சிறுபாணாற்றுப்படை - மூலமும் மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்
சங்க கால நூல்கள்
Back " சிறுபாணாற்றுப்படை - மூலமும்
மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்"
-
Source
பத்துப்பாட்டு மூலமும்
மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை : கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
(மூன்றாம் பதிப்பு)
பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] - 1931 [விலை ரூபா. 5
---------------
உ
கணபதி துணை.
முகவுரை.
- - - - - - - - - - - - - - -
சிறுபாணாற்றுப்படையென்பது, நக்கீரனார் முதலிய கடைச் சங்கப்புலவர்களால் இயற்றப்பட்டு அவர்களால் தொக்குக்கப்பெற்ற பத்துப்பாட்டினுள், மூன்றாவதாகவுள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுபத்தொன்பது அடிகளையுடைது.
பத்துப்பாட்டாவன : திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவாம்.
வெண்பா.
" முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கொள்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து,"
இவற்றுள், திருமுருகாற்றுப்படை, சைவத்திருமுறைகளில், 11 -ம் திருமுறைப் பிரபந்தவரிசையிற் சேர்க்கப்பட்டுள்ளது; குறிஞ்சிப் பாட்டு, பெருங்குறிஞ்சியெனவும் மலைபடுகடாம், கூத்தராற்றுப் படையெனவும் வழங்கும்; நிற்க
ஆற்றுப்படையென்பது,ஒருவர் ஒரு கொடையாளியின்பால் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் அங்கேசென்று தாம்பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல்; ஆறு -வழி; படை -படுத்தல். ஒவ்வொருவரும் இங்ஙனம் கூறுதற்குரியோராயினும், கூத்தர்முதலியோரே, எதிர் வந்த வறியவர்களாகிய கூத்தர் முதலியவர்களுக்குக்கூறி அவர்களை வழிப்படுத்தியதாகச் செய்யுள்செய்தல்மரபு. தொல்காப்பியப் புறத் திணையியலில், 36 -ம் சூத்திரத்தில் உள்ள, "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்" என்பது இதற்கு விதி;'ஆடன்மாந்தரும்பாடற் பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலாராகிய விறலியுமென்னும் நாற்பாலாரும் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம்பெறுமாறுகூறிய கூறுபாடும்' என்பது இதன் பொருள். இங்ஙனம் இயற்றப்பெற்றவைகள்: கூத்தராற்றுப்படை, பாணராற்றுப்படை, பொருநராற்றுப்படை, புலவராற்றுப்படை, விறலியார்றுப்படை என ஒவ்வொருவகையிலும் பலபலவுள்ளன. பத்துப்பாட்டிலன்றிப் புறநானூறு முதலியவற்றிலும் பிற்காலத்து நூல்களாகிய கலம்பகங்களிலும் இவ்வாற்றுப்படைச்செய்யுட்கள் காணப்படுகன்றன. இவை தனிச்செய்யுளாகவே ஆக்கப்படும். புறப்பொருள் வெண்பாமாலையிற் பாடாண்படலத்தில் வந்துள்ள,
[வெண்பா]
"இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற்
நன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற்
காமரு சாயலான் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்."
என்னும் பாணாற்றுப்படைச் செய்யுள்முதலியவற்றால் இஃது அறியலாகும். பத்துப்பாட்டிலுள்ள மூன்றாவதும் நான்காவதுமாகிய பாட்டுக்கள் பாணாற்றுப்படைகளேயாயினும் அடி வரையறையின் சிறுமை பெருமைகளால் முறையே அவை சிறுபாணாற்றுப்படையெனவும் பெரும்பாணாற்றுப்படையெனவும் வழங்கலாயின. பாணர் - இசைப்பாட்டைப்பாடுவோர்;[பாண் -இசை.]
நூல்.
சிறுபாணாற்றுப்படையென்பது, ஏறுமாநாட்டு நல்லியக்கோடன்மீது இடைக்கழிநாட்டு நல்லூர்நத்தத்தனாரால் இயற்றப்பெற்றது. நல்லியக்கோடன்பாற் பரிசில் பெற்றுச்செல்லும் பாணனொருவன், வறுமையால் வருந்தி மெலிந்து எதிர்ப்பட்ட பாணனொருவனை அவன்பாற் செல்லும்படி வழிப்படுத்தியதாக அமைந்துள்ளது, இப்பாட்டு.
இப்பாட்டின் சிலபகுதிகள், பழையஉரையாசிரியர்களால் தக்க இடங்களில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன.
முகவுரை.
இந்நூலால், தமிழ்நாட்டரசர்களின் இராசதானிகளாகிய வஞ்சி, மதுரை, உறந்தை என்பவற்றின் நிலைமையும் பேகன் முதலிய ஏழுவள்ளல்களின் அரியவரலாறுகளும் நல்லியக்கோடனுடைய கொடைச்சிறப்பும் அவனுடைய ஊர்களின்வளமும் அவற்றிலுள்ளவர்களின் நற்குண நற்செய்கைகளும் அவனுடைய ஓலக்கச் சிறப்பும் குறிப்பறிந்துகொடுக்கும் அவனது விதரணவிசேடமும் பிறவும் நன்கு அறியலாகும்.
