மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I


சுய சரிதை

Back

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)


முதல் பாகம்


முன்னுரை


     நாலைந்து ஆண்டுகளுக்கு முன், என் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக் கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால், முதல் பக்கத்தை எழுதி முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம் மூண்டுவிட்டதால் அவ்வேலை தடைப்பட்டு விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நடந்து எராவ்டாவில் என் சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில் சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன். ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்த போதே நான் விடுதலை அடைந்து விட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையைத் திரும்ப என்னிடம் கூறினார். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தை எழுதி முடித்து விட்டேனாகையால், சுய சரிதையை "நவஜீவனு"க்கு எழுதும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. தனி நூலாகப் பிரசுரிப்பதற்கென்றே அதை நான் எழுதவேண்டும் என்று சுவாமி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை. வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும் 'நவஜீவனு'க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதுவது சுய சரிதையாக ஏன் இருக்கக் கூடாது? இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார்; நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

     ஆனால், தெய்வ பக்தியுள்ள ஒரு நண்பருக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டாயின. என் மௌன விரத நாளில் அவற்றை அவர் என்னிடம் கூறினார். "இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்?" என்று அவர் கேட்டார். "சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினருக்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு நாகரிக வயப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுய சரிதை எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், நீங்கள் என்னதான் எழுதுவீர்கள்? உங்கள் கொள்கைகள் என்று நீங்கள் இன்று கொண்டிருப்பவைகளை நாளைக்கு நிராகரித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், அல்லது, இன்று நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை நாளைக்கு மாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். அப்போது, நீங்கள் பேசியவை அல்லது எழுதியவைகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்குத் தவறான வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாதா? சுயசரிதை போன்ற ஒன்றை இப்போதைக்காவது எழுதாமலிருப்பது நல்லதல்லவா?" என்று அவர் கேட்டார்.

 

     இந்த வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், உண்மையில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதையைச் சொல்லவே விரும்புகிறேன். என் வாழ்க்கையிலும் இந்தச் சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால், இக்கதை ஒரு சுய சரிதையாகவே அமையும் என்பது உண்மை. ஆனால், அதன் ஒவ்வொரு பக்கமும் என்னுடைய சோதனைகளைப் பற்றி மாத்திரமே கூறுமானால், அதைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன். இந்தச் சோதனைகள் அனைத்தையும் பற்றிய தொடர்ச்சியானதொரு வரலாறு வாசகர்களுக்குப் பலனளிக்காமற் போகாது என்று நம்புகிறேன்; அல்லது அந்த நம்பிக்கையுடன் என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன். ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு 'நாகரிக' உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் 'மகாத்மா' பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மன வேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. ஆனால், ஆன்மிகத் துறையில் நான் நடத்திய சோதனையைப் பற்றிச் சொல்லவே நிச்சயமாக விரும்புவேன். அவை எனக்கு மாத்திரமே தெரிந்தவை. ராஜீயத் துறையில் வேலை செய்து வருவதற்கு எனக்கு இருந்து வரும் சக்தியையும் நான் அதனிடமிருந்தே பெற்றிருக்கிறேன். இந்தச் சோதனைகள் உண்மையிலேயே ஆன்மீகம் ஆனவைகளாக இருப்பின், இதில் தற்புகழ்ச்சி என்பதற்கே எந்த விதமான இடமும் இல்லை. அவை என்னுடைய அடக்கத்தையே அதிகமாக்கும். இதுவரை செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவற்றைக் குறித்துச் சிந்திக்கச் சிந்திக்க, என் குறைபாடுகளையே நான் தெளிவாக உணருகிறேன்.

 

     நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்; நடமாடுகிறேன். நான் இருப்பதும் அதற்காகவே தான். நான் பேசுவன, எழுதுவன, ராஜீயத் துறையில் முயற்சி செய்வன ஆகிய யாவும் இக் குறிக்கோளைக் கொண்டவையே. ஆனால், ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை நெடுகிலும் நம்பி வந்திருக்கிறேனாகையால், என்னுடைய சோதனைகளை ஒளிவு மறைவாகச் செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன். இதனால், அவற்றின் ஆன்மிக மதிப்பு எந்த வகையிலும் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை. தனக்கும், தன்னைப் படைத்த கடவுளுக்கும் மாத்திரமே தெரிந்தவையாக உள்ள சில விஷயங்கள் உண்டு. அவற்றை ஒருவர் மற்றொருவருக்கு விண்டு சொல்லுவது என்பது சாத்தியமில்லாத காரியம். நான் சொல்லப் போகும் சோதனைகள் அப்படிப்பட்டவை அல்ல. ஆனால், அவை ஆன்மீகமானவை; அதைவிடச் சன்மார்க்கமானவை என்றே சொல்லிவிடலாம். ஏனெனில், சன்மார்க்கமே மதத்தின் சாரம்.

 

     வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் புரிந்து கொள்ளக்கூடிய மத விஷயங்கள் மாத்திரமே இகக்தையில் சேர்க்கப்படும். பாரபட்சமற்ற வகையில், அடக்க உணர்ச்சியோடு அவற்றை நான் விவரிப்பேனாயின், இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டிருக்கும் மற்றும் பலரும் தங்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய ஆதாரங்களை இதில் காண்பார்கள். இச் சோதனைகள், குறைகளே இன்றிப் பூரணமானவை என்று நான் சொல்லிக் கொள்ளுவதாக யாரும் கருதிவிட வேண்டாம். ஒரு விஞ்ஞானி, தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன் யோசனையின் பேரிலும், நுட்பமாகவும் நடத்துகிறார். ஆனால், அதன் பலனாகத் தாம் கண்ட முடிவுகளே முடிந்த முடிவுகள் என்று அவர் கொள்ளுவதில்லை. தாம் அறிந்து கொள்ளாதவையும் இருக்கக் கூடும் எனக் கருதி, அவற்றையும் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார். அத்தகைய விஞ்ஞானியின் நிலைதான் என் நிலையும். என்னை நானே ஆழ்ந்து சோதித்து வந்திருக்கிறேன். என்னுள்ளேயே நான் துருவித் துருவித் தேடிப் பார்க்காத இடமில்லை. என் மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து அலசிப் பார்த்திருக்கிறேன். என்றாலும், நான் கண்ட முடிவுகள் குறையற்றவை. முடிவானவை என்று சொல்லிக் கொள்ளும் நிலைக்கு நான் வந்து விடவில்லை. ஒன்று மாத்திரம் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது, அந்த முடிவுகள் முற்றும் சரியானவையாகவே எனக்குத் தோன்றுகின்றன; இப்போதைக்கு முடிவானவை என்றும் தோன்றுகின்றன. ஏனெனில், அவை அவ்வாறு தோன்றாது போனால், அவற்றின் அடிப்படையில் நான் எதையும் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும், ஏற்றுக் கொள்ளுவது அல்லது நிராகரித்து விடுவது என்ற முறையை அனுசரித்து அதன்படி நடந்தும் வந்திருக்கிறேன். என்னுடைய செயல்கள், என் அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஏற்றவையாக இருக்கும் வரையில், நான் என் ஆரம்ப முடிவுகளையே கடைப்பிடித்தாக வேண்டும்.

 

     கொள்கைகளைப் பற்றிய சித்தாந்தங்களை மட்டுமே விவாதிப்பது என்றால், நான் சுய சரிதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டியதே இல்லை. ஆனால், எனது நோக்கமோ, இக் கொள்கைகள் நடைமுறையில் பல வகையிலும் அனுசரிக்கப்பட்டு வந்திருப்பதன் வரலாற்றைக் கூறுவதாகும். ஆகவே, நான் எழுதப் போகும் இந்த அத்தியாயங்களுக்கு 'நான் செய்த சத்திய சோதனையின் கதை' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம் முதலிய ஒழுக்க நெறிகளைப் பற்றிய சோதனைகளும் இவற்றில் அடங்கியிருக்கும். இந்த ஒழுக்க நெறிகள் வேறு, சத்தியம் வேறு என்று கருதப்படுகிறது. ஆனால், சத்தியமே தலையாய தருமம், அதில் மற்றும் பல தருமங்களும் அடங்கி இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். இந்தச் சத்தியம் என்பது உண்மை பேசுவது மாத்திரம் அல்ல; உள்ளத்திலும் உண்மையோடு இருப்பது என்பதையும் இது குறிக்கும். அத்துடன் நமக்குத் தோன்றும் சத்தியத்தை மட்டுமின்றி, சுத்த சுயம்புவான சத்தியமும், நித்தியத்துவமான கடவுளையும் அது குறிக்கும். கடவுளைப் பற்றிய விளக்கங்கள் கணக்கில் அடங்காதவை. ஏனென்றால், அவர் காட்சி தரும் ரூபங்களும் எண்ணற்றவை.

 

     இவை பற்றி எண்ணும் போது ஆச்சரியத்திலும் அச்சத்திலும் அமிழ்ந்து விடுகிறேன்; ஒரு கணம் பிரமித்தும் போய்விடுகிறேன். ஆனால், கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவிலலை. ஆயினும், அவரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். இம் முயற்சியில் வெற்றி பெறுவதற்காக, எனக்கு இனியதான எதையுமே தத்தஞ் செய்துவிடத் தயாராயிருக்கிறேன். என் உயிரையே இதற்காகத் தியாகம் செய்துவிட வேண்டியிருந்தாலும், அதைக் கொடுக்கவும் நான் தயாராக இருப்பேன் என்றே நம்புகிறேன். ஆனால், இந்தச் சுத்த சத்திய சொரூபியை நான் அடையும் வரையில், எனக்குத் தெரிந்ததாகவுள்ள சாதாரண சத்தியத்தையே நான் பற்றுக் கோடாகக் கொண்டாக வேண்டும். இதற்கு மத்தியில் இந்தச் சத்தியமே எனக்கு வழிகாட்டும் ஒளியாகவும், பாதுகாக்கும் கேடயமாகவும், மார்புக் கவசமாகவும் இருந்தாக வேண்டும். இந்தச் சத்திய வழி, நேரானதாகவும், குறுகலானதாகவும், கத்தி முனையைப் போல் கூர்மையானதாகவும் இருந்த போதிலும், இதுவே எனக்கு மிகச் சீக்கிரத்தில் செல்லக்கூடிய, மிக எளிதான வழியாக இருந்து வந்திருக்கிறது. இவ்வழியிலிருந்து பிறழாமல் நான் கண்டிப்பாக நடந்து வந்திருப்பதால், ஹிமாலயம் போன்ற என் பெரிய தவறுகளெல்லாம் கூட எனக்கு அற்பமானவையாகத் தோன்றுகின்றன. ஏனெனில், இவ்வழியே என்னைத் துன்பங்களிலிருந்து காத்து வருகின்றது. இதில் என் உள்ளொளிக்கு ஏற்ப நான் முன்னேறிச் சென்றிருக்கிறேன். என் முற்போக்கில் சுத்த சத்தியமான கடவுளின் மங்கலான தோற்றங்களை நான் அடிக்கடி காண்கிறேன்.

     மெய்ப்பொருள் அவர் ஒருவரே; மற்றவை யாவும் பொய்யே என்ற திடநம்பிக்கை நாளுக்கு நாள் எனக்கு வளர்ந்து கொண்டும் வருகிறது. என்னுள் இந்த உறுதி எவ்விதம் வளர்ந்திருக்கிறது என்பதை விருப்பமுள்ளோர் உணரட்டும்; அவர்களால் முடிந்தால் சோதனைகளில் பங்கு கொண்டு எனது திடநம்பிக்கையிலும் பங்கு கொள்ளட்டும். எனக்குச் சாத்தியமானது, ஒரு சிறு குழந்தைக்கும் சாத்தியமானதாகவே இருக்கும் என்ற மற்றொரு நம்பிக்கையும் என்னுள் வளர்ந்து வருகிறது. இவ்விதம் நான் கூறுவதற்குத் தக்க காரணங்களும் இருக்கின்றன. சத்தியத்தை அடைவதற்கான சாதனங்கள் எப்படிக் கஷ்டமானவையோ, அப்படி எளிமையானவை ஆகவும் இருக்கின்றன. இறுமாப்பைக் கொண்ட ஒருவனுக்கு அவை முற்றும் சாத்தியமில்லாதவையாகத் தோன்றலாம்; ஆனால் கபடமற்ற ஒரு குழந்தைக்கு அவை சாத்தியமானவை. சத்தியத்தை நாடிச் செல்பவர், தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின் கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால், சத்தியத்தை நாடுகிறவரே, அத்தூசியும் நம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் - அதற்கு முன் அல்ல - ஒளியைக் கணப்பொழுதாவது காண முடியும். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த வாக்குவாதம் இதை மிகத் தெளிவாக்குகிறது. கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

 

     இப்பக்கங்களில் நான் எழுதப் போவதில் ஏதாவது ஒன்று தற்பெருமையோடு கூறப்பட்டது போல் வாசகருக்குத் தோன்றுமாயின், என் சத்தியத் தோட்டத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றும், எனக்குத் தோன்றும் காட்சிகளும் கானல் நீரைப் போன்றவையே ஒழிய உண்மையானவை அல்ல என்றும் தான் அவர் கொள்ள வேண்டும். என்னைப் போன்றவர்கள் நூற்றுக் கணக்கில் அழிந்தாலும் சரி, சத்தியம் நிலைக்கட்டும். தவறே இழைக்கவல்ல என் போன்றவர்களின் தன்மையைக் கண்டறிவதற்காக, சத்தியத்தின் பெருமையை மயிரிழையும் குறைத்து விடாமல் இருப்போமாக.

 

     இனி வரும் அத்தியாயங்களில் ஆங்காங்கே காணப்படும் புத்திமதிகள் அதிகார பூர்வமானவை என யாரும் கருதி விட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அப்படிக் கருதி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையுமாகும். கூறப்பட்டிருக்கும் சோதனைகளை உதாரணங்கள் என்றே கொள்ள வேண்டும். அவற்றை அனுசரித்து ஒவ்வொருவரும் தத்தம் நோக்கப்படியும் தகுதிக்கேற்றவாரும் சொந்தச் சோதனைகளை மேற்கொள்ளலாம். இந்தக் குறிப்பிட்ட அளவு வரையில் இந்த உதாரணங்கள் உண்மையில் பயனுள்ளவையாகும் என நம்புகிறேன். ஏனெனில், சொல்லியாக வேண்டிய ஆபாசமான விஷயங்களைக் கூட நான் மறைக்கப் போவதில்லை; குறைத்துக் கூறப்போவதில்லை. என்னுடைய எல்லாக் குற்றங்களையும், தவறுகளையும் வாசகருக்கு அறிவிப்பேன் என்றே நம்புகிறேன். என் நோக்கம், சத்தியாக்கிரக சாத்திரத்தில் நடத்திய சோதனைகளை விவரிப்பதேயன்றி, நான் எவ்வளவு நல்லவன் என்பதைச் சொல்லுவது அன்று. என்னுடைய நன்மை, தீமைகளை மதிப்பிடுவதில் சத்தியத்தைப் போல அதிகக் கண்டிப்பாக இருக்கவே நான் முயல்வேன். மற்றவர்களும் அவ்விதமே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த அளவுகோலைக் கொண்டு என்னை நானே அளவிடும்போது, சூரதாஸ் என்னும் பக்தர் பாடியது போல நானும், 'என்னைப் போல் கொடிய, வெறுக்கத்தக்க பாவி வேறு எவர் உண்டு? படைத்த பிரமனையே மறந்திடும் நன்றி கெட்டவன் ஆனேன் நான்!' என்று கதற வேண்டும். ஏனெனில் என் வாழ்வின் ஒவ்வொரு சுவாசத்தையுமே பரிபாலிப்பவனும், என்னை ஈன்றெடுத்தவனுமான ஆண்டவனுக்கு இன்னும் வெகுதொலைவிலேயே நான் இருந்து வருவது எனக்கு இடையறாத சித்திரவதையாக இருக்கிறது. என்னுள் இருக்கும் தீய குணங்களே என்னை அவனுக்குத் தொலை தூரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். என்றாலும், அவற்றிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. முன்னுரையை இங்கு நான் முடிக்க வேண்டும். அடுத்த அத்தியாயத்திலிருந்து என் கதையைத் தொட்ங்குவேன்.

-மோ. க. காந்தி

 

ஆசிரமம், சபர்மதி.

26, நவம்பர், 1925

முதல் பாகம்

1. பிறப்பும் தாய் தந்தையரும்

 

     காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திரகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.

 

     ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை. ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.

 

     ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர்; சத்திய சீலர்; தீரமானவர்; தயாளமுள்ளவர். ஆனால், கொஞ்சம் முன் கோபி. அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக் காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர். சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது. தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்து விடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

 

     பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.

 

     அனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம், அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும், அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூஜை செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.

 

     என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சாதுர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விரதத்தின் போது சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான். "அதைப்பற்றிப் பரவாயில்லை" என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். "நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை" என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.

 

     என் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

 

     இந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுருப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றும் யூகிக்க முடிகிறது.

2. குழந்தைப் பருவம்

 

     எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னுடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்த்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடு வந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.

 

     உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

 

     என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்து விடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்து விடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். என்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.

 

     அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிரவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம்) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்த படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்தது என் நினைவில் இன்னும் அப்படியே இருந்து வருகிறது. சோகம் மிகுந்த அந்தக் கீதம் என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.

 

     மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள்? அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது? என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது நிச்சயம்.

3. குழந்தை மணம்

 

     இந்த அத்தியாயத்தை நான் எழுத நேர்ந்திருக்கக்கூடாது என்றே விரும்புவேன். இந்த வரலாற்றைக் கூறி முடிப்பதற்குள் கசப்பானவை பலவற்றை நான் விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அறிவேன். நான் சத்தியத்தை வழிபடுவனாக இருப்பதென்றால், வேறு விதமாக நடந்து கொள்ளுவதற்கில்லை. எனது பதிமூன்றாவது வயதில் எனக்கு மணமாயிற்று என்பதைத் கூறியாக வேண்டியது, வேதனையோடு கூடிய என் கடமையாகிறது. என்னை சுற்றிலும் என் பராமரிப்பில் இருக்கும் அதே வயதுடைய சிறுவர்களைப் பார்த்துவிட்டு என் விவாகத்தையும் எண்ணும் போது என்னைப் பற்றி நானே பரிதாபப்பட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. என் கதிக்கு ஆளாகிவிடாமல் தப்பி விட்ட அவர்களை ஆசீர்வதிக்கவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் இருப்பதாக நான் காணவில்லை.

 

     எனக்கு ஆனது விவாகம் அன்றி நிச்சயதார்த்தம் அன்று என்பதை வாசகர்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கத்தியவாரில் நிச்சயதார்த்தம், விவாகம் என்ற இரண்டு வெவ்வேறு சடங்குகள் உண்டு. நிச்சயதார்த்தம் என்பது ஒரு பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் விவாகம் செய்வதென்று அவ்விருவரின் பெற்றோர்களும் ஆரம்ப நிச்சயம் செய்து கொள்வது. அது மீறிவிட முடியாதது அல்ல. பையன் இறந்து விட்டால் பெண் விதவை ஆகிவிடுவதும் இல்லை. பெற்றோரைப் பொறுத்தவரை செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமே இது. குழந்தைகளுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது என்பதை அநேகமாக அக் குழந்தைகளுக்கு அறிவிப்பதும் இல்லை. எனக்குத் தெரியாமலேயே எனக்கு மும்முறை நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்று தெரிகிறது. எனக்கு என்று நிச்சயம் செய்திருந்த இரு பெண்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர் என்பதை அறிந்தேன். எனது ஏழாவது வயதில் மூன்றாவது நிச்சயதார்த்தம் நடந்ததாக இலேசாக நினைவிருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எனக்கு யாரும் தெரிவித்திருந்ததாக நினைவு இல்லை. இந்த அத்தியாயத்தில் என் விவாகத்தைப் பற்றியே நான் கூறுகிறேன். அதைப் பற்றிய ஞாபகம் எனக்குத் தெளிவாக இருக்கிறது.

 

     நாங்கள் சகோதரர்கள் மூவர் என்பது நினைவிருக்கும். மூத்தவருக்கு முன்னாலேயே மணம் ஆகிவிட்டது. அடுத்த சகோதரர் எனக்கு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர். இந்த இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், எனக்கு ஒரு வயது மூத்தவரான பெரியப்பா பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் மணம் முடித்து விடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையைக் குறித்தோ, எங்கள் விருப்பத்தைப் பற்றியோ அவர்களுக்குச் சிந்தனையே இல்லை. அவர்கள் சௌகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரம் பற்றிய விஷயம் அது.

 

     ஹிந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே தங்களுக்கு நாசத்தைத் தேடிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சொத்தையும் வீணாக்குகிறார்கள், காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. விருந்துப் பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும் வகையிலும், ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்குக் குரல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டுப் பாடுகிறார்கள். நோய் வாய்ப்படவும் செய்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாத படியும் செய்து விடுகிறார்கள். இத்தகைய கூச்சல், குழப்பங்களையும் விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பையையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில், தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ளவேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

 

     இந்தத் தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது எவ்வளவோ, நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர். இப்படிச் செய்தால் செலவும் குறைவாக இருக்கும் ஆடம்பரமும் அதிகமாயிருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்குப் பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாகச் செலவிடலாம். என் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகிவிட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்க வேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள். தங்கள் கடைசிக்காலத்தில் சந்தோஷமான காரியத்தைச் செய்துவிட்டுப் போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் முன்னிட்டு மூன்று விவாகங்களையும் ஒரே சமயத்தில் முடித்துவிடுவது என்று முடிவு செய்தனர். நான் முன்பே கூறியிருப்பதைப்போல, இவற்றிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு மாதங்கள் பல ஆயின.

 

     இத்தகைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்த பிறகே, நடைபெற இருக்கும் சம்பவங்களைப்பற்றி நாங்கள் அறியலானோம். உடுத்துக்கொள்ள நல்ல ஆடைகள் கிடைக்கும், மேளதாளங்கள் இருக்கும். கல்யாண ஊர்வலங்கள் இருக்கும், பிரமாதமான விருந்து நடக்கும், இவற்றுடன், சேர்ந்து விளையாடுவதற்கு விசித்திரப் பெண் ஒருத்தியும் கிடைப்பாள் என்பதைத்தவிர, விவாகம் என்பதைப்பற்றி எனக்கு அப்பொழுது வேறோன்றுமே தெரியாது. சிற்றின்ப இச்சை பிறகுதான் ஏற்பட்டது. குறிப்பிடக்கூடிய சில விவகாரங்களைத் தவிர நான் வெட்கப்பட வேண்டிய பிறவற்றை மறைத்துவிடவே விரும்புகின்றேன். இந்த விவரங்களைப் பிற்பாடு சொல்லுகிறேன். ஆனால், இவற்றிற்கும், இந்தக்கதையை நான் எழுதுவதன் முக்கியமான நோக்கத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமிலலை.

 

     ஆகவே, என் அண்ணனையும் என்னையும் ராஜகோட்டிலிருந்து போர்பந்தருக்கு அழைத்துச் சென்றனர். முடிவான நாடகத்துக்குப் பூர்வாங்கமாக எங்கள உடம்பெல்லாம் அரைத்த மஞ்சளைப் பூசியது போன்ற சில வேடிக்கையான விவரங்களும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதுதான்.

 

     என் தந்தையார் ஒரு திவான். ஆனாலும் ஓர் ஊழியர்தான். அவரிடம் தாகூர் சாஹிப் விசேஷ அபிமானம் வைத்திருந்ததனால் அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே ஊழியம் புரிந்தார். தாகூர் சாஹிப் கடைசி நிமிஷம் வரையிலும் என் தந்தையாரைப் போக விடவில்லை. போக அனுமதித்தபோது பிரயாண காலத்தில் இரண்டு தினங்கள் குறைவதற்காக, விசேஷக் குதிரை வண்டிகளை என் தந்தைக்கு ஏற்பாடு செய்ய அவர் உத்தர விட்டார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்து விட்டது. ராஜகோட்டிலிருந்து போர் பந்தருக்கு 120 மைல்கள். சாதாரண வண்டியில் வந்தால் ஐந்து நாட்கள் ஆகும். என் தந்தையோ மூன்றே நாட்களில் வந்துவிட்டார். ஆனால் மூன்றாவது கட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் வந்த குதிரை வண்டி குடை சாய்ந்தது. அவர் பலத்த காயமடைந்தார். காயங்களுக்காக, உடம்பெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். நடைபெறவிருக்கும் வைபவத்தில் அவருக்கும் எங்களுக்கும் இருந்திருக்க வேண்டிய சிரத்தையில் பாதி இதனால் போய்விட்டது. ஆயினும் எப்படியும் வைபவம் நடந்தாக வேண்டும். முகூர்த்தத் தேதிகளை மாற்ற முடியுமா? குழந்தைகளுக்குக் கல்யாணத்தில் இயல்பாக ஏற்படும் சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டிருந்தது. அதில் மூழ்கியதன் காரணமாக, என் தந்தையின் காயங்களால் அடைந்த மனக்கிலேசத்தை மறந்திருந்தேன்.

 

     என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. அதே அளவுக்குச் சதை உணர்ச்சிகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. என் பெற்றோருக்கு நான் ஆற்ற வேண்டிய பக்தியோடு கூடிய பணிக்காக எல்லாச் சுகங்களையும், இன்பங்களையும் நான் தியாகம் செய்துவிட வேண்டும் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. எனினும், இன்ப நுகர்ச்சியில் நான் கொண்டிருந்த ஆசைக்குத் தண்டனையாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுதிலிருந்து அந்தச் சம்பவம் என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன். ஆசைகளைத் துறக்காமல் ஆசைக்குரிய பொருள்களைத் துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும் அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். இப்பாடலை நான் பாடும்போதெல்லாம், பாடக் கேட்கும் போதெல்லாம், வெறுக்கத்தக்க கசப்பான அந்தச் சம்பவம் உடனே என நினைவுக்கு வந்து, வெட்கப்படும்படி செய்கிறது.

 

     என் தந்தைக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தும், சமாளித்துக் கொண்டு தைரியமாகவே காணப்பட்டார். மண வைபவங்களிலும் கலந்து கொண்டார். பல தரப்பட்ட சடங்குகளில் அவர் கலந்து கொண்டபோது, எந்த எந்த இடங்களில் உட்கார்ந்திருந்தார் என்பதைக்கூட இன்றும் என் மனக்கண் முன்பு கொண்டுவர முடியும். நான் குழந்தையா இருந்தபோதே எனக்கு விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது ஒரு நாள் நான் என் தந்தையைக் கடுமையாகக் குறை கூறுவேன் என்று அப்பொழுது நான் கனவிலும் எண்ணவில்லை. அன்று நடைபெற்றவை யாவும் சரியானவை, நியாயமானவை, மகிழ்ச்சிகரமானவை என்றே அந்த நாளில் எனக்குத் தோன்றியது.

 

     விவாகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கே இருந்தது. என் தந்தை செய்வன எல்லாம் சரியான காரியமாகவே அப்பொழுது எனக்குத் தோன்றியதால் அவற்றைப் பற்றிய நினைவு என் ஞாபகத்தில் அப்படியே இருந்து வருகின்றது. மணவறையில் நாங்கள் எவ்விதம் அமர்ந்திருந்தோம், சப்தபதிச் சடங்குகளை எவ்விதம் நிறைவேற்றினோம், புதிதாக மணமான கணவனும் மனைவியும் இனிப்பு கன்ஸாரை எவ்விதம் ஒருவருக்கொருவர் வாயில் ஊட்டிக் கொண்டோம், நாங்கள் இருவரும் எவ்விதம் கூடி வாழத் தலைப்பட்டோம் என்பனவற்றையெல்லாம் இன்றுகூட என் உள்ளத்தில் நினைத்துப் பார்க்க முடியும்.

 

     மேலும் அந்த முதல் இரவு! எதுவுமே அறியாத இரு குழந்தைகள், எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்கைச் சாகரத்தில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி என் அண்ணன் மனைவி எனக்கு முழுப் போதனையும் செய்து வைத்திருந்தார். என் மனைவியைத் தயார் செய்திருந்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி அவளை நான் கேட்டதே இல்லை; இப்பொழுது கேட்கும் உத்தேசமும் இல்லை. ஒருவரையொருவர் சந்திப்பதில் எங்களுக்கு ஒரே நடுக்கந்தான். இதனைப்பற்றி வாசகர்களுக்குச் சந்தேகமே தேவையில்லை. உண்மையிலேயே எங்களுக்கு அளவு கடந்த கூச்சம். அவளுடன் நான் எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? சொல்லிக் கொடுத்திருந்த பாடம் அந்த அளவுக்கு உதவவில்லை. ஆனால், இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்தவிதமான போதனையுமே அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான போதனைகளும் அனாவசியமானவை என்று ஆக்கிவிடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன்.

