முல்லைப்பாட்டு - மூலமும் நச்சினார்க்கினியருரையும்
சங்க கால நூல்கள்
Backபத்துப்பாட்டில் ஐந்தாவதான : முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டு ஐந்தாவது முல்லைப்பாட்டு
மூலமும் நச்சினார்க்கினியருரையும்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்கள்
பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர், நிழற்படப்பதிப்பு - 1986
---------------
முல்லைப்பாட்டு
-
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி 5
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது 10
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கு யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர 15
வின்னே வருகுவர் தாய ரென்போ
ணன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது நீநின் 20
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள்க லுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி 25
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
கவலை முற்றங் காவ னின்ற 30
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் 35
கல்லா விளைஞர் கவளங் கைப்பக்
கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்
கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் 40
பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவி லரண மரண மாக
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் 45
திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
நெடுநா வொண்மணி நிழத்திய நடுநா 50
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவலிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்
பொழுதளந் தறியும் பொய்யா மாக்க 55
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து 60
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு
ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் 65
படம்புகு மிலேச்ச ருழைய ராக
மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் 70
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை 75
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து 80
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல 85
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர்
வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையொடு 90
விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு
வயிறும் வளையு மார்ப்ப வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்
கோடற் குவிமுகை யங்கை யவிழத் 95
தோடர் தோன்றி குருதி பூப்பக்
கான நந் திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மட மானுகள்
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் 100
முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
1. "நனந்தலை யுலகம்" (பதிற். 63 : 18)
‘நன' என்னும் அகர வீற்றுரிச்சொல், அகலமென்னுங் குறிப்புப் பொருளை யுணர்த்துதற்கும் உரிச்சொல் எழுத்துத் திரிந்திசைத்தற்கும் இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. 78, ந ; இ - வி. சூ. 282, 289.
2 - 3. "கயந்தரு நறும்புனல் கையிற் றீண்டலும், பயந்தவர் களுமிகழ் குறளன் பார்த்தெதிர், வியந்தவர் வெருக்கொள விசும்பினோங்கினான், உயர்ந்தவர்க் குதவிய வுதவி யொப்பவே" (கம்ப. வேள்வி. 35) ; "நீர்விரி கமலச் செங்கை நீர்செல நிவந்த மாயோன்" (பாகவதம், 8. வாமனாவதார. 64)
4. "வலனேர்பு" (முல்லை. 91 ; முருகு. 1)
4 - 6. "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென " (நெடுநல். 1 - 2)
7. மு. "வாள்போழ்" (நாற். சூ. 147, உரை, மேற்.) என்னுஞ் செய்யுளிலும் ஓரடி இப்படி வந்துள்ளது. 3. யாழிசைவண்டு : "யாழ்வண்டு" (பொருந. 211) ; "வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடு" (கலித். 32 : 9) ; "வண்டியாழாக" (அகநா. 82 : 6) ; "உண்டிருந்த தேனை யறுபதங்க ளூடிப் போய்ப், பண்டிருந்த யாழ்முரல" (ஈங்கோய். எழு. 10); பொருந. 213, ந. குறிப்புரையையும் பார்க்க.
8 - 10. "நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது" (நெடுநல். 43) ; "அரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்" (சிலப். 9 ;1-2)
----
11. பெருமுது பெண்டிர் : குறுந். 181 : 7.
8 - 11. "நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும், செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா" (புறநா. 280 : 6 - 7)
"முல்லை குறிஞ்சியென்பன இடுகுறியோ காரணக்குறியோ வெனின், ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறியென்றே கொள்ளப்படும். என்னை காரணமெனின், ‘நெல்லொடு .................தூஉய்' என்றமையால் காடுறையுலகிற்கு முல்லைப்பூச் சிறந்த தாகலானும்............இவ்வாறு குறியிட்டாரென்று கொள்ளப்படும் என்க" (தொல். அகத். சூ. 5, இளம்.)
6 - 11. மாலையில் விரிச்சி நிற்றல் : "வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற், கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று" (பு. வெ. 4)
12. பசலைக்கன்று : "பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று" (திருவிளை. திருநகரப். 33)
12 - 4. இவ்வடிகளுடன், "எம்மனை மாரினி" (சீவக. 425) என்னுஞ் செய்யுளை ஒப்பிடுக.
15. கொடுங்கோற் கோவலர் : "கொடுங்கோற், கல்லாக் கோவலர்" (அகநா. 74 : 15 - 6)
16. "இன்னே வருகுவர்" (நெடுநல். 155)
15-6. காதல்பற்றியும் உவப்புப்பற்றியும் அஃறிணை உயர்திணையாய் மயங்கியதற்கு இவ்வடிகள் மேற்கோள் : தொல். கிளவி. சூ. 27, ந. இ - வி. சூ. 299.
20. (பி-ம்.) ‘வருதராதல் வாய்வது' 21. (பி-ம்.) ‘மாயோளென'
20-21. "பொய்ம்மை யுடன்புணரார் மேலவர் பொய்ம்மையு, மெய்ம்மைசூழ் மேலவரை மேவாவாம்-இம்முறையாற், பூவலருந் தாராய்
பிரிந்தாற் பொலங்குழையார், காவலர்சொற் போற்றல் கடன்" (இ-வி. சூ. 658, மேற்.) என்பதன் கருத்து இவ்வடிகளின் கருத்தையொத்தது.
--------
20 - 22. "இன்னே வருகுவ ரின்றுணை யோரென, வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து" (நெடுநல். 155 - 6)
23. பூப்போலுண்கண்: நற். 20 : 6, 325 : 7 ; குறுந். 101 : 4 ; ஐங். 16 : 4, 101 : 4. புலம்புமுத்துறைப்ப : "விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப" (சிலப், 4 : 71)
25. பைம்புதலெருக்கி : பெரும்பாண். 112.
28. (பி - ம்.) ‘பரந்த பாசறை'
பாசறைக்குக் கடல் : "கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறை", "கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்" (புறநா. 294 : 2. 295 : 1)
24 - 8. வஞ்சி, முல்லையின் புறமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் : தொல். புறத். சூ. 6, இளம் ந.
29. ‘உவலை' தழையென்னும் பொருளை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 363.
29 - 30. "கவலை மறுகிற் கடுங்கண் மறவர், உவலைசெய் கூரையொடுங்க" (பு. வெ. 169)
30 - 31. "எல்லை நின்ற வென்றி யானை யென்ன நின்ற ................. வாயிலே" (கம்ப. நகர. 22)
31 - 3. "கரும்பொடு காய்நெற் றுற்றி........யானை" (சீவக. 2522)
31 - 4. "யானை தன், கோட்டிடை வைத்த கவளம்போல" (புறநா. 101 : 6 - 7)
-------
35. "கவைமுட் கருவியு மாகிக் கடிகொள" (மணி. 18 : 164)
வடமொழி பயிற்றி : "பெருவெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர்" (மலைபடு. 326-7)
36. "காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப" (மதுரைக். 658-9)
37-8. "முக்கோலுங் கமண்டலமுஞ் செங்கற் றூசு முந்நூலுஞ் சிகையுமாய் முதிர்ந்து தோன்று, மக்கோலம்" (வி. பா. அருச்சுனன் தீர்த்த. 55)
40. கூடம் : "ஒல்லாக் கூடமு மொருங்குதலைப் பிணங்கி" (பெருங். 2. 12 : 45)
41. பெரும்பாண். 119-20 -ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.
41 - 2. "வேலி யிட்ட தவர்க ளிட்ட வில்லும் வாளும் வேலுமே" (திருவரங்கக்கலம். 53)
43. பட்டினப். 216.