பாட்டுடைத்தலைவன்:
இப்பாட்டுடைத்தலைவனாகிய நல்லியக்கோடன்காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாருமிலர்; பேகன்முதலிய ஏழுவள்ளல்களுக்கும் இவன் காலத்தாற் பிந்தியவன். இவை, இப் பாட்டிலுள்ள “வஞ்சியும்வறிதே” “மதுரையும்வறிதே” “உறந்தையும்வறிதே” என்பவற்றாலும், இதன், 84 -ம் அடி முதலியவற்றாலும் கீழே காட்டப்படும் புறநானூற்றுச் செய்யுளாலும் விளங்கும். ஒய்மான் நல்லியக்கோடனெனவும் இவன் வழங்கப்பெறுவன்; இதனை மேற்கூறிய செய்யுளின் பின்னுள்ள வாக்கியத்தாலறிக. ஒய்மானல்லியாதன், ஒய்மான்வில்லியாதனென இரண்டுஉபகாரிகள் புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளார். அவர்கள் இவனுடைய பரம்பரையைச் சார்ந்தவர்களென்றுமட்டும் தெரிகின்றதேயன்றி இவனுக்கு முன்பிருந்தவர்களோ பின்பிருந்தவர்களோ யாதும் புலப்படவில்லை.
சங்கப்புலவருள், புறத்திணைநன்னாகனாரென்பவராலும் இவன்
துதித்துப் பாராட்டப் பெற்றுள்ளான்; அவர் பாடிய செய்யுள்,
“ஒரை யாயத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின்
யாமையீன் புலவு நாறு முட்டையைத்
தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉ
மிழுமென வொலிக்கும் புனலம் பதவிற்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியா
ழில்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
யுடையை வாழியெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீ
ரோரூ ருண்மையி னிகந்தோர் போலக்
காணது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொன்று நினைந்தே"
[புறநானூறு, 186]
[புறநானூறு, 179]
சிறுபாணாற்றுப்படையில், "உறுபுலித் துப்பி னோவியர் பெருகன்" (122) என்றதனால் இவன் ஓவியர்குடியிற்பிறந்தவனென்று தெரிகின்றது; ஓவியர்குடி, நாகர்களுடைய வகுப்பில் ஒருவகையென்றும் இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாவிலங்கையென்பது, *அன்னாட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவாவடதலையென்கிற இரண்டும் சேர்ந்த இடமென்றும் புராதன சரித்திர ஆராய்ய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.
இவனுடைய மற்ற ஊர்களுள், எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்பவை தொண்டைநாட்டிலுள்ள இருபத்துநான்கு கோட்டங்களுள் மூன்றுகோட்டங்களாகவுள்ளவை. எயிற்கோட்டத்தைச் சார்ந்த சிறுநாடுகள்: தண்டகம், கோனேரிக்குப்பம், மாகறலென்பன. வேலூர்க்கோட்டத்தைச்சார்ந்தவை: ஒழுகறைநாடு, நென்மேலிநாடு, மாத்தூர்நாடு என்பவை. ஆமூர்க்கோட்டத்தைச் சார்ந்தவை: படுநீர்நாடு, குமிழிநாடென்பவை. இப்பாட்டின்கண் 190 -ம் அடியில்வந்துள்ள, கிடங்கிலென்பது கிடங்காலென இக்காலத்து வழங்கப்படுகின்றது. இது, திண்டிவனத்தைச்சார்ந்த ஊர்களுள் ஒன்று. யாப்பருங்கலவிருத்தியுரையில் மேற்கோளாகவந்துள்ள பாடல்களுள் ஒன்றில் இவ்வூர் பாராட்டப்பட்டிருக்கின்றது.
நூலாசிரியர்.
இந்நூலாசிரியர் நாடாகிய இடைக்கழிநாடென்பது சென்னைக்குத் தென்மேற்கிலுள்ள ஒரு சிறுநாடு. இஃது உப்பங்கழிகளுக்கு இடையே இருத்தலின் இப்பெயர்பெற்றதுபோலும்; இதிலுள்ள ஊர்கள் பலவற்றில் நல்லூரென்று ஓரூர் இருக்கின்றது. அதுவே இந்நூலாசிரியருடைய ஊராக இருத்தல் வேண்டும். இவருடைய காலத்துப்புலவர், நல்லியக்கோடனைப்பாடிய புறத்திணை நன்னாகனாராவார்; இவர்காலத்துப்பிரபுக்கள்: இப்பாட்டுடைத்தலைவனாகிய நல்லியக்கோடனும், புறத்திணை நன்னாகனாராற்பாடப்பெற்ற ஒய்மா நல்லியாதனும் ஒய்மான்வில்லியாதனும் கரும்பனூர்க்கிழானுமே.
தத்தனாரென்பது இவரது இயற்பெயரென்றும் கல்விமேம்பாடு பற்றி நத்தத்தனாரென்றபெயர் பின்னர் வழங்கலாயிற்றென்றும் தெரிகின்றது. 'ந' என்பது சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச் சொல். நக்கீரர், நப்பாலத்தர், நப்பூதனார், நச்செள்ளையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும். எட்டுத்தொகையில் நத்தத்தனாரென ஒரு புலவர் பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
கடைச்சங்கப்புலவர்காலம், இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 - வருஷங்களுக்கு முற்பட்டதென்பது யாவருக்கும் தெரிந்ததாதலால், அப்புலவர்களுள் ஒருவராகிய இவருடைய காலமும் அதுவேயென்பது சொல்லாமலே விளங்கும்.
சென்னை இங்ஙனம்
23 -8 -09. வே.சாமிநாதையன்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
இந்நூல் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் வரலாறு.
_____________
விருத்தம்,
எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன்
எவன்பரம் வுபகாரி யெவனச்சி னார்க்கினிய னெனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ.
