புறநானூறு உரை 2c


சங்க கால நூல்கள்

Back

புறநானூறு
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 2c (341முதல் 400 வரை)



புறநானூறு - பாகம் 2C
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரையுடன்

Source:
புறநானூறு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
154, டி.டி.கே. சாலை, சென்னை - 18.
------------

341. பரணர்

மகள் மறுத்தல் காரணமாக இருவரிடையே போர் நிகமும் திறமொன்றை, ஆசிரியர் பரணர் இப் பாட்டின்கட் குறிக்கின்றார். ஒரு தலைவன்பால் அழகிய மகளொருத்தி நலஞ்சிறந்து விளங்கக்கண்ட வேந்தனொருவன் அவளைத் தனக்கு மகட்கொடை நேருமாறு வேண்டினான். தலைவனாகிய தந்தை மகட்கொடை மறுத்தான். வேந்தன் தன் வேட்கை மிகுதியால் அவனை இரந்து பின்னின்று குறைமொழிந்து கேட்டான். அதற்கும் அத்தந்தை கொடுத்தற்கு இசையவில்லை. வேந்தற்கு வெகுளி பெரிதாயிற்று. இருவர்க்கும் போர்மூண்டது. தந்தை தன் தானை மறவரைப் போர்க்குரியராமாறு பணித்து அவரவரும் பேர்ந்து போர்ப்பூப் பெற்றுக் கொள்ளுமாறு ஏவிவிட்டுத் தானும் போர்க்குச் செல்வான் நீர்நிலைக்கு நீராடச் சென்றான். வேந்தனும் இவ்வாறே தன் தானை மறவரைப் பணித்து மிக்க சினத்துடனே நாளை இம் மாமகளை மணம் புணரும் நாளாதல் ஒன்று; விழுப்புண்பட்டு மேம்படு வடுவுடன் விண்ணுலகு புகும் நாளாதல் ஒன்று; இரண்டினுள் ஒன்று நிகழ்தல் வேண்டுமென வஞ்சினம் மொழிந்து வாளைக் கையிற் கொண்டான். இவர் இவ்வகையராதலால். இவ்வூர் தனதுபேரழகை இழந்தழியும்போலும் என ஆசிரியர் பரணர் இரங்கிப் பாடுகின்றார்.

    வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட்
    டம்பூந் தொடலை யணித்தழை யல்குல்
    செம்பொறிச் சிலம்பி னிளையோட டந்தை
    எழுவிட் டமைத்த திண்ணிலைக் கதவின்
    அரைம ணி்ஞ்சி நாட்கொடி நுடங்கும்         5
    .................
    புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு
    மாற்ற மாறான மறலிய சினத்தன்
    பூக்கோ ளெனவேஎய்க் வேளா மெல்லியற்
    விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற்         10
    சுணங்கணி வனமுலை யவளொடு நாளை
    மணம்புகு வைக லாகுத லொன்றோ
    ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்
    நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு
    வாரா வுலகம் புகுத லொன்றெனப்         15
    படைதொட்ட டனனே குருசி லாயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவி னிழப்பது கொல்லோ
    மென்புல வைப்பினித் தண்பணை யூரே.
    ----------

திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

உரை: வேந்து குறை யுறவும் கொடான் - வேந்தன் தானே வந்து குறையுற்று நின்று மகட்கொடை வேண்டினானாகவும் கொடானாய்: அம்பூந் தொடலை அணித்தழை - அழகிய பூக்கள் விரவித் தொடுத்தனையுடைய அழகிய தழையினையும்:ஏந்து கோட்டு அல்கும்-உயர்ந்த பக்கத்தையுடைய அல்குலினையும்: செம்பொறிச் சிலம்பின் - செவ்விய பொறிகள் பொறிக்கப்பட்ட சிலம்பினையுமுடைய: இளையோள் தந்தை - இளைவட்குத்தந்தை யாயினான்: எழுவிட்டு அமைத்த திண்ணிலைக் கதவின் - கணைய மரத்தைக் குறுக்கிட்டமைத்த திண்ணிய நிலையையுடைய கதவையும்: அரை மண் இஞ்சி - அரைத்த மண்ணாலமைந்த மதிலையும்: நாட்கொடி நுடங்கும் - நாடோறும் பெற்ற வெற்றிக்குறியாக எடுத்த கொடியசையும்: ...புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு - ...புலிக்கூட்டத்தை யொத்த தறுகண்மையுடைய வீரர்சுற்றுத்துடனே: மாற்றம் மாறான் - தான் கொண்ட வஞ்சின மாற்றம் தப்பானாய்: மறலிய சினத்தன் - போர்குறித்துண்டாகிய சினமுடையனாய்: பூக்கோள் என ஏஎய் - வீரரனைவரும் போந்து போர்ப்பூவைப் பெற்றுப் போர்க்கெழுத்தேகுமாறு பணித்துவிட்டு; கயம் புக்கனன் - நீராடற்குக் குளத்துக்குட் புகுந்தான்; குருசில் - வேந்தனாகிய தலைவன்; விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல்லியல் - விளங்குகின்ற இழைகளால் பொற்பு மிக்க மணமாகாத மெல்லிய இயல்பினையும்; கணங்கணி வனமுலை யவளொடு - சுணங்கு பரந்த அழகிய முலையினையுடைய அவளுடனே; மணம் புகு வைகல் - மணம் புரிந்து கொள்ளும் நாள்; நானையாகுதல் ஒன்று; ஆரமர் உழக்கி மறம் கிளர் முன்பின் - கடத்தற்கரி போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளரும் வலியினையும்; நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு - நீண்ட இலையைுடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்டவுடம்போடே, வராரவுலகம் புகுதல் ஒன்று - மேலுலகு புவகுது ஒன்று, இரண்டனுள் யாதாயினும் ஒன்று ஆகுக; என என்று வஞ்சினம் கூறி; படை தொட்டனன் - தன் படையைக் கையிலே ஏந்தினான்; ஆயிடை - அவ்விடத்து, மென்புலவைப்பின் இத தண்பணையூர் - நன்செய் வயல்கள் பொருந்திய வூராகிய இந்தமருதநிலத்தூர்; களிறு பொரக்கலங்கிய தண்கயம் போல - நீராடும் களிறுகள் தம்முட் பொருவதால் கலங்கிச் சேறாகும் குளிர்ந்த குளம்போல; பெருங்கவின் இழப்பது கொல் - இருவரும் செய்யும் போரால் பெரி தன் அழகை இழக்கும் போலும்; எ - று.

ஏந்து கோட்டல்குல், அணித்தழை யல்குல் என இயையும். தொடுத்தல், தொடலையென வந்தது. தொடலை, மாலையுமாம். செம்பொற் சிலம்பென்றும் பாடமுண்டு. பொறி, தொழிற்பாடு. எழுகணையமரம். மண்ணை யரைத்துக் கல்லறத்து இஞ்சி யெடுத்தல் முறையாதலால் "அரைமண் இஞ்சி" யென்றார். தமர் பிறரெனத் தெரியாது பகைவரைப் பொருதழிக்கும் தறுகண் மறவரைக் "கடுங்கண் சுற்றம்" என்றார். மறுத்த - மறுப்படுத்த; அறுத்த வென்றுமாம். துறக்க வுலகு வாராவுல கெனப்பட்டது; எதிர்காலத்தை வாராக் காலம் என்பது போல. நாட்டுக்கழகு தருவது அதன் பெருவளமாதலின், அதனைப் பெருங்கவின் என்றார். மென்புல வைப்பென்றும் பாடமுண்டு. தந்தை கொடானாய், மாறானாய், சினத்தனர்க் கயம்புக்கனன்; குரிசில், நானை ஆகுதல் ஒன்று, புகுதல் ஒன்று எனப் படை தொட்டனன், இத்தண்பணையூர் கவின் இழப்பது கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: ஒருவர்பாலுள்ள அரிய பொருளொன்றினைப் பெற விரும்பும் பிறர், உடையாரை வேண்டிப் பெறுவது முறை; விலை வரம் பிட வியலாததாயும், அவர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுவதாயுமிருப்பின் அப் பொருளைப் பிறர் இரந்து குறையுத்துத் தரப் பெறுவது வழுவாகாது; அதனால் அன்ன தன்மையளான் மனளைப் பெற விரும்பிய பிறனொரு வேந்தன் குறையுற்றுக் கேட்டான் என்பார், "வேந்து குறையுறவும்" என்றும், கொடைக்குரிய மரபினையுடைய தந்தை கொடை மறுத்தான் என்பார், "கொடாஅன்" என்றும் கூறினார், வேந்தன் விழைந்த மகளை, தழையணிந்தியலும் அல்குலும் சிலம்பணிந்து பொலியும் இளமையும் உடையளெனச்சிறப்பித் தோதுதலின், தந்தை ஒருகால் தன மகளது இளமை கூறிக் கொடை மறுத்தான்போலும் என எண்ணற்கிடமுண்டாகிறது. மாற்றம், மாறுபட்டுரைக்கும் சொல்; இது வங்சினம் கூறுவது; போரிடையே எதிர்நின்று பொரும் வீரர் மாறுபட்டுரைக்கம் சொற்களுக்குத் தானும் மாறுபட்டுரைக்கும் உரையெனினும் அமையும். மாற்றம் மாறாமைக்குக் காரணம் மிக்க சினம் என்றற்கு "மறலிய சினம்" எனப்பட்டது. போர்க்குச் செல்லும் மறவர் நீராடி மாலையணிந்து ஒப்பனை செய்து கொண்டேகுவது மரபு. "மூதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பி னொண்குழை மலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் காண்க. ஒன்று மணமனை புகுதல், ஒன்று வாராவுலகம் புகுதல் இரண்டனுள் ஒன்று செய்தல் வேண்டுமென்ற உறுதியுடன் படையைக் கையேந்தினனென்றது மகட்கொடை வேண்டிய வேந்தனது துணிபு. இதனால் கடும்போர்நிகழ்தல் ஒருதலை யென்பதும், அதனால் உயிர்க்கேடும் பொருட்கேடும் உண்டாதல் தேற்றமென்பதும், கண்டு ஆசிரியர் இத் தண்பணையூர் "பெருங்கவின் இழப்பது கொல்லோ" என இரங்கினார்.
---------

342. அரிசில் கிழார்

மறக்குடியில் தோன்றிய தமிழ்மகள் ஒருத்தியின் நலங்கண்டான் ஒருகாளை, அவளை மணந்துகொள்ள விரும்பிச் சான்றோராகிய அரிசில் கிழாரைக் கண்டு உசாவினன். அவர் அவனது பெருவிதுப்புணர்ந்து "நெடுந்தகாய்! இவள் திருநயத்தக்க செவ்வியும் பண்பும் உடையளே. ஆனால், இவளுடைய தந்தை ஒரு தண்பணைக்கிழவன்; இவளை மணத்தல்வேண்டி வேந்தர் பலர் முயன்று இவளைப் பெறாராய்ப் பொருது தோற்றோடினர். போரிற் பலரைக் கொன்று குவித்த பெருமாட்சியுடையர் இவள் உடன் பிறந்தோர். நீ இதனையறிந்து செய்வன தேர்ந்து செய்வாயாக" என இப் பாட்டால் அவனைத் தெருட்டுகின்றார்.

    கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
    மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
    ஏனோர் மகள்கொ லிவளென விதுப்புற்
    றென்னொடு வினவும் வென்வே னெடுந்தகை
    திருநயத் தக்க பண்பினிவ ணலனே         5
    பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே
    பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்னை
    மென்சேற் றடைகரை மேற்ந்துண் டதற்பின்
    ஆர லீன்ற வையவி முட்டை
    கூர்ந லிறவின் பிள்ளையொடு செறூஉம்         10
    தண்பணைக் கிழவனிவ டந்தையும் வேந்தரும்
    பெறாஅ மையிற் பேரமர் செய்தலிற்
    கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா
    வாடக வைகலு முழக்கும்
    மாட்சியர் மற்றிவ டன்னை மாரே.         15
    -------

திணையும் துறையும் அவை. அரிசில்கிழார் பாடியது.

உரை: கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும் - காட்டுக் காக்ககையின் தழைத்த சிறகையொத்த; மயிலைக் கண்ணிப் பெருந்தோள் குறுமகள் - இருள்வாசிப்பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்; இவள் ஏனோர் மகள்கொல் என விதுப்புற்று - இவள் மறப்பண்பில்லாத பிறருடைய மகளாவாள்போலும் எனக் கருதி வேட்கையால் விரைவுற்று; என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை - என்னைக் கேட்கும் வெற்றிபொருந்திய வேலையுடைய நெடுந்தகையே; திரு நயத்தக்க பண்பின் இவள் நலன் - திருமகளும் விரும்பத்தக்க நற்பண்புடைய இவளது நலம்; பொருநர்க்கல்லது பிறர்க்கு ஆகாது – போர் மறவர்க்குரியதேயன்றிப் பிறருக்கு எய்துவதரிது, பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை - பசிய காலையுடைய கொக்கினது அகன்ற வாயையுடைய குஞ்சு; மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்- மெத்தென்ற சேறு பொருந்திய அடைகரையில் மேயும் மீன்களை மேய்ந்துண்டபின்; ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - ஆரல்மீன் ஈன்ற ஐயவிக் கடுகு போன்ற முட்டையையும்; கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்- மிகவும் நல்ல இறாமீனின் குஞ்சுகளையும் தாய் தரப் பெற்றுண்ணும்; தண்பணைக் கிழவன் இவள் தந்தைமயும் - தண்ணிய மருதநிலத்தூர்களுக்குத் தலைவனாவன் இவளுடைய தந்தையும்; இவள் தன்னைமார் - இவளு டைய உடன்பிறந்தோர்களும்; வேந்தரும் பெறாமையின் - வேந்தர்களும் தாம் மகட்கொடை பெறாமையால்; பேரமர் செய்தலின் - பெரிய போரைச் செய்தலால்; கழிபிணட்ம பிறங்கு அழிபோர்பு -போரிற் கழிந்தோருடைய பிணக்குவியல் உயர்ந்தவைக் கோற்போராகவும், களிறு அழி எருதா - களிற்றியானைகள் வைக்கோலை மிதித்தொதுக்கும் எருதுகாளகவும்; வாள் தக - தமது வாளாண்மைக்கேற்ப; வைகலும் உழக்கும் மாட்சியர் - நாடோறும் வாளுழவு செய்யும் மாண்புடையராவர்; எ - று.

காட்டுக் காக்கை. கள்ளிக் காக்கையெனவும் வழங்கும் மறமாண் புடைய தந்தை தன்னையரை எடுத்தோதுதலின், அஃதில்லாரை "ஏனோர்" என்றார். வேட்கை மிகுதியால் உள்ளத்தெழும் விரைவுத் துடிப்பு, விதுப்பெனப்படும்; அது கட்பார்வையிலும், சொற்செயல்களினும் மெய்ப்பட்டுத் தோன்றும் உருவும் குணமும் தொழிலும் அகப்படப் "பண்பு" என்றார் பொருநர், மறக்குடிப்பிறப்பும் பேராண்மையும் உடையராய், அவற்றால் பிறர்க்கு உவமமாகும் உயர்ந்தோர். ஐயவிபோலும் முட்டையை ஐயவி முட்டையென்றார். மகட்கொடை வேண்டியெழுந்த வேட்கை அது பெறாவழி வெகுளியாய் மாறிப் போர் செய்தற்கண் செலுத்தலின், "பெறாயைின் பேரமர் செய்தலின்" என்றார். நெடுந்தகை,இவள் நலன், அல்லது, ஆகாது; தந்தையும் கிழவன்; தன்னையார் மாட்சியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று: அசைநிலை.

விளக்கம்: இருள்வாசிப் பூவினை இருவாட்சி யென்பதும் வழக்கு. இப்பூ இரவில் மலர்வது. இப் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியணிந் திருக்குமாறு தோன்ற, "மயிலைக் கண்ணி பெருந்தோட்குறுமகள்" என்றார். தோள் பெருத்திருத்தல் மகளிர்க்கு மாண்பு. "அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி" (கலி. 108) என்று சான்றோர் கூறுவது காண்க. கேடபோனுடைய கட்பார்வையில், அவன் அவளை மறப்பண்பில் லாதார் மகள் எனக்கருதும் கருத்துநிலவக் காண்டலின், "ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று வினவும் நெடுந்தகை" யென்றார். விதுப்புறவும், வென்வேல் ஏந்தும் தகைமைவழிப் பிறந்த செருக்கும் அவன் கருத்துக்கு ஏதுவாயின. "திருநயத்தக்க பண்பின் இவள்" என்றது, நீ விரும்புதல் பெரிதன்று என்றவாறு. கொக்கின் பிள்ளை தானே மேய்ந்துண்டதோடமையாது ஆரல் முட்டையும் இறவின் பிள்ளையும் தாய் நல்கப் பெறுமென்றது, தாமாகமற்ம்மிக்கு மறலும் இவள் தன்னமைார் தந்தையால் மிக்க போர்ப் பறிய்சியுடைய ரென்பது குறித்தவாறு.
----------

343. பரணர்

திரு மிக்கதோர் ஊர்த்தலைவனை மகட்கொடை வேண்டிப் பலர் சென்று கேட்டனர். "அறிவு ஆண்மைகளால் ஒவ்வாரை என் மகளாகிய அவள் வரைந்து கொள்ளான்; ஆதலால் நீவிர் மகட்கொடை வேண்டுதலைக் கைவிடுமின்" என்று சொல்லி மறுத்துவிட்டான். இம்மறுப்பு வந்தோர் பலரையும் கீழோராக்கினமையின் அவர் உள்ளத்தே சினங்கொண்டு போர்க்கு ஆயத்தராயினர். அதனையறிந்த சான்றோராகிய பரணர், தந்தையின் மறுப்பால் அவ்வூர்க்குப் போரால் எய்தக் கூடிய துன்பத்தை யெண்ணி இப் பாட்டின்கண் இரங்கிக் கூறுகின்றார்.

    மீனொடுத்து நெற்குவைஇ
    மிசையம்பியின் மனைமறுக்குந்து
    மனைக்குவைஇய கறிமூடையாற்
    கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
    கலந்தந்த பொற்பரிசம்         5
    கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
    மலைத்தாரமுங் கடற்றாரமும்
    தலைப்பெய்து வருநர்க்கீயும்
    புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
    முழங்குகடன் முழவின் முசிறி யன்ன         10
    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
    புரைய ரல்லோர் வரையல ளிவளெனத்
    தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர்
    வாய்ப்பட விறுத்த வேணி யாயிடை
    வருந்தின்று சொல்லோ தானே பருந்துயிர்த்         15
    திடைமதிற் சேக்கும் புரிசைப்
    படைமயங் காரிடை நெடுந லூரே.
    --------

திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

உரை: மீன் நொடுத்து நெல் குவைஇ - மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால்; மனமைிசை யம்பியின் மறுக்குந்து - வீடும்உயர்ந்த தோணிகளும் பிரித்தறியவாராத படி காண்பார் மயங்கச் செய்யும்; மனைக் குவைஇய கறி மூடையால் - மனையிடத்தே குவிக்கப்பெற்ற மிளகு மூடைகள்; கலிச் சும்மைய கரை கலக்குறுந்து - ஆரவாரத்தையுடைய கரையினின்றும் பிரித்தறிவியலாதபடி காண்பார் மயங்கச் செய்யும்; சலந்தந்த பொற்பரிசும் கழித்தோணியால் கரைசேர்க்குந்து - கலங்கள் கொணர்ந்த பொன்னாகிய பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்; மலைத்தாரமும் கடல்தாரமும் தலைப்பெய்து - மலைபடு பொருளும் கடல்படு பொருளும் கலந்து; வருநர்க்கீயும் - இரவலராகிய வரவர்க்கு அளிக்கும்; பு னலங்கள்ளின் - தண்ணீர்போலக் கள்ளை மிகுதியாகவுடைய; பொலந்தார்க் குட்டுவன் - பொன்மாலை யணிந்த குட்டுவனுடைய; முழங்கு கடல் முழவின் முசிறியன்ன - முயங்குகின்ற கடலாகிய முழவையுடைய முசிறி நகரத்தையொத்த; நலஞ்சால் விழுப்பொருள் பணிந்தவந்து கொடுப்பினும்- நலஞ்சான்ற உயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்; இவள் புரையர் அல்லோர் வரையலள் என - அவள் ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாள் என்று சொல்லி; தந்தையும் கொடான் - தந்தையும் கொடுக்கமாட்டான்; ஆயின் - இதனை ஆராயுமிடத்து; வந்தோர் - மகட்கொடை வேண்டி வந்தவர்கள்; பருந்து உயிர்த்துச் சேக்கும் இடைமதிற் புரிசை - பருந்து இளைப்பாறியிருக்கும் இடைமதில் பொருந்திய புரிசையும்; படை மயங்கு ஆரிடை - படை யேந்திய மறவர் நின்று காக்கும் அரி வழிகளையுமுடைய; நெடுநல் ஊர் - நெடிய நல்ல வூரின்கண்; வாய்ப்பட இறுத்த ஏணி - அரண் கொள்ளுதற் பொருட்டு மேலேறுதற்கு வழியுண்டாகச் சார்த்திய ஏணிகள்; வருந்தின்று கொல் - வருந்தும் போலும்; எ - று.

நொடுத்தல், விலைக்கு விற்றல். மீனை நெல்லுக்கு விற்றலின், "மீனொடுத்து நெற்குவைஇ" யென்றார். உயர்ந்த அம்பிகளும் மனனக் கூரைகளும் தம்மில் ஒத்து விளங்குதலின், வேறுபாடறிய இயலாமையின், "மறுக்குந்து" என்றார். உம் உந்தாயிற்று. பழைய வாய்க் கடலிற் செலுத்துதற்காகாது கெட்ட அம்பிகளை நிறுத்தி அவற்றின் மேற் குவித்த நெற்குவையும் ம னைக்கூரையும் வேறுபாடறிய வாராக படிமறுக்கஞ் செய்யுமென வுரைப்பினுமமையும். அவ்வகையில், மிசை நெற்குவை யென இயைத்து மேலே நெல்லைக் குவித்தலாலென வுரைக்க. கறி முடையும் கடற்கரையும் தம்மில் ஒத்துக் காண்பார் காட்சியைக் கலக்கும் என்றற்குக் "கறி மூடையாற் கரைக் கலக்குறுந்து" என்றார். மூடைகளை ஏற்றலும் இறக்குதலும் செய்தலால் ஆரவாரம், உண்மை யுணர்க. பொன்னாகிய பொருள் பரிசமாயிற்று. தாரம் - பண்டங்கள். ஈண்டுக் குட்டுவனென்றது, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனை யென்றறிக. கடல் முழங்கு முழவின் முசிறியென இயைத்துக் கடல்போல் முழங்கும் மழவினைுடைய முசிறி யெனினுமாம். புரைதல், உயர்தலும் ஒத்தலுமாம் வாய்ப்பட - விழயுண்டாக. பருந்துயிர்த்துச் சேக்கும் என்பதைப் பருந்து தங்கி உயிர்க்குமெனக் கொள்ளினுமமையும். உயிர்த்தல், இளைப்பாறுதல். உழிஞைப்போர் நிகழ்தல் ஒருதலையென்பார் "ஏணி வருந்தின்று கொல்" என்றார். அரண் கோடற்குச் சார்த்திய ஏணி அசைவின்றி நிலை பெறத் தாங்குதல்பற்றி "இறுத்த ஏணி" யெனல் வேண்டிற்று. மறவர் பலரும் ஏறிப் பொருதலின், விரைவுதோன்ற "வருந்தின்று கொல்லோ" என இறந்த காலத்தாற் கூறினார், மறுக்கும், கலக்கும், சேர்க்கும் முசிறி, குட்டுவன் முசிறி, முழவின் முசிறியென இயையும்; ஈயும் குட்டுவன் என முடிக்க. கொடுப்பினும், தந்தையும் கொடான். ஊர்க்கண் வந்தோர். இறுத்த ஏணி வருந்தின்று கொல்லோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஏணியை எல்லையாக்கி ஏணிக்கும் ஊர்க்கும் இடையிலுள்ள நிலம் வருந்தின் றென்றுரைப்பினுமாம்.

விளக்கம்: மகட்கொடை நேர்தற்பொருட்டு நலமெல்லாம் நிறைந்த விழுமிய பொருளைக் கொடுப்பினும் இவள் தந்தை கொடான் என்பது கூறவந்த ஆசிரியர், "நலஞ்சால் விழுப்பொருள்" பெறலாகும் இடம் இஃது என்பார், குட்டுவனது முசிறி நகரை விதந்து விரித் துரைத்தார். மீன் விற்போர் ஈட்டிய நெல்லும், மனையவர் தொகுத்துக் கலத்திலேற்றி வெளிநாடுகட்கு விடுதற்குக் கடற்கரையில் தொகுத்த கறி மூடையும், வெளிநாடுகளிலிருந்து கலங்களில் வந்து கரையிற் றொகுக்கப்பட்ட பொன்னும் முசிறி நகரின் நலஞ்சால் விழுப்பொருள் உடைமையை விளக்குகின்றன. கடலில் நிற்கும் கலத்திலிருந்து பொற்பரிசம் கழித் தோணியால் கரைபேரும் என்றாராயினும், கழியாய் ஆண்டுப் பயன்பட்டது கள்ளியாறு எனக் கொள்க. "சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர்தந்த வினைமாணன் கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி" (அகம். 149) எனப்பிறரும் கூறுவது காண்க. குட்டநாடு மலை வளமும் கடல் வளமுமாகிய இரண்டுமே யுடையதாகலின், குட்டுவன், தன்பால் வருவோர்க்கு "மலைத் தாரமும் கடற்றாரமும் தலைப்பெய்து" நல்குவன் என்றார். விழுப்பொருள் கொடுப்போன் "பணிந்து வந்து" கொடுத்தல் வேண்டாவாயினும், அப் பொருளினும் சிறந்தவள் "மகள்" என்பது தேர்ந்தமையும், விழுப்பொருளோடு பணிவு தோற்று விப்பின், தந்தை மகட்கொடைக்கு உடன்படவன் எனவுணர்ந்தமையும் தெரிய நின்றன. "நெடுநல்லூர்" என்று சிறப்பித்தது, அதற்கு உளதாக இருக்கும் கேட்டினை நினைந்தெனக் கொள்க.
-----------

344. அண்டர் நடுங்கல்லினார்

இவர் பெயர் அடை நெடுங்கல்லினாரென்றும், அண்டர் நடுங்கல்லியார் அடை நெடுங் கல்லியாரென்றும் காணப்படுகிறது. இப் பாட்டு இடையிற் சில அடிகள் சிதைந்துள்ளது. அதனால் பொருள் முடிவு தெளிய விளங்கலில்லை. திணையும் துறையும் முன்னைப் பாட்டுக்களி்லுள்ளனவே என்பதனால், மகட்கொடை பற்றியது இப்பாட்டு என்று அறியலாம். கொடை நேர்ந்தவழி மகளைப்பெற்ற தந்தை மிக்க பொருளும் மருத நிலத்தூர்களும் தரப்பெறுவனென்பதும், நேராது மறுத்தவழிப் போர்தோன்றி ஊரை யழிக்கு மென்பதும் உணரப்படுகின்றது.

    செந்நெ லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை
    செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து
    துறைநணி மருதத் திறுக்கு மூரொடு
    நிறைகால் விழுப்பொரு டருத லொன்றோ
    புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து         5
    பண்பி லாண்மை தருத லொன்றோ
    இரண்டினு ளொன்றா காமையோ வரிதே
    காஞ்சிப் பணி மறி யாரங் கண்ணி...
    கணிமே வந்தவா ளல்குலவ் வரியே.
    ---------

திணையும் துறையு மவை. அண்டர் நடுங்கல்லினார் பாடியது.

உரை: செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை - செந்நெற்கதிர் களை யுண்ட பசிய சிறகையுடைய மயில்; செறிவளை மகளிர் ஒப்பலின் - செறிந்த வளையணிந்த இளமகளிர் ஒட்டுவதால்; பறந்தெழுந்து - பறந்து சென்று; துறைநணி மருதத்து இறுக்கும் ஊ ரொடு - துறைக்கணித்தாக நிற்கும் மருதமரத்தில் தங்கும் ஊர்களுடனே; நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்று - நிறையமைந்த விழுமிய பொருள்களைக்கொணர்ந்து தருவது ஒன்று, பகைசெய்து புகைபடு கூர் எரி பரப்பி - பகைமை மேற் கொண்டு புகையெழும் மிக்க தீயானது ஊர்களிற் பரந்தெரியக் கொழுவி; பண்பில் ஆண்மை தருதல் ஒன்று - அருட் பண்பில்லாத மறச் செயல் செய்வது ஒன்று; இரண்டனுள் ஒன்றாகாமை அரிது - இவ்விரண்டினுள் ஒன்று உளதாதல் ஒருதலை; காஞ்சிப் பனிமுறி ஆரம் கண்ணி - காஞ்சியினது குளிர்ந்த தளிருடனே - ஆத்திப்பூவை விரவித் தொடுத்த கண்ணி .... கணி மேவந்தவள் - வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய; அல்குல் அவ்வரி - அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்; எ - று.

இப் பாட்டில் சில அடிகள் சிதைந்து போனமையின் பிற்பகுதியின் பொருணிலை விளங்கவில்லை. செறிவளை மகளிரெனவே இளையவ ரென்பது பெறுதம். நீர்த்துறைத் கணிமையில் மருதம், நிற்கும் "துறைநணி மருதமேறி" (பதிற். 27) என்றும். "மருதிமிழ்ந் தோங்கிய பெருந்துறை" (பதிற். 23) என்றும் சான்றோர் விளம்புதல் காண்க. நிறுக்கப் படும் பொன்னும் பொருளும் அடங்க "நிறைசால் விழுப்பொருள்" என்றார். பெண்ணின் நிறையளவு பொன்னும் நிறுத்துத் தரப்படும் என அறிக; பண்பில் ஆண்மையாவது, மக்கட் பண்பாகிய அருளும் அறமும் இன்றிக் கொலை விலங்குபோல உயிர்க்கட்குத் தீமை தருவது. இஃது இழித்தக்கதாயினும் மேற்கொண்டு செய்யப்டுமென்பார், "பண்பிலாண்மை தருதல் ஒன்றோ" என்றார; ஒரு மகளைக் கொள்வோன், அவளுடைய தந்தை தன்னையரைக் கொன்று, அவள் பிறந்த வூரையும் மனையையும் தீக்கிரையாக்கிக் கோடல் பெரியதொரு பண்பில் செயலாதலின், அதனைத் தனக்கு ஆண்மையாக மேற்கொண்டு செய்தல், பண்பிலாண்மையாதல் காண்க. ஆர், ஆத்தி; அஃது அம்முப் பெற்று ஆரம் என வந்தது. முலை முற்றத்தணிந்த சந்தனக்குழம்பு புலர்வது குறித்து வேங்கையின் நுண்ணிய தாதினை அப்பிக்கொள்வதில் இளமகளிர்க்கு விருப்பு மிகுதியாதல்பற்றி, "வேங்கை மேவந்தவள்" என்றார். வேங்கை மரத்திலிருந்து பூப்பறித்து விளையாடும் விருப்பமுடைமை தோன்ற இவ்வாறு கூறினாரெனினுமையும். மேவருதல், விரும்புதல்; முறி - தளிர்.

விளக்கம்: செறிவளை மகளிர், மனையுறையும் பெண்டிர், இவர்கள் தாம் உணக்கிய நெல்லை மயில் கவர்ந்துண்ணுமிடத்து அதனைக் கடிவர்; அக்காலை மயில் பறந்து சென்ற நீர்த்துறையிடத்து நிற்கும் மருதமரத்தில் தங்கும் என்றது, அவ்வூரிடத்து இளமகளிரை விரும்பும் இளையர் கொண்டுதலைக்கழிதல் முதலிய களவுத்துறையில் ஈடுபடவியலாவண்ணம் காவல் மிக வுடையரென்று கூறியவாறாம். ஆகவே அவர்கள் விழுப்பொருள் தருவதோ; அன்றி பண்பிலாண்மை தருவதோ இரண்டினுள் ஒன்றைச் செய்தலல்லது விரும்பும் மகளிரைப் பெறலாகாதென்பது வலியுறுத்தப் பட்டது. செந்நெல் பைந்தோடு உண்ட மஞ்ஞை யென மாறியியைத் துரைப்பினும் அமையும். அகன்ற அல்குலிடத்து வரிபரந்திருத்தல் அழகு. அதனாற்றான், "அல்குல் அவ்விரி" யென்றார. அல்குல், இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகும்.
----------

345. அண்டர் நடுங்கல்லினார்

மறக்குடித் தலைவன் ஒருவன் மகள் திருமணத்துக்குரிய செவ்வி யெய்தியிருந்தாளாக, அவளை நயந்து மகட்கொடை வேண்டிச் சீறூர் வேந்தரும் பேரூர் வேந்தருமாகிய பலர் அவள் தந்தைபால் வந்தனர். அவர்களை "நிரலல் லோர்க்குர் தரலோ இல்" என்று கூறி மறுத்தான். அவள் தந்தை உற்றார்க்கு ரியர் பொற்றொடி மகளிர் என்பது கொண்டு யாவரேனும் ஒருவர்க்கு மகட்கொடை நேரச் சமைந்தானாயினும், அவளுடைய தன்னையர் மகள் வேண்டி வந்தோரது நிரலுடைமையைக் கூர்ந்து நோக்கும் குறிக்கோள்கொண்டு மகட்கொடை மறுத்தலில் முற்பட்டிருந்தனர். மகட்கொடை வேண்டி வந்தோர் பெரும் பொருள் நல்குவதாகக் கூறியவழியும் நிரலுடைமை நோக்கி மறுப்பதே அத் தன்னையர் செய்தனர். இது கண்டார் சான்றோராகிய அண்டர் நடுங்கல்லினார். வந்த வேந்தர்களின் பெருமையும் தன்னையரின் தறு கண்மையும் இவர்களாற் போர் நிகழ்ந்தவழி அவ்வூர்க்குள தாகும் தீமையும் தூக்கி நோக்கி இப் பாட்டால் இரங்கிக் கூறகின்றார்.

    களிறணைப்பக கலங்கின, காஅ
    கேரோடத் துகள்கெழுமின, தெருஅ
    மாமறுகலின் மயக்குற்றன, வழி
    கலங்கழா அலிற், றுறை கலக்குற்றன
    தெறன்மறவ ரிறைகூர்தலிற்         5
    பொறைமலிந்து நிலனெளிய
    வந்தோர் பலரே வம்ப வேந்தர்
    பிடியுயிர்ப் பன்ன கைகவரிரும்பின்
    ஒவுற் ழிரும்புறங் காவல் கண்ணிக்
    கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை         10
    மைய னோக்கிற் றையலை நயந்தோர்
    அளியர் தாமேயிவ டன்னை மாரே
    செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
    நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
    கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்         15
    குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
    கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
    இன்ன மறவர்த் தாயினு மன்னோ
    என்னா வதுகொ றானே
    பன்னல் வேலியிப் பணைநல் லூரே.         20
    ----------

திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

உரை: தெறல் மறவர் இறை கூர்தலின் - பொருதலை யியல் பாகவுடைய மறவர் வந்து தங்குதலால்; கா களிறு அணைப்புக் கலங்கின - காவிலுள்ள மரங்களில் களிறுகளைக் கட்டுவதால் அவற்றால் திமிரப்பட்டு நிலைகலங்கின; தேர்ஒட தெருவு துகள் கெழுமின்- தேர்கள் செல்லுவதால் தெருக்கள் புழுதியால் நிரம்பின; மா மறுகலின் வழி மயக்குற்றன - குதிரைகள் சாரி போவதால் வழிகள் உருத்தெரியாது மறைந்தன; கலம் கழாஅலின் துறை கலக்குற்றன - படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த் துறைகள் குழம்பிவிட்டன; பிடி உயிர்ப்பன்ன கைகவர் இரும்பின் - பிடியானை உலைத்துருத்தியின் வாயிரும் புபோலும்; ஓவுறழ் இரும்புறம் - இரட்டைக் கதவமைந்த சுருங்கை வழி; காவல் கண்ணி - காக்கப்படுவது கருதி; வம்ப வேந்தர் - புதியரான வேந்தர்கள்; பொறை மலிந்து நிலன் நெளிய - சுமை மிகுவதால் நிலமும் சுளியும் படியாக; வந்தோர் பலர் - வந்தவர் பலராவர்; கருங்கண் கொண்ட நெருங்கால் வெம்முலை - கரிய கண்ணையுடைய நெரங்கிய விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும்; மையல் நோக்கின் கண்டார்க்குப் பேதுறவு விளைக்கும் பாார்வையினையு முடைய; தையலை நயந்தோர் அளியர் - பெண்ணை விரும்பியவர்கள் அளிக்கத்தக்கவராவர்; இவள் தன்மையார் - இவளுடைய அண்ணன் மாராகிய உடன் பிறந்தோர்; நிரல் அல் லோர்க்குத் தரலோ இல்லென - குடிமை ஆண்மை முதலியவற்றால் ஒவ்வாதாருக்குத் தருவதில்லை யென்று சொல்லி; செல்வம் வேண்டார்-மகள் வேண்டினோர் தரும் செல்வத்தை விழையாராய்; செருப்புகல் வேண்டி - போர் செய்வதையே விரும்பி; கழிப்பிணிப் பலகையர் - கழிகளாற் பின்னிக் கட்டப்பட்ட கேடயத்தையேந்தி; கதுவாய் வாளர் - வடுவினைச்செய்யும் கூரிய வாயையுடைய வாளேந்தி; குழாம் கொண்ட குருதியம் புலவொடு - கூட்டம் கொண்ட குருதி நாறும் புலால் நாற்றத்துடனே; கழாத்தலையர் - கழுவாத தலையுடையராயுள்ளனர்; கருங்கடை நெடுவேல் - வலிதாய்க் கடையப்பட்ட காம்பினையுடைய நெடுவேலேந்தும்; இன்ன மறவர்த்தாயினும் - இத்தகைய வீரர்களையுடையதெனினும்; அன்னோ - ஐயோ; பன்னல் வேலி பருத்தி வேலி சூழ்ந்த; இப் பணை நல்லூர் - இந்த வளவயல் சூழ்ந்த நல்ல வூர்; என்னாவது கொல் - என்ன வாகுமோ, தெரிந்திலதே; எ - று.

இறுத்தல் இறையென வந்தது. இறை கூர்தல் என்ற தொடர் ஒரு சொல்லாய்த் தங்குதல் என்னும் பொருள் குறித்துநின்றது. கா கலங்கின; தெரு துகள் கெழுமின், வழி மயக்குற்றன, துறை கலக்குற்றன, காவல் கண்ணி வந்த வம்ப வேந்தர் பலர்; தன்னைமார், வேண்டி, வேண்டாராய், பலகையராய், வாளராய், கழாத்தலையராயுள்ளனர்; இன்ன மறவர்த்தாயினும், நல்லூர் என்னாவது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கன்னி மாடத்துச் சுருங்கையாயினும் ஓவிய வேலைப்பாட்டால் மிக்கதென்பார். "ஓவுறழ் இரும்புறம்" என்றார். ஓவுறழ் இரும்புறம் என்றதற்குக் கதவுநின்றியங்கும் இரும்புறம் எனினுமமையும். சுருங்கை தூம்பு போறலின், அதன் கதவினை ஒவென்றாரென்று கொள்க. இரும்பின் இடையே கைவிரல் நுழைந்து கோத்துப்பிடி இயக்கப்படுவதுபற்றி, "கைகவர் இரும்பு" எனல் வேண்டிற்று. கைகவர் இரும்பின் இரும்புறம், ஓவுறழ் இரும்புறம் என இயையும். மையல் நோக்கு, காமச் செவ்வி தோன்றியது புலப்படுத்தும் நோக்கமென்றுமாம். தையல், ஒப்பனை செய்யப்டுபவள். கதுவாய் வாள், போரிற் பகைவரைத் தாக்கி வாய் மடிந்த வாள் என்றுரைப்பினுமமையும். வயிரமேறிய மரக்கடையைக் கடைந்த காம்பு கரிதாகலின், "இருங்கடை நெடுவே" லெனப்பட்டது. வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கில் எப்போதும் நிற்பனவல்லவாதலின், "இன்ன மறவர்த் தாயினும் என்னாவது கொல்" என்றும், போர்விளைவு கருதியிரங்குதலின், அன்னோ என்றும் கூறினார். "செல்வம் வேண்டார்" என்றதனால், செல்வமுடைமை நிரலுடைமைக்கு உறுப்பாகக் கொள்ளப் படாமை விளங்குகிறது.

விளக்கம்: தையலை நயந்துவந்த வம்ப வேந்தர் பலர்; அவர் வருங்கால் களிறும் மாவும் தேரும் உடன் வருதலால், களிறு முதலியவற்றால் முறையே காவும், தெருவும், வழியும், துறையும் கலங்கிப் பொலிவழிந்தன; மகள் வேண்டி வரும்போதே இவ்வூர்த் தெருவும் பிறவும் இன்ன கலக்க மெய்துமாயின், இவர்கள் போர்குநித்து வரின், இம் மகளுடைய தந்தை தன்னையாரின் களிறும் மாவும் தேரும் மறவர் தொகையும் உடன் கலந்து இயங்குமாதலால் இவ்வூரது நிலை சொல்லற்கரிய கலக்கமெய்து மென்பது தெளிய விளங்குவது கண்டு, "என்னாவது கொல்" என்றும், இவளுடைய தன்னையர் பலகையரும் வாளரும் தலையருமாதலால், இவ்வூர் கலக்கமெய்தாவாறு காக்கப்படுமன்றோ வெனின் காக்கப்படுமென்பது தெளிவேயெனினும், அதனையும் பொருதே செய்யவேண்டியிருத்தலின், "இன்ன மறவர்த் தாயினும்" என்றும் கூறினார். இதனையும் விலக்கலா மெனினும், தன்னையர் மகட்கொடை வேண்டி வந்த வேந்தர் நிரல் நன்குடையரல்லரென்றும், அவர் தரும் ெ்சல்வத்தைப் பெற்றுத் தம்முடன் ஒப்பக் கோடற் கொருப்படுகின்றிலரென்றும் விளக்குவாராய், "நிரல் அல்லோர்க்குத் தரலோ வில்லெனச் செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டின" ரென்றார். நிரல் என்பதன் இயல்பை, "இளமையும் வனப்பும் இல்லொடு வரவும், வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும், தேசத்தமைதியு மாசில் சூழ்ச்சியோ, டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது, மகட்கொடை நேரார் மதியோர்" (பெரங். 1:26:89-93) என்று பிறரும் கூறுவதனால் அறிந்துகொள்க. மகட்பாற் காஞ்சிக்கு இதனைக் காட்டி, "நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென வென்றலின், அரவர்க்கு மகட்கொடைக்குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற் பட்ட" தென்பர் நச்சினார்க்கினியர்; (தொல், புறத். 24),
---------

346. அண்டர் மகன் குறுவழுதியார்

இக் குறுவழுதியார் அண்டர் நடுங்கல்லினார்க்கு மகனார்போலும். பாண்டிவேந்தர்க்கீழ் விளங்கிய தானைத்தலைவர்களும் ஏனைத் தலைவர்களும் பாண்டிவேந்தர் சிறப்புப் பெயர்களுட் சிவவற்றைத் தாமுமி கொண்டிருந்தனர். இதனை இடைக்காலச் சோழ பாண்டியர்களின் கல்வெட்டுக்களிற் காணலாம். சடையவன்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று. (P. S. No. 492) ஒரு தலைவன் பெயரைச் சுந்தரபாண்டிய வாணாதிராயர் என்று குறிப்பது காணலாம். ஆதலால், இருவரும் குறுவழுதி யென்ற பெயருடையராயினாரெனக் கருதலாம். பாண்டியர்க்குப் பெருவழுதி யென்ற பெயருண்டு; சிறு வழுதி யென்றலினும் குறுவழுதி யென்பது சிறப்புடையதாதலின் இவர் குறுவழுதி யெனப்பட்டனர். இவர் பாடியனவாக அகத்தில் இரண்டு பாட்டுக்களும் குறுந்தொகையில் ஒரு பாட்டும் காணப்படுகின்றன. கருப்பொருள்களில் நெய்தலையும் உரிப் பொருளிற் குறிஞ்சியையும் இவர் பெரிதும் விரும்பிப் பாடுவர். இவர் மறக்குடி யொன்றில் தோன்றி மனச்செவ்வி யெய்திய மகளொருத்தியை நயந்து பலர் மகட்கொடை வேண்டி நின்றதும், அவளுடைய தந்தையும் தன்னையரும் மறுத்ததும் கண்டு. போர் நிகழ்தல் ஒருதலை யென்றும், அதனால் அவ்வூர் பெரும்பாழாம் என்றும் நினைந்து இப் பாட்டால் வருந்திக் கூறுகின்றார்.

    பிறங்கிலை யினியுள பாலென் மடுத்தலின்
    ஈன்ற தாயோ வேண்டா ளல்லள்
    கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅன்
    ஒவ்வே னல்ல னதுவா யாகுதல்
    அழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற்         5
    பேணுநர்ப் பெறாஅது விளியும்
    புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே.
    ----------

திணையும் துறையு மவை. அண்டர்மகன் குறுவழுதியார் பாடியது.

உரை: பிறங்கிலை இனி உளபால் என மடுத்தலின் - பசி தீரு மளவறியும் அறிவால் நீ முதிர்ந்தாயில்லை இனியும் சிறிது பாலுளது உண்க என - வள்ளத்தை வாயில்வைத்து உண்பித்தலால்; ஈன்ற தாய் வேண்டாள் அல்லள் - இவளை மீன்ற தாயும் இதனை விரும்பாதாளல்லள்; வல்லாண் சிறாஅன் கல்வியென் என்னும்-வல்லாண்மைமயுடைய இளையனாகிய இவள் தமையன் சிறிது கல்வியறிவுடையேன் என்று சொல்ாநின்றான்; ஒள் வேல் நல்லன் - ஒள்ளி வேலேந்திப் பொருதலில் நல்ல வீறுடையன் இவட்குத் தந்தை; அழிந்தோர் அழிய - பகைவரொடு பொருது கெட்டோர் ஒழிய; ஒழிந்தோர் ஒக்கல் - கெடாது மேம்படுவோர்க்கு உரிய சுற்றமாய்த் தலையளிசெய்வன்; இவள் நலன் - இவளது நலமோ எனின்; பேணுநர்ப் பெறாது விளியும் - விரும்புவோர் இல்லாது கெடும்; புன்றலைப் பெரும்பாழ் செய்யும் - புல்லிய இடமாகிய பெரிய பாழிடமாக இவ்வூரைச் செய்யும்; அது ஆகுதல் வாய் - அஃது உண்மையாதல் ஒருதலை; எ - று.

நீ உண்டற்குரிய பாலின் அளவை அறியும் அறிவு நிரம்பினாயில்லை; இன்னும் சிறிது பால் உளது; இதனை உண்க. எனப் பரிந்துண்பித்தலால், ஈன்ற தாய்க்கும் இவள்பால் பேரண்பு உண்டு என வற்புறுத்தி யவாறு. பெருங்கல்வியுடையார்க்கல்லது "யானும் சிறிது கல்வியுடையே" னென்னும் பணிந்த மொழி பகரும் பண்பு உண்டாகாதாகலின், இவள் தமையனும் இவள்பால் மிக்க அன்பு செய்பவனாதல் விளங்குகிறது. இவ்வாறு தாயும் தமையனும் அவர் வாயிலாக ஊரவரும் தன்பால் பேரன்புடைவராகவும், இவளது நலம் இவரனைவரும் கெட ஊர் பாழ்பாடச் செய்வதாயிற்றென இரங்குவது தோன்ற, "பேணுநர்ப் பெறாது விளியும், புன்றலைப் பெரும்பாழ் செய்யும் இவள் நலன்" என்றும், இஃது ஒருதலை காண்க. என்பார், "அதுவாயாகுதல்" என்றும் கூறினார். இவள் நலம் பெரும்பாழ் செய்யும்; அஃதொருதலை அதனைப் பின்னர்க் கண்டுகொள்க என்பது குறிப்பெச்சம். சிறா அனென்றது, தமையன் மேனின்றது.

விளக்கம்: சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது போலச் சிறிதள விற்றாகிய பால் சிலவெனப்படுவதுபற்றி உளபால் எனப் பன்மைவினை கூறப்பட்டது. ஈன்ற தாயது அன்பும், சிறாஅன் எனவே தந்தையாயிற்று. இனி, தாயையும் உடன்பிறந்தானையும் கூறலின். தந்தை முன்பே இறந்தொழிந்தானென்னும், வல்லாண் சிறான், ஒழிந்த தாய்க்கும் உடன் பிறந்தார் சுற்றத்தார் முதலியோர்க்கும் ஒக்கலாய் நின்ற பேணுகின்றா னென்றும் உரைப்பினுமமையும். ஒவ்வானல்லன் அதுவாயாகுதல் என்று கொண்டு புரையரல்லோர்க்கு இவளை மகட்கொடை நேர்தற்கு உடன்படுவானல்லன்; அஃது உண்மையாதல் காணப்படும் என்று உரைத்தலுமாம். இவள் நலங் குறித்து நிகழவிருக்கும் போரில், கெட்டு அழிபவர் அழிய, இறவாது எஞ்சுவோர்க்கு ஒக்கலாய் நின்று பேணுவார் ஒருவரும் இலராமாறு இவ்வூர் பெரும் பாழாகும் எனினுமாம்.நல்ங்காரணமாக நிகழும் போரால் விளையும் செயலை நலத்தின்மேலேற்றிக் கூறினார். தாய் அன்புடையள்; தந்தை ஒக்கல்; உடன்பிறந்தான் கல்வியென் என்னும்; மகள் அன்புடையள்; தந்தை ஒக்கல்; உடன்பிறந்தான் கல்வியென் என்னும்; மகள் நலன் பெரும்பாழ் செய்யும் என அவரவர் கூறுபாடும் வகுத்துரைத்தவாறு.
---------

347. கபிலர்

மகட்கொடை வேண்டிய வேந்தர் போந்து தம் போர்யானைகளைக் காவிலுள்ள மரங்களிற் பிணித்திருப்ப, தந்தை மகள் மறுக்கும் கருத்தினைாய் இருத்தலைக் கபிலர் கண்டார். அவனது மறுப்பால் போர் நிகழுமெனக் கருதிய கபிலர் தந்தை மகட்கொடை நேரானாயின், இவ்வூர் போரால் வருந்துவது ஒருதலை; இவ் வேந்தருடைய யானைகள் பிணிக்கப்பட்டிருக்கும் மரங்கள் பருத்த அரையையுடையவாயினும், யானைகளின் வலிக்கு ஆற்றாது துளங்குவனவாயின, ஆகவே, இவ்வூரும் பெருவருத்தம் எய்தும் போலும் என இரங்கி இப் பாட்டைப் பாடியுள்ளார்.

    உண்போன் றானறுங் கள்ளி னிடச்சில்
    நாவிடைப் பஃறேர்பு கோலச் சிவந்தாங்
    கொளிறொள் வாளடக் குழைந்தபைந் தும்பை
    எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின்
    மணநாறு மார்பின் மறப்போ ரகுதை         5
    குண்டுநீர் வரைப்பிற் கூட லன்ன
    குவையிருங் கூந்தல் வருமுலை சேப்ப
    ..............................
    வென்னா வதுகொ றானே நன்றும்
    விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்         10
    வினைநவில் யானை பிணிப்ப
    வேர்துளங் கினநம் மூருண் மரனே.
    ---------

திணையும் துறையு மவை. கபிலர் பாடியது.

உரை: உண்போன் தான் நறுங்கள்ளின் சில இட - நறிய கள்ளளையுன் பவன் அதற்குத் துணையாக்ச சில வெஞ்சனங்களை அதன் கண் இட்டுண்ணுகையில்: பல் இடை நா தேர்பு கோல சிவந்தாங்கு - பற்களின் இடையே ஒட்டிக்கொண்டவற்றை நாவை அவற்றின் இடையில் தொடுத்துத் தேர்ந்து பல்லால் அரைபடுமாறு செலுத்துவதால் நாச் சிவப்பேறினாற்போல: ஒளிறு ஒள் வாள் அட - சிவந்த ஒளிபொருந்திய வாள் எதிரேற்ற பகைவரை வெட்டுதலால்: குழைந்த பைந் தும்பை – சாம்பிய பசிய தும்பை மாலையினயைும்; எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - பகைவரை யெறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்; மணநாறு மார்பின் - சந்தனத்தின் மணங் கமழும் மார்பினையுமுடைய; மறப்போர் அகுதை - மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை யென்பானது; குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்ற; குவை இருங் கூந்தல் - குவிந்த கரிய கூந்தலையுடையவளை; வருமுலை சேப்ப-தோன்றுகிற இளமுலை சிவக்கும்படி; .............; நம் ஊருள் மரன் - நம்முடைய ஊர்க்குள்ளேயிருக்கும் மரங்கள்; நன்றும் விளங்குறு பராரைய வாயினும் - பெரிதாய் விளங்குதல் பொருந்திய பருத்த அடியையுடைய வாயினும்; வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப - வேந்தர்கள் தம்முடைய போர் வினை பயின்ற யானைகளைக் கட்டுவதால்; வேர் துளங்கின - வேர்கள் தளர்ந்து அசையத் தொடங் கினவாதலால்; என்னாவது கொல் இவ்வூர் என்னாகுமோ எ - று.

கள்ளுண்போர் இடையிடையே கறித்தற்பொருட்டு இ்ஞ்சியும் இறைச்சி வற்றலும் மீனும் தின்ப. அவற்றுட் சில பற்களிடையே புகுந்து கொள்ளின் நாவாற் கோலுதலும், அதனாலும் இயலாதவழித் துரும்பு கொண்டு குத்தி யெடுத்தலும் இயல்பு. இவ்வகையில் பன்முறையும் பல்லிடை நுழைந்து சிவப்பேறுதல் கண்டு, அச் சிவப்பைக் குருதி தோய்ந்து விளங்கும் வாள் வாய்க்கு உவமம் கூறினார். கள்ளுண் போர் இடையே சிலவற்றை யுண்பரெ ன்பதை "இஞ்சி வீவிராய பைந்தார் பூட்டி" (பதிற். 43) என்பதன் பழைய வுரையிற் காண்க. அகுதை யென்பான் சங்கத் தொகை நூல்களில் காணப்படும் வள்ளல்களுள் ஒருவன். பெருங் காற்று மழைகளால் தாக்குண்டும் பல்லாண்டுகளாய்ச் சிலயாது நின்று அடி பருத்திருப்பதால், "நன்று விளங்குறு பராரைய" என்றார். போர் செய்யும் துறையில் நன்கு பயின்ற யானைகளை "வினை நவில் யானை" யென்பது வழக்கு; செறுநர் செல்சமந் தொலைத்த வினை நவில் யானை" (பதிற். 82) எனச் சான்றோர் வழங்குவது காண்க. "ஊருள் மரம் வேர் துளங்கின்" வெனவே, ஊரழிதல் சொல்ல வேண்டாமையின், "என்னாவது கொல்" என்றார். தானே யென்பது கட்டுரைச்சுவை குறித்து நின்றது. இடையே அடிகள் சில சிதைந்தமையின், பொருண்முடிவு விளங்கவில்லை. நறுங்கள்ளின் சில இட, உண்போன், பல்லிடை நாதேர்பு கோலச் சிவந்தாங்கு ஒளிறு வாள் அடக் குழைந்த தும்பையும், வேலும் மார்புமுடையே அகுதையது கூடலன்ன கூந்தலுடையாள் என இயையும். மரன் பராரையவாயினும், வேந்தர் யானை பிணிப்ப, வேர் துளங்கின; ஆகலின், என்னாவது கொல் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: கதுவாய் வேல், முரிந்து வடுப்பட்ட வேல், அகுதையை, "இன்கடுங் கள்ளின் அகுதை" (குறுந். 298) என்றும் "நன்மா வீசும் வண்மகிழகுதை" (அகம். 112) என்றும் சான்றோர் கூறுவதால், அகுதை கள்ளால் சிறப்பெய்தியவனென்பதை இனிது காணலாம். குண்டு நீரென்றது, ஆழ்ந்த நீர் நிறைந்த கடலுமாம். கூடலென்ற பெயர் கொண்டவூர்கள் தமிழகத்திற் பல இருத்தலின், அகுதையின் கூடல் இன்னதெனத் துணிய முடியவி்ல்லை. அகுதை ஒரு வேளிர் தலைவன்; அவன் கோசர்களைத் தன் படைமறவராகக் கொண்டிருந்தான். அவனது நாடு கடற்கரைப் பகுதிசை் சேர்ந்ததென, "குண்டு நீர் வரைப்பு" என இப் பாட்டினும், "நெய்தலஞ் செறுவின் வளங்கெழு நன்னாடு" (அகம். 113) என்று கல்லாடனார் பாட்டிலும் கூறுப்படுதலால். அறிகின்றோம். இவ்வகையில் அகுதையின் கூடல், மேற்காநாட்டுக் கூடல் (A. R. 62 of 1918) என்றும் கூடன்மங்கலம் (S. I. I. Vol. VII No. 757) என்றும் கூறப்படும் கூடலூராகக் கொள் ளலாம். அஃது இப்போது கடலூர் (Cuddalore O.T.) எனப்படும் பேரூராகும்.
-----------

348. பரணர்

மகட்கொடை வேண்டி வந்தோர்க்குத் தந்தையும் தன்னையரும் மகள் மறுத்தமையின், போர் நிகழுமென்பது ஒருதலையாகத் துணியப் பட்டது. வந்தோர் ஊரிடத்தேயுள்ள பெருந்துறைக்கண் தம் களிறுகளைக் கொணர்ந்து ஆங்குள்ள மரந்தோறும் அவற்றை நிறுத்திப் பிணித்தனர்; போர்க்குரிய குறிப்புக்கள் தோன்றியதும் களிறுகள் மரங்களை யீர்த்துச் சவட்டத் தலைப்பட்டன. இது கண்ட சான்றோராகிய பரணர் இ்ந்த மகள் பொருளாகவன்றோ இவ்வூரின்கட்போரும், அதனால் ஊர்க்குக் கேடும் உண்டாகவிருக்கின்றன. இவளை இவளுடைய தாய் பெறாதிருப்பாளாயின் நன்றாம்; பெற்று வளர்த்து விட்டமையின் அது கழிந்தது என இரங்கிக் கூறுவாராயினர்.

    வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
    கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
    கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்
    மீன்சீவும் பாண்சேரி
    வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன         5
    குவளை யுண்க ணிவளைத் தாயே
    ஈனா ளாயின ளாயி னானாது
    நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
    வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே.         10
    ----------

திணையும் துறையும் மவை. பரணர் பாடியது.

உரை: வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண்ணெல்லை யறுக்கும் தொழுவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை கேட்டஞ்சி;கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் நீங்கியதனால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர் சேரியும்; சிறு சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களைப் பிடித்துண்ணும் பாண் சேரியுமுடைய; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன - தப்பாத மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப்போன்ற; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும், செந்நுதல் யானை பிணிப்ப - சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்துறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ - று.

நெற்கதிர் முற்றிய வயலில் பல்வகைப் புள்ளினங்கள் கூடு கட்டி வாழுமாதலின், அறுவடைக்காலத்தில் அவை ஊறின்றி நீங்குதல் குறித்து நெல்லரியுந் தொழுவர் தொடக்கத்தே தண்ணுமை இசைப்பது பண்டை மரபு. வயலருகே நின்ற தெங்கு முதலிய மரங்களின் மடலிற் கட்டிய அதன் கூட்டினின்றும் தேனீக்கள் தண்ணுமையோசை கேட்டஞ்சி நீங்கிவிடுதலால், ஆங்கு வாழும் குயவர் தேனடையைக் கைக்கொண்டு இனிய தேனை வடித்துக்கொள்வர் என்பதுபட, "கண் மடற் கொண்ட தீந் தேன் இரியக் குயம் கள்ளரிக்கும்" என்றார், அரித்தல், வடித்தல். சேரியைக் குயத்துக்குங் கூட்டுக. குயவர் சேரி குயம் எனப்பட்டது. வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று சிறப்பித்தல் இடைக் காலத்தும் தமிழகத்து வழக்காக இருந்தது. சிறு வலை கொண்டு மீன் பிடிக்குஞ் செயலை மீன் சீவுதல் என்றார்.மன். பெருமை. இனி இதனை ஒழியிசையாக்கி, ஆனாதுமு மன் எனக் கூட்டி, ஈனாளாயினளாயின் ஆனாது மன்னென்று கொண்டு ஈனா தொழிந்திருப்பளேல் இந்நிலை வந்து அமையாது; அது கழிந்தது என வுரைப்பினும் அமையும்.

விளக்கம்: வெண்ணெல் அரிபவர், அரியப் புகுமுன் தண்ணுமை முழக்கி நெல் வயலில் வாழும் புள்ளினங்களை ஒப்புவரென்பதைச் சான்றோர் "வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள்ளிரிய"(நற். 350) எனவும், "வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்பும், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை" (அகம். 40) எனவும், "வெண்ணெ லரிநர் படிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ளோப்பும்" (அகம். 204) எனவும் கூறுவது காண்க. தழும்பனுடைய ஊணூர் மருங்கூர்ப்பட்டினத்துக்கு அண்மையில் இருப்பதென நக்கீரர் (அகம். 227) கூறுகின்றார். வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று பட்டந் தந்து சிறப்பிப்பதை, "இலாவா ணகவழிச் சாதக னென்னும், குலாலற்கேற்பப் பெருங்குய மருளி" (பெருங். 4; 9:47-8) என்று கொங்குவேளிர் கூறுவது காண்க. ஈன்று வளர்த்துவிட்டமையின், ஈனாளாயிளையின் என்றார்.
------------

349. மதுரை மருதனிளநாகனார்

சோழநாட்டு உட்பிரிவுகளுள் சிக்கல் நாடு என்பது ஒன்று. இஃது இந் நாளில் திருவாரூர்க்குக் கிழக்கிலுள்ள பகுதியாகும். இதன் தலை நகரம் சிக்கல் எனப்படும் இக்காலத்தில் அது சிக்கல் என்றே வழங்குகிறது. சிக்கல் நாட்டுத் தலைநகரமாகிய பெருமையுடைமையால் பெருஞ் சிக்கல் என்பது பண்டைநாளை வழக்கு. அதன்கண் மருதனிளநாகனார் காலத்தே வேளாண் தலைமகனொருவன் இருந்தான். அவனைப் பெருஞ் சிக்கல்கிழான் என்பர். அவனுடைய மகள் பெண்மை நலங் கனிந்து வேந்தர் விரும்பி வேட்கம் வீறுகொண்டு விளங்கினாள். அவளை மணக்க விரும்பினானொரு வேந்தன. பெருஞ்சிக்கல் கிழான் அவன்பால் தன் மகளை மணத்தற்கு வேண்டும் நலம் குறைந்திருப்பது கண்டு மகட்கொடை மறுத்தான். அதனால் இருவரிடையே பகைமை தோன்றிற்று. சினம் சிறந்த வேந்தன் தன் நுதல் வியர்வையைத் தன் கைவேலாற்றுடைத்துக் கடிய சொற்களையே கூறலுற்றான். பெருஞ்சிக்கல் கிழானும் வேந்தனது வலிமிகுதி யறிந்த பணிந்து மொழிந்தடங்காது நெடுமொழி நிகழ்ித்தினான். இருவர் நிலைகளைமயும் மருதனிளநாகனார் கண்டார். "இவர்தம் இயல்பு இதுவாயின், இதற்கெல்லாம் காரணம் இக்கிழான் பெற்ற மகளேயாவாள்; விறகிற் றோன்றும் தீ விறகையே யழிப்பதுபோல இவ்வூரிற் பிறந்த இவள் இவ்வூர் அழிதற்குக் காரணமாயினள்" என இப் பாட்டின்கண் வருந்திக் கூறியுள்ளார்.

    நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
    கடிய கூறும் வேந்தே தந்தையும்
    நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
    இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
    றரிமதர் மழைக்க ணம்மா வரிவை         5
    மரம்படு சிறுதீப் போல
    அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.
    -----------

திணையுந் துறையு மவை. மதுரை மருதனிளநாகனார் பாடியது. இது
பெருஞ் சிக்கல் கிழான் மகண் மறுத்தது என்பர் இளம்பூரணர்.

உரை: வேல் நுதிகொண்டு நுதல்வியர் துடையா - தன் கைவேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து; வேந்து கடிய கூறும் - வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழிகளைக் கூறாநின்றான்; தந்தையும் நெடிய வல்லது பணிந்து மொழியலன் இவன் தந்தையும் நெடுமொழிகளைத் தவரிப் பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை; இஃது இவர் படிவம் - இஃது இவர்கள் கொள்கை யாகும்; ஆயின் - இதனை ஆரா யுங்கால்; வை எயிற்று அரிமதர் மழைக் கண் அம்மா அரிவை - கூரிய பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்; மரம்படு சிறு தீப்போல் - மரத்தைக் கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தையழிப்பது போல, தான் பிறந்தவூர்க்கு அணங்காயினள் - இவள் தான் பிறந்தவூர்க்கு வருத்தம் விளைவிப்பவ ளாயினாள் என்பதல்லது வேறில்லை, எ - று.

மகட்கொடை மறுக்கவே, வேந்தன் உள்ளத்தில் மகள் பாற் கொண்ட காதல் முற்றம் பகைமையாய் முறுகிவிட்டமையின் மேற் செயற்பாலும் போரே எனத் துணிந்த செயலும் சினந்த சொல்லு முடையனானான் என்பது தோன்ற, "நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும்" என்றார். தந்தையும் அஞ்சாநெஞ்சினனாதல் விளங்க "தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன்" என்றார். படிவம், கொள்கை. மரக்கட்டையைக் கடைந்தவழிப் பிறக்கும் தீ, தான் தோன்றும் மரமே எரிந்து கெடுதற்குக் காரணமாவதுபோல், இவள் தான் பிறந்தவூர் கெட்டு வருந்துதற்குக் காரணமாயினன் என்பார், "மரம்படு சிறுதீப் போல, அணங்காயினன் தான் பிறந்த வூர்க்" கென்றார். வேந்து, துடையா கூறும்; தந்தையும் மொழியலன்; இவர் படிவம் இஃது; ஆயின், இவன் தீப்போல ஊர்க்கு அணங்காயினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: மகட்கொடை மறுக்கப்பட்டவழி, மறுக்கப்பட்டவனும் மறுத்தவனுமாகிய இருதிறத்தாரும் போர் செய்தற்குச் சமைந்தது கண்ட மருதன் இளநாகனார் இப் பாட்டைப் பாடுகின்றார்; மகட்கொடை விழைந்த வேந்தன் உள்ளத்தில் நிலவிய விழைவு முற்றும் வெகுளியாய்ப் போர்க்கண் அவனைச் செலுத்திற்று; கொடைபுரிதற்குரிய தந்தை கொள்ளிற்குரிய அமைதி விழைந்த வேந்தன்பால் இல்லாமை கண்டு மறுத்து, மறுக்கப்பட்ட வேந்தன் போர்க்கெழுதலை யறிந்து சினங்கொண்டு போர்க்குச் சமைவானாயினன். "தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன்" என்றதனால், மகட்கொடை மறுப்பவன் வேந்தனல்லன் என்றும், வேந்தன் மகட்கொடை நல்கும் மாண்புடைய குடியினனாதலால், அதற்கேற்ப, "நெடிய மொழிதல்" அவற்கு இயல்பாயிற்று. "நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முது குடி, மகட் பாடஞ்சிய மகட்பாற் காஞ்சி" (தொல். புறத். 24) என்பதற்கு இதனைக் காட்டிய இளம்பூரணர், "இது பெருஞ்சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்தது" என்பர்.
-----------

350. மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தா ராயத்தனார்

மேலைக்கடைய மென்பது தென்பாண்டி நாட்டிலுள்ளதோரூர். இவ்வூர் நல்லிசைச் சான்றோர் பலர் பிறந்த சிறப்புடையது. கடையம் என்பது குறைந்து கடையெனச் சுருங்கிற்று. இப்போதுள்ள மேற் கடையம் கீழ்க்கடையம் என்ற வூர்கள் இடைக் காலத்தே "கோனாட்டு விக்கிரம பாண்டிய நல்லூரான கடையம்" (A. R. No. 522 of 1916) என்றும் "கோனாட்டுக் கடையம்" (A. R. No. 525 of 1916) என்றும் வழங்கியதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். மேலைக்கடையத்தார் எனற்பாலது மதுரையோலைக்கடையத்தார் என ஏடெழுதினோரால் பிழைக்கப் பட்டுள்ளது. இக் கடையத்தைச் சார்ந்த ஒரு குடியினர் மதுரையிற்றங்கியிருந்தமையின் அவர் மதுரை மேலைக் கடையத்தாரென வழங்கப் பட்டனர். மதுரை மேலைக் கடையத்தாரான நல்வெள்ளையார் என்ற சான்றோரொருவர் நற்றிணை பாடிய ஆசிரியன்மார்களுள் ஒருவராகக் காணப்படுகின்றார். மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் என்றொருவர் குறுந்தொகையிற் காணப்படுகின்றார். ஆக. கடையத்திலிருந்து வந்து மதுரையிற்றங்கி வாழ்ந்த கடையத்தார் குடி சிறந்த நல்லிசைப் புலவரைப் பெற்று மேன்மையுற்று விளங்கினமை தெளிவாகும். புண்ணம் புகுத்த போரின்கண், கண்ணீர் சொரிந்த நின்றாரைக் கண்ணம் புகுத்தாரெனப் பாடிய சிறப்பு பற்றி இவர் கண்ணம்புகுத்தாரென்று சான்றோரால் சிறந்தோதப்பட்டனர் போலும் இவரது இயற்பெயர் ஆயத்தனார் என்பது. மறக்குடி யொன்றில் வளர்ந்த மகளொருத்தி திருமணத்துக்குரிய செவ்வி முதிர்ந்து சிறந்திருந்தாளாக, அவளை மணத்தாற் பெறல் வேண்டி வேந்தர் பலர் அவ்வூர்க்கு வந்து போகின்றவராயிருந்தனர். அவளுடைய தன்னையர் இவள், "புரையரல்லோரை வரையலள்" என்று கொண்டு மறங்கிளர்ந்து நின்றனர். வேந்தர் மணக்கோளும் தன்னையர் மறமாண்பும் கண்ட ஆயத்தனார் இவள் மார்பில் சுணங்கு பரந்து வேந்தர் உள்ளத்தைக்கவர்ந்த கொள்ளுதலால் மகள் மறுத்தல் பொருளாகப் போருண்டதால் ஒரு தலை; இவ்வூர்க் கிடங்கு ஞாயிலும் இஞ்சியும் போதிய காவல் வலியில்லன; அதனால் இவ்வூரது நிலை யாதாகுமோ என இரங்கிப் பாடியுள்ளார்.

    தூர்ந்த கிடங்கிற் சோர்ந்த ஞாயிற்
    சிதைந்த விஞ்சிக் கதுவாய் மூதூர்
    யாங்கா வதுதொ றானே தாங்காது
    படுமழை யுருமி னிரங்கு முரசிற்
    கடுமான் வேந்தர் காலை வந்தெம் 5
    நெடுநிலை வாயிற் கொட்டுவர் மாதோ
    பொருதா தமைகுவ ரல்லா போருழந்
    தடுமுரண் முன்பிற் றன்னைய ரேந்திய
    வடிவே லெஃகிற் சிவந்த வுண்கண்
    தொடிபிறழ் முன்கை யிளையோள் 10
    அணிநல் லாகத் தரும்பிய சுணங்கே.
    ------------

திணையும் துறையுமவை. மதுரைக் கடைக்கண்ணம்புகுத்தா ராயத்தனார் பாடியது.

உரை: தூர்ந்த கிடங்கின் - தூர்ந்துபோன அகழியினையும்; சோர்ந்த ஞாயில் - தளர்ந்த மதிலுறுப்பினையும்; சிதைந்த இஞ்சி - இடிந்த மதிலையுமுடைய; கதுவாய் மூதூர் - பகைவர் செய்த அழிவால் வடுப்பட்ட பழை வூர்; தாங்காது யாங்காவது கொல் - போரைத் தாங்காதாகலின் என்னாகுமோ; படுமழை உருமின் இரங்கு முரசின் - ஒலிக்கின்ற மேகத்தின் இடிபோல் முழங்கும் முரசினையும்; கடுமான் வேந்தர் - விரைந்து செல்லும் குதிரைகளைமுடைய வேந்தர்கள்; காலை வந்து எம் நெடு நிலை வாயில் கொட்குவர் - எம்முடைய நெடிய நிலையையுடைய வாயிலின்கண் சுற்றித்திரிகின்றனர்; பொருதாதமைகுவரல்லர் - மறுத்த வழி போர் உடற்றியன்றி அமையார் போல்கின்றனர்; அடு முரண் முன்பின் தன்னையர் - அடுகின்ற மாறுபாட்டுக் கேதுவாகிய வலியினையுடைய தமையன்மார்; போர் உழந்து ஏந்திய வடிவேல் எஃகின் – போரை வென்றியுண்டாகச் செய்து கையில் ஏந்திய வடித்த வேலின் இலைபோல்; சிவந்த உண்கண் தொடி பிறழ் முன்கை இளையோள் - சிவந்த மை தீட்டிய கண்களையும் தொடியானது கையின் முன்னும் பின்னுமாக இயங்கும் முன் கையினையுமுடைய இளமகளது; அணி நல்லாகத்துச் சுணங்கு அரும்பிய - அழகிய நல்ல மார்பின்கண் சுணங்கு தோன்றிப் பரந்தன வானலான்; எ - று.

சுணங்கு அரும்பியவாகலின், வேந்தர் கொட்குவர்; அமைகுவரல்லர். மூதூர் தாங்காதாகலின் யாங்காவது கொல் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இடந்தோறும் இடிந்து பொலிவின்றி யிருத்தலின் "கதுவாய் மூதூர்" என்றார். இம் மூத்தூர் வருபடையைத் தாங்காதென்பது சொல்லாமலே யமையுமாயினும் வேண்டாதே கூறியது "யாங்காவது கொல்" என்பதை மிகுத்துக் காட்டுதற்கு. வளைகட்கு முன்னும் பின்னுமாக இயங்குதலின், "தொடிபிறழ் முன்கை" எனப்பட்டது. சுணங் கரும்பின மையின் மகட்கொடை வேண்டி வேந்தார் வாராதிருத்தலும், மகண் மறுத்தவழிப்போர் செய்யாதொழிதலும் இலர் என்பார் "நெடுநிலை வாயிற் கொட்குவ" ரென்றும், "பொருதா தமைகுவரல்ல" ரென்றும் கூறினார்.

விளக்கம்: ஞாயில், மதிலினது உறுப்பு. அதனிடத்தேயிருந்து அகத் தோராகிய வில் மறவர் புறத்தார்மேல் அம்புமாரி பொழிவர். இஞ்சி, மதில், கிடங்கு, அகழ். கிடங்கும் ஞாயிலும் இஞ்சியும் சீரிய அரண்களாதலின், போர்க்குச் சமைபவர் இவற்றின் வலியறிதல் முதற் கண் செய்ய வேண்டுவதுபற்றி இவற்றை யெடுத்தோதுகின்றார். குடி வளங்குன்றி வலியழிந்திருத்தல் "கதுவாய் மூதூர்" என்றதனால் பெறப்படுகிறது. "எம்நெடுநிலை வாயில்" என்றது, சிதைந்த இஞ்சி சூழ்ந்த எம்மூரின் நெடுவாயில் வந்து இடவலி முதலிய வலி காணுகின்றனர் என்பதுபட நின்றது. "கொட்குவர்" என்றது, மகட்கோடற் கண் இருக்கும் பெருவேட்கையினை யுணர்த்துகிறது. "பொருதாது அமைகுவரல்ல" ரென்றது. இருதிறத்தாருடைய உட்கோளுமாம். இளையோள் ஆகத்தில் சுணங்கு அரும்பினமையின் வேந்தர் வேட்டலும். இவளுடைய தன்னையர் போர்க்குரியராதலும் நிகழ்தலின் அதனை ஏதுவாக்கினர். கண்ணம் புகுத்தார் ஆயத்தனார் என்பன இந்த ஆசிரியர் பெயராயின.
---------

351. மதுரைப் படைமங்க மன்னியார்

ஒருகால் ஓரிடத்தே நிகழ்ந்த போரின்கண் தானைத் தலைவனொருவன் தானேந்திய படை முழுதும் கெட்டபின்னரும் பகைவரொடு பொருது வென்றியாற் புகழ் நிறுவினானாக, அவனைப் படைமங்க மன்னினான் என்று சிறப்பித்துப் பாடிய நலங்கருதிச் சான்றோர் இந்த ஆசிரியரைப் படைமங்க மன்னியார் என்று வழங்கினர் போலும். இவர் மதுரையில் வாழ்ந்த சான்றோருள் ஒருவர். இவருடைய இயற்பெயர் முதலியன கிடைத்தில. இவர் வாகை யென்னும் ஊரில் வாழ்ந்த எயினன் என்னும் தலைவனால் சிறப்புற ஆதரிக்கப்பெற்றவர். மறக்குடித் தலைவன் மகளொருத்தி பெண்மைநலங்கனிந்து மணஞ் செய்யும் செவ்வி யெய்தி விளங்கினாளாக, அவளை மணம்புரிந்து கோடல் குறி்த்து வேந்தர் பலர் மகட்கொடை வேண்டி நின்றனர். அவள் தந்தையோ அவர்களை மறுத்தான். அவர் தானை பண்ணிப் போர்க்குச் சமைந்தனர். அது கண் மதுரைப் படைமங்க மன்னியார், அப் போர் வினையால் ஊரெய்தும் கேடு நினைத்து வருந்தி இப் பாட்டைப் பாடியுள்ளார்.

    படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்
    கொடுநுடங்கு மிசைய தேரு மாவும்
    படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
    கடல்கண் டன்ன கண்ணகன் றானை
    வென்றெறி முரசின் வேந்த ரென்றும்         5
    வண்கை யெயினன் வாகை யன்ன
    இவணலந் தாரா தமைகுவ ரல்லர்
    என்னா வதுகொறானே தெண்ணீர்ப்
    பொய்க் மேய்ந்த செவ்வரி நாரை
    தேங்கொண் மருதிண் பூஞ்சினை முனையிற்         10
    காமரு காஞ்சித் துஞ்சும்
    ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.
    ---------

திணையும் துறையு மவை: மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

உரை: படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் - ஒலிக்கின்ற மணி கட்டபட்ட பக்கத்தையுடைய பருத்த காலையுடைய யானைகளும்; கொடி நுடங்கும் மிசைய தேரும் மாவும் - கொடி நின்றசையும் உச்சியை யுடைய தேர்களும் குதிரைகளும்; படை அமை மறவரொடு துவன்றி - படைக்கலமேந்திப் போர்க்கமைந்த வீரருடனே நெருங்கி; கல்லெனக் கடல் கண்டன்ன - கல்லென்னும் முழக்கத்தோடே கூடிய கடலைக் கண்டாற் போன்ற; கண்ணகன் தானை - இடமகன்ற தானையையுடைய; வென்றெறி முரசின் வேந்தர் - வென்றெறிந்த முரசினையுடைய அரசர்; என்றும் - எப்போதும்; வண்கை எயினன் வாகை யன்ன - வள்ளன்மையுடையனாகிய எயினன் என்பானுக்குரிய வாகை யென்னும் நகரத்தைப் போன்ற; இவள் நலம் -இவள் பெண்மை நலத்தை; தாராது - தந்தையானவன் மணஞ்செய்து தாரா தொழியின்; அமைகுவ ரல்லா - வறிது அமைந்து மீளார்; தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனன மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை மேய்ந்த செல்வரி நாரைகள்; தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின் - தேன் பொருந்திய மருதமரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை வெறுப்பின்;காமரு காஞ்சி துஞ்சும் - அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்; ஏமம் சால் சிறப்பின் இப்பணை நல்லூர் - காப்பமைந்த சிறப்பினையுடைய நல்செய் வயல் வளம் நிறைந்த இந்தவூர்; என்னாவது கொல் - என்னவாகுமோ, தெரிந்திலதே; எ - று.

வேந்தர் பலராதலின், அவர் தானைகளும் பலவாயின; ஆதலால் கடல் கண்டன்ன தானை என்ப பன்மைவினையான் முடித்தார். கடல் கண்டன்ன தானையையுடைய வேந்தர் அமைகுவரல்லர்; நல் லூர் என்னாவது பொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பொருள் வளம் குன்றிப் பெருவறம் உண்டாகியபோதும் தன் வண்மையில் எயினன் குன்று வதிலன் என்பார், "என்றும் வண்கை யெயினன்" என்றார். தாரானாயின் என்பது தாராது என நின்றது. தருதற்குரிய வினைமுதலாகிய தந்தை வருவிக்கப்பட்டது. செவ்வரி நாரை நாரையினத்துள் ஒன்று; "நந்து நாரையொடு செவ்வரி யுகளும்" (பதிற். 23) என்று சான்றோர் கூறுவது காண்க. ஏமஞ்சால் சிறப்பு - இன்பம் அமைந்த வாழ்க்கையுமாம்.

விளக்கம்: மிசைய தேர், மிசையென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சக் குறிப்பு தேரென்னும் பெயர் கொண்டது. நால்வகைப் படையுள் யானைப்படை சிறப்புடையதென்பது பற்றி அதனை யெடுத் தோதினார். துவன்றியென்னும் வினையெச்சம் அன்னவென்னும் வினைக் குறிப்புக் கொண்டது. வாகை, எயினைுக்குரிய வூர். வாகைப் பறந் தலை, வாகைப் பெருந்துறை என்பவற்றின் வேறு: இவ் வாகைக்குரிய எயினன், ஏனை ஆய் எயினனின் வேறாவான். இந்த வாகை மதுரை நாட்டில் உள்ள நாளிற் சிறப்பெய்திருந்தது. படை மங்க மன்னியாரது ஊரும் இவ்வாகையாகலாம். தாராதமைகுவரல்லரென ஒரு தொடராகக் கொண்டு கொள்ளா தொழியார் என்றலு மொன்று.நாரை பூஞ்சினை முனையின் காஞ்சிக் சினையிற் றுஞ்சும் சிறப்பினை யுடைய நல்லூரென வேண்டாது கூறியது. மகண் மறுத்தவழி நிகழும் போரால் அவ்வூர் பாழ்படுவது குறித்து இரங்கிக் கூறியது. இக்கருத்தே பற்றி "என்னாவது கொல்" என்றார். படையமை மறவர் என்பதற்குப் பழைய வுரைகாரர். "படைக்கலத் தொழிலமைந்த வீரர்" (புறம். 72 உரை) என்ற உரைப்பர். நிறைவுடைய தானைக்கு யானை முதலிய நான்கும் நிரலே நன்கமைவது சிறப்பு: "நெடுநல் யானையுந்தேரு மாவும்; படையமை மறவரும் உடையம்" (புறம். 72) என்று பிறரும் கூறவது காண்க.
----------

352. பரணர்

மகட்கொடை வேண்டிய வேந்தன் தந்தைக்கு மிக்க செவ்வந் தருவதாக வுரைத்தானாக, நெடுந்தகையாகிய தந்தை மறுத்தலே பொருளாகக் கொண்டான்; கொடைக்குரிய மகளும் பெண்மை கனிந்து சுண்ஙகு பரந்த மார்புடனே கதிர்த்து விளங்கினாள்; இவள் தன்னையர் தாமும் போர்வெறி கொண்டு நின்றனர். இதனைக் கண்ட ஆசிரியர் பாணர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். உறையூரில் வாழ்ந்த தித்தன் என்ற வண்மையோன்பால் பரணர்க்குப் பேரன் புண்டு. இப் பாட்டுப் பெரிதும் சிதைந்திருத்தலின் பொருண் முடிவு இனிது விளங்கவில்லை.

    தேஎங்கொண்ட வெண்மண்டையான்
    வீங்குமுலை.............கறக்குந்து
    அவல்வகுத்த பசுங்குடையாற்
    புதன்முல்லைப் பூப்பறிக்குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்         5
    குன்றேறிப் புனற்பாயிற்
    புறவாயாற் புனல்வரையுந்து.............
    .............நொடைநறவின்
    மாவண் டித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை யன்ன வுரைசா னன்கலம்         10
    கொடுப்பவுங் கொளாஅ னெடுந்தகை யிவளே
    விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையிற்
    கதிர்த்தொளி திகழு நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த மலைய டன்னையும்
    சிறுகொ லுளையும் புரவியொடு..........         15
    ................யாரே.
    --------

திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

உரை: தேஎங்கொண்ட வெண் மண்டையான் - கள் நிரம் பக்கொண்ட வெள்ளிய மண்டையின்கண்; வீங்கு முலை ... கறக்குந்து - பருத்த மடியில் ...கறக்கும்; அவல் வகுத்த பசுங்குடையால் - பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட பசிய ஓலைக் குடையில்; புதல் முல்லைப் பூப்பறிக்குந்து - புதவிடத்தே மலர்ந்த முல்லைப்பூக்களைப் பறிக்கும்;ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - ஆம்பலின் தண்டால செய்யப்பட்ட வளையணிந்த கையையுடைய மகளிர்; குன்றேறிப் புனல் பாயின் - மணற்குன்றின் மேலேறி நீர் நிலையில் விளையாடப் பாய்வாராயின்; புற வாயால் புனல்வரையுந்து - புறத்தே நீர் செ்ல்லுதற்குரிய கோடியில் வழிந்து நீங்கும்; ......... நொடை நறவின் ............ விலைப் பொருட்டாகிய கள்ளினையுடைய; மாவண் தித்தன் - பெரிய வண்மையையுடைய தித்தனது; வெண்ணெல் வேலி உறந்தை யன்ன - வெண்ணெல் வயல்கள் வேலியாகச் சூழ்ந்துள்ள உறையூரைப்போல;உரைசால் நன் கலங் கொடுப்பவும் - புகழ் நிறைந்த நன்கலங்கள் பவவற்றைக் கொடுக்கவும்; நெடுந்தகை கொளா அன் நெடிய தகைமையினையுடைய தந்தை அவற்றைக் கொள்ளானாயினான்; இவள் - இம் மகள் தானும்; விரி சினைத் துணர்ந்த நாகிள வேங்கையின் - விரிந்த கிளையிடத்துக் கொத்துக் கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தினைப்போல; கதிர்த்து ஒளி திகழும் - கதிர்விட்டு ஒளி செய்யும்; நுண் பல் சுணங் கின் நுண்ணிய பலவாகிய சுணங்கு பரந்த; மாக்கண் மலர்ந்த முலையள் - கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள்; தன்னையும் - தமையனும்; சிறுகோல் உளையும் புரவியொடு - சிறு கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன் .........யாரே ........ யாவர்; எ - று.

