பாவலர் விருந்து


இலக்கண நூல்கள்

Back

பாவலர் விருந்து
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்



பாவலர் விருந்து
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்

pAvalar viruntu
by V.K. cUryanArayaNa cAstiriyar
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy (formerly Tamil Virtual University), Chennai, Tamilnadu
    for placing in the Net a PDF version based on scanned images of this work.
    Etext preparation and proof-reading:
    This etext was produced through Distributed Proof-reading approach.
    We thank the following persons in the preparation and proof-reading of the etext:
    Anbu Jaya, Azarudeen, S. Karthikeyan, Naresh Dass, R. Navaneethakrishnan,
    V. Ramasami, Sasikumar, Thamizhagazhvan, S Thamizharasu, V. Devarajan, Mithra and P. Thulasimani
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2013.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

பாவலர் விருந்து
(வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள்
இயற்றிய நூற்றொகுதி - முதற் பகுதி. - 4 )

முதல் நாள்.

உரிமையுரை.
செந்தமிழ்ப் பாவலீர்!

அமிழ்தினுமினிய அருந்தமிழ்ப் பாநலஞ்சுவைத்துத் தேக்கெறிந்து இன்ப நுகர்ச்சியில் இனிது வீற்றிருக்கும் நுமது அன்பு பற்றி யாமிடும் இப்பாவிருந்தின்கட் குறைபாடு ஏதேனும் நிகழ்ந்திடுமாயினும் அதுகொண்டு எம்மை யெள்ளலீர் ஏற்றுக்கொண்மின்.

உள்ளவாறே நீவிர் இம்முதனாள் விருந்தில் இன்சுவை காண்டிராயின் இன்னுஞ் சின்னாள் விருந்திடப் புகுதும். அன்றி இம்முதனாள் விருந்தே புன்சுவைத்தாய்ப் போயிற்றேல் யாம் வாய் வாளாமை மேற்கொண்டு அமைதல் ஒருதலை.

இங்ஙனம்,
நூலாசிரியர்.
----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- ----- -

முகவுரை


பாவலர் விருந்தெனும் இந்நூலின்கண் அடங்கிய செய்யுட்களுட் பெரும்பாலன முன்னரே புத்தக ரூபமாகத் தனித்தும் பத்திரிகைகளிலே விடய ரூபமாக ஏனையவற்றோடு சேர்ந்தும் வெளிப்பட்டிருக்கின்றன. அவையனைத்தையும் ஒருங்கு சேர்த்துத் தொகுத்து அச்சிட விரும்பினேமை எமது நண்பரும் மாணாக்கரும் அவ்வாறே தூண்டினமையின் இதனை வெளிப்படுத்துவே மாயினேம்.

இதன்கண் அடங்கியவற்றுட் 'பட்டினக் காட்சி', 'மதுரைமாநகர்', 'போலியாராச்சியன்', 'ஓர் ஐயப்பாடு' என்னும் இந்நான்கும் முன்னர் ஒரு போழ்தத்தும் வெளிப்படாதான. அவை இப்பொழுதுதாம் முதன் முறையாக வெளிப்படுகின்றன. 'கடற்கரை யுலா', 'தாமரைத் தடம்', 'கலங்கரை விளக்கம்' என்னும் இம்மூன்றும் ஞானபோதினி யென்றதோர் மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வாயிலாக வெளிப்போந்தன.

இவையிற்றைத் தொகுக்கும்வழி உடனின்றுதவிய எமது இயற்றமிழ் மாணவரது நன்றியறிவு ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று.

ஒன்றுக்கும் பற்றாத சிறியேமை இந் நன்முயற்சியின் கண் ஏவித் தோன்றாத்திணையா யருகிருந்து உதவிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாய நடராசப் பெருமானை மனமொழி மெய்களிற் றொழுகின்றனம்.

வி. கோ. சூ.
பிலவாண்டு ஆனித்திங்கள்,)
சென்னை.
-- - ----- - ----- - ----- - ----- ----- -

பொருளடக்கம்

    பக்கம்
    1. மணியசிவனார் கலிவெண்பா 339
    2. அனுபவ வறிக்கை 349
    3. கையறுநிலை 351
    3.1தென்னிஸன் பிரபு 351
    3.2 திரு. சலசலோசனச் செட்டியார் 354
    3.3 க. சபாபதி முதலியார் 356
    3.4 ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை 360
    3.5 சை. இரத்தின செட்டியார் 361
    3.6 விக்டோரியா மகாராணி 362
    3.7 தி. மி. சேஷகிரி சாஸ்திரியார் 365
    4. கடற்கரையுலா 368
    5. தாமரைத்தடாகம் 375
    6. கலங்கரை விளக்கம் 385
    7. ஆசானுருநிலை 389
    8. பட்டினக் காட்சி 392
    9. மதுரைமாநகர் 403
    10. போலியாராய்ச்சியன் 409
    11. ஓர் ஐயப்பாடு 413
    12. பரிந்துரை 415
    13. முடிசூட் டிரட்டைமணிமாலை 418
    14. பண்டித நாட்டம் 424.
    ----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- - ----- ----- -


முன்னுரை


ஆசிரியர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் தமக்கு ஒவ்வோரமயத்துத் தோன்றிய புதிய கருத்துக்களையும், ஆங்கிலம் வடமொழியாதிய பாஷை நூல்களுல் தாம் கண்ட அரிய பொருள்களையும் புதுவனவாகச் செந்தமிழ்ப் பாவிற் சீர்பெற அமைத்துச் சந்ததம் புலவர்க் கந்தமில் இன்பமளிக்கும் ஆர்வமுடையராதலின், தாம் அங்ஙனம் இயற்றிய செய்யுட் டொகுதிக்குப் 'பாவலர் விருந்து' எனப் பெயர் தந்து அதனை வெளியிட்டனர். ஆசிரியர் தொல்காப்பியச் செய்யுளியலில்,

    "அம்மை யழகு தொன்மை தோலே
    விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப்
    பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ," (தொல் - செய் 1)

என்று எடுத்துக் கூறிய எண்வகை வனப்பினுள் ஒன்றாகிய விருந்தின் இலக்கணத்தை,

    "விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பில் மேற்றே" (தொல் - செய். 239)

என்ற சூத்திரத்தானும், அதற்குப் பேராசிரியர், "விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலை மேற்று. தானும் என்ற உம்மையான் முன்னைத் தோலெனப் பட்டதூஉம் பழைய கதையையப் புதிதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஓம்புதல் உடைமையின் உம்மையான் இறந்தது தழீஇயினா வென்பது. புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னையெனின், புதிதாகத் தாம் வேண்டிய வாற்றார் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது," என்று கூறிய உரையானும் நன்கு உணரலாம்.

முதனாள் விருந்தாக அச்சிட்ட ஆசிரியர் பதிப்பில் முதற் பதினொரு பகுதிகளே அடங்கியிருந்தன. முதற்பதிப்பு அச்சிட்ட பின்னர் எழுதின "பரிந்துரை, முடிசூட்டிரட்டைமணி மாலை, பண்டித நாட்டம்" என்பவை இவ்விரண்டாம் பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், திருத்தணிகை, திருக்காளத்தி, காஞ்சீபுரம், திருப்பாதிரிப் புலியூர், திருவதநீந்திரபுரம், சிதம்பரம், பழனி முதலான ஸ்தலங்கள் சென்றிருந்த காலத்தில், ஆண்டாண்டுள்ள மூர்த்திகளின் மீது இயற்றிய தோத்திர ரூபமான பாடல்களும் வேறு சில பல
தனிப்பாடல்களும் உளவேனும் அவை யிற்றை, ஆசிரியர்தஞ் சரித்திரத்தை வேறாக எழுதக் கருதியுள்ளேனாதலின் ஆங்குத் தருதல் பொருத்தமுடைத் தென்றெண்ணி ஈங்குச் சேர்க்கவில்லை.

இவ்விரண்டாம் பதிப்பி லடங்கிய பதினான்கு பகுதிக்களுள் முதலாவதாகிய மணிய சிவனார் கலிவெண்பா, மாங்குடியிலவதரித்துச் சத்தாத்துவிதசைவ மேற்கொண்டு விளங்கிய மகா சீலராகிய ஸ்ரீ சுப்பிரமணிய சிவனார்மீது அன்னார் தம் பெருமைக்குணம் பலவும் விளங்கப் பலபடப் புனைவணி கலந்திகழப் பாடியது. இவர்தம் பெருமைகளை யாவரும் உணர்ந்து கொண்டாடற் பொருட்டு வசன நூலாக ஸ்ரீமணியசிவனார் சரித்திரத்தை தனி யேயும் ஆசிரியர் எழுதியுள்ளார். ஸ்ரீ சிவனாரிடத்து ஆசிரியர்க்கு மிகுந்த பக்தி யும் பேரன்பும் அளவுகடந்து உண்டு. அன்னார், தமது கனவில் எழுந்தரு ளிப் பஞ்சாக்ஷர உபதேசம் செய்ததை இவர்,

    " அஞ்செழுத்து
    மந்திரத்தை யென்கனவில் வந்துரைத்த சுந்தரனை'',

என்று பாராட்டியும், தமக்கு ஷடாசர உபதேசஞ் செய்ததை,

    "விள்ளரிய
    ஆறெழுத்தை யெம்மனச்செ யல்பால் விதைத்தானை,"

என்று சிறப்பித்தும், தமக்குண்டாகிய தமிழறிவும் பெருமையும் எல்லாம் சிவனார் தமக்குச் செய்த ஆசீர்வாத பலத்தால் என்ற உணர்ச்சி மேலிட்டு,

    "சோத்தம்யாஞ்
    செய்யுளாற் செய்வான் றிருவருள் புரிந்தானை,"

என்றும்,

    " எந்தமக்கு மேம்பாடு தந்தானை,"

என்றும், தமது நன்றியறிவு புலப்பட இக் கலிவெண்பாவிற் கூறியுள்ளார்.

ஆசிரியர்,தாம் செந்தமிழ் நூல் பலவற்றையும் ஆராய்ந்து வரும்பொழுது தமக்கு ஏதேனும் ஐயந்திரிபறியாமையால் இடர்ப்பாடுநேர்ந்துழித் தாம் மனப்பாடமாக வைத்துள்ள இக் கலிவெண்பாவை யொருமுறை யோதிய பின்ன ருறங்கப் போவதும், துயிலுகையில் ஸ்ரீசிவனார் கனவில் எழுந்தருளி அவ்விடர்ப்பாடுகளனைத்தையு நீக்கியருளுவதால் துயிலுணர்ந்தபின் யாவுந் தெளிவாய் உண்மைவிளங்கப் பெறுவதும் உண்டென்று பன்முறையும் அவர் உரைப்பதுண்டு.

இரண்டாவதாகிய அவயவ அறிக்கை யென்பது ஸ்ரீ மணிசிவனார் தம் மாணாக்கர்களாகிய, ஆசிரியர் தம் பிதா கோவிந்த சிவனார், ஸ்ரீநிவாஸ சிவனார், சுப்பிரமணிய சிவனார் ஆகிய ஏகலிங்க சிவார்ச்சனை புரியும் பரம சாம்பவ சிகாமணிகளாய் விளங்கிய மூன்று பெரியார்பால் தமக்குள்ள பக்தியும் மெய் யன்பும் திகழ ஆசிரியர் தமது அவயவங்களை முன்னிலைப்படுத்தி வரைந்தது.

மூன்றாவதாகிய கையறுநிலை, ஆங்கிலத்தில் சோகரஸம் ததும்பப் புனையும் 'எலிஜி'(Elegy) என்னும் ஒரு வகை யாப்பினை யொத்ததாய்ப் பண்டைத்தமிழ்நூல்களிற் காணப்படும் புறப்பொருட் டுறையாகிய 'கையறு
நிலை' யினைத் தழுவி ஆசிரியர் தமதன்பிற்குரியராயிருந்து பின்னர்க் காலஞ் சென்ற ஒரு சிலர் மீது தமதாற்றாமை விளங்கப் பாடிய பாக்களாகும்.

இதனுள், அக்காலத்தில் ஆங்கிலக் கவிச்சக்கிரவர்த்தியாய் Poet Laureate என்னும் பட்டந் தரித்து விளங்கிய மகாகவி டெனிஸன் பிரபு இறந்துழி, அக்கவிஞரின் இனிய நூல்களில் ஈடுபட்டு மகிழ்வடைந்த ஆசிரியர் தமதாற்றாமையைப் புலப்படுத்திய பாக்கள் முதலில் நிற்பனவாகும். ஒரே சுவையை உருசிப்பவன் தெவிட்டாமைப் பொருட்டு இடையிடையே வேறோர் சுவையைச் சிறிது சிறிது உருசித்தல்போலச் செந்தமிழ் நூலாராய்ச்சியையே செய்து வந்த ஆசிரியர் இடையிடையே தமது மனத்திற்கு ஊக்கமுண்டாக மறுசுவை நூலாகக் கொண்டு பார்ப்பது இந்த டெனிஸன் பிரபுவின் செய்யுட்டிரட்டேயாம். இவர் டெனிஸன் கவிகளில் ஈடுபட்டமை. 'போலியாராய்ச்சியன்', 'ஓர் ஐயப்பாடு', என்ற தலைப்பின் கீழுள்ள செய்யுட்களை நோக்குநர்க்குப் புலனாகும். மேலும் ஆங்கில தத்துவ சாஸ்திரப் பயிற்சி நன்குடைய ஆசிரியர் அத்தத்துவப் பொருள்களை மிளிரக் காட்டுங் கவிஞனா கிய டெனிஸனிடத்தில் ஈடுபடுதல் இயல்பேயாகும். இதற்கு,

    " தத்துவ சாத்திரத் தனித்த ருக்கணே
    கொத்தொடு தோன்றிய குணஞ்சி றந்துள
    வித்தைசேர் பெயின் ஸ்பென்ஸர் மில்லெ னும்பழச்
    சத்தினைக் கவிக்கலந் தந்த வள்ளலே!"

என்று ஆசிரியர் கூறிய பாவே தக்க சான்று பகரும்.

இதன் பின்னர் 2 -வது, 3 -வது உட்பகுதிகளில் முறையே அன்புடைய மாணவன் மாட்டும் அருள்கனிந்த ஆசான் கண்ணுந் தமக்குள்ள பேரன்பு புலப்பட, ஒரோவோரடி மிக்கு வந்த கொச்சக வொருபோகில், அவலச்சுவை கனிந்து விளங்கச் சொல்லழகும் பொருளழகுந் திகழ நிற்கும் பான்மை, உற்று நோக்கித் திளைத்தற்பாலதாம்.

நான்காவது உட்பகுதியில் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இறந்துழி அவர்தம் பிரிவாற்றாமைக் கிரங்கிச் சென்னைமாநகரிற் கூடிய தமிழ்ப் புலவர் பலர் சேர்ந்த அநுதாபக் கூட்ட மொன்றில் ஆசிரியர் பாடிய செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர் ஆண்டுக் குழுமியிருந்த புலவர்களைத் 'தண்டமிழ்ச் செந்நாப் புலவீர்' என்று விளித்துள்ளதும், 'நந்தம் பன்னரிய நகர்' என்று சென்னையைக் குறித்துப் போந்ததும் மேற்கூறியவற்றுக்குச் சான்றாகும்.

ஏனைய கையறுநிலை யுட்பகுதிகளின் விவரங்கள் அவற்றின் குறிப்புரைகளால் விளங்கும்.

'கடற்கரையுலா,' 'தாமரைத்தடம்,' ஆகிய இரண்டும், ஆசிரியர் தமது இல்லக் கிழத்தியுடன் நகையாடிப் பேசு முறையின்கண் அறிவுறுத்திய 'தற்காப்பு நியமம்,' 'இயற்கை வனப்பு' என்னும் உண்மைகளை வற்புறுத்திக் கூறியனவாகும்.

ஆசிரியர், வெண்ணில வெறிக்கும் ஓரிரவின்கண் உணவு கொண்டபின் நண்பர் சிலருடன் மேன்மாடியில் விநோதப் பொழுது போக்காக உரையாடி யிருந்துழி ஒருவர், நீதிமன்றத்தின் றலைமையிலமைத்துள்ள விளக்கினின்று வெளிப்பட்டுச் சுழலும் இருசுடர்ப் பிழம்புகளைச் சுட்டித் தமக்குத் தோன்றுங் கற்பனைகளைக் கூறக்கேட்டபொழுது, அவர் தற்குறிப் பேற்றமாகக் கூறிய கற்பனைகளே 'கலங்கரை விளக்க'ப் பகுதியிற் காணப்படுஞ் செய்யுட் கருத்துக்களாம்.

சென்னைக் கிறிஸ்தவக் கலாசாலைத் தலைவராயிருந்த டாக்டர் மில்லர் துரைக்கு வெண்கலச் சிலையொன்றமைத்து நாட்டி, அதனைச் சென்னைக் கவர்னராயிருந்த ஆம்ப்ட்ஹில் துரை யவர்கள் திறப்புவிழாச் செய்தபொழுது, ஆசிரியர் கூறிய செய்யுட்களே 'ஆசானுருநிலை' யில் அடங்கியனவாகும். இதனை, மேற்படி கலாசாலையில் உபந்நியாசராயிருந்த மிஸ்டர் K. கிருஷ்ணமாசாரியர் M.A. அவர்கள் ஆங்கிலத்திலும் 'My Masters' Statue' என்னும் தலைப்பிட்டுச் செய்யுளாக மொழி பெயர்த்துள்ளார்.

ஓரமயம், ஆசிரியர் கடற்கரையில் தம் மாணவரிடம் ஊழ்வினையின் முறையினைப் பற்றி வலிவுறுத்திக் கூறிய கருத்துக்களை யமைத்துப் பாடியது 'பட்டினக் காட்சி'யாம். இதன்கண், பற்பல மாந்தரின் பண்புகளை நகைச்சுவை திகழப் பாடிய பாடல்களும், பட்டினத்தின் அமைப்பினைத் தற்குறிப்பேற்ற வணிநலம் விளங்க வருணித்துள்ள பாக்களும் படிக்கு நர்க்கும் பேரின்பம் பயத்த லொருதலை.

ஸ்ரீமான் பாண்டித்துரைசாமித் தேவர் அவர்கள் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஸ்தாபிக்கப் பெருமுயற்சி செய்த காலத்தில், அவ்விசயத்தில் ஊக்கமின்றியிருந்த மதுரை மாநகரினரை ஊக்குதற் பொருட்டு வரைந்தது 'மதுரை மாநக'ராம். ஆசிரியர் சித்தூரிலிருந்து ரெயில் பிரயாணஞ் செய்த சிரமத்தையும் பொருட்படுத்தாது, நமது விடுதியிற் குழா(Water -Pipe)யின் கீழ் ஸ்நாநஞ் செய்துகொண்டே இம்’மதுரைமாநகர்’ அகவலினை, அடியேன் எழுதிவரச் சிறிதும் தங்குதடையின்றிக் கூறி முடித்தனர். இதனாலே அவர்க்குத் தமிழின் மாட்டுள்ள அளவற்ற அன்பு புலனும்.

‘பரிந்துரை’ என்பது, ஸ்ரீமதி அசலாம்பிகை யம்மையவர்களின் இனிமை வாய்ந்த செய்யுட்களினைக் காணுந்தோறும் மகிழ்ச்சியடையும் ஆசிரியர், அவ்வம்மையார்க்கு உண்டான துயரினை யாற்ற வரைந்து விடுத்த நிருபமாகும்.
விக்டோரியா ராணியின் மீது பாடிய கையறுநிலைச் செய்யுளும், முடி சூட்டிரட்டைமணிமாலைச் செய்யுளும், ஆசிரியர் தம் இராஜ விசுவாசத்தினைக் காட்டுவனவாம்.

பக்தி வயப்பட்டுப் பேரன்பு ததும்ப பாடிய ‘பண்டித நாட்ட’ப் பதிகம், ஆசிரியர்க்குக் கலியுகத்திற் கண்கண்ட தெய்வமாகிய குமாரக் கடவுளின் மாட்டுள்ள நம்பிக்கையைப் புலபடுத்தும் அறிகுறியாகும்.

ஆசிரியர்தம் நூல்களில் ஈடுபட்ட நண்பர்கள் பலரும் பன்னாளாக இப்பாவலர் விருந்தினை இன்றியமையாக் குறிப்புரை முதலியவற்றுடன் பெறல் வேண்டு மென்று விரும்பியதை யுணர்ந்து, அன்னார்தம் புதல்வராகிய
சிரஞ்சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் என்னை யண்மி இந்நூற்கு வேண்டிய குறிப்புரையை வரைந்துதர வேண்டினர். இந்நூலின் பல பகுதிகளும் வரையப் பெற்ற அமையங்களிலெல்லாம் ஆசிரியரோடு இடைவிடாது உடனுரைந்து நெருங்கிப் பழகியவன் யான் என்பது நினைந்தே என்மீது இப் பொறையை அவர் ஏற்றினார் என்று கருதுகிறேன். அவர் வேண்டி யாங்குச் செய்ய எல்லாவற்றானுங் கடப்பாடுடைய எளியேன் என்னாலியன்றளவு செய்யுட்களின் பொருள் விளங்குமாறு ஓர் குறிப்புரை வரைந்துளேன். எனினும், ஆசிரியர்தம் பாடல்களில் அமைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகளையும் அணிநல மாதிய அழகுகளையும் முற்று மெடுத்தோதும் வன்மை சிறிது மில்லாத எனது குறிப்புரையைத் தமிழ் பயிலு மிளைஞர்க்கு ஒருவாறு பயன்படுமென்று கருதி உலகம் போற்றுமாறு பெரிதும் வேண்டுகிறேன்.

அண்ணாமலை நகர், ந. பலராம ஐயர்
1 -4 -1938
- - ----- - ----- - ----- ----- -

பாவலர் விருந்து

I

1. மணியசிவனார் கலிவெண்பா

(திருவையாற்றிற்கடுத்த மாங்குடி யென்னுஞ் சிறூரிற்றோன்றியவரும், தமது தந்தாயார்க்கு வாய்த்த ஞான குரவரும், சிவாதுபூதிச் செல்வருமாய் விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய சிவனார் மீது 1894 -ஆம் வருஷம் தாம் தமது
தாயாரோடும் மகா சிவராத்திரியினிமித்தம் சீகாளத்தி நகரஞ் சென்றுழிப் பாடியது.)

மணியசிவனார் கலிவெண்பா
காப்பு

    நேரிசை வெண்பா

    சீமான் மணிய சிவன்றனக்கு நற்கலிவெண்
    பாமாலை யாகும் பணியியற்ற - நாமாதுங்
    கற்பகலா வள்ளி கணவனுமன் னான்றமையன்
    கற்பகமால் யானையுமே காப்பு.

    ஞானகுரு வணக்கம்

    குறள் வெண்பா

    எந்தைகோ விந்தசிவ னெங்குரவ னார்கழலெஞ்
    சிந்தைகூர் பேரணாயாஞ் சீர்த்து.

----- -----
காப்பு: - சீமான் - திருவாளன்; செல்வன், மணியசிவன் - பெயர். பாமாலை - பாவாகிய சொன்மாலை. பணி - அணிகலன். இயத்த - செய்வ. நாமாது - ஸரஸ்வதி. கற்புஅகலா - கற்பின் நீங்காத. வள்ளிகணவன் - சுப்பிரமணிய மூர்த்தி. அன்னான் தமையன் - அவன் மூத்தோனாகிய கணபதி. கற்பகமால் யானை - பெரியகற்பக விநாயகர்.

ஞானகுரு வணக்கம்: - எந்தை -எமது பிதா; கோவிந்த சிவன் - பெயர். குரவன் - ஆசாரியன். கழல் - ஈண்டுத் தானியாகுபெயாராய்ப் பாதத்தை யுணர்த்திற்று. சிந்தைகூர் - உளத்தின்கண்மிக்க; பேரணி - பெருமை வாய்ந்த அணிகலன். சீர்த்து - சிறப்புடையதாகி. கழல் சீர்த்துப் பேரணியாம் என முடிக்க. தந்தையாகிய கோவிந்த சிவனாரே பிரமோபதேசம் செய்தவராவதோடு ஆசிரியர்க்குப் பஞ்சாக்ஷர உபதேசமுஞ் செய்தவராதலின் ஞானகுமு வாவர்.

ஆக்கியோன் பெயர்
குறள் வெண்பா

    சூரியநா ராயணவேள் சொல்கலிவெண் பாவகவல்
    பேரிய லைந்தும் பெறும். 3

நூல்

கலி வெண்பா

    பூமணக்குங் கூந்தற் பொறிமணக்கு நான்முகன்ற
    னாமணக்கு மான்மணக்கு நல்லூராங் - காமணக்கு

    மாங்குடியிற் சற்குருவை வாழெந்தை சீரிதய
    மாங்கமலத் துற்ற வரசவத்தைப் - பாங்குடனே

    சுத்தமகா சைவபதந் துன்னுபரஞ் சோதியினை (5)
    யத்துவித மாயொனிரு மான்மாலைச் - சித்தரெலாந்

    தன்பாதத் தேவீழ்ந்து சத்தேயென் சித்தேந
    லின்பே யெமையாள்வ தென்றோவென் - றன்பாற்

    றுதிசெய்யக் கேட்டுவந்து தூயசில தீட்சைக்
    கதியையவர் கட்கருளுங் கல்லாற் - பதியைச்சன் (10)

----- - ----- ----- -
ஆக்கியோன் பெயர்: -வேள் -கண்டோரால் விரும்பப்படுபவன்,கலிவெண்பா அகவல் - உம்மைத்தொகையாகக் கொண்டு கலிவெண்பாவ்வாகிய 'மணிய சிவனார் கலிவெண்பா'வும், அகவலாகிய நேரிசையாசிரியப் பாவானியன்ற 'அவயவ அறிக்கை'யும் ஆகிய இவ்விரண்டும் எனப்பொருள் கொள்க. ஆசிரியர், 'மணிய சிவனார் கலிவெண்பா'வும், அவயவ அறிக்கை'யும் ஆகிய இவ்விரண்டனையுமே முதன்முதல் தனிப் புத்தகமாக அச்சிட்டு வெளிப்படுத்தினரென்பது ஈண்டறியற்பாலது. அகவல் -'அகவ லென்ப தாசிரி யம்மே' (தொல்.பொரு.செய்.சூத்.அக) என்னுஞ் சூத்திர வுரையிற் பேராசிரியர்,'அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங்
கருதியவா றெல்லாம் வரையாது சொல்லுவதோராறும் உண்டு, அதனை வழக்கினுள்ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப. அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவலெனப்படும்,' என்று கூற்றிலுணர்க. பேரியல் ஐந்தும் பெறும் - பெரிய இலக்கணங்களாகிய எழுத்துச் சொல் பொருள் யாப்பு
அணி என்னும் ஐந்தனையும் பெற்று விளங்கும்.

1. பூ மணக்கும் கூந்தற்பொறி - பூ மணம் வீசும் கூந்தலையுடைய இலக்குமி. நான்முகன் - பிரமன். நாமணக்கும் மான் - நாவில் வீற்றிருக்கும் மான் போன்ற ஸரஸ்வதி. மணக்கும் - கூடியிருக்கும், காமணக்கும் - சோலை சூழ்ந்துள்ள, மாங்குடி -ஊரின் பெயர், எந்தை - எமது பிதாவாகிய கோவிந்த சிவனார், இதயமாங் கமலம் -
மனமாகிய தாமரை. அரசனம் - அரச அன்னம், ராஜஹம்ஸம். பாங்கு - அழகு.

5. பதம் - பதவி, துன்னு - சேர்ந்த, பரஞ்சோதி - மேலான ஒளி, அத்துவிதமாய் - இரண்டாந் தன்மையின்றி, ஒளிரும் - விளங்கும். ஆன்மா - எங்கும் இரண்டறக் கலந்து நிற்கும் பரமாத்மா, சித்தர் - அணிமாவாதிய எண்வகைச் சித்திகளும் கைவந்தவர். சத்து - உண்மைப்பொருள். சித்து - ஞானப்பொருள். சத்து சித்து இன்பம் -
சச்சிதானந்தம். என்றோ - எப்பொழுதோ, கேட்டு உவந்து - கேட்டு மகிழ்ந்து, தூய - பரிசுத்தமான, கதி - நிலைமை. கல்லாற்பதி - கல்லால விருஷத்தினடியில் வீற்றிருந்த பரமபதியாகிய தக்ஷிணாமூர்த்தி.


    மார்க்க வழிமொழுகிக் காட்டி வணங்கலரை
    வேர்க்கா தவர்பால் விருப்பின்னை - யார்க்குமரும்

    கத்தனைக்கொம் புத்தேனைக் காமாதி யாதனையுஞ்
    சித்தமுட னேயரிந்த செல்வனைப் -பத்தியுட

    னெஞ்ஞான்று முப்பத் திரண்டறமுஞ் செய்தோனை
    மிஞ்சாலத்து துன்னா ரெவெரெவ்ர்க்கு -மஞ்ஞான

    வையந் திரியொழித்த வான்றோனைப் பாவங்க
    நையும் படிக்கு நயந்துவந்த -வையனைப்பே

    ராவந்த மான வரும்பொருனை யற்புதநற்
    கான ரசிகனைச்சிற் கந்தவே -டானே

    யவதரித்தா னென்றேயனைவோரு மேத்த
    லவனியிட் போந்த வமுதை -கஷ்மான

    தக்கிணா மூர்த்தியைச் சரமமுதல் வேதமெலா
    லொக்கவே யோதா துணர்ந்தானைத் -தக்கமுறை

    யின்னில் லதத்தை யினிது நடாத்தியதிற்
    தன்னிகரி லாத தனிவேனை -மன்னியவி

----- - - - -
வணங்கலர் -வணங்காதவர்,பகைஞர்,வேர்க்காது -வெருளாது,வெறுக்காது, வணங்காதாரையும் வெறுக்காது தாமே சன்மார்க்க வழியில் நடந்துகாட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் விருப்பினன் என்க. கத்தன் -கர்த்தன்,
தலைவன், கொம்புத்தேன் மூங்கிற் கோலிற் கட்டிய தேன். காமாதியாறு -அரிஷ்ட வர்க்கம்; காம க்ரோத லோப மத மாற்சரியங்கள், சித்தம் -மனம், அறிந்த -அறுத்த.

எஞ்ஞான்றும் -எப்பொழுதும், முப்பத்திரண்டுஅறம் -ஆதுலர்க்குஞ்சானை,ஓதுவார்க்குணவு, அது சமயத்தாக்குண்டி, பசுவுக்கு வாயுறை, சிதைச் சோறு, ஐயம், திபண்ட சங்கல், அறவிச்சோறு, மகப் பெறுவித்தல், மகவுவளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப் பிணஞ்சுதல், அறவைத் தூரியம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து,தலைக்கெண்ணை, பெண்போகம், பிதற்றுயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம், தடம், சோலை, ஆவுறிஞ்சுதறி, விளங்கிற் ருணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத் துயிர்காத்தல், கன்னிகாதானம், ஞாலம் -உலகம், அஞ்ஞானம் -அறிவின்மை, ஐயம் -சந்தேகம், திரிபு -விபரீத வுணர்ச்சி ஒழித்த -தம்மையடைந்தார்க்கு நீக்கிய, ஆன்றோன் -எல்லா நற்குணங்களும் அமைந்தோன், கயும்படி -அழியும்படி, நயந்து -விரும்பி, அரும்பொருள் -கிடைத்தற்கரிய பொருள்.

30 கானரசிகநிசியுணர்ந்து அனுபவிப்பவன், சித்தந்தவேள் -அறிவுருவான முருகன், எத்த -துதிக்க, அவனீ -பூமி, விண்ணோசமுதினின்றும் வேறுபடுத்த ‘அவனியி னுட்போந்த’ அமுதுஎன விசேடித்தனர், ஒழித்துகாட்டணி, சவம் -புதுமை. ஒக்கவே -ஒழுங்குசேர, ஓதாணுணர்ந்தான் -படியாமல் அறிந்தவன், ஆசிரியரும் மணியசிவனாரும் சாமவேதிகளாதனாலானும், ‘வேதநாம் மால வேதோஸ்மி’ என்று சிறப்பிக்கப்பட்டதாலும் சாமத்திஅ முன் வைத்தனர். அக்ரு -உரித்திராக்கம். புனைந்த -தரித்த், அநுபூதிமாந் அநுபூதியடைந்தவன், அநுபூதிதானே கண்டறிந்தும், பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு.

    பூதியோ டக்கும் புனைந்ததிரு மேனியது
    பூதிமா னைப்பல் புகழ்படைத்த - -வேதியனை
    மட்டார் குழன்மடவார் மாவிருளிற் சேராமற்
    பட்டாக்கிற் சொந்த படியாக - -வட்டால்க (20)

    யோகம் பயின்றானை யுத்திபுத்தி மானையென்றும்
    போகத் திருந்தானைப் புண்ணியனை - -வாகாக
    மும்மணிற் சிறுகுறியிற் காட்டியவெஞ் - -செம்றனைச்
    ----- - ----- -

cf." பேசா அநுபூ தியையடியேன் பெற்றுப் பிழைக்கப் பேரருளால்,
தேசோ மயந்தந் தினியொருநாற் சித்தத் திருளுந்தீர்ப்பாயோ." (தாயு. சொல்லற்.3)

மட்டு -தேன்.ஆர் -நிரம்பிய, குழல் -கூந்தல். மடவார் மால் இருள் – மாதரான் உண்டாகும் மயக்கமாகிய இருள்.

30. பட்டாங்கு - - உண்மைநூல். சொற்றபடி -சொன்னவிதம். அட்டாங்க யோகம் - எட்டுறுப்புகளையுடைய யோகம். எண்வகை யுறுப்புகள் - -இயமம், நியமம், ஆசனம்,வளிநிலை, தொகைநிலை, பொதைநிலை, நினைதல், சமாதி என்னும் எட்டும், இவற்றைப் பின் வருஞ் சூத்திரங்களா லுணர்க.

    " பொய் கொலை கனவே காமம் பொருளெனக
    யில்வகை யைந்து ளடக்கிய தியமம்"

    யெந்ததற் குகத்தல் பிழம்புநனி யுணர்தல்
    கற்பன கற்றல் சுழிகடுந் துய்மை
    பூசனைப் பெரும்பய மாசாற் களித்தகொல்
    நயனுடை மரபி னியம மைந்தே."

    " நித்த யிருத்தல் கிடத்தல் நடத்தலென்
    றொத்த நான்கினொல்கா றிலைமையோ
    டின்பம் பயக்குஞ் சமய முதலிய
    கந்தமில் சிறப்பி னாசன மாகும்."

    " உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
    தந்த மியக்கத் தடுப்பது வளிநிலை"

    "பொறியுணர் வெவ்வாம் புலத்தின் வழாம
    வொருவழிப் படுப்பது தொகைநிலைப் பறனே."

    " மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே."

    " நிறுத்திய கம்மன நிலைதிரி யாமற்
    குறித்த பொருளொடு கொளுத்த வினையே"

    "ஆங்ஙனங் குறித்த காய்முதற் பொருளொடு
    தான்பிற னாநாத் தகையது சமாதி."

---------------
பயின்றான் - -பலநாற் பழகியவன், புத்திபுத்திமான் - - புத்தியும் புத்தியுமுடைன். யோகம் - -சுகானுபவம்.வரகு - -அழகு.மும்மலம் - -ஆணவம், மாயை, கன்மம். பதி - -பரமபதி, சிவன். ஒன்றும் - -கூடும். முதிர்பசு - -பக்குவமடைந்த ஆன்மா.கைம்மலர் - -கையாகிய மலரில். சிற்குறி -ஞானமுத்திரை. மும்மயநீக்கிய காலத்தில் சிவத்தோடு கூடும் பக்குவமடைந்த ஆன்மாவி னியல்பைக் கைம்மலனற் செய்யும் ஞான முத்திரையான் அறிவித்த செம்மல் என்ன. செம்மல் - -தலாவன்.

சிந்தா மணியைச் சிவக்கொழுந்தைச் சின்மயத்தைக் கந்தூக்க மாகவன்பு கட்டுதற்கு - நந்தாத
சங்கிலியெ முள்ளத் தடங்கூடத் திற்கருணைப் பொங்குமதந் தன்னைப் பொழிகின்ற - செங்களிற்றை
யெத்திக்குஞ் சீரா ரிறையோனைச் சிந்திக்கத் தித்திக்குந் தன்மையுள செங்கரும்பை - முத்திக்கு
மூலத்தைக் கல்வி முதல்வனைமெய் காத்தானைக் காலங் கடந்த கடவுளைப்பே - ரோலமிட்டுத்
தூதருட னேவருங்கா லற்செகுக்குஞ் சூலத்தைப் பாதம் பணிந்தார் பரமசுக - தாதைதனை
யெங்கு நிறைந்தானை யேகாந்த மானானைத் துக்கமறை யெல்லாந் தொகுத்துத்தான் - மங்காப்
பிரசங்கத் தின்முகமாய்ப் பேசுபெரி யோனை யரசங்கம் யாவு மடைந்த - குரிசிறனை
----- - - -
    cf. "மும்மலம் வேறுபட் டொழிய மொய்த்துயிர்
    அம்மலர்த் தாணிழ லடங்கு முண்மையைக்
    கைம்மலர்க் காட்சியிற் கதுவ நல்கிய
    செம்மலை யலதுளஞ் சிந்தி யாதரோ"
    (திருவானைக்காப் புராணம் - தக்ஷிணாமூர்த்தி துதி)

35. சிந்தாமணி - நினைத்ததை யளிக்குமொரு தேவரத்நம். சிந்மயம் - ஞானமயம். கந்து ஊக்கம் ஆக - ஊக்கம் கந்து ஆக என மாற்றா. கந்து - கட்டுத்தறி. நந்தாத - கெடாத. தடங்கூடம் - பெரிய யானைக்கூடம்.
செங்களிறு - செந்நிறம் வாய்ந்த களிறு. மனமாகிய கூடத்தில் ஊக்கமாகிய கட்டுத் தறியில் அன்பாகிய சங்கிலியாற் பிணிப்புண்டு மிக்க கருணையாகிய மதத்தைச் சொரியும் களிறு என்க.

    "உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறுவி யுறுதி யாகத்
    தன்னரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
    கன்னவினைப் பசுபோதந் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும்
    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைக டீர்ப்பாம்"
    (திருவிளையாடல் - சித்தி விநாயகர் துதி)

சீர் ஆர் - புகழ் பரவிய. மூலம் - காரணம். மெய்காத்தான் - சத்திய விரதன். பேர் ஓலம் - பெரிய ஆரவாரம். காலற் செருக்கும் - யமனைக் கடக்கும். பரமசுக தாதை - மேலான இன்பத்தை யளிக்கும் தந்தை.

45. எங்கும் நிறைந்தான் - சர்வாந்தரியாமி. ஏகாந்தம் - தனிமை. துங்கம் - உயர்வு. தொகுத்து - திரட்டி. பிரசங்கத்தின் முகமாய் - உபந்நியாச வாயிலாய் அரசங்கம் - அரசனுக்குரிய அங்கங்கள். இவன் தவராஜாங்கத்தை நாடாத்துஞ் சிவராஜ யோகி யாதலின் 'அரசங்கம்' கூறினார். அரசர்க்குரிய அங்கங்கள் பத்து - ஆணை, ஊர், கலி, கொடி, நாடு, பரி, மலை, மாலை, முரசு, யாழ் என்பன.
    cf. "மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட வரையினொடு செம்பொன்மேரு
    மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல் வரைந்துசய விருதுகாட்டி
    மெய்திகழும் அஷ்டாங்க யோகபூ மிக்குள்வளர் வேந்தரே குணசாந்தரே."

----- -
    வேதாந்த வீசுரனை வெள்ளிமலை யுள்ளானை
    நாதாந்த முங்கடந்த நாயகனைப் - -போதாந்தத் (50)

    துட்பொதிந்த வொன்றை யுரைப்பரிய வுண்மையையெந்
    நட்பாள னாகி நனிவிரைந்து - -பெட்புடன்வந்

    தாண்டானைப் பத்த ரனைவோ ரினுமிகவு
    மாண்டானைக் கல்யாண வள்ளறனைத் - -தூண்டா

    மலையிலிட்டுக் காற்றசையா மாவிளக்கை யாரும் (55)
    விலைமதியா ரத்தினத்தை மேலாங் - -கலைகனிந்த

    சாற்றைப் பருகிட்ட சாம்பவனை நான்மறைமேல்
    வீற்றிருக்குந் தேவை விமலமா - -மூற்றை
    விளங்குகரு ணைக்கடலை வித்தையெலாம் வைத்த
    களஞ்சியத்தைப் பஞ்சரக் கரத்தைக் களங்கபரி (60)
    ----- ----- -
    "கெசதுரக முதலான சதுரங்க மனமாதி கேள்வி னிசைந் துநிற்பக்
    கெடிகொண்ட தலமாறு முகமண்டலத்திலுங் கிள்ளாக்கு செல்லமிக்க
    தெசவதம தாய்நின்ற நாதங்க ளோலிடச் சிங்காச னாதிபர்களாய்த்
    திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை திகழ்ந்திட வசந்தகாலம்
    இசைமலர் மீதுறை மணம்போல ஆனந்தம் இதயமேற் கொள்ளும்வண்ணம்
    என்றைக்கு மழியாத சிவராஜ யோகமாய் இந்த்ராதி தேவர்களெலாம்
    விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு இருக்குநும் பெருமையெளிதோ
    வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே."
    (தாயு. சித்தர். 5, 6)

--------
குரிசில் - குருசில், தலைவன். வெள்ளிமலை - கைலை.

50. நாதாந்தம் - நாதத்தின் முடி. போதாந்தம் - ஞானத்தின் முடிவு. உட் பொதிந்த - உள்ளே நிரம்பிய. உரைப்பரிய வுண்மை - வெளியிட்டுச் சொல்லமுடியாத உண்மைப் பொருள். நட்பாளன் - நட்பை யாள்பவன். பெட்பு - விருப்பு. மாண்டானை - மாட்சிமை யுள்ளானை. மலையிலிட்டு - மலையிலேற்றி. காற்று அசையா -
காற்றாள் சலனமடையாத.

55. மாவிளக்கு - பெரியவிளக்கு, மாவிளக்குமாம். தூண்டா மாவிளக்கு எனக்கூட்டுக. கலை கனிந்த சாறு - சாஸ்திரங்களில் உள்ள முதிர்ந்த ரஸம். பருகிட்ட - உண்ட. சாம்பவன் - சாம்புவை வழிபடுவோன். நான்மறைமேல் - வேதாந்தத்தில். தேவு - கடவுள். விமலம் - அழுக்கற்ற. வித்தை - அறிவு.

