திருக்குறள் - பரிமேலழகர் 4


நீதிநெறி நூல்கள்

Back

திருக்குறள்
பரிமேலழகர் 4



திருக்குறள் - பரிமேலழகர்
3. காமத்துப்பால்

    3.1 களவியல்

    3.1.1 தகையணங்குறுத்தல்

    1081. அணங்குகொல் லாய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலு மென் னெஞ்சு.
    தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது. கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர் கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது.
    விளக்கம் (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். கனங்குழை: ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி, 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும்பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.) ---
    1082. நோக்கினா னோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.
    மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என்நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற்போலும் தன்மையை உடைத்து.
    விளக்கம் (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.) ---
    1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
    பெண்டகையாற் பேரமர்க் கட்டு.
    இதுவும் அது. கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
    விளக்கம் (பெண்தகை: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டெனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.) ---
    1084. கண்டா ருயிருண்ணும் தோற்றத்தாற் பெண்டகைப்
    பேதைக் கமர்த்தன கண்.
    இதுவும் அது. பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.
    விளக்கம் (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.) ---
    1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
    னோக்கமிம் மூன்று முடைத்து.
    இதுவும் அது. கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமை யான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ; அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.
    விளக்கம் (இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில் பற்றி வந்த ஐயநிலை உவமம்.) ---
    1086 கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
    செய்யல மன்னிவள் கண்.
    இதுவும் அது கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடைய வாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - துயரைச் செய்யமாட்டா.
    விளக்கம் (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினார். நடுங்கு அஞர் - நடுங்கற்க ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.) ---
    1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
    படாஅ முலைமேற் றுகில்.
    அவள் முலைகளினாய வருத்தம் கூறியது. மாதர் படா முலைமேல் துகில் - இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.
    விளக்கம் (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றார். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றுஞ் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.) ---
    1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினு
    நண்ணாரு முட்குமென் பீடு.
    நுதலினாய வருத்தம் கூறியது. ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்துவிட்டது.
    விளக்கம் ('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதனால், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.) ---
    1089 பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
    கணியெவனோ வேதில தந்து.
    அணிகலத்தானாய வருத்தம் கூறியது. பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான்பிணைஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து ?
    விளக்கம் (மடநோக்கு - வெருவுதல் உடைய நோக்கு. 'இவட்குப் - பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.) ---
    1090 உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
    கண்டார் மகிழ்செய்த யின்று.
    தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது. அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.
    விளக்கம் (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அது பெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. ''அரிமயிர் திரள் முன்கை'' (புறநா. 11) என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.) ---

    3.1.2 குறிப்பறிதல்

    1091 இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
    தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது. இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்ததாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என் கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
    விளக்கம் (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தனாய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற நோக்கு. மருந்தாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்; அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ்வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.) ---
    1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாக மன்று பெரிது.
    இதுவும் அது. கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.
    விளக்கம் (தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும், நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவு கொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், 'இனிப் புணர்த்ல் ஒருதலை' என்பான் 'செம்பாகம் அன்று; பெரிது' என்றும் கூறினான்.) ---
    1093 நோக்கினா னோக்கி இறைஞ்சினா ளஃதவள்
    யாப்பினு ளட்டிய நீர்.
    நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது. நோக்கினாள் - யான் நோக்கா அளவில்தான் என்னை அன்போடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றி அன்புப் பயிர் வளர அதற்கண் அவள் வார்த்த நீராயிற்று.
    விளக்கம் (அஃது என்னும் சுட்டுப் பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.) ---
    1094 யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
    றானோக்கி மெல்ல நகும்.
    நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்கா நிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
    விளக்கம் (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.) ---
    1095 குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்.
    இதுவும் அது. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத துணையல்லது; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை சிரங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
    விளக்கம் (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம். சிறக்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல' என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். 'இனி இவளை எய்துதல் ஒருதலை' என்பது குறிப்பெச்சம்.) ---
    1096 உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
    லொல்லை உணரப் படும்.
    தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தால் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
    விளக்கம் (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து; வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றவை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.) ---
    1097 செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
    முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.
    இதுவும் அது. செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவன.
    விளக்கம் (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.) ---
    1098 அசையியற் குண்டாண்டோ ரேர்யா னோக்கப்
    பசையினள் பைய நகும்.
    தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது. யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கிய இயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
    விளக்கம் (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.) ---
    1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே யுள.
    தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையார் கண்ணே உளவாகாநின்றன.
    விளக்கம் (பொது நோக்கு; யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர் கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண் தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சி போல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார் 8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.) ---
    1100 கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
    ளென்ன பயனு மில.
    இதுவும் அது. கண்ணோடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச் சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
    விளக்கம் (நோக்கால் ஒத்தல்; காதல் நோக்கினவாதல். வாய்ச்சொற்கள்; மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.) ---

    3.1.3 புணர்ச்சி மகிழ்தல்

    1101 கண்டுகேட் டூண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
    மொண்டொடி கண்ணே யுள.
    இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்ணே உளவாயின.
    விளக்கம் (உம்மை, முற்று உம்மை. தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.) ---
    1102 பிணிக்கு மருந்து பிறம னணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து.
    இடந்தலைப் பாட்டின் கண் சொல்லியது. பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன் நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள்.
    விளக்கம் (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந்தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து ' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப் பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.) ---
    1103 தாம்வீழ்வார் மென்றோட் டூயிலினினிதுகொ
    றாமரைக் கண்ணா னுலகு.
    'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
    விளக்கம் (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.) ---
    1104 நீங்கிற் றெறூஉம் குறுகுங்காற் தண்ணென்னுந்
    தீயாண்டுப் பெற்றா ளிவள்?
    பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும். அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்? -
    விளக்கம் (என் கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்? கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றிதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான். அவளான் அது வெளிப்படுதலின்.) ---
    1105 வேட்ட பொழுதி னவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினா டோள்.
    தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவைதாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினை யுடையாள் தோள்கள்.
    விளக்கம் (தோடு: ஆகுபெயர். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.) ---
    1106 உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
    கமிழ்தி னியன்றன தோள்.
    இதுவும் அது. உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால் - தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
    விளக்கம் (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று - வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.) ---
    1107 தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
    லம்மா வரிவை முயக்கு.
    'இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அம் மா அரிமை முயக்கு அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம். தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற் கண் தமக்குரிய இல்லின் கண் இருந்து உலகோர் தம் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்.
    விளக்கம் (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று.) ---
    1108 வீழு மருவர்க் கினிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
    'ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது' என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.
    விளக்கம் (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.) ---
    1109 கூடியார் பெற்ற பயன்.
    'கரத்தல் வேண்டாமையின், இடையறவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து' என வரைவு கடாவியாட்குச் சொல்லியது. ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்?
    விளக்கம் ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும். அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவ்வூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளிள் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா,' என, அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.) ---
    1110 அறிதோ றறியாமை கண்டற்றால் காமஞ்
    செறிதோறுஞ் சேயிழை மாட்டு.
    புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது. அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச் செறிய இவள்மாட்டுக் காதல்.
    விளக்கம் (களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப் பெறாது அவாவுற்றான், இது பொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றான். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறிய அறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத் தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.) ---

