அகநானூறு விளக்கவுரை 2


சங்க கால நூல்கள்

Back

அகநானூறு: களிற்றியானை நிரை
பாகம் 2 செய்யுள் 61-120 பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரைகளுடன்


note: அகநானூறு: களிற்றியானை நிரை (முதல் 120 பாக்கள்)
இந்நூல் முதலில் உள்ள 120 பாக்கள் களிற்றியானை நிரை எனவும், 121 முதல் 300 முடியவுள்ள 180 பாக்கள் மணிமிடை பவளம் எனவும், 301 முதல் 400 முடியவுள்ள 100 பாக்களுக்கு நித்திலக் கோவை எனவும் பெயர் கொடுத்து மூன்று பகுதிகளாகப் பகுத்திடப்பட்டுள்ளது.
------------

செய்யுள் 61


திணை: பாலை
துறை: தலைமகன் பொருள்வயிற்பிரிய வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.

(து-ம்) அஃதாவது - தலைவன் பொருளீட்டற்குத் தலைவியைப் பிரிந்து சென்ற பின்னர்த் தலைவி ஆற்றாமைமிக்குப் பெரிதும் வருந்தினளாக அது கண்ட தோழி வினையே ஆடவர்க்குயிர் என்பது பற்றி இல்லின்கண் ணிருந்து செய்யும் அறத்திற்கு இன்றியமையாப் பொருட் பிரிவினை நீ ஆற்றியிருத்தலே நின் கடமை என்பதுபடக் கூறித் தலைவியை ஆற்றுவித்தது என்றவாறு,.

(இ-ம்) இதனை "பெறற் கரும்பெரும் பொருள்" எனவரும் (தொல். கற்பி. 9) நூற்பாவின் கண் பிறவும் வகைபட வந்த கிளவி என்பதன்கண் அமைத்திடுக.

இதனை, "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" என்னும் (தொல் அகத். 44) நூற்பாலிற்கு எடுத்துக் காட்டி, "இவ்வகப் பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவரெனத் தன் சாதிக்கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து
வற்புறுத்தலைத் தோழி கூறினாள்" என்பர். எனவே, இதனை அவர் வேந்தற்குற்றுழிப் பிரிந்த பிரிவெனக் கருதினர் என்றறிகின்றோம்.

    நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
    கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத்
    தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
    நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
    ஆழல் வாழி தோழி தாழாஅது         5
    உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
    வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ
    அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
    அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
    நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்         10
    கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
    மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
    விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
    பழகுவ ராதலோ அரிதே புனாஅது
    முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி         15
    பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
    ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
    நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
            --மாமூலனார்.

(உரை)

1-5: நோற்றோர்.............தோழி.
(இ-ள்) தோழி- பெருமாட்டியே கேள்!; கூற்றம் கோள் உற விளியார்- கூற்றத்தாலே உயிர் கொள்ளப்பட்டு இறவாமல்; பிறர் கொள விளிந்தோர்- பிறர் தம் கைப் பொருளைக் கொள்ளும்படியாக நன்முயற்சி தலைப்பட்டு அது காரணமாக உயிர்நீத்தவர் இவ்வுலகின்கண்; மன்ற நோற்றோர்- தேற்றமாகத் தவந்தலைப்பட்டோரே யாவர் என்னும் மேற் கோளுடனே; தாள் வலம்படுப்ப- தமது முயற்சியை வெற்றியுடைத்தாக்கற்குச் சேட்புலம் படர்ந்தோர் நம்மைப் பிரிந்து தொலைவிலுள்ள நாட்டிற்குச் சென்ற நம்பெருமான்; நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி- நாட்களின் கணக்கறிதற்குக் கோடிட்ட நெடிய சுவரின்கண் அவற்றை எண்ணி எண்ணித் துயருற்று அதனுள் அழுந்தாதே கொள்; என்க.

(வி-ம்) ஈண்டுத் தோழி தலைவன் பிரிவிற்குக் கூறும் காரணம் அவன் வேந்தற் குற்றுழிப் பிரிந்துளான் எனற்கே பெரிதும் பொருந்துவதாகவுளது. பழைய வுரையாசிரியர் பொருள் வயிற்பிரிவு என்று கொண்டமையால், பிறர் தம் கைப்பொருள் கொள்ளும்படி மரித்தல் என்றுரை கூறுவாராயினர். நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி ஆழல் என்பதனோடு- "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற, நாளொற்றித் தேய்ந்த விரல்" (குறள் 1261) எனவருந் திருக்குறள் நினையற்பாலதாம் ஆழல்- அழாதே கொள் எனினுமாம்.

5-13: தாழாஅது........பெறினும்

(இ-ள்) தாழாஅது உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு- மின்னியபொழுதே சிறிதும் காலந்தாழ்க்காமல் இடி இடித்தாற்போல ஆரவாரித் தெழுதற்குக் காரணமான மனவெழுச்சியுடனே; பைங்கால் மாண்வரி வன்சிலை நோன் ஞாண் கொளீஇ- புதிய காலும் மாட்சிமைப்பட்ட வரியும் உடைய வலிய வில்லின்கண் வலிய நாணைக் கொளுவி; அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் - பகைமறவருடைய அரிய மார்பிடத்தே பாய்ச்சிய அம்பினையுடைய தொடைமாண் மறவருடனே; அண்ணல் யானை வெண் கோடு கொண்டு- தலைமைத் தன்மையுடைய களிற்றியானையின் வெள்ளிய மருப்புக்களையும் கைப்பற்றிக் கொணர்ந்து; நறவு நொடை நெல்லின் - தேறல் விற்றுப் பெற்ற நெல்லினாலே நாட்காலத்தே களியாட்டயருகின்ற; கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான்- வீரக்கழல் கட்டிய பிறக்கிடாத அடியினையுடைய கள்வர் கோமானாகிய ; மழபுலம் வணக்கிய மாவண் புல்லி - மழநாட்டை வென்றடிப்படுத்த பெரிய வள்ளன்மையுடைய புல்லி என்பானுடைய; விழவுடை விழுச்சீர் - திருவிழா அறாத பெரிய சிறப்பையுடைய திருவேங்கடம் என்னும் திருமலையையே பெறுவதாயினும்; என்க.

(வி-ம்.) செய்யக் கடவ‌ போர்த் தொழிலைக் காலந் தாழ்த்திராமல் இடி இடித்தால் போல ஞெரேலென ஆரவாரித்துச் சென்று செய்தற்குக் காரணமான ஊக்கம் என்க. ஊக்கம் - மனவெழுச்சி. பகைமறவர் பலரையும் அவர்தம் யானைக் கோடுகளையும் கைப்பற்றி என்க. திருந்த‌டி - போரிற் பிறக்கிடாத அடி. நாண்மகிழ் - வெற்றி நாள் முதலாய சிறப்பு நாள் பற்றிக் கொண்டாடும் களியாட்டம். திருவேங்கடம் ஒரு காலத்தே புல்லி என்னும் தமிழ் மன்னன் ஆட்சியிலிருந்தமை இதனாற் புலப்படும். வேங்கடம் இக்காலத்திற் போலவே அக்காலத்தும் விழவுடை விழுச்சீர் வேங்கடமாகவே இருந்தமையும் இதனாற் பெற்றாம்.

14-18: பழகுவர்..........மறந்தே

(இ-ள்.) முழவு உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன் உடை நெடுநகர்ப் பொதினி அன்ன - மத்தளம் போன்ற திண்ணிய தோளையுடைய நெடிய வேளிர்குலத்தவனாகிய ஆவி என்பவனுடைய பொன்வளம் மிக்குடைய நெடிய நகரமாகிய பொதினி போன்ற சிறப்புமிக்க; நின் ஒள் கேழ் வனமுலைப் பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் முனாஅது - உன்னுடைய ஒளிபடைத்த நிறமுடைய‌ அழகிய முலைகளாலே பொலிவுபெற்ற நுண்ணிய தொழிற்றிறம் அமைந்த அணிகலன்களையுடைய மெய்யினை முயங்கும் முயக்கத்தை நினையாமல்; மறந்து பழகுவர் ஆதல் அரிது - ம‌ற‌ந்து அச்சேட் புல‌த்திலே கால‌ந்தாழ்த்திருந்து ப‌ழ‌குவார‌ல்ல‌ர் ந‌ம்பெருமான் வினைமுற்றிய‌ அப்பொழுதே வ‌ருகுவ‌ர் ஆற்றுக‌ என்ப‌தாம்.

(வி-ம்.) முனாஅது - நினையாம‌ல். இத‌ற்கு இப்பொருள் காணாம‌ல் ப‌ழைய‌தான‌ என்னும் உரை சிற‌வாமைய‌றிக‌. முனாஅது ம‌ற‌‌ந்து பழ‌குவ‌ர் ஆத‌ல் அரிது என‌ இயைக்க‌. பொதினி - ப‌ழ‌னி.

இனி இத‌னை, "தோழி ப‌ட‌ர்ந்தோர் நாள் இழை சுவ‌ர் நோக்கி ஆழ‌ல். ந‌ம்பெருமான் வேங்க‌ட‌ம் பெறினும் நின் ஆக‌ம் பொருந்துத‌ல் முனாஅது ம‌ற‌‌ந்து ப‌ழ‌குவ‌ர் ஆத‌ல் அரிது" என‌ இயைத்திடுக‌.

(பா-வே.) 7.வ‌ரிம‌ர‌னோன் ஞான் வார்சிலை.
----------------

செய்யுள் 62


திணை: குறிஞ்சி.
துறை: அல்ல‌குறிப்ப‌ட்டுழித் த‌லைம‌க‌ன் த‌ன்னெஞ்சிற்குச் சொல்லிய‌து.

(து-ம்.) அஃதாவது - இரவுக்குறிக்கண் தலைவன் செல்லு முன்னரே தலைவி அல்ல குறிப்பட்டுக் குறியிடத்தே வந்து தலைவனைக் காணாப் பெறாமல் இல்லம் புக்காளாகப் பின்னர்த் தலைவன் குறியிடத்தே வந்து புள்ளெழுப்பல் முதலிய குறி செய்யவும் இதுவும் பண்டுபோல இயற்கையில் நிகழ்வனவேயாம் என எண்ணித் தலைவி வாராதொழியத் தலைவன் ஏக்கற்று நின்று தன்னெஞ்சிற்குக் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதனை "மெய்தொட்டுப் ப‌யிறல்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். களவி.11.) சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் என்பதன்கண் அமைத்திடுக.

    அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
    நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய்
    ஆகத் த‌ரும்பிய முலையள் பணைத்தோள்
    மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
    மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு         5
    பேயும் அறியா மறைய‌மை புணர்ச்சி
    பூசல் துடியில் புணர்வுபிரிந் திசைப்பக்
    கரந்த கரப்பொடு நாஞ்செலற் க‌ருமையின்
    கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
    நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல         10
    நடுங்க‌ஞர் தீர முயங்கி நெருநல்
    ஆகம் அடைதந் தோளே வென்வேல்
    களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
    ஒளிறுநீர் அடுக்கத்து வியல‌கம் பொற்பக்
    கடவுள் எழுதிய பாவையின்         15
    மடவது மாண்ட மாஅ யோளே
            -ப‌ர‌ண‌ர்.

(உரை)

12-16: வென்வேல்..........மாயோளே

(இ-ள்.)வென் வேல் களிறு கெழுதானைப் பொறையன் - சென்ற போர் தொறும் வெல்லும் சிறப்பையுடைய வேலாட் படையினையும் களிற்றுயானை மிக்க படையினையும் உடைய சேரமன்னனுடைய; கொல்லி ஒளிறுநீர் அடுக்கத்து வியல் அகம் பொற்ப- கொல்லி ம‌லையின்க‌ண்ணே விள‌ங்காநின்ற‌ அருவி நீரினையுடைய ப‌க்க‌ம‌லையிட‌த்தே அக‌ன்றிருக்கின்ற‌ இட‌மான‌து பொலிவுறுமாறு; க‌ட‌வுள் எழுதிய‌ பாவையின்-க‌ட‌வுட்ட‌ன்மை பெறுமாறு வ‌ரைந்துள்ள‌ பாவை போன்ற‌; ம‌ட‌வ‌து மாண்ட‌ மாயோள்- ம‌ட‌ப்ப‌த்தாலே மாட்சிமையுடைய‌ மாமை நிற‌முடைய‌ ந‌‌ங்காத‌லி; என்க‌.

(வி-ம்.)பொறைய‌ன்-சேர‌ன். சேர‌ நாட்ட‌க‌த்துக் கொல்லி ம‌லைய‌க‌த்தே ப‌க்க‌ம‌லையின் அக‌ன்ற‌தோரிட‌த்தே எழுத‌ப்ப‌ட்ட பாவை என்க‌. இது தெய்வ‌த் த‌ன்மையுடைத்‌தாக‌லின் க‌ட‌வுள் எழுதிய‌ பாவை என‌ப்ப‌ட்ட‌து. இனி, க‌ட‌வுள‌ரால் எழுத‌ப்ப‌ட்ட‌ பாவை
எனினுமாம். இது த‌லைவிக்குவ‌மை. மாயோள்- மாமை நிற‌முடையோள்; க‌ரிய‌ள் என்பாருமுள‌ர்.

1-12: அய‌த்து..........அடைத‌ந்தோளே

(இ-ள்.)அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்- குளத்தின் கண் வள‌ருகின்ற பைஞ்சாய்க் கோரையின் அடிக்குருத்தினை ஒத்த புன்முறுவலாலே பொலிவுற்றுத் திகழாநின்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயையுடைய; ஆகத்து அரும்பிய முலையள் - மார்பிடத்தே முகிழ்த்துள்ள‌ அழ‌கிய முலைக‌ளையுடையாளும்; பணைத்தோள்- மூங்கில்போன்ற தோளையும்; மாதாள் குவளை மலர் பிணைத்தன்ன- கரிய தண்டினையுடைய குவளையினது மலர்கள் இரண்டனை ஒருசேரப் பிணைத்து வைத்தாற்போன்ற; மா இதழ் மழைக்கண் மாஅயோளொடு- பெரிய இமைகள் பொருந்திய குளிர்ந்த கண்களையும் உடைய அம்மாமை நிறத்தையுமுடையாளோடே; பேயும் அறியா மறை அமை புணர்ச்சி- யாம் இதுகாறும் நிகழ்த்திய பேயும் அறிதற்கியலாத மறைப்பினையுடைய இக்களவுப் புணர்ச்சியானது இற்றைநாள்; புணர்வு பிரிந்து பூசல் துடியில் இசைப்ப- இவ்வூர் கொடித‌றி பெண்டிர் த‌ம்முட் கூடியிருந்தும் ஆங்காங்குப் பிரிந்து சென்றும் போர்க் க‌ள‌த்திலே முழக்கும் துடியொலி போலே அல‌ர் தூற்ற‌ப் பெறுதலாலே; நாம் கரந்த கரப்பொடு செலற்க‌ருமையின்- யாமும் பண்டுபோலப் பிறர் அறியாவண்ணம் மறைந்த மறைப்போடு குறிப்பிட்ட செவ்வியில் இரவுக் குறியிடத்தே செல்லுதற்கு அருமை யுடைத்தாயினமையாலே அஞ்சி அஞ்சிக் காலந்தாழ்த்து வ‌ந்து அல்ல‌குறிப்ப‌ட் டொழிந்தோம்; நெருந‌ல்- ம‌ற்று நேற்றிர‌‌வு யாம் குறிப்பிட்ட‌பொழுதில் வ‌ந்த‌மையாலே அவ‌ள் தானும்; கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல- க‌டிது செல்லும் நீர்மிக்க‌ காவிரிப் பேரியாற்றின்க‌ண் நெடிய சு‌ழிக‌ளோடே ஒழுகும் வெள்ள‌த்தே திளைத்தாடுப‌வ‌ள் போன்று ஆர்வ‌த்தோடு ந‌ம்பால் வ‌ந்து; நடுங்கு அஞர் தீர- யாம் நடுங்குதற்குக் காரணமான நமது காமநோய் தீரும்படி; முயங்கி- நம்மைத் தழுவிக்கொண்டு; ஆகம் அடை தந்தோள்- நம்முடைய மார்பிலே பொருந்திக் கிடந்தாள். அத்தகையவள் இன்று வந்திலள் யாம் என்செய்குதும்; என்பதாம்.

(வி-ம்) அயம்- குளம். பைஞ்சாய் - ஒருவகைக் கோரைப்புல். நகை- புன்முறுவல். எயிறு- விழுந்து முளைத்த பல். அணித்தே முகிழ்த்திருக்கின்ற முலை என்றான் அவளது இளமை கருதி. பேயும் அறியா என்புழி உம்மை சிறப்பு. மறைத்தல் அமைந்த புணர்ச்சி.

இப்பொழுது சிலரும் பலரும் அறியக் கரவாக்கரவு ஆயிற்று என்பது கரந்த கரப்பொடு நாம் செலற் கருமையின் என்பதனாற் பெற்றாம். நெருநல் ஆகம் அடைந்தோள் என்றமையால் இன்று வந்திலள் என்பது பெற்றாம். அவள் வாராமைக்குக் காரணம் நாம் காலந்தாழ்த்து வந்தமையால் அவள் அல்ல குறிப்பட்டு மீண்டதே என்பது குறிப்பு. இனி இதனை மாயோள் யாம் அவளொடு பண்டு போலச் செலற் கருமை ஆயினமையின் நெருநல் ஆகம் அடைதந்தோள் இன்று வந்திலள் என இயைத்திடுக.

(பா-வே) 5. வாயிதழ். 10. மண்ணுநள்.
----------

செய்யுள் 63


திணை: பாலை
துறை: தலைமகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.

(து-ம்) அஃதாவது- தலைவி தலைவனோடு நிகழ்த்திய களவொழுக்கத்திற்கு இடையூறு பலப்பல உண்டாக; அவனைப் பிரியலாற்றாது தலைவி தமர் அறியாமல் தலைவனோடு சென்று விட்டாளாக. அவள் பாலைப் பரப்பில் அவனோடு சென்றாள் என்பதும் அறிந்து பெரிதும் வருந்துபவள் நீ எற்றுக்கு இத்துணை வருந்துகின்றாய் வருந்தற்க என்று ஆற்றுவிக்கின்ற தன்மகட்கு, (தலைவியின் தோழிக்கு) கூறியது என்றவாறு.

(இ-ம்) இதனை-'தன்னும் அவளும்' எனவரும் நூற்பாவின் (தொல் அகத். 36) கண் 'அச்சம்' என்பதன்பாலடக்குக. (நச். இதற்கிதனையே காட்டினர்)

    கேளாய் வாழியோ மகளைநின் தோழி
    திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு
    பெருமலை இறந்தது நோவேன் நோவல்
    கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
    முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி         5
    பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்
    கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
    சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்
    அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
    கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து         10
    மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன்
    கறவை தந்த கடுங்கால் மறவர்
    கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
    முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
    மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை         15
    தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்
    வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
    சேக்கோள் அறையுந் தண்ணுமை
    கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே.
            --கருவூர்க் கண்ணம் புல்லனார்

(உரை)

1-3: கேளாய்.............நோவேன்.

(இ-ள்) மகளை வாழியோ- என் தோழி அவள் காதலனோடு சென்றமைக்கு நீ இத்துணை வருந்துவானேன்! ஆற்றுக! என்கின்ற அன்புடைய என்மகளே! நீ நீடுவாழ்வாயாக; நின் தோழி- உன் ஆருயிர்த் தோழியானவள்; திருநகர் வரைப்பு அகம் புலம்ப - அழகிய நமதில்லப் பரப்பெல்லாம் அனைவரும் குடியோடிப் போனாற் போன்று தனிமையுற்று வெச்சென்று கிடக்கும்படி; அவனொடு பெருமலை இறந்தது நோவேன்- நின்னாற் கூறப்படுகின்ற அவனோடு பெரிய மலைநெறியிலே சென்றதற்காக யான் வருந்துகின்றிலேன்காண்; கேளாய்- நான் எதற்கு வருந்துகின்றேன் என்பதனைக் கூறுவல் கேட்பாயாக!; என்க.

(வி-ம்) தலைவி அவளாற் காதலிக்கப் பட்டான் ஒருவனோடு சென்றுவிட்டாள் போலும் என்று மெல்ல இச் செய்தியைச் செவிலியறியக் கூறியவள் தோழியே ஆவள். பின்னர்த் தலைவியின் பிரிவு பற்றிப் பெரும் பேதுறுகின்ற செவிலியை ஆற்றுபவள்- அவளாற் காதலிக்கப் பட்டவனோடு அவள் சென்றது நீ இத்துணை வருந்துதற்குரிய செயலோ? அது முறைதானே! எனக் கூறித் தேற்றினாள் என்பது செவிலி "அவனோடு பெருமலை இறந்தது நோவேன்" என்று அவட்கு இறுக்கும் விடையாலே பெற்றாம். தலைவியைப் பிரிந்து தன்னினும் வருந்தியிருக்கின்றாள் ஆதலின் தோழியை நீ வாழி! என்று வாழ்த்துகின்றாள். மகளை என்புழி ஐ: சாரியை.

4- 9: கடுங்கண் .....நீந்து

(இ-ள்) கடுங்கண் யானை- தறுகண்மையுடைய யானைகள்; நெடுங்கை சேர்த்தி- நெடிய கையை நிலத்திலே ஊன்றி நின்று; முடங்கு தாள் உதைத்த- வளைந்த காலாலே நிலத்திலே உதைத்தலாலே உண்டான; பொலம் கெழுபூமி- பொற்றுகள் கலந்த புழுதியின்கண்ணே; பெரும்புலர் விடியல் விரிந்து வெயி லெறிப்ப- இருள் நன்கு புலர்ந்தொழிந்த விடியற் காலத்திலே கதிரவன் வெயில் யாண்டும் பரவி எறிக்கும்பொழுது; கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்- கரிய மாலைபோன்ற கோடமைந்த கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழ்ச் சேவல் சிறிய புல்லிய தன் பெடையோடே குளித்தற்கியன்ற அத்தகைய இடங்களையுடைய; அஞ்சு வரத்தகுந காரணமான காட்டைக் கடந்து அப்பால் என்க.

(வி-ம்) யானை கையை நிலத்திலூன்றி நிலத்தைக் காலால் உதைத்துப் பூழியாக்கும் இயல்புடையதிு என்பது இதனாற் பெற்றாம். குறிஞ்சி நிலந்திரிந்த பாலையாதலின் அப்பூழியில் பொற்றுகள் கலந்திருத்தல் கூறப்பட்டது. குறும்பூழ் முதலிய சிறுபறவைகள் புழுதியிற் குளிக்கும் இயல்புடையன. சேவல் போன்று பெடை காட்சிக் கினிய அழகுடையன அல்ல என்பது தோன்ற 'சிறுபுன்பெடை' எனப்பட்டது. யானை முதலிய வல்விலங்குகளும் ஆறலைப்போரும் உண்மையின் அஞ்சு வரத்தகுந கானம் என்றாள். கடத்தலரிதாதல் தோன்ற நீந்தி என்றாள்.

10-13: கன்று.........அசைஇ

(இ-ள்) கன்று காணாது புன் கண்ண - தத்தம் கன்றுகளைக் காணப் பெறாமையாலே துன்பமுடையனவாய்; செலி சாய்த்து மன்று நிறை பைதல்கூர- தங்கன்றுகளின் குரல் ஓர்த்துத் தஞ்செவிகளைச் சாய்த்து மன்றிலே செறிந்து நிறைதலாலே உண்டாகின்ற துன்பமும் மிகாநிற்ப; கறவை பலவுடன் தந்த - கரந்தையாருடைய கறவை யான்கள் பலவற்றையும் ஒருங்கே கவர்ந்து கொணர்ந்த; கடுங்கால் மறவர் - விரைந்து நடக்கும் வலிய காலையுடைய வெட்சி மறவர்க்குரிய; கல் என் சீறூர் - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சிறிய ஊரின் கண்ணே; எல்லியின் அசைஇ - இரவிலே தங்கி என்க.

(வி-ம்) மாற்றார் ஊராகலின் ஆக்கள் தங்கன்றுகளைக் காணாது துன்ப முறுகின்றன என்க. புன்கண்- துன்பம். தமது கன்றின் குரல் கேட்டற் பொருட்டு நாற்றிசையினும் ஆக்கள் தஞ்செவிசாய்த்து ஓர்கின்றன என்பது கருத்து. மன்று நிறையச் செறிந்து நிற்றலாலுண்டாகும் பைதல் என்க. பைதல்- துன்பம். ஆக்களை விரைந்து கவர்ந்து வருதலின் கடுங்கால் மறவர் என்றாள். எல்லி- இரவு.

14-19: முதுவாய்.....நெஞ்சே

(இ-ள்) முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை- முதுமையுற்ற பெண்டு தனித்துறைகின்ற சோர்ந்த கால்களையுடைய சிறிய குடிலின்கண்; மடமயில் அன்ன என் நடைமெலி பேதை- மடப்பமுடைய மயில் போலும் சாயலையுடைய என் மகளாகிய நடையால் வருந்தி மெலிந்த பேதையானவள்; தோள் துணையாகத் துயிற்ற- அவன் தனது தோளிற் கிடத்தி இனியன கூறித் துயில்விக்கவும்; துஞ்சாள்- துயிலாதவள்; வேட்டக் கள்வர் - வேட்டைத் தொழிலோடு பிறர்நாட்டு ஆக்களையும் கவரும் களவுத் தொழிலையும் உடைய எயின மறவர்; சேக்கோள்- அவ்வாக்களினூடே நிற்கும் ஏறுகளைப் பற்றிக் கட்டுதற் பொருட்டு; விசி உறு கடுங்கண் அறையும்- வாராலே நன்கிழுத்துக் கட்டிய கடிய ஒலியினையுடைய கண்ணிடத்தே அறைதலாலே எழுகின்ற; தண்ணுமை கேட்குநள் கொல்- தண்ணுமை முழக்கத்தைக் கேட்டுப் பொறுப்பாளோ? பொறா துயிர் நீப்பளோ? என்னும் ஐயத்தாலே; கலுழும் என் நெஞ்சு- கலங்குகின்றது என்னுடைய நெஞ்சம்; என்க.

3 நோவல்- அந் நெஞ்சிற்கே யானிப்பொழுது வருந்துகின்றேன்; என்பதாம்.

(வி-ம்) ஆங்கு மனைவி மக்களோடு வாழ்கின்றவர் மனையிலே தங்குமிடம் பெறுதல் அரிதாகலின் இவர் முதுவாய்ப் பெண்டின் சிறுபுள் குடிலிலேயே தங்குதல் கூடும் என்பது தோன்ற முதுவாய்ப் பெண்டின் குரம்பை என்றாள். மீண்டும் இவள் தங்குதற்கு அக் குரம்பை சிறிதும் தகுதியுடையதாகாது என்பாள் செதுகால் குரம்பை என்றும் மடமயில் அன்ன என்பேதை என்றும் விதந்தாள். விசியுறு கடுங்கண் தண்ணுமை எனக் கூட்டுக. ஏற்றினை அச்சுறுத்திப் பற்றுதற் பொருட்டு அறையும் தண்ணுமை என்க. அதன் ஒலி கேட்டற் கின்னாதாகும் என்பது தோன்ற விசியுறும் கடுங்கண் தண்ணுமை என்றாள். கேட்குநள்கொல்லோ என்புழி கொல்- ஐயப் பொருட்டு. கேட்குநள்கொல்லோ என்றது கேட்டுப் பொறுப்பளோ பொறாது இறந்து படுவளோ என்றவாறு. இங்ஙனம் ஐயுற்றுக் கலங்கும் என்னெஞ்சையே யான் நோகின்றேன் என்றிறுத்தபடியாம்..

இனி இதனை --மகளே வாழி நின் தோழி அவனொடு இறந்தது நோவேன்; அவள் கானநீந்தி மறவர் சீறூர் எல்லியின் அசைஇ குரம்பையில் (அவன் ) துயிற்றத் துஞ்சாள் சேக்கோள் கடுங்கண் தண்ணுமை கேட்குநள்கொல் எனக் கலுழும் நெஞ்சையே நோவல் என இயைத்திடுக.

(பா-வே) 5. புலங்கெழு. 11. கூடி. 12. கடுங்கண். 14. முதுகாற்.
----------

செய்யுள் 64


திணை:முல்லை.
துறை: வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(து-ம்) அஃதாவது-- வினைவயிற்சென்ற தலைவன் வினைமுற்றிய வழித் தலைவியை நினைந்து அவள் அல்லல் களைதற்கு விரைந்து செல்லக் கருதியவன் தோர்ப்பாகனுக்குக் கூறியது என்றவாறு.

(இ-ம்) இதற்கு, "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 5) "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" எனவரும் விதிகொள்க.

    களையும் இடனால் பாக உளைஅணி
    உலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா
    வகையமை வனப்பின் வள்புநீ தெரியத்
    தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி
    ஐதிலங் ககலிலை நெய்கனி நோன்காழ்         5
    வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்
    செலவுநாம் அயர்ந்தன மாயின் பெயல
    கடுநீர் வரித்த செந்நில மருங்கின்
    விடுநெறி ஈர்மணல் வாரணஞ் சிதரப்
    பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குத்தி         10
    மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
    உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ
    ஊர்வயிற் பெயரும் பொழுதில் சேர்புடன்
    கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்
    ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசை         15
    புலம்புகொள் மாலை கேட்டொறுங்
    கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
            --ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்.

(உரை)

1-7: பாக.............அயர்ந்தனமாயின்.

(இ-ள்) பாக- தேர்ப்பாகனே!; நீ உலகு கடப்பு அன்ன புள்இயல் உளை அணி கலிமா - இப்பொழுது நீ இந்நிலவுலகத்தையே கடந்து மேனிலையுலகிற்குச் செல்லுதற்கு நினைவனபோலப் பறவைபோன்று விரைந்து இயங்குகின்ற பிடரி மயிராலே அழகுற்ற கனைக்கின்ற நம் குதிரைகளைச் செலுத்துகின்ற; வகை அமை வனப்பின் வள்பு தெரிய- கூறுபாடமைந்த அழகு மிக்க வார்களை ஆராய்ந்துகொள்க; யாம் தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி- அங்ஙனம் கொண்டக்கால், யாம் செம் முல்லை கட்டவிழ்ந்து மணக்கின்ற குளிர்ந்த செவ்விபெற்றுள்ள பெரிய வழியிலே ; ஐது இலங்கு அகல் இலை நெய்கனி நோன்காழ் வென் வேல் இளையர் வீங்கு பரிமுடுக - அழகிதாகத் திகழாநின்ற அகன்ற இலையினையும் எண்ணெய் வழிகின்ற வலிய தண்டினையும் உடைய வெற்றிவேற்படை ஏந்திய நந்தம் ஏவல் இளைஞர் செல்லும் விரைந்த செலவினுங் காட்டில் முடுகிச் செல்லுமாறு; நம் செலவை மேற்கொள்வோமாயின் என்க.

(வி-ம்) கார்ப்பருவம் வந்துற்றமையாலே மழைவளம் பெற்று தளவம் மலர்ந்து வழியும் செலற்கினிதாகத் தண்பதமுடையதாயிருக்கும் என ஆற்றினது இனிமை புலப்படுத்தோதியவாறாம்.

மற்று நங்குதிரைகளும் நாம் எண்ணியாங்குச் செல்வனவேயாம் என்பான் உலகு கடப்பன்ன புள்ளியல் கலிமா என்றான். மற்று நம் ஏவலிளைஞரும் நம்மை விடாது தொடர்ந்துவர வல்லுநர் என்பான் வென்வேல் இளையர் வீங்கு பரிமுடுக என்றான். செலவயர்தல் - செலவு
மேற்கொள்ளுதல்.

7-17: பெயல..............கையறுநிலை.

(இ-ள்) பெயல கடு நீர் வரித்த செந்நிலமருங்கின்- இக் கார்ப்பருவத்துத் தலைப்பெயலாகிய மிக்க மழையாற் பெருகி விரைந்து ஒழுகிய நீராலே அறலிடப்பட்ட சிவந்த இந்நிலத்தின்பால்; விடுநெறி ஈர்மணல் வாரணம் சிதர- விளிம்பாக விடுபட்ட நெறியிடத்தே ஈரிய மணலைக் காட்டுக்கோழிச் சேவல்கள் காலாற் சீய்த்து இரையாராயா நிற்ப; பாம்பு உறை புற்றத்து ஈர்ம்புறம் குத்தி மண் உடைக் கோட்ட - பாம்புகள் உறைதற் கிடனான புற்றுகளின் நனைந்த புறப்பகுதியிலே குத்திப் பெயர்த் தமையாலே மண் கொண்ட மருப்புகளை உடையனவாகிய; அண்ணல் நன் ஏஎறு. உடன்நிலை வேட்கையின் - தலைமைத் தன்மையுடை அழகிய ஆனேறுகள் தம்முடனே நிற்றலை விரும்பிய; மடநாகு தழீஇ - இளைய ஆன்களைத் தழுவினவாய்; ஊர் வயின் பெயரும் பொழுதின் - மேய்புலத்தினின்றும் ஊரிடத்தே புகப்போகின்ற இற்றை நாளந்திப் பொழுதிலே; உடன் சேர்பு கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெள்மணி- அவற்றோடே சேர்ந்து தத்தம் கன்றை அழைக்கின்ற குரலையுடையவாய் ஊர்மன்றம் நிறையும்படி புகுகின்ற ஆக்கள் கழுத்திற் பூண்டுள்ள தெளிந்த ஓசையையுடைய மணிகள்; ஐது இயம்பு இன் இசை - கேட்டற்கு இனிதாக விட்டுவிட்டொலிக்கின்ற ஓசையை; புலம்பு கொள் மாலை- தன்திறத்திலே தனிமைத் துயரத்தைக் கொண்டிருக்கின்ற மாலைப்பொழுதிலே; கேட்டொறும்- கேட்குந்தோறும் கேட்குந்தோறும் அத்துயரம் மிகுதலாலே; கலங்கினள் உறைவோள் கையறுநிலை- தனது நெஞ்சு கலங்கியிருப்பவளாகிய எங்காதலியினுடைய செயலறுதற்குக் காரணமான பெரிய துயரநிலையினை;

1. களையும் இடன்- இச்செலவு யாம் களைதற்கு இடனாகும் காண்! என்பதாம்.

(வி-ம்) பெயல- பெயலால் பெருகிய என்க. கடுநீர்- விரைந் தியங்கும் நீர்; விடு நெறி- நெறியின்கண் ஒதுங்கிய விளிம்பு; ஈர் மணலில் நாங்கூழ்ப்புழு முதலிய இரையை ஆராய்தற்கு வாரணம் கிளரும் என்க. சிதர- சீய்க்க. புற்றத்து அத்துச்சாரியை புற்று. முதலியவை நனைந்துழி ஏறுகள் கோட்டாற் குத்திக் கோட்டுமண் கோடல் அவற்றிற்கு இயல்பு. ஏறு மடநாகு தழீஇ ஊர்வயிற்புகுங் காட்சியும் தலைவியின் புலம்புகொள் வருத்தத்தை மிகுவிப்பதாம். ஆகவே காண்டொறும் கேட்டொறும் கலங்கினள் என்பது கருத்தாயிற்று.

கையறுநிலை- துன்ப மிகுதியாலே செய்வதின்னதென் றுணரமாட்டாமல் திகைத்திருத்தல். அவலம் கவலை கையாறு அழுங்கல் என்னும் துன்பநிலை நான்களுள் இது மூன்றா நிலையாகும்.

இது விற்பூட்டுப் பொருள்கோள். கையறுநிலை களையும் இடன் என இறுதியும் முதலும் இணைந்து முடிந்தது.

இனி இதனை, பாக நீ வள்பு தெரிய(க்கடவாய்) யாம் இப்பொழுது இளையர் பரிமுடுகச் செலவு அயர்ந்தனமாயின் அச்செலவு ஏறு மடநாகு தழீஇ ஊர்வயிற் பெயரும் பொழுதில் (அவற்றைக் காண்டொறும்) அவற்றுடன் குரல மன்று நிறை புகுதரும் ஆ பூண் மணி இசை கேட்டொறும் கலங்கியுறைவோளுடைய கையறுநிலைகளையும் இடனாம் என்றியைபு காண்க.

(பா.வே) 3. தெரிந்த. 4.பெருவளி. 13. சோர்வு 15. ஐதியங்கின்.
-----------------------

செய்யுள் 65


திணை: பாலை
துறை: வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது.

(து-ம்) களவொழுக்கத்தே இற்செறிப்பு முதலிய இடையூறுகாரணமாகத் தலைவி தலைவனைக் காணப்பெறாது பெரிதும் வருந்தி மெய் வேறுபட்டாளாக அவட்குத் தோழி தலைவன் அவளை உடன்கொண்டு சேறற்குத் துணிந்தமையைக் கூறி ஆற்றுவித்தது என்பதாம்.

(இ-ம்) இதற்கு " தலைவரும் விழுமம்" எனவரும் (தொல். அகத். 39) நூற்பாவின்கண் "தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும் " எனவரும் விதிகொள்க.

    உன்னங் கொள்கையொ டுளங்கரந் துறையும்
    அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
    ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
    சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
    நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்         5
    பாடிச் சென்ற பரிசிலர் போல
    உவவினி வாழி தோழி அவரே
    பொம்மல் ஓதி நம்மோ டொராங்குச்
    செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்
    மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி         10
    மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்
    வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு
    மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
    உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
    கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக்         15
    காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்
    ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
    நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
    நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு
    20 அரிய வாலென அழுங்கிய செலவே         20
            -மாமூலனார்.

(உரை)

1-7: உன்னம்.......தோழி

(இ-ள்) தோழி வாழி- தோழி நீ வாழ்வாயாக ஒரு நற்செய்தி கேள்!; இனி உன்னம் கொள்கையொடு உளம் கரந்துறையும் அன்னை சொல்லும் உய்கம்- இனி யாம் குறிப்பினாலே நமது கருத்தை அறிந்துகொண்டுள்ள கோட்பாட்டோடு அதனைத் தன்னுள்ளத்தே மறைத்துக்கொண்டிருக்கின்ற நம் அன்னை அக் கோட்பாட்டிற்கியையக் கூறுகின்ற இன்னாச் சொற் கேட்டு வருந்தும் வருத்தத்தினின்றும் தப்புவோம்; அதுவுமன்றி; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்- சிறிதேனும் அன்பு சேர்ந்திலாத இயல்பினையும் பொய்ம்மொழியே பேசுதலையும் உடைய இவ்வூர்க் கொடிதறி பெண்டிர் கூறும் அலருக்கும் ஆளாகாமல் தப்பி யுய்வேம் ஆதலாலே; இனி நாடு கண் அகற்றிய உதியஞ் சேரல் பாடிச் சென்ற பரிசிலர் போல- இனி நீ இத்துன்பத்தைத் துவர விடுத்து, தன் பகைவர் நாட்டினை வென்று கைப்பற்றிக் கொள்ளு மாற்றாலே தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் மன்னனைப்பாடி அவன் திருமுன்னர்ச் சென்ற பரிசிலர் மகிழுமாறுபோல; உவ – மகிழக் கடவை எற்றாலெனின்; என்க.

(வி-ம்) தலைவன் உடன்கொண்டு கழிதற்குடன்பட்ட உவகைச் செய்தியைத் தலைவிக்குக் கூறுபவள் அதனை முற்படவோதாது அதனாலாய பயன்களை முற்படக் கூறுகின்றாள். இங்ஙனம் கூறுவது உவகைச் செய்தி கூறுவார்க்கியல்பு. இதன்பயன் கேட்போர்க்கு அவாவுண்டாக்கிச் செய்தியின் சுவையை மிகுதியாக்கலாம். இங்ஙனமாதலை இராமன் வில்லொடித்த செய்தியைச் சீதைக்குக் கூறவந்த நீலமாலை என்னும் தோழி செயலாலுணர்க. (கம்பராமாயணம்)

உன்னம் கொள்கை- பிறர் கூறாமலே குறிப்பினாலே யாதானுமொன்றைத் தானே உணர்ந்து கொள்கை. ஈண்டு அன்னை நம் களவொழுக்கத்தை அங்ஙனம் உணர்ந்து கொண்டமையாலே அவள் சொல் சுடு சொல்லாயிருக்கின்றன; அதை இனிக் கேட்டு யாம் வருந்த வேண்டா என்கின்றாள். என்னதூஉம் - சிறிதும். ஈரம்- அன்பு. கௌவை- அலர். உதியஞ்சேரலாதனைப் பாடிச்சென்ற பரிசிலர்க்கு அவன் வேண்டுவன வழங்குதலின் அவர் பெரிதும் மகிழ்வர் ஆதலின் அவரை உவமை எடுத்தாள்,.

9-20 மலைதொறும்...........செலவே

(இ-ள்) மலைதொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி- .மலையுச்சிதோறும் உலர்ந்த பெரிய மூங்கில்கள் ஒன்றனோ‌டொன்று உராய்தலாலே பிறந்த‌ தீ காற்றும் கூடப் பெறுதலாலே மிக்கு எரிகின்றவை; மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர் புணரி மிசைக் கண்டாங்கு மேவரத் தோன்றும்- மீன் படுக்கும் பரதவருடைய வளைந்த தோணிகளிலே செறிந்த விளக்குகளை கடலின்கண் கண்டாற் போன்று காண்டற்கு விருப்பமுண்டாகக் காணப்படுகின்ற; யா அ உயர் நனந்தலை- யாஅ ம‌ர‌ங்க‌ள் த‌ழையும் கோடுமின்றி வ‌ற்றி உய‌ர்ந்து நிற்கின்ற‌ அக‌ன்ற‌ பாலைப்ப‌ர‌ப்பிலே அமைந்த‌; உயவல் யானை வெரிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல்சாய்- த‌சை வ‌ற்றிப் போய்ப் ப‌சியால் வ‌ருந்தும் யானையின‌து என்பெழுந்துல‌றிய முதுகின்மேலே ந‌ட‌ப்ப‌து போன்று ந‌ட‌த்த‌ற் கிட‌மாய் ம‌லைமிசை ஏறியும் இற‌ங்கியும் மூங்கில்கள் க‌ரிந்து சாய்ந்துள்ள‌ சிறிய‌ வ‌ழியிட‌த்தே; காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறுகடி கொள்ளும்- காடு உயர்த்துக் கூற‌ப்ப‌டுத‌ற்குக் கார‌ண‌மான‌ கோடுக‌ள் நிமிர்ந்துள்ள‌ க‌ளிற்றுயானை காவ‌ல் கொண்டிருக்கின்ற‌; அருஞ்சுரம்- க‌ட‌த்த‌ற்க‌ரிய‌ பாலை வ‌ழிக‌ள் தாம்; நாறு ஐங்கூந்தல் கொம்மை வரிமுலை நிரை இதழ் உண் கண் மகளிர்க்கு அரிய என அழுங்கிய செலவு- ம‌ண‌ங்க‌ம‌ழ்கின்ற‌ கூந்த‌லையும் திர‌ண்ட‌ தொய்யில் எழுத‌ப்ப‌ட்ட‌ முலையினையும் நிர‌ல்ப‌ட்ட‌ இத‌ழ்க‌ளையுடைய‌ நீல‌ ம‌ல‌ர்போன்ற‌ மையுண்ட‌ க‌ண்க‌ளையும் உடைய‌ மெல்லிய‌ன் ம‌க‌ளிர் ந‌ட‌த்தற் க‌ரிய‌ன‌வாகும் என்று இதுகாறும் கூறித்த‌டுத்த‌ உட‌ன் போக்கினை; என்க‌.

(வி-ம்.)த‌லைவ‌ன் இதுகாறும் இங்ங‌ன‌ம் கூறி உட‌ன்போக்கினைத்
த‌டைசெய்து வ‌ந்தானாக‌; அத்த‌லைவ‌ன் பாலைவ‌ன‌த்து நெறியின்னாமையை அவ‌ன் கூறியாங்கே ஈண்டுக் கொண்டு கூறுகின்றாள் என்றுண‌ர்க‌. காடுப‌டு பொருள்க‌ளிலே யானை ம‌ருப்பே த‌லைசிற‌ந்த‌தாக‌லின் காடு மீக்கூறும் கோடு என்ற‌வாறு. இனிக் காடுமீக்கூற‌ற்கு ஒருத்த‌லே கார‌ண‌ம் என‌க் கொள்ள‌லுமாம். வ‌ரி- தொய்யிற்கோல‌ம். தேம‌ல்
என்பாருமுள‌ர்.

7-9:அவ‌ரே.........இன்றே

(இ-ள்.) பொம்மல் ஓதி - அட‌ர்ந்த‌ கூந்த‌லையுடையோய்; இன்று- இற்றைநாள்; அவரே- மற்று அங்ஙனம் தடுத்த அவர்தாமே; நம்மொடு ஒராங்கு- நங்கருத்தோடு ஒருபடித்தாய்
ஒன்றிய கருத்துடையராய்; செலவு அயர்ந்தனர்- உட‌ன்போக்கினை மேற்கொண்டருளினர் ஆத‌லால் என்ப‌தாம்.

(வி-ம்.) ப‌ண்டெல்லாம் உட‌ன்போக்கிற்கு உடம்ப‌டாது செலவு அழுங்கிய அவர்தாமே நினக்கு அளிசெய்த‌ற்கு இன்று உட‌ம்ப‌ட்டார்காண்! என்ற‌வாறு.

இனி இத‌னை, தோழி இனி யாம் சொல்லும் உய்க‌ம்; கௌவையும் ஒழிக‌ம்; இனி நீ உவந்திடுக! எற்றால் எனின் அருஞ்சுரம் மகளிர்க்கு அரிய என‌க் கூறிச் செலவழுங்கிய அவரே இன்று நம்மோடோராங்குச் செலவயர்ந்தனர் ஆதலால் என்றியைத்திடுக.

(பா-வே.) 14. உறுவல் யானை, வெருவச்செள்.
---------

செய்யுள் 66


திணை: மருதம்
துறை: பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப்புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-பரத்தையிற் பிரிந்த தலைமகனை ஏற்றுக் கோடல் வேண்டும் என்று அவன் பொருட்டு வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் நேர்ந்த கருத்துடன் அவன் பண்டுசெய்த தொன்றனைக்கூறி நகையாடிய‌து என்றவாறு.

(இ-ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" என வரும் (தொல்-கற்பி-6) நூற்பாவின்கண் 'கொடுமை யொழுக்கம்............வாயிலின் வரூஉம் வகை" என்பதன்கண் 'பெட்டலும்' என்பதனாலமைத்திடுக.

    இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
    மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
    செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
    சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
    பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்         5
    வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி
    நிரைதார் மார்பன் நெருல் ஒருத்தியொடு
    வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
    இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
    மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து        10
    காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
    பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
    தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது
    மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப்
    புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக்         15
    கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்த
    மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு
    தானே புகுதந் தோனே யான‌து
    படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன்
    கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென்         20
    ற‌லைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்
    டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
    பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்
    கழங்கா டாயத் த‌ன்றுநம் அருளிய
    பழங்கண் ணோட்டமும் நலிய         25
    அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.
            -செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.
            (செயலூர்க் கோசங் கண்ணனார் என்றும் பாடம்)

(உரை)

1-6: இம்மை........தோழி

(இ-ள்.) தோழி-தோழியே கேள்!; செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி-பகைவரும் விரும்புதற்குக் காரணமான குற்றந்தீர்ந்த நற்காட்சியையுடைய; சிறுவர்ப் பயந்த செம்மலோர்- மக்களைப்பெற்ற திருவுடையோர்; இம்மை உலகத்து இசையொடும் விளங்கி- இப்பிறப்பிற்கு நிலைக்களனாகிய இந் நிலவுலகத்தும் புகழோடு விள‌ங்கி; மறுமை யுலகமும் மறுவின்று எய்துப- மறுபிறப்புறுதற் கிடனான மேனிலையுலகத்தையும் தடையின்றி எய்துவர்; எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்- என்று சான்றோர் பலரும் கூறிய முதுமொழிப் பொருள் எல்லாம்; வாயே ஆகுதல் வாய்த்தனம்- வாய்மையாகவே இருத்தலை அறிந்துகொள்ளும் செவ்வி ஒன்று கிடைக்கப்பெற்றேம்காண்; எங்ஙனமெனின்; என்க.

(வி-ம்.) இதன்கட் போந்த பழமொழிப் பொருளை,

"எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்."

எனவருந் திருக்குறளினுங் காண்க. செம்மல்-தலைமைத் தன்மை முதலிய சிறப்புக்கள். ஆகலின் திருவுடையார் என்றாம். செறுநர்- பகைவர். வாய்-வாய்மை. ஆகுதலை அறியும் வாய்ப்புப் பெற்றேம் என்றவாறு.

7-18: நிரைதார்.................புகுதந்தோனே

(இ-ள்) நிரைதார் மார்பன்- நிரல் பட அணிந்த மலர்மாலை யணிந்த மார்பையுடையனாய் நம்பெருமான்; நெருநல் - நேற்று; ஒருத்தியொடு- ஒருத்தியை; வதுவை அயர்தல் வேண்டி- மணந்து கோடற்பொருட்டு; புதுவதின் இயன்ற அணியன்- புதிதாக இயற்றப்ட்ட மணக்கோலத்தை யுடையனாக; இத் தெரு இறப்போன்- தேரூர்ந்து இந்தத் தெருவைக் கடந்து செல்பவனுடைய தேரிற்பூட்டிய; மாண் தொழில் மாமணி கறங்க- மாட்சிமையுடைய தொழிற் சிறப்பமைந்த குதிரைகள் பூண்ட மணிகள் ஒலிப்பக்கேட்டு; காண்டல் விருப்பொடு- அக்காட்சியைக் காண்பதற் கெழுந்த விருப்பத்தோடே; கடை கழிந்து தளர்பு தளர்பு ஓடும் பூங்கண் புதல்வனை நோக்கி - நம் முன்றிலையுங் கடந்து அத்தேர்ப் பின்னர்த் தளர்ந்து தளர்ந்து ஓடிவருகின்ற மலர்போன்ற கண்களையுடைய தன் மகனைக் கண்டு; வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று இழிந்தனன்- பாகனே நெடிய தேரினைச் சிறிதுபொழுது நிறுத்துதி என்று பணித்து அத்தேரினின்றும் இறங்கிவந்து; தாங்காது- சிறிதும் காலந்தாழ்த்தலின்றி விரைந்து மகனை எடுத்து மணி புரை செவ்வாய் மார்பகம் சிவண- அவனுடைய பவளம் போன்ற சிவந்த அழகிய வாய் தன் மார்பகத்தே பொருந்தும்படி; புல்லி- ஆர்வத்தோடு தழுவியணைத்து; பெரும இனி அகத்துச் செல் எனக் கொடுப்போற்கு- பெருமானே இனி நீ நம்மில்லத்திற்குச் செல்வாயாக என்று கூறிக் கைவிடுகின்றவன் கருத்திற்கு; ஒல்லான் உடம்படானாய்; கலுழ்தலின் - அழுதலாலே; தடுத்த மாநிதிக் கிழவனும் போன்ம் என - தன்னைத் தடுத்த மகனையும் அவனை ஏந்திவருகின்ற அளகேசனையும் ஒக்கும் என்று கண்டோர் கூறும்படி்; மகனொடு தானே புகுதந்தோன்- தழுவப்பட்ட மகனோடு தானே வந்து இல்லத்திற் புகுந்தான்; என்க.

(வி-ம்) ஒருத்தி- பரத்தைமகள் ஒருத்தி; புதுவ தியன்ற அணி என்றது, மணக்கோலத்தை. தாங்காது- தாழ்க்காமல்; மகனாற் றடுக்கப்பட்டு அம்மகனைத் தழுவிக்கொண்டு அவனோடு வருகின்ற மாநிதிக் கிழவன் எனப் பொருட்கியன்றவற்றை உவமைக்கும் கூறிக் கொள்க.
மாநிதிக்கிழவன்- அளகேசன்- குபேரன்; புகுதந்தோன் என்புழி ஆஓவாயிற்றுச் செய்யுளாகலின்.

18-26: யானது.....மணனே.

(இ-ள்) யான் அது படுத்தனன் ஆகுதல் நாணி- இச் செய்கைதான் யானே மகவினைக் கொண்டு அச்செயலைச் செய்வித்தேன் என்று ஏனையோரும்; எம்பெருமானும் கருதுதற்கு இடனாயிருத்தலை உணர்ந்து அப்பழிக்கு நாணி; இக்கொடியோன்- இந்தக் கொடுஞ்செயலையுடையோன்; இவன் இடித்து கலக்கினன் போலும்- இப் புதுமணமகன் காரியத்தை இடையூறு செய்து பெரிதும் கலக்கிவிட்டான் போலும் என்று கடிந்துரை கூறி; அலைக்குங் கோலொடு- அம்மகனைப் புடைத்தற்குரிய கோலோடு அவனை அணுகாநிற்ப; அவர்மனை தலைக்கொண்டு இமிழ் முழவின் இன்சீர்- அப்பரத்தையர் மனைக்கண்ணே இவ்வதுவை கருதி முழங்குகின்ற முழலினது இனிய இசைகள்; பயிர்வன போல வந்து இசைப்பவும்- நம்பெருமானை அழைப்பன போன்று எம்மில்லத்தினும் வந்து முழங்குதல் கேட்டு வைத்தும்; தவிரான் - நம்மில்லத்தினின்றும் நீங்காதவனாய்; அன்று கழங்கு ஆடு ஆயத்து நம் அருளிய பழங்கண்ணோட்டமும் நலிய- அன்றொருநாள் யாம் கழங்கு ஆடுகின்ற தோழியர் கூட்டத்தினின்னும் பிரிந்து அவனை முதன்முதலாகக் கண்டபொழுது. நம்மைத் தேற்றி அளிசெய்தற் பொருட்டுக் கூறியருளிய பழைய கண்ணோட்டமமைந்த சூளுறைதானும் தன்னெஞ்சத்தே தோன்றிச் சுடுதலாலே; அயர்ந்த தன் மணன் அழுங்கினன் அல்லனோ- தான் பெரிதும் விரும்பிய தனது வதுவையையும் தவிர்ந்தனன் அல்லனோ அவ்வாற்றாற்காண்; என்பதாம்.

(வி-ம்) மணம் தவிர்ந்தனன் அல்லனோ! அவ்வாற்றான் அப் பழமொழி வாயே ஆகுதல் அறியும் செவ்வி வாய்க்கப் பெற்றேம் என்றியையும். மணந்தவிர்ந்தமையால் சூண்மொழியும் பொய்யாது பழியும் உய்ந்து நன்னெறியில் ஒழுகினன். ஆதலால் இம்மை யுலகத் திசையொடும் விளங்குவானாயினன். இம்மை யுலகத்து இசையொடு புணர்ந்தோன் மறுமையுலகமும் மறுவின்றி எய்துவனாதல் ஒருதலை. ஆகவே சிறுவர்ப்பயந்த செம்மலோர் கூறிய பழமொழி வாய்மையே யாதலறிந்தனம் என்பது கருத்து.

யானது படுத்தனன் ஆகுதல் நாணி- இவளே தலைவன் வதுவையயரப்போவது பொறாளாகி அவன் ஊர்கின்ற தேரின் பின்னர் மகனைப் போக்குவித்து அவனுக்கு இடையூறு செய்தாள் எனத் தலைவனும் பிறரும் கூறுதற்கு இந்நிகழ்ச்சி இடந்தருதலின் அப்பழிக்கு நாணினேன்
என ஈண்டுத் தலைவி கூறியது மிகவும் பொருத்தமாயிருத்தல் உணர்க.

இடித்தல- ஊறுசெய்தல். இவன் என்றது தலைவனை. மணத்தைத் தடுத்தலின் அச்செயல் செய்தல் கொடுமையாகலின் மகனைக் கொடியோன் என்றாள்.

கழங்காடாயத்து அன்று நம்மருளிய என்றது இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் நின்னிற்பிரியேன் என்று தலைவன் சூள் மொழிந்ததனைக் குறித்தபடியாம்.

இனி இதனை, தோழி பழமொழி வாயே ஆகுதல் வாய்த்தனம் எங்ஙனம் எனின், மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி இத்தெரு இறப்போன் மணிகறங்கக் காண்டல் விருப்பொடு ஓடும் புதல்வனை நோக்கி, தாங்குமதி என்று இழிந்தனன் புல்லி, பெரும இனிச்செல் என ஒல்லான் கலுழ்தலின் தானே புகுதந்தோன்; யான் நாணி அலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்டு தவிரான் கண்ணோட்டமும் நலிய அயர்ந்ததன் மணன் அழுங்கினன் இவ்வாற்றான் என இயைபு காண்க.

(பா-வே) 1. யுலகமுமி. 5. பயமொ.
--------------

செய்யுள் 67


திணை: பாலை
துறை: பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து-ம்) அஃதாவது- தலைவன் பொருளீட்டற் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து சென்ற பின்னர் ஆற்றியிருத்தற்குரிய தலைவி ஆற்றாது வருந்தினளாக, அதுகண்ட தோழி நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என வற்புறுத்தினள். அதுகேட்ட தலைவி யான் வருந்துவது அவன் பிரிவாற்றாமையாலன்று அவன் சென்றவழியினது இன்னாமையை எண்ணி எண்ணியே ஏங்குகின்றேன் என்று கூறியது என்றவாறு.

(இ-ம்) இதனை "எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே" எனவரும் (தொல். அகத். 42) நூற்பாவான் அமைத்திடுக.

இனி இதனை நச்சினார்க்கினியர் தோழி கூற்றாகக் கருதுவர் . அவர் (தொல். அகத். 44) உரையை நோக்குக.

    யானெவன் செய்கோ தோழி பொறிவரி
    வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
    உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன்
    மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை
    அரம்போழ் நுதிய வாளி அம்பின்         5
    நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
    நெல்லி நீளிடை எல்லி மண்டி
    நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்         10
    வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
    மொழிபெயர் தேஎந் தருமார் மன்னர்
    கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
    உலவிடு பதுக்கை ஆளுகு பறந்தலை
    உருவில் பேஎய் ஊராத் தேரொடு         15
    நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
    இலங்குபரல் இமைக்கும் என்பநம்
    நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.
            --நோய்பாடியார்
            (நோய்ப்பாடியார் என்றும் பாடம்.)

(உரை)

1: தோழி...

(இ-ள்) தோழி - நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று என்னை வற்புறுக்கின்ற தோழியே கேள்! நான் ஆற்றியிருப்பேன் மன்! என்க.

(வி-ம்) ஆற்றியிருத்தலே குலமகளிர் கடமை ஆதலின் நீ ஆற்றுக என்னும் தோழிக்குக் கூறுகின்றாளாகலின் இசை யெச்சமாக ஈண்டைக்கு வேண்டுவன பெய்துரைத்தாம். இனி ஆற்றமாட்டாமைக்குத் தலைவி காரணம் கூறுகின்றாள்.

17-18: நம்.........ஆறே

(இ-ள்) நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு- அறஞ்செய்தற்கு இன்றியமையாத பொருளீட்டுதலைக் குறிக்கோளாகக் கொண்டு தமக்கின்பமாகிய நமது பெண்மை
நலத்தையும் துறந்து வேற்று நாட்டகத்தே உறைகின்ற நம் பெருமான் பொருளீட்டற்குச் சென்ற வழிகளிலே என்க.

(வி-ம்) ஈண்டுத் தலைவி தலைவன் இன்பந்துறந்து அறத்திற்காம் பொருளீட்டற்கட் சென்றமையைப் பாராட்டுகின்றாள். பாராட்டவே அவர் வருந்துணையும் ஆற்றியிருத்தலே என் கடமை என்பதூஉம் அறிவேன் என்பதுபட இவ்வாறு கூறினள் என்றுணர்க. எனவே அவர் பிரிவாற்றாது வருந்துகிலேன் என்பது குறிப்பெச்சப் பொருளாயிற்று.

1-17: பொறிவரி...என்ப

(இ-ள்) பொறிவரி வானம் வாழ்த்தி பாடவும் அருளாது- புள்ளிகளையும் வரிகளையும் உடைய வானம்பாடிப் புள் மழைத்துளியை வேண்டிப் பாடா நிற்பவும் சிறிதும் இரக்க மின்றி அவற்றிற்கு இரங்கியேனும் மழைதுளித்தலின்றி வானத்தினின்றும் முகிலானது நீங்கி மறைந்து போனமையாலே; பறையுடன்- இலைகள் கரிந்து தேய்ந்துபோன நிலைமையோடு; மரம் புல் என்ற முரம்பு உயர் நனந்தலை- மரங்கள் வற்றிப் பொலிவிழந்த பருக்கைக் கற்களையுடைய ப‌குதியுயர்ந்துள்ள அக‌ன்ற பாலை நிலப் பரப்பிடத்தே; அரம்போழ் வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார் நெல்லி நீள் இடை- அரத்தாலராவிப் பிளந்த பிறைவா யம்பினையும் இடுங்கிய‌ நோக்கு உடையராய் வந்து ஆனிரைகளைக் கவர்வோராகிய வெட்சி மறவரை நெல்லி மரங்களையுடைய நெடிய வழியிடத்தே; எல்லி மண்டி-இரவிலேயே மிக்குச் சென்று வளைத்து; நல் அமர்க் கடந்த நாண் உடை மறவர்- அறப்போர் ஆற்றி வென்று மீட்ட கரந்தை மறவர்களுள் வைத்து; விழுப்புண் பட்டு வீழ்ந்த மான‌ப்பண்புமிக்க மறவருடைய, பெயரும் பீடும் எழுதி - பெயரும் மறச் சிறப்பும் பொறித்து; அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்- மக்கள் வழங்குதற்குரிய வழிகள் தோறும் புகழ் விளங்குதற்குக் காரணமாகிய நடுகல்லாகிய மறக்கற்கள்; வேல் ஊன்று பலகை முன்னர்- அவ்வம் மறவர்கள் கைக் கொண்டிருந்த வேற்படையினை நட்டுக் கிடுகுப்படையும் சார்த்தப்பட்டிருப்பவை; வேற்றுமுனை கடுக்கும்- பகைவருடைய போர்க்களம்போன்று தோன்றுதலையுடைய; மொழி பெயர் தேஎம் தருமார்- தம் மொழி மாறுபட்ட வேற்று நாட்டைக் கைக் கொள்ள வேண்டி; மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன- தம்ம்முடைய கழியிலே பிணித்தலையுடைய கரிய கேடய மேந்திய காலாட் படையை அணி வகுத்துப் பார்த்தாற் போன்ற தோற்ற முடைய; உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை- போரிற்பட்ட மறவருடம்பைத் தழை கொண்டு மூடிக் கற்களைக் குவித்துவைத்த பதுக்கைகளையுடைய பாலைப் பரப்பிலே; உரு இல் பேய் ஊராத் தேரொடு- வடிவ மில்லாத பேயின் பெயரை அடைமொழியாகக் கொண்ட ஏறி ஊர்தற்கிய‌லாத தேர் பறத்தலாலே; இலங்கு பரல் பலவுடன் நிலம் படு மின்மினிபோல இமைக்கும் என்ப- விள‌ங்குகின்ற‌ ப‌ருக்கைக் க‌ற்க‌ள் ப‌ற்ப‌ல‌ ஒருசேர‌ நில‌த்திலே வீழ்ந்த‌ மின்மினி போன்று ஒளிரும் என்று அறிந்தோர் கூறுவ‌ர்; என்க‌.

(வி-ம்.) வான‌ம் வாழ்த்தி- ஒரு ப‌ற‌வையின் பெய‌ர். இத‌னை இக்கால‌த்தார் வான‌ம்பாடி என்ப‌ர். இப்ப‌ற‌வை நில‌த்திற்ப‌ட்ட‌ நீருண்ணாதென்றும் முகில் துளிக்கும் துளியை வானிடை நின்று வாயி லேற்றுண்டு உயிர் வாழும் என்ப‌ர். இத‌னை "தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புய‌ன்மாறி வான் பொய்ப்பினும்" என‌ வ‌ரும் ப‌ட்டின‌ப்பாலை யானும் (3-5) உண‌ர்க‌. "துளிந‌சை வேட்கையின் மிசை பாடும் புள்" என‌க் க‌லியினும் (46) காண‌லாம். ஈண்டு ம‌ழை பெரிதும் வ‌ற‌ங்கூர்ந் த‌மை யுணர்த்த‌ற்கு, வான‌ம் வாழ்த்தி பாடவும் அ‌ருளாது உறை துற‌ந்து எழிலி நீங்க‌லின் என்றோத‌ப்ப‌ட்ட‌து. ப‌றைபு- தேய்பு. இத‌னைப் ப‌ற‌த்த‌ல் என்பாருமுள‌ர். இலைக‌ரிந்து தீய்தலின் ம‌ர‌ம் வ‌ள‌ர்த‌ற்கு மாறாக‌த் தேய்ந்து புற்கென‌த் தோன்றும் என்ற‌லே ந‌ல்லுரையாம் என்க‌.

அர‌ம்போழ் வாளி ய‌ம்பு, என்ற‌து நுனிக‌வ‌ர்த்த‌ பிறைவாய‌ம்பினை. நிர‌ம்பா நோக்கு- க‌ண்ணை இடுக‌வைத்து நோக்குத‌ல். நிரைய‌ம் என்புழி அம் சாரியை. நிர‌ய‌ம் என்ற பாட‌மும் உண்டு. இத‌ற்குக் க‌ள‌வுசெய்து ந‌ர‌க‌ம் புகுவாராகிய‌ வெட்சியா‌ர் என்று பொருள் கொள்க‌. த‌ம்மூரை யும் ஆக்க‌ளையும் பாதுகாத்தற்குச் செய்யும் அற‌ப்போர் ஆத‌ல்ப‌ற்றி ந‌ல்ல‌ம‌ர் க‌ட‌ந்த‌ என்றார். க‌ட‌ந்த‌ ம‌ற‌வ‌ருள் வைத்து விழுப்புண்ப‌ட்டு மாண்ட‌ ம‌ற‌வ‌ர் என்க‌. இனி வென்றாருள் இவ‌ரே த‌லைசிற‌ந்தாராத‌ல் ப‌ற்றிக் க‌ட‌ந்த‌ ம‌ற‌வ‌ர் என்ற‌தே விழுப்புண்ப‌ட்டு மாண்ட‌ ம‌ற‌வ‌ரைக் குறித்த‌தெனினுமாம். நாண் ஈண்டு மான‌ம். போரின்க‌ண் விழுப்புண்ப‌ட்டு வீழ்ந்த‌ ம‌ற‌வ‌ர்க்குக் க‌ல்ந‌ட்டு வ‌ண‌ங்குத‌லும்‌ அக்க‌ல்லின்க‌ண் அவ‌ர்த‌ம் பெய‌ரும் பீடும் பொறித்து வைத்த‌லும் ப‌ண்டைத் த‌மிழ‌ர் வ‌ழ‌க்க‌ம். க‌றைத்தோல்-கிடுகு. பேய்த்தேர் என்ப‌து கான‌லுக்குப் பெய‌ர். அப்பெய‌ரின்க‌ட் காண‌ப்ப‌டும் இரண்டு சொற்கும் பொருளில்லை. இர‌ண்டு சொற்போற் காண‌ப்ப‌டினும் அஃது ஒரு பெய‌ர்ச் சொல் மாத்திரையே என்ப‌து தோன்ற‌ இப்புல‌வ‌ர் பெருமான் உருவில் பேய் ஊராத் தேர் என‌ப் பிரித்து அவ‌ற்றிற்கு இருபொருளின்மையை அழ‌குற‌ விள‌க்கினர். பேய்த்தேரால் ப‌ருக்கைக் க‌ற்க‌ள் நில‌த்தில் ஒளிர்வ‌தைப் ப‌ல‌வுட‌ன் நில‌ம்ப‌டு மின்மினி என‌ அழ‌கிய‌ உவ‌மையால்
விள‌க்கினார்.

1: யா னெவ‌ன் செய்கோ

(இ-ள்.) (இங்ங‌ன‌ம் கூறக் கேட்ட‌) யான் எவ‌ன் செய்கு- யான் ஆற்றியிருத்த‌ற்கு என் செய்ய‌மாட்டுவேன். இத்த‌கைய‌ கொடு நெறிக் க‌ண் ந‌ம் பெருமான் என்னாயின‌ரோ? என்று
என்னுள்ள‌ம் ஆற்றாத‌ழிகின்ற‌து. அத‌னை ஆற்றுவிக்க‌ யானும் ஏதும் செய்ய‌வ‌ல்லுந‌ன் அல்லேன் என்ப‌தாம்.

(வி-ம்.) "இத்த‌கைய ......அல்லேன்" என்ப‌து குறிப்பு.

இனி, இத‌னைத் தோழி ந‌ம் ந‌ல‌ந்துற‌ந்து உறைந‌ர் சென்ற‌ ஆறு ப‌ர‌ல் இமைக்கும் என்ப‌, யானெவ‌ன் செய்கு என‌ இயைக்க‌.

(பா-வே.) 3.உறையிற‌ந். ப‌றையுட‌ன், 11. க‌ட‌ந்து. 12 ம‌ன்ன‌ர். 14. அழிருப‌துக்கை.
---------

செய்யுள் 68


திணை: குறிஞ்சி.
துறை: த‌லைம‌க‌ன் இர‌வுக்குறி வ‌ந்த‌மைய‌றிந்த‌ தோழி த‌லைம‌க‌ட்குச் சொல்லிய‌து.