60. களஞ்சியம் - சேர். களங்கபரிபாகம் - மலபரிபாகம்; பாசம் தனது தன்மை நீங்கிப் பக்குவமடைதல். சத்தி நிபாதம் - ஆன்மாவினது ஞாநத்தைத் தடுக்கு மாணவமல சத்தி நழுவு மவசரத்திலே முற்பிற்பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது நித்தியஞானக் கிரியையை விளக்குவது. அது மந்த தரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும். அவற்றுள், மந்ததரமாவது - நமக்குப் பெறுபேறா யுள்ள பதி யொருவனுண்டென்று அறிவொழிந் திருத்தல்; மந்தமாவது - அப்பதியை அடைதற்கு வழி எங்ஙனமென் றாராய்தல்; தீவிமாவது - அங்ஙனமாராய்ந்தறிந்த பதியை அடையும் பொருட்டு அதற்குத் தடையாயுள்ள பிரபஞ்சத்தை அகத்தான் வெறுத்துப் பறுத்தாற்றழுவுதல்; தீவிரதரமாவது - அப் பிரபஞ்சத்தை அகம் புறமென்னு மிரண்டானு முற்றத்துறந்து ஞாநாசாரிய ரொருவரையே பொருட்படுத்துத் திரிகரசங்களினாலும் வழிபடுதல். மந்ததரம் - வாழைத்தண்டினும், மந்தம் - பச்சை விறகினும், தீவிரம் - உலர்ந்த விறகினும், தீவிரதரம் - கரியினும், முறையே நெருப்புப் பற்றுதல் போல்வனவாம்.

    பாவமொடு சத்தினி பாத மடைந்தவருக்
    கோவையொடு சொல்லு மொருவனைச் - சீகண்ட

    மாதியாம் பாடியங்க ளைந்தன் பொருளுடனே
    நீதிநூ லுட்கருத்து நேராக - மீதிவரச்

    சீரா ருபநிடதஞ் செவ்வியசி வாகமங்க (65)
    ளேரார் புராண மிவையிற்றின் - சாரமுஞ்சேர்த்

    தாக்கிய பஞ்சா மிருதலித்தி யாலிருத்தி
    தேக்கியவன் புள்ளவராஞ் சீடர்செவி - வாக்கியநன்

    மேதருமே தாவியாம் வித்தகனை விப்பிரனைக்
    கீதரசஞ் சேர்ந்த கிளவியனை - வாதமெனுங்

    காட்டினிலே வந்து கலக்கி யுழல்கின்ற
    கோட்டுமா வாண்கட்கோர் கோனரியை - வீட்டுநெறிக்

    குற்ற வொருதுணையை யுத்தமனை மாயைவலி
    செற்றவனைச் சாலச் சிறந்தானை - நற்றவனை

    மன்னவனை மாசீனி வாசற்கு வாய்த்தசிவ
    சின்னந் தரித்திலங்குஞ் சிற்சொரூபந் - தன்னைச்
    ----- - - - -
    cf. உண்மைதரு முணர்வென்று நாலாஞ்சத்தி நிபாதமெய்தி"
    (திருவாத. மந்திரி. 22)

சத்தி - திருவருள். நி - உபசருக்கம். பாதம் - பதிதல். ஓகை - மகிழ்ச்சி. ஒருவன் - ஒப்பற்றவன். சீகண்டம் - ஸ்ரீகண்டம், நீலகண்ட பாஷ்யம். பாடியங்கள் - விருத்தியுரைகள். பாடியங்கள் ஐந்து - வியாசர் செய்த வேதாந்த
சூத்திரத்திற்கு விருத்தியுரை வகுத்த சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், மத்வர், வல்லபர் என்னும் ஐவர் செய்த பாஷ்யங்கள். மீது இவர - மேற்பொருந்த. உபநிடதம் - வேதத்தின் உட்பொருளைக் கூறும் நூல்.
சிவாகமம் - சதாசிவமூர்த்தி ஆன்மாக்கள் தருமார்த்த காம மோக்ஷ மென்னும் புருடாத்தம் நான்கினையு மடையும் பொருட்டு அநுட்டுப்புச் சந்தஸாக அருளிச் செய்த ஒரு முதனூல். அது காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டு வகைப்படும் என்ப. ஏர் ஆர் - அழகுமிக்க. பஞ்சாமிருத வித்தியா விருத்தி - பஞ்சாமிருதம் போன்ற வித்தியாவிருத்தி. பஞ்சாமிருதம், பழம், தேன், சர்க்கரை யிவற்றாலாயது போல வித்தியாவிருத்தி, உபநிடதம், ஆகமம், புராணமென்னு மிவற்றாலாயதென்க. வித்தியாவிருத்தி – மணிய சிவனார் செய்த நூல் (மணிய சிவனார் சரித்திரம் பார்க்க). தேக்கிய - நிறைத்த. வாக்கிய - சொரிந்த.

70. மேதகு - மேன்மை வாய்ந்த. மேதாவி - பேரறிவுடையன். வித்தகன் - அறிவாளன். விப்பிரன் - வேதியன். கீதரசம் சேர்ந்த கிளவியன் - கானம் போல இனிமை வாய்ந்த சொல்லையுடையான். வாதம் - தருக்கம். கோட்டுமா ஆண் - ஆண்கோட்டுமா, களிறு. கோடு - கொம்பு. கோட்டுமா - யானை. கோள் அரி - வலிய சிங்கம். தன்னொடு வாதஞ் செய்பவர்களாகிய யானைகளை எளிதில் வெல்லுஞ் சிங்கம் போன்றவன் என்றபடி. வீட்டுநெறி - மோக்ஷ மார்க்கம். செற்றவன் - அழித்தவன். சால - மிகுதியும்.

75. சீனிவாசன் - மணிய சிவனிடம் உபதேசம் பெற்ற ஒருவர். (மணிய சிவனார் சரித்திரம் பார்க்க) சிவ சின்னம் – விபூதி ருத்ராக்ஷம்.

    சுயம்பிரகா சத்தைச் சொலற்கரிய தாகி
    வயங்கும் பெருவெளியை வாடி - யுயங்குயிர்கள்

    வந்துவிடாய் தீருதற்கு வாய்த்ததொரு வாவியினைக்
    கந்தங் கமழ்ந்து கலக்கமின்றி - நந்துதவ (80)

    ழுந்தடமாய்ச் சுப்ரமண்ய சாத்திரியா ருள்ளத்தை
    யுந்துகளிப் பிற்கொண் டுறுதுணையோ - டுந்தினமு

    மேலாஞ் சலக்ரீடை செய்து விளையாடும்
    பாலசுகு மாரனைப் பண்ணவனைச் - சீலமுறுந்

    தன்னை யறிந்தானைத் தற்சொரூப மானானைப் (85)
    பொன்னின்பற் றற்ற புரவலனை - யின்னல்புரி

    மண்ணாசை நீத்த மகானை யவிச்சையது
    நண்ணாத மேலோனை நங்கவிக்கு - விண்ணாட

    ரேத்தித் தனக்குநிக ரில்லாத் தலைவனையெ
    மாத்தனைச்சாட் சாற்கார மானானைச் - சோத்தம்யாஞ் (90)

    செய்யுளாற் செய்வான் றிருவருள் புரிந்தானை
    வையம் வணங்கும் வடிவழகு - மெய்யனைத்தன்

    காதலிக்கு நல்ல கணவனைத்தி கந்தமுற்ற
    சீதாமு காரவிந்தச் சீரோனைச் - -சாதல்பிறப்
    பென்னுஞ் சமுத்திரங்க டம்மை யெளிதாக (95)
    ----- - ----- - - - -

உயங்குயிர் - வாடும் உயிர்கள். வாய்த்த - பொருந்திய. வாவி - தடாகம். கந்தம் - மணம். நந்து - சங்கு. தவழும் - ஊரும். தடம் - தடாகம். சுப்ரமண்ய சாத்திரியார் - சோமசுந்தரபுரம் சுப்பிரமணிய சாஸ்திரிகளென்று வழக்கமாய் அழைக்கப்படுபவர். சிந்தாமணி கணபதி யுபாவணை செய்பவர். இம்மகா சாம்பவரும் மணிய சிவனார் தஞ்சீடர்களொருவர். (மணிய சிவனார் சரித்திரம் பார்க்க) உறுதுணை - இல்லறத்திற்
குற்ற துணையாகிய மனைவி. சலக்ரீடை - நீர் விளையாட்டு. சுகுமாரன் – மிருதுத் தன்மையுடையவன். பண்ணவன் - தேவன்.

85. தன்னை யறிந்தான் - ஆத்தும லஷணத்தை யறிந்தவன். தற்சொரூபம் ஆனானை - சகவர வுருவம் அடைந்தானை. பொன்னின் பற்று - பொன்னாசை. இன்னல் புரி - துன்பத்தைச் செய்யும். நீத்த - நீக்கிய. அவிச்சை - அவித்யா, அஞ்ஞானம். அது - பகுதிப்பொருள் விகுதி. விண்ணாடர் - தேவர். ஏத்தி - துதித்து.
எங்கவிக்குத் தலைவன் எனச் சுட்டுக. ஆத்தன் - ஆப்தன்; உள்ள பொருளைக் கூறுவோன்; அந்தரங்க இஷ்டன்.

90. சாக்ஷாத்காரம் - பிரத்தியக்ஷம். சோத்தம் - ஸ்தோத்திரம்; இழிந்தோர் செய்யும் அஞ்சலி. "சோத்துன்னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந், தேத்தும்படி நிற்பவன்". சோத்தம் - இழிந்தோர் செய்யும் அஞ்சலி; அது சோத்தம் எனக் கடைக்குறைந்து நின்றது, 'சோத்தமடியம்' என்பதூஉம் அடிய
மெனிற் குழுமித் தொல்லை வானவர்' என்பதூஉம், 'குழீஇத் தொல்லை வானவர் சூழ்ந் தேத்தும்படி நிற்பவன்' என்பதூஉம் பாடம்' (திருக்கோவையார் செய், *பேராசிரியர் உரை). செய்வான் - செய்யும்படி, வடிவழகு மெய்யன் – மெய்யான ரூபலாவணிய முடையவன். காதலி - மனைவி, திகந்தம் உற்ற - திசைகளின் முடிவான எல்லையளவும் பரந்து பொருந்தின.
---- ----- -

    முன்னர்க் கடந்தானை முத்தமிழால் - -கன்னற்சா
    றுண்டு களித்தானை யோதரிய வாணிமுத்தைப்
    பண்டுயந்நி யாசியர்தன் பாதங்கள் - -கண்டு
    பகர்யரிய பூசைபல பண்ண மகிழ்ந்து
    சுகவழியின் சூக்குமத்தைக்கொள்ள - -பகவனைப்போய்ச்

    சார்ந்தவிடமெல்லாங் சலாது மணப்பானை
    யார்ந்தவிட மெல்லா மருள்பதித்துச் - -சேர்ந்தவிட
    மெல்லாஞ் சிவபதமா யேறத்தா பித்தானைப்
    பல்லா யிரதேவர் பாடலுறும் - -வல்லானை
    மாமதுரை வந்து மனிதர் மனத்திருக்கைப் (105)

    போய்மடியச் செய்த புனிதனைநற் - -றாமதுரை
    யான தயாபரனை யாதார மாறனையு
    மோனமாச் சென்று முதிர் பிரம - -வானந்த
    ரந்திரத்திற் சேர்ந்தவெங்கள் ரட்சகனை யஞ்செழுத்து
    மந்திரத்தை யெங்களவில் வந்துரைத்த - -சுந்தரனைக் (110)

    ----- - - - -

சீதளம் -குளிர்ச்சி, முகாரவிந்தம் -முகமாகியதாமரை, சீரோண் -புகழுடையோன், திகந்தமுற்ற சீர் எனக்கூட்டுக. சாதல் பிறப்புஇரண்டும் அளவிடமுடியாவாதலின்அவற்றைச் சமுத்திரங்கள் என்றனர். முன்னர் -முன்பு, முதலில். முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். கன்னல் - கரும்பு. ஆணிமுத்து -உயர்ந்த முத்து. ' பண்டு சந்நியாசிகள் தன் ............ பகவனை' -ஈண்டுக் கூறிய வரலாற்றை மணிய சிவனார் சரித்திரத்திற் பார்க்க.

100. சூக்குமம் - இரகசியம். பகவன் -பகவான். அளவிடமுடியாத ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞாநம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களை யுடையான் என்பர். சார்ந்த -சேர்ந்த. பதித்து -சேர்த்து. ஏற - மிக்குப் பொருந்த. தாபித்தல் - இருத்துதல், பிரதிட்டித்தல். பாடலுறும் -பாடும். வந்து -தோன்றி. மனத்திருக்கு -மனத்தின் மாறுபாடு. மடியச்செய்த -அழித்த. புனிதன் - பரிசுத்தன். நல் தாம துரையான தயாபரன் - நல்ல அழகிய தலைவனான மேலான தயையுடையவன் - தாமம் -அழகு . ஆதாரம் ஆறு; ஆதாரம் - உடம்பிலுள்ள விசேடமான
இடம். அவை, மூலாதாரம், சுவாதிட்டாநம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, என்னும் ஆறாம். மானம் -மௌநம். பிரமாநந்தம் -சிவாநந்தம். ரந்திரம் -துவாரம்.வெளி. ரட்சகன் -காப்பவன்.

110. அஞ்செழுத்து மந்திரம் -பஞ்சாக்ஷரம். ஆசிரியர், தமது பாதாவின் மாட்டுப் பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றிருப்பினும், ஒரு நாள் துயிலுகையில் ஸ்ரீ மணிய சிவனார் தமது கனவிற்றோன்றித் தமக்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்தனர், என்று பன்முறையுங் கூறுவதுண்டு.

    கொள்ளைப் பிறப்பறுக்க வந்த்தொரு கோமளத்தைக்
    கள்ளப் புலக்களைகள் கட்டானை -வின்னரிய

    வாறெழுத்தை யெம்மனச்செ யன்பான் விதைத்தானை
    மாறில் குணக்குன்றை மாமோக்கப் -பேறுதரு

    மந்தகா சஞ்செய் மகாப்பிரபு வானானை (115)
    விந்தயனை யெந்தமக்கு மேம்பாடு -தந்தவனை

    வைகைப் புனினத் திருந்துழி வந்தெதிர்த்துக்
    கைகலந்தோர் விண்ணேறக் காட்டுமருட் -செய்கையனைத்

    தேடரும்பே ரின்பச் செழுங்கதிர்கால் *சோழவன்
    காடதனி லேயுதித்த ஞாயிற்றைச் -சீடர்மனச் (120)

    செங்குமுதங் கண்மலரத் தோன்றுஞ் சிவயோகத்
    திங்களினைச் சித்தாந்த தீபத்தை -நங்கண்

    மணியைநல்ல மெய்ஞ்ஞான மாமுகிலைச் சுப்ர
    மணியசிவன் தன்னைநெஞ்சே வாழ்த்து,

    ----

    கொள்ளைப்பிறப்பு -மிகுந்த பிறவி, கோமளம் -மென்மையோடு கூடிய அழகு,
      Cf. “குத்தங், கொள்ளா தெதிர்கொள்க *தேருண மாவது
      *கோமனலே. “ (தஞ்.கோ.885)
    கள்ளப் புலக்களைகள் சுட்டான் – வஞ்சகத்தையுடைய ஐம்புலங்களாகிய களைகளைப் *பீடுக்கினவன். விள்ளரிய – சொல்லுதற்கரிய, சொல்லமுடியாத. ஆறெழுத்து - ஷடாக்ஷரம் (நமக்குமாராய). மோக்கப்பேறு – வீடாகிய செல்வம். மந்தகாசம் - புன்னகை. விந்தையன் – அற்புதன், மேம்பாடு – மேன்மை. புளினம் – மணற்குன்று. இருந்துழி – இருந்தபொழுது. கைகலந்தோர் – சண்டையிட்டோர். விண்ணேற –
    சுவர்க்கம்புக. ‘வைகைப் புளினத் திருந்துழி ... ... செய்கையனை’. இச்செய்தியினை மணிய *சின்னார் சரித்திரத்திற் காண்க. கதிர் – கிரணம், ஒளி. செழுங்கதிர் கால் ஞாயிறு எனக்கூட்டுக.

    120. சீடர் – மாணாக்கர். கண்மலர – விகசிக்க. சிவயோகத்திங்கள் – சிவத்தோ டொன்றுபட்ட சந்திரன்; சிவயோகஞ் செய்யுந் திங்களெனவுமாம். கண்மணி – கண்ணினுட் கருமணி, மெய்ஞ்ஞானத்தைச் சொரியும் மாமுகிலென்க.
    [முன்னர்க்கூறிய ஸ்ரீமணிய சிவனாரது மாணாக்கருட் சிலர்மீது, தாம் 1894 -ஆம் வருஷம் மதுரை மாநகரஞ் சென்றுழி, அன்னாரது சிவபத்திச் செயல்களிலீடுபட்டுத் தம் அவயவங்களை முன்னிலைப்படுத்திப் பாடியது.]


    2. அவயவ வறிக்கை


    காப்பு
      வஞ்சித்துறை

      சிவகணபதிதா
      வைபவ வறிக்கைக்
      குவகையொ டுதவும்
      கவலலென் மனனே* (*Unclear image)

      நேரிசை யாசிரியப்பா

      திருவளர் செல்லப் பாண்டிய நாட்டின்
      மருவளர் சோலை மாண்புறப் புடைசூழ்

      மதுரைப் பதிதனில் வந்தவ தரித்த
      மதுர வாசக வள்ள லாரை

      யன்பே யுருவா யமர்ந்த குரவரை (5)
      மன்பே ருலகில் வளர்புக ழாளரைப்

      பத்தி நிரம்பிய பாசு பதரை
      வித்தை நிரம்பிய வேதம்வல் லோரை

      யாகம முணர்ந்த வறிஞரைச் சந்திர
      சேகர மூர்த்திதா டினம்பணி யுநரை (10)

      யேகலிங்க சிவார்ச்சனஞ்செய்து
      மாகே சரனருள் மகிமையுற் றோரை

      மாங்குடி மணிய சிவனா ரிடத்துப்
      பாங்குடன் சைவ தீட்சைபெற் றோரை
      ----- - ----- - -

    அவயவங்களைத் தன் முகமாக அழைத்து நல்லறி றுத்திக்கூறியது.

    காப்பு: - - அவயவ அறிக்கைக்கு - 'அவயவ வறிக்கை" யை இயற்றுதற்கு. உவகை -மகிழ்ச்சி. உதவும் -உதவிபுரிவன். கவலல் என் -மனக்கவற்சி எதனால்? கவல வேண்டாம் என்றபடி. மனன் -மனம்; போலி. மரு -வாசனை. மாண்பு உற -மாட்சி பொருந்த, புடை -பக்கம். குரவர் -ஆசிரியர். பாசுபதர் -பசுபதியைப் பூசிப்பவர். வித்தை -அறிவு. சந்திரசேகர மூர்த்தி - பிறைச்சந்திரனை முடியில் அணிந்த கடவுள்; சிவன். தாள் -பாதம். பணியுநர் -வணங்குபவர். ஏகலிங்க சிவார்ச்சனம் - ஒரு சிவலிங்கத்தைப் பூசிக்குமுறை; லிங்கபூசைவகைகளுள் ஒன்று. மாகேசுரன் - சிவன். பாங்குடன் - முறைமையோடு.

      நல்லற மியற்றிய ஞானதே சிகரை (15)
      யில்லற வியல்வழா திருந்த புலவரைப்
      பண்புடை யாளரைப் பரம சிவன்பேர்
      மொழிந்து சஞ்சித மொழிந்த தூயரைப்
      பதியைப் புல்விப் பாசவேர் கல்லி
      விதியை வென்ற வீரரை யஞ்செழுத் (20)
      தெண்ணி யின்ப நண்ணுநா வலரை
      வேனி லானுடை வீதடக் கியமா
      சீனி வாச சிவனூல் யோகம்
      பயின்றகோ விந்த பரமா சிரியனு
      மயின்று நஞ்சைக் கண்டங் கறுத்தா (25)
      னடிமலர்த் தரிசன மதுதினஞ் செய்யுஞ்
      சுப்பிர மணிய சிவனு மாகிய
      சுத்தாத் துவிதச் சூக்குமந் தெரித்த
      வத்தர் மூவரை யகமே நினையாய்
      கண்ணே யவருடை யுருவங் காணாய் (30)
      செவியே யவரது சிறப்பினைக் கேளாய்
      நாசியே யவர்நா டொறுமருச் சிக்கும்
      வாசனை வீசு மலர்களை முகவாய்
      வாயே யவர்தம் பாதம் வழுத்தாய்
      மெய்யே வணங்காய் கையே கூம்பாய் (35)
      தலையே பணியாய் சாற்றினே
      மலையா திருத்திரெ *மவயவயங் கானே!

      ----- -----

    தேசிகர் – ஆசாரியார்,இல்லறஇயல் -கிருகஸ்த தர்ம க்ரமம். வழாது – கெடாது. புலவர் – அறிவாளர். பண்பு – ‘பண்பெனப்படுவது பாடறிந் தொழுகல்.’
    (கலித். நெய்தல். *14)
    சஞ்சிதம் – ஆன்மா அநாதியாக ஈட்டி வைத்துள்ள வினைத்தொகுதி. ஒழிந்த - நீங்கிய. பதி – பரமான்மா. புல்லி – கூடி. பாசவேர் – பாசத்தினது மூலம். கல்லி – களைந்து. விதி – ஊழ். எண்ணி – உருச்செபித்து. காவலர் – சொல்வன்மை யுடையார்; சாபாநுக்ரக சாமர்த்திய முடையார். வேனிலான் – வேனிற் காலத்தைத் தனக்குரிய காலமாக்க் கொண்டவன்; மன்மதன். வீறு – வல்லபம். அடக்கிய – வென்ற. கோவிந்த பரமாசிரியன் – ஆசிரியருடைய பிதாவும் ஞாநாசாரியருமாகிய கோவிந்த சிவனார். ந்ஞ்சை அயின்று கண்டம் கறுத்தான் – விடத்தையுண்டு கழுத்துக் கறுத்தனன்; நீலகண்டன். சுப்பிரமணிய சிவனார் பிரதிதினமும் சிவதரிசனஞ் செய்தே உணவு கொள்ளும் விரதமேற் கொண்டவர் என்றபடி. *சீநிவாஸ சிவன், கோவிந்த சிவன், சுப்பிரமணிய சிவன் ஆகிய மூவரும் ஸ்ரீ மணிய சிவனாரிடம் சில தீக்ஷையும் ஞாநோபதேசமும் பெற்ற சீடர்களாவார். சுத்தாத்துவிதம் – நீலகண்டர் அருளிச் செய்த மார்க்கம். குக்குமம் – இரகசியம். அத்தர் – பெரியார். கூம்புதல் – குவிதல். பணியாய் – வணங்குவாய். அலையாதிருத்திர் – விடயங்களிற் றிரியாமல் மேற் சொல்லிய தொழில்களில் நிலையாக நிற்பீராக.


    3. கையறுநிலை


    [1892 -ம் வருஷம் முதல் 1901 -ஆம் வருஷத்திற்குள் தம் அன்பிற்கு இடனாயிருந்து இவ்வுலக வாழ்வினை நீத்துச் சென்ற சிலர்மீது, தாம் செயலற்று நின்ற நிலையைப் புனைந்து காஞ்சித்திணையிற் பொதுவியற் பாலதாங்கையறு நிலைத்துறையின் கணமைத்துப் பாடியது]

    கையறுநிலை
    3.1 தென்னிஸன் பிரபு

    [ஆங்கில பாஷையில் மகா கவியெனப் பெயர்பெற்று விளங்கிய தெனிசன் பிரபு 1892 -ஆம் வருஷம் இறந்துழி அவர் நூல்களி லீடுபட்ட தாம் ஆற்றாது பாடியது]

      கலிவிருத்தம்

      ஆங்கில மாதரா னழுகு குன்றுவா
      ளேங்குவா னென்செய்யா னின்ப மீந்ததன்
      மாங்குயிற் கிளவிசேர் மன்ன னாகிய
      வோங்குசீர்த் தெனிசனை பொழிந்த பான்மையாய். (1)

      தத்துவ சாத்திரத் தனித்த ருக்கணே
      கொத்தொடு தோன்றிய குணஞ்சி ற‌ந்துள
      வித்தைசேர் பெயின்ஸ்பென்சர் மில்லெ னும்பழச்
      சத்தினைக் கவிக்கலர் தந்த வள்ளலே! (2)

    ----
    கையறு நிலை – செயலற்று நிற்கும் நிலை. அன்புடைய ஒருவன் இறப்ப அவனைச் சேர்ந்தோர் அய்யிறந்து பாட்டிற்கு ஒழுக்கத் தளர்தல்.

      cf. “செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
      கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று” (பு.வெ.பொது. 14)
      “ கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினு
      மொழிந்தனர் புவன ரத்துறை யென்ன” பு. வெ. பொது. 15)

    இறந்தவனுடைய புகழை விரும்பிக் கூறினும் இத் துறையால். காஞ்சித்தினை நிலைபேறில்லாத உலகியக்கையைக் கூறும் பகுதியாம்.
      Cf. “கழிந்தோர் தேயத்து அழிபடர் உறீஇ
      ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்” (தொல். புறத். 24)
      “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானு
      நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” (தொல். புறத். 23)

    1. மாங்குயில் – மாமரத்தில் வாழ்தலை விரும்புங் குயில்.
      Cf. “மாம ரக்கிளை தன்னின் மகிழ்ந் துவாழ்
      கோம ளக்குயில்” (தாமரை நாண்மலர்; குயில்)
    கிளவி – சொல். ஒழிந்த – நீங்கிய. பான்மை – விதம், தன்மை, பகுதி.

    2. தத்துவ சாஸ்திரம் – Philosophy. தனித்தரு – ஒப்பற்ற மரம். வித்தை சேர் – அறிவு பொருந்திய. பெயின், ஸ்பென்சர், மில் – Alexander Bain, Herbert Spencer, John Street Mill. பழச்சத்து – பழத்தின் ரஸம். கவிக்கலம் – செய்யுளாகிய பாத்திரம்.

      மல்லிகை நுகர்தொறும் வாசங் குன்றல்போ
      லில்லையே நின்கவி யினிமை யானது
      மெல்லென நினைதொறும் மேன்மை காட்டலாற்
      சொல்லுதற் குவமையொன் றேனுந் தோன்றின்றால். (3)

      திப்பியப் புலவனே தெனிச வள்ளலே
      யொப்புயர் வற்றநி னுசித கேயத்தின்
      றுப்பினைச் சொற்றொறுஞ் சொரிசு கத்தினைச்
      செப்பிடும் வலிபெற யாண்டுச் செல்லுகேம்? (4)

      ஐயனே யாங்கிலத் தற்பு தப்பெருஞ்
      செய்யநற் பாடல்கள் செய்த செம்மலே
      ஐயகோ தெனிசனே யணிகொள் பூவனாய்
      நையுபு செம்மலாய் நண்ணிற் றோநின்மெய்? (5)

      நீயிறந் தாங்கில நிகரி னாட்டினை
      வாய்விடுத் தழுதலாம் வருத்த மெய்துவித்
      தாயிரங் காதத்திற் கப்பு றத்தினிற்
      சேயவெம் மையுந்துயர் செய்தல் சாலுமோ? (6)

      வெல்லுதற் கரியனே விளங்கு சீர்த்திசால்
      செல்வனே தெனிசநின் செய்யுட் கட்படுஞ்
      சொல்லினும் பொருளினுந் தோன்று கின்றசீர்
      வல்லமை காண்பினி யாவர் மாட்டினே? (7)

    ----
    3. நுகர்தல் -ஈண்டு முகர்தல். மெல்லென நினைதொறும் மேன்மை காட்டலால்.
    Cf. ” நவிறொறும் நூனயம் போலும்.” (திருக்குறள்: 783)
    தோன்றின்று – தோன்றவில்லை.

    4. திப்பியம் - திவ்யம் என்பதன் தற்பவம். திப்பியப்புலவன் – தெய்வீக வித்வான். உசிதம் – அழகு, மேன்மை, தக்கது. கேயம் – இசைப்பாட்டு. துப்பு – வலிமை. சொற்றொறும் – ஒவ்வொரு சொல்லின்கண்ணும். சுகம் – இன்பம். செப்பிடும் – எடுத்துக்கூறும். வலிபெற – வன்மையைப் பெறுதற்கு. யாண்டுச் செல்லுகேம் – எவ்விடஞ் செல்லுவோம்.

    5. செம்மல் – தலைவன். அணிகொள் – அழகினைக் கொண்ட. பூ அனாய் – மலர்போன்றவனே. நையுபு – நைந்து. செம்மலராய் – பழம் பூவாய். நண்ணிற்றோ – பொருந்தியதோ. நின்மெய் – உனதுடல். செம்மலே (தலைவனே) நின் மெய் செம்மலாக (வாடிய பழம்பூவாக)ப் போயிற்றோ என்று கூறியதன் நயம் நோக்கத்
    தக்கது. சொற் பின்வருநிலை யணி.

    6. நிகர்இல் – சமானமற்ற. ஆம் – உண்டாக்கும். எய்துவித்து – உண்டாக்கி. சேய – தூரத்திலுள்ள. சாலுமோ – தகுதியாமோ.

    7. சீர்த்திசால் – புகழ்மிக்க. செய்யுட்கட்படும் – கவியினிடம் உண்டாகும் சொல்லின் சீர், பொருளின் சீர் எனத் தனித்தனிக் கூட்டுக. காண்பு – காணுதல் இனி யாவர் மாட்டுக் காணுதல் ஆகும், என ஒரு சொல் வருவிக்க.

      சாதுவா மார்தரின் றனிநற் காதையு
      மேதமி லினிமையா ரின்மெ மோரிய
      மாதரம் பாக்களு மனத்திற் கொண்டியா
      மாதரத் தோடுமா னந்த மார்துமே. (8)

      இனிமைசேர் செகப்ரிய ரென்ற மாகவி
      மனிதரி னியற்கையை வகுத்துக் காட்டல்போற்
      குனிவிலா மானுட குணவி சேடஞ்சொ
      னினபனு வலின்றிற னிகழ்த்த வல்லெமோ? (9)

      ஒழுகுதே னிசையனா யொளிர்ந்து நின்றநிற்
      கழகொடு வாய்மையு மமைந்த பண்பினால்
      விழைவொடு தெனிசப்பேர் விளம்பி னார்கொலோ
      கழறுநின் னிசையெங்கும் கவின்று பொங்குமால். (10)

      பாமர பண்டிதர் பயங்கொள் பாக்கிசைத்
      தோமறு பாப்பல சொற்ற பாவலோய்
      நாமகள் கூத்தமர் நாவி னோய்நின் றன்
      காமர்செங் கவித்தடங் களிப்பி னாடுகேம். (11)

    ----- - -
    8. ஆர்தரின் தனி நற்காதை. -The story of King Arthur and the Knights of the Round Table. ஏதம் இல் -குற்றமற்ற. இனிமைஆர் -இனிமை மிகுந்த. இன் மெமோரியம் -In Memoriam. மா தரம் பாக்கள் -மேன்மை
    மிக்க உத்தமப் பாடல்கள். ஆதரம் -அன்பு. ஆர்தும் -அநுபவிப்போம்.

    9. செகப்ரியர் -Shakespeare (William). மாகவி -மகா கவி. மனிதரினியற்கை -மக்களியல்பு (Human Nature). குனிவுஇலா - குறைவு இல்லாத. மானுட குண விசேடம் - Peculiarities of Human Character. நின பனுவல் - உன்னுடைய நூல். திறன் -அழகு முதலிய பண்பு. நிகழ்த்த வல்லெமோ -கூறமாட்டுவேமோ.

    10. தேன் இசையன் - தேன்போலு மினிய இசை வாய்ந்த கவிஞன். ஒளிர்ந்து -விளங்கி. 'தேனிசையன்' என்பது 'தெனிஸன்' என மருவினதாகத் தற்குறிப்பேற்றினர். கழறு -சிறப்பித்துச் சொல்லப்படும். இசை -புகழ். கவின்று - அழகு பொருந்தி.

    11. பாமரர் பண்டிதர் -பாமரரும் பண்டிதரும். உம்மைத்தொகை. பாமரர் - கல்லாதோர். பண்டிதர் -கற்றறிந்தோர். பயன் கொள்பாக்கு -பலனை யடையும் பொருட்டு. இசைத்தோம் அறு பா -இனிய இசையினையுடைய குற்றம் அற்றபாடல். சொற்ற - சொல்லிய. பாவலோய் - கவிஞனே. நாமகள் -சரஸ்வதி. கூத்து அயர் -கூத்தாடுகின்ற. நினது செய்யுணூலாகிய தடாகத்தில் மூழ்கித் திளைத்து விளையாடுவோம் என்றபடி. உருவகவணி.

    3.2 திரு. சலசலோசனச் செட்டியார்

    [தம்மிடம் கல்வி பயிலும் இயற்றமிழ் மாணவரு ளொருவராயிருந்தவரும், *திருவெவ்வுளூர் இராமசாமிச் செட்டியாரவர்கள் குமாரரும், 1900 -ஆம் வருஷத்துச் சென்னைச் சர்வகலாசாலைப் பிரதம கலா பரீட்சைப் பாடமாயிருந்த சரசாங்கி நாடக முடையாருமாகிய திரு. *சலசுலோசனச் செட்டியார் 1897 -ஆம் வருஷம்
    இறந்துழிப் பிரிவாற்றாது பாடியது]

      ஒரோவோரடிமீக்கு வேறுபடவந்த கொச்சக வொருபோகு

      பொன்மலருங் கொன்றைப் புனிதமுடி யைங்கரன்மேற்
      சொன்மலருஞ் செந்தமிழிற் றூயபதி கம்புகன்று
      தென்மலருஞ் சாவித் திரிசரிதை செய்தோனே
      கன்மவசத் தானோ கடிதிற் பிரிந்தனையே!
      கஞ்சமலர்க் கண்ணா கடிதிற் பிரிந்தனையே!! (1)

      பேணிமுகில் போல்வார்சொற் பெற்றுவக்குஞ் சாதகமே
      யாணர்நூ னாண்மலரி னின்தே னுணுஞ்சுரும்பே
      மாணெழில்சேர்ந் தோங்கு மதியே யியற்றமிழின்
      மாணவர்தங் கண்ணே மறந்தெங்ங னேகினையோ!
      மாமுளரிக் கண்ணா மறந்தெங்ங னேகினையோ!! (2)

    ----- ----- -
    திருவெவ்வுளூர் இராமசாமிச் செட்டியார் -திருவிடை மருதூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம் முதலிய நூல்கள் இயற்றிய தமிழ்ப் புலவர். ஆசிரியரிடம் மிக்க நன்மதிப்பும் பேரன்பு முடையவர்.

    1. பொன்மலருங் கொன்றை - பொன்னிறம் விளங்கும் கொன்றைப் பூவை யணிந்த. புனிதமுடி ஐங்கரன் மேல் - பரிசுத்தமான சடைமுடியினை யணிந்த ஐந்து கரத்தையுடைய விநாயகக் கடவுண்மேல். சொல் மலரும் செந்தமிழில் - சொல்விளங்கும் செந்தமிழினால். தூய பதிகம் புகன்று - குற்றமற்றதாற் றூய்மையான பதிகம் பாடி. சலசுலோசனச் செட்டியார் விநாயகர் பதிகம் ஒன்று எழுதியுள்ளனர். தென் மலரும் - அழகு பொருந்திய சாவித்திரி சரிதை - சாவித்திரியின் சரித்திரம். இவரே சாவித்திரி சரிதையைச் சத்திய நூலாக எழுதியுள்ளனர்.
    கடிதில் - விரைவினில், ஈண்டு *காவியத்தில் என்றபடி. 'கஞ்சமலர்க் கண்ணன்' *சவசுலோசனன். பிறிது நவிற்சியணி.

    2. பேணி - விரும்பி, முகில் - மேகம். போல்வார் - ஆசிரியர், தந்தையார் முதலிய *கல்வியறிவிற் சிறந்த பெரியோரை ஈண்டுக் குறித்தது. சாதகம் – வானம்பாடி; இஃது முகிற்றுளி யொன்றனையுமே கேட்டுணு மியல்பினது.

      cf."தற்பாடிய தனியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி (பட்டினப்பாலை3,4)
      “துளிநசை வேட்கையான் மிசைபாடும் புன்னிங்” (கலித். குறி.10).

    யாணர் - புதுமை. யாணர்நூல் - புதுநூல்.நாண்மலர் - அன்றலர்ந்த மலர். நூவா மலரென்க. இன் தேன் உணும் - இனிய தேனை உண்ணும். சுரும்பு - வண்டு மாண் எழில் - மிக்க அழகு. மாமுளரிக் கண்ணன் - சவசுலோசனன். பிறிது நவிற்சியணி.

      மாற்றாரை யஞ்சாது வாதப்போர் வென்றவனே
      தேற்றார் தமைத்தெருட்டுஞ் செஞ்சலச லோசனசொல்
      லூற்றே குளந்தைநக ருற்றுழியெந் தம்பிரிவை
      யாற்றா துரைத்தவெண்பா வம்மா வயர்க்கிலமே!
      ஐயனே யிஞ்ஞான்று மம்மா வயர்க்கிலமே!! (3)

      குற்றமிலாத் தாதைமக வென்றோர்தங் கோண்மறுத்துக்
      கற்றகலைக் காதலனுங் காதலியு மாகுநிலை
      மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட்
      குற்ற யியைபென் றுரைத்தாயெங் குற்றணையோ! (4)

      நாடகமாம் வண்கழனி நற்பயிர்செய் சொல்லுழவா
      வோடிச் சரசாங்கி யுட்பயனைத் துய்க்கலைநீ
      யாடகப்பொன் னம்பலத்து ளாடுநன்றா ளண்மியின்ப
      வீடுற்றா யென்னே மிகவு மிறும்பூதே!
      மென்கமலக் கண்ணா மிகவு மிறும்பூதே!! (5)

    ---------
    6. மாற்றார் = பகைவர். வாதப்போர் = வாதமாகிய போர். தேற்றார் = அறியார் தெருட்டும் = அறிவுறுத்தும். சொல்லுற்றே = செவ்விய சொற்களாகிய நீர் சுரக்கும் ஊற்றுப் போன்றவனே. குளந்தை நகர் = பெரியகுளம். ஆசிரியர் = வடகரை ஜமீந்தார் ஸ்ரீ ராமபத்திர நாயுடு அவர்களின் வேண்டுகோளின்படிக் குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழை அரங்கேற்றும்படி செய்யப் பெரியகுளஞ் சென்றிருந்தனர். தாம் மீண்டு சென்னைக்கு வருவலென்றுரைத்த காலங் கடந்து ஆசிரியர் அங்குத் தாழ்த்தமையின், அதற்காற்றாது சலசலோசணச் செட்டியார் அவருக்கு வெண்பா வொன்று வரைந்து விடுத்தனர். அஃது பின் வருமாறு:

      "செல்வ மலிகுளந்தைச் சேயின் றமிழ்விரிப்பச்
      செல்வ லெனச்சென்றாய் தேசிகவான் - கல்விவயிற்
      போந்தவன் றாழ்ப்பப் புலம்புகொண்டிற் கண்ணுறையு
      மேந்திழையை நேர்குவலியா னெண்."

    அயர்க்கிலம் = மறந்தோமில்லை. இஞ்ஞான்றும் = இப்பொழுதும்.

    4. கல்வியிற்சிறந்த ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் உள்ள இயைபு, குற்றமற்ற தந்தைக்கும் புத்திரனுக்கும் உள்ள இயைபு போன்றது என்பவர் தங்கோட் பாட்டினை மறுத்துக், கலைகளில் வல்ல காதலனுக்கும் காதலிக்கும் உள்ள இயைபே அதை யொப்பது என்றபடி. இக்கருத்து மேற்சொன்ன வெண்பாவா லுணரக் கிடக்கும். மகவு =புத்திரன். கோள் = கொள்கை. இயைபு = சம்பந்தம். நிலைஇயைபு என்றது காட்சியணி. எம்பால் அன்பு உள்ளாய் = எம்மிடத்து அன்புள்ளவனே.

    5. நாடகக்கலையாகிய வளவிய கழனியில் நல்ல பயிரினை விளைவிக்கும் சொல்லேருழவனே என்றபடி சலசலோசனச்செட்டியார், ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் ஒன்றாகிய 'ஸிம்பலின்' (Cymbaline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழ் நடைக்கேற்பச் செவ்விதாகப் புனைந்து தான் எழுதிய 'ஸரஸாங்கி' யென்னும் அழகிய தமிழ் நாடகம் அச்சிட்டு வெளிவரும் பருவத்திற் காலஞ்சென்றமையின், 'ஸரஸாங்கியுட் பயனைத்துக்கலை நீ' யென்று ஆசிரியர் கூறினார். துய்க்கலை = அநுபவித்திலை. ஆடகப்பொன் = ஆடகமாகிய பொன். ஆடகம் = பொன்னின் நால்வகைகளுள் ஒன்று. அம்பலம் = சபை. ஆடுநன் = நடராஜ மூர்த்தி. தாள் அண்முதல் = அடிசேர் முத்தியடைதல். இன்பவீடு = பேராநந்தமாகிய மோக்ஷம். உற்றாய் = அடைந்தாய். இறும்பூது = ஆச்சரியம். மென்கமலக் கண்ணன் = சலசலோசனன். (சலஜம் = தாமரை; லோசனம் =கண்)
    ---------------
    3.3 க. சபாபதி முதலியார்

    [ தமது தமிழ்நூற் போதகாசிரியரும், மதுரையம்பதி மகா வித்துவானுமாகிய க. சபாபதி முதலியாரவர்கள் 1898 -ஆம் வருஷம் தேகவியோகமாயின ஞான்று, அவரது பிரிவாற்றாமலிரங்கிப் பாடியது]

      ஒரோவோரடிமிக்கு வேறுபடவந்த கொச்சக வொருபோகு
      கோல்வளருஞ் செய்யதமிழ்த் தொல்கடலி னாடோறுஞ்
      செல்வளைத லென்னத் திளைத்தா டிருங்களிறே
      கல்லளரெந் நெஞ்சங் கவினரங்க மாநடிப்போய்
      பல்வளனுஞ் சான்றோய் பரலோக முற்றனையோ!
      பண்ணவர்கள் வாழும் பரலோகமுற்றனையோ!! (1)

      கொந்தார் நறிய குவளைமலர்த் தாருடையோய்
      சிந்தா மணியே சிவஞான நற்செல்வா
      வந்தோவெ மன்புடைய வண்ணா லரும்புலவா
      மந்தா கினியணிந்தான் மால்வரைக்க ணெய்தினையோ!
      மன்னே சபாபதியே மால்வரைக்க ணெய்தினையோ!! (2)

    ----- - ----- - -
    ஞான்று -பொழுது.

