கள் சொல்லின.
"இந்த ஆண்டின் மிக முக்கியமான வெளிநாட்டுப் படம்" என்ற 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' பத்திரிகை விமர்சன வாசகம் அவள் சுவாசத்தின் அநேகமாக உஷ்ணமான ஸ்பரிசத்தை வாங்கிக்கொண்டிருந்தது. அவள் தாடையின் கீழே "ஆற்றலின் சுற்றுப்பயணம்" என்றார் ஒரு வெள்ளைக்கார விமர்சகர். "இந்த மாதிரி வராது" என்ற 'நியூயார்க் டைம்'ஸின் வார்த்தைகள் அவள் மேலாடையை அத்துமீற முயன்றுகொண்டிருந்தன. தவற விடக் கூடாத படம்தான் போல என டி.வி.டி.யை வாங்கினேன் (அக்கவுண்ட் இருக்கிறது).
The Falcon என்ற இந்தப் படம் நிஜமாகவே 1998இன் மிக முக்கியமான படம். இந்த ஆண்டிலும் முக்கியமானதுதான். அதற்காகவே இந்த விமர்சனம். விமர்சனம் என்று வரும்போது முழுக் கதையையும் எழுதுவது அவசியம். இது தமிழ் கதைசொல்லல் மரபின் நீட்சி. நாம் சொல்லும் கதை சினிமாவில் வந்ததாக இருப்பது பிரச்சினை இல்லை. பெரும்பாலான படங்களின் கதை ஒரே மாதிரி இருக்கிறது. எனவே டிரீட்மெண்ட் மூலம் வித்தியாசம் காட்டுகிறார்கள். அது போக, முழு கதையைச் சொன்னால்தான் மக்கள் காட்ஃபாதரையும் சினிமா பாரடைசோவையும் குழப்பிக்கொள்ள மாட்டார்கள்.
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜவிக்கில் ஒருவன் இருக்கிறான். படத்தில் முதலில் அவனைக் காட்டுவதால் அவன்தான் கதாநாயகன். அவன் ஒரு இடத்திற்குப் போகிறான். அங்கே இன்னொருவன் இருக்கிறான். இருவரும் பேசுகிறார்கள். முதல் ஆள் கிளம்பி வேறு ஓரிடம் செல்கிறான். போன இடத்தில் அவனுக்கு ஒன்று நடக்கிறது. இதனால் ஒரு மாற்றம் நிகழ்கிறது. ஒருத்தி இவனைத் தேடி வருகிறாள். இவன் கோபமாகப் பேசுகிறான். அவள் அழுதுவிட்டுக் கிளம்புகிறாள். அவள் போகும் இடத்தில் நான்கு பேர் அவளுடன் நீண்ட நேரம் பேசுகிறார்கள். பேசியவர்கள் முதல் ஆளிடம் வருகிறார்கள். முதல் ஆள் இரண்டாம் ஆளை வரவைக்கிறான். எல்லோரும் நீண்ட நேரம் பேசுகிறார்கள்.
இதற்கிடையில் அந்தப் பெண் திரும்பி வருகிறாள். அவளிடம் எல்லோரும் பேசுகிறார்கள். அந்தப் பெண்ணும் வந்தவர்களில் ஒருவரும் அங்கிருந்து காரில் கிளம்புகிறார்கள். முதல் ஆள் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். இரண்டாவதாக ஒருத்தி வந்து அவனிடம் ஒன்றைக் கொடுக்கிறாள். இருவரும் சில நொடித் தியாலங்களுக்கு முத்தமிடுகிறார்கள். அவன் அந்தப் பொருளை வாங்கி உள்ளே கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வருகிறான். அங்கேயே சிறிது நேரம் நிற்கிறான். அவன் மீது பீப்பி வகை வாத்திய இசையுடன் முடிவு டைட்டில் ஓடுகிறது.
படத்தை இயக்கியவர் குவின்னார் யுன்சன். வாயால் இரண்டு நிமிடங்களில் சொல்லப்படக்கூடிய கதையை காட்சிப்படுத்தல் என்ற திறமையைக் கொண்டு 80 நிமிடங்களுக்கு வளர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நம் கண்ணைக் கட்டிப்போடுவன. கதையைப் புரிந்துகொள்ளவே படத்தை இருமுறை பார்க்கலாம். மற்றவைகள் புரிய இப்படம் குறித்த விமர்சனம் எதையாவது படிக்கலாம். உண்மையிலேயே சொல்கிறேன், இது போல இன்னொரு படத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால் உலக சினிமாவில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி.
ஒற்றன் "ஃ"
அத்தியாயம் 1
கொள்ளிடத்தைக் கதிரவனின் கிரகணங்கள் தீண்டிய அந்தி வேளையில் நாகப்பட்டினத்திலிருந்து உறையூர் செல்லும் நீண்ட புரவியொன்றில் ஒரு வீரன் அமர்ந்திருந்தான். அவன் வேறு யாருமல்லன், "ஃ" என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்ட பிரசித்தி பெற்ற சோழ ஒற்றன். ரகசியத் துறை அமைச்சர் மர்மவர்மனின் மனைவியிடம் சேர்ப்பிக்க வேண்டிய செய்தி ஒற்றன் ஃ-இடம் இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த ஒற்றனிடம் ஒப்படைக்குமளவு அப்படி என்ன செய்தி என்று அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம். பார்ப்போமா?
அத்தியாயம் 2
காவிரிப்பட்டினத்தில் ஒரு சத்திரம். அமைச்சரின் இலச்சினை பதித்த அரக்குத் தாழ்ப்பாளை உடைத்து ஒவ்வொரு கருந்திராட்சையாகப் புசித்தபடி ஓலையை விளக்கொளியில் வாசித்தான் ஒற்றன் ஃ. மர்மவர்மனின் ஓலையில் இருந்தது சுவிசேஷ நற்செய்தியன்று. கடாரம் சென்ற அமைச்சர் அங்கு தீவிர நோய்வாய்ப்பட்டு வைத்திய பைத்தியங்கள் ஏதும் பலனளிக்காது உயிர் நீத்தார். ஒற்றன் சுமந்த ஓலை, மரணம் முற்றுகையிட்ட தறுவாயில் அவர் மனைவிக்கு எழுதியமை. ஏன், அதுவே ஒரு மரண ஓலைதான்...
அத்தியாயம் 3
ஒற்றன் ஃ-இன் சாந்தக் கண்கள் மர்மவர்மனின் ஓலையைப் படித்தன. "அன்பினி, எனக்கு வயிறு சரியில்லை. ஒற்றன் ஃ சாளுக்கியர்களுக்கு ஊழியம் புரிகிறான். அவன் என் உணவில் நஞ்சு கலந்துவிட்டான் எனச் சந்தேகிக்கிறேன். இதை நீ படிக்கிறாயானால் நான் இறந்துவிட்டேன் என்று அறிவாயாக. இவ்வோலையைக் கொண்டுவருபவனே ஒற்றன் ஃ. இத்துரோகியை உடனே சிறைபிடி. ஈசன் அருள் போற்றி. - நின்றன் மர்மவர்மன்" என்றது ஓலை. ஒற்றன் ஃ அதனைத் தீயில் பொசுக்கிவிட்டுப் புதிய ஓலை எழுதினான். அதை மூடி அரக்கிட்டுத் தனது சுருக்குப் பையிலிருந்து அமைச்சரின் இலச்சினையை எடுத்து அதில் பதித்தான். அப்போது...
அத்தியாயம் 4
சோழத் தலைமாநகராம் உறையூரில் அமைச்சர் மாளிகையில் மர்மவர்மனின் மனைவி அன்பினியாள் கையில் இருந்தது மரண ஓலை... "அன்பினி, எனக்கு வயிறு சரியில்லை. இதை நீ படிக்கிறாயானால் நான் இறந்துவிட்டேன் என்று அறிவாயாக. ஈசன் அருள் போற்றி. - நின்றன் மர்மவர்மன்." படித்து முடித்த அன்பினியாளின் வதனம் சிற்பமாய் இறுகியது. ஒற்றன் ஃ-ஐப் பார்த்தாள். “இங்கேயே நில்” என்று கட்டளையிட்டுச் சென்றாள் மந்திரிதர்மிணி. ஒரு பணிப்பெண் வந்து மோர் கொடுத்துப் பிரிந்தாள். ‘கணவன் மாண்டது கேட்டுத் துடிக்காத கல் மனம் படைத்தவளா அமைச்சனின் மனைவி?’ என சிந்தித்தபடி அதைப் பருகினான் ஃ.
அத்தியாயம் 5
“கல் மனம் படைத்தவள் அவள் அல்லள். நீதான்” எனும் குரல் கேட்டு நிமிர்ந்தான் ஒற்றன் ஃ. சாவின் சுவடுகளற்று அவன் எதிரில் ஆரோக்கியமாக நின்றிருந்தது மர்மவர்மன்தான். கடகடவென நகைத்தார் அமைச்சர். “என்ன பார்க்கிறாய்? நான் எப்படிப் பிழைத்தேன் என்றா? உன் மேல் எனக்கு ஐயம் இருந்தது. அதனால்தான் நீ கொடுத்த மோரை நான் குடிக்கவில்லை. என் ஓலையை மாற்றி எழுதி மாட்டிக்கொண்டாய். நீ இப்போது குடித்தது உன்னுடைய மோர்தான்...” மோர் புளித்த காரணத்தை ஒற்றன் உணர்ந்து முடிக்கவும் அவனது ஆவி பிரியவும் சரியாக இருந்தது.
முற்றும்
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
உலகம் சூடுபிடிக்கிறது
இயற்கை அன்னைக்குக் காய்ச்சல். உலகம் சூடாகிக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் இதை 'புவி வெப்பமாதல்' என்கிறார்கள். மழையும் வெயிலும் அதிகரிப்பது மட்டுமே இதன் விளைவுகள் என்று நினைத்திருந்தேன். நல்லவேளையாக ஒரு வாசக விஞ்ஞானியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன விளைவுகள் இன்னும் பயங்கரமானவை. முக்கியமானவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.
கடல் மட்டம் கணிசமாக அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நாம் கடற்கரைக்கு விமானத்தில்தான் செல்ல வேண்டியிருக்கும். மேடான பகுதிகளில் வசிப்பவர்களே பீச்சிற்கு இரண்டு மாடி ஏற வேண்டியிருக்கும்.
பனி உருகுவதால் உலகில் எங்குமே நல்ல தண்ணீர் கிடைக்காது. ஆனால் அது சென்னைவாசிகளை பாதிக்காது.
வெள்ளமும் வறட்சியும் போட்டி போட்டுத் தாண்டவமாடும். இதில் எது ஜெயிக்கிறதோ அதுவே அதிக ஆபத்தானதாகக் கருதப்படும்.
மிகப் பிரம்மாண்டமான மரங்களுக்கும் சலிப்பைத் தருமளவிற்குப் புயல்கள் அதிகமாகும்.
வெப்பநிலை ஏற்றத்தால் மலேரியா, டெங்கு பரவல் அதிகரிக்கும். பல அரசியல் தலைவர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் பலியாவார்கள்.
கோடையில் வெக்கை உயர்ந்து காட்டுத் தீக்கள் வதந்தி போல் பரவும். ஸ்வெட்டர் விற்காது.
தண்ணீருக்காகப் போர்கள் நடக்கும். துருப்புகள் குடிக்கத் தண்ணீர் இருக்காது.
பல காட்டு விலங்கினங்கள் அழியும். இரைக்கு அவற்றை நம்பி வாழும் அபாயகர விலங்குகள் எல்லாம் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வந்து உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளும்.
ஓசோன் மாசுபாட்டால் நுரையீரல் நோய்கள் ஏற்படும். இது மூச்சு வாங்குதலுக்கு இட்டுச்செல்லும்.
பனி ஆறுகள் மறைந்து ஒரே கஷ்டமாக இருக்கும்.
வெப்ப அலைகள் வீசும். இதனால் மழை சூடாகப் பெய்யும்.
கரியமில வாயுத்தொல்லையால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். ஒயிட் சட்னி இரண்டாவது முறை பரிமாறப்படாது.
நோய்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஃபேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கை குறையும். பல சமயங்களில் நமது சுற்றுப்பயண புகைப்படங்களுக்கு லைக்கே கிடைக்காமல் போகும்.
பேரழிவுகளால் பெருத்த பொருளாதார நஷ்டம் ஏற்படும். சம்பளம் விட்டு விட்டுத்தான் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் நிலவியல் மாறி தமிழில் கௌபாய் திரைப்படங்கள் எடுக்கப்படும்.
இதில் ஒரே ஆறுதல் என்ன என்று யாராவது கேட்டால், இவை எதுவும் நம் காலத்தில் நடக்கா. நம் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்காகத்தான் இத்தனையும். அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.
கேர்ள் விட்த் டிராங்கோ
"Girl Width Drango Tattoo கட்டாயம் பாருய்யா" என்றார் லார்டு லபக்குதாஸ் என்னிடம் ஃபோனில். ஒரே பேச்சில் தான் பார்த்ததையும் நான் பார்க்கவில்லை என என்னிடமேயும் நிறுவும் சாமர்த்தியம்.
"கேர்ள் விட்த் டிராங்கோ நான் பார்த்துட்டேன். நல்ல படம். அந்த கேரக்டர் ஒண்ணு வருமே…"
"அதே படம்தான். நெறைய சீன்ஸ் இருக்கும்."
"ஆமா, நல்ல மேக்கிங். விமர்சனம் எழுதுறீரா?"
"அது வந்து ரொம்ப நாளாச்சே. இப்ப எதுக்கு? சும்மா பிளாகுல ரெண்டு வரி. இந்த ஆண்டுதான் பாக்க அவகாசம் கிட்டியது… தன்னிச்சையாக இயங்கும் நேர்மையான இதழியலாளர் கார்ப்பரேட் சதிக்கு ஆளாகிறாரு… பாலியல் வன்முறைக்கு பலியாகும் நாயகி… சிகரெட் புகைக்கிற இருபாற்புணரி கணிப்பொறி நிபுணி… தற்சார்புப் பெண்களை ஆண் தன்மை கொண்ட அழகிலிகளாகவும் ஒழுக்கக் கேடாகவும் சித்தரிக்கும் ஸ்வீடிச அழகியல்… ."
இதற்குள் எனக்கு முகம் கோணியிருந்தது. எழுதியே விட்டாரா ஃபோனில்?
"நானும் எழுத ஆரம்பிச்சேன், முடிக்க நேரமில்ல."
"படத்தைப் பாத்துட்டீருல்ல?"
"கண்டிப்பா! முருகராஜ் இல்ல… ஆக்டர் ஜீவா அசிஸ்டென்ட் – அவன் டி.வி.டி. குடுத்தான்."
"ஓ."
லபக்குதாஸ் விடைபெற்று அழைப்பைத் துண்டித்தார்.
நான் கூகுளுக்குப் போய் "Girl Width Drango" என்று தேடிப் பார்த்தேன். அது "Girl With Dragon" என்று திருத்தியது. அவர் பார்த்த படம் வேறு, நான் பார்க்காத படம் வேறு என்று தெரிந்த பின்பே நிம்மதி வந்தது.
சுகாவின் 'தாயார் சன்னதி'
(மூன்றாம் பதிப்புக்கு எழுதிய அணிந்துரை. வெளியீடு சொல்வனம்)
முதலில் சம்பிரதாயமாக சில வார்த்தைகளைச் சொல்லிவிடுகிறேன். 'தாயார் சன்னதி' என்ற புத்தகத்தை (இதுதான் அது) படிப்பதற்கு முன்பு எனக்குத் தோன்றியது: சுகா ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல மனிதரும்கூட. நூலைப் படித்த பின்பும் இந்தக் கருத்தெனக்கு மாறவில்லை. எழுத்தாளர்-மனிதர் என்று ஒரு கலவையான ஆள் இந்த சுகா.
சுவாரசியமான எழுத்து சலிப்பூட்டக்கூடியது என்பது என் கருத்து. காரணம், அதிலுள்ள ஆர்ப்பாட்டம், 'படி, பிரமி' என்ற முரட்டு மெனக்கெடல். சுகாவின் எழுத்து இந்த சுயமுன்னேற்ற உத்திகள் இல்லாமல் சுவாரசியம் அளிக்கிறது. அவர் தன் கதைகளைத் தனக்கே உரிய மொழியில் சொல்கிறார். சுகாவின் எழுத்துநடை வெகுஜன அச்சு ஊடகத்தில் பயன்படுத்தத்தக்கது என்றாலும் அவர் பொதுவான ஒரு வார்ப்புருவில் சிக்கவில்லை. திருநெல்வேலிப் பேச்சுத் தமிழின் கூறுகள் அடங்கிய நடை அவருடையது. நினைவுகூரல் தொனி தூக்கலாக இருந்தாலும் அவருடைய மொழிநடை இந்த அம்சங்களால் தனித்துவம் பெற்றிருக்கிறது. அடுத்த பத்தியைப் படிப்போமா என்ற நிச்சயமின்மை அவரை வாசிக்கும்போது ஏற்படுவதில்லை. சரி, என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்பதைவிட அதிக எதிர்பார்ப்பை அவர் எழுத்து தூண்டுகிறது. சுவாரசியமூட்டும் நோக்கம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அநாவசிய அலங்காரங்கள், எப்படி வளைத்து நிமிர்த்தி எழுதுகிறேன் பார் போன்ற வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள் இல்லை. இந்த அரிய குணத்திற்கு வாசகர்கள் அவருக்குக் கடமைப்படுவதுதான் நியாயம்.
சுகா தனது நினைவேட்டில் பத்திரப்படுத்திப் பதிவுசெய்யும் பல விஷயங்கள் பத்தாண்டுகள் முன்பு வரை இளைய தலைமுறையினராக நம்பிக்கையுடன் வலம் வந்த பலருக்கும் என்னைப் போன்ற பிறவி சென்னைவாசிகளுக்கும் பழக்கமானவையே. மூட்டைப்பூச்சி, டயனோரா கருப்பு-வெள்ளை டி.வி., பொதுநலனுக்காக மேற்கொள்ளப்படாத நீண்டதூர சைக்கிள் பயணங்கள், எம்.ஜி.ஆர். எல்லாம் மறக்க முடியமா? மறக்கத்தான் சுகா விடுவாரா? அவை பற்றித் 'தாயார் சன்னதி' போல் ஒரு புத்தகம் எழுதிவிட மாட்டாரா? காலத்தின் தேவைகளுக்கு இழுபட்டுப் பல அற்புதமான விஷயங்களை இழந்து பெருமூச்சு விடும் நம் போன்றோரை சுகா தனது சைக்கிள் கேரியரில் ஏற்றிக்கொள்கிறார். பழகிய சைக்கிளின் நிதானமான ஓட்டத்தில் மென்மையான உலோகச் சத்தமாக அவரது குரல் ஒலிக்கிறது.
இந்த நூல் சுகாவின் வாழ்க்கை வரலாறு என்று சொன்னால் தவறாகாது. தன் வாழ்க்கை அனுபவங்களைத்தான் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் சொல்லும் அனுபவங்களைச் சிறுகதை போன்று தொடங்கி இடையுறுத்தல் ஏதுமின்றிக் கச்சிதமாக முடிக்கிறார். புன்னகையூட்டும் தருணங்கள் போல மனத்தை கனக்கச் செய்யும் நிகழ்வுகளும் அவர் கதைகளில் அதிகம் உண்டு. துன்பமும் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்ட தொனியில் இந்தக் கதைகளை எழுதுகிறார். எனக்கென்னவோ இந்தத் தொனி அவர் எழுத்து வடிவத்திற்குக் கொடுக்கும் மரியாதையாகவே தெரிகிறது. ஏனென்றால் சோகங்களைக் கவித்துவ நடையில் தத்துவ விரிவுரையாற்றப் பயன்படுத்தலாம். ஆசை ஆசையாகப் பல விஷயங்களைப் பொதுமைப்படுத்தலாம் ("இந்தா பிடி மேற்கோள். ஃபேஸ்புக்கில் போடு, போ" என்கிற மாதிரி). ஆனால் சுகா அதைச் செய்யவில்லை. அவர் தனது உணர்வைப் பதிவுசெய்து தத்துவ விசாரத்தை நம்மிடம் விட்டுவிட்டு அடுத்த அத்தியாயத்திற்கு நகர்ந்துவிடுகிறார். துன்பத்தைச் சிறுமைப்படுத்தாத, மரியாதையான அணுகுமுறை இவருக்கு. இந்த நூலில் அனைவரையும் அரவணைக்கும், அரவணைக்கப்பட விரும்பும் மனிதாபிமானியாக வெளிப்படுகிறார் சுகா. உண்மையில் அவர் அப்படித்தானா அல்லது இரட்டை வேடம் போடுகிறாரா என்பதை அவருடன் நேர்ப் பழக்கம் கொண்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆசிரியரின் இசைப் பிரியம் இந்தப் புத்தகத்தின் அடிச்சரடு. இசைக் கலைஞர்களை, இசை சார்ந்த விஷயங்களை, நுட்பங்களை தானே ஒரு நல்ல இசைக் கலைஞராக நிறைய பகிர்ந்துகொள்கிறார். எனக்குத்தான் இசை பற்றி எதுவும் தெரியாது. யாரையாவது கேட்டு எழுத நேரம் இல்லை. எனவே எனக்கு இசை பற்றி நிறைய தெரிந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். சினிமா பற்றியும் வாஞ்சையுடன் எழுதியிருக்கிறார். அது அவரது இன்னொரு கண்.
அப்புறம் ஒன்று: சுகாவின் எழுத்துகளில் ஊர்ப் பெருமை தாங்கவில்லை. எப்படி என்றால், "ஊரு மேல அம்பூட்டு பிரேமையின்னா அங்கியே இருந்துக்கிடுயேன்? எதுக்கு அசலூருக்கு வந்து குப்பைய நொட்டணும்?" என்று நம்மைக் கேட்கவைக்கும் பெருமை. அதற்கு அவரைக் குறை சொல்ல முடியாது. அந்த ஊர் அப்படி. தட்டு நிறைய ஜிலேபி வைத்து ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் 'சீச்சீ ஜிலேபி!' என்று அதில் ஒன்றைத் தூக்கி எறிவானா? சொந்த காரணங்களுக்காகச் சென்னைக்கு வந்துவிட்ட சுகா, திருநெல்வேலியை விட்டு அசலூருக்கு ஏன் செல்லக் கூடாது என்பதற்கான காரணங்களைப் புத்தகம் முழுதும் சொல்கிறார். லேஸ் சிப்ஸ் தூரத்திலுள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில்தான் கிடைக்கும் என்று கிளம்பி அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரிலேயே வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு. ஆனால் இந்த இடமாற்றம் அவரிடம் வலுவான கசப்புணர்வு எதையும் ஏற்படுத்தாததை கவனிக்க வேண்டும். உண்மையில் அவர் சொல்லும் காரணங்களுக்காகத்தான் நான் 'ஐ லவ்' புகழ் சென்னையை விட்டு வெளியேற விரும்புகிறேன். ஏனென்றால் சென்னைமயமாக்கம் விஷமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பெயர் நினைவில் நிற்காத குக்கிராமங்களின் பெட்டிக் கடைகளில்கூட பெப்சியைப் பார்க்கும்போது ஆத்திரத்தில் பகீரென்கிறது.
கடைசி பத்தியாக, 'தாயார் சன்னதி' சற்று கனமான புத்தகம். சரளமாக எழுதுகிறாரே என்று ஒரே அமர்வில் இதைப் படிப்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல (நானே முழுமையாகப் படிக்கவில்லை). இந்த நூலை அப்படிப் படிக்கவும் கூடாது. ஏனென்றால் கதைகளில் அவர் சொல்லிப் போகும் விவரங்கள் சமூகவியல், உளவியல், மரபியல் என்று பல ரீதிகளில் சிந்திக்க வேண்டியவை. முக்கியமாக இந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது. நிறைய கெட்ட வார்த்தைகள் வருகின்றன. எல்லாமே அந்த காலத்தில் பாவிக்கப்பட்டவை. எனவே குழந்தைகள் அவற்றைக் கற்றுக்கொள்வதில் பயனிருக்காது. பள்ளிக்கூடம்தான் அதற்குச் சரியான இடம். மொத்தத்தில் புத்தகம் நன்றாக இருக்கிறது.
என் வீட்டில் சிலர்
என் வீட்டில் சில பேர் இருக்கிறார்கள். வந்து நான்கு நாட்களாயிற்று. இன்னும் இங்கேயே தொடர்கிறார்கள். எப்போது போவார்கள் என்று தெரியவில்லை. என் வீட்டை விட்டு வெளியே போனால் – குறிப்பாக மூட்டை முடிச்சுகளுடன் நான்கைந்து பேராகப் போனால் – கண்டதும் சுடும் துணை ராணுவ உத்தரவு ஏதும் இல்லை. அமைதிப் பூங்கா நான் வசிக்கும் இடம். அது இவர்களுக்கு சாதகமாகிவிட்டது. இவர்கள் நகர்வதாக இல்லை. இவர்களுக்கு இங்கேயே எல்லாம் கிடைக்கிறது. துணிமணி, பற்பசை, சோப்பு, இத்யாதிகளைக் கைவசம் வைத்திருக்கிறார்கள். தீர்ந்துபோனாலும் மீண்டும் கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
அதுதான் பிரச்சினை. இங்கே கடைகள் இருக்கின்றன. கடைகள் மட்டுமல்ல, என் வீட்டைக் கடைகளுடன் இணைக்கும் சாலைகள் இருக்கின்றன. குண்டும் குழியும் என்னவோ நிதசர்னங்கள்தாம். ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயும் அப்படித்தானாம். அதனால் அவை பரவாயில்லையாம். அதாவது இப்போதைக்குப் போக மாட்டார்களாம். இங்கேயேதான் இருப்பார்களாம். எங்கள் வீட்டு சாப்பாடு அருமையாக இருக்கிறதாம். அவர்கள் ஊரில் கத்தரிக்காய் இவ்வளவு ருசி இல்லையாம். ஒருநாள் பயணத்திற்கு ஆகும் சாப்பாட்டைச் சமைத்து சுளையாக ஐந்து ஹாட்பேக்குகளில் கட்டிக்கொடுத்து நான் வழியனுப்பத் தயாராக இருந்தால்கூடக் கிளம்பும் அறிகுறி இருக்காது.
இந்த ஊரில் குழந்தைகள் விளையாடப் பல இடங்கள் இருக்கிறதாம். அவர்கள் ஊரில் சினிமா பார்க்க வண்டி கட்டிக்கொண்டெல்லாம் போக வேண்டாமாம். அரை மணிநேர பேருந்துப் பயணத்தில் திரையரங்கு வந்துவிடுமாம். திரைப்படக் கட்டணங்கள் இங்கு போல் அதிகமில்லையாம். பாப்கார்ன் வகைவகையான சுவைகளில் கிடைக்காது என்றாலும் அங்கே தலைக்குப் பத்து ரூபாயில் முடிந்துவிடுமாம். பீட்ஸா பிடிக்காதாம். முதலை மாதிரி வாயைத் திறந்துகொண்டு பர்கர் சாப்பிடுவதும் பிடிக்காதாம். அவர்கள் ஊரிலும் இண்டர்நெட் புக்கிங் இருக்கிறதாம். ஆனால் அதை யாரும் பயன்படுத்துவது இல்லையாம்.
இன்னொன்று, இவ்வளவு போக்குவரத்து நெரிசல் அவர்கள் ஊரில் இல்லை. இங்கே ஒவ்வொன்றுக்கும் நீண்ட வரிசை. எங்கு பார்த்தாலும் ஜனம். இந்த ஜனமெல்லாம்கூட உங்களைப் போல விருந்தாளிகள்தானே. எல்லாம் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள். இந்த ஊர்க்காரர்கள் என்ன ஒரு முப்பது சதவீதம் இருப்பார்கள். தெருக்கள் துப்புரவாக இல்லையாம். மற்றபடி இது நல்ல ஊராம். அதனால் இப்போதைக்குப் போக மாட்டார்களாம். இந்த ஊரில் நிறைய வசதிகள் இருக்கிறதாம். இங்கே பெண் எடுப்பதில் பிரச்சினை இல்லையாம்...
மரணக் கிணறு
ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை
“வெல், வெல், வெல்!” என்றார் இன்ஸ்பெக்டர் குமார் கிணறுகளை எண்ணியபடி. மூன்று வீடுகளுக்குப் பின்னே மூன்று கிணறுகள். ஈரம் சொட்ட இரண்டு பிணங்கள். மூன்றாவது ஆள் மட்டும் பிழைத்துவிட்டான். ஒரு பிணத்தின் திறந்த வாயில் இன்னும் இருந்த கிணற்று நீரில் இரண்டு தலைப்பிரட்டைகள் விளையாடிக்கொண்டிருந்தன. இரு பிணங்களும் மிகையான அட்டென்ஷனில் படுத்திருப்பது போலிருந்தது. ஏனென்றால் விண்வெளி வீரர்களின் பிராணவாயு போல் முதுகில் கனமான செவ்வகப் பாறை கட்டப்பட்டிருந்தது. இருவருக்கும் 30 வயதுக்கு மேல் இருக்காது. பிழைத்தவனை உடை மாற்றி உட்கார வைத்திருந்தார்கள்.