மண்டை, கள் முதலியன வுண்டற்குரிய மட்கலம். மனையோலை யால் உட்குடைவாகச் செய்யப்டுவதுபற்றி, "அவல் வகுத்த பசுங்குடை" என்றார். கொடிமுல்லை யன்மை தோன்ற, "புதல் முல்லை" யெனப்பட்டது. இதனைத் தளவுமுல்லை யென்பர். நீர்நிலைகளில் மிக்கு அதனைப் "புறவாய்" என்றார்; மதகென்றுமாம். உறையூர், உறந்தையென வருவது மரூஉ; "நொச்சி வேலித் தித்தன் உறந்தை" (அகம். 122) என வருதல் காண்க. வள்ளி - வளை.

விளக்கம்: இப் பாட்டு இடையிடையே சிதைந்தள்ளது. சிதைந்த வற்றுள் சிற்சில் சொற்களே கிடைத்துள்ளன. பழைய தமிழ்ச் செல்வர் மனைகளில் அழிந்தனபோக ஒழிந்த ஏடுகளைக் காணும் வாய்ப்பு நேரில் சிதைந்தவை கிடைப்பினுங்கிடைக்கும். இதன்கண் அடிகள் சில சிதைந்திருத்தலின் வினைமுடிபு காண்பது இயலவில்லை. தேஎம், தேன், தேன் கோடற்குரிய வெண்மண்டையில் ஆவின்பால் கறக்கப்படும் போலும். பனையோலை, தெங்கிண் ஓலை யென்றிவற்றால் உட்குடைவாகச் செய்யப் பட்டவை பசுங்குடை யெனப்பட்டன. அவற்றை உணவுண்டற்குப் பயன்படுத்துவது பண்டையோர் முறையெனினும், ஈண்டு அது முல்லைப் பூப்பறித்தற்குப் பயன்படு்கிறது. குன்று, மணலாலாகிய செய்குன்று. மணற்குன்றேறி நீரிற் பாய்ந்து விளையாட்டயர்தல் பண்டைநாளை இளையர் விளையாட்டு.குன்றேறிப் பாய்தலால் நீர்நிலையிலுள்ள நீர் அலைந்து புறத்தே நீர் செல்லும் வாய் வழியாக வழிந்தோடும் என்பார், "குன்றேறிப் புனல் பாயின் புறவாயாற் புனல் வரையுந்து" என்றார். உறந்தை, உறையூரின் மரூஉ: பொறையாறு புறந்தையென வருதல்போல. உறையூர் சோழராட்சிக்கு வருமுன் தித்தன் முதலிய செல்வர் பாதுகாப்பிலிருந்தமையின், தித்தன் ........ உறத்தை யென்றார். உறந்தையன்ன உரைசால் நன்கலன் என்றது, உறந்தைநகர் புலவர் பாடும் புகழ் படைத்ததாகலின், அப் புகழுடைமை வெறிப்பட, "உரைசால் நன்கல்" யென் விதந்து கூறினார். கொள்ளாமைக்கேது த்ந்தைபாலுள்ள நெடுந்தகைமை யென்பார், "உறந்தை யன்ன உரைசால் கலம்" என்றார். நாகிள் வேங்கை, மிக்க இளமையையுடைய வேங்கை.
-----------

353. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

வேந்தர் குடித்தோன்றல் ஒருவன் இளமகளொருத்தியின் மெய்ந் நலங்கண்டு அவள்பால் தன் கருத்தைச் செலுத்தி அறிவழிந்து நின்றான். இடையில் மேகலையும் தலையிற் பொற்கண்ணியும் அணிந்து தன் மனைப்பெய்ம் மணல் முற்றத்தில்இனிதிங்கிய அவளது இனிய காட்சி அவளை மணந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையை அவள் உள்ளத்தே எழுப்பிற்று. அவன் தான் ஊர்ந்துவந்த தேரை ஒரு புடையில் நிறுத்திச் சான்றோராகிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரைக் கண்டு அவரைத் தன் பொருட்டு மகட்பேசி வருமாறு தன் கண்ணாற் குறையிரந்து நின்றான். வெள்ளைப்பார்வையால் தன்னை நோக்கிய அவள் உள்ளக்குறிப்பையோரந்த சான்றோர், "அண்ணால் இவள் யாவர் மகள் என்று வினவுகின்றாய்; இவள் ஒரு தொல்குடி மன்னன் மகள்; மகட்கொடை வேண்டி முன்னால் வேந்தர் பலர் வந்து கொடை மறுக்கப்பட்டுச் சென்றனர். அது காரணமாக நிகழ்ந்த போரை வென்றியுண்டாத நடத்திய இவள் தமையன்மார் இன்னும் அப் போர்ப் புண்ணாறாது புண்ணிடை வைத்த பஞ்சியொடு விள்ஙகின்றனர். அவர் காண்பதற்கே அச்சம் தருபவராக இருப்பர், கண்" என்று இப் பாட்டாற் கூறியுள்ளார்.

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொருஞ்செய் பல்கா சணிந்த வல்குல்
    ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத்
    தருமண லியல்வோள் சாய னோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை         5
    வினவ லானா வெல்போ ரண்ணல்
    யார்மக ளென்போய் கூறக் கேளினிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை
    வல்வி லிளையர்க் கல்குபத மாற்றத்         10
    தொல் குடி மன்னன் மகளே முன்னாட்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    ...........................
    செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
    கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு         15
    பஞ்சியுங் களையாப் புண்ணர்
    அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே.
    ------

திணையும் துறையு மவை. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

உரை: ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த - குற்றமில்லாத பொற் கொல்லன் பழுதறச் செய்த; பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல் - பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும்; ஈகைக் கண்ணி இலங்கத்தைஇ - பொன்னாற் செய்த கண்ணியும் விளக்கமுற ஒப்பனை செய்துகொண்டு; தருமணல் இயல்வோள் சாயல் நோக்கி - புதிது கொணர்ந்து பரப்பப்பட்ட மணலின்கண் நடந்து செல்பவளுடைய சாயலை நோக்கி; தவிர்த்த தேரை - செல்லாது நிறுத்திய தேரையுடையனாய், விளர்த்த கண்ணை வெளுத்த பார்வையினையுடையனாய்; வினவலானான வெல்போர் அண்ணல் - கேட்டல் அமையாத வெல்லும் போரையுடைய தலைவ; யார் மகள் என்போய் - இவள் யார் மகள் என்று கேட்கின்றாய்; இனி கூறக் கேள் - இப்பொழுது யான் கூறக்கேட்பாயாக; குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு - மலையைக் கண்டாற்போன்ற நிலையினையுடைய பல நெற்போர்களை; நாள் கடா அழித்த நனந்தலைக் குப்பை - நாட்காலையில் அழித்துக் கடாவிடப்பட்ட இடத்திற் குவிந்த நெல்லை; வல்வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா - விலய வில் வீரர்களுக்கு நாளுணவாக நல்குவதில் மாறுதல் இல்லாத; தொல் குடி மன்னன் மகள் - பழைமையான குடிகள் நிறைந்த வூர்க்கு வேந்தன் மகளாவாள்; முன்னாளில் மக்ட கொடை வேண்டி வந்த பெரிய முதிய வேந்தராகிய சான்றோர்க்கு - செருவாய் உழக்கிக் குருதி யோட்டி - போர்க்களத்தில் பகைவரைக் கொன்று அவர் குருதியையாறாக வோடச் செய்து; கதுவாய் போகிய - வாய்மடிந்து வடுப்பட்ட; துதி வாய் எஃகமொடு - கூரிய வாயையுடைய வாளுட னே; பஞ்சியும் களையாப் புண்ணர் - சீலை நீக்கப்படாத புண்ணையுடையராய்; அஞ்சு தகவு உடையர் கண்டார் - அஞ்சத்தக்க தகுதிப்பாட்டினையுடையரா யிரா நின்றார்; இவள் தன்னைமார் - இவளுடைய தமையன்மார்கள்; எ - று.

தனக்குரிய தொழிலைக் குற்றமற வுணர்ந்த பொற்கொல்லனை "ஆசில்
கம்மியன்" என்றும், எனவே அவன் புனையும் பொற்பணி பழுதறவியன்றதா
மென்றற்கு "மாசறப்புனைந்த" என்றும் கூறினார். அல்குலிடத்தே பணியப்படும்
மேகலை, அல்குலெனப்பட்டது; "பால்காசு நிரைத்தசில்கா ழல்குல்" (முருகு. 16) என்று சான்றோர் வழங்குவது காணக். தருமணல், புதிது கொணர்ந்து பரப்பப்பட்டமணல். மகளது சாயல் வெல்போரண்ணலின் கண்ணைக் கவர்ந்து குருத்தைப் பிணித்தலின், அவள் தேரை நிறுத்திக்கொண்டைமைதோன்ற, "சாயல் நோக்கித் தவித்ததேரை" யென்றார். மலர்ந்தநோக்கமின்றி மையல் நோக்கங்கோடலின், "விளர்த்த கண்ணை" யென்றார். மாற்றா-வழங்கு தலை இல்லையென்று நீக்காத. போரிற் பட்டபுண் இன்னும் ஆறிற்றல் வென்றற்கு, "பஞ்சியும் களையாப் புண்ணர்" என்றும், அதனால் அவர் அஞ்சுதகவுடையரென்றும் குறித்தார்.

விளக்கம்: இது கட்பாற்காஞ்சியாதலின், மகளது மாண்பும் அவளைக்கோடற்கு விரும்புவோன் இயல்பும் கொடைக்குரியமரபினரான தந்தைதன்னையர் இயல்பும் முறையே கூறலுற்ற ஆசிரியர்காரிக் கண்ணனார் மகளது மாண்பை இயலும் சாயலும் காட்டி இன்புறுத்துகின்றார். அவள் இடையில் அணிந்திருந்த மேகலை பல்காசு நிரையாகத் தொடுக்கப்பட்டுள தென்றும், தலையிற் சூடியிருந்த பொற்கண்ணி இனிது விளங்கப் புனையப்பட்டுளதென்றும் கூறலுற்று, மேகலையிலுள்ள காசுகள் கைத்திறன் வல்ல கம்மியனால் செய்யப்பட்டவை யென்பாராய் "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு"என்றார்.இதனால் அவளது செல்வமிகுதியும் சுட்டியவாறாயிற்று. புதுமணல் பரப்பிய முற்றத்தில் இடையிலும் தலையிலும் மேகலையும் பொன்னங்கண்ணியும் பொற்புடன் திகழ அன்னத்தின் நடையும் மயிலின் சாயலும்கொண்டு காட்சியளித்தமை குறிப்பாராய், "தருமண லியல்வோள் சாயல் நோக்கி" என்றார். தருமமொடியல் வோள் என்றும் பாடமுண்டு; இளமைக்குரிய பண்பும் செயலும் கொண்டு இயல்வோளென்பது அதற்குப் பொருள். பொருட்குரிய குணமும்செயலும் தருமனெமப்படும். இயல்கண்டு செலவுதவிர்த்தச் சாயல்கண்டு கருத்திழந்தானாயினும் மறமாண்புடையன் அம்மகள் வேட்டமைந்தன் என்பார், வெல்போரண்ணல்" என்று சிறப்பித்தார். இதனாற் பய்ன, கருதியது முடிக்கும் கட்டாண்மையுடையன் என்பது. கொடைக்குரிய மரபினையுடைய தந்தை தொல்குடி மன்னன் என்றது, குடிநன்குடைமை சுட்டியவாறு. துதிவாய் எஃகம், கூரிய வாயையுடைய வேல்.
--------

354. பரணர்

மகள் மறுத்தது காரணமாக ஒரூர்த் தலைவன்மகள்வேண்டி வந்து மறுக்கப்பட்ட ஏனைத்தலைவரொடு போர்செய் வேண்டிய நிலை எய்திற்று. அதனால் அவன் தனக்குரிய தானை மறவருடன் தன் வேலை நீர்ப்படை செய்தலாகிய மண்ணுமங்கலத்தைச் செய்யலுற்றான். இதனையறிந்த ஆசிரியர் பரணர், மணத்திற்குரிய இந்த மடந்தையின் நோக்கம் இவ்வூர்க்கு நலஞ் செய்ததேயன்றி, கேடு உண்டாதற்கும் ஏதுவாயமையும் போலும் என வியந்து வருந்திய இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

    அரைசுதலை வரினு மடங்க லானா
    நிரைகா ழெஃக நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயலமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை யுகைத்த வாளை         5
    புனலாடு மகளிர் வளமனை யொய்யும்
    ஊர்கவி னிழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கணிந்தெழிலிய வணந்தேந் திளமுலை
    வீங்கிறைப் பணைத்தோண் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே.         10
    ---------

திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

உரை: அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா - முடிவேந்தர் நேர் நின்று பொர வரினும் அடங்குதலமையாத; நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்க - நிரைத்த காம்பணிந்த வேலை நீர்ப்படை செய்தற்பொருட்டு; புரையோர் சேர்ந்தென - சான்றோர்களாகிய உயர்நத் வீரர்கள் வந்து கொக்கனராக; தந்தையும் பெயர்க்கும் - தந்தையாகிய தலைவன் நீர்நிலைக்குச் செல்ல விடுக்கின்றான்; வயலமர் கழனி வாயிற் பொய்கை - வயல்கள் பொருந்திய கழனி கட்கு வாயிலாகிய பொய்கைக்கண்; கயலார் நாரை உகைத்த வாளை - களல்மீனன யுண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீனை; புனலாடு மகளிர் வளமனை ஓய்யும் நீரில் விளையாட்டயரும் மகளிர் பிடித்துத் தம் வளவிய மனைக்குக் கொண்டுசெல்லும்; ஊர் கவினிழப்பவும் - ஊர் தன் பொலிவிழந்து கெடவும்; வருவது கொல் - வரும் போலும்; சுணங் கணிந்து எழிலிய அணந்து ஏந்து இளமுலை - தேமல் பரந்து உயர்ந்த அண்ணாந்து நிற்கும் இளமுலையும்; வீங்கு இறைப் பணைத் தோள் - பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலுந் தோளையுமுடைய, மடந்தை மான் பிணையன்ன மகிழ்மட நோக்கு - மடந்தையது பிணைமான்போலும் மருண்டமடவியநோக்கம்; எ - று.

எஃகம்நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தை பெயர்க்கும்; மடந்தை மடநோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அரைசெனப் பொதுப்படக் கூறினமையின், உயர்ந்த முடிவேந்தர் என்பது கொள்ளப்பட்டது. புரையோர், போர் வினையாற் புகழ் மேம்பட்ட சான்றோர். சான்றோரை முன்னிட்டு மண்ணுமங்கலம் செய்து மரபு. போர் தொடங்குமுன், மண்ணுமங்கலம்; வாண்மங்கலம் முதலியன செய்வது பண்டையோர் போர்த்துறை இயல்பு. வயல், பொது; போறலின், வாயிலெனப் பட்டதென்றுமாம். மடந்தையின் மடவியநோக்கு, ஊர்க்குப் பொலி வினைச் செய்வதேயன்றிக் கேட்டினைச்செய்தற்கும் ஏதுவாயிற்றென நிற்றலின், உம்மை, எச்சப்பொருட்டு, நாரைக்கு அடங்கா தோடும் வாளை, மகளிர் விளையாடும் நீர்நிலைக்கண் கைப்பற்றப்படுவது போல முன்னாள் பெருவேந்தர்கட் கரியவளாயிருந்த இம் மடந்தை ஊர்கவினிழப்பப்பிற வேந்தர் கைப்படுவள்போலும் என இறைச்சி தோன்றியவாறு காண்க.

விளக்கம்: மகள் மணத்திற்குரிய செவ்வி யெய்தினமையும், மகட்கொடை வேண்டி வேந்தர் வந்தமையும், கொள்ளற்குரிய நிரலுடைமை அவர்பால் இன்மைகண்டு கொடைக்குரிய மரபின் தந்தை தன்னையர் மகண் மறுத்தமையும், அதனாற் சினங்கொண்ட வேந்தர் போர்க்குச் சமைந்தமையும் எடுத்தோதாராயினும்,தந்தை"புரையோர் சேர்ந்துவர நிரைகா ழெஃகம் நீரின் மூழ்கப் பெயர்க்கும்" என்றதனால் பெறப்பட்டன. அரைசு தலைவரினும் அவரைத் தாக்கி யெறியும் வகையால் மேம்பட்டு நிற்பதன்றி அவர்க்கு தலைவரினு மடங்கலானா" என்றார். இனி, மடங்கலானா என்று எஃகத்தின் செயலாக்கி, தந்தையின் மடங்காத் தன்மையை அதன்மேலேற்றிக் கூறிதாகக் கொள்ளினும் அமையும். மடந்தையின் மடநோக்கம் மான்பிணையது போலமருண்ட நோக்கமாயினும் காண்பார்க்கு மகிழ்வை விளைக்கும் என்பார் "மடந்தைமான்பினை யன்ன மகிழ்மட நோக்கம்" என்றும், எனவே இத்தைகய நோக்கம் இவ்வூரவர்க்கு இன்பத்தைச் செய்வதோடு, நிகழவிருக்கும் போரால் துன்பத்தையும் விளைவிக்கின்றதே. இஃதென்னை யென்றற்கு "ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ" என்றார். ஊர்க்கு அரணும் ஆக்கமுமாதற்குரிய நோக்கம் கவின் இழப்பவும் வருமோ என்று கொள்ளுமிடத்து, உம்மை எதிர்மறையுமாம்.
-------------

355. கடுமான் கிள்ளி

இப் பட்டுச் சிதைந்து பாடினோராதல் பாடப்பட்டோராதல் இன்னாரென்றறிய-வாராதபடிள்ளது. இதன் இறுதியில், அச்சுப்படியினும் கையெழுத்துப்படியில் இரண்டடிகள் மிகுதியாகக் காணப்படினும் பொருண் முடிவு காட்டும் அடிகள் காணப்படவில் லை. கிடைத்தவற்றின் இறுதியில் கடுமான்கிள்ளி யென்ற பெயர் காணப்ப்டடமையின், அஃது ஈண்டுக் குறிக்கப்பட்டது. இதுவும் மகண் மறுத்தல் காரணமாக நிகழ விருக்கும் போர் குறித்து ஒரு சான்றோராற் பாடப் பெற்றுளதென்பது தெளிவு. இடைக்காலத் தமிழ் நன்மக்கள் தங்கள் பெறலரும் தமிழிலக்கியப் பெருஞ் செல்வத்தைப் புறக்ணித்துச் சீரழிந்ததற்கு இதுவுமோர் எடுத்துக் காட்டாக இலங்குகிறது.

    மதிலு ஞாயி லின்றே கிடங்கும்
    நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளும்
    ஊரது நிலைமைமயு மிதுவே மற்றே
    எண்ணா மையலன் றந்தை தன்னையர்
    கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி         5
    ...............
    --------

திணையும் துறையு மவை...............

உரை:மதிலும் ஞாயில் இன்று - இவ்வூர் மதிலுக்கும் அதன் உறுப்பாகிய ஞாயில் இல்லை; கிடங்கும் நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் - அகழியிலும் நீரில்லாமையால் கன்றுகள் மேய்ந்து திரியும், ஊரது காப்புநிலை இத்தமையாகவுளது; தந்தை எண்ணா மையலன் - இம் மகளுடைய தந்தையும் இதனை யெண்ணாமைக் கேதுவாகிய மயக்கத்தையுடையன்; தன்னையர் - இவளுடைய தமையன்மார்; கண்ணார் கண்ணிக்கடுமான கிள்ளி - கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையும் விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய கிள்ளி;.......... எ - று.

மதிலுக்கு ஞாயிலும் அகழிக்கு அரணும் வலிதருவனவாகலின் அவை அரணாகாமையான் இவ்வூர் பகைவர் கைப்பட்டழிவது ஒரு தலை யென்பார், "ஊரது நிலைமையு மிதுவே" என்றார். தந்தை, இடத்தின் வலியின்மை நோக்கி மகட்கொடை நேராமையான், "எண்ணாமையல்" னானான்.
-----------

356. கதையங் கண்ணனார்

இக் கண்ணனார் கதையன் என்பாருடைய மகனாவர். கதையன் என்பவர் பெயரால் கதையன்குடி யென்றோர் ஊரும் பாண்டிய நாட்டில் உண்டு. அதுவே பின்பு கதவங்குடி யென மருவித் திருத்தியூர் முட்டத்துக் கதவங்குடி (A. R. No. 183 of 1935-36) எனத் திருப்புத்தூர்க் கல்வெட்டுக்களில் வழங்குகிறது. கண்ணாரென்ற பெயருடைய சான்றோர் பலர் உளராதலின், அவரின் வேறுபடுத்த இவர் கதையங் கண்ணனார் எனப்பட்டனர். இவரைத் தாயங் கண்ணனாரெனக் கொண்டு, இப்பாட்டை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாட்டாகத் தொகுப்பாருமுளர். ஏடுகளில் கதையங் கண்ணாரென்பதே காணப்படுகிறது. முதுகாட்டின் முதுமைப்பகுதியை மிகுத்துரைக்கும் துறையில் இவர் பாடியுள்ள இப் பாட்டு கற்றோர்க்குப் பெருஞ்சுவை நல்கும் சிறப்புடையது. சுடுகாட்டைப் பொருளாகக் கொண்டு உயிர்வாழ்க்கையின் நிலையா இயல்பைக் கூறக்கருதிய இச்சான்றோர், "முதுகாடு கூகையும் பேய்மகளிரும் உறைதலால் காண்பார்க்கு அச்சம் தரும் தன்மையுடையது; இறந்தோர் தன்கண் வந்து எரிந்து சாம்பராக, அதனை அவர்பாற் காதலன்புடையார் சொரியும் கண்ணீர் அவிக்கும்; ஆயினும், அஃது எல்லாருடைய முதுகையும் காண்கின்றது; எத்தகைய மக்கட்கும் தானே முடிவிடமாய்த் தனி நின்று விளங்குகிறது. இம் முது காட்டின் புறங்காண்போர் ஒருவரும் இலர். இக் காடுதானும் தன் முதுகு காண்பாரை இதுகாறும் கண்டதில்லை. சுருங்கச் சொல்லுமிடத்து, எல்லாமக்களும் வீய, தான்மட்டில் வீயாது நிற்கும் வீறுடையது இ்ம் முதுாடென்ற கருத்தமைய இப் பாட்டைப் பாடியுள்ளார்.

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய்
    ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ
    டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர்         5
    என்புபடு சுடலை வெண்ணீர் றவிப்ப
    எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
    மன்பதைக் கெல்லாந் தானாய்த்
    தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே.
    ----------

திணையும் துறையுமவை. கதையங் கண்ணனார் பாடியது.

உரை: களரி பரந்து கள்ளி போகி - காடு படர்ந்து கள்ளி மிகுந்து; பகலும் கூவும் கூகையொடு - பகற்காலத்தின்கண்ணும் கூவும் கூகைகளாலும்; ஈம விளக்கின் - பிணஞ்சுடு தீயாகிய விளக்காலும்; பேழ்வாய் பேய் மகளிரொடு - அகன்ற வாயையுடைய பேய்மகளிராலும்; இம் மஞ்சுபடு முதுகாடு - இந்தப் புகை தவழும் சுடுகாடு; அஞ்சுவந் தன்று - காண்பார்க்கு அச்சம் வரப்பண்ணுகிறது; நெஞ்சமா காதலர் அழுத கண்ணீர் - மனம் விரும்பும் காதலர்கள் அழுதலால் ஒழுகும் கண்ணீர்; என்பு படு சுடலை வெண்ணீறு அவிப்ப - எலுப்பு கிடக்கும் சுடலை கண்ணுள்ள சாம்பலை யவிப்ப; எல்லாப் புறனும் தான் கண்டு - எல்லாரையும் தான் முதுகு கண்டு; உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய் -உலகத்து மக்கட்டொகுதிக் கெல்லாம் தானே தனி முடிவிடமாய்; தன் புறம் காண்போர்க் காண்பறியாது - அம் மன்பதையுள் தன்னைப் புறங்காண வல்லவர்களை அம் முதுகாடு தானும் கண்டதில்லை; எ - று.

ஒடு, ஆனுருபின் பொருட்டு, முதுகாடு, பரந்து, போகி, கூகை யொடும் பேய்மகளிரொடும் விளக்கினாலும் அஞ்சு வந்தன்று; கண்ணீர் அவிப்ப, உலகத்துத் தானாய்க் காண்போர்க்க காண்பறியாது எனக் கூட்டி வினை முடிவு செய்க. பேழ்வாய்ப்பேஎய் மகளிர் என இயைக்க. வெண்ணீறு, நீறுபூத்த நெருப்புமாம். சுடலையீமத்திற் சுடப்படும் பிணமெல்லாம், ஈமப்பள்ளியில் பிணித்தின் முதுகு பொருந்தக் கிடத்துபவாதலின், "எல்லார்புறனுந் தான்" என்றும் எல்லாம் ஒடுங்குங் காலத்துத் தானொன்றே ஒடுங்காது நிற்றலின் "மன்பதைக் கெல்லாந் தானாய்" என்றும், எல்லா மக்களும் தன்கண் ஓடுங்கிவிடுதலின், தனது ஒடுக்க்ங் காணும் மக்கள் எவரும் இலரர்தலின், "தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே" என்றும் கூறினார்.

விளக்கம்: இப் பாட்டு முதுகாட்டின் முதுமைக் கூற்றை மிகுத்துக் கூறுதலின், முன்னைத் திணையும் மமையுமெனத் துறை வகுத்தோர் "திணையுந் துறையு மவை" யென்றனர் போலும். ஆசிரியர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், இதனை "மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செல்லச் செல்லாக் காடு வாழ்த்து" (தொல். புறத். 24) என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்வர். உலகத்துப் பலரும் சென்றாராகவும் தான்மட்டில் செல்லாது முதுகாடு நிற்றற்குக் காரணம் இதுவென்பார் ஆசிரியர், "மலர்தலை யுலகத்து மரபுநன் கறிய" என்றார். அம் மரபு, இப்பாட்டால் இனிது விளக்கப்பட்டிருப்பது காணலாம். இனிப் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், "பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல், கல்லெனவொலிக்கும் காடு வாழ்த்தின்று" (பு. வெ. மா.10?6) எனக் காடு வாழ்த்தின் இயல்பு கூறி, இதற்குக் காட்டலுற்ற வெண்பாவில், இப் புறப்பாட்டின் கருத்தையே யமைத்து, "இன்புறந் தான்காணு மிவ்வுலகையில்வுலகில், தன்புறங்கண்டறிவார் தாமில்லை - அன்பின், அழுதார் கண்ணீர் விடுத்த வாறாடிக்கூகை, கழுதார்ந் திரவழங்குங் காடு" எனக்கூறியிருப்பதும், இதன்கண் "காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீறவிப்ப" என்ற கருத்து, அன்பின் அழுதார் விடுத்த கண்ணீராகிய ஆறாடிக் கூகையும் குழுதும் வழங்கும் எனக் குறித்திருப்பதும் ஒப்பு நோக்கத் தக்கனவாம். புறக்கொடை வழங்காத போர் வேந்தரெனப் பட்டார் யாவரையும் முடிவில் புறங்கண்டு நிற்கும் பொற்புடைமை "எல்லார் புறனுந் தான்கண்" டென்பதனாற் பெறவைத்தார்.
-------

357. பிரமனார்

இப் பிரமனாரைப்பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பிரமனார் என்ற இவர் பெயர் இடைக்காலத்தும் மக்களுக்கு வழங்கிற்றென்பது திருமழபாடிக் கல்வெட்டொன்று, "செம்பிய தரையகோன் மகன் பிரமன்" (S. I. Ins. Vol. V. No.648) என்பதனால் விளங்குகிறது. இவர் துறவின்கண் நின்று அறத்தை வலியுறுத்துவது மிக்க இன்பந்தருவதொன்று. இப் பாட்டின்கண், இத் தமிழகம் சேர சோழ பாண்டியார் மூவர்க்கும் பொதுமை கருதியது; மூவருள் ஒருவர், ஒவ்வொரு காலத்தில் ஏனையிருவர்க்கும் அது பொதுவென்பதை மறுத்து, அவரது நாட்டைத் தாம் கவர்ந்து தமது ஒரு மொழி வைத்தாண்டதுண்டு; ஆயினும் அவ்வாறு பொதுமையின்றி ஆண்ட வேந்தரும் வாழ்நாள் கழிய இறந்தனர்; அவர் ஈட்டிய செவ்வமும் அவர்க்குத் துணையாய்ச் சென்றதில்லை. அவரவர் செய்யும் அறவினையே மேலுலகத்து இன்பவிளைவிற்கு வித்தாகும்; இவ்வுலக வாழ்வாகிய கடலைக் கடந்து மேலுல மாகிய அக்கரை சேர்தற்கு அறவினையே தெப்பமாய்த் துணை செய்யும்; அதனை விரைந்து செய்ம்மின் என வற்புறுத்தி யுள்ளார்.

    குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவ ருலகமும்
    பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே யாண்டுக டுணையே
    வைத்த தன்றே வெறுக்கை வித்தும்         5
    அறவினை யன்றே விழுத்துணை யத்துணைப்
    புணைகை விட்டோர்க் கரிதே துணையழத்
    தொக்குயிர் வௌவுங் காலை
    இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே.
    -----------

திணை: அது. துறை: மறக்காஞ்சி; பெருங்காஞ்சியுமாம்; பிரமனார் பாடியது.

உரை: குன்றுதலை மணந்த மலை பிணித்து யாத்த மண் - குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்; பொதுமை சுட்டிய மூவருலகமும் - பொதுவெனக் கருதப்பட்ட மூவேந்தருடைய நாடு மூன்றையும்; பொதுமையின்றி ஆண்டிசினோர்க்கும் - பொதுவெனப் போற்றாது தமக்கே யுரியவெனக் கொண்டாண்ட வேந்தருக்கும்; ஆண்டுகள் மாண்டவன்றே - வாழ்நாட்கள் கழிந்தன; வெறுக்கை துணைவைத்ததன்று - அவர் ஈட்டித்தொகுத்து வைத்த செல்வமும் அவர் செல்லுயிர்க்குத் துணையானதில்லை; வித்தும் அறவினையன்றே விழுத்துணை - அவரவர் செய்யும் அறவினையே மறுமைத் துணையாய் இன்பம் தருவதாம்; துணை தொக்கு அழ - துணைவர்கள் தம்மிற் கூடி யழ; உயிர் வௌவுங்காலை - உயிர் கூற்றுவனாற் கவர்ந்து கொள்ளப்படும் காலத்தில்; இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளல் - இவ்வுலகினின்றும் உயர்ந்து வீட்டுலகைப் பெறுதற்கு; அத்துணை புணை - அறவினையாகிய துணையே தெப்பமாவது; கைவிட்டோர்க்கு அரிது - அத்துணையைக்கை விட்டவர்க்கு மேலுலகப்பேறு இல்லையாம்; எ - று.

பெருமலைகளின் முடியிலும் அடியிலும் சிறு சிறு குன்றுகள் நிற்பது பற்றி, "குன்று தலை மணந்தமலை" யென்றும், வானில் ஒரு பற்றுக் கோடு மின்றி நிலவுலகு தனித்துச் சுழலுமிடத்து மலையும் குன்றும் நீ்ங்காதவாறு பிணித்துக்கொடு நிற்றலின், "பிணித்த யாத்த மண்" என்றும் கூறினாரென்க. மூவர், சேர சோழ பாண்டியர். உலகம் "சேயோன் மேய மைவரை யுலகமும்" (தொல். அகத். 5) என்றாற்போல, நாடென்பது பட நின்றது. இத்தமிழகம் மூவர்க்கும் பொது வென்மது நன்கு விளங்க. "பொதுமை சுட்டிய மூவருலகமும்" என்றார். "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" (தொல். செய் 78) என்று ஆசிரியர் கூறுவது காண்க. உடம்பு நீ்ங்குங்கால் உயிரோடு தொடராமையின், "துணை வைத்தன்றே வெறுக்கை" யென்றார் அன்றே யென்பதை அசைநிலையாக்கி, அறவினை செய்தற்கு வெறுக்கை துணையே யன்றி அறவினை போல உயிர்க்குத் துணையாவதில்லை யெனினுமமையும். இம்மைக்கண் வித்தாய் நின்று மறுமை வீடுபோற் றின்பங்களை விளைவித்தலின், "வித்தும் அறவினை" என்றார். விழுமிய வென்பவற்றுள் விழுமியது வீடுபேறாதலின், அதனைப் பெறுதற்குத் துணையாகும் அறவினை "விழுத்துணை" யெனப்பட்டது. துணையாதல் எங்ஙனம் என்பாரக்குப் புணையாகிய உவமையின் வைத்து, "அத்துணைப்புணை" யென்றார். புணையென்தற்கேற்ப, இம்மையம்மைகள் "இக்கரை உக்கரை" எனப் பட்டன.அக்கரை யெனின், அது மறுமையாகிய துறக்க வுலகாய் மீளவும் பிறததற் கேதுவாகலின் அதனின் மேலதாகிய வீட்டுலகு என்றற்கு உக்கரை யென்றார். ஆண்டிசினோர்க்கும் ஆண்டுகள் மாண்ட; வெறுக்கை வைத்த தன்று; விழுத்துணை அறவினையே; அத்துணைப் புணை, கைவிட்டோர்க்கு உக்கரைகொளல் அரிது எனக்கூடிய வினைமுடிவு செய்க.

விளக்கம்: தமிழகம் சேர சோழ பாண்டியார் மூவர்க்கும் பொது வென்பது பண்டையோர் கொள்கை. இவருள் யாவரேனும் ஒருவர் பொதுமையின்றித் தாமே யாண்ட காலமு முண்டாதலின், "பொது மையின்றி யாண்டிசினோர்க்கும்" என்றார், "போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது" (புறம். 8) "பொழமையின்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்" (புறம். 186) என வருதல் காண்க. வேந்தர் பொதுமையின்றித் தாமே யாண்ட காலத்தும் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லை மாறியது இல்லை; சோழன் பாண்டி நாட்டைக் கொண்ட போதும், பாண்டியன் சோழ நாட்டைக் கொண்டு போதும் பாண்டி நாட்டின் பெயரையோ சோழ நாட்டின் பெயரையோ எல்லைகளையோ மாற்றியது கிடையாதென்பதை இடைக்காலப் பல்லவ சோழ பாண்டியர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பிரமனாரென்ற பெயர்கொண்டு இவரைப் பார்ப்பனரென்பது பொருந்தாதென்பது மேலே காட்டிய கல்வெட்டால் விளக்கும்.
---------

358. வான்மீகியார்

வடமொழியில் இராமாணம் எழுதிய வான்மீகியார் வேறு, இவர் வேறு தமிழ் நல்லிசைச் சான்றோராகிய இவர் வடமொழிப் புலவரான வான்மீகியாரது நூலிற் பேரீடுபாடு கொண்டிருந்தத னாலோ, இவர் தந்தையார்க்கு வடவான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு இப்பெயருண்டாயிற்றெனக் கொள்ளலாம். இனி, "இவர் பெயர் வான்மீகனா ரெனவுங் வழங்கப்படுமென்பது 'அறுவகைப்பட பார்ப்பனப்பக்கமும்’ (தொல்; புறம்:20) என்பதன் உரைக்கணுள்ள வழக்காற் றெரிவது. வடமொழியில் வல்லமுனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புணைந்து விளங்கினர் என்பது செந்தமிழ்நாட்டு நல்லிசைப் புலவர் பொயர்கள் பல கொண்டு தெரியலாம். இனி வட மொழிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருது வாருண்டு (தமிழ் வரலாறு. பக். 246) என்று திரு, ரா. இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப் புறப்பாட்டாசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு தமிழகத்தில் நன்கு பரவியிருந்ததென்பது தெளிய விளங்குகிறது. இவர்க்கு மனையறத்தினும் துறவறம் சிறந்ததென்பது கருத்து. அதனை வற்புறுத்தமாற்றால் இவ் வான்மீகியார் இப் பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண் உலகியல் எழுவர் தவைராக நிலவும் செயல்முறை போல்வது; அதனால் அறிந்தோர் தவத்தைக் காதலித்து வையத்திற் பற்றிவிட்டனர். திருமகள் பற்றுவிட்டோரை நீங்காள் விடாது பற்றிலே யழுந்தியிருப்போரைத் திருமகள் கைவிட்டு நீங்குவள்; ஆதலால் தவமே செயற்பாலதென்று வற்புறுத்தியுள்ளார்.

    பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
    ஒருபக லெழுவ ரெய்தி யற்றே
    வையமுந் தவழுந் தூக்கிற் றவத்துக்
    கையலி யனைத்து மாற்றா தாகலிற்
    கைவிட்டனரே காதல ரதனால்         5
    விட்டோரை விடாஅ டிருவே
    விடாஅ தோரிவள் விடப்பட் டோரே.
    ----------

திணை: அது. துறை: மனையறம் துறவற. வான்மீகியார் பாடியது.

உரை: பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் - ஞாயிற்றால் வலமாகச் சுற்றப்படும் இப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்; ஒரு பகல் எழுவர் எய்தியற்று - ஒருநாளில் எழுவரைத் தலைவராகக் கொண்டாற்போலும் தன்மைத்து; வையமும் தவமுத் தூக்கின் - உலகியலாகிய இல்லறத்தையும் தன் வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்; தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது - தவத்துக்கு வையம் சிறு கடுகவவும் நேர்படாதாம்; ஆகலின் - ஆதலால், காதலர் கைவிட்டனர் வீடு காதலித்தோர் இல்வாழ்விற் பற்றுவிட்டனர்; திரு விட்டோரை விடான் - திருமகள் தன்பாற் பற்றுவிட்டோரை நீங்காள்; இவள் விடப்பட்டோர் - இத் திருமகளால் விடப்படடோர்; விடார் - இல்வாழ்விற் பற்றுவிடாது அதனுள் - அழுந்தி வருந்துவர் எ - று.

பருதியாற் சூழ்வரப்பட்டது நிலம் என்றாராயினும் நிலத்தாற் சூழ்வரப்பட்டது பருதி யென்பது கருத்தாகக் கொள்க. எழுவார் தலைவராகிய வழி, அவர் கீழ் வாழ்வோர்க்கு ஒருகாலும் இன்பமில்லையாம்; இன்பம் போலத் தோன்றுவதெல்லாம் துன்ப மேயாதலின் "ஒரு பகல் எழுவரெய்தியற்று" என்றார். எழுவர் என்பது பலர் என்னும் பொருள்பட நின்றது. இல்வாழ்க்கை உற்ற நோய் பொறாது வருந்துதலும் உயிர்க்கு உறுகண் செய்தாரை முறையும் மானமுங் கருதி வருத்துதலு முடைமையின் தவத்துக்குச் சிறிதுமாற்றாதெனப் பட்டது. தன்பாற் பற்று வைத்தார் கடும் பற்றுள்ள முடையராய் அறஞ்செய்தலும் இன்ப நுகர்தலுமின்றித் திருவுடைமைக் கேதுவாகிய அறப்பயனை யிழத்தலின், "விடாதோர் இவள் விடப்பட்டோர்" என்றார். "இலர்பல ராகிய காரணம் நோற்பார், சிலர் பலர் நோலாதவர்" (குறள். 270) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

விளக்கம்: இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் வான்மீகையாரெனவும் காணப்படுகிறது. வான்மீகையாரென்பது உண்மைப் பாடமாயின், இது செந்தமிழ்ச் சான்றோரொருவது தமிழியற் பெயராய் வட வான்மீகியாரோடு தொடர்பு யாதும் இல்லதாம். வான்மீகையார் என்பது மழையினும் மேம்பட வழங்கும் வண்கையுடைய வரென்று பொருள்படும். ஒரு பகலில் பலர் தலைவராகியவழி அவர் தலைமையின் கீழ் எவர்க்கும் எத்துணையும் இன்பமில்லையாம். "எழுவ ரென்றது ஒரு பகவலவைக்குள் இறந்த அரசர் ஒருவர்பின் னொருவராக அரசெய்திய எழுவரைக் குறித்தது; எழுவர் "ஒரு குடியிரைல்லாத எழுவரெனினுமைமையும்" என்று திரு. ரா. இராகவையங்கார் கூறுவர். தவம், துறவறத்துக்குச் சிறந்ததையின் வையம் இல்லறத்துக்குரியதாயிற்று. இல்வாழ்வில் செய்வனவும் தவிர்வனவும் பொருள்மேற் பற்றின்றிக் கடனெனச் செய்தவழி, திருமகள் செய்வோனை நீங்காது உறைவள் என்பார், "விட்டோரை விடாள் திருவே" என்றார். திருமகள் தவத்தை விரும்புவளாதலால், தவத்தைக் கைக்கொண்டு வையத்தைக் காதலியாது விட்டாரைத் திருமகள் தவம் பற்றி விரும்பியுறைதலால், தவங் கைவிட்டு வையத்தைக் காதலிப்பாரை "இவள் விடப்பட்டா" ரென்றார். "திரு இறைவன் அருட்சக்தியாதலின் பற்றறற்வர் இறைவனருளாற் பற்றப்பட்டவ ரென்பதும், பற்றுவிடாதார் அருளாற் பற்றப்படாது விடப்பட்டவரென் பதும், கருத்தாதல் கொள்க" என்று திரு. ரா. இராகவையங்கார் கூறவர்.
------------

359. அந்துவன் கீரன்

அந்துவன் கீரன் என்பவன் ஒரு சிறந்த தமிழ்த் தலைவன். அந்துவன் என்பாற்கு மகனாதலின், இன் கீரன் அந்துவன் கீரன் எனக் குறிக்கப் பெறுகின்றான். நல்லிசைச் சான்றோர்பால் பேரன்புடைய இவன் அவர் சொல்வழி நின்று பெரும் பொருள்ஈட்டிச் சிறந்த புகழ் கொண்டு விளங்கினான். ஆயினும், அவற்கு உலகியலிற் பெரும்பற்று உண்டாயிருந்தது. அவன் வேட்கை பொருளீட்டற்கண் மிக்க ஊற்றமோடிருந்தது. அதனை மாற்றி அவன் கருத்தைப் புகழ் பயக்கும் பெருந்துறையில் செலுத்தச் சான்றோர் பலர் முயன்றனர். அவருள் காவிட்டனார் அவனை நெருங்கித் தெருட்டற்கு வேண்டும் செவ்வி பெற்றார். அப்போது அவர் கூறக் கருதிய அறவுரை இப் பாட்டாய் வெளிவருதாயிற்று.பெருநாடுகளை வென்று கொண்ட முடிவேந்தாராயினோரும் முடிவில் முதுகாட்டை யடைந்தார்களே யன்றி நிலைபெற இருந்தாரில்லை. நினக்கும் அவ்வாறு ஒருநாள் வருதல் தப்பாது; இவ்வுலகில் இசையும் வகையுமே ஒப்ப நிற்பனவாம். ஆதலால் வசை நீக்கி இசை நடுதலும், ஒருபாலும் கோடாது முறை வழங்குதலும், இரவலர்க்குக் களிறும் மாவும் தேரும் பிறவும் கொள்ளெனக் கொடுத்தலும் செய்க; செய்வாயாயின், நீ மேலுலகம் புக்க வழியும் நீ எய்தும் புகழ் இவ்வுலகம் உள்ளவும் நிலைபெற நிற்குங்காண் என்று இப் பாட்டின் கண் அறிவுறுத்தி யுள்ளார்.

ஆசிரியர் காவிட்டனாரைக் கானட்டரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில். காவிட்டன் என்ற இப் பெயர் கோயில்பட்டர்களிடையே பயில வழங்கியிருந்ததென்று சோழவந்தானுக் கண்மையிலுள்ள தென்கரைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. "அதிஐய மங்கலத்துகூ காவிட்டன. முத்தசீராமபட்டன; காவிட்டன் வடுகனாதித்தன்" (S. I. I. Vol. V. No.294) என வருவது காண்க. களவுக் காலத்தில் தலைவி தலைவனைக் காணப்போதில் எய்துந் துன்பத்தைப் பெருங்கால் நாடன் பிரிந்த புலம்பும், உடன்ற அன்னை அமரா நோக்கமும், ஞாயிறு குடகடல் சேரும் படர்கூர் மாலையும், அனதை்தும் அடூஉ நின்று நலிவும்" (அகம். 378) என வகுத்துக் கூறும் இவரது அகப்பாட்டு இவரது புலமை நலத்தைக் காட்டி இன்புறுத்துகின்றது.

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
    பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
    விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்         5
    களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமன் னினரே நாடுகொண்ட டோரும்
    நினக்கும் வருதல் வை கலற்றே
    வசையு நிற்கு மிசையு நிற்கும்         10
    அதனால், வசைநீ்க்கி யிசை வேண்டியும்
    நசைவேண்டாது நன்றுமொழிந்தும்
    நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு
    பொலம்படைய மாமயங்கிட
    இழைகிளர் நெடுந்தே ரிரவலர்க் கருகாது         15
    கொள்ளென விடுவை யயின் வெள்ளென
    ஆண்டுந் பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்குநீ யெய்திய புகழே.
    -----------

திணை: அது. துறை : பெருங்காஞ்சி, அந்துவன்கீரனைக் காவிட்டனார் பாடியது.

உரை: பாறுபடப்பறைந்தபல்மாறு மருங்கின் - முற்றவும் கெட்டுத் தேய்ந்தமிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்; வேறுபடு குரல - வேறுபட்ட குரலினையும்; வெவ்வாய்க் கூகையொடு - வெவ்விய வாயையுமுடைய கூகையொடு கூடி; பிணந்தின் குறுநரி நிணம் திகழ் பல்ல - பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை யொட்டிய பற்களையுடையவாய்த் தின்றுகொண்டிருக்க; பேஎய் மகளிர் பிணம் தழூ உப்பற்றி - பேய்ப் பெண்டிர் பிணங்களைத் தழுவிப் பற்றிக் கொண்டு; விளர் ஊன் தின்றவெம்புலால் மெய்யர் - வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய்; களரி மருங்கில் கால் பெயர்த்தாடி பிணம் வைத்துச் சுறாம் களர் நிலத்தில் காலைப் பெயர்த்து வைத்துக் கூத்தாடி ஆம விளக்கின் வெருவரப்பேரும் சுடுகாட்டுத் தீயின்கண் அச்சம்வர நீங்கும்; காடு - சுடுகாட்டை; நாடு கொண்டோரும் முன்னினர் பெரு நாடுகளை வென்ற முடி வேந்தரும் சென்றடைந்தனர், நினக்கும் வைகல் வருதல் அற்று நினக்கும் காடு முன்னும் நான் வருதல் அத்தன்மைத்தாம்; வசையும் நிற்கும் இசையும் நிற்கும் இவ்வுலகில் ஒருவன் செய்த பழியும் நிலைபெறும்; புகழும் நிலைபெறும் அதனால் -; வசை நீக்கி இசை வேண்டிய - பழி நீக்கிப்புகழ் நிறுவியும், நசைவேண்டாது நன்று மொழிந்தும் - கைக்கூலி பெற்றக் கோடுதலை விரும்பாது நடுவுரையாகிய அறமே மொழிந்தும்; நிலவுக் கோட்டுப் பல களிற்றோடு விளங்குதலையுடைய கொம்புகளையுடைய பலவாகிய களிறும்; பொலம்படைமா - பொற் கலண்ணிந்த குதிரைகளும்; மயங்கிட கலந்து வர; இழைகிளர் நெடுந்தேர் - பொன்னிழை யணிந்த நெடிய தேர்களை, இரவலர்க்கு அருகாது கொள்ளென விடுவையாயின் - கொள்வீராகவென இரவலர்க்கும் குறைவறக் கொடுத்துச் செல்லவிடுவாயாயின்; வெள்ளென - வெளிப்படையாக; நீ ஆண்டுப் பெயர்ந்த பின்னும் - நீ மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும்; நீஎய்திய புகழ் - நின் ஈகையாலுளதாரும் புகழ்; ஈண்டு நீடு விளங்கும் - இவ்வுலகில் நெடிது நிலைநிற்கும்; எ - று.

இது யாக்கை நிலையாமை கூறி்ப் புகழுண்டாக வாழ்தலை வற்புறுத்தியது. பேணுவாரற்ற பாழிடமென்றற்குப் "பாறுபடப்ப றைந்த பன்மாறு மருங்கின்" என்றார். மாறு வற்றியுலர்ந்த முட்கள் உயர்த்தியும் தாழ்த்தியும் உருட்டியும் குழறும் கூகையின் குரலை, "வேறுபடு குரல்" என்றார். பிணத்தின் ஊன் குருதியின்றி வெளுத்திருக்கும் மாகலின், "விளரூன்" எனபப்ட்டது. களரி - ஈண்டுப் பிணஞ் சுடும் இடம்; களர் நிலமுமாம். பொதுச்சொல் பொறாது மைந்து மலிந்து பிற நாடுகளைத் தம் ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்த முடிவேந்தரை, "நாடு கொண்டோர்" என்றார். வைகல். நாள். உலகியலில் பகலும் இரவும் நிலைபெறுமாறுபோல, இசையும் வசையும் நிலைபெறுவதனால், "இசையும் நிற்கும் வசையும் நிற்கும்" என்றார். வசைக்கேது நசைமயும் இசைக்கேது நன்றுமாதலின், "நசை வேண்டாது நன்று மொழிந்து" என்றாரென அறிக. நசை பொருண்மேனின்று தீநெறியிற் செலுத்தவது. வெள்ளெனல் வெளிப்படையாக யாவரும் காண விளங்குதல். கூகையொடு குறுநரி பல்லவாய்ப்போருங் காடு, பேய் கொண்டோரும் காடு முன்னினர்; நினக்கும் அற்று; நிற்கும், நி்ற்கும்; வேண்டியும் மொழிந்தும், விடுவையாயின், வெள்ளெனப் பெயர்ந்த பின்னும், புகழ் நீடு விளங்கும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: பெருங் காஞ்சியாவது "மலையோங்கிய மாநிலத்து, நிலையாமை நெறியுரைத்தன்று" (பு, வெ. மா. 10:2) என வரும், அந்துவன் கீரனுக்கு ஆசிரியர் காவிட்டனார் இப் பாடல் நிலையாமையை வற்புறுத்தி, நிலையாமைகொண்டு நிலையுதலுடையவற்றைச் செய்துகோடல் வேண்டுமெனக் கூறுகின்றார். முதற்கண் நிலையாமை காட்டும் முது காட்டின் இயல்பை எடுத்தியம்புவாராய், முதுகாட்டில் கூகையும் குறுநரியும் பேய் மகளிரும் இருக்கும் இருப்பை விளக்குகின்றார். கூகை குழறா நிற்ப, பிணங்களை குறுநரியும் ஈர்ந்து நிணந் தின்பதைக் காட்டுகின்றார்; வேண்டும், நிணத்தை ஆரவுண்ட பேய்மகளிர் சுடுகாட்டில் பிணஞ் சுட்டெரியும் கொள்ளிக் கட்டையின் ஒளியை விளக்காகக் கொண்டு கால் பெயர்த்தாடிக் கூத்தாடுவரெனவும், அது காண்பார்க்கு அச்சம் தருமெனமவும் குறிப்பார், "களரி மருங்கித் கால்பெயர்த்தாடி, ஈம விளக்கின் வெருவரம் அமைத்த மன்றம். இதன்கண் கிடக்கும் மரக்கட்டை யெரியுற் கால் உண்டாகும் ஒளியை விளக்காகக்கொண்டு களரி மன்றத்தைச் சூழ்வந்து கூத்தயரும் என்றுமாம். எனவே, இத்தகைய இடத்துக்கு யாவரும் செல்ல விரும்பா ரென்பது தேற்றம். ஆயினும், கண்ணுக்கினிய காட்சி வழங்கும் கடலும் வயலும் காடும் மலையும் பொருந்திய நாடுகளின் வளமும் நலமுமாகிய இவை தமக்கேயுரியவாதல் வேண்டுமென விழைந்து கைப்பற்றிக் கொண்ட முடியொடு விளங்கும் பெரு வேந்தரும் முடிவில் இம் முதுகாட்டையே அடைந்தனரென்பார், "காடு முன்னினரே நாடு கொண்டோரும்" என்றார். நீ யெய்திய புகழ் ஒன்றே இவ்வுலகில் நீடு விளங்கி நிற்பதென வற்புறுத்துகின்றாராதலால், அப் புகழைப் பயக்கும் கொடையினை, "நிலவுக்கோட்டு...விடுவையாயின்" என்றார்.
----------

360. தந்துமாறன்

தந்துமாறன் என்பான் பாண்வேந்தர் ஆணைவழி நின்ற தலைவர்களுள் ஒருவன்; இவன் நல்லொழுக்கமும் சான்றோர் உரைக்கும் சால் புரைகளிற் பேரீடுபாடும் உடையவன். மிக்க செலவத்தால் நற்புகழ் நிறுவிச் சிறக்கும் இவனைச் சங்கவருண ரென்னும் நாகரியர் கண்டு இவ்வறைவுரையை வழங்கியுள்ளார். இதன்கண் சிறு சினமும், பல கேள்வியும், நுண்ணுணர்வும் பெருங் கொடையும் பணிமொழியுமாகிய நற்பண்பு நற்செய்கைகளால் பலர்க்குப் பயன்பட வாழ்ந்து இன்பமாக அரசியல் நடத்திய வேந்தர் மிகச் சிலரேயாவர்; அவ்வாறு வாழ்வதை யறியாதவர் பலர்; அவர்தம் செல்வம் நிலை பெற்றதில்லை; இக்காலத்தும் அதன் பண்பு அத்தன்மையாகவேயுளது; அதனால் நீ ஒழுக்கம் குன்றாமல், இரவலர் இன்மை தீரக் கொடுத்தலைக் கைவிடா தொழிக; மேற் கூறிய ஒழுக்கக் குறைவின்றித் தாம் உடையது பகுத்துண்டு வாழ்வோருள்ளும் ஈமத்தின்கண் எரிவாய்ப்புக்க பின்னும் புகழ் வாய்த்திலர் பலர் எனச் சொல்லித் தெருட்டியுள்ளார்.

சங்கவருணர் என இச் சான்றோர் ஈண்டு வழங்கப்பட்டன ராயினும், இவரது இயற்பெயரை நாகரையர் என்று உணர்தற் கேற்பச் சங்கவருண ரென்னும் நாகரையர் எனப்படுகின்றார். இவர் பெயர் நாகரிகரென்றும் காணப்படுகிறது. சங்கவருண னென்பதற்கு வனைவணன் என்பது தமிழ். இப் பெயர் இங்கே வடமொழியில் மொழி பெர்க்கப்பட்டுள்ளது. வளைவணன் என்றொரு நாகநாட்டரசன் மணி மேகலையிற் காணப்படுகின்றன். இப்புலவர் பெயரும் நாகரையர் எனக் காணப்படுவதால். இவர் நாகநாட்டிற் பிறந்து தமிழகமடைந்து சான்றோர் குழுவிடை யிருந்தா னென்றும், அக்காலத்தே தந்து மாறனைக் கண்டு இப் பாட்டால் நிலையாமையாகிய அறத்தை வற்புறுத்தினான் என்றும் கோடற்கு இடமுண்டு. இவர் பாடிய இப் பாட்டொன்று தவிர வேறே பாட்டுக்கள் தொகை நூல்களிற் காணப்படவில்லை.

    பெரிதாராச் சிறுசினத்தர்
    சிலசொல்லாற் பலகேள்வியர்
    நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
    கலுழ்நனையாற் றண்டேறலர்
    கனி குய்யாற் கொழுந்துவையர்         5
    தாழுவந்து தழுஉ மொழியர்
    பயனுறுப்பப் பலர்க்காற்றி
    ஏமமாக விந்நில மாண்டோர்
    சிலரே பெரும கேளினி நாளும்
    பலரே தெய்யவஃ தறியா தோரே         10
    அன்னோர் செல்வமு மன்னிநில்லா
    தின்னு மற்றதன் பண்பே யதனால்
    நிச்சமு மொழுக்க முட்டிலை பரிசில்
    நச்சுவர நிரப்ப லோம்புமதி யச்சுவரப்
    பாறிறை கொண்ட பயந்தலை மாறுதகக்         15
    கள்ளி போகிய களரி மருங்கின்
    வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு
    புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
    புலைய னேவப் புனமே லமர்ந்துண
    டழல்வாய்ப் புக்க பின்னும்         20
    பலர்வாய் திராஅர் பகுத்துண்டோரே.
    ---------

திணையும் துறையுமவை. தந்துமாறனைச் சங்கவருண ரென்னும் நாகரையர் பாடியது.

உரை: பெரிதாராச் சிறு சினத்தர் - மிகைபட வுண்ணாத சிறிதே சினமுடையவரும்; சில சொல்லால் பல கேள்வியர் - சிலவாகிய சொற்களைச் சொல்லுதலோடு பல பொருள்களைச் சான்றோர் சொல்லக் கேட்டலையுடையவரும்; நுண்ணுணர்வினால் பெருங்கொடைர் - நுண்ணுணர்வோடு பெருங்கொடை வழங்குபவரும்; கலுழ் நினைால் தண் தேறலர் - கலங்கிய கள்ளோடு தண்ணிய கட்டெளிவை யளிப்பவரும்; கனி குய்யால் பொழுந்துவையர் - கனிந்த தாளிதத்தோடு கூடிய கொழுவிய துவையலைப் பிறர்க்களிப்பவரும்; தாழுவந்து தமூஉமொழியர் - எல்லோர்க்கும் பணிவை விரும்பி அவரை வணங்கிய சொல்லால் தழுவிப் பேசும் இன்சொல்லையுடையவருமாய்; பலர்க்குப் பயனுறுப்ப ஆற்றி - பலர்க்கும் பயனுண்டாகத்தக்க செயல்களைச் செய்து; இந் நிலம் ஏமமாக ஆண்டோர் - இந்நிலவுலகம் இன்பநிலைய மாமாறு ஆண்ட வேந்தர்; சிலர் - சிலராவர்; பெரும - பெருமானே; இனி கேள் - இப்பொழுது யான் சொல்வதைக் கேட்பாயாக; அஃது அறியாதோர் பலர் - அவ்வாறு அவர் வாழுந்திறத்தையறியாதவர் பலர்; அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது - அவ்வறியாதாருடைய செல்வமும் நிலைத்து நில்லாது; அதன் பண்பு இன்னும் அற்று - அச் செல்வத்தின் நிலையாப் பண்பு இப்பொழுதும் அவ்வாறேயாம்; அதனால் நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை - ஆதலால் நாடொறும் நினக்குரிய ஒழுக்கத்தில் குன்றாதொழிக; பரிசில் நச்சுவர நிரப்பல் ஓம்புமதி - நின்பாற் பொருள்நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக; அச்சுவரப் பாறு இறை கொண்ட பறந்தலை - கண்டார்க்கு அச்சமுண்டமாறு கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய; மாறுதக - மாறுபட்ட இடத்துக்கத் தக; கள்ளி போகிய களரி மருங்கின் - கள்ளிகள் ஓங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கள்; வெள்ளில் நிறுத்த பின்றை - பாடையை நிறுத்தி பின்பு; புல்லகத்துக் கள்ளொடு இட்ட சில்லவிழ் வல்சி - பரப்பிய தருப்பைப் புல்லின்மேல் கள்ளுடனே படைக்கப்பட்ட சில சோறாகிய உணவை; புலையன் ஏவ - புலையன் உண்ணுமாறு படைக்க; புல்மேல் அமர்ந்துண்டு - தருப்பைப் புல்லின்மேல் இருந்து உண்டு; அழல்வாய்ப் புக்க பின்னும் - சுடலைவாய்த் தீயில் வெந்து சாம்பரானது கண்ட பின்னும்; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் - பகுத்துண்டு வாழும் வலருள்ளும் பலர் ஒழுக்கங்குன்றாத புகழ் வாயத்திலர்; எ - று.

பெரிதுண்டல் நோயும், கழிசினம் தீமையும் பயத்தலின், "பெரிதாராச் சிறு சினத்தர்" என்றும், தெளிந்த அறிவுடைமை தோன்ற, "சில சொல்" லுவரென்றும் கூறினார். பல கேள்வியின் பயன் நுண்ணுணர்வுடைமை. நுண்ணுணர்வுடைார்க்கப் பணிவின்கண் உவப்பும் பிறரை இன்சொல்லாற் றழீ இக்கோடலும் இயல்பு. பிறர் பிழைபட்ட பல சொற்கள் கூறினும் பொருள் தேர்ந்து தழீஇக் கொள்வரரெனினுமாம்; "வல்லாராயினும் புறம றைத்துச் சென்றோரைச்சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கம்" (மலைபடு. 78-80) நயனு டைமை தோன்ற, "தாழுவந்து தழூஉமொழியர்" என்றாரென்றுமாம். பலர்க்கம் உதவும்போது மிக்க பயன் கருவனவற்றைத் தேர்ந்து உதவுவரென்பார், "பயனுறுப்ப பலர்க் காற்றி" என்றார். இப்பெற்றியோர் இருப்பு, உலகர்க்கு அரணாய் இன்பத்துக் காக்கமாதலின், "ஏமமாக இந்நிலை மாண்டோர்" எனல் வேண்டிற்று. ஏமம், இன்பம். தெய்ய; அசை நிலை. தகையென்பதே பாடமாயின் பெருந்தகையே யென விளியாக்குக. இன்னோர் பெரிய தவமுடைய ராதலின், ஆண்டோர் சிலராயினர். தவமுடையாராதற்கேது நிலையாமையறிவாகலின், அதனை "அஃது" என்றொழிந்தார். அறியாரது அறியாமை பற்றிச் செல்வம் நிலை பெறாதென்பார், "அன்னோர் செல்வமும் மன்னி நில்லா" தென்றும், நிலையாமை செவ்வத்துக்கென்றுமுள்ளதோரியல் பென்றற்கு "இன்னும் அற்றதன் பண்பே" யென்றும் கூறினார். முட்டுதல் - அஞ்சுவர வென்பது எது கையின்பம் குறித் வலித்தது. ஈமத்தில் எரிவாய் இடுவதன்முன், பிணத்தைப் பாடையின் நீக்கித்தருப்பையும் புன்மேற் கிடத்தி, எதிரே பரப்பப்பட்ட தருப்பையில் சோற்றை வைத்துப் புலயன் படைப்பன் என்பது. புல்லகத் திட்ட வல்சி புலையனேவப் புன்மேலமர்ந்துண்டென்பதனாற் பெற்றாம். பின்பு, போர்ப் புண்படாது நோயுற்றிறந்தாரை வாளாற் போழ்ந்து ஈமத்திடுவது பண்டை யோர் மரபு. வாய்த்தல். ஒழுக்கங்குன்றாது கொடையாற் பெறும் புகழ் வாய்த்தல். பருத்துண்டோர் என்று பாடமாயின், உண்டு பருத்தோர் கல்வி கேள்விகளால் உணர்வு பெருகாதோர் என்பதாம். சினத்தரும் கேள்வியரும் கொடைரும் தேறலரும் மொழியருமாகி, இந்நிலம் ஏமமாக ஆண்டோர் சிலர்; பெரும; இனி; கேள்; அஃது அறியாதோர் பலர்; அன்னோர் செல்வமும் நில்லா; பண்பு இன்னும் அற்று; அதனால் முட்டிலை, நிரப்பல் ஓம்புமதி; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: நிலையாமையறிந்து இந்நிலமாண்டோராகிய சிலரும், அறியாதார் பலருமாகிய இருதிறத்து வேந்தர் செல்வமும் நில்லாது; அதனால் நீ ஒழுக்கம் முட்டிலையாய் நிரப்பல் ஓம்புமதியென்பவர், இவ்வுண்மையறிந்து பகுத்துண்பவர் பலரும் செல்வமும் வாழ்வும் நிலை பெறப் பெறுவர் போலும் என்னும் ஐயமறுத்தற்குப் "பலர் வாய்த்திரார் பகுத்துண்டோர்" என்றார். இனி, தாம் உடையது பகுத்துண் போருள்ளும் ஒழுக்கமுட்டாது புகழ் வாய்ந்திருந்தவர் சிலரே; பலர் அது வாய்த்திரார் என வுரைப்பினுமமையும். இதற்குப் புகழ் என ஒருசொல் வருவித்துக் கொள்க.
-------------

361. கயமானர்

அச்சுப்பிரதிகளில் இப்பாட்டைப்பாடின ஆசிரியர்பெயர் காணப்படவில்லை. கிடைத்த கையெழுத்துப்படியில் இப்பாட்டைப்பாடியவர் கயமனாரென்று குறிக்கப்பட்டிருந்தது; இடையிற் சிதைந்திருந்த அடிகள் நிறைவுற்றும் இருந்தன; ஆயினும், இதன் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை. அதனால் அக் கையெழுத்துப் படியை மேற்கொண்டே ஈண்டு உரையும் பிறவும் கூறப்படுகின்றன. இப்பாட்டின்கண் ஆசிரியர் கயமனார் செல்வச் சிறப்புமிக்க தலைவனொருவனைக் கண்டு நிலையாமையை அறிவுறுத்தி நன்னெறிபல எடுத்துரைப்பாராய்க் கூற்றுவனை நோக்கி, "கூற்றமே, எங்கள் தலைவன், நின் வரவுக்கு அஞ்சுபவனல்லன்; அவன் அந்தணர்க்கு அருங்கலங்களை நீர் பெய்து தந்துள்ளான்; பலர்க்கும் தாயினும் சால்ப் பரிந்து அவர் வேண்டுவன பெரிதும் நல்கியவன்; தன் அருணிலைபாடும் புலவர் பொருநர் முதுலாயினார்க்குக் களிறும் மாவும் கொடுத்தவன்; தன் தாள் பணிந்து அன்பராகின்றவர்க்குப் பகைவர்களை வென்று பெற்ற பெருவளங்களைத் தந்தவன்; பாடினிக்குப் பொன்னரிமாலையும் பாணருக்குப் பொற்றாமரையும் அளித்தவன்; பொற்கலத்தில் தேறலேந்தி மகளிர் தரவுண்டு மகிழ்பவனாயினும், ஒருபொழுதும் யாக்கை செல்வ முதலியவற்றின் நிலையாமையியல்பை மறப்பதிலன். அவற்கு உலகவாழ்வின் நிலை யாமை நீ தெரிவித்தல் வேண்டா; அவன் யாவையும் முன்பேயறிந்து உணர்வன முழுவதும் உணர்ந்து கேட்பன தெளியக் கேட்டுச் சிறந்துளான்" என்று கூறியுள்ளார்.

    காரெதி ருருமி னுரறிக் கல்லென
    ஆருயிர்க் கலமரு மாராக் கூற்றம்
    நின்வர வஞ்சலன் மாதோ நன்பல
    கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்
    கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத்         5
    தாயி னன்று பலர்க்கீத்துத்
    தெருணடை மாகளி றொடுதன்
    உருணடைப் பஃறே ரொன்னார்க் கொன்றதன்
    தாள்சேருநர்க் கினிதீத்தும்         10
    புரிமாலையர் பாடினிக்குப்
    பொலந்தாமரைப் பூம்பாணரொடு
    கலந்தளைஇய நீளிருக்கையாற்
    பொறையொடு மலிந்த கற்பின் மானோக்கின்
    வில்லெ விலங்கிய புருவத்து வல்லென         15
    நல்கி னாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்
    அல்கு றாங்கா வசைஇ மெல்லென
    கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி
    அமிழ்தென மடுப்ப மாந்தி யிகழ்விலன்
    நில்லா வுலகத்து நிலையா மைநீ         20
    சொல்ல வேண்டா தோன்றன் முந்தறிந்த
    முழுதுணர் கேள்விய னாகலின்........
    ..................விரகி னானே.
    --------------

.............கயமனார் பாடியது.

உரை: கார எதிர் உருமின் உரறி - கார் காலத்திற்றோன்றும் இடி போல் சட்டெனத் தோன்றி; கல்லென -; ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம் - நிறைந்த உயிர்களை யுண்டற் பொருட்டுத் திரியும் நிரம்பாக் கூற்றமே; நின் வரவு அஞ்சலன் - நின் வருகைக்கு அஞ்சுதல் இல்லான்; நன்பல கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு - நல்ல பல நூல்களைக் கேட்டு அறிவு நிரம்பிய வேள்வி செய்தலையுடைய அந்தணர்களுக்கு; அருங்கலம் நீரொடு சிதறி - பெறற்கரிய பொற்கலங்களை நீர் வார்த்துக் கொடுத்து; பெருந்தகை - பெரிய தகைமையையுடைய எம் தலைவன்; தாயின் நன்று பலர்க்கு ஈத்து - தாயினும் பெரிய அன்புடையனாய் இரவலர் பலர்க்கும் வேண்டுவன கொடுத்து; தெருள் நடை மா களிறொடு - தெருண்ட நடையினையுடைய குதிரையும் யானையும்; தன் அருள் பாடுநர்க்கு அருணலம் பாடும் பொருநர் முதலாயினார்க்கு; நன்கு அருளியும் - மிகக் கொடுத்தும்; ஒன்னார்க் கொன்ற தன் தாள் சேருநர்க்கு உருள் நடைத் தேர் பல இனி தீத்தும் - பகைவரைக் கொன்ற தன் தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உருண்டு செல்லும் தேர்கள் பல வுவந்தளித்தும்; புரிமாலையர் பாடினிக்கு - பொன்னரிமாலை பெறற்குரிய பாடினிகட்கும்; பொலந்தாமரைப் பூம்பாணரொடு - பொன்னாற் செய்த தாமரைப் பூவைப் பெறற்குரிய பாணர்கட்கும்;கலந்தளைஇ நீள் இருக்கையால் - தம்மிற் கலந்து வேண்டுவன நல்கி அளவளாவியிருக்கும் நெடிய இருக்கைக்கண்; பொறையொடு மலிந்த கற்பின் - பொறுமைக் குணங்களால் நிறைந்த கற்பிணையும்; மான் நோக்கின் - மான்போலுங் கண்களையும்; வில்லென விலங்கிய புருவத்து - வில்போல் வளைந்த புருவத்தையும் வல்லென நல்கின் - வல்லென ஒரு சொல் வழங்கின்; நாவஞ்சும் முள்ளெயிற்று மகளிர் - நா அஞ்சு தற்கேதுவாகிய முட்போன்ற பற்களையுமுடைய மகளிர்; அல்குல் தாங்கா அசைஇ - அல்குலிலணிந்த மேகலையைத் தாங்கமாட்டாது தளர்ந்து; மெல்லென - மென்மையாக; கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி - கலங்கலாகிய கள்ளைப் பொன்வள்ளத் தேந்தி; அமிழ்தென மடுப்ப மாந்தி - அமிழ்துண்பிப்பாரைப் போல வுண்பிக்க வுண்டும்; இகழ்விலன் - நிலையாமை யுணர்வை மறப்பதிலன்; நில்லா உலகத்து நிலையாமை நீ சொல்ல வேண்டா - நிலைபேறில்லாத உலகியலின் நிலைாமை யியல்பை நீ எடுத்துச் சொல்லவேண்டா; தோன்றல் - எங்கள் தலைவனாகிய அவன்; முந்தறிந்த முழுதுணர் கேள்வியன்- முன்பே யறிந்து மறவா தொழுகும் உணரத்தகுவன வற்றை முற்றவுணர்ந்த கேள்வியறிவுடையன்; ஆகலின் - ஆதலால்...; விரகினான் - விரகின்கண்: எ - று.

கார்காலத்து மழைமுகிலிற் றோன்றும் இடி எதிர்பாரா வகையில் திடீரெனத் தோன்றி முழங்குவது போலக் கூற்றுவன் தோன்றி யச்சுறுத்தலின் "காரெதிர் உருமு" எடுத்தோதப்பட்டது. எளவிறந்த உயிர் இரவு பகலென்னாது ஓய்வின்றி யுண்டும் அமையாது மேன் மேலும் உண்ட வண்ணமிருத்தலின், "ஆருயிர்க் கலமரும் ஆராக் கூற்றம்" என்றார். கூற்றம்: விளி. வேள்வி செய்தலையுடைய அந்தணர்தாம் பெறுவனவற்றை நீர்வார்த்துத்தரப்பெ.றவதையே இயல்பாகவுடைய ரென்பதுபற்றி, "அருங்கலம் நீரொடுசிதறி" யென்றார். "ஏற்ற பார்ப்பார்க்கும் ஈர்ங்கை நிறைய, பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து" (புறம். 367) என்றார் பிறரும். கதியும் சாரியையும் நன்கு பயின்ற குதிரையின் நடை மிகவும் தெளிவாக இருத்தலின், "தெருணடைமா" எனச்சிறப்பிக்கப்பட்டது. தாயினும் சிறந்த அன்புகொண்டு ஈதலின், பலரென்றது இரவலரை யாயிற்று. தாள் சேருநர் என்றது அருள் வேண்.டிய வேந்தரையென்றுமாம்.

பாணரொடு என்புழி மூன்றாவது நான்காவதன்கண் மயங்கிற்று. பாடினி மாலையும் பாணர் தாமரையும் பெறுதலை, "வாடாமாலை பாடினியணியப், பாணன்சென்னிக் கேணி பூவா, எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க" (புறம். 364) எனப்பிறரும் கூறுதல் காண்க. உரிமை மகளிராதலின், அவருடைய பொறையும் கற்பும் விதந்தோதினார். வல்லென்ற சொற்களை விரைந்து பேசின் மேலும் கீழும் உள்ள பற்கள் துள்புறுத்துமென அஞ்சினமை தோன்ற, "வல்லென நல்கின் நாவஞ்சு முள்ளெயிற்றுமகளிர்" என்றார்; "அமிழ்து பொதிசெந் நாவஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெ யிற்றுச் சின்மொழி யரிவை" (குறுந் 12) என்று சான்றோரும் கூறுவது காண்க. அல்குல்: ஆகுபெயர். இகழ்தல், ஈண்டு மறத்தன் மேனின்றது; தன்னுயிரைக் கொள்ள வருகின்ற நின் கொடுமைபற்றி நின்னை இகழ்விலன் என்றற்கு ஏது கூறுதலின், "முந்தறிந்த முழுதுணர் கேள்வியனாகலிந்" என்றார். கூற்றம். பெருந்தகை; சிதறி, ஈத்து அருளியும், ஈத்தும், அளைஇய இருக்கையில், மடுப்பமாந்தி இகழ்விலன்; அதனால் நின் வரவு அஞ்சலன்: நீ நிலையாமை சொல்லவேண்டா; தோன்றல் கேள்வியனாகலின் எனக்கூட்டி வினைமுடிவு கொள்க. இதன் ஈற்றடியின் முதலிரு சீர்களும் சிதைந்து விட்டன.

விளக்கம்: எத்தனை வலியுடையாராயினும் போரெதிர்ந்தவழி அஞ்சாது நின்று பொருது வெல்லும் பேராண்மையுடையவனாதல் கண்டு, அவன் அஞ்சுமாறு இடிபோல் உரறிவருமாயினும் கூற்றத்துக்கு அஞ்சான் என்பது விளங்குதற்கு. "காரெதிர் உருமின் உரறிக் கல்லென" வரும் கூற்றம் என்றார். இனி, எந்நாளாயினும் ஒரு நாள் கூற்றம் வருவது ஒருதலை யென்றும், அது வருமுன் செய்தற்குரிய நல்வினை செய்தல் வேண்டுமெனக் கருதி அவற்றைச் செய்துள்ளானென்றும், அதனால் அவன்முன் கூற்றம் அச்சமுண்டாகத்தோன்றி வருதல் பயனில் செயலென்றும் கூறுவார், "கூற்றம் நின்வர வஞ்சலன்" என்றாரென்றுமாம். அற்தணர், அரசர். பாணர், விறலியார் முதலிய பலர்க்கும் அவரவர் வரிசையறிந்து நல்கினான் எனவே, நிலையாமை யுணர்வு நன்கு வாய்த்திருப்பது விளங்கிற்று, கலங்கலந் தேறலை மகளில் மடுப்ப மாந்தி இன்பக் களிப்பில் மூழ்கியிருந்த காலத்தும் நிலையாமைபற்றிய நல்லுணர்வு அவன் நினைவின்கண் நீங்காது நிலை பெற்றிருந்தது காட்டுவார், "இகழ்விலன்" என்றார். இவ்வாற்றால் அவற்குக் கூற்றம் போந்து நிலையாமையைக் காட்டுவது மிகையென்னும் குற்றமென்பார், "நில்லா வுலகத்து நிலையாமை நீ, சொல்ல வேண்டா" என்றும், இதனை அவன் தன் வாழ்க்கையான் மட்டுமன்றிக் கற்றுவல்ல நூலோர் நூல்களைக் கற்றும், அவர்பாற் கேட்டும் பேரறி வினனாயின னென்பார், "முழுதுணர் கேள்வியன்" என்றும் கூறினார்.
--------

362. சிறுவெண்டேரையார்

இச் சான்றோரைப்பற்றி ஒன்றும் தெரிந்திலது. கயமனாராற் பாடப்பெற்றதலைவனே இவரால் இப்பாட்டிற் பாடப்பட்டிருத்தலின், இவரும் கயமனாரும் ஒருகாலத்தவரென்று அறியலாம். "அந்தணர்களே, எங்கள் தலைவன் கணங்கொண்ட தானையொடு சென்று பகைவரைத் தாக்குங் குரலைக் கேட்பீராக; அருளாகாமையின், இஃது நுங்கள் நான்மறைகளிற் குறிக்கப்படுவதன்று; புறத்துறையாகிய பொருளாதலால் ஒழுக்கங்கூறும் அறநூல்களில் குறிக்கப்படுவதுமன்று; பார்ப்பார்க்குத் தண்ணடை நல்கி, இரவரர்க்குச் சோறளித்துப் பரிசிலர்க்கு நன்கலம் வீசி, கல்லென்னும் சுற்றம் பெருகியவழித்தாம் சிறிய இடத்தில் ஒதுங்கி யிருந்தற்கஞ்சி, உயர்ந்தோருலகத்துப் போர்வடுவுற்று உடம்போடு செல்லும் பொருட்டேயாகும்," என இப்பாட்டின்கண் போர் வேந்தரது போர் வேட்கையின் கருத்தை விளக்கியுள்ளார்.

    ஞாயிற் றன்ன வாய்மணி மிடைந்த
    மதியுற ழார மார்பிற் புரளப்
    பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
    பொழிலகம் பரந்த பெருஞ்செய் யாடவர்
    செருப்புகன் றெடுக்கும் விசய வெண்கொடி         5
    அணங்குருத் தன்ன கணங்கொ டானைக்
    கூற்றத் தன்ன மாற்றரு முன்பிற்
    றாக்குரற்கேண்மி னந்த ணாளிர்
    நான்மறைக் குறித்தன் றருளா காமையின்
    அறங்குறிக் தன்று பொருளா குதலின்         10
    மருடீர்ந்து மயக்கொரீஇக்
    கைபெய்தநீர் கடற்பரப்ப
    ஆமிருந்த வடைநல்கிச்
    ஆமிருந்த வடைநல்கிச்
    சோறு கொடுத்து மிகப்பெரிதும்
    வீறுசா னன்கலம் வீசிநன்றும்         15
    சிறுவெள் ளென்பி னெடுவெண் களரின்
    வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
    பகலுங் கூவு மிகலு ளாங்கட்
    காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொ
    டில்லென் றில்வயிற் பெயர மெல்ல         20
    இடஞ்சிறி தொதுங்க லஞ்சி
    உடம்பொடுஞ் சென்மா ருயர்ந்தோர் நாட்டே.
    --------

திணை: பொதுவியல்; துறை: பெருங்காஞ்சி. அவனைச் சிறு வெண்டேரையார் பாடியது.

உரை: ஞாயிற் றன்ன ஆய்மணி மிடைந்த - ஞாயிறு போல் ஒளி திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்து; மதியுறழ் ஆரம் மார்பிற் புரள - பிறைமதிபோல வளைந்த மாலை மார்பிற் கிடந்தசைய; பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்ப - பலியூட்டப்பெற்ற முரசு பாசறைக்கண் ஒலிக்க; பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்- பெழிலிடங்களிற் பரந்து நின்ற பெரிய மறந்செயலைப் புரியும் வீரர்; செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி - போரை விரும்பி யுயர்த்திய வெற்றியை யுடைய வண்மையான கொடியேந்திய; அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை - வருத்தம் செய்யும் தெவ்ம் உருத்து வந்தாற்போன்ற கூட்டங்கொண்ட தானையிடத்தேயிருந்து; கூற்றத் தன்ன மாற்றா முன்பின்- கூற்றுவனைப்போல் விலக்குதற்கரிய வலியுடனே; தாக்குரல் கேண்மின் - பகைவரைத் தாக்குதற்குச் செய்யும் முழக்கத்தைக் கேட்பீராக; அந்தணாளிர் - அந்தணர்களே; அருளாகாமையின் நான்மறைக் குறித்தன்று - இஃது அருட்செயலன்மையால் நும் நான்மறைக்கண் குறிக்கப் படுவதன்று; பொருளாகுதலின் அறம் குறித்தன்று - புறத்துறையாகிய பொருள் குறித்தலின் ஒழுக்கம் கூறும் அறநூல்களிற் குறிக்கப்படுவதுமன்று; மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ - மருட்கையினின்றும் நீங்கி அம்மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி; கைபெத் நீர் கடலளவும் பரந்து செல்லுமாறு; ஆம் இருந்த அடை நல்கி -நீர்வளம் மிகுந்த மருத நிலத்தூர்களைக் கொடுத்தும்; மிகப் பெரியதும் சோறு கொடுத்து - பசித்து வரும் இரவலர்க்கு மிகுதியாகச் சோறளித்தும்; வீறுசால் நன்கலம் நன்றும் வீசி - பரிசிலர்க்குச் சிறப்பமைந்த நல்ல அணிகளைப் பெரிதும் பொடுத்தும்; சிறு வெள்ளென்பின் நெடுவெண்களரின் - சிறு சிறு வெள்ளிய எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தின் கண்; வல்வாய்க் காக்கை கூகையொடு கூடி- வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடி; பகலும் கூவும் அகலுள் ஆங்கண் - பகற்போதிலும் கூவும் அகன்றவிடமமாகிய அவ்விடத்து; காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு - சுடுகாட்டுண்மை புலனாகாதபடி செறிந்த கல்லென்ற சுற்றத்தார் நிறைதலால்; மெல்ல - மெல்லென; இல்வயின் இல்லென்று பெயர இல்லிடத்தே - இனித் தமக்கு இடமில்லையென்று அதனின் நீங்கக் கருதியும்; இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி - நிலவுலகு சிறிதாகலால் இனிதியங்குதற்கியலாமைக்கு அஞ்சியும்; உயர்ந்தோர் நாட்டு உடம்பொடுஞ் சென்மார் - வீரத்தால் சிறந்த உயர்ந்தோர் உலகிற்குத் தம்முடம்போடே செல்லற்பொருட்டுப் பொருகின்றனர்; எ - று.

அந்தணாளிர், தானை தாக்குரல் கேண்மின் நான்மறைக் குறித்தன்று; அறம் குறித்தன்று; தீர்ந்து, ஒரீஇ, நல்கி, கொடுத்து, வீசி, அஞ்சி, உயர்ந்தோர் வருவித்துக் கூட்டி வினைமுடிவுசெய்க. மணி யொகிக்கும் ஞாயிறும், மாலைக்குப் பிறை மதியும் உவமம். போர்க்குச் செல்லும் வேந்தர், முதற்கண் முரசுக்குப் பிறை மதியும் உவமம். போர்க்குச் செல்லும் வேந்தர், முதற்கண் முரசுக்குப் பலியிடுவது மரபு; "கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலி யோச்சி" (பெருங்.II, 2:29-30) என வருதல் காண்க. அணங்கு உருத்தன்ன என்பதற்குத் தெய்வம் வருத்துதற் பொருட்டு உருக்கொண்டாற்போன்ற என்றுரைப்பினுமமையும். தாக்கு குரல், தாக்குரல் என வந்தது; தழங்கு குரல் முரசமென்பது தழங்குரல் முரசம் என வந்தது; தழங்கு குரல் முரசமென்பது தழங்குரல் முரசம் என வருதல் போல. மிக்க வலியும் செல்வமும் இளமையுமாகிய அவற்றை நிலையுடைய வாகக் கருதிற் கடும்பற்றுள்ளம் கொள்ளச் செய்யுமாகலின், அதற்கேதுவாகிய மருட்சியும் மயக்கமும் தீர்ந்தாலன்றிப் பொருட் கொடையாற் புகழும் உயிர்க்கொடையாற்றுறக்க வின்பமும் எய்தாமைபற்றி, "மருள் தீர்ந்து மயக் கொரீஇ" என்றார். கல்லென்னும் சுற்றம் கூடி நிலையாமை யுணர்த்தும் சுடுகாட்டின் உண்மை நினையாதவாறு அறிவுக்கண்ணை மறைத்தலின், "காடு கண் மறைத்த கல்லென் சுற்றம்" என்றார். பேராண்மை யாலும் சிறந்த கைவண்மையாலும் உண்டாகும் புகழ் உலக முழுவதும் பரவப் பெற்றார்க்கு உறையுளாகிய உலகிடம் சிறிதாதலின், "இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி" யென்றும், போரிற் புண்பட்டுப் புகழுண்டாக வீழ்பவர், தம் புகழுடம்போடே துறக்கவுலகு புகுவரென்பதனால், "உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே" யென்றும் உரத்தார்; ஏனைச் சான்றோரும், "நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாராவுலகம் புகுத லொன்றோ" (புறம். 341) என்பது காண்க. உயர்ந்தோர், துறக்கவுலகு சென்றுள்ள சான்றோர்.