    1. தமிழ்த்தொல் கடல் - பழமை வாய்ந்த தமிழாகிய கடல். செல்வளைதல் என்ன -(நீருண்ணுதற்கு) மேகங்கள் சூழுதல்போல. திளைத்தல் -அநுபவித்தல். இருங்களிறு - பெரிய ஆண் யானை. கல்வளர் எம் நெஞ்சம் -எமது கல்லைப்போலச் சிறிதும் இளகாத நெஞ்சம். சபாபதி யென்ற பெயர்க்கேற்ப நெஞ்சமாகிய அரங்கில்
    நடனமிடுவோய் என்றனர். உருவகவணி. பல்வளனும் சான்றோய் -நல்லாசிரியர்க்குக் கூறிய பல வளங்களும் அமைந்தோய், நல்லாசிரியர்க்குக் கூறிய பல வளங்களையும்,
    "வலமபுரி முத்திற் குலம்புரி பிறப்பும், வான்யா றன்ன தூய்மையும் வான்யாறு,
    நிலம் படர்ந்தன்ன நலம்படரொழுக்கமும், திங்களன்ன கல்வியும் திங்களொடு,
    ஞாயி றன்ன வாய்மையும் யாவதும், அஃகா வன்பும் வெஃகா வுள்ளமுந்,
    துலைநா வன்ன சமநிலை யுளப்பட, எண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின்,
    வேளாண் வாழ்க்கையுந் தாஅ ளாண்மையும், உலகிய லறிதலு நிலைஇய தோற்றமும்,
    பொறையு நிறையும் பொச்சாப் பின்மையும், அறிவு முருவு மாற்றலும் புகழும்,
    சொற்பொரு ளுணர்த்துஞ் சொல் வன்மையும், நற்போர் நெஞ்சங் காமுறப்படுதலும்,
    இன்னோ ரன்ன தொன்னெறி மரபினர், பன்னருஞ் சிறப்பி னல்லாசிரியர்,"
    என்னும் ஆத்திரேயன் பேராசிரியன் கூறிய பொதுப் பாயிரத்தா னுணர்க. பரலோகம் - மேலான வீட்டுலகம். பண்ணவர் -தேவர்.

    2 கொந்து ஆர் -பூங்கொத்துக்கள் நிரம்பிய. குவளை மலர்த் தார் -இஃது வேளாளர்க்குரித்து
      cf." களியானை செம்பொ, னாவல ரேபெற நல்குங் கைம்மேக நறுங்குவளை
      மாவல ரேய்தொடை யான்றஞ்சை வாணன் வரையில்வ்வந்தே"
      [தஞ்சை.வா.கோ. 155]

    சிந்தாமணி -நினைத்தவற்றைக் கொடுக்கும் தெய்வ ரத்தினமொன்று, சிவஞான நற்செல்வன் - சிவஞானத்தையே சிறந்த செல்வமாகக் கொண்டவன். அண்ணல் -பெருமைக் குணமுடையான். அண்ணால் -விளி. மந்தாகினி -கங்கை. மந்தாகினி யணிந்தான் -சிவன். மால்வரை - பெரியமலை; ஈண்டுக் கைலை.

      ஐயமெனுன் காடுமடுத் தன்பி னெரித்தொளிர்ந்த
      செய்ய சுடர்ப்பிழம்பே தீந்தமிழின் றாதாவே
      துய்ய குணக்குன்றே தோமில் சபாபதியே
      மையமருங் கண்டனார் மாணுலக மேவினையோ!
      வானோர் தவப்பயனான் மாணுலக மேவினையோ!! (3)

      கற்பனைச்செந் தேன்பிலிற்றுங் கான்செறிந்த தாமரையே
      சொற்பொருளை நாடுந் தொளிலாளர்க் கெந்நாளுங்
      கற்பகமா நின்றவனே காதற் குருமணியே
      யற்பர் செறியுலக மாகாதென் றேகினையோ!
      அண்ணால் சபாபதியே யாகாதென் றேகினையோ!! (4)

      பைவரலின் பங்களொன்றாப் பாவித்த தேசிகனே
      சைவ சிகாமணியே தண்டமிழ்ப்பைங் கொண்டலனா
      யுய்வழியிஃ தென்றறியா தோடி யுயங்குநர்க்கு
      மெய்வழியைக் காட்டியநீ விட்டொளித்த தெவ்விடமோ!
      வேறா யெமைவிடுத்து விட்டொளித்த தெவ்விடமோ!! (5)

      சங்கத்துச் செய்யுளெனுந் தண்கடலி னீர்முகந்தேர்
      மங்கலங்க டாம்பாட மாணாக்க ருட்பொழியுந்

    ----- - ----- - - -
    3. ஐயம் – சந்தேகம். மாணாக்கர் தம் ஐயமாகிய காட்டினை யெரித்தழிக்கும் செந்தீயென உருவகித்தனர். அன்பின் – அன்பால். செய்ய – செவ்விய, செந்நிறமுடைய. சுடர்பிழம்பு – தீக்கற்றை. தீந்தமிழ் – இனிய தமிழ். தாதா – வள்ளல். குணக்குன்று – குணமாகிய மலை. தோம் இல் – குற்றம் அற்ற. மையமருங் கண்டன் – நீலகண்டனாகிய சிவன். வானோர்க்கு விருந்தாய்ச் சென்றமையின் ’வானோர் செய்த தவத்தின் பயனால்’ என்றனர். மாண் உலகம் – வீடு. மாண் – பெருமை.

    4. கற்பனைச் செந்தேன் – கற்பனைகளாகிய செந்தேன்றுளிகள். பிலிற்றும் – சொரியும். கான் – மணம். செறிந்த – பொருந்திய. சொற்பொருளை நாடுந் தொழிலாளர் – சொல்லினது பொருளை யாராயுந் தொழிலையுடைய மாணவர். கற்பகம் – வேண்டியதளிக்கும் தெய்வமரம். காதல் – அன்பு. செறி - பொருந்திய.

    5. பைரவல் - துன்பம். இன்ப துன்பங்களை யொன்றாகப்பாவித்த சற்குரு. சிகாமணி - சிரோமணி, சூடாமணி. தண்டமுழ்ப் பைங்கொண்டல் - தண்ணிய தமிழாகிய மழையினைப் பொழியும் குளிரந்த மேகம். ஆனாய் - அன்னவனை, போன்றவனே. உய்வழி - உய்யும் வழி, பிழைக்கும் வழி. உயங்குவர் - வாடுபவர். மெய்வழி - உண்மையானவழி, சன்மார்க்கம்.

    6. சங்கத்துச் செய்யுள் - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு முதலியன. தண்கடல் - குளிர்ந்த கடல். முகந்து - மொண்டு. ஏர்மங்கலம் - பொன் ஏர் பூட்டி நின்றோர் ஏரைப்பாடும் மங்கலவாழ்த்துப் பாட்டு.

      cf. "கொழுங்கொடி யவரையுங் குவளை யுங் கலந்து
      விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
      பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
      ஏரொடு நின்றோ ரேர்மங் கலமும்." (சிலப். நாடு. 132 -135,)

      "காராளர், ஏர்மங் கலம்பொழிய
      வினிதுழநாட் கொண்டிடினே." (ஏரெழுபது - 1)

      துங்கமுகிலே துகடீர் சபாபதியே
      யெங்கள் குருமுனியே யெங்க னகன்றனையோ
      இன்றமிழிற் கூங்குயிலே யெங்க னகன்றனையோ. (6)

      வாதமெனும் போரரங்கின் வந்து மனமகிழ்ந்து
      போதமொன்றத் தாளினிற்பல் போரின் சதிகாட்டிப்
      பேதவறை கூவிப் பெரும்போர் தனில்வென்ற
      தீதொழிந்த நாச்சிலையோய் சென்றதுநீ யெவ்விடமோ
      சித்தாந்த நூல்வல்லோய் சென்றதுநீ யெவ்விடமோ (7)

      தென்பரங்குன் றத்துறையுஞ் செவ்வேண்மே லந்தாதி
      யன்பி னியமகமா வாற்றித் திருக்குளந்தை
      மன்புடைப்பிள் ளைத்தமிழை மாண வியற்றியவா
      வின்ப வடிவுடைய வீசுரன்றா ளண்மினையோ!
      எம்மைத் தெருட்டியவா வீசுரன்றா ளண்மினையோ!! (8)
      ----- - -

    துங்கம் = பெருமை. முகில் = மேகம். துகள்தீர் = குற்றம் நீங்கிய குருமணி = ஆசாரிய ரத்தினம். எங்ஙன் = எவ்விடம். இன் தமிழ்க் கூங்குயில் = இனிய தமிழ் மொழியிற் கூவுங்குயில்.

    7. வாதம் = தருக்கம். போர் அரங்கு = வாதப்போர்புரியும் சபை. போதம் = அறிவு. ஒன்ற = பொருந்த. தாள் = பாதம். சதி = தாளகொத்து.
    cf. தாளிணை பெயர்த்து முன்னஞ் சதிமுறை பிறழா தாட. (கூர்ம. திருக்கல். 56)

    பேதம் = வேறுபாடு. அறைகூவுதல் = போருக்கழைத்தல். (Challenge)
    cf. "சஞ்சத் தகர்வந தறைகூவ (வில். பார. பதின்மூ. 8)

    தீதொழிந்த = தீமை நீங்கிய; ஈண்டுத் தீமை யென்றது பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பவற்றை. நாச்சிலையோய் = நாவினையே வில்லாகக் கொண்டவன். நாவாகிய வில்லிற் சொல்லாகிய அம்பினை வைத்தெய்பவன் என்றபடி. சித்தாந்தநூல் = சுத்தாத்துவித சைவசித்தாந்த சாத்திரங்கள்.

    8. தென்பரங்குன்றம் = தென்றிசையில் உள்ள திருப்பரங்குன்றம் செவ்வேள் = முருகன். சபாபதிமுதலியார் அவர்கள் 'பரங்கிரிக் குமரன் அந்தாதி' யியற்றியுள்ளார்கள். அன்பின் = அன்போடு. இயமகம் = ஓரெழுத்து முதற் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல நான்கடியும் வரப் பாடுவது. (தண்டி. 94 உரை) ஆற்றி = செய்து. திருக்குளந்தைமன் = பெரியகுளமென்னும் ஊரிற் கோயில் கொண்டெழுந்தருளிய முருகன். புடை = மேல். (ஏழனுருபு) பிள்ளைத்தமிழ் = தமிழில் வழங்குகிற தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. பிரபந்தத் தலைவனைக் குழந்தையாகக்கொண்டு பாடுவது. பிள்ளை என்பது ஈண்டு ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாகிய பெயர். இதனிலக்கணத்தைப் பிங்கல நிகண்டு பன்னிரு பாட்டியல், இலக்கண விளக்கம், வெண்பாப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் முதலிய நூல்களிற் காண்க. சபாபதி முதலியார் மேற்குறித்த முருகன்மீது 'திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்' இயற்றியுள்ளனர். தெருட்டுதல் =
    அறிவு கொளுத்துதல். அண்முதல் = சேர்தல்.

      மாமதுரைப் பெம்மான்மேன் மாலையெனப் பேர்புனைந்து
      காமர் சிலேடைவெண்பாக் கட்டுரைத்த பாவலனே
      பாமணமார் கோவேநீ பாரினைவிட் டேகியது
      தாமதுரை சாமீ தமியேஞ்செய் தீவினையோ!
      தாதாய் குருவே தமியேஞ்செய் தீவினையோ!! (9)

      ஆங்கிலகீர் வாண வருமொழிக டாம்பயின்றோய்
      தாங்கு கணிதம்வல தார்க்கிகர்தங் கோமானே
      பாங்கு பெறுகமகா பாவலர்தம் போரேறே
      வாங்குபுகழ்க் கூடன் மதியில்விசும் பாயிற்றே!
      மாண்புறுநீ யின்றி மதியில்விசும் பாயிற்றே!! (10)

      ஐயோ தமிழ்மொழியே யையோ தமிழ்நாடே
      யையோ மதுரை யருநகரே யெம்முடைய
      வையன் சபாபதியை யன்னோ விழந்தமையாற்
      றுய்ய மதியிழந்த தூலவுடம் பாயினிரே!
      சோகத் துகின்மறைத்துத் தூலவுடம் பாயினிரே!! (11)

      இம்மை மறுமையினு மெஞ்ஞான்று மாணாக்கர்
      தம்மனத்து வீற்றிருக்குஞ் சாதுக்கள் கோமாஅனின்
      செம்மை வினாக்கட்குச் சிற்சிலகா லெம்விடைகேட்
      டெம்மைத் தழீஇயவுனை யெவ்வுலகிற் காண்குதுமோ!
      எங்கள் சபாபதியே யெவ்வுலகிற் காண்குதுமோ! (12)

    ----- - ----- ----
    1. மா மதுரைப் பெம்மான் = பெருமையுடைய மதுரையம்பதியிற் கோயில் கொண் டெழுந்தருளிய சோமசுந்தரக்கடவுள். முதலியார் எழுதிய நூற்கு, 'மதுரை மாலை' என்று பெயர். நூறு சிலேடை வெண்பாக்களடங்கியது. காமர் = அழகு. ஈண்டுச் சொல்லழகும் பொருளழகும். பாமணம் ஆர் கோ = பாக்களின் மணமாகிய சுவையினை நன்கு அநுபவிக்கும் தலைவன். தாம துரை = அழகிய பிரபு. தாதாய் =
    தாதை என்பதன் விளி.

    10. கீர்வாணம் = ஸம்ஸ்கிருதம். அருமொழிகள் = அருமையான மொழிகள். கணிதம் = கணித சாத்திரம் (Mathematics) தார்க்கிகர்தங் கோமான் = தர்க்க சாஸ்திரத்தில் வல்லுநர் என்றபடி. பாங்கு = அழகு. கமகன் = ஒருவன் சொல்லிய நூற்பொருளை விரிக்க வல்லவன்.

      cf. "நிறைமதியாற் கல்வியா னீள்கலைகள் கல்லா
      தறையு மவன் கமக னாம்"
      (வெண். பா. செய். 46)

    பாவலர் = கவிஞர். போர் ஏறு = போரில் வல்ல ஆண் சிங்கம். இடபமுமாம். புகழ் வாங்கு கூடல் = புகழ் வளைந்த மதுரை. வாங்குதல் = நனைதல். மதி இல்விசும்பு = சந்திரனில்லாத ஆகாயம். மதுரை பொலிவிழந்ததற்கு இஃது உவமை யாயிற்று.

    11. ஐயோ, அன்னோ = இரக்கக் குறிப்புச் சொற்கள். துய்யமதி = தூய அறிவு. தூல உடம்பு = ஸ்தூல சரீரம். சோகத்துகில் = துக்கமாகிய வஸ்திரம்.

    12. எஞ்ஞான்றும் = எப்பொழுதும். சாதுக்கள் கோமான் = கல்லோர் தலைவன் செம்மையினா = செவ்விய கேள்வி. தழீஇய = தழுவிய. சொல்லிசை யளபெடை. காண்குதும் = காண்போம்.

    --------
    3.4 ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை

    [ தமக்கு நண்பரும் பேராதரவா யிருந்தவருமாகிய வித்துவான் யாழ்ப்பாணம் றாவ்பகதூர், சி.வை. தாமொதரம் பிள்ளை யவர்கள் இருபதாம் நூற்றாண்டு பிறந்தவற்றைஞான்று தேக வியோகமாகியனமையின் அவர்தம் பிரிவாற்றாது பாடியது.]

      அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

      பொன்னவிருஞ் செய்யநறுந் தமிழுலகிற் புலவரெலாம் புதுநூற் றாண்டு
      துன்னியது கண்டுகொண்ட மகிழ்வனைத்துந் தொலைந்தரநந்தூய்மை சான்று
      பன்னரிய நகர்நடுவட் பழுத்ததொரு பயன்மரந்தான் பறிப்புண் டாங்கே
      தன்னிலையின் வீழ்ந்ததெனத் தாமோதரக்குரிசில் சாய்ந்தா னந்தோ! (1)

      புலமையெனு நீர்நிறைந்த வூருணியின் கரையுடைந்து போயிற் றென்னக்
      கலைமதியங் காரிருளைக் கடியாது விசும்பினின்றும் கரந்த தென்ன
      விலகினிய விசையெழுப்பும் யாழினுறு நரம்பிடையி னிற்ற தென்னச்
      சிலையினினா ணற்றதெனத் தாமோத ரக்குரிசில் சென்றா னந்தோ! (2)

    ----- - -
    யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் – இவர்கள் தமிழுலகத்திற்குத் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கணவிளக்கம், கலித்தொகை, சூளாமணி முதலியவற்றை முதலில் அச்சிட்டுத் தந்து தவிய மகோபகாரி.

    1. பொன் = அழகு. அவிரும் = விளங்கும். துன்னியது = பிறந்தது. தொலை தர = நீங்க. பன் அசிய = செப்புதற்கரிய. 'நம்நகர்' எனக் கூட்டுக. நகர் = சென்னை. பிள்ளையவர்கள் காலஞ்சென்றமைக்காகச் சென்னையிலுள்ள தமிழ்ப் புலவர்கள் கூடிய அநூதாபக் கூட்டத்தில், இவ்வாசிரியர், இச்செய்யுட்களைப் பாடினமையின், ஆண்டுக்குழுமி இருந்த புலவர்களையும் தம்மோடு உளப்படுத்தி, 'நமதுநகர்' என்று
    சென்னையைக்கூறினார். இதன் உண்மையை நான்காவது பாட்டின் இறுதியில் தண்டமிழ்ச் செந்நாப்புலவர் என்று சபையோரை விளித்துக் கூறியதே நன்கு விளக்கும். தூய்மை = பரிசுத்தம். சான்று - அமைந்து. நடுவண் = நடுவில். பயன் மரம் = பழங்களையுடைய மரம். இங்ஙனங் கூறியதனால் இவர்,

      "பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
      நயனுடை யான்கட் படின்"

    என்னுந் திருக்குறட்கு இலக்கியமாக நின்றனர்என்பது போதரும். தன்னிலையின் = தனது நிலையினின்றும். குரிசில் = குருசில்; தலைவன்

    2. புலமை = அறிவு. ஊருணி = தடாகம் (ஊராரான் உண்ணப்படுவது. இவ்வடி,
    "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு," என்னுங் குறட்கருத்தைத்தழுவியது.

    கலைமதியும் = கலைகளையுடைய சந்திரன். விசும்பு = ஆகாயம். கரந்தது = ஒளிந்தது. இலகு = விளங்கும். யாழ் = வீணைபோன்ற இசைக்கருவியொன்று. நரம்பு இடையின் இற்றது என்ன = நரம்பு யாழை வாசிக்குமிடையில் அறுந்தது என்று சொல்லும்படி சிலையினில் நாண் அற்றது என - அம்புகள் எய்யுமிடையே வில்லின் நாணி யறுந்தது என்று சொல்லும்படி.

      செந்தமிழ்ப்பா வலர்களெனும் பயிர்வாடச் சிறப்புமிகு சென்னை யின்கண்
      விந்தைநலச் சாலைதன துறுப்பிழப்ப மாணாக்கர் மிகவ ருந்தச்
      சந்தமலைத் தமிழணங்குந் தலைகுனிய வீழமுகந் தான்க விழ்ப்ப
      நந்துபுகழ்த் தாமோத ரக்குரிசில் சிவலோக நண்ணி னானால். (3)

      தரவுகொச்சகக் கலிப்பா

      காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ
      னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த
      தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர்
      தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்?

    ---------------
    3.5 சை. இரத்தின செட்டியார்

    (தமக்கு நண்பராயிருந்து சுவாநுபூதிப் பெருவாழ்வுற்ற சை. இரத்தின செட்டியார் ரவர்கள் விதேகமுத்தி யெய்தியவழிப் பாடியது)

      அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

      வணிகர்திருக் குலத்தினவ தரித்தவர்த மரபொளிர வயங்கா நின்ற
      மணியனைய நினக்குறுபே ரிரத்தினமென் றிட்டழைத்து வழங்கி னாரோ
      வணிகர்பலர் வேதாந்தம் வல்லுநர்நிற் சூழ்தரநீ யன்னார் நாப்ப
      ணணிவிளங்கி யிருந்தபெரும் பரிசினெதி ரதுபோற்றி நல்கி னாரோ? (1)

      எத்தொழிலை மேற்கொளினு மதுகடமை யெனக்கருதி வியற்று கிற்போ
      யத்துவித மெனுங்கடலிற் றுனைந்தவெந்த மருங்களிறே யமைந்த சாந்த
      வித்தகனே தமிழுலகில் வேதாந்த நூற்கதிர்கள் வீசு மென்றூ
      ழொத்தவனே யநுபூதிப் பெருவாழ்விங் குற்றவனே யொளித்த லென்னே! (2)

    ----- - ----- - -
    3. விந்தை = வித்தை. சென்னை யுனிவெர்சிடி தமிழ் போர்டு அக்கிராசனராக இவர் இருந்தமையின், 'விந்தை நலச்சாலை தனதுறுப்பிழப்ப' என்றனர். உறுப்பு = அங்கம். சந்தமலை = சந்தனப் பொதிய மலை. பொதிய மலையிலிருக்கும் அகத்தியர் தமிழ் முதற்குரவராதலின், 'சந்தமலைத் தமிழ்' என்றனர். தமிழ் அணங்கு = தமிழாகிய அணங்கு. ஈழம் = ஈழநாடு. தலைகுனிந்ததும் முகங்கவிழ்ந்ததும் பிள்ளை பிரிந்தமையால். நந்துபுகழ் = வளரும் புகழினையுடைய.

    4. காமோதி = காவின்கண் மலர்களில் மோதி. கா = சோலை. வண்டர் = வண்டு கடிமலர் = மணத்தையுடைய பூ. நாம் ஓது = நாம்படிக்கும். நன்னூல்பல = இவை முற்கூறப்பட்டன. சால்பு = பல நற்குணங்களின் அமைதி. 'எவர் தாமோ தரம் உடையர்' எனப் பிரிக்க. தரம் = வன்மை.

    சுவாநுபூதி = சுயமுயற்சியாற் பெற்றுக்கொண்ட வறிவு. (ஸ்வா = தனக்கு, அநு - பின்புண்டாம், -பூதி ஐச்வரியம்) சை. இரத்தின செட்டியார் - இவர்கள் சென்னைரிப்பன் அச்சுக்கூட சுவான்தாராக இருந்தவர்.

    1. மரபு = பரம்பரை. ஒளிர = விளங்க. மணி = இரத்தினம். தற்குறிப்பேற்ற வணி. அணியர் = அண்ணியர், நெருங்கினவர். காப்பண் = நடுவிடம். நணி = நண்ணி பரிசின் = தன்மையால் பின்னர் நிகழ்வது கருதி முன்னம் பெயர் வைத்தது எதிரது போற்றினதாயிற்று.

    3. அத்துவிதம் = கேவலாத்வைதம். துளைந்த = மூழ்கி விளையாடிய சாந்தம் = பொறுமைக்குணம். வித்தகன் = அறிவாளன். வேதாந்த நூற்கதிர்கள் = வேதாந்த நூல்களாகிய கிரணங்கள். வீசும் = பிரகாசிக்கும். எண்றூழ் = சூரியன்.

    கன்மவய மின்பதுன்ப மென்றவனே யவையிற்றாற் கலங்க லின்றி
    யின்மனத்தி னிருந்தவனே யிரத்தினப்பே ரிருந்தவனே யெவ்வெ வர்க்கு
    நன்மகிழ்வி னுரைவழங்கு நட்பாளா சுரியாப்புன் னகைமு கத்தாய்
    நின்மலச்செம் பொருளாக நீமிளிர்ந்த பரிசெடுத்து நிகழ்த்தற் பாற்றோ? (3)

----------------
3.6 விக்டோரியா மகாராணி

{இந்திய சக்கரவர்த்தினியாரும் ஆங்கில நாட்டின் அரசியாருமாகிய மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாரவர்கள் காலஞ்சென்றமை கேட்டு இரங்கிப் பாடியது}

    கலிவிருத்தம்.

    ஈங்குந மிந்தியர்க் கியைந்த வாறெலாம்
    பாங்குற நலம்பல பரிந்து செய்தவ
    னாங்கில நாட்டினல் லரசி யாகிய
    வோங்கொளி விசயைத னுயிர்து றப்பதோ? (1)

    நின்மலர்க் குணத்தின ணேய மிக்கவ
    ணன்மையே விரதமா நயந்து நின்றவள்
    புன்மையை நாடொறும் போக்கி யாண்டவள்
    பன்மகார் துதிசெயப் பாரி னீங்கினாள். (2)

    ஐயகோ வினியந மரசி போயினாள்
    செய்யகோல் செலுத்திய செல்வி போயினாள்
    வையகங் காத்தருண் மாது போயினா
    டுய்யவாழ் வுடையபைந் தோகை போயினாள். (3)

----- - ----- - - -
3. இன்பதுன்பங்கள் கர்மவசப்பட்டன என்று கூறியவனே. இன் மனம் இனியமனம். இருந்தவன் (பின்னது) = பெரிய தவத்தைச் செய்பவன். உரை வழங்கும் = பேசும். சுரியா = கூம்பாத, எனவே மலர்ந்த. புன்னகை = மந்தகாசம் நின்மலச் செம்பொருள் = நிர்மலமான செவ்விய பொருள், கடவுள். மிளிர்ந்த = விளங்கிய. பரிசு = தன்மை. நிகழ்த்தப்பாற்றோ = சொல்லக் கூடியதோ.

1. இயைந்தவாறு = பொருத்தமான விதம். பாங்கு = அழகு. பரிந்து = அன்புடன். ஓங்கு = உயர்ந்த. ஒளி = மன்னவர் உறங்காநிற்கவும் தாம் உலகங் காக்கின்ற அவர் கடவுட்டன்மை.

    cf. "உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி
    கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்," (சிந். 248)

2. நின்மலக் குணத்தினள் = குற்றமற்ற குணமுடையவள். நேயம் = அன்பு. விரதம் = மேற்கொண்ட கடமை. நயந்து = விரும்பி. புன்மை = தீமை. பன்மகார் = பல மக்கள். பாரில் = இவ்வுலகினின்றும்.

3. செய்யகோல் = செங்கோல். வையகம் = உலகம். துய்ய = தூய. பைந்தோகை = பசிய நிறமுடைய மயில் போன்றவள்.

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பொங்குபுகழ் விசயையெனுங் கோமாட்டி விண்ணுலகம் புக்க போழ்து
    தங்குமொளிப் பரிதிசென்று தண்கடலில் வீழ்ந்திட்டான் றணந்த பாரின்
    மங்கையுள நைந்திருளின் படாம்போர்த்து வருந்தினாண் மயங்கிப் பின்ன
    ரெங்குமுன வெவ்வுயிரு மரசிபிரி வாற்றாம லிரங்கிற் றம்மா (4)

    செம்மைநெறி திறம்பாது பல்லாண்டு தன்றலைவற் சேர்ந்து வாழ்வா
    டம்மையகஞ் சென்றவழித் தாயிறந்து போனதொரு தகைமை மானப்
    பொம்மலிளம் புவிமகளு நீயிறப்பக் கண்டுமனம் புழுங்கு கின்றாள்
    விம்முயிர்த்துத் தொழுகின்றா ளெழுகின்றா னழுகின்றாள் விழுகின் றாளே. (5)

    இவ்வுலகின் மகளிரது மேன்மையினை யியையவினி தெடுத்து நாட்டிச்
    செவ்விபெற வரசாண்ட விசயையெனுஞ் சீமாட்டி தேவர் வாழு
    மவ்வுலகின் கணுமன்னார் மேதகவை யன்பினெடுத் தறையு மாறு
    நவ்விவிழி மாதரசி விண்ணுலகிற் கெழுந்தருளி நடந்தாய் போறும். (6)

    பெண்ணெதற்கு முரியளல டன்வயமு முடையள்ளலள் பேதை யாவ
    ணண்ணியதன் றலைவனுக்குக் குற்றேவ லாட்டியென நாளுந் தம்மு
    ளெண்ணமிட்டுப் புன்மொழிகள் பலபிதற்றித் திரிதருஞ்சில் லெளியர் தேறும்
    வண்ணமந்தப் போலிவசை மொழிபொய்ப்ப நீயாண்ட மகிமையென்னே! (7)

----- - ----- - -
4 கோமாட்டி = அரசி. தணந்த = பிரிந்த. பாரின்மங்கை = பூமாதேவி. உளம் நைந்து = மனம் நொந்து. இருளின் படாம் = இருளாகிய போர்வை. இரங்கிற்று = வருந்தியது.

5. செம்மைசெறி = சன்மார்க்கம். திறம்பாது = தவறாது. பல்லாண்டு = பல வருடங்கள். தலைவற் சேர்ந்து = தலைவனைக்கூடி. தம்மை = தாய். தம்மையகம் = தாய்வீடு. தகைமை = தண்மை. மான = போல. பொம்மல் = பொலிவு, அழகு. புவி மகள் = நிலமங்கை. விம்முயிர்த்து = அழுது; விம்மிப் பெருமூச்சு விட்டு.

6. இயைய = பொருந்த. மேதகவு = மேன்மை. அறைதல் = பேசுதல். நவ்வி = மான், சீமாட்டி, மாதரசி = விளி

7. உரியவள் அலள் = உரிமையுடையவளில்லை. தன்வயம் = ஸ்வாதீநம். பேதையாவள்:

    cf. "நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
    பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே."
    (இறை. அகப். சூத். 23 மேற்.)

    "நுண்ணறி வுடைய ராகி நூலொடு பழகினாலும்
    பெண்ணறி வென்ப தெல்லாம் பேதைமைத் தாத லால்."
    (திருவிளை. 45 -34)

நண்ணிய = பொருந்திய. தலைவன் = கணவன். குற்றேவலாட்டி = வேலைக்காரி. நாளும் = தினமும். புன்மொழி = அற்பமொழி. எளியவர் - அறிவில் ஏழைகள். தேறும் வண்ணம் = தெளியும்படி. போலி = உள்ளீடற்ற; பொருளில்லாத. வசைமொழி = பழிச்சொல். பொய்ப்ப = பொய்யாக.
----- ----- -

    மேற்படி -வேறு

    அரசற் குரிய மனையாட்டி யரசி யாவண் மற்றொளிரு
    மரசிக் குரிய தலைமகனோ வரச னல்லன் மெய்யிதெனப்
    பரசு நினது நாட்டுவிதி பகரா நின்ற பரிசதனான்
    விரைசேர் குழலி னார்பெருமை மிகுதி யென்றல் போதருமால். (8)

    தரவுகொச்சகக் கலிப்பா

    தண்டாச் சிறப்புடைய தையரனின் னாளுகையிற்
    கண்டாய் புதுமையெலாங் காரிகைமார் தந்தலையிற்
    கொண்டாடு மாதே குவலயத்திற் பன்னலமு
    முண்டாகும் வண்ண முவந்தருளி யாண்டனையே. (9)

    பூண்டநின்கோ ணல்லசெயல் பொல்லார்க்கு மாதலினான்
    வேண்டியலெச் செல்லமுநீ வேட்டபடி பெற்றனைமுன்
    னாண்ட வரசரினு மம்மே நினக்குமிக
    நீண்ணபெரு வாழ்வினைநின் னேர்மையன்றோ நல்கியதால். (10)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    நயமுறு மன்னே நின்னை நாடெனு முடவி னுற்ற
    வுயிரென மொழிகோ வன்றி யொளியுடை விழியே யென்கோ
    செயிரிலா லறிவே யென்கோ செவ்விய மவனே யென்கோ
    வயமுருக் கொண்ட தன்ன வான்படைச் செல்வ மாதே!. (11)

----- -----
8. அரசன் (King) மனைவி அரசி (Queen) எனப் பட்டம் பெறுவள்; அரசி (Queen) யின் கணவன் அரசன் (King) எனப் பட்டம் பெறான். இஃது ஆங்கில நாட்டு முறை. விக்டோரியா ராணியின் கணவனுக்கு ராஜகுமாரன் (Prince) என்ற பட்டமேயன்றி, அரசன் (King) என்னும் பட்டமில்லை. பரசும் - கொண்டாடும். நினது நாடு - ஆங்கில நாடு. விதி = சட்டம். பரிசு - தன்மை. விரை - மணம். குழல் - கூந்தல். குழலினார் - மாதர். போதகும் - வெளிப்படும்.

9. தண்டா - குறையில்லாத. தையல் - பெண். தையால் - விளி. ஆளுகை - ஆட்சி. காரிகைமார் = மாதர்கள். புதுமையெலாங் கண்டாய் எனக்கூட்டுக. புதுமை - நீராவியந்திரம். தந்தி, மின்சாரசக்தி முதலிய பலவாம். குவலயம் - மண்ணுலகம். பல் நலம் - பல நன்மைகள். உவந்து - களித்து.

10. கோள் - கொள்கை. நல்லசெயல் = - நல்லவற்றைச் செய்தல். பொல்லார்க்கும் நல்ல செயல் அவள் கோட்பாடு என்றபடி. வேட்டபடி - விரும்பியபடி மிக நீண்டபெரு வாழ்வு. - இவள் அறுபத்துநான்கு வருடம் அரசாண்டமையின் இங்ஙனம் கூறினார். நேர்மை - நடுவு நிலைமை. நல்கியது - கொடுத்தது.

11. நயம் - நன்மை. அன்னே - தாயே. நாடாகிய உடலுக்கு உயிர் போன்றவள் என்பேனோ. ஒளியுடை விழி - நாணுங்கண். என்கோ - என்பேனோ. செயிர் - குந்தம். மனன் -மனம். வயம் - வெற்றி. உருக்கொண்டதன்ன - ஓருருவெடுத்தாற் போன்ற. வான்படை - மேலான சேனை. ஆங்கிலச் சேனை சென்ற இடங்கடோறும்
வெற்றியே பெறுமியல்பின தென்றபடி.

3.7 தி. மி. சேஷகிரி சாஸ்திரியார்

[தமக்கு நண்பரும் பேராதரவா யிருந்தவரும் சென்னை இராஜதானிக் கலாசாலையில் வடமொழித் தலைமைப் புலமையும் பாஷைநூற் புலமையும் ஒருங்கே முறைபெற நடாத்தினவருமாகிய தீ.மீ. சேஷகிரி சாஸ்திரியாரவர்கள். எம்.ஏ., தேகவியோக மாயின ஞான்று இவர்தம் பிரிவாற்றாமையால் இரங்கிப் பாடியது.]

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    கல்வியினிற் சேடனையு நற்குணத்திற் குன்றினையுங் கடுத்து நின்ற
    செல்வமுறு கலைஞற்குச் சேடகிரிப் பெயரிட்ட செம்மை நோக்கிப்
    பல்விதத்துங் களிகிறந்தேம் பாரிடத்தி னின்சீர்த்தி பரவல் கண்டே
    மொல்வகையி னின்னன்புக் குரியேமாய் நாணானா முவவா நின்றேம். (1)

    ஐந்தமக்கோர் பற்றுக்கோ டெனவிருந்த மறையவனே யெம்மி னீங்கி
    விந்தையினும் விந்தையென மறைந்ததற்கோர் புதுப்பொருளும் வியப்ப நாட்டி
    யந்தரர்கள் கைம்முகிழ்த்து நினையழைத்தா ராதலினா னன்னார் மாட்டு
    மந்தநகை புரிந்துமன மகிழ்ந்தும்ப ருலகுசென்ற வகைமை யென்னே! (2)

    இவ்வாறி யாமன்றி யெம்போலு மேனையரு மிருத்த றேர்ந்து
    மெவ்வாது பிரிந்தனைகொ லெம்மிரக்கங் கேட்டிலைகொ வின்சொ லான
    வொவ்வாது நினதுசெய லொருமொழியு மெமக்குரையா யோடிப் போதல்
    செவ்வாக யாவரே கொள்கிற்பார் சேடகிரிச் செம்ம லேயோ! (3)

    ஆரியமாக் கடல்கடைந்திட் டாரமிழ்த மனித்தவெழி லண்ண லேயோ
    சீரியசெந் தமிழ்க்கடலிற் குளித்துமுத்த நல்கியனெஞ் செல்வ னேயோ
    பாரியலு மாந்திரத்தின் மணமனைத்துங் கொண்டுலவு பவன னேயோ
    லேரியபன் மலர்களெனு மொழிக்கொலா மேற்கொண்ட வேந்த னேயோ! (4)

----- - ----- - -
1. சேடன் – ஆதிசேஷன். அளக்கலுந் துளக்கலு மாகாத் தன்மையினுஞ் சேணோர்க்கும் புலனா மாண்பினுங் குன்று குணத்திற் குவமையாயிற்று. கல்விச் செல்வமும் பொருட்செல்வமு மொருங்கு பெற்றிருந்த அருமை நோக்கிச் 'செல்வமுறு கலைஞ’ என்றனர். தற்குறிப்பேற்றவணி. களி – மகிழ்ச்சி. பார் இடத்தில் –
உலகில். சீர்த்தி – புகழ். ஒல்வகை – கூடியவாறு. உவவா – உவந்து.

2. பற்றுக்கோடு – ஆதரவு. மறையவன் – வேதியன். எம்மின் – எம்மினின்றும். விந்தை – வியப்பு. புதுப்பொருள் – புதிய கருத்து. வியப்பு – அதிசயிப்ப. நாட்டி – நிறுவி. அந்தரர் – தேவர். கைம்முகிழ்த்து – கைகுவித்து. மந்தநகை – புன்னகை. உம்பருலகு – விண்ணுலகம். வகைமை – விதம்.

3. ஏனையர் – பிறர். தேர்ந்து – தெரிந்து. இரக்கம் – புலம்பல். ஒவ்வாது – பொருந்தாது. செவ்வாக – நேரிதாக. கொள்கிற்பார் – கொள்ளார். செம்மல் – தலைவன்.

4. ஆரியம் – ஸமஸ்கிருதம். மாக்கடல் – பெரிய சமுத்திரம். கடல் கடைந்து அமிழ்தம் அளித்தலின் நாராயணனை நிகர்ப்பாய் என்று குறிப்பித்தனர். முத்தம் – முத்தம் போன்ற அரிய விடயங்கள். பாரியலும் – உலகில் நடைபெறும். ஆந்திரம் – தெலுங்கு. உலவும் – சஞ்சரிக்கும். பவனன் – வாயு. காற்றிற்குக் கந்தவாகன் என்னும் பெயருண்மை நோக்குக. வேரி – தேன். வேரிய – தேனையுடைய. மேற்கொண்ட – தரித்த. வேந்தன் – அரசன்.

    மேற்படி – வேறு

    பழிதூ றுலகர் பகர்ந்தாலும் பாராட் டாமன் மேற்கொண்ட
    வழியே சென்று கொள்கைகளின் வாய்மை கண்டு மகிழ்ந்தவற்றை
    யெழுதா வெழுத்தி னிட்டெவரு மேற்கு மாறு செய்தவனே
    மொழிநூல் வகுத்தாய் நின்செலவு முறையோ முறையோ முறையேயோ! (5)

    உண்மை தவறா வுத்தமனே யொழுக்க நலஞ்சான் றுயர்ந்தவனே
    தண்மை செறிந்த வருட்கடலே தன்னை யடுத்தார் தமக்கரணே
    வண்மை கனிந்த கற்பகமே மயக்க விருளை நீத்தவென்றே
    நுண்மை மிகுந்த வறிவுடையாய் நுவலா யெங்ங னொளித்தனைகொல்? (6)

    தரவுகொச்சகக் கலிப்பா
    ஏழிசைக்கு மிருப்பிடமே யெம்மொழியு முணர்ந்தவனே
    யாழிசைத்தல் வல்லவனே யாவருக்கு நல்லவனே
    யாழிபுடை சூலுலகை யானந்த வுலகுசெய்தாய்
    பாழென்ன நீயிறந்திப் பார்தோன்றச் செய்தலெவன்? (7)

    துணியிழந்த மதியென்னச் சுவையிழந்த கூத்தென்ன
    வுணர்விழந்த வுடலென்ன வொளியிழந்த விழியென்ன
    மணியிழந்த பணியென்ன மணமிழந்த மலரென்ன
    வணியிழந்த மகனென்ன. வருஞ்சென்னை தோன்றுமரோ! (8)

----- -
சேஷகிரி சாஸ்திரியார் பதினெட்டுப் பாஷைகளை அவ்வவற்றின் இலக்கணத்தோடு நன்கறிந்திருந்தனர்.
5. நூறு பழி – பல பழிச்சொற்கள். பாராட்டாமல் – பொருட்படுத்தாமல். வாய்மை – உண்மை. எழுதா வெழுத்து – அச்சு. ஏற்குமாறு – பெறுமாறு. மொழிநூல் – Philology. இவர் எழுதிய நூற்குத் ‘திராவிட சப்த த்த்துவம்’ என்று பெயர். செலவு – இறத்தல்.

6. நலம் சான்று – நன்மையமைந்து. தண்மை – குளிர்ச்சி. செறிந்த – நிரம்பிய. அருட்கடல் – கருணையாகிய கடல். அரண் – காவல். அடுத்தார் – ஆதாரமென்று அடைந்தவர். வண்மை – ஈகை. கற்பகம் – கற்பகம் போன்ற வள்ளல். நீத்த – நீக்கிய. என்று – சூரியன். நுண்மை – கூர்மை. நுவலாய் – கூறாய்.

7. ஏழிசை – குரல், துத்தம், கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன; ஸ, ரி, க, ம, ப, த, நி, என்னும் ஸப்தஸ்வரம். சேஷகிரி சாஸ்திரியார் வீணை நன்றாக வாசிக்கும் பழக்கமுடையார். யாழ் - வீணை. இசைத்தல் - வாசித்தல். ஆழி - கடல். புடை - பக்கம். ஆநந்தவுலகு – இன்பவுலகம், ஸ்வர்க்கம். பாழ்என்ன – பாழாக.
எவன் – ஏன். ‘நீ இறந்து இப்பார்பாழ் என்னத் தோன்ற’ எனக் கூட்டுக.

8. துணிவு – தெளிவு. மதி – புத்தி. சுவை – சிருங்காரம் முதலிய நவரஸம். கூத்து – நாடகம். உணர்வு – அறிவு. ஒளி – கட்புலன். மணி – மாணிக்கம். பணி – பாம்பு. அணி – திருமங்கலியம். மகன் – பெண். சென்னை – சென்னைமாநகரம்.

