வானியல்


வானியல்

வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.

வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக்குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது.

20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவதானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது அவதானிப்பு வானியல் ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது கருத்தியல் வானியல் ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக்கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III