விளக்கம்: மறவர் பலரும் போர் வேட்கை மிகக்கொண்டு நாளும் போரே விரும்பியும் அதற்கேற்ப மெய்வலி பெருக்கியும் ஒழுகுவது கண்ட அந்தணர், இவ் வேட்கைக்குக் காரணமறியுங் கருத்தினராய் வந்து நிற்ப, ஆசிரியர், அந்தணாளரே, ஆரம் மார்பிற் புரள, முரசம் பாசறைக்கண் சிலைப்த் தானைவீரர் மாற்றரும் முன்புடமே பகைவர் மேற் சென்று தாக்கும் முழக்கத்தைக் கேண்மின் என்று அவர்க்குப் போர்நிகழ்ச்சியைக் காட்டி மறவரது போர்வேட்கை மிகுதியைக் கண்ணெதிரே காண்பித்தார், கண்ட அந்தணாளருக்கு வியப்புப் பெரிதாயிற்று. ஆகவே, ஆசிரியர், இது நுங்கள் நான்மறையிலும் அறநூல்களிலும் காணப்படாது; இது பொருட்டுறை. நுமக்கு இது வேண்டாத தொன்று என்றும், பொருட்பேறு தன்னலங் குறித்தன்று; பார்ப்பாரையும் ஏனை இரவலரையும் உண்பித்தல் கருதியது என்பார், "கை பெய்த நீர் கடல் பரப்ப, ஆம் இருந்த அடைநல்கிச் சோறு கொடுத்து மிகப்பெரிதும் வீறுசால் நன்கலம் வீசி" என்றும் குறிப்பித்தார். இவ்வாறு இரப்போர் சுற்றமும் தம் புகழ்பரப்பி, மக்களும் ஒக்கலுமாதிய சுற்றம்சூழவாழ்வதால், நிலையாமையுணர்த்தும் முதுகாட்டுண்மை மறகை்கப்படுமாயினும், இப் போர்வேட்கை மிக்கு நிற்கும் சான்றோர் அதனால் மறைப்புண்ணாது நிறையாமை நிலவும் நெஞ்சினராய், இனித்தாம் உறையும் இல்லம் நிலைத்த இன்பந்தரும் நிலையமாகாதென விணர்ந்து அதனின் நீங்கும் கருத்தாலும், இந் நிலவுலகு முழுதும் தம் புகழ் பரவி விழுங்கினமையின் இனி அது சென்று பரவுதற்கு இடந்தேடுங் கருத்தாலும் உயர்ந்தோர் உறையும் துறக்கவுலகு செல்லும் கருத் தினராயினர். அது போர்ப்புண்பட்டு வீழுமாற்றால் பெறக்கடவதாகலின், "உடம்பொடுஞ் சென்மார்" என்றும், அது குறித்துப் போர் வேட்கை மிகுவாராயினரென்றும் கூறினாராயிற்று.
-----------

363. ஐயாதிச் சிறுவெண்டேரையார்

முன்பு கண்ட சிறுவெண்டேரையாரின் வேறுபடுத்த இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையாரெனப்படுகின்றனர். ஐயாதி யென்பது இரவதூர். இநத் ஐயாதி யென்பதுவே இடைக்காலத்தே ஐயாறாயிற்றோவென வெண்ணுதற்கும் இடந்தருகின்றது. தொண்டை நாட்டிற் சலவாறு என்ற மூர் சலவாதியென வழங்குவது காண்க, தேரையார் என்னும் பெயர் பிற்காலத்தும் வழக்கிலிருந்துளது. தேரையார் என்றொரு சான்றோர், பதார்த்தகுண சிந்தாமணி யென்னும் நூலை ழெுதியுள்ளார். ஆதி யென்னும் பெயரால், ஆதியூர் (A. R. No. 778 of 1933) என்றும், ஆதிகுடி (A. R. No. 05 of 1920) என்றும் ஊர்கள் பல இருந்திருக்கின்றன. இவரும் வேந்தனை நோக்கி, இந்நிலவுலகில் உடை வேல் மரத்தின் சிறிய இலையளவு இடமும் பிறர்க்கின்றித் தாமே யாண்ட வேந்தர் பலர் இருந்தனர். முடிவில் தம் நாட்டைப் பிறர் கொள்ள, அவர் இறந்தனர்; அதனால் "இறவாது நின்றோர் ஒருவ ருமில்லை; இறத்தல் உண்மை; பொய்யன்று; இன்னா நாளாகிய இறக்கும் நாள் வருமுன்னே நீ இவ்வுலகியலைத் துறந்து நினக்குரிய நல்வினையாகிய தவத்தைச் செய்வாயாக" என இப்பாட்டின்கண் அறிவுறுத்தியுள்ளார்.

    இருங்கட் லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
    உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
    தாமே யாண்ட வேமங் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடுபதி ாகப் போகித் தத்தம்         5
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
    அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா
    துடம்பொடு நின்ற வுயிரு மில்லை
    மடங்க லுண்மை மாயமோ வன்றே
    கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு         10
    வெள்ளில் போகிய வியலு ளாங்கண்
    உப்பிலாஅ வவிப்புழுக்கல்
    கைக்கொண்டு பிறக்குநோக்கா
    திழிபிறப்பினோ னீயப்பெற்று
    நிலங்கல னாக விலங்குபலி மிசையும்         15
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பா முழுதுடன் றுறந்தே.
    ----------

திணையயும் துறையு மவை...ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

உரை: இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம் - கரிய கடல் சூழ்ந்த இப் பெரிய இடத்தையுடைய நிலவுலகத்தை; நடுவணதுஉ டைஇலை இடை பிறர்க்கு இன்றி - நடுவே உடை வேலமரத்தின் இலையளவாகிய இடமும் பிறர்க்கு இல்லையாக; தாமே ஆண்ட ஏமம் காவலர் - தாமே தமக்குரியதாக முழுதுமாண்ட இன்பக் காவலரான வேந்தர்; திரையிடு மணலினும் பலர் - கடற்றிரைகள் கொழித்தொதுக்கும் நுண்மனலினும் பரலாவர்; சுடு பிணங்காடு பதியாக - பிணஞ் சுடும் சுடு காட்டைத் தமக்கு முடிவிடமாக; போகி - சென்று சேர்ந்து; தத்தம் நாடு பிறர்கொள - தத்தமக்குரிய நாட்டை மற்றவர் கொள்ள; சென்று மாய்ந்தனர் - இறந்து போயினர்; அதனால்-; நீயும் கேண்மதி - நீயும் கேட்பாயாக; வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை - இறவாமல் உடம்போடே என்றும் இருந்தவர் யாரும் இல்லை; மடங்கல் உண்மை - இறப்பு உளது; மாயம் அன்று - பொய்யன்று; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு - கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டின்; வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் - வெள்ளிடையே யோங்கிய அகன்ற இடத்தின்கண்; உப்பிலா அவிப் புழுக்கல் - உப்பின்றி வேகவைத்த சோற்றை; கைக்கொண்டு பிறக்கு நோக்காது - கையிற்கொண்டு பின்புறம் பாராது; இழி பிறப்பினோன் ஈயப் பெற்று - இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று; நிலம் கலனாக விலங்கு பலி மிசையும் - நிலத்தையே உண்கலமாகக் கொண்டுவைத்து வேண்டாத பலியுணவை யேற்கும்; இன்னா வைகல் வாராமுன் - துன்பம் பொருந்திய இறுதி நாள் வருமுன்பே; முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்து - கடல் சூழ்ந்த நிலவுலக வாழ்வைப் பற்றறத் துறந்து; நீ முன்னிய வினைசெய் - நீ கருதிய தவமாகிய நல்வினையைச் செய்வாயாக; எ - று.

இருகை, கருமை, பெருமை - பரப்பு. உடையிலை மிகச் சிறியது; "சிறியிலையுடை" (புறம். 124) என்பது காண்க. நாடாளும்வேந்தர் இறப்பின், அவர் நாட்டரசை அவர்தம் மக்களே பெறினும் அவரைப் "பிறர்" என்றார், இறக்குங்கால் உயிர்த் துணையாக வாராமைபற்றி. தோன்றிய வுடம்பு வளர்ந்து முதிர்ந்து மீள மடங்கிச் சென்று ஒடுங்குதற்கிடனாதலின் சாக்காடு மடங்கலெனப்பட்டது. தான் கொள்ளக் கருதிய உயிரைக் கொண்டனறி மீளாமைபற்றிக் கூற்று மடங்கலெனப்பட்ட தெனினுமமையும். சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு நிலத்தில் வைத்துப் படைத்தலும் அதனை யவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள். முன்னிய வினையாவது மீளவும் வேந்தர் குடியிற்றோன்றி அரசவின்பம் துய்க்கவேண்டுமென்பது; இன்றேல், பிறவா வாழ்க்கை பெற்று உயர்ந்தோருலகத்து உலவாப் பேரின்பம் நுகர்தல்வேண்டு மென்பது; இவ் வினைக்கு முன்னே செயற்பாலது தவமென்றும், அதற்கு உருதுறவென்றும் அறிக. காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை; உண்மை, மாயமன்று; வாரா முன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய் என்று கூட்டி வினைமுடிவு செய்க. யாக்கையும் செல்வமும் நிலையாமை கூறித் துறவுபூண்டு தவஞ்செய்யுமாறு வலியுறுத்தவாறு.

விளக்கம்: "மாற்றருங் கூற்றம் சாற்றியபெருமையும்" (தொல். புறத். 19) என்ற சூத்திரத்து "மாற்றருங் கூற்றமம்சாற்றியபெருமை" என்பதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். இனி, ஆசிரியர் பேராசிரியர் இப் பாட்டை வாயுறை வாழ்த்துக்கு எடுத்துக்காட்டுவர். இந்த மாநிலம் ஏனையோர்க்கும் உரியதாகலின் பொதுவெனக் கருதாது தமக்கே உரித்தாகக் கருதி வென்று தாமே நிலவுலகிற்கு வேந்த ரென்னுமாறு ஆட்சி செலுத்திய பெரு வேந்தரும் பின்னர் இறந்தொழிந்தனர்; ஆகவே, ஏனை எளியோர் இறப்பது சொல்ல வேண்டா. எனவே, எத்திறத்தோரும் இறத்தல் ஒருதலையாம் என்பார், "வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை" யென்றார். இறக்கும் நாளில் நிகழும் நிகழ்ச்சிகள் இன்பந்தாராவாகலின், அவை நிகழும் நாளை, "இன்னாவைகல்" எனக் குறிக்கின்றார். இன்னாமையை விளக்குதல் வேண்டி, புறங்காட்டு வியலுளாங்கண், இழிபிறப்பினோன் உப்பிலா அவிப் புழுக்கலை நிலங்கலனாக வைத்துப் படைத்தலை எடுத்தோதினார். இறத்தற்குரிய வைகல் நெருங்குங்கால் சொல்லும் செயலும் கை கூடாது போதலின், முன்னிய வினை செய்யப்படாவென்பார், "இன்னா வைகல் வாரா முன்னே செயல்நீ முன்னிய வினை" யென்றார். நினைத்த நினைவைச் செயற்படுத்தற்குரிய வாயும் உடம்புமாகிய கருவிகள் பயன்படாது கெடுதலின், இறக்கும் நாள் "இன்னா வைகல்" எனப் படுவர் இயல்பு. மாறிப் பிறப்பதாயின் வேந்தர் குடியிற் பிறத்தலையே வேந்தர் வேண்டுவதை, "மன்பதை காக்கும் நீள்குடிச்சிறந்த, தென்புலங்காவலினொரீ இப் பிறர், வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே" (புறம். 71) என வருதல் கண்டுகொள்க.
---------

364. கூகைக்கோழியார்

பேராந்தையைக் கூகைக்கோழியென்று சிறப்பித்துரைத்த நயம் கண்டு சான்றோர் இவரைக் கூகைக்கோழியார் என வழங்கினர். இதனால் இவரது இயற்பெயர் மறைந்துபோயிற்று. இவரைப்போல ஆரிசியர் பரணரும், பசும்பூண் பாண்டியனுடைய தானைத் தலைவனான அதிகன் என்பான் களிறொடு பொருது வீழ்ந்த வாகைப் பறந்தலையை "கூகைக்கோழி வாகைப்பறந்தலை" (குறுந். 339) யெனச் சிறப்பித் துரைத்தது இக் கூகைக்கோழியார வழங்கிக்காட்டிய இத் தொடரை நல்லிசைச் சான்றோர் விரும்பி யேற்றுக் கொண்டாரென்பதை வலியுறுத்துகிறது. இதனால் இவர் பண்டைச்சான்றோரால் நன்கு மதித்துப் போற்றும் பெருமை பெற்றவரென அறியலாம். ஐயாதிச் சிறு வெண்டேரையார் பாடிய தலைவனையே இவரும் பாடியிருத்தலின், இருவரும் ஒரு காலத்த வரென்பது தெளிவு. இப் பாட்டின்கண், போர் வேட்கை கொண்டு நாளும் அதனையே செய்து சிறந்த வேந்தனொருவனைக் கண்ட, "வேந்தே பாணற்குத் தாமரையும் விறலிக்கு மாலையும் தந்து அவரும் பிறருமாகிய சுற்றம் சூழ விருந்து ஆட்டுக் கறியும் கள்ளும் உண்டு, இரவலரை இவ்வாறே யுண்பித்து மகிழ்வோமாக; முதுமரப் பொந்திலிருந்து கூகைக்கோழி கூவும் இடுகாட்டையாம் அடைவோமாயின், இவ் வுண்டாட்டினைப் பெறுவது அரிது" என அறிவுறுத்தியுள்ளார்.

    வாடா மாலை பாடினி யணியப்
    பாணன் சென்னிக் கேணி பூவா
    எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க
    மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
    காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை         5
    நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
    உண்டுந் தின்று மிரப்போர்க் கீய்ந்தும்
    மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
    அரிய வாகலு முரிய பெரும
    நிலம்பக வீழ்ந்த வலங்கற் பல்வேர்         10
    முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும்
    கூகைக் கோழி யானாத்
    தாழிய பெருங்கா டெக்திய ஞான்றே.
    ---------

திணையும் துறையு மவை. அவனைக் கூகைக்கோழியார் பாடியது.

உரை: பாடினி வாடா மாலை யணிய - பாண்மகளாகிய பாடினி பொன்மாலை யணியவும் பாணர் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க - பாணன் தன் சென்னியின்கண் நீர்நிலையிற் பூவாத எரிபோலும் பெரிய பொற்றாமரைப் வூணிந்து விளங்கவும்; மைவிடை இரும்போத்து - கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்து; செந்தீச் சேர்த்தி - அதன் ஊனைத் தீயிலிட்டுச் சுட்டு; காயம் கனிந்த கண்ணகன் கொழுங்குறை - காயம் பெய்தட்ட இடமகன்ற கொழுவிய ஊனுணவை; நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப்த் தின்றும் உண்டும் - கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது இரு மருங்கும் புரட்டிக்கொடுக்கத் தின்றும் உண்டும்;இரப்போர்க்கு ஈந்தும்- இரவலரை யுண்பித்தும்; மகிழ்கம் வம்மோ - மகிழ்வேம் வருவாாக; மறப் போரோய் - மறம் பொருந்திய போரைச்செய்பவனே; நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் - நிலம் பிளவுபடக் கீழே சென்ற அசகைின்ற பலவாகிய வேர்களையுடைய; முதுமரப் பொத்தின் முதுமரத்தின் பொந்துகளிலிருந்து; கதுமென இயம்பும் கூகைக்கோழி ஆனா - கதுமெனக் கூவும் பேராந்தைகள் நீங்காத; தாழிய பெரும் காடெய்திய ஞான்றும் - தாழிகளையுடைய சுடுகாட்டையடைந்தபோது; பெரும பெருமானே; அரியவாகலும் உரிய - இவைகள் உண்ணப்படாவாம்; எ - று.

பொன்னாற் செய்த தமரைப் பூவுக்குக் கேணி பூவாத்தாமரைப் பெருமலர் என்றது வெளிப்படை எரிமருள் தாமரை யென்பது இனம் பற்றி வந்தது. மைவிடையிரும் போத்து - ஆட்டுக்கிடாய். காயம் - உறைப்பு. தீயிற் சுட்டவூனை வாயிற்பெய்து நாப்புடை பெயர்ப்ப இரு மருங்கினும் மென்று தின்னும் செயலை, "காழிற் சுட்ட போழூன் கொழுங் குறை, ஊழி னூழின் வாய்வெய்தொற்றி" (பொருந. 105-9) என்று பிறரும் கூறதல் காண்க. தாமே தமியருண்டலினும் இரவலர்க் கீத்துண்ணப் பிறக்கும் இன்பம் பெரிதாகலின், "இரப்போர்க் கீய்ந்தும்" என்றார். முதுகாட்டில் உள்ள மரங்களில் முதிவற்றிற் பொந்துகள் உளவாதல் பற்றி "முதுமரப் பொத்து" எனல் வேண்டிற்று. அப் பொந்துகளில் பேராந்தையும் கோட்டானும் வாழ்தல் கண்கூடு. கூகை கூவுதலைப் பிறரும் "பொத்தவரையுட் போழ்வாய்க் கூகை, சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பிரும், கள்ளியம் பறந்தலை" (புறம். 240) என்று கூறுவர். தாழி, ஈண்டுப் பிணங்களைக் கவிக்கும் தாழி; இவற்றை இக்காலத் தார் முதுமக்கள் தாழி யென்ப. மறப் போரோய், பெரும மகிழ்கம் வம்மோ; பெருங் காடெய்திய ஞான்று, அரியவாகலுமுரிய என்று கூட்டி வினைமுடிவு செய்க. எய்துஞான்றெனற்பாலதனை எய்தியவென இறந்த காலத்திற் கூறியது விரைவுக் குறிப்பு என அறிக.

விளக்கம்: நாளும் போருடற்றலும் பொருளீட்டலும் மேற் கொண்டு நிலவும் தானைத் தலைவன் ஒருவனைக் கண்டு அவன் கருத்தில் யாக்கை நிலையாமையையும், அது நின்றவழிச் செய்தற்குரியனவும் ஊறி நன்னெறிப்படுத்தும் கூகைக்கோழியார், செய்தற்குரியது இது வென முதற்கண் கூறலுற்று, பாடினிக்குப் பொன்னரி மாலையும், பாணர்க்குப் பொற்றாமரையும் நல்குக என்பார், "பாடினி அணிய" என்றும், "பாணன் சென்னித் தாமரைப் பெருமலர ் தயங்க" என்றும் கூறினார். பின்பு தின்றற்குரிய வூனும் உண்டற்குரிய நறவும் இரப்போரும் சுற்றத்தாரும் தின்றும் உண்டும் மகிழ்ச்சியுற அவரோடுடனுண் டின்புறுக என்பார், உண்டுந் தின்றும் இரப்போர்க் கீய்ந்தும் மகிழ்கம் வம்மோ" என்றார். எந்நாளேனும் முதுகாடடைதல் ஒருதலையாதலால் "பெருங்காடெய்திய ஞான்று" என்றும் ஈத்துவக்கும் இன்பம் இறந்தபின் எய்தும் துறக்கவுலகில் இல்லை யென்றற்கு "அரியவாகலும் உரிய" என்றும் கூறினார். உம்மை இசை நிலை. "ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர்" (குறள்; 1058. பரி. மேற்.) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருங்காடென்ப தன் பொதுமை நீக்கத், "தாழிய" வெனச் சிறப்பித்தார்.
-----------

365. மார்க்கண்டேயனார்

காஞ்சி பாடிய புலவருள் இம் மார்க்கண்டேயனாரும் ஒருவர். நிலையாமை யுணர்வால் தவம் பூண்டு வாழும் அறவோர் வரிசையுள் நிற்கும் இச் சான்றோர், இப்பாட்டின்கண், விசும்பு முகமாக இரு சுடரும் கண்களாகக்கொண்ட நிலமாகிய மகள், முன்னோராகிய வேந்தர் பலர் மறையவும் யான் மறையாது உள்ளேனே என அழும் நிலையும் உண்டென அறிந்தோர் கூறுவர் என்று நிலையாமைப் பண்பை இனிமையுறக் கூறுகின்றார், மார்க்கண்டேயனாரைப்பற்றி குறிப் பொன்றும் கிடைத்திலது. இவர் பெயர் மாக்கடையனாரென்றும் பாடவேறுபாடு காணப்படுகிறது.

    மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
    இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
    வளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம்
    வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
    பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்         5
    பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
    முன்னோர் செல்லவும் செல்லா தின்னும்
    விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
    உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண்
    நிலமக ளழுத காஞ்சியும்         10
    உண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே.
    ----------

திணை: காஞ்சி, துறை: பெருங்காஞ்சி. மார்க்கண்டேயனார் பாடியது.

உரை: மயங்கு இருங் கருவிய விசும்பு முகனாக-தம்மிற் கலந்த மழை மின் முதலியவற்றின் தொகுதியையுடைய விசும்பை முகமாகவும்; இயங்கிய இருசுடர் கண்ணென - விசும்பின்கண் இயங்கும் ஞாயிறும் திங்களுமாகிய சுடர் இரண்டையும் கண்களாகக்கொண்ட; பன்மாண் நிலமகள் - பலவ கையாலும் மாண்புற்ற நிலமாகிய மகள்; பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் - இடம் விட்டுப் பெயர்தலையுடைய காற்று இயங்காத இடமாகிய எவ்வுயிரும் செல்லுதற்கரிய விசும்பைக் கடந்து; வயிரக் குறட்டின் வயங்குமணியாரத்து - வயிரத்தாற் செய்யப்பட்ட குறட்டின்கண் செறிந்து விளங்குகின்ற மணிகளாலாகிய ஆர்க்காலையுடைய; பொன்னந் திகிரி முன் சமத்துருட்டி - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிப்படையைப் போரின் முன்னே நின்று செலுத்தி; பொருநர்க் காணா பகைவரையழித்து - மேலே வரக்கடவ பகைவர் வரப்பெறாமையால; செருமிகு முன்பின் - போர்க்கண் மேம்பட்ட வலியினையுடைய; முன்னோர் செல்லவும் செல்லாது - முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகு செல்லக் கண்டுவைத்தும் உடன் செல்லாது; விலை நலப் பெண்டிரின் - தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல; பலர் மீக்கூற - பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ; யான் இன்னும் உள்ளேன் வாழியர் - யான் இப்பொழுதும் நிலையாக இருக்கின்றேன், யான் வாழ்க; என - என்று; அழுத காஞ்சியும் உண்டென - புலம்பிய காஞ்சியும் உண்டென்று; உணர்ந்திசினோர் உரைப்பர் - அறிவுடையோர் கூறுவர்; எ - று.

விசும்பு முகனாக கூடர் கண்ணாகக்கொண்ட நிலமகள் முன்னோர் செல்லவும் செல்லாது விலைநலப் பெண்டிரின் பலர் மீக்கூற யான் உள்ளேன் வாழியர் என அழுத காஞ்சியும் உண்டென உணர்ந்திசினோர் உரைப்பர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நில மண்டிலமும், நீர் மண்டிலமும், தீ மண்டிலமும், வளி மண்டிலமும், கடந்து நிற்கும் விசும்பு நீத்த மெனப்பட்டது. நில முதலாகிய மண்டிலங்களை நீத்து நிற்பது நீத்தமாயிற்று; இதன் கண் வளி வழங்குதலின்மையின், வளியிடை வழங்கா வழங்கருநீத்தமெனப்படு வதாயிற்று; குறடு, திகிரியின் நடுவிடமாகிய குடம். அதனகைச் சுற்றி ஆர்க்கால் செறிந்திருப்பது கொண்டு, இதனை "ஆர் சூழ்குறடு" (புறம். 283) என்று சான்றோர் வழங்குப. ஆர், ஆரம் என வந்தது. திகிரி, ஆழிப்படை. பொன்னாலாகிய திரிகியாதலின், வயிரமணியாற் குறடும் ஏனை மணிகளால் ஆரமும் அமைக்கப்பெற்றன வென்றறிக. விலைமகளிர் பெருளுடையார் பாற்சேர்வது போல, நிலமுகள் வலியும் சூழ்ச்சியுமுடைய வேந்தர்பால் தங்குதலின் "விலைநலப் பெண்டிரின்" என்றார். வாழியர்: எதிர்மறைக் குறிப்பு மொழி. பொறைக் கெல்லையாகிய நிலமகளும் நிலைாமை யுணர்ந்து பொறாது அழுதனளெனின் நாம் அதனை முன்னுணர்ந்து துறத்தலே சீரிது என்பது கருத்து.

விளக்கம்: வளிமண்டிலம் சூழவிப்பது ஞாலமாதலின் அதனைக் கடந்து. நிற்கும் விசும்பை நீத்மென்றாரென அறிதல் வேண்டும்; திருவள்ளுவரும், ஞாலத்தை "வளிவழங்குமல்லன்மா ஞாலம்" (குறள். 245) என்பது காண்க. "விசும்பு நீத்தம்" (புறம். 376) என்பதும் இக் கருத்தேபற்றி வந்தது. "நிலனேந்திய விசும்பும்" (புறம். 2) என நிலத்துக்கு மேலெல்லை கூறி, இடைப்பட்ட காற்றும், தீயும், நீரும் ஞாலத்தின் பகுதியாகச் சான்றோர் கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. விசும்பை முகமென்றலின், ஆண்டு நிலவும் இரு சுடரையும் நிலமகட்குக் கண்ணாகக் கூறினார். திகிரி யுருட்டிச் செங்கோலோபச்சி நிலவுலகு முற்றும் நெடிதாண்ட வேந்தரும் இறந்தாராயினும் தான் உடன் இறவாது நிற்பதுபற்றி, "முன்னோர்செல்லவும் செல்லாது" என்றுபரிந்து கூறகின்றார். நிலமகளை விலைமகட்கு ஒப்பக் கூறிய இக் கருத்தைத் தோலாமொழித்தேவர், மேற்கொண்டு தாம்பாடிய சூளமாணியில் முத்தி சருக்கத்தில், "நிலமகணிலைமையும் நெறியிற் கேட்டிலேல், குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள், வளமிகு சூழ்ச்சியார் வழியள் மற்றவள், உலமிகு வயிரத்தோள் உருவத் தாரினீர்" எனவும், "தன்னுயிர் மணலினும் பலர்க டன்னலம், முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர் பின்னும்வந் தவரொடும் சென்று பேர்ந்திலள், இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே" எனவும், "வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும், உற்றதோ ருரிமைகளில்லள் யாரொடும், பற்றிலள் பற்றினார் பால ளன்னதால், முற்றுநீர்த்துகிலுடை முதுபெண்ணீர்மையே" எனவும், "அடிமிசை யரசர்கள் வணங்க வாண்டவன், பொடிமிசை யப்புறம் புரள விப்புறம், இடிமுர சதிரவோ ரிளவ றன்னொடு, கடிபுகுமவளது கற்பின் வண்ணமே" (சூளா. முத்தி 19-22) எனவும் கூறுதல் காண்க.
--------

366. கோதமனார்

இவரின் வேறுபடுத்தவே, பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தைப் பாடிச் சிறப்பித்த கோதமானர் பாலைக்கோதமனார் எனப்பட்டனர். இவர் இப் பாட்டைத் தருமபுத்திரன் பொருட்டுப் பாடியதாக அச்சுப்படியிற் காணப்படுகிறது. இப் பாட்டின்கண் "இறவோன் மகனே" யென வந்திருப்பதுகொண்டு அதனைப் பிற்காலத்தார் யாரோ தருமபுத்திரன் என் மொழி பெயர்த்துக் கொண்டனர். பாண்டவர் தலைவனான தருமபுத்திரனே இப் பாட்டுடைத் தலைவனெனவும், மூன்றாம் பத்தைப் பாடிய கோதமனாரே இவரெனவும் கருதுபவருமுண்டு. பாலை பாடிய கோதமனாராயின், இப் பாட்டுடைத் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனாதல் வேறொரு சேரமானாதல் வேண்டும். இப் பாட்டின்கண், ஆசிரியர் கோதமனார், "உலக முழுவதும் தமது ஒரு மொழியே வைத்து உலகாண்ட பெருமையுடைய வேந்தரும் தம் புகழை நிறுவிவிட்டுத் தாம் சென்று மாய்ந்தனர்; அதனால் யான் உனக்கும் ஒன்று வரைப்பன், கேட்பாயாக; நின்வலியைப் பிறர் அறியாவகை காத்துக்கொண்டு, பிறர் கூறுவனவற்றின் மெய்ம்மையைத் தெரிந்துணர்ந்து,பகற்போதில் ஆள்வினைக் குதவி,இரவுப்போதில் மேல் செய்யக்கடவனவற்றை ஆராய்ந்து வினையாளரை வினைக்கண் செலுத்துதல் வேண்டும். நின் மனயைிடத்தே மகளிர்தரும் தேறலை யுண்டுமகிழ்க; சூட்டிறைச்சியும் புழுக்கலுமாகிய மடை வேண்டுபவர்க்கு இலை யிலையாகத் தந்தும், சோறு வேண்டுபவர்க்குச் சோறளித்தும் நீ உண்பாயாக; நீர்ாற்றடை கரையில் இழைத்த வெறியாடு களத்து வீழ்த்தற் பொருட்டுத் தொகுத்த ஆடுகளைப்போல இறப்பது உண்மை; அது பொய்யன்று" எனச் செய்வன செய்து நுகர்வன நுகர்ந்து புகழ் நிறுவி மேம்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். இப் பாட்டின் இடைசேில அடிகள் சிதைந்துள்ளன.

    விழுக்கடிப் பறைந்த முழுக்குரன் முரசம்
    ஒழுக்குடை மருங்கி னொருமொழித் தாக
    அரவெறி யுருகி னுரறுபு சிலைப்ப
    ஒருதா மாகிய பெருமை யோரும்
    தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே         5
    அதனால், அறவோன் மகனே மறவோர் செம்மால்
    நின்னொன் றுரைப்பக் கேண்மதி
    நின்னூற்றம் பிறரறியாது
    பிறர் கூறிய மொழி தெரியா
    ஞாயிற் றெல்லை யாள்வினைக் குதவி         10
    இரவி னெல்லை வருவது நாடி
    உரைத்தி சின் பெருக்நன்றும்
    உழவொழி பெரும்பக டழிதின் றாங்குச்
    செங்கண் மகளிரொடு சிறுதுனி யளைஇ
    அங்கட் டேற லாய்கலத் துகுப்பக்         15
    கெடலருந் திருவ வுண்மோ..........
    விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
    மடை வேண்டுநர்க் கடையருகா
    தவிழ்வேண்டுநர்க் கிடையாருளி
    நீர்நிலை பெருத்த வார்மண லடைகரைக்         20
    காவு தோறிழைத்த வெறியயர் களத்தின்
    இடங்கெத் தொகுத்த விடையின்
    மடங்க லுண்மை மாயமோ வன்றே.
    ----------

திணையும் துறையு மவை. ............கோதமனார் பாடியது.

உரை: விழுக் கடிப்ப அறைந்த முழுக் குரல் முரசம் - பெரிய குறுந் தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்; ஒழுக் குடை மருங்கின் - மறவொழுக்கமுடைய வீரரிடத்தே சென்று; ஒரு மொழித்தாக - அரசாணை யென்ற ஒரு குறிப்பே தோன்ற; அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப - பாம்மை எறியும் இடி முழங்குவதுபோல முழங்க; ஒருதாமாகிய பெருமையோரும் - பெருமையுடையோர்க்குக் தாம் எல்லையாகிய பெருமையுடை வேந்தரும்; மஙஹபகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனர் - தங்கள் புகழை நிறுவிவிட்டுத் தாம்மாண்டு மறைந்தனர்; அதனால்-; அறவோன் மகனே - அறத்ததையுடைய வேந்தனுக்கு மகனே மறவோர் செம்மால் - வீரர்கட்குத் தலைவனே; நின் ஊற்றம் பிறர் அறியாது - நின்னுடைய வலியைப் பிறர் அறியாமலும்; பிறர் கூறிய மொழி தெரியா - நீர் கூறுவனவற்றின் உள்ளுறு கருத்தை யறிந்துகொண்டும்; ஞாயிற்றெல்லை ஆள்வினைக் குதவி - ஞாயிறு விளங்கும் எல்லையாகிய பகற்போதில் வினைசெய்வோர் பலரோடும் இருந்து மறுநாள் செய்யக்கடவவற்றை யாராய்ந்தும்; உரைத்திசின் - வினைஞர்கட்கு உரைப்பாயாக; பெரும் - பெருமானே; நன்றும் - பெரிதும்; ............ உழவு ஒழி பெரும்பகடு அழிதின்றாங்கு ............ உழுதலைச் செய்து நீங்கிய பெரிய எருது வைக்கோலைத் தின்றாற்போல; செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ - சிவந்த கண்ணையுடைய மகளிருடனே சிறிதாகியதுனி கலந்து; அங்கள்தேறல் ஆம்கலத்து உகுப்ப - அழகிய கள்ளினது தெளிவை ஆராய்ந்து கலத்திற் பெய்து தர; கெடல் அருந்திருவ - கெடுவதில்லாத செல்வத்தையுடையவனே; விடைவீழ்த்துச் சூடு கிழிப்ப - ஆட்டுக்கிடாயையறுத்துச் சூட்டுக் கோலிற் கோத்துச் சுட்ட சூட்டிறைச்சியைச் சமைத்து; மடைவேண்டுநர்க்கு அடையருகாது - தெய்வங்கட்கிடும் மடைபோலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் வேண்டுமவர் கட்கு இலையிலையாகக் குறையாமல் கொடுத்து; அவிழ் வேண்டுநர்க்கு இடையருளி உண்மோ - சோறுவேண்டி வருபவர்க்கு உரிய இடமளித் துண்பித்து நீயும் உண்பாயாக; நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரை நீர்நிலையிடத்தே - பெருகியுள்ள ஒழுகிய மணல் பரந்த கரையின்கண் நிற்கும்; காவுதோறு இழைத்த வெறியயர் களத்து - காக்கள் தோறும் அமைக்கப்பட்ட வெறியாட்டிடங்களில்; இடம்கெடத் தொகுத்த விடையின் - இனி இடமில்லை யென்னுமாறு தொகுத்து நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல; மடங்கல் உண்மை - இறத்தல் ஒருதலை; மாயம் அன்று பொய்யன்று; எ - று.

அறவோன் மகனே, செம்மால், பெரும, திருவ, பெருமையோரும் மாய்ந்தனர்; கேண்மதி; உரைத்திசின்; கிழிப்ப, அருகாது அருளி உண்மோ, மடங்கல் உண்மை மாயமோ அன்று என வினைமுடிவு செய்க. பெரு முழக்கம், முழுக்குரல் எனப்பட்டது. செம்மல் செம்மாலென விளியேற்றது. பிறர் கூறுவன பொய்யும் வழுவும் நிறைந்திருப்பினும் உண்மை தேர்ந்து செய்வன செய்தல் வேண்டுதலின், "பிறர் கூறிய மொழி தெரியா" என்றார். பகற்போது வினைசெய்வதற்கும், இரவுப்போது வினைசெயல் வகையைச் சூழ்தற்கும், உரிவாகலின், "ஞாறிற்றெல்லை ஆள்வினைக்குதவி, இரவி னெல்லை வருவது நாடி யுரைத்திசின்" என்றார். கலங்கலான கள்ளுண்டு களித்திருக்குமாறு தோன்றச் "செங்கண் மகளி" ரெனவும் சிறப்புடைய கலங்கலைத்தாராது தேறலைத் தருவது பற்றித் துனித்தாய்போல மகளிரை மகிழ்வுறுத்துகவென்பார், "சிறுதுனியளைஇ யுண்மோ" எனவும் கூறினார். "எமக்கே கலங்கல் தருமோ" (புறம், 298) என்பது காண்க. தெய்வங்கட்குத் தேக்கிலைகளில் வைத்து மடை கொடுப்பது போலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் தமக்கு இலைகளில் மடைபோலத் தரப் பெறுதலை விழைவார்க்கு அவ்வாறுதருக வேன்பார், "அடையரகாது" என்றார். "தெய்வமடையின் தேக்கிலைக் குவைஇ நும்பை தீர் சுற்றமொடு பலமிகப் பெறுகுவீர்" (பெரும்பாண், 104-5) என்று பிறரும் கூறுதல் காண்க. கிழித்தெனற் பாலது கிழிப்பவெனத திரிந்து நின்றது. வெறியயர் களத்தின்கண். விடைவீழ்த்து வழிபடுவராதலின் "வெறியயர் களத்து விடங்கெடத் தொகுத்தவிடையின்" என்றார்.

விளக்கம்: நிலவுலகு முற்றும் ஒரு தாமாக ஆண்ட வேந்தரும் சென்று மாய்ந்தன ரென்பதனால், இப் பாட்டுடைத் தலைவனும் ஓர் அரசன் என்பது விளங்குகிறது. தமிழகத்தில் தருமபுத்திரனெனப் பெயரிய அரசர் இருந்தனரென்றற்குச் சான்றின்மையின், இவன் சேர நாட்டுநிலத்தலைவருள் ஒருவனாதல் வேண்டும். வடவாரியர் முதற்கண் குடிபுகுந்த தமிழ்ப்பகுதி சேரநாடேயென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. வடவாரிய வழக்க வொழுக்கங்களையும் மொழி யமைதிகளையும் முழுவதும் மேற்கொண்டு தமது தொன்மைநிலை தெரியாதொழுகும் தமிழ் நிலத்தாருள் சேரநாட்டுக் கேரளர்களே முன்னணியில் நிற்பவர். அதனால் தருமபுத்திரன் என ஒருவன் இருந்தானெனின், அவன் சேரநாட்டவனே என்பது தேற்றம். அசோக மன்னனுடைய கல்வெட்டுக்கள் கேரளரைக் "கேரளபுத்திரர்" என வழங்குவது இதற்குப் போதிய சான்றாகும். கோதமனார் இவனுக்கு உரைக்கு அறவுரையை நோக்கின் இவன் மிக்க இளையனென்பது விளங்கும். பகலின் ஆள்வினைக்குதவலும் இரவில் வருவது நாடலும்செய்க என்ற வழி. அவன் உள்ளம் மறநெறியே செல்லுமென்று கொண்டு, மறமொன்றே யன்று இவ்வுலக வாழ்வுக்கு வேண்டுவது, அறமும் செய்தல் வேண்டுமென்பார், தேறல் மகளிரோடு உண்டு மடைவேண்டுநர்க்கும் அவிழ் வேண்டுநர்க்கும் நிரம்பத் தந்து உண்பித்து நீயும்உண்டு அன்புடையனாகுக என்றார். வெறிக்களத்துத் தொகுக்கப் பட்ட விடைகள் வீழ்தல் ஒரு தலையாதல் போல இவ்வுலகிடைத் தொக்க வுயிர்கள் இறப்பது ஒருதலை யென்பதாம். "உழவொழி பெரும்பகடு அழிதின்றாங்கு" என்றது, "தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாய்" வாழ்க என்றவாறு.
----------

367. ஒளவையார்

சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒரு காலத்தே சேரமான் மாரிவெண்கோவென்றலும் பாடம். இச் சேரமான் சேரமான்களுட் காலத்தாற் பிற்பட்டவனாகக் கருதப்படுகின்றான். அவரிையே வேறுபடுதற்கேதுவாகிய பகைமையில்லை. தமிழகம் இம் மூவர்க்கும் பொதுவாக உரியதென்பது தொன்று தொட்டுவரும் கொள்கை. இக்கருத்தே தோன்றச்சான்றோர் "குன்று தலை மணந்த மலைபிணித்து யாத்தமண், பொதுமை சுட்டிய மூவருலகமும்" (புறம். 357) என்று வற்புறுத்தியிருப்பது காண்க. இவர் தம்முட் பகைத்துப் பொருது கெடுவரேல், வேறு நாட்டவர் புகுந்து தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழியற் பண்பாட்டைச் சிதைத்துத் தமிழ்நாட்டுச் செல்வம், கலை, சமயம், மொழி, ஒழுக்கம் முதலியவற்றைச் சிதைத்தழிப்பரென்று சான்றோர் முன்னரே யறிந்திருந்தனர். அதனால் அச் சான்றோர், வேந்தர் மூவரும் அன்பால் ஒருங்கு கூடியிருக்கும் செவ்வி காணும் போதெல்லாம் ஒன்றிய வாழ்வின் வென்றிநலத்தை எடுத்தோதிச் சிறப்பிப்பர். அவ் வழியில் வந்த சான்றோராகிய ஒளவையார் வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பக் கண்டதும், பெருமகிழ்வுகொண்டு, "வேந்தர்களே! நிலவுலகம் வேந்தர்க்குரித்தாயினும், அவர் இறந்துபோங்கால், உலகமும் உடன் போவதில்லை; அரசியற் பேற்றுக்குரிய நோன்மையுடையோர் வேற்று நாட்டவரேயாயினும், அவர்க்கு உரியதாய்ச் சென்றொழியும்; ஆதலால், அரசியலை அறநெறியிற் செலுத்திப் பொருளீட்டு இரவலர்க்கு வழங்கி உங்கள் வாழ்நாள் முற்றும் இன்பமுறவாழ்வீர்களாக. உங்களை வாழச் செய்த நல்வினையே உங்கள் இறுதிக்காலத்தில் உயிர்த் துணையாகும். ஆதலின், அந் நல்வினையையே செய்வீர்களாக. யான் அறிந்த அளவு இதுவே. நீவிர் வானிற்றோன்றும் மீனினும் மழைத்துளியினும் பல காலம் வாழ்வீர்களாக" என்று இப் பாட்டால் அறிவுறுத்தினார். இவ்வாறு சான்றோர் பலர் மூவேந்தரும் ஒருமை மனத்தவராய் வாழ வேண்டுமென வற்புறுத்தியிருப்பவும், அவர் அவ்வன்புறையை மறந்து பொருது கெட்டனர்; கெடவே, வடநாட்டு வடவரும், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரம், துருக்கரும் மேலைநாட்டு வெள்ளையருமாகப் பலர் புகுந்து தமிழகத்து அரசியல், சமயம், மொழி, பொருணிலை, சமுதாயம் முதலியவாழ்க்கைக் கூறுகளையழித்துத் தமிழர் என்றும் பிறர்க்கே யுழைத்து ஏழையாகும் இழி நிலையை யுண்டாக்கி விட்டனர்.

    நாகத் தன்ன பாகார் மண்டிலம்
    தமவே யாயினுந் தம்மொடு செல்லா
    வேற்றோ ராயினு நோற்றோர்க் கொழியும்
    ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
    பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து         5
    பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
    நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்
    திரவலர்க் கருங்கல மருகாது வீசி
    வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்
    வாழச் செய்த நல்வினை யல்ல         10
    தாழுங் காலைப் புணைபிறி தில்லை
    ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறர் பாளர்
    முத்தீப் புரையக் காண்டக விருந்த
    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
    யானறி யளவையோ விதுவே வானத்து         15
    வயங்கித் தோன்று மீனினு மிம்மென
    இயங்கு மாமழை யுறையினும்
    உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே.
    ---------

திணை: பாடாண்டிணை. துறை; வாழ்த்தியல். சேரமான் மாவண்கோவும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது.

உரை: நாகத் தன்ன பாகார் மண்டிலம் - நாகலோகத்தைப் போன்ற வளவிய பகுதிகளையுடைய நிலவட்டம்; தமலே யாயினும் - தம்முடையவேயென வுரிமை கொள்ளப்பட்டனவாயினும்; தம்மொடு செல்லா - வேந்தர் தாம் இறக்குங்கால் அவரோடே மறைந்தொழியாமல் நின்று; வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும் - அவர்க்குப் பின்வரும் வேந்தர் ஒரு தொடர்பு மில்லாத வேற்று நாட்டவராக இருப்பினும்; நோன்மையுடையராயின் அவர்க்குரிய தாய்விடும்; ஏற்றபார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய - பொருள் வேண்டி இரந்துநின்ற பார்ப்பனருக்கு அவருடைய நனைந்த கை நிறையும்படி; பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து - பொற்பூவும் பொற்காசும் நீர் வார்த்துக் கொடுத்து; பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி மகிழ்சிறந்து - பசிய இழை யணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவை யுண்டு களித்து; இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி - இரவலர்க்கு அவர் வேண்டிய அரிய பொருள்களைக் குறைவறக் கொடுத்து; இவண் வரைந்த வைகல் வாழ்தல் வேண்டும் - இவ்வுலகில் வாழ்தற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் நன்றாக வாழ்தலே வேண்டுவது; வாழச் செய்த நல்வினை யல்லது - வாழ்தற்கேதுவாகிய அந் நல்வினையின்றி; ஆழுங் காலைப் புணை பிறிது ல்லை - இறக்கும்போது உயிர்க்குத் துணையாவது வேறே யாதும் இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீயுரைய - வீடுபேறொன்றையே விரும்பிப் புலன்கண்மேற் செல்லுகின்ற ஆசைகளை யடக்கியமைந்த அந்தணர் எடுக்கும் முத்தீயைப்போல; காண்தக இருந்த - அழகுதக வீற்றிருந்த; கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் - வெண்கொற்றக் குடையும் கொடி யுயர்த்திய தேருமுடைய வேந்தர்களே! யான் அறி அளவை இதுவே - யானறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் - வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்களிலும்; இம்மென இயங்கும் மாமழை உறையினும் - இம்மென்று முழங்கி்ப் பெய்யும் பெரிய மழைத்துளியினும்; உயர்ந்து மேந் தோன்றி மிக்கு - மேம்பட்டு; நும் நாள் பொலிக - நும்முடைய வாழ்நாட்கள் விளங்குவனவாக; எ - று.

நாகம், இன்பமே தேவருலகம். பாகு - பகுதி. மண்டிலம் வட்டம்; ஈண்டுச் சேரமண்டலம், சோழமண்டலம் மென்றாற்போல நாட்டின்மேல் நின்றது. வேற்றோர் தமிழரல்லாத பிறர். நோன்றல், நோன்மையாதலின், அதனை யுரையாரை நோற்றோரென்றார். 2தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்" என்பதுபற்றி, அரசவாழ்வாகிய செல்வப் பேற்றுக் கேதுவாகிய நோன்மை குறிக்கப்பட்டது. வலிய போர்ப்படை யேந்திப் போருடற்றும் பண்பினரல்லராகலின், பார்ப்பார் கை உண்டற்றொழி லொன்றிற்கே பயன்பட்டமை தோன்ற ஈர்ங்கை யென்றார். பூ, பொன்னாற்செய்த பூ; பார்ப்பார் இதனைச் "சொர்ண புட்பம்" என்பர். பார்ப்பார் என்போர் ஓதல் ஓதுவித்தல் முதலிய அறுதொழிலைச் செய்யும் வேதியராவர். அந்தணரென்போர், பார்ப்பார், அரசர் வணிகர், வேளாளரென வரும் பலருள் அருளறம் மேற்கொண்டு முற்றத் துறந்த துறவிகளாவர். மகிழ வுண்டு பெருகக் கொடுத்துப் புகழுண்டாக வாழ்தலே வாழ்வு; ஈதலும் இசைபடவாழ்தலும் வாழ்வின் ஊதியமென்பது தமிழரறம். எத்திறத் தோர்க்கும் வரைந்த வாழ்நாள் எல்லைகடவாதாகலின் "வரைந்தவைகல்" என்றார். ஒன்று - வீடு பேறு. சுவை முதலாகிய புலன்கண்மேற் சென்ற ஆசையால் நுகரப்படுவது உலகியலின்பமாய்க் கருதும் வீடு பேற்றுக்குமாறு படுதலின், வீடு காதலிப்பவரால் ஆசையாகிய உலகியலின்பம்விடப்படு மென்பதுபற்றி, "ஒன்றுபுரிந் தடங்கிய இருபிறப்பாளர்" என்றார். இரண்டாவது பிறப்பும் வீடுபேறு குறித்ததென்றுணர்க. தமிழ் வேந்தர் மூவருக்கும் முத்தீ உவமம். சொரிதலும் உண்டலும் ஈதலும் புகழை நிறுவி நாட்டு மக்களை அன்பால் பிணிப்பித்து வலிமிகச் செய்தலின் வேந்தர் இவற்றைச் செய்து வாழவேண்டு மென்றார். வேந்தீர், மண்டிலம் செல்லா ஒளியும்; சொரிந்து சிறந்து வீசி வாழ்தல் வேண்டும்; இல்லை; மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சொரிதல் அறப்பொருட்டும், சிறத்தல் பொருட் பொருட்டும், வீசுதல் இன்பப்பொருட்டும் எனக் கொள்க.

விளக்கம்: தமிழ்வேந்தர் மூவரும் மனத்தால் ஒன்றுபடாமைக் கேது ஒவ்வொருவருக்கும் தாம் ஒருவரே மேம்பட்டு நிற்க ஏணையோர் தம் ஆணைவழியடங்கி நடக்கவேண்டுமென்றெழுந்த வேட்கையாகும்; அவ்வேட்கை நாட்டின்மேல் நிற்றலின், அதனை விலக்கி ஒருமை மனமுடையராதல் வேண்டும் என்று கருதினார் ஒளவையார். இத்தமிழகம் "நாகத்தன்ன பாகார் மண்டிலம்" என்று குறித்து, "இதனைத் தாமேயாள வேண்டுமென்று எண்ணி, அதனால் ஏனையிருவரையும் பொருது வென்று நாட்டையடிப்படுத்த வேந்தரும் இறந்தனர்; இறந்தபோது தமிழகம் அவர்பின் சென்றொழியாது, வேற்றோர்க்கு என்று கருதாது, யாவர் தன்னைத் தாங்குகிறார்களோ, அவர்கள் அடிக்கீழ் இவ்வுலகம் நிற்கும் இறல்பிற்று. ஆதலால், நீவர் நும்முடைய நாட்டை இனிது தாங்கு முகத்தால், பார்ப்பார்க்கும் இரவலர்க்கும்வேண்டுவன நல்கி வாழ்தல் வேண்டும். இதுவே நீவிர் செய்யத்தக்க நல்வினை. இந் நல்வினையே நும்மை இனிது வாழச் செய்வத. இந்நல்வினையொழிய வேறே துணையில்லை; இவ்வளவே யான் அறிந்தது என்று கூறினார். இந்நல்வினையை மேற்கொண்டு நீவிர் மூவிரும் ஒருமை மனத்தோடு வாழ்வீராயின் வானத்திற்றோன்றும் விண்மீனினும் பெருமழையிற்றோன்றும் நீர்த்துளியினும் பல்லாண்டு நெடிது வாழ்விர்; இன்றேல், வீலிர் வேரொடு ஒழிவது ஒருதலை; இத் தமிழகமும் வேற்றவர் ஆட்சிக்குட்பட்டுத்தன் மொழி, கலை, பண்பாடு, செல்வம், வாணிகம் முதலியதுறை பலவற்றினும் சீரழிந்து வேற்றோர்க்கு அடிமை நாடாய்விடும் என்று உய்த்துணர வைத்தார். அப் பேதைவேந்தர் அவர் கூற்றை மனங்கொள்ளாராயினர். அன்று அவர் செய்த தீச்செயலால், இன்று இத் தமிழகம், மொழியும், கலையும் பொருளும், பண்பாடும் கன்றிப் பிற நாட்டவர் ஆட்சியாணைக்குத் தலைதாழ்ந்து செல்வதாயிற்று; அடிமையில் மடிந்தூரும் மடமையிற்றலைமை பெறுவ தாயிற்று; நாட்டுக்கு வறுமை உரிமையாயிற்று.
----------

368. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃற டக்கைப் பெருவிறற்கிள்ளியும் யாது காரணத்தாலோ பெரும் பகை கொண்டு திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே கடும்போர் உடற்றினர். திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது. இதனைக் கல்வெட்டுகள் திருப்பேர்த் திருப்புறம் (S. I. I. Vol. No.497) என வழங்கும். இவ்விடத்தே சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் போர் நிகழ்ந்ததும் அதன்கண் சேரமான் பற்றுக்கோட்பட்டதும். (புறம். 74) ஈண்டு நினைவு கூர்தற்குரியன. அப்போரில் இருவேந்தரும் புண்பட்டுப் போர்க்களத்தே வீழ்ந்தனர். அக்காலத்தே கழாத்தலையாரென்னும் சான்றோர் போர்க்களஞ் சென்று இருவரும் வீழ்ந்து கிடப்பது கண்டார். அக்காலத்தே அவர் சேரமானைப் பார்க்கையில் அவன் குற்றுயிராய்க் கிடந்தான். அந்நிலையில் அவன் தன்னைப் பாடி வந்த கோடியர்க்குத் தன் கழுத்தில் இருக்கும் ஆரத்தைக் காட்டிப் பரிசிலாக எடுத்துக்கொள்ளுமாறு அவர்க்குக் குறிப்பாயுணர்த்தினான். அது கண்டு, கையறவுமிக்க கழாத்தலையார் இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், “வேந்தே! களிறு பெறுவேமென்னின், அவை அம்பு பட்டுப் புண்ணுற்று வீழ்ந்தொழிந்தன: தேர் பெறலாமென்னின், அவை பீடழிந்து சிதைந்து நிலத்தே கிடக்கின்றன; குதிரைகளோ வெனின், அவை வாள்வடுப்பட்டுக் குருதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன; இதனால் பெறற்குரிய பெருவளம் பெறாமையின் இரவலர் இரங்குவாராயினர். தடாரிப்பறையை யறைந்துகொண்டு யான் வந்தது நின் தோளிடத்தே அரவுபோற்சுற்றிக்கொண்டிருக்கும் ஆரத்தைப் பெறற்பொருட்டேபோலும்” என ஆசிரியர் அவனது மறமாண்பும் கொடை நலமும் தோன்றப் பாடியுள்ளார்.

    களிறு முகந்து பெயர்குவ மெனினே
    ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம் போலக்
    கைம்மா வெல்லாங் கணையிடத் தொலைந்தன
    கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே
    கடும்பரி நன்மான் வாங்குவயி னொல்கி         5
    நெடும்பீ டழிந்து நீலஞ்சேர்ந்
    கொய்சுவற் புரவி முகக்குவ மெனினே
    மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி
    வளிவழக் கறுத்த வங்கம் போலக்
    குருதியம் பெரும்புணல் கூர்ந்தோழிந் தனவே,         10
    யாங்க முகவை யின்மையி னுகவை யின்றி
    இரப்போ ரிரங்கு மின்னா வியன்களத்
    தாளழிப் படுத்த வாளே ருழவ
    கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
    தெடாரித் தெண்கண் டெறிர்ப்ப வொற்றிப்         15
    பாடி வந்த தெல்லாங் டூகாடியர்
    முழவுமரு டிருமணி மிடைந்ததோள்
    அரவுற ழார முகக்குவ மெனவே.
    ---------

திணை: வாகை. துறை: மறக்களவழி. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து ஆரம் கழுத்தினதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.

உரை: களிறு முகந்து பெயர்குவம் எனினே - களிறுகளைத் தரப் பெற்றுச் செல்வேமென்று கருதினால்; ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம்போல - விளங்குகின்ற மழைமுகிலைத் தடுக்கும் குன்றுகளைப் போல; கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன - யானைக ளெல்லாம் நின் அம்புபட்டு இறந்தன; கொடுஞ்சி்நெடுந்தேர் முகக்குவம் எனின் - கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களைத் தரக்கொண்டு செல்வோமென்றார்; கடும்பரி நெடுமான் வாங்கு வயின் ஒல்கி – கடிய செலவையுடைய குதிரைகள் வளைத்தீர்த் தோடுதலால் இடந்தோறும் நொடித்துத் தளர்ந்து - நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்ன - தம் நெடிய வலியழிந்து முறிந்து நிலத்தே சிதறி வீழ்ந்தன; கொய் புரவி முகக்குவம் எனின் - கொய்யப்பட்ட பிடரி மயிரயுடைய குதிரைகளைத் தரப்பெற்றுச் செல்வோமென்றால்; மெய் நிறை வடுவொடு பெரும் பிறிதாகி - உடல் முழுவதும் நிறைந்த வாட்புண்களுடனே வீழ்ந்திறந்து; வளி வழக் கறுத்த வங்கம் போல - காற்றிக்க மின்றி நிற்கம் மரக்கலம்போல; குருதியும் பெரும்புனல் கூர்ந்தொழிந்தன - குருதி வெள்ளத்தில் நிறைந்து மிதக்கலாயின; முகவை இன்மையின் உகவை இன்றி - பெறுதற்குப் பரிசிலொன்றும் காணப்பெறாமையால் உவகை யின்றி; இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து - இராவலராகிய பரிசிலர் வருந்தும் துன்பமுற்ற அகன்ற போர்க்களத்தில்; ஆள் அழிப்படுத்த வாளேர் உழவ - காலாட்களாகிய வைக்கோலைக் கடாவிட்டொதுக்கிப் போரெனக் போரெனக் குவித்த வாளாகிய ஏரையுடைய உழவனே; கடாானைக் கால்வழி யன்ன - மதமுடைய யானையின் அடிச்சுவடுபோன்ற; என் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றி - என்னுடைய தடாரியினது தெளிந்த கண் ஒலிக்க இசைத்து; பாடி வந்ததெல்லாம் - யான் பாடி வந்ததெல்லாம் காரணம்; கோடியர் முழவு மருள் திருமணி மிடைந்த தோள் - கூத்தரது முழவுபோன்ற அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்த தோளிடத்துக் கிடக்கும்; அரவுறழ் ஆரம் முகக்குவம் என - பாம்பு போலும் ஆரத்தைப் பெறலாமென்று போலும்; எ - று.

எனவென்புழிப் போலும் என ஒரு சொற்பெய்து முடித்துக்கொள்க. உழவ, களிறு தொலைந்தன; தேர் நிலஞ் சேர்ந்தன: புரவி கூர்ந்தொழிந்தன; பாடிவந்ததெல்லாம் ஆரம் முகக்குவமென்று போலும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போரிற் பகைவரை வென்று பெறும் களிறும், தேரும், குதிரையும், பிறவும் பொருநர் பாணர், கூத்தர் முதலாயினார்க்கு வழங்குவது பண்டைவேந்தர் மரபு. ஈண்டு இவற்றைப் பெறலர்மென வந்த இரவலர் களிறு கணையிடத் தொலைந்தவாறும், தேர் பீடழிந்து நிலஞ் சேர்ந்தவாறும், குரிரைகள் குருதிவெள்ளத்திற் கூர்ந்தொழிந்தவாறும் கண்டு வியந்தனரென்பார், “முகவை யின்மையின் உகவை - யின்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களம்” என்றார். உகவை, மகிழ்ச்சி, கால் வழி - கால் நிலத்தில் அழுந்த வுண்டாகும் சுவடு. தடாரி, தெடாரியென வந்தது. பாம்பு ஆரத்திற்குவமை; 'விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு’. (புறம். 398) என்று பிறரும் கூறுதல் காண்க. ஆக: அசைநிலை, மெய்ந் நிறைந்த வடுவொடு என்றும் பாடம்.

விளக்கம்: அரசர்பொரும் போர்க்களத்துக்குச் சென்று வெற்றி பெறும் வேந்தர்களைப் பாடும் பாணர் முதலிய பரிசிலருக்குப் போரிடத்துத் தோற்ற வேந்தருடைய களிறு, தேர், குதிரை முதலியனவும், அவரணிந்த கலங்களும் கொடுக்கப்படுவதுமரபு. கழாத்தலையார் குடக்கோ நெடுஞ்சேரலாதன் பொருது வீழ்ந்த போர்க்களத்தில் இரு வேந்தரும் வீழ்ந்தமையின், இரவலர் அக் களிறு முதலியன பெறாது வருந்தினமை தோன்ற, “முகவை இன்மையின் உகவை யின்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களம்” என்று குறித்தார். தன்னைக் காண்டற்கு வந்த கழாத்தலையார் காணத் தன் கழுத்திடத்துக் கிடந்த ஆரத்தைச் சேரலாதன் கோடியர்க்கு நல்கினானாக, இறுதிக் காலையினும் கொடைநலம் குன்றாத அவனது வள்ளன்மையை வியந்து கூறலுற்றவர், “கோடியர் பாடிவந்தது ஆரம் முகக்குவம் எனவே” என்றார்; எனவே, இரப்போர்இரங்கும் வியன் களத்துடக கோடியர் நின் ஆரம் பெற்றனர்; யான் நின் புகழ் பாடும் பேறு பெற்றேன் எனக் குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார். வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கல்லவாதலால் தோற்றோர் வருந்தாரென்பதும், இரவலரே தாம் பெறற்கு இன்மை கண்டு வருந்துவாரென்பதும் விளங்க இருவரும் வீழ்ந்த போர்க்களம் “இன்னா வியன் களம்” எனப்பட்டதென்க.
-----------

369. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்

சேரமன்னருள், குட்டுவர், குடவர், இரம்பபொறையர் எனப் பலர் பலவேறு காலங்களில் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கினர். அவருள் வேல்கெழுகுட்டுவன் ஒருவன். சேரவேந்தர் மேலைக்கடற்கரை நாட்டிலிருந்து கடற்படைகொண்டு வேறு நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தலில் மேம்பட்டிருந்தனர். இவருடைய கடற்படையின் வன்மை நாடெங்கும் பரந்திருந்தது. சேரர்களது வங்கம் கடலிற் செல்லுமாயின் ஏனை நாட்டவர் தத்தம் வங்கங்களைத்தம் கரையில் நிறுத்திக் கொள்வரே யன்றிக் கடலிற் கலஞ் செலுத்துதற்கஞ்சுவர். "சினமிகுதானை வானவன் குடகடற், பொலந்தரு நாவாயோட்டிய வவ்வழிப், பிறர்கலஞ் செல்கலா" (புறம். 126) தென்று மாறோக்கத்து நப்பசலையார் கூறுவது காண்க. இவ் வண்ணம் செந்தமிழ்ப் பெருவேந்தர் கடற்படையால் உலகுபுகழும் உயர்வுற்றிருந்தபோது வேறுநாட்டவர் கடலில் கலஞ் செலுத்திக் குறும்புசெய்து வந்தனர். அவர்தம் குறும்பு மிகுவது கண்டவேல்கெழு குட்டுவன், கடற்படை ஒன்று கொண்டு சென்று அவரை வென்று வேரறுத்து வாகை சூடினான். அன்று முதல் அவனுக்குச் சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன் என்ற சிறப்புண்டாயிற்று. இக் குட்டுவனைச் செங்குட்டுவன் என்றும் கூறுவர். இப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பரணரால் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்திற் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பாராட்டிக் கூறப்பட்டுளன். பரணர் காலத்துப் கடல்பிறக் கோட்டிய குட்டுவன் செங்குட்டுவனென்றும், வேல்கெழுகுட்டுவனென்றும் நூல்களிற் கூறப்படுவதனால் இருவரும் ஒருவராதல் தெளிவாம். இப் பாட்டு ஆசிரியர் பரணர் குட்டுவன் கடல் பிறக்கோட்டும் செயல்செய்தற்கு முன்னர் அவனைப் பாடியது. பின்னர்ப் பாடிய பாட்டுக்களான பதிற்றுப்பத்து இச் செய்தியைச் சிறப்பாகக் குறிக்கின்றன.

இதன்கண், "உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மேகமும், அது கருத்து மழை பெய்யுங்காலத்துச் செய்யும் மின்னலும், உடன் தோன்றும் இடிமுழக்கமும், மின்னியிடித்து மழை பெய்யுங்கால் நாற்றிசையும் பரவிப் பொழியுமாறு வீசும்வளியும், இவற்றால் ஈரங் கொண்ட நிலமும், அதனை யுழுதற்கு வேண்டும் ஏரும், உழுதவழி யுண்டாகும் படைச்சாலும், அதன்கண் விதைக்கப்படும் வித்தும், அது விளைந்து முற்றிக் கதிர் தலைசாய நிற்றலும், அவற்றை யறுத்துப் போரிடுதலும் வயலுழவரப்ால் நிகழ்தல்போல, போர்க்களத்தில் கருங்கை யானை மேகமாக, மறவர் எறிதற்குயர்த்த வாள் மின்னலாக, போர்முரசு முழக்கமாக, மிக விரைந்த செலவினையுடைய குதிரை வீசு வளியாக, வல்வில் வீங்கு நாண் செலுத்திய கணைகள் மழைத் தாரையாக இவற்றால் கொலையுண்ட மாக்களின் குரதி தோய்ந்து ஈரமுற்ற போர்க்களம் வயலாக, தேர் ஏராக, ஆயுதமாகிய படைகளால், கீழ்மேலாக மறிக்கப்பட்ட படை முதலியவற்றின் நிரை படைச்சாலாக, வெள்வேலும் கணையமும் எறியப்பட்டுச்சிதறி வீழ்வன விதையாக, பகைவரை பெட்டிச் சாய்த்தலால் மிதிப்புண்டு நசுங்கிய நிணங்களின் அச்சந்தரும் நிலை பைங்கூழாகப் பேய்மகளிர் பிணங்களின் முன்சூழ்ந்துவர, சிதைந்த பிணங்களின் குவைபோராக, அவற்றைப் பூதம், பேய், நரி முதலியன முகந்துண்ணும் வகையில் தான் தன்னைப் பாடி வருவோர்க்கு அவர் வேண்டுவன ஈதற்பொருட்டுச் செங்குட்டுவன் வீற்றிருக்கின்றான்; அவனைத் தடாரியை பொருநன் ஒருவன் சென்று கண்டு, "வேந்தே! யான் என் தடாரியை யறைந்து நின் விறற்புகழ் பாடிவந்தேன்; என்வறுமை தீரக் கன்றும் பிடியும் விரவிய, இமயம் போலுயர்ந்த, களிறுகளைப் பரிசிலாக நல்குவாயாக" என்று கேட்கும் வகையில் ஆசிரியர் பாடியுள்ளார்.

    இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற்
    கருங்கை யானை கொண்மூவாக
    நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த
    வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த
    குருதிப் பலிய முரசுமுழக் காக         5
    அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின்
    வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
    விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த
    கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
    ஈரச் செறுவயிற் றேரே ராக         10
    விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
    செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சாற்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
    விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
    பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு         15
    கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
    பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
    பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
    தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
    வேய்வை காணா விருந்திற் போர்வை         20
    அரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப்
    பாடி வந்திசிற் பெரும பாடான்
    றெழிலி தோயு மிமிழிசை யருவிப்
    பொன்னுடைய நெடுங்கோட் டிமயத் தன்ன
    ஓடை நுதல வொல்குத லறியாத்         25
    துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
    வேழ முகவை நல்குமதி
    தாழா வீகைத் தகைவெய் யோயே.
    ----------

திணையும் துறையு மவை. துறை: ஏர்க்கள உருவகமுமாம். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.

உரை: இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின் - இரும்பாற் செய்யப்பட்ட பூண ் நுனியிற் செறிக்கப்பட்ட உயர்ந்த அழகிய கொம்பினையும்; கருங்கை யானை - பெரிய கையினையுமுடைய யானை; கொண்மூவாக - முகிலாகவும்; நீள் மொழி மறவர் எறிவனர் - உயர்ந்த வாள் மின்னாக நெடுமொழியையுடைய வீரர்கள் பகைவர்மேல் எறிதற்காக ஏற்திய வாள் மினனலாகவும்; வயங்கு கடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசு முழக்காக - விளங்குகின்ற குறுந்தடிகொண் டடிக்கப்படுகின்ற குருதிப்பலி யூட்டப்பெற்ற முரசொலி மழையின் முழக்கமாகவும்; அரசு அராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் - அரசர்களாகிய பாம்புகள் அஞ்சி நடுங்கும் வருத்தமிக்க பொழுதின் கண்; வெவ்விசைப் புரவி வீசு வளியாக - வெவ்விய செலவையுடைய குதிரைகள் மோதுகின்ற காற்றாகவும்; விசைப்புறு வல்வில் வீங்கு நாண் உகைத்த கணைத் துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை - விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லினுடைய பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்த இடமகன்ற போர்க்களத்தில்; ஈரச் செறுவயின் - குருதி தோய்ந்து ஈரமாகிய செருக்களத்தின்கண்; தேர் ஏராக - தேர்கள் ஏர்களாகவும்; விடியல் புக்கு - விடியற்காலத்தே புகுந்து; நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த -திருத்துறு பைஞ்சால் நெடியவாகிய நின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் நெடியவாகிய நின் வேல் முதலிய படைக் கருவிகளை நீட்டி மாற்றார்ப் படைக் கலங்கள் கீழ் மேலாக மறிக்கப்பட்டாழ்ந்த மைந்த பசிய படைச் சாலின்கண்; பிடித்தெறி வெள் வேல் கணைய மொடு வித்தி - பிடித்தெறியும் வெள்ளிய வேலும் கணையமரமுமாகிய படைகளைத் துகள்படச் சிதைத்தெறிதலால் அவை விதைபோல் நிலத்திற் புதையுண்ணச் செய்து; விழுத்தலை சாய்த்த வெருவருபைங் கூழ் பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து மூளையும் நிணமும் குழம்பிய கண்டார்க்கு அச்சம்பக்கும் பிணங்களாகிய பசிய பயிரினுடைய; பேய் மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு பேய்மகளிர் மொய்த்துச் சூழும் பிணங்கள் குவிக்கப்பட்டுயர்ந்த பல போர்களை; கண நரி யோடு கழுது களம் படுப்ப - கூட்டமான நரிகளும் பேய்களும் ஈர்த்துண்ண; பூதம் காப்ப - பூதங்கள் காவலைச் செய்ய; பொலி களம் தழீஇ - பிணங்களாகிய நெல் பொலிந்த போர்க்களத்தே பொருந்தி; பாடுநர்க் கிருந்த பீடுடையாள - போர்க்களம் பாடும் பொருநர் முதலியோர் பாடக் கேட்டற்பொருட்டு வீற்றிருந்த பெருமை யுடையவனே; தேய்வை வெண்காழ் புரையும் - கல்லிற் றேய்த்து அரைக்கப்படும் வெள்ளிய சந்தனக்கட்டை போலும்; விசி பிணி வேண்வை காணா விருந்தின் போர்வை - இறுக விசித்துக் கட்டப்பட்ட குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட; அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றி - அரித்த ஓசையுடைய தடாரிப் பறையைச் சூடேற்றி யறைந்து; பாடி வந்திசின் - பாடி வந்தேன்; பெரும - பெருமானே; பாடான்று - ஓசை நிறைந்து; எழிலி தோயும் இமிழிசை யருவி முகில்கள் படியும் ஒலிக்கின்ற ஓசையையுடைய அருவிகள் பொருந்திய; பொன்னுடை நெடுங்கோட்டு அமயத்தன்ன - பொன்னின் நிறம்ம பொரு்.நதிய நெடிய உச்சியையுடைய இமயத்தைப் போல; ஓடை நுதல - பட்டமணிந்த நெற்றியினையும்; ஒல்குதல் அறியா - சுருங்குதலில்லாத; துடியடிக் குழவிய பிடி - துடிபோன்ற அடியையுடைய கன்றையுடைய பிடி யானைகள்; இடை மிடைந்த - இடையிடையே செறிந்துள்ள; தாழா ஈகைத்தகை வெ்யோய் - குன்றாத ஈகையாற் பிறக்கும் புகழை விரும்புபவனே; எ - று.

யானைகள் மழை மேகமாகவும், மறவருடைய வாள் மின்னலாகவும், முரசொலி இடி முழக்காவும், அதுகேட்டு அஞ்சும்வேந்தர் பாம்பாகவும், புரவிகள் காற்றாகவும், கணை மழைத்துளியாகவும், குருதியீரல்பட்ட போர்க்களம் வயலாகவும், பலரும் திரிந்து மிதிப்புண்பது திருத்தப்படும் மறுசாலாகவும், கையறுப்புண்டு வீழும் வேலும் கணையமும் விதையாகவும், தலைசாய்ந்து வீழும்வீரர் வநை்து தலைசாய்ந்து நிற்கும் பசிய பயிராகவும், பிணக்குவை போர்பாகவும் உருவகம் கொள்க. பொலி களம், நெற்பொலி நிறைந்த களம். உழவர் போர்க்களத்தே நின்று ஏர்க்களம் பாடும் பொருநர் பாட, அப் பாட்டையேற்று அவர்கட்கு நெல்லைத் தருவதுபோல, வேந்தரது போர்க்களத்தில் பொருநர் பாடும் புகழை ஏற்றலின், "பாடுநர்க்கிருந்த பீடுடையாள" என்றார். தோலிலும் தோலாற் செய்யப் படும்வார்களிலும் நரம்புகளிலும் காணப்படும் பிசிர் வேய்வை யெனப்படும். அது குற்றமாய் இசைக் கருவிக்குச் சிறப்புத் தாராமையின், "வே்வை காணா விருந்திற்போர்வை" யென்றார். "வேய்வை போகிய விரலுளர் நரம்பு" (பொருந. 17) என்று பிறரும் "உருப்ப வொற்றி" யென்றார். தகை, அழகுமாம். வெய்யோய், வேண்டற் பொருட்டாகி வெம்மையடியாகப் பிறந்த வினைப்பெயர். பீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடைமிடைந்த வேழமுகவை நல்குமதி என்று கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: மறக்கள வழியாவது, "முழவுறழ் திணிதோளானை உழவனாக வுரைமலிந்தன்று," (பு. வெ. மா. 85) என வரும். இனி "கூதிர் வேனில்"(தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, "ஏரோர் களவழி யன்றிக் களவழித், தேரோர் தோற்றிய வென்றியும்" என்ற தன் உரையில் இதனை யெடுத்துக்காட்டி "இஃது ஏரோர் களத்தின் வழி கூறியது" என்பர் இளம்பூரணர். இப்பகுதிக்கு நச்சினார்க்கினியர். "நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச்சுற்றத்தொடுநுகர்வதற்கு முன்னே கடவுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும், நாற்படையையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்மட லோச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி 'ஈனா வேண்மான் இடந்துழந்தட்ட’ கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற குதிரை யானைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் "பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்" (தொல். புறத். 24) என்று கூறுவர். இப்பாட்டினும், குட்டுவனை உழவனாகவும், அவனுடைய போர்க்கள நிகழ்ச்சியை ஏர்க்களத்தின் செயலில் வைத்தும் உருவகம் செய்து கூறினமையின், இதனை ஏர்க்கள வுருவகம் என்றார்போலும், இப் பாட்டுப் போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக் கூறுதலின், "அரிக்குரல் தடாரி உருப்ப வொற்றிப் பாடி வந்திசின் பெரும" என்றும், பாடி வந்ததன் கருத்து விளங்குதற்கு, "வேழ முகவை நல்குமதி" யென்றும், நீட்டியாது தருக வென்பார், "தாழா வீகைத் தகை வெய்யோய்" என்றும் கூறினர். ஆசிரியர் பரணர் பெயரால் பரணர் பள்ளி யென்றோர் ஊர் கோயமுத்தூர் மாவட்டத்துக் காங்கேயப் பகுதியில் உள்ளது. (A. R. No. 560 of 1908) இப்போது இது பரஞ்சேர்வளியென வழங்குகிறது.
------------

370. சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி

சோழன் இளஞ்சேட்சென்னி சோழநாட்டுக்கு வேந்தனானபின் வட வடுகர் அடிக்கடி அவனது தொண்டை நாட்டிற்குட் புகுந்து குறும்பு செய்தனர். அவர்களை அவ்வப்போது அவன் வெருட்டி யோட்டினா னாயினும் வடுகரது குறும்பு குறைந்தபாடில்லை. முடிவில் அவன் பெரும் படை யொன்று கொண்டு சென்று பாழி யென்னுமிடத்தே தங்கியிருந்த வடுகரைச் சவட்டி வென்றி யெய்தினான். பாழி நகர் நல்ல அரணும் காவலும் பொருந்தியிருந்தமையின் அதனை வடுகர்கைப்பற்றிக் கொண்டு அதனைத்தமக்கு இடமாகக் கொண்டிருந்தனர், சோழன் வடுகரை வென்று அவருடைய வலிய அரண் சூழ்ந்த பாழி நகரையும் அழித்துச் செரு மேம்பட்டான். அதனால் அவனைச் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி யென வழங்கினர். இடையன் சேந்தன் கொற்றனாரென்னும் சான்றோர், சென்னி, செருப்பாழி யெறிந்த திறத்தை, எழூஉத் திணிதோள் சோழன் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி, குடிக்கடனாகலிற் குறைவினை முடிமார், செம்புறழ் புரிசைப் பாழி நூறி, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" (அகம். 375) வென்றானென்று குறிக்கின்றார். இப் பாழி யென்பது தொண்டைநாட்டு நெடுங்குன்றத்துக் கல்வெட்டொன்றில் "பாழி ஒபிளியான திருவாஞ்சேரி" (A. R. No. 26 of 1934-5) என்று கூறப்படுகிறது. இது செங்கற்பட்டு தாலூகாவில் உளது. வடுகரைச் சவட்டியது கொண்டு செருப்பாழி தொண்டைநாட்டுப் பாழியாகலாம் என்று கருதப்பட்டது. ஏனை நாடுகளிலும் பாழியெனப் பெயரிய ஊர்கள் பலவுண்டு. சோழநாட்டுப் பாழி அரதைப் பெரும்பாழி யென்றும் இக்காலத்து அரித்துவாரமங்கல மென்றும் வழங்கும். இந்த இளஞ்சேட்சென்னி, நெய்தலங் கானல் இளஞ்சேட்சென்னி யெனவும், சேரமானுடைய பாமுளூரை யெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவும், செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவும் இத்தொகை நூலாற் குறிக்கப்படுகின்றான். இனி, இடையன் சேந்தன் கொற்றனார் பாழி யெறிந்த சென்னியை இளம்பெருஞ் சென்னி யென்றலின், நெற்தலங்கானல் என்னுமித்தே தோன்றிச் சேரமானது பாமுளூரை யெறிந்த இளஞ்சேட்சென்னி, இளம்பெருஞ் சென்னியின் வேறாவன் என்றும், செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னியும், பாமுளூரெறிந்த இளஞ்செட் சென்னியும் உடன்பிறந்ததோராகலாமென்றும்,இருவரும் ஒருகாலத்தவராதலின் ஊன்பொதி பசுங்குடையாராற் பாடப்பெற்றன ரென்றும் கருதலுண்டு. இக்கருத்து உண்மையாமாயின், செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னி யெனற்பாலது ஏடெழுதினோரால் இளஞ்சேட்சென்னி யெனத் தவறாக எழுதப்பட்டதெனக் கோடல் வேண்டும். இந்த இளஞ்சேட்சென்னி வடுகரை வென்று களங்கொண்ட செய்தியறிந்த ஊன்பொதி பசுங்குடையார் அவன்பாற் சென்று, பகைவர்பால் அவன் பெற்ற களிறுகளைப் பரிசிலாகப் பெறக் கருதி இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், தம்மைப் புரப்போர் இல்லாமையால் தம்முடை சுற்றத்தார் பசியால் வருந்த அவருடனே தாம் காடு பல கடந்து அவன்பால் வந்ததாகவும், அவன் பகைவரைக் கொன்று, பேய்மகள் குரவை யயரப், பருந்தும் கழுகும் இருந்து பிணம் தின்ன வென்றி மேம்பட்டிருந்ததாகவும், தாம் புகர்முக முகவை விரும்பி வந்திருப்பதாகவும் குறித்துரைக்கின்றார்.

    வள்ளியோர்க் காணா துய்திற னுள்ளி
    நாரும் போழுஞ் செய்தூண் பெறாஅது
    பசிதினத் திரங்கிய விரும்பே ரொக்கற்
    கார்பதங் கண்ணென மாதிரந் துழைஇ
    வேருழந் துலறி மருங்குசெத் தொழியவந்         5
    தத்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல்
    உழுஞ்சிலங் கவட்டிடை யிருந்த பருந்தின்
    பெடைபயிர் குரலொ டிசைக்கு மாங்கட்
    கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை
    வரிமாற் றிரங்கிய கானம் பிற்படப்         10
    பழுமர முள்ளிய பறவை போல
    ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
    துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
    விளைந்த செழுங்குர லரிந்துகால் குவித்துப்
    படுபிணப் பல்போர் பழிய வாங்கி         15
    எருதுகளி றாக வாண்மட லோச்சி
    அதரி திரித்த வாளுகு கடாவின்
    அகன்கட் டடாரி தெளிர்ப்ப வொற்றி
    வெந்திறல் வியன்களம் பொலிகென் றேத்தி
    இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பின்         20
    வரைமருண் முகவைக்கு வந்தனென் பெரும
    வடிநவி லெஃகம் பாய்ந்தெனக் கிடந்த
    தொடியுடைத் தடக்கை யோச்சி வெருவார்
    இனத்தடி விராய வரிக்குட ரடைச்சி
    அழுகுரற் பேய்மக ளயரக் கழுகொடு         25
    செஞ்செவி யெருவை திரிதரும்
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.
    ------------

திணையும் துறையு மவை. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ் சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

உரை: வள்ளியோர்க் காணாது - வள்ன்மையுடைய பெருமக்களைக் காணப்பெறாமையால்; உய் திறன் உள்ளி நாரும் போழும் செய்து - உய்யும் வகையை யெண்ணிப் படைமடற்கண் பெறப்படும் நாரும் பனங்குருத்தும் கைக்கொண்டு; ஊன்பெறாது பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு - உணவு கிடைக்கப் பெறாமையாற் பசிநின்று வருத்த வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்க்கு; ஆர்பதம் கண்ணென - நிறைந்த உணவு பெறவேண்டுமென்பதிலே நோக்கம் இருப்பதறிந்து; மாதிரம் துழைஇ - நாற்றிசையும் தேடி; வேர் உழந்து உலறி - மேனியில் வியர்வை யொழுக அலைந்து புலர்ந்து; மருங்கு செத்து ஒழிய வந்து - வயிறொட்டி வாட வந்து; அத்தக் குடிஞைத் துடியோசைபோலும் கடிய குரலோசை; உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த - உழுஞ்சின் மரத்தின் கவடுகளிலிருந்த; பருந்தின் பெடை பயிர் குரலோடு இசைக்கும் - பெடைப் பருந்தையழைக்கும் சேவற் பருந்தின் குரலோடு கலந்தொலிக்கும்; ஆங்கண் - அவ்விடத்து; கழையாய்ந்து உலறிய வறங்கூர் நீள் இடை - மூங்கில் காய்ந்து உலறிக் கிடக்கும் நீரின்றி வறம்மிக்க நீண்ட வழியிடத்தே; வரி மரல்திரங்கிய கானம் பிற்பட - வரிகளையுடைய மரற் பழங்கள் வற்றித் திரங்கிக் கிடக்கும் காடுகள் பிற்பட்டொழிய; பழு மரம் உள்ளிய பறவை போல - பழுத்த மரங்களை நினைந்து செல்லும் வௌவால்களைப் போல; ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென - ஒள்ளிய வில்லும் வாளுமாகிய படையாகிய மழை முகில் விரும்பிய தலைகளாகிய கனிகளைப் பெய்ததாக; துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப - முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின்மேற் பரவிச் செல்ல; விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்து - விளைந்த செழுமையான கதிர்களாகிய கழுத்தை யறுத்துக் காலொன்றக் குவித்து; படு பிணப் பல்போர்பு அழிய வாங்கி - இறந்த பிணங்களாகிய பல போர்கள் அழியும்படி வளைத்து; களிறு எருதாக - யானைகளை எருதாகவும்; வாள் மடல் ஓச்சி - வாட்படையைப் பனைமடலாகவும் கொண்டு செலுத்தி; அதரி திரித்த ஆளுகு கடாவின் - புணைகட்டிச் சூழ் வரச்செய்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்து; அதன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி - அகன்ற கண்ணையுடைய தடாரிப்பறை யொலிக்க அறைந்து; வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி - வெவ்விய திறலையுடைய நின் பெரிய போர்க்களம் புகழால் விளக்கமுறுக எனப் பாராட்டி; இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் - இரும்பினாற் செய்யப்பட்ட பூண் செறிக்கப்பெற்ற உயர்ந்த அழகிய மருப்பினையுடைய; வரை மருள் முகவைக்கு வந்தனென் - மலை போலும் களிறாகிய பரிசில் பொருட்டு வந்தேன்; பெரும - பெருமானே; வடிநவில் எஃகம் பாய்ந்தென - வடிக்கப்பட்ட கோடரி பாய்ந்து வெட்டிற்றாக; கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி - துணிபட்டுக்கிடந்த தொடியணிந்த பெரிய கை யொன்றை எடுத்து மேலே யுயர்த்தி; வெருவார் இனத்து இடிவிராய வரிக்குடர் அடைச்சி - அஞ்சாத வீரர் கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரிபொருந்திய குடரை ஒருங்கு சேர்த்து; பேய்மகள் அழுகுரல் அயர - பேய்மகள் தன் அழுகுரலை யெடுத்துப் பாடிக் கூத்தாட; கூழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் - கழுகுகளும் சிவந்த செவியையுடைய பருந்துகளும் இருந்து வட்டமிட்டுத் திரியும்; அஞ்சுவது கிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடத்தையும் போர்க் களத்தைத் தனதாக்கிக் கொண்ட உரிமையுடையவனே; எ - று.