44. "நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த, கொடும்பட நெடுமதில்" (சிலப். 27 : 151-2) : "காழொடு சேர்த்த, கண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த, நன்னகர்", "கண்டப் பூந்திரை காழ்முதற்கொளீஇ", "பல்காழ்த் திரையும்" (பெருங். 1.42 : 105-7, 2.4 : 134. 12 : 44)
46-7. "இடும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட, வரும்பெறற் சுரிகை யம்பூங் கக்சிடைக் கோத்து வாங்கி" (சீவக. 698)
-------
48. "சொரிசுரை கவரு நெய்வழி புராலில்" (பதிற். 47: 5)
49. (பி-ம்.) ‘மாட்டி'
50. (பி-ம்.) ‘நெடுநாவெண்மணி', ‘மிழற்றிய நடுநாள்', ‘நிழத்தலினடுநாள்',‘நிழற்றிய'
"நெடுநா வொண்மணி கடிமனை யிரட்ட", "யாமங் கொள்பவர் நெடுநா வொண்மணி யொன்றெறி பாணியி னிரட்டும்" (நற். 40 : 1. 132 ; 9-10)
51. அதிரல் : குறிஞ்சிப். 75.
54. பெருமூதாளர் : "பெருமூ தாளரே மாகிய வெமக்கே" (புறநா. 243: 14) : "பெருமூ தாள, னேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்ப", "பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்" (பெருங். 1. 34 : 110-11, 57: 17)
53-4. "பைந்துகின் முடியணிந் தவர்பின், உலவு காஞ்சுகியவர்" (சீவக. 1558)
55 - 8. "சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப" (மதுரைக். 670-71) : "குறுநீர்க் கன்ன லெண்ணுந ரல்லது, கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்" (அகநா. 43: 6-7) ; "நாழிகைக் கணக்கர்", "ஐந்து கேள்வியு மமைந்தோ னெழுந்து, வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்ற, மிருநில மருங்கின் மன்னரெல்லாநின், றிருமலர்த் தாமரைச் சேவடி பணியு, முழுத்த மீங்கிது முன்னிய திசைமே, லெழுச்சிப் பாலை யாகென் றேத்த" (சிலப். 5 : 49, 26 : 26-31) ; "குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்" (மணி. 7: 64-5) ; "கொலைமுகக் களிற னாற்கு நாழிகை சென்று கூற" (சீவக. 2733) ; "புன லுற்றுருகு செப்பின், காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான், மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ" (கம்ப. கார்காலப். 73) ; "பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு, காமன் றிரியுங் கருவூரா-யாமங்க, ளொன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையு, மொன்றுபோ யொன்றுபோ யொன்று" (சிலப். 5: 49, அடியார். மேற்.)
-----------
60. மெய்ப்பை புக்கு : "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66) ; "மெய்ப்பை புக்கு" (சிலப். 16 :107)
66. (பி - ம்.) ‘மிலைச்சர்'
படம்புகும் : (பெரும்பாண். 69) ; "செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக, வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைக், செங்கட்டீவிழி யாத்தெழித் தான்" (சீவக. 431)
67. "செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர்" (அகநா. 157 : 4) ; "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" , "பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை, வளிபொரு தெண்கண் கேட்பி , னதுபோ ரென்னுமென்னையு முளனே", "வாள்வடு விளங்கிய சென்னிச், செருவெங் குருசில்" (புறநா. 31: 9 . 89 :7-9 . 321: 9-10) ; "போரென்ன வீங்கும் பொருப்பன்ன திரள்கொ டிண்டோள்" (கம்ப. பூக்கொய். 18) ; "செருவென்ற மாற்றங் கேட்டுச் சிந்தையி னுவகை பொங்க, மருவொன்று மலங்கன் மார்பும் வாகுபூ தரமும் பூரித்து .......... ஒருப்பட்டான்" (வி. பா. நிவாதகவசர். 17)
69. (பி-ம்.) ‘வேழமும்'
70. யானைத்துதிக்கைக்குப் பாம்பு : "யானைதன், வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை, குன்றுபுகு பாம்பிற் றோன்றும்" (அகநா. 391 : 11-3) ; "நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர், வரைபுரை யானைக்கைந் நூற-வரைமே, லுருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ப்பிற், சேய்பொரு தட்ட களத்து" (களவழி. 13) ; "பாந்தளன்ன பரேரெறுழ்த் தடக்கையின்" (பெருங். 1. 58: 8) ; "அனந்தனன்னகை யானை" (சீவக. 2521)
-------
73. "வேனிறத் திங்க வயவரா லேறுண்டு, கானிலங் கொள்ளக் கலங்கிச் செவிசாய்த்து, மாநிலங் கூறு மறைகேட்ப" (களவழி.41)
‘வை' கூர்மையாகிய குறிப்புப்பொருளை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல், உரி. சூ. 91, சே : 89, ந.
74. (பி.-ம்.) ‘மாவுஞ் சிந்தித்து'
75. "பள்ளி-படுக்கை; ‘ஒருகைப் பள்ளி யொற்றி' இது முல்லை." (தக்க. 54. உரை)
76. நெடிதுநினைந்து : "நீடு நினைந்து" (முல்லை. 82)
75 - 6. தொல். கற்பியல், சூ, 34, ந. மேற்.
83. ஒரு பிரதியில் இவ்வடியின் பின், "அஞ்சி லோதி யாய்கவி னசைஇ, யேவுறு" என்னும் பகுதி காணப்படுகின்றது.
ஒய்யென : பொருந. 152.
84. (பி.-ம்.) ‘இனழ நெகிழா' "ஏவுறு மஞ்ஞையி னினைந்தடி வருந்த" (மணி. 7: 127) ; "இடருற் றிகல்வாளி, தன்னங்க மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென, அன்னம் பொருவு நடையா ளயிராணி, மன்னன் றிருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே" (கந்த. அயிராணி. 5)
---------
85. "யவன ரியற்றிய வினைமாண் பாவை, கையேந் தையகனிறையநெய் சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி", "பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல" (நெடுநல். 101-3, 175) ;" பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல" (பதிற்,47: 6)
பரூஉச்சுடர் : "பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர்கொளீஇ" (பெருங். 1. 54: 8)
86. எழுநிலைமாடம் : "எழுநிலை மாடஞ் சேர்ந்தும்" (சீவக. 2840)
86-7. "நீர்பாய் மாடமொடு","ஏரணி யமைந்த வெழுநிலை நல்வினை, நீரணி மாடத்து"(பெருங். 1. 38 : 77, 40 : 16-7)
87-8. "கார்வா னின்னுறை தமியள்கேளா" (புறநா. 157: 3)
89. அல்வழிக்கட் ககரமும் அகரமுங்கெடுதற்கு இது மேற்கோள் : தொல். குற். சூ. 78, ந.
90-91. "நீரொலித் தன்ன நிலவுவேற்றானையொடு, புலவுப் படக் கொன்று மிடைதோ லோட்டிப்,புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி" (மதுரைக் 369-71).
92. வயிரும் வளையும் ஆர்த்தல் : முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
93. செறியிலைக்காயா : "செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்ப" (பெருங். 1. 49: 115)
"கண்ணிய லஞ்சனஞ் தோய்ந்தபோற் காயாவும், நுண்ணரும் பூழ்த்த புறவு" (கார்.8) "அஞ்சனங் காயா மலர" (திணைமொழி. 21)
94. "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" (அகநா. கடவுள். ) ; "கொன்றைகள்பொன்சொரிய" (தேவாரம், திருப்புகலி.)
95. "செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்" (சிறுபாண்.
