மலைபடுகடாம் - இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்


சங்க கால நூல்கள்

Back

மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்



பத்துப்பாட்டில் பத்தாவதான
கபிலர் பாடிய மலைபடுகடாம்

Source:
பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை : கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
(மூன்றாம் பதிப்பு) பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] - 1931 [விலை ரூபா. 5
--------------

பத்துப்பாட்டு- மலைபடுகடாம்
மூலமும் நச்சினார்க்கினியருரையும்.

    திருமழை தலைஇய விருணிற விசும்பின்
    விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
    திண்வார் விசித்த முழவொ டாகுளி
    நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
    மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு         5
    கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
    னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
    விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
    நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
    கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி         10
    நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
    கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
    நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
    கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
    படுத்துவைத் தன்ன பாறை மருங்கி         15
    னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
    தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
    ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
    மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
    திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்         20
    தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
    கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
    குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
    னரலை தீர வுரீஇ வரகின்
    குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச்         25
    சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
    யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
    புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
    புதுபுது போர்த்த பொன்போற் பச்சை
    வதுவை நாறும் வண்டுகம ழைம்பான்         30
    மடந்தை மாண்ட நுடங்கெழி லாகத்
    தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப
    வகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது
    கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
    நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்         35
    களங்கனி யன்ன கதழ்ந்துகிள ருருவின்
    வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியா
    ழமைவரப் பண்ணி யருணெறி திரியா
    திசைபெறு திருவின் வேத்தவை யேற்பத்
    துறைபல முற்றிய பைதீர் பாணரொ         40
    டுயர்ந்தோங்கு பெருமலை யூறின் றேறலின்
    மதந்தபு ஞமலி நாவி னன்ன
    துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடிக்
    கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ
    விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்         45
    திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
    கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்
    புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற்
    புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
    கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ         50

குறிப்புரை

1 திருமழைதலைஇய : தலைப்பெயறலைஇய (முருகு. 9)
இருணிற விசும்பு : இருணிற விருவிசும்பு (சீகாளத்தி. தென்கயிலை. 62) ; முருகு.116, குறிப்புரை.
இவ்வடி கூத்தராற்றுப்படைக்கும் (தொல்.புறத். சூ. 36, ந.) , ஆசிரியம் அளவடியான் வந்ததற்கும்,முடுகுதற்கும் மேற்கோள் ; தொல். செய். சூ. 32,பேர். ந ; 67,பேர்.

2. ' கடுப்ப' என்பது மெய்யுவமத்திற்குரிய சொல்லென்பதற்கும் (தொல்.உவம. சூ. 15, இளம்.), சிறுபான்மை பயனுவமத்திற்கும் வருமென்பதற்கும் (தொல். உவம. சூ. 14, பேர்.) மேற்கோள்.

1 - 2. மதுரைக். 560.

3. ' முழ ' உகரம் பெறாமல் வந்ததற்கு மேற்கோள் ; தொல். குற்றியலுகர. 78,ந.

2 - 3. பண்ணமை முழவு (பதிற்.41 : 1)

1 - 3. மலைபடு. 532 ; முருகு. 121,குறிப்புரை.

5. (பி-ம்.) ' அணிதழை'

தாழ்பீலிப் பல்லியம் (பு- வெ. 24)

6 மலைபடு. 533 ; கண்ணறுத் தியற்றிய தூம்பு (பதிற். 41 : 4) ;கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் (புறநா.152 : 15)

7 இவ்வடியின் பாடபேதம்போல் தோன்றும் , "விளிப்பது பயிலுங் குறும்பர்துந் துமியொடு "என்ற அடியை வினைமுற்று வினையெச்சமாதற்கு மேற்கோள் காட்டுவர் ; நன். சூ. 350, மயிலை.

11. பாணிய பதலை : "பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் "(குறுந். 59 : 1 )

2 - 11. புறநா. 152 : 14 - 8.

11 - 2. மலைபடு. 142 - 4.

13. மலைபடு. 365 ; "காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை "(புறநா. 206 : 10)

3 - 13. "புணர்புரி நரம்பின் றீந்தொடை பழுனிய, வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப், பண்ணமை முழவும் பதலையும் பிறவுங், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் "(பதிற். 41 : 1 -5); "ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத், தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி ", "சுவலழுந்தப் பலகாய, சில்லோதிப் பல்லிளைஞர் "(புறநா. 103 : 1 - 2, 139 : 1 - 2)

15. மதுரைக். 278, குறிப்புரை.

16. "விசும்பினுக் கேணி நெறியன்னசின்னெறி "(திருச்சிற். 149)

"செல்வர் மனத்தினோங்கி .............அஃகுநெறி "(சீவக. 1416) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

15 - 6. தொல். கிளவி. சூ. 55, சே ; இ - வி. சூ. 321, மேற்.

17 - 8. பெரும்பாண். 39 - 41.

19. மீமிசை, ஒருபொருட் பன்மொழி என்பதற்கு மேற்கோள் ; யா - வி. சிறப்பு.

21. பொருந. 14 - 5, குறிப்புரை.

தொண்டுபடுதிவவு : "தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ் "(ஆசிரியமாலை)

22. (பி-ம்.) ' கேள்வி போகாது ' (பொருந. 16 - 8)

23. சுகிர்புரி நரம்பு : "சுகிர்புரி நரம்பின் சீறியாழ் "(புறநா. 109 : 15) ; "வீணைச் சுகிர்புரி நரம்பு "(சீவக. 728) ; முருகு 140 - 41

21 - 3. சீவக. 559, ந. மேற்.

24. இயைபு வண்ணத்திற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். செய். சூ. 219, பேர்.

24 - 5. பொரும்பாண். 7 - 8.

27. பொருந. 10.

28. இவ்வடி, வினையெச்சம் அகரவீறன்றிப் பிற ஈற்றால் முடிக்குஞ் சொல்லை விசேடித்து வருதற்கு மேற்கோள் ; தொல். வினை. சூ. 31, கல். ந.

30. பொருந. 19 - 20, குறிப்புரை ; "விழவொலி கூந்தல் "(ஐங்குறு. 306 : 4 ) ; "கடிமகள் கதுப்பி னாறி ", "வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள "(அகநா. 244 : 5, 378 : 2)

33. (பி-ம்.) 'பொருந்திய வளவினில்'

இன்னுருபு வருமிடத்து இன்சாரியை வந்ததற்கு இவ்வடி மேற்கோள; தொல்.புணரியல், சூ .29, ந.

31 - 3. பொருந. 6 - 8.

35. (பி-ம்.) ' நுணங்கற னுவறிய'

37. "வணரமை நல்யாழ் "(பதிற். 41 : 2) ; "வணர்கோட்டுச் சீறியாழ்"(புறநா. 155 : 1)

வள்ளுயிர்ப் பேரியாழ் : குறிஞ்சிப். 100.

36 - 7. "களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் "(புறநா. 127 : 1, 145 : 5)

42 - 3. பொருந. 42, குறிப்புரை.

44. சிறுபாண். 14 - 5, குறிப்புரை.

கதுப்பிகுத் தசைஇ : பட்டினப். 259.

45 - 6. சிறுபாண். 31.

44 - 6. இவ்வடிகளைப் பொருளானந்தமென்பர் ; யா - வி. ஒழிபு.

41- 6. புறநா. 135 : 1 - 10.

47. "கயங்கண் டன்ன.............பெருமரக் குழாம் "(மலைபடு. 259 - 65) ; "பொய்கையும் போன்றதே , ஈச னெந்தை யினையடி நீழலே "(தே. திருநா.) ; "கொய்ம்மலர்க் காவகம்............தெண்கயம் புக்கது போன்றதே "(சீவக. 872) ; "அசோகந் தண்பொழில், மணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழல் ", "அழல்கண் ணகற்றி நிழன்மீக் கூரி, நீர்புக் கன்ன நீர்மைத் தாகி"(பெருங். 1. 40 : 121 - 2, 2. 13 : 17 - 8) ; "வெவ்வாறு மெனக்குளிர்ந்து வெயிலியங்கா வகையியங்கும் விரிபூஞ் சோலை "(கம்ப. நாடவிட்ட. 22)

48. பெரும்பாண். 380.

"நீர்கால் கழீஇய வார்மண லெக்கர் (பெருங். 1. 42 : 91)

50. மலைபடு. 569, குறிப்புரை.
தொல். புள்ளிமயங். சூ. 17, ந. மேற்.

    தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
    மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்
    கியாமவ ணின்றும் வருது நீயிருங்
    கனிபொழி கானங் கிளையொ டுணீஇய
    துனைபறை நிவக்கும் புள்ளின மானப்         55
    புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
    வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோண்
    மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்
    முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி
    னிசைநுவல் வித்தி னசையே ருழவர்க்குப்         60
    புதுநிறை வந்த புனலஞ் சாயன்
    மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
    வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூ
    ணன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்ளையொ
    டுள்ளினிர் சேறி ராயிற் பொழுதெதிர்ந்த         65
    புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலி
    னாற்றி னளவு மசையுநற் புலமும்
    வீற்றுவளஞ் மலையுஞ் சோலையு மாபுகல்
    காணமுந் சோலையு மாபுகல் கானமுந்
    தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்         70
    பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்
    புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியு
    மிகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க்
    கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு
    தூத்துளி பொழிந்த பொய்யா வானின்         75
    வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையு
    நல்லோர் குழீஇய நாநவி லவையத்து
    வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
    சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
    நல்லிதி னியக்குமவன் சுற்றத்தொழுக்கமு         80
    நீரகம் பனிக்கு மஞ்சுவரு கடுந்திறற்
    பேரிசை நவிர மேஎ யுறையுங்
    காரி யுண்டிக் கடவுள தியற்கையும்
    பாயிரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு
    ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு 85
    மிகந்தன வாயினுந் தெவ்வர் தேஎ
    நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
    புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
    கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவு
    மிரைதேர்ந் திவருங் கொடுந்தாண் முதலையொடு         90
    திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
    வரைபுரை நிவப்பின் வான்றோ யிஞ்சி
    யுரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையுங்
    கேளினி வேளை நீ முன்னிய திசையே,
    மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்         95
    புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
    வானமின்னு வசிவு பொழிய வானா
    திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
    பெயலொடு வைகிய வியன்க ணிரும்புனத்
    தகலிரு விசும்பி னாஅல் போல         100

குறிப்புரை.
53. சிறுபாண். 143 ; பெரும்பாண். 28.

51 - 3. பெரும்பாண். 427, குறிப்புரை. "மலையி னிழிந்து மாக்கட னோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லா நின்னோக்கினரே "(புறநா. 42 : 19 - 21) ; "கடுவரை நீரிற் கடுத்துவர "(பு. வெ. 11) ; "பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் "(கம்ப. கையடை. 15)

54 - 5. பொருந. 64, குறிப்புரை ; "வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி "(புறநா. 47 : 1)

57. "வாங்கமை மென்றோன் "(பதிற். 12 : 22)

58. மலைபடு. 424 ; "கொடுங்குழை கணவ", "திருந்திழை கணவ", "வாணுதல் கணவ", "நன்னுதல் கணவ", "ஆன்றோள் கணவ", "நல்லோள் கணவன்", "சேயிழை கணவ", "புரையோள் கணவ", "சேயிழை கணவ", "ஒண்டொடி கணவ"(பதிற். 14 : 15, 4 : 11, 38 : 10 , 42 : 7, 55 : 1, 61 : 4, 65 : 10, 70 : 16, 88 : 36, 90 : 50) ; "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ "(புறநா. 3 : 6)

59. மு. குறிஞ்சிப். 128.

60. "வித்திய பனுவல்"(புறநா. 237 : 5)

61. "வானி நீரினுந், தீந்தண் சாயலன்"(பதிற். 86 : 12 -3);

"நீரினுஞ் சாய லுடையன் ", "வேனிற் புனலன்ன நுந்தை "(கலித். 42 : 20. 84 : 38 ) "நீரினு மினிய சாயற், பாரி "(புறநா. 105 : 7 - 8)

50-65. "கூத்தராற்றுப்படையுள், ' கலம்பெறு.........தலைவ, என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப்பெயர், ' நீயிரும் .............சேறிராயின் ' எனப்பன்மையோடு முடிந்தது. இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி ஆண்டுச் செல்வார் பலராயுழியே வரப் பெறுவதென்றும் தனியொருவனாயின் மயங்கப் பெறாதென்றுங் கொள்க"(தொல். எச்ச. சூ. 60, தெய்வச்.)

65-6. புள் : மலைபடு. 448 ; பெரும்பாண் . 155 ; புறநா.124 : 2.

ஒப்பு : பொருந. 59 ; "நல்ல சகுன மென்னவெதிர் கண்டு வந்தாய் நம்பிநீ.............புல்ல நின்றாய் " (பிரபு.பிரபுதேவர்வந்த. 47) ; "ஒரு நெறி யெதிர்ப்பா டுற்றது முன்னைப், பழுதறு பெருந்தவப் பயனது போலும்"(தணிகையாறு. 169 - 70)

68. மலைபடு. 462 ; "நாடென்ப நாடா வளத்தன "(குறள். 739) ; "நிலஞ் சுரக்கு நிறைவளம் "(கம்ப. நாடு. 38)

70. தொலையா நல்லிசை : "செல்லா நல்லிசை "(மலைபடு. 338) ; "கெடாஅ நல்லிசை நிலைஇ", "நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்து"(பதிற். 14 : 21, 86 : 5 ) ; "மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்............சாவா வுடம்பெய்தினார் "(திரி. 16) ; "ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த, வுருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து, மருவிய வுருவ மிங்கே மறைந்துபோமற்றை யாக்கை , திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே ", "பொன்று மிவ்வுட லின்பொருட், டென்று நிற்கு மிரும்புக, ழின்று நீர்கழிந் தீர்களாற், குன்றின் மேற்குடை வேந்திர்காள் "(சூளா. சீயவதை. 204, அரசியல், 226) ; பொருந. 176, ந. குறிப்புரை; பெரும்பாண். 466, ந. குறிப்புரை.

72. ஈகைமாரி : மலைபடு. 75 - 6, 580.

71 - 2. சிறுபாண். 247 - 8, அடிக் ; மதுரைக். 145 - 6, குறிப்புரை.
"ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற் கெளிதினினீயும் "(பதிற். 48 : 5 - 6) ; "ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி, வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே ", "வேந்துதரு விழுக்கூழ் பரி சிலர்க் கென்றும், அருகா தீயும் வண்மை "(புறநா. 122 : 6 - 7, 320 : 16 - 7)

73. மதுரைக். 139 - 40.

73 - 4. மதுரைக். 131 - 2, குறிப்புரை.

75 - 6. "ஈகைமாரி ", "மழைசுரந் தன்ன வீகை நல்கி "(மலைபடு. 72, 580) ; சிறுபாண். 124, குறிப்புரை ; மதுரைக். 442, குறிப்புரை.) ; "ஆர்கலி வானந் தளிசொரிந் தாஅங், குறுவ ரார வோம்பா துண்டு, நகைவரார நன்கலஞ் சிதறி "(பதிற். 43 : 18 - 20) ; "நின் , சுரத்தலும் வண்மையு மாரியுள ", "அவன், வண்மைபோல் வானம் பொழிந்தநீர் "(பரி. 4 : 27, 22 : 7 - 8) ; "மழைசுரந் தன்ன வீகை "(அகநா. 238 : 13) ; "வானத் தன்ன வண்மையும் ", "மாரியன்ன வண்மை ", "வரையா மரபின் மாரி போல ............கொடைமடம் படுதல் ", "மாரி யீகை மறப்போர் மலையன் ", "மாரி யன்ன வண்மையிற் சொரிந்து "(புறநா. 55 : 15, 133 : 6, 142 : 3 - 5, 158 : 7, 397 : 16) ; "மாரியினேற்பார்க் கவைநல்கி ", "மாரிமழை வள்ளல்", "மழைவள்ளல் "(சீவக. 365, 500, 899)

77 - 80. முருகு. 282 - 6.

82. மேவென்பது நசையென்னும் குறிப்பை உணர்த்துமென் பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 32, இளம். சே. தெய்வச். ந; இ - வி. சூ. 281.

83. காரியுண்டிக் கடவுள் : சீவக. 670.

84 - 5. பாயிருள்.............ஞாயிறு : "பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி "(பெரும்பாண். 1 - 2)

"பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி, ஞாயிறு குணமுதற் றோன்றியா அங்கு ", "மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா, ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் "(பதிற். 59 : 5 - 6, 64 : 12 - 4)

பகல் செய்யா வெழுதரு ஞாயிறு : பெரும்பாண். 441 - 2, ந. குறிப்புரை.

87. நுகம்படக்கடந்து : "நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி "(குறுந். 80 : 5)

89.கொடைக்கடனிறுத்த : மலைபடு. 543 ; பெரும்பாண். 446, குறிப்புரை.

90. கொடுந்தாண் முதலை : குறிஞ்சிப். 257.

இரைதேர்ந்திவரும் ...............முதலை : "இரைதேர் முதலையும் "(சிலப். 13 :7) ]

91. கல்லகழ் கிடங்கு : மதுரைக். 730, குறிப்புரை.

92. "கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி "(பதிற். 16 : 1)]

வான்றோ யிஞ்சி : "விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில் "(பெருங். 3. 4 : 3)

97 - 8. மதுரைக். 10 - 11.

100. அகலிரு விசும்பு : பெரும்பாண். 1; மதுரைக். 267.

101. புன்கொடி முசுண்டை : நெடுநல் : 13.

100 - 101. மதுரைக் 280 - 81.

' ஆரல் ' ஆலென்று வந்த இடைக் குறைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா - வி. ஒழிபு. சூ. 2 ; யா - கா. ஒழிபு. 8, உரை.

    வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
    நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
    மகுளி பாயாது மலிதுளி தழாலி
    னகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
    கௌவை போகிய கருங்காய் பிடியேழ்         105
    நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
    பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
    கொய்பத முற்றன குலவுக்குர லேனல்
    விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொறுங்
    குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை         110
    மேதி யன்ன கல்பிறங் கியவின்
    வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி
    யிரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
    பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
    வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்         115
    வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்னக்
    காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
    குறையறை வாரா நிவப்பி னறையுற்
    றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
    புயற்புனிறு போகிய பூமலி புறவி         120
    னவற்பதங் கொண்டன வம்பொதித் தோரை
    தொய்யாது வித்திய துளர்படு துடவை
    யையவி யமன்ற வெண்காற் செறுவின்
    மையென விரிந்தன நீணறு நெய்தல்
    செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக்         125
    காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து
    வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்
    விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
    காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென
    வூழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத்         130
    துறுகல் சுற்றிய சோலை வாழை
    யிறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்
    கூழுற் றலமரு முந்தூ ழகலறைக்
    கால மன்றியு மரம்பயன் கொடுத்தலிற்
    காலி னுதிர்ந்தன கருங்கனி நாவன்         135
    மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை
    நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்
    துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்
    தரலை யுக்கன நெடுந்தா ளாசினி
    விரலூன்று படுக ணாகுளி கடுப்பக்         140
    குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்
    கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச்
    சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
    முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே
    தீயி னன்ன வொண்செங் காந்தட்         145
    டூவற் கலித்த புதுமுகை யூன்செத்
    தறியா தெடுத்த புன்புறச் சேவ
    லூஉ னன்மையி னுண்ணா துகுத்தென
    நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
    வெறிக்களங் கடுக்கும் வியலறை தோறு         150

குறிப்புரை
99 - 101. ஊனந் தோன்றிய ஆனந்தவுவமை யென்பர் ; யா - வி. ஒழிபு. சூ. 3.

102. மதுரைக். 279.

105. கௌவை : மதுரைக். 271.

105 - 6. ஐகார ஒளகாரக் குறுக்கமும் நேரசையென்பதற்கு மேற்கோள் ; யா - வி. அசை. சூ. 2.

108. (பி-ம்.) ' குவவுக்குரலேனல்'

107 - 8. தினைக்கதிர்க்கு யானைக்கை உவமை : குறிஞ்சிப். 35 - 8, குறிப்புரை.

109 - 10. தினையரிதாளில் அவரை விளைதல் : "பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற், கொழுங்கொடி யவரை பூக்கும் "(குறுந். 82 : 4 - 5) ; "சிறுதினை கொய்த விருவி வெண்காற், காய்த்த வவரை "(ஐங். 286 : 1 - 2)

111. "எருமை யன்ன கருங்கல் "(புறநா. 5 : 1)

112. வடசொல் சிதைந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 6, ந ; இ - வி. சூ. 175.

113. "இரும்புகவர் கொண்ட வேனற் பெருங்குரல் "(நற். 194 : 9)

112 - 3. கவைக்கதிர் ...........வரகு : "கவைக்கதிர் வரகின் சீறூர் "(அகநா. 384 : 6) ; "கவைக்கதிர் வரகும் "(பெருங். 1. 49 : 105)

115. (பி-ம்.) ' ஐவன வெண்ணெல் '

118 - 9. அறையுற்று ............. .அலமருங்கரும்பு : "அறைக்கரும்பு "(பொருந. 193) ; "அறையுறு கரும்பு "(பதிற். 75: 6 ; பெருங். 1. 48 : 146)

116 - 9. கரும்புக்கு வேல் உவமை : "கரும்பின் , வேல்போல் வெண்முகை "(நற். 366 : 7 - 8) ; "தோடுகொள் வேலின் றோற்றம் போல, வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் "(புறநா. 35 : 9 - 10)

122. "ஏறு பொருதசெறு வுழாதுவித் துநவும் "(பதிற். 13 : 2)

துளர்படு துடவை : "தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை "(பெரும்பாண். 201) ; "துடவையஞ் சிறுதினைத், துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை "(குறுந். 392 : 4 - 5)

124 . "மைவிரிந்தன நீலமும் "(சூளா. நாடு. 11)

125 - 6. "பாவை யிஞ்சி "(பெருங். 1 . 51 : 23)

127, பிடிமுழந்தாள் : பெரும்பாண். 53, குறிப்புரை ; கலித் . 50 : 2.

128. மதுரைக். 534, குறிப்புரை.

129."எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புணர்கூர்ந்து, பிடிக்கண மறந்த வேழம் "(முல்லை. 68 - 9)

காழ் மண்டெஃகம் : மதுரைக் . 739, குறிப்புரை ; "மடையமை திண் சுரை மாக்காழ் வேலொடு ", "மாக்காழ் நெடுவேல் "(அகநா. 119 : 13, 368 : 18) ; "வேலே.......... இருங்காழொடு.........நிலைதிரிந் தனவே "(புறநா. 97 : 4 - 7)

131. "சோலை வாழை : "சோலை வாழைச் சுரிநுகும்பு "(குறுந். 308 :1)

134. "கால மன்றியு மரம்பயம் பகரும், யாண ரறாஅ வியன் மலை "(புறநா. 116 13 - 4) ; "பருவ மன்றியும் பயன்கொடுப் பறாஅப், பலவு மாவுங் குலைவளர் வாழையு, மிருங்கனி நாவலு மிளமா துளமும் "(பெருங். 2. 20 : 61 - 3) ; "காலமன்றியுங் கனிந்தன கனி ", "தீங்கனி, கால மின்றிக் கனிவது காண்டிரால் "(கம்ப. வனம்புகு. 44, நாடவிட்ட.18)

135. கருங்கனி நாவல் : புறநா. 177 : 11

137."கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் "(சிலப். 25 : 42) ; "பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும் "(பெருங். 1. 51 : 23)

138. "உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை"(மலைபடு. 445) ; "உண்ணுநர்த் தடுத்த, சாரற் பலவின்சுளை"(அகநா. 2 : 2 - 3)

138 - 9. புண்ணரிந்துக்கன ஆசினி : "கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் "(மலைபடு. 292) ; "பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல் "(பதிற். 61 : 1) ; "அள்ளிலைப் பலவி னளிந்துவீழ் சுளையும் "(சீவக. 2109)

141. "குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை "(நன். சூ. 458, மயிலை. மேற்.) ; "குடிஞை யிரட்டுங் குளிர்வரை "(பழ. 246)

140 - 41. பொருந. 210, குறிப்புரை.

143. மலைபடு. 511.

143 - 4. மலைபடு. 11 - 2.

145. மலைபடு. 149 ; முருகு. 43, குறிஞ்சிப் 90, குறிப்புரை ; "கார்த்திகை ...........விளக்கிற் பூத்தன தோன்றி " (கார். 26) ; "வழகிதழ்க் காந்தண்மேல் வண்டிருப்ப வொண்டீ, முழுகியதென் றஞ்சி முது மந்தி - பழகி, யெழுந்தெழுந்து கைநெறிக்கு மீங்கோயே திங்கட், கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று "(ஈங்கோய். 70) ; "தண்காந்த ளம்பூத், தழல்போல விரியும் "(பாண்டிக். ) ; "தோன்றி வில்விளக்கே பூக்கும் "(நள. கலித்தொடர். 28) ; "குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய, வழலெரியின் மூழ்கினவால் "(யா - வி. சூ. 67, மேற்.)

ஈகாரவீறு வேற்றுமைக்கண் இன்பெற்று வந்ததற்கும், இரண்டாம் வேற்றுமை யுருபு அன்ன வென்பதையுங் கொண்டு முடியுமென்பதற்கும் இவ்வடி மேற்கோள் ; (தொல். குற்றியலுகர. சூ. 78, க்ஷ. எச்ச. 13, ந.)

145 - 6. தொல். உவம. சூ. 16, பேர். மேற்.

149 -50. மதுரைக். 279 - 84, குறிப்புரை. "பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த, ராடுகளங் கடுக்கும் "(புறநா. 28 : 13 -4.)

145 - 50. பரிசிற் பொருளானந்தத்திற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டுவர் ; யா - வி. ஒழிபு. சூ. 3.

    மணவில் கமழு மாமலைச் சாரற்
    றேனினர் கிழக்கின ரூனார் வட்டியர்
    சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப்
    பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
    தூவொடு மலிந்த காய கானவர்         155
    செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
    யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி
    ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக்
    கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
    சேந்த செயலைச் செப்பம் போகி         160
    யலங்குகழை நரலு மாரிப் படுகர்ச்
    சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
    நோனாச் செருவின் வலம்படு நோன்றாண்
    மான விறல்வேள் வயிரிய மெனினே
    நும்மில் போல நில்லாது புக்குக்         165
    கிழவிர் போல கேளாது கெழீஇச்
    சேட்புலம் பகல வினிய கூறிப்
    பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
    குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவி
    ரேறித் தரூஉ மிலங்குமலைத் தாரமொடு         170
    வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்
    குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
    பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர
    வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
    வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை         175
    முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
    பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
    வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி
    னின்புளிக் கலந்து மாமோ ராகக்
    கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து         180
    வழையமை சாரல் கமழத் துழைஇ
    நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
    குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி
    யகமலி யுவகை யார்வமொ டளைஇ
    மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்         185
    செருச்செய் முன்பிற் குருசின் முன்னிய
    பரிசின் மறப்ப நீடலு முரியி
    ரனைய தன்றவன் மலைமிசை நாடே
    நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
    வரையர மகளி ரிருக்கை காணினு         190
    முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர்
    பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
    விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப்
    புழைதொறு மாட்டிய விருங்க லரும்பெறி
    யுடைய வாறே நள்ளிரு ளலரி         195
    விரிந்த விடியல் வைகினிர் கழிமி
    னளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
    முரம்புகண் ணுடைந்த பரலவற் போழ்விற்
    கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
    குறிக்கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச்         200

குறிப்புரை
151. அகநா. 107 : 21.

152. ஊனார்வட்டி : "வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும் "(புறநா. 33 : 1 - 2)

150 - 157. ஆற்றுப்படையுள் ஒருமைச்சொல் பன்மையோடு முடிவதற்கு, ' கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ........இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் ' என்னும் பகுதி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 66, இளம், சே. ந ; இ - வி. சூ. 300.

158. மலைபடு. 256.

159 - 60. "செந்நீ யொண்பூம் பிண்டி "(மதுரைக். 700 - 701) ; "ஏரியவி ருருவி னங்குழைச் செயலை ", "செந்நீ யொண்பூம் பிண்டி "(குறிஞ்சிப். 105 , 118 - 9) ; "அணிமல ரசோகம் பூத்தன......... அழற்கணை தரித்த போன்றவே "(நைடதம், அன்னத்தைக் கண்ணுற்ற. 36)

162- 3. (பி-ம்.) ' எய்தி னோனாச் செருவின் '

164 . மானவிறல்வேள் மதுரைக். 344.

165. மலைபடு. 491 ; "எங்கோ னிருந்த கம்பலை மூதூ, ருடையோர் போல விடையின்று குறுகி "(புறநா.54 : 1 - 2)

169. ' குரு ' என்னும் பண்புரிச்சொல் நிறத்தையுணர்த்தி நீண்டு வருவதற்கு இவ்வடி மேற்கோள் ; (தொல். உரி. சூ. 5, ந.)

164 - 9. பெரும்பாண். 103 - 5.

171. (மலைபடு. 522 ; முருகு. 195, குறிப்புரை.)

தேக்கட்டேறல் : "தேம்பிழி தேறல் "(குறிஞ்சிப். 155)

172. (பி-ம்.) 'குழைவின்று பருகி'

173. பொருந. 94, குறிப்புரையையும், மதுரைக். 669, குறிப்புரையையும் பார்க்க.

174. அருவிதந்த பழம் : "ஆசினி முதுசுளை கலாவ............இழி தருமருவி "(முருகு.301 - 16) ; "பூநாறு பலவுக்கனி, வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம் "(குறுந். 90 : 4 - 5)

176. "முளவுமா வல்சி "(ஐங். 364 : 1, பி - ம்.)

முளவுமாத் தொலைச்சிய : "முளவுமாத் தொலைச்சுங் குன்ற நாட "(அகநா. 182 : 8) ; "முளவுமாத் தொலைச்சிய முழுச்சொ லாடவர்"(புறநா. 325 : 6)

177. "முடுவ றந்த பைந்நிணத் தடியொடு "(மலைபடு. 563)

176 - 7. தொல். குற்றியலுகர. சூ .78, இளம். ந. ; இ - வி. சூ. 90, மேற்.

179. இன்புளி : "தீம்புளி"(மதுரைக். 318)

181. (பி-ம்.) ' வழையமல்'

வழையமை சாரல் : "நாகநெடுவழி "(சிறுபாண். 88) ; "வழையமல் வியன்காடு "(பதிற். 41 : 13) ; "வழையமை நறுஞ்சாரல் "(கலித். 53 : 1 ) ; "வழையம லடுக்கத்து "(அகநா. 328 : 1)176 - 83. நற். 85 :8 - 11.

179 - 83. இன்புளிக் கலந்து..............குறமகளாக்கிய வல்சி : "எயிற்றிய ரிட்ட வின்புளி வெஞ்சோறு " (சிறுபாண். 175)

185. சிறுபாண். 192.

179- 85. சிறுபாண். 189 - 92.

192. (பி-ம்.) ' நிலனொடு படர்மின் ', 'சில நாள் படர்மின் '

193. "இரும்புன நிழத்தலின் "(குறிஞ்சிப். 157)

194.கற்பொறி : "சிறுபொறி மாட்டிய பெருங்க லடாஅர்"(நற். 119 : 2) ; "பொறியறிந்து மாட்டிய, பெருங்க லடாரும் "(புறநா. 19 : 5 - 6) ; "கொல்புலி படுக்கும் பெருங்க னீளடார் "(கூர்ம. சம்புத்தீவின். 29)


    செறிதொடி விறலியர் ைதொழூஉப் பழிச்ச
    வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்
    புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ
    ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ
    வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப்         205
    பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்க
    லிருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக்
    கருவிர லூகம் பார்ப்போ டிரிய
    வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
    வரும்விசை தவிராது மரமறையாக் கழிமி         210
    னுரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி
    யிரவி னன்ன விருடூங்கு வரைப்பிற்
    குமிழி சுழலுங் குண்டுகய முடுக்க
    ரகழிழிந் தன்ன கான்யாற்று நடவை
    வழூஉமருங் குடைய வழாஅ லோம்பிப்         215
    பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
    துருவி னன்ன புன்றலை மகாரோ
    டொருவி ரொருவி ரோம்பினர் கழிமி
    னழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
    விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா         220
    வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
    யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய
    முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோ
    டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி
    னுயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய         225
    மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
    தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
    சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
    யோரியாற் றியவின் மூத்த புரிசைப்
    பராவரு மரபிற் கடவுட் காணிற்         230
    றொழாநிர் கழியி னல்லது வறிது
    நும்மியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி
    மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
    யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
    கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங்         235
    கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
    நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு
    நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த
    சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினு
    ஞெரேரென நோக்க லோம்புமி னுரித்தன்று         240
    நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
    வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
    கழுதிற் சேணோ னெவொடு போகி
    யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி
    நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி         245
    னெறிக்கெடக் கிடந்த விரும்பிண ரெருத்தி
    னிருடுணிந் தன்ன வேனங் காணின்
    முளிகழை யிழைந்த காடுபடு தீயி
    னளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
    துகளறக் துணிந்த மணிமரு டெண்ணீர்க்         250

குறிப்புரை
201. கைதொழூஉப்பழிச்ச : (பெரும்பாண். 463, குறிப்புரை.)