    3.1.4 நலம்புனைந்துரைத்தல்

    1111 நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
    மென்னீரள் யாம்வீழ் பவள்.
    இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. அனிச்சமே வாழிநன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக; மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள்.
    விளக்கம் (அனிச்சம்: ஆகுபெயர். 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---
    1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே மிவள்கண்
    பலர்காணும் பூவொக்கு மென்று.
    இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளைநீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்; நின்அறிவு இருந்தவாறென்? மையாத்தல்; ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு. ---
    1113 முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
    கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது. வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும்.
    விளக்கம் (பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று; 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.) ---
    1114 காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
    மாணிழை கண்ணொவ்வே மென்று.
    பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது. குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - 'மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம்!' என்று கருதி, அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.) ---
    1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா னுகப்பிற்கு
    நல்ல படாஅ பறை.
    பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது. அனிச்சப்பூக்கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
    விளக்கம் ('அம் முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.) ---
    1116 மதியு மடந்தை முகனு மறியா
    பதியிற் கலங்கிய மீன்.
    இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது. மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும், 'இதுமதி' 'இதுமுகம்' என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.
    விளக்கம் (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.) ---
    1117 அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து.
    இதுவும் அது. அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது? அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ?
    விளக்கம் (இடம் - கலை. மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.) ---
    1118 மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
    காதலை வாழி மதி.
    இதுவும் அது. மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல் ஒளி விடவில்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி.
    விளக்கம் ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்,' என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.) ---
    1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
    பலர்காணத் தோன்றன் மதி.
    இதுவும் அது. மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத்தோன்று; பலர் காணத் தோன்றாதொழி.
    விளக்கம் (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது,' என்பதாம்.) ---
    1120 அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
    ரடிக்கு நெருஞ்சிப் பழம்.
    உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
    விளக்கம் (முன் வலிதாதலுடைமையின் 'பழம்' என்றான். 'இத்தன்மைத்தாய அடி ''பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கற்'' களையுடைய (அகநா. களிற். 5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்?' என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமை யாகலின், இதுவும் இவ்வதிகாரத்தாயிற்று.) ---


    3.1.5 காதற் சிறப்புரைத்தல்

    1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.
    இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது. பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம் மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
    விளக்கம் ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறுவேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.) ---
    1122 உடம்பொ டூயிரிடை யென்னமற் றன்ன
    மடந்தையொடு டெம்மிடை நட்பு.
    பிரிவு அச்சம் கூறியது. உடம்பொடு உயிரிடை என்ன அன்ன-உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். 'என்ன' எனப்பன்மையாற் கூறியது, இரண்டும தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்ப துன்பங்கள்
    விளக்கம் (ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அது பொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே? ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்?' எனவும், 'இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்?' எனவும் அவள் மனத்தின்கண் நிகழும்; அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---
    1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
    திருநுதற் கில்லை யிடம்.
    இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது. கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின் கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.
    விளக்கம் ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின். நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.) ---
    1124 வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
    லதற்கன்ன னீங்கு மிடத்து.
    பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது. ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்; நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்.
    விளக்கம் ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.) ---
    1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
    னொள்ளமர்க் கண்ணாள் குணம்.
    ஒருவழித் தணந்துவந்த தலைமகன், 'நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. ஒள் அமர்க்கண்ணாள் குணம்; யான் மறப்பினை உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
    விளக்கம் (மன்: ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று; மேல் தலைமகள் கூற்று.) ---
    1126 கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்
    நுண்ணியரெங் காத லவர்.
    ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக; எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர்.
    விளக்கம் (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.) ---
    1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
    மெழுதேங் கரப்பாக் கறிந்து.
    இதுவும் அது. காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.
    விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.) ---
    1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
    லெஞ்சுதும் வேபாக் கறிந்து.
    இதுவும் அது காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
    விளக்கம் ('எப்பொழுதும் எம் நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை?' என்பது குறிப்பெச்சம்.) ---
    1129 இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
    யேதில ரென்னு மிவ் வூர்.
    வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது. இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்தற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
    விளக்கம் (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை,' என்பதாம்.) ---
    1130 உவந்துறைவ ருள்ளத்துள் ளென்று மிகந்துறைவ
    ரேதில ரென்னு மிவ் வூர்.
    இதுவும் அது. என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர், என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
    விளக்கம் ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.) ---

    3.1.6 நாணுத் துறவுரைத்தல்

    1131 காம முழந்து வருந்தினார்க் கேம
    மடலல்ல தில்லை வலி.
    சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை.
    விளக்கம் (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார்' இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்,' என்பது கருத்து.) ---
    1132 நோனா வுடம்பு முயிரு மடலேறு
    நாணினை நீக்கி நிறுத்து.
    'நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.
    விளக்கம் ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.) ---
    1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
    காமுற்றா §ருறு மடல்.
    'நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது. நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;
    விளக்கம் (காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். நாண்: இழிவாயின செய்தற் கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன; இன்று உள்ளது இதுவேயாகலின், கடிதின் முடியும்,' என்பதாம்.) ---
    1134 காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
    நல்லாண்மை யென்னும் புணை.
    நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் 'அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.
    விளக்கம் (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்,' என்பதாம்.) ---
    1135 தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
    மாலை யுழக்குந் துயர். விளக்கம் (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்,' என்பது கருத்து.) ---
    1136 மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
    படலொல்லா பேதைக்கென் கண்.
    'மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலை பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.
    விளக்கம் ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று; மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.) ---
    1137 கடலன்ன காம முழந்து மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.
    'பேதைக்கு என் கண் படல் ஒல்லா,' என்பது பற்றி, 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்' என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.
    விளக்கம் ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது; நீ அஃது அறிகின்றிலை,' என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.) ---
    1138 நிறையரியர் மன்னளிய ரென்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்.
    காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது. நிறை அரியர்
    விளக்கம் (என்னாது) - 'இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர்' என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - 'மிகவும் அளிக்கத்தக்கார்' என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனி, அறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று.) ---
    1139 அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம
    மறுகின் மறுகும் மருண்டு.
    இதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
    விளக்கம் (மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.) ---
    1140 யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா வாறு.
    செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை!' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது. யாம் கண்ணிற்கான அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு அவர் அங்ஙனஞ் செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.
    விளக்கம் ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகா நின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.) ---