4. கணவன் அதிகாரம்

 

     எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் (எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும். அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப் பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யச் சந்தர்ப்பமும் கிடையாது.

 

     ஆனால் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால் எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவதென்றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு, அவளுடைய கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக் கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான் விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித்தேன். அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ஆனால், காரணங்களுக்காகச் சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆகவே, அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என் அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத் தண்டனையே, இத்தகைய காரியத்திற்கு உடன்பட்டு விடக் கூடிய பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க் கொண்டுதான் இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால் எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. குழந்தைத் தம்பதிகளான எங்களுக்குள், ஒருவரோடொருவர் பேசாமல் இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. என்னுடைய கட்டுத் திட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறுமில்லை என்றே நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது என்றும், தன் தோழிகளைப் போய் பார்க்க கூடாது என்றும் தடைவிதித்தால், கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள்? அவளுக்குக் கட்டுத் திட்டங்களை யெல்லாம் விதிக்க எனக்கு உரிமை இருக்கிறதென்றால், அதே போன்ற உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா? இவையெல்லாம் இன்று எனக்குத் தெளிவாகப் புரிகின்றன. ஆனால் அப்பொழுதோ கணவனுக்குரிய அதிகாரங்களைச் செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன்!

 

     என்றாலும், எங்களுடையே வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது என்று வாசகர்கள் நினைத்து விட வேண்டாம். நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன். அவள் தூய வாழ்க்கை நடத்தி, நான் கற்றவைகளை அவளும் கற்பதன் மூலம் எங்கள் இருவருடைய வாழ்க்கையும் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே என் அபிலாஷை.

 

     கஸ்தூரி பாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். சுபாவமாகவே அவள் கபடமற்ற தன்மையும், சுயேச்சை நோக்கும், விடாமுயற்சியும் உடையவள். குறைந்தபட்சம் என் விஷயத்தில் மாத்திரம் பேச வெட்கப்படுபவள். தன்னுடைய அறியாமையைக் குறித்து அவளுக்குக் கவலையே இல்லை. நான் படித்து வந்தது, தானும் அவ்வாறு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை அவளுக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகையால் நான் கொண்டிருந்த அபிலாஷையெல்லாம் என்னோடு தான் நின்றது என்று எண்ணுகிறேன். அவள் ஒருத்தி மீதே நான் என் முழு ஆசையும் வைத்திருந்தது போல அவளும் என்மீது ஆசை வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படி அவள் ஆசை வைக்காது போனாலும் வாழ்க்கை மீளாத் துன்பமாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், ஒரு பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.

 

     அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்லவே வேண்டும். பள்ளிக்கூடத்தில்கூட எனக்கு அவள் நினைப்புத்தான். இரவானதும் அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். பிரிந்திருப்பது என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில் நெடுநேரம் வரையில் ஏதேதோவெல்லாம் பேசி அவளைத் தூங்க விடமாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு மாற்றாகக் கடமையில் தீவிரமான பற்று மட்டும் எனக்கில்லாதிருந்தால், நான் நோய்வாய்ப்பட்டு அகால மரணத்தை அடைந்திருப்பேன். இல்லையானால், பிறருக்குப் பாரமாக இருந்து வாழ வேண்டியவனாகியிருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கென்றிருந்த வேலைகளை நான் செய்த தீர வேண்டியிருந்தது. யாரிடமும் பொய் சொல்லுவது என்பதோ என்னால் ஆகவே ஆகாது. கடைசியாகச் சொன்ன இந்தக் குணமே படுகுழியில் விழாமல் பல தடவைகளிலும் என்னைக் காத்தது.

 

     கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது போயிற்று. அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதனால், அவளுடைய இஷடத்திற்கு மாறாக, அதுவும் இரவில்தான் சொல்லிக் கொடுக்க முடியும். பெரியவர்கள் இருக்கும்போது அவளைச் சந்திப்பதற்கே எனக்குத் துணிவு இல்லையென்றால், அவளுடன் பேசுவது எப்படி? கத்தியவாரில் அப்பொழுது ஒரு விசித்திரமான, உபயோகமற்ற, காட்டு மிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை) இருந்தது. இப்பொழுதும்கூட அது ஒரளவுக்கு இருந்து வருகிறது. இவ்விதம் சந்தர்ப்பங்கள் சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிபப் பருவத்தில் கஸ்தூரி பாய்க்குக் கல்வி கற்பிக்க நான் செய்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெறவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். காமத் தூக்கத்திலிருந்து நான் விழித்தெழுவதற்கு முன்பே பொது வாழ்க்கையில் இறங்கி விட்டேன். ஆகையால், எனக்குப் போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட உபாத்தியாயர்களைக் கொண்டு போதிக்கவும் தவறிவிட்டேன். இதன் பயனாக, இன்று கஸ்தூரிபாய் சிரமத்தின் பேரில் சாதாரணக் கடிதங்களை எழுதிக் கொள்ளவும், எளிய குஜராத்தி மொழியைப் புரிந்து கொள்ளவுமே முடியும். நான் அவளிடம் கொண்டிருந்த அன்பு, காமக் கலப்பே இல்லாததாக இருந்திருக்குமாயின், இன்று அவள் சிறந்த படிப்பாளியாக இருப்பாள். ஏனென்றால் படிப்பதில் அவளுக்கு இருந்த வெறுப்பையும் அப்பொழுது நான் போக்கியிருக்க முடியும். பரிசுத்தமான அன்பினால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன்.

 

     காமம் மிகுந்த அன்பினால் ஏற்படும் நாசங்களிலிருந்து என்னை அநேகமாகக் காப்பாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருளுவார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. ஹிந்து சமூகத்தில் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடும் கொடிய வழக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய தீமைகளை ஒரளவுக்குக் குறைக்கக் கூடிய மற்றொரு வழக்கமும் அதனிடம் இருந்தது. இளம் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து இருக்கப் பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தைப் பருவ மனைவி, பாதிக் காலத்தைத் தன் பெற்றோரின் வீட்டிலேயே கழித்து விடுகிறாள். எங்கள் விஷயத்திலும் இப்படியே ஆயிற்று. அதாவது, எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் (அதாவது 13-இலிருந்து 18-ஆம் வயது வரையில்) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் சேர்ந்திருந்ததில்லை. ஆறு மாதகாலத்தை ஒன்றாக இருந்து கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளுடைய பெற்றோர்கள் அழைத்துப் போய் விடுவார்கள். அப்படி அழைத்துக் கொண்டு போய்விடுவது அந்தச் சமயத்தில் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் அவ்விதம் அழைத்துச் சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. பதினெட்டாவது வயதில் நான் இங்கிலாந்துக்குப் போனேன். இதனால் ஏற்பட்ட நீண்ட பிரிவு, எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது. இங்கிலாந்திருந்து நான் திரும்பி வந்த பிறகும் கூட ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில் ராஜ கோட்டுக்கும் பம்பாய்க்கும் நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு நான் சிற்றின்ப இச்சையிலிருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்.

5. உயர்நிலைப் பள்ளியில்

 

     எனக்கு மணமான போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான் என் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார். அவரைப் போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

 

     நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம் எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின் அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் முறையே நான்கு ரூபாயும் பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில் இந்த உபகாரச் சம்பளம் எல்லோருக்கும் உரியதன்று. கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே அது உண்டு. அந்த நாட்களில் நாப்பது முதல் ஐம்பது பேர் வரையில் கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.

 

     என் திறமையில் எனக்குப் பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது நன்னடத்தையை நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் என்று உபாத்தியாயர் கருதினாலோ என்னால் சகிக்க முடியாது. ஒரு தடவை அடிப்பட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. அடிப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை, நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக அழுதேன். முதல் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம் அவரிடம் அதிகப் பிரியம். அதே சமயத்தில் கட்டுத் திட்டங்களில் மிகக் கண்டிப்பானவர். குறிப்பிட்ட முறைப்படி காரியங்களைச் செய்பவர். நன்றாக போதிப்பவருங்கூட. அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத் தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. இவை கட்டாயமாக்கப் படுவதற்கு முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும் சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும் தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்.

 

     என்றாலும் தேகப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும் எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது.

 

     தேகாப்பியாச வகுப்புக்குப் போக நான் விரும்பாததற்குக் காரணம், என் தந்தைக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப் பணிவிடை செய்வேன். இந்தச் சேவை செய்வதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என் தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால் தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு. ஜிமிடம் கோரினேன். ஆனால் அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமை, அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4 மணிக்குத் தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும் பள்ளிக்கூடம் போக வேண்டும் நான் பள்ளிக்கூடம் போய் சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம். போய்விட்டார்கள். வந்திருந்தோரின் கணக்கை திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக் கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன். நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஒரணாவோ அல்லது இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச் சரியாக நினைவில்லை) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

     பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்துச் செய்யப்பட்டு விட்டதில் நான் வெற்றி அடைந்தேன் என்று இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு நான் வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு என் தந்தையே எழுதியதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப் போகவேண்டும் என்பதில் இருந்து விலக்குப் பெற்றேன்.

 

     தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்து விட்டதனால் எனக்குத் தீமை ஏற்படாது போனாலும் மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு, முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில், இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொர் இளைஞரும் இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்து கொள்ளுவதைப் போல, எழுத்துக்களையும் அது பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக் கொண்ட பிறகு எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்போது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்.

 

     என் பள்ளிக்கூட நினைவுகளில் குறிப்பிடத்தக்கவை மற்றும் இரண்டு உண்டு. என் விவாகத்தினால் எனக்கு ஒரு வருடப் படிப்பு வீணாகி விட்டது. ஒரு வகுப்புத் தாண்டி மேல் வகுப்பில் என்னைத் தூக்கிப்போட்டு எனக்கு அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர் விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும் பிள்ளைகளுக்கே இந்தச் சலுகையை அளிப்பது வழக்கம். நான் மூன்றாம் வகுப்பில் ஆறு மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு முன்னால் நடக்கும் பரீட்சைக்குப் பிறகு என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். நான்காம் வகுப்பிலிருந்து பல பாடங்கள் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. எனக்கோ திக்குத்திசை தெரியவில்லை. ஷேத்திர கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதை ஆங்கிலத்திலும் போதிக்க ஆரம்பித்து விட்டதால் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக நன்றாகவே சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்னால் விளக்கிக் கொள்ள இயலவில்லை. பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம் வகுப்புக்கே திரும்பிப் போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு வருடப் படிப்பை ஒரே வருடத்தில் படித்துவிடலாம் என்பது அதிகப்படியான ஆசை என்றும் எனக்குத் தோன்றும். ஆனால், அப்படி மூன்றாம் வகுப்புக்கே போய்விடுவது எனக்கு மாத்திரமல்ல, ஆசிரியருக்கும் அவமானம். ஏனெனில் கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான் என்று நம்பியே என்னை மேல் வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு செய்தார். இந்த இரண்டு அவமானங்களையும் குறித்து எனக்கு ஏற்பட்ட பயத்தினால் விடாப்பிடியாகப் படிக்கலானேன். அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதிமூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு அந்தப் பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்கு தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும். ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர கணிதம் எனக்குச் சுலபமானதாகவும் சுவையுள்ளதாகவும் ஆயிற்று.

 

     என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஷேத்திர கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர்; பர்ஸிய பாஷை இலகுவானது; அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கி விட்டேன்.

 

     ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம் செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பினவருமாறு சொன்னார்: "நீ ஒரு வைஷ்ணவரின் மகன் என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில் உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால் ஆன வரையில் சிரமம்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும் விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது. வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்."

 

     அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம் செய்து விட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக் கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை. அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும் பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாக படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது உணருகிறேன்.

 

     இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்த யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கும் இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.

 

     ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தாயினும், பர்ஸிய மொழிக்கும், அரபு மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று நான் கருதுவதில்லை. எனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய, அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப் படிப்பது அவசியம்.

 

6. ஒரு துக்கமான சம்பவம்

 

     உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.

 

     இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன் ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன்: "நீங்கள் கூறும் குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும் என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச் சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்."

 

     நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என் வழியே போக என்னை அனுமதித்து விட்டார்கள்.

 

     நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன். சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு. ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை. தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே விலகி இருக்க வேண்டும்; அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.

 

     ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த சமயத்திலேயே இந்த நண்பரை முதன் முதலில் நான் சந்தித்தேன். எங்கள் ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின் பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார். உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.

 

     இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள் இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் சொன்னார்: "புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால் உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப் பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம் நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள், கொப்பளங்கள் முதலியன வருவதில்லை. எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும் நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும். சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்."

 

     புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில் கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல சமயங்களில் நீண்ட விரிவான வாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார். ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும், இந்த நண்பரோடும் ஒப்பிடும் போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன். அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள்; பலசாலிகள்; அதிக தைரியசாலிகள். இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர். எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச் செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன். அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால் தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக் கூடாது?

 

     மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள் பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது என்னால் முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது. என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல; வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில் இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள் தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப் படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என் நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும், திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.

 

     குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,

     பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்,

     சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.

     காரணம் - புலால் உண்பதால்

     அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.

 

     இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும் தைரியசாலியாகவும் மாற்றும்; நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.

 

     அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும் உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும், வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும், அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை அறிந்த கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும் அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது. மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில் இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும் தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது. ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என் பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்து வைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது என்றும் என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)

 

     முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.

 

     அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.

 

     என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.

 

     இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்?

 

     இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.

 

     ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: 'மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.'

 

     நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.

 

     இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.

 

     சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.

 

     என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.

 

     அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.

8. திருட்டும் பரிகாரமும்

 

     புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம்.

 

     ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும் கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

 

     இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!

 

     ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை? சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது? என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்குமே சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.

 

     தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.

 

     நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.

 

     இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது காசுகள் திருடினேன்; வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது, இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த அண்னன் இருபத்தைந்து ரூபாய் கடன் பட்டிருந்தார். அவர் கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.

 

     சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.

 

     என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.

 

     குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.

 

     அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.

 

     முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.

 

     இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.

9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்

 

     நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை. பவுந்திர நோயினால் என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை என் தாயாரும் வீட்டு வேலைக்காரரான ஒரு கிழவரும், நானும் செய்து வந்தோம். என்னுடையன ஒரு தாதிக்குரிய வேலைகள். முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச் சேர்த்துத் தயாரிப்பது ஆகியவை அவை. ஒவ்வொரு நாள் இரவும் அவருக்குக் கால் பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னதுமோ, அல்லது அவர் தூங்கிய பிறகோதான் போய் படுத்துக் கொள்ளுவேன். இப்பணி செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில் நான் எப்பொழுதேனும் அசட்டையாக இருந்து விட்டதாக எனக்கு நினைவில்லை. எனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக பாக்கியிருக்கும் நேரத்தைப் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும் என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும் கழிப்பேன். அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.

 

     அது, என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்த்திருந்த சமயமும் ஆகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான் பள்ளி மாணவனாகையால் நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது போனது ஓர் அவமானம். படிப்பு விஷயத்தில் என் கடமையென நான் கருதியதையும், என் பெற்றோரிடம் பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய கடமை என நான் கொண்டிருந்ததையும் மறக்கும்படி காமவெறி செய்துவிட்டது, இரண்டாவது அவமானமாகும். சிரவணன் போல இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம் முதலே என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின் பாதங்களை என் கைகள் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனம் மாத்திரம் என் படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம், வைத்திய சாஸ்திரம், பகுத்தறிவு ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை கூடாது என்று தடுக்கும் ஒரு சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. என் வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியுறுவேன். தந்தைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.

 

     அதே சமயத்தில் என் தந்தையின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள் தங்கள் பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி உபாயங்களை எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர் ஆங்கில சர்ஜனும் தமது திறமையைப் பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சகிச்சை ஒன்றே கடைசியாகச் செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப வைத்தியர் இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில் சத்திர சிகிச்சை செய்வதை அவர் ஓப்புக்கொள்ளவில்லை. அந்த வைத்தியர் திறமை வாய்ந்தவர்; பிரபலமானவர். ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை. சத்திர சிகிச்சைக்கு வைத்தியர் அனுமதித்திருந்தால் புண் எளிதில் ஆறியிருக்கும் என்பது என் எண்ணம். இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும். ஆனால், கடவுள் சித்தம் வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்போது சரியான பரிகாரம் யாருக்குத் தோன்றும்? சத்திர சிகிச்சைக்குச் சேகரிக்கப்பட்டு, இப்பொழுது வீணாகப் போன பொருளுடன் என் தந்தை பம்பாயிலிருந்து திரும்பினார். இனி அதிக காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லாமல் போயிற்று. மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால் மலஜலங்களைப் படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், கடைசி நேரம் வரையில் அவர் அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக சிரமத்துடன் பிடிவாதமாகப் படுக்கையிலிருந்து எழுந்து போயே மலஜலம் கழித்து வந்தார். வைஷ்ணவ தருமத்தின் புறத் தூய்மையைப் பற்றிய விதிகள் அவ்வளவு கண்டிப்பானவை.

 

     இத்தகைய சுத்தம் முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சுத்தத்தைக் கண்டிப்பாக அனுசரிப்பதும், நோயாளிக்குக் கொஞ்சமேனும் அசௌகரியம் இல்லாமல், படுக்கையையும் கொஞ்சமும் அப்பழுக்கு இல்லாமல் வைத்துக் கொண்டு, குளிப்பது உட்பட எல்லாக் காரியங்களையும் படுக்கையிலேயே செய்யலாம் என்பதை மேனாட்டு வைத்திய சாத்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தகைய சுத்தம் வைஷ்ணவ தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது என்றே நாம் கருத வேண்டும். ஆனால், படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்தியது அப்பொழுது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது. அதை நான் வியந்தேனேயன்றி வேறுவிதமாகக் கருதவில்லை.

 

     பயங்கரமான அந்த இரவும் வந்தது. என் சிறிய தகப்பனார் அப்பொழுது ராஜ்கோட்டில் இருந்தார். என் தந்தையின் தேக நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்து அவர் ராஜ்கோட்டுக்கு வந்ததாக எனக்குக் கொஞ்சம் ஞாபகம். இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பலமான அன்பு கொண்டவர்கள். என் சிற்றப்பா, நாளெல்லாம் என் தந்தையாரின் படுக்கைக்கு அருகிலேயே உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப்போகச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே பிடிவாதமாகப் படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின் நிலை என்னவோ ஆபத்தாகவே இருந்தது. ஆனால், அது எமனின் இரவாக இருக்கும் என்று யாரும் கனவுக்கூடக் காணவில்லை.

 

     அப்பொழுது இரவு 10-30 அல்லது 11 மணி. நான் தந்தையாருக்குக் கால் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக அவ்வேலையைத் தாம் பார்த்துக் கொள்ளுவதாக என் சிறிய தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே படுக்கையறைக்குப் போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், நான் அங்கே போன பிறகு அவள் எவ்வாறு தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கெல்லாம் வேலைக்காரன் கதவைத் தட்டினான். திகிலுடன் துடித்து எழுந்தேன். "கிளம்புங்கள்; அப்பாவுக்குக் கடுமையாக இருக்கிறது" என்றான். அவருடைய தேக நிலை மிகவும் மோசமாகவே இருந்தது என்பதை நான் அறிவேன். ஆகவே, அச்சமயத்தில் கடுமையாக இருக்கிறது என்றால் அதன் பொருள் இன்னதென்பதை ஊகித்துக் கொண்டேன். படுக்கையிலிருந்து குதித்தெழுந்தேன். "என்ன விஷயம், சொல்?" என்றேன். "தந்தை காலமாகி விட்டார்" என்றான்.

 

     ஆகவே, எல்லாம் முடிந்து போயிற்று! என் கைகளைப் பிசைந்து கொண்டேன். அளவு கடந்த வெட்கத்தையும் வேதனையையும் அடைந்தேன். என் தந்தையார் இருந்த அறைக்கு ஓடினேன். காமவெறி மாத்திரம் என்னைக் குருடனாக்காமல் இருந்திருக்குமாயின் கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து பிரிந்ததால் விளைந்த சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக் கண்டேன். அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பேன்; என் கரங்களிலேயே அவர் ஆவி பிரிந்திருக்கும். இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என் சிறிய தகப்பனாருக்குக் கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால், அவருக்குக் கடைசி சேவைகளைச் செய்யும் கௌரவத்தை அவர் தேடிக்கொண்டார்! மரணம் நெருங்கிவிட்டது என்பதை என் தந்தையார் அறிந்து கொண்டு, பேனாவும் காகிதமும் கொண்டு வருமாறு சமிக்ஞை செய்திருக்கிறார். இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறார். பிறகு தம் கையில் அணிந்திருந்த காப்பையும், தங்கத் துளசி மணிமாலையையும் கழற்றித் தூரத்தில் வீசிவிட்டு, ஒரு கண நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.

 

     முந்திய ஓர் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிக் கூறினேன். என் தந்தை சாகும் தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான் விழித்திருந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்க, எனக்குக் காமவெறி ஏற்பட்டதைப் பற்றி அவமானமே அது. இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட கறை. இதை என்றுமே என்னால் அழிக்கவோ, மறக்கவோ முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு எல்லையற்ற பக்தி உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம் செய்திருப்பேனாயினும், சோதித்துப் பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க முடியாத வகையில் குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில், அதே சமயத்தில் என் மனம் காமத்தின் பலமான பிடிப்பில் இருந்து வந்தது. இதை எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பேன். ஆகையால் நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும் காமவெறியன் என்றே என்னை என்று கருதலானேன். காமத்தின் விலங்கிலிருந்து விடுபட எனக்கு அதிக காலமாயிற்று. அதை வெல்வதற்குள் நான் எத்தனையோ கடுஞ்சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

 

     எனது இரு அவமானங்களைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்பு, என் மனைவியின் வயிற்றில் பிறந்த அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று, நான்கு நாட்கள் கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும் நான் கூற வேண்டும். இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. மணமாகி இருப்பவர்களெல்லாம் என்னுடைய உதாரணத்தைக் கண்டு எச்சரிக்கை அடைவார்களாக.

 

10. சமய அறிவின் உதயம்

 

     எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான விஷயங்களைப்ப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள் அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும், அக்கம் பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் - தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்.

 

     வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்குப் பிடிக்கவே வில்லை. அதோடு ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும் கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை. இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.

 

     ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக் கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப் பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு இளம் பிராயத்திலிருந்தே ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய் விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம் இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

 

     இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும் என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப் பாராயணம் செய்து வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான் அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன் ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த பெருமையேயாகும்.

 

     என்றாலும், என்னுள் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார் எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம் கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக் குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம் செய்ததாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள். அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார். அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய் மறந்து அவர் பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய் மறந்திருக்கச் செய்துவிடுவார். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர் வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான். பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.

 

     இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப் படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத் தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான் கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும் அபிப்ராயங்கள் ஒருவருடைய சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல நல்ல நூல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.

 

     என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.

 

     இதல்லாமல் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.

 

     அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்து விட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர் 'ஞானஸ்நானம்' செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும் குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடையையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. 'மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது' என்று நான் எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின.

 

     மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்தது என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.

 

     என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார். அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை. "உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது" என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம் திருப்பதியடையவில்லை. மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

 

     மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.

 

     ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. 'ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும்' என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.

 

     அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:

'உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்

விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.

அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.

செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.

உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.

செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்

சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்

ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,

வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்

ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்

இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண

நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.'

11. இங்கிலாந்து போக ஆயத்தம்

 

     1887-ல் நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினேன். அப்பொழுது அகமதாபாத், பம்பாய் ஆகிய இரு இடங்களில் அப்பரீட்சை நடப்பது வழக்கம். நாட்டின் பொதுவான வறுமை நிலை காரணமாக இயற்கையாகவே சமீபத்தில் இருக்கும், அதிகச் செலவில்லாத இடத்திற்கே கத்தியவார் மாணவர்கள் சென்றனர். என் குடும்பத்தின் வறுமையினால் நானும் அவ்விதமே செய்ய வேண்டியதாயிற்று. ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத்துக்கு முதன் முதலாக, அதிலும் துணையின்றி, நான் பிரயாணம் செய்தது அப்பொழுதுதான்.

 

     மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறிய பின் நான் கல்லு}ரியில் சேர்ந்து தொடர்ந்து படித்து வர வேண்டும் என்று வீட்டிலிருந்த பெரியவர்கள் விரும்பினர். பவநகரில் ஒரு கல்லூரி இருந்தது, பம்பாயிலும் இருந்தது. பவநகரில் படித்தால் செலவு அதிகமாகாதாகையால் அங்கே போய்ச் சாமளதாஸ் கல்லூரியில் சேருவதென முடிவு செய்தேன். அவ்வாறே சேர்ந்தும் விட்டேன். ஆனால், அங்கே எனக்குத் திக்குத் திசை புரியவில்லை. எல்லாமே எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பது இருக்கட்டும், முதலில் பேராசிரியர்களின் பிரசங்கங்களே எனக்குப் புரியவில்லை. இது அப்பேராசிரியர்களின் குற்றமன்று. அக்கல்லூரி பேராசிரியர்கள் முதல்தரமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஆனால், நான் தான் கல்லூரிப் படிப்புக்குப் பண்படுத்தப் படாதவனாய் இருந்தேன். ஆறு மாதமானதும் வீடு திரும்பினேன்.

 

     மாவ்ஜி தவே என்ற கல்வியறிவுள்ள பிராமணர், எங்கள் குடும்பத்திற்கு நண்பரும் ஆலோசகருமாக இருந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவர். என் தந்தையார் இறந்த பிறகும் கூட அவர் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தார். விடுமுறைக்கு நான் ஊர் போயிருந்த போது ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தாயாருடனும் என் தமையனாருடனும் பேசிக்கொண்டிருந்தபோது என் படிப்பைப் பற்றியும் விசாரித்தார். நான் சாமளதாஸ் கல்லூரியில் படிக்கிறேன் என்பதை அறிந்ததும் அவர் பின்வருமாறு கூறினார்: ‘இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டது. தக்க படிப்பு இல்லாமல் உங்களில் யாரும் உங்கள் தந்தையின் பதவிக்கு வர முடியாது. இப்பொழுது இப்பையன் இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால், அப்பதவிக்கு இவனைத் தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவன் பி.ஏ. பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாகவது ஆகும். அப்படிப் பெறும் பட்டம், இவனை ஓர் அறுபது ரூபாய்ப் பதவிக்குத்தான் தகுதியுடையவனாக்குமேயின்றித் திவான் பதவிக்கு தகுதியுடையவானாக்காது. என் மகனைப் போல் இவனும் சட்டம் படித்துத் தேர்ச்சி பெறவும் அதிக காலமாகும். அதற்குள் திவான் பதவியைப் பெற முயலும் வக்கீல்கள் எராளமாகி விடுவார்கள். இதையெல்லாம்விட இவனை இங்கிலாந்துக்கு அனுப்புவது எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றுகிறது. பாரிஸ்டராவது மிக எளிது என்று என் மகன் கேவல்ராம் கூறுகிறான். மூன்று வருடங்களில் இவன் திரும்பி விடலாம், செலவும் நான்கு முதல் ஐயாயிரத்திற்கு மேல் ஆகாது. இங்கிலாந்திலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கும் அந்தப் பாரிஸ்டரைப் பாருங்கள், எவ்வளவு நாகரிகமாக அவன் வாழ்க்கை நடத்துகிறான்! கேட்டால் போதும், அவனுக்குத் திவான் பதவி கிடைத்துவிடும். இவ்வருடமே மோகன்தாஸை இங்கிலாந்துக்குக் கட்டாயம் நீங்கள் அனுப்பிவிடவேண்டும் என்றே நான் கூறுவேன். இங்கிலாந்தில் கேவல்ராமுக்கு அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் அறிமுகக் கடிதங்கள் கொடுப்பான். மோகன்தாஸ் அங்கே சுகமாக இருந்துவிட்டு வரலாம்!’