206. (பி-ம்.) ' நிலைதவிர்க்கும் '

208."கருவிர லூகம் விளையாடும் "(தே. திருஞா. சிராப்பள்ளி)

203-9. குறவர் கவணெறிதலும் அதற்கு யானை முதலியன அஞ்சுதலும் : "இலங்கொளி மருப்பிற் கைம்மா வுளம்புநர், புலங்கடி கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும், விலங்குமலை", "பிடியொடு மேயுஞ் செய்புன் யானை, அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன், நெடுவரை யாசினிப் பணவை யேறிக், கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலி, னிறுவரை வேங்கையி னொள்வீ சிதறி, யாசினி மென்பழ மளிந்தவை யுதிராத், தேன்செ யிறாஅ றுளைபடப் போகி, நறுவடி மாவின் பைந்துண ருழக்கிக், குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப், பலவின் பிழத்துட்டங்குமலை"(கலித். 23 : 1 - 3, 41 : 7 - 16) ; "இரவின் மேய மரூஉம் யானைக், கால்வ லியக்க மொற்றி நடுநாள், வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன், கடுவிசைக் கவணி ணெறிந்த சிறுக, லுடுவுறு கணையிற் போகிச் சாரல், வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப், பலவின் பழத்துட் டங்கு, மலைகெழு நாடன் ", "காம்பின், வனைகழை யடைந்த கவண்விசைக் கடியிடிக், சுனைசுட ரமையத்து வழங்கல் செல்லா, திரவுப் புன மேய்ந்த வுரவுச்சின வேழம் ", "தினைமே யானை யினனிரிந்தோடக், கல்லுயர் கழுதிற் சேணோ னெறிந்த, வல்வாய்க் கவணின் கடுவெடி யொல்லென, மறப்புலி யுரற வாரணங் கதற, நனவுறு கட்சி நன்மயி லால, மலையுடன் வெரூஉ மாக்கல் வெற்பின் "(அகநா. 292 : 8 - 15, 309 : 12 - 5, 392 : 11 - 8) ; "இடுதினை தின்வேழங் கடியக் குறவர், வெடிபடு வெங்கவண்க லூன்ற - நெடுநெடென, நீண்டகழை முத்து திர்க்கு மீங்கோயே "(ஈங்கோய். 7)

211. முதலை யானையை விழுங்கல் : "களிறட்டு விழ்க்கு , மீர்ப்புடைக் கராஅத் தன்ன "(புறநா. 104 : 3 - 4)

213. மலைபடு. 474 - 6.

217. புன்றலை மகார்: மலைபடு. 253.

218.(பி-ம்.) ' ஓம்பினர் கழிமின் '

நன் - வி. சூ. 380, மேற்.

50 - 218. உயர்திணை யொருமையிற் பன்னை மயங்கியதற்கு இவ்வடிகள் மேற்கோள்; நன். சூ. 379, மயிலை.

219. புழகு : குறிஞ்சிப். 96, குறிப்புரை.

226. மதுரைக். 183, குறிப்புரை.

வில்லுமிழ் கடுங்கணை : "விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி "(சீவக. 435) ; "விற்பழுத் துமிழும் வெய்யகணை "(கூர்ம. இராமன் வனம்புகு. 56)

227. மதுரைக். 47, குறிப்புரை ; நெடுநல். 169, குறிப்புரை.

229. (பி-ம்.) ' இயவிற்புரிசை மூத்த '

231. (பி-ம்.) ' தொழாநீர் கழிமின் '

236 - 7. சிறுபாண். 56, குறிப்புரை ; "குரங்கன்னபுன் குறுங்கூளியர் "(புறநா. 136 : 13); அகநா. 206 : 3 - 6.

239. சூர்புகலடுக்கம் : "சூருடை யடுக்கத்த "(நற். 359 : 9) ; "சூருறை குன்றிற் றடவரை "(பரி. 19 : 23)

238 - 9. மலைபடு 524 - 5 ; முருகு. 229 - 300.

240. (பி-ம்.) ' ஞெரோவென '

ஞெரேரென : மலைபடு. 579.

242. (பி-ம்.) 'வகுந்தின் கானத்து '

வகுந்து வழியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; (சிலப். 15 : 14 - 9, அடியார்.)

243. கழுதிற்சேணோன் : குறிஞ்சிப். 40 - 41.

247. வழக்கொடு பட்ட மரபு பிறழவும், செய்யுளின்பம்படின் அவ்வாறு செய்க வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். மரபு. சூ. 1, பேர்.)

248. (பி-ம்.) ' முளிகழை யிசைந்த '

மதுரைக். 302, குறிப்புரை.

249. மிசைதல் வேறுவினைப் பொதுச்சொல் அன்றென்று கூறி இதனை மேற்கோள் காட்டினர் ; தொல். கிளவி. சூ. 46, ந.

250. மணிமருடெண்ணீர் : சிறுபாண். 152, குறிப்புரை. ; மதுரைக் 351, குறிப்புரை.

    குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி
    மிகுத்துப்பதங் கொண்ட பரூஉக்கட் பொதியினிர்
    புட்கை போகிய புன்றலை மகாரோ
    டற்கிடை கழித லோம்பி யாற்றநு
    மில்புக் கன்ன கல்லளை வதிமி         255
    னல்சேர்ந் தல்கி யசைத லோம்பி
    வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து
    கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
    கயங்கண் டன்ன வகன்பை யங்கண்
    மைந்துமலி சினத்த களிறுமத னழிக்குந்         260
    துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி
    யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர்
    மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து
    பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னா
    ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமு         265
    மிடனும் வலனு நினையினிர் நோக்கிக்
    குறியறிந் தவையவை குறுகாது கழிமின்
    கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
    கூடியத் தன்ன குரல்புணர் புள்ளி
    னாடுகா ணனந்தலை மென்மெல வகன்மின்         270
    மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின்
    ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத்
    தேஎ மருளு மமைய மாயினு
    மிறா அவன் சிலையர் மாதேர்பு கொட்குங்
    குறவரு மருளுங் குன்றத்துப் படினே         275
    யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென
    வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்
    பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக்
    காடுகாத் துறையுங் கானவ ருளரே
    நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்         280
    புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
    யுண்டற் கினிய பழனுங் கண்டோர்
    மலைதற் கினிய பூவுங் காட்டி
    யூறு நிரம்பிய வாறவர் முந்துற
    நும்மி னெஞ்சத் தவலம் வீட         285
    விம்மென் கடும்போ டினியி ராகுவி
    ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
    குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர்
    நோக்கினும் பனிக்கு நோய்வகூ ரடுக்கத்
    தலர்தாய வரிநிழ லசையினி ரிருப்பிற்         290
    பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
    கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
    மலைமுழதுங் கமழு மாதிரந் தோறு
    மருவி நுகரும் வானர மகளிர்
    வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந்         295
    தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை
    யிலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல்
    விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்
    புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
    சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி         300

குறிப்புரை.
251. "குவளைப் பைஞ்சுனை பருகி "(புறநா. 132 : 5)

253. புன்றலைமகார் : மலைபடு. 217.

இவ்வடி , புள் வளையென்னும் பொருளில் வருமென்பதற்கு மேற்கோள்; சீவக. 2591, ந.

256. மலைபடு. 158.

260 - 61. யானையை விழுங்கும் பாம்பு : "களிறு பாந்தட் பட்டென ", "களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் "(நற். 14 : 8, 261 : 6) "வெண்கோட் டியானை விளிபடத் துழவு, மகல்வாய்ப் பாந்தள் "(அகநா. 68 : 19 - 20); "பரிய களிற்றை யரவு விழுங்கி மழுங்க "(திருஞா. தே.) ; "குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை "(திருச்சிற். 21) : "களிறென்று பெரிய மாசுணம் .............பெயர்தரு பிருதியெம் பெருமானை "(பெரியதிரு. 1. 2 : 10) ; "புழுங்குவெம் பசியொடு புரளும் பேரரா, விழுங்கவந் தெதிரெதிர் விரித்த வாயின்வாய், முழங்குதிண் கரிபுகும்", "மதக்கதமா, வடங்கு பேழ்வயிற் றரவு ", "இடிகொள் வேழத்தை யெயிற்றொடு மெடுத்துடன் விழுங்குங், கடிய மாசுணம் ", "பெரிய பாந்தள், மறங்கிளர் மாண யானை வயிற்றின வாக வாய்சோர்ந், துறங்கின " (கம்ப. தாடகை. 11, சித்திரகூட. 4, 35, சேதுபந்தன. 20) ; "கைந்நாக மேமேயு மாநாகம் "(தக்க. 543)

262. சேட் கமழும்பூ : "சேணாறு பிடவம் "(முல்லை. 25)

262 - 3. மலைபடு 282 - 3.

265. (பி-ம்.) ' இருங்கோல் '

259 - 65. கயங்கண்டன்ன.........பெருமரக்குழுாம் : மலைபடு. 47, குறிப்புரை.

268.கோளியாலம் : "கோளி யாலத்துக் கொழுநிழல் "(புறநா. 58 : 2)

முரஞ்சல் முதிர்வாகிய குறிப்புணர்த்தற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 35, இளம். தெய்வச். ந.

270. நாடு காணனந்தலை : "நாடுகா ணெடுவரை "(பதிற் 85 : 7)

275. "புளிஞரு மருளும் போக்கருஞ் சுரம் "(தணிகையாறு. 167) ; "குறவரு மருளுங் குன்றமொன்று "(குசேலோ. குசேலர் மேல். 39)

இவ்வடி, உம்மை உயர்வு சிறப்புப்பொருளில் வந்ததற்கு மேற்கோள் ; தொல். இடை. சூ. 7, இளம். சே. ந ; நன். சூ. 271, 424, மயிலை ; நன். வி. சூ. 425, இ - வி. சூ. 256.

278. "பாடின் னருவிப் பயங்கெழு மாமலை "(சீவக.2112)

286. இம்மென்கடும்பு : "இம்மென விமிரும் "(குறிஞ்சிப். 147)

288 - 9. "குறியவு நெடியவுங் குன்று "(சிலப். 27 : 153 ; மணி. 6 : 58)

290. வரிநிழல் : பெருந. 51 ; சிறுபாண். 11 - 2, குறிப்புரை.

292. மலைபடு. 138 - 9, குறிப்புரை.

கலைதொடு பெரும்பழம் : "கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் "(குறுந். 342 : 1 )

294. (பி-ம்.) 'அருவி நுகக்கும் '

"ஆழருவி யரமகளி ராடுபவே "(கலித். 40 : 23); அமர நாடியர் துன்னியா டிடங்களும் "(கம்ப. பிலநீங்கு. 8)

295 - 6. மதுரைக். 363, குறிப்புரை.

300 - 301. "மொய்த்த முட்டன துடற்றலை துளைப்ப முடுகிக், கைத்தலத்தனிமி ரக்கடிது கன்றிவிசிறும், மெய்த்த மெய்ப்பெரிய கேழலென "(கம்ப. விராதன். 33) ; "மெய்யுருவிய வையுறு முனைமுள்ளை, யெய்யுதறின "(சீகாளத்தி. கண்ணப்ப. 86)


    னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை
    கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி
    னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென
    வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட
    றலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை         305
    மலைமா ரிடூஉ மேமப் பூசல்
    கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
    வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலி
    னொண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
    நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குகுரல்         310
    கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
    யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
    முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
    சிறுமை யுற்ற களையாப் பூசல்
    கலைகை யற்ற காண்பி னெடுவரை         315
    நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
    பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை
    யருங்குறும் பெறிந்த கானவ ருவகை
    திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென
    நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு         320
    மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
    வான்றோய் மீமிசை யயருங் குரவை
    நல்லெழி னெடுந்தே ரியவுவந் தன்ன
    கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
    நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்         325
    துரவுச் சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
    விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
    யொலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறுங்
    கிளிகடி மகளிர் விளிபடு பூச
    லினத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு         330
    மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
    மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்
    கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
    வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
    நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை         335
    காந்தட் டுடுப்பிற் கமழ்மட லோச்சி
    வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ
    முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
    கன்றுகடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
    மழைகண்டன்ன வாலைதொறு ஞெரேரெனக்         340
    கழைகண் ணுடைக்குங்கரும்பி னேத்தமுந்
    தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையுஞ்
    சேம்பு மஞ்சளு மோம்பினர் காப்போர்
    பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பு
    மென்றிவ் வனைத்து மியைந்தொருங் கீண்டி         345
    யவலவு மிசையவுந் துவன்றிப் பலவுட
    னலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த
    மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்
    குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர்
    முழவுத்துயி லறியா வியலு ளாங்கண்         350

குறிப்புரை.
303 - 4. "காஞ்சி பாடி .........காக்கம் வம்மோ காதலந் தோழி, ...........நெடுந்தகை புண்ணே "(புறநா. 281 : 5 - 9) ; "கொய்யாக் குறிஞ்சி பலபாடி - மொய்யிணர்ப், பூப்பெய் தெரிய னெடுந்தகை புண் யாங்காப்ப "(பு. வெ. 79)

305. தலைநாட் பூத்த வேங்கை : "தலைநாட் செருந்தி "(சிறுபாண். 147)

305 - 6. மதுரைக். 296 - 7, குறிப்புரை.

307. கயந்தலை மடப்பிடி : நற். 137 : 6.

கயந்தலை மடப்பிடி : இது , கயவென்பது மென்மையையுணர்த்து மென்பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ.
24, இளம். சே. ந.

311. கருவிரன் மந்தி : "கருவிரண் மந்திச் செம்முகப் பெருங்கிளை "(நற். 334 : 1) ; "கருவிரற் கடுவன் "(புறநா. 200 : 2) ; "கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி "(திணைமாலை. 10)

311 - 2. "காமர் மந்தி, கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி "(குறுந். 69 : 2 - 3) ; "கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ் ", "கருவிரன் மந்திக் கல்லா வன்பார்ப்பு "(ஐங். 272 : 1, 280 : 1)

313. முறிமேயாக்கைக்கிளை : "முறிமேய் கடுவன் "(ஐங். 276 : 1)

முறி : தொல். மரபு. சூ. 87, பேர். மேற்.

313 - 4. பொருளானந்தத்திற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் ; யா- வி. ஒழிபு. சூ. 3.

311 - 4. "மந்திகண் மறலி யெதிரெதி ருகள மருங்கிருந் துலாவிய கல்லாப், பைந்தலைப் பார்ப்பு மெழுந்துதாய்ப் பிழைத்துப் படரரு விடரினுக் கழுங்குஞ், சந்தனங் கமழுஞ் சாரல் "(காஞ்சிப். இருபத்தெண். 26)

315. முருகு 42 - 3, குறிப்புரை.

316. (பி-ம்.) ' நிலை புணர்ந்திட்ட '

315 - 6. "மால்புடை நெடுவரைக் கோடு "(புறநா. 105 : 6)

316 - 7. மால்பிலேறித் தேன் கொள்ளுதல் : "பெருந்தேன் கண்படு வரையின் முதுமால், பறியா தேறிய மடவோன் போல "(குறுந். 273 : 5 -6) ; "வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங், கானக னாடன் மகன் "(கலித். 39 : 8 - 10) ; "ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும், வேய்விளையாடும் வெற்பா "(திருச்சிற். 133)

319. மலைபடு. 467.

318 - 22. முருகு. 194 - 7, குறிப்புரை.

324. குறுந். 42 : 2 - 3, ஒப்பு.

323 - 4. அருவியொலிக்குத் தேரொலி : "குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக "(குறுந். 189 : 2 ) ; "கற்பா லருவியி னொலிக்கு நற்றேர் "(அகநா. 184 : 17)

326. (பி-ம்.) ' பரூஉவெளில் '

325 - 7. முல்லை. 35 - 6 ; சீவக. 1834.

328 - 9. தட்டை : குறிஞ்சி. 43 - 4, குறிப்புரை ; "கடுங்கழைத் தட்டைக் குன்றவர் மகளிர் காவலும் "(திருக்காளத்தி. 2 : 4)

331. மலைபடு. 406.

336. காந்தட்டுடுப்பு : பட். 153 ; கலித். 59 :3 - 4, 101 : 3 - 4 ; அகநா. 78 : 8 - 9, 108 : 15 ; பெருங். 2. 15 : 73 - 4.

337.கோள் கொத்தினையுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தஞ்சை 85, உரை.

340. (பி-ம்.) ' ஞெரோவென', ' ஞேயென'

"பூங்கரும் புடைந்த தீஞ்சா றடுபுகை புயலென் றெண்ணி "(நைடதம், நாடு.16) ; "சுற்று பாகடு புகையவை சூழ்கரு முகிற்குல மொப்பன "(சீகாளத்தி. நக்கீர. 14)

340 - 41.பெரும்பாண். 259 - 60, குறிப்புரை.

342. "பாவடி யுரல பகுவாய் வள்ளை "(குறுந். 89 : 1) ;"வெதிர்நெற் குறுவாநாம், வள்ளை யகவுவம்வா "(கலித். 42 : 7 - 8)

350. மதுரைக். 327 ; "முழவங் கண்டுயி லாத முதுநகர்"(சீவக. 856)


    விழவி னற்றவன் வியன்கண் வெற்பே
    கண்ண டண்ணணெனக் கண்டுங் கேட்டு
    முண்டற் கினிய பலபா ராட்டியு
    மின்னும் வருவ தாக நமக்கெனத்
    தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்         355
    செருமிக்குப் புகலுந் திருவார் மார்ப
    னுருமுரறு கருவிய பெருமலை பிற்பட
    விறும்பூது கஞலிய வின்குரல் விறலியர்
    நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
    கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்         360
    மைபடு மாமலைப் பனுவலிற் பொங்கிக்
    கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
    தூஉ யன்ன துவலை துவற்றலிற்
    றேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
    காஅய்க் கொண்டநும் மியந்தொய் படாமற்         365
    கூவ லன்ன விடரகம் புகுமி
    னிருங்க லிகுப்பத் திறுவரை சேராது
    குன்றிடம் பட்ட வாரிட ரழுவத்து
    நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு
    மண்கனை முழவின் றலைக்கோல் கொண்டு         370
    தண்டுகா லாகத் தளர்த லோம்பி
    யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே
    யயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
    வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்துக்
    கதிர்சினந் தணிந்த வமயத்துக் கழிமி         375
    னுரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
    புரைதவ வுயரிய மழைமருள் பஃறோ
    லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய
    பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு
    முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோ         380
    லின்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
    மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
    கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
    களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகற்
    றளிபொழி கானந் தலைதவப் பலவே         385
    யொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்தென
    நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
    செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
    கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே
    யின்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத்         390
    தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்
    பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
    சந்து நீவிப் புன்முடிந் திடுமின்
    செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
    கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த         395
    கடவு ளோங்கிய காடேசு கவலை
    யொட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர்
    சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
    தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
    யோம்பா வள்ளற் படர்ந்திகு மெனினே         400

குறிப்புரை.
352.இவ்வடி, ஒற்று அளபெடுத்துச் சீர்நிலை யெய்தியதற்கும் (தொல். மொழி. சூ. 7, ந ; ஷ. செய். சூ. 17, இளம் ; ஷ. ஷ.சூ. 18, பேர்) ; அளபெடை வண்ணத்திற்கும் (தொல்.செய். சூ.220 பேர். ந .; யா - கா. ஒழிபு. 8,உரை) , ஒற்று அளபெழுந்து நேரசை யானதற்கும் ( யா - வி. எழுத்து . சூ.3), ஒற்று அளபெழுந்து ஓரலகு பெற்றதற்கும் (யா.கா. ஒழிபு. 1, உரை) ஒற்றள பெடைக்கும் (நன். சூ. 91, மயிலை ; இ - வி. சூ. 20) மேற்கோள்.

"கண்ண........கேட்டும் ' என்புழிக் கண்ண் என்பது சீர்நிலை யெய்தித் தேமாவாயிற்று, 'தண்ணணென ' என்றவழித் தட்பத்திற் சிறப்புக் கூறுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்தான்.அது , மாசெல்சுரமென்னும் வஞ்சியுரிச்சீராவதனை யாகற்க ; பாதிரியென முன்னின்ற இயற்சீரேயாகவென வழுவமைத்தவாறு "(தொல். செய். சூ. 18, ந.)354. பரி. 11 : 139, 13 : 64 ,14 : 31 . 21 : 69.

356.(பி-ம்.) ' திருவார் மார்பின் '

357.(பி-ம்.)' பின்பட '

"உருமுரறு கருவிய பெருமழை தலைஇ "(அகநா. 158 :1)

359. இன்குரல் விறலியர் : மலைபடு. 536

359. முருகு. 239.

358 - 60."செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச, வறிது நெறியொரீஇ வலஞ்செயாக் கழிமின் "(மலைபடு. 201 - 2)

361 - 2. "எழிலி, யெஃகுறு பஞ்சிற் றாகி..............நெடுவரை ஆடும் ", "பனுவல் போலக் கணங்கொள, வாடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை "(நற் . 247 : 3 - 5, 353 : 2 - 3) ; "பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை பொங்கலாடி யென்றது எஃகின பஞ்சுபோலப் பொங்கியெழுதலைச் செய்தென்றவாறு "(பதிற். 55 : 14 - 5, உரை) ; "வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும் ","பொங்கல் வெண்மழை, யெஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை "(அகநா. 133 : 6. 217 : 1 - 3)

362 - 4."தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாஅய் ............செறிந்தவிம் மழக்கே ", "முழங்குகடன் முகந்த கமஞ்சூன் மாமழை , மாதிர நனந்தலை புதையப் பாஅய் "(நற். 115 : 7 - 9, 347 : 1 - 2 ) ; "பெயல்கான் மறைத்தலின் விசும்புகா ணலரே, நீர்பரந் தொழுகலினிலங்கா ணலரே ", "விசும்புகண் புதையப் பாஅய்................பெயலா னாதே வானம் "(குறுந். 355 : 1 - 2, 380 : 1 - 3) ; "மாநிலந் தோன்றாமை மலிபெய றலைஇ "(பரி. தி. 2 )

365. மலைபடு. 13.

373.(பி-ம்.) ' கூன்கட்பாறை'

சிறுபாண். 7 - 8, அடிக் ; "வேலைக் காய்ச்சிமுன் னட்டுவைத்தன்ன வெம்பரல் "(திருவையாற்றுப் புராணம், 9 : 14)

374.இன்னலென்பது இன்னாமையென்னும் குறிப்புணர்த்துதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ.6, இளம். சே. தெய்வச். ந.

375.கதிர் சினந்தணிந்தவமயம் : "சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேர "(நற். 369 : 1, குறுந். 195 : 1 ) ; "கதிர்சினந் தணிந்த கையறு மாலை "(குறுந். 387 : 2)

376."உரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையும் "(மலைபடு. 93)

377.மழைமருள்பஃறோல் : "மன்ன, ரெயிலூர் பஃறோல் போலச், சென்மழை "(நற். 197 : 10 - 12) ; "மழையென மருளு மாயிரும் பஃறோல் "(பதிற். 62 : 2) ; "மழைத்தோற் பழையன் "(அகநா. 186 : 15) ; "மழையுருவின தோல் ", "மழையென மருளும் பஃறோல் "(புறநா. 16 : 2, 17 : 34)

382. (பி-ம்.) ' முழவுங்கண்ணு மோம்பி '

384. துறுகல்லிற்கு யானை உவமை : பட்டினப் . 234, குறிப்புரை ; "வேழ, மிரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம் "(ஐங். 239 :1 - 2)

386.ஒன்னாத் தெவ்வர் : மலைபடு. 397 ; பெரும்பாண். 491.

பகைவர் தோல்விகண்டு ஆர்த்தல் : பெரும்பாண். 419 ; "வினைவலதிகன், களிறொடு பட்ட ஞான்றை, யொளிறுவாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே "(குறுந். 393 : 4 - 6) ; "கொன்றுகளம் வேட்ட ஞான்றை , வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிதே ", "எழுவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த , வாலங்கானத் தார்ப்பினும் பெரிதென ", "மொய்வலி யறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே "(அகநா. 36 : 22 - 3, 209 : 4 - 6, 246 : 13 - 4) ; "உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை ................அழுந்தப் பற்றிய யகல்விசும் பார்ப்பெழக், கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை "(புறநா. 77 : 9 - 12)

388. செல்லாநல்லிசை : மலைபடு 70, அடிக் ; புறநா. 395 : 19.

387 - 9.நடுகல் : "விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோ, ரெழுத்துடை நடுகல் "(ஐங். 352 : 1 - 2) ; "விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ, ரெழுத்துடை நடுக லன்னிழல் வதியும், அருஞ்சுரக் கவலை ", "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் ", "ஆடவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் ", "விடுவாய்ச் செங்கணைக் கொடுவி லாடவர், நன்னிலை குறித்த கன்னிலை யதர ","நல்லிசை நிறுத்த நாணுடை மறவர், நிரைநிலை நடுகல் "(அகநா. 53 : 10 - 12, 67 : 8 - 10, 131 : 9 - 11, 179 : 7 - 8, 387 : 14 - 5) ; "கெடுவி னல்லிசை சூடி, நடுகல் லாயினன் புரவலனெனவே ", "அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித், தினிநட்டனரே கல்லும் "(புறநா. 221 : 12 - 3, 264 : 3 - 4) ; "சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த, நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து, மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக், கன்னட்டார் கல்சூழ் கடத்து ", "கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து, வாய்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த், திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய்,மடைகொளல் வேண்டு மகிழ்ந்து "(தொல். புறத். சூ. 5, ந. மேற்.) ;"மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப், பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமரு, ளாண்டக நின்றி வமர்வெய்யோற் காகென்று, காண்டக நாட்டினார் கல் "(பு. வெ. 251) ; "பட்டோர் பெயரு மாற்றலு மெழுதி, நட்ட கல்லும் "(திருவாரூர் - மும் 16 : 1 - 2)

390.முரற்கை : "பாணர் நரம்புளர் முரற்கை போல ", "பாணர் நரம்புளர் முரற்கையின் யாத்தபயன் "(ஐங். 402: 2 - 3, 407 : 1 - 2)

395 - 6. மராஅத்த கடவுள் : "மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் "(குறுந். 87 : 1) ; "தொல்வலி மராஅமு, முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் "(கலித். 101 : 13 - 4)

397.ஒன்னாத்தெவ்வர் : மலைபடு. 386, குறிப்புரை.

398."எரிசுடர்க் கடவுளுங் கருதின்வே முள்ளமும் ", "நினையு நெஞ்சமுஞ் சுடுவதோர் நெடுஞ்சுரம் "(கம்ப. தாடகை. 5, வனம்புகு. 38)

399.தேர்வீசுகவிகை : மதுரைக். 224, குறிப்புரை.

400."கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே "(மலைபடு. 424)

ஓம்பாவள்ளல் : மதுரைக். 146, குறிப்புரை.


    மேம்பட வெறுத்தவவன் றொஃறிணை மூதூ
    ராங்கன மற்றே நம்ம னோர்க்கே
    யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின்
    புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
    கலைநின்று விளிக்குங் கானமூ ழிறந்து         405
    சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
    தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின்
    வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த
    வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர்
    வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற்         410
    பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
    புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்
    பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
    தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
    கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும்         415
    பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே
    பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
    துய்ம்மயி ரடக்கிய சேக்கை யன்ன
    மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
    தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்         420
    கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
    கொடுவிற் கூளியர் கூவை காணிற்
    படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக்
    கொடியோள் கணவற் படர்ந்திரு மெனினே
    தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ         425
    யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை
    யாங்குவியங் கொண்மி னதுவதன் பண்பே
    தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரு
    மும்ப லகைத்த வொண்முறி யாவுந்
    தளிரொடு மிடைந்த காமரு கண்ணி         430
    திரங்குமர னாரிற் பொலியச் சூடி
    முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
    வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின்
    செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
    வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த         435
    சுவல்விளை நெல்லி னவரையம் புளிங்கூ
    ழற்கிடை யுழந்தநும் வருத்தம் வீட
    வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய
    புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
    பென்னறைந் தன்ன நுண்ணே ரரிசி         440
    வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை
    தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக
    வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர்
    விசையங் கொழித்த பூழி யன்ன
    வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை         445
    நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
    பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
    புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
    புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
    மெல்லவ லிருந்த வூர்தொறு நல்லியாழ்ப்         450

குறிப்புரை.
403. அசைவுழி யசைஇ : பெரும்பாண். 44.

406.மரைவிடை : "மரையான் கதழ்விடை "(மலைபடு. 331)

408 - 9.ஏறுடையினத்த ஆன் : "கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை "(மலைபடு. 573) ; நெடுநல். 4 , குறிப்புரை.

414. துருவையும் வெள்ளையும் : "கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் "(பெரும்பாண். 153)

417.(பி-ம்.) ' விதவையும் '

421 - 2."கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் "(புறநா. 23 : 5 )

423."படியோர்த் தேய்த்த வாண்மை "(பதிற். 79 : 6) ; "படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை "(அகநா. 22 : 5 )

424. மலைபடு. 400.

கொடியோள் கணவன் : (மலைபடு. 58, குறிப்புரை.)

425. "பராஅரை வேவை பருகெனத் தண்டி "(பொருந. 104)

429. யானை யாவை முறித்தல் : "பெருங்கை வேழ, மென்சினை யாஅம் பிளக்கும் ", "உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய, யாஅவரிநிழல் ", "அத்த யாஅத்துப், பொரியரை முழுமுத லுருவக் குத்தி ...........தடமருப்பி யானை ", "களிறு.............நிலையுயர் யாஅத் துலையத் குத்தி "(குறுந். 37 : 2 - 3, 232 : 4 - 5, 307: 4 - 6) "நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட் படிஞிமிறு கடியுங் களிறே ", "யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னா வேனி லின்றுணை யார, முளிசினை யாஅத்துப் பொளிபிளந் தூட்ட "(அகநா. 59 : 8 - 9. 335 : 4 - 7)

430 – 31 "மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி "(புறநா. 264 : 2)

திரங்குமரல் : அகநா. 49 : 12, 199 : 7, 327 : 10; சிலப். 11 : 77

435.(பி-ம்.) ' விதவை '

435 - 6."ஆய்மக ளட்ட வம்புளி மிதவை "(புறநா. 215 : 4)

434 - 5. பெரும்பாண். 194 - 5.

441.(பி-ம்.) ' எள்ளெறிந்து ' ‘ எண்ணெறிந்தது '

442.நுண்ணிழுது : "நீரினு நுண்ணிது நெய்யென்பர் "(நாலடி. 282)

445.(பி-ம்.) ' இடிநுண்ணுவணை '

உண்ணுநர்த்தடுத்த நுண்ணிடி நுவணை : மலைபடு. 138, குறிப்புரை.

448. மலைபடு. 65 - 6, குறிப்புரை.


    பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
    பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு
    நன்பல வுடைத்தவன் றண்பணை நாடே
    கண்புமலி பழனங் கமழத் துழைஇ
    வலையோர் தந்த விருஞ்சுவல் வாளை         455
    நிலையோ ரிட்ட நெடுநாண் டூண்டிற்
    பிடிக்கை யன்ன செங்கண் வராஅற்
    றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப்
    பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
    ஞெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த         460
    விலங்க லன்ன போர்முதற் றொலைஇ
    வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
    துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேற
    லிளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்
    முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு         465
    வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
    திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக்
    கண்டோர் மருளக் கடும்புட னருந்தி
    யெருதெறி களம ரோதையொடு நல்யாழ்
    மருதம் பண்ணி யசையினிர் கழிமின்         470
    வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச்
    செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்
    கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
    வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந்
    துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங்         475
    காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
    யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமி
    னிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
    பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
    வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்         480
    தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென
    விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
    கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு
    மலையென மழையென மாட மோங்கித்
    துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும்         485
    பனிவார் காவிற் பல்வண் டிமிரு
    நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
    பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்
    பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர்
    கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி         490
    னருங்கடி வாயி லயிராது புகுமின்
    மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
    வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி
    வந்தோர் மன்ற வளியர் தாமெனக்
    கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னோக்கி         495
    விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப்
    பரிபுலம் பலைத்தநும் வருத்தம்வீட
    வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
    தொழுதி போக வலிந்தகப் பட்ட
    மடநடை யாமான் கயமுனிக் குழவி         500

குறிப்புரை
451."பண்ணுப் பெயர்த்தாங்கு "(பதிற். 65 : 15)

452.(பி-ம்.) 'சேர்ந்தனிர் '

"பலநாட் பயின்று பலரொடு செல்லினும் "(புறநா. 101 : 2)

454.(பி-ம்.) ' சண்புமலிபழனம் ', 'காண்புமலி ', 'கண்பமல் ' கண்பு :மதுரைக். 172, குறிப்புரை.

கண்புமலி பழனம் : "கழனிக் கண்பு "(பெருங். 2 . 19 : 187)

457 - 8.வராற்றுடிக்கணன்னகுறை : "கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல் (மதுரைக். 320) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

459. பகன்றைக்கண்ணி : (ஐங். 87 : 1 ; பதிற். 76 : 12)

461. நெற்போருக்கு மலை : (பொருந. 244 ; பெரும்பண். 240 - 41, குறிப்புரை.) "போரொடு நிகர்வன புணர்மலை"(கம்ப. நாடு . 46) ; "தெரிந்திடும் போர்கள் ..........மேருவாயவே "(கந்த. நாடு. 22) ; "நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார்"(திருவிளை. நாடு. 27)"வரைகளொப்பன போர் "(சீகாளத்தி.நக்கீர. 14)

463. துளங்குதசும்பு : "தசும்புதுளங் கிருக்கைத், தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் "(பதிற். 42 : 11 - 2)

464. இளங்கதிர் ஞாயிறு : மணி.பதிகம், 1)

467. மலைபடு. 319.

468. பொருந. 97.

469 - 70. நல்யாழ் மருதம்பண்ணி : (மலைபடு. 534 ; மதுரைக். 658)

471. "வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ "(நற். 350 : 1 , புறநா. 348 : 1 ) ; "வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை ", "வெண்ணெ லரிநர் மடிவாய்த் தண்ணுமை ............படுபு ளோப்பும் "(அகநா. 40 : 13 - 4,204 : 10 - 11)

475.(பி-ம்.) ' இறந்து பனிக்கும் '

476.கட்கின்சேயாறு : (மலைபடு. 555)

478. மு. அகநா. 378 : 1

மலைபடு. 575 ; "துஞ்சுநீ ணிதியது சுரமை "(சூளா. நாடு. 1)

வடசொல் சிதைந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; (தொல். எச்ச. சூ. 6, இளம் ; இ - வி. சூ. 635)

479. (பி-ம்.) ' பதியெழவறியா ', 'பதியெழுவறியா '.

"பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய ","பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட, மதுரை மூதூர் "(சிலப். 1:15, 15:5 - 6)

481. (பி-ம்.)'யாறு கிடந்த'

தெருவுக்கு யாறு : (மதுரைக்.359,கு- ரை.)

483. "கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர், செவ்வனூறாயிரஞ் சிலைக்கும் பம்பையு, மெவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு, பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே "(சீவக. 42)

484. மாடத்திற்கு மலை : (மதுரைக். 474, 488, 501 - 2)

மழை மாடத்திற்கு : (பொருந. 84)

491. மலைபடு. 165, அடிக்; "தடைஇய வாயி றடையாது நுழைந்து "(தணிகையாறு. 231)

492."வயிரிய மாக்கள்............மன்றநண்ணி "(பதிற். 29:8-9); "மன்றுபடு பரிசிலர் "(புறநா.135:11)

493. (பி-ம்.) ' சேஎய் பெருவிறல் '

493 - 4. முருகு. 284- 5.

492 - 4. "தன்றெறல் வாழ்க்கை "என்பதன் விசேடவுரைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; (சிலப். 15 : 195 , அடியார்)

497."பரிபுலம் பினரென "(சிலப். 10 : 226) ; "பரிபுலம் பினனிவன் "(மணி. 16 : 57)

498. (பி-ம்.) ' மராஅத்த'

498-500. குறுந். 322 : 1-5.


    யூமை யெண்கின் குடாவடிக் குருளை
    மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
    வரைவாழ் வருடை வன்றலை மாத்தக
    ரரவுக்குறும் பெறிந்தசிறுகட் டீர்வை
    யளைச்செறி யுழுவை கோளுற வெறுத்த         505
    மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
    யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
    பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை
    வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்ஞை
    கானக் கோழிக் கவர்குரற் சேவல்         510
    கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ
    மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
    வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந்
    தூவற் கலித்த விவர்நனை வளர்கொடி
    காஅயக் கொண்டநுகமரு ணூறை         515
    பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
    குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
    முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
    வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த
    ணாகந் திலக நறுங்கா ழாரங்         520
    கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
    திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்
    கானிலை யெருமை கழைபெய் தீந்தயிர்
    நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
    நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅ         525
    லுடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங்
    குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
    கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
    நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி
    வானத் தன்ன வளமலி யானைத்         530
    தாதெருத் ததைந்த முற்ற முன்னி
    மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக்
    கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர
    மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
    நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்         535
    கடவ தறிந்த வின்குரல் விறலியர்
    தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ
    தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
    விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
    குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப         540
    லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
    விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
    கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
    வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
    சென்றது நொடியவும் விடாஅ னசைதர         545
    வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்
    பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து
    திருநகர் முற்ற மணுகல் வேண்டிக்
    கல்லெ னொக்க னல்வலத் திரீஇ
    யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத்         550

குறிப்புரை.
502-3. வருடை : பட்டினப். 139, குறிப்புரை.

505 - 6. குறுந். 321: 5-6

507. பொருந். 43, குறிப்புரை.

510. மு. குறுந்.242 : 1.

500-510. இங்கே கூறப்பட்ட விலங்கினங்களிற்சில சிலப்பதிகாரம், 25 : 48- ஆம் அடி முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளன.

511. மலைபடு. 143-4.

512. நறுவடிமா : (பெரும்பாண். 309 ; நற்.243 : 3 ; குறுந். 331 : 5-6 ; ஐங். 61 : 1, 213 : 1 ; கலித். 41 : 14, 84 : 1 - 2)

517.புலி பொருத யானை : "பூம்பொறி யுழுவைப் பேழ்வாயேற்றை, தேங்கமழ் சிலம்பிற் களிற்றொடு பொரினே ", "கொன்முரணிரும்புலி யரும்புழைத் தாக்கிச், செம்மறுக் கொண்ட வெண்கோட்டியானை ", "புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு.........வேழம் ", "வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை "(நற். 104 : 1-2, 151 : 2-3, 202 : 1-4, 255 : 4) ; "சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கி "(குறுந். 88 : 2) ; "மறங்கொ ளிரும்புலித் தொன்முரண் டொலைத்த, முறஞ்செவி வாரணம் ", "புகர்முகக் களிறொடு புலிபொரு துழக்கும் ", "வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தலோ, டாய்பொறி யுழுவை தாக்கிய பொழுதின் ", "பெருங்களிற் றினத்தோடு வீங்கெருத் தெறுழ்முன்பி, னிரும்புலி மயக்குற்ற விகன்மலை "(கலித். 42 : 1-2, 45 : 12, 46 : 3-4, 48 : 6-7) ; "புலியொடு பொருது சினஞ்சிறந்து வலியோ, டுரவுக்களி றொதுங்கிய மருங்கில் ", "குயவரி யிரும்போத்துப் பொருத புண்கூர்ந், துயங்குபிடி தழீஇய மதனழி யானை "(அகநா. 291 : 6-7. 398 : 22-3) ; "வரிவயம் பொருத வயக்களிறு "(புறநா. 100 : 7)

517-8. யானை முத்துடை மருப்பு : (முருகு. 304- 5 ; குறிஞ்சி. 35-6) ; "முத்துடை மருப்பின் மழகளிறு "(பதிற். 32 : 3 "முத்தார் மருப்பின் "(கலித். 40 : 4) ; "வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க,தெண்ணீ ராலி கடுக்கு முத்தமொடு "(அகநா. 282 : 6 - 7) ; "துடியடியளக்கர்நிரையே துணிபடுபிறக்கநடு வொடிமடிமருப்பிணைகள் சொரி குருதி முத்த நினையோம் "(குலோத். பிள்ளை. முத்தப். 8)

519."கோடல் வீயுகு பவைபோ, லிலங்கே ரெல்வளை ", "ஊழுறு கோடல்போ லெவ்வளை யுகுபவால் ", "ஊழுற்ற கோடல்வீ, யிதழ் சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு "(கலித். 7 : 15-6, 48 : 11, 121 : 13-4) ; "உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் "(புறநா. 90 : 1) ; "துணைமலர்க் காந்த ளுழ்த்துச் சொரிவபோற் றோன்றி முன்கை, யணிவளை நலத்தேடேங்க "(சீவக. 1742)

522. மலைபடு. 171, குறிப்புரை.

525. மலைபடு. 238 - 9, குறிப்புரை.

524 - 5. நெடுவரை.........இறால் : (முருகு. 299 - 300)

"அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து, திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே"(புறநா. 109 : 7 - 8)

527. "குடாஅது, பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பப்., பூவிரி. புதுநீர்க் காவிரி புரக்கும் "(புறநா. 166 : 26 - 8)

527 - 8."மலைத்தலைய கடற்காவிரி "(பட். 6) ; "குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு, கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்குங், காவிரி "(சிலப். 10 : 106 - 8)

526 - 9. மதுரைக். 695 - 7.

530. மலைபடு. 377 ; "காள மேகமு நாகமுந் தெரிகில "(கம்ப. சித்திரகூட. 2)

531. தாதெருத் ததைந்த முற்றம் : "மன்றத், தெருவினுண்டாது குடைவன வாடி"(குறுந். 46 : 3 - 4) ; "தாதெரு மன்றம்"(கலித். 103 : 62, 108 : 60 ; சிலப். 16 : 102, 17 : "மாயவன்றம்", 27 : 74) ; "தாதெரு மறுகு"(நற். 343 : 3 ; அகநா. 165 : 4 ; புறநா. 33 : 11, 215 : 2, 311 : 3)

532. மலைபடு. 1 - 3, குறிப்புரை.

533. மலைபடு. 6, குறிப்புரை.

534. மருதம்பண்ணிய : (மலைபடு. 469- 70, குறிப்புரை.)

கருங்கோட்டுச் சீறியாழ் : (நெடுநல். 70, குறிப்புரை.)

536. இன்குரல் விறலியர் : (மலைபடு. 358)

534 - 6. முருகு. 212 , அடிக். ; மதுரை. 217 - 8, குறிப்புரை.

538. அருந்திறற் கடவுள் : (மணி. 6 : 60)

"கடவுட் பழிச்ச "(பதிற். 41 : 6)

541. பொருந. 176 ; பெரும்பாண். 466, ந. அடிக் ; புறநா. 165 : 1 - 2, குறிப்புரை.

542. பெரும்பாண். 445.

543. மலைபடு. 89 ; பெரும்பாண். 446, குறிப்புரை ; "பெய்ம்முகி லென்னக் கொடைக்கடனிறுக்கு மிக்குவாகு "(கூர்ம. சூரியன் மரபு. 8)

544."மறம்வீங்கு பல்புகழ் "(பதிற். 12 : 8) ; (திருவாசகம், பொற்சுண்ணம், 18 ; பெரிய. திருநீலகண்டயாழ்ப். 5 ; திருவால. 56 : 9) ; "காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல் ", "மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாட, லென்ன "(சொக்கநாதருலா)

549. கல்லெனொக்கல் : (பெரும்பாண். 12, குறிப்புரை.)

550. உரும்பில் சுற்றம் : "உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி"(பெரும்பாண். 447)


    தகன்ற தாயத் தஃகிய நுட்பத் திலமென மலர்ந்த கைய ராகித்
    தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
    நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக்
    கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று         555
    வடுவா ழெக்கர் மணலினும் பலரே
    அதனால், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
    பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு
    நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி
    துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி         560
    யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க
    மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
    முடுவ றந்த பைந்நிணத் தடியொடு
    நெடுவெ ணெல்லி னரிசிமுட்டாது
    தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து         565
    பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது
    செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
    மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட்
    டலைவன் றாமரை மலைய விறலியர்
    சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய         570
    நீரியக் கன்ன நிரைசெல னெடுந்தேர்
    வாரிக் கொள்ளா வரைமருள் வேழங்
    கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை
    பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
    நிலந்தினக் கிடந்த நிதியமோ டனைத்து         575
    மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக்
    கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
    வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
    கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
    மழைசுரந் தன்ன வீகை நல்கித்         580
    தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
    வென்றெழு கொடியிற் றோன்றுங்
    குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே.

குறிப்புரை
553. "மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே"(புறநா. 27 : 6)

555. கட்கின் சேயாறு : (மலைபடு. 476)

556. மதுரைக். 236, குறிப்புரை. சிலப். 28 : 125 - 6.

559 - 60. "யாந்தன் னறியுந மாகத் தான்பெரி, தன்புடை மையினெம்பிரி வஞ்சி"(புறநா. 381 : 6 - 7)

561. பொருந. 82 - 3, குறிப்புரை.

563. மலைபடு. 177.

566. குறிஞ்சிப். 238, குறிப்புரை ; "தலைநாள் விழைவொடு"(வி - பா. குருகுல. 79)

565 - 6."பலநாள் பயின்று பலரொடு செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ"(புறநா. 101 : 2 - 3"பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை, யென்னானும் வேண்டுப வென்றி கழ்ப - வென்னானும், வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர், காண் டொறுஞ் செய்வர் சிறப்பு"(நாலடி. 159)

567 - 8. பொருந. 121 - 2.

569. பாணன் பொற்றாமரை சூடுதல் : (பொருந. 159 - 60, குறிப்புரை.)

569 - 70. விறலியர் இழை பெறுதல் : "வசையின் மகளிர் வயங்கிழை யணிய "(பதிற். 12 : 23)

பாணன் பொற்றாமரை பெறுதலும் விறலி இழைபெறுதலும் : பொருந. 159 - 62, குறிப்புரை.

571. செலவுக்கு நீரியக்கம் : மலைபடு. 51 - 3, குறிப்புரை.

572. வரைமருள்வேழம் : "வரைமருளு முயர்தோன்றல...............யானை "(மதுரைக். 46 - 7) ; "மலையெனத், தேனிறை கொள்ளு மிரும்பல் யானை "(புறநா. 17 : 34 - 5) ; "மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே "(சீவக. 2230) ; "மலையே மலையோடு மலைந்தனபோற், கொலைவேழமொ டேற்றன குஞ்சரமே "(சூளா. அரசியல் . 184); "யானை மலையென மலைவ "(கம்ப. மிதிலை 3)

573. ஏறுடைப் பெருநிரை : மலைபடு. 408 - 9 ; நெடுநல். 4, குறிப்புரை.

574. "பொலம்படைக் கலிமா","பொலம்படையமா"(புறநா. 116 : 19, 359 : 14 ) ;"புனையும் பொலம்படைப் பொங்குளைமான"(பு. வெ. 276)

பொன்னென்பது பொலமெனத் திரிந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். புள்ளி. சூ. 61, இளம். ந.

575. மலைபடு. 478 : மதுரைக். 215, குறிப்புரை. "நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வம்"(தணிகையாறு. 25)

576. ஏற்றகை : நாலடி. 98.

"இலம்படு................நிறையவென வரும் ; உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரென்னும் பொருளுணர நிற்றலின் வேற்றுமை முடிபாயிற்று"(தொல். புள்ளி. சூ. 21,இளம்.)"' இலம்...............நிறைய' இதற்கு இல்லாமையுண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக "( ந.) ; இலம்பாடு வறுமையை யுணர்த்துமென்பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 62, இளம். சே. தெய்வச். ந.

576 - 7. "இலம்படு புலவ ரேற்றகை ஞெமரப், பொலஞ்சொரி வழுதி"(பரி. 10 : 126 - 7)

571 - 7. பரிசிலர்க்குத்தேர் தருதல் : மலைபடு. 399 - 400 ; சிறு பாண். 142 - 3, குறிப்புரை ; மதுரைக். 224, கு -ரை.

பரிசிலர்க்குத் தேரும் குதிரையுங் கொடுத்தல் : மதுரைக். 223 - 4, குறிப்புரை.

பரிசிலர்க்கு யானை கொடுத்தல் : பொருந். 126 - 7, குறிப்புரை ; சிறுபாண். 142 - 3, குறிப்புரை ; மதுரைக். 99 - 102, குறிப்புரை.

579. ஞெரேரென : மலைபடு. 240.

580. மழை சுரந்தன்ன வீகை : (மலைபடு. 72 ; 75 - 6, குறிப்புரை) ; "எழிலி வான மெள்ளினன் றரூஉங், கவிகை வண்கைக் கடுமான் றோன்றல் "(தொல். எச்ச. சூ. 18, ந. உவம. 14, பேர். மேற்.) ; "மழை விழை தடக்கை வாய்வா ளெழினி", "கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி"(தொல். உவம. சூ. 14, பேர். மேற்.)

582. வென்றெழுகொடி : முருகு. 67, குறிப்புரை ; முல்லை. 90 - 91, அடிக். ;"உரவுக் களிற்று வெல்கொடி"(பதிற். 88 : 17)

581 - 2. "பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப், பெருவரை மருங்கி னருவியி னுடங்க"(மதுரைக். 373 - 4) ; "வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்க", "வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து, வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெரு", "வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்க"(பதிற். 25 : 11, 47 : 3 - 4,69 : 1 - 2 ) ;"களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, வொளிறுவன விழிதரு முயர்ந்துதோன் றருவி, நேர்கொ ணெடுவரை", "பெருவரை யிழிதரு நெடுவெள் ளருவி, யோடை யானை யுயர்மிசை யெடுத்த, வாடு கொடி கடுப்பத் தோன்றுங், கோடுயர் வெற்பன்"(அகநா. 162 : 22 - 4, 358 : 12 - 5) ; "மனையிற்பொலி மாக நெடுங்கொடி மாலை யேய்ப்ப, வினையிற்றிரள் வெள்ளரு வித்திர டூங்கி வீழ"(கம்ப. கடறாவு. 50) ; "அமையநிற்கு மலங்கலேறு பிறங்க வெண்கொடி யாடுமா, லிமைய வெற்பு மதன்கணின்று மெடுத்த கங்கையு மென்னவே"(தக்க. 634)

583.நாடுகிழவோன் : "மலைகிழவோனே"(முருக. 317) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
---------

இதன் பொருள்

1 - 2. திரு மழ தலஇய இருள் நிறம் விசும்பின் விண் அதிர் இமிழ் இச கடுப்ப - 1செல்வத்த"ண்டாக்கும் மழயப்பெய்த இருண்ட நிறத்த"டய "மகத்தின ஆகாயத்திடத்தி"ல நின்று முழங்கும் ஓசயயொப்ப,

நடுக்கங் கூற"வ மிக்கவொலியென்றாயிற்று.

2 - 3. பண் அமத் திண் வார் விசித்த முழவொடு - பண்கள் தன் 2கண்களி"ல உண்டாக்கப்பட்டுத் திண்ணிய வாரா"ல இறுக வலித்த மத்தளத்"தா"ட,

3 "இடக்க ணிளியா வலக்கண் குரலா, நடப்ப "தாலியற் கருவியாகும் "என்பதனாற் பண்ணமத்தென்றார்.

3 . ஆகுளி - சிறுபற"ம்,

4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் - கரய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத் தட்டின 4கஞ்சதாளமும்,

5. மின் இரு பீலி அணி தழ "காட்டொடு - விளங்குகின்ற கரிய 5 பீலியாகிய அழகின"டய தழயக் கட்டின கொம்"பா"ட,

6. கண்இட விடுத்த களிறு உயிர் தூம்பின் - 6கண்களின் நடு"வ வெளியாகத் திறந்த 7 யானயின் க"பாலும் நெடுவங்கியத்"தா"ட,

8உயிர் : ஆகுபெயர். இனி, 9யான நெட்டுயிர்ப்புக் கொண்டாற் "பாலும் ஓசய"டயவென்றுமாம்.

---------
    1 "எடுப்பதூஉ மெல்லா மழ "(குறள், 15)
    2 கண் - அடிக்கும் பக்கம் .
    3 சீவக. 675, 2596 ,ந. "மேற்.
    4 கஞ்சம் - வெண்கலம்.
    5பீலி - மயிலிறகு ; ஒருவக வாச்சியமுமாம் ; "விழிக்குந் தழப்பீலி "(சுந்தர. "த.)
    6 கண் - கணு.
    7 "கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் - கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றின க"பாலும் வடிவ"டய பெருவங்கியத்த இற"ங்"காள் "(புறநா. 152 : 15, உர)
    8 உயிர்த்தல"டய மூக்காதலின், திக்க இங்"க உயிரெனப்பட்ட ; "நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார் "தே. திருநா. பொது); "மாதிரக் களிற்றின் வரிக்கவாண் மூக்கிட மடுப்ப "(கம்ப. நிந்தன. 2) ; "முழவிற் பூரித்த கும்ப குடந்தொறு, மூரி "யழ்கடலுந்தரு மூக்கின "(தக்க. 273) ; "உயிர்க்குறு நாசிக யாக வுள்ளவும் "(பிரபு. முனிவார்.13) ; "கமழ்கந்தங் கயான் "மாக்கு மண்ணா "(திருவானக்காப். கடவுள்.)
    9 "நீர்நசக் கூக்கிய வுயவல் யான, "யியம்புணர் தூம்பியினுயிர்க்கு மத்தம் "(ஐங். 377 : 1 - 2) ; "ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பி னுயிர்க்கும் ", "செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக், குறுநெடுந் தூம்பொடு முழவுபுணர்ந் திசைப்ப "(அகநா. 111 : 8 - 9, 301 : 16 - 7)
-------

7. இளி பயிர் இமிரும் குறு பரம் தூம்பொடு - இளியென்னும் நரம்பினுடைய ஓசையைத் தானொலிக்கும் குறிய மேலாகிய தூம்போடே,

இது குறுந்தூம்பு. பயிர் - தழைத்தல்.

8. 1விளிப்பது கவரும் தீ குழல் துதைஇ - பாட்டைச் சுருதி குன்றாமற் கைக்கொண்டு நிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டு,

9. நடுவு நின்று இசைக்கும் 2 அரி குரல் தட்டை - கண்களுக்கு நடுவே நின்றொலிக்கும் ஓசையையுடைய 3 கரடிகையும்,

இனித் தாளமானத்திடையே நின்றொலிக்கும் 4அரித்தெழுகின்ற ஓசையையுடைய வென்றுமாம்.

10. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி - விளக்கத்தையுடைத்தாகிய தாளத்தைக் கைக்கொண்டு ஒலிக்கும் வலிய வாயையுடைய 5 சல்லியும்,

11. நொடி தரு பாணிய பதலையும் - மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய 6 ஒரு கண் மாக்கிணையும்,

பிறவும் - கூறாத வாச்சியங்களும்,

12. கார்கோள் பலவின் காய் துணர் கடுப்ப- கார்காலத்தாலே பழுத்தலையுடைய பலாவினது காயை மிகவுடைய தொத்தை யொப்ப,

13. நேர் சீர் சுருக்கி காய 7கலம் பையிர் - தம்மிலொத்த கனத்தையுடையவாகக் கட்டிக் காவின வாச்சிய முட்டுக்களையுடைய பையையுடையிராய், முழவொடே ஆகுளியும் (3) பாண்டிலும்(4) கோட்டொடும் (5) தூம்பொடும் (6) குறுந்தூம்பொடும்(7) தட்டையும் (9) எல்லரியும் (10) பதலையும் பிறவும்(11) தீங்குழலும் நெருங்கப்பட்டு (8) அவற்றைச்சுருக்கிக்காய கலப்பையிர் (13) என்க.

--------
    1 விளிப்பது - பாடுவது ; திரி. 10 ; மணி. 4 : 13.
    2 அரிக்குரற்றட்டை யென்பதற்குத் தவளையினது குரலையுடைய தட்டைப் பறையென்று பொருள் கோடலுமாம் ; "இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த், தேரை, தட்டைப் பறையிற் கறங்கு நாடன் "(குறுந். 193 : 2 - 3.)
    3 மதுரைக். 612 , குறிப்புரை.
    4 "அரிக்கூ டின்னியம் "(மதுரைக். 612) என்பதற்கு, ' அரித்தெழும் ஓசையையுடைய சல்லி கரடி முதலியவற்றோடே கூடின இனிய ஏனைய வாச்சியங்கள் ' என்றார்முன்.
    5 மதுரைக். 612, குறிப்புரை.
    6 "பதலை யொருகண் பையென வியக்குமின் "(புறநா. 152 : 17)
    7 "கலப்பை - யாழ் முதலியவற்றையுமிட்ட பெட்டிகள் "(சீவக. 864. ந.)
--------------

14. கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்- கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்கமலையில்,

15. படுத்து வைத்தன்ன பாறைமருங்கில் - படுத்துவைத்தாற் போன்ற, ஒத்தநிலமாகியகற்பாறையின் பக்கத்தில்,

16. எடுத்து நிறுத்தன்ன இட்டு அரு சிறுநெறி - நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்து நிறுத்தினாற்போன்றஇட்டிய அரிய சிறியவழியை,

17. தொடுத்த வாளியர் துணை புணர்கானவர் - தொடுத்த அம்பினையுடையராய்த் தம் மனைவியரோடுகூடியிருக்கின்ற கானவர்,

18. [இடுக்கண் செய்யா தியங்குந ரியக்கும்:] இயங்குநர் இடுக்கண் செய்யாது இயக்கும் - வழிபோவாரைவருத்துதலைச் செய்யாமல் வழிபோக்கும்,

19 - 20. [ அடுக்கன் மீமிசை யருப்பம்பேணா, திடிச்சுர நிவப்பினியவுக்கொண் டொழுகி :]அடுக்கல் மீமிசை இடி சுரம் நிவப்பின் இயவு 1அருப்பம் பேணாது கொண்டு ஒழுகி - மலையிடத்து மிக்கஉயர்ச்சியிற் கல்லையிடித்த அருநிலத்தில் உயர்ந்தவழியைப் போதற்கு அரிதாகக் கருதாதே போதக்கடவேமென்றுநெஞ்சாலே கொண்டுநடந்து,

கல்லையிடித்து ஆக்கிய வழி.

சிலம்பிற் (14) பாறைமருங்கிற் (15)சிறுநெறியைக் (16) கானவர் (17) போக்கும் (18) சுரத்தில்இயவுக்கொண்டொழுகி (20) யென்க.

21. தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்- தொடியினது உறழ்ச்சியையொத்த உறழ்ச்சியையுடையஒன்பதென்னுமெண் உண்டான வார்க்கட்டினையும்,

2 வலித்தல் மெலித்தல் செய்யவேண்டுதலின்,உறழ்ச்சி கூறினார்.

22 - 4. [ கடிப்பகை யனைத்துங்கேள்வி போகாக், குரலோர்த்துத் தொடுத்தசுகிர்புரி நரம்பி, னரலை தீர வுரீஇ :]

கேள்வி அனைத்தும் போகா - நூற்கேள்வி அடைய முற்றுப்பெற்று,

3 கடிப்பகை அனைத்தும் அரலைதீர உரீஇ - வெண்சிறுகடுகளவும்

--------
    1 அருப்பம் - அருமை.
    2 "நெகிழ வேண்டுமிடத்து நெகிழ்ந்தும்இறுக வேண்டுமிடத்து இறுகியும் நரம்பு துவக்கும்வார்க்கட்டு "(சிறுபாண். 221 - 2, ந ; பெரும்பாண்.12 - 3, ந.)
    3 பேய்க்குப் பகையாதலின் வெண்சிறுகடுகைக்கடிப்பகையென்றார் "ஐயவிக் கடிப்பகை "(மணி.7 : 73)
------------

1 கொடும்பு இல்லையாம்படி 2தீற்றி,

முடங்கிப் பரற்றன்மையிருத்தலிற்கொடும்பை3 அரலையென்றார்.

அரலை - குற்றமுமாம். இனி, வெண்சிறுகடுகளவும்கேள்விதப்பாதென்பாருமுளர் ; அது வடிவிற்கு உவமையாதலிற்பொருந்தாது.

குரல் ஓர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின் - ஓசையை ஓர்ந்து பார்த்துக் கட்டினவடித்து முறுக்கின நரம்பினையும்,

கேள்வி போகா, உரீஇத் தொடுத்தநரம்பென்க.

24 - 5. வரகின் குரல் வார்ந்தன்ன நுண்துளை இரீஇ - வரகின் கதிர் ஒழுகின தன்மைத்தாகநெருங்கின நுண்ணிய துளைகளையிருத்தி,

இது , 4பொல்லம் பொத்துமிடத்திற்றுளை.5 "பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்,கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை"என்றார்பிறரும்.

26 -9. [சிலம்பமை பத்தல் பசையொடுசேர்த்தி, யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்,புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப், புதுவது போர்த்தபொன்போற் பச்சை :]

இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி -விளங்குகின்ற துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளைஇறுகத் தைத்து,

புதுவது வெண்கை புனைந்த யாப்புஅமைத்து - புதிதாக யானைக் கொம்பாற் செய்தயாப்பை அமையப்பண்ணி,

யாப்பு - பத்தலிற் குறுக்கே வலிபெறஓட்டுவது.

சிலம்பு அமை பத்தல் பசையொடுசேர்த்தி புதுவது போர்த்த பொன்போல் பச்சை -ஒலித்தலமைந்த பத்தலிலே 6பற்றோடே கூட்டிப்புதிதாகப் போர்த்த பொன்னிறம்போலும் நிறத்தையுடையதோலினையும்,

இரீஇ முடுக்கி அமைத்துச் சிலம்புதலமைந்தபத்தலிலே போர்த்த பச்சையென்க.

30 - 31. [ வதுவை நாறும் வண்டுகம ழைம்பான்,மடந்தை :]

வண்டு வதுவை நாறும் ஐம்பால் மடந்தைதன்னிடத்திருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடையநாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினையுடையமடந்தை,

வதுவைக்கு எல்லா மணமும் உளவாதல்பற்றிவதுவை நாறுமென்றார்.

-------
    1 கொடும்பு - கொடுமுறுக்கு (கொடி முறுக்கு)
    2 தீற்றி - உருவி.
    3 அரலை - சிறுகல்.
    4 பொல்லம் பொத்தல் - இரண்டுதலைப்பையுங் கூட்டித் தைத்தல் ; "பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை "(பொருந. 8)
    5 பெரும்பாண். 7 - 8.
    6 பற்று - பசின்.
--------------

கமழ் ஐம்பால் - 1 இயல்பானமணத்தையுடைய ஐம்பால்.

31 - 2. [ மாண்ட நுடங்கெழி லாகத்,தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப :] எழில் நுடங்குமடந்தை மாண்ட ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய அ வாய்கடுப்ப - 2அழகு கட்புலனாகி நின்றசையும் மடந்தையதுமாட்சிமைப்பட்ட மார்பிடத்தே சென்று பின்பு இல்லையானமயிர் ஒழுங்குபட்டுக் கிடக்கின்ற அழகிய வயிற்றிடத்தையொக்க,

33 - 4. அகடு சேர்பு பொருந்தி அளவினில்திரியாது கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி -பொல்லம்பொத்துதல் நடுவே சேரப் பட்டுக் கட்குஇனிதாய்த் தனக்குக் கூறுகின்ற அளவிலே வேறுபடாமற்பகுத்தலுண்டாக அகத்திட்ட உயர்ந்து வளைந்த உந்தியினையும்,

3 உந்தி - யாழகத்துஓருறுப்பு.

35 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடையகரியநிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தினகோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ்,

திவவினையும் (21) நரம்பினையும் (23)பச்சையினையும் (29) உந்தியினையும் (34) மருப்பினையுமுடையபேரியாழ் (37) என்க.

38. [அமைவரப் பண்ணி யருணெறி திரியாது:] பேரியாழ் (37) அருள் நெறி திரியாது அமைவர பண்ணி- பேரியாழைத் தனக்கு நூலினாற் கூறிய வழிகளைத் தப்பாதபடிபொருந்துதல்வரச் சமைத்து,

39 - 40. இசைபெறு திருவின் வேந்துஅவை ஏற்ப துறை பல முற்றிய - இசையை எக்காலமும் கேட்கின்றசெல்வத்தினையுடைய அரசர் அரசர்களுடைய

-----------
    1 இயல்பான மணம் - இயற்கை மணம் ;"செறியெயிற் றரிவை கூந்தலி, னறியவு முளவோநீயறியும் பூவே "(குறுந். 2 : 4 - 5)
    2 இவ்வழகு இலாவணிய மெனப்படும்.
    3 "உந்தி யென்பது, கொப்பூழினையும்,ஆற்றிடைக்குறையினையும், தேர்த்தட்டினையும்யாழ்ப்பத்தற்றுளையினையு முணர்த்தும் "(நன்.சூ. 271, மயிலை.)
    4 உயிர் - ஒலி ; குறிஞ்சி. 100, ந; "உயிரி லெழுத்து மெண்ணப்படாஅ "(தொல்.செய். சூ. 44)
    5 பேரியாழ் - இருபத்தொரு நரம்புகளையுடையது; பெருங்கலமெனவும் படும். இதனுடைய இலக்கணம், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லாருரைப் பாயிரத்தாலறியலாகும்.
-------

அவைக்களத்தே அவர்கள் செவிக்கொள்ளும்படிதாம்வாசிக்கும் 1 துறைகள் பலவற்றையும் வாசித்து முடித்த,

40. பை தீர் பாணரொடு - 2பசுமையற்ற பாணரோடே,

என்றது , கல்வி முதிர்ந்தமையின்இளமையற்ற பாணரென்றவாறு.

41. உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்றுஏறலின் - உயர்ந்து வளர்ந்த கற்கள் தம்மிற்றொடரும்பெரிய மலைகள் வேறோரிடையூறின்றாக ஏறிவருகையினாலே,

42 - 3. [மதந்தபு ஞமலி நாவி னன்ன,துளங்கியன் மெலிந்த கல் பொரு சீறடி :] துளங்கு இயல்மெலிந்த மதம் தபு ஞமலி நாவின் அன்ன கல் பொரு சிறுஅடி - அசைகின்ற இயல்பினான் இளைத்த வலி கெட்ட நாயினதுநாவினையொத்த கல்லுப்பொருகின்ற சிறிய அடியினையும்,

ஏறலின் மெலிந்த அடியென்க.

44 - 6. [ கணங்கொ டோகையிற்கதுப்பிகுத் தசைஇ, விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்,திலங்குவளை விறலியர் நிற்புறஞ்சுற்ற :]

விலங்கு மலைத்து அமர்ந்த சேயரிநாட்டத்து - மானோடு மாறுபட்டுப் பொருந்தின செவ்வரியையுடையகண்ணினையும்,

இலங்கு வளை விறலியர் -விளங்குகின்ற வளையினையுமுடைய விறல்படப்பாடியாடுவார்,

கணம் கொள் தோகையின் கதுப்புஇகுத்து அசைஇ நின் புறம் சுற்ற - திரட்சியைக் கொண்டமயில்போலே மயிரைத்தாழ்த்து இளைத்து நின்னைப்புறத்தே சூழ,

அடியினையும் (43) நாட்டத்தினையும்(45) வளையினையுமுடைய விறலியர் (46) கதுப்பிகுத்துஅசைஇக் (44) சுற்ற (46) என்க.

47 - 8. [ கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்,புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் :]

3 புனல் கால் கழீஇய மணல்வார் புறவில் - பெருகும்நீர் துராலை வாரிக்கொண்டு போன மணலொழுங்குபட்ட சிறுகாட்டிடத்தில், கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்- குளத்திலே புகுந்தாலொத்த பயனைத்தருகின்றகுளிர்ந்த நிழலிலே,

-------
    1 துறைபலவென்றது, வலிவு, மெலிவு,சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழுதானம்முடித்துப்பாடும் இருபத்தொரு பாடற்றுறைகளை ; "மூவேழ்துறையு முறையுளிக் கழிப்பி "(புறநா. 152 : 20) ;"ஏழே யேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா வஞ்சத்தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்"(தே. தாளச்சதி.)
    2 பசுமை - இளமை ; "பசுங்கதிர் -பச்சைக் கதிர் ; பசுமை நிறத்திற் சென்றதன்று ;இளமையிற் சென்றது "(தக்க. 605, உரை)

    3 "புனல்கால் கழீஇய - நீர்பெருகியகாலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப் போன"(பெரும்பாண்.380, ந.)
-----------------

49 - 50. [புலம்புவிட் டிருந்தபுனிறில் காட்சிக், கலம்பெறு கண்ணுள ரொக்கற்றலைவ :]

புலம்பு விட்டு இருந்த காட்சி கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - வழிவந்த வருத்தத்தைக்கைவிட்டிருந்த அறிவினையுடைய பேரணிகலங்களைப் பெறுங்கூத்தருடைய சுற்றத்திற்குத் தலைவனே,

புனிறு இல் ஒக்கல் - ஈன்றணிமையில்லாதசுற்றம்,

என்றது, பிள்ளையைப் பெற்றவர்கள்பிள்ளையைக்கொண்டு கூட வந்திலர்களென்றவாறு.