    3.1.7 அலரறிவுறுத்தல்

    1141 அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்.
    அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகளைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவள் சொல்லியது. அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலாராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானை அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
    விளக்கம் (அல்ல குறிப்பிட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம்; ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான், என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.) ---
    1142 மலரன்ன கண்ணா ளருமை யறியா
    தலரெமக் கீந்ததிவ் வூர்.
    இதுவும் அது. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
    விளக்கம் (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக் கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.) ---
    1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை யதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
    இதுவும் அது. ஊர் அறிந்த கெளவை உறாஅதோ-எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.
    விளக்கம் (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.) ---
    1144 கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்
    றவ்வென்னுந் தன்மை யிழந்து.
    இதுவும் அது. காமம் கவ்வையாற கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
    விளக்கம் (அலர்தல்: மேன்மேல் மிகுதல்.செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்வு: இன்பம் பயத்தல். 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப''
    விளக்கம் (நெடுநல். 184-185) என்புழியும் அது.) ---
    1145 களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
    வெளிப்படுந் தோறு மினிது.
    இதுவும் அது. களித் தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.
    விளக்கம் ('வேட்கப்பட்டற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.) ---
    1146 கண்டது மன்னு மொருநா னலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
    இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது. கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.
    விளக்கம் (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும், என்பதாம்.) ---
    1147 ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன்
    னீராக நீளுமிந் நோய்.
    வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.
    விளக்கம் ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.) ---
    1148 நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற்
    காம நுதுப்பே மெனல்.
    இதுவும் அது. கெளவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
    விளக்கம் (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.) ---
    1149 அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
    பலர்நாண நீத்தக் கடை.
    வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள், அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றன் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்டஞான்று 'நின்னிற்பிரியேன்; அஞ்சல் ஓம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாண ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.
    விளக்கம் ('நாண்' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையுமாய யாம் நாணுதல் யாண்டையது?' என்பதாம்.) ---
    1150 தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங்
    கெளவை யெடுக்குமிவ் வூர்.
    தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச்சொல்லியது. யாம் வேண்டும் கெளவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே வரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர்தாமும்யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர்; அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.
    விளக்கம் (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.) ---

    களவியல் முற்றிற்று


    3.2. கற்பியல்

    3.2.1 பிரிவாற்றாமை

    1151 செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.
    'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.
    விளக்கம் (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.) ---
    1152 இன்கண் ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் ணுடைத்தாற் புணர்வு.
    பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புண் கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
    விளக்கம் ('பார்வல்' என்றதனால், புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, ''முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந்தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்'' (கலித்.பாலை. 3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதற் குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.) ---
    1153 அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
    இதுவும் அது. அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது. ---
    1154 அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
    றேறியார்க் குண்டோ தவறு.
    இதுவும் அது. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் ஊண்டோ?
    விளக்கம் ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போற் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும்; அஃது எய்தாவகை அழுங்குவி' என்பது கருத்து.) ---
    1155 ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
    நீங்கி னரிதாற் புணர்வு.
    இதுவும் அது. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.
    விளக்கம் (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று; வினைமாற்றின்கண் வந்தது.) ---
    1156 பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
    நல்குவ ரென்னு நசை.
    தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச் சொல்லியது. அவர் பிரிவு உரைக்கும் வண்கண்ணராயின் - நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்றும் தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
    விளக்கம் (அருமை: பயன்படுதல் இல்லாமை. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது?' என்பதாம். அழுங்குவித்தல்: பயன்.) ---
    1157 துறைவன் துறந்தமை தூற்றாகொன் முன்கை
    மிறையிறவா நின்ற வளை.
    இதுவும் அது. துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் உனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
    விளக்கம் (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்கு வித்து வந்து கூறற்பாலை யல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்;' எனப் புலந்து கூறியவாறு.) ---
    1158 இன்னா தின தில்லூர் வாழ்த லதனினு
    மின்னா தினியார்ப் பிரிவு.
    மதுவும் அது. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தன் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
    விளக்கம் (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.) ---
    1159 தொடிற்சுடி னல்லது காமநோய் போல
    விடிற்சுட லாற்றுமோ தீ.
    'காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதலல்லது; காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ? மாட்டாது.
    விளக்கம் (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப் படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'கடல்' என்றார். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.) ---
    1160 அரிதாற்றி யல்லல்னோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்னிருந்து வாழ்வார் பலர்.
    'தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை,'என்ற தோழிக்குச் சொல்லியது. நீ சொல்லுகின்றது ஒக்கும், அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலர்.
    விளக்கம் (பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரிய தொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந்தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும், 'வருந்துணையும்யாம் ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும், புறத்து யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப் பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணர நின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும் இறந்து படுவல்' என்பது கருத்து.) ---

    3.2.2 படர்மெலிந்திரங்கல்

    1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை மிறைப்பவர்க்
    கூற்றுநீர் போல மிகும்.
    'காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது', என்ற தோழிக்குச் சொல்லியது. நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகு‘மறு போல மிகாநின்றது.
    விளக்கம் ('அம்மறைத்தலால் பயன் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ''இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்'' என்புழிப்போல, ஈண்டு சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அடு பாடமின்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.) ---
    1162 கரத்தலு மாற்றே னிந் நோயைநோய் செய்தார்க்
    குரைத்தலு நாணுத் தரும்.
    'ஈண்டையார் அறியாமல் மறைத்தல், ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது.) இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது; இனி என் செய்கோ?
    விளக்கம் (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பத பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத்தரும்' என்றும் கூறினாள்.) ---
    1163 காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
    னோனா வுடம்பி னகத்து.
    இதுவும் அது. காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன.
    விளக்கம் (பொறாமை மெலிவானாயது. 'தூங்கும்' என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.) ---
    1164 காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து
    மேமப் புணைமன்னு மில்.
    'தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்ற புணையான் நீந்திக் கடப்பார்' என்ற தோழிக்குச் சொல்லியது. உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புனை இல்லை.
    விளக்கம் (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை'' என்பது கருத்து.) ---
    1165 துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு
    நட்பினு ளாற்று பவர்.
    தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
    விளக்கம் (துப்புப் பகையுமாதல், ''துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்'' நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்'' (புறநா.80) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.) ---
    1166 இன்பங் கடல்மற்றுக் காம மஃதடுங்காற்
    றுன்ப மதனிற் பெரிது.
    'காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல்போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
    விளக்கம் ('மற்று' வினை மாற்றிக்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்துவரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.) ---
    1167 காமக் கடும்புன நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே யுஉளேன்.
    'காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன்; நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று; இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றியானேயாயினேன்; ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன்; ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென்
    விளக்கம் (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. 'யானே ஆயினேன்' என்பது 'நீ துணையாயிற்றிலை' என்னும் குறிப்பிற்று.) ---
    1168 மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
    வென்னல்ல தில்லை துணை.
    இரவின் கொடுமை சொல்லி இரங்கியது. இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
    விளக்கம் ('துயிற்றி' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.) ---
    1169 கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா
    ணொடிய கழியு மிரா.
    இதுவும் அது. இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யா நின்ற.
    விளக்கம் (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல் அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.) ---
    1170 உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோவென் கண். விளக்கம் (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனோடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.) ---