இந்நூலின் உரையாசிரியராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், பாண்டிவள நாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணகுலத்திற் பாரத்துவாச கோத்திரத்திற் பிறந்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ள பலவகையான எல்லா நூல்களிலும் அதிபாண்டித்தியமுள்ளவர். இவரது சமயம் சைவமே. இவர் இன்னராதல், "வண்டிமிர் சோலை மதுரா புரிதனி, லெண்டிசை விலங்க வந்த வாசான், பயின்ற கேள்விப் பாரத் துவாச, னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய, தூய ஞான நிறைந்த சிவச்சுடர், தானே யாகிய தன்மை யாளன்" என்னும் உரைச்சிறப்பு பாயிரத்தாலும் விளங்கும். சிவஸ்தலங்களுட் சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய 'திருச்சிற்றம்பலம்', 'பெரும் பற்றப்புலியூர்' என்பவற்றை முறையே ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழெழுத்தொருமொழிக்கும் உதாரணமாக, இவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில், "ஓரெழுத்தொருமொழி" என்னும் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவ சமயத்துச் சிறந்தநூல்களாகிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்பவற்றி னின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய இலக்கணப் பொருள்களுக்கன்றித் தத்துவப் பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டியிருத்தலாலும், அங்ஙனம் மேற்கோள் கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேடவுரைகளாலும், சீவக சிந்தாமணியில், "மேகம் மீன்ற" என்னும் 333 -ம் செய்யுளில்'போகம்மீன்ற புண்ணியன்' என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாகற்றுப்படையுரையிற் காட்டிய சில நயங்களாலும், இவரது சைவ சமயம் நன்கு வெளியாகும்.
இவ்வுரையாசிரியர், பத்துப்பாட்டினுள் இந்நூலுக்கன்றி மற்ற நூல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் குறுந்தொகையிற் பேராசிரியர் பொருளெழுதாதொழிந்த இருபது செய்யுட்களுக்கும் உரைசெய்தருளினர். இன்னும் சில நூல்களுக்கு இவர் உரையியற்றின ரென்பர்; அவை இன்னவையென்று புலப்படவில்லை. இக்காலத்து வழங்கும் திருக் கோவையாருரை பேராசிரியராற் செய்யப்பட்டதென்று தெரிகின்றமையாலும், இவர் அந் நூற்குச்செய்த வேறுரை கிடையாமையாலும் அதற்கும் திருக்குறள் முதலிய மற்றுஞ்சிலவற்றிற்கும் இவர் உரை செய்திருப்பதாக இவருடைய உரைச்சிறப்புப் பாயிரத்திலேனும் வேறொன்றிலேனும் கூறப்படாமையாலும் அவைகள் இங்கே
எழுதப்பட்டில.
சீவகசிந்தாமணிக்கு இவ்வுரையாசிரியர் முதன்முறை ஓருரையெழுதி, அக்காலத்துப் பிரசித்திபெற்றிருந்த சைனவித்துவான்கள் சிலருக்குக்காட்ட, அவர்கள் அவ்வுரையை அங்கீகரியாமை கண்டு, பின்பு ஆருகத நூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டா முறை ஓர் உரையை யெழுதி அவர்களுக்குக் காட்டவே, அவர்கள் உற்றுநோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக் கொண்டார்களென்று சைனர் கூறுகின்றனர்.
தொல்காப்பியவுரை முதலியவற்றில் இவரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களமைந்த நூல்களுள் இதுகாறும் விளங்கியவை 80; அவை வருமாறு: -
1. அகத்தியம் | 11. ஐந்திணையைம்பது | |
2. அகநானூறு | 12. ஔவையார்பாடல் | |
3. அணியியல் | 13. கடகண்டு | |
4. அவிநயம் | 14. கலித்தொகை | |
5. ஆசாரக்கோவை | 15. களவழிநாற்பது | |
6. இராமாயணவெண்பா. | 16. கரக்கைபாடினியம் | |
7. இறையனாரகப்பொருள் | 17. கார்நாற்பது | |
8. ஏலாதி | 18. காரைகாற்பேயார்பாடல் | |
9. ஐங்குறுநூறு | 19. குணநாற்பது | |
10. ஐந்திணையெழுபது | 20. குறிஞ்சிப்பாட்டு |
21. குறுந்தொகை | 31. சீவகசிந்தாமணி |
22. கூத்தநூல் | 32. தடுகர்யாத்திரை |
23. கைந்நிலை | 33. தந்திரவாக்கியம் |
24. கொன்றைவேந்தன் | 34. திணைமாலைநூற்றைம்பது |
25. சிலப்பதிகாரம் | 35. திணைமொழியைம்பது |
26. சிறுகாக்கைபாடினியம் | 36. திரிகடுகம் |
27. சிறுகுரீஇயுரை | 37. திருக்குறள் |
28. சிறுபஞ்சமூலம் | 38. திருக்கோவையார் |
29. சிறுபாணாற்றுப்படை | 39 திருப்பாட்டு. |
30. சினேந்திரமாலை | 40. திருமுருகாற்றுப்படை. |
41. திருவாசகம். | 51. பரிபாடல். |
42. திருவாய்மொழி | 52.பல்காப்பியம். |
43. திருவுலாப்புறம். | 53. பல்காயம். |
44. தொல்காப்பியம். | 54. பழமொழி. |
45. நற்றிணைநானூறு. | 55. பன்னிருபடலம். |
46. நாடகநூல். | 56. பாரதவெண்பா. |
47. நாலடியார். | 57. புறநானூறு. |
48. நெடுநல்வாடை | 58. புறப்பொருள் வெண்பா மாலை |
49.பட்டினப்பாலை. | 59. பூத்தத்தாரவையடக்கு. |
50. பதிற்றுப்பத்து. | 60. பூதபுராணம். |
61. பெருங்கதை. | 71. முதுமொழிக்காஞ்சி. |
62. பெரும்பாணாற்றுப்படை. | 72. முல்லைப்பாட்டு. |
63. பெரும்பொருள் விளக்கம். | 73. மூதுரை. |
64. பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி. | 74. மோதிரப்பாட்டு. |
65. பொருநராற்றுப்படை. | 75. யாப்பருங்கலம். |
66. மணிமேகலை. | 76. யாழ்நூல். |
67.மதுரைக்காஞ்சி. | 77. வசைக்கடம். |
68. மலைபடுகடாம். | 78. வசைக்கூத்து. |
69.. மாபுராணம். | 79. வளையாபதி. |
70. முத்தொள்ளாயிரம். | 80. விளக்கத்தார் கூத்து |
தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய நூல்களிலிருந்தும் பல உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குவிளக்கிப்போகின்றமையாலும் பிறவற்றாலும் இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவராகச் சொல்வதுடன் பலவகையான கலைகளிலும் பயிற்சியுடையவ -ரென்று சொல்லுதற்கும் இடமுண்டு.
உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்தபிள்ளயாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின், அவர்களுக்கு இவர் காலத்தினாற் பிற்பட்டவரென்று தெரிகின்றது.
"பாரத்தொல்காப்பியமும்", "தொல்காப்பியத்தில்", "பாற் கடல்போல", "பச்சைமாலனைய" என்னும் முதற்குறிப்பையுடைய பாடல்கள், பண்டைக்காலத்தாரால் இயற்றப்பெற்று இவருடைய உரைச்சிறப்புப் பாயிரங்களாக வழங்குகின்றன.
அமிழ்தினுமினிய தமிழ்மடவரல்செய் அருந்தவத்தின்பெரும் பயனாக அவதரித்தருளிய இம்மஹோபகாரியின் அருமை பெருமைகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டன.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பத்துப்பாட்டுள் மூன்றாவதாகிய "சிறுபாணாற்றுப்படை."
மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை
(யணிமுலைத்) துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் 5
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
*லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்பப் 10
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் 15
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென 20
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் 25
----------
* அயிலுருக்கனையவாகியென்றும், அயிலுருத்தனையவாகி யென்றும் பாடம்.
பூணகத் தொடுங்கிய (வெம்முலை முலை)யென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்செறி நீர்தரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியன் 30
மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ 35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல 40
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழன்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர 45
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
வெழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று 50
நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த 55
மகாஅ ரன்ன மந்தி மடவோர்
**நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
--------
**நகாஅ வன்னவென்றும் பாடம்.
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற 60
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
றென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65
றமிழ்நிலை பெற்ற தாங்கரு ம*ரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே யதாஅன்று
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
யோவத் தன்ன வுண்டுறை மருங்கிற் 70
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
(வருமுலை யன்ன) வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை 75
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமர் தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந் 80
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய 85
வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற் 90
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ் 95
நீல நாக நல்கிய கலிங்க
மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி 100
யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் 105
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா 115
ணறுவீ நாகமு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளு 120
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை 125
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்னாட் சென்றன மாக விந்நா
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை 130
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் 135
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் 140
டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருது நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லுள்ளமொடு செல்குவி ராயி 145
னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் 150
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி
னோங்குநிலை யொட்டகந் துயின்மடிந் தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் 155
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉ மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் 160
றளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் 165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் 170
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு 175
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து 180
# புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவன்
மதிசே ரரவின் மானத் தோன்று 185
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை 190
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
--------
# புலவுக்கய டுலறிந்த வென்றும் பாடம்.
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை யிருப்புமுகந் தேய்த்த
வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி 195
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப 200
நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
மருமறை நாவி னந்தணர்க் காயினு
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன 205
வடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு 210
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு §மோடிய துணர்தலு
மரியே ருண்க ணரிவைய ரேத்த 215
வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் 220
பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
---------
*( இந்தக் கோடு மற்ற பக்கங்களில் உள்ளது.)
§ ஊடியதுணர்தலுமென்றும் பாடம்.
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் 225
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது 230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசில் 235
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் 240
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றானின் றூட்டித் 245
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல 255
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
- - - - -
( * இந்தப் பக்கம் கையெழுத்துக் குறிப்பாகப் பதிப்பில் உள்ளது )
232:பதிற்.63: 5 ; புறநா. 10
218 -9' பெருங்: ப. 101: 91
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ 260
யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்
டுகிலணி (யல்குற்) றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட் 265
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
னல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.
- - - - - - - - - -
இதன் பொருள்.