 

     மாவ்ஜி தவேயை, ஜோஷிஜி என்று சொல்லுவது வழக்கம் அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, “இங்கே படிப்பதைவிட இங்கிலாந்துக்குப் போகவே நீ விரும்புகிறாயல்லவா?” என்று முழு நம்பிக்கையுடன் கேட்டார். இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. கஷ்டமான கல்லூரிப் படிப்புடன் நான் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகையால், இந்த யோசனையை உடனே ஏற்றுக் கொண்டு, “என்னை எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது” என்றேன். சீக்கிரத்தில் பரீட்சைகளில் தேறிவிடுவது என்பது எளிதான வேலையே அல்ல. எனவே, “என்னை வைத்தியத் தொழில் பயிற்சிக்கு அனுப்பக் கூடாதா?” என்று கேட்டேன்.

 

     என் சகோதரர் உடனே குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்: “அது தந்தைக்குப் பிடிப்பதேயில்லை. அவர் உன்னை மனத்தில் வைத்துக் கொண்டே, ‘பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்குக் தகாது’ என்று சொன்னார். நீ வக்கீல் ஆக வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார்.”

 

     ஜோஷிஜி இடைமறித்துத் கூறியதாவது: “காந்திஜியைப் போல் வைத்தியத் தொழில் கூடாது என்பவனல்ல நான். நமது சாத்திரங்களும் அதற்கு விரோதமாகக் கூறவில்லை. ஆனால், ஒரு வைத்தியப் பட்டம் உன்னைத் திவான் ஆக்கிவிடாது. நீ திவானாக வேண்டும்; சாத்தியமானால் இன்னும் பெரிய பதவியையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி ஆனால் தான் உன்னுடைய பெரிய குடும்பத்தை நீ காப்பாற்ற முடியும். காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. நாளுக்கு நாள் கஷ்டமாகிக் கொண்டும் வருகிறது. ஆகையால், மிகப் புத்திசாலித்தனமான காரியம் பாரிஸ்டராகி விடுவதுதான்!” என் தாயாரைப் பார்த்து அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் புறப்பட வேண்டும். நான் கூறியதை நன்றாக யோசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நான் திரும்ப இங்கே வரும்போது, இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் குறித்து நான் அறியலாம் என்று எதிர் பார்க்கிறேன். ஏதாவது ஒருவகையில் நான் உதவி செய்ய முடியுமென்றால் நிச்சயமாக எனக்குத் தெரிவியுங்கள்.”

 

     ஜோஷிஜி போய்விட்டார். நானும் மனக்கோட்டைகள் கட்டலானேன்.

 

     என் மூத்த சகோதரரின் மனம் மிகப் பரபரப்படைத்து விட்டது. என்னை அனுப்புவதற்கு வேண்டிய பணத்திற்கெல்லாம் என்ன செய்வது? என்னைப் போன்ற ஓர் இளைஞனை நம்பித் தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?

 

     என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம் ஆகிவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே, எனக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முயன்றார். “இப்பொழுது சிறிய தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் இவ்விஷயத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார்.

 

     என் சகோதரருக்கு இன்னும் ஒரு யோசனை தேன்றிற்று. அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்: “போர்பந்தர் சமஸ்தானத்தினிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஸ்ரீ லேலி அதற்க நிர்வாக அதிகாரி. நம் குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. நமது சிறிய தகப்பானாரிடம் அவர் பிரியமாக இருக்கிறார். இங்கிலாந்தில் நீ படிப்பதற்காக உனக்கு ஏதாவது சமஸ்தான உதவி அளிக்க அவர் சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”

 

     இந்த யோசனை எனக்கும் பிடித்தமானாதாக இருந்தது. போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்கு தயாரானேன். அந்தக் காலத்தில் ரயில் கிடையாது. மாட்டு வண்டியில் ஐந்து நாட்கள் போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே கூறியிருக்கிறேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையே என்னை முற்றும் அப்பொழுது ஆட்கொண்டிருந்ததால் அதன் முன்னால் என் பயங்காளித்தனமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. தோராஜி வரைக்கும் ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டேன் போர்பந்தருக்கு ஒரு நாள் முன்னாடியே போய்விட வேண்டும் என்பதற்காகத் தோராஜியில் ஓர் ஒட்டகத்தை அமர்த்தினேன். ஒட்டகத்தில் நான் சவாரி செய்தது அதுதான் முதல் முறை.

 

     கடைசியாகப் போர்பந்தர் போய்ச் சேர்ந்தேன். என் சிறிய தகப்பனாரை சாஷ்டாங்கமாய் வணங்கி எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். அதைப்பற்றி அவர் யோசித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்: “மத தருமம் கெடாமல் ஒருவர் இங்கிலாந்தில் இருப்பது சாத்தியம் என்பது எனக்கு நிச்சயமில்லை. நான் கேள்விப்பட்டிருப்பவைகளைக் கொண்டு பார்த்தால் எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தப் பெரிய பாரிஸ்டர்களை நான் பார்க்கும்போது இவர்கள் வாழ்க்கைக்கும் ஐரோப்பியர் வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. இவர்கள் எந்த உணவையும் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வாயில் சுருட்டு இல்லாமல் இருப்பதே இல்லை. வெட்கமில்லாமல் ஆங்கிலேயரைப் போலவே உடை உடுத்துகிறார்கள். இவையெல்லாம் தம் குடும்ப பாரம்பரியத்திற்குப் பொருந்தாதவை. சீக்கிரத்தில் நான் க்ஷேத்திர யாத்திரைக்குப் புறப்படப் போகிறேன். இன்னும் பல வருடங்களுக்கு நான் உயிரோடிருக்கப் போவதில்லை. மரணத்தின் தருவாயில் இருக்கும் நான், இங்கிலாந்துக்குப் போகவும், கடல் கடக்கவும் உனக்கு அனுமதி கொடுக்க எப்படித் துணிவேன்? ஆனால், உன் வழியில் குறுக்கிடமாட்டேன். இதற்கு முக்கியமாக வேண்டியது உன் தாயாரின் அனுமதி. அவர் அனுமதி கொடுத்துவிட்டால், சுகமாகப் போய் வா. இதில் நான் குறுக்கிடமாட்டேன் என்று அவருக்குத் தெரிவி. என் ஆசி உனக்கு எப்பொழுதும் இருக்கும்.”

 

     “இதைவிட அதிகமாக எதையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்றேன். “என் தாயாரின் சம்மதத்தைப் பெற முயல்கிறேன். ஸ்ரீ லேலிக்கு என்னைப் பற்றி நீங்கள் சிபாரிசு செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.

 

     “அதை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றார் அவர். “ஆனால் அவர் நல்லவர். உனது உறவு முறையைத் தெரிவித்து, அவரை நீ பார்க்க விரும்புவதாகக் கேள்; நிச்சயமாகப் பார்ப்பார். உனக்கு உதவி செய்யவும் கூடும்” என்றார்.

 

     என் சிறிய தகப்பனார் எனக்கு ஏன் சிபாரிசுக் கடிதம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி என்னால் கூறமுடியாது. நான் இங்கிலாந்துக்குப் போவது மத விரோதமான காரியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததால் நான் போவதில் நேரடியாக ஒத்துழைக்க அவர் தயங்கினார் என்று ஏதோ கொஞ்சம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

 

     ஸ்ரீ லேலிக்கு எழுதினேன். தமது வீட்டில் வந்து பார்க்கும்படி அவர் அறிவித்தார். மாடிப் படிக்கட்டு ஏறிக்கொண்டிருந்தபோதே அவர் என்னைப் பார்த்தார். “முதலில் நீ பி.ஏ. பாஸ் செய். பிறகு வந்து என்னைப் பார். இப்பொழுது உனக்கு எந்த உதவியும் செய்வதற்கில்லை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் படியேறிப் போய்விட்டார். அவரைச் சந்திப்பதற்காக எவ்வளவோ விரிவான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்திருந்தேன். அவரிடம் பேசச் சில வாக்கியங்களைக் கவனமாகக் கற்று வைத்திருந்தேன். தாழ்ந்து தலை வணங்கி, இரு கரங்களாலும் சலாம் போட்டேன் ஆனால், அவையெல்லாம் ஒன்றுக்கும் பயன்படவில்லை.

 

     பிறகு என் மனைவியின் நகைகளைப்பற்றி நினைத்தேன். என் மூத்த அண்ணன் நினைவும் வந்தது. அவரிடம் எனக்கு முழு நம்பிக்கையும் உண்டு. அவர் தாராளமான மனமுடையவர். என்னைத் தம் மகன் போலவே கருதி அன்பு கொண்டிருந்தார்.

 

     போர்பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குத் திரும்பி, அங்கே நடந்ததையெல்லாம் தெரிவித்தேன். ஜோஷிஜியைக் கலந்து ஆலோசித்தேன். அவரோ, அவசியமானால் கடன் வாங்கும் படியும் யோசனை கூறினார். என் மனைவியின் நகைகளை விற்றால் இராண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் கிடைக்கும். அவற்றை விற்றுவிடும் யோசனையையும் கூறினேன். எப்படியும் பணம் தேடிவிடுவதாக என் சகோதரர் வாக்களித்தார்.

 

     என் தாயார் மாத்திரம் இன்னும் என்னை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பாமலேயே இருந்தார். நுட்பமாக எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டிருந்தார். வாலிபர்கள் இங்கிலாந்துக்குப் போய்க் கெட்டு விடுகிறார்கள் என்று யாரோ ஒருவர் அவருக்குச் சொல்லிவிட்டார். இன்னும் யாரோ ஒருவர், ‘அவர்கள் மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்’ என்று சொல்லிவிட்டார். ‘குடிக்காமல் அங்கே அவர்களால் இருக்கவே முடியாது’ என்று இன்னும் ஒருவர் சொல்லியிருந்தார். “இவைகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தாயார் என்னைக் கேட்டார். நான், “என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். ‘அவைகளில் எதையும் தீண்டுவதில்லை’ என்று உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். அங்கே அப்படிப்பட்ட அபாயம் ஏதாவது இருந்தால் ஜோஷிஜி என்னைப் போக விடுவாரா?” என்றேன்.

 

     “உன்னை நானே நம்பலாம். ஆனால் நீ தொலைவான நாட்டில் இருக்கும்போது எப்படி நம்புவது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது என்பதே புரியவில்லை. பேச்சர்ஜி சுவாமியைக் கேட்கிறேன்” என்றார், அன்னை.

 

     பேச்சர்ஜி சுவாமி முன்பு மோத் வணிகர். இப்பொழுது ஜைன சந்நியாசியாகி விட்டார். ஜோஷிஜியைப் போல் இவரும் குடும்பத்திற்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறி வருவார். அவர் எனக்கு உதவினார். “மூன்று விரதங்களை அவன் அனுசரிப்பதாக அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறேன். பிறகு அவனைப் போகச் செல்லலாம்” என்றார். அவர் என்னிடம் அப்படியே பிரமாணம் வாங்கினார். ‘மதுபானம், பெண், மாமிசம் ஆகியவைகளைத் தொடுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். உடனே என் அன்னை அனுமதி தந்தார்.

 

     என்னைக் கௌரவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு பிரிவு உபசாரம் நடத்தினர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன், இங்கிலாந்துக்குப் போகிறான் என்றால் அது சாமானிய விசயமன்று! நன்றி தெரிவிப்பதற்கென்று சில வார்த்தைகள் எழுதி வைத்திருந்தேன். அதைப் படிக்க நான் எழுந்தபோது எனக்கு எவ்விதம் தலை சுற்றியது. உடம்பெல்லாம் எவ்விதம் நடுங்கியது என்பது இன்னும் நினைவிருக்கிறது.

 

     எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். ராஜ்கோட்டிலிருந்து நான் பம்பாய்க்குச் சென்றது இதுவே முதல் முறை. என் சகோதரரும் என்னுடன் வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதற்குள் எத்தனையோ விபத்துக்களும், சமாளித்தாக வேண்டிய கஷ்டங்களும் பம்பாயில் காத்திருந்தன.

12. சாதிக் கட்டுப்பாடு

 

     பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு, என் தாயாரின் அனுமதியையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். அங்கே போய்ச் சேர்ந்ததும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்து மகாசமுத்திரத்தில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்றும், நான் இப்பொழுதுதான் முதல் முறையாகக் கப்பல் பிரயாணம் செய்வதால் நவம்பர் மாதம் வரையில் நான் கப்பலேற அனுமதிக்கக் கூடாது என்றும் நண்பர்கள் என் சகோதரரிடம் கூறினர். இப்பொழுதுதான் புயல் காற்றினால் ஒரு கப்பல் மூழ்கி விட்டது என்றும் யாரோ சொன்னார்கள். இதனால் என் சகோதரருக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. உடனே கப்பல் பிரயாணம் செய்ய என்னை அனுமதிக்கும் அபாயத்திற்கு உடன்பட அவர் மறுத்து விட்டார். என்னைப் பம்பாயில் ஒரு நண்பரிடம் விட்டுவிட்டுத் தம் வேலைகளைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார். என் பிரயாணச் செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை ஒரு மைத்துனரிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு, எனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு, சில நண்பர்களிடம் சொல்லிப் போனார்.

 

     பம்பாயில் நாளை எண்ணிக்கொண்டே காலம் கழித்தேன். இங்கிலாந்துக்குப் போகப்போவதைப் பற்றி ஓயாமல் கனவு கண்டு கொண்டிருந்தேன்.

 

     இதற்கு மத்தியில் நான் வெளிநாட்டுக்குப் போகப் போவதைக் குறித்து என் சாதியினர் பரபரப்படைந்தார்கள். மோத் வணிக சாதியைச் சேர்ந்த யாரும் இதுவரை இங்கிலாந்துக்குப் போனதில்லை; நான் போகத் துணிந்தால், எனக்குத் தக்க சிட்சை விதிக்க வேண்டும்! சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டினர். அதன் முன்னால் ஆஜராகுமாறு எனக்குக் கட்டளை அனுப்பினார். நானும் போனேன். திடீரென்று எனக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது என்பது எனக்கே தெரியவில்லை. எதற்கும் அஞ்சாமல், கொஞ்சமும் தயக்கமின்றிக் கூட்டத்திற்கு முன்னால் போனேன். சாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராயிருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார்:

 

     “இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களைக் கைவிடாமல் அங்கே வசிப்பதே சாத்தியமில்லை என்று நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். ஐரோப்பியருடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் வேண்டிவரும்!”

 

     இதற்கு நான் சொன்ன பதிலாவது: “இங்கிலாந்துக்குச் செல்வது நம் மதத்திற்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேற்கொண்டு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப் பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”

 

     இதற்குச் சேத், “அங்கே நமது மதாசாரங்களைக் கடைப்பிடித்து நடப்பது சாத்தியமே அல்ல என்று நாங்கள் சொல்லுகிறோம். எனக்கும் உன் தந்தைக்கும் இருந்த உறவு, உனக்குத் தெரியும். ஆகவே, நான் கூறும் புத்திமதியை நீ கேட்க வேண்டும்” என்றார்.

 

     “அந்த உறவுகளையெல்லாம் நான் அறிவேன். நீங்கள் எனக்குப் பிதாவைப் போன்றவர். ஆனால் இதில் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்து விட்டதை நான் மாற்றுவதற்கில்லை. என் தந்தையின் நண்பரும் ஆலோசகரமான கற்றரிந்த ஒரு பிராமணர், நான் இங்கிலாந்து செல்வதில் எந்தவித ஆட்சேபமும் இருப்பதாகச் சொல்லவில்லை. என் தாயாரும், சகோதரரும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்” என்றேன்.

 

     “என்றாலும், சாதிக்கூட்டத்தின் கட்டளையை நீ மீறி நடக்கப் போகிறாயா?”

 

     “எனக்கு வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் சாதி தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”

 

     இதைக் கேட்டதும் சேத்துக்குக் கோபம் வந்துவிட்டது. கடுமையாகப் பேசினார். அதற்கெல்லாம் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். எனவே, சேத் வருமாறு உத்தரவு பிறப்பித்தார். “இன்று முதல் இப்பையனை சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக நடத்த வேண்டும். இவனுக்கு யார் உதவி செய்தாலும், இவனை வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச் சென்றாலும். அவர் ஒரு ரூபாய் நான்கணா அபராதம் விதிக்கப் படுவார்!”

 

     இந்த உத்தரவைக் கேட்டு நான் கலங்கிடவில்லை. சேத்திடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதை என் சகோதரர் எப்படி ஏற்பாரோ என்றே பயந்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக, அவர் உறுதியுடன் இருந்தார். சேத்தின் கட்டளை எதுவானாலும் நான் போவதைத் தாம் அனுமதிப்பதாகக் கடிதம் எழுதி எனக்கு உறுதி கூறினார்.

 

     என்றாலும், கப்பல் ஏறிவிடவேண்டும் என்ற என் ஆர்வத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. என் சகோதரரைக் கட்டாயப்படுத்தி அவர் மனத்தை மாற்றிவிடுவதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் என்னவாகும்? எதிர்பாராதது ஏதோ நிகழ்ந்து விடுகிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது? எனக்குள்ள சங்கடத்தைக் குறித்து இப்படியெல்லாம் எண்ணி நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாரிஸ்டர் ஆவதற்காக ஜுனாகத் வக்கீல் ஒருவர், செப்டம்பர் 4-ஆம் தேதி புறப்படும் கப்பலில் இங்கிலாந்துக்குப் போகிறார் என்று கேள்வியுற்றேன். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறு என் சகோதரர் சொல்லிப் போயிருந்த நண்பர்களைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினேன். அத்தகைய துணையுடன் போவதற்கு வாய்த்த சந்தர்ப்பத்தை இழந்து விடக்கூடாது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். காலம் தாழ்த்துவதற்கே இல்லை. அனுமதியளிக்குமாறு என் சகோதரருக்குத் தந்தி கொடுத்தேன். அவரும் அனுமதித்தார். பணத்தைக் கொடுக்கும்படி என் மைத்துனனைக் கேட்டேன். ஆனால் , அவரோ, சேத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, தாம் சாதிப் பிரஷ்டன் ஆக முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு நான் குடும்ப நண்பர் ஒருவரை நாடினேன். கப்பல் கட்டணத்துக்கும் சில்லரைச் செலவுக்கும் வேண்டிய அளவுக்கு எனக்குப் பண உதவி செய்யுமாறும் அக்கடனை என் சகோதரரிடமிருந்து வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டேன். இந்த நண்பர் என் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டதோடு என்னை உற்காசப்படுத்தியும் அனுப்பினார். அவரிடம் மிக்க நன்றியுடையவனானேன். அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு உடனே கப்பல் டிக்கெட் வாங்கினேன். பின்பு பிரயாணத்திற்கு எனக்கு வேண்டியவைகளைத் தயாரிக்கலானேன். இவ்விஷயத்தில் அனுபவம் வாய்ந்த மற்றொரு நண்பர் இருந்தார். உடைகளையும், மற்றவைகளையும் அவர் தயாரித்துக் கொடுத்தார். உடைகளில் சில எனக்குப் பிடித்த மாயிருந்தன, சில எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கழுத்தில் டை கட்டிக்கொள்ளுவதில் பின்னால் நான் பெருமகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அப்பொழுது அது எனக்கு வெறுப்பாயிருந்தது. குட்டைச் சட்டை அணிவது, வெட்கத்தை விட்டும் செய்யும் காரியம் என்று கருதினேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆர்வமே என்னிடம் மேலோங்கி நின்றதால், அதன் எதிரே இந்த வெறுப்பெல்லாம் மேலோங்கவில்லை. கப்பலில் ஜுனாகத் வக்கீல் ஸ்ரீ திரியம்பக்ராய் மஜ்முதார் செல்ல இருந்த அதே அறையிலேயே நண்பர்கள் எனக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறினர். அவர் அனுபவமுள்ளவர், நல்ல வயது வந்தவர், உலகமறிந்தவர், நானோ, உலக அனுபவமே இல்லாத பதினெட்டு வயதுச் சிறுவன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஸ்ரீ மஜ்முதார் என் நண்பர்களுக்குக் கூறினார்.

  கடைசியாகச் செப்டம்பர், 4-ஆம் தேதி பம்பாயிலிருந்து நான் கப்பலில் புறப்பட்டேன்.

 

 

13. முடிவாக லண்டனில்

 

கப்பல் பிரயாணத்தில் எனக்கு மயக்கம் எதுவும் வரவே இல்லை. ஆனால், நாளாக ஆக எனக்கு அலுப்புத்தான் அதிகமாக இருந்தது. பிரயாணிகளின் சாப்பாட்டு வசதிக்காரியஸ்தரிடம் பேசக்கூட எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசி எனக்குப் பழக்கமே இல்லை. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்பில் ஸ்ரீ மஜ்முதாரைத் தவிர மற்றெல்லோரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. அவர்கள் என்னிடம் வந்து ஏதேனும் பேசினால், அவர்கள் சொல்லுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருந்தது. புரிந்து கொண்டாலும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பேசுவதற்கு முன்னால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மனத்திற்குள் நான் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. கத்தியையும் முள்ளையும் கொண்டு எடுத்துச் சாப்பிடவும் எனக்குத் தெரியாது. பரிமாறப் போகும் உணவு வகையைக் குறிப்பிடும் சீட்டில் கண்டவைகளில் மாமிசம் கலவாத பண்டம் எது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அப்பொழுது எனக்குத் தைரியமில்லை. ஆகையால், சாப்பாட்டு அறைக்குச் சென்று உட்கார்ந்து நான் சாப்பிடவே இல்லை. என் அறையிலேயே சாப்பிட்டு விடுவேன். நான் சாப்பிட்டதெல்லாம் பெரும்பாலும் நான் உடன்கொண்டு வந்திருந்த மிட்டாயும் பழங்களுமே. ஸ்ரீ மஜ்முதாருக்கு இத்தகைய சங்கடம் எதுவுமே தோன்றவில்லை. அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழகிக் கொண்டிருந்தார். நாளெல்லாம் நான் அறைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடப்பேன். மேல் தளத்தில் அதிகம் பேர் இல்லாதபோதுதான் அங்கே போகத் துணிவேன். ஆனால் ஸ்ரீ மஜ்முதாரோ மேல் தளத்திற்கு அடிக்கடி போய் உலாவுவார். பிரயாணிகளுடன் கூடிப் பழகி, அவர்களுடன் தாராளமாகப் பேசும்படி அவர் எனக்கு அடிக்கடி சொல்லுவார். வக்கீல்களுக்குப் பேச்சுச் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என்பார். வக்கீல் தொழிலில் தமது அனுபவங்களையும் எடுத்துக் கூறுவார். ஓர் அந்நிய மொழியில் பேசும்போது தவறு ஏற்படுவது சகஜம் என்றும், ஆகையால் அதைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயத்திலேயே பேசும்படியாகவும் எனக்கு அவர் புத்திமதி கூறினார். ஆனால், அவர் என்ன சொல்லியும் எனக்கு இருந்த கூச்சத்தை மாத்திரம் போக்கடிக்கவே முடியவில்லை.

 

     ஆங்கிலப் பிராணி ஒருவர், என்மீது பிரியம் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுத்தார். அவர் என்னை விட மூத்தவர். நான் என்ன சாப்பிட்டேன், நான் யார், நான் எங்கே போகிறேன், நான் இப்படிக் கூச்சப்படுவது ஏன் என்றெல்லாம் அவர் என்னை விசாரித்தார். சாப்பாட்டு அறைக்கு வந்து எல்லோருடனும் சாப்பிடும்படியும் சொன்னார். மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நான் பிடிவாதமாகக் கூறியதைக் கேட்டுச் சிரித்தார். நாங்கள் செங்கடலை அடைந்ததும் அவர் நட்பும் முறையில் பின்வருமாறு கூறினார்: “அதெல்லாம் இதுவரை மிகவும் சரி. ஆனால், பிஸ்கே குடாக்கடல் போய்ச் சேர்ந்ததும் உம்முடைய தீர்மானத்தையெல்லாம் மாற்றிக் கொண்டுவிட வேண்டியதுதான். இங்கிலாந்தில் குளிர் அதிகமாகையால் மாமிசம் சாப்பிடாமல் அங்கே யாருமே உயிர் வாழ முடியாது. ”

 

     “அங்கும் மாமிசம் சாப்பிடாமல் மனிதர் இருக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

 

     “அதெல்லாம் வெறும் கதை. இதை நிச்சயமாக நம்பும். புலால் உண்ணாமல் அங்கே இருப்பர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இல்லை. நான் குடிக்கிறேன். ஆனால் உம்மையும் குடிக்குமாறு நான் சொல்லவில்லையல்லவா ? மாமிசம் சாப்பிடாமல் அங்கே உயிர் வாழ முடியாதாகையால் நீர் புலால் உண்டே ஆக வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

 

     “உங்கள் அன்பான புத்திமதிக்கு என் நன்றி, ஆனால், புலாலைத் தீண்டுவதில்லை என்று என் அன்னைக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் அதைத் தின்னுவது என்பதை நான் நினைப்பதற்கும் இல்லை. அதைத் தின்னாமல் இருப்பது சாத்தியமில்லை என்று கண்டால் நான் இந்தியாவுக்கு திரும்பி விடுவேனேயன்றி அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக மாமிசம் தின்னமாட்டேன்” என்றேன்.

 

     பிஸ்கே குடாக்கடலை அடைந்தோம். மாமிசம் திண்பதும் குடிப்பதும் அவசியம் என்ற உணர்ச்சி அப்பொழுதும் எனக்கு ஏற்படவில்லை. மாமிசமே சாப்பிடாமல் இருந்ததற்கு அத்தாட்சிப் பத்திரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்கள். ஆதலால், அத்தகைய அத்தாட்சி ஒன்று எழுதித் தருமாறு அந்த ஆங்கில நண்பரிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைக் கொஞ்ச காலம் பத்திரமாக வைத்தும் இருந்தேன். ஆனால் மாமிசம் சாப்பிடுகிறவர்களும் அத்தகயை அத்தாட்சியைப் பெற்றுவிட முடியும் என்பதை நான் பின்னால் கண்டது அத்தாட்சி பத்திர விஷயத்தில் எனக்கிருந்த மோகம் போய் விட்டது. என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையென்றால் இவ்விஷயத்தில் அத்தாட்சிப் பத்திரம் வைத்திருந்துதான் என்ன பயன்?

 

     முடிவாக, சௌத்தாம்டன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். அன்று சனிக்கிழமை என்றே எனக்கு ஞாபகம். கப்பலில் இருந்த போது கறுப்பு உடை தரித்திருந்தேன். என் நண்பர்கள் தயாரித்துக் கொடுத்த வெள்ளைக் கம்பளி உடையைக் கப்பலிருந்து இறங்கும்போது போட்டுக்கொள்ளுவது என்று வைத்திருந்தேன். இறங்கம்போது வெள்ளை உடை அணிந்தால் அழகாயிருக்கும் என்று நினைத்தேன்.

 

     ஆகவே, வெள்ளை கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு இறங்கினேன். அப்பொழுது செப்டம்பர் மாதக் கடைசி, அத்தகைய உடை உடுத்தியவன் நான் ஒருவனே என்பதைக் கண்டேன். மற்றவர்களெல்லாம் கிரிண்ட்லே கம்பெனியின் ஏஜெண்டிடம் தங்கள் சாமான்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு இறங்கினார்கள். நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று என் சாமான்களை - சாவி உட்பட அந்த ஏஜெண்டிடம் ஒப்பித்தேன்.