    3.2.3 கண்விதுப்பழிதல்

    1171 கண்டாங கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாங்காட்ட யாங்கண் டது.
    'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?
    விளக்கம் ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது?' என்பதாம்.) ---
    1172 தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
    பைத லுழப்ப தெவன்?
    இதுவும் அது. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? விளைவது: பிரிந்து போயவா வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல். முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம். ---
    1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுமு
    மிதுநகத் தக்க துடைத்து.
    இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.
    விளக்கம் ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.) ---
    1174 பெயலாற்றா நீருலந்த வுண்கணுயலாற்றா
    வுய்வில்நோய் யென்க ணிறுத்து.
    இதுவும் அது. உண்கண் - உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன; என் கண் நிறுத்து - அன்று யான் உய்வ மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்ல த நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.
    விளக்கம் (நிறுத்தல்: பிரிதலும் பின்கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன'' என்பதாம்.) ---
    1175 படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக்
    காமநோய் செய்தவென் கண்.
    இதுவும் அது கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண் - எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காமநோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் - அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது. ---
    1176 ஓஒ இனிதே யெமக்கிந்நோய் செய்தகண்
    டாஅ மிதற்பட் டது.
    இதுவும் அது. எமக்கு அந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது - எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒஇனிதே - மிகவும் இனிதாயிற்று!
    விளக்கம் ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச் சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.) ---
    1177 உழந்துழந் துணணீ ரறுக விழைந்திழைந்து
    வேண்டி யவர்க்கண்ட கண்.
    இதுவும் அது. விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக - இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக.
    விளக்கம் (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது.) ---
    1178 பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
    காணா தமைவில கண்.
    காதலர் பிரிந்து போயினாரல்லர், அர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணாது பெட்டார் உளர் - நெஞ்சால் விழையாது வைத்துச் சொல் மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க் கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
    விளக்கம் (செயலாற் பிரிந்து நின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமம் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை 'யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விருமபாநின்றன: என்பதாம். இனிக 'கொண்கனை' என்று பாடமாயின், 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை; இவ்வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ?' என்று உரைக்க. இதற்கு மன் அசைநிலை) ---
    1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்.
    'நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன - ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய.
    விளக்கம் ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.) ---
    1180 மறைபெற லூரார்க் கரிதன்றா வெம்போ
    லறைபறை கண்ணா ரகத்து.
    1180 'காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்போலும் அறைபறையாகிய கண்ணினையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.
    விளக்கம் ('மறை' என்றது, ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின், 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.) ---

    3.2.4 பசப்புறுபருவரல்

    1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க் குரைக்கோ பிற.
    (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?
    விளக்கம் ('பிற என்பது அசைநிலை உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ?' என்றும் கூறினாள்.) ---
    1182 அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
    மேனிமே லூரும் பசப்பு.
    ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும்; பசப்பு இப் பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என்மேனிமேல் இவர் தந்து ஊரும் - என்மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
    விளக்கம் (''குருதி கெப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' (சீவக விமலை. 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 'அஃது உரிமை பற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.) ---
    1183 சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையுந் தந்து.
    'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
    விளக்கம் (எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.) ---
    1184 உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்
    கள்ளம் பிறவோ பசப்பு.
    'பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்,' என்றவழிச் சொல்லியது. யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது.
    விளக்கம் (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத்தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.) ---
    1185 உவக்காணொங் காதலர் செல்வா ரிவக்காணென்
    மேன பசப்பூர் வது.
    'காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை,' என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது. எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கேசெல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண்- என்மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
    விளக்கம் ('உவக்காண், இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள். தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன?' என்பதாம்.) ---
    1186 விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
    இதுவும் அது. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளேபோல; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
    விளக்கம் ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது?' என்பாம்.) ---
    1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
    லள்ளிக்கொள் வற்றே பசப்பு.
    இதுவும் அது. புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடை பெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
    விளக்கம் ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.) ---
    1188 பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
    துறந்தா ரவரென்பா ரில்.
    'நீ இங்ஙனம் பசக்கற்பாலைபல்லை,' என்ற தோழியோடு புலந்து சொல்லியது. இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது;
    விளக்கம் (இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.) ---
    1189 பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலைய ராவ ரெனின்.
    இதுவும் அது. நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக.
    விளக்கம் (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.) ---
    1190 பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றா ரெனின்.
    தரைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவறி அவள் இயற்பட மொழிந்தது. நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்: பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.
    விளக்கம் ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள். அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது என்பதாம்.) ---

    3.2.5 தனிப்படர் மிகுதி

    1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி.
    'காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.
    விளக்கம் (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.) ---
    1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வா ரளிக்கு மளி.
    இதுவும் அது. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி;வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்.
    விளக்கம் ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது,' என்பதாம்.) ---
    1193 வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுந மென்னுஞ் செருக்கு.
    இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு.
    விளக்கம் (நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.) ---
    1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅ ரெனின்.
    'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச் சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.
    விளக்கம் (சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை,' என்பதாம்.) ---
    1195 நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாங்காதல் கொள்ளாக் கடை.
    'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்,' என்ற தோழிக்குச் சொல்லியது. நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
    விளக்கம் (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே,' என்பதாம்.) ---
    1196 ஒருதலையா னின்னாது காமம்காப் போல
    விருதலை யானு மினிது.
    இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
    விளக்கம் (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.) ---
    1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காம
    னொருவர்க ணி¢ன்றொழுகு வான்.
    இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ!
    விளக்கம் ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?' என்பதாம்.) ---
    1198 வீழ்வாரி னின்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணா ரில்.
    தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது. வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)
    1199 நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
    டிசையு மினிய செவிக்கு.
    இதுவும் அது. நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதல் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்துயாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.
    விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்,' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.) ---
    1200 உறார்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு.
    தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது. உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாய; அஃது எளிது.
    விளக்கம் (உரைக்கலுற்றது அளவிறந்த நோயகலானும், கேட்பார் உறவினராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.) ---