வள்ளியோரது வள்ளன்மை பற்றுக்கோடாகத் தன் இனத்தவர் உயிருய்கின்றன ரென்பான், "வள்ளியோர்க் காணாது உய்திறனுள்ளி" என்றான். நார், பனைமடலிற் பெறப்படும்நார் போழ், பனங்குருத்து. "முழாஅரைப் போந்தையரவாய் மாமடல் நாரும் போழும் கிணையொடு சுருக்கி" (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காண்க. "நாரும் போழும் செய்துண்" டென்றும் பாடவேறுபாடுண்டு. பசி மிகுதியால் உணவு தருவாரையே நோக்குதலின், "ஒக்கற்கு ஆர்பதம் கண்" என்றார்.துடியோசை போன்றதாயினும், கேட்டற்கு இன்னாதா யிருத்தலின் "துடிமருடீங்குரல்" எனப்பட்டது. மாரி கனி பெய்தென வென்றது இல்பொருளுவமை. வீழ்கனி, உண்ண விரும்பிய இனிய கனி. குரல், கழுத்துமாம். களிறுகளை நிரையாகப் பூட்டிப் பிணங்களை மிதித்துக்கொண்டுசுற்றி வரச்செய்வதால், உடல்குழைந்து தலை வேறுபட்டு நீங்குதலின், "அதரி திரித்த ஆளுகு கடாவின்" என்றார். "வரைமருள் முகவை" யென்றதனால், களிற்றுப் பரிசில் என்பது பெற்றாம், வெருவார் - அஞ்சாத வீரர். கிடக்கைய; பெயரெச்சக் குறிப்பு. களத்தை வென்று தனதாக்கிக் கோடலின், "களங் கிழவோய்" என்றார். கிழவோய், பெரும, பறவைபோல, ஏத்தி, முகவைக்கும் வந்தனன் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: நெல்லுழவர் நெல்லரிந்து தொகுத்த நெற்களத்துக்குச் சென்று பாடி நெல்பெற்று மகிழும் பொருநருட் சிலர் வேந்தர் போருடற்றி வெற்றி யெய்தும் போர்க்களத்துக்குச் சென்று பாடிக் களிறும், தேரும், மாவும், கலன்களும் பெறுவது பண்டையோர் மரபு. அவ்வாறு ஊன்பொதி பசுங்குடையார் செருப்பாழி ஏனை இர வலர்க்கும் பகுத்தளித்து உண்பது அவர்களுக்கு இயல்பு. அதனால் வறுமை எய்தி வருந்துவது அவர்கள் வாழ்வில் அடிக்கடி யுண்டாகும் நிகழ்ச்சியாகும். வறுமை மிக்கவழி ஏர்க்களமோ, போர்க்களமோ நாடிச் செல்வரென்பது விளங்கும்.போர்க்களம் பாடும் பொருநன் வறுமையுற்று வருந்திய வருத்தத்தைத் தொடக்கத்திலே குறிப்பிப்பார், உய்திறன் உள்ளி வள்ளியோர்க் காணாது ஊன் பெறாது பசிதினத் திரங்கிய ஒக்கல் பொருட்டு, மாதிரம் துழைஇ, கானம் பிற்படப் பழுமரம் உள்ளிய பறவைபோல வந்தேன் என்றான் என்றார். தான் பாடும் ஏர்க்களத்துக்கும், போர்க்களத்துக்கும், ஒப்புமை காட்டி ஏர்க்களம் பாடினோர்க்கு வழங்குவது போலப் போர்க்களம் பாடின எனக்கும் வழங்குதல் வேண்டும் என்பான், "வெந்திறல் வியன்களம் பொலிக என்றேத்தி வரைமருள் முகவைக்கு வந்தனென்" எனற்ான். ஒண்படை மாரி வீழ்கனி பெய்தன என்பது முதல் அதரி திரித்த ஆளுகு கடாவின் என்பது வரை ஏர்க்களத்தோடு போர்க்களத்தை உருவகம் செய்தவாறு. சென்னியின் போர்த்திறம் புகன்று கூறுவார், பேய்மகளும் கழுகும், எருவையும் திரியும் போர்க்களம் கண்டார்க்கு அச்சம் உண்டாகும் வகையில், போரிற்பட்டோருடைய பிணக் குவையால் காட்சி வழங்கச் செய்து அக் களத்தில் வெற்றிக்குரியோன் சென்னியேயாய் மேம்பட்டான் என்பது பற்றிக் "களங் கிழவோய்" என்று குறித்துள்ளார்.
-----------

371. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச், செருவென்ற நெடுஞ்செழியன் ஒருகால் தன்னை யெதிர்த்த பகைவரை வென்று களங்கொண்டு மேன்மை யுற்றான். பகைவீரர் பலர் பட்டு வீழ்ந்தனர். அவருடைய குதிரையும் களிறும் பலவாய்ப் பட்டு வீழ்ந்தன. சிதைந்து வீழ்ந்த பிணங்களைப் பேய்மகளிருண்டு களித்து நெடுஞ்செழியனை வாழ்த்திக் கூத்தாடினர். அக் காலத்தே போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் அவனைப்பாடிப் பரிசில் பெறும் கருத்துடன் சென்று காணும் வகையில் ஆசிரியர் கல்லாடனார் இப் பாட்டைப் பாடியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டினரென்பது நினைவுகூரத் தக்கது. (செந். செல்வி சிலம்பு. 23 பக்கம்: 113.) இதன்கட் கூறப்படும் பொருநன் தன்னைப் புரக்கும் தலைவர்கள் வேறேயில்லாமை யால் வறுமையால் உணவின்றி வாடி ஒரு மரத்தடியில் தங்குகின்றான். பின்பு, தன் கரவடியின் ஒரு தலையில் பறையையும் மற்றையதில் இசைக் கருவிகளை வைத்துக் கட்டிய பையையும் கட்டிக்கொண்டான். தலையில் நாரால் தொடுக்கப்பட்ட பூமாலையை யணிந்தான். சோறு சமைக்கும் மட்பானையைத் தோளிற் கொண்டான். தான் இருந்த மன்றத்தின்கண் நின்ற வேம்பின் பூ மழைத்துளி போல் உதிர, அவ்விடத்தினின்றும் நீங்காமல், வேறு இன்றியமையாது செய்தற்குரிய செயலையும் செய்ய விரும்பாது பொருளே விரும்பிய வுள்ளத்தனாய் நெடுஞ்செழியன் இருக்கும்போர்க்களம் நாடி வழிகள் பல கடந்து சென்று அவனைக்கண்டு, "வில்லேருழவின் நின்நல்லிசையுள்ளி, நின்பாற் பெறலாகும் புகர்முக முகவைக்கு வந்தேன்" என்று கூறுகின்றான். இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து விட்டன. கிடைத்த ஏடுகளில் அவை காணப்படவில்லை.

    அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது
    மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப்
    போதவி ழலரி நாரிற றொடுத்துத்
    தயங்கிரும் பித்தை பொலியச் சூடிப்
    பறையொடு தகைத்த கலப்பையென் முடிவுவாய்         5
    ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
    மன்ற வேம்பி னொண்பூ வுறைப்பக்
    குறைசெயல் வேண்டா நசைய விருக்கையேன்
    அரிசி யின்மையி னாரிடை நீந்திக்
    கூர்வா யிரும்படை நீரின் மிளிர்ப்ப         10
    வருகணை வாளி.................
    ..................அன்பின்றுதலைஇ
    இரைமுரை சார்க்கு முரைசால் பாசறை
    வில்லே ருழவினின் னல்லிசை யுள்ளிக்
    குறைத்தலைப் படுபிண னெதிரப் போர்பழித்         15
    தியானை பெருத்தின் வாண்மட லோச்சி
    அதரி திரித்த வாளுகு கடாவின்
    மதியத் தன்னவென் விசியுறு தடாரி
    அகன்க ணதிர வாகுளி தொடாலிற்
    பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப்         20
    புகர்முக முகவைக்கு வந்திசிற் பெரும
    களிற்றக்கோட் டன்ன வாலெயி றழுத்தி
    விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
    குடர்த்தலை மாலை சூடி யுணத்தின
    ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து         25
    வயங்குபன் மீனினும் வாழியர் பலவென்
    உருகெழு பேய்மக ளயரக்
    குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.
    ---------

திணையும் துறையு மவை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

உரை: அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது - அகன்ற இடத் தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப் பெறாமையால்; மரந்தலைச் சேர்ந்து - மன்றத் தின்கண் நிற்கும் வேப்ப மரத்தின் அடியிலே இருந்து; பட்டினி வைகி - பட்டினி கிடந்த; போதவிழ் அலரி நாரின் தொடுத்து - அரும்பு மலர்ந்த பூக்களை நாரால் மாலையாகத் தொடுத்து; தயங்கு இரும்பித்தை பொலியச் சூடி - விளங்குகின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு; பறை யொடு தகைத்த வைத்த பையை யுடையேனாய்; முரவு வாய் ஆடுறு குழிசி பாடின்று தூக்கி - சிதைந்த வாயையுடைய சமைத்தற்கமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்து வைத்து; மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப - மன்றத்தின் கண் நின்ற அந்த வேம்பினது ஒள்ளிய பூவுதிரே; அரிசியின்மையின் - சோற்றுக்குரிய அரிசி யில்லாமையாலே; குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் - மிக இன்றியமையாத வேறு எச் செயலையும் செய்ய விரும்பாது பொருள் நசையே கொண்ட இருக்கையினை யுடையேனாய்; ஆரிடை நீந்தி - பின்பு அரிய வழிகள் பல கடந்து; கூர் வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப - கூரிய வாயைுடை பெரிய வாட்படைகள் தம்முடைய நீர்மைப் படி மேலும் கீழுமாகச்சுழல; வருகணை வாளி தம்மை நோக்கி - வரும் அம்புகளை; ....................அன்பின்று தலைஇ ......................அன்பின்றிப் பகைவரை ஏறட்டு வேற்சென்று; இரை முரைசு ஆர்க்கும் உரைசால் பாசறை - ஒலிக்கின்ற முரசு முழங்கும் புகழமைந்த பாசறைக்கண்ணே தங்கி; வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளி - வில்லை யேராகக் கொண்டு போராகிய உழவினைச் செய்யும் நின்னுடைய நல்ல புகழை நினைந்து; குறைத்தலைப் படு பிணன் எதிர - தலைகள் வெட்டுண்டு குறை யுடலங்களாய் வீழும் பிணங்கள் தன்னெதிலே குவிய; போர்பு அழித்து - அப் பிணக்குவையாகிய போரை யழித்து; யானை யெருத்தின் வாள் ம்டலோச்சி - யானைகளாகிய எருதுகளை வாளாகிய பனைமடல் கொண்டு சூழ்வரச் செலுத்தி; அதரி திரித்த ஆள் உகு கடா வின் கடா - விடுதலால் தலை வேறு உடல் வேறாகப் பிரிந்து தொக்க களத்தின்கண்; மதியத்தன்ன என் விசியுறு தடாரி முழுமதிபோன்ற - வாராற் கட்டப்ட்ட என் தடாரிப் பறையை; அகன்கண் அரிர அகன்ற - கண்ணதிரும்படி யறைந்து; ஆகுளி தொடாலின் - ஆகுளிப் பறைகை் கொட்டிக்கொண்டு; பணை மருள் நெடுந்தாள் - பறைபோன்ற நெடிய கால்களையும்; பல்பிணர்த் தடக்கை - பலவாகிய சருச்சரைகளையுடைய பெரிய கையையும்; புகர் முக முகவைக்கு வந்திசின் - புகர்பொருந்திய முகத்தையுமுடைய களிறாகிய பரிசில்பொருட்டு வந்தேன்; பெரும - பெருமானே; களிற்றுக் கோட்டன்ன வாலெயிறு அழுத்தி - பன்றியின் கோடுபோன்ற வெள்ளிய பற்களாற் கடித்தீர்த்து; விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் - தசையொடு விசவிய வெள்ளிய பொழுப்பைத் தின்று சுவை காண்பவளாய்; குடர்த்தலை மாலை சூடி - குடர்களைத் தன் தலையில் மாலையாக அணிந்துகொண்டு; உணத் தின ஆனா - யாம் சிரம்ப வுண்ணவும் தின்னவும் குறையாதவாறு; பெரு வளம் செய்தோன் - மிக்க பிணங்களாகிய பெரிய வளத்தைக் கொடுத்தவனாகிய இவ் வேந்தன்; வானத்து வயங்கு பன் மீனினும் பல வாழியர் என - வானத்தின்கண் விளங்கும் பலவாகிய விண் மீன்களினும் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று; உருகெழு பேம்கள் அயர - அச்சம் பொருந்திய பேய் மகள் பாடிக் குரவைக் கூத்தாடி; குருதித் துகளாடிய களம் கிழவோய் - குருதி யுலர்ந்து துகள்பட்ட போர்க்களத்தை யுரைமைகொண்டவனே; எ - று.

சுவையினளாகிய பேய்மகள் வாழியர் பலவென அயர; துகளாடிய களங்கிழவோய், பெரும, காணாது, வைகி, சூடி தகைத்த கலப் பையேனாய், நீந்தி உள்ளி, வந்திசின் என மாறிக் கூட்டி வினை முடிவுசெய்க. காவடியின் ஒருதலையிற் கலப்பையும் ஒருதலையிற் பறையும் கட்டித் தூக்கிக் காவிச் செல்லுவது தோன்றப் "பறையொடு தகைத்தகலப்பையென்" என்றான். கலப்பை இசைக்கருவிகளை வைத்து கட்டும் பை. பித்தை தலைமயில். "அலரி, சுரியிரும்பித்தை பொலியச் சூட்டி" (அகம். 213) என்று பிறரும் கூறுதல் காண்க. சமைத்தற்குரிய மட்பானையைத் தனியே தோளிற் சுமந்து வருமாறு விளங்க அதனைத் தனியாகக் கூறினான். பாடுற்ற வழி, பானை அசைந்து உடைந்து போமாதலால், "பாடின்று தூக்கி" யெனல் வேண்டிற்று. வேம்பின் பூ மழைத்துளிபோல் உதிர்தலின் "ஒய்பூ வுறைப்ப" என்றார். குறைசெயல், இன்றியமையாதசெயல். நசையவிக்கையேன் என்றற்கு வாளா இருத்தலை விரும்பிய இருக்கை யுடையேன் என்றலுமாம். கடா விடுங்களம், கடாவெனப்பட்டது; கடாவிடுஞ் செயல் குறித்ததென்றுமாம். பணை, வட்டமான வாயையுடைய ஒருவகைப் பறை; உரலெனினுமமையும். பிணர், சருச்சரை; இது வரி வரியாய்ப்பலவாயிருத்தலின், 'பல்பிணர்’ என்றார். புகர்முக முகவை, வகரக்கிளவி யென்றாற் போல்வ தோராகு பெயர். களிறு, பன்றி. விழுக்கு ஊன்வகையுள் ஒன்று. (சீவக;1584 உரை) உணத்தின, உண்ணவும் தின்னவும். உண்டல் - விழுங்குதல்; தின்றல், மென்று உண்பது. அயர்தல், ஈண்டுக் கூத்தின் மேனின்றது.

விளக்கம்: போர்க்களம் பாடும் பொருநன் தான் வறுமையுற்று வருந்திய வருத்தத்தை. புரவலர்க் காணாது பட்டினி வைகி, கலப்பை யேனாய்க்குழிசி பாடின்று தூக்கி நசைய இருக்கையேனாய் ஆரிடைநீந்தி வருவேனாயினேன் என்று முதற்கட் கூறுகின்றான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வெடுஞ்செழியன் போர்க்களத்திற்பகை வரை யெறிந்து பிணக்குவை பெருகச் செய்த பெருமையைப் பின்பு 'படுபிணன் எதிரப் போர் பழித்து, வாண்மடலோச்சி அதரி திரித்த ஆளுகு கடாவின்’ எனப் பிரித்தோதினான்; இது கேட்கும் வேந்தன் உள்ளத்தில் உவகை தோன்றி அவன் முகத்தே முறுவலால் வெளிப்படக் கண்டு, அச் செவ்வி நோக்கித் தான் தடாரியும் ஆகுளியும் இசைத்துக் களம்பாடிய திறத்தைக் கூறித் "தடக்கைப் புகர்முக முக வைக்கும் வந்திசின் பெரும" என்று மொழிந்தான். வேந்தன் செய்த போர் நலத்தால் பேற்மகள் விழுக்கும் வெண்ணிணமும் தின்று குடர்களை மாலையாக அணிந்து உவகை மிகுந்து போர்க்களத்தே நின் தேர்ப்பின்னே குரவையாடி மகிழ்கின்றாள்; மகிழ்பவள் யாம் உண்ணவும் தின்னவும் குன்றாத பெருவளத்தைச் செய்தான் பாண்டியன்; அவன் வானத்து வயங்கும் பன்மீனினும் பல்லாண்டு வாழியர் என வாழ்த்துகின்றாள். பேய்மகள் தனக்குரிய விழுக்கும் நிணமும் பிணமும் பெற்றுப் பாடியாடி வாழ்த்துவதுபோல யாமும் களிறும் மாவும் கலமும் தேரும் பெற்றுப்பாடியாடி மகிழ்ச்சி மிகுமாஞறு செய்வாயாக என வேண்டினான். "கூதிர் வேனில்" எனத் தொடங்கும் சூத்திரத்து (தொல். புறத். 17) "தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவை" என்பதற்கு இளம்பூரணர் இங்கே பேய்மகளாடிய பகுதியை எடுத்துக் காட்டுவர்; "ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவை" என்றதற்கு இப்பகுதியை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ. 21). பிறரும் வென்று களங்கொண்ட வேந்தன் போர் வென்றதன்பின், பேய்கள் பிணந்தின்று குரவைாடின என்பது காண்க; (புறத்திரட்டு. 1429.)
------

372. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவரை வென்று களத்தைத் தனாதாகக் கொண்டு அவ்விடத்தே களவேள்வி செய்தான். அப்போது பகைவருடைய வெட்டுண்ட தலைகளை அடுப்பாக வைத்துக் கூவிளங்கட்டையை விறகாக இட்டு மண்டை யோட்டை அகப்பையாகவும் வன்னிக்கொம்பை அதிற் செருகிய கொம்பாகவும் கொண்ட அகப்பையைக் கொண்டு,உலையிற் பெய்த ஊனும் நிணமும் குடரும் பொங்க, வேண்மாள் கூழாக்க, அதனை வாலுவன் தேவர்க்குக் காட்டிக் கலயத்திற் பெய்த நீரை யாவர்க்கும் தெளி்து வேள்வி செய்தான். விழாவின்கண் புதுவோர் பார் வருவது போலப்புதியர் பலர் வந்திருந்த வேள்விச் சாலைக்கு ஆசிரியர் மாங்குடி மருதனாரும் வந்திருந்தார். அப்போது அவர் பாண்டியனைப் பாராட்டிப் புகழ்வாராய், போர்க்களம் பாடும் பொருநனொருவன் பாசறைக்கண் வேந்தனைக் கொண்டு, களவேள்விசெய்து சிறக்கும் வேந்தே, யான் என் தடாரிப்பறையைக் கொட்டிக்கொண்டு நின் புகழைப் பாடிவந்த தெல்லாம் நீ நல்கும் முத்துமாலையைப் பெறலா மென்றே யாகும் என்று கூறுவதாக இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

    விசிபிணித் தடாரி விம்மென வொற்றி
    ஏத்தி வந்த தெல்லா முழுத்த
    இலங்குவா ளவிரொளி வலம்பட மின்னிக்
    கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
    பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்         5
    கூவிள விறகி னாக்குவரி நுடங்க
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
    மாமறி பிண்டம் வாலுவ னேந்த
    வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்         10
    வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய்நின்
    நிலவுத்திக ழார முகக்குவ மெனவே.
    ---------

திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி. அவனை மாங்குடி கிழார் பாடியது.

உரை: விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி - விசித்துக் கட்டப்பட்ட கிணைப்பறை இம்மென வொலிக்கும்படி யறைந்து; ஏத்தி வந்ததெல்லாம் - நின்னைப் பாராட்டி வந்ததற் கெல்லாம் காரணம்; முழுத்த இலங்குவாள் அவிரொளி வலம்படி மி்ன்னி - குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிக்க ஒளி வெற்றியுண்டாக மழைமின்னுப்போல மின்னி; கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை - அம்புகளாகிய மழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே; பொருந்தாத் தெவ்வா அருந்தலை யடுப்பின் - மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே; கூவிளவிறகின் ஆக்குவரி நுடங்க - கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே, வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் - தலைிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற் செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால்; ஈனா வேண்மாள் - ஈனாத பேண்மகள்; இடந்து துழந்து அட்ட - தோண்டித் துழாவிச் சமைத்த; மா மறு பிண்டம் - மாக்களும் உண்ண மறுக்கும ஊன்சோறாகிய பிண்டத்தை; வாலுவன் ஏந்த - பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய் ஏந்திக்காட்ட; வதுவை விழாவின் - திருமணவிழாவில் நிகழ்த்துவதுபோல்; புதுவோர்க்கேல்லாம் வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்க என - விருந்தினர் எல்லோருக்கும் கலயத்தின் வெவ்விய வாய் வழியாகப் பெய்த புதுநீர் அமைவதாக என்று சொல்லி நீரைத் தெளித்து; புடவுக் களம் பொலிய வேட்டோய் - புலால் நாறும் போர்க்களம் விளங்கக் களவேள்வி செய்தவனே; நின் நிலவுபோல் ஒளி திகழும் மாலையைப் பெறாமென்றே யாகும்; எ - று.

தடாரிஒற்றி ஏத்தி வந்ததெல்லாம், வேட்டோய், நின் ஆரம் முகக்குவம் எனவேயாகும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வாளின் ஒளி மின்னலாகவும் அம்புகள் மழைத்தாரையாகவும் உவமம் செய்தவாறு.மனம் பொருந்தாமையின் தெவ்வராயினமை தோன்றப் "பொருந்தாத் தெவ்வர்" என்றார். பகைவர் உடற்ற சையைக் குடரோடே உலையில் பெய்து அடுங்கால் சூடேறவேறக் குடர்கள் வெந்து மென்மை யெய்து தலின், "ஆக்குவரி நுடங்க" வென்றார். வரிகளையுடைய குடர் வரியெனப்பட்டது. வேண்டாள் அடும் கூழைத் துழாவுதற்குக் கொள்ளும் துடுப்பிற்கக் கொம்பு வன்னிமரக் கொம்பு என்றும் அகப்பை மண்டையோடென்றும் விளக்குதற்கு. "ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்" என்றும் கூறப்பட்டது. இவ்வாறு அட்டகூழ் பொறுத்தற்கரிய புலால்நாற்ற முடையதாகலின் எத்தகைய விலங்கும் அதனை விரும்பாதுமறுக்குமாறு தோன்ற, "மாமறு பிண்டம்" என்றார். புதுநீர், வழிபடுங்கலத்துப்புதிது பெய்தநீர். அதன் குறுகிய வாயிடத்தொழுகும் நீர் தெய்வக் காப்புடையதாய் யாவராலும் விரும்பப் படுவதாயிருத்தலின் அதனை, "வெவ்வாய்ப் புதுநீர்" என்றார். நிலவொளி போல் தண்ணிய வொளியைச் செய்தலின். முத்துமாலை, "நிலவுத் திகழார" மெனச் சிறப்பிக்கப்பட்டது. ஆம் என ஒரு சொற்பெய்து முடிக்க.

விளக்கம்: மறக்கள வேள்வியென்பது, "அடுகிற லணங்கார, விடுதிறலான் களம் வேட்டன்று" (பு. வெ. மா. 8:1) என வரும். பகைவர் தலையை அடுப்பாகவும்,கூவிளங் கட்டையை அடுப்பெரிக்குங் கட்டையாகவும் கொண்டு மண்டையோடும் வன்னிமரக்குச்சியும் கொண்டமைத்த அகப்பையால் ஈனாவேண்மாள் கூழடுவதும், அதனைப் பேய்கட்கு அளித்து உண்பிப்பதும் களவேள்வியாகக் கூறப்படுகின்றன. "அஞ்சுவந்த பே்ார்ககளத்தான்.ஆண்டலை யணங்கடுப்பின் வயவேந்த ரொண்குருதி, சினத் தீயின் பெயர்வு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின், தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன் சோறு நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" (மதுரை. 28-38) எனக் கவேள்வி செய்யுந் திறத்தை இவ்வாசிரியரே பிறாண்டும் கூறுவர். இது பூதநீர் என்று இச்சுப்படியிற் காணப்படுகிறது. பூத நீரை, பூத தீர்த்தமென்று, அஃதாவது "பஞ்ச தீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும்நீர்" என்றும் சைவ சமய நெறி (பொது. 66) கூறுகிறது. பூதநீர் என்பதே பாடமாயின், தருப்பைப்புல் வளர்ந்த பொய்கையிடத்து நீர் என்றும், புது மட்கலத் துப் புதுநீர் என்றும், பூதமும் நீரும் எனப்பிரித்து எள்ளும் நீருமென்றும்பொருள் கொள்ளப்படுதலின், "பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்" என்றதற்கேற்ப ஈண்டைக்குப் பொருந்துவதறிந்து கொள்க.ஆசிரியர் நக்கீரனார், "ஒருமுகம், செறுநர்த் தேற்த்துச் செலசம முருக்கிக், கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே" (முருகு. 98-100) என்பதனால், இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு, பின்வந்த வெற்றி வேந்தர் பலரும் இக் களவேள்வி செய்தொழுகினரென வறியலாம். மறக்களவேள்வி யென்றொரு நிகழ்ச்சியினை ஆசிரியர் தொல்காப்பியர் குறித்திலர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. ஏர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடைவுரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடைபுரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்குத் தேரோர் கொடைபுரிவது போர்க்கள வேள்வியென அறிக.
----------

373. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

இச் சோழன், கிள்ளிவளவன் என்னும் பெயரினன். இவன் குளமுற்ற மென்னுமித்தே இறந்தனால், பிற்காலச் சான்றோர் இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனக் குறிப்பாராயினர். சில ஏடுகளில் இப் பெயர் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்று காணப்படுவது ஏடெழுதினோரால் நேர்ந்த பிழை. குராப்பள்ளித் துஞ்சியவன் பெருந்திருமாவளவன் எனப்படுவன். அவன் வேறு; சோழன் நலங்கிள்ளிக்குத் தம்பியான மாவளத்தான் வேறு. ஒருகால் இந்த வாவளத்தானே குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என வழங்கப்பட்டிருக்கினும் இருக்கலாம். அஃது ஈண்டைக்கு வேண்டிய ஆராய்ச்சியன்று. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது இறுதிக் காலத்தில் விளங்கியவர் கோவூர்கிழார். கிள்ளிவளவனுக்குப் பின்வந்தவன் சோழன் நலங்கிள்ளி. சோழநாட்டில் நலங்கிள்ளி ஒருபாலும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒருபாலும் இருந்து ஆட்சிசெய்தனர். இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்திருக்கின்றன. இனி, குராப்பள்ளியென்பது தஞ்சை மாநாட்டிலுள்ள திருவிடைக்கழி யென்னும் ஊராகும். இங்குள்ள இறைவனுக்குத் திருக்குராவுடையார் (A. R. No. 269 of 1925) என்பது பெயர். இத் திருக்குராவுடைய இறைவனை முருகனாகக்கொண்டே கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த செப்புறைச் சேந்தனார் தமது திருவிசைப் பாவைப் பாடியுள்ளார். இங்கே மிகப் பழையதொரு சிவன் கோயில் சோளேச்சுரம் என்ற பெயருடன் இருப்பதாகவும், அது குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனது பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம் என்றும் காலஞ்சென்ற சீகாழி, சைவத்திரு, முத்துத்தாண்டவராய பிள்ளை கூறுவர். இக் கிள்ளிவளவனை, ஆசிரியர் கோவூர் கிழார், இப் பாட்டின்கண் களம்பாடும் இளம்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாராட்டியுள்ளார். இவ் வளவன், முரசம் மழையென முழங்க, களிறுகள் முகில்போல் திரள, தேரும் குதிரைகளும் மழைத்துளிபோற் சிதைந்து வீழ அம்புகள் காற்றெனச் செல்ல வீரருடனே கூடிக் கொங்கரொடு பொருது அவர் புறந்தந்தோடச் செய்தானெனவும், இவ்வாறே குடநாட்டுவஞ்சிநகர் முற்றத்திற் போருடற்றி வயக்களனாக்கினனெனவும், குறிக்கின்றார். முன்னோராகிய பொருநர் பலர் உயர்ந்த வேந்தருடைய களந்தொறுஞ் சென்று பாடிக் களிறாகிய பரிசில் பல பெற்றனரெனப் பெரியோர் கூறக்கேட்ட இப் பொருநன் தானும் அவ்வாறே வளவனை யொத்த வேந்தர் பிறரில்லாமை கண்டு கிள்ளிவளவன்பால் பகைப் புறத்துப் பெற்றவற்றைப் பரிசிலாகப் பெறவேண்டி வந்ததாக இப் பாட்டின்கட் கூறுகின்றான்.

    உருமிசை முரச முழக்கென விசைப்பச்
    செருநவில் வேழங் கொண்மூ வாகத்
    தேர்மா வழிதுளி தலைஇ நாமுறக்
    கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை
    இழிதரு குருதியொ டேந்திய வொள்வாட்         5
    பிழிவது போலப் பிட்டையூ றுவப்ப
    மைந்த ராடிய மயங்கு பெருந் தானைக்
    கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே
    ...................தண்டா மாப்பொறி
    மடக்கண் மயிலியன்று மறலி யாங்கு         10
    நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
    மென்றோண் மகளிர் மன்றம் பேணார்
    புண்ணுவந்து....................
    .....................உளையணிப் புரவி வாழ்கெனச்
    சொன்னிழ லின்மையி னின்னிழற் சேர         15
    நுண்பூண் மார்பிற் புன்றலைச் சிறாஅர்
    அம்பழி பொழுதிற் றமர்முகங் காணா
    ...வாளிற் றாக்கான்
    வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
    மாட மயங்கெரி மண்டிக் கோடிறு         20
    புருமெறி மலையி னிருநிலஞ் சேரச்
    சென்றோன் மன்ற கொலைவற் சென்றெறி
    வெம்புண் ணறிநர் கண்டுகண் ணலைப்ப
    வஞ்சி முற்றம் வயக்கள னாக
    அஞ்சா மறவ ராட்போர் பழித்துக்         25
    கொண்டனை பெரும குடபுலத் ததரி
    பொலிக வத்தைநின் பணைதயங்கு வியன்களம்
    விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று
    புகர்முக முகவை பொலிகென் றேத்திக்
    கொண்டன ரென்ப பெரியோர் யானும்         30
    அங்கண் மாக்கிணை யதிர வொற்ற
    முற்றிலே னாயினுங் காதலி னேத்தி
    நின்னோ ரன்னோர் பிறரிவ ணின்மையின்
    மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும
    பகைவர் புகழ்ந்த வாண்மை நகைவர்க்குத்         35
    தாவின் றுதவும் பண்பிற் பேயொடு
    கணநரி திரிதரு மாங்க ணிணனரந்து
    செஞ்செவி யெருவை குழீஇ
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.
    ----------

திணை: அது. துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந் தானைக் கோவூர் கிழார் பாடியது.

உரை: உருமிசை முரசம் முழக்கென சைப்ப - இடியினது ஓசையைத் தன்பாலுடைய முரசு மழையிடத்து முழக்கம் போல முழங்க; செருநவில் வேழம் கொண்மூவாக - போரிற் பயின்ற யானைகள் முகில்களாகவும்; தேர்மா அழிதுளி தலைஇ - தேர்களும் குதிரைகளும்சிதைந்து பரந்து மழைத்துளியாகவீழ்ந்து கெட; நாம் உறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை - அச்சமுண்டாக அம்புகளாகிய காற்று வீசுகின்ற இடமகன்ற பாசறையும்; இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் - சொரிகின்ற குருதியோடே கையிலேந்திய வாட்படையால்; பிழிவ துபோல - உடலைப் பிழிந்தெடுத்தற்குப் பிளந்தாற் போல்; பிட்டை ஊறுஉவப்ப - பிளத்தலாலுண்டாகிய புண்ணுற்று மகிழ்ச்சி யெய்த; மைந்தர் ஆடிய மயங்கு பெருந்தானை வலியுடைய வீரர் போர்செய்தற்காக விரும்பிச் சேர்ந்திருக்கின்ற பெரிய தானையால்; கொங்கு புறம் பெற்ற கொற்றவேந்தே - கொங்கு நாட்டவரைப் புறந்தந் தோடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே;.....................தண்டா மாப்பொறி - குறையாத பெரிய பொறிகளையும்; மடக் கண் மயில் - மடவிய கண்களையுமுடைய மறிப்பெடை; இயன்று மற லியாங்கு - மாறுகொண்டு முன்னும் பின்னும் பன்முறை நடந்ததுபோல; நெடுஞ் சுவர் நல்லில் புலம்ப - நெடிய சுவர்க ளையுடிய நல்ல தம் இல்லங்கள் தனிமைப்பட; கடைகழிந்து - அவற்றினின்றும் அகன்று சென்று; மென்றோள் மகளிர் - மெல்லிய தோளையுடைய மகளிர்; மன்றம் பேணார் - மன்றத்தை நாடிச் செல்லாது; புண் உவந்து - தம் கணவன் போரிற் பெரிதும் விழுப்புண்ணைக் காணவிரும்பி;.....................உளையணிப் புரவி வாழ்கென - தலையாட்டமாகிய அணியணிந்த குதிரை வாழ்வதாக என்று வாழ்த்தி; சொல் நிழலின்மையின் புகழமைந்த புகலிடம் பிறி தில்லாமையால்; நின்னிழல் சேர நின்னுடைய சிறந்த தாணிழலாகிய புகலைச் சேர்வாராக; நுண்பூண் மார்பின் புன் றலைச் சிறாஅர் - நுண்ணிய பூணணிந்த மார்பினையும் புல்லிய தலையினையு முடைய சிறுவர்கள்; அம்பு அழிபொழுதில் தாம் தொடுத்து விளையாடி அம்பு இல்லையாகும்போது; தமர் மு கம் காணார் - தமக்கு அவற்றைச் செய்து தரும் தந்தை தன்னையரைக்காணாராய்;.....................வாளில் தக்கான் - வாளால் எறியானாய்; வேந்து புறங் கொடுத்த வீய்ந்துகு பறந் தலை - வேந்தர்கள் புறந்தந் தோடியதனால் அழிந்து கெட்ட பே ார்க்களத்தில்; மாடமயங்கெரி மண்டி - பெருமாடங்களைப் பற்றி யெரிக்கும் தீப்போல நெருங்கி; உரும் எறிமலையின் - இடியேற்றால் தாக்குண்டு வீழும் மலைபோல; கோடிறுபு நிலஞ் சேர - கோடொடிந்து நிலத்தே வீழுமாறு கொன்று; சென்றோன் மன்ற - வெற்றியொடு சென்றான் தெளிவாக; கொலைவன் - கொலையைச் செய்யும் தலைவன்; சென்றெறி வெம்புண் அறிநர் கண்டு கண் அலைப்ப - அவன்மேற் சென்று அவனை யெறியுங்கால் உண்டாகும் வெவ்விய புண்ணைக்கண்டு பஞ்சியிட்டாற்றுவோரும் தம் கண்களால் அப் புண்ணைக் காண ஆற்றாராய்க் கண்கலுழ்ந்து வருந்த; வஞ்சிமுற்றம் வயக்களனாக - வஞ்சிமாநகரின் முற்றம் வெற்றிபொருந்திய போர்க்களமாய் மாற; அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்து - அஞ்சாத இயல்பினரான வீரர்களின் பிணப்போரை யழித்து; குடவுலத்து அதரி கொண்டனை - குடநாட்டின்கண் கடாவிட்டாய்; நின்பணை தயங்கு வியன்களம் பொலிக - நின்னுடைய முரசு முழங்கும் அகன்ற போர்க்களம் விளங்குக; விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று விளக்கமுடைய உயர்குல வேந்தருடைய போர்க்களந் தோறுஞ் சென்று; பொலிய என்று ஏத்தி - விளங்குக என்று பாராட்டிப் பரவி; புகர்முக முகவை கொண்டனர் என்ப பெரியோர் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானையாகிய பரிசிலைப் பெற்றனர் என்று சொல்லுவர் பெரியோர்; யானும்-; அங்கண் மாக்கிணை அதிர வொற்றி - அழகிய கண்ணையுடைய தடாரிப்பறை யதிரும்படியதந்து; முற்றிலெனாயினும் இசையறிவு நிரம்பப் பெற்றிலேனாயினும்; காதலின் ஏத்தி - அன்புடன் பரவி; நின்னோரன்னோர் அவண் பிறர் இன்மையின் நின்னை யொப்பவர் இவ்வுலகிற் பிறர் இல்லாமையால்; பெரும - பெருமானே; மன்னெயில் முகவைக்கு வந்திசின் - பகைமன்னருடைய எயிலிடத்துக் கொண்ட பொருள்களைப் பரிசிலாகப் பெறுதற்பொருட்டு வந்தேன்; பகைவர் புகழ்ந்த ஆண்மை - பகைவரும் புகழ்ந்து பாராட்டும் ஆண்மையும்; நகைவர்க்குத் தாவின்று உதவும் பண்பின் - நண்பர்கட்குக் குறைவில்லாதவாறு உதவும் நற்பண்பும் உடையனாய்; பேயொடு கணநரி திரிதரும் ஆங்கண் - பேய்க்கூட்டமும் நரிக்கூட்டமும் ஊனுண்டு திரியும் அவ்விடத்தே; நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ - ஊன் தின்று சிவந்த செவியையுடைய கழுகுகள் கூடி; அஞ்சுவருகிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடமாகிய போர்க்களத்தை உரிமையாகக் கொண்டவனே; எ - று.

கொங்கு புறம்பெற்ற வேந்தே, வஞ்சி முற்றம் வயக்களனாக, குடபுலத்து அதரி கொண்டனை; பெரும, கொண்டனரென்ப பெரியோர்; யானும் முற்றிலெனாயினும் ஒற்றி ஏத்தி, இன்மையின் முகவைக்கு வந்திசின், பெரும, ஆண்மையும் பண்பும் கொண்டு களம் கிழமை பெற்றோய் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மழை உருவகம் செய்யப் படுதலின், முழக்கெனப் பொதுப்படக் கூறினார். தேர்மா சிதைந்து துகள்பட்டுச் சிதறிப் பரந்து விழுமாறு தோன்ற, "தேர்மா வழிதுளி தலைஇ" என்றார். தேர்மா வழி துளி தலைஇ என்றதற்குத்தேரிற்பூட்டிய குதிரைகளின் வாயில்வழியும் நுரையினது துளி, பிசிராகத் துளிக்கும் மழைக்கு உவமமாயிற்றென்றுமாம். பிளவுண்டது பிட்டை; பிளக்கப் பட்டுண்டாகியபுண்பிட்டையூறெனப்பட்டது. ஆடுதல், போராடுதல்.

மகளிர் தம் கணவன் போர்க்களத்தினின்றும் திரும்பி வராமையின் தாம் மன்றம்சென்று எரிவர்த்து உடனுயிர் போக்க நினையாது போர்க்களம் சென்று அவர்பெற்ற புண்ணைக் காண்டற்குப் புறம் போந்தனரென்பார், "நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணால் புண்ணு வந்து..." என்றார். புரவி வாழ்க எனச்சொல்லி வாழ்த்திப் பரவுதற்கு உரிய தம் வேந்தனின்மையின் நின்னை வேந்தனைக் கொண்டு நின் தாணிழலை யடைந்தனரென்பான், சொன்னிழலின்மையின் நின்னிழல்சேர" என்றான். வேட்டுவச் சிறார்கள் தந்தையும் தன்னையரும் செய்துதரும் வில்லும் அம்புங் கொண்டு விற்பயிற்சி செய்தலும் செய்யுங்கால் கையம்பு தொலை ந்தவழிவேறே அம்பு செய்து தருமாறு தந்தை தன்னையரை நோக்குதலும் செய்வராதலின் "அம்பழி பொழுதில் தமர்முகம்காணா" என்றார். ஆளைக்கொல்லற்க வேண்டும் வாளைக்கொண்டு யானையையெறிதல் கூடாமையின் "வாளிற்றாக்கா" னென்றார். தன் தலைவனான வேந்தன் புறங்கொடுத் தோடியதனால் சினந்த ணியாது செல்லும் களிற்றுக்குத் தீயையுவமித்து, "மாடமயங்கெரி" யென்றார், மாடங்களில் மண்டி யெரியுந்தீ தன்னைப் பிறர் அணுகாதவாறு வெம்மை செய்து திரிந்து எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் எரித்தழித்தல்போலக் களிறும் பகைவர் படைத்திரள் நடுவுட்புகுந்து தீதுசெய்துதிரிந்தமை பெற்றாம். எரியின் என ஒப்புப் பகைவரது தானைத்தலைவனொருவன் அதனை வெலெறிந்து வீழ்த்திவிட்டு மேல்வந்த சோழன் தானையை எதிர்ந்து சென்று நேர்ந்தாரனைவரையும் உயிர் குடித்துத் திரிந்தா னென்பான், "இரு நிலஞ்சேரச் சென்றோன் மன்றகொலைவன்" என்றான். அவ்வாறு வெற்றியொடு வீறுற்று வந்த தலைவனை முன்சென்று தாக்கி வெம்புண்ணுறு வித்தனை யென்பார், "வெம்புண்ணறிநர் கண்டு கண்ணலைப்ப" என்றார். உயிரைப் போக்காது வெம்புண் தற்து வீழ்த்தியது அவன்தன் வலியின் சிறுமையும் சோழன் வலியின் பெருமையும் தெரிந்துணர்ந்த தொடுங்குவனென்றற்கு. குறுநில மன்னரினும் முடிமன்னர் உயர்ந்தமை விளங்க, "விளங்கு திணைவேந்த" ரென்றார். எம்மிற் பெரியோர் செய்ததனையே யானும் செய்தேன் என்பான், "மன்னெயின் முகவைக்கு வந்திசின்" என்றும், பெரியோர் போல அத்துணைப் பெருமை புடையேனல்லே னென்பான், "முற்றிலெனாயினும்" என்றும் கூறினான். பகைவர் என்புழிச் சிறப்பும்மை தொக்கது. பகைவர் புகழ்ந்து ஆண்மை, "நண்ணாரு முட்குமென் பீடு" (குறள். 1088) என்றாற் போல வந்தது. உடுக்கை இழந்தார்க்குக் கை சென்றுதவுதல் போல நண்பரது இடுக்கண் களைவது பண்பாதல் பற்றி "நகைவர்க்குத் தாமின்றுதவும் பண்பின்" என்றார். போர் நிகழுமிடங்களிலெல்லாம் வென்று களங்கொள்வதைத் தவறாதே செய்து வந்தமை தோன்ற, "களங்கிழவோய்" என்றார். ஆர்ந்தென்பது அருந்தென வந்தது.

விளக்கம்: குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் கொங்குபுறம் பெற்றசெய்தியும் வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்ற செய்தியும் இப் பாட்டின்கட் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றன.

கொங்கு நாட்டிற்கு மேற்கின்கண்ணதாய் மேலைக்கடற்கரையை யடுத்திருக்கும் வஞ்சிநகர் முற்றத்தே போருடற்றி மேம்படுதலின், "குடபுலத்ததரி கொண்டனை" யென்றார். குடபுலமென்றும் வஞ்சி யென்றும் கூறியதனால், ஈண்டுக் கூறப்படும் வஞ்சி, கருவூரான வஞ்சிநகர் அன்றென்பதாம். குடபுலத்து வஞ்சிநகர், இடைக்காலத்தே அஞ்சைக் களமெனமருவி (S.I.I. Vol. V. No. 789) இப்போது திருவஞ்சிக்களமென வழங்குகின்றது. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய "பண்டைநாளைச் சேரமன்னர்கள்" என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும் கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை "வீரசோழ மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்" (A. R. No. 335 of 1927-28) என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920) எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு காலத்தில் உண்டாகியது. இவ்வளவனால் எறியப்பட்ட கருவூர் மேலைக் கடற்கரையில் வஞ்சிநகர்க்கண்மையிலுள்ள கருவூர். முரசம் இடியென முழங்க, களிறுகள் மேகக்கூட்டம்போல் அடர்ந்து செல்ல, குதிரைகள் மழைத் தாரைபோலப் பாய்ந்தோட, வில்வீரர் எறிந்த அம்புகள் காற்றுப் போற் சென்று மொதக் கொங்குநாட்டவர் எதிரூன்றி நிக்ற ஆற்றாது புறந்தந்தோடினர். "கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே" என்பதற்கும், "வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகுபறந்தலை" என்பதற்கும் இடையிற் கிடந்த அடிகல் பல சிதைந் தொழிந்தமையின், அவற்றாற் குறிக்கப்படும் பொருள் தெளிய விளங்கவில்லை. அச்சமுற்ற மயில் முன்னும் பின்னும் மேலும் கீழுமாக மிக விரைந்து நடந்தும் பறந்தும் அலமருவது இயல்பு. அதுபோலப் போர்க்குச் சென்ற கணவன் வாராமையால் மனையோள் மனவமைதி பெறாது இல்லின்கண் அலமருகின்றாள் என்பது உவமத்தாற் பெறப்படுகிறது. சுடுகாட்டில் பிணங்களைச் சுடுதற்கமைந்த இடம் மன்றம் எனப்படுவதும், அங்கே எரிவளர்த்துக் கணவனை யிழந்த மகளிர் அதன்கண் வீழ்ந்து உயிர் கொடுப்பதும் வழக்காயினும், இம் மகளிர் அவற்றை உடனே செய்யக் கருதாது போர்க்களம் சென்று கணவன் பெற்ற புண்ணின் திறங்காண்டற்குக் களத்திற்கு விரைந்தேகுகின்றன ரென்பது தோன்ற, "மயில் இயன்று மரலியாங்கு நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணார் புண்ணுவந்து படுகளம் நோக்கிச் சென்றனர்," என்று கூறுகின்றார். இனி மன்றம் என்பதற்குப் பலரும் கூடுமிடம் எனக்கொண்டு, அங்கே சென்று அவர் கூறுவன கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பாது களத்துக்குச் சென்றார் எனக் கொள்ளினும் அமையும். இதனால் போரிற்பட்ட கணவன் புறப்புண்பட்டு வீழ்ந்தானெனப் பழிப்புரை’ வந்தது போலும் எனக் கருதலாம்; அடிகள் சிதைந்தமையின் உண்மை விளங்கிற்றன்று. புண்திறம் காணச் சென்ற மனையோள் கணவன் போர்செய்த திறம் வாளிற்றாக்கான் வேலிற்றாக்கிக் களிறு கோடிறுபு நிலஞ்சேரக் கொன்று வீழ்த்தி வெற்றியோடு சென்றோன் மன்ற கொலைவன் உற்ற வெம்புண் அறிநர் கண்டு கண்ணலைத்து வருந்தினரெனக் கூறப்படுகிறது போலும். இருநிலஞ் சேரக் கொன்றோன் மன்ற என்றும் பாடம்.
-------------

374. ஆய் அண்டிரன்

வேள் ஆய்அண்டிரன் தன்னுடைய பொதியின் மலைக்கடியிலுள்ள ஆய்க்குடியிலிருக்கையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அவனை யடைந்து இந்தப்பூவைநிலைப்பாட்டைப் பாடினார். இதன்கண் அண்டிரனது வண்மைை வியந்து ஞாயிற்றை நோக்கி, "ஞாயிறே, விசும்பின்கண் வறிதே விளங்குகின்ற நீ அண்டிரன்போலக் கை வண்மை யுடையையோ, கூறுக" என்று கேட்கின்றார். மேலும், அண்டிரனுடைய கைவண்மையை விளக்கலுற்று, விடியற்காலத்தே கிணைப் பறையைக் கொட்டி அண்டிரனது குறிஞ்சிமரங்கள் நிறைந்த மலைப்பக்கத்தைப் பாடுவராயின், உறக்கத்திற் றீர்ந்த மான்கலைகள் அவர் தம் இசையைச் செவிசாய்த்துக் கேட்கும்; மலைவாணர், இப் பொருநர்கட்கு நல்ல விருந்தைச் செய்து, புலித்தோலைப்பரப்பி அதன் மேல் மான்கறியும் சந்தனக்கட்டையும் யானைக்கோடுமாகிய மூன்றையும் குவையாகப் பெய்து நல்குவர் என அவனது நாட்டவர் விருந்தோம்புங் கூறுபாட்டில் வைத்துக் கூறியுள்ளார்.

    கான மேய்ந்து வியன்புலத் தல்கும்
    புல்வாயிரலை நெற்றி யன்ன
    பொலமிலங்கு சென்னிய பாறுமயி ரவியத்
    தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
    மன்றப் பலவின் மாலரைப் பொருந்தியென்         5
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
    இருங்கலை யோப்ப விசைஇக் காண்வரக்
    கருங்கோற் குறிஞ்சி யடுக்கம் பாடப்
    புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்
    மான்கண் மகளிர்க் கான்றோ ரகன்றுறைச         10
    சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
    விடர் முகை யடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்
    புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
    இருங்கேழ் வயப்புலி வரியதட் குவைஇ
    விருந்திறை நல்கு நாட னெங்கோன்         15
    கழறொடி யாஅ யண்டிரன் போல
    வண்மையு முடையையோ ஞாயிறு
    கொன்விளங் குதியால் விசும்பி னானே.
    ---------

திணை: பாடாண்டிணை; துறை: பூவைநிலை, ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

உரை: கானம் மேய்ந்து வியன்புலத்தல்கும் - காட்டின் கண் மேய்ந்துவிட்டு அகன்ற கொல்லைக்கண் தங்கும்; புல்வாய் இரலை நெற்றியன்ன - புல்வாயென்னும் மானினது ஆணின் நெற்றிமயிர் போல; பொலம் இலங்கு சென்னிய - பொற்றாமரை விளங்கும் சென்னியிலுள்ள; பாறுமயிர் அவிய - சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப் படியுமாறு; தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனி துளிக்கும் நன்கு புலராத விடியற் காலத்தில்; மன்றப் பலவின் மாலரைப் பொருந்தி - மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின் பெரிய அடியில் இருந்து; என் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - என்னுடைய தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறைநன்கு ஒலிக்குமாறு கொட்டி; இருங்கலை ஓர்ப்ப இசைஇ - பெரிய கலை மானினம் செவிசாய்த்துக் கேட்குமாறு இசைத்து; காண்வர - அழகுண்டாக; கருங்கோற் குறிஞ்சியடுக்கம் பாட - பெரிய தண்டினையுடைய குறிஞ்சிமரஞ் செறிந்த மலைப்பக்கத்தைப் பாடவே; புலிப்பற்றாலிப் புன்றலைச் சிறாஅர் - புலிப்பல் கோத்த கழுத்தணி யணிந்த புல்லிய தலையையுடைய குறச் சிறுவர்களைப் பயந்து; மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் - மான் போலும் கண்ணையுடைய மகளிர்க்கமைந்த கணவன்மார்; அகன்று றைச் சிலைப்பாற்பட்ட முளவுமான் கொழுங்குறை - அகன்ற நீர்த் துறைக்கண் தம் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம்பன்றியின் கொழுவிய வுனும்; விடர்முகையடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம் - மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப்பக்கத்தே கிளை தழைத்து நிற்கும் சந்தனக்கட்டையும்; புகர்முக வேழத்து மருப்பொடும் மூன்றும் - புள்ளி பொருந்திய வலிய புலியினுடைய வரியமைந்த தோலின்மேற் குவித்து; விருந்து இறை நல்கும் நாடன் - விருந்தினர்க்குக் கொடுக்கும் நாட்டையுடையனாகிய; எங்கோன் - எங்கள் தலைவனான்; கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல - கழலவிடப்பட்ட தொடியணிந்த ஆஅய் அண்டிரனைப்போல; ஞாயிறு - ஞாயிறே; வண்மையும் உடையையோ - வள்ளன்மையு முடையையோ; விசும்பின் கொன் விளங்குதி - வானத்தின்கண் வறிதே ஒளிதிகழ்கின்றா யாகலின்; எ- று.

செல்வர் தந்த பொற்றாமரை கிடந்து விளங்குந்தலையைப் "பொல மிலங்கு சென்னி" யென்றார். நன்கு புலராப் போதிற் பெய்யும் பனி பாறிய தலையிரைப் படிவிக்குஞ் செயலை; "பனி பழுனி பல்யாமத்துப் பாறு தலைமயிர் நனைய (புறம். 377) என்று பிறரும் கூறுதல் காண்க. உறக்கதத்திற் சிதறிப் பரந்த தலைமயிர், ஈண்டு பாறுமயிர் எனப்பட்டது. கருங்கோல், பருத்தகொம்பு, சிறாரையுடைய" மகளிரும் அவர்க்கமைந்த கணவன்மாரும் விருந்திறை நல்கும் நான் என இயைக்க. சிறுவர்க்குப் புலிப்பற் கோத்த தாலி யணிதலை, "புலிப் பற்றாலிப்புதல்வர்" (குறுந். 16) என்பதனாலுமறியலாம். அகன்றுறை. அகன்ற நீர்த்துறை. நீர்த்துறைக்கண்ணிருந்தே முள்ளம் பன்றியை வேட்டஞ் செய்தல் வேட்டுவர்மரபு. முளவுமான், முள்ளையுடைய மாவாகிய பன்றி, ஆய் அண்டிரன் வள்ளன்மையால் இசைகொண்டு விளங்குதல்போல விளக்கமுறாது வறிதே திகழ்கின்றா யென்பார், "கொன் விளங்குதியால்" என்றார். பனியுறைக்கும் ஞாங்கர், பொருந்தி, தெளிர்ப்ப ஒற்றி, பாட, ஆன்றோர், விருந்திறை நல்கும் நாடன், எங்கோன் அண்டிரன்போல, விளங்குதி யாகலின், வண்மையுமுடையையோ கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விருந்து இறைநல்கும் என்பதற்குப் புதிய புதியவாக வழங்கும் என வுரைப் பினுமமையும்.

விளக்கம்: பூவை நிலையாவது. "கறவை காவல னிறனொடு பொரீஇ, புறவலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று" (பு.வெ.மா. 9:4) எனவரும். ஆசிரியர் தொல்காப்பியரும், இதனை, "மாயோன் மேயமன் பெருஞ்சிறப்பின், தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை" (தொல்.புறத். 5) என்று கூறுவர். பூவைநிலை யென்பதற்குப் புறப்பொருள் வெண்பாமாலைகாரர் கூறுவது பொருந்தா தென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இப் பொருந்தாமையை இளம் பூரணர்க்கு முன்னிருந்த உரை காரரும் கண்டுள்ளனர்; அவரெல்லாம், "மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப" என்று கூறி, "அங்ஙனமாயின், ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பது பற்றி வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவைநிலையாகக் கொள்க" என்பர் இளம்பூரணர். அதனால் ஞாயிற்றோடு உவமித்து வரும் இப்பாட்டு பூவைநிலையெனப்படுவதாயிற்று. ஆய் அண்டிரனைப் போல ஒளியுடையை யாயினும், அவனைப்போல வண்மையுடையையோ என்றது, ஞாயிற்றோடு உறழ்ந்து நின்றது; உறழ்வும் பொரூஉ வகையே யெனக்கொள்க. இப் பாட்டு, "கடந்தடுதானைச் சேரலாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்... அகலிரு விசும்பி னானும் பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே" (புறம். 8) என்பதனோடு ஒப்புநோக்கத்தக்கது. அப் பாட்டையும் "பூவைநிலையுமாம்" எனக் குறித்திருப்பது காண்க. இடைக்காலக் கல்வெட்டுகல் சில முடமோசி நாரணக் கிரம வித்தன் என்று கூறுவதை நோக்கின் முடமோசி என்பது குடிப்பெயர்போலும் என நினைப்பிக்கின்றது.
----------

375. ஆய் அண்டிரன்

ஆய் அண்டிரனை ஒருகால் ஏணிச்சேரி முடமோசியார் இனிய பாட்டொன்றைப் பாடி மகிழ்வித்தாராக, அவன் அவர்க்குப் பெரும் பொருளைப் பரிசில் நல்கினான். அதுகொண்டு அவர் அவனை வாழ்த்து வாராய், இப் பாட்டால், "ஆயே, பெருமழைக் கூட்டம் கடற்குச் சென்றாற் போல யான் என் சுற்றத்தாருடமே நின்பால் வந்தேன்; நீ புலவர்கட்குப் புகலிடமாய் இந்நிலவுகில் நெடிது வாழ்க; நீ இல்லாத வழி இவ்வுலகம் வறுமையுறும்; அந்நாளில் இவ்வுலகிற் புலவர் இல்லாது ஒழிவாராக; ஒருகால் உளராயின் அப் பீடின்றிப் பெருகிய பாடிலாச் செல்வரை என்றும் எம்மினத்தவர் பாடாதொழிவாராக" என்று எடுத்தோதியுள்ளார்.

    அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி
    நிலைதளர்வு தொலைந்த வொல்குநிலைப்பல்காற்
    பொதியி லொருசிறைப் பள்ளி யாக
    முழாஅரைப் போந்தை யரவாய் மாமடல்
    நாரும் போழுங் கிணையோடு சுருக்கி         5
    ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
    ஊழிரந் துண்ணு முயவல் வாழ்க்கைப்
    பிரசந் தூங்கு மறாஅ யாணர்
    வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந         10
    பொய்யா வீகைக் கழறொடி யாஅய்
    யாவரு மின்மையிற் கிணைப்பத் தவாது
    பெருமழை கடற்பரந் தாஅங் கியானும்
    ஒருநின் னுள்ளி வந்தனெ னதனாற்
    புலவர் புக்கி லாகி நிலவரை         15
    நிலீஇய ரத்தை நீயே யொன்றே
    நின்னின்று வறுவி தாகிய வுலகத்து
    நிலவன் மாரோ புலவர் *துன்னிப்
    பெரிய வோதினுஞ் சிறிய வுணராப்
    பீடின்று பெருகிய திருவிற்         20
    பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே.
    ---------
    *இரவலர் என்றும் பாடவேறுபாடுண்டு.

திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை யவர் பாடியது.

உரை: அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி - அசைகின்ற கதிர்கள் நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலைபோல; நிலைதளர்வு தொலைந்த ஓங்கு நிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளியாக - நிலை தளர்ந்து பாழ்பட்ட வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையுமுடைய மன்றத்தின் ஒரு பக்கத்தைப் படுக்கையிடமாகக் கொண்டு; முழாஅரைப் போந்தை யரவாய் மாமடல் நாரும் போழும் - முழவின் வாய்போன்ற அடியினையுடைய பனையின் அரம்போலும் கருக்குப் பொருந்திய பெரிய மடலினின்று மெடுத்த நாரையும் பனங்குருத்தையும்; கிணையொடு சுருக்கி - கிணையொடு சேர்த்துக் கட்டி; ஏரின் வாழ்நர் குடி - ஏரால் உழுதுண்டு வாழ்வோர் மனையின்கட் சென்று; ஊழ்முறை புகாஅ இரந்துண்ணும் வருத்தம் பொருந்திய வாழ்வை - முறையே அவர் நல்கும் உணவை இரந்துண்ணும் வருத்தம் பொருந்திய வாழ்வையுடைய எம்மை; புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என - பாதுகாத்தலை மேற்கொள்ளும் சான்றோர் யாவருளர் என்று நினைந்து; பிரசம் தூங்கும் அறாஅயாணர் - தேன் கூடுகள் தொங்குகின்ற நீங்காத புது வருவாயையுடைய; வரையணி படப்பை - மலைசார்ந்த தோட்டங்களை யுடைய; நன்னாட்டுப் பொருந - நல்ல நாட்டையுடைய பொருநனே; பொய்யா ஈசைக் கழல்தொடி ஆஅய் - பொய்யாத வள்ளன்மையும் கழலவிடப் பட்ட தொடியுமுடைய ஆயே; கிணைப்ப யாவரும் இன்மையின் - கிணையைக்கொட்டிப் பரவுதற்கேற்ப எம்மைப் புரப்போர் பிறர் இல்லாமையால்; தவாது - நின்றாங்கு நின்று கெடாமல், பெரு மழை கடல் பரந்தாங்கு - பெரிய மழை முகில்கள் நீர் கோடற் பொருட்டுக் கடற்குச் சென்றாற்போல; யானும் ஒருநின் உள்ளி வந்தனென் - யானும் ஒப்பற்ற நின்னை நினைந்து வருவேனாயினேன்; அதனால், புலவர் புல்கிலாகி - புலவர்கட்குப் புகலிடமாய்; ஒன்று - ஒன்றாக; நின்னின்று வறுவிதாகி வுலகத்து - நீ இல்லாமையால் வறிதாகும் இவ் வுலகின்கண்; புலவர் நிலவன் மார் - புரப்பாரை நோக்கி வாழும் புலவர் இலராயொழிவாராக; துன்னிப் பெரிய வோதினும் சிறிய உணரா - நெருங்கிச் சென்று பல சொற்களால் எடுத்துரைத்தாலும் சிறிதளவுதானும் உணரும் உணர்ச்சியில்லாத; பீடின்று பெருகிய திருவின் பாடில் மன்னரை- சிறப்பின்றி மிக்குள்ள செல்வத்தையுடைய பெருமையில்லாத வேந்தர்களை; எமர் பாடன்மார் - எம் மினத்தவர் பாடாதொழிவாராக; எ - று.

காற்றால் அலைப்புண்டு புலர்ந்து நீங்கிப் பறந்துவரும் கதிர்கள் வீழ்ந்துகலங்கிய சேற்றுநீரிற் படிந்து கிடக்கும் நீர்நிலை, "அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி" யெனப்பட்டது ஒப்புப்பொருட்டாய இன்னுருபு விரித்துக் கொள்க. வட்டமாயிருத்தல்பற்றி நீர்நிலையைச் சூழியென்றார். இச் சூழி போலவே பொதியிலிடமும் தரைவெடித்துக் குப்பையும் கூளமும் நிறைந்து குழிந்து பொலிவின்றிக் காணப்படுதலின் சூழியை யுவமம் கூறினார். தரை வெடித்துக் குழிதலால் பொதியிலின் கட்டும் கோப்பும் தளர்ந்தமையின் "நிலைதளர்வு தொலைந்த" என்றும் தளர்ந்த விடந்தோறும் பல கால்களை நிறுத்தி வீழாமற் காக்கப்படுமாறு தோன்ற "ஒல்குநிலைப்பல்காற் பொதியில்" என்றும், உழவர் மனையில் இரந்து நின்று அவர் நல்கும் உணவையிரந்துண்பது வறுமையைப் போக்காது துயர் மிகுத்தலின் "ஏரின் வாழ்நர் குடி முறைபகாஅ வூழிரந் துண்ணும் உயவர் வாழ்க்கை" யென்றும், போரு ழந்து மேம்பட்ட சான்றோரையே நாடிச் செல்லுமாறு தோன்றப் "புரவெதிர்ந்து கொள்ளும் சான்றோர் யாரென வந்திசின்" என்றும் கூறினார். கிணையென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. தவாது பரந்தாங்கு என இயையும் கண்டென ஒரு சொல் வருவிக்கப் பட்டது. மழை கடற்பரந்தாங் கென்றதனால் ஆஅய் அண்டிரன் கடல் போலும் செல்வமுடைய னென்பது பெற்றாம். புலவரது புலமை உணவு குறித்து வருந்துமாயின் சீரிய இலக்கியங்கள் பிறவாமலும், மக்கள் அறிவு அவற்றின் வாயிலாக நாட்டிற்குப் பயன்படாமலும் கெடுமாகலின், "வறுவிதாகிய வுலகத்து, நிலவன் மாரோ புலவர" என்றான். இரவலரென்பது பாடமாயின் இரவலர் இன்மை காண மாட்டாத புரவலனான ஆய் அண்டிரனுக்குப் பின் அத்தகைய புரவுக் கடன் புரியும் சான்றோர் உளராவ தரிதென்னுங் கருத்தால், "நிலவன் மாரோ இரவலர்" என்றான் எனக் கொள்க. பீடின்று பெருகுந் திருவுடைமையிலே கண்ணுங் கருத்தும் ஒன்றியிருத்தலின், பாடிலராகிய வேந்தர்க்கு அறியுந்திறம் இலதாமென்பார், "பெரிய வோதினும் சிறிய வுணரா" என்றார். அவரைப் பாடியவழிப் புலவரது புலமை பாடுபெறா தழியும் என்பார், "பாடன்மார் எமரே" என்றார். இடைக்காலத்தும் இக்காலத்தும் தாயிருக்கப் பேய்க்கு வழிபாடு செய்யும் பாடின் மனனர்களும் தலைவர்களும் உளரான தன் பயனாகப் பண்டை நாளைச் செந்தமிழ் மூன்றும் சீரழிந்த போனதை வரலாறு வற்புறுத்துதலால் ஏணிச்சேரி முடமோசியார் அன்று கூறியது வாய்மையாதல் தெள்ளிதாம்.

விளக்கம்: வாழ்த்தியல் என்பதுதலைமகனொருவனுடைய வென்றியும் குணமும் ஏத்தி வாழ்த்துவதாகும். "அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்து" (தொல். புறத். 29) என்பதனை இளம்பூரணர் முதலியோர் "இயன்மொழி யெனவும் வாழ்த்தெனவும் இயன்மொழி வாழ்த்தெனவும் மூவகைப்படும்" என்பர். இம் மூன்றனுள் ஒன்றாகிய வாழ்த்து ஈண்டு "வாழ்த்தியல்" எனப்பட்டது. இப்பாட்டின்கண் கிணைப் பொருநன் புரப்போர் பிறர் இன்மை தேர்ந்து ஆய் அண்டிரன் பால் அடைந்து அவனை வாழ்த்தும் கருத்தில் இப்பாட்டு அமைந்துள்ளது. ஆய் அண்டிரன் தென் பாண்டி நாட்டுப்பொதியின் மலையடியில் ஆய்க்குடியிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் புலவர், கூத்தர், பாணர், பொருநர் முதலியோர் நல்ை தேர்ந்து புரக்கும் நற்குடிச் செல்வர் குறைந்தனர். ஏணிச்சேரி முடமோசியார் அவர் குறிப்பனைத்தும் பொருளீட்டுதலிலே ஒன்றியிருந்ததை யுணர்ந்தார். இந்நிலை கி.பி. நான்காம் நூற்றாண்டிலும் இருந்ததென்பதை அக்காலத்தே நம் நாட்டிற்கு வந்த சீனச்சான்றோர் எழுதியுள்ள குறிப்புகள் எடுத்தோதுகின்றன. புரப்போர் புறக்கணித் தமையின் பொருநன் ஏர் வாழ்நர் குடிகட்குச் சென்று முறையே உணவு இரந்துண்ணும் நிலையடைந்து வருந்திய திறத்தை, "ஏரின் வாழ்நர் குடிமுறைப் புகாஅ, ஊழிரந்துண்ணும் உயவர் வாழ்வு" என்று குறித்தார். சான்றோர் யாரென நோக்கினேன்; நோக்கினேனுக்கு ஒருவரும் காணப்பட்டிலர் என்பார், "யாவரும் இன்மையின்" என்றார். "பெருமழை கடற்பரந்தாங்கு நின்னுள்ளி வந்தனென்" என்றது, கடனீரை முகந்த மழை யாமும் செல்வர் தரும் பெருவளத்தின் தீமை போக்கி நன்மையை உலகுயிர்கள் பெறச்செய்வேம் என்பது.
--------

376. ஓய்மான் நல்லியக் கோடன்

புறத்திணையைப் பாடுதலில் மிகச்சிறந்த நல்லிசைப் புலவராகிய நன்னாகனார் ஒருகால் ஓய்மான் நல்லியக் கோடனைக் காண்டற்கு அவனூரில் அவனது நெடுமனையை யடைந்தார். அக்கால பகற்போது கழிந்ததனால் அந்திமாலை வந்திருந்தது. ஒளிகுறைய மெல்லிய இைளிருள் பரந்தது. பாணர் உணவுண்டற்கமைந்திருந்தனர். அவ்வளவில், வறுமையுற்று மெலிந்து உருமாறியிருந்தநாகனார் நல்லியக்கோடனுடைய நெடுமனைக்கண்ணின்ற நெற்கூட்டின் அடியில் நின்றனர். நல்லிக் கோடன் அவரைக் கண்டமாத்திரையே அவரை இன்னாரென ஆராயாமலே அவர் இடையில் சிதறிப் பீறிக்கிடந்த உடையை மாற்றி வேறோ ருடைதந்து மெலிவுண்டு பொறானாய்ப் பாடிநின்ற அவரது கைத் தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு கட்டெளிவும் சூட்டிறைச்சியுந் தந்து, உண்பித்து, இரவுப்போதாயிற்றே என்று சிறிதும் நினையாது அவரைப்பற்றி நிரயத் துன்பத்தைத் தந்துகொண்டிருந்த வறுமை நீங்கப் பெருஞ் செல்வத்தை நல்கினான். அது பெற்றுப் பெரு மகிழ்ச்சி கொண்ட நன்னாகனார் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றின் வைத்து இப்பாட்டைப் பாடினார். இதன்கண் பொருநன் நல்லியக் கோடன் தனக்குச்செய்த கொடைநலத்தை யெடுத்தோதி, "அன்று முதல் யான் வரையாது வழங்கும் பெருவள்ளியோராயினும் பிறர் மனைவாய் நின்று இரத்தற்கு நினையேனாயினேன். என் கிணைப்பறையின் சிறு குரல் தானும் பிறசெல்வரது நெடுமொழியைப் பாடி இசைக்காதாயிற்று," என்று குறித்துள்ளான்.

    விசும்பு நீத்த மிறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி
    சிறுநனி யிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பினென் றெடாரி தழீஇப்
    பாண ராரு மளவை யான்றன்         5
    யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப்
    பண்டறி வாரா வருவோ டென்னரைத்
    தொன்றுபடு துளையொடு பெருவிழை போகி         10
    நைந்துகரை பறைந்தவென் னுடையு நோக்கி
    விருந்தின னளிய னிவனெனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே         15
    இரவி னானே யீத்தோ னெந்தை
    அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும்
    இரப்பச் சிந்தியே னிரப்படு புணையின்
    உளத்தி ளைக்கு மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி         20
    ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாதென் சிறுகிணைக் குரலே.
    ------

திணை: அது. துறை: இயல்மொழி. ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

உரை: விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய -விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய பசிய கதிர் ஒளி குறைந்த; சிவந்து வாங்கு அந்தி சிறுநனி இறந்த பின்றை - செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப் போதின் மிகச் சிறு பொழுது கழிந்த பின்னர்; செறிபிணிச் சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ - செறியப் பிணிக்கும் துண்டான வார்களாற் கட்டப்பட்ட எனது தடாரிப் பறையை ஒருபால் தழுவிக் கொண்டு; பாணர் ஆரும் அளவை - பாணர்கள் உணவு உண்ணும் அளவில்; யான்தன் யாணர் நன்மனைக் கூட்டிமுதல் நின்றனென் - யான் அவனுடைய புதுமையறாத நல்ல பெருமனைக்கண் நின்ற நெற்கரிசையின் அடியில் நின்று பாடினேனாக; இமைத்தோர் விழித்த மாத்திரை - இமைத்த கண்விழிக்குமளவிலே; ஞெரேலென - விரைவாக; குணக்கெழு திங்கள் கனையிருள் அகற்ற - கிழக்கே யெழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க; பண்டு அறிவாரா உருவோடு - முன்பிருந்த எனது நிலையையறிய இலாதவாறு மாறியிருந்த உருவோடு; என் அரை - எனது இடையிலேயிருந்த, தொன்றுபடு துளையொடு பருவிழை போகி - பழைமையுற்றுத் துளைகளுடனே பருத்த இழைகள் கெட்டு; நைந்து கரை பறைந்த - மெலிநது கரை கிழிந்து கிடந்த; என் உடையும் நோக்கி - எனது உடையையும் பார்த்து; இவன் விருந்தினன் அளியன் என் - இவன் புதியன் அளிக்கத் தக்கானாவன் என்று சொல்லி; பெருந்தகை - பெரிய தகைமையினையுடையனாகிய அவன்; நின்ற முரற்கை நீக்கி - என் கையில் நின்ற தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு; நன்றும் அரவு வெகுண்டன்ன தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே; சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து - நிரயம்போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி; அன்று இரவினான் ஈத்தோன் - அவ்விரவுப்போதிலே வேண்டுவன கொடுத்தான்; எந்தை - என் தலைவன்; நிரப்புடு புணையின் - வறுமையாகிய கடலைக் கடக்கும் தெப்பமாக அவன் இருத்தலால்; அன்றை ஞான் றினோடு இன்றினூங்கும் - அந்நாளிலிருந்து இன்றும் இனி மேலும்; இரப்பச் சிந்தியேன் - பிறர்பாற் சென்று இரத்தலை நினையேனாயினேன்; உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் - பிறர் உளத்தின்கண் நிகழ்வனவற்றை உள்ளத்தா லளந்தறியும் விளங்குகின்ற மகிழ்ந்தனெனாகி - நீர் நிறைந்த குளத்தின் வாய்த்தலை போல உண்ணிறைந் துந்தும் மகிழ்ச்சி யுடையேனாய்; ஒரு நாள் இரவல வரையா வள்ளியோர் கடைத்தலை - ஒருநாளும் தம்பால் வரும் இரவலரை மறுத்தலில்லாத வள்ளன்மை யுடையோர் தலைவாயிலும்; ஞாங்கர் நெடுமொழி பயிற்றி - அவர் பக்கத்து நெடும்புகழ் விளைக்கும் நலங்களைப் பாராட்டி ஒன்று பெறுதற்கு; தோன்றல் செல்லாது - அசையாதாயிற்று; என் சிறு கிணைக்குரல் - எனது சிறியதாகிய கிணைப்பறையின் ஓசை; எ - று.

நிலமுதல் வளியீறாகவுள்ள நால்வகை மண்டிலங்களையும் கடந்து நிற்றலின் விசும்புநீத்தவெனப்பட்டது; "வெளியிடை வழங்காவழக்கரு நீத்தம்" (புறம். 365) என்று பிறரும் குறித்துரைப்பது காண்க. நீத்த மென்றதனைக் கடற்காக்கி, விசும்பாகிய கடலை ஞாயிறு நீந்திச்செல்வதாகக் கொண்டு உரைத்தலுண்டு. மாலைவெயில் வெம்மை குன்றித் தட்பமும் செம்மையும்பெறுதலின் "பசுங்கதிர்" என்றார். "சுடர்கெழு மண்டில மழுக ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை2 (அகம். 378) என்று பிறரும் கூறுவர். அந்திமாலையின் செவ்வொளி மழுக இளையிருள் பரவும் மருண்மாலைப் போதினைக் காட்டற்கு "அந்தி சிறு நனி பிறந்த பின்றை" என்கின்றார்; அந்திமாலையின் ஞாயிற்றின் செங்கதிர் நேரே நிலவுலகிற் பாயாமல், அதனைச் சூழ்ந்துள்ள வளிமண்டிலத்தால் அளைந்து (Refracted) வீழ்விக்கப்படுதல்பற்றி, "வாங்கந்தி" என்றும் வளிமண்டிலத்துப்பரவிச் செறிந்திருக்கும் துகளொளியாற் செங்கதிர் பசுங்கதிராகிற் றென்பது விளங்கப் "பசுங்கதி" ரென்றும் வழங்குகின்றமை உணர்ந்துகொள்க. இருள் பரந்த அருண் மாலைப்போதில் பாணரும் நுளையரும் சோறுண்பது மரபு; "மலையின் வாயிற்சோறும்" எனவழங்கும். கூடு, நெற்கூடு; கரியையுமாம். ஞெரேரென: விரைவுக் குறிப்பு. பண்டறிவாரா வுருவென்றது,நன்னாகனார் நல்லியக்கோடனால் முன்பே அறியப்பட்டவரென்பது சுட்டி நின்றது. கரப்பகுதி பருவிழையா லமைந்ததாகலின், "பருவிழை போகி நைந்து" விருந்தின்னென அவன்கூறியதை வற்புறுத்தி நின்றது. நாட்பட்டுக் களிப்பு மிக்குற்ற கள்ளை "அரவு வெகுண்டன்ன தேறல்" என்றார்; "பாம்பு வெகுண்டன்ன தேறல்" (சிறுபாண். 237) எனப் பிறரும் கூறுவர். ஒப்பதும் மிக்கது மில்லாத துன்பநிலையம் நிரயமாகலின், தனக்குத் தானே யொப்பாகிய (குறள். 1041) வறுமை "நிரயத்தன்ன, வறன்" "இரவி னானே யீத்தோ" னென்றார். "நிரப்படு புணையின்" என்றது, இரப்பச் சிந்தியாமைக்கு ஏதுவாய் நின்றது. தன்னுள்ளத்தால் பிறர் உள்ளத்தின்கண் நிகழ்வன அளந்தறியும் ஒள்ளிய புலமை தன்பால் உண்மையினை அடங்கிய வாய்பாட்டாற் கூறுதலின், "உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையே" என்றார். மிளிர்ந்த தகை, விளங்குகின்ற புலமையழகு. கரை புரண்டு வழிந்தெழும் மகிழ்ச்சி தகை, விளங்குகின்ற புலமையழகு. கரை புரண்டு வழிந்தெழும் மகிழ்ச்சி வெள்ளத்தை அறிவால் அடக்கினும் அடக்கினும் அடங்காது முகத்தின்வழிப் புலப்பட நிற்கும் தமது நிலையை, "நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனாகி" யென்றார். இரவலர் வரையா வள்ளியோ ரிடத்தில் இரவலர் இரத்தல் இனிதாயினும் (குறள் 1053) அதனையும் யான் செய்ய விழைந்திலேன் என்பார். "இரவலர் வரையா வள்ளியோ கடைத்தலைத் தோன்றல் செல்லாது என்சிறு கிணைக்குரல்", யென்ப. அந்தி இறந்த பின்றை, தழீஇ நின்றெனனாக, திங்கள் இருளகற்ற, உருவோடு உடையும் நோக்கி, நீக்கி களைந்து, பெருந்தகை, ஈத்தோன்" தகையேன், மகிழ்ந்தனெனாகி, புணையின் சிந்தியேன்; சிறுகிணைக்குரல்; தோன்றல் செல்லாது எனக்கூட்டி வினைமுடிபு செய்க. அவ்விரவினான் என்புழிச் சுட்டு அன்றென நின்றது; "அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே" (தொல். சொல். சேனா. 66) என்புழிப்போல. அன்றே என்பதனை அசைநிலை யெனினும், அப்பொழுதே யெனினு மமையும்.

விளக்கம்: இயன்மொழியாவது, "இன்னோ ரின்னவை கொடுத்தால் நீயும், அன்னார்போல வவையெமக் கீகென, என்னோரு மறிய வெடுத்துரைத்தன்று" (பு.வெ. மா. 9,6) எனவரும். இயன்மொழி வாழ்த்தாவது, "வென்றியும் குணனும் அடுத்துப் பரந்தேத்துவது" (தொல். புறத். 29) என இளம்பூரணம் கூறி, இதனை இயன்மொழி எனவும், வாழ்த்தெனவும், இயன்மொழி யாவது, வென்றியாவது, குணமாவது, இரண்டுமாவது எடுத்தோதப் பரவுதல் எனக் கொள்ளலாம். இவ்வகையில் ஈண்டு நன்னாகனார் நல்லியக்கோடனது கொடை நலத்தையே அடுத்துப் பரந்தேத்திமொழிதல்பற்றி, இப்பாட்டுஇயன் மொழி யெனப்பட்டதெனக் கோடல்வேண்டும். இப்பாட்டின்கண் கூற்று நிகழ்த்தும் பொருநன், கோடனது நன்மனைக் கூட்டு முதல் நின்றானாக, நைந்து கரைபறைந்த அவனது உடையை நோக்கி, புறக்கணியாது கொடைப்பண்புடையனாதலால் "இவன் விருந்தினன் அளியன்" என இன்மொழிநல்கித் தன் பெருந்தகைமையைப் புலப்படுத்தினான் நல்லியக்கோடன். இரவுப்போது ஈத்தற்குச் சிறந்த தன்றாயினும், அது நோக்கிற்றிலன் என்றும், இரப்பவர் என்பெறினும் கொள்வர் என்பதுபற்றிச் சிறிது நல்காது பெரிது நல்கினன்; அதனால், யான் என்றும் பிறரைச் சென்று இரக்கும் வறுமை எய்துதல் இல்லேனாயினேன் என்றும் கூறுவான், "இரவினானே ஈத்தோன் எந்தை" என்றும், கூறினான். நல்லியக்கோடன் வழங்கிய கொடையின் பெருமையைப் புலப்படுக்கலுற்றவன், வள்ளியோர் கடைத்தலை நாடியோடும் என்னுள்ளம் அச்செலவை மீளச் சிறிதும் கருதா வகையில் அடைந்த தென்றற்கு, "ஒரு நாள்...சிறுகிணைக் குரலே" என்றான். எனவே, இத்துணையும் கொடைநலமே புகழ்ந்தோதியவாறு காண்க. நல்லியக்கோடன் என்பது நல்லியனாகிய கோடன் என விரியும். கோடன் என்பது இயற்பெயர்; குயக்கோடன் (த. நா. சரிதை. 10) எனப் பிற்காலத்தும் இப்பெயர் வழக்கிலிருக்கிறது. "மேல் வெம்பா நாட்டுக் கோடனூர்" (A. R. No.20 of 1932-33) எனப் பாண்டி நாட்டிலும், கோடன்பாக்கம் எனத் தொண்டை நாட்டிலும் ஊர்கள் பல இருப்பது நோக்கத் தக்கது. இதனைச் சிலர் கோஷனூர் என்பதன் திரிபாகக் கூறுவது பொருந்தாமை காண்க.
----------

377. சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்காலச் சோழ வேந்தருள் காலத்தாற் பிற்பட்டவன். இவனை ஒருகால் உலோச்சனாரென்னும் நல்லிசைச் சான்றோர் காணச்சென்றார். இவர் பெயர் உவோச்சனார் என்றும் காணப்படுகிறது. அக்காலத்தே யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வாட்படை முதலிய படைத்தலைவர்கள் இவனை அன்புடன் சூழ்ந்திருந்தனர். அவர் நடுவண் இருந்த கிள்ளி உலோச்சனாரை வரவேற்றுப் பெரும் பொருளை வழங்குவானாய், மலையிற் பிறந்த மணியும், காட்டிடத்துப் பெற்ற பொன்னும், கடலிற் பெறப்பட்ட முத்தும், பல்வேறுவகை உடையும் பிறவுந் தந்து சிறப்பித்தான். அப்போது அவர் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்த இப்பாட்டினைப் பாடினார். இதன்கண் பொருநன், தன் கிணைப் பறையைக் கொட்டி, அவியுண்ணும் ஆன்றோர் காப்ப, அறம்புரியும் நெஞ்சினனாகிய கிள்ளி நெடிது வாழ்க என வாழ்த்திய சான்றோர் வரிசைபெற்றுச் செல்வது கண்டு வியப்பு மிக்கு மதிமழுங்கி நின்றான். அவனைக் கிள்ளி கண்டு "நீ சேய்நாடு செல்லும் கிணைவன் போலும், நின்னையும் யாம் புரப்போம், கவலற்க" என வுரைத்து மணியும் பொன்னும், முத்தும், உடையும் பிறவும் நிரம்ப நல்கினன். அவை பெற்ற பொருநன், "நாடெனப்படுவது சோழன் நாடே; வேந்தெனப்படுபவன் இராயசூயம்வேட்ட பெருநற் கிள்ளியே, ஆகவே, வேந்தே, நீ நெடிது வாழ்க" என்று வாழ்த்தி யுள்ளான்.