கலப்பையிராய் (13) இயவுக்கொண்டொழுகி(20) யாழைப் (37) பண்ணித் (38) துறைபலமுற்றிய பாணரோடு(40) விறலியர் புறஞ்சுற்றத் (46) தண்ணிழலிலே (47)இருந்த (49) கண்ணுளரொக்கற்றலைவனே (50) என வினைமுடிக்க.

கலப்பையிரென்னும் பன்மைதலைவனென்னுமொருமையொடு முடிந்தது, "ஓருமை சுட்டிய"(தொல். எச்ச. சூ. 65) என்னுஞ் சூத்திரத்தால்.

51 - 3. தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்மீமிசை நல்யாறு கடல் படர்ந்தா அங்கு யாம் அவண்நின்றும் வருதும் - தூய பூக்கள் நெருங்கின கரையைப்பொருகின்ற ஓக்கத்தினையுடைய மலையுச்சியினின்றும்இழிந்த நல்லயாறு கடலைநோக்கிப் போனாற்போலயாம் அவனை நோக்கிச் சென்று சில பெற்றுவருகின்றேம்;

இனி, 1மலையிற்பொருள்களைவாரிக்கொண்டு யாறு கடலைநோக்கிப்போனாற்போல அவ்விடத்துள்ள பொருள்களைவாரிக்கொண்டு வருகின்றேமென்றுமாம்.

53 - 5. [ நீயிருங், கனிபெழி கானங்கிளையொ டுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளின மான :]

கனி பொழி கானம் கிளையொடுஉணீஇய துனை பறை நிவக்கும் புள் இனம் மான : பழங்களைச்சொரிகின்ற காட்டிற் பழங்களைச் சுற்றத்தோடே சென்றுதின்றற்கு விரைந்த பறத்தற்றொழிலிலே ஓங்கும்பறவைத்திரளை யொக்க,

நீயிருமென்பது 2 மேலே கூட்டுதும்.

56. புனை 3 தார் பொலிந்தவண்டு படு மார்பின் – கைசெய்த மாலையாற் பொலிவுபெற்ற வண்டுகளைஉண்டாக்குகின்ற மார்பினையுடைய கணவன் (58) என்க.

------------
    1 பெரும்பாண். 427, உரையைப்பார்க்க.
    2 மேலே யென்றது 65-ஆம் அடியினுரையை.
    3 தார் - மார்பின்மாலை ; "பொலந்தார்மார்பி னெடியோன் "(மதுரைக். 61) ; "தாரொடுபொலிய - தங்கணவர் மார்பின் மாலையோடே அழகுபெற"(மதுரைக். 264 - 6, ந.)
--------------

57. வனை புனை எழில் முலை- ஓவியங்களிலே முலையாகப் பண்ணின கைசெய்த அழகைத் தன்னிடத்தேயுடையமுலையினையும்,

வாங்கு அமை திரள் தோள் - வளைந்தமூங்கிலையொத்த திரண்ட தோளினையும்,

58. மலர் போல் மழை கண் 1மங்கையர்கணவன் - பூப்போலும் குளிர்ச்சியையுடைய கண்ணினையுமுடையகற்புடை மகளிர்க்குக் கணவன்.

59. முனை பாழ் படுக்கும் துன்அருதுப்பின் - பகைப்புலத்தைப் பாழுண்டாக்கும் கிட்டுதற்கரியவலியினையும்,

60. [ இசைநுவல் வித்தி னசையேருழவர்க்கு] நுவல் இசைவித்தின் நசை ஏர் உழவர்க்கு- தாம் பிறரைக்கூறும் புகழாகிய விதையாலேபிறர்பொருள்களை நச்சுதலாகிய ஏருழவினையுடையபரிசிலர்க்கு,

என்றது , புகழைவித்திப்பொருளையெடுப்பரென்றவாறு.

61. புது நிறை வந்த புனல் அம் சாயல்- புதுப்பெருக்காய்வந்த நீர்போலும் அழகையுடைய மென்மையினையும்,

என்றது, தண்ணீர் அரியகாலத்தேவந்துபயன்தருமாறுபோல இவனும் பயன்றருவனென்றவாறு.

62. மதி மாறுஓரா நன்று உணர் சூழ்ச்சி- தனதறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேட்டை நினையாதுஆக்கத்தினையேயுணரும் நினைவினையும்,

63. வில் நவில் தட கை -விற்றொழிலிலே பயின்ற பெரிய கையினையும்,

மேவரும் பெரும்பூண் - பொருந்துதல்வரும் பேரணிகலங்களையுமுடைய,

64. நன்னன் சேய் நன்னன் படர்ந்தகொள்கையொடு - நன்னன் மகனாகிய நன்னனை நினைத்தகோட்பாட்டுடனே,

துப்பினையும் (59) சாயலினையும் (61)சூழ்ச்சியினையும் (62) கையினையும் பூணினையும் (63)உடைய நன்னனென்க.

65. உள்ளினிர் சேறிராயின் - அவன்தரும் பரிசில்கள் இவையென்று அப்பரிசில்களை உள்ளினிராய்நீயிரும் (53) செல்வீராயின்,

65- 6. [பொழுதெதிர்ந்த,புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலின் :] என் தாக்குறுதலின்எதிர்ந்த பொழுது புள்ளினிர் மன்ற- என்னை எதிர்ப்படுகையினாலே நீர்புறப்படுகின்றபொழுது நுமக்குவரும் ஆக்கத்தை எதிர்கொண்டுநின்ற நன்முகூர்த்தத்தோடே நன்னிமித்தத்தையும்உடையிராயிருந்தீர், அறுதியாக ;

---------
    1 மக்களுட் பெண்பாலாரைப்பாடுதல்சிறப்பின்மையின் இவ்வாறு கணவரோடு சேர்த்துப்பாடுதல் மரபென்பர் : தொல். புறத்திணை. சூ. 26,ந.
--------------

67. ஆற்றின் அளவும் - வழியினது நன்மையினதுஅளவும் தீமையினதளவும்,
அசையும் நல் புலமும் - நீர் தங்கும்நன்றாகிய இடங்களும்,

68. வீறு வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும் - பிறர் நாட்டுக்கு இல்லாத செல்வத்தைமாறாமற்கொடுக்கும் அவன் நாடு விளைகின்றஉணவுகளும்,

நாடெனவே 1 மலைநாடும் காட்டுநாடும் தண்பாணை நாடுங் கூறினார் ; அது மேற்காண்க.

69. மலையும் - அவனாட்டின் மலைகளின்தன்மையும்,

சோலையும் - அவனாட்டிற் சோலைகளின்தன்மையும்,

மா புகல் கானமும் - விலங்குகள்விரும்பித்திரியுங் காட்டின் தன்மையும்.

ஆற்றினதளவு முதலிய ஐந்தினையும்இக் கூறியமுறையே கூறாமல் மயங்கக் கூறுவர், கூறும்வழிக்கண்ஆண்டுள்ளனவே கூறவேண்டுதலின்,

70 - 72. தொலையா நல் இசை உலகமொடுநிற்ப பலர் புறம் கண்டு அவர் அருங்கலம்புலவோர்க்கு தரீஇ சுரக்கும் அவன் ஈகை மாரியும் - கெடாதநல்லபுகழ் உலகமுள்ளளவும் நிற்கும்படியாகப் பகைவர்பலரையும் முதுகுண்டு அவர் திறையாகத் தந்த பெறுதற்கரியபேரணிகலங்களை முற்பட அறிவுடையோர்க்குக் கொடுத்துப்பின் அவர்க்குச் சொரியும் அவன் பொன்மழையும்,

73. இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் -தன்னை இகழ்ந்திருக்கும் பகைவரை அரசுகொடாமற்சுருக்கும் அறிவின்வலியும்,

73 - 6. புகழுநர்க்கு அரசு முழுதுகொடுப்பினும் அமரா நோக்கமொடு தூ துளி பொழிந்தபொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள்மகிழ்இருக்கையும் - 2 சூதர் மாகதர் பாணர் கூத்தர்முதலியோர்க்குக் தான் புறங்கண்ட பகைவரரசை முற்றுங் கொடுப்பினும் அமைதி பிறவாத அறிவுடனே தூய துளியைப் பெருகச் சொரிந்த பருவம் பொய்யாத மேகம் பின்னரும் பெய்யுமாறு போலப் பின்னரும் மாறாமற் சொரியும் அவனுடைய நாளோலக்கமும்,

----------
    1 மலைநாடு - குறிஞ்சி, காட்டுநாடு -முல்லை, தண்பணைநாடு - மருதம்.
    2 சூதர் - நின்றேத்துவார் ; மாகதர்- இருந்தேத்துவார் ; மதுரைக். 676, ந.
---------------

நோக்கு - 1 நோக்கனோக்கம்."வீயாவீண்டும் "என வீயாமை அகற்சிமேற்று.

77 - 80. [ நல்லோர் குழீஇய நாநவிலவையத்து, வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்,சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதினியக்குமவன் சுற்றத் தொழுக்கமும் :] நா நவில் 2நல்லோர்குழீஇய அவையத்து சென்றோரை வல்லாராயினும் புறம்மறைத்து சொல்லி காட்டி சோர்வு இன்றி விளக்கிநல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் - தாம்கற்றவை நாவிடத்தே பயின்ற நல்ல அறிவினையுடையோர் திரண்ட தன் அவைக்களத்திடத்தே சென்ற அறிவுடையோரைத் தாம் கற்றவற்றை மனங்கொள்ளக் கூறமாட்டாராயினும் மாட்டாமையை மறைத்துத் தாம் பொருளைச்சொல்லிக்காட்டி அதனைத் தப்பின்றாக எல்லார் மனமுங் கொள்ளும்படி அறிவித்து நன்றாகநடத்தும் அவனுடைய சுற்றத்தாருடைய பேரொழுக்கமும், நவிலுதல் - கூறியடிப்படுதல் . சுற்றம்- கல்வியுடையோர்.

-------
    1 நோக்கு அல் நோக்கம் - கண்ணால்நோக்கும் நோக்கமன்றி மனத்தால் நோக்கும் நோக்கம்; அஃதாவது கருதுதல் ; தொல். வேற்றுமைமயங்கு. சூ.10, ந.
    2 நல்லோர் குழீஇய அவை - நல்லவையும்நிறையவையும் ; அவற்றுள் , "நல்லவை யென்பது நாடுங்காலை, எத்துறை யானு மிருவரு மியம்பும், அத்துறை வல்லோரறனொடு புணர்ந்தோர், மெய்ப்பொருள் கண்டோர்மிக்கவை யோர்ப்போர், கற்றவர் கல்விக் கடாவிடையறிவோர், செற்றமுஞ் சினமுஞ் சேரா மனத்தோர்,முனிவொன் றில்லோர் மூர்க்கரல்லோர், இனிய முகத்தோரிருந்துரை கேட்போர், வேந்த னொருவர்க்குப்பாங்கு படினும், தாந்தா மொருவர்கட் பாங்கு படாதோர்,அன்னோர் முன்னரக் கூறிய பொழுதில், தொலையு மாயினுந்தொலைவெனப் படாது, வெல்லு மாயினு மிகச்சிறப்புடைத்தே ", "நிறையவை யென்பது நினையுங்காலை, எல்லாப் பொருளுந் தன்னகத் தடக்கி, எதிர்வருமொழிகளையெடுத்துரைப் பதுவே "(யா - வி. ஒழிபு.சூ. 3, மேற்.) ; "புகழுந்தருமநெறி நின்றோர்பொய்காமம், இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்,எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ, நல்லாயவைக்கு நலம் ", "நலனடக்கஞ் செம்மைநடுவுநிலை ஞானம், குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர், சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம் , அன்றோ நிறைந்த வவை "(வெண்பாப்பாட்டியல், பொது. 9, 10) ; "ஆறுட் பகைசெற் றருங்கலை யோர்ந்து,பாரிற் கீர்த்தி படைத்தோர் வைகுதல், நல்லவையடக்கம் வாய்மை நடுநிலை, சொல்லு நன்மை யுடையோர்தொகைஇ, வல்லார் மொழியினும் வல்லுநராக்கிக், கேட்போருறையவை நிறையவை யாகும் "(இ - வி. சூ. 936, உரை,மேற்.)
----------------

81 - 3. நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடு திறல் பெரு இசை நவிரம் மேஎய் உறையும் காரிஉண்டி கடவுளது இயற்கையும் - கடல் சூழ்ந்த உலகுநடுங்கும்அஞ்சுதல்தோன்றுங் கடியவலியையுடைய பெரிய புகழினையுடைய1நவிரமென்னுமலையைப் பொருந்தியிருக்கும்நஞ்சை ஊணாகவுடைய இறைவனது இயல்பும்,

பனிக்குங்காரி ; திறலினையுடையகாரி.

84 - 5. பாய் இருள் நீங்க பகல் செய்யாஎழுதரும் ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் -பரந்த இருள்நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து தோன்றும்2ஞாயிற்றையொத்த அவனுடைய 3பகையாகியஇருளைக் கடிந்த குற்றமில்லாத தலைமையும்,

86 - 9. [ 4இகந்தன வாயினுந் தெவ்வர்தேஎ, நுகம்படக் கடந்து நூழி லாட்டிப், புரைத்தோல்வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக், கொடைக்கடனிறுத்தவவன் றொல்லோர் வரவும் :] தெவ்வர் தேம்இகந்தனஆயினும் நூழிலாட்டி நுகம் பட கடந்து புரை தோல்வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு கொடை கடன்இறுத்த அவன் தொல்லோர் வரவும் - பகைவர் தேயம் சேணிகந்தனவாயினும்ஆண்டுச் சென்று 5தூசிப்படையைக் கொன்றுகுவித்துவலியுண்டாகவென்று பின்னர் உயர்ச்சியையுடையயானை அணிந்து நிற்கின்ற அணியிலே சென்று பொருத 6வேற்போரின்விளக்கத்தையுடைய அறிவுடையோர்க்குக் கொடுத்தற்குரியநாடும் ஊரும் முதலியவற்றைக் கொடுத்த அவனுடையகுடியிலுள்ளோர் தோற்றரவும்.

---------
    1 நவிரமென்னும் மலை இக்காலத்துத் திரிசூலகிரி யென்றும் பருவதமலை யென்றும் வழங்கப்படுகின்றது; இதில் காரியுண்டிக் கடவுளுடைய திருக்கோயில்இருக்கின்றது ; இக்காலத்து வழங்கும் அவரது திருநாமம் ஸ்ரீ காளகண்டேசுவரரென்பது ; இம்மலை திருவண்ணாமலையின்வாயுதிக்கில் (வடமேற்கில்) உள்ளது.
    2 பகையைக்கடிதலுக்கு ஞாயிறுஇருளைக் கெடுத்தல் உவமை : "ஈண்டுநீர் மிசைத்தோன்றியிருள்சீக்குஞ் சுடரேபோல், வேண்டாதார் றனையை நின்பகைவர்க்கு"(புறநா. 59 : 6)
    3 "உறை நிறுத்திய வாளினாற்பகையிரு ளொதுக்கி"(திருவிளை. நாடு. 1).
    4 புறநா. 31 : 9 - 11.
    5 தூசிப்படை - முற்படை.
    6 வேற்போர் : யானையைக்குத்துதற்குவேலுரியதாகலின் யானையணியிலே வேற்போரைக் கூறினார்; மலைபடு. 129, குறிப்புரை.
---------

1 காஞ்சிசான்ற வயவராதலின்,அவரைப் புலவரென்றார்.

90 - 91. இரை தேர்ந்து இவரும் கொடு தாள்முதலையொடு திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின் - இரையைத் தேடியுலாவும் வளைந்த காலினையுடைய முதலைகளோடே திரையுண்டாக ஆழ்ந்த கல்லை யகழ்ந்த கிடங்கினையும்,

92. வரை புரை நிவப்பின் வான் தோய்இஞ்சி - மலையையொத்த உயர்ச்சியையுடைய வானைத்தீண்டும்மதிலினையுமுடைய,

93 - 4. உரை செல வெறுத்த அவன் மூதூர்மாலையும் கேள் - புகழ் எங்கும் பரக்கும்படி செறிந்தஅவனுடைய பழைய ஊரினதியல்பும் இருக்கும்படி கேட்பாயாக ;

ஆற்றினதளவு முதலியவற்றையெண்ணிஇன்னதும் இன்னதும் இருக்கும்படி கேட்பாயாக வெனமுடிக்க.

94. [ இனி வேளை நீ முன்னிய திசையே:] இனி நீ 2 வேளை முன்னிய திசையே கேள் - அவற்றில்இப்பொழுது நீ நன்னனைக் கருதிச் செல்கின்ற திசையைக்கேள் ;

திசை ஆற்றினளவை யுணர்த்திநிற்றலின்ஆகுபெயராயிற்று ; ஏகாரம் : பிரிநிலை.

95 - 6. மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்புதுவது வந்தன்று - மிகுகின்ற செல்வம் முற்றுப்பெற்றபுதுவருவாயையுடைய ஊர்களாலே புதிதாகிய தன்மை வந்தது;

96. [இது வதன் பண்பே :] அதன் பண்புஇது - அவ்வழியின் செய்தி இத்தன்மைத்து ;

97 - 8. [வானமின்னு வசிவு பொழியவானா, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய : ஆனாதுஇட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய வானம் மின்னு வசிவுபொழிய - அமையாதே நிலத்தேயிட்ட விதைகளெல்லாம் இன்னவாறே விளையவேண்டுமென்று ஆண்டுள்ளார் விரும்பினாற்போலே விளையும்படியாக மேகம் மின்னாகிய பிளந்து வடுப்படுதலோடே பெய்கையினாலே,

99. பெயலொடு வைகிய வியல் கண் இருபுனத்து - அம்மழையோடே தங்கின அகன்ற இடங்களையுடையபெரிய கொல்லைநிலத்தே,

100 - 101 [அகலிரு விசும்பி னாஅல்போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை :] புல்கொடி முசுண்டை அகல இரு விசும்பின் ஆல்போல வாலிதின்விரிந்த - புல்லிய கொடியினை

---------
    1 காஞ்சி சான்ற வயவர் - நிலையாமையைஎப்பொழுதும் உள்ளத்துக் கொண்டிருத்தலமைந்த வீரர்; காஞ்சி சான்ற வயவர் பெரும "(பதிற். 65 : 4,90 : 39)
    2 வேள் - நன்னன், மலைபடு. 163 -4, ந.
------------

உடைய முசுண்டை 1ஏனைப் பூதங்கள் தோன்றுதற்குக்காரணமான பெரிய ஆகாயத்திற் 2 கார்த்திகையாகிய மீன்போலவெள்ளிதாக மலர்ந்தன ;

3 ஆரல், ஆலெனவிகாரம்.

102 - 6. [நீலத் தன்ன விதைப்புனமருங்கின், மகுளி பாயாது மலிதுளி தழாலி, னகளத் தன்னநிறைசுனைப் புறவிற், கௌவை போகிய கருங்காய்பிடியேழ், நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண் :] பல்கவர் ஈர் எண் நீலத்து அன்ன விதை புனம் மருங்கின் அகளத்துஅன்ன நிறை சுனைபுறவின்மகுளி பாயாது மலிதுளிதழாலின்4 கௌவை போகிய கரு காய் பிடி ஏழ் நெய்கொள ஒழுகின - பலவாகக் கிளைத்த பசிய எள்ளுத் தோடுகளெல்லாம்நீலமணியையொத்த நிறத்தையுடையவாயெழும் படி அவற்றைவிதைத்த கொல்லையின்பக்கத்தில் நீர்ச்சாலையொத்தநிறைந்த சுனைகளையுடைய காட்டிடத்தே அரக்குப்பாயாமல்மிக்க துளி தழுவுகையினாலே இளங்காயாகிய தன்மைபோனகரிய காய் ஒருபிடியிலே ஏழ்காயாக நெய் உள்ளேகொள்ளும்படியாக வளர்ந்தன ;

107 - 8. [பொய்பொரு கயமுனி முயங்குகைகடுப்பக், கொய்பத முற்றன குலவுக்குர லேனல் :] 5பொய்பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப குலவு குரல் ஏனல்கொய் பதம் உற்றன - தம்மில் விளையாடிப்பொருகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றோடென்றுசேர்ந்தகைகளையொப்பத் தம்மிற் பிணையுங்கதிர்களையுடையதினை அறுக்குஞ் செவ்வியாக முற்றின ;

109 - 10. [ விளைதயிர்ப் பிதிர்வின்வீயுக் கிருவிதொறுங், குளிர்புரை கொடுங்காய் கொண்டனவவரை :] அவரை இருவிதொறும் விளை தயிர் பிதிர்வின்வீ உக்கு குளிர் புரை கொடு காய் கொண்டன - அவரைகள்தினையரிதாள்தோறும் முற்றின தயிரினது பிதிர்ச்சிபோலும்பூக்களுதிர்ந்து அடியிலே அரிவாளை யொக்கும் வளைந்தகாயைக்கொண்டன ; குளிர் - கிளிகடிகருவியுமென்ப.

-----------
    1 பெரும்பாண். 1, குறிப்புரை.
    2 "மழையில் வான மீனணிந் தன்ன,குழையமன் முசுண்டை வாலிய மலர"(அகநா. 264 : 1 -2)
    3 "வடவயின் விளங்கா லுறையெழுமகளிருட், கடவு ளொருமீன் சாலினி"(பரி. 5 : 43-4 ) என்பதும் , ' ஆரலென்னும் பெயர் ஆலெனக் குறைந்துநின்றது ' என்னுமதனுரையும் இங்கே அறியற்பாலன.
    4 மதுரைக். 271, குறிப்புரை.
    5 "பொய்பொரு முடங்குகை "(சிலப்.15 : 50) என்றவிடத்து, புரைபொருந்திய வளைந்த கை' என்று அடியார்க்குநல்லார் உரையெழுதியிருத்தலின்பொய்பொரு என்பதைக் கைக்கு அடையாக்கிப்பொருள் கொள்ளலுமாம்.
-----------

111-3. [மேதி யன்ன கல்பிறங் கியவின்,வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி, யிரும்புகவர்வுற்றன பெரும்புன வரகே : ] பெருபுனம் வரகு மேதி அன்னகல் பிறங்கு இயவின் வாதி கை அன்ன கவை கதிர்இறைஞ்சி இரும்பு கவர்வுற்றன - பெரிய புனத்தில் வரகுகள்எருமை கிடந்தாற்போன்ற கற்பெருத்த வழியிடத்திலேதருக்கங் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களையொத்தஇரட்டித்த கதிர்கள் முற்றி வளைந்து அரிவாளாலேஅரிதலுற்றன ;

114-44. [பால்வார்பு கெழீஇப் பல்கவர்வளிபோழ்பு, வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்,வேலீண்டு தொழுதி யிரிவுற்றென்னக் காலுறு துவைப்பிற்கவிழ்க்கனைத் திறைஞ்சிக், குறையறை வாரா நிவப்பி னறையுற்,றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே, புயற்புனிறுபோகிய பூமலி புறவி, னவற்பதங் கொண்டன வம்பொதித்தோரை, தொய்யாது வித்திய துளர்படு துடவை, யையவியமன்ற வெண்காற் செறுவின், மையென விரிந்தன நீணறுநெய்தல் செய்யாப் பாவை வளர்ந்துகவின்,முற்றிக், காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து,வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும், விழுமிதின்வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை, காழ்மண் டெஃகங்களிற்றுமுகம் பாய்ந்தென, வூழ்மல ரொழிமுகை யுயர்முகந்தோயத், துறுகல் சுற்றிய சோலை வாழை, யிறுகுகுலை முறுகப்பழுத்த பயம்புக், கூழுற் றலமரு முந்தூ ழகலறைக், காலமன்றியு மரம் பயன் கொடுத்தலிற், காலி னுதிர்ந்தனகருங்கனி நாவன், மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை,நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந், துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந், தரலை யுக்கன நெடுந்தா ளாசினி, விரலூன்றுபடுக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்,கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச், சுரஞ்செல்கோடியர் முழவிற் றூங்கி, முரஞ்சுகொண் டிறைஞ்சினவலங்குசினைப் பலவே :]

பூ மலி புறவில் புயல் புனிறு போகிய(120) அம் 1 பொதி 2 தோரை அவல் பதம்கொண்டன (121) - பூ மிக்க காட்டிடத்தே மழையால் ஈன்றணிமைதீர்ந்துமுற்றிய அழகிய குலையினையுடைய 3 மூங்கில்நெல்அவலிடிக்குஞ் செவ்வியைக் கொண்டன ;

------------
    1 பொதி - பொதிந்தகுலை.
    2 தோரை - ஒருவகை நெல்லும் மூங்கில்நெல்லும் ; (மதுரைக். 287, ந.)
    3 இதனை , "அவலவலென்கின்றன நெல்"(தொல். எச்ச. சூ. 26, சே. ந. மேற்.) என்பதுவிளங்கச் செய்கின்றது.
--------------

இது மூங்கில் ஐயவி (123) தொய்யாது துளர் படு துடவைவித்திய (122) அமன்ற (123)- வெண்சிறுகடுகு உழாதே களைக்கொட்டால்அடிவரைந்து கொத்தும் தோட்டங்களிலே விதைக்கப்பட்டனவாய்நெருங்கி விளைந்தன;

இஞ்சி (126) செய்யா பாவை வளர்ந்துகவின் முற்றி (125) 1காயம் கொண்டன(126)-இஞ்சிமுதல் ஒருவராற் பண்ணப்படாத பாவைகள்வளரப்பட்டு அழகு முதிர்ந்து 2 காழ்ப்பைக்கொண்டன;

கொழு கொடி கவலை (128) குழிதொறும்வயவு பிடி முழந்தாள் கடுப்ப (127) விழுமிதின் 3வீழ்ந்தன (128) - கொழுவிய கொடியினையுடைய கவலை குழிகடோறும்வலிய பிடியின் மடித்த முழந்தாளை யொக்கும்படிசீரிதாகக் கீழே வளர்ந்தன ;

மா இருந்து (126) வீழ்ந்தன (128) -முற்றி மாவாந்தன்மை தம்மிடத்தே உளவாய் வீழ்ந்தன;

காழ் மண்டு எஃகம் களிறுமுகம்பாய்ந்தென (129) - காம்பிலே தைத்த வேல் யானையைக்குத்திற்றென்னும்படியாக,

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய(130) - துறுகல் சுற்றிய சோலை வாழை (131)- முறைப்பட மலர்தலையொழிந்தமுகைகளினுடைய உயர்ந்த முகங்கள் சென்று தீண்டும்படியாகநெருங்கின மலைகளைச் சூழ்ந்துநின்ற சோலையாகியவாழை.

வேல் யானையைக் குத்தினாற்போலவாழைப்பூ மலையைத்தீண்டி நின்றதென்றுணர்க ; வாழைப்பூஉதிர்ந்து பின்பு உலராதுநிற்றல் இயல்பு.

இறுகு குலை முறுக பழுத்த (132) -காய்நெருங்கின குலை மிகவும் நெகிழும்படி பழுத்தன ;

உந்தூழ் ஊழுற்று (133) பயம் புக்கு (132)அலமரும் (133) - பெருமூங்கில் நெல்லு முற்றுதலுற்றுப் பயன்படுந்தன்மையிலே புகுந்து அசையாநிற்கும் ;

மரம் காலம் அன்றியும் பயன்கொடுத்தலின் (134) - ஆண்டுள்ள மரங்கள் தாம் காலமன்றியும்நிலவிசேடத்தாற் பயனைக்கொடுத்தலின் ,

நாவல் காலின் கரு கனி (135) அகல்அறை (133) உதிர்ந்தன (135) - நாவல் காற்றாலே கரியபழம் அகன்ற பாறையிலே உதிர்ந்தன ;

இது சினைவினை முதலொடு முடிந்தது.

----------
    1 காயம் - உறைப்பு ; "உப்பொடுநெய்பா றயிர்காயம் பெய்தடினும் "(நாலடி.116)
    2 காழ்ப்பு - உறைப்பு.
    3 மதுரைக். 534, குறிப்புரை.
------------

நீர் ஊறு உயவை மாறு கொள ஒழுகின(136) - விடாய்த்த காலத்தில் வாய் நீரூறுதற்குக் காரணமானஉயவைக்கொடி நீரோடே மாறுபாடு கொள்ளும் படி படர்ந்தன;

என்றது, தண்ணீர் தேடவேண்டாவென்றவாறு.

கூவை 1 நூறொடு குழீஇயின (137) -கூவைக்கிழங்கு நீறாந்தன்மையோடே முற்றித்திரண்டன;

தேமா (138) சேறு சிறந்து (137) உண்ணுநர்தடுத்தன (138) - பழமாக்கள் சாறுமிக்கு 2 உண்பாரைவேறொன்றிற் செல்லவொட்டாமல் தடுத்துக்கொண்டன;

நெடு தாள் ஆசினி (139) 3 புண்அரிந்து (138) அரலை உக்கன (139) - நெடிய அடியையுடைய ஆசினிப்பலாப்புண்ணாம்படி வெடித்து உள்ளுள்ள விதைகள் சிந்தின ;

விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப(140) குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து (141) - விரல்தீண்டுகின்றமுழங்குங்கண்ணையுடைய சிறுபறையை ஒக்கப் பேராந்தைபேடும்சேவலும் மாறிக் கூப்பிடும் நெடிய மலைப்பக்கத்தே,

அலங்கு சினை பலவு (144) கார் வாய்த்துஎதிரி (142) சுரம் செல் கோடியர் முழவின் (143) 4கீழும்மேலும் (142) தூங்கி (143) 5 முரஞ்சு கொண்டு இறைஞ்சின(144) - அசைகின்ற கொம்பினையுடைய பலாக்கள் மழை மிகப்பெய்யப்பட்டுஅதனைத் தாம் ஏற்றுக்கொண்டு வழிபோகின்ற கூத்தருடையமத்தளங்கள்போலே கீழும் மேலுந் தூங்கி முற்றுதல்கொண்டு தாழ்ந்தன ;

வெள் கால் செறுவில் (123) -வெள்ளிய அரிதாள்களையுடைய செய்யிலே,

---------
    1 நூறு - நீறு.
    2 "உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை- தன்னை நுகர்வாரை வேறொன்றை நுகராமற்றடுத்த...........பிண்டி"(மலைபடு. 445, உரை) ; "நெய்த லெருமையி னிரைதடுக்குநவுமென்றது நெய்தலானது அக்கரும்பு முதலாய மற்றோரிரையின் பாங்கரிற்செல்லாது தன்னையேநின்று தின்னும்படி தான்போதவுண்ட எருமைநிரையைத் தடுக்குமிடங்களுமென்றவாறு"(பதிற். 13 : 3 - 4, உரை) ; "செலல் விலங்குதேன்- தன்னைவிட்டுப் போகையை விலக்குந்தேன் "(தக்க.360, உரை)
    3 "பசும்பு ணென்றது புண்பட்டவாய்போலப் பழுத்து விழுந்த பழத்தினை "(பதிற்.61 : 1 ) என்பது இங்கே பயன்படும்.
    4 "வேரு முதலுங் கோடு மொராங்குத்,தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ் வன்னவீழ்கோட் பலவின் "(குறுந். 257 : 1 - 3)

    5 "முரஞ்சன் முதிர்வே "(தொல்.உரி. சூ. 35)
-------------

1 ஐவனம் வெண்ணெல் (115) பால் வார்பு கெழீஇ பல் கவர் வளிபோழ்பு (114) வாலிதின் விளைந்தன (115) - ஐவனநெல்லும் வெண்ணெல்லும் பால்கட்டிச் சிறிது முற்றிப் பலவாய்க் கவர்த்த காற்று ஊடறுக்கப்பட்டு நன்றாக விளைந்தன ;

வார்தல் ஒழுகுதலாதலிற் கட்டுதலையுணர்த்திற்று . கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று. பல்கவர்வளியெனவே நாலுகாற்றும் அடித்து முற்றுதல் கூறினார்.

தீ 2 கழை கரும்பு (119) கவிழ் கனைத்து (117) - இனிய கோலாகிய கரும்பு தோடு கவிழ்தலோடே தண்டுதிரண்டு,

அறை குறை வாரா நிவப்பின் (118) - 3 பாத்தி குறைபடுதலுண்டாகாத வளர்ச்சியோடே,

வேல் ஈண்டு தொழுதி இரிவு உற்றென்ன (116) கால் உறு துவைப் பின் இறைஞ்சி (117) - வேற்படைதிரண்ட தானை கெட்டுப்போதலை உற்ற தென்னும்படி காற்று மிகப் படுகின்ற ஆரவாரத்தாலே சாய்ந்து,

அறை உற்று (118) ஆலைக்கு அலமரும் (119) - வெட்டுதலுற்று ஆலையிலேசென்று பயன்படுதற்கு அசையாநிற்கும் ;

கரும்பு திரண்டு நிவப்போடே இறைஞ்சி அலமருமென்க.