    3.2.6 நினைந்தவர் புலம்பல்

    1201 உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
    கள்ளினுங் காமம் இனிது.
    தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் - முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அது பொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
    விளக்கம் (தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு.) ---
    1202 எனைத்தொன றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன் றில்.
    இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
    விளக்கம் (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.) ---
    1203 நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்
    சினைப்பது போன்று கெடும்.
    தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்‘ர் போன்று நினையாராகல் வேண்டும்.
    விளக்கம் (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.) ---
    1204 யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
    தோஒ வுளரே யவர்.
    இதுவும் அது. எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ?
    விளக்கம் (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.) ---
    1205 தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ
    லெந்நெஞ்சத் தோவா வரல்.
    இதுவும் அது. தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணால்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணால்கொல்லோ?
    விளக்கம் (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றான்.) ---
    1206 மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடி யா
    னுற்றநா ளுள்ள வுளேன்.
    அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும்,' என்றாட்குச் சொல்லியது. யான் அவரொடு உற்ற நான் உள்ளே உளேன் - யான் அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன் ?
    விளக்கம் (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன் தூது வருதல், தன் தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை,' என்பது கருத்து.) ---
    1207 மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
    னுள்ளினு முள்ளஞ்சுடும்.
    இதுவும் அது. மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்த படாது உளேனாவது எத்தால்?
    விளக்கம் (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது 'மண்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசை நிலை.) ---
    1208 எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
    காதலர் செய்யுஞ் சிறப்பு.
    இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர்,' என்றாட்குச் சொல்லியது. எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
    விளக்கம் (வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்வது கூறியவாறு. ---
    1209 விளியுமென் னின்னுயிர் வேறல்லம் என்பா
    ரளியின்மை யாற்ற நினைந்து.
    தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் 'நாம் இருவரும் வேறல்லம்,' என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து; என் இன்னுயிர் விளியும் - எனது இனிய உயிர் கழியாநின்றது.
    விளக்கம் (அளியின்மை, பின் வருவராதலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு,' என எதிர்அழிந்து கூறியவாறு.) ---
    1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாதி வாழி மதி.
    வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது. மதி - மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
    விளக்கம் (கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மையின், 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின்; கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிப்படுகின்றதில்லை என அதனால் துயில பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை.) ---

    3.2.7 கனவுநிலையுரைத்தல்

    1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்
    கியாதுசெய் வேன்கொல் விருந்து.
    தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக யாதனைச் செய்வேன்?
    விளக்கம் ('விருந்து' என்றது, விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.) ---
    1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
    குயலுண்மை சாற்றுவேன் மன்.
    தூது விடக் கருதியான் சொல்லியது. கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதல்ரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.
    விளக்கம் ('கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பு தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.) ---
    1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்.
    ஆற்றான் எனக் கவன்றாட்கு 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது. நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின் கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.
    விளக்கம் (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சி யானே யான் ஆற்றியுளேன் ஆகினறேன். 'நீ கவலல் வேண்டா,' என்பதாம்.) ---
    1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.
    இதுவும் அது. நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக்கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
    விளக்கம் (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.) ---
    1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
    இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும் தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
    விளக்கம் ('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு - ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.) ---
    1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்.
    இதுவும் அது. நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
    விளக்கம் ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.) ---
    1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
    என்எம்மைப் பீழிப் பது.
    விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாது கொடியவர்; கனவினான் எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
    விளக்கம் (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கி, 'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர்; 'அது கண்டிலம்,' என்பதாம்.) ---
    1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
    தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது. துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.
    விளக்கம் (கலவிவிட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை,' என்பதாம்.) ---
    1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்.
    இதுவும் அது. கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின் கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவா நிற்பர்.
    விளக்கம் (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய் அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின் கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.) ---
    1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
    காணார்கொல் இவ்வூ ரவர்.
    இதுவும் அது இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ?
    விளக்கம் ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளே யாம்,' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.) ---

    3.2.8 பொழுதுகண்டிரங்கல்

    1221 மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது.
    பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.
    விளக்கம் (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 ) என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் 'என்பாரும்' உளர்.) ---
    1222 புன்கண்ணை வாழி மருள்மாலை யெங்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.
    தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை - நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக.
    விளக்கம் (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,' என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.) ---
    1223 பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்.
    ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது.
    விளக்கம் (குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ் செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.) ---
    1224 காதல ரில்வழி மாலை கொலைக்களத்
    தேதிலர் போல வரும்.
    இதுவும் அது. மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.
    விளக்கம் (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனியான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.) ---
    1225 காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை?
    இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
    விளக்கம் (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.) ---
    1226 மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத
    காலை யறிந்த திலேன்.
    இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை?' என்றாட்குச் சொல்லியது. மாலை நோய் செய்தல் - முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ் செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்; அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்;' என்பதாம்.) ---
    1227 காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலருமிந் நோய்.
    மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் - இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும்.
    விளக்கம் (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.) ---
    1228 அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
    குழல்போலுங் கொல்லும் படை.
    இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை - அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று.
    விளக்கம் (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.) ---
    1229 பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து. விளக்கம் ('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.) ---
    1230 பொருள்மாலை யாளரை யுள்ளி மருள்மாலை
    மாயுமென் மாயா வுயிர்.
    இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப் பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.
    விளக்கம் ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்; காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை,' என்பதாம்.) ---

    3..2. 9 உறுப்புநலனழிதல்

    1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
    நறுமலர் நாணின கண்.
    ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
    விளக்கம் (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.) ---
    1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாருங் கண்.
    இதுவும் அது. பசந்து பணி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவது போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும்.
    விளக்கம் (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---
    1233 தணந்தமை சால வறிவிப்ப போலு
    மணந்தநாள் வீங்கிய தோள்.
    இதுவும் அது. மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று; இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்தவதுபோல மெலியா நின்றன; இது தகாது.
    விளக்கம் ('அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.) _---
    1234 பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.
    இதுவும் அது. துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றி, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும். இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன; இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.
    விளக்கம் (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால் செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனி அவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ?' என்பதாம்.) ---
    1235 கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
    இதுவும் அது. கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியொடு தொல் கவின் வாடிய தோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை?
    விளக்கம் ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.) ---
    1236 தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
    கொடிய ரெனக்கூற ணொந்து.
    தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தொடியொடு தோற்நெகிழ-யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
    விளக்கம் (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு,' என்பதாம்.) ---
    1237 பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூச லுரைத்து.
    அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவர் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினாள் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி: பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின அதனை ஒப்பதில்லை.
    விளக்கம் ('கொடியார்க்கு' என்பதும் கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடா நின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்; ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; வந்தால், இவையெல்லாம் நீங்கும்; நீங்க, அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால், 'பாடு பெறுதியோ?' என்றாள்.) ---
    1238 முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்.
    வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒரு ஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது; அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?
    விளக்கம் ('இனிக் கடிதிற் சொல்லவேண்டும்' என்பது கருத்து.) ---
    1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.
    இதுவும் அது. முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையாவன கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?
    விளக்கம் (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி.) ---
    1240 கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
    யொண்ணுதல் செய்தது கண்டு.
    இதுவும் அது. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாக ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. விளக்கம் ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது; யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்,' எனத், தன் வன்மையும் தன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம். ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும்; யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.) ---