--------
தோடார் தோன்றி குருதி பூப்பக்கான நந்திய செந்நிலப் பெருவழிவானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
"கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்" (பரி. 19: 76) ; "கைவிரிந்தன காந்தளும்" (சூளா. நாட்டு.11)
96. "குருதிப் பூவின் குலைக்காந் தட்டே" (குறுந். 1: 4)
99. திரிமருப்பிரலை : "இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பின் ........................... இரலை", "திரிமருப் பிரலைய காடிறந் தோரே", "புன்கண்கொண்ட திரிமருப் பிரலை" (அகநா. 4: 3-4, 133-18, 371;5)
இரலையொடு மடமானுகளல் : "பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி, மடக்கட் பிணையொடு மறுகுவன வுகள" (மதுரைக். 275-6); "அறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவும்" (பட். 245) ; "வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன், இன்புறு துணையொடு மறுவந் துகளத், தான்வந் தன்றே தளிதரு தண்கார்", "துணையோ, டிரலைநன்மா னெறிமுத லுகளு, மாலை", "திரிமருப் பிரலை யண்ண னல்லே, றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ, வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச், செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலை" (குறுந். 65: 1-3, 250 : 1-3.338 : 1-4)' "அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத், திரிமருப் பிரலை புல்லருந் துகள", "அண்ண லிரலை யமர்பிணை தழீஇத், தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே", "இருதிரி மருப்பினண்ண லிரலை ................... மடப்பிணை யருத்தி........................காக்கும்". "திரி மருப் பிரலை........காமர் துணையோ டேமுற வதிய", "திரிமருப் பிரலை தெள்ளறல் பருகிக், காமர் துணையோ டேமுற வதிய", "மடப்பிணை, வலந்திரி மருப்பி னண்ண லிரலையொ, டலங்குசினைக் குருந்தி னல்கு நிழல் வதிய ", "மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற், றிரிமருப் பிரலை பைம்பயி ருகள'; (அகநா. 14: 5-6. 23: 8-9. 34: 4-8, 139 : 10-12, 154 : 8-9, 304 : 8-10, 314: 5-6) ; "கருவியல் கார்மழை கால்கலந் தேந்த, வுருகு மடமான் பிணையோ டுகளும்" (திணைமொழி. 2); "கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூரில்" (தே. திருஞா.); "சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை", "மறியுடன் றழீஇய மடமா னம்பிணை, துள்ளுநடை யிரலையொடு வெள்ளிடைக் குழும", "திரிமருப் பிரலை.................மடமா னம்பிணை கண்டு .................. புகன்றுவிளையாடும்" (பெருங். 149: 114, 54 : 38-9 ; 3.1 :141-7)
98-9. "பழமழைக் கலித்த புதுப்புன வரகி, னிரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை" (குறுந். 220 : 1-2)
-------
100. வெண்மழை : நெடுநல். 19.
101. வள்ளியங்காடு : குறுந். 216 : 2.
பிறக்கொழிய : பெரும்பாண். 351 ; ஐங். 385: 2 ; அகநா. 104: 13 ; புறநா. 15: 15 ;மணி.11: 65.
102. ‘துனை' என்னுஞ்சொல் விரைவென்னும் பொருளையுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 17, ந.
---------------
இப்பாட்டிற்கு #முல்லையென்று பெயர் கூறினார் ; @முல்லைசான்ற கற்புப்பொருந்தியதனால். §இல்லறம்நிகழ்த்துதற்குப் பிரிந்துவருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்த லென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள்கூறலே அவர் கருத்தாயிற்று. "தானே சேறல்" (தொல். அகத். சூ. 27) என்னும் விதியால், அரசன் தானே சென்றது இப்பாட்டு.
இது, தலைவன் வினைவயிற் பிரியக்கருதியதனை அவன் குறிப்பானுணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் $பெருமுதுபெண்டிர் £அவன் வினைமுடித்து வருதல் வாய்வது, ## நீவருத்தம் நீங்குவதெனக்கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக்கண்டு வாயில்கள் தம்முட்கூறியது. இது "வாயி லுசாவே தம்முளு முரிய", (தொல். செய். சூ. 199), "எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப" (தொல். கற்பு. சூ. 37) என்பனவற்றாற் கூறினார்.
-----
# இப்பாட்டு முல்லையென்று வழங்குதல், "இது முல்லை" (தக்க. 54, உரை)என்பதனாலு மறியப்படும்.
@ "முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" (சிறுபாண். 30)
§ சிறுபாண். 169-ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
$ "பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப" (முல்லை. 11)
£ முல்லை. 20.
## முல்லை. 20-21.
------
1. நன தலை உலகம் வளைஇ-அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து,
1-2. [நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை :]
நேமியொடு வலம்புரி தாங்கு தட கை மாஅல் (3)-சக்கரத்தோடே வலம்புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால்,மா #பொறித்த மாஅல் (3)- திருமார்பிடத்தே திருமகளைவைத்த மாலை,
3. நீர் செல நிமிர்ந்த மாஅல் போல-மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப்போல,
இனி, @நேமியோடே வலம்புரியுமாகிய உத்தம இலக்கணங்களைப் பெற்றிருக்கின்ற திருமகளையணைத்தகையிலே நீர்செல்லவென்றுமாம்.
இதனானே §முல்லைக்குரிய தெய்வங்கூறினார்.
4-5. [பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, $கோடுகொண்டெழுந்த கொடுஞ்செல வெழிலி :] பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு கோடு கொண்டு-ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலைக்குடித்து வலமாகவெழுந்து மலைகளை இருப்பிடமாகக்கொண்டு, உலகம் வளைஇ (1) எழுந்த கொடு செலவு எழிலி-பெய்யுங்காலத்தே உலகத்தை வளைந்தெழுந்த கடிய செலவினையுடைய மேகம்,
மால்நீர் செலநிமிர்ந்தாற்போல மேகமும் நீர்செலநிமிர்ந்ததென்றார்.
இனி, உலகத்தைத் திருவடிகளிலே அணைத்துக்கொண்டுநிமிர்ந்த மாலென்றுமுரைப்பர்.
6. பெரு பெயல் பொழிந்த சிறு புல் மாலை-பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய வருத்தஞ்செய்கின்ற மாலைக்காலத்துப் பாவை விளக்கு (85) எனக்கூட்டுக.
---------
# பொறித்தல்-வைத்தல் ; சிறுபாணாற்றுப்படை, 48, உரையைப் பார்க்க.
@ இங்கே, நேமி-சக்ரரேகை, வலம்புரி-சங்கரேகையெனக் கொள்க ; இவை கைக்குரிய உத்தம இலக்கணங்கள் ; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" (சீவக. 204) ; "சங்க லேகையுஞ் சக்ரலேகையும், அங்கை யுள்ளன வையற்கு" (சூளா. குமார, 45) ; "சங்கு சக்கரக் குறியுள தடக்கையில்" (கம்ப. மராமரப். 117.)
§ "மாயோன் மேய காடுறை யுலகமும்" தொல். அகத். சூ, 5.
$ "ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ" (புறநா. 35: 17) என்பதனுரையில் கோடென்பதற்குப் பக்கமென்று பொருளெழுதுவர் அதனுரையாசிரியர்.
--------
இதனானே முல்லைக்குரிய #காரும் மாலையுங் கூறினார்.
மால்போல (3) எழுந்த எழிலி (5) பொழிந்த மாலையென்க.
