திருக்குறள் - பரிமேலழகர் 1


நீதிநெறி நூல்கள்

Back

திருக்குறள்
பரிமேலழகர் 1



திருக்குறள் -பரிமேலழகர்


    1. அறத்துப்பால்

    1.1 பாயிரவியல்

    1.1.1 கடவுள் வாழ்த்து

    1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
    விளக்கம்
    (இது தலைமைபற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
    தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து எல்லாம்' என்றார். 'ஆதிபகவன்' என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள்மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின்மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம்-தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
    ---
    2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
    கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
    விளக்கம்
    ('எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.) ---
    3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய் வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார் விளக்கம்
    (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும், ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல். சொல். வினை. 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றவாரும் உளர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.)---
    4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
    வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
    விளக்கம்
    (பிறவித் துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.) ---
    5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. விளக்கம்
    (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே 'பொருள் சேர் புகழ்' எனப்பட்டது. புரிதல்-எப்பொழுதும் சொல்லுதல்.) --
    6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்; நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். விளக்கம்
    (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று.) ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது) ---
    7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
    தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
    விளக்கம்
    ("உற்றபல தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.) ---
    8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
    அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கு அல்லாது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது
    விளக்கம்
    ((அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் 'பிற' எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையான் ஆகலின், 'அற ஆழி அந்தணன்' என்றார். 'அற ஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப் புணையைச் சேராதார் கரை காணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.) ---
    9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
    கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத்தலை- எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்
    விளக்கம்
    எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலான உடையன எனவும் உரைப்பாரும் உளர். 'காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல' எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---
    10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    இறைவன் அடி (சேர்ந்தார்) பிரவிப் பெருங்கடல் நீந்துவர் - இரைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெருங்கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
    விளக்கம்
    (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் எனப்து சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவைன் அடியையே நினைப்பார்க்கு பிறவி அறுதலும், அவ்வாறின்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரன்டும் இதனான் நியமிக்கப்பட்டன. ---


    1.1.2. வான்சிறப்பு

    11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று-அம்மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து
    விளக்கம்
    ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை' 'அமிழ்தம்' என்று உணர்க' என்றார்.) ---
    12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.
    துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை-அவற்றை உணர்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை
    விளக்கம்
    (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.) ---
    13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.
    விண் இன்று பொய்ப்பின் மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி-நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
    விளக்கம்
    (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.) ---
    14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
    உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின.
    விளக்கம்
    ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) --
    15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை-இவை எல்லாம் வல்லது மழை.
    விளக்கம்
    ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, 'ஆங்கு என்பது மறுதலைத் தொழிலுவ மத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு' என்றார். 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.) ---
    16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.
    விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது-வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது. தலையையும் காண்டல் அரிது.
    விளக்கம்
    ('விசும்பு ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்) ---
    17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.
    நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்-அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகிவிடின்-மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
    விளக்கம்
    (உம்மை சிறப்பு உம்மை. தன்இயல்பு குறைதலாவது நீர்வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட எறிந்து" (பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.) ---
    18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல்-மழை பெய்யாதாயின. விளக்கம்
    (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற் கூறினார்.) ---
    19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
    வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின் விளக்கம்
    (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.) ---
    20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
    யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின்-எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
    விளக்கம்
    (பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார். அவை இம்மைக்கண்ண ஆகலின். இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகு எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது. ---



    1.1.3. நீத்தார் பெருமை

    21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு-விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
    விளக்கம்
    (தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது, உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது) ---
    22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
    துறந்தார் பெருமை துணைக் கூறின் - இரு வகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையார் என அரியலுற்றாற் போலும்.
    விளக்கம்
    (முடியாது என்பதாம். 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.) ---
    23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.
    இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று-உலகின்கண் உயர்ந்தது. ('தெரிமாண் தமிழ் மும்மைத்தென்னம்பொருப்பன்'
    விளக்கம்
    (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிகுந்தது என்பது கூறப்பட்டது.) ---
    24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
    உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
    விளக்கம்
    (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) ---
    25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.
    ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
    விளக்கம்
    (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.). ---
    26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
    செயற்கு அரிய செய்வார் - பெரியர்-ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர்.
    விளக்கம்
    (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய "நாலிரு வழக்கின் தாபதபக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.) ---
    27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.
    சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.
    விளக்கம்
    (அவற்றின் கூறுபாடு ஆவன: பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்,கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவி ஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிரிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.) ---
    28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
    நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
    விளக்கம்
    ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல்: பயனான் உணர்த்துதல்.) ---
    29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது.
    குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; கணம் ஏயும் காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
    விளக்கம்
    (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரேவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், 'கணம் ஏயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.) ---
    30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
    விளக்கம்
    (பூணுதல், விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பக்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கள் மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது. ---



    1.1.4. அறன்வலியுறுத்தல்

    31. சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
    சிறப்பு ஈனும்-வீடுபேற்றையும் தரும்: செல்வமும் ஈனும்-துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்-ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?
    விளக்கம்
    (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்: மேன் மேல் உயர்தல். ஈண்டு 'உயர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனான் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது) ---
    32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
    அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை-ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை-அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
    விளக்கம்
    (அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை' என மேற்சொல்லியவதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.) ---
    33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
    ஒல்லும் வகையான்-தத்தமக்கு இயலுந்திறத்தான்; அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்-அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
    விளக்கம்
    (இயலுந்திறம் ஆவது-இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல். ஓவாமை, இடைவிடாமை. எய்தும் இடம் ஆவன: மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள்ஆவன: முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.) ---
    34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற.
    மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன்-அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர-அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா ஆரவார நீர்மைய,
    விளக்கம்
    (குற்றம் தீயன சிந்தித்தல், பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழியே ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.) ---
    35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
    அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி-அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்-அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம்-இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.
    விளக்கம்
    (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.) ---
    36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.
    அன்று அறிவாம் என்னாது அறம் செய்க- 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை-அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.
    விளக்கம்
    ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.) ---
    37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
    அறுத்து ஆறு இது என வேண்டா-அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை-சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
    விளக்கம்
    (பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். 'உணரப்படும்' என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.) ---
    38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்.
    வீழ் நாள் படாமை நன்று ஆற்றின்-செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்-அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். விளக்கம்
    (ஐவகைக் குற்றத்தான் வரும் இரு வகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் 'வாழ்நாள்' எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன: நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.) ---
    39. அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
    புறத்த புகழும் இல.
    அறத்தான் வருவதே இன்பம்-இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த-அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல-அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.
    விளக்கம்
    (ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, "தூங்கு கையான் ஓங்கு நடைய" (புறநா.22) என்புழிப்போல. இன்பம்-காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே, துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின், 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது. ---
    40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.
    ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவனுக்குச் செய்தற்பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே-ஒழிதற்பான்மையது தீவினையே.
    விளக்கம்
    ('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.) ---



    1.2. இல்லறவியல்

    1.2.1. இல்வாழ்க்கை

    41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.
    இல்வாழ்வான் என்பான்-இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை-அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
    விளக்கம்
    ('இல்' என்பது ஆகுபெயர். 'என்பான்' எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்; ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத்தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.) ---
    42. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.
    துறந்தார்க்கும்-களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும்-நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும்; இல் வாழ்வான் என்பான் துணை-இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை.
    விளக்கம்
    (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.) ---
    43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று-பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார்தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை-ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம் ஆம்.
    விளக்கம்
    (பிதிரராவார்: படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். 'தெய்வம்' என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்; பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும்தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற', என்பது விகாரமாயிற்று. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.) ---
    44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
    பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின்-பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல்-அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை.
    விளக்கம்
    (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்பட்டது.) ---
    45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
    இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின்-ஒருவன் இல் வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும்-அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்.
    விளக்கம்
    (நிரல்நிரை.இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.) ---
    46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்?
    இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின்-ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்-அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
    விளக்கம்
    (அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், 'போஒய்ப் பெறுவது எவன்' என்றார்.) ---
    47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.
    இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான்-இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் கலை-புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
    விளக்கம்
    (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பலவகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்தலின், 'தலை' எனவும் கூறினார்.) ---
    48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.
    ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை-தவஞ் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து-அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
    விளக்கம்
    (பசி முதலிய இடையூறு நீக்கலின், 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர். நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.) ---
    49. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
    அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை-இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது. இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று-ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.