    3.2.10 நெஞ்சொடுகிளத்தல்

    1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று
    மெவ்வநோய் தீர்க்கு மருந்து.
    தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது. நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன்; எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.
    விளக்கம் (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்,' என்றாள்.) ---
    1242 காத லவரில ராகநீ நோவது
    பேதைமை வாழியென் னெஞ்சு.
    தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது. என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; காதல் இலராக நீ நோவது - அவா நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே; பிறிதில்லை.
    விளக்கம் ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பது அறியலாம்; அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்; இது, நீ செய்து கொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு. 'யாம்' அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.) ---
    1243 இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
    பைதனோய் செய்தார் கணில்.
    இதுவும் அது. நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே, அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்துபடுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பயுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது.
    விளக்கம் ('நம்மாட்டு அருளுடையர், அன்மையின், தாமாக வாரார்; நாம் சேறலே இனித் தகுவது' என்பதாம்.) ---
    1244 கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
    தின்னு மவர்க்காண லுற்று.
    இதுவும் அது. நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீஅவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.
    விளக்கம் ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம்: என்றது, தான் சேறல் குறித்து.) ---
    1245 செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
    முற்றா லுறாஅ தவர்.
    இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர்யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
    விளக்கம் (உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தருவது' என்பதாம்.) ---
    1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.
    தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது. என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கண்டால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டா நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயா நின்றாய்; இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
    விளக்கம் ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.) ---
    1247 காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேனிவ் விரண்டு.
    நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது. நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காமவேட்கையை விடு; ஒன்று நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
    விளக்கம் ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது 'நல்நெஞ்சே' என்றது, 'இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிறுண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்,' என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.) ---
    1248 பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதையென் னெஞ்சு. விளக்கம் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.) ---
    1249 உள்ளத்தார் காத லவரா வுள்ளிநீ
    யாருழைச் சேறியென் னெஞ்சு.
    இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?
    விளக்கம் ('உள்ளம்' என் புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற வரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து அதனை ஒழி,' என்பதாம்.) ---
    1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
    லின்னு மிழத்துங் கவின்.
    'அவரை மறந்து ஆற்றல் வேண்டும்' என்பதுபடச் சொல்லியது. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்போம்.
    விளக்கம் ("குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" (குறுந். கடவுள் வாழ்த்து) என்புழிப்போல 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும், நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி 'நிறன் நிறையும் இழப்போம்,' என்பதாம்.) ---

    3.2.11 நிறையழிதல்

    1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
    நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.
    விளக்கம் (கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.) ---
    1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.
    நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.
    விளக்கம் ('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.) ---
    1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.
    'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.
    விளக்கம் ('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை" என்பதாம்.) ---
    1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
    மறையிறந்து மன்று படும்.
    இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.
    விளக்கம் (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.) ---
    1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று.
    'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.
    விளக்கம் (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.) ---
    1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்.
    இதுவும் அது. செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. 'செற்றவர்' என்றது ஈண்டும் அப்பொருட்டு 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது, இகழ்ச்சிக் குறிப்பு. 'இக் காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது,' என்பதாம்.) ---
    1257 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்.
    பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.
    விளக்கம் ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.) ---
    1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
    இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
    விளக்கம் (பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக் கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ?' என்பதாம்.) ---
    1259 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்
    கலத்தல் உறுவது கண்டு.
    இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.
    விளக்கம் (வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.) ---
    1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல். விளக்கம் (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.) ---

    3.2.12 அவர்வயின்விதும்பல்

    1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.
    போய நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஔ¢யிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை.
    விளக்கம் (நாள்-ஆகு பெயர். 'புல்லியவாதல்' நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. 'இனி யான் காணுமாறு என்னை?' என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.) ---
    1262 இலங்கிழா யின்று மறப்பினென் றோள்மேற்
    கலங்கழியும் காரிகை நீத்து.
    'ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம்.
    விளக்கம் ('இலங்கிழாய்' என்பது இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுப்பிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது, 'நீத்து' எனத் திரிந்த நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி அன்புறலாம்; அதனான் மறக்கற்பாலேன் அல்லேன்,' என்பதாம்.) ---
    1263 உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
    வரலனசைஇ மின்னு முளேன்.
    இதுவும் அது. உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம் ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ் வெல்லையினும் உளேனாயினேன்.
    விளக்கம் ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந் நசையான் உயிர் வாழா நின்றேன்; அஃதில்லையாயின் இறந்துபடுவல்,' என்பதாம்.) ---
    1264 கூடிய காமம் பிர§ந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் னெஞ்சு.
    இதுவும் அது. பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கோடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத்தெழாநின்றது.
    விளக்கம் (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும்,? அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். 'ஓடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. 'கொண்டு' என்பது குறைந்து நிற்து. 'அஃதுள்ளிற்றலேனாயின் இறந்து படுவல்,' என்பதாம்.) ---
    1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
    னீ£ங்குமென் மென்தோட் பசப்பு.
    தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை,' என்ற தோழிக்குச் சொல்லியது. கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின் கண்பசப்புத் தானே நீங்கும்.
    விளக்கம் ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அது வேண்டும் எனப்துபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.) ---
    1266 வருகமன் கொண்க னொருநாட் பருகுவன்
    பைதனோ யெல்லாங் கெட.
    இதுவும் அது. கொண்கண் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
    விளக்கம் ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.) ---
    1267 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்ணென்ன கேளிர் விரன்.
    இதுவும் அது. கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்; புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ? புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ? கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?
    விளக்கம் (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ? என்று உரைப்பாரும் உளர்.) ---
    1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை யயர்கம் விருந்து.
    வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித் துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
    விளக்கம் ('மனை' என்பது ஈண்டு ஆகுபெயர். "மங்கலம் என்ப மனை மாட்சி" (குறள் 60) என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப் பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனை கலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப் பொழுதின்கண் விருந்தயர்க என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.) ---
    1269 ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
    வருநாள்வைத் தோங்கு பவர்க்கு.
    (இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
    1270 பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
    முள்ள முடைந்துக்கக் கால்.
    இதுவும் அது. உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அது அன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. விளக்கம் (அதன் மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.) ---