 

     என்னிடம் நான்கு அறிமுகக் கடிதங்கள் இருந்தன. டாக்டர் பி.ஜே. மேத்தா, ஸ்ரீ தளபத்ராம் சுக்லா, ராஜகுமாரர் ரஞ்சித் சிங் ஜி, தாதாபாய் ஆகிய நால்வருக்குமே அக்கடிதங்கள். லண்டனில் விக்டோரியா ஹோட்டலில் போய்த் தங்கும்படி கப்பலில் யாரோ ஒருவர் சொன்னார். அதன்படி நானும் ஸ்ரீ மஜ்முதாரும் அங்கே போனோம். நான் ஒருவனே வெள்ளையுடையுடன் இருப்பது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், என் சாமான்களைக் கிரிண்ட்லே கம்பெனியார் அதற்கு மறுநாளே கொண்டுவந்து சேர்பார்கள் என்று ஹோட்டலில் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

 

     டாக்டர் மேத்தாவுக்கு சௌத்தாம்டனிலிருந்து தந்தி கொடுத்திருந்தேன். அன்றிரவு எட்டு மணிக்கு அவர் என்னைப் பார்க்க வந்தார். மிக்க அன்புடன் எனக்கு முகமன் கூறினார். நான் வெள்ளை கம்பளி உடை தரித்திருப்பதைப் பார்த்துச் சிரித்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உயரத் தொப்பியை எடுத்தேன். அது அவ்வளவு மிருதுவாக இருக்கிறது என்பதை அறிய அதைத் தடவி பார்த்தேன். தெரியாமல் எதிர்ப்புறமாகத் தடவி விட்டேன். அது ஒரு பிராணியின் மிருதுவான ரோமத்தால் ஆனது. எனவே, நான் தடவியதனால் அந்த ரோமமெல்லாம் கலைந்து விட்டது. நான் செய்ததையெல்லாம் ஒரு மாதிரி கோபத்துடன் டாக்டர் மேத்தா பார்த்துவிட்டு என்னைத் தடுத்தார். ஆனால் , விஷயம் நடந்தது நடந்துவிட்டது. இச்சம்பவம் வருங்காலத்திற்கு எனக்கு ஓர் எச்சரிக்கையாயிற்று. ஐரோப்பிய மரியாதைச் சம்பிரதாயங்களில் நான் கற்ற முதல் பாடம் இது. அந்தச் சம்பிரதாய விவரங்களைப் பற்றி டாக்டர் மேத்தா வேடிக்கையாகவே எனக்குப் பாடம் கற்பித்தார். “பிறருடைய சாமான்களைத் தொடாதீர்” என்றார். “ஒருவர் முதன்முதலில் அறிமுகமானதும் இந்தியாவில் கேட்பதுபோல் அவரிடம் கேள்விகளெல்லாம் போடாதேயும்; இரைந்து பேசக்கூடாது; பேசிக் கொண்டிருக்கையில் இந்தியாவில் நாம் கூப்பிடுவதைப் போல் யாரையும், ‘ஸார்’ என்று கூப்பிடக்கூடாது. வேலைக்காரர்களும் கீழிருப்பவர்களும் மாத்திரமே அப்படிக் கூப்பிடுவார்கள்” என்றார். இப்படியெல்லாம் பல விஷயங்களை எனக்கு போதித்தார். ஹோட்டலில் தங்கினால் செலவு அதிகமாகும் என்றும், தனிப்பட்ட ஒரு குடும்பத்தினருடன் தங்கியிருப்பதே நல்லது என்றும் சொன்னார். அதைப் பற்றித் திங்கட்கிழமை யோசிப்பதென்று ஒத்திவைத்தோம்.

 

     ஹோட்டல் வாசம் - எனக்கும் சரி, ஸ்ரீ மஜ்முதாருக்கும் சரி, சங்கடமானதாக இருந்தது. அதோடு, செலவும் அதிகமாயிற்று. மால்டாவிலிருந்து எங்களுடன் கப்பலில் வந்த ஒரு சிந்திக்காரர் ஸ்ரீ மஜ்முதாருக்கு நண்பரானார். லண்டன் அவருக்குப் புதிதல்ல. ஆகவே, நாங்கள் தங்குவதற்கு அறை பார்த்துத் தருவதாக அவர் சொன்னார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். திங்கட்கிழமை எங்கள் சாமான்கள் வந்த சேர்ந்ததும் ஹோட்டல் கணக்கைத் தீர்த்து விட்டு, சிந்தி நண்பர் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்திய அறைகளில் இருக்கப் போய்விட்டோம். ஹோட்டலுக்கு நான் 3 பவுன் கொடுக்கவேண்டி வந்தது! அந்தத் தொகையைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. செலவு இவ்வளவு அதிகமாக இருந்ததே ஒழிய, அங்கே நான் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன் என்றே சொல்ல வேண்டும்! அங்கே கொடுத்த சாப்பாட்டில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஓர் உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்று வேறொன்றைக் கொண்டுவரச் சொன்னால், இரண்டுக்கும் சேர்த்துப் பணம் கொடுக்க வேண்டி வந்தது. இதெல்லாம் இப்படி இருக்க உண்மை என்னவென்றால் பம்பாயிலிருந்து கொண்டு வந்த ஆகாரதிகளைக் கொண்டே நான் காலம் கழிக்கலானேன்.

 

 

     புது அறையிலும் எனக்கு மன நிம்மதியே இல்லை. வீட்டு நினைவும், நாட்டு நினைவுமே எனக்கு இடைவிடாமல் இருந்து கொண்டிருந்தன. என் அன்னையின் அன்பு அடிக்கடி என் நினைவுக்கு வரும். இரவில் கண்ணீர் பெருகி, கன்னங்களில் அருவியாக வழியும். வீட்டைப் பற்றிய எல்லாவித நினைவுகளும் வந்துவிடவே தூங்கவே முடியவில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும் வழியில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொள்ள முடிந்திருந்தாலும் அதனாலும் ஒரு பயனும் இராது. ஏனெனில், எனக்கு எதுவும் ஆறுதல் அளிக்க முடியாது என்பதை நான் அறிவேன். மக்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அவர்களுடைய வீடுகள் எல்லாமே விசித்திரமாக இருந்தன. ஆங்கில மரியாதை முறைகள் விஷயத்திலோ எனக்கு எதுவுமே தெரியாது. ஆகையால், எங்கே தவறு செய்துவிடுவேனோ என்பதற்காக எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியிருந்தது. சைவ உணவு விரதமோ அதிகப்படியானதோர் அசௌகரியம். நான் சாப்பிடக்கூடிய ஆகார வகைகளும் ருசியற்றவைகளாகவும் சப்பென்றும் இருந்தன. எனவே, இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனேன். இங்கிலாந்து வாசத்தை என்னால் சகிக்க முடியவில்லை ஆனால், இந்தியாவுக்கு திரும்பிவிடுவது என்பதையோ நினைக்கக்கூட முடியாது. வந்தது வந்துவிட்டேன், மூன்று ஆண்டுகள் இருந்து முடித்துவிட வேண்டும் என்று கூறியது, என் அந்தராத்மா.

 

14. விரும்பி மேற்கொண்ட விரதம்

 

விக்டோரியா ஹோட்டலில் என்னைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துத் திங்கட்கிழமையன்று டாக்டர் மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை அறிந்தார். எங்கள் புதுவிலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால் என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும் கப்பலில் கடல் நீரையே உபயோகித்து வந்தோம். அந்நீரில் சவுக்காரம் கரையாது. சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்புத தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன். அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப் பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால் உடம்பில் படை வந்துவிட்டது. அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் திராவகத்தை போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என் அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார். அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “இந்த இடம் உதவாது” என்றார். “நாம் இங்கிலாந்துக்கு வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின் வாழ்க்கையிம், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது நல்லது. ஆனால் நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால் ... என்பவருடன் சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன்” என்றும் கூறினார்.

 

     அவருடைய யோசனையை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர் முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப் போலவே பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரப்பும். ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப் பட்டினிதான். அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி ஓயாமல் எனக்கு எடுத்துக் கூறிக் கொண்டே இருந்தார். நானும் என் விரதத்தை அதற்குச் சமாதானமாகக் கூறிவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவேன். மத்தியானச் சாப்பாட்டிற்கும் இரவு உணவுக்கும் எங்களுக்குப் பசலைக் கீரையும் ரொட்டியும் ஜாமும் இருக்கும். நானோ நன்றாகச் சாப்பிடுகிறவன். பெருவயிறு படைத்தவன். ஆனால் இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளுக்கு அதிகமாகக் கேட்பது சரியல்லவென்று தோன்றிதால் அதிகமாகக் கேட்கவும் எனக்கு வெட்கம். போதாதற்கு மத்தியானத்திலும், இரவிலும் சாப்பாட்டில் பாலும் கிடையாது. இந்த நிலையைக் கண்டு அந்த நண்பருக்கு வெறுத்துப் போய் விட்டது. அவர் பின்வருமாறு சொன்னார்: “நீர் என் சொந்தச் சகோதரனாக இருந்தால் மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன். இங்குள்ள நிலையை அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு தாயாரிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கு என்ன மதிப்பு உண்டு ? அது ஒரு விரதமே அல்ல. சட்டப்படி அதை ஒரு விரதமாகவும் கருதுவதற்கில்லை. அத்தகைய ஒரு சத்தியத்தில் விடாப்பிடியாக இருப்பது மூடநம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. மேலும், இந்தப் பிடிவாதத்தினால் இங்கே உமக்கு எந்தவிதப் பயனும் உண்டாகாது என்பதையும் கூறுகிறேன். மாமிசத்தை முன்பு சாப்பிட்டதாகவும், அது உமக்குச் சுவையாக இருந்தது என்றும் ஒப்புக் கொள்ளுகிறீர், எங்கே முற்றும் அவசியமில்லையோ அங்கே நீர் அதைச் சாப்பிட்டிருக்கிறீர். அவசியமான இடத்தில் உண்ணமாட்டேன் என்கிறீர், இது என்ன பரிதாபம்!”

 

     ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். நாள் தவறாமல் அவர் இதைக் குறித்து என்னிடம் தர்க்கம் செய்துகொண்டே இருப்பார். முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி விடுவேன். அவர் தர்க்கம் செய்யச் செய்ய நானும் அதிகப் பிடிவாதக்காரனாவேன். கடவுளின் பாதுகாப்பைக் கோரித் தினமும் பிரார்த்திப்பேன். அதை அடையவும் அடைவேன். கடவுளைப் பற்றிய ஞானம் அப்பொழுதே எனக்கு இருந்தது என்பதல்ல, நம்பிக்கை தான் அது. எனக்குச் செவிலித் தாயாக இருந்த அந்த நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின் விதையே வேலை செய்து வந்தது.

 

     ஒரு நாள் அந்த நண்பர், பெந்தாம் எழுதிய பயன்படுவதன் தத்தவம் (Theory of Utility) என்ற நூலை எனக்குப் படித்துக் காட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் நடை நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன் பொருளை விளக்கவும் ஆரம்பித்தார். அப்பொழுது நான் சொன்னேன்: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இந்த நுட்பமான விஷயங்களெல்லாம் எனக்கு விளங்கமாட்டா. மாமிசம் சாப்பிடுவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நான் கொண்ட விரதத்திற்குப் பங்கம் செய்ய முடியாது. இதைப் பற்றி என்னால் விவாதிக்கவும் முடியாது. அப்படியே உங்களோடு விவாதித்தாலும் வெற்றி பெற முடியாதென்பதும் நிச்சயம். நான் முட்டாள் பிடிவாதக்காரன் என்று என்னை விட்டு விடுங்கள். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை உணருகிறேன். என் நலத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிகிறேன். எனக்காக நீங்கள் கவலைப்படுவதனாலேயே இதைப் பற்றி அடிக்கடி எனக்கு கூறி வருகிறீர்கள் என்பதையும் அறிவேன். ஆனால், நான் உங்கள் புத்திமதிப்படி நடக்க முடியாது. விரதம் விரதமே. அதற்குப் பங்கம் செய்ய என்னால் ஆகாது.”

 

     அந்த நண்பர் ஆச்சரியத்தோடு என்னை உற்றுப் பார்த்தார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “நல்லது. இனிமேல் உம்மிடம் வாதம் செய்யமாட்டேன்” என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். பிறகு இது விஷயமாக என்னிடம் அவர் விவாதிக்கவே இல்லை. ஆனால், என் விஷயத்தில் கவலைப்படுவதை மாத்திரம் அவர் விட்டுவிடவில்லை. அவர் புகை பிடிப்பார், குடிப்பார். ஆனால் அப்படி செய்யுமாறு என்னை அவர் கேட்டதே இல்லை. உண்மையில் இந்த இரண்டு பழக்கங்களும் எனக்குக் கூடாது என்றே சொல்லி வந்தார். மாமிசம் சாப்பிடாவிடில் நான் பலவீனமாகிவிடுவேன், அதனால், இங்கிலாந்தில் நான் சுகமாக வசிக்க முடியாது போகும் என்பது ஒன்றே அவருடைய கவலையெல்லாம்.

 

     இப்படி ஒரு மாதம் நான் பயிற்சி பெற்றேன். நண்பரின் வீடு ரிச்மாண்டில் இருந்தது. வாரத்தில் இரண்டொரு முறைகளுக்கு மேல் லண்டனுக்குப் போவது சாத்தியமில்லை. ஆகவே, லண்டனுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு குடும்பத்தோடு என்னைத் தங்க வைக்க வேண்டும் என்று டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ தளபத் ராம் சுக்லாவும் முடிவு செய்தனர். மேற்குக் கென்சிங்கனில் ஓர் ஆங்கிலோ இந்தியரின் வீட்டைக் கண்டுபிடித்து, ஸ்ரீ சுக்லா என்னை அங்கே கொண்டு போய் விட்டார். அந்த வீட்டுக்கார அம்மாள் விதவை. என்னுடைய விரத்தைக் குறித்து அவரிடம் கூறினேன். என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவதாக அம்மூதாட்டி வாக்களித்தார். அவர் வீட்டில் வசிக்கலானேன். அங்கும் கூட அநேகமாக நான் பட்டினி கிடக்கவே நேர்ந்தது.

 

     மிட்டாயும் பலகாரங்களும் அனுப்புமாறு வீட்டுக்கு எழுதியிருந்தேன். ஆனால், எதுவும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கே கொடுத்த சாப்பாடெல்லாம் எனக்குச் சப்பென்று இருந்தது. சாப்பாடு பிடித்திருக்கிறதா என்று அம்மூதாட்டி தினமும் என்னைத் கேட்டார். ஆனால், அவர்தான் என்ன செய்வார் ? முன்பு இருந்தது போலவே இன்னும் எனக்கும் கூச்சம் இருந்தது. முதலில் பரிமாறியதை விட அதிகமாக எதையும் கேட்கும் துணிவு எனக்கு இல்லை. அந்த அம்மாளுக்கு இரு பெண்கள். அதிகப்படியாக இரண்டொரு ரொட்டித் துண்டுகளை அப்பெண்கள் வற்புறுத்தி எனக்கு வைப்பார்கள். ஆனால், ஒரு முழு ரொட்டிக்குக் குறைந்த எதனாலும் என் வயிறு நிரம்பாது என்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை!

 

     ஆனால், இதற்குள் எனக்குக் கால் முளைத்துவிட்டது. இன்னும் என் பாடங்களை நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஸ்ரீ சுக்லா தூண்டியதன் பேரில் அப்பொழுதுதான் பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியாவில் நான் செய்திப் பத்திரிகைகளைப் படித்ததே இல்லை. இங்கே தொடர்ந்து படித்து வந்தால் பத்திரிகைகளை, படிப்பதில் எனக்குச் சுவை ஏற்பட்டது. டெய்லி நியூஸ், டெய்லி டெலிகிராப், பால்மால் கெஜட் ஆகிய பத்திரிகைகளைப் எப்பொழுதும் மேலெழுந்த வாரியாகப் படிப்பேன். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகாது. ஆகவே, அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தேன். சைவச் சாப்பாடு விடுதி எங்காவது இருக்கிறதா என்று தேட முற்பட்டேன். அத்தகைய சாப்பாட்டு விடுதிகள் நகரில் இருக்கின்றன என்று நான் தங்கியிருந்த வீட்டுக்கார அம்மாள் கூறியிருந்தார். தினம் பத்துப் பன்னிரண்டு மைல் தூரம் சுற்றுவேன். மலிவான சாப்பாட்டு விடுதிக்குப் போய் அங்கே வயிறு நிறைய ரொட்டியைத் தின்பேன். என்றாலும், எனக்கு திருப்தி ஏற்படாது. இவ்வாறு சுற்றி அலைந்து வரும் போது ஒரு நாள் பாரிங்டன் தெருவில் ஒரு சைவச் சிற்றுண்டிச் சாலையைக் கண்டுபிடித்தேன். அதைக் கண்டதும், தன் மனத்துக்கு இனியதைக் கண்டதும் ஒரு குழந்தை என்ன குதூசலம் ஏற்படுமோ அவ்வளவு ஆனந்தம் எனக்கு உண்டாயிற்று. அதற்குள் போகும் முன்பு, கதவுக்கு அருகில் கண்ணாடி ஜன்னலில் விற்பனைக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அவற்றில் சால்ட் எழுதிய சைவ உணவின் முக்கியத்துவம் என்ற புத்தகமும் இருந்தது. ஒரு ஷில்லிங் கொடுத்து அதை வாங்கிக் கொண்டு நேரே சாப்பாட்டு அறைக்குச் சென்றேன். இங்கிலாந்துக்கு வந்த பிறகு நான் வயிறார உண்ட முதல் சாப்பாடு இதுதான். கடவுள் எனக்குத் துணை செய்துவிட்டார்.

 

 

     சால்ட் எழுதிய அந்த நூலை ஒரு வரிவிடாமல் படித்து முடித்தேன். அது என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த நாள் முதற்கொண்டே, என் இஷடத்தின் பேரில் நான் சைவ உணவு விரதம் பூண்டவனானேன் என்று நான் சொல்லிக் கொள்ள முடியும். என் தாயாரின் முன்பு நான் விரதம் எடுத்துக் கொண்ட நாளை வாழ்த்தினேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நான் எடுத்துக் கொண்டிருந்த விரதத்திற்காகவுமே இதுவரை நான் புலால் உண்ணாமல் இருந்து வந்தேன் ஆனால், அதே சமயத்தில் ஒவ்வோர் இந்தியரும் மாமிசம் சாப்பிடுபவராக வேண்டும் என்று விரும்பி வந்தேன். ஒரு நாள் நானும் தாராளமாகவும், பகிரங்கமாகவும் அப்படிச் சாப்பிடுபவன் ஆகவேண்டும் என்றும், மற்றவர்களையும் இதற்குத் திருப்ப வேண்டும் என்றும் கருதி, அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது நான் சைவ உணவு விரதத்தை விரும்பி மேற்கொண்டுவிட்டதால், இதைப் பரப்புவதே என் வாழ்வின் லட்சியமாயிற்று.

 

15. ஆங்கிலக் கனவானாக நடிப்பு

 

சைவ உணவில் நான் கொண்ட நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. உணவு சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பசியை சால்ட்டின் புத்தகம் எனக்கு உண்டாக்கிற்று. சைவ உணவைப் பற்றிக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தேன். ஹோவார்டு வில்லியம்ஸ் எழுதியிருந்த உணவு முறையின் தருமம் (The Ethics of Diet) என்ற நூல், ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரையில் மனிதரின் உணவு வகையைப் பற்றி எழுதப் பெற்ற எல்லாப் புத்தகங்களின் வரலாற்றுச் சரித்திரத்தையும் கூறுகிறது. பித்தகோரஸ், ஏசுநாதரிலிருந்து தற்காலத்தில் வாழ்கிறவர்கள் வரை, எல்லாத் தத்துவஞானிகளும், தீர்க்கதரிசிகளும் சைவ உணவு உட்கொள்ளுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் இந்த நூல் முயன்றிருக்கிறது.

 

     டாக்டர் அன்னா கிங்க்ஸ் போர்டு எழுதிய உணவுமுறையில் சரியான வழி (The Perfect way in Diet) என்ற நூலும் கவர்ச்சிகரமானது. தேகாரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் குறித்து டாக்டர் அலின்சன் எழுதியிருந்தவையும் அதே போல உதவியாக இருந்தன. நோயாளியின் ஆகாரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே நோயைக் குணமாக்கும் முறையை அந்த நூலில் அவர் எடுத்துக் கூறியிருந்தார். அவர் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர். ஆகையால், தம்மிடம் வரும் நோயாளிகளுக்கும் கண்டிப்பான சைவ உணவு யோசனையைச் சொல்லி வந்தார். இந்த நூல்களையெல்லாம் படித்ததன் பலனாக, உணவாராய்ச்சி செய்வதும் என் வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் தேகசுகத்தை முக்கியமாகக் கருதியே பெரும்பாலும் இந்தச் சோதனைகளைச் செய்து வந்தேன். ஆனால், பிறகோ சமயப்பற்று, இச்சோதனைகளுக்குப் பிரதானமான நோக்கமாயிற்று.

 

     இதன் நடுவில் என் நண்பர் என்னைப் பற்றிக் கவலைப்படுவதை விடவில்லை. மாமிசம் சாப்பிடுவதில் எனக்கு இருக்கும் ஆட்சேபங்களில் நான் பிடிவாதமாகவே இருந்து வந்தால், என் உடல் இளைத்து போவதோடு நான் மண்டுவாகவும் இருந்துவிடுவேன் என்று கருதினார். ஏனெனில், மாமிசம் சாப்பிடாதிருந்தால் ஆங்கிலேய சமூகத்தில் நான் சகஜமாகப் பழக முடியாது என்றும் அவர் நினைத்தார். என் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலேயே இப்படியெல்லாம் எண்ணினார். சைவ உணவின் பெருமையைப் பற்றி கூறும் நூல்களில் கவனம் செலுத்த நான் தலைப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும், அப் புத்தகங்கள் என் புத்தியைக் குழப்பி விடுமே என்று பயந்தார். என் படிப்பை மறந்து விட்டு, அந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் இறங்கிப் பித்தனாகிவிடுவேன் என்றும் அஞ்சினார்.

 

     ஆகையால், என்னைச் சீர்திருத்துவதற்காகச் கடைசி முயற்சி ஒன்றையும் செய்தார். ஒருநாள், நாடகம் பார்க்கப் போகலாம் என்று என்னை அழைத்தார். நாடகம் பார்க்கும் முன்பு இருவரும் ஹால்பர்ன் போஜன விடுதியில் சாப்பிடுவது என்றும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த போஜன விடுதியின் கட்டடம் அரண்மனை போன்றே எனக்குத் தோன்றியது. மேலும், விக்டோரியா, ஹோட்டலில் இருந்து வந்து விட்டப் பிறகு, நான் சாப்பிடப் போன முதல் பெரிய விடுதியும் இதுதான். அந்த ஹோட்டலில் இருந்த போது நான் திக்குத் திசை தெரியாதவனாகவே இருந்ததால் அங்கே ஏற்பட்ட அனுபவம் எதுவும் எனக்கு இங்கே உதவியாக இருந்துவிடவில்லை. சங்கோஜத்தினால் நான் கேள்வி எதுவும் கேட்கமாட்டேன் என்று எண்ணியே என் நண்பர் என்னை இந்த விடுதிக்கு அழைத்து வரத் திட்டமிட்டு இருந்தார் என்று தெரிந்தது. அநேகர் அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் என் நண்பரும் ஒரு மேஜையின் முன் சாப்பிட உட்கார்ந்தோம். முதலில் சூப் வந்தது. அது என்ன சூப் என்பது தெரியாமல் திகைத்தேன். ஆனால் அதைப் பற்றி நண்பரிடம் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை.

 

     ஆகவே, பரிசாரகரைக் கூப்பிட்டேன், நண்பர் நிலைமையைக் கவனித்துக் கொண்டார். “என்ன விஷயம்” என்று என்னைக் கடுமையாகக் கேட்டார். “சூப் சைவ சூப்தானா என்று விசாரிக்க விரும்பினேன்” என்று அதிகத் தயக்கத்துடனேயே சொன்னேன். “நாகரீகமான சமூகத்தில் பழகுவதற்கு நீர்க் கொஞ்சமும் தகுதியில்லாதவர்” என்று அவர் ஆத்திரத்தோடு கூறினார். “இங்கே சரியானபடி நடந்துகொள்ள உம்மால் முடியாது என்றால் வெளியே போய் விடும். வேறு ஏதாவது ஒரு சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்காக வெளியில் காத்திரும்” என்றார் இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். வெளியிலும் போய்விட்டேன். பக்கத்திலேயே சைவ உணவு விடுதி ஒன்று இருந்தது. ஆனால் அது அப்பொழுது மூடப்பட்டுவிட்டது. ஆகையால், அன்றிரவு சாப்பாடே இல்லாமல் பட்டினி கிடந்தேன். அந்த நண்பருடன் நாடகத்திற்கு சென்றேன். ஆனால், செய்துவிட்ட அசந்தர்ப்பமான காரியத்தைக் குறித்து அவர் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையிலோ, நான் சொல்வதற்கு எதுவுமில்லை.

 

     எங்களிடையே நட்புமுறையில் ஏற்பட்ட கடைசிப் பூசல் இதுவே. எங்களுக்குள் இருந்த உறவை இது கொஞ்சமும் பாதித்து விடவில்லை. என் நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் காரணம், அவர் என் மீது கொண்டிருந்த அன்பே என்பதை நான் அறியமுடிந்தது. அந்த அன்பைப் போற்றவும் போற்றினேன். எண்ணத்திலும், செயலிலும் எங்களுக்குள் வேற்றுமை இருந்தது உண்மை என்றாலும் அவர் மீது நான் அதிக மதிப்புக் கொண்டேன்.

 

     அதனால், எனக்காக அவர் கொண்டிருந்த கவலையைப் போக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இனி நாகரீகக் குறைவாக நடந்து கொள்ளமாட்டேன். சைவ உணவு விரதம் கொண்ருப்பதால் என்னிடம் இருந்த குறைக்கு ஈடு செய்ய நாகரீக சமூகத்திற்குத் தகுதியான மற்றக் காரியங்களையெல்லாம் அனுசரித்து நாகரீகமாக நடந்து கொள்பவன் ஆகிவிட்டேன் என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதே என் முடிவு. இதற்காக ஆங்கிலக் கனவானாகவே ஆகிவிடுவதற்கு வேண்டிய அசாத்தியமான காரியங்களையெல்லாம் செய்ய முற்பட்டேன்.

 

     பம்பாயில் தைத்த உடைகளையே தறித்துக் கொண்டிருந்தேன். அந்த உடை ஆங்கிலச் சமூகத்திற்குப் பொருத்தமானதன்று என்று எண்ணினேன். ராணுவக்கடற்படை ஸ்டோரில் புதிய உடை வாங்கினேன். பத்தொன்பது ஷில்லிங் விலையில் ஒரு சிம்னி - பாட் தொப்பி வாங்கினேன். அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகமான விலை. லண்டனில் நாகரீக வாழ்க்கைக்கு மத்திய இடமான பாண்ட் தெருவில், மாலையில் போட்டுக்கொள்ளும் உடுப்பு ஒன்று வாங்கி பத்துப் பவுனை பாழாக்கினேன். உத்தமரும் உயர் குணம் படைத்தவருமான என் சகோதரருக்கு எழுதி கடிகார இரட்டைவட தங்கச் சங்கிலி ஒன்றை அனுப்பி வைக்கும் படியும் செய்தேன். கடையில் கட்டி விற்கும் கழுத்து டை அணிவது நாகரீகத்திற்குச் சரியல்லவாகையால், ‘டை’ யை நானே கட்டிக் கொள்ளும் வித்தையயும் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் குடும்ப நாவிதர் எனக்கு க்ஷவரம் செய்து விடும்போது மாத்திரமே முகக் கண்ணாடியை பார்க்கும் ஆடம்பரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இங்கோ, ஒரு பெரிய கண்ணாடி முன்னால் நின்று, என்னைப் பார்த்துக் கொள்வதிலும் ‘டை’யைச் சரிபடுத்திக் கொள்வதிலும் நாகரீகத்திற்கு ஏற்றாற்போல் தலைவாரிக் கொள்வதிலும் தினம் 10 நிமிட நேரத்தை வீணாக்குவேன். என் தலை மயிர் மிருதுவானதன்று. ஆகவே, அதைச் சீவிச் சரியாகப்படியவைப்பது தினமும் ஒரு போராட்டமாகி விட்டது. ஒவ்வொரு முறையும் தலையில் தொப்பியை வைக்கும் போதும் எடுக்கும் போதும் தலை மயிரை சரிபார்க்க கை தானாகவே தலைக்குப் போய்விடும். நாகரீக சமூகத்தினரின் நடுவே உட்கார்ந்திருக்கும் போது, ஒவ்வொரு சமயமும் கை இதற்காகவே தலையில் வேலை செய்து கொண்டிருக்கும். மற்றொரு நாகரீகப் பழக்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.

 

     நாகரீகத்தோற்றம் அளிப்பதற்கு இவ்வளவும் போதாதென்று, ஆங்கிலக் கனவானாவதற்கு வேண்டியவை என கருதப்பட்ட மற்ற அம்சங்களிலும் கவனத்தை செலுத்தினேன். நடனம் ஆடக் கற்றக் கொள்ளுவதும், பிரெஞ்சு மொழி கற்பதும், பிரசங்கவன்மையும் ஓர் ஆங்கிலக் கனவானுக்கு அவசியம் என்றார்கள். பிரெஞ்சு, பக்கத்து நாடான பிரான்ஸின் மொழி என்பது மாத்திரம் அல்ல, ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருடன் பேசுவதற்குப் பொது மொழியாகவும் அது இருந்தது. எனக்கு அக் கண்டம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நடனம் கற்றுக் கொள்ளுவதெனத் தீர்மானித்து, சில மாதங்களுக்கு மூன்று பவுன் கட்டணமும் செலுத்தினேன். மூன்று வாரங்களில் இதில் ஆறு பாடங்களைக் கற்றிருப்பேன். ஆனால், தாளகதிக்கு ஏற்ப நடனமாடுவது என்பது என்னால் ஆகவில்லை. பியானோ வாத்திய இசையைப் பின்பற்ற முடியாது போகவே தாளத்தை அனுசரிக்கவும் இயலவில்லை.