    விளக்கம்
    (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப் பெயர் அதன்மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத் துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உ¨ற்யும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
    வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன்-இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
    விளக்கம்
    (பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலை யாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ்; அதனை இறுதிக்கண் கூறுப.) ---



    1.2.2 வாழ்க்கைத் துணைநலம்

    51. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
    மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள்-மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை-அதற்குத் துணை. நற்குணங்களாவன: துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.
    விளக்கம்
    (நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.) ---
    52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்-மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்-அல்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
    விளக்கம்
    (இல்' என்றார் பயன்படாமையின்.) ---
    53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை?
    இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என்-அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
    விளக்கம்
    ('மாண்பு' எனக் குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.) ---
    54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
    பெண்ணின் பெருந்தக்க யாஉள ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்-அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.
    விளக்கம்
    (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின், 'யா உள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.
    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என-பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பெய் எனப் பெய்யும் மழை-'பெய்' என்று சொல்ல, மழை பெய்யும்.
    விளக்கம்
    (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழா நின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.) ---
    56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
    தன் காத்துத் தன் கொண்டான் பேணி-கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகை சான்ற சொல் காத்து-இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண்-மேற் சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.
    விளக்கம்
    (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.
    மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்-மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை-அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.
    விளக்கம்
    ((சிறை: மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை:நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.
    பெண்டிர் பெற்றான் பெறின்-பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர்-புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
    விளக்கம்
    (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.) ---
    59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
    புகழ் புரிந்த இல் இலேர்க்கு-புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை-தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறுபோல நடக்கும் பெருமித நடை இல்லை.
    விளக்கம்
    ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---
    60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
    மங்கலம் என்ப மனை மாட்சி-ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு-அவை தமக்கு நல்ல அணிகலன் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
    விளக்கம்
    ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.) ---



    1.2.3. புதல்வரைப் பெறுதல்

    61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.
    பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.
    விளக்கம்
    ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
    பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.
    விளக்கம்
    ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.
    தம் மக்கள் தம் பொருள் என்ப-தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும்-அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.
    விளக்கம்
    ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.) ---
    64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.
    அமிழ்தினும் ஆற்ற இனிதே-சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்-தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.
    விளக்கம்
    (சிறுகையான் அளாவலாவது, "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்-நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்" (புறநா.188).] ---
    65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
    உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல்-ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்-செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
    விளக்கம்
    ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுபடச் 'சொல்' என்றார். 'தீண்டல்' 'கேட்டல்' என்னும் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.) ---
    66. குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    குழல் இனிது யாழ் இனிது என்ப-குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
    விளக்கம்
    ('குழல், யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச் சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.) ---
    67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
    தந்தை மகற்கு ஆற்றும் நன்றி-தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல்-கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.
    விளக்கம்
    (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.) ---
    68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
    தம் மக்கள் அறிவுடைமை-தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது-பெரிய நிலத்து மன்னா நின்று உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.
    விளக்கம்
    (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.) ---
    69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    > ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்-தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.
    விளக்கம்
    (கவானின் மகற்கண்ட பொது உவகையினும் சால்புடையன் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையின் 'கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது, சான்றோன் என்றற்கு உரியார் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.) ---
    70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல்.
    தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி- கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது: இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும்சொல்-தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்.
    விளக்கம்
    ('சொல்' என்பது நிகழ்த்துதல் ஆகிய தன் காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல்-அங்ஙனம் தோன்ற ஒழுகல். இதனால் புதல்வன் கடன் கூறப்பட்டது.) ---


    1.2.4. அன்புடைமை

    71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.
    அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ-அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத் தூற்றும் ஆதலான்.
    விளக்கம்
    (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை., கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான் அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.) ---
    72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.
    அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்-அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்-அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
    விளக்கம்
    (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் "தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்" (புறநா.43) முதலாயினார்கண் காண்க.) ---
    73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.
    ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப-அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
    விளக்கம்
    (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத் தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.) ---
    74. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
    அன்பு ஆர்வமுடைமை ஈனும் ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்-அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
    விளக்கம்
    (உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச் சிறப்பு' என்றார்.) ---
    75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.
    அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு-இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின் பத்தினை.
    விளக்கம்
    ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டு இன்புறுவர் ஆகலின், 'இன்புற்றார் எய்தும் சிறப்பு' என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை. ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.) ---
    76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.
    அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார்-அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கம் அஃதே துணை-ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
    விளக்கம்
    (ஒருவன் செய்த பகைமைப்பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்; 'துன்பத்திற்கு யாரே துணையாவார்' (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.
    என்பு இலதனை வெயில் போலக் காயும்-என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம்-அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
    விளக்கம்
    ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் 'காயும்' என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ''அல்லவை செய்தற்கு அறம் கூற்றம்''(நான்மணிக்.83) எனப் பிறரும் கூறினார்.) ---
    78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.
    அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை-மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று-வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
    விளக்கம்
    (கூடாது என்பதாம். வன்பால்-வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறினைப் படர்க்கைப் பெயர்.) ---
    79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
    யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு-யாக்கை யகத்தின்கண் நின்ற (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்!
    விளக்கம்
    (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின், 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. 'யாக்கையின் கண் முதலிய உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.) ---
    80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.
    அன்பின் வழியது உயிர்நிலை-அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த-அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
    விளக்கம்
    (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பு இல்வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---


    1.2.5. விருந்தோம்பல்

    81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
    இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்-மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
    விளக்கம்
    (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.) --
    82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
    சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
    விளக்கம்
    (சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.
    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை.
    விளக்கம்
    (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.) ---
    84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.
    செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
    விளக்கம்
    (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.) ---
    85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்.
    விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.
    விளக்கம்
    ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) ---
    86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு.
    செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
    விளக்கம்
    ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) ---
    87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.
    வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
    விளக்கம்
    (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு "தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்-வான் சிறிதாப் போர்த்து விடும்" (நாலடி,38) ஆகலின், 'இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை' என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.) ---
    88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.
    பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
    விளக்கம்
    ("ஈட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்" (நாலடி. 280) ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.) ---
    89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை-உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு-அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.
    விளக்கம்
    (உடைமை-பொருளுடையனாம் தன்மை. பொருளாள் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---
    90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் கு¨ழ்யும் விருந்து.
    அனிச்சம் மோப்பக் குழையும்-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்-விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
    விளக்கம்
    ('அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.) ---