7. [அருங்கடி மூதூர் மருங்கிற் போகி :] அரு கடி முது ஊர் மருங்கில் நல்லோர் (18) போகி-அரியகாவலையுடைய பழைய ஊர்ப் பக்கத்துப் பாக்கத்தே படைத்தலைவரேவலால் நற்சொற்கோடற்குரியோர் போய்,
8-11. [யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை, யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது, 2பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப:]
நறு வீ முல்லை (9) அரும்பு (10) யாழ் இசை இனம் வண்டு ஆர்ப்ப (8) அவிழ் அலரி (10) நாழிகொண்ட (9) நெல்லொடு (8) தூஉய் (10)- நறியபூக்களையுடைய முல்லையினது அரும்புகள் யாழினது ஓசையினையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை நாழியிடத்தே கொண்டுபோன நெல்லுடனேதூவி,
கைதொழுது (10) விரிச்சி நிற்ப (11)-தெய்வத்தை வணங்கி நற் சொற்கேட்டு நிற்க,
நல்லோர் (18) போகித் (7) தூஉய்த் தொழுது (10)நிற்பவென்க.
என்றது : §ஒரு வேந்தன் ஒரு வேந்தனோடு இகல்கருதினாற் போர் செய்ய வேண்டுதலின், அவனாட்டந்தணர் முதலியோரைத் தன்னாட்டின் கண்ணே அழைத்தற்கும், அதனையறியாத ஆவைக் கொண்டுபோந்து தான் காத்தற்குமாகத் தன் படைத்தலைவரை நோக்கி அரசன் நிரை யடித்தற்கேவியவழி, அவர் அவனூரினின்றும் போய் ஒரு பாக்கத்து
--------
# "காரு மாலையு முல்லை குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்" (தொல். அகத். சூ. 6)
@ பெருமுதுபெண்டிரென்பதற்கு ஒரு பிரதியிலும் உரையிலது ; பெரிய முதிர்ந்த பெண்டிரென்க.
§ "இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர், ஒருவர் நாட்டுவாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத்தகாதசாதிகளை ஆண்டுநின்றும் அகற்றல்வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாமென்றதற்கு ‘ஆதந்தோம்பல்' என்றான்; அஃது, ‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் ................... எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென, வறத்தாறு நுவலும் பூட்கை மரத்தின்' (புறநா. 9:1-6) எனச் சான்றோர் கூறிய வாற்றானுணர்க" (தொல். புறத். சூ. 2, ந.) என்று இவ்வுரையாசிரியர் எழுதியுள்ளவற்றால் இங்கே கூறப்படும் வழக்கு விளங்கும்.
--------
#விட்டிருந்து அரசனுக்கு மேல்வரும் ஆக்கத்தை யறிதற்கு விரிச்சியோர்த்தல் வேண்டுமென்று புறத்திணையியலுட் கூறினமையான், ஈண்டும் அவ்வாறே கூறினார், ‘அது, "வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவி, னாதந் தோம்பன் மேவற் றாகும்", "படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி" (தொல். புறத். சூ. 2,3) என்னுஞ் சூத்திரங்களானும், "திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி, நரைமுதியோ னின்றுரைத்த நற்சொன்-னிரையன்றி, யெல்லைநீர் வையமிறையோற் களிக்குமால், வல்லையே சென்மின் வழி" என்னும் உதாரணத்தானுமுணர்க. இவர் இதுகேட்டு நிரைகொண்டால் அரசன் வஞ்சி சூடி மண்ணசையால் மேற்செல்வ னென்பது. ஆண்டு, "எஞ்சாமண்ணசை" (தொல். புறத். சூ, 7) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவாறே ஈண்டுக் கூறினார். அது மேல், "முனை கவர்ந்து" (19)என்பதனானுணர்க.
12-8, [சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி, னுறுதுய ரலமரனோக்கி யாய்மக, ணடுங்குசுவ லசைத்த கையள் கைய, கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர, வின்னே வருகுவர் தாய ரென்போ, ணன்னர் நன்மொழி கேட்டன மதனா, னல்ல நல்லோர் வாய்ப்புள்;]
நன்னர் (17) வாய்ப்புள் (18) - அவர்கேட்ட நன்றாகிய நற்சொல்,
ஆய் மகள் (13) நடுங்கு சுவல் அசைத்த கையள் (14) - இடைச் சாதியின் மகள் குளிரால் நடுங்குகின்ற தோளின்மேலே கட்டின கையளாய் நின்று,
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் (12) உறு துயர் அலமரல் நோக்கி (13) - சிறிய தாம்பாலே காலிலே கட்டப்பட்ட வருத்தத்தையுடையத்தாகிய கன்றினுடைய முலையுண்ணாமலுறுகின்ற துயராலே தாய் வருமென்று சுழலுகின்ற தன்மையைப் பார்த்து,
கைய (14) கொடு கோல் கோவலர் பின் நின்று உய்த்தர (15) - கையிடத்தனவாகிய @கொடிய கோலையுடைய இடையர் பின்னேநின்று செலுத்துதலைச் செய்கையினாலே
தாயர் இன்னே வருகுவர் என்போள் (16) நன்மொழி கேட்டனம் (17)-நிரம்ப மேய்ந்து நும்முடைய தாய்மார் இப்பொழுதே வருவரென்று கூறுகின்றறோளுடைய நன்றாகிய வார்த்தையாக யாங்கள் கேட்டோம் ;
அதனால் (17)-அவள் கூறிய நற்சொல்லின் கருத்தால்,
---------
# விட்டிருந்து-தங்கியிருந்து ; முல்லை. 42, உரை ; மதுரைக். 125-7. உரையைப் பார்க்க.
@ "விழுத்தண்டூன்றியகை-பசுக்களுக்கு வருத்தஞ்செய்யும்தடியை ஊன்றின கை" (பெரும்பாண். 170, ந.) என்பதனால், ‘கொடியகோல்' என்பதன் பொருள் நன்கு விளங்கும்.
------
18-20. [தெவ்வர், முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து, வருத றலைவர் வாய்வது :] தலைவர் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல் வாய்வது-நம் தலைவர் வஞ்சிசூடிச் சென்று பகைவர் மண்ணைக்கொண்டு பின் அவரிடத்தே வாங்கிக்கெண்ட திறையினையுமுடையராய் இங்ஙனந் தாமெடுத்துக் கொண்ட வினையை முடித்து வருவாரென்று நாம் கருதிய தன்மையிலே அவர்நிற்றல் உண்மை ;
நல்ல (18)-அவர் அங்ஙனம் வினைமுடித்துவருதல் நமக்கு இல்லறம் நிகழ்தற்குக் காரணமாகலின் நல்ல காரியம் ;
20-21. [நீ நின், பருவர லெவ்வங் களைமா யோயென :] மாயோய் நீ நின் பருவரல் எவ்வம் களை என -#மாமை நிறத்தையுடையோளே நீ நின் மனத்தடுமாற்றத்தான் உளதான வருத்தத்தைப் போக்கென்று கூற, அது கேட்டு,
செலவுக்குறிப்பறிந்து வேறுபட்டதுணர்ந்தமையின், மனத்தடு மாற்றமென்றார்.
பெருமுதுபெண்டிர் (11), நல்லோர் (18) போகித் (7) தூஉய்த் தொழுது (10) விரிச்சிநிற்ப (11) அவர்கேட்ட நன்னர் (17) வாய்ப்புள் (18) ஆய் மகள் (13) கையளாகிக் (14) கன்றின் (12) அலமரனோக்கித் (13) தாயர் இன்னே வருகுவரென்போளுடைய (16) நன்மொழியாகயாங்கள் கேட்டனம் ; அதன் கருத்தால் (17) தலைவர் வருதல் வாய்வது (20) ; நல்லகாரியம் (18); மாயோய் (21), நீ நின் (20) பருவரலெவ்வம்களையென்று கூற (21) அது கேட்டு நீடு நினைந்து (82) என்க.