1 -2 [மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை, (யணிமுலை)த் துயல் வரூஉ மாரம் போல: ] பணை தோள் மா நிலமடந்தை மணி மலை (அணி முலை) துயலவரூஉம் ஆரம் போல - மூங்கிலாகிய தோளையுடைய பெருமையினையுடைய மண்மகளுடைய மணிகள்தங்கின மலையாகிய (அழகினையுடைய முலையிற்) கிடந்தசையும் முத்துவடம்போல,
(குறிப்பு) இதுமுதல், 40 -ம் அடி இறுதியாகவுள்ள அடிகளால், நல்லியக்கோடனிடத்துப் பரிசில்பெற்றுப் பலவகைச்சிறப்போடுவரும்பாணன், இடைவழியில் வறுமைத் துன்பத்தால்வருந்திக் கவலையுற்று விறலியரோடும் சுற்றத்தோடுமிருந்த பாணனொருவனைக்கண்டு இரங்கி அவனுடையவறுமையைப் போக்க நினைந்து நல்லியக்கோடனிடத்தே ஆற்றுப்படுத்தற்கு அவனை முன்னிலையாக்கல் கூறப்படுகின்றது. பூமியை மடந்தையென்றது, வடநூல் வழக்குப்பற்றி; "நாணென்னு நல்லாள்" என்பதனாலுமுணர்க. மூங்கில்கள் நிலமடந்தையின் தோள்களாக உருவகம்செய்யப்பட்டன. துயல்வரல் - அசைதல். ஆரம் - முத்து வடம்.
3 -4 [செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக், கொல்கரை நறும் பொழில்:] சேய் வரற் கரை கொல் கான்யாற்றுச் செல் புனல் உழந்த நறு பொழில் - மலைதலையினின்றும் வருதலையுடைய கரையைக் குத்துகின்ற காட்டாற்றிடத்து ஓடுகின்ற புனலாலே வருந்தின நறிய பொழிலிடத்து, இரண்டுமலையினின்றும் வீழ்ந்து இரண்டு ஆற்றிடைக்குறையைச் சூழ் வந்து பின்னர்க் கூடுதலின், முத்துவடம் உவமையாயிற்று; இது மெய்யுவமம். பெருக்காற் கோடுகள் வருந்துதலின், உழந்தவென்றார். இதனாற்பயன். ஆற்றிடைக்குறையில் நின்றமரம்இளவேனிற்காலத்து மிகவும் பூத்ததாயிற்று.
(கு -பு.) சேய்மை - நெடுந்தூரம். அஃது இங்கே மலையுச்சிக்கு ஆயிற்று. நறுமை -நல்லமணம். பொழில் -சோலை. முத்துவடம் காட்டாற்றிற்கு உவமை. மெய்யுவமம் -நால்வகையுவமத்துள் ஒன்று. அது வடிவினால் ஒரு பொருள் மற்றொன்றற்கு உவமையாவது; 'துடியிடை' என்பதுபோல. கோடுகள் -மரக்கிளைகள். பூத்தது -பொலிவுபெற்றது.
4 -8 [குயில்குடைந் துதிர்ந்த, புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக், கதுப்பு விரித் தன்ன காழக நுணங்கற, எயிலுருப் பனைய வாகி யைது நடந்து, வெயிலுருப்புற்ற வெம்பரல் கிழிப்ப;]
காழ் அகம் நுணங்கு அறல் குயில் குடைந்து உதிர்த்த புது பூ செம்மல் சூடி புடைநெறித்து கதுப்பு விரித்தன்ன வேனில் நின்ற (9) -கருமையை இடத்தேயுடைய, நுண்மையையுடைய அறல் குயில்கள் அலகாலுளர்ந்து உதிர்த்த புதிய பூக்களாகிய வாடலைச்சூடித் தம்மிடமெல்லாம் அறல் பட்டு மயிரை விரித்தாலொத்த தன்மையவாக இளவேனில் நின்றவென்க.
பொழிலிடத்து அறலென்க.
வெயில் உருப்பு உற்ற வெம் பால் - வெயிலால் வெம்மையுற்ற வெவ்விய பருக்கை,
அயில் உருப்பு அனையவாகி கிழிப்ப சுரன் மராத்த வரிநிழல் முதல் அசைஇ(12) ஐது நடந்து -வேல் காய்ந்த தன்மையவாய் அடியைக் கிழிக் கையினாலே அருங்கானகத்துநின்ற கடம்பினுடைய செறியாத நிழலையுடைத்தாகிய அடியிலே இளைப்பாறிப் பின்பு போகவேண்டுதலின், மெத்தென நடந்து,
(கு -பு.) காழ் -கருமை.அறல் -கருமணல். செம்மல் -பழம்பூ. நெறித்து -நெளித்து. கதுப்பு -கூந்தல். அலகு -பறவையின்மூக்கு, வாடல் - வாடற்பூ. இளவேனில் -சித்திரை வைகாசி மாதங்கள். பருக்கை -பருக்கைக்கல். உருப்பு -வெம்மை. பருக்கைக்கல்லுக்குக் காய்ந்தவேல் உவமை. ஐம்மை -மென்மை;"ஐதவீ ழிகுபெயல்"(13) என்பர்பின்னும். மராம் - கடப்பமரம். அசைதல் -இளைப்பாறுதற்குத் தங்கல்.
9 -11. [வேனி னின்ற வெமபத வழிநாட், காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்பப், பாலை நின்ற பாலை நெடுவழி;] வேனில் நின்ற காலை வழி நாள் ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப வெம்பதம் பாலை நின்ற பாலை நெடுவழி - இளவேனில் நிலைபெற்ற காலத்துக்குப் பின்னாகிய நாளிலே ஞாயிற்றினுடைய கதிர் வெம்மையைச் செலுத்தலைச் செய்கையினாலே வெய்ய செவ்வியையுடைய பாலைத்தன்மை நிலைபெற்றமையாற் பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழியினையுடைய சுரனென்க(12)
* "நடுவுநிலைத்திணையே" என்னுஞ் சூத்திரத்துரையாற் பாலைத்தன்மை கூறினாம்; அதுகொண்டு உணர்க. பாலைநின்ற பாலைவழி, "ஆறுசென்றவியர்" போல்நின்றது.