    பனிபழுனிய பல்யாமத்துப்
    பாறுதலை மயிர்நனைய
    இனிதுதுஞ்சுந் திருநகர் வரைப்பின்
    இனையலகற்றவென் கிணைதொடாக் குறுகி
    அவியுணவினோர் புறங்காப்ப         5
    அறநெஞ்சத்தோன் வாழ்நாளென்
    றதற்கொண்டு வரலேத்திக்
    கரவில்லாக் கவிவண்கையான்
    வாழ்கவெனப் பெயர்பெற்றோர்
    பிறர்க்குவமந் தானல்லது         10
    தனக்குவமம் பிறரில்லென
    அதுநினைந்து மதிமழுகி
    ஆங்குநின்ற வெற்காணூஉச்
    சேய்நாட்டுச் செல்கிணைஞணை
    நீபுரவலை யெமக்கென்ன         15
    மலைபயந்த மணியுங் கடறுபயந்த பொன்னும்
    கடல்பயந்த கதிர்முத்தமும்
    வேறுபட்ட வடையஞ் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவி னல்கியோ னசைசால் தோன்றல்         20
    நாடென மொழிவோரவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோரவன் வேந்தென மொழிவோர்
    புகர்நுதலவிர் பொற் கோட் டியானையர்
    கவர்பரிக்கச்சை நன்மாவினர்
    வடிமணி வாங்குருள         25
    கொடி மிசைநற் றேர்க்குழுவினர்
    கதழிசை வன்கணினர்
    வாளின் வாழ்ந ரார்வமொ டீண்டிக்
    கடலொலி கொண்ட தானை
    அடல்வெங் குரிசின் மன்னிய நெடிதே.         30
    --------

திணை: அது; துறை: வாழ்த்தியல்: சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

உரை: பனி பழுனியபல் யாமத்து - பனி மிக்க பல யாமங்கள் உறங்கியதனால்; பாறு தலைமயிர் நனைய - பரந்து சிதறித் தோன்றும் தலைமயிர் பனியால் நனைந்துபடிய; இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் - தான் இனிதுறங்கும் செல்வ மனையின்கண்; இனையல் அகற்ற - யான் எனது வறுமை வருத்தம் நீக்கக்கருதி; என் கிணை தொடாஅக் குறுகி - என் தடாரிப் பறையை இசைத்துக் கொண்டு சென்று; அவியுணவினோர் புறங்காப்ப அவியாகிய உணவை யுண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க; அறநெஞ்சத்தோன் நாள் வாழ என்று - அறஞ் செய்யும் நெஞ்சினையுடைய வேந்தன் பன்னாள் வாழ்வானாக என்று வாழ்த்த; அதற் கொண்டு வரல் ஏத்தி - அது கொண்டு வாழ்த்தி வந் தவர்களை அவன் வரவேற்க; கரவு இல்லாக் கவி வண்கையான் - இரவலர்க்கு மறைத்தல் இல்லாமல் இடக் கவிந்த வளவிய கையையுடையராதலால்; வாழ்க எனப்பெற்றோர் - நெடிது வாழ்க எனப் புலவர் வாழ்த்தும் வாழ்த்தாகிய பொருளைப் பெற்றோராகிய; பிறர்க்கு - ஏனை வேந்தர்கட்கு; தான் உவமம் அல்லது - இவ்வேந்தன் உவம மாவனே யன்றி; தனக்கு - இவ்வேந்தனுக்கு; பிறர் உவமம் இல்லென - ஏனைவேந்தர் உவமமாகும் ஒப்பும் உயர்பும் இலர் என்று சொல்லி வந்த சான்றோர் பலரும் பாராட்ட; அது நினைந்து மதி மழுகி - அப் பாராட்டைக் கேட்டு அறிவான் ஆராய்ந்த யான் அவனது பெருமை என் அறிவெல்லை யிறந்து விளங்குவதை நினைந்து மதிமயங்கி; ஆங்கு நின்ற என் காணூஉ - அவ்விடத்தே நின் றொழிந்த என்னைக்கண்டு; சேய்நாட்டுச் செல் கிணைஞனை - புரவலரை நாடிச் சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும் கிணைப்பொருநனே; நீ எமக்குப் புரவலை என்ன - நீ மலையிடைப் பெறப்பட்ட மணிகளையும்; கடறுபயந்த பொன்னும் - காட்டிற் பெறப்பட்ட பொன்னையும்; கடல் பயந்த கதிர் முத்தமும் – கடலித்தே பெறப்பட்ட ஒளியையுடைய முத்துக்களையும்; வேறுபட்ட உடையும் - வேறு வேறு வகையவான உடைகளையும்; சேறுபட்ட தசும்பும்கள் நிறைந்த குடங்களையும்; வருந்தாது நிற்ப - யான் இனி வறுமையுற்று வருந்தாமல் செல்வ நிலையிலே நிலைநிற்குமாறு; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த தோன்றலாகிய தலைவன்; கனவிற் கண்டாங்கு நனவில் யான் கொள்ளுமாறு தந்தான்; நாடு என மொழிவோர்; அவன் நாடென மொழிவோர் - மிகச் சிறந்த நாடாவது அவனது சோழ நாடென்று சொல்லுவர்; வேந்தென மொழிவோர் -வேந்தர்கள் பலருள்ளும் சிறந்த வேந்தரைத் தேர்ந்துரைப்பவர்; அவன் வேந்தென மொழிவோர் - அவனொருவனையே சிறந்த வேந்தனென்று சொல்வர்; புகர் நுதலவிர் பொற் கோட்டுயானையர் - புள்ளி பொருந்திய நெற்றியும் விளங்குகின்ற கிம்புரியணிந்த கொம்பினையுமுடைய யானைப்படைத் தலைவரும்; கவர்பரிக் கச்சை நன்மாவினர் - கதியும் சாரியையுமாகப் பகுக்கப் படும் செலவினையும் கச்சிகையுமுடைய குதிரைப் படைத்தலைவரும்; வடிமணி வாங்குருள - வடித்த வோசையையுடைய மணியினையும் வட்டமாக வளைந்த உருளைகளையும்; கொடிமிசை நல்தேர்க் குழுவினர் - மேலே கொடியையுமுடைய நல்ல தேர்ப்படைத்தலைவரும்; கதழிசை வனக்ணினர் - விரைவும் புகழும் வன் கண்மையுமுடைய விற்படை வேற்படைகட்குத் தலைவர்களும்; வாளின் வாழ்நர் - வாள்கொண்டு போர் செய்து வாழும் வாண் மறவருடைய தலைவரும்; ஆர்வமொடு ஈண்டி - ஆர் வத்துடடே கூடியிருத்தலால்; கடல் ஒலி கொண்டதானை - கடலினது முழக்கத்தையுடைய தானையையுடைய; அடல் வெங்குரிசில் - போரை வெல்லுதலின் விருப்பமுடையனான வேந்தனாகிய தலைவன்; நெடிது மன்னிய - நெடுங்காலம் வாழ்வானாக; எ - று.

உறக்கத்திற் கழியும் இடையாமம் ரண்டும் "பல் யாமம்" எனப்பட்டன; ஒன்றின் மிக்கனவாதலின் திருநகரென்றலின் அதற்கேற்ப சிறப்பித்தார். தான் வறுமையால் வருந்தும் வருத்தத்தைப் போக்கும் கருத்தோடு வந்திருத்தலின், "இனைய லகற்ற" என்றான். தெய்வம் புறங்காப்பச் செல்வதோடு வழிவழி சிறந்து பல்லாண்டு வாழ்க என வுயர்ந்தோர் வேந்தனை வாழ்த்துவது புறநிலை வாழ்த்தெனும் மரபாதலால் "அவியுணவினோர் புறங்காப்ப அறநெஞ்சத்தோன் வாழ நாள் என்று" வாழ்த்தினரென்றான்; "வழிபடுதெய்வ நிற்புங்காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து, பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்து" (தொல். செய். 109) என ஆசிரியர் உரைப்பது காண்க. பெயர், ஈண்டு வாழ்த்து ரையாகிய பொருண்மேனின்றது. மக்களானும் பிறவுயிர்களானும் உண்டாகும் துன்பங்கள் முன்னறிந்து காத்துக் கொள்ளும் ஆற்றலுடைய வேந்தருக்குத் தெய்வத்தான் உண்டாவன அவ்வாறுகாக்கப்படாவாதலின், அவற்றிற் கரணாவன புறநிலை வாழ்த்துக்கள் என்ற கருத்தால் அது, பொருள் எனப்பட்டதென வறிக. உயர் பொருளே உவமமாவன வாகலின், "பியர்க்குவமந் தானல்லது தனக்குவமம் பிறரில்லென" என்றார். "உயர்ந்ததன் மேற்றேயுள்ளுங்காலை" (தொல். உவம. 3) என்ப. பிறரும், "பிறர்க்கு நீ வாயினல்லது நினக்குப்பிறருவம மாகா வொருபெருவேந்தே"(பதிற். 3) என்பது காண்க. உவமத்திற்கு ரிய உயர்ந்தோர்களை யெண்ணி ஒருவரையும் காணாமையால் அறிவு மழுங்கினமையின், "மதிமழுகி" என்றான். புரவலை; புரத்தலையுடையை; அஃதாவது பாதுகாக்கப்படுவை யென்பதாம். "கனவிற் கண்டாங்கு நனவின் நல்கியோன்" என்றது பெருநற்கிள்ளி தந்த வளத்தின் பெருமையும் அருமையும் சுட்டி நின்றது. யானையரும் மாவினரும் தேரினரும் வன்கணினருமாகிய வேந்தரென்றுமாம். அச்சத்தால்ல ஈண்டாது அன்பால் ஈண்டுவதே உயர்ந்த அரசியற்கு மாண்பாதலின். அதுதோன்ற, "ஆர்வமொடீண்டி" யென்றார். அடல் வெற்றியுமாம். அகற்ற, குறுகி, பிறர்இல்லென, நினைந்து, மழுகி, நின்ற எற்காணூஉ, என்ன, நிற்ப, தோன்றல், நல்கியோன், மொழிவோர் மொழிவோர்; மொழிவோர்; மொழிவோர்; யானையர், மாவினர், குழுவினர், வன்கணினர், வாழ்நர், ஈண்டுக்கொண்ட தானையையுடைய குரிசில் மன்னிய எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: வாழ்த்தியலாவது "அலங்குகதிர்" (புறம். 375) என்ற பாட்டுரையின் விளக்கப் பகுதியிற் கூறினாம். இப்பாட்டின்கண் ஆசிரியர் உலோச்சானார் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துச் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் கொடைப் பண்பை எடுத்தோதி வாழ்த்துகின்றார். பெயர் பெற்றோர் என்றது, புலவர் புகழ்ந்து வாழ்த்தும் வாழ்த்துக்களைப் பொருளாகப் பெற்ற வேந்தர்களை யென அறிக. கிள்ளியைப் பாடிச்சென்ற கிணைப்பொருநன், அவனைக் கண்டபோது, அவனைச் சூழ்ந்திருந்த சான்றோர் புலவர்பாடும் புகழ்பெற்ற வேந்தருள் "இவனுக்குவமம் இவனே யன்றிப் பிறர் இல்லை" யென்று கூறினர்; அதுகேட்டுக் கிணைவன் மதிமருண்டு நிற்க, பெருநற்கிள்ளி அவனை யடைந்து "நீயும் எம்மாற் புரக்கப்படுந் தகுதியுடையை" என்று சொல்லி மணியும் பொன்னும் முத்தும் கள்ளும் கனவிற் கண்டாங்கு நனவின் நல்கினான்; அவன் நெடிது மன்னுக என்று கிணைவன் வாழ்த்தினான். கிள்ளி இராயசூயம் வேட்ட வேந்தனாகலின், அவனைத் தொடக்கத்தில், "அவியுணவினோர் புறங்காப்ப, அற நெஞ்சத்தோன் தன்னாள்வாழ்க" என்று வாழ்த்திச்சென்றான். அவனை வேந்தன் வரவேற்றலும், ஆங்கிருந்த சான்றோர் அவன் மதிமருளத்தக்க வகையில், "வாழ்க எனப்பெயர் பெற்றோர்...பிறர் இல்" என்று மொழிந்தனர். கிள்ளியைக் காண விழைந்தகாலத்தில் கனவின் கண் அவன் மிகு பொருள் வழங்குவதாகக் கனாக்கண்டு நனவில் அவனை யடைந்தபோது அவன் கனவின் கண்டது போல வழங்கினான் என்பான், "கனவிற்கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவின். நல்கியோன் நசைசால்தோன்றல்" என்றான். கொடைக்கேற்ப மறத்திலும் குறைபாடிலனென்றற்குத் தானையை விதந்தோதினான்.
------------

378. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி

சங்ககாலச் சோழன் காலத்தில் வடபுலத்திருந்து வடுகரும் தென் புலததிலிருந்து பரதவரும் தமிழகத்திற்குட் புகுந்து குறும்பு செய்து வந்தனர். இவ்வடுகரே இடைக்காலப் பல்லவ பாண்டியர் காலத்திற் சீரழிந்து வலியழிந்தொழிந்த களப்பிரராவர். தென்பரதவர் தென்னாட்டுக் கடற்கரையில் தங்கிக் குறும்புசெய்தனர் இவர்கள் இடைக்காலப் பாண்டியர் காலத்தில் வலியழிந்தொடுங்கினர். சங்ககாலத்தில் வடுகரும் பரதரும் குறும்பு செய்வான் தலைதூக்கும்போதெல்லாம் ஒடுக்கி வந்தவருள் சோழவேந்தரும் சிறந்து நின்றனர். இக் காலத்தே மேலைக் கடற்கரைப் குறும்பு செய்தனர். இன்றும் மேலைக்கடற்கரையில் தென் கன்னட சில்லாவில் கடம்பத்தீவு என ஒரு தீவு இருந்து பண்டைய கடம்பரை நினைவு கூர்வித்து நிற்கிறது. அவர்களை இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனும் சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனும் கடற்போருடற்றி வென்றொடுக்கினர். இங்ஙனம் சங்ககாலத்தில் தமிழகத்தின் வடக்கில் வடுகரும், தெற்கில் பரதவரும், மேற்கில் கடம்பரும் அடிக்கடி வந்து அரம்பு செய்த செயல்களைச் சங்கத்தொகை நூல்கள் குறிக்கின்றன. வடபுலத்திலிருந்து வடுகராகிய களப்பிரேயன்றி மோரியரும் பிறரும் வந்தன ராயினும், அவர்கள் தொடக்கத்திலேயே தலைமடங்கி நின்றொழிந்தனர். களப்பிரர்மட்டில்இடைக்காலத்திற்றான் வடபுலத்துப் புத்தரும், சமணரும் தமிழகத் திற் புகுந்து இடம்பெறுவாராயினர். செந்தமிழின் செல்வாக்குக்குக் கேடுண்டாகத்தொடங்கியதும் அவர்கள் காலத்தேயாகும். செந்தமிழ்ச் செல்வரிடையும் வேந்தரிடையும் புறஞ்சுவர் கோலஞ்செய்யும் புன்மையுண்டாகத் தொடங்கியது அக் களப்பரர் காலத்தெயாம் எனப்து மனங்கொள்ளற்பாற்று. அந்நாளில் களப்பிரரான வடவடுகரையும் தென்பரதவரையும் ஒடுக்கிய செயலில் ஒருகால் சோழன் செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ்சென்னி (சேட்சென்னி) வென்றி மேம்பட்டு விளங்கினான். அவனை ஆசிரியர் ஊன்பொதி பசுங்குடையார் காணச் சென்றார். அவன் அவர்க்குப் பல அணிகலன்களையும் செல்வங்களையும் நல்கினான். அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றதினர் பகிர்ந்து கொண்டு தாம்தாம் அணிந்து மகிழ்ந்தனர். இம்மகிழ்ச்சியைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் தென்பரதவரை, மிடலழித்து வடவடுகரது வாள்வன்மையைக் கெடுத்து மேம்பட்ட சோழனுடைய வெண்சுதை மாடத்தின் நெடுநகர் முற்றத்தே நின்று பொருநன் அவனுடைய வஞ்சித் துறையைப் பாடி நின்றானாக, பொருநர்க்கெனச் சமைக்கப் படாது அரசர்க்கும் செல்வர்க்குமாக அமைக்கப்பெற்றனவும் போரிற் பகைவர் பாற் கொண்டனவுமாகிய அணிகலன்கள் பல வழங்கினன்; அவற்றுள் விரலில் அணிவனவற்றைச் செவியிலும், செவிக்குரியவற்றை விரலிலும், அரைக்குரியவற்றைக் கழுத்திலும், கழித்தணியை இடையிலும் வகை தெரியாது அப் பொருநனுடைய சுற்றத்தினர் அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினார்; அவர் செய்கை, பண்டு இராமனுடன் போந்த சீதையை இராவணன்தூக்கிச் சென்றபோது அவள் கழற்றியெறிற்த அணிகலன்களைக் குரக்கினம் அணிந்து கொண்டது போல இருந்தது; அவர்கள் கொண்டிருந்த வறுமைத் துன்பமும் மறைந்து போயிற்றென்று கூறியுள்ளார்.

    தென்பரதவர் மிடல்சாய
    வடவடுகர் வாளோட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
    கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்         5
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
    அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
    எஞ்சா மரபின வஞ்சி பாட
    எமக்கென வகுத்த வல்ல மிகப்பல         10
    மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே யதுகண்
    டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
    விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்         15
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
    கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை
    வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்         20
    செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
    கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
    இருங்கிளைத் தலைமை யெய்தி
    அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.
    ---------

திணை: அது. துறை: இயன்மொழி: சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

உரை: தென்பரதவர் மிடல்சாய - தென்னாட்டிற் புகுந்து குறும்பு செய்த பரதவருடைய வலிகெட்டொடுங்க; வடவடுகர் வாள் ஒட்டிய - வடநாட்டினின்றும் போந்து குறும்பு செய்த வடுகரது வாட்படையைக் கெடுத்தழித்த; தொடையமை கண்ணி - நன்கு தொடுக்கப்பட்டமைந்த கண்ணியையும்; திருந்துவேல் தடக்கை - திருந்திய வேலேந்திய பெரிய கையையும்; கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் - கடுகிச் செல்லும் குதிரையைச் செலுத்தற்கென்று காலில் இடப்பெற்ற பரிவடிம் பென்னும் காலணியையும்; நற்றார்க் கள்ளின் - நல்ல தாரினையும் கள்ளினையுமுடைய; சோழன் கோயில் – சோழவேந்தனுடைய அரண்மனைக் கண்ணுள்ள; புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து - புதிது முளைத்த பிறைபோன்ற வெள்ளிய சுதையால் இயன்ற மாடத்தையுடைய; பனிக்கயத்தன்ன நீணகர் நின்று - குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்திய நெடிய பெருமனையின் முன்னே நின்று; என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி; எஞ்சா மரபின் வஞ்சிபாட - வலிகுன்றாத முறைமையினையுடைய பகைமேற் செல்லும் செலவாகிய வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்துப் பாட; எமக்கென வகுத்தவல்ல - எம்மைப் போலும் பரிசிலர்க் களித்தற்கெனச் செய்யப்படாதனவான; மிகப்பல - மிகப்பலவாகிய; மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை - மேன்மையான சிறப்பினையுடைய பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள்களுமாகிய செல்வத்தை; தாங்காது பொழிதந்தோன் - எம்மால் தாங்கமாட்டாத அளவில் வழங்கினான்; இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் - வறுமைால் வருந்திய என் கூற்றத்தார்; அதுகண்டு - அக் கொடைப் பொருளைக் கண்டு பேரார்வத்தோடு தத்தம் கைக்கொண்டு; விரல்செறிமர பின - செவித் தொடக்குநரும் விரல்களில் அணியத் தகுவனவற்றைக் காதில் அணிபவரும்; செவித்தொடர் மரபின விரல்செறிக்குநரும் - செவியல் அணியத் தகுவனவற்றை விலலில் அணிபவரும்; அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும் - அரைக்கு அமைந்தவற்றைக் கழுத்தில் அணிபவரும்; மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும் -கழுத்தில் அணிவனவற்றை இடையிற் கட்டிக்கொள்பவருமாய்; கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை - கடிய வலித்தகை அரக்ன் வௌவிய ஞான்றை - மிக்க வலியுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றபோது; நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் - சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த அழகிய அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய; செம்முகப் பெருங்கிளை இழைப்பொ லிந்தாங்கு - சிவந்த முகத்தையுடைய மந்திகளாகிய பெரிய சுற்றம் அவ் விழைகளைத் தாம் அணிந்து விளங்கக் கண்டோர் சிரித்து மகிழ்ந்தாற்போல; இருங்கிளைத் தலைமை யெய்தி - பெரிய சுற்றத்துக்குத் தலைமை தாங்கி; அரும்படர் எவ்வம் உழந்ததன் தலை - அவர் வறுமைகளைதற் பொருட்டுப் பல அரிய நினைவுகளாலுண்டாகும் துன்பத்தால் வருந்தியது போக; அறாஅ அருநகை - இனிதுபெற்றிகும் நீங்காத அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்; எ - று.

தென்பரதவர், தென்பாண்டிநாட்டின் கடற்கரையிலிருந்து குறும்பு செய்தவர். இவர்கள் சில காலங்களில் பாண்டியர்க்குப் பகைவராகவும், சில காலங்களில் துணைவராகவும் இருந்துள்ளனர். வடுகர் தொண்டைநாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கிலுள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர். பரிவடிம்பு குதிரையிவர்ந்து செல்பவர் அதனை விரையச் செலுத்தற்பொருட்டுக் காலில் அணியும் இரும்பு; இதுவடிம்பு போறலின் வடிம்பெனப்பட்டது; பிறரும், "மாவுடற்றிய வடிம்பு" எனக் கூறுதல் காண்க. மறுவில்லாத பிறைத்திங்கள் மிக வெள்ளிதாக இருக்குமாறு விளங்க, "புதுப்பிறையன்ன சுதை" என்றார். அரித்த ஓசை, அரியெனப் பட்டது; ஓசை கூட்டப்பெற்ற கிணையை "அரிக்கூடுகிணை" யென்றார்; "அரிக்கூடின்னியம்" (மதுரை: 612) என வருதல் காண்க. எஞ்சா மண்ணசைால் வந்த வேந்தன் எதிர்சென்று பொருது மேம்பட்டு மேற்சேறலின், "எஞ்சா மரபின் வஞ்சி" என்றார். வேந்தனது பரிசில் அவரவர் வரிசைக்கேற்ப வழங்கப்படுமாயினும். ஈண்டு அவரவர் வரிசை நோக்காது மிக்க பரிசில் தரப்பட்டதென்பதும் விளங்க, "எமக்கென வகுத்தவல்ல மிகப்பல மேம்படு சிறப்பினருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே" யென்றார். இலம்பாட்டால் அறிவு மயங்கிச் செபவது தெரியாது தன் சுற்றத்தார் விரைந்தனரென்பார், கலங்களை முறைமை மாறியணிந்து காண்பார்க்கு நகைவிளைத்தனர் என்றார். அரக்கன் வலியால் தகைமைபெற்றவனேயன்றி ஒழுக்கத்தனர் தகைமை பெற்றவனல்ல னென்பார், "வலித்தகை யரக்கன்" என்றார். இவ்வாசிரியர் காலத்தில் இராமராவணப்போர் வடபுலத்தவர்க்கும் தென்புலத்தவர்க்கும் நடந்த போரென்னும் பொய்க்கருத்து நாட்டில் நிலவவில்லை. மதர் - அழகு, ஒளிமிகுதியுமாம். செம்முகப் பைங்கிளை மந்திக்கூட்டம். எவ்வம் இருந்த எம்பால் நகைச் சுவை நுகரும் இன்பம் உளதாயிற்றென்பான், "எவ்வ முழந்ததன்றலை அறாஅ வருநகையினிது பெற்றிகும்" என்றான், தலைமையெய்திப் பெற்றது எவ்வமே; மகிழ்ச்சியன்று; சோழன் அருங்கலவெறுக்கை பொழிந்து இன்ப முறுவித் தான் என்பதாம். சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழிதந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமையெய்தி உழந்ததன்றலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: இயன் மொழியின் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. "பெற்ற பின்னரும் பெருவள னேத்தி, நடைவயிற்றோன்றிய இருவகை விடை" (தொல். புறத். 30) என்றசூத்திரத்திற்கு, "அவையாவன, தான் போதல் வேண்டுமெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும்" என்றும் உரைத்து, வளன் ஏத்தலும் இருவகை விடையுமாக மூன்று பகுதியாக்கி, வளன் ஏத்தியதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியர், இத்துறைக்கே இதனைக் காட்டி, "இதுதானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளனையுயர்த்துக் கூறியது" (தொல். புறத்: 36) என்பர். கிணைப்பொருநன் சென்னியின் நீணகர் நின்று வஞ்சி பாடுதலும், இளஞ்சேட் சென்னி பெருவளன் நல்குதலும், பெற்றுச் சென்ற பொருநனுடைய சுற்றத்தார் செய்கையுமெ இப் பாட்டு மூன்று பகுதிக்கண் அடங்கும். இளஞ்சேட் சென்னியின் கோயிலைக் கூறுபவன் அவனுடைய சிறப்பைப் பரதவர் மிடல் சாய்த்ததும், வடுகரது வாளாண்மை கெடுத்ததும் எடுத்தோதி, அவன் கோயில் வெள்ளிய சுதையாலமைந்து தண்ணிய காற்றும் ஒளியும் நிலவத்தக்க சிறப்புக் கொண்டிருந்த தென்பான் "புதுப்பிறையன்ன சுதைசெய்மாடத்துப், பனிக்கயத்தன்ன நீணகர்" என்று புகழ்கின்றான். வஞ்சியாவது, "எஞ்சா மண்ணாசை சேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று" (தொல். புறத். 7) எனவரும். எனவே, மண்ணாசைகொண்டு பகைத்துக் காலங்கருதியிருக்கும் வினைசெயல் வகையைப் பாடுவது வஞ்சியாயிற்று. இதனை விரித்துரைத்தற் கிடமின்மையின், "எஞ்சா மரபின் வஞ்சி பாட" எனச் சுருங்க வுரைக்கின்றான். இவ் வண்ணம் வஞ்சிப்போருடற்றித் தோற்ற வேந்தர் பணிந்து நல்கிய அருங் கலங்களைப் பொருநர் முதலாயினார்க்கு இளஞ்சேட் சென்னி நல்குகின்றானென்பான், "எமக்கென வகுத்த வல்ல...பொழிதந் தோனே" என்று இசைக்கின்றான். "பொழிதந்தோன்" என்றது, மழைபோல் சொரிந்தமை தோன்ற நின்றது. அருங் கலங்களைக் கண்ட கிணைப் பொருநன் சுற்றத்தார், "அவை தமக்கென வகுத்த வல்ல" என்பது காணாமல், சீதையின் "மதரணி கண்ட குரங்கின் செம்முகப், பெருங்கிளை இழைப் பொலிந் தாங்கு"க் கொண்டார் நகைக்கத்தக்க வகையில் அவ்வருங் கலன்களை அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தனர் என்று சொல்லியின்புறுகின்றான். சுற்றத்துக்குத் தலைமை தாங்கிய தான் பெற்று வந்தது" அரும்பட ரெவ்வம்" எனவும், இப் போது பெறுவது "அறாஅ வருநகை" எனவும், கூறுவது பொருட்பேற்றிற் பிறந்த மருட்கை.
---------

379. ஓய்மான் வில்லியாதன்

ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் நல்லியக்கோடனுடைய வழித்தோன்றலாவன். "அரம்பையின்கீழ்க் கன்றும் உதவுந் கனி" யென்பது போல, இவனும் நல்லியக் கோடன்போலக் கொடைக்கடன் இறுக்கும் விரிந்த உள்ளம் படைத்தவன். தன் முன்னோன் காலத்தே தனது ஊராகியமா விலங்கைக்குப் போந்து, அவனைப் பாடிப் பெருஞ் சிறப்புச்செய்யப் பெற்றவர் புறத்திணை நன்னாகனா ரென்பதை நன்கு அறிந்திருந்தான் இந்த வில்லியாதன். புறத்திணை நன்னாகனார் நல்லியக் கோடனுக்குப் பின் அரசு கட்டிலேறித் தன் முன்னோனைப் போலவே வண்புகழ் நிறைந்து விளங்கும் வில்லியாதனைக்கண்டு இப் பாட்டினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இதன்கண் தாம் வருங்கால வில்லியாதனுடைய கிணைப்பொருநன் ஒருவனைத் தாம் கண்டவாறும், அவன் தமக்குக் கூறியவாறும் எடுத்தோதி அவன்கூற்றே தாம் இப்போது வருதற்கோ ரேதுவாயிற் றென்பதுபட வுரைத்துள்ளார். "நெல்வயல் நிறைந்து சூழ்ந்தது மாவிலங்கை; அதற்குரியவன் வில்லியாதன். அவனுடைய கிணைப்பொருநன் யான்; நெய்யிற் பொரித்த பன்றியூனும் சோறும் நாட்காலத்தே தந்து பசிதீர்க்கும் பண்புடையவன் என் தலைவன். அவன் தாணிழல் வாழும் வாழ்வே எனக்கு உண்டாகுக; என் நாவிசையெழும் பாட்டு அவற்கேயுரியவாகுக" என்ற அப்பொருநன் தமர் கூற, நாகனார், அதுகேட்டு, "அத்தகைய வள்ளியோகைக் காண்டல் வேண்டுமென்றெழுந்த வேட்கை உண்ணின்று உந்த, நின் திரு மனைக்கண் எழும் இனிய புகை யெழுந்து மறுகெங்கும் பரவி மழை முகில்போன் மறைக்கும் ஊர்க்கும் யான் வந்தேன்" என்ற அக் கருத்தேயமைய இப் பாட்டினைப் பாடியுள்ளார். மாவிலங்கை ஆழ்ந்த அகழும் நீண்ட மதிலும் உடையது. இது தென்னார்க்காடு சில்லாவில் திண்டிவனம் தாலுகாவில் இன்றும் இப் பெயர் திரியாமல் இருக்கிறது.
ஓவியர் பெருமான் என்பது ஓய்மான் என மருவிற்று, அருமருந்தன்ன என்பது 'அருமந்த’ என்பதுபோல.

    யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை
    அவனே பெறுகவென் னாவிசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற்
    பின்னைமறத்தோ டரியக் கல்செத் து
    அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும்         5
    நெல்லமல் புரவி னிலங்க கிழவோன்
    வில்லி யாதன் கிணயேம் பெரும
    குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணல்விளர்
    நறுநெய் யுருக்கி நாட்சோ றீயா
    வல்ல னெந்தை பசிதீர்த் றீயா         10
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்டோய் தலைய குன்றம் பின்பட
    நசைதர வந்தனென் யானே வசையில்
    தாயிறூஉங் குழவி போலத்         15
    திருவுடைத் திருமனை யதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே;
    -----------

திணை: அது. துறை: பரிசிற்றுறை. ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது:

உரை: அவன் தாணிழல் வாழ்க்கையே யான் பெறுக - அவனது அருணிழலில் வாழும் எனக்கு உண்டாகுக; என் நாவிசை நுவறல் அவனே பெறுக - என் நாவால் புகழ்ந்து பாடப்படும் பாட்டிசையை அவன் ஒருவனே பெறுவானாக; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் - நெல்லறுக்குங் களமர் தம்முடைய கூரிய அரிவாள் வாய் மழுங்குமாயின், பின்னை - பின்னையும்; மறத்தோடு அரிய - மறங்குன்றாது அரிது வேண்டி; கல் செத்து - தீட்டுக் கல்லாகக் கருதி; அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் - சேற்றிற் படிந்திருக்கும் யாமையின் வளைந்த முதுகோட்டில் தீட்டும்; நெல் லமல புரவின் இலங்கை கிழவோன் - நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுயை மா விலங்கையென்னும் ஊர்க்குத் தலைவனான; வில்லியாதன் கிணையேம் - ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப் பொருநராவோம்; பெரும - பெருமானே; எந்தை - எங்கள் தலைவனான அவன் குறுந்தாளேற்றைக் கொழுங்கண் நல்விளர் - குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய வூன்துண்டங்களான நல்ல வெள்ளிய வூனை; நறுநெய் உருக்கி - நறிய நெய்யையுருக்கி அதன்கட் பெய்து பொரித்து; நாட்சோறு ஈயாப் பசி தீர்த்தல் வல்லன் - நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து எம்முடைய பசியைப் போக்க வல்லவனாவான்; என - என்று; கொன்வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற - விடியற்காலத்தே வந்து பாடும் மரபினையுடைய நின் கிணைப்பொருநன் வந்து எனக்குச் சொல்லவே; கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது - கேட்டதுகொண்டு நின்னைக் காணவேண்டுமென்றெழுந்த விருப்பம் அமையாமையால்; விண்தோய் தலையகுன்றம் பிற்பட - வானளாவிய உச்சியையுடைய குன்றுகள் பிற்பட்டொழிய; வசையில் தாயில் தூஉங் குழவி போல - குற்றமில்லாத தாயிடத்துப் பாலுண்டற் கோடிவரும் குழவிபோல; நசைதர வந்தனன் யானே - நின்பாற் பெறலாகும் பரிசின் மேற் சென்ற ஆசை செலுத்த வந்தேன் யான்; திருவுடைத் திருமனை ஐது தோன்று கமழ்புகை - செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை; வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் - பெய்தற்கு வரும் மழைமுகில் படிந்து மறைப்பது போலத் தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்; குறும்படு குண்டகழ் நீள் மதிலூர் - அரணை யடுத்த ஆழ்ந்த அகழினையும் நீண்ட மதிலினையுமுடைய வூர்க்கு
எ - று.

ஆங்க: அசைநிலை. நின்கிணைவன் எம்மைநோக்கி, பெரும, கிணையேம், நாட்சோறீயா பசி தீர்த்தல் வல்லன் எனக்கூற என இயைக்க. வில்லியாதனுடைய ஆதரவு பெற்று வாழும் வாழ்க்கை நலத்தை நினையுமாற்றால் தன் நன்றியறிவும் கடப்பாடும் ஓதுவான், "யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை" என்றும், "அவனே பெறுகவென் நாவிசை நுவற" லென்றும் கூறினான். ஏகாரம் இரு வழியும் தேற்றம்; எதிர்வரும் கிணைவனையும் ஆற்றுப்படுக்கும் குறிப்பிற்றாமென அறிக. தொழுவர், களவர், புரவு, விளைபுலம். இக்காலத்தும் மாவிலங்கை நாட்டவர் நெல்விளைவயலைப் புரவடை யென்ப. குறுந்தாளேற்றை யெனவே பன்றியாயிற்று. கொன், விடியற்காலம். விடியலிற் போந்து துயிலெடை நிலைபாடுவது கிணைப்பொருநன் கடனாதலின், "கொன்வரல் வாழ்க்கை நின் கிணைவன்" என்றார். வேட்கை தண்டா" தென்றும், அதன் வயப்பட்டெழும் உள்ளம் பொருணசை நிறைந்து உந்துதலின், நசைதர வந்தனெ னென்றும் கூறினார். வசையில் தாய் என்றது, தாய் தன் குழவியின் பசிநிலையைத் தானே நினைந்தறிந்து பால் சுரந்தளிப்பதுபோல நீயும் எம் குறிப்பறிந்து நல்குதல் வேண்டுமென்றவாறு. தூஉங்குழவி, தூஉவரும்குழவி. மனையிடத்தெழுந்த கமழ்புகை மறுகுடம் மறகை்கு மென்றது, நின்புகழெழுந்து உலக முழுதும் பரவும் என்றவாறாம். நின்கிணைவன், என, கிணைவன் கூறக் கேட்டதிற்கொண்டும், தண்டாது பிற்பட, நசைதர, ஊர், குழவிபோல, வந்தனென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: பரிசிற் றுறையாவது, "மண்ணகங் காவன் மன்னன் முன்னர், எண்ணிய பரிசில் இதுவென வுரைத்தன்று" (பு.வெ. மா. 9:5) என வரும். இவ்வகையில் உரைக்குமிடத்துத் தானே கூறுதலும், பிறர் கூறியதனைக் கொண்டெடுத்துக் கூறுதலும் எனப்பல வகை யுண்மையின், இப்பாட்டின்கண் புறத்திணை நன்னாகனார் கிணைப் பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து மொழிவது பரிசில் இதுவென வுரைப்பதாதலின், இப் பாட்டுப் பரிசிற்றுறை யெனத் துறை கூறப் படுவதாயிற்றென வறிக.வில்லியாதன் நல்கிய பெருவளம் பெற்ற கிணைவன் "யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை, அவனே பெறுக வென் நாவிசை" என்பது அவனது உள்ள நிறைவைக் குறிக்குமாயினும், பெற்ற வளத்தின் சிறப்பியல்பை வெளிப்படுத்தாமையினும், பெற்ற வளத்தின் சிறப்பியல்பை வெளிப்படுத்தாமையின், அதனையெடுத்து மொழிந்த நன்னாகனார், "குறுந்தாளேற்றை........பசி தீர்த்தல் என" என அவன் கூறியதனை இறுதிக்கண் உரைத்தார். கொன்னைச்சொல் பெருமையும் (தொல். இடை. 6) குறிக்குமாகலின், கொன்வரல் வாழ்க்கை யென்றதற்குப் பெருவளப் பேற்றால் பெருமிதத்தோடு வரும் வாழ்க்கையை யுடைய கிணைவன் எனினும் பொருந்தும். மாவிலங்கை யென்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனப் பகுதியில் மேன்மாவிலங்கை யெனவும் கீழ்மாவிலங்கை யெனவும் இரு கூறுற்று வழங்குகிறது. "நெல்லமல் புரவின் இலங்கை யென்றலின், இஃது இன்று போலப் பண்டும் நல்ல நெல்வளம் பொருந்தியவூராக இருந்திருந்த தென்பது குறிக்கத் தக்கது.

இப்பகுதியில் ஆதவில்லிக்கூத்தனூர் என்றோர் ஊருமுளது; அதனை நோக்கின், வில்லியாதனுடைய வழிவந்தோன் ஒருவன் ஆதன் வில்லி யெனப் பெயர் கொண்டிருந்து தன்காலத்துக் கூத்தன் ஒருவனுக்கு ஆதவில்லிக் கூத்தன் என்ற சிறப்பளித்து அப்பெயரால் ஆத வில்லிக் கூத்தனூரை நல்கினான் என்பது தெரிகிறது. சென்ற 1938 முதல் தமிழ் நாட்டில் எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களைப்பற்றிய ஆண்டறிக்கை களேனும் இதுகாறும் வெளியிடப்படாமையால், இதனை மேலும் ஆராய்ந்து காண்பதற்கு வாய்ப்பில்லை.
----------

380. நாஞ்சில் வள்ளுவன்

நாஞ்சில்மலைத் தலைவனான இவ்வள்ளுவனை ஒருகால் கருவூர்க் கதப்பிள்ளை யென்பார் காணச்சென்றார்.கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா ரென வேறொரு சான்றோர் இம்தொகை நூலுட் காணப்படுகின்றார். இவர் இச்சாத்தனார்க்குத் தந்தையெனக் கொள்ளல் தகும். இவர் வள்ளுவனைக் கண்டபோது, அவன் பெருவந் தந்து இவரைச் சிறப்பித்தான். அக்காலை இப்பாட்டுப்பாடப் பெற்றது. இதன்கண், "வள்ளுவன் தென்னவனுக்குத் தானைத் தலைவன்; நாஞ்சில்மலைக்குத் தலைவன்; பகைமையுற்றோர்க்கு நினைவுக்கெட்டா நெடுஞ்சேய்மையில் உள்ளவன்; நட்புக்கொண்டு தன்பால் வருவோர்க்கு அங்கையினும் அண்மையிலுள்ளவன்; அத்தகையனாதலால், எங்கும் எவர்க்கும் இன்மைத் துன்பம் வந்துவருத்துமாயினும் என் சுற்றத்தார் அத்துன்ப மின்றி இனிது மகிழ்ந்துள்ளனர்" என்று குறித்துள்ளார். இப் பாட்டு இடைிடையே சிதைந்துள்ளது. இதனிடையே "வல்வேற்சாத்தன் நல்லிசை" என்றொரு தொடர் காணப்படுகிறது. அதனை யடுத்து வரும் அடி சிதைந்து போனமையின் அஃது இன்னாரைக் குறிக்கிறதென்றறிய இயலவில்லை. டாக்டர். திரு.உ. வே. சாமி நாதையர் வல்வேற்கந்தனென்று பாடங்கொண்டு "கந்தனென்பது நாஞ்சில்மலைத் தலைவர் பரம்பரையிலுள்ளானும் இப்பாட்டுடைத் தலைவனுமாகிய ஒருவன் பெயர்" என்று கூறியுள்ளார். இந் நூலாராய்ச்சிக்கு கிடைத்த ஏட்டில் "வல்வேற் சாத்த னல்லிசை" யென்று காணப்படுகிறது.

    தென்பவ் வத்து முத்துப் பூண்டு
    வடகுன் றத்துச் சாந்த முரீஇ
    ................ங்கடற் றாணை
    இன்னிசையை விறல்வென்றித்
    தென்னவர் வயமறவன்         5
    மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய
    வேறுபெ...................த்துந்து
    தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன்
    துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்         10
    நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்
    வல்வேற் சாத்த னல்லிசை...................
    ...................சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்ன னாகன் மாறே யிந்நிலம்
    இலம்படு காலை யாயினும்         15
    புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே.
    -------

திணை: அது. துறை: இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

உரை: தென்பவ்வத்து முத்துப்பூண்டு - தெண்கடலிற் குளித்தெடுத்த முத்துமாலை சூடி; வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ - வட்மலையிற் பெற்ற சந்தனத்தை யணிந்து;................... கடல்தானை - கடல் போன்ற தானையையும்; இன்னிசைய விறல் வென்றி - இனிய புகழையுடைய போர் வென்றியையு முடைய; தென்னவர் வயமறவன் - பாண்டியருடைய வலிமிக்க தானைத் தலைவனும்; மிசைப் பெய்த நீர் மேலே - விசும்பிலிருந்து மழை பொழிந்த நீர்; கடல் பரந்து முத்தா குந்து - கடற்குட் சென்று முத்தாகும்; நாறிதழ்க்குளவியொடு கூதளங் குழைய - நறுமணம் கமழும் மலைமல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க; வேறு பெ...துந்து-; தீஞ்சுளைப்பலவின் நாஞ்சிற்பொருநன் - தீவியசுளைகளையுடைய பலா மரங்கள் நிறைந்த நாஞ்சில்மாலையையுடைய வனுமாகிய தலைவன்; துப்பு எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன் - வலிகொண்டு போர் செய்ய வரும் பகைவர்களுக்கு நினைவுக்கெட்டாத சேய்மையிலுள்ளவனாவன்; நட்பு எதிர்ந்தோர்க்கு அங்கை நண்மையன் - நட்புக்கொண்டு நேர்படுபவருக்கு அரவது உள்ளங்கைபோல நெருங்கிய அண்மையனாவன்; வல்வேற் சாத்தன் நல்லிசை யல்லது - வலிய வேலையிடைய சாத்தனது நல்ல புகழையன்றி; ..........சிலைத்தார்ப் பிள்ளையஞ்சிறார ் - வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த பிள்ளைப்பருவத்தையுடைய சிறுவர்கள்; அன்ன னாகன்மாறு - அத்தன்மையனாதலால்; இந்நிலம் இலம்படு காலையாயினும் - இந்நிலவுலகத்து மக்கள் வறுமையுற்று வருந்துங்காலம் வந்தபோதிலும்; பூத்த என் கடும்பு புலம்பல் போயின்று - பொற்பூவும் பொன்மாலையும் கொண்டு மகிழும் என் சுற்றத்தார் வருந்துதல் இலாயினர்; எ - று.

தென்கடல் முத்துக்கும் வடமலை சந்தனத்துக்கும் பெயர் பெற்றவையாதலின், அவற்றை விதந்தோதினார். வடமலை யென்றது இமய மலையை; வேங்கடலையுமாம். வடவர் தமிழ்நாட்டிற்குள் வந்தபோது ஒருவகைச் சந்தனங் கொணர்ந்தனரென்ப; "வடிவர் தந்த வான்கேழ் சந்தம்" (அகம். 340) என்பது காண்க. போர்செய்து பெற்ற வென்றி யென்பது விறல் வென்றி யெனப்பட்டது. பாண்டிவேந்தர்க்குத் துணையாய் அவன் தானைக்குத் தலைமை தாங்குபவன் என்றற்குத் "தென்னவர் வயமறவன்" என்றார். கடலில் மழைபெய்யுங்கால் முத்தீனும் நத்தைகள் நீர்மேல் வந்து தம் ஓட்டைத் திறந்து கொண்டிருக்குமென்றும், ஒரு துளி தன் ஓட்டிற்குள் வீழ்ந்ததும், ஓட்டை மூடிக்கொண்டு நீர்க்குட் சென்று விடுமென்றும், அதுவே பின்பு முத்தாகு மென்றும் பண்டையோர் கருதியிருந்தனராதலின், அக்கருத்தே தோன்ற, "மிசைப் பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து", என்றார். ஆகுமென்னும் உம்மை உந்தாயிற்று. நாஞ்சில், பொதியின் மலைத் தொடர்களுன் ஒன்று; இப்போது இது மருத்துமலை என வழங்குகிறது; முன்னாளில் இது நஞ்சிலாமலை என வழங்கிற்றென்பர். இது நாஞ்சில் நாட்டில் நாகர்கோயிலுக்கும் தென் குமரிக்கும் இடையில் உளது. இம் மலைக்கு வடகிழக்கில் உள்ள வள்ளியூர் இவ்வள்ளுவரது ஊராகலாம் என்பர். அவ்வூரில் பண்டைநாளில் இனியகோட்டையிருந்ததெனக் கல்வெட்டு (A. R. No. 254 of 1927-28) கூறுகிறது. "உயர் சிமைய வுழாஅ நாஞ்சில்" (புறம். 139) என்று பிறரும் கூறுதல் காண்க. துப்பு, வலி; ஈண்டு அதனுடைமை காரணமாகக் கொள்ளும் பகைமை மேனின்றது. பகைமைகொண்டு போரெதிர்ந்தோர் பின்பு பகைமையின்றி அன்பு காட்டி யொழுகினா ராயினும், "பழம்பகைநட்பாதல் இல்" (பழ. 296) என்ற முதுமொழிகொண்டு அவரை நெருங்கவிடாத நேர்மை யுடையனென்றற்கு, "துப்பெதிர் தார்க்கே யுள்ளாச் சேய்மையன்", எனவும் உண்மையன் புடையார்க்குக் கைபோன் மிக்க வுதவியினைச் செய்பவனென்றற்கு, "நட்பெதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்" எனவும் எடுத்துரைத்தார். நணிமை, நண்மையென வந்தது. சாத்தன், இவனை வள்ளுவனென்றோ, அவன். முன்னோருள் ஒருவ னென்றோ இன்னாரென அறிய இயலவில்லை. மறவனும், பொருனனும், சேய்மையனும் நண்மையனுமாகிய சாத்தன் என இயையும். புலம்பு, ஆதரிப்பாரின்றித் தனிமையுற்று வருந்தும் வருத்தம். இலம்படுகாலை - வற்கடம். பூத்தம் செல்வத்தாற் சிறந்திருத்தல்.

விளக்கம்: இயன்மொழியாவது இன்னதென முன்னர்க் கூறினாம். திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரைக் கண்ட பிற்காலத்தார் இந் நாஞ்சில் வள்ளுவனைக் காணாதொழிந்தனர்; கண்டிருப்பின் பிறந்தவரென்றும் பொய்க்கதைகள் புனைந்து பொய் கூறியிருக்கமாட்டார்கள். நாஞ்சில் மலைக்குத் தலைவனாகிய வள்ளுவனும், திருக்குறளாசிரியராகிய திருவள்ளுவனாரும் வள்ளுவன் என்ற சிறப் புப்பெயர் கொண்டு விளங்கியவராவர். இவர்கள் வழிவந்தோர் வள்ளுவர்களாய் இடைக்காலத்தே அரச காரியம் பார்த்துவந்த மேலோராவர். மலையாளசில்லாவைச் சேர்ந்த பொன்னானிப்பகுதியிலுள்ள சுகவுரத்துக் கல்வெட்டொன்று, "சொகிரத்துப் பருடையாரும்...இராயசேகரராயின வள்ளுவரும் கூடிச் செய்த கச்சமாவது" (S.I. Ins. Vol. V No.772) என வள்ளுவர்களை "இராயசேகரர்" என்பது இக்கருத்தை வற்புறுத்தும். இப் பாட்டு இடையே பெரிதும் சிதைந்துள்ளது. "தென்னவர் வய மறவன்" என்றும், "நாஞ்சிற் பொருநன்" என்றும், வருவன இடைக்கால வள்ளுவர்கள் "இராயசேகரராய்" இருந்ததற்குத் தக்க சான்றாகும். துப்பெதிர்ந்தோர், பகைத்தெழுந்தோர்: "கடுமான் கோதை துப்பெதிர்ந்தெழுந்த நெடுமொழி மன்னர்" (புற்ம. 54) எனவும், "துப்பி னெவனாவர் மற்கொல் துயர்வரவு, நட்பினுள் ஆற்றுபவர்" (குறள். 1165) எனவும் வருதல் காண்க. வள்ளுவனது கொடைநலத்தைச் சிறப்பித் துரைப்பாராய், "இந்நிலம் இலம்படு காலையாயினும் பூத்தவென் கடும்பு புலம்பல் போயின்று" என்று கூறினார். மறவன், பொருநன், சேய்மையன், நண்மையன், வல்வேற் சாத்தன் என்றலின், இப் பாட்டுடைத்தலைவன் நாஞ்சில் வள்ளுவன் சாத்தன் என்று பெயர் கூறப்படுவன்போலும்.
------------

381. கரும்பனூர்கிழான்

கரும்பனூர் என்பது தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத் திலுள்ள தோரூர். திருக்கழுக்குன்றத்துக் கல்வேட்டொன்று, "கரும்பனூர் வணிகன் ஆதித்த" (A.R. No. 76 of 1932-3) னென்பவனைக் குறிக்கின்றது. இவனை ஒருகால் நன்னாகனாரென்னும், சான்றோர் கிணைவரும் பாணருமாகிய சுற்றத்தாருடன் கரும்பனூர் சென்று கண்டார். அவன் இவர்களை வரவேற்று நல்விருந்து செய்து கிறப்பித்தான். அங்கே அவர்கள் சின்னாள் தங்கியிருந்து பின்பொருநாள் தம்மூர் போதற்கு அவன்பால் விடைவேண்டினர். அவன் சான்றோர் பிரிவைப் பெரிதும் விரும்பானாய் அஞ்சிச் சின்னாள் தன்பால் இருக்க வைத்தான். இதற்கிடையே நாட்டில் வறனுண்டாயிற்று; கோடையும் மிகுந்தது. மீளவும் ஒருநாள் அவர் விடை வேண்டவே, அவர்க்கும் அவர் சுற்றத்தார்க்கும் மிக்க செல்வத்தை நல்கி நீவிர் நாடுவறங்கூர நின்று வருத்தும் கோடை நீங்கிய காலத்து ஈயாத புல்லராகிய வேந்தர் மனைக்குச்சென்று வருந்திப் பாடித் துன்புறல் வேண்டா; எம்பால் வருக; யாம் நுமக்கு வேண்டுவன நல்கிப் போற்றுவேம்; நீவிர் சேய்மையிலிருப்பினும் இந்நாட்டிலிருப்பினும் கவலையுறாது; வருக; அக்காலை யாம் செய்வதனை இது கொண்டறிந்து கொள்க" என்றான். அவன் அறத்துறையம்பிபோல் விளங்கு வதனை இப் பாட்டின்கண் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

    ஊனு மூணு முனையி னினிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்துறுந் தாற்றி யிருந்தனெ மாகச்
    சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென         5
    யாந்தன் னறிந மாகத் தான்பெரி
    தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப்
    பயம்பகர வறியா மயங்கரின் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண்         10
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி
    விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின்
    இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு         15
    தெருமர லுயக்கமுந் தீர்க்குவெ மதனால்
    இருநிலங் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச்
    சேயை யாயினும் மிவணை யாயினும்
    இதற்கொண்டறிநை வாழியோ கிணைவ         20
    சிறுநனி, ஒருவழிப் படர்கென் றோனே யெந்தை
    ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்
    உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும்
    அறத்துறை யம்பியின் மான மறப்பின்
    றிருங்கோ ளீராப் பூட்கைக்         25
    கரும்ப னூரன் காதன் மகனே.
    ----------

திணையுந் துறையுமவை. கரும்பனூர்கிழானைப்புறத்திணை நன்னாகனார்
பாடியது.

உரை: ஊனும் ஊணும் முனையின் - இறைச்சியும் சோறு மாகியவற்றைத் தெவிட்டி வெறுத்தால்; பாலிற்பெய்தவும் பாகிற்கொண்டவும் - பால் கலந்து செய்தனவும் வெல்லப் பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை; இனிதென அளவுபு கலந்து - இது மிக வினி தென்னுமாறு நன்கு கலந்து;மெல்லிது பருகி - மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்துண்டு; விருந்து உறுத்து விருந்தாகி; ஆற்றி இருந்தெனமாக - பசிபோக்கிப் பன்னாள் இனிதிருந்தேமாக; பெரும - பெருமானே; எம் விழவுடைநாட்டுச் சேன்மோ என - எம்முடைய விழாப் பொருந்திய நாட்டிற்குச் செல்ல வேண்டினேம் விடையருளுக என்று; யாம் தன் அறியுநமாக - யாங்கள் அவனுக்கு அறிவித்தேமாக; தான் பெரிய அன்புடைமையின் - அவன் தான் மிக்க அன்புடையனாதலால்; எம் பிரிவு அஞ்சி - எம்மைப் பிரிதற்கு அஞ்சி; துணரியது கொளாவாகிப் பழமூழ்த்து - குலை குலையாகப் பூத்துள்ளதாயினும் எவ்வுயிர்களாலும் கொள்ளப் படாவாய்ப் பழுத்துக் கனிந்து; பயம் பகர்வறியா - பயன்படுதற்கியலாதவாறு; மயங்கரில் முதுபாழ்ப் பெயல்பெய்தன்ன - முட்கள் கலந்த கொடிகள் பின்னிக்கிடக்கும் புதரிடையே நின்று வற்றும் முதிய பாழிடத்தின்கண் மழைபெய்தாற் போன்ற; செல்வத் தாங்கண் - செல்வமிக்க இடத்தையுடைய; ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி - இரவலர்க்கு ஈயாத வேந்தர் முற்றத்தில் நின்று; சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி - துண்டித்த வார்களாற் கட்டப்பட்ட சிதர்ந்த புறத்தையுடைய தடாரிப்பறையை; ஊன் சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி - ஊனால் தெற்றப்பட்ட தெளிந்த கண்ணிடத்தே யறைந்து; விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின் - விரலால் நொடிக்கும் நொடி விசையின் மேம்பட்ட குற்றமில்லாத தாளத்தோடு கூடிய பாட்டால்; இலம்பாடகற்றல் யாவது - வறுமையைப் போக்குவது கூடாதாம்; புலம்பொடு - ஆதரவற்ற தனிமைத் துயரத்துடனேஇ தெருமரம் உயக்கமும் தீர்க்குவெம் - வள்ளியோரைச் சூழ்ந்து திரியும் வருத்தத்தையும் யாம் போக்குவோம்; அதனால்-; இரு நிலம் கூலம் பாற - பெரிய இந்நிலவுலகம் கூலமின்றிக் கெடுமாறு நின்ற; கோடை - வேனில் வெம்மை மிக்க வறற்காலம்; வருமழை முழக்கிசைக்கு ஓடியபின்றை - வருகின்ற மழை முகிலினது முழக்கிசையுடன் பெய்து நீங்கியபின்பு; சேயைாயினும் - நெடுந்தொலைவிலுள்ள நாட்டில் இருப்பினும், இவணையாயினும் - இந்த நாட்டிடத்தே யிருந்தாயாயினும்; இதற்கொண்டு அறிநை - இது கொண்டு நினைவாயாக; கிணைவு - கிணைவனே; வாழி - வாழ்வாயாக; சிறுநனி ஒருவழிப் படர்க - ஒருவழியே சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக; என்றோன் - என்று சொன்னான்; எந்தை - எங்கள் தலைவன்; ஒலி வெள்ளருவி வேங்கடநாடன் - ஒலிக்கின்ற வெள்ளிய அருவி பொருந்திய வேங்கடநாட்டுக் குறியவன்; உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் - அறத்துறை அம்பியின் மான பெரியவராயினும் சிறியவராயினும் வருவோரை இருகரையினும் மாறிமாறிக் கொண்டுபோய்விடும் நீர்த்துறையிடத்துள்ள அறத்துக்குழைக்கும் தெப்பம் போல; மறப்பின்று - மறவாமல்; இருங்கோள் ஈராப்பூட்கை - பெரிய கடைப்பிடியும் பிறரால் ஈர்த்து விலக்கப்படாத கொள்கையையுமுடைய; கரும்பனூரன் காதல் மகன் - கரும்பனூர் கிழானுக்கு அன்புடைய மகன்; எ - று.

ஊனுணவும் நெல்லுணவும் மிகவுண்டலால் வெறுப்புணடாகிய வழி, அதனை மாற்றப் பாற்பெய்து சமைத்த பாயசம் போல்வனவும் வெல்லப்பாகுகொண்டு மிக்க இனிப்புச்சுவை கனிந்த பண்ணிகாரங்களும் உண்பது கூறுவான், "பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்" என்றான். ஊனுஞ் சோறுந்தின்று பல்கூர்மை மழுகிக் கெட்டமை தோன்ற "அளவுபு கலந்து மெல்லிது பருகி" யென்றார். மென்மையானவற்றைத் தின்றல் நிகழுமாகலின். இருந்தன மென்றது, பன்னாள் இனி திருந்தமை புலப்படுத்தி நின்றது. அறிவித்தனமென்பது அறியுந விடைவேண்டற்குக் காரணம் கூறுவான், "எம் விழவுடை நா" டென்றான். விழக்காலத்தில் பிரிந்தவர் தத்தம் ஊர் மீளச்செல்லயுடையதாதல். முட்கள் நிறைந்த கொடிகள் பின்னிக் கிடக்கும் புதரிடையே பூத்துக் கனிந்திருக்கும் பழங்கள் கொள்ளப்படாவாகலின். "பழமூழ்த்துப்பயம் பகர்வரிய மயங்கரில்" என்றார். மயங்கரில் ஊழ்த்த பழமும் முதுபாழிற் பெய்த மழையும் பயன்படாதவாறு பாடும்பாட்டும் பயன்படாவென்பது கருத்து. ஊன்சுதிர் - தோலின்கண் ஒட்டிக்கிடந்து காய்ந்து கொருக்காக இருக்கும் ஊன்பிசிர் வலத்தல், தெற்றுதல். பாட்டிசை முடுகுமிடத்துத் தாளத்தின் கடுமைக்கும் பாணி" யென்றும், அவ்வாற்றால் பாட்டின் அமைதி குறைவுபடாமை தோன்ற "அரலையில் பாணி" யென்றம் கூறினார். யாவது, ஈண்டு, இன்மை குறிந்து நின்றது. தெருமரல் உயக்கம், வள்ளிோர் உண்மை சூழ்ந்து அவரிருக்கும் இடநாடிப் பறவைபோலத் திரிவதாற்பிறக்கும் துன்பம். அறிநை மறவாதொழிக. அறிதல், ஈண்டு செய்ந்நன்றியறிதல் என்புழிப்போல நின்றது. கோள், கடைப்பிடி. கண்ணன்ன கேளிர் வந்து விலக்கினும் விலகாத உரம்பற்றி, "ஈராப் பூட்கை" யென்றார். இருங்கேள் ஈராப் பூட்கை யென்றும் பாட வேறுபாடுண்டு. கலந்து, பருகி, விருந்துறுத்து, ஆற்றி இருந்தனமாக, அறியுநமாக, நாடன், மகன், அஞ்சி, தோன்றி, ஒற்றி, அகற்றல் யாவது; தீர்க்குவெம், அதனால் கிணைவ, சேயையாயினும் இவணையாயினும், அறிநை படர்க என்றானெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

விளக்கம்: கரும்பனூர் என்னும் தொண்டைநாட்டூர் இப்போது கரும்பூர் என வழங்குகிறது. ஊனும்...ஊணும் விருந்துறுத்தாற்றி யிருந்தெனமாக" என்பது கரும்பனூர்கிழான் கிணைப்பொருநர்க்குச் செய்த விருந்தின் சிறப்புணர்த்தி நிற்கிறது; கரும்பனூர்கிழான் கிணைவனுக்கு விடைதருங்கால், நீவிர் ஈயா மன்னர் புறங்கடைத்தோன்றி, அரலையில் பாணியின் இலம்பா டகற்றல் யாவது, புலம்பொடு தெரு மரல் உயக்கமும் தீர்க்குவெம்; இலம்பாடு உற்றவழி இவணையாயினும் சேயையாயினும் எம்பால் வருக என்பான், "இதற்கொண்டறிநை" என்பது, அவனது வேளாண்மையை விளக்கி நிற்கிறது. இனி விழவு தோன்றிய காலத்துப் பிரிந்தோர், மனையகம் வந்து சேர்தல் வேண்டுமென விழைவது இயல்பாதலை, "மழைகால் நீங்கிய மாக விசும்பின், குறுமுயன் மறுநிறங் கிறர மதிநிறைந், தறுமீன் சேரு மக லிரு ணடு நாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி, பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னர வருகதில் அம்ம (பிரிந்த காதலர்)" (அகம். 141) என்று சான்றோர் கூறுவது காண்க. "பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி், நடைவயின் தோன்றிய விருவகை விடையும்" (தொல். புறத்.30) என்றவிடத்து இருவகை விடையாவன: "தான் போதல் வேண்டுமெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும்" என்றுரைத்துத்தான் பிரிதல் வேண்டிக் கூறிதற்கு இளம்பூரணர் இப்பாட்டைக் காட்டுவர்."தாவில் நல்லிசை" (தொல். புறத். 36) என்ற சூத்திரத்தில், "பரிசில் கடை இய கடைக்கூட்டுநிலை" என்பதில், "நிலையென் றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க" என்று ஓதி, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, "இது மேலும் இக்காலத்தும் இங்ஙனம் தருவலென்றானெனக் கூறினமையின் அவன் பரிசில்நிலை கூறிற்" றென்பர் நச்சினார்க்கினியர்.
------------

382. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளிபால் ஆசிரியர் கோவூர் கிழார் பேரன்புடையவ ரென்பதை முன்பேகண்டுள்ளேம்.நலங்கிள்ளி சிறந்த போராண்மையும் மிகுந்த கைவண்மையும் உடையன். ஒருகால் அவர் நலங்கிள்ளியிட மிகுந்த பொருநர் சிலரைக் கண்டார். அவர்கள் வறுமைச் சிறுமையின்றி மிக்க மகிழ்ச்சியுடனி ருந்தனர். அவர்களோடு கோவூர்கிழார் சிறிது போது உரையாடினார். பொருநர ் தலைவன் தான் சோழநாட்டு மறம்பாடும் பொருநன் என்றும், தானும் தன் சுற்றததாரும் சோழன் நலங்கிள்ளியின் போர்க்களம் பாடும் பொருநர் என்றும் கூறி, "யாங்கள் பாடினால் சோழன் நலங்கிள்ளியைப் பாடுவோமே யன்றிப் பிறரைப் பாடுவதை விரும்ப மாட்டோம்; அவனையே பாடுவோம்; அவன் முயற்சி வெல்க," என்று சொல்லி, "அவன்பாற் செல்லின், நின்பசித்துன்பம் நீங்க அவன் நெய்யிற் பொரித்தவூனும் பல்வகைச்சோறும் சுவையுடைய பிறவும்நல்குவன்" என்று ஆற்றுப்படுத்தினர். இதனான் வியப்பு மிகக்கொண்ட கோவூர்கிழார் சோழனையடைந்து, "பெரும, நின் பொருநர் இவ்வாறு கூறுகின்றனர்; அதுகேட்டு நீ முன்னால் பரிசில் நல்கிச் செலவிட்ட பொருநராகிய சிறாருடனே யான் வழிவினாய் வந்துள்ளேன். என்னைப் பாம்புபோல் தீண்டி வருத்தும் வறுமை நீங்க, யானும் என்பால் வருவோர்க்கு வழங்குதற் கேற்ப வளம் பல தந்து விடுவாயாக; இவ்வியனுலகு, பலரும் அறிய, நினதே யாகும்; அவ்வாறே, இக்கிணைப்பறை எனதாகும். இக்கிணையின் கண் சிறுகோலால் எறியுந்தோறும் நுடங்குவதுபோல் பிற வேந்தர் கேட்குந் தோறும் உள்ளம் நுடங்குமாறு நின் மாண்புகழை அவர் அவைக்களஞ் சென்று அவர் எதிரே நின்று பாடுவேன், காண், என்று கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார்.


    கடற்படை யடற்கொண்டி
    மண்டுற்ற மறனோன்றாள்
    தண்சோழ நாட்டுப் பொருநன்
    அலங்குளை யணியிவுளி
    நலங்கிள்ளி நசைப்பொருநரேம்         5
    பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்
    அவற்பாடுது மவன்றாள் வாழியவென
    நெய்குய்ய வூனவின்ற
    பலசோற்றா னின்சுவைய
    நல்குவனின் பசித்துன்பற         10
    என்பநின் பொருநர் பெரும வதற்கொண்டு
    முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
    யானும், ஏழ்மணியங் கேழணி யுத்திக்
    கட்கேள்விக் கவை நாவின்
    நிறனுற்ற வராஅப் போலும்         15
    வறனொரீஇ வழங்குவாய்ப்ப
    விடுமதி யத்தை கடுமான் றோன்றல்
    நினதே, முந்நீ ருடுத்த விவ் வியனுல கறிய
    எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல்         20
    எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர்
    கேட்டொறு நடுங்க வேத்துவென்
    வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.
    ----------

திணை: அது. துறை: கடைநிலை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

உரை: கடற்படை அடல் கொண்டி - கடலிற் படை கொண்டு சென்று பகைவரை யடுதலாற் கெள்ளலாகும் பெரும் பொருள்; மண்டுற்ற மற நோன்றாள் - நெருங்கிப் பெருகிய மறம் பொருந்திய வலிய தாளையுடைய; தண் சோழநாட்டுப் பொருநன் - தண்ணிய சோழரது நாட்டில் வாழும் பொருநன்; அலங்குஉளை அணி இவுளி நலங்கிள்ளி - (யாங்கள்) அசைகின்ற தலையாட்டமணிந்த குதிரைகளையுடைய நலங்கிள்ளியது; நசைப் பொருநரேம் - விருப்பத்துக்குரிய பொருநராவோம். பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் - பிற வேந்தரைப் பாடி அவர் ஒன்று தரப்பெறுவதை விரும்ப மாட்டேம்; அவன் தாள்வாழிய என - அவ னது முயற்சியால் நடைபெறும் அரசியல் வாழ்வதாக என்று; அவற்பாடுதும் - அவனையே பாடுவோம்; நெய் குய்ய ஊன் நவின்ற பல சோற்றான் -நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட வூன் கலந்த பலவகையான சோற்றுடனே; இன் சுவைய - இனிய சுவையுடைய பிற பொருள்களையும்; நின் பசித்துன்பற நல்குவன் - நீ செல்லின் நின் பசித் துன்பம் நீங்குமாறு கொடுப்பன்; என்ப நின் பொருநர் - என்று கூறாநின்றனர் நின்னுடைய பொருநர்; பெரும - பெருமானே; அதற்கொண்டு - அதனால்; முன்னாள்விட்ட மூதறி சிறாரும் - முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறையறிந்த சிறுவரும்; யானும்-; ஏழ்மணியங்கேழ் அணி உத்தி - எழுச்சியையுடைய மணியையும் நிறம் பொருந்திய பொறிகளையும்; கட்கேள்விக் கவைநாவின் - கண்ணிற் பொருந்திய செவியையும் சுவைத்த நாவையுமுடைய; நிறன் உற்ற அரா அப் போலும் - நிறம்பொருந்திய பாம்பு தன் தோலை யுரிந்து நீக்கினாற்போல; வறன் ஒரீஇ - வறுமையின் நீங்கி; வழங்கு வாய்ப்ப - பிறர்க்கும் யாம் வழங்குதல் அமைய; கடுமான் தோன்றல் - கடுகிச் செல்லும் குதிரைகளையுடைய தலைவனே; விடுமதி - எமக்கு வேண்டுவன தந்து விடைதருவாயாக; முந்நீர் உடுத்த இவ்வியனுலகு அறிய நினதே - கடல் சூழ்ந்த இவ்வகன்ற உலகம் சான்றோர் பலரும் அறிய நின்னுடையதேயாகும்; கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை அறிய - எனது நெட்டியின் காம்புபோன்ற தெளிந்த கண்கணையுடைய பெரிய தடாரிப்பறை பலருமறிய என்னுடையதாதல்போல; கண்ணகத்து யாத்த நுண்ணரிச் சிறுகோல் - இதன் கண்ணிற் கட்டப்பட்ட நுண்ணிய அரித்த வோசையை யெழுப்பும் சிறியகோலானது; எறிதொறும் - அடிக்குந்தோறும்; நுடங்கியாங்கு - தடாரியின் கண் நடுங்குவது போல; நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க - நின் பகைவர் கேட்குந்தோறும் மனம் நடுங்குமாறு; பிறர் வேத்தவையான் - பிற வேந்தருடைய அவையின்கண்; வென்ற தேர் ஏத்துவென் - நின்னால் வெல்லப்பட்ட தேர்களைச் சொல்லிப் பாராட்டிப் புகழ்வேன்; எ - று.

கலங்களிற் சென்று அருமணம் (பர்மா), சாவகம் சீனம் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து பெரும்பொருள் ஈட்டி வருவது பண்டைத் தமிழர் மரபு. அந்நிலையிற் பகைவர் கடலிற் கலஞ்செலுத்திப் போந்து சூறையாடுபவாதலின் அவர்களொடு பொருது அவர் செய்யும் குறும் பினைக் களைதல் வேண்டிக் கடற்படை வேண்டியிருந்தமையின், கடற்படையும் அதுகொண்டு பெறும் பெரும்பொருளும் எடுத்தோதப் பட்டன. சோழன் நலங்கிள்ளி யைப் பாடிய நாவால் பிறவேந்தரைப் பாடி அவர்தரும் பொருளை விரும்பேம்; பொருள் குறித்துப் பிறர்பாற் செல்லவேண்டாத அளவு அவன் எங்கட்கு வேண்டுவன நிரம்பத் தருவன், அவனது நெடுவாழ்வே எங்கட்குப் பெருஞ்செல்வமாம் என்பான், "அவற் பாடுதும் அவன்றாள் வாழிய" என்றான். முன்னாள் விட்ட சிறாரென்றது. முன்னாள் பரிசில் தந்துவிடப்பட்ட சிறுவர். ஆண்டால் இளையராயினாரை, "சிறாஅர்" என்றார். மூதறிவு, பொருநர்க்கெனப் பழைமையாய்த் தொன்றுதொட்டு வரும் பாடற்றுறை யறிவு. ஏழ்மணி, எழுச்சியையுடையமணி. எழுச்சி, உயர்ந்தமதிப்பு. பாம்பின் கட்பொறியே செவிப்புலனையு முடைய தென்பது பண்டையோர் கொள்கை; பாம்பைக் கட்செவியென்றும் வழக்கும் நாட்டில் உண்மையறிக. பாம்பிற்கு அதன் தோல்போல எமக்கு வறுமை யமைந்துளது என்பார், "அராஅப்போலும் வறனொரீஇய" என்றார். வழங்கு: முதனிலைத் தொழிற்பெயர். கிணையின் கண்ணிடத்தே சிறுகோலைக் கட்டி வைப்பது இயல்பு. "நுண்கோற் சிறுகிணை" (புறம். 383) என்பர் பிறரும். கிணைவன் கூற்றாதலின் அதற்கேற்ப அவன் பயின்ற சிறுகோலும் தடாரிக்கண்ணின் நடுக்கமும் உவமமாகக் கூறப்பட்டன. சோழ நாட்டுப் பொருநன்; பொருநரேம்; வேண்டேம்; வாழிய எனப்பாடுதும், நின் துன்பற நல்குவன் என்ப; பெரும, அதற்கொண்டு, சிறாரும் யானும் அராஅப் போலும் வறன்ஒரீஇ, வாய்ப்ப, தோன்றல், விடுமதி, உலகம்நினதே; மாக்கிணை உலகறிய எனதுவென் சிறுகோல் நுடங்கியாங்கு, பகைஞர் நடுங்க, வேத்தவையான் ஏத்துவென் எனக் கூட்டி வினை முடிவு செய்க. அத்தை: அசைநிலை.

விளக்கம்: கடை நிலையாவது, ஆசிரியர் தொல்காப்பியனாரால் "பரிசில் கடைஇய கடைக்கூட்டுநிலை" (தொல். புறத் 36) எனப்பட்டதாக, புறப்பொருள் வெண்பாமாலைக்காரரால் பரிசினிலை யெனப்பட்டது. அஃதாவது "புரவலன்மகிழ்தூங்க, இரவலன் கடைக்கூடின்று" (பு.வெ.மா. 9:25) என வரும். "பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை" யென்றதனை, பரிசில் கடைஇய நிலையும் கடைக்கூட்டு நிலையும் என்று இரண்டாகக் கொண்டு, கடைக்கூட்டு நிலையாவது "வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலை" யென்றுரைத்து, "நிலையென்றத னானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க" என்பார் நச்சினார்க்கினியர். ஆசிரியர் கோவூர்கிழார் இப்பாட்டு, சோழன் நலங்கிள்ளியின் கிணைப்பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து மொழி்யும் பகுதியும், தான் வேண்டும் பரிசுநிலை கூறும் பகுதியுமென்று மூன்று பகுதிகளையுடையது. கிணைப்பொருநன் கூறுவனதாம் நன்கறிந்தனவாயினும், தாம் நேரே வேந்தன் முன்னின்று கூறுதல் சிறப்பன்மையின், கிணைவன் கூற்றில் வைத்துக்கொண்டு கூறினார்; அவன் கூறியன தமக்கும் உடன்பாடே யென்பதும் இதனால் பெறுவித் தாரென அறிக. "பிறர்பாடிப் பெறல்வேண்டேம், அவற்பாடுதும் அவன்றாள் வாழிய" எனப் பொருநன் கூறுவதனோடு, புறத்திணை நன்னாகனார், "யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, அவனே பெறுகவென் னாவிசை நுவறல்" (புறம். 379) என்பது ஒப்பு நோக்கத்தக்கது. இவ்வாறு கூறுவது கிணைப்பொருநர் இயல்பென அறிக. அரவின் தோல் புதுத்தோலுண்டாக நீங்குவதுபோல, வறுமையும் செல்வமுண்டாக நீங்கத் தக்கதென்பது விளங்க, "அராஅப்போலும் வறன் ஒரீஇ" என்றார். எனக்கு வழங்குவதால், நின் பகையொடுக்கம் பயனாகக் காண்பாய் என்பார், "நின்பகைஞர்...வேத்தவை யானே" என்றார்.
----------

383. மாறோக்கத்து நப்பசலையார்

மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். இஃது இடைக்காலத்துக் குட நாட்டையும் முள்ளிநாட்டையும் தன்கண் கொண்டிருந்தது. இப் பகுதியிலுள்ள மாறமங்கலத்தை நற்குடி வேளாளர் வராலறென்னும் தமிழ்நூல் (அகத். 38) ஓகமாநக ரென்று குறிக்கிறது. மாறமங்கலமாகிய ஓகமாநகர்ப் பகுதி குட நாட்டுப் பகுதி; மாறோக்கத்து முள்ளிநாட்டில் கல்லிடைக்குறிச்சியும் சேரன்மாதேவியும் இருந்தன எனக் கைந்நிலையென்னும் நூற்குறிப்பால் அறிகின்றோம். இப்பகுதிக்குரியராகிய ஆசிரியர் நப்பசலையாரென்னும் புலவர்பெருமாட்டியார், இப்பாட்டின் கண் அவியன் என்னும் குறுநில மன்னனொருவனைக் குறித்துப் பாடியுள்ளார்.

அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால் அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர் நாட்டுக்குத்தலைநகராகவும் இருந்ததெனத் திருவதிகைக்கல்வெட்டொன்று (A. R. No. 419 of 1921) கூறுகிறது. இந்த அவியன் வழி வந்த வேந்தர் இடைக்காலத்தே வேற்றுப் புல வேந்தர் வரவால் வலியழிந்து பலநூற்றாண்டு காறும் அரசியலுலகில் தலைமறைவாக இருந்து வந்தனர். பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகாறும் அவ்வப் போது தோன்றிய வேந்தருடைய தானைத் தலைவராகவும், தானை மறவராகவும் இருந்துவந்து போதிய வலிபெற்றவுடனே குறுநில மன்னராய் விளங்கலாயினர். இவர்கள் பாண்டி நாட்டுத் திருப்பத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த சூரைக்குடி யென்னுமூரைத் தலைநகராகக் கொண்டு பிற்காலத்தே விளக்கமுற்றிருந்தனர். அவருள் சிலர் விசயாலயதேவரென்றும் மாளவ சக்கரவர்த்தியென்றும் தம்மைக் கூறிக்கொள்வாராயினர். ஆயினும் பழைய தம் குடி முதல்வனான அவியன் பெயரையும் மறவாறு பேணிவந்தனர். சடாவர்மன் வீரபாண்யன் காலத்தில் அவியன் பெரியநாயனான விசயாலயதேவன் (A.R. No 119 of 1908) என்பவனுடைய கல்வெட்டொன்று அவியன் மாளவ சக்கரவர்த்தி (A. R. No. 122 of 1908) என்பவன் கல்வெட்டொன்றும் திருப்பத்தூர் திருத்தளியாண்டார் கோயிலில் உள்ளன.இந்த அவியர்கட்குக் குடி முதல்வனான அவியனைத்தான் மாறோக்கத்து நப்பசலையார் "குன்று பலகெழீஇய கான்கெழுநாடன் கடுந்தேர் அவியன்" என்றும், காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், களமலி கள்ளின் நற்றே ரவியன்" (அகம். 271) என்றும் சிறப்பித்துள்ளனர். இந்த அவியன்கைவண்மை மிகவுடையன்; புலவரை யோம்பும் பெருந்தகைமையுடையவன். ஒரு கால் நப்பசலையார் வறுமையால்வாடி அவனிருந்த ஊருக்குச் சென்றார். அவன், அவர் வருகையறிந்து தன்பாற் போந்த தன்னைக் காணு முன்னே சிறந்த உணவும் உயர்ந்த ஆடையுந்தந்து பின்பு தன்னை வந்து அவர் காணச்செய்து அவரது புலமை நலத்தை நுகர்ந்து இன்புற்று அவர்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தான். நப்பசலையாரும் வறுமையின் நீங்கி மறுபிறப்புக் கொண்டவரைப்போல் வேருவகை கொண்டார். பின்பு அவன் அவருக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம் வேண்டிவாறு அளித்து அவந்தான். அவனுடைய ஆதரவு பெற்று அனிதிருக்கையில் வெள்ளிமீன் தென்புலம் சாய்ந்து நாட்டில் வறனுண்டாதற்குரிய குறிப்பைக் காட்டிற்று. அதுகண்ட சான்றோர் வருந்தினாராக, நப்பசலையார், "யான் அவியன் என்ற வள்ளியோனது ஆதரவு மிகவுடையேன்; அதனால் வெள்ளியின் நிலைபிறழ்ச்சிக்குச் சிறிதும் வருந்தேன்" என்ற கருத்தமைந்த இப் பாட்டைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன.

    ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து
    தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புக ழேத்தினெ னாக வென்வலத்         5
    திடுக்க ணிரியல் போல வூன்புலந்
    தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற்
    றேம்பா யுள்ள தங்கமழ் மடருணப்
    பாம்புரி யன்ன வடிவின காம்பின்         10
    கழைபடு சொலியி னிழையணி வாரா
    ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    மெல்லணைக் கிடந்தோன்...................         15
    வெறபெயர்ந்த...................நோக்கி.................
    ...................யதற்கொண்
    டழித்துப் பிறந்தனெ னாகி யவ்வழிப்
    பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே
    குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி         20
    நரைமுக வூகமொ டுகளும் வரையமல்...
    ...................குன்றுபல கெழீஇய
    கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென
    ஒருவனை யுடையேன் மன்னே
    அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே.         25
    --------

திணையுந்துறையுமவை...மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

உரை: ஒண்பொறிச் சேவல் எடுப்ப - ஒள்ளிய பொறிகளையுடைய சேவற்கோழி கூவித் துயிலெடுப்ப; ஏற்றெழுந்து - படுக்கையினின் றெழுந்து போந்த; தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனிதுளிக்கும் புலராத விடியற்காலத்தே; நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி - நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப் பறையைக் கொட்டி; நெடுங்கடை நின்று - நெடிய மனை முற்றத்திலே நின்று; பகடுபல வாழ்த்தி - பலவாகிய உழவெருதுகளை வாழ்த்தி; தன்புகழ் ஏத்தினெனாக - அவற்றை யுடையனான அவியன் புகழ்களைச் சொல்லிப் பாராட்டிப் பாடினேனாக; ஊன் புலந்து என்வலத் திடுக்கண் இரியல் போக - உடல் மெலிவித்து என்பால் தங்கியிருந்த வறுமைத்துயர் நீங்குமாறு; ................கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த ஆம்பல் - குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பற்பூவைப் போன்ற; தேம்பாய் உள்ளது அம்கமழ் மடருண - தேன் பரந்துள்ளதாகிய கட்டெளிவை அழகிய மணங் கமழும் மடாரிற் பெய்து உண்ணச் செய்து; அருங்கடி வியன்நகர் குறுகல் வேண்டி - அரிய காவலையுடைய அகன்ற தன் பெருமனைக்குள் தான் காண யாம் அணுகுதலை விரும்பி; பாம்புரி அன்ன வடிவின - பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையவாய்; காம்பின் கழைபடு சொலியின் - மூங்கிற்கோலின் உட்புறத்தேயுள்ள தோல் போன்ற; இழை யணி வாரா - நெய்யப்பட்ட இழைகளின் வரிசை யறிய வியலாத; ஒண்பூங் கலிங்கம் உடீஇ - ஒள்ளிய பூவாலே செய்யப்பட்ட ஆடையை யுடுப்பித்து; நுண்பூண் வசிந்து வாங்கு நுசுப்பின் - நுண்ணிய பூண்களை யணிந்து மின்னுப்போன் மின்னி வளைந்த இடையினையும்; அவ்வாங்கு உந்தி - அழகுறச் சுழிந்த கொப்பூழையும்; கற்புடை மடந்தை - கற்பையு முடைய மடந்தையாகிய தன் மனைவி; தற்புறம் புல்ல - தன் புறத்தே புல்லிக் கிடக்க; மெல்லணைக் கிடந்தோன் - மெல்லிய அணைமேற் கிடந்து உறங்கினவன் ,,,எற்பெயர்ந்த - என்னின் நீங்கிய; ................,,,நோக்கி - பார்த்து; ................,,, அதற்கொண்டு - அது கொண்டு; அழித்துப் பிறந்தனெனாகி மீளப் பிறந்தேன் போன்று; அவ்வழி -அவ்விடத்தே; பிறப் பாடுபுகழ் பாடிப்படர்பு அறியேன் - பிறருடைய பாடுதற்கமைந்த புகழைப் பாடிச் செல்லுதலைக் கருதிற்றிலேன்; குறுமுலைக்கு அலமரும் பாலார் வெண்மறி - குறுகிய முலையை யுண்டற் ,,,பொருட்டத்தாயைச் சுற்றித் திரியும் பாலுண்ணும் ஆட்டுக்குட்டி; நரைம கவூகமொடு உகளும் - வெளுத்த முகத்தையுடைய குரங்குக்குட்டி யுடனே தாவும்; வரையமல் - மூங்கில்கள் நிறைந்த;,,,குன்று பல கெழீ இய -.............,,,குன்றுகள் பல பொருந்திய; கான்கொழுகி நாடன்-கானநாடனாகிய; கடுந்தேர் அவியன் என ஒருவனை உமையேன்மன்-கடுகிச் செல்லும் தேர்களையுடைய அவியன் எனப்படும் ஒருவனை யான் எமக்குத் தலைவனாக வுடையேன்; அறான் - அவன் புரவுக்கடனாகிய தன்னறத்தினின்றும் நீங்கான்; வெள்ளியது நிலை எவன்பரிகோ - வெள்ளியாகிய மீன் நிலை பிறழ்ந்து நிற்பது குறித்து இவ்வுலகு என்னாகுமோ என வருந்துவேனல்லேன்; எ -று,

வைகறை யாமத்தில் துயிலெமுவது முறையாயினும் அக்காலத்தே கோழிச் சேவல் கூவுலது சார்பாகக் காட்டி "ஒண்பொறிச் சேவல் எடுப்ப" என்றும் கிணையின்கண்புறத்தே அதனையறையும் சிறுகோலைக் கட்டி வைப்பது மரபாதலால் "நுண்கோற் சிறுகிணை" யென்றும் கூறினார், விளைபுலப் பயனை வளம்பட நல்கும் சிறப்புக் குறித்துப் பகடுகளை எடுத்தோதி வாழ்த்துதல் முறையாயிற்று; "பால்பல வூறுக பகடுபல சிறக்க" (ஐங்.3) என மகளிர் விழைந்து கூறுமாறு காண்க. ஊன்: ஆகுபெயர். புலந் தென்றது பிறவினைப் பொருட்டு. இடுக்கண் - வறுமைத் துன்பம். இரியது போக-நீங்க; "அந்நிலை யிடுக்கண் இரியல் போக" (புறம். 388) எனப் பிறரும் கூறுதல் காண்க. மடார் தேறலையுண்ணும் வள்ளம். ஆம்பல, மடாருக்கு வடிவுபற்றி வந்த உவமம். உண்பித்தென்னும் வினையெச்சம் உணவெனத் திரிந்தது. சொலி, தோல். இழை யறிவாரா வென்ற பாடத்துக்கு இழையறியப்படாதவென்ப பொருள் கொள்க.வசிந்து வாங்கு நுசுப்பு, முகிலிடைத் தோன்றும் மின்று அதனைப் பிளந்து தோன்றி விளங்குதல் போல விளங்குகின்ற நுசுப்பு.வசிவு. பிளவு."வானமுன்னு வசிவு பொழிய" (மலைபடு. 97) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, வசிந்தென்பதற்கு வேறு கூறுவாருமுளர். உந்திக்கு வாங்குதல், சுழிதல். மடந்தை புறம் புல்லிக் கிடக்க அணையிற்கிடந்து உறங்குவது இயல்பு; "புதல்வற் கவைஇயினன்றந்தை மென்மொழிப், புதல்வன்றாயோ விருவருங் கவையினள்,இனிது மன்றவலர் கிடக்கை" (ஐங் 409) எனப் பிறரும் கூறுதல் காண்க. நரைமுக வூகம், வெள்ளிய மயிர் பரந்த முகமுடைய குரங்கு. மன: ஒழியிசை. பொருள்வளம் இடையறாமையே யன்றி எம்மைப் புரத்தலினும் இடையறவுபடான் என்பது தோன்றப் பொதுப்பட, "அறான்" என்றும், வெள்ளிமீன் நிலைபிறழு மாயின் நாட்டில் நலங்குன்று மென்று சான்றோர் வருந்துபவாகலின், தான் அது செய்யாமைக்கு ஏது கூறுவாராய், "ஒருவனையுடையேன், அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே" என்றார். எழுந்து, ஒற்றி, நின்று, வாழ்த்தி ஏத்தினெனாக, இரியல்போக, உண, வேண்டி, உடீஇ, மடந்தை,புல்லக்கிடந்தோன்...நோக்கி ...ஆகி, படர்பு அறியேன; அவியனென ஒருவனை யுடையேன், அறான், நிலைக்கு எவன் பரிகோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து விட்டமையின் பொருள்விளக்கம் நன்கு உண்டாகவில்லை. இதுவும் முன்னைப் பாட்டுக்களைப் போலக் கிணைவன் கூற்றைக் கொண்டெடுத்துக் கூறும் குறிப்பினதாகும். பசித்து வருவாரை முதற்கண் நீராட்டி நல்லாடை தந் துடுப்பித்து இனிய வுணவுதந் துண்பித்த பின்னர்த் தான் காண வருவித்தல் தமிழ்ச் செல்வம் கொடைப்பண்பாதலின், அருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக்கள்ளுண்பித்ததும், ஒண்பூங் கலிங்கம் உடுப்பித்ததும் கூறினா னென வறிக. பிறரும், " தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை, முதுநீர்ப் பாசி யன்ன வுடை களிந்து, திருமல ரன்ன புதுமரக் கொளீஇ, மகிழ்தரன் மரபின் மட்டு" (புறம் 360) நல்கியது கூறுதல் காண்க. வறுமையுற்ற குடியிற்பிறந்த பிறப்பு மாற்றிச் செல்வக் குடியிற் பிறந்தார் போலச் செல்வம் மிக வுடையனானது கண்டு தன்னையே வியந்து கூறுகின்றானாதலால், "அழித்துப் பிறந்தனெ னாகி" யென்றும், குறைபடாச் செல்வம் நல்கினமை தோன்ற" அவ்வழிப் பிறர் பாடுபுகழ் பாடிப்படர் பறியேன்" என்றும் கூறினான். வேண்டுங்காலத்து வேண்டுவன குறை வின்றாக நல்கும் அவியனது தூய அன்பை உடையேனாதலால், 'எங்கெழிலென் வெள்ளி யென விருக்கின்றேன்’ என்றான். இவ்வாறே பிறரும் "அன்னோனை யுடையேமென்ப வினிவறட் கியாண்டு நிற்க வெள்ளி" (புறம். 384) என்று கூறுதல் காண்க.
-----------

384. கரும்பனூர் கிழான்

வெள்ளியாகிய மீன் தென்றிசைக்கண் நிற்கின் நாட்டிற்கு கல முண்டாகாதென்பது கோணிலையறிந்தோர் கொள்கை. நாடு நலங் குன்றுவது தெரிந்து சான்றோர் வருந்துவது இயல்பு. அன்னதொரு காலத்தில் புறத்திணை நன்னாகனார் வெள்ளியது நிலையறிந்தும் வருத்தமோ கவலையோ இன்றி இனிதிருந்தார். அவரைக்கண்ட சான்றோர் வியப்புக் கொண்டனர். அவர் கருத்தறிந்த நன்னாகனார் இப்பாட்டால் தம்முடைய மனக்கோளை எடுத்துரைத்தார். இதன்கண், தொண்டை நாட்டுக் கரும்பனூர் கிழான் நெல்லும் பொன்னும் நறவும் ஊனும் நிரம்பவுடையன்; யான் அவற்றாற் குறைவுறுங் காலத்து அவன் அவற்றைத் தந்து என்னை நிறைத்தலிற் குறைவதிலன்; அவனைத் தலைவனாக யாம் உடையோமாகலின், நாட்டில் வறம் உண்டாதல் குறித்து வெள்ளி எவ்விடத்து நிற்பினும் நிற்க; இதுகாறும் அவனது பேராதரவால் உண்டுந்தின்றுமே என் நாட்கள் கழிந்தன; அந் நாட்களை யான் வரக்கண்ட துண்டே யன்றி அவை யெத்துணை கழிந்தன வென்பது அறிந்திலேன்; அவனுடைய கரும்பனூர் இயற்கை நலம் மிகச் சிறந்ததாம்; மென் புலத்து மீனுண்டு பசி தீர்ந்த நாரை, வஞ்சி மரத்தின் கிளையிற்றங்கிப் பின் கரும்பின் பூ வருந்த அதன்பால் தங்கும்; வரகரிந்த அரிகாலில் வாழும் எலியை யலைக்கும் இயல் பிற்றாகிய குறும் பூழ்க்கு அங்கே வாழும் முயல் அஞ்சியோட, அதனால் இருப்பைப் பூ உதிரும்; ஊரில் விழாவொன்றும் இல்லையாயினும், உழவர் உண்கலமாகிய மண்டையில் கெடிற்று மீனாகியவுணவுடனே கள் நிறைந்திருக்கும்.