    3.2.13 குறிப்பறிவுறுத்தல்

    1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்கண்
    ணுரைக்க லுறுவதொன் றுண்டு.
    பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தௌ¢யச் சொல்வாயாக.
    விளக்கம் (காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.) ---
    1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
    நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது. கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு. என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது.
    விளக்கம் (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.) ---
    1273 மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
    யணியிற் றிகழ்வதொன் றுண்டு.
    இதுவும் அது. மணியில் திகழ்தரும் நூல்போல். கோக்கப்பட்ட பளிங்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
    விளக்கம் (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான் அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்,' என்பது கருத்து.) ---
    1274 முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
    நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.
    இதுவும் அது. முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
    விளக்கம் (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.) ---
    1275 செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.
    இதுவும் அது. செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாத தொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து . என் மிக்க துயரைத் தீர்க்கும். மருந்தாவதொன்றனை உடைத்து.
    விளக்கம் (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து: அப்பிரிவின்மை தோழியால் தௌ¢வித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்,' என்பதாம்.) ---
    1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
    யன்பின்மை சூழ்வ துடைத்து.
    தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தௌ¢விக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது. பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
    விளக்கம் (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.) ---
    1277 தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
    முன்ன முணர்ந்த வளை.
    இதுவும் அது. தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற்பிரிந்தமையை; நம்மினும் வளைமுன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளகைள் முன்னே அறிந்தன.
    விளக்கம் (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தௌ¢ய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அது தன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.) ---
    1278 நெருநற்றுச் சென்றாரெம் காதலர் யாமு
    மெழுநாளே மேனி பசந்து.
    இதுவும் அது. எம் காதலர் சென்றார் நெருநற்று - எம் காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனிபசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
    விளக்கம் ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழு நாளுண்டாகலின், அன்றே மேனி பசந்தது என்பாள், 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.) ---
    1279 தொடிநோக்கி மென்தோளு நோக்கி யடிநோக்கி
    யஃதாண் டவள்செய் தது.
    தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது. யான் அது தௌ¢வித்தவழித் தௌ¢யாது தொடி நோக்கி - 'அவா பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா' எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி' - 'அதற்கு ஏதுவாக இவை மெலியும்' எனத் தன் மென்தோள்களையும்? நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்த காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது. அங்ஙனம் அவள் செய்து குறிப்பு உடன் போக்காயிருந்தது.
    விளக்கம் (செய்த குறிப்பு - செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், "செறிதொடி செய்திறந்த கள்ளம்" (குறள் 1275 என்றனாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.) ---
    1280 பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
    காமநோய் சொல்லி யிரவு.
    தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது. காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர்தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணிற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்.
    விளக்கம் (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தௌ¢ந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.) ---

    3.2.14 புணர்ச்சிவிதும்பல்

    1281 உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
    (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)
    1282 தினைத்துணையு மூடாமை வேண்டும்
    பனைத் துணையுங் காமம் நிறைய வரின்.
    இதுவும் அது. காமம் பனைத்துணையும் நிறைய வரின். மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமையின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.
    விளக்கம் ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.) ---
    1283 பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
    காணா தமையல கண்.
    இதுவும் அது. பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்கனைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை.
    விளக்கம் (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை?' என்பதாம்.) ---
    1284 ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
    கூடற்கண் சென்றதென் னெஞ்சு.
    இதுவும் அது. தோழி - தோழீ! ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர்செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.
    விளக்கம் (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன் என் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.) ---
    1285 எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
    பழிகாணேன் கண்ட விடத்து.
    இதுவும் அது. எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத்தெல்லாம் கண்டிருந்து, அவனைக் கண்ட விடத்துக் காணமாட்டேன்.
    விளக்கம் (கோல்; ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின், மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.) ---
    1286 காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
    காணேன் தவறல் லவை.
    இதுவும் அது. காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன்-காணாத பொழுது அவையேயல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
    விளக்கம் (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்,' என்பதாம்.) ---
    1287 உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
    பொய்த்த லறிந்தென் புலந்து.
    இதுவும் அது.- உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? . புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்?
    விளக்கம் ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் . புரைபடுதல். 'புலந்தாலும் பயனில்லை' என்பதாம். 'பொய்த்தல் அறிந்தென்' என்பது படாமையின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன்; இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.) ---
    1288 இளித்தக்க வின்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.
    தலைமகள் புணர்ச்சி? விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது. கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு.
    விளக்கம் (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை. ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.) ---
    1289 மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்.
    உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. காமம் மலரினும் மெல்லியது - காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
    விளக்கம் (தொட்ட துணையானே மனச் செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லியது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.) ---
    1290 கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத
    லென்னினுந் தான்விதுப் புற்று.
    இதுவும் அது. கண்ணின் துனித்தே-காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள்- புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.
    விளக்கம் (கண் மாத்திரத்தான் ஊடல்-சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.) ---

    3.2.15 நெஞ்சொடுபுலத்தல்

    1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
    நீயெமக் காகா தது.
    தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது?
    விளக்கம் (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். 'எமக்காகாதது' என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை,' என்பதாம்.) ---
    1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
    செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.
    இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச்சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
    விளக்கம் ('அவரை' என்பது வேற்றுமை மயக்கம். 'பழங்கண்ணோட்டம் பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ?' என்பதாம்.) ---
    1293 கெட்டார்க்கு நட்டாரி லென்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங் கவர்பின் செலல்.
    இதுவும் அது. நெஞ்சே; நெஞ்சே, நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர் மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
    விளக்கம் ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது,' என்பாள்; 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது. ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். ''ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு''
    விளக்கம் (கலித். பாலை 25) ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.) ---
    1294 துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
    இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே! துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அதுசெய்யேன்.
    விளக்கம் (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள், 'காண்' என்பது உரையசை. 'மற்று' வினையாற்றின் கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.) ---
    1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சு
    மெறா விடும்பைத்தென் னெஞ்சு.
    வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது. பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று.
    விளக்கம் (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.) ---
    1296 தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
    தினிய விருந்ததென் நெஞ்சு.
    இதுவும் அது. என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னோடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத் தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
    விளக்கம் ('என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே; இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று,' என்பதாம்.) ---
    1297 நாணு மறந்தே னவர்மறக் கல்லாலென்
    மாணா மடநெஞ்சிற் பட்டு.
    இதுவும் அது. அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
    விளக்கம் (மாணாமை - ஒருநிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந்தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும மறந்தேன்,' என்றாள்.) ---
    1298 எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
    முள்ளு முயிர்க்காதல் நெஞ்சு.
    இதுவும் அது. உயிர்க்காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி - நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது.
    விளக்கம் (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாடையானும், பிரிவாற்றாமையானும், நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. 'இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது' என்பதாம்.) ---
    1299 துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.
    உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் பணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை
    விளக்கம் (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது,' என்பதாம்.) ---
    1300 தஞ்சத் தமரல்ல ரேதிலார் தாமுடைய
    நெஞ்சந் தமரல் வழி.
    இதுவும் அது. தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
    விளக்கம் ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது,' என்பதாம்.) ---