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பற்பல பாடை யுள்ளும் பரிவுட னுழைந்தா ராய்ந்து
    சொற்பொருட் கார ணங்க டுகளறத் தோன்று மாறு
    செற்பமும் விதண்டை தானுஞ் சேராது தெளிவி னோடுங்
    கற்பவர் களிகூர்ந் தென்றுங் கருதிடச் செய்த கோவே! (9)

    மன்றினில் வாண னார்த மலரடி புகுந்தா யேனு
    நுன்றிற னறிவு தூய்மை நுவலரு செஞ்சொ றேர்ந்தோ
    ருன்றனை மறந்த லுண்டோ வுயர்வினு முயர்ந்த வண்ணா
    னன்றெலா முருக்கொள் சேட கிரியெனு நங்கோ மானே! (10)

----- -----
9. பரிவு – அன்பு. நுழைந்து – உட்புகுந்து. சொற்பொருட்காரணம் – சொற்களுக்குப்பொருள் அமைதியின் காரணம்; தாதுக்களை யாராய்தல் என்றபடி. துகள் – குற்றம். அத – நீங்க. 'செற்பம் – சாதன மிரண்டுள்ளதன்கண் வெல்லும் வேட்கை யுடையான் கதை. விதண்டை – தன் கோட்பாட்டை நிலைபெறுத்தாத கதையாவது கூறுவார் பலரையுடைத்தாய்ச் சங்கை யுத்தரங்களைப் பயக்குந் தொடர்
மொழியின் கோவைப் பாடு,' என்பது தருக்க சங்கிரகவுரை. (தருக். சங். 100)
செற்பம் – ஜல்பம் என்னும் வடமொழிச் சிதைவு. ஜல்பவாதம் விதண்டாவாதம் இரண்டும் தருக்கக் குற்றங்களுள் அமையும். களிகூர்ந்து – மகிழ்ச்சிமிக்கு.

10. மன்று – சபை. மன்றினில்வாணனார் – நடராஜமூர்த்தி. வாணன் – வாழ் நன் (வாழ்பவன்). எனும் – எனினும். திறன் – சக்தி. நுவல் அரும் – சொல்ல முடியாத. செஞ்சொல் – இனிமை முதலிய பண்புகளையுடைய செவ்விய சொல். தேர்ந்தோர் – அறிந்தோர். உயர்வினும் உயர்ந்த – உயர்ச்சியைக் காட்டிலும் உயர்ந்த, அதாவது மிக உயர்ந்த என்றபடி.

Cf “உயர்வினு முயர்ந்த தோளான்.” (கம். ரா.)

நன்று – நன்மை. நன்மையெல்லா மோருருக்கொண்டால் ஒத்த. கோமான் – சிறந்தவன்.


4. கடற்கரையுலா.


[தற்காப்பு முறையென்னுஞ் சுபாவநியமத்தை வலியுறுத்துரைப்பான் கருதித் தாம் 1900 -ஆம் வருஷம் பாடியது]

கடற்கரையுலா

    கலிவிருததம்

    சொல்வளர் தமிழ்கமழ் தொண்டை நாட்டினி
    னல்வளச் சென்னைமா நகர்க்க டற்கரை
    வல்வெயின் மிக்கதோர் மாலைப் போழ்தத்தென்
    செல்வியும் யானுமாச் சென்று சேர்ந்தனம். (1)

    ஆவயிற் றண்புன லருகி னேகினே
    மேவிய தளர்வொடு வியர்வு நீங்கினே
    மோவலி லைலைகளு மொலித்து மேல்வர
    மாவிரை வொடுமெழீஇ மருங்கொ துங்கினேம். (2)

    ஒதுங்கிய பினர்ச்சிறி துற்று நோக்கினே
    மதங்கிளர் திரைகளின் வன்பு கண்டியாங்
    கதங்கொள லின்றியுட் களிப்ப டைந்துபல்
    விதங்கருதி கொளுங்கடல் வியந்து நின்றனெம். (3)

    நின்றயா மிருவெமு நேர்ந்து லாவிய
    சென்றனஞ் செல்வுழிச் சிறிய ஞெண்டுக
    ளொன்றிய தண்மண லுழுது வந்தன
    மன்றவே யதுகண்டு மறைந்து றைந்தனெம். (4)

----- - - - -
தற்காப்பு -தன்னைத்தானே காத்துக்கொள்ளுதல். இஃது ஒவ்வொரு பிராணிக் தற்காப்பு - தன்னைத்தான் காத்துக்கொள்ளுதல். இஃது ஒவ்வொரு பாராணிக்கும் இயல்பு;இவ்வாசிரியரே 'தற்காப்பு நியமம்' (Law od Self -Preservation) என்பதைப்பற்றி யொரு கட்டுரை வரைந்துள்ளார்.

1. சொல்வளர் -சொற்கள் வளரும். இது தமிழிற்கு விசேடம். தமிழ் வளரும் பாஷை என்றபடி. தமிழ் இனிமை யென்று பொருள் படுவதாதலின் 'கமழ்' என்றனர். கமழ்தல் -மணம் வீசுதல, வல்வெயில் -மிக்க வெயில். போழ்தத்து - பொழுதில்; அத்துச் சாரியை. செல்வி -மனைவி.

2. ஆவயின் -அவ்விடத்து. ஓவல் இல் - நீங்காத. மாவிரைவு -மிக்க விரைவு. எழீஇ -எழுந்து. மருங்கு - பக்கம்.

3. பினர் -பின்னர், பிறகு. வன்பு - வலிமை. கதம் -கோபம். குதிகொளும் - கூத்தாடும்.

4. இருவெம் - இரண்டு பேர் (தன்மையிடம்). நேர்ந்து -கூடி. உலாவிய உலாவுதற்பொருட்டு. செல்வுழி -செல்லும் பொழுது. ஞெண்டு -கண்டு. ஒன்றிய தாங்கள் பொருந்திய. மன்ற -தெளிவாக.

    இற்றைஞான் றைப்பல விளைஞ ரோவிங்ஙன்
    கற்றன வெழுதுபு கருத்திற் போற்றுறு
    நற்றொழி ல்லவனை நனிநி கர்க்குந்
    குற்றவென் தலைவிர்நீ ருரைத்தி ரென்றனள். (5)

    என்னலு மற்றன்றெ னினிய மாதராய்
    நன்னயக் கடலிறை ஞண்டென் கைகளாற்
    றன்னில மகளெனுந் தலைவி மேனியி
    லின்னெழிற் றெய்யினன் கழுது கின்றனன். (6)

    எனவிள நகைபுரிந் தியானி யம்பலுந்
    தளதழ கியமுகந் தையல் சேந்தன
    னெனதொரு வினாவினை யிகழ்ந்து நின்றனி
    ரெனைகொலோ வொளித்தலின் றிசைமி னென்னவே (7)

    கூறிய வளவினிற் குறிப்பி யானொன்றும்
    வேறுறக் கொண்டிலேன் விளங்கு புந்தியாய்
    சீறிநின் முகநிறந் திறம்பு கிற்பதென்
    தேறிய லறிகலென் றெருட்டு கிற்றியோ? (8)

    நீயிரே நிகழ்த்துபு நின்ற செய்தியை
    யாயழி யதனினின் றாழ்க ருத்தொன்று
    மேயதும் முளத்தென விளம்பு தற்கினி
    நேயதோர் காரண மியம்பல் வேண்டுமோ? (9)

----- -
5. ஞான்று – பொழுது. கற்றன - கற்றவை. எழுதுபு – எழுதி. கருத்திற் போற்றுறும் – மனத்திற் காப்பாற்றும். அலவன் – நண்டு.

cf. “அனைவாழலனன் கூருகிர்வரித்தவீர்மணல்.” (குறுந்.351)

இளைஞரோ அலவனை நனி நிகர்க்குநர் என்று கூட்டுக. நனி – மிகவும். நிகர்க்குநர் – ஒப்பாவார். உற்ற – அன்புற்ற. உரைத்திர் – உரைப்பீர். மனைவி எழுவாய்.

6. அற்று அன்று – அத்தன்மைத்தன்று. மாதராய் – அழகுடையாய். நயம் – நீதி, நியாயம், ஈண்டுஒழுக்கம். நன்னயக் கடல் இறை - நல்லொழுக்கினையுடைய கடலாகிய தலைவன், ஞண்டு என் கைகளால் – நண்டாகிய கைகளால். நிலமகள் – பூமாதேவி. எழில் – அழகு. தொய்யில் – சந்தனக் குழம்பால் எழுதும் பத்திக்கீற்று. தற்குறிப்பேற்றவணி.

7. இளநகை – புன்னகை. சேந்தனன் – சிவந்தனன். வினா – கேள்வி. எனை கொலோ ஒளித்தல் – மறைத்தல் ஏனோ கொல், ஓ – அசை. இன்று – இப்பொழுது. இசைமின் – கூறுங்கள்.

8. குறிப்பு – கருத்து. புந்தி – புத்தி. சீறி – கோபித்து. நிறந்திறம்புகிற்பது – நிறம் மாறுவது. என் – ஏன். தேறு இயல் அறிகலென் – நீ உணர்ந்த தன்மையை அறிகிலேன். தெருட்டுகிற்றியோ – தெளிவிப்பாயோ.

9. நீயிரே – நீங்களே. நிகழ்த்துபு – நிகழ்த்தி. நிகழ்த்துபுநின்ற – சொல்லிய. செய்தி – விஷயம். ஆயுழி – ஆராயுமிடத்து. அதனில் நின்று – அதனிடத்தினின்றும். ஆழ்கருத்து – ஆழ்ந்தகருத்து, புதை பொருள். ஒன்று – வேறொன்று. உம் உளத்து மேயது – உமது மனத்திற் பொருந்தியது. இனிது – நன்றாக. ஏயதோர் காரணம் –
பொருந்தியதாகிய வொரு காரணம்.

    ஏனிந்த வீண்மொழி யென்னை நும்முளந்
    தேனுந்து மின்றமிழ்ச் செய்ய பாவலீர்
    ஞானந்த வாதவஞ் ஞண்டின் பாங்கர்ச்சென்
    றானந்த மெய்துவ மன்பின் வம்மினோ (10)

    என்றென்றன் காதலி விட்ட வாணையை
    நன்றென மேற்கொடு நண்ண லும்மவ
    ணின்றஞண் டனைத்துமே நினைப்பி னும்விரைஇத்
    துன்றின தொனைவெளித் தோன்ற லின்றியே. (11)

    உதுகண்டென் மனைவியு முற்ற தென்கொலோ
    கதுமென ஞெண்டெலாங் கmந்த காரண
    மிதுவெனச் சுட்டுத லியலுமோபொருட்
    புதுமையின் சுவைநலன் புகலு நாவலீர்! (12)

    செயலையந் தளிர்புரை சிறிய தாளெழிற்
    கயல்விழி நின்முழங் கால்கள் கண்ணுறீஇ
    யயலவை நிற்கவு மஞ்சி யோடின
    வியல்பிது வாகவு மென்கொ னின்வினா? (13)

    அன்பினோ டழகுநன் கார்ந்த மங்கையே
    வன்பகை யாளரை வழியிற் கண்டக்கான்
    மென்பொலி வுடையார்தாம் வெருவி யோடுவ
    ரென்பது வையகத் தியற்கை யேயன்றோ? (14)

----- ----- -
10. நும் உளம் என்னை = உமது கருத்தென்ன. தேன் = இனிமை. உந்தும் = வெளியாக்கும். பாவலீர் = கவிஞரே. ஞானம் தகாத = அறிவு கெடாத. பாங்கர் = பக்கம். எய்துவம் = அடைவோம். வம்மின் = வாருங்கள்.

11. என்று என்றன் = எனப்பிரிக்க. என்றன் = எனது. ஆணை = கட்டளை மேற்கொடு = மேற்கொண்டு. நண்ணலும் = (அந்நண்டுகளை) நெருங்கலும். நினைப்பினும் = மநோ வேகத்தினும். விரைஇ = விரைந்து. தொளை துன்றின = தொளையின்கட் சேர்ந்தன. வெளித் தோன்றலின்றி = வெளிப்படலின்றி.

12. உது கண்டு = அதனைப்பார்த்து. உற்றது என்கொலோ = என்ன நேர்ந்தது. கதுமென = திடீரென்று. கரந்த = ஒளிந்த. சுட்டுதல் = குறித்தல். இயலுமோ = கூடுமோ. பொருட்புதுமையின் கலைநலன் = பொருட்களினிடத்துக் காணப்படும் புதுமைகளின் அழகை. புகலும் = கூறும்.

13. செயலை = அசோகம். தளிர் = இளவிலை. புரை = போன்ற. சிறியதாள் = கூரை, கயல்விழி = கயல்போன்ற விழியினை யுடையாய். கண்ணுறீஇ = கண்டு அயல் = பக்கத்தில். அவை = அந்நண்டுகள். தற்குறிப்பேற்றவணி. இயல்பு = தன்மை

14. ஆர்ந்த = நிரம்பிய. வன்பகையாளர் = வலிய பகைவர். கண்டக்கால் = பார்த்தபொழுது. மென் பொலிவுடையர் = மெல்லியலார். வையகத்து இயற்கை = உலகவியல்பு.

    போதும்போ துந்தமிழ்ப் புலவ ரேயினி
    யோதுதற் குரியதா யுற்ற காரண
    மேதொன்று முண்டெனி லெடுத்துக் காட்டுதிர்
    காதலின் மெய்ந்நிலை கண்ட வந்தணீர்! 15

    இவ்வுரை யான்செவி யேற்ற பின்னரென்
    செவ்விய மடந்தையே சிறிது கேட்டியா
    லெவ்வகை யுயிர்களு மினிது தாந்தமைத்
    தெவ்வினிற் காத்திட றேர்ந்த மெய்ம்மையே. 16

    ஆதலி னவையெலா மரிய தம்முயிர்க்
    கேதமே தாயினு மெய்து மோவெனப்
    போதலுற் றனமற்றுன் புந்தி தோன்றுவ
    தீதென விசைத்தியோ வெனாது தையலே! 17

    விந்தையே நும்முரை வேறு தீயெணஞ்
    சிந்தையிற் கொண்டிலேன் செம்மை சான்றநற்
    பைந்தமிழ் வாணரே பகர்தி ராலவை
    தந்தமைக் காத்தலோ தக்க காரணம்? 18

    நன்மையை நாடுது ஞான வானையு
    மன்மையை யாற்றிடு மறிவி லானையுந்
    தன்மதி தனிலொப்பத் தான்கு றிக்கொளல்
    புன்மைய தாமன்றிப் புலமைப் பாலதோ? 19

----- ----- -
15. ஓதுதற்கு = கூறுதற்கு. உரியதாய் = பொருந்தியதாய். உண்டெனில் = இருந்தால். காட்டுதிர் = காட்டுவீர். காதல் = அன்பு. மெய்ந்நிலை = உண்மைநிலை

16. செவியேற்றல் = கேட்டல். பின்னர் = பிறகு. கேட்டி = கேட்பாய்.. ஆல் = அசை. தாம் தமை = தாங்கள் தங்களை. தெவ் = பகை. தெவ்வினில் = பகைவரிடமிருந்து. தேர்ந்த = ஆராய்ந்த.,அறிந்த.. மெய்ம்மை = உண்மை.

17. அரிய = கிடைத்தற்கரிய. ஏதம் = துன்பம். ஏதாயினும் = என்னவாயினும். எய்துமோ = உண்டாகுமோ. போதல் உற்றன = போதலைப் பொருந்தின, போயின. புந்தி = அறிவு. ஈதென = இதுவென்று. இசைத்தியோ = கூறுவையோ.

18. நும் உரை = நீர் பேசியது. விந்தையே = வியப்பைத் தருவதாம். வேறாகிய தீயெண்ண மென்க. செம்மை சான்ற = நற்குணம் அமைந்த. பைந்தமிழ் = பசுமை இளமை மேற்று; கன்னித் தண்டமிழ் என்றபடி. தமிழ் வாணர் = தமிழ்ப் புலவர். பகர்திர் = கூறுவிர். ஆன் = அசை.

11. நாடும் = அறியும். ஞானவான் = அறிவாளன். அன்மை = நல்லதல்லாதது தீமை. ஆற்றிடும் = செய்யும். மதி = புத்தி. குறிக்கொளல் = கருதுதல். புன்மையது = அறிவின்மை. புலமை = அறிவுடைமை.

    அத்துணை யறிவந்த வலவற் றுண்டுகொன்
    முத்துறழ் முறுவனின் மொழிக ளின்பொருண்
    மெத்தவு மழகிது மேன்மை சான்றநங்
    கத்தன்றன் படைப்பினுங் காண்டி யோகுறை? 20

    இறைவனார் படைப்பினு மிருக்கு மோசில
    குறையெனுங் கருத்தியான் கொண்டி லேன்மற்றெ
    னறிவினிற் றோன்றிய வையப் பாட்டினம்
    மறைதனைக் காணிய மனங்கொண் டேனரோ. 21

    அம்மம்ம யாமுரை யாடு மல்வயிற்
    றம்மையே தாநிகர் தன்மை யாளர்கள்
    செம்மைசேர் மேனியர் சேந்த குஞ்சியர்
    விம்மிய தோளினர் விளைந்த யாக்கையர். 22

    மயலென வுயிரினை மதிக்கு மாண்பினர்
    செயலருஞ் செய்கைகள் செய்ய வல்லவர்
    புயலென முழங்குபு போர்செய் வீரர்க
    ணயவுரை நண்ணலர் நால்வர் போந்தனர். 23

    போதாக் கண்டனன் பொருக்கென் றொன்றையு
    மோதல னென்னிடை யோடி வந்தெனை
    யாதர வொடுந்தழீஇ யயர்ந்து நின்றனண்
    மூதறி வுடையவென் முதல்வி மாணவே. 24

----- - - - -
20. அத்துணை அறிவு = அவ்வளவு அறிவு. அலலற்கு = நண்டிற்கு. உண்டு கொல் = உண்டோ. முத்து உறழ் = முத்தைப் போன்ற. முறுவல் = புன்னகை யுடையாய். சான்ற = அமைந்த. கத்தன் = கர்த்தன்; கடவுள். குறை காண்டியோ = குற்றம் காண்பாயோ.

21. இறைவனார் = கடவுள். படைப்பு = சிருட்டி. குறை = குறைகள். ஐயப்பாட்டின் = சந்தேகத்தினால். அம்மறைதனைக் காணிய = அவ்விரகசியத்தினை அறிய மனங்கொண்டேன் = எண்ணினேன். அரோ = அசை.

22. அம்மம்ம = வியப்புப்பற்றிய அடுக்கு. யாம் உரையாடும் அவ்வயின் = நாங்கள் பேசிவரும் அப்பொழுது. தம்மையே தாம்நிகர் தன்மையளர்கள் = தமக்குத் தாமே நிகரான தன்மையினையுடையார். செம்மைசேர் மேனியர் = சிவந்த மேனியர். சேந்த = செவந்த. குஞ்சியார் = தலைமயிரினையுடையார். விம்மிய தோளினர் = பூரித்த தோளினை யுடையார். விளைந்த யாக்கையர் = பருத்துயர்ந்த தேகத்தினை யுடையார். இது குளகம்.

23. மயல் = குப்பை. உயிரைத் திருண (தூசி) மாக மதிப்பவர். செயல் அரும் = செய்தற்கு அரிய. புயல் = மேகம். முழங்குபு = முழங்கி. நயவுரைநண்ணலர் = இனியவுரை பேசாதவர்; வெடு வெடுப்பாய்ப் பேசுபவர். போந்தனர் = வந்தனர். ஈண்டுக் கூறப்பட்டவர் ஆங்கிலப்போர்வீரர்கள். (soldiers)

23. போதர = வர. பொருக்கென்று = திடீரென்று. ஒன்றையும் ஓதலள் = ஒன்றையும் பேசாதவளாய். என்இடை - என்னிடம். ஆதரவு = அன்பு. தழீஇ = தழுவி. அயர்ந்து = வாடி. மூதறிவுடைய = பேரறிவுடைய. முதல்வி = தலைவி, இல்லாள். மாண = மாண்புற.

    பாகட்ட மென்மொழிப் பாவை யேயுற்ற
    மாகட்ட மென்னைகொல் வகுத்து ரைத்திநீ
    போகட்ட மணிது புரிந்து கொள்ளென
    வாகட்டு மென்றதை யன்பிற் கைக்கொண்டான். (25)

    என்னதா மிருப்பினு மிந்த வீரர்க
    டன்னமும் பயமின்றித் தமக்குத் தோன்றிய
    பன்னரு வழியெலாம் பயின்று லாவுத
    லின்னல்செய் மாக்கள திழிந்த செய்தியாம். (26)

    மடமையார் வீரர்கள் மகளிர் தம்மியல்
    பொடுபயின் றவரல ருணருஞ் செவ்வியு
    முடையவ ரல்லரா லுவரை நீசினந்
    திடுவது சாலுமோ வினிய மஞ்ஞையே! (27)

    இனியிது நிற்கநா மிருலெ மும்முனர்
    நனியுரை யாடிய நலத்த செய்தி மீட்
    டினிதின்மேற் கொள்ளுதற் கியைதி யோவென்றன்
    பனிமதி முகத்தினாய் பரிந்து சொற்றியால். (28)

    தாமெதை யோவெணித் தமல ழிச்சென்ற பாமரர் தமைக்கண்டு பயந்த தென்கொலால்
    காமர்பூந் தலைவிதற் காப்பெ னச்சொலு
    மாமுறை யல்லது மற்றென் சாற்றுவாய்? (29)

-----
25. பாகு அட்டமென்மொழி -பாகினை இனிமையால் வென்ற இனிய மொழி. மா கட்டம் -மிகுந்த கஷ்டம். என்னை கொல் -யாது. கொல் -அசை. போகட்ட -போட்ட. புரிந்து -விரும்பி. கொள் -வாங்கிக்கொள். என -என்று
சொல்ல. ஆகட்டும் -அங்ஙனமே யாகுக.

26. என்னதாம் இருப்பினும் -எப்படியிருந்த போதிலும். தன்னமும் -சிறிதும். பயின்று -சஞ்சரித்து. இன்னல் -துன்பம். செய்தி -செய்கை.

27. மடமை -அறிவின்மை. ஆர் -பொருந்திய. பயின்றவர் அல‌ர் -பயிலாதவர். உணரும் -தாமாகவே அறியும். செவ்வியும் -பண்பும். உவரை -அவர்களை. சினந்திடுவது -கோபிப்பது. சாலுமோ -தகுமோ. மஞ்ஞை -மயில் போன்றவள்; ஆகுபெயர்.

28. முனர் - முன்பு. நனி உரையாடிய - மிகப்பேசிய. நலத்த -நல்ல செய்தி -விடயம். இயைதியோ -மனம் பொருந்துவையோ. பனிமதி -குளிர்ந்த சந்திரன். பரிந்து சொற்றி -அன்புடன் கூறுவாய். ஆல் -அசை.

29. தாங்கள் எதனையோ கருதினவராய்த் தம் வழியே சென்ற அறிவிலிகளைக் கண்டு நீ பயந்தது எதனால்? காமர் -அழகிய. பூ - அழகு. காமர்பூ -மீமிசைச் சொல், விரும்பத்தக்க அழகுமாம். மாமுறை -பெரிய முறைமை. முறை -கிரமம்.

    நங்கையர் மணியென நவிலு நன்மையாய்
    தங்குமிவ் வுலகினிற் றயங்கு யிர்ப்பொரு
    டங்கட்காத் திடலவை தமவி யற்கையென்
    றுங்குநின் செயல்களா னுணர்ந்து கொண்டியோ? (30)

    ஒக்குமொக் கும்மும துரையெ னாமகிழ்ந்
    தக்கொள்கை யேயுற வமைந்த தாமன்றித்
    தக்கது வேறிலை சரத மென்றனன்
    புக்கது தண்மதி புகழ்கொண் டோங்கியே (31)

    அப்புறம் யாங்களு மன்பி னாடினெந்
    துப்புறழ் வாயின டூய பாடல்க
    டிப்பியக் குரலினிற் சிறிது பாடின
    ளுப்பங்காற் கடற்கரை யுலாவிப் போந்தனெம். (32)

-----
30. நங்கையர்மணி - மாதர் சிரோமணி. நன்மை -நற்குண நற்செயல் அழகு முதலிய. தயங்கு -விளங்கு. தங்களைக் காத்துக் கொள்ளுதல் அவற்றின் இயல்பான குணம். உங்கு = இவ்விடம் நிகழ்ந்த. உணர்ந்துகொண்டி = உணர்ந்து கொண்டனை.

31, ஒக்கும் -பொருந்தும். அடுக்குத் தெளிவு பற்றியது.. ஏயுற -பொருந்த தக்கது -தகுந்தது. சரதம் -சத்தியம்., உண்மை. தண்மதி புகழ் கொண்டோங்கிப் புக்கது. புகழ் -கெண்ணிதம். சந்திரோதயமாயிற்று என்றபடி.

32. ஆடினெம் -விளையாடினேம். துப்பு -பவளம். உறழ் -போன்ற, தூய சொல்லிலும் பொருளிலும் தூய்மையான. திப்பிய -திவ்வியமான. உப்பங்கால் - உப்பங்காற்று. தடம் -தடாகம். வனப்பு -அழகு. கழிபேருவகை = மிக்க மகிழ்ச்சி.


5. தாமரைத்தடம்


[இயற்கைவனப்பின்கண் ஈடுபட்டுக் கழிபேருவகை பூத்த தாம் அதனைப் பிறர்க்கும் வலியுறுத்ரைப்பான் கருதி 1900 -ஆம் வருஷம் பாடியது.]

தாமரைத்தடம்.

    தரவுகொச்சகக் கலிப்பா

    பொன்மயிலுஞ் சொன்மயிலும் போதமகிழ்சிறந்து
    புன்மையின்றி நாளும் பொருந்தி விளையாடு
    நன்மையுறு பாண்டின‌ன் நாட்டின் றலைநகராம்
    வன்மைநனி பெற்றவெழின் மாமதுரை யம்பதிக்கண். (1)

    வையைக் தரையில் வளர்ந்தோங்கி வானுலவு
    மையைத் தமகிளையான் வன்பிற் தளைப்பவனை
    கையைப் பிசைந்து கலுழ்ந்துகண்ணீர் காலவிட்டுச்
    செய்யிற் பயிர்வளர்க்குஞ் சீரார் தடங்காவில். (2)

    மன்னுமொரு செந்தா மரைத்தடத்திற் சென்றாட
    நன்ன ரொருஞான்றை நானந்திங் காலையினிற்
    றன்னர் தனியேயான் சார்ந்தேனா வென்பின்ன
    ரென்னை யறியாம லென்னினிய வில்லாளும். (3)

    போந்து மறைந்துநின்றாள் பொய்கைக் கரைசென்று
    சேர்ந்து கடவுளையான் சிந்தித் திருப்புழிக்கொம்
    பாரந்து பறவையென மன்பி னிசைகூட்டி
    யேய்ந்து பரிதி யெழல்கண்டு கொண்டாடி (4)

----- - - -
1. பொன்மயில் -இலக்குமி. சொன்மயில் -ஸரஸ்வதி. போத -மிக.மகிழ் சிறந்து - களிப்புமிக்கு. புன்மை -விரோதம். நன்மையுறும் -எல்லா நன்மைகளும் பொருந்திய. தலைநகரம் -பிரதான நகரம்.வன்மை -வலிமை; கண்டு, அகழ்,மதில், முதலிய காப்பின் வலிமை.நனி -மிகவும்.எழில் -அழகு. இது குளகம்.

2. வையை -வைகை நதி. கான் உலவும் -ஆகாயத்தில் உலாவும். மையை - மேகத்தை. தமகிளையான் -தம்முடைய கிளைகளால். வன்பு -வலிமை.தளைப்ப - தடுத்துச் சிறை செய்ய. கலுழ்ந்து -அழுது.காலவிட்டு -சொரிந்து. கையைப் பிசைந்து - கலுழ்ந்து கண்ணீர் காலவிட்டு -என்று கூறியது இலக்கணை. செய் - வயல், சீர்
ஆர் -சிறப்பு மிக்க. தடக்கா -பெரிய சோலை. இதுவும் குளகம்.

3. மன்னும் -பொருந்திய. தடம் - தடாகம். சென்று ஆட -சென்று நீராடும் பொருட்டு. நன்னர் -நல்ல. ஒரு ஞான்று - ஒரு தினம். ஞான்றை - ஐ சாரியை. நானந்திக்காலை -வைகறை, விடியற்காலம். (அல்கந்தி -மாலை).தன்னந்தனியே - ஒன்றியாய். சார்ந்தேனா -சார்ந்தேனாக; சென்று அடைந்தேனாக. என் பின்னர் -
என் பிறகே. இதுவும் குளகம்.

4. சிந்தித்திருப்புழி -தியானித்திருக்கும்பொழுது. கொம்பு ஆர்ந்து -கொம்புகளிற்றங்கி. எய்ந்து - மனம் பொருந்தி. பரிதி - சூரியன். எழல் -உதித்தல். பறவை யெலாம் கொண்டாடி நின்றன.

    நின்றனவப் போழ்தத்து நீரின் முளைத்தெழுந்து
    துன்றியசெந் தாமரையின் றூயநறும் போதனைத்து
    மென் றூழ் வரல்கண் டினிதி னலர்ந்தனயான்
    மன்ற விழிவிருந்து வாய்த்த தெனாமகிழ்ந்தேன். (5)

    தண்ணீ ரருகிற் றனிச்சென்றேன் றாமரையி
    னுண்ணீர்மை கண்டே னுள‌த்துவகை கொண்டேன்றங்
    கண்ணீர் வடித்தவவை கண்ணுற்ற யானுமின்பக்
    கண்ணீர் வடித்தேன் களிகூர்ந்து நின்றேனால். (6)

    என்னே யியற்கைகால மென்னே யிறைமகிமை
    யென்னேயென் னேயென்ன வின்பக்கூத் தாடினேன்
    கொன்னே யிராதுகரங் கூப்பித் துதித்தேன்யான்
    தன்னேரி லாத தனிக்கருணை வள்ளலையே. (7)

    கூடிவாழ் வோரே குறையா வலியினர்மற்
    றோடிவில கிட்டா ருறுவ துறுகணென்றே
    நாடி யறியா நமரங்க டோவன்றோ
    பீடுடைய தாமரைகாள் பெட்பி னொருங்குறைவீர்? (8)

    நும்மியல்பு கண்டு றுனித்துணர்கி லார் பலரே
    யிம்மையே யிவ்வுலகை யின்பவுல காக்குகிற்பீ
    ரம்மம்ம றுந்த மறிவுடைமை யென்னென்கோ
    தம்மின் மலர்கா டமியேற் கொருமுத்தம். (9)

----- - - -
5. அப்போழ்தத்து - அப்பொழுது. துன்றிய -நெருங்கிய. நறும்போது - மணமுள்ள மலர். என்றூழ் -சூரியன். தாமரை மலர்கள் மலர்ந்த காட்சி தமக்குப் புதியதோர் உவகையளித்தமையால் அதனை விழி விருந்தென்றனர். வாய்த்தது - கிடைத்தது. எனா -என்று.

6. தனி -ஒன்றியாய். உள் நீர்மை - உள்ள இயற்கைப்பண்பு. உவகை -மகிழ்ச்சி. கண்ணீர் -கள்ளாகிய நீர்,கண்ணீர் (சிலேடை). கண்ணீர் வடிப்பவரைக் காணுநருங் கண்ணீர் வடித்தல் இயல்பு. களி கூர்ந்து - களிப்பு மிக்கு.

7.இயற்கை நலம் -இயற்கையழகு. இறை -கடவுள். கொன்னேயிராது - சும்மா விராமல். கரங்கூப்பி -அஞ்சலி செய்து. தன் நேர் இலாத -தனக்கு நிகர் இல்லாத. தனிக்கருணை வள்ளல் -ஒப்பற்ற கருணையை யுடைய வள்ளல்.

8. தாமரைகள் கூட்டமாக முளைத்தெழுந்து மலர்ந்திருக்குந் தன்மை நோக்கிக் கூறியது. தாமரைக் கொடிகளிடையே சிக்கிய வலிய பிராணியும் தப்புதலரிது. ஆதலின், கூடி வாழ்வோரே குறையா வலியின ரென்பதை யிஃது விளக்கிற்று. விலகிட்டார் -விலகினார். உருவது -அடைவது. உறுகண் -துன்பம். நாடி -ஆரா
ய்ந்து. நமரங்கள் - நம்மவர்கள். தேர -உணர. பீடு -பெருமை. பெட்பின் -விருப்பமுடன். ஒருங்கு -ஒருசேரக்கூடி. உறையீர் -தங்குவீர்.

9. இயல்பு -தன்மை. துணித்து -ஆய்ந்து. உணர்கிலார் -அறியார். இவ்வுலகு -மண்ணுலகு. இன்பவுலகு - பொன்னுலகு. தமியேற்கு -தமியேனுக்கு. தம்மின் -தாருங்கள்.

    என்றுசொல்லி முத்த மிடுதலுமென் றன்பின்னர்
    நின்றமனை யாள்யா னினையாத வண்ணமின்னே
    யொன்றியவிவ் வின்ப மொழியுமெனச் சொல்வான்போ
    லென்றன் விழியை யிமைப்பொழுதி லேபுதைத்தாள். (10)

    ஈதுணர்ந்த யானுமென்ற னின்னுயிர்நற் காதலியே
    போதும் விடுதியெனப் பூவொன்று நீர் கொய்தென்
    மீதுள்ள காதலுக்கு வேண்டு மறிகுறியாப்
    பேதையேற் கீயிலொன்றும் பேசேன் விடுவவென்றாள். (11)

    நன்றுநன்று நின்றன்மொழி யென்று நகையாடி
    யென்றன் கருத்திஃ தெனயா னவிலுமுனந்
    தன்றன்விருப் பிற்குத் தடையொன்றுஞ் சொல்லாம
    னன்றுநன் றென்றேனா நாடி விடுத்துநின்றான். (12)

    நங்கா யியற்கையெனு நல்லா ளழகெல்லா
    நன்கண்ணாற் கண்டு நனிநுகரத் தக்கனகாண்
    பொங்கு மனத்துவகை பூத்தின்ப மெய்தாது
    தங்கு மவளழகைத் தான்குறைத்த னேரிதுகொல்? (13)

    மக்களெலாங் கண்டே மகிழுறுதல் வேண்டுமென்று
    தக்க கடவுளார் தாம்படைத்தா ரஃதுணரா
    யிக்குமொழிக் காரிகையே யென்றலுமன் னானெழுந்து
    துக்க முறாளியற்கை தூய குணமுடையாள். (14)

----- ----
10. பின்னர் -பின்புறம். யான் -நினையாதவண்ணம் = யான் அறியாதபடி ஒன்றிய -கூடிய. ஒழியும் -நீங்கும். புதைத்தல் -பொத்துதல்

11. ஈது உணர்ந்த -இதனையறிந்த. போதும் -கண்ணைப்பொத்தியது போதும். விடுதியென -விடுவாயென்று சொல்ல. நீர் பூ வொன்று கொய்து என்று மாற்றுக. காதல் -அன்பு. அறி குறி -அடையாளம். பேதையேற்கு -
பேதையேனாகிய எனக்கு. ஈயில் = கொடுத்தால். விடுவல் = விடுவேன்

12. நன்று = நல்லது. கருத்து இஃதென யான் நவிலுமுனம் = யான் என் எண்ணம் இன்னதென்று கூறுமுன்பு. 'நன்று நன்று' என்று கூறியதையே தன் வேண்டுகோட் கிணங்கியதாகக்கொண்டு மேற்கூறக் கருதியதைக் கேட்பதன்முன் கண்ணினின்றும் கைகளை நீக்கினள் என்றபடி. நாடி -கருதி.

13. இயற்கையெனும் நல்லாள் - இயற்கைமாது. நுகர -அநுபவிக்க பொங்கும் -மிகும். பூத்து -உண்டாகி. எய்தாது -அடையாது. குதைத்தல் - சிதைத்தல். நேரிதுகொல் -நியாயமோ.

14. மகிழ் உறுதல் -மகிழ்ச்சியடைதல். படைத்தார் -சிருட்டித்தார். உணராய் -அறியாய். இக்கு மொழி -கரும்புபோலும் இனிய மொழி. காரிகை -பெண். அன்னாள் -மனைவி. இயற்கை -இயற்கைமாது. துக்கம் உறாள் -
ன்பம் அடையாள்.

    தன்னுடைய மக்களெலாந் தன்பக்கற் போந்துமிகத்
    தன்னுடலைப் பற்றியுறத் தாவிமேல் வீழ்ந்திழுத்துத்
    தன்னை மிதித்தாலுந் தாய்களிப்புக் கொள்ளலன்றி
    யென்னையணு காதி ரெனச்சீற்றம் கொள்வாளோ? (15)

    வாய்பொதிந்த செப்பினிடம் வைகுமலர் போலாது
    பாய்புனலு ணின்று பலருந்தன் பால்வந்து
    தாய்போற் கருதியவர் தாந்தாம் விரும்பியன
    வாய்புகொள வேண்டியன்றோ வன்னாண் முகமலர்தல்? (16)

    அற்றன்றேற் கேண்மினென தன்புடையீர் கரமுண்ண
    லுற்ற பொருள்களெலா முண்ணா தொழிந்திடுவா
    நற்றண் புனலினியாம் நம்வாய் பருகலமே
    சற்றுமசை யாதியற்கை தன்னழகு கண்டிருப்பாம். (17)

    இவ்வாறு வாதித் தெனாதின் னுயிர்த்துணைவி
    யொவ்வா துமதுரைமற் றுந்தோல்விக் கீடாக
    விவ்வேளை யோடிச்சென் றெற்கினிய பூவொன்று
    செவ்வே கொணர்மினெனச் செப்பினா ளப்படியே. (18)

----- ----- -
15. தன் பக்கல் -தன்னிடம். போந்து -சென்று. உறப்பற்றி - நன்கு பிடித்து. மக்கள் மேல் விழுந்து விளையாடினாலும் இயற்கைத் தாய் கோபியாள் என்றனள். அணுகாதீர் -நெருங்காதீர். சீற்றம் -கோபம்.

16. வாய்பொதிந்த - மூடியால் மூடப்பெற்ற. செப்பினிடம் வைகு மலர் போலாது -செப்பினிடத்து வைக்கப்பெற்ற மலர்போல் அழகு குலையாமல். செப்பினுள் மலர் வைத்தல் இயல்பு.

    cf."தன்மணிச் செப்பினுள், மன்னு காலை கொடுத்தவ னுக்குய்த்தீ." (சிந்.1667.)

    செப்பினுள் வைத்தமலர் புனையாமல் மூடி வைத்தால் புழுக்கத்தால் வாடும்.

    cf. "வகைவரிச் செப்பினுள் மங்கிய மலர்போந்தகைநலம் வாடி" (மணி. 4.65.)

    " மடைமாண் செப்பிற் றமிய வைகிய
    பெய்யாப் பூவின் மெய் சாயினளே (குறுந். 1)

பாய்புனல் -பரவிய நீர், விரும்பியன -விரும்பிய மலர்கள். ஆய்பு -ஆய்ந்து கொள, எடுத்துக்கொள்ள. முகமலர்தல் ஆகும் என ஒருசொல் வருவிக்க.

17. அற்றன்தேல் - அத்தன்மைத் தன்றெனில். கேண்மின் - கேளுங்கள். உண்ணலுற்ற -சாப்பிடப்பட்ட.நற்றண் புனல் -நல் இனிய தண்ணீர்.நம் வாய் - நமது வாயால். பருகலம் -குடியாது விடுவோம். சற்றும் -சிறிதும். அசையாது - அசையாமல்.

18. வாதித்து -தருக்கித்து. இன்னுயிர்த் துணைவி -மனைவி. உமது உரை ஒவ்வாது -உமது வார்த்தை பொருந்தாதாகும். ஈடு -பதில். ஓடிச்சென்று - விரைந்து போய். எற்கு -எனக்கு. செவ்வே -நேராக.

    மலரொன்று கொண்டு வாநீரு ணீந்தி
    யலகின் றலர்ந்த வலர்தம்மு ணன்ன
    ரிலருற்று நின்ற வியல்வண்டு வீழா
    நலன்மேவு பூக்கொய்து நானோடி வந்தேனால். (19)

    வந்தென் றலைவியினை வாயார வாழ்த்தியெழி
    னந்தாத தாமரையி னாண்மலரை யான்மகிழ்ந்து
    தந்தே ன‌வள் கரத்திற் றையலுமஃ தேற்றினிய
    மந்தநகை செய்து மலர்ந்தாண் முககமலம். (20)

    தங்க ளினத்தாரைத் தாங்களே கண்டக்காற்
    பொங்கு மனத்திற் புரிந்தன்பு பாராட்டி
    யங்கே யுபசரித்த லன்னார் வழக்கன்றோ
    விங்கெனுள‌க் கஞ்ச மினிது மலர்ந்ததே. (21)

    அப்போதென் னாருயிர்க்கொம் பன்னா ளெனைநோக்கி
    யிப்போது காண்மினோ விப்போதை யென்னதுநின்
    கைப்போதுந் தாமரைகாண் கட்போதுந் தாமரைகா
    ணொப்போதுந் தண்முகமு மொண்டொடியே தாமரைகாண். (22)

    போதாக் குறைக்குநின்றாட் போதுகளுந் தாமரைகா
    ணாதலா வம்மலரு மன்பிழை கோங்கியதான்
    மாதேநின் கைப்பரிச மாண்புறுகண் ணோக்கமுந்தம்
    மீதே படப்பெற்றால் வீறாவோ வெப்பொருளும்? (23)

----- - - -
19. அப்படியே மலரொன்று கொண்டுவா எனக் கூட்டுக. அலகின்று -அளவில்லாமல். அவர் தம்முள் -மலர்களுள். நன்னர் -நன்றாக. இலருற்று -விளங்கி. இயல்வண்டு -பல மலர்களிலுஞ் சஞ்சரிக்கும் வண்டு. வண்டுவிழா -வண்டு வீழ்ந்து தேனை யுண்ணாத, எனவே அப்பொழுது மலர்ந்த. நலன் மேவு -அழகு பொருந்திய.

20. எழில் நந்தாத -அழகு கெடாத. நாண்மலர் - அன்றலர்ந்த மலர். அஃது ஏற்று -அதனைப் பெற்று. முககமலம் மலர்ந்தாள் என்க. மந்தநகை - புன்னகை.

21. இனத்தாரைக் கண்டால் களித்த வியல்பாதலால், அன்றலர்ந்த தாமரை மலரைக் கண்டதும் முககமலமும் உள‌க்கஞ்சமும் மலர்நதன. புரிந்து - விரும்பி. உள‌க்கஞ்சம் -மனத்தாமரை.

22. கொம்பு அன்னாள் - பூங்கொம்பு போல்பவள். காண்மின் -பாருங்கள், இப்போது -தாமரை மலர். கைப்போது - கைம்மலர். கண் போது -கண் மலர் ஒப்பு ஓதும் -ஒப்பாகக்கூறும். தண்முகம் -குளிர்ந்த முகம். ஒண்டொடி -ஒளி பொருந்திய வளையணிந்தவள்; அன்மொழித்தொகை.

23. போதாக்குறைக்கு - இல்லையேயன்றி இன்னும். தாட்போது -காலாகிய மலர். காண் -முன்னிலையசை. அம்மலர் -அத்தாமரைமலர். அழகு ஓங்கியது - அழகு மிக்கது. கைப் பரிசம் -கையாற்றொடல். கண் நோக்கம் - கண்ணால் பார்த்தல். கையாற்றொடினும் கண்ணாற் பார்க்கினும் எப்பொருளும் சிறப்படையாவோ? வீறு -சிறப்பு.