நீள் நறு நெய்தல் மை என விரிந்தன (124) - நீண்ட நறியநெய்தல் கருமைதான் வடிவுகொண்ட தென்னும்படியாக அலர்ந்தன ;

நீ முன்னிய திசையைக்கேள் (94) ; வானம்பொழிகையினாலே (97), பெயலொடுவைகிய புனத்து (99) , முசுண்டை மலர்ந்தன (101) ; எண் ஒழுகின (106) ; ஏனல் கொய்பதமுற்றன (108) ; அவரை கொண்டன (110) ; வரகு கவர்வுற்றன(113) ; புறவிலே (120) ; தோரை கொண்டன (121) ; ஐயவி அமன்றன (123) ; இஞ்சி காயங்கொண்டன (126) ; கவலை வீழ்ந்தன (128) ; வாழை (131) பழுத்தன (132) ; உந்தூழ் அலமரும் (133) ; நாவல் உதிர்ந்தன (135) ; உயவை ஒழுகின (136) ; கூவை குழீஇயின (137) ; தேமாத் தடுத்தன (138) ; ஆசினி உக்கன (139) பலவு இறைஞ்சின (144) ; வெண்காற்செறுவிலே (123) ஐவனநெல்லும் வெண்ணெல்லும் விளைந்தன (115) ; கரும்பு அலமரும் (119) ; நெய்தல் விரிந்தன (124) ; இவ்வாறே மிக்க வளம் முற்றுப்பெற்ற புதுவருவாயையுடைய ஊர்களாலே (95) புதிதாகிய தன்மைவந்தது ; அவ்வழியின்பண்பு இத்தன்மைத்து (96) என வினைமுடிக்க.

இஃது 4 ஆற்றினது நன்மையின் அளவுகூறிற்று.

---------
    1 மதுரைக். 288, குறிப்புரை.
    2 கழைக்கரும்பு, ஒருவகைக் கரும்பென்பாருமுளர்.
    3 "கரும்புநடு பாத்தி "(குறுந். 262 : 7 ; ஐங். 65 : 1)
    4 மலைபடு. 67.
----------

145. தீயின் அன்ன ஒள் செ காந்தள்- நெருப்பினையொத்த ஒள்ளிய செங்காந்தளினது,

இதற்கு நன்னனென்னும்பெயர் தீயோடடுத்ததன்மையின் , 1 ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும்இறந்தாரென்று ஆளவந்தபிள்ளையாசிரியர் குற்றங்கூறினாராலெனின்,அவர் அறியாதுகூறினார் ; செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக்குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல்,இவர் நல்லிசைப்புலவராகார் ; இவர்செய்த செய்யுளைநல்லிசைப்புலவர்செய்த ஏனைச்செய்யுட்களுடன் சங்கத்தார்கோவாமல் நீக்குவர்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக்காரணம் ஆனந்தக்குற்ற மென்பதொரு குற்றம் இச்செய்யுட்குஉறாமையானென்றுணர்க.

இச்சொன்னிலை நோக்குமிடத்துஒருகுற்றமுமின்று ; என்னை ? அன்னவென்னும் அகரவீற்றுப்பெயரெச்ச உவமவுருபு தீயென்னும் பெயரைச் சேர்ந்துநின்றுஇன்சாரியை இடையே அடுத்துநிற்றலின். நன்னனெனநகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக்குற்றம் உளதாவதெனமறுக்க. நன்னவென அண்மைவிளியாய்நின்றமுன்னிலைப் பெயரென்று குற்றங்கூறுவார்க்கு இப்பாட்டுப்படர்க்கையேயாய் நிற்றலிற் குற்றமின்றென்க.

நூற்குற்றங்கூறுகின்ற 2 பத்துவகைக்குற்றத்தே,3 "தன்னா னொரு பொருள் கருதிக் கூறல்"என்னுங்குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்றமென்பதொருகுற்றமென்று நூல்செய்ததன்றி 4 அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளாரெனமறுக்க.

---------
    1ஆனந்தமாய் - ஆனந்தக்குற்றமாகி; ஆனந்தக்குற்றமென்பது எழுத்தானந்தம், சொல்லானந்தம்,பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தமென அறுவகைப்படும் ; அவற்றுள் இங்கே சொல்லியதுசொல்லானந்தத்திலடங்குமென்பர் ; "இயற்பெயர்மருங்கின் மங்கல மழியத், தொழிற்சொல்புணர்ப்பினது சொல்லானந்தம்"யா - வி. ஒழிபு ;யா - கா ; ஒழிபு. 9 , உரை ; இ - வி. 887.
    2 பத்துவகைக்குற்றங்களாவன : "சிதைவெனப் படுபவை வசையற நாடிற், கூறியது கூறன் மாறுகொளக்கூறல், குன்றக் கூறன் மிகை படக்கூறல், பொருளிலமொழிதல் மயங்கக் கூறல், கேட்போர்க்கின்னாயாப்பிற் றாதல், பழித்த மொழியா னிழுக்கங்கூற, றன்னா னொரு பொருள் கருதிக் கூற, லென்ன வகையினுமனங்கோ ளின்மை, யன்ன பிறவு மவற்றுவிரி யாகும்"(தொல். மரபு. சூ. 108)
    3 "தன்னானொருபொருள் கருதிக்கூறலென்பது மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற்காலத்தானொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும் பதமுடிப்பென்பதோர் இலக்கணம் படைத்துக்கோடலும் போல்வன " (தொல். மரபு. சூ. 108, பேர்.)
    4 "இனி ஆனந்தவுவமை யென்பனசிலகுற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றைஎவ்வாறு கோடுமெனின், அவைகள்தாம் அகத்துள்ளும்பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினுமடங்காமைவேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமுந்தொல்காப்பியமும் நூலாகவந்த சான்றோர் செய்யுங்குற்றம்வேறுபடாவென்பது "(தொல். உவம. சூ. 37, பேர்.)
--------------

146 - 7. தூவல் கலித்த புது முகை ஊன் செத்து அறியாது எடுத்த புல் புறம் சேவல் – மழையாலே செருக்கி வளர்ந்த புதிய முகையைத் தசையாகக் கருதிமுகை யென்றறியாதேயெடுத்த புற்கென்ற முதுகினையுடையபருத்து,

148. ஊன் அன்மையின் உண்ணாது உகுத்தென- தசையல்லாத படியாலே தின்னாமல் எவற்றையுஞ் சிந்திப்போகட்டதாக,

149 - 50. நெருப்பின் அன்ன பல் இதழ்தாஅய் வெறி களம்கடுக்கும் வியல் அறை தோறும் -நெருப்பினையொத்த பல இதழ்கள் பரந்து வெறியாடுகின்றகளத்தையொக்கும் அகன்ற பாறைகடோறும்,

151. மணம் இல் கமழும் மா மலை சாரல்- மணஞ்செய்த மனை போல மணக்கும் பெரிய மலைப்பக்கத்திற்சிறுகுடி (156) யென்க.

152. தேனினர் கிழங்கினர் ஊன்ஆர் 1வட்டியர் - தேனினையுடையராய்க் கிழங்கினையுடையராய்த்தசைநிறைந்த கடகத்தையுடையராய்,

153. சிறு கண் பன்றி பழுதுளிபோக்கி - சிறிய கண்ணையுடைய பன்றியிற் பழுதானவற்றைப்போக்கிஅதன் தசையையும்,

2 பழுதுளி ; உளி : பகுதிப்பொருள்விகுதி.

154 - 5. [பொருதுதொலை யானைக்கோடுசீ ராகத், தூவொடு மலிந்த காய கானவர் :] தூவொடுமலிந்த பொருது தொலை யானை கோடு சீர் ஆக காய கானவர்- மற்றுள்ள தசைகளோடேநிறைந்த வட்டிகளையும் தம்மிற்பொருதுபட்ட யானையினது கொம்புகள் காவுமரமாகக்காவிக்கொண்டுவந்த கானவருடைய,

156 - 7. செழு பல் யாணர் சிறுகுடி படினேஇரு பெரு ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் - வளவிய பலபுதுவருவாயினையுடைய

----------
    1 வட்டி , கடகம் - பனையகணியாற் செய்தபெரிய பெட்டி ; "முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறுசொரிந்த, வகன்பெரு வட்டி "(ஐங். 47 : 1 - 2)
    2 ' முறையுளி ; உளி : பகுதிப்பொருள்விகுதி' (பெரும்பாண். 462, ந.)
-----------

சிறிய ஊரிலே தங்கிற் கரியபெரிய சுற்றத்தோடே அவ்வுணவுகளை மிகவும் பெறுகுவிர்;

158. [ அன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கி:] அசைஇ அன்று அல்சேர்ந்து அவண் அல்கி - அவற்றைப்பெற்றுஇளைப்பாறி அற்றைநாள் இராப்பொழுதும் அவர்களுடனேபொருந்தி அவ்விடத்தே தங்கி,

159 - 60. கன்று எரி ஒள் இணர் கடும்பொடுமலைந்து சேந்த செயலை செப்பம் போகி - கன்றினநெருப்புப்போன்ற ஒள்ளிய பூங்கொத்துக்களைச்சுற்றத்தோடே சூடிச் சிவந்த அசோகமரத்தையுடைய செவ்வியவழியைப்போய்,

161 - 2. அலங்கு கழை நரலும் 1ஆரி படுகர் சிலம்பு அடைந்திருந்த 2 பாக்கம்எய்தி - அசைகின்ற மூங்கிலொலிக்கும் அரிதாயிழியும்வழிகளையுடைய சிலம்பைச் சேர்ந்திருந்த சீறூர்களைச்சேர்ந்து,

163 - 4. நோனா செருவின் வலம் படு நோன்தாள் மானம் விறல் 3வேள் வயிரியம் எனினே- பகைவரைப் பொறாமற் பொரும்போரினையும் வெற்றியுண்டாகும்வலியமுயற்சியினையும் மானத்தையும் வெற்றியையுமுடையநன்னனுடைய கூத்தரேமென்று கூறுவீராயின்,

165. நும் இல் போல நில்லாது புக்கு -நும்முடைய மனைபோல வாசலில்நில்லாதே உள்ளேசென்று,

166. கிழவிர் போல கேளாது கெழீஇ -முன்பே கிழமையுடையீர் போலே அவரைக்கேளாதேஉறவுகொள்ளுகையினாலே,

167. சேண் புலம்பு அகல இனிய கூறி - சேணிடைவந்த நுமது வருத்தந்தீரும்படி இனியமொழிகள் அவர்கூறி,

168. [பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண்வேவையொடு :] பொழிந்த நெய்க்கண் பரூஉ 4குறை வேவையொடு - மிகச்சொரிந்த நெய்யிடத்தேபருத்த தசைகிடந்து வெந்த பொரியலோடே ,

169. குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்- நிறவிய வடிவினையுடைய தினைச்சோற்றைப் பெறுகுவிர்;

170 - 88 [ ஏறித் தரூஉ மிலங்குமலைத்தாரமொடு , வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்,குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப், பழஞ்செருக்குற்றநும் மனந்த றீர, வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்,வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சியபைந்நிணப் பிளவை, பிணவுநாய் முடுக்கிய தடியொடுவிரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி,னின்புளிக் கலந்து மாமோ ராகக், கழைவளர் நெல்லினரியுலை யூழ்த்து , வழையமை சாரல் கமழத் துழைஇ, நறுமல ரணிந்த நாறிரு முச்சிக், குறமக ளாக்கிய வாலவிழ்வல்சி, யகமலி
யுவகை யார்வமொ டளைஇ, மகமுறை தடுப்பமனைதொறும் பெறுகுவிர், செருச்செய் முன்பிற்குருசின் முன்னிய, பரிசின் மறப்ப நீடலு முரியி,ரனைய தன்றவன் மலைமிசை நாடே :]

-------
    1 ஆரி - அருமையையுடையது.
    2 பாக்கம் - பக்கத்திலுள்ளது.
    3 வேள் : மலைபடு. 94, ந.
    4 குறை - குறைக்கப்பட்டது.
--------------

அவன் மலை மிசை நாடு அனையது அன்று(188) - அந்நன்னனுடைய மலையினது உச்சியில் நாடு யான்முற்கூறிய தன்மைத்தன்று ; மிகவும் சிறப்புடைத்து ;ஆண்டுப் பெறுவனவற்றைக் கேட்பீராக ;

பிணவு நாய் முடுக்கிய தடியொடு (177)வரு விசை தவிர்த்த கடமான் கொழு குறை (175) முளவுமா தொலைச்சியபைந்நிணம் பிளவை (176) விரைஇ (177) - பெண்ணாகிய நாய்ஓடிக்கடித்த உடும்பின் தடிகளோடே ஓடிவருகின்ற விசையைக்கெடுத்துக்கொன்ற கடமானின் கொழுவிய தசையையும்எய்ப்பன்றியைக்கொன்ற பசுத்த நிணத்தையுடைய பிளக்கப்பட்ட தசைகளையும் கலந்து,

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல்(171) குறைவு இன்று பருகி (172) – மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனாற்செய்த கட்டெளிவைக் குறைவின்றாக நிரம்பவுண்டு,

நறவு மகிழ்ந்து (172) - பின்னர் 1நெல்லாற்சமைத்த கள்ளை உண்டு மகிழ்ந்து,

முற்படக் கூறிய தசைகளைத் தின்றுஇடையே தேறலைப்பருகிப் பின் நறவு மகிழ்ந்தென்க.

வைகறை (172) பழஞ்செருக்கு உற்ற நும்அனந்தல் தீர (173) – விடியற் காலத்துக் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மதந்தீரும்படி,

வைகறையனந்தலென்க.

அருவி தந்த பழம் (174) ஊழ்த்து (180)சிதை வெள் காழ் (174) - மா (179) - நீர் கொண்டுவந்த பலாப்பழம் செவ்வியழிந்து உதிர்ந்த வெள்ளியவிதையில் மாவையும்,

வெள் புடை கொண்ட துய் தலை பழனின்(178) இன் புளி (179) உலை (180) மோர் ஆக கலந்து (179) -வெள்ளிய புறத்தைக்கொண்ட ஆரத்தை இடத்தேயுடைய புளியம்பழத்தின் இனிய புளிப்பையும் உலையாக வார்த்தமோருக்கு அளவாகக்கலந்து,

கழை வளர் நெல்லின் அரி (180) வழைஅமை சாரல் கமழ துழைஇ (181) ஆக்கிய (183) – மூங்கிலிலே நின்று முற்றிய நெல்லினரிசியைச் சுரபுன்னை நெருங்கிய மலைச்சார-லெல்லாம் நாறும்படியாகத் துழாவி ஆக்கிய,

வால் அவிழ் வல்சி (183) - வெள்ளியசோறாகிய உணவை,

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி(182) குறமகள் (183) - நறிய மலரைச் சூடின நாறுகின்ற கரிய மயிர்முடியினையுடைய குறச்சாதியின் மகளாக்கியவென்க.

கள்ளுண்டபின்பு அனந்தல் தீரச்சோற்றைப் பெறுகுவிரென்க.

----------
    1 நெல்லாற் சமைத்த கள் : பட்டினப்.93, குறிப்புரை.
----------

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ(184) - நெஞ்சுநிறைந்த மகிழ்ச்சியை உடையராய்விருந்தினரைப்பெற்றேமென்னும் ஆசையோடே நெஞ்சுகலந்து,

1மக முறை தடுப்ப மனைதொறும்பெறுகுவிர் (185) - தத்தம் பிள்ளை களைக்கொண்டு முறைசொல்லித் தடுக்கையினாலே மனைகடோறும் பெறுகுவிர் ;

அண்ணன் , அம்மானென்றாற் போல்வனமுறை.

ஏறி தரூஉம் இலங்கும் மலை தாரமொடு(170) - தாங்கள் உச்சி மலையிலே ஏறிக் கொண்டுவரும் விளங்குகின்ற மலையிற் பண்டங்களோடே,

அவை சந்தனம், அகில், பொன், மணிமுதலியன.

தடுப்ப மனைதொறும் தாரத்தோடேவல்சியைப் பெறுகுவிரென்க.

செரு செய் முன்பின் குருசில்முன்னிய (186) பரிசில் மறப்ப நீடலும் உரியிர் (187) -ஆண்டுப்பெற்றவற்றாலே போரைச்செய்கின்ற வலிமையையுடையநன்னனிடத்துப் பெறக்கருதிய பரிசிலை மறக்கும்படிநீட்டித் திருத்தலுமுரியிர் ;

189 - 91. நிரை இதழ் குவளை கடி வீ தொடினும்வரை அரமகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பிபனித்தலும் உரியிர் - நிரைத்த இதழையுடைய குவளையில்,2 தெய்வம் விரும்புதலிற் கடியவாகிய பூக்களைக் கிட்டினும் ஆண்டை வரையர மகளிருடைய இருப்பைக் காணினும்உயிர் போம்படி வெதும்பி நடுங்குதலு முரியிராகையினாலே பல நாள் நில்லாது நிலநாடு படர்மின் (192) என வினைமுடிக்க.

இத்துணையும் 3 அசையுநற்புலமும்வல்சியும் சேரக்கூறினார்.

192. 4 [ பலநா ணில்லாது நிலநாடுபடர்மின் :]

-------------
    1 "மகமுறை தடுப்ப...............தான்உள்ளேயிருந்து தன் பிள்ளை களைக்கொண்டு நும்மைஅடைவே எல்லாரையும் போகாது விலக்கு கையினாலே ;இனி, பிள்ளைகளை உபசரிக்குமாறு போல உபசரித்து விலக்கவென்றுமாம் "(சிறுபாண். 192, ந.)
    2 "தான் விரும்புதலிற் சுரும்பினமும்மொய்யாத ...........செங்காந்தள் "(முருகு. 43 -4, ந.)
    3 மலைபடு. 67 - 8.
    4 இதற்கு உரைகிடைக்கவில்லை ; பலவாகியநாட்கள் தாழ்த்து நில்லாமல் நிலத்திலுள்ள நாட்டுவழியேசென்மினென்க. நிலனொடு என்ற பாடத்திற்குப் பூமிவழியேயென்க.
    5 "சிறுகட் பன்றி, யோங்குமலைவியன்புனம் படீஇயர் வீங்கு பொறி, நூழை நுழையும்பொழுதில் "(நற். 98 : 2 - 4)
----------

193 - 5 . [ 5 விளைபுன நிழத்தலிற்கேழ லஞ்சிப், புழைதொறு மாட்டிய விருங்க லரும்பொறி, யுடையவாறே :] ஆறே கேழல் விளைபுனம் நிழத்தலின் அஞ்சிபுழைதொறும் மாட்டிய இரு கல் அரு பொறி உடைய - வழிகள்,பன்றி முற்றின தினைப்புனத்தை 1 நொக்குகையினாலேஇதற்கு அஞ்சிச் சில்வழிகடோறும் 2கொளுத்திவைத்தபெரிய கற்பொறிகளையுடைய ; ஆகையினாலே,

195 - 6. [ நள்ளிரு ளலரி, விரிந்தவிடியல் வைகினிர் கழிமின் :] 3நள் இருள் வைகினிர்அலரி விரிந்த விடியல் கழிமின் - செறிந்தஇருட்காலத்தே தங்கினிராய் ஞாயிற்றின்கதிர்விரிந்த விடியற்பொழுதிலே போவீர் ;

197. நளிந்து பலர் வழங்கா செப்பம்துணியின் - செறிந்து பலரும் போகாதவழியைப் போகத்துணிவீராயின்,அவ்விடம்,

198 - 9. [ முரம்புகண் ணுடைந்த பரலவற்போழ்விற், கரந்துபாம் பொடுங்கும் பயம்புமாருளவே :] 4முரம்பு கண் உடைந்த பரல் அவல்போழ்வில் பாம்பு கரந்து ஒடுங்கும் பயம்பும் உளவே- மேட்டுநிலம் தன்னிடத்திலே விண்ட பரலையுடையபள்ளநிலத்திற் பிளப்பிலே பாம்பு மறைந்து கிடக்கும்குழிகளுமுள ;

உம்மையாற் புலி முதலியனவுள்ள குழிகளுங்கொள்க.மார் : அசை.

200. குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கி- அப்பயம்பை மனத்தாலே குறித்தல் கொண்டு விலங்கிற்குமரங்களிலேயேறிக் கொட்டிப்பார்த்து,

201. செறி தொடி விறலியர் கை தொழூஉபழிச்ச - செறிந்த வளையினையுடைய விறலியர் அப்பாம்புமனமகிழும்படி கையாற்றொழுது வாழ்த்த,

202. [ வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக்கழிமின் :] நெறி வறிது ஒரீஇ வலம் செயா கழிமன் -விலங்குகிடக்கும்வழியைச் சிறிது அகலப்போய்வலப்பக்கத்து வழியை நுமக்கு வழியாகச் செய்து கொண்டுபோவீராக ;

வலம் : ஆகுபெயர்.

203. [ புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ்குறவர் :] புனிறு போகிய புனம் சூழ் குறவர் புலந்து - ஈன்றணிமைதீர்ந்துமுற்றின தினைப்புனத்தைக் காத்தற்குச்சூழ்ந்த குறவர்தினையழிகின்றதற்கு வெறுத்து,

புலர்ந்தென்பது பாடமாயின்,முற்றியென்க.

-----------
    1 நொக்குகை - உண்டு குறையச்செய்கை.
    2 கொளுத்தி - பொருத்தி.
    3 நெடுநல், 186 , குறிப்புரை.
    4 முரம்பு - பருக்கைக்கல்லாலாகியமேட்டுநிலம்.
-----------

204. உயர் நிலை இதணம் ஏறி கைபுடையூஉ - உயர்ந்த நிலையினையுடைய பரணிலேயேறிக் கையைக்கொட்டி,

205. அகல் மலை இறும்பில் துவன்றியயானை - அகன்றமலையிற் குறுங்காட்டிடத்தே நிறைந்தயானைகளினுடைய,

206. பகல் நிலை தளர்க்கும் கவண்உமிழ் கடு கல் - பகற்பொழுதே நிற்கின்ற நிலையைக்கெடுக்கும்1 கவண்காலுகின்ற கடிய கற்கள்,

207 - 10. [ இருவெதி ரீர்ங்கழை தத்திக்கல்லெனக் கருவிரலூகம் பார்ப்போ டிரிய,வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன, வரும்விசை தவிராது:]

உயிர் செகு மரபின் கூற்றத்தன்ன -உயிர்களைப் போக்கும் முறைமையாலே கூற்றத்தையொக்கும்; அவைதாம்,

கரு விரல் ஊகம் பார்ப்போடு கல்லெனஇரிய - கரிய விரலையுடைய குரங்குகள் பார்ப்போடே கல்லென்னு மோசைபடக் கெடும்படியாக,

இரு வெதிர் ஈர்ங்கழை தத்திவிசை தவிராது வரும் - பெரிய மூங்கிலினது பசிய கோலைக் கடந்து வருகின்ற விசை மாறாது வரும் ;

மரம் மறையா கழிமின் - அதற்குமரங்களிலே ஒதுங்கிநின்று போவீராக ;

குறவர் (203) ஏறிக் கைபுடையூஉத் (204)தளர்க்குங்கல் (206) கூற்றத்தன்ன (209) ; அவை இரியத்(208) தத்தி (207) விசைதவிராதுவரும் ; அதற்கு மரமறையாக்கழிமின் (210) என்க.

211 - 2. உரவு களிறு சுரக்கும் இடங்கர்ஒடுங்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் - வலியயானையை விழுங்கும் முதலைகள் தங்கப்பட்டு இராக்காலத்தையொத்த இருள்செறியும் 2 மிளைகளையும்,

213. குமிழி சுழலும் குண்டு கயம்முடுக்கர் - குமிழிகள் சுழன்று வரும் ஆழ்ந்தநீரறாதமடுக்களையுடைய முடுக்கரையுமுடைய,

முடுக்கர் - நீர்குத்தின இடங்கள்.முடுக்கரையுமுடைய யாறு (214)

214. அகழ் இழிந்தன்ன கான் யாறுநடவை - ஏறுதற்கும் இறங்குதற்கும் அரியவாகையினாலே அகழிலே இழிந்தாற் போன்ற காட்டாற்று வழி,

215. வழூஉம் மருங்கு உடைய -காலோடுமிடங்களையுடைய ; அவ்விடத்திற்கு,

---------
    1 "கல்கால் கவணையென்றது கற்களைக் கான்றாற்போல இடையறாமல் விடும் கவணென்றவாறு "(பதிற். 88: 18, உரை)
    2 மிளை - காவற்காடு ; இஃதுஇளையெனவும் வழங்கும்.
------------

215 - 8. [வழாஅ லோம்பிப், பரூஉக்கொடிவலந்த மதலை பற்றித், துருவி னன்ன புன்றலை மகாரோ,டொருவி ரொருவி ரோம்பினிர் கழிமின் :]

துருவின் அன்ன 1 புன்றலை மகாரோடு- செம்மறி யாட்டினையொத்த புற்கென்ற தலையினையுடையபிள்ளைகளோடே,

வலந்த பரூஉ கொடி மதலை பற்றி வழாஅல்ஓம்பி - மரங்களிற் சுற்றிக் கிடக்கின்ற பரியகொடியாகிய பெரிய பற்றுக்கோட்டைப் பிடித்துக்காலோடுதலைப் பரிகரித்து,

ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்- ஒருவிரை ஒருவிர் பாதுகாத்துப் போவீராக ;

219. அழுந்து பட்டு அலமரும் புழகு அமல்சாரல் - கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்குநெருங்கின பக்கமலையில்,

220 - 21.[ விழந்தோர் மாய்க்குங் குண்டுகயத்தருகா, வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி :] விழுந்தோர்மாய்க்கும் குண்டு கயத்து அருகா கண் புதைத்த நுண் நீர்பாசி வழும்பு - வீழ்ந்தோரை மறைக்கும் ஆழத்தையுடையகுளங்களுக்கு அருகாக இடம் மறைதற்குக் காரணமாகிய நுண்ணியநீர்மையையுடைய பாசியினது குற்றம்,

2 "வழும்பறுக்ககில்லாவாந் தேரை - வழும்பில்சீர் "என்றார்பிறரும்.

222. அடி நிலை தளர்க்கும் அருப்பமும்உடைய - அடி ஊன்றியிட்ட நிலையை ஓடப்பண்ணும் ;அதுவுமின்றி அவ்விடம் போதற்கு அருமையையுமுடைய ;அதற்குப் பரிகாரமாக,

223 - 4. முழுநெறி அணங்கிய நுண்கோல் வேரலோடு எருவை மெல் கோல் கொண்டனிர் கழிமின்- வழிமுழுவதும் பின்னிவளர்ந்த நுண்ணிய கோல்களையுடையசிறுமூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல்களையும்பற்றுக்கோடாகப் பிடித்துப் போவிர் ;

இத்துணையும் ஆற்றினது தீமையினளவு(67) கூறினார்.

225 - 8. [ உயர்நிலை மாக்கற் புகர்முகம்புதைய, மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத், தாரொடுபொலிந்த வினைநவில் யானைச், சூழியிற் பொலிந்த:]

------------
    1 ‘புன்புறம் - புற்கென்றபுறம் ' (பெரும்பாண்.376, ந.) ; 'புல்லென்சடை - புற்கென்ற சடை ' (புறநா.252 : 2. உரை)
    2 நாலடி. 352.
----------

புகர் முகம் புதைய சூழியின் பொலிந்தஉயர் நிலை மா கல் வினை நவில் யானை - புகரையுடைய முகமறையும்படிமுகபடாத்தாற் பொலிவு பெற்ற உயர்ந்த நிலையினையுடையபெருமையையுடைய மலைபோலும் போர்த்தொழிலிலே பயின்றயானையினையும்,

மாரியின் 1 இகுதரு வில் 2உமிழ்கடு கணை - மழைபோலத் தாழ்ந்து விழும்வில்லுக்கான்ற கடிய அம்பினையுமுடைய,

தாரொடு பொலிந்த மூத்த புரிசை(229) - தூசிப்படையோடே பொலிவுபெற்ற பழைய மதில்,

மதில், ஆகுபெயராய்த் திருப்பதியையுணர்த்திற்று.என்றது காரியுண்டிக் கடவுளுடைய படைமிகுதி கூறிற்று.அன்றிப் பகைப் புலத்தை அழித்தற்கும் அந்நிலத்தைக்காத்தற்கும் நன்னன்வைத்தபடையுமாம்.

228 - 9. [ சுடர்ப்பூ விலஞ்சி,யோரியாற் றியவின் மூத்த புரிசை :] சுடர் பூ இலஞ்சியாறு ஓர் இயவின் மூத்த புரிசை - ஒளியையுடைய பூக்களையுடையமடுவினையுடைய யாற்றுக்கரையில் ஒருவழியினையுடையஊர்,

'ஓராற்றியவு ' பாடமாயின் ஒருப்பட்டவழியென்க.

இனி அம்பையுடைய தூசிப்படையோடுபொலிந்த யானையென்று யானைக்கு அடையாக்கி அவ்வியானையினுடைய பூக்களெழுதின முகபடாம் போலே உயர்நிலைமாக்கற் புகர்முகம் புதையப்பொலிந்த சுடர்ப் பூவையுடைய புரிசை யென்றுமாம் ; இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சியையுடைய உயர்நிலைமாக்கல்லையுடையபுரிசையென்பாருமுளர். அவர் சுனையிடத்து மேலெழுந்தகுவளை முதலியவற்றின் அரும்புகள் தலைசாய்ந்து கற்புதையக்கிடந்ததற்கு யானையின் மத்தகத்துப்புகரைஉவமையென்று கொள்வர்.

230. [ பராவரு மரபிற் கடவுட் காணின்:] புரிசை (229) பராவு அரு மரபின் கடவுள் காணின் -கோயிலிற் பராவுதற்கரிய முறைமையினையுடையகடவுளைக் கண்டீராயின்,

231. [ தொழாநிர் கழியி னல்லது :] நீர்தொழா கழியின் அல்லது - நீர் வணங்கிப்போம் அத்தனையல்லது,

நீரென்பது குறுகிநின்றது. இனித் தொழாநிரென்பது3 மறை யன்றித் தொழுதென்றுபொருடருமேனுமுணர்க.

231 - 2. வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின்- சிறிது நும்முடைய வாச்சியங்களைத் தீண்டுதலைக்காப்பீராக ; அதற்குக் காரணமென்னையெனின்,

-------------
    1 இகுத்தல் சொரிதல் ; "இகுத்தகண்ணீர் - சொரியப்பட்ட கண்ணீர் "(புறநா.143 : 13, உரை)
    2 "உமிழ்தல் - புறப்படவிடுதல்"என்பர் தக்கயாகப்பரணி உரையாசிரியர் ; 110,602.
    3 மறை - எதிர்மறை.
----------

232 - 3. [ மயங்குதுளி, மாரி தலையுமவன்மல்லல் வெற்பே :] அவன் மல்லல் வெற்பு மயங்கு துளிமாரி தலையும் - அவனது வளவிய நவிரமென்னுமலை மயங்கினதுளியையுடைய மழையை இடைவிடாமற் பெய்யா நிற்கும் ;

என்றதனாற்பயன் : வாச்சியங்களும்நனைந்து நுமக்கும் போதலரி தென்பதாம்.

234 - 5. [ அலகை யன்ன வெள்வேர்ப்பீலிக், கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் :]

1 அலகை அன்ன வெள்வேர்பீலி மஞ்ஞை - பலகறையையொத்த வெள்ளிய 2வேரினையுடைய பீலியையுடைய மயில்,

கட்சியில் கலவம் தளரினும் - அக்காட்டிடத்தேஆடுதற்குவிரித்த கலாபத்தினது பாரத்தாலே ஆடியிளைத்துநிற்பினும்,

236 - 7. [ கடும்பறைக் கோடியர் மகாஅரன்ன, நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினும் :]

நெடு கழை கொம்பர் - நெடிய மூங்கிலின்கவடுகளிலே,

கடு பறை கோடியர் மகாஅர் அன்னகடுவன் உகளினும் - கடிய பறையினையுடைய கூத்தருடையபிள்ளைகளையொத்த கடுவன்பாயினும் ,

238 - 9. [ நேர்கொ ணெடுவரை நேமியிற்றொடுத்த, சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினும் :]

3 நேர் கொள் நெடு வரை சூர்புகல் அடுக்கத்து - செவ்வையைத் தன்னிடத்தே கொண்டநெடியமலையில் தெய்வம் விரும்பின பக்க மலையிலே,

நேமியின் தொடுத்த பிரசம் காணினும்- தேருருள்போல்வைத்த தேனிறாலைக் காணினும்,

240 - 41. [ ஞெரேரென நோக்கலோம்புமி னுரித்தன்று, நிரை செலன் மெல்லடி நெறிமாறுபடுகுவிர் :]

ஞெரேரென நோக்கல் உரித்தன்று -கடுகப்பார்த்தல் நுமக்குரிய தொழிலன்று ; அதற்குக்காரணமென்னையெனின்,

மெல் அடி நிரை செலல் நெறி மாறுபடுகுவிர்- மெல்லிய அடியாலே நிரைத்துச் செல்லுதலையுடைய வழிதப்புவிர்;

ஓம்புமின் - ஆதலால் அங்ஙனம் நோக்குதலைப்பாதுகாப்பீர் ;

இதுவும் ஆற்றினது அருமை (67) கூறிற்று.

---------
    1 அலகு, பலகறை - சோழி ; பறையலகென்பதுபலகறையென மருவிற்றென்பர் ; (சீவக. 2773, ந.) ;"பறையலகே, யைதாம் பலகறையென் றானவே "(ஆனந்த.வண்டு. 415)
    2 வேர் - அடிக்குருத்து ; இது முருந்தெனவழங்கும்.
    3 நேர்கொள் நெடுவரை - செங்குத்தானமலை.
---------

242. வரை சேர் வகுந்தின் கானத்துபடினே - மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டிடத்தே செல்ல்லின்,

243 - 9. [ கழுதிற் சேணோ னேவொடுபோகி, யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி, நிறப்புண்கூர்ந்த நிலந்தின் மருப்பி, னெறிக் கெடக் கிடந்தவிரும்பிண ரெருந்தி, னிருடுணிந் தன்ன வேனங்காணின்,முளிகழை யிழைந்த காடுபடு தீயி, னளிபுகை கமழா திறாயினிர்மிசைந்து :]

கழுதில் சேணோன் (243) நிறம் புண்கூர்ந்த (245) ஏவொடு போகி (243) நெறிகெடகிடந்த (246)ஏனம் (247) - பரணின்மேலிருந்த யானை முதலியவற்றிற்கு எட்டாதவன் எய்த மருமத்திற்புண் மிகுதற்குக் காரணமான அம்போடே போகி நெறிகெடக் கிடந்த பன்றி,

நிலம் தின் மருப்பின் (245) இழுதின்அன்ன வால் நிணம் செருக்கி (244) இரு பிணர் எருத்தின் (246) இருள் துணிந்தன்ன ஏனம் (247) - கிழங்குகளை அகழ்ந்து தின்கையினாலே மண் தின்று தேய்ந்த கொம்பினையும் நெய்விழுதை யொத்த வெள்ளிய நிணம் செருக்கும்படி கரிய சருச்சரையை யுடைத்தாகிய கழுத்தினை-யுமுடையஇருள் அற்றுக்கிடந்தாற்போன்ற ஏனம்,

செருக்கவெனத் திரிக்க.