(து-ம்.) அஃதாவ‌து- த‌லைவ‌ன் இர‌வுக் குறியிடத்தே வ‌ந்து நிற்ற‌லைத் தோழி அறிந்த‌ன‌ள். அறிந்த‌வ‌ழி அன்னை துயில்கின்றாளா? துயிலாதிருக்கின்றாளா? என்ப‌தையும் ஆராய்ந்து கொண்ட‌பின்ன‌ர் அவ‌ன் வ‌ர‌வினைத் த‌லைவிக்குக் கூறியது என்ற‌வாறு.

(இ-ம்.) இத‌ற்கு "நாற்ற‌மும் தோற்ற‌மும்" என‌வ‌ரும் நூற்பாவின்க‌ண் (தொல்-க‌ள‌வி-23) புண‌ர்ச்சி வேண்டினும் என‌வ‌ரும் விதி கொள்க‌. இதற்கே இது (ந‌ச்) காட்ட‌ப்ப‌ட்ட‌து.

    அன்னாய் வாழிவேண் ட‌ன்னைநம் படப்பைத்
    தண்ணயத் த‌மன்ற கூதளங் குழைய
    இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉங்
    கேட்டியோ வாழிவேண் ட‌ன்னைநம் படப்பை
    ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை         5
    ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென
    முழுமுதல் துமிய உருமெறிந் தன்றே
    பின்னுங் கேட்டியோ எனவுமஃ த‌றியாள்
    அன்னையும் கனைதுயில் மடிந்தனள் அதன்ற‌லை
    மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்         10
    வருவ ராயின் பருவம் இதுவெனச்
    சுடர்ந்திலங் கெல்வளை நெகிழ்ந்த நம்வயின்
    படர்ந்த உள்ளம் பழுத‌ன் றாக
    வந்தனர் வாழி தோழி அந்தரத்து
    இமிழ்பெயல் தலைஇய இனப்பல‌ கொண்மூத்         15
    தவிர்வில் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
    கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
    புன்ற‌லை மடப்பிடிப் பூசல் பலவுடன்
    வெண்கோட் டியானை விளிபடத் துழவும்
    அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்         20
    பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.
            ---ஊட்டியார்.

(உரை)

14: வாழி தோழி.....

(இ-ள்.) தோழி- தோழி துயி லெழுவாயாக‌!

(வி-ம்.) தோழி என்னும் விழி துயிலெழுவாயாக‌! என்ப‌து ப‌ட நின்ற‌து. வாழி: அசைச்சொல்.

1-10: அன்னாய்......பொழுதே

(இ-ள்.) அன்னையும் கனை துயில் மடிந்தனள்- நந் தாயும் பேருறக்கத்தே அழுந்திக்கிடக்கின்றாள்காண்! அஃதெங்ங‌னம் அறிந்தாய் என்பாயேல் யான் அவள் மருங்கு சென்று; அன்னாய் வாழி வேண்டு அன்னை- தாயே நீ வாழ்வாயாக! யான் கூறுமிதனை விரும்பிக் கேள்; நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய- நம் புழைக்கடைத் தோட்டத்திற் குலத்திற் செறித்து வளர்ந்த கூதளஞ் செடி குழைந்து போமாறு; அருவி இன் இசை பாடும்- அருவி நீர் வீழ்ந்து இனிய இசை பாடுகின்றது; என்னதூஉம்- அவ்வோசையைச் சிறிதேனும்; கேட்டியோ- கேட்டாயா? ; அன்னை வாழி வேண்டு- தாயே நீ வாழ்க! நான் கூறுவதனை விரும்பிக் கேள்; நம் படப்பை- நமது புழைக்கடைத் தோட்டத்தின்கண்; ஊட்டி அன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் பாம்பு என முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே- சாதிலிங்கம் ஊட்டப்பட்டது போன்று சிவந்த ஒள்ளிய தளிரையுடைய அசோக மரத்தினது உய‌ர்ந்த கிளையிலே கட்டப்ப‌ட்டிருந்த ஊசற் கயிற்றைப் பாம்பு என்று நினைத்து அவ் வசோகமரம் முழுதும் வேரோடு அழிந்து போம்படி முகில் இடியினை வீழ்த்தியதே! என்று கூறி; பின்னும் கேட்டியோ எனவும்- நான் மீண்டும் அவ்வொலியைக் கேட்டனையோ? என்று வினவாநிற்பவும்; அஃத‌றியாள்- அதனைச் சிறிதும் அறியாது கிடக்கின்றாள், இவ்வாற்றால் ஆராய்ந்து அறிந்து கொண்டேன்!; அதன் தலை- அதன் மேலும்; பொழுது மன்னுயிர் மடிந்தன்று- பொழுது தானும் உலகில் வாழ்கின்ற உயிரினமடங்கலும் உறங்கும் நள்ளிரவா யிருந்ததுகாண்!

(வி-ம்.) தலைவன் வருகையை அவன் குறிசெய்தலால் அறிந்த தோழி முன்னம் அன்னையின் துயில் ஆராய்ந்தறிந்து பின்னர்த் தலைவியை எழுப்பித் தான் துயிலாராய்ந்த முறையை அவட்கு இவ்வாறு கூறி விளக்குகின்றாள். முன்னர் அருவியோசையைக் கேட்டாயோ! என்று வினவியவள் ஒரோவழி அன்னை அதனைப் பொருட்டாகக் கொள்ளாமல் விடை கூறாதிருத்தலும் கூடும் என்று ஐயுற்றவள் பின்னர் அவள் துணுக்குற்று விடையிறுத்தற் கியன்றதொரு வினாவை வினவிய நுணுக்கம் அறிக. வீட்டுத் தோட்டத்தில் அருவி வீழ்கிறது என்புழி வீழ்ந்தால் வீழட்டும் என்று துயில்மயக்குடையோர் வாய்வாளாதிருத்தலும் இயல்பே; வீட்டின் பின்புறத்தே பேரிடி வீழ்ந்ததென்று கூறக்கேட்டால் யார்தாம் வாய்வாளாதிருப்பர்? விழித்திருப்பின் ஒருதலையாக அதனை ஆராய்ந்தறியவே முயல்வரல்லரோ? இதற்கும் விடை கூறாமையின் அன்னை நன்றாக உறங்கிக் கிடக்கின்றாள் என்று ஐயமின்றி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

இனி ஊர் துஞ்சாமையும் தாய் துஞ்சாமையும் முதலிய பிற இடையூறுகளும் இல்லை என்பாள் பொழுது மன்னுயிர் மடிந்தது என்றாள். என‌வே பேயுந் துஞ்சும் நள்ளிரவு என்றாளாம்.

10-12: காதலர்.................பழுதன்றாக.

(இ-ள்) காதலர் வருவாராயின்- நம்பாற் காதலையுடைய நம்பெருமான் நமக்கு அளிசெய்ய வருவாரானால்; பருவம் இது என - இதுவே அவர் வரவு இன்றியமையாத பருவம் ஆம் என யாம் கருதும்படி; சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த- விட்டு விளங்கும் ஒளியையுடைய நமது வளையல் எல்லாம் கழன்று வீழும்படி மெலிந்திருக்கின்ற; நம் வயின் படர்ந்த உள்ளம் பழுது இன்று ஆக- நம்மிடத்தே அன்பினாலே படர்ந்திருக்கின்ற தமது நெஞ்சம் சிறிதும் குற்றமில்லையாம்படி; என்க.

(வி-ம்) வருவராயின் என்றது வருதலின் அருமை புலப்படுத்து நின்றது. பிரிவாற்றாமையாலே மெலிவுற்று வளைநெகிழ்ந்தனவாதலின வந்து நம்மை அளித்தற்குப் பருவம் இஃது என்றாள். பிரிவாற்றாது இறந்துபாடு எய்தலுறின் நம்பால் படர்ந்த அவருள்ளம் பழிபூணும் ஆதலால் அவ்வாறு பழிபூண்டு அவர் உள்ளம் பழுதுபடாமலே (வந்தனர்) என்றவாறு.

14-21: வந்தனர்......சுரனே.

(இ-ள்) அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய பல இனக் கொண்மூ தவிர் இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப- வானத்தினின்றும் முழங்குதலோடு மழைபொலிதலுற்ற பலவாகிய கூட்டமாகிய முகில்கள் ஓயாது பெய்தலாலே உண்டாகிய வெள்ளம் இடந்தோறும் இடந்தோறும் பெருகுதலாலே; மடப்பிடி கடுஞ் சுழிநீத்தம் கன்றுகால் ஒய்யும்பூசல் பலவுடன்- பெண்யானைகள் கடிதாக இயங்கும் அவ்வெள்ளம் தம்முடைய கன்றுகளின் காலைப் பறித்திழுத்தலாலே எடுக்கும் ஆரவாரங்கள் பலவற்றோடே; வெண்கோட்டியானை விளிபடத் துழவும்- வெள்ளிய மருப்பையுடைய களிற்றியானைகளும் ஆரவாரமுண்டாகக் கன்றுகளைப் பற்றுதற்கு நீரைத் துழாவுதற்கிடனானதும்; வாய் அகல் பாந்தட் படாஅர்- இடமகன்று அடர்ந்த பாம்புச் செடிகளையுடையதுமாகிய; பகலும் அஞ்சும் பனிக் கடுஞ்சுரம்- பகற்பொழுதிலே இயங்குதற்கும் மாந்தர் அஞ்சுகின்ற நடுக்கந் தருகின்ற கடிய அருநெறியினூடே; வந்தனர் - நம்பெருமான் நம்மை அளிசெய்தற்கு நம்மிரவுக் குறியிடத்தே வந்துள்ளனர்காண் விரைந்தெழுதி! அவரை எதிர்கொள்ளுதும் என்பதாம்.

(வி-ம்) இமிழ்பெயல்- முகில் வீசுகின்ற மழையுமாம். இனம்- கூட்டம். தலிர்வு இல்லாது பெய்தலால் உண்டாகிய வெள்ளம் என்க. வெள்ளநீர் கன்றுகளின் கால்களைப் பறித்து இழுத்தலாலே பிடிகள் செய்யும் பூசல் என்க. இப்பூசல் பல வேறிடங்களிலும் உண்டாதல் தோன்றப் பூசல் பலவுடன் என்றாள் வெண்கோட்டியானை ஆரவார முண்டாக வெள்ளம் இழுக்கும் கன்றினைப் பற்றுதற்குக் கையால் நீரைத்துழாவும் என்க. வாய் அகல் என மாறுக . அகன்ற இடத்தே அடர்ந்த படாஅர், படாஅர்- பாம்புச்செடி என்பர் பழையவுரையாசிரியர். படாஅர் தூறு எனவே கொண்டு அங்காந்த வாயையுடைய பாம்புகள் உறையும் தூறு எனலுமாம். இவற்றால் தோழி வழியின்னாமையைக் கறபோரும் அஞ்சுமாறு கட்டுரைத்தலுணர்க. இதனால் நம்பெருமான் தம்முயிரினும் காதலைப் பெரிதாக நினைப்பவர் ஆதலின் இத்தகைய இன்னாமிக்க நெறியினும் நம்பொருட்டு வந்தனர் என்றாளாயிற்று.

இனி இதன் பழையவுரையாசிரியர்,

"யானைகளுங் கன்று காரணமாகப் பிடிவருந்தியபின்பு, எடுக்க முயன்றாற்போல அவரும் அலரானும் வழியதருமையானும் நாம் நலனழிந்தபின்பு வரைய முயலுமதல்லது முன்பு முயலா ரென்பது கருத்து" என உள்ளுரை காண்பர்.

இனி இதனை, தோழி அன்னையும் கனைதுயில் மடிந்தனள் பொழுதும் ஊர்துயின் மடிந்த நள்ளியாமம். காதலர் உள்ளம் பழுதன்றாக பகலும் அஞ்சும் சுரம் வந்தனர் என இயைத்திடுக.

(பா-வே) 2. தண்கயத்.
-----------

செய்யுள் 69


திணை: பாலை.
துறை: பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான் தலைமகன் எனக் கவன்ற தலைமகட்கு வருவரென்பதுபடச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.

(து-ம்) அஃதாவது- தலைவன் பொருளீட்டற் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து சென்றவன் குறித்த காலத்தே மீண்டுவாராமல் காலம் தாழ்த்திருந்தமையாலே தலைவி பிரிவாற்றாது மெலிந்து பெரிதும் துன்புறுவாளாக அதுகண்ட தோழி தலைவனுடைய பேரன்புடைமையை எடுத்துக்காட்டிச் சிறிது காலந்தாழ்த்தாராயினும் அவர் நின்னை மறந் துறைவாரல்லர் அணித்தாக வருவர் வருந்துணையும் ஆற்றுக என்று வற்புறுத்தியது என்றவாறு.

(இ-ம்) இதனை, "பெறற் கரும் பெரும் பொருள்" எனவரும் (தொல். கற்பி. 9) நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாலமைத்திடுக.

    ஆய்நலந் தொலைந்த மேனியும் மாமலர்த்
    தகைவனப் பிழந்த கண்ணும் வகையில
    வண்ணம் வாடிய வரியும் நோக்கி
    ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
    ஈதல் இன்பம் வெஃகி மேவரச்         5
    செய்பொருட் டிறவ ராகிப் புல்லிலைப்
    பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
    கான மடமரைக் கணநிரை கவரும்
    வேனில் அத்தம் என்னா தேமுற்று
    விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்         10
    பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
    அறையிறந் தகன்றனர் ஆயினும் எனையதூஉம்
    நீடலர் வாழி தோழி ஆடியல்
    மடமயில் ஒழித்த பீலி வார்ந்துநம்
    சிலைமாண் வல்விற் சுற்றிப் பலமாண்         15
    அம்புடைக் கையர் அரண்பல நூறி
    நன்கலந் தரூஉம் வயவர் பெருமகன்
    சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
    தலைநாள் அலரி நாறுநின்
    அலர்முலை ஆகத் தின்றுயில் மறந்தே.         20
            --உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்.

(உரை)

13: வாழிதோழி........

(இ-ள்) தோழி வாழி- தோழி நீ நீடுவாழ்வாயாக! நான் கூறுவதனைக் கூர்ந்து கோள்!

(வி-ம்) ஆற்றுவிக்கத் தொடங்குதலின் வாழ்த்துகின்றாள். இவ்விளி யான் ஒன்று கூறுவல் அதற்குச் செவிசாய்த்தருள்க என்னும் குறிப்புடைத்து.

1-4: ஆய்நலம்........நீயே!

(இ-ள்) நீ ஆய்நலம் தொலைந்த மேனியும் மாமலர்த்தகை வனப்பு இழந்த கண்ணும்- நீதானும் நம்பெருமானுடைய பிரிவாற்றாமையாலே மகளிர் பலரும் ஆராய்ந்து காண்டற்குக்
காரணமான பெண்மை நலம் பொதுளிய மழுங்கிய நினது மேனியையும் பெரிய செந்தாமரை மலர்போன்ற தமது பேரழகினை இழந்து புற்கென்றிருக்கின்ற நின் கண்களையும்;
வகை இல வண்ணம் வாடிய வரியும் நோக்கி- இத்தகைய என்று கூற உவமை வகை இல்லாத தனித்தன்மையுடைய தமது நிறம் மழுங்கிப்போன சுணங்குகளையும் அடிக்கடி நோக்கி நம்பெருமானைக் காணப்பெறாமலே இறந்துபடுவோமோ! என்னும் பெருந்துன்பத்தினூடே; ஆழல் - மூழ்கிவிடாதே! ஆன்றிசின்- அமைதியுறுதி; என்க.

(வி-ம்) தலைவி ஆற்றாமையாலே நாளுக்குநாள் நலிந்து வருகின்ற தன் மேனி முதலியவற்றை அடிக்கடி நோக்கி இந்நிலை நீடிக்குமாயின் இறந்துபடுவேம் எம்பெருமானைக் காணாமலேயே இறப்பேமோ? என்று கையாறு கொள்ளுவாளைத் தேற்றுதலின் நீ இங்ஙனம் நோக்கி ஆழல் என்கின்றாள் அமைதியோடிருத்தலே நின் போன்ற "செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையுமுடைய பெருந்தகைப்
பெண்டிர்க்கியல்பு என்பாள்" ஆன்றிசின் என்றாள்.

4-12: உரிதினின்..............ஆயினும்

(இ-ள்) ஈதல் இன்பம் உரிதினின் வெஃகி- நங்காய்; நும்போலப் பொங்கி முற்றிய காதலாற் பிணைப்புண்டு இல்லத்திருந்து வாழ்வாங்கு வாழும் திருவுடையார்க்கு வறியார்க்கு ஈத்துவக்கும் பேரின்பமே சிறப்புரிமை யுடைத்தாதலாலே பிறவின்பமெலாம் துறந்து அவ்வின்பத்தையே பெரிதும் விரும்பி; மேவரப் பொருள்செய் திறவராகி- அவ்வின்பம் நும் வாழ்க் கையினூடே வந்து பொருந்துதற்கு இன்றியமையாத பொருளீட்டிக் கொள்ளுந் திறத்திலே முயல்வாராகி; பராரை புல் இலைநெலலி அம் புளித் திரள் காய் கானம் மடமரைக் கணம் நிரை கவரும் வேனில் அத்தம் என்னாது- பரிய அரையினையும் புல்லிய இலையினையும் உடைய நெல்லியினது அழகிய புளிப்பினையும் திரட்சியையும் உடைய காய்களைக் காட்டகத்தே மடப்பமுடைய மரைமானினமாகிய கூட்டம் கவர்ந்து தின்னுதற்கியன்ற வேனிற் பருவத்து வெவ்விய வழி என்றும் பாராமல்; ஏம் உற்று விண்பொரு நெடுவரை இயல் தேர் மோரியர் பொன் புனைதிகிரி திரிதரக் குறைத்த- துன்பத்தையே இன்பமாக மேற்கொண்டு, வானத்தைத் தீண்டுகின்ற நெடிய மலையிடத்தும் இயங்குகின்ற தேரையுடைய மோரிய மன்னர்கள் தங்கள் தேரினது பொன்னாலியன்ற உருள்கள் முட்டின்றி இயங்குதற் பொருட்டுச் செதுக்கிய; அறை இறந்து அகன்றனர் ஆயினும் - பாறைக் கற்களையுடைய மலைநெறியைக் கடந்து அப்பாற்பட்ட நாட்டிற்கே சென்றிருந்தாரேனும்; என்க.

(வி-ம்) இதன்கண் தலைவன் தனது இன்பங்களைத் துறந்து பொருளீட்டலாலே வருகின்ற துன்பங்களையே இன்பமாகக் கொண்டு பாலைக் கொடுநெறி கடந்தும் போயதற்குக் காரணம் ஈதலின்பத்தை ஏனைய இன்பங்களினும் சிறந்த இன்பமாகக் கருதி அவ்வின்பந் துய்த்தற்கு இன்றியமையாத பொருளீட்டலே ஆம் ஆகவே தாம் மேற்கொண்ட இல்வாழ்க்கைக்குரிய பண்பும் பயனும் உண்டாக வாழவேண்டியே பிரிந்தார், வினையே ஆடவர்க்குயிர் என்பது பற்றி அவர் பெருந்தகைமைக்கு ஏற்பவே அவர் பிரிந்தார் என அறிவுறுத்து அது தோன்றலே நினக்குச் சிறப்பாம் என்பதுபட ஆற்றுவித்தல் நினைந்து மகிழற்பாற்று.

பரு அரை- பராரை எனப் புணர்ந்தது. அரை- மரத்தின் நடுப்பகுதி. நெல்லிமரத்தின் நடுப்பகுதி பரியதாயிருத்தல் பற்றிப் பராரை நெல்லி என்றாள். புல்லிலை என்புழிப் புன்மை சிறுமைமேற்று. மரைமான்கள் ஆணும் பெண்ணும் அஞ்சுமியல்புடையன ஆதல் கருதி மடமரை எனப் பொதுவின் ஓதினள். வேனிற் பருவத்தே நெல்லி காய்க்கும் ஆதலின் வேனிலுக்கு இங்ஙனம் அடைதொடுத்தபடியாம். வேனில் அத்தம் என்னாது ஏமுற்று அறையிறந்தனர் என்னும் இக்கருத்து,

"அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்" (611)

எனவும்,
"இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண்." (615)

எனவும் வரும் திருக்குறள்களை நினைவுறுத்துகின்றது.

"மோரியர் ஆவார் சக்கரவாள சக்கரவர்த்திகள் விச்சாதரரும் நாகரும் என்ப" என்பது புறநானூற்றின் (175) பழையவுரை. ஈண்டும் பொன்புனைதிகிரி என்பதனால் இவ்வாசிரியர் கருத்தும் அதுவே போலும். இனி மோரியர் வடநாட்டு மன்னரில் ஒரு குடிமன்னர் எனக் கருதுவாரும் உளர்.

12-20: எனையதூஉம்.......மறந்தே

(இ-ள்) ஆடு இயல் மடமயில் ஒழித்த பீலி வார்ந்து தம் சிலைமாண் வல்வில் சுற்றி- கூத்தாடுகின்ற இயல்புடைய இளைய மயில் தன் தோகையினின்றும் உதிர்த்துவிட்ட பீலியை இரண்டாகக் கிழித்துத் தம்முடைய ஒலிமாட்சிமையுடைய வலிய வில்லிலே சுற்றி அணிசெய்த; பலமாண் அம்பு உடைக்கையர்- பலவேறு வகைப்பட்ட தொடைமாட்சிமைப்பட்ட அம்புகளைப் பற்றிய கையையுடையராய்ச் சென்று; அரண் பல நூறி நன் கலம்தரூஉம் வயவர் பெருமகன்- பகைமன்னர் அரண்கள் பலவற்றையும் நொறுக்கி வென்றடிப்படுத்து அம்மன்னர் திறையாகத் தருகின்ற அழகிய பேரணிகலங்களையும் கொணர்ந்து தருகின்ற வலிமைமிக்க மறவர்களுடைய தலைவனாகிய; சுடர் மணிப் பெரும்பூண் ஆ அய் கானத்து- ஒளியுடைய மணிகளாலியன்ற பெரிய அணிகலனை அணிந்த ஆஅய் என்னும் வள்ளற் பெருமானுடைய காட்டகத்தே மலருகின்ற; நாள்தலை அலரி நாறும்- நாட்காலத்தே மலருகின்ற மலர்போல நறுமணங் கமழாநின்ற; நின் அலர்முலை ஆகத்து இன் துயில் மறந்து- நினது அடிப்பகுதி பரந்த முலையினையுடைய மார்பகத்தே கிடந்து துயிலுகின்ற இனிய துயிலை மறந்து; எனையதூஉம் நீடலர் – சிறிது காலமுந் தாழ்த்திரார்! இன்னே வருவர்காண் ! என்பதாம் .

(வி-ம்) மயில்கள் ஆட்டைக்கொருமுறை இறகு உதிர்க்கும் என்ப. அங்ஙனம் உதிர்த்த பீலியை இரண்டாகக் கிழித்து வில்லிற் சுற்றி அணி செய்வர்என்பது கருத்து. ஆஅய் கடையெழுவள்ளலுள் ஒரு வள்ளல். நாள் தலை - தலைநாள் என மாறி நின்றது. இனி, கார்ப் பருவத்துத் தலைப்பெயல் நாளிலே மலர்ந்த முல்லைமலர் எனினுமாம். என்னை? ஈண்டு ஆஅயின் நாடு கானம் என்றாராகலின். கானம்- முல்லை. நிலம். அறத்தின்கட் கருத்தூன்றிச் சென்ற நம்பெருமான் அன்பைப் புறக்கணிப்பார‌ல்லர். எனவே அன்பின் உறையுளாய் இன்பத்தின் கருவூலமாயிருக்கின்ற நின்னையும் அவர் மறப்பரோ? இன்னே வருவர் ஆற்றுக என்பது குறிப்பு என்க.

இனி இதனை, தோழி! நீ நோக்கி ஆழல்! ஆன்றிசின் நம்பெருமான் ஈதல் இன்பம் வெஃகித் திறவர் ஆகி அகன்றனர் ஆயினும் நின் ஆகத்து இன்துயில் மறந்து நீடலர் என இயைக்க.

(பா-வே 10. நெடுங்குடை.18. சுடர்மலி.
---------

செய்யுள் 70


திணை: நெய்தல்.
துறை: தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-களவொழுக்கமே காமுற்று வரைதலிற் கருத்தின்றி ஒழுகிய தலைவன் அலர் மிகுதியானும் தோழி வரைவுகடாஅயதாலும் வரைவுடம்பட்டு வரைதற்கு வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு அவ்வுவகைச் செய்தியை அறிவுறுத்து மகிழ்வித்தது என்றவாறு.

(இ-ம்.) இதனை " நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல். கள. 23) நூற்பாவி*ன்கண் "ஆங்கதன் றன்மையின் வன்புறை யுளப்பட" என்பதன்கண் அமைத்திடுக.

    கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
    இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
    குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டிக்
    கொழுங்கண் அயிலை பகுக்குந் துறைவன்
    நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே         5
    அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
    பலருமாங் கறிந்தனர் மன்னே இனியே
    வதுவை கூடிய பின்றைப் புதுவது
    பொன்வீ ஞாழலோடு புன்னை வரிக்கும்
    கானலம் பெருந்துறைக் கழனி மாநீர்ப்         10
    பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
    விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
    வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
    முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுரை
    வெல்போர் இராமன் அருமறைக் கவித்த         15
    பல்வீழ் ஆலம் போல
    ஒலியவிந் கன்றிவ் அழுங்கல் ஊரே.
            ----மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்.

(உரை)

1-5: கொடுந்திமில்.......கேண்மை

(இ-ள்.) கொடுந்திமில் பரதவர் - வளைந்த படகுகளை யுடைய நெய்தனில மாக்கள்; வேட்டம் வாய்த்தென கடலிற்சென்று ஆடிய மீன் வேட்டை நன்கு கைகூடிற்றாக; இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்து - பெரிய புலால் நாற்றமே கமழா நின்ற சிறிய குடிகளையுடைய தம்மூரினிற் புகுந்து; குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி - முற்படக் குறிய கண்களையுடைய அழகிய தமது வலையினை அவற்றின் பயன் கருதி நறும்புகை காட்டிக் கொண்டாடிப் பின்னர்; கொழுங்கண் அயிலை பகுக்குந் துறைவன் - தாம் கொணர்ந்த கொழுவிய கண்ணையுடைய அயிலை மீன்களைத் தஞ்சுற்றத்தார்க் கெல்லாம் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தற்கிடனான; துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை - கடற்றுறையினையுடைய நம்பெருமான் நம்பாற் கொண்ட காதலுறவு என்க.

(வி-ம்.) வேட்டம் - மீன்வேட்டை. அது வாய்த்தலாவது நிரம்ப மீன் அகப்படுதல். அவ்வலை - அழகிய வலை. வலைப்பயம் - வலையினாற் கிடைக்கும் ஊதியம்: அஃதாவது மீன்-வலையைப் பயம் கருதிப் பாராட்டி. வலையைப் பாராட்டுதலாவது: நறும்புகை காட்டுதல்; கண்ணேறு கழித்தலுமாம். முன்னர் வலைப்பயம் பாராட்டிப் பின்னர்ப் பகுக்கும் துறை. சுற்றத்தார்க்கெல்லாம் பகுக்கும் துறை என்க. அயிலை – மீனின் ஒருவகை.

இனி இப்பகுதியில் பழையவுரையாசிரியர் காட்டும் உள்ளுறை யுவமம் வருமாறு:
"பரதவர் தம் முயற்சியாலே வேட்டை வாய்த்ததாகிலும் குறுங்கண் வலையைப் பாராட்டி, அம்முயற்சியாலுண்டான அயிலையைக் கடலினின்றும் நீக்கி எல்லார்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தாற் போல, அவரும் (தலைவரும்) தம்முடைய முயற்சியானே வதுவை கூடிற்றாயினும் அதற்குத் துணையாக நின்ற என்னைக் கொண்டாடி, நின்னைப்
பெரிய இச்சுற்றத்தினின்றும் கொண்டுபோய்த் தம்மூரின் கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம்மூரையெல்லாம் மகிழ்விப்பர் என்றவாறு" எனவரும் .

5-7: முன்னே..........மன்னே

(இ-ள்) முன்னே- யாம் அறத்தொடு நின்றமையாலே நம் சுற்றத்தார் மகட் கொடை நேர்வதற்கு முன்பெல்லாம்; அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற - பிறர்பழியை யாவரும் அறியத் தூற்றுதலே தம் வாய்க்கியல்பாகிய கொடிதறி மகளிர் முன்னர் நம் மறையினை அம்பலாக்கிப் பின்னர் யாவரும் அறிய அலர் தூற்றுதலானே; ஆங்குப் பலரும் அறிவாராயினர். அத்துன்பநிலை ஒழிந்தது என்க.

(வி-ம்) முன்னே என்றது மறைவெளிப்பட்டு நமர் மகட்கொடை நேர்தற்கு முன்பு என்பதுபட நின்றது. அலர் வாய்- அலர் கூறுதலையே இயல்பாகவுடைய வாய். பலரும் அறிந்தனர் என்றது நஞ்சுற்றத்தார் பலரும் அறிந்து இற்செறித்தல் முதலிய இன்னல் பல
செய்தனர் என்பதுபட நின்றது. மன்- அவ்வின்னலும் அதற்குக் காரணமான அலரும் ஒழிந்தன என ஒழிந்த பொருண் மேனிற்றலின் ஒழியிசை.

7-17: இனியே.....ஊரே

(இ-ள்) இனி, வதுவை கூடிய பின்றை- இப்பொழுது நம்பெருமான் வரைவு மலிந்த பின்னரோ; இவ் அழுங்கல் ஊர்- இந்த ஆரவாரமுடைய ஊர் முழுதும்; புதுவது பொன்வீ ஞாழலொடு புன்னைவரிக்கும் கானல் அம் பெருந்துறை- புதிதாக மலர்ந்த பொன்னிறமுடைய மலர்களையுடைய ஞாழன் மரமும் புன்னை மரங்களும் தம் பூக்களாலும் தாதுக்களாலும் ஓவியந் தீட்டுகின்ற கடற்கரைச் சோலை மருங்கேயமைந்த; கழனி மாநீர்ப் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழையணிக் கூட்டும் வென் வேல் கவுரியர் தொல் முதுகோடி - கழனிகளில் கரிய நீரிடத்தே தழைத்துள்ள திரண்ட தண்டுகளையுடைய நெய்தற் பூக்களை விழாவிற்குத் தம்மைக் கோலம் செய்துகொள்கின்ற பரதவர் மகளிர்கள் தாமுடுத்துள்ள தழையாடைக்கு அழகுசெய்யும் பொருட்டுப் பறித்துச் சேர்த் தற்கிடனான வெற்றிவேலேந்தும் பாண்டிய மன்னருடைய மிகப் பழைய கோடிக்கரையின்கண் அமைந்த; முழங்கு இரும் பௌவம் முன்றுறை - ஆரவாரிக்கின்ற கடற்றுறை மருங்கே; இரங்கும்- பறவைகள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தை; இராமன் வெல்போர் அருமறைக்கு அவித்த- இராமன் அரக்கரை வெல்லுதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச்செய்தியை வானர வீரர்களோடு ஆராய்தற் பொருட்டுக் கைகவித்து அவிக்கப்பட்ட; பல்வீழ் ஆலம் போல- பலவாகிய விழுதுகளையுடைய ஆலமரம்போல; ஒலி அவிந்தன்று- ஆரவாரம் அடங்கிக் கிடக்கின்றது என்பதாம்.

(வி-ம்) கானலம் பெருந்துறைக்கு அணித்தாகிய கழனிகளில் என்க. விழவணி- திருவிழாக் காண்டற்குச் செய்யும் ஒப்பனை. முழங்கும் முன்றுறைக்கண் இரங்கும் ஆலம் அருமறைக்கு அவித்த ஆலம் எனத் தனித்தனி கூட்டுக.

இதன்கண் வருகின்ற இராமகாதைக் குறிப்புமறிக.

இனி இப்பகுதிக்கு -- நெய்தற் பூவானது, ஞாழலும் புன்னையும் கரையிலே நின்று தாதையுதிர்த்துப் புறஞ்சூழ நீரிடத்துத் தன்னை விடாதே அலைகள் சூழ நடுவே நின்று நெருங்கி வளர்ந்து பின்னை விழ வணி மகளிர் அல்குலுக்குத் தழையாய்ப் பயன்பட்டாற்போல இருமுது குரவர் புறங்காப்ப ஆயவெள்ளத்தார் மெய்யைவிடாதே சூழ்ந்து புறங்காப்ப இப்படிச் செல்வத்தால் வளர்ந்த நீயும் எம்பெருமானுடைய இல்லறமாகிய பிரிவிற்குத் துணையாகப் போகா நின்றாயன்றோ வென்று வியந்து கூறியவாறு கண்டுகொள்க" என உள்ளுறை யுவமம் கொண்டனர் பழைய வுரையாசிரியர்.

இனி இதனை "துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர்தூற்றப் பலரும் அறிந்தனர். இனி வதுவைகூடிய பின்றை இவ் வழுங்கல் ஊர் ஒலி அவிந்தன்று" என இயைக்க.

(பா-வே) 13. கவிரியர்.
------------

செய்யுள் 71


திணை: பாலை.
துறை: பொருள்வயிற் பிரிந்த விடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது,

(து-ம்) அஃதாவது--தலைவன் பொருள்வயிற் பிரியாநிற்ப அப் பிரிவாற்றி யிருத்தற்குரிய தலைவி ஆற்றாது பெரும்பேதுறுவாளை ஆற்றுவிக்கும் தோழி நீ இங்ஙனம் ஆற்றாயினமையின் ஆற்றுவித்தற்குரிய யான் என் கடமையை ஆற்றவியலாமையால் நீ உயிர் விடுமுன்னர் என் உயிர் தானே என்னுடம்பைத் துறந்துபோதற்குரிய காலம் வந்துற்றதென்றே கருதுகின்றேன் எனத் தன் ஊழை நொந்துரைக்குமாற்றால் ஆற்றுவித்தது என்று கொள்க.

(இங்ஙனமன்றி இதனைத் தலைவி கூற்றாகவே கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஈண்டு யாம் பழையவுரையாசிரியர் கருதியதற்கிணங்கத் தோழி கூற்றாகவே கொண்டு உரை கூறுவாம்.)

(இ-ம்.) இதனை "பெறற் கரும் பெரும் பொருள்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 9) 'பிறவும் வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்குரிய' என்பதனாலமைக்க.

[இனி, தலைவி கூற்றெனக் கொள்ளின் "அவனறிவு" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 6) 'ஆவயின் வரும் பல்வேறு நிலையினும்' என்பதனாலமைத்திடுக.]

    நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
    பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம்
    நயனின் மாக்கள் போல வண்டினம்
    சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
    மையின் மானினம் மருளப் பையென         5
    வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
    ஐயறி வகற்றுங் கையறு படரோ
    டகலிரு வானம் அம்மஞ் சீனப்
    பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை
    காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக         10
    ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக்
    கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது
    எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்
    துள்ளு தாவியிற் பைப்பய நுணுகி
    மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்         15
    திதுகொல் வாழி தோழி என்னுயிர்
    விலங்குவெங் கடுவளி எடுப்பத்
    துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.
            --அந்தி யிளங்கீரனார்

(பா.வே.) அந்திலிளங்கீரனார். குறிப்பு: இச்செய்யுளின்கண் "வெந்தாறு பொன்னிள் அந்தி பூப்ப" என்னும் இனியதோருவமை கூறிய அருமைகருதி இவர் அந்தி இளங்கீரனார் என்று கூறப்பட்டார் என்றுணரலாம.

(உரை)

16: தோழி........தோழி கேள்!

1 - 9: நிறைந்தோர்........ பழங்கண்மாலை

(இ-ள்.) வண்டு இனம் - வண்டின் கூட்டம்; குறைந்தோர் பயன் இன்மையின் - தாம் பண்டு நண்பு செய்தவர் செல்வம் குறைந்து வறியவர் ஆயவிடத்து அவரல் தமக்குப் பயன் இல்லாமை கண்டு; பற்றுவிட்டு - அவர்பாற் றாம் கொண்டுள்ள அன்பைத் துறந்து; நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு - தமக்குப் பயன்படத்தகுந்த செல்வரை ஆராய்ந்து கண்டு நட்புக் கொள்கின்ற செஞ்சத்தோடு கைவிட்டுப் போகின்ற; நயன் இல் மாக்கள் போல் - மக்கட்பண்பு என்னும் நன்மையில்லாத கயமாக்கள் போன்று; சுனைப்பூ நீத்து - சுனைக்கண் மலர்ந்துள்ள நீர்ப்பூக்களைத் துறந்து; சினைப்பூப் படர - கோட்டுப் பூக்களை விரும்பிச் செல்லா நிற்பவும்; மையின் மான் இனம் மருள - குற்றம் இல்லாத மான் கூட்டம் மயங்கா நிற்பவும்; வெந்து ஆறு பொன்னின் அந்திபூப்ப - உலையின்கண் தீயில் வெந்து ஆறிய பொன்போன்ற நிறமுடைய வாய்ச் செவ்வந்தியரும்புகள் மலரா நிற்பவும்; ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன - வியக்கத் தக்க நல்லறிவினையும் போக்கி விடுதற்குக் காரணமான செயலறவைத்தரும் துன்பத்தோடே அகன்ற பெரிய வானமானது அழகிய வண்ணங்களையுடைய முகில்களைத் தோற்றுவியா நிற்பவும்; பகல் ஆற்றுப் படுத்த - ஞாயிற்று மண்டிலத்தைப் போக்கிய; பழங்கண் மாலை - துயரமே தருகின்ற இந்த மாலைக் காலத்தானும் என்க.

(வி - ம்.) நிறைந்தோர் - செல்வம் நிறைந்தவர். குறைந்தோர் - செல்வம் குறைந்து வறியராயினோர். ஈண்டுக் கூறப்படும் இவ்வுவமை யொடு "நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டும் போல்குவம்" எனவரும் சித்திராபதி கூற்று (மணிமே - 18: 19-20) நினையற்பாலதாம். அந்தி - செவ்ந்திப்பூ. இப்பூ வெந்தாறு பொன்போலும் நிறமுடைத்தாதலறிக. இனி அந்தி - செக்கர் வானம் எனக் கொள்ளினுமாம். இதற்கு அந்தி ஆகு பெயராம். வையறிவு எனக் கண்ணழித்துக் கூர்த்த அறிவினையும் எனினுமாம். கையறுதற்குக் காரணமான படர் என்க. படர் - துன்பம். மாலைக்காலத்து முகில்கள் பொன்மை முதலிய பல்வேறு வண்ணமும் உடையவாய் அழகுடைய வாதல் பற்றி அம்மஞ்சு என்றார். பகல் - ஞாயிறு. பகற்பொழுதுமாம். ஆற்றுப்படுத்தல் - போக்குதல். பழங்கண் - காமத்துன்பம். இது மாலையில் மலர்தலின் இங்ஙனம் கூறினாள்.

10 - 18 : காதலர் ......... பொழுதே.

(இ - ள்.) காதலர்ப் பிலிந்த புலம்பின் – முன்னரே தங் காதலரைப் பிரிந்த தனிமையினாலே; நோதக – காண் போரும் நோகத்தகுமாறு; ஆரஞர் உறுநர்- ஆற்றியிருக்கும் மதுகையின்மையாலே அருந்துயரை எய்துவோருடைய; அருநிறம் சுட்டி- காண்டற்கரிய மார்பினைக் குறிக்கொண்டு; கூர் எஃகு எறிஞரின்- கூரிய வேற்படையை எறிகின்ற வன்கண்ணர் போன்று; அலைத்தல் ஆனாது - வருந்துதலையும் ஒழியாதாயிற்று. எள் அற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து உள் ஊது ஆவியில் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் - குற்றந்தீர இயற்றப்பட்ட நிழல் காண்டற்குரிய கண்ணாடி மண்டிலத்தின் அகத்தே வாயினால் ஊதப்பட்ட ஆவியைப்போல மெல்லமெல்லக் குறைந்து அவருடைய ஆற்றல் அழிதல் தேற்றம்; என் உயிர் விலங்கு வெங்கடுவளி எடுப்பத் துளங்கு மரப்புள்ளில் பெரிது அழிந்து துறக்கும்பொழுது இது கொல்- அங்ஙனம் மதுகை மாய்வார் திறத்திலே மிகவும் நெஞ்சம் அழிவுற்று அளியேனுடைய உயிர் சூறைக்காற்று மோதித் தாக்குதலாலே அசைகின்ற மரத்தைத் துறந்து போகின்ற பற‌வை போன்று நடுங்கும் என்னுடம்பைத் துறந்து போகும் காலம் இதுவே போலும் யான் என் செய்கேன் என்பதாம்.

(வி-ம்) தலைவன் பிரிவைத் தனது அறிவு மதுகையாலே ஆற்றியிருக்கும் கடமையுடைய தலைவி அங்ஙனம் ஆற்றியிராமல் மிகவும் வருந்தி யிருக்கும்பொழுது மாலைக்காலமும் வந்துற்றதாக அதுகண்டு தலைவி பின்னும் ஆற்றாது பேதுறுவாளாயினள். அவளை ஆற்றுவிக்கும் கடமையுடைய தோழி இனி நீ சாதற்குமுன்னரே என்னுயிர் போய்விடும் என்று தோழிக்குக் கூறுபவள், தலைவியின் பிரிவாற்றாமையை உலகின்மேலிட்டு, "காதலர் பிரிந்த புலம்பின் ஆரஞர் உறுநரை இந்த மாலையும் அலைத்தலொழியாது; இனி அவர் மதுகையும் துவரக்கெடும். அது கண்டு நெஞ்சழியும் என் உயிர் போங்காலம் இந்த மாலைக்காலமே காண் என்கின்றாள். இதனாற் போந்தபயன் யான் உயிர் வாழவேண்டுதியாயின் நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்துத் தலைவியை ஆற்றுவதாம். இங்ஙனம் கூறாக்கால் இது தோழி கூற்றாமாறில்லை. தலைவியின் கூற்றாயின் அதற்கியையப் பொருள் கூறிக்கொள்க.

இனி இதனை, "தோழீ! வண்டினம் நீத்துப்படர, மானினம் மருள, அந்தி பூப்ப, வானம் ஈன, ஆற்றுப்படுத்த மாலை ஆரஞர் உறுநர் நிறஞ் சுட்டி எஃகெறிஞரின் அலைத்தல் ஆனாது. ஆகவே அவர் மதுகை மாய்தல்வேண்டும். என் உயிர் துறக்கும் பொழுதும் இம்மாலையே போலும்" என்றியைபு காண்க.
-----------

செய்யுள் 72


திணை: குறிஞ்சி.
துறை: (1) தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(2) தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.

(து-ம்.) (1) அஃதாவது --தலைவன் பெரிதும் இன்னாமையுடைய இருள் நெறியிலேயும் தனக்கு அளிசெய்தற் பொருட்டு இரவுக் குறிக்கண் வந்து ஒருசார் நிற்றலை உணர்ந்த தலைவி அவன் கேட்டு வரைதற்கு முயலுமாறும் இங்ஙனம் இன்னா நெறிக்கண் வருதலைத் தான் விரும்பாமையை அவன் உணருமாறும் தோழிக்குக் கூறுவாளாய்க் கூறியது என்றவாறு.

(2) தலைவன் இரவுக்குறிக்கண் வருதலை மறுத்து வரைவு கடாவுதற் பொருட்டுச் சிறைப்புறத்தே நின்ற தலைவன் கேட்டற் பொருட்டுத் தோழிக்குக் கூறுவாள் போன்று கூறியதெனினுமாம் என்றவாறு.

(இ-ம்) (1) இதற்கு "மறைந்தவற் காண்டல்" என்னும் நூற்பாவின்கண் (தொல். களவி. 20) "அவனளி சிறப்பினும்" எனவரும் விதி கொள்க. (நச்சினார்க்கினியரும் இதற்கிதனைக் காட்டினர்)

(2) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். களவி. 23) "களனும்....அனைநிலையால் வரைதல் வேண்டினும்" எனவரும் விதிகொள்க.

    இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்
    துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்
    மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
    பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்
    குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை         5
    இரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண்
    ஆறே அருமர பினவே யாறே
    சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய
    கழைமாய் நீத்தம் கல்பொரு திரங்க
    அஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந்         10
    தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
    ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
    இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
    நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
    மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்         15
    வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
    உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி
    அருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக.
    வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
    நீதவ றுடையையும் அல்லை நின்வயின்         20
    ஆனா அரும்படர் செய்த
    யானே தோழி தவறுடை யேனே.
            --எருமை வெளியனார் மகனார் கடலனார்.
            (மோகமானக் கடலார் என்றும் பாடம்)

(உரை)

1-10 : இருள்.....என்னாது

(இ-ள்) தோழி- தோழி கேள்; வானம் இருள் கிழிப்பது போல் மின்னி- முகில்கள் உலகைக் கவிழ்ந்து மூடியுள்ள இருள் என்னும் கரிய திரைச்சீலையைக் கிழிப்பதுபோன்று மின்னுதலைச் செய்து; துளிதலைக்கொண்ட நளிபெயல் நடுநாள்- துளிகளைத் தம்மிடத்தே கொண்டுள்ள செறிந்த மழையையுடைய நடுயாமத்தே; மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரிற் சுடர வாங்கி- மின்மினிப் பூச்சிகள் மொய்த்துள்ள சிதைவுடைய வாயையுடைய புற்றினை அம்மின்மினிகள் காய்ச்சப்பட்ட இரும்பினைப் பட்டடையிலிட்டுச் சம்மட்டியாற் புடைக்கும் பொழுது சிதறுகின்ற தீப்பொறிகள் போன்று நாற்றிசையும் சிதறியோடும்படி கையால் அகழ்ந்து மண்ணைப் பறித்துப் பின்னர்; குரும்பி கெண்டும்- அதனகத்தேயுள்ள குரும்பியைத் தோண்டித் தின்னுகின்ற; பெருங்கை ஏற்றை- பெரிய கையையுடைய ஏற்றைக் கரடியானது; இரும்பு செய் கொல் எனத் தோன்றும் - இரும்பினாற் கருவிகள் செய்கின்ற கொல்லனைப் போல் தோன்றுதற்கிடனான அக்காட்டின் கண்ணே; என்க.

(வி-ம்;) கிழிப்பது என்பதனால் இருளாகிய திரையை என்க. வானம்- ஆகுபெயர். முகில். நளி-செறிவு. குளிருமாம். புற்றின் மேல் இரவில் மின்மினி மொய்தது இரைதேர்தல் இயல்பு. முரவுவாய்- சிதைந்தவாய். மழை பொழிதலாலே புற்றின் வாய் முரவுவாயாயிற்று. புற்றம் என்புழி அம்: சாரியை. இசைநிறை எனினுமாம். கரடி கையாலகழ்ந்து மண்ணைப்புறத்தே தள்ளும்பொழுது அதன் வாயின் மொய்த்துள்ள மின்மினி நாற்புறமும் விரைந்து பறந்துபோதல் பொன் எறியுங்காற் றெறிக்கும் தீப்பொறிகள் போன்று தோன்றும் என்றவாறு. பொன்- இரும்பு. எறிதல் பட்டடையிலிட்டுச் சம்மட்டியாற் புடைத்தல். ஏற்றை-கரடி. ஏற்றை (ஆண்கரடி) இதற்குப் பொன்செய் கொல்லன் உவமை; இவ்வுவமையின் சிறப்புணர்ந்து மகிழ்க.

7-15: ஆறே.......ஈர்க்கும்.

(இ-ள்) ஆறு அருமரபின- இயங்குதற்குரிய வழிகள் தாமும் காண்டற்கரிய முறைமையினையுடையனவாம்; யாறு கழைமாய் நீத்தம் கல் பொருது இரங்க சுட்டுநர்ப் பனிக்கும் சூர் உடை முதலைய- இடைக்கிடந்த காட்டியாறுகள்தாமும் ஓடக்கோலை மூழ்குவிக்கும் வெள்ளப்பெருக்கெடுத்துக் கற்களிலே மோதிமறிந்து முழங்காநிற்ப நினைத்துப்பார்ப்பவரையும் நடுங்கச் செய்கின்ற அச்சத்தைத் தருதலுடைய முதலைகளையும் தம்மிடத்தே யுடையன; தமியம் அஞ்சுவம் என்னாது- யாமும் தமியராய் இருத்தலின் அஞ்சி அமையற்பாலம் என்று கருதி அமைந்திராமல்; மஞ்சு சுமந்து ஆடுகழை நரலும் அணங்கு உடைக் கவாஅன்- முகிலைச் சுமந்து அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கின்ற தீண்டி வருத்தும் தெய்வங்களையுடைய பக்க மலையிலே; ஈர் உயிர் பிணவின் வயவுப்பசி களைஇய- சூலுடைய பெண் புலியினது துன்பமிக்க பசியைத் தீர்த்தற்பொருட்டு; இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை - பெரிய களிற்றியானையைக் கொன்ற பெரிய வெகுளியையுடைய ஏற்றைப் புலியானது; நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கில் புலர ஈர்க்கும்- அச்சந் தருகின்ற நல்லபாம்பு ஒளியுண்டாம்படி உமிழ்ந்திட்ட தான் மேய்தற்குக் கருவியான மணியாகிய விளக்கொளியிலே குருதி படிந்து வருமாறு அக்களிற்றியானையை இழுத்துச் செல்லுமிடமான; வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை- வாளினது வாயின் மேல் நடத்தல் போன்று நடத்தற்கு அருமை யுடையமையாலே; உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறுநெறி - ஆறு செல்லநினைப்போர் பெரிதும் அஞ்சுகின்ற கூர்த்த பருக்கைக் கற்கள் செறிந்த சிறிய வழியின்மேல்; அருள்புரி நெஞ்சமோடு- நந்துயர் தீர்த்தருள வேண்டும் என்னும் நன்னர் நெஞ்சத்தோடு; எஃகு துணையாக- தனது வேற்படையொன்றே தனக்கு வழித்துணையாக அமைய; வந்தோன்- வந்த நங் காதலன்; கொடியனும் அல்லன்- கொடியவனும் ஆகின்றிலன்; தந்த நீ தவறு உடையையும் அல்லை- அவனை இக் கொடுநெறிக்கண் இரவுக் குறியிடத்தே வருவித்த நீதானும் தவறு செய்தாய் என்பதற்கும் வழியில்லை; நின்வயின் ஆனா அரும்படர் செய்த யானே தவறுடையேன்- நின்பால் ஒழிவின்றித் தீர்த்தற்கரிய துன்பத்தைச்செய்த யானே தவறு செய்தேன் ஆகின்றேன் காண்.

(வி-ம்) இதனைத் தலைவி கூற்றாகக் கொள்வார் "யான் அவனது பிரிவாற்றாமையாலே பெரிதும் துன்புறுமாற்றாலே உனக்கு அரும்படர் செய்தமையாலே நீ அவனை இரவுக்குறிக்கண் வருவித்தாய், அவனும் அருள்புரி நெஞ்சமொடு அஞ்சுவம் தமியம் என்னாது இங்ஙனம் உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறு நெறிக்கண் வந்தனன் ஆதலாலே யானே தவறுடையேன்" எனத் தலைவி கூறினள் என்று கூறிக்கொள்க.

இனி தோழிகூற்றாயின் யானே அவனுக்கு நின்னைக் குறை நயப்பித்தேன் அதனால் நீயும் அவனுக்கு அருள்தந்தனை. பின்னர் அவனும் வரைதற்கண் கருத்தின்றித் திரிவானை அருள்புரி நெஞ்சமொடு இருள் நெறிக்கண் வருமாறு செய்வித்தேனாகிய யானே தவறுடையேன் என்றாளாகக் கொள்க. இதுகேட்ட தலைவன் நம்பொருட்டு இந்நல்லாரிருவரும் மிகவும் துன்புறுகின்றனர். ஆதலின் இனி யான் வரைந்து கொன்வல் எனத் துணிதலே இதனாற் போந்த பயனாம் என்க.

ஈருயிர்ப் பிணவு- சூலுடைய பெண்புலி. வயவுப்பசி- வேட்கை மிக்க பசி நாம்- அச்சம். நல்லரா- நல்லபாம்பு. இது தன் மிடற்றிலுள்ள மணியை உமிழ்ந்திட்டு அதன் ஒளியிடத்தே இரைதேடும் என்பதோர் உலகுரை கருதிற்று.

உள்ளுறை உவமம்: புலி துணை புறந்தருதற்குப் பிறவற்றைத் தீங்கு செய்யும் பாம்பும் அதற்குத் துணையாயினாற்போல, நீயும் குடியோம்பற் செய்தி காரணமாக வரைவொடுவரிற் கடுஞ்சொற் சொல்லுகிற பேரும் இன்சொற் சொல்லி வரைவுடம்படுவர் என்பதாம்." இது பழைய வுரையிற் கண்டது.

இனி, இதனை--தோழி! வானம் துளிதலைக்கொண்ட நடுநாள் ஆறு அருமரபின, யாறு முதலைய; அணங்குடைக் கவாஅன் பிணவின் பசிகளைஇய களிறட்ட உழுவை அராமணி விளக்கில் ஈர்க்கும் உட்கும் நெறி வந்தோன் கொடியனும் அல்லன்; நீயும் தவறுடையை அல்லை. யானே தவறுடையேன் என இயைத்திடுக.

(பா. வே) 6. தோன்றி யாங்கண்.,15. புலாலையீர்.
-------

செய்யுள் 73


திணை: பாலை.
துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான். குறித்த பருவவரவு கண்டு அழிந்த தலைமகட்குச் சொல்லியது.

(து-ம்) அஃதாவது --தலைவன் பொருளீட்டற்குத் தலைவியைப் பிரிந்து போகும்பொழுது நான் கார்ப்பருவத் தொடக்கத்தே மீள்வல் வருந்தற்க என்று சொல்லிப் பிரிந்தானாக, அவனது பிரிவாற்றாது தலைவி பெரிதும் வருந்தியிருப்ப, அவ்வப்போது ஆற்றுவித்த தோழி தலைவன் கூறிய கார்ப்பருவ வரவு கண்டு தலைவியை அழைத்து அப்பருவ வரவு காட்டி இனி வருந்தாதே கொள், நம்பெருமான் இன்னே வருவர் என்பதுபடச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்) இதனை, "பெறற் கரும் பெரும் பொருள்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 9) 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாலமைத்திடுக.

    பின்னொடு முடித்த மண்ணா முச்சி
    நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ
    வெருகிருள் நோக்கி அன்ன கதிர் விடு
    பொருகாழ் முத்தம் இடைமுலை விளங்க
    அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய்         5
    நின்னோய்த் தலையையும் அல்லை தெறுவர
    என்னா குவள்கொல் அளியள் தானென
    என்னழி பிரங்கும் நின்னொடி யானும்
    ஆறன் றென்னா வேற‌ல் காட்சி
    இருவேம் நம்படர் தீர வருவது         10
    காணிய வம்மோ காதலந் தோழி
    கொடிபிணங் க‌ரில இருள்கொள் நாகம்
    மடிபதம் பார்க்கும் வயமான் துப்பின்
    ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப்
    பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி         15
    விடுபொறிச் சுடரின் மின்னிஅவர்
    சென்ற தேஎத்து நின்றதால் மழையே.
            -எருமை வெளியனார்.

(உரை)

1-11: பின்னொடு...........தோழி

(இ-ன்.) பின்னொடு முடித்த- பின்னுதன்மாத்திரையாய் முடிக்கப்பட்ட; மண்ணா முச்சி- கை செய்யப்படாத கொண்டையிலே; நெய்கனி வீழ்குழல் அகப்பட- எண்ணெய் கனிய்த் தூங்குதற்கியன்ற குழலும் அகப்படும்படி; தைஇ- கட்டி; வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு முத்தம் ஒரு காழ் முலை இடை விளங்க- (மங்கலங் கருதி அணியப்பட்ட) காட்டுப் பூனை இருளிடத்தே விழித்துப் பார்த்தாற் போலே ஒளி விடுகின்ற முத்துக்களாலியன்ற ஒற்றை வடம் முலைமேற் கிடந்து திகழா நிற்ப; அணங்கு உறுகற்பொடு- தெய்வத்தன்மையுடைய கற்புடைமையோடு; மடம்கொள- காண்போர் இவள் இன்னள் என்று அறியாமை எய்துமாறு பெரிதும் மெலிந்து; நின்னோய்த் தலையையும் அல்லை- நீ எய்துகின்ற பிணியிடத்தே மட்டும் வருந்தியிருப்பாயும் அல்லை; தெறுவர- என்னிலை நோக்கி நினக்கு அச்சம் வருதலாலே; அளியள் தான் என்னாகுவள் கொல்- நம்மால் அளிக்கத்தக்க இவள்தான் நம்பெருமானுடைய பிரிவாற்றாமையாலே என்னாகுவளோ? அறிகின்றிலேனே என்று: என் அழிபு இரங்கும் - என்னுடைய அழிவுக்குப் பெரிதும் இரங்குகின்ற ; நின்னொடு - உன்னோடு; ஆறு அன்று என்னா- நீ இங்ஙனம் வருந்துதல் நன்னெறிப்பாற்பட்டதன்று என்று நின்னைத் தேற்றாமைக்குக் காரணமான , இல்லாத வேறு அல் காட்சியானும் - நின் காட்சிக்கு மாறல்லாத காட்சியையே காணும்யானும் ஆகிய; நம் இருவேம்படர்தீர- நம்மிருவருடைய துன்பமும் ஒருங்கே தீரும்படி; வருவது – நம்பெருமான் வருவதற்குரிய அறிகுறியை ; காணிய வம்- இருவேம் காண்டற்கு என்னோடு வருதி! அதுதான் யாதெனின்; என்க.

(வி-ம்) பின்னுதல் மாத்திரையோடு பிறிதியாதும், ஒப்பனை செய்யாமல் முடித்த முச்சி என்றவாறு. மண்ணாமுச்சி - நீராடுதல் இல்லாத உச்சி எனினுமாம். நெய்கனி வீழ் குழல் என்றது ஐம்பாலில் குழல் என்பதற்குரிய அடைமொழிகள். குழலாக விடவேண்டிய கூந்தலையும் கொண்டையோடு சேர்த்துக்கட்டி என்றவாறு. இதனாற் கூறியது ஐம்பால் என்னும் பாகுபாடின்றிக் குழலை முச்சியாகவும் பின்னலை முடியாகவும் வேண்டியவாறே கட்டி என்பதாம் வெருகு- காட்டுப்பூனை. இதன் கண்கள் இருளில் பெரிதும் ஒளியுடையனவாகவும் வட்டமாகவும் இருக்கும். ஆதலின் முத்திற்கும் ஒளிக்கும் உவமையாயிற்று. அணங்கு- அருந்ததி என்பாருமுளர். மடங்கொள சாஅய் - தென்னல் கண்ட திருமேனி இன்று பிறிதாய் நிலைதளர்தலின் இவளைக் கண்டோர் தலைவி என்றறியாதபடி மடமையைச் செய்யும்படி மெலிந்து என்றவாறு. நின் நோய்க்கு வருந்துவதோடன்றி என்னோய்க்கும் வருந்துகின்றாய்.. ஆதலின் நின் வருத்தம் இருமடங்காகின்றது என்பது கருத்து. ஆறன்று- தலைவன் பிரிவை ஆற்றியிருப்பதே மகளிர்க்கு நல்லாறு என்று கூற வேண்டிய யான் அங்ஙனம் கூறமாட்டாமல் நீ வருந்துமாறே யானும் வருந்துகின்றேன் என்றிரங்கியபடியாம். இதற்குக் காரணம் நின்னறிவு கண்டதையே என்னறிவும் காண்பதேயாம். என்றவாறு. எனவே, பிரிவாற்றாமை உனக்கு எத்துணையுளதோ அத்துணையும் எனக்கும் உளது என்றாளாயிற்று,. இருவருடைய படரும் ஒன்றே; அப்படர் தீர்தற்கு மருந்து அவர் வரவு , அவர் வருவதனை: காணிய வம்- காண்டற்கு வருவாயாக! இனி அவர் இன்னே வருவர் என்றபடியாம். வருவது- வருதற்குரிய அறிகுறி. அஃது இனிக் கூறப்படும்

12-17: கொடி..........மழையே

(இ-ள்) கொடி பிணங்கு அரில- பூங்கொடிகள் பின்னிப் படர்ந்துள்ள குறுங்காட்டின் கண்ணே; இருள்கொள் நாகம் மடிபதம் பார்க்கும் - இருண்ட நிறத்தையுடைய யானை சோர்வுற்றுக் கிடக்கும் செவ்வியை ஆராய்கின்ற அரியேற்றின் வலிமைபோன்ற வலிமையையுடைய ; ஏனலம் சிறுதினைச் சேணோன்- ஏனல் என்னும் அழகிய சிறிய தினைப்புனத்தைக் காக்கின்ற பரணிடத்தோனாகிய கானவனது ; கையதை கைப்பிடி அமைந்த கனல்வாய்க்கொள்ளி விடு பொறிச் சுடரின் மின்னி - கையின் கண்ணதாகிய கைப்பிடி அமைந்துள்ள தீயைத் தன்னிடத்தே கொண்டுள்ள கொள்ளிக் கட்டையானது வீசப்படும் பொழுது தெறிக்கின்ற தீப்பொறிகளைப் போன்று மின்னுதலைச்செய்து; அவர் சென்ற தேஎத்து மழை நின்றது - நம்பெருமான் சென்ற திசையிலே மழையானது இறங்கி நிலைபெற்றது ஆதலான் அவர் இப்பொழுதே வருவர் காண் என்பதாம்.

(வி-ம்) கொடிகள் பிணங்கிய குறுங்காட்டினூடே யானைகள் தான் சோர்ந்திருக்கும் செவ்வியைப்பார்த்து மறைந்து நிற்றற்கிடனான எனலுமாம். கைப்பிடி- பிடிக்கை என மாறிநின்றது. சேணோன்- பரணிடத்துள்ள கானவன். அவன் யானை முதலியவற்றின் வரவு காண்டற்குக் கைக்கொள்ளியை வீசி ஒளி பெருக்குங்கால் தெறிக்கும் சுடர் மின்னலுக்குவமை. தேஅம்- திசை; நாடுமாம். நம்பெருமான் கார் வருமுன் என் தேர்வந்து நம்முன்றிலில் நிற்கும் என்று கூறிப்போந்தமையால் அங்கு மழைபெய்கின்றது. ஆதலால் இப்பொழுதே வருவர் அவர் வருவது காண்டற்கு வருதி என்றவாறு

இனி இதனை தோழி நீதானும் நின்னோய்த் தலையையும் அல்லை என்னழிபும் இரங்குதி அங்ஙனம் இரங்கும் நீயும் யானும் ஆகிய இருவேமும் படர்தீர அவர் வருவது காணிய வம்மோ எற்றாலறிதியெனின் அவர் சென்ற தேஎத்து மழைநின்றது, ஆதலான் என இயைத்திடுக.

(பா-வே.) 2. நெடுவீழகப்பட. 6. தெய்ய.
-----------

செய்யுள் 74


திணை: முல்லை
துறை: தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

(து-ம்) அஃதாவது--தலைவன் தன் மன்னனுக்கு பகைவர் போர் வந்துற்றுழி அவனுக்குத் துணையாகத் தலைவியைப்பிரிந்து சென்றானாக,, அப்பிரிவா ற்றாமையல் தலைவி பெரிதும் வருந்துவாளைத் தோழி நீ ஆற்றியிருத்தலே பெருந்தகைமையாம் என வற்புறுத்தினள்; அதுகேட்ட தலைவிதான் ஆற்றுதற் கேலாமைக்குக் காரணம் கூறியது என்றவாறு.

(இ-ம்) இதனை, "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" எனவரும் நூற்பாவின்கண் "கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் " என்பதனாற் கொள்க.

    வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து
    போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்
    தண்பெயல் பொழிந்த பைதுறு காலை
    குருதி உருவின் ஒண்செம் மூதாய்
    பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப்         5
    பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
    வெண்களர் அரிமணல் நன்பல‌ தாஅய்
    வண்டுபோ த‌விழ்க்கும் தண்கமழ் புறவில்
    கருங்கோட் டிரலை காமர் மடப்பிணை
    மருண்டமான் நோக்கம் காண்டோறும் நின்னினைந்து         10
    திண்டேர் வலவ கடவெனக் கடைஇ
    இன்றே வருவர் ஆன்றிகம் பனியென
    வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
    நின்வலித் த‌மைகுவ‌ன் மன்னோ அல்கல்
    புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல்         15
    கல்லாக் கோவலர் ஊதும்
    வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே.
            ---ம‌துரைக் க‌வுணிய‌ன் பூத‌த்த‌னார்.
            (ம‌துரைக் க‌வுணிய‌ன் முத்த‌னார் என்றும் பாட‌ம்.)

(உரை)

1-8: வினைவ‌ல‌ம்.......புற‌வின்

(இ-ள்.)வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து- தோழி ஈதொன்று கேள்; நீதானும் போற் மேற் சென்ற‌ ந‌ம் பெருமான் தாம் மேற்கொண்ட‌ போர் வினையை வெற்றியுடைத்‌தாக‌ முடித்து அவ் வெற்றி கார‌ணமாகத்‌ த‌ம் நெஞ்சினுள்ளே பிற‌க்கும் ம‌கிழ்ச்சியாலே சிற‌ப்புற்று: போர்வல் இளையர் தாள் வலம் வாழ்த்த- போர்த் தொழிலின் வன்மையுடைய தம் போர் மறவர் தாமே தமது முயற்சியாலுண்டான வெற்றியை விளம்பித் தம்மை வாழ்த்தா நிற்ப; தண் பெயல் பொழிந்த பைது உறுகாலை- தாம் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்துற்றுத் தண்ணிய மழையைப் பொழிதலாலே நந்தம் முல்லைப் பரப்பெல்லாம் பசுமை பெறுகின்ற இப்பொழுதே; குருதி உருவின் ஒள் செம்மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப- குருதி நிறத்தை ஒத்த ஒள்ளிய செந்நிறமுடைய இந்திர கோபங்கள் ஊர்ந்து அவ‌ர்த‌ம் தேர் வ‌ருகின்ற‌ பெரிய‌ வ‌ழியின் இருபக்கங்களினும் சிறிய பற்பல ஓவியங்களைத் தோற்றுவியா நிற்ப; பைங்கொடி முல்லை மெல் பத நல்பல புது வீ - பசிய கொடியையுடைய முல்லையினது மெல்லியல்புடைய அழகிய பலவாகிய புதிய மலர்கள் தாம். வெள்களர் அரிமணல் தா அய் - வெள்ளிய களரிடத்தே அறல்பட்ட மணலின் மேலே உதிர்ந்து பரவிக்கிடவா நிற்பவும்; வண்டு போது அவிழ்க்கும் - வண்டினங்கள் அவற்றில் தேனுண்ணாமல் கொடியின் கண் உள்ள நாளரும்புகளைக் கிண்டி மலர்விக்கும்; தண் கமழ் புறவில் - தண்ணிய மணங்கமழா நின்ற முல்லைப்பரப்பிலே என்க.

(வி - ம்) நம் பெருமான் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவல் அதுகாறும் வருந்தற்க என்று நம்மைத் தேற்றிச் சென்றாரல்லரோ? அவர் உரை பொய்ப்ப இருப்பாரோ? இரார். இன்னே வருவர் என்றறிவுறுத்தற்குக் கார்ப்பருவ வரவினை விதந்தோதினள். மேலும் அவர் சென்ற போர்தொறும் வென்றியே விளைக்கும் பேராற்றல் உடையராதலின் அவர் மேற்கொண்ட வினையையும் வலம்படுத்து அவ் வென்றியொடு மகிழ்சிறந்து இளையர் வாழ்த்த இன்னே வருவது தேற்றம் என்று ஆற்றுவிப்பாளாயினள். ஈண்டுக் கார்ப்பருவத்தாலே கவினுற்ற முல்லைப் பரப்பினைச் சொல்லோவியமாக இப்புலவர் பெருமான் தீட்டியிருத்தலுணர்ந்தின்புறற் பாற்று.

9 - 14 : கருங்கோட்டு ....... மன்னோ

(இ - ள்.) கருங்கோட்டு இரலை காமர் மடப்பிணை மான் மருண்ட நோக்கம் காண் தொறும் நின் நினைந்து - கரிய கொம்பினையுடைய இரலைமானிற் கலைமான்களைத் தாம் விரும்புவதற்குக் காரணமான இளைய பிணைமான்கள் நோக்கா நின்ற மயக்கமுடைய நோக்கத்தை நம்பெருமான் யாண்டும் காண்பரல்லரோ? அங்ஙனம் காணும் பொழுதெல்லாம் அவர் நின்னை நினைந்து; திண்தேர் வலவ கடவு எனக் கடைஇ - திண்ணிய தேரைச் செலுத்துகின்ற பாகனே ! நந்தேரினை விரைந்து செலுத்துதி எனக்க கூறிச் செலுத்துவித்து; இன்றே வருவர் - இற்றைநாளே வந்து சேர்வார்காண் ! பனி ஆன்றிகம் என - அவர் வருமளவும் யாம் நமது துன்பத்தை மறந்து அமைவேம் என்று; வன்புறை இன்சொல் நல்பல பயிற்றும் - வற்புறுத்தலாகிய சொல்லினும் அன்புறுதகுந வாகிய இனிய சொற்கள் நல்லன பலவற்றைப் பலகாலும் கூறுகின்ற; நின் வலித்து - நின் சொல்லை உறுதியாகப்பற்றி; அமைகுவென்மன் - யான் ஆற்றியிருப்பேன் காண் ! ஆயினும் அங்ஙனம் இருக்கும் வலியிலேன் ; என்க.