    என்ன வுரைசெய் தெனியேனு மம்மலரை
    யின்ன தவிர்க்கு மெழிற்பொருளே யென்றுமுத்தந்
    துன்னி யிடுதலுமென் றோகைமுகங் கோட்டினா
    னென்னினுமிப் போதுநுமக் கேர்மிக்குத் தோன்றுங்கொல்? (24)

    இந்தவுரை யென்செவியி லெய்து மனவினிலே
    சந்த வடிவுடைய தையாலித் தாமரைநின்
    னிந்து முகத்தி னிடுமுத்தந் தானளிக்குஞ்
    சிந்தைகொளின் பத்திற் சிறிதேனு மீயவற்றோ? (25)

    என்தறிவான் வேண்டியா னிட்டே னொருமுத்த
    மன்றியுமச் செந்தா மரையி னலர்தானு
    நின்றன்கைப் பங்கயத்தி னேர்ந்தழகு மிக்கொளிர்பு
    நின்றதனைக் கண்டேனா னின்மலச்செம் பொன்னனையாய்! (26)

    உண்மை யெனிவிவ் வுரைதானிப் பூந்தடத்திற்
    றண்மை மிகுந்திலங்கு தாமரையின் போதொன்றை
    யண்மியிவண் யானிலெனென் றானந்த மாய்வளைத்து
    முண்மகிழ்ந்து நீர்தா மொருமுத்த மிட்டதென்னோ? (27)

    தாது முகுத்துத் தனையவிழ்ந்து தேன்றுளிக்கும்
    போதுகண்ட வென்மனந்தான் பொன்னே யுனதெழில்கொள்
    சீத மலர்முகங்கண் சிந்தித்து நிற்பனெற்குக்
    காதன் மிகுந்ததனாற் கண்ணேயான் முத்தமிட்டேன். (28)

----- ----
24. உரைசெய்து –பேசி. அம்மலரை –அத்தாமரை மலரை. இன்னல் தவிர்க்கும் –துன்பத்தை நீக்கும். எழிற் பொருள் –அழகிய பொருள். துன்னி – நெருங்கி. முத்தம் இதெனும் எனச் சேர்க்க. தோகை – மயில் போன்றவள். உவமவாகுபெயர். முகங்கோட்டினாள் –முகம் வளைத்தாள், அன்றி முகமாறினாள்.
என்னினும் – என்னைக் காட்டிலும். இப்போது – இம்மலர். ஏர்மிக்கு – அழகு மிகுந்து. தோன்றுங்கொல் –தோன்றுமோ.

25. எய்தும் – சேரும். சந்தம் –அழகு. இந்து –சந்திரன். அளிக்கும் – கொடுக்கும். சிந்தைகொள் –மனம் நிறைந்த. கயவற்றோ –கொடுக்கும் வண்மையுடையதோ.

26. அறிவான் – அறியும்பொருட்டு. நேர்ந்து – கூடி, பொருந்தி. ஒளிர்பு – ஒளி வீசி. நின்மலச்செம்பொன் – மாற்றுயர்ந்த பொன். உயர்ந்த பொன்னிற் களிம் பேறாதாதலின் அதற்கு ‘நின்மல’ என்னும் அடை கொடுத்தார்.

27. இவ்வுரைதான் உண்மையெனில். இப்பூந்தடத்திற் போதொன்றை யண்மி. இவண் யான் இலேன் என்று ஆநந்தமாய் வளைத்தும் மனமகிழ்ந்தும் ஒரு முத்தம் இட்டதென். என்க –அண்மி –நெருங்கி. இலங்கு –விளங்கும். உள் –மனம்.

28. தாது –மகரந்தப்பொடி. உகுத்து –சொரிந்து. முகம் கண் –முகத்தையும் கண்ணையும். சிந்தித்து –நினைத்து. எற்கு –எனக்கு. காதல் –அன்பு. அத்தாமரை மலர் நினது முகத்தையுங் கண்ணையும் நினைப்பூட்டியதால் அதன்பாலும் அன்பு கொண்டு அதனை முத்தமிட்டதெனக் கொள்க. சிந்தித்து –நினைப்பணி.

    பூவிற் கணிகலமோ பொங்குறுசெந் தேனாகும்
    பாவிற் கணிகலமோ பண்கொண்ட கற்பனைபூங்
    காவிற் கணிகலமோ கஞ்சமலர் வாவியென்ற
    ணாவிக் கணிகலநீ யன்றோவென் னாரணங்கே? 29

    காம்புறழ்பைந் தோளுடைய காதலியு மென்மீது
    தோம்புனைந்து சொல்லுதற்குந் தோன்றாம லிஃதுரைத்தா
    டாம்புரிந்த வெச்செயற்குந் தக்கவா காரணங்க
    டாம்படைத்துக் கூற ற‌மிழ்வாணர் தம்மியல்பாம். 30

    இதுநிற்க யானோ ரெழில்மலர்கொய் பாக்குக்
    கதுமென்ன வொன்றுங் கருதாது நீரிற்
    புதுமலரி னாப்பட் புகுந்துழியென் றாளி
    லதன்கொடிசுற் றிக்கொண்டா லன்னோவென் போக்கென்கொல்?

    நீயிதனைச் சற்று நினையா தொருமலர்க்காப்
    போயதனைக் கொண்டு புகவெற் பணித்தமையை
    யாயும் பொழுதி னதுதா ளெவர்தமையு
    மேயேநி னுள்ளமிரும் பென்றெண்ணச் செய்யுமரோ. 32

    செந்தா மரைக்கொடியாள் சீர்க்கற் புடையளவள்
    கந்தமலர் கொய்வான் கடுகிவரு வோரையவர்
    தந்தாள் செறித்திடா டானே விலகிநிற்பா
    னந்தோ நுமதுமொழி யம்ம வதிசயமே! 33

----- - - -
29. அணிகலம் - அழகு செய்வது. பூவினுக்கு அழகு தருவது அதன்பாலுள்ள தேன் ஆகும்; பாவினுக்கு அழகு, கற்பனை; காவினுக்கு அழகு, கஞ்சமலர் காவி; அதுபோல ஆவிக்கழகு நீ, என்றது ஒப்புமைக் கூட்டவுவமை. பா - பாட்டு பண் - இசை. கா - சோலை. கஞ்சமலர் - தாமரைப் பூ. வாவி - தடாகம். ஆவி - உயிர்.
ஆர் அணங்கு - கிடைத்தற்கரிய தெய்வப்பெண் போல்பவள்.. ஓ - தெரிநிலை.

30. காம்பு = மூங்கில். உற‌ழ் = போலும். பைந்தோள் = பசியதோள். தோம் = குற்றம். புனைந்து = கற்பித்து. இஃது = பின்வருமிதனை. புரிந்த = செய்த. செயல் = செய்கை. தக்கரை = தகுந்தவாறு. படைத்துக் கூறல் = கற்பித்துக் கூறுதல். தமிழ் வாணர் = தமிழ்ப்புலவர்.

31. எழில் - அழகு. கொய்பாக்கு -கொய்யும் பொருட்டு. கதுமென்ன - திடீரென்று. நாப்பண் - நடுவில். புகுந்துழி - புகுந்தபொழுது; உயிர் வாழ்தலுமாம்.

32. இதனை - இவ்வுபாயத்தை. போய் அதனை - சென்று அம்மலரை யுக -வர. எற்பணித்தமை -என்னைக் கட்டளையிட்டது. ஆயும்பொழுதின் -ஆராயும் பொழுது. உள்ளம் - மனம். எவர் தமையும் எண்ணச்செய்யும் என்க.

33. தாமரையாள் கற்புடையாள், பதுமின் ஜாதி ஆதலின்.. கந்தம் = மணம் கடுகி = விரைந்து. தாள் செறிந்திடாள் = காலைப் பிணித்திடாள். அம்ம = வியப்பிடைச்சொல்.

    அல்லதவ டன்பாலோ ரன்னியனென் காதலனைச்
    சொல்லலளோர் காரணமுஞ் சுற்றிவைத்துக் கொள்வானேற்
    கொல்லும் வினையான் கொடியா னெலும்பெயர்தா
    னெல்லுமே யொல்லுமந்த வூறு வினைப்பாட்கே. (34)

    காரணமொன் றில்லாதக் கன்னிப் பசங்கொடியா
    ளேரணங்கே யெண்ணே விருப்பானென் றன்னாட்சியா
    னோரணங்கே செய்கிற்பா லுற்றேனா லஃதொன்றே
    சீரணவு காரணமாஞ் சிந்தித்துக் காண்மாதோ. (35)

    விள்ளரிய நம்முயிர்க்கே வீதல் வருமேனு
    முன்னற்க வொன்ற னுயிர்நீத்த லென்றுதிரு
    வள்ளுவனார் வாய்மலர்ந்த வ‌ண்மைத் திருக்குறணும்
    முள்ளத்தி னின்று மொழிந்த்துகொ லொண்புலவீர்? (36)

    நீவிர் மறப்பினுமந் நீள்கொடியா டான்மறவான்
    பாவலரே யென்று பரிகசித்தா லென்னையென்றன்
    பாவையனை யான்யாளத் தாமரைப்பூம் பைங்கொடிக்கு
    மேலரிய நல்லறிவு முண்டோ விளங்கிழையாய்? (37)

----- -
34. அல்லது – அன்றி. தன்பால் – தன்னிடம். அந்நியன் – அயலான். ஓர் காரணமுஞ் சொல்லாளாய். கொல்லும் வினையான் – கொல்லுந் தொழிலை யுடையவன். ஊறு – குற்றம்; தவறு. கொடியாள் – கொடியாகிய பெண், கொடியவள் (சிலேடை). ஒல்லும் – பொருந்தும், தரும். வினைப்பான் – செய்பவன்.

35. இல்லாது – இல்லாமல். கன்னி – இளமை, பெண். ஏர் அணங்கே – அழகிய அணங்கு போல்பவளே. காரணமொன்றில்லாது இருப்பாள் என்று எண்ணேல், எனச்சேர்க்க. ஓர் அணங்கு – ஒரு வருத்தம்; மலரைக் கிள்ளுதலாலாகிய துன்பம். செடிகட்குப் பரிசவுணர்ச்சி யுண்டாதலின் இங்ஙனம் கூறப்பட்டது.
ரெணவு – சிறப்பான. சிந்தித்து – கருதி.

36. விள்ளரிய – நீங்குதற்கரிய. வீதல் – இறப்பு; அழிவு. உள்ளற்க – நினையாதே. ஒன்றன் உயிர்நீத்தல் – ஒன்றினைக் கொல்லுதல். திருவள்ளுவனார் – திருக்குறளாசிரியர். வண்மை – பல வளப்பமும் உள்ள. வாய்மலர்ந்த – கூறிய. திருக்குறள் – அழகிய குறள் வெண்பா.
“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை” (திருக்குறள், 837)
என்னுங் குறளே ஈண்டுக் குறித்தது.

37. நீவிர் – நீங்கள். அந் நீள் கொடியாள் – அந்த நீண்ட தாமரைக் கொடியாள். அக்கொடியாள் குறளை மறவாள் என்றதால். அவள் உம்மைக் காலைத் தனைத்துக் கொல்லாள் என்பது பெறப்பட்டது. பாவலர் – கவிஞர். பாவை – பதுமை. அனையாள் – போன்றவள். மேவரிய – பொருந்துதற்கரிய. நல்லறிவு – பகுத்தறிவு.

    எனாவினவி நிற்க வெனாது தலைவி
    தனாதுமேற் கோளைவலி தானுறுத்தல் வேண்டி
    யுனாது சொலப்புகுந்தீ ரொக்குமுந்தம் வாத
    மனாதிகளுக் கெட்டாதும் வான்றருக்க வண்மையென்றான். 38

    வாளா விகழ்ந்தாலும் வன்மைபெறா துன்வாதம்
    வானார் விழிவெருட்டல் வைதலிவை யாவுமுன்கோ
    டூனாக்குந் தோல்விநிலை சூழ்ந்தறிதி மங்கையர்தஞ்
    சூளா மணியாகத் தோன்று மடவனமே. 39

    நிற்பிர் சிறிது நியாயநூல் வல்லீர்நுஞ்
    சொற்படியப் பைங்கொடிக்குத் துன்ப மிகவுதும்மா
    னுற்பவித்து மன்னா ளுமக்கொன்றுஞ் செய்யாமை
    வற்புறுத்து மன்றோவென் வாதத் தினைப்புகலீர்? 40

    என்னோ வொருபொழுதி லென்னாதுமுன் றன்னதுமா
    முன்னல் வினைதுணையா முட்டுப்பா டில்லேனா
    நுன்னருகர்ப் போந்ததன்றி நோக்குமிடத் துன்மேற்கோ
    னென்னணமோ வன்மெபெற லெற்கியம்பு வாய்மயிலே.

----- - - - -
38 வினவி - கேட்டு. எனாது - என்னுடைய. மேற்கோள் - கொள்கை. வலியுறுத்தல் வேண்டி - பலப்படுத்த எண்ணி. உனாது - உன்னாது, கருதாது. ஒக்கும் - பொருந்தும். உம் நான் தருக்கவன்மை - உமது மேலான தருக்க சாஸ்திர வளப்பம். மனாதிகளுக்கு - மனம் முதலியவற்றிற்கு. எட்டாது - புலப்படாது.

39. வாளா - சும்மா வன்மை - வலிமை. உன் வாதம் வன்மை பெறாது என்க. வாளார் விழி - வாளின் தன்மை பொருந்திய கண். வெருட்டல் - அச்சுறுத்தல். வைதல் - ஏசுதல். கோள் - கொள்கை. தூள் ஆக்கும் - பொடிப்படுத்தும்; அழிக்கும். தோல்விநிலை - தோல்வித்தானம், வாதம் பேசுவார் தோல்வி யுறுதற்கேது. அவை மேற்கோளழிவு முதல் ஏதுப் போலி யீறாகப்பலவாம் தர்க்க சங்கிரகம் 64 -ம் பக்கம் பார்க்க. சூழ்ந்து அறிதி - ஆலோசித்து அறிவாய். சூளாமணி - வேண்டியதளிக்குந் தேவமணியி லொன்று; சிகா ரத்தினம் என்பது பொருள். மடவனம் - இளமைத் தன்மையுடைய அன்னம்.

40. சிறிது நிற்பீர் - சிறிது உங்கள் பேச்சை நிறுத்துங்கள். நியாய நூல் வல்லீர் - தருக்கம் வல்லவரே. உற்பவித்தும் - உண்டாகியும். அன்னாள் - அவள் வற்புறுத்தும் - வலியுறுத்தும். என் வாதத்தினை வற்புறுத்தும் அன்றோ என மாற்றுக. புகலீர் - சொல்வீர். காரியத்தாற் காரணம் பெறப்பட்டது.

41. என்னோ - ஏதோ. ஒரு பொழுதில் - ஒரு சமயம். என்னதும் - என்னுடையதும். உன்தன்னதும் - உன்னுடையதும். ஆம் - ஆகிய. முன் நல்வினை துணையா - முற்செய்துள்ள நல்வினையின் உதவியால். முட்டுப்பாடு இல்லேன் ஆக - இடையூறில்லாதேனாக. நுன் அருகர்ப் போந்தது அன்றி - நினது பக்கஞ் சேர்ந்ததே யல்லாமல். நோக்குமிடத்து - ஆராயும்பொழுது. உன் மேற்கோள் - உனது கொள்கை. வன்மை பெறல் - வலிமை பெறுவது. என்னணமோ - என்ன விதமோ எற்கு இயம்புவாய் - எனக்குக் கூறுவாய். துன் - நின்.

cf நுன்பழம் பகைதவ தூறு வாயென (சிக். 324)

நுன் - என்பது திசைச் சொல் என்பர் நச்சினார்க்கினியர். நுன் - கன்னட பாஷையில் வழங்குகிறது. நம்பநின் பெருமை நுன்னிடை யொடுங்க (கருவூர் - திருவிசைப்பா)

    மேலொன்றுஞ் சொல்லான் வெகுண்டாடன் மெய்வியர்த்தான்
    வேலொன்று கண்ணான் விதனமீக் கூர்ந்தவணோர்
    பாலொன்றி நின்றான் பனிமுகம்வா டக்கண்டென்
    பாலொன்று மின்மொழியாப் பைல*ரன் யெய்தியதென்? (42)

    கூறாயெ னின்சொற் குயிலே யெனதுமன
    மாறாதிப் போழ்தே யறிவுறுத்து வாயென்னை
    வேறாகக் கொள்ளாய் விளம்பா யெனவுரைத்தோ
    ராறேனுங் காணே னவட்டழீஇ முத்தமிட்டேன். (43)

    இட்டேன் முகமலர்ந்தா னென்மீது தன்கரம்வேய்ந்
    துட்டேன் றுளித்தெழல்போ லுற்றவிழி நீர்பெய்தாண்
    மட்டுறுஞ் செங்குமுத வாய்மலர்ந்து பாடினான்
    விட்டா டனதூடல்* மின்னே ரிடையானே. (44)

    ஏமமிக வெய்தினேன் யானு மிவைகாணுஉத்
    தேமலர்க்கஞ் சக்கிழவன் செம்பரிதி விண்ணியர்ந்தான்
    காமருசெந் தேமொழியென் கைப்பிடித்துக் கோடலும்யாந்
    தாமரைப்பூம் பொய்கைவிட்டுச் சார்ந்தோ மெமதிலமே. (45)

----- - ----- - ----- - - - -
42. மேல் - அதற்கு மேல். வெகுண்டான் - கோபித்தான். வேல் ஒன்று கண் - வேலின் தன்மை பொருந்திய கண். விதனம் - விசனம். மீக் கூர்ந்து - மிகுந்து. பால் ஒன்றி - பக்கஞ் சேர்ந்து. பனிமுகம் - குளிர்ந்த முகம். என் பால் - என்னிடம். பால் - விதியுமால். ஒன்றும் - கூடும். பைவ*ரல் - துன்புதல். என் - 'எவன்' என்பதன் திரிபு.

43. ஆறாது - வருந்தத்தணியாது. போழ்து - பொழுது. அறிவுறுத்துவாய் - தெரிவிப்பாய். வேறாக - உள்ளில் வேறாக; விரோதியாக எனினுமாம். ஆறு – வழி காணோன் - காணோனாய். அகட்டழீஇ - அவனைத்தழுவி.

44. இட்டேன் என்றிஉ மீட்டுங் கூறியாது உடனே முகமலர்ந்த விரைவினைக் குறிக்கும். வேய்ந்து - மாலைபோல் அணிந்து. உன் தேன் - மனத்திலுள்ள களிப்பாகிய தேன். துளித்து எழல்போல் - மேலே துளித்துப் புறப்படுவதுபோல. விழி நீர் பெய்தது உவகையால். மட்டேறும் - தேனூறும். செங்குமுதம் என்றது*யிலை.
தனது ஊடல் விட்டாள் - தனது சிறிய கோபத்தை நீக்கினாள். ஊடல் - பிரணவ* கலகம். மின் நேர் - மின்னலையொத்த.

45. ஏமம் - மகிழ்ச்சி. எய்தினேன் - அடைந்தேன். காணுஉ - கண்டு. தேமலர்க் கஞ்சம் - தேன் பொருந்திய தாமரை மலர். கஞ்சக்கிழவன் - பத்ம**தனனாகிய சூரியன். செம்பருதி - சிவந்த சூரியன். விண் இயர்ந்தான் - ஆகாயத்தில் ஏறினான். காமரு - விருப்பம் மிக்க; அழகிய எனினுமாம். கோடல் - கொள்ளல். சார்ந்தோம் - சேர்ந்தனம். இலம் - வீடு.


6. கலங்கரை விளக்கம்


{சென்னைமாநகரின்கண் உயர்நீதிசாலையின்மீது நின்று சுழன் றொளிரும் விளக்கத்தை நோக்குந்தோறுந் தம்மனத்தின்க ணுதித்த நில கருத்துக்களை யமைத்து அரச விசுவாசந் தோன்ற 1900 -ஆம் வருஷம் பாடியது.}

கலங்கரை விளக்கம்

    கலிவிருத்தம்

    ஓது செல்வமிக் கோங்கிய சென்னையி
    னீதி சாலை நிமிர்தரு சேட்சிமை
    மீது நின்று மிளிர்ந்திருள் போழுபு
    சோதி யொன்று சுழன்றொளிர் கின்றதால், (1)

    அளக்க ரிற்செல வார்ந்துவங் கம்மெலாந்
    துளக்க முற்றுத் துயாடை யாவண
    மளக்க ரும்புக ழானர் கலங்கரை
    விளக்க மென்னவொன் றிட்டடர் மேலைநாள். (2)

    அன்ன வெண்ணங்கொண் டாக்கின ரேனுமல்
    தின்ன மும்பல வின்பய னல்குபு
    மன்னு கிற்றன் மதிக்கு மெமதுள
    முன்னி யுன்னி யுவகை சிறக்குமால். (3)

----- - - -
கலங்கரை விளக்கம் - கப்பலை யழைக்கும் தீரா* வென்னும் விளக்கு (Light house) கலம் - கப்பல். கரை - அழைக்கும். விளக்கம் - விளக்கு. 'நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு' என்பர் அடியார்க்கு நல்லார்; 'திக்குக் குறிகாட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம்' என்பர் சிலப்பதிகார அரும்பத
வுரையாசிரியர்.
* "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்." (சிலப். 6 -141.)

1. ஓது - சிறப்பித்துச் சொல்லப்படும். ஓங்கிய - உயர்ந்த ஓங்கிய -சிறந்த; நீதி சாலை - ஹைகோர்ட் கட்டிடம்; நிமிர்தரும் -நிமிர்ந்த. சேண் சிமை -உயர்ந்த‌ உச்சி. மீது - மேல். மிளிர்ந்து - விளங்கி. இருள் போழுபு - இருளைப் பிளந்து. போழ்தல் - கிழித்தல், பிளத்தள். சோதி - ஒளி, பிரகாசம். சுழன்று - சுற்றி. ஒளிர்கின்றது - விளங்குகின்றது. ஆல் - அசை. சென்னை ஹைகோர்ட் கட்டிடத்தின் உச்சியிற் சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ள பெரிய விளக்கே ஈண்டுக் குறிக்கப்பட்ட கலங்கரை விளக்கம்.

2. அளக்கர் - கடல். செலவு ஆர்ந்து - செல்லுதலுற்று. வங்கம் – கப்பல் துளக்கம் - நடுக்கம். துயர் அடையா வணம் - துன்புறாவிதம். அளக்க அரும் புகழ் ஆனர் - அளத்தற்கரிய புகழினையுடையார்; என்றது அரசாங்கத்தாரை. இட்டனர் - அமைத்தனர். மேலை நாள் - முற்காலத்தில்.

3. அன்ன - அந்த. எனும் - எனினும். பல இன் பயன் - பல இனிய பயன்கள். நல்குபு - நல்கி, கொடுத்து. மன்னுகிற்றல் - நிலை பெறல். மதிக்கும் - கருதும். உன்னி - நினைத்து. உவகை - மகிழ்ச்சி.

    உலக மாந்தர்க் கொளியே யுயர்ந்ததென்
    றிலகு முண்மை யினிது விளக்குபு
    மலைக வின்றுயர் மாடத்து மீமிசைப்
    பலக திர்த்திரள் பண்பிற் பரப்புமே. (4)

    ஆக்க மோங்குக மாங்கில மன்னவர்
    தாக்கு தம்பிர தாபம் பகையிருள்
    போக்கு தற்குப் பொருந்து மறிகுறி
    யாங்கொள் கிற்ப தமைவுடைத் தேயரோ. (5)

    மன்ற மேறுபு வாய்மொழி கூறுநர்
    நின்று தங்கொள்கை நேர்ந்து நிறுவுந
    ரொன்று மெய்ம்மை யுணர விழையுந
    ரென்றின் னோர்கட்கு மேனைய மக்கட்கும். (6)

    கரவு செய்யலிர் கட்டுரை கூறுமி
    னொருவன் றேவ னுளன்கண்டீ ரென்றுதன்
    சிரநி வந்துயர் செவ்விய கோலெனும்
    விரவிற் சுட்டி விளம்புதன் மானுமே. (7)

    மக்கட் கின்னுரை மாண்பின் வழங்குந
    ரொக்க யாரு மொருங்குறக் கேட்டற்குத்
    தக்க தோருயர் தானத்தின் மேலெழீஇத்
    தொக்க தங்கைகள் சொல்லுழி நீட்டல்போல். (8)

----- - ----- - ----- ----- -
4 மாந்தர் = மனிதர். இலகும் = விளங்கும். விளக்குபு = விளக்கி. மலை கவின்று உயர் = மலைபோல் அழகுற்றுயர்ந்த. மாடம் = பெரிய கட்டிடம். மீமிசை = உச்சியில். கதிர்த்திரள் = கிரணக் கற்றை

5. ஆக்கம் = செல்வம். தாக்கு = பகைவரைத் தாக்கும். பிரதாபம் = இது செந்நிறமுடைய தென்று கூறுவது புலவர் நாட்டிய பெருவழக்கு. அறிகுறி = அடையாளம். கொள்கிற்பது = கொள்வது. அமைவுடைத்து = பொருத்த முடையது. அரோ = அசை

6. மன்றம் = நியாய சபை. ஏறுபு = ஏறி. வாய்மொழி கூறுநர் = உண்மை பேசுபவர்; வாதி, பிரதிவாதி, சாக்ஷி முதலியோர். நின்றுதங் கொள்கை நேர்ந்து நிறுவுநர் = நியாயசபையில் எழுந்து நின்று தமது கொள்கைகளைச் சட்ட விதிக்குப் பொருந்தப் பேசி நிலைநாட்ட வாதிக்கும் வக்கீல்கள். ஒன்றும் = பொருந்திய. மெய்ம்மை யுணர விழையுநர் = உண்மையை அறிய விரும்பும் நியாயாதிபதி, ஜூரிகள் முதலியோர். ஏனையமக்கள் = மற்றுஞ் சபையிலுள்ளவர்கள்.

7. கரவு = வஞ்சகம். கட்டுரை = உண்மை. ஒருவன் தேவன் = ஒருவனாகிய கடவுள். கண்டீர் = முன்னிலை யசை. சிரம் = தலை. நிவந்து = நிமிர்ந்து. செவ்விய கோல் = செங்கோல். விளம்புதல் =கூறுதல். மாணும் - போலும்.

8. இன்னுரை = இனிய உபந்நியாசம். ஒக்க = பொருந்த, ஒருக்குற = ஒரு சேர. உயர்தானம் = உயர்ந்த ஸ்தானம்., பிரசங்க மேடை (Pulpit). எழீஇ = எழுந்து தொக்க = கூடிய. சொல்லுழி = பேசும்பொழுது.

    வன்பு மாக்கள் வழிப்பட் டுழலுபு
    துன்புற் றாரைத் துயர்களை நீதித்தா
    யின்ப மீறாவ லென்வயிற் போதுதி
    ரென்ப வட்போன் றிருங்கதிர் வீசுமால். (9)

    கடமை யிற்பிறழ் கல்லார் பொதுளிவிண்
    டடவு மாடத் தலைக்கண் விளக்கந்தான்
    படமெ டுத்துயர் பாந்த ளரையன்றப்
    சுடிகை மேவுஞ் சுடர்மணி போலுமே. (10)

    உம்பர் நோக்கி யொளிசெய்து சுற்றிவந்
    திம்ப றீவ்விளக் கெங்கணு மின்னலா
    னம்ப னந்த நறும்தமிழ் வேட்டவ
    னெம்பி ரான்சடை யென்றது மொக்குமே. (11)

    சுற்றி நின்று சுடர்க்கற்றை வீசலா
    லுற்று நோக்குந ருள்ள மலர்த்தலான்
    மற்றி ராப்பொழு தத்தின் வயங்கலான்
    வெற்றி வேணியன் மேலொளிர் திங்களோ? (12)

----- ----- -
9. வன்பு மாக்கள் வழி - கொடியவரிடம். பட்டு - அகப்பட்டு. உழலுபு - உழன்று, வருந்தி. துன்புற்றார் - துன்பமடைந்தவர். துயர் களை – துயரினைக்களையும். நீதித்தாய் - நீதியாகிய தாய். ஈகுவல் - கொடுப்பேன். போதுதி - வருகுவாய். என்பவட் போன்று - என்று கூறுபவனைப் போல. இருங்கதிர் - பெரிய கிரணக் கற்றைகள்.

10. பிறழ்கல்லார் - தவறாதவர். பொதுளி - கூடி. விண் - ஆகாயம். தடவும் - தொடும். மாடத் தலைக்கண் - மாடத்தினுச்சியில். விளக்கம் - விளக்கு. பாந்தள் - பாம்பு. அரையன் - அரசன். சுடிகை - உச்சி. மேவும் - பொருந்திய. சுடர் மணி - ஒளியுள்ள மாணிக்கம்.

11. உம்பர் - மேலிடம், இம்பர் - இவ்வுலகு. மின்னலால் - ஒளி வீசலால். நம்பன் - கடவுள். நம் தம் நறுந்தமிழ் வேட்டவன் - நமது நறிய தமிழை விரும்பின வன். எம்பிரான் - எமது பெருமானாகிய சிவன். நம்பனாகிய வேட்டவனாகிய எம்பிரான் என்க. சிவன் சடை செந்நிறமுடையதாதலின் நிறமும் வடிவும் பற்றிய
உவமை.

12. சுடர்கற்றை - ஒளிப்பிழம்பு. சுற்றி நின்று - சுற்றுதலைப் பொருந்தி நின்று. உற்று நோக்குநர் - உற்றுப்பார்ப்பவர். பொழுத்தத்தின் - பொழுதில். வயங்கலான் - விளங்குதலால். வெற்றி வேணியன் - வெற்றியையுடைய சடைமுடியனாகிய சிவபெருமான். மேலொளிர் - தலைமீது விளங்கும். திங்கள் - சந்திரன். இது செம்மொழிச் சிலேடை.

    ஓரும் போழ்தினி லுவ்விளக் கம்புடை
    சாரும் பற்பஃ றனிமலை தானடுத்
    தேரி யன்றுய ரின்னலஞ் சான்றபொன்
    மேரு மாமலை மேலொளி ரீசனோ? (13)

    எண்ணு மிந்நக ரேயிவ் விளக்கமே
    கண்ணி மாந்தரைக் காக்குங் கறைமிடற்
    றண்ண வார்த மருள்கெழு மாவலக்
    கண்ணெ னாவிது கண்டுளம் பொங்குமால். (14)

    இங்கி ருக்குமெ மின்றமிழ்ப் பாவலர்
    தங்க ளுக்குத் தழைத்துவந் தெம்முள
    மிங்கி தத்தி னெழுந்து குதித்துறப்
    பொங்கு மாறு புகலுதற் பாலதே. (15)

    வென்றி ப்படை வீரர் புரந்திட
    நன்றிவ் வாங்கில ராச்சிய ஞாலத்தி
    னென்று மென்றூழ் மறைகுத லில்லையா
    மென்று கூற வியையு மியையுமே. (16)

-----
13. ஓரும்போழ்து = ஆலோசிக்கும்பொழுது. உவ்விளக்கம் = அந்தக் கலங்கரை விளக்கு. புடைசாரும் = பக்கங்களிற் சாரும். பற்பஃறனிமலை = பற்பல தனியான மலைகள்; ஈண்டுக் கூறியன இமயம், மந்தரம் முதலிய அஷ்ட குலாசலங்கள். ஏர் இயன்று = அழகு பொருந்தி. இன் நலம் = இனிய நன்மை. சான்ற = அமைந்த. ஒளிர் = விளங்கும். ஈசன் = சிவன். பக்கங்களிற் சூழ்ந்துள்ள ஸ்தூபிகளுக்கு அஷ்ட குலாசலங்களும், இவைகட்கிடையே மிக உயர்ந்து விளக்குடன் விளங்கும் ஸ்தூபிக்குப் பொன் மேருவும், தலையில் விளங்கும் விளக்கிற்கு அழலுருவாய்ந்த சிவனும் உவமை.

14. எண்ணும் = சிறப்பாக எண்ணப்படும். ஏய் = பொருந்திய. கண்ணி = கருதி. கறைமிடற் றண்ணல் = நீலகண்டனாகிய சிவன். கறை = விடம். மிடறு = கழுத்து. அருள்கெழு = கருணை பொருந்திய. மாவலக்கண் = பெருமை வாய்ந்த வலதுகண்; சூரியன். எனா = என்று. உளம் = மனம். பொங்கும் = மகிழ்ச்சிமிகும்.

15. இங்கு = இவ்விடம். உளம் = மனம். இங்கிதம் = இனிமை. ஆறு = விதம் புகலுதற்பாலதே = சொல்லுந் தரத்ததோ. ஏகாரம் எதிர்மறை வினா.

16. வென்றி = வெற்றி. மாப்படை = பெரிய படை; குதிரைப் படையுமாம். புரந்திட = பாதுகாக்க. நன்று = நன்றாக. ஆங்கில ராஜ்ஜியம் = British Empire என்றும் = எக்காலத்தும். என்றூழ் = சூரியன். பகலிற் சூரியனும் இரவில் சூரியனைப் போன்ற இக்கலங்கரை விளக்கமும் ஒளி செய்தலால் எப்பொழுதும் சூரியப் பிரகாச
முண்டென்றனர். என்று கூறல் = cf. "The Sun never set in the British Empire." ஆசான் = ஆசிரியன்; (இங்கு டாக்டர் மில்லர் அவர்களைக் குறித்தது உருநிலை = Statue.
-------------

7. ஆசானுருநிலை


[தமக்கு ஆங்கிலநூற் போதகாசிரியரும், தாம் தலைமைத் தமிழ்ப்புலமை நடாத்தும் கிறிஸ்தவ கலாசாலைத் தலைவருமாகிய கனம் பொருந்திய வில்லியம் மில்லர் துரையவர்களது சிலை நாட்டிய போழ்தத்துப் பாடியது.]

ஆசானுருநிலை

    கலிவிருத்தம்

    குருவெனச் சென்னையிற் கூடினானுக்கெந்
    திருநலஞ் சான்றொளிர் செய்ய மாணிக்க வருமணி யனையவ னாரு மில்லருக்
    குருநிலை யெடுத்தவ ருவத்தி நெஞ்சமே! (1)

    ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை.

    உண்மைவழி காட்டியுல குய்விக்க வந்தவனை
    யண்மினா ருள்ளத்தி லன்பு விதைப்பவனைப்
    பண்மலர யாமாடிப் பாடுகம்வா நெஞ்சே!

    மாணாக்க ரென்றும் வளர்கொடிக ளெஞ்ஞான்றும்
    பூணாக் கறிவுமலர் பூப்பவெழு மாதவனைப்
    பாணாற் பரிந்தாடிப் பாடுகம்வா நெஞ்சே!

    மெல்லியலார் தம்வலையில் வீழாக் குருமணியை
    வில்லிய மில்லரெனும் வித்தகனை யாம்புகழ்ந்து
    பல்லிய மார்த்தாடிப் பாடுகம்வா நெஞ்சே! (2)

----- - - -
1. குரு -ஆசிரியன். கூடினான் -பொருந்தினவன். திரு - கண்டாரான் விரும்பப்படும் தன்மை. நலம் -நன்மை. சான்று - அமைந்து. ஒளிர் -விளங்கும். மாணிக்க அருமணி -அரிய மாணிக்கமணி. அனையவன் -போன்றவன். உவத்தி - உவப்பாய்.

2. உண்மைவழி -சத்தியமார்க்கம். உலகு -உவகை. உய்விக்க -ஈடேற்ற. அண்மினார் -நெருங்கினார். உள்ளத்தில் அன்பு விதைப்பவன் -உள்ளமாகிய நிலத்தில் அன்பாகிய விதையை விதைப்பவன். பண் -இசை.மலர - பரந்துபொருந்த. பாடுகம் -பாடுவோம். பூண் -அணி. அறிவுமலர் -அறிவாகிய மலர். ஆதவன் -
சூரியன். மலர்கள் மலர்தற்குச் சூரியனொளி இன்றியமையாதது. பாண் - இசைப்பாட்டு. பரிந்து -விரும்பி.மெல்லியலார் -மென்மைத்தன்மையுடையார்; மாதர். வலை - ஈண்டு மோகவலை. குருமணி - ஆசாரிய ரத்தினம். வித்தகன் -அறிவாளன். பல் இயம் -பல வாத்தியங்கள். ஆர்த்து -ஒலித்து.

    கலிவிருத்தம்

    அண்ட ரும்புக ழாசிரி யன்னெழில்
    கொண்ட மேனி குறித்திவண் வெண்கலத்
    தெண்ட வாவ்வுரு வேய்ந்திசை நிற்பது
    கண்டு நெஞ்சங் களிக்கட லாடுமால். (3)

    கலிநிலைத்துறை

    துணிந்த கேள்வியுங் கல்வியுஞ் சூழ்ச்சியு முடையார்
    பணிந்தி ருப்பரென் றடிக்கடி பகர்ந்தசொற் காட்டாத்
    தணந்தி ராதுமா ணாக்கரிற் றரைபுறத் தாழ்ந்து
    தணிந்தி ருந்தனை போலுமாங் கிலத்தினா சானே! (4)

    நீதி சாலையும் கலைபயில் சாலையு நிரலே
    பேத மின்றுபின் முன்னராப் பிறங்கநின் னிலைதா
    னோத னாவநூல் கற்றபிற் றுயரா யொழுகி
    யாதரத்தினீர் நீதிகைக் கொண்மினென் றறையும். (5)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    விளைகலை நலங்க ளோங்கி மேதக வுடையை யாகி
    மிளிர்தரு முனக்கு மேலோர் மிக்கதம் முவகைக் கேற்ற
    வெளியறி குறியாச் செய்த வெண்கலச் சிலையை மாந்த
    ரொளிநிலை யென்னார் நின்ற னுருநிலை யென்ற லென்னே! (6)

----
3. அண்டரும் -தேவரும். எழில் -அழகு. குறித்து - மனத்தாற் கருதி. எண் தலா -மனத்தைவிட்டு அகலாத. தவா -தவாத, கெடாத. ஏய்ந்திசைகிற்பது - பொருந்தி விளங்குவது. களிக்கடல் -ஆனந்த சாகரம். ஆடும் -மூழ்கித் திளைக்கும்.

4. துணிந்த -தெளிந்த. சூழ்ச்சி -ஆராய்ச்சி. பணிந்திருப்பர் –அடக்க முடையரா யிருப்பார். சொற்காட்டா -சொல்லுக்கு திருஷ்டாந்தமாக. தரையுறை - பூமியிற் பொருந்த. தாழ்ந்து துணிந்திருந்தனை - தாழ்வுடன் கீழிடத்திற் பொருந்தியுள்ளாய். தற்குறிப்பேற்றம். கிறிஸ்டியன் காலேஜ் கட்டிடத்திற்கும் ஹைகோர்ட்
கட்டிடத்திற்கும் இடையேயுள்ள வெளியிடத்தில், மில்லர் திருவுருவச் சிலை நாட்டப் பட்டிருத்தலின் இங்ஙனம் கூறினர்.

5. நீதிசாலை - ஹைகோர்ட். கலைபயில் சாலை -கிறிஸ்டியன் காலேஜ். நிரலே -முறையே. முன்னர் -முன்பு, மில்லர் உரு நிலைக்குப் பின்புறம் நீதிசாலையும் முன்புறம் கலாசாலையும் உள்ளன. பிறங்க -விளங்க. நில் நிலை -நிற்கும் நிலை துயராய் - பரிசுத்தராய். ஆதரத்தின் -அன்புடன். கைக்கொண்மின் -கைப்பாற்றுங்கள். அறையும் -கூறும். தற்குறிப்பேற்றகணி.

6. கலைவிளைநலம் -கலைகளால் விளையப்பெற்ற நன்மைகள். மேதகவு - மேன்மை. மிளிர்ந்தரல் -விளங்குதல்.மேலோர் - பெரியோர். உவகை மகிழ்ச்சி. ஏற்ற -பொருந்திய. வெளி அறிகுறி -கட்புலனாகும் அடையாளம். வெண்கலச்சிலை - BroneStatue. மாந்தர் -மனிதர். ஒளிநிலை -ஒளி நிலைபெற்ற உருவம். ஒளி -
ஒருவன் உளனாய காலத்து மிக்குத்தோன்றுதலுடைமை.

    cf. " ஒளியொருவற் குள்ள வெறுக்கை" (திருக்குறள். 971)
என்னே - என்ன வியப்பு.


    எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    உலகிய லனைத்து மொருங்குணர் தருநீ யுதக்கினை கோக்குபு நிற்ற
    லலைகட லாடுவ ணசைந்துசெல் கலங்க ளருந்துய ரகன்றுநற் றுறைக்க
    ணிலைபெறச் செலுத்தும் வடக்குநோக் குறுமோர் நிகரலு கருவியைப் போல
    வலகிலிவ் வாழ்வி னாருயி ரினிதி னடைநெறி காட்டிடு மன்றே. (7)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    நின்னடிக்கீ ழிருந்தபல மாணாக்கர் தமதுளத்தி னினக்கு நேர்ந்த
    பொன்னியன்ற சிலையினுமே லானதொரு கருவிகரப் புரிவி லாது
    நன்னரொளி மல்குதனிச் சிலையெடுத்து நாட்டினார் நாமு நந்தம்
    பன்னரிய தமிழ்மொழியி லுன்னுருவம் புனைதந்துபாடி னேமால். (8)

    வஞ்சிவிருத்தம்

    எங்கண் மில்ல ரிசையொடுந்
    தங்கி வாழ்க தரைமிசைப்
    பொங்கி யோகை பொவிகவே
    யெங்கு மின்ப மிகைபுகவே. (9)

-----------
7. உலகு இயல் = உலகத்தின் இயல்பு. ஒருங்கு = முற்றிலும், அனைத்தும். உதக்கு = ஆடக்கு. நோக்குபு = நோக்கி. அலைகடல் = வினைத்தொகை. நடுவண் = நடுவில். கலம் = மரக்கலம். அருந்துயர் = புயல், திசைமாறுத லாதியவற்றால் வருந்துன்பம். அகன்று = நீங்கி. துறை = துறைமுகம்(Harbour). நிலைபெற = நிற்க. வடக்குநோக்கும் கருவி = வடக்கு நோக்கி, Mariner's campus. நிகர் அறு = சமானமில்லாத
அலகுஇல் = அளவில்லாத. இவ்வாழ்வு = உலக வாழ்க்கை. ஆருயிர் = பெறற்கரிய உயிர். இனிதின் = செவ்விதாக. அடைநெறி = அடையும் வழி. அன்று, ஏ = அசைகள்.

8. அடிக்கீழ் இருந்த மாணாக்கர் = ஆசிரியன் அடியில் இருந்து கல்வி கற்ற மாணாக்கர்.

cf. "To sit at the master's foot."