    மென்பாலா னுடனணைஇ
    வஞ்சிக்கோட்டுறங்கு நாரை
    அறைக்கரும்பின் பூவருந்தும்
    வன்பாலாற் கருங்கால்வரகின்
    அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின்         5
    அங்கட் குறுமுயல் வெருவ வயல
    கருங்கோட்டிருப்பைப் பூவுறைக் குந்து
    விழவிண் றாயினு முழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து
    கரும்ப னூரன் கிணையேம் பெரும         10
    நெல்லென்னாம் பொன்னென்னாங்
    கனற்றக் கொண்ட பொன்னென்னாங்
    மனைமன்னா வவைபலவும்
    யான்றண்டவுந் தான்றண்டான்
    நிணம் பெருந்த கொழுஞ்சோற்றிடை         15
    மண்ணாண்ப் புகழ்வேட்டு
    நீர்நாண நெய்வழங்கிப்
    பரந்தோ னெந்தை யாமெவன் றொமைலவதை
    அன்னோனையுடையே மென்ப வினிவறட்
    கியாண்டு நிற்க வெள்ளி மாண்டக         20
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    தின்ற நண்ப லூஉன் றோண்டவும்
    வந்த வைக லல்லது
    சென்ற வெல்லைச் செலவறி யேனே.
    -----------

திணையுந் துறையு மவை. கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

உரை: மென்பாலான் - மென்புலமான மருதவயற்கண்; உடன் அணைஇ - தன் இனத்துடனே மேய்ந்துண்டு; வஞ்கிக் கோட்டு உறங்கும் நாரை - வஞ்சிமரத்தின் கிளையின்கண் தங்கியுறங்குதலைச் செய்யும் நாரை; அறைக்கரும்பின் பூ அருந்தும் - முற்றிய கரும்பினுடைய பூவைக் கொழுதும்; வன்பாலான் - வன்புலமாகிய முல்லை நிலத்தின்கண் விளையும்; கருங்கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்- கரிய தாளையுடைய வரகின் அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிப்பதற்கு முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரத்தால், அங்கண் குறுமுயல் வெருவ - அவ்விடத்தே யுறையும் குறுமுயல் அஞ்சி யோட; அயல - அயலிடத்தே நிற்கும்; கருங்கோட்டு இருப்பைப்பூ உறைக்குந்து - கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் பூக்கள் உதிரும்; விழவின்றாயினும் - விழாவென்றும் நிகழா வழியும்; உழவர்மண்டை - உழவருடைய வுண்கலத்தில்; இருங்கெடிற்று மிசையொடு - பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே; பூக்கள் வைகுந்து இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்; கரும்பனூரன் கிணையேம் - கரும்பனூர் கிழானுடைய கிணைவ ராவோம்; பெரும - பெருமானே; நெல்லென்னாம் பொன் னென்னாம் - நெல்லும் பொன்னும் என்னவாகும்; கனற்றக் கொண்ட நறவு என்னாம் - உடல் வெதும்புமாறு கொண்ட கள்ளுந்தான் என்ன பயனுடைத்தாம்;............ மனைமன்னா அவை பலவும் - மனையிடத்து இல்லாத அவை பலவற்றையும்;யான் தண்டவும் - யான் குறைபடவும்;தான் தண்டான் - தான் சிறிதும் குறைவிலனாய்; நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை - நிணம் கலந்த கொழுவிய பெய்து; மண் நாணப் புகழ் வேட்டு - மண்ணவர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து; புரந்தோன் - எம்மை விரைந்தேற்று ஆதரிப்பன்; எந்தை - எங்கள் தலைவன்; யாம் தொலைவதை எவன் - யாங்கள் வறுமை குறித்து நெஞ்சழுங்குவது இல்லையாம்;அன்னோனையுடையேம் - அத்தகையவனைத் தலைவனாகவுடையே மாதலின்; இனி - இப்பொழுது; வறட்கு - வறற்காலத்தைச் செய்தற்பொருட்டு; வெள்ளி யாண்டு நிற்க -வெள்ளியாகிய மீன் எத்திசைக்கண் நிற்பினும் நிற்பதாக; மாண்டக -மாண்புண்டாகஉண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் - உணவுண்ட நல்ல கலங்களில் உண்ணமாட்டாதொழித்த மிக்கவற்றை அக்கலத்திடையே வைத்து மடித்தெறியவும்; தின்றநன்பல் ஊஉன் தோண்டவும் - ஊனைத் தின்றதனால் பற்களின் இடையிலே சிக்கிக்கொண்ட - வூனைத் தோண்டியெடுக்கவும்; வந்த வைகல் அல்லது- நிகழ்ந்த நாட்கள் உண்டேயன்றி; சென்ற எல்லைச் செலவறியேன் - இவ்வகையாக உண்ணக்கழிந்த நாட்களை எண்ணியறிந்திலேன்;எ - று.

நீர்வளத்தால் மருதம் மென்பாலென்றும் அவ்வளம் இன்மையால் முல்லை வன்பாலலென்றும் கூறுப்படும்.உடன் அணைஇ யென்றதனால் இனமும்கொள்ளப்பட்டது. வஞ்சி, வஞ்சிமரம். முற்றிய கரும்பே யறுக்கப் படுமாகலின், அஃது அறைக்கரும் பெனப்பட்டது. இருப்பைப் பூ மழைத்துளிபோ லுதிர்வதுபற்றி, "இருப்பைப்பூ வுறைக்குந்து"் என்றார். உம், உந்தாயிற்று. கருப்பை, எலி. குறும்பூழ் கருப்பையைப் பிடித்தற்கு முயலுதலைப் பிறரும், "பொறிப்புறப் பூழின் போர்வல்சேவல்-குடந்தையஞ் செவிய கோட்டெலியாட்ட" (புறம். 321) என்பர். கள்ளுண்பார்க்கு வியஞ்சனமாக இஞ்சிப் பூ முதலியவற்றை மாலையாகத் தொடுத்துக் கட்குடத்துக்குக் கட்டுவது பண்டையோர் மரபு. நீர் பெய்தற்கு வருந்தாமைபோல நெற்பெய்தற்குச் சுருங்காமை தோன்ற "நீர் நாண நெய் வழங்கி" யென்றார். மண்: ஆகுபெயர்; மண்ணுலகென்றே கொண்டு, மண்ணாணுதலாவது மண் பரப்புச்சுருங்கப் புகழ்விரிதல் என்றலுமொன்று. எங்கள் தலைவன் இனிதிருத்தலின், வெள்ளியது நிலைகுறித்து யாம் உள மழிந்து நலந்தொலைவது வேண்டா என்பார் "யாமெவன் தொலைவதை" என்றார்.எவன் என்பது இன்மை குறித்து நின்றது. வெள்ளியாகிய மீன் கெடுதிசையில் நிற்பினும் எமக்கு வருத்தமில்லையென்றலின், "யாண்டும் நிற்க" என்பது கூறப்பட்டது. உணவுன்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதின், நன்கலமெனப் பட்டது; பிற்காலத்தார் பரிகலம் என்பது இக் குறிப்பேபற்றி வந்தது. உண்ணப்படாது மிக்கு நின்றவற்றை இ்லையிட வைத்து மடித்துப் புறத்தே யெறிதலின் "உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்" என்றும், ஒவ்வொரு நாளும் வந்தநாளிற் போல உண்பனவும் தின்பனவும் ஆரப்பெற்று, இறப்பும் எதிர்வுமாகிய நாட்களை எண்ணாது மகிழும் திறம் கூறுவார் "வந்த வைகல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே" என்றார். எல் - பகல். பெரும, யாம்கிணையோம்; தண்டவும், தண்டான்; வழங்கி, வேட்டு, புரந்தோன்; எந்தை; தொலைவதை எவன்; அன்னோனை யுடையேம்; நிற்க, நுடக்கவும் தோண்டவும் வந்த வைகல் அல்லது எல்லை செலவறியேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. என்ப: அலைநிலை.

விளக்கம்: இப்பாட்டின்கண்புறத்தினண நன்னாகனார் கரும்பனூர் கிழானது கரும்பனூரையும், அவனது கொடைநலத்தையும், அந்நலத்தைத்தாம் நுகர்ந்த சிறப்பையும் விளக்கியுள்ளார். கரும்பனூரின் சிறப்பை இவர் குறித்தபடியே இப் பாட்டுரையின் முன்னுரைக்கண் கூறினாம். கொடைநலம் குறிக்கும் வகையில் கரும்பனூரன் தந்த நெல்லும் பொன்னும் நறவும் பிறவும் சுருங்கக் குறித்து,நிணத்தோடு கூடிய சோற்றில் நீரென்னுமாறு நெய்யைச் சொரிந்து, தன்பால் வந்த னிணைப்பொருநருக்கு உணவளித்து விருந்தோம்பிய சிறப்பை, "நிணம் பெருத்த...புரந்தோன் எந்தை" என்று கூறியுள்ளார். இச் செயலால் கரும்பனூரனுக்கு உண்டாகிய பயன் பெரும்புகழ் என்பார், "மண்ணாணப் புகழ்வேட்டுப் புரந்தான்" என்றார். உண்பனவும் தின்பனவும் உடுப்பனவும் குறைவின்றிப் பெறு மிடத்து வாழ்க்கையைப் பற்றிய நினைவே மறந்து போயிற்றென அவனது கொடைநலத்தைத் தாம் நுகர்ந்த வாற்றை விளக்கி,வறுமையைப் புறங்கண்டு பெருமித முற்ற நிலையை,"வறட்கு யாண்டு நிற்க வெள்ளி"என்று வெளிப்படுத்தியுள்ளார்.வந்த வைகல் அல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே" என்றது, வாழ்க்கையைப் பற்றிய நினைவு மறந்து கிடந்ததற்குச் சான்றாயிற்று. இத்துணையும் கிணைப்பொருநன் கூற்றில் வைத்துக் கூறியது குறிக்கொள்ள வேண்டுவதொன்று. பாணன் கூற்றாகவும் கிணைவன் கூற்றாகவும் கூறும் புலமை வகையை யறியாது வேறுபடக் கூறுவர் தமிழறியாதார்.
---------------

385. அம்பர்கிழான் அருவந்தை

அம்பர் என்பது சோழநாட்டில் தஞ்சை மாநாட்டில் நன்னிந்தாலுகாவில் உள்ளதோரூர்.இஃது இருவந்தை யென்னும் தலைவன் ஒருவனுக்கு உரியது. இவனைத் திவாகரமுடையார்"கற்ற நாவினன் கேட்ட செவியினன்,முற்றவுயர்ந்த மூதறிவாளன், நாகரிகநாட்டத்தாரியன் அருவந்தை" யென்றும்,"நாடே பிறர்நாட்டிற் குவமையாறே, காலமறிந்துதவுங்காவிரி. தானே, ஆடவர் திலகமை்பர் மன்ன, னீடிசைத் தலைவன் அருவந்தை" யென்றும் குறித்துரைத்துள்ளார். இதனால் அம்பர் காவிரி பாயும் நாட்டில் உள்ளதோரூரெனவும், அவ்வூர்த் தலைவனான அருவந்தை கல்வி கேள்விகளால் நிறைந்தவன் எனவும், முழுதுணரும் ஒண்புலவனெனவும் கண்ணோட்டமுடைய காவலனெனவும் அறியலாம். இவனது அழியாப்புகழ் அவ்வூர்க்கே பேரணியாய் நின்று பிரிவின்றி இயலுவதாயிற்று; ஆகவே, இடைக்காலத்தில் இவ்வூர் அம்பர் அருவந்தையெனவே வழங்குவதாயிற்று; "உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் அருவந்தை" (A. R. No. 175 of 1927-8) எனத் திருப்பழனத்துக் கல்வெட்டொன்று கூறுவது காண்க. இந்த அருவந்தையின் குடிப்பிறந்தவர் பிற்காலத்தே தொண்டைநாட்டில் இருந்திருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் காலத்தின். வந்த வாசிக் கண்மையிலுள்ள பொன்னூரில் அருவந்தை யொருவன் இருந்துள்ளான் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. அது "பொன்னூரான அழகிய சோழநல்லுார் அருவந்தை ஆண்டான் திருச்சோற்றுத் துறையுடையான் சொறப்பிள்ளை" (S. I. Ins. Vol. XII. No.220) என வருவது காண்க. இந்த அருவந்தைக்குடி முதல்வனான அம்பர் அருவந்தையைக் கல்லாடனாரென்னும் சான்றோர் இப் பாட்டில் வியந்து பாராட்டியுள்ளார். ஒருகால் கல்லாடனார் அம்பருக்குச் சென்று அங்கு வாழ்ந்த செல்வன் ஒருவனைப் பாடலுற்றார். அவன் மனைக்கு அண்மையில் அருவந்தையின் பெருமனையும் இருந்தது. அவர் பாடிய பாட்டிசை அருவந்தையின் செவியிற் பட்டது. அருட்கடலாகிய அவன் உள்ளம் பாட்டிற் குருகிற்று. அவரையுடனே தன்பால் வருவித்து, அழுக்கேறிப் பீறிக்கிடந்த அவரது உடையைக் களைந்து வேறொரு வெள்ளாடை தந்து உடுப்பித்து இனிய உணவு தந்து பசிகளைந்தான். அது கண்டு கழிபேரு வகையால் தம்மை மறந்து இன்புற்ற கல்லாடனார் இப்பாட்டைப் பாடி இதன்கண், காவிரி பாயும் அம்பர் கிழவனான அருவந்தை, புல்லியென் பானுக்குரிய வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவர். சென்னைக்கு வடகிழக்கிலுள்ள பொன்னேரிக் கண்மையில் புகைவண்டி நிலையமாய் நிற்கும் மீஞ்சூர் பண்டை நாளில் கல்லாடமென்று வழங்கிற்று. (செந். செல்வி Vol. 23 பக். 113-22) இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலையும் மலையமான் திருமுடிச் காரியையும், சோழநாட்டு அம்பர் அருவந்தை, பொறையாற்றுக்கிழான் என்பாரையும், தொண்டைநாட்டுத் தொண்டையரையும், வேங்கடத்துக்குரிய புல்லி யென்பானையும் பாடியிருத்தலால், இவர் தமிழ் முழுதறிந்த தண்டமிழாசிரியரென்பது ஒருதலையாம் இவர், தம் பாட்டுக்களில் தொண்டை நாட்டு வேங்கடத்தையும் அதற்குரிய புல்லியென் பானையும் பன்முறை பாடியிருப்பதுகொண்டு இவர் தொண்டைநாட்டுக் குரியரென்பது ஒருவாறு கருதப்படுமாயினும், மீஞ்சூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டு (A. R. No. 133 டிக 1916) அதனை நன்கு வற்புறுத்துகின்றது. "பொருவார் மண்ணெடுத்துண்ணும் அண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர்" (குறுந். 260) என்பது இவர் தொண்டையரைக் குறித்துரைப்பது.

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பப்
    புலரி விடியற் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றிற்று மிலனே பிறன்கடை
    அகன்கட்டாரிப் பாடகேட்டருளி
    வறனியா னீங்கல் வேண்டி யென்னரை         5
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளிய துடீஇயென் பசிகளைந் தோனே
    காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி யம்பர் புல்லிய
    நல்லரு வந்தை வாழியர் புல்லிய         10
    வேங்கட விறல் வரைப் பட்ட
    ஓங்கல் வானத் துறையினும் பலவே.
    --------

திணை: அது துறை : வாழ்த்தியல்: அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.

உரை: வெள்ளி தோன்ற - வெள்ளியாகிய மீன் வானத்தே தோன்றவும்; புள்ளுக்குரல் இயம்ப - புள்ளினங்கள் எழுந்து ஒலிக்கவும் வந்த; புலரி விடியல் - இரவுப்பொழுது புலரும் விடியற்காலத்தில்; பகடு பல வாழ்த்தி - எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி; தன்கடைத் தோன்றிற்றுமிலன் - யான் அவன் பெருமனை முற்றத்துக்குச் சென்றி லேன்; பிறன் கடை அகன்கண் தடாரிப்பாட்டு கேட்டு - பிறன்மனை முற்றத்தில் நின்றுகொட்டிய அகன்ற கண்ணையுடைய தடாரிப்ப றையினது ஓசையைக் கேட்டு; அருளி - அருள் கூர்ந்து; யான் வறன் நீங்கல் வேண்டி - யான் வறுமையின் நீங்குதலைத்தான் விரும்பி; என் அரை நிலந் தினக் குறைந்த சிதாஅர் களைந்து- என் அரையில் யான் உடுத்திருந்த மண் தின்னம்படி பழைதாய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி; வெளியது உடீஇ - வெள்ளிய ஆடைதந்து உடுப்பித்து; என்பசி களைந்தோன் - எனது பசித்துன்பத்தைப் போக்கினான்; காவிரி அணையும் தாழ்நீர் படப்பை - காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும்; நெல்வினை கழனி - நெல்விளையும் கழனிகளையு முடைய; அம்பர் கிழவோன் - அம்பரென்னும் ஊர்க்குரியோனாகிய; நல் அருவந்தை - நல்ல அருவந்தை யென்போன்; புல்லிய வேங்கடவிறல் வரைப்பட்ட - புல்லி யென்பவனுடைய வேங்கட மலையிற் பெய்த; ஓங்கல் வானத்து உறையினும் பல வாழியர் - உயர்ந்த வானத்திலிருந்து பொழிந்த மழைத்துளியினம் பல ஆண்டுகள் வாழ்வானாக; எ - று.

வெள்ளி முளைத்தலும் புள்ளுக்குரல் தோன்றலும் விடியற்காலத்துக் காட்சியாதலின்,அவற்றை யெடுத்தோதினார்."வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளு, முயர்சினைக் குடம்பைக்குரல் தோன்றினவே" (புறம். 397) என்று பிறரும் கூறுதல் காண்க.இயைபில்லாத என் பால் அன்பு செய்தான் என்றற்குத் "தன்கடைத்தோன்றிற்றுமிலனே" என்றும், "அருளி" யென்றும் கூறினார், காவிரியிற் பிரிந்தோடும் அரிசிலாறு அம்பர்க்கருகிலோடு கின்றதாகலின். அதனைக் காவிரி யென்றார். சோழநாட்டின் அம்பர்ப் பகுதி நோக்கி ஆறு ஓடிவருதலின், அது தாழ்ந்திருக்கும் பான்மை குறித்து "தாழ்நீர்ப் படப்பை" யெனப்பட்டது. புல்லியென்பவன் கள்வர் கோமான் என்றும், வேங்கடமலை அவற்கு உரித்தென்றும் சான்றோர் பலரும் கூறுப்.தோன்ற, இயம்ப,வாழ்த்தித் தோன்றிற்றுமிலன்; கேட்டு அருளி,வேண்டி,களைந்து,உடீஇக் களைந்தோன், கிழவோன்; கிழவோனாகிய அருவந்தை, உறையினும் பல வாழியர் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: வாழ்த்தியலை "அலங்குகதிர்" (புறம். 375) என்ற பாட்டுரை விளக்கப்பகுதியிற் கூறினாம். அம்பர்கிழான் அருவந்தையின் கொடைநலத்தை முதற்கண்ணோதி அவனை வாழ்த்தும் வாழ்த்துரையினைப் பின்னர்க் கூறியுள்ளார். "யான் வறனுற்று வருவதை யான் உரையாமே முன்னறித் தழைத்து,யான் வறுமையின் நீங்குதலை அவன் தானே விரும்பிய புத்தாடை யுடு்ப்பித்துப் பசி களைந்தான்," என்பது அருவந்தையின் சிறந்த கொடைநலத்தை விளக்கி நிற்கிறது. மாற்றுடையின்மையின் அழுக்கேறி மட்சிக் கிழிந்து குறைந்திருந்த பீறல்உடை யென்றற்கு "நிலந்தினக் குறைந்த சிதாஅர்" என்றார். காவிரியிற் பிரிந்துவருதலின், அம்பர் அருகே யோடிவரும் அரிசிலாற்றைக் காவிரி யென்றார். கல்லாடனார் திருவேங்கட நாட்டுக்குரியவராதலின், காவிரி மணலினும் பலவென்னாது, வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல வாழ்க எனவாழ்த்து வாராயினர்.ஒருவன் தன்னாட்டினின்றும் நீங்கி நெடிது செல்லச் செல்ல, அவன் பிறந்த நாட்டுத் தொடர்பு அவனை யறியாதே பிணித்து நிற்குமென அறிக. அதனை ஆங்கில நாட்டுக் கவிகளிடையே பரக்கக் காணலாம்.
------

386. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் பெரிதும் ஆதரவு செய்யப் பெற்றவர் ஆசிரியர் போவூர் கிழாராவர். ஒருகால் சான்றோரிடை வெள்ளி மீனினது நிலைபற்றியொரு பேச்சு நிகழ்ந்தது. வெள்ளிமீன் தெற்கேகின்நாட்டிற்கு வறனுண்டாகும்; நல்லுயிர்கள் உணவின்றி வாடும் என்பது வான நூன்முடிபு.அக்காலக் கோவூர் கிழார் தமக்குக் குளமுற்றத்துத் துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் செய்த உதவிகளை விரிய எடுத்தோதித் தாம் அவனுடைய பொருநரென்றும், அவன் தமக்கு வேண்டியவற்யைக் குறிப்பானுணர்ந்து உதவுவன் என்றும், அதனால் தான் வெள்ளியது நிலையைப்பொருளாகக் கருதுவதில்லையென்றும் இப்பாட்டால் உரைத்தார். இதன்கண் தொடக்கத்தில் சோழனது கொடை நலமும் பின்பு நாட்டின் நலமும் அழகுறக் கூறப்பட்டுள்ளன.

    நெடுநீர நீறைகயத்துப்
    படுமாரித் துளிபோல
    நெய்துள்ளிய வறைமுகக்கவும்
    சூடு கிழித்து வாடூன் மிசையவும்
    ஊன்கொண்ட வெண்மண்டை         5
    ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
    வெய்துண்டவியர்ப் பல்லது
    செய்தொழிலான் வியர்ப்பறியாமை
    ஈத்தோ னெந்தை யிசைதன தாக
    வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்         10
    பாத்திப்பன்மலர்ப் பூத்த தும்பின்று
    புறவே, புல்லருந்து பல்லாயத்தான்
    வில்லிருந்த வெங்குறும்பின்று
    கடலே, காறந்த கலனெண்ணுவோர்
    கானற் புன்னைச் சினை யலைக்குந்து         15
    கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்க னன்னாட்டுமணொலிக் குந்து
    அன்னநன் னாட்டுப்பொருநம் யாமே
    பொராஅப்பொருநரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்         20
    குடதிசை நின்று குணமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்றிசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டு நிற்க வெள்ளியாம்
    வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே.         25
    ---------

திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

உரை: நெடுநீர் நிறைகயத்து - மிகக் நீர்நிறைந்த நீர்நிலையின் கண்; படுமாரித் துளிபோல - வீழ்கின்ற மழைத்துளிபோல; நெய் துள்ளிய வறை முகக்கவும் - நெய்யினது துளியையுடைய வாய் வறுக்கப்பட்ட வறுவல்களை முகந்துண்ணவும்; சூடுகிழிந்து வாடூன் மிசையவும் - சூட்டுக்கோலாற் கிழித்துச் சுடப்பட்டவூனைத் தின்னவும்; ஊன்கொண்ட வெண்மண்டை - ஊனைப் பெய்துவைத்த வெள்ளிய மண்டையானது; ஆன்பயத்தான் முற்றழிப்பவும் - ஆவின்பால் நிறைந்த வழியவும்; வெய்துண்ட வியர்ப்பல்லது - உண் பனவற்றைச் சுடச்சுடவுண்டு வியர்த்தலையன்றி; செய்தொழிலான் வியர்ப்பறியாமை - தொழில்செய்து மெய் வருந்தி வியர்வை கொள்ளா வண்ணம்; இசை தனதாக ஈத்தோன் -உலகில் நிலைபெறும் புகழ் தனக்கேயுரியதாமாறு கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; வயல் - நெல் வயல்; நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்தி - நெல்லுக்கு வேலி போல நெடிது வளர்ந்து நின்ற கரும்பு நடுதற்கிட்ட பாத்தியின் கண்; பன்மலர் பூ ததும்பின்று - பல்வகைப் பூக்கள் நிறைந் திருக்கும்; புறவு - முல்லைக்காடு; புல்லருந்து பல்லாயத்தான் - புன்மேயும் பலவாகிய ஆனிரைகளுடைனே; வில் இருந்த வெங்குறும்பின்று - வில் வீரர்கள் காவலிருந்த வெவ்விய அரணுடை தாயிருக்கும்; கடல் கடல்சார்ந்த நெய்தற்பகுதி; கால்தந்த கலன் எண்ணுவோர் - காற்றாற் கொணரப்பட்ட மரக்கலங்களை யெண்ணும் மகளிர் தங்கும்; கானற் புன்னைச் சினை அலைக்குந்து - கானற் சோலையிலுள்ள புன்னையின் கிளைகள் கடலலையால் அலைப்புண்டிருக்கும்; கழி - கழிசார்ந்த பகுதி; சிறு வெள்ளுப்பின் கொள்ளை சாற்றி - சிறிய வெண்மையான உப்பின் விலையைச் சொல்லி; பெருங்கால் நன்னாட்டு உமண் ஒலிக்குந்து - பெரிய மலைகள் பொருந்திய நல்ல நாடுகட்குக் கொண்டுசென்று விற்கும் உமணர் குடி தழைத்திருக்கும்; யாம் அன்ன நன்னாட்டுப் பொருநம் - யாங்கள் அத்தகைய நல்ல நாட்டுப் பொருநராவோம்; பொராஅப் பொருநரேம் பொருநருள்ளும் யாங்கள் போருடற்றும் பொருநரல்லேம்; குணதிசை நின்று குடமுதற் செலினும் - குடதிசை நின்று குணமுதற் செலினும்;கீழ்த்திசையினின்று மேற்றிசைக்கும் மேற்றிசையினின்று கீழ்த்திசைக்கும் சென்றாலும்; வடதிசை நின்று தென்வயிற் செலினும் - வடக்கிலிருந்து தெற்கேகுமாயினும்; தென்றிசை நின்று குறுகாது நீடினும் - தெற்கிற் சின்னாள் இராது பன்னாள் நெடிது நிற்குமாயினும்; வெள்ளியாண்டும் நிற்க - வெள்ளியாகிய மீன் எங்கு நிற்பினும் நிற்க; யாம் வேண்டிய துணர்ந்தோன் தாள் வாழிய - யாம் வேண்டுவனவற்றை எம் குறிப்புக்கண் டுணர்ந்து அவ்வளவும் நல்கு வோனாகிய வளவனுடைய தாள் வாழ்க; எ- று.

நெடுநீர், ஆழமான நீர் நிறைகயத்தில் மழை பெய்யுங்கால் நீர்த் துளி துள்ளித் துளிப்பது போலக் காய்ச்சிய நெய்யில் வறுவல்களைப் பொரிக்குமிடத்து அது துள்ளித் துளிக்குமாதலின் அதனைச் செய்யும் வறுவலை "நெய் துள்ளிய வறை" யென்றார்.நெய்யில் வறுத்த வறையின்கண் நெய்த்துளிகள் நிறைந்திருப்பதுபற்றி இவ்வாறு கூறினாரெனினும் அமையும். வறுக்கப்படுவது வறை: அறுக்கப்படுவது அறையென்றாற்போல. வறைகள் கைந்நிறைய முகந்து உண்ணப்படுவதனால் "முகக்கவும்" என்றார். சூட்டுக் கோலாற் கிழித்துச் கூடப்படும் ஊன், "சூடுகிழித்து வாடூன்" எனப்பட்டது. மண்டை, உண்கலம். அது நிரம்பி வழியுமளவு ஆன்பால் சொரியப்படுமாறுதோன்ற, "ஆன்பயத்தான் முற்றழிப்பவு" மென்றார். மெய்வருந்த உழையாமல் வேண்டுவன பெற்றுண்டற் கேற்ற பெருஞ் செல்லும் தந்தமை கூறுவார், "வெய்துண்ட வியர்ப்பல்லமு செய்தொழிலான் வியர்ப்பறியாமை யீத்தோன்" என்றார், ஈவார்மேல் புகழ் நிற்குமாகலின்; ஈத்த வளவற்கே இசையுரிய தாயிற்றென்பது "இசை தனதாக" எனப்பட்டது. வயல் பூத்ததும்பின்று, புறவு வெங்குறும்பின்று, கடல்புன்னைச்சினையலைக்குந்து கழி உமண் ஒலிக்குந்து என இயையும். கொள்ளை, விலை. "சில்பதவுணவின் கொள்ளை சாற்றி" (பெரும்பாண். 64) என்புழிப்போல. பொருநர் போர்செய்யும் மறவர்க்கும் போர்க்கள ஏர்க்களங்களைப் பாடும் பொருநர்க்கும் பொதுப்பெயராகலின் போர்செய்யும் பொருநரினீ்ககுதற்கு "பொருநம் யாம்" என்றவர்,"பொரா அப் பொருநரேம் என்றார். வெள்ளி நிற்றற்குரிய நிலைகளெல்லாம் சொன்னவர், "யாண்டும் நிற்க" என்று மறுபாடியும் சொன்னது யாப்புறவுகுறித்துநின்றது. தாம் வளவனது தாணிழல் வாழும் செமம்ாப்புத்தோன்ற இங்ஙனம் கூறியவர், அதனை நல்கும் அவன் தாளை "தாள்வாழிய" என வாழ்த்தினார், முகக்கவும் மிசையவும் முற்றழிப்பவும், வியர்ப்பறியாமை இசைதனாதாக ஈத்தோன்; எந்தை; வயல் பூத்ததும்பின்று, சினையலைக்குந்து, வெங்குறும்பின்று. உமணொலிக்குந்து; அன்ன நன்னாட்டுப் பொருநம் யாம்; பொரா அப் பொருநரேம், செலினும், நீடினும், யாண்டும் நிற்க உணர்ந்தோன் தாள் வாழிய எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய கொடையை யெடுத்தோதி வாழ்த்தலுற்ற கோவூர்கிழார், கொடை வளத்தைக் கொடை யெதிர்ந்தோர்பால் உளதாகிய பயனால் உரைக்கும் புலமைத் துறையை மேற்கொண்டு, "வெய்துண்ட வியர்ப் பல்லது, செய்தொழிலான் வியர்ப்பறியாமை, ஈத்தோன்" என்று உரைப்பது அறிந்து இன்புறத்தக்கது. கொடையினை யேற்றோர்க்கு இது விளைவாக, அக்கொடையினால் வளவற்கு உளதாகிய பயன் இதுவென்பார், "இசை தனதாக"என்றார். வயல்பூத் ததும்பின்றென் றதனால் மருதவளமும், புறவு வெங்குறும்பின்று என்றதனால் முல்லை வளமும், கடல்புன்னைச் சினையலைக்குந்து என்றதனால் நெய்தல் வளமும்,கழிபெருங்கல் நன்னாட்டு உமணொலிக்குந்து என்றதனால் குறிஞ்சி வளமும் திணை மயக்கமும் கூறினாராயிற்று. நாட்டின் நலங்காணுமிடத்துப்பாலை சிறந்த தன்மையின் நானிலமே எடுத்து மொழிதல் மரபு. ஆசிரியர் தொல்காப்பியரும்"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்" (அகத்திணை:5) சொல்லிய முறை காண்க. புறவு கூறுமிடத்து, "வில்லிருந்த வெங்குறும்பின்" றென்றதனால் பாலையும் ஓராற்றால் கூறப்பட்டதெனக் கோடலுமொன்று, "பொருநம் யாம்" எனப் பொதுப் படக் கூறினமையின், பொதுநீ்க்கிச் சிறப்பிப்பார் "பொராஅப் பொருநரேம்" என்றார், வேண்டியது குறிப்பான் உணர்ந்து நல்கும் வளவன் பால் இரத்தலும் "ஓர் ஏர் உடைத்" (குறள். 1053) தாதலால், அச்சியப்பால் "யாண்டுநிற்கவெள்ளி" எனப்பெருமிதம்படப்பேசுகின்றார்.
-----------

387. சேரமான் சிக்கற்பள்ளித் துங்சிய செல்வக் கடுங்கோவாழியாதன்

சோழநாட்டில் சிக்கலென்னு மோருர் இருப்பதுபோலப் பாண்டி நாட்டிலும் ஓர் ஊர் உளது. பாண்டி நாட்டுச் சிக்கற்பள்ளியிற் செல்வக் கடுங்கோ வாழியாதன் துஞ்சியதுபற்றி அவன்சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் எனப்படுவானாயினன். பதிற்றுப் பத்தினுள் ஏழாம்பத்தாற் பாடப்பெற்ற செல்வக்கடுங்கோ வாழியாதனும் சிக்கற்பள்ளித் துஞ்சிய வாழியாதனும் ஒருவரேயாவர்.செல்வக் கடுங்கோ வாழியாதன் சிக்கற்பள்ளிக்கண துஞ்சியபின் இப்புறப்பாட்டுத் தொகுக்கப் பட்டமையின். தொகுத்தோர் இவ்வாறு குறித்துள்ளனரென அறிக. பறம்புமலைக் குரியனான வேள்பாரி யிறந்தபின் கபிலர் இச்செல்வக் கடுங்கோ வாழியாதன், "ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்" என்று சான்றோர் கூறக்கேட்டு வாழியாதனைச் சென்று கேளாத நல்குபவன். அவனுடைய போர்வன்மையும் கைவண்மையும் அவனுடைய திருவோலக்கத்திலிருந்து கண்ட கபிலர், அவனை "பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே, பணியா வுள்ளமோடணிவரக் கெழீஇ, நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல, மகளிர்க் கல்லது மலர்ப் பறிய யலையே, நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே" (பதிற். 63) எனவும், "தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற, வேள்வியிற் கடவுளருத்தினை, கேள்வியின் உயர்நிலை, யுலகத் தையரின்புறுத்தினை, வணங்கிய சாயல் வணங்கா வாண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், வணங்கா வாண்மை, இளந்துனணப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடனிறுத்த வெல்போ ரண்ணல்" (பதிற். 70) எனவும் பாராட்டினார். ஒரு முற்றுகையில் இரு பெருவேந்தரை வென்ற அவனது ஆண்மையும் போர்செய ஆற்றாது அடிபணியும் பகைவர்பால் அருள் செய்யும் ஊராண்மையும் கபிலராற் சிறப்பிக்கப்டுகின்றன. இவன் மனைவியார் கடவுளும் தன் ஏவல் செய்யுமாறு செய்யும் கற்பினையுடையர். "பெண்மை சான்று பெருமடநிலைஇக், கற்பிறைகொண்டகமழுஞ் சுடர்நுதற் புரையோள்" (பதிற். 70) என்று கபிலர் அவரைப் பாராட்டுகின்றார். இவர்க்குச் சேரமான் "சிறுபுறமன நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றாவென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்" என்று ஏழாம்பத்தின்பதிகம் கூறுகிறது. இவ்வண்ணம் கபிரைச் சிறப்பித்த செல்வக் கடுங்கோ இப் புறப்பாட்டைப் பாடிய குன்றுகட் பாலியாதன் என்னும் சான்றோரையும் ஆதரித்துள்ளான். இச் சான்றோரது இயற்பெயர் ஆதன் என்றும், ஊர் குன்றுகட் பாலியென்றும் அறிக. குன்றின்கட் பாலியாதனார் என்பது இவரது பெயர்; இது நாளடைவில் குன்றுகட்ட பாலியாதனாரெனச் சுருங்கிப் பின் குண்டுகட் பாலிக்குன்னு என்ற பெயருடன் மலையாளம் சில்லாயைச் சேர்ந்த கோழிக்கோட்டுப் பகுதியில் ( calicut) உளது. ஆதனார் சேரநாட்டுப் புலவர் பெருமக்களுள் ஒருவராவர். செல்வக் கோவுக்குரிய நன்றா என்னும் குன்று இடைக்காலத்தே நணா எனத்திரிந்துவிட்டது. அக் குன்றேறி நின்று கபிலர்க்குக் காட்டிக் கொடுத்த நாட்டுப் பகுதியில் கபிலக் குறிக்சியென்னும் ஊர் இருந்து அந்தப் பண்டைக்கால நிகழ்ச்சிக்குச் சான்று கூறி நிற்கிறது. இதன் விளக்கத்தை இவ்வுரைகாரருடைய பண்டைநாளைச் சேரர் என்ற நூலிற் காண்க. இனி, இவ்வாதனார் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் காண்ச்சென்று அவன் பகைவரை வென்று அவர் தந்த திறையை ஏற்று இனிதிருந்து தன் நண்பார்க்ம் பரிசிலர்க்கும் அவற்றை நல்குதலைக் கண்டார். தாமும் அவன் வென்றிமாண்பை எடுத்துரைத்துப் பாடினார். கபிலர் போலப் பெரும்புலவ ரல்லராயினும், இவ் வாதனாரைச் சேரமான் இழித்து நோக்காது தன் பெருமைக் கேற்பத் தகவுற நோக்கிக்களிறும் மாவும் நிரையும் பிறவும் கனவென அவர் மருளுமாறு வழங்கினான். "சேரமானைக் காணச் செல்லுமிடத்து வழியிடையே வேறு சில வேந்தர் எதிர்ப்படின், அவர்க்கு யாம் செல்வக் கடுங்கோ வாழியாதனால் புரக்கப் படும் இரவலர் என்னின், அவர்கள் தம் குடையைப் பணித்து அன்புடன் வழிவிடுவர்" என்று இதன்கண் அவனது ஒளியினையுயர்த்திக் கூறி, அவன் பொருநையாற்று மணலினும் அதனைச் சுற்றியுள்ள வயல்களில் விளையும் நெல்லினும் பல்யாண்டு வாழ்வானாக என்று வாழ்த்தியுள்ளார்.

    வள்ளுகிர வயலாமை
    வெள்ளகடு கண்டன்ன
    வீங்குவிசிப் மாக்கிணை
    யியக்கி யென்றும்
    மாறுகொண்டோடர மதிலிடறி         5
    நீறாடிய நறுங்கவுள்
    பூம்பொறிப் பணையெருத்தின
    வேந்துடைமிளை யயல்பரக்கும்
    ஏந்துகொட்டிரும்பிணர்த் தடக்கைத்         10
    திருந்துதொழிற் பலபகடு
    பகைப்புல மன்னர் பணிதியை தந்துநின்
    நகைப்புல வாணர் நல்குர வகற்றி
    மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்
    றியாஅ னிசைப்பி னனிநன்றெனாப்         15
    பலபிற வாழ்த்த விருந்தோர்தங் கோன்,,,
    மருவவின்னக ரகன் கடைத்தலைத்
    திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி
    வென்றிரங்கும் விறன் முரசினோன்
    என்சிறுமையி னிழித்து நோக்கான்         20
    தன்பெருமையின் றகவுநோக்கிக்
    குன்றுறழ்ந்த களிறென்கோ
    கொய்யுளைய மாவென்கோ
    மன்றுநிறையு நிரையென்கோ
    மனைக்களமரொடு களமென்கோ         25
    ஆங்கவை. கனவென மருள வல்லே நனவின்
    நல்கி யோனே நசைச றோன்றல்
    ஊழி வாழி பூழியர் பெருமகன்
    பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட்
    செல்வக் கடுங்கோ வாழி யாதன்         30
    என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்
    விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
    புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
    கல்லென் பொருநை மணலினு மாங்கட்
    பல்லூர் சுற்றிய கழனி         35
    எல்லாம் விளையு நெல்லினும் பலவே.
    ------------

திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

உரை: வள்ளுகிர வயலாமை - கூரிய நகங்களையுடைய வயலிடத்து வாழும் யாமையினது; வெள்ளகடு கண்டன்ன - வெண்மையான வயிற்றைக் கண்டாற் போன்ற; வீங்கு விசிப் புதுப் போர்வை - பெரிதாய் வலித்துக் கட்டப்பட்ட புதிய தோல் போர்த்த;தெண்கண் மாக்கிணை இயக்கி -தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை யறைந்து; என்றும் மாறுகொண்டோர் மதில் இடறி- எப்போதும் பகைவருடைய மதில்களைத் தகர்த்து; நீறாடிய நறுங்கவுள –நீறு படிந்த நறிய கபோலத்தையுடைய; பூம்பொறிப் பணையெருத்தின் - பூவேலை செய்யப்பட்ட பட்டமணிந்த பருத்த கழுத்தை யுடையவாய்; வேறுவேறு பரந்தியங்கி - வேறுவேறாகப் பரந்து சென்று; வேந்துடை மிளை அயல் பரக்கும் - வேந்தர்களுடைய காவற்காட்டின் அயவிடத்தே பரவியுலவும்; ஏந்துகோட்டு இரும்பிணர்த்தடக்கை - உயர்ந்த கோடுகளையும் பெரிய சருக்சரை பொருந்திய பெரிய கையையுமுடையவாய்; திருந்துதொழில் பல பகடு - திருந்திய தொழில் செய்யவல்ல பலவாகிய யானைகளையுடைய; பகைப்புல மன்னர் பணிதிறை தந்து - பகைநாட்டு வேந்தர் பணிந்து தரற்குரிய திறையைத் தந்து; நின் நகைப்புலவாணர் நல்குர வகற்றி - நினக்கு இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர் நண்பர் முதலியோரது வறுமையைப் போக்கி; மிகப் பொலியார் தன் சேவடி - மிகவும் விளங்குக அவன் திருவடி; என்று-; யா அன் இசைப்பின் நனி நன்று எனா - யான் பாடுவேனாயின் மிகவும் நன்றென்று; பல பிற வாழ்த்த இருந்தோர்- பலவாகிய பிற இயல்புகளைக் சொல்லி வாழ்த்தக் கேட்டு மகிழ்ந்திருந்தோர்க்கு; கோன் - தலைமை தாங்கும் வேந்தன், மருவ இன்நகர் அகன் கடைத்தலை - நெருங்குதற்கினிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து; திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி - திருந்திய கழலணிந்த சேவடியை வந்தடையுமாறு; வென்றிரங்கும் விறல் முரசினோன்- போர்க்களத்தில் பகைவரை வென்று முழக்கும் விறல்படைத்த முரசினையுடையவன்; என் சிறுமையின் இழித்து நோக்கான் - என் சிறுமை கண்டும் இகழ்ந்து நோக்காது; தன் பெருமையின் தகவு நோக்கி - தன் பெருமையும் தகதியும் நோக்கி; குன்றுறழ்ந்த களிறு - மலைபோன்ற களிறுகளும்; கொய்யுளையமா - கொய்யப் பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும்; மன்று நிறையும் நிரை - மன்றிடம் நிறைந்த ஆனிரைகளும்; மனனக்களமரொடு களம் - மனைக்கண் இருந்து பணிபுரியும் களமரும் நெற்போர்க்களங்களுமாகிய; அவை - அவற்றை; வல்லே - விரைவாக; கனவென மருள நனவின் நல்கியோன் - கனவென்று மயங்குமாறு நனவின்கண் நல்கினான்; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த தலைவன்; பூழியர் பெருமகன் பூழிநாட்டார்க்குப் பெருந்தலைவனாயவன்; பிணர் மருப்பு யானை சருக்சரை - பொருந்திய கையும் கோடுமுடைய யானைகள் செய்யும்; செருமிகு நோன்றாள் - போரில் மேம்பட்ட வலிய தாளையுடைய; செல்வக் கடுங்கோ வாழியாதன்; என்னா - என்று; தன் பெயர் கூறிய அளவில்; தெவ்வர் உயர்குடை பணித்து - பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக் குடையைத் தாழ்த்தி வணங்கி; நெடிது நில்லாது இவண் விடுவர் -நெடிது தாழ்க்காமல் தாம் செய்தற்குரிய சிற்புக்களைச் செய்து இவண் வரவிடவராதலால்; புல்லிலை வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத வஞ்சியாகிய வஞ்கிமாநகரின் மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; ஆங்கண் - அவ்விடத்து; பல்லூர் சுற்றிய கழனி யெல்லாம் - விளையும் நெல்லினும் பல வூழி வாழி - பலவாகிய வூர்களைச் சூழவுள்ள வயல்களெல்லாவற்றினும் விளையும் நெல்லினும் பலவாகிய வூழிகள் வாழ்வானாக; எ - று.

கிணை இயக்கி, தந்து, அகற்றில் பொலியர்தன் சேவடி என்று இசைப்பின் நனிநன்று எனா, வாழ்த்த இருந்தோர் தங்கோன், குறுகல் வேண்டி, இரங்கும், முரசினோன்; நோக்கான் நல்கியோன் தோன்றல், பெருமகன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னாத் தெவ்வர் குடை பணித்து, நில்லாது விடுவராதலின், மணலினும் நெல்லினும் பல வூழி வாழி என்று கூட்டி வினை முடிவு செய்க.

ஆமையின் வெள்ளகடுபோல்வது கிணைப்பறை யென்பதை " ஆமை கம்புள் இயவனாக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறமும்" (அகம். 356) என்று பிறரும் கூறுதல் காண்க. நாற்றிசையும் பரந்து சென்று காவற்காட்டையழித்தலின், " வேறு வேறு பரந்தியங்கி வேந்துடை மிளையயல் பரக்கும்" என்றார், திருந்து தொழிற் பகடென்றது, தாம் செய்தற்குரிய வினைபலவும் நன்கு பயின்றிருப்பது விளக்கி நின்றது. பகடாகிய திறையென இயையும். பகைப்புல வேந்தர் பணிந்து நண்பராயினமை தோன்றத் திறை பகர்ந்ததோடு அமையாது. சேரமானுடைய நகைப்புலவாணர்க்கு நல்குரவு தீர வழங்குவதும் சேரமான் புகழை அவர் பாடக்கேட்டிருந்து மகிழ்வதும் செய்வரென்பதாம். நகைப்புலவாணர், அறிவுக்கு இன்பச்சுவை நல்கும் புலவர், பாணர், கூத்தர் முதலாயினார். மருவுவார்க்குச் சீர்த்தவுணவும் உடையுந் தந்து சிறப்பித்தலின் "மருவவின்னகர்" என்றார். பெரிய தப்புநராயினும்தன் கழல் பணிந்து திறைதருவரேல் தான் பேரருளுடையனா மென்பதைக் குறித்துத் தெரிவித்தலின், "வென்றிரங்கும் விறன்முரசு" என்றார். ஏற்போர் சிறுமை நோக்காது ஈவோர் தம்தகுதி நோக்கிக் கொடுப்பது மரபு. என்கோ, ஆங்கு அசைநிலை பிணர் மருப்பு என்புழி: பிணர் ஆகுபெயராய்க் கைமேனின்றது. மனைக்களமர், மனையிடத்தே சோறும் கூறையும் பெற்றுப் பணிபுரியும் உழவர். செல்வக் கடுங்கோ வாழியாதன் பெயர்கூறக் கேட்ட அளவிலே பகைவேந்தர் அஞ்சி நெடிது தாழ்த்தாது பெயர் கூறினார்க்கு வேண்டுவன நல்கி வழிவிடுவரென அவனது ஒளியின் இயல்பு கூறுவார், "என்னாத் தெவ்வர் உயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே" என்றார். புல்லிலை யென்புழி புன்மை இன்மை குறித்து நின்றது: இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை வஞ்சிநகர்க்கண்மையிலோடும் பொருநை ஆன்பொருநை யெனப்படும். கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. "மண்ணாள் வேந்தே நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க" (சிலப். 28; 125-6) என அடிகளும் உரைப்பது காண்க. எனவே சேரநாட்டுவஞ்சி தண்பொருநைக் கரையிலும் கொங்கு நாட்டுக்கருவூராகிய வஞ்சி ஆன்பொருநைக்கரையிலும் இருப்பன வென வேறுபடுத்தறியவேண்டுவனவாம். சேரநாடு கேரள நாடாய்ச் செந்தமிழ் மொழியும் நாட்டு மக்களுடைய பண்பாடுகள் பலவும் திரிந்து வேறுபட்ட இடைக்காலத்துச் சேரநாட்டு வஞ்சியும் தண்பொருநையும் பெயருருத் தெரியாது மறைந்தன. இடைக் காலத்தறிஞர் கருவூரையே சேரநாட்டு வஞ்சியாமெனப் பிறழ வுணர்ந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சிக் குறிப்பைப் " புறநானூற்றுச் சொற்பொழிவுகள்" என்ற நூலிற் (பக். 34-5) காண்க.

விளக்கம்: செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடைவழங்கும் தலைவன் பலர்க்குத் தலைவன் என்பதும், அவனைக் கிணைப்பொருநன் பாடிச் சென்றபோது அவன் பொருநனது சிறுமை நோக்காது இனிது வரவேற்றதும், கொடைபல புரிந்ததும் அவனது ஒளியின் சிறப்பும் கூறிப்பொருநை மணலினும், நெல்லினும் பல வூழி வாழியென்பதும் பாலி ஆதனார் இப்பாட்டின்கட் கூறுவனவாகும். இவற்றுள் முற்றத்தே நின்று கிணைப் பொருநனது செயலை முதற்கண்ணோதிப் பின்னர்ச் சேரமானுடைய வென்றி நலத்தை விரித்தோதுகின்றார். தான் சேரமானைப் பாடவரும்போது தன் கிணைப்பறைக்குப் பதுப்போர்வை யணிந்து செம்மையுற வந்ததாகவுரைத்துச் சேரமான் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட யானைகளின் சிறப்பை "மாறுகொண்டோர் மதில்இடறி நீறாடிய நறுங்கவுள" என்றும், "பூம்பொறிப் பணையெருத்தின" என்றும் அவை திருந்திய தொழில்புரியும் பயிற்சியுடையவை யென்றற்கு, "திருந்து தொழிற் பலபகடு" என்றும் பொருநன் உரைக்கின்றான். அக்காலை அவன் வேந்தனை முன்னிலைப்படுத்தி வேந்தே. நினக்கு நின் பகைப்புலமன்னர் நல்கும் திறைப்பொருளைத் தந்து பொருநர், பாணர், கூத்தர் முதலிய "நகைப்புலவாணர் நல்குரவகற்றி மிகப்பொலியர்தன் சேவடி" என்று வாழ்த்தினான். அந்நிலையில் ஆங்கிருந்த சான்றோர் பலரும் அவன் செயலை நனிநன்றென வியந்து அக்கிணைவனை யூக்கினராக. அவன் இவைபோல்வன் பிறவும் எடுத்தோதினன். அச் சான்றோர் பலரும் அவையனைத்தும் செவியும் நெஞ்சம் குளிர இனிதிருந்து கேட்டனர் என்பான், "நனிநன்றெனாப் பலபிற வாழ்த்த இருந்தோர்" என்று இசைக்கின்றான். பின்பு அச் சான்றோர் சென்று அருளொழுக நோக்கிச் சிறப்பித்த செயலை, "என் சிறுமையின் இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கி" களிறும் மாவும் நிரையும் பிறவும் நல்கினன் என்று கூறுகின்றான். இழித்து நோக்கற்குரிய சிறுமை என்பால் இருப்பவும், தன்தகுதி நோக்கற்குரிய பெருமையுடையனாதலால் அவன் அது செய்யானாயினன்" என்றான். "விழையா வுள்ளம் விழையு மாயினும்", என்றும். "கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு அறனும் பொருளும் வழாமை நாடித் தற்றகவுடைமை நோக்கி மற்றதன் பின்னாகும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோ ரொமுக்கம்" (அகம், 281) என ஆசிரியர் ஓரம்போகியார் உரைப்பதனால், பெருமை தன்தகவு நோக்கற் பெருமகன்" என்றார். இவ்வாறு பரிசில்பெற்றுச் செல்லுங்கால் பகைவர் எதிருற்று வளைத்துக் கொள்வாராயின், அவர்க்குச் செல்வக்கடுங்கோ வாழியாதன் செய்த சிறப்பு இஃது என்றால், அவர்கள் தமது வணக்கத்தின் அறிகுறியாகத் தம் குடையைப் பணித்துப் பரிசிலரை இனிது செல்ல விடுவரென்பது.
----------

388. சிறுகுடி கிழான் பண்ணன்

சிறுகுடிகிழான் பண்ணனை இப் பாட்டால் ஆசிரியர் மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் என்னும் சான்றோர் பாராட்டிப் பாடியுள்ளார். பண்ணனது சிறுகுடி சோழநாட்டில் திருவீழிமிழலைக்கு அண்மையில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாட்ப்பெற்றவூராகும். இப் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும் கோவூர் கிழாரும் பாடியுள்ளனர். முடிவேந்தனான கிள்ளி வளவனே வியந்து பாடும் பாராட்டுப்பெற்றவன் இப்பண்ணன் எனின், இவனுக்கு அக்காலத்தில் தமிழகத்திலிருந்து நன்மதிப்பு மிகப்பெரிதாம். கிள்ளிவளவனை ஒருகாற பாடிப் போந்த கோவூர் கிழார் அவனால் பெரிதும் விரும்பப்பெற்ற பண்ணன் சிறுகுடியில் உள்ள பாதிரிமரத்தின் மணத்தை வியந்து, "கைகவள்ளீகைப் பண்ணன் சிறுகுடிப்பாதிரிகமழுமோதி யொண்ணுதல் இன்னகை விறலி" (புறம். 70) எனச்சொல்லி அவ் வளவனை மகிழ்வித்தார். முடிவேந்தனும் சான்றோரும் பாராட்டும் சிறப்புடைய பண்ணனை ஆசிரியர்மள்ளனார் இப்பாட்டின் கண் பாடுவாராய், இவனை யான் நாடோறும் பாடேனாயின் நன்றி கொன்றேனென்னும் குற்றம்பற்றி என் பெருஞ்சுற்றத்தாரைப் பாண்டியன் அருள் செய்யாமல் ஒழிவானாக என்று கூறுவதுடன் பண்ணன் புலவர்க்கு விளை நிலங்களை வினைப்பகடுகளோடே நல்குவன் என்றும், கிணைவனொருவன் பண்ணன்பாற்சென்று கிணைதொட்டுப் பாடிப் பரவினானாக அவனது வறுமைத் துன்பம் நீங்குமாறு தன்பால் உள்ள செல்வத்தைத் தந்தான் என்றும் குறித்துள்ளார். அளக்கர் ஞாழலார் என்றபாலது அளக்கர் ஞாழார் எனவும் காணப்படுகிறது. மள்ளனாருடைய தந்தையார் அளக்கர் ஞாழல் என்று சிறப்பித்துப் பாடியதுகொண்டு அவர் அளக்கர் ஞாழலாரெனப்பட்டா ரென்றும் அறியலாம். மள்ளனாரென்பது இவரது இயற்பெயர். இவர் பாடியனவாக அகத்தில் ஏழும் குறுந்தொகையில் இரண்டும் நற்றினணயில் மூன்றும் புறத்தில் ஈது ஒன்றுமாகப் பதின்மூன்று பாட்டுகள் உள்ளன. முல்லைக் காலத்தே பார்ப்பனமகளிர் முல்லை மலரைத்தம் கூந்தலில் அணிவரென்றும், தலைமகளொருத்தியின் நலத்துக்கு உவமையாக "முருகு புணர்ந் தியன்ற வள்ளி" யென்றும், கொல்லிமலையை "வெல்போர் வானவன் கொல்லி" யென்றும் குறிப்பர். தலைமகன் ஒருவன் பொருள்மேற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, "நாளது செலவும் மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத்தியற்கையும்" கனவு போலக் கழியும் என்பதும், இவைபோல்வன பிறவும் இவருடைய புலமைச் சிறப்பை விளக்குவனவாம். இப் பாட்டும் இடையிற் சில அடிகள் சிதைந்துள்ளது.

    வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
    பள்ளம் வாடிய பயணில் காலை
    இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
    சிறுகுடி கிழான் பண்ணற் பொருந்தித்
    தன்னிலை யறியுந னாக வந்நிலை         5
    இடுக்க ணிரியல் போக வுடைய
    கொடுத்தோ னெந்தை கொடைமேந் தோன்றல்
    நுண்ணூற் றடக்கையி னாமருப் பாக
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன்...         10
    வினைப்பக டேற்ற மெழீஇக் கிணைதொடா
    நாடொறும் பாடே னாயி னானா
    மணிகிளர் முன்றிற் றென்னவன் மருகன்
    பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானை
    அண்ணல் யானை வழுதி         15
    கண்மா றலீஇயரென் பெருங்கிளைப் புரவே.
    --------

திணை: அது, துறை; இயன்மொழி - சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

உரை: வெள்ளி தென் புறத்துறைய - வெள்ளியாகிய மீன் தென்றிசையில் நிற்க; வினைவயல் பள்ளம் வாடிய பயனில்காலை - விளை வயல்களும் நீர்நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்; இரும்பறைக் கிணைமகன் சென்றவன் - பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன் சென்று; பெரும்பெயர் சிறுகுடிகிழான் பண்ணற் பொருந்திய - பெரிய புகழையுடைய சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து; தன்நிலை அறியுநனாக- தனது வறுமைநிலையையறிவித்தானாக; அந்நிலை - அப்பொழுதே; இடுக்கண் இரியல்போக - அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு; உடைய கொடுத்தோன் - தான் உடைய பொருள்களைக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவனும்; கொடை மேந்தோன்றல் - கொடையால் மேம்பட்ட தோன்றலுமாகிய பண்ணன்; நுணணூல் தடக்கையின் நா மருப்பாக - நுண்ணிய நூற்பொருளே பெரிய கையாகவும் நாவே மருப்பாகவும்; வெல்லும் வாய்மொழிப் புலவர்க்கு - வெல்லுகின்ற வாய்மொழியாகிய களிற்றையுடைய புலவர்கட்கு; புல்லுடை விளைநிலம் பெயர்க்கும் - பண்ணன் கேட்டிர் நெல்லாகிய புல்லையுடைய விளைவயல்களை நல்கும் பண்ணனையான் கூறக்கேட்பீராக்;...அவன் வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா - அவனுடைய உழவுவினைக் குரிய எருதுகளையும் ஏற்றத்தையும் யாழிலிட்டிசைத்துக் கிணைப் பறையைக் கொட்டி; நாடொறும் பாடேனாயின் - நாளும் பாடா தொழிவேனாயின்; ஆனா மணிகிளர் முன்றில் - நீங்காத ஆராய்ச்சி மணி கட்டியிருக்கும் முன்றிலையுடைய; தென்னவன் மருகள் - பாண்டியன் வழித்தோன்றலான; பிணி முரசு இரங்கும் நீடு கெழு தானை – வாராற்கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய தானையையுடைய; அண்ணல் யானைவழுதி - தலைமை பொருந்திய யானைப் படையாற் சிறந்த வழுதி; என் பெருங்கிளைப்புரவு கண்மாறலீயர் - என் பெரிய சுற்றத்தாரைப் புரத்தற்கு வேண்டும் அருளைச் செய்யாதொழிவானாக; எ- று.

விளைவயல் பயன்தாராது கெடுதற்குப் பள்ளங்கள் நீர்வற்றுதலா தலின், "விளைவயற் பள்ளம் வாடிய பயனில்காலை" என்றார். கிணைப் பொருநனைக் கிணைமகன் என்ப. பெரும்பெயர்ப் பண்ணன் எனஇயையும்; பெயரென்றுது ஈண்டுப் புகழ்மேனின்றது. கிணைமகன் தக் வறுமையைக் குறிப்பால் உணர்த்திய அப்பொழுதே சிறிதும் தாழ்க்காது தான் உடையவற்றை வழங்கினமை தோன்ற "அந்நிலை" யெனப் பட்டது; "அந்நிலையே கெட்டான் எனப்படுத என்று" (குறள். 967) என்றாற ் போல. கடக்கையும் மருப்பும் கூறி அவற்றையுடைய களிற்றைக் கூறாமையின், இஃது ஏகதேசவுருவகம். நுண்ணிய நூற்கேள்வியாலாகும் அறிவாற் செயல் நலம் சறிப்புறுதலின் அதனைத் தடக்கையாகவும் அறிவாற் செயல் நலம் சிறப்புறுதலின் அதனைத் தடக்கையாகவும் சொற்போர் வல்லாரை வேறற்கு நற்கருவியாதலின் நாவை மருப்பாகவும் உருவகம் செய்துள்ளார். உழுதற்றொழிலில் நன்கு பயின்ற எருதுகள் வினைப்பக டெனப்பட்டன. வினைப்பகடேற்ற மேழி கிணைதொடா என்ற பாடத்துக்குப் பகடும் ஏற்றமும் மேழியும் பண்ணற்குப் பெருங்கருவியாய் உழவுவளம் மேம்படுதற்குதவுதலின் அவற்றைப் பாடுவது அவளைப் பாடுவதா மென்பது கொண்டு "கிணைதொடாப் பாடேனாயி" னென்றாரெனக் கோள்க. ஏத்துதற்குரியாரை ஏத்தாமை நன்றி கொல்லும் குற்றமாதலின் அதுகுறித்து வழுதி கண்மாறுவானாக என்றார். இது வஞ்சினம், கண்மாறலீயர் - கண்மாறுக; "அருள் கண்மாறலோ மாறுக" (அகம். 144) என இம் மள்ளனார் கூறுவது காண்க.

விளக்கம்: இப் பாட்டின்கண் ஆசிரியர் மள்ளனார் தொடக்கத்தில் பண்ணன் கிணைவனுக்கு வழங்கிய கொடையினையும், பின்னர்ப் புலவர் கட்குச் செய்யும் பேருதவியையும் பாடி, இறுதியில் அவன் நலம் பாராட்ட வழிநன்றிகொன்ற குற்றத்துக்காகப் பாண்டியன் தம்பால் அருள் கண்மாறுக என்று உரைக்கின்றார். வறம் மிக்க காலத்தில் கிணைவன் சிறு கிழான் பண்ணனைப் பாடிச் சென்று, "தன்னி்லை அறியுநனாக அந்நிலை இடுக்கண் இரியல்போக உடைய கொடுத்தான்" என்றார். "வெள்ளி தென்புலத்துறைய விளைவயற் பள்ளம் வாடிய பயனில்காலை" என்பதை எடுத்தோதுதலால், சிறுகுடிகிழான் பண்ணன் மழைவளத்தால் விளையும் விளைவே விளைவே வருவாயாக வுடையன் என்பது பெற்றாம். புலவர்கட்கு விளைநிலம் பெயர்க்கும் என்பது புலவர்பால் அவன்கொண்ட பேரன்பு குறித்து நிற்கிறது. பண்ணன் உழவுத்தொழிலால் பெருவளம் பெற்றுக் கொடைக்கடன் இறுக்கும் புகழுடையனாதலால், அவனுடைய பகடும் ஏற்றமும் புகழ்ந்து பாடப்படுவனவாயின. அருள்செய்தற்குரிய வழுதி, புகழ்தற்குரிய பண்ணனை யான் புகழேனாயின், என் பெருங் கிளைபால் அருள்செய்யா தொழிதல் கொடுமையாகாமையின் அவன் அது செய்க என்றான்.
---------------

389. நல்லேர் முதியன்

தமிழகத்தின் வடவெல்லையாக விளங்கும் திருவேங்கடத்தின்கண் இருந்து பண்டைநாளில் அப் பகுதியையாண்ட வேந்தர்களான புல்லி ஆதனுங்கன் முதலியோர் வழித்தோன்றல் இந்த நல்லேர் முதியன். இவனுடைய முன்னோனாகிய ஆதனுங்கனைப் பாடிப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்திய கள்ளில் ஆத்திரையானரென்னும் சான்றோர் ஒருகால் முதியனைக் காணச் சென்றார். அக்காலை ஆதனுங்கன் செய்த சிறப்பை யோதுவாராய், யான் பண்டு வந்திருந்தபோது இளையனாயிருந்தேன்; என்னை நோக்கி, "பிள்ளைப் பொருந, வெள்ளிமீன் வறனுண்டாதற்குரிய திசைக்கட் செல்லுங்கால் நின்னால் நினைக்கப்படுவாருள் எம்மையும் மறவாது நினைப்பாயாக" என்று சொல்லி வேண்டுவன நல்கினன். அத்தகைய வள்ளியோன் இன்று யான் சென்றுகூடும் இடத்தில் இல்லை; சென்றால் காணமாட்டாத இயல்புடையனுமல்லன்; அவன் இவ்வேங்கடத்துக்கு உரியவன்; என்று கூறி, "நல்லேர் முதியனே, அந்த ஆதனுங்கன்போல நீயும் எம் பசிப்பிணி தீர வீறுடைய நன்கலங்களை நல்குக; பெருமானே; நின் நெடுமனை முற்றத்தே நின்மகளிர் சாப்பறை முழக்கம் கேளாதொழிவார்களாக" என்று இப் பாட்டின்கண் கூறியுள்ளார். ஆத்திரையனாருடைய கள்ளில் என்று மூரைத் "தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்துக் குன்றிகை நாட்டுத் திருக்கள்ளில்" (A.R. 486 of 1926) என்று கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வூரிலுள்ள சிவனைத் திருஞான சம்பந்தர் "கள்ளின் மேய அண்ணல்" (119:1) என்று பாடினாராகக் கல்வெட்டுக் காலத்தவர் தவறாகக்"கள்ளின்" மெனப் பொறிப்பாராயினர். இதற்குக் கள்ளுரென்றும் பெயர (A.R. No. 490 of 1928) உண்டு. இனி ஆசிரியர் கடுவன் மள்ளனார் கூறும் "தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக், கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளுர்" (அகம். 253) இஃதெனக் கருதுவோரும் உண்டு. இதற் கிப்போது மடவிளாகம் என்பது பெயர்.

    நீர் நுங்கின் கண்வலிப்பக்
    கானவேம்பின் காய்திரங்கக்
    கயங்களியுங் கோடையாயினும்
    ஏலா வெண்பொன் போகுறு காலை
    எம்மு முள்ளுமோ பிள்ளையச பொருந         5
    என்றீத் தனனே குசைசா னெடுந்தகை
    இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன்
    செலினே காணா வழியனு மல்லன்
    புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து
    குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்         10
    கல்லிழியருவி வேங்கடங் கிழவோன்
    செல்வுழி யெழாஅ நல்லேர் முதிய
    ஆத னுங்கன் போல நீயும்
    பசித்த வொக்கற் பழங்கண் வீட
    வீறுசா னன்கல நல்குமதி பெரும         15
    ஐதக லல்குன் மகளிர்
    நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே.
    ----------

திணையும் துறையு மவை. நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

உரை:நீர் நுங்கின் கண் வலிப்ப - நீர் நிறைந்து மெல்லி தாயுள்ள பனைநுங்கு வற்றிக் கற்ோல் வலிதாக; கான வேம்பின் காய் திரங்க - காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் முற்றாது உலர்ந்துகெட்; கயங் கறியும் கோடைக்காலமாயினும் - ஆழ்ந்த நீர்நிலை வற்றிப் பிளவுற்றுக்கிடக்கும் கோடைக்காலமாயினும்; ஏலா வெண்பொன் போகுறுகாலை - வெள்ளியாகிய மீன் தெற்கின் கட் சென்று வறம்செய்யும் காலையாயினும்; பிள்ளையம் பொருத - பிள்ளைப்பருவங் கடவாத பொருநனே; எம்மும் உள்ளுமோ - நின்னால் நினைக்கப்படுவோருள் எம்மையும் நினைப்பாயாக; என்று ஈத்தனன் - என்று சொல்லிப் பெருவளம் நல்கினான்; இசைசால் நெடுந்தகை - புகழ் நிறைந்த நெடிய தகைமையினையுடைய தலைவன்; இன்று சென்று எய்தும் - காணும் இடத்தில் உள்ளான் அல்லன்; செலின் காணா வழியனுமல்லன் - சென்றால் காணவியலாத அருஞ்செவ்வி யுடையனுமல்லன்; - புன்றலை மடப்பிடி இனைய-புல்லிய தலையையுடைய பிடியானை வருந்த; கன்று தந்து - அதன் கன்றைக் கொணர்ந்து; குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும் - குன்றை ஊரகத்தேயுடைய நல்லவூரின் மன்றத்தே பிணித்துவைக்கும்; கல்லிழியருவி வேங்கடம் கிழவோன் - கற்களினூடே யோடி யிழியும் அருவிகளையுடைய வேங்கடத்துக் குரியவனான;செல்வுழி எழாஅ நல்லேர் முதிய -தன் மனம் செல்லுமிடமெல்லாம் சேற்ற கெழாத நல்லேர் முதியனே; ஆதனுங்கன் போல - நின் முன்னோனாகிய ஆதனுங்கன்போல; நீயும்-;பசித்த ஒக்கல் பழங்கண் வீட - பசித்த என் சுற்றத்தாருடைய துன்பம் கெட்; வீறுசால் நன்கலம் நல்குமதி - சிறப்பமைந்த நல்ல கலன்களை நல்குவாயாக; ஐதகல் அல்குல் மகளிர் - மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய நின் மகளிர்; நெடுங்கடை நெய்தல் கேளன்மார் - நின் பெருமனையின் நெடிய முற்றத்தில் நெய்தற்பறையே கேளா தொழிவார்களாக; எ- று.

கோடை மிகுந்த காலை பனைநுங்கு நீர்வற்றிக் கற்போல் வலிதாகலும் கயங்கள் வற்றி அடிப்பகுதி வெடித்துப்பிளந்து கிடப்பதும் இயல்பாதலால் "நுங்கின்கண் வலிப்ப" வென்றும் "கயங்களியும்" என்றும் கூறினார். "ஏலா வெண் பொன்" என்றது வெள்ளியாகிய மீனுக்கு வெளிப்படை போகுறு காலை, வறஞ்செய்தற்பொருட்டுத் தெற்கேகுங் காலம்.

ஆயினும் என்பதைக் காலைக்குங் கூட்டுக. இதனைப் போருறு காலை என்று பாடங் கொண்டு வெள்ளிமீன் ஏனைக் கோள்களோடு போர்செய்யுங் காலையென்று பொருள் கூறுதலுமுண்டு. ஆதனுங்கனது முதுமையும் தமது இளமையுந் தோன்ற, "பிள்ளையம்பொருந" என்று குறித்தார். ஈவார்மேல் புகழ்நிற்கு மாகலின் "ஈத்தனனே இசைசால் நெடுந்தகை" யென்றார். ஆதனுங்கள் இறந்து உயர்ந்தோருலகில் இருக்கின்றனென்பார் "இன்று சென்றெய்தும் வழியனுமல்லன்" எனவும், அங்குச் செல்லின் அவனைக் காண்டல் எளிது என்பார், "செலினே காணாவழியனுமல்லன்" எனவும் தெரித்தார். இனி ஆதனுங்கன் வேங்கடத்திலும், நல்லேர்முதியன் பிறிதோரிடத்திலும் ஒரு காலத்தவராய் வாழ்ந்தவரென்றும், ஆத்திரையனார்க்கு வேங்கடத்தினும் முதியனூர் அண்மையில் இருந்ததாமென்றும், முதியனுக்கு ஆதனுங்கன் இயல்பு தெரிவித்தற்கு "இன்று சென்றெய்தும் வழியனுமல்லன் செலினே காணாவழியனுமல்லன்" என எடுத்தோதினாரென்றலுமுண்டு; ஆயினும் ஒத்தகாலத்து ஒத்த நிலையிலுள்ள வள்ளியோனொருவளைக் காட்டி வேறொரு வள்ளியோனைச் சான்றோர் பாடும் வழக்கம் தொகை நூல்களிற் காணப்படாமையை ஈண்டுக் கருதுதல் வேண்டும். "மடப்பிடியினையக் கன்று தந்து மன்றத்துப்பிணிக்கும் குன்றநல்லூர்" என்றது, ஆதனுங்கனுடைய நெடுமனை புலம்ப அறக்கடவுள் அவனை உயர்நிலை யுலகிற் கொண்டுய்த்த தென்னும் குறிப்பைத் தன்னுட்கொண்டு நிற்கிறது. இக்குறிப்பையே "மகளிர் நெய்தல் கேளன்மார் நெடுங்கடையானே" என்றது வற்புறுத்திநிற்கிறது. மனஞ்செல்வுச்சேறல்நிறையாகிய நற்பண்பில்லாதார் செய்கையாய் ஒருவற்குச் சிறுமைபயக்கு மாதலின் அதனை நாடாது பெருமைக்குரிய பண்பும் செயலும் நல்லேர் முதியன்பால் உண்மை தோன்ற, "செல்வுழியெழாஅ நல்லேர் முதிய" என்றார், ஏர், அழகு; நல்லேர் என்றது பெருமையு முரனுமாகிய அழகு குறித்ததாம். செல்வத்துக்குப் பயன் சேர்ந்தோர் புன்கண் அஞ்சி அதனைக் கடிதிற் களையும் மென்மையுடைமை யாதல் பற்றி, "பசித்தோர் பழங்கண் வீட நல்குமதி" என்றும் ஆதனுங்கன் பிரிவால் கறங்கிய நெய்தற்பறை மீளவும் கறங்கலாகாதென்ற கருத்தை வற்புறுத்தலின், "நெய்தல் கேளன்மார்" என்றும், கூறினார். வலிப்பத்திரங்கக்களியும் கோடையாயினும், போகுறு காலையும், பொருந, உள்ளுமோ என்று ஈத்தனன், நெடுந்தகை; அல்லன், அல்லன், கிழவோனாகிய முதிய. நீயும், ஆதனுங்கன்போல, பழங்கண் வீட நன்கலம் நல்குமதி; பெரும மகளிர் நெடுங்கடையில் நெய்தல் கேளன்மார் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: இங்கே குறிக்கப்படும் ஆத்ன்நுங்கனைப் போல, நுங்கன் என்று பெயர் தாங்கிய வேந்தர்பிற்காலத்தே ஆந்திரநாட்டில் குடிபுரந்து அரசுபுரிந்துள்ளனர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அன்போதி நாயுடு என்பான் தன் சிறிய தந்தையான பாரி நாயுடுவுக்கும் சிற்றன்னை நுங்கன் சானிக்கும் நன்றுண்டாகக் கல்லூர்க் கங்காதரேசுரர்க்கு எண்ணெயாடும் செக்கு நல்கினான் (Nel. Ins. Darsi. 33). பதினான்காம் நூற்றாண்டில் அசனதேவமகாராயர் காலத்தில் உண்டான கல்வெட்டொன்று, அவருடைய தந்தையார் நுங்கதேவமகாராயரென்றும், அசனதேவர் மகன் பெயரும் நுங்கராயரென்றும் கூறுகிறது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் குண்டூர் சில்லாவிலுள்ள ஓங்கோல் தாலூகாவைச் சேர்ந்த கணுபார்த்தி பகுதியில் வீரனுங்கள் என்றொரு வேந்தன் இருந்தானென்றும், அவன் மகன் வீர அமலன் (அபலன்) என்பான் பிரமகுண்டிகையென்றும் ஆறு கடலொடு கலக்குமிடத்திலுள்ள கோசம்பி நகரத்து வேதியர்களுக்கு நிலம் வழங்கினானென அவ்வூர்க் கல்வெட்டொன்று. (Nel. Ins. O.55pp 988-90) கூறுகிறது. கொண்டவீட ரெட்டி வேந்தருள் அன்னவேமன் என்னும் வேந்தன் தன் உடன்பிறந்தவளும் நல்லன் நுங்கண் என்னும் வேந்தனுடைய பட்டத்தரசியுமான வேமசானி யென்பவட்கு நன்றாக நடுப்பூராண வேமாயுரத்தைப்பிரமதாயமாகச் செப்பேடு நல்கியுள்ளான். (Ep. Ind. Vol. III. பக். 286-92)

இப் பாட்டிற்கூறப்பட்ட குன்றகநல்லூர் என்ற தொடர்நலங் கண்ட சான்றோர் புழற்கோட்டத்தூ ரொன்றற்குக் குன்றகநல்லூர் என்று பெயரிட்டு வழங்கினரெனவும் அதுவே பின்பு புழற்கோட்டத்துக் குன்றக நாட்டுக்குத் தலைமையூராகக் கொள்ளப்பட்டதெனவும், பின்னர் அக்குன்றகநல்லூர் குன்றிகை நாடெனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவ தாயிற்றெனவும் கருதுதற் கிடனுண்டு. நல்லேர் முதியன் காலத்தே ஆதனுங்கனும் பிறிதோரிடத்தில் வாழ்ந்து சிறந்திருந்தானாயின், அவனை உவமங்கூறுவது வேற்றுமையுணர்வுக் கிடந்தந்து ந்மை விளைவியாதெனத் தெரிதல் வேண்டும். பிடியினையக்கன்றைக்கொணர்ந்து மன்றத்துப் பிணிக்கும் செயலைக் கல்லாடனாரும் "கறைடிய மடப்பிடி காணத்தலறக் களிற்றுக் கன்றொழித்தவுவகையர் கலி சிறந்த கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து, பெரும் பொளி நறவுநொடை நல்லிற்புதவு முதல் பிணிக்கும், கல்லர் விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்" (அகம். 83) என்று கூறுவது ஒப்புநோக்கத் தக்கது. கல்லாடனாரும் வேங்கட நாட்டவரென்பது "தண்டுளிபலமொழிந்" (புறம். 391) தெனவரும் அவர் பாட்டால் தெளியப்படுகிறது.
--------------

390. அதியமான் நெடுமான் அஞ்சி

இப் பாட்டினால் ஒளவையார் அதியமானது கொடைநலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில்வைத்துச் சிற்பபிக்கின்றார். இதன் கண் பொருநன் ஒருவன், முல்லை நிலத்து ஆயர் தம்மிற் கூடியெடுக்கும் விழவுக்களம்போல் அணிசிறந்து விளங்கும் அதியமான் பெருமனையை அவன்பால் அன்புடையார் எளிது சென்றடைதல் கூடுமேயன்றி வேறு பட்ட வேந்தர் சேறல் அரிது; அது மிக்க காவலுடையதென்று கூறுகின்றான். ஒருநாள் அவன் அதியமானது தகடூர்க்குச் சென்று அன்றிரவு அவனுடைய மனைமுற்றத்தே நின்று தன் தடாரிப் பறையைக் கொட்டி அதியமானுடைய புகழைப் பாடி நின்றானாக, அதியமான் அப்பொருநனுடைய அழுக்கேறிப் பீறிய உடையைக் களைந்து கள்ளும் அடிசிலும் வெண்கலத்திற்றந்து உண்பித்தான்; பின்பு அவ்வதியமான் அவனுக்கும் அவனுடன் வந்த சுற்றத்தார்க்கும் நெல்லும் பொன்னும் கொடுத்தான். அவற்றைப்பெற்று மகிழ்ந்த அப் பொருநன், "பலபொருநர் எம்பால் நின்று வருத்தும் பசித்துன்பத்தை வானமும் அறித்தில" என்று வருந்துகின்றனர்; வேந்தனாகிய அதியமான் உளனாதலை அவர் அறிந்திலராதல் அவனைக் கண்டறிந்திலராதல் வேண்டும் என்று இப் பாட்டின்கட் கூறுகின்றான். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன.

    அறவை நெஞ்சத் தாயர் வளரும்
    மறவை நெஞ்சத் தாயி லாளார்
    அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
    விழவணி வியன்கள மன்ன முற்றத்
    தார்வலர் குறுகி னல்லது காவலர்         5
    கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்
    மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென்
    அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப்
    பாடி நின்ற பன்னா ளன்றியும்
    சென்ற ஞான்றைச் சென்றுபடரிரவின்         10
    வந்ததற் கொண்ட நெடுங்கடை நின்ற
    புன்றலைப் பொருந னளியன் றானெனத்
    தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
    முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து
    திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ         15
    மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும்
    அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில்
    வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி
    முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
    இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகன்ற         20
    அகடுநனை வேங்கை வீகண் டன்ன
    பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
    கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை
    மலையல ரணியுந் தலைநீர் நாடன்
    கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி...         25
    வானறி யலவென்ப ரடுபசி போக்கல்
    அண்ணல் யானை வேந்தர்
    உண்மையோ வறியலர் காண்பறி யலரே.
    -------------

திணையும் துறையு மவை. அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

உரை: அறவை நெஞ்சத்து ஆயர் - அறம்புரியும் நெஞ்சினையுடைய ஆயர்களும்; வளரும் மறவை நெஞ்சத்து ஆய்இலாளர் - பெருகு கின்ற மறம் பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடியில் வாழ்பவரும் கூடியெடுக்கும்; அரும்பலர் செருந்தி நெடுங்கான் பலர் கமழ் விழவணி வியன்கள மன்ன - அரும்பு மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் செறிந்த நெடிய காட்டிடத்து மலரும் பூக்களின் மணம் கமழும் விழாவாற் பொலியும் அகன்ற மன்றத்தையொத்த; முற்றத்து - நெடுமனை முற்றத்தின்கண்; ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலும் குறுகாக் கடியுடை வியனகர் - அன்பராயினார்க்கன்றி மாறுகொண்ட வேந்தராயினார்க்குக் கனவின்கண்ணும் சென்று சேர்தற்கியலாத காவலையுடைய அகன்ற நகரின்கண் புகுந்து; மலைக்கணத் தன்ன மாடம் சிலம்ப-மலைகளின் கூட்டத்தையொத்த மாடங்கள் எதிரொலிக்க; என் அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் தடாரிப்றை கிழியும்படி யறைந்து; பன்னாள் பாடி நின்ற(து) அன்றியும் - பன்னாள் பாடி நின்றதில்லையாகவும்; சென்று ஞான்றைச் சென்று படர் இரவில் வந்ததற்கொண்டு - சென்ற நாளில் அன்றைய இரவுப் போதிலே வந்ததுகொண்டு; நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருநன் அளியன் என - நமது நெடுமனை முன்றிலில் நின்று பாடும் புல்லிய தலையையுடைய பொருநன் அளிக்கத்தக்கவன் என்று; தன்னுழைக் குறுகல் வேண்டி - யான் தன்பால் அணுகுவது குறி்த்து;என் அரை முதுநீர்ப் பாசி அன்ன உடை களைந்து -என் இடையிலிருந்த பழைமையான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீ்க்கி; திருமலர் அன்ன புதுமடி கொளீஇ -அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்துடுப்பித்து; மகிழ்தரல் மரபின் மட்டேயன்றியும் - களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடும்; அமிழ்தன மரபின் ஊன்துவையடி சில் - அமிழ்து போற் சுவையுடைய ஊன்துவையலோடு கூடிய சோற்றை; வெள்ளி வெண்கலத்து ஊட்டலன்றியும் - வெள்ளியாலாகிய வெள்ளிய கலத்தே பெய்து உண்பித்ததோடு; முன்னூர்ப் பொதியில் சேர்ந்த - ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த; மென்டை இரும்பேரொக்கல் பெரும்புலம்பு அகற்ற - தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெரும்துயரைப் போக்க; அகடுநனை வேங்கை வீ கண்டன்ன - தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கபை் பூவைக் கண்டாற்போன்ற; பகடுதரு செந்நெல் போரொடு நல்கி - உழவெருதுகளைக் கொண்டு உழுது வினளவித்த செந்நெல்லை இப்பொருளைப் பெற்றுக்கொள்க என்று சொல்லிக் கொடுத்தான்; உண்டுறை மலை யலர் அணியும் தலைநீர் நாடன் - நீர்கொள்ளும் துறைக்கண் மலையிடத்துப் பூத்த பூக்களைக் கொணர்ந் தொதுக்கும் தலை நீரால் வளம் பொருந்திய நாட்டையுடையவன்; கண்டால் மனைகொண்டு திருந்தடி வாழ்த்தி - அவனைக் கண்டால் மனையிடத்தே அழைத்துச் சென்று அவனுடைய திருந்திய அடிகளை வாழ்த்தி வணங்கி; .......... அடுபசி போக்கல் வான் அறியல என்பர் ............. எம்மை வருத்துகின்ற பசியைப் போக்குதற்கு மழையும் அறிந்து மழை பெய்யாதாயிற்றென்பார்; அண்ணல் - யானை வேந்தன் உண்மை யறியலர் காண்பறியலர் - தலைமை யமைந்த யானையையுடைய வேந்தனாகிய அதியமான் உளனாதலை யறியாதவரும் அறிந்தும் அவனைக் கண்டறியாதவரும் எ - று.