சம்பவக் கிணறுகளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிப்பதிவில் விழ எட்டிப் பார்ப்பது போல் பல தலைகள் பிணங்களைப் பார்க்க எம்பின.
குமார் எரிச்சலடைந்தார். “ஃபர்ஸ்ட் ரோ - பாத்துட்டீங்கன்னா நகருங்க, மத்தவங்களுக்கு வழி விடுங்க” என்று அதட்டினார். முதல் வரிசைக்காரர்கள் முணுமுணுத்தபடி விலகிச் செல்ல பின்னாலிருந்தவர்கள் முன்னே வந்தனர். மூன்று கிணறுகளையும் எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“யாரு முதல்ல பாத்தது?” என்று குமார் கேட்டதும் எங்கோ மூலையிலிருந்து ஒரு இளைஞன், “நான்தான் சார்!” என்று கைதூக்கிக் கத்தினான். எல்லோரும் அவனுக்கு வழி விட்டார்கள்.
“என்ன நடந்துது சொல்லு.”
“என் பேரு கணேஷ் சார். அங்க படுத்திருக்காருல்ல சார் மாணிக்கம் (முதல் பிணம்), அவரப் பாக்க வந்தேன் சார். தொப்புனு சத்தம் கேட்டுச்சு. இவரு (பிழைத்தவன்) கெணத்துலருந்து ஏற ட்ரை பண்ணிட்டிருந்தாரு. நான் ஒரு கயிறப் போட்டு மேல ஏத்துனேன். பக்கத்துக் கிணத்துலயும் ஆள் விழுந்திருக்குன்னு இவர் சொன்னாருன்னு உள்ள பாத்தா ஒரு ஆள் கெடந்தாரு. பாடிய வெளிய எடுத்தோம். அதுக்கப்புறம் என் ஃப்ரெண்டப் பாக்கப்போனா அவர் வீட்ல இல்ல. சரி, கெணத்துல இருப்பாரான்னு பாத்தேன். அங்கதான் சார் பொணமாக் கெடக்குறாரு!” என்று முடிக்கும்போது குரல் கம்மியது அந்த இளைஞனுக்கு.
இன்ஸ்பெக்டர் மாற்று ஆடை அணிந்த மூன்றாமவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“என்னய்யா, கல்லு சரியா கட்டலியா?” என்றார்.
“ஆமா சார், பொழச்சிட்டன் சார்” என்று குழைந்தான் அந்த வாலிபன்.
“உம் பேரு என்ன? உம் பேருக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?”
“எம் பேரு சீனிவாசன்ங்க சார். இந்தப் பக்கமா போயிட்டிருந்தப்ப பெருசா ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வந்து பாத்தேங்க. ஒருத்தர் கெணத்துல மூழ்கிட்டிருந்தாரு. யாருன்னு பாக்க சொல்லோ பின்னாலேந்து மண்டைல யாரோ ஓங்கி அடிச்சாங்க சார். நெக்ஸ்டு முளிச்சுப் பாத்தா கெணத்துல கெடக்குறேன். எனக்கு நீச்சல்கூடத் தெரியாதுங் சார். இவர்தான் காப்பாத்துனாரு. அப்புறம் இவரு சொன்ன மாதிரி ரெண்டு பாடிய வெளிய எடுத்தோம்” என்று சொன்னவனின் பின்மண்டையை குமார் தடவிப் பார்த்தார். வீங்கித்தான் இருந்தது.
“எங்க, சட்டையக் கழட்டு பாப்போம்” என்றார் இன்ஸ்பெக்டர்.
சீனிவாசன் உடலுறவு அவசரத்தில் கழற்றுவது போல் பரபரவென்று சட்டையைக் கழற்றினான். உடலின் முன்பகுதியில் சில இடங்களில் நேர்த்தியான கீறல்கள். தடயவியல் நிபுணர் அவன் கிணற்றில் விழுந்தபோது அணிந்திருந்த ஈர ஆடைகளையும் அவற்றில் இருந்த பொருட்களையும் குமாரிடம் காட்டினார். அதில் குமாரைக் கவர்ந்தது ஒரு பேனாக் கத்தி. அவர் அதை எடுத்துக் கூர்மையைச் சோதித்தார், பிறகு முகர்ந்து பார்த்தார்.
“இப்ப நான் ஒரு கதை சொல்லட்டுமா? நீயும் கணேஷும் மாணிக்கத்த பிளான் போட்டுக் கொலை பண்றீங்க. அத நடுவீட்டுக்கார்ரு பாத்துடுறாரு. அவரையும் அதே மாதிரி கல்லக் கட்டி கெணத்துல போட்டுத் தள்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலயும் பழி விழக் கூடாதுன்றதுக்காக நீயும் விழுந்த மாதிரி காட்டிக்க ஒரு கல்லக் கெணத்துல போடுறதா பிளான் பண்றீங்க. ஆனா கணேஷு உன்னை தீத்துக்கட்ட பிளான் போட்ருக்கான். உன்னை அடிச்சுப் போட்டு கல்லக் கட்டி கெணத்துல தள்றான். உனக்கு கணேஷு மேல முன்னாடியே நம்பிக்கை இல்ல. தற்காப்புக்காக பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்க. கணேஷு பய டென்சன்ல கல்ல கொஞ்சம் லூசா கட்டிட்டான். நீ கத்தியால கயித்தை அறுக்குறப்ப உடம்புல காயம் பட்டிருக்கு. நீ வெளிய வர்றதுக்குள்ளாற ஜனம் சேந்துருச்சு. மாட்டிக்காம இருக்க நீங்க திருப்பியும் தோஸ்தாயிட்டீங்க. ரைட்டா?”
கணேஷும் சீனிவாசனும் இன்ஸ்பெக்டரின் கதை சொல்லலில் வெகுநேரமாய் கட்டுண்டிருந்தார்கள். தப்பிக்க வழி தேடி இருவரின் கண்களும் அலைபாய்ந்தன. ஆனால் 114 லத்தியை உயர்த்தித் தயாராக இருந்தார். தடயவியல் நிபுணரும் பேனா கத்தியை அது இருந்த பாலிதீன் பையுடன் சேர்த்துக் காட்டி மிரட்டினார்.
இன்ஸ்பெக்டர் சூழலை ரசித்துப் புன்னகைத்தபடி இருவரையும் கேட்டார், “எதுக்குடா கொன்னீங்க?”
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
பலியாடு ஆக்கப்படுகிறதா மின்விசிறி?
எங்கள் பகுதியில் பத்திலிருந்து பன்னிரண்டு வரை மின்வெட்டு. மின்விசிறி ஓடாமல் வீடு நிசப்தம் காக்கிறது. பெண்கள், குழந்தைகள், மின்னணுச் சாதனங்கள், சமையல் கருவிகள், தெருவிலிருந்து வரும் பல்வேறு வகை ஒலிகள் எல்லாம் மின்விசிறி மட்டுமே அத்தனை நாராசத்தையும் செய்வது போல் தெரியவைக்கும் நாடகம். மின்விசிறி அணைந்தால் எல்லாம் அடங்கி என்னவோ மின்விசிறியில்தான் சுற்றுப்புற சத்தங்கள் அனைத்திற்கும் சாவி இருப்பது போல் ஒரு தோற்றம். மேலும், எல்லா சத்தங்களையும் மின்விசிறிச் சத்தம் ஊதிப் பெரிதாக்குவது போலும் ஒரு மாயை. இரு ஓசைகளும் ஒன்றாகக் காணாமல் போவதற்குத் தற்செயலைக் காரணங்காட்ட முடியாதவண்ணம் இரண்டும் முன்னேற்பாட்டின்படி இணைந்து செயல்படுவதான ஒரு மயக்கம்.
மஞ்சள் வெளிச்சமான தனிமை அமைதியில் நான் மூக்குறியும் ஒலி மட்டும் என்னோடு அவ்வப்போது உரையாடிக்கொண்டிருக்கிறது. தொலைபேசி மாநாட்டு அழைப்புப் போல எனது கனைப்பொலி இடையிடையே சேர்ந்துகொள்கிறது. ஆச்சரியப்பட ஏதுமற்ற விதமாக, நாங்கள் பேசுவது எனது ஆரோக்கியத்தைப் பற்றி. ஆங்கிலக் களிம்புகளின் காட்டமான நிவாரண நெடி கவனத்தைச் சிதைப்பது என்பதால் பகற்பொழுதில் தூங்கி விழவைக்கும் மாத்திரைகளோடு நிறுத்திக்கொண்டு பழக்கம் (ஜலதோஷ மாத்திரைகளால் எல்லோருக்கும் தூக்கம் வருமென்று சொல்ல முடியாது; ஒரு மருந்திற்கு ஒருவரின் உடல் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அவருடைய மரபணுத் தொடரின் தன்மைகளே தீர்மானிக்கின்றன).
தஸ்தயெவ்ஸ்கியின் நிலத்தடி மனிதனைப் போல, மருத்துவத்தில் நம்பிக்கை கொள்ளுமளவு எனக்கு மூட நம்பிக்கை இல்லை. ஆங்கில மருத்துவத்தால் உடல் உபாதைகளிலிருந்து நிவாரணமடைவது ஒரு உபாதையைக் கொடுத்து இன்னொரு உபாதையைப் பெறுமோர் 'எக்ஸ்சேஞ்ச் பாலிசி டிரேட் ஆஃப்' பரிமாற்றம். ஆயுர்வேத. சித்த மருத்துவங்களை நம்பலாமா என்று தெரியாது. நவீன நோய்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத இம்மருத்துவங்களில் பிராணவாயுக் குழாய் கிடையாது. ஆனால் மத்தியகாலங்களில் நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் உடலிலிருந்து ரத்தம் முழுவதையும் வடிய விட்டார்கள். மரணம்தான் நோயைக் குணப்படுத்தியது என்று சொல்ல வேண்டும். நோய்வாய்ப்பட்டவர் இப்படிக் குணமடைந்த பின்பு வாழ்க்கையை விட்ட இடத்திலிருந்து தொடர முடியாததால் ரத்த வடிசல் சிகிச்சைமுறை தோல்வியடைந்தது. இன்று அதே ரத்த வடிசல் சிகிச்சைமுறையை மருத்துவக் கட்டண ரசீதுகளில் பிரதிபலிக்கக் காண்கிறோம்.
வந்தது மின்சாரம். மின்விசிறி சுதாரிப்பதற்குள் ஊருக்கு முன்பு குழல்விளக்கு கண் திறந்தாயிற்று. இதில் ஒரு தர்க்கபூர்வ நியாயம் உள்ளது. மின்விசிறியைப் பின்னணியொலி உற்பத்திக் கருவியாகச் சித்தரித்தாயிற்று. ஒலியைவிட வேகமானதல்லவா ஒளி? மாடி வீட்டில் உடனடியாகத் தொலைக்காட்சி ஓசை. அவ்வளவு அவசரம். மின்சாரம் வந்துவிட்டதாகத் தெருவில் பொதுமக்கள் கத்துகிறார்கள். குப்பை வண்டிக்காரர் விசில் ஊதிக்கொண்டு எங்கள் தெருவில் நுழைகிறார். எதிர்வீட்டு வாசலில் மூன்று பெண்கள் மத்தியில் பேச்சு உரக்கிறது. யாரோ ஏதோ கத்திக்கொண்டே ஓட, அவர் பின்னே ஆறு பேர் அரிவாளுடன் ஓடுகிறார்கள். நவீன நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பின்னணி இசையாகவே ஆகிவிட்டிருந்த மின்விசிறிச் சுற்றோசை இத்தனை சத்தங்களுக்கிடையே அமைதியாகித் தன் இடத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டிருக்கிறது.
(பிப்ரவரி 2013 'தமிழ் ஆழி' மாத இதழில் வெளிவந்த பத்தி)
மூட்டம்
ஞாயிற்றுக்கிழமை காலை பதினொன்றரை மணி இருக்கும். மழை பெய்யப்போகிறோம் என்பது போல் மேகங்கள் மூண்டிருந்தன. வீட்டு வாசலில் நின்றிருந்த பாலு மேகத் திரளைக் கண்ணால் எடை போட்டான். குடையை எடுத்துக்கொள்ள வேண்டுமா வேண்டாமா? மழை வராவிட்டால் வெட்டிச் சுமையாய்க் கையில் வைத்துக்கொண்டு திரிய வேண்டுமே என்று நினைத்து வெறுங்கையோடு பாலு கிளம்புகையில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் குரல் எழுந்தது. "குடை எடுத்துக்கிட்டுப் போங்க." பாலு குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பாலுவின் குடை, மடக்கிய நிலையில் முக்கால் அடி நீளம் இருந்தது. அதன் கைப்பிடி வாடிக்கையான ஒரு குடையைவிட அதிக தடிமனாய், பிடித்துக்கொள்ள பாலுவுக்கு அசௌகரியமானதாய் இருந்தது. குடையின் பளபளப்பான மெல்லிய கருப்புத் துணி நைலான் அல்லது சாட்டின் என்று நினைத்தான் பாலு. அதற்குக் கீழே இரண்டு பேர் பிடிப்பார்கள். குடும்பம் முழுக்க ஒண்டிக்கொண்டு போக முடியாது. கைப்பிடியில் உள்ள சிவப்பு சதுரப் பொத்தானை அழுத்தினால் மென்மையான துணியோசையுடன் படக்கென்று விரியும். சிங்கப்பூரில் அது போன்ற குடைகளைத்தான் பயன்படுத்துவதாக அலுவலக சகா ஒருவன் சொல்ல பாலு கேட்டிருக்கிறான். அது உண்மையாகவே இருக்கக்கூடும். அந்தக் குடையில் ஒரு சிங்கப்பூர் ஷோக்கு இருந்தது.
தெருவில் பாலுவைத் தவிர வேறு யாரும் மழையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. யார் கையிலும் குடை இல்லை. குடையை வைத்திருந்த வலதுகையை ஆட்டாமல் இடதுகையை மட்டும் ஆட்டிக்கொண்டு நடந்தவன் தனது தெருவைத் தாண்டி வலதுபக்கம் திரும்பிச் சற்றுப் பெரியதான ஒரு தெருவில் புகுந்தான். எதிர் மருங்கில் ஒரு முதியவர் கையில் விரித்த குடையுடன் போய்க்கொண்டிருந்தார். அவர் இவனைக் கவனிக்கவில்லை. அவருக்கு இவனைத் தெரியாது. ஆனால் அந்த இடத்தில் குடை வைத்திருந்த ஒரே இன்னொரு ஆள் பாலுதான்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது; முதியோரும் பெண்களுமே மழையைப் பற்றி மிதமிஞ்சிக் கவலைப்படுகிறார்கள் என்று தோன்றியது. அவனுடைய வயது வரம்பில் அவன் மட்டும்தான் அங்கே கையில் குடை வைத்திருந்தான். கைப்பிடியின் நுனியில் ஒரு கருப்பு நாடா கட்டப்பட்டிருந்தது. குடையை மெல்ல நழுவ விட்டு ஆள்காட்டி விரலை மடக்கி அதில் நாடாவை மாட்டிக்கொண்டான். அதாவது குடை அவனது ஒற்றை ஆள்காட்டி விரலில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. "மழைக்காகப் பெரிதாகக் கவலைப்பட்டெல்லாம் நான் குடையைக் கொண்டுவரவில்லை. ஏதோ கொண்டுவந்தேன், அது எதற்கு இப்போது?" என்று கேட்பது போல் இருந்தது பாலு புதிதாகக் குடையைப் பிடித்திருந்த விதம்.
ரெட்டியின் வீடு இருந்த திசையை தூரத்திலிருந்து பார்த்தவாறு தெருவைக் கடந்தான் பாலு. நான்கு வீடுகள் குறுகலான வாசல்களை முன்வைத்து ஒரே மாதிரி இருந்தன. அதில் ஒன்று ரெட்டி வீடு. ரெட்டியின் தாயார் எப்போதும் வாசற்படிக்கட்டில் உட்கார்ந்திருப்பார். அதுதான் ரெட்டி வீட்டிற்கு அடையாளம். அவரை மதிக்காமல் உள்ளே செல்ல வேண்டாம் என்ற மரியாதைக்காக "ரெட்டிகாரு உன்னாரா?" என்று விசாரித்தான். அவருக்குத் தமிழ் தெரியாது. ரெட்டிக்கே அந்த மொழி தகராறுதான். ரெட்டியின் தாயார் ஒரு தினுசாகத் தலையாட்டி ஆமோதித்தார். பாலு அந்த வீட்டின் இருட்டுச் சந்திற்குள் ஒரு ஃபர்லாங் நடந்து போய் அரை இருளில் கையில் தெலுங்கு பேப்பர் சகிதம் தொலைக்காட்சியில் தெலுங்கு நடனம் பார்த்துக்கொண்டிருந்த ரெட்டியிடம் எச்சில் காபியை மறுத்துவிட்டு ஒரு மூட்டை அரிசி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
பாலு தெருவைக் கடந்து மீண்டும் இந்தப் பக்கம் நடந்தான். மழை இன்னும் வரவில்லை, ஆனால் மேகங்களின் நிலவரம் அப்படியே இருந்தது. ரீகன் ஸ்டோர்ஸின் இரண்டு படிகளில் ஏறினான். "வாங்க சார்" என்றார் பாய். பாலு பையிலிருந்து லிஸ்ட்டையும் நோட்டுப் புத்தகத்தையும் சட்டைப்பையிலிருந்து எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்ட பாய், "போங்க, அனுப்புறேன்" என்றார். பாலு முதலில் ஒரு படி இறங்கிவிட்டு, "இன்னிக்குக் கண்டிப்பா மழைதான்" என்றான். "ஆ, அதெல்லாம் சும்மா சார். கொஞ்ச நேரத்துல கொளுத்தப்போவுது பாருங்க" என்றார் பாய். பாலு அசடு வழியச் சிரித்தான். குடை அவமானமாகக் கனத்தது. பாலு படியிறங்கி நேராக நடந்தான்.
இரண்டு வீடு தள்ளி டீக்கடைக்கு வெளியே மாஸ்டர் சிகரெட்டுடன் நின்றிருந்தார். பாலு கடைக்குள் போய் ஒரு மின்விசிறிக்குக் கிட்டத்தட்ட நேர்கீழே இருந்த கைவைத்த பெஞ்சில் அமர்ந்தான். குடையை இருக்கையின் பக்கவாட்டில் சாய்த்து வைத்து, "ஒரு சாயா!" என்றான். சாயா என்று மலையாள சங்கேத வார்த்தையில் கேட்டால் நல்ல தேநீர் கிடைப்பதாக அவனுக்கு ஒரு நம்பிக்கை. மாஸ்டர் சிகரெட்டைக் காது மடலில் செருகிக்கொண்டு பாலுவுக்குத் தேநீர் தயாரித்தார். உரிமையாளர் வேலைக்காரப் பையனைத் திட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்தபடி அமைதியாகத் தேநீரைக் குடித்து முடித்த பாலு, காசைக் கொடுத்துவிட்டு வீடுகிளம்பினான்.
வேலைகள் முடிந்ததால் வீடு வேகமாக வந்தடைந்தது. பாலு தொலைக்காட்சிக்கு எதிரே ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டான். "லிஸ்ட்டு குடுத்துட்டேன்" என்று தொலைக்காட்சித் திரையைப் பார்த்துக் கத்தினான்.
டீக்கடையில் பையன் ஒரு குடையைக் காட்டி, "ஈ கொடா ஆருதாணு?" என்றான். "இவிடெதரு" என உரிமையாளர் அதை வாங்கிக் கல்லாப்பெட்டிக்கு அடியில் எடுத்துவைத்தார்.
சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. உடனே பாலுவுக்குக் குடையை டீக்கடையில் வைத்தது நினைவிற்கு வந்தது. "கதவை சாத்திக்கோ, வெளிய போயிட்டு வர்றேன்" என்று சமையலறையை நோக்கிக் கத்திவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டான். "எதுக்கு மழைல?" என்றாள் மனைவி உள்ளிருந்து. "குடையை எடுத்துக்கிட்டுத்தானே போறேன்" என்றான் பாலு.
கன்னட மொழி வரலாறு
மறைந்த கன்னடத் திரைப்பட நடிகர் ராஜ்குமாருக்கான வித்துக்கள் இடப்படுவதற்கு முன்னரே, அதாவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்ப் புலவர் ஆக முயன்று தோல்வியடைந்த சில அதிருப்தியாளர்கள் இன்று கர்நாடகா என்று அறியப்படும் அன்றைய கலி நாடக சமஸ்தானத்தின் தலைநகரமான மைசூரில் ஒன்றுகூடிக் "கலி நடனம்" என்றதொரு மொழியை உருவாக்கினார்கள். இது "கலி நடம்" என்று மருவிப் பின்னர் "கன்னடம்" ஆயிற்று.
கன்னடம் உருவாக்கப்பட முதன்மையான காரணம், அதனை உருவாக்கிய கலகத் தமிழர்களுக்கு இருந்த தமிழ் உச்சரிப்புப் பிரச்சினைகளாகும். எடுத்துக்காட்டாக, ப, வ ஆகிய ஒலிகளைச் சரிபட உச்சரிக்க இயலாமை. இந்த உச்சரிப்புக் கோளாறுகளைத் தமது புதிய மொழியில் செல்லுபடியாக்குவதில் நிறுவனர்கள் கவனம் குவித்தனர். "பால்" என்பதில் உள்ள "பா" என்ற எழுத்து, "ஹா" ஆகி, "ல்" என்ற எழுத்து 'உகாரக் கேவலம்' எனப்படும் புதிய இலக்கண விதிப்படி "லு" ஆகி "ஹாலு" ஆனது. "வண்டி" என்பது "பண்டி" எனவும் "வருவது", "போவது" என்பன "பருவோது", "ஹோகுவோது" எனவும் ஆயின. "விடு" > "பிடு", "வீடு" > "பீடு", "வீதி" > "பீதி", "பல்லி" > "ஹல்லி", "பழைய" > "ஹளைய" என்று மேலும் சில காட்டுகளைக் காட்டலாம்.
தமிழை உச்சரிக்க இயலாமையின் அடிப்படையிலேயே கன்னட இலக்கணம் அமைக்கப்பட்டது என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு, கன்னட இலக்கணத்தில் உள்ள கடைநீக்கம் என்கிற விதியாகும். "வந்துவிட்டு" என்னும் ஒரு சொல் உச்சரிப்புப் பிழையுடன் "பந்துபிட்டு" என்று மாற்றப்படுவதோடு நில்லப்படாமல் முதன்மை வினை, துணை வினை ஆகியவற்றின் இறுதி எழுத்து நீக்கப்பட்டு "பன்பிட்" என்று மாற்றப்பட்டது. இதனால்தான் மொழியியல் வட்டாரங்களில் கன்னடம் "பிட்(டு) மொழி" என்று அழைக்கப்படுகிறது. உலக மொழியியல் சங்கம் இதை எட்டு பிட் (8-bit) மொழி என வகைப்படுத்தியுள்ளது. கன்னட மொழியியல் சங்கம் இதை "எட் பிட்" என வகைப்படுத்துகிறது. இது போக, பல தமிழ்ச் சொற்கள் நேரமின்மைக்காகக் கன்னடத்திற்குள் அப்படியே புகுத்தப்பட்டன. காட்டாக, மக்கள் என்கிற சொல் உளுகாரக் கடைச்சேர்க்கை விதிப்படி "மக்குளு" ஆனது போல் "ஆக்கள்" அதே விதிப்படி "ஆக்குளு" ஆனது.
கன்னடத்தை உருவாக்கத் தமிழ், சமஸ்கிருதம், துளு, கொங்கணி, படகமொழி ஆகியவை பயன்படுத்தப்பட்டாலும் எந்தப் புது மொழியும் முழுவதுமாகப் பிற மொழிகளிலிருந்து உருவாக்கப்படாது என்பது இயற்கை நியதி. மத்திய கொங்கணியை அடிப்படையாகக் கொண்டு கன்னடத்திற்குப் புதிய சொற்களை உருவாக்க மைசூரில் ஊர்ப் பெரியவர்கள் இணைந்து உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகள், எண்கள் ஆகியவற்றைச் சீட்டுகளில் எழுதிக் குலுக்கிப் போட்டார்கள். ஒரு சொல் எத்தனை எழுத்துகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க முதலில் ஒரு எண் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கேற்ற எண்ணிக்கையில் எழுத்துச் சீட்டுகள் பொறுக்கப்பட்டன. அடுத்து, அந்தச் சொல்லின் எழுத்துகள் எந்த வரிசையில் அமைய வேண்டும் என்பது தாயம் வீசி முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தோராயமாக ஆறு மாத காலம் உழைக்கப்பட்டு சுமார் 2,000 புதிய கன்னடச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 200 சொற்களாவது இன்றும் புழக்கத்தில் உள்ளன.
அடுத்து கன்னட மொழிக்காக இவ்வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட ஒலிகளுக்கு வரிவடிவம் தரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தெலுங்கு போன்ற மொழிகளின் வரிவடிவம் 'ஜிலேபி' என்று நகைச்சுவையாக வர்ணிக்கப்பட்டாலும் அதிலொரு வரலாற்று உண்மை இல்லாமலில்லை. தங்கள் புதிய மொழியின் வரிவடிவம் வேறு எந்த மொழியைப் போன்றும் (தெலுங்கு தவிர்த்து) இருக்கக்கூடாது என்பதில் கலகத் தமிழர்கள் சித்தமாக இருந்தனர். எனவே கன்னட வரிவடிவமானது கன்னட ஒலிகளைப் போல் அறிவியல் ரீதியாக உருவாக்கப்படாமல் முற்றிலும் படைப்பூக்கம் சார்ந்து பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்கதையைச் சற்றுப் பார்ப்போம்.
அன்றைய காலகட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் விரும்பிப் பசு வேட்டையாடும் (கன்னடத்தில் "கோ பேட்டெ") தலமாக மைசூர் இருந்தது. பசு இறைச்சியை மைய உணவாகக் கொண்டு மைசூர்வாழ் கலகத் தமிழர்களின் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்து சமஸ்கிருத வட்டார வழக்கான பிராகிருதத்தில் பேசிய மாத்வர்கள் (கன்னட வீரவைணவப் பார்ப்பநர்கள்) உணவிற்குப் பசுக்களை இட்டுக்கொண்டு வரச் சென்ற பயணங்களில் வயல் வெளிகளில் பசுக்களின் குடல்கள் இறைந்து கிடந்ததைக் கண்டு வரிவடிவத்திற்குத் தீர்வு கண்டனர். கலகத் தமிழர்கள் அக்குடல்களை வடிவமாதிரியாகக் கொண்டு கன்னட வரிவடிவத்தைக் கட்டமைத்தனர். நெல்லில் அட்சராப்யாசம் தொடங்கும் வழக்கத்தை அடியொட்டி முதன்முதல் கன்னட வரிவடிவங்கள் முறுக்குப் பிழியும் கருவிகள் வழியே அரிசி மாவால் எழுதப்பட்டன. பிசிறுகள் துணை எழுத்துகள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
1715இல் ஹங்கனஹள்ளி (பங்கனபள்ளி) ராகவேந்திர ராவ் முதல் கன்னட நூலான ஹனுமான் சாலிசா மொழியாக்கத்தை எழுதினார். 1752இல் பௌத்தமும் அதற்குப் பின்பு சமணமும் (1753இல்) மைசூரில் அறிமுகமானவுடன் மைசூர் வைணவப் பார்ப்பநர்கள் அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கு மாறினர். 1900களில் கர்நாடகத்தில் எழுத்தாணிப் புழக்கம் தொடங்கியது. கன்னடர்கள் முறுக்குப் பிழியும் கருவியால் தலையணை அளவு 16 பக்க ஓலைச் சுவடி நூல்கள் எழுதுவதைக் கைவிட்டு எழுத்தாணியைப் பயன்படுத்தத் தொடங்கினர். 1930களில் கர்நாடகத்தில் இறகு எழுதுகோல் அறிமுகமானது. 1947இல் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பின்பு காங்கிரஸ் நடுவண் அரசால் மைப் பேனா அறிமுகப்படுத்தப்பட்டது. 1931இல் பறவைக் காய்ச்சலின் வரவு காரணமாக எழுதும் பழக்கத்தை அறவே விட்டொழித்திருந்த கன்னடர்கள் பேனா கிடைத்ததும் மீண்டும் எழுதத் தொடங்கினார்கள். 1934இல் முதல் கன்னடத் திரைப்படமான 'சதி சுலோச்சனா'வின் வசனங்கள் பேனாவால் எழுதப்பட்டன. சதி சுலோச்சனா பெருவெற்றி அடைந்ததையடுத்து பேனாவின் பயன்பாடு பிரபலமடைந்து எழுதுதல் பிற துறைகளுக்கும் பரவியது.