சேர்ந்த = அமைத்த. பொன் இயன்ற சிலை = பொன்னான் இயன்ற சிலையுரு. சிலையினும் = சிலையைக் காட்டினும். கருவி கரப் புரிவு இலாத = உளி முதலிய கருவிகளாலும் கைகளாலும் செய்யப்படாத. நன்னர் ஒளிமல்கு தனிச்சிலை. எடுத்து காட்டினார் = நல்ல ஒளிமிகுந்த ஒப்பற்ற உருவம்சிலையினை நிலைபெறச் சேர்தினார். மாணாக்கர் தமது மனத்தித் கருத்தான் அமைந்துள்ள ஒளியுருவம் ஈண்டுக் கூறப்பட்டது.
தாமும் = ஆசிரியர் தம்மைக் குறிக்கின்றார். தமிழ் மொழியில் = தமிழ் மொழியினால் புனைதந்து = புனைந்து, அலங்கரித்து.

9. தரைமிசை இசையொடும் தங்கி வாழ்க, ஓகை பொங்கிப் பொலிக, இன்பம் எங்கும் இயைக எனக் கூட்டுக. ஓகை = மகிழ்ச்சி.


8. பட்டினக் காட்சி.


[சென்னைத் துறைமுகக் காட்சியைப் புனையுமுகத்தாற் பழவினை முறையையும் ஊழ்க்கோளையும்பற்றி ஆராய்ந்து அவற்றின்கட் பொதிந்துளமாசு கழீஇத் தன்வய விழைவு முறையை வலியுறுத்தி நகைமொழிநிலை தோன்றப் பாடியது]

பட்டினக் காட்சி

    கலிநிலைத்துறை

    மன்னு தொல்புகழ்த் தமிழ்மக ணடமிடும் வளஞ்சால்
    சென்னை மாநகர்க் கடற்கறைப் பட்டினஞ் சென்று
    நன்னர்க் காணிய நின்றன நானுமெற் கினிய
    பன்ன ரும்பல நூல்களிற் பயின்றமா ணவனும். (1)

    பொங்குமாக்கட லிறைதிரைக் கையின்முத்தம் பொலிய
    வெங்க ணுந்தன நீர்த்துளி யினிமையின் வீசச்
    சங்கு லாங்கரைக் கண்வளி சாமரை யிரட்டத்
    தங்கி னேமவண் யாங்களுந் தகுமகிழ் சிறந்தே. (2)

    வெள்ளைக் காரர்கள் பற்பலர் மிக்கவுல் லாசக்
    கள்ள ருந்திய படைஞர்கள் கவினுற வுலவ
    வெள்ளி னும்பிற ரதைச்சிறி தேனுமெண் ணுகிலாக்
    கொள்ளி வாய்ப்புகைச் சுருட்டினர் சிலரவட் குழும; (3)

---------
பட்டினம் = துறைமுகம் (Harbour) cf. "பட்டினப் பாலை." புனைதல் = வருணித்தல். ஊழ்க்கோள் = விதியைப்பற்றிய கொள்கை. தன்வய விழைவு = தானாக அடையும் விருப்பம். மாசு = குற்றம். கழீஇ = கழுவி, களைந்து. நகை மொழி நிலை = Humour.

1. மன்னு = நிலைபெற்ற. தொல்புகழ் = பழமையான புகழினை யுடைய. தமிழ் மகள் = தமிழாகிய மகள். நடம் இடும் = களிக்கூத்தாடும். வளம் சால் = வளப்பம் அமைந்த. நன்னர் = நன்றாக. காணிய = காணுதற்பொருட்டு. எற்கு = எனக்கு பன் அரும் = சொல்லுதற்கரிய. மாணவன் = மாணாக்கன்; ஈண்டு மாணவன் என்றது இங்குக் குறிப்புரை எழுதிவரும் எளியேமை.

2. பொங்கும் = அலையெழும். மாக்கடல் = கரியகடல். இறை = இறைக்கும். திரைக்கை = அலையாகியகை. முத்தம் பொலிய = முத்துக்கள் போல விளங்க. பொலிய = ஈண்டு உவமவுருபு. எங்கணும் = எவ்விடத்தும். தன - தன்னுடைய. நீர்த்துளி = நீர்த்துளிகளை. உலாம் = உலாவும். கரைக்கண் = கரையிடத்து. வளி = காற்று.
இரட்ட = வீச. அவண் = அவ்விடத்தில். தகும் = தக்க. மகிழ்சிறந்து = மகிழ்ச்சிமிக்கு.

3. வெள்ளைக்காரர்கள் = ஐரோப்பியர்கள். உல்லாசக் கள் = மகிழ்ச்சியைத் தரும் மதுபானம். அருந்திய = உண்ட. படைஞர் = Soldiers. கவின் உற = அழகு பொருந்த. எள்ளினும் = இகழ்ந்தாலும். பிறர் எள்ளினும் என்று மாற்றுக. எண்ணுகிலா = பொருட்படுத்தாத. கொள்ளிவாய்ப்புகைச் சுருட்டினர் = கொள்ளிக்கட்டையை
வாயிற் கொண்டதுபோலும் புகையிலைச் சுருட்டையுடையவர். அவண் = அங்கு குழும = கூட.

    அன்னந் தாமென வருநட மஞ்ஞைக ளென்னப்
    பன்னும் பாவல ருவமைகள் பாரினிற் றமையே
    துன்னு மென்றுதம் மேனியின் றோற்றநற் பொலிவாற்
    சொன்ன வாங்கில மாதர்க னாயிடைத் துறும்; (4)

    வெண்ணி றத்தினின் மிளிர்தரு மேனியு முடையு
    நண்ணு கிற்றலாற் கல்வியி னலங்களா னினிய
    பண்ண வின்னிசைப் பாட்டினாற் பரிவுடை மையினாற்
    பெண்ணென் பெற்றியாற் கலைமக ளாரெனப் பிறங்க; (5)

    ஆந்தி ரம்பயில் யார்களோ டரியபைந் தமிழ
    ரேந்து கன்னடம் பேசுந ரெவற்றையு மூக்காற்
    சேர்ந்தி சைத்திடு மீமிசைச் சிகைமலை யாளர்
    போந்து தாந்தனித் தனிக்குழாங் கூடுபு புகுத; (6)

    தூண்டிற் கையினர் வலைஞர்கள் வீசுபு தோன்ற
    நீண்ட தாடியர் குஞ்சியில் சிரத்தினர் நெருக்க
    வேண்டு மெய்யெலாந் தொளைசெய்து பலவணிமேற்கொண்
    டாண்டுப் பன்னிறத் தரிவைய ரகமுவந் தடைய ; (7)

4. அன்னம் = அன்னப்பறவை. வெள்ளுடையணிந்து வெளிய நிறத்துடன் செல்லும் மேனாட்டு மாதர்கட்கு உவமை. அருகடம் = அரிய நடனத்தைச் செய்யும் மஞ்ஞை = மயில். தமது கூந்தலை விரித்துச் செல்லும் மணமுடிக்காத ஐரோப்பிய மாதர்கட்கு உவமை. பாவலர் = கவிஞர். துன்னும் = பொருந்தும். பொலிவு = அழகு
சொன்ன = சிறப்பாகச் சொல்லப்பட்ட. ஆங்கில மாதர்கள் = English Ladies. ஆயிடை = அவ்விடம். துறும = நெருங்க.

5. இஃது சிலேடையுவமை. கண்ணுகிற்றல் = பொருந்துதல். நலம் = அழகு பண்ண = பண்ணையுடைய. பரிவு = அன்பு. பெற்றி = தன்மை. வெளியமேனியும் வெளிய உடையும் பொருந்தியதால். கல்வியுடைமையால், இசைப்பாடல்களை யிசைத்தலான் அன்புடனிருத்தலால், பெண்ணாந் தன்மையால் இவர்கள் கலைமகளை
யொத்தனர் என்க. கலைமகளார் = சரஸ்வதி. ஆர் = சிறப்புபற்றிய விகுதி. பிறங்க = விளங்க.

6. ஆந்திரம் பயில்வார்கள் = தெலுங்கு பேசுபவர்கள். அரிய = இது தமிழுக்கு அடைமொழி. ஏந்து = உயர்ந்த. கன்னடம் = கன்னட பாஷை. பேசுநர் = பேசுபவர் எவற்றையும் = எவ்வெச் சொல்லையும். மூக்காற் சேர்ந்திசைத்திடும் = மூக்கொலியொடு சேர்த்துச் சொல்லும்; with nasal twang. மீமிசைச் சிகை = உச்சிக் குடுமியை யுடைய. மலையாளம் பேசுபவர்க்கு இம்மூக்கொலி யியல்பு. போந்து = வந்து. தனித் தனிக் குழாம் = தனித்தனியே வெவ்வேறான கூட்டங்கள். கூடுபு - கூடி. புகுத - சேர.

7. தூண்டில் = மீன் பிடிக்குங்கோல். வலைஞர்கள் = வலைகளையுடைய செம்படவர்கள். வீசுபு = வீசி. நீண்டதாடியர் குஞ்சியில் சிரத்தினர் = மகம்மதியர்கள் குஞ்சி = குடுமி. மெய்யெலாம் பல தொளை செய்து, பல அணிகளை யணியும் வழக்கம் மகம்மதிய மாதர் முதலியோரிடத்துண்டு. பல் நிறத்து அரிவையர் = பல வேறு
நிறங்களை யுடைய மாதர்கள். அகம் உவந்து = மனங்களித்து. அடைய = சேர.

    வேலைக் காரர்கள் கலஞ்சென்று மீளவல் லிருப்புப்
    பாலத் தோவிலாப் பண்டிகள் பற்பல போத
    ஞாலத் தாருயிர் யாவையு நனிமகிழ் தருமம்
    மாலைக் காலமின் புறும்படி வயங்கிய தன்றே. (8)

    அந்த வேளையி லாழ்கட லகத்தொரு நாவாய்
    வந்து கொண்டிருந் ததனைப்பன் மாந்தர்கள் கண்ணுற்
    றுந்து முண்மகிழ் வொடுமவ ணுரைநயந் துலவித்
    தந்த நண்பர்க டம்மொடுக் குலாய்க்களி தந்தார். (9)

    நவிலு மப்புகைக் கலனுநம் பட்டின நண்ணக்
    கவினு றப்பொவிந் தனர்சில காரிகை மார்கள்
    சவிபெ றீஇத்திகழ் தந்தசின் மடந்தையர் முகங்க
    ளுவகை பொங்கின முவைகண்ட யாங்களு முடனே. (10)

    போந்த கப்பலு நின்றது புரிந்துபல் படவு
    மாந்த ரேற்றியும் வண்பொரு ளேற்றியு மாண்பிற்
    சூழ்ந்து லாவுபு வருதல்காண் டோகைய ரெழிலி
    யார்ந்து வானுறக் கண்ணுறு மணிமயி லானார். (11)

    யாண்டு நோக்கினு மின்பொளிர் முகங்களே கண்டேம்
    பூண்டு நன்மகிழ் பூத்தனம் யாங்களும் புகழ்ந்தேங்
    காண்டற் கெட்டருங் கடவுளார் படைப்பினுட் கருத்து
    மேண்ட வாவின்ப மேகொலோ வெனவெண்ணி னேமால். (12).

----
8. வேலைக்காரர்கள் - துறைமுகத்து வேலை செய்பவர். கலம் - மரக்கலம். மீள - திரும்ப. வல் இரும்புப் பாலம் - வலிய இரும்பா னியன்ற பாலம். ஓவிலா - நீங்காத. பண்டி - வண்டி. போத - செல்ல. ஞாலம் - உலகம். நனிமகிழ்தரும் - மிக மகிழும். வயங்கியது - விளங்கியது. அன்று ஏ - அசைகள்.

9. கடலகத்து - கடலிடத்தே. நாவாய் - மரக்கலம். மாந்தர்கள் - மனிதர்கள். கண்ணுற்று - கண்டு. உந்தும் - வளரும். உண்மகிழ்வு - உள்ளக்களிப்பு. உரை நயந்து உலவி - விரும்பிப் பேசி யுலாவி. குலாய் - குலாவி.

10. நவிலும் - சொன்ன. புகைக்கலன் - Steamer. பட்டினம் - Harbour. நண்ண - நெருங்க. கவின் - அழகு. பொலிந்தனர் - விளங்கினர். காரிகைமார்கள் - மாதர்கள். சவி - ஒளி. பெறீஇ - பெற்று. திகழ்தந்த - விளங்கின (முற்று). உவை - அவற்றை. யாங்களும் உடனே உவகை பொங்கினம் என்க.

11. போந்த - வந்த. பிரிந்து - விரும்பி. மாண்பு - மாட்சி. புரிந்துகாண் எனக் கூட்டுக. தோகையர் - மயில்போன்றமாதர். எழிலி - மேகம். ஆர்ந்து - நிறைந்து. வன்உற - ஆகாயத்திற்பொருந்த. கண்ணுறும் - காணும். அணிமயில் - அழகிய மயில். ஆனார் -ஆயினர்; போன்றனர். மேகங்காண் மயில்போன்றனம்
என்றபடி.

12. யாண்டு - எவ்விடத்தும். இன்பு ஒளிர் - மகிழ்ச்சி விளங்கும். மகிழ் பூண்டு - மகிழ்ச்சி கொண்டு. பூத்தனம் - முகமலர்ந்தனம். காண்டற்கு - அறிதற்கு. எட்ட அரும் - எட்டுதற்கு அரிய. கடவுளார் - 'ஆர்' சிறப்பு விகுதி. படைப்பு - சிருஷ்டி. கருத்து - அபிப்பிராயம். எண் தவா இன்பம் - வலிமை நீங்காத மகிழ்ச்சி; மிக்க
இன்பம், எண்ணினேமாய்ப் புகழ்ந்தேம் என்க.

    மக்கள் யாவரு மகிழ்தால் கருதியே மகிமை
    தொக்க பேரருட் கடவுளார் கடலினைச் சூழ்ந்து
    தக்க தோரின்பப் பெருந்தனிக் கருவியாத் தந்தா
    ரிக்க ருத்தினை யுணர்கிலா ரென்கொலோ வழிதல்? (13)

    என்ற வென்மொழி கேட்டவென் னினியமா ணவனு
    நன்று நன்றஃ தேயென நயந்தன னம்ம
    தன்ற னின்மனத் தினுமிந்தத் தனிக்கருத் துதித்த
    தென்றிவ் வுண்மையோர் பாவினி லிசைப்பலென் றுரைத்தான்.

    ஒருவிகற்ப நேரிசை வெண்பா

    "ஓவாது நீமகிழ்த லுற்றுணர்ந்து மாகடலே
    யாவா வநேக ரருந்துயர்க்கா - ளாவாரா
    றேவாதி தேவன் றிருமுறையின் பண்பறியார்
    சாவார்பார் தீதென்று தாம். (15)

    கலிநிலைத்துறை

    இவ்வெண் பாவென செவித்துணை யெய்தலு மினிய
    செவ்வி வாய்ந்தநல் லமிழ்தெனச் சிறந்துளங் களிப்ப
    வவ்வி டத்தொரு கலம்புறத் தகன்றிடக் கண்ட
    நவ்வி நேர்விழி மாதரார் நலந்தொலைந் தழுதார். (16)

    அழுத வக்குரல் கேட்டனம் பதைத்தன மந்தோ
    லெழுது மோவிய மெனுமிந்த மகளிர்க ளினைதல்
    பழுது மற்றிதன் காரணம் யாதெனப் பரிந்து
    முழுது முய்த்துநோக் குழிச்சில முதுமொழி மாக்கள். (17)

--------
13. மகிழ்தரல் = களித்தல். மகிமை தொக்க = பெருமை கூடிய. பேரருட் கடவுளார் = மிக்க அருளினையுடைய பகவான். சூழ்ந்து = உலகத்தைச் சுற்றி. இன்பப் பெருந்தனிக் கருவி = இன்பம் அளித்தற்குக் காரணமான பெரிய ஒப்பற்ற கருவி. உணர்கிலார் = அறியாதவர். அழிதல் = மனம் வருந்துதல்

14. நயந்தனன் = விரும்பினன். அம்ம = உரையசைச் சொல். தன்றன் = தன்னுடைய இன்மனம் = இனிய மனம். தனிக் கருத்து = நிகரற்ற அபிப்பிராயம். உதித்தது தோன்றியது. பா = பாட்டு. இசைப்பல் = கூறுவேன்.

15. ஓவாது = நீங்காது, எப்பொழுதும். நீ மகிழ்தல் = நீ களித்தல். உற்று உணர்ந்தும் = உற்றுநோக்கி யறிந்தும். மாகடலே = பெரிய கடலே. ஆஆ = இரக்கப் பொருட்டு. துயர்க்கு ஆள் ஆவார் = துன்பத்தின் வசமாவார்; துன்புறுவர். என்றபடி. ஆல் = ஆசை. திருமுறை = சிருஷ்டிக்கிரமம். பண்பு = தன்மை. அறியார் =
அறியாராய். பார் தீதென்று தாம் சாவார் = உலகம் பொல்லாது என்று மன மழிவார்.

16. என = என்னுடைய. செவித்துணை = இரு செவியினும். எய்தலும் = சேர்தலும். செவ்வி = சுவை. கலம் = மரக்கலம். புறத்து அகன்றிட = பட்டினத்தை விட்டுப் பயணமாக வெளியே செல்ல. நவ்வி = மான். நலம் = களிப்பு.

17. ஓவியம் = சித்திரம். இணைதல் = வருந்துதல். பரிந்து = விரும்பி. உய்த்து நோக்குழி = அறிவைச் செலுத்தி யாராயுமிடத்து. முது மொழி மாக்கள் = பழம் பேச்சாளிகள்.

    நுந்த மாருயிர்த் தலைவர்க ணுமையிவண் விடுத்துத்
    தந்த நற்றொழி றலைக்கொண்டு புகைக்கலஞ் சார்ந்தா
    ரிந்தத் தீமையே மிக்கதோ ரியல்புடை யுலகி
    னிந்து வாணுத லீரிது துந்தலை யெழுத்தே; (18)

    அம்ம நையலி ராருளம் பதைக்கலி ரயரீர்
    நம்ம முற்பவத் தீவினை நமைவந்து நலியு
    மிம்மை யாஞ்செயு மெச்செயல் களுமதன் பயனே
    செம்மை மாதரீர் சிந்தையிற் றெளிமினோ வென்றார். (19)

    உரைத்த வாசகங் கேட்டலு மொய்யென யானுஞ்
    சிரித்து நின்றனெ னதுகண்ட மாணவன் றெளியான்
    றிருத்த முற்றிலா னென்னைகொ லிவர்மொழி செறிந்த
    கருத்து மென்கொலோ கட்டுரை மின்னெனக் கழற. (20)

    ஐய மாணவ யான்சொல லன்பினிற் கேண்மோ
    செய்ய வாருயிர்ச் செயலெலாஞ் செய்வினைப் பயனே
    லுய்யு மாறிலை யுய்த்துணர் வாயிதை மைந்த
    மையல் கொண்டுநீ மயங்கலை வாய்மையை யறிதி. (21)

    ஈது நல்லது மற்றது தீயதா மென்ன
    யாதை யாயினுங் கேள்வியின் மட்டுநீ யியம்பே
    லீது மெய்யன்றே லெழுதிவை யாரென வெண்ணே
    லாதி தொட்டிஃ தைதிக மாமென நம்பேல். (22)

---------
18. நும்தம் = உங்கள். உயிர்த் தலைவர் = பிராண நாயகர். இவண் = இங்கு தலைக்கொண்டு = மேற்கொண்டு. இந்து வாணுதல் = பிறைச்சந்திரன் போன்ற ஒளியுள்ள நெற்றி. தலை எழுத்து = பிரமன் அவரவர் அநுபவிக்க வேண்டியதைத் தலையில் எழுதுவதாக நம்மவர் கூறுவர்.

19. அம்ம = முன்னிலையசை. நையலிர் = வருந்தாதீர். ஆர் உளம் = அன்பு நிறைந்த உள்ளம். பதைக்கலீர் = கலங்காதீர். முற்பவம் = முற்பிறப்பு. நலியும் = வருத்தும். இம்மை = இப்பிறப்பில். அதன் = முன்செய்த தீவினையின். பயன் = காரியம். தெளிமின் = தெளியுங்கள்.

20. ஒய்யென = விரைந்து. திருத்தம் = திருந்திய அறிவு. என்னை கொல் = யாதோ. செறிந்த = பொருந்திய. கட்டுரையின் = விளக்கி யருளுங்கள். கழற = சொல்ல.

21. அன்பினில் = அன்புடன். கேண்மோ = கேட்பாயாக. உயிர்ச்செயல் = உயிரினது செய்கை. உய்யுமாறு = பிழைக்கும் விதம். இலை = இல்லை. உய்த்து உணர்வாய் = அறிவைச் செலுத்தி அறிவாய். மைந்த = மாணவ (விளி) மையல் = மயக்கம். மயங்கலை = கலங்காதே. வாய்மையை அறிதி = உண்மையை அறிவாய்.

22. கேள்வியின் மட்டும் = பிறர் கூறக் கேட்பதான் மாத்திரம். இயம்பேல் = பேசாதே. மெய் அன்றேல் = உண்மையில்லாவிடில். ஆதி தொட்டு = பண்டைக் காலமுதல். ஐதிகம் = பழங் கொள்கை.

    உலகிற் பற்பலர் நம்பலா னுண்மையென் றுணரே
    லிலகு மோருவ மானத்தி னெதையிமேற் கொள்ளே
    லலகின் றாய்விரிந் ததிசய மாய்விளங் கிடலா
    னலதெ னாவதை நம்பலை நயந்தறி குதியால். (23)

    மெய்ம்மை யாளன்சொன் மென்மையாற் பொய்யெனத் தோன்றப்
    பொய்ம்மை யாளன்சொல் வன்மையான் மெய்ம்மையே போலு
    மெம்மொ ழிக்கணும் யாவர்தங் கூற்றையு மினிது
    தம்ம னத்தினிற் றகவுற வாய்குநர் தக்கோர். (24)

    ஆத லானென தன்புடை மாணவ வன்னா
    ரோதி னாரென வுண்மையை யுணர்தலின் றுரையே
    லேதை யெவ்வெவ ரியம்பினு மதன்கண்மெய்ப் பொருளை
    நீதி ருத்தமாக் காண்டலே நேரென நினைத்தி. (25)

    அன்னர் சொற்படி யாருயிர்ச் செயலெலா மந்த
    முன்னை யேய்வினைத் தொகுதியின் பயனென மூளு
    மென்ன யாங்கொளி னெய்துறு பிழைகளு மிவையாற்
    றுன்னு மந்தமுற் பவவினை யதற்குமுன் றொடரும். (26)

    அதுவு மந்தமுற் பிறப்புக்கு முற்பிறப் பவாவு
    மதன்க ணாருயி ரகப்படு மெனிலதற் குய்வெவ்
    விதத்தி னாகுமோ வொருமுறை தவறுபு விளங்கா
    மதிம யக்கினான் வீழ்ந்தபின் வாழ்வதற் குண்டோ? (27)

-----------
23. உபமானத்தின் - திருஷ்டாந்தத்தால். மேற்கொள்ளுதல் - ஒப்புதல். அலகு - அளவு. நலதெனா - நல்லதென்று. நயந்து - நீதியுணர விரும்பி.

24. cf. "மெய்யுடை யொருவன் சொலமாட்டாமையாற் பொய்போலும்",
"பொய்யுடை யொருவன் சொல்வன்மையான் மெய்போலும்" (நறுந்தொகை.)

மொழிக்கணும் - வார்த்தையிடத்தும். கூற்று - பேச்சின் கருத்து. தகவு உற - தகுதிபொருந்த. ஆய்குநர் - ஆராய்பவர்.

25. உணர்தலின்று - அறிதலின்றி. ஏதை - எதனை. எவ்வெவர் - யார் யார். திருத்தமா - உள்ளவாறு.நேர் - சரி.

26. அன்னர் - முதுமொழி மாக்கள்.

27. ஏய் - பொருந்திய. தொகுதி - கூட்டம். மூளும் - சேரும். பிழை - தவறு. இப்பிறப்பிற் செய்யும் தீவினை -முற்பிறப்பின் தீவினைப் பயன் என்று கொண்டால், அப்பிறப்பின் தீவினை அதற்கு முற்பிறப்பின் தீவினைப் பயனாம். அஃது அதற்கு முற்பிறப்பின் காரியமாம். அவாவும் - சேரும். அதன்கண் - அத்தீவினையின் பால். உய்வு - தப்பிப் பிழைத்தல்; ஈடேறுதல். தவறுபு - தவறி. விளங்கா மதிமயக்கு - பேதைமையாலுண்டாகும் மயக்கம். வீழ்ந்தபின் - அத்தீவினையில் அகப்படின். வாழ்வு - ஈண்டுத் தீவினையி னின்றும் விலகி ஈடேறுதல்.

    இப்பி றப்பினில் யாஞ்செயும் வினைகளின் பயனே
    பிற்பி றப்பினி னாநல்ல வழியினிற் பெயர்ந்து
    தப்பி யுய்யவொட் டாதுநந் தமசெய றகைக்கு
    மப்பி றப்புறு செயல்களு மன்னவா மதன்பின்; (28)

    தீய செய்தன தீயவே செய்குபு செலுமா
    லாய வவ்வழி விடுத்தவை யயற்புறத் தகலா
    மேய நற்செயல் செய்தன மேலவை விரும்பு
    மேய வில்வழி விடுத்திவை யெங்கணு மியங்கா. (29)

    வினையெ னுஞ்சுழற் பட்டவா ருயிரெலா மீட்டு
    நினைவு நல்லன மேவியச் சுழலினி னீங்கித்
    துனைவின் மேதக வெய்துவான் கருதிய தொல்லோர்
    புனைவி னல்கிய நீதிநூல் யாவையும் பொருந்தா. (30)

    மக்க டம்பழ வினைகளின் பயனென வந்து
    புக்க குற்றத்தின் பொருட்டந்த மக்களைப் புடைத்த
    லெக்க ருத்தினா னேரிதா மியம்புதி யொறுத்த
    றக்க தன்றெனி லுலகினிற் றகைமையு மின்றாம். (31)

-----------
28. பிற்பிறப்பு = இனிவரும் பிறப்பு. பிறப்பினில் நாம் என்று பிரிக்க. நல்ல வழி = சன்மார்க்கம். பெயர்ந்து = மீண்டு. தகைக்கும் = தடுக்கும். அம்மறுபிறப்பிற் செய்யுந் தீவினைகள் அதன்பிறகு உண்டாம் பிறப்பிலும் நல்ல வழியிற் செல்ல வொட்டாமற் றடுக்கும். அன்னவாம் = அத்தகுதியுடையவாம்.

29. செய்குபு = செய்து. கு சாரியை. அயற்புறம் = தீவினையின் அயலதாகிய நல்வினையில். தீவினை செய்த ஆன்மா அவ்வினை வயப்பட்டுத் தீவினையே செய்து போகும்; அங்ஙனமே நல்வினை செய்தது நல்வினையே செய்து செல்லும். இவ்வழி = இம்மார்க்கத்தினை. எங்ஙணும் = வேறெவ்விடத்தும். இயங்கா = செல்லா

30. சுழல் = நீர்ச்சுழி. பட்ட = அகப்பட்ட. நினைவு நல்லன = நல்லனவாகிய எண்ணங்கள். மேவி = பொருந்தி. துனையு = விரைவு. மேதகவு = மேன்மை. எய்து வான் = அடையும்பொருட்டு. தொல்லோர் = பழைய ஆசிரியர். புனைவின் = அழகாக. நல்கிய = கொடுத்த. புனைவின் நல்கிய = செய்து கொடுத்த எனினுமாம். நீதி நூல் =
திருக்குறள் முதலியவை. ஆன்மா, வினை வயப்பட்டுத் தீவினை செய்தது தீவினையையே செய்துகொண்டும், நல்வினை செய்தது நல்வினையையே செய்து கொண்டுஞ் செல்லுமாயின், நீதி நூல்களால் ஆன்மாக்கட்கு உண்டாகும் பயன் யாதொன்று மில்லை என்றதாம்.

31. பழவினை = முற்பிறப்பின் வினை; ஊழ். புக்க = உண்டான, ஆன்மா செய்த என்றபடி. முற்செய்த தீவினை வயப்பட்டஆன்மா அதன் பயனாக வோர் குற்றத்தைச் செய்யுமெனின், அக்குற்றத்தின் பொருட்டு அவ்வான்மாவைத் தண்டித்தல் நேரிதன்று என்றபடி. புடைத்தல = ஒறுத்தல், தண்டித்தல். நேரிதாம் = நியாயமாகும். இயம்புதி = கூறுவாய். தக்கதன்று = நியாயமன்று. தகைமை = தகுதி. ஒருவன் ஒருவனைக் கொலை செய்தால், கொலை செய்தமையும் கொலையுண்டமையும் ஊழ் வினையால் நிகழ்ந்த வென்று கொள்ளின், அத் தன்வயமற்ற ஆன்மாவிற்குக் கொலைக் குற்றஞ் சாட்டிக் கொலைத் தண்டனை விதித்தல் நியாயமில்லை. உலகிற் செய்யப்படும் ஒவ்வொரு குற்றமும் ஊழ்வினையால் நிகழ்ந்துழித் தன்வயமற்ற ஆன்மாக்களைத் தண்டித்தல் எவ்வாற்றானும் பொருந்தாதாம். ஆகவே நீதிநூல்களும் நீதி மன்றங்களும் உலகிற் றேவையேயில்லையென்று முடியும். இம்முடிவு தகுதியற்றதே.

    தரவுகொச்சகக் கலிப்பா

    அற்றேற் பழவினைக ளவ்வவ் வுயிர்களைத்தாம்
    பற்றாவோ கூறுமினிப் பாருலகி னெங்குருவே
    யெற்றேனு மிவ்வுண்மை யான்றிதல் வேட்டேனாற்
    கற்றோர்தங் கோவே கனிவாய் மலர்கவென்றான். (32)

    கலிநிலைத்துறை

    தொல்லைச் செய்வினை யாவையு நமைவந்து தொடரும்
    வல்லை யென்பது வாய்மையே மற்றவை நந்தம்
    வல்ல நம்மனந் தமைத்தம வழிகளிற் றிருப்ப
    லொல்லு மென்பது போலிவா சகமென வுணர்தி. (33)

    இன்ன நாட்டினி லின்னவூ ரினிவின்ன பெயரி
    லின்னர் தாய்தந்தை மார்களு மின்னர்சோ தரரு
    மின்ன ளில்லறக் கிழத்தியு மாவின்ன குலத்தி
    லின்ன வாழ்க்கையி லிருக்கெனப் பழவினை யிருத்தும். (34)

    அன்றி நம்மனத் துதித்திடுங் கருத்தினை யந்தத்
    துன்று செய்வினை மாற்றுவ வல்லவென் றூய
    நன்றி யேயொரு வடிவென நண்ணுமா ணவனே
    யென்று கூறலு மிளநகை யரும்பினன் மாதோ. (35)

    உள்ள நூற்புல வோர்களு முரைத்தன ரிதையே
    மெள்ள மெள்ளவெப் பொருள்வந்து மயக்கினும் வியந்த
    வுள்ள மப்பொருள் விழைதலும் விடுத்தலும் முரைத்த
    லுள்ளு மாருயிர்ச் செயலென வுணர்தியென் மைந்தா. (36)

--------
32. அற்றேல் - -அங்ஙனமாயின். பழவினை -விதி, ஊழ். உயிர்களை - -ஆன்மாக்களை. பற்றாவோ - -பிடியாவோ. இப்பாருலகிற் பற்றாவோ என்க. குரு –ஆசாரியன். எற்றேனும் -எவ்விதத்தானும். வேட்டேன் - -விரும்பினேன். கோ -தலைவன். கனிவாய் - -கனியனையவாய். வாய் மலர்தல் - -பேசுதல்.

33. தொல்லைச் செய்வினை - -பழவினை. வல்லை -விரைவில். வாய்மை - - உண்மை. வல்ல - -வன்மையுடைய. தம - -தம்முடைய. ஒல்லும் - -கூடும். போலிவாசகம் - -பொய்ம்மொழி. உணர்தி - -உணர்வாய்.

34. இன்னர் - -இன்ன தன்மையினர், இன்னவர், இவர் என்றபடி. சோதரர் - - சகோதரர். இல்லறக் கிழத்தி - -மனைவி. இருக்க என - -இருப்பாயாக என்று. இருத்தும் - -அமைக்கும்.

35. கருத்து - எண்ணம். துன்று - -பொருந்திய, நெருங்கிய; ஆன்மாவைப் பற்றிய என்றபடி. மாற்றுவ அல்ல - -மாற்றும் தன்மையுடையனவில்லை. நன்றி - நன்மை. இளநகை - -புன்னகை. மா து ஓ - -அசைகள்.

36. உள்ள நூல் - -Mental Science. புலவர் - -அறிஞர். வியந்த - -வியப்பினால் ஈடுபட்ட. விழைதல் - -விரும்புதல். விடுத்தல் - -வெறுத்தல். உள்ளும் - -கருதும். உயிர்ச்செயல் - -உயிரின் செய்கை.

    அயிர்க்கும் புந்தியி னடைந்தவிவ் வையுற வகற்றி
    மயக்க நீங்குதி வாய்மையி னொளிதவ மேவி
    யுயிர்க்குத் தன்வய விழைவுள தெனலுண்மை யுதனாற்
    செயிர்க்கு மக்களை பொறுத்திடல் செவ்விதா மன்றே. (37)

    மனிதன் வேட்கையிற் றன்வயம் வாய்ந்தவ னதனா
    னினிய நற்செய லின்னவென் றறிந்தவை புரியி
    னனிசி றந்தவ னயப்புக ழுடையனாம் பொல்லாத்
    துனிய தீச்செய லுஞற்றிடிற் றுயரமுற் றிழிவான். (38)

    இச்சொற் கேட்டவென் மாணவ னின்பமா ருளத்த
    னிச்சை கொண்டெழுந் தாடின னென்றனை வணங்கி
    மெய்ச்சி நின்றனன் வியந்தனன் மெய்ப்பொருள் பெற்றே
    னச்ச மற்றைய மகன்றனெ னையனே யென்றான். (39)

    தரவுகொச்சகக் கலிப்பா

    இத்துணையி லிதுநிற்க வெற்கிசைந்த மாணவனே
    முத்தமிகக் கொழித்தொலிக்கு முந்நீரைக் காணுதியாற்
    சித்தமிசை மகிழ்சிறந்த சிறியமகா ரெனவோடிப்
    பத்தியொடுந் துதிபாடும் பரமனடி யார்போலும். (40)

    பட்டினத்தி லுள்ளிருக்கும் பனிநீரெல் லாமடக்கப்
    பட்டிருக்கத் தண்கடலிற் பரவுநீ ரலைதருமாற்
    கட்டுச்சிறைக் கோட்டமுளார் கையற்று நிற்பமற்றோ
    ரொட்டுதுய ரொன்றுமின்றி யோடியெங்குந் திரிவரன்றோ? (41)

---------
37. அயிர்க்கும் -சந்தேகமடையும். புந்தி -புத்தி. ஐயுறவு -சந்தேகம். வாய்மையின் ஒளி -உண்மையின் பிரகாசம். தவமேவி -மிகப்பொருந்தி. தன்வய விழைவு -ஸ்வாதீகமான விருப்பம். விருப்பமும் வெறுப்பும் ஆன்மாவுக்குச் சொந்தமான இயல்புக் குணங்கள். உதனால் - அதனால். செயிர்க்கும் -குற்றம் புரியும்.
ஒறுத்திடல் -தண்டித்தல். செவ்விது -தக்கது. அன்று, ஏ -அசைகள்.

38. வேட்கை -விருப்பம். தன்வயம் -ஸ்வாதீநம். வாய்ந்தவன் -உடையவன். இன்ன -இவை. புரியின் -செய்தால். நனி -மிக.நயப்புகழ் -நல்ல புகழ்; நியாயமான புகழ். துணிய -துன்பத்தைச்செய்யும். உஞற்றிடில் -செய்யின். இழிவான் - மேல் நிலையினின்றும் இழிநிலை யடைவான்.

39. இன்பம் ஆர் -இன்பம் நிறைந்த. இச்சை -அன்பு. மெய்ச்சி -புகழ்ந்து. மெய்ப்பொருள் - உண்மைப்பொருள். ஐயம் அகன்றனென் -சந்தேகம் நீங்கப் பெற்றேன்.

40. இத்துணை - இவ்வளவு. இது - ஊழைப்பற்றிய ஆராய்ச்சி. எற்கு - எனக்கு. முத்தம் - முத்து. கொழித்து -சிதறி. ஒலிக்கும் - ஆரவாரிக்கும். முந்நீர் - கடல்; ஆக்கல், அளித்தல்,அழித்தல் என்னும் மூன்று தன்மைகளை யுடையதாதலின் - இதற்கு இப்பெயர் என்பர் நச்சினார்க்கினியர். காணுதி - காண்பாய். சித்தமிசை -மனத்தில். இனிச் சித்தம் இசை எனவும் ஆம். சிறிய மகார் -இளங்குழந்தைகள். பரமனடியார் -சிவனடியார்.

41. பட்டினம் -Harbour. பனிநீர் - குளிர்ந்த நீர். அடக்கப்பட்டிருக்க - நாற்புறமும் அணைகளாலும் கரையாலும் சூழப்பட்டு அலைவின்றி அடங்கியிருக்க; தண்கடல் - குளிர்ந்த கடல். பரவு நீர் -விரிந்த நீர் அலைதரும் - அலைவீசும்.

    ஆழ்ந்தகருத் தாளரெலா மடக்கமுடை யோராவர்
    தாழ்ந்திருந்தார் தமக்கொன்றுந் தாழ்விலையா மாறுநிறீஇச்
    சூழ்ந்துவளை மதிலுடைய துறைமுகத்துட் புவன்முழுது
    மோய்ந்தொடுங்கி நிற்பதனை யுற்றுணர்தி மாணவனே. (42)

    உடல்சிறிய ராயிடினு முள்ளடங்கி னோர்தமையே
    விடுதலின்றி நாணாளு மேவியணு குவர்மாந்தர்
    கடல்வெளியி னில்லாது கலங்களெலா முட்புகுந்து
    படர்வெளிய பட்டினத்தின் பாலடைந்து தங்குவவால். (43)

    கலிவிருத்தம்.

    பூவொடு சேர்ந்து பொருந்திய பிணைநார்
    மேவிடும் வாசம் விரும்புறும் விதமாப்
    பாவிய வாரி பயின்றலை புனலுந்
    தூவிய லார்ந்து துறைத்தலை யமையும். (44)

    தரவுகொச்சகக் கலிப்பா

    நல்லோரை நண்ணினரு நல்லோரே யாவதுபோ
    லெல்லோனைச் சேர்ந்தபொரு ளெல்லினொளி யேய்வதுபோ
    னில்லாது பேலொலிசெய்ந் நீள்கடலு னீர்துறைபோய்ச்
    செல்லாது தானமையுஞ் சீர்காண்டி மாணவனே. (45).

-----
கட்டு - -கட்டப் பெற்ற. சிறைக் கோட்டம் - -சிறைச்சாலை. கையற்று - -செயலின்றி. ஒட்டு - -சார்ந்த.

42. கருத்து - -எண்ணம். அங்ஙனம் தாழ்ந்திருந்தவர் என்க. தாய்வு இலை - - குறைவு இல்லை. cf. "தாழ்ந்தோருயர்வர்" - (பிரபுலிங்கலீலை) ஆறு - -விதம். நிறீஇ - நறுவி; ஸ்தாபித்து. மதில் - ஈண்டு Pier. புனல் - -நீர்.

43. உள் அடக்கினோர் - மனம் அடங்கப் பெற்றவர்.

cf. "உருவுகண்டெள்ளாமை வேண்டும்." - - (திருக்குறள்)

நாள் நாளும் - -தினமும். அணுகுவர் - -சேருவர். கடல் வெளி - -கடற் பரப்பு. கலம் - -மரக்கலம். படர்வு எளிய - -செல்லுதற்குச் சுலபமான. பட்டினத்தின்பால் - துறைமுகத்தில். துறைமுகத்தில் மதிலு (Pier) க்குட்பட்ட நீரில் அலையிராது; புறம்பான இடங்களில் அலை வீசும் என்பது பார்க்குநர்க்குப் புலனாம்.

44. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். பிணை - -மலர்களைப் பிணைக்கும், கட்டும். வாசம் - -வாசனை. விரும்புறும் விதமா மேவிடும் என்க. பாவிய - -பரந்த. வாரி - -கடல். தூஇயல் - -தூய இயல்பு. ஆர்ந்து - -நிறைந்து. துறைத்தலை - -துறையிடம். அமையும் - -அடங்கும்.

45.எல்லோன் - -சூரியன். எல்லினொளி - -சூரியப் பிரகாசம். நீர் துறையின் கட்சென்று அமையும் என்க. சீர் - -சிறப்பு. தத்குணம்.

    சென்னைமக ளருள்கூர்ந்து செவ்விமுக மலர்ந்தொளிரத்
    தன்னிரண்டு கைகளையுந் தாய்குழவி யணைப்பதுபோன்
    முன்னிரையுங் கடனோக்கி மொய்த்துவருந் திரைவிலக்கி
    நன்னர்வளைக் குபுகலங்க ணயந்தணைத்தல் காணுதியால். (44)

    வஞ்சிவிருத்தம்

    என்றன் மாணன னேரிரு
    டுன்று கின்றது தோமிலீர்
    சென்று சேர்குவம் வம்மினோ
    வென்றி யம்பலு மேகினேம். (47)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    விண்ணகத்து நின்றுமிளிர் மீன்கணத்தி னொளியானும் விளங்கு நாவாய்க்
    கண்ணிருக்கும் பலவிளக்கத் தொளியானும் பட்டினத்தைக் கடந்து சென்னை
    நண்ணுதெருக் கடைகுறுகு மனவிலெமை யவணிறுவி நடுக்க பாடங்
    கண்ணில்கடு மொழியனடைத் தரைமணிமேற் புகைச் சகடங் கடுகிற் றம்மா.

    கலிவிருத்தம்

    அவ்வண மருங்கத வடைத்து நின்றனர்
    செவ்விய கட்குடிச் செருக்கு வாய்ந்தவர்
    கௌவிய விதழினர் கடைதி றந்தன
    ரவ்வழி யவரரு ளடைந்து போந்தனம். (49)

----------
46 சென்னை மகள் = சென்னையாகிய மகள். அருள் கூர்ந்து = கருணைமிக்கு. செவ்வி = அழகு. ஒளிர = விளங்க. கைகளையும் நீட்டியென ஒரு சொல் வருவிக்க. தாய் குழந்தையை அணைத்தல் போல, " தாய்முலை தழுவிய குழவி போலவும்" என்ற பட்டினப் பாலையடி இவ்வுவமையைத் தந்தது போலும். துறைமுகத்தின்
இருபுறங்களிலும் நீண்டு வளைந்து கடலிற் செல்லும் மதில்களை (Pier)ச் சென்னை மகளின் கரங்களாகக் கூறினர். தற்குறிப்பேற்ற யுவமையணி. முன் = எதிரில். இரையும் = ஆரவாரிக்கும். மொய்த்து = அணியணியாக. திரை = அலை. நன்னர் = நன்றாக. வளைக்குபு = வளைத்து. கலங்கள் = மரக்கலங்களை. நயந்து = விரும்பி.