(கு - பு.) வழி - பின். ஞாயிறு - சூரியன். கடாவுறுத்தல் - செலுத்துதல். இளவேனிலுக்குப்பின் வந்தகாலம் முதுவேனிலாதலின், 'ஞாயிற்றுக் கதிர்கடாவுறுப்ப' என்றார். பதம் - காலம். பாலைத்தன்மையாவது, காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல்மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயன்துறந்து புள்ளும்மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பமுபெறுவதொரு காலம். "நடுவுநிலைத்திணையே" என்னுஞ் சூத்திரத்துரையில், பாலைத்தன்மைகூறினாமென்று எழுதியிருத்தலின், இந்நூலுக்கு முன்பே நச்சினார்க்கினியர், தொல்காப்பியத்துக்கு உரைசெய்தமை பெறப்படுகின்றது; இந்நூல், 28 -ம் அடிமுதலியவற்றின் விசேடவுரையும் இதனை வலியுறுத்தும். ஆறுசென்றவியர் - வழியிற்சென்றதனாலுண்டாகிய வேர்வை.
12. (சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ) என்பதனை முன்னே கூட்டுக.
(கு - பு.) இவ்வடி, 7 -ம் அடிமுதலியவற்றொடு முன்பு கூட்டப்பெற்றது.
13 - 4. (ஐதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி, நெய்கனிந் திருளிய கதுப்பின்:) அருளி ஐது வீழ் இகு பெயல் அழகுகொண்டு நெய் கனிந்து இருளிய கதுப்பின் - உலகிற்கு அருளுதலைச்செய்து மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையினது இழகைத் தன்னிடத்தே கொண்டு எண்ணெயிலே முற்றுப்பெற்று இருண்ட மயிரினையும்,
(கு - பு.) இனி பாணனுடன்வந்த விறலியரின் கேசாதிபாதவருணனை கூறப்படுகின்றது. தெய்வமகளிரைப் பாதாதிகேசாந்தமாகவும், மானிட மகளிரைக் கேசாதிபாதாந்தமாகவும் வருணித்தல் மரபு. வீழென்னுமுதனிலை வினையெச்சப் பொருளில்வந்தது. "எண்ணெயு நானமு மிவைமூழ்கி" (சீவக. நரமக. 135) என்பது ஈண்டுள்ள 'நெய்கனிந்திருளியகதுப்பு' என்பதன் பொருளைத் தழுவியது.
14 - 6. (கதுப்பென, மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன், மயின் மயிற் குளிக்குஞ் சாயல்:) மயில் பலவுடன் மணி வயின் கலாபம் கதுப்பெனப் பரப்பி மயில் குளிக்கும் சாயல் - மயில்கள் பலவுங்கூடி நீலமணிபோலுங் கண்ணினையுடைய தோகைகளை மகளிர் மயிரைவிரித்தாற்போல விரித்துப் பார்த்து இவர்கள் சாயற்கு ஒவ்வேமென்று பேட்டிற்குள்ளே சென்று மறைதற்குக் காரணமாகிய கட்புலனாகிய மென்மையினையும்,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 9.
(கு - பு.) கண்ணென்றது, மயிலின்பீலியிலுள்ள கண்களை; வயின் - இடம். ஐம்புலன்களிலும் மென்மையுண்மையின், ‘கட்புலனாகிய மென்மை’ என்றார். சிந்தாமணியில் “சேந்தொத்தலர்ந்த” (8) என்னுஞ்செய்யுளில், ‘அமிர்தன்னசாயல்’ என்பதற்கு இவர் எழுதிய உரையைப்பார்க்க.
16 -8. சாஅய் உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் - ஓடியிளைத்து வருந்துகின்ற நாயினது நாக்கினுடைய நல்ல அழகைவருத்தி வறுமையாலே விளங்குகின்ற சிலம்பு முதலியன இன்றிப் பொலிவழிந்த அடியினையும்,
(கு - பு.) மகளிர்களுடைய அடிக்கு வருந்தியநாயின்நாவை உவமை கூறுதல், “வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி” (பொருந. 42), “மதந்தபு ஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி” (மலைபடு. 42 -3), “நாயநாச் சீறடி” (சீவக. முத்தி. 96), “வருந்துநாய் நாவி னணி கொள் சீறடி” (கூர்ம. இராமன்வனம். 15) என்பவற்றாலும் அறியப்படும்.
18 -9. [அடிதொடர்ந், தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையின்:] ஈர்ந்து நிலம் தோயும் இரு பிடி தட கையின் அடி தொடர்ந்து - இழுக்கப்பட்டு நிலத்தேசெறியும் கரிய பிடியினது பெருமையையுடைய கைபோலத் தாமும் அடியோடே தொடர்புபட்டு முறையாற் பருத்து,
(கு - பு.) இருமை - கருமை. பிடி - பெண்யானை. தட - பெருமை; உரிச்சொல்; ”தடவுங் கயவு நளியும் பெருமை” (தொல். உரி. 22.)
20 -21. [சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென, மால்வரையொழுகிய வாழை:]
மால் வரை ஒழுகிய வாழையெனச் சேர்ந்து – பெருமையையுடைய மலையிலே ஒழுங்குபடவளர்ந்த வாழையெனத் திரண்டு, சேரென்னும் உரிச்சொல் முதனிலையாகச் சேர்ந்தென்னும் வினையெச்சம் வந்தது.