1960களில் கன்னடத்திற்குப் பாரம்பரியம் தேவைப்பட்டதன் அவசியத்தை உணர்ந்த கன்னட மொழி அறிஞர்கள், அதாவது கன்னடர்கள், அன்றைய நடுவண் அரசை நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தி அவசர அவசரமாகப் பழைய துளு, கொங்கணி, படகர் மொழி நூல்களை ஒவ்வொன்றாகக் கன்னட நூல்கள் எனக் கருதப்பட வழிவகுத்தனர். உதாரணமாக, ஒன்பதாம் நூற்றாண்டு நூலாகிய "கவிராஜமார்கா" மத்திய கொங்கணியில் எழுதப்பட்டது. இப்போது அது கன்னட மொழி நூலாகும். 2006இல் இந்திய மொழிகளுக்கான நடுவண் கழகம் (Central Institute of Indian Languages), அப்போதைய மத்திய அரசுக்கு பெங்களூரு ஐயங்காரு ஹேக்கரியின் ஜிலேபிகளை அனுப்பிச் செம்மொழி அந்தஸ்து கோரியது. இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து கன்னடத் திரைப்படக் குறுவட்டுகள் அனுப்பப்பட்டன. 2008இல் கன்னடத்திற்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது.
மோடஸ் ஆப்பரண்டி
எனது அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு விவேகானந்தன் இருந்தார். நாற்பத்தி சொச்ச வயதுக்காரர். அவர் மனைவியும் அவ்வாறே. இருவருக்கும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். வீட்டில் நிறைய குழந்தைப் படங்களை ஒட்டிவைத்திருப்பார்கள். மேற்படி பிரியத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் அவர்களது மூன்று வயதுக் குழந்தை மேல் அவர்களுக்கு அளவு கடந்த பிரியம் நிலவியது. மூன்று மூன்று வயதுக் குழந்தைகள் விளையாடுமளவிற்கு பொம்மைகள் நிரம்பியிருக்கும் அவர்கள் வீட்டில்.
அந்தக் குழந்தை பார்க்கவே கொஞ்சத்தக்கதாக இருக்கும். மூன்று வயதில் என் மகனும் இப்படித்தான் இருப்பான் என்று சொல்ல ஆசைப்படவைக்கும் அழகு. நாள்பட்ட நிமிண்டலால் சிவந்துபோன இரு கன்னங்களும் அந்தக் குழந்தையை இன்னும் அழகாக்கின. அத்தம்பதிக்குத் தங்கள் குழந்தையின் தோற்றம் பற்றி ஏகப் பெருமை. தினமும் வாசலில் குழந்தையோடு உட்கார்ந்துவிடுவார்கள். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாம் அறிந்த புன்னகையுடன் உட்கார்ந்திருப்பார் தாயார். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதைப் பார்த்தால் அதன் குண்டுக் கன்னங்களைக் கிள்ளாமல் நகர மாட்டார்கள். (எனக்கும் சூட்டிகையான குழந்தைகளைப் பிடிக்கும். ஆனால் குழந்தைகளுக்குத் தரப்படுமளவு முக்கியத்துவம் அவர்களின் அன்னையருக்குத் தரப்படுவதில்லை என்பது என் கருத்து.) அந்தக் குழந்தை பேசியோ அழுதோ உலகம் பார்த்ததில்லை. அதனாலேயே எனக்கு அதன் மேல் ஒரு மரியாதை இருந்தது. இப்போதெல்லாம் இந்த மாதிரிக் குழந்தைகளை யாரும் பெற்றுப்போடுவதில்லை. பொதுவாகவே குழந்தைகள் பிறவி அழுமூஞ்சிகள்.
கோகுலாஷ்டமி, நவராத்திரி என்று ஏதாவது வந்தால் மாட்டுப் பொங்கலன்று அலங்கரிக்கப்பட்ட மாடு போல் குழந்தையைக் கிருஷ்ணன் வேடத்தில் தெரு முழுக்கப் பார்க்கலாம். எங்கள் வீட்டில் ஏதாவது விசேடம் என்றால் மனைவி தவறாமல் அந்தக் குழந்தைக் குடும்பத்தை அழைத்துவிடுவார். சுமார் ஓர் ஆண்டு இப்படி இருந்தது. பிறகு ஒரு நாள் அந்தத் தம்பதி வீட்டைக் காலி செய்துகொண்டு போவதாக என் மனைவி சொன்னார். மூன்று வயதுக் குழந்தையை இங்கேயே தனியாக விட்டுச் செல்லப் பெற்றோருக்கு எப்படி மனம் வருகிறது என்று எனக்கு ஆச்சரியம். அவர்கள் குழந்தையையும் சேர்த்துத்தான் காலி செய்வதாக மனைவி தெளிவுபடுத்தினார். ஆக, ஒரு நாள் மொத்தமாகக் காலி செய்துகொண்டு நினைவுகளை மட்டும் விட்டுச் சென்றார்கள். நான் கடைசியாக விவேகானந்தனுடன் பேசியபோது அவர் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். 'நான்காக முயற்சிக்கலாமே' என்று நான் நகைச்சுவையாகச் சொல்ல, 'வயிற்றில் அவ்வளவு இடம் இல்லை சார்' என்றார் அப்பாவியாக.
இத்தனையும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாங்கள் அவர்களை மறந்துவிட்டோம். அதற்குப் பின்பு பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. பல நெடுந்தொடர்கள் முடிந்து புதிய நெடுந்தொடர்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அந்தத் தம்பதி எங்கள் குடும்பப் புகைப்படத் தொகுப்புகளில் மங்கிய உருவங்களாக மிஞ்சினார்கள். பிறகு இன்னொரு நாள் செய்தித்தாளில் அந்தக் குடும்பத்தின் குழுப் புகைப்படத்தைப் பார்த்தேன். சிறந்த குடும்பத்திற்கான சாகித்ய அகாதமி விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா என்று செய்தியைப் படித்தால் விஷயமே வேறு.
கணவன், மனைவி, ஒரு மருத்துவர் என மூவரைக் கைது செய்திருந்தார்கள். இந்தத் தம்பதி தங்கள் குழந்தைக்குப் பதினைந்து ஆண்டுகளாக ஹார்மோன் ஒடுக்க மருந்துகளைக் கொடுத்து வளராமல் வைத்திருந்தார்கள். இது மருத்துவ ரீதியாக சாத்தியமா என்று எனக்குத் தெரியாது. எழுதிவிட்டேன், அவ்வளவுதான். எனவே அந்தக் குழந்தையின் நிஜ வயது சுளையாகப் பத்தொன்பது. எனக்கு மூன்று ஆண்டுகள் முன்கூட்டியே திருமணம் ஆகியிருந்தால் இந்நேரம் இவன் வயதில் எனக்கொரு மகன் இருந்திருப்பான். எனது சொந்த மகன் இவனுக்குத் தம்பியாக இருந்திருப்பான். எனக்கு இரு மகன்கள் இருந்திருப்பார்கள். இருவரின் சண்டைகளைச் சமாதானம் செய்துவைக்கவே நேரம் சரியாக இருக்கும். இருக்கட்டும். இந்தப் பையன் எங்கள் வீட்டு விழாக்களுக்கு வரும் பெண்களை நோட்டம் விடுவதை கவனித்திருக்கிறேன். என்னவோ அப்போது சந்தேகப்படத் தோன்றவில்லை. இப்போது சந்தேகமாக இருக்கிறது.
ஆனால் விஷயம் அதுவல்ல. தங்கள் செல்லக் குழந்தை முதுமை அடையாமல் இருப்பது பிறரின் சந்தேகத்தைக் கவரக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் வேறு மாவட்டத்திற்கு வீடு மாறுவது அந்தத் தம்பதியின் 'மோடஸ் ஆப்பரண்டி'யாக இருந்தது. எந்தப் பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது? அதுதான் அவர்கள் செய்த தவறு. அவர்கள் இன்னொரு குழந்தை பெற்றிருக்கலாம், தத்தெடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை என்பது காவல் துறைக்குத்தான் வெளிச்சம். இயற்கையின் போக்கில் குறுக்கிட்டதற்காக ஐந்து ஆண்டுகள், குழந்தை மீதான குரூரத்திற்காக ஐந்து ஆண்டுகள் என்று மொத்தம் பத்தாண்டு சிறைத் தண்டனை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. பையனுக்கு ஹார்மோன் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது யாரோ உறவினர் வீட்டில் மெதுவாக வளர்ந்துகொண்டிருக்கிறான். வேறு மாதிரி முடித்தால் நன்றாக இருக்காது.
மீண்டும் குமார்
ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை
"வாங்கோ!" என்று மேல் துண்டின் நுனியால் அழுகையைப் பொத்திக்கொண்டு வரவேற்றவரை (48) கண்டுகொள்ளாமல் அந்த இரண்டு படுக்கையறை வீட்டிற்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். அவர் நேராகச் சென்ற சமையலறையின் நடுவில் ஓர் எரிந்த பெண்மணி (44) படுத்த நிலையிலேயே ஓட முயல்வது போல் கிடந்தார். ஆள் போய் மூன்று-நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். எரிந்து முடிகையில் நீரூற்றி அணைக்கப்பட்ட தடயம் இருந்தது. அவரைச் சுற்றி சாக்பீஸால் கோட்டோவிய அவுட்லைன் வரைந்திருந்தார்கள். கலரிங் கொடுப்பதற்குள் போலீஸ் ஓவியர் தீயணைப்புப் படையினருடன் தேநீர் குடிக்கப் போய்விட்டதால் சம்பவ நபர் இன்னும் கோட்டோவியத்திற்குள்ளேயே சிறைபட்டிருந்தார்.
சமையல் மேடை மற்றும் அதன் பின்னணி, தாமும் அவிந்த அடையாளங்களைக் கன்னங்கரேலெனப் பறைசாற்றின. சுவரில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய ஓட்டை வழியே எதிர்வீட்டுப் பார்வையாளர்கள் தெரிந்தார்கள். குமாருக்குக் கண்கள் பனித்தன – அந்த இடத்தில் அபரிமித வெங்காய வீச்சம். தரையில் எங்கேயும் வெங்காயத்தின் அடையாளங்கள் காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் அதை மனத்தில் குறித்துக்கொண்டார்.
இறந்தவர் முகம் சிறிது சிதைந்திருந்தது. மேற்சருமம் முழுமையாகப் பொசுங்கி அடியில் இருந்த சருமத்தைத் தன்னையறியாமல் காட்டியது. வெளிறிப்போய், புருவங்கள் இன்றி, மிகையான கெய்ஷா ஒப்பனையில் இருந்த ஜப்பானியப் பெண் போல் தெரிந்தார் அந்தப் பெண்மணி. குமாரைப் புதிராக்கியது என்னவென்றால் பிணத்தின் முகத்தையும் வயிற்றில் கொஞ்சத்தையும் தவிர உடலில் சுமார் 40% தீக்காயங்களே இருந்தன. சிலிண்டர் வெடித்துவிட்டது என்றார்கள். சிலிண்டர் உருப்பிளந்து கிடந்தது உண்மை. ஆனால் முகம் மட்டும் அதிகமாகச் சேதமடைந்தது எப்படி? விபத்து அந்தப் பெண்மணியின் முகத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊகித்தார் குமார்.
"இன்னிக்குக் காலைலகூட நல்லா இருந்தா. மதியத்துக்குள்ள சிலிண்டர் இப்படி ஆயிடுத்து. புதூ சிலிண்டர். பக்கத்துத் தெரு வரைக்கும் போயிருந்தேன். வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு" என்றார் கணவர் கேவி.
குமார் பதிலளிக்காமல் கூடத்திற்குச் சென்று போலீஸ் முறைப்படி நோட்டம் விட்டார். சுவர்களில் இலைப் பிள்ளையார் படம், பத்து நிமிடம் தாமதமான சுவர்க் கடிகாரம், கணவன்-மனைவி-இரு குழந்தைகள் அடங்கிய குழுப் புகைப்படம், மாத நாள்காட்டி என ஒரு சாதாரணக் குடும்பச் சித்திரம் விரிந்தது. பொருட்கள் அடைத்திருந்த ஓர் அலமாரியில் எண்ணெய்ப் புட்டி, பல வகை மருந்துகள், பழைய மருந்துச் சீட்டுகள், ஒப்பனைப் பொருட்கள் நிரம்பியிருந்தன. குமார் ஒவ்வொரு மருந்தையும் மருந்துச் சீட்டையும் எடுத்துப் பார்த்தார். அருகே தொலைக்காட்சிப் பெட்டி. அதன் மேல் மீண்டும் ஒரு பிள்ளையார் பொம்மை, ஒரு விக்ஸ் டப்பா. குமார் கையுறைக் கையால் விக்ஸ் டப்பாவை அடிப்பகுதியில் பிடித்து எடுத்து எல்லா பக்கமும் திருப்பியும் முகர்ந்தும் பார்த்துவிட்டுத் தடயவியல் நிபுணரிடம் கொடுத்தார். நாள்காட்டியில் ஒரு தேதி பால்பாயின்ட் பேனாவால் இருமுறை வட்டமிடப்பட்டிருந்தது. குமார் அருகில் சென்று பார்த்தார். அது முந்தைய நாளின் தேதி. "நேத்துத் தேதிய எதுக்கு மார்க் பண்ணிருக்கீங்க?" என்றார் குமார். "நேத்து ஏகாதசி, அதான்" என்றார் கணவர்.
அடுத்து பாத்ரூமைக் கண்டுபிடித்தார் குமார். சமீபத்தில் சுத்தப்படுத்தப்பட்ட இடம். ஒரு மூலையில் அமிலம், கழுவும் ஹாக்கி பிரஷ், முழுவதும் காலியான ஒரு ஃபெனாயில் புட்டி ஆகியவை இருந்தன. குமார் அந்தப் புட்டியை எடுத்து மூடி அருகே முகர்ந்து பார்த்தார். புட்டியின் உடல் துடைத்தது போல் உலர்ந்து இருந்தது. அதையும் எடுத்துத் தடயவியல் ஆளிடம் கொடுத்தார். குமாரின் தேடல் முடிந்தது போல் தெரிந்தது. கூடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
"இன்னிக்கு என்ன சமையல்?" என்றார் குமார் அந்தக் கணவரிடம்.
கணவர் இதை எதிர்பார்க்கவில்லை. "சமையலா?" என்றார் விழித்து.
"ஆமா. குக்கிங்" என்றார் குமார்.
"வெண்டைக்காய் குழம்பு, தக்காளி ரசம் அவரைக்காய் பொரியல், வெள்ளரிக்காய் பச்சடி…"
"வெங்காய பூரணம் மாதிரி எதுவும் பண்லியா?"
"இன்னிக்கு துவாதசி சார். வெங்காயம் பண்ண மாட்டோம்" என்றவரின் முகம் உடனே வெளிறியது. குமார் எதிர்பார்த்தது அதைத்தான்.
"தெரியும்" என்றார் குமார். "குழந்தைங்க எங்க?" என்றார்.
"பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க."
"குழந்தைங்களுக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார். ஃப்ளைட்ல வந்துக்கிட்டிருக்காங்க டெல்லிலேந்து."
"நீங்கதான் கொன்னீங்கன்னு சொல்லிட்டீங்களா?"
"சார்! என்ன பேசறீங்க?"
"உன் மனைவிக்கு ஜலதோஷம். அதனால அவங்களுக்கு வாசனை தெரியாதுன்றத யூஸ் பண்ணிக்கிட்டு பால் பாத்திரத்துல இருந்த பாலைக் கொட்டிட்டு பெனாயில ஊத்தியிருக்கே. அவங்களுக்கு இருந்த சளில வெளுத்ததெல்லாம் பால்னு நம்பி பெனாயில அடுப்புல வெச்சிருக்காங்க. பெனாயில் பொங்குறப்ப வெடிச்சு அந்த அதிர்ச்சில ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்டா இருக்குற உன் சம்சாரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. சிலிண்டரும் வெடிச்சிருச்சு. பெனாயில் வாசனை தெரியாம இருக்குறதுக்கு பொண்டாட்டி எரியிற நெருப்புல நிறைய வெங்காயத்த அள்ளிப் போட்டிருக்க. ஆனா நிறைய தடயங்கள எங்களுக்கு விட்டு வெச்சிருக்க" என்றார் குமார்.
"என்ன சார் அநியாயமா கதை சொல்றீங்க! என் பொண்டாட்டிய நான் எதுக்கு சார் கொல்லணும்?"
"அத ஸ்டேஷன்ல வந்து டீட்டெய்லா எஸ்பிளைன் பண்ணுவியாம்."
ஆறுதல்
காலையில் வெறும் வயிற்றில் ஃபேஸ்புக் பார்க்காதீர்கள். எழுத்துலகவாதியும் குறிப்பாக இலக்கியவாதியுமான இஷ்டமித்திரனுக்கு (புனைபெயர்) ரத்த அழுத்தம் தொடர்பாக மருத்துவரின் அறிவுரை. அவர் மருத்துவர். அப்படித்தான் சொல்வார். செய்தித்தாளைக் கையிலெடுத்தால் நாடாளுமன்ற அமளி, சட்டமன்ற வெளிநடப்பு, கொலை, திருட்டு, 'கற்பழிப்பு', செயின் பறிப்பு, வேலைவாய்ப்பு மோசடிக்காரர் பிடிபாடு, பெட்ரோல் விலையுயர்வு, சாக்கடைநீர் தேக்கத்தை எதிர்த்து காலனிக்காரர்கள் தர்ணா, புதிய ஏ.டி.எம். திறப்புவிழா, அரசு அதிகாரிகள் மாற்றல், ஹாலிவுட் நடிகையின் மில்லியன் டாலர் கிரகப்பிரவேசம், ஹங்கேரியிடம் ஹாக்கியில் தோல்வி என்று எல்லாம் அரை மணிநேரத்தில் முடிந்துவிடுகிறது. குளிக்கப் போவதற்கு முன்பு ஃபேஸ்புக்கில்தானே கொள்ளை போகிறது. ரத்த அழுத்தத்திற்கு மருந்தைத் தின்றால் போயிற்று.
"இ.மி.யின் [இஷ்டமித்திரன்] அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி புனைவுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தாயிற்று என யாராவது இவருக்குச் சொல்லுங்களேன்..!!" இது இ.மி.யின் சிறுகதை ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட ஒரு நண்பருக்கு "நெகிழ்நன் கவிஞா" என்ற இளம் எழுத்தாளர் எழுதிய பின்னூட்டம். நெகிழ்நன் கவிஞா கவிதை, சிறுகதை, மதிப்புரை எழுதுபவர். சமகால பின்னூட்ட எழுத்தாளர்களில் அதிகம் காணக்கிடைப்பவர். இஷ்டமித்திரனின் சமீபத்திய தலைவலிகளில் ஒருவர். மொழி ரசத்தில் தொப்பலாக நனைந்த தமது உருவகச் சிறுகதைகளுக்கு யார் ஃபேஸ்புக்கில் சுட்டி (ஓர் இணையப் பக்கத்திற்கான முகவரி) கொடுத்தாலும் நெகிழ்நன் அங்கு வந்து அதை ஒரு எத்து எத்திவிட்டுப் போகத் தவறுவதில்லை என்பதை இஷ்டமித்திரன் கவனித்தார். சொல்லப்போனால் நெகிழ்நன் இந்தச் சேவையை இன்னும் சிலருக்கும் செய்துவந்தார். ஆனால் இஷ்டமித்திரனுக்கு அது பற்றிக் கவலையில்லை. வாய்க்கால் தகராறு இல்லாமல் ஒருவன் வந்து இம்சிப்பதுதான் அவருக்கு எரிச்சலேற்படுத்தியது. இவனுக்கு எங்கே அரிக்கிறது? இவன் எதிர்க்கும் விஷயங்களைத்தானே நாமும் எதிர்க்கிறோம்? (என்று அவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்) பதிலடி கொடுத்தால் சண்டையாக வளரும் என்று கைமூடி மௌனியாக இருந்தார் இ.மி. போலி அடையாளம் தயாரிக்கக் கை துறுதுறுத்தது. ஆனால் இஷ்டமித்திர பந்துக்கள் எனப்படும் தமது ரசிகர்கள் அதைச் செய்யட்டும் என விட்டுவிட்டார்.
அவ்வகை பின்னூட்டங்களுக்குப் பின்பு நெகிழ்நனை ஓரிரு முறை இலக்கிய நிகழ்வுகளில் பார்த்தார் இஷ்டமித்திரன். ஒரு விழாவில் ஓர் அறிவுக்கொழுந்து ரொம்ப முக்கியமாக நெகிழ்நனை அறிமுகப்படுத்தினார். இஷ்டமித்திரன் தம்மை யாரோ கூப்பிட்டாற்போல் திரும்பிப் பார்த்து அங்கிருந்து விலகினார். நெகிழ்நன் வீடு திரும்பியதும் முதல் வேலையாக அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டார். "விடுங்கள் தலை, இந்தப் பெரிய மனிதர்களே இப்படித்தான்" ரக பின்னூட்டங்கள் குவிந்தன. இஷ்டமித்திரன் அதையும் விடாமல் தேடிப் படித்தார். நிலைமை இப்படி இருக்க, இன்னொன்று நடந்தது.
இஷ்டமித்திரன் அடிப்படையில் ஒரு பிரபலம் என்பதால் மக்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிகளைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போனார்கள். அப்படிப் போடப்பட்ட சுட்டிகளை அவர் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு மின்னிதழ் இணைப்பு கண்ணில் பட்டது. அவர் மிகவும் விரும்பிப் படிக்காத 'விசை' இணைய இதழில் இந்த மாதம் யார் எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலும் அதில் இருந்தது. 'பொத்தான்' என்று நெகிழ்நன் கவிஞா ஒரு சிறுகதையைப் படைத்திருந்தார். இந்த ஆள் என்ன எழுதுகிறான் பார்ப்போம் என இஷ்டமித்திரன் மின்னிதழ் சுட்டியை க்ளிக் செய்து தமக்கு வேண்டிய சிறுகதையைச் சென்றடைந்தார்.
சிறுகதை இப்படி ஆரம்பித்தது: "என்னவோ தெரியவில்லை, தினேசனுக்குச் சற்று காலமாக எல்லோரது நெற்றியிலும் குங்குமப் பொட்டு போல ஒரு பொத்தான் தெரிந்தது. அவன் தன்னைக் கண்ணாடியில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் பார்த்துக்கொண்டான். நல்ல வேளையாக அவனது நெற்றியில் பொத்தான் எதுவும் இல்லை. பொத்தான்கள் இருக்க வேண்டிய இடம் சட்டையேயன்றி நெற்றியல்ல என்று அவன் ஒருவாறாக நம்பத் தொடங்கி சில காலம் ஆகிவிட்டிருந்தது."
தொடர்ந்து படித்த இஷ்டமித்திரனின் இதழ்களில் அரும்பிய புன்னகை, அவரது சகல பற்களின் இருப்பையும் உலகிற்கு அறிவித்த இளிப்பாக விரிந்தது. 'பூ! இவ்வளவுதானா இவன்! இந்தப் பத்தோடு பதினொன்றா என்னைப் பற்றிப் பெரிய வார்த்தைகளில் வசைகிறான்!' என்று நினைத்துக்கொண்டார் இஷ்டமித்திரன். இப்போது அவருக்குக் கவிஞா மீது கிட்டத்தட்ட ஏமாற்றமே வந்துவிட்டது. நெகிழ்நன் இன்னும் என்னென்ன எழுதியிருந்தாரோ அவற்றையெல்லாம் தேடிப் படித்துப் புளகித்தார் அவர். "இவனெல்லாம் இப்படித்தான் எழுத வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டார்.
இலக்கியக் கூட்டங்களுக்கு ஏது பஞ்சம்? இன்னொரு புத்தக வெளியீட்டு விழா வந்தது. வெளியான ஆறு புத்தகங்களில் ஒன்று நெகிழ்நனுடையது. இஷ்டமித்திரன் இன்னொரு புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்று அது பற்றிப் பேச அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் இருந்த சிம்மாசன மாடல் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்த நெகிழ்நனின் அருகில் அமர்ந்தார் இஷ்டமித்திரன். "என்ன நெகிழ்நன்! அருமையாக எழுதுகிறீர்கள். இதே மாதிரி எழுதுங்கள்" என்றார்.
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
வெயில்: இரு கடிதங்கள்
அன்பினிய சார்,
சமீபத்தில் எனக்குக் கிட்டிய ஓர் அனுபவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். வழமையாகத் தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவனாகிய நான், வெயிலின் கொடுமை தாங்காது ஒரு தேநீர்க் கடையில் மோர் குடித்தேன். மோரின் விலை ஆறு ரூபாய் என்பதை மோரினைப் பருகிய பின்னரே அறிந்துகொண்டேன். அம்மோரில் கருவேப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவையில் ஏதேனும் ஒன்று இருந்திருந்தாலும் என் மனமானது சமாதானம் அடைந்திருக்கும். சிரம காலத்திலும் மக்கள் உழைத்து ஈட்டிய பணம் அறமற்ற வியாபாரிகளால் இவ்வாறு உறிஞ்சப்படுவது வேதனையைக் கிளப்பி விடுகிறது. இதைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டும்.
இவண்
சந்திரன் திருவேற்காடு
சென்னை
அன்பின் திருவேற்காடு,
இதே ஓர் அனுபவம் எனக்கும் சமீபத்தில் கிடைத்தது. நானும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதுகிறேன்.
மோர் விற்பன்னர்களின் இந்தச் செய்கை போர்க்கால லாபங்காணல் (war profiteering) வகைப்பட்டது. இதில் பெரிய அளவில் அறத்தை எதிர்பார்ப்பது முழுமுற்றான அறிவுகெட்டத்தனம் அல்லது கற்பனாவாதம். நீங்கள் குறிப்பிடும் மோரானது ஐஸ்மோர் இலக்கணங்களைப் பின்பற்றாமல் உப்பின்றி, புளிப்பாக, சற்று கெட்டியாக இருக்கும் என நீங்கள் சொல்லாமலே ஊகிக்கிறேன். இதன் பொருளாதார மதிப்பு அதிகபட்சம் மூன்று ரூபாயைக் கடக்க வாய்ப்பில்லை. எங்கள் வீட்டில் மோர் இப்படித்தான் இருக்கும். இதைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம், ஆனால் வேனில் நிவாரண பானமாகக் குடிக்கத் தகுதியற்றது. அதனால்தான் என் வீட்டில் நான் மோர் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இரண்டு ரூபாய்க்கு மேல் என்னிடமிருந்து பெயராது.
எல்லா கடைகளிலுமே மோர் என்றால் தரக்கேடாகத்தான் இருக்கும் என்று நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை என்றாலும் இன்றைய நிலவரம் அதுதான். அக்னி நட்சத்திர காலத்தின் வரவையொட்டி மோரின் நுகர்வும் அதற்கிணையாக அதன் தேவையும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே விலையேற்றங்கள், மின்வெட்டுகள், மதுக் கடைகள் போன்ற காரணிகளால் திணறிக்கொண்டிருக்கும் தேநீர்க் கடை உரிமையாளர் சமூகம், கூடுதல் பாலைக் கொள்முதல் செய்து மோர் தயாரிப்புக்கென தனி மாஸ்டரை நியமிப்பதில்லை. தேநீர் தயாரிக்கும் மாஸ்டரே மோரையும் தயாரிப்பதால் சில சமயங்களில் மோரில் சர்க்கரை தூக்கலாக இருக்கிறது; இன்னும் சில சமயங்களில் சுத்தமாக சர்க்கரை இருப்பதில்லை. உயர்ந்த சர்க்கரை விலையும் இதற்கு ஒரு காரணம். அதே போல காய்கறிக் கடைகளில் ஒரு ரூபாய்க்குக் கருவேப்பிலை-கொத்துமல்லி கேட்டால் பத்து ரூபாய்க்குக் குறையாமல் தருவதில்லை. முன்பெல்லாம் சும்மா கொடுப்பான். இதனால் தேநீர்க் கடை உரிமையாளர் சமூகத்தினர் தரக்குறைவான மோரை நுகர்வோரிடம் தள்ளி விடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் விலையையும் அதற்கேற்பக் குறைவாக நிர்ணயிக்காததுதான் இப்போது பிரச்சினை ஆகிவிட்டிருக்கிறது.