    1.2.6 இனியவைகூறல்

    91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
    இன்சொல்-இன்சொல்லாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
    விளக்கம்
    ('ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்-அன்புடைமை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.) ---
    92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
    அகன் அமர்ந்து ஈதலின் நன்று-நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்-கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.
    விளக்கம்
    (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார். ---
    93. முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.
    முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி-கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின் நண்ணிய வழி, மனத்துடன் இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.
    விளக்கம்
    ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல் நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது. ---
    94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
    யார்மட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
    விளக்கம்
    (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' எனப்பட்டுது. 'யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பே ஆம். ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.) ---
    95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற.
    ஒருவர்க்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல்-ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்; பிற அல்ல-அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா.
    விளக்கம்
    (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், 'பிற' எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.) ---
    96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்.
    நல்லவை நாடி இனி சொலின்-பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும்-அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
    விளக்கம்
    (தேய்தல்: தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்று மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.) ---
    97. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.
    நயன் ஈன்று நன்றி பயக்கும் ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்; பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்-பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல் நீதி. உலகத்தோடு பொருந்துதல்.
    விளக்கம்
    ('பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல்-ஒரு சொல் நீர்மைத்து.) ---
    98. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்.
    சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும்-ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
    விளக்கம்
    (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.) ---
    99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது?
    இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்-பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல்-அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?
    விளக்கம்
    ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.) ---
    100. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
    இனிய உளவாக இன்னாத கூறல்-அறம் பயக்கும்-இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று-இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
    விளக்கம்
    ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.) --



    1.2.7. செய்ந்நன்றி அறிதல்

    101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.
    செய்யாமல் செய்த உதவிக்கு= தனக்கு முன்னோர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும் வானகமும் ஆற்றல் அரிது= மண்ணுலகும் விண்ணுலகுங் கைமாறாகக் கொடுத்தாலும் ஒத்தல்அரிது.
    விளக்கம்
    கைம்மாறுகள் எல்லாம் காரணம் உடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி'யென்று பாடமோதி, மறித்து உதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்த உதவி என்று உரைப்பாரும் உளர்.
    102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.
    காலத்தினால் செய்த ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக் கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது-தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.
    விளக்கம்
    (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.) ---
    103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.
    பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்-'இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்' என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது-அதன் நன்மை கடலினும் பெரிது ஆம்.
    விளக்கம்
    (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம். பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.) ---
    104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
    திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
    விளக்கம்
    ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக் கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.) ---
    105. உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து.
    உதவி உதவி வரைத்து அன்று கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து-அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
    விளக்கம்
    (''சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், 'சால்பின் வரைத்து' என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.) ---
    106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.
    துன்பத்தின் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க-அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக.
    விளக்கம்
    (கேண்மை: கேள் ஆம் தன்மை, இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.) ---
    107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.
    நம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்-எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
    விளக்கம்
    (எழுமை' என்றது வினைப் பயன். தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள். 62). விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புதோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.) ---
    108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.
    நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று: நன்று அல்லது அன்றே மறப்பது நன்று-அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.நல்லோர்.
    விளக்கம்
    (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.) ---
    109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    கொன்று அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
    விளக்கம்
    (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.) ---
    110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
    விளக்கம் (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, 'ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தபுதலும்' (புறநா 34) இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது. முதலிய பாதகங்களைச் செய்தல்.) ---


    1.2.8 நடுவு நிலைமை

    111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
    தகுதி என ஒன்றே நன்று-நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல், நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்,
    விளக்கம்
    (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு 'தோறு'ம் என்பதன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவு நிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
    செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
    விளக்கம்
    (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்துவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.) ---
    113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
    நன்றே தரினும்-தீங்கு அன்றி நன்மையே பயந்த தாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.
    விளக்கம்
    (நன்மை பயவாமையின் 'நன்றே தரினும்' என்றார். 'இகத்தலான்' என்பது 'இகந்து' எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச் செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.) ---
    114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
    தக்கார் தகவிலர் என்பது-இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.
    விளக்கம்
    (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.) ---
    115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
    கேடும் பெருக்கமும் இல் அல்ல-தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி-அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
    விளக்கம்
    (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று' என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், 'சான்றோர்க்கு அணி' என்றார்.) ---
    116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்.
    தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக-அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
    விளக்கம்
    (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.) ---
    117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
    நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.
    விளக்கம்
    நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர். ('கெடு' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம், கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.) ---
    118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.
    சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்-முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி-இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.
    விளக்கம்
    (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒரு பால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கவாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.) ---
    119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
    செப்பம் சொற்கோட்டம் இல்லது-நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறன்-அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
    விளக்கம்
    (சொல்: ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது.) ---
    120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்.
    பிறவும் தம்போல் பேணிச் செய்யின் - பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய வணிகம் ஆம்.
    விளக்கம்
    (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.) ---


    1.2.9. அடக்கமுடைமை

    121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.
    அடக்கம் அமரருள் உய்க்கும்-ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்-அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
    விளக்கம்
    ('இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' (நான்மனிக். 7) என்றார்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.) --
    122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை-உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க-ஆதலான், அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.
    விளக்கம்
    ('உயிர்' என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.) ---
    123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
    அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்-'அடங்குதலே நமக்கு அறிவாவது' என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
    விளக்கம்
    (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.) ---
    124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.
    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி; மலையினும் மானப் பெரிது-மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
    விளக்கம்
    (திரியாது அடங்குதல்-பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.) ---
    125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
    பணிதல் எல்லார்க்கும் நன்றாம்-பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து-அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம்சிறப்பினை உடைத்து.
    விளக்கம்
    (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார், அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்த காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்துச் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    126. ஒரும்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழும்யும் ஏமாப் புடைத்து.
    ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
    விளக்கம்
    (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுத்தாமல் அடக்க வேண்டும் என்பார், 'ஆமை போ' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.) ---
    127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    யாகாவாராயினும் நாகாக்க-தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்-அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.
    விளக்கம்
    ('யா' என்பது அஃறினைப் பன்மை வினாப் பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உரை நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர், செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.) ---
    128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
    தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்-தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும்-அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.
    விளக்கம்
    (தீயசொல்லாவன-தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. 'ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.) ---
    129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.
    தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்: நாவினால் சுட்டவடு ஆறாது-அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
    விளக்கம்
    (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது, குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.) ---
    130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
    கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செல்வி-மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை; அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து-அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று.
    விளக்கம்
    (அடங்குதல்-மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி-தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி, முகங்களின் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.) ---


    1.2.10. ஒழுக்கமுடைமை

    131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
    ஒழுக்கம் விழுப்பம் தரலான்-ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்-அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
    விளக்கம்
    (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.) ---
    132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
    ஒழுக்கம் ஓம்பிப் பிரிந்து காக்க-ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்த ஓம்பித் தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, 'இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாது?' என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.
    விளக்கம்
    ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்து சிறப்புக் கூறப்பட்டது.) ---
    133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
    ஒழுக்கம்-உடைமை குடிமை-எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்-அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
    விளக்கம்
    (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்ததராவர் ஆகலின் 'குடிமையாம்' என்றும்; உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் 'இழிந்த பிறப்பாய் விடும்' என்றும் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ் விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.) ---
    134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
    ஓத்து மறப்பினும் கொளலாகும் கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்-அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
    விளக்கம்
    (மறந்தவழி. இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.) ---
    135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
    அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல; ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.
    விளக்கம்
    (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் (குறள்.166) நல்கூர்தலின். உயர்வு: உயர் குலமாதல்.) ---
    136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்-செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து-அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.
    விளக்கம்
    (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.) --
    137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்-எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர்-அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
    விளக்கம்
    (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம்பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி எய்துவர்' என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.) ---
    138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
    நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்-ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்-தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
    விளக்கம்
    ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம். ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.) ---
    139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
    வழுக்கியும் தீய வாயால் சொல்ல-மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
    விளக்கம்
    (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முத லியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொல்' சாதியொருமை. 'சொல்லல்' எனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.) ---
    140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்-உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்; பல கற்றும் அறிவிலாதார்-பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
    விளக்கம்
    (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும் செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றான் தொகுத்துக் கூறப்பட்டன.) ---