 

     அப்படியாயின் பிறகு என்ன செய்வது? ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.

 

     ஆனால், ஸ்ரீ பெல் என் காதில் எச்சரிக்கை மணியை அடித்தார். நானும் விழித்துக் கொண்டு விட்டேன்.

 

     வாழ் நாளெல்லாம் நான் இங்கிலாந்திலேயே இருக்கப் போவதில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்படியிருக்க, பேச்சுவன்மையைக் கற்றுக் கொள்ளுவதால் என்ன பயன்? அதோடு நாட்டியமாடுவது என்னை எப்படி ஒரு கனவான் ஆக்கி விடும்? பிடில் வாசிக்க நான் இந்தியாவிலும் கற்றுக் கொள்ளலாம். நானோ மாணவன். ஆகவே என் படிப்பையே நான் கவனித்துக் கொண்டு போக வேண்டும். பாரிஸ்டராவதற்கு வேண்டியத் தகுதியையே நான் அடைய வேண்டும். என்னுடைய ஒழுக்கம் என்னைக் கனவானாக்கினால் அதுவே போதும். இல்லையானால் அந்த ஆசையை நான் விட்டுவிட வேண்டியதே.

 

 

     இவையும், இவை போன்ற எண்ணங்களும் என்னைப் பற்றிக் கொண்டன. பிரசங்கப் பயிற்சிக்காக நான் அமர்த்திக் கொண்டிருந்த ஆசிரியருக்கு இந்த என் எண்ணங்களையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதினேன். மேற்கொண்டு பாடல் கற்றுக் கொள்ள வராததற்கு மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதெல்லாம் இரண்டு மூன்று பாடங்களே. இதே போல் நடன ஆசிரியருக்கும் எழுதி விட்டேன். பிடில் வாத்தியாரிடம் நேரில் போய், வந்த விலைக்குப் பிடிலை விற்றுவிடுமாறு கேட்டுக் கொண்டேன். அப்பெண்மணி என்னிடம் நட்புடன் பேசினாள். ஆகவே, நான் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த விதத்தை அவரிடம் கூறினேன். முற்றும் உருமாறுதல் அடைந்துவிட வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த முடிவை ஏற்று அவர் உற்சாகப்படுத்தினார்.

 

     ஆங்கிலக் கனவான் ஆகி விட வேண்டும் என்பதில் எனக்கு இருந்த மோகம் சுமார் மூன்று மாதங்கள் இருந்திருக்கும். அதற்குப் பின் மாணவனாகி விட்டேன். உடை, சம்பிரதாயப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மாத்திரம் பல ஆண்டுகள் என்னிடம் இருந்து வந்தது.

 

16. மாறுதல்கள்

 

நாட்டியத்திலும், அது போன்றவைகளிலும் நான் செய்த சோதனை என் வாழ்க்கையில் நெறி தவறிப் போய்விட்ட ஒரு கட்டம் என்று யாரும் ஊகித்துக் கொண்டுவிட வேண்டாம். அச்சமயத்திலும்கூட நான் மதி மயங்கிப் போய்விடவில்லை என்பதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். ஆங்கிலக் கனவானாவதில் எனக்கு மோகம் இருந்த அந்தக் காலத்திலும் கூட, என் வரையில் ஓரளவுக்கு என்னுள் ஆன்ம சோதனையும் இல்லாது போகவில்லை. நான் செலவு செய்த ஒவ்வொரு பார்த்திங்(காலணா)குக்கும் கணக்கு வைத்திருந்தேன். செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்து வந்தேன். வண்டிச் சத்தம், தபால் செலவு, பத்திரிக்கை வாங்கச் செலவிட்ட சில காசுகள போன்ற சிறு செலவினங்களையும் கூடக் கணக்கில் எழுதுவேன். தினந்தோறும் படுக்கப் போவதற்கு முன்னால் கணக்கை கூட்டி இருப்புக் கட்டுவேன். அப்பொழுதிலிருந்தே இப்பழக்கம் என்னிடம் நிலைத்து விட்டது. இதன் பலனாக, பொதுப் பணத்தை லட்சக்கணக்கில் நான் கையாள நேர்ந்தபோது அதைச் செலவிடுவதில் கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க என்னால் முடிந்ததோடு, நான் நடத்திய எல்லா இயக்கங்கள் சம்பந்தமாகவும் வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதுமே கையில் மிச்சத் தொகையே இருந்திருக்கிறது என்பதை அறிவேன். என் வாழ்க்கையின் இந்த அனுபவத்தை ஒவ்வோர் இளைஞரும் பாடமாகக் கொண்டு, தம்மிடம் வரும் தொகை ஒவ்வொன்றுக்கும், தாம் செலவிடுவதற்கும் கணக்கு வைக்க வேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ளட்டும். அப்படிச் செய்தால் என்னைப் போல் முடிவில் நன்மையையே அடைவார்கள்.

 

     என் வாழ்வு முறையை நானே கண்டிப்பாகக் கவனித்து வந்தால், செலவில் சிக்கனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை நான் அறிய முடிந்தது. ஆகையால், எனக்கு ஆகும் செலவைப் பாதியாகக் குறைத்துவிடுவது என்று தீர்மானித்தேன். போக்குவரத்துக்கு வண்டிச் சத்தம் கொடுப்பதிலேயே அதிகத் தொகை செலவாகிறது என்பது கணக்கிலிருந்து தெரிந்தது. அதோடு, ஒரு குடும்பத்தில் நான் வசித்து வந்ததால் வாரந்தோறும் தவறாமல் குறிப்பிட்ட தொகை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அத்துடன், அக்குடும்பத்தினரை மரியாதைக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுடன் விருந்துகளுக்குப் போவது போன்ற வகையிலும் செலவாகி வந்தது. முக்கியமாகக் கூடவரும் நண்பர்கள், பெண்மணியாக இருந்தால், எல்லாச் செலவுகளையும் ஆணே செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். இதனாலெல்லாம் போக்குவரத்துச் செலவு மிக அதிகமாக இருந்தது. வெளியில் சாப்பிடுவதனால் - வீட்டில் சாப்பிடாமல் இருந்ததற்காக வாராந்திரக் கணக்கில் எதுவும் குறைத்துக் கொடுக்க முடியாதாகையால், அதிகப்படி செலவுகளையும் குறைத்துவிடலாம் என்று எனக்குத் தோன்றிற்று.

 

     ஆகவே, இனி ஒரு குடும்பத்துடன் வசிப்பதற்குப் பதிலாகத் தனியாக அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளுவது என்று முடிவு செய்தேன். எனக்கு இருக்கும் வேலையை அனுசரித்து, என் குடியிருப்பையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அதே சமயத்தில் அதனால் அனுபவம் பெறவும் தீர்மானித்தேன். எனக்கு வேலையிருக்கும் இடத்திற்கு அரைமணி நேரத்தில் நடந்து போய்விடக் கூடியதாகவும், அதனாலும் செலவு குறைவதாகவும் இருக்கும் வகையிலும், அறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு முன்னால் நான் எங்காவது வெளியில் போவதாயிருந்தால் ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொள்ளுவேன். இனி நடந்தே போவதென்றால் நடப்பதற்கு வேண்டிய அவகாசத்தையும் தேடிக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் நடையும் சிக்கனமும் சேர்ந்திருந்தன. அதன்படி வண்டி வாடகை கொடுத்து மிச்சமானதோடு தினம் எட்டு அல்லது பத்து மைல் நடையும் எனக்கு கிடைத்தது. முக்கியமாக நீண்ட தூரம் நடந்த இந்தப் பழக்கத்தினாலும், இங்கிலாந்தில் இருந்த வரையில் நான் நோயே இல்லாமல் இருந்தேன், என் உடலும் உரம் பெற்றது.

 

     இவ்வாறு நான் இரண்டு அறைகளுள்ள ஓர் இடத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். அதில் ஒர் அறை, உட்கார்ந்து வேலை செய்வதற்கு, மற்றொன்று படுக்கையறை. எனது லண்டன் வாழ்க்கையில் இது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டம் இனிமேல்தான் வரவேண்டும்.

 

     இந்த மாறுதல்களினால் என் செலவுகள் பாதியாகத் குறைந்தன. ஆனால், எனக்கிருந்த அவகாசத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுவது? பாரிஸ்டர் பரீட்சைக்கு அதிகமாகப் படிக்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகையால் நேரத்திற்குப் பஞ்சம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆங்கில மொழியில் எனக்குத் திறன் போதாமல் இருந்ததே எனக்கு தீராக் கவலையாக இருந்து வந்தது. முதலில் பி.ஏ. பட்டம் பெற்று, பிறகு என்னிடம் வா என்று ஸ்ரீ வேலி (பிற்காலத்தில் ஸர் பிரடரிக்) சொன்ன சொற்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பாரிஸ்டர் பரீட்சையில் தேறுவதோடு மாத்திரமின்றி இலக்கியக் கல்வியிலும் நான் ஏதாவது ஒரு பட்டத்தைப் பெறவேண்டும் என்று எண்ணினேன். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலைகளின் படிப்பு முறைகளைப் பற்றி விசாரித்தேன் சில நண்பர்களையும் கலந்து ஆலோசித்தேன். இந்த இரு சர்வகலாசாலைகளில் ஒன்றில் சேருவது என்று நான் முடிவு செய்தால், அதனால் செலவு அதிகமாவதோடு, இங்கிலாந்தில் தங்குவதற்கு நான் தயாராயிருக்கும் காலத்தைவிட அதிக காலம் தங்கவும் நேரும் என்று கண்டேன்.

 

     கஷ்டமான தொரு பரீட்சையில் தேறிவிட்டேன் என்று திருப்பதிப்பட நான் விரும்பினால், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் நான் தேறிவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார். அப்படியானால் அதிகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். பொது அறிவும் விருத்தியாகும். இதற்குச் செலவு அதிகப்படியாக ஒன்றும் ஆகிவிடாது என்பது தெரிந்தது. இந்த யோசனை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அப்பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்த பாடங்களோ என்னைப் பயமுறுத்தி விட்டன. லத்தீனையும், தற்கால ஐரோப்பிய மொழி ஒன்றையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும். லத்தீனைப் படிப்பது எப்படி? ஆனால் அந்த நண்பரோ, அம்மொழியைப் படித்தாக வேண்டும் என்று பரிந்து பேசினார். வக்கீல்களுக்கு லத்தீன் மிகவும் பயனுள்ள மொழி. சட்டப் புத்தகங்களைப் புரிந்துகொள்ள லத்தீன் தெரிந்திருப்பது உபயோகமாக இருக்கும். ரோமன் சட்டம் பற்றிய ஒரு பரீட்சை முழுவதையும் லத்தீன் மொழியில்தான் எழுதவேண்டியிருக்கும். லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியிலும் நல்ல ஆற்றல் இருக்கும் என்றார். நண்பர் கூறியது நல்லது என்றே தோன்றியது. என்னதான் கஷ்டமாக இருந்தாலும் சரி, லத்தீன் படித்து விடுவது என்று தீர்மானித்தேன். இதற்கு முன்னாலேயே பிரெஞ்சு மொழி படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆகவே, நான் படித்தாக வேண்டிய இக்கால மொழியாக அதையே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். மெட்ரிகுலேஷனுக்குத் தயார் செய்வதற்கென்று தனிப்பட்டவர் வைத்திருந்த, வகுப்பில் சேர்ந்தேன். பரீட்சைக்குப் போவதற்கு எனக்கு ஐந்து மாதங்களே இருந்தன. இது அசாத்தியமான வேலை என்று எனக்குத் தோன்றிற்று. ஆங்கிலக் கனவானைப் போல் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நான், இப்பொழுது கருத்துள்ள மாணாக்கனாக என்னை மாற்றிக்கொண்டு விட்டேன். என் கால அட்டவணையை நிமிஷக் கணக்கு வரையில் துல்லியமாக வகுத்துக்கொண்டேன். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றப் பாடங்களுடன் லத்தீனையும், பிரெஞ்சு மொழியையும் நான் படித்துவிட முடியும் என்பதற்கு என் அறிவோ, திறமையோ துணை செய்வதாயில்லை. இதன் பலனாக லத்தீன் பரிட்சையில் தவறிவிட்டேன். இதற்காக வருத்தப் பட்டேனாயினும் மனம் தளர்ந்து விடவில்லை.

 

     இதற்குள் லத்தீன் மொழியில் இன்னும் ஒரு பரீட்சைக்குப் போனால் நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். விஞ்ஞானத்தில் நான் படித்தது ரசாயனம். மிக மிகக் கவர்ச்சிகரமான படிப்பாக இருந்திருக்க வேண்டிய அது, எனக்கு ருசிக்காமல் போனதற்குக் காரணம், சோதனைகள் நடத்துவதற்கு இடமில்லாது போனதே. இந்தியாவில் அது கட்டாயப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. ஆகவே, லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு அதைப் பாடமாக எடுத்துக்கொண்டேன். என்றாலும், இத்தடவை ரசாயனத்திற்குப் பதிலாக வெப்பம், வெளிச்சத்தைப் பற்றிப் படிப்பதென முடிவு செய்தேன். இதைப் படிப்பது சுலபம் என்றார்கள், எனக்கும் சுலபமாகவே இருந்தது.

 

     மற்றொரு சோதனைக்கு நான் என்னைத் தயார் செய்துகொண்டதோடு மேற்கொண்டும் என் வாழ்க்கையை எளிமையானதாக்கிக் கொள்ளவும் முயன்றேன். அடக்கமான என் குடும்ப நிலைமைக்கு ஏற்றதாக என் வாழ்க்கை முறை இல்லை என்பதை உணர்ந்தேன். பண உதவி வேண்டும் என்று அடிக்கடி நான் தெரிவிக்கும் போதெல்லாம் என் சகோதரர் பெருந்தன்மையோடு பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார். இப்படிப் பணம் அனுப்புவதற்ககாக அவர் அனுபவிக்கும் அநேக கஷ்டங்களை எண்ணிப் பார்த்தேன். அது மனத்திற்குப் பெரும் வேதனையாக இருந்தது. மாதத்திற்கு எட்டு முதல் பதினைந்து பவுன் வரையில் செலவு செய்து கொண்டிருந்தவர்களில் அநேக மாணவர்களுக்கு உபகாரச் சம்பள வசதி இருந்தது என்பதை அறிந்தேன். மிக எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் உதாரணமும் என் முன்னால் இருந்தது. என்னைவிட எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பல ஏழை மாணவர்களையும் நான் பார்க்க நேர்ந்தது.

 

     அவர்களில் ஒரு மாணவர், சேரிப் பகுதியில் வாரத்திற்கு இரண்டு ஷில்லிங்குக்கு ஓர் அறையை அமர்த்திக் கொண்டு. அதில் இருந்து வந்தார். லோகார்ட்டிலிருக்கும் மலிவான கோக்கோக் கடைகளில் வேளைக்கு இரண்டு பென்ஸ் செலவில் கோக்கோ குடித்து, ரொட்டி தின்று, தம் சாப்பாட்டை முடித்து விடுவார். அவரைப் பின்பற்றுவதென நினைப்பதே என்னால் முடியாது. ஆனால், இரண்டு இரண்டு அறைகளை வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஓர் அறையை அமர்த்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தால் மாதத்திற்கு நான்கிலிருந்து ஐந்து புவன் மிச்சப்படும். எளிய வாழ்க்கை நடத்துவதைப் பற்றிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன். இரண்டு அறை ஜாகையை விட்டுவிட்டு, ஓர் அறையை அமர்த்திக்கொண்டேன்.

 

 

     ஒரு ஸ்டவ் அடுப்பும் வாங்கினேன். காலை ஆகாரத்தை வீட்டிலேயே சமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன். நான் சமைக்க வேண்டியிருந்ததெல்லாம் ஓட்ஸ் கஞ்சி வைப்பதும், கோக்கோவுக்கு நீர் கொதிக்க வைப்பதுமேயாகையால் அதற்கு இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகாது. மத்தியான ஆகாரத்தை வெளியில் சாப்பிட்டுக் கொள்ளுவேன். இரவில் வீட்டில் ரொட்டி தின்று. கோக்கோ குடிப்பேன். இவ்விதம் தினத்திற்கு ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் என்னால் வாழ முடிந்தது. அது கடுமையாகப் படிக்க வேண்டியிருந்த சமயமும் கூட எளிய வாழ்க்கையை நான் மேற்கொண்டதால், படிப்பதற்கு எனக்கு நேரம் அதிகமாக இருந்ததோடு நான் பரீட்சையிலும் தேறினேன்.

 

     இவ்விதம் வாழ்ந்து வந்ததால் என் வாழ்க்கை எந்த வகையிலும் இன்பமற்றதாயிற்று என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். இதற்கு மாறாக, இத்தகைய மாறுதல் என் அக வாழ்வையும், புற வாழ்வையும் ஒருமைப்படுத்தியது. அதோடு இந்த வாழ்க்கை, என் குடும்ப நிலைமைக்கும் ஒத்தாக இருந்தது, முன்பு இருந்ததைவிட அதிகமான உண்மையோடும் கூடியதாயிற்று; என் ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

 

17. உணவில் பரிசோதனைகள்

மேலும் மேலும் ஆழ்ந்து, நான் ஆன்ம பரிசோதனை செய்யச் செய்ய, எனது அகவாழ்விலும் புறவாழ்விலும் அதிக மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று. என் செலவுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதல்களைச் செய்தேன். இதற்கு முன்னாலேயே, என் உணவிலும் மாறுதலைச் செய்ய ஆரம்பித்திருந்தேன். சைவ உணவின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதிய நூலாசிரியர்கள், அவ்விஷயத்தை வெகு நுட்பமாகப் பரிசீலனை செய்திருந்ததைக் கண்டேன். இவ்விஷயத்தின் மத, விஞ்ஞான, அனுபவ, வைத்திய அம்சங்களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்திருந்தனர். தருமக் கோட்பாட்டின் ரீதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால் தாழ்ந்த உயிரினங்களைத் தின்று மனிதன் உயிர் வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல. உயர்ந்த இனங்கள் தாழ்ந்த இனங்களைப் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவிக் கொள்ளுவதைப் போல, அவ்விரு இனங்களும் தம்மிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும் என்பது அந்நூலாசிரியர்கள் கண்ட முடிவு. மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கேயன்றி, சுகானுபவத்திற்காக அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இதை அனுசரித்து அவர்களில் சிலர், புலால் உண்ணாமல் இருப்பதோடு முட்டை, பால் சாப்பிடுவதும் கூடாது என்று சொன்னார்கள். அதன் படி சாப்பிடாமலும் இருந்தார்கள். மற்றும் சிலர், விஞ்ஞான ரீதியில் வேறு ஒரு முடிவுக்கும் வந்தனர்.

 

     மனிதனின் உடலமைப்பை ஆராய்ந்தால், அவன் உணவைச் சமைத்துத் தின்னப் படைக்கபட்டவன் அல்ல என்பதும் பச்சையாகத் தின்று வாழ வேண்டிய பிராணியே என்பதும் தெளிவாகின்றன என்றார்கள். மனிதன் ஆரம்பத்தில் தாய்ப்பாலை மட்டும் அருந்த வேண்டும், பிறகு பல் முளைத்ததும் கடினமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றும் இவர்கள் கருதினர். வைத்திய சாத்திரத்தின்படி மசாலைகள், ஊறுகாய்களை விலக்கிவிட வேண்டும் என்றும் யோசனை கூறினர். அனுபவ, பொருளாதார விவாதத்தின் பிரகாரம் சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் செலவே மிகக் குறைவு என்பதையும் அவர்கள் நிரூபித்திருந்தனர். இந்தக் காரணங்களெல்லாம் என் மனத்தில் மாறுதலை உண்டாக்கின. இத்தகைய பலவகைப்பட்ட சைவ உணவுவாதிகளையும் சைவ உணவு விடுதிகளில் சந்தித்தேன். இங்கிலாந்தில் சைவ உணவினர் சங்கமும் ஒன்று இருந்தது. அவர்கள் சொந்தமாக ஒரு வாரப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அப்பத்திரிகைக்கு நான் சந்தாதாரனானேன். அச்சங்கத்திலும் சேர்ந்து வெகு சீக்கிரத்திலேயே அதன் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினரானேன். சைவ உணவு பிரசார இயக்கத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட முக்கியஸ்தர்களுடன் இச்சங்கத்தில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. உணவில் என் சொந்தச் சோதனைகளையும் செய்ய முற்பட்டேன்.

 

     வீட்டிலிருந்து தருவித்திருந்த மிட்டாய்களையும், ஊறுகாய்களையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மனம் வேறு வழியில் திரும்பி விட்டதால், மசாலை மீதிருந்த மோகம் போய்விட்டது. மசாலையின்றிச் சமைத்த கீரை, அப்பொழுது ரிச்மண்டு ஹோட்டலில் சப்பென்று ருசியற்றிருந்தது. இப்பொழுதோ, சும்மா வேக வைத்த கீரையே எனக்கு ருசியாக இருந்தது. ருசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை என்பதை இதுபோன்ற பல பரீட்சைகள் எனக்குப் போதித்தன.

 

     சிக்கனத்தைக் கவனிக்க வேண்டும் என்பதும் எப்பொழுதும் என் நினைவில் இருந்து வந்தது. தேயிலை, காப்பி போன்ற பானங்கள் தீமை விளைவிப்பவை என்றும், கோக்கோ குடிப்பது நல்லதென்றும் கருதியவர்கள் அக்காலத்தில் அநேகர் உண்டு. உடலுக்கு நன்மையானவைகளை மாத்திரமே ஒருவர் சாப்பிட வேண்டும் என்று திடமாக நான் நம்பியிருந்ததால் தேயிலை, காப்பி போன்ற பானங்களைச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அவற்றிக்குப் பதிலாகக் கோக்கோ சாப்பிடலானேன்.

 

     நான் சாப்பிடப்போன உணவு விடுதிகளில் இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒரு பிரிவில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். ஒருவர், அவற்றில் தாம் விரும்புவதைச் சாப்பிட்டு விட்டு அதற்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும். இத்தகைய இரவு சாப்பாட்டுக்கு ஒன்றிலிருந்து இரண்டு ஷில்லிங் வரை செலவாகும். சுமாராகப் பணக்காரராக இருப்போர் இப்பிரிவுக்கே போவார்கள். மற்றொரு பிரிவிலோ, ஆறு பென்ஸுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். அதில் ஒரு ரொட்டித் துண்டுடன் மூன்றுவகைப் பண்டங்கள் பரிமாறுவர். நான் அதிகச் சிக்கனமான வாழ்க்கையை நடத்தி வந்தபோது, இந்த இரண்டாவது பிரிவில்தான் சாப்பிடுவது வழக்கம்.

 

     பிரதானமான உணவுப் பரிசோதனையோடு பல சிறு சோதனைகளையும் நடத்தி வந்தேன். உதாரணமாக, மாவுப் பண்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சமயம் விலக்கியிருந்தேன். மற்றொரு சமயத்திலோ, ரொட்டியும் பழமும் மாத்திரமே சாப்பிட்டு வந்தேன். ஒரு சமயம் பால்கட்டி, பால், முட்டைகள் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கடைசிச் சோதனையைக் குறித்துக் கொஞ்சம் கவனிப்பது முக்கியம். இச்சோதனை இரு வாரங்கள் வரையிலும் கூட நீடிக்கவில்லை. மாவு கலந்த பண்டங்களைத் தின்னக்கூடாது என்று சொன்ன சீர்திருத்தக்காரர், முட்டைகளின் மேன்மையைக் குறித்துப் பிரமாதமாகச் சொன்னதோடு அவை மாமிசமாகா என்றும் கூறினார். முட்டையைத் தின்பதால் உயிருள்ள எதற்கும் துன்பம் விளைவித்து விடவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த வாதத்தில் மயங்கி என் விரதத்தையும் மறந்துவிட்டு, நான் முட்டை தின்ன ஆரம்பித்தேன். ஆனால், நான் இதில் செய்த தவறு தற்காலிகமானதே. நான் கொண்டிருந்த விரத்திற்குப் புதியதொரு வியாக்கி யானத்தையே நான் அனுசரிக்க வேண்டும். மாமிசம் என்பதைப் பற்றிய என் தாயாருடைய கருத்தில் முட்டையும் சேர்ந்ததே என்பதை நான் அறிவேன். இவ்விதம் விரதத்தின் உண்மை கருத்தை நான் கண்டு கொண்டதுமே, முட்டை சாப்பிடுவதையும், அப்பரீட்சையையும் ஒருமிக்க விட்டுவிட்டேன்.

 

     இந்த வாதத்தில் அடங்கிய, கவனிக்கத்தக்க நுட்பமான விஷயம் ஒன்று உண்டு. இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூன்று வகையான வியாக்கியானங்கள் கூறப்படுவதை அறியலானேன். இதில் முதல் வியாக்கினப்படி, மாமிசம் என்பது பறவைகள், மிருகங்களின் இறைச்சியே. இந்த வியாக்கியானத்தை ஒப்புக்கொள்ளும் சைவ உணவுவாதிகள், பட்சிகள், மிருகங்களின் மாமிசத்தை உண்ணமாட்டார்கள். ஆனால், மீன் சாப்பிடுவார்கள், முட்டைகளும் சாப்பிடுவார்கள் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவது வியாக்கியானப்படி மாமிசம் என்றால், எலலா உயிர்ப் பிராணிகளின் புலாலுமேயாகும். ஆகையால், இக்கருத்துக் கொண்டவர்கள். மீன் சாப்பிட மாட்டார்களெனினும் முட்டை சாப்பிடுவார்கள். மூன்றாவது வியாக்கியானமோ, உயிர் வாழ்வன எல்லாவற்றின் புலாலும், அவைகளிடமிருந்து கிடைப்பவைகளும் மாமிசம் என்று முடிவு கட்டியிருந்தது. இதன்படி, பால், முட்டைகள் முதலியனவும் மாமிசம் ஆகிவிடுகின்றன. முதல் வியாக்கியானத்தை ஒப்புக் கொள்வதாயின், முட்டை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், மீனும் தின்னலாம். ஆனால், என் அன்னையாரின் வியாக்கியானம் ஒன்றே என்னைக் கட்டுப்படுத்தும் வியாக்கியானம் என்பதில் நான் நிச்சயமாயிருந்தேன். ஆகையால், நான் மேற்கொண்ட விரதத்தின்படி நான் முட்டைகள் தின்னலாகாது, அப்படியே செய்தேன். இதனால் ஒரு கஷ்டம் உண்டாயிற்று.

 

     சைவ உணவு விடுதிகளில் கூடப் பல உணவு வகைகளிலும் முட்டை சேர்க்கிறார்கள் என்பது, விசாரித்ததில் தெரிய வந்ததுதான் அக்கஷ்டம். பலவகையான களிகள், கேக்குகள் ஆகியவைகளில் முட்டைக் கலப்பு உண்டு. எனவே இன்னதில் இன்னது இருக்கிறது என்பது முன்னதாகவே தெரிந்திருந்தாலன்றி, ஒரு குறிப்பிட்ட உணவில் முட்டை கலந்திருக்கிறதா, இல்லையா என்பதைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டிய சங்கடமான முறையையும் நான் அனுசரிக்க வேண்டியதாயிற்று. என் கடமையை உணர்ந்ததன் காரணமாக எனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்ட தெனினும், இது என் உணவை இன்னும் எளிதாக்கி விட்டது. இவ்விதம் எளிதானது எனக்கு இன்னுமொரு தொல்லையையும் உண்டாக்கியது. நான் ருசித்துச் சாப்பிடத் தொடங்கிய பல உணவு வகைகளையும் கைவிட நேர்ந்ததே அத்தொல்லை. இந்தச் சங்கடங்களெல்லாம் சீக்கிரத்தில் மறைந்து விட்டன. ஏனெனில், விரதத்தைக் கண்டிப்பாக அனுசரித்து வருகிறோம் என்பது எனக்கு உள்ளூற ஒரு ருசியை உண்டாக்கியது. நாவின் ருசியைவிட உள்ளத்தின் இந்த ருசி, தெளிவாக அதிக இன்பத்தையும் சுகத்தையும் தந்ததோடு நிரந்தரமானதாகவும் இருந்தது. என்றாலும், உண்மையான அவதி இனிமேல்தான் எற்பட இருந்தது. மற்றொரு விரதத்தைப் பற்றியதே அது. கடவுளின் அருளைப் பெற்றோருக்கு யார்தான் தீங்கு இழைத்துவிட முடியும் ?