(வி - ம்.) இரலை - மான் வகையுள் ஒன்று. பின்னர்ப் பிணைமான் கூறுதலின் இரலையில் ஆண்மான் என்க. இரலை என்பதே கலைமானைக் குறிக்கும் என்பாருமுள‌ர். காம‌ர் - விருப்ப‌ம். க‌லைமான், விரும்புத‌ற்குரிய‌ பிணைமான், அதனைக் காமுற்றுப் பார்க்கும் ம‌ருண்ட‌ பார்வை. என‌வே ஒன்றை ஒன்று காமுற்று நோக்கும் என்ப‌தாயிற்று. இவ‌ற்றை நோக்க‌வே ந‌ம் பெருமான் நின்னை நினைவ‌து தேற்ற‌ம் என்ற‌வாறு. இனி "வினைவ‌ல‌ம்.. என்ப‌து தொட‌ங்கி ஆன்றிக‌ம் ப‌னி" என்னுந் துணையும் தோழி த‌ன்னை ஆற்றுவிப்பாள் கூறிய‌வ‌ற்றையே த‌லைவி கொண்டு கூறிய‌ப‌டியாம். ஆன்றிக‌ம்: வினைத்திரிசொல். அமைவேம் என்ற‌வாறு. ப‌னி-துன்ப‌ம். கார‌ண‌த்தைக் காரிய‌மாக‌க் கூறிய‌ப‌டியாம். இத‌ன்க‌ண், க‌ருங்கோட்டிர‌லை காம‌ர் ம‌ட‌ப்பிணை ம‌ருண்டமா னோக்க‌ம் காண்டொறும் நின்னை நினைவ‌ர் என்ற‌து அன்புறு த‌குந இறைச்சியிற் சுட்டி வ‌ற்புறுத்திய ப‌டியாம். இத‌னை,

" அன்புறு த‌குந இறைச்சியிற் சுட்ட‌லும்
வ‌ன்புறை யாகும் வ‌ருந்திய‌ பொழுதே"

என‌வ‌ரும் தொல்காப்பிய‌த்தானு ம‌றிக‌.( பொருளிய‌ல்.37) ம‌ன்- ஒழியிசை.

14-17: அல்க‌ல்.... வ‌ருத்தாக்காலே

(இ-ள்.) அல்கல் புன் கண் மாலையொடு பொருந்தி- நாள் தோறும் தனித்துறைவார்க்குக் கொலைக்களத்தேதிலர்போலத் துன்பத்தையே கொண்டு வருகிற இவ்வந்தி மாலைப் பொழுதோடு ஒருசேரப் பொருந்தி; கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும்- வளைந்த கோலையும் கல்லாமையையும் உடைய ஆயர்கள் ஊதுகின்ற; வல்வாய்ச் சிறுகுழல் - வ‌லிய‌ வாயையும் சிறுமையையும் உடைய‌ வேய்ங் குழ‌லின‌து இசை வ‌ந்து என் செவித்தொளை வ‌ழியாக‌ப் புகுந்து என் பேதை நெஞ்ச‌த்தை வ‌ருந்தா தொழியுமேல் ஆற்றியிருத்தலும் கூடுங்காண்! என்ப‌தாம்.

(வி-ம்.) காம‌ நோய் ம‌லையில் ம‌ல‌ர்ந்து வ‌ருத்து மிய‌ல் புடைத்தாக‌‌லின் அவ்வ‌ருத்த‌த்தை மாலைக் கேற்றின‌ள். துன்ப‌த்தின் மேலும் துன்ப‌மாய்க் குழ‌லிசை வ‌ருகின்ற‌து என்பாள். புன்க‌ண் மாலையொடு பொருந்தி வரும் என்றாள். அத‌ன் இசை த‌ன்னை வ‌ன்மையாக வ‌ருத்தும் என்பாள் வ‌ன்மையைக் குழ‌லின் வாய்க்கு அடைபுண‌ர்த்தாள். துன்புறுவார்க் கிர‌ங்காமை‌ சிறுமைக்குண‌ம் என்ப‌து போதர‌ச் சிறுகுழ‌ல் என்றாள். இனி அத‌னை ஊதும் கோவ‌ல‌ரும் கொடிய‌ர் என்ப‌துப‌ட‌க் கொடுங்கோல‌ர் என்றாள், இனி, மாடு மேய்க்க‌க் க‌ற்ற‌‌த‌‌ன்றி‌ அற‌நூல் க‌ல்லாதார் என்ப‌துப‌ட‌க் க‌ல்லாக் கோவ‌ல‌ர் என்றாள்; அற‌நூல் க‌ற்றவ‌ராயின் த‌ஞ்செய‌லால் பிற‌ரை வ‌ருத்தா தொழிவ‌ர் என்ப‌து க‌ருத்து.

வ‌ருத்தா‌க்கால் ஆற்றியிருப்பன் என‌வே ஆற்றியிருத்த‌லே என் க‌ட‌மை என்ப‌தை யானும் அறிகுவ‌ன் என்றாளாற்று.* இப்பொழுது அஃது என்வ‌ரைத்த‌ன்று என்ப‌து குறிப்பு.

இனி, இத‌னை தோழி! இன்றே வ‌ருவர் ப‌னி ஆன்றிக‌ம் என‌ப் ப‌யிற்றும் நின் வ‌லி‌த்த‌மைகுவ‌ன். ஆனால் அல்க‌ல் கோவ‌ல‌ர் ஊதும் குழ‌ல் வ‌ருத்தாக்கால் அது வ‌ருத்துத‌லின் அமைய‌கில்லேன் என‌ இயைபு காண்க‌.
----------

செய்யுள் 75


திணை: பாலை
துறை: பொருள்வ‌யிற் பிரிவ‌ரென‌ வேறுப‌ட்ட‌ த‌லைம‌க‌ட்குப் பிரியேனெ‌ன‌த் த‌லைம‌க‌ன் சொல்லிய‌து.

(து-ம்.) அஃதாவ‌து-த‌லைவ‌ன் பொருள்வ‌யிற் பிரிய‌ நினைப்ப‌த‌னைக் குறிப்பாலுண‌ர்ந்த‌ த‌லைவி க‌வ‌லையுற்று மெய்வேறுப‌ட்டுப் பிர்வாற்றாமையாலுண்டாந் துன்ப‌த்தை உல‌கின் மேலிட்டுக் குறிப்பால்
த‌லைவ‌ன் கேட்ப‌க் கூறினளாக‌ அதுகேட்ட‌ த‌லைவ‌ன் இவ‌ள் இப்பொழுது யாம் பிரியின் ஆற்றாது இற‌ந்துப‌டுவ‌ள் என்று க‌ருதி யான் பிரியேன் என்று கூறிச் செல‌வ‌ழுங்கிய‌து என்ற‌வாறு.

(குறிப்பு- இத‌னைத் தோழி கூற்றாக‌க் க‌ருதுவாருமுள‌ர். அது பொருத்த‌மாக‌த் தோன்ற‌வில்லை; த‌லைவ‌ன் கூற்றாக‌க் கோட‌லே நேரிதாம்.)

(இ-ம்.) இதற்கு "க‌ர‌ண‌த்தின் அமைந்து முடிந்த‌ காலை" என‌ வ‌ரும் நூற்பாவின்க‌ண் (தொல்.க‌ற்பி.5) "வேற்றுநாட் ட‌க‌ல்வ‌யின் விழும‌த் தானும்" என‌வ‌ரும் விதி கொள்க‌.

    அருளன் றாக ஆள்வினை ஆடவர்
    பொருளென வலித்த பொருளல் காட்சியின்
    மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
    எரிசினந் தவழ்ந்த இருங்கடற் ற‌‌டைமுதல்
    கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை         5
    அடுபுலி முன்பின் தொடுகழல் மறவர்
    தொன்றியல் சிறுகுடி மன்றுநிழல் படுக்கும்
    அண்ணல் நெடுவரை ஆம‌றப் புலர்ந்த
    கல்நெறிப் படர்குவ ராயின் நன்னுதல்
    செயிர்தீர் கொள்கைச் சின்மொழித் துவர்வாய்         10
    அவிர்தொடி முன்கை ஆயிழை மகளிர்
    ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
    ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
    சென்றுபடு விறற்கவின் உள்ளி என்றும்
    இரங்குநர் அல்லது பெயர்தந் தியாவரும்         15
    தருநரும் உளரோஇவ் வுலகத் தானென
    மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
    அம்மா மேனி ஐத‌மை நுசுப்பின்
    பல்காசு நிரைத்த கோடேந் த‌ல்குல்
    மெல்லியற் குறுமகள் புலந்துபல கூறி         20
    ஆனா நோயை ஆக யானே
    பிரியச் சூழ்தலும் உண்டோ
    அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே
            ----ம‌துரைப் போத்த‌னார்

(உரை)

17-21: மாரி....குறும‌க‌ள்

(இ-ள்.) மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி ஐது அமை நுசுப்பின்- கார்ப்ப‌ருவ‌த்தே தளிர்த்த‌ இண்டையின‌து கரிய‌ த‌ளிரின‌து நிற‌ம் போன்ற‌ அழ‌கிய‌ க‌ரிய‌ நிற‌த்தையும்- நுண்மையான‌ இடையினையும்; பல்காசு நிரைத்த கோடு ஏந்து அ‌ல்குல்- ப‌ல‌வாகிய‌ பொற்காசுக‌ளை நிர‌லாக‌க் கோக்க‌ப்ப‌ட்ட மேகலையையும் உடைய‌ விளிம்புக‌ள் உய‌ர்ந்த‌ அல்குலினியும்‌, மெல் இயல் குறுமகள்- மெல்லிய‌ சாய‌லையும் இளைமையினையும் உடைய காத‌லியே கேள்! என்க‌.

(வி-ம்.) மாரி- கார்ப்ப‌ருவ‌ம். ஈங்கை- இண்ட‌ங்கொடி. இத‌ன் த‌ளிரின் நிற‌ம் த‌லைவியினிற‌த்திற்குவ‌மை. மா-க‌ருமை. மாமேனி- மாமை நிற‌ம். ஐது- நுண்மையுடைய‌து. காசு- பொற்காசு. குறும‌க‌ள் என்ப‌து செல‌வ‌ழுங்குத‌ற்கொரு குறிப்பேதுவுமாகும்.

1-9: அருள‌ன்றாக‌......ப‌ட‌ர்குவ‌ராயின்

(இ-ள்.) ஆடவர்- ஆண் ம‌க்க‌ள்; அருள் அன்று ஆக- அருளே உறுதிப் பொருளாக‌வும் அது பொருள‌ன்று என்று ஆகிவிடும்ப‌டி; ஆள்வினை பொருள் என வலித்த- அவ்வ‌ருளைத் துற‌ந்து ஆள்வினையை மேற்கோட‌லே உறுதிப் பொருளாகும் என்று துணித‌ற்குக் கார‌ண‌மான‌; பொருள் அல் காட்சியின்- ம‌ருட்காட்சியுடை‌மையாலே; மைந்து மலி உள்ளமொடு- வலிமைமிக்க‌ ஊக்க‌த்தோடு; துஞ்சல் செல்லாது-* ம‌டிந்திராம‌ல்; எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று - தீயின‌து வெப்ப‌ம் த‌வ‌ழ்ந்த பெரிய‌ பாலை நில‌த்திலே; அடைமுதல் கரிகு உதிர்மரத்த- இலை முதலியன கரிந்து உதிர்ந்த மரத்தையுடைய ; கான வாழ்க்கை- காட்டின் கண்ணே வாழும் வாழ்க்கையினையுடைய ; அடுபுலி முன்பின் கழல் தொடு மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று- கொல்லுகின்ற புலியை ஒத்த வலிமையையுடைய வீரக் கழல் கட்டிய அடியினையுடைய எயின மறவருடைய பழையதாய் வருகின்ற சிறிய ஊரின்கண் அமைந்த மன்ற முழுதும்; நிழற்படுக்கும் அண்ணல் நெடுவரை- நிழலைப் பரப்புகின்ற பெருமையுடைய நெடிய மலை மிசைச் செல்லுகின்ற; ஆம் அறப் புலர்ந்த- நீர் அறும்படி காய்ந்தொழிந்த ; கல்நெறிப் படர்குவராயின்- பரற்கற்களையுடைய வழியிலே செல்லுவாராயின் என்க.

(வி-ம்) அருளே சிறந்த பொருளாகவும் அதனைப் பொருளாக மதியாமல் ஆள்வினையையே ஆடவர் பொருளாகக் கருதுகின்றனர். அங்ஙனம் கருதுவதற்குக் காரணம் அவர்தம் அறியாமை என்பாள் "அருளன்றாக....பொருளல் காட்சியின்" என்றாள் , ஈண்டு,

"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள. " (குறள். 241)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களையும் நோக்குக.

பொருளல் காட்சி- மருட்காட்சி. மைந்து- வலிமை. உள்ளம்- ஊக்கம். துஞ்சல்- மடிந்திருத்தல். கடறு- பாலைநிலம். அடை- இலை. கரிபுகு எனல் வேண்டிய எச்சம் ஈற்றுயிர் மெய் கெட்டது. விகாரம் . முன்பு- வலி. மறவர். ஈண்டு எயினமறவர் . சிறுகுடி சிற்றூர்.
மன்றின்கண்ணே அயலதாகிய நெடியமலை நிழலைப்பரப்பும் என்றவாறு மலையின் நீழலன்றி மற்றொரு நீழலுமில்லாத கல்நெறி என்பது கருத்து.

9-16: நன்னுதல்..........உலகத்தானென

(இ-ள்) நல் நுதல் செயிர்தீர் கொள்கைச் சில் மொழித்துவர் வாய் அவிர் தொடி முன் கை ஆய் இழை மகளிர்- அழகிய நெற்றியினையும் குற்றமற்ற கொள்கையினையும் சிலவாகிய மொழிகளையும் விளங்குகின்ற வளையலணிந்த முன் கையினையும் ஆராய்ந்தணிந்த அணிகலன்களையும் உடைய அவர்தம் காதன் மகளிருடைய ; ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடைக் குழையாது- முத்துமாலை அணிந்த அடி பரந்த முலைகளையுடைய மார்பிடத்தே நுகர்ந்து நுகர்ந்தமையாத பெரிய காதலோடே முயங்குங்கால் கணவரின் மார்பிலணிந்த மலர்மாலை அம்முயக்கிடையே அகப்பட்டுக் குழையாமையாலே; சென்று படு விறல் கவின் உள்ளி- அம் மகளிர்பானின்று அகன்று போயழிகின்ற பேரழகினைப் பின்னர் நினைந்து நினைந்து; இரங்குநர் அல்லது- கழிபேரிரக்கம் கொள்வாருளராதலல்லது; யாவரும் பெயர்தந்து தருநரும் இவ்வுலகத்தான் உளரோ என - யாரேனும் அவ்வழகினை மீட்டுக் கொணர்ந்து கொடுப்போர்தாம் இப்பேருலகத்தே உளராவரோ! என்று கூறி என்க.

(வி-ம்) "அருளன்றாக என்பது தொடங்கி.............உலகத்தான்" என்னுமளவும் தலைவன் தலைவி கூற்றைக்கொண்டு கூறினான். தலைவி நீயிர் இப்பொழுது பிரிந்தீராயின் பின்னர் எப்பொழுதும் என்னைக் குறித்து இரங்குதல் தேற்றம் என்பாள், அக்கருத்தை உலகத்துமகளிர் மேலிட்டுக் கூறியபடியாம் என்றறிக. தாரிடைக் குழையாது என்றது இடக்கரடக்கு. குழையாது- குழையாமையால் என, கவின் சென்று படுதற்கு ஏதுவாக்குக. விறல்- வெற்றி. மகளிர் வெற்றிக்குக் காரணம் கவினே ஆதலால் விறற் கலின் என்றாள். தான் இறந்துபடுதல் தேற்றம் என்பாள், அதனைக் கலினுக்கேற்றிக் கூறினள். இவ்வுலகத்தான் என்புழி மூன்றனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று.

21- 24: புலந்து.....நின்வயினானே

(இ-ள்) புலந்து பல கூறி ஆனா நோயை ஆக- என்னோடு பிணங்கிப் பற்பலவற்றை முன்னிலைப் புற மொழியாகச் சொல்லி அமையாத துன்பமுடையை ஆக அதனைக் கண்டு வைத்தும்; அரிது பெறு சிறப்பின் நின்வயினான்.- இவ்வுலகத்தே அரிதாகப் பெறுதற்கியன்ற பெண்மைச் சிறப்பினையுடைய நின்னிடத்தினின்றும்; பிரிய யான் சூழ்தலும் உண்டோ- பிரிந்து வினைவயிற் செல்ல நினைத்தலும் உளதாகுமோ? ஆகாதன்றே, நீ வருந்தாதே கொள் என்பதாம்,

(வி-ம்) புலந்து- ஊடி. எனவே முற்கூறியவை எல்லாம் தலைவன் கேட்பவே முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறினமை பெற்றாம்.

இதன்கண் மறவர் சிறுகுடி மன்றத்தை ஆங்குள்ள அண்ணல் நெடுவரை நிழற்படுக்கும் என்றது; அந்த மலைபோன்று யான் பிரிவுத் துன்பத்தாலே இறந்துபடாவண்ணம் நீயும் எனக்கு நினதின்னருளைத்தந்து அளிப்பாயாக என்பது உள்ளுறை உவமமாதலும் உணர்க.

அரிது பெறு சிறப்பு என்றது உலகத்துப் பெண் பிறந்தோர் எல்லாம் பெறுதற்கரிய ஒருசிலரோ பெறுதற்கியன்ற பெண்மைச் சிறப்புகள். அவற்றை--

"கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்"

எனவரும் தொல்காப்பியத்தான் (கற்பி. 11) உணர்க.

இனி இதனை, "குறுமகள் நீ ஆடவர் பொருளல் காட்சியின் உள்ளமொடு துஞ்சல் செல்லாது கன்னெறிப் படர்குவராயின் சென்றுபடுவிறற் கவின் உள்ளி இரங்குநர் அல்லது இவ்வுலகத்துப் பெயர்தந்து தருநரும் உளரோ எனக் கூறி நோயை ஆக நின்வயிற் பிரிய யான் சூழ்தலும் உண்டோ என இயைத்திடுக.

(பா. வே.) துறை: பொருள்வயிற் பிரிவரென வேறுபட்ட தலை மகட்குப் பிரியாரெனத் தோழி சொல்லியது.
---------------

செய்யுள் 76


திணை: மருதம்
துறை: தலைமகளை நயப்பித்துக் கொண்டாளென்று கழறக்கேட்ட பரத்தை தலைமகள் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-- தலைவன் பரத்தையர் சேரிக்கண் தன் காமக் கிழத்தியாகிய இளம்பரத்தை யொருத்தியின் நாடகம் காண நயந்து சென்றமை அறிந்த தலைவி அப்பரத்தையின் தோழிமார் கேட்ப அவள் ஆடலும் பாடலுங் காட்டி நின்னைப் பற்றிக் கொண்டாள் என்று கூறித் தலைவனோடு ஊடினள். அதனை அறிந்த அப்பரத்தை தலைவியின் தோழிமார் கேட்கும்படி இத்துணையோ செய்குவன் அவனை முழுதும் இனி என்வழிப்படுத்தவும் எண்ணியுளேன் எனச் சூண் மொழிவாள் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, (தொல்-கற்பி. 10) "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்" எனவரும் விதிகொள்க. (ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இதற்கிதனையே காட்டினர்.)

    மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
    தண்டுறை ஊரனெம் சேரி வந்தென
    இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
    நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை
    அவைபுகு பொருநர் பறையின் ஆனாது         5
    கழறுபஎன்பவவன் பெண்டிர் அந்தில்
    கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
    வகையமைப் பொலிந்த வனப்பகை தெரியல்
    சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
    ஆதி மந்தி பேதுற் றினையச்         10
    சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும்
    அந்தண் காவிரி போலக்
    கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே.
            ---பரணர்.

(உரை)

1-6: மண்கனை........அந்தில்

(இ-ள்.) மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க- யாங்கள் ஓரிரவு மண் பூசப்பட்டு முழங்கும் முழக்கத்தையுடைய முழவு முதலிய இன்னிசைக் கருவிகளோடே காண்போர் மிகவும் மகிழ்தற்குக் காரணமான கூத்தாட்டத்தை இயற்றினோமாக; தண் துறை யூரன் எம்சேரி வந்தென- அவ்விசையும் கூத்தும் கேட்டும் கண்டும் களித்தற்கு விரும்பிக் குளிர்ந்ததுறையையுடைய தலைவன் எமது சேரிக்கு யாமழையாமலே எழுந்தருளினானாக; அவன் பெண்டிர் - இதனை அறிந்து அவன் மனையுறை மகளிர் எம்பால் அழுக்காறு கொண்டு; இன் கடுங் கள்ளின் அஃதை- இனிமையையும் கடுப்பினையுமுடைய கள்ளினையுடைய அஃதை என்னும் வள்ளற்பெருமான்; களிற்றொடு நன்கலம் ஈயும் மகிழ்நாள் இருக்கை - தன்பால் வந்த பரிசிலர்க்கெல்லாம் களிற்றியானையோடே அழகிய அணிகலங்களையும் பரிசிலாக வழங்குகின்ற மகிழ்ச்சியையுடைய நாளோலக்க மண்டபத்தின் கண்ணே அரியணையில் வீற்றிருக்கின்ற பொழுது குழுமியுள்ள; அவை புகு பொருநர் பறையின் - நல்லவையிலே புகா நின்ற கூத்தரது தடாரிப்பறைபோன்று; ஆனாது கழறுப என்ப- இடையறாது என்னை இகழ்ந்து தலைவனை இடித்துரைப்பர் என்று எனக்குப் பாங்காயினார் கூறிநிற்பர் என்க.

(வி-ம்.) யாங்கள் எம்மியற்கைக் கிணங்கக் கூத்தும் பாட்டும் இயற்றினேம்; அக்கலைநலங் காமுற்றுத் தண்டுறையூரன் தானே எம் சேரி வந்தானல்லது அவனை அவற்றாலே யாம் வசஞ்செய்திலேம் என்பாள், யாம் தூங்க ஊரன் வந்தான் என்றாள். அவன் பெண்டிர் கழறுப என்றது தலைவியைக் குறித்துக் கூறியவாறு. ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று. கழறுதல் இடித்துரைத்தல். எனவே தலைவி தலைவனை நோக்கி 'நின்னைப் பரத்தை தன்னிசையாலும் கூத்தாலும் தன்வயப்படுத்திக்கொண்டனள் ; நீ அவள் சேரிக்கே செல்லுக! ஈண்டெம்மில்லம் புகாதே கொள்!' என்று கடிந்தனள் என்று அவள் பாங்காயினார் கூறக்கேட்டனள் என்பது தோன்றிற்று. அவன் இடையறாது இங்ஙனம் தன்னை யிகழ்ந்து தலைவனைக் கடிகின்றாள் என்றற்கு அஃதை அவைபுகும் பொருநர் பறையை உவமை எடுத்தோதினள்,

இனி இவ்வேளை உவமையே ஈண்டு உள்ளுறை உவமையாகவும் இப்பரத்தை கூறியது கூர்ந்துணரற் பாலது. என்னை? அஃதை பரிசிலர்க்கு இன்கள்ளும் களிறும் அணிகலமும் வழங்குதல் போன்று யாமும் எம்பால் வருகின்ற ஊரனுக்குப் பெண்மை நலமும் கலைநலமும் அளிப்பேம் ஆதலால் அவன் அவளினுங் காட்டில் எம்மையேபெரிதும் விரும்புகின்றான் எனத் தலைவியை இகழ்ந்தாளும் ஆதலறிக அந்தில்: அசை.

7-13 கச்சினன்..............யானே

(இ-ள்.) ஆதிமந்தி - பண்டொருநாள் ஆதிமந்தி என்பவள் தன் கணவனைக் காணப்பெறாமல்; கச்சினன் கழலினன்தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த தெரியல் சுரியல்அம் பொருநனை காண்டிரோ என- அந்தோ? கச்சணிந்தவனும் கழல் கட்டியவனும் பல்வேறு வகைத் தொழிற்றிறம் அமைந்து பொலிவுற்ற மாலையினையும் சுரிந்த தாடிமயிரினையும் உடைய அழகிய ஆடுகள மகனாகிய என் கணவனை நீயிர் கண்டிரோ? என்று எதிர் வருவோரையெல்லாம் வினவி விடை பெறாமையாலே; பேதுஉற்று இனைய- பெரிதும் மயங்கி வருந்தும்படி; சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் அந்தண் காவிரிபோல- அணையை அழித்துக் கரைகளை உராஅய்ந்து மெலித்து நேர் கிழக்காகப் பாய்கின்ற அழகிய குளிர்ந்த காவிரிப் பேரியாறு அவள் கணவனாகிய ஆட்டனத்தியைக் கைக் கொண்டாற்போல; கைக்கொண்டு வலித்தல் சூழ்ந்திசின் - இப்பொழுது யான் ஊரனை முழுதும் கைப்பற்றிக்கொண்டு என்னுடையவனே அவன் என்பதை உறுதி செய்தற்குச் சூளுறவோடு துணிந்துள்ளேன். இதனை அவட்குப் பாங்காயினார் அவட்குக் கூறுவாராக! என்பதாம்.

(வி-ம்.) ஆதிமந்தியின் வரலாறு சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும் இந்நூலினும் "ஆட்டனத்தி நலளயந்து உரைஇத் தாழிருங்கதுப் பின் காவிரி வவ்வலின் மாதிரத்துழைஇ மதிமருண்டலந்த ஆதிமந்தி" என இவ்வாசிரியரே (பரணர்) ஓதுவர். (அகம். 222)

என் பெண்மை நலம் தலைவியின் பெண்மை நலத்தினும் சிறந்தமையாலே தலைவன் தானே என்னை விரும்பி என்மனைக்கு வருகின்றான். அவனை யான் என் ஆடல்பாடலால் வசஞ் செய்து கொண்டேன் என்பாளாயின் இனி அவனை என்பாலே இருத்தி விடுவேன் அப்பொழுது அவள் என் செய்வள்? என மறம் பேசிய படியாம்.

இனி, இதனை யாம் மகிழ் தூங்க ஊரன் வந்தனன் அவன் பெண்டிர் கழறுப என்ப அங்ஙனமாயின் யான் இனி அவனைக் கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் என இயைத்திடுக.

இதனை அவட்குக் கூறுக என்பது குறிப்பு.

(பா.வே.) 1. முழவமொடு. 9. காணீரோ..11. சிறை பாய்ந்
------------------

செய்யுள் 77


திணை: பாலை
துறை: தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லி, செலவழுங்குவித்தது.

(து-ம்.) அஃதாவது-- தலைவியை மணந்து கொண்டு அவளோடு இரண்டறக் கலந்தின்பமெய்தித் தலைவன் இல்லறந் தலைநிற்குங்கால் அவன் நெஞ்சம் அவனொடு மாறுபட்டு அவனுக்குப் பொருளினது சிறப்பைப் பல்லாற்றானும் எடுத்துக்காட்டி யாமிப்பொழுது. இவளைப் பிரிந்து போய்ப் பொருள் ஈட்டிவருதல் வேண்டும் என இடையறாது வற்புறுத்துவதாயிற்று. இதுகண்ட தலைவன் யாமிப் பொழுது இவளைப் பிரிந்து சென்றால் சென்றவிடத்தும் இவளையே நினைந்து வருந்துதலன்றி ஆள்வினை செய்யும் வலியிலேமாதல் ஒருதலை; ஆகவே இப்பொழுது அக்கருத்தைக் கைவிடுக! என்னோடொன்றி இன்பமே திளைத்து மகிழ்க என்பதுபடத் தன்னெஞ்சிற்குக் கூறிச் செலவு தவிர்ந்தது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் நூற்பாவின் கண் (தொல்-கற்பி- 6) 'வேற்று நாட்டகல் வயின் விழுமத் தானும் ' எனவரும் விதிகொள்க.

    நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
    துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப்
    பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச்
    சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற
    இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும்         5
    குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க்
    கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
    பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்
    உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த
    தறுக ணாளர் குடர்தரீஇத் தெறுவரச்         10
    செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங்
    கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப்
    புல்லரை யித்திப் புகர்படு நீழல்
    எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை
    வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை         15
    ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்
    பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த
    திருந்தலை யெஃகம் போல
    அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே
            - மருதனிளநாகனார்

(உரை)

1-4 நன்னுதல்...............நெஞ்சே

(இ-ள்.) நெஞ்சே - அன்புமிக்க என் நன்னர் நெஞ்சமே!; நன்னுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர் துன் அருங் கானம் துன்னுதல் நன்று எனச் சூழ்ந்தனை- நீதானும் நம் காதலியாகிய அழகிய நுதலையுடைய இவள் நம்பிரிவாற்றாது பசலை பாயப்பட்டு வருந்துவாளாயினும் ஆகுக! நாமிப்பொழுது இவளைப் பிரிந்து நமது ஆண்மைக்குயிராகிய முயற்சியை மேற்கொண்டு நிரம்பப் பொருளீட்டிக் கொணர்தற்குச் செலலுதற்கரிய காட்டினூடே செல்லுதல் நன்மையுடைத்தாகும் என்று ஆராய்ந்து துணிந்தாய் மன்; பின்னின்று ஆயின் நன்று இன்னாச் சூழ்ந்தனை- நீ துணிந்தாங்கே யாமிவளைப் பிரிந்து ஆள்வினை மேற் சென்ற பின்னர் யாம் அதனிடையே முறியும் பொழுது சிறிதுநின்று நீ ஆராய்வாயாயின் நீ பெரிதும் நமக்குக் கேடே சூழ்ந்தனை ஆகுதி காண்! அஃதெற்றாலெனின், என்க.

(வி-ம்.) நன்னுதல் பசப்பவும் என்றது, நாம் பிரியின் அவள் பிரிவாற்றாது பசப்பூர்ந்து நலிவள் என்பது அறிந்திருந்தும் என்பதுபட நின்றது. எனவே இதனால் அகற்சியது அருமை கூறி யாம் இப்பொழுது பிரிவது நன்றன்று என்றறிவுறுத்தானாம்! நன்றெனச் சூழ்ந்தனை பின்னின்று ஆயின் நன்று இன்னாச் சூழ்ந்தனை என மாறிக் கூட்டுக. யாமும் பிரிவாற்றாமையால் ஆள்வினையிலும் இடைக்கண் முறிகுவம் அப்பொழுது ஆராயின் நீ இனிதென்று சூழ்ந்த இதுவே இன்னாச் சூழ்ந்ததாதலை அறிகுவாய் என்பான் பின்னின்று ஆயின் நன்று இன்னாச் சூழ்ந்தனை என்றான்,. ஆகுதி என ஒருசொல் வருவி்த்து முடிக்க. தேராது தெளிந்தமை கருதி இரங்குவான் வாழி என வாழ்த்தினன்.

4-12: வெய்துற.........போகின்

(இ-ள்.) இடி உமிழ் வானம் வெய்து உற நீங்கி- இடி வீழ்த்து முழங்கி மழை பொழியும் முகில்கள் நிலம் பெரிதும் வெப்பமுறுமாறு பெய்யாது போதலாலே; யாங்கணும் குடிபதிப் பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ்- எவ்வெவ்விடத்தும் வாழ்ந்து வந்த குடி மக்கள் தத்தம் இருப்பிடங்களைக் கைவிட்டு வேறிடங்கட்குச் சென்று விட்டமையைப் பிற நாட்டினரெல்லாம் சுட்டிக் கூறுதலையுடைய பழைய பாழ் நிலமாகிய பாலை நிலத்திலே ; செயிர் திறம் பெயர தெறுவர நல் அமர்க்கடந்த தறுகணாளர்- தம்முயிர் மறவர் உயிர்புகும் மேனிலையுலகம் புகுதும் தன்மையுடையவாய்த் தம்முடலை விட்டுப் போகுமாறு, அடிப்பிறக்கிடாதே நின்று காண்போர்க்கு அச்சமுண்டாகும்படி அறப்போர் ஆற்றிப் பகைவென்றுழி விழுப்புண்பட்டு வீழ்ந்த அஞ்சாமையையுடைய மறவர் உடம்பிடத்தே; கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார் - ஊர்மக்கள் தாம்தாம் விரும்பிய தலைவர் பெயர் பொறித்திடப்பட்ட குடவோலைகளைக் கொள்ளும்பொருட்டுக் கயிற்றாலே வரிந்துகட்டப்பட்ட குடங்களின் கண்ணே; பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்- நடுவராற் பொறிக்கப்பட்ட இலச்சினையை ஆராய்ந்து பார்த்து அழித்துக் குடங்களினூடிருந்து அவ்வோலைகளைக் கையிட்டு ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கின்ற ஆவண‌க்களரியாள‌ர் போன்று; செஞ்செவி எருவை- சிவந்த செவியையுடைய கழுகுகள் கச்சு முதலியன கட்டப்பட்ட இடங்களிலே குடைதற்கியன்ற இடத்தை ஆராய்ந்து கண்டு தம் அலகால் குடைந்து; அஞ்சுவர- கண்டார்க்கு அச்சம் வருமாறு; குடர் தரீஇ இகுக்கும்- அலகினாலே குடரை வெளிப்படுத்தி இழுத்தற்கிடனான; கல் கவலை அதர் போகின் - பரற்கற்களையுடைய கவர்த்த வழியிலே யாம் போம்பொழுது என்க.

(வி-ம்.) இதன்கண் பண்டைக் காலத்தே இத்தமிழகத்தில் ஊராட்சியாளரைத் தேர்ந்தெடுக்க ஊர்மக்கள் தாம் தாம் விரும்பிய தலைவர் பெயரை ஓலையில் எழுதி சுருள் செய்து குடத்தினுள்ளிடுதலும், நடுவர் அக்குடங்களை மூடிப் பின்னர் கயிற்றால் வரிந்து கட்டி இலச்சினையிடுதலும்; பின்னர் ஆவணக்களரியாளர் அவ்விலச்சினையை ஆராய்ந்து பார்த்து அதனை அழித்துக் குடத்துள்ளிருந்து ஓலைச் சுருள்களை வெளியிலெடுத்துப் பிரித்து நோக்குதலும் உவமை கூறுமாற்றால் கூறப்பட்டிருத்தல் உணர்க. மற‌வருடம்பும் கச்சை கவசம் முதலியவற்றாற் கட்டப்பட்டிருத்தலால் கழுகுகளும் குடைந்து குடரை இழுத்தற்கு இடம் ஆராய்ந்து காண்டல் வேண்டிற்று. (10) தெறுவர என்பதனை தெறுவர (9) நல்லமர் கடந்த எனக் கூட்டுக.

12-19: சீறூர்.........கண்ணே

(இ-ள்.) சீறூர் புல் அரை இத்திப் புகர்படு நீழல் எல்வளி அலைக்கும் இருள்கூர் மாலை- அவ்வழியிடத்தே குடியோடிப்போன சீறூரின்கண் புற்கென்ற அரையினையுடைய இத்திமரத்தினது புள்ளிகளை உடைய நீழலிடத்தே பெரிய கோடைக் காற்றுத் தாக்கித் துன்புறுத்துதலையுடைய இருள் மிகுகின்ற அந்திமாலைப் பொழுதில் யாம் இரவைக் கழித்தற்குத் தங்குது மல்லமோ! அப்பொழுது; இவள் பனிவார் கண்- நம்மாற் றுறக்கப்பட்ட இவளுடைய நீர் ஒழுகும் கண்கள் நம் அகக்கண் முன்பு கண்கூடாகத் தோன்றி; வானவன் மறவன்- சேரமன்னனுடைய படைத்தலைவனாகிய; வணங்கு வில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்- வளைந்த‌ விற்ப‌டையையுடைய பெரிய‌ கையையுடைய‌வ‌னும் இடையீடின்றிக் க‌ள்ளின் வ‌ள‌விய‌ க‌ளிப்பை விரும்புப‌வ‌னும் ஆகிய‌ பிட்ட‌ன் என்பான்; பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த- ப‌கை ம‌ன்ன‌ரோடு பொருதுகின்ற‌ வெல்லுத‌ற்க‌ரிய‌ போரின்க‌ண்ணே ஒக்கிய‌ திருந்திய‌ இலையினையுடைய‌ வேல் அப்ப‌கை ம‌ன்ன‌ர்க்கு உய்த‌ற்க‌ரிய‌ துய‌ர‌ம் விளைப்ப‌து போன்று; அருந்துயர் தரும் - ந‌ம‌க்கும் உய்த‌ற்க‌ரிய துய‌ர‌த்தைத் த‌ருத‌ல் தேற்ற‌ம், ஆத‌லால் இப்பொழுது அக்கருத்தினைக் கைவிடுவாயாக‌ என்ப‌தாம்.

(வி-ம்.) எல்வ‌ளி என்புழி எல் பெருமை மேற்று. வேறிட‌மின்மையால் சீறூரில் இத்திநீழ‌லிலே த‌ங்குவேம் என்றான். த‌ங்கிய‌ பொழுது ந‌ங்காத‌லி பிரிவாற்றாது துன்ப‌க் க‌ண்ணீர் பெருகித் துய‌ருறும் நிலைமை ந‌ம் அக‌க்க‌ண் முன்னர்த் தோன்றுத‌ல் ஒருத‌லை. அங்ங‌ன‌ம் தோன்றிய‌க்கால் யாம் மேற்கொண்டுள்ள‌ ஆள்வினையின் க‌ண் ஊக்க‌ங்கோட‌லும் அவ்வ‌ழிச் சென்று பொருளீட்ட்ட‌லும் அரிய‌வாம். ஆத‌லின் அக்க‌ருத்தை விடுக‌ என்ப‌து குறிப்பு.

இனி இத‌னை, நெஞ்சே நீ ஆள்வினை மேற்கொண்டு பொருள் த‌ரீஇய‌ர் கான‌ம் துன்னுத‌ல் சூழ்ந்த‌னை பின்னின்று ஆயின் நீ ந‌ன்றும் ந‌ம‌க்கு இன்னாச் சூழ்‌ந்த‌னை ஆதல் அறிதி, எங்ங‌ன‌மெனின் யாம் க‌வ‌லை போகின் சீறூர் இத்தி நீழ‌ல் இருள்கூர் மாலையில் இவ‌ள் ப‌னிவார்க‌ண் ந‌ம‌க்கு அருந்துய‌ர் த‌ரும்! என‌ இயைபு காண்க‌.

(பா-வே.) 3.விடுத்த‌னை, விடுத்தி. 5. நீங்க‌ நீங்கி 12. ந‌ல்ல‌த‌ர்.
-------------

செய்யுள் 78


திணை: குறிஞ்சி.
துறை: க‌‌ள‌வுக் கால‌த்துப் பிரிந்து வ‌ந்த‌ த‌லைம‌க‌ற்குத் தோழி சொல்லிய‌து.

(து-ம்.) அஃதாவ‌து- த‌லைவ‌ன் வ‌ரைவிடை வைத்துப் பிரிந்த‌வ‌ன் சிறிது கால‌ந்தாழ்த்து வ‌ந்தானாக‌ அவ‌னைத் தோழி எதிர் கொண்டு த‌லைவியின் பிரிவாற்றாமையை உள்ளுறை வ‌கையாலுண‌ர்த்தி இப்பிரிவுக் கால‌த்தே பெருமான் எம்மை உள்ளியுமறிதிரோ? என்று
வின‌விய‌து என்ற‌வாறு.
(இ-ம்.) இத‌ற்கு "நாற்ற‌மும் தோற்ற‌மும்" என‌வ‌ரும் நூற்பாவின்க‌ண் (தொல்-க‌ள‌-23) 'வேண்டாப் பிரிவினும்' என‌வ‌ரும் விதி கொள்க‌.

    நனந்தலைக் கானத் தாளி ய‌ஞ்சி
    இனந்தலைத் தரூஉ மெறுழ்கிளர் முன்பின்
    வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப்
    பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்
    இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்         5
    கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல்
    தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
    முந்தூ ழாய்மலர் உதிரக் காந்தள்
    நீடிதழ் நெடுந்துடுப் பொசியத் தண்ணென
    வாடை தூக்கும் வருபனி ய‌ற்சிரம்         10
    நம்மில் புலம்பிற் ற‌ம்மூர்த் தமியர்
    என்னா குவர்கொல் அளியர் தாமென
    எம்விட் ட‌கன்ற சின்னாட் சிறிதும்
    உள்ளியும் அறிதிரோ ஓங்குமலை நாட
    உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை         15
    வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
    செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
    தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
    யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா
    தாளிடூஉக் கடந்து வாள‌மர் உழக்கி         20
    ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
    க‌டும்பரிப் புரவிக் கைவண் பாரி
    தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
    தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே.
            -மதுரை நக்கீரனார்.

(உரை)

14: ஓங்கு மலை நாட‌.........

(இ-ள்.) ஓங்கும் ம‌லை நாட‌- உய‌ர்ந்த‌ ம‌லைநாட்டினையுடைய பெருமானே! என்க.

(வி-ம்.) அன்புடையாரைத் துன்பத்திலாழ்த்தி விடுதல் நும் போன்ற உய‌ர்குடித் தோன்றினார்க்கு அடாது எனக் குறிப்பான் அறிவுறுப்பவள் அவன் குடியினுயர்வை அவன் மலைக்கேற்றி "ஓங்குமலை நாட' என்று விளித்தனள் என்க.

1-6: நனந்தலை............சாரல்

(இ-ள்.) இனம் தலைத்தரும் கிளர் எறுழ் முன்பின் - தன்னினமாகிய யானைகளைப் பாதுகாத்தற் பொருட்டுத் தன் பாலே சூழ்வித்துக் கொள்ளுதலையுடைய நன்கு விளங்குதலையுடைய பேராற்றலையும்; வாய்புகு வரி ஞிமிறு ஆர்க்கும் கடாஅத்து - வாயினுள்ளே புகுகின்ற வரியினையுடைய அறுகாற் சிறுபறவைகள் ஆரவாரித்தற்குக் காரணமான மதநீரினையுமுடைய; பொறி நுதல் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல் - புள்ளிகளையுடைய நுதலாலே பொலிவுற்றுத் திகழாநின்ற வன்மை மிக்க களிற்றியானைகளினும் தலைமைத் தன்மையுடைய களிற்றுயானையே; இரும்பிணர்த் தடக்கையின் ஏம் உற தழுவ - தனது கரிய கரடுமுரடான பெரிய கையினாலே காவலமையும்படி தழுவா நிற்பவேயும்; கடுஞ்சூழ் மடப்பிடி - அதன் காதலியாகிய முதற் சூழையுடைய இளம்பிடியானையானது; நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி நடுங்கும் சாரல் - அகன்ற இடத்தையுடைய காட்டின்கண்ணே வாழும் யாளிக்குப் பெரிது அஞ்சி நடுங்குதற்குக் காரணமான மலைச்சாரலிடத்தே என்க.

(வி-ம்.) இனந்தலைத்தருதல்-தன்னினத்தைத் தன்னை சூழ்வித்துக் கோடல். கிளர் எறுழ் முன்பு எனமாறுக. எறுழ் முன்பு: ஒரு பொருட் பன்மொழி. ஈண்டுப் பேராற்றல் என்பது பட நின்றன. ஞிமிறு - மிஞிறு என்பது எழுத்து நிலைமாறிய படியாம்: சிவிறி, விசிரி என்றானாற் போல; வண்டு களீற்று ஒருத்தல் - களிற்றினுள்ளும் தலைமைத் தன்மையுடைய ஒருத்தல் என்க. இது யானைக் குழுவின் தலைவனாகிய களிறு. இதனை யூதநாதன் என்றும் கூறுப.

இனி இதன்கண் களிற்றியானை கையாற்றழுவிப் பாதுகாப்பவும் கடுஞ்சூல் மடப்பிடி யாளிக்கு அஞ்சி நடுங்கினாற் போன்று எம்பெருமான் தலைவியைத் தலையளி செய்து போற்றுவீராக விருக்கவும் வரைவிடை வைத்துப் பிரியும் இச் சிறு பிரிவிற்கும் ஆற்றாது நடுங்குகின்றாள் என உள்ளுறுத்துக் கூறினாள் தோழி: இது வரைவுடன் பட்டானைப் பின்னரும் முடுக்கியவாறாம்.

7-14. தேம்பிழி..............அறிதீரோ

(இ-ள்.) தேம்பிழி நறவின் குறவர் முன்றில் முந்தூழ் ஆய்மலர் உதிர - தேனிற் பிழிந்தெடுத்த கள்ளினையுடைய குறவருடைய முற்றத்திலே மூங்கிலினது அழகிய பூக்கள் உதிரா நிற்பவும்; நீடு இதழ்க் காந்தள் நெடுந்துடுப்பு ஒசிய - நீண்ட இதழ்களையுடைய காந்தட் பூவினது நெடிய தண்டு முறியவும்; தண் என வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் - தண்ணென்று குளிரும்படி வாடைக்காற்று வீசுங்கால் உண்டாகின்ற பனியையுடைய அற்சிரக் காலத்திலே ; தம் ஊர்த்தமியர் அளியர்தாம் நம் இல்புலம்பில் என் ஆகுவர் என- தமதூரின்கண் தனித்துறைகின்ற இரக்கத்திற்குரிய மகளிர்தாம் யாம் அங்கில்லாமையாலே உண்டாகின்ற பிரிவுத் துயரத்தாலே எத்தகைய நிலையினர் ஆகுவரோ? என்று எம் விட்டு அகன்ற சின்னாள் சிறிதும் உள்ளியும் அறிதிரோ - எளியேமைக் கைவிட்டுப்போய்த் தங்கிய ஒருசில நாள்களினூடே எப்பொழுதேனும் நினைத்துப் பார்த்தது தானும் உண்டோ? கூறுமின்! என்க.
(வி-ம்) தேம்- இனிமையுமாம். முந்தூழ்- மூங்கில். பனியையுடைய அற்சிரம் என்க. அற்சிரம்- பெரும் பொழுதுகளில் ஒன்று; முன்பனிக்காலம். புலம்பு-தனிமைத் துன்பம். நினைத்துளீராயின் இத்துணைக் காலந் தாழ்த்திருப்பீரல்லீர் என்பது கருத்து. வாடை மலர் உதிர, துடுப்பு ஒசியத் தூக்கும் என்க

15-24: உலகுடன் .....நுதலே.

(இ-ள்) உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்இசை- உலகுள்ள துணையும் பரவுதலைச் செய்கின்ற சான்றோர் பலரானும் புகழ்தற்கியன்ற சிறந்த புகழினையுடையவனும்; வாய் மொழிக் கபிலன் சூழ -அஞ்சாது நின்று பகைமன்னர்பாலும் வாய்மையே கூறுகின்ற மொழியையுடைய கபிலன் என்னும் புலவர் பெருமான் சூழ்ந்தவாறே; சேய் நின்று செழுஞ் செய்ந் நெல்லின் விளை கதிர் கொண்டு- கிளிகள் தூரியவிடத்தினின்றும் செழி்த்த கழனிகளிற் றழைத்த நெற்பயிரின்கண் நன்கு விளைந்து முற்றிய கதிர்களைக் கொய்துதருதலாலே அவற்றைக் கைக்கொண்டு அரிசியாக்கி; தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி- அப்பறம்புமலைச் சுனையிலுள்ள பெரிய தண்டுகளையுடைய ஆம்பற் பூவோடு கூட்டிச் சமைத்துண்டு; யாண்டு பல கழிய- இவ்வாறே பலயாண்டுகள் கழியா நிற்பவும் காலங் கருதியிருந்து; வேண்டு வயின் பிழையா- போராற்றுதற்கு வேண்டிய செவ்வி வந்துழித் தப்ப விடாமல்; தாள் இடூஉ வாள் அமர் உழக்கி- முயற்சியை மேற்கொண்டு தன் வாளாலேயே போர்செய்து கலக்கி முற்றுகையிட்டிருந்த; ஏந்து கோட்டு யானை வேந்தர் - நிமிர்ந்த மருப்புக்களையுடைய யானைப்படை முதலியவற்றையுடைய மூவேந்தரையும்; கடந்து ஓட்டிய - வென்று புறமிட்டோடச் செய்த; கடும்பரிப் புரவிக் கைவண் பாரி- கடிய செலவினையுடைய புரவியையும் கையால் வழங்கும் வள்ளன்மைமையு முடையவனும் ஆகிய பாரி வள்ளலினுடைய; தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த தேம் கமழ் புதுமலர் நாறும் இவள் நுதல்உள்ளியும் அறிதிரோ- இனிய பெரிய பசிய சுனையிடத்தே மலர்ந்த தேன் மணங்கமழும் புதுமலர் போன்று நறுமணம் கமழுகின்ற எம்பெருமாட்டியினது நுதலையேனும் நினைத்துப் பார்த்ததுண்டோ? கூறுமின்; என்பதாம்.

(வி-ம்) தமியர் என்னாகுவர் என உள்ளியும் அறிதிரோ? எம்மை நினைந்திலீராயினும் ஒழிக. எம்பெருமாட்டியின் நுதலையேனும் உள்ளியறிவீரோ? என உள்ளியும் அறிதிரோ என்பதனைப் பின்னும் கூட்டிப் பொருள் கூறுக.

இனி இதன்கண் மூவேந்தரும் பாரியின் பறம்பு மலையை முற்றியிருந்த பொழுது கபிலர் கிளிகளைப் பழக்கிச் சேய்மையிற் சென்று நெற்கதிர் கொய்து கொணரச் செய்து அதனால் அரண்மனையகத்துள்ளாரை யெல்லாம் இனிதாக உண்பித்த வரலாறு குறிப்பிட்டிருத்தலும் உணர்க. இவ்வரலாற்றைப் புறநானூற்றினும் காணலாம். இந்நூலினும் 303 ஆம் செய்யுளில் ஔவையார் "உரைசால் வண் புகழ்ப் பாரி பறம்பின் நிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி- முடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோராங் கிரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப் படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு" எனக் குறிப்பிட்டுள்ளமை உணர்க.

இனி இதனை, நாட வாடை தூக்கும் அற்சிரம் நம்மில் புலம்பில் அளியர் என்னாகுவர் என உள்ளியும் அறிதிரோ? அன்றெனினும் பாரி சுனை பூத்த புதுமலர் நாறும் இவள் நுதலையேனும் உள்ளியும் அறிதிரோ? என இயைததிடுக.

(பா. வே.) 10. தூங்கி. 15. நெடுந்தா. 20. நாளிடூஉ.
-------

செய்யுள் 79


திணை: பாலை.
துறை: பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(து-ம்) அஃதாவது -தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லும் பொழுது இடைநெறியிலே தன்னெஞ்சம் தலைவியை நினைந்து வருந்திற்றாகத் தலைவன் அந்நெஞ்சத்தைக் கடிந்து கூறியது என்றவாறு.

(இ-ம்) இதற்கு "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 5) 'மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்' எனவரும் விதிகொள்க.

    தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
    கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து
    கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்
    பாருடை மருங்கின் ஊறல் மண்டிய
    வன்புலம் துமியப் போகிக் கொங்கர்         5
    படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்கலும்
    சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்
    அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
    நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப
    வல்லாங்கு வருது மென்னா தல்குவர         10
    வருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறை
    வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை
    ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
    கொடுவில் எயினர் கோட்சுரம் படர
    நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடைக்         15
    கல்பிறங் கத்தம் போகி
    நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே
            ---குடவாயிற் கீரத்தனார்.

(உரை)

11-17: வாழி யென்.............பிரிந்த நேயே.

(இ-ள்) என் நெஞ்சே வாழி- என் நெஞ்சமே நீ நீடு வாழ்வாயாக!; இருஞ் சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கண் பேடை- கரிய சிறகினையும் வளைந்த அலகினையும் உடைய பருந்தாகிய வெளிய கண்ணையுடைய பேடையானது; ஆடு தொறுகனையும் அவ்வாய்க் கடுந்துடி- அசைந்து நடக்குந்தோறும் ஒலிக்கின்ற அழகிய வாயினையுடைய கடிய ஓசையினையுடைய துடி என்னும் தோற்கருவியினையும்; கொடு வில் எயினர்- வளைந்த வில்லையும் உடைய எயின மறவர்; கோள் சுரம் படர- ஆறு செல்வோரை அலைத்து அவர்தம் கைப்பொருளைக் கொள்ளை கொள்ளுதற்குரிய பாலைவழியிலே போவதனைப் பார்த்து; நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை- தன் காதற்றுணையாகிய சேவலை நெடிதாகக் குரலைடுத்துப் பலகாலும் கூப்பிடுதற்குக் காரணமான தொலையாத நீண்ட இடத்தையுடைய; கல் பிறங்கு அத்தம் போகி- கற்கள் ஒளிறுகின்ற இப்பாலை வழியிலே சென்று; நில்லாப் பொருள் பிணி- யாவரிடத்தும் நிலையுதலில்லாத பொருட்பற்றுக் காரணமாக; பிரிந்த நீ- நங்காதலியைப் பிரிந்து போந்த நீதான் என்க.

(வி-ம்) இருஞ்சிறை - பெரிய சிறகுமாம்; வாய். அலகு. நடக்குங்கால் அசையுந்தோறும் துடி கனைக்கும் என்றவாறு. கனையும்- ஒலிக்கும். பருந்தின் பெடை எயினர் வில்லொடும் ஆறு கோட்பறை யுடனும் செல்லக்கண்டு அங்குத் தமக்கு ஊன் இரை கிடைக்கும் என்று கருதித் தன்சேவற் பருந்தை அழைக்கும் என்றவாறு. நில்லாப் பொருட்பிணி என்றது பொருளினது இழிவு கூறியபடியாம். இழிந்த பொருளைக் கருதி உயர்ந்த அருளைத் துறந்தனை என்பது குறிப்பு.

1-11. தோட்பதன்..........வருந்தினை

(இ-ள்) தோள் பதன் அமைத்த கருங்கை ஆடவர்- தோளின்கட் கோத்த கட்டுச் சோற்றினையுடைய வலிய கைகளையுடைய ஆடவர்; வினைப்படர்ந்து- தொழிலின்கட் சென்று; கனை பொறி பிறப்ப நூறிக் கல் உறுத்து இயற்றிய - கற்பாறையைத் தீப்பொறி பறக்கும்படி நுறுக்கிக் கல்லியெடுத்துச் செய்த; வல் உவர்ப் படுவில்- மிக்க உவர்ப்பினையுடைய கிணற்றில்; பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய- மண்ணுள்ள பக்கத்தே ஊறிய நீரைப் பருகும் பொருட்டு; கொங்கர் படுமணி ஆயம்- கொங்கருடைய ஒலிக்கும் மணிகளையுடைய பசுத்திரள்களுள் வைத்து; நீர்க்கு வன்புலம் துமியப் போகிச் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்- நீர்வேட்கையாலே தலைநிமிர்ந்து வன்னிலம் துகள்படும்படடி மிதித்துச் சென்று சிவந்த ஆக்கள் குளம்பினாலே எழுப்பிய சிவந்த நிலத்தினது நிறமிக்க அத்துகள்; அகல் இருவிசும்பின் ஊன்றித் தோன்றும் - அகன்ற பெரிய செக்கர் வானம் போன்று மிக்குத்தோன்றுதற் கிடனான; நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப- அகன்ற இடமமைந்த காட்டின் கண்ணே நம்மாருயிர்க் காதலிதானும் நம்மோடு நமக்குத் துணையாக வரும்படி; வல்லாங்கு வருதும் என்னாது- வல்லபடி போவோம் என்று அங்கு நினையாமல் இ்த்துணைத் தொலைவும் வந்தபின்னர்; அல்குவர வருந்தினை- யாம் செலவழுங்குதல் உண்டாகும்படி வருந்தாநின்றனை! என்னோ நின் பேதைமை இருந்தவாறு? என்பதாம்.

(வி-ம்) தோட்பதம்- தோளிற்றூக்கிய கட்டுச் சோறு. கருங்கை- வலிய கை. பொறி- தீப்பொறி. கற்பாறையை இடிக்கும் பொழுது தீப்பொறி பிறத்தல் இயல்பு. நூறி- நுறுக்கி. கல்லுறுத்தல்- கல்லி யெடுத்தல். வல்லுவர் என்புழி வன்மை மிகுதிப் பொருள்பட நின்றது. படு- கிணறு. பார்- வன்மையுடைய மண்ணடுக்கு. கன்னிலத்தை அகழ்ந்த வழி மண்ணடுக்குடைய இடத்தே நீர் ஊறுதலியல்பு. மண்டிய- மண்டுதற்கு. மண்டுதல்- குடித்தல். கயமண்டெருமை என் புழியும் அஃதப் பொருட்டாதலறிக. கொங்கர் ஆனிரைகளுள் வைத்துச் சேதா நிரை நீ்ர் வேட்கை காரணமாக நிமிர்ந்து வன்புலம் துணிபட விரைந்து செல்லும் என்றும், அங்ஙனம் செல்லுங்கால் எழுகின்ற செந்துகள் செக்கர், வானம் போல் தோன்றும் என்றும் கூறுக. ஊன்றித் தோன்றும் - மிக்குத் தோன்றும். துணைப்ப- துணையாக. காதலி என்னும் எழுவாய் பெய்துரைக்க. அழுவம் - காடு. அல்குவர - செலவழுங்குதல் உண்டாக.

இனி இதனை “நெஞ்சே நிரம்பா நீளிடை அத்தம் போகிப் பொருட்பிணிப் பிரிந்த நீயே! நனந்தலை அழுவம் நம்மொடு (காதலி) துணைப்ப வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர வருந்தினை!” என இயைத்திடுக.

(பா.வே.) 2 - பிறப்புற. 3. கல்லறுத்.
-----------------

செய்யுள் 80


திணை: நெய்தல்.
துறை: இரவுக் குறிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-வரைந்து கோடலிற் கருத்தின்றிக் களவொழுக்கந் தலைநின்ற தலைவன் இரவுக்குறி வருவானை இரவுக்குறி மறுத்து இனிப் பகற்குறிக்கண் வருக! என்று தோழி கூறியது. இது வரைவு கடாஅதற் குறிப்புடைத்து.

(இ-ம்.) இதனை, “நாற்றமுந் தோற்றமும்” எனவரும் நூற்பாவின்கண் (தொல் - களவி - 23) “களனும் பொழுதும் வரைநிலை விலக்கி......அனை நிலைவகையான் வரைதல் வேண்டினும்” என்பதன் கண் அமைத்திடுக.

    கொடுந்தாள் முதலையோடு கோட்டுமீன் வழங்கும்
    இருங்கழி யிட்டுச்சுரம் நீந்தி யிரவின்
    வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப
    நினக்கெவன் அரியமோ யாமே எந்தை
    புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த         5
    பன்மீன் உணங்கற் படுபுள் ஒப்புதும்
    முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
    ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்
    செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
    இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ         10
    மின்னிலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
    தண்நறும் பைந்தா துறைக்கும்
    புன்னையங் கானல் பகல்வந் தீமே.
            -மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்.
            (நக்கீரர் என்றும் பாடம்.)
-------

(உரை)

1-6 : கொடுந்தாள்................ஒப்புதும்

(இ-ள்) தண் கடல் சேர்ப்ப- குளிர்ந்த கடலையுடைய நெய்தனிலத் தலைவனே! நீதான்; மன்ற - தேற்றமாக; கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங்கழி- வளைந்த காலையுடைய முதலைகளோடே கொம்புடைய சுறா மீனும் திரிதருகின்ற அச்சந்தருகின்ற கடற் கழியையும்; இட்டுச் சுரம்- இட்டிதாகிய கடத்தற்கரிய வழியையும் கடந்து; இரவின் வந்தோய்- யாங்கள் கவல்வதற்குக் காரணமான இரவின் கண்ணே இவ்வாறு இங்கு வந்தனை; நினக்கு யாம் எவன் அரியமோ- இவ்வாறு நீ இன்னாமை மிக்க இருள் நெறியிலே வருதற்கு பெருந்தகையாகிய உனக்கு யாம் எவ்வாற்றான் எய்துதற் கரியம் ஆவோம் என்பது எமக்கு விளங்கவில்லை; நீ இங்ஙனம் வருதலை எம்பெருமாட்டி பொறாள்காண் ஆதலால் நீ இரவின்கண் வாராதே கொள்!: எந்தை புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த பன்மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்- இனி நாளைப்பகலிலே யாங்கள் எம்முடைய தந்தை அலைகள் பொருந்திய கடற் பரப்பினூடே புக்கு நீரை வலை முதலிய வற்றால் துழவி அகப்படுத்துக் கொணர்ந்த பல்வேறு மீன்வற்றலிலே வீழ்கின்ற பறவைகளை ஓட்டுந் தொழிலை மேற்கொள்வேம் ஆதலால் என்க.

(இ-ம்) மன்ற என்றது தேற்றப் பொருட்டு. அதனை முதலையும் மீனும் வழங்குதற்கு அடையாக்குக. வந்தோய் என்புழி ஆ- ஓவாயிற்றுச் செய்யுளாகலின் இருங்கழியில் ஆளைக் கொல்லும் முதலையும் சுறாமீனும் வழங்குதல் தேற்றமாகலின் அதனை இரவில் நீந்திக் கடந்து வருதலை எம்பெருமாட்டி பொறாஅள் என்பது வாரற்க என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது.

நீ மனங்கொள்ளின் இப்பொழுதே எம்பெருமாட்டியை வரைவொடு வந்து வதுவை செய்து கொள்ளல் மிகவும் எளிதே. அங்ஙன மிருப்பவும் நீ இவ்வாறு வருவானேன் என்பதுபட யாம் எவன் நினக்கு அரியமோ? என்று வினவினள். இவ்வாற்றால் தோழி நுணுக்கமாக வரைவு கடாஅயினாளாதலறிக. இனி யாம் புள் ஓப்புதும் என்றது மேலே பகல்வந்தீமே என்றற்கு ஏதுக் கூறியவாறாம்.

7-13: முண்டகம்.....பகல் வந்தீமே

(இ-ள்) முண்டகம் கலித்த முதுநீர் அடை கரை- நீர் முள்ளிச் செடி தழைத்துள்ள கடலினது நீரடைகின்ற கரையின் கண்ணே படர்ந்துள்ள; ஒள்பல் மலர கவட்டு இலை அடும்பின்- ஒளிய பலவாகிய மலர்களையுடையவும் சுவடுபட்ட இலைகளையுடையவும் ஆகிய அடும்பினது; செங்கேழ் மெல்கொடி ஆழி அறுப்ப- சிவ‌ந்த‌ நிற‌முடைய‌ மெல்லிய‌ கொடிக‌ளை நின‌து தேரின் உருள்க‌ள் அறுக்கும்ப‌டி; இன மணிப்புரவி நெடுந் தேர் கடைஇ- உய‌ர்ந்த‌ இன‌த்தன‌வாகிய‌ ம‌ணிபூட்டப் ப‌ட்ட‌ குதிரைக‌ளையுடைய‌ நின்தேரினைச் செலுத்தி; மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் தண் நறும் தாது உறைக்கும் புன்னை அம் கானல் பகல் வந்தீம்- க‌திர‌வ‌ன் ஒளியாலே மின்னுகின்ற‌ இலைக‌ளாலே பொலிவுற்ற விள‌ங்குகின்ற‌ பூங்கொத்துக்க‌ள் க‌ட்ட‌விழ்ந்து பொன்னிற‌முடைய‌ குளிர்ந்த‌ ந‌றிய‌ பூந்துகள்க‌ளை உதிர்க்கின்ற‌ புன்னைக‌ள‌ட‌ர்ந்த‌ அழ‌கிய‌ க‌ட‌ற்க‌ரைச் சோலையிலே ப‌க‌ற்பொழுதிலேயே வ‌ந்த‌ருள்வாயாக‌! என்ப‌தாம்.

(வி-ம்.) ப‌க‌ற்குறியிட‌த்தே நீ எம்மை அளித்த‌ற்கு வ‌ருவாயேனும் நின்தேருள் மென்பூங்கொடியை அறுக்குமாறு போலே நின்வ‌ர‌வு பிற‌ர் அறித‌ற்கு ஏதுவாகி மெல்லிய லாராகிய எம‌துள்ள‌த்தைப் புண்ப‌டுத்தாதிராது என்னும் க‌ருத்தை உள்ளுறுத்து நின் ஆழி மென்கொடி அறுப்ப‌வா என்றாள். இனி நீ நின் க‌ட‌ற்க‌ரைச் சோலையிட‌த்தே புன்னைம்ல‌ர் பொன்தாது சொரிந்து ந‌றும‌ண‌ங் க‌மழ்விக்குமாறு போலே நீதானும் முலைவிலைப் பொன்னொடு வ‌ரைவு வேண்டி வ‌ந்து வ‌துவை செய்து புக‌ழ்ப‌ர‌ப்புத‌லே எம் விருப்ப‌ம் என்ப‌தை உள்ளுறுத்துப் புன்னை இண‌ர் பொன்தாது உறைக்கும் கான‌ல் என்றாள் என‌ நுண்ணிதின் உள்ளுறை க‌ண்டு ம‌கிழ்க‌.

இனி இத‌னை - சேர்ப்ப‌ நீதான் முத‌லையொடு கொடுமீன் வ‌ழ‌ங்கும் இட்டுச் சுர‌ம் நீந்தி இர‌வின் வ‌ந்தாய்! இங்ங‌ன‌ம் வ‌ருத‌லைத் த‌‌லைவி பொறாஅள் யாம் நின‌க்கு எவ்வாறு அரிய‌ம் ஆவேம் நாளைப் புள்ளோப்புதும் புன்னையங் கான‌ல் ப‌க‌ல் வ‌ந்தீம் என இயைத்திடுக‌.

(பா-வே.) 5.பாக்க‌ந். 6.ஒப்ப‌.
-----------

செய்யுள் 81


திணை: பாலை
துறை: பிரிவுண‌ர்த்திய‌ த‌லைம‌க‌ற்குத் தோழி த‌லைம‌க‌ள் குறிப்ப‌றிந்து வ‌ந்து சொல்லிய‌து.

(து-ம்.) அஃதாவ‌து- த‌லைவியைப் பிரிந்து போய்ப் பொருளீட்டி வ‌ருத‌ல் வேண்டும் என்னும் க‌ருத்தினைத் த‌லைவ‌ன் தோழிக்குக் கூறின‌னாக‌; அது கேட்ட‌ தோழி த‌லைவ‌ன் க‌ருத்தைத் த‌லைவிக்குக் கூற‌, அது கேட்ட‌ த‌லைவி அப்பொழுதே அழ‌த்தொட‌ங்கி விட்ட‌ன‌ள். அது க‌ண்ட‌ தோழி த‌லைவ‌ன்பாற் சென்று நீவிர் இப்பொழுது பிரிவீராயின் த‌லைவியை ஆற்றுவித்த‌ல் அரிது. அவ‌ள் இற‌ந்துப‌டுத‌லும் கூடும் என்ப‌துப‌ட‌க் கூறித் த‌லைவ‌னைச் செல‌வ‌ழுங்குவித்த‌து என்ற‌வாறு.

(இ-ம்.) இதனை, "தலைவரும் விழுமம்" எனவரும் நூற்பாவின்கண் (தொல் அகத்திணை-39) "*தலைவரும் விழும நிலை யெடுத்துரைப்பினும்" என்பதனாலமைத்திடுக.

    நாளுலா எழுந்த கோள்வல் உளியம்
    ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்
    புல்ல‌ளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
    ஒருங்குமுயன் றெ*டுத்த நனைவாய் நெடுங்கோ
    டிரும்பூது குருகின் இடந்திரை தேரும்         5
    மண்ப*க வறந்த ஆங்கட் கண்பொரக்
    கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
    நெறிய‌யல் மராஅம் ஏறிப் புலம்புகொள
    எறிபருந் துயவும் என்றூழ் நீளிடை
    வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த         10
    செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
    ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
    மாவண் கடலன் விளங்கில் அன்னஎம்
    மையெழில் உண்கண் கலுழ
    ஐய சேறிரோ அகன்றுசெய் பொருட்கே.
            ---ஆல‌ம்பேரி சாத்த‌னார்.

(உரை)

15: ஐய‌...

(இ-ள்.) ஐய‌- எம்பெருமானே!

11-14: கறுத்தோர்.....க‌லுழ‌

(இ-ள்.) கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறுபடக் கடக்கும் - தன்னோடு சினந்து போரெதிர்ந்த பகைவருடைய சுடர்வீசுகின்ற வேலேந்திய காலாட் படைப்பரப்பு முதல் யானைப் படை ஈறாக மாண்டொழியுமாறு நூழிலாட்டி வெல்லும் போராற்றலையும்; மாவண் கடலன் - பெரிய‌ வ‌ள்ளன்மையையுமுடைய‌ க‌ட‌ல‌ன் என்னும் மன்ன‌ன‌து; விளங்கில் அன்ன- விளங்கில் என்னும் மூதூர் போன்று இன்பமும் அழ‌கும் நிரம்பிய; எம் மை எழில் உண்கண்- எம்முடைய‌ அழ‌கிய‌ மையுண்ட‌ க‌ண்க‌ள்தாம்; கலுழ- பிரிவாற்றாது அழுது புல‌ம்பும்ப‌டி: என்க‌.

(வி-ம்) கறுத்தோர் - சினந்தோர்; அவராவார்- பகைவர். கடலன் என்பான் ஒரு குறுநிலமன்னன் என்றும் சிறந்த போராற்றல் உடையான் என்றும் வள்ளற் பண்புடையான் என்றும் அவன் மூதூர் விளங்கில் என்பது என்றும் இதனாற் பெற்றாம். விளங்கில்- தலைவியின் கண்ணுக்குவமை. ஈண்டுத் தோழி தன்னையும் உளப்படுத்தி எம்கண் என்கின்றாள்.

10-11: சிறந்த...........துரத்தலின்.

(இ-ள்.) சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின்- நின் இயல்பிற் கிணங்கச் சிறந்த தலைமைத் தன்மையுடைய நின் நெஞ்சம் நின்னைத் தூண்டுதலாலே என்க.