    1.2.11. பிறனில் விழையாமை

    141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
    அறம்பொருள் கண்டார்கண் இல்.
    பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை; ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்-ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
    விளக்கம்

    (பிறன் பொருள்:பிறன் உடைமை. 'அறம், பொருள்' என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார். எனவே, அப் பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.) ---
    142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.
    அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
    விளக்கம்

    (அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.) ---
    143. விளிந்தா¡¢ன் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
    மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்; விளிந்தாரின் வேறு அல்லர்-உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
    விளக்கம்

    (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்' என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.) ---
    144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.
    எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினம் ஒருவர்க்கு யாதாய் முடியும்; தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
    விளக்கம்
    (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். "என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்" (கலித்.பாலை.6) என்புழிப்போல, உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.) ---
    145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    எளிது என இல் இறப்பான்-'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்-மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
    விளக்கம்
    (இல்லின்கண் இறத்தல்-இல்லான்கண் நெறிகடந்து சேறல்.) ---
    146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
    இல் இறப்பான்கண் பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து; பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் 'நீங்காவாம்,
    விளக்கம்
    (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.) ---
    147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன்.
    அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்-பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.
    விளக்கம்
    (ஆண் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.) ---
    148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
    பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை; சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு-சால்புடையார்க்கு அறனும் ஆம்; நிரம்பிய ஒழுக்கமும் ஆம். புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார்.
    விளக்கம்
    ('ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.) ---
    149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
    நாம நீர் வைப்பின்-அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின்-எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்; பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார்-பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார்.
    விளக்கம்
    (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.) ---
    150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று.
    அறன் வரையான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று-அவனுக்குப் பிறன் எல்லைகண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.
    விளக்கம்
    (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன்இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.) ---


    1.2.12. பொறையுடைமை

    151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
    அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
    விளக்கம்
    (இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்) ---
    152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
    என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
    விளக்கம்
    ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறுத்தலை 'அதனினும் நன்று' என்றார்.) ---
    153. இன்¨ம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
    இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல் வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
    விளக்கம்
    (இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.) ---
    154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொ¨ற்யுடைமை
    போற்றி யொழுகப் படும். <
    நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுகப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
    விளக்கம்
    (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
    ஒறுத்தாரை, ஒன்றாக வையார்-பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்-அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
    விளக்கம்
    (ஒறுத்தவர் தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல். --
    156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.
    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்-தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழ்-அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
    விளக்கம்
    (ஒருநாளை இன்பம், அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின், ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.) ---
    157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
    திறன் அல்ல தன் பிறர் செய்யினும்-செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று-அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.
    விளக்கம்
    (உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை-எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி.58) என்று பரிதல்.) ---
    158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
    மிகுதியான் மிக்கவை செய்தாரை-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் பொறையான் வென்று விடுக.
    விளக்கம்
    (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.) ---
    159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
    துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்சிற்பவர்-நெறியைக் கடந்தார வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
    விளக்கம்
    (தூய்மை: மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டிய தன் இழிபு முடித்தற்கு.) ---
    160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
    உண்ணாது நோற்பார் பெரியர்-விரதங்களான் ஊனைத் தவிர்த்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்-அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
    விளக்கம்
    (பிறர்-அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.) ---


    1.2.13 அழுக்காறாமை

    161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
    ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக கொள்க-தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.
    விளக்கம்
    (இயல்பு-அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.) ---
    162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
    யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை-மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.
    விளக்கம்
    (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.) ---
    163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.
    அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
    விளக்கம்
    ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.) ---
    164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
    அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
    விளக்கம்
    (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.) ---
    165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்கியும் கேடீன் பது.
    ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.
    விளக்கம்
    ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.) ---
    166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்கு கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்-உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
    விளக்கம்
    (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல், 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.) ---
    167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும்.
    விளக்கம்
    (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.) ---
    168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
    அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
    விளக்கம்
    (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது. ---
    169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
    விளக்கம்
    (கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.) ---
    170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
    அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
    விளக்கம்
    (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.) ---


    1.2.14. வெஃகாமை

    171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
    நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்-அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
    விளக்கம்
    (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.) ---
    172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.
    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்-பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர்-நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.
    விளக்கம்
    ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.) ---
    173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
    சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர்-அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.
    விளக்கம்
    ('பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.) ---
    174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்.
    இலம் என்று வெஃகுதல் செய்யார்-'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.
    விளக்கம்
    (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்லவிடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.) ---
    175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்.
    அஃகி அகன்ற அறிவு என்னாம்-நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
    விளக்கம்
    ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவம், கடியனவும் முதலியன் செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார். ---
    176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்.
    அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்-பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
    விளக்கம்
    (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.) ---
    177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
    வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க-பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம்-பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.
    விளக்கம்
    ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது.) ---
    178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.
    செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்
    விளக்கம்
    ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.) ---
    179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
    அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்-திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.
    விளக்கம்
    (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.) ---
    180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.
    எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
    விளக்கம்
    (பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல் ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர் யாவரையும் கீழ்ப்படுத்தலின், 'விறல் ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.) ---


    1.2.15. புறங்கூறாமை

    181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
    ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
    விளக்கம்
    (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.) ---
    182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை.
    அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
    விளக்கம்
    (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.) ---
    183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
    புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்-பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்-அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
    விளக்கம்
    .(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.) ---
    184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
    கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப்பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
    விளக்கம்
    ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.) ---
    185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும். br> அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றனல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.
    விளக்கம்
    (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.) ---
    186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும்.
    பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
    விளக்கம்
    ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன் இறத்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.) ---
    187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.
    பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றல் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
    விளக்கம்
    (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கரு ததான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். 'கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலித். மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.) ---
    188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.
    துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
    விளக்கம்
    ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.) ---
    189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
    புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
    விளக்கம்
    (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.) ---
    190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
    ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்-ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறாகிய தம் குற்றத்தையும் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
    விளக்கம்
    (நடுவு நின்று ஒப்புக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.) ---


    1.2.16. பயனில சொல்லாமை

    191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.
    பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும்.
    விளக்கம்
    (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. ---
    192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கண் செய்தலிற் றீது.
    பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.
    விளக்கம்
    ((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.) ---
    193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை.
    பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.
    விளக்கம்
    (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.) ---
    194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து.
    பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
    விளக்கம்
    (பண்பு: இனிமையும் மெய்யும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.) ---
    195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
    பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.
    விளக்கம்
    (நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.) ---
    196. பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி யெனல்.
    பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.
    விளக்கம்
    ('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.) ---
    197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.
    நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக-சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்; பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.
    விளக்கம்
    ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.) ---
    198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல்.
    அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
    விளக்கம்
    (அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.) ---
    199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.
    பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்; மருள் தீர்ந்த மாசுஅறு காட்சியவர்-மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.
    விளக்கம்
    ('தூய அறிவு' மெய்யறிவு, 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புப் பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல் சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.) ---
    200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
    சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
    விளக்கம்
    ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.) ---