ஏனம் காணின் (247) முளி கழை இழைந்தகாடு படு தீயின் (248) நளி புகை கமழாது 1 இறாயினிர்மிசைந்து (249) - பன்றியைக் கண்டீராயின் உலர்ந்தமூங்கில் தம்மில் இழைந்ததனாற் பிறந்த காடெங்கும்உண்டாகிய தீயினாலே செறிந்த புகைநாறாமல் 2வக்கி மயிர்போகச் சீவித் தின்று,

250 - 51. [ துகளறத் துணிந்த மணிமரு டெண்ணீர்க்,குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி :] குவளை அம் பைஞ்சுனைதுகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர் அசைவு விடப்பருகி - குவளையால் அழகிய பசிய நிறத்தவாகியசுனையில் கலக்கமறக் தெளிந்த 3 பளிங்கென்றுமருளும்4தெளிந்தநீரை வழியின் இளைப்புத்தீரும்படி குடித்து,

அசைவு : விகாரம்.

-----------
    1 இறாவுதல் - நெருப்பில் வாட்டி மயிர்போகச்சீவுதல்.
    2 வக்குதல் - வாட்டுதல் ; "வன்பெரும்பன்றி தன்னை யெரியினில் வக்கி ", "கொழுப்பரிந்து, வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவனவக்குவித்து "(பெரிய. கண்ணப்ப. 117, 145)
    3 குறிஞ்சிப். 57, குறிப்புரை.
    4 துணிந்த - தெளிந்த ; "துணிநீர்- தெளிந்தநீர் "(மதுரைக், 283, ந.)
-------------

252. [ மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட்பொதியினிர் :] பரூஉ கண் பதம் மிகுத்து கொண்டபொதியினிர் - பருத்த இடத்தையுடைய தசையாகிய உணவை முழுதுந் தின்னாமல்மிகுத்துவைத்துக் கட்டிக் கொண்ட பொதியின்சுமையினையுடையிராய்,

253. புள் கை போகிய 1 புன்றலைமகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமானசிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,

2பிள்ளையைப் பெற்றால்வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.

254 - 5. [ அற்கிடை கழித லோம்பியாற்றநு, மில்புக் கன்ன கல்லளை வதிமின் :] இடை கழிதல்ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல்அளை அற்கு வதிமின்- அவ்விடத்துப் போதலைப் பரிகரித்து வழியிடத்தனவாகியநும் இல்லிலே புக்காலொத்த கன்முழைஞ்சுகளிலே இராக்காலத்துத்தங்குவிர் ;

இஃது அசையுநற்புலமும் (67) வல்சியும்(68) சேரக்கூறிற்று.

கானத்துப்படின் (242) மிசைந்து (249)பருகிப் (251) பொதியினிராய் (252) மகாரோடே (253) கழிதலோம்பி அதற்கு (254) வதிமின் (255) என்க.

256. அல் சேர்ந்து அல்கி அசைதல்ஓம்பி - இராக்காலத்திற்கு எல்லாருங்கூடித் தங்கிஇளைப்பாறி,

257. வான் 3 கண் விரிந்தவிடியல் ஏற்றெழுந்து - வானிடத்தே ஞாயிற்றின்கதிர்விரிந்த விடியற்காலத்தே துயிலுணர்ந்தெழுந்து,

258. கான் அகப்பட்ட செ நெறி கொண்மின்- காட்டிடத்தே கிடந்த செவ்விய நெறியைப் போவீராக;

259 - 65. [ கயங்கண் டன்ன வகன்பை யங்கண்,மைந்துமலி சினத்த களிமறுமத னழிக்குந், துஞ்சுமரங்கடுக்கு மாசுணம் விலங்கி, யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர், மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து, பெரும்பயங் கழியினுமாந்தர் துன்னா, ரிருங்கால் வீயும் பெருமரக்குழாமும் :]

அகல் பை அம் கண் (259) மைந்து மலிசினத்த களிறு மதன் அழிக்கும் (260) 4 துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி (261) – அகன்ற படத்தினையும் அழகிய கண்ணினையுமுடைய வலிமிகுகின்ற சினத்தவாகிய யானைவலியைக் கெடுத்து விழுங்கும் விழுந்து கிடக்கின்ற பெருமரங்களை யொக்கும் பெரும்பாம்பு கிடக்கின்ற வழியை விலங்கி,

-------------
    1 பட்டினப். 90, ந.
    2 ( பி - ம்.) ' பிள்ளைப் பேற்றால்'
    3 உலகிற்குக் கண்ணாதலின் சூயரினைக் கண்ணென்றார் ; "வான்கண் விழியா "(சிலப்.10 : 1) என்றவிடத்து வான்கணென்பதற்கு ஆதித்தனென்று அரும்பதவுரையாசிரியரும் உலகிற்குக் கண்ணாகிய ஆதித்தனென்று அடியார்க்குநல்லாரும் எழுதியிருப்பனவும், "எண்ணுக்குவரும்புவனம் யாவினுக்குங் கண்ணாவா னிவனே யன்றோ"(வி. பா. அருச்சுனன்றவநிலை. 43) என்பதும் இங்கேஅறிதற்குரியன.
    4 துஞ்சுதல் தூங்குதலாதலின் அஃது இங்கேவிழுந்துகிடத்தலாயிற்று.
-----------

பெரு பயம் கழியினும் (264) ஊழ் இறந்து(263) இகந்து சேண்கமழும் பூவும் உண்டோர் (262) மறந்துஅமைகல்லா பழனும் (263) மாந்தர் துன்னார் (264) – அவற்றாற் கொள்ளும் பெரிய பயன் கொள்ளா மற்போகிலும்முற்காலம் அடிப்பட்டுப் போந்த முறைமையைக் கடந்து தாம் நிற்கின்ற இடத்தைக் கடந்து தூரியநிலத்தே சென்றுநாறும் பூவையும் நுகர்ந்தவர் மறந்து உயிர் வாழ்தலாற்றாத பழங்களையும் தெய்வங்களன்றி மானிடர் அணுகாராகையினாலே, ஊழிறந்து துன்னாரென்க.

இரு கால் வீயும் (265) பழனும் (263)கயம் கண்டன்ன (259) பெரு மரம் குழாமும் (265) – நீளுங்காம்பையுடைய அப்பூக்களையும் பழத்தையும் குளத்தைக் கண்டாற்போலும் குளிர்ச்சியையுடைய பெரிய மரக்குழாத்தினையும்,

266 - 7. [ இடனும் வலனு நினையினிர் நோக்கிக்,குறியறிந்தவையவை குறுகாது கழிமின் :] நினையினிர்குறி அறிந்து இடனும் வலனும் நோக்கி அவை அவை குறுகாதுகழிமின் - யான்கூறியதனை நினைத்து அவற்றின் குறிகளையறிந்து இடத்தினும் வலத்தினும் பார்த்து அவையிற்றை அவையிற்றை அணுகாமற்போவீர் ;

விலங்கி நோக்கிக் குறுகாது கழிமினென்க.

இது சோலை (69) கூறிற்று.

268 - 9. கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து கூடு இயத்தன்ன குரல் புணர் புள்ளின் -கொம்புகள் பலவும் முற்றிய பழத்தைத் தன்னிடத்தேகொண்டதாகிய 1ஆலமரத்திடத்தே கூடின பலவாச்சியங்களை யொத்த பல ஓசையுங்கூடின பறவைத்திரளையுடைய,
பறவைத் திரளையுடைய நாடுகாணனந்தலையென்க.

270. 2 நாடு காண் நன தலை மென்மெல அகன்மின் - நாடுகளை யெல்லாம் காணலாயிருக்கின்றஅகன்ற இடத்தையுடைய மலையை மெல்லமெல்லப்போவீர் ;

நனந்தலை : ஆகுபெயர்.

----------
    1 மதுரைக். 543 - 4, குறிப்புரை ; மதுரைக். 538, குறிப்புரை. "இவ்வோசைகளின் வேறுபாடுகளை நோக்கிப்பல்வேறு புள்ளோசைகளை உவமங் கூறினார் "(மதுரைக்.536 - 44, ந.)
    2 "நாடுகாணெடுவரையென்றது தன்மேலேறிநாட்டைக் கண்டின் புறுதற்கு ஏதுவாகிய ஓக்கமுடையமலையென்றவாறு"(பதிற். 85 : 7) ; திருக்குறுங்குடியின்பக்கத்துள்ள ஒரு மலையினுச்சி மிகவும் உயர்ந்து நாடுகாணியெனஇன்றும் வழங்குகின்றது.
-----------

271. மா நிழல் பட்ட மரம் பயில்இறும்பின் - பெரியநிழலுண்டான மரம் நெருங்கின குறுங்காட்டாலே,

272. [ ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை :]மாகம் ஞாயிறு தெறாஅ நன தலை - ஆகாயத்தில் திரியும்ஞாயிற்றாற் சுடப்படாத அகன்ற இடத்தையுடைய குன்றம்(275),

273 - 5. தேஎம் மருளும் அமையம் ஆயினும்1 இறா வன் சிலையர் மா தேர்பு கொட்கும்குறவரும் மருளும் குன்றத்து படினே - திசை தெரியாமல்மயங்கும் இராக்காலமாகினும் முறியாத வலியவில்லையுடையராய்விலங்குதேர்ந்துநின்று சுழன்றுதிரியும் குறவருமுட்படமயங்குங் குன்றத்தே நீங்கள் செல்லின்,

276 - 7. [ அகன்கட் பாறைத் துவன்றிக்கல்லென, வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்:]இயங்கல் ஓம்பி அகல் கண் பாறை துவன்றி கல்லெனநும் இயங்கள் தொடுமின் - அவ்வழியைப் போதலைப்பரிகரித்து அகன்ற இடத்தையுடைய பாறையிலே குவிந்துகல்லென்னும் ஓசைபட நும்முடைய வாச்சியங்களைவாசிப்பீராக ;

278 - 9. பாடு இன் அருவி பயம் கெழுமீமிசை காடு காத்து உறையும் கானவர் உளரே - ஓசையினிதாகிய அருவியின்பயன் பொருந்திய உச்சிமலையிலே காட்டைக்காத்திருக்குங் கானவர் பலருமுளர் ;

ஏகாரம் : ஈற்றசை.

280 - 81. நிலை துறை வழீஇய மதன்அழிமாக்கள் புனல் படு பூசலின் - நிலையாய்ப்போம் துறையைத்தப்பிஆழத்திலேபுக்க வலியழிந்த மாக்கள் புனலிலே அழுந்துகின்றவருத்தங்கண்டு விரைந்தெடுப்பாரைப்போல,

281 - 6. [ விரைந்துவல் லெய்தி, யுண்டற்கினிய பழனுங் கண்டோர், மலைதற் கினிய பூவுங் காட்டி,யூறு நிரம்பிய வாறவர் முந்துற, நும்மி னெஞ்சத்தவலம் வீட, விம்மென் கடும்போ டினியி ராகுவிர் :]

நெஞ்சத்து அவலம் வீட விரைந்துவல் எய்தி - திசைமயக்கத்தாற் கலங்கி அறிவழிந்தநெஞ்சிற் கேடு போம்படி ஓடிக் கடுகவந்து சேர்ந்து,

உண்டற்கு இனிய பழனும் கண்டோர்மலைதற்கு இனிய பூவும் காட்டி - எல்லாரும் உண்டற்குஇனியவாகிய பழங்களையும் கண்டவர்கள் சூடுதற்கு இனியவாகியபூக்களையும் நுமக்குக்காட்டி,

நீர் அவற்றை நுகர்ந்த பின்பு.
அவர் ஊறு நிரம்பிய ஆறு முந்துற - அக்கானவர்இடையூறு மிக்க வழியை நுமக்கு முற்படப் போகையினாலே,

---------
    1 இறாவன் சிலையரென்பதற்கு இறாமீனைப்போன்றுவளைந்த வலிய வில்லையுடையவரெனப்பொருள்கோடலுமாம் ; "சிலையுமான .............. . பச்சிறாப்பிறழும் " (பெரும்பாண். 269 - 70) என்னும் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.
-----------

நும்மின் 1இம்மென் கடும்போடு இனியிராகுவிர் - நும்முடைய இம்மென்னும் ஓசையையுடைய சுற்றத்தோடே மனமகிழ்வீர் :

287. அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு- திசைமயக்கம் நாடியறிவார் கூறிய திசையையுட் கொண்டு,

288 - 9. [ குறியவு நெடியவு மூழிழிபுபுதுவோர், நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்து:]`

புதுவோர் நோக்கினும் பனிக்கும்நோய் கூர் அடுக்கத்து - புதிய மாந்தர் கண்ணால் நோக்கினும்தலைநடுக்கும் நோய்மிக்க பக்கமலையிடத்து,

குறியவும் நெடியவும் ஊழ் இழிபு -குறியனவும் நெடியனவுமாகிய குவடுகளை முறைமைப்பட இழிந்து,

290. அலர் தாய 2 வரி நிழல் அசையினர் இருப்பின் - பூப்பரந்த பல வரிகளையுடையவாகியநிழலிலே இளைத்திருப்பின்,

291. பல திறம் பெயர்பவை கேட்குவிர்- பலகூறுபாடுகளையுடைய வாய் எழுகின்ற ஓசைகளைக் கேட்பீர்;

292. கலை தொடு பெரு பழம் புண் கூர்ந்துஊறலின் - 3 முசுக்கலை தோண்டின பெரிய பலாப்பழம்புண்மிக்குத் தேனூறுகையினாலே,

293. மலைமுழுவதும் கமழும் மாதிரந்தோறும்- மலைமுழுதும் அத்தேன் நாறுந் திசைகடோறும்,

294 - 6. [ அருவி நுகரும் வானர மகளிர்,வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந், தெரியிமிழ்கொண்டநும் மியம்போ லின்னிசை :] வாங்குபுவருவிசை தவிராது இமிழ்கொண்ட அருவி நுகரும் வான்அரமகளிர் குடைதொறும் நும் இயம் போல தெரி இன்இசை - உள்ளபண்டங்களை வாங்கிக்கொண்டு வருகின்றவிசைதவிராது ஒலித்தலைக்கொண்ட அருவியை ஆடும் தெய்வமகளிர்அதனைக் கையாற்குடையுந் தோறும் நும்முடைய வாச்சியங்களைப்போல்தாளந்தெரிகின்ற இனியவோசையும்,

297- 9. [ இலங்கேந்து மருப்பி னினம்பிரியொருத்தல், விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்,புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல் :]

விலங்கல் மீமிசை பணவை கானவர்புலம் புக்கு உண்ணும் - மலையின்மேலிட்டபரணிற் கானவர்தினைப்புனத்தைப் புகுந்து தின்னும்,

------------
    1 சுற்றத்தார் இசைப்புலவராதலால்,இம்மென் கடும்பென்றார்.
    2 இடையிடையே வெயிலும் கலந்திருத்தலின்தாயவரி நிழலென்றார் ; வரிநிழலென்பதற்கு, செறியாதநிழலெனப் பொருள்கூறினர் முன் ; (சிறுபாண். 12,ந.)
    3 முசு - குரங்கின் சாதியிலொன்று ;கலை - அதன் ஆண்.
-------------

இலங்கு ஏந்து மருப்பின் இனம்பிரி 1 ஒருத்தல் புரி வளை பூசல் -விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடைய தன்னினத்தைப் பிரிந்த 2 யானைத் தலைவனைப் பிடித்தற்கு விரும்பின வளைத்தலையுடைய ஆரவாரமும்,

300 - 301. [ சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி,னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை :] சேய் அளை பள்ளி எள் எஃகு உறு முள்ளின் தெறஇழுக்கிய கானவர் அழுகை - நெடியமுழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றிதனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்துகொல்லுகையினாலேபட்ட கானவர் அழுகின்ற அழுகையும்,

302 - 4. [ கொடுவரி பாய்ந்தெனக்கொழுநர் மார்பி, னெடுவசி விழுப்புண் டணிமார்காப்பென, வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்:] கொழுநர் மார்பில் கொடுவரி பாய்ந்தென நெடு வசி3விழுபுண் தணிமார் காப்பென அறல் வாழ் கூந்தல்கொடிச்சியர் பாடல் - தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப் பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரியபுண்ணை ஆற்றுதற்குக் காவலென்று கருதி அறல் வீற்றிருந்தமயிரினையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டாலெழுந்தஓசையும்,

305 - 6. தலைநாள் பூத்த பொன் இணர்வேங்கை மலைமார் இடூஉம் ஏமம் பூசல் - முதல்நாளிலேபூத்த பொன்போலுங் கொத்தினையுடைய வேங்கைப்பூவைச்சூடுதற்கு மகளிர் புலிபுலியென்று கூப்பிடும் ஏமத்தையுடையஆரவாரமும்,

வேங்கைவளைந்து பூவைக் கொடுத்தலின்,அச்சந்தீர்த்த பூசலென்றார்.

307. கன்று அரைபட்ட 4கய தலைமட பிடி - கன்று வயிற்றிலேயுண்டான மெல்லிய தலையினையுடையமடப்பத்தையுடைய பிடியை,

308. வலிக்கு வரம்பாகிய 5கணவன் ஓம்பலின் - வலிக்கு

------------
    1 ஒருத்தல் - யானைத்தலைவன் ; கலித்.46 : 3, ந; அகநா. 78 : 4, உரை.
    2தலைமைவாய்ந்த ஆண்யானையை யானைத்தலைவனெனக்கூறுதல் மரபு ; "ஊதத், தலைவனே யொத்துப் பொலிந்ததுசந்திர சைலம் "(கம்ப. வரைக்காட்சி .7) ;ஏந்தலெனவும் கூறப்படும் ; "இருங்களிற்றினநிரையேந்தல் "(குறுந். 180 : 2).
    3 நெடுநல். 172, குறிப்புரை.
    4 கய : மென்மையை யுணர்த்துமுரிச்சொல்; தொல். உரி. சூ. 24.
    5 கணவனென்பது அஃறிணையாண்பற்பொருளிலும்வழங்கும் ; "மாயா வேட்டம் போகிய கணவன்,பொய்யா மரபிற் பிணவுநினைந்திரங்கும் "(நற்.103 : 7 - 8) ; "வங்காக் கடந்த செங்காற் பேடை, யெழாலுறவீழ்ந்தெனக் கணவற் காணாது "(குறுந். 151 : 1 -2)
----------------

ஓரெல்லையாகிய 1களிறு 2கவழந்தேடிக்கொடுத்துப்பாதுகாத்துப் போகையினாலே,

309. ஒள் கேழ் வய புலி பாய்ந்தென -அப்போக்கினைக்குறித்து ஒளித்திருந்து ஒள்ளிய நிறத்தையுடைய வலியபுலி பாய்ந்ததாக,

309 - 10. கிளையொடு நெடு வரை இயம்பும்இடி உமிழ் தழங்கு குரல் - அப்பிடி தன்சுற்றத்தோடேநெடியமலையிடத்தே கூப்பிடும் இடி யோசைபோலும் முழங்குங்குரலும்,

இடியுமிழ்ந்த ஓசையை ஆகுபெயரான்உமிழ் என்றார்.

311. கை கோள் மறந்த கரு விரல் மந்தி- பார்ப்பைத் தன் கையால் தழுவிக்கோடலை மறந்தகரிய விரலையுடைய மந்தி,

312. அரு விடர் வீழ்ந்த தன் கல்லாபார்ப்பிற்கு - எடுத்தற்கு அரிய ஆழ்ந்த முழையிலேவீழ்ந்திருந்த தன்குட்டிக்கு,

கல்லாமை - 3 தனக்குரியதொழிலைக்கல்லாமை.

313 - 4. முறி மேய் யாக்கைகிளையொடு துவன்றி சிறுமை உற்ற களையா பூசல் – தளிரை மேய்ந்து வளர்ந்த வடிவினையுடைய சுற்றத்தோடே நெருங்கி நோய்மிக்க விலக்கப்படாத ஆரவாரமும்,

315 - 6. கலை கை அற்ற காண்பு இன் நெடுவரை நிலைபெய்து இட்ட மால்பு நெறியாக - முசுக்கலைஏறமுடியாதென்று செயலற்ற காட்சியினிய உயர்ந்தவரையிலே நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட 4கண்ணேணியேவழியாகச்சென்று,

-------
    1 களிறு பிடிக்குக் கவளந்தேடிக்கொடுத்தல்; "கயந்தலை மடப்பிடி யுயங்குபசி களைஇயர், பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை "(நற்.137 : 6 - 7) ; "பிடிபசி களைஇய பெருங்கை வேழ, மென்சினையாஅம்பிளக்கும் "(குறுந். 37 : 2 - 3) ; "யானைதன்,கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னாவேனி லின்றுணை யார, முளிசினை யாஅத்துப் பொளிபிளந்தூட்ட "(அகநா. 335 : 4 - 7) ; "கறுத்தமுலைச்சூற்பிடிக்குக் கார்யானை சந்தம், இறுத்துக்கை நீட்டுமீங் கோயே", "சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனிற்றோய்த்தி யானை, மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப "(ஈங்கோய். 23, 38) ; "வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை யளைமிகு தேன்றோய்த்துப்,பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள்செயும் பிருதி"(பெரியதிருமொழி, 1. 2 : 5)
    2 கவழம் : "கவழக் களிப்பியன்மால்யானை "(திணைமாலை. 42)
    3 தனக்குரிய தொழிலாவது தாயின்மார்பைஇறுகப் பற்றுதல்.
    4 கண்ணேணியாவது கணுக்களிலேயேஅடிவைத்து ஏறிச்செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ;உச்சியிலுள்ள தேனிறாலை அழிக்கும்
-----------

317. பெரு பயன் தொகுத்த தேம்கொள் கொள்ளை - பெரியபயனுண்டாகத் 1தேனீத்திரட்டிவைத்த தேனையழித்துக்கொண்டகொள்ளையாலுண்டான ஆரவாரமும்,

318 - 9. [ அருங்குறும் பெறிந்த கானவருவகை, திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென :]

திருந்து வேல் அண்ணற்கு விருந்துஇறை சான்மென - திருந்தும் வேலினையுடைய நன்னனுக்குப்புதிதாகக்கொடுத்தற்கு 2 இவற்றிற் கைக்கொண்டபொருள்கள் அமையுமெனக் கருதிச்சென்று,

அரு குறும்பு எறிந்த கானவர் உவகை -அழித்தற்கு அரிய 3குறும்புகளை யழித்த கானவர்மகிழ்ச்சியிலுண்டான ஆரவாரமும்,

320 - 22. நறவு நாட்செய்த குறவர் தம்பெண்டிரொடு மான்தோல் சிறுபறை கல்லென கறங்கவான் தோய் மீமிசை அயரும் 4 குரவை - 5நறவை நாட்காலத்தேகுடித்த குறவர் தம்பெண்டிரோடே கூடி மான்றோல் போர்த்த சிறுபறை கல்லென்னும் ஓசைபடவொலிப்ப வானைத் தீண்டும் உச்சி மலையிலே ஆடுங் குரவைக்கூத்தின் ஆரவாரமும்,

323 - 4. [ நல்லெழி னெடுந்தேரியவுவந் தன்ன, கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை:] நல் எழில் நெடு தேர் இயவு வந்தன்ன ஒலிக்கும் கல்யாறு விடர் முழங்கு இரங்கு இசை - நல்ல அழகினையுடையநெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையவாக ஒலிக்கும் கல்லின்மேல்வரும் யாறுகள் முழைஞ்சுகளிலே வீழ்ந்துமாறா தொலிக்கும் ஓசையும்,

325- 7. நெடு சுழி பட்ட கடுங்கண் வேழத்துஉரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர்

பொருட்டுச் செங்குத்தான மலையிலேறிச் செல்வதற்குஅதன் அயலில் இவ்விரண்டு மூங்கில்களைக்கூட்டி நிறுத்தியமைப்பது வழக்கம்.

--------
    1 "உய்த்தீட்டுந் தேனீ "(நாலடி.10)
    2 இவற்றில் - இச்சிற்றரண்களில்.
    3 குறும்பு - பகைவர் தங்கும் சிற்றரண்.
    4 குரவை இருபாலாரும் விரவி ஆடுவதாதலின்,குறவர் தம் பெண்டிரொடு அயருங் குரவை யென்றார் ;"பெண்டிரொடு விரைஇ, மறுகிற்றூங்குஞ் சிறுகுடிப்பாக்கத்து", "வியலறை வரிக்கு முன்றிற் குறவர், மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்"(அகநா.118 : 3 - 4, 232 : 9 - 10) ; "மாயவன்றன் முன்னினொடும்வரிவளைக்கைப் பின்னையொடும்,...............தாதெருமன்றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே"(சிலப். 17); "மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையு, மாடிய குரவையிஃது"(மணி. 19 : 65 - 6)
    5 "நாட்கள்ளுண்டு "(புறநா.123 : 1)
-------------

ஓதை - காட்டாற்றின்நெடியசுழியிலே வீழ்ந்து அகப்பட்ட தறுகண்மையையுடைய யானையினது வலிய சினத்தைத் தணியப் பண்ணிப் பெரிய கம்பத்திலே சேர்த்தற்குத் தமதேவற்றொழிலைச் செய்தற்குக் காரணமான 1பேச்சுக்களைப்பேசி அவற்றிலே பயிலப் பண்ணும் பாகருடைய ஆரவாரமும்,

328 - 9. ஒலி கழை தட்டை புடையுநர்புனந்தொறும் கிளி கடி மகளிர் விளி படு பூசல் - ஒலிக்கும்மூங்கிலாற் செய்த 2தட்டையைப் புடைத்துப் புனங்கடோறும் கிளியை யோட்டுகின்ற மகளிர் கூப்பிடுதலாற்பிறந்த ஆரவாரமும்,

330. இனத்தின் தீர்ந்த துளங்கு 3இமில்நல் ஏறு - நிரையினின்றும் பெயர்ந்த அசையும் 3குட்டேற்றினையுடையஇடபமும்,

331. மலை தலைவந்த மரையான் கதழ்விடை - எக்காலமும் போர் செய்து போர்த்தொழில்தன்னிடத்திலே கைவந்த மரையானினது விரைந்த ஏறும்,

332 - 5. [ மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்,கோவலர் குறவரோடொருங்கியைந் தார்ப்ப, வள்ளிதழ்க்குளவியுங் குறிஞ்சியுங் குழைய, நல்லேறு பொரூஉங் கல்லென்கம்பலை :]

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்துஆர்ப்ப - முல்லைநிலத்திற் கோவலரும் குறிஞ்சிநிலத்திற்குறவரும் சேரக்கூடி வென்றதன் வெற்றி தோன்ற ஆரவாரிக்கும்படி,

மாறா மைந்தின் ஊறு பட தாக்கி பெரூஉம்கல்லென் கம்பலை - முதுகிடாத வலியுடனே புண்ணுண்டாம்படிமுட்டிப்பொரும் கல்லென்கின்ற ஓசையையுடைய ஆரவாரமும்,

ஏறும் விடையும் ஆர்ப்பப் பொரூஉம்கம்பலை யென்க.

நல் ஏறு வள் இதழ் குளவியும்குறிஞ்சியும் குழைய பொரூஉம் கம்பலை - எருமையேறுகள்வளவிய இதழையுடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படிதம்மிற் பொருகின்ற ஆரவாரமும்,

336 - 9. [ காந்தட் டுடுப்பிற் கமழ்மடலோச்சி, வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ, முண்டுபடுமிச்சிற் காழ்பயன் கொண்மார், கன்றுகடாஅவுறுக்கு மகாஅ ரோதை :]

வள் கோள் பலவின் விளை தீ பழம்சுளை உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார் -வளவிய குலைகளையுடைய பலாவினது முற்றின

----------
    1 இப்பேச்சுக்களை, முல்லைப். 35 -குறிப்புரையால் அறியலாம்.
    2 தட்டையாவது மூங்கிலைக் குறுக்கேநறுக்கிப் பலவாகப்பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலேதட்டுங்கருவி (குறிஞ்சி. 43 - 4, ந.)
    3 இமில் , குட்டேறு - இடபத்தினுடையமுன்முதுகின் மேல் உருண்டு பருத்துத் தோன்றும்ஓருறுப்பு.
-------------

இனிய பழத்திற்சுளையை விரும்பினோரெல்லாரும் தின்று கீழ்வீழ்ந்து கிடக்கும் மிகையான பழத்தின் விதையைப் பயன்கோடற்கு,

கன்று காந்தள் துடுப்பின் கமழ்மடல் ஓச்சி கடாவுறுக்கும் மகார் ஓதை – கன்றுகளைப் பிணைத்துக் காந்தளினது துடுப்புப் போலும் கமழுகின்ற மடலாலே யடித்துக் கடாவிடும் பிள்ளைகளுடைய ஆரவராமும்,

340. 1[மழைகண் டன்ன வாலைதொறுஞெரேரென :]

341. [ கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்:] கரும்பின் கழை கண்உடைக்கும் ஏத்தமும் -கரும்பின்கோலைச் சாறுகொள்ளும் ஆலையின் ஓசையும்,

342. தினை குறு மகளிர் இசை படுவள்ளையும் - தினையைக் 2குறுகின்ற மகளிருடையஇசைமிகுகின்ற 3 வள்ளைப்பாட்டும்,

343 - 4. சேம்பும் மஞ்சளும் ஓம்பினர்காப்போர் 4 பன்றி பறையும் – சேம்பையும் மஞ்சளையும் விதைத்து வளர்ந்தபின்பு பன்றி கிழங்கு அகழாமற் காப்போருடைய பன்றிக்குக் கொட்டும் பறையோசையும்,

குன்று அகம் சிலம்பும் - இவ்வோசைகளால்மலையிடத்தெழும் எதிரொலியும்,

345. என்ற இவ்வனைத்தும் - என்றுயான்கூறிய இவ்வெல்லா ஓசைகளும்,

345- [ இயைந்தொருங் கீண்டி :]ஒருங்கு இயைந்து ஈண்டி - சேரப்பொருந்தித் திரளப்பட்டு,

346. [ அவலவு மிசையவுந் துவன்றிப்பலவுடன் :] அவலவும் மிசையவும் பல உடன் துவன்றி – தாழ்வரையிலுள்ளனவும் உச்சிமலையிலுள்ளனவுமாகிய ஒழிந்த பல ஓசைகளும் சேர நெருங்குகையினாலே,

347 - 8. [ அலகைத் தவிர்த்த வெண்ணருந்திறந்த, மலைபடு கடாஅ மாதிரத் தியம்ப :] எண் அரு திறத்தஅலகை தவிர்த்த மலை படு கடாம் மாதிரத்து இயம்ப -எண்ணுதற்கு அரிதாகிய கூறுபாட்டையுடையவாகையினாலேஎண்ணையொழிந்த 5மலைகளாகிய யானைக்கு உண்டாகின்றவொலிதிசைகளெல்லாமொலிப்ப,

கடாம், ஆகுபெயராய் அதனாற்பிறந்தஓசையையுணர்த்திற்று.

வரிநிழலிருப்பின் (290) இன்னிசையும்(296) பூசலும் (299) அழுகையும் (301) பாடலும் (304) பூசலும் (306)குரலும் (310) பூச லும் (314) கொள்ளையும் (317) உவகையும்(318) குரவையும் (322) இசையும் (324) ஓதையும் (327) பூசலும்(329) கம்பலையும் (335) ஓதையும் (339) ஏத்தமும் (345) குன்றகச்சிலம்பும்(344) ஒருங்கியைந்தீண்டப்பட்டு (345) ஒழிந்த ஓசைகளும்துவன்றுகையினாலே (346) மலைகளாகிய யானைக்குண்டாகின்றவொலி (348) பலதிறம்பெயர்பவை (291) மாதிரத்தியம்ப(348) அவற்றைக் கேட்குவிர் (291) என முடிக்க.

---------
    1 இதற்கு உரை கிடைத்திலது ; மேகத்தைக்கண்டாலொத்த கொட்டில்கள்தோறும் விரைவாக வென்க; ஆலை : ஆகுபெயர் ; (பெரும்பாண். 260 - 61, ந.)
    2 குறுகின்ற - குத்துகின்ற.
    3 வள்ளைப்பாட்டு - உலக்கைப்பாட்டு.
    4 இது குடப்பறையெனவும் வழங்கும் ;"பன்றிப் பறையே குடப்பறை யாகும்" (பிங்கல.1518)
    5 மலைபடு. 572, குறிப்புரை.
------------

இருப்பிற் (290) கேட்குவிர் (291) என்க.

மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால், இப்பாட்டிற்கு மலைபடுகடாமென்று பெயர் கூறினார்.