(வி-ம்) "வினையே ஆடவர்க்குயிர்" என்பது பற்றிப் பொருளீட்டும் ஆள்வினைமருங்கிற் பிரியக் கருதும் கருத்தினைத் தானும் பாராட்டுவாள் "செம்மல் உள்ளம் துரத்தலின்" என்று விதந்தாள். துரத்தல்- செலுத்துதல்.

1-10: நாளுலா........நீந்தி

(இ-ள்) நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்- விடியற்காலத்தே இரைதேரும் பொருட்டு உலாப் போதற்கு எழுந்த தனக்குரிய இரையைத் தேர்ந்து கொள்ளுதலில் வன்மையுடைய கரடியானது, ஓங்கு சினை இருப்பைத் தீம்பழம் முனையின்- உயர்ந்த கிளைகளையுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தினைத் தின்று வெறுப்பின், புல் அளை புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு இரும்பு ஊது குருகின் இடத்து இரை தேரும்- புல்லிய வளைகளையுடைய புற்றினது பலவாகிய இனங்களாகிய சிதலைகள், ஒருங்கு கூடிப் பெரிதும் முயற்சி செய்து கட்டிய நனைந்த வாயையுடைய நெடிய உச்சிகளை இரும்புருக்கும் கொல்லுலையின்கண் துருத்தி ஊதுமாறுபோல வளையினுள் ஊதி அகழ்ந்து தனக்கு இரையாகிய புற்றாஞ் சோற்றினை ஆராய்தற்கு இடனான; மண் பக வறந்த ஆங்கண் கண பொரக் கதிர் தெறக் கவிழ்ந்த உலறு தலை நோன் சினை நெறிஅயல் மராஅம் ஏறி- நிலம் வெடிக்கும்படி வறட்சியுற்ற பாலை நிலமாகிய அவ்விடத்தே கண் ஒளி மழுங்க ஞாயிறு காய்தலாலே வழியின் பக்கத் தில் உள்ள வெண்கடப்ப மரங்களின் தாழ்ந்துள்ள உலர்ந்த உச்சியையுடைய வலிய கிளைகளில் ஏறியிருந்து; எறி பருந்து புலம்புகொள உயவும் என்றூழ் நீள் இடை வெம்முனை அருஞ் சுரம் நீந்தி- இரையினைப் பாய்ந்து பற்றுகின்ற பருந்தானது தனிமையுற்று வருந்துகின்ற வெப்பம் மிகுந்த நீண்ட இடங்களாகிய வெவ்விய போர்க்களங்களையுடைய கடத்தற் கரிய சுரத்தினைக் கடந்தும்; என்க.

(வி - ம்.) நாள்-விடியற்காலம். உளியம்-கரடி. முளைதல்- வெறுத்தல் அளை-வளை. சிதலை - கறையான். கோடு - உச்சி. குருகு-கொல்லன் துருத்தி. கரடி புற்றை அகழும்போழுது வளையினுள் மூக்கினால் உயிர்த்து அகழும் இயல்புடையதாகலின் இரும்பூது குருகின் இடந்திரை தேரும் என்றார். மராஅம் - வெண்கடப்ப மரம். புலம்பு - தனிமை. முனை - போர்க்களம்.

இனி, இதன்கண் கரடி இனிய தேன் பொதுளிய இருப்பைப் பூவை வெறுத்து இழிந்த புற்றாஞ் சோற்றினை அவாவி அகழுமாறு போல, நீதானும் நிரம்பிய செல்வத்தோடிருந்தும், தலைவியோடு கூடி இன்புற்றிருந்து அறஞ்செய்யும் நல்வாழ்க்கையை வெறுத்து இழிந்த பொருளை நாடிப் பிரியத் துணிகின்றன என உள்ளுறை காண்க.

15: சேறிரோ……..பொருட்கே

இ - ள்.) அகன்று செய் பொருட்கு - எம்பெருமாட்டியைத் துறந்து போய் முயன்று ஈட்டுகின்ற பொருள் நிமித்தமாக; சேறிரோ - செல்லுவீரோ; என்பதாம்.

(வி - ம்.) செல்லுவீரோ என்பது அத்துணை வன்கண்மை உடையீரோ என்பதுபட நின்றது.

இனி, இதனை - ஐய! செம்மல் உள்ளம் துரத்தலின் எம்கண் கலுழப் பொருட்குச் செல்லுவீரோ? என இயைபு காண்க.

இதனது பயன் - தலைவன் செலவழுங்குதல் என்க.

(பா - வே.) 4. இருங்கோடு.
-------------

செய்யுள் 82


திணை: குறிஞ்சி.
துறை: தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.

(து - ம்) களவொழுக்கத்தின் பொழுது தலைவன் வரவு முட்டுப் பாடுற்றமையால் பிரிவாற்றாது வருந்திய தலைவி தோழியை அறத்தொடு நிற்பித்தற்குச் சொல்லியது என்றவாறு.

இ - ம்.) "இதற்கு வரைவிடைவைத்த" எனவரும் (தொல்-களவி-21) நூற்பாவின்கண் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்" என வரும் விதி கொள்க.

    ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
    கோடை யவ்வளி குழலிசை யாகப்
    பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை
    தோடமை முழவின் துதைகுர லாகக்
    கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு         5
    மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
    இன்டல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
    மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
    கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்
    விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன்         10
    உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து
    செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
    புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை
    மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்         15
    பலர்தில் வாழி தோழி அவருள்
    ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
    ஒரியா னாகுவ தெவன்கொல்
    நீர்வார் கண்ணோடு நெகிழ்தோ ளேனே.
            ---கபிலர்.

(உரை)

15: வாழி தோழி...

(இ-ள்.) தோழி வாழி - தோழி நீ நீடுவாழ்வாயாக ஈதொன்றுகேள்.

1 - 10: ஆடமை ...நாடன்

(இ-ள்.) ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கில் கோடை அ வளி குழல் இசையாக - ஆடுகின்ற மூங்கிலின்கண் வண்டுகளால் துளைக்கப்பட்ட விளங்குகின்ற துளையின் பக்கத்தே மேல் காற்றினால் எழுகின்ற இசையே அழகிய வேயங்குழலின் இசையாகவும்; பாடு இன் அருவிப் பனிநீர் இன்னிசை தோடு அமை முழவின் துதை குரலாக - தோற்றுகின்ற அழகிய அருவியின் குளிர்ந்த நீர் வீழ்ச்சியினால் எழுகின்ற இனிய ஓசையே கூட்டமான மத்தளங்களின் செறிந்த முழக்கமாகவும்; கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு - கூட்டமாகிய கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய ஓசையே பெருவங்கியம் என்னும் துளைக்கருவியின் இசையாகவும்; மலை பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக - மலையினது அழகிய சாரலின்கண் முரலுகின்ற வண்டுகளின் இசையே யாழிசையாகவும்; இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து மந்தி நல்அவை மருள்வன நோக்க - இவ்வாறு கேட்டற்கினியவாகிய பல்வேறு இசைகளையும் கேட்டு ஆரவாரம் மிகுந்து குரங்குகளாகிய நல்ல அவையினர் வியப்புற்றுப் பார்க்கும்படி; கழை வளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில் - மூங்கில்கள் வளர்தற்கிடனான பக்கமலைகளில் அங்குமிங்கும் உலாவிக் கூத்தாடுகின்ற மயில்கள்: விழவுக்கள விறலியின் தோன்றும் நாடன்- விழா நாளில் கூத்தாட்டரங்கத்தே புகுந்து ஆடுகின்ற கூத்தியர் போலத் தோன்றுதற்குக் காரணமான மலை நாட்டையுடைய நம் பெருமான்; என்க.

(வி-ம்.) அமை - மூங்கில். குயிலுதல் - செய்தல். கோடைவளி - மேல்காற்று: இன்னருவி - காட்சிக்கினிய அருவி என்க. தோடு - கூட்டம் தூம்பு - பெருவங்கியம். அவை - கூத்தாட்டரங்கு. விறலி - கூத்தி.

11 - 15: உருவ ......பலர்தில்

(இ - ள்) உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து - அழகிய வலிய வில்லினைக் கையில் பற்றிக் கொண்டு சிறந்த கணையை ஆராய்ந்து மற்றொரு கையிற்கொண்டு; செரு செய் யானை செல்நெறி வினாஅய் - தன்னோடு போர்செய்ய வந்து தன்னால் கணையெய்யப்பெற்றுப் புறமிட்ட யானை சென்ற வழியினை வினவி; புலர் குரல் ஏனல் புழையுடை ஒரு சிறை - முதிர்ந்த கதிர்களையுடைய தினைக்கொல்லையின் வாயிலின் ஒருபக்கத்தில்; மலர்தார் மார்பன் நின்றோன் கண்டோர் பலர் - மலர்ந்த மாலையையுடைய மார்பையுடையனாய் நின்றவனைப் பார்த்த மகளிர் பலராவார்; என்க.

(வி- ம்) உருவம் - அழகு. தெரிதல் - ஆராய்தல். செரு - போர். புலர்தல் - முதிர்தல். புழை - வாயில். பலர் என்றது தோழியைக் குறித்துக் கூறியபடியாம்.

15 - 18: அவருள் .....தோளேனே

(இ - ள்.) அவருள் ஆர் இருள் கங்குல் அணையோடு பொருந்தி - அம் மகளிருள் வைத்து நிறைந்த இருளையுடைய இரவின்கண் பாயலிலே கிடந்து; நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேன் - நீர் ஒழுகுகின்ற கண்களோடு மெலிந்த தோள்களையும் உடையேன்; ஓர் யான் ஆகுது எவன் கொல் - யான் ஒருத்தியே ஆவதற்கு உரிய காரணம் யாதோ அறிகின்றிலேன்; என்பதாம்.

(வி - ம்.) நாடனை மகளிர் பலர் கண்டாராக; அவரெல்லாம் அமைதியாக உறங்கா நிற்ப, யான் மட்டுமே உறக்கமின்றி வருந்துகின்றேன். மேலும் என் தோள்கள் மட்டுமே மெலிவுறுகின்றன; இதற்குக் காரணம் யாதோ என்றவாறு. எனவே என் நெஞ்சத்தை நாடன் கவர்ந்துகொண்டு போயினன் ஆதல் வேண்டும் என்பது குறிப்பாயிற்று இந்நிலை நீடிக்குமேல் யான் இறந்தொழிவேன் ஆதலால் நீ அறத்தொடு நிற்பாயாக என்பது இதன்கண் குறிப்பெச்சப் பொருள்.

இனி இதனை, தோழி வாழி நாடனாகிய மார்பன் நின்றோனைக் கண்டோர் பலர்; அவருள் அணையொடு பொருந்தி நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேன் ஓர் யான் ஆகுவது எவன் கொல் என இயைத்திடுக.

(பா. வே.) 10. நனவுப்புகு.
------------

செய்யுள் 83


திணை: பாலை.
துறை: தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(து - ம்.) அஃதாவது - பொருளீட்டுதற்குத் தலைவியைப் பிரிந்து பாலை வழியில் செல்லுகின்ற தலைவன் நெஞ்சம் தலைவியின் குணநலங்களை நினைந்து வருந்தியபொழுது அவன் அந்நெஞ்சிற்குக் கூறியது என்றவாறு.

(இ - ம்) இதற்கு "கரணத்தி னமைந்து முடிந்த காலை" எனவரும் (தொல். கற்பி - 5.) நூற்பாவின்கண் 'வேற்றுநாட் டகல்வாயின் விழுமத் தானும்' எனவரும் விதிகொள்க.

    வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீச்
    சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
    கறையடி மடப்பிடி கானத் தலறக்
    களிற்றுக்கன் றெழித்த உவகையர் கலிசிறந்து
    கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து         5
    பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
    நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
    நறவுநொடை நல்லில் புதவுமுதற் பிணிக்குங்
    கல்லா இளையர் பெருமகன் புல்லி
    வியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும்         10
    சேயர் என்னா தன்புகமிகக் கடைஇ
    எய்தவந் தனவால் தாமே நெய்தல்
    கூம்புவிடு நிகர்மலர் அன்ன
    ஏந்தெழில் மழைக்கணெம் காதலி குணனே.
            ------ கல்லாடனார்.

(உரை)

1-14: வலஞ்சுரி.......குணனே

(இ-ள்) சுரம் மராஅத்துக் கமழ்வலம் சுரி புது வீ-பாலை நிலத்தின்கண்ணே வெண்கடம்பினது மணங்கமழ்கின்ற, வலப் பக்கமாகச் சுற்றிய புதிய மலரை; சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி- சுருள்கொண்ட தலையாட்டம் போன்று அசையும்படி தந்தலை மயிரின்மேல் அழகுறும்படி அணிந்து; கறை அடி மடப் பிடி கானத்து அலற- உரல்போன்ற அடியினையுடைய இளைய பெண்யானை காட்டகத்தே நின்று வருந்தி அலறும்படி; களிற்றுக்கன்று ஒழித்த உவகையர்- அதன் ஆணாகிய கன்றினைப் பற்றிக்கொண்ட மகிழ்ச்சியை யுடையராய்; கலி சிறந்து கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து - ஆரவாரம் மிக்கு வலிய அடிமரத்தினையுடைய வெண்கடம்பின் கொழுவிய கொம்பைப் பிளந்து; பெரும் பொளி வெள் நார் அழுந்துபடப் பூட்டி- பெரிதாக நைத்து உரித்தெடுத்த வெள்ளிய நாரால் இயன்ற கயிற்றினாலே காலில் வடுவுண்டாக இறுக்கிக்கட்டி; நெடுங் கொடி நுடங்கும் நியமம் மூதூர் நறவு நொடை நல்இல் புதவு முதல் பிணிக்கும் - நெடிய கொடிச்சீலைகள் அசையா நின்ற அங்காடிகளையுடைய பழைமையான தமது ஊரின்கண் கள் விற்கின்ற நல்ல வீட்டினது முன்றிலிலே கொணர்ந்து கட்டுதற்கிடனான; கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்- தந்தொழிலை யன்றிப் பிறிதொன்றும் கற்றிலாத மறவர்களுக்குத் தலைவனாகிய புல்லி என்பவனுடைய பரந்த இடங்களையுடைய நல்ல நாட்டின்கண்ணதாகிய திருவேங்கடம் என்னும் மலையை யாம் கடந்த வந்தபின்பும்; நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக்கண் எம்காதலி குணன்- நெய்தலினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளியுடைய மலரை ஒத்த உயரிய அழகமைந்த குளிர்ந்த கண்களையுடைய நம் காதலியின் குணங்கள்தாம்; சேயர் என்னாது அன்புமிகக் கடைஇ எய்த வந்தன- அவர் சேய்மைக்கண் சென்றுவிட்டனர் என்று கருதாமல் அன்பு மிகவும் செலுத்துதலாலே இங்கும் நம்மை எய்துதற்கு வந்தனகாண்; என்பதாம்.

(வி-ம்) வீ- பூ. சுரி- சுருள். உளை- தலையாட்டம் என்னும் ஒருவகைக் குதிரை யணி கறை-உரல். களிற்றுக் கன்று என்றது ஆண் கன்றினை. கலி- ஆரவாரம். பொளி- பொளிந்த. -நைத்துரித்த. அழுந்துபட -தசையுள் ஆழும்படி எனினுமாம். நியமம்- அங்காடி. நொடை-விலை. புதவு முதல்- முன்றில். கள்விலைக்காகக் களிற்றுக் கன்றைக் கள்விற்போர் முன்றிலில் கொணர்ந்து கட்டும் மறவர் என்பது கருத்து. கல்லா இளையர்- நூல் கல்லாத இளையருமாம். வேங்கடம்- திருவேங்கடம் (திருப்பதிமலை). ஆல், தாம், ஏ: அசைச் சொற்கள். நிகர் மலர் - ஒளியுடைய மலர். தலைவியின் கண்களுக்கு நெய்தலின் மலர்கள் உவமை.

இனி, இதனை யாம் புல்லி வேங்கடம் கழியினும் காதலிகுணன்
சேயர் என்னாது நம்மை) எய்த வந்தன என இயைக்க.
-----------

செய்யுள் 84


திணை: முல்லை.
துறை: தலைமகன் பாசறை இருந்து சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-போர் மேற்சென்ற முடிவேந்தன் போர் முடிந்த பின்பும் சினந்தனியாது பாசறை இடத்து இருப்பானாக, அவனுக்குத் துணையாகச் சென்ற தலைவன் தலைவியை நினைந்து தன்னுள் வருந்திக் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு "ஒன்றாத் தமரினும்" எனவரும்(தொல். அகத்-41) நூற்பாவின்கண் பாசறைப் புலம்பலும் எனவரும் விதிகொள்க.

    மலைமிசைக் குலைஇய உறுகெழு திருவில்
    பணைமுழங் கெழிலி பெளவம் வாங்கித்
    தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
    மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
    இருநிலங் கவினிய ஏமுறு காலை         5
    நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
    அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
    நறுவீ முல்லை நாணமலர் உதிரும்
    புறவடைந் திருந்த அருமுனை இயவில்
    சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே         10
    எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
    அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
    கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
    தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
    அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து         15
    வினைவயிற் பெயர்க்குந் தானைப்
    புனைதார் வேந்தன் பாசறை யேமே.
            ---- மதுரை எழுத்தாளன்.

(உரை)

1-10: மலைமிசை......ஒண்ணுதல்

(இ-ள்) ஒள் நுதல்- ஒள்ளிய நெற்றியினையுடைய நங் காதலியானவள்; மலைமிசை குலைஇய உருகெழு திருவில் பணை முழங்கு எழிலி - மலையின் உச்சியில் வளைந்துள்ள நிறம் பொருந்திய இந்திரவில்லையும் முரசம் போன்ற முழக்கத்தையும் உடைய; முகில்; பௌவம் வாங்கி தாழ்பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ- கடலின்கண் நீரைப் பருகித் தாழ்ந்து பெய்தற்குரிய மிக்க நீரோடு வானத்தின்கண் வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுச்சியுற்று உலகத்தை வளைத்துக்கொண்டு; மாதிரம் புதைப்பப் பொழிதலின் - திசைகள் மறையும்படி மழையைச் சொரிதலாலே; காண்வர இருநிலம் ஏம் உறு காலை- இனிய காட்சியுண்டாகும்படி கவினிய பெரிய முல்லைநிலத்தில் வாழ்வோர் இன்பம் எய்துதற்குக் காரணமான கார்ப்பருவத்திலே; நெருப் பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க்கண் படாஅர் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாள்மலர் உதிரும் - நெருப்புப்போன்ற சிறிய கண்களையுடைய பன்றியானது நுண்ணிய மணலின்கண்ணுள்ள சிறிய தூற்றிலே உறங்குகின்ற பொழுது அதன் முதுகு மறைந்து போகும்படி நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையினது புதிய மலர்கள் உதிருகின்ற; புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் சீறூரோள் - காடு சார்ந்திருக்கும் அரிய முனை களையுடைய வழியிலுள்ள சிறிய ஊரினிடத்தே பிரிவாற்றாது பெரிதும் வருந்தி இருப்பாளாக; என்க.

(வி-ம்) குலைஇய- வளைந்த. உரு- நிறம். திருவில்- வானவில். (இந்திரவில்) பணை- முரசு -பணைபோல முழங்கும் எழிலி என்க. பெயல்- பெய்தல் தொழில். ஏர்பு- எழுச்சியுற்று. மாதிரம் -திசை. எழிலி வாங்கி ஏர்பு வளைஇப் புதைப்பப் பொழிதலின் என்க. காண்- காட்சி. ஏம்- ஏமம் என்பதன் விகாரம். அயிர்- நுண்மணல். படாஅர்- சிறு தூறு. துஞ்சுபுறம் புதைய- துஞ்சுங்கால் அதன் முதுகு மறைய என்க. புறவு- முல்லைப்பரப்பு. இயவு- வழி.

10-17: யாமே.....பாசறையேமே.

(இ-ள்) யாமே- அவளைக் கைவிட்டு வந்த வன்கண்மையையுடைய யாம் இப்பொழுது; எரிபுரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு- தீப்பிழம்பையொத்த செந்தாமரை முதலிய பல்வேறு மலர்களும் தலைமாறும்படி அள்ளி நெல் அரிகின்ற உழவர் கட்டிய அசைகின்ற தலையையுடைய பெரிய கதிர்க்கட்டுகளை; கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்-கள்ளைக்குடித்த தொழிலாளர்கள் சுமந்துகொண்டு களந்தோறும் செல்லுதற்கிடனான ; தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான்- மருதநிலம் சூழ்ந்த வெற்றிக்கொடி அசைகின்ற மதிலமைந்த இந்த ஊராகிய கொடுத்தற்கரிய திறைப்பொருளைப் பகை மன்னர்கள் வணங்கிக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாய்; சினம் சிறந்து வினைவயின் பெயர்க்கும் தானைபுனைதார் வேந்தன்- வெகுளிமிக்குப் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனைகளையும் அணிந்த வாகைமாலையினையும் உடைய நம்மரசனது; பாசறையேம்- பாசறை இடத்து அவளை நினைந்து வருந்தி இருக்கின்றேம், அவள் நிலை என்னையோ? என்பதாம்

(து-ம்) புரை: உவமவுருபு. எரி புரை பன்மலர் என்றது செந் தாமரை செங்கழுநீர் முதலியவற்றைமலர்களோடு அரிந்தநெல் அரிகளைத் தலைமாற வைத்துக் கட்டுதற்பொருட்டுப் பிறழ வாங்க வேண்டிற்று. அரிஞர்- கதிர் அரிந்த உழவர். சூடு- கதிர்க்கட்டு. வினைஞர் என்றது கூலிக்கு வேலைசெய்பவரை. தண்ணடை- மருதநிலம். மருதநிலம் சூழ்ந்த தமது அரண்மனையையே பகைவர் திறையாகக் கொடுப்பவும் கொள்ளான் என்றது, அரசனது மிகையாய மறப்பண்பினைக் குறைகூறி தன்னுள் நொந்துரைத்தவாறு. அவள் நிலை என்னையோ என்பது குறிப்பு.

இனி, ஒண்ணுதல், புறவு அடைந்திருந்த இயலில் சீறூரோள், யாமே, திறைகொடுப்பவும் கொள்ளான் வினைவயின் பெயர்க்கும் தானை வேந்தன் பாசறையேமே; என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 3. தாழ் பெயற்கெதிரி. 10. நன்னுதல்.
-------------

செய்யுள் 85


திணை: பாலை.
துறை: தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(த-ம்) அஃதாவது --தலைவன் பொருள்வயின்பிரிபவன், யாம் கார்ப்பருவம் தொடங்குமுன்னே மீண்டு வருகுவம் என்று கூறிச்சென்றவன், அப்பருவம் வந்துழியும் வந்திலனாக. பிரிவாற்றாமையால் தலைவி அக்கார்ப்பருவ வரவு கண்டு பெரிதும் வருத்துவாளைத் தோழி, ஆற்றி இருந்திடுக என வற்புறுத்திக் கூறியது என்றவாறு.

(இ-ம்) இதற்கு "பெறற்கரும் பெரும்பொருள்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 9) பிறவும் வகைபட வந்த கிளவி எனவரும் விதிகொள்க.

    நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்
    உண்ணா உயக்கமோ டுயிர்செலச் சாஅய்
    இன்னம் ஆகவும் இங்குநத் துறந்தோர்
    அறவர் அல்லர் அவரெனப் பலபுலந்து
    ஆழல் வாழி தோழி சாரல்         5
    ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
    கன்று பசி களைஇய பைங்கண் யானை
    முற்றா மூங்கில் முளைதரு பூட்டும்
    வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
    நன்னாட் பூத்த நாகிள வேங்கை         10
    நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை
    நணைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து
    துணைப்ப‌யிர்ந் தகவுந் துனைதரு தண்கார்
    வருதும் யாமெனத் தேற்றிய
    பருவங் காணாது பாயின்றால் மழையே.         15
            --- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

(உரை)

1-5: நன்னுதல்.....தோழி

(இ-ள்.) வாழி தோழி - தோழி நீ வாழ்வாயாக: நல்நுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும் உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் - நீதானும் அழகிய எமது நெற்றி பசலை பூப்பவும் பெரிய தோள்கள் மெலியவும் உணவு சிறிதும் உண்ணாமையால் உண்டான வருத்தத்தோடு உயிரே போகும்படி பெரிதும் மெலிந்து; இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் - யாம் பிரிவாற்றாமையால் இத்தன்மையேம் ஆகாநிற்பவும் இவ்விடத்தே நம்மைக் கைவிட்டுச் சென்றனர்; அவர் அறவர் அல்லர் என பலபுலந்து - ஆதலால் நீ கூறுவதுபோல நம் தலைவர் அறவோர் அல்லர், அத்தகையோர் வருதலும் அரிது என இன்னோரன்ன பற்பல சொல்லி வெறுத்து; ஆழல் - துன்பத்தில் மூழ்கிவிடாமல் ஆற்றுக; என்க.

(வீ-ர்.) அவரால் அன்பு செய்யப்பட்ட நாம் பிரிவாற்றாமையால் இத்தகைய எய்தும்படி துணிந்து துறந்துபோயினர். ஆதலால் அத்தகைய வன்கண்ணர் நம்மை நினைந்து வருதலும் அரிது என்பாள் இன்னம் ஆகவும் நத்துறந்தார் அவர் அறவர் அல்லர் என்று வன்புறை எதிரழிந்து கூறுகின்றாள். தோழி, நம்பெருமான் அறவோர் ஆகலான் இன்னே வருகுவர்! என்று வற்புறுத்தியதற்கு அவர் அறவர் அல்லர் என்று மறுத்தவாறு.

5-15: சாரல்...............மழையே.

(இ-ள்) சாரல் ஈன்று நாள் உலந்த மெல்நடை மடப்பிடி கன்று பசிகளைஇய- மலைப்பக்கத்தே கன்று ஈன்று சின்னாள் கழிந்த மெல்லிய நடையையுடைய இளிய பெண்யானைக்கும் அதன் கன்றிற்கும் பசி தீர்த்தற்பொருட்டு; பைங்கண்யானை முற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்- பசிய கண்ணையுடைய களிற்றியானை முதிராத மூங்கிலினது முளைகளைக் கொணர்ந்து அவற்றின் வாயில் ஊட்டுதற் கிடனான; வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை- வெற்றியையுடைய வேற்படையை யேந்திய திரையன் என்னும் அரசனுடைய திருவேங்கடம் என்னும் நெடிய மலையின்கண்; நல் நாள் பூத்த இளவேங்கை நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை- அழகிய விடியற்காலத்தே மலர்ந்துள்ள பெரிதும் இளமையுடைய வேங்கை மரத்தினது நறுமணங்கமழும் பூக்களினூடே நுழைந்து அவற்றின் துகள்படியப்பெற்ற புள்ளியையும் கோடுகளையும் உடைய மயிற் சேவலானது; நனை பசு குருந்தின் நாறு சினை இருந்து துணை பயிர்ந்து அகவும்- அரும்பிய பசிய குருந்த மரத் தினது நறுமணங்கமழுகின்ற கிளையின்மேல் இருந்து தனது பெடையை அழைத்து அகவுதற்குக் காரணமான; துனை தருதண் கார் வரதும் யாம் எனத் தேற்றிய - விரைதலைச் செய்கின்ற குளிர்ந்த கார்ப்பருவத்துத் தொடக்கத்தே வருவேம் யாம் என்று சொல்லி நம்மை நம்பெருமான் தேற்றிய; பருவம் மழை பாயின்று அதுகாண்- பருவமாகிய கார்ப்பருவத்து மழையும் பரவுகின்றது அதனை இங்குவந்து பார்! நம்பெருமான் இப்பொழுதே வருகுவர்; என்பதாம்.

(வி-ம்) சாரல்- மலைசார்ந்த இடம். ஈன்று நாள் உலந்த மடப்பிடி தானே இரைதேட மாட்டாமைக்கு, மென்னடை என்றது குறிப்பேதுவாய் நின்றது. பிடியானைக்கும் அதன் கன்றிற்கும் களிற்றி யானை பிடிக்கு ஈன்ற வயிறம் கன்றிற்குக் குழவி வயிறும் உண்மையின் முற்றாத முனைகொணர்தல் வேண்டிற்று. நம்பெருமான் இக்காட்சியைக் காணுங்கால் நின்னை நினைவர் ஆதலின் காலம் நீட்டித்திரார் என இறைச்சிப்பொருள் தோன்றிற்று மேலே மயில் பெடையை அழைக்கும் கார்ப்பருவம் என்றதும், இங்ஙனமே அன்புறு தகுந இறைச்சியில் கட்டிய படியாம். நம்பெருமான் குறித்துச் சென்ற கார்ப் பருவமும் இதோ வந்துவிட்டது என்பாள், மழை பாயின்று என்றாள். ஆதலால் நம்பெருமான் இன்னே வருகுவர் வருந்தாதே கொள் என்பது குறிப்பெச்சம். தலைவி தன்பத்தில் மூழ்கிப் பிறிதொன்றையும் காணா திருத்தலின் , அம்மழையை விரலாற் சுட்டி அதுகாண் என்றாள்,

இனி இதனை, தோழி வாழி நாம் இன்னம் ஆக, நம்மைத் துறந்தார். (அத்தகைய அவர்) அறவர் அல்லர் (வன்கண்ணர்) அவர் வருதலும் அரிது. எனப்புலந்து ஆழல்: அவர் வருதும் எனத் தேற்றிய பருவமும் இது. இதோ மழை பாயின்று அதுகாண்; என இயைத்திடுக.

(பா.வே.) 11. பொறி வரை. 13. பயிர்ந்திறைஞ்சு துனைதரு.
----------

செய்யுள் 86


திணை: மருதம்.
துறை: வாயில் மறுத்த தோழிக்கு தலைமகன் சொல்லியது தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.

(து-ம்.) அஃதாவது-பரத்தையர் சேரியினின்றும் வந்து தோழியைத் தலைவன் வாயில் வேண்ட, தோழி அதனை மறுத்தபொழுது அவன் பண்டு நிகழ்ந்த தொன்றனை நினைவு கூர்ந்து அவட்குச் சொல்லியது. தலைவியோடு அளவளாவி இருந்த தலைவன் தலைவிக்குப் பண்டு நிகழ்ந்ததைச் சொல்லி அசதியாடியதுமாம் என்றவாறு.

(இ-ம்.) இதற்கு "கரணத்தின் அமைந்து முடிந்த" எனவரும், (தொ. கற்பி -5.) நூற்பாவின்கண் அன்னபிறவும் மடம்பட வந்த தோழிக்கண்ணும் எனவரும் விதி கொள்க.

    உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
    பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
    தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
    மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
    கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்         5
    கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
    கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
    உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்         10
    புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
    நீரோடு சொரிந்த ஈரிதழ் அலரி         15
    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
    கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
    பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
    ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் 20
    கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
    தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ
    முயங்கல் விருப்பொடு முகம்புகை திறப்ப
    அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
    நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென         25
    இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
    செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
    அகமலி உவகையள் ஆகி முகனிகுத்
    தொய்யென இறைஞ்சி யோளே மாவின்
    மடங்கொள் மதைஇய நோக்கின்         30
    ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே.
            ----நல்லாவூர்கிழார்.

(உரை)

1--7: உழுந்து............வந்தென

(இ-ள்.) கனை இருள் அகன்ற கவின் பெறு காலை--மிக்க இருள் நீங்கிய அழகுடைய விடியற்காலத்தே; கோள் காலை நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப்புகழ் நாள் தலை வந்தென- தீய கோள்கள் தன்னைவிட்டு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களானது தீமை இல்லாத சிறந்த புகழையுடைய உரோகணி நாளிடத்தே வந்தெய்தியதாக அப்பொழுது; உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை பெருஞ்சோற்று அமலை நிற்ப- நம்முடைய இல்லத்தின்கண் உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய கனியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும் பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும்; நிரை கால்தண் பெரும்பந்தர்த் தரு மணல் ஞெமிரி-வரிசையாக நடப்பட்ட கால்களையுடைய குளிர்ந்த திருமணப்பந்தரின் கீழெல்லாம் புதிதாகக் கொணர்ந்த மணலைப் பரப்பி; மனை விளக்கு உறுத்து மாலை தொடரி-இல்லத்தின்கண் திருவிளக்கேற்றி வைத்து மலர்மாலை சூட்டி; என்க.

(வி-ர்.) உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம் பருப்புப் பொங்கல் என்றவாறு. பெருஞ்சோறு என்றது அறுசுவை உணவை. அமலை- ஆரவாரம். ஈண்டு, திருமணத்திற்கு வந்துள்ள மாந்தரனைவரும் உண்ணுதலாலே உண்டாகின்ற ஆரவாரம். திருமணக்காலத்தில் பந்தரிட்டுப் புதுமணல் பரப்புதலும் விளக்கேற்றி வைத்து அதற்கு மாலைசூட்டுதலும் இற்றைநாள் போலவே பண்டைநாளினும் வழக்கமாய் இருந்தமை உணரலாம். பண்டைநாள் தமிழ்ச் சான்றோர் திருமணத்திற்குத் திங்களும் உரோகணியும் சேர்ந்த நாளைச் சிறப்பாகக் கொண்டனர் என்பதும் இங்குணரப்படும்.

8-17; உச்சி........தயங்க.

(இ-ள்) உச்சிக் குடத்தர் புதுஅகல் மண்டையர் - தலையில் குடத்தை உடையவரும் புதிய அகன்ற வாயையுடைய மட் பாண்டத்தை உடையவரும் ஆகிய; பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்- பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கலநாண் உடைய பேரிளம் பெண்டிர்; முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர- முன்னே கொடுப்பனவும் பின்னெ கொடுப்பனவும் ஆகியவற்றை அறிந்து முறையே கொணர்ந்து கொடுக்குந்தொறும் கொடுக்குந் தொறும் வாங்கி ; புதல்வர் பயந்த திதலை அ வயிற்று வால் இழைமகளிர் நால்வர் கூடி- மக்களைப்பெற்ற தேமல் படர்ந்த அழகிய வயிற்றையும் சிறந்த அணிகலன்களையும் உடைய மங்கல மகளிர் ஒரு நால்வர் ஒருங்கு குழுமி நின்றுசெய்யுஞ் சடங்குகளை எல்லாம் செய்தபின்னர்; கற்பினின் வழாஅ நல்பல உதவி பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு என - கற்பொழுக்கத்தினின்றும் சிறிதும் வழுவாமல் நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து உன்னை மனைவியாகப்பெற்ற நின் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆகுக என்று சொல்லி வாழ்த்தி; நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி பல் இருங்கதுப்பின்நெல்லொடு தயங்க வதுவை நல்மணம் கழிந்த பின்றை- மங்கல நீரோடு விரவிச் சொரியப்பெற்ற நனைந்த இதழையுடைய மலர்கள் பலவாகிய கரிய கூந்தலின்மேல் நெற்களுடனே திகழாநிற்ப இவ்வாறு வதுவையாகிய நல்ல திருமணச் சடங்குகள் செய்து கழிந்த பின்னர் என்க.

(வி-ம்) இப் பகுதியால் பண்டைக்காலத்தில் தமிழர் ஆரியப் பார்ப்பனரின் சடங்குகள் இன்றித் திருமணச் சடங்குகள் செய்தமுறை நன்குணரப்படும். இதன் கண் முதுசெம் பெண்டிர் என்புழிச் செம்மையும் வாலிழை மகளிர் என்புழி இழையும் மங்கலநாண் உடைய மகளிர் என்பதை உணர்த்தின. பெற்றோன்- கணவன். பெட்கும்- விரும்பும். பிணை- பெண்.

18-24: கல்லென்..............உயிர்த்தகாலை

(இ-ள்) தமர் கல் என் சும்மையர் ஞெரேர் எனப் புகுதந்து பேர் இல் கிழத்தி ஆகு எனத் தர - அவ்வழி இருமுது குரவரை உள்ளிட்ட சுற்றத்தார் கலீர் என்று ஒலிக்கின்ற ஆரவாரத்தையுடையராய்க் காலந்தாழாது வந்து புகுந்து தலைவியை நோக்கி நீ பெரிய மனைவாழ்க்கைக்கு உரியை ஆவாயாக என்று வாழ்த்தி என் கையில் ஓம்படை செய்யாநிற்ப, ஓர் இல் கூடிய உடன் புணர்கங்குல்- அற்றைநாள் அவளும் யானும் ஒரு படுக்கை யறையின்கண் சேர்ந்த புணர்ச்சிக்குரிய இரவின்கண்; கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப- நாணத்தாலே அவள் தன் முதுகினை வளைத்துக் கொண்டு தனது புதுப்புடைவைக்குள் ஒடுங்கிக் கிடந்த இடத்தினை எய்தி யான் அவளைத் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தினை மூடி இருந்த புடைவையைச் சிறிது திறவா நிற்ப; அஞ்சினள் உயிர்த்த காலை- அவள் தன் பெண்மையாலே அஞ்சி நெடு மூச்செறிந்த பொழுது; என்க.

(வி-ம்.) தமர் ஈண்டுத் தாய்தந்தை முதலியோர். கல்லென், ஞெரேரென என்பனவற்றுள் முன்னது ஒலியும் பின்னது விரைவும்பற்றி வந்த குறிப்பு மொழிகள். ஓர் இல் என்றது பள்ளியறையை இதனைச் சதுர்த்தியறை என்பாருமுளர். முனபே நாணத்தால் வளைந்த முதுகினைப் பின்னும் வளைத்து என்பான் கொடும்புறம் வளைஇ என்றான். கோடிக் கலிங்கம் - புதுப்புடைவை. ஒடுங்கினள் - முற்றெச்சம். புதை-மறைப்பு. அஞ்சினள்- முற்றெச்சம்.

24-31: யாழநின்..........மாஅயோளே

(இ-ள்.) மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின் ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோள்- மானினது மடப்பமுடைய மதர்த்த பார்வையினையும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையும் மாமை நிறத்தினையும் உடைய நின் தலைவியை நோக்கி, இன் நகை இருக்கைப்பின் யான் யாழநின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என வினவலின்- இனிய மகிழ்ச்சியோடு யாங்கள் இருந்த இருக்கையின்மேல் இருந்ததன் பின்னர் யான் அனபுடையாய்! நின் நெஞ்சம் நினைந்தவற்றை மறையாமல் எனக்குச் சொல்க என்று வினவாநிற்ப; செ சூடு ஒள் குழை வண் காது துயல் வர அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து- அவள் சிவந்த அணிகலனாகிய ஒள்ளிய குழைகள் தனது வளவிய செவிகளில் அசைந்தாடும்படி உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை உடையவளாய் நாணம்மிக்கு விரைந்து முகங்கவிழ்ந்து குனிந்தனள்காண்; அதுதான் அவள் பண்பு என்பதாம்.

(வி-ம்.) எனவே அத்தகைய அன்பும் நாணமுடையாள் இவ்வாறு ஊடி இருத்தற்குக் காரணம் நீயே என்பது குறிப்புப் பொருளாயிற்று இது தலைவன் தோழி வாயில் மறுத்தமைபற்றி அவளைக் கடிந்த படியாம். இதன் பயன் தோழி மீண்டும் வாயில் நேர்தலாம் என்றுணர்க. இன்னகை இருக்கைப்பின் என்றது இடக்கர் அடக்கு. புணர்ந்தபின் என்றபடி செஞ்சூடு என்புழிச் சூடு அணிகலன். மா- மான். மதைஇய - மதர்த்த. ஓதி - கூந்தல்.

இனி இச்செய்யுளை, தலைவியை ஊடல் தீர்க்கும் தலைவன் அவள் முகங்கொடாமையின் முன்னிலைப் புறமொழியாகப் பண்டு அவளது அன்புநிலை கூறி அப்படி இருந்தவள் இங்ஙனம் ஆயினள் எனத் தன்நெஞ்சிற்குக் கூறியது என்பதே மிகவும் பொருத்தமாம்.

இனி இதனை வதுவை கழிந்த பின்றை, தமர்தர ஓரிற்கூடிய கங்குல் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ, முகம் புதை திறப்ப உயிர்த்த காலை நின்நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென யான் வினவலின் மாயோள் முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோள் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 10. தரீஇய. 11. பயந்த. 19. நுமர்தர.
----------

செய்யுள் 87


தினை: பாலை.
துறை: வினைமுற்றி மீளுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-தலைவியைப் பிரிந்துபோய் மீள்கின்ற தலைவன் இடைவழியில் அவளை நினைந்து விதுப்புறுகின்ற தன்நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் (தொல் கற்பி -5) நூற்பாவின்கண் மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும் எனவரும் விதி கொள்க.

    தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
    கன்றுவாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
    படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
    நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்
    குடுமி நெற்றி நெடுமரச் சேவல்         5
    தலைக்குரல் விடியல் போகி முனாஅது
    கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்
    எழுந்த தண்ணுமை இடங்கட் பாணி
    அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்
    குன்றசேர் கவலை இசைக்கும் அத்தம்         10
    நனிநீ டுழந்தனை மன்னே அதனால்
    உவவினி வாழிய நெஞ்சே மையற
    வைகுசுடர் விளங்கும் வாந்தோய் வியனகர்ச்
    சுணங்கணி வனமுலை நலம்பா ராட்டித்
    தாழிருங் கூந்தனங் காதலி         15
    நீளமை வனப்பின் தோளுமா ரணைந்தே
            ---- மதுரைப் பேராலவாயார்.

(உரை)

12: வாழிய நெஞ்சே

(இ-ள்.) நெஞ்சே வாழிய - எனது நெஞ்சமே நீ வருந்தாதே கொள் நீடு வாழ்வாயாக.

1-6: தீந்தயிர்........போகி

(இ.ள்.) தீம்தயிர் கடைந்த திரள் கால் மத்தம் கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை நல்கூர் சீறுர் - இனிய தயிரைக் கடைந்த பின்னர்த் திரண்ட காம்பினையுடைய மத்து, கன்றானது தன் நாவினாலே நக்கிச் சுவைக்கும்படி முற்றத்திலே தொங்கா நின்ற மர நிழலாகிய பந்தரையும் புல்லால் வேயப்பட்ட குடில்களையும் உடைய வறுமைமிக்க சிறிய ஊரின் கண்; எல்லித் தங்கிக் குடுமி நெற்றி நெடு மரச் சேவல் தலைக் குரல் விடியல் போகி - இரவின்கண் தங்கிச் சூட்டினையுடைய நீண்ட மரத்தின்கண் இருந்த சேவலினது முதல் கூக்குரல் உண்டான விடியற்காலத்திற்கு முன்னரே எழுந்து சென்று; என்க.

(வி-ம்.) கால் - காம்பு. வாய்; ஆகுபெயர். நா என்க. படலை - தழை. மரத்தின் தழை நிழலாகிய பந்தர் என்க. எல்லி - இரவு. சேவல் - கோழிச் சேவல். இரவில் மரத்தில் அமர்ந்து துயிலும் சேவல் என்றவாறு தலைக்குரல் என்றது சேவல் முதலில் கூவும் குரலை விடியல்- ஈண்டுப் பொழுது விடிதற்குக் காரணமான வைகறைப் பொழுதினை.

6-11: முனாஅது.மன்னே

(இ-ள்.) முனாஅது கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங்கண்பாணி - முற்படக் கிடந்த வழி இடத்தேயுள்ள அஞ்சாமையையுடைய மறவர்கள் வாழுகின்ற மலையிடத்தே பொருந்திய குறும்பின்கண் உண்டான தண்ணுமை என்னும் தோற்கருவியினது அகன்ற கண்ணினின்று எழுகின்ற ஓசை; அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்எனக் குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் - கடத்தற்;கரிய பாலை வழியிலே செல்கின்ற வம்பலருடைய நெஞ்சம் நடுங்கும்படி ஒலித்தற்கிடனான மலைப்பக்கத்தில் அமைந்த கிளை வழிகளையுடைய இந்தக் காட்டினூடே; நனி நீடு உழுந்தனை மன் - நீ மிகவும் நீள வருந்தி வந்தாய்; என்க.

(வி-ம்.) மறவர் எயின மறவர்; கல்கெழு குறும்பு, என்றதனால் இது குறிஞ்சி திரிந்த பாலை என்பது பெற்றாம். 'மேலே தீந்தயிர் கடைந்த..........தங்கி' என்றதனால் அது முல்லை திரிந்த பாலை என்க. தண்ணுமை- ஒருவகைத் தோற்கருவி. பாணி- ஓசை. தண்ணுமை. ஆறலை கள்வர் பறை ஆதலின் ஆறு செல்வோர் நெஞ்சம் நடுங்கும் என்க. கவலை- கிளைத்த வழி. அத்தம்- பாலைநிலம். நீடு- நீள மன்- அசைச்சொல். முல்லையும் குறிஞ்சியும் ஆகிய இருவகைப் பாலை நிலங்களையும் நெடிது வருந்திக் கடந்தாய் என்றிரங்குவான் நனி நீடு உழந்;தனை மன் என்றான்

11-16: அதனால்......அணைந்தே

(இ-ள்.) அதனால் மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர் - ஆதலால் இருள் தீரும்படி விடியுமளவும் எரிகின்ற விளக்குகள் திகழ்கின்ற வானத்தைத் தீண்டுகின்ற அகன்ற நம்முடைய இல்லத்தின்கண் சென்று அங்கு; தாழ்இருங் கூந்தல் நம்காதலி- நம்முடைய வருகையை எதிர்;பார்த்திருக்கும் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நம்மாருயிர்க் காதலியைக் கண்டும்; சுணங்கு அணி வனமுலை நலம் பாராட்டி அவளுடைய தேமல் படர்ந்த அழகிய முலையினது அழகைப் பாராட்டியும்; நீள் அமை வனப்பின் தோளும் ஆர் அணைந்து- நீண்ட மூங்கில் போன்ற அழகையுடைய அவளுடைய தோள்களைத் தழுவியும் ; இனி உவ- இனிமேல் இவ்வருத்தமெல்லாம் தீரும்படி பெரிதும் மகிழ்வாயாக என்பதாம்.

(வி-ம்.) அதனால் அவ்வாறு உழந்ததனால் இனி. உவ என்றான். அவ்வுழப்பின் பயனை இனி நீ எய்துவை என்பான் உழத்தலை ஏதுவாக்கினான்,. தாழ் இருங் கூந்தல்- நிலந்தோய நீண்டு வளர்ந்த கூ்ந்தல் என்க. இனி நமது பிரிவினால் கை செய்யாமல் வாளாது தூங்குகின்ற கூந்தல் எனினுமாம். ஆர்: அசைச்சொல்.

இனி இதனை, நெஞ்சே நீ சீறூர் எல்லித்தங்கி விடியற்போகி அத்தம் நீடு உழந்தனை மன்னே அதனால் வியனகர் நம் காதலி முலைநலம் பாராட்டி அணைந்து இனி உவ என இயைத்துக் கொள்க.

(பா._வே.) இடைச்சுரத்து மீளலுறும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
--------

செய்யுள் 88


திணை: குறிஞ்சி.
துறை: இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

(து-ம்.) தலைவன் களவொழுக்கமே காமுற்று மணஞ்செய்து கோடலிற் கருத்தின்றி நாள்தொறும் வந்து மீள்பவன் ஒருநாள் இரவின்கண் சிறைப்புறத்தே வந்து நிற்றலை அறிந்த தோழி அவனை வரைவு கடாவுவாள் அவன் கேட்பத் தலைவியை நோக்கிக் கூறுவான் போலக் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதனை "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல். களவி - 23) நூற்பாவின்கண், "களனும் பொழுதும்.....அனைநிலைவகையான் வரைதல் வேண்டினும்" எனவரும் விதியாலமைத்துக் கொள்க.

    முதைச்சுவல் கலைத்த மூரிச் செந்தினை
    ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப்
    பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
    புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
    கடுங்கைக் கானவன் கமுதுமிசைக் கொளீஇய         5
    நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
    நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
    சென்றனன் கொல்லோ தானே குன்றத்
    திரும்புலி தொலத்த பெருங்கை யானைக்
    கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்         10
    இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்
    திருங்கல் லிடரளை அசுணம் ஓர்க்கும்
    காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்
    கொடுவிரல் உளியம் கெண்டும்
    வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே         15
            ---- ஈழத்துப் பூதன் தேவனார்.

உரை

1-7 முதை.....நன்னராளன்

(இ-ள்.) முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய - முதிய மேட்டுக் கொல்லையில் தழைத்துள்ள பெரிய சிவந்த தினைப்பயிரின்கண் உயர்ந்து வளைந்த பெரிய கதிர்களைத் தின்னுதற்காக; பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்துக் குறுகும்- நல்ல திசையிலே பிளந்த வாயையுடைய பல்லி சொல்லுதலை ஆராய்ந்து அச்சொல் கேட்டவுடன் வருகிற இயல்பையுடைய; புருவைப்பன்றி வருதிறம் நோக்கி - இளம் பன்றி வருகின்ற செவ்வியைப் பார்த்து; கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து- வலிய கையையுடைய குறவன் தனது பரண்மிசைக் கொளுத்திவைத்த நீண்ட ஒளியினையுடைய விளக்கினை அடையாளமாக வைத்து நமது படப்பையின்கண் இரவுக் குறியிடத்தே வந்தருளி; நம்நடுங்கு துயர் களைந்த நன்னராளன்- நம்முடைய நடுங்குதற்குக் காரணமான வருத்தத்தைப் போக்கிய நன்மையுடையோன் ஆகிய நம்பெருமான்; என்க.

(வி-ம்) முதை- முதுமை. கலித்தல்- தழைத்தல். மூரிச் செந்தினை என்பது தினை வகையினுள் ஒன்று. வணர்- வளைந்த குரல்- கதிர். உணீஇய உண்ண (தின்ன ); பன்றி தினைக்கதிரைத் தின்ன வரும்போது பல்லி சொல்வதை ஆராய்ந்து பார்த்து நன்னிமித்தமாயின் வரும் என்றது. செய்யா மரபின செய்தனபோலக் கூறியதொரு வழு வமைதி என்க. இதன் பயன் தினைநுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்து வருவதாகக் கானவன் அது வருதிறம் அறிந்து சுடர் கொளுத்தினாற்போலத் தாமும் நமக்கு நடுங்குதுயர் வருதிறம் அறிந்து வந்து அளிசெய்தாரேனும் அவ்வொளியில் பன்றியினது வரவு வெளிப்படுமாறு போல நம்பெருமான் வரவும் வெளிப்படும் என இறைச்சி வகையால் தலைவனை அறிவுறுத்துல் என்க. புருவை- இளமை.

8-15 சென்றனன்....நெறியே

(இ-ள்) குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்கவுள் மலிபு இழிதரும் காமர்கடாஅம் - மலையின்கண் பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையினது கவுளின்கண் மிகுந்து ஒழுகுகின்ற அழகிய மதநீரை உண்ணுதற் பொருட்டு மொய்க்கின்ற ; இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப- கரிய சிறகுகளையுடைய வண்டின் கூட்டம் முரலா நிற்ப; இருங்கல் விடர் அளை அசுணம் யாழ் செத்து ஓர்க்கு,ம்- பெரிய மலையினது பிளப்பினால் உண்டான பொந்தின்கண் உறைகின்ற அசுண‌ப் ப‌ற‌வை அவ்விசையைக் கேட்டு இவ்விசை யாழினிசையோ என்று க‌ருதிச் செவி கொடுத்துக் கேட்ப‌த‌ற்கு இட‌னான‌; காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி உளியம் கொடுவிரல் கெண்டும்- மூங்கில் அட‌ர்ந்த‌ குறுங்காட்டில் பாம்புக‌ள் இற‌ந்தொழியும்ப‌டி நெருங்கிக் க‌ர‌டி த‌ன் வளைந்த‌ விரல்களாலே தோண்டும்; வடுவு ஆழ் புற்றின வழக்கு அருநெறியே- சுவ‌டு ப‌திந்துள்ள‌ புற்றுக்க‌ளையுடைய‌ ம‌க்க‌ள் செல்லுதற்கு அரிய‌ வ‌ழியின்க‌ண்; சென்ற‌ன‌ன் கொல்லோ தானே - ந‌ம்பெருமான் மீண்டு போயின‌னோ; என்ப‌தாம்.

(வி-ம்.) என‌வே இத்த‌கைய‌ இன்னாமை மிக்க‌ வ‌ழியிலேதான் நம்பெருமான் ந‌ம் பொருட்டு நாள்தோறும் வ‌ந்து போகின்றார். அவ‌ர்க்கு ஏதேனும் ஏதம் நிக‌ழுமாயின் யாம் உயிர் வாழ‌வ‌ல்ல‌மோ என்று இம்ம‌க‌ளிர் பெரிதும் அஞ்சுகின்ற‌ன‌ர் என்று த‌லைவ‌ன் உண‌ர‌ வேண்டும் என்பது இத்தோழியின் க‌ருத்தாகும் என்க‌. இத‌ன் ப‌ய‌ன் த‌லைவ‌ன் வரைத‌ற்க‌ண் முயல்வானாத‌ல் வ‌ண்டின் ஓசையை அசுண‌ம் யாழிசை என்று க‌ருதி ம‌கிழுதல்போல‌ ந‌ம்பெருமானும் இக் க‌ள‌வின்பத்தையே சிற‌ந்த‌ இன்ப‌ம் என்று க‌ருதுகின்றான்; இத‌னினும் சிற‌ந்த‌ அற‌த்தொடுப‌ட்ட் இன்ப‌ வாழ்க்கையை நினைக்கின்றில‌ன் என‌ இத‌ன்க‌ண் உள்ளுறை காண்க‌.

இனி, இத‌னைத் தோழி கான‌வ‌ன் கொளீஇய‌ விள‌க்க‌ம் நோக்கி வ‌ந்து ந‌ம் துயர் க‌ளைந்த நன்னராளன் புற்றின, (ஆகிய) வழக்கரு நெறி சென்றனன் கொல்லோ என இயைத்துக் கொள்க.

(பா.-வே.) 13. காம்புபயி.
-------------

செய்யுள் 89


திணை: பாலை.
துறை: ம‌க‌ட்போக்கிய‌ செவிலித்தாய் சொல்லிய‌து.

(து-ம்.) த‌லைவ‌ன் த‌லைவியை அவ‌ள் த‌ம‌ர் அறியாம‌ல் த‌ன்னுட‌ன் அழைத்துப் போய்விட‌ அச்செய்தி அறிந்த‌ செவிலித்தாய் த‌லைவியின் மென்மை க‌ருதி வ‌ருந்திக் கூறிய‌து என்ற‌வாறு.

(இ-ம்.) இத‌னை "எஞ்சியோர்க்கும் எஞ்சுத‌ல் இல‌வே' (தொல்- அக‌த்-42) என்ப‌த‌னால் அமைத்துக் கொள்க‌.

    தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்
    உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை
    உருத்தெழு குரல குடிஞைச் சேவல்
    புல்சாய் விடரகம் புலம்ப வரைய
    கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்         5
    சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்
    தூழுறு விளைநெற் றுதிரக் காழியர்
    கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழியக்
    களரி பரந்த கல்நெடு மருங்கின்
    விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்         10
    மைபடு திண்டோள் மலிர வாட்டிப்
    பொரைமலி கழுதை நெடுநிரை தழீஇய
    திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த
    படுபுலாக் கமழும் ஞாட்பில் துடியிகுத்
    தருங்கலந் தெறுத்த பெரும்புகல் வலத்தர்        15
    வில்கெழு குறுப்பிற் கோள்முறை பகுக்குங்
    கொல்லை யிரும்புனம் நெடிய என்னாது
    மெல்லென் சேவடி மெலிய ஏக
    வல்லுநள் கொல்லோ தானே தேம்பெய்
    தளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள்        20
    இடுமணற் பந்தருள் இயலும்
    நெடுமென் பணைத்தோள் மாஅ யோளே.
            --- மதுரைக் காஞ்சிப் புலவர்.

(உரை)

19-22: தேம்பெய்.........மாஅயோளே

(இ-ள்.) தேம்பெய்து அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள் - தேன்பெய்து அளாவிய இனிய பாலைக் கோல் கொண்டு அச்சுறுத்தவும் பருக மறுத்து; இடுமணல் பந்தருள் இயலும் - கொணர்ந்து பரப்பிய மணலையுடைய பந்தரின்கண் என் கைக்கு அகப்படாமல் அங்குமிங்குமாக ஓடுகின்ற, நெடுமெல் பணைத்தோள் மாஅயோள் - நெடிய மெல்லிய மூங்கில் போன்ற தோளையும் மாமை நிறத்தினையும் உடையவளாகிய என் செல்லி என்க.

(வி-ம்.) தேம் - தேன். இடுமணல் - கொணர்ந்திட்ட மணல். பந்தர் - முன்றிலிலிட்ட பந்தர் என்க. முதுமையுடைய செவிலி கைக்கு அகப்படாமல் அங்குமிங்குமாக ஓடுவாள் என்றவாறு. இதனோடு "முத்தரிப் பொற்சிலம்பொலிப்பத் தத்துற்று, அரிநரைக் கூந்தற் செம் முது செவிலியர் . பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளை யாட்டி" எனவரும் நற்றிணை (110) ஒப்பு நோக்குக.

1-5: தெறுகதிர்...............ஆங்கண்

(இ-ள்) தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்- சுடுகின்ற கதிரவன் வானத்துச்சியில் நின்று எரித்தலான்; உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை - மிக்க மழைநீர் வற்றிப்போன பேய்த்தேரையுடைய அகன்ற பாலைப் பரப்பின் கண்; குடிஞைச் சேவல் புல்சாய் விடர் அம் புலம்ப வரைய - கூகைச்சேவல் பசும் புற்களும் அழிந்துபட்ட தம் பொந்துகள் தனித் தொழியப் பறந்துபோய் மலையின்கண் இருந்து; கல்லெறி இசையின் உருத்து எழுகுரல் இரட்டும் ஆங்கண் - மலையினின்றும் சரிகின்ற கற்கள் உண்டாக்குகின்ற ஓசைபோல வெப்பத்தோடு எழுகின்ற குரலையுடைய வாய் மாறி மாறிக் குழறுகின்ற அவ்விடத்தே என்க.

(வி-ம்) தெறுதல் - சுடுதல்; அழித்தலுமாம். ஓடு தேர் என்றது, பேய்த்தேரை. உருத்தெழு குரல என்புழி, உருத்தல் – வெப்பம் செய்தல் குடிஞை - கூகை. பேராந்தை என்பதுமது. இரட்டுதல் - ஒன்று ஒலித்த உடன் மற்றொன்று ஒலித்தல்.

6-9: சிள் வீடு..............மருங்கின்

(இ-ள்.) சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழ் உறு விளைநெற்று உதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக் களரி பரந்த - சிள்வீடு என்னும் வண்டுகள் ஆரவாரிக்கின்ற சிறிய இலையினையுடைய வேலமரத்தின்கண் காய்த்து முற்றிய நெற்றுக்கள் உதிரா நிற்ப வண்ணார்கள் தொழிலுக்குதவும் வெவ்விய உவர்மண் ஒழியக் களர்மண் பரந்துள்ள ; கல்நெடு மருங்கின் - மலைப்பக்கத்தே அமைந்த நீண்ட இடத்தினையும்.

(வி-ம்.) சிள்ளீடு - இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒருவகை வண்டுகள். இவை வேலமரத்தில் மிகுதியாகக் காணப்படும். வேல் - கருவேல். அத்து:சாரியை. ஊழ் - ஊழ்த்தல். உறு – பகுதிப் பொருட்டு. கல் - பரற்கல்லுமாம்.

10-14: விளரூன்..ஞாட்பின்

(இ-ள்) விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் மை படு திண் தோள் மலிர - நிணமாகிய ஊனைத்தின்ற வீக்கிய வில்லையுடைய எயினர்; மௌ போன்று கறுத்த தம் தோள்கள் பூரிக்கும்படி; பொறைமலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் வயவர் வாட்டி - சுமைமிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைத் தொடர்ந்து வருகின்ற திருந்திய வாட்போரில் வன்மையுடைய மறவராகிய வணிகரைப் போரின்கண் வென்று; அருந்தலை துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பின் - துணித்தற்கு அரிய தலைகளைத் துணித்துப்போகட்டமையால் உண்டான புலால் நாறுகின்ற போர்க்களத்தின்கண் என்க.

(வி-ம்) விளர் -நிணம். வீக்குசிலை வீங்குசிலை என மெலிந்தது. வீக்குதல் - கட்டுதல். நாண் ஏற்றிய சிலை என்றவாறு. பொறை - பண்டச்சுமை வயவர் என்றது வணிகரை. வணிகர் பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்லுவர். இவரை வாணிகச் சாத்து என்ப. அவருள்ளும் வீரர் உளர் ஆகலின் சாத்து என்னாது வயவர் என்றார். புலா ஊன். ஞாட்பு போர்க்களம்.

14- 19: துடியிகுத்து.......தானே

(இ-ள்.) துடி இகுத்து அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர் - தமது வெற்றிக்கு அறிகுறியாகத் துடியை மெல்ல முழக்கிப் பெறற்கரிய அணிகலன்களை அவ் வணிகர்பால் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பமுடைய வெற்றியையுடைய அம்மறவர்கள்; வில் கெழு குறும்பின் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும்புனம் நெடிய என்னாது - விற்கள் பொருந்திய தம்மூராகிய குறும்பின்கண் ஒவ்வொருவரும்; கொள்ளும் முறைப்படி பகுத்துக் கொள்ளுதற்கிடனான வறிய கொல்லைகலளையும் பெரிய தினைப்புனங்களையும் உடைய வழி நீண்டன என்று கருதாமல்; மெல் என் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ தானே - தனது மெல்லிய சிவந்த அடிகள் மெலியுமாறு அவனோடு நடந்து செல்ல மாட்டுவளோ என்பதாம்.

(வி-ம்) குறும்பு - எயினர் ஊர். கோள்முறை இன்னார்க்கு இத்துணை எனத் தொன்றுதொட்டுப் பகுத்துக் கொடுக்கும் முறை. கொல்லைகளையும் புனத்தையும் உடைய வழி என்க. கொல் : ஐயம். ஓ, தான், ஏ: அசைச் சொற்கள்.

இதனை பால் அலைப்பவும் உண்ணாளாய் இயலும் மாஅயோள் கொல்லை இரும்புனம் நெடிய என்னாது சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ என இயைத்துக்கொள்க.

(பா-வே) 3. குடுமிச் சேவல். 11. திணிதோள் 21. பந்தரியலு.
---------------------------

செய்யுள் 90


திணை: நெய்தல்.
துறை: பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று இற்செறிப்பு அறிவுறீஇயது.

(து-ம்.) அஃதாவது வரைதற்கண் கருத்தின்றிக் களவொழுக்கமே காமுற்று நாள்தோறும் பகற்குறியிடத்தே வந்து மீளுகின்ற தலைவனை ஒருநாள், தோழி தமியளாய்ச் சென்று எதிர்ப்பட்டு, தலைவியைத் தமர் இற்செறித்தமை கூறிக் குறிப்பாக வரைவு கடாஅயது,
என்றவாறு.

(இ-ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல். களவி - 21) நூற்பாவின்கண் அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் எனவரும் விதி கொள்க.

    மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி
    இளையோ ராடும் வரிமனை சிதைக்கும்
    தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச்
    சில்செவித் தாகிய புணர்ச்சி அலரெழ
    இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள்         5
    வருமுலை வருத்தா அம்பகட்டு மார்பில்
    தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்
    நீங்கு கென்றியான் யாங்ஙனம் மொழிகோ
    அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது
    பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்         10
    இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
    கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
    உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
    நறுநுதல் அரிவை பாசிழை விலையே.
           ---- மதுரை மருதனிள நாகனார்

(உரை)

1-5: மூத்தோர்.........அறியாய்

(இ-ள்.) மூத்தோர் அன்ன வெள் தலைப்புணரி இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் - நரைத்த தலையையுடைய முதியவர் போல வெள்ளிய தலையையுடைய கடலானது பேதை மகளிர் விளையாடுகின்ற மணல் வீட்டினை அழித்தற்கிடனான, தளை அவிழ் தாழைக் கானல் அம்பெருந்துறை - மடல் விரிந்து மலர்கின்ற தாழையையுடைய கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையிடத்தே நிகழ்ந்த; சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ - ஒரு சில மகளிர் செவிகளில் மட்டுமே பட்டிருந்த நுங்கள் இயற்கைப் புணர்ச்சி, பின்னர் யாண்டும் அலராக எழா நிற்றலால்; இல்வயின் செறித்தமை அறியாய் - எங்கள் சுற்றத்தார் தலைவியை இற்செறித்தமை நீ அறிந்திலை என்க.

(வி-ம்) இதன்கண் மூத்தோர் இளையோரை வருத்தார் அன்றே! மூத்தோர் போன்ற கடல் அவ்வறத்தைக் கடைப்பிடியாமல் பேதை மகளிர் மனையைச் சிதைத்தாற் போன்று பேரறிவுடைய நீர் சிறியேமாகிய எங்களை நுமது களவொழுக்கத்தாலே பெரிதும் வருத்துகின்றீர் என உள்ளுறை காண்க. கடலின்கண் அலைகள் வெள்ளிய துளிகளோடும் நுரையோடும் புரளுங்கால் வெண்மையாகத் தோன்றுமாதலின் வெண்டலைப் புணரி என்றாள். வரிமனை மணலால் வரி வரியாகக் கோலும் சிற்றில். தளை - கட்டு. செலித்து - செவியின் கண்ணது. புணர்ச்சி - கூட்டம். முன்னர் அம்பலாய்ச் சிலர் மட்டும் அறிந்த நும் புணர்ச்சி இப்பொழுது அலராய்ப் பலரானும் அறியப்பட்டது. ஆதலால் எமர் தலைவியை இச்செறித்தனர் நீ அதனை அறியாது வருகின்றனை என்றவாறு.

5-8: பன்னாள்........மொழிகோ

(இ-ள்) பல் நாள் அம் பகட்டு மார்பின் வருமுலை வருத்தா தெருமரல் உள்ளமொடு - பல நாளாக நீ வளரும் முலையினையுடைய எம் பெரமாட்டியை நின் அழகிய பெருமையுடைய நினது மார்பினாலே வருத்திச் சுழலுகின்ற நெஞ்சத்தோடு வருந்துகின்ற; நின்வயின் நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகு - நின்னிடத்தே நீ இவ்வாறு வாராதே கொள் என்று யான் எவ்வாறு துணிந்து சொல்லுவேன்; என்க.

(வி -ம்) வருமுலை - அன்மொழித்தொகை. மார்பினாலே வருத்தி என்க வருத்தா - வருத்தி. தெருமரல் - சுழற்சி. கண்ணோட்டமின்றி நின்னிடத்தில் யான் சொல்ல மாட்டுவனோ என்றவாறு. எங்கள் வருத் தம் அறிந்து வரைந்துகொள்ள நினையாத உமக்கு நீங்குகென்று அறிய யான் சொன்னாலும் அறியீர் என்னும் கருத்தான் யாங்ஙனம் மொழிகோ என்றனள்; என்பர் பழையவுரையாசிரியர்.

9-14: அருந்திறல்......விலையே

(இ-ள்) பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர் அருந்திறல் கடவுள் செல்லூர் - பெரிய கடல்போல முழக்கத்தையுடையதாகிப் புதிய வருவாயினையும் உடைய அரிய திறலையுடைய தெய்வங்கள் பலி கொள்ளுகின்ற செல்லூரின்; குணாஅது இரும்பு இடம் படுத்த வடுஉடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம் ஆயினும் - கிழக்கின் கண்ணதாகிய இரும்பாலியன்ற படைக் கலங்கள் தம்மிடம் உண்டாக்கிய வடுக்களை உடைய முகத்தை உடையராகிய அஞ்சாமையையுடைய கோசருடைய ஊரினைக் கொடுத்தாலும்; நறுநுதல் அரிவை பாசிழை விலை உறும் எனக் கொள்ளுநர் அல்லர் - எம் சுற்றத்தார் எம் பெருமாட்டிக்குப் புதிய அணிகலன்களுக்கு விலையாக அமையும் என்று மனத்தில் அமைதி கொள்ளுவார் அல்லர் காண்; என்பதாம்.

(வி-ம்.) இரும்பு - பகைவருடைய வேல் அம்பு முதலிய படைக் கலம்; அப் படைக்லங்களால் விழுப்புண்பட்டு உண்டாகிய தழும்புகளையுடைய முகத்தையுடைய கோசர் வாழுகின்ற ஊராகிய நியமம் என்றவாறு. எனவே நீ உன்னுடைய சான்றோரைக் கொண்டு மகட் பேசி எமரையும் அமைதி செய்துகொண்டு வரைந்து கோடல் வேண்டும் என்பது கருத்தாயிற்று.

இனி இதனைப் பெருமானே நீ அலரெழ எம்பெருமாட்டியை இற்செறித்தமை அறியாமல் வருந்துகின்றாய் நின்வயின் யான் நீங்குக என்று யாங்ஙனம் மொழிகு. எமர் நியமம் கொடுப்பினும் இழைவிலை உறும் எனக் கொள்குநர் அல்லர் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 12. கருங்கட்
-----------

செய்யுள் 91


திணை: பாலை.
துறை: பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(து-ம்.) அஃதாவது - தலைவன் பொருள் ஈட்டுதற்குத் தலைவியைப் பிரிந்து போனவன் குறித்த பருவத்தே வாராமையின் தலைவி பிரிவாற்றாது வருந்துவாளை ஆற்றியிருந்திடுக என வற்புறுத்துகின்ற தோழி சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "பெறற்கரும் பெரும்பொருள்" எனவரும் (தொல்.கற்பி. 9) நூற்பாவின்கண் பிறவும் வகைபட வந்த கிளவி, என்னும் விதிகொள்க.

    விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
    வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்
    அருவி யான்ற பெருவரை மருங்கில்
    சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது.
    பாசி தின்ற பைங்கண் யானை         5
    ஓய்பசிப் பிடியொ டொருதிறன் ஒடுங்க
    வேய்கண் ணுடைந்த வெயிலவிர் நனந்தலை
    அரும்பொருள் வேட்கையின் அகன்றன ராயினும்
    பெரும்பே ரன்பினர்தோழி இருங்கேழ்
    இரலை சேக்கும் பரலுயர் பதுக்கைக்         10
    கடுங்கண் மழவர் களவுழ வெழுந்த
    நெடுங்கால் ஆசினி ஒடுங்காட் டும்பர்
    விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்
    பசியென வறியாப் பணைபயில் இருக்கைத்
    தடமருப் பெருமை தாமரை முனையின்         15
    முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்
    குடநாடு பெறினும் தவிரலர்
    மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே.
            ---- மாமூலனார்.

(உரை)

1-9: விளங்கு...........தோழி

(இ-ள்.) விளங்கு பகல் உதவிய பல்கதிர் ஞாயிறு வளம்கெழு மாமலை பயம் கெடத் தெறுதலின் - உலகின்கண் உயிர்களுக்கு எல்லாப் பொருளும் விளங்குதற்குக் காரணமான பகற் பொழுதை வழங்கிய பலவாகிய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலம் வளம் பொருந்திய பெரிய மலைகள் தம் பயன்கள் கெடும்படிக் காய்தலாலே; அருவி ஆன்ற பெருவரை மருங்கில் சூர்ச்சனை துழைஇ நீர்ப்பயம் காணாது பாசி தின்ற பைங்கண் யானை - அருவிகள் இல்லையான பெரிய மலைச்சாரலிலே தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறைகின்ற சுனைகளிடத்தே இறங்கிக் கையினால் துழவிப் பார்த்தும் நீராகிய பயனைக் காணாமல் அவ்விடத்தே உலர்ந்து கிடக்கும் பாசியைத் தின்ற பசிய கண்ணையுடைய யானையானது; ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை - இயக்கம் ஓய்ந்து போதற்குக் காரணமான பசியோடே தனது பிடியானையோடு ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடப்ப மூங்கில்களின் கணுக்கள் உடையும்படி காய்கின்ற வெயில் விளங்குகின்ற அகன்ற பாலைப் பரப்பிலே ; அரும்பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் பெரும்பேர் அன்பினர் - நம்பெருமான் ஈட்டுதற்கரிய பொருளின்கண் அவாவினாலே நம்மைக் கைவிட்டுப் போயினர் ஆயினும், அவர் தாம் மிகப் பெரிய அன்புடையர் அல்லரோ! ஆதலால்; என்க.

(வி-ம்.) இதன்கண் நம்பெருமான் செல்லும் வழியின்கண் களிற்றியானை நீரும் உணவும் பெறாது ஓய்ந்துழியும் தன் பிடியோடு ஒருபக்கத்தே கிடத்தலைக் காண்பர; அங்ஙனம் காணும்பொழுது அவர் உன்னை நினையாதிரார் என, அன்புறு தகுந இறைச்சியில் சுட்டியவாறு காண்க.

பயம் - பயன். சூர் - தீண்டிவருத்துந் தெய்வம். பாசி – உலர்ந்த பாசி என்க. வேய்கண் - மூங்கிலினது கணு.

9-18: இருங்கேழ்........மறந்தே

(இ-ள்) இருங்கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை - கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பரற் கற்களால் உயர்ந்த கற்குவியலின் கண்ணே; கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் - அஞ்சாமையையுடைய மழ நாட்டினர் ஆக்களைக் களவு செய்யும் களவேர் உழவருக்கு உதவியாக வளர்ந்த நெடிய காலையுடைய ஆசினிப்பலாவையுடைய ஒடுங்காடு என்னும் ஊருக்கு அப்பாலுள்ள; விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப பசியென அறியாப் பணைபயில் இருக்கை - இறுக்கிக் கட்டிய முழவினையுடைய குட்டுவன் காத்தலால் குடிகள் பசி என்று சொல்லி அறியாத மருத நிலமிக்க ஊர்களையுடைய; தடமருப்பு எருமை தாமரை முனையின் முடம் முதிர்பலவின் கொழுநிழல் வதியும் - வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேய்ந்த தாமரையை வெறுக்குமானால் முடத்தன்மை மிகுந்த பலாவினது கொழுவிய நிழலிலே தங்குதற்கிடனான; குடநாடு பெறினும் - குட நாட்டையே பெறுவதானாலும்; மடமான் நோக்கி நின் மாண் நலம் மறந்து தவிரலர் - மடப்பம் பொருந்திய பார்வையினை யுடையோய் நினது மாட்சிமைப்பட்ட அழகினை மறந்து தங்குவாரல்லர் என்பதாம்.

(வி-ம்.) எனவே அவர் இப்பொழுதே வருகுவர் நீ வருந்தாதே கொள் என்பது குறிப்பெச்சம் ஆயிற்று. நம்பெருமான் பெரும்பேரன்பினர் ஆதலால் அவர் குடநாடு பெறினும் நின்நலம் மறந்து தங்குவாரல்லர் என்றாளாயிற்று. இரலை - ஒருவகை மான். களவுஉழ என்றது களவு செய்ய என்றவாறு. களவு செய்வார்க்கு ஒடுங்காடு உதவியாய் இருக்கும் என்பது கருத்து. குட்டுவன் - சேரன். பணைபயில் இருக்கை. என்றது மருதநிலத்தூர்களை. பலாமரம் பெரும்பாலும் முடம் பட்டிருத்தல் இயல்பு ஆதலின் முடமுதிர் பல என்றார்.

இனி இதனை, தோழி! மான் நோக்கி! பேரன்பினர் நனந்தலை அரும்பொருள் வேட்கையின் அகன்றனராயினும் குடநாடு பெறினும் நின்நலம் மறந்து தவிரலர் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 2. வயங்கெழு. 3. பெருவள மருங்கிற்.
-----------

செய்யுள் 92


திணை: குறிஞ்சி.
துறை: இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்குத் தலைமகனைப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி வரைவு கடாயது.

(து-ம்.) அஃதாவது-மணஞ்செய்து கோடலில் கருத்தின்றி நாள்தொறும் இரவுக்குறியின்கண் வந்து போகின்ற தலைவனை வரைவு முடுக்குதற் பொருட்டுத் தோழி ஒருநாள் தலைவன் இரவில் வந்து மீள்பவன் எதிர்சென்று நீ இனி இரவில் வாராதே கொள்! யாம், நாளைத் தினை காவலுக்கு வருவேம் என நீ பகலில் வருக என்பதுபடச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல். களவி-23)நூற்பாவின்கண் களனும் பொழுதும்.......அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் எனவரும் விதிகொள்க.

    நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்
    குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
    செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்
    வாரல் வாழியர் ஐய நேரிறை         5
    நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
    காவல் கண்ணினம் தினையே நாளை
    மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
    ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
    தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை         10
    உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின்
    திருமணி விளக்கிற் பெறுகுவை
    இருண்மென் கூந்தல் ஏமுறு துயிலே.
            ---- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.

(உரை)

1-5: நெடுமலை.............ஐய

(இ-ள்.) ஐய வாழிய நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னிப் படு மழை பொழிந்த பால் நாள் கங்குல் - பெருமானே! நீ வாழ்வாயாக! நெடிய மலைச்சாரலிலே கண்ணின் ஒளி மழுங்கும்படி மின்னி மிகவும் மழை பொழிந்த நள்ளிரவின் இருளிலே; குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமும் சாரல் - யானை நடுங்கும்படி தாக்கி வளைந்த வரிகளையும் சிவந்த கண்ணையுமுடைய பெரிய புலியானது முழங்கா நின்ற மலையின் பக்கத்தே; வாரல் - இனி நீ வாராதே கொள்; என்க.

(வி-ம்.) இதன்கண் புலி யானையைத் தாக்கி முழங்கும் சாரல் என்றது ஆற்றது தீமை கூறி இரவில் வாரற்க என்றதற்கு ஏதுக் காட்டியபடியாம்.

படுமழை - மிக்க மழை. குஞ்சரம் - யானை. குழுமுதல் - முழங்குதல். வாரல் - அல்லீற்று எதிர்மறை வியங்கோள்.


5-7: நேர் இறை...........நாளை

(இ-ள்.) நாளை நேர் இறை நெடுமெல் பணைத்தோள் இவளும் யானும் - நாளைப் பகற்பொழுதிலே அழகிய முன் கையையும் நெடிய மெல்லிய பருத்ததோளையும் உடைய எம் பெருமாட்டியும் யானும்; தினை காவல் கண்ணினம் – தினைப் புனத்தைக் காவல் செய்தற்குக் கருதியுள்ளேம்; என்க.

(வி-ம்.) நேர் - அழகு. இறை - முன்கை: ஆகுபெயர். தலைவி இருவர்க்கும் நெஞ்சத்தினள் ஆதலால் இவள் என அண்மைச் சுட்டால் சுட்டினள்.

8-13 மந்தியும் ...துயிலே

(இ-ள்.) மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் ஒள் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண் - குரங்குகளும் ஏறி அறிய வொண்ணாதபடி வளர்ந்த மரங்கள் மிகுந்த சிறிய காட்டிலே ஒள்ளிய செங்காந்தள் மலர்ந்துள்ள அவ்விடத்திலே; தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை - குளிர்ந்த பல அருவிகளின் நீர் விழுகின்ற ஓரிடத்தே; உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கின் - இடிஏறு சினந்து முழங்குதலாலே வலியழிந்த பாம்பு உமிழ்ந்த சிறந்த மணியாகிய விளக்கொளியிலே; இருள்மெல் கூந்தல் ஏம் உறு துயில் பெறுகுவை - இருண்ட மெல்லிய இவளுடைய கூந்தலாகிய பாயலிலே இன்பம் எய்துதற்குக் காரணமான துயிலை எய்துவாய் என்பதாம்.

(வி-ம்.) பயில் - மிகுந்துள்ள. இறும்பு - காடு உரும்-இடி. சிவப்பு - இங்கு, சினம். உரன் - வலிமை. பாம்பு - இடியால் உரனழிந்து மணியை உமிழும் ஆதலின் அது விளக்கு ஆயிற்று. ஏம் - இன்பம். ஏமுறு துயில்: இடக்கர் அடக்கு. மரம் பயில் காடு ஆதலின் மணி விளக்கு வேண்டிற்று என்க.

இனி அருவி பாய்ந்து காந்தள் முதலிய மலர்கள் மலர்தலின் அங்கு மலர் பறிக்க வருவாரும் உளர். ஆதலின் பகற்குறியும் இன்னல் உடைத்து என இறைச்சிப் பொருளில் குறித்தவாறும் உணர்க. இனி இதனை, ஐய! வாழிய! பானாட்கங்குல் குஞ்சரந் தாக்கிப் புலி குழுமும் சாரல் வாரல். இவளும் யானும் நாளைத் தினை காவல் கண்ணினம். (நாளை) இறும்பில் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் ஒருசிறை விளக்கில் கூந்தல் ஏம் உறுதுயில் பெறுகுவை! என இயைக்க.
--------------

செய்யுள் 93


திணை: பாலை.
துறை: வினைமுற்றி மீளலுறுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது - பொருள் தேடுவதற்குத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தான் நினைந்தாங்கு நிரம்பப் பொருளீட்டி முடிந்தவுடன் மீண்டு வருபவன், தலைவியை நினைந்து விதுப்புறுகின்ற தன்னெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு. "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் (தொல். கற்பி - 5) நூற்பாவின்கண் மீட்டுவரவு ஆய்ந்த சிறப்பின்கண்ணும் எனவரும் விதிகொள்க.

    கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும்
    கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
    ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்
    தாரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
    அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன         5
    பெறலரு நன்கலன் எய்திய நாடும்
    செயலருஞ் செய்வினை முற்றின மாயின்
    அரண்பல கடந்த முரண்கொள் தானை
    வாடா வேம்பின் வழுதி கூடல்
    நாளங் காடி நாறும் நறுநுதல்         10
    நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு
    வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
    நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
    நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
    நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப         15
    முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல்
    வயந்திகழ் பிமிழ்தரும் வாய்ப்புகு கடாத்து
    மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி
    ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
    கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை        20
    திருமா லியனகர்க் கருவூர் முன்றுறைத்
    தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
    தண்ணான் பொருநை மணலினும் பலவே.
            ---- கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

(உரை)

16...........நெஞ்சே

(இ-ள்.) நெஞ்சே - ஆள்வினை முடித்த அரும்பெறல் நெஞ்சமே கேள்; என்க.

(து-ம்) வினைமுற்றி மீள்தலால் தலைவன் தன் நெஞ்சைப் பாராட்டி விளித்தலின் நெஞ்சே என்பது ஆள்வினை...நெஞ்சே என்பது பட நின்றது.

1 - 7: கேள்....ஆயின்

(இ-ள்.) கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள் அல் கேளிர் கெழீஇயனர் ஒழுகவும் - நம் உறவினர்களைத் துன்பம் போக்கித் தாங்கவும் மேலும் சுற்றத்தார்கள் பெருகவும் சுற்றத்தார் அல்லாதார் சுற்றத்தார் போல நம்மொடு பொருந்தி நடக்கவும் காரணமான; ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்தது - தாளாண்மைக்குப் பொருந்திய ஊக்கத்தோடும் கூடிய விருப்பத்தால் சிறப்புற்று; ஆரம்கண்ணி அடுபோர் சோழர் அறம்கெழு நல் அவை உறந்தை அன்ன - ஆத்திமாலை சூடிய பகைவரைக் கொல்லுகின்ற போர் வன்மை மிக்க சோழருடைய நல்லறம் நிலைபெற்ற அவையையுடைய உறையூர் போன்ற; பெறல் அரும் நல்கலம் எய்திய நாடும் செயலரும் செய்வினை முற்றினம் ஆயின் - பெறுதற்கரிய நல்ல அணி கலன்களை அடையும் பொருட்டு நாடுகின்ற செய்தற்கரிய பொருளீட்டுத் தொழிலைச் செய்து முடித்தேம் ஆதலாலே; என்க.

(வி-ம்.) கேள் - அணுகிய சுற்றத்தார். கிளைஞர் சேயராகிய சுற்றத்தார் என்க கேளல் கேளீர் என்றது. நொதுமலரை, நொது மலரும் கேளிராகி ஒழுகவும் என்றவாறு. ஆள்வினை - ஆண்மைக்கியன்ற தொழில். எதிரிய செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இவற்றிற் கெல்லாம் கருவி, பொருளாகலின், பொருளீட்டுதலை ஆள்வினை என்றான். புகல் - விருப்பம்.

8-11: அரண்.......மாஅயோளொடு

(இ-ள்.) அரண்பல கடந்த முரண் கொள் தானை வாடா வேம்பின் வழுதி - பகை அரண்கள் பலவற்றையுங் கடந்த வலிமையையுடைய படைகளையுடைய பொன்னாலியன்ற வேப்பம்பூ மாலையை அணிந்த பாண்டியனுடைய; நாள் அங்காடி நாறும் நறுநுதல் நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு - மதுரையினிடத்துள்ள நாளங்காடிபோல நறுமணங் கமழுகின்ற நறிய நுதலையும் நீண்ட கூந்தலையும் மாமை நிறத்தினையுமுடைய நம் ஆருயிர்க் காதலியோடு என்க.

(வி-ம்.) அரண் - பகைவர் அரண். முரண் - வலிமை; இகலுமாம். வாடாவேம்பு என்றமையின் பொன்னாற் செய்த வேப்பம் பூமாலை என்பது பெற்றாம். வழுதி - பாண்டியன். கூடல் - மதுரை. அல்லங் காடியும் உண்டாதலின், நாளங்காடி என்றார்.

12-15: வரை.............பொறிப்ப

இ-ள்.) வரை குயின்று அன்ன வான்தோய் நெடுநகர் - மலையைக் குடைந்து வைத்தாற் போன்ற வானத்தைத் தீண்டுகின்ற நெடிய நமது இல்லத்தின்கண்; நுரை முகந்து அன்ன மெல் பூஞ் சேக்கை நிவந்த பள்ளி - எண்ணெயினது நுரையை முகந்து வைத்தாற் போன்ற மென்மையுடைய மலர்ப் பாயலையுடைய உயர்ந்த கட்டிலிடத்தே; நெடுஞ்சுடர் விளக்கத்து - நெடிய சுடரையுடைய விளக்கொளியின்கண்; நலங்கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப - நம்முடைய அழகு பொருந்திய மார்பின்கண் அவளுடைய பூண்கள் வடுப்படுத்தும்படி என்க.

(வி-ம்) நகர் - இல்லம். நுரை - எண்ணெயின் நுரை என்க. இது பூம்படுக்கைக் குவமை. பள்ளி - பள்ளிக்கட்டில். ஆகம் – மார்பு பூண் தலைவியினது பூண் என்க.

16-23: வரிநுதல்.......பலவெ

(இ-ள்.) வரிநுதல் வாய்புகு கடாத்து வயம் திகழ்பு இமிழ்தரும் மீளி மொய்ம்பொடு - வரி பொருந்திய நெற்றியினையும் வாயிடத்துப் புகும் மத நீரையும் வலிமை விளங்க முழங்கும் மறத்தன்மைமிக்க ஆற்றலொடு; குறுகி ஆள் நிலன் எறியா கோள் பிழையா அஞ்சுவரு தடக்கை கடும் பகட்டு யானை - பகைப் படையை அணுகி ஆளைப் பிடித்து நிலத்தில் அறைந்து கொல்லும் தொழிலில் தப்பாத அச்சம் வருதற்குக் காரணமான கடிய களிற்றுயானையையும்; நெடுந்தேர்க் கோதை திருமா வியன் நகர்க் கருவூர் - நெடிய தேரினையும் உடைய சேரனது செல்வம் மிகுந்த பெரிய அகன்ற தலை நகரமாகிய கருவூரின்கண்; தெள்நீர் தண் ஆன் பொருநை முன்துறை உயர் கரைக் குவைஇய மணலினும் பல முயங்குகம் சென்மோ - தெளிந்த நீரையுடைய தண்ணிய ஆன்பொருநை யாற்றின் இறங்குதுறையின்மருங்கே உயர்ந்த கரையின்கண் குவிந்துள்ள மணலினும் காட்டில் பலமுறை தழுவிக் கொள்வோம்; ஆதலால் விதுப்புறாதே அமைந்து என்னொடு வருவாயாக; என்பதாம்.

(வி-ம்.) பொருநை மணலினும் பல முயங்குகம் சென்மோ எனக் கூட்டுக. மீளி போரின்கண் வென்று மீளுதற்குக் காரணமான மறப் பண்புடைமை என்க. செவியினின்றும் ஒழுகும் கடாம் வாய்புகும் யானை என்க. மொய்ம்பு - ஆற்றல். பகைவரைக் குறுகி என்க. ஆள் நிலன் எறியக்கோள் பிழையா யானை என்க. ஆளைப் பிடித்து நிலத்தில் அறைந்து கொல்லுதலில் தப்பாதயானை என்றவாறு. அஞ்சு - அச்சம். பகட்டி யானை- களிற்றி யானை. கோதை - சேரன். தலை நகர் ஆதல் தோன்ற, திருமா வியனகர்க் கருவூர் என விதந்தார். பொருநை முன்றுறை என ஒட்டுக.

இனி இதனை - நெஞ்சே ஊன்றவும் ஆரவும் ஒழுகவும் எதிரிய ஊக்கமொடு சிறந்து செய்வினை முற்றினம் ஆயின் இனி, மாஅயோ ளொடு நெடுநகர், சேக்கைப் பள்ளி விளக்கத்துப் பொறிப்பப் பொருநை மணலினும் பல முயங்குகம் சென்மோ என இயைத்துக் கொள்க.

(பா- வே.) 17. அயந்திகழ்
-------------------------------

செய்யுள் 94


திணை: முல்லை.
துறை: வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉமாம்.

(து-ம்.) அஃதாவது தலைவன் தலைவியைப் பிரிந்துபோய்ப் பொருளீட்டியவன் அவ்வினை முற்றியபின் தலைவியை நினைந்து அவளைக் காணும் அவாமிகுதியாலே தன் தேரினை விரைந்து செலுத்தும் பொருட்டுப் பாகனுக்குச் சொல்லியது; இனி, தலைவன் தன்தோழனுக்குச் சொல்லியது என்று கோடலுமாம் என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" (தொல்-கற்பி-5) எனவரும் நூற்பாவின்கண் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் எனவரும் விதி கொள்க.

    தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
    குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய
    வானெனப் பூத்த பானாட் கங்குல்
    மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
    தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ         5
    வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்
    ஐதுபடு கொள்ளி அங்கை காயக்
    குறுநரி யுளம்புங் கூரிருள் நெடுவிளி
    சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய
    முதைப்புனங் காவலர் நினைத்திருந் தூதும்         10
    கருங்கோட் டோசையொ டொருங்குவந் திசைக்கும்
    வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்
    தார்வஞ் சிறந்த சாயல்
    இரும்பல் கூந்தல் திருந்திழை யூரே.
            --- நன்பலூர்ச் சிறுமேதாவியார்.

(உரை)

12-14: அன்புகலந்து.........ஊரே

(இ-ள்.) அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல் – அன்பு விரவிய ஆர்வத்தினாலே சிறப்புற்ற ஐம்பொறிக்கும் இன்பம் நல்கும் சாயலையும்; இரும்பல் கூந்தல் திருந்து இழைஊர் – கரிய பலவாகிய கூந்தலையும் திருந்திய அணிகலன்களையும் உடைய எம்முடைய காதலியானவள் எம்மைப் பிரிந்துறையும் ஊரானது என்க.

(வி-ம்.) ஆர்வம் - பற்றுள்ளம். சாயல் - ஐம்பொறியால் நுகரும் மென்மை. திருந்திழை: அன்மொழித் தொகை.


1-6: தேம்படு.......கண்ணியன்

(இ-ள்.) தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெள்பூ வான் என குழையப் பூத்த பால் நாள் கங்குல் - தேனடைகள் உண்டாகின்ற மலையுச்சியின் பக்கங்களிலே பரவிய குவிந்த இலையையுடைய முசுண்டையின் வெள்ளிய மலர்கள் வானத்தில் மீன் பூத்தாற் போலக் குழைந்து பூத்துள்ள நள்ளிரவின் இருளிலே; மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்; ஆட்டுக் குட்டிகளை ஒருங்கே தொகுத்த ஓலைப்பாயை முதுகிலே உடைய இடையனானவன்; தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன் - குளிர்ந்த நறுமணங் கமழுகின்ற முல்லைப் பூக்களைத் தோன்றிப் பூவோடு விரவி வண்டுகள் மொய்க்கும்படி தொடுக்கப்பட்ட நீர் துளிக்கின்ற மாலையைத் தலையில் அணிந்தவனாய் என்க.

(வி-ம்.) மறித்துரூஉ - ஆட்டுக்குட்டி. தொகுத்த இடையன், பறிப்புற இடையன் எனத் தனித்தனி கூட்டுக. தோன்றி – மரு தோன்றி. முல்லையும் தோன்றியும். மலர்க்கு ஆகுபெயர்கள். விரைஇ - விரவி.

7-12: ஐதுபடு............நாட்டதுவே

(இ-ள்.) ஐதுபடு கொள்ளி அகம் கை காய - மெலிதாய்த் தேய்ந்த கொள்ளிக்கட்டையானது அகங் கையிடத்தே பிடிக்கப்பட்டு எரியா நிற்ப; குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி - குறுநரிகளை ஓட்டுவதற்கு மிக்க இருளினூடே செய்கின்ற நெடிய விளிக் குரலானது; முதைப்புனம் காவலர் சிறு கண் பன்றி பெரு நிரைகடிய நினைத்து இருந்து ஊதும் கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் - முதிர்ந்த தினைப் புனத்துக் காவலராகிய குறவர்கள் சிறிய கண்ணையுடைய பன்றிகளின் பெரிய கூட்டமானது தினைக்கதிரைத் தின்னாமல் ஓட்டுவதற்கு நினைத்துத் தம்மிடத்திருந்தே ஊதா நின்ற பெரிய கொம்பினது ஓசையோடு ஒன்று கலந்து வந்து ஒலித்தற் கிடனான; வன்புலக்காட்டு நாட்டதுவே - வன்புலமான காட்டு நாட்டின்கண் உளது; ஆதலால் பாகனே! நமது தேரினை விரைந்து செலுத்துவாயாக! என்பதாம்.

(வி-ம்.) ஐது - மெல்லிது. இடையன் கையின்கண் கொள்ளிகொண்டு குறுநரியை ஓட்டுகின்ற விளியொலியானது புனங்காவலர் பன்றி கடிய நினைத்துப் புனத்தில் இருந்து ஊதுகின்ற கொம் பொலியோடு கூடிவந்து ஒலிக்கும் என்றவாறு. வன்புலக்காட்டு நாடு - முல்லைப் பரப்பிலுள்ள ஊர் - எனவே நம்மூர் சேய்மைக் கண்ணது ஆதலால் தேரை விரைந்து செலுத்துக எனப் பாகனுக்குக் கூறினன் என்க.

இனி, பாங்கனுக்குத் தலைவன் கூறியது எனின் இதனைக் களவொழுக்கமாகக் கொள்க. இயற்கைப் புணர்ச்சி எய்திப் பிரிந்த தலைவன் மெலிவினைக் கண்டு வினாவிய பாங்கனுக்குத் தலைவன் தலைவியைத் தான் கண்ட இடம் வன்புலக்காட்டு நாட்டது என்றானாகக் கொள்க.

இனி, இதனை - திருந்திழை ஊர் இடையன்விளி புனங்காவலர் கோட்டோசையோடு ஒருங்கு வந்து இசைக்கும் காட்டு நாட்டது என இயைத்துக் கொள்க.

(பா-வே.) 3. வான்பூத்தன்ன. 9. கூடிய - கடியு.
---------------

செய்யுள் 95


திணை: பாலை.
துறை: போக்குடன் பட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது - களவொழுக்கத்தின்கண் இற்செறித்தலும் பிரிவாற்றாமையும் அலர் மிகுதலும் அன்னை கடிதலும் ஆகிய இன்னல் பல வந்தெய்துதலால் தமர்அறியாமல் தலைவனுடன் போக உடன்பட்ட தலைவி, தனது உடன்பாட்டிற்குக் காரணம் தோழிக்குச் சொல்லியது. என்றவாறு.

(இ-ம்.) இதனை "எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே" எனவரும் (தொல். அகத். 42.) நூற்பாவினால் அமைத்துக் கொள்க.

    பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய்
    ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
    பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
    உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
    எவனோ வாழி தோழி பொரிகால்         5
    பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற
    ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
    ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
    ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
    சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார்        10
    கௌவை மேவல ராகி இவ்வூர்
    நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
    புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ
    நம்முணர்ந் தாறிய கொள்கை
    அன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.        15
            ---- ஒரோடோகத்துக் கந்தரத்தனார்.

(உரை)

1--5: பைபய........தோழி

(இ-ள்.) தோழி வாழி பைபயப் பசந்தன்று நுதலும் தளிர்புரை என்மேனியும் ஐது ஆகின்று பலரும் அறியத் திகழ் தரும் அவலமும் உயிர்கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ - தோழி நீ வாழ்வாயாக மெல்ல மெல்ல என் நுதலும் பசந்தொழிந்தது. நாளுக்கு நாள் என்னுடைய மாந்தளிரை யொத்த திருமேனியும் மெலிந்து தேய்வதாயிற்று ஊரிலுள்ளோர் பலரும் அறியும்படி விளங்குகின்ற எனது துன்பந்தானும் என்னுடைய உயிரைக் கைக் கொண்டு போவதல்லது ஆராயுங்கால் வேறு என் செய்யும் என்க.

(வி-ம்.) இதன்கண் தனது நிலைமையைத் தோழிக்குத் தலைவி கூறுகின்றாள் - யான் நாளுக்கு நாள் மெலிந்து வருகின்றேன் என் மெலிவு கண்டு ஊர்ப்பெண்டிரும் அலர் தூற்றாதிரார் துன்பமும் மிக்குவரு தலால் யானும் இறந்து படுவேன்; என்றவாறு. வேறு வழியும் காண்கிலேன் என்பாள் நினையின் எவனோ? என்றாள்.

5-10: பொரிகால்... ... ...என்னார்

(இ-ள்.) பொரிகால் பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி ஒப்பின் - பொரிந்த அடியையும் முருடுகளையுடைய அரையினையுமுடைய இருப்பையினது கூம்பிய குலையினின்றும் உதிர்ந்த ஆலங்கட்டிகளை ஒத்த; தூம்பு உடைத் திரள் வீ - துளையையுடைய திரண்ட மலர்களை; ஆறுசெல் வம்பலர் நீள் இடை அழுங்க - வழியில் செல்லுகின்ற வழிப் போக்கர் நெடிய வழியின்கண் தடைப்பட்டுத் தங்கும்படி; ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் - குட்டிகளை ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவருகின்ற கொடு நெறிகள் பலவற்றையும் கடந்து சென்ற தந் தலைவருக்கு மகளிர் இரங்குவாராத லியல்பென்று கருதாராய் என்க.

(வி-ம்.) பொகுட்டு - முருடு. இருப்பையினது அடுப்பகுதி முருடு பல உடைத்தாதல் கண்டறிக. ஆலி - ஆலங்கட்டி. தூம்பு - உட்டுளை. வீ - மலர்; வம்பலர் - புதியராகிய வழிப்போக்கர். வழியில் கரடிகள் கூடிநிற்றலின் வழிப்போக்கர் செலவழுங்குதல் வேண்டிற்று. ஈனல் - குட்டியீனுதல். இரங்குதல் இயல் பென்னார் என்றவாறு.

11-15: கௌவை...........படலே

(இ-ள்.) இவ்வூர் நிரையப் பெண்டிர் கௌவை மேவலர் ஆகி - இந்தப் பொல்லாத ஊரிலுள்ள நிரையம் புகுவதற்கே யுரிய கொடிய பெண்டிர் பழி தூற்றுதலையே விரும்புவாராய்; என் மகட்கு இன்னா கூறுவ புரைய அல்ல என - என் மகளுக்கு கேட்டார்க்குத் துன்ப முண்டாகும்படி கூறுகின்ற சொற்கள் சிறப்புடையன ஆகமாட்டா என்று கருதி; பரைஇ நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர் - தெய்வத்தைப் பரவி நமது நிலையையும் உணர்ந்துகொண்டு யாதும் சொல்லாமல் அடங்கிய கோட்பாட்டினையுமுடைய நம் அன்னையின் முன்னிலையிலே; யாம் இதன் படல் என் - யாம் இந்நிலையிலே அவள் முன் காணப்படின் அவள் நிலை என்னாம்? என்பதாம்.

(வி-ம்.) எனவே யான் நம் அன்னையால் காணப்படுதலை நாணியே போக்குடன்படுகின்றேன் என்பது குறிப்பெச்சப் பொருளாயிற்று. கௌவை - அலர். மேவலர் - விருப்பமுடையோர். நிரையம் - நரகம். நரகம் புகுவதற்கே உரிய கொடிய பெண்டிர் என்க. கூறுவ – கூறப்படுவன. புரைய - பொருந்துவன எனினுமாம்.

இனி, ஆறு செல்வோர் வழியில் நிற்கும் கரடிக் கூட்டத்திற்கு அஞ்சிச் செலவழுங்கினாற்போல, யானும் நமது ஒழுக்கத்திற்கு இடையூறாக அலர் தூற்றும் நிரையப் பெண்டிர்க்கு அஞ்சி, அன்னைமுன் செல்ல நாணுகின்றேன் என உள்ளுறுத்துக்கொண்டு ஆதலால் போக்குடன் பட்டேன் என்றாளும் ஆயிற்று என்க.

இனி இதனை, தோழி அவலமும் உயிர்கொடு கழியின் அல்லதை எவனோ? இவ்வூர்ப் பெண்டிர் கூறுவ என்மகட்கு புரைய அல்ல எனப்பரைஇ உணர்ந்து ஆறிய அன்னை முன்னர்யாம் இதன் படல் என் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 1. பசந்தது. 7. தூம்பிடைத். 10. கழித்தோர். 14. தாற்றிய.
------------------------

செய்யுள் 96


திணை: மருதம்.
துறை: தோழி வாயின் மறுத்தது

(து-ம்.) அஃதாவது - தலைவன் தலைவியைப் பிரிந்துபோய்ப் பரத்தையர் சேரிக்கண் ஓர் இளம் பரத்தையை மணந்துகொண்டான் எனக் கேள்வியுற்ற தலைவி ஊடியிருப்ப, தலைவன் மீண்டும் வந்து தோழியை வாயில் வேண்டினனாக அவள் தாமறிந்த செய்தியைக் கூறி வாயின் மறுத்தது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, பெறற் கரும் பெரும் பொருள் எனவரும் (தொல். கற்பி. 9.) நூற்பாவின்கண் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் எனவரும் விதிகொள்க.

    நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்
    பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும்
    பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
    அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
    அருவி ஆம்பல் அகலடை துடக்கி        5
    அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
    விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழுங்
    கழனியம் படப்பைக் காஞ்சி யூர
    ஒண்தொடி யாயத் துள்ளுநீ நயந்து
    கொண்டனை யென்பவோர் குறுமகள் அதுவே         10
    செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின்
    அங்கலுழ் மாமை யஃதை தந்தை
    அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்
    வெண்ணெல் வைப்பிற் பருவூர்ப் பறந்தலை
    இருபெரு வேந்தரும் பொருதுகளத் தொழிய         15
    ஒளிறுவாள் நல்லமர்க் கடந்த ஞான்றைக்
    களிறுகவர் கம்பலை போல
    அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.
           ---- மருதம் பாடிய இளங்கடுங்கோ.

(உரை)

1-8: நறவுண்.........காஞ்சி யூர

(இ-ள்.) நறவு உண் மண்டை நுடக்கலின் இறவுக் கலித்துப் பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் - கள்ளை உண்ட மட்பாண்டத்தினுள் நுடக்கிவைத்தலாலே அக்கள்வெறி கொண்ட இறாமீன் செருக்குற்று நாணினது பூட்டு விட்டுப் போன வில்லைப் போன்று துள்ளிக் குதித்து நெற் கூடுகளினிடத்தே விழும்; பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி - பொதுநிலங்களையுடைய நீர் நிலையினது நீரடை கரையின்கண் படர்ந்துள்ள பிரம்பினது அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடியானது; அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி - அருவியாய் வந்து விழுகின்ற நீரின்மேல் படர்ந்த ஆம்பலினது அகன்ற இலையைத் தனது முள்ளால் கோத்துக் கிடந்து; அசைவரல் வாடை தூக்கலின் ஊதுஉலை விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் - தங்கித் தங்கி வருதலையுடைய வாடைக் காற்று இடையிடையே தூக்குதலாலே கொல்லுலைக்கண் ஊதுகின்ற விசைக்கயிற்றால் இழுக்கப்படும் துருத்திபோல அவ்விலையினோடு உயர்ந்துயர்ந்து தாழுதற்கிடனான; கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர - கழனிகள் சார்ந்த காஞ்சி மரங்கள் மிகுந்த தோட்டங்களை உடைய ஊரனே என்க.

(வி-ம்.) இதன்கண் இழிந்த கள்ளுண்ட மண்டையில் நுடக்கிய இறாமீனானது கள்வெறி எய்தித் துள்ளிப்போய் உயர்ந்த நெற்கூட்டில் விழுந்தாற்போல நீ இழிந்த பரத்தையைப் புணர்ந்து செருக்குற்று உயர்ந்த குடிப்பிறந்த தலைவி உறைகின்ற இல்லத்திற்கு வந்தாய் எனத் தோழி உள்ளுறுத்தி வைத்தமை யுணர்க. மண்டை - மண்ணாலாகிய ஒருவகைப் பாண்டம். இதனை இக்காலத்தார் மொந்தை என்பர்.

இனி, அடை சரையில் படர்ந்த பிரப்பங்கொடி ஆம்பலிலையைப் பிணித்துக் காற்று உயர்த்த அவ்விலை உயர்ந்தும் காற்று வாராதொழியின் தாழ்ந்தும் கிடப்பதுபோல நீயும் நின் பாணன் அழைக்கும்போது பரத்தையர் சேரிக்குப் போவதும் அழையாவிடின் இல்லிற்கு வருவதுமாக உழல்கின்றாய் என இதனால் பாணனை இகழ்ந்தவாறும் உள்ளுறையாகக் காண்க.

9-10: ஒண்டொடி.......குறுமகள்

(இ-ள்.) நீ ஒள் தொடி ஆயத்துள்ளும் ஓர் குறுமகள் நயந்து கொண்டனை என்ப - நீ தானும் ஒள்ளிய வளையலணிந்த பரத்தை மகளிருள் வைத்துப் பெரிதும் இளமையுடையாள் ஒரு பரத்தையை விரும்பி மணந்து கொண்டனை என்று அறிந்தோர் கூறுவர் என்க.

(வி-ம்.) ஆயம் - மகளிர் கூட்டம். கொண்டனை என்பது மணந்து கொண்டனை என்பதுபட நின்றது. குறுமகள் - இளமை யுடையவள்.

10- 18: அதுவே............வாய்ப் பாட்டே.

(இ-ள்) அது - அச் செய்தி தானும்; செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அம் கலுழ் மாமை அஃதை தந்தை - சிவந்த பொன்னாற் செய்த சிலம்பையும் செறிந்த துடையினையும் அழகு ஒழுகுகின்ற மாமை நிறத்தினையுமுடைய அஃதை என்பவளுக்குத் தந்தையராகிய; அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் வெள் நெல் வைப்பின் - தலைமைத் தன்மையுடைய யானையையும் பகைவரைக் கொல்லும் போர்த் தொழிலையும் உடைய சோழமன்னருடைய வெண்ணிற நெல் விளையும் மருதப் பரப்பினையுடைய; பருவூர் - பறந்தலை இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – பருவூரின் கண்ணதாகிய போர்க்களத்தின்கண் சேரனும் பாண்டியனும் ஆகிய இரண்டு பெரிய மன்னர்களும் போர் செய்து அக் களத்திலே இறந்தொழியும்படி அச்சோழர்; ஒளிறுவாள் நல் அமர்க் கடந்த ஞான்றைக் களிறு கவர் கம்பலை போல - விளங்குகின்ற வாளால் அறப்போர் செய்து வென்ற அந்த நாளிலே அம்மன்னருடைய களிற்றியானைகளைக் கைக் கொண்டபொழுது எழுந்த ஆரவாரம் போல; பலர் வாய்ப்பட்டு அலர் ஆகின்றது - இவ்வூரில் பலர் வாயிடத்தும்பட்டு எங்கும் அலர் எழுகின்றது; ஆதலால் தலைவியை ஊடல் தீர்த்தல் எனக்கு இயலாது காண் என்பதாம்.

(வி-ம்.) ஆதலால் தலைவியின் ஊடல் தீர்த்தல் எனக்கு இயலாது காண் என்பது குறிப்புப் பொருள். அது என்றது - நீ நயந்து கொண்ட அச்செய்தி என்றவாறு. அது களிறு கவர் கம்பலைபோல அலர் ஆகின்றது என்று இயையும்.

குறங்கு - துடை. அஃதை - சோழர் குடியிற் பிறந்த பெண் ஒருத்தி. சோழர் குடியில் பிறத்தலின் சோழர் எல்லாம் அவட்குத் தந்தையர் என்றனர். இருபெரு வேந்தரும் என்றமையால் எஞ்சிய சேரபாண்டிய மன்னர் இருவரும் என்பது பெற்றாம். இதன்கண் பண்டைக் காலத்தே சோழநாட்டின்கண் பருவூர் என்னுமிடத்து மூவேந்தரும் போர் செய்தமையும் அவருள் சோழர் வென்றமையும் ஏனைய இருவரும் இறந்தமையும் ஆகிய வரலாறும் பெற்றாம். இனி, இதனை-ஊர நீ ஓர் குறுமகள் நயந்துகொண்டனை என்ப. அது சோழர் களிறு கவர் கம்பலைபோல அலராகின்றது என இயைத்துக் கொள்க.

(பா-வே.) 1. துடக்கலின். 8. அரவாளன்ன. 12. *அகுதை. 15. வேந்தரு மொருகளத்.
---------

செய்யுள் 97


திணை: பாலை.
துறை: வற்புறுந்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது, தலைவன் - பொருள் தேடுதற்குத் தலைவியைப் பிரிந்து செல்கின்றவன், யான் கார்ப்பருவத்துத் தொடக்கத்தே மீண்டு வருகுவென், அதுகாறும் நீ ஆற்றி இருந்திடுக! என்று கூறிப் போனவன் குறித்த பருவத்து வாராமையின், தலைவி பிரிவாற்றாமையான் பெரிதும் வருந்தினளாக; அதுகண்ட தோழி நீ ஆற்றி இருத்தலே நின் கடமை என வற்புறுத்திய வழி, தலைவி தன் ஆற்றாமைக்குக் காரணம் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு. "பெறற்கரும் பெரும்பொருள்" எனவரும் (தொல் கற்பி - 9.) நூற்பாவின்கண் பிறவும் வகைபட வந்த கிளவி எனவரும் விதிகொள்க.

    கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
    வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து
    புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
    இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத்
    திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்         5
    கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்
    பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திருக்கும்
    அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும்
    இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த
    நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரோ         10
    டகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி
    நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
    வயலை வேலி வியலூர் அன்னநின்
    அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந்
    தாழேல் என்றி தோழி யாழவென்         15
    கண்பனி நிறுத்தல் எளிதோ குரவுமலர்ந்
    தற்சிர நீங்கிய அரும்பத வேனில்
    அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
    துறையணி மருது தொகல்கொள வோங்கிக்
    கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்         20
    திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
    புகைபுரை அம்மஞ் சூர
    நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே.
            ---- மாமூலனார்.

15. தோழி............யாழ

(இ-ள்.) தோழி யாழ - ஆற்றி இருத்தலே நின் கடமை என்று கூறி வற்புறுத்தும் தோழியே கேள்! என்க.

(வி-ம்.) யாழ: முன்னிலையசை.

1-8: கள்ளி....... கொடியோர்க்கு

(இ-ள்.) கள்ளி அம்காட்டபுள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம்கோடு உதிர வலங் கடந்து - கள்ளிக் காட்டினுள்ளே நிற்கின்ற புள்ளியாகிய பொறி பொருந்திய கலைமானுடைய வறட்சியுற்ற அழகிய கொம்புகள் தெறித்து விழும்படி ஓடுகின்ற அதன் வெற்றியையும் கடந்து பற்றிக்கொண்ட; புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடுமுடை - புலால் உண்ணுதலில் விருப்பமுடைய புலியானது அதனைக் கொன்று தின்று போகட்டுப்போன மூட்டுவாய் கழிந்த மிக்க முடை நாற்றத்தையுடைய தசையை; இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து இருங்கல் முடுக்கர் திற்றி கெண்டும் கொலைவில் ஆடவர் போல - இரவிலே சென்று குறும்பின்கண் உள்ள கரந்தையார் அலறும்படி நூழிலாட்டி அவருடைய ஆநிரையைக் கவர்ந்து கொணர்ந்து அவற்றைப் பகுத்துப் பெரிய கற்பாறையின் முடுக்கிலே அவ்வாக்களின் தசையை அறுத்துத் தின்னும் கொலைத் தொழிலையுடைய வில் மறவரான வெட்சியார் போல; பெருந்தலை எருவையோடு பருந்து பலவுடன் வந்திருக்கும் - பெரிய தலையையுடைய கழுகுகளோடு பருந்துகளும் பற்பல ஒருங்குகூடி வந்திருத்தற் கிடனான; அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு - கடத்தற்கரிய பாலை நிலத்து வழியிலே நம்மைக் கைவிட்டுப் போனவன் கண்ணராகிய நம்பெருமான் பொருட்டு; என்க.

(வி-ம்.) கள்ளியங்காடு என்புழி அம்: சாரியை. புள்ளியாகிய பொறி என்க. கலை - ஆண் மான். அதன் கொம்பு ஊற்றுணர்ச்சிக்கு வற்கென்றிருத்தலின் வறனுறல் அங்கோடு என்றார். உதிரப் பாயும் வலம் என்க. மானுக்கு ஓடுதலே வெற்றியாகலின் அதனை வலம் என்றார். கலவு - மூட்டுவாய். குறும்பு - அரண். இது கரந்தையாருடையது. நூறுதல் - கொன்று குவித்தல். நிரை - ஆநிரை. திற்றி - இறைச்சி. கெண்டும் - தின்னும். ஆடவர் - வெட்சி மறவர்; இவர் கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் உவமை. கலவுக் கழிகடுமுடைக்கண் எருவையும் பருந்தும் வந்திருக்கும் சுரம் என்க. தோழி தலைவனை இயற் பழிப்பாள் கொடியோர் என்றாள்.

8-15: அல்கலும்..................என்றி

(இ-ள்.) அல்கலும் - நாள் தோறும்; இருங்கழை இறும் பின் ஆய்ந்துகொண்டு அறுத்த நுணங்குகண் சிறுகோல் வணங்கு இறை மகளிரொடு - பெரிய மூங்கிற் புதரினூடே ஆராய்ந்து பார்த்து அறுத்தெடுத்துக் கொண்ட நுணிகிய கணுக்களையுடைய மூங்கிலாலியன்ற தலைக்கோலைப் பிடித்த வளைந்த முன்கையையுடைய கூத்தியரோடே; அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் - பாணர்களையும் புலவர்களையும் பாதுகாத்த அன்பினையுடைய உழலுகின்ற தொடியினையும் கள்ளுண்டு களித்திருக்கம் அத்தாணி மண்டபத்தையுமுடைய நன்னன் வேண்மான் என்னும் அரசனுடைய; வயலை வேலி வியலூர் அன்ன நின் - வயலைக் கொடி படர்ந்த வேலியையுடைய வியலூரைப் போன்ற உன்னுடைய; அலர்முலை ஆகம் புலம்ப பல நினைந்து ஆழேல் என்றி - அடி பரந்த முலையினையுடைய மார்பகம் தனிமைத் துயரம் எய்துதலாலே பலவாகிய நினைவுகளை நினைந்து துன்பத்தில் மூழ்காதேகொள்! என்று வற்புறுத்துகின்றனை; என்க.

(வி-ம்.) நாள்தோறும் பல நினைந்து ஆழேல் என்று இயையும். அல்கல் - நாள். கழை - மூங்கில். இறும்பு - புதர். ஆய்ந்து கொண்டு அறுத்த. நுணங்கு கண் சிறுகோல் என்றது தலைக்கோலை. இதன் வரலாறும் இயல்பும் சிலப் - அரங்கேற்று காதைக்கண் விளங்கக் காணலாம். அகவுநர் - பாணரும் புலவரும். வன்பின் கழல் எனக் கொண்டு மறப்பண்பிற்கு அறிகுறியாகக் காலிற் கட்டும் வீரக் கழல் எனினுமாம். நறவு மகிழ் இருக்கை என்றது, நாளோலக்கத்தை என்க. நன்னன் - வேளிர் குலத்தவன் ஆதலின் வேண்மான் எனப்பட்டான். இவன் ஒரு வள்ளல். மலைபடு கடாஅம் என்னும் பாட்டிற்குத் தலைவனும் இவனே. வயலை - ஒருவகைக்கொடி; இக் காலத்தார் இதனைப் பசலைக் கொடி என்பர். என்றி: முன்னிலை ஒருமை.

15-23: என்....கேட்போர்க்கே.

(இ-ள்.) என் - இஃது என் கொலோ; குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் அறல் அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரை - குரவ மரங்கள் மலரப் பெற்று முன் பனிக்காலமும் நீங்கிய பெறற்கரிய செவ்வியையுடைய இவ்விள வேனிற் காலத்தே அற்றற்று ஒழுகுகின்ற நீரினூடே விளங்குகின்ற நெடிய மணலையுடைய அகன்ற யாற்றினது நீரடை கரையிலேயுள்ள; துறை அணி மருது தொகல் கொள ஓங்கிக் கலிழ் தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து - நீராடுதுறையை அழகு செய்யும் மருத மரங்கள் உயர்ந்து நிற்ப, நீண்டு தொங்குகின்ற தளிரால் அழகு செய்ய்யப்பெற்ற பெரிய கிளைகளையுடைய மாமரங்களினது; இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை அம்மஞ்சு ஊர - பூங்கொத்துகள் செறிந்த புதிய மலர்கள் நெருங்கிய சிறிய கொம்புகளிலே புகைபோன்ற அழகிய வெண்முகில்கள் தவழா நிற்ப; நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு - அம் மாஞ்சோலையின்கண் அவற்றின் தளிரைத் தின்னா நின்ற குயில்கள் கூவுகின்ற இனிய குரலைக் கேட்கும் துணைப்பிரிந்த மகளிருக்கு; கண்பனி நிறுத்தல் எளிதோ - பிரிவாற்றாமையால் துளிக்கின்ற கண்ணீர்த் துளிகளை நிறுத்திவிடுதல் அத்துணை எளிய செயலோ காண்! அத்துன்பத்தின் தன்மையை நீ உணர்வாய் அல்லை போலும்; என்பதாம்.

(வி-ம்.)என் - என்னையோ. இவ்வாறு கூறுதற்குக் காரணம் நின் அறியாமையே என்பாள் என்னையோ என்று வினவினள்.

இனி, இதன்கண் இளவேனிற் பருவம் இப்புலவர் பெருமானால் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டிருத்தல் கண்டு மகிழ்க. அற்சிரம் - முன்பனிக் காலம். காதலருக்கு இத்தகைய செவ்வி கிடைத்தற்கரிது என்பாள், அரும்பதவேனில் என்றாள். கவிழ்தல் - ஒழுகுதல். பொங்கர் - கொம்பு. புகைபுரை *அம்மன்க என்றது, வெண்மேகத்தை. மாவினது இளந்தளிரைத் தின்ற பின்னர்க் குயிலினது இன்குரல் பின்னரும் இன்ப மிகுவதாகும் என்ப, ஆதலின் பொங்கரில் தளிரை நுகர்குயில் என்றாள். கேட்போர் என்றது துணைப்பிரிந்திருந்து கேட்கும் மகளிர் என்பதுபட நின்றது.

இனி, இதனை - தோழி! அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு நின் ஆகம் புலம்ப நினைந்து ஆழேல் என்றி இஃதென்னை? மலர்ந்து நீங்கிய வேனில் மருது ஓங்கத் தளிர் அணிந்த மாஅத்துப் புதுப்பூப் பொங்கர் மஞ்சூர குயிலகவும் குரல் கேட்போர்க்குக் கண்பனி நிறுத்தல் எளிதோ என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 6. கோள்வலாட. 9.கொண்டிறுத். 11.பண்டிற். 14. னகமலியாகம். 14. பலபுலந். 17. அரும்பவிழ். 19. மருதமொடிகல் கொள. 20. மாத்திளிணர்ததை.
---------------------------------

செய்யுள் 98


திணை: குறிஞ்சி.
துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. தோழிக்குத் தலைமகள் சொல்லிய தூஉமாம்.

(து-ம்.) அஃதாவது -வரைதற்கண் கருத்தின்றிக் களவொழுக்கமே காமுற்று இருவகைக் குறியிடத்தும் வந்து மீள்கின்ற தலைவனுக்கு வெறியாட்டு அறிவுறுத்தி வரைவு கடாவுவான் தோழி தலைவன் சிறைப் புறத்தே நிற்றல் கண்டு அவன் கேட்பத் தலைவிக்குக் கூறுவாளாய்க் கூறியது; இனி, தலைவி தோழிக்குக் கூறியது எனினுமாம் என்றவாறு.

(இ-.) இதற்கு, - தோழி கூற்றாயின்- "நாற்றமும் தோற்றமும்" என வரும் (தொல் - களவி-23.) நூற்பாவின்கண் அனை நிலைவகையான் வரைதல் வேண்டினும் என வரும் விதி கொள்க.

இனி "மறைந்தவற் காண்டல்" எனவரும் நூற்பாவின்கண் வெறி யாட்டிடத்து வெருவின்கண்ணும் எனவரும் விதிக்கு எடுத்துக்காட்டி (நச்சி.) இதனைத் தலைவி கூற்றாகக் கொள்வர்.

    பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்
    துனியில் கொள்கையோ டவர்நமக் குவந்த
    இனிய உள்ளம் இன்னா வாக
    முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
    சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்         5
    அறிந்தனள் அல்லள் அன்னை வார்கோல்
    செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
    கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
    பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
    முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்         10
    தோவத் தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன பலராய் மாண்கவின்
    பண்டையிற் சிரக்கவென் மகட்கெனப் பரைஇக்
    கூடுகொள் இன்னியம் கறங்கக் களனிழைத்
    தாடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்         15
    வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
    ஐதமை பாணி இரீஇக்கை பெயராச்
    செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
    வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன்
    பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின்         20
    என்னாங் கொல்லோ தோழி மயங்கிய
    மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக
    ஆடிய பின்னும் வாடிய மேனி
    பண்டையிற் சிறவா தாயின் இம்மறை
    அலரா காமையோ அரிதே யஃதான்         25
    றறிவர் உறுவிய அல்லல்கண் டருளி
    வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே
    செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
    கான்கெழு நாடன் கேட்பின்
    யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே.         30
           ---- வெறிபாடிய காமக்கண்ணியார்.

(உரை)

21: தோழி.........

(இ-ள்) தோழி - ஈதொன்று கேள் என்க.

1-6: பனிவரை......அன்னை

(இ-ள்.) பனிவரை நிவந்த பயம் கெழு கவான் துனிஇல் கொள்கையொடு - குளிர்ந்த மலையினது உயர்ந்த வளம் பொருந்திய சாரலின் கண் வெறுப்பில்லாத கொள்கையோடு; அவர் நமக்கு வந்த இனிய உள்ளம் இன்னா ஆக முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்-நம்பெருமான் நம் பொருட்டு வந்தமையாலே இனிமை உடையதாகிய நமது நெஞ்சம் பின்னர் வாராமையாலே துன்பமுடையதாகும்படி நாம் வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக நம்பால் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தமானது; சூர் உறை வெற்பன் மார்பு உறத்தணிதல் அன்னை அறிந்தனள் அல்லள் - தீண்டி வருத்தும் தெய்வம் உறைகின்ற மலையையுடைய நம்பெருமானுடைய மார்பினை மீண்டும் யாம் பொருந்துதலாலே தணியும் என்னும் உண்மையை நம் தாய் இன்னும் அறிந்திலள் என்க.

(வி-ம்.) பனிவரை நிவந்த பயங்கெழு கவான் என்றது இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தைச் சுட்டியபடியாம். துனி - வெறுப்பு. அவர் வாய்மையாகவே நம்மை விரும்பும் கோட்பாடுடையர் என்பாள் துனியில் கொள்கையோடு என்றாள். அவர் என்றது தலைவனை. நமக்கு ஊழ்வினை கூட்ட வந்தமையாலே என்க. இனி நமக்கு உவந்த எனக் கண்ணழித்து நம்மை உவந்தமையால் இனியதாகிய நம்முள்ளம் எனலுமாம். இனிய உள்ளம் இன்னா ஆக என்றது, பல்வேறு இடையூறுகளால் அவனைப் பெறமாட்டாமையால் இன்னாவாயிற்று என்றபடியாம். முனிதக – வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக. எவ்வம் – துன்பம். அதற்குக் காரணம் அவன் தனக்கு அளி செய்தமையே ஆதலின் நல்கல் எவ்வம் என்றாள். (நல்கலால் வந்த துன்பம்) சூர் – தீண்டி வருத்துந் தெய்வம். அவன் வெற்பின்கண் உறையும் தெய்வம்போல அவன் மார்பம் தீண்டினாரை வருத்தா நின்றது எனக் கருப்பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று. அன்னை – ஈண்டுச் செவிலி.

9-10: வார்கோல்...............அது செத்து

(இ-ள்.) வார்கோல் செறிந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கி கை அறு நெஞ்சினள் வினவலின் – நீண்ட கோற்றொழில் அமைந்த செறிந்து விளங்குகின்ற ஒளியையுடைய எனது வளையல் கழன்று வீழும்படி என் உடல் மெலிந்தமையைப் பார்த்துச் செயலற்ற நெஞ்சினையுடையளாய்க் கட்டுவிச்சியரை வினவுதலாலே; பொய் வல் முதுவாய் பெண்டிர் – பொய் கூறுதலில் கூர்த்த அறிவு வாய்க்கப் பெற்ற அம்மகளிர் தாமும்; பிரப்பு உளர்பு இரீஇ – பிரப்பரிசியைப் பரப்பி வைத்துக் குறி பார்த்து; முருகன் ஆர் அணங்கு என்றவின் அது செத்து – இந்நோய் முருகனால் உண்டானது பிறரால் தீர்த்தற்கரிய நோய் என அறிவித்தலாலே அவர் கூற்றினை உண்மை என்று கருதி என்க.

(வி-ம்.) வார் – நீண்ட. எல் – ஒளி. கையறுதல் – யாதொன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்தல். பிரப்பு – அரிசி முதலியவற்றை அள்ளி முறத்தின்கண் பல்வேறிடங்களில் வைத்து அவற்றை எண்ணிக் குறி சொல்லுதல். இங்ஙனம் குறி சொல்லுவோர் கட்டுவிச்சியர். இவர் குறி கேட்போரின் மெய்ப்பாடு அறிந்து கூறுவார் ஆதலின் முதுவாய் பெண்டிர் என்றாள். இவர் பெரும்பாலும் பொய்யே கூறுதல் வழக்கமாதலின் பொய் வல் பெண்டிர் என்றாள். செத்து – கருதி.

11 -15: ஓவத்தன்ன ..................பந்தர்

(இ-ள்.) ஓவத்து அன்ன வினைபுனை நல்இல் – ஓவியம் போன்று தொழிலால் அழகு செய்யப்பட்ட அழகிய வீட்டின்கண்; பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் என் மகட்கு பண்டையில் சிறக்க எனப் பரைஇ – பாவை போன்ற பிற மகளிர் பலரும் ஆராய்ந்து கண்டு மகிழத் தகுந்த மாட்சிமையுடைய‌ அழ‌கான‌ என் ம‌க‌ளுக்கு முன்பு போல‌வே சிற‌க்க‌ச் செய்த‌ருள்க‌ என‌ அம் முருக‌ப் பெருமானை வேண்டுத‌ல் செய்து பின்ன‌ர்; கூடுகொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து ஆடு அணி அயர்ந்த அகல் பெரும் பந்தர் - தம்முள் இசை முதலியவற்றால் இயைகின்ற கேட்டற்கினிய இசைக் கருவிகள் பலவும் முழங்கா நிற்ப வெறியாடுதற்குரிய களத்தை இழைத்து அதற்கேற்ற அழகுகளும் செய்யப்பட்ட அகன்ற பெரிய பந்தலில் என்க.

(வி-ம்.) இதன்கண் அன்னையின் செயல் கூறப்படுகின்றது. ஓவ‌ம் - ஓவிய‌ம். இல்ல‌த்தின்க‌ண் இருந்தே செவிலி இவ்வாறு தெய்வ‌ம் பராவினாள் என்பாள். "பாவை........ ம‌க‌ட்கு" என‌ச் செவிலி கூற்றைக் கொண்டு கூறிய‌ப‌டியாம். என்ம‌க‌ள் என்ற‌து த‌லைவியை. ப‌ரைஇ - ப‌ராவி. இய‌ம் - இசைக் க‌ருவிக‌ள்.

16-21: வெண்பேழ் .......கொல்லோ

(இ-ள்.) வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர் ஐது அமை பாணி இரீஇ - வெளிய‌ ப‌ன‌ந்தோட்டினைக் க‌ட‌ப்ப‌ ம‌ல‌ரோடு அணிந்து கேட்ட‌ற்கினிய‌ பாட்டினை மெலிதாக அமைந்த‌ தாள‌த்தோடே கூட்டி; செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப - முருகக் கடவுளின் பெரிய புகழைக் கூறிப் புக‌ழ்ந்து வேல் ம‌க‌ன் வெறியாடுகின்ற‌ அக‌ன்ற‌ அக்க‌ள‌ம் பொலிவுறும்ப‌டி; வல்லோன் பொறி அமை பாவையின் கை பெயராத் தூங்கல் வேண்டின் என் ஆம் - பொறி அமைத்த‌லில் வல்ல‌வ‌னாலே ஆட்டப்ப‌டுகின்ற‌ பாவை போல‌க் கையெடுத்தோச்சி வெறியாடு த‌லை விரும்பினால் அப்பொழுது ந‌ம்நிலை என்னாகுமோ அறிகிலேன் என்க‌.

(வி-ம்.) வெண்போழ் - ப‌ன‌ந்தோடு; ஆகுபெய‌ர். க‌ட‌ம்பு- ம‌ல‌ர்; ஆகு பெய‌ர். சீர் பாட்டிற்கு ஆகுபெய‌ர்; பாணி - தாள‌ம். செல்வ‌ன் - ம‌க‌ன். ஈண்டுச் சிவ‌பெருமான் ம‌க‌ன் என்ற‌வாறு; முருக‌ன் என்க‌. பெய‌ர் - புக‌ழ். வேல‌ன் - பூசாரி. தூங்க‌ல் - ஆடுத‌லை. அன்னை ப‌ராவி வேல‌ன் வெறியாடுத‌லை விரும்பினால் என்னாம் என‌ இயையும்.

21-25: ம‌ய‌ங்கிய‌......அரிதே

(இ-ள்.)மயங்கிய மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும் - அறிவு மயங்கிய செவிலி முதலிய மகளிர்க்குப் பின்னும் துன்பமேயுண்டாகும்படி வேலன் வெறியாடிய பின்னரும்; வாடிய மேனி பண்டையின் சிறவாது ஆயின் - நம்மேனி அவர் பரவியாங்கு முன்பு போலச் சிறப்புறா தொழியின்; இம்மறை அலர் ஆகாமை அரிது- இந்தக் கள வொழுக்கம் பலரும் அறிய வெளிப்பட்டு யாண்டும் அலராகா தொழிதல் மிகவும் அரிதே யாகும் என்க.

(வி - ம்) மயங்கிய மையற்பெண்டிர், என்றது செவிலி, கட்டுவிச்சி முதலியோரை. நோவல் முதல் குறுகி விரிக்கும் வழி விரிக்கப் பெற்று நொவ்வல் என்றாயிற்று. செவிலிக்கு, மகள் மேனி சிறவாமையாலும், கட்டுவிச்சிக்குக் குறி பொய்த்தலாலும் நோவுண்டாம் என்றாவாறு.

25-30: அஃதான்று………………..அரிதே

(இ - ள்.) அஃது ஆன்று அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவனே எனின் - அவ்வாறன்றித் தன்னைப் புகலாக அறிந்துள்ள செவிலி முதலியோர் துன்பத்தைக் கண்டு இரங்கி வெறிமணம் கமழுகின்ற நெடியோனாகிய முருகவேள் அவர் வேண்டியவாறு யாம் முன்புபோலச் சிறக்கும்படி திருவருள் புரிவனானாலோ; செறிதொடி உற்ற செல்லலும் பிறிது எனக் கான்கெழு நாடன் கேட்பின் - செறிந்த வளையலணிந்த நம் காதலி எய்திய துன்பந்தானும் நம் பிரிவாற்றாமையால் அன்று வேறொன்றனாற் போலும் என்று காடு பொருந்திய நாட்டையுடைய நம்பெருமான் கேட்டறிதலுறின்; யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே – பின்னர் யான் - உயிர் வாழ்ந்திருத்தல் அதனினுங் காட்டில் அரிதே யாம் என்பதாம்.

(வி - ம்.) முருகனால் என் மெலிவு தீர்தல் இல்லையாம். அங்ஙனம் தீராதவிடத்து ஊர்ப் பெண்டிர் இவள் நோய் காம நோயே காண் என அலர் தூற்றுதல் ஒருதலை என்பாள் வாடிய மேனி சிறவாதாயின் இம் மறை அலராகாமை அரிது என்றாள்; ஒரோ வழி இறைவன் எல்லாம் வல்லன் ஆதலின் என் மேனி சிறக்கச் செய்தலுங் கூடும். அங்ஙனம் நிகழின் நம் பெருமான் இவள் நோய்க்குக் காரணம் பிறிதொன்றே, நம்பால் வைத்த காதலன்று என எனது காதலையே அயிர்ப்பவன் ஆவன்; அவ்வாறு அயிர்த்தவழி யான் ஒரு தலையாக இறந்து படுவேன் என்பாள் நெடுவேள் நல்குவனே எனின்………. அரிதே என்றாள்.

அஃது அன்றி எனற்பாலது "அன்று வரு காலை ஆவாகுதலும்" என்னும் விதி பற்றியும் (தொல் - எழுத்து 258.) "இள்றி என்னும் வினை எஞ்சிறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே" (தொல் - எழுத்து - 237.) என்னும் விதி பற்றியும் அஃதான்று என்றாயிற்று.

இனி இதனைத் தோழி அன்னை அவர் நல்கல் எவ்வம் அறிந்தனள் அல்லள் வினவலின் பெண்டிர் அணங்கு என்றலின் அது செத்து, கவின் என் மகட்குச் சிறக்க எனப் பரைஇ கறங்க இழைத்து அயர்ந்த பந்தரில் வேலன் கை பெயராத் தூங்கல் வேண்டின் என்னாம்? ஆடிய பின்னும் மேனி சிறவாதாயில் மறை அலராகாமை அரிது; அஃதான்று நெடுவேள் நல்குவன் எனின் செல்லலும் பிறிதென நாடன் கேட்பின் யான் உயிர் வழ்தல் அதனினும் அரிது என இயைத்திடுக.

இனி, இதனைத் தோழி கூற்றாகக் கொள்ளின் அவள் தலைவியையே யான் என்கின்றாளாகக் கொள்க. இதற்கு தொல் - பொருள். 221 ஆம் நூற்பாவால் அமைதி காண்க.

இனி இச் செய்யுள் தலைவி கூற்றெனக் கோடலே நேரிதாம். அல்லது தோழி சொல்லெடுப்பத் தலைவி முடித்தவாறுமாம். இங்ஙனங் கொள்லின் 1-6. பனிவரை.......அன்னை - என்னும் வரையில் தோழி கூற்றாகவும் எஞ்சியவை, தலைவி கூற்றாகவும் கொள்ளல் வேண்டும்.

(பா.வே.) 3. மின்னாவாக்கி. 4. முனிவுதக வந்த 7. நெகிழ்தனோக்கி. 27. நல்குவனெனினே
-----------

செய்யுள் 99


திணை: பாலை.
துறை: உடன் போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது,

(து-ம்.) அஃதாவது-களவொழுக்கத்திற்குப் பெரிதும் இடையூறு நிகழ்ந்தமையால் தலைவியை அவள் சுற்றத்தார் அறியாதபடி அழைத்துக் கொண்டு பாலை நிலப் பரப்பிலே செல்லுகின்ற தலைவன், தலைவிக்கு வழிநடை வருத்தம் தோன்றாதிருக்கும் பொருட்டு, வழியில் பல்வேறு காட்சிகளையும் அவட்குக் காட்டிச் செல்பவன் சொல்லியது என்றவாறு.

(இ-.) இதற்கு, "ஒன்றாத் தமரினும்" (தொல் - அகத் - 41.) எனவரும் நூற்பாவின்கண் அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் எனவரும் விதி கொள்க.

    வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
    செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
    சிதரார் செம்மல் தாஅய் மதரெழில்
    மாணிழை மகளிர் பூணுடை முலையின்
    முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை         5
    அதிரல் பரந்த அந்தண் பாதிரி
    உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ
    மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
    அணங்குடை நகரின் மணந்த பூவின்
    நன்றே கானம் நயவரும் அம்ம         10
    கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
    அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்
    பிடிமிடை களிற்றில் தோன்றும்
    குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே.
           ---- பாலைபாடிய பெருங்கடுங்கோ.

10-11: அம்ம........குறுமகள்

(இ-ள்.) அம்ம குறுமகள் வாழியோ – அன்புடைய இளையோய் இதுகேள் நீ வாழ்வாயாக என்க.

(வி-ம்.) அம்ம - கேட்பித்தற் கண் வந்தது.

1-11: வாள்வரி..........கண்டிசின்

(இ-ள்.) வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின் சிதர் ஆர் செம்மல் தாஅய் - வாள் போலும் கோடுகளையுடைய புலியினது மான் முதலியவற்றைக் கொன்று அளைந்த நகம் போன்று சிவந்த அரும்புகள் மலரப்பெற்ற முட்கள் முதிர்ந்த முருக்கினது வண்டு பொருந்திய பழம் பூ பரக்கப்பட்டும்; மதர் எழில் மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் முகைபிணி அவிழ்ந்த கோங்க மொடு அசைஇ - மதர்த்த அழகையும் சிறந்த அணிகலன்களையும் உடைய இளமகளிரின் பூண் அணிந்த முலையையொத்த அரும்புகள் கட்டவிழ்ந்து கோங்க மலரோடு தங்கி; நனை அதிரல் பரந்த - அரும்பிய புனலிப் பூக்கள் பரவப்பெற்று; அம் தண்பாதிரி அம்சினை உதிர்வீ தாஅய் - அழகிய குளிர்ச்சியுடைய பாதிரியினது அழகிய கிளையினின்றும் உதிர்ந்த மலர்களும் பரவப் பெற்று; வீஎதிர் மராஅம் மலரொடு விராஅய் - பூக்கும் பருவத்தை எதிர்ந்த வெண் கடப்ப மலரொடு கலந்து; பராஅம் அணங்கு உடை நகரின் - வழிபாடு செய்தற்குரிய தெய்வம் உறைகின்ற திருக்கோயில்போல; மணந்த பூவின் கானம் நன்று நயவரும் கண்டிசின் - மணங்கமழுகின்ற பல்வேறு மலர்களுடைமையால் நாம் செல்லும் இக்காடு பெரிதும் விரும்பத் தக்கதாய் இருத்தலைக் கண்டு மகிழ்வாயாக என்க.