ஆனிரைகளைக் காத்தோம்பும் ஆயர்களை "அறவைநெஞ்சத்தாயர்" என்றார். அடிகளும், "ஆகாத் தோம்பி யாப்பய னனிக்கும் கோவலர் வாழ்க்கை கொடும்பாடில்லை" (சிலப். 15:120:1) என்றார். வளர்தல் மிகுதல். ஆயில், ஆய்ந்தஇல்; பொருளின்மையாற் சிறுமையுற்ற இல்லம் என்றவாறு. விழாக்காலங்களிற் பலவகைப் பூக்களால் மனைகளையும் மன்றங்களையும் ஒப்பனைசெய்து தாமும் சூடி இன்புறுதலால், எங்கும் பூக்களின் நறுமணம் நிலவுவதுபற்றி "அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ் விழவணி வியன்களம்" என்றும், வழிவணி முழுதும் இயல்பாகவே தன்கண்கொண்ட முற்றமென்று சிறப்பித்தற்கு "விழவணி வியன்கள மன்ன முற்றம்" என்றும் சிறப்பித்தார். நெடுங்காற் செருந்தியென இயைப்பினுமமையும். இன்பர்க்கெளிமையும் அல்லார்க்கு அருமையும் உடையனென்பதை அவன் நகர்மேல் வைத்து "ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலுங் குறுகாக் கடியுடை வியனகர்" என்றார். கோடுயர்ந்த மாடங்கள் நிறைந்திருப்பது பற்றி மலைக்கணம் உவமம் கூறப்பட்டது. சென்ற ஞான்றைச் சென்று படர் இரவென்றது, பகற்போதில் அவனூருக்குச் சென்று ஊர்க்கு முன்னேயுள்ள மன்றத்தே தங்கிப் பகற்போதைக் கழித்து இரவின் கடையாமத்தேகிணைப் பறை கொட்டித்தலைவன் புகழ்பாடுவது கிணைப்பொருநர் செயன்முறையாதல் பற்றி, பரிசில்தர நீட்டியாது விரைந்து தந்தமைதோன்ற, "பாடிநின்ற பன்னாளன்றியும்" என்றான். பசித்து வருந்தும் வறுமைக் கோலத்தில் பொருநனைக் காணப்பொறாது உண்டியும், உடையுந் தந்து சிறப்பித்த அதியமான் உள்ளத்தின் வள்ளன்மை நலத்தை எடுத்தோதினார். திருமலரென்பது ஈண்டுப் பகன்றை மலரை. "போது விரி பகன்றைப் புதுமலரன்ன, அகன்றுபடி கலிங்கம்" (புறம். 393) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர்ப்பாசிக்கு முதுமை கூறியது அதன் மென்மை மிகுதியுணர்த்தற்கு. முதுமையை நீர்க்கேற்றி, முதுநீரென்றது புதுநீரிற் பாசிபடாமை பற்றியென்று கூறலுமொன்று. தன்னுடைய ஒக்கல் பசியால் மெலிந்து நடக்கும் வலியிழந்திருக்குமாறு விளங்க. "மென்னடை யொக்கல்" எனற்ான். நெல்விளைவுக்குப் பகடு இன்றியமையாமையின், "பகடுதரு செந்நெல்" என்றார்; "பகடு நடந்த கூழ்" (நாலடி. 2) என்பர் பிறரும். மலையினின்றிழி தரும் நீர் முதற்கண் மலையடியிற்கிடநத் நாட்டிற் பாயுங்கால் அதன் புதுமை குன்றாமைபற்றித் தலைநீர் எனப்பட்டது. வேந்தனாகிய அதியமானது உண்மையையறியும் திறமும் அறிந்த வழி அவனைக் கண்டறியுந் திறமும் இல்லாதாரே தம் பசித் துன்பத்தைப் போக்குதற்கு மழைமேற்பழிதூற்றுவர் என்பார் "வானறியலவென்பர் அடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தனுண்மையோ வறியலர் காண்பறியலரே" என்றார். "பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண்டு உலகு புரப் பதுவே" (புறம். 107) என்று கபிலர் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. வியன்கண் மன்ன முற்றத்து, வியனகர், மாடம் சிலம்ப, தடாரி ஒற்றி, பாடிநின்ற தன்றாக, கொண்டு, என, குறுகல் வேண்டி, களைந்து, கொளீஇ, ஊட்டலன்றியும், ஒக்கல் புலம்பகற்ற, நல்கி, பெறுக என்றேன், நாடன், அறியலரும் காண்பறியலரும் என்பர் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: அதியமான் கொடைநலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து ஒளவையார் அறிவுறுத்திகின்றாராகலின், முதற்கண் அதியமானது வியனகர் மாடச்சிறப்புக் கூறுகின்றார்; பின்பு அதியமான் தன் நெடுங்கடை நின்று பாடும் கிணைவனை வரவேற்ற நலத்தை யெடுத்தோதி அவன் நல்கிய பெருவளத்தை விரித்துரைத்து இறுதியில் அவனைக் கண்டு பரிசில் பெறாது வறுமையுற்று வருந்தும் ஏனை இரவலர் பொருட்டுப் பரிந்து சில கூறி முடிக்கின்றார். அதியமானது வியனகர் ஆயரும் சிறுகுடி மறவரும் சேர்ந்து செய்யும் பூக்கமழ் பிழாக்களம்போல் கண்ணுக்கினியகாட்சி வழங்கும் என்பார், "அறவை நெஞ்சத் தாயரும்... வியன்கள மன்ன முற்றத்து" என்றும், அதன் காவற் பெருமையைக் "காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்" என்றும் கூறினார். ஏனைப்புரவலர் பால் கினணப்பொருநர் சென்றால், பன்னாள்நின்று அவரைப்பாடுவர்: பின்னரே அவர் பரிசில் தரப்பெறுவர்; அவ்வாறன்றிச் சென்ற நாளே பரிசில் நல்கப்பெற்றமை தோன்ற, "பாடிநின்ற பன்னாளன்றியும் சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் வந்ததற்கொண்டு" என்றான், அவன் தந்த கொடையினை, புதுமடியும் பட்டும் அடிசிலும் நல்கி "அகடுநனை வேங்கை வீ கண்டன்ன, பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டிபெறு கென்றோனே" என்றவர், இரவலர் பலர், "அடுபசி போக்கல் வான் அறியல என்பர்; அண்ணல் யானைவேந்தன் உண்மையோ அறியலர் காண்பறியலர்" என வருந்துவது கண்டு பரிந்து கூறுகின்றார். இவ் வண்ணம் பரிசில்பெற்ற கினணப்பொருநன் மகிழ்ந்து கூறவது பொருளாக ஒளவையார் அதியமான் சிறப்பைத் தாம் நேரிற் கண்டவாறே யுரைத்துள்ளார்.
--------------

391. பொறையாற்றுகிழான்

பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையிலுள்ள தோரூர். இதனைப் புறந்தையென்றும் சங்கச் சான்றோர் மருவி வழங்குப். விரியிணர்ப் புன்னையங் கானற் புறந்தை" (அகம். 100) என வருதல் காண்க. கி.பி. பத்துப் பதினோராம் நூற்றாண்டில் இப் பொறையாறு, குறும்பூர் நாட்டுத் தேவதானமான திருவிடைக்கழிக்குப் (A. R. No. 267 of 1925) பிடாகையா (A. R. No. 234 of 1925) வழங்கிவந்திருக்கிறது. அப்பகுதியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் குன்றத்து நாராயணன் என்பவனால் வடமொழி வேதாந்தக் கல்லூரி யொன்று (A. R. No. 276 of 1925) நிறுவப் பெற்றிருந்தது. இந்நாளில் அப்பகுதி கல்வி மணம்குன்றாது வளஞ்சிறந்து விளங்குவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. இப் பொறையாற்று கிழான் பெரியன் எனப் படுவன். "நறவுமதி ழிருக்கை நற்றேர்ப் பெரியன், கட்கமழ் பொறையாறு" (நற்:131) என்றும், "பாடுநர்த்தொடுத்த கைவண்கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன்" (அகம். 100) என்றும் ஆசிரியர் உலோச்சனார் கூறுதல் காண்க. ஆகவே புலவர் பாடும் புகழ் படைத்த பெரியன். பாடும் பணிமேற்கொண்ட புலவர் பாணர் பொருநர் முதலாயினார்க்குப் பேராதரவு புரிந்து வாழ்ந்த பெருந்தகையென்பது தெளிவாகிறது. இவன்பால் ஒருகால் ஆசிரியர் கல்லாடனார் வந்து பரிசில் பெற்றுச் சென்றார். கல்லாடனார் தொண்டை நாட்டின் வட பகுதியில் உள்ள கல்லாடமென்னும் ஊரில்வாழ்ந்த சான்றோராதலால் ஒருமுறை அவர் தம்முடைய வேங்கடநாடு வற்கடத்தும் வருத்தம் மிகப்பெறவே,தம்முடைய சுற்றத்தாருடனே சோழநாட்டுக்கு வந்தார். சோழநாட்டுப் பொறையாற்றுகிழானான பெரியனைப் பண்டும் ஒருமுறை கண்டு அவனால் சிறப்பிக்கப்பெற்றுள்ளாராதலால் நேரே பொறையாற்றுக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டோர் முன்பே அவர் வந்தவராதலின், அவரது நிலைமையை யுணர்ந்து பெரியனைச் சென்று காணுமாறு அறிவித்தனர். அவர்கள் கண்டோர் முன்பே அவர் வந்தவராதலின், அவரது நிலைமையை யுணர்ந்து பெரியனைச் சென்ற காணுமாறு அறிவித்தனர். அவர்கள் பெரியன் மனக்கோளை நன்குணர்ந்தவராதலின், கல்லாடனாரும் பெரியனைக் கண்டார்,அவன் உயர்ந்த உணவும், சிறந்த உடையும் தந்து அவரையும் அவர் சுற்றத்தாரையும் ஆதரித்தான். அதனால் பெருமகிழ்வு கொண்ட கல்லாடனார் "பெரும், நீ நின் செழுமனனக்கண் நின் காதலியுடனே இனிது கண்டுயில்வாயாக; அஃதாவது பசியும் பிணியும் பகையுமென்றிவற்றால் நாடாள்வார்க் குண்டாகும் மனக்கவலை நினக்கு உண்டாகா தொழிக" என்பது, வானம் செவ்வியறிந்து மழைபொழிய "வயல்கள் வேலி ஆயிரமாக வினளக" என்று வாழ்த்தி யின்புற்றார். இந்நிகழ்ச்சி இப்பாட்டாய் உருக்கொண்டு விளங்குகிறது. இதனிடையேயும் சில அடிகள் சீர் சிதைந்துள்ளன. செந்தமிழ் மக்கட்குண்டான சீரழிவு, அரசியல், வாணிகம் சமயம், சமுதாயம் முதலிய துறைகளோடே நில்லாது இலக்கியத் துறையினும் நுழைந்து எத்துணைக் கேட்டினைச் செய்துளது, காண்மின் :

    தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும்
    விண்டு வனைய விண்டோய் பிறங்கல்
    முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
    பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
    திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி         5
    அரிய லார்கைய ருண்டினி துவக்கும்
    வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
    ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்
    தீர்கை விடுக்ழும் பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் வினவலின்...         10
    முன்னும் வந்தோன் மருங்கில னின்னும்
    அளிய னாகலிற் பொருத னிவனென
    நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக்
    காண்கு வந்திசிற் பெரும மாண்டக
    இருநீர்ப் பெருங்கழி நுழைமீ னருந்தும்         15
    துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
    புதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
    நெஞ்சமா காத னின்வெய் யோளொ
    டின்றுயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
    துளிபத னறிந்து பொழிய         20
    வேலி யாயிரம் விளைகநின் வயலே.
    -------------

திணை: அது. துறை ; கடைநிலை. பொறையாற்று கிழானைக்
கல்லாடனார் பாடியது.

உரை: தண்டுளி பலபொழிந்து எழிலி இசைக்கும் - தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும்; விண்டு அனைய விண்தோய் பிறங்கல் - மலைபோன்ற வானளாவிய குவியலாய்; முகடுற வுயர்ந்த நெல்லின் - உச்சி யுண்டாக வுயர்வுறக் குவித்த நெல்லாகிய; படுகதரு பெருவளம் மகிழ்வர வாழ்த்திப்றெ்ற - எருதுகளின் பேருழைப்பால் உண்டாகயி பெரும்பொருளை மகி்ழ்ச்சி மிக வாழ்த்திப் பெற்றதை; திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி - திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து; அரியல் ஆர்கையர் உண்டு - கள்ளுண்போர் உடனுண்டு; இனிது உவக்கும் - மிகவும் இன்புறும்; வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென - வேங்கட நாடாகிய வடநாடு வறங்கூர்ந்ததனால்; ஈங்குவந்திறுத்த என் இரும்பேரொக்கல் - இங்கே வந்து தங்கிய என் பெரிய சுற்றம்; தீர்கை விடுக்கும் பண்பின் - இந்நாட்டினின்றும் நீங்குதலைக் கைவிடும் பண்பினையுடையவாய்; முதுகுடி நனந்தலை மூதூர் - பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தையுடைய மூதூரின்கண்; .............வினவலின் - .............கேட்டலால்; இவன் முன்னும் வந்தோன் மருங்கிலன் - இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதவன், பொருநன் - கினணப் பொருநன்; ஆகலின் இன்னும் அளியன் என - ஆதலால் இப்பொழுதும் அளிக்கத் தக்கவன் என்று; நின் உணர்ந்தறியுநர் என் உணர்ந்து கூற - நின்பால் நெருங்கிப் பயின்று நின் உள்ளக் கிடையை யறிந்த சான்றோர் என் நிலைமையினை நன்குணர்ந்தது எனக்கு அறிவிக்க; பெரும் கழியிடத்தே துழவி மீன் பிடித்துண்ணும்; துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும் - நெருங்கிய தூவியையுடைய புதா வென்னும் புள்ளினம் தங்கும்; ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் - தழை செறிந்த புன்னைகளையுடைய செழுவிய நின் நெடுமனையின்கண்; நெஞ்சமர் காதல் நின்வெய்யோளொடு - நெஞ்சமர்ந்த காதலையுடைய நின்னால் விரும்பப்பட்ட மனைவியுடன்; இன்றுயில் பெறுகதில் நீ - இனிய உறக்கத்தை நீ பெறுவாயாக; வளஞ்சால் பதன் அறிந்து துளி பொழிய - நெல்வளம் நிறையும் செவ்வியறிந்து மழைபொழிய; நின்வயல் வேலி ஆயிரம் விளைக - நின் வயல்கள் வேலி ஆயிரமாக விளைக எ- று.

விண்டு, மலை. விண்டோய் பிறங்கலென்றது ஈண்டு நெற்குவியன் மேற்று. "விண்டு வனைய வெண்ணெற் போர்வின்" (ஐங். 58) என்று பிறரும் கூறுவது காண்க. நெல்லாகிய பெருவளம் பெற்றவை என இயையும். திருந்தா மூரி - திருந்தாத வூன்: அதனைத் திருத்துமாறு கூறுவார், "பரந்துபடக் கொண்டி" யென்றார், மூரி, ஊன்; "வெண்ணிண மூரி" (புறம். 93) என்பது காண்க. வேங்கட வரைப்பாகிய வடபுலம் என இயைக்க. எழிலிஇசைக்கும் விண்டு. பிறங்கால் நெல்லின் பெருவளம் பெற்ற கெண்டி உண்டு இனிதுவக்கும் வேங்கட வரைப் பின் வடபுலம் என இயையும். வறமுண்டாகியவழி மக்கட்குப் பசிப்பிணி நின்று வருத்தம் பயக்குமாகலின் "பசி்த்தென" என்றார்; தீர்கை, நீங்குதல். தீர்கை விடுக்கும் பண்பினவாகிய முதுகுடியென இயைத்து "வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும்" (குறள். 95) நீங்காத பண்பினையுடைய பழங்குடி யென்றுரைத்தலுமாம். நின் வள்ளம்மையையும் என் இன்மையையும் நன்குணர்ந்த சான்றோர் கூறக்கேட்டு நின்பால் வந்துள்ளேன் என்பார், "நின்னுணர்ந்தறியுந ரென்றுணர்ந்து கூறக்காண்கு வந்திசின் பெரும்" என்றார். புதாவை ஒருவகை நாரை என்பர். இலையும் பூவும் செறிந்து கண்ணுக்கினிய காட்சி வழங்கும் புன்னை "ததைந்தபுன்னை" யெனப்பட்டது. நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்வழியே வேந்தர்க்கு இன்றுயில் எய்துதலின், அப் பசி முதலாயின இலவாகுக என்பார் "இன்றுயில் பெறுகதில் நீயே" என்றார். என்றது யானும் வேண்டுவன் பெற்று ஒக்கலுடன் இனிது வாழ்வேனாக என்றவாறாம். வேலியாயிரம் விளைக நின்வயல் என்றது, பகுத்துண்டு பல்லுயிரோம்பும் நல்லறம் நெடிது நிலவற்கு. வடபுலம் பசித்தென. இறுத்த ஒக்கல், வினவலின் என, உணர்ந்து கூற, காண்கு வந்திசின; பெரும, வரைப்பின் வெய்யோளொடு இன்றுயில் பெறுக. துளிபொழிய, வயல் விளைக எனக்கூட்டி வினைமுடிவு செய்க. தில்: விழைவின்கண் வந்தது.

விளக்கம்: கடைநிலையாவது "கடற்படை" (புறம். 382) எனத் தொடங்கும் பாட்டின் உரை விளக்கத்தின்கட் கூறப்பட்டது. இப்பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார் வேங்கடநாட்டின் பொது வியல்பை எடுத்துரைத்து, அந்நாட்டினின்றும் தாம் ஒக்கலுடன் பொறையாற்றுக்கு வரநேர்ந்த காரணத்தை, "வேங்கடவரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந்திறுத்த என் இரும்பேரொக்கல்" என்று குறித்துள்ளார். இன்றும் வடபுலம் பசித்தெனப் பல்லாயிர மக்கள் சோழநாட்டில் வந்து தங்கியிருப்பது கல்லாடனார் கூற்றை வற்புறுத்துகிறது. பொறையாற்று வாழ்நர், வடபுலத்தினின்றும் வந்திருக்கும் தம்முடைய ஒக்கலை உண்டியும் உறையுளுந் தநது இனிது பேணிப் புரப்பதால் அவர்கள் தங்கள் வடபுலத்தை நினைந்து செல்லுங்கருத்தே இலராயினர் என்பதுபட, "தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி" என்று குறிக்கின்றார். நின்னையும் என்னையும் நன்குணர்ந்த சான்றோர் என்வருகையை நினக்கு அறிவித்தாராக. அதுவே பற்றுக்கோடாக யான் நின்னைக் காணவந்தேன்: எனக்கு வேண்டுவன தந்து யான் சென்று இனிதிருத்தற்கு அருளுவாயாக என நேர்நின்று நாவாற் கூறமாட்டாராய், "செழுநகர் வரைப்பில் நெஞ்சமா காதல் நின்வெய்யோளொடு இன்றுயில் பெறுகதில் நீயே" என்றும், "வேலியாயிரம் விளைகநின் வயலே" என்றும் கூறுகின்றார். இக்குறிப்பறிந்த பொறையாற்று கிழான் வறுமை நோய் கொண்டு வருந்தாவண்ணம் பெருவளன் நல்கி அவரைச் சிறப்பித்தானென்பது பெறப்படுகிறது.
---------------

392. அதியமான் பொகுட்டெழினி

அதியமான்நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. இவன் அதியமான் உயிரோடிருக்கும்போதே தந்தைக்குத் துணையாய் நின்று அரசியலில் ஈடுபட்டிருந்தான்.அதியமானால் பெரிதும் ஆதரிக்கப் பெற்ற ஒளவையார்பால் எழினிக்கும் பேரன்புண்டு. அவனைப் பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருகால் அவர் பொகுட் டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது அவன் செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் எழினியின் பெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டிப் "பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர் அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை யுழுது வெள்வரகும் கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக" என்று பாடி நின்றானாக,அப்பொழுதே பாசிபோற்பீறிக்கிடந்த அவனது உடையைக்களைந்து நுண்ணூல் ஆடையொன்று தந்து அவனை யுடுப்பித்துக் களிப்பு மிக்க தேறலைப் பொற்கலத்திற் பெய்து அவனும் அவனொடு போந்த அவன் சுற்றத்தாரும் உண்டு தேக்கெறியு மளவுந் தந்து விருந்து செய்தான் என்று பாடியுள்ளார்.

    மதியேர் வெண்குடை யதியர்கோமான்
    கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
    பசலை நிலவின் பனிபடு விடியற்
    பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
    ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ         5
    உருகெழு மன்ன ராரெயில் கடந்து
    நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
    தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
    வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்         10
    வைக லுழவ வாழிய பெரிதெனச்
    சென்றியா னின்றனெனாக வன்றே
    ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
    வேர்புரை சிதாஅர் நீ்க்கி நேர்கரை
    நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்         15
    தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்
    கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
    ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை
    விருந்திறை நல்கி யோனே யந்தரத்
    தரும் பெற லமிழ்த மன்ன         20
    கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே.
    -----------

திணையும் துறையு மவை. அதியமான் மகன் பொகுட் டெழினியை ஒளவையார் பாடியது.

உரை: மதியேர் வெண்குடை அதியர் கோமான் - முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையை யுடைய அதியர் வேந்தனான்; கொடும்பூண் எழினி - வளைந்த மாலை யணிந்த எழினியினுடைய; நெடுங்கடை யான் நின்று - பெருமனையின் நெடிய முற்றத்திலே யான் நின்று; பசலை நிலவின் பனிபடு விடியல் - இள நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே; பொருகளிற்று அடிவழி யன்ன - போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமான; என் கை ஒருகண் மாக்கிணை ஒற்றுபு - என் கையிலிருந்த ஒரு கண் மாக்கிணையை யறைந்து; கொடாஅ உருகெழு மன்னர் ஆரெயில் கடந்து - திறை கொடாத உட்குப் பொருந்திய மன்னருடைய அரிய மதிலை வஞ்சியாது பொருதழித்து; நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்து - தசையும் குருதியுந் தோய்ந்த கெருக்கா லுண்டாகிய ஈரம் பொருந்திய; அணங்குடை மரபின் இருங்களந்தோறும் - துன்பந்தரும் தெய்வங்களுறையும் முறைமையினையுடைய பெரிய போர்க்களந்தோறும்; வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெள்ளி வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டியுழுது; வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் - கவடியும் குடைவேலும் வேந்தே; வைகல் உழவ - இடையறாத போராகிய உழவைச் செய்யும் வேந்தே; பெரிது வாழிய என - நீ நெடிது வாழ்வாயாக என்று பாடிக் கொண்டு; சென்று யான் நின்றனென் ஆக - சென்று யான் அவன் முற்றத்தே நின்றேனாக; அன்றே - அப்பொழுதே; ஊருண்கேணிப் பகட்டிலைப் பாசிவோர் புரை சிதாஅர் நீக்கி - ஊரவர் நீர்கொள்ளும் கேணியிற் படர்ந்த பெரிய இலையையுடைய பாசியினது வேர்போற் கிழிந்த உடையைக் களைந்துவிட்டு; நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ - நேரிய கரையை யுடைய நுண்ணிய நூலானியன்ற உடையைத் தந்து உடுப்பித்து; உண்மென - உண்மினென்று; தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் - தேளினது கடுப்புப்போல் நாள்படப் புளிப்பேறிய கள்ளை; கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ -கோளாகிய மீன் போன்ற பொன்வள்ளத்திற் பெய்து; ஊண்முறை ஈத்தல் அன்றியும் - உண்ணும் முறைப்படி அளிப்பதன்றி; கோள்முறை விருந்து இறை நல்கியோன் - கொள்வார் கொள்ளும் முறையில் விருந்தாய் எம்மை இருத்தி யுண்பித்தான்; அந்த ரத்து - கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள; அரும் பெறல் அமிழ்தம் அன்ன- பெறற்கரிய அமுதம்போன்ற; கரும்பு இவண் தந்தோன் - கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய; பெரும் பிறங்கடை - பெரிய வழித்தோன்றல் எ - று.

அதியமான் குடியினரை அதியர் என்ப; பாண்டியர் குடிப்பிறந்தாரைப் பாண்டிரென்றும் தொண்டைமான் குடியினைரத் தொண்டையரென்றும் வழங்குவதுபோல. மார்பிலணியும் ஆரம் வளைந்து கிடத்தலின் கொடும்பூண் என்றார். "விளங்குமணிக்கொ டம்பூண்ஆய்" (புறம்.130) என வருதல் காண்க. இருள் மயங்கிய இளநிலவினைப் "பசலை நில" வென்றார். கிணைப்பறையின் கண் வட்டமாயிருந்தலின் யானையின் அடிச்சுவட்டை உவமம் கூறினார். "பெருங்களிற்றடியின் றோன்று மொருகண், இரும்பறை" (புறம். 263) என்று பிறரும் கூறுவர். எழினி, ஆரெயில் கடத்தற்குக்காரணம் கூறுவார் "கொடா உருகெழு மன்னர்" என்றார், பேயும் கூளியும் விரும்புமிடமாதல் பற்றி "அணங்குடை மரபின் இருங்கள்" மெனப்பட்ட தென்றுமாம். பகைவர் நாட்டை வென்ற வேந்தன் கழுதையேர் பூட்டி அந்நாட்டைப் பாழ் செய்வது பண்டையோர் போர்முறை; "வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ் செய்தனையவர் நனந்தலை நல்லெயில்" (புறம். 15) என்பர் பிறரும். வெள்ளை வரகு, கவடி, கொள்; குடை ஒருவகை வேலமரம். நாடோறும் இச்செயலே நிகழ்த்துதல்பற்றி. "வைகலுழவ" எனச் சிறப்பித்தார். கிழிந்த ஆடைக்குப் பாசிவேரை உவமம் கூறுதல் இயல்பு; "பாசிவேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதா அர்" (பொருந 153-4) என ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் மொழிவது காண்க. நாட்பட்ட தேறல் களிப்புமிகுதியால் தன்னை யுண்டார்க்குப் பெருமயக்கம் விளைத்தலால் அதனை விதந்தோதினார். நாண்மீனினும் கோண்மீன் பெரிதாதலால் அதனைப் பொன் வள்ளத்துக்கு உவமம் செய்தார். ஊண்முறை உண்டற்குரியவற்றுள் தலையும் இடையும் கடையுமாக உண்ணும் முறை; கோண்முறை - கொள்வோர் கொள்வகை யறிந்து படைக்கும் முறை; கரும்பு இவண் தந்த செய்தியை "அமரர்ப் பேணியும்" (புறம்.99) என்னும் புறப்பாட்டிற் குறித்திரருத்தலைக் காண்க. எழினி நெடுங்கடை நின்று, யான் மாக்கிணை யொற்றுபு, வாழிய பெரிதெனச் சென்று நின்றனெனாக, அன்றே, கரும்பிவண் தந்தோன் பிறங்கடையாகிய அவன் சிதாஅர் நீக்கி, கலிங்கம் உடீஇ, தேறல் அளைஇ, விருந்திறை நல்கினானெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: சேலம் மாநாட்டின் வடபகுதியும் மைசூர் நாட்டின் கோலார் நாட்டுப் பகுதியும் சேர்ந்து ஒரு காலத்திற் கங்கநாடென வழங்கிற்று. *இப்பகுதியை இடைக்காலச்சொழர் கைப்பற்றி இதற்கு 'நிகரிலிசோழமண்டல’ மெனப் பெயரிட்டு வழங்கினர். சேலநாட்டின் வடபகுதியை அதியான் +தகடூரைத் தலைநகராக்கிக் கொண்டு பண்டை நாளில் ஆட்சி செய்து வந்தனர். தகடூருக்கு இப்போது தருமபுரி என்பது பெயர். இடைக்கால அதியமான்கள் சோழர்க்குப் பணிந்து அவர்கீழ்க் குறுநிலமன்னராயிருந்தனர். அக்காலை இவ்வதியமான்கள் கன்னடரை வென்று புகழ்பெற்றிருந்தனர். இவர்களைக் கன்னடநாட்டுக் கல்வெட்டுக்கள் அதியமா # எனக் குறிக்கின்றன. பிற்கால அதியமான்களான எழினி, விடுகாதழகிய பெருமாள் முதலியோர்கள் தம்மைச்சேரர் குடிக்குரிய ரென்றே $ கூறிக்கொள்வாராயினர். கல்வெட்டிலாகாவினர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொன்ற அதியமானை வென்று அவனது தகடூரைக் கைப்பற்றிக் கொண்டதனால், @ அதியமான்கள் சேரர்குடியினராதல் கூடாதெனக் கருதுகின்றனர்.
----
*Mysore Gazetteer Vol. l.P. 3 4. # EP. Ind Vol. Vl. P. 33
+Bom. Gazetteer Vol. II. P. 495. $ EP. Ind. Vol. Vl. P. 332.
@பதிற்
-----------

* பண்டை நாளைச்சேரர் சோழபண்டியர், தனித்தனியே தத்தம் குடியிற் பிறந்து தம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து ஆட்சி செய்தோருடனே போர் உடற்றியிருத்தலின், அதனால் அவர் குடி வேறுபட்டவராகக் கருதுவது கிடையாது. ஆதனால் அதியமான்கள் என்றுமே சேரர் குடிக்கு உரியவ ரென்பது துணிவான செய்தியாகும். இனிப்பாண்டியன் நெடுஞ்சடையனுடைய செப்பேடொன்று + "மாயிரும்பெரும்புனல் காவிரி வடகரை, ஆயிர வேலியயிரூர் தன்னிலும், புகழியூரிலுந் திகழ்வேலதியனை ஓடுபுறங்கண்டவன் ஒலியுடை மணித்தேர்,ஆடல்வெம்மா வவையுடன் கவர்ந்ததும்,பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப், பல்படையொடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து, குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப, வெல்படையொடு மேற்சென்றங், கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக், குடகொங்கத்தடன் மன்னனைக், கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து, கொடியணி மணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும்" என்று கூறுவதனால், நெடுஞ்சடையன் பராந்தகன் காலத்தில் அதியமான் ஒருவன் பல்லவரையும் கேரளரையும் துணைகொண்டு பாண்டியனோடு பொருது தோற்றுக் கூடல் நகரில் சிறையுற்றானென்று அறிகின்றோம். ஆயினும் இப் போரில் மீகொங்கெனப்படும் மேலைக் கொங்குநாட்டு வேந்தனும் கலந்திருத்தலின், அதியமான்கள் இக்காலத்தே கொங்குநாடு முற்றும் புகழ்கொண்டு விளங்கினரென்பது தெளிவாகிறது. சேலநாட்டு நாமக்கல்லிலுள்ள அரங்கநாதர் கோயில் கல்வெட்டொன்று (8) அதியமான் குடியைக் குறிப்பிட்டு, அங்குள்ள கற்குகையை "அதியேந்திர விஷணுகிரகம்" என்று குறிப்பதால், அதியமான்களின் குடிவரலாறு தமிழகத்தில் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வந்திருத்தலைக் காணலாம். இதன் விரிந்த செய்தியை இவ்வுரைகாரர் எழுதிய "அதியமான் நெடுமான் அஞ்சி" என்ற தனி நூலிற் கண்டுகொள்க.
----
* M. EP. R. for 906 Para. 34. + Madras Museum Plates of Jatila varaman(8) R. R. No. 7 of 1906.

இதன்கட் கிணைப்பொருநன் சென்று பொகுட்டெழினியை யடைந்து பாடி வாழ்த்தியது வரை ஒரு பகுதியும், எழினியின்கொடை நலம் ஒரு பகுதியுமென இரு பகுதிகள் உண்டு. இரண்டும் கிணைவன் கூற்றுக்களே யாம். முதற்பகுதியின் தொடக்கத்தே எழினியை எடுத்துரைக்கும் கிணைவன், அரசியல் நடாத்தும் உயர்குடியிற் பிறந்தவன் எழினியென்றற்கு "மதியேர்... எழினி" என்றான், எழினியின் நெடுமனை முற்றம் சென்றது பின்பனிக் காலத்துத் தேய்மதிப்பக்கத்து விடியற்கால மென்பது விளங்க, "பாசலை நிலவின் பனிபடு விடியல்" என்றான். வினைமேற் சென்ற தலைவர் வினைமுடித்து வந்து மனைக்கண் உறையும் போதாகலின் அப்போதில் வினைமுடித்த மார்பினை யெடுத்தோதிப்புகழும் கருத்தால், வினைபுரிந்த செயலை, "கொடா வுருகெழு மன்னர்...வாழிய பெரிதென"எடுத்தோதி வாழ்த்தினான்.எழினி,விடியற்போதில் வந்துதன்வினை வென்றி கூறி வாழ்த்திய கினணவனுக்கு உரியதொரு புத்தாடை தந்து உடுப்பித்து, நாட்பட்ட தேறலைப் பொன் வள்ளத்திற் பெய்து தந்தானாக அதனைப் பாராட்டி, "ஊருண்...நல்கியோனே" என்றான். கொடுப்பவன் கொடைநலம் ஏற்போனது ஊண் முறையும் கோண்முறையும் அறிந்து செய்வதென்பது கொடைக்கடன் இறுக்கும் குடிப்பிறந்தார்க்கே இனிது அமைவதாகலின், "ஊண்முறை யீத்த லன்றியும் கோண்முறை விருந்திறை நல்கி யோனே" எனப்பாராட்டி, அவன் முன்னோர் வேற்று நாட்டினின்றும் கரும்பு கொணர்ந்த வரலாற்றைக் குறி்த்து, "அந்தரத்து அரும்பெற லமிழ்தமன்ன கரும்பிவண் தந்தோர் பெரும் பிறங்கடையே" என்று புகழ்ந்தோதினான்.
----------

393. சோழன் குளமுற்றத்துக் துஞ்சிய கிள்ளிவளவன்

குறுந்தொகையிற் காணப்படும் "கொங்குதேர்வாழ்க்கை" என்ற பாட்டைப் பாடிய இறையனாரின் வேறுபடுத்த இப் பாட்டைப் பாடிய சான்றோர் நல்லிறையனா ரெனப்படுகின்றார். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் இல்லை. இப்பாட்டும் கிணைப்பொருநன் ஒருவன் வறுமையாக பெருவாட்டமுற்றுச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப்பரிசில் கேட்குங் கூற்றாக அமைந்துள்ளது. இதன்கண் கிணைப்பொருதன் ஒருவன் வறுமை மிகுந்து தன்னைப் புரப்போர் எங்கேனும் உளரோ எனத்தேடி ஒருவருங் கிடைக்காமையால் வருந்தித் கிள்ளிவளவனையடைந்து நிகழ்ந்தது கூறி, "அண்ணலே, நின் நல்லிசை நினைந்து நின்பால் வந்துள்ளேன்: என் சுற்றம் உணவு கொண்டு பன்னாட்கள் ஆகின்றன. நிணம் விரவிய சோறும், பகன்றை மலர்போன்ற மெல்லிய ஆடையுந்தந்து எம்மை ஆதரித்தல்வேண்டும். யாங்கள் நின்னுடைய திருவடியைப் பரவி வாய்வாள்வளவன் பன்னாள் வாழ்க என வாழ்த்திப் பாடுவோம் என்று கூறியுள்ளான்.

    பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை
    குறுநெடுந் துணையொடு கூர்மை வீதலிற்
    குடிமுறை பாடி யொய்யென வருந்தி
    அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும்
    கடனறி யாளர் பிறநாட்டின்மையின்         5
    வள்ளன் மையினெம் வரைவோர் யாரென
    உள்ளிய வுள்ளமோ டுலைநசை துணையா
    உலக மெல்லா மொருபாற் பட்டென
    மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி
    ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல்         10
    கூர்ந்தவெவ் வம்விடக் கொழுநிணங் கிழிப்ப
    கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
    மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன
    வெண்ணிண மூரி யருள நாளுற
    ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென்         15
    தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
    போதுவிரி பகன்றைப்புதுமல ரன்ன
    அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும்
    கேடின்றுநல்குமதி பெரும மாசில்
    மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி         20
    ஆடுமக ளொல்க லொப்ப வாடிக்
    கோடை யாயினுங் கோடே வொழுக்கத்துக்
    காவிரி புரக்கு நல்நாட்டுப் பொருந
    வாய்வாள் வளவன் வாழ்கெனப்
    பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே.         25
    -------

திணையுந் துறையு மவை. சோழன் னுளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்லிறையனார் பாடியது.

உரை: பதி முதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை - தொடக்க முதலே பழகி யறியாத துன்ப வாழ்க்கையில்;குறு நெடுந் துணையொடு கூர்மை வீதலின் - இளைய நெடிய துணையாகிய மனைவியுடனே மதிநுட்பமும் கெடுதலால்; குடிமுறை பாடி - குடிதோறும் முறையே சென்று பாடி;ஒய்யென வருந்தி - ஈவோரின்மையின் மிகவும் நைந்து வருந்தி; அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் - சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் கமைக்கச் செய்யும்; கடன் அறியாளர் பரவுக்கடனையறிந்தாளும் செல்வர்; பிற நாட்டின்மையின் - பிற எந்நாட்டினும் இலராதலால்; வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என - இரப்பார்க்கு இல்லென்னாது கொடுக்குந் தன்மையுடைமையால் எம்மை எற்று உதவுவோர் யாருளர் என்று; உள்ளிய உள்ளமொடு - நினைந்த நெஞ்சத்துடனே; உலைநசை துணையா - வருந்துதற் கேதுவான விருப்பம் துணையாக; உலக மெல்லாம் ஒருபாற் பட்டென - உலக வாழ்விற்குரிய வளங்களெல்லாம் ஒரிடத்தே யுண்டானாற்போல; மலர்தார் அண்ணல் நின் நல்லிசை உள்ளி - மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த தலைவனாகிய நீ உள்ளாயென அறிந்து நின்னுடைய நல்ல புகழை நினைத்து; ஈர்ங்கை மறந்த என் இரும்பேரொக்கல் - உண்டு கையீரமாதலைத் துறந்து வருந்தும் கெடுமாறு; கொழுநிணம் கிழிப்ப - கொழுவிய வூனைத் துண்டாக்கி; கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த - கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத் திணித்த; மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன - பொதியாகிய பண்டம் மிடைந்து நிறைந்திரந்தாற்போல; வெண்ணிணமூரி அருளி - வெள்ளிய வூன்துண்டங்களைக் கொடுத்து உண்பித்து, நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும் - ஈனுதற்குரிய பொழுது எய்த முட்டையீன்ற பாம்பினது நாவின் வடிவைப்போல; என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி - பழமை யுற்றுக் கிழிந்து பிளவு பட்ட என் பீறிய உடையைமுற்றவும்நீக்கி; போது விரி பகன்றைப்புதுமலர் அன்ன-அரும்பி மலர்ந்த பகன்றையின் புதுப்பூப் போன்ற; அகன்று மடி கலிங்கம் உடீஇ - அகல மடிக்கப்பட்ட ஆடைகொடுத் துடுப்பித்து; செல்வமும் கேடின்று நல்குமதி - செல்வத்தையும் குறையாவளவிற் கொடுப்பாயாக;பெரும - பெருமானே; மாசில் மதி புரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி -கலை குறைவில்லாத முழுமதியத்தையொக்கும் தடாரிப் பறையொலிக்க இசைத்து; ஆடுமகள் ஆடி ஒல்கல் ஒப்ப - ஆடு மகள் ஆடி யிளைத் தொடுங்குவது போல்;கோடையாயினும் - எல்லாம் பசையற்றொடுங்கும் கோடைக்காலம் வந்தபோதும்; கோடா ஒழுக்கத்துக் காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந - தப்பாது நீரொழுகுதலையுடைய காவிரியாறு பாயும் நல்ல நாட்டுக்குத் தலைவனே-; வாய் வாள் வளவன் வாழ்க என - தப்பாத வாட்புடையை யுடைய கிள்ளி வளவன் வாழ்வானாக என்று; பீடுகெழு நோன்றாள் பல பாடுகம் - பெருமை பொருந்திய நின் வலிய தாளைப் பல படியும் பாடுவோம்; எ - று.

வாழ்க்கை தொடங்கிய நாண்முதல் வறுமைத்துயர் கண்டறியாமை விளங்க, "பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை" எனப் பட்டது. பதிதல், ஈண்டுத் தொடக்கத்தின் மற்று.குறுநெடுந்துணையேன்றவிடத்துக் குறுமை இளமையும், நெடுமை காலமும் குறித்து நின்றன. மனைவியைக் குறுநெடுந் துணையென்றான். கூர்மை, அறிவின் நுட்பம். சீரிய மதிநுட்பமுடையார்க்கும் வறுமை அந்நுட்பம் மழுங்கச் செய்தலின், "கூர்மை வீதலின்" என்றார் குடி முறை பாடியென்றது. ஏருழுது வாழும் வேளாண்மக்கள் இல்லந்தோறும் பாடி ஊண்பெற்று வாழ்தலைக் குறித்து நின்றது. "ஏரின் வாழ்நர் குடிமுறைபுகாஅ, வூழிரந்துண்ணும் உயவர் வாழ்க்கை" (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காண்க. குடிமுறை பாடியிரத்தல், மேன்மேலும் இரத்தற்கே இடனாவதன்றி, இரவாமை பயந்து தம்மில் இருந்து தமது பாத்துண்ணும் தகைமை பயவானமயின் ஒய்யென வருந்தி யென்றான். குழிசியை மலர்த்தலாவது, அரிசி முதலாயின இன்மையால் சமைத்தற்றொழில் நிகழாமையின் கவிழ்த்து வைத்திருக்கும் மட்பானையை, அவ்வரிசி முதலாயின பெற்றவழிச் சமைத்தற்கு நிமிர்த்து அடுப்பேற்றுவது, இல்லாரது இன்மை தீர்ப்பது உடையார்க்குக் கடன் என்பதமை யறிந்தொழுகும் செல்வரை ஈண்டுக் கடனறியாளரென்றார். தமது நாட்டில் இல்லாமையை யுணர்த்துதலால் பிறநாட்டில் அவர் இல்லாமையை விதந்து "பிற நாட்டின்மையின்" என்றார். உலைவுக் கேதுவாகிய நசை உலை நசையெனப்பட்டது.ஆகவென்பதன் ஈற்றகரம் விகாரத்தாற் றொக்கது.உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளமெல்லாம் ஓரிடத்தே ஒருங்கு உளவாதல் இரிதாதலால்இ "உலகமெல்லாம் ஒரு பாற்பட்டென்" நினைந்து வருபவாதலால், யான் நின்பால் வருவேனாயினேன் என்பான், "மலர்தா ரண்ணல் நின் நல்லிசை யுள்ளி" வருவேனாயினேன் என்றான். உலகம் - ஈண்டு உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளம் குறித்து நின்றது; வளமாவது, உண்டியும் உடையுமென இரண்டாகி யடங்குமென்றறிக. உள்ளியதனால் ஒக்கல் பிறரை இரத்தலைக் கைவிட்டு ஈர்ங்கை மறப்பதாயிற்று. கிழித்தெனற்பாலது கிழிப்ப வென வந்தது. கிழித்தல், சூட்டிக்கோலாற் குத்திச் சுட்டுத் துண்டாக்குதல். பருத்திவீடு, பருத்தினின்றும் எடுத்துக்கொட்டை நீக்கிச் சுகிரப்பட்ட பஞ்சு. பருத்தியினின்றும் விடுபட்டது பருத்தி வீடாயிற்று. முட்டையீன்ற பாம்பின் நா பெரிதும் பாம்பு பிளவுபட்டுக் காட்டுமென்ப. ஈனுதற்குரிய நாளெய்திய போதே நம்பி முட்டையீனும் என்பார், "நாளுறவீன்ற வரவு" என்றார். "நாளுற்று நம்பி பிறந்தான்" (சீவக. 10.) என்று பிறரும் கூறுதல் காண்க. செல்வமில்வழி யெய்தும் வறுமைத் துன்பத்தை நன்கு கண்டிருக்கின்றானாதலின், செல்வமும் கேடின்றி நல்குமதி யென வேண்டினான். மதிக்கு மாசு, கலை குறைவு. ஆடுகள் ஆடியொல்குவது போலக் கோடையில் எப்பொருளும் வாடி வதங்குமென வறிக. இடையறாத நீரொழுக்குடையதாகலின், காவிரியைக், "கோடா வொழுக்கத்துக் காவிரி" என்றார். வளவன் நல்கியவழித்தான் செய்யக் கூடியது இது வென்பான், "வளவன் வாழ்கெனப் பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே" என்றான். வீதலின், வருந்தி, உள்ளமொடு, நசைதுணையாக, ஒருபாற்பட்டென, உள்ளி, மறந்த என் ஓக்கல், கிழித்து, அருளி, நீக்கி, உடீஇ, நல்குமதி, பெரும, தெளிர்ப்ப ஒற்றி, பொருந. வாழ்கெனப் பாடுகம் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனபை் பாடித் தமக்குப் பரிசில் நல்கிவிடுத்தல் வேண்டுமென்ற கருத்தை அவனுக்குத் தெரிவிக்கும் கருத்துடையரான நல்லிறையனார், கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துத் தாமுற்று வருந்திய வருத்தத்தையும் தமக்கு வேண்டும் பரிசில் நிலையையும் இப் பாட்டின்கட் கூறுகின்றார். முன்பெல்லாங் கண்டீராத வறுமையுண்டாக, அதனால் அறிவு மழுங்கிக் கடனறியாளர் இருக்குமிடம் நாடிச்சென்று அவ்ர குடி தோறும் சென்று இரந்து வருந்திய வருத்தத்தை "பதிமுதற் பழகா...இன்மையின்" என்றார். தம் வறுமைதீரக் கொடுக்கும் செல்வர்களைப் பிறநாடுகளில் தேடியலைந்ததும், குடிதொறும் சென்று இரந்து வருந்தியதும் தோன்றக் "கடனறியாளர் பிறநாட்டின் மையின்" என்றும் "குடிமுறை பாடி யொய்யென வருந்தி" யென்றும் குறித்தார். கிள்ளி வளவனது கொடைநலம் கேள்வியுற்று அவன் பால் தாம்வருந்தித் திரிதலைக் குறிப்பாராய், "வள்ளன்மையின்-உள்ளி" வந்தனன் என்று கூறுகின்றார். வள்ளன்மை யில்வழி, இரவலரை வரைந்து வரவேற்று உடையும் உண்டியும் நல்கிப் புரக்கும் செந்தண்மையுளதாகாமையின், "வள்ளன்மையின் எம் வரைவோர் யாரென" இறையனாரது உள்ளம் உள்ளுவதாயிற்று. கரவாத உள்ளமுடையாரிடத்தில் இரத்தலே இரவர்க்கு இன்பமும் எழுச்சியும் தருவதாகலின் வள்ளியோரை நாடுவது இயல் பாயிற்று. இனிய வுணவும், அகன்று மடி கலிங்கமும் தரல்வேண்டுமெனக் குறித்தவர் மீள அளவை குறித்து இரத்தலாகிய செயலை மேற் கொள்ளாவாறு மிகுதியாக நல்குக வென்பாராய்ச் "செல்வமும் கேடின்று நல்குமதி பெரும" என்றும், இதற்குக் கைம்மாறாக யாம்செய்யத் தக்கதொன்று மில்லையாயினும், தளர்ச்சியின்றி நின் பீடுகெழு நோன்றாள் நாடெங்கும் விளங்குமாறு பாடுவோம் என்பார், "மாசில்...பலவே" என்றும் குறிக்கின்றார்.
---------------

394.சோழியவேனாதி திருக்குட்டுவன்

திருக்குட்டுவன் சேரநாட்டின் பகுதியாகிய குட்டநாட்டு அரசர் குடியில் தோன்றியவன்: குட்டநாட்டு வேந்தரைக் குட்டுவர் என்பது வழக்கு சேரவேந்தர் பலர்செங்குட்டுவன், வேல்கெழுகுட்டுவன், சேரமான் குட்டுவன் கோதை எனத் தொகை நூல்களுட் காணப்படுகின்றனர். குட்டுவன் என்னும் அறியலாம். இவ்வகையால் இத்திருக்குட்டுவன் தன் குடிமுன்னோர் பெயரையே தனக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டவன் ன அறிகின்றோம். இவன் முன்னோர் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கியிருந்தனர். குட்டுவர் குடவர் பொறையர் எனச் சேரவேந்தர் குடிவகை பலவுண்டு. ஒருகாலத்தே குட்டுவர் குடிவலி குன்றியொடுங்கிக் கிடக்கையில் அதன்கண் இத்திருக்குட்டுவன் தோன்றித் தன் வன்மையாலும் வள்ளன்மையாலும் முடிவேந்தனாதற்குரிய சிறப்புற்றிருந்தான். இனிக் குட்டுவர் குடியில் தோன்றிய சேரமான் குட்டுவன் கோதை யென்பான் முடிவேந்தனாயிருந்தமையின் இவன் ஒரு பகுதிக்குத் தலைவனாயிருந்திருக்கலாமென நினத்தற்கும் இடமுண்டு. திருக்குட்டுவன் தொடக்கத்தில் சோழ வேந்தன்பால் தானைத்தவைனாயிருந்து போர்க்செயல் மாண்பால் சோழிய ஏனாதி யென்றும் அவனால் மாராயந்தரப்பட்டான். இவனுடையவூர் பாலைக்காடு நாட்டிலுள்ள வெண்குடையென்ற வூராகும். இப்போது அது வெங்கொடியென வழங்கும் சீறூராகவுளது. வெண்குடையென்னும் ஊரில் திருக்குட்டுவன் வழிவந்த குடும்பமொன்றுளது. அவர்கள் தங்களைக் குட்டுவன் வீட்டார் என்றே கூறிக்கொள்ளுகின்றனர். கோனாடு என்பது புதுக்கோட்டைப் பகுதியில் ஓடும் வெள்ளாற்றின் கரை சேர்ந்த நாடு. இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகையெனக் கல்வெட்டுக்கள் (P. S. Ins. 285) கூறுகின்றன. இது கல்வெட்டுக்களில் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழவள நாடு (P. S. Ins. 129) என்றும், கேரளாந்தக வளநாடான கோனா (P. S. Ins. 86) டென்றும், கடலைடயா திலங்கைகொண்ட சோழவளநாடு (P. S. Ins. 167) என்றும் வழங்கும் இக்கோனாடு, வடகோனாடு, (P. S. Ins. 286) தென்கோனாடு, (P. S. Ins. 221) கீழ்கோனா (P. S. Ins. 198) டென்றும் மூவகைப்படடும். குமரனாருடைய எறிச்சிலூர்கீழ்க்கோனாட்டில் உள்ளது. கீழ்கோனாடு இளங்கோனா (P. S. Ins. 728) டென்றும் வழங்கும்; இந்நாடு இப்போது தஞ்சைசில்லாவிலுள்ள அறந்தாங்கித்தாலுகாவின் மேலைப் பகுதியாக இருக்கிறது. இதன் இயல்புகளை இவ்வுரைகாரர் எழுதிய மதுரைக்குமரனார் என்ற நூலிற் பரக்கக்காணக். ஒருகால் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் அவனைக் காணச் சென்றார். திருக்குட்டுவன் காலத்தில் அப்பகுதியெல்லாம் தமிழ்நாடாகவேயிருந்தமை நினைவுகூரக் தக்கது. அவன் குமரானாரை வரவேற்று வேண்டுவன நல்கி இனிதிருக்கச் செய்தான். இருக்கையில் ஒருநாள் தாம் விடைபெற வேண்டியிருக்கும் குறிப்பை அவர் அவனுக்குத் தெரிவித்தார். இவன் போர் பல செய்து வென்றியொடு விங்கிய வெஞ்சின யானையொன்றை ஒப்பனை செய்து நிரம்பப்பொன்னும் பொருளும் உடன்வரக் குமரனார்க்குப் பரிசில் அளித்தான். யானையின் பெருமாண்ிபு கண்ட குமரனார் அதனை யணுகற் கஞ்சி அதனைத் திருப்பி விட்டார். தான் விடுத்த யானை திரும்பி வரக்கண்ட திருக்குட்டுவன்,தான் தந்த வேழப்பரிசில் தம் வரிசை நோக்கச் சிறிதாமெனக் கருதி விட்டார்போலும் இச் சான்றோர். விரசையறியும் தரமில்லாது போனேனே எனத் தானே நாணி, அவ் வேழத்தோடு பிறிதொரு பெருங்களிறு கொணரச் செய்து அதனையும் முன்னே விடுத்ததுபோல ஒப்பனை செய்து சான்றோராகிய குமரானார்க் கென விடுத்தான். அவனுடைய அச் சான்றோராகிய குமரனார்க்கென விடுத்தான். அவனுடைய அச் செயலறிந்த குமரனார் பெருவியப்புக்கொண்டு இப்பாட்டை ஒரு பொருநன் கூற்றில் வைத்துப் பாடினார். இதன்கண் கிணைப்பொருநனாகிய தான், வெண்குடை்கிழவோனான திருக்குட்டுவன் பெருமனையை யடைந்து விடியலில் எழுந்து அவன் தந்தையின் வஞ்சிப்போர்த்திறத்தைப் பாடினதாகவும், அதுகேட்டுத் தன்னை அவன் தன்பால் பிரிவின்றி யிருத்தல்வேண்டிக் களிற்றுப் பரிசில் நல்கினானெனவும், அது போரிற் பகைவரைக் கொன்று சினம் தணியாத வெஞ்சின வேழமெனவும், அதுகண்ட கிணைவன் அஞ்சி அதனைப் பெயர்த்தும் அவன்பாற் செல்லவிடுத்ததாகவும், அதனையவன் சிறிதெனத் திருப்பி விட்டதாகக் கருதிப் பிறிதுமொரு களிறு நல்கினானெனவும் அவன் தந்த பெருஞ்செல்வத்தால் தான் பின்பு என்றும் இரத்தலை மேற்கொள்ளாத செல்வனானதாகவும் கூறி. வஞ்சப்புகழ்ச்சியாக "அவன் துன்னரும் பரிசில் தந்தான்;அது கொண்டு யான் அவன் பால் என்றுஞ் செல்லேன்; உய்ரமொழிப் புலவீர், நீவிரும் அவன் வையம் புகழும் வள்ளியோனென்ப துண்மையாயினும் அவனை உள்ளுதலை யோம்புமின்" என்று கூறியுள்ளான். கி. பி. 1229 ஆம் ஆண்டில் மாறவன்மன் முதற் சுந்தர பாண்டியன் காலத்தில் வஞ்சி பாடிய புலவன் திருவரன் குளமுடையான் என்பவனுக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை யென்ற சிறப்புப்பெயர் கொடுத்து, விளைநிலம் பல இறையில் காணியாகக் கொடுத்த செய்தியைக் கல்வெட்டு (P. S. Ins. 278) கூறுவது ஈண்டு நினைத்தற்குரியது.

    சிலையலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
    ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவவோன்
    வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
    வள்ளிய னாதல் வையகம் புகழினும்
    உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர்         5
    யானும், இருணிலாக கழிந்த பகல்செய் வைகறை
    ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
    பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
    வாடா வஞ்சி பாடினெ னாக
    அகமலி யுவகையொ டணுகல் வேண்டிக்         10
    கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
    வெஞ்சின வேழ நல்கின னஞ்சி
    யானது பெயர்த்தனெ னாகத் தானது
    சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
    பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்         15
    டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்
    துன்னரும் பரிசி றருமென
    என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே.
    --------

திணையுந் துறையு மவை. கடைநிலையாயின வெல்லாம் பாடாண்டிணை. சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சி லூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

உரை: சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் - விறபயிற்சி யால் உயர்ந்தகன்ற சந்தனம் பூசப்ட்ட மார்பினையுடைய; ஒலிகதிர்க் கழனி வெண்குடை கிழவோர் - தழைத்த கதிர்கள் பொருந்திய கழனிகள் சூழ்ந்த வெண்குடையென்னும் ஊர்க்குரியவனான; வலிதுஞ்ச தடக்கை வாய்வாள் குட்டுவன்- வலி பொருந்திய பெரிய கையையுடைய தப்பாத வானள யேந்தும் திருக்குட்டுவன்; வள்ளியனாதல் வையகம் புகழினும் - வள்ளன்மையுடைய னென்பதை உலகத்து நன்மக்கள் புகழ்ந்தோதினாலும்; உயர்மொழிப் புலவீர் - உயர்ந்த கருத்தமைந்த சொற்களை வழங்கும் புலவர்களே; உள்ளல் ஓம்புமின் - நினைத்தலைக் கைவிடுவீராக; யானும்-; இருள்நிலாக் கழிந்த பகல் செய் வைகறை-இருட்போதும் நிலவுப்போதும் கிாந்த பகற்போதினைச் செய்தற்குத் தோன்றிய விடியற்காலத்தே; ஒரு கண் மாக்கினண தெளிர்ப் ஒற்றி - ஒரு கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை மெல்ல ஒலிக்கு மாற இசைத்து; பாட இமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை - ஒலி முழங்குகின்ற முரசினையும் செய்யப்பட்ட தேரினையுமுடைய அவன் தந்தையது; வாடா வஞ்சி பாடினெனாக - வஞ்சித்துறைப் பாட்டொன்றைப் பாடினேனாக; அகமலி யுவகையொடு - மனம் நிறைந்த உகையினால்; அணுகல் வேண்டி - பிரிவின்றித் தன்பால் அன்பால் நெருங்கியுறைய வேண்டுமென விரும்பி; கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் - பகைவரைக் கொன்ற பின்பும் முன்புகொண்ட சீற்றம் குன்றாத புலான் மணங்கமழும் கோட்டினையுடைய; வெஞ்சின் வேழம் நல்கினன் - வெவ்விய சினத்தையுடைய யானையொன்றைத் தந்தான்; அஞ்சி - அது கண்டு அச்சமுற்று; யான் அது பெயர்த்தனெனாக - யான் அவ் வேழத்தை அவன் யால் திருப்பி விட்டேனாக; தான் அது சிறிதென வுணர்ந்தமை நாணி-அவன் தான் அது என்வரிசைக்குச் சிறிதென உணர்ந்தமை யெண்ணி நாணமுற்று, பிறிதும் ஒருபெருங்களிறு நல்கியோன் - மேலும் வேறே ஒரு பெரிய களிற்றை நல்கினான்; அதற்கொண்டு - அதனால்; இரும்பேரொக்கல் பெரும்புலம் புறினும் - மிக்க பெரிய என சுற்றத்தார் வறுமையால் பெருந்துன்பம் எய்தினாராயினும்; அவன் குன்றுகெழுநாட்டு - குன்றுகள் பொருந்திய அவனுடைய நாட்டுக்கு; துன்னரும் பரிசில் தருமென - நெருங்குதற்கரிய பரிசிலை நல்குவானென்றும் கருதி; என்றும் செல்லேன் - எப்போதும் செல்லுவேனல்லேன்; எ- று.

மார்பின் அகன்றுயர்ந்த மாண்புக்கு ஏதுக்கூறுவரர், "சிலையுலாய் நிமிர்ந்த மார்பு" என்றார். சாந்து - சந்தனம். வெண்குடை, திருக்குட்டுவனுடைய தலைநகர். ஒருவன் வள்ளியோனாகிய வழி, அவன் புகழ் உலகெங்கும் பரவுதல் ஒருதலையாதலின் "வள்ளியனாதல் வையகம் புகழினும்" என்றார். உள்ளல் ஓம்புமின் ஒரு சொல்லா யியைத்து உள்ளன்மின் எனவும் நின்றாங்கே கொண்ட உள்ளுதலை மறவாது போற்றுமின் எனவும், பொருள் கொள்க. முற்பக்கத் திருளும் பிற்பக்கத்து நிலவும் உடைய இரவுப்போது புலருங் காலம், "இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை" என்று கூறப்பட்டது. ஏனைத் தேர் போலாது மிக்க காவ்வலி யுடையதாக அமைந்த தேர் பல உடையன் என்பார், "இயறேர்த் தந்தை" யென்றார். வாடாஞ்சி, வஞ்சித் துறைப்பாட்டுக்கு வெளிப்படை அணுகல்வேண்டி வேழம் நல்கினன் என்றரைப்பினுமமைமயும், உணர்ந்தமை நாணி, உணர்ந்தமையான் நாணியென விரிக்க. புலம்புறினும் செல்லேன் என இயையும். கிழவனான குட்டுவன் வள்ளியனாதல், புகழினும் புலவீர் உள்ள லோம்புமின், யானும், ஒற்றி, பாடினேனாக, வேண்டி நல்கினன்; அஞ்சி, பெயர்த்தனெனாக, நாணி களிறு நல்கினன்; அதற்கொண்டு புலம்புறினும், தருமென, நாட்டுக்குச் செல்லேன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: கிழவன் என்று உரிமையாக வுடையவன் என்பது பட நின்றது. இக் கிழமை பெற்றவர் கிழான் என்றும் கிழாரென்றும் கூறப்படுவர். இதுவேந்தரால் நல்கப்படும் சிறப்பெனவும், இதனைப் பெறற்கண் அந்தணர் முதல் அனைவரும் உரியரெனவும் உணர்தல் வேண்டும். உப்பூரிகுடி கிழான் உருத்திரசன்மன் (இ,அ. உரை) என வருவதும், இடைக்காலத்தே எட்டி சாத்தன ் என்பான் இருஞ்சேர்நாட்டுக் கூடற்குடி, 'குளத்தூர், துழாயூர், இருப்பைக்குடி, வெளியங்குடி, ஆலங்குடி என்ற வூர்கட்குரியனாய் இருப்பைக்குடி கிழான் என்று வேந்தனால் சிறப்பிக்கப் பெறற்ான் (A. R. No. 334 of 1929-30 and A.R. for 1936-7 p. 73-4) என வருவதும் போதிய சான்று பகருகின்றன. திருக்குட்டுவன் செய்த சிறப்புக்கண்டு பெருமகிழ்வுற்ற குமரனார் அவனைப் பழிப்பதுபோலப் புகழ்கின்றாராதலின்இ"குட்டுவன் ...புலவீர்" என்றும், "இரும்பேரொக்கல்...நாட்டே" யென்றும் கூறுகின்றார். என்றாராயினும் "இது மறைமுகமாக உயர்மொழிப் புலவர் ஒருங்கு திரண்டுவந்து தங்கள் உயர்மொழியால் இக் குட்டுவனது புகழுடம்பை உயர்மொழிப் புலமைச் செய்யுளால் உருப்படுத்தி நிலை நிறுவுதல் வேண்டுமெனப் பணிக்கும் தமிழ்ப்பணி" (மது. கும. பக்க. 118) என்பது கருத்தெனக் கொள்க. துன்னரும் பரிசில் என்னும் தொடர், "நம்போல்வார் பெறுதற்கரிய பெரும் பரிசில்" என்றும் பொருள்படமாறு அமைந்திருப்பது குறிக்கத்தக்கது.
----------

395. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

பிடவூர் எனப் பெரியதோரூர் இதனைச் சோழநாட்டுப் பிடவூர் என்று பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டைநாட்டுப் பிடவூர், "மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டுப் பிடவூர்" (A. R. No. 68 of 1923) என்றும், சோழநாட்டுப்பிடவூர். "பிடவூர் நாட்டுப் பிடவூர்" (A. R. No. 139 of 1930-31) என்றும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன. இப்பிடவூர்க்குரியராய் வாழ்ந்த வேளாண் மக்களின் குடி முதல்வன் பிடவூர் கிழானாவன். இவனும் இவனைச் சேர்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்த் துணைபுரிந்தனர். மூவேந்தர்க்கு மகட்கொடை நேரும் சிறப்பும் இவர்கட்கு உண்டு. இவர்கள் வேளிரெனப்படுதலுமுண்டு. பிடவூர் வேளிர்குடி வழிவழியாக வந்து இடைக்காலத்தும் சிறந்திருந்தது. கல்வெட்டுகளுள் "பிடவூர் நாட்டுப் பிடவூர் வேள்" என்பானொருவன் (A. R. No. 139 of 1930-31) காணப்படுவதே இதற்குக் சான்று பகருகின்றது. இது நிற்க. இப் பிடவூர் உறையூர்க்குக் கிழக்கில் உளது. பெருஞ் சாத்தன் இப்பிடவூர் கிழான் மகனாவான். இவன் நொடுங்கை வேண்மால் எனவும் வழங்கப்படுவன். இவன்பால் மதுரைச்சானறோரான நக்கீரனார்க்குப் பேரன்பும் பெருநட்பும் உண்டு. ஒருகால் நக்கீரர் இவனைக் காணச் சென்றபோது, பெருஞ்சாத்தன் அவரை இனிது வரவேற்றுச் சீரிய உணவும் நல்சி மிக்க பெருஞ் செல்வமும் வழங்கிச் சிறப்பித்தான். இவ்வாறு நக்கீரர்க்குப் பெருஞ் சிறப்புக்களைச் செய்தும் இப்பெருஞ்சாத்தன் உள்ளம் அமையானாய், தன் மனைவியை வருவித்து அவட்கு நக்கீரரைக் காட்டி, இவரை என்னபை் போற் போற்றுக என்று பணித்தான். அது கண்டதும் நன்கீரர்க்குப் பெருவியப்புண்டாயிற்று. அக்காலை இப் பாட்டைப் பாடினார். இதன்கண் தம்மை ஒரு கிணைப்பொருநனாக வைத்துக் தமக்கு அவன் செய்த சிறப்பை விரியக் கூறியுள்ளார். இதன் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன.

    மென்புலத்து வயலுழவர்
    வன்புலத்துப் பகடுவிட்டுக்
    குறுமுயலின் குழைச்சூட்டொடு
    நெடுவாளைப் பல்லுவியற்
    பழஞ்சோற்றப் புகவருந்திந்         5
    புகற்றளவின் பூச்சூடி
    அரிப்பறையாற் புள்ளோப்பி
    அவிழ்நெல்லி னரியலாருந்து
    மனைக்கோழிப் பைம்பயிரின்னே
    கானக்கோழிக் கவர்குரலொடு         10
    நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து
    வேயன்ன மென்றோளால்
    மயிலன்ன மென்சாயலார்
    கிளி கடியின்னே
    அகலள்ளற் புள்ளிரீஇயுந்து         15
    ஆங்கப், பலநல்ல புலனணியும்
    சீர்சான்ற விழுச்சிறப்பிற்
    சிறுகண் யானைப் பெறலருந் தித்தன
    செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்         20
    அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெருமவெண
    முன்னா ணன்பகற் சுரனுழந்து வருந்திக்
    கதிர்நனி சென்ற கனையிருண் மாலைத்
    தன்கடைத் தோன்றி யென்னுற விசைத்தலிற்
    றீங்குரல...கினரிக்குரற் றடாரியோ         25
    டாங்குநின்று வெற்கண்டு
    சிறிது நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே யருளினன் வேண்டி
    ஐயென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப்
    பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை         30
    என்போற் போற்றென் றோனே யதற்கொண்
    டவன்மறவ லேனே பிறருள்ள லேனே
    அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
    மிகவானு ளெரிதோன்றினும்
    குளமீனொடுந் தாட்புகையினும்         35
    பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
    பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி
    விளை வொன்றொ வெள்ளங்கொள்கென
    உள்ளது மில்லது மறியா
    தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே.         40
    --------

திணையுந் துறையு மவை. சோழநாட்டுப் பிடிவூர்கிழான் மகன் பெருஞ் சாத்தனை மதுரை நக்கீர் பாடியது.

உரை: மென்புலத்து வயலுழவர் - மென்புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில் புரியும் உழாவர்; வன்புலத்துப் பகடுவிட்டு - வன் புலமாகிய முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு; குறுமுயலின் குழைச்சூட்டொடு - குறுமுயல்களின் குழைந்த சூட்டிறைச்சியுடனே; நெடுவாளைப் பல் உவியல் - நெடிய வாளை மீனைக்கொண்டு பலவாகச் செய்த அவியலை; பழஞ்சோற்றுப் புகவருந்தி - பழையதாகிய சோற்றுணவோடே யுண்டு; புதல் தளவின் பூச்சூடி-புதலிடத்தே மலர்ந்த தளவ முல்லையின் பூவைத் தலையிற் சூடிக்கொண்டு; அரிப்பறையாற் புள்ளோப்பி - அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த கதிர்களை யுண்டற்கு வந்துபடியும் புள்ளினங்களை யோட்டி; அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து - நற்சோற்றினின்றும் இறக்கப்பட்ட வடித்த கள்ளையருந்தும் மனனக்கோழி; பைம்பயிரின் - மனையிடத்துக் கோழிசெய்யும் பசிய அழைப்பினால்; கானக்கோழி கவர்குரலோடு - காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை யெடுத்தும்;நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து - நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலையெடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்; வேயன்ன மென்றோள் - மூங்கில் போலும் தோளையும், மயிலன்ன மென்சாயலார் கிளிகடியின் - மயில் போன்ற மெல்லிய சாயலையுமுடையமகளிர் புனத்திற் படியும் கிளிகளை யோப்புவாராயின்; அகல் அள்ளல் புள் இரீ இயுந்து - அகன்ற சேற்றிடத்தே நின்ற புள்ளினங்கள் அவ்விடத்துநின்றும் நீங்கியோடும்; பலநல்ல புலனணியும் - பலவாகிய நல்ல விளைபுலங்கள் சூழ்ந்திருக்கும்; சீர்சான்ற விழுச் சிறப்பின் - தலை மையமைந்த செல்வச் சிறப்பும்; சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் - சிறிய கண்ணையுடைய யானைகளுமுடைய பெறுதற் கரிய தித்தன் என்பானுடைய; செல்லா நல்லிசை உறந்தைக் குணாது - கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே; நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்-நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள; அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் - அறத்தாலுண்டாகிய புகழையுடைய சாத்துனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநராவோம்; பெரும-; முன்னாள் நண்பகல் சுரன்உழந்து வருந்தி - முன்னாள் நண்பகலில் காட்டிடத்தே நடந்து வருந்தி, கதிர்நனி சென்ற களையிருள் மாலை - ஞாயிற்றின் செங்கதிர் மிகக்கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலைப்போதில்; தன் கடைத்தோன்றி என் உறவு இசைத்தலின் - தன்னுடைய மனைமுன்றிலில் நின்று யான் வந்துற்றிருத்தலை - தன்னுடைய மனைமுன்றிலில் நின்று யான் வந்துற்றிருத்தலை அறிவிக்குமாற்றால்; தீங்குரல் - தீவிய இசையாகிய குரலையுடைய;...............; அரிக்குரல் தடாரியொடு - அரித்த ஓசையையுடைய தடாரியுடனே; ஆங்கு நின்ற என் கண்டு - அவ்விடத்தே நின்ற என்னைக் கண்டு; சிறிதும் நில்லன் - சிறிது போதேனும் நின்று தாழ்த்த லின்றி; பெரிதும் கூறான் - மிகுதியாகப் பேசுதலுமின்றி; அருங்கலம் வர வருளினன் - அரிய கலன்களை நல்கி வரவிடுவானாய்; வேண்டி - மிகவும் விரும்பி; ஐயெனவுரைத்து அன்றி - மெல்லிய சில சொற்களைச் சொன்னதுமன்றி; நல்கி - எம்பால் பேரருளுடையனாய்; தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி - தன் மனைக்கண்ணுள்ள திருமகள் போலும் மடந்தையாகிய மனையாட்கு என்னைக் காட்டி; இவனை என் போல் போற்று என்றோன் - இவனையும் என்னைப் பேணுவது போல் நல்லுணவு தந்து பேணுக என்று சொன்னான்; அதற்கொண்டு - அதனால்; அவன் மறவலேன் - அவனை மறவேனாயினேன்; பிறர் உள்ளலேன் - அவனை நினைத்த நெஞ்சத்தால் பிறரை நினைப்பதில்லே னாயினேன்; அகன் ஞாலம் பெரிது வெம்பினும் - அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று வாடினும்; வானுள் எரி மிகத் தோன்றினும் - வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும்; குளமீனொடு தாள் புகையினும் - குளமீனும் தாள்மீனுமாகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும்; பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்-பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய கொக்கின் நகம் போலும் சோற்றை; பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி-பசிய துண்டகளாகிய பொரிக்கறியும் சூட்டிறைச்சியுடனும் உண்டு; விளைவு ஒன்று வெள்ளம் கொள்க என - விளைத்த ஒன்று வெள்ளமென்னும் அளவிற்றாக விளையக்கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு ; ஆங்கு - அவ்விடத்தே; உள்ளதும் இல்லது அறியாது - உள்ளதிதுவென்றும் இல்லாததிதுவென்றும் பாராது; அமைந்தன்று தாள் - வரையாது கொடுத்தலிலே யமைந்தது அவனது தாளாண்மை; வாழ்க - அது வாழ்வதாக; எ - று.

மென்புலத்து நன்செய் வயல்களை யுழுத எருதுகளை அண்மையிலுள்ள வன்புலத்துவிடுநிலத்துப் படுபுன் மேயுமாறு விடுவது தோன்ற, "வன்புலத்துப் பகடுவிட்டு" என்றார். வன்புலத்துப்படுபுல் பகடுகட்கு மிக்க உரந்தரும் உணவாமென்பது இன்றைய ஆராய்ச்சி யாளர்க்கும் ஒப்ப முடிந்த வுண்மை: ஏனையவற்றின் இறைச்சி போலாது குறுமுயலின் இறைச்சி மிகக் குழைவுடையதென்றற்குச் "குழைச்சூடு" என்றார். உவியல்: அவியல்: "சாந்த விறகின் உவித்த புன்கம்" (புறம். 168) என்பது காண்க. புதற்றளவு புதலிடத்தே மலர்ந்த செம்முல்லை. நெற்சோற்றினின்றெடுக்கப்படும் அரியல், "அவிழ்நெல்லினரியல்" எனப்பட்டது. ஆரும்: ஆருந்தென உம்மை உந்தாயிற்று. பயிர், அழைப்புக்குரல். தழுதழுப்புடைமை தோன்றப் "பைம்பயிர்" என்றார். கோழியின் குரல் இரட்டையோசைத்தாகலின், "கவர்குரல்" எனப்பட்டது. சேற்றிற் படிந்து கிடக்கும் ஆரல் முதலிய மீன்களை யுண்ணும் நாரை முதலியவற்றைப் புள்ளெனப் பொதுப்படக் கூறினார். புலனணியும்பிடவூர், உறந்தைக்குணா அது பிடவூர்; அருங்கடிப்பிடவூர் என இயையும். சிறப்பினையும் யானையினையுமுடைய தித்தன் என்க. உறையூர் தித்தற்குரிய தென்பதைப் பிறரும். "மாவண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை" (புறம். 358) என்பது காணக். நெடுங்கை வேண்மான் என்பான் பிடவூரைக் காக்கும் கிழவன். சாத்தன் அவற்குப் புதல்வன். அறத்தாற்றில் ஈட்டிய புகழாளனாகலின் சாத்தனை, "அறப்பெயர்ச் சாத்தன்" என்றார், பெயர், ஈண்டுப் புகழ்குறித்து நின்றது. உலக வாழ்வின் முடிபொருளாக ஒருவன் செயற்பாலது புகழாதலின், புகழ் பெயரெனப்பட்டதாம். பெயர், பொருள், ஞாயிறு மேலைக்கடலை நெருங்குங் காலம் "கதிர் நனி சென்ற மாலை" யெனவும், அக்காலத்தே இருளும் உடன் பரவிச் செறிதலின், "கனையிருள் - மாலை" யெனவும் கூறப்பட்டது. கண்டவுடனே கொடைக் கடனிறுக்கத் தொடங்கின னென்பான், "சிறிது நில்லான் பெரிதுங் கூறான்" என்றார். நிற்றலும் பெரிதும் பேசுதலும் இரப்போர்க்கு வாட்டந்தருஞ் செயல்ககளாதலின், அவற்றின்மையை யெடுத்தோதினான். அருளினன்: முற்றெச்சம் பெருஞ்சாத்தனது அன்பின் பெருமையை விளக்குவார். அவன் தன் மனைக்குக் காட்டிச் செய்த தலையளியை விதந்தோதினான், யான் நல்லுணவுண்டு இனிது வாழவேண்டுமென நயந்து பேணுமாறு போல.

இப் பொருநனும் வாழவேண்டுமென நயந்து பேணுக எனத் தன் மனைவியைப் பணித்தா னென்பார், "தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டியிவனை யென்போற் போற்றென் றோனே" என்றான். நான்காவதன்கண் இரண்டாவது வந்து மயங்கிற்று; "அறிவுடையந்தணவைளைக் காட்டென்றானோ" (கலி. 72) என்றாற்போல, அவனிருந்த என் நெஞ்சில் பிறர் இருக்க இடத் தந்திலேன் என்பான், "அவன் மறவலேனே" என்றதனோடமையாது "பிறருள்ளலேனே" என்று வற்புறுத்தினான். ஏரி, குளம், தாள் என்பன விண்மீன் வகை. இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடு தரும் என்பது பண்டையோர் கருத்து. கருனை, பொரிக்கறி. கொடுத்தறக்ண் உள்ளது இல்லது நோக்காது விளைவு ஒன்றோ வெள்ளம்கொள்க. எனக் கொடுத்தலிலே யமைந்தது அவனது தாள்; அது வாழ்க என முடிக்க. இது கொடைப் பொருள் இயல்பு நோக்காத கொடைமடம். அரியலாகும், கூப்பெயர்க்கும், புள்ளிரியும் புலனணியும் பிடவூர், சாத்தன் கிணையேம் பெரும, வருந்தி, தோன்றி, இசைத்தலின் எற்கண்டு, நில்லானாய், கூறானாய், அருளுவானாய், வேண்டி, உரைத்ததன்றி, நல்கி, காட்டி, போற்றென்றான்; அதற்கொண்டு, மறவலேன்; உள்ளலேன் தோன்றினும், புகையினும், மாந்தி, கொள்கென, அறியாது அவன்தான் அமைந்தன்று, வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: சோழநாட்டுப்பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் கண்ட தாம் பெற்ற சிறப்பை மதுரை நக்கீர் ஒரு கினணப் பொருநன் கூற்றில்வைத்து இப் பாட்டாற் கூறுகின்றார. கிணைவன் இதன்கண் முதல் இருபது அடிகளால் பிடவூரின் நலத்தைக் கூறி, தொடக்கத்தில் தான் சாத்தனைக் கண்டதும் அவன் சிறப்புச் செய்ததும், விரியக் கூறுகின்றான். பிடவூர் நன்செய் வளஞ் சிறந்த தாதலால், அவ்வூரிடத்து உழவர் வயலுழுத பகடுகளை வன்புலத்தில் மேயவிடுத்து, முயற்கறியும், வாளைமீன் கறியும் பழஞ்சோற்றோடு உண்டு. பூச்சூடி, புள்ளோப்பி அரியல் உண்டு மகிழ்வர்; ஒருபால் கானக்கோழியும் நீர்க்கோழியும் கூவாநிற்கும்; வேய்போலும் தோளும்மயில்போலும்சாயலுமுடைய உழவர் மகளிர் கிளிகடிகுவராயின், அவரோசைகேட்டு அள்ளற் புட்களாகிய நாரை முதலியன வெருவியோடும்; இப் பிடவூர் உறையூருக்குக் கிழக்கில் உள்ளதென்னக் கருதும் நக்கீரர் உறையூர்க் குரிய தித்தன் சிறப்பையும் உடன்கூற விழைந்து "பல நல்ல...தித்தன்" என்று கூறுகின்றார். காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குதற்கு முன்பே விளக்கம் பெற்ற தலைநகர் உறையூர்: "ஊரெனப்படுவது உறையூர்" என்ற சிறப்புடையது. அதனை இவர் "செல்லா நல்லிசை யுறந்தை" என்று குறிக்கின்றார், பிறவிடத்தும். "ஆரங்கண்ணியடுபோர்ச் சோழர், அறங்கெடா நல்லவை யுறந்தை" (அகம். 93) எனவும், "கடலந் தானைக் கைவண் சோழன், கெடலரு நல்லிசை யுறந்தை (அகம்:369) எனவும் கூறுவது காணலாம். கினணவன் சென்று சாத்தன் மனையை யடைந்து தன் கிணைப்பறையை இசைத்து நிற்பவும், உடனே பரிசில் நல்கக் கருதி நன்கலங்களைத ் தருவித்து அவற்குக் கொடுத்து, தன் பேரன்பினை அருஞ்செய லொன்றாற் புலப்படுத்தினா னென்பார், "தன்மனை...என்றோனே" என்றார். இச் செயலைச் கண்டு வியப்பு மிக்க பிற்காலச் சான்றோரொ ருவர், "யாமாயின் எம்மில்லங் காட்டுதுந் தாமாயின், காணவே கற்பழியுமென்பார்போல் - நாணிப், புறங்கடை வைத்தவர் சோறும் அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு" (நாலடி. 293) என்று இசைப்பாராயினர். முடிவில் பெருஞ்சாத்துனுடைய பேரன்பால் பிணிப்புண்ட தமது உட்கோள் இதுவென்பாராய், "அவன் மறவலேனே... புகையினும்" என்றார். இத்தகைய பெருவள்ளியோனை நினைக்குந்தோறும் பேசுந்தோறும் சான்றோர் அவனை வாழ்த்துவது அவன்பால் அவர்க் கிருக்கும் அன்பின் பயனாதலால், தமது உட்கோள் உரைத்ததனோடு நில்லாது, "அவன் தாள் வாழ்க" என்றும் தாட்பயனை, "விளைவொன்றோ வெள்ளங் கொள்கென.உள்ளதும் இல்லதும் அறியா தாங்கமைந்தன்றால்" என்றும் கூறினார்.இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்திருக்கின்றன. அப் பகுதியில் கினணவன் பெருஞ்சாத்தன் மனைக்கட் சென்றடைந்த செய்த குறிக்கப்படுகிறது போலும்.
----------

396. வாட்டாற்று எழினியாதன்

வாட்டாறு என்று பெயர் தங்கிய ஊர்கள் கோழநாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் உள்ளன. ஒன்று சோழநாட்டுத் தஞ்சை சில்லாவில்பட்டுக்கோட்டைத் தாலுகாவில் உளது. வாட்டாற்றுக்கோட்டை வாட்டாத்திக் கோட்டையென இப்போது மருவி வழங்குகிறது. ஒர காலத்தில் இது தன்னைத் தலைமை ஆகக்கொண்டு சூழவுள்ள வூர்கட்கு நாடாக விளங்கிற்று. அப்போது இதன்பெயர் வாட்டாற்று நாடென்பதாம். இதன்கண் திருச்சிற்றேமம் என்ற சீரூர் இருந்தது. இப்போது அதற்குத் திருச்சிற்றம்பலம் என்று பெயர். இங்குள்ள சிவரெுமானைத் திருஞான சம்பந்தர் இனிய திருப்பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருச்சிற்றேமமாகிய திருச்சிற்றம்பலம் என்று பெயர். இங்குள்ள சிவபெருமானைத் திருஞான சம்பந்தர் இனிய திருப்பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருச்சிற்றேமமாகிய திருச்சிற்றம்பலத்துக் கல்வெட்டொன்று, "இராசராச வளநாட்டுப் புன்றில் கூற்றத்துவாட்டாற்று நாட்டுத்திருச்சிற்றேமம்" (A. R. No. 180 of 1926) என்று கூறுதல் காண்க. மற்றொன்று தென் பாண்டிநாட்டில் இப்போது திருவாங்கூர் அரசில் மேலைக் கடற்கரையில் கல்குளம் தாலுகாவில் பறளியாற்றின்கரையில் உள்ள திருவாட்டாறு.இதுவும் பழமையான நகரமாகும்.(K. P. P. Menon’s Hist. of Kerala P. Vol. ii பக் 59). இப்பகுதி பண்டைநாளில் வேளிர்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. இவ்வாட்டாற்றருகே ஓடும் ஆறு தாமிரவருணியென்றும் கூறப்படுகிறது. வாட்டாற்றின் கண் இருந்து சிறந்து புலவர் பாடும் புகழ்பெற்ற எழினியாதன் எழினி யென்னும் வேளிர் தலைவற்கு மகனாவான். சங்கத் தொகைநூற்கண் எழினியென்னும் பெயருடையார் பலர் இருந்துள்ளனர். அவருள், அதியமான் எழினியும், செல்லிக்கோமான் ஆதன் எழினியும், கண்ணன் எழினியும ் சிறந்து காணப்படுகின்றனர். இவரின் வேறாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருது தோற்றோடிய எழுவருள் ஒருவனாக ஓர் எழினியும் உள்ளனர், வாட்டாற்கு ஆதனுக்குத் தந்தையாகிய எழினி, தலையாலங்கானத்துத் தோற்றோடிய எழினியாவன். வாட்டாற்று எழினியாதன் அரசுகட்டிலேறிப் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் நட்புச் செய்துகொண்டான். இவன் சிறந்த வேற்படையுடையவன். இவன்பால் இருந்த மறவர். தம் தலைவன் குறிப்பறிந்து அவன் பணிக்கும் தொழிலை வென்றியுற முடித்தலில் பெருவேட்கையுடையர். அவர்கள் கள்ளுண்டு களித்தவழி அக் களிப்பினால் வெவ்விய சுரங்களைக் கடந்து பகைவர் நிரைகளைக் கவர்ந்து வரும் இயல்பினரெனத் தாயங்கண்ணனார் (அகம். 105) என்பார் கூறுகின்றார்.

தரையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக்காஞ்சி பாடிச் சிறப்பித்தவரும், அவனால், "ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன்" (புறம். 72) எனச் சிறப்பிக்கப்பெற்றவரு மாகிய மாங்குடிகிழார் மருதனார் ஒருகால் வாட்டாற்று எழினியாதனைக் கண்டார். அவன் அவர்கள் வேண்டும் வளம் பலவும் நல்கினான். அதனால் மாங்குடிகிழார்க்கு உண்டாகிய உவகைக்கு அளவில்லை. அவர், அவன் நாட்டின் இயல்பையும் அவன் தந்த வளத்தையும் அவனுடைய சிறப்பையும் குறித்து இப்பாட்டைப் பாடினார். இதன்கண், உள்ளம் இழந்தோர்க்கு உரம் படைத்த துணைவனாதலும், சீரிய நண்பரை யில்லார்க்குச் சீர்த்த நண்பனாதலும் வாட்டாற்று எழினியாதன் செயற் பண்பென்றும். அவன் நல்லிசை தாரசை நடுவண் தண்மதிபோல் விளங்குகவென்றும். புலவர் பாடும் புகழ்படைத்த அவன் பெருவளம் பெருகுவதாக வென்றும் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துச் சிறப்பிக்கின்றார்.

    கீழ்நீரான் மீன்வழங்குந்து
    மீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து
    கழிசுற்றிய விளைகழனி
    அரிப்பறையாற் புள்ளோப்புந்து
    நெடுநீர்தொகூஉ மணற்றண்கான்         5
    மென்பறையாற் மனைக்கோசர்
    நனைக்கள்ளின் மனைக்கோசர்
    தீந்தேற னறவுமகிழ்ந்து
    தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
    உள்ளிலோர்க்கு வலியாகுவன்         10
    கேளிலோர்க்கு கேளாகுவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற் றெழினி யாதன்
    கிணையேம் பெரும
    கொழுந்தடிய சூடென்கோ         15
    வளநனையின் மட்டென்கோ
    குறுமுயலி னிணம்பெய்தந்த
    நறுநெய்ய சோறென்கோ
    திறந்துமறந்த கூட்டுமுதல்
    முகந்துகொள்ளு முணவென்கோ         20
    அன்னவை பலபல.................
    ................வருந்திய
    இரும்பே ரொக்க லருந்தெஞ்சிய
    அளித்துவப்ப வீத்தோ னெந்தை
    எம்மோ ராக்கக் கங்குண்டே         25
    மாரிவானத்து மீனாப்பண்
    விரிகதிர வெண்டிங்களின்
    விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசா னன்கல னல்கி         30
    உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே.
    ---------

திணையுந் துறையு மவை. வாட்டாற் றெழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

உரை: கிழ்நீரால் மீன் வழங்குந்து - நீரின் கீழே மீன்கள் சென்றுலவும்; மீ நீரால் கண்ணன்ன மலர் பூக்குந்து - நீரின் மேற்பரப்பில் குவளையுந் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலீர்ந்திருக்கும்; கழி சுற்றிய விளைகழனி - கழிகளாற் சூழப்பட்ட நெல் விளைந்து கிடக்கும் வயலின்கண்; அரிப்பறையால் புள்ளோப்புந்து - அரித்த ஒசையையுடைய பறையை முழக்குவதால் கதிர் கவர வரும் கிளி முதலிய புள்ளினங்கள் வெருட்டியோட்டப்படும்; நெடுநீர் தொகூஉம் மணல் தண்கால் - நீர்மிக்க கடற்கரைக்கண் குவியும் மணலை யள்ளித் தூவும் குளிர் காற்றினால்; மென்பறையால் புள் இரியுந்து - மெல்லிய சிறகுகளோடு கூடிய புள்ளினங்கள் நீங்கிச் செல்லும்; நனைக் கள்ளின் மனைக் கோசர் - மலர்களிடத்திற் பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோச ரென்பார்; தீந்தேறல் நறவு மகிழ்ந்து - தீவிய கட்டெளிவை யுண்டு களி்ப்பேறி; தீங்குரவைத் கொளைத் தாங்குந்து - இனிய குரவையாடுமிடத் தெழும் பாட்டுக்கள் இசைக்கப்படும்; நீர்வள வாட்டாற்று எழினியாதன் - நீர்வளஞ் சிறந்த வாட்டாறென்னும் ஊக்கம் இல்லாதார்க்கு வலியாகித் துணைசெய்வன்; கேளிலோர்க்குக் கேளாகுவன் - அறிவு வழங்கும் கேளிரை யில்லாதார்க்குக் கேண்மையுற்று அறிவுத் துணை செய்வன்; கழுமிய வென்வேல் வேள் - பிற படையொடு கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவனாவன்; கிணையேம் - யாம் அவனுடைய கிணைப்பொருநராவோம்; பெரும - பெருமானே; கொழுந்தடிய சூடு என்கோ - அவன் எமக் களித்த கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்வேனோ; குறுமுயலின் நிணம் பெய்தந்த - குறுமுயலின் தசை விரவித் தந்த, நறுசெய்ய சோறு என்கோ - நறிய நெய்யையுடைய சோற்றைச் சொல்வேனோ; திறந்து மறந்து கூட்டு முதல் - திறந்து பின் மூடுதற்க மறந்தொழிந்த நெற்கரிசையிடத்து; முகந்துகொள்ளும் உணவென்கோ - தாந்தாம் வேண்டுமளவும் முகந்துகொள்ளப்படும் உணவுப்பொருளைச் சொல்வேனோ: அன்னவை பலபல - அவை போல்வன மிகப்பல; ..........வருந்திய............. வறுமையுற்று வருந்திய; இரும்பேரொக்கல் - என் பெரிய சுற்றத்தார்; அருந்து எஞ்சிய - உண்டு கழிந்தவற்றை; உவப்ப அளித்து ஈத்தோன் - உவக்கு மாறு தலையளித்து மீளமீளக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; எம்மோர் ஆக்கம் கங்கு உண்டே - எம்மனோராகிய இரவவர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லையில்லையாம்; மாரி வானத்து மீன் நாப்பண் - மழைமுகில் நிலவும் விசும்பின்கண் தோன்றும் விண்மீன்களிடையே திகழும்; விரிகதிர வெண்டிங்களின் - விரிந்த கதிர்களையுடைய வெள்ளிய திங்களைப்போல; விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை - விளக்கமாய் யாவருமறிய நிலவுவதாக அவனுடைய கெடாத நல்ல புகழ்; நாளும் யாமும் பிறரும் வாழ்த்த - நாடோறும் யாங்களும் எம்போற் பிறரும் வாழ்த்திப் பாராட்ட; நிரைசால் நன்கலம் நல்கி - களிற்றுநிரைகளோடு அமைந்த நல்ல கலன்களை வழங்கி; உரை செலச் சிறக்க - புகழுண்டாக மேம்படுக; அவன் பாடல் சால்வளன் - அவனது புலவர் பாடும் பாடமைந்த செல்வம்; எ - று.

நீர்க்கீழென்பது கீழ்ந்ரென வந்தது. குவளையுந் தாமரையும் மகளிர் கண்ணுக்கு ஒப்பாவனவாதலின் அவற்றைக் "கண்ணன்னமல" ரென்றொழிந்தார். வயல்களில் வேண்டாது மிகும் நீர் கழிதற்கெடுத்த கழிகால் ஈண்டுக் கழியெனப்பட்டது. புள்ளெனப் பொதுப்படக் கூறினாராயினும் சார்புபற்றிக் கிளி முதலியன கொள்ளப்பட்டன. நெடிய நீரையுடைய கடல் நெடுநீராயிற்று. கடற்கரைக்கண் அலைகளாற் றொகுக்கப்படும் மணல் பரந்த கானலில் தண்ணிய கடற்காற்று மோதித் தூவும் நுண்மணற் கஞ்சிக் கானற்சோலைகளிலும் உப்பங்கழிகளிலும் தங்கும்நாரை முதலிய புள்ளிமை் நீங்கிப் போதலின், "நெடுநீர் தொகூஉ மணற் றண்கால். மென்பறையாற் புள்ளிரியுந்து" என்றார். காற்றுத்தூவும் மணல்மிக்க நொய்ம்மைத்தாயினும் மெல்லிய சிறகுகளையுடைய நீர்ப்பறவைகள் அதற்காற்றாவாயின என்பதற்கு "மென்பறையாற் புள்ளிரியும்" என்று சிறப்பித்தார். கோசர்கள்ளுண்பவராதலின், அவரை. "நனைக்கள்ளின் மனைக்கோச" ரென்றும். அவர்கள் கள்ளுண்டு களித்துக் குரவைக் கூத்தாடும் கொள்கையினராதலின், "நறவுமகி்ழ்ந்து தீங்குரவைக் கொளைததாங்குந்து" என்றும் கூறினார். உள்ளம் உள்ளென வந்தது. உள்ள மின்மைக்கேது வலியின்மையாதலால், "உள்ளிலோர்க்கு வலியாகுவன்" என்றார். கேளாந்தன்மை, வழங்கும் அறிவுரைமேற்றர்தலின், அறிவு வழங்குந்திறத்தைக் "கேளாகுவன்" என்றார். இக்கருத்து, "படைவேண்டுவழி வாளுதவியும், வினைவேண்டுவழி அறிவுதவியும்" (புறம். 179) என்புழியும் அமைந்திருத்தல் காண்க. என்கோ என்பதை அசைநிலையாகக் கோடலுமொன்று. ஆர்ந்தென்பது அருந்தென வந்தது: வேண்டுவோர் வேண்டியாங்கு முகந்து கொள்ளுமாறு திறந்தகரிசை மூடப்படாமலே யிருந்தமையின், "திறந்துமறந்தகூ" டென்றார். இதனால் வாட்டாற் றெழினியாதனது வள்ளன்மை யுணர்த்தியவாறு. ஆக்கக் கங்கு, ஆக்கத்துக்குக் கங்கு என விரியும். கங்கு-எல்லை. பாடுவார்க்கருளும் வள்ளலாதலின், எழினியாதன் செல்வத்தைப் "பாடல் சால் வளன்" என்றார்.வழங்கும் பூக்கும் முதலியவாக அடுக்கிநின்ற உம்மீற்றுப்பெயலெச்சங்கள் உந்தாயின. வழங்கும், பூக்கும், ஒப்பும், இரியும், தாங்கும் வாட்டாற்று எழனியாதனாகிய வேள்வலியாகுவன், கேளாகுவன்; அவன் கிணையேம், பெரும, சூடென்கோ, மட்டென்கோ, சோறென்கோ, உணவென்கோ; அன்னவை பலபல வருந்திய ஒக்கல் ஆர்ந்து எஞ்சிய, அழித்து உவப்ப ஈத்தான் எந்தை; கங்கு இல்லை; நல்லிசை விளங்கித் தோன்றுக; வளன்சிறக்க எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: வாட்டாற்று எழினியாதன் தன்தந்தையாகிய எழினியொடு பொருது அவனை வென்று கொண்டவனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பெருங்காஞ்சி பாடிச் சிறப்புற்ற மாங்குடிகிழார், தன் வள்ளன்மையை நயந்து பாடிவரக்கண்டு மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுப் பரிசில் பல நல்கிச் சிறப்பித்த திறத்தை இப் பாட்டில் அம் மாங்குடிகிழார் அழகொழுகப் பாடியுள்ளார். இதன் இடையே சில அடிகள் சிதைந்திருப்பது அந்த அழகை நாம் முழுதும் கண்டு இன்புறுதற் கிடையூறு செய்கிறது. எனினும் பாட்டின் நலம் தன்பாலுள்ள இன்பச் சுவையைக் குறையாவண்ணம் காட்டிநிற்பது காணத்தக்கது. வாட்டாற்று நாடு கடற்கரைகாறும் பரந்து கிடப்பதாகலின், அதன் நெய்தல்வளமும் கூறப்படுகிறது. கழனிகள் நீர் நிறைந்திருப்பதால், நீர்மேல் பூக்கள் பூத்திருப்பதும், கீழ்நீர் மீன்கள் வழங்குவதும் இனிய காட்சி வழங்குகின்றன. விளைந்து முற்றிய நெல் வயல்களில் புள்ளினம் படிந்துண்ணாவாறு உழவர் அரிப்பறை முழங்குவதும், மணல்பரந்த தண்கானத்தில் புள்ளினம் நீங்கிப் போவதும், கள் நிறைந்த மனைகளில் கோசர்கள் கள்ளுண்டு மகிழ்ந்து குரவையாடி இன்புறுவதும் வாட்டாற்று நாட்டிற் காணப்படும் நிகழ்ச்சிகளாகும். வேளிர் அனைவரும் குறுநிலமன்னராதலின், எழினியாதனை, "வென்வேல் வேள்" என்றார். ஆதனுடைய தனிச்சிறப்பை, "உள்ளி லோர்க்கு.....எழினியாதன்" என்று சிறப்பிக்கின்றார். கிணைவனுக்கு எழினியாதன் தந்த உணவும் பொருளும் கூறுவார், "கொழுந்தடிய சூடென்கோ.....அன்னவை பலபல" என்றார். என்றவர், வறுமையால் வாடிய இரவலர் வெறுப்பவுண்டு அளப்பரும் பொருள் மீளமீளப் பெற்று உவமை மிக வெய்துமாறு அவன் கொடைநலம் திகழ்ந்தது என்பதனை, "வருந்திய.....ஈத்தோன்" என்பதனால் விளக்கினார். சுருங்கச்சொல்லுவாராய், "எம்மோர் ஆக்கக்கங்குண்டே" என்றார். முடிவில் எழினியாதனை வாழ்த்தலுற்ற மாங்குடிகிழார், ஆதனது நல்லிசை "வெண்டிங்களின் விளங்கித் தோன்றுக" என்றார். அவன் பகைப்புலத்துப்பெற்ற செல்வ முழுதையும் கிணைவரும் பிறரும் நாடோறும் வாழ்த்தியதற்குப் பரிசாக நல்குவனெனவும், அதனால், அச்செல்வம் புலவர் பாடும் புகழ் பெற்ற தெனவும் கூறுவார் "உரை செலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே" என்றார்.மென்பறையாற் புள்ளிரியுந்து என்பதற்கு வேறு பொருளுண்டாகக் கூறுவாருமுளர். ஆக்கக் கங்குண்டே யென்பதற்கு வேறு பொருளும் கருதுவர்.
------------

397. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அறியும் ஆண்மையுமுடையார் எத்திறந்தாராயினும் அவரைவியந்துபாராட்டிச் சிறப்பிக்கும் பெருந்தகை யென்பது உலகறிந்த செய்தி. தொகைநூல்களுட் காணப்படும் சான்றோர்களிற் பலர் இவனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். இவனை இப் பாட்டாற் சிறப்பிக்கும் சான்றோர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாராவர். இவரது எருக்காட்டூர் சோழநாட்டுத் தஞ்சை சில்லாவில் நன்னிலந் தாலூகாவில் உளது. குளிக்கரை புகை வண்டி நிலையத்துக்கு மேற்கில் இவ்வூர் இன்றும் இருந்துவருகிறது. அதனைச் சார இருந்த மணற் குன்று என்னுமூரை எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A. R. No. 32 and 38 of 1906) கூறுகின்றன. தாயன் என்பார்க்கு மகனாதலால் இவர் தாயங்கண்ணனா ரெனவும், தாயங்கண்ணனாரென்ற பெயருடையார் பலர் இருத்தலின், அவரின் வேறுபடுத்த இவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனா ரெனவும், சான்றோரால் குறிக்கப் படுவாராயினர். தாயங்கண்ணனார், தாயன் என்பார்க்கு மகனாவர். தாயனார் எருக்காட்டூரில் வாழ்ந்தவர். கண்ணனார் எருக்காட்டூரினராதலால். எருக்காட்டூரித் தாயங்கண்ணனார் எனப்படுவாராயினர். பொருள்வயிற் பிரியக் கருதும் தலைமகனைச் செலவழுங்குவிக்கும் கருத்தினளான தோழி,தலைமகள் நலத்தை, "அணங்கென வுருத்த நோக்கின் ஐயென, நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப், பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய. நன்னிறத் தெழுந்த கணங்கணி வன முலைச். சுரும்பார் கூந்தல் பெருந்தோள் இவள்" என வனப்பை வகைப்படுத் தோதி. அது கேட்டுத் தலைமகள் நெஞ்சுநெகிழ்வ துணர்ந்து, "கொய்தழைத் தளிரேரன்ன தாங்கரு மதுகையள்,மெல்லியலிளையள் நனி பேரன்பினள், செல்வே மென்னு நும்மெதிர், ஒல்வே மென்னு மொண்மையோ விலளே" (அகம். 319) என்பதனால் இவரது புலமைநலம் மிகச்சிறந்து விளங்குவதை யறிகின்றோம். மேலும் இவர், யவனர் பொன்கொணர்ந்து தந்து மிளகுகொண்டு சென்றன ரென்பார், "சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க,யவனர் தந்த வினைமாணன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" (அகம். 149) என்று கூறுகின்றார். இம் முசிறி நகரை ஒருகால் பாண்டியனொருவன் வளைத்துக்கொண்டு அரும்போருடற்றி வென்று அங்கிருந்த பொற்படிம மொன்றைக் கவர்ந்து வந்தான் என்பதையும் அவனுடைய கூடல்நகர்க்கு மேற்கிலுள்ள பரங்குன்றத்து விழாவையும் அங்குள்ள சுனையிடத்து மலரும் நீல மலரையும் "வளங்கெழு முசிறி யார்ப்பெழ வளைஇ, அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய, நெடுநல்யானை யடுபார்ச் செழியன், கொடி நுடங்கு மறுகிற் கூடற்குடாஅது. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஓடியா விழவின் நெடியோன் குன்றத்து, வண்டுபடி நீடிய குண்டுசுனை நீலம்" (அகம். 149) எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் ஒருகால் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் தோன்றிய அவரது புலமை நலத்தை வியந்து நெடிய சூட்டிறைச்சியும், மணங்கமழும் கட்டெளிவும் உயரிய ஆடையும் அரிய கலங்கள் பலவும் நல்கிப் பெருஞ்சிறப்புச் செய்தான் வளவன். அவனது வள்ளன்மைகண்டு பெருவியப்புற்ற தாயங் கண்ணனார், இவ்வுலகில் எத்துணை வறுமைத்துன்பம் உண்டாயினும் எங்கெழிலென ஞாயிறு எமக்கென இருப்பேம் என்ற கருத்துப்பட இப்பாட்டைக் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடினார். இதன்கண் கிணைப்பொருநன் சென்று விடியற் காலையில் துயிலெடை நிலை பாடியதும், அதுகேட்டுச் சோழன் கிள்ளிவளவன் சூட்டிறைச்சியும் தேறலும் பிறவும் நல்கிச் சிறப்பித்துதும், ஊழி பெயரினும், ஞாயிறு தென்றிசைச் செல்லினும் வளவன் தாணிழல் வாழ்வு பெற்ற தான், சிறிதும் அஞ்சாத ஆதரவு பெற்றதும் அழகுறக் குறிக்கின்றான்.

    வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரற்றொற்றினவே
    பொய்கையும் போதுகண் விழித்தன பையச்
    சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந்
    திரங்குகுரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப         5
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகிரு ளகற்று மேமப் பாசறை
    வைகறை யரவங் கேளியர் பலகோட்
    செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி         10
    நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந்
    துள்ளி வந்த பரிசில னிவனென
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கல னிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு         15
    மாரி யன்ன வண்மையிற் சொரிந்து
    வேனி லன்னவென் வெப்புநீங்க
    அருங்கல நல்கி யோனே யென்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த         20
    தீயொடு வளிங்கு நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும்
    என்னென் றஞ்சலம் யாமே வென்வேல்         25
    அருஞ்சமங் கடக்கு மாற்றலவன்
    திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே.
    ---------

திணை: அது; துறை: பரிசில்விடை; கடைநிலை விடையுமாம். சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.

உரை: வெள்ளியும் இருவிசும் பேர்தரும் - வெள்ளியாகிய மீனும் வானத்தில் எழுவதாயிற்று; புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரல்தோற்றின - பறவைகளும் மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய கூட்டிலிருந்து தம்முடைய ஓசையைச் செய்ய லுற்றன; பொய்கையும் போதுகண் விழித்தன - பொய்கைகளில் குவிந்திருந்த தாமரைகள் கண்விழிப்பதுபோல் இதழ் விரியலுற்றன; பையச் சுடரும் ஒளி சுருங்கின்று - மெல்லெனத் திங்களாகிய சுடரும் தன் ஒ ளிாகிய நிலவு குறையத் தொடங்கிற்று; பாடு எழுந்து - ஒலித்தற்கு முற்பட்டு; இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப - முழங்குதற்குரிய முரசங்களும் வலம்புரிச் சங்கங்களும் முழங்குதலைச் செய்ய; இரவுப் புறங்கண்ட காலை தோன்றி - இரவுப்புறமாகிய கடையாமங் கழிந்த காலைப்போது தோன்றி; எஃகு இருள் அகற்றும் - எஞ்சிநின்ற குறையிருளைப் போக்கும்; ஏமப் பாசறை - காவலையுடைய பாசறைக்கண்; வைகறை யரவம் கேளியர் - வைகறைப் போதில் எழுகின்ற ஒலிகளைக் கேட்பாயாக; பலகோள் செய்தார் மார்ப - பலவகைத் தொழிற்பாடமையத் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மார்பைபுடைய வேந்தே; துயில் எழுமதி - படுக்கையினின் றெழுவாயாக; என - என்று; தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை யொலிக்குமாறு கொட்டி; நெடுங்கடைத் தோன்றியேன் - நெடிய முற்றத்தின்கட் சென்று நின்றேனாக; அது நயந்து - என் வரவை விரும்பி; இவன் உள்ளிவந்த பரிசிலன் என - இவன் நம்மை மறவாது நினைந்த வந்த பரிசிலனாவான் என்று சொல்லி; நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு - நெய் மிகச் சொரிந்து பொரித்த தாளிதத்தையுடைய நெடிய சூட்டிறைச்சியும்; மணிக்கலன் நிறைந்த மணன் நாறு தேறல் - மணியிழைத்த வள்ளத்தில் நிறையப் பெய்த மணம் கமழும் கட்டெளிவும்; பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு - பாம்பினது உரியாகிய தோல்போன்ற வெள்ளிய பூவேலை செய்யப்பட்ட ஆடையும்; மாரி யன்ன வண்மையின் சொரிந்து - மழை போன்ற வண்மையுடையனாதற்கேற்ப வழங்கி; வேனில் அன்ன என்வெப்பு நீங்க - வேனிற்காலத்து வெம்மைபோல வறுமையால் எனக்குண்டாகிய துன்பமாகிய வெம்மை நீங்குமாறு; அருங்கலம் நல்கியோன் - பெறற்கரிய கலன்கள் பலவும் பொடுத்தருளினான்; என்றும் - எப்போதும்; செறுவிற் பூத்த சேயிதழ்த்தாமரை - வயலிடையே பூத்த சிவந்த இதழ்களையுடைய தாமரை; அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன் - அறத்தை விரும்பி வளர்த்த தீப்போல விளங்கும் நாட்டையுடையவனும்; வாய் வாள் - தப்பாத வாட்படை கொண்டு சென்று; வலம்படு தீவின் பொலம்பூண் வளவன் - வென்று கொண்ட தவிடத்திற் பெற்ற பொன்னாலாகிய அணிகளை யுடையவனுமாகிய; எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும் - எறிகின்ற அலைகளையுடைய பெரிய கடல்முடிவெய்தும் ஊழிகாலமே வரினும்; தெறுகதிர்க் கனலி தென்றிசை தோன்றினும் - வெதுப்புகின்ற கதிர்களையுடைய ஞாயிறு கீழ்த்திசை மாறித் தென்றிசையிற் றோன்றுங் காலமே வரினும்; யாம் என்னென்று அஞ்சலம் - யாங்கள் இதற்குச் செய்வது என்னோவென்று அஞ்சு வேமல்லேம்; வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் - வென்றி தரும் வேலைக் கையிலேந்தி அரிய போர்களை வஞ்சியாது செய்து வெல்லும் ஆற்றலையுடைய; அவன் - அக்கிள்ளிவளவனுடைய; திருந்து கழல் நேரன்றாள் தண்ணிழலேம் - திருந்திய கழலணிந்த வலிய தாள்கள் செய்யும் தண்ணிய நீழலின்கண் உள்ளே மாதலால்; எ - று.

வெள்ளி யெழுந்து விளங்குதலும், புள்ளினம் சிலைத்தலும், தாமரைப் போது விரியத் தொடங்கலும் திங்களின் ஒளி மழுங்குதலும் விடியற்காலத்து நிகழ்ச்சிகள், பாடு, ஒலி. எழுதல் - முற்படுதல். வேந்தர் அரண்மனைகளில் விடியற்காலையில் முரசமும் வலம்புரியும் முழங்குவது இயல்பு. இரவுப் போதிற்கு அந்திமாலை அகமும் விடியற்காலை புறமும்போலக் குறிப்பார், விடியலை "இரவுப்புறம்" என்றார். "இரவுப்புறம் பெற்ற வேம வைகறை" (புறம். 398) என்று பிறரும் கூறுதல் காண்க.காவலாற்சிறப்புடையதாதல் பற்றி, பாசறை ஏமப்பாசறை யெனப்பட்டது. பல வேறு தொழிற் பாடு விளங்கத் தொடுக்கப்படுவது பற்றித்தார், "பலகோட் செய்தார்" என்றார். உள்ளிவந்த என்றது, பண்டுவந்தமை தான் அறிந்துகொண்டமை தெரிந்தவாறு. பூவியல் நறவமென்றற்கு "மணநாறு தேறல்" என்றார். உடைக்குப் பாம்பின் தோலை உவமம் செய்தல் மரபு பிறரும், "பாம்புரியன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியினிழையணி வாரா வொண்பூங் கலிங்கம்" (புறம். 383) என்று கூறுதல் காண்க. திருவள்ளுவர் நிரப்பின் வெம்மையை நெருப்பிலும் பெரிதென்றராக இவ்வாசிரியர், "வேனிலன்ன வெப்பு" என்றார். ஓதல் முதலிய அறுவகைத் தொழிலுடையராதலின் "அறுதொழிலந்தணர்" எனப்பட்டனர். ஓதல் முதலிய தொழில் ஆறும் பார்ப்பார்க்குரிய வாதலின், அறவோராகிய அந்தணர் இம்மைக்குரிய உழவு வாணிக முதலிய தொழில்களைச் செய்யாமைபற்றி "அறு தொழிலந்தணர்" எனப்பட்டன ரென்றல் சிறப்பென அறிக: அறுதொழில், அற்றதொழில் என விரியும்; "அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த" (சிலம். 17) என்புழிப்போல. மேனாட்டுக் கிரேக்கர், உரோமானியர் முதலியோர் நாடுகளும், கிழக்கிலுள்ள கடாரம் சாவகம் முதலிய நாடுகளும் தீவு எனப்படுமாதலால் "வலம்படு தீவின்" எனப் பொதுப்படக் கூறினார். இறுதி, இறுதிக் காலமாகிய ஊழிக்காலம். வளவனுடைய தாணிழலின் பெருமை கூறவார். "செலினும் தோன்றினும் அஞ்சலம்" என்றார். ஏர்தரும்; தோன்றின; விழித்தன; சுருங்கின்று; காலை தோன்றி, அகற்றம்; கேளியர்; மார்ப, துயில் எழுமதியென இத்துணையும் கிணைவன் பாடிய துயிலெடை நிலையாயிற்று. மார்ப, துயில் எழுமதியென ஒற்றி, தோன்றியேன்; நயந்து, என, சூடும்தேறலும் கலிங்கமும் சொரிந்து, நீங்க, நல்கியோன்; நாடன், வளவன், செலினும் தோன்றினும் யாம் அஞ்சலம்; தண்ணிழலே மாதலால் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: பரிசில் விடையாவது, "வேந்தனுண் மகிழ வெல்புகழைந்தோர்க், கீந்து பரிசிலின்புற விடுத்தன்று" (பு. வெ. மா. 9:26). கடையிடத்தே நின்று விடைபெற்றுச் செல்லுதல் கடைநிலை விடையாகும். கிணைவன் நெடுங்கடைத் தோன்றி நின்று பாடி வளவன் பரிசில் நல்கி விடுத்தவழி, வளவன் நோன்றாள் தண்ணிழலேம்; என்னென்றஞ்சலம் என மகிழ்ந்து பாடிச் சேறல்பற்றி இது "கடைநிலை விடையுமாம்" எனப்பட்டது. கிணைப்பொருநன் வேந்தர் முன்றிலில் விடியற் காலத்தே சென்று நின்று தன்னடைய கிணைப்பறையைக் கொட்டி அவ்வேந்தர்களின் வஞ்சி முதலாகவுள்ள மறத்துறைகளைப் பாடுவது இயல்பு. அங்ஙனம் பாடுவோர் தொடக்கத்தில் வேந்தர்க்குத் துயிலெடைப் பாட்டைப் பாடி, அவர் துயிலுணருங்கால் அவர் செவிப்பட அவர்தம் மற மாண்புகழ்களை யோதியின்புறுத்துத் துஞ்சிய சோழன் கிள்ளி வளவளைத் துயிலெடை பாடிய திறத்தை "வெள்ளியும்...துயிலென்" என்று குறிக்கின்றார். ஈண்டு, "போது பிணிவிட்ட கமழ்நறும் பொய்கைத் தாதுண் தும்பி போது முரன்றாங்கு, ஓதலந்தணர் வேதம் பாடச், சீரினிதுகொண்டு நரம்பினிது இயக்கி, யாழோர் மருதம் பண்ண...சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப, இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்ப, பொறிமயிர் வாரணம் வைகறையியம்ப, யானையங் குருகின் சேவலொடு காமர், அன்னங் கரைய, வணிவயமாப் புலியொடு குழும...தருமணல் முற்றத் தரிஞிமி றாப்ப, மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப, இரவுத்தலைப் பெயரும் ஏனவைகறை" (மதுரை 664-86) என மாங்குடி மருதனார் பாடுவது ஒப்புநோக்கியின்புறத்தக்கது. திருப்பள்ளியெழுச்சி பாடி வேந்தன் பால் பரிசிலும் விடையும் பெறுவான், கிணைவன் அவ் வேந்தனது மற மாப்புகழைப் பாடு முன்பே அவன் பெருமகிழ்வுகொண்டு "உள்ளி வந்த பரிசிலன் இவன் என" க்குய்யுடை நெடுஞ்சூடும், மணனாறு தேறலும் வான்பூங் கலிங்கமும் தந்தானெனப் பரிசில் நிலையைப் பரிந்து கூறுவது தாயங்கண்ணனாருடைய தமிழ்மிகு சால்பினைப் புலப்படுத்து நிற்பது காண்க. வளவனது கொடையை மாரி யென்றலின், அதற்கு ஏற்பத் தம்முடைய வறுமை நிலையை வெப்பு எனப் புணர்த்து "வேனிலன்ன என் வெப்பு" என்றதும், பூத்த தாமரைகளோடு வேதி யரெடுத்த தீயை யுவமித்து, "செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழிலந்தண ரறம் புரிந்தெடுத்த, தீயொடு விளங்கும் நாடன்" என்றதும் மிக்க இன்பந்தருவனவாகும். ஆசிரியர் ஓரம்போகியார், "பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின். ஆம்பலஞ் செறுவின் தேனூர்" (ஐங்.57.) என்பது இங்கே அப்புநோக்கத்தக்கது. உலகிற்கு எத்தகைய கேடு வருவதாயினும், தான் கிள்ளிவளவன் ஆதரவு பெற்றி உறுதியுடைமை தோன்ற, பெருங்கடல் இறுதிக்கட் செலினும், கனலிதென்றிசைத் தோன்றினும் "என்னென் றஞ்சலம்" என்றும், "அவன் திருந்துகழனோன்றாள் தண்ணிழ லேமே" என்றும் கூறகின்றார். தீவொன்றிற் பெற்ற பொன்கொண்டமைத்த பூணணிந்த வளவன் என்றவிடத்துத் தீவுக்கு "நன்பொன்விளை தீவம்" (சிவக. 53) எனத் திருத்தக்க தேவர் கூறவதனை எடுத்துக் காட்டுவாருமுளர்.
-----------

398. சேரமான் வஞ்சன்

சேரன் குடிக்குரிய முடிவேந்தருள் ஒருவன் சேரமான் வஞ்சன். சேரரது வஞ்சிக்களம் அஞ்சைக் களமென்றானதுபோலச், சேரமான் வஞ்சன் பெயர் பிற்காலத்தே அஞ்சன் என்றாயிற்று; வஞ்சனது பாயல் நாடு பின்னர் வயனாடென்றாகி இப்போது வைநாடு (Introduction of B.L. Rice io Coorg Inscriptions Vol i.p3) என வழங்குகிறது. பாயல் மலைப் பகுதியில் வஞ்சனுக்குரியதாயிருந்த குன்று அஞ்சன் குன்றென்றிருந்து இப்போது அஞ்சுகுன்று என்ற பெயருடன் வைநாடு தாலூகாவில் உளது. இவனது ஆட்சியின் கீழிருந்த நாடு வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த அஞ்சனாடு முடிய இருந்தது. வடபகுதியில் அவன் பெயர் மறைந்ததாயினும் தெற்கில் அப் பெயர் மறையாது அஞ்சனாடு என்றே இப்போதும் வழங்குகிறது. பேரறிவும் பேராண்மையும் கொண்ட இச் சேரமான் தொகை நூல்களுட் காணப்படும் சேரவேந்தருள் மிகவும் பழையோன் எனக் கருதுதற்கிடனுண்டு. இவனைப் பற்றிய குறிப்பொன்றும் வேறு ஆசிரியர்களாற் குறிக்கப்படவில்லை. இவனது தலைநகரச் சான்றோர் "பெரும் பெயர் மூதூர்" எனப் பாடுவர். இந்நகர்க்கண் நண்பராகிய வேந்தர் குறுகுவது எளிதேயன்றிப் பகைமைக் கருத்தினர் எவரும் சேல்லுதல் இயலாது. இச்சேரமானும் பரிசிலர் வரிசையறிந்து சிறப்பிக்கும் பண்பு மேம்பட்டவன். சொல் தவறாத திட்பமும், சில சொற்களைக் கொண்டே அவற்றைச் சொல்வோரது உள்ளக்குறிப்பைவிரைந் துணரும் ஒட்பமும் உடையவன். இவனது பாயல் மலை மிகப்பல அருவிகளையுடையது. அச் சேரமானைப் பாடிச் சிறப்பித்தவர் திருத்தாமனார் என்னும் சான்றோர். தாமன் என்றது இயற்பெயரென்றும், திருவென்பது அவரது சிறப்பைக் குறித்து நிற்பதென்றும் தமிழறிஞர் கருதுகின்றனர். திருத்தாமனாரும் இப்பாட்டொன்று ஒழிய வேறு பாடியதாக ஒரு பாட்டும் இத்தொகை நூல்களில் காணப்படவில்லை. தாம் சேரமான் வஞ்சனைக் காணச் சென்ற போது அவன் செய்த சிறப்பை இப்பாட்டில் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இதன்கண், பொருநன் ஒருவன் சேரமானது மூதூர்க்குச் சென்று விடியலில் அவன் நெடுமனை முற்றத்தில் நின்று தன் கிணைப்பறையைக் கொட்டி இசைத்தான். விடியற்காலத்தே நிலா மறைய வெள்ளி யெழுந்து விளங்கிய போதில் சேவற்கோழி யெழுந்து விடியல் வரவறிந்து கூவுதாயிற்று. பொய்கைகளில் கூம்பிய பூக்கள் மலர்ந்தன; பாணர் தாம் கொணர்ந்த சீறியாழை முறைமை யறிந்து இசைத்தனர். அந்நிலையில் பொருநன் தன் கிணைப்பறையை யறைந்து "நினைந்து வரும் பரிசிலர் ஏந்திய கலங்களில் அவர்வேண்டுவன தந்து நிறைத்து மகிழ்விக்கும் வேந்தே, எம்மை அருளுபவனாகுக" என்று சொல்லித் தன் வரவை அறிவித்தான். சிலவாகிய இச் சொற்களைக் கேட்டதும் சேரமான் பேருவகை கொண்டு அன்பால் மாசுபடுந்து பீறிக்கிடந்து ஆடையைக் கடைந்து, தான் உடுத்தியிருந்த பூந்துகிலைத் தந்து பொருநனை உடுக்கச் செய்தான். பின்பு, அப்பொருநன்பால் இருந்த உண்கலம் நிறைய இனிய கட்டெளிவை நல்கி உண்பித்ததோடு, தான் உண்ணும் கலத்தில் தனக்கென இடப்பட்டிருந்த மானிறைச்சி பொரித்த பொரிக்கறியும் செவ்விய நெற்சோறும் அப்பொருநனும் அவனோடு போந்த சுற்றத்தவரும் இனிதுண்ணுமாறு கொடுத்தான். பின்பு தான் அணிந்திருந்த விலையுயர்ந்த அரிய ஆரத்தையும் தன் மேனியில் அணியப்பெற்றிருந்த அணிகலன்களையும் தந்தருளினான். அவற்றைப் பெற்ற பொருநரும் பிறரும் அவன் புகழ் நாடெங்கும் பரவுமாறு பாடிச்செல்வாராயினர். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன.

    மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர
    வகைமா ணல்லில்.....
    பொறிமயிர் வாரணர் பொழுதறிந் தியம்பப்
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க         5
    இரவுப்புறம் பெற்ற வேம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையி னிறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகி னல்லது பகைவர்க்குப்
    புவியின் மடிந்த கல்லளை போலத்         10
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி
    இரவுரை நெடுவா ரரிப்ப வட்டித்
    துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகிய ரெமக்கென         15
    என்வர வறீஇச்
    சிறிதிற்குப் பெரிதுவந்து
    விரும்பிய முகத்த னாகி என்னரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ         20
    அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
    நிழல்காண் டேற னிறைய வாக்கி
    யானுண வருள லன்றியுந் தானுண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருணை
    கொக்குகிர் நிமிர லொக்க லார         25
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
    புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
    உரைசெல வருளியோனே
    பறையிசை யருவிப் பாயற் கோவே.         30
    -----------

திணை: அது. துறை: கடைநிலை. சேரமான் வஞ்சனைத்திருத் தாமனார்
பாடியது.

உரை: மதி நிலாக் கரப்ப - திங்களின் நிலவொளி மறைய; வெள்ளி ஏர் தர - வெள்ளியாகிய விண்மீன் எழுந்து விளங்க; வகைமாண் நல்லில் - பலவகையாகக் கட்டப்பட்டு மாண்புற்ற நல்ல பெருமனை;....; பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்ப - பொறிகள் பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல் விடிற்போதின் வரவறிந்து கூவ; பொய்கைப் பூமுகை மலர - பொய்கைக்கண் கூம்பியிருந்த பூக்களின் முகை இதழ் விரிந்து மலர; பாணர் கைவல் சீறியாழ் கடல் அறிந்து இயக்க - பாணர் தாம் கைதேர்ந்த சிறிய யாழை முறைமை யறிந்து இசைக்க; இரவுப்புறம் பெற்ற ஏம வைகறை - இரவுப்போது நீங்கும் விடியற்காலத்தில்; பரிசிலர் - பரிசிலர்களை; வரையா விரைசெய் பந்தர் நீங்காத மணம் கமழும் பந்தரின்கண்...; வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - அவரவர் வரிசையறிந்து புரவுக்கடன் செலுத்திய வாய்மையே மொழியும் சேரமான் வஞ்சனுடைய; நகைவர் குறுகினல்லது - இன்பஞ்செய்பவராகிய பாணர் முதலாயினாரும் நட்புடைய வேந்தராயினாரும் மெல்ல வியலுவதன்றி; பகைவர்க்கு - பகைவராயினார்க்கு, புலியின மடிந்த கல்லளை போல - புலியினம் கிடந்துறங்கும் கன்முழைஞ்சுபோல; துன்னல் போகிய - நெருங்குதற்காகாத; பெருபெயர் மூதூர் - பெரும் பொருந்திய பெயரையுடைய மூதூர்க்குச் சென்று; மதியத்தன்ன என் அரிக்குரல் தடாரி - முழுமதிபோன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப் பறையை; இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து - தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து; உள்ளிவருநர் கொள்கலம் நிறைப்போய் - மறவா வுள்ளத்தால் நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய பொள்கலம் நிரம்ப - அரிய பொருள்களை வழங்குபவனே; எமக்குத் தள்ளா நிலையையாகியர் என - எம்மிடத்து நீங்காத அன்புற்ற நிலையையுடையனாகுக என்று என் வரவைக் குறிப்பித்து நின்றோனாக; என் வரவு அறீஇ - என் வரவை யறிந்து; சிறிதிற்குப் பெரிதுவந்து - என் சின்மொழிக்குப் பெரிதும் மகிழ்ந்து; விரும்பிய முகத்தனாகி - அன்பால் மலர்ந்த முகமுடையனாய்; என் அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கி - என் இடையில் சிதர்ந்து நார்நாராய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரைப் புகை விரிந்தன்ன பொங்குதுகில் உடீஇ - தன் அரையில் உடுத்திருந்த புகையை விரித்தாற் போன்ற உயர்ந்த உடையைத் தந்து என்னை யுடுப்பித்து; அழல் கான்றன்ன அரும்பெறல் இல்லையாயின என் உண்கலத்தில்; நிழல்காண் தேறல் நிறைய வாக்கி - உண்பார் நமது நிழலைக் காணுமாறு தெளிந்த கட்டெளிவை நிரம்ப பெய்து; யான் உண அருளல் அன்றியும் - யான் உண்டற்கு வழங்கியதேயன்றி; தான் உண் மண்டைய கண்டமான்வறைக் கருனை - தான் உண்ணும் மண்டையிடத்துத் துண்டித்த மானிறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்; கொக்கு உகிர் நிமிரல் - கொக்கின் நகம் போனற் முறியாத நெல்லரிசிச் சோற்றையும்; ஒக்கல் ஆர - என் சுற்றத்தார் உண்ண; வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் - மலைபோன்ற மார்பிலணிந்த உலகமெலாம் விலைமதிக்கத் தக்க; விரவுமணி ஒளிர்வரும் - பலமணிகள் விரவிக் கோக்கப்பட்டு ஒளி விளங்கும்; அரவு உறழ் ஆரமொடு - பாம்பு போல் வளைந்து கிடக்கும் மாலையும்; புரைோன் மேனிப் பூத்துகில் கலிங்கம் - உயர்ந்தோனாகிய அவன் மேனிக்கண் கிடந்து விளங்கும் பூ வேலை செய்யப்பட்ட உடைகளை; உரைசெல அருளியோன் - தன் புகழ் எங்கும் பரவ நல்கினான்; பறையிசை அரவிப் பாயல்கோ - பறைபோல் முழங்கும் அருவிகளையுடைய பாயல் என்னும் மலைக்குரியவன்; எ - று.

வைகறையில், வஞ்சன் மூதூர்க்கண் தடாரி அரிப்ப வட்டித்து, என, அறீஇ, உவந்து, முகத்தனாகி, நீக்கி, உடீஇ, வாக்கி, அருளலன்றியும் ஓக்கல் ஆர, ஆரமொடு, பாயற்கோவாகிய அவன் அருளினான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கரப்ப, ஏர்தர, இயம்ப, மலர, இயக்க, பெற்ற ஏமவைகறையென இயையும். பெரும்பெயர் மூதூரென்றது, அவன் பெயரே பெய்ய அஞ்சன் குன்று என்னும் நகர் போலும். குடகு நாட்டுக் கல்வெட்டொன்று "அஞ்சனகிரி மாளிகை" (Coorg: Ins. Voli. No.10) என்று ஒன்றைக்குறிக்கின்றது. சென்ற நூற்றாண்டு இறுதிகாறும் பாயல்நாடாகிய வயனாடு (whynad Taluka) குடகுநாட்டோடே சேர்ந்திருந்ததென அந்நாட்டு வரலாறு கூறகிறது. (Malabar Series - Whynad: P.5) இப்போதுள்ள நீலகிரி சில்லாவும் வயனாட்டோடு சேர்ந்திருந்து கி.பி. 1887 இல் தான் பிரிந்தது. இது நீலகிரியெனப் படுவதும் இடைக்காலக் கல்வெட்டு அஞ்சன கிரி யென்றும் நோக்கின், இந்நீலகிரி ஒருகாலத்தில் சேரமான் வஞ்சனுக்கு உரியதாயிந்து. பெரும்பெயர் மூதூர் எனச் சிறப்பிக்கப்பெற்றமை தெரிகிறது. தடாரிக்கு அரிக்குரல், அதன் நெடிய வார்கள் அரித்தலால் உண்டாவது தோன்ற, "நெடுவார் அரிப்ப" என்றார். தடாரியின் ஓசை. அதனை இயக்கும் பொருநரது குறிப்பையுணர்த்தும் வகையில் எழுப்பப்படுமாகலின், "இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து" என்றார். வட்டித்தல்-இசைத்தல்; "விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை, யலகின்மாலையார்ப்ப வட்டித்து" (புறம். 399) என வருதல் காண்க. சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச் சுற்றியடித்தல் பற்றி "வட்டித்து" என்றார். வட்டமென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. மதியம் வடிவுவமம், நார்நாராய்க் கிழிந்து வுடையென்பது தோன்ற, "துரும்புபடு சிதா அர்" எனப்பட்டது. மண்டையைக் காணுந்தோறும். உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை யெழுப்பி வெதுப்புதலின் "அழல்கான் றன்ன மண்டை" யென்றார். அரும்பெறல் என்புழி அருமை இன்மை குறித்து நின்றது; "அருங்கேடன்" (குறள். 210) என்றாற்போல, தேறலின் தெளிவைச் சிறப்பிப்பது குறித்து, அது "நிழல் காண்தேறல்" எனப்பட்டது. சேரமான் அணிந்திருந்த மணிமாலை உலகினரால் பெரிதும் மதித்துப் பாராட்டப் படுவதொன்றாதலின், "வையகம் விளக்கும் விரவுமணியொளிர் வரும் ஆரம்" என்றார். அருவிப் பாயல் என்றது பாயல் மலைக்கு வெளிப்படையாயிற்று.

விளக்கம்: இதன்கண் ஆசிரியர் திருத்தாமனார் சேரமான் வஞ்சனைக் கண்டு சிறப்பிக்கப்பெற்ற திறம் கிணைப்பொருநன் ஒருவன் கூறும் கூற்றாக இப்பாட்டின்கண் விளக்கப்படுகிறது. கிணைப்பொருநன் சேரமானைக் காணச் சென்ற வைகறைப்போது, "மதிநிலாக் கரப்ப...வைகறை" என்று குறிக்கப்படுகிறது. மதிநிலாக் கரப்ப என்றது, வளர்பிறை நாளாதலைக் காட்டிற்று. வைகறைப்போதின் வரவறிந்து கூவுதலின் தப்பாமை பற்றி, "பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்ப" என்றார். "பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப" (மதுரை 673) என்று பிறரும் கூறுகூது காண்க. "பொய்கைப்பூ முகைமலர" என்றது, நெய்தற்பூவைக் குறிப்பதாகக் கொள்க; நெய்தல் வைகறையில் மலர்வது; "வைகறை மலரும் நெய்தல்" (ஐய். 188) என்பது காண்க. கடன், முறைமை. மதிநிலா மறையவும், வெள்ளி யெழவும், வாரணம் இயம்பவும். பொய்கைப்பூ மலரவும் வந்த வைகறைப்போதில் கிணைப்பொருநன் சென்று சேரமான் வஞ்சனைக் காண்கின்றானென்பது தெளிவாம். அதன்பின், சேரமான் ஊரது காவற்சிறப்பு விளக்குவாராய், அவ்வூர்க்குள் நகைவரல்லது பகைவர் செல்லுதல் இயலாதென்றற்கு "நகைவர் குறுகில்லது பகைவர்...துன்னல் போகியமூதூர்" என்றார். மூதூர் பகைவர் துன்னுதற்காகாமைக்கு ஏது இதுவென விளக்குதற்குப் "புலியின மடிந்த கல்லளை போல" என்றார். பெரும்பெயர் மூதூர், பெரிய பெயரையுடைய மூதூர்; பெயருக்குப் பெருமையாவது, மூதூராளும் பெருமானாகிய வஞ்சனது பெயரையே தனக்கும் பெயராக அமையும் பெருமை. இப்பெருமை அதன் பழம் பெயரை மறைத்து விட்டது; சேரமான் வஞ்சன் பெயர்கொண்டெழுந்த மூதூர் அஞ்சன் குன்றென்றிருந்து அஞ்சு குன்னு என்று இப்போது வழங்குகிறது. இதன் பழம்பெயர் குன்றூர் என்பது போலும். கிணைவன் வைகறைப்போதில் கிணைகொட்டிச் சென்றவன் பறையிசையாலே தன்வரவினை அறிவித்தலும், "உள்ளிவருநர் கொள்கலம் நிறைப்போய், தள்ளாநிலையை யாகியர் எமக்" கென உரைத்தலும் மரபு. சேரமான் செய்த சிறப்பையும் தான் பாடிய பாட்டினையும் சீர் தூக்கிக் காணும் கிணைவன், வஞ்சனது பெருமையை நோக்கத் தன் பாட்டு இறப்பவும் சிறிதாதலை யெண்ணி வியக்கின்றானாதலால், "சிறிதிற்குப் பெரிதுவந்து" என்றான். உயர்ந்தோர்க்குத் தரப்படும் நறவு மிக்க தெளிவுடைத்தாகும்; அத்தகைய தெளிவைத் தனக்கும் தந்தது கொண்டு மகிழ்கின்றவன். "நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, யான் உண அருளல் அன்றியும் தானுண்மண்டைய கண்ட மான்வறைக் கருணை ஒக்கல் ஆர அருளியோன்" என்று கூறியுள்ளான். ஆற்றொழுக்காகக் செல்லும் திருத்தாமனாரது இப் பாட்டின் இடையிலும் சில அடிகள் சிதைந்த படிப்போர் உள்ளத்தில் வருத்தத்தை விளைவிக்கின்றன. (நற். 2) என்று சான்றோர் கூறுவது காண்க. புரையோனாதலால், இவனது பெயர் இவனது மூதூர்க்கு உரயதாயிற்றென்பது படப் "புரையோ" னென்ற சொல் நிற்பது குறிக்கத்தக்கது. நீலகிரிப் பகுதியிலும் வயனாடுதாலூகாவிலும் குடகுநாட்டிலும் உள்ள மலைகள் பாயல்மலை எனவும். நாடு பா(யல்) நாடெனவும் அதன் ஒரு பகுதி உம்பற் காடெனவும் வழக்கி வந்திருக்கின்றன.
-----------

399. தாமான் தோன்றிக்கோன்

தோன்றிக்கோன் என்பான் தோன்றிமலைக்குரிய தலைவனாவான். இம்மலை இருக்குமிடம் தெரிந்திலது. வழிவழியாகச் சிறந்து வந்த பழங்குடியில் தோன்றி அறமும் மறமும் புகழும் கொண்டு விளங்கிய இத்தோன்றிக்கோனுடைய இயற்பெயர் தாமன் என்பது. அது தாமான் என மருவித் தாமான் தோன்றிக்கோன் என வழங்கி வருவதாயிற்று. இவனைப் பாடிச் சிறப்பித்த சான்றோர் ஐயூர் முடிவனாராவர். இச்சான்றோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்பால் பேரன்புடையவர். அவ்வளவனையன்றிப் பிறரைப் பாடுவதில்லையெனவும் அவன்பாலன்றிப் பிறர் எவர்பாலும் ஒன்று வேண்டிச் செல்வதில்லை யெனவும் உறுதி கொண்டவர். ஐயூர்முடவனார் ஒருகால் வறுமை வருத்தத் தமக்குரிய சோழவேந்தனைக் காணச் சென்றார். முடவராதலின் பகடுபூட்டிய பண்டியில்தான் அவர் செல்வது வழக்கம். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஈர்த்துச்செல்லும் பகடுகளுள் ஒன்று வலியிழந்து போயிற்று. அவர் வருத்தமுற்றுத் தோன்றிக்கோவின் ஊர் அண்மையிலிருந்தது கேள்வியுற்று மெல்ல அவ்வூரை யடைந்தார். தோன்றிக்கோமானான தாமான் அவரது புலமைச் சிறப்பை முன்பேயறிந்தவனாதலால் அவர் தமக்குற்ற குறையை உரைப்பதற்கு முன்பே வேண்டுவன நல்கி அவரை மகிழ்வித்தான். அம்மகிழ்ச்சி வயப்பட்ட ஐயூர்முடவனார். கிணைவனொருவன் கூற்றாக, இப்பாட்டைப் பாடினர். இதன்கண் அவன் காவிரி பாயும் நாடனாகிய கிள்ளி வளவனை நினைந்து அவன்பாற் .செல்கின்றமையும், அவன்பாலன்றிப் பிறர்பால் செல்ல விரும்பாமையும், பிறர்முகநோக்கி அவருடைய அருணோக்கத்தைப் பெற விழையாமையும் மேற்கொண்டதனால் வறுமைமிக்க வருத்த, பொழுது மறுத்துண்ணும் சிறுமையுற்று நெஞ்சழிந்து ஒருபுடையிருந்ததாகவும், கிணைமகள் மீன் விற்று வந்த வருவாய் கொண்டு சமைத்த பாகற்பைங் கூழைப் பொழுது மறுத்துண்டு வருந்தியிருந்ததாகவும் குறித்துள்ளான். அக்காலத்தே அங்குள்ளோரால் தோன்றிக்கோனான தாமானது நல்லிசை அவன் நெஞ்சைக்கவர்ந்தது. தோன்றிக்கோன், "அறவர் அறவன், மறவர் மறவன். மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்" என்ற புகழ்படைத்து விளங்கினான். வறுமை மிகுதியால் கிணைவனுடைய கிணைப்பறை வார் அறுந்து கண்கிழிந்து பயன் படாவகையில் சீர் குலைந்து கிடந்தது. இப்புகழ் கேட்டதும், தோன்றிக்கோனால் தன் வறுமைத் துயர் கெடுமென்னும் துணிவால், புதுத்தோலும் புதுவாரும் கொண்டு தன் கிணையைப் புதுப்பித்துக்கொண்டு, கிணையு றையும் கடவுட்கு, வழிபாடு செய்யத் தாழ்க்கின் எய்தக் கருதிய பொருள் உரிய காலத்தில் எய்தப் படாமையும் கூடுமென நினைந்து கடவுளையும் வழிபடாது கிணைவன் தோன்றிக் கோனிடம் சென்று, "சேற்று வழியே சேறற்கண் தளர்ச்சியுறாத பகடு ஒன்றே யான் வேண்டுவது" எனத் தன் குறையை யெடுத்துரைத்தற்கு முன்பே, அவன் குறிப்பானுணர்ந்து பரிசில் தரற்குச் சமைந்து பல நிரைகளை ஊர்தியுடனே நல்கினான் என்று குறித்துரைத்துள்ளான். இப் பாட்டிடையே சில அடிகள் சிதைந்துள்ளன.

    அடுமகண் முகந்த வளவா வெண்ணெல்
    தொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி
    மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை         5
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற்
    பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன
    மெய்களைந் தினனொடு விரைஇ...
    மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநற் களியட வைகிற்         10
    பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும்
    செல்லேன் செல்லேன பிறர்முக நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக்         15
    கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண்
    டொருசிறை யிருந்தே னென்னே யினியே
    அறவ ரறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன்         20
    இசையிற் பொண்டா னசையமு துண்கென
    மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி
    வள்பரிந்து கிடந்த வென் றெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை
    உலகின் மாலை யார்ப்ப வட்டித்துக்         25
    கடியு முணவென்னக் கடவுட்குந் தொடேன்
    கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற்
    பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென
    ஒன்றியான் பெட்டா வளவை யன்றே
    ஆன்று விட்டன னத்தை விசும்பின்         30
    மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை
    ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென விழிதரு மருவி
    வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவை.
    ----------

திணை: அது. துறை: பசில்விடை. தாமான் தோன்றிக்கோனை ஐயூர்
முடவனார் பாடியது.

உரை: அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - சோறாக்கும் பெண். முகந்து கொணர்ந்த அளக்கப்படாத வெண்ணெல்லினுடைய; தொடிமாண் பரூஉ உலக்கை குற்றரிசி - பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி கொண்டாக்கிய சோற்றை; காடி வெள்ளுலைக் கொளீஇ - காடி நீர் பெய்த வெள்ளுலையிற் பெய்து கொண்டு; நீழலோங்கு சினைமாவின் தீங்கனி நறும்புறி - நீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாமரத்தின் தீவய கனிகைப் பிசைந்து செய்த நறிய புளிக்குழம்பும்; மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை பெரிய கரிய வராலிசைச்சியும் - கோட்டையுடைய சுறா மீனினது துண்டமாகிய கொழுவிய இறைச்சியும்; செறுவின் வள்ளை - வயல்களிற் படர்ந்த வள்ளைக்கீரையும்; சிறுகொடிப் பாகல் - சிறு கொடியாகிய பாகற்காயும்; பாதிரியூழ் முகை அவிழ்விடுத்தன்ன - பாதிரியின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற்போன்ற; மெய் களைந்து இனனோடு விரைஇ - தோலைநீக்கி இனமாகியவற்றோடு கலந்து; ஐதின் - மென்மையுண்டாக; மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல் - மூடும்படியாகப் பெய்த முழுத்த சோறும்; அழுகளிற் படுநர் களியாட வைகின் - வைக்கோல்களிற் பொழுதெல்லாம் உழைக்கும் களமர் தாமுண்ட கள்ளாற் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பாராயின்; பழஞ்சோறு அயிலும் - விடியலிற் பழஞ்சோற்றையுண்ணும்; முழங்கு நீர்ப்படப்பை - முழங்குகின்ற நீர்நலம் சான்ற தோட்டங்களையுடைய; காவிரிக்கிழவன் - காவிரியும் நாட்டையுடையனாகிய; மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி - கெடாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைந்து; அவன் படர்தும் - அவனை நோக்கிச் செல்கின்றேம்; பிறர் செல்லேன் செல்லேன் முகம் நோக்கேன் -பிறர் பால் ஒருகாலும் செல்லேன், பிறருடைய முகத்தை உதவி கருதிப் பாரேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்து - செடிய மூங்கிலாகிய தூண்டிலாற் பிடித்த மீனை விற்று; கிணை மகள் அட்ட பாவால் புளிங்கூழ் - கிணைமகள் சமைத்த நீர்த்தர்ப் பரந்த புளிங்கூழை; பொழுது மறுத்துண்ணும் உண்டயேன் - காலமல்லாத காலத்தில் உண்ணும் உணவையுடையேன்; அழிவுகொண்டு ஒருசிறை இருந்தேன் - செஞ்சழிந்து ஒரு புடையே இருந்தேனாக; என்ன - நின் நல்லூழ் இருந்தவாறென்னே; இனி - இப்பொழுது; அறவர் அறவன் - அறவோர்களிற் சிறந்த அறவோனும்; மறவர் மறவன் - அறவர்க்குள் சிறந்த மறவனும்; மள்ளர் மள்ளன் - உழவருட் சிறந்த உழவனும், தொல்லோர் மருகன் பழையோருடைய வழித்தொன்றலு மாகிய அவன் - தாமான் தோன்றிக் கோன்; இசையிற்கொண்டான் - நின்புகழால் நின்பால் அன்புகொண்டு விட்டானாகலின்; நசையமுது உண்க என - நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறவே; மீப் படர்ந்து இறந்து - மேலே செயற்பாலவற்றை நினைந்து சென்று; வன்கோல மண்ணி - கையிற்கொண்டேகும் வலிய கோலைத் தூய்மை செய்து கொண்டு; வள் பரிந்து கிடந்த என் கெண்கண்மாக் கிணை வார் அறுப்புண்டு - சீர்குலைந்து கிடந்த என் தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையை; விசிப்புறுத்து - புதுவார்கொண்டு விசித்துக் கட்டி; அமைந்த புதுக்கால் போர்வை - இசைக்குரிய கண்ணமைக்கப்பட்ட புதிய வலிய தோலினுடைய; அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்து - அளவில்லாத மாலை போன்ற நெடிய வாரகள ஒலிக்க இயக்கி; கடியும் உணவென்னக் கடவுட்கும் தொடேன் - கிணைக்கண்ணுறையும் தெய்வத்துக்கு வழிபாடாற்றக் கருதியவழிப் பெறற்குரிய உணவைப் பெறுவது தாழ்க்கு மெனக் கருதி அத்தெய்வத்தையும் வழிபடாது; கடுந்தேர் அள்ளற்கு அசாவா - வலிய தேராகிய வண்டி சேற்றில் அழுந்திய வழி அதற்குத் தளராத; நோனசுவல் பகடே - யான் வேண்டி வந்தது என வலிய கொண்டையையுடைய பகடே யான் வேண்டிவந்தேன் என்று; ஒன்று யான் பெட்டா அளவை - ஒன்றை யான் விரும்பிக் கேளாமுன்பே; அன்றே ஆன்றுவிட்டான் - அப்பொழுதே கொடுத்தற்கமைந்து என்பால் வரவிடுவானாய்; விசும்பின மீன் பூத்தன்ன - வானத்தே விண்மீன்கள் பூத்தாற்போல; உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கியோன் - அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை ஊர்ந்துசெல்லற்கேற்ற காளைகளோடே நல்கினான்; சீர்கொள இழுமென இழிதரும் அருவி - தாளம் அமைய இழுமென்னும் ஓசையுடன் இழியும் அருவிகளையுடைய; வான்தோய் உயர்சிமைத் தோன்றிக்கோ - வானளாவ உயர்ந்த உச்சியுயைடைய தோன்றி மலைக்குத் தலைவன் எ - று.

அடுப்பிலேற்றாது காடி நீரில் சோற்றைப் பெய்து வைத்திருக்கும் உலை, வெள்ளுலையெனப்பட்டது. மாங்கனியிற் சாறுபிழிந் தமைக்கும் நறும்புளியைப் பிறரும், "வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காய கிளைத்துணர் வடித்துப் புளிப்பத னமைத்த புகுக்குடம்" (அகம். 37) என்று கூறுதல் காண்க. மோடு, பெருமை, கோட்டுமீன், சுறாமீன். முரியாத அரிசிச் சோற்றை "முழுவவிழப் புழுக்கல்" என்றார். மூழ்த்தல், மூடுதல்; வாய் மூழ்த்தனரென்றாற்போல. வையும் நெல்லும் பிரிக்கும் தொழிலில் பொழுதெல்லாம் கழித்தோயும் களமரை, "அழிகளிற்படுநர்" என்றார். களிமயக்கால் இரவுப்போதில் உணர்வற்றுக் கிடந்தால் விடியலிற் பழஞ்சோறுண்ணும் இயல்புபற்றி, "களியடவைகின் பழஞ்சோ றயிலு" மென்றார். ஊன் விற்று உணவுப்பொருள் பெற்றுக் கிணைமகள் புளிங்கூழ் சமைப்பது காலவரையறைக்ககப் படாமையின், "நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக் கிணைமகளட்ட பாவற் புளிங்கூழ்" என விரித்தோதினார். பாவல் புளிங்கூழ், கூழ் சிறிதும் நீர் பெரிதுமாகச் சமைக்கப்பட்ட புளிங்கூழ். புளிக்க வைத்து அடுங்கூழ், புளிங்கூ ழெனப்பட்டது. பொழுது மறுத்துண்டலாவது, உண்டற்குரிய காலவரவு நோக்கியிருந் துண்ணாது, உணவு வரவு நோக்கியிருந்துண்பது; பழைய வுரைகாரர் உண்ணுங்காலை மாறி யுண்ணுதல் (புறம். 248 உரை) என்பது காண்க. மறவன் என்பதே போர்க்குரிய மறமும் வீரமும் உடைமையுணர்த்தி நிற்றலின், மள்ளன் என்பது உழவுத் தொழில் வன்மையுடைமை குறிப்பதாயிற்று. தோன்றிக்கோவின் தகைமையறிந் துரைப்போர். அவன் இக் கிணைவனது இசையறிந்து கொடை வழங்கும் உள்ளத்தனாதலை யறிந்து வந்துரைத்தலின், "என்னே" என வியந்தனர். கிள்ளி வளவன்பாற் செல்லக் கருதி வந்தவர், தோன்றிக்கோவின் வள்ளன்மையும் அவன் தன்பாற் கொட்டிருக்கும் செலுத்துகின்றாராகலின், "மீப்படர்ந்திறந்து" என்றார். வளவற்தே யுரித்தாய் அவனையே வரைந்து ஒன்றியிருந்த நெஞ்சம் தோன்றிக்கோவுக்கு உரித்தாய் அவன்பால் அன்பு செய்தற்கிடனாய் நிற்றலின் படர்தலும் இறத்தலும் உளவாயின. கிணைவன் முதலிய இரவலர் கையில் கோல்கொண்டு சேறல் மரபு. போர்வை, போர்க்கப்படும் தோல். மாலை போறலின், நெடிய வார்கள் மாலையெனப்பட்டன. முரசு, கிணை முதலியவற்றில் தெய்வ முறையு மென்பது பண்டையோர் கொள்கை; "கடியுமுணவென்னக் கடவுட்கும் தொடேன்" என்பதற்கு, என்னவும் என உம்மை தொக்கதாகக் கொண்டு, வழிபடாத வழித் தெய்வம் உணவு பெறாவாறு கடியும் என்று எம்மிற் சான்றோர் சொல்லியிருப்பவும். விரையச் செல்வது குறித்துக் கடவுட்கும் வழிபாடாற்றாது செல்வது குறித்துக் கடவுட்கும் வழிபாடாற்றாது செல்வேன் என்றுரைப்பினு மமையும். பெட்டல், விரும்புதல். வாயைத்திறந்து கேட்பதற்கு முன்னே பன்னிரையும் ஊர்தியும் பண்ணுமாறு தன் ஏவலரைப் பணித்தாரென்பார், "ஒன்றியான் பெட்டா அளவை யன்றே யான்று விட்டனன்" என்றார். அத்தை: அசைநிலை. அரிசி உலைக்கொளீஇ நறும்புளியும் கொழுங்குறையும் வள்ளையும் பாகலும் இன்னொடு விரைஇ. புழுக்கலும், படுநர்வைகின், வளவன், அவற் படர்தும், செல்லேன், செல்லேன் நோக்கேன், உண்டியேன் இருந்தனெனாக, என, இறந்து மண்ணி விசிப்புறுத்து, வட்டித்து, தொடேன், எனப் பெட்டா அளவை அன்றே, ஆன்று, விட்டனன்: தோன்றிக்கோ, நல்கினான் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

விளக்கம்: உண்டற்கொருட்டு வரைந்து தொகுக்கப்பட்ட நெல்லை வேண்டும் போதெல்லாம் எடுத்துக் குற்றிக்கொள்ப வாதலால் அடுமகள் முகந்துகொண்ட நெல்லை அளவா வெண்ணெல் என்றார்; இனி அளந்துகொண்ட நெல்லென்றுரைப்பினு மமையும். உலக்கையின் பருமை குற்றலின்மே னின்றது. காடி நீரையும் மோர் பெய்த நீரையும் உரைக்கிடுபவாதலால் காடி வெள்ளுலைக் கொளீஇ யென்றார். நறும்புளியும் பாகலும் வேறு கறிக்கும் இனமான சாந்தும் காயமும் பிறவும் இனமெனக் குறிக்கப்பட்டன. சோறுவேறென்னத் தோன்றாதவாறு தோன்ற, "ஐதுற மூழ்ப்பப் பெய்த புழுக்கல்" என்றார். வெய்துற என்றும் துய்த்தலையென்றும் காணப்படும் பாடம் பொருள் விளங்கவில்லை. காவிரிக்கிழவனான கிள்ளிவளவனைக் காண்டற்குச் செல்லும் ஐயூர் முடவனார் விழியிடையே சிறப்புற்றிருந்த தோன்றிக் கோமானான தாமான் என்பானைப் பாடுகின்றாராகலான், "காவிரிக்கிழவன்...படர்தும்" என்று கூறுகின்றார்.

இடையே தாமான் தோன்றிக்கோனை அறிந்தோர் முடவனாருக்குக் கூறியது, "அறவர்...உண்க" என்றது. முடவனார் தோன்றிக்கோனது ஊர்வயின் தங்கிமேலே உரையூர்க்குச் செல்லும் திறம் இன்றி, பகடொன்றில்லாக் குறையுற்றிருந்தாராக, அங்கிருந்தோர் அவருக்கு அவனது பெருமையை யெடுத்துக் கூறினர்; அதுகேட்டு அவர், "காவிரிக் கிழவன்...இருந்தேன்" என்றார். அமுது உண்க என்றது, நிறைந்த செல்வம் பெறுக என்பது குறித்து நின்றது; "அமுத முண்க நம் மயலிலாட்டி" (நற். 65) என்றாற்போல. தோன்றிமலை திண்டுக்கல்லுக்கு மேற்கில் பதினைந்து கல்லில் உளது; இப்போது அங்கே தான்றிக் குடியென்றோர் மலையிடை ஊர் உளது; அது காப்பிச் செடியும் ஏலமும் பயிராகும் வளவிய இடம். இனி, கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்யையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.
-----------

400. சோழன் நலங்கிள்ளி

தமிழகத்தை நினைக்கும்போது, இதனைப் பொதுவாகத் தமக்கு உரிமையாகவுடையவர் தமிழ் மூவேந்தர் என்பது நினைவுக்கு வரும். சான்றோரும் இது பற்றியே இதனைப் "பொதுமை சுட்டிய மூவருலகம்" (புறம். 357) என்று கூறினர். சோழர் பாண்டியர் சேரராகிய மூவரையும் உலகியலில் மக்கட்கு உறுதித்துணையாகப் பண்டையோர் கருதினாராகலின், உறுதிப் பொருளாகிய அறம் பொருள் இன்பங்களைப் போல இவ் வேந்தர் மூவரும் உளர் என்பதும் அந்நாளில் நிலவிய கொள்கையாகும். அதனால் ஒருவர் மேம்பட இருவர் அவர் வழிப்பட நிற்பது இயல்பாயிற்று. ஒருகால் சோழ வேந்தனான நலங்கிள்ளி வடபுலத்தரவர் துஞ்சாக் கண்ணராய் நெஞ்சு நடுங்க அவலமுற்று மறப்புகழ் கொண்டு விளக்க முற்றானாக. அவனைச் சிறப்பித்துப் பாடிய ஆசிரியர் கோவூர்கிழார், "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும், அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல. இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை, உருகெழு மதியினிவந் துசேண் விளங்க" (புறம். 31) நல்லிசை நிறுவியதை விதந்தோதிப் பண்டைய தமிழ்க் கொள்கையை நிறுவியிருத் தலைக் காணலாம். சோழன் நலங்கிள்ளி சோழநாட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தவன். இவன் புலவர் பாடும் பெரும்புகழ் படைத்தவன்.இவனை, "மென்மையுன் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை" (புறம். 68) என்பர். பாணர், பொருநர் முதலிய பரிசிலர்க்குப் பெருவளம் நல்கிப் பேரின்பம் எய்துபவன். இதனால், இவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் பின்பு பிறரெவரையும் பாடிப் பரிசில் பெற விரும்பார். "நலங்கிள்ளி நசைப்பொருநரேம், பிறர்பாடிப் பெறல்வேண்டம்" (382) என அவர்கள் கூறுவது காண்க. இத்ததைய சிறப்புடைய வேந்தனுக்கு ஆசிரியர் கோவூர்கிழார்பால் பெருமதிப்புண்டு. பல காலங்களில் கோவூர்கிழார் பலவேறுவகையில் நலங்கிள்ளியைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

இவரால் புகழ் மாசுபடாது உய்த்த வேந்தருள் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் குறிப்பிடத்தக்கவராவர். சோழன் நலங்கிள்ளியின் புலவருள் ஒருவரான இளந்தத்தனார் உறையூர்க்கொருகால் சென்ற போது அவரை ஒற்று வந்தவரெனப் பிழைப்படக்கருதி, நெடுங்கிள்ளியின் புலவருள் ஒருவரான இளந்தத்தனார் உரையூர்க்கொருகால் சென்ற போது அவரை ஒற்று வந்தவரெனப் பிழைப்படக்கருதி, நெடுங்கிள்ளி கொல்லப்புக்கானாக, கோவூர்கிழார் அதனை யறிந்து விரைந்து சென்று புலவரை உய்வித்தார். அதனால் சோழன் குடிக்குண்டாகவிருந்த பெரும்பழியையும் நிகழாவாறு காத்தார். புலவர்கள் பரிசில்பெற்று வாழும் வாழ்வினராயினும் பிறர்க்குத் தீதுசெய்யும் இயல்பினரல்லர்; நண்ணார் நாண அண்ணாந்து செல்லும் ஆண்மையுடையார்; அவ்விடத்தும் எவ்விடத்தும் இனிது ஒழுகும் இனிபை் பண்பினர். மண்ணாளும் செல்வமெய்திய மன்னவ ரொப்பச் செம்மலும் உடையர் என ஆசிரியர ் கோவூர்கிழார் கூறுவது அந்நாளில் புலவர் பெருமக்களை இகழ்ந்தொழுகும் பேதைமாக்கட்குச் சீர்த்த அறிவுரையாகும். சோழன் நலங்கிள்ளிபால் தாம் பெற்ற வண்மைநலத்தைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக்கோவூர்கிழால் இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண், கிணைப்பொருநன் சென்று விடியற் காலையில் தன் இணைப் பறையைக் கொட்டி நலங்கிள்ளியின் புகழ் பாடினானாக. அதுகேட்டவன், அப் பொருநன்பால் அன்புகொண்டு, அவன் இடையில் அழுக்கேறிக் கிழிந்திருந்த உடையை நீக்கிப் புத்தாடை தந்து உடுப்பித்து உயர்ந்த கலன்கள் பல நல்கினான். பொருநனும் அதுகொண்டு சின்னாள் தங்கி மீள்பவன், "யான் அவன்பால் இருக்கையில் அவனைக் கண்டு பயிலும்போது இதுவெனும் வரையறையின்றிப் பழகினேன்; அவன் தனக்குளதாகும் பகையைக் கடிதலேயன்றித் தன்னைச் சேர்ந்தோர்க் குளதாகும் பசிப்பகை கடிதலிலும் சிறந்தவன்; மறவர் மலிந்த போர்க்களத்தாலும் மறையவர்களின் வேள்விக்களத்தாலும் கடல்வழியே பிறநாடுகட்குச் சென்று பொருளீட்டி வரும் கலத்தாலும் புதுவாருவய் இடையறாது உறைதற்கு இனிதாயது அவனது நல்லவூர்," என்று இதன்கண் குறித்துரைக்கின்றார். இப்பாட்டு இடையிடையே மிகவும் சிதைந்துளது.

    மாகவிசும்பின் வெண்டிங்கள்
    மூவைந்தான் முறைமுறைக்
    கடனடுவட் கண்டன்ன வென்
    இயமிசையா மரபேத்திக்
    கடைத்தோன்றிய கடைக்கங்குலாற்         5
    பலர்துஞ்சவுந் தான்றுஞ்சான்
    உலகுகாக்கு முயர்கொள்கைக்
    கேட்டோ னெந்தையென் றெண்கிணைக் குரலே
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதா அர் மருங்கு நீக்கி         10
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசான் னகலஞ்
    ........ ....... ....... .................லவான
    கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி
    நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து
    போதறியேன் பதிப்பழகவும்         15
    தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன்.....
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்
    திருங்கழி யிழிதரு மார்கலி வங்கம்         20
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே.
    --------

திணை: அத. துறை: இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

உரை: மாக விசும்பின் வெண்டிங்கள் - மாகமாகிய விசும்பின்கண் நிலவும் வெண்மதியம்; மூவைந்தால் முறைமுற்ற - பதினைந்துநாள் முறையே முதிர; கடல் நடுவண் கண்டன்ன - கடலின் நடுவின் அதனைக் கண்டாற் போன்ற; என்இயம் இசையா மரபேத்தி - எனது இயமாகிய தடாரிப்பறையை யறைந்து முறையே அவனுடைய புகழ் பரவினேனாக; கடைக்கங்குலால் - இரவின் கடையாமமாகிய விடியற்காலத்தில்; பலர் துஞ்சவும் தான் துஞ்சான் - பலர் உறங்கவும் தான் மட்டில் உறங்கானாய்;உலகு காக்கும் உயர் கொள்கை - உலகத்தைக் காக்கும் உயர்ந்த கொள்கையையுடைய; எந்தை - எம் தலைவன்; கடைத் தோன்றிய என் தெண்கிணைக் குரல் கேட்டோன் - தன் நெடுமனை முற்றத்தில் நின்று இசைத்த எனது தெளிந்த - கிணைப்பறையின் ஓசையைக் கேட்டாய்; கேட்டற்கொண்டும் கேட்டதனால்;வேட்கை தண்டானது - என்பால் உண்டான அருள் குறையாமல்; தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி - பழைமையுற்றுச் சிதர்ந்த பீறிய என அரைிலிருந்த உடையைக் களைந்து போக்கி;கலிங்கம் அளித்திட்டு - புத்தாடை தந்து உடுப்பித்ததுடன்; என் அரை நோக்கி - அதனை யணிந்து பொலியும் என் அரையைத் தான் பார்த்து மகிழ்ந்து; மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் - மிகப்பெரிய சிறப்பினையுடைய வீறமைந்த நல்ல கலன்களை;...நாரரி நறவின் நாண்மகிழ் தூங்குந்து - நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுண்ட நாடோறும் மகிழ்ந்சிமிகும்;... பதிப்பழகவும் போதறியேன் - அவன் ஊர்க்கண்ணேிருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்; தன்பகை கடிதலன்றியும் – தன்னை வருத்தக் கருதும் பகையைப் போக்குதலோடு; சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் - தன்னைச் சேர்ந்தோருடைய பசியாகிய பகையை உடன்கெடுத்தற்கும் வல்லவனாவன்; மறவர் மலிந்த வேள்வித் தூணத்து - மறைகளைக் கேட்டுவல்ல அந்தணர் நிறைந்த வேள்விச்சாலையில் நிற்கும் தூண்களையும்; இருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் - கரிய கழிவழியாக வந்திறங்கும் கடலிற் செல்லுதலுடைய ஓடங்களை; தேறுநீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து - தெளிந்த நீர்பரந்த கடற்குச் செல்லும் வழியாகிய யாற்றைச் செம்மை செய்து செலுத்தி; துறைதொறும் பிணித்து நிறுத்தும் நல்ல வூர்களையும்; உறைவினர் யாணர் நாடுகிழவோன் - தங்கி வாழ்தற்கினிய புது வருவாயையுமுடைய நாட்டுக்கு உரியவன்; எ - று.

வெண்டிங்கள்: இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர். பதினைந்து நாளும் நிறைந்த திங்கள் கடல் நடுவே வட்டமாய்க் காணப் படுவது பற்றி முழுவட்டமாய்த் தோன்றும் தடாரிப்பறைக்கு உவமம் செய்தார். இயம் எனப் பொதுப்படக் கூறினாரேனும், திங்களை யுவமம் கூறுவதாலும், கிணைப்பொருநன் கூற்றாதலாலும், தடாரிப்பறை யென்றும் பெறப்பட்டது. "மதியத் தன்னவென் விசியுறு தடாரி" (புறம்:371) என்று பிறரும் கூறதல் காண்க. வேத்தியல் பொதுவியல் என இயலும் முறைமை யறிந்து இசையும் பாட்டும் கூத்தும் நிகழுமாதலின், "இயம் இசையா" என்றதனோடு, "மரபேத்தி" என்று கிணைப்பொருநன் உரைக்கின், "பலர் துஞ்சவுந்தான் துஞ்சா" னாதற்கு ஏது கூறுவார், "உலகுகாக்கும் உயர்கொள்கை" என்றார். பாணர்்பொருநர் புலவர் முதலாயினாரால் வேந்தருடைய மறமும் புகழும் நாடெங்கும் பரவிப் பகைவர்க்கு அச்சம் பயந்து அரணுமாதலின் அவர்க்குச் சிறப்புச் செய்தற்கண் விருப்பம் மிகவுடையனானான் என்பது "வேட்கை தண்டாது" என்பதனால் பெறப்படுகிறது. வறுமை மிக்கவழிப் பதியின்கண் பழகுதல் கூடாமையின், செல்வம் பெற்றுச் சிறக்கும் தனக்கு அஃது எளிதாய் இனிதாய்ப் போது கழிதற்கு வாயிலாயிற் றென்பான், "போதறியேன் பதிப்பழகவும்" என்றார். பிறரும், "பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை" (புறம்:393) யென்பது காண்க. தான் பகையால் நெருக்குண்டு வரு்தும் போதும் தன்மைனச் சேர்ந்தோர் பசியின்றி வாழ்தலிலே வேந்தன் கருத்து நிலவிற்றென்றற்கு, "தன்பகை கடிதலன்றியும் சேர்ந்தோர், பசிப்பகை கடிதலும் வல்லன்" என்றார். இது வன்மை பரிதுடையார்க்கே இயலுவதாகலின், "வல்லன்" என்றார்; யாற்றுப் பெருங்கால் கடலொடு கலக்குமிடம் மணம் தூர்ந்து வங்கம் கழியிடைப் புகுதற கியலாவழி, அதனைப் போக்கி வழிசெய்து கோடல் விளங்க, "யாறு சீத்துய்த்து" என்றார். கடைக் கங்குலில், இசையா, ஏத்தி, தோன்றிய, குரல்கேட்டோன்; கேட்டதற்கொண்டும், தண்டாது, நீக்கி, அளித்திட்டு, நோக்கி... அறியேன், வல்லன், கிழவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தூங்கும் பதியென இயையும். தூணத்தையும். நல்லூரையும் யாணரையு முடைய நாடுகிழவோன் என இகை்க. விளக்கம்: கடைக் கங்குற்போதில் யாவரும் எழுதற்குமுன் தான் துயிலுணர்ந்து எழுந்து கிணைவன் வரவறிந்து வரவேற்று உடையும் உண்டியுந் தந்து சிறப்பித்த சோழன் நலங்கிள்ளியின் நலத்தைப் "பலர் துஞ்சவுந்..." "வீறுசா னன்கலம் நல்கினான்" என்றார். ஆசிரியர் கோவூர்கிழாரும் கிணைவன் கூற்றில் வைத்துக் கூறுவது நோக்கத்தக்கது. மறக்கள வேள்வியும் அறக்கள வேள்வியும் சோழன் செய்துள்ளான் என்பது, "மறவர் மலிந்ததன்... வேள்வித்தூணத்து" என்பதனால் விளங்குகிறது. வங்கத்தை "யாறுசீத்துய்த்துத் துறைதொறும் பிணிக்கும் நல்லூர்" என்றலின், இச்சோழனது பேரூர் கடற்கரைக் கண்ணதாகிய காவிரிப்பூம்பட்டினம் என்பது உய்த்துணரப்படுகிறது. ஆகவே, இவன் கரிகாலனுக்குக் காலத்தாற் பிற்பட்டவன் என்பது தெளிவாம். கிடைத்தத பிரதியில் இரண்டொரு திருத்தம் தவிர இப் பாட்டின் முழுவடிவும் இனிது காணச் செல்வத்தைப் பேணுக்காலத்துத் தமிழம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுந்துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், ஆ! இத்தமிழகம் இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிறநாட்டார் தலைவணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ்கூறும் நல்லுலகமாகும் பணியில் பெரும்பாடு படுகிறது. வாழ்க தமிழ்; வீழ்க பகை. வெல்க தமிழகம், வெல்க தமிழர்.

புறநானூறு மூலமும் ஆசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள்
விளக்கவுரையும் முற்றுப்பெற்றன.

-------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்