349 - 51. [குரூஉக் கட் பிணையற் கோதைமகளிர் - முழவுத்துயிலறியா வியலு ளாங்கண், விழவினற்றவன் வியன்கண் வெற்பே :]

அவன் வியன் கண் வெற்பு - அந்நன்னனுடையஅகன்ற இடத்தையுடைய மலை,

குரூஉ கண் பிணையல் கோதை மளிர் -பலநிறம் பொருந்தின இடத்தையுடையதாகிய பிணைத்தலையுடைய மாலையினையுடைய மகளிர் ஆடற்கு ஏற்ற,

முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்விழவின் அற்று - முழவு கண்ணுறக்கமறியாத அகன்ற ஊரிடத்துக்கொண்டதிருநாளையொத்துச் சிறந்திருக்கும் ;

352 - 3. கண் தண்ணென கண்டும் கேட்டும்உண்டற்கு இனிய பல பாராட்டியும் - காண்டற்கு இனியவற்றைக்1கண்குளிரக்கண்டும் கேட்கப்படுவனவற்றைச்செவிகுளிரக்கேட்டும் உண்டற்கு இனிய பல உணவுகளைக்கொண்டாடியுண்டும்,

354 - 5. [ இன்னும் வருவ தாக நமக்கெனத்,தொன்முறை மரபினி ராகி :] நமக்கு இன்னும் வருவதாகஎன தொல் முறை மரபினிர் ஆகி - நமக்கு மேலும் இந்நுகர்ச்சிஉண்டாவதாகவென்று விரும்பிப் பழைய உறவான மக்களைப்போலும்முறைமையினையுடையிராய்ச் சில நாள் தாங்கி,

355- 6. பல மாண் செரு மிக்கு புகலும் திருஆர் மார்பின் - பலவாய் மாட்சிமைப்பட்ட 2வஞ்சிமுதலியபோர்த்தொழில் மிக்குநடத்தலாலே உலகம்புகழுந் திருமகள் நிறைந்திருந்தமார்பினையுடைய நன்னனுடைய,

-----------
    1 "கரங்கூப்பிக் கண்குளிரக்கண்டு "(முருகு, இறுதிவெண்பா, 9)
    2 வஞ்சி - போர்செய்தற்குப்பகைவர்மேற்செல்லுதல்.
--------------

357. உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட- உருமேறுமுழங்குந் தொகுதியையுடைய பெரியமலை நுமக்குப்பின்னாம்படி,

358 - 9. இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்நறு கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி – அதிசயம் நெருங்கின இனிய யாழையுடைய விறல்பட ஆடுமகளிர் நறியகரிய பக்கமலையிலே குறிஞ்சியென்னும் பண்ணைப்பாட,

குரல் : ஆகுபெயர். பாடி, பாடவென்க.

360. கை தொழூஉ பரவி பழிச்சினிர்கழிமின் - நீரும் ஆண்டுறையும் தெய்வங்களைக் கையாலே தொழுதுஎம் குறை முடித்தால் நுமக்கு இவை தருதுமென்று பரவுக்கடன் பூண்டு வாழ்த்திப் போவீர் ;

மரபினிராகிப் (355) பாடிப் (359) பழிச்சி(360) மலை பிற்படக் (357) கழிமின் (360) என்க.

361. [ மைபடு மாமலைப் பனுவலிற்பொங்கி :] பனுவலின் பொங்கி மை படு மா மலை - சூல்முதிர்வதற்கு முன்பு 1 எஃகுறு பஞ்சிபோலப்பொங்கிச் சென்று கார்காலம் வருமளவும் மேகம் கிடக்கும்பெரிய மலையிடத்தில்,

362. கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி- கை சென்று பிடிக்குந் தன்மையையொத்த அணுகுதலையுடையகரிய மேகத்திரள்,

363. தூஉய் அன்ன துவலை துவற்றலின் -வலியத் தூவினாலொத்த துவலைகளைத் தூவுகையினாலே,

364. தேஎம் தேறா கடு பரி கடும்பொடு- திசைகளைத் துணிந்து கொள்ளமாட்டாத கடிய செலவினையுடையசுற்றத்தோடே,

365. காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல்- காவிக்கொண்ட நும்முடைய வாச்சியங்கள் நனையாதபடி,

366. கூவல் அன்ன விடரகம் புகுமின் -கிணறுகள்போன்ற 2 முழைஞ்சுகளிடத்தேபுகுவீர்,

367. இரு கல் இகுப்பத்து இறு வரை சேராது- பெரிய கல்லினது திரட்சியினிடத்து முறிந்துநின்றமலைகளைச்சேராதே,

368 - 72. [ குன்றிடம் பட்ட வாரிடரழுவத்து, நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு, மண்கனைமுழவின் றலைக்கோல் கொண்டு, தண்டுகா லாகத் தளர்தலோம்பி, யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே :]

நின்று கண் நோக்கினும் வாள்வௌவும் (369) இடம் பட்ட குன்று (368) - நின்று கண்ணாற்பார்க்கினும்3கண்ணினொளியைத் தன் அழகாலேவாங்கிக்கொள்ளும் இடமுண்டாகிய மலையில், உம்மை : அவற்றை நுகர மனத்தாற் கருதின் அம்மனத்தையும் வாங்கிக் கொள்ளுமென எச்சவும்மை.

--------
    1 எஃகுறுபஞ்சி - பன்னியபஞ்சு ; நற்.247 : 4
    2 முழைஞ்சு - குகை.
    3 மதுரைக். 343 - 5, அகநா. 217: 2, குறிப்புரை.
--------------

அரு இடர் அழுவத்து (368) ஊறு தவ பல (372)- பொறுத்தற்கு அரிய வருத்தத்தைச் செய்யும்குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறுகள் மிகப்பல ;அவற்றை,

மண் கனை முழவின் தலை (370) தண்டுகாலாக (371) கொண்டு (370) - மார்ச்சனைசெறிந்த முழவிடத்திற்காமரத்தை நுமக்குக் காலாக வாங்கிக்கொண்டு,

தளர்தல் ஓம்பி (371) கோல் (370) ஊன்றினிர்கழிமின் (372) - அடி உள்ளேவிழுதலைப் பரிகரித்து அத்தண்டாகியகோலை ஊன்றிப் போவிர் ;

373. அயில் காய்ந்தன்ன கூர் கல்பாறை - வேல்காய்ந்தாற் போலும் 1குடுமிக் கூர்ங்கற்களையுடைய பாறையில்,

374. வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து - குளிர்ச்சி வாராமல் வெயில் பாதுகாக்கும் இன்னாமை செய்யும் வழியிடத்திற்போம்பொழுது,

375. கதிர் சினம் தணிந்த அமயத்துகழிமின் - ஞாயிறு 2 சினம் மாறின அந்திப்பொழுதிலேபோவீர் ;

376 - 8. [ உரைசெல வெறுத்தவவ னீங்காச்சுற்றமொடு, புரை தவ வுயரிய மழைமருள் பஃறோ,லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய :]

உரை செல வெறுத்த அவன் நீங்காசுற்றமொடு புரை தவ உயரிய மழை மருள் பல் 3தோல்அருப்பமும் உடைய - புகழ் பரக்கும்படி செறிந்த நன்னனுடையநீங்காத படைத் தலைவரோடே உயர்ச்சி மிகவுயர்ந்த 4மேகமென்று மருளும் பல யானைத் திரளையுடையஅரண்களையும் அவ்வழியுடைய ;

அரசு நிலை தளர்க்கும் அருப்பம் -பொரவந்த அரசர் நிலையுடைமையைக் கெடுக்கும் அரண்,

379. பின்னி அன்ன பிணங்கு அரில்நுழை தொறும் - அவ்வரண்களிற் பின்னிவைத்தாலொத்தகெடிபிணங்கின சிறுகாட்டையுடைய சிறிய வழிகடோறும்,

-------------
    1 "பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்"(அகநா. 5 : 13)
    2 சினம் : "காய்சினந் தவிராதுகடலூர் பெழுதரு, ஞாயிறு "(புறநா. 59 : 5 - 6) என்றவிடத்துச்சினமென்பதற்கு வெம்மையெனப் பொருள் கூறுவர்அதனுரையாசிரியர்.
    3 "மழையென மருளும்பஃறோல் "(புறநா. 17 : 34) என்னுமிடத்துத் தோலென்பதற்குப்பரிசையெனப் பொருள்கூறுவர் அதனுரையாசிரியர்.
    4 மலைபடு. 530, குறிப்புரை.
------------

380 - 83. முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிப் கை பிணி விடாது பைபய கழிமின் - முன்போகின்றவன் முகத்திலடியாமல் வாங்கிவிட்ட கடியவிசையையுடைய திரண்டகோல் இனிய இசையைத் தன்னிடத்தே கொண்ட நல்ல யாழின் பத்தரையும் வலித்துக் கட்டின மார்ச்சனை செறிந்த முழவின்கண்ணையும் கெடாதபடி காத்து அவனைக் கரம்பிடித்துக் கோடலை விடாதே மெல்லமெல்லப் போவீர் ;

நாடுகாணனந்தலை (270) முதல் இத்துணையும் மலை (69) கூறிற்று. இவ்விடத்து யாற்றின்றன்மையும் (62) சேரக்கூறினார்.

384. களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல் - யானைகள் தம்மிற் சேர்ந்து பொருதாலொத்த ஒன்றினிடத்தே ஒன்று கூடிநெருங்கின கல்லிடத்தே,

385. தளி பொழி கானம் தலை தவ பலவே - மழைபெய்கின்ற காடுகள் அவ்விடத்து மிகப்பல ;

386 - 7. ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் - ஏவல் பொருந்தாத பகைவர் முதுகிட்ட அளவிலே தமது வெற்றிதோன்ற ஆரவாரித்தாராக, அதுபொறாமல் இவ்விடம் உயிர்கொடுத்தற்கு நல்லகாலமென்று மீண்டு உயிரைக்கொடுத்த நாணத்தையுடைய மறவருடைய,

388 - 9. செல்லா நல் இசை பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே - கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்டகற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும் பலவழிகள் எண்ணுதல் மிகும்படி பலவாயிருக்கும் ;

390 - 91. இன்பு உறு முரற்கை நும் பாட்டு விருப்பாக தொன்று ஒழுகும் மரபின் நும் மருப்பு 1இகுத்து துனைமின் - இன்பமிகுகின்ற தாளத்தினையுடைய நும்முடைய பாட்டு அந்நடுகல்லில் தெய்வத்திற்கு விருப்பமாகப் பழமைநடக்கின்ற முறைமையினையுடைய நும்முடைய யாழைவாசித்து விரையப் போவிர் ;

மருப்பு : ஆகுபெயர்.

392 - 3. பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் சந்து நீவி புல் முடிந்து இடுமின் - முற்காலம் நன்மையறியாத தீயநிலத்தை வழியறியா மற்போய் மீண்டுவந்த புதியவர்கள் பின்வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாதபடி பலவழிகளுங்கூடின சந்தியைக் கையாலே துடைத்து அடையாளமாக ஊகம்புல்லை முடிந்திட்டு வைப்பீர் ;

நற்கு ; நன்கின் விகாரம்.
கானம் பல (385) ; ஆண்டுக் கல் (389) நட்ட (388) கவலை பல (389) ; அக்கல்லிற்கு மருப்பிகுத்துத் துனைமின் (391) ; அப்பொழுது புதுவிர் (392) புல் முடிந்திடுமின் (393) எனக்கூட்டுக.

-----------
    1 இகுத்தல் - ஒலித்தல் ; மலைபடு. 352, ந.
-------------

394. செல்லும் தேஎத்து - நீங்கள் போம் தேசத்திலே,

394 - 6. [ பெயர்மருங் கறிமார், கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவு ளோங்கிய காடேசு கவலை :]

கல் எறிந்து மருங்கு பெயர் அறிமார் எழுதிய கடவுள் - கல்லை 1இடந்துகொண்டு அதனிடத்தே இவ்வாறே பொருதுபட்ட இன்னானென்று அவன் பெயரை உலகமறிவதற்கு எழுதிய கடவுள்,

நல் அரை மராத்த கடவுள் - நல்ல அரையினையுடைய மராத்திடத்தனவாகிய கடவுள்.

என்றது, மராமரத்தின் நிழலிலே நட்ட கல்லென்றவாறு.

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - அக்கடவுளின் தெய்வத்தன்மை மிக்க தன்கொடுமையாற் பிறகாடுகளையிகழும் பலவழிகளில்,

397 - 8. [ ஒட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர், சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே :]

ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் சுரம் தவ பலவே - நன்னனைப் பொருந்தாதே நீங்கின அவன் ஏவற்குப் பொருந்தாத பகைவரிருக்கும் அருநிலங்கள் மிகப்பல ;

இதனால் இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றல் (73) கூறினார்.

சுட்டினும் பனிக்கும் சுரம் - தத்தமூர்களிலேயிருந்து நினைப்பினும் தலைநடுங்குவிக்குஞ் சுரம்,

399 - 400. தேம் பாய் கண்ணி தேர் வீசு 2கவி கை ஓம்பா வள்ளல் படர்ந்திருக்கும் எனினே - தேன்சொரிகின்ற கண்ணியினையும் தேரைச் சிதறும் கொடுத்துக்கவிந்த கையினையுமுடைய 3தனக்கென்று ஒரு பொருளும் பேணாத நன்னனை நினைத்துச் செல்கின்றோமென்று கூறுவீராயின்,

401 - 2. [ மேம்பட 4வெறுத்தவன் றொஃறிணை மூதூர், ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே :] நம்மனோர்க்கு ஆங்கனம் மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் அற்று - நம்மையொக்கும் பரிசிலர்க்கு அப்பகைப்புலம் எல்லாவூர்களினும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழையவூர்களை யொக்கும் ;

-----------
    1 இடந்து - பெயர்த்து.
    2 "ஆனாதீயுங் கவிகை ", "இசை விளங்கு கவிகை "(புறநா. 54 : 7, 102 : 6) என்ற இடங்களில் கவிகையென்பதற்கு இடக்கவிந்தகையென வுரையெழுதுவர் அதன் உரையாசிரியர் ; "கலம்பெயக் கவிந்த கழறொடித் தடக்கையின் "(மலைபடு. 577)

    3 மதுரைக். 146- ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
    4 செல்வத்தைக் குறிக்கும் வெறுக்கையென்னும் பெயருக்கும், இங்கே செல்வமுண்டான என்று பொருள் செய்யப்பட்டிருக்கும்
--------------

403. அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்- இளைத்தவிடத்தே யிளைப்பாறி அஞ்சாமற் போவீர் ;

404 - 5. புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக் , கலைநின்று விளிக்குங் கான மூழிறந்து :] புலி உற வீழ் தன் பிணை உள்ளி வெறுத்த கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து - புலி பாய்கையினாலே பட்ட தன் பிணையை நினைத்து வெறுத்த கலைநின்று கூப்பிடும் அக்காட்டை முறைமைப்படப்போய்,

406. சிலை ஒலி வெரீஇய செ கண் மரைவிடை - வில்லின் ஓசைக்கு வெருவின சிவந்த கண்ணையுடைய மரையேறு,

407. தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் - முட்பட்ட குறுங்காட்டிலே விரைந்தோடும் நாறுகின்ற கொடிகளையுடைய காட்டிடத்து,

408 - 9. வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த வளை ஆன் தீ பால் - வேற்றுப்புலங்களிலே சென்று மேய்ந்த ஏற்றையுடைய நிரையிடத்தனவாகிய சங்குபோல் வெள்ளிய பசுக்களின் இனிய பாலை,

409 - 10. 1 மிளை சூழ் கோவலர் வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் - நிரையைக் காவல் சூழ்கின்ற இடையர் வளையினையுடைய மகளிர் மனமகிழும்படி கொண்டுவந்து சொரிகையினாலே,

411 - 12. [ பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும், புலம் புசே ணகலப் புதுவி ராகுவிர் :] பலம் பெறு நசையொடு நும் பதிவயின் தீர்ந்த புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - பலத்தைப்பெறவேண்டு மென்னும் ஆசையுடனே நும்முடைய ஊரினின்றும் போந்தவருத்தம் விட்டுநீங்குகையினாலே விருந்தாந்தன்மையையுடையிராகுவிர் ;

413 - 6. [ பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன, தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக், கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும், பல்யாட் டினநிரை :] பகர் பல விரவு நெல்லின் அரி அன்ன தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும் பல்யாட்டு இனம் நிரை - பண்டம்விற்ற பலவுங்கூடுநெல்லின் அரிசியையொத்தனவாகக் கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள் வெள்யாட்

வெறுத்த வென்னுஞ் சொல்லிற்கும் இயைபு ஏதேனும் உண்டோவென்பது ஆராய்ச்சிக் குரியது
டுடனே கலந்து கல்லென்கிற ஓசையையுடைய காட்டிடத்தே கடல் போலே யொலிக்கும் பல யாட்டினினங்களையுடைய திரள்களிலே,

---------
    1 "மிளைசூழ் கோவலரிருக்கை "(சிலப். 16 : 4)
---------------

பகர்நெல் : வினைத்தொகை,

416. எல்லினிர் புகினே - இராக்காலத்தையுடையிராய்ச்சொல்லின்,

மனத்தே அக்காலத்தைக் கருதுதலின்,உடைமையாயிற்று.

417. பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - பாலும் பாற்சோறும் நுமக்கென்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவிர் ;

418. துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன -மெல்லிய தலைமயிரினையுடைய சேணமிட்ட படுக்கையையொத்த,

419. மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி - 1ஆடுகளின் மெய்யையுரித்து ஒன்றாகத்தைத்த வார்மிதித்த தோற்படுக்கையிலே,

420. தீ துணையாக சேந்தனிர் கழிமின் - கொடிய விலங்குகள் வாராதபடி 2இடையர் ஒளித்த நெருப்புத் துணையாகத் தங்கிப் போவிர் ;

421 - 2. 3கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் கூவை காணின் - கூப்பிடாத அவ்வெல்லையைக் 4 கூவாநிற்கும் கூரிய நல்ல அம்பினையும் கொடியவில்லினையுமுடைய நாடுகாக்கும் வேடருடைய திரளைக் கண்டீராயின்,அவர்களுக்கு,

423 - 4. படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே - தன்னை வணங்காதாரை அழித்த தாழ்ச்சியில்லாத பகைவரை ஆளுந்தன்மையினையுடைய நன்னனை நினைத்துப் போகின்றோமென்று கூறின்,

கொடியோள் கணவன் - கொடியினையுடையோள் கணவன் ; இதனால் அவன்தேவி கற்புமிகுதி கூறினார்.

5இது நன்னனென்னும் பொருட்டாய் நின்றது.

425 - 6தடியும் கிழங்கும் 6தண்டினர் தரீஇ ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை - தசைகளையும் கிழங்குகளையும் நும்மை நலிந்து
தின்னப்பண்ணிப் பாதுகாப்பாரல்லது வருத்துவார்களில்லை ; அவற்றை நுகர்ந்து,

----------
    1 'கிடாயினுடைய தோல்களைப் பாயலாகவுடைய முதியோன் ' (பெரும்பாண். 151, ந.)
    2 "கடைகோற் சிறுதீ யடைய மாட்டித், திண்கா லுறியன் பானையனகல, னுண்பஃறுவலை யொருதிற நனைப்பத், தண்டுகா லூன்றிய தனி நிலை யிடையன் "(அகநா. 274 : 5 - 8)
    3 கூப்பிடு - ஓரெல்லை ; "நாக்குமுக் கூப்பிடுவளர்ந்து ", "முக்கூப்பிடு வளர்ந்தநெடு நாக்கடிது கொண்டாய் "(சிதம்பர. சோமநாத. 21, 34 )
    4 (பி-ம்.) ' கடாவாநிற்கும் '
    5 முருகு. 6, குறிப்புரை.
    6 "தண்டி - பலகாலலைத்து "(பொருந. 104, ந.)
-----------

427. ஆங்கு 1 வியம் கொண்மின் - அவ்விடத்து அவர் போகச் சொன்னவீவழியை நுமக்கு வழியாகக் கொண்டுபோவிர் ;

அது அதன் பண்பே - அக்காட்டின் தன்மை அத்தன்மைத்தாயிருக்கும் ;

428. தேன் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் -தேனுண்டாக மலர்ந்த மராவினது மெல்லிய பூங்கொத்தும்,

429. உம்பல் அகைத்த ஒள் முறி யாவும் - யானைமுறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய 2 யாம் பூவும்,

430 - 31. [தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, திரங்குமர னாரிற் பொலியச் சூடி :] திரங்கு மரல் நாரில் தளிரொடு மிடைந்த 3 காமரு கண்ணி பொலிய சூடி - உலர்ந்த மரல் நாரிலே தளிர்களோடே நெருங்கக்கட்டின விருப்பம் மருவின கண்ணியை அழகுபெறச் சூடி,

432. முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விண்ட சிறுவழி மழைபெய்து குளிருகையினாலே,

433. உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின் - அந்நீரைக்குடித்துக் குளித்து வழிக்கு முகந்துகொண்டு போமின் ;

434 - 6. [ செவ்வீ வேங்கைப் பூவி னன்ன, வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த, சுவல்விளை நெல்லி னவரையும் புளிங்கூழ் :]

செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை -சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த நிறத்தையுடைய அவரைவிதை,

வேய் கொள் அரிசி - மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி,

சுவல் விளை நெல்லின் அரிசி - மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி,

சொரிந்த மிதவை புளியங்கூழ் -இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை,

437. அதற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட - இராக்காலத்து, காட்டிடத்துப் பகற்பொழுதுவந்த நும் வருத்தம் போம்படி,

438 - 9. [அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய, புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் :] ஆங்கண் அகலுள் கழி மிடைந்து இயற்றிய புல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர் - அவ்விடத்து அகன்ற ஊரிடத்துக் கழிகளால் தெற்றிப் பண்ணின புல்லான் வேய்ந்த குடில்களிலிருக்கும் குடிகளிடந்தோறும் பெறுகுவிர் ;
கூழை அற்கு பெறுகுவிரென்க.

---------
    1 வியம் - ஏவல்.
    2 (பி-ம்.) ' ஆச்சாவிற் பூவும் '
    3 காமரு : முருகு. 75, குறிப்புரை.
------------

440 - 43. [ பொன்னறைந்தன்ன நுண்ணே ரரிசி, வெண்ணெறிந்தியற்றிய மாக்கணமலை, தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக,வசையினிர் சேர்ப்பி னல்கலும் பெறுகுவிர் :]

அசையினிர் சேப்பின் - இளைப்பாறி அவ்விடத்தே சிலநாள் தங்கு வீராயின்,

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி வெண்ணெறிந்து இயற்றிய மா கண் அமலை - பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய ஒத்த அரிசியை வெள்ளையெறிந்தாக்கின கரிய இடத்தையுடைய சோற்றுத்தடியை,

தண்ணென் நுண் இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிர் -தண்ணென்ற நுண்ணிய நெய்விழுதை உள்ளே இட்டுண்ணும்படி நாடோறும் பெறுகுவிர் ;

444. விசயம் கொழித்த பூழி அன்ன- கருப்புக் கட்டியைக் கொழித்த பொடியையொத்த,

445. உண்ணுநர் தடுத்த இடி நுண் நுவணை - 1தன்னை நுகர் வாரை வேறொன்றை நுகராமல் தடுத்த இடித்தலால் நுண்ணியதாகிய தினைப் 2பிண்டியொடு,

சேப்பின் நுவணையோடே அமலையை இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிரென்க.

நுவணையோடென ஓடு விரிக்க.

446 - 7. நொய் மரம் விறகின் ஞெகிழி மாட்டி பனி 3சேண்நீங்க இனிது உடன் துஞ்சி - நொய்ய மரமாகிய விறகாலாக்கின 4கடைக்கொள்ளியை எரித்துப் பனி விட்டுநீங்கும்படி இனிதாகச் சேரத்துஞ்சி,

448. புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின் - இராக்காலம் நீங்குதலையுடைய விடியற்காலத்தே நிமித்தம் பார்த்துப் போவிர் ;

புள்ளோர்த்தென்றதற்குப் புட்களின் குரல்கேட்டுப் போவீரென்றுமாம்.

இத்துணையும் கானமும் (69) கானத்து ஆற்றினது நன்மையும் அசையுநற்புலமும் (67) வல்சியும் (68) சேரக்கூறினார்.

-----------
    1 மலைபடு. 138-ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
    2 பிண்டி - மா.
    3 "சேணீங்கிய - கைவிட்டு நீங்க "(மதுரைக். 198 , ந.)
    4 கடைக்கொள்ளி : பெரும்பாண்ள் 177 - 9, குறிப்புரை.
--------------

449. புல் அரை காஞ்சி - புற்கென்ற அரையினையுடைய காஞ்சி மரத்தினையும்,
புனல் பொரு 1புதவின் - நீர்வந்துபொருகின்ற அறுகுகளையும்,

450. மெல் அவல் - மெல்லிய விளைநிலங்களையும்,

450 - 53. [ இருந்த வூர்தொறு நல்லியாழ்ப், பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும், பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு, நன் பல வுடைத்தவன் றண்பணை நாடே :]

காவும் - பொழில்களையும்,

பள்ளியும் - இடைச்சேரிகளையுமுடைய,

அவன் தண் பணை நாடே - நன்னனுடைய குளிர்ந்த மருதநிலத்தையுடைய நாடு,

பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் இருந்த ஊர்தொறும் - பலநாள் நிற்பினும் ஒருநாள் தங்கிப்போகினும் நீர் நுகர்வுதற்குக் குடி நீங்காதிருந்த ஊர்கள் தோறும்,

நல் யாழ் பண்ணு பெயர்த்தன்ன நல் பல உடைத்து - நல்ல யாழின் பண்ணை மாறி வாசித்த தன்மையவாக நன்றாகிய பல பொருள்களையுடைத்து ;

காஞ்சி முதலியவற்றை உடையநாடு ஊர்தோறும் நன்பலவுடைத்தென்க.

2பண் ஒன்னையொன்றொவ்வாது இனிதாயிருக்குமாறுபோல நுகரும் பொருள்களும் ஒன்றையொன்றொவ்வா இனிமையுடையவென்றார்.

454 - 5. கண்பு மலி பழனம் கமழ துழைஇ வலையோர் தந்த இரு சுவல் வாளை - கண்பு நெருங்கின மருதநிலத்தைப் பூக்கள்நாற வளைத்து ஆராய்ந்து வலையைவீசுவார் கொண்டுவந்த பெரிய கழுத்தினையுடைய வளைத்தடியை,

456 - 8. நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் பிடி கை அன்ன செகண் வரால் துடி கண் அன்ன குறையொடு விரைஇ - ஓரிடத்தில் நிலைபெற நிற்றலையுடையோரிட்ட நெடிய கயிற்றையுடைய தூண்டிலிற் பட்ட பிடியின் கையையொத்த சிவந்த கண்ணையுடைய வராலினது துடியின் கண்ணையொத்த தடியோயேகலந்து,

459 . 3 பகன்றை கண்ணி பழையர் மகளிர் - பகன்றைப் பூவாற் செய்த கண்ணியையுடைய கள்விற்கும் வலையருடைய மகளிர்,

------
    1 "புதவொரு விகற்பப் புல்லா கும்மே "(பிங்குல. 3001)
    2 "பையு ளுறுப்பிற் பண்ணுப்பெயர்த்தாங்கு அளிக்கும் நனையெனக் கூட்டி, எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்து வாசிக்குமாறு போலே ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மதுவெனவுரைக்க "(பதிற். 65 : 12, உரை) 3 பகன்றை : (குறிஞ்சிப். 88. குறிப்புரை.)
------------

460 - 62. ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ வளம் செய் விளைஞர் வல்சி நல்க - ஞெண்டுகள் ஆடித்திரியும் செய்க்கு அருகில் மேட்டுநிலத்தேயிட்ட மலையை யொத்த போர்களை அடியிலேவிழ அழித்துக் கடாவிட்டு வளப்பத்தை யுண்டாக்கும் உழவர் நெல்லை முகந்து தராநிற்க,

463. 1துளங்கு தசும்பு வாக்கிய பசு பொதி தேறல் - களிப்பு மிகுதியால் அசையும் மிடாவினின்றும் வார்த்த பசிய முளையாலாக்கின கட்டெளிவை,

464. [ இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் :] ஞாயிறு இள கதிர் களங்கள் தொறும் பெறுகுவிர் - ஞாயிற்றினது இளைய கதிர்களெறிக்குங் காலத்திலே களங்கடொறும் பெறுகுவிர் ;

வினைஞர் வல்சிநல்காநிற்கப் பழையர்மகளிர் விரைஇத் தேறல் நல்கா நிற்கப் பெறுகுவிர் என்க.

465 - 8. [ முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு, வண்டு படக் கமழுந் தேம்பாய் கண்ணித், திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக், கண்டோர் மருள :]

வண்டு பட கமழும் தேன் பாய் கண்ணி திண் தேர் நன்னற்கும் அயினி சான்மென கண்டோர் மருள - வண்டு படியும்படி நாறும் தேன் சொரிந்த கண்ணியினையும் திண்ணிய தேரினையுமுடைய நன்னனுக்கும் உணவாதற்கு அமையுமென்று கண்டோர்கள் மருளும்படி,

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெள் சோறு - முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய நிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோற்றை,

வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை வெள்ளரி யென்றார். ஆகுபெயராக்கி.

மருள இயற்றிய வென்க.

468. கடும்புடன் அருந்தி - நின் சுற்றத்துடனேயுண்டு,

469 - 70. எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழிமின் - எருத்தையடிக்கின்ற உழவரோசையோடே கூடும்படி நல்லயாழை மருதத்தை வாசித்து இளைப்பாறிப் போவீர் ;

இத்துணையும் நாடுபடு வல்சியும் (68) அசையுநற்புலமும் (67) சேரக் கூறினார்.

-----------
    1 "தசும்புதுளங்கிருக்கை "(பதிற், 42 : 11) என்பதும் , ' தன் களிப்பு மிகுதியால் தன்னையுண்டார் உடல்போல அத்தசும்பு இருந்து ஆடும்படியான இருப்பு 'என்னும் அதனுரையும் இங்கே அறியற்பாலன.
--------------

471 - 3. வெள் நெல் அரிநர் தண்ணுமை வெரீஇ செ கண் எருமை இனம் பிரி ஒருத்தல் கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி - வெள்ளிய நெல்லையறுப்பார் கொட்டின பறையோசைக்கு வெருவிச் சிவந்த கண்ணையுடைய எருமைத்திரளைப் பிரிந்த கடா ஆரவாரிக்குஞ் செலவினையுடைய வலியோடே நும்மேல் விரைந்து வருதலைப் பேணி,

474 - 5. வனை கலம் திகிரியின் குமிழி சுழலும் துனை செலல் 1தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் - குயவன் வனைகின்ற மட்கலத்திற் சக்கரம்போலக் குமிழி சுழன்று தோன்றும் விரைந்த செலவினையுடைய வாய்த்தலையின் ஒழிவின்றி ஓடும் யாறு (476),

476 - 7. காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் யாணர் ஒருகரை கொண்டனிர் கழிமின் - காண்பார் விரும்பும் கட்கு இனிய சேயாற்றினது புதுவருவாயையுடைய ஒரு கரையை வழியாகக்கொண்டு போவிர் ;

வாயம் : ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது (தொல். வினை. சூ. 41) சேயாறு : அவ்வியாற்றின் பெயர்.

478 - 87. [ நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற், பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ, வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத், தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென, விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற், கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு, மலையென மழையென மாட மோங்கித் , துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும், பனிவார் காவிற் பல்வண் டிமிரு, நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் :]

பல் வண்டு இமிரும் பனி வார் காவின் (486) - பலவண்டுகளொலிக்கும் குளிர்ந்த நெடிய பொழில்களையும்,

இகழுநர் வெரூஉம் (482) நிவந்து ஓங்கு வரைப்பின் (478) - நன்னனை இகழ்ந்திருப்பார் அஞ்சும் மிகவோங்குமதிலையும்,

சாறு என (481) கெழீஇ (479) கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு (483) வியல் இடம் பெறா விழு பெரு நியமத்து (480) - திருநாளென்னும்படி மாந்தர் பொருந்திக் கடலெனக் காரென ஒலிக்கும் ஆரவாரத்தோடே திரிதரற்கு அகன்ற இடம்பெறாத சீரிய பெரிய அங்காடித் தெருவினையும், கவலை மறுகின் (482) - பல கவர்த் தன்மையையுடைய குறுந்தெருக்களையும்,

-----------
    1 "காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை, யோவிறந் தொலிக்கு மொலியே யல்லது "(சிலப். 10 : 108 - 9) என்றவிடத்து ஓவிறந்தென்பதற்கு ஓவுதல் தவிர்ந்தென்று அரும்பதவுரையாசிரியரும், வாய்த்தலையோ விறந்தொலிக்கு மொலியென்பதற்கு, ' வாய்த்தலைக்கிட்ட கதவின்மீதெழுந்து குதிக்கின்ற புதுப்புனலொலி ' என்று அடியார்க்கு நல்லாரும் எழுதிய உரைகள் இங்கே அறியற்பாலன.
------------

1பதி எழல் அறியா பழ குடி (479) துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் (485) மாடம் மலை என மழை என ஓங்கி (484) - ஊரினின்றும் பேர்தலையறியாத பழையகுடி வெறுப்பில்லாத விருப்பத்தோடே நன்றாதல் பொருந்தியிருக்கும் மாடங்கள் மலையென மழையென ஓங்குகையினாலே,

யாறு என கிடந்த தெருவின் (481) - யாறென்னும்படி கிடந்த பெருந்தெருவினையும்,

2இரண்டு மருங்கின் மாடமுந் தெருவும் யாறும் கரையும் போன்றவென்றார்.

நிதியம் துஞ்சும் (478) அவன் பழவிறல் முது ஊர் நனி சேய்த்து அன்று (487) - காவினையும் மதிலினையும் நியமத்தினையும் மறுகினையும் தெருவினையுமுடைய, பொருட்டிரள் தங்கும் அவன் பழைய வெற்றியையுடைய மூதூர் மிகவும் தூரிதன்றென்க.

இது மூதூர்மாலை (93) கூறிற்று.