    3.2.16 புலவி

    1301 புல்லா திராஅப் புலத்தை யவருறு
    மல்லனோய் காண்கஞ் சிறிது.
    வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது. அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக் கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்துசென்று புல்லாதே; இத் தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
    விளக்கம் (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள். புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி? ஐகாரம் ''கடம்பூண்டொருகால் நீ வந்தை'' (கலித். குறிஞ்சி. 27) என்புழிப்போல முன்னிலை வினைவிகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக் குறிப்புக் கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.) ---
    1302 உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
    மிக்கற்றா னீ£ள விடல்.
    புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவர் சொல்லியது. புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.
    விளக்கம் (நீள விடல் - அளவறிந்துணராது. கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல்; 'சிறிது நீள விடலாகாது' என்றாள். நேர்விக்கின்றாளாகலின், 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கல்வி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.) ---
    1303 அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
    பரத்தையர் இடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
    விளக்கம் ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.) ---
    1304 ஊடி யவரை யுணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.
    இதுவும் அது. ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
    விளக்கம் ('நீர் பரத்தையரிடத்தல் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற் பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்,' என்பதாம்.) ---
    1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
    பூவன்ன கண்ணா ரகத்து.
    தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே
    விளக்கம் (சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான். 'நலத்தகை நல்லார்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.) ---
    1306 துனியும் புலவியு மில்லாயிற் காமங்
    கனியுங் கருக்காயு மற்று.
    இதுவும் அது. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
    விளக்கம் (மிக முதிர்ந்திறும் 'எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் 'துனியில்லையாயின், கனியற்று' என்றும்; கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின், 'புலவியில்லையாயின் கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.) ---
    1307 ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொ லென்று.
    இதுவும் அது. புணர்வது நீடுவது
    விளக்கம் (கொல்) அன்று கொல் என்று- இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக்'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.) ---
    1308 நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
    காதல ரில்லா வழி.
    உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினையறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?
    விளக்கம் ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. 'இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை,' எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.) ---
    1309 நீரு நிழல தினிதே புலவியும்
    வீழுநர் கண்ணே மினிது.
    இதுவும் அது. நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது; ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.
    விளக்கம் (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையுடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது,' என்பதாம்.) ---
    1310 ஊட லுணங்க விடுவாரோ டென்நெஞ்சங்
    கூடுவே மென்ப தவா.
    இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. விளக்கம் (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.) ---

    3.2.17 புலவி நுணுக்கம்

    1311 பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.
    உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. பரத்த- பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்-நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
    விளக்கம் (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணக்கமாயிற்று.) ---
    1312 ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.
    தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்த காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி;
    விளக்கம் (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.) ---
    1313 கோட்டுப்பூச் சூடினும் காயு மொருத்தியைக்
    காட்டிய சூடின ரென்று.
    தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, 'நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது?' என்ற தோழிக்கு தலைமகன் சொல்லியது. கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியை காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?
    விளக்கம் ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர்; வளையமாகச் சூடினும் என்பதாம்; ''கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்'' (புறநா. 275) என்றார் பிறரும். இனி, 'அம் மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், 'பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்,' எனினும் அமையும்.) ---
    1314 யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
    யாரினும் யாரினு மென்று.
    இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.
    விளக்கம் (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.) ---
    1315 இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.
    இதுவும் அது. இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேன் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள். அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள்.
    விளக்கம் ('வௌ¢ப்படு சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை,' என்பதாம்.) ---
    1316 உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்.
    இதுவும் அது. உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், 'யான் உள்ளினேன்' என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்-என, அதனை ஒருகால் மறந்துபின் நினைந்தேன் என்றதாகக் கருதி, 'என்னை யிடையே மறந்தீர்' என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். மற்று - வினை மாற்றிக்கண் வந்தது. அருத்தாபத்தி வகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம். ---

    1317 வழுத்தினா டூம்மினே னாக வழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீ ரெ¦ன்று.
    இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.
    விளக்கம் (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.) ---
    1318 தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
    லெம்மை மறைத்திரோ வென்று.
    இதுவும் அது தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, 'யார் உள்ளித் தும்மினீர்?' என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன்; அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
    விளக்கம் ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது?' என்பதாம்.) ---
    1319 தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்கும்நீ
    ரிந்நீர ராகுதி ரென்று.
    இதுவும் அது. தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர்,' என்று சொல்லி.
    விளக்கம் ('இவள் தௌ¢வித்தவழியும் தௌ¢யாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அதுதானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது?' என்பதாம்.) ---
    1320 நினைத்திருந்து நோக்கினும் காயு மனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீ ரென்று.
    இதுவும் அது. நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயவங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளாநிற்கும்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - 'நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர், அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து?'' என்று சொல்லி.
    விளக்கம் ('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்க வேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின், 'என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி?' என்றாள்.'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.) ---

    3.2.18 ஊடலுவகை

    1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
    வல்ல தவரளக்கு மாறு.
    தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்க வற்றாகின்றது.
    விளக்கம் ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.) ---
    1322 ஊடலிற் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
    புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, 'அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளிவாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.
    விளக்கம் ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும் 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.) ---
    1323 புலத்தலிற் புத்தேணா டூண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னா ரகத்து.
    இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
    விளக்கம் (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.) ---
    1324 புல்லி விடாப் புலவியுட் டோன்றுமென்
    னுள்ள முடைக்கும் படை.
    'அப்புலவி இனி யாதான் நீங்கும்?' என்றாட்குச் சொல்லியது. புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை. - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
    விளக்கம் ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் 'படைக்கலம்' என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும். 'படைக்கலம்' என்றாள். அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.) ---
    1325 தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோ
    ளகறலி னாங்கொன் றுடைத்து.
    தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து.
    விளக்கம் ('உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை' என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். 'ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.) ---
    1326 உணலினு முண்ட தறலனிது காமம்
    புணர்தலி னூட லினிது.
    இதுவும் அது. உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
    விளக்கம் ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல, அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம்பற்றிக் கூறியவாறு.) ---
    1327 ஊடலில் தோற்றவர் வென்றா ரதுமன்னுங்
    கூடலிற் காணப் படும்.
    இதுவும் அது. ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.
    விளக்கம் (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.) ---
    1328 ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலிற் றோன்றிய உப்பு.
    இதுவும் அது. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் சொல்லோ - இன்னும் ஒருகால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ?
    விளக்கம் (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றாள். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப்பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.) ---
    1329 ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ விரா.
    இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.
    விளக்கம் ('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.) ---
    1330 ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
    கூடி முயங்கப் பெறின்.
    இதுவும் அது. காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
    விளக்கம் (கூடுதல் - ஒத்த அளவினராதல், முதிர்ந்த துனியாய வழித்துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப் பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)

    கற்பியல் முற்றிற்று

    காமத்துப்பால் முற்றிற்று
    திருக்குறள் முற்றிற்று


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III