(வி-ம்) வாள் போலும் வரிகள் என்க. வயமான் - புலி. கோள் உகிர்: தனக்கிரையான மான் முதலியவற்றை அறைந்து குருதி தோய்ந்த நகம் என்க. இது முருக்கினது செம்முகைக்கு உவமை. அசைஇ - தங்கி, அதிரல்-புனலிப்பூ. வீ எதிர் மராஅம் என்க. பராஅம்- பராவும் அணங்கு-தெய்வம். நகர்-கோயில். இசின்- முன்னிலையசை.

11-14: நுந்தை.......உடைத்தே

(இ-ள்.) நுந்தை அடுகளம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் பிடிமிடை களிற்றின்-உன் தந்தை பகைவரைக் கொல்லுகின்ற போர்க்களத்தின்கண் பகைவருடைய மதிற் கதவினைப் பாய்ந்ததனால் பூண் சிதைந்த மருப்பினையுடைய பிடியானைகளும் களிற்றியானைகளும் போலத் தோன்றுகின்ற; குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்து-குறியனவும் நெடியனவும் ஆகிய அளவில் அமைந்த மலைகளையும் உடையதாய்க் காட்சிக்கு இனியதாதலையும் காண்பாயாக.

(வி-ம்.) அடுகளத்தில் மதிற் கதவைப் பாய்ந்த என்க. பெண் யானையும் களிற்றி யானையும் விரவிய காட்சி போலக் குறியவும் நெடியவுமாகிய குன்றங்கள் தோன்றும் என்க.

இனி, இதனை அம்ம குறுமகள் வாழி முருக்கின் செம்மல் தாஅய்க் கோங்கமொடு அசைஇ, அதிரல் பாதிரி உதிர் வீயோடு தாஅய் வீ எதிர் மராஅம் விராய் அணங்குடை நகரின் மணந்த பூவின் கானம் நன்றும் நயவரும்; மற்றும் பிடிமிடை களிற்றின் தோன்றும் குன்றமும் உடைத்து என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 3. சிதறற். 7. முதிர் வீ. 9. யணங்கு. 12.தொடி செறி. 13. பிடியிடை.
---------

செய்யுள் 100


திணை: நெய்தல்.
துறை: தோழி வரைவு கடாயது.

(து-ம்.) அஃதாவது-திருமணம் செய்தலில் கருத்தின்றிக் கள வொழுக்கமே காமுற்று நாள்தோறும் வந்து மீளுகின்ற தலைவனுக்குத் தோழி அலர் மிகுதி கூறி வரைவு கடாவுவாள் சொல்லியது என்றவாறு.

(வி-ம்.) இதற்கு, "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல்- களவி.23.) நூற்பாவின்கண் களனும் பொழுதும்.......அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் எனவரும் விதி கொள்க.

    அரையுற் றமைந்த ஆரம் நீவிப்
    புரையப் பூண்ட கோதை மார்பினை
    நல்லகம் வடுக்கொள முயங்கி நீவந்
    தெல்லினிற் பெயர்தல் எனக்குமா ரினிதே
    பெருந்திரை முழக்கமொ டியக்கவிந் திருந்த        5
    கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
    கொழுமீன் கொள்பவர் இருள்நீங் கொண்சுடர்
    ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
    ஆடியல் யானை அணிமுகத் தசைத்த
    ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்         10
    பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
    பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப்
    புன்னையங் கானற் புறந்தை முன்றுறை
    வம்ப நாரை யினனொலித் தன்ன
    அம்பல் வாய்த்த தெய்ய தண்புலர்         15
    வைகுறு விடியல் போகிய எருமை
    நெய்தலம் புதுமலர் மாந்தும்
    கைதையம் படப்பைஎம் மழுங்க லூரே.
            ---- உலோச்சனார்.

(உரை)

1-4: அரையுற்று.......இனிதே

(இ-ள்.) அரை உற்று அமைந்த ஆரம் நீவிப் புரையப் பூண்ட கோதை மார்பினை - பிற மணப் பொருளோடு விரவி அரைக்கப்பட்டு இனிதின் அமைந்த சந்தனத்தைத் திமிர்ந்து பின்னும் நறுமணம் சிறப்புறும்படி அணிந்த மலர் மாலையினையும் உடைய மார்பினையுடையையாய் நாள்தோறும்; நீ எல்லினின் வந்து நல் அகம் வடுக்கொள முயங்கி - நீ இரவிலே வந்து மார்பு வடுக்கொள்ளும்படி தழுவிவிட்டு; பெயர்தல் எனக்கும் ஆர் இனிதே - மீண்டும் போதல் எனக்கும் மிகவும் இனிதேயாம் என்க.

(வி-ம்.) நீ மிகவும் மணங்கமழும் சந்தனம் பூசி வந்து முயங்குதலாலே அந்த மணம் நீ வருங்கால் சேய்மையில் உள்ளாரும் நின் வரவினை அறிதற்கும் அந்நறுமணம் தலைவியின்பாலும் கமழப் பெறுமாதலால் எம்மில்லத்தார் தலைவியினை ஐயுறுதற்கும் ஏதுவாம். ஆதலால் நீ இரவில் வருதலும் எமக்குத் தீதே எனக் கருப்பொருட் புறத்தே இறைச்சி தோற்றுவித்தமையும் நுண்ணிதின் உணர்க. நல்லகம் வடுக்கொள முயங்கி என்புழி நின் முயக்கம் பிறர் அறியுமிடத்தே எமது குடிக்குப் பழியும் பிறக்கும் எனவும் மற்றோர் இறைச்சிப் பொருளும் தோன்றுதலறிக. எனக்கும் என்றது தோழி தலைவியைத் தானாகக் கருதிக் கூறியபடியாம். ஆர்: இசை நிறை.

5-10: பெருந்திரை . . . . . . . . . .தோன்றும்

(இ-ள்.) பெருந்திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த கொண்டல் இரவின் கொழுமீன் கொள்பவர் இருங்கடல் மடுத்த இருள் நீங்கு ஒள் சுடர் – பெரிய அலைகளின் முழக்கத்தோடே இயக்கமில்லாதிருந்த கடலையும் முகிலையும் உடைய இரவின்கண் கொழுமீன் என்னும் ஒருவகை மீனைப் பிடிப்ப வராகிய பரதவர் பெரிய அக் கடலில் தமது தோணியில் கொளுத்திவைத்த இருள் நீங்குதற்குத் காரணமான ஒளிமிக்க விளக்குகள்; ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை ஆடு இயல் யானை அணிமுகத்து அசைத்த ஓடை ஒள் சுடர் ஒப்பத் தோன்றும்- போரின்கண் புறமிடாத மேற்கோளையுடைய அரசனது பாசறையின்கண் ஆடும் இயல்புடைய யானைகளின் முகத்திலே கட்டிய பொன்னாலியன்ற முகபடாங்களின் ஒள்ளிய சுடர்களைப் போன்று தோன்றுதற்கிடனான; என்க.

(வி-ம்.) பெருந்திரை முழக்கமொடு இயக்கவிந்திருந்த இருங் கடல் எனவும் கொண்டல் இரவின் இரும்கடல் எனவும் தனித் தனி கூட்டுக. விளக்கொளியைக் கண்டு கொழுமீன் தமது தோணியை நோக்கி வருதற் பொருட்டு அம்மீன் பிடிப்பவர் தோணியில் விளக்கிடுவர் என்பது கருத்து. மீன் கொள்பவர் தோணியில் விளக்கேற்றினாற் போலப் பெருமானே தலைவியை மணந்துகொள்ள விரும்புகின்ற நீ நின் மனையில் திருமணம் செய்து கொள்ளுதற்கு ஆவன செய்க என்பது இதன்கண் உள்ளுறை என்க. இவ்வுள்ளுறை உவமமே ஏனை உவமமாகவும் நின்றது. பூட்கை – மேற்கோள். ஓடை – முகபடாம்.

11-18: பாடுநர்..................அழுங்கலூரே

(இ-ள்.) பாடுநர் தொடுத்த கை வண் கோமான் பரிஉடை நல்தேர் பெரியன் விரி இணர்ப்புன்னை அம்கானல் புறந்தை பாணர்களையும் புலவர்களையும் தன்னோடு தொடர்பு செய்து கொண்ட கை வண்மையையுடைய அரசனான குதிரை பூண்ட தேரினையுடைய பெரியன் என்பவனுக்குரிய விரிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னை மரங்களால் அழகுற்ற கடற்கரைச் சோலையினையுடைய புரையாறு என்னும் பட்டினத்தின்; முன்துறை வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – துறைமுகத்தின்கண் புதியனவாக வந்த நாரைக்கூட்டம் ஆரவாரித்தாற் போன்று; தண்புலர் வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புதுமலர் மாந்தும் – குளிர்ந்த இருள் புலர்தலையுடைய இராக் காலத்தின் வைகறைப் பொழுதின் பின்னதாகிய விடியற் காலத்தே மேய்தற்குச் சென்ற கற்றெருமைகள் நெய்தலினது அழகிய புதிய மலர்களை மேய்தற்கிடனான; கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊர் - தாழை வேலியையுடைய அழகிய தோட்டக்களமைந்த எம்முடைய ஆரவாரமுடைய ஊரின்கண்; அம்பல் வாய்த்த - அலர் எழுந்து ஆரவாரித்தன ஆதலால்; இனி நீ இரவின்கண் வாராதேகொள் என்பதாம்.

(வி-ம்.) பாணரும் புலவரும் அடங்கப் பாடுநர் எனப் பொதுச் சொல்லால் ஓதினர். தொடுத்தல் தொடர்பு படுத்துதல். பாடுநரைத் தன்னோடு தொடர்புபடுத்துதற்குக் காரணமான கைவண்மை என்க. புறந்தை - புறையாறு என்பதன் மரூஉ. அஃது இக்காலத்தே பொறையாறு என வழங்கப்படுகின்றது. துறைமுன் என்னும் தொடர் முன்றுறை எனச் சொன்னிலை மாறி நின்றது. நாரை முதலிய பறவைகள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் இயல்புடையன ஆதலின் வம்ப நாரை என்றார். இனன்: போலி. தெய்ய: அசைச் சொல். வைகுறு - வைகறை. நாட்காலையில் கற்றெருமைகளை மேயவிடுதல் வழக்கம். இதனை "கீழ் வானம் வெள் என்று எருமை சிறு வீடு மேய் வான் பரந்தன காண்" என்பதனாலும் (திருப்பாவை - 8) உணர்க. படப்பை - தோட்டம். அழுக்கல் - ஆரவாரம், அம்பல் ஈண்டு அலர் என்க.

இனி இதனை-பெருமானே! நீ! இரவில் வந்து முயங்கிப் பெயர்தல் எனக்கும் இனிது (ஆயினும்) பெரியன் முன்றுறை வம்பநாரை ஒலித் தன்ன எம் அழுங்கலூர் அம்பல் வாய்த்த (ஆதலால் இரவின்கண் வாராதேகொள்) என இயைத்துக் கொள்க.

இது நெய்தலிற் குறிஞ்சி.

(பா.வே.) 1. அறையற்றமை. 18. நெய்தற் புதுமலர்.
------------------

செய்யுள் 101


திணை: பாலை.
துறை: பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉமாம்.

(து-ம்.) (1) அஃதாவது, தலைவி வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்தது பொறாஅது தோழிக்குச் சொல்லியது.

(2) வரைவுடன் பட்ட தலைவன் வரை பொருள் நிமித்தம் அதற்கு இடையீடாகத் தலைவியைப் பிரிந்த பொழுது, தலைவி அவன் பிரிவாற்றாது பெரிதும் வருந்தினாளாக, அதுகண்ட தோழி, "நாம் நம் பெருமானுக்கு நலமே செய்தனம் ஆதலால் நமக்குத் துன்பம் உண்டாதற்குக் காரணமில்லை: ஆதலால் நம் பெருமான் விரைந்து வருகுவர்; நலம் உண்டாதலும் தேற்றம்; ஆதலால் நீ வருந்தாதே கொள்!" என்று தலைவிக்குச் சொல்லியது எளினுமாம் என்றவாறு.

(இ-ம்.) (1) இதற்கு "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" எனவரும் (தொல் - களவி. 21.) விதிகொள்க.

(2) இதற்கு, "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல்- களவி. 23) நூற்பாவின்கண் ஆங்கதன் தன்மையின் வன்புறைஎனவரும் விதி கொள்க.

    அம்ம வாழி தோழி யிம்மை
    நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும்
    தொன்றுபடு பழமொழி யின்றுபொய்த் தன்றுகொல்
    தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த
    சுவன்மாய் பித்தைச் செங்கண் மழவர்         5
    வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
    தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
    நுறைதெரி மத்தங் கொளீஇ நிரைப்புறத்
    தடிபுதை தொடுதோல் பறைய வேகிக்
    கடிபுலங் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்         10
    இனந்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்
    டகலிரு விசும்பிற் கோடம் போலப்
    பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்
    றுருப்பவிர் பூரிய சுழன்றுவரு கோடைப்
    புன்கால் முருங்கை ஊழ்கழி பன்மலர்         15
    தண்கார் ஆலியில் தாவன உதிரும்
    பனிபடு பன்மலை இறந்தோர்க்கு
    முனிதகு பண்பியாஞ் செய்தன்றோ விலமே.
            ---- மாமூலனார்.

(உரை)

1-3: அம்ம.....கொல்

(இ-ள்.) தோழி அம்ம வாழி இம்மை நன்ரு செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி - தோழி நீ வாழ்வாயாக ஈதொன்று கேள்! இப்பிறப்பிலே ஒருவர் ஏதேனும் ஒரு நன்மை செய்தவிடத்தே அச்செயல் காரணமாக அவருக்கு நன்மையே விளையுமல்லது தீங்கு விளைவதில்லை என்னும் பொருள் படுகின்ற தொன்றுதொட்டு வழங்கிவருகின்ற வாய்மையுடைய பழமொழியானது; இன்று பொய்த்தன்று கொல் - இக் காலத்தே பொய்த்தது போலும்; அஃது எற்றால் அறிந்தனையனின்; என்க.

(வி-ம்.) அம்ம, கேட்பித்தற்கண் வந்தது. இம்மை - இப்பிறப்பு. "நன்று செய்மருங்கில் தீதுஇல்" என்பது பழமொழி; பொய்த்தன்று- பொய்த்தது.

4-11: தகர்.....பெருங்காட்டு

(இ-ள்.) தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் - செம்மறிக்கிடாயின் கொம்புபோல முறுக்குண்டு சுருண்ட (அணலினையும்) பிடரியை மறைக்கின்ற தலைமயிரினையும் சிவந்த கண்ணையுமுடைய வெட்சி மறவர்; கடிபுலம் நிரைப்புறத்து அடிபுதை தொடுதோல் பறைய ஏகி - பகைவர் நிலத்தின்கண் உள்ள ஆனிரை நிற்குமிடத்திற்குத் தமது அடியை மறைக்கின்ற தொடுதோல் தேயும்படி விரைந்து சென்று; வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல் தீப்படு சிறு கோல் வில்லொடு பற்றி நுரைதெரி மத்தங் கொளீஇ - நிரை காக்கும் ஆயர்களுடைய இருமல்நோய் தீர்க்கும் மருந்தாகிய மண்ணையும் கடிய திறலையுடைய தீயினால் துளையிடப்பட்ட சிறிய மூங்கிற் கோலாகிய குழலையும் வில்யாழோடு கைப்பற்றிக் கொண்டு தயிரினது நுரை கானப்படுகின்ற அவர்தம் மத்துக் களையும் கைக்கொண்டு; கவர்ந்த கன்றுடை இனம் கொள்ளையர்- அவர்பால் கவர்ந்துகொண்ட கன்றுகளையுடைய ஆனிரையைக் கொள்ளையிட்டுக் கொணர்ந்தவராய்; தலை பெயர்க்கும் நனந் தலைப் பெருங்காட்டு - அவற்றைப் பாதீடு செய்து நிறுத்தும் அகன்ற இடத்தையுடைய பெருங்காட்டின்கண்; என்க.

(வி-ம்.) தகர் மருப்பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த பித்தை சுவன்மாய் பித்தை எனக்கூட்டி முன்னது மீசை எனவும் பின்னது தலைமயிர் எனவும் கொள்க. பித்தை - ஆண் மயிர். மழவர் என்றது, வெட்சி மறவரை. வாய்ப்பகை கடியும் மண் என்றது இருமலைத் தீர்க்கும் மருந்தாகிய மண்ணை என்க. கடியும் மருந்தொடு என்பதும் பாடம் என நினைத்தற்குப் பழைய உரைக்குறிப்பு இடந்தருகின்றது. தீப்படு சிறுகோல் என்றது, தீக்கடைகோல் எனினுமாம். மத்தம் - தயிர் கடை கருவி. கடிபுலம் என்றது கரந்தையாரிடத்தை. மறவர் கடிபுலம் நிரைப்புறத்துத் தொடுதோல் பறைய ஏகிக் கவர்ந்த கொள்ளையராய் வந்து இனந்தலைப் பெயர்க்கும் பெருங்காடு என இயையும். தொடு - செருப்பு. இனம் - ஆனினம். காடு - வெட்சியார் காடு.

12-18: அகலிரு......செய்தன்றோ விலமே

(இ-ள்.) அகலிரு விசும்பிற்கு ஓடம்போலப் பகல் இடை நின்ற பல்கதிர் ஞாயிற்று - அகன்ற பெரிய வானமாகிய கடலிலியங்கும் தோணிபோலப் பகற்பொழுதிலே நின்ற பல கதிர்களையுடைய கதிரவனது; உருப்பு அவிர்பு ஊரிய சுழன்று வருகோடை - வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்றுவரும் மேல் காற்றினால்; புன் கால் முருங்கை ஊழ் கழி பல்மலர் தண்கார் ஆலியில் தாவன உதிரும் - புல்லிய அடிப்பகுதியையுடைய முருங்கை மரத்தின்கண் ஊழ்த்துக் கழிகின்ற பலவாகிய பூக்கள் குளிர்ந்த முகிலினின்றும் உதிருகின்ற ஆலங்கட்டிகளைப் போலப் பரவி உதிருகின்ற; பனிபடு பன்மலை இறந்தோர்க்கு - நடுக்க முண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு; யாம் முனிதகு பண்பு செய்தன்று இலம் - யாம் நன்றே செய்த தன்றி வெறுக்கத்தக்க செயல் செய்திலேம் ஆகவும் நமக்குத் துன்பம் வருதலான்; என்பதாம்.

(வி-ம்.) விசும்பாகிய கடலுக்கு ஓடம்போல என்க. அவிர்பு ஊரிய எனக் கண்ணழித்துக் கொள்க. புன்கால் -உறுதியற்ற கால்; கால் - அடிமரம். ஊழ்த்துக் கழி மலர் என்க. ஆலி - ஆலங்கட்டி, இவை நிறம் பற்றி வந்த வுவமை. முனிதகு பண்பு - வெறுக்கத்தக்க செயல்; பண்பு, ஆகுபெயர். செய்தன்று - செய்தது. யாம் முனிதகு செயல் செய்திலமாகவும் என்றது யாம் நன்மையே செய்தேமாகவும் என அதன் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தி நின்றது. இங்ஙனம் கூறவே யாம் நன்மையே செய்திருப்பவும் நமக்கு அவர் பிரிவு ஆற்றாமையால் துன்பமே உளதாயிற்று. ஆதலால் "நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி யின்று பொய்த்தது" என்றவாறு.

இனி, இதனை - தோழி நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும் பழமொழி இன்று பொய்த்தது எற்றாலெனின் மலை இரந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்று இலம் ஆகவும் நமக்குத் துன்பம் வந்தமையான், என இயைத்துக் கொள்க.
-------

செய்யுள் 102


திணை: குறிஞ்சி.
துறை: இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது-தலைவன் களவொழுக்கமே காமுற்று நாள்தோறும் வந்து வந்து மீள்கின்றவனை வரைவு கடாதற்பொருட்டு, அவன் ஒரு நாளிரவு சிறைப்புறத்தே வந்து நிற்றலறிந்த தலைவி அவன் வருகை அறியாதாள் போன்று தோழிக்குச் சொல்லுவாள்போலத் தலைவன் கேட்பச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதனை, "மறைந்தவற் காண்டல்" எனவரும் (தொல்- களவி -20.) நூற்பாவின்கண் அன்னவும் உளவே என்பதனால் அமைத்துக்கொள்க.

    உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
    கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
    உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்
    பைதுவரல் அசைவளி யாற்றக் கைபெயரா
    ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி         5
    பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
    குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
    படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
    மறம்புகல் மழகளி றுறங்கும் நாடன்
    ஆர மார்பின் அரிஞிமி றார்ப்பத்         10
    தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன்
    காவலர் அறிதல் ஓம்பிப் பையென
    வீழாக் கதவம் அசையினன் புகுதந்
    துயங்குபடர் அகல முயங்கித் தோள்மணந்
    தின்சொல் லளைஇப் பெயர்ந்தனன் தோழி         15
    இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன்
    நல்கா மையின் அம்ப லாகி
    ஒருங்குவந் துவக்கும் பண்பின்
    இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.
            --- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்.

(உரை)

1-9: உளைமான்.....நாடன்

(இ-ள்.) (15) தோழி-தோழியே கேள்!; உளைமான் துப்பின் தினைப் பெரும்புனத்து ஓங்கு கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென-பிடரிமயிரினையுடைய சிங்கம்போன்ற வலிமையோடு தனது தினையினையுடைய பெரிய புனத்திலே உயர்ந்த பரணிடத்தே குறவன் கள்ளை யுண்டு களித்துத் தங்கினானாக; உரைத்த சந்தின் ஊரல் இரும்கதுப்பு ஐதுவரல் அசைவளி ஆற்ற-பூசிய மயிர்ச் சந்தனத்தையுடைய பரந்த கரிய தனது கூந்தலை மெல்ல இயங்குகின்ற காற்றானது புகுந்து ஆற்றா நிற்ப; கொடிச்சி ஒலியல் வார்மயிர் கை பெயரா உளரினள்-குறப் பெண் தழைத்து நீண்ட அம்மயிரினை மேலும் கையோயாது கோதுபவளாய் இருந்து; பெருவரை மருங்கின் குறிஞ்சி பாட- பெரிய மலைச்சாரலிலே குறிஞ்சியென்னும் பண்ணைப் பாடுதலாலே; மறம் புகல் மழகளிறு-மறத்தன்மையையே பெரிதும் விரும்புகின்ற இளங் களிற்றியானையானது தினையைத் தின்னத் தினைப்புனத்தினுள் புகுந்து அப்பண்ணைக் கேட்டு மயங்கி; குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது-தான் கைக்கொண்ட தினைக் கதிரைத் தின்னுமலும் தான் நிற்குமிடத்தினின்றும் போகாமலும்; படாஅப் பைங்கண் பாடுபெற்று-துயிலாத தனது பசிய கண்களும் துயில்தலைப் பெற்று, ஒய்யென உறங்கும் நாடன்-விரைந்து துயில்தற்குக் காரணமான மலைநாட்டை யுடைய நம்பெருமான்; என்க.

(வி-ம்.) உளைமான்-சிங்கம். கழுது-பரண். பிழி-கள்- சந்து-சந்தனம்.

கானவன்-கள்ளுண்டு மயங்கித் தினைக்காவல் கைவிட்டமையால் கொடிச்சி பாடிய குறிஞ்சிப்பண்ணைக் கேட்டுத் தினைப்புனத்தில் புகுந்த யானை இசையால் மயங்கிக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது துயின்றது எனவரும் இதனோடு,

"அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த"

எனவரும் (சிலப் – நீர்ப்படை: 217 -20) இளங்கோவடிகளார்
செய்யுட் பகுதியையும் ஒப்பு நோக்குக. இது, கொடிச்சி கானவனுக்குப் பாடிய பண் தினைதின்ன வந்த யானையை அதனைத் தின்னாமலும் அவ்விடத்தின்றும் போகாமலும் நின்றவாறே துயில்வித்ததுபோல உன்னால் குறை நயப்பிக்கப்பட்ட தலைவன் உன்னால் கூட்டப்படுகின்ற இக்களவின்பத்தில் மயங்கி என்னை வரைந்துகொண்டு தன் மனை புகாமலும் இக்களவொழுக்கத்தின்கண் ஈடுபட்டு அதனையும் கைவிடாதவனாய்த் தன் குலப் பெருமையை மறந்தொழிந்தான் என உள்ளுறுத்தித் தலைவன் கேட்பத் தலைவி தோழியை நோகின்றாளாகக் கூறியபடியாம்.

10-15: ஆரமார்பின்.............பெயர்ந்தனன்

(இ-ள்.) ஆரம் மார்பில் அரி ஞிமிறு ஆர்ப்ப தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – சந்தனம் பூசிய தன் மார்பிலே அழகிய வண்டுகள் ஆரவாரித்தற்கு, இடனாகிய மாலையையும் கண்ணியையும் உடையனாய்த் தன் வலக்கையில் வேற்படையை உடையவனாகவும் ஒருநாள் இரவின்கண் வந்து; காவலர் அறிதல் ஓம்பி வீழாக்கதவம் அசையினன் பையென புகுதந்து – ஊர்காவலர் தன்னை அறியாமல் மறைந்து வந்து தாள் வீழ்க்கப்படாத புழைக்கடைக் கதவின் பக்கத்திருந்து மெல்ல வீட்டினுள் புகுந்து; உயங்கு படர் அகல முயங்கி தோள் மணந்து இன்சொல் அளைஇப் பெயர்ந்தனன் – யான் வருந்துதற்குக் காரணமான எனது துன்பம் தீரும்படி தழுவி எனது மார்பின் மேல் பொருந்தி இனிய சொற்களை விரவிக் கூறி என்னை மகிழ்வித்துப் போயினன்; என்க.

(வி-ம்.) ஆரம் – சந்தனம்; முத்துமாலையுமாம். அரி – வரியுமாம். ஞிமிறு – வண்டு – தார், கண்ணி, என்பன மாலைவகை, எஃகு – வேல். காவலர் – ஊர் காவலர். பை என: குறிப்பு மொழி. தாள் வீழாக் கதவம் என்க. படர் – நினைவால் உண்டாகும் துயர். தோள் மணந்து என்றது, இடக்கரடக்கு. தலைவன் இடையே இடையூறு காரணமாக வாராதொழிந்தமை தோன்ற நெருநல் இங்ஙனம் வந்து மணந்து போனான் என்றாள் என்க. நெருநல் என வருவித்துக் கொள்க.

16 – 19: இன்றெவன் ................பசப்பே

(இ-ள்.) இன்று அவன் நல்காமையின் ஒருங்கு வந்து அம்பலாகி உவக்கும் பண்பின் இருஞ்சூழ் ஓதி ஒள் நுதல் – இன்று ஒருநாள் அவன் நம்பால் வந்து நமக்கு அளி செய்யாமையால் ஒருசேர வந்து ஊர்முழுதும் அலர் தூற்றி ஏதிலார் மகிழ்தற்குக் காரணமாகக் கரியவாய்ச் சூழ்ந்த கூந்தல் புரளும் நமது ஒள்ளிய நெற்றியின் கண்; பசப்பு எவன் கொல்லோ கண்டிகும் - யாம் ஏனோ இந்தப் பசலையைக் காண்கின்றோமோ இந்நிலை நீடிக்கும் எனின் யாம் எவ்வாறு உய்வேம்; என்பதாம்.

(வி-ம்.) தலைவன் இரவுக்குறியின்கண் வந்து மீளினும் அவனைக் காணும் பொழுதினும் காணாப் பொழுதே நீளிதாதலின் அப்பிரிவு ஆற்றாமல் யான் மெலிகின்றேன் என்பது தலைவனுக்குத் தோன்றும்படி தலைவி இவ்வாறு கூறுகின்றாள் என்க. ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் என்றது அலர் தூற்றும் பெண்டிர் ஒருங்கே கூடி வந்து உவப்பதற்குக் காரணமான பசப்பு என்க. இப்பொழுதே இம்மறை பலர் அறிந்தனர் என்பாள் அம்பலாகி என்றாள். கண்டிகும் - காண்கின்றேம். கொல், ஓ: அசைச்சொற்கள். இதனால் போந்த பயன் தலைவன் தலைவி நிலைமையறிந்து வரைவொடு வருவானாதல் என்க.

இனி இதனை, தோழி நெருநல் நாடன் ஆர்ப்ப ஓம்பிப் பையென அசையினன் புகுதந்து முயங்கி மணந்து அளைஇப் பெயர்ந்தனன் இன்று எவன்கொல் நுதல் பசப்புக் கண்ஈஊ ஏணா இயைத்துக் கொள்க.

இந்நிலை நீடிக்குமாயின் எவ்வாறு உய்வேம் என்பது குறிப்பு.
-----------

செய்யுள் 103


திணை: பாலை
துறை: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொற்றது.

(து-ம்.) அஃதாவது-தலைவன் பொருள் ஈட்டுதற்குச் சென்றவன் காலம் நீட்டித்தலின் அவனது பிரிவினை ஆற்றாத தலைவி, பெரிதும் வருந்தித் தோழிக்குச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதனை "அவனறி வாற்ற வறியு மாகலின்" எனவரும் (தொல் - கற்பி - 6.) நூற்பாவின்கண் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் எனவரும் விதியால் அமைத்துக் கொள்க.

    நிழலறு நனந்தலை யெழாலேறு குறித்த
    கதிர்த்த சென்னி நுணங்குசெந் நாவின்
    விதிர்த்த போலும் அந்நுண் பல்பொறிக்
    காமர் சேவல் ஏமஞ் சேப்ப
    முளியரில் புலம்பப் போகி முனாஅது         5
    முரம்படைந் திருந்த மூரி மன்றத்
    ததர்பார்த் தல்கும் ஆகெழு சிறுகுடி
    உரையுநர் போகிய வோங்குநிலை வியன்நகர்
    இறைநிழல் ஒருசிறைப் புலம்பயா உயிர்க்கும்
    வெம்முனை யருஞ்சுரம் நீந்தித் தம்வயின்         10
    ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்னென
    நள்ளென் யாமத் துயவுத்துணை யாக
    நம்மொடு பசலை நோன்று தம்மொடு
    தானே சென்ற நலனும்
    நல்கார் கொல்லோ நாம் நயந்திசி னோரே.         15
            --- காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்.

(உரை)

1-5: நிழல் அறு.....போகி

(இ-ள்.) நிழல் அறு நனந்தலை எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்-- நிழல் இல்லையான அகன்ற பாலை நிலைப்பரப்பின்கண் வல்லூறு என்னும் வன்பறவையினாலே எறிதற்குக் குறிவைக்கப்பட்ட விளக்கமுடைய தலையினையும் நுணுகிய சிவந்த நாவினையும்: விதிர்த்த போலும் அம் நுண் பல் பொரி காமர் சேவல் ஏமம் சேப்ப- அள்ளித்தெளித்தாற்போலும் அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் கண்டாரால் விரும்பப்படும் தன்மையினையுமுடைய குரும்பூழ்ச் சேவலானது அதற்குத் தப்பிப் பாதுகாவலான இடத்தை அடைதற்கு; முளி அரில் புலம்பப் போகி – தான் மறைந்திருந்த உலர்ந்த புதர் தனித்துக்கிடக்கும்படி பறந்து போய்; என்க.

(வி-ம்.) எழாஅல் - வல்லூறு என்னும் வன்பறவை. இது பறவைகளை வேட்டையாடித் தின்னும். ஏறு - எறிதல். விதிர்த்தல் - கையால் தெளித்தல். கதிர்த்த முதலிய அடைமொழிகளால் சேவல் குறும்பூழ்ச்சேவல் என்பது பெற்றாம் அரில் - புதர்.

5-10: முனாஅது.......நீந்தி

(இ-ள்.) முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து - தன் முன்பக்கத்தே வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழையதான பெரிய அம்பலத்திலே; அதர் பார்த்து அல்கும் ஆகெழு சிறுகுடி உறையுநர் போகிய ஓங்குநிலை வியன் மனை – வழிப்போக்கரை எதிர்பார்த்து ஆறலை கள்வர் தங்குதற்கிடமான பசுக்களையுடைய சிறுகுடியாகிய அவ்வூரினின்றும் குடியோடிப்போன உயர்ந்த நிலையினையுடைய அகன்ற பாழ்மனையினது; இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் வெம்முனை அருஞ்சுரம் நீந்தி – இறப்பினது நிழலையுடைய ஒரு பக்கத்தே புகுந்து தனது தனிமையினாலே நெட்டுயிர்ப்புக் கொள்ளுதற்கிடனான வெவ்விய போர் முனையாகிய கடத்தற்கரிய நெறியைக் கடந்து; என்க.

(வி-ம்.) முனாஅது மூரி மன்றம் என்பதற்கு – தன்கண் முன்னதாகிய மூரி மன்றம் என்க. அதர் – வழி குறிஞ்சி திரிந்த பாலை என்பது தோன்ற, சிறுகுடி என்றார். உறையுநர் – குடியிருப்போர். இறை – வீட்டின் இறப்பு.

10 – 15: தம்வயின்.................நயந்திசி னோரே

(இ-ள்.) நாம் நயந்திசி னோரே தம் வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன்என – நம்மால் விரும்பப்பட்ட நம் பெருமான் தம்மிடத்தே கடமையாக வந்து பொருந்திய ஆள்வினையாகிய பொருள் ஈட்டுதற்கு மீண்டனர் என்பது தலைக்கீடாக; நள் என் யாமத்து உயவுத்துணை ஆக நம் மொடு –பசலை நோன்று – நள் என்னும் ஓசையையுடைய இரவின்கண் நமக்கு இதுகாறும் உசாத்துணையாக நம்முடனே இப்பசலை நோயையும் பொறுத்திருந்து; தம்மொடு தானே சென்ற நலனும் – அவரோடு தானே போய்விட்ட நமது பெண்மை நலத்தை; நல்கார் கொல் – இனி நமக்கு அருள மாட்டாரோ, அங்ஙனமாகின் யான் உயிர் வாழேன்; என்பதாம்.

(வி-ம்.) ஆடவர்க்குப் பொருளீட்டுதல் கடமையாகலின் அதனைத் தம் வயின் ஈண்டு வினை என்றான். மீண்டோர் என்றது, பண்டும் அவர் பொருள் வயின் பிரிந்துபோய் ஈட்டி வந்தவர் மீண்டும் போயினர் என்னும் பொருள் குறித்து நின்றது. பண்டு யாமத்துத் துணையாக இருந்து இப்பொழுது அவரோடு தானே சென்ற நலன் என்க. கொல்: ஐயப் பொருட்டு. அவர் நம்மை நயந்திலர் என்பது தோன்ற நாம் நயந்திசினோர் என்றாள்.

இனி, இதனை – தோழி நாம் நயந்திசினோர் அருஞ்சுரம் நீந்தி வினை மருங்கின் மீண்டார் எனப் பண்டு யாமத்துத் துணையாக நம்மொடு இருந்து இப்போது தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்கொல்மன், என, இயைத்துக் கொள்க.

(பா.வே.) 12. ஆகிய. 14. தாமே.
------------

செய்யுள் 104


திணை: முல்லை.
துறை: வினைமுற்றி மீளுந் தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து-ம்.) அஃதாவது, முடி மன்னனுக்குப் படைத்துணையாகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் யான் கார்ப்பருவத்தில் ஒருதலையாக மீண்டு வருவேன் அதுகாறும் வருந்தாதே கொள், எனத் தேற்றுரை வழங்கிச் சென்றவன் தான் சென்ற வினை முடிந்தமையின் குறித்த பருவம் தப்பாமல் மீண்டு வந்தமை கண்டு மகிழ்ந்த தோழி அவனைப் பாராட்டிச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" எனவரும் (தொல் - கற்பி.9) நூற்பாவின்கண் பிறவும் வகைபட வந்த கிளவி என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்
    தினவண் டார்க்குந் தண்ணறும் பிறவின்
    வென்வேல் இளையர் இன்புற வலவன்
    வள்புவலித் தூரின் அல்லது முள்ளுறின்
    முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா         5
    நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
    வாங்குசினை பொலிய ஏறிப் புதல
    பூங்கொடி அவரைப் பொய்யதள் அன்ன
    உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி
    மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய         10
    புந்தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக்
    கவையிலை ஆரின் அங்குழை கறிக்கும்
    சீறூர் பலபிறக் கொழிய மாலை
    இனிதுசெய் தனையால் எந்தை வாழிய
    பனிவார் கண்ணள் பலபுந் துறையும்         15
    ஆய்தொடி யரிவை கூந்தல்
    போதுகுரல் அணிய வேய்தந் தோயே.
            -மதுரை மருதனிளநாகனார்.

(உரை)

14: எந்தை வாழிய...........

(இ-ள்.) எந்தை வாழிய - எம் பெருமானே நீ நீடூழி வாழ்க, என்க.

(வி-ம்.) எந்தை என்பது, இங்கு முறைப்பெயரன்று; இது தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபிற்றாய்ப் புலனெறி வழக்கில், தோழி தலைவனை விளிக்கும் ஒருசொல் என்றுணர்க. (தொல். பொருளியல், 52)

1-7: வேந்துவினை............ஏறி

(இ-ள்.) வேந்துவினை முடித்தகாலை இன வண்டு தேம் பாய்ந்து ஆர்க்கும் தண் நறும் புறவின் - மன்னவன் தான் மேற்கொண்ட போர்த்தொழிலின்கண் வாகை சூடியபொழுதே காலந்தாழ்த்தலின்றி வண்டுகள் நாற்றிசையினும் சென்று ஆரவாரிக்கின்ற குளிர்ந்த நறிய முல்லைப்பரப்பிலே; வென்வேல் இளையர் இன்புற - நின்னுடைய வெற்றிவேல் ஏந்திய ஏவலிளையர் மகிழும்படி; வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதிஆற்றா - நின்னுடைய தேர்ப்பாகன் கடிவாள வாரை இழுத்துப் பிடித்து ஊர்ந்தாலல்லது அவன் கைக்கொண்டுள்ள தாற்றுக் கோலின்முள் தம்மேற் பட்ட விடத்தே கடல் சூழ்ந்த இந் நிலவுலகம் தம்முடைய ஒருபொழுதை தேரோட்டத்திற்கு இடம் போதாதாகும்படி விரைகின்ற; நல் நால்கு கடும்பரி பூண்ட நெடுந்தேர் - அழகிய நான்கு குதிரைகள் பூண்ட கடிய செலவினையுடைய நினது நெடிய தேரினது; வாங்கு சினை பொலிய ஏறி - வளைந்த கொடிஞ்சி என்னும் இருக்கை பொலிவுறும்படி ஏறி இருந்து, என்க.

(வி-ம்.) வேந்து - துணைக்கழைத்த வேந்தன். வினை – போர்த் தொழில். தேம் - திசை. வலவன் - தேர்ப்பாகன். வள்பு - கடிவாளவார். வலித்து ஊர்தலாவது - வாரைப் பிடித்து வலிந்து இழுத்த வண்ணமே செலுத்துதல். முள் - தாற்றுக்கோலின் முள். ஆதி - குதிரைகள் நேராக ஓடும் ஓட்டம். நால்கு - நான்கு. குதிரைகளுக்கு எண்ணால் வரும்பெயர். சினை - கொடிஞ்சி; அஃதாவது, தாமரை மலர் வடிவமாகச் செய்யப்பட்ட இருக்கை என்க.

7-13: புத‌ல‌........ஒழிய‌

(இ-ள்.)புதல பூ கொடி அவரைப் பொய் அதள் அன்ன உள்இல் வயிற்ற மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய வெள்ளை வெள்மறி - புத‌லின்க‌ண் ப‌ட‌ர்ந்துள்ள‌ ம‌ல‌ர்க‌ளையுடைய‌ கொடியிட‌த்தே காய்த்த‌ அவ‌ரைப்பிஞ்சின‌து உள்ளே வ‌றிதான‌ பொய்த்தோல் போன்ற‌ உள்ளீடில்லாத‌ வ‌யிற்றையுடைய‌ன‌வும் ம‌ய‌ங்கி விழுந்தாற் போன்று தாழ்ந்து தூங்குகின்ற‌ பெரிய‌ செவியையுடைன‌வுமாகிய‌ வெள்ளாட்டின் வெண்ணிற‌மான‌ குட்டிக‌ள்; புல்த‌லை சிறாரோடு உகளி - புற்கென்ற‌ த‌லையையுடைய‌ சிறுவ‌ர்க‌ளோடு துள்ளிக்குதித்து விளையாடிப் பின்ன‌ர்; மன்று உழை கவை இலை ஆரின் அம்குழை கறிக்கும் சீறூர் - ம‌ன்ற‌த்தின் ப‌க் க‌த்திலுள்ள‌ க‌வ‌டுப‌ட்ட‌ இலைக‌ளையுடைய‌ ஆத்திம‌ர‌த்தின‌து அழ‌கிய தளிரைத் தின்ன‌ற்கிட‌மான‌ சிறிய‌ ஆய‌ர்பாடிக‌ள்; ப‌ல‌ பிற‌க்கு ஒழிய‌ - ப‌ல‌வும் பிற்ப‌ட்டுக் கிட‌க்கும்ப‌டி, என்க‌.

(வி-ம்.) அவ‌ரைப் பெய்ய‌த‌ள் - அவ‌ரையின‌து பிஞ்சுக‌ளின் உள்ளே விதை தோன்றாம‌ல் இருக்கும்போழுது அவ‌ற்றின் தோல்க‌ள் வ‌றுங் கூடாயிருப்ப‌துபோல‌ மாலைப்பொழுதில் த‌ம‌க்குண‌வாகிய‌ பால் உண்ண‌ப்பெறாது வ‌றிதேகிட‌க்கும் ஆட்டுக் குட்டிக‌ளின் வ‌யிற்றிற்கு உவ‌மை எடுத்தோதிய‌து, ச‌ங்க‌ப் புல‌வ‌ர்க‌ள் பொருள்க‌ளுக்கு உவ‌மை கூறுங்கால் பெரிதும் கூர்ந்துண‌ர்ந்து கூறுத‌ற்கு எடுத்துக்காட்டு எனலாம்; வெள்ளை, நிறங்குறித்த‌ன்று யாட்டின் வ‌கை குறித்து நின்ற‌து. மாழ்குத‌ல் - ம‌ய‌ங்குத‌ல். ஆர் - ஆத்தி; அத‌னிலை சுவைத் திருதலைக் க‌ண்டுண‌ர்க‌. க‌றித்த‌ல் (க‌டித்த‌ல்) - தின்ன‌ல். சீறூர் என்ற‌து பாடிக‌ளை.

13-17: மாலை.....த‌ந்தோயே

(இ-ள்.)பனிவார் கண்ணள் பல புலந்து உறையும் மாலை - பிரிவாற்றா‌மையாலே க‌ண்ணீர் ஒழுகுகின்ற‌ க‌ண்க‌ளை யுடைய‌வ‌ளாய்ப் ப‌ற்ப‌ல‌ சொல்லி நின்னை வெறுத்து இல்ல‌த்திலே உறைத‌ற்குக் கார‌ண‌மான‌ காம‌நோய் ம‌ல‌ருகின்ற‌ இந்த‌க்
கொடிய‌ மாலைப்பொழுதிலே விரைந்து வ‌ந்து; ஆய்தொடி அரிவை குரல் கூந்தல் அணிய போது வேய்தந்தோய் - அங்ங‌ன‌மாகிய‌ அழ‌கிய‌ வ‌ளையலையுடைய‌ எம்பெருமாட்டியின‌து கொத்தாகிய‌ கூந்த‌ல் அழ‌கெய்தும்ப‌டி ம‌ல‌ர்க‌ளைக் கொண‌ர்ந்து நீயே நின் கையால் சூட்டா நின்ற‌னை; இனிது செய்தனையால் – இவ் வாற்றால் நீ எம‌க்கு மிக‌வும் இனிய‌தொரு செய‌லைச் செய்தாயாகின்ற‌‌னை; என்ப‌தாம்.
-------------------------

செய்யுள் 105


திணை: பாலை
துறை : மகட்போக்கிய தாய் சொல்லியது

    அகல் அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
    ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
    நல்வரை நாடன் தற்பா ராட்ட
    யாங்குவல் லுநள்கொள் தானே - தேம்பெய்து
    மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி         5
    ஈனாத் தாயார் மடுப்பவும் உண்ணாள்,
    நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்
    எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டு
    பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்
    சில்பரிக் குதிரை, பல்வேல் எழினி         10
    கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
    கனைஎரி நடந்த கல்காய் கானத்து
    வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
    தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து
    வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்         15
    முகைதலை திறந்த வேனிற்
    பகைதலை மணந்த பல் அதர்ச் செலவே !
            -தாயங்கண்ணனார்.

(உரை)

4-8: தேம்பெய்து......................பொய்ம்மருண்டு

(இ-ள்.) மணிசெய் மண்டை தேம்பெய்து தீம்பால் ஏந்தி ஈனாத்தாயர் மடுப்பவும் உண்ணாள் – மணிகள் இழைத்த பொற்கலத்தின்கண் தேன்கலந்த இனிய ஆவின்பாலினைக் கையில் ஏந்திச் செவிலிமாருள் ஊட்டுவாள் உண்ணென்று ஊட்டா நிற்பவும் உண்ண மறுப்பவளாகிய என்மகள்; நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் – தருநிழலின்கண் அமைந்த தண்சுணை போன்று குளிர்ந்திருக்கின்ற மாடங்களால் உயர்ந்த எமது இல்லத்தின் கண் அமைந்த பெரிய செல்வங்களையும் பொருளாகச் சிறிதும் மதியாளாய்; பொய்ம்மறுண்டு – ஏதிலாளாகிய யாரோ ஒருத்தியின் மகன் தனக்குச் சொல்லிய பொய்மொழியால் மயங்கி, என்க.

(வி-ம்.) மண்டை என்பது ஈண்டு மண்ணால் செய்த கலம் என்னும் தன் பொருள் குறியாது, மணிசெய் மண்டை என்றமையால் பொற் கலம் என்னும் பொருள் குறித்து நின்றது. தேம்பெய்து தீம்பால் ஏந்தி என்றது நற்றாய் தனது வளமும் தன்மகள் வளர்ந்தவாறும் கருதிக் கூறியபடியாம். ஈனாத்தாயர் – செவிலித் தாய்மார். இவரைப் படர்க் கையில் கூறினமையில் இவள் நற்றாய் என்பது பெற்றாம். கயம் – சுனை. அதன் தண்மையை விதந்தோதுவான் நிழற்கயம் என்றாள். நீள் நகர் என்றமையால் மாடவீடு என்பது பெற்றாம். இவ்வாற்றானும் தனது செல்வப் பெருக்கினைக் குறித்து இத்தகைய பெருஞ்செல்வத்தையும் நினையாது போயினள் என்றவாறு. இங்ஙனம் போதற்கு அவன் எத்துணைப் பொய் கூறினனோ என்பதுபடப் பொய்ம்மருண்டு என்றாள்.

1 - 3: அகலறை...............பாராட்ட

(இ-ள்.) நல்வரை நாடன் அகல் அறை அரும்பு முதிர் வேங்கை மலர்ந்த ஒள் இலைத் தொடலை தைஇ - அழ‌கிய‌ ம‌லை நாட‌னாகிய‌ த‌ன் காத‌ல‌ன் அக‌ன்ற‌ ம‌லைப் ப‌க்க‌த்திலே அரும்புக‌ள் முதிர்ந்த‌ வேங்கை ம‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ரோடு ஒள்ளிய‌ ப‌ச்சிலையையும் விர‌வித்தொடுத்த‌ மாலையைச் சூட்டிவிட்டு; மெல்லென‌த் த‌ன் பாராட்ட‌ - மெல்ல‌ மெல்ல‌த் த‌ன் ந‌ல‌ங்க‌ளைப் பாராட்டா நிற்ப‌, என்க‌.

(வி-ம்.) ம‌ருக‌ன் என்னும் அன்பின் தூண்டுத‌லாலே அவ‌னை ந‌ல்வ‌ரை நாட‌ன் என‌ப் பாராட்டின‌ள். அறை - க‌ற்ற‌ரை. வேங்கை ம‌ல‌ரோடு இலை விர‌வித்தொடுத்த‌ மாலை என்க‌. தைஇ – அணிந்து என்ற‌வாறு.

9-17: ப‌ந்து........செல‌வே

(இ-ள்.) பந்து புடைப்பு அன்ன பாணிப் பல் அடி சில்பரிக் குதிரைப் பல் வேல் எழினி - ப‌ந்த‌டிக்கும் ஒலி போன்ற‌ தாள‌த்திற்கியைந்த‌ ப‌ல‌வ‌கையான‌ அடியிடுத‌லையுடைய‌ன‌வும் சில‌வாகிய‌ செல‌வுக‌ளை உடைய‌ன‌வும் ஆகிய‌ குதிரைக‌ளையும் ப‌ல‌ வேற்ப‌டையினையும் உடைய‌வ‌னாகிய‌ எழினி என்னும் ம‌ன்ன‌னுடைய‌; கெடல் அரும் துப்பின் விடு தொழில்முடிமார் - ஒருகாலத்தும் கெடுதலில்லாத தமது வலிமை காரணமாகத் தமக்குப் பணித்த தொழிலைச் செய்து முடிக்கும் பொருட்டு; கனைஎரி நடந்த கல்காய் கானத்து வினைவல் அம்பின் விழுத்தொடைமறவர் - மிகுந்த தீப்பரவிக் கற்கள் சுடுகின்ற காட்டின்கண் தமது தொழிலின்கண் வன்மையுடைமையால் அம்புகளைக் குறி தவறாமல் தொடுக்கும் சிறந்த தொடையையுடைய மறவர்கள்; தேம்பிழி நறுங்கள் மகிழின் - தேனாற்ச‌மைத்த‌ ந‌றிய‌ க‌ள்ளைப் ப‌ருகிய‌த‌னாலே உண்டான‌ செருக்கினோடு ப‌கைவ‌ர்க‌ளைப் போர்க்க‌ள‌த்தே வீழ்த்தி வென்று; ஏறு வீங்கு மெல் சுரைய இனம் தரூஉம் - காளைக‌ளோடு கூடிய‌ பால்சுர‌ந்து ப‌ருத்த‌ ம‌டியையும் மெல்லிய‌ முலைக்காம்புக‌ளையும் உடைய‌ ஆனின‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கொண‌ரும் இட‌மான‌; வேனில் முகை தலை திறந்த பகைதலை மணந்த பல் அதர் - வேனிற் ப‌ருவ‌த்து வெயிலின் வெப்ப‌ம் ம‌லைக‌ளிட‌த்தே முழைஞ்சுகளைத் திற‌ந்துள்ள, பகைவரொடு கூடிய பலவாகிய பாலை நிலத்துவழியின் கண்; செல(4) யாங்கு வ‌ல்லுந‌ள் கொல்தான்ஏ - ந‌ட‌ந்து செல்லுத‌ற்கு எங்ங‌ன‌ம் வ‌ல்ல‌மை உடைய‌ள் ஆயின‌ளோ அறிகின்றிலேன், என்க‌.

(வி-ம்.) குதிரை அடிஇடும் ஒலிக்குப் ப‌ந்து அடிக்கும் ஒலி உவ‌மை. போர்க் குதிரைக‌ள் ப‌ல‌வும் ஒருசேர‌ அடிபெய‌ர்த்திடுத‌லால் அவ்வடியீட்டிற்குப் பாணி உவமை. பாணி - தாளம், பரி - செலவு. சில் பரிக்குதிரை பல் வேல் எழினி என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்பம் தோன்றுதலுணர்க. எழினி என்பவன் பெருஞ்சித்திரனார் முதலிய புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற ஒரு வள்ளலாவான். துப்பு - வலிமை. எழினியால் ஏவி விடப்பட்ட தொழில் என்க. விழுத் தொடை - குறி தவறாமல் அம்பு தொடுக்கும் தொடை; அங்ஙனம் தொடுக்கும் மறவர் என்க. மகிழ் - செருக்கு. முனை - போர்க்களம். முகை - முழைஞ்சு. அதர் - வழி. செலவு - 4. யாங்குவல்லுநள் என இயையும். கொல், தான், ஏ: அசைச் சொற்கள்.

இனி, இதனை - தேம்பெய்து பால் ஏந்தி மடுப்பவும் உண்ணாதவள் எம் செல்வமும் உள்ளாளாய் மருண்டு நாடன் தைஇ பாரட்ட வேனில் அதர்ச் செலவு யாங்கு வல்லுநள் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 1. அகவரை. 10. வல்வேலெ. 15. விலங்குமென்.
-------------

செய்யுள் 106


திணை: மருதம்.
துறை: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(து.ம்.) அஃதாவது-தலைவன் பரத்தையர் கேண்மைகொண்டு ஒழுகுவானாக, தலைவி அச்செய்தி அறிந்துழிப் பரத்தையை வைதாள்; அச்செய்தியைப் பரத்தையின் தோழி பரத்தைக்குக் கூற அது கேட்டுப் பொறாத பரத்தை தலைவியின் தோழிமார் சிலர் கேட்கும்படி தலைவியை இகழ்ந்து சொல்லியது என்றவாறு.

(இ.ம்.) இதற்கு, "புல்லுதல் மயக்கும்" எனவரும் (தொல்- கற்பி. 10) நூற்பாவின்கண் இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும் எனவரும் விதி கொள்க.

    எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
    பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன்
    வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்
    பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந்
    துறைகே ழுரன் பெண்டுதன் கொழுநனை         5
    நம்மொடு புலக்கும் என்ப நாமது
    செய்யா மாயினும் உய்யா மையின்
    செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்
    உலமந்து வருகம் சென்மோ தோழி
    யொளிறுவாட் டானைக் கொற்றச் செழியன்         10
    வெளிறில் கற்பின் மண்டமர் அடுதொறும்
    களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
    தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே.
            ---- ஆலங்குடி வங்கனார்.

(உரை)

9 - தோழி..........

(இ-ள்.) தோழி – தோழி! இன்று யாம் ஒருதலையாக ஒருகாரியம் செய்தே தீரவேண்டும்! அஃதென் என்பாயாயின் என்க.

(வி-ம்.) இதன்கண் இன்று......ஆயின் என்பன இசையெச்சத்தால் கொண்ட பொருள்.

1-6: எரியகைந்தன்ன...............என்ப

(இ-ள்.) எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து- தீ கொழுந்து விட்டாற்போல இதழ் திறந்து மலருகின்ற தாமரை மலர்களையுடைய கழனிகளில்; பொரி அகைந்து அன்ன பொங்குபல சிறுமீன் உணீஇயர் – நெல்லைப் பொரிக்குங்கால் பொரிகள் துள்ளி வீழ்வது போலத் துள்ளி விழுகின்ற பலவாகிய சிறிய மீன்களைப் பற்றித் தின்பதற்கு அவாவி: பறைதபு முதுசிரல் பைப்பய வெறி கொள் பாசடை வந்து அசைபு இருக்கும் – சிறகு கெட்ட முதுமையுடைய சிரற்பறவை மணமுடைய பசிய இலையின்மேல் மெல்ல மெல்ல வந்து மடிந்து இருத்தற்கு இடனான. துரைகேழ் ஊரன் பெண்டு – நீர்த்துறை பொருந்திய மருதநிலத்து ஊர்த் தலைவனாகிய நம்பெருமானுடைய மனைவி; தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப – தன்னுடைய கணவனை நம்முடனே ஒரு சேர வெறுக்கின்றாள் என்று அறிந்தோர் கூறுகின்றனர்; என்க.

(வி-ம்.) பொரி – நெற்பொரி. நீரின்கண் சின்னஞ்சிறிய கெண்டைகள் துள்ளிக் குதிப்பதற்கு இப்புலவர் பொரிக்குங்கால் நெற் பொரிகள் துள்ளி விழுவதை உவமை கூறுதல் நினைந்து மகிழத்தகும். இனி வெறிகொள் பாசடை நறுமணமிக்க தன் மனையாகவும், துள்ளிக் குதிக்கும் சிறுமீன் தன் மனைக்கண் வந்து தன்னோடு ஆடுகின்ற தலைவனாகவும் அத்தலைவனைக் கவர்ந்து கொள்ளக் கருதி மெல்ல மெல்லத் தன்னைப் பற்றிப் பேசுகின்ற தலைவி முதிர்ந்த சிரலாகவும் உள்ளுறுத்து வைத்து இப்பரத்தை தலைவி முதுமையையும், அவள் கருத்துக் கைகூடாமையையும் இகழ்ந்து பேசுதல் உணர்க. முதுசிரல் என்றது தலைவி முதுமையைக் கருதிக் கூறியபடியாம். அவள் கொழுநனை அவள் புலத்தல் அமையும். ஆயினும் நம்மொடு புலத்தல் அமையாது என்பது கருத்து.

9-13: நாமது.....வயிறே

(இ-ள்) நாம் அது செய்யாம் ஆயினும் - யாம் அவள் செய்தது போல அவள் கொழுநனையும் அவளையும் வெறுப்பது செய்யமாட்டேம் ஆனாலும்; உய்யாமையின் - அவள் செய்தற்கு ஈடாக யாமும் ஒன்று செய்யாவிடின் யாம் உயிர் வாழமுடியாது போல இருந்தது ஆதலால்; சிறிது அவண் செறிதொடி தெளிர்ப்ப வீசி உலமந்து வருகம் சென்மோ - யாம் சிறிது பொழுது அவள் இருக்குமிடம் சென்று அவள் கண்காணும்படி நமது கையில் செறித்த வளையல்கள் குலுங்கி ஒலிக்கும்படி நம் கைகளை வீறுபட வீசிநடந்து சுற்றி மீண்டு வருவோம் அதற்கு என்னோடு வருதி, அஃது எற்றுக்கெனின்; ஒளிறுவாள் தானை கொற்றச்செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் களிறு பெறு வல்சிப்பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின் - விளங்குகின்ற வாளேந்திய படைகளையும் வெற்றியையும் உடைய பாண்டியன் தனது குற்ற மில்லாத போர்க்கல்வி வன்மையால் தான் மேற் கொண்டு சென்ற போர்க்களங்களிலே பகைவரைக் கொன்று வாகை சூடும் பொழுதெல்லாம் களிற்றியானையைப் பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற தண்ணுமையினது கண்ணைப்போல; தன் வயிறு அலைஇயர் - அவளும் தன் வயிற்றிலே அடித்துக்கொள்ளுதல் பொருட்டேயாம்; என்பதாம்.

(வி-ம்) அது என்றது புலத்தலை. அவள் இகழ்ச்சியைப் பொறுத்து யான் உயிர் வாழேன் என்பாள் உய்யாமையின் என்றாள். உய்யாமை - உயிர் வாழாமை. அவண் என்றது அவளுறையும் இல்லின்கண் அவள் காணும்படி என்பதுபட நின்றது. நமது வீறுதோன்ற அவள் கண்முன் தொடி தெளிர்ப்ப நாம் கைவீசிப் பன்முறையும் நடப்பேம் என்பாள், உலமந்து வருகம் என்றாள். உலமருதல் - சுழன்று திரிதல். அப்படி வந்தால் அவள் தன் வயிற்றில் அடித்துக்கொண்டு வருந்துவள் என்றவாறு. தலைவி வயிற்றில் அடித்துக் கொள்வதற்குப் பாணன் தண்ணுமைக்கண்ணின் அடித்தல் உவமை. களிறு பெறு வல்சி - களிற்றைப் பரிசிலாகப் பெற்று அதனால் உண்ணும் உணவு. இனி, அம்மன்னன் களிறு பெறுகின்ற உணவில் எஞ்சியவறை உண்ணும் உணவு எனினுமாம்.

இனி, இதனைத் தோழி ஊரன்பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப. நாம் அது செய்யாம் ஆயினும் உய்யாமையின் சிறிது அவண் தொடி தெளிர்ப்ப வீசி உலமந்து வருகம் சென்மோ (ஏற்றுக்கெனின்) தன் வயிறு அலைஇயர் என இயைத்துக் கொள்க.

(பா.வே.) 7.உய்யாமா. 8. சிறிதிவன். (கூறினாளென)
-----------

செய்யுள் 107


திணை: பாலை.
துறை: தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து தலைமகற்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது, களவொழுக்கத்தின்கண் இடையூறுமிக்கமையால் தலைவியை அவள் சுற்றத்தார் அறியாவண்ணம் தன்னுடன் அழைத்துப் போக்க் கருதிய தலைவன் அதனைத் தோழிக்குக் கூற, தோழி தலைவிக்குக் கூறி அவளுடைய உடன்பாட்டைக் குறிப்பினாலறிந்து வந்து தலைவனுக்குச் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்" எனவரும் (தொல். அகத்.31) நூற்பாவின்கண் போக்கற் கண்ணும் எனவரும் விதி கொள்க.

    நீசெல வயரக் கேட்டொறும் பலநினைந்
    தன்பின் நெஞ்சத் தயாஅப்பொறை மெலிந்த
    என்னகத் திடும்பை களைமார் நின்னொடு
    கருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின்
    றிரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்         5
    நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
    ஒலிகழை நெல்லின் அரிசியோ டோராங்
    கானிலைப் பள்ளி அளைபெய் தட்ட
    வானிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
    புகரரைத் தேக்கின் அகலிலை மாந்தும்         10
    கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்
    வல்லாண் அருமினை நீந்தி அல்லாந்து
    உகுமணூ றஞ்சும் ஒருகாற் பட்டத்
    தின்னா ஏற்றத் திழுக்கி முடங்கூர்ந்
    தொருதனித் தொழிந்த உரனுடை நோன்பக        15
    டங்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
    புல்லுளைச் சிறாஅர் வில்லின் நீக்கி
    மரைகடிந் தூட்டும் வரையகச் சீறூர்
    மாலை இன்றுணை யாகிக் காலைப்
    பசுநனை நறுவீப் பரூஉப்பர லுறைப்ப         20
    மணமனை கமழும் கானம்
    துணையீ ரோதியென் தோழியும் வருமே.
            ---- காவரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

(உரை)

1-3: நீ செல.............களைமார்

(இ-ள்.) நீ செலவு அயர கேள்தொறும் பலநினைந்து- பெருமானே! நீ என் தோழியை நின்னுடன் அழைத்துக் கொண்டு போதலைக் கருதா நிற்ப அச்செய்தியை யான் குறிப்பாக அவள் உணர்ந்து கொள்ளூம் பொருட்டுப் பல்லாற்றானும் கூறுந் தோறும் கூறுந்தோறும் அவள்தானும் அவற்றைக் கேட்கும் பொழுதெல்லாம் தன்நெஞ்சினுள் பல்வேறு நினைவுகளை நினைந்து; அன்பின் நெஞ்சத்து அயா பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார் – அன்புடைய தனது நெஞ்சத்தினுள்ளே அந்நினைவுகளை ஆராய்ந்து பார்த்துப் பின்னர்த் துன்பச்சுமையால் மெலிந்துள்ள அடிச்சியேனது நெஞ்சத்தின் துன்பத்தை நீக்குதற்பொருட்டு; என்க.

(வி.ம்.) நீ கொண்ட கருத்தினை யான் குறிப்பாக அவள் உணரும் பொருட்டுப் பல்லாற்றானும் கூறினேன் என்பது தோன்றக் கேட் டொறும் என்றாள். அவளும் நின்னுடன் வந்தால் உண்டாகும் விளைவுகளைப் பல படியாகவும் நினைந்தாள் என்பாள் பல நினைந்து என்றாள். பொறை – துன்பச்சுமை. அவள் பொருட்டு உடன்பட்டாளில்லை; என் துன்பத்தை நீக்கும் பொருட்டே அவள் உடன்பட்டனள் என்பது தோன்ற என் அகத்திடும்பை களைமார் என்றாள். களைமார் – களைதற் பொருட்டு.

4-10: கருங்கல்..........மாந்தும்

(இ-ள்.) இரும்புவி கருங்கல் வியல் அறைக்கிடப்பி வயிறு தின்று துறந்த ஏற்றுமான் உணங்கல் – பெரிய புலியான‌து க‌ரிய‌ க‌ல்லாகிய‌ அக‌ன்ற‌ ம‌லைப்ப‌க்க‌த்திலே கொன்று போக‌ட்டுத் த‌ன் வ‌யிறு நிறைய‌த் தின்று எஞ்சிய‌ வ‌ற்றை விட்டுப்போன‌ க‌லைமானின‌து த‌சைவ‌ற்ற‌லைக் க‌ண்டு; நெறிசெல் வம்பலர் உவந்தனர் - வழியைப் போகின்ற புதுயவர் பெரிதும் மகிழ்ந்தவராய்; ஆங்கண் ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன்நிலைப்பள்ளி அளை பெய்து அட்ட - தம்முள் ஒன்றனோடொன்று உராய்தலால் ஒலிக்கின்ற மூங்கிலினது நெல்லினது அரிசியோடு ஒன்றாக‌ ஆயர் தம் பசுக்கிடையிடத்தே பெற்ற தயிரையும் பெய்து ச‌மைக்கப்பெற்ற; வால் நிணம் உருக்கிய வாஅல் வெள் சோறு புகர் அரைத்தேக்கின் அகல் இலைமாந்தும் - வெள்ளிய‌ நிண‌த்தை உருக்கிக்கூட்டிய‌ மிக‌வும் வெண்மையான‌ சோற்றினைப் புள்ளிக‌ளையுடைய‌ அரையினையுடைய‌ தேக்கின‌து அக‌ன்ற‌ இலையின்க‌ண் இட்டு உண்ணுத‌ற்கு இட‌னாய், என்க‌.

(வி-ம்.) கிட‌ப்பி - கொன்று போக‌ட்டு என்க‌. மானின் வ‌யிற்றுப் ப‌குதியைத் தின்றுபோன‌ எனினுமாம். ஏற்றுமான் - ஆண்மான். நெறிசெல் வ‌ம்ப‌ல‌ர் - புதிய‌ரான‌ வ‌ழிப்போக்கர். ஒலித்த‌ல் - த‌ழைத்த‌ல் என்பாருமுள‌ர். ஈ‌ண்டைக்கு அவ்வுரை பொருந்தாது என்க‌. ஆனிலைப்ப‌ள்ளி - ப‌சுக்கிடை இர‌விற் கிட‌க்குமிட‌ம் என்க‌. அவ்விட‌த்து ஆய‌ர்பால் பெற்ற‌ அளை என்ற‌வாறு. அளை - த‌யிர். புக‌ர் - புள்ளி.

11-18: க‌ல்லா........சீறூர்

(இ-ள்.) கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் வல்லாண் அருமுனை நீந்தி - போர்த்தொழிலையன்றிப் பிறிதொன்றும் கல்லாத நெடுமொழியையும் சினமிக்க நாயையுமுடைய வடுகமறவரின் வலிய ஆண்மை விளங்குகின்ற கடத்தற்கரிய போர்க்களங்களையும் கடந்து; உகுமண் ஊறு அஞ்சும் ஒருகால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி - சரிந்து வீழும் மண்ணுக்கு அஞ்சுதற்குக் காரணமான ஒற்றையடிப் பாதையில் இன்னாமையையுடைய ஏற்றத்தின்கண் வழுக்கி வீழ்ந்து; முடங்கூர்ந்து அல்லாந்து ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன்பகடு - கால் முடம்மிக்குத் துன்புற்றுத் தான் மட்டும் பெரிதும் தனித்துக் கிடந்த வலிமையுடைய பொதி சுமக்கும் எருதினை; புல் உளைச்சிறார் வில்லின் இருப்பை அம்குழை அறைவாய் வான்புழல் நீக்கி மரைகடிந்து ஊட்டும் வரை அகச்சீறூர் - புற்கென்ற‌ த‌லைம‌யிரையுடைய‌ எயின‌ச் சிறுவ‌ர் த‌ம‌து வில்லினால் இருப்பை ம‌ர‌த்தின‌து அழ‌கிய‌ த‌ளிரையும் துணித்தாற் போன்ற‌ வாயையும் வெள்ளிய‌ உட்டுளையையும் உடைய பூவையும் அடித்து வீழ்த்தி அவற்றைத் தின்னவருகின்ற மரைமானையும் துரத்தி ஊட்டுதற்கு இடனாகிய மலையிடத்தமைந்த சிறிய ஊர்களின்கண், என்க.

(வி-ம்) நீள்மொழி - நெடுமொழி. அஃதாவது ஒரு மறவன் தன் மேம்பாட்டினைத் தானே பகைவர்க்கு எடுத்துக் கூறுதல்; இது வஞ்சித்திணையில் ஒரு துறை (புறப்பொருள் வெண் - வஞ்சிப். 12.) கதம் - சினம். வல்லாண் - மறக்குடி ஊர் மறப்பண்பு முதலியவற்றின் சிறப்பு. இது வாகைத்திணையில் ஒருதுறை (புறப்பொருள் வெண். - வாகைப். 23.) உகுமண் ஊறு - மண் சரிவினால் உண்டாகும் துன்பம்; அதற்கு அஞ்சுதற்கிடனான ஒரு காற்பட்டம். ஒரு காற்பட்டம் - ஒற்றையடிப்பாதை. பாட்டம் இக்காலத்துப் பாட்டை என வழங்கப்படும். இன்னா ஏற்றம் - ஏறுதற்கு இயலாத ஏற்றம். நோன்பகடு - பொதி எருது. உளை: உவம வாகுபெயர். உளைபோன்ற மயிர் என்க. மரை - ஒருவகை மான். ஒரு காற்பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடங் கூர்ந்த பகட்டிற்குச் சிறார் இருப்பையின் தழையையும் பூவையும் மரத்திலிருந்து அடித்து வீழ்த்தி அதைத் தின்னவரும் மரை மானையும் கடிந்து ஊட்டுவித்தாற்போல வரைவொடு வருதற்கும் இழுக்கி, வேறு வழியுங் காணாத பெருமகனாகிய உனக்கு யான் எனது சூழ்ச்சியால் தலைவியைச் சுற்றத்தாரினின்றும் விலக்கி எம் பெருமாட்டியை மணக்க வரும் பிறரையும் கடிந்து ஓம்படை செய்கின்றேன் என இதன்கண் உள்ளுறை காண்க.