மோர் குடிப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் அல்லது ஏற்படுத்தப்பட்டால் ஒழிய இந்த நிலைக்குத் தீர்வு இல்லை. வெப்பம் மிக மோசமாக இருப்பதால் ஜில்லென்று இருந்தால் பெனாயிலையும் குடித்துவிடும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். சரியாகக் கழுவாத கண்ணாடி கிளாஸில் தளும்பத் தளும்பத் தரப்படும் மோரின் தோற்றமும் குளிர்ச்சியும் அவர்களுக்குப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த உளவியலைத் தேநீர்க் கடைக்காரர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
தாகம் தணித்தல் என்பது உயிர் பிழைத்திருத்தலின் (survival) ஓர் அங்கம். வெயிலின் கடுமை தணிந்தால் மக்களுக்கு மோரின் தரம் சார்ந்த அறம் குறித்த எதிர்பார்ப்புகள் மேம்படலாம். அது வரை நாமே யூட்யூபில் பார்த்து ஐஸ்மோர் தயாரிப்பு கற்றுக்கொள்வதுதான் வழி.
வாழ்த்துகளுடன்
பேயோன்
சென்னை
* * *
வணக்கம் ஐயா,
என்ன சார் வெயில் இப்படிக் கொளுத்துகிறது?
இப்படிக்கு
வியர்த்தன்
சேலம்
அன்பின் வியர்த்தன்,
முதலில் தொழிற்புரட்சி, அடுத்து பசுமைப் புரட்சி, பின்பு தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் என இரு புரட்சிகளும் இரு ஆக்கங்களும் கரங்கோத்து உலகைப் புதிதாக்கின; பல நல்ல, கெட்ட, மற்றும் நடுவாந்தரமான விளைவுகளுக்கு வித்திட்டன. இந்தக் கெட்ட விளைவுகளில் உங்கள் கடிதம் தொடர்பாகக் குறிப்பிடத்தக்கது குளோபல் வார்மிங் எனப்படும் குவலய சூடேற்றம். மேலே குறிப்பிட்ட நான்கின் நன்மைகளை அனுபவித்துவரும் அதே வேளையில் குவலய சூடேற்றம் என்கிற தீமையையும் இன்றைய தேதியில் (19-05-2013) நாம் அனுபவித்தாக வேண்டியுள்ளது. இது விஷயமாக வானிலை ஆராய்ச்சி மையமே கைவிரிக்கும்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நைசில் மாதிரி ஏதாவது தடவிக்கொள்ளுங்கள்.
வாழ்த்துகளுடன்
பேயோன்
சென்னை
தீபாவளி: தோற்றமும் வளர்ச்சியும்
நமக்கு தீபாவளி தெரியும். கொண்டாடுகிறோம். அதன் வரலாறு தெரியுமா? ஆதி முதல் இன்று வரை தீபாவளியின் சுருக்கமான வரலாறை அடுத்த வாக்கியம் முதல் காணலாம்.
கி.மு. 8000ஆம் நூற்றாண்டு – மனிதன் நெருப்பைக் கண்டுபிடிக்கிறான்.
கி.மு. 80ஆம் நூற்றாண்டு – இந்திய ராஜகுமாரனாகிய ராமன், இலங்கை மன்னன் ராவணனைத் தோற்கடித்துக் கொல்கிறான். இது இந்திய இதிகாச வரலாற்றின் முதல் போர்க் குற்றமாகிப் பின்னாளில் தீபாவளி கொண்டாடப்பட வழிவகுக்கிறது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டு – ராமனின் வெற்றி பண்டிகையாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று துறவியான புனித தீபாவளியார் அன்றைய வடநாட்டு மன்னராகிய முதலாம் சந்திரகுப்தரிடம் கோரிக்கை விடுக்கிறார். சந்திரகுப்தர் மறுத்து அவரைக் கழுவேற்றுகிறார். தீபாவளியாரின் நினைவில் ‘தீபாவளி’ என்ற பெயரிலேயே பண்டிகை நாளை சந்திரகுப்தர் அறிவிக்கிறார். பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என அனைத்துலக இந்திய மன்னர்கள் சங்கம் முடிவு செய்கிறது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டு – அகல்விளக்கு கண்டுபிடிக்கப்படுகிறது. களிமண் சுரங்கங்கள் தோண்டப்பட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் அகல்விளக்குகள் இடம்பெறுகின்றன.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு – சீனர்கள் பட்டாசு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவே, இந்திய மன்னர்களின் காத்திருப்பு முடிகிறது. பட்டாசுகளுக்கான முதல் ஆர்டர் அனுப்பப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு – சீனா ராக்கெட்களைக் கண்டுபிடிக்கிறது. மூன்றாம் சித்திரகுப்தர் இரண்டு ராக்கெட்களுக்கு ஆரியபட்டா, பாஸ்கரா எனப் பெயரிட்டு மகிழ்கிறார்.
கி.பி. 7-16ஆம் நூற்றாண்டு – பல நூற்றாண்டுகள் கழிகின்றன.
கி.பி. 17ஆம் நூற்றாண்டு – மராட்டியப் பேரரசு தமிழ்நாட்டில் தீபாவளியை அறிமுகப்படுத்துகிறது.
1921 – மைசூர் அரண்மனையில் நடந்த ஒரு சமையலறை விபத்தில் மைசூர்பாகு கண்டுபிடிக்கப்படுகிறது.
1945 – அமெரிக்காவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘ஆட்டம்பாம்‘ கண்டுபிடிக்கிறார். சிங்கம் மார்க் பட்டாசுகள் உடனடியாக அதற்கு உரிமம் பெற்று இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் அது ‘ஆட்டோபாம்’ என்ற பெயரில் பிரபலமாகிறது.
1954 – தீபாவளி போனஸை உயர்த்தக் கோரி கல்கத்தாவில் வேலைநிறுத்தம்.
1966 – சோவியத் ரஷ்யா ‘சோயஸ்’ ராக்கெட்களை உருவாக்குகிறது. அன்றைய இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, ரஷ்யாவுடனான தனது நட்புறவைப் பயன்படுத்தி ஸ்டாண்டர்ட் ஃபயர்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு ராக்கெட் உரிமம் பெற்றுத் தருகிறது.
1967 – இந்திய அரசு தீபாவளிக்கான பாதுகாப்புக் குறிப்புகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுகிறது. இதனால் வடநாட்டில் தீபாவளி தீவிபத்துகள் குறைகின்றன.
1970 – அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் அமலுக்கு வருகிறது. ஆட்டம்பாம்களை அழிக்கும்படி இந்தியாவை ஐ.நா. கேட்டுக்கொள்கிறது. இந்தியா தீபாவளியைக் காரணம் காட்டி மறுக்கிறது.
1974 – சொந்தமாக ஆட்டம்பாம் தயாரிக்கும் இந்திய முயற்சி தோல்வியடைகிறது. யுரேனியம், புளூட்டோனியம் மற்றும் கனநீருக்கு பதிலாக முறையே பயத்தமாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்க்கப்பட்டு பயத்தலாடு உருவாக்கப்படுகிறது. பயத்தலாடின் சிற்பி என்று போற்றப்படும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா பத்ம விபூஷண் விருது பெறுகிறார்.
1980கள் – வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி நாடெங்கும் பரவுகிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. தீபாவளி பற்றிய திரைப்படப் பாடல்களை தூர்தர்ஷன் ஆண்டுதோறும் தொகுத்து ஒளிபரப்புகிறது. நடிகர்கள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.
1990கள் – மும்பையிலிருந்து வந்த நடிகைகள் (‘மும்பை இறக்குமதிகள்’) தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள். தாராளமயமாக்கத்தை அடுத்து புடவை, நகைக் கடைகள் புற்றீசலாகக் கிளம்புகின்றன.
1996 – நான் தலை தீபாவளி கொண்டாடுகிறேன். மாமனார் எனக்கு மோதிரம் வாங்கித் தருகிறார். பக்கத்து வீட்டில் ‘வெப்பன்ஸ் கிரேடு ரசகுல்லா’ உருவாக்கப்படுகிறது.
1998 – இந்தியா இரண்டாம் முறையாகப் பரிசோதனை செய்து வெற்றிகரமாக சொந்த ஆட்டம்பாம்களைத் தயாரிக்கிறது. அவற்றை அழிக்குமாறு ஐ.நா. மீண்டும் வலியுறுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்த முடியாது என்று பா.ஜ.க. அரசு ஆட்சேபிக்கிறது.
2000கள் – மும்பை நடிகைகள் தொடர்ந்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளால் பட்டாசு விற்பனை குறைகிறது. பட்டாசு வெடிக்க நேரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. மென்பொருள் துறை வளர்ச்சியால் மேலும் அதிக இந்தியர்கள் வெளிநாடுகளில் தீபாவளி அனுஷ்டிக்கிறார்கள்.
2008 – ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் கவிதைகளால் தீபாவளி வாழ்த்து சொல்லும் வழக்கம் தொடங்குகிறது. உள்ளூர் நடிகைகள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.
2010 – தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள்.
2011 – தீபாவளி வாழ்த்துகளையடுத்து முதல்முறையாக ஃபேஸ்புக் நிறுவன பங்கு விலை சரிகிறது. லட்சுமி வெடியைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம். பாம்பு மாத்திரையைத் தடைசெய்யக் கோரி புளூ கிராஸ் ஆர்ப்பாட்டம்.
2012 – உலகம் அழிவதற்கு முன்பு தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடுகிறது.
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
ஃபவுல் பிளே
ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை
ஒரு வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அந்த அழுது வடிந்துகொண்டிருந்த வசதியான சாவு வீட்டுக்குள் வலது காலை எடுத்துவைத்தார் இன்ஸ்பெக்டர் குமார். கான்ஸ்டபிள் 114 பின்தொடர்ந்தார். வீட்டினுள் நுழைந்ததும் ஸ்பிளிட் ஏ.சி. குளிர் அவர்களை அணைத்துக்கொண்டது.
அந்தப் பெரிய கூடத்தில் தோராயமாக எழுபது பேருக்கு அப்பால் சுமார் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவரை சுவரோரத்தில் ஐஸ் பாளங்களின் மேல் கிடத்தியிருந்தார்கள். மெல்லிய விசும்பல்கள், கிசுகிசுப்புகள் தவிர அந்த இடம் அமைதியாக இருந்தது. குமார் நுழைந்த மறுகணம் எல்லோர் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது, புருவங்கள் மொத்தமாக உயர்ந்தன. குமார் நெருங்கிச் சென்று பார்வையால் சடலத்தை மேய்ந்தார். அவர் பார்வைக்கு உள்காயமோ வெளிக் காயமோ எதுவும் தென்படவில்லை. க்ஷீணக் கிழம். காதில் சத்தமாகக் கத்தினாலே மாரடைப்பை ஏற்படுத்திவிடலாம். கைரேகை, விஷம் என்று ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை.
மூதாட்டியின் ஐம்பது வயது மகன் போல் தெரிந்த ஒருவர் எழுந்து குமாரிடம் கேட்டார்: "என்ன சார் வேணும்?"
"இங்க தனசிங்கம் யாரு?"
"நான்தான். என்ன வேணும்?"
"இறந்துபோன லேடி பத்தி கொஞ்சம் கொஸ்டின்ஸ் கேக்கணும்" என்றார் குமார்.
"அவங்க எங்கம்மா சார். காலைல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. அது பத்தி என்ன கேக்கப்போறீங்க?"
"இந்த சந்தர்ப்பத்துல உங்களத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும். ஆனா இது அர்ஜன்ட் போலீஸ் மேட்டர்…"
"சாரி சார், ரெண்டு நாள் கழிச்சு வாங்க. ரெண்டு மணிக்கு எடுக்குறோம். வேலை நிறைய இருக்கு," தனசிங்கம் எரிச்சலாகச் சொன்னார்.
"பக்கத்துல ஏதாவது ரூம்ல வெச்சிப் பேசலாமா, ஸ்டேஷனுக்கு வரீங்களா?" என்றார் குமார் அழுத்தமாக.
திடுக்கிட்ட தனசிங்கம், வலதுகையால் ஒரு திசையைக் காட்டினார். பெரும்பாலானவர்களைப் போல் இவருக்கும் வலதுகைப் பழக்கம்தான் என்று மனதில் குறித்துக்கொண்டார் குமார். இருவரும் தனியாக ஓர் ஆளில்லாத அறைக்குச் சென்றார்கள்.
குமாரும் தனசிங்கமும் அங்கிருந்த 90களின் பாணியிலான குஷன் நாற்காலிகளில் அமர்ந்ததும் தனசிங்கத்தைக் குமார் உள்வாங்கினார். ஐம்பது வயதுக்கு மீறிய நரை. ஆனால் முதுமை நெருங்கினாலும் வழுக்கை விழ அனுமதிக்காத மரபணு. இழப்பின் அழுகை அவரது கண்களைச் சிவப்பாக்கியிருந்தது. சமீபத்தில் முடிதிருத்தம் செய்துகொண்டதன் அடையாளமாக கழுத்திலும் போலோ டி-ஷர்ட் காலரிலும் மில்லிமீட்டர் நீள முடித் துண்டுகள் விடாப்பிடி விசுவாசம் காட்டிக்கொண்டிருந்தன.
"ஓ.கே. மிஸ்டர் தனசிங்கம்," என்றார் குமார். "உங்கம்மா எத்தனை மணிக்கு இறந்தாங்க?"
"காலைல எட்டு மணி இருக்கும். அவங்களுக்குத் தொண்ணூறு வயசு சார். ஹார்ட் பேஷண்ட். அப்படித்தான் சாவாங்க. இதுல கேள்வி கேக்க என்ன இருக்கு?" என்றார் தனசிங்கம் வேதனையுடன்.
"உங்கம்மா சாவுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்குறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. அது சம்மந்தமா கேள்வி கேக்கணும்."
"என்ன டீடெய்ல்ஸ் வேணுமோ கேளுங்க, சொல்றேன்" என்றார் அமைதியாக தனசிங்கம்.
"அவங்க சாகுறப்ப என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க?"
"பேப்பர் படிச்சிட்டிருந்தாங்க."
"அந்த டைம்ல நீங்க எங்க இருந்தீங்க?"
"முடி வெட்டிக்கப் போயிருந்தேன்."
"உங்கம்மாவுக்கு சொத்து எதுனா இருக்கா?"
"நாங்கல்லாம்தான் அவங்களோட சொத்து" தனசிங்கம் உருக்கமாகச் சொன்னார்.
குமார் எரிச்சலடைந்தார். "உங்கம்மா பேர்ல என்னென்ன சொத்து இருக்கு? டீடெய்லா சொல்லுங்க."
"இந்த வீடு, ராயபுரத்துல ரெண்டு வீடு, ஊர்ல அறுவது ஏக்கர் நிலம், பேங்க்ல ஒரு பதினஞ்சு கோடி பணம், அப்புறம் நாங்க, அவ்வளவுதான்."
"உயில் ஏதாவது இருக்கா?"
"இருக்கு, ஆனா வக்கீல்ட்ட இருக்கு."
"சொத்தெல்லாம் யார் பேருக்கு எழுதி வெச்சிருக்காங்க?"
"என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும்."
"பியூட்டிஃபுல். கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டீங்க?"
"சார்?"
குமார் கேள்வியை மீண்டும் கேட்டார்.
"ரெண்டு மாசம் இருக்கும்."
"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீங்க முடி வெட்டிக்கிட்ட அன்னிக்கு என்ன கிழமை?"
தனசிங்கம் விழித்தார். "அதெல்லாம் எப்படி சார் ஞாபகம் இருக்கும்? சண்டேன்னு நினைக்கிறேன்."
"ரைட். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க."
"உங்களுக்கு யாரோ எங்களப் பத்தி தப்பா தகவல் குடுத்திருக்காங்க சார்."
"அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க."
தனசிங்கம் குழப்பம் குறையாமல் எழுந்து போனார். சில நொடிகளில் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.
"உங்க ஹஸ்பண்ட் கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டாருன்னு நியாபகம் இருக்கா மேடம்?" என்றார் குமார்.
"எதுக்குக் கேக்குறீங்க சார்?"
"அது எங்க பிரச்சனை. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க."
"ரெண்டு மாசம் இருக்கும் சார்."
"அன்னிக்கு என்ன கிழமை?"
"ஞாயித்துக்கிழமை சார்."
"நல்லா தெரியுமா?"
"தெரியும் சார். காலண்டர்ல குறிச்சி வெச்சிருக்காரு."
"உங்க ஹஸ்பண்ட் என்னிக்காவது வெள்ளிக்கிழமை முடி வெட்டிருக்காரா?"
"இல்ல சார். எனக்குத் தெரிஞ்சு இதுதான் முதல் தடவை."
"நீங்கதான் காலைல கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் பண்ணீங்களா?"
"இல்லியே சார்" என்றார் அந்தப் பெண் பதற்றமாக.
குமார் புன்னகைத்தார். "பயப்படாதீங்க. உங்க பேர் வெளிய வராது."
"நான் இல்ல சார்!"
"உங்களுக்கும் உங்க புருஷனுக்கும் ஏதாவது பிராப்ளம்?"
"ஒரு பிராப்ளமும் இல்ல. நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம்" என்றார் அந்தப் பெண்மணி பட்டென்று.
குமார் மீண்டும் புன்னகைத்து, "நீங்க போய் உங்க புருஷனை அனுப்புங்க" என்றார்.
சிறிது நேரத்தில் தனசிங்கம் பொறுமையெல்லாம் இழந்து புயலாக அறைக்குள் வந்தார்.
"என்ன சார் வேணும் உங்களுக்கு?" என்றார் புலம்பலாக.
"உங்க அம்மாவைத் திட்டம் போட்டுக் கொலை பண்ணதுக்காக உங்களைக் கைது செய்றேன்" என்ற குமார், இடுப்பில் மாட்டியிருந்த விலங்கை எடுத்தார்.
"வாட் நான்சென்ஸ்! முதல்ல வெளிய போங்க!" என்று எழுந்து நின்று கத்தினார் தனசிங்கம்.
"வெள்ளிக்கிழமை முடி வெட்டிக்கிட்டா அம்மாவுக்கு ஆகாதுன்றது போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் தெரியும் தனசிங்கம்" என்றார் குமார் சிரித்துக்கொண்டே.
தனசிங்கம் விருட்டென எழுந்து எல்லோரும் பார்க்க வீட்டுக்கு வெளியே ஓடினார். துக்க விசாரிப்புக் கும்பல் வேடிக்கை பார்க்கப் பரபரவென்று வெளியே வந்தது. சட்டைப் பையிலிருந்து கார் சாவியைக் கையில் வைத்துக்கொண்டார் தனசிங்கம். அதற்காகவே காத்திருந்த 114, தயாராகப் பிடித்துவைத்திருந்த ஒரு பூனையைக் குறுக்கே ஓட விட்டார். தனசிங்கம் விதிர்விதிர்த்து சிலையாக நின்றார். குமார் சாவகாசமாக வெளியே வந்து அவருக்கு விலங்கு மாட்டினார். "உன்னையெல்லாம் நூத்தியெட்டு வருஷம் உள்ள வெக்கணும்" என்றார்.
பாரதியின் சந்தானமும் சந்தானத்தின் பாரதியும்
தேசியகவி சுப்பிரமணிய பாரதி தனியாகவே பட்டையைக் கிளப்பக்கூடியவர் ஆவார். சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் போன்ற ஒரு மகத்தான பாடகரும் ஜமா சேர்ந்துகொண்டால் விளைவுகள் யாருடைய ஊகத்திற்கும் உரியவை. Bharathiyar Songs – Maharajapuram Santhanam என்ற பாடல் தொகுதியைச் சமீபத்தில் கேட்டேன். சந்தேகமேயில்லாமல் இது கர்நாடக இசை. கர்நாடக இசையைப் பொதுவாக நான் அதன் கடினத்தன்மை காரணமாக மற்றவர்களே கேட்டுக்கொள்ளட்டும் என்று தவிர்த்துவிடுவது. ஆலாபனை கேட்கும்போது எனக்கு ரத்த அழுத்தம் எகிறும். சினிமாவில் வரும் கர்நாடகம் எனக்குப் போதும் என்று இருந்துவிட்டேன். நண்பர் ஒருவர் இந்தத் தொகுதி அப்படியெல்லாம் இல்லை, நன்றாக இருக்கும் கேட்டுப் பாருங்கள் என்று அனுப்பிக் கொடுத்தார். என்ன ஒரு நல்ல முடிவு! 'பாரதியார் சாங்ஸ்' பாரம்பரியமிக்க கர்நாடக இசையையும் பாரதியார் பாடல்களையும் ஒருசேரக் கேட்கும் பாக்கியத்தை அளித்தது.
சாங்ஸில் எட்டுப் பாடல்கள் உள்ளன. அனைத்தும் நாம் படித்துப் பழகியவை. ஆனால் சந்தானம் தமது பாணியின் வாயிலாக அப்பாடல்களுக்குப் புதிய அர்த்தங்களைத் தருகிறார். முதல் பாடலான "ஆசை முகம் மறந்து போச்சே" சோகமான கருப்பொருளைக் கொண்டது. சோகம் என்றால் சோம்பல். மெதுவாக நகர வேண்டிய இந்தப் பாடலை சந்தானம் வீரமுகாரி ராகத்தில் வேகமாகப் பாடிவிடுகிறார். "ஆஷை முகம் மறன்ந்து போட்ச்சே இதைய்ங், ஆரிடம் ஷொல்வேனடி தோழி" என்று நிறுத்தாமல் தவிப்பை வெளிப்படுத்தியபடி பாடிக்கொண்டே போகும்போது எல்விஸ் ப்ரெஸ்லியின் 'ஜெயில்ஹவுஸ் ராக்' நினைவுக்கு வரலாம். பாடலின் ஒலிகளைத் தம் குரலின் திறனால் இழுத்தும் வளைத்தும் நுட்பமாக அவர் பாடும்போது, ஹொகுசாயின் கனகவா பேரலையில் தத்தளிக்கும் படகில் நாம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இது பரவசமூட்டும் ரோலர் கோஸ்டர் பயணம். சோகமான பாடலை இவ்வளவு ரசித்துப் பாடி சோகத்தை அவமதிப்பானேன் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் உணர்ச்சியைக் கழற்றிவைத்துவிட்டு உன்னதங்களை சிருஷ்டிப்பது கலையின் இயல்புகளில் ஒன்று அல்லவா? அது மட்டுமின்றி, அடுத்த பாட்டிற்குப் போவோமா?
"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்"-இல் கழிவிரக்கம் தொனிக்க நான்கு முறை கேட்கும்போது மணிபல்லவி கமகத்தின் மகிமையை உணர்கிறோம். அறிவுதான் தெய்வம் என்கிற இந்தப் பாடலின் முதல் வரி நம்மை உலுக்கவில்லை என்றால் அடுத்த வரி உலுக்கத் தவறாது: "ஷுத்த அறிவே ஷிவமென்று கூறும் ஷுருதிகள் கேளீரோ?" சந்தானத்தின் குரலில் பாரதி நம்மிடம் கருணை கொள்கிறார், கடிந்துகொள்கிறார், திட்டுகிறார், போதிக்கிறார். நெக்குருக்குவதை மட்டும் சந்தானத்திற்கு விட்டுவைக்கிறார். சந்தானமும் ஏமாற்றவில்லை. ருத்ரபட்சிணியை இவ்வளவு லாவகமாகவோ லாகவமாகவோ வேறு யாரும் பாடி நான் கேட்டதில்லை. என் தப்பு.
அடுத்து "சின்னஞ்சிறு கிளியே". வழக்கமான மெட்டில் தொடங்கிப் பாடலை மெல்ல நகர்த்தும் சந்தானத்தின் "என்னைப் பழி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்" என்ற வரியில் பாரதி கம்சனாகிறார், கண்ணன் கண்ணம்மா ஆகிறான். கம்சன் கண்ணனை "பில்லைக் கனியமுதே கழ்ணம்மா, பேஷும் பொற்சித்திரமே" என்று கொஞ்சுவதன் தர்க்கம் புரியவில்லை. எனினும் ஷுத்தமான இசை என்பது "லாஜிக் இல்லா மேஜிக்" என்று இளையராஜா குறிப்பிட்டதை நினைவுகூர வேண்டும். "ஓடி வருகையிலே கழ்ணம்மா, உள்ளம் குளிருதடி" என்பதில் ஒரு பாலியல் குறிப்பு இருப்பதாகப் படுகிறது. பாடல் முழுவதுமே முத்தம், கள்வெறி, தழுவுதல் என்கிற ரீதியில் இருப்பதால் இதில் வியப்பில்லை. மேலே சுட்டப்பட்ட வரியில் உள்ளம்தான் குளிர்கிறது, அதே போல கன்னத்தில் முத்தமிட்டாலும் உள்ளம்தான் கள்வெறி கொள்கிறது. உடல் தேமே என்று இருக்கிறது. தழுவுதல் தரும் உன்மத்தமும் உள்ளத்தின் ஒரு நிலையையே குறிப்பதை கவனிக்க வேண்டும். புன்னாகவராளியின் கிளை ராகமான ஆபேரிமூக்கனில் பட்டையைக் கிளப்பப்பட்டுள்ளது.
"மோகத்தைக் கொன்றுவிடு, அல்லா எந்தன் மூச்சை நிறுத்திவிடு"வில் பாரதி இறைவனிடம் கையேந்துகிறார். சந்தானம் மோகத்தைக் கொல்ல அவசரம் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு அரிசி மண்டிக்காரரிடம் அந்த காலத்து அரிசி விலை பற்றி ஏக்கத்துடன் பேசுவது போன்ற தொனியில் பாடுகிறார். "தேகத்தை ஷாய்த்துவிட்டு, அல்லா எந்தன் ஷிந்தனை மாய்த்துவிடு" எனப் பாடும்போதுதான் சந்தானம் உரையாடலிலிருந்து விடுபட்டு பாரதியின் இரைஞ்சுதலில் அவசரமாகச் சேர்ந்துகொள்கிறார். ஆனால் அடுத்து அனுசரணம் வரும்போது மீண்டும் வைதேகி முருங்க விருட்சத்தில் ஏறி உதாசீன ஸ்திதி சாந்நித்யமாகிவிடுகிறது. "இந்தப் பதர்களையே எல்லாம் என எண்ணியிருப்பேனோ" என்ற வரியில் "தேடிச் சோறு நிதம் தின்று" புகழ் பாரதி வெளிப்படுகிறார். இன்னும் இரண்டு வரி (எட்டு வரி) நீளாதா என்று ஏங்கவைக்கும் இந்தப் பாடலில் இருவரும் இணைந்து மிரட்டுவதில் வெற்றியடைந்துள்ளனர்.
"நெஞ்சில் உரமுமின்றி" தலை ஆட்டித் தொடை தட்ட வைக்கிறது. இது அப்படியே "ஏனுங்க மாப்பிள்ள, என்ன நெனப்பு" மெட்டில் அமைந்துள்ளது. அதே சமயத்தில் இந்தப் பாடல் வரிகளுக்கு பதிலாக ஐயப்பன் புகழ் பாடும் வரிகளை வைத்துவிட்டால் இது பக்திப் பாடலாகிவிடும். அடிப்படையில் சமூகத்தின் மேல் கோபம் கொண்டு வெறுப்பையும் அவநம்பிக்கையையும் கக்கி வசைபாடும் இந்தப் பாடலுக்குத் தேவையான ஆக்ரோஷம் இல்லை. 'கலி முற்றித்தான் கிடக்கிறது. நம்மால் ஆகாது சாமி' என்ற தொனியே இதில் உள்ளது. காரணம், ராகத் தேர்வில் தவறு நிகழ்ந்திருக்கிறது. சந்தானம் பாடியிருப்பது புத்த சன்யாசி ராகத்தில். பாடலுக்குத் தேவையானதோ கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி ராகம்.
"சுற்றும் விழிச் சுடர்தான்", "வெள்ளைக் கமலத்திலே", "வெள்ளைத் தாமரை" ஆகிய மூன்றையும் நான் கேட்கவில்லை. ஆனால் எழுதியவர் பாரதியார், பாடியவர் மகாராஜபுரம் சந்தானம். எனவே தாராளமாகக் கேட்கலாம்.
மேற்கண்ட எட்டு பாரதிப் பாடல்களையும் நினைவில் நிறுத்தச் சிறந்த வழி, சந்தானத்தின் இந்தத் தொகுதியைக் கேட்பதுதான். ஏனென்றால் அவர் ஒவ்வொரு வரியையும் நான்கு முறை பாடுகிறார். போதும் என்று தோன்றும்போதுதான் அடுத்த வரிக்குத் தாவுகிறார். ஆனால் அடுத்த வரியையும் நான்கு முறை கேட்கிறோம். ஆக, பாரதி ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு வரிகள் எழுதியிருந்தாலே போதுமாக இருந்திருக்கும். பிரச்சினை என்னவென்றால், சந்தானம் 1928இல் பிறந்தபோது பாரதிக்கு ஏழு திவசம் ஆகியிருந்தது. இந்தத் தொகுதி பற்றிச் சொல்வதற்குத் திரும்பி வந்தால், எந்த நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு. இந்தத் தொகுதி, கர்நாடக இசை எளிதில் செரிமானமாகும் பக்கம்.