    1.2.17. தீவினையச்சம்

    201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
    தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை; தீவினையார் அஞ்சார்-முன் செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-அஃது இலராகிய சீரியர் அஞ்சுவர்.
    விளக்கம்
    ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்த அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.) ---
    202. தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.
    தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
    விளக்கம்
    (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.) ---
    203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.
    அறிவினுள் எல்லாம் தலை என்ப-தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
    விளக்கம்
    (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும், செய்யத் தக்குழியுஞ் செய்யாது ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.) ---
    204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
    பிறன் கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
    விளக்கம்
    ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.) ---
    205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.
    இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
    விளக்கம்
    (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.) ---
    206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான்.
    நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக் கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
    விளக்கம்
    (செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.) ---
    207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும்.
    எனைப்பகை உற்றானாம் உய்வர்-எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்
    விளக்கம்
    ("வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.) ---
    208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அஇஉறைந் தற்று.
    தீயவை செய்தார் கெடுதல்-பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று-ஒருவன் நிழல் நொடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கி தன்மைத்து.
    விளக்கம்
    (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு 'அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று' என்னாது, 'வீயாது அடி உறைந்தற்று,' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார். ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.) ---
    209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால்.
    தன்னைத் தான் காதலன் ஆயின்-ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்; தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
    விளக்கம்
    (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், 'தீவினைப் பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்து தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார். ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.) ---
    210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்.
    மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்-ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-அவன் அரிதாகிய கோட்டையுடையவன் என்பது அறிக.
    விளக்கம்
    (அருமை:இன்மை. அருங்கேடன் என்பதனை, "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்" (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.) ---


    1.2.18. ஒப்புரவறிதல்

    211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என் ஆற்றுங் கொல்லோ உலகு.
    மாரிமாட்டு உலகு என் ஆற்றும்-தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன; கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
    விளக்கம்
    ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.) ---
    212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
    தக்கார்க்கு தகுதி உடையார்க்கு ஆயின்; தான் ஆற்றித் தந்த பொருள் எல்‘ம்-முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்; வேளாண்மை செய்தற் பொருட்டு-ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
    விளக்கம்
    (பிறர்க்கு உதவதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.) ---
    213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற.
    புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்; ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது-ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
    விளக்கம்
    (ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராதலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    214. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.
    உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
    விளக்கம்
    (உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.) ---
    215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு.
    உலகு அவாம் பேர் அறிவாளன் திரு-உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை யுடையவனது செல்வம்; ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற்போலும்.
    விளக்கம்
    (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.) ---
    216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
    செல்வம் நயன் உடையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்; பயன் மரம் உள்ளூர் பழுத்தற்று-அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
    விளக்கம்
    (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.) ---
    217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்.
    செல்வம் பெருந்தகையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று-அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.
    விளக்கம்
    (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டானனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.) ---
    218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர்.
    இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்-செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்; கடன் அறி காட்சியவர்-தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார்.
    விளக்கம்
    (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.) ---
    219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யாது அமைகலா வாறு.
    நயன் உடையான் நல்கூர்ந்தான்ஆதல்-ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது; செயும் நீர செய்யாது அமைகலா ஆறு-தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம்.
    விளக்கம்
    (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.) ---
    220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து.
    ஒப்புரவினால் கேடு வரும் எனின்-ஒப்பரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து-அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.
    விளக்கம்
    (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது. புகழ் பயத்தல் நோக்கி, இதனான் ஒப்புரவினா கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.) ---


    1.2.19. ஈகை

    221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
    வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை-ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து-அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.
    விளக்கம்
    (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.) ---
    222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    கொளல் நல் ஆறு எனினும் தீது-ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று-ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும், ஈதலே நன்று.
    விளக்கம்
    ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.) ---
    223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள.
    இலன் என்னும் எவ்வம் உரையாமை-யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்; ஈதல்-அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்; உளகுலன் உடையான்கண்ணே-இவை இரண்டு உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.
    விளக்கம்
    (மேல் 'தீது' என்றது ஒழிதற்கும் 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உயர்த்தியவாறு. இனி 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்' எனவும், 'அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், 'யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன்' எனக் 'கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்' எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.) ---
    224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
    இரக்கப்படுதல் இன்னாது-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று; இரந்தவர் இன்முகம் காணும் அளவு-ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;
    விளக்கம்
    (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப்படுதல்-'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது, 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி. 145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே, எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.) ---
    225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்-தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்- அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.
    விளக்கம்
    (தாமும் பசித்துப் பிறரையும் அது 'தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் அற்றல் நன்று என்பதாம்.) ---
    226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
    அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க; பொருள்பெற்றான் ஒருவன்வைப்புழி அஃது-பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
    விளக்கம்
    (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.) ---
    227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    பாத்து ஊண் மரீஇயவனை-எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.
    விளக்கம்
    (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்-தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-வறியார்க்குவேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!
    விளக்கம்
    ('உவக்கும்' என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம்; அஃது 'இன்பம்' என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.) ---
    229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    நிரப்பிய தாமே தமியர் உணல்-பொருட்குறை நிரப்ப வேண்டிய வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்; இரத்தலின் இன்னாது மன்ற-ஒருவார்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.
    விளக்கம்
    (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை. தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.) --
    230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    சாதலின் இன்னாதது இல்லை-ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை; அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது-அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
    விளக்கம்
    (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.) ---


    1.2.20. புகழ்

    231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
    ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
    விளக்கம்
    (இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.) ---
    232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்.
    உரைப்பார் உரைப்பவை எல்லாம்-உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்-வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
    விளக்கம்
    ('புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்.' (புறநா. 27.) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளுப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க இதனைப் 'பிறர்மேலும் நிற்கும்' என்பார், 'தாம் எல்லாம் சொல்லுக; புகழ் ஈவார்மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.) ---
    233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில்.
    ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
    விளக்கம்
    (இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு.
    நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.
    விளக்கம்
    (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.) ---
    235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது.
    நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
    விளக்கம்
    ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.) ---
    236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    தோன்றின் புகழொடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
    விளக்கம்
    (புகழ்; ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.) ---
    237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்?
    புகழ்பட வாழாதார் - தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார்-அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி?
    விளக்கம்
    (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.) ---
    238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்.
    இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.
    விளக்கம்
    ('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.) ---
    239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்.
    இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.
    விளக்கம்
    (உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.) ---
    240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்.
    வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
    விளக்கம்
    (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்; இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலாயாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள் 50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.) ---

    இல்லறவியல் முற்றிற்று




    1.3. துறவறவியல்

    1.3.1 அருளுடைமை

    241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
    செல்வத்துள் செல்வம் அருட் செல்வம் - செல்வங்கள் பவற்றுள்ளும் ஆராய்ந் தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம்; பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள-அஃது ஒழிந்த பொருளான்வரும் செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
    விளக்கம்
    (அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்: ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.) ---
    242. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.
    நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத்துணை யாம் அறம் யாது?' என்று ஆராய்ந்து, அருளுடையராக; பல ஆற்றான் தேரினும் துணை அஃதே-ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாம் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
    விளக்கம்
    (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது: 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
    இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
    விளக்கம்
    ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன்கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.) ---
    244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
    மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல்என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
    விளக்கம்
    (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல் துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.) ---
    245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
    அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையோர்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; வளி வழங்கும் மல்லம்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
    விளக்கம்
    (சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார், 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.) ---
    246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
    அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
    விளக்கம்
    ('உறுதிப் பொருள்: அறம். துன்புறுதல், பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலாராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.) ---
    247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
    விளக்கம்
    ('அவ்வுலகம்' 'இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.) ---
    248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது.
    பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் - ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர்; அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது-அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒரு காலத்தும் ஆதல் இல்லை.
    விளக்கம்
    ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.) ---
    249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
    அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
    விளக்கம்
    (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப் பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்து விடும்; அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்துவிடும் என்பது ஆயிற்று; ஆகவே, பிற அறங்கட்கெல்‘ம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்க வரும் குற்றம் கூறப்பட்டது.) ---
    250. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து.
    வலியார் முன் தன்னை நினைக்க-தன்னில் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க; தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.
    விளக்கம்
    ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறினையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, 'இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம்' என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.) ---