இங்ஙனம் பொருள்கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுதுபெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது ; நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து (80) புலம்பொடு (81) தேற்றியும் திருத்தியும் (82) மையல்கொண்டும் உயிர்த்தும் (83) நடுங்கியநெகிழ்ந்து (84) கிடந்தோள் (88) எனப் பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற்பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற்பொருட்டாகாமை யுணர்க.
--------
# மாமைநிறம் : நாருரித்த ஆம்பற்றண்டுபோன்ற அழகிய நிறம் ; "நீர்வள ராம்பற் றூம்புடைத் திரள்கா, னாருரித் தன்ன மதனின் மாமை" (நற். 6 : 1-2) ; "பொய்கை யாம்ப னாருரி மென்கால், நிறத்தினு நிழற்றுதன் மன்னே, இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே" (ஐங், 35 : 2-4) ; இது மாமைக்கவினென்றும் வழங்கும்.
-------
அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியானென்பதூஉம், அவன் குறித்தகாலங்கடந்தால் தலைவிக்கு வருத்தமிகுமென்பதூஉம், அது பாலையாமென்
பதூஉம், அவ்வாற்றாமைக்கு #இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாமேன் பதூஉம் நூற்கருத்தாதலுணர்க.
22. [காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து :] காட்டவும் காட்டவும் @கலுழ்சிறந்து காணாள் - தலைவன் §புகழும் மானமும் எடுத்துக்காட்டி வற்புறுத்தவும் தோன்றல் சான்ற மாற்றார் பெருமை கூறிக்காட்டி வற்புறுத்தவும் அன்புமிகுதியாற் கலக்கமிக்கு இவை அரசற்கு வேண்டுமென்று மனத்திற் கருதாதவள்,
23. பூ போல் உண் கண் $புலம்பு முத்து உறைப்ப-பூப்போலும்மையுண்கண்கள் தாரையாகச்சொரியாது தனித்து வீழ்கின்ற முத்துப் போலுந் துளியைத் துளிப்ப,அதுகண்டு,
24. கான் யாறு தழீஇய அகல் நெடு புறவின் -காட்டாறுசூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே,
25. சேண் நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி-தூரியநிலத்தே நாறுகின்ற பிடவமோடே ஏனைப் பசியதூறுகளையும் வெட்டி,
26. வேடு புழை அருப்பம் மாட்டி-பகைப்புலத்தக்குக் காவலாக விருக்கும் வேட்டுவச்சாதியினுடைய சிறு வாயில்களையுடைய அரண்களையழித்து,
26-7. [காட்ட, விடுமுட் புரசை யேமுற வளைஇ :] காட்ட முள் இடு புரசை ஏமம் உற வளைஇ-காட்டின் கண்ணவாகிய முள்ளாலிடும் மதிலைக் காவலுறும்படி வளைத்து,
28. [படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி :] புணரி படும் நீரின் பரந்த பாடி-திரையொலிக்கின்ற £கடல்போற்பரந்த பாசறைக்கண்ணே கண்படைபெறாது (67) என்க.
புறவிடத்தே (24) எருக்கி (25) மாட்டி (26) வளைஇப் (27) பரந்த பாடி யென்க.
29. உவலை கூரை ஒழுகிய தெருவில்-தழையாலேவேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
30-31. கவலை முற்றம் காவல் நின்ற தேம் படு கவுள சிறு கண் யானை-நாற்சந்தியான முற்றத்தே காவலாகநின்ற மதம்பாய்கின்ற கதுப்பினையுடையவாகிய சிறியகண்ணையுடைய யானை,
--------
#.(பி. - ம்.) ‘இரங்கல் நிமித்தம்'
@.(பி - ம்.) ‘கலிழ் சிறந்து'
§. புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும்........தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்" (தொல். அகத்திணை, சூ. 41)
$.புலம்பே தனிமை" (தொல். உரி. சூ. 33)
£ கடன்மருள் பெரும்படை", "படைநிலா விலங்குங் கடன்மருடானை" (அகநா. 116 : 16 . 212 : 15) : "கடலென, வானீர்க் கூக்குந்தானை " (புறநா. 17: 36-7)
---------
32-3. [ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த, வயல் விளை யின்குள குண்ணாது :] ஒங்கு நிலை கரும்பொடு வயல் விளை கதிர்மிடைந்து யாத்த இன் குளகு உண்ணாது-வளர்கின்ற தன்மையையுடைய கரும்புகளோடே வயலிலேவிளைந்த நெற்கதிர் இடையே நெருங்கப்பட்டுக் கட்டிப்போகட்ட சாவியையும் இனிய #அதிமதுரத்தழையையும் தின்னாமல்,
33-4. நுதல் துடைத்து அயில் நுனை மருப்பில் தம் கையிடை கெண்டென-அவற்றாலே தம் நெற்றியைத்துடைத்துக் கூர்மையையுடைய முனைகளையுடைய கொம்பினிடத்தே ஏறட்ட தம் கையிடத்தே கொண்டு நின்றனவாக,
35-6. [கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக், கல்லா விளைஞர் கவளங் கைப்ப :] கல்லா இளைஞர் வடமொழி பயிற்றி கவை முள் கருவியின் @கவளம் கைப்ப-வடமொழியை அடியிலே கல்லாத இளைஞர் §யானைப்பேச்சான வடமொழிகளைக் கற்றுப் பலகாற்சொல்லிக் கவைத்தமுள்ளையுடைய $பரிக்கோலாலே கவளத்தைத் தின்னும் படி குத்த, £யானைக்குச்செய்யும் தொழில்களொழிய வேறொரு தொழிலைக் கல்லாத இளைஞரென்றுமாம்.
37-40. [கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல சைநிலை கடுப்ப நற்போ, ரோடா வல்விற் றூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை :]
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை (40)-கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டின இருப்பின்கண்ணே,
என்றது ##படங்குகளை.
-----------
# (பி-ம்.) ‘அட்டி மதுரத்தழை'
அதிமதுரத்தழை யானைக்கு விருப்பமுடையது; மதத்தை உண்டு பண்ணுவது: "அதிங்கத்தின் கவளங் கொண்டால், வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகாது" (சீவக. 750); "அதிங்கத்தின், மரங்கொலு மதவேழ மதர்த்தெழு மயக்கத்தால்" (தணிகை. வீராட்ட.63)
@(பி- ம்.) ‘கவழமகைப்ப'
§ யானைப் பேச்சான வடமொழிகளாவன. அப்புது அப்புது, அது ஆது, ஐ ஐ என்பன ; சீவக. 1834, ந. பார்க்க.
$ பரிக்கோல்-குத்துக்கோல் ; பெரும்பாண். 393-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.
£ சிறுபாண். 32-3, உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க
## படங்குகள்-கூடாரங்கள் ; "பாடி வீடுகொள் படங்கென" (தக்க. 54)
----------
கல் தோய்த்து உடுத்த படிவம் பார்ப்பான் (37) முக்கோல் அசை நிலை கடுப்ப (38)-துகிலைக் காவிக்கல்லைத் தோய்த்துடுத்த விரதங்களையுடைய முக்கோலந்தணன் அம்முக்கோலிலே அந்த உடையினை இட்டு வைத்த தன்மையையொக்க,
நல் போர் (38) ஓடா வல் வில் தூணி நாற்றி (39)-அறத்தாற் பொருகின்ற போரில் ஓடாமைக்குக் காரணமான வலியவில்லைச் சேரவூன்றி அதிலே தூணிகளைத் தூக்கி,
41. பூ தலை குந்தம் குத்தி-பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறிகோல்களையும் ஊன்றிபூந்தலை :விகாரம்.