 

     விரதங்கள் அல்லது பிரதிக்ஞைகளைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது. பிரதிக்ஞைகளுக்கு வியாக்கியானம் கூறவதிலேயே உலகமெங்கும் சச்சரவுகள் உண்டாகின்றன். பிரதிக்ஞை என்னதான் தெளிவானதாக இருந்தாலும் சரி, தங்களுடைய காரியத்திற்கு ஏற்றவகையில் அதைப் புரட்டித் திரித்துக் கூறிவிடுகிறார்கள். அப்படிச் செய்கிறவர்களைப் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரையில், அரசர்களிலிருந்து உழவர் வரையில், சமூகத்தின் எல்லா வகுப்பினரிடையேயும் காணலாம். சுயநலம் அவர்களைக் குருடர்கள் ஆக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

 

     ஒரு பிரதிக்ஞையை யோக்கியமாகக் கூறும் வியாக்கியானத்தை ஒப்புக்கொண்டு விடுவதுதான் இதில் சிறந்த வழியாகும். இரண்டு வகையான வியாக்கியானங்கள் சாத்தியமாகும் போது, பலவீனராயிருக்கும் கட்சியினர் கூறும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளுவது மற்றோர் சிறந்த வழி. இந்த இரண்டு விதிகளையும் நிராகரித்து விடும்போது அசத்தியத்தின் பலனாக சச்சரவுகளும் துன்பங்களும் எழுகின்றன. எவன் சத்தியத்தை நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியைப் பின்பற்றுகிறான். வியாக்கியானத்திற்காக, அவன் படித்தவர்களின் ஆலோசனையை நாட வேண்டியதில்லை. மாமிசம் எது என்பதற்கு என் அன்னை கொண்ட வியாக்கியானமே சரியான வழியின் படி எனக்கு உண்மை வியாக்கியானம். இதுவன்றி, என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ, நான் அதிக அறிவு படைத்து விட்டேன் என்ற அகம் பாவமோ, எனக்குப் போதித்திருக்க கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.

 

     இங்கிலாந்தில் நான் செய்த உணவுச் சோதனைகளெல்லாம், சிக்கனத்தையும், தேகாரோக்கியத்தையுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்பட்டவை. உணவுப் பிரச்சினைக்கும் மதத்துக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றி நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும் வரையில் சிந்திக்கவே இல்லை. அங்கேதான் நான் கடுமையான சோதனைகளை மேற்கொண்டேன். அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன். என்றாலும் இவைகளுக்கெல்லாம் இங்கிலாந்திலேயே விதை விதைக்கப்பட்டுவிட்டது.

 

 

     ஒரு மதத்தில் பிறந்தவர்களைவிட அம்மதத்திற்குப் புதிதாக மாறியவர்களுக்கு அம்மதத்தினரிடம் அதிக அன்பு இருப்பது இயல்பு. சைவ உணவு என்பது அப்பொழுது இங்கிலாந்துக்கு ஒரு புதிய தருமம். எனக்கும் அப்படியே. ஏனெனில் மாமிசம் சாப்பிட வேண்டியது அவசியம் என்பதில் திட நம்பிக்கையுள்ளவனாக நான் அங்கே சென்றேன். ஆனால், அறிவாராய்ச்சியின் மூலம் சைவ உணவே சிறந்தது என்ற கொள்கைக்குப் பிறகு மாறி விட்டேன் என்பதை முன்னால் கவனித்தோம். சைவ உணவு சம்பந்தமாகப் புதிதாக மதம் மாறியவனுக்கு இருக்கும் உற்சாகம் எனக்கும் இருந்ததால், நான் வசித்துவந்த பகுதியான பேஸ் வாட்டரில் ஒரு சைவ உணவு சங்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன். ஸர் எட்வின் அர்னால்டு அங்கேதான் வசித்தார். சங்கத்திற்கு உபதலைவராக இருக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். வெஜிடேரியன் என்ற சைவ உணவுப் பத்திரிகைக்கு ஆசிரியரான டாக்டர் ஓல்டுபீல்டு சங்கத் தலைவரானார். நான் அதற்குச் செயலாளனானேன். கொஞ்ச காலம் சங்கம் சரிவர நடந்து வந்தது. ஆனால், சில மாதங்களில் எல்லாம் கலைந்து போய்விட்டது. அடிக்கடி ஓர் இடத்திலிருந்து வேறு ஓர் இடத்திற்கு மாறிவிடும் என் பழக்கப்படி அப்பகுதியிலிருந்து நான் குடி பெயர்ந்துவிட்டதே சங்கம் கலைந்து விட்டதற்குக் காரணம். என்றாலும் இந்தக் கொஞ்ச காலச் சாதாரணமான அனுபவமே, ஸ்தாபனங்களை உருவாக்கி நடத்துவதில் எனக்குச் சிறிது பயிற்சியை அளித்திருந்தது.

 

18. கூச்சமே எனது பாதுகாப்பு

 

சைவ உணவாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு நான் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். இக்குழுவின் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் நான் தவறாமல் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், கூட்டங்களில் நான் பேசுவது மாத்திரம் இல்லை. டாக்டர் ஓல்டுபீல்டு என்னிடம் ஒரு சமயம் “நீங்கள் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே! அப்படியிருக்க, கமிட்டிக் கூட்டங்களில் மாத்திரம் நீங்கள் ஏன் வாய் திறப்பதே இல்லை? தேனீக்களில் நீங்கள் ஆண் ஈ போன்றிருக்கிறீர்கள்” என்றார். அவர் இவ்விதம் என்னைக் கேலி செய்ததைப் பாராட்டினேன். தேனீக்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. ஆண் ஈயோ முற்றும் சோம்பேறியாக இருக்கிறது. இக்கூட்டங்களில் மற்றவர்களெல்லாம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போது நான் மாத்திரம் பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பது பெரிய விசித்திரமே. பேசுவதற்கு எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், பேசத் தெரியாத குறைதான். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்னைவிட விஷயங்களை நன்கு அறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. பிறகு வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடுவது உண்டு. தைரியப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிப்பது என்று நான் எண்ணியதும், கூட்டத்தில் அந்த விஷயம் போய், ஒரு புது விஷயம் ஆலோசனைக்கு வந்துவிடும். இப்படியே நீண்ட காலம் நடந்துகொண்டு வந்தது.

 

     இதற்கு மத்தியில் ஒரு முக்கியமான விஷயம் விவாதத்திற்கு வந்தது. கூட்டத்திற்குப் போகாமல் இருந்து விடுவது தவறு என்று நினைத்தேன். எதுவும் பேசாமல், வோட்டுப் போட்டுவிட்டு மாத்திரம் வந்துவிடுவது கோழைத்தனம் என்றும் தோன்றிற்று. பின்வரும் ரீதியில் அந்த விவாதம் எழுந்தது, சங்கத்திற்கு ஸ்ரீ ஹில்ஸ் தலைவராக இருந்தார். அவர் தேம்ஸ் இரும்புத் தொழிற்சாலையின் சொந்தக்காரர். நல்லொழுக்க விஷயத்தில் அவர் கண்டிப்பான கொள்கையுடையவர். அவருடைய பொருளுதவியைக் கொண்டே சங்கம் நடந்து வந்தது என்றும் சொல்லவேண்டும். கமிட்டியின் உறுப்பினர்களில் பலர் அவருடைய ஆதரவில் வாழ்ந்து வருபவர்கள். சைவ உணவு இயக்கத்தில் பிரசித்தி பெற்றவரான டாக்டர் அல்லின்ஸனும் இக்கமிட்டியில் ஓர் உறுப்பினார். அச்சமயம் புதிதாகக் கிளம்பிய கர்ப்பத்தடை இயக்கத்தை ஆதரிப்பவர் இவர். கர்ப்பத்தடை முறைகளை அவர் தொழிலாளரிடையே பிரச்சாரம் செய்துவந்தார். இம்முறைகள் ஒழுக்கத்தின் வேரையே அறுப்பவையாகும் என்று ஸ்ரீ ஹில்ஸ் கருதினார். உணவுச் சீர்திருத்தத்தோடு ஒழுக்கச் சீர்திருத்தமும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கம் என்பது அவருடைய அபிப்ராயம். டாக்டர் அல்லின்ஸன் போன்ற ஒழுக்கத்திற்கு விரோதமான கருத்துள்ளவர்களைச் சங்கத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் எண்ணினார்.

 

     ஆகவே, அவரை நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விஷயம் என் கவனத்தை அதிகமாக் கவர்ந்தது. கர்ப்பத்தடைக்குச் செயற்கை முறைகளை அனுசரிப்பதைப் பற்றி டாக்டர் அல்லின்ஸன் கொண்டிருந்த கருத்து ஆபத்தானது என்றே நானும் கருதினேன். ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்வர் என்ற வகையில் டாக்டர் அல்லின்ஸனை எதிர்க்க ஸ்ரீ ஹில்ஸுக்கு உரிமை உண்டு என்று நானும் கருதினேன். அதோடு ஸ்ரீ ஹில்ஸிடமும், அவருடைய உதார குணத்தினிடமும் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால் ஒழுக்கக் கொள்கைகளும், சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்று ஒப்புக்கொள்ள ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக, அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன். ஒழுக்கக் கொள்கைக்கு ஸ்ரீ ஹில்ஸின் கருத்து, அவருடைய சொந்த அபிப்பிராயமே. சங்கத்தின் தெளிவான கொள்கைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சங்கத்தின் நோக்கம் சைவ உணவுக் கொள்கையைப் பரப்புவதேயன்றி எந்த ஒழுக்க முறையையும் பரப்புவதன்று. ஆகையால், மற்ற ஒழுக்கங்களைப் பொறுத்தவரையில் ஒருவர் என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், சைவ உணவு மாத்திரமே சாப்பிடும் யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராக இருக்கலாம் என்று நான் அபிப்ராயப்பட்டேன்.

 

     என்னைப் போன்ற அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும் கமிட்டியில் இருந்தனர். ஆயினும் என் சொந்த அபிப்பிராயத்தைக் கூறிவிட வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை என்று உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்சனை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால் என் எண்ணங்களையெல்லாம் எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன். அவ்வாறே எழுதி, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு படிக்கும் துணிவுகூட எனக்கு வரவில்லை என்றே எனக்கு ஞாபகம். தலைவர் வேறொருவரைக் கொண்டு அதைக் கூட்டத்தில் படிக்கச் செய்தார். முடிவில் இது போன்ற முதல் போராட்டத்திலேயே தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக நான் இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி நியாயமானது என்ற திருப்தி எனக்கு இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கமிட்டியிலிருந்து நான் ராஜிநாமாச் செய்துவிட்டதாகவே எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது.

 

     நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முழுவதிலும் எனக்கு இந்தக் கூச்சம் இருந்து வந்தது. சாதாரணமாக, நண்பர்களைப் பார்த்துவரச் செல்லும் இடங்களில்கூட, அங்கே ஐந்தாறு பேரோ அதற்கு அதிகமானவர்களோ இருந்துவிட்டால், நான் ஊமையாகப் போய்விடுவேன்.

 

     ஒருநாள் ஸ்ரீ மஜ்முதாருடன் வெண்ட்னருக்குச் சென்றேன். அங்கே சைவ உணவுக் குடும்பம் ஒன்றுடன் தங்கினோம் உணவு முறையின் தருமம் என்ற நூலின் ஆசிரியரான ஸ்ரீ ஹோவார்டும் அதே கடலோர ஊரில் தங்கியிருந்தார். நாங்கள் அவரைச் சந்தித்தோம். சைவ உணவைப் பரப்புவதற்காக நடந்த ஒரு கூட்டத்தில் பேசுமாறு அவர் எங்களை அழைத்தார். ஒருவர், தாம் கூட்டத்தில் பேச வேண்டியதை எழுதிப் படிப்பது தவறாகக் கருதப்பட மாட்டாது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். தாங்கள் கூற வேண்டியதை, முன்பின் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் சொல்லுவதற்காகப் பலர் இவ்விதம் எழுதிப் படிப்பது உண்டு என்பதையும் நான் அறிவேன். நினைவில் இருந்தபடியே பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தை முதலில் எழுதி வைத்துக்கொண்டேன். கூட்டத்தில் அதைப் படிப்பதற்கு எழுந்தேன், என்னால் முடியவில்லை. நான் எழுதி வைத்திருந்த பிரசங்கம் ஒரே தாளில் முடிந்துவிட்டது. என்றாலும் கண் மங்கலாகிவிட்டது. உடம்பெல்லாம் நடுங்கியது. எனக்காக ஸ்ரீ மஜ்முதார் அப்பிரசங்கத்தைப் படிக்க வேண்டியதாயிற்று. அவர் சொந்தமாகப் பேசியதோ அற்புதமாக இருந்தது. கேட்டவர்கள் கரகோஷம் செய்து குதூகலமாக வரவேற்றனர். என்னுடைய திறமையின்மைக்காக மனம் வருந்தியதோடு என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.

 

     இங்கிலாந்தில் பொதுக்கூட்டத்தில் பேச நான் கடைசியாக முயன்றது. அங்கிருந்து தாய்நாடு திரும்பிய சமயத்தில்தான். இத்தடவையும் நான் என்னைப் பிறரின் நகைப்புக்கு உரியவனாகச் செய்துகொள்ளுவதில் தான் வெற்றி பெற்றேன். எனது சைவ உணவு நண்பர்களை, முன்னால் நான் கூறியிருக்கும் ஹால்பாரன் ஹோட்டலுக்கு ஒரு விருந்துக்கு அழைத்தேன். சைவ உணவு விடுதிகளில் சைவ உணவு விருந்து வைக்க முடியும் என்பது சரி. ஆனால், மாமிசச் சாப்பாடு போடும் ஹோட்டலிலும் சைவ உணவு விருந்து ஏன் சாத்தியமாகாது போகும்? என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன் பேரில் ஹால்பார்ன் ஹோட்டலின் நிர்வாகியிடம் பேசி, சுத்த சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இப்புதிய பரீட்சையை சைவக் சாப்பாட்டுக்காரர்கள் சந்தோஷமாகப் பாராட்டினார்கள். விருந்துகளெல்லாம் இன்பத்திற்காகவே வைக்கப்படுகின்றன. ஆனால், மேலை நாடுகளிலோ, விருந்தையும் ஓர் அருங்கலையாக வளர்த்திருக்கிறார்கள். அங்கே விருந்துகள் ஆடம்பரமாகவும், சங்கீதம், பிரசங்கங்கள் ஆகியவைகளுடனும் நடத்தப்படுகின்றன. நான் நடத்திய அச்சிறிய விருந்திலும் இந்த ஆடம்பரங்கள் இல்லாது போகவில்லை. ஆகையால், அதில் பிரசங்கங்களும் இருந்தாக வேண்டியதாயிற்று. நான் பேசவேண்டிய சமயம் வந்தபோது பேசுவதற்கு எழுந்து நின்றேன். சில வாக்கியங்களை மாத்திரமே கொண்ட ஒரு சிறு பிரசங்கம் செய்வதென்று அதற்காக யோசித்தும் வைத்திருந்தேன். ஆனால், முதல் வாக்கியம் பேசிய பிறகு மேற்கொண்டு பேச்சு வரவே இல்லை. பார்லிமெண்டு காமன்ஸ் சபையில் அடிஸன் செய்ய முயன்ற முதல் பிரசங்கத்தைக் குறித்து நான் படித்திருக்கிறேன். ‘நான் கருதுகிறேன் (I Conceive)’ என்று மும்முறை திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்பொழுது ஒரு கேலிக்காரர் எழுந்து ‘இக்கனவான் மும்முறை கருத்தரித்தார். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை’ என்று சொன்னார். இந்த வரலாற்றை வைத்துக் கொண்டு தமாஷ் பிரசங்கம் ஒன்றைச் செய்துவிடுவது என்று யோசித்து வைத்திருந்தேன். ஆகையால், அக்கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். முதலியே தடைப்பட்டு என் பேச்சு நின்றுவிட்டது. எனக்கு ஞாபக சக்தி அடியோடு இல்லாது போய்விட்டது. தமாஷான பிரசங்கம் ஒன்று செய்ய முயன்று, என்னையே கேலிக்கு இடமாக ஆக்கிக்கொண்டேன். கனவான்களே என் அழைப்பிற்கு இணங்கி வந்ததற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாத்திரம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டேன்.

 

     தென்னாப்ரிக்காவில்தான் இந்தக் கூச்சம் என்னை விட்டுப் போயிற்று, என்றாலும் அங்கும் அது முற்றும் போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து கொள்ளாமல் பிரசங்கம் செய்வதென்பதும் என்னால் முடியாது. முன்பின் தெரியாத ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன். முடிந்தால் பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றுகூட நண்பர்களின் கூட்டத்தில் வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை, அப்படிச் செய்யவும் மாட்டேன்.

 

     ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும். என் உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில் என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக் கொண்டேன் என்பதைத் தவிர அதனால் எனக்கு எவ்விதத்திலும் கெடுதி உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உண்மையில் அது எனக்கு நன்மையே செய்திருக்கிறது என்பதைக் காண்கிறேன். பேச்சில் எனக்கு இருந்த தயக்கம், ஒரு சமயம் கவலை தருவதாக இருந்திருந்தாலும், இப்பொழுது அது இன்பமானதாக இருக்கிறது. சொற்களைச் சிக்கனமாக உபயோகிக்க எனக்குத் கற்றுக் கொடுத்ததே அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய நன்மை. என்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் இயற்கையாகவே எனக்கு உண்டாயிற்று. சரியாகச் சிந்திக்காத சொல் எதுவும் என் நாவிலிருந்தோ, பேனாவிலிருந்தோ வெளிவருவதோ இல்லை. இந்த விஷயத்தில் இப்பொழுது நானே எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளித்துக் கொள்ள முடியும். நான் பேசியது அல்லது எழுதியது எதற்காகவும் நான் பின்னால் வருத்தப்பட நேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இவ்விதம் பல தவறுகளிலிருந்தும் நான் தப்பினேன். வீண் கால விரயமும் எனக்கு நேராதிருந்தது. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது.

 

 

     உண்மையை அறிந்தோ அறியாமலோ மிகைப்படுத்தியும் மறைத்தும் திரித்தும் கூறுவது, மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு குறைபாடு. அதனின்றும் தப்புவதற்கு மௌனம் அவசியமானது. அதிகமாகப் பேசாதவர், யோசியாமல் பேச வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு சொல்லையும் அவர் நிறுத்தியே பேசுவார். பேச வேண்டும் என்று பெருத்த ஆசையுடன் இருப்போர் பலரைப் பார்க்கிறோம். தம்மையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறத்தி வரும் பல சீட்டுக்களைப் பெறாத எந்தக் கூட்டத் தலைவரையும் காண முடியாது. பேச அனுமதி கொடுத்துவிட்டாலோ, தங்களுக்கு அளித்த நேரத்தையும் தாண்டி, இன்னும் அதிக நேரம் வேண்டும் எனக் கேட்டு அனுமதியின்றியும் இவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். இத்தகைய பேச்சுக்களினாலெல்லாம் உலகிற்கு எந்தவிதப் பயனும் இருப்பதாகச் சொல்லவே முடியாது. காலத்தை வீணாக்குவதுதான் அது. உண்மையில் எனக்கு இருந்த கூச்சமே, எனக்குக் கேடயமாகவும், கவசமாகவும் ஆயிற்று. நான் வளர்ச்சியடைய அது அனுமதித்தது. சத்திய ஆராய்ச்சியில் அது எனக்கு உதவியையும் செய்தது.

 

19. பொய்ம்மை ரணம்

இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் சொற்பமாகவே இருந்தனர். தங்களுக்கு மணமாகியிருந்தாலும் மணமாகதவர்கள்போல் நடித்து வருவது அவர்களிடம் இருந்த பழக்கம். படிப்புக்கு மண வாழ்க்கை ஏற்றதல்ல என்று அங்கே கருதப்படுகிறது. ஆகையால், பள்ளிக்கூட அல்லது கல்லூரி மாணவர்கள் எல்லோரும் மணமாகாதவர்கள். நம் நாட்டில் சிறந்திருந்த பழங்காலத்திலும் இந்தப் பழக்கமே இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள் பிரம்மச்சாரிகள் என்றே சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலேயே விவாகம் செய்து வைத்து விடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. இப்பழக்கம் இங்கிலாந்தில் இல்லவே இல்லை.     ஆகையால் தங்களுக்கு மணமாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள இங்கிலாந்தில் இருந்த இந்திய இளைஞர்கள் வெட்கப்பட்டார்கள். இவ்விதம் இவர்கள் பாசாங்கு செய்து வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. இவர்களுக்கு மணமாகிவிட்டது என்று தெரிந்துவிட்டால், இங்கிலாந்தில் இவர்கள் எந்தக் குடும்பத்தினருடன் வசிக்கிறார்களோ அக்குடும்பங்களின் இளம்பெண்களுடன் வெளியே உலாவப் போவதும், சல்லாபம் செய்வதும் முடியாது போகும். சல்லாபம் அநேகமாகக் குற்றமற்றதேயாகும். பெற்றோர்களே இதற்கு ஆதரவளிக்கிறார்கள். அந்நாட்டில் ஒவ்வோர் இளைஞனும் தனது வாழ்க்கைத் துணைவியைத் தானே தேர்ந்துகொள்ள வேண்டியவனாகிறான். அப்படியிருப்பதால் வாலிபப் பையன்களும், வாலிபப் பெண்களும் அத்தகைய உறவு கொள்ளுவது அங்கே அவசியமாகக் கூட இருக்கலாம் ஆனால், ஆங்கில இளைஞர்களுக்கு முற்றும் இயற்கையானதாக இருக்கும் இத்தகைய உறவுகளில் இங்கிலாந்துக்கு வந்ததும் இந்திய இளைஞர்கள் ஈடுபட்டு விடுவார்களேயாயின், அதன் முடிவு ஆபத்தில் முடிந்துவிடக்கூடும். அப்படியே ஆகியும் விடுகிறது. நமது வாலிபர்கள், உணர்ச்சி வயப்பட்டுப் போய்ப் பெண்களுடன் தோழமை கொள்ளுவதற்காகப் பொய்யான வாழ்க்கை நடத்தி வருவதைக் கண்டேன். இத்தகைய தோழமை ஆங்கில இளைஞர்கள் விஷயத்தில் என்னதான் குற்றமில்லாததாக இருந்தாலும், இவர்களுக்கு அது விரும்பத்தகாததே. இத்தொத்து நோய் என்னையும் பற்றிக் கொண்டது. எனக்கு மணமாகி, ஒரு குழந்தைக்கும் நான் தந்தையாக இருந்தபோதிலும், மணமாகாதவன் போல் நடித்து வர நானும் தயங்கவில்லை. ஆனால் பாசாங்கு செய்பவனாக இருந்தது எனக்கு இன்பமாயும் இல்லை. எனக்கு இருந்த கூச்சமும் அடக்கமுமே இவ்விஷயத்தில் இன்னும் அதிக தூரம் போய்விடாதவாறு என்னைத் தடுத்தன. நான் வாய்திறந்து பேசவே இல்லை என்றால், என்னுடம் பேசவேண்டும் என்றோ, உலாவப் போகவேண்டும் என்றோ எந்தப் பெண்ணும் எண்ணுவதற்கில்லை.

     கூச்சத்தோடு நான் ஒதுங்கியிருந்ததற்கு ஏற்றாற்போல் என்னிடம் கோழைத்தனம் இருந்தது. வெண்ட்னரில் ஒரு குடும்பத்தினருடன் நான் வசித்து வந்தேன். அத்தகைய குடும்பங்களில் வீட்டுக்கார அம்மாளின் மகள் விருந்தினரை உலாவ அழைத்துச் செல்லுவது வழக்கம். என் வீட்டு அம்மாளின் மகள், ஒரு நாள் என்னை வெண்ட்னரைச் சுற்றியுள்ளள அழகான மலைகளுக்கு அழைத்துச் சென்றாள். நானே வேகமாக நடப்பவன், அப்பெண்ணோ என்னையும்விட வேகமாக நடந்தாள். அவளுக்குப் பின்னால் என்னை இழுத்துக்கொண்டு போனாள் என்றே சொல்லலாம். வழியெல்லாம் ஏதோதோ பேசிக்கொண்டே போனாள். அவளுடைய ஓயாத பேச்சுக்குச் சில சமயம்,‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மாத்திரம் மெல்லிய தொனியில் பதில் சொல்லுவேன். அதிகமாக நான் பேசினால், ‘ஆம் எவ்வளவு அழகாயிருக்கிறது’ என்பேன். அவள் பறவை போல் பறந்து கொண்டிருந்தாள். நானோ எப்பொழுது வீடு திரும்பப் போகிறோம் ? என்று திகைத்துக் கொண்டிருந்தேன்.

     இவ்வாறு மலையின் உச்சிக்குப் போய்விட்டோம். திரும்ப எப்படிக் கீழே இறங்குவது என்பதே பிரச்சனை. குதி உயர்வான பூட்ஸ் போட்டிருந்தும், இருபத்தைந்து வயதுள்ள சுறுசுறுப்பான அப்பெண், அம்புபோலப் பாய்ந்து குன்றிலிருந்து இறங்கி விட்டாள். கீழே நின்றுகொண்டு சிரித்தாள், இறங்கி வரும்படி என்னை உற்சாகப்படுத்தினாள், ‘வந்து இழுத்து வரட்டுமா?’ என்றும் கேட்டாள். நான் அவ்வளவு கோழையாக இருப்பது எப்படி? எவ்வளவோ கஷ்டத்துடன் சில சமயம் ஊர்ந்தும் கூட எப்படியோ கீழே போய்ச் சேர்ந்துவிட்டேன். ‘சபாஷ்’ என்று அவள் உரக்கச் சிரித்தாள். அவளால் முடிந்தவரையில் நான் அதிக வெட்கப்படும்படி செய்துவிட்டாள்.

     ஆனால் நான் தீங்குறாமல் எங்குமே தப்பிவிட முடியாது. ஏனெனில் புரையோடும் பொய்மைப் புண்ணிலிருந்து என்னைக் காக்க கடவுள் திருவுளம் கொண்டார். வெண்ட்னரைப் போல நீர் நிலையத்தை அடுத்த மற்றோர் ஊரான பிரைட்டனுக்குப் போயிருந்தேன். அது நான் வெண்ட்னருக்குப் போவதற்கு முன்னால் அங்கே ஒரு ஹோட்டலில் சாதாரண வசதிகளுடைய ஒரு கிழ விதவையைச் சந்தித்தேன். என் இங்கிலாந்து வாசத்தின் முதலாண்டில் நடந்தது இது. ஹோட்டலில் சாப்பாட்டுக்குப் பரிமாற இருக்கும் உணவு வகைகளைக் குறிக்கும் பட்டியல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை.

     அக்கிழவி உட்கார்ந்திருந்த மேஜையிலேயே நானும் உட்கார்ந்திருந்தேன். நான் அந்த இடத்திற்குப் புதியவன். ஆகையால் விழிக்கிறேன் என்பதை அம்மூதாட்டி கண்டு கொண்டார். எனக்கு உதவி செய்யவும் முன் வந்தார். “நீர் இவ்விடத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது இன்னது வேண்டும் என்று ஏன் கேட்காமல் இருக்கிறீர்?” என்று கேட்டார். அப்பட்டியலை எழுத்துக் கூட்டிப் படித்து, அதில் கண்டவைகளில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பரிசாரகரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நான் தயார் ஆகிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த நல்ல மூதாட்டி, மேற்கண்டவாறு குறுக்கிட்டார். நான் அவருக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த கஷ்டத்தையும் விளக்கினேன். “பிரெஞ்சு மொழி எனக்குத் தெரியாததனால் பரிமாறப் படுவதில் எது மாமிசக் கலப்பில்லாதது என்று எனக்கு விளங்கவில்லை” என்றேன்.

     “நான் உமக்கு உதவி செய்கிறேன். அப்பட்டியலை உமக்கு விளக்கிக் கூறி, நீர் எதைச் சாப்பிடலாம் என்பதையும் காட்டுகிறேன்” என்றார் அம்மூதாட்டி. வந்தனத்துடன் அவர் உதவியைப் பயன்படுத்திக் கொண்டேன். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின் ஆரம்பம் இது. பின்னர் இது நட்பாக வளர்ந்து, நான் இங்கிலாந்தில் இருந்த வரையிலும், அதற்குப் பிறகு நீண்டகாலமும் கூட, இந்த நட்பு தொடர்ந்து இருந்து வந்தது. அவர் தமது லண்டன் விலாசத்தை எனக்குக் கொடுத்ததோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் தம் வீட்டுக்கு சாப்பிட வருமாறும் அழைத்தார். விசேஷ சந்தர்ப்பங்களிலும் அவர் என்னை அழைப்பார். என் கூச்சத்தைப் போக்கிக் கொள்ள உதவி செய்வார். இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் நான் பேசும்படியும் செய்வார். இவ்விதம் பேசுவதில் ஈடுபட்ட பெண்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவள், அம் மூதாட்டியின் வீட்டிலேயே வசித்து வந்த ஒருத்தியாவாள். அடிக்கடி நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருக்கும்படியும் விடப் படுவோம்.