குறங்குடன் செறிந்த குறங்கின் - ஒருகுறங்குடனே ஒருகுறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும்,
(கு - பு.) சேரென்பது திரட்சியையுணர்த்துவதோர் உரிச்சொல்; “சேரேதிரட்சி” (தொல். உரி. 65.) என்பதனாலும் உணர்க. குறங்கு - துடை.
21 -2. வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி - வாழையினது பூவென்னும்படி அழகு பெற்ற பனிச்சையினையும்,
(கு - பு.) ஓதி - கூந்தல்; பனிச்சை - வாழைப்பூவடிவாக முடிக்கப்படும் கூந்தல் வடிவம்.
22 -4 [ஓதி. நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்து:] களி சுரும்பு நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி ஓதி அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து -களிப்பினை யுடைய சுரும்பகள் செறிவினை -யுடைத்தாகிய கொம்பினையுடைய வேங்கையினது நாட்காலத்து மலரென்று விரும்பிப் பாடி ஆரவாரிக்கும் ஓரிடத்திற்றோன்றிய சுணங்குடனே ஓரிடத்திற்றோன்றிய சுணங்கு பிதிர்பட்டு,
(கு -பு) சுரும்புகள் -வண்டுகள். நளி -நெருக்கம். சினை -மரக்கிளை. வேங்கை -ஒருவகைமரம். நாட்காலம் -மலரும்காலம். சுணங்கு -தேமல். பிதிர்தல் -சிதறுதல். தேமலுக்கு வேங்கைப்பூ உவமம்.
25 -6 யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய (வெம் முலை) -புதிதாகப் பூத்தலையுடைய கோங்கினது விளங்குகின்ற முகையை இகழ்ந்து மெல்லிய பணிகள் இடையிலே கிடக்கின்ற (விருப்பத்தையுடைய முலையினையும்)
(கு -பு) யாணர் -புதுமை. கோங்கு -ஒருவகைமரம். முகை -அரும்பு. பணிகள் -ஆபரணங்கள் . அகம் -உள்;. வெம்மை -விருப்பம்.
26 -8 [(முலையென,) வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கினின்செறி நீர்தரு மெயிற்றின்:] வண் கோள் பெண்ணை (முலையென) வளர்த்த நுங்கின் இன்செறி நீர் தரும் எயிற்றின் -பெரிய குலையினையுடைய பனை (முலையென்னும்படி) வளர்த்த நுங்கினது இனிய செறிந்தநீர் தன்னீர்மையால் தாழும் எயிற்றினையும்,
(கு -பு) வண்மை -பெருமை. கோள் -காய்க்குலை. பெண்ணை - பனை. எயிறு -பல்.
28 -30. [எயிரெனக், குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த, முல்லை சான்ற கற்பின்:] குல்லை அம் புறவில் குவி முகை எயிறென அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் -கஞ்சங்குல்லையையுடைய அழகிய காட்டகத்தே குவிந்த அரும்பு எயிறென்னும்படி நெகிழ்ந்த முல்லைசூடுத ற்கமைந்த கற்பினையும்,
கற்பின் மிகுதிதோன்ற முல்லைசூடுதல் இயல்பு. 'கதுப்பிற் கதுப்பு' என்பது முதல் இத்துணையும் இயைபுத்தொடை. திரிந்து வந்ததென்றறிக.; *"இறுவா யொன்றல்" என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம்.
(கு -பு) கஞ்சங்குல்லை -கஞ்சா.; "கஞ்சங் குல்லை கஞ்சா வாகும்" என்பது, பிங்கலநிகண்டு. புறவு -முல்லைநிலம் ; காடு. கற்பின்மிகுதிதோன்ற மகளிர் முல்லைமாலைசூடுதலை, "முல்லையந்தொ டையருந்ததி" [பிரபுலிங்க லீலை) என்பதனாலுமுணர்க; "முல்வாய்நின் பேர்க்குணம் பெற்றேற் கிடந் தந்தென் முன்னிற்பையே" என்பது திருவாவடுதுறைக்கோவை, 13.
- - - - - - - - - - -
*தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், **16.
30 -31. மெல்லியல்மடமான் நோக்கின் வாள் நுதல் விறலியர் - மெல்லிய இயல்பினையும், மடப்பத்தினையுடைய மான்போலும் பார்வையினையும் ஒளியையுடைத்தாகிய நுதலினையுமுடைய விறல்பட ஆடுமகளிர்,
கதுப்பினையும், (14) ஓதியினையும் (22) நுதலினையும், நோக்கினையும் (31) எயிற்றினையும் (28) (முலையினையும்) (26) குறங்கினையும் (20) அடியினையும் (18) சாயலினையும் (16) மெல்லிய இயல்பினையும் , கற் பினையு (30) முடைய விறலியரென்க.
(கு -பு) மடப்பம் -கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை. நுதல் - நெற்றி. விறல் -சத்துவம்; அஃதாவது வேம்புதின்றார்க்குத் தலைநடுங்குவதுபோல, அஞ்சத்தக்கது முதலியவற்றைக் கேட்டவிடத்துப்பிறந்த உள்ள நிகழ்ச்சியால் தாமேதோன்றும் நடுக்கமுதலாயின.
32 -3 நடை மெலிந்து அசைஇய நல் மெல் சீறடி. கல்லா இளையர் மெல்ல தைவர - நடையால் இளைத்து ஓய்ந்த நன்மையையுடைய மெல்லிய சிறிய அடியைத் தம்தொழிலையொழிய வேறுகல்லாத இளையர் மெத்தென்று வருட.