கிடுகு நிரைத்து-கிடுகுகளையும் நிரையாகக் குத்தி,
42. வாங்கு வில் அரணம் அரணம் ஆக-இங்ஙனஞ்சூழும் விற்படையாகிய அரணே தங்களுக்கு அரணாக, இதற்குள்ளே #விட்ட,
கயிறு வாங்கிருக்கைக்கண்ணே (40) நாற்றிக் (39) குத்தி நிரைத்து (41)வாங்குவில்லரண மென்க.
43. @வேறு பல் பெரு படை நாப்பண்-பாடைவேறுபட்ட பலவாகிய பெரிய படைக்குநடுவே,
43-4. [வேறோர், நெடுங்காழ்க் கண்டங் கோலியக நேர்பு :]வேறு ஓர் அகம் நேர்பு-வேறோரிடத்தை அரசனுக்குக் கோயிலாக எல்லாருமுடம்பட்டு,
நெடு காழ் கண்டம் கோலி-நெடிய குத்துக்கோலுடனே பண்ணின பல நிறத்தாற் கூறுபட்ட §மதிட்டிரையை வளைத்து,
கண்டம் : ஆகுபெயர்.
45. குறு தொடி முன் கை கூந்தல் அம் சிறு புறத்து மங்கையர் (47)- குறியதொடியையுடைய முன்கையினையும் கூந்தலசைந்துகிடக்கின்ற அழகினையுடைய சிறிய முதுகினையுமுடைய மங்கையர்,
-----------
# விட்ட-தாங்கிய : மதுரைக். 125-7. உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க,
@ "பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில, மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை' (புறநா. 62 : 10-11) என்ற பகுதியும், ‘பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண்பாடைமாக்களாகிய படைத்தொகுதி இடமில்லையாம்படி தொக்க அகன்ற இடத்தையுடைய பாடிவீடு' என்ற அதனுரையும் இங்கே அறிதற்குரியன. "விரவு மொழிக்கட்டூர்" (அகநா. 212 :14 ; பதிற். 90. 30)
§ மதிட்டிரை கண்டத்திரையெனவும் பல்வண்ணத்திரையெனவும் வழங்கும் ; சீவக ; 647, ந ; 873.
--------
46-7. இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் - இராப்பொழுதைப் பகற்பொழுதாக்கும் திண்ணிய #ஆசினையுடைய ஒள்ளியவாளை விரவின நிறத்தையுடைய கச்சினாலே பூண்ட மங்கையர்,
48-9. நெய் உமிழ் சுரையர் நெடு திரி கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட-நெய்யைக்காலுகின்ற திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் நெடிய திரியை எங்குக்கொளுத்தி ஒழுங்காயமைந்த விளக்குகள் அவியுந்தோறும் தம் கையிற் பந்தத்தைக் கொளுத்த,
50. நெடு நா ஒள் மணி நிகழ்த்திய நடு நாள்-நெடிய நாக்கினையுடைய ஒள்ளியமணி எறிந்துவிட்ட நடுயாமத்தும்,
கோயில் பணி மடங்கினால் மணியெறிந்துவிடுதல் இயல்பு.
இனி யானை குதிரைமுதலியன துயில்கோடலின் அவற்றின் மணியோசை அடங்கிய நடுநாளொன்றுமாம்.
51-2. @அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு-புனலிபூத்த அசைகின்ற கொடியினையுடைய சிறுதூறுகள் துவலையோடே வருதலையுடைய அசைந்த காற்றிற்கு அசைந்தாற்போல,
சிதர்-மெத்தெனவுமாம்.
53-4. துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை பெருமூதாளர் ஏமம் சூழ-மயிர்க் கட்டுக் கட்டிச் சட்டையிட்ட, அனந்தரினையும் பெரிய ஒழுக்கத்தினையுமுடைய மெய்காப்பாளர் காவலாகச் சூழ்ந்துதிரிய,
55-6. [பொழுதளந் தறியும் பொய்யா மாக்க, டொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி :]
மாக்கள் பொழுது அளந்து அறியும் பொய்யா காண்கையர்- §அறிவில்லாதோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியையுடையார் ,
தொழுது தோன்ற வாழ்த்தி-அரசனைவணங்கி விளங்க வாழ்த்தி,
57. எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்-திரையெறிகின்ற கடல்சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லுதற்குச் செல்கின்றவனே .
57-8. நின் குறுநீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப-$கிடாரத்து நீரிலேகாண்கின்ற நினது நாழிகைவட்டிலிற்சென்ற நாழிகை இத்துணையென்று சொல்லுகையினாலே,
--------
# (பி - ம்.) ‘கவிசினையுடைய', ‘வாய்ச்சினையுடைய'
@ "அதிரல்-காட்டுமல்லிகை" (சிலப். 13 : 156, அரும்பத. ) ; "அதிரல்-மோசிமல்லிகை" (மேற்படி அடியார்.)
§ பொருந, 91, ந. குறிப்புரையைப் பார்க்க.
$ கிடாரம் - நீர்பெய்துவைக்கும் ஒருவகைப் பாத்திரம்; இது கடாரமெனவும் வழங்கும் ; "காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ" (குலோத். உலா)
------
59. [மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை :]
மத்திகை வளைஇய உடை-புரவியையடிக்கின்ற சம்மட்டி வளைந்து கிடக்கின்ற உடை.
மறிந்து வீங்கு செறிவு உடை-அச்சம்மட்டி மறையும்படி வடிம்பு தாழ்ந்து பெருக்குஞ் செறிதலையுடைய #புடைவையுடையினையும்,
60. மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து-சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றரவினையும்,
61. வலி புணர் யாக்கை-இயல்பான வலிகூடின மெய்யினையுமுடைய,
வன்கண் யவனர்-தறுகண்மையினையுடைய சோனகர்,
62. புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல் - புலிச்சங்கிலிவிடப்பட்ட கைசெய்த மாட்சிமைப்பட்ட நன்றாகிய இல்லிலே,
63-4. திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் எழினி வாங்கிய இரு அறை பள்ளியுள்-அழகினையுடைய மாணிக்கமாகிய விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றிற்றிரையைவளைத்த புறவறைக்குள்ளறையிற் படுக்கைக்கண்ணே சென்று,
65-6. [உடம்பி னுரைக்கு முரையா நாவிற், படம்புகு மிலேச்சருழைய ராக :] உரையா நாவின் உடம்பின் உரைக்கும் படம் புகும் மிலேச்சர் உழையர் ஆக-வார்த்தை சொல்லாத நாவினையுடைய கையாலும் முகத்தாலும் வார்த்தைசொல்லும் சட்டையிடும் @சரவாசிகள் பள்ளி கொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரிய .
உரையாநாவென்றார், ஊமைகளென்றற்கு.
67. மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது-பகைவர் மனமறியாமல் மிக்குச்செல்கின்ற போரை நச்சுதலாலே கண்ணுறக்கம்பெறாமல்,
68-9. எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து பிடி கணம் மறந்த வேழம் உள்ளியும் (72)-ஒச்சி வெட்டுகின்ற வாளழுந்துகையினாலே புண்மிக்குப் பிடித்திரளைமறந்த வேழத்தை உள்ளியும்,
67-70. [வேழத்துப், பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமிய :] வேழத்து பரூஉ கை பாம்பு பதைப்பன்ன துமிய-யானையினுடைய பரியகைகள் பாம்பினது பதைக்கின்ற தன்மையையொத்த பதைப்பினையுடையவாக அற்று விழும்படி,
-------
# ஆணுடையையும் புடைவையென்பது பண்டைக்கால வழக்கு; "மெய்சூழ்ந்து...........சென்றடைந்தார்" (பெரிய. திருநா. 61) ; இவ்வழக்கு செட்டிநாட்டில் இக்காலத்து உள்ளது,
@ (பி-ம்.) ‘அசாரவாசிகள்', சரவாசிகள்-சரித்துக்கொண்டே வசிப்போர்.