47. ஏர் இருள் = உண்டாகிய இருள். ஏர்தல் = எழுதல். தோன்றுதல். துன்றுதல் = மிகுதல். தோம் இலீர் = நல்லீர். தோம் = குற்றம். சேர்குவம் = சேர்வோம். வம்மின் = வாருங்கள்.

48.விண்அகத்து = ஆகாயத்தில். மிளிர் = விளங்கும். மீன்கணம் = நக்ஷத்திரக் கூட்டம். நாவாய்க்கண் = மரக்கலங்களில். விளக்கம் = விளக்குகள். தெருக்கடை = தெருவிடம். ஈண்டுக்குறித்தது Beach Road. எமை = எங்களை. அவண் = அங்க. நிறுவி = நிறுத்தி. நடுக்கபாடம் = Level Crossing ல் இட்டிருக்கும் ரெயில்வே
கதவு. கண்ணில் = தாக்ஷண்யமில்லாத; யோசனையில்லாத எனினுமாம். ரெயில் வருவதற்கு அரை மணிக்கு முன்னரே கதவடைத்து ஒருவருங் குறுக்கிட்டுச் செல்லாது அங்கு நின்றமையின் இங்ஙனம் கூறினார். கடுமொழியன் = வெடு வெடுப்பான பேச்சினை யுடையான். புகைச் சகடம் = நீராவி வண்டித் தொடர். கடுகிற்று = விரைந்தது.

49. அவ்வணம் = மேற்கூறிய விதம். செவ்விய = மிகுந்த. கட்குடிச் செருக்கு = மதுபானத்தாலுண்டாம் செருக்கு. கௌவிய இதழினர் = பற்களாற் கௌவிய உதட்டினர். கடை திறந்தனர் = வாயில் திறந்தனர். அவ்வழி = அவ்விதம். அவர் = Gatekeepers. அருள் அடைந்து = கருணையைப் பெற்று. இருவரும் இல்லம்
அடைந்து உணவு கொண்ட பின்னர், ஆசிரியர் இப் 'பட்டினக்காட்சி' யைத்தாம் துயிலு முன்னரே எழுதி முடித்தனர்.
------------

9. மதுரை மாநகர்


[தாய்மொழியாகிய தமிழினை மறந்து செல்வப்பொரு ளீட்டலிலேயே காலம்போக்கி யுழலும் மதுரையாகிய தாம்பிறந்த நகர்க்கிரங்கி யாற்றாது பாடியது]

மதுரைமாநகர்

    நிலைமண்டில வாசிரியப்பா

    உலகமெங்கு மிலகு நகர்பல
    கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயரத்
    தான்மாத் திரையின் வான்மீத் திரியும்
    வளமழை பொய்த்து விளைபொருள் குன்றி
    மயங்குறு காலை வயங்குமேற் றிசையோர் (5)

    மகீதலத் தின்கட் பகீரதன் போலப்
    பேரியா றதனை மாரியு நாணிமெய்
    விளர்ப்ப வையையோ டளவக் கூட்டி
    விளைவெலா மலியுமா விரும்பிச் செயவொளிர்
    மதுரைமாநகரே! மதுரைமாநகரே! (10)

-------------
1. இலகு = விளங்கும். கழிபெரும் = மிகப்பெரிய; மீமிசைச்சொல். செல்வக் கள்ளாட்டு = செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதல். அயர = விளையாட.

    cf. "கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து" (மணி. 6. 102)

3. தான் மாத்திரையின் = தன்னளவில், 'தான்மாத்திரம்' = தான்மட்டும் வான்மீ = விண்மேல். திரியும் = சஞ்சரிக்கும். வனமழை = உலகம் வளம் பெறுதற்குக் காரணமாகிய மழை. மழைபொய்த்து = மழை பெய்யவேண்டிய காலத்திற் பெய்யாமற்போய்.

cf. "வானம் பொய்யாது" - (மணிமேகலை)

4. விளைபொருள் = நெல் முதலியவை. குன்றி = குறைந்து. மயங்குறுகாலை = உலகங் கலக்கத்தை யடைந்தபொழுது. "மாறனும் புலவரும் மயங்குறு காலை." (கல்லாடம் 5 -11) வயங்கு = விளங்கும். மேற்றிசையோர் = மேல் நாட்டினர்; ஈண்டு ஆங்கிலேயரை யுணர்த்திற்று. மகீதலம் = பூமி. பகீரதன் = திலீபன் மகன்; கபில முனிவரின் கோபத்தீயாற் பட்ட தன் முன்னோராகிய சகரரை நற்கதியிற் சேர்த்தற் பொருட்டுக் கடுந்தவம் புரிந்து கங்கையை யிவ்வுலகிற்குக் கொணர்ந்தோன். பேரியாறு = ஓர்யாறு; இஃது பெருமுயற்சி செய்து ஆங்கிலேயர் மதுரை இராமநாதபுரஞ் ஜில்லாக்களின் பாசனத்தின்பொருட்டுக் கொணர்ந்தது. விளர்ப்ப = வெளுப்ப; மாரிதான் தோற்றதால் நாணி மெய்வியர்த்ததென்றது தற்குறிப்பேற்றம். வையை = வைகைநதி. அளவ = கலப்ப. வினைவெலாம் = விளைபொருள்கள் யாவும். மலியுமா = மலியுமாறு; மிகும்படி. ஒளிர் = விளங்கும்.

    செல்வப் பொருளே சிறப்புடைப் பொருளென
    வொல்வகை யுண்மை யுணர்கிலை கொண்டனை.
    அதனை யாக்கும் விதமறிந் தவற்றிற்
    றலைப்பட் டுழலுந் தனிப்பெரு நகரே!
    நிலைப்பட் டிருக்கு நீர்மையெய் தினையோ? (15)

    நினைக்குறித் தந்தோ நினைக்குந் தோறுந்
    துன்ப மிகுந்து சோரு மென்னுளம்!
    இன்ப மீ தூரு மெவர்க்குந் தாந்தாம்
    பிறந்த நகரெனில்; பேசிய விந்நிலை
    யென்னிட மாறிய தென்னைகொல்? அறியேன். (20)

    நின்னிற் பிரிந்து நெடுங்கலை கற்பேன்
    சென்னை போந்துஞ் சிறியனே னுள்ளம்
    பன்னாள் சென்றும் பரிந்து நிற்காண்
    வேட்கை மேவி விரைந்தாண்டு தோறு
    மிருமதி நின்வயி னிருந்தேன். அம்ம! நீ (25)

    யுயர்நிலை தவறி நயமெலாந் தொலைந்து
    வீழ்நிலை யுற்றனை! மேதக்க மதுராய்
    எவன்கொலோ விவ்வா றவநிலை யெய்தினை?
    நச்சிப் பாண்டியர் மெய்ச்சி வளர்த்த
    சங்க மிருந்து பொங்கிய நன்னகர் (30)

---------
11. சிறப்பு உடைப் பொருள் - சிறப்பினையுடைய பொருள்; சிறந்த பொருள். ஒல்வகை -கூடும் விதம்; மனத்திற்கொத்தபடி. உணர்கிலை –உணராமல் (முற்றெச்சம்). அதனை -செல்வத்தை. ஆக்கும் -வளர்க்கும். விதம் -வகை, வழி. தலைப்பட்டு -முதன்மையாய். உழலும் -வருந்தி முயலும். நீர்மை -தன்மை.
எய்தினையோ - அடைந்தனையோ. குறித்து -கருதி. என்னுளஞ் சோரும் என்க. எவர்க்கும் தாம் தாம் பிறந்த நகர் எனின் இன்பமீதூரும். மீதூரும் - மிகும். பேசிய - கூறிய. இந்நிலை - இந்த நிலைமை.

21. நின்னில் -நின்னிடமிருந்து. நெடுங்கலை -காலேஜ் படிப்பு. கற்பேன் - கற்க (முற்றெச்சம்) போந்தும் -சென்றும். பன்னாள் -பல நாள். பரிந்து -அன்புற்று. நிற்காண் வேட்கை உன்னைக் காணும் ஆசை. மேவி -பொருந்தி. ஆண்டு தோறும் - ஒவ்வொரு வருடமும். இருமதி -இரண்டு மாதம். இது கோடைக்கால
விடுமுறை நாட்களைக் குறித்தது. நின்வயின் -உன்னிடம்.

26. நயம் - நியாயம், நன்மை. வீழ்நிலை -இழிந்த நிலைமை. மேதக்க - மேன்மை வாய்ந்த. மதுராய் -மதுரை என்னும் பெயர் விளி ஏற்றது.

28. எவன்கொலோ - ஏனோ. இவ்வாறு -இவ்விதம். அவம் நிலை - பயனற்ற நிலைமை. நச்சி - விரும்பி. மெய்ச்சி -புகழ்ந்து. சங்கம் -முதல் இடை கடையாம் முத்தமிழ்ச் சங்கங்கள். பொங்கிய -மேலோங்கிய; சிறப்புற்ற. நன்னகர் –நல்ல நகரம்.

    மதுரையென் றான்றோர் வகுத்துக் கூறிய
    தெதிர்மறை யிலக்கணை யென்பது பற்றியோ?
    வஞ்சப் புகழ்ச்சியோ? மற்றெனோ? அறியேன்.
    நஞ்செனக் கருதியோ நற்றமி ழமுதைப்
    பேதமை கந்தா மாதுய ருறுவாய் (35)

    பருகலை யதன்சுவைக் குருகலை யிருத்தி?
    மறையெலாம் புகழு மிறையனா ரென்னு
    நறுந்தமிழ்ப் புலவர் சிறந்துவீற் றிருந்த
    வளநக ராகிய மதுரையு நீகொலோ?
    ஆல வாயி னவிர்சடைக் கடவுளை (40)

    யேலவா தித்த வின்றமிழ்க் கீரன்
    வந்தவ தரித்த மதுரையு நீகொலோ?
    தமிழ்மண மிகுந்து கமழு நாடெலா
    முள்ள பாவல ருள்ளிநின் பெருமையைத்
    தந்தம நூல்களை விந்தை யரங்கினி (45)

    லேற்றி நூற்பொருள் சாற்றல் வேண்டியு
    மரசர்பாற் பற்பல பரிசு கருதியுங்
    காடலாங் கடந்து நாடொறும் போந்து
    முதுதமிழ் கொழித்த மதுரையு நீகொலோ?
    பதினெண் கூலமு மிதன்க ணுளவெனச் (50)

------
ஆன்றோர் -எல்லா நற்குணங்களும் அமைந்தோர். எதிர்மறை யிலக்கணை - Irony. 'கல்லைக் கறிக்க நன்றாய்ச் சமைத்தாய்' (நன்றாய்ச் சமைக்கவில்லை) என்று மறைப்பொருள்பட வருவது. வஞ்சப் புகழ்ச்சி -புகழ்வதுபோ லிகழ்தல். மற்றெனோ -வேறி யாதோ. நஞ்சு -விடம்.

34. நற்றமிழ் அமுது -நல்ல தமிழாகிய அமுதம். பேதைமை கந்தா - அறியாமை காரணமாக.
cf. "பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக, வூழ்வினை வந்திவ னுயி
ருண்டு கழிந்தது." (மணி - 6. 151)
மாதுயர் -மிக்க துன்பம். பருகலை -குடித்தாயில்லை. தமிழமுதைப் பருகலை எனக் கூட்டுக. உருகலை -உருகுவாயில்லை. பருகலையாய் (பருகாமல்) உருகலையாய் (உருகாமல்) இருத்தி என்க. மறை -வேதம். இறையனார் -சிவபெருமான்.

40. ஆலவாய் -மதுரை. அவிர் சடைக் கடவுள் -விளங்குஞ் சடை முடியையுடைய சிவன். ஏல -பொருந்த. வாதித்த -வாதிட்ட. இன் தமிழ்க் கீரன் –இனிய தமிழ்ப் புலமை வாய்ந்த நக்கீரன். ஈண்டுக் கூறிய வாதம், "கொங்கு தேர் வாழ்க்கை," (குறுந். 1.) என்னும் பாசுரங் குறித், தெழுந்தது. (திருவிளையாடற் புராணம் நோக்குக.) நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மகனார் ஆதலின், அவர் ஊர் மதுரை என்பது தேற்றம். தமிழ் மணம் மிகுந்து கமழும் நாடு - தமிழகம். பாவலர் - கவிஞர். உள்ளி -கருதி. நின் பெருமையை உள்ளி என்க. தந்தம - தங்கள் தங்களுடைய; தாந்தா மியற்றிய. விந்தை அரங்கு -வித்தியாரங்கம்; புலவர் சபை; ஈண்டுக் குறித்தது தமிழ்ச் சங்கம். நூற் பொருள் சாற்றல் -நூற்குப் பொருள் கூறுதல். பரிசு -வெகுமதி. நாடொறும் -தினந்தோறும். முது தமிழ் –பழ்மையான தமிழ். கொழித்த -மிகுத்த.

    சாற்றுவார் போலச் சாத்தனா ரென்னு
    மேற்றகைப் புலவர் வேட்டினி திருந்து
    மதுரநூல் யாத்த மதுரையு நீகொலோ?
    நால்வர் குரவரு மேல்வகைத் தமிழிற்
    பண்ணிசைப் பாட்டிற் பரிந்து புகழ்ந்த (55)

    மண்ணில்விண் ணகரெனு மதுரையு நீகொலோ?
    அமிழ்தினு மினிய தமிழி னின்சுவை
    யுணர்ந்தநீர் வையை மணந்த பாண்டியன்
    பதியென வயங்கிய மதுரையு நீகொலோ?
    வல்லாள ரேத்துங் கல்லாடர் தாஞ்செய் (60)

    கல்லாட மென்னுங் கனித்தமிழ் நூலுட்
    சொல்லாயுஞ் சங்கத் தொல்பெரு நகரென
    வெல்லாருங் கொள்வா னின்னிசை யகவற்
    பாத்தொறு முரைத்துப் பரிவுடன் புகழ்ந்த
    மதிகுல வேந்தர்த முதுரையு நீகொலோ? (65)

    செந்தமிழ்ப் பாற்கடற் புந்திமத் தாற்கடைந்
    துட்பொரு ளாகிய தட்பநல் லமுதை
    யுரையெனத் தந்த நரைமூ தான
    ரந்தண குலத்தின் விந்தையிற் றோன்றி
    யன்னார்ப் பற்றிய வின்னாப் பழமொழி (70)

--------
50. பதினெண் கூலம்: கூலம் -நெல் முதலிய தானியங்கள்.
cf. "பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக." (மதிவாணர் நாடகத் தமிழ்.)
சிலப்பதிகாரம் கடலாடுகாதை -வரி 35 -36 உரை நோக்குக. மேற்றகைப் புலவர் - மேலான திகுதிவாய்ந்த புலவர். இவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தன் எனப் படுதலின் இவர் பிறந்தஊர் மதுரையென்பது போதரும். வேட்டு -விரும்பி. மதுரநூல் -மணிமேகலை. இந்நூலின் இனிய நடையில் ஆசிரியர் மிகவும் ஈடுபட்டவர் ஆத
லின் இதனை மதுரநூல் என்றே கூறினர்.

55. நால்வர் குரவர் -சைவ சமய குரவராகிய நால்வர்; சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர். மேல்வகைத் தமிழ் -மேலாம் ஆன்ம ஞானத்தைத் தரும் வகைமை பொருந்திய தமிழ். பண் இசைப் பாட்டு -பண் பொருந்திய இசைப் பாட்டு. பரிந்து -அன்புற்று. மண்ணில் -இப்பூவுலகில். விண் நகர் -அமராவதி. தமிழின் இன்சுவை உணர்ந்த நீர் வையை -பாண்டியன் முன்னிலையிற் சம்பந்தரும் சமணரும் புனல்வாதஞ் செய்தபொழுது, சம்பந்தர், "வாழ்க வந்தணர் வானவரானினம்" என்னுந் தொடக்கத்த பாசுரமெழுதிய ஏட்டை வைகையிலிடத் தமிழின் சுவையுணர்ந்த வையைநீர் அவ்வேட்டை எதிரேறக் கொண்டு சென்ற வரலாறு
ஈண்டுக் குறிக்கப்பட்டது. மணந்த -கூடிய. மணந்த பதி எனக் கூட்டுக. பதி - நகரம்.

60. வல்லாளர் -கல்வி கேள்விகளில் வல்லவர். ஏத்தும் - கொண்டாடும். கல்லாடர் -இவர் வரலாற்றைப் புறநானூற்று முகவுரையிற் காண்க. கல்லாடம் –அகப் பொருணலஞ் செறிந்த நூற்றிரண்டு அகவற்பாக்களான் இயன்ற அருமையும் இனிமையும் வாய்ந்த வொரு தமிழ் நூல். இஃது கல்லாடரியற்றியது. கனித்தமிழ் -கனி
போலும் இனிய தமிழ். சொல்லாயும் -சொற்களையாராயும். எல்லாரும் கொள்வான் - யாவரும் கொள்ளும் வண்ணம். பாத்தொறும் -ஒவ்வொரு பாவிலும். பரிவுடன் - அன்புடன். தமிழ்ப்பாற்கடல் -தமிழாகிய பாற்கடலை. புந்திமத்து - புத்தியாகிய மத்து. பொருளாகிய அமுது. தட்பம் -குளிர்ச்சி.

    போலி யுரையெனச் சால விளக்கிய
    வுச்சிமேற் புலவர்கொ ணச்சினார்க் கினியர்
    மாண்புட னிருந்த மதுரையு நீகொலோ?
    புலத்தமிழ் தோற்ற போலி மதுராய்!
    நலத்தெரி வில்லாய்! நாணிலை போலும். (75)

    அன்னோ வென்றன் மெய்ந்நடுங் குறுமால்!
    அஞ்ஞான்றை யுயர்வென்! இஞ்ஞான்றை யிழிவென்!
    மனைவிசொற் கேட்டுத் தனையீன் றெடுத்த
    தாயினைப் பசியிற் றீய விடுக்கும்
    பதகனை யொத்த மதுரைமா நகரே! (80)

    பொருத்தமின் முரணிருள் போக்கியெங் குஞ்சீர்
    திருத்தமென் பரிதி திகழ்ந்து தோன்றியும்
    பயிலுந் தமிழ்த்தாய் வெயிலுறத் தள்ளித்
    துயிலுகின் றனையோ? தொல்சீர் மதுராய்!
    நன்றி யறிவிலாய்! குன்றிய சிந்தையாய்! (85)

    குறையே நயமெனக் கொண்டு பிதற்றுவோய்!
    உன்வயிற் பிறந்தேன் யானென வுரைக்கவும்
    வெள்கினேன்! அந்தோ! வெள்கினேன்!! அந்தோ!
    இன்னணம் வெள்குவோ ரின்னு மெத்துணைப்
    பெயரோ? அறியேன். மயலார் மதுராய்! (90)

----------
நரைமூதாளர் - முதியவர். அந்தண குலம் - பிராமண குலம். விந்தையில் - யாவரும் வியந்து பேச. அன்னார்ப்பற்றிய இன்னாப் பழமொழி - 'வேளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் வழ வழ' என்பது. அன்னார் - அவர். போலியுரை - பொய்யுரை. சால - நன்றாக. உருவகவணி. மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்ற பெயரான் இவர் ஊர் மதுரை யென்பது புலனாம்.

74. புலம் - அறிவு. தோற்ற - இழந்த. நலத்தெரிவு - நன்மை யறிதல். நாணிலை - வெட்கமடைந்தனையல்லை. போலும் - ஒப்பில்போலி. அன்னோ - இரக்கக் குறிப்பு. ஞான்று - பொழுது. ஈன்றெடுத்த - பெற்றெடுத்த. தீய - வேவ. பசியாகிய தீயில் வருந்த என்றபடி. பதகன் - பாதகன். பொருத்தமில் - தகுதியற்ற. முரண் இருறள் - மாறுபாடுற்ற இருள். சீர்திருத்தம் ஆகிய பரிதி என்க. உருவகம். பயிலும் - பழகும். வெயில்உற - வெய்யிலிற் கிடப்ப. தொல்சீர் - பழைய சிறப்பு. குன்றிய சிந்தை - Narrow mindedness. நயம் - நன்மை. வெள்குவோர் - வெட்க மடைபவர். மயல் - மயக்கம். ஆர் - நிரம்பிய. எழுதி - எழுவாய். ஒழிதி - நீங்குவாய்.

    அழிநிலை யடையா தெழுதி; துயிலுத
    லொழிதி; தமிழ்நிலை விழிகொடு காண்டி;
    அவளிசைத் தேறல் செவிவாய்ப் பருகுதி;
    நந்தலி லின்பஞ் சிந்தையிற் பெறுதி;
    என்னோ சொற்றே னென்ன வெண்ணலை. (95)

    அருந்தமிழ்த் தாயின் றிருந்திய வன்பினாற்
    சிறியனே னித்துணை நெறியெனக் கூறினேன்.
    என்னை வெகுளலை; என்னன் பதனை
    வேண்டு மெனினீ வெகுள்க; மற்றுச்
    'சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்திடல் (100)

    நல்வினை கோறலின் வேறன்' றென்ன
    வுரைத்த புலவனு முளனால். தமரே
    யெனினி மவர்பிழை யினிதெடுத் துரைத்தல்
    கடனே யன்றோ? கழறாய். அன்றியு
    நின்பா லெனக்குள வன்பால் யானுரை (105)

    செய்த விதனைநீ நொய்தெனக் கருதி
    வாளா காலம் போக்கலை. மதுராய்!
    மீளாய் தமிழ்நலம் விரும்பியுய் வாயென.

-------
93. இசைத்தேறல் - இசையாகிய தேன். செவிவாய்ப் பருகுதி - செவிவாயாகப் பருகுவாய்.

94. நந்தல் இல் இன்பம் - அழிவில்லா ஆனந்தம். பெறுதி - பெறுவாய். என்னோ - யாதோ. சொற்றேன் சொன்னேன். எண்ணலை - கருதாய். இத்துணை - இவ்வளவு. நெறி - கிரிமம். வெகுளலை - கோபியாதே. வேண்டுமெனில் - வேண்ட மாயின். சொல்வன்மை - வாக்கு வல்லபம். கொன்னே - பயனின்றி; சும்மா. விடுத்
திடல் - விட்டுவிடல். கோறல் - கொல்லுதல்; ஈண்டு அழித்தல். உரைத்த புலவன் - குமரகுருபர சுவாமிகள். "சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல், நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம், ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ, வாக்கின் பயன்கொள்ப வர்." (நீதிநெறி விளக்கம் -69).

102. தமரே யெனினும் - சுற்றத்தா ரென்றாலும். கடன் - கடமை. நொய்து - அற்பம், இலேசு. வாளா - சும்மா. மீளாய் - முன்னைய வுயர் வழியில் மீள்வாய். உய்வாய் - ஈடேறுவாய். 'என' - அசைச் சொல். இவ்வசைச் சொல்லால் ஆசிரிப்பா முடிதல் சிறப்புடைத் தென்பர்.
----------------------

10. போலியாராய்ச்சியன்


(நூலாராய்ச்சியென்பது நூலிற் குற்றங் கூறுதலே யென்று பொருள் கொண்டும், மெய்யான குற்றங்களைக் காண்டலின்றிப் போலிக்குறை கூறிக்கொண்டும், நூலின் நயங் கண்டு நுகர்தலின்றி நவைகாண்டலே தெழி
லெனக்கொண்டும், வாளா திரிதரும் ஒருவனைச் சுட்டிப்பாடியது)

போலி யாராய்ச்சியன் - False Critic. இப் 'போலி யாராய்ச்சியன்' டெனிஸன் மகாகவி ஆங்கிலத்தில் வரைந்துள்ள, The Poet's Mind' என்னுஞ் செய்யுளினைப் பெரிதுந் தழுவி எழுந்தது. அது வருமாறு:

    THE POET'S MIND
    (First Published in 1830)
    By
    Alfred Lord Tennyson.

    Vex not thou the poet's mind
    With thy shallow wit:
    Vex not thou the poet's mind:
    For thou canst not fathom it.
    Clear and bright it should be ever,
    Flowing like a crystal river:
    Bright as light, and clear as wind.
    Dark -brow'd sophist, come not anear:
    All the place is holy ground:
    Hollow smile and frozen sneer
    Come not here.
    Holy water will I pour
    Into every spicy flower
    Of the laurel -shrubs that hedge it around.
    The flowers would faint at your cruel cheer.
    In your eye there is death,
    There is frost in your breath
    Which would blight the plants.
    Where you stand you cannot hear
    From the groves within
    The wild -bird's din.
    In the heart of the garden the merry bird chants:
    It would fall to the ground if you came in.
    In the middle leaps a fountain
    Like sheet lighting,
    Ever brightening
    With a low melodious thunder;
    All day and all night it is ever drawn
    From the brain of the purple mountain
    Which stands in the distance yonder:
    It springs on a level of bowery lawn,
    And the mountain draws it from Heaven above,
    And it sings a song of undying love;
    And yet, tho' its voice be so clear and full,
    You never would hear it; your ears are so dull;
    So keep where you are: you are foul with sin;
    It would shrink to the earth if you came in.

போலியாராய்ச்சியன்

    கலிவிருத்தம்

    நூலை யுள்ளபடி யாய்வலெனு நொய்யமகனே
    போலியாயபல தோமுரைசெய் புன்மைநெறியாய்
    சீல முள்ளபுல வோர்மனதின் செவ்வியுணராய்
    வேலை யொத்தநின வீண்மொழி விடுத்தியொழிதி. (1)

    பாந்த ளேபிறிது பாந்தனின பாதமுணரும்
    வாய்ந்த மாதறி மகாரருமை வந்தியுணரா
    னாய்ந்த செய்புணல மான்றகவி வாணரறிவா
    ரேய்ந்த வூறுணரு மோர்விழிய வெங்ஙனறிவாய்? (2)

    மதுர மிங்கொழுகு மாங்கனி வடித்தசுவையார்
    முதுத மிழ்க்கவியை முற்றுணர்கி லாதுபிசிதத்
    துதித ருங்கனியை யொத்தகுறை யோருமுறையாற்
    கொதிகணொன் றுறுகொடுங்கொடிநிகர்ப்பை கொடியோய்? (3)

----------
1. ஆய்வல் = ஆராய்ச்சி செய்வேன். நொய்ய = அற்பமான. போலியாய =மெய் போலத் தோற்றி உள்ளவாறு நோக்குமிடத்துப் பொய்யான. தேரம் = குற்றம். உரைசெய் = கூறும். புன்மைநெறி = இழிந்தவழி. சீலம் = நல்லொழுக்கம். செவ்வி = நல்லியல்பு. உணராய் = அறியாய். வேலை யொத்த = வேலாயுதம் போல
வருத்தும் இயல்புள்ள. நின = நின்னுடைய. வீண் மொழி = பயனற்ற சொல். விடுத்தி யொழிவாய் = விட்டொழிவாய். விடுத்தி =முற்றெச்சம்.

2. பாந்தள் = பாம்பு. பிறிது = மற்றொரு. பாதம் = கால்.
cf. "பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும்,"

    "புலமிக் கவரைப் புலமை தெரிதல்
    புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
    பூம்புன லூர பொதுமக்கட் காகாதே
    பாம்பறியும் பாம்பின் கால்." - (பழமொழி)

வாய்ந்த = பெற்ற. மாது = தாய். மகார் = குழந்தைகள். வந்தி = மலடி.
    cf. "குழந்தையருமை தாய்க்குத் தெரியும்."
    "மகவருமை மலடி யறியாள்."

ஆய்ந்த = ஆராய்ந்த. செய்யுள் நலம் = செய்யுளின் அழகு. ஆன்ற = அமைந்த; கல்வி கேள்வி யமைந்த என்றபடி. கவிவாணர் = பாவலர். ஏய்ந்த = பொருந்திய. ஊறு = குற்றம். இவண் குற்றமே யுணர்பவனாதலின் 'ஓர் விழியன்' எனப்பட்டனன். ஓர் விழியன் = ஒரே பார்வை (One -sided view) உள்ளவன். ஆசிரியர் குறிப்பித்துள்ள 'வாளா திரிதரும் போலியாராய்ச்சியனாம் ஒருவ'னுக்கும் ஏகாக்ஷம் போலும்.

3. சுவையார் = சுவை பொருந்திய. பிசிதம் = வேம்பு. உதிதரும் = உண்டாகும். ஓரும் = ஆராயும். கொதிகண் = தீய கண். கொடுங்கொடி = கொடிய காகம். கொடுமை வாய்ந்திருப்பதோடு கொடி (காக்கை)யையும் நிகர்ப்பையாதலின், 'கொடியோய்' என்ற பெயர் நினக்கே தகும், என்றது குறிப்பு. காக்கைக்குக் கண்மணி யொன்று என்பது காகாக்ஷகோள நியாயத்தாலும் "காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிவருவர்," (திருக்கோவையார் -71) என்பதாலும் அறிக.

    களிந றைக்கினிய வைப்புறழ் கவீசன்மனமிக்
    கொளிப டைத்துமறு வின்றுதெளி வுற்றுலவுமா
    றெளிப ளிங்கனைய தெள்ளறலி னூறலெனலான்
    வளியெ னக்குலவு வான்கணொளி மானுமெனவே. (4)

    கண்ணி லாதுழல் கசட்டறிவி னாயணுகலை
    யெண்ணு மிவ்விட மெலாமினிய தூய்மையுடைய
    வுண்ணி லாமலெழு தந்ததுகொ லுன்றனகைதான்
    மண்ணி லிவ்விடையின் வாரலை மயங்குபொறியாய்! (5)

    தூய நீர்மலர்க டோறுநனி பெய்துவருவேன்
    மாயு மம்மலர்கண் மாகொடியை நுன்றனகையா
    லேயு நின்விழியி லெய்துறு மிறப்புமிகவும்
    வீயு மூச்சினுறு வெய்யபனி மேவியவையே. (6)

--------
4. களி நறை - களிப்பினையுண்டாக்கும் தேன். வைப்பு - வைக்குமிடம். உறழ் - போன்ற; உவமச்சொல். கவீசன் - கவிஞர்களுக்குத் தலைவன். வைப்புறழ் மனம் எனச் சேர்க்க. மறுவின்று - குற்றமின்றி. தெளிவுற்று - தெளிவுபொருந்தி. உலவும் - சஞ்சரிக்கும். தெளிபளிங்கு - தெளிந்த பளிங்கு. (Clear crystal). தெள்
அறலின் ஊறல் - தெளிவான நீரூற்று. வான்வளி - உயர்ந்த ஆகாயத்திலோடும் காற்று. ஊறலென வளியென வான்கண் ஒளியென உற்றுலவும் என முடிக்க. பூமிக்குச் சமீபத்திற் சூழ்ந்துள்ள வாயுவில் தூசு பொருந்தியிருக்குமேயன்றி மேலிடத்துள்ள வாயு நிர்மலமா யிருக்குமாதலின் வான்வளி உவமையாயிற்று.
வான்கண் - சூரியன். கண்கள் மூன்றில் விண்ணிற் செல்லுங்கண் சூரியனே.

    cf."கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்,
    விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேர." (சூளாமணி - மந்திர. 30).
    சூரியனொளியில் அணுக்கள் ஒன்றுபட்டுக்கலவா. மானும் - போலும்.

5. கண் இலாது - கட்பொறியின்றி. உழல் - உழலும். கசடு - குற்றம். அணு கலை - நெருங்கலை. தூய்மையுடைய - பரிசுத்தமானவை. உள்நிலாமல் - மனத்தில் அடங்காமல். எழுதந்தது - எழுந்தது. கொல் - அசை. உன்றன் நகை - உனது இகழ்ச்சி நகை. மண்ணில் - உலகில். இவ்விடையின் - இங்கு. வாரலை - வராதே. மயங்கு பொறியாய் - உள்ளதை உள்ளவாறு காணுந் தன்மையின்றி மயங்கும் கண்ணாகிய இந்திரியத்தை யுடையவனே.

இச் செய்யுளில் 'இவ்விடம்' என்று குறித்தது, ஆசிரியர் தம்பாற் றமிழ் பயிலும் இயற்றமிழ் மாணவர்கட்குப் பாடங் கூறும்இடத்தினை.

6. தூய - பரிசுத்தமான.நீர் - நீரினை. நனி - மிக. மா கொடியை - மிகக் கொடுமை யுள்ளாய். நுன்றன் - நினது. அம்மலர்கள் நுன்றன் நகையால் மாயும் என்க. ஏயும் - பொருந்திய. நின் விழியில் - உன் பார்வையால். நினது விழியால் மிகுதியும் இறப்பினை அடையும். மூச்சின் உறுவெய்ய பனி - உனது மூச்சிலுண்டாகும் கொடிய பனி. மேவி - பொருந்தி. வீயும் - அழியும். அவை வெய்யபனி மேவி லீயும் என்க.

பாடம் பயிலும் மாணாக்கர்களின் மனத்தை மலராகவும், தாம் பாடங் கூறலைத் தூய நீர் பெய்தலாகவும் குறித்துள்ளனர்.

    cf. "ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத்
    தேனா ரோதி செவிமுதல் வார்த்து." (மணிமேகலை. 23 -138.)

    மன்னி வானளவு காந்தமலை மாகமுறுமா
    மின்னு மேகமடை விற்குமுறி வீழ்மழையினா
    னன்ன ரோடைபல நாற்புறம் விடுத்தபரிசே
    யென்ன வான்புலவ ரின்னுள மெழுந்தொளிருமால். (7)

    நீயிருக்குமிட நிற்றியெனி னேசநிலவு
    மாயி ருஞ்சினை படைத்தபொழில் வந்திசைசெயுஞ்
    சேய வின்குயில்கள் பாடுதல் செவித்தொளையுறாய்
    பாய பூம்பொழிலி னாப்பணவை பாடியெழுமால் (8)

    கிட்டி வந்தையெனி லம்மவலை கேயமினையக்
    கெட்ட ழிந்துவிடு மாலினிசை கேட்டுமகிழன்
    மட்டு மஃகறிவி னிற்குறுதல் வாய்வதிலையா
    னட்டு நல்லறிவு நாளுமுனை நண்ணுகிலதே. (9)

---------
7. மன்னி = நிலைபெற்று. வான் அளவு = ஆகாய மளாவிய. காந்த மலை = காந்தக் கல்லாகிய மலை. மாகம் = விண். உறும் = பொருந்திய. மா மின்னு மேகம் = கரு நிறத்தோடு மின்னலைச் செய்யும் மேகம். அடைவில் = முறைமையாக. குமுறி = இடி யொலி செய்து. வீழ் மழையினால் = பெய்யும் மழையால். நன்னர் = செவ்விதாக. ஓடை = நீரோடை. ஓடை = ஐ வினைமுதற் பொருள். விகுதி. பல ஓடை என்க. நாற்புறம் விடுத்த = நான்கு புறங்களிலும் ஒழுக்கிய. பரிசே யென்ன = விதமே போல. வான்புலவர் = சிறந்த புலமை வாய்ந்த பாவலர்தம்.; இன் உளம் = இனிய மனம். எழுந்து ஒளிரும் = மேலோங்கி விளங்கும். கேட்போர் நெஞ்சைத் தன்பா லிழுத்துப் பிணிக்கும் வன்மையால் இன்னுள த்திற்குக் காந்தமலை யுவமையாயிற்று.

8. நீ இருக்கும் இடம் நிற்றியெனின் = நீ இருக்குமிடத்திலேயே யிருந்துவிடின். நேசம் நிலவும் = அன்பு பொருந்திய. மாயிரும் = மிகப்பெரிய. சினை = கிளைகள். பொழில் = சோலை. இசை செயும் = பாடும். சேய = செவ்விய. இன்குயில்கள் = இனிய குயிற்பறவைகள். பாடுதல் = கானஞ்செய்தலை. செவித்தொளை உறாய் = நினது காதிற்கேளாய். பாய = பரந்த. பூம்பொழிலின் நாப்பண் = பூக்கள் மலர்ந்த சோலை நடுவே.
அவை பாடி எழும் = அக்குயில்கள் சிறப்பாகப் பாடும்.

'நேச நிலவுங் குயில்கள்' எனவும், 'வந்திசை செயுங் குயில்கள்' எனவும் தனித்தனிக் கூட்டுக. 'இயற்றமிழ் மாணவர்' கல்வி பயிலிடத்தே யொரு பூஞ்சோலையாகவும் மாணவரை இன்குயில்களாகவுங் குறிப்பித்துள்ளார்.

9. கிட்டிவந்தையெனில் = நெருங்கி வந்தாயென்றால். அம்ம = இரக்கக் குறிப்பு. அவை = அக்குயில்கள். கேயம் = பாட்டு. இனைய = வருந்த. கெட்டு அழிந்து விடும் = சீர் குலைந்து கெடும். ஆல் = அசை. இன் இசை கேட்டு மகிழல் மட்டும் = இனிய கானத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைதன் மாத்திரம். அஃகு அறிவின் நிற்கு = குறைந்த அறிவினையுடைய நினக்கு. உறுதல் = பொருந்துதல். வாய்வது இலை = பொருந்தாது. ஆல = அசை. நாளும் நல்லறிவு உன்னை நட்டு நண்ணுகிலதே = தினமும் நல்ல புத்தி உன்னை விரும்பி அடையாது. குற்றமே யுணரு மியல் புடைய நினக்குக் குணம் ஒரு சிறிதும் புலனாகாது.

    cf. "குற்ற மேதெரி வார்குறு மாமுனி
    சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்.' (கந்த. அவை. 6)
-----------

11. ஓர் ஐயப்பாடு


[தாம் திருக்குறள் நாலடியாராதி நீதி நூல்களிற் கூறிய உலக நிலையாமையைப்பற்றிச் சிந்தித்துழித் தமக்கு நிகழ்ந்த தோர் ஐயப்பாட்டினை யமைத்துப் பாடியது]

ஓர் ஐயப்பாடு

    நிலைமண்டில வாசிரியப்பா

    கட்புல னில்லா விட்புலத் தோர்குர
    னேரிய பெற்றிப் பேரறி வானற்
    குலகமு மதன்க ணிலகுந யாவையு
    நிலையுர வல்லவோர் நிகழ்கண மேனு
    மென்று முழங்கலுந் துன்றியோ ரிரப்போன். (5)

------
ஐயப்பாடு = சந்தேகம்.

இச்செய்யுள் ஆங்கிலத்தில் டெனிஸன் மகாகவி எழுதியுள்ள 'A Voice Spake Out of the Skies' என்ற கவியின் மொழி பெயர்ப்பாகும். அது வருமாறு:

    "A Voice Spake out of the Skies"
    By
    Alfred Lord Tennyson.

    A voice spoke out of the skies
    To a just man and a wise -
    'The world and all within it
    Will only last a minute!'
    AND A BEGGER BEGAN TO CRY.
    "FOOD, FOOD OR I DIE"!
    IS IT WORTH HIS WHILE TO EAT
    OR MINE TO GIVE HIM MEAT,
    If THE WORLD AND ALL WITHIN IT
    WERE NOTHING THE MEAT MINUTE?

கட்புலன் இல்லா = கண்ணுக்குப் புலனாகாத. விட்புலத்து ஓர் குரல் = ஆகாய விடத்தில் ஒரு குரல். அசரீரியாக ஆகாயவாணியின் குரல் என்றபடி. நேரிய = ஒழுங்கான. பெற்றி = பண்பு. பேர் அறிவானற்கு = பெரிய அறிவினையுடையான் ஒருவனுக்கு. உலகமும் அதன்கண் இலகுவ யாவையும். = இந்த மண்ணுலகமும் அதன்
காண் வழும் சராசரப் பொருள்கள் எல்லாம்.

நிகழ் ஓர் கணமேனும் = இப்பொழுதி நிகழும் ஒரு கணப் பொழுதேனும். நிலையுந அல்ல = நிலைபெற்றிருப்பன அல்ல; அழிந்துபோம் என்றபடி.
என்று முழங்கலும் = என்று முழங்கினபொழுது. துன்றி = நெருங்கி. ஓர் இரப்போன் = ஒரு பிச்சைக்காரன்.

    சோறுசோ றின்றேற் பாறிப் படுவெனா
    லென்னாக் கூயின னிதுகேட் டறிஞனு
    மன்னோ வுணவுண் டவனிவண் வாழ்தலும்
    யானவற் கின்னுணவிடுதலு மாகிய
    விவற்றாற் பயனெனை யெய்திய வுலகு (10)

    மதன்க ணார்பொரு ளனைத்து மறுகணத்
    தழியு மேலென வையமுற்றனனே.

-------
சோறு சோறு இன்றேல் பாறிப்படுபவன் நான் - சோறு போடுங்கள் சோறு போடுங்கள் இல்லாவிடின் நான் பசியான் இறந்தொழிவேன். என்னாக் கூயினன் - என்று கூவினன்.

இது கேட்டு அறிஞனும் - இம்மொழியைக் கேட்டு அவ்வறி வுடையவனும். அன்னோ - அந்தோ. உணவு உண்டு - சோற்றினை யுண்டு. அவன் இவண் வாழ்தலும் - அப்பிச்சைக்காரன் இவ்வுலகத்தில் வாழ்தலும். யான் அவற்கு இன் உணவு இடுதலும் - நான் அவனுக்கு இனிய சோறு போடுதலும். ஆகிய இவற்றால் பயன்
எனை - ஆகிய இச்செயலுகளால் யாது பயன். எய்திய பொருந்திய. உலகும் -
இவ்வுலகமும். அதன்கண் ஆர் பொருள் அனைத்தும் - அதனிடத்துப் பொருந்திய எல்லாப் பொருள்களும். மறு கணத்து - அடுத்த நிமிஷத்திலேயே. அழியுமேல் - அழிந்து போகும் என்றால். என் - என்று. ஐயம் உற்றனன் - சந்தேகம் அடைந்தனன். ஏ - ஈற்றசை.

இப்பிச்சைக்காரன் சோற்றையுண்டு பசிநீங்கி உயிர்வாழ்தலானும் இவனுக்குச் சோறளித்துப் புண்ணியம் பெருகலானும் யாது பயன் உண்டாகும், இவ்வுலகமும் அதன்பாலுள்ள எல்லாப் பொருள்களும் மறுகணத்தே அழிந்துபோமாயின், என்ற சந்தேகமே ஈண்டுக் குறித்த ஐயப்பாடாகும்.