488 - 9. பொருந்தா தெவ்வர் இரு தலை துமிய பருந்து பட கடக்கும் ஒள் வாள் மறவர் - நன்னனைப் பொருந்தாத பகைவருடைய கரிய தலைகள் துணியப் பருந்துகள் யப் போரைவெல்லும் ஒள்ளிய வாளையுடைய மறவர்,

490 - 91. கரு கடை எஃகம் சாத்திய புதவின் அரு கடி வாயில் அயிராது புகுமின் - தம்முடைய கரிய காம்பினையுமுடைய வேலைச்சாத்தி வைத்துக் காத்திருக்கின்ற பல தெற்றுவாசல்களையுமுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவிர் ;

492 - 5. [ மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர், வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி, வந்தோர் மன்ற வளியர் தாமெனக், கண்டோரெல்லா மமர்ந்தினிதி னோக்கி :]

மன்றில் வதியுநர் சேண் புலம் பரிசிலர் கண்டோர் எல்லாம் - அம்பலங்களிலே தங்குவாராகிய தூரிய நிலங்களினின்றும் வந்த கூத்தர் முதலியோராய நும்மைக் கண்டோரெல்லாம்,

-----------
    1 "பதியெழு வறியா - பதியினின்றும் பெயர்தலை யறியாத ; எனவே பகையின்மை கூறிற்று. பழங்குடி - தொன்மரபு ; ஆதிகாலத்தேறிய குடியுமாம் "(சிலப். 1 : 13, அடியார்.)
    2 "இருகரையும் யாறும்போன்றன, இரண்டு பக்கத்தின் மனைகளும் தெருவுகளும் "(மதுரைக். 359 , ந.)
----------

அளியர் தாம் வெல் போர் சேஎய் பெருவிறல் மன்ற உள்ளி வந்தோர் என அமர்ந்து இனிதின் நோக்கி - இவ்வளிக்கத்தக்கவர் தாம் வெல்லும் போரைவல்ல முருகனைப்போலும் நன்னனைப் பரிசிலர்க்குக் கொற்றமாக நினைத்து வந்தோரென்று கருதி முகம்பொருந்தி இனிதாகப் பார்த்து,

496 - 7. [ விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப், பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட :] 1பரி புலம்பு அலைத்த வருத்தம் வீட அவர் விருந்து நும் இறை எதிர்கொள அவர் குறுகி - தரித்தலானுண்டான தனிமை வருந்தின வருத்தம் போம்படி அவ்விடத்தோர் விருந்தாய் நீங்கள் தங்குதலை எதிரேற்றுக் கொள்கையாலே அவர்களைச் சேர்ந்திருந்து,

498 - 500. [ எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத், தொழுதி போக வலிந்தகப் பட்ட, மடநடை யாமான் கயமுனிக் குழவி :]

எரி கான்றன்ன பூ சினை மராஅத்து தொழுதிபோக வலிந்து அகப்பட்ட மடம் நடை ஆமான் குழவி - நெருப்பைக் கான்றாலொத்த பூங்கொம்புகளையுடைய மராமரத்திடத்தே கிடந்த இனமெல்லாங் கெட்டுப்போகப் போகமாட்டாது அகப்பட்ட மடப்பத்தையுடைய நடையையுடைய ஆமானினது குழவி,

கயம் முனி குழவி - யானைக்கன்றிளையது,

501. ஊமை யெண்கின் குடாவடிக் குருளை :] எண்கின் குடாவடி ஊமை குருளை - கரடியின் வளைந்த அடியினையுடைய வாய் திறவாக்குட்டி,

502 - 3. மீமிசை கொண்ட கவர் பரி கொடு தாள் வரை வாழ்வருடைவல் தலை மாதகர் - முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண் கால்வருடையில் வலிய தலையினையுடைய பெரியகிடாய்,

இனி வருடையும் தகருமென வேறாகக் கூறலுமாம்.

504. அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை - பாம்பினது வலிகளை யழித்த சிறிய கண்ணினையுடைய கீரி,

505 - 6. அளை செறி உழுவை கோள் உற வெறுத்த மடம் கண் மரையான் பெரு செவி குழவி - முழையிலே செறிந்திருந்த புலி பாய்தலுறுகையினாலே தன் உடலை வெறுத்த மடப்பத்தையுடைய கண்ணினையுடைய மரையானினது பெரிய செவியினையுடைய குழவி,

------------
    1 "பரிபுலம்பினர் "(சிலப். 10 : 226) என்றவிடத்துச் செலவால் வருந்தினரென அரும்பதவுரையாசிரியரும், ' வழிவரும் வருத்தத்தால் மிகவும் வருந்தினர் ............பரி - மிகுதி ; பரிபுலம்பினர் ஒரு சொல்லுமாம் ' என அடியார்க்கு நல்லாரும் எழுதிய வுரைகள் இங்கே கருதற்குரியன.
-------------

507 - 8.அரக்கு விரித்தன்ன செ நிலம் மருங்கின் பரல் தவழ் உடும்பின் கொடு தாள் ஏற்றை - அரக்கைப் பரப்பினாலொத்த சிவந்த நிலத்திடத்திற் சுக்கான் கல்லிலே தவழும் உடும்பினது வளைந்த காலையுடைய ஏறு,

509. வரை பொலிந்து இயலும் மடம் கண் மஞ்ஞை -மலையிடத்தே அழகுபெற்று ஆடும் மடப்பத்தையுடைய கண்ணினைடையமயில்,

510. கானக்கோழி கவர் குருல் சேவல் -கானத்திடத்துக்கோழியினது பெடையை அழைக்கின்றகுரலையுடைய சேவல்,

511.கானம் பலவின் முழவு மருள் பெரு பழம் - காட்டிடத்துப் பலாவினுடைய முழவென்று மருளும்பெரியபழம்,

512 - 3.[ இடிக்கலப் பன்ன நறுவடி மாவின், வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் :] நறு வடி மாவின் இடி கலப்பன்ன வடி சேறு விளைந்த தீ பழம் தாரம் : நறிய வடுக்களையுடைய மாவினது பொடிச்செய்த 1 கண்டின் கலப்பையொத்த பிழியப்படும் சாறு முற்றினஇனிய பழமாகிய பண்டம்,

514. தூவல்கலித்த இவர் நனை வளர் கொடி - மழையாற்செருக்கின பரக்கின்ற அரும்புகளையுடைய மணம்வளருகின்ற 2நறைக்கொடி,

515.3 காஅய் கொண்ட நுகம் மருள் நூறை - காவிக்கொண்டு வந்த நுகமென்று மருளும் 4நூறைக்கிழங்கு,

நூறை - 5மலங்கென்பாருமுளர்.

516.[ பரூஉப்பளிங் குதிர்த்த :] உதிர்த்த பரூஉ பளிங்கு - மரத்தினின்றும் சிதறியுதிர்த்த பருத்த 6 நிகரமாகிய 7கருப்பூரம்,

பல உறு திரு மணி -பலவிலைபெற்ற அழகினை மாணிக்கம்,

517 - 8. [குரூஉப்புலி பொருத புண்கூர் யானை, முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் :] குரூஉ புலி பொருத புண் கூர் முழு வலியானை முத்துடை மருப்பின் மிகு திரள் - நிறத்தையுடைய புலி பொரப்பட்ட புண் மிக்க குறைவில்லா வலியையுடைய யானைகளினுடைய முத்துடைக் கொம்புகளினுடைய மிக்கதிரள்,

519.வளை உடைந்தன்ன வள் இதழ் காந்தள் - வளையுடைந்தாற் போன்ற வளவிய இதழையுடையகாந்தட்பூ,

------------
    1 கண்டு -கற்கண்டு.
    2 நறைக்கொடி - ஒருவகைக்கொடி ;"தண்கமழ் நறைக்கொடி கொண்டு" (ஐங்குறு. 276 : 2).
    3 காஅய், காவி -தோளிற்சுமந்து.
    4 பி - ம்.'நூற்றைக்கிழங்கு'
    5 மலங்கு - ஒருவகைமீன்.
    6 நிகரம் - திரள் ;"நிகரவேறு வேறாய ..............ஆரம்"(தக்க. 106)
    7 கருப்பூரம் - ஒருவகைமரம் ; "இமயச்சாரற் கருப்புரக்கன்று"(சீவக. 1267)
---------------

520. நாகம் -புன்னைப்பூ,

திலகம் -திலகப்பூ,

நறு காழ் ஆரம் -நறிய வயிரத்தையுடைய சந்தனம்,

521. [கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி :] மிளகின் கரு கொடி காய் துணர் பசு கறி - மிளகினது கரிய கொடிகள்காய்த்த கொத்திற் பசியமிளகு,

முன்னர் மிளகென்றது முதலை ; கறி, சினை.

522. திருந்து அமை விளைந்த தேன் கள் தேறல் - நன்றாகிய மூங்கிற் குழாயிலே முற்றியதேனாற்செய்த கட்டெளிவு,

523. கான் நிலை எருமை கழை பெய் தீ தயிர் - காட்டிடத்து நிலைமையினையுடைய எருமையினது,மூங்கிற்குழாயிலே தோய்த்த இனிய தயிர்,

524. நீல் நிறம்1ஓரி பாய்ந்தென - முற்றுகையினாலே 2நீலநிறத்தையுடைய ஓரிநிறம் பரந்ததாக,

524 - 5. நெடு வரை நேமியின் செல்லும் நெய் கண் இறால் - நெடிய வரையில் இறாலிடத்தை விட்டுப்பாயுந் தேனைத் தன்னிடத்தே உடையஇறால்கள்,

526 - 9. [ உடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங், குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி, கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப, நோனாச் செருவினெடுங்கடைத் துவன்றி :]

தழீஇய ஆசினி -நன்றென்று கூட்டிக்கொண்ட ஆசினிப்பலா,

குடமலை பிறந்ததண் பெரு காவிரி கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப - குடகமலையிற்பிறந்த குளிர்ந்த பெரியகாவிரி கடலிலே மிக்குச்செல்கின்ற ஆழத்தையுடைய புகார்முகத்தையொப்ப,

நோனா செருவின் நெடு கடை -பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே,

3அனைத்தும்உடம்புணர்பு துவன்றி,

530 - 31. 4[ வானத் தன்ன வளமலி யானைத், தாதெருத் ததைந்த முற்ற முன்னி :]

--------
    1 "ஓரியென்பது தேன்முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம் ; முசுக்கலை யெனினும் அமையும் "(புறநா. 105, உரை)
    2 "நீனெய்தாழ்கோதை - நீலநிறத்தையுடைய தேனெய் தங்கியகோதை "(பரி. 11 : 124,பரிமேல்.)
    3 இதற்கு உரைகிடைத்திலது ; மேற்கூறிய யாவும்ஒருமிக்கச் சேரப் பெற்று நெருங்கியென்க.
    4 இதற்கும் உரைகிடைக்கவில்லை ; மேகங்களை யொத்த வளப்பம் மிகுந்த யானைகளையுடைய தாதாகிய எருக்கள் நெருங்கின முன்றிலையடைந்தென்க.
----------

532. மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப - மழைமுழக்கத்திற்கு எதிராகமுழங்கும் கண்ணையுடைய முழவின் கண்கள் ஒலியா நிற்க,

533. கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர - மூங்கிலாகிய இசை வளரும் பெருவங்கியத்தினது திறந்த கண்ணிடம் ஒலியாநிற்க,

534-6. [மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ், நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக், கடவ தறிந்த வின்குரல் விறலியர் :]

மருதம் பண்ணிய கரு கோடு சிறு யாழ் நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி இன் குரல் விறலியர் - மருதத்தை வாசித்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின்நரம்பினோசைக்கு மேற்போகாது அவ்வோசையுடனேகூடி ஓரோசையாய் இனிதாகிய பாட்டினையுடைய விறல்பட ஆடும் மகளிர்,

கடவது அறிந்த விறலியர் - தலைவனைக் கண்டாற் செய்யக்கடவ தொழில் யறிந்த விறலியர்,

537. தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது - பழைதாய் நடக்கும் முறைமையினையுடைய தம் இலக்கணத்தில் தப்பாமல்

538. அரு திறல் கடவுள் பழிச்சிய பின்றை -1பொறுத்தற்கு அரிய வலியையுடைய கடவுளை முதலில் வாழ்த்தின பின்பு,

முற்றத்தையணுகி (531) இகுப்ப (532) விறலியர் (536) தேவபாணியைப் பாடினபின்பு (539) என்க.

539. விருந்தின் பாணி கழிப்பி - சென்றாற் புதிதாகப்பாடும் பாட்டுக்களைப் பாடி,

539 - 40. நீண்மொழி குன்றா நல் இசை சென்றோர் உம்பல் - வேல் நிழற் புலவோர்க்குக் (88) கொடுத்தவற்றை வாங்காதபடி தாம் கூறிய வஞ்சினங்களிற் குறையாத நல்ல புகழிலே நடந்தோருடைய வழியில் வந்தவன்,

இதனாற் கொடைக்கடனிறுத்த அவன் தொல்லோர் வரவு (89) கூறினார்.

541 - 3. [ இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப, விடைத்தெரிந்துணரும் பெரியோர் மாய்ந்தெனக், கொடைக்கட னிறுத்த செம்மலோயென :]

இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென - நன்று இது தீது இஃதென்று ஆராயும் பெரிய உபகாரிகள் இறந்தார்களாக,

இன்று இவன் செல்லாது உலகமொடு நிற்ப கொடை கடன் இறுத்த செம்மலோய் என - நின்பேர் இக்காலத்து இவ்வுலகிலே நடந்துவிடாதே உலகமுள்ளளவும் நிற்கும்படி கொடையாகிய கடனை முடித்த தலைமையை உடையோயென்றுகூறி,

------------
    1 "நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் "(சீவக. 402)
---------------

544. வென்றி பல் பகழ் விறலொடு ஏத்தி - வெற்றியாலுண்டாகிய பல புகழ்களை1ஐம்பொறிகளைத் தன் வசமாக்கின வெற்றியோடேபுகழ்ந்து,

545. சென்றது நொடியவும் விடாஅன் - நும்மனத்திற்சென்ற ஏனைப் புகழ்களைமுற்றக்கூறவும் அமையானாய்,

545 - 6. நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என - என்மேலுள்ள நசை கொண்டுவருகையினாலே என்னிடத்து வந்ததே அமையும் ;வழிவந்த வருத்தமும் பெரிதென முகமன்கூறி,

547 - 8. பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி - பொருகின்ற மாறுபாட்டினை எதிர்கொண்டிருக்கும் படைத்தலைவரோடே பொலிவுபெற்றுச் செல்வத்தையுடைய தன் மனையின் முற்றத்தை நீங்கள் செல்லுதலை விரும்பி,

பொலிந்தென்னு மெச்சத்தைஉடையவென்பதனோடு முடிக்க.

549. கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சான்றோரிருக்கின்ற நன்றாகிய 2சமயத்திருக்குமண்டபத்தேயிருந்து,

வலம் - இடம்.

இதனால் நல்லிதினியக்குமவன்சுற்றத்தொழுக்கமும் (80), அவன் நாண் மகிழிருக்கையும் (76)கூறினார்.

550 - 52. உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகி - உயர்ந்த அரசவுரிமையினையும், கொடுமையில்லாத அமைச்சர் முதலியோரையும் அகன்ற நாட்டினையும், சுருங்கின அறிவினையுமுடையராய் இரந்து வந்தோர்க்கு யாம்இல்லேமென்று கூறி இல்லையென்று மறித்த கையினையுமுடையராய்,

கட்டில் - சிங்காதனமுமாம். தாயம் -உரிமைகளெல்லாவற்றையும் கூறிற்றுமாம்.

553. தம் பெயர் தம்மொடு கொண்டனர்மாய்ந்தோர் - தம்பெயரை உலகில் நிறுத்தாமல் தம்முடனேகொண்டுபொன்றக் கெட்டுப்போன அரசர்,

554 - 6. நெடுவரை இழிதரு நீத்தம் சால் அருவி கடு வரல் கலுழி கட்கு இன் சேயாறு வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - நெடியமலையில்நின்றுங் குதிக்கும் பெருக்கு நிறைந்த அருவியினது கடியவரத்தினை உடைத்தாகிய பெருக்கினையுடைய கண்ணுக் கினியசேயாற்றின் அறல் வீற்றிருந்த இடுமணலாகிய மணலினும்பலர் ;

----------
    1 "புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம் "(தனிப்.)
    2 சமயத் திருக்குமண்டபம் : சீவக. 2370, ந. ; "சமயமண்டப நிறைந்திருந்ததிரி சங்குமைந்தன் "(அரிச்சந்திர. வேட்டஞ்செய். 16)
----------------

557. [ அதனால் , புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென :] அதனால் நம் வரைந்தநாள் புகழொடும் கழிக என - ஆகையினாலே நமக்குத் தெய்வம் இத்துணைக் காலமிருவென எல்லையிட்டுவிட்ட நாள் புகழோடே கழிந்து போவதாகவென்று கருதி,

558. [ பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு :]

பரந்து இடம் கொடுக்கும் உள்ளமொடு - கொடுத்தற் றொழிலிலேவிரிந்து அதற்கே இடங்கொடுக்கும் நெஞ்சுடனே,

விசும்பு தோய் உள்ளம் - ஆகாயத்தை யொத்த பெரியஉள்ளம்,

559 - 60. [நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்தவுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி :] நயந்தனிர் உவந்த உள்ளமொடு சென்ற நும்மினும் தான் பெரிது அமர்ந்து இனிது நோக்கி - பரிசில் பெறுதற்கு விரும்பி மகிழ்ந்த நெஞ்சத்தோடே சென்ற நும்மினுங்காட்டில் தான் பெரிதும்முகனமர்ந்து இனிதாகப்பார்த்து,

561 - 2. [ இழைமருங் கறியா நுழைநூற் கலிங்க, மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ :] எள் அறு சிறப்பின் இழை மருங்கு அறியாநுழை நூல் கலிங்கம் வெள்அரை கொளீஇ - இகழ்ச்சியற்ற தலைமையினையுடைய இழைபோனவிடமறியாத நுண்ணிய நூலாற் செய்த புடவைகளை,அழுக்கேறின சீலைகள் கிடத்தலின் வெள்ளிதாகியஅரையிலே உடுத்தி,

563 - 6. [ முடுவ றந்த பைந்நிணத் தடியொடு , நெடுவே ணெல்லினரிசி முட்டாது , தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து,பலநா ணிற்பினும் பெறுகுவிர் :]

வழி சிறந்து பல நாள் நிற்பினும் - அவ்விடம் நும்நெஞ்சிற்குச் சிறப்பெய்திப் பலநாள் நின்றீராயினும்,

முடுவல் தந்த பைந்நிணம் தடியொடு -பெண்நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய நிணத்தையுடையதசைகளோடே,

நெடு வெள் நெல்லின் அரிசி முட்டாது - நெடிய வெள்ளிய நெல்லின் அரிசியும்முட்டுப்படாமல்,

தலைநாள் அன்ன புகலொடு பெறுகுவிர் -முதல் நாட்போன்ற விருப்பத்தோடே பெறுகுவிர் ;

566 - 8. [ நில்லாது, செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென, மெல்லெனக் கூறி விடுப்பின் :] நில்லாது எம் தொல் பதிபெயர்ந்து செல்வேம் தில்ல என மெல்லென கூறி விடுப்பின் அவ்விடத்து நில்லாதே எம்முடைய பழையவூரே மீண்டும் போவேம் ; இஃது எங்களுக்கு விருப்பமென்று அவன் பொறுக்கச் சொல்லிஅவனைக் கைவிடின்,

568 - 9. நும்முள் தலைவன் தாமரை மலைய - நுங்களில் தலைவனானவன் பொற்றாமரையைச் சூட,

569 - 70. விறலியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய - விறல்பட ஆடுமகளிர் அழகுபொருந்தின தலைமையினையுடைய விளங்குகின்ற பேரணிகலங்களைப் பூண,

571. நீர் இயக்கு அன்ன நிரை செலல்நெடு தேர் - நீரின் செலவினை யொத்த நிரைத்துச்செல்கின்றசெலவினையுடைய நெடிய தேர்கள்,

572. வாரி கொள்ளா வரை மருள் வேழம் -யானைபடுகின்ற விடத்திற் பிடித்துக் கொள்ளாதமலையென்று மயங்கும் யானைகள்,

என்றது , பகைவர்திறைதந்த யானைகளை.

573. கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை - ஒலிக்கும் மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பெரிய பசுத் திரள்கள்,

574. பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி - பொன்னாற் செய்த கலனைமுதலியவற்றாற் பொலிவுபெற்ற மனச்செருக்கால் மயிரைப் பலகாலுங் கொய்யும்கழுத்தினையுடைய குதிரைகள்,

575. நிலம் தின கிடந்த நிதியமோடு - மண்தின்னும்படி பழைதாய்க்கிடந்த பொருட்டிரளோடே,

அனைத்தும் - எல்லாவற்றையும்,

576 - 7. இலம் படு புலவர் ஏற்ற கை நிறைய1கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தடகையின் - இல்லாமையுண்டான புலவர் ஏற்ற கைந்நிறையும்படி பேரணிகலங்களைச் சொரிகையினாலே கீழ்நோக்கின உழலுந் தொடியணிந்த பெரியகையினிடத்துண்டாகிய,

இதனாற் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரி (72)கூறினார்.

578.வளம் பிழைப்பு அறியாது - தான்கொடுத்த செல்வம் கெடுதலை யறியாதபடி,

578 - 9. வாய் வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீமிசை - வாய்த்த வளப்பம் முற்றுப்பெற்று மூங்கில்வளர்ந்த நவிரமென்னும் பெயருடையமலையிடத்துச்சியிலே,

579 - 80. ஞெரேரென மழை சுரந்தன்ன ஈகை - கடுக மழைசொரிந்தாற்போன்ற கொடையாலே,

580 - 81. [நல்கித், தலைநாள் விடுக்கும் பரிசில் :] தலைநாள் பரிசில் நல்கி விடுக்கும் -முதனாளிலே பரிசில்தந்து போகச்சொல்லும்,

------------
    1 "கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கை "(அகநா. 213 : 20)
-------------

581 - 3. மலை நீர் வென்று எழு கொடியில் தோன்றும்1குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே - மலையினின்றும் விழுகின்ற அருவிகள்வென்றுயர்கின்ற கொடிகள்போலத்தோன்றும் மலைகள்சூழ்ந்தபரப்பினையுடைய நாட்டிற்கு உரிமையையுடையோன்.

-----------
    1 குன்றுசூழிருக்கையென்றது பல்குன்றக்கோட்டத்தை ; இது தொண்டை மண்டலத்துள்ள 24 கோட்டங்களுள் ஒன்று.
----------

விடுப்பிற் (568) சென்றோரும்பல் (540) நாடுகிழவோன் (583) தன் கையிடத்துண்டாகிய (577) மழைசுரந்தன்ன இயல்பாகிய கொடைத்தொழிலாலே (580) வளம்பிழைப்பறியாதபடி (578) நிதியத்தோடே (575) தேர் (571) வேழம் (572) நிரை (573) புரவி (574) இவையனைத்தும் (575) உயர்ந்தவன் தாமரை மலைய விறலியர் (569) இழையணியத் (575) உயர்ந்தவன் தாமரை மலைய விறலியர் (569) இழையணியத் (570) தலைநாளிலே பரிசிலாக (581) நல்கி ( 580) விடுக்கும் (581) என முடிக்க.

இதனால், வீயாதுசுரக்குமவன் நாண்மகிழிருக்கை (76)கூறினார்.

கலப்பையிராய் (13) ஒழுகிச் (20) சுற்ற (46) இருந்த (49) தலைவ (50) , யாறு கடற்படர்ந்தாங்கு (52) யாம் அவனைக்கருதிச்சென்று பரிசில் பெற்று வருகின்றேம் ; நீயிரும் (53) நன்னற்படர்ந்த கொள்கையொடு (64) சேறிராயின் (65), எற்றாக்குறுதலின் (66) எதிர்ந்தபொழுதையும் (65) புள்ளையும்உடையிரா யிருந்தனிர் (66) ; இனி யாற்றினதளவும் புலமும் (67) வல்சியும் (68) மலையும் சோலையும் கானமும் (69) ஈகைமாரியும் (72) ஆற்றலும் (73) இருக்கையும் (76) சுற்றத்தொழுக்கமும் (80) கடவுளதியற்கையும் (83) அவன் சிறப்பும் (85) தொல்லோர் வரவும் (89) மூதூர்மாலையும் (93) இருக்கும்படி கேட்பாயாக ; அவற்றுள் இனி வேளை நீ முன்னிய திசையைக்கேள் (94) ; பெட்டாங்குலாகப் பலவு (144) ஈன்றாகவெண்ணிய இம் மிகுவளம் பழுநியவைப்பாலே (95) புதுவதுவந்தன்று ; அவ்வழியின்பண்பு இத்தன்மைத்து (96) ; அவற்றைக்கண்டு கானவர் (155) சிறுகுடிப்படின் (156) ஒக்கலொடும் பதமிகப்பெறுகுவிர் (157) ; அசைஇ அன்று அற்சேர்ந்து அவண் அல்கிப் (158) போகிப் (160) பாக்கமெய்தி (162) விறல்வேள் வயிரிய மெனிற் (188) ; ஆண்டுத் தேக்கட்டேறலைப் (171) பருகி நறவைமகிழ்ந்து (172) அனந்தல்தீர (173) மகமுறைதடுப்ப மனைதொறும் (185) தாரத்தோடே (170) வல்சியைப் (183) பெறுகுவிர் (185) ; பெற்றால் பரிசில் மறப்ப நீடலுமுரியிர் (187) ; அங்ஙனம் நீட்டிப்பிற் பனித்தலுமுரியிர் (191) ; ஆதலால் பலநாணில்லாது நாடுபடர்மின் (192) ; படரும் பொழுது அவ்வாறு (195) அரும்பொறி (194) உடையவாகையினாலே
நள்ளிருள் (195) வைகினிர்விரிந்த விடியல் கழிமின் (196) ; கழிந்துசெப்பந்துணியின் (197) வலஞ் செயாக்கழிமின் (202) ; கழிந்துகுறவர் (203) ஏறித் (204) தளர்க்குங்கல் (206)கூற்றத்தன்ன (209) ; அவைதாம் இரியத் (208) தத்தி (207)விசை தவிராது வரும் ; அதற்கு மர மறையாக்கழிமின்(210) ; கழிந்து கான்யாற்று நடவை (214) வழூஉம்மருங்குடைய (215) ; அவ்விடத்திற்கு வலந்த பரூஉக்கொடிமதலைபற்றி (216) வழாலோம்பி (215)ஒருவிரொருவிரோம்பினிர் கழிமின் (218) ; கழிந்துநுண்ணீர்ப்பாசிவழும்பு (221) அடிநிலை தளர்க்குமருப்பமுமுடைய (222) ; அதற்கு வேரலோடு (223) மென்கோல்பற்றினிர்கழிமின் (224) ; கழிந்து கடவுட்காணின்(230) வெற்பு மாரிதலையு (233) மாதலின்,நும்மியந்தொடுத லோம்புமின் (232) ; ஓம்பிமஞ்ஞைதளரினும் (235) கடுவன் உகளினும் (237)பிரசங்காணினும் (239) ஞெரேரென நோக்கலுரித்தன்று(240) ; நெறிமாறுபடுகுவிர் (241) ; அங்ஙனம் நெறிமாறுபடாமற்போய்க் கானத்துப்படின் (242)ஏனங்காணின் (247) மிசைந்து (249) பருகிப் (251)பொதியினிராய் (252) மகாரோடே (253) கழிதலோம்பிஅற்குக் (254) கல்லளைவதிமின் (255) ; வதிந்துவிடியலெழுந்து (257) செந்நெறிக்கொண்மின் (258) ;கொண்டு விலங்கி (261) நோக்கிக் (262)குறுகாதுகழிமின் (267) ; கழிந்து நாடுகாணனந்தலைமென்மெல அகன்மின் (270) ; அகன்று குன்றத்துப்படின்(275) இயந்தொடுமின் (277) ; தொட்டால் கானவருளர் (279); அவரெய்திக் (281) காட்டி (283) முந்துற (284)இனியிராகுவிர் (286) ; அங்ஙனமினியிராய் அவர்கூறிய மாதிரங்கைக் கொண்டு (287) இழிந்து (288)இருப்பின் (290) மலைபடுகடாம் (348) பலதிறம்பெயர்பவை கேட்குவிர் (291) ; கேட்டபின்அவன்வெற்பு விழவினற்று (351) ; ஆண்டுத் தொன்முறைமரபினிராகிப் (355) பாடிப் (359) பழிச்சி (360)மலைபிற்படக் (357) கழிமின் (360) ; கழிந்து துவலைதுவற்றலின் (363) விடரகம் புகுமின் (366) ; புகுந்துகுன்றில் ஆரிடரழுவத்து (368) ஊறு தவப்பல (372) ;அவற்றைக் கோல்கொண்டு (370) ஊன்றினிர்கழிமின்(372) ; கழிந்து இன்னலியக்கத்து (374)அமயத்துக்கழிமின் (375) ; கழிந்து அவ்விடம்அருப்பமுமுடைய (378) ; அவ்வரண்களிற் போயின்நுழைதொறும் (379) கைபிணிவிடாதுகழிமின் (383) ;கழிந்தாற் கானம்பல (385) ; கல் நட்ட (388)கவலைகள்பல (389) ; அக்கல்லிற்கு மருப்பிகுத்துத்துனைமின் (391) ; அப்பொழுது புதுவிர் (392)புன்முடிந்திடுமின் (393) ; இட்டுப்போனாற்சுரந்தவப்பல (398) ; ஓம்பாவள்ளற்படர்ந்திகுமெனின் (400) நம்மனோர்க்கு ஆங்கனம்(402) மூதூர் (401) அற்று (402) ; அசைவுழியசைஇ அஞ்சாதுகழிமின் (403) ; அக்கானத்தையிறந்து (405) கோவலர்பாலைச் (409) சொரிகையினாலே (410) அவர்க்குவிருந்தாவிர் (412) ; அங்ஙனம் விருந்தாய் ஆட்டின்நிரையிலேபுகிற் (416) பாலும் மிதவையும் பெறுகுவிர் (417) ;

அவற்றைப்பெற்றுஅதட்பள்ளியிலே (419) சேந்தனிர்கழிமின் (420) ;கழிந்து கூளியர்கூவைகாணிற் (422) படர்ந்திகுமெனின்(424) தடியும் கிழங்குந் தரீஇ (425) ஓம்புநரல்லதுஉடற்றுநரில்லை (426) ; அவற்றையருந்திவியங்கொண்மின் ; அதன்பண்பு அஃது (427) ;அப்பண்பைக்கண்டு கண்ணியைச் (430) சூடித் (431)தண்ணென (432) உண்டனிர் ஆடிக் கொண்டனிர்கழிமின்(433) ; கழிந்தாற் புளிங்கூழை (436) அற்குக் (437)குடிதொறும் பெறுகுவிர் (439) ; பெற்று அசையினிர்சேப்பின் (443) நுவணையோடு (445) அமலையை (441)இழுதுள்ளீடாக (442) அல்கலும் பெறுகுவிர் (443) ;அவற்றைப்பெற்று ஞெகிழிமாட்டித் (446) துஞ்சிப் (447)புள்ளோர்த்துக் கழிமின் (448) ; கழிந்தால் அவன்தன்பணைநாடு நன்பலவுடைத்து (453) ; அதனையடைந்தால்வினைஞர் வல்சிநல்கப் (462) பழையர் மகளிர் (459)விரைஇத் (458) தேறலை (463) நல்க (462) அவற்றைப்பெறுகுவிர் (464) ; அவற்றைப் பெற்றபின்புஅவரவரிட்ட வெண்சோற்றை (465) அருந்தி (468)மருதம்பண்ணிக் கழிமின் (470) ; கழிந்துஎருமையொருத்தல் (472) கதழ்ந்து வரல்போற்றிச் (473)சேயாற்றின் (476) ஒருகரைக்கொண்டனிர்கழிமின்(477) ; கழிந்தால் அவன்மூதூர் சேய்த்தன்று (487) ;அவ்வூரிற்சென்றால் அருங்கடிவாயிலை அயிராதுபுகுமின் (491) ; புக்காற் பரிசிலர் (492)கண்டோரெல்லாம் (495) எதிர்கொளக் குறுகிப் (496)பின்னர் முற்றமுன்னிக் (531)கடவுள் வாழ்த்தியபின்னர் (538) விருந்திற்பாணிகழிப்பிச் (539) செம்மலோயெனக் கூறி(543) ஏத்திச் (544) சென்றதுநொடியவும் விடானாய் (545)வருத்தமும் பெரிதெனக் கூறி (546) அணுகல்வேண்டி (548)நல்வலத்திரீஇ (549) மாய்ந்தோர் (553) மணலினும்பலர் (556) ; அதனால் நம் வரைந்தநாள் புகழொடுகழிகவென்று கருதிப் (557) பரந்திடங்கொடுக்குமுள்ளத்தோடே (558) அமர்ந்து நோக்கிக் (560)கலிங்கம் (561) வெள்ளரைக்கொளீஇப் (562) பலநாள்நிற்பினும் (566) தடியொடு (563) அரிசிமுட்டாது (564)தலைநாளன்ன புகலொடு (565) தரப்பெறுகுவிர் ; நில்லாது(566) செல்வேமென (567) விடுப்பின் (568)சென்றோரும்பல் (540) , நாடுகிழவோன் (583) , அவன்தன் கையிடத் துண்டாகிய (577) மழைசுரந்தன்னஇயல்பாகிய கொடைத்தொழிலாலே (580) வளம்பிழைப்பறியாதபடி (578) நிதியத்தோடே (575) தேர் (571) வேழம்(572) நிரை (573) புரவி (574) இவையனைத்தையும் (575)தலைவன்றாமரைமலைய விறலியர் (569) இழையணியத் (570)தலைநாளிலே பரிசிலாக (581) நல்கி (580) விடுக்கும்(581) ; ஆதலால், அவன்பாற் றாழாமற் கடிதாகச் சென்றுபரிசில்பெறுவீராகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பல்குன்றப்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய்நன்னனைப் பாடிய மலைபடுகடாத்திற்கு மதுரையாசிரியர் பாரத்துவாசிநச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.
-------

வெண்பா

    1தூஉஉத் தீம்புகை தொல்விசும்புபோர்த்ததுகொல்
    பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப்பட்டான்கொல்
    மாஅ மிசையான்கோ னன்ன னறுநுதலார்
    மாஅமை யெல்லாம் பசப்பு.

    முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
    கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து.


1(பி-ம்.) 'தூஉஉய்த்தீம்புகையத்தொல்விசும்பிற் ' "தூஉஉத்தீம்புகை "என்பதில் தூஉஉ என்பது நான்குமாத்திரை பெற்று நின்றதாதலின், இது செப்பலோசைபிழையாது வந்ததென்பர் ஆசிரியர்நச்சினார்க்கினயர் முதலியோர் (தொல். நூன். சூ.6, ந ; யா - வி. எழுத். சூ. 4 ; இ - வி. சூ. 743) ; பேராசிரியர் வேறு கூறுவர் ; தொல். செய். சூ. 62.

பத்துப்பாட்டு நச்சினார்க்கியருரை முற்றுப்பெற்றது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III