     இவையெல்லாம் முதலில் எனக்கும் பெரும் சங்கடமாகவே இருந்தன. பேச்சை முதலில் தொடங்க என்னால் முடியாது. விகடமாகப் பேசி, நகைப்பை உண்டாக்கவும் என்னால் ஆகாது. ஆனால், அப்பெண் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். நானும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நாளாக ஆக, ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கலானேன். அந்த இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்தையும் விரும்பத்தலைப் பட்டேன்.

     அம்மூதாட்டி நாளுக்கு நாள் தமது வலையை விரிவாகப் பரப்பிக் கொண்டே போனார். எங்கள் சந்திப்பில் அவர் அதிகச் சிரத்தை கொள்ளலானார். எங்கள் இருவரைக் குறித்தும் அவருடைய சொந்தத் திட்டம் ஏதாவது இருந்திருக்க கூடும்.

     என் நிலைமை அதிகச் சங்கடமானதாயிற்று. ‘எனக்கு மணமாகி விட்டது’ என்பதை முன்னாலேயே அந்த நல்ல மூதாட்டிக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்பொழுது அவர், எங்கள் இருவருக்கும் விவாக நிச்சயம் செய்ய எண்ணியிருக்க மாட்டார். என் பிழையைத் திருத்திக்கொள்ள இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை. உண்மையைச் சொன்னால் இனிமேலாவது துயரத்திற்கு உள்ளாகாமல் நான் காப்பாற்றப் பட்டு விடுவேன். என் மனத்தில் இத்தகைய எண்ணங்களுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதம் ஏறக்குறைய பின்வருமாறு இருந்தது.

     ‘நாம் பிரைட்டனில் சந்தித்ததிலிருந்து நீங்கள் என்னிடம் அன்புடன் இருந்திருக்கிறீர்கள். தாய், தனது மகனை கவனிப்பதுபோல என்னைக் கவனித்தும் வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் ஆகிவிட வேண்டும் என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த நோக்கத்துடன் இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். விஷயம் முற்றுவதற்கு முன்னால், உங்கள் அன்புக்குத் தகுதியற்றவனாக நான் இருந்திருக்கிறேன் என்பதை நான் உங்களிடம் ஒப்புக் கொண்டுவிட வேண்டும். நான் உங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தபோதே, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள், தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன்.

     ‘அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்பொழுது உணருகிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும் சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனுக்கு நான் தந்தை. இவ்வளவு காலமும் இதையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் மனம் நோகிறேன். ஆனால், உண்மையைச் சொல்லிவிடும் தைரியத்தை எனக்குக் கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா ? நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆவவேண்டும் என்று இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள் போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும்.

     ‘இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்த பிறகு. நீங்கள் காட்டிய அன்புக்கு அருகதையற்றவனாக நான் இருந்திருக்கிறேன் என்று நீங்கள் உணர்ந்தால், அது தவறு என்று நான் எண்ண மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்களுடைய அன்பினாலும் நீங்கள் என்னிடம் காட்டிய சிரத்தையினாலும் நிரந்தரமான நன்றியறிதலுக்குக் கடமைப்பட்டவனாக என்னைச் செய்திருக்கிறீர்கள். இக்கடிதத்திற்குப் பிறகும், நீங்கள் என்னை நிராகரித்து விடாமல், உங்களுடைய அன்பான வீட்டிற்கு வரத் தகுதியுடையவனாகவே என்னைக் கருதுகிறீர்கள் என்றால் அதற்கு உரியவனாவதற்குப் பாடுபட நான் தவறமாட்டேன், இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்ளுவேன்.’

     இத்தகைய கடிதத்தை ஒரே சமயத்தில் நான் எழுதியிருக்க முடியாது என்பதை வாசகர் அறியவேண்டும். அதை நான் நிச்சயமாகத் திரும்பத் திரும்பப் பன்முறை திருத்தி எழுதியிருக்க வேண்டும். ஆனால், அதை எழுதிய பிறகு, என் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெருஞ்சுமை நீங்கியது. அநேகமாக அடுத்த தபாலிலேயே அம்மூதாட்டியிடமிருந்து எனக்குப் பதிலும் வந்தது. அது ஏறக்குறையப் பின்வருமாறு:

     ‘எதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்து. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்து விட்டோம். நீங்கள் செய்துவிட்ட, உண்மையை மறைத்த குற்றம் என்று நீங்கள் கூறும் செயல், மன்னிகத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு நீங்கள் தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர்பார்க்கிறோம் அதோடு உங்கள் குழந்தைக் கல்யாணத்தைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்து, உங்கள் சங்கடத்தில், நாங்கள் சிரித்து இன்புறுவதையும் எதிர் நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு, ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா?’

     இவ்வாறு நான் என்னிடமிருந்து, பொய்மையின் புரையோடிய புண்ணைப் போக்கிக்கொண்டேன். அதற்கு பிறகு - அவசியமாகும் இடங்களிலெல்லாம் எனக்கு மணம் ஆகிவிட்டதைக் குறித்துப் பேச நான் தயங்கியதே இல்லை.

 

20. சமயங்களுடன் தொடர்பு

 

நான் இங்கிலாந்தில் இருந்த இரண்டாம் ஆண்டின் இறுதியில் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் மணம் ஆகாதவர்கள். அவர்கள் கீதையைக் குறித்து என்னிடம் பேசினர். ஸர் எட்வின் அர்னால்டு மொழி பெயர்த்திருந்த கீதையை அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அசல் நூலைத் தங்களுடன் சேர்ந்து படிக்க வருமாறு என்னை அழைத்தார்கள். அத்தெய்வீக நூலைச் சமஸ்கிருதத்திலோ, குஜராத்தியிலோ நான் படித்ததில்லையாகையால் எனக்கு வெட்கமாகி விட்டது. நான் கீதையைப் படித்ததேயில்லை. ஆனால், அவர்களோடு சேர்ந்து மகிழச்சியுடன் அதைப் படிப்பேன் என்பதை நான் அவர்களிடம் சொல்லியாக வேண்டியதாயிற்று. சமஸ்கிருதத்தில் எனக்கு இருந்த ஞானம் சொற்பமேயாயினும், மொழிபெயர்ப்பு எந்த இடத்தில் அதன் பொருளைச் சரியாகக் கொண்டுவரத் தவறியிருக்கிறது என்பதைக் கூறும் அளவுக்கு மூலநூல் எனக்கு விளங்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன். அவர்களோடு சேர்ந்து கீதையைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் இரண்டாவது அத்தியாத்தில் காணும் சில சுலோகங்களின் கருத்து இது.

இந்திரிய விசயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு
     அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது.
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது,
     ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது
குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது,
     குழப்பத்திலிருந்த நினைவின்மையும்
நினைவின்மையிலிருந்து புத்தி நாசமும் உண்டாகின்றன
     புத்தி நாசத்தினால் மனிதன் அழிந்துபோகிறான்.


     இந்தச் சுலோகங்கள் என் மனத்தில் ஆழப் பதிந்தன. அவை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்நூல் விலை மதிப்பைக் கடந்த மாணிக்கமாக எனக்குத் தோன்றியது. அதிலிருந்து இந்தக் கருத்து எனக்கு வலுப்பட்டுக்கொண்டே வந்தது. இதன் பலனாக, சத்தியமான ஞானத்தைப் போதிக்கும் மிகச் சிறந்த நூல் இது என்று நான் எண்ணி வருகிறேன். எனக்கு மனச் சஞ்சலங்கள் ஏற்படும் சமயங்களில் இந்நூல் மதித்தற்கரிய உதவியாக இருந்திருக்கிறது. அநேகமாக கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் ஸர் எட்வின் அர்னால்டின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்தது என்று நான் கருதுகிறேன். மூலத்தின் கருத்து ஒரு சிறிதும் மாறுபடாத வகையில் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். அது மொழிபெயர்ப்பாகவே தோன்றவில்லை. இந்த நண்பர்களுடன் சேர்ந்து, அப்பொழுது கீதையை நான் படித்த போதிலும் அதைத் தீரக் கற்றேன் என்று நான் பாசாங்கு செய்வதற்கில்லை. சில ஆண்டுகள் சென்ற பின்னரே நான் தினந்தோறும் கீதையைப் படிக்கலானேன்.

     ஸர் எட்வின் அர்னால்டு எழுதிய, ஆசியாவின் ஜோதி என்ற நூலையும் படிக்கும்படி அச்சகோதரர்கள் என்னிடம் கூறினார். பகவத் கீதையின் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று மாத்திரமே ஸர் அர்னால்டை அதுவரையில் எனக்குத் தெரியும். பகவத் கீதையையும்விட இன்னும் அதிகக் கவனத்துடன் அந்நூலைப் படித்தேன். படிக்கக் கையில் எடுத்துவிட்டால் பிறகு அதைக் கீழே வைத்துவிட முடிவதில்லை. அச்சகோதரர்கள் ஒரு சமயம் என்னைப் பிளாவட்ஸ்கி விடுதிக்கு அழைத்து சென்று, பிளாவட்ஸ்கி அம்மையாரையும் ஸ்ரீமதி பெஸன்டையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஸ்ரீமதி பெஸன்ட் அப்பொழுதுதான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். அவர் இவ்விதம் மாறிவிட்டதைக் குறித்து நடந்த வாதப் பிரதிவாதங்களைச் சிரத்தையுடன் கவனித்து வந்தேன். இச்சங்கத்தில் சேரும்படி நண்பர்கள் எனக்கும் யோசனை கூறினர். என் மதத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மத சம்பந்தமான எந்த ஒரு ஸ்தாபனத்திலும் சேர நான் விரும்பவில்லை என்று மரியாதையுடன் கூறி மறுத்துவிட்டேன். அந்தச் சகோதரர்கள் சொன்னதன் பேரில் பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய, பிரம்மஞானத் திறவு கோல் என்னும் நூலை நான் படித்தாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் எனக்கு ஊட்டியது. ஹிந்து சமயத்தில் மூடநம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன என்று பாதிரிகள் செய்த பிரச்சாரத்தினால் எனக்கு உண்டாகியிருந்த தவறான எண்ணத்தையும் இந்நூல் போக்கியது.

     அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ்கோட்டில் கிறிஸ்தவ் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார். “நான் சைவ உணவ மாத்திரமே சாப்பிடுபவன், மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள் அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை. தயவு செய்து பைபிளைப் படியுங்கள்” என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன், அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக் கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது. அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய ஏற்பாட்டைப் படித்துக் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காகச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்கு கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை, எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.

     ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.

     இவைகளைப் படித்ததனால் மற்றச் சமயாசாரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கவேண்டும் என்ற பசி எனக்கு உண்டாகிவிட்டது. கார்லைல் எழுதிய, வீரர்களும் வீரர் வழிபாடும் என்ற நூலைப் படிக்குமாறு ஒரு நண்பர் கூறினார். வீரனைத் தீர்க்கதரிசியாகக் கூறும் அத்தியாயத்தைப் படித்து, முகமது நபியின் பெருமையையும் வீரத்தையும் எளிய வாழ்க்கையையும் பற்றித் தெரிந்துகொண்டேன்.

     பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்தது. மற்ற வெளி விஷயங்களைக் குறித்துப் படிக்க நேரம் கிடைப்பதே இல்லை. ஆகையால் சமயங்களைப் பற்றி இன்னும் அதிகமாக நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சமய நூல்களை இன்னும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்று என் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டேன்.

     நாத்திக வாதத்தைக் குறித்து நான் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது எப்படி? பிராட்லாவின் பெயரையும் நாத்திகம் என்று கூறப்படும் அவர் வாதத்தையும் ஒவ்வோர் இந்தியரும் அறிவர் அதைக் குறித்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதன் பெயரை மறந்துவிட்டேன். அதற்கும் முன்னாலேயே நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து விட்டேனாகையால், அப்புத்தகம் என் மனத்தை மாற்றிவிடவில்லை. அச்சமயம் ஸ்ரீமதி பெஸண்டின் பெயர் எங்கும் பிரபலமாக இருந்தது. அவர் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பிவிட்டார். ‘நான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தது ஏன்?’ என்று அவர் எழுதியிருந்த நூலையும் படித்தேன்.

     ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் பிராட்லா காலமானார். அவர் சடலத்தை வோகிங் கல்லறையில் அடக்கம் செய்தனர். இச்சவ அடக்கச் சடங்கிற்கு நானும் போயிருந்தேன். லண்டனில் இருந்த இந்தியர் எல்லோருமே அதற்குச் சென்றிருந்தனர் என்று நம்புகிறேன். அவருக்குக் கடைசி மரியாதை செய்வதற்காகப் பாதிரிமார் சிலரும் வந்திருந்தனர். அச்சடங்கிலிருந்து திரும்பும்போது ரயிலுக்காக நிலையத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர நாத்திகர், பாதிரிகளில் ஒருவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

     “சரி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார்.

     “ஆம்” என்று அடக்கமான குரலில் அந்த நல்ல மனிதர் பதில் சொன்னார்.

     “இப்பூமியின் சுற்றளவு 28,000 மைல்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்கள் அல்லவா?” என்று அந்த நாத்திகர் தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

     “ஆமாம்” என்றார் பாதிரியார்.

     “அப்படியானால் உங்கள் கடவுளின் உருவம் என்ன, அவர் எங்கே இருப்பார் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்.”

     “சரி; நம்மால் அறிய மாத்திரம் முடிந்தால், அவர் நம் இருவர் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.”

     “இதோ பாருங்கள் என்னைக் குழந்தை என்று நினைத்துவிட வேண்டாம்” என்றார், அத்தீவிரவாதி. அதோடு வெற்றிப் பார்வையுடன் எங்களை நோக்கினார்.

     பாதிரியாரோ, அடக்கத்துடன் மௌனமாக இருந்து விட்டார். இந்த வாக்குவாதம் நாத்திகத்திடம் எனக்கு இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கி விட்டது.

 

21. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை

 

ஹிந்து தருமத்தைக் குறித்தும் மற்ற உலக சமயங்களைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருந்தேன். என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். சோதனைகளிலிருந்து ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது எது என்பதை மனிதன் அறிவதில்லை. அதுவும் அச்சமயத்தில் அதைப்பற்றிய அறிவே இருப்பதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயின் தான் தற்செயலாகத் தப்பிவிட்டதாகக் சொல்லிக் கொள்ளுவான். கடவுள் நம்பிக்கை உள்ளனானால், கடவுளே தன்னைக் காத்தார் என்பான். தனக்கு இருந்த சமயஞானமோ, ஆன்மீகக் கட்டுப்பாடோதான், ஆண்டவன் தன்னிடம் கருணை காட்டியதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருவான். அல்லது வரக்கூடும். ஆனால் அவன் ரட்சிக்கப்படும் சமயத்தில் தன்னைக் காத்தது தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாடுதானா, வேறு ஒன்றா என்பதை அவன் அறியான். தனக்கு ஆன்மீக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம் பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார் ? சமய ஞானம் சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.     சமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை என்பதை இங்கிலாந்தில் தான் நான் முதன் முதலில் கண்டுகொண்டேன். இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பாற்றப்பட்டேன் என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில், அப்பொழுது நான் மிகச் சிறியவன். ஆனால், இப்பொழுதோ எனக்குச் சிறிது அனுபவமும் ஏற்பட்டிருந்தது.

     எனக்கு நினைவிருக்கும் அளவில், நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கடைசி ஆண்டில் அதாவது 1890-இல் சைவ உணவாளர்கள் மகாநாடு ஒன்று போர்ட்ஸ்மவுத்தில் நடந்தது. அதற்கு ஓர் இந்திய நண்பரும். நானும் அழைக்கப்பட்டிருந்தோம். போர்ட்ஸ்மவுத் துறைமுகம், மாலுமித் தொழிலில் ஈடுபட்டவர்களையே பெரும்பாலும் கொண்ட பட்டணம் அங்கே தீய நடத்தையுள்ள பெண்களைக் கொண்ட வீடுகள் பல உண்டு. இப்பெண்கள் விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. என்றாலும் தங்கள் கற்பு நெறியைக் குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள். இப்படிபட்ட வீடுகளில் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம். இதைப்பற்றி வரவேற்புக் கமிட்டிக்கு எதுவுமே தெரியாது என்பதை குறித்து நான் சொல்லத் தேவையில்லை. போர்ட்ஸ்மவுத் போன்ற ஒரு பட்டணத்தில் தங்குவதற்கு நல்ல இடம் எது கெட்ட இடம் எது என்பதைக் கண்டுபிடிப்பது எங்களைப்போல் எப்பொழுதோ ஒரு சமயம் அங்கே போகிறவர்களுக்குக் கஷ்டமாகவே இருந்திருக்கும்.

     மகாநாட்டிலிருந்து மாலையில் திரும்பினோம். இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ரப்பர் பிரிட்ஜ் என்ற ஒருவிதச் சீட்டாட்டம் ஆட உட்கார்ந்தோம். அவ்வீட்டுக்கார அம்மாளும் எங்களுடன் சீட்டாடினார். இப்படி வீட்டுக்கார அம்மாளும் சேர்ந்து சீட்டாடுவது, இங்கிலாந்தில் கௌரவான குடும்பங்களிலும் வழக்கம். ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் ஒவ்வொருவரும் குற்றமற்ற வகையில் கேலியாகப் பேசுவது சாதாரணமானது. ஆனால், இங்கோ என் சகாக்களும் அவ்வீட்டு அம்மாளும் ஆபாசமான பேச்சுக்களைப் பேச ஆரம்பித்தார்கள. என் நண்பர், அக்கலையில் கைதேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது. அது என்னையும் பிடித்துக் கொண்டு விட்டது, நானும் அவ்விதப் பேச்சுக்களில் கலந்து கொண்டேன். சீட்டையும் சீட்டாட்டத்தையும் விட்டுவிட்டு. எல்லை மீறி நான் போய்விட இருந்த சமயத்தில் அந்த நல்ல சகாவின்மூலம் கடவுள் எனக்குத் தெய்வீகமான எச்சரிக்கையைச் செய்தார், தம்பி “உன்னுள் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது? எழுந்து போய்விடு, சீக்கிரம்” என்று அவர் சொன்னதே அந்த எச்சரிக்கை.

     நான் வெட்கம் அடைந்தேன். எச்சரிக்கைப்படி நடந்தேன். நண்பருக்கும் என்னுள்ளே நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டேன். என் அன்னையின் முன்னிலையில் நான் மேற்கொண்டிருந்த விரதத்தை நினைவுபடுத்திக் கொண்டு, அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டேன். தடுமாறிக்கொண்டே, நடுங்கிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன். துரத்திய வேடனிடம் இருந்து தப்பிய மிருகம் போல் என் இருதயம் துடிதுடித்தது.

     என் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண், என் மனத்தில் காம இச்சையைத் தூண்டிவிட்டது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன். அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எனக்கு உண்டாயின. அந்த வீட்டிலிருந்தே போய்விடுவதா? அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவதா? நான் செய்தது என்ன கொஞ்சம் புத்தி கெட்டுப் போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்? இனி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுவதென்ற முடிவைச்செய்து கொண்டேன். அவ்வீட்டை விட்டுப் போய்விடும் மாத்திரம் அல்ல, எப்படியாவது அவ்வூரை விட்டே போய்விடுவது என்றும் தீர்மானித்தேன். மகாநாடு இரண்டு நாட்களே நடந்தது. அடுத்த நாள் மாலையே போர்ட்ஸ்மவுத்திலிருந்து நான் புறப்பட்டுவிட்டதாக ஞாபகம். என் நண்பர் மாத்திரம் சில நாட்கள் அங்கே தங்கினார்.

     சமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ, அவர் நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ எனக்கு அப்பொழுது தெரியாது. அச்சமயம் கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்பதை மாத்திரம் தெளிவற்ற முறையில் நான் அறிந்தேன். சோதனை நேர்ந்த சமயங்களிளெல்லாம் அவரே என்னைக் காத்தார். கடவுள் காப்பாற்றினார் என்ற சொற்றொடருக்கு நான் இன்று ஆழ்ந்த பொருள் கொள்ளுகிறேன் என்பதை அறிவேன். என்றாலும், அதன் முழுப்பொருளையும் நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்றே உணர்கிறேன். அதன் முழுப் பொருளையும் அறிந்த கொள்ளுவதற்கு மேலான அனுபவம் ஒன்றே உதவ முடியும். என்றாலும், ஆன்மீகத் துறையிலும், வக்கீலாக இருந்தபோதும், ஸ்தாபனங்களை நடத்தியபோதும், ராஜீய விஷயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம் கடவுளே என்னைக் காப்பாற்றினார் என்று சொல்ல முடியும். நம்பிக்கைக்கே ஒரு சிறிதும் இடம் இல்லாதபோதும், உதவுவோர் உதவத் தவறித் தேற்றுவாரும் ஓடிவிட்ட சமயத்திலும், எப்படியோ அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன். ஆனால் எங்கிருந்து அது வருகிறது என்பதை நான் அறியேன். இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும் , நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றை விடவும் அதிக உண்மையான செயல்கள் அவை. அவை மட்டுமே உண்மையானவை, மற்றவை யாவும் பொய்யானவை என்று சொல்வதும் மிகையாகாது.

     அத்தகைய வழிபாடு அல்லது பிரார்த்தனை, வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிரார்த்தனை. ஆகையால், அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு, உள்ளத் தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின், தானே இனிய கீதம் எழுந்து, இறைவன் அருளைக் கூட்டுவிக்கும். பிரார்த்தனைக்குப் பேச்சுத் தேவையில்லை, உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அத்துடன் முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்.

 

22. நாராயண ஹேமசந்திரர்

 

ஏறக்குறைய அச் சமயத்தில்தான் நாராயண ஹேமசந்திரர் இங்கிலாந்துக்கு வந்தார். அவர் எழுத்தாளர் என்று கேள்விப்பட்டிருந்தேன். தேசிய சங்கத்தைச் சேர்ந்த குமாரி மானிங் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். எல்லோருடனும் கலந்து பழகும் குணம் எனக்கு இல்லை என்பது குமாரி மானிங்குக்குத் தெரியும். நான் அவர் வீட்டுக்குப் போனால் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பேன். என்னிடம் யாராவது பேசினால் மட்டும் அதற்கு பதில் சொல்வேன். நாராயண ஹேமச்சந்திரரை அப்பெண்மணி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கோ ஆங்கிலம் தெரியாது. அவருடைய உடைகளும் விசித்திரமாக இருந்தன. அவருடைய கால்சட்டை விகாரமானது. பார்ஸி மோஸ்தரில் இருந்த அவருடைய பழுப்பு நிறச் சட்டை, கசங்கிப்போய், அழுக்காக இருந்தது. கழுத்தில் ‘டையோ, காலரோ’ இல்லை. குஞ்சம் வைத்த கம்பளித் தொப்பியைத் தலையில் வைத்திருந்தார். நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டிருந்தார்.     அவர் ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருப்பார். வட்டமான அவர் முகம் முழுவதிலும் அம்மைத் தழும்புகள். அவர் மூக்கு, கூரியதென்றோ சப்பையானதென்றோ சொல்ல முடியாது. எப்பொழுதும் தமது தாடியைக் கையினால் உருவிவிட்டுக் கொண்டே இருந்தார்.

     நாகரிகமானவர்கள் கூடியுள்ள இடத்தில் இத்தகைய விசித்திரத் தோற்றத்தோடும், வேடிக்கையான உடையோடும் இருப்பவர் மீதே எல்லோருடைய கவனமும் செல்லும்.

     “உங்களை குறித்து நான் நிரம்பக் கேள்விப் பட்டிருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன். “நீங்கள் எழுதிய நூல்கள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கு அன்பு கூர்ந்து வருவீர்களாயின் மகிழ்ச்சியடைவேன்” என்றேன்.

     நாராயண ஹேமசந்திரரின் குரல், கொஞ்சம் கம்மலாக இருக்கும். சிரித்த முகத்துடன் அவர் “வருகிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

     “ஸ்டோர் வீதியில்” என்றேன்.

     “அப்படியானால் நாம் பக்கத்தில்தான் இருக்கிறோம். நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?”

     “என்னால் முடிந்த எதையும் கற்றுக் கொடுக்க எனக்கு மகிழ்ச்சியே. என்னால் முடிந்த வரை முயல்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் இடத்திற்கே வருகிறேன்.”

     “வேண்டியதில்லை. உங்கள் இடத்திற்கே நான் வருகிறேன். என்னுடன் மொழி பெயர்ப்புப் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் கொண்டு வருகிறேன்.”

     இவ்விதம் ஏற்பாடு செய்து கொண்டோம். சீக்கிரத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.

     நாராயண ஹேமசந்திரருக்கு இலக்கணம் என்பதே தெரியாது. குதிரை என்பது வினைச்சொல் என்பார். ஓடு - என்பது பெயர்ச்சொல் என்பார். இப்படிப்பட்ட வேடிக்கையான பல சம்பவங்கள் எனக்கு நினைவு இருக்கின்றன. ஆனால், தம்முடைய இத்தகைய அறியாமைக்காக அவர் கவலைப்படுவதே இல்லை. இலக்கணத்தில் எனக்கு இருந்த சிறிது அறிவும் அவர் விஷயத்தில் பயன்படவில்லை. இலக்கணத்தைக் குறித்துத் தமக்கிருந்த அறியாமை, வெட்கப்பட வேண்டியது என்று அவர் கருதியதே இல்லை என்பது நிச்சயம்.

     அவர் கொஞ்சமேனும் கவலைப்படாமல் என்னிடம், “உங்களைப் போல் நான் பள்ளிக் கூடத்திற்குப் போனதே இல்லை. என் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு இலக்கணம் அவசியம் என்று நான் உணர்ந்ததும் இல்லை. அது சரி, உங்களுக்கு வங்காளி மொழி தெரியுமா? எனக்கு அது தெரியும், நான் வங்காளத்தில் பிரயாணம் செய்திருக்கிறேன். மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் நூல்களைக் குஜராத்தி பேசும் உலகத்துக்கு அளித்தவனே நான்தான். மற்றும் பல மொழிகளில் இருக்கும் பொக்கிஷங்களை யெல்லாம் குஜராத்தியில் மொழிபெயர்க்க நான் விரும்புகிறேன். மூலத்திற்கு நேரான மொழிப்பெயர்ப்பை நான் செய்வதில்லை என்பது உங்களுக்கு தெரியும். மூலத்தின் கருத்தைக் கொண்டு வருவதோடு நான் திருப்தியடைந்து விடுகிறேன். என்னைவிட அறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில் இன்னும் அரிய வேலைகளைச் செய்யலாம். ஆனால், இலக்கணத்தின் உதவி இல்லாமலேயே நான் இதுவரை செய்திருப்பதில் திருப்தியடைகிறேன். எனக்கு மராத்தி, ஹிந்தி, வங்காளி ஆகிய மொழிகள் தெரியும் இப்பொழுது ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். ஏராளமான சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என் ஆசை இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணுகிறீர்களா ? இல்லவே இல்லை. பிரான்ஸுக்குப் போய்ப் பிரெஞ்சு மொழி கற்க விரும்புகிறேன். அம்மொழியில் இலக்கியச் செல்வம் ஏராளம் என்று கேள்விப்படுகிறேன். சாத்தியமானால் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மன் மொழியையும் கற்பேன்” என்று சொன்னார்.

     இவ்விதம் அவர் விடாமல் பேசிக்கொண்டே போவார். பிற மொழிகளைக் கற்பதிலும், வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்வதிலும் அவருக்கு இருந்த ஆசைக்கு எல்லையே இல்லை.

     “அப்படியானால் நீங்கள் அமெரிக்காவுக்கும் போவீர்கள் அல்லவா?”

     “நிச்சயமாகப் போவேன். புதிய உலகத்தைப் பார்க்காமல் நான் எப்படி இந்தியாவுக்குத் திரும்பிவிட முடியும்?”

     “ஆனால், இதற்கெல்லாம் பணத்திற்கு என்ன செய்வீர்கள்?”

     “எனக்குப் பணம் எதற்காக? உங்களைப்போல நான் நாசூக்கானவன் அல்ல. எனக்குக் குறைந்த அளவு சாப்பாடும், குறைந்த அளவு உடையும் போதும். என் புத்தகங்களின் விற்பனையிலிருந்தும் என் நண்பர்களிடம் இருந்தும் கிடைப்பதே இதற்குப் போதுமானது. நான் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பு வண்டியிலேயே பிரயாணம் செய்கிறேன். அமெரிக்காவுக்குப் போகும் போதும் கப்பலில் கடைசி வகுப்பிலேயே நான் போவேன்.”