    1.3.2. புலான்மறுத்தல்

    251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?
    தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை?
    விளக்கம்
    தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக் கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.) ---
    252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
    பொருள் ஆட்சி போற்றார்தார்க்கு இல்லை-பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை-அது போல அருளாள் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.
    விளக்கம்
    (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---
    253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.
    படை கொண்டார் நெஞ்சம் போல்-கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ் வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.
    விளக்கம்
    (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்ட . இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.) ---
    254. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
    அருள் யாது எனின் கொல்லாமை-அருள் யாது எனின் கொல்லாமை: அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்; அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.
    விளக்கம்
    (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும், 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரியமாக்கியும் கூறினார். அருளல்லது-கொடுமை. சிறப்புப் பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் 'பொருள் அல்லது' எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி, இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கி, 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரு உளர்.) ---
    255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
    உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது-ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.
    விளக்கம்
    (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயர்நிலை' என்றார். 'உண்ணின்' என்பது 'உண்ண' எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங் காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---
    256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
    தினற் பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்; விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
    விளக்கம்
    ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. 'பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.) ---
    257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.
    புலால் பிறிதொன்றன் புண்-புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்-அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும்.
    விளக்கம்
    ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.) ---
    258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார்; உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.
    விளக்கம்
    ('தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார். ---
    259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.
    அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்-தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று-ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
    விளக்கம்
    (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.) ---
    260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.
    கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
    விளக்கம்
    கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.) ---


    1.3.3 தவம்

    261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
    தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே-உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.
    விளக்கம்
    (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' என்பதனை, 'யானைக்குக் கோடு கூரிது' என்றார்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனான் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.) --
    262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள்வது.
    தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்-ஆகலான், அத்தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயன்இல் முயற்சியாம்.
    விளக்கம்
    (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.) ---
    263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
    மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்!
    விளக்கம்
    (துப்புரவு - அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்" பயத்தது ஆகலின் (குறள் 265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும் எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.) ---
    264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்.
    ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும்; உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்; எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
    விளக்கம்
    (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.) ---
    265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
    வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்-முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம். ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம். இம்மைக்கண் அறிவடையோரான் முயலப்படும்.
    விளக்கம்
    ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    266. தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
    தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவர் துறந்து தவத்தைச் செய்வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.
    விளக்கம்
    (அநித்தமாய் மூவகைத் துன்பத்தாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்திவருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.) ---
    267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
    சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
    விளக்கம்
    ('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.) ---
    268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
    தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
    விளக்கம்
    (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட்பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.) ---
    269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
    கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
    விளக்கம்
    (சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைக்கூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.) ---
    270. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.
    இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.
    விளக்கம்
    (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன; என்னை? "நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்" (நாலடி. 251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப் பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.) ---


    1.3.4. கூடாவொழுக்கம்

    271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.
    வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
    விளக்கம்
    (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது, இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் 'வஞ்சமனம்' என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும், உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம் முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.) ---
    272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின்.
    வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.
    விளக்கம்
    ('வான் உயர் தோற்றம்' என்பது ''வான் தோய்குடி'' (நாலடி. 142) என்றார்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே, நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.) ---
    273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
    வலி இல் நிலைமையான் வல் உருவம் - மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையடார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.
    விளக்கம்
    (இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், 'மேய்ந்தற்று' என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம்; ஆகவே, வல்உருவங் கோடற்கு பயன் அன்ன காரணங்களான் உலகத்தால் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.) ---
    274. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
    தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிரித்தாற் போலும்.
    விளக்கம்
    ('தவம் ஆகுபெயர், தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல் . இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.) ---
    275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
    பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு 'யாம் பற்று அற்றேம்' என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்; எற்று எற்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் 'என் செய்தோம்! என் செய்தோம்! என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
    விளக்கம்
    (சொல் அளவல்லது பற்று அறாமையின், 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்வார். அதன் விளைவின் கண் "அந்தோ வினையே என்றழுவர்" (சீவக. முத்தி, 27) ஆகலின், "எற்று எற்று" என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.) ---
    276. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
    நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து; துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர்போல்; வண்கணார்இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை.
    விளக்கம்
    (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, "யாம்மறுமைக் கண் தேவராதற் பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்" என்று அறியாது ஈந்தாரை, அது கொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல் 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி - உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர்ஏறே" (சீவக. முத்தி 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.) ---
    277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.
    குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினம், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்.
    விளக்கம்
    ('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. "ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே" (திருக்கோவை 322) என்பதும் அது.) ---
    278. மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
    மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக; மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுடையராய் நீரின் மூழ்கிக் காட்டி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
    விளக்கம்
    (மாசு: காம வெகுளி மயக்கங்கள்: அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுததற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி, 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப் பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.) ---
    279. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.
    கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது: யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல்பட கூற்றானே அறிந்து கொள்க.
    விளக்கம்
    (கணைக்குச் செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறிவும் ஆறு கூறப்பட்டது.) ---
    280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.
    மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின்.
    விளக்கம்
    (பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.) ---


    1.3.5. கள்ளாமை

    281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
    எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்; எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
    விளக்கம்
    ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும், நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல், ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.) ---
    282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்.
    உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்து கொள்வோம் என்று கருதற்க.
    விளக்கம்
    ('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம், அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.) ---
    283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும்.
    களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
    விளக்கம்
    ('ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர். ---
    284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும்.
    களவின்கண் கன்றி காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அப்பொழுது இனிது போலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
    விளக்கம்
    (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், 'வீயா விழுமம் தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.) ---
    285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
    அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது.
    விளக்கம்
    (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வ பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.) ---
    286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்.
    அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெற்றியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.
    விளக்கம்
    (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உள்ள விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் விட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் 'தருமத் தியானம்' என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல். ---
    287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
    களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் 'அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.
    விளக்கம்
    (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவெனும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்ற' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) ---
    288. அளவற§ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு.
    அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றார்போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.
    விளக்கம்
    (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.) ---
    289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.
    அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்.
    விளக்கம்
    (தீய நினைவுகளான : பொருளுடையாரை வஞ்சிக்கு மாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின், 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையவாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி, கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.) ---
    290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு.
    கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.
    விளக்கம்
    (உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள் 566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.) ---


    1.3.6. வாய்மை

    291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்; தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
    விளக்கம்
    ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.) ---
    292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
    புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலஆம்.
    விளக்கம்
    (குற்றம் தீர்ந்த நன்மை: அறம்; அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல் நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம்; பயப்பின், மெய்ம்மையாம் என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை' எனவும், 'நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.) ---
    293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
    தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
    விளக்கம்
    (நெஞ்சு கரியாதல் "கண்டவர இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித். நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.) ---
    294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
    உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம்.
    விளக்கம்
    (பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல். அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.) ---
    295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை.
    மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.
    விளக்கம்
    (மனத்தொடு பொருந்துதல்-மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.) ---
    296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்.
    பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்.
    விளக்கம்
    ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேண்டுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார். 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.) ---
    297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.
    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்ய வல்லனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.
    விளக்கம்
    (அடுக்கு இரண்டனுள்; முதலது இடைவிடாமை மேற்று; ஏனையது துணிவின்மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று,' என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று,' எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிறர் அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப் பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) ---
    298. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.
    புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும் - அது போல, மனம் தூய்தாந்தான்மை வாய்மையான் உண்டாம்.
    விளக்கம்
    (காணப்படுவது உள்ளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்; மனம் தூய்தாதல் மெய்யுணர்தல், புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும் என்பதூஉம் பெற்றாம்.) ---
    299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.
    எல்லா விளக்கும் விளக்குஅல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா; சான்றோர்க்கு விளக்குப் பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.
    விளக்கம்
    (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம்
    அல்ல; அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே,' என்று உரைப்பாரும் உளர்.) ---
    300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற.
    யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்; எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
    விளக்கம்
    (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன; தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற்பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.) ---