கடிதம்: நாவல் எழுதுதல்
அன்புள்ள சார்,
நான் பல முன்னணி இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இதுவரை ஒரு நாவல் கூட எழுதியதில்லை. எங்கே தொடங்குவது என்று குழப்பமாக இருக்கிறது. பல நாவல்களை எழுதியுள்ள நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.
ஆனந்தன்,
சென்னை – 15
அன்பின் ஆனந்தன்,
இதழ்கள் என்றால் உதடுகள் என்ற பொருளில் நீங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அர்த்தம் கூடி வரவில்லை.
நாவல் எழுதுவது ஒன்றும் ஏவுகணை அறிவியல் அல்ல. நாவல் இலக்கணம் எல்லாம் சொல்கிறார்கள். அதையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால் கடைசி வரை அதை மட்டும்தான் படித்துக்கொண்டிருக்க முடியுமே தவிர நாவல் எழுத வழியைக் காணாது. நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். திரைப்படம் எடுக்கும்போது முதல் காட்சியை காலக்கிரமப்படி முதலில் எடுக்க மாட்டார்கள். நடுவில் வரும் காட்சி எதையாவது எடுப்பார்கள். ஆனால் நாவலை எங்கே தொடங்குவது என்றால் முதல் அத்தியாயத்தில்தான் தொடங்க வேண்டும்.
என்னைக் கேட்டால் முதல் அத்தியாயம் என்பது முதல் நான்கைந்து அத்தியாயங்களின் தொகுதியாகவும் இருக்கலாம். கதாபாத்திரங்களை உருவாக்கி வீடு, ஓட்டல், கடற்கரை போன்ற ஒரு பௌதிக இடத்தில் அலையவிட்டுப் பேசவைத்து அப்படியே போய்க்கொண்டிருந்தால் போகப்போக கதை உருப்பெறும். உங்களுக்கே தெரியாமல் திட்டமிடல் பின்னணியில் உருவாகிக்கொண்டிருக்கும்.
நாவல் எழுதுவதில் கதையைத் திட்டமிடுவதைவிடப் பெரிய சவால், கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது. அது முதல் அத்தியாயத்தில் செய்ய வேண்டியது. இதற்கே சில நாட்கள் ஆகலாம். முருகன், ராஜா, பாலு, பாலாஜி, செல்வி, திவ்யா, பவித்ரா போன்றவை பலமுறை அச்சில் அடிபட்ட பெயர்கள். இப்பெயர்கள் வாசகர்களுக்கு வேறு புனைவுகளில் வரும் பாத்திரங்களை நினைவூட்டக்கூடும். அதனால்தான் தனித்துவமான, ஆனால் புழக்கத்தில் உள்ள பெயர்களைத் தேர்வு செய்வது அவசியமாகிறது. உதாரணமாக உங்கள் பெயரையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆனந்தன் பரிச்சயமான பெயர், ஆனால் தனித்துவமானது. இதுதான் உங்கள் பெயர்க் காரணம். சில சமயங்களில் புனைவு எழுதுவது பரீட்சை எழுதுவதற்கு இணையானது. கடினமான கேள்விகளுக்கு மூளையைக் கசக்கிக்கொண்டிருக்காமல் எளிய கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு பின்பு கடினமான கேள்விகளுக்குத் திரும்பி வந்து எழுதுகிறோம் அல்லவா, அது போலத்தான் பெயரிடுதலும். நான் சில சமயங்களில் கதாபாத்திரங்களுக்கு வெண்டைக்காய், கத்தரிக்காய், பேரீச்சம்பழம் என்று டம்மியாகப் பெயர் வைத்துவிடுவேன். அதிலும் ஓர் ஒழுங்கு இருக்கும். காய் என்றால் ஆண் கதாபாத்திரம், பழம் என்றால் பெண். நாவலை எழுதி முடித்த பின் ஞாபகமாகப் பெயர்களை யோசித்துக் கதாபாத்திரங்களுக்கு சூட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும். என்னுடைய ஒரு நாவல் என் மறதியால் வெண்டைக்காய், கத்தரிக்காயோடு அச்சுக்கு அனுப்பப்பட்டு உருவகக் கதை ஆனது. சல்லி சுற்றுச்சூழல் விருதொன்று கிடைத்தது. ஆனால் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் தொலைத்துவிடுவார்கள்.
இப்போது நாவல் இலக்கணத்திற்கு வருவோம். பொதுவாக நாம் பார்க்கும் நாவல்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் யாவை? முறையாகப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
1. நிறைய பக்கங்கள். குறைந்தது 100.
2. நிறைய அத்தியாயங்கள். குறைந்தது 20.
3. கதாபாத்திரங்கள் எண்ணிக்கை – தேவைக்கேற்ப.
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் நாவலாக உருவாக நல்ல வாய்ப்புள்ளது. பாத்திரங்களை ஒன்றோடொன்று மோத விடலாம், உறவினர்கள் ஆக்கலாம், கடைசியில் மொத்தமாக ஓரிடத்தில் வைத்துக் கொல்லலாம், இத்யாதி. சிலர் ராமாயண மகாபாரதங்களைப் படித்துவிட்டு கதாபாத்திரங்களை அவற்றில் வருவது போல் அமைக்கிறார்கள். என் குருநாதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் 'தி கேம்ப்ளர்' நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யப் பின்னணியில் மகாபாரதக் கதையின் மீள்சொல்லல்தான். கேம்ப்ளரில் கதாநாயகன் சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மையக் கரு. பாத்திரப் படைப்பு, சகோதர சண்டை, கிருஷ்ணாவதாரம், புடவை உருவுதல் போன்ற தெலுங்குப் பட விசயங்கள் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு 100 பக்கங்களில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் தாஸ்தா. இது ஒரு வகை நாவல். உங்களுக்கு சொந்தமாகக் கதை எழுதத் தயக்கமாக இருந்தால் மீள்சொல்லல் உத்தியைக் கையாளலாம். நன்றாக இருக்கும்.
நாவலை எங்கே, எப்போது நிறுத்துவது என்பது நீங்கள் கேட்க விட்டுப்போன இன்னொரு கேள்வி. தொடங்குவதே தகராறு என்பதால் நீங்கள் கேட்கவில்லை என்று புரிகிறது. தொடக்கத்தைத் தாண்டிவிட்டோம். வளர்ப்பது எப்படி என்றும் பார்த்துவிட்டோம். இப்போது முடிப்பதற்கு வருவோம். எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம். எங்கே முடிக்கிறீர்களோ, அதற்கேற்ப நாவலின் அர்த்தம் மாறும். மொட்டையாக முடித்தால் 'உங்கள் நாவலுக்கு என்ன அர்த்தம்?' என்று உங்களிடமே வந்து கேட்பார்கள். எனவே ஒரு திருமணத்தில், விவாகரத்தில், சாவில், படுகொலையில், பேரழிவில், நாடு கடத்தலில், கைதில், நீதிமன்றத் தீர்ப்பில் முடிக்கலாம். எனக்கு இந்தப் பிரச்சினை கிடையாது. நான் பெரிய நாவலாசிரியன். அதனால் கட்டுரைதான் எழுதுவார்கள். சில சமயம் எனக்கு சலிப்பாக இருப்பதுண்டு. நாவலே கேன்சர் வார்டு போல் இருக்கும். ஐந்தாண்டுகள் ஒரு மருத்துவமனையில் தங்கி தினமும் அதே முகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இந்த சலிப்பு வரும்போது நிறுத்திவிடுவேன். எனது 'ஆசிரியரின் பிற நூல்கள்' போன்ற ஓரிரு நாவல்களில் கடைசிப் பக்கத்தில் "முற்றும்"க்கு பதிலாக "டிக்ளேர்" என்று இருக்கும். உங்கள் நாவலை மிகச் சிறிதாகவும் எழுதலாம். "ஆதிகேசவ பட்டருடைய ஒன்று விட்ட வழக்கறிஞரின் நவபாஷாணக் கிருதிகள்" என்ற நாவலில் "Clipboard" என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே இருக்கும். ஆமாம், ஒற்றைச் சொல் நாவல். பயல்கள் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே, நீளமும் பிரச்சினை அல்ல (அது வேறு ஒன்றினுடையதாக இல்லாத பட்சத்தில்!).
அடுத்து எடிட்டிங். பல மூத்த எழுத்தாளர்கள், பிழைதிருத்துநர்கள் நியாயமான கட்டணத்தில் நாவல்களைச் செப்பனிட்டுத் தருகிறார்கள். நீங்கள் உங்கள் நாவலை எழுதி முடித்ததும் நேரடியாகப் பதிப்பாளருக்கு அனுப்பிவிடலாம். அவர் அதை நேரடியாக அச்சுக்கு அனுப்பிவிடுவார். அதற்குப் பிறகு உங்கள் அதிர்ஷ்டம்.
வாழ்த்துகளுடன்
பேயோன்
அடுத்த ஐந்து ஆண்டுகள்
அடுத்த ஐந்தாண்டுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி என்னுடைய ஆரூடம் சுருக்கமாக…
2014 – நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமர் ஆவார். பெண்களை வர்ணிக்கும் சிற்பங்களைக் கொண்ட பழைய கோவில்கள் அனைத்தும் இடிக்கப்படும். மசூதிகளும் இடிக்கப்படும். தாஜ்மகால் உள்ளிட்ட தேசிய நினைவுச்சின்னங்கள் தகர்க்கப்படும். இந்தியா ரகசியமாக ஆயுத உற்பத்தியைத் தொடங்கும். ஆண்டிறுதியில் ஆயுத வளர்ச்சியில் பாரதம் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும்.
2016 – அகண்ட ஹிந்துஸ்தானத்திற்கான முதல் படியாக பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, சீனா, பர்மா உள்ளிட்ட நாடுகள் மீது தேசம் படையெடுத்து ஆக்கிரமிக்கும். தேசத்தின் முஸ்லிம்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வலுக்கட்டாயமாக பிறை-நட்சத்திரம் பச்சை குத்தப்படும். கொத்துக் குண்டுவீச்சு மூலம் ஐநூறு நக்சலைட்டுகளும் பல்லாயிரம் பழங்குடி மக்களும் அழிக்கப்படுவார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து எழுத்தாளர்களும் வரலாற்று அறிஞர்களும் கைது செய்யப்படுவார்கள் மற்றும்/அல்லது கொல்லப்படுவார்கள். இதற்கிடையில் பா.ஜ.க. அரசு தில்லியில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த முயன்று தோல்வியடையும்.
2017 – அகண்ட ஹிந்துஸ்தான முயற்சிகளால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும். போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள். அதே சமயத்தில் இந்து அல்லாதவர்களும் குறிப்பிட்ட பல இந்துக்களும் கூட்டம் கூட்டமாக சாவார்கள். பிரதமர் மோடியும் கூட்டாளிகளும் எதிரி குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க அகமதாபாதில் ஒரு ரகசிய இடத்தில் நிலவறை அமைக்கப்படும். இந்தியாவின் மிக சக்திவாய்ந்த முப்படைகளான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி ஆகியவை அடங்கிய ராஷ்ட்ரீய ராணுவம், அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுப் படைகளிடம் திணறத் தொடங்கும். பா.ஜ.க.வின் உயர் அதிகாரிகளும் வசதியான விராட இந்துக்களும் அர்ஜென்டீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்குப் போலி அடையாளங்களுடன் குடிபெயரத் தொடங்குவார்கள்.
2018 – மூன்றாம் உலகப் போரில் இந்தியா படுதோல்வி அடையும். மோடியும் அவரின் கூட்டாளிகளும் இன அழித்தொழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு ஜெனீவாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க் குற்ற விசாரணையாக இது அமையும். பல தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அண்டை நாடுகள் பா.ஜ.க. ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும். போரினால் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும்.
இப்போதைக்கு இந்த sketchதான் எழுத முடிந்தது. ஆனால் இத்தகைய நிகழ்வுகளின் நீண்டகால விளைவுகள் எப்படி என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல. உதாரணமாக, இருபது ஆண்டுகளுக்குப் பின்பு தமிழகம் தவிர நாடெங்கும் ஆங்காங்கே சிறு நவ இந்து (neo-Hindu) குழுக்கள் உருவாகும்...
காரட் குழம்பு
நான் சாப்பிட உட்கார்வதற்கும் சோற்றில் குழம்பு ஊற்றப்படுவதற்கும் இடைப்பட்ட சமயத்தில் லபக்குதாஸ் வந்தார். முகத்தில் களையிழந்த புன்னகை. ஏதோ பிரச்சினை. டைனிங் டேபிளின் நான்கு பக்கங்களிலும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்துகொண்டார். வழக்கமாக அவர் முன்னறிவிப்பின்றி என்னைப் பார்க்க வர மாட்டார். எங்கே அவர் வரும்போது நான் இல்லாமல் போய்விடுவேனோ என்ற பயம்.
"வாருமய்யா" என்றேன்.
புன்னகைத்த லபக்குதாஸ், சோற்றைப் பார்த்து "என்னய்யா, பாயில்டு ரைஸா?" என்றார் சம்பிரதாயமாக.
"சந்தேகமே வேணாம்" என்று பதிலளிக்க வேண்டியிருந்தது.
மனைவி ஆவி பறக்கும் குழம்புப் பாத்திரத்தைக் கொண்டுவந்து மேஜை மேல் வைத்தார். லபக்குதாஸைப் பார்த்து 'ஏன் வருகிறாய்?' என்பது போல் ஒரு அரைப் புன்னகையை சிந்திவிட்டுப் போனார். என் மனைவிக்கு லபக்குதாசைப் பிடிக்காது. அவரிடம் லபக்குதாசைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்.
வெந்த அரிசி பற்றிய கேள்வியில் ஒரு செய்தி இருந்தது என்றால் அது லபக்குதாசின் திடீர் பணத் தேவை தொடர்பானதாக இருக்கலாம். அதைக் கேட்டால் கொடுக்கத் தயாராக இருந்தேன், ஆனால் அது அவர் வாயிலிருந்தே வரட்டும் என்று பேசாதிருந்தேன். லபக்குதாஸ் கடன் கேட்கத் தயங்குபவர் அல்ல. அதையெல்லாம் உரிமையோடு செய்வார். இதில் கூடுதலாக வேறு ஏதோ விவகாரம். நெருங்கிய நண்பரிடம் கடன் கேட்கும்போது அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியிருப்பது சமயத்தில் பெரிய அசௌகரியம்.
லபக்குதாசின் பார்வை காரட் குழம்பில் நிலைகுத்தியிருந்தது. பார்வையில் ஒரே வெறுப்பு. இவனெல்லாம் காரட் குழம்பு சாப்பிடுகிறானே என்று நினைத்தாரா, அல்லது அவர் வீட்டிலும் அன்றைக்கு காரட் குழம்பா என்று புரியவில்லை. காரட் குழம்புடன் எனக்கு முன்பகையே உள்ளது என்றாலும் இவ்வளவு வெறுப்பாக நான் அதைப் பார்த்ததில்லை. என் குறுக்கீடு இல்லை என்றால் அவர் அதைப் பார்வையாலேயே எரித்துவிடுவார் போலிருந்தது.
"என்னய்யா காரட் கொழம்பை லுக் விடுறீரு?" என்றேன்.
சிந்தனையோட்டம் திடுக்கென்று கலைந்தவராக, "ராடிஷ் இல்லியா?" என்றார்.
"ராடிஷ்-னா ஒரு வீச்சம் இருக்குமே" என ஒரு கவளத்தை வாயில் போட்டுக்கொண்டேன். அவரை சாப்பிட அழைக்கவில்லை என்று அப்போதுதான் உறைத்தது.
"சாப்ட்டாச்சா? இன்னொரு ரவுண்டு உக்கார்றீரா?" என்றேன்.
லபக்குதாஸ் பதில் பேசாமல் மறுப்பில் தலையசைக்க, உள்ளறையிலிருந்து பயங்கர சத்தம் எழுந்தது. மனைவியும் மகனும் வாக்குவாதமாய்க் கத்திக்கொண்டிருந்தார்கள். எழுந்து போய்ப் பார்க்கலாமா, இன்னொரு கவளம் போகட்டுமா என்று யோசித்தபோது மகன் (15) பள்ளி மூட்டையுடன் வேகமாக வாசலை நோக்கி வெளியேறினான். மனைவி நேராக சமையலறைக்குச் சென்றார்.
"என்னப்பா, சூடா இருக்கே?" என்று லபக்குதாஸ் மகனை நலம் விசாரித்தார்.
"யோவ், போய்யா வேலையப் பாத்துக்கிட்டு!" என்று திரும்பிப் பார்க்காமல் வெளிப் புயன்றான் வாரிசு. லபக்குதாசின் முகம் வெளிறியது.
நான் எச்சில் கையைத் தட்டில் உதறிவிட்டு வேகமாக அவன் பின்னால் நடந்தேன். 'அங்கிளை அப்படியெல்லாம் பேசக் கூடாது. அவர் உன்னவிட வயசுல பெரியவர்' என்று நான் அவனை நிறுத்திவைத்து அறிவுரை அளிப்பதாக லபக்குதாஸ் கற்பனை செய்துகொண்டிருக்கையில் யதார்த்தத்தில் நான் அவன் மென்னியைப் பிடித்து நிறுத்தினேன். என் சட்டைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட இருநூறு ரூபாயை அவன் பையிலிருந்து மீட்டு அதன் இடத்தில் ஐம்பது ரூபாயை வைத்து "போடா!" என்று தள்ளினேன் சத்தமிட்டு. அவன் ஓடிப் போய்விட்டான்.
"பொறுக்கிப் பய!" என்று உறுமியபடி திரும்பி வந்து சாப்பாட்டுத் தட்டிற்கு முன்பு அமர்ந்தேன்.
"அட, விடுமய்யா. சின்னப் பையன் ஏதோ சொல்லிட்டுப் போறான்" என்றார் லபக்குதாஸ்.
எனக்குக் கோபம் அடங்கவில்லை. "என்னைக் கேக்காம என் சட்டைப்பைலேந்து காசெடுக்குறான்யா. இவனையெல்லாம் என்கவுண்டர்ல போடணும்!" என்றேன். இது டாபிகல் இறையாண்மை விசயம்.
லபக்குதாஸ் சிறிது நேரம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். "நான் வந்த நேரம் சரியில்லய்யா. அப்புறமா வர்றேன்" என்று எழுந்தார்.
"சாரிய்யா, என்னவோ பேச வந்தீரு. நான் அப்புறமா ஃபோன் பண்ணிக் கேட்டுக்குறேன். சரியா?" என்றேன்.
"ரைட்டு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
நான் இனம்புரியாத மனப்பிசைவுடன் தட்டில் இருந்த காரட் குழம்புச் சோற்றைப் பார்த்தேன். பிறகு அதை சாப்பிடத் தொடங்கினேன்.
சயன்ஸ் ப்ராஜெக்ட்
குழந்தைகளை இணையத்தில் மேய விட்டால் அவர்கள் அங்கே என்ன பார்க்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால்தான் என் மகன் கணினியைப் பயன்படுத்தும்போது வேலை இருக்கும் பாவனையில் அதைச் சுற்றி நடமாடுவேன். இரு நாட்களுக்கு முன்னர் அவன் யூட்யூபில் 'டைம் பாம் செய்வது எப்படி?' என்று ஒரு விளக்க வீடியோ பார்த்துக்கொண்டிருந்தான். நான் அதிர்ச்சியில் அங்கேயே விழுந்துவிட்டேன். "என்னடா பார்க்கிறாய்?" என்று கத்தினேன் தரையிலிருந்தபடி. "ஸ்கூல் ப்ராஜெக்ட்பா" என்ற பிறகே சமாதானம் அடைந்தேன்.
ஐந்து நாட்களுக்குப் பின்பு அவன் பள்ளியிலிருந்து சம்மன் வந்தது. அவனது வகுப்பாசிரியர் என்னிடம் ஒரே புலம்பல்: "உங்கள் பையனுக்கு சுட்டுப்போட்டாலும் சயன்ஸ் வராது சார். நாங்கள் சயன்ஸ் ப்ராஜெக்ட் செய்துவரச் சொன்னோம். அவன் இன்டர்நெட்டைப் பார்த்து டைம் பாமை எடுத்துவந்து நிற்கிறான். அது வெடிக்கவேயில்லை. அவனை நம்பி ஸ்கூலில் இருந்த எல்லோரையும் அரக்கப்பரக்க வெளியே அனுப்பி போலீசுக்கு வேறு சொல்லிவிட்டோம். பாம் ஸ்குவாடு வந்து பாமைப் பார்த்து காறித் துப்பிவிட்டுப் போய்விட்டது. ஸ்கூலுக்கே அவமானம். ஏன் சார், ஒரு ஒயர் கனெக்ட் செய்வது கம்பசூத்திரமா? ப்ராங்க் கால் என்று பிரின்சியை லாக்கப்பில் போட்டிருக்கிறார்கள். ஸ்கூலுக்கு லீவ் விட வேண்டியதாய்ப் போனது. இன்று ஒரு டொனேஷன் ஷெட்யூல் செய்திருந்தோம். ஆனால் இன்றைக்குப் பார்த்து உங்கள் பையன்..."
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
இன்னுமிரு கடிதங்கள்
அன்பின் நூருதீன்,
உங்கள் கையெழுத்து சுத்தமாகப் புரியவில்லை. இப்படிக் கையால் எழுதி ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புவதற்கு பதிலாக நேரடியாக மின்னஞ்சலிலேயே தட்டச்சு செய்யலாமே? உங்கள் அனுப்புநர் பெயரும் மலையாளத்தில் இருக்கிறது. நான் மலையாளம் படிப்பேன், ஆனால் என்ன எழுத்துகளைப் படிக்கிறோம் என்று தெரியாது. "நூருதீன்" என்ற உங்கள் பெயரையே நீங்கள் சற்றுத் தெளிவாக எழுதியிருக்கும் 'சென்னை-103′ என்ற அஞ்சல் குறியீட்டெண்ணை வைத்துத்தான் ஊகித்தேன்.
சரி, வந்த கடிதத்தை வீணாக்குவானேன்? பாக்டீரியாக்களைப் பற்றிச் சில தவறான கருத்துகள் உலவுகின்றன. எல்லா பாக்டீரியாக்களும் தீங்கானவை அல்ல. நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவுச் செரிமானத்தில் உதவுகின்றன. அவைகளுக்கு ஒன்று என்றால் நாம் பாக்டீரிய மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாக்டீரிய மருத்துவம் இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். ஆனால் மிகையான சுகாதார நடவடிக்கைகளால் நம் வீட்டிலுள்ள நல்ல பாக்டீரியாக்களையும் வீரியமான கிருமி நாசினிகளால் கொன்றுகொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய நன்மைகளை நாம் இழக்கிறோம். பாக்டீரியாக்களின் அழிவால் பாக்டீரிய மருத்துவம் வேகமாக நசிந்துவரும் ஒரு துறை ஆகிவருகிறது. இது போதும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகளுடன்
பேயோன்
*
அன்புள்ள பேயோன்,
எழுதுவியா? இனிமே எழுதுவியா?
இப்படிக்கு
பிரம்பு
பழநி/திருப்பதி
அன்புள்ள பிரம்பு,
உங்கள் அக்கறைக்கு நன்றி. நான் பத்து நிமிடம் எழுதாமல் இருந்தால் தொலைபேசி அழைப்புகள் குவியும் நிலை மாறும் வரை எழுதுவேன் என்றே நினைக்கிறேன். எனக்கு வேறு தொழில் தெரியாது. அறிவார்த்தத் தேடல் உள்ள என் போன்ற ஒருவன் வங்கியில் வேலை பார்க்க முடியுமா? ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்துவிடுவேன். வேலை நடக்காது. அப்புறம் உங்கள் பெயர் – வித்யாசமாக இருக்கிறது. பழநி, திருப்பதி பக்கம் இப்படியொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. மதுரை பக்கம் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மதுரையில் பிறந்து பழநிக்கு மாறிய புலம்பெயர்ந்த தமிழரா?
நீங்கள் என்னை ஒருமையில் அழைப்பதை வைத்து உங்களுக்கு தொண்ணூறு வயதாவது இருக்கும் என்று எண்ணுகிறேன். என் தாத்தா உயிரோடு இருந்திருந்தால் அவருக்கும் உங்கள் வயதுதான் இருக்கும். ஆனால் அவர் எனக்குக் கடிதம் எழுத மாட்டார். ஏனென்றால் நாங்கள் ஒரே வீட்டில் இருப்போம். உங்கள் கடிதம் அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது. அவரும் இப்படித்தான் என்னை ஒருமையில் அழைப்பார். ஆனால் உங்களைப் போல் எனக்குக் கடிதம் எழுத மாட்டார். காரணம், நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தோம்.
வாழ்த்துகளுடன்
பேயோன்
குழாயைச் சரியாக மூடுவதில்லை
கணேசுவின் சித்தியும் சித்தப்பாவும் ஊரிலிருந்து அவன் வீட்டிற்கு வந்திறங்கியிருந்தார்கள். பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் வந்தேவிடுவார்கள் என கணேசு எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம் தங்கி சென்னை கோவில்களுக்கும் கடற்கரைக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். கணேசுவின் மகள்கள் சித்ராவுக்கும் அமுதாவுக்கும் பட்டுப் பாவாடை வாங்கி வந்திருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு சமையலைப் புகழ்ந்தார்கள். வாஞ்சையாக இருந்தார்கள்.
முதல் மூன்று நாட்கள் விருந்தாளிகளால் களை கட்டின. ஊர்க் கதை, உறவுக் கதை பேசியதில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்கள் நிறைவாகக் கழிந்தன. பெரியவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தங்கள் பிள்ளைகளின் அருமை பெருமைகளையே அதிகம் பேசினார்கள். கிடைத்த இடைவெளிகளில் காயத்ரி தன் மகள்களைப் பற்றிப் பாமாலை பாடினாள்.
நான்காம் நாள் காயத்ரி ஒன்றைக் கவனித்தாள். பாத்ரூம் (குளியலறை) குழாயை யாரோ மூடாமல் விட்டிருந்தார்கள். தண்ணீர்த் துப்பாக்கியிலிருந்து வருமளவு கொஞ்சமாக ஆனாலும் தண்ணீர் டைல்ஸ் தரையில் கொட்டிக்கொண்டிருந்தது. கணேசு இறுக்க மூடுவான். சித்ராவும் பாரதியும் இதில் அப்பாவை உரித்துவைத்திருந்தார்கள். சித்தி எதையும் பார்த்துப் பார்த்துச் செய்பவராகத் தெரிந்தார். ஆகையால் சித்தப்பாதான் சரியாக மூடாமல் போயிருக்க வேண்டும் என்று காயத்ரி கணக்கிட்டாள். இது இன்னும் சில முறை நடந்தது. பேத்திகளுக்குப் பட்டுப் பாவாடை வாங்கிக் கொடுத்ததற்காகக் குழாயை மூடாமல் விட்டுவிட முடியுமா?
"உங்கள் சித்தப்பா பாத்ரூம் குழாயைச் சரியாக மூடுவதேயில்லை. நீங்கள் அவரிடம் சொல்கிறீர்களா?" என்று கணேசுவுக்குக் காயத்ரி அன்புக் கட்டளையிட்டாள். கணேசுவுக்குத் தர்மசங்கடமாகிப்போனது. சித்தப்பாவுடன் கணேசுவிற்கு அவ்வளவு பழக்கம் இல்லை. சுட்டிக்காட்டினால் குத்திக்காட்டுவதாக அவர் எடுத்துக்கொள்ளக்கூடும். "நீதான் வாழைப்பழத்தில் ஊசி கோர்ப்பது போல் பேசுவாயே, அது போல் நீயே சொல்லிவிடேன்" என்றான் கணேசு. 'இதைக்கூடவா செய்யத் துப்பில்லை?' என்பது போல் அவனை முறைத்துவிட்டு விலகினாள் காயத்ரி.
அன்றிரவு சாப்பிட்ட பின் எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய் உட்கார்ந்தார்கள். அப்போது காயத்ரி தண்ணீர்ப் பிரச்சினை பற்றிப் பேச்சைத் தொடங்கினாள். "இப்போதெல்லாம் நிலத்தடி நீர் முன்பு போல் பம்ப்பில் ஏறி வருவதில்லை. தண்ணீரைத் தண்ணீர் போல் செலவழிக்க முடிவதில்லை. அதனால்தான் நாங்கள் குழாய்களை இறுக்க மூடிவிடுகிறோம். இல்லையென்றால் தண்ணீர் வீணாகிறது. மீண்டும் மோட்டாரை இயக்க வேண்டியிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் பொறுப்பே இல்லை. பாத்ரூம் குழாயைச் சரியாக மூடாமல் விட்டுச் சென்றுவிடுகின்றன" என்றாள் காயத்ரி. "ஆமாமாம்" என கணேசு பலமாகத் தலையாட்டினான்.
