பொருநர் ஆற்றுப்படை (இரண்டாம் பாட்டு)


சங்க கால நூல்கள்

Back

பொருநர் ஆற்றுப்படை (இரண்டாம் பாட்டு)
முடத்தாமக் கண்ணியார்


porunarARRuppaTAi (in Tamil script, TSCII format)

பொருநர் ஆற்றுப்படை (இரண்டாம் பாட்டு)

பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை :: பாடாண்திணை
துறை :: ஆற்றுப்படை
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த வரிகள் :: 248


அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை ...5

எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி ....10

எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் ... 15

ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி ....20

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் ... 25

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் ... 30

நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத் ... 35

தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் ... 40

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் ... 45

நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக் கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி .... 50

வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள்
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
அரசவை யிருந்த தோற்றம் போலப் .... 55

பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
அறியா மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந ... 60

ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் ... 65

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி ... 70

இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் ... 75

கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த ... 80

துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர் ... 85

போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் ... 90

தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து ... 95

மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் ... 100

கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை ... 105

ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க .... 110

மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யருநாள்
அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப ... 115

அயின்ற காலைப் பயின்றினி திருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாள்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய .... 120

செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியடு .... 125

பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென்வேல்
உருவப் ப·றேர் இளையோன் சிறுவன் ... 130

முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி ... 135

வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி ... 140

முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த .... 145

இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் ... 150

றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் .... 155

பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி .... 160

நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் .... 165

காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் ... 170

வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து ... 175

நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல நொல்லெனத்
திரை பிறழிய விரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற் ... 180

றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண் ... 185

ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப் ... 190

பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத் ... 195

தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப் .... 200

பொற் கொன்றை மணிக் காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவத்
திற வருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின் .... 205

ஒங்கு திரை யலிவெரீ இத்
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோட் டெங்கின் குலை வாழைக்
கொழுங் காந்தண் மலர் நாகத்துத்
துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக் .... 210

யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர்ப் பல பெயரத்
தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும் .... 215

தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் .... 220

நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினைக் கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்பத் .... 225

தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் .... 230

அன்னோன் வாழி வென்வேற் குருசில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக் .... 235

கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும் .... 240

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் .... 245

சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே. ..... 248

பொருநர் ஆற்றுப்படை முற்றிற்று.

-----------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III