    1.3.7 வெகுளாமை

    301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கால் என்?
    சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்?
    விளக்கம்
    ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.) ---
    302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற.
    சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
    விளக்கம்
    (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை,' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.) ---
    303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
    யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும் - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
    விளக்கம்
    (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார் மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்,' என்றும் கூறினார்.) ---
    304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
    நகையும் உவகையம் கொல்லும் சினத்தின - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது; பிற பகையம் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
    விளக்கம்
    (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்ற அருள்முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லையாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.) ---
    305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.
    தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச் சினம் வராமல் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச் சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.
    விளக்கம்
    ("வேண்டிய வேண்டியாங்கு எய்தல்" (குறள் 265) பயத்தாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதுலின் 'தன்னையே கொல்லும்' என்றார். ''கொல்ச் சுரப்பதாங் கீழ்" (நாலடி (279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.) ---
    306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
    சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புனையையும் சுடும்.
    விளக்கம்
    (சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்; 'தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, 'உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; 'இந் நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்,' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியயராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம் என்னும் ஏமப்புணை' என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.) ---
    307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.
    விளக்கம்
    (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றார்போல, ஈண்டுக் குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---
    308. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
    இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று . அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
    விளக்கம்
    (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனைவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.) ---
    309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.
    உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின்; உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.
    விளக்கம்
    ('உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---
    310. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.
    இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
    விளக்கம்
    (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும், கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின், அவரை 'இறந்தார் அனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதற்கு உரிய யாக்கை நின்றதாயினம், ஞானத்தான வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை 'வீடு பெற்றாரோடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.) ---


    1.3.8 இன்னாசெய்யாமை

    311. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
    சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாரது துணிவு.
    விளக்கம்
    (உம்மை பெறாமை மேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு' என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் 'சிறப்பு ஈனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றாமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.) ---
    312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
    கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும், மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
    விளக்கம்
    (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.) ---
    313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்.
    செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.
    விளக்கம்
    (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.) ---
    இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறத்தலாவது; அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்த அவ்விரண்டனையும் மறத்தல்.
    விளக்கம்
    (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பா ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.) ---
    315. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.
    அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ?
    விளக்கம்
    (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.) ---
    316. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை.
    இன்னா எனத் தான் உணர்ந்தவை-இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
    விளக்கம்
    (இன்பத் துன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.) ---
    317. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
    மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.
    விளக்கம்
    (ஈண்டு, மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும், எளியார்க்கும் ஆகாமையின், 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.) ---
    318. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
    தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
    விளக்கம்
    (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப் பாவம் கழுவப்படாமையின் 'இன்னாதன யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பதுபோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.) ---
    319. தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல்.
    பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
    விளக்கம்
    ('முற்பகல், 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதன வாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.) ---
    320. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும்.
    320. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்.
    நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னா தன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
    விளக்கம்
    ("உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் அதுவே,' '(சீவக. முத்தி. 164) ஆகலின், "நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---


    1.3.9 கொல்லாமை

    321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்.
    அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச் செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
    விளக்கம்
    (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களல்லாம் கூடியம் விளைக்க மாட்டா என்பதாம் கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.) ---
    322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நு¡லோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
    பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு, ஐகை உயிர்களையும் ஓம்புதல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.
    விளக்கம்
    ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின், அச் சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும், அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான், 'இது தலையாய அறம்' என்றும் கூறினார். ---
    323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று.
    ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
    விளக்கம்
    ('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும், மேல் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின்' எனவும், 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை' எனவும் கூறினார் ஆகலின், இரண்டு அறந்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே! அது நிகழாமைப்பொருட்டு, ஈண்டு, 'அதன் பின்சாரப் பொய்யாமை நன்று' என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் 'பின்சார நன்று' என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
    324. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
    நல்ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
    விளக்கம்
    ('யாது ஒன்றும்' என்றது. ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.) --
    325. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை.
    நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாம் நிலைமை.
    விளக்கம்
    (துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால் பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார். இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.) ---
    326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று.
    கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.
    விளக்கம்
    ("மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்பயன் அனுபவிப்பர்' என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம்செய்தான் தானும் கொல்லப்படான்; படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார், 'வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது,' என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவற்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---
    327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
    தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்; தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.
    விளக்கம்
    ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி, 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிற செய்தலும் ஆகாமையின், அஃது உரையன்மை அறிக.) ---
    328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை.
    நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம்பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்; சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை,
    விளக்கம்
    (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும்தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும், பின்னும்பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது.துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்கு ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கிய வாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.) ---
    329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து.
    கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
    விளக்கம்
    ('கொலை வினையர்' என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.) ---
    330. உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
    செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழி தொழில் வாழ்க்கையினை உடையாரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர்' என்று சொல்லுவர் வினை விளைவுகளை' அறிந்தோர்.
    விளக்கம்
    ('செல்லா வாழ்க்கை, தீ வாழ்க்கை' எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், 'அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழு நோய் எழுபவே' (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும், அஃது அறிந்து அடக்கிக் கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.) ---


    1.3.10 நிலையாமை

    331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை.
    நில்லாதவற்றை நிலையின் என்று உணரும் புல்லறிவு ஆண்மை - நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடைய என்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை - துறந்தார்க்கு இழிபு.
    விளக்கம்
    (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி, புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும்,அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.) ---
    332. கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.
    பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற் போலும்; போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.
    விளக்கம்
    (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சஉம்மையான்வருதல் பெற்றாம்; அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித்தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல்திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.) ---
    333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
    அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடையப்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க.
    விளக்கம்
    ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழ் உள்வழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், 'அது பெற்றால்' என்றும், அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட்பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.) ---
    334. நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
    நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறை போலத் தன்னைக் காட்சி ஈர்ந்து செல்கின்ற வாளினது னாயது உயிர்; உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.
    விளக்கம்
    (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், 'நான் என ஒன்றுபோல் என்றும், அது தன்னை வாள் என்று உணர மாட்டாதார் தமக்குப்பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும், இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின், 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவே யாகலின், 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை 'நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம்' என்று உரைப்பாரும் உளர்: 'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.) ---
    335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும்
    நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடாவண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
    விளக்கம்
    (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும், 'வாராமுன்' என்றும், அதுதான் இன்ன பொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல், மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.) ---
    336. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு.
    ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து - 'ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான்' என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு - இவ்வுலகம்.
    விளக்கம்
    (ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப் பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.) ---
    337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல.
    ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலை தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.
    விளக்கம்
    (இழிவு சிறப்புஉம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனி, 'கருதுப' என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.) ---
    338. குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
    குடும்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து, உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
    விளக்கம்
    ('தனித்து ஒழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்: அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள் உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும் உளவேனும்,புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடும்பை' என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.) ---
    339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.
    சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் -அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு 'ஒக்கும்.
    விளக்கம்
    (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.) ---
    340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.
    உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!
    விளக்கம்
    (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுல் துச்சிலிராது என்பதாம்; ஆகவே, உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவை ஏது பாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும, அவை ஓரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டு கொள்க.) ---