     நாராயண ஹேமசந்திரரின் எளிய வாழ்க்கை அவருக்கே உரியது. அந்த எளிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் இருந்தது அவருடைய கபடமற்ற தன்மையும். கர்வம் என்பதே அவரிடம் கொஞ்சமேனும் இல்லை. ஆனால், நூலாசிரியர் என்பதில் மாத்திரம் தம்முடைய திறமையைப் பற்றிக் கொஞ்சம் அதிகப்படியாகவே அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.

     நாங்கள் தினந்தோறும் சந்திப்போம். எங்கள் இருவருடைய எண்ணங்களும், செயல்களும் அநேக விஷயங்களில் ஒரேமாதிரி இருந்தன. நாங்கள் இருவரும் சேர்ந்து, மத்தியான வேளைகளில் சாப்பிடுவோம். வாரத்திற்கு 17 ஷில்லிங் செலவில் வாழ்ந்து நானே சமைத்துக் கொண்ட சமயம் அது. சில சமயங்களில் அவர் இருந்த இடத்திற்கு நான் போவேன். சில சமயங்களில் அவர் நான் இருந்த இடத்திற்கு வருவார். ஆங்கில தோரணையில் நான் சமையல் செய்துவந்தேன். இந்திய முறைச் சமையல் தவிர வேறு எதுவுமே அவருக்குப் பிடிக்காது. பருப்பு இல்லாமல் அவருக்குச் சரிப்படாது. காரட் முதலியவைகளைக் கொண்டு நான் சூப் தயாரிப்பேன். எனக்கு இப்படியும் ருசி கெட்டுப் போய்விட்டதே என்று அவர் பரிதாபப்படுவார். ஒருநாள் இந்தியக் காராமணியை எங்கோ தேடிப்பிடித்துச் சமைத்து அதைக் கொண்டு வந்தார். நான் மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டேன். அதிலிருந்து ஒருவருக்கொருவர் கொடுப்பதும் வாங்கிக் கொள்ளுவதுமான முறை ஆரம்பமாயிற்று. நான் சமைத்ததை அவருக்குக் கொண்டு போய் கொடுப்பேன், அவர் சமைத்ததை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்.

     அச்சமயத்தில் கார்டினல் மானிங்கின் பெயர் எங்கும் பிரசித்தமாக இருந்தது. ஜான் பர்ன்ஸ், கார்டினல் மானிங் ஆகிய இருவரின் முயற்சியினால் துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் சீக்கிரத்தில் முடிவுற்றது. கார்டினலின் எளிய வாழ்க்கையைக் குறித்து டிஸ்ரேலி பாராட்டிக் கூறியிருக்கிறார் என்று நாராயண ஹேமசந்திரரிடம் சொன்னேன். “அப்படியானால் அந்த முனிவரை நான் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.

     “அவரோ மிகப் பெரிய மனிதர். அப்படியிருக்க அவரை எப்படிப் பார்க்க முடியும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?” என்றேன்.

     “ஏன் பார்க்க முடியாது? எப்படிப் பார்ப்பது என்பது எனக்குத் தெரியும். எனக்காக என் பெயரில் அவருக்கு நீங்கள் எழுத வேண்டும். நான் ஒரு நூலாசிரியர் என்றும், அவருடைய ஜீவகாருண்ய சேவைகளுக்காக அவரை நேரில் கண்டு வாழ்த்துக் கூற விரும்புகிறேன் என்று எழுதுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாததனால் எனக்கு மொழிபெயர்ப்பாளராக உங்களையும் உடன் அழைத்து வரவேண்டியிருக்கிறது என்றும் எழுதுங்கள்” என்றார்.

     அப்படியே நான் கடிதம் எழுதினேன். இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் சந்திப்பதற்கு நேரத்தைக் குறிப்பிட்டு, கார்டினல் மானிங்கிடமிருந்து கடிதம் வந்தது. ஆகவே, நாங்கள் இருவரும் கார்டினலிடம் போனோம். யாரையாவது பார்க்கப் போகும்போது உடுத்துக் கொள்ளும் சம்பிரதாய உடையை அணிந்துகொண்டு நான் போனேன். ஆனால், நாராயண ஹேமசந்திரரோ, எப்பொழுதும்போல் அதே சட்டையையும் கால் சட்டையையும் போட்டுக் கொண்டே வந்தார். இதை குறித்து நான் கேலிசெய்த போது அவர் கூறியதாவது.

     “நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள். மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை அவருடைய உள்ளத்தைப் பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள்.”     கார்டினலின் மாளிகைக்குள் சென்றோம். நாங்கள் போய் உட்கார்ந்ததும், மெலிந்த உயரமான கிழக் கனவான் ஒருவர் வந்து எங்களுடன் கை குலுக்கினார். நாராயண ஹேமசந்திரர் பின் வருமாறு தமது வாழ்த்தைத் கூறினார்: “உங்கள் நேரத்தை அதிகம் வீணாக்க நான் விரும்பவில்லை. உங்கள் பெருமையைக் குறித்து நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். வேலை நிறுத்தம் செய்திருந்தவர்களுக்கு நீங்கள் செய்த சிறந்த சேவைக்காக உங்களிடம் வந்து, நன்றி தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உலகத்திலுள்ள மகான்களையெல்லாம் தரிசிப்பது என் வழக்கம். இதனாலேயே தங்களுக்கு நான் இந்தத் தொந்தரவைக் கொடுத்துவிட்டேன்.”

     குஜராத்தியில் அவர் சொன்னதை நான் மேற்கண்டவாறு மொழிபெயர்த்துச் சொன்னேன்.

     “நீங்கள் வந்ததற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். லண்டன் வாழ்க்கை உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றும், இங்குள்ள மக்களுடன் நீங்கள் பழகுவீர்கள் என்றும் நம்புகிறேன். ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவானாக” என்றார் கார்டினல்.

     இவ்வாறு கூறிவிட்டுக் கார்டினல் எழுந்து நின்று எங்களுக்கு விடையளித்தார்.

     ஒரு நாள் நாராயண ஹேமசந்திரர் வேட்டி கட்டி, ஒரு சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு, என் இருப்பிடத்திற்கு வந்தார். அச்சமயம் இருந்த வீட்டு அம்மாள் புதியவர். நாராயண ஹேமசந்திரரை அவருக்குத் தெரியாது. இந்த நிலையில் அவர்தான் ஹேமசந்திரருக்குக் கதவைத் திறந்துவிட்டார். அவர் பயந்து போய், என்னிடம் ஓடோடி வந்து, “பைத்தியம்போல் இருக்கும் ஒருவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்றார். நான் கதவண்டை போனேன். நாராயண ஹேமசந்திரரைப் பார்த்து, வியப்படைந்தேன். அவருடைய கோலத்தைக் கண்டு திடுக்கிட்டும் போனேன். ஆனால் அவருடைய முகத்திலோ வழக்கமாக இருக்கும் புன்னகையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

     “தெருவிலுள்ள சிறுவர்கள் உங்களைத் தொடர்ந்து வந்து உங்கள் துணிகளைக் கிழிக்க முற்படவில்லையா?” என்று அவரைக் கேட்டேன். “ஆம், குழந்தைகள் என் பின்னால் ஓடி வந்தனர். அவர்களை நான் பொருட்படுத்தவில்லை. பிறகு சும்மா இருந்துவிட்டார்கள்” என்றார்.

     நாராயண ஹேமசந்திரர், லண்டனில் சில மாதங்கள் தங்கியிருந்து விட்டுப் பிறகு பாரிஸூக்குச் சென்றார். பிரெஞ்சு மொழி படிக்கவும், பிரெஞ்சு நூல்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார். அவருடைய மொழி பெயர்ப்பைத் திருத்துவதற்குப் போதுமான அளவுக்கு எனக்குப் பிரெஞ்சு மொழி தெரியும். ஆகவே, அதைப் படித்துப் பார்க்க அவர் என்னிடம் கொடுத்தார். அது சாராம்சமேயன்றி மொழிபெயர்ப்பன்று.

     கடைசியாக அமெரிக்கா போவது என்ற தமது உறுதியையும் அவர் நிறைவேற்றி விட்டார். அதிகக் கஷ்டப்பட்டே கப்பலில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் அவருக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நாள் வேட்டியும் உள் சட்டையும் மாத்திரம் அணிந்து கொண்டு, அவர் வெளியே வந்து விடவே, ஆபாசமான உடை அணிந்திருந்த குற்றத்திற்காக அவரைக் கைது செய்து வழக்குத் தொடுத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலையடைந்தார் என்றே எனக்கு ஞாபகம்.

 

23. மகத்தான கண்காட்சி

 

1899-இல் பாரிஸில் மகத்தான கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்காகச் செய்யப்பட்டு வந்த விமரிசையான ஏற்பாடுகளைக் குறித்துப் பத்திரிகையில் படித்திருந்தேன். எனக்குப் பாரிஸைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. ஆகையால், இச்சமயத்தில் அங்கே போனால் இரண்டையுமே பார்த்ததாகும் என்று எண்ணினேன். கண்காட்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இருந்தது, எப்பீல் கோபுரம். அது முழுக்க முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. சுமார் ஆயிரம் அடி உயரம் இருக்கும். கவர்ச்சியான மற்றும் பல பொருள்களும் காட்சியில் இருந்தன. ஆனால், எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக இருந்தது அந்தக் கோபுரமே. ஏனெனில் அவ்வளவு உயரமான ஒரு கட்டுக்கோப்பு, விழுந்து விடாமல் எப்போதும் நிற்க முடியாது என்று அதுவரையில் கருதப்பட்டு வந்தது.     பாரிஸில் சைவ உணவு விடுதி ஒன்று உண்டு என்று கேள்விப் பட்டிருந்தேன். அங்கே ஓர் அறையை அமர்த்திக் கொண்டு, ஏழு நாட்கள் தங்கினேன். பாரிஸூக்குப் பிரயாணம் செய்ததிலும் அதைச் சுற்றிப் பார்த்ததிலும் மிகச் சிக்கனமாகவே செலவழித்துச் சமாளித்துக் கொண்டேன். பாரிஸின் அமைப்புப் படத்தையும் கண்காட்சியின் விவரங்களும் படமும் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு, அவற்றின் உதவியால் பெரும்பாலும் நடந்தே சென்று, எல்லாவற்றையும் பார்த்தேன். முக்கியமான தெருக்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் வழி தெரிய அவைகளே போதுமானவை.

     கண்காட்சி மிகப் பெரியது. பலவகையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்பொழுது நினைவு இல்லை. எப்பீல் கோபுரத்தில் இரண்டு, மூன்று தடவை நான் ஏறியதால் அதுமாத்திரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் முதல் அடுக்கில் ஒரு சாப்பாட்டு விடுதி இருந்தது. வெகு உயரத்தில் நான் மத்தியானச் சாப்பாடு உண்டேன் என்று சொல்லிக் கொள்ளுவது சாத்தியமாக வேண்டும் என்ற திருப்திக்காக மாத்திரம் ஏழு ஷில்லிங்கை அங்கே தொலைத்தேன்.

     பாரிஸிலுள்ள புராதனமான கிறிஸ்தவாலயங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அவற்றின் கம்பீரமான தோற்றமும் அங்கிருந்த அமைதியும் என்றும் மறக்க முடியாதவை. நோத்ரதாம் கோயிலின் அற்புதமான அமைப்பும், உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோயில்களைக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாகக் கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.

     பாரிஸ் நகரின் நாகரிக வாழ்க்கையைக் குறித்தும், களியாட்டங்களைப் பற்றியும் நான் நிரம்பப் படித்திருந்தேன். அவற்றிற்கான அறிகுறிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்பட்டன. ஆனால், இக் காட்சிகளுக்கெல்லாம் புறம்பானவைகளாகவே கிறிஸ்தவாலயங்கள் இருந்தன. இக்கோயில்கள் ஒன்றினுள் ஒருவன் போய் விடுவானாயின், வெளியிலுள்ள சப்தங்களையும் சந்தடிகளையும் அவன் மறந்தே போவான். உடனே அவனுடைய தன்மையே மாறிவிடும். கன்னி மேரியின் சிலை முன்பு மண்டியிட்டுத் தொழும் ஒருவனை கடந்து சென்றதுமே அவன் கண்ணியமாகவும் பக்தியோடும் நடந்து கொண்டு விடுவான். இவ்விதம் முழந்தாள் இடுவதும், பிரார்த்தனை செய்வதும் வெறும் மூட நம்பிக்கைகளாக இருக்க முடியாது. கன்னி மேரியின் முன் பயபக்தியுடன் மண்டியிட்டுக் கொண்டு வணங்கியவர்கள் வெறும் சலவைக்கல்லை மாத்திரம் வணங்கியவர்களாக இருக்க முடியாது என்று அப்பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி, அது முதலே என்னுள் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் கல்லை வணங்கவில்லை, உண்மையான பக்தியால் பரவசம் அடைந்து, அக்கல் எதற்கு அறிகுறியாக நின்றதோ அந்தத் தெய்வீக சக்தியையே அவர்கள் வணங்கினார்கள். இத்தகைய பிரார்த்தனைகளினால் அவர்கள் கடவுளின் மகிமையை வளர்த்தார்களேயல்லாமல் குறைத்து விடவில்லை என்றும் அப்பொழுது எனக்குத தேன்றியதாக நினைவிருக்கிறது.

     எப்பீல் கோபுரத்தைப்பற்றியும் இங்கே ஒரு வார்த்தை கூற வேண்டும். அந்தக் கோபுரம் இன்று எவ்விதம் பயன்படுகிறது என்பது தெரியாது. ஆனால், அதைக் குறித்துப் பலர் குறை கூறினர் என்றும், மற்றும் பலர் போற்றினர் என்றும் அப்பொழுது அறிந்தேன். அதைக் குறை கூறியவர்களில் முக்கியமானவர் டால்ஸ்டாய். எப்பீல் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமேயன்றி அவனுடைய அறிவுக்குச் சின்னம் அல்ல என்று அவர் கூறினார். போதை தரும் பொருள்களிலெல்லாம் மிக மோசமானது புகையிலை என்று டால்ஸ்டாய் கூறினார். புகையிலைப் பழக்கம் உள்ளவனை, குடிகாரன் கூடச் செய்யத் துணியாத குற்றங்களைச் செய்துவிடும்படி புகையிலை தூண்டிவிடுகிறது என்றார். மதுபானம் ஒருவனைப் பித்தன் ஆக்கி விடுகிறது, புகையிலையோ, அவன் புத்தியை மயக்கி, ஆகாயக் கேட்டை கட்டும்படி செய்கிறது என்றார். அத்தகைய மதிமயக்கத்தில் மனிதன் சிருஷ்டிப்பவைகளில் ஒன்றே எப்பீல் கோபுரம் என்றும் டால்ஸ்டாய் கூறினார். எப்பீல் கோபுரத்தில் கலைத்திறன் எதுவும் இல்லை. கண்காட்சியின் உண்மையான அழகை இது எந்த விதத்திலும் அதிகரித்ததாகவும் சொல்லுவதற்கில்லை. இதைப் பார்ப்பதற்கு ஏராளமான மனிதர்கள் கூடினார்கள். அது புதுமையாகவும், இணையற்ற வகையில் பெரிதாகவும் இருந்ததால், மனிதர்கள் அதில் ஏறியும் பார்த்தனர். கண்காட்சியில் அதை ஒரு விளையாட்டுப் பொம்மை என்றே சொல்லலாம். நாம் குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கும் வரையில், பொம்மைகள் நமக்குக் கவர்ச்சியாகவே இருக்கும். விளையாட்டு பொருட்களைக்கண்டு மயங்கும் குழந்தைகளே நாம் எல்லோரும் என்ற உண்மையை அக்கோபுரம் நன்றாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அதுவே எப்பீல் கோபுரத்தினால் ஏற்பட்ட பயன் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

 

24. பாரிஸ்டரானேன், ஆனால் பிறகு...?

பாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.     ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக் கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.

     மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப் போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பறிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாற வேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச் செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது. நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.

     நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.

     இத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை. அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச் சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்து கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன, பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் வளர்த்துக் கொள்ள முடியும். என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப்பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும் பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.

     பரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும். என் காலத்தில் ரோமன் சட்டப் பரீட்சை, பொதுச் சட்டப் பரீட்சை என்று இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப் புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம். அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப் பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன். அதே போலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புகளை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்துவிட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை, மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள். ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன! இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.

     ஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்து விடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப் பணமும் செலவிட்டேன். ரோமன் சட்டத்தை லத்தீன் மொழியிலேயே படிப்பது என்று தீர்மானித்தேன். லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்காக நான் லத்தீன் படித்தது எனக்கு உதவியாக இருந்தது. நான் இவ்விதம் படித்ததெல்லாம் தென்னாப்பரிக்காவில் ரோமன் டச்சு பொதுச் சட்டமாக இருந்ததால் அந்நாட்டில் இருந்தபோது, எனக்கு நன்மையை அளித்தது. ஜஸ்டினியனைப் படித்தது, தென்னாப்பிரிக்காவின் சட்டங்களைப் புரிந்து கொள்ளுவதில் எனக்கு அதிக உதவியாக இருந்தது.

     இங்கிலாந்தின் பொதுச் சட்டங்களை நான் கஷ்டப்பட்டுப் படித்து முடிக்க ஒன்பது மாத காலம் ஆயிற்று. புரூம் எழுதிய பொதுச் சட்டம் என்ற நூல் பெரியதாயினும் சுவராஸ்யமானது அதைப் படித்து முடிக்க அதிகக் காலம் ஆகிவிட்டது. ஸ்னெல் எழுதிய‘ஈக்விடி’ என்ற நூல் சிறந்த விஷயங்களைக் கொண்டது. ஆனால், புரிந்து கொள்ளுவதுதான் சிரமம். ஓயிட்டும் டூடரும் எழுதிய, முக்கியமான வழக்குகள் என்ற நூலில் சில வழக்குகள் பாடங்கள். இவை கவர்ச்சியானவைகள் ஆகவும், விஷய ஞானத்தைப் போதிப்பவைகள் ஆகவும் இருந்தன. வில்லியமும் எட்வர்டும் எழுதிய ‘உண்மையான சொத்து’, குடவேயின் ‘சொந்தச் சொத்து’ ஆகிய நூல்களையும் படித்தேன். வில்லியத்தின் பத்தகத்தைப் படிப்பது கதை படிப்பது போல் இருந்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பியதும் அதேபோல், குறையாத சிரத்தையுடன் நான் படித்த ஒரே புத்தகம் மேய்னே எழுதிய ‘ஹிந்துச் சட்டம்’ என்பதாக எனக்கு ஞாபகம். இந்தியச் சட்டப் புத்தகங்களைப் பற்றிச் சொல்ல இது இடமன்று.

     பரீட்சைகளில் தேறினேன். 1891, ஜூன், 10-ஆம் தேதி என்னைப் பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்த்துக் கொண்டனர். ஜூன், 11-ஆம் தேதி, ஹைக்கோர்ட்டில் பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டேன். 12-ஆம் தேதி இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.

     நான் என்னதான் படித்திருந்தேனாயினும் எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்றுவிட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும்.

 

25. எனது சக்தியின்மை

 பாரிஸ்டர் ஆகிவடுவது எளிதாகவே இருந்தது. ஆனால், பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது. நான் சட்டங்களைப் படித்திருந்தேன். ஆனால், சட்டவாதம் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ளவில்லை. சட்டக் கோட்பாடுகளையெல்லாம் சிரத்தையுடன் படித்திருந்தேன். அவற்றை என் தொழிலில் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுவது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களின் சொத்துக்களுக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக் கொள் என்பது அத்தகைய கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், ஒரு கட்சிக்காரரின் நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் கோட்பாட்டின் மேல் எழுந்த முக்கியமான பெரிய வழக்குகளின் விவரங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். என்றாலும் வழக்குகளில் அதை அனுசரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை.     இதுவல்லாமல், இந்தியச் சட்டத்தைக் குறித்து நான் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை. ஹிந்து, முகமதியச் சட்டங்களைப் பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பிராதைத் தயாரிப்பது எப்படி என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை. எனவே, திக்குத்திசை தெரியாமல் தவித்தேன். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, கோர்ட்டுகளில் சிங்கம் போல் கர்ஜிப்பவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்த வித்தையை இங்கிலாந்தில் அவர் எப்படிக் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய சட்டஞானத்தை, நான் என்றாவது அடைய முடியும் என்பதற்கே இடமில்லை. ஆனால், இந்தத் தொழில் என் ஜிவனத்திற்கு வேண்டியதாவது கிடைக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

     நான் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சந்தேகங்களும் கவலைகளுமே என்னைப் பிய்த்துக் கொண்டு இருந்தன. என்னுடைய இக்கஷ்டங்களை நண்பர்கள் சிலரிடம் கூறினேன். தாதாபாய் நௌரோஜியிடம் போய். அவர் யோசனையைக் கேட்க வேண்டும் என்று ஒரு நண்பர் எனக்குக் கூறினார். நான் இங்கிலாந்துக்கு சென்றபோது தாதா பாய்க்கும் ஓர் அறிமுகக் கடிதம் வைத்திருந்தேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அதை வெகுகாலம் கழித்தே நான் பயன்படுத்திக் கொண்டேன். பேட்டி காண வேண்டும் என்று அத்தகைய பெரியவரைக் கஷ்டப்படுத்துவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எண்ணினேன். அவர் எங்காவது பேசப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டால், அக்கூட்டங்களக்கு நான் போவேன். மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, அவர் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு என் கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த அவ்விருந்தோடு வீடு திரும்புவேன். மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக அவர் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். அதன் கூட்டங்களுக்கு நான் போவேன். மாணவர்கள் விஷயத்தில் தாதாபாய் கொண்டிருந்த சிரத்தையையும் அவர்கள் அவரிடம் கொண்டிருந்த மரியாதையும் கண்டு மகிழ்ந்தேன். நாளாவட்டத்தில் தைரியப்படுத்திக் கொண்டு என்னிடம் இருந்த அறிமுகக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.

     “நீர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என் புத்திமதியைக் கேட்கலாம்” என்று அவர் கூறினார். ஆனால், அவர் இவ்விதம் கூறியதைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஒரு தரமும் அவரிடம் போகவில்லை. மிக முக்கியமான அவசியம் இருந்தாலன்றி அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆகையால், எனக்குள்ள கஷ்டங்களைக் குறித்துத் தாதா பாயிடம் கூறுவது என்ற என் நண்பனின் யோசனையை ஏற்றுக் கொள்ள அச்சமயம் நான் துணியவில்லை. ஸ்ரீ பிரடரிக் பின்கட்டைச் சந்திக்குமாறு எனக்கு யோசனை சொன்னது இதே நண்பர்தானா, வேறு ஒருவரா என்பது எனக்கு நினைவு இல்லை. ஸ்ரீ பின்கட், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இந்திய மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்போ புனிதமானது. சுய நலமற்றது. பல மாணவர்கள் அவருடைய ஆலோசனையை நாடுவார்கள். உத்தியயோகங்களுக்கும் அவரிடம் மனுச் செய்து கொள்ளுவார்கள். அவரும் வேண்டியதைச் செய்வார். நான் அவரைச் சந்தித்துப் பேசியதை என்றுமே மறக்க மடியாது. ஒரு நண்பனாகவே என்னை அவர் வரவேற்று முகமன் கூறினார். எனக்கு இருந்த நம்பிக்கைகளை நான் சொல்லக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். “ஒவ்வொருவரும் பிரோஸ்ஷா மேத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீரா? பிரோஸ்ஷாக்களும் பத்ருதூன்களும் அபூர்வமாகவே இருப்பார்கள். சாதாரண வக்கீலாக இருப்பதற்கு அசாதாரண ஆற்றல் எதுவும் அவசியமில்லை என்பதை நிச்சயமாக நம்பும். பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜிவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும். வழக்குகள் எல்லாமே சிக்கலானவை அல்ல. பொது அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கு எந்த அளவு படித்திருக்கிறீர்? அதைச் சொல்லும், பார்ப்போம்” என்றார்.

     என்னுடைய சொற்பமான படிப்பை நான் அவருக்குத் தெரிவித்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார் என்பதைக் கண்டேன். ஆனால், அந்த ஏமாற்றம் அவருக்குக் கணத்தில் மாறிவிட்டது. உடனே அவர் முகத்தில் அழகிய புன்னகை மலர்ந்தது. அவர் கூறியதாவது, “உமக்குள்ள கஷ்டத்தை நான் அறிகிறேன். உமது பொது அறிவுப் படிப்பு மிகக் கொஞ்சம். ஓரு வக்கீலுக்கு இன்றியமையாததான உலக ஞானம் உமக்கு இல்லை. இந்தியாவின் சரித்திரத்தைக் கூட நீர் இன்னும் படிக்கவில்லை. மனித சுபாவத்தையும் ஒரு வக்கீல் அறிந்திருக்க வேண்டும். முகத்தைப் பார்த்தே ஒருவன் எப்படிப்பட்டன் என்பதைத் தெரிந்து கொள்ள அவரால் முடியவேண்டும். ஒவ்வோர் இந்தியரும் இந்திய சரித்திரத்தை அறிந்திருக்க வேண்டும். வக்கீல் தொழிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, என்றாலும், இதை நீர் அறிந்திருப்பது அவசியம். 1857 சிப்பாய்க் கலகத்தைக் குறித்துக் கேபியும் மாலிஸனும் எழுதியிருக்கும் சரித்திரத்தைக்கூட நீர் படித்ததில்லை எனக் காண்கிறேன். அதை உடன் படிப்பதோடு, மனித சுபாவத்தை புரிந்து கொள்ளுவதற்கு மற்ற இரு புத்தகங்களையும் படியும் லவேட்டரும் ஷெம்மல் பென்னிக்கும் முகபாவங்களைக் குறித்து எழுதியிருக்கும் புத்தகங்களே அவை இரண்டும்.”

     மதிப்பிற்குரிய இந் நண்பரிடம் நான் மிகுந்த நன்றியறிதல் உள்ளவனானேன். அவர் முன்னிலையில் எனக்கு இருந்த பயமெல்லாம் பறந்து ஓடிவிட்டதைக் கண்டேன். ஆனால், அவரை விட்டு வந்ததுமே திரும்பக் கவலைப்பட ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குத் திரும்புகையில் அவ்விரு புத்தகங்களைப் பற்றி நான் எண்ணியபோது, ஒருவனுடைய முகத்தைக்கொண்டே அவனுடைய குணங்களை அறிவது எப்படி? என்பதே என் மனத்தைச் சதா அலைத்துக் கொண்டிருந்தது. மறுநாள் லவேட்டரின் புத்தகத்தை வாங்கினேன். ஷெம்மல் பென்னிக்கின் புத்தகம் கடையில் கிடைக்கவில்லை... லவேட்டரின் புத்தகத்தைப் படித்தேன். ஈக்விடியைப் பற்றி ஸ்னெல்லின் புத்தகத்தையும் விட இது அதிக கஷ்டமானதாக இருந்ததோடு படிப்பதற்கும் ரசமாக இல்லை. ஷேக்ஸ்பிரியரின் முக பாவத்தைப் பற்றியும் படித்தேன்.

     ஆனால், லண்டன் தெருக்களில் அங்கும் இங்குமாக நடந்தகொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்களின் முகபாவத்தைக் கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டுவிடும் ஆற்றல் எனக்கு ஏற்படவில்லை.

     லவேட்டரின் புத்தகம் எனக்குப் புதிய அறிவு எதையும் புகட்டிவிடவில்லை. ஸ்ரீ பின்கட்டின் புத்திமதிகள் எனக்கு நேரடியான உதவி எதையும் அளித்துவிடவில்லை. ஆனால், அவருடைய அன்பு எனக்குத் தைரியத்தை ஊட்டியது. அவரது புன்னகை பூத்த கபடமற்ற முகம், என் நினைவில் பதிந்துவிட்டது. ‘வெற்றிகரமான ஒரு வக்கீல் ஆவதற்கப் பிரோஸ்ஷா மேத்தாவுக்குள்ள அறிவுக்கூர்மையும், ஞாபக சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் போதும்’ என்று அவர் கூறிய புத்திமதியில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியில் கூறப்பட்ட இவ்விரு குணங்களும் என்னிடம் ஓரளவுக்கு இருந்ததால் நான் ஒருவாறு தைரியம் கொண்டேன்.

     கேயியும் மாலிஸனும் சிப்பாய் கலகத்தைக் குறித்து எழுதிய புத்தகத்தை இங்கிலாந்தில் இருந்தபோது நான் படிக்க முடியவில்லை. ஆனால், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே படித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் படித்தேன்.

     இவ்விதமான மனச்சோர்வுடனும், அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும், எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவிப் படகும் மூலமே கப்பலிலிருந்து கரைசேர்ந்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III