இனி, புலி விட்டுப்போன மானிறைச்சியை வழியிற்கண்டு அங்குள்ள மூங்கில் அரிசியோடும் அளையோடும் சமைத்த சோற்றினைத் தேக்கின் இலையிலிட்டு இனிதாக உண்ணுமாறு போலே நீயும் நின்வழியில் நின் ஆகூழ் விட்டுப்போன தலைவியை நின்முயற்சி இன்றியே பெற்று மகிழ்ந்தனை. இவளை நின்னொடு அழைத்துப்போய் நின்சுற்றத்தாரோடு சேர்த்து நின் இல்லத்தில் இன்புற்று இனிது வாழ்க! என உள்ளுறுத் தமையும் உணர்க.

1-3: நின்னொடு.......

(இ-ள்) நின்னொடு - இனி எம்பெருமாட்டியும் நின் கருத்திற்கிணங்கி உன்னோடுகூடி, என்க.

(வி-ம்) எனவே, தலைவியும் உடன் போக்கிற்கு இணங்கிவிட்டாள் என்றாளுமாயிற்று.

19-22: மாலை.......வருமே

(இ-ள்.) மாலைஇன் துணையாகிய - மாலைப்பொழுதிலே நீ இன்புறுதற்கியன்ற துணையாகி; காலை பசுநனை நறுவீப்பரூஉப்பரல் உறைப்ப மணமனை கமழும் கானம் - விடியற் காலையில் பசிய கொத்தினின்றும் நறிய மலர்கள் பருத்த பரற்கற்களின்மேல் உதிரா நிற்றலால் திருமண மனைபோல நறுமணங் கமழுகின்ற காட்டின்கண்; துணைஈர் ஓதி என் தோழியும் வரும் – நின் வாழ்க்கைத் துணைவியாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என்தோழியும் வருவாள், என்பதாம்.

(வி-ம்.) வரையகச் சீறூரின்கண் மாலைப்பொழுதில் உனக்குத் துணையாக எந்தோழி வரும் என்றாள்; பின்னரும் இனி, நின் வாழ்க்கைக்கும் துணை என்பாள், துணையீரோதி என்றாள்.

இனி, இதனை –பெருமானே! நீ செலவயரக்கேட்டொறும் நினைந்து நெஞ்சத்து அயா, என் இடும்பை களைமார் வரையகச் சீறூர் துணையாகி மணமனை கமழும் கானம் என்தோழியும் நின்னொடு வரும் என இயைத்துக் கொள்க.

(பா-வே.) 4.இருங்கல். 13 – பன்னூறஞ்சு.
------------

செய்யுள் 108


திணை: குறிஞ்சி
துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

(து – ம்.) அஃதாவது – திருமணம் செய்து கொள்ளுதலில் கருத்தின்றி நாள்தோறும் தலைவன், இரவுக் குறிக்கண் வந்து வந்து மீள் பவனாயிருந்தான்; இன்னாமையுடைய இருள் வழியில் அவன் வருவதற்குத் தலைவி பெரிதும் அஞ்சினன்; ஒரு நாள் தலைவன் இரவில் வந்து சிறைப்புறத்தே நிற்றல் கண்ட தோழி, அவனை வரைவுகடாதற் பொருட்டு அவன் வருகை அறியாதாள் போன்று, அவன் கேட்பத் தலைவிக்குக் கூறுவாளாய்க் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல்-களவி-23.) நூற்பாவின்கண் ஆற்றதுதீமை அறிவுறுகலக்கமும் என வரும் விதி கொள்க.

    புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்
    கொத்தன்று மன்னால் எவன்கொல் முத்தம்
    வரைமுதல் சிதறி யவைபோல் யானைப்
    புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
    பளிங்குசொரி வதுபோல் பாறை வரிப்பக்         5
    கார்கதம் பட்ட கண்ணகன் விசும்பின்
    விடுபொறி ஞெகிழியில் கொடிபட மின்னிப்
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்
    ஆருயிர்த் துப்பில் கோண்மா வழங்கும்
    இருளிடைத் தமியன் வருதல் யாவதும்         10
    அருளான் வாழி தோழி அல்கல்
    விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ யரவின்
    அணங்குடை யருந்தலை பைவிரிப் பவைபோல்
    காயா மென்சினை தோய நீடிப்
    பஃறுடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள்         15
    அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி
    கையாடு வட்டின் தோன்றும்
    மையாடு சென்னிய மலைகிழ வோனே.
            ---- தங்காற் பொற்கொல்லனார்.

(உரை)

11 வாழிதோழி...............

(இ-ள்.) தோழிவாழி – எம் பெருமாட்டியே நீ நீடுவாழ்வாயாக! ஈதொன்று கேள், என்க.

12-18: விரவுப்பொறி.................மலைகிழவோனே

(இ-ள்.) விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அணங்கு உடை அருந்தலை பைவிரிப்பவைபோல் காயாமெல் சினைதோய நீடி எடுத்த – விரவிய புள்ளிகளையுடைய மயிலுக்கு அஞ்சி ந்ல்ல பாம்புகளின் துன்பம் செய்தலையுடைய நோக்கற்கரிய தலைகள்பல, ஒருங்கே படம் விரித்தாற்போலக் காயாவினது மெல்லிய கொம்புகளைத் தீண்டும்படி நீண்டு அரும்பிய; பல் துடுப்பு அலங்கு குலைக்காந்தள் – பலவாகிய மலர்களோடே அசைகின்ற கொத்தாகிய காந்தளினது; அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி – அழகிய மலர்களிலே தாவித்தாவி நறிய தாதினை நுகருகின்ற வண்டுகள்; கை ஆடு வட்டின் தோன்றுதற்கிடனான; மை ஆடு சென்னிய மலைகிழவோன் – முகில்கள் தவழுகின்ற உச்சிகளையுடைய மலைநாட்டுத் தலைவனாகிய நம்பெருமான், என்க.

(வி-ம்.) காந்தளின் மலர்கள் தம்மைக் கண்டார்க்குத் தமது அழகால் இன்பம் தருதலொழித்துப் பாம்பின் படம்போல் தோன்றி அச்சந்தருமாறு போலே நம் பெருமானும் நம்மை மணந்து கொண்டு நமக்கு இனியானாகத் தோன்றாமல் இரவுக் குறிக்கண் வருதலாலே நமக்குப் பெரிதும் துன்பம் தருகின்றான் என இதன்கண் உள்ளுறை காண்க. மஞ்ஞை - மயில். வெரீஇ - வெருவி; அணங்கு - துன்பம். பை - பாம்பின் படம். பஃறுடுப்பு என்புழி, நிலைமொழி ஈற்று லகர மெய் - ஆய்தமாகத் திரிந்தது. வட்டு - சூதாடுகாய். தும்பிக்குவமை. மை - முகில்.

1-11: புணர்ந்தோர்........அல்கல்

(இ-ள்) அல்கல் (ஆர் இருளிடை வருதல்) எவன் - இரவிலே வருதற்கரிய இருளினூடே துணையின்றித் தனியனாக நமக்கு அருள் செய்யக் கருதி வருகின்றானேனும் அதனால் பின்னும் நமது வருத்தம் மிகுவதேயன்றிக் குறைதலின்மையின் என்ன பயன்; புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந் தோர்க்கு ஒத்தன்று மன் - அன்பினால் கேண்மை கொண்டவர்களுடைய துன்பத்தை நீக்கி அவரைப் பாதுகாத்தருளுதலும் முழுதுமுணர்ந்த சான்றோர்களுக்குப் பெரிதும் பொருந்திய செயலாம், நம்பெருமான் அது செய்திலன்; முத்தம் வரை முதல் சிதறியவை போல் புகர்யானை முகம் பொருத புதுநீர் ஆலி - முத்துக்கள் மலையின் உச்சியிலே சிதறிப் போகட்டவை போன்ற புள்ளிகளையுடைய யானையின் முகத்திலே மோதிய புதிய ஆலங்கட்டி; பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - பளிங்குகளைச் சொரிவது போலப் பாறைக் கல்லிலே யுதிர்ந்து அழகுசெய்யா நிற்ப; கார் கதம்பட்டகண் அகல் விசும்பில் - முகில்கள் சினங்கொண்ட இடத்தையுடைய அகன்ற வானத்தின்கண்; விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னிப் படுமழை பொழிந்த பால் நாள் கங்குல் - விடுகின்ற பொறிகளையுடைய கொள்ளிக்கட்டைகளைப்போல நிரலாக மின்னுதலைச் செய்து பெரிய மழை பொழிந்த நள்ளிரவின் இருளினூடே; ஆர் உயிர்த்துப்பின் கோண்மா வழங்கும் இருளிடைத்தமியன் வருதல் - அரிய உயிரினங்களையே உணவாகவுடைய கோண்மா என்னும் வல்விலங்கு திரிகின்ற அவ்விருளினூடே அவன் தனியனாக வருவது; எவன் - என்கொலோ?; யாவதும் அருளான் - அவ்வரவினால் அவன் நம்மைத் துன்புறுத்தலேயன்றி ஒரு சிறிதும் அருள் செய்தவன் ஆகான்.

(வி-ம்.) புணர்ந்தோர் - கேண்மை கொண்டோர்; புன்கண் - துன்பம். துன்பத்தை நீக்கி அருளலும் என்க. ஒத்தன்று - ஒத்தது; பொருந்தியது. மன் – அவன், அது செய்திலன் என ஒழிந்த பொருள் குறித்து நிற்றலின் ஒழியிசை. ந்வன் – ந்ன்ன காரணமோ. கொல்: அசை. ஆலி – ஆலங்கட்டி. இதற்கு முத்து உவமை. வரிப்ப – அழகு செய்ய. முகில் மின்னி முழங்கி இடித்து நிற்றற்கு இடமாதலின் அதனைக் கார்கதம்பட்ட விசும்பு என்றார். கதம் – சினம். இங்குக் கார்ப்பருவம் தன்பகையாகிய முதுவேனிலின்மேல் கதம்பட்டது என்க. ஞெகிழி – கொள்ளிக்கட்டை. படுமழை – பெரிய மழை. துப்பு – உணவு. கோண்மா – சிங்கம் போன்றதொரு வல்விலங்கு; சிங்கமுமாம். வருதலால் யாவதும் அருளானாகவும் வருதல் எவன் என வருதலை இரண்டிடத்துங் கொள்க.

இனி, இதனை தோழி மலைகிழவோன் வருதலால் யாவதும் அருளான் ஆகவும் யாம் துன்புறும்படி கங்குலில் கோண்மா வழங்கும் இருளிடை வருதல் எவன் கொல் உணர்ந்தோர்க்குப் புணர்ந்தோர் புன்கண் அருளலும் ஒத்தன்று; அவன் அது செய்திலன்! என இயைக்க.

(பா-வே.) 3. வரை மிசைச்சித. 5 – சொரிப்பவைபோற்.
தங்கால் பூட்கோவனார்.
---------------

செய்யுள் 109


திணை: பாலை.
துறை: இடைச்சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது – இல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாமை கருதி பெண்மை நலம் சிறந்த தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டுதற்குப் பாலைக் கொடு நெறியில் மிகத் தொலைவு கடந்த பின்னரும் தலைவியின் குணத்தைக் கருதி வருந்துமாற்றால் தன் போக்கிற்கு இடையூறு செய்யும் தன்நெஞ்சை நோக்கித் தலைவன் இத்துணைத் தொலைவு கடந்து வந்த யாம் வறிதே மீண்டுபோதல் பேதைமை என்பது படச் சொல்லியது; என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, "கரணத்தின் அமைத்து முடிந்த காலை" என வரும் (தொல் – கற்பி – 5.) நூற்பாவின்கண் மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும் எனவரும் விதி கொள்க.

    பல்லிதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்
    நரம்பிசைத் தன்ன இன்றீங் கிளவி
    நலநல் கொருத்தி இருந்த ஊரே
    கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
    காடுகால் யாத்த நீடுமரச் சோலை         5
    விழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலை
    வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர்
    எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கைச்
    சுரங்கெழு கவலை கோட்பாற் பட்டென
    வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்         10
    கைப்பொருள் இல்லை யாயினும் மெய்க்கொண்
    டின்னுயிர் செகாஅர் விட்டகல் தப்பற்குப்
    பெருங்களிற்று மருப்பொடு வரியதள் இறுக்கும்
    அறனில் வேந்தன் ஆளும்
    வறனுறு குன்றம் பலவிலங் கினவே.         15
           ---- கடுந்தொடைக் காவினார்

(உரை)

1-3: பல்லிதழ்.............ஊரே

(இ-ள்.) பலிதழ் மெல்மலர் உண்கண் நல்யாழ் நரம்பு இசைத்து அன்ன இந்தீம் கிளவி நலம் நல்கு ஒருத்தி – பேதை நெஞ்சமே நீ இப்பொழுது பலவாகிய இதழ்களையுடைய மெல்லிய மலர்போன்ற அழகினால் நம்முடைய நெஞ்சத்தையே பருகுகின்ற கண்களையும் நல்லயாழினது நரம்பு இசைத்தாற்*போன்ற இனிய தீவிய மொழியினையும் உடைய பெண்மைக்கியன்ற இன்பம் முழுவதையும் வழங்குவாள் ஒருத்தி என நீ இத்துணைத் தொலைவு வந்த பின்னரும் நினைதல் பேதைமையாம்; இருந்த ஊர் – மற்று அப்பெண்ணின் நல்லாள் இருந்த ஊர்க்கு, என்க.

(வி-ம்.) பல்லிதழ்........ஒருத்தி என்னுமளவும் தன் நெஞ்சம் தலைவியைத் தன்னுள் நினைந்தவை; அவற்றைத் தலைவன் கொண்டு கூறி இங்ஙனம் நினைத்தல் பேதைமை என்பதுபடச் சொல்லிய படியாம் அவள் இருந்த ஊர் என்க.

4-10: கோடு..........அத்தம்

(இ-ள்.) கோடு உழு களிற்றின் தொழுதி யீண்டிக் காடு கால் யாத்த நீடுமரச்சோலை – பகைவரது மார்பினைத் தமது கோடுகளாகிய கலப்பையால் உழுது வெற்றி விளைக்கின்ற களிற்றியானையின் கூட்டம் செறியப் பெற்று எங்கும் காடு மண்டிக்கிடந்த நீண்ட மரங்களையுடைய சோலைகளையும் அவற்றின் பின்; விழைவெளில் ஆடும் கழை வளர் நனந்தலை - ஆணும் பெண்ணுமாய்த் தம்முள் ஒன்றனையொன்று காதலிக்கின்ற அணில்கள் ஆடுதற்கிடனான மூங்கில்கள் வளரும் அகன்ற இட முடைய பாலைப்பரப்பினையும் அப்பாலையிலே; வெண்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை - தீட்டியதாலே வெண்மையான நுனியையுடைய அம்புகள் விசையோடு வந்து பாய்ந்தமையாலே இறந்தொழிந்த மறவர்களின் உடலைப் புதைத்த எண்ணால் எல்லை காணுதற் கரிய தழையால் மறைத்த பதுக்கைகளையுடைய; சுரம்கெழு கவலை கோள்பால் பட்டென - சுரத்தில் பொருந்திய கவர்த்த வழிகள் ஆறலைத்துச் சூறை கொள்கின்ற கள்வர் பகுதியிலே அகப்பட்டது என்றறிந்து; வழங்குநர் மடிந்த அத்தம் – ஆறு செல்வோர் இல்லையான அக்கொடு நெறியின்கண், என்க.

(வி-ம்) தொழுதி - கூட்டம்; கால் யாத்தல் - பற்றிக் கொள்ளுதல்; யானைக் கூட்டம் செறிந்து காடுமண்டி நீடுமரச்சோலை என்றது தலைவியிருக்கின்ற முல்லைப் பரப்பின் இப்பாற்பட்ட குறிஞ்சி நிலத்தை என்க. மேலே பாலைப் பரப்புக் கூறுகின்றான். விழை வெளில் - கண்டோர் விரும்பிப் பார்க்கும் அழகுடைய அணிலுமாம். கழைவளர் என்றது பாலைக் கருப்பொருள் குறித்தபடியாம். *வெந்நுளை என்னும் பாடத்திற்கு வெவ்விய நுனி என்க. உவல் - தழை; சருகுமாம். பதுக்கை - பிணங்களை மறைத்தற்கு அவற்றின் மேற்குவித்த கற்குவியல் - கவலை - கவர்த்த வழிகள். கோள் - சூறை கொள்ளுதல். வழங்குநர் - வழிப் போக்கர். அத்தம் - அருநெறி; பாலைநிலமுமாம்.

10-15: இறந்தோர்........விலங்கினவே.

(இ-ள்) இறந்தோர் கைப்பொருள் இல்லையாயினும் மெய்க்கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல்தப்பற்கு - சென்ற வழிப்போக்கரிடம் கைப்பொருள் சிறிதும் இல்லா விட்டாலும் அவருடம்பைப் பற்றிக்கொண்டு அவர்தம் உயிரைப் போக்காமல் உயிருடன் விட்டுப்போன தவற்றிற்காக; பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் - பெரிய களிற்றியானையின் கொம்புகளையும் புலித்தோலையும் தண்டமாக இறுப்பிக்கின்ற அறப்பண்பு சிறிதுமில்லாத எயினர் வேந்தன் ஆளுகின்ற; வறன் உறு குன்றம் பல விலங்கின - மாரிவறங் கூர்ந்து பாழ்பட்டுக்கிடக்கும் மலைகள் பற்பல இடையிட்டுக் கிடந்தனகாண்.

(வி-ம்.) இறந்தோர் - சென்றோர். அப்பாலை வழியில் செல்லும் வழிப்போக்கரிடத்தில் உள்ள பொருளைக் கொள்ளை கொள்ள வேண்டும் அவர்பால் பொருள் இல்லையானாலும் கொன்றுவிட வேண்டும். பொருளில்லாமை கண்டு இரங்கி உயிரோடு விட்டவர் அக்குற்றத்திற்கு யானைக்கோடும் புலித்தோலும் தண்டமாகச் செலுத்த வேண்டும். அத்தகைய அறனில் வேந்தன் என்றவாறு. மறக்குடி அறம் செய்யக்கெடும் என்பது அவர் கோட்பாடு. இதன்கண் நம் காதலியாகிய அவன் இருக்கும் ஊர்க்கு நீடுமரச்சோலையாகிய குறிஞ்சியும் கழைவளர் நனந்தலையும் அத்தமும் அறனில் வேந்தன் ஆளும் குன்றம் பலவும் இடையே கிடந்தன. ஆள்வினை மேற்கொண்டு வந்த யாம் அவளை இத்துணைத் தொலைவு கடந்த பின்னரும் நினைத்தல் பேதைமை; ஆதலால், அந்நினைவை விடுக! என்பது இதனாற் போந்த பயன்.

இனி, இதனை (நெஞ்சே) ஒருத்தி இருந்த ஊர்க்குச் சோலையும் அத்தமும் அறனில் வேந்தன் ஆளும் குன்றம் பலவும் விலங்கின ஆதலால் நினையாதே கொள் என இயைத்துக் கொள்க.

(பா-வே.) 6 - கழைவிரி. 7 - வெந்நுனை. 11 - மெய்க்கட்.
--------------

செய்யுள் 110


திணை: நெய்தல்.
துறை: தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றது.

(து-ம்.) அஃதாவது களவொழுக்கத்தின்கண் கூடி இருக்குங் காலத்தினும் பிரிந்துறையும் காலமே நீளிதாதலின் தலைவி பிரிவாற்றாமையால் மெய்வேறுபட்டுத் தோன்ற அதுகண்ட செவிலி, இவள் எதனால் இவ்வாறாயினள் என்று வினவத் தலைவியின் குறிப்பறிந்த தோழி அவள் கற்புக் கடம் பூண்டமையைச் செவிலிக்குக் குறிப்பாக வுணரும்படி மறை வெளிப்படுத்துக் கூறியது என்றவாறு.

(இ-ம்.) இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல்- களவி - 23) நூற்பாவின்கண் முன்னிலை அறன் எனப்படுதல் என்றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் எனவரும் விதிகொள்க.

    அன்னை அறியினும் அறுக அலர்வாய்
    அம்மென் சேரி கேட்பினுங் கேட்க
    பிறிதொன் றின்மை அறியக் கூறிக்
    கொடுஞ்சுழிப் புகாரத் தெய்வம் நோக்கிக்
    கடுஞ்சூள் தருகுவல் நினக்கே கானல்         5
    தொடலை யாயமொடு கடலுடன் ஆடியுஞ்
    சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
    வருந்திய வருத்தம் தீர யாஞ்சிறி
    திருந்தன மாக எய்த வந்து
    தடமென் பணைத்தோள் மடநல் லீரே         10
    எல்லும் எல்லின் றசைவுமிக உடையேன்
    மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
    கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ
    எனமொழிந் தனனே ஒருவன் அவற்கண்
    டிறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி         15
    இவைநுமக் குரிய வல்ல இழிந்த
    கொழுமீன் வல்சி என்றனம் இழுமென
    நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
    காணா மோவெனக் காலிற் சிதையா
    நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்         20
    என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
    ஒழிகோ யானென அழிதகக் கூறி
    யான்பெயர் கென்ன நோக்கித் தான்தன்
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
    நின்றோன் போலும் இன்றுமென் மகட்கே.         25
            --- போந்தைப் பசலையார்.

(உரை)

5 - 9 : கானல்..............ஆக

(இ-ள்.) யாம் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் கானல் சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும் வருந்திய வருத்தம் தீர சிறிது இருந்தனம்ஆக - அன்னையே இவள் இங்ஙனம் ஆயதற்குக் காரணம் யான் நண்கு அறிந்திலேன் ஆயினும் யானும் தலைவியும் ஒருநாள் எம்மை மாலைபோலத் தொடர்ந்து வரும் தோழிமார் குழுவினோடு சென்று கடலிலே ஒருங்கே நீராடியும் கடற்கரைச் சோலையிலே மணல் வீடு கட்டியும் சிறுசோறு சமைத்தும் விளையாடி வருந்தி அவ்வருத்தம் தீரும்படி சிறிது பொழுது இளைப்பாறி அச்சோலைக்கண் இருந்தேம் அப்பொழுதே; என்க.

(வி-ம்.) யாம் என்றது யானும் தலைவியும் என்றவாறு. கானல் - கடற்கரைச் சோலை. சிறு சோறு - மணற்சோறு. மணலைக் குவித்து வைத்து இது சோறு என்பர் ஆதலின் சோறு குவைஇயும் என்றான். சிறிது - சிறிது பொழுது.

9-14 எய்த வந்து.........ஒருவன்.

(இ-ள்) ஒருவன் எய்த வந்து தட மெல் பணைத்தோள் மட நல்லீரே - யாரோ ஓர் ஆடவன் எம்மிடம் அணுகி வந்து பெரிய மெல்லிய மூங்கில்போலும் தோளையும் மடப்பத்தையும் உடைய நல்லீரே என்று எம்மை இனிதாக விளித்து; எல்லும் எல்லின்று மிக அசைவும் உடையேன் - பகற் பொழுதும் ஒளி குன்றிற்று; யானும் மிகவும் இளைப்புடை யேனாய் இருக்கின்றேன் ஆதலின்; மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானுக் இக்கல் என் சிறுகுடித் தங்கின் (மற்று) எவனோ என மொழிந்தனனே - இந்த மெல்லிய இலைப்பரப்பிலே நீவிர் ஆக்கிய இச்சிறு சோற்றை விருந்தினனாக இருந்துண்டு யானும் இந்த ஆரவாரமுடைய சிறிய குடியில் உங்களோடு தங்கினால் உங்களுக்கு இடையூறு ஏதேனும் உண்டோ கூறுமின் என்று வினவினனாக; என்க.

(வி-ம்) தட - பெருமை; பணை - மூங்கில்; எல்லின்று - ஒளி இல்லையாயிற்று. அசைவு - இளைப்பு. மெல்லிலை என்றது அம்மகளிர் பறித்துவைத்திருந்த இலைகளை. விருந்து - விருந்தினன். கல்லென் - இசைக் குறிப்புமொழி. எவனோ - என்னையோ. இவ்வினா யான் அவ்வாறு தங்க விரும்புகின்றேன் என்பதுபட நின்றது. ஒருவன் என்றது, யாமறிந்தில்லாத புதிய ஆடவனொருவன் என்பதுபட நின்றது.

14-1:7 அவன் கண்டு........இழுமென

(இ-ள்) அவன் கண்டு இறைஞ்சிய முகத்து எம் புறம் சேர்பு பொருந்தி- யாங்கள் அப் புதியவனைக் கண்டமையால் குனிந்த முகத்தோடு எம்முள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து நின்று; இழுமென இவை இழிந்த கொழுமீன் வல்சீ - இழும் என்னும் மெல்லிய மொழியால் அதற்கு விடையாக இவ்வுணவு இழிந்ததான கொழுமீனால் ஆக்கிய உணவாதலின்; நுமக்கு உரிய அல்ல என்றனம் - உயர்குடித் தோன்றலாகிய நீவிர் உண்ணுதற்குரியன அல்ல என்று கூறினேமாக; என்க.

(வி-ம்) அவன் என்றது, அப்புதியவன் என்பதுபட நின்றது. நாணத்தால் இறைஞ்சிய என்க. முகத்தெம் எனத் தன்மைப் பன்மையாகக் கோடலுமாம். ஒருவர் புறத்தில் ஒருவர் சேர்ந்து மறைந்து நின்று என்க. அவன் தோற்றத்தால் உயர்குடித் தோன்றல் போன்றிருந்தான் ஆதலின் இவை நுமக்கு உரிய அல்ல என்னும் இதனால் தோழி அத்தலைவன் உயர்குடித் தோன்றல் என அறிவுறுத்திய நுணுக்கமு முணர்க. கொழுமீன் - ஒருவகை மீன். வல்சி - உணவு. இழுமென; ஒலிக் குறிப்பு.

18 - 22: நெடுங்கொடி.......கூறி

(இ-ள்.) நுடங்கும் நெடுங்கொடி தோன்றுவ நாவாய் காணாமோ என - தோழியீர் அதோ கடலின்கண் அசைகின்ற நீண்ட கொடிகளையுடையவாய் மரக்கலங்கள் தோன்றுகின்றன அவற்றைச் சென்று காண்போம் அல்லமோ என்று கூறிக் கொண்டு: காலின் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும் - தமது சிற்றில் முதலியவற்றைக் காலால் சிதைத்து விட்டு அவன் முன் நில்லாது சென்ர மகளிர் பலருள் வைத்து அவன்றானும்; என்னே குறித்த நோக்கமொடு நல் நுதால் யான் ஒழிகோ என அழிதகக் கூறி - என்னையே குறிக்கொண்டு நோக்கிய நோக்கத்தோடு நின்று அழகிய நுதலையுடையோய் யான் போகவோ என்று தனது நெஞ்சு அழியுமாறு விடை இரப்ப; என்க.

(வி-ம்.) இவை நுமக்குரிய அல்ல என்று கூறிய துணையானே, நாவாய் காண்டலைத் தலைக்கீடாகச் சொல்லி யாங்கள் அவ்விடத்தில் நிலாது காண்டலைத் தலைக்கீடாகச் சொல்லி யாங்கள் அவ்விடத்தில் நிலாது சென்றேமாக, எம்முள் என்னைத் தனித்து நோக்கி ‘யான் ஒழிகோ’ என்று நெஞ்சழிந்து கூறினன் என்றது, தலைவிக்கு யான் உயிர்த்தோழி என்பதுணர்ந்து கொண்டு என்னை மதியுடம்படுத்தற் பொருட்டு அங்ஙனம் கூறினன் என்றறிவித்தற் பொருட்டு. அழிதகக் கூறி என்றது அவன் தலைவியைக் காமுற்று நெஞ்சழிந்து கூறினன் என்றறிவித்தற் பொருட்டாம்.

23 - 25: யான்.........மகட்கே

(இ - ள்.) யான் பெயர்க என்ன - அதுகேட்ட யான் நீவிர் போவீராக என்று கூறவும்; தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் - அவ்விடத்தினின்றும் அகலாதவனாய், அவன் தனது நெடிய தேரினது கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு, தலைவியைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நெடும்பொழுது நின்றனன்; என்மகட்கு போலும் இன்று - அங்ஙனம் நின்றவனே என்மகளின் மெய்வேறு பாட்டிற்குக் காரணம் போலும் என்று, என்க.

(வி- ம்.) பெயர் கென்னவும் பெயரானாய் எனவும், தலைவியை நோக்கி எனவும், மகள் மெய் வேறுபாட்டிற்கு எனவும், காரணம் போலும் எனவும், ஏற்ற பெற்றி சில சொற்கள் வருவித்துக் கொள்க. இச்சொற்களை அறத்தொடு நிற்கும் தோழி அன்னைமுன் சொல்ல நாணி விடுத்தனள். நின்றோன் என்புழி, ஆகாரம் ஓகாரம் ஆயிற்றுச் செய்யுள் ஆதலின். போலும், ஒப்பில்போலி. என்று அன்னை அறியினும் அறிக என இயையும் இச்செய்யுள் விற்பூட்டுப் பொருள் கோள்.

1-5 அன்னை.........நினக்கே

(இ-ள்) அன்னை அறியினும் அறிக - இந்நிகழ்ச்சியை நற்றாய் அறிந்து கொள்ளினும் கொள்க; அம் என் அலர்வாய் சேரி கேட்பினுங் கேட்க - அன்றியும் அம் என்னும் ஒலியுடனே அலர்தூற்றும் வாயையுடைய இச்சேரியில் வாழ்கின்ற பொல்லாத மகளிர் கேட்டு அலர்தூற்றினும் தூற்றுக; நினக்கு - அன்னையே யான் உனக்கு; பிறிது ஒன்று இன்மை அறிய - தலைவியின் மெய்வேறுபாட்டிற்கு இதனை அல்லாமல் யான் அறிந்த காரணம் வேறொன்றும் இல்லாமையை நீ ஐயமின்றித் தெரிந்து கொள்ளும் பொருட்டு; கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கூறி - வளைந்த சுழியையுடைய நீரையுடைய இப்புகாஅர் இடத்து உறைகின்ற தெய்வத்தை நோக்கிச் சொல்லி; கடுஞ்சூள் தருகுவன் - பொய்க்க வொண்ணாத சூள் செய்து தருவேன் காண்! என்பதாம்.

(வி-ம்) அன்னை என்றது நற்றாயை. சேரி: ஆகுபெயர். கேட்பினுங் கேட்க என்றது கேட்டு அலர் தூற்றினும் தூற்றுக! என்பது பட நின்றது. ஒன்று - ஒரு காரணம். சூள் பொய்ப்பின் தெய்வம் ஒறுக்கும் ஆதலின் கடுஞ் சூள் என்றாள். புகார்த் தெய்வம் என்றது வருணனை.

இனி, தோழி அறத்தொடு நிற்குங்கால் எளித்தல் முதலிய ஏழு வகையால் நிற்றல் வேண்டும் என்பர் தொல்காப்பியர். அவற்றுள் இதன்கண் "மெல்லிலைப் பரப்பின் விருத்துண்டி யானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ" என்பது எளித்தல் எனவும் "பிறி தொன்றின்மை அறியக்கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே" என்பது தலைப்பாடு எனவும் நச்சினார்க்கினியர் ஓதுவர்.

இனி, நினக்கென எனவும் காவிற் சிதையா எனவும் இன்று மென் மகட்கே எனவும் பாடவேற்றுமையுண்டு.

இனி, இதனைக் கானல் தொடலை ஆயமொடு வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனம்; ஒருவன் , அசைவு மிக உடையேன், விருந் துண்டு இச்சிறுகுடித் தங்கின் எவனோ என மொழிந்தனன்; இழிந்த கொழுமீன் வல்சி என்றனம்; நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு ஒழிகோ யானென அழிதகக் கூறி யான் பெயர்க என்ன, கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும் என் மகட்கே; அன்னை அறியினும் அறிக; சேரி கேட்பினும் கேட்க; பிறிதொன்றின்மை அறியக் கூறிப் புகார்த் தெய்வம் நோக்கி நினக்குக் கடுஞ் சூள் தருகுவன் என்று இயைத்துக்கொள்க.
---------------------

செய்யுள் 111


திணை: பாலை
துறை: தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமளை யாற்றுவித்தது.

(து - ம்.) அஃதாவது - தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் சென்றானாக, தலைவி பெரிதும் வருந்துதல் கண்ட தோழி அவளுக்குத் தலைவன் கருத்துணர்த்தி ஆற்றுவித்தது.

(இ - ம்.) இதனை - "பெறற் கரும் பெரும் பொருள்" எனவரும் (தொல் - கற்பி -9) நூற்பாவின்கண் பிறவும் வகைபட வந்த கிளவி என்பதனால் அமைத்துக்கொள்க.

    உள்ளாங் குவத்தல் செல்லார் கறுத்தோர்
    எள்ளல் நெஞ்சத் தேஎச்சொல் நாணி
    வருவர் வாழி தோழி யரச
    யானை கொண்ட துகிற்கொடி போல
    அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி         5
    ஓடைக் குன்றத்துக் கொடையொடு துயல்வர
    மழையென மருண்ட மம்மர் பலவுடன்
    ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை
    தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
    அத்தக் கேழல் அட்ட நற்கோள்         10
    செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பக்
    குருதி யாரும் எருவைச் செஞ்செவி
    மண்டம ரழுவத் தெல்லிக் கொண்ட
    புந்தேர் விளக்கின் தோன்றும்
    விண்தோய் பிறங்கல் மலையிறந் தோரே.         15
            ---- பாலைபாடிய பெருங்கடுங்கோ.

(உரை)

3 - வாழி தோழி

(இ - ள்.) தோழி நீ நீடூழி வாழ்க! இவ்வாரு வருந்தாதே கொள், என்க.

3-15 அரச.......மலையிறந்தோரே

(இ-ள்) அரச யானை கொண்ட துகில் கொடிபோல - பட்டத்தியானை தனது கையிற் கொண்டுயர்த்திய வெண் பட்டால் செய்த கொடிச்சீலைபோல ; ஓடைக்குன்றத்து அலர் தலை ஞெமையத்து வலந்த சிலம்பி கோடையொடு துயல்வர - ஓடைக்குன்றம் என்னும் மலையின் உச்சியில் சுழலுகின்ற ஞெமை மரத்தினது உலர்ந்த கிளையில் கட்டப்பெற்ற சிலம்பியின் நூல் கோடைக்காற்றினால் அசையாநிற்ப; மழை என மருண்ட மம்மர் ஓய்களிறு பலவுடன் எடுத்த நோய்உடை நெடுங்கை தொகுசொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அதனை முகில் என்று மயங்கிய மயக்கத்தையுடைய நீருக்கு அலைந்து ஓய்ந்து போன களிற்றியானைகள் பலவும் ஒருங்குகூடி உயர்த்திய நீர் வேட்கையாகிய துன்பத்தையுடைய நெடிய கைகள் புரவலருடைய புகழைத் தொகுத்துப்பாடும் சொல்லையுடைய கூத்தரின் தூம்பு என்னும் இசைக்கருவிக்குழாம் போல ஒலித்தற் கிடனாகிய; அத்தக் கேழல் அட்ட நல்கோள் செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப- வழியின்கண் பதுங்கிக் கிடந்து பன்றியைக் கொன்றமையால் நல்ல இரையைக் கொண்ட செந்நாய்ச் சாதியில் ஆண்நாய் விரைந்து அதனை இழுத்துச் செல்ல; குருதி ஆரும் எருவைச் செஞ்செவி - அப்பன்றியின் குருதியைப் பருகுகின்ற கழுகுகளின் சிவந்த காதுகள்; மண்டு அமர் அழுவத்து - மறவர்கள் மண்டிச் சென்று போரிடுகின்ற போர்க்களத்தின்கண்; எல்லிக் கொண்ட புண்தேர் விளக்கின் தோன்றும் – இரவின்கண் மறவர்கள் தம்கையிற் கொண்ட விழுப்புண்பட்டு விழுந்த மற வருடைய புண்ணை ஆராய்தற்குரிய விளக்குகளைப் போலக் காணப்படுகின்ற; விண்தோய் பிறங்கல் மலை இறந்தோர்- வானத்தைத் தீண்டுகின்ற விளக்கத்தையுடைய மலையைக் கடந்து சென்ற நம்பெருமான் என்க.

(வி-ம்) அலந்தலை என்னும் பாடத்திற்குக் காற்றால் சுழலுகின்ற என்க; ஞெமை- ஒருவகை மரம். சிலம்பியின் வலை கோடையொடு சுழலுகின்ற ஞெமை மரத்தின்கண் துயல்வர என்க. கோடை- மேல் காற்று. துயல் வருதல் அசைதல். ஓடைக்குன்றம்: பெயர்; மழை- முகில். கோடியர்- கூத்தர். தூம்பு - ஓரிசைக் கருவி. கேழல் - பன்றி. கம்மென- விரைய . எருவை- கழுகு. கழுகின் செவிக்கு விளக்கு உவமை. பிறங்கல்- விளங்குகின்ற.

1-3 உள்ளாங்கு.........வருவர்.

(இ-ள்) கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி - பிரிந்து போயது நல்குரவினால் அன்று தம்பகைவர் தம்மை இகழ்கின்ற நெஞ்சத்தோடு தம்மைக் குறித்துக் கூறுகின்ற ஆள்வினை இல்லான் என்னும் அம்புபோன்ற பழிச் சொல்லிற்கு நாணமடைந்து; உள்ளாங்கு உவத்தல் செல்லார். தம் தாயத்தார் வைத்துப் போன தமக்குள்ள பெரும் பொருள் அளவிலே மகிழ்ந்து அமையமாட்டாராய்ப் பொருள் ஈட்டச் சென்றனர். ஆதலால் தாம் மேற்கொண்ட வினை முற்றிய பொழுதே; வருவர் - நின்னை நினைந்து மீண்டு வருவர். ஆதலால் அவர் வருமளவும் நீ ஆற்றி இருப்பாயாக என்பதாம்.

(வி -ம்) ஈண்டு, " இனிப் பொருட்பிணி என்பது பொருளிலனாய்ப் பிரியும் என்பதன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொரு ளெல்லாம் கிடந்துமன், அது துய்ப்பது ஆண்மைத்தன்மை யன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியும் என்பது" எனவரும் இறையனார்களவியலுரை கருதற்பாலதாம். உள்ளாங்கு உவத்தல் - தமக்கு உள்ள பொருளே போதுமென்று அமைதியுடன் இருந்து வாழ்தல். " போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனவரும் பழமொழியும் ஈண்டு நினையர்பாலது. கறுத்தோர் - பகைவர். ஏஎச்சொல் - அம்பு போலப் பாய்ந்து துன் புறுத்துஞ் சொல். அஃதாவது ஆள்வினை அறியான் என்னும் சொல்.

இனி "இல்லாரை எல்லாரும் எள்ளுவர்" என்பவாகலின் கறுத்தோர் எள்ளுதல் ஒருதலை என்று கருதியுஞ் "செறுநர் -செருக்கறுக்கும் எஃகு அதனின் கூரியதில்" (குறள் எருஉ, எருகூ.) என்பது பற்றியுமே பொறு ளீட்டச் சென்றனர், ஆதலின் வினைமுற்றியவுடன் விரைந்து வருவர். அவர் வருந்துணையும் ஆற்றியிருத்தலே நின்கடமை என வற்புறுத்தினாள் என்க .

இனி, இதனை - தோழி மலை இறந்தோர் உள்ளாங்குவத்தல் செல்லார்கறுத்தோர் ஏஎச் சொல்லுக்கு நாணிப் பிரிந்தனர் ஆதலின் வருவர் ஆற்றுக என இயைத்துக் கொள்க.
---------

செய்யுள் 112


திணை: குறிஞ்சி.
துறை: இரவுக்குறி வந்த தலைமகனை யெதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லி வரைவு கடாயது.

(து-ம்) அஃதாவது - இன்னல் நிறைந்த இருளினூடே இரவுக் குறிக்கம் நாள்தோறும் வந்து மீள்கின்ற தலைவன் வருகைக்கு அஞ்சியும், அவன் வாராதொழியின் தலைவியின் பிரிவாற்றாமைக்கு அஞ்சியும் தோழி, ஒரு நாள் இரவுக்குறி வந்த தலைவனைத் தமியளாய் எதிர்ப்பட்டு நின்று வரைவு முடுக்கியது என்றவாறு.

(இ - ம்) இதற்கு - "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல் - களவி -23) நூற்பாவின்கண் ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் எனவரும் விதி கொள்க.

    கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
    சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
    மண்புனை நெடுங்கோ டுடைய வாங்கி
    இரைநசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
    ஈன்றணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி        5
    ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும்
    பனியிருஞ் சோலை யெமியம் என்னாய்
    தீங்குசெய் தனையே யீங்குவந் தோயே
    நாளிடைப் படினென் றோழி வாழாள்
    தோளிடை முயக்கம் நீயும் வெய்யை         10
    கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
    பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
    வரையின் எவனோ வான்தோய் வெற்ப
    கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின்
    மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார்        15
    தொன்றியல் மரபின் மன்றல் அயரப்
    பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி
    நொதுமல் விருந்தினம் போலவிவள்
    புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.
            ---- நெய்தற் சாய்த்துய்த்த அவூர்கிழார்.

(உரை)

13. வான் தோய் வெற்ப

(இ - ள்.) வானத்தைத் தீண்டுகின்ற மலைநாட்டின் பெருமானே என்க.

(வி-ம்.) உயர்குடித் தோன்றலாகிய உனக்கு இவ்வொழுக்கம் இழுக்குத் தரும் என்பது கருப்பொருட் புறத்தே தோன்றிற்று – இஃது இறைச்சி.

1-8: கூனல்...........வந்தோயே

(இ-ள்) கூனல் குறுநடை எண்கின் தொழுதி சிதலை செய்த மண்புனை நெடுகோடு உடைய வாங்கி - கூனிய முதுகினையும் குறிய நடையினையும் உடைய கரடிக் கூட்டம் கறையான் இயற்றிய செங்குத்தாய் நிற்கும் நிலையினையுடைய புற்றினது மண்ணாற் புனைந்த நெடிய குவடுகள் உடைந்து போகும்படி அகழ்ந்தெடுத்து; இரை நசைஇப் பரிக்கும் அரைநாள் கங்குல் - தமக்கிரையான புற்றாஞ் சோற்றினை விரும்பித் தின்னற்குச் செல்லுதற்குரிய இந்த நள்ளிரவின் இருளினூடே; ஈன்று அணி வயவுப் பிணப் பசித்து என மறப்புலி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் - குட்டி ஈன்ற அணிமைக் காலம் காரண மாக வயா வருத்தத்தோடிருக்கின்ற பெண்புலி பசியுடன் இருப்பதறிந்து தறுகண்மையையுடைய ஆண்புலியானது அதற்குணவாக விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய களிற்றி யானையைக் கொன்று வீழ்த்தி முழங்கா நின்ற; பனி இருஞ்சோலை எமியம் என்னாய் ஈங்கு வந்தோய் - குளிர்ந்த பெரிய சோலையினூடே புகுந்து யாம் தமியம் என்று எண்ணாமல் இங்கு வந்தனை; தீங்கு செய்தனை - இங்ஙனம் வந்த நீ எமக்கு அளிசெய்யவே வந்தாயேனும் அது செய்திலை! அதற்குமாறாக எமக்குத் துன்பமே செய்தனை காண், என்க.

(வி-ம்.) எண்கு - கரடி. தொழுதி - கூட்டம். நசைஇ - தின்னற்குப் பரிக்கும் என ஒரு சொற்பெய்க. ஈன்று அணிமை காரணமாக வயாவருத்தத்தோடிருக்கும் பிணா என்க. பிணா - பெண்புலி. அஃதீற்றுயிர் குறுகி, பிண என நின்றது. புலி களிறட்டுக் குழுமும் சோலை என்றது ஆற்றது தீமை அறிவுறு கலக்கம். வந்தோய் - ஆ ஓவாயிற்று. வந்தது அளி செய்தற்கேயாயினும் அது செய்திலை துன்பமே செய்தனை என்றவாறு. துன்பம் வரும் வழியில் நேரும் தீங்கு கருதும் அச்சம். எனவே வருதலினும் வாராமையே நன்றென இரவுக்குறி மறுத்தாளுமாயிற்று.

9-13: நாளிடை...........எவனோ

(இ-ள்.) நாள் இடைப்படின் என்தோழி வாழாள் - இனி நீ வாராமல் ஒரோ ஒரு நாள் இடைப்பட்டாலும் எம் பெருமாட்டி உயிர் வாழாள் போலுகின்றாள்; தோள் இடை முயக்கம் நீயும் வெய்யை - மேலும் அவள் தோள் மேல் கிடந்து தழுவும் தழுவுதலை நீதானும் பெரிதும் விரும்புகின்றனை அல்லையோ; சான்றோர் கழியக் காதலர் ஆயினும் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் - சான்றாண்மையுடையோர் மாபெருங் காதலர் ஆகியவிடத்தும் பழியொடு வருவதாயின் அக்காதலால் வரும் இன்பத்தை விரும்புவதிலர், இங்ஙனமிருத்தலின்; வரையின் எவனோ - நீ எம்பெருமாட்டியயை எஞ்சுற்றத்தாரிடத்து மகட் பேசித் திருமணஞ் செய்துகொண்டால் உனக்கு வரும் துன்பம் என்னையோ? என்க.

(வி-ம்.) இரவில் வருதல் எமக்குத் துன்பந்தரும் ஆதலால் வாராதே கொள்! என்றவள், மீண்டும் நீ ஒரு நாள் ஒழியினும் எம் பெருமாட்டி உயிர் வாழாள் எனத் தலைவியின் ஆற்றாமை கூறினள். நீயும் அத்தகையை என்பான் நீயும் வெய்யை என்றான். இக்கள வொழுக்கம் பழி பிறத்தற்கு ஏதுவாம். இரவிடை கொடுநெறிக்கண் வருகின்ற உனக்கு ஏதேனும் ஏதம் நிகழுமாயின் தலைவியும் உயிர் நீப்பள்; அவ்வழிப் பிறக்கும் பழி சாலப் பெரிதாம் ஆதலின் இவ் வொழுக்கத்தைத் தவிர்க என்பாள், அதனை உலகின் மேலிட்டுச் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார், என்றாள். அன்றியும் வரைந்து கோடலும் உனக்கு எளியதும் கடமையும் ஆகும் என்பாள் வரையின் எவனோ? எனவும் வினாயினாள்.

14-19: கணக்கலை............யாமே.

(இ-ள்.) கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் மணப்பரும் காமம் புணர்ந்தமை அறியார் தொன்று இயல் மரபின் மன்றல் அயர - கூட்டமான கலைமான்கள் தாழ ஒலித்தற்கிடனான மிளகுக் கொடி படர்ந்த இம்மலைச் சாரலில் நீங்கள் கூடுதற்கரிய இயற்கைப் புணர்ச்சியால் காமக்கூட்டம் கூடிய செய்தியை எம் சுற்றத்தார் இதுகாறும் அறிந்திலர் ஆதலால் நீ வரைவொடு வரின் அவர் தாம் தொன்றுதொட்டு நடந்து வருகின்ற முறைமைப்படி மகட் கொடை நேர்ந்து மணவிழாவும் செய்யா நிற்பர்; யாம் நொதுமல் விருந்தினம் போல - அப்பொழுது யாமும் அயலாராய் அவ்விழாவிற்கு வந்துள்ள புதியேம் போல; பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி - நீதானும் எம் பெருமாட்டியைத் திருமணப் பந்தலிலே வாழ்க்கைத் துணைவியாகக் கைப்பற்றிக் கொள்ளுகின்ற பொழுது செய்கின்ற சடங்குகளையும் நுங்கள் திருமணக் கோலங்களையும் எம் கண்கள் பெறுதற்குரிய பயனைக் கொள்ளும்படி மகிழ்ந்து நோக்கி மேலும்; இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் - எம்பெருமாட்டி தானும் நின்னைப் பண்டறியாத புதியவள்போல நாணி நின் பக்கலிலே ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் கண்டு எம்முள்ளே நகுவேம்! அல்லமோ; என்பதாம்.

(வி-ம்.) கணம் - கூட்டம். கறி - மிளகுக்கொடி. உயர்குடிப் பிறப் புடைய ஒருவனும் ஒருத்தியும் தமியராய்த் தம்முள் தலைப்பெய்து கூடுகின்ற இயற்கைப் புணர்ச்சி ஊழாற் கூட்டப்படுதலன்றி நிகழ்தல் மிகவும் அரிதாகலின் அதனை மணப்பரும் காமம் புணர்ந்தமை என்றாள். தொன்றியல் மரபு என்றது தொன்றுதொட்டு "கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது" ஆகிய முறைமையை என்க. பெண்கோள் ஒழுக்கம் - வதுவைச் சடங்கு செய்து பெண்ணைக் கைப்பிடித்தல். நொதுமல் விருந்தினம் - அயலாராய்த் திருமணங் காணவந்த புதியேம். காண்குவம் என்றது கண்டு மகிழ்ந்து உள்ளுள்ளே நகுவேம் என்பது படநின்றது.

இனி, இதன்கண் கரடிகள் கறையான் பெரிதும் முயன்று செய்த புற்றை ஒரு பொழுதை உணவின் பொருட்டு உடைத்து அழித்தல் போல நீ இக்களவின்பத்தின் பொருட்டு எளியேமாகிய தலைவியும் யானும் அரிதின் முயன்று வளர்த்துள்ள எமது காதலுள்ளத்தை நினது இவ்வொழுக்கத்தானும் வரையாமையானும் சிதைத் தொழிகின்றாய்" என உள்ளுறை கொள்க.

இனி, இதனை - அரை நாட் கங்குல் புலி களிறு அட்டுக் குழுமும் சோலையில் ஈங்கு வந்தோய்! தீங்கு செய்தனை; நாள் இடைப்படின் என் தோழி வாழாள்; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; வரையின் எவன்? மன்றல் அயர அப்பெண் கோளொழுக்கத்தை நோக்கி யாம் நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கம் காண்குவம் என இயைத்துக் கொள்க.

(பா - வே.) 1. கானலெண்கின். கூருகிரெண்கின். 10. முயங்கமதி. 15. மணப் பெருங்.
-----------

செய்யுள் 113


திணை : பாலை
துறை : தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது - தலைவன் தலைவியைப்பிரிந்து ஆள்வினை மருங்கின் சென்றானாக, அப்பிரிவாற்றாது தலைவி வருந்தி அழுதாள்; அதுகண்ட தோழி, "நீ ஆற்றி இருத்தலே முறை; இங்ஙனம் அழுவதோ?" என்று தகைந்தாளாக; அது கேட்ட தலைவி, "ஏடி! காதலரைப் பிரிந்து ஆற்றுவாராற்றுக, எம்மால் அஃதியல்வதன்று. ஆற்றாமையால் எம்முயிர் போம்! அதன் பின்னர் யாம் அழவும் மாட்டேம்!" என்று கூறி வன்புறை எதிரழித்தது என்றவாறு.

(இ - ம்.) இதனை - அவனறிவு ஆற்ற அறியுமாதலின் எனவரும் (தொல் - கற்பி - 6) நூற்பாவின்கண் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பதனால் அமைத்துக் கொள்க.

    நன்றல் காலையும் நட்பிற் கோடார்
    சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியில்
    புன்றலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
    அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்
    காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர் 5
    இளங்கள் கமழும் நெய்தலம் செறுவின்
    வளங்கெழு நன்னா டன்னவென் தோள்மனந்
    தழுங்கல் மூதூர் அலரெடுத் தரற்ற
    நல்காது துறந்த காதலர் என்றும்
    கல்பொரூஉ மெலியாப் பாடினோன் அடியன் 10
    அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன்
    இகந்தன வாயினும் இடம்பார்த்துப் பகைவர்
    ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
    குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்
    கணையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் 15
    விழவயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
    எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்
    நெறிசெல் வம்பலர் கொன்ற தெவ்வர்
    எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
    அறுதுறை யயிர்மணல் படுகரைப் போகிச்         20
    சேயர் என்றலில் சிறுமை யுற்றவென்
    கையறு நெஞ்சத் தெவ்வம் நீங்க
    அழாஅம் உறைதலும் உரியம் பராரை
    அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
    புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு         25
    மெய்யிவ ணொழியப் போகிஅவர்
    செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே.
            ---- கல்லாடனார்.

(உரை)

1 - 9: நன்றல்...........காதலர்

(இ - ள்.) நன்று அல் காலையும் நட்பில் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் புல்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன் - நன்மையில்லாத துன்பம் வந்தகாலத்தும் தமது நட்புப்பண்பில் மாறுபடாமல் துன்பமுற்ற அந் நண்பரிடத்தே சென்று அவர் வழிப்பட்டு அவர்க்கு நன்மையே செய்யும் பிறழாத தமது கோட்பாடு காரணமாகப் புல்லிய தலையையுடைய இளைய பிடி யானைகளைத் தன்னைப் பாடி வருகின்ற பாணர் தலைவனுக்கு; அமர்வீசு வண்மகிழ் அஃதைப்போற்றி காப்புக் கை நிறுத்த பல் வேல் கோசர் - போர்க்களத்திலே பரிசிலாக வழங்குகின்ற தனது வள்ளன்மையாலே இன்புறுகின்ற அஃதை என்பவனுக்குத் துன்பம் வந்துற்ற பொழுது அதனை ஒழித்துக் காப்பாற்றிப் பின்னரும் துன்பம் வராதபடி அவனை அரணிடத்தே வைத்து அவன் உயிரை நிலைநிறுத்தி வைத்த பலவாகிய வேற்படையையுடைய கோசர் புரக்கின்ற; இளங்கள் கமழும் நெய்தலம் செருவின் வளம் கெழு நல் நாடு அன்ன என்தோள் மணந்து - புதிய கள் மணங் கமழுகின்ற நெய்தலம் செரு என்னும் தலைநகரத்தையுடைய வளம் பொருந் திய அழகிய நாட்டையொத்த என்னுடைய தோளை மணந்து; அழுங்கள் மூதூர் அலர் எடுத்து அரற்ற நல்காது துறந்த காதலர் - பின்னர் ஆரவார முடைய இப்பழைய ஊரில் வாழ்கின்ற பெண்டிர் எனது பழியை எடுத்துக் கொடுபோய் நாற்றிசையினும் தூற்றும்படி நமக்கு அருள் செய்யாது கைவிட்டுப்போன நம்பெருமான்; என்க.

(வி - ம்) நன்றல் காலை - அல்லற் காலம். சூழ்ச்சி - ஆராய்ந்து துணிந்த கொள்கை. அகவுநர் - பாணர். அமர் வீசுவண்மை - போர்க்களத்தில் வழங்கும் வண்மை. அஃதை - ஒரு மன்னன்; இவனுடன் கேண்மை கொண்டிருந்த கோசர் என்னும் வீரர் அம்மன்னனுக்குப் பகைவரால் துன்பம் வந்துற்றபொழுது அத்துன்பத்தைத் தவிர்த்துத் தமது அரணிடத்தே வைத்துக் காப்பாற்றினார் என்பது இதனாற் பெற்றாம். நெய்தலஞ் செரு - ஒரு ஊர். இது கோசருடையது. தலைவி இவ்வூரினைத் தன் தோளுக் குவமையாக எடுத்தோதுகின்றாள் என்க. இக்கோசரைப் பற்றி இந்நூலில் 15, 90, 196, 205, 216, 251, 262 முதலிய பல செய்யுள்களினும் கூறப்படுகின்றது. இவர் நாடு துளுநாடு எனவும் காணப்படுகின்றது. அழுங்கள் - ஆரவாரம்.

9 - 17: என்றும் ......... உம்பர்

(இ - ள்.) என்றும் கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன் - எஞ்ஞான்றும் கல்லைப் பொருது மெலிவுறாத ஓசை இனிய வலிய அடியினை யுடையவனும்; அல்கு வன் சுரை பெய்த வல்சியன் - மிக்க வலிய மூங்கிற் குழாயிற் பெய்த உண வினையுடையவனும்; இகந்தனவாயினும் - தன்நாட்டெல்லையைக் கடந்து சேய்மைக் கண்ண வாயினும்; இடம் பார்த்து - கவரும் செவ்விபார்த்து; பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் - பகைவர் ஆவினைப் பாதுகாத்து உறையும் உணவுமிக்க அரண்களிற் சென்று; குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் - திரண்ட இமிலையுடைய விடைகளுடன் கூடிய பகைப் புலத்து ஆக்களைக் கவர்ந்து செலுத்தும்; கனைஇரும் சுருணை கனி காழ் நெடுவேல் - செறிந்த கரிய பூணையும் நெய்கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேலினையும்; விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி - விழாச் செய்தாலொத்த கொழுமையாகிய பல உணவையுமுடைய; எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர் - பகைவர்க்குப் புறங்கொடாத பாணன் என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட; என்க.

(வி - ம்.) கல் - உலக்கல், பாடு - ஓசை, சுரை - மூங்கிற்குழாய், இசந்தன - சேய்மைக்கண் உள்ளன. இடம் - செவ்வி . கூழ் - உணவு. சுருணை - பூண். காழ் - தண்டு. திற்றி - உணவு.

18 - 23: நெறிசெல்........... உரியம்

(இ - ள்.) நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் எறி படை கழீஇய சேய் - வழிப்போக்கராகிய புதியவரைக் கொன்ற ஆறலைகள்வர் அவரைக்கொன்ற படைக்கலங்களைக் கழுவியதனால் சிவந்து; அரிசில் நீர் அறு துறை அயிர் மணல் படுகரை போகி சேயர் என்றலின் - அரித் தோடுகின்ற சிலவாகிய நீர் தானும் அற்றுப் போன இறங்குதுறைக் கண்ணேயுள்ள நுண்ணிய மணலையுடைய பெரிய கரையையும் கடந்து அப்பாற் சென்று மிகத் தொலைவின்கண் உள்ளார் என்று அறிந்தோர் கூறுதலாலே; சிறுமை உற்ற என் கை அறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் - அது கேட்டுச் சிறுமையடைந்து செயலொழிந்து கிடக்கும் எமது நெஞ்சின்கண் உள்ள துன்பம் முழுவதும் ஒழியும்படி நீ வற்புறுத்திக் கூறுமாறு போலே, யாம் அழாமல் வாளாது உறைதற்கும் உரியேம், அங்ஙனம் உறைதற்கும் உரியேமாவேம்; அங்ஙனமிருத்தற்கு என்க.

(வி - ம்) பாணன் - ஒரு மன்னன். வம்பலர் - புதியவர். கழீஇய - கழுவிய. அரிச்சின்னீர் - அரித்துச் சில கால்களாக ஓடும் நீர். நீரும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. காதலர் பாணன் நாட்டு உம்பர் மணற் படுகரையையும் கடந்து போகிச் சேயர் ஆயினர் என இயையும். சிறுமை - துன்பம். அழாஅம் - அழாமலிருப்பேம்.

தோழி காதலர் வருந்துணையும் நீ அழாமல் உறைதற்குரியள் என்றலின் அதற்குடன்பட்டு யாம் அங்ஙனம் உறைவதற்கும் உரியமே என்றவாறு.

23-27: பராரை ................உயிரே

(இ - ள்.) பராரை அலங்கல் அம்சினை குடம்பை புல் எனப் புலம் பெயர் மருங்கின் புள் எழுந்தாங்கு - பருத்த அடிமரத்திலே கவைத்துள்ள அழகிய கிளைகளின் இடையே அமைக்கப்பட்ட தனது கூடு பொலிவின்றிப் பாழாய்க் கிடக்கும்படி தன் மனஞ் சென்ற இடத்திற்கு அதன்கண் உறைந்த பறவை அதனைத் துறந்து பறந்து போனாற் போல; மெய் இவண் ஒழிய என் உயிர் போகி அவர் வினைசெய் மருங்கின் செலீஇயர் - எமது உடம்பு இவ் விடத்தே தனித்துக் கிடப்ப எம் உயிரானது அதனைத் துறந்து எமது காதலர் வினைசெய்யும் இடத்திற்குப் போவதாக; அங்ஙனம் போன பின்னர் யாம் ஈண்டு அழாது உறைதலும் உரியேங்காண்; என்பதாம்.

(வி-ம்) யாம்- எம்முயிர். போனபின்னர் நீ வற்புறுத்துவது போல ஒருதலையாக அழாதுறைவேம் என்றவாறு. பராரை - பருஅரை; பராரை எனப் புணர்ந்தது. அரை - அடிமரம். குடம்பை - கூடு. புலம் - மனம். ஈண்டு , "சேக்கை மரன் ஒழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க் கொழிய நீத்து" எனவரும் நாலடியும் (30) "குடம்பை தனித் தொழியப் புட்பறந் தற்றே - யுடம்போ டுயிரிடை நட்பு" (குறள் - 338.) எனவரும் திருக்குறளும் ஒப்புநோக்குக.

இனி, இதனை - நாடன்ன என் தோள் மணந்து அலர் எடுத்தரற்ற நல்காது துறந்த காதலர் சேயர் என்றலின் என் எவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் எப்பொழுதெனில் என் உயிர் மெய் இவண் ஒழியப் போகி அவர் வினைசெய் மருங்கின் செலீஇயர் அப்பொழுது; என இயைத்துக் கொள்க.

(பா-வே.) 2 - திருவில் சூழ்ச்சி. 3 -4 மகன், மாவிசு. பொற்றி - 10 . 16 -றித்தி.
-------------

செய்யுள் 114


திணை: முல்லை.
துறை: வினை முற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது - ஆள்வினை மருங்கிற் றலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தான் மேற்கொண்ட வினை முற்றியவுடன் தலைவியைக்காண விதுப்புறுகின்ற நெஞ்சத்தை யுடையவனாய்த் தேர்ப்பாகனை நோக்கித் தேரினை விரைந்து செலுத்தும்படி கூறியது என்றவாறு.

(இ-ம்) இதற்கு - "கரணத்தின் அமைந்து முடிந்த காலை" எனவரும் (தொல். கற்பி. 5) நூற்பாவின்கண் "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" எனவரும் விதி கொள்க.

    கேளாய் எல்ல தோழி வேலன்
    வெறியயர் களத்துச் சிறுபல தாஅய
    விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்
    உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு
    அரவுநுங்கு மதியின் ஐயென மறையும்        5
    சிறுபுன் மாலையும் உள்ளார் அவரென
    நப்புலந் துறையும் எவ்வம் நீங்க
    நூலறி வலவ கடவுமதி உவக்காண்
    நெடுங்கொடி நுடங்கும் வாந்தோய் புரிசை
    யாமங் கொள்பவர் நாட்டிய நளிசுடர்         10
    வானக மீனின் விளங்கித் தோன்றும்
    அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
    திருநகர் அடங்கிய மாசில் கற்பின்
    அரிமதர் மழைக்கண் அமைபுரை பணைத்தோள்
    அணங்குசால் அரிவையைக் காண்குவம்         15
    பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே.
            -----............................- ..........
            (குறிப்பு:- இதன் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

(உரை)

8: நூலறி வலவ

(இ-ள்.) பாகுநூல் கற்றுத் துறைபோகிய தேர்ப்பாகனே! என்க.

(வி-ம்.) நூல் - பாகுநூல்.

1 - 7: கேளாய்..........நீங்க

(இ- ள்.) எல்ல தோழி கேளாய் - (இப்பொழுது எங் காதலி பிரிவாற்றாமையாலே தன் தோழியை நோக்கி); ஏடி தோழி ஈதொன்று கேட்பாயாக!; வேலன் வெறி அயர் களத்துத்தாய பலவிரவு வீ உறைத்த ஈர் நறும்புறவின் - வேன்மகன் முருகனுக்கு வெறியாடுகின்ற களத்தின்கண்ணே பரவிய பல்வேறுவகை மலர்களும் கலந்து கிடக்குமாறு போலே கார்ப் பருவத்தாலே வளம்பெற்ற மரமும் செடியும் கொடியுமாகிய பலவற்றினின்றும் உதிர்ந்த பல்வேறு மலர்களும் பரந்து கிடக்கின்ற குளிர்ந்த நறுமணமுடைய இம்முல்லைப் பரப்பிலே; உரவு கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு அரவு நுங்குமதியின் ஐ என மறையும் - வலிய தனது ஒளி மழுங்கப்பெற்ற மறைமலையினை (அத்தகிரி) எய்துகின்ற ஞாயிற்று மண்டிலமானது பாம்பினாலே விழுங்கப்படுகின்ற திங்கள் மண்டிலம் போன்று காணப்பட்டு மெல்லென மறையாநின்ற; சிறு புல் மாலையும் – சிறுமையுடைய புல்லிய இம்மாலைப் பொழுதிலேயும்; அவர் உள்ளார் என - நம்மைப் பிரிந்து சென்ற வன்கண்ணர் நம்நிலை என்னாம் என நினைந்தும் பாரார் போலும் என்று சொல்லி; நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க - நம்மை வெறுத்துறைதற்குக் காரணமான அவளது தனிமைத் துன்பம் நீங்கும்படி; என்க.

(வி-ம்.) தலைவன் வினைமுற்றுந்துணையும் காரியத்திலே கண்ணாய்த் தலைவியை நினையானாய் வினைமுற்றிய பின்னர்த் தலைவி இங்ஙனமிருப்பாள் எனத் தன் மனக்கண் முன்னர் அவளைக் கண்டு கூறியபடியாம்.

கார்ப்பருவத்து மாலைப்பொழுது தனித் துறைவார்க்குப் பெரிதும் துன்பஞ் செய்யுமியல்பிற்றாதலின் அந்தப் பொழுதினையே நினைக்கின்றனன்.

இது கார்ப்பருவம் என்பது முல்லைநிலத்து மரம் முதலியன பெரிதும் மலர்ந்து யாண்டும் மலர்களை உதிர்ப்பதனால் அறியப்படும். முல்லைப் பரப்பின்கண் யாண்டும் பல்வேறு மலர்கள் உதிர்ந்து கிடப்பதற்கு மலர் சிதறப்பட்ட வெறியாடுங் களம் உவமை. உரவுக்கதிர் என்றான் - வெயிற் கதிர் ஆகலின். கதிர் மழுங்கிய ஞாயிற்று மண்டிலத் திற்குத் திங்கள் மண்டிலம் உவமை. அது மெல்ல மெல்ல மலையில் மறைவதற்கு அரவு விழுங்குதல் உவமை. ஐயென - மெல்லென.
கண்டோர் வியக்கும்படி எனினுமாம்.

8-15: நெடுங்கொடி........................தேரே

(இ-ள்) நெடுங் கொடி நுடங்கும் வான்தோய் புரிசை யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் - நெடிய கொடித் துகில்கள் அசையா நின்ற வானத்தைத் தீண்ட உயர்ந்த மதிலிடத்தே யாமந்தோறும் மாறி மாறி நின்று விழிப்புடன் காவல் செய்யுந் தொழிலை மேற்கொண்ட மறவர் அம் மதிலுச்சியிலே ஏற்றி வைத்த ஒளிநெருங்கிய விளக்குகள்; வானக மீனின் விளங்கித் தோன்றும் - விண்ணிடத்தே விளக்கமுறுகின்ற மீன்களைப் போன்று விளங்கித் தோன்றுதற்கிடனான; அருங் கடிக் காப்பின் அஞ்சுவரும் மூதூர் - கிட்டுதற்கரிய சிறப்பான காவலமைந்த பகைவர்க்கு அச்சம் வருதற்குக் காரணமான பழைய நமதூரின்கண்ணே; திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் - அழகிய நந்தமில்லத்தினூடே நாம் பணித்தபடியே அடங்கியிருக்கின்ற குற்றமற்ற கற்பினையும்; அரி மதர் மழைக்கண் அமை புரை பணைத்தோள் அணங்குசால் அரிவையைக் காண்குவம் - செவ்வரியோடிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும் மூங்கில்போன்ற தோளையும் பிரிவாற்றாமையாகிய துன்பத்தையும் உடைய எங்காதலியை இற்றை மாலைப்பொழுதிலேயே யாம் சென்று காண்பேம்; என்க.

(வி-ம்.) யாமந்தோறும் காவல் கொள்பவர் என்க. சுடர் - விளக்கு. மதிலின்மேலிட்ட விளக்கு விண்மீன் போன்று விளங்கித் தோன்றும் என்க. திருகர் - அழகிய வீடு. அவள் கண் முதலிய உறுப்புக்களை அகக்கண் முன்னர்க் கண்டு அவற்றை விதந்து கூறியவாறு.

8: உவக்காண்................உங்கே

(வி-ம்.) உவக்காண், இவக்காண் என்பன ஒட்டிநின்ற இடைச்சொல் என்பர் பரிமேலழகர் (குறள்-1185) உங்கே எனவே பொருள் கூறினர். ஈண்டுத் தலைவன் தேர் செல்லவேண்டிய வழியைச் சுட்டிக் கூறியபடியாம்.