கர்ணன் இறக்குந் தருவாயில் தன்பால் வந்து இரந்த அந்தணனுக்குத் தான் அதுகாறும் செய்துள்ள தருமத்தையெல்லாம், அது தன்னுயிர்க்க அரணாய் நிற்றலையும் பொருட்படுத்தாது, தானஞ் செய்திருப்பதாகவும் அம்மகாதான பலன் அவனைக் காத்தில்லை; அம்மாகாதானபலன் சித்திப்பதற்கு முன்னரே அதனையுஞ் சேர்த்துத் தானஞ்செய்தல் எங்ஙனம் அமைவுடைத்தாகும்? என்றின்னோரன்ன ஐயத்தை யொருவாறு நிகர்த்தது மேற்குறித்த ஐயப்பாடும். எல்லாம் நிலைபேறின்றி யழியுமாயினும் அவனவன் செய்யற்பால கடமைகளைச் செய்தலே தக்க தென்பது ஆசிரியர் கருத்துபோலும்.
-----------------

12. பரிந்துரை.


(இஃது இரட்டணைத் தமிழ்ப் பண்டிதையர் அசலாம்பிகை யம்மையவர்கள் தமதருமைத் தந்தையாரை யிழந்து மனங்கலங்கியவழி அவர்கள் பாற்பரிந்து அவர்கள் ஆற்றியிருத்தல் வேண்டி நிருபமென வரைந்து விடுத்தது.)

பரிந்துரை.

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    இரட்டணைப்பே ரூரின்கண் வேதியர்தங் குலமினிதி னிலங்கத் தோன்றி
    மருட்டுவிழி மடவார்த முரிமையெலாங் கவர்ந்துகொடு மயங்கிப் பேசுந்
    திருட்டுமொழி யாளர்தமை வாதித்துப் புறங்காட்டிச் செலத்தொ லைத்துத்
    தெருட்டுரைகள் பலவெழுதித் திகழசலாம் பிகையம்மைத் தெரிவை காண்க. (1)

    வஞ்சிவிருத்தம்.

    கலைநல மல்கிய காரிகையீ
    ரலைகடல் சூழ்தரு மம்புவியின்
    மலைகளும் வன்மைய மாநிலமும்
    நிலைகுலை தந்தழி நீரனவே. (2)

-----------
1. இரட்டணை - திண்டிவனந் த்தாலுக்காவைச் சேர்ந்த ஓரூர். பேரூர் -பெருமை வாய்ந்த ஊர். வேதியர்தங் குலம் - பிராமணகுலம். மருட்டு விழி - கண்டாரை மருட்டு மியல்பினையுடைய விழி. இஃது மடவார்க்கு அடை. மடவார்தம் உரிமை - மாதர் சுதந்தரம். கவர்ந்து கொடு - பிடுங்கிக்கொண்டு. மயங்கி - கலங்கி, அறிவின்றி. திருட்டு மொழியாளர் - வஞ்சகப்பேச்சினர். வாதித்து - வாதஞ்செய்து. புறங்காட்டிச் செல - தோற்றோட. தொலைந்து - அழித்து. அவர்களை வாதப்போரில் வென்று என்றபடி. தெருட்டுரைகள் - அறிவினைப் பயக்கும் மொழிகள். பல எழுதி - பலவற்றை எழுதி. அசலாம்பிகை; செந்தமிழ்ப் புலமை செவ்விதின் வாய்ந்த இவ்வம்மையார் இனிய கற்பனை நலஞ்செறிந்த செய்யுட்களை விரைவின் இயற்றும்
ஆற்றல் படைத்தவர்; கேட்டார்ப் பிணிக்குஞ் சொல்வன்மை யுடையார். திருவிடையூர்த் தலபுராணம், காந்தி புராணம், திலகர் மான்மியம் முதலிய பல தமிழ் நூல்களை இயற்றி யிள்ளார். தெரிவை - மாது. செந்தமிழ் தெரிந்த சீரிய நலத்தாற் றெரிவை யென்னும் பெயர் நினக்கே பொருந்தும் என்பது குறிப்பு.

2. கலைநலம் - கல்வி யறிவு. மல்கிய - நிரம்பிய. காரிகை - மாது. காரிகையீர் - விளி. அலைகடல் - அலையையுடைய கடல்; வினைத்தொகையுமாம். அம்புவி - பூமி. மலைகளும் - பர்வதங்களும். வன்மைய - வலிய. மாநிலம் -பெரிய பூமி. நிலை குலைதந்து - நிலைகுலைந்து; தா - துணைவினை விகுதி. அழிநீரன - அழியுந் தன்மை யுடையன. பூகம்பம் முதலிய நிகழுங் காலங்களில் மலைகளும் தந்நிலைமை கெட்டு
மாறுமியல்பினவா மாதலின், அசலம்(மலை) என்னும் பெயர்க்குரிய நீயும் கலங்க நேர்வது உலகியல்பே என்றபடி.

    கலிவிருத்தம்

    இவ்வுண்மை யறிந்தார்க ளெதுவரினுங் கலங்ககிலா
    ரௌவியமில் குணக்குன்ற யரியகுல மரபுவழாச்
    செவ்வியசீர் வாய்ந்திருந்த திருப்பெமா ளையனுந்தை
    யவ்வுலகஞ் சென்றமைகேட் டம்மவுள முடைவர்பலர். (3)

    வஞ்சிவிருத்தம்

    நும்மோய் கைம்மை நோன்புகொள
    லெம்மாண் பிற்கண் டிருப்பிர்கொலோ
    வம்மா வதனை யாய்வழியுள்
    விம்மா நிற்றல் விளம்பறியேன். (4)

    கலிவிருத்தம்.

    என்றாலும் பண்டிதையீர் ரித்துயர மிவ்வுலகி
    னென்றாலும் வரற்பாற்றென் றின்பவுளங் கவன்றுமிகக்
    குன்றாம லமைந்திருத்தல் கோளென்று நாடோறு
    நன்றாகு மாறறிந்து நடப்பிரென நம்புவலே. (5)

---------
3. இவ்வுண்மை யறிந்தார்கள் - இவ்வுலியல்பாகிய உண்மையைத் தெரிந்த அறிவாளர்கள். கலங்கிலார் - கலங்கார். ஔவியம் இல் - பொறாமையில்லாத. குணக்குன்று - நற்குணமாகிய குன்று. சலிப்பின்மை, பொறுத்தல் பொதுத்தன்மை. அரிய - சிறந்த. குலமரபு - குலவொழுக்கம். வழா - வழுதவாத, தவறாத. பெருமாளையன் - அசலாம்பிகை யம்மையின் தந்தை பெயர். உந்தை - உனது தந்தை.
அவ்வுலகம் - மேலுலகம். உளமுடைதல் - வருந்துதல். அம்ம - இரக்கக் குறிப்பு.

4. நும்மோய் - நினதுதாய். மோய் - தாய். கைம்மை நோன்பு - கணவனை யிழந்த மகளிர் தமது உடம்பு வருந்த நோற்கும் விரதம்.
    cf. "அன்பரோ டுடனுறை வாழ்க்கைக்கு
    நோற்றுடம் படுவர்." (மணி. 2. 46.)

    "வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
    வேளை வெந்தை வல்சி யாகப்
    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
    உயவற் பெண்டிர்." (புறம். 246)

---------
எம்மாண்பில் - எத்தகுதியோடு. ஆய்வழி - ஆயுமிடத்து. உள்விம்மாநிற்றல் - உளம் விம்முதல், வருந்துதல். விளம்பு - சொல்லுதல். முதனிலைத் தொழிற்பெயர்.

5. பண்டிதை - பெண்பால். பண்டிதையீர் - விளி. என்றுஆனும் - என்றைக்கு ஆயினும். வரல் பாற்று - வரக்கூடியது. கவன்று - வருந்தி. குன்றாமல் - குறையாமல். கோள் - கொள்கை. நன்றாகுமாறு - நன்மையுண்டாம்படி. நம்புவல் - நம்புவேன்.

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

    இன்பமே வடிவாக்கொண்ட வெம்பெரு மான்றானீண்டைத்
    துன்பமே யெவர்க்குங் காட்டித் தொல்லைநல் வழியி லுய்த்து
    வன்புகள் பலவுஞ் செய்து வாய்மையைத் தெரித்துப் பின்னர்
    நன்பெரு ஞான வீடு நல்குவன் மெய்ம்மை கண்டீர். (6)

    வஞ்சிவிருத்தம்

    இனியி வுண்மை யெய்த்தநீ
    ரினிய வுள்ள மேங்கலீர்
    நனிந னூல்க ணாடுபு
    மனியி ருந்து வாழ்விரே. (7)

-------
6. இன்பமே வடிவாக்கொண்ட வெம்பிரான் - ஆனந்தமயன். ஈண்டை - இவ்வுலகத்து. தொல்லை - பழமையான. உய்த்து - செலுத்தி. வன்பு - துன்பம். வாய்மை - உண்மை. தெரித்து - விளக்கி. நன்பெருஞான வீடு - நல்ல பெரிய ஞானமயமான முத்தி. நல்குவன் - கொடுப்பன். மெய்ம்மை - இஃதுண்மை. கண்டீர் - முன்னிலையசை.

7. எய்த்த - துனபத்தால் வாடிய; அறிந்த எனினுமாம். ஏங்கலீர் - வருந்தாதீர். நனி - மிகவும். நனூல்கள் - நல்ல நூல்களை. நாடுபு - நாடி, ஆராய்ந்து. மனி - மன்னி, மனவொருமையுற்று. வாழ்விர் - வாழ்வீராக.
-----------

13. முடிசூட்டிரட்டை மணிமாலை


[இஃது ஏழாம் எட்வர்ட் இந்தியச் சக்கரவர்த்தியாக முடிபுனைந்த காலத்தில் (1902 - ஆகஸ்டு மாதம்) எழுதியது]

    முடிசூட்டிரட்டை மணிமாலை.

    சொல்லார் மணிக்கடலிற் றோமில் வயிரமணி
    வல்லான் பதித்தபெரு மாண்பிற்றால் - நல்லார்
    பெருந்தேவிக் கிட்டுப் பிறங்கு திலகம் போல்
    திருந்தேர்கொ ளாங்கிலநற் றேம். (1)

    நற்றே னொழுகு நறுமலர் தம்மு ணலஞ்செறியப்
    பெற்றே யிலரும் பெருமைகொ டாமரை பீடுயரும்
    அற்றே யெனலா மருங்கலை வாணி யமர்ந்தொளிரப்
    பொற்றே வியுமொருங் கெய்திய வாங்கில பூமியையே. (2)

-----------
இரட்டைமணிமாலை: வெண்பா, கட்டளைக் கலித்துறையாகிய இருவகைப் பாக்களான் வகைக்குப் பத்தாக இருபது செய்யுட்கள் அந்தாதித் தொடையாகப் பொருந்த அமைக்கப்பெற்ற ஒருவகைப் பிரபந்தம்.

1. சொல் = புகழ்.ஆர் = நிரம்பிய. மணிக்கடல் - நீலமணிபோலும் நிறமுடைய கடல்; நவமணிகட்கும் இருப்பிடமாகிய கடல் எனினுமாம், இரத்தினாகரமாதலின். தோம்இல் = குத்தம் இல்லாத. வயிரமணி = வைர ரத்தினம். வல்லான் = தொழில் வல்லவன். மாண்பிற்று = மாட்சியுடைத்து. நல்லார் பெருந்தேவிக்கு இட்டுப்
பிறங்கு திலகம் = நல்லாரால் பூமாதேவிக்கு இட்டு விளங்கும் நெற்றிப்பொட்டு. நல்லார் = மகளிர், ஈண்டுச் சேடியர்.

திருந்து = திருத்தமான. ஏர் = அழகு. தேம் = தேயம். நல்ல ஆங்கிலதேயம் என்க. திலகம்போல் ஏர்கொள் ஆங்கில தேயம் மாண்பித்து என முடிக்க. மணிக் கடற் பரப்பில் வைரமணியைத் தொழில் வல்லான் பதித்த மாண்பினையுடையது ஆங்கில தேயம் என்றபடி. ஈண்டுக் கூறியது,
    "மதியத் தன்ன வாண்முகம் போலும்
    பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை."
என்றதன்கட்போலும் உவமைக் குவமை யன்று. தேயமாகிய ஒரு பொருட்கு ஈருவமை கூறியதென்க.

2. நறுமலர் = நறிய மணமுள்ள மலர். நலம் = அழகு. செறிய = மிகுதியும் பொருந்த. இலரும் = விளங்கும். பீடு உயரும் அற்ற = பெருமை சிறக்கும் அத்தன்மைத்து. எனலாம் = என்று கூறலாம். கலைவாணி = நாமகள். பொற்றேவி = பொன்னாகிய தேவி, இலக்குமி. ஒருங்கு எய்திய = சேர்ந்து பொருந்திய. ஆங்கில பூமியை
மலர் தம்முள் தாமரை பீடு உயரும் அற்றே எனலாம் என்று முடிக்க.
    cf. "பூவினுக் கணிகலம் பொங்கு தாமரை." (அப்பர் தே. நமச்சிவாயப் பதிகம்)
    "பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சரம்புநதம்.". (திருவள்ளுவ மாலை. 34)
    "பூவெனப் படுவது பொறிவாழ் பூவே." (நால்வர் நான்மணிமாலை. 40.)

    பூமிக்கு ளோங்கியவள் பொன்னிகர்செந் நாப்புலவர்
    நாமிக் கொளிரு நலமுடையாள் - ஏமக்
    கடலுடையா ளாங்கிலநற் காரிகையிற் கம்மா
    உடல்வயிற்கண் போன்மிலண்ட னூர். (3)

    ஊருக்கு ளெல்லா முயர்ந்தவிவ் வூரினி லோங்குசெங்கோல்
    பாருக்கு ளங்கங்குச் சிற்றர சாண்டார் பலர்தமக்குஞ்
    சீருக் கெடுத்தநற் செவ்விய காட்டாச் செலுத்தியவள்
    நாருக்குரிய விஜயைத் திருப்பெயர் நம்மனையே. (4)

    அனையநற் றாயி னரும்புதல்வர் தம்முட்
    புனையு முடிக்குரிய பூமான் - தனையே
    தனக்குநிகர் கொண்டுநிகர் தண்ணளியுஞ் சான்ற
    மனக்கினிய னெட்வர்ட் மகான். (5)

    மகானென்றி யாரு மகீதலத் தின்கண் மகிழ்ந்துரைசீர்
    மிகாநின்ற வள்ளல் கலைநலங் கூட்டுண்செவ் வேளனையான்
    உகாநின்ற பைந்தே னிராசமலரி னொளிர்புயத்தான்
    தகானென் றெவருங் குறைசொலற் கில்லாத் தகைமையனே.

--------
3. ஓங்கியவன் = உயர்ந்தவன். பொன் நிகர் செந்நாப் புலவர் = வியாழனை நிகர்த்த செவ்விய நாவினையுடைய அறிஞர். நா = நாவினிடத்து. மிக்கு ஒளிரும் = மிக விளங்கும். நலம் = நன்மை. ஏமம் = காவலாகிய; அரணாகச் சூழ்ந்த என்றபடி. கடல் உடையாள் = கடலினையே உடையாக உடுத்தவள். இங்கிலாந்து தீவமாதலின் இங்ஙனம் கூறினர். ஆங்கில நற்காரிகையிற்கு = இங்கிலாந்தாகிய நல்ல பெண்ணினது. வேற்றுமை மயக்கம். அம்மா = வியப்பிடைச் சொல். உடல்வயிற் கண் போன்ம் = தேகத்தினிடத்துக் கண்ணினைப்போல விளங்கும். இலண்டன் ஊர் - இலண்டன (London) மாநகரம். இலண்டனூர் போன் மென முடிக்க. போன்ம் = போலும் என்பதன் றிரிபு.

4. செங்கோல். அரசாட்சி. செங்கோலைச் செலுத்தியவள். சீருக்கு எடுத்த = பெருமை மிக்க. காட்டா = திருஷ்டாந்தமாக. கார் = அன்பு. விஜயை = Victoria நம்அனை = நமது தாய். 'இவ்வூர்' என்றது லண்டன் மாநகரினை.

5.அனைய = அந்த. புனையும் முடிக்குரிர பூமான் = முடியினை அணிதற்கு உரிமை வாய்ந்த தலைவன். தன்னையே தனக்கு நிகர்கொண்டு = தன்னையே தனக்கு நிகராகக்கொண்டு; எனவே ஒப்புயர்வற்றவன் என்றபடி. நிகர் = ஒளிவாய்ந்த;
    cf. "நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பநன்மாய்ந்த." (சிலப். கனாத். 2)
    "நீர்வார் நிகர்மலர் கடுப்ப." (அகம். 11)
தண்ணளி = குளிர்ந்த கருணை. உம் = சிறப்பும்மை. சான்ற = அமைந்த. மனக்கு மனத்திற்கு. கொண்டு சான்ற இனியன் என முடிக்க. மகான் = பெரியோன்.

6. மகீதலம் = பூமி. சீர் மிகாநின்ற = பெருமை மிகுகின்ற. வள்ளல் = வரையாது கொடுப்போன். கலைநலம் = நூல்களின் சுவை. கூட்டுண் = கொள்ளை கொண்டுண்ணும்.
    cf. "கடுங்கட் கானவர் கடறுகூட்டுண்ணும்." (பெரும்பா. 116)
செவ்வேள் அனையான் = குமாரக் கடவுளைப் போன்றவன். பைந்தேன் உகாநின்ற = பசிய தேன் சொரிகின்ற. இராச மலர் = ரோஜாபுஷ்பம். மலரினால் ஒளிரும் புயத்தான்என்க. தகான் = அரசாளத் தகுதியற்றவன். தகைழையன் = பெருமைக் குணமுடையான்.

    மையலொன் றின்றி மடலெழுதிப் பாடுநரும்
    ஐயனே காவெனச்சொ லாடுநரும் - துய்ய
    மனத்தின் மகிழ்சிறந்து வாழ்த்துநரு மாவார்
    இனத்தின் மகளி ரெலாம். (7)

    எல்வகை மாதரு மெங்கன் புகழ்சான்ற வெட்வர்டிறை
    உலாவருந் தோறும்யா மேற்கூறி யாங்குள் ளுருகிநிற்பச்
    சிலாமய மாமென வாநந்த் முற்றுத் திகழ்ந்துநின்றார்
    நலாரொடு பொல்லாத மாக்களு மம்ம நயந்துனமே. (8)

    மேன்மொழியிற் பாநலஞ்சான் மேலோ ரெனையரோ
    பான்மையொடன் னானைப் பரிந்துரைத்தார் - தேன்மொழியாம்
    செந்தமிழின் யாமுமவன் சீர்மைசொலி மாலையொன்
    றுந்துகளிப் பிற்புனைந்திட் டோம். (9)

    ஓமென் றிணங்கினர்க் குற்றநட் பாள னுளம்பிறிதாய்த்
    தாமென்ற கன்று தருக்கினர்க் குற்ற தனியரியே
    றாமென் றெமதிறை வோனைப் புகழி னதனையொவ்வோம்.
    போமென் றிகழ்ந்திட்ட போவர்க்குஞ் செய்தனன் பொன்னருளே. (10)

---------
7. மையல் = மயக்கம். மடலெழுதல் = மடலூரக் கருதுபவர் தாம் விரும்பியதலைவன் உருவத்தைச் சித்திரத்தில் எழுதும் வழக்கம் ஈண்டுக் குறிக்கப் பட்டுள்ளது. மடல் எழுதிப் பாடுதல் = உலாமடல், வளமடல் முதலிய பிரபந்தங்களை யெழுதிப் பாடுதல். கா = காப்பாயாக. சொல்லாடுதல் = பேசுதல். இனத்தின் = கூட்டமான.

8. எலாவகை = பதுமினி, சங்கினி, சித்தினி, அத்தினி, யென்னும் பல வகைப்பட்ட. இறை = மன்னன். உலாவருதல் = பவனிவரல். உள் = மனம். சிலாமய மயம் என = நல்லுருவமென்று கருத. பரவசமாய் நிற்பர் என்றபடி. நலார் = நல்லவர் அம்ம = வியப்பு. உளம் நயந்து நின்றார் என்க

9. மேன்மொழி = மேனாட்டு ஆங்கிலமொழி. பாநலம் = கவித்துவம். சால் = அமைந்த. எனையர் = எத்தனையோ பெயர். பான்மை = தன்மை. பெருமை, அழகு. அன்னான் = எட்வர்ட். பரிந்து = விரும்பி. உரைத்தார் = புகழ்ந்தார். தேன்மொழியாம் = இனிய மொழியாகிய. செந்தமிழினால் = இரட்டை மணி மாலையொன்று புனைந்திட்டோமென்று முடிக்க. சீர்மை = சிறப்பு. சொலி = புகழ்ந்து. உந்துகளிப்பின் = மேன்மே லெழுங் களிப்பால். புனைதல் = கட்டுதல்.

10. ஓம் = Yes. ஒப்புக்கோடற் குறிப்பு. இணங்கினர் = சம்மதித்தனர். உற்ற = பொருந்திய. நட்பாளன் = நண்பன். உளம் பிறிதாய் = மனம் வேறுபட்டு. தாம் என்று = தாமே பெரியரென்று. அகன்று = விலகி. தருக்கினர் = அகங்கரித்தவர். தனி அரி ஏறு = ஒப்பில்லாத ஆண் சிங்கம். ஆம் = ஆகும். புகழின் = புகழ்ந்தால்.
அதனை = அப்புகழ்ச்சியை. ஒவ்வோம் போம் = ஒப்புக்கொள்ளோம் போங்கள். போவர் = Boers. பொன் அருள் = அழகிய கருணை.

    பொன்னருளி னூற்றுப் புகழ்தோய் குணக்குன்று
    மன்னுயிர்ப்பைங் கூழ்வளர்க்கு மாவெழிலி -துன்னுமன்பின்
    பொங்கு கடனீதிப் பொலிவார் மணிவிளக்கம்
    எங்களிறை யெட்வர்டென் பேம். (11)

    எனபே சுவதெட்வர்ட் வள்ளல் குணங்களை யெம்முரையின்
    இன்பேர் வரையறைக் கட்படு மோவிதை யெய்த்திலமால்
    துன்பே யுளங்கொ ளியல்புடை யாளருந் துன்றிமகிழ்
    நன்பே ருலக மிதுவே யெனவெணி நாடுவரே. (11)

    நாடுதனிச் செந்தமிழி னற்கடலி லாடுவீர்
    நீடுவகை கொண்டிங்ங னேர்மினோ -கூடிநாம்
    எல்லாரு மெட்வர் டிறைவன் முடிபுனைதல்
    சொல்லாரப் பாடிமகிழ் தும். (13)

    தும்மினுங் குற்ற மிருமினுங் குற்றஞ் சொலிப்புடைத்தார்
    நம்மிந் தியரைமுன் னாளு நலம்பெற்ற ஞாலமன்னர்
    இம்மையின் பெல்லா மினிது நுகர்தந் திருங்களியா
    டெம்மைநிகர்ப்பவர் யார்கொலிப் போழ்தென் றிருக்குதுமே. (14.

------
11. ஊற்று - நிரூறல். புகழ்தோய் - புகழ்சேர்நெத. பைங் கூழ் - பயிர். உயிராகிய பயிர். மாஎழிலி - பெரிய மேகம். துன்னும் - மிகுந்த. அன்பாகிய கடல். நீதியாகிய அழகு நிரம்பிய மாணிக்க தீபம். எங்கள் இறை - எமதரசன். என்பேம் - என்று கூறுவேம்.

12. எட்வர்ட் வள்ளல் குணங்களை யென் பேசுவது. இன்பேர் - இனியபுகழ். எம் உரையின் வரையறைக்கண் படுமோ - எமதுத் சொல்லின் எல்லைக்கட் பொருந்தும் அளவிற்றோ; மிகப் பெரி தென்றபடி.
இதை இத்தன்மையினை. எய்த்திலம் - அறிந்திலேம்.
    cf. "முத்து டைம்முலைக் கண்க ணொந்தவென்
    றெய்த்த டிச்சிலம் பிரங்கும்" (சிந். முத். 85)
துன்பத்தையே உள்ளத்திற்கொள்ளும் இயல்பினர்; Pessimists. மகிழ்துன்றி - மகிழ்ச்சி நிரம்பி. நன்பேருலகம் -துறக்கம். இது - இவன் ஆளும்நாடு. நாடுவர் - கருதுவர்.
13. நாடு தனிச் செந்தமிழி னற்கடல் - ஆராயப்படும் ஒப்பற்ற செவிவிய தமிழாகிய நல்ல கடல். ஆடுவீர் - மூழ்கித் திளைப்பீராக. நீடு உவகை - மிக்க களிப்பு. நேர்மின் - சேர்வீர். சொல்லார - வாயார. மகிழ்தும் - மகிழ்வோம்.

14. தும்மினாலுங் குற்றம் இருமினாலுங் குற்றம் என்று சொல்லி. முன் - முற்காலத்தில். நலம் பெற்ற - எல்லாச் செல்வங்களையுமடைந்த. ஞாலம் - பூமி. ஞால மன்னர் நம்மிந்தியரை நாளும் புடைத்தார் எனக் கூட்டுக.
இம்மையின்பு - இப்பிறப்பில் உள்ள இன்பம். நுகர்தந்து - அநுபவித்து. இருங்களியாடு - மிக்க மகிழ்ச்சியில் மூழ்கும். இருக்குதும் - இருப்போம்.

    இருக்குமறை தான்முழங்கு மிந்தியநற் றேயத்
    தருக்குமற்றை யாங்கிலர்க்குஞ் சாலப் - பெருக்கும்
    உரிமைகளில் வேறுபா டொன்றுமுறா வண்ணம்
    புரியுமெட்வர்ட் மன்னன் புகன்று. (15)

    மன்னர்தம் மன்னென்று வையமெல் லாமொப்ப வந்த வெங்கள்
    முன்னவ னாமெட்வர்ட் டேழா வனேனு முதல்வனென்னப்
    பொன்னரி யாதன மேறி மகிழ்ந்து பொலிந்தன்னால்
    நன்னரிக் காட்சிகண் டாநந்த மெய்தின நாமுளத்தே. (16)

    தேவன் றிருவருளாற் சீர்சான்ற வெட்வர்டெங்
    காவலன்செங் கோல்கொண்டான் காண்மினோ -யாவரும்
    உள்ளுவந்து வாழ்த்துமி னோங்கியகூத் தாடுமின்
    தெள்ளுதமிழ் பாடுமின் றேர்ந்து. (17)

    தேர்ந்துநின் றீருஞ் சிறிதள வாயினுந் தேரலிருஞ்
    சேர்ந்துநின் றிவ்வயி னீர்தினஞ் சிந்தை செயுமொருவன்
    ஆர்ந்துநின் றோங்கும் பரம்பொரு ளாகு மவனையன்பு
    கூர்ந்துநின் றெட்வர்ட் பொருட்டுக் கரந்தொழல் கொள்பரிசே. (19)

-------
15. இருக்கு முறை - இருக்கு வேதம். இந்திய நற்றேயத்தருக்கும் ஆங்கிலர்க்கும். சால - மிக. உரிமை - பாத்தியதை, (Rights). வேறுபாடு - வித்தியாசம். உறாவண்ணம் - பொருந்தாவிதம். புரியும் - செய்யும். ந‌டுவுநிலைமை யுடையான் என்பது கருதியது. புகன்று - விரும்பி. புகன்று புரியுமென்க.
    cf. "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்." (புறம் -31.)

16. மன்னர்தம் மன் - அரசர்க்கரசன்; Emperor. ஒப்பு - ஒப்புக்கொள்ள. எட்வர் டேழாவனேனும் முதல்வன் என்ன - இவன் ஏழாவது எட்வர்டாயிருப்பினும் முதன்மை வாய்ந்தவன் என்று சொல்லும்படி. பொன் அரியாதனம் - பொற்சிங்காசனம். பொலிந்தனன். நன்னர் - நன்றாக. ஆநந்தம் எய்தினம் -
களிப்படைந்தோம்.

17. தேவன் - கடவுள். சீர்சான்ற - சிறப்பமைந்த. எங்காவலன் - எமது அரசன். யாவிரும் - நீங்கள் எல்லீரும். உள் உவந்து - மனங்களித்து. வாழ்த்துமின், கூத்தாடுமின், பாடுமின் என்க. தெள்ளுதமிழ் - தெளிவான தமிழ். தேர்ந்து - ஆராய்ந்து.

18. தெரிந்தவரும் தெரியாதவரும் என்றபடி. தேரலிர் - அறியாதீர். இவ்வயின் - இங்கு. நீர் தினம் சிந்தை செய்யும் ஒருவன் - நீங்கள் தினமும் தியானிக்கும் ஒப்பற்ற கடவுள். ஆர்ந்து - எங்கும் நிறைந்து. பரம்பொருள் - மேலான பொருள். அன்புகூர்ந்து - அன்பு மிகுந்து. கரந்தொழல் - கைகுவித் திறைஞ்சுதல். கொள் பரிசு - மேற்கொள்ளத்தக்க செயலாகும். எட்வர்டு பொருட்டு கடவுளைக் கரந்தொழல் மேற்கொள்ளத் தக்கதென்று கூறியது.

    சேம சுபகிருதிற் செங்கடகச் சித்திரையிற்
    காமர் முடியணிந்தான் காண்மினோ - சீமைக்
    கரசனெனு மெட்வர் டருஞ்சார்வ பௌமப்
    பரசுபெரும் பேரொடுமிப் பார். (19)

    பாரி லவனர சென்றென்றும் வாழ்க பயன்சிறக்க
    சேரல ரெல்லாரு நட்பாள ராக செறிந்துமுகில்
    மாரி பொழிகவெங் கெங்குந் தமிழின் மணங்கமழ்க
    ஏரிற் பொலிகந மிந்தியர் வாழிய வெஞ்சொலுமே. (20)

-------
19. சேமம் - ஷேமம்; நன்மையைச் செய்யுமென்றபடி. இது சுபகிருது வருடத்திற்கு அடை. செங்கடகம் - செவ்விய கடகமாதமாகிய ஆடித்திங்களில். சித்திரையில் - சித்திரை நக்ஷத்திரத்தில். காமர் முடி - அழகிய கிரீடம். சீமைக்கு - இங்கிலாந்து நாட்டிற்கு. அரும் - கிடைத்தற்கரிய. சார்வபௌமன் - எல்லாப் பூமியையி
முடையோன்; பிறரைப் பணியா துலகாள்பவன்; சக்கிரவர்த்தி. இப்பார் - இந்த உலகில். சார்வபௌம்ப் பேரோடும் இப்பாரில் முடியணிந்தான் என முடிக்க. பரசு - கொண்டாடப் பெற்ற.

20. பாரில் - உலகில். அவன் அரசு - அவனுடைய அரசாட்சி. பயன் - அறம் பொருள் இன்பங்களாகிய பயன்கள். சேரலர் - சேராதவர்; பகைவர். செறிந்து - திரண்டு. முகில் - மேகம். மாரி - மழை, எங்கெங்கும் - எவ்விடங்களிலும். தமிழ் இன்மணம் - தமிழின் நறுமணம். கமழ்க - வீசுக. ஏரிற்பொலிக - அழகிற் றிகழ்க; இனி ஏர் வளஞ் சிறக்க என்றதுமாம். எம்சொலும் வாழிய - எமது கவியும் வாழ்க.
--------------

14. பண்டித நாட்டம்


[ஆசிரியர், தாம் இருமல் நோயால் வருந்திய பொழுது, அவரது தந்தையாராகிய ஸ்ரீ கோவிந்த சிவனார்தங் கட்டளையைச் சிரமேற் கொண்டு திருப்பரங்குன்றத்தில் ஸ்தலவாசமாக நாற்பத்தைந்து நாள் தங்கியிருந்த காலத்தில், அப்பிணியினை நீக்கியருள ஞானபண்டிதனாகிய திருப்பரங்கிரி முருகனைப் பாடியது]

பண்டித நாட்டம்

    கட்டளைக்கலித்துறை

    உலக முவப்ப வுயர்தமி ழாய்தந்த வொண் புலவ
    கலகம் விளைக்கும் விழியா ரிருவர் கணவயெழி
    லிலகறி வாள விருமலி னேங்கா தெமக்கருள்வாய்
    பலகலை யோங்கும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (1)

    காமர் செம்பாடலி யற்றுபு நின்னைக் கருதிவந்தேந்
    தேமலர் வெட்கியந் தாருடை யாய்தேவ சேனைமகிழ்
    கோமகனேயெமை வாட்டுங் கொடுநோய் குமைத்தருள்வாய்
    பாமயி லாடும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (2)

    தோமில் செம்பாட லியற்றுபு நின்னைத் தொழுதுவந்தே
    நீமகிழ் வுற்றே மிருமற் கொடுநோயை நீத்தருள்வாய்
    பூமகள் கொங்கை யெனப்பொலி கின்ற பொருப்புடையாய்
    பாமக ளேத்தும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (3)

-----------
1. உலகம் உவப்ப = சீவான்மாக்கள் மகிழும்படி, நக்கீரர் பெற்ற திருவருளினைத் தாமும் பெறக்கருதியே, ஆசிரியர் திரு முருகாற்றுப்படையின் மங்கல முதன் மொழியை ஈண்டமைத்துப் போற்றினர். கூடன்மா நகரத்துக் குலவிய தமிழ்ச்சங்கத்திற் குன்ற மெறிந்த குமரவேளும் அங்கத்தினனா யமர்ந்திருந்தமையின், 'உயர்தமி ழாய்தந்த கொண்புலவா' என்றனர். ஆய்தந்த = ஆய்ந்த. கலகம் விளைக்கும் விழியார் = கலகம் விளைத்தல் விழிக்கு அடை. இருவர் = வள்ளி, தெய்வயானை என்று மிருதேவியர்.
cf. "மங்கையர் கணவ மைந்த ரேறே" (திருமுரு. 264)

எழில் இலகு அறிவாள = அழகு விளங்கும் அறிவுடையாய். ஏங்காது = துன்புறாது. பலகலை = பலநூல்களும். ஓங்கும் = சிறந்து விளங்கும். பண்டிதன் (Doctor)

2. காமர் = அழகு, விருப்பம் மிக்க எனினுமாம். இயற்றுபு = இயற்றி. செம்பாடல் = செவ்விய பாடல்களை. தேமலர் = தேன்பொருந்திய. வெட்சி = வெட்சித் தேமலர் என மாறுக. தார் = மாலை. குமைத்தல் = அழித்தல். பா மயில் = சரஸ்வதி.

3. தோம் இல் = குற்றமற்ற. தொழுது உவந்தேம் = வணங்கிக் களித்தேம். மகிழ்வுற்றேம் = களிப்பினையுடைய எமது. நீத்தருள்வாய் = நீக்கியருள்வாய். பூமகள் கொங்கை = பூமாதேவியின் தனம். பொலிகின்ற = விளங்குகின்ற. பொருப்பு = மலை. மலைக்குப் பூமாதேவியின் கொங்கையை ஒப்பிடுவது மரபு.
    cf "சோதிமதி வந்துதவழ் சோலைமலை யோடிரண்டாய்
    மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே" (திருவேங்கடமாலை)
பா மகள் = சரஸ்வதி.

    நைந்துளம் வாடி யிருமலி னெற்றுண்டு நாந்தவியா
    துய்ந்திடு மாறெமை யாண்டருள் செய்குத லுன்கடனான்
    மைந்துடை யாயெழின் மாண்புடை யாய்கலை மான்புகழும்
    பைந்தமிழ் சான்ற பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (4)

    நாணாது நாவலர் கூட்டம் புகூஉப்பல நாளுமுனைப்
    பேணா திருந்திலெம் பேசிப் புகழ்ந்தனெம் பீடுயர்ந்தாய்
    வீணாக யாமிரு மல்லி னுழலல் விரும்புதியோ
    பாணார் பொழில்கொள் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (5)

    கண்ணேயக் கண்ணுண் மணியே மணியின் கதிரொளியே
    விண்ணேயவ் விண்ணி னிறையே யிருமலை வீட்டியரு
    ளெண்ணேயவ் வெண்ணு ளிருப்பவ னேதமி ழின்புலவா
    பண்ணே சுவையே பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (6)

    காலாழ் களரிற் களிறென நாயேங் கசிதரனிற்
    கேலாது காண்டி யிருந்தமிழ் வாணர்க் கிறையவனே
    நூலார் நயந்தெரி வாயெ மிருமலைநூக்கியருள்
    பாலா குமாரா பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (7)

---------
4. உளம் நைந்து - மனம் வருந்தி. எற்றுண்டு - அடிபட்டு. தவியாது - வருந்தாது. உய்ந்திடுமாறு - தப்பிப் பிழைக்கும்படி. கடன் - கடமை. ஆல் - அசை. மைந்து - வலிமை. எழில் மாண்பு - அழகின் மாட்சி. கலைமான் - சரஸ்வதி. சான்ற - அமைந்த.

5. நாவலர் கூட்டத்து நாணாது புக்கு எனச் சேர்க்க. பகூஉ - புக்கு; புகந்து. இருந்திலெம் - யாமிருந்ததில்லை. புகழ்ந்தனெம் - பகழ்ந்தோம். பீடு - பெருமை. உழலல் - வருந்துதல். பாண் - இசைப்பாட்டு. ஆர் - நிரம்பிய. வண்டு குயில் முதலியவற்றின் இசையை ஈண்டுப் பாண் என்றனர்.

6. விண் - ஆகாயம்.விண்ணின் இறை - விண்ணுலகிற்குத் தலைவன். எண் - எண்ணம். சுவையே - அப்பண்ணின் சுவையே. தமிழின் புலவா - இனிய தமிழ்ப் புலவனே.

7. களர் - சேற்று நிலம். சேற்றிற் காலாழ்ந்த யானை யென்று சொல்லும்படி.
cf. "காலாழ் களரின்." (திருக்குறள். 500)
ஏலாது - பொருந்தாது. கசிதரல் - வருந்துதல். நிற்கு - நினக்கு. காண்டி - முன னிலையசை. தமிழ் முதற் குரவராகிய அகத்தியர் முதலியோர்க்கு அருள் புரிந்த தலைவனாதலின் தமிழ் வாணர்க் கிறையவனே என்றனர். நூலார் நயம் - நூலிலுள்ள அழகு. நூக்குதல் - அழித்தல். பாலா - குழந்தையே. குமாரா - யௌவந பருவத்தை
யுடையாய்.

    கூடலி னுற்றன்று கூடும் புலவர் குழூஉவிருந்து
    நாடுநக் கீர னுரையே யுரையென நாட்டியசேஎ
    யீடில் வணமெமை நோயினில் வாட்டுத லென்னைகொலோ?
    பாட னலஞ்சால் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (8)

    பார்க்குங் குலத்தே மிருமலின் வாடல் பரிவுகொலோ
    வேர்க்கும் பரிசின் விரைந்தடி யார்க்காக்கும் வீரவிண்ணினின்
    கார்குகுல மெல்லா மொருங்கே துயிலுறுங் காட்சிசெறி
    பார்க்கு ளுயர்ந்த பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (9)

    நாவலர்க் கெய்ப்பினில் வைப்பென விவ்வயி னண்ணியசீருக்
    காவல னேயா மிருமலின் வாடிடக் கைவிடுத
    னீவிழை ழேலுட னேவந்தெ நோயினை நீக்கியருள்
    பாவலர்க் குற்ற பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (10)

    துங்கக் குடம்மையி னீங்கி விரும்பித் தொடுகடலின்
    மங்கறி விற்புகுந் தோடி யுழன்று மயங்குகிள்ளை
    வங்கம் பெறீஇ மகிழ்ந் தென்ன வெளியே மகிழ்ந்தனெமாற்
    பங்கயை வாழும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (11)

--------
8. கூடலின் உற்று - மதுரையிற் சேர்ந்து. அன்று - முற்காலத்தில். புலவர் - சங்கப்புலவர். குழூஉ - கூட்டம். நாடும் - ஆராயும். குழூஉ - இன்னிசை யளபெடை. நக்கீரன் உரை - இறையனா ரகப்பொருட் சூத்திரங்கட்கு நக்கீரதேவர் இயற்றிய உரை. உரை யென - சரியான உரையென்று. நாட்டிய - நிலைபெறக் கூறிய. முருகக்
கடவுள் உருத்திர சன்ம னென்னும் மூங்கைப்பிள்ளையாய் அவதரித்துச் சங்கத்தார் நடுவிற் காரணிகனாய் வீற்றிருந்து இறையானார் கூறிய அகப்பொருட் சூத்திரங்கட்கு நக்கீரனார்தம் முரையே சிறந்த்தென்று புலப்படுத்தினார் என்னும் வரலாறு ஈண்டுக் குறித்தது. சேஎய் - அளபெடுத்தது விறியின் பொருட்டு. ஈடு இல் வண்ணம் - இத்துன்பத்திற்கு நிகர் வேறு துன்பமில்லை யென்னும்படி; வலிமை கெடுபடி எனினுமாம். என்னை கொலோ - ஏனோ. பாடல் நலம் - பாடலின் இனிமை. சால் - அமைந்த.

9. பார்க்குங் குலம் - பார்ப்பார்குலம். வேதாந்தத்தை நெருங்கிப் பாரப்பவர் என்றபடி. குலத்தேம் - குலத்திற் பிறந்த யாம். பரிவு - அன்பு. வேர்க்கும் வீர - துன்பமுற்ற அடியாரைக் காத்தற் பொருட்டுத் தனக்கு வியர்வை யுண்டாதலையும் பொருட் படுத்தாது விரைந்து செல்லும் இயல்புடைய வீரனே என்றபடி. விண்ணின் - ஆகாயப் பரப்பிலுள்ள. கார்க் குலம் - மேகக்கூட்டம். ஒருங்கே - ஒன்றாகக் கூடி. துயில் உறும் - தூங்கும். தொடர்புயர்வு நிவிற்சியணி. காட்சிசெறி பரங்கிரி யென்க. பார் - பூமி. உயர்ந்த - நினது படை வீடுகளிற் சிறந்ததாக முதன்மையுற்ற.

10. நாவலர் - புலவர். எய்ப்பினில் வைப்பு - சேமநிதி. ஆபத்தனம். இவ்வயின் - இவ்வுலகில். நண்ணிய - பொருந்திய. சீர்க்காவலன் - சிறந்த காவலன். கைவிடுதல் - உதவிபுரியாது விடுதல்; கை உபசருக்கம். விழையேல் - விரும்பாதே. கைவிடுதலை விழையேல் என்க. உடனே வந்து எம்நோயினை நீக்கியருள் எனப்
பிரிக்க. பாவலர்க்கு உற்ற - புலவர்கட்கு அருள் செய்தற் பொருட்டுப் பொருந்திய.

11. துங்கம் - உயர்வு. குடம்மை - கூடு. தொடுகடல் - தோண்டப்பட்ட கடல். மங்கு அறிவில் = குறைந்த அறிவினால். உழன்று - வருந்தி. மயங்கு - கையற்ற. கிள்ளை - கிளி. வங்கம் - மரக்கலம். பெறீஇ - பெற்று. மகிழ்ந்தென்ன - மகிழ்ந்த தென்று சொல்லும்படி. எளியேம் - அடியேம். ஆல் - அசை. பங்கயை - இலக்குமி.

சுபம்.
-----------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்