-------
71-2. தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்-தேன்பரக்கும் #வஞ்சிமாலைக்கு நன்றாகிய வெற்றியை யுண்டாக்கிச் @செஞ்சோற்றுக் கடனிறுத்துப் பட்ட வீரரைநினைத்தும்,
72-4. தோல் துமிபு வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்-பக்கரைகளை யறுத்துக் கூரிய முனையினையுடைய அம்புகள்வந்து அழுந்துகையினாலே செவிசாய்த்துப் புல்லுண்ணாதே வருந்தும் குதிரைகளை நினைத்தும்,
75-6. [ஒருகை பள்ளி யொற்றி யொருகை, முடியொடு கடகஞ்சேர்த்தி. ] ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை கடகம் முடியொடு சேர்த்தி ஒருகையைப் படுக்கையின் மேலேவைத்து ஒருகையிற் கடகத்தை முடியோடே சேரவைத்து
என்றது கையிலே தலையை வைத்தென்றராயிற்று.
நெடிது நினைந்து-இப்படைநொந்தவளவுக்கு நாளை எவ்வாறு பொருமென்று நெடிதாகநினைந்து,
77. பகைவர் சுட்டிய படை கொள் நோன் §விரல்- $பகைவரைக் கருதி வைத்த வாளைப்பிடித்த வலியினையுடைய கையாலே வெட்டி வென்று (89) என்க.
-------
# முல்லை. 78-ஆம் அடி உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
@ "புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா, டிரந்து கோட்டக்க துடைத்து" (குறள், 780); "குஞ்சரத் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச், செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த, பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை" (சீவக. 2240); "ஒருத்தரின் முன்னஞ் சாத லுண்டவர்க் குரியதம்மா" (கம்ப. கும்ப. 156.) ; "வல்விற், கைம்முனி வனுஞ்செஞ் சோற்றுக் கடன் கழித்திடுதல் வேண்டும்....................என்றான்", "செஞ்சோற்றுக் கடனின்றே கழியேனாகிற் றிண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வேறுண்டோ" (வி. பா. நிரைமீட்சி. 90, 17-ஆம் போர். 20)
§ விரல்-கை ; "மெல்விரல்-மெல்லிய விரலையுடையகை ................... விரல் : ஆகுபெயர்" (கலித். 54 :9 . ந.) ; "கணவனை நோக்கி யிணைவிரல் கூப்பி" (பெருங். 4. 7: 36)
$ "தெவ்வர்க்கோக்கிய வேல் - பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டு வைத்த வேல்" (பட்டினப். 299-300, ந.) என்பது இங்கே அறியற்பாலது.
--------
78. நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி-தனக்கு எக்காலமும் விளக்கந்தங்கும் #வஞ்சிக்கு நன்றாகிய வெற்றியை நிலைபெறுத்தி,
79. அரசு இருந்து பனிக்கும் பாசறை-பகையரசிருந்து நடுங்குதற்குக் காரணமான பாசறை,
பனிக்கும் பாசறை, "நோய்தீருமருந்து" (கலித். 60:18) போனின்றது.
முரசு முழங்கு பாசறை-வெற்றிக்களிப்புத்தோன்ற முரசுமுழங்கும் பாசறை,
80-84. [இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து, நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு, நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு, மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து, மேவுறு மஞ்ஞையினடுங்கி யிழைநெகிழ்ந்து :]
வதியுநன் இன் துயில் காணாள் (80)- தன்னிடத்தே தங்குகின்றவனை இனிய துயில் கொள்ளுதலைக் காணாளாய்,
நெஞ்சு ஆற்றுப்படுத்த புலம்பொடு (81)-அவன் தன்னெஞ்சம் தான்போகின்ற வழியிற் செலுத்துதலால் தனக்குண்டான தனிமையாலே,
இது, "நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்" (தொல். அகத். சூ. 43)என்பதாம்.
நிறை தபு புலம்பு (81)-தனது நிறைகெடுத்த தனிமை,
நீடு நினைந்து (82)-இங்ஙனம் பிரிந்தாலன்றி இவ்வரசியல் நிகழாதென்று நினைத்து,
ஓடு வளை திருத்தியும் (82)-கழலுகின்ற வளையைக் கழலாமற்செறித்தும்,
மையல்கொண்டும் (83) - மயக்கங்கொண்டும்,
ஒய்யென உயிர்த்தும் (83)-விரைய நெட்டுயிர்ப்புக்கொண்டும்,
----------
# வஞ்சி-பகைமேற் செய்வோர்க்குரிய அடையாள மாலை ; மேற்சென்று பொருது பகைவரை அவர்க்கு உரிய இடத்தே வெல்ல நினைந்தானென்பது இதன் கருத்து. பகைவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வெல்லுதல் அருமையாதலின் அவ்வெற்றி சிறந்தது ; "சிறுபடையான் செல்லிடஞ் சேரினுறுபடையா, னூக்க மழிந்து விடும்", "சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த, ருறைநிலத்தோ டொட்ட லரிது" (குறள், 498-9), "ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர், மாணிழை மகளிர் நாணிலர் கழியத், தந்தை தம்மூ ராங்கட், டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே" (283.78: 9-12) என்பவை இக்கருத்தை வலியுறுத்தும்.
------
ஏவு உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து (84)-அம்பு தைத்த #மயிற்போல நடுங்கி அணிகலங்கள் நெகிழ்ந்து கண் புலம்பு முத்துறைப்ப (23) எனக் கூட்டுக.
துயர் உழந்து (80) தேற்றியும் (82) - அதனைக்கண்டு தானும் வருத்தமுற்று இவன் ஆற்றியிராளென்று துணிந்தும்,
85. பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல - பொற்பாவை ஏந்தி நின்ற @தகளியிலே பரியவிளக்கு நின்றெரிய,
விளக்கு : ஆகுபெயர்.
86. இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து-தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று உயர்ந்த §ஏழு நிலையினையுடைய மாடத்திடத்து,
87. முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி-மூட்டுவாய் (பி - ம். கூடுவாய்) களினின்றும் சொரிதலைச்செய்யும் பெருமையையுடைய திரண்ட அருவிகளினுடைய.
88. இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்-இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசைக்கண்ணே தலைவன் தான்கூறிய பருவம் பொய்யாமல் வருவனென்னுங் கருத்தினளாகலின் அவன்வரவினையே கருதிக்கிடந்தோளுடைய,
89. அஞ்செவி நிறைய ஆலின-அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன ;
89-91. [வென்றுபிறர், வேண்டுபுலங் கலந்த வீண்டுபெருந்ததானையொடு, விசயம் :]
வென்று-வெட்டிவென்று,
பிறர் வேண்டு புலம் கவர்ந்த விசயம்-பகையரசர் எக்காலமும் விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட வெற்றியாலே,
ஈண்டு பெரு தானையொடு-திரளுகின்ற பெரிய படையோடே,
அரசன் வினைமுடித்தகாலத்தே விரைந்துபோந்தானாகலின், அது கேட்டு வருகின்ற படையென்பது தோன்ற ஈண்டுபெருந்தானையென்றார்.