"டைல்ஸில் தண்ணீர் கொட்டினால் அது காயாது. அதனால் பாத்ரூம் எப்போதும் ஈரமாகவே இருக்கும்" என்று தானே கண்டுபிடித்தது போல் சொன்னார் சித்தப்பா. "எங்கள் வீட்டிலெல்லாம் பாத்ரூமுக்கும் சிமென்ட் தரைதான். தண்ணீர் சீக்கிரம் காய்ந்துவிடும். தரை சொரசொரப்பாக இருப்பதால் வழுக்காது" என்றார் அவர். "இவர் என்னவோ சொல்கிறார். ஆனால் டைல்ஸ் போட்டால்தான் வீடு லட்சணமாக இருக்கும்" என்றார் சித்தி. காயத்ரி கணேசுவைப் பார்த்தாள். பிறகு பேச்சு ரியல் எஸ்டேட், வேலைவாய்ப்பு, நவீன வசதிகள் என்று மாறிவிட்டது.
ஐந்தாம் நாள் காலை ஐந்து மணிக்கு காயத்ரி தோளில் ஆடைகள், துவாலையுடன் குளிக்கக் கிளம்பினாள். பாத்ரூம் விளக்கைப் போட்டதும் குழாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டாள். எழுந்தவுடன் முதல் வேலையாகக் குளித்துவிட்டு அதற்குப் பின்பே பல் தேய்க்கும் வழக்கமுள்ள கணேசு, வாஷ் பேசினில் பல் தேய்த்துக்கொண்டிருந்தான். "அந்தக் குழாயை சரியாக மூடாதது உங்கள் வேலைதானா?" என்று பொரிந்தாள் காயத்ரி. அவன் பல் தேய்த்து முடிக்கும் வரை பதிலுக்குக் காத்திருந்தாள். கணேசு வழக்கத்தைவிட அதிக நிதானத்தோடு எல்லாவற்றையும் செய்துவிட்டு, "காலையிலேயே ஆரம்பிக்காதே" என்று சொல்லி நகர்ந்தான். சித்தி, சித்தப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். காயத்ரிக்கு அவர்களைப் பார்க்கப் பாதி ஏமாற்றமும் பாதி அனுதாபமுமாக இருந்தது. இன்னும் இரண்டு நாள் என்று சொல்லிக்கொண்டாள்.
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
கடிதம்: கூடுதல் குழந்தை
அன்புள்ள பேயோன் சார்,
நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உயிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.
கோபி,
செட்டிப்பாளையம்
பி.கு.: இந்தக் கடிதத்தில் தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.
*
அன்பின் கோபி,
என் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் கேள்வி, முதல் குழந்தை பெற்றுக்கொண்ட எல்லோருக்கும் எழும் கேள்விதான். இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி உயிரோடு இருந்தால் மட்டும் போதாது. உங்கள் இருவருக்கும் இன்னொன்றை மேய்க்கத் திராணி இருக்கிறதா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே சமூகம் அவர்களிடம் இன்னொரு குழந்தையை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. சமூகம் என்பது புற்றுநோய் போன்றது. நாம் அதன் உயிரணுக்கள். தனது உயிரணு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே புற்றுநோயின் செயல்பாடு. நாம் இதற்கு உடன்பட வேண்டும் என்றில்லை. இரண்டு குழந்தைகளைக் கட்டி மேய்க்கத் திணறும்போது சமூகம் உதவிக்கு வராது. அழுத்தம் கொடுக்கும் உறவினர்கள் கைகொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கும். அதனால்தான் அவர்கள் உங்களையும் தங்களாக மாற்ற முயல்கிறார்கள். எனவே உங்கள் வசதி எப்படி என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சில நாடுகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றுப்போடுவதன் விளைவுகளைச் சட்டங்கள் அங்கீகரிக்கின்றன. யுரேஷியாவில் (சீனாவைத் தாண்டி நேராகச் சென்று ஜப்பான் கடலில் இடப்பக்கம் திரும்பி மீண்டும் ஓர் இடது எடுத்தால் வரும் நாடு) இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு முதல் குழந்தையின் ஒப்புதலைப் பெற வேண்டும். முதல் குழந்தையின் சம்மதம் இல்லாமல் இன்னொரு குழந்தையைப் பெறுவது அபராதத்திற்குரிய குற்றமாகும். அதே போல தெலுங்கர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பம்ப்பிஸ்தானில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கடுமையான விதி அமலில் உள்ளது. இங்கே கூடுதல் குழந்தை, தண்டனைக்குரிய குற்றம். இரண்டாம் குழந்தை பிறந்தால் முதல் குழந்தை ஐந்தாண்டுகள் சிறையில் வாழ வேண்டியிருக்கும்.
கூடுதல் குழந்தையின் சிக்கல்களைச் சில பெண்கள் தனியாக சமாளித்ததை மகாபாரதத்தில் காணலாம். சாந்தனுவை மணம் முடிக்கும் கங்கை, இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இந்த நிராகரிப்பை அவள் குக்கர் விசில் எண்ணிக்கை போன்ற ஒரு குழப்பத்தால் முதல் குழந்தையிலிருந்தே தொடங்கிவிடுகிறாள். ஒரு கட்டத்தில் சாந்தனு பொறுமை இழந்து அவளிடம் இப்படிக் கேட்கிறான்: 'குழந்தைகளை ஆற்றில் குளிப்பாட்டும்போது ஏன் கையை எடுத்துவிடுகிறாய்?' கங்கைக்குத் தன்னை யாராவது கேள்வி கேட்டாலே பிடிக்காது. பதில் சொல்ல வாயைத் திறந்தால் தண்ணீரும் மீனுமாக வெளியே கொட்டுவதும் ஒரு காரணம். கேள்வி கேட்கப்பட்ட கோபத்தில் கணவனைக் கைவிட்டுச் செல்கிறாள் கங்கை. இப்போது போய்ப் பார்த்தீர்கள் என்றால் வளர்ந்த ஆட்களே கங்கையில் மிதப்பதைக் காணலாம். கங்கையில் விடப்படும் செத்த சாரீரங்களில் எத்தனை இரண்டாவது குழந்தைகள் என்று தெரியவில்லை. இதற்கும் உங்கள் கடிதத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் எனக்கு இப்படி ஏதாவது சொல்லியாக வேண்டும்.
கிரேக்க புராணம், பாரசீக கதைசொல்லல் என உங்கள் பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாமல் நிறைய எழுதலாம். உங்கள் தற்போதைய குழந்தை அலுத்துவிட்டது, மாறுதலுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்றால், கர்ப்ப செலவுகள், குழந்தைச் செலவுகள் போன்றவைக்காக சேமிக்கத் தொடங்குங்கள். முதல் குழந்தையை வளர்க்கும் அனுபவம் இரண்டாம் குழந்தையின் வளர்ப்புக்கு ஓரளவு உதவும். கூடுதலாக ஒரு பாக்கெட் பால் வாங்குங்கள். முதல் குழந்தை சற்றுப் பெரியது என்றால் தம்பி/தங்கை பாப்பாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அதனிடமே விடுங்கள். க்ரஷ் வசதியைப் பயன்படுத்துங்கள். இம்மாதிரி விசயங்களைப் பட்டியல் போட்டுத் தீர்வு கண்டால் கூடுதல் குழந்தை ஒரு சுமையே இல்லை. கடைசியாக, நம்பகமான ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். எல்லோரும் அதை மறந்துவிட்டுப் பின்பு புலம்புகிறார்கள்.
வாழ்த்துகளுடன்
பேயோன்
கத்தியின்றி ரத்தமின்றி
ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை
புறநகரில் இருந்த அந்தத் தனி வீட்டை இன்ஸ்பெக்டர் குமார் அடைந்தபோது வாசலில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கான்ஸ்டபிள் 114 அவருக்காக வெளியில் காத்திருந்தார்.
"என்ன விசேஷம்?" என்று கான்ஸ்டபிளிடம் கேட்டுக்கொண்டே படியேறினார் குமார். "மர்டர் கேஸ் சார்" என அவரைப் பின்தொடர்ந்தார் 114.
போலீஸ் புகைப்படக்காரர் பெரிய கூடத்தின் சோபாவில் கிடந்த கொலைப் பிணத்திடமிருந்து தூர விலகி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தார். குமாரைப் பார்த்ததும் சல்யூட் வைத்தார்.
இடதுகால் லுங்கியிலிருந்து வெளிப்பட்டுச் சரிந்து தரையில் புரள, கைதாங்கும் கட்டை மீது வலதுகால் கிடக்க, தலைக்கு அடியில் தலையணையுடன் சோபாவில் கிடந்தது ஆண் பிணம். இன்ஸ்பெக்டர் அருகில் சென்று பார்த்தார். வயது முப்பத்தைந்திலிருந்து நாற்பது இருக்கும். திருமணமானதற்கு அடையாளமாகக் கழுத்தில் தாலி. நெற்றியில் சன்னஞ்சரியாகப் பொட்டு வைக்கும் இடத்தில் ஆணி அடித்திருந்தது. அந்த இடத்தைச் சுற்றி வேறு கீறல்கள், காயங்கள் இல்லை. எனவே ஓங்கி அடித்த ஒரே அடியில் ஆணியைப் புகுத்தியிருப்பார்கள் போல. குறுக்கும் நெடுக்கும் சிறு கோடுகள் பாய்ந்த வட்ட முனை மட்டுமே தெரியும்படி ஆழமாக இறங்கியிருந்தது ஆணி. அதைச் சுற்றி மண்டையோட்டில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மண்டைக்கு வெளியிலிருந்து பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான கச்சிதம். குமார் தம் சட்டைப்பையிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பிணத்தின் தலையை இருபக்கமும் திருப்பிப் பார்த்தார். பின்னந்தலை வீக்கத்தை கான்ஸ்டபிளிடம் காட்டினார்.
"விஸ்வநாதன நெத்தீல ஆணியடிச்சிக் கொன்னுருக்காங்க சார்" என்றார் 114.
"யாரு விஸ்வநாதன்?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"இவுருதான் சார்" என்று பிணத்தைக் காட்டிச் சொன்னார் கான்ஸ்டபிள். குமார் யோசனையாகத் தலையாட்டி ஆமோதித்துவிட்டு விஸ்வநாதனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்.
பக்கத்து அறையில் அழுது அடங்கி அடுத்த பாட்டத்தைத் தொடங்கும் பெண் கேவல் கேட்டது. ஒரு பெண், சந்தேகத்திற்கிடமின்றி விஸ்வநாதனின் மனைவி ரேணுகா (சுமார் 30 வயது), இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சுவரோரத்தில் உட்கார்ந்திருந்தார். அருகே அவரை சமாதானப்படுத்திக்கொண்டு சற்று மூத்த இன்னொரு பெண்மணி.
"என்னம்மா ஆச்சு?" என்றார் குமார் குரலை இளக்கிக்கொண்டு.
"காலைல எழுந்து பாத்தா என் புருஷன் பொணமா கெடக்குறாரு சார். மண்டைல ஆணி அடிச்சிருக்கு. அவருக்கு இதெல்லாம் புடிக்கவே புடிக்காது!" கேவல் தொடர்ந்தது.
"காலைல எப்ப எழுந்தீங்க?"
"அஞ்சரை மணி இருக்கும் சார்."
"ராத்திரி ஏதாச்சும் சத்தம் கேட்டுச்சா?"
"இல்ல சார்."
"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? அவருக்கு எதிரிங்க யாராவது…"
"அதெல்லாம் இல்லைங்க சார். அவரு யார் வம்புக்கும் போக மாட்டாரு."
"நல்லா யோசிச்சு சொல்லுங்கம்மா. கதவைத் தொறந்துக்கிட்டு உள்ள வந்திருக்காங்க. அவருக்குத் தெரிஞ்ச யாரோ ஒரு ஆள்தான் இப்படி பிஹேவ் பண்ணிருக்கான். அநேகமா அவர்தான் கதவைத் தொறந்து விட்டுருப்பாரு…"
"அப்படி நடந்திருந்தா சத்தம் கேட்டு நான் எழுந்திருப்பேனே சார்! சத்தமில்லாம முடிஞ்சுபோச்சே!" மனைவி மீண்டும் அழத் தொடங்கினார்.
வீட்டிலிருந்து சல்லிக் காசுகூடத் திருடு போகவில்லை. நகைகளும் ஒரு திருகாணி விடாமல் பத்திரமாக இருந்தன. பீரோ பூட்டிய கோலத்தில் கிடந்தது. புருவம் சுருங்கிய குமார், பிள்ளையார் பொம்மை பதித்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். தலத்திற்கு வந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் குற்றவாளி யார் என்று ஊகிக்க முடியாததில் குமாருக்கு எரிச்சலாக இருந்தது. 'அவ்வளவு பெரிய ஆளா நீ?' என்று நினைத்துக்கொண்டார்.
க்ரைம் சீனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். விஸ்வநாதன் பிரேதப் பரிசோதனைக்கு மூட்டை கட்டப்பட்டார். அவரது மனைவி, அருகில் அமர்ந்து தேற்றிக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுப் பெண்மணியின் வீட்டில் தங்க ஏற்பாடானது. வீட்டிற்குள் ஆயுதபூஜைத் தோரணங்கள் போல் மஞ்சள் ரிப்பன்களைக் கட்டிப் பூட்டுப் போட்டார்கள். குமார் ஸ்டேஷனுக்கு புல்லட்டைச் செலுத்தினார்.
இன்ஸ்பெக்டர் அவசரப்படுத்தியும் போஸ்ட்மார்ட்ட அறிக்கை கைக்கு வர இரண்டு நாள் ஆனது. குமாருக்கு முன்பே தெரிந்த இரு விஷயங்களை அறிக்கை உறுதிப்படுத்தியது. மொண்ணை ஆயுதத்தால் – அநேகமாகக் கட்டையால் – பின்மண்டையில் அடித்து நெற்றிப்பொட்டில் ஆணி அடித்திருக்கிறார்கள். ஆணி அடித்ததால்தான் ஆசாமிக்கு இதயம் நின்றுவிட்டிருக்கிறது. முதலில் பின்மண்டையில் அடித்து மயக்கமூட்டி சோபாவில் கிடத்திய பின்பு ஆணியை இறக்கியிருப்பார்கள் என்று ஊகித்தார் குமார். எவ்வளவு தெரிந்த ஆளாக இருந்தாலும் மண்டையில் ஆணி அடிக்க ஒப்புக்கொண்டிருக்க முடியாது. அந்த மாதிரி ஓர் உறவை குமார் இன்னும் பார்க்கவில்லை. இது ஏதோ ஒருவித அனஸ்தீஷியாவைக் கொடுத்த பின்பு செய்ய வேண்டிய காரியம். கொலை நடந்த நேரம், நள்ளிரவைத் தாண்டி 1.00-2.00 மணி என்றது ரிப்போர்ட்.
ஆணி, சோபா, கதவு எதிலும் கைரேகை இல்லை. அவை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தன. மேஜை, நாற்காலி தவிர கனமான மரச் சாமான்கள் எவையும் இல்லை. வேலைக்கு ஆகாத வகையில் வீட்டைச் சுற்றி ஏராளமான கால் தடங்கள் இருந்தன. வங்கி அதிகாரி விஸ்வநாதனும் இல்லத்தரசி ரேணுகாவும் அதிக சண்டை சச்சரவில்லாமல் வாழ்ந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். சலிப்பூட்டும் வாழ்க்கை போல் தெரிந்தது. மனைவி குற்றவாளியாக இருக்க முடியாது என்று குமார் அப்போதைக்கு முடிவு செய்தார். ஆனால் நெற்றிப்பொட்டில் கச்சிதமாக ஆணி அடிக்கப்பட்டதில் ஏதோ துப்பு இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அது என்ன? சுத்தமாகத் தெரியவில்லை.
மூன்றாம் நாள் கொலை வீட்டிற்கு இன்னொரு வருகையடித்தார் குமார். தமிழில் அவருக்குப் பிடிக்காத வார்த்தை பூதக்கண்ணாடி. ஆனால் இப்போது வேறு வழியின்றி அதைத்தான் கையில் வைத்துக்கொண்டு சோபாவுக்கு அருகே தரையை ஆராய்ந்துகொண்டிருந்தார். வாசலிலிருந்து சோபா வரை ஆங்காங்கே இறைந்து கிடந்த நூலிழைகள் போன்ற சில பொருட்கள் குமாரின் காவல் துறைக் கண்களில் பட்டன. அவற்றைத் தமது ஆஸ்தான குச்சியால் மெல்ல எடுத்து ஒரு பாலிதீன் பைக்குள் போட்டுக்கொண்டார்.
ரேணுகா விஸ்வநாதன் இப்போது நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்த தமது தூரத்து உறவினர் வீட்டிற்கு இடமாற்றல் ஆகியிருந்தார். குமார் அங்கே போய் இன்னும் சில கேள்விகள் கேட்டதில் சில தகவல்கள் கிடைத்தன. வீட்டில் இரண்டு பேர் இருந்தும் டூப்ளிகேட் சாவி வைத்துக்கொள்ளவில்லை. முன்பெல்லாம் இருவரில் ஒருவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே போனால் சாவியைப் பக்கத்துவீட்டில் கொடுத்தார்கள். இப்போது ஜன்னலுக்கு உள்பக்கம் ஒளித்துவைத்து ஜன்னல் கதவை மூடும் பழக்கம் வந்திருந்தது. அதைத்தான் யாரோ பார்த்து எடுத்து நகல் எடுத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் புழங்குபவர்களில் ஒருவரின் கைவேலையாக இருக்கலாமோ என்று நினைக்கலாம் என்றால் உருப்படியான உள்நோக்கம் எதுவும் அகப்படவில்லை.
கொலை நடந்த நான்காம் நாள் தடயவியல் ஆய்வகத்திலிருந்து ஓர் அறிக்கை வந்தது. இன்ஸ்பெக்டர் அள்ளி வந்த நூலிழைகள் அவர் முன்பே எதிர்பார்த்தது போல் அடிப்படையில் சணல் இழைகள். சணல் என்றால் கோணிப்பை செய்யப் பயன்படும் ரகம். குமாரின் அனுபவமிக்க புருவங்கள் இம்முறை தீர்க்கமாகச் சுருங்கின.
அடுத்த நான்கு மணிநேரத்தில் (போக்குவரத்து நெரிசல்) குமாரின் கார் ரேணுகாவின் உறவினர் வீட்டுப் பார்க்கிங்கில் நின்றது.
ரேணுகா இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார். குமாரை மௌனமாக வரவேற்றார். குமார் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நேரடியாகக் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.
"உங்க வீட்ல கோணிப்பை இருக்கா?"
"இருக்குமே. எடுத்துத் தரவா?" என்று குழப்பம் காட்டி எழுந்தார் ரேணுகா.
"இந்த வீட்ல இல்ல. உங்க வீட்ல."
"நாங்க கோணிப்பை எல்லாம் யூஸ் பண்றதில்ல சார்."
"ஓ.கே. சாவிய முதல்ல பக்கத்துவீட்டுல குடுத்துக்கிட்டிருந்த நீங்க, அப்புறம் ஏன் அதை உங்க வீட்டு ஜன்னல்ல ஒளிச்சு வெச்சீங்க?"
"அவர்தான் அவங்க வீட்ல குடுக்க வேணாம்னாரு."
"அப்படியா? ஏன்?"
"பக்கத்துவீட்டு ஆன்ட்டி எங்க வீட்டுக்கு சீரியல் பாக்க வருவாங்க. அது என் ஹஸ்பெண்டுக்குப் புடிக்கல. எங்களுக்குள்ள சண்டை ஆயிடுச்சு. அவங்க வர்றத நிறுத்திட்டாங்க. என்னோட பேசறதையும் நிப்பாட்டிட்டாங்க. அப்பதான் சாவி குடுக்குறத நிறுத்துனேன்."
"அவங்க ஏன் உங்க வீட்ல டி.வி. பாக்கணும்? அவங்க வீட்ல இல்லியா?"
"இருக்கு. ஆனா அவங்க புருஷன் வீட்ல சீரியல் பாக்க விடமாட்டாரு. பசங்க ரொம்ப கார்ட்டூன் பாப்பாங்க."
"ஐ ஸீ" என்ற குமார், "தேங்க் யூ ஃபார் த இன்ஃபர்மேஷன்" என்றார்.
இதைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், "இந்த சாவியக் காட்டி ஏரியால இருக்குற டூப்ளிகேட் சாவிக் கடை எல்லாத்தையும் விசாரி" என்றார், "ஓகே சார்" என்று பதிலளித்த கான்ஸ்டபிளிடம்.
குமார் 114ஐ அனுப்பிவிட்டு விஸ்வநாதனின் பக்கத்துவீட்டிற்குப் பறந்துகொண்டிருந்தபோது கான்ஸ்டபிளிடமிருந்து தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தந்த சாவியை இரு வாரங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் டூப்ளிகேட் செய்திருக்கிறான். மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற எவ்வளவு வலுவான நம்பிக்கை இருந்திருந்தால் கொலையாளி தன் மகனையே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டார் குமார்.
விஸ்வநாதனின் பக்கத்து வீட்டை வி.ஆர்.எஸ். கொடுத்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. குமார் வீட்டுக்குள் நுழைந்ததும் சுப்பிரமணி தொலைக்காட்சி எதிரிலான குஷன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். குமாருக்குப் புன்னகைத்து இன்னொரு இருக்கையைக் காட்டினார். அவர் வலதுகை இதிலெல்லாம் கலந்துகொள்ளாமல் ரிமோட்டின் சானல் பொத்தானைப் பரபரவென்று அழுத்திக்கொண்டே இருந்தது.
"விஸ்வநாதன் கொலை சம்மந்தமா உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கணும்."
சுப்பிரமணியின் மனைவி மகாலட்சுமி, குமாரைப் பார்க்கக் கூடத்திற்கு வந்தார். விஸ்வநாதன் கொலையுண்ட பிறகு ரேணுகாவுக்குப் பக்கத் துணையாக இருந்த 'சற்று மூத்த பெண்மணி' இவர்தான்.
"நீங்க என்ன பண்றீங்க மேடம்?" என்றார் குமார்.
"நான் இங்க பக்கத்துல சாய் மெட்ரிகுலேஷன்ல டீச்சரா இருக்கேன்."
"எந்த க்ளாஸுக்கு எடுக்குறீங்க?"
"நர்சரிதான் சார்" என்றார் அடக்கமாக.
கான்ஸ்டபிள் 114 உள்ளே நுழைந்தார்.
"கண்டுபுடிச்சிட்டீங்களா சார் யார் பண்ணாங்கன்னு?" என்றார் மகாலட்சுமி.
"கண்டுபுடிச்ச மாதிரிதான்" என்றார் குமார் புன்னகைத்து.
மகாலட்சுமி திகைத்து நின்றார்.
"எப்படி சார் கண்டுபுடிச்சீங்க? ஹூ இஸ் த கல்ப்ரிட்?" என்று கேட்டார் சுப்பிரமணி. எங்கே அதைக் கேட்காமல் போய்விடுவார்களோ என்ற மெல்லிய கவலையில் இருந்த குமார், விளக்கத்திற்கான தயார்ப்படுத்திக்கொள்ளுதலாகக் கனைத்தார்.
"ரொம்ப ஈஸி. கொலை பண்ணவங்களுக்கு விஸ்வநாதன் வீட்டு சாவி கிடைச்சிருக்கு. அத டூப்ளிகேட் எடுத்திருக்காங்க. நைட்டு ஒரு மணி இருக்குறப்ப சுலபமா கதவத் தொறந்து உள்ள போயிருக்காங்க. நடக்கற சத்தம் கேக்காம இருக்க கோணிப்பைக்குள்ள நின்னுக்கிட்டு குதிச்சு குதிச்சுப் போயிருக்காங்க. அன்னிக்குன்னு பாத்து விஸ்வநாதன் வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு சோபால தூங்கிட்டிருந்திருக்காரு. இவங்க முன்னெச்சரிக்கையா ஒரு கட்டையால விஸ்வநாதன் மண்டைல ஒங்கி ஒரு போடு போட்டு அவரை மயக்கிட்டாங்க. அப்புறம் உடம்பைத் திருப்பி வெச்சு அதே கட்டையால கரெக்டா நெத்திப் பொட்டுல ஆணி அடிச்சுக் குரூரமா கொன்னுருக்காங்க. கொன்னப்புறம் சைலண்டா வந்த வழில திரும்பிப் போயிட்டாங்க."
"அதெப்படி அவ்ளோ துல்லியமா சொல்ல முடியும்?" என்றார் மகாலட்சுமி மூச்சிரைக்க.
"நெத்தில இம்மி பிசகாம கரெக்டா பொட்டு வெக்கிற இடத்துல ஆணியப் பாத்தப்பவே இது லேடீஸ் வேலையாத்தான் இருக்கும்னு தோணிச்சு. அதுவும் அந்த பெர்ஃபெக்ஷன் – அதுக்குப் பின்னால இருக்குற மன உறுதி, அனுபவம், கண்டிப்பா மிடில் ஏஜ்னு சொல்லுது. சாக்குப்பைய கால்ல மாட்டிக்கிட்டு தவ்வித் தவ்விப் போற ஐடியா ஒரு நர்சரி ஸ்கூல் டீச்சருக்குத்தான் தோணும். நீங்க வீட்லேர்ந்தே பூரிக்கட்டையோ சம்திங் லைக் தட் எடுத்துட்டுப் போயிருக்கீங்க. வெப்பன்ஸை உங்க வீட்ல சீக்கிரமா தேடிக் கண்டுபுடிச்சிடுவோம். ஸர்ச் வாரன்ட்டும் அரஸ்ட் வாரன்ட்டும் வந்துட்டிருக்கு. பாவம், உங்க பையன வேற இன்வால்வ் பண்ணிருக்கீங்க. நல்லா கொன்னீங்க போங்க!"
"நானா?" மகாலட்சுமி வீறிட்டார்.
"பின்ன நானா?" என்றார் குமார். "சீரியல் பாக்க விடாத ஆத்திரத்துல விஸ்வநாதனை திட்டமிட்டுக் கொன்னதுக்காக உன்னைக் கைது பண்றேன்!"
"ஹலோ!" என்று மகாலட்சுமி அலறினார் கணவனைப் பார்த்து. "இவங்க என்னை இழுத்துட்டுப் போறாங்க, நீங்க பாட்டுக்கு சானல் மாத்திட்டு இருக்கீங்களே!"
"மகா, இன்ஸ்பெக்டர் பக்கமும் நியாயம் இருக்கு. எப்பவுமே சட்டத்தை நம்ம கைல எடுத்துக்கிட்டா பிரச்சனைதான். பசங்க விளையாடிட்டு வர்றதுக்குள்ள கெளம்பிடு. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றார் சுப்பிரமணி.
குமார் விலங்கு மாட்டி மகாலட்சுமியைக் கட்டிய புடவையுடன் ஜீப்பிற்கு அழைத்துச் செல்லும்போது கேட்டார், "ஏம்மா, நீயுந்தானே சம்பாதிக்கிறே? உன் காசுல ஒரு டி.வி. வாங்கி சீரியல் பாத்திருக்கலாம்ல?"
"என்னவோ தோணவேயில்ல சார்!"
நோபல் பரிசு: நாடக'மன்றோ' நடக்குது!
இந்த ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு எனக்குத் தரப்படவில்லை. அல்லது இந்த ஆண்டு எனக்கு பதிலாக ஆலிஸ் மன்றோ என்ற கனேடிய நாட்டவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் சொல்லலாம். செய்திகள் 'ஆலிஸ் மன்றோ என்ற கனடா நாட்டு எழுத்தாளர்' என்று குறிப்பிடுகின்றன. நோபல் பரிசு பெற்றவர் 'ஆலிஸ் மன்றோ' என்று சொன்ன ஒரு நபரா, 'ஆலிஸ் மன்றோ' என்று சொன்னதற்காக அவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டதா, அல்லது பரிசை வென்றவரின் பெயர் 'ஆலிஸ் மன்றோ'வா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆலிஸ் மன்றோ' என்று சொல்வதாலேயே இலக்கிய நோபல் பரிசு கிடைத்துவிடும் என்று நான் நம்ப விரும்பவில்லை. அப்படி இருந்தால் உலகில் பாதிப்பேர் அந்தப் பரிசைப் பெற்றிருப்பார்கள், என்னையும் சேர்த்து. ஆனால் அதில் எனக்குப் பெருமைப்பட ஒன்றும் இருக்காது.