16: பொலம்................தேரே

(இ-ள்.) பொலம் படைக் கலிமா பூண்ட - பொன்னாலியன்ற பல்லணம் பூண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட; தேர் - நமது தேரினை (அ) கடவுமதி - இப்பொழுதே விரைந்து
செலுத்துவாயாக! என்பதாம்.

(வி-ம்.) பொலம்படை - பொன்னாலியன்றதொரு குதிரை யணி கலன். மதி: முன்னிலையசை.

இனி, இதனை, வலவ எங்காதலி என் தோழியை நோக்கித் தோழி நம்பெருமான் சிறுபுன்மாலையும் உள்ளார் என நப்புலந்துறையும் எவ்வம் நீங்க மூதூரில் நகர் அடங்கிய அவ்வரிவையைக் காண்குவம் தேர் கடவு என இயைத்துக் கொள்க.

(பா. வே.) 2. களந்தோ றுறுபல. 11. வானமீனின் (வருகின்ற).
---------

செய்யுள் 115


திணை: பாலை.
துறை: பிரிவிடை வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

துறை: அஃதாவது - தலைவியைப் பிரி்ந்து பொருளீட்டச் சென்ற தலைவன் குறித்த பருவத்து வாராமற் கால நீட்டித்தவழிப் பிரிவாற்றாது பெரிதும் வருந்துந் தலைவியைத் தோழி அவர் வருமளவும் ஆற்றியிருத்தலே நின்கடனாம் என வற்புறுத்திய பொழுது தலைவி அவட்கு மாறு கூறி வருந்துவாள் சொல்லியது என்றவாறு.

(இ-ம்.) இதனை, "அவனறிவாற்ற அறியுமாகலின்" எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி. 6) 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்' என்பதனாலமைத்திடுக.

    அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
    பழியிலர் ஆயினும் பலர்புறங் கூறும்
    அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொற்
    சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
    நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்         5
    ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்
    நோயில ராகநம் காதலர் வாய்வாள்
    எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர்
    கைதொழு மரபின்முன் பரித்திடூஉப் பழிச்சிய
    வள்ளுயிர் வணர்மருப் பன்ன ஒள்ளிணர்ச்         10
    சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
    அறைமிசைத் தாஅம் அத்தம் நீளிடைப்
    பிறைமருள் வான்கோட் டண்ணல் யானைச்
    சினமிகு முன்பின் 1வாமான் அஞ்சி
    இனங்கொண் டொளிக்கும் அஞ்சுவரு கவலை        15
    நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
    நந்நீத் துறையும் பொருட்பிணிக்
    கூடா மையின் நீடி யோரே.
            ---- மாமூலனார்.

(உரை)

1-6: அழியா...........தொலைக

(இ-ள்.) அழியா விழவின் அஞ்சுவரும் மூதூர் பழி இலர் ஆயினும் பலர் புறம் கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெம் சொல் சேரிப் பெண்டிர் - ஒழிவில்லாத திருவிழாவினையுடைய நல்லோர் வாழ்தற்கு அச்சம் உண்டாதற் கிடனானதுமாகிய‌ இந்தப் பழைய ஊரிடத்தே குற்றம் சிறியுமில்லாதவராயினும் அவரிடத்தும் குற்றமேற்றிப் பலரிடமும் சென்று புறங்கூறித் திரியும் கரந்த வொழுக்கத்தையும் அதன் வழித்தாகப் பிறக்கின்ற இன்னாச் சொல்லையும் இயல்பாக உடையவராகிய இத் தெருவில் உள்ள கொடிதறி மகளிர்; எள்ளினும் எள்ளுக - என்னை இக‌ழினும் இக‌ழ்ந்திடுக‌; நுண்பூண் எருமை குடநாட் டன்ன என் ஆய் நலம் தொலையினும் தொலைக - நுட்ப‌மான‌ தொழிற்றிற‌‌ன் அமைந்த‌ அணிக‌ல‌ன்க‌ளை அணிந்த‌ எருமை என்ப‌வ‌ன‌து குட‌நாட்டினை யொத்த‌ என‌து அழ‌கின் ந‌ன்மை ஒழியினும் ஒழிக‌; என்க‌.

(வி-ம்.) அழியா - ஒழிவில்லாத‌. ந‌ல்லோர் வா‌ழ்த‌ற்கு அஞ்சுகின்ற‌ மூதூர் என்க. அம்‌ப‌ல் ஒழுக்க‌ம் - க‌ர‌ந்த‌ ஒழுக்க‌ம். வெஞ் சொல் - இன்னாமையுடைய‌ புற‌ங்கூறும் சொல். எருமை: குட‌நாட்டை யாளும் ஒரு ம‌ன்ன‌ன். அந்நாட்டின் அழ‌கு த‌லைவியின் அழ‌குக்குவ‌மை.

7-15: வாய்வாள்..........க‌வ‌லை

(இ-ள்.) வாள்வாய் எவ்வி வீழ்ந்த செருவின் - வாட் போரில் பொய்த்தலின்றிப் பகைவரைக் கொன்று அப் போரின்கண் தானும் விழுப்புண்பட்டு வீழ்ந்த எவ்வி என்னும் வள்ளலை அப்போர்க் களத்திலே; முன் பாணர் பரித்து இடூஉக் கைதொழுமரபின் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன - இச்செய்தி கேட்கும் முன்பு ஒடித்து நிலத்தில் எறிந்து தமது கையால் தொழுகின்ற முறைமையினோடு வாழ்த்திய வளவிய இசையினையுடைய வளைந்த யாழினது கோடுகளைப்போல; ஒள் இணர் சுடர்ப்பூங் கொன்றை ஊழ் உறு விளை நெற்று அறைமிசைத் தாஅம் அத்தம் நீள்இடை - ஒள்ளிய‌ கொத்துக்க‌ளையுடைய‌ விள‌க்குப் போன்ற‌ ம‌லரையுடைய‌ கொன்றையின்க‌ண் ஊழ்த்து முற்றிய‌ நெற்றுக்க‌ள் க‌ற்பாறைமீது ப‌ர‌வ‌லாக‌ உதிரும் சுர‌த்தின் நீண்ட‌ நெறியிலுள்ள‌; பிறைமருள் வால்கோட்டு அண்ணல் யானை சினமிகு முன்பின் வாமான்அஞ்சி - இள‌ம் பிறை போன்ற‌ வெள்ளிய‌ கொம்புக‌ளையும் த‌லைமைத் த‌ன்மையையும் உடைய‌ யானைப் ப‌டைக‌ளையும் வெகுளி மிகுத‌ற்குக் கார‌ண‌மான‌ ஆற்ற‌லையுடைய‌ குதிரைப் ப‌டைக‌ளையுமுடைய‌ அதிக‌மானெடுமான‌ஞ்சி என்னும் பேர‌ர‌ச‌ன்; இனங்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை - த‌ன் ப‌கைவ‌ருடைய ஆனிரையைக் கைக் கொண்டு ம‌றைத்து வைத்த‌ற்கிட‌னான‌ அச்ச‌ம் உண்டாகின்ற‌
க‌வ‌ர்த்த‌ வ‌ழியிலே, என்க‌.

(வி-ம்.) வாள்வாய் வீழ்ந்த எவ்வி என மாறுக. வாள்வாய் வீழ்தல் ஒரு போர்த்துறை. இதை வாள்வாய்த்துக் கவிழ்தல் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். (புறத் - 5) "அஃதாவது வாட்டொழிலில் பொய்த்தலின்றி மாற்றோரைக் கொன்று தானும் வீழ்தல்," எனப் பொருள் கூறி

"ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்
வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன்
வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே
கேளா வழுதார் கிடந்து"

எனவரும் வெண்பாவையும் காட்டுவர் (நச்சி)

வள்ளுயிர் - யாழ். யாழின்கண் மாதங்கி என்னும் இசைத்தெய்வம் உறையும் என்பது பற்றி, அது கை தொழும் மரபினை உடைத்தாயிற்று. பரித்திடுதல் - ஒடித் தெறிதல். எவ்வி என்னும் வள்ளல் இறந்து பட்டான் எனக் கேட்டவுடன் பாணர்கள் ஒருங்கு கூடித் தத்தம் யாழின் கோடுகளை ஒடித்திறிந்தனர் என்க. அக்கோடுகள் கொன்றை நெற்று உதிர்ந்து கிடத்தற்கு உவமை. வாமான் - குதிரை. அஞ்சி - அதிகமானெடுமானஞ்சி. இனம் - ஆனிரை.

16-18: நன்னர்..........நீடியோரே

(இ-ள்) நன்னர் ஆய்கவின் தொலைய சேய்நாட்டு நம் நீத்து உறையும் - நன்மை பொருந்திய கண்டோர் ஆராய்ந்து காணத்தகுந்த நமது பேரழகு அழிந்து போம்படி தொலைவிலுள்ள வேற்று நாட்டின்கண் சென்று நம்மைக் கைவிட்டு வதிகின்றவரும்; பொருள்பிணிகூடாமையின் நீடியோர் - தாம் விரும்பிய பொருளீட்டம் கை கூடாமையாலே தாம் குறித்த பருவம் கடந்தும் காலந் தாழ்த்திருப்பவரும் ஆகிய, என்க.

(வி-ம்.) ஆகிய (எ) நம்காதலர் என இயையும்

6-7: என்றும்..........காதலர்

(இ-ள்) என்றும் நம் காதலர் - எஞ்ஞான்றும் நம்மால் காதலிக்கப்பட்ட நம்பெருமான்; நோய் இலர் ஆக – துன்பம் சிறிது மிலராய் நீடூழி வாழ்வாராக என்பதாம்.

(வி-ம்.) யாம் இன்றே இறந்தொழியினும் ஒழிக என்பது படக் காதலர் என்றும் நோயிலராக என்று வாழ்த்தினாள் "இது நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்றஞ்சி வாழ்த்தியது; நம் பொருட்டுத் தீங்கு வருமென்று நினைத்தலின் வழுவாயமைந்தது," என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் 244.) அவர் நம்மைக் காதலித்திலர் என்பது பட நம் காதலர் என்றாள். இது யான் இறந்து ப‌டுவேன் எனத் தலைவி வன்புறை எதிரழிந்த‌வாறு என்க.

இனி இத‌னை - தோழி எம்மை, பெண்டிர் எள்ளினும் எள்ளுக‌ ந‌ல‌ம் தொலையினும் தொலைக‌ அஞ்சுவ‌ருக‌வ‌லை க‌வின் தொலைய‌ச் சேய்நாட்டு நீடியோர் ந‌‌ம் காத‌ல‌ர் என்றும் நோயில‌ராக‌ என‌ இயைத்துக் கொள்க‌.

(பா-வே.) 14.வ‌ய‌மான‌ஞ்சி. 14-15- யானை, சின‌மிகு முன்பின் வ‌ய‌மான் அஞ்சி என்ப‌து பாட‌மாயின் யானை சிங்க‌த்திற்கு அஞ்சித் த‌ன‌து இன‌த்தை அழைத்துக்கொண்டு ஓடி ம‌றைக்கும் என‌ப் பொருள் கூறுக‌.
-----------

செய்யுள் 116


திணை: ம‌ருத‌ம்.

துறை: தோழி த‌லைம‌க‌னை வாயில் ம‌றுத்த‌து.
(து-ம்.) அஃதாவது - த‌லைவ‌ன் ப‌ர‌த்தை யொருத்தியொடு நீராடிய‌வ‌ன் இல்ல‌த்திற்கு வ‌ந்த‌ பொழுது த‌லைவி ஊடியிருப்ப‌, அவ‌ன் த‌லைவியை ஊட‌ல் தீர்த்துத் த‌ன்னொடு கூட்டும்ப‌டி தோழியை வாயில் வேண்டின‌னாக, அவ‌ள் அச்செய்தியைத் தாம் அறிந்த‌மை கூறி அவ‌ன் வேண்டுகோளை ம‌றுத்துச் சொல்லிய‌து என்ற‌வாறு.

(இ-ம்.) இதற்கு - 'பெறற்கரும் பெரும் பொருள்' எனவரும் நூற்பாவின்கண் (தொல்-கற்பி-9.) புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் எனவரும் விதிகொள்க.

    எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
    அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
    கட்கொண்டு மறுகுஞ் சாகா ட‌ளற்றுறின்
    ஆய்கரும் ப‌டுக்கும் பாய்புனல் ஊர
    பெரிய நாணிலை மன்ற பொரியெனப்         5
    புன்க‌விழ் அகன்றுறைப் பொலிய ஒண்ணுதல்
    நறுமலர்க் காண்வருங் குறும்பல் கூந்தல்
    மாழை நோக்கிற் காழியல் வனமுலை
    எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு நெருநை
    வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே         10
    பொய்புறம் பொதிந்தியாம் கரப்பவும் கையிகந்து
    அலரா கின்றால் தானே மலர்தார்
    மையணி யானை மறப்போர்ச் செழியன்
    பொய்யா விழவின் கூடற் பறந்தலை
    உடனியைந் தெழுந்த இருபெரு வேந்தர்         15
    கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி
    இரங்கிசை முரசம் ஒழியப் பரந்த‌வர்
    ஓடுபுறம் கண்ட ஞான்றை
    ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே.
            ---- ப‌ர‌ண‌ர்.

(உரை)

1-4: எரிய‌கை.........ஊர‌

(இ-ள்.) எரி அகைந்து அன்ன தாமரை இடை இடை செந்நெல் அரிந்து கால் குவித்த வினைஞர் - தீயான‌து கொழுந்து விட்டாற் போன்ற‌ தாம‌ரை ம‌ல‌ர்க‌ளுக்கு இடையே இடையே விளைந்த‌ சிவ‌ந்த‌ நெற்க‌திரை அரிந்து ஓர் இட‌த்தே குவித்த‌ உழ‌வ‌ர்; கள்கொண்டு மறுகுஞ் சாகாடு அளறு உறின் - த‌ம‌க்குக் க‌ள்ளேற்றிக் கொண‌ருகின்ற‌ ச‌க‌ட‌ம் சேற்றின்க‌ண் வ‌ந்துற்றால்; ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர - அத‌ன் உருள்க‌ள் சேற்றில் அழுந்தாத‌ப‌டி அழ‌கிய‌ க‌ருப்ப‌ங்கோல்க‌ளை முறித்து அடைகொடுத்த‌ற் கிட‌னான‌ ந‌ன்கு நீர் பாய்கின்ற ஊரையுடைய‌ த‌லைவ‌னே, என்க‌.

(வி-ம்.) இத‌ன்க‌ண் - "ச‌க‌டு சேற்றில் அழுந்தும் பொழுது அத‌ன் உருளைக‌ளைத் தாங்கும் வ‌லிமை யில்லாத‌ க‌ரும்புக‌ளை அடைகொடுப்ப‌து போல் நின்னிட‌ம் ஊட‌ல் கொண்டு பெரிதும் துன்பத்தில் அழுந்துகின்ற தலைவியை ஊடல் தீர்க்கும்ப‌டி அவ‌ள் சின‌த்திற்கு அஞ்சுகின்ற‌ அடிச்சியை வாயில் வேண்டுகின்ற‌னை! அச்செய‌ல் என்னால் இய‌லாத‌ தொன்று காண்" என‌ நுண்ணிதின் தோழி உள்ளுறுத்த‌மை உண‌ர்க‌.

5-10: பெரிய‌........என்ப

(இ-ள்.)பெரிய நாண் மன்ற இலை - நீதானும் மாந்தர் சிறப்புக்களுள் பெரிய சிறப்புப் பண்பாகிய நாணம் என்னும் அப்பண்பினைத் தேற்றமாக உடையை அல்லைகாண்! எற்றாலெனின்; பொரியெனப் புன்கு அவிழ் அகல் துறை பொலிய - நெல்லினது பொரியைப் போல் புன்க மரம் மலர்கின்ற யாற்றினது அகன்ற நீராடுதுறை பொலிவுறும்படி; நெருநை ஒள்நுதல் நறுமலர் காண்வரும் குறும் பல் கூந்தல் மாழை நோக்கின் காழ் இயல் வனமுலை எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு - நேற்று ஒளியுடைய‌ நெற்றியையும் ந‌றிய‌ ம‌ல‌ர‌ணிந்த‌ ப‌ல‌ரும் காணுத‌ற்கு அவாவும் குறிய பலவாகிய கூந்தலையும் மடப்ப முடைய நோக் கத்தினையும் முத்துவடம் அசைகின்ற அழகிய முலையினையும் கூர்மை யுடைய எழுச்சியாகிய இளமையழகினையும் உடையாளாகிய ஒரு பரத்தை மகளோடு; வைகுபுனல் அயர்ந்தனை யென்ப - குளிர்ச்சிதங்கிய நீரின்கண் விளையடினை என்று அறிந்தோர் எம்பால் வந்து கூறாநிற்பர், என்க.

(வி - ம்.) மக்கள் பண்புகளுள் நாணுடைமை மிகவும் சிறப்புடை யதாகலின் அதனைப் பெரியநாண் என்றாள். இதனை:- "ஊணுடையெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு" (.) எனவரும் திருக்குறளானும் உணர்க. மன்ற, தேற்றத்தின்கண் வந்தது. பொரி - நெற்பொரி; இது புன்கம் பூவிற்குவமை. இங்ஙனம் பலரும் அறியும்படி பரத்தை மகளோடு விளையாடுதல் நின் சான்றாண்மைக்குப் பொருந்தாத செயல் ஆகவும் அது செய்தனை யாகலின் நீ மன்ற நாணிலை என்றவாறு. காணவரும் - காணுதற்கு அவா வரும். மாழை - பேதைமை. ஈண்டு மடம் என்க. இனி, அழகு எனினுமாம். காழ் முத்துவடம். எஃகு - கூர்மை. எழில் - எழுச்சி. இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் "வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்துமாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்" என்பர். ஒருத்தி என்பது ஒரு பரத்தை மகள் என்பதுபட நின்றது. நெருநை - நேற்று.

12 - 19: மலர்தார்................பெரிதே

(இ - ள்.) மலர்த்தார் மை அணி யானை மறப்போர்ச் செழி யன் பொய்யா விழாவின் கூடல் பறந்தலை - மலர்ந்த பூமாலையை யும் மை கொண்டு அழகு செய்த யானையையும் மறத்தன்மை மிகுந்த போர்த் தொழிலையுமுடைய பாண்டியனுடைய ஒரு நாளும் ஒழிதலில்லாத திருவிழாக்களையுடைய மதுரை நகரத்தின் பக்கத்திலுள்ள போர்க்களத்திலே; உடன் இயைந்து எழுந்த இரு பெருவேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி - தம்முள் ஒருங்கு கூடித் தன்மேல் போரிடுதற்கு எழுந்து வந்த சேரனும் சோழனுமாகிய இரண்டு முடி மன்னர்களும் அவருடைய கடல்போன்ற பெரிய படைகளும் கலக்க மெய்தும்படி அவரோடு போர்செய்து; இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடும் புறங்கண்ட ஞான்றை - முழங்குகின்ற தம்முடைய போர்முரசங்களைக் கைவிட்டு நாற்றிசையினும் பரவி அம்மன்னர் தம் படைகளோடு ஓடுங்கால் அவர் தம்மைப் புறங்கண்ட பொழுது; ஆடுகொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிது - அப்பாண்டிய மன்னன் வெற்றிகொண்ட அகன்ற அப்போர்க்களத்தின்கண் எழுந்த ஆரவாரத்தினும் காட்டில் மிகவும் பெரிதாக என்க.

(வி - ம்.) செழியன் - பாண்டியன். கூடல் - மதுரை. இருபெரு வேந்தர் - சேர சோழர்கள். அவர் - அம்மன்னரிருவரும். ஆடு - வெற்றி ஆர்ப்பு - வென்ற மறவரின் ஆரவாரம். ஆர்ப்பினும் பெரிது. (11) அலராகின்று என இயையும்

10 - 12: அதுவே..........................தானே

(இ - ள்.) அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப் பவும் - அங்ஙனம் எம்மிடத்தே கூறிய அந்தப் பழியை யாங்கள் பொய்யென்று மறுத்து எமது சொல்லாகிய போர்வையால் புறத்தே மூடி யாங்கள் எம்மால் இயலு மளவும் மறையாநிற்பவும்; கை இகந்து தானே அலர் ஆகின்று - எம்முயற்சியையும் கடந்து அதுதானே யாண்டும் அலராகப் பரவுகின்றது காண்! ஆதலால் நினது வேண்டுகோளின்படி யான் நினக்கு வாயில் நேருமாறில்லை என்பதாம்.

(வி - ம்.) அது - அப்பழிச்சொல். பொய் என்றி கூறிப் புறம் பொதிந்து என்க. கை இகத்தல் - முயற்சியைக் கடந்து போதல். ஆதலால் யான் நினக்கு வாயில் நேருமாறில்லை என்பது குறிப்புப் பொருள்.

இனி இதனை - ஊர நீ மன்ற நாணிலை எற்றாலெனின் நீ நெருநை ஒருத்தியொடு புனலயர்ந்தனை யென்ப, செழியன் ஆடுகொள் களத்து ஆர்ப்பினும் பெரிது; அதுபொய் என யாம் கரப்பவும் தானே அலரா கின்று என இயைத்துக்கொள்க.

(பா - வே.) 2. - விளைஞர். 7. - கூழை. 8. - காழின். 9. - நெரு
நல். 11 - யான்கரப்பவுங்கைகடந்.
-------------

செய்யுள் 117


திணை: பாலை
துறை: மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

(து-ம்.) அஃதாவது - களவொழுக்கத்தின்கண் இடையூறுகள் பற் பல தோன்றினமையால் தலைவன் தோழியை வாயிலாகக் கொண்டு தலைவியின் சுற்றத்தார் அறியாதபடி தன்னுடன் அழைத்துக் கொண்டு போயினன்; இச்செய்தியை அறிந்த செவிலித்தாய் தலைவியை நினைந்து வருந்திச் சொல்லியது என்றவாறு.

(இ - ம்.) இதற்கு - "எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே" என வரும் (தொல் - அகத் - 42.) விதிகொள்க.

    மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்
    அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
    ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர்வி(னை)
    வளங்கெழு திருநகர் புலம்பப் போகி
    வெருவரு கவலை ஆங்கண் அருள்வரக்         5
    கருங்கால் ஓமை யேறி வெண்டலைப்
    பருந்துபெடை பயிரும் பாழ்நாட் டாங்கண்
    பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
    சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே
    சாந்துளர் வணர்குரல் வாரி வகைவகுத்து        10
    யான்போது துணைப்பத் தகரம் மண்ணாள்
    தன்னோ ரன்ன தகைவெங் காதலன்
    வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
    சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்
    நெடுங்கால் மாஅத் தூழுறு வெண்பழம்        15
    கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
    பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
    வாணன் சிறுகுடி வடாஅது
    தீநீர்க் கான்யாற்று அவிரறல் போன்றே.
            --- .................
            குறிப்பு:- (ஆசிரியர் பெயர் காணப் படவில்லை)

(உரை)

1-9: மௌவலொடு...............மகட்கே

(இ - ள்.) மௌவலொடுமலர்ந்த மாக்குரல் நொச்சியும் அ வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அந்தோ தான் வளர்த்த முல்லைப் பூவினோடு தான் விளையாடுகின்ற கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியினது நிழலையும் அந்த நீழலின்கண் அழகிய வரி களையுடைய அல்குலையுடைய தன் தோழிமாரையும் நினையாத வளாய்; ஏதிலன் பொய்ம்மொழி நம்பி - பிறள் மகன் ஒருவன் கூறிய பொய்யாய மொழிகளை உண்மை மொழியென்று நம்பி; ஏர் வினை வளம் கெழு திருநகர் புலம்பப்போகி - அழகிய சிற்பத் தொழிலமைந்த வளம் பொருந்திய அழகிய எம்மில்லம் தனித்துக் கிடப்ப அவன் பின்னர்ச்சென்று; வெருவரு கவலை ஆங்கண்

வெள்தலை பருந்து கருங்கால் ஓமை ஏறி அருள்வரப் பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் - அச்சம் வருதற்குக் காரணமான கவர்த்த வழியையுடைய அப்பாலை நிலத்தே வெள்ளிய தலையை யுடைய பருந்து கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் மேல் ஏறி இருந்து தன் பெடைப் பருந்திற்கு இரக்கமுண்டாகும்படி அதனை விளிக்கின்ற பாழ்பட்டுக் கிடந்த நாடாகிய அவ்விடத்தே; பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சே அடி சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கு - தன் கைகளைப் பொன்னாலியன்ற வளையல் கள் ஒலிக்கும்படி வீசித் தன் சிவந்த அடிகளில் அணிந்த சிலம்புகள் வெயிலொளியால் சிரிப்பன போல விளங்கும்படி நடந்து சென்ற என்னுடைய மகளுக்கு, என்க.

(வி - ம்.) மௌவல் - முல்லை. இது தலைவி நட்டு வளர்த்த முல்லை. மாக்குரல் - கரிய பூங்கொத்து. நொச்சியின் நீழலில் அவள் விரும்பி ஆடு வாள் என்பது பற்றி அதனையும் நினையாமை கூறினள். ஆயம் தோழியர் குழு. தலைவனை இன்னன் என அறியாமை பற்றி ஏதிலன் என்றாள். ஏர் வினை - சிற்பம் முதலிய கலைத்தொழில். அவள் போயபின் வீடு வெச் சென்று கிடத்தலின் திருநகர் புலம்ப என்றாள் .

கருங்காலோமை ஏறி வெண்டலைப்பருந்து என்புழிச் செய்யுளின்பம் உணர்க. பயிர்தல் - அழைத்தல். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளலின் அதனையும் பாழ் நாடு என்றாள். நின் மகள் ஏதிலானோடு கைவீசிக் களிப்புடன் சென்றாள், எனக் கண்டோர் கூறக்கேட்டமை தோன்றப் பொலந்தொடி தெளிப்ப வீசிச் சேவடிச் சிலம்புநக இயலிச்சென்ற மகள் என்றாள். சிலம்பு நகலாவது வெயிலொளி பட்டுச் சிரிப்பது போல விளங்குதல்.

10 - 19: சாந்துளர்................போன்றே

(இ - ள்.) சாந்து உளர் வணர்குரல் வாரி வகை வகுத்து யான் போது துணைப்ப - நறுமணச்சாந்தை விரலில் தோய்த்துக் கோதப்பெற்ற வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி விட்டு அவற்றைக் கால்காலாக வகுத்து யான் மலர்களை அவற்றிடையே சேர்ப்பதற்கு; தகரம் மண்ணாள் - மயிர்ச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளவும் மறுக்கின்றவள்; தன் ஓரன்ன தகை வெம்காதலன் - தன்னோடு ஒருபடித்தான அழகையும் விருப் பத்தையுமுடைய தன் காதலனாகிய அந்த ஏதிலான் தாம் செல்லும் வழியிற் கிடைத்த; வெறிகமழ் பல் மலர் புனையப்பின்னுவிட - குரவும் மராஅமும் பாதிரியும் ஆகிய நறுமணங்கமழும் பாலைநிலத்துப் பல்வேறு மலர்களையும் சூட்டுதற் பொருட்டுத் தன் கூந்தலைக் கை செய்து பின்னலாகப் பின்னி விடா நிற்ப; நெடுங் கால் மாஅத்து ஊழ் உறு ஒள் பழம் கொடுந்தாழ் யாமை பார்ப் பொடுகவரும் பொய்கை சூழ்ந்த - நீண்ட அடியையுடைய மாமரத்தின் கண் கனிந்து காம்புவிட்ட ஒள்ளிய பழத்தை வளைந்த கால்களையுடைய யாமையும் அதன் பார்ப்பும் கவர்ந்து தின்னுதற் கிடனான நீர்நிலைகளால் சூழப்பட்ட; பொய்யா யாணர் வாணன் சிறுகுடி வடாஅது தீம்நீ்ர் கான்யாற்று அவிர் அறல் போன்று - ஒருநாளும் பொய்யாத புதுவருவாயையுடைய வாணன் என்னும் வள்ளலுடைய சிறு குடி என்னும் ஊருக்கு வடபால் உள்ள இனிய நீரையுடைய காட்டாற்றின்கண் விளங்குகின்ற கருமணல் போன்று; சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் - அவளுடைய சிறிய பிடர் மறையும்படி அறல்பட்டு அப்பின்னல்கள் தாழ்ந்து தொங்கினவோ அறிகின்றிலேன்; என்பதாம்.

(வி-ம்) சாந்து - கலவைச் சாந்து. உளர்தல் - விரலால் கோதுதல். யான்போது துணைப்பத் தகரம் மண்ணுதற்கும் மறுப்பவள், இப்பொழுது தன்காதலன் பின்னி விடுந்துணையும் பொறுத்திருப்பள் போலும்; அவன் பின்னிய பின்னல்கள் அவளுடைய சிறுபுறம் புதையத் தாழ்ந்து கிடக்குங் கொல் என்றவாறு. இது செவிலி தன்மகள் காதலனுடன் செல்வதனையும் அவன் அவளுக்குக் கூந்தல் பின்னுவதையும் செல்லும் நெறியிலுள்ள பாலை நிலத்துப் பல்வேறு மலர்களையும் அவள் கூந்தலில் சூட்டுதலையும் தன் அகக்கண்முன்னர்க் கண்டு கூறிய படியாம்

இனி, இதன்கண் கரையின்கண் உயர்ந்து நிற்கின்ற தேமாவின் இனிய பழத்தைத் தொடர்பில்லாத பொய்கையில் வாழும் யாமையும் அதன் பார்ப்பும் கவர்ந்து தின்றாற் போல எம்மொடு தொடர்பில்லாத ஏதிலான் ஒருவன் உயர்குடிப்பிறப்பினளாகிய என்மகளைக் கவர்ந்து கொடுபோய்த் தன் சுற்றத்தாரோடு அவள் நற்குணங்களை நுகரா நிற்பன்; யாம் அக்கனி வீழப்பெற்ற மரம் போல வறிதே நிற்பேமாயினேம் என உள்ளுறை காண்க.

வெண்பழம் என்றும் பாடம். அது சிறப்பில்லாப்பாடம்.

இனி இதனை நொச்சியினையும் ஆயத்தினையும் நினையாளாய் ஏதிலன் பொய்மொழி நம்பி, நகர் புலம்பப்போகி பாழ் நாட்டாங்கண் வீசியும், இயலியுஞ் சென்ற என் மகட்கு யான் போது துணைப்பத் தகரமும் மண்ணாள் தன் காதலன் பின்னுவிட அவள் கூந்தல் வாணன் சிறுகுடி வடாஅது கான் யாற்று அறல் போன்று சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் என இயைத்துக் கொள்க.

(பா. வே) 10. வன்குரல். 18. பண்ணன்.
------------

செய்யுள் 118


திணை: குறிஞ்சி
துறை: செறிப்பறிவுறீஇ இரவும் பகலும் வாரலென்று வரைவு
கடாஅயது.

(து -ம்.) அஃதாவது - தலைவன் நாள் தோறும் பகற்குறியிடத்தே வந்து வந்து மீள்பவனாக, வரைந்து கோடலில் அவனுக்குக் கருத்தின்மை யறிந்த தோழி அவனை வரைவு முடுக்குதற் பொருட்டு ஒருநாள் பகற்குறி யிடத்தே தமியளாய் வந்து எதிர்ப்பட்டு தலைவி தினை காவல் ஒழிந்த மையும் சுற்றத்தார் அவளை இற்செறித்தமையும் கூறிப் பகற்குறி மறுத்து ஆற்றது தீமை அறிவுறுத்து இரவுக்குறியு மறுத்துத் தலைவி நின்னை இன்றி உயிர் வாழாள் என அவளது பிரிவாற்றாமையும் கூறிப் பல்லாற்றானும் வரைவு கடாயது என்றவாறு.

(இ -ம்.) இதற்கு - "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல் - களவி - 23.) நூற்பாவின்கண் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி.........அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் என வரும் விதி கொள்க.

    கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்
    தேங்கமழ் இணர வேங்கை சூடித்
    தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ
    மறுகிற் றூங்கும் சிறுகுடிப் பாக்கத்து
    இயன்முரு கோப்பினை வயநாய் பிற்படப்         5
    பகல்வரிற் கவ்வை அஞ்சுதும் இகல்கொள
    இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
    பெருங்கை யானைக் கோள்பிழைத் திரீஇய
    அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள்
    தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்         10
    என்னா குவள்கொல் தானே பன்னாள்
    புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
    கிளிகடி பாடலும் ஒழிந்தனள்
    அளியள் தானின் அளியல திலளே.
            ---- கபிலர்

(உரை)

1 -6: கறங்கு ........அஞ்சுதும்

(இ - ள்.) கறங்கு வெள் அருவி பிறங்கும் மலைக்கவாஅன் - பெருமானே! நீதான் ஆரவாரிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய விளக்கமான எமது மலைச்சாரலிலே; தேம் கமழ் இணர வேங்கை சூடி - தேன் மணங்கமழுகின்ற பூங்கொத்துக்களிலே மலர்ந்துள்ள வேங்கையனது மலரை அணிந்து கொண்டு; பெண்டிரொடு விரைஇ - மகளிரொடு கலந்து; தொண்டகப் பறைச்சீர் மறுகின் தூங்கும் சிறுகுடிப்பாக்கத்து - தொண்டகப்பறையினது தாளத்திற் கொப்ப ஆடவர் தெருவின்கண் குரவைக் கூத்தாடுகின்ற சிறுகுடியாகிய எமது ஊரின் கண்ணே; இயல் முருகு ஒப்பனை - எமது கண் காண வடிவங்கொண்டு வருகின்ற முருகவேளை நிகர்த்த அழகுடையையாய்; வயநாய் பின்பட பகல்வரின் கவ்வை அஞ்சுதும் - வலி நின் வேட்டை நாய்கள் நின்னைப் பின் தொடர்ந்து வாராநிற்பப் பகற்பொழுதிலே இவ்வாறு வந்தால் அதனால் இவ்வூரில் எழுகின்ற அலருக்கு யாங்கள் பெரிதும் அஞ்சுகின்றேம். என்க.

(வி-ம்.) நீ முருகனைப் போலவே அழகுடையை; கானவர் குரவைக் கூத்தாடும் பொழுது வருவதனால் நின்னை எம்மவர் முருகன் நமக்கிரங்கி எழுந்தருளுகின்றான் என்று எண்ணி மகிழ்வாரல்லர், எற்றாலெனின் உனக்கு அறுமுகமில்லை அணிமயிலில்லை நின்னை வயநாய்கள் மட்டுமே தொடர்கின்றன ஆதலால் காண் என்றவாறு. எனவே, உன்னை இந்தக் குறிஞ்சித்தலைவன் என்றுட் கொண்டு இவ்வூர்ப் பெண்டிர் பழிதூற்றுவர் அதற்கு யாம் அஞ்சுகின்றோம். ஆதலின் நீ இனி இவ்வாறு பகலில் வாராதே கொள்! எனப் பகற்குறி மறுத்தாளாயிற்று.

6-10: இகல்கொள.........அஞ்சுதும்

(இ-ள்) அடு புலி வழங்கும் ஆர் இருள் - கொல்லும் புலிகள் இரைதேடித் திரிகின்ற நிறைந்த இருளின்கண்; இகல் கொள - அவற்றோடு பகை கொள்ளுதற்கு அஞ்சி; இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப் பெருங்கை யானை - கரிய பிடியானையோடும் கன்றினோடும் கூடிய பெரிய வாயையும் பெரிய கையையுமுடைய களிற்றியானையானது; கோள் பிழைத்து இரீஇய - தம்மை அப்புலி இரையாகக் கொள்ளுதலினின்றுந் தப்பிப் பிடி முதலியவற்றை மறைத்து வைத்தற்குக் காரணமான; நடுநாள் தனியை வருதல் அதனினும் காட்டில் அஞ்சுகின்றேம், என்க.

(வி-ம்.) இகல் கொள அஞ்சி என ஒரு சொற்பெய்க. பிடியொடும் கன்றொடும் இருத்தலால் பெருங்கையானை அவற்றை மறைத்து வைக்கும் என்க. அடுபுலி வழங்குதலும் தனிவருதலும் அஞ்சுதற்கு ஏது வாயின; எனவே இரவினும் வாராதே கொள்! என இரவுக்குறியும் மறுத்தவாறாயிற்று.

11-14: என்னாகுவள்.............இலளே.

(இ-ள்) பல் நாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் கிளிகடி பாடலும் ஒழிந்தனள் - இனி, பெருமானே! நீ பல நாளும் வந்து தலைவியைக் கூடுதற்குக் குறியிடமாக எம்மால் காட்டப்பட்ட இடமாகிய தினைப்புலத்தினும் தினை முதிர்ந்து கதிரும் கொய்யப்பட்டமையால் அத்தினைப்புனத்தின்கண் தலைவி வந்து கிளியை ஓட்டும் பாடலையும் கைவிடும்படி அவள் இற்செறிக்கப் பட்டனள், இவ்வாற்றால் இனி எம்பெருமாட்டி நின்னைக்காணும் பேறிலள்; அளியள் நின்அளி அலது இலள் என் ஆகுவள் கொல் - நம்மால் இரங்கப்படுதற்குரியளான எம்பெருமாட்டி இனித் தனக்கு நின்னுடைய அருளையன்றிப் பிறிதொரு துணை இலள் ஆயினள்; அவள் தான் இனி என்ன நிலைமையை உடையளோ அறிகின்றிலேன்,என்பதாம்,

(வி-ம்.) ஏனல் - தினைப்புனம் ஆகுபெயர். யாம் உனக்குப் பகற் குறியிடமாகச் செய்த தினைப்புனத்திற்கும் அவள் இனி வருவாள் அல்லள் என்றவாறு. வாராமைக்குப் புலர் குரல் ஏனல் என்றது (தினைக்கதிர் முற்றி அரியப்பட்டமையின் என நின்று) ஏதுவாயிற்று, தான் தமியளாய் வந்தமையையே தலைவி இற்செறிக்கப்பட்டமையை அறிவிக்கும் ஏது வாக்கினாள். என்னாகுவள் கொல் என்பது, ஒரோ வழி அவள் இறந்து படுதலும் கூடும் என்பதுபட நின்றது. இவ்வாற்றால் இது இத்தோழி செறிப்பறிவுறீஇ இரவும் பகலும் வாரலென்று வரைவு கடா அயது ஆதல் உணர்க.

கபிலருடைய இச்செய்யுள் அவர் புகழ் போலச் சாலவும் சிறந்து விளங்குதலு முணர்க.

இனி, இதனை (பெரும) பாக்கத்து முருகொப்பினை பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; புலி வழங்கும் ஆரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். அளியள் பாடலும் ஒழிந்தனள், நின் அளி அலது இலள், என்னாகுவள் கொல் என இயைத்துக் கொள்க.
-----------

செய்யுள் 119


திணை: பாலை.
துறை: செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது. தோழி தலைமகட்குச் சொற்றதூஉமாம்.

(து-ம்.) அஃதாவது - களவொழுக்கத்தின் பொழுது தலைவன் வேந்தற்குற்றுழித் தலைவியைப் பிரிந்து போக நேர்ந்ததனை அறிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

இனி, தோழி தலைவிக்குத் தலைவன் கருத்துணர்ந்து சொல்லியது எனினுமாம் என்றவாறு.

(இ-ம்.) இது - தலைவி கூற்றாயின் "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" எனவரும் (தொல் - களவி - 21.) விதிகொள்க. இனி, தோழி கூற்றாயின், "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல் - களவி - 23.) நூற்பாவின்கண் வகையும் என்பதனால் அமைக்க.

    நுதலுந் தோளுந் திதலை யல்குலும்
    வண்ணமும் வனப்பும் வரியும் வாட
    வருந்துவள் இவளெனத் திருந்துபு நோக்கி
    வரைவுநன் றென்னா தகலினும் அவர்வறிது
    ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை         5
    ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
    நெறியயல் திரங்கும் அத்தம் வெறிகொள
    உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பின்
    நோன்சிலை மழவர் ஊன்புழுக் கயரும்
    சுரன்வழக் கற்ற தென்னா துரஞ்சிறந்து        10
    நெய்தல் உருவின் ஐதிலங் ககலிலைத்
    தொடையமை பீலிப் பொலிந்த கடிகை
    மடையமை திண்சுரை மாக்காழ் வேலொடு
    தணியமர் அழுவம் தம்மொடு துணைப்பத்
    துணிகுவர் கொல்லோ தாமே துணிகொள         15
    மறப்புலி உழந்த வசிபடு சென்னி
    உறுநோய் வருத்தமொ டுணீஇய மண்டிப்
    படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
    கைதோய்த் துயிர்க்கும் வறுஞ்சுனை
    மைதோய் சிமைய மலைமுத லாறே.        20
            --- குடவாயிற் கீரத்தனார்.

(உரை)
1 - 4: நுதலும்…………...அகலினும்

(இ - ள்.) இவள் நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட - (ஏடி தோழி! நம்பெருமான் நம்மைப் பிரிந்து செல்லுவர் போலும் என்கின்றாய்) அவர்தாம் என்னை நோக்கி இவளுடைய நெற்றியும் தோளும் தேமல் படர்ந்த அல்குலும் நிறமும் அழகும் கண்களின் செவ்வரியும் பெரிதும் வாடும்படி; வருந்துவள் என திருந்துபு நோக்கி - மிகவும் வருந்துவாள் என்று நம்மியல்பினைத் திருத்தமாகக் கண்டு வைத்தும்; வரைவு நன்று என்னாது அகலினும் - இவளை இப் பொழுது வரைந்து கொள்ளுதலே நன்மையாம், இன்றெனின் தீதாம் என்று நினையாமல் தமது காரியத்தையே நோக்கிச் சென்றாலும், என்க.

(வி - ம்.) இது தலைவர் நம்மைப் பிரிந்து போவார் போலே காணப் படுகின்றனர் என்றதோழிக்குத் தலைவி அவர் என் நிலையை இப்பொழுது கூர்ந்துணர்வாராயின் இவளை இப்பொழுது வரைந்து கொள்ளுதலே நன்றெனத்துணிவர்; அவர் வேந்தற் குற்றுழிப் பிரிதலால் வரைதற்கு இது செவ்வியில்லை எனப் பிரிந்துபோதலும் நேரிதேயாம், எனப் பிரிவுடன் பட்டு அவர் செல்லினும் செல்க! என்கின்றாள். இதனால் பண்டைக்காலத்தே தலைவிமார் தலைவரை இன்றியமையாக் காரியங்களில் பிரிந்து போதற்கு உடன்பட்டுப் பிரிவாற்றியிருக்கும் இயல்பினர் என்பது பெற்றாம்.

15 - 20: துணிகொள………...மலைமுதலாறே

(இ - ள்.) மறப்புலி உழந்த துணிகொள வசிபடு சென்னி உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி - தறுகண்மையுடைய புலியானது தாக்கி நகத்தை ஊன்றி இருதுண்டாகும்படி பிளந்தமையால் பிளவுபட்ட தனது தலையின்கண் உண்டான புண்காரணமாக மிக்க நோயாகிய துன்பத்தோடு நீருண்ண விரைந்து சென்று; முழம்படி ஊன்றிய யானை - முழங்காலை நிலத்தில் ஊன்றிய யானையானது; நெடுநல்கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை மை தோய் சிமைய மலைமுதல் ஆறு - தனது நெடிய நல்ல கையை உள்ளே செலுத்தி நாற்றிசையினும் அக்கை தோயத் துழாவிப்பார்த்தும் நீர் இன்மையால் பெரிதும் வருந்தி நெட்டு யிர்ப்புக்கொள்ளுதற்கிடனான வறிய சுனையையும் முகில்படியுமாறு நீண்ட குவடுகளையுமுடைய மலையிடத்து, என்க.

(வி - ம்.) துணிகொள, என்னும் பாடத்திற்கு வெறுப்புற எனப் பொருள் கொண்டு உயிர்க்கும் என்பதற்கு அடையாக்குக. வசிபடு – பிளவு பட்ட. உறு, மிகுதிப் பொருட்டு. உணீஇய - உண்ண. முழம் - முழந்தாள். நெடுநல் கை எனக்கூட்டுக. மை - முகில். சிமையம் - குவடு.

4 - 10: அவர்வறிது ........ என்னாது

(இ - ள்.) அவர் - நம்பெருமான்; ஆறுசெல்மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு பாம்பின் பைதுணி கடுப்ப நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் - வழிப்போக்கர் அறுத்துப் போகட்ட பிரண்டைக்கொடியானது இடிஏறுண்ட பாம்பினது பசிய உடலினது துண்டுகள்போல வழி மருங்கில் வீணாக வற்றிக் கிடக்கின்ற அருநெறியின்கண்; உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பின் நோன்சிலை மழவர் வெறிகொள புழுக்குஊன் அயரும் - உப்பு வாணிகரின் கூட்டம் சமைத்துண்டு கைவிட்டுப்போன கல்லாற் கோலிய அடுப்பின்கண் வலிய வில்லையுடைய மறவர்கள் ஊனை மணமுண்டாகும்படி புழுக்கிய உணவை உண்ணற்கிடனான; சுரன் வழக்கு அற்றது என்னாது - அப்பாலை நிலமானது மக்கள் வழக்கற்ற பாழ்நிலம் என்று கூறி நம்மை அழைத்துப் போதற் குடம்படாமல்; என்க.

(வி-ம்.) வழிப்போக்கர் யாதானும் ஓரூரின்கண் தாமிருந்து புறப் பட்டுப் போம்பொழுது அவ்வூரின்கண் உள்ள வெப்பும் குருவும் ஆகிய தொற்றுநோய்கள் தம்மைத் தொடர்ந்து வந்து பற்றிக் கொள்ளாமைக்குப் பிரண்டைக்கொடியை அறுத்துப் போகட்டு அதனைத் தாண்டிப் போவர்; அதற்கப்பால் அந் நோய்கள் தம்மைப் பின் தொடரமாட்டா என்பது அவர் நம்பிக்கை. அவ்வழக்கம், இக்காலத்திலும் உளது. அப் பிரண்டைக்கொடிக்கு இடிஏறுண்டு இறந்து கிடக்கும் பாம்பினது உடல் துண்டுகள் உவமை. திரங்குதல் - வற்றுதல். உமண் சாத்து - உப்பு வாணிகர் கூட்டம். ஒழிகல் அடுப்பு - கைவிட்டுப் போன கல்லடுப்பு. ஊன் வெறிகொளப் புழுக்கும் உணவு அயரும் எனக் கூட்டுக. மகளிரை மக்கள் வழக்கற்ற வழியில் அழைத்துப்போதல் இன்னாது என்று நம்பெருமான் நம்மை அழைத்துப்போக மறுத்தலுங் கூடும். அங்ஙனம் மறாஅமல் என்றவாறு.

10-15: உரஞ்சிறந்து.............தாமே.

(இ-ள்.) உரம் சிறந்து - தமது வலிமையினால் சிறப்புற்று; நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை - நெய்தற் பூப்போலும் உருவினையுடைய அழகியதாக விளங்கும் அகன்ற இலையினையும் தொடுத்தல் அமைந்த மயிற்றோகையால் விளக்கமுற்ற காம்பினையும்; மடை அமை திண்சுரை மாகாழ் வேலொடு - மூட்டுவாயையும் திண்ணிய செருகு துளையினையும் பெரிய காழ்ப்பினையும் உடைய தமக்குத் துணையாகிய வேற்படையோடு; தாம் தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத் துணிகுவர் கொல்லோ - நம்பெருமான் தாம் மேற்கொண்டு செல்லுகின்ற பகைதணி வினைக்குப் பகைவருடைய போர்களத்திற்குச் செல்லுகின்ற தம்மோடு யாமும் துணையாக நம்மையும் அழைத்துச்செல்ல உடன் படுவரோ? படாரோ? அவர் கருத்தினை அறிந்து வருதி, என்பதாம்.

(வி-ம்.) மகளிரையும் உடன் அழைத்துப் போகும் துணிவு பிறத்தற்கு ஏதுவாதலின், தமது வலிமையினால் தம்மையே நம்பு மொரு சிறப்புடையராய் என்பாள், உரஞ்சிறந்து என்றாள். உரத்தால் சிறப்புற்று என்க. அவர் இப்பொழுது தமக்குத் துணையாக வேலொடு போகின்றார்; அதனோடு யாமும் துணையாக நம்மையும் அழைத்துப்போகத் துணிகுவரோ என்றவாறு.

இனி இதன்கண் தணிஅமர் அழுவம் என்றதனால் இத்தலைவன் வேந்தற் குற்றுழிச் சந்து செய்து பகைதணிக்கும் வினைமேல் செல்கின்றான் என்பதும்; வேலோடு என்றததால் இவன்றானும் அரசன் என்பதும் பெற்றாம். பகைதணி வினைமேல் செல்லும் அரசன் தம்முள் பகைத்துப் பொருதும் அரசர் இருவருக்கும் மேம்பட்ட பேரரசன் ஆதல் வேண்டும். எனவே அத்தகைய பேராற்றல் படைத்த அரசன் மகளிரொடும் அவ் வினைமேல் செல்லுதலும் பண்டைய வழக்கம் என்னும் செய்தி இதனால் உணரப்படும்.

இனி வழிப்போக்கர் தம்மை நோய்தொடராமைப்பொருட்டுப் பிரண்டையை அறுத்து வழியிற்போகட்டு அதனைத் திரங்கவிட்டுச் செல்லுதல்போன்று நம்பெருமானும் தமக்கின்னாவாம் என்பது கருதி நம்மைக்கைவிட்டு, அன்புத்தளையறிந்து அலர் தூற்றுவோர் வழி இடத்தே நாங்கிடந்து வாடிவதங்கும்படி நம்மைக் கைவிட்டுத் தாம் தமியராய்ச் செல்லத் துணிவர் போலும் என இதன்கண் உள்ளுறை காண்க.

இனி, புலியால் தாக்குண்டு சென்னி பிளவுபட்டு வருந்தும் வருத்தத்தோடு நீர் வேட்கைகொண்டு அது தணிதற்கு வறிய சுனையில் கைவிட்டுத் துழாவிப் பார்த்தும் நீர் பெறாமல் நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானை போன்று யாமும் அம்பற் பெண்டிரால் அலர் தூற்றப்பெற்ற வருத்தத்தோடு, நம்பெருமான்பால் காதல் வேட்கையும் உடையேமாய் நமது அறிவாலாந்துணையும் அவர்பால் வரைவுகடாவிப் பார்த்தும் அவர்பாலருள் காணப்படாமையின், இனி யாம் ஈண்டுத் தனியே வருந்தி உயிர்த்துக்கிடப்பேம். இதனையும் அவர்பால் கூறுதி என இதன்கண்ணும் நுண்ணிதின் உள்ளுறை கண்டு மகிழ்க.

இன்னும் உமண் சாத்துக் கைவிட்டுப் போன அடுப்பில் மழவர் மணங்கமழும்படி ஊன்புழுக்கயர்ந்து மகிழ்ந்தாற் போல இனி அவரால் துறக்கப்பட்ட நம்மைப் பொருளாகக்கொண்டு இவ்வூர் அம்பற் பெண்டிர் ஊரெல்லாம் அலர்தூற்றி மகிழ்வர் எனவும் உள்ளுறை காண்க.

இனி - இதனை, (தோழி) அவர் நுதல் முதலியன வாட இவள் வருந்துவள் என நம்மை நோக்கி வரைந்து கொள்ளாமல் அகலினும் அகல்க. அவர் அகலும் மலைவழியில் அத்தம் வெறிகொள மழவர் புழுக்கயரும் சுரன் வழக்கற்றது என்று மறாஅமல் உரஞ்சிறந்து தாம் செல்லும் அழுவம் தம்மொடு துணைப்ப நம்மையும் அழைத்துச்செல்லத் துணிகுவர் கொல்லோ என இியைத்துக்கொள்க.

இனி இது தோழி கூற்றாயின், தலைவன் சிறைப்புறதானாக, அவன் கேட்டுச் செலவழுங்கி வரைதற்பொருட்டுத் தலைவிக்குக் கூறுவாளாக. இங்ஙனம் கூறினள் என்க.

(பா-வே.) 6. வேறுபெறு. 7. நெறியவற் 8. உமண்சாக் கொண்ட. 11. நெய்யகலுரு. 15. துணிகொள்பு. 16. வரிபடு.
------------------------

செய்யுள் 120


திணை : நெய்தல்
துறை: தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து
தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது.

(து-ம்) அஃதாவது, களவொழுக்கத்தின்கண் தலைவன் பகற்குறியின்கண் வந்து வந்து மீள்வானாக, தலைவி இரவெல்லாம் அவனது பிரிவாற்றாமல் வருந்துவாளாயினள்; ஆகவே தோழி அவள் ஆற்றாமை தீர்க்கும் பொருட்டுத் தலைவனை இரவின்கண்ணும் தம் விருந்தினனாகத் தம்மொடு தங்கும்படி அவனைத் தனியிடத்தே கண்டு வேண்டிக்
கொண்டது, என்றவாறு.

(இ-ம்.) இதற்கு - "நாற்றமும் தோற்றமும்" எனவரும் (தொல் களவி-23.) நூற்பாவின்கண் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் எனவரும் விதிகொள்க.

    நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
    செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
    பைங்காற் கொக்கின் நிரைபறை யுகப்ப
    எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
    கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு        5
    மதரெழில் மழைக்கண் கலுழ இவளே
    பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
    மாணலம் சிதைய ஏங்கி யானாது
    அழல்தொடங் கினளே பெரும அதனால்
    கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி        10
    நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
    வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
    சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
    பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
    அன்றில் அகவும் ஆங்கண்         15
    சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே.
            ---- நக்கீரனார்.

1-9: நெடுவேள்...............பெரும

(இ-ள்) பெரும -பெருமானே; நெடுவேள் மார்பின் ஆரம்போல செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் பைங்கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப - நீண்ட புகழையுடைய முருகவேளின் மார்பின்கண் அணியப்பட்ட முத்து வடம் போலச் சிவந்த நிறம் வாய்ந்த அந்தி வானத்தைத் தொட்டு மீனைத் தின்னுகின்ற பசிய காலையுடைய வெள்ளைக் கொக்கின் கூட்டம் நிரலாகப் பறந்தேறா நிற்ப; எல்லை பைபயக் கழிப்பி பல் கதிர் ஞாயிறு குடவயின் கல் சேர்ந்தன்று - பகற்பொழுதினை மெல்ல மெல்லக் கழித்துப் பலவாகிய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலம் மேலைத்திசைக்கண் மலையை எய்திற்று; இவளே- பகற் குறியிடத்து நின்னோடு கூடியிருந்த எம்பெருமாட்டிதானும் நீ பிரிந்தவிப்பொழுதே; பெரு நாண் அணிந்த சிறுமெல் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது - தன்னுடைய பெரிய நாணுடைமையாலே அழகு செய்யப் பெற்ற சிறிய மெல்லிய சாயலும் மாட்சிமையுடைய தனது பெண்மை நலமும் சிதைந்து போம்படி நின் பிரிவாற்றாமையாலே பெரிதும் ஏக்கமுற்று; மதர் எழில் மழைக்கண் கலுழ - தனது மதர்க்கும் அழகிய கண்கள் நீர் வார; ஆனாது அழல் தொடங்கினள் - ஒழியாமல் அழத்தொடங்கிவிட்டனள் காண்!; என்க.

(வி-ம்) நெடுவேள் - முருகன். செக்கர்வானத்தை யணுகி நிரலாகப் பறந்து போகின்ற வெள்ளைக்கொக்கு நிரலுக்கு - சிவந்த திருமேனியையுடைய முருகவேள் மார்பில் கிடக்கின்ற முத்துமாலை உவமை.

குடவயின் கல் - மேற்றிசையில் மலை (அத்தகிரி). சேர்ந்தன்று - சேர்ந்தது. நீ கூடியிருந்து இப்பொழுதுதான் அவளைப் பிரிந்து போகின்றனை. அவள் தானும் நீ பிரிந்தபொழுதே தனது சாயல் முதலியன சிதையும்படி அழத் தொடங்கிவிட்டாள். இனி நாளைப் பகற்குறியிடத்தே நின்னைக் காணும் அளவும் அவள் எவ்வாறு ஆற்றுவள்? ஆற்றாதே இறத்தலும் கூடும் என்று, பின்னர் இற்றை இரவு ஈண்டே நீ தங்குதி எனற்குக் குறிப்பேதுவாக இங்ஙனம் கூறினள் என்றுணர்க.

9-15: அதனால்...........நாட்டே

(இ-ள்.) அதனால் - ஆதலால்; கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து - உப்பங்கழியிடத்துள்ள சுறாமீன் தன்கோட்டால் எறிந்தமையாலே புண்பட்ட காலையுடைய நினது ஊர்தியாகிய கோவேறுகழுதையும் மீண்டும் நெடிய நீர் வழியாகிய அக்கழியினிடத்தே செல்லுதற்கு மெலிந்தமையால்; வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது - வலிய வில்லையுடைய நின் ஏவலராகிய இவ்விளைஞரொடு நீ இவ்விரவிலே நின்னூர்க்குப் போகாமல்; பெண்ணை ஓங்கிய வெள்மணல் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் - பனைகள் உயர்ந்துள்ள வெள்ளிய மணலையுடைய கடற்கரைச்சோலையிலே இரவின்கண் அன்றிப் பறவை தன் பெடையை அழைக்கின்ற அவ்விடத்தே; சிறுகுரல் நெய்தல் எம் பெருங்கழி நாட்டுச் சேர்ந்தனை அசைஇ செலின் சிதைகுவது உண்டோ - சிறிய கொத்துக்களான நெய்தற் பூக்களையுடைய எம்முடைய பெரிய கழிசூழ்ந்த ஊரின்கண் இளைப் பாறி இருந்து நாளைச்சென்றால் நினக்குக் கெடுவது யாதேனும் உண்டோ இல்லையன்றே, என்பதாம்.

(வி-ம்) தலைவன் வரும்பொழுது கழியில் இறங்கி வந்ததனால் அக்கழியிடத்துள்ள சுறாமீன் அவன் ஊர்தியை காலில் எறிந்து புண்படுத்தினமை இவள் கூற்றாற் பெற்றாம். இதனை, தலைவன் இரவின்கண் தங்கு தற்கு ஓர் ஏதுவாகக் கொண்டு இத்தோழி கூறுகின்றாள் என்க.

அத்திரி- கோவேறு கழுதை; பரி - செலவு. மெலிந்து - மெலிந்தமையால் என்க. அசைஇ - இளைப்பாறி. எல்லி - இரவு. பெண்ண - பனை படப்பை - ஈண்டுச் சோலை. அச்சோலையில் அன்றில் அகவும் என்றது அக் குரல் கேட்பின் தலைவி பொறாள் என்றுணர்த்துதற்கு. நாடு ஈண்டு ஊர் என்பதுபட நின்றது. சிதைகுவதுண்டோ என்றது உனக்குச் சிதைவது ஒன்றுமில்லை என்பதுபட நின்றது. நீ தங்கின் உனக்குச் சிதைவதில்லை என்றது தலைவிக்கோ நீ அங்ஙனம் தங்காது செல்லின் உயிரே போம் என்பதுபட நின்றது.

இனி, இச்செய்யுளை ஆசிரியர் நச்சினார்க் கினியர் 'வைகுறுவிடியல்' என்னும் (தொல் - அகத். 8) சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டி நெய்தற்கு எற்பாடு வந்த தென்றும் "பொழுதும் ஆறும் (தொல் பொருளியல் 66.) என்னும் சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டி இஃது இரவினும் பகலினும் நீ வாவெனத் தோழி கூறியது என்றும், இங்ஙனம் வரின் மறைவெளிப்படும் என்று அஞ்சாது தோழி கூறுதல் வழுவாயினும் தலைவியின் வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார் என்றும் "தேரும் யானையும்" (தொல். பொருளியல். 18.) எனவரும் நூற்பாவின்கண் பிற என்பதற்கு இதன்கண் அத்திரி என்பதனையும் எடுத்துக்காட்டினர்.

இனி, இதனை, - நெய்தலிற் களவு எனக் கொள்க.

இனி, இதனைப் பெரும! பல் கதிர் ஞாயிறு கல் சேர்ந்தன்று; இவள் அழல் தொடங்கினள். அதனாலும், அத்திரி பரி மெலிந்தமையாலும் இளையரோடு எல்லிச் செல்லாது பெருங்கழி நாட்டுச் சேர்ந்தனை செலினே சிதைகுவதுண்டோ என வியைத்துக்கொள்க.

அகநானூற்றின்கண் முதலாவதாகிய களிற்றியானைநிரைக்குப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த சொற்பொருளுரையும் விளக்கமும் முற்றும்.
-----------------


ஆசிரியர் பெயர் அகரவரிசை.

    [எண்: செய்யுளெண்]
    அந்தி யிளங்கீரனார் 71
    அம்மூவனார் 10,
    அள்ளூர் நன்முல்லையார் 46
    ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 64
    ஆலங்குடி வங்கனார் 106
    ஆலம்பேரிச் சாத்தனார் 47, 81
    ஆவூர் மூலங்கிழார் 24
    ஈழத்துப் பூதன் தேவனார் 88
    உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் 19
    உலோச்சனார் 20, 100
    ஊட்டியார் 68
    எயினந்தை மகனார் இளங்கீரனார் 3
    எருமை வெளியனார் 73
    எருமை வெளியனார் மகனார் கடலனார் 72
    ஒக்கூர் மாசாத்தனார் 14
    ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 26, 65
    ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
    25 ஔவையார் 11
    கடுந்தொடைக் காலினார் 109
    கணக்காயனார் மகனார் நக்கீரனார் 93
    கபிலர் 2,12,18, 42, 82, 118
    கயமனார் 7, 17
    கருவூர்க் கண்ணம்புல்லனார்
    கருவூர்ப் பூதஞ்சாத்தனார் 50
    கல்லாடனார் 9, 83, 113
    காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் 85
    காவன் முல்லைப்பூதனார் 21
    காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் 107
    காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 103
    குடவாயிற் கீரத்தனார் (அம்மூவனார்) 35, 60, 79, 119
    குடவாயிற் கீரத்தனார் (உறையூர்ச் சல்லியங் குமரனார்) 44
    குறுங்குடி மருதனார் 4
    குன்றியனார் 40
    குன்றியனார் (சேரமானந்தையார்) 41
    நாகலாசனார் 16
    சீத்தலைச் சாத்தனார் 53
    செல்லூர்க் கோசிகன்
    தாயங்கண்ணனார் 66
    தங்கால் முடக்கொற்றனார் 48
    தங்காற் பொற்கொல்லனார் 108
    தாயங்கண்ணனார் 105
    நக்கீரர் 57; 120
    நல்லாவூர் கிழார் 86
    நல்வெள்ளியார் (நல்லொளியார்) 32
    நன்பலூர்ச் சிறுமேதாவியார் 94
    நெய்தற் சாய்த்துய்ந்த ஆவூர் கிழார் 112
    நொச்சி நியமங்கிழார் 52
    நோய்பாடியார் 67
    பரணர் 6, 62, 76, 116
    பாண்டியன் அறிவுடைநம்பி 28
    பெருங்குன்றூர் கிழார் 8
    பெருந்தலைச்சாத்தனார் 13
    பெருந்தேவனார் 51
    பொருந்தில் இளங்கீரனார் 19
    போந்தைப்பசலையார் 110
    பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி 26
    பாரதம் பாடிய பெருந்தேவனார் (க.வா.)
    பாலை பாடிய பெருங்கடுங்கோ 5,99,111
    மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 56
    மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 33
    மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் 102
    மதுரை எழுத்தாளன் 84
    மதுரைக் கணக்காயனார் 27
    மதுரைக்கவுணியன் பூதத்தனார் 74
    மதுரைக் காஞ்சிப்புலவர் 89
    மதுரைச்செங்கண்ணனார் 39
    மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடவன் மள்ளனார் 70
    மதுரை நக்கீரர் 36, 78
    மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் 51
    மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 62
    மதுரைப் பேராலவாயார் 87
    மதுரைப் போத்தனார் 75
    மதுரை மருதன் இளநாகனார் 34, 59, 77, 90, 104
    மதுரையாசிரியர் நல்லத்துவனார் 43
    மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் 80
    மருதம்பாடிய இளங்கடுங்கோ 66
    மாமூலனார் 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115.
    மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் 54
    முடங்கிக்கிடந்த நெடுஞ் சேரலாதன் 30
    வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 38
    வண்ணப்புறக் கந்தரத்தனார் (வண்ணப்புறக் கல்லாடனார்) 49
    விற்றூற்று மூதெயினனார் 37
    வெள்ளாடியனார் 29
    வெள்ளி வீதியார் 45
    வெறிபாடிய காமக்கண்ணியார் 22, 98
    --------------

    செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை

    [எண்: செய்யுளெண்]
    அகலறை மலர்ந்த .... 105 எரியகைந் தன்ன 106
    அணங்குடை நெடுவரை .... 22 எரியகைந் தன்னதா 116
    அம்மவாழி...யிம் .... 101 ஒழித்தது பழித்த 39
    அயத்துவளர் பைஞ்சாய் .... 62 கடல்பா டவிந்து 50
    அரக்கத் தன்ன 14 கடன் முகந்து 43
    அரிபெய் சிலம்பி 6 களையும் இடனால் 64
    அருளன் றாக 75 கள்ளியங் காட்ட 97
    அரையுற் றமைந்த 100 கறங்குவெள் அருவி 118
    அழியாவிழவின் 115 காய்ந்து செலற் 55
    அழிவி லுள்ளம் 47 காவிரி கொன்றைப் 2
    அளிநிலை பொறாஅ 5 கானன் மாலைக் 40
    அறியாய் வாழி 53 கிளியும் பந்துங் 49
    அன்றவ னொழிந் 19 கூனல் எண்கின் 112
    அன்னாய் வாழிவேண்....நம் 68 கூன்முண் முள்ளிக் 26
    அன்னாய் வாழிவேண்.......நின் 48 கேளாய் எல்லதோழி 114
    அன்னை அறியினும் 110 கேளாய் வாழியோ 63
    ஆடமைக் குயின்ற 82 கேள்கே டூன்றவும் 93
    ஆய்நலந் தொலைந்த 69 கொடுந்தாள் முதலையொடு 80
    ஆள்வழக்கற்ற 51 கொடுந்திமிற் பரதவர் 70
    இம்மையுலகத் 66 கொடுவரி இரும்புலி 27
    இருங்கழி முதலை 3 கொல்வினைப் பொலிந்த 9
    இருள்கிழிப் பதுபோல் 72 கோழிலை வாழைக் 2
    இன்னிசை உருமொடு 58 சிறுகரும் பிடவின் 34
    ஈயற் புற்றத் 8 சிறுபைந் தூவிச் 57
    ஈன்று புறந்தந்த 35 சேற்றுநிலை முனைஇய 46
    உழுந்துதலைப் பெய்த 86 தண்கயத் த‌மன்ற 59
    உனைமான் துப்பின் 102 தன்கடற் பிறந்த 13
    உள்ளாங் குவத்தல் 111 தீந்தயிர் கடைந்த 87
    உன்னங் கொள்கையொ 65 தெறுகதிர் ஞாயிறு 89
    எம்வெங் காம 15 தேம்படு சிமயப் 94

    தொடங்குவினை தவிரா 29 மண்கண் குளி்ர்ப்ப 23
    தோட்பதன் அமைத்த 79 மண்கனை முழவொடு 76
    நகையா கின்றே 56 மலிபெயற் கலித்த 42
    நறவுண் மண்டை 96 மலைமிசைக் குலைஇய 84
    நனந்தலைக் கானத் 78 மறந்தவ ணமை 37
    நன்றல் காலையும் 113 மனையிளநொச்சி 21
    நன்னுதல் பசப்ப - ஆ 77 முதைச்சுவல் கலித்த 88
    நன்னுதல் பசப்ப - பெ 85முலைமுகஞ் செய்தன 7
    நாயுடை முதுநீர்க் 16முல்லை வைந்நுனை 4
    நாளுலா எழுந்த 81 மூத்தோ ரன்ன 90
    நிழலறு நனந்தலை 103 மெய்யிற் றீரா 28
    நிறைந்தோர்த் தேரும் 71 மௌவலொடு மலர்ந்த 117
    நீசெல வயரக் 107 யாயே கண்ணினுங் 12
    நீர் நிறங் கரப்ப 1 யானெவன் செய்கோ 67
    நுதலுந் தோளுந் 119வண்டுபடத் தகைந்த 1
    நெடுங்கயிறு வலந் 30வந்துவினை முடித்த 44
    நெடுங்கரைக் கான்யாற் 25 வலஞ்சுரி மராஅத்து
    நெடுமலை யடுக்கம் 92 வலந்த வள்ளி 52
    நெடுவேள் மார்பின் 120 வளங்கெழு திருநகர் 17
    நெருப்பெனச் சிவந்த 31 வாட லுழுஞ்சில் 45
    நெருன லெல்லை 32 வாள்வரி வயமான் 99
    நோற்றோர் மன்ற 61 வானமூர்ந்த 11
    பகுவாய் வராஅற் 36 வான்கடற் பரப்பில் 10
    பல்லிதழ் மென்மலர் 109 விரியிணர் வேங் 38
    பனிவரை நிவந்த 98 விருந்தின் மன்னர் 54
    பின்னொடு முடித்த 73 விளங்கு பகல் உதவிய 91
    புணர்ந்தோர் புன்கண் 108 வினைநன்றாதல் 33
    பெருங்கடற் பரப்பில் 60 வினைவலம் படுத்த 74
    பெருநீ ரழுவத் 20 வேந்துவினை முடித்த 104
    பைபயப் பசந்தன்று 95 வேளாளப் பார்ப்பான் 24
    வைகுபுலர் விடியன் 41
    ----------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்