----------
#.மயில் முல்லைக்குமுரியது ; "முல்லைக்குப்..................புள் கானங்கோழியும் மயிலும் சிவலும்" (இறை. சூ. 1, உரை) ; "இயலு மன்ன முந் தோகையு மெதிரெதிர் பயில, வயலு முல்லையு மியைவன பலவுள மருங்கு " (பெரிய, திருக்குறிப்புத். 45)
@ தகளி-அகல் ; "வையந் தகளியா" (திவ். முதற்றிரு. 1) ; இப்பெயர் தாளி யெனவும் வழங்கும்.
§ "ஏழுயர் மாட மூதூர்" (வி. பா. நிரைமீட்சி. 118)
------
91. வெல் கொடி உயரி-எக்காலமும் #வென்றெடுக்கின்ற கொடியை எடுத்து,
91-2. வலன் ஏர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப-வெற்றி தோன்றிக் கொம்பும் சங்கும் முழங்க,
92-3. அயிர செறி இலை காயா அஞ்சனம் மலர - நுண்மணலிடத்தனவாகிய நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்போல அவிழ,
94. முறி இணர் கொன்றை நல் பொன் கால-தளிரினையும் கொத்தினையுமுடைய கொன்றை நன்றாகிய பொன்னைச் சொரிய,
95. கோடல் குவி முகை அங்கை அவிழ - கோடலினது குவிந்த முகைகள் அகங்கைபோல விரிய,
96. @தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப-திரட்சி நிறைந்த தோன்றி உதிரம்போலப் பூப்ப,
97. கானம் நந்திய செ நிலம் பெரு வழி-காடு தழைத்த சிவந்த நிலத்திற் பெருவழியிலே,
98-100. [வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகிற், றிரிமருப் பிரலை யொடு மடமானுகள,வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் :]
வானம் வாய்த்த வரகு-மழை வேண்டப்பெய்த வரகு,
எதிர் செல் வெள் மழை பொழியும் திங்களில் வாங்கு கதிர் வரகின்-எதிர்காலத்துக்குப் பெய்யச் செல்கின்ற வெள்ளியமழை சிறுதுவலையைப் பொழியும் முன்பனி தொடங்குந் திங்களிலே வளைகின்ற கதிரையுடைய வரகிடத்தே,
திரி மருப்பு இரலையொடு மடம் மான் உகள-முறுக்குண்ட கொம்பினையுடைய §புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான்துள்ள,
மழையால் தண்ணீரும் புல்லும் நிறையப்பெற்றுப் புணர்ந்துதிரியுமென்ற கருப்பொருளால், அவற்றைக்கண்ட அரசனுக்கு வேட்கை மிகுதி கூறிற்று.
மலரக் (93) கால (94) அவிழப் (95) பூப்ப (96) உகளக் (99) கானம் நந்திய பெருவழி (97) யென்க.
இவையெல்லாம் வேட்கைவிளைதற்குக் காரணமாயின.
101. முதிர் காய் $வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய-தன்பருவம் வந்தால் முதிருங்காயையுடைய வள்ளியங்காடு பின்னாக,
-----------
# முருகு. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
@ தோடு-தொகுதி ; "தோடு கொள் முரசம்-தொகுதிகொண்ட முரசங்கள்" (புறநா. 238:8, உரை)
§ "இரலையுங் கலையுங் புல்வாய்க் குரிய" (தொல். மரபு. சூ. 44) ; "புல்வா யிரலை" (புறநா. 374:2)
$ வள்ளி-ஒருவகைக் கொடி ; பெரும்பாண். 370-71, ந.
---------
102. துனை புரி துரக்கும் செலவினர்-விரைந்துசெல்லும் பரியை அதனான் அமையாமற் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையராய் வந்த வருடைய,
என்றது : "வினை வயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான " (தொல். கற்பியல், சூ. 53)என்பது தோன்றக் கூறிற்று.
103. வினை விளங்கு நெடு தேர் பூண்ட மாவே-தான் எடுத்துக் கொண்ட வினை எக்காலமும் விளங்கும் நெடிதாகிய தேரைப்பூண்ட குதிரை.
தலைவி தன்னிடத்தே வதிக்கின்றவனை இன்றுயிலைக்காணாளாய் (80) நெஞ்சாற்றுப்படுத்த புலம்பாலே (81) ஓடுவளை திருத்தியும் (82) மையல் கொண்டும் உயிர்த்தும் (83) நடுங்கி நெகிழ்ந்து (84) பூப்போலுண்கண் புலம்புமுத்துறைப்ப (23) அதுகண்டு துயருழந்து (80) தேற்றியும் (82) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமெனக் கருதிக் காட்டவும் காட்டவும் காண தவள் (22) பெருமுது பெண்டிர் (11) எவ்வம் களையெனக்கூற (21) அதுகேட்டு நீடுநினைந்து (82) பெரும்பெயல்பொழிந்த சிறுபுன் மாலையில் (6) இட்டசுடர் அழலாநிற்க (85) இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோளுடைய (88) அஞ்செவிநிறையப் (89) பரந்தபாடியிலே (28) அரசிருந்து (79) ஒருவகை பள்ளியொற்றி ஒருகை (75) முடியொடுசேர்த்தி (76) வேழத்தை (69) உள்ளியும் (72) மாவைச்சிந்தித்தும் (74) ஒழிந்தோரை உள்ளியும் (72) நினைந்து (76) நடுங்குதற்குக் காரணமான பாசறையிற் (79) பெரும்படைநாப்பண் வேறோர் (43) அகம் நேர்பு கண்டங்கோலி (44) யவனர் (61) புலித்தொடர்விட்ட நல்லில்லிலே (62) பொழுதளந்தறியும் (55) காண்கையர் (56) கன்னல் இனைத்தென்றிசைக் கையினாலே (58) மங்கையர் (47) திருமணிவிளக்கங்காட்டி (63) எழினி வாங்கிய பள்ளியிலே சென்று (64) இளையர் கவளங் கைப்பச் (36) சுரையர் (48) மாட்டப் (49) பெருமூதாளர் ஏமஞ்சூழ (54) மிலேச்சர் உழையராக (68) வெண்மணிநிழத்திய நடுநாளினும் (50) மண்டமர்நசையாற் கண்படைபெறாதிருந்து (67) மற்றைநாட் படைகொணோன் விரலாலே (77) வென்று (89) கண்ணிவலந்திருத்திப் (78) பிறர்வேண்டுபுலங்கவர்ந்த (90) விசயத்தாலே வெல்கொடியுயரிக் (91) காடு பிறக்கொழியப் (101) பெருவழியிலே (97) வயிரும் வளையுமார்ப்ப (92) ஈண்டு பெருந்தானையோடே (90) துனைபரிதுரக்குஞ் செலவினையுடையராய் வந்தவருடைய (102) தேர்பூண்டமா (103) ஆலின (89) வென வினை முடிக்க.
"செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பியல். சூ. 44) என்பதனால் வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்றுணர்க.
-------
தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தாரென்றுணர்க. இவ்வாறன்றி ஏனையோர் கூறும்பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமையுணர்க.
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டிற்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
#வண்டடைந்த கண்ணி வளராய்ச்சி வாணெடுங்கண்
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ - தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் @கனிவிளவின் காயுகுத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை. 1
§புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
துனையுந் துனைபடைத் துன்னார்-முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
கடன்முகந்து வந்தன்று கார். 2
---
# (பி-ம்.) ‘வண்டடை கண்ணி'
@. "மலர்க்குறிஞ்சி, முதற்கேற்றவடை ; ‘கனிவிளவின்காய்' போல" (சிலப். 14:86-97. அடியார்.)
§ இச்செய்யுள், புறப்பொருள் வெண்பாமாலையில், கார்முல்லை (276) என்னுந்துறைக்குக் காட்டிய வெண்பா.
---------------------
கருத்துகள்
கருத்துரையிடுக