பொதுவாகச் செய்திகள் வானொலியில் வருவதற்கு முன்பே இணையத்தில் வந்துவிடுகின்றன. அதுவும் கெட்ட செய்திகள் பரவும் வேகம் நாம் அறியாத ஒன்றல்ல. இணையதளங்களில் இச்செய்தியைப் பார்த்து வருத்தம் தெரிவிக்க என்னைத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழுவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியவும் இங்குள்ள எனது எதிரிகள் விட மாட்டார்கள். பீட்டர் ஹிக்ஸுக்கு இயற்பியல் நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி ஓய்வதற்குள் இலக்கிய உலகத்திற்கு இப்படியோர் இடி விழும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்? நோபல் பரிசை வைப்பதற்காகவே ஒரு அலமாரித் தட்டைச் சுத்தம் செய்துவைத்திருந்தேன். இப்போது பழையபடி அந்தத் தட்டில் மெமன்டோ என்ற பெயரில் வழங்கப்பட்ட தாம்பூலத் தட்டுகளையும் கோல மாவு டப்பாவையும் வைக்க வேண்டியதுதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நோபல் பரிசு தேர்வுக் குழுவே?
தமிழ்நாட்டில் என் வளர்ச்சிக்கு உள்ள எதிர்ப்பு மற்றும் சதி நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியும். எனக்கெதிரான சதி, ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்நாட்டில்தான் இந்தத் துரோக வெறியாட்டம் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரு பயல் என்னைச் சீந்துவதில்லை. யார் யாரெல்லாம் நோபல் பரிசு தேர்வுக் குழுவுடன் 24 மணிநேரத் தொடர்பில் இருந்தார்கள், யாரெல்லாம் மூச்சுக்கு முன்னூறு மின்னஞ்சல் அனுப்பினார்கள், எந்தெந்த நபர்கள் பி.சி.சி.ஐத் தொடர்பு கொண்டு பேசினார்கள், யாருக்கு சச்சின் டெண்டுல்கரின் விளம்பரதாரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். என்னை முட்டாள் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு கருதினால், அதுதான் அப்படிக் கருதப்பட வேண்டிய ஒன்றாகும். நானாவது ஒரு ஆள், என்னோடு போய்விடும். தேர்வுக் குழுவிலோ ஒரு டஜன் முட்டாள்கள் இருப்பார்கள். அப்போது எப்படி வசதி? ஒரு டஜன் என்றால் பன்னிரண்டு பேர். 'பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும்' மொழிபெயர்த்து மின்னஞ்சலினேனே, நினைவிருக்கிறதா? ஏன் என்று இப்போது புரிகிறதா? வேறு யாராவது செய்வார்களா?
சரி, யாரிந்த ஆலிஸ் மன்றோ? யாரோ எழுத்தாளர். சரி, எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறார்? புத்தக விழாக்களில் எத்தனை பிரதிகள் விற்கும் அல்லது விற்காது? சினிமா வசனம் எழுதியிருக்கிறாரா? பார்த்திருந்தாலே பெரிய விசயம். உலக இலக்கியத்தை, உலக சினிமாவை அறிமுகப்படுத்தியிருக்கிறாரா? மனித வாழ்வின் அற்ப நிகழ்வுகளைக் கொண்டாடியிருக்கிறாரா? குறைந்தபட்சம் இன்னொரு எழுத்தாளரை வம்பிழுத்திருக்கிறாரா? அவதூறு மறுப்பு வெளியிட்டிருக்கிறாரா? அட, அதெல்லாம்கூட வேண்டாம் ஐயா. 'புயலிலே ஒரு தோணி' படிச்சிருக்கிறியா? அப்புறம் என்ன மயித்துக்கு நீயெல்லாம் எழுத்தாளன்? எந்த மயிரான் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு உனக்கு நோபல் ப்ரைஸ் குடுக்குறான்? நான் மிகைப்படுத்துவதாகச் சிலர் எண்ணலாம், ஆனால் நோபல் பரிசு தேர்வுக் குழு மிக மோசமான ஒரு முன்னுதாரணத்தைத் திகழ்வதாகவே இதைக் கூறியாக வேண்டும்.
நோபல் பரிசு எனக்குக் கிடைக்காதது பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. உலக அரசியலுக்கு ஐ.நா. போல், உலக சினிமாவுக்கு பிலிம்பேர் விருது போல், உலக இலக்கியத்திற்கு நோபல் பரிசு தேர்வுக் குழு ஆகிவிடக் கூடாது என்பதே என் கவலை. இந்தக் கவலையில் நியாயம் உள்ளதா இல்லையா என்று தேர்வுக் குழுவினரே சிந்தித்து முடிவுசெய்து அடுத்த ஆண்டு இலக்கிய நோபலை எனக்குத் தந்துகொள்ளட்டும், எனக்கு அது பற்றிக் கவலையில்லை. என் எதிரிகள் தங்கள் மேலிடத் தொடர்புகளைப் பயன்படுத்தி சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு முடிவை அறிவிக்கவைத்து திசைதிருப்ப முயன்றாலும் மதியத்திலிருந்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாசகரின் வீடும் சாவு வீடு போல் இருக்கிறது. அதற்கு ஒரு பதில் சொல்லுங்கள்.
தாராபுரம் சீனிவாசனின் 'கல் பாறை'
இது ஒரு மதிப்புரையின் தொடக்க வரி என்பதால், கடந்த பதின்சொச்ச ஆண்டுகளில் தமிழ் நாவலுக்குப் பல தலைகள் முளைத்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை மதிப்புரையின் நடுவில் எங்காவது சொன்னாலும் உண்மையாகவே இருக்கும். கு.ப.ரா., தி.ஜா., அசோகமித்திரன், ஜி. நாகராஜன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் போன்ற நாவலாசிரியர்கள் கையாண்ட கதைக் களன்கள் வேறு, நவீன வசதிகள் பெருகி எளிய சிக்கல்களின் இடத்தைச் சிக்கலான சிக்கல்கள் இட்டுநிரப்பிவிட்ட இன்றைய எழுத்துலகில் விரியும் களன்கள் வேறு. 'பாக்யா' வார இதழுக்குப் பிந்தைய இந்த எழுத்துச் சூழலில்தான் தாராபுரம் சீனிவாசனின் புதிய நாவலான 'கல் பாறை' வெளிவந்திருக்கிறது.
சீனிவாசனின் நாவலில் கண்டுள்ள பல அம்சங்கள் என்னைக் கவர்கின்றன. சீனிவாசன் யாருடைய வம்புக்கும் போகாமல் 250 பக்கங்களுக்குள் புத்தகத்தை அடக்கிவிட்டார். ஒரு புத்தகம் நானூறு பக்கங்களைத் தாண்டிவிட்டால் சிறு இலக்கிய அமைப்புகள்கூட அதற்குப் பரிசு/விருது அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றன. இத்தகைய அங்கீகாரத்தை அளிக்காவிடில் அது இலக்கிய அரசியல் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. அதனால்தான் பக்க எண்ணிக்கை நமக்கு முக்கியமாகிறது. இந்த நூல் இடைநிலை பதிப்பகத்தால் நல்ல தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டு பைண்ட் செய்யப்பட்டுள்ளது. விலையை நிர்ணயித்ததில் தன்னம்பிக்கை தெரிகிறது.
நகரத்தில் பிறந்து நகர வாழ்க்கையின் உளைச்சல்களுக்கு ஆளாகும் இளைஞன் நரேந்திரன், இனி நகரத்தைப் பொறுக்க முடியாது என்று தீர்மானித்து கிராமப்புற வாழ்க்கைக்கு மாறுகிறான். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் படித்தவன் ஒரு மாந்தோப்பில் கடைநிலைப் பராமரிப்பு வேலையாளனாகச் சேர்கிறான். கிராமப்புற வாழ்விற்கே உரிய இன்னல்கள் தமது கோர முகத்தைக் காட்டும்போது அவன் தனக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளியைத் தவிர மனிதர்களை முழுவதுமாகத் தவிர்த்து ஹென்றி டேவிட் தோரோவைப் போல் மரங்களுடன் ஊடாடத் தொடங்குகிறான். மரங்களுக்கிடையே ஒரு மரமாகவே ஆகிவிடுகிறான் நரேந்திரன். பின்னர் அவனுக்கு கிராமத்துப் பெண் சுமதியுடன் பழக்கம் ஏற்படுகிறது. சுமதியை அவன் நேசித்தாலும் சீர்கெட்ட சமகால வாழ்க்கைக்குத் திரும்ப அவன் விரும்பவில்லை. அவளுடன் உடலுறவு கொள்வதில் பிரச்சினை இல்லையே தவிர இயல்பு வாழ்க்கைக்கு அவனை இழுக்கும் எந்த பந்தத்திலும் தான் ஈடுபட முடியாது என்று அவளிடம் சொல்கிறான் நரேந்திரன். சுமதி மனமுடைந்து அந்தத் தோப்பிலேயே பெரியதான மாமரம் ஒன்றில் ஏறி உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சுமதி தற்கொலை செய்துகொண்டதாக அவளது பெற்றோர் நம்ப மறுத்து நரேந்திரன்தான் அவளைக் கொன்றதாகப் புகார் செய்கிறார்கள். சுமதியின் சாவுக்குக் காரணமான குற்ற உணர்வில் எதிர்ப்பு தெரிவிக்காமல் சரணடையும் நரேந்திரன், பின்னர் மனம் மாறி சிறையிலிருந்து தப்பி வெளிநாடு செல்கிறான். தமிழகக் காவல் துறையும் அமெரிக்க எஃப்.பி.ஐ. காவல் துறையும் இணைந்து நரேந்திரனைத் தேடுவது திரில்லருக்குரிய விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையிடமிருந்து தப்பிக்க நரேந்திரன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகிறான். மந்திரவாதி, அவனை மன்னராட்சி, டிராகன்கள், ஆயுதம் ஏந்திய அழகிகள் என்று இருக்கும் ஓர் இணைப் பிரபஞ்சத்தில் ஒளித்துவைக்கிறான். ஆனால் அதற்கு நரேந்திரன் கொடுக்கும் விலை, நம்மை திடுக்கிட வைக்கிறது: மாதம் ரூ. 10,000. தான் நம்பிய அந்த மந்திரவாதி, இணைப் பிரபஞ்சத்தில் கொடுங்கோல் ஆட்சி புரியும் சர்வாதிகாரி என்றும், வேலைவாய்ப்பு ஆசை காட்டித் தன்னைப் போன்றவர்களை அடிமையாக்குபவன் என்றும் நரேந்திரன் உணர்கிறான். இணைப் பிரபஞ்சத்தை மந்திரவாதியிடமிருந்து விடுவிக்கும் பொறுப்பு நரேந்திரன் தோளில் விழுகிறது. இதில் அவனுக்கு ஒரு மர்மப் பெண் உதவுகிறாள். அவளிடம் ஈர்க்கப்படும் நரேந்திரன், அந்தப் பெண்தான் தன்னுடைய பிறந்த பிரபஞ்சத்தில் சுமதியாக இருந்தாள் என்று புரிந்துகொள்கிறான். இருவரும் இன்னும் சிலரும் இணைந்து மந்திரவாதியைக் கொன்று அந்தப் பிரபஞ்சத்தை மீட்கிறார்கள். அதை ஆள வேண்டும் என்று பிரஜைகள் கெஞ்சினாலும் நரேந்திரன் தன்னுடைய இடம் சென்னை மத்திய சிறைச்சாலைதான் என்று பேசி நாம் வாழும் பிரபஞ்சத்திற்குத் திரும்பி வருகிறான். இங்கே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை என்பதோடு நாவல் முடிகிறது.
நேர்த்தியாக வடிக்கப்பட்ட நாவலிது. புதிய நாவல் என்ற அடைமொழிக்கேற்பப் புதிய கதை மற்றும் கதாபாத்திரங்களை இது கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களை வாசகர்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்திருக்கிறார். தவறிப்போய்க்கூட எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னுடைய பெயரை அவர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம வயதுள்ள கதாபாத்திரங்களைக்கூட வெவ்வேறு மாதங்களில் பிறந்தவர்கள் என்று உரையாடல் துண்டுகளால் நுட்பமாகப் பிரித்துக்காட்டுகிறார் ஆசிரியர் ("ஜூலை பதிமூணுக்குப் பொறந்தவனே"). ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விஷயத்திற்குக் குறியீடாக இயங்குகிறது. நரேந்திரனாக வருபவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். தோப்பு முதலாளியாக வரும் காளிமுத்து, தாளில் தோன்றும்போதெல்லாம் பண்ணையார்த்தனம் இன்னும் மறைந்துவிடவில்லை என உணர்த்துகிறார். சுமதி, நகரத்திற்குப் போய் 'நல்ல வாழ்க்கை' வாழ ஆசைப்படும் சராசரி கிராமத்துப் பெண்ணை நமக்குக் காட்டுகிறாள். மாந்தோப்பில் நரேந்திரனுக்கு நண்பர்களாகும் கமல், எம்.ஜி.ஆர்., ராஜேந்திரன், சகுந்தலா, கணேசன், வைஜெயந்திமாலா ஆகிய மரங்கள், மனித முயற்சியால் பாதிக்கப்படும் தாவர ஜீவிதத்தின் காற்றிலசையும் குரல்கள்.
இருநூற்று சொச்சம் பக்கங்களில் ஓர் உலகையே படைத்துவிடுகிறார் சீனிவாசன். இது தமிழ்ப் புனைவுக்குப் புதிது. அந்த அளவில் இது முக்கியமான நாவல். ஆனால் இதில் குறைகளே இல்லையா? உண்டு. இந்த நாவல் ஒரு குப்பையாகும். எவ்வளவு மோசமான குப்பை என்றால் சீனிவாசன் ஆண் இனத்திற்கே அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவு குப்பை. சீனிவாசனின் உரைநடை அலங்காரம் இல்லாதது. ஆனால் இந்த எளிமை, ஆசிரியருடைய மொழியறிவின் போதாமையால் நிகழ்வது என்பதற்கான தடயங்கள் நாவல் முழுவதும் உள்ளன. கதாபாத்திரங்கள் தட்டையானவை, தர்க்கத்தின் இலக்கணங்களை மீறியவை. உதாரணமாக, பட்டமரமாக வரும் எல். விஜயலட்சுமி, நரேந்திரனுக்குத் தாய் போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் எந்தத் தோப்பில் பட்டமரத்தை அப்புறப்படுத்தாமல் விட்டுவைப்பார்கள்? இது போன்ற பிழைகள் நிறைய உள்ளன. இது ஆசிரியர் தமது வாசகர்களை முட்டாளாகக் கருதுவதன் விளைவா, அல்லது ஆசிரியரே முட்டாளா என்பதை விமர்சகர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன். தலையணை எழுத்தாளர்களுக்குப் போட்டியாக எழுதக் கூடாது என்று நாவலைச் சிறிதாக எழுதுவதில் ஆசிரியர் காட்டியுள்ள கவனம், விவாதத்துக்குரிய நரேந்திரனின் அரசியலில் செலுத்தப்பட்டிருக்கலாம். பொதுவாக ஒரு கதையின் மையப் பாத்திரம், ஆசிரியர் போன்றது. அதற்குப் பொறுப்பு இருக்க வேண்டும். நரேந்திரன் இந்தப் பொறுப்பு இல்லாமல் மரமாகித் துறவு நிலையை அடைகிறான். கிராமத்தில் காணும் பிரச்சினைகளை அவன் தீர்க்கவில்லை. தப்பித்தலே இங்கு துறவு நிலையாக முன்வைக்கப்படுகிறது. இந்த பூர்ஷ்வா தப்பிதலியம்தான் 'கல் பாறை'யில் எனக்கு மிகப் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது. மற்றபடி இது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகும்.
பெருமைக்குரிய விசயம்
இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை (பெருமைக்காகச் சொன்னாலும் தவறில்லை. நாம் பெருமைப்படும் வகையில் நமக்கொன்று நடக்கும்போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதால் நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது ஒரு சுயநலச் செயல்தான். இருந்தாலும் மற்றவர்களுக்குத் தீங்கில்லாதது. பிறருக்குத் தீங்கில்லாத ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறோம் என்னும் மகிழ்ச்சியும் இதில் கொசுறாகச் சேர்ந்துகொள்கிறது. நமக்குப் பெருமையளிக்கும் ஒரு விசயத்தைப் பகிர்கையில், அதைக் கேட்பவர் தன்னலமின்றி நமக்காக மகிழ்வார் என நம்புகிறோம். இது சக மனிதர்களின் நல்ல குணத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது): நடிகர் நாசரை மவுண்ட் ரோடு சிக்னலில் பார்த்தேன்.
கடிதம்: அடித்தல், திருத்தல்
எழுத்தாளர் பேயோன் அவர்களுக்கு
நான் உங்கள் தீவிர வாசக அடிமை. எனக்குத் திருமணமாகி 14, 8 ஆகிய அகவைகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுநாள்வரை மழலையாக இருந்த இரண்டாவது குழந்தை இப்போதெல்லாம் பெரிய இம்சையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவன் முன்கோபத்தில் கத்தும்போது, வரம்பு மீறிப் பேசும்போது நாலு அறை விட்டு அடக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் உங்களைக் கலந்தாலோசிக்காமல் அதைச் செய்வது குறித்துத் தயக்கமாக உள்ளது. குழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா?
இப்படிக்கு
ஸ்ரீனி விக்டர்
தாம்பரம் (தென்மேற்கு)
அன்பின் ஸ்ரீனி விக்டர்,
இந்தக் கேள்வியை தினமும் நான்கு பேர் என்னைக் கேட்கிறார்கள். நான் அவர்களைக் கடிதமாக எழுதி அனுப்பும்படி சொல்லிவிடுகிறேன்.
உண்மையில் உங்கள் கேள்வி என்னை அதிர்ச்சியில் தள்ளுகிறது. முதல் குழந்தையை எப்படி வளர்த்தீர்கள்? உங்கள் மூத்த மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தால் குறிப்பிட்டிருப்பீர்கள் என்பதால் அவன் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை எனப் புரிந்துகொள்கிறேன். அவன் குற்றங்களில் ஈடுபடாததை வைத்து நீங்கள் அவனை அடித்துத்தான் வளர்த்தீர்கள் என்பதும் புரிகிறது. இரண்டாம் மகனை அடிக்க மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? அவனும் குழந்தைதானே?
அடித்து வளர்ப்பது சரியா என்று கேட்கிறீர்கள். குழந்தை வளர்ப்பு அன்போடு செய்யப்படும் கடமையாகும். அன்பு என வரும்போது சரி தவறு பற்றி யோசிப்பது நடைமுறையாகாது. எல்லா குழந்தைகளும் சமமாகப் பிறப்பதில்லையே. சில குழந்தைகள் ஒழுங்காக வளர்கின்றன. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே தறுதலையாக இருக்கின்றன. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளருமா, அடியாத மாடு படியுமா என்றெல்லாம் நமது முன்னோர்கள் கேட்டிருக்கிறார்கள். வளராது, படியாது என்பதே நமது பதிலாக இருக்க வேண்டும்.
பெற்றோர் என்ற மிகப்பெரிய வாக்கு வங்கிக்காகப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்துதல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள சமகாலச் சூழலில் அந்தப் பணி பெற்றோரின் தலையில் வந்து விழுந்திருக்கிறது. எனவே பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் சேர்த்துத் தங்கள் குழந்தைகளை நையப் புடைக்க வேண்டுமே தவிர சரியா தவறா என்று விநாடி வினா ஜல்லி அடிக்கக் கூடாது. அத்தகைய செய்கை எதிர்காலத்தில் மேலும் அதிக அரசியல்வாதிகளுக்கே வழிவகுக்கும்.
அன்புடன்
பேயோன்
சதுரங்கத்தின் கில்லாடிகள்
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து முழுநேர ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பலரும் அவரை கௌரவித்து எழுதும்படி என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் விஸ்வநாதன் ஆனந்த் – மாக்னஸ் கார்ல்சன் இடையே நடக்கும் உலகக் கோப்பை செஸ் போட்டி பற்றி எழுதுவது இன்னும் சவாலாக இருக்கும் என்று தோன்றுகிறது. கிரிக்கெட்டை நான் தொலைக்காட்சியில் பார்த்த அனுபவம் இருக்கிறது. செஸ் என்று வரும்போது, நான் ஆனந்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் செய்தித்தாளில் மட்டும்தான். இந்தத் தகுதியை வைத்துக்கொண்டு இந்த செஸ் போட்டி பற்றி எழுதுவது நிறைவு தருவதாக இருக்கும்.
ஆனந்த்-கார்ல்சன் இடையிலான முதல் போட்டியே வெற்றி தோல்வியின்றி முடிந்தது. ஆனந்த் கருப்புக் காய்களையும் கார்ல்சன் வெள்ளைக் காய்களையும் கொண்டு ஆடினர். வெள்ளைக் காய்களை வைத்து ஆடுபவருக்குக் கூடுதல் சாதக நிலை இருக்கும் என்று கூறப்படுவதற்குக் காரணம், நிறம் காரணமாக ஆட்டக்காரருக்கு வரக்கூடிய உயர்வு மனப்பான்மை. செஸ் பதத்தில் இது White Supremacy எனப்படுகிறது. ஆனால் செஸ் பற்றி சுத்தமாக எதுவுமே தெரியாதவன் என்ற முறையில் எனக்கு இந்தக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. ஏன் என்று விளக்குகிறேன். செஸ் மைதானம் பொதுவாக, ஆட்டக்காரர்கள் மீதோ விளையாட்டுப் பலகை மீதோ நிழல் விழாதபடிக்கு ஒளியூட்டப்பட்டிருக்கும். இங்கு இருட்டுக்கே இடமில்லை. இத்தகைய சூழலில் வெள்ளைக் காயைவிட கருப்புக் காயே பளிச்சென்று தெரியும். தவறான காயை வெட்டி ‘சொந்த கோல்’ போடும் அபாயங்கள் குறைவு. இதற்காகத்தான் கிரிக்கெட்டில் இருட்டிய பிறகு வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படுகிறது.
இது வரை நடந்திருக்கும் எட்டு ஆட்டங்களில் கார்ல்சன் இரண்டை வென்று முன்னணியில் இருக்கிறார். நியாயமாக ஆனந்தின் கைதான் ஓங்கியிருக்க வேண்டும். காரணம், அவரது வயது, விளையாட்டு அனுபவம், திருமண வாழ்க்கை அனுபவம், antiglare கண்ணாடி ஆகிய கார்ல்சனிடம் இல்லாத தகுதிகள். ஆனால் அவை முழு பலனளிக்காதது கார்ல்சனின் திறமைக்குச் சான்றாகும். இருவரின் அணுகுமுறையும் எப்படி வேறுபடுகின்றன என்று பார்ப்போம்.
புராதன இந்திய விளையாட்டான சதுரங்கத்தில் வெள்ளை யானைக்கு உள்ள பௌராணிக பலத்தை இளம் கார்ல்சன் அறிந்திருக்கிறாரோ என்னவோ, முதல் ஆட்டத்தில் அவர் ஆனந்தின் மந்திரியைத் தூக்க அதனைப் பயன்படுத்தினார். காஸ்பரோவின் கொசாக்குகளை அநாயாசமாகச் சமாளித்த ஆனந்திடம் கார்ல்சனின் ஐராவதத்திற்கு பதில் இல்லை. ஆனந்த் தமது மந்திரியை அந்த யானையின் பாதையிலிருந்து விலக்கித் தமது கஜேந்திரனை வெள்ளை யானையின் பாதையில் ஏவினார். ஆனால் இந்திய செஸ் ரசிகர் வட்டாரத்தில் ‘ஐராவதம் மகாதேவன்’ என்றே பெயர் பெற்றுவிட்ட கார்ல்சனிடம் கருப்பு யானையைக் காவு கொடுப்பதைத் தவிர மந்திரியைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை “செஸ்” ஆனந்திற்கு. இப்போது ஆனந்த் தமது யானை ஒன்றை இழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களினூடே ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரண்டாம் ஆட்டத்தில் ஆனந்த் குதிரையால் தாக்கத் தொடங்கினார். இதனால் கார்ல்சனின் காலாட்படையில் முதல் வரிசை ஐயோ என்று போனது. அடுத்துப் பின்வரிசையைக் காப்பாற்ற ராணியையே முன்னே நகர்த்தினார் கார்ல்சன். இந்த உளவியல் தந்திரம் அருமையாக வேலைசெய்தது. கார்ல்சனின் ராணி, ஆனந்தின் சிப்பாய்களில் பலரைத் தட்டி விட்டதோடு மந்திரியையும் நிலைகுலைத்தாள். ராணியின் கண்ணியக் குறைவான நடத்தையைத் தமது ராஜா பார்த்துக்கொண்டிருந்ததை அலட்சியப்படுத்தியதுதான் கார்ல்சனின் அதிரடித் தந்திரம். விளைவு, அடுத்த ஐம்பத்திமூன்று நிமிடங்களை ஆனந்த் தலையைச் சாய்த்து மேலுதட்டைப் பிதுக்கி நெற்றியைச் சுருக்கி மோவாயைத் தடவியபடி வெள்ளை ராணியை முறைப்பதிலேயே கழித்தார். கண்ணாடியைக் கழற்றித் திருப்பி மாட்ட நான்கு நிமிடங்கள் தனி. இதனால் இந்த ஆட்டமும் டிராவினில் முற்றியது. ஏன், இருவருமே ஜெயிக்கவில்லை என்றும் கூறலாம்.
மூன்றாம் ஆட்டத்தில் ஆனந்த் Karpov Tunnel என்ற வியூகத்தினை வகுத்தார். சிப்பாய்க் குழு, இரு கோணல்நடைக் குதிரைகள் அடங்கிய குதிரைப்படை, தந்தமற்ற இரு யானைகள் அடங்கிய யானைப்படை, ஒற்றை மந்திரி ஆகியவற்றை ராணியிடமிருந்து விலக்கினார் ஆனந்த். அதாவது ராணியைப் பாதுகாப்பில்லாததாகக் காட்டி எதிரியின் வலுவான காய்களை உள்ளே இழுத்து, அதற்குப் பின்னர் அந்தக் காய்களைச் சூழ்ந்து ஒவ்வொன்றாகத் தூக்குவதுதான் கார்ப்போவ் டனல். இதன் வேர்கள் இந்திய கபடி ஆட்டத்தில் இருக்கின்றன. ராணியைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது இந்தியாவுக்கே உரிய பிற்போக்கு அணுகுமுறை எனலாம். அது மட்டுமல்ல, இந்த வியூகமானது எதிரிகள் ஸ்திரீலோலர்கள் என்று அனுமானிக்கிறது. கார்ல்சனின் வெள்ளைக் காய்களோ கையில்லா ஆடைகளுக்கும் இறுக்கமான ஜீன்ஸுக்கும் புக்ககமான மேலைக் கலாச்சாரத்தில் பிறந்து ஊறியவை; Bikini Defence எனப்படும் சக்திவாய்ந்த நகர்வுக்கும் அசையாதவை. ஆக, ஆனந்தின் வியூகம் தவிடுபொடியாக உருமாறியது. ஆனால் அதற்கு கார்ல்சன் இரு குதிரைகளை பலிகொடுக்க வேண்டியிருந்தது. இதில் கார்ல்சனின் தியாக மனப்பான்மை தலையைக் காட்டுவதைக் கவனிக்கலாம்.
மூன்று ஆட்டத்தில் மூன்று டிராக்கள். இது இரு ஆட்டக்காரர்களுக்குமே நிர்ப்பந்தமான சூழ்நிலைதான். வெற்றி-தோல்வி இல்லாத நிலை பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்தது. மூன்றாம் ஆட்டம் முடிந்த பின்பு அதிருப்தியடைந்த பார்வையாளர்கள் சிலர் ஹயாட் ரீஜன்சி ஓட்டலின் செஸ் மைதானத்தி்ல் நாற்காலிகளை எரித்தார்கள். ரசிகைகள் கார்ல்சனின் காதுபட அவரை இழிவாகப் பேசியதையும் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. இதனால் இரு மேதைகளும் நான்காம் ஆட்டத்தில் வேறு மாதிரி ஆடிப்பார்த்தார்கள்.
கார்ல்சன் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஒரே சமயத்தில் எட்டு சிப்பாய்களையும் இரண்டு கட்டம் முன்னே நகர்த்தினார். ஆனந்தின் அணுகுமுறை நேரெதிரானது. அவர் ஒரு காயையும் நகர்த்தவில்லை. கார்ல்சனின் செஸ் நாணயங்கள் அருகே வரும் வரை அமைதியாக இருக்கும் Beauty Looks at Mirror என்ற உத்தியைக் கையாண்டார் ஆனந்த். உண்மையில் இது குங்ஃபூ உத்தி. துரதிர்ஷ்டவசமாக ஆனந்திற்கு இந்தத் தந்திரம் வேலை செய்யவில்லை. கார்ல்சனின் இரு யானைகள் மற்றும் ராணியிடம் ஆனந்தின் சக்கரவர்த்தி சிக்கிக்கொண்டார். விளைவு, அவர் (ஆனந்த்) ஜெயிக்கவில்லை.