    1.3.11 துறவு

    341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
    விளக்கம்
    (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீக்குதல் - துறத்தல். ஈண்டத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி, ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.) ---
    342. வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால பல.
    துறந்த பின் ஈண்டு, இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல; வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக் காலம் பெறத் துறக்க.
    விளக்கம்
    (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன.இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக் கண் துன்பங்கள் இல்லாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.) ---
    343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
    ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
    விளக்கம்
    ('புலம்' என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள்மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.) ---
    344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
    ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்; உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயக்குவதற்கு ஏதுவாம்.
    விளக்கம்
    (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப் பெயர்த்தலான்' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாக விட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது' என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.) ---
    345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
    பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவிஆகிய உடம்பும் மிகை ஆம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்?
    விளக்கம்
    ('உடம்பு' என்ற பொதுமையான், உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள், அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம்; இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.) ---
    346. யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
    யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கொடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
    விளக்கம்
    (மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பற்சியானும் அவை 'யான், எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது என்பது கூறப்பட்டது.) ---
    347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர் க்கு.
    பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றி விடாதாரை; இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா.
    விளக்கம்
    (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல்; 'விடாஅதவர்க்கு' என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.) ---
    348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
    தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
    விளக்கம்
    (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் 'தலைப்பட்டார்' என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.) ---
    349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்.
    பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே, அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமைகாணப்படும்.
    விளக்கம்
    (காரணமற்ற பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். "அற்றது பற்றெனில், உற்றது வீடு" (திருவாய் 1-2-5) என்பதூஉம் அதுபற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன. ---
    350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.
    பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, 'இதுவே நன்னெறி' என்று மனத்துக் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க, விடாது வந்த பற்று விடதற்கு.
    விளக்கம்
    (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் 'பற்றற்றான்' என்றார். 'பற்று அற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் 'பற்று' என்றது, பற்றப்படுவதனை 'அதன்கண் உபாயம்' என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும்உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.) ---


    1.3.12 மெய்யுணர்தல்

    351. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.
    பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.
    விளக்கம்
    (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.) ---
    352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.
    மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையர் ஆயினார்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
    விளக்கம்
    (இருள்: நரகம்; அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள் நீங்கி' என்னும் வினையெச்சம், 'காட்சியவரென்னும்' குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.) ---
    353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.
    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.
    விளக்கம்
    (ஐயமாவது, பல தலையாய உணர்வு. அஃதாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; 'பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ?' எனத் துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம் களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்' என்றும், அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார்; கூறவே, ஐய உணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.) ---
    354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
    ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றைவிட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
    விளக்கம்
    (ஐந்தாகிய உணர்வு: மனம். அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின், 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானம் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    எப்பொருள் எத்தன்மையத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு . அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
    விளக்கம்
    (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது, 'கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை' என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதொரு குடியும் , வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதினையும நிலைத்திணையும் ஆகிய பொருள்கள் எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான், மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.) ---
    356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.
    ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
    விளக்கம்
    ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.) ---
    357. ஓர்த்துள்ளம் உள்ளது உணர§ன் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.
    விளக்கம்
    ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.) ---
    358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.
    பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.
    விளக்கம்
    (பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள்அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச் சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும், 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இது பற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு, ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் 'சமாதி' எனவும், 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது. அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காரத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.) ---
    359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்.
    சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
    விளக்கம்
    (ஆகுபெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன - பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன.அவை விளக்கின்முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான், நல்வினைப் பயனும் 'நோய்' எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடைய உயிரைச் சாராமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்' என்பது, இதனால் கூறப்பட்டது.) ---
    360. காமம் வெகுளி மயக்கம் இ¨வ்முன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்.
    காமம் வெகுளி மயக்கம் இவை முன்றன் நாமம் கெட ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்; நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.
    விளக்கம்
    (அநாதியாய அவிச்சையும், அதுபற்றி 'யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி, 'எனக்கு இது வேண்டும்' என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், எண வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றின் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிபு. 'நோய்' என்பது சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய வினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டு பாட்டும் இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.) ---


    1.3.13 அவாவறுத்தல்

    361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து.
    எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும்வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து; அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர்.
    விளக்கம்
    (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக் கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் 'பிறப்பினும் வித்து' என்றும், கதிவயத் தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறுபடாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும், இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல் கூறப்பட்டது.) ---
    362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்.
    வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் -பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.
    விளக்கம்
    (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், 'பிறவாமையை வேண்டும்' என்றும், ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒரு பொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், 'அது வேண்டாமை வேண்ட வரும்' என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின்றமையின், 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.) ---
    363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்பது இல்.
    வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல் - இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.
    விளக்கம்
    (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---
    364. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்.
    தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை; அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.
    விளக்கம்
    (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை என்பது அவா இன்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல்-இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்கு பரம்பரையான்அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரம் வழியும் இதனால் கூறப்பட்டன.) ---
    365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர்.
    அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவாஅற்றவர்கள்; மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி ஆற்றிலர்.
    விளக்கம்
    (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.) ---
    366. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா.
    ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை, மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவர்; அஞ்சுவதே அறன்-ஆகலான், அவ்வவாவை அஞ்சி காப்பதே துறவறமாவது.
    விளக்கம்
    ('ஓரும்' என்பன அசைநிலை. அநாதியாய்ப் போந்த அவா, ஓரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது, வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம் என்பதூஉம் கூறப்பட்டன.) ---
    367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்.
    அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித்துவரக் கெடுக்க வல்லன் ஆயின்; தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.
    விளக்கம்
    (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை.'வினை' சாதி யொருமை, தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறு அறஞ்செய்ய வேண்டா; செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) ---
    368. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்.
    அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.

    விளக்கம்
    (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இப்பொழுது அவாவால் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.) ---
    369. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
    அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.

    விளக்கம்
    (துன்பத்துள் துன்பம் - ஏனைத்துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின் கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து 'அவா' என்றும், 'துன்பத்துள் துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாது நிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது' என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்' என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது.) ---
    370. இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்.
    ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்; அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும்.

    விளக்கம்
    (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம் பயனும் நிலையாமையின் வேண்டாதனவாயபொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயினஇன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை, 'பேரா இயற்கை' என்றும், அஃது அவா நீத்த வழிப் பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார்; "ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு" (திருவாய், 8,8,6) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வட நூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.) ---

    துறவறவியல் முற்றிற்று.


    1.4 ஊழியல்

    1.4.1. ஊழ்
    371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி.
    கை பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.
    விளக்கம்
    ('ஆகூழ்!' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு-மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.) ---
    372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலு¡ழ் உற்றக் கடை.
    இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும், கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை வரிக்கும்.
    விளக்கம்
    ('கைப்பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்', 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத் தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாகிய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.) ---
    373. நுண்ணிய நு¡ல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்.
    நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
    விளக்கம்
    (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.) ---
    374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
    உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு; திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு.
    விளக்கம்
    (செல்வத்தினைப்படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதர்க்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக் காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.) ---
    375. நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.
    செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம் - அதுவேயன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான்.
    விளக்கம்
    ('நல்லவை' 'தீயவை' என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. 'ஊழான்' என்பது அதிகாரத்தால் பெற்றாம். அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.) ---
    376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
    பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மைவிட்டுப் போகா.
    விளக்கம்
    (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது, காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.) ---
    377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
    கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லா துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான அல்லது நுகர்தல் உண்டாகாது.
    விளக்கம்
    (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் 'வகுத்தான்' என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத்தான்" (தொல். சொல். 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், 'உம்மை' எச்ச உம்மை. வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.) ---
    378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்.
    துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர்; உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.
    விளக்கம்
    ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.) ---
    379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்?
    நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, 'இவை நல்ல' என்று இயைந்து அனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
    விளக்கம்
    (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத் துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.) ---
    380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
    மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும்; தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழின் பெருவலியா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
    விளக்கம்
    ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதிகொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.) ---

    ஊழியல் முற்றிற்று
    அறத்துப்பால் முற்றிற்று


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்