ஐந்தாம் ஆட்டத்திலிருந்து எனக்கு செஸ்ஸில் இருந்த திடீர் ஆர்வம் பரிபூரணமாக விலகியது. கிரிக்கெட்டிற்கு டெஸ்ட் மேட்ச்சுகள் இருப்பது போல் சதுரங்கத்திற்கு செஸ் போட்டிகள். இரண்டுமே கலை வடிவங்கள்தாம் என்றாலும் ஆட்டக்காரர்கள் அடுத்த காயை நகர்த்துவதற்குள் நமக்கு நாலு கல்யாணம் ஆகிவிடுகிறது. எனவே 5, 6, 7, 8 ஆகிய ஆட்டங்களை இணையத்தில் ஹைலைட்ஸாக மட்டும் பார்த்தேன். செஸ்ஸை ஆடும்போதே எடிட் செய்த வடிவத்தில் ஆடுவது இந்த விளையாட்டுக்கு அதிக ரசிகர்களைச் சேர்க்கும் என்று பத்து நாளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதை நிரூபிப்பது போல் இருவரும் ஐந்து நிமிடங்களில் ஆடி முடித்துவிட்டார்கள். ஐந்திலும் ஆறிலும் ஆனந்த் தோல்வியுற்றார். ஏழாவது, எட்டாவதில் மீசையில் மண் ஒட்டவில்லை.
ஒன்று புரிகிறது. இந்திய செஸ்ஸுக்கு ஆனந்த் ஆற்றிய சேவை மறுக்க முடியாதது. அவர் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். எண்ணற்ற இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்துவருகிறார். இருந்தாலும் இந்த எட்டு ஆட்டங்களில் அவர் தள்ளாத வயதை எட்டிவிட்டது தெரிந்தது. மைதானத்தில் நின்று “ஆனந்த்… ஆனந்த்!” என்று கத்தும் ரசிகர்களுக்காகவாவது அவர் ஓய்வு பெற வேளை வந்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது எனக்கு.
('தி இந்து' நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
இப்படித்தான் ஒரு முறை...
நானும் மனைவி-மகனும் வெவ்வேறு வெளியூர்களுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தோம். நான் போன பின்பு அவர்கள் போவதாகத் திட்டம். உண்மையில் வெளியூர் அவர்களுக்குத்தான். அவர்கள் தலை மறைந்ததும் வீட்டுக்குத் திரும்பி வந்து நிம்மதியாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான கனவு.
நான்கு நாட்களுக்குத் தேவையான லக்கேஜுடன் கோயம்பேடு போனேன். பயணத்திற்கு அரை மணிநேரம், காத்திருப்பில் அரை மணிநேரம் கழிந்தன. தஞ்சை செல்லும் பேருந்து ஆரம்பித்து ஊர்ந்து சைதாப்பேட்டையை அடைய சுமார் ஒரு மணிநேரம் ஆனது. அங்கேயே இறங்கிக்கொண்டேன். ஒரு ஆட்டோ பிடித்து மெதுவாக ஓட்டச் சொல்லி வீடு திரும்பினேன். குறிப்பாக எந்தப் பாட்டும் இல்லாமல் ஹம்மிங் செய்தபடி பூட்டுக்கருகே சாவியைக் கொண்டுபோனால் இதயம் எகிறியது. வீடு திறந்திருந்தது! வீடு பேறுகள் இன்னும் கிளம்பித் தொலைக்கவில்லை.
மூளை மின்னலாய் வேலைசெய்ய சட்டென வாட்ச்சைக் கழற்றி பேண்ட் பைக்குள் நழுவ விட்டேன். கதவு திறந்து மனைவி முகம் காட்டினார். "என்னாச்சு?" என்றார் அதிர்ச்சியுடன். "வாட்ச்சை மறந்திட்டேன். நீ கிளம்பலியா?" என்றேன். "உங்க மவன் குளிச்சிட்டிருக்கான். வந்தப்புறம் சாப்ட்டு கெளம்பிருவோம். வாட்ச்சுக்காகவா இவ்ளோ தூரம் வந்தீங்க?" என்றார். "இது என்னோட லக்கி வாட்ச் ஆச்சே!" என் அறைக்குப் போய் வாட்ச்சை வெளியே எடுத்து அவர் இரண்டு கண்ணாலும் பார்க்கும்படியாக அதைக் கையில் கட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.
அடுத்து தாம்பரத்திற்குப் பேருந்து பிடித்தேன். அங்கே கிடைத்த ஒரு லாட்ஜில் ஓரிரவுக்கு மட்டும் ரூம் எடுத்தேன். ரெய்டு எல்லாம் நடந்தது. நான் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருந்தேன். ஓர் இரவு வீணானால் பரவாயில்லை. வீட்டினர் திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.
கடிதம்: இலக்கிய சினிமா
அன்புள்ள பேயோன் சார்,
மகத்தான உலக இலக்கியங்கள் திரைப்பட வடிவம் பெற்றுள்ளன. தமிழில் அவைகளுக்கு நிகரான இலக்கியப் படைப்புகள் இருந்தபோதிலும் வெறும் டப்பாங்குத்து படங்களே வந்தவண்ணம் உள்ளன. உங்கள் ஆயிரம் பக்க நாவல்களில் ஒன்று கூடக் கரையேறியபாடில்லையே? இந்த நிலை ஏன் நிலவுகிறது? தமிழன் செத்துவிட்டானா?
வி. அர்த்தநாறி
செங்குன்றம்
அன்பின் அர்த்தநாறி
தமிழின் ஆகப்பிரபலமான நாவலாகிய 'பொன்னியின் செல்வ'னுக்கே இந்தக் கதிதான். அதைப் போய் இன்னும் ஏன் படமாக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தினமும் நான்கு பேராவது என்னிடம் கேட்கின்றனர். நான் அலுப்பில்லாமல் அவர்களுக்கு ஒரே பதிலைத்தான் சொல்கிறேன்: "உன்னால முடிஞ்சா நீ எடுயேன் பாப்போம்." ஏனென்றால் சினிமா பார்ப்பதைவிட உருவாக்குவது கடினம்.
ஒரு சராசரி சினிமா பார்வையாளனையும் அதே சராசரி திரைப்பட இயக்குநரையும் எடுத்துக்கொள்வோம். இந்தப் பார்வையாளன் சீவி சிங்காரித்துக்கொண்டு திரையரங்குக்குச் சென்று உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு வருகிறான், அவ்வளவுதான். ஆனால் இயக்குநரோ, பார்வையாளன் திரையரங்குக்கு வருவதற்குள் அந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம், இசை. படப்பிடிப்பு, விநியோகம், தயாரிப்பாளர்களை மேய்த்தல் உள்பட எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும். கொஞ்சம் தாமதமானால்கூட பார்வையாளன் பிரிண்ட் இல்லை என வேறு படம் பார்க்கப் போய்விடுவான். இயக்குநருக்குள்ள ஒரே வசதி, அவரும் நடுநடுவே உட்கார்ந்துகொள்ளலாம். இதுதான் இவர்களின் வேறுபாடு.
ஒரு படத்தை உருவாக்குவது எளிதானதல்ல. ஏனென்றால் அது கடினமானது. கதையில் "வேதனையை மறைத்துக்கொண்டு கோபமாகச் சிரித்தான்" என்று எளிதாக எழுதிவிடுகிறோம். இதைக் காட்சிப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? நிறைய செலவாகும். முதலில் இப்படி நடிக்க ஆளில்லை. வேதனையைக் காட்ட ஒரு முகபாவம், அதை மறைத்துக்கொள்ள ஒரு முகபாவம், அடுத்து கோபமாக இருப்பதற்கு ஒரு முகபாவம், பிறகு சிரிப்பதற்கு ஒரு முகபாவம் என நான்கு தனித்தனி முறை நடிக்கச் சொல்லிவிட்டு நான்கு காட்சிகளையும் ஒரே ஷாட்டில் 'மெர்ஜிங்' தொழில்நுட்பத்தால் இணைக்க வேண்டும். பார்வையாளன் ரசித்துக் கைதட்டிவிட்டுப் போய்விடுவான் பஸ்ஸைப் பிடித்தோ டூவீலர் கொண்டுவந்திருந்தால் அதிலோ அல்லது வீடு அதிக தொலைவில் இல்லை என்றால் ஆட்டோவிலோ (சைக்கிளில் யாரும் சினிமாவுக்குப் போவதில்லை. அதில் என்னவோ ஒரு கௌரவக் குறைச்சல்). எல்லா மெனக்கெடலும் இயக்குநருக்கே.
பண்டைய தலைமுறை எழுத்தாளர்கள் சினிமாவை மனதில் வைக்காமல் எழுதினார்கள். அதனால்தான் 'பொன்னியின் செல்வன்', 'இன்னொரு செருப்பு எங்கே' போன்ற காவியங்கள் கடைசி வரை திரையேறவில்லை. எனவேதான் சென்ற தலைமுறை எழுத்தாளர்களான நாங்கள் நாவல், சிறுகதை எழுதும்போதே பார்த்து எழுதுகிறோம். எதுவெல்லாம் சாத்தியமோ அதை மட்டும்தான் எழுதுகிறோம். "ஓட்டலில் சுவையான சப்பாத்தி சாப்பிட்டான்" என்று எழுதினால் சுவையான ஓட்டல் சப்பாத்திக்கு எங்கே போவது? பிறகு ஓர் இயக்குநர் நம் சிறுகதையைப் படிக்கும்போது அவன் மனதில் ரூ. 5 கோடிக்குள் கதை விரிய வேண்டும். எனது சமீபத்திய சிறுகதை ஒன்றை முடிக்கும்போது அடைப்புக்குறிகளில் "இது சினிமா கதை மாதிரியே இல்லை?" என்று சேர்த்திருக்கிறேன். இந்த முனைப்பு இல்லாமல் கிளாசிக்குகளைத் திரைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதிகபட்சம் அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு போய் சினிமா பார்க்கலாம். அதனால் என்ன பிரயோஜனம்? "இதோ பார் ஹன்சிகா மோட்வானி!" என்று வந்தியத்தேவனிடம் காட்டவா முடியும்? தோலை உரித்துவிடுவாள் குந்தவைக்காரி.
அன்புடன்
பேயோன்
தில்லி பாபு
புதுதில்லியின் கன்னாட் பிளேசிலிருந்து இரு ஃபர்லாங்குகள் தொலைவில் வேதகிரீஷ்வர் கோவிலின் பின்வாசலுக்கு அருகிலுள்ள ராயல் தியேட்டர்ஸில் (நியூ ராயல் தியேட்டர்ஸுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது; நியூ ராயல் தியேட்டர்ஸ் அக்பர் ரோட்டில் இருக்கிறது; இது நிஜ ராயல் தியேட்டர்ஸின் மோசமான காப்பி; ஆறாம் பத்தியில் கூடுதல் விவரங்கள்) ஷ்யாம் பெனகல் படங்களின் ஒருவாரநீள நினைவுத் திரையிடல் விழா ஒன்றில் கடும் அலுவலகப் பணிகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் இடையிலான அல்லாட்டத்தில் முதல் நாளைத் தவற விட்டு இரண்டாம் நாளுக்கு வந்தபோது சட்டைப்பையில் கையை விட்டு அன்றைய தினத்திற்கான இலவச டிக்கெட்டை எடுத்தால் பேருந்துப் பயணச் சீட்டு, ரூபாய் நோட்டுகள், தொலைபேசி எண்ணெய் எழுதிக்கொண்ட கிழிந்த துண்டுச் சீட்டு என்று டிக்கெட்டைத் தவிர எல்லாம் கையில் சிக்க, மறந்துவிட்டு வந்த தியேட்டர் பாஸை எடுத்துவர வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து முதல் படத்தைக் கோட்டைவிட்டு அடுத்த படத்திற்கு வரிசையில் நின்றிருந்தபோதுதான் படேலை முதன்முதலில் பார்த்தேன். அவனிடம் டிக்கெட் இல்லை. யாராவது கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தானும் வரிசையில் நின்றிருந்தான். எனக்கு டிக்கெட் கொடுத்தீர்கள் என்றால் வரிசையில் முன்னே விடுகிறேன் எனப் பின்னாலிருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பார்த்து மறுப்பு வாங்கிக்கொண்டிருந்தான்.
என்னிடம் எனது அந்நாளைய தில்லி பாணி பஞ்சாபி சல்வார் அணிந்த காதலி பிம்லாவுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த இரண்டு டிக்கெட்டுகள் இருந்தன. அவள் வருபவளாக இருந்தால் எப்போதோ வந்திருப்பாள். வழக்கமாக சொன்ன நேரத்தில் வந்துவிடும் அவள் வருவதற்கு அரை மணிநேரம் தாமதமானால் அதன் பின்பு வர மாட்டாள் என்பதற்கே அதிக உத்தரவாதம். அவள் இன்னும் வராதமைக்குக் காரணம் தெரியவில்லை. தொண்ணூறுகளில் செல்போன் இல்லை. அதுவும் தலைநகரத்திலேயே. ஆனால் இது எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் இதை நினைவுகூர்வது தொண்ணூறுகளில். அந்த சமயத்தில் எனக்குத் தெரியாத ஒரு படேலுக்கு டிக்கெட்டை அள்ளிக்கொடுக்க எனக்கு முதலில் விருப்பமில்லை. படேல் அடிப்படையில் சிறுகதை எழுத்தாளன். அந்தக் கதைகளை வைத்துத் தீவிர சினிமாக்கள் எடுப்பது தன்னுடைய லட்சியம் என்று என்னிடம் அவன் சொன்னபோது காதலிக்கு டிக்கெட் வைத்திருந்த சட்டைப்பையின் பக்கம் கை போய்த் துறுதுறுக்காமல் இல்லை. நான் தீவிர சினிமாவுக்குப் பங்களிக்க அதுதான் ஒரே வழி போல் தெரிந்தது.
கதைக்கு வருவோம். அறுபதுகளின் தில்லியில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்க்கும் ஒருவனுக்கு ஒரு ஜெர்மானியப் பெண் சுற்றுலாப் பயணியுடன் உறவு ஏற்படுகிறது. அவள் காதலனோ அடிக்க வந்துவிடுகிறான். சிறிய கதைதான். ஆனால் படேலின் மனதில் உருப்பெற்றிருந்தப் படம் இந்திய, ஜெர்மானிய கலாச்சாரங்களிடையேயான முரணியக்கங்களை உருவகப்படுத்தும் குறியீடுகளாகக் கதையின் மையப் பாத்திரங்களை உருட்டியது. நான் அவன் வாய் வழியாக அறுபதுகளின் தில்லிக்கே பயணப்பட்டுப்போனேன். இது படமாக வர வேண்டிய கதை என்று நினைத்துக்கொண்டேன். வரிசையில் அடுத்து அவன் முறை. நான் பேசாமல் காதலியின் டிக்கெட்டை எடுத்து அவன் கையில் மௌனமாக வைத்தேன். எப்படியும் நான் அதைக் காசு கொடுத்து வாங்கவில்லை. இலவசமாக வந்தது இலவசமாகவே மாற்று இந்திய சினிமாவிற்கு என்னுடைய எளியதொரு காணிக்கையாகக் கைவிட்டுப் போகட்டும் என்று அவனுக்குத் தந்துவிட்டேன்.
எனக்கு பிம்லா காதலியே தவிர அவளுக்கு நான் யார் என அப்போது வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் எனக்குத் தொண்ணூறுகள் முழுவதுமே மர்மமாகத்தான் இருந்தது. 1994ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாள் என் காதலியிடம் என் இதயக் கிடக்கையைச் சொன்னேன். அவளுக்கு சிரிப்புக்கூட வரவில்லை. அவளுடனான உறவை நட்பாகத் தொடருமளவு எனக்கு மனநேர்மை கிடையாது. அவளுக்கும் நான் வேண்டாம் என்று தோன்றிவிட்டதோ என்னவோ, நான் காதலைச் சொன்ன பின்பு 1998 நவம்பர் வரை அவளைப் பார்க்கவில்லை. தில்லி ஒரு விசாலமான ஊர். ஒருவரை ஒருமுறை பார்த்துவிட்டால் பிறகு அவரை வாழ்நாள் காலம் வரை மீண்டும் தற்செயலாகக்கூட சந்திக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.
படேலை மட்டும் எப்போதாவது மாற்று சினிமா திரையிடல்களில் சந்தித்தேன். இரண்டாம் முறையாக அவனைப் பார்த்தபோது சுற்றுலா வழிகாட்டி கதையை என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதை மறந்து மீண்டும் சொல்லத் தொடங்கினான். கதையில் பல மாற்றங்கள் செய்து வழிகாட்டி கல்லூரி மாணவன் ஆகியிருந்தான். ஜெர்மன்காரி மலையாளினி ஆனாள். தில்லி இப்போது ஹரியானாவில் ஒரு கிராமம். இருவரும் காதலித்தார்கள். பெற்றோர் சம்மதத்தை மீறி எப்படி இருவரும் பிரிகிறார்கள் என்பது கதை. அவனோ என்னிடம் தயங்கித் தயங்கிப் பேசிப் பணம் எதிர்பார்த்தது போல் தோன்றியது. அவனைத் தவிர்க்கலாம் போல் இருந்தது.
ராயல் தியேட்டர்ஸின் பெயரை ஓர் உருப்படாத திரையரங்குக்கு சூட்டியபோது அது விஷயமாக இரு உரிமையாளர்களுக்கும் சட்டப் பிரச்சினை ஏற்பட்டு நியூ ராயல் தியேட்டர்ஸ் உரிமையாளர் ராயல் தியேட்டர்ஸை நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சரிக்கட்டியது தனிக்கதை.
இந்த இடத்தில் படேலுடன் இன்னொரு சந்திப்பு வைத்து அதில் அவனை பிம்லாவுடன் சேர்த்துப் பார்த்ததாகச் சொல்லி இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாக வர்ணித்து காதலில் கசப்பான அனுபவங்களுக்கு உள்ளாகும் அறிவுஜீவியாக என்னைத் தத்துவார்த்த தொனியில் ஸ்தாபித்துக்கொண்டு முடித்துக்கொள்வது தேய்வழக்கு மரபு. ஆனால் தேய்வழக்குகளில் வருவது போலா நடக்கிறது வாழ்க்கை? 1998 நவம்பர் பிம்லாவைப் பார்த்தது செய்தித்தாளில் ஓர் இரங்கல் குறிப்புப் புகைப்படத்தில். பிறந்த தேதி, இறந்த தேதி போட்டு "இன் ரிமெம்பரன்ஸ்" என்று எழுதியிருந்தார்கள். அவள் இறந்தது நவம்பர் 1994. எப்படிச் செத்தாள் என்று பழைய நண்பர்களை விசாரித்து அறிய ஆர்வம் இல்லை. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவள் செத்தபோது, அவள் மரணம் வலியற்றதாக இருந்திருக்கட்டும் என்று சர்வமங்கள சந்தோஷிமாதாவைப் பிரார்த்தித்துக்கொண்டேன்.
வாசகர் கடிதம் எழுதும் கலை
வாசகர் கடிதம்… சிறுகதையும் கட்டுரையும் தொலைபேசி அழைப்பும் கலந்த இந்த இலக்கிய வடிவம் கடந்த நாற்பதாண்டுகளாகக் காலங்காலமாய் படைப்பாளிகளை ஈர்த்துவந்திருக்கிறது. ஏனெனில் புனைவிலும் கட்டுரையிலும் சொல்லத் தெரியாத விசயங்களை வாசகர் கடிதத்தில் எழுதலாம். 'தன்னைப் பற்றியே பேசுகிறான்' என்ற வசைக்கு இடமளிக்காமல் சுயபுராணம் பாட இதில் வசதியுண்டு. அது போலவே, இன்னொருவர் பெயரில் நம்மை நாமே வகைதொகையின்றிப் புகழ்ந்துகொண்டு மகிழலாம். இது கடல் போன்ற ஒரு துறையாகும்.
பல எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுதும் கடிதங்களில் அரிய சொந்தக் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அக்கடிதங்களைத் தொகுத்து 'இன்னார் கடிதங்கள்' என்று புத்தகமாய்ப் போட்டுக்கொள்கிறார்கள். பிரசுரம்தான் இக்கடிதங்கள் எழுதப்படுவதன் நோக்கம். பல எழுத்தாளுமைகள், "எனக்குக் கடிதம் எழுது, நான் பதில் போட வேண்டும்" என்று கேட்டுப் பெறுகிறார்கள். இன்று இணைய எழுத்துக்கும் கடிதங்கள் முக்கியமான ஒன்றுகளாகிவிட்டன. படைப்பூக்கத்தின் இடைவேளைகளை இட்டுநிரப்புபவை கடிதங்களே. ஆனால் எழுத்து வாழ்க்கை என்பது ரோஜாக்களின் படுக்கை அல்லவே. கடிதங்களே வராத நிலையில் ஓர் எழுத்தாளனின் கதி என்ன? கடிதங்களுக்கு பதில் எழுதாமல் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலைக்கு அவன் ஆளாக வேண்டுமா?
இங்கே ஒரு விசயம்: படைப்பாளிகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொண்டிருந்த தலைமுறையினரில் பலர் இன்று முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டார்கள். மற்றும் பலர் இறந்துவிட்டார்கள். எஞ்சியுள்ள மிகச் சிலர், புரியும்படி எழுதித் தொலைப்பதில்லை. இன்னொரு பக்கம் எழுத்தாளர்களை அணுகுவது இன்று மின்னஞ்சலால், சமூக வலைத்தளங்களால் எளிதாகியுள்ள அதே சமயத்தில் வாசகர் கடிதங்களின் தரம் குறைந்துவருகிறது. கடிதங்களும் மின்னஞ்சல்களுமாய் எனக்கு தினமும் சுமார் ஐம்பது வருகின்றன. இவற்றில் ஒன்றுகூடப் பிரசுரிக்கத்தக்கவை அல்ல. இதுதான் நிலைமை. இதனால்தான் இன்று பல எழுத்தாளர்கள் வாசகர்கள் அனுப்ப வேண்டிய கடிதங்களையும் தாமே எழுதுகின்றனர். சொல்லப்போனால், எழுத்தாளன் போன்ற முதிர்ச்சியான, பண்பட்ட, சாமர்த்தியமான, நகைச்சுவை உணர்வு மிக்க, கண்ணியமான, தன்னலமற்ற, குழந்தைமை கொண்ட, நியாயமான, கழிவிரக்கம் செறிந்த, அறிவுக் கடலான ஓர் ஆளுமைக்குக் கடிதம் எழுதும் தகுதி இன்னொரு எழுத்தாளனுக்கே இருக்கக்கூடும். ஆனால் எந்த எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்திற்காக உழைப்பான்? அதனால்தான் நம் வாசகர் கடிதங்களை நாமே எழுத வேண்டியுள்ளது. கேள்வி-பதில் பகுதிக்குக் கேள்விகள் எழுதுதல் என்கிற இதழியல் மரபு முன்னமே இதற்கு அடிகோலியுள்ளமை கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
வாசகர் கடிதம் எழுதுதல் வெறும் சுயசொறிதலாக எடை குறைத்துப் பேசப்படக் கூடாது. எப்போதும் ஒரே வாசகரே கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதால் ஒவ்வொரு கடிதத்தையும் ஒவ்வொரு வாசகர் எழுதுவதாகக் காட்ட வேண்டும். ஒவ்வொரு வாசகருக்கும் தனித்தனி எழுத்துநடையைக் கையாள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எழுத்துப் பிழைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு வாசகருக்கும் பெரும்பாலும் வெவ்வேறு பெயரும் ஊரும் இருக்க வேண்டும். ஒரு ஊரில் எல்லோருக்கும் ஒரே பெயர் இருக்க முடியுமா? கடிதங்களில் யதார்த்தச் சித்தரிப்பு, எழுத்தாளனின் படைப்பூக்கத்திற்கு மிகத் திருப்திகரமானதொரு சவாலாகும்.
எழுத்தாளர்கள் தமக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொள்வதில் ஓர் அணுகுமுறை வைத்திருப்பார்கள். நான் எனது உத்தியை விளக்குகிறேன். இதற்குத் தேவையான கருவிகள்:
நேரம் (மிக அவசியம்)
டெலிபோன் டைரக்டரி (ஓரளவு அவசியம்)
தமிழக வரைபடம்
சொந்தக் கருத்துகள் (இருந்தால் பயன்படும் சாத்தியங்கள் அநேகம்)
டெலிபோன் டைரக்டரியை ஏன் சொல்கிறேன் என்றால் வாசகருக்குப் பெயர் வைப்பது அல்லது அவர் பெயரை ஊகிப்பது நேரத்தைக் கபளீகரம் செய்யும். பெயர்களை யோசிப்பதில் நாமறியாது நேரம் கரையும்போது நாம் எழுத நினைத்திருக்கும் விசயங்கள் மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய் மனதின் ஆழ்வெளிகளில் ஒரேடியாகத் தொழுதுண்டு பின் சென்றுவிடும் அபாயம் உள்ளது. அதே சமயத்தில் சட்டென மனத்தில் உதிக்கும் பெயர்களை வைத்தால் படிப்பவர்கள் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது. டைரக்டரியில் உள்ள பெயர்களைப் பயன்படுத்தும்போது பெயர்களுக்கு ஓர் உண்மைத்தன்மை கிடைக்கிறது. ஊர் பெயரைத் தேர்ந்தெடுக்கத் தமிழக வரைபடம் போதும்.
அடுத்து இந்த 'சொந்தக் கருத்து' என்கின்ற கருத்தாக்கம். சொந்தக் கருத்து என்பது கசப்பான சவாலாக இருக்கத் தேவையில்லை. பலர் சொந்தக் கருத்தையும் தனித்துவமான கருத்தையும் குழப்பிக்கொண்டு சஞ்சலம் அடைகிறார்கள். இந்த அநாவசியத் தலைவலி தேவையே இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் சொந்தக் கருத்து. முக்கியமான விசயம், அது நம் பெயரில், நம் வார்த்தைகளில் இருக்க வேண்டும். நக்கல், நையாண்டி, சிற்றிதழ் பதங்கள், வெகுஜன கலாச்சார சொல்லாடல்கள் போன்ற நகாசுகளை இடைச்செருகினால் வாசகர்களைச் சுண்டியிழுக்கும். இது நிஜமான வாசகர் கடிதங்கள் வரச் செய்துவிடும் என்பதே இதிலுள்ள ஒரே பிரச்சினை.
இப்பயனுள்ள கையேடு ஒரு கோடிகாட்டல் மட்டுமே. நீ என்ன சொல்வது, நான் என்ன செய்வது என்று உங்களுக்குப் பட்டால் நீங்கள் வேறு உத்திகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
ஒரு நற்செய்தி
விரைவில் என் படைப்புகளை மருந்துக் கடைகளில் வாங்கலாம். வயாக்ரா தயாரிக்கும் ஃபைஸர் மருந்து நிறுவனம் என்னிடம் ஆர்டரின்பேரில் எழுதி வாங்க முடிவு செய்துள்ளது. என் படைப்புகளில் மருத்துவ குணங்கள் இருப்பதாக யாரோ அவர்களிடம் கிளப்பி விட்டதுதான் எனக்கு நன்மையில் முடிந்திருக்கிறது. தூக்கமின்மைக்கு மருந்தாக Payon 50s, Payon 100s, Payon 250s என மூன்று டோஸ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதித் தருவதாக ஒப்பந்தம் (இங்கு S என்பது நொடிகள்). மாத்திரை வடிவில் வராது. சிறு புத்தகங்களாக வரும். சோதனை எலிகள் படிக்குமளவு பரிணாம வளர்ச்சி அடையாததால் இந்த டோஸ்கள் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டன. பக்கவிளைவுகள், எச்சரிக்கைகள் என சில பட்டியல்களை ஃபைஸர் வெளியிட்டுள்ளது. இதயப் பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் இம்மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். சோதனைகளில் ஒருவருக்கு மட்டும் ஓவர்டோஸ் ஆகி கோமா நிலையில் உள்ளார். மற்றபடி பிரச்சினை இல்லை. இதன் சந்தைச் செயல்பாட்டைப் பொறுத்து Payon SR (Slow Release) என்ற பிரிவில் சில படைப்புகளைக் கேட்டிருக்கிறார்கள். அமெரிக்க மருந்து நிர்வாக வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டியதுதான் பாக்கி. இதில் எனக்குச் சுளையாக ஒரு தொகை கிடைக்கப்போகிறது. சக எழுத்தாளர்களுக்கு நிச்சயம் வயிற்றெரிச்சலில் தூக்கம் போய்விடும். அவர்கள் தூக்கம் அனுஷ்டிக்க பேயோன் 100sஐப் பரிந்துரைக்கிறேன்.
சுட்டிகள்
writerpayon.com
twitter.com/ThePayon
writerpayon.tumblr.com
கருத்துகள்
கருத்துரையிடுக