(கு -பு) சீறடி -சிறுமை அடி. தைவர -தடவ.
34 -5 பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சிறுயாழ் இடவயின் தழீஇ -பொற்கம்பியினையொத்த முறுக்கடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
(கு -பு) வார்தல் -ஒழுகுதல். யாழ்த்தந்தி நரம்பை முறுக்கிச் செய்யப்படுவதாதலின் , 'புரியடங்குநரம்பு' என்றார். "பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ" (பெரும்பாணாற்றுப்படை, 15 -6) என்பது இவ்வடிகளின் பொருளை வற்புறுத்துகின்றது.
36 -7 நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க -நட்டபாடையென்னும் பண் முற்றப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலையாழை வாசித்தலைவல்ல பாணனாகியமகன் வாசிக்கு முறைமையை அறிந்து வாசிக்க,
(கு -பு) நட்டபாடை -ஒருவகைப்பண்; அது பகற்பண் பன்னிரண்டனுள் ஒன்று. பாலையாழ் - ஒருவகையாழ்.; இவ்வடிகளும், "நைவளம் பழுநிய பாலை வல்லோன்" (குறிஞ்சிப்பாட்டு, 146) என்பதும் ஒத்துள்ளன.
38. இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ -வள்ளியோரின்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே பரிசில் தருவாரை விரும்பி,
இனி இயங்கும்வையம் சகடமாகலின், உலகத்திற்கு இயங்காவையமென வெளிப்படை கூறிற்றுமாம்.
(கு -பு) வள்ளியோர் -கொடையாளிகள். சகடம் -வண்டி. வையமென்பதற்குப் பூமியென்றும் வண்டியென்றும் இரண்டுபொருளுண்டு. இதற்குச் செய்திருக்கும்பொருள் மிகப் பாராட்டற்பாலது.
39. துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப -தன்னை வெறுத்தல்மிக்க வருத்தத்தோடேகூடின வறுமை நின்னைக் கொண்டு போகையினாலே,
(கு -பு) துனி -வெறுப்பு. 'ஆற்றுப்படுப்ப' என்பது இந்நூற் பெயரைக் குறிப்பிக்கின்றது.
40. முனிவு இகந்து இருந்த முது வாய் இரவல -வழிவருத்தந் தீர்ந்திருந்த பேரறிவு வாய்த்தற்றொழிலையுடையையாய இரவல,
(கு -பு) முனிவு -வெறுப்பு; இங்கேவருத்தத்திற்கு ஆயிற்று. முதுமை - பேரறிவு; "அளியன் றானே முதுவா யிரவலன்" (திருமுருகாற்றுப்படை, 284) "வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கல்" , "முதுவாய்க் கோடியர்" (பட்டினப்பாலை, 214, 253))
துயர் ஆற்றுப்படுக்கையினாலே போந்து (39) விறலியர் தம்முடைய (31) சீறடியை (32) வெம்பரல் (8) அயிலுருப்பனையவாகிக் (7) கிழிக்கையினாலே (8) வரிநிழலசைஇப் (12) பின்னும் ஆற்றுந்தகைபெற ஐதுநடந்து (7) அந்நடையால் இளைத்து ஓய்ந்த அடியை (32) இளையர் தைவரப் (33) பாண்மகன் (37) பாலையை (36) இயக்க (37) வள்ளியோர் நசைஇச் (38) சீறியாழ் இடவயிற்றழீ (35) முனிவிகந்திருக்;க இரவலவென முடிக்க.
41 -2 கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை -கொழுவிய மீன் துணியநடந்து வளவிய இதழையுடைத்தாகிய செங்கழுநீர்ப் -பூவைத்தின்ற பெரிய வாயையுடைய எருமை,
(கு -பு) சேரன்முதலிய தமிழ்நாட்டரசர்மூவரும் மிக்கபரிசில் தாரார்; மிக்கரிசிலைத்தருபவராகிய பேகன் முதலிய ஏழுவள்ளல்களும் இப்பொழுது இலர். ஆதலால், நீ நல்லியக்கோடன்பாற்செல்' என வற்புறுத்திக் கூறும்பாணன், முதலில் சேரன் இராசதானியாகிய வஞ்சியினிலைமை யைக் கூறுகின்றான். கொழுமீன் -ஒருவகை மீனுமாம்; "கழனி யுழவர் சூட்டொடு தொகுக்குங், கொழுமீன்" (புறநாநூறு, 13) .குறைய -துண்டமாக. கய, பெருமையையுணர்த்துவதோர் உரிச்சொல்.
43 -4 பைங்கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறம் தைவர -பசிய மிளகுகொடிபடர்ந்த பலாவினீழலிலே மஞ்சளினது மெல்லியஇலை தனது மயிரையுடைய முதுகைத்தடவ,
45. விளையா இளங்கள் நாற மெல்புகு பெயரா -முற்றாத இளையதேன் நாற மென்று அசையிட்டு,
(கு -பு) கள், கழுநீர்ப்பூவிலுள்ளது. அசையிடுதல் -முதலில் உண்டதனைச் சிறிது சிறிதாக மீட்டும் வாயில் வருவித்துக் கடித்து உண்ணுதல்.
46. குளவி பள்ளி பாயல் கொள்ளும் -காட்டுமல்லிகையாகிய படுக்கையிலே துயில்கொள்ளும்,
(கு -பு) காட்டு மல்லிகை யென்றது, உதிர்ந்துகிடக்கும் காட்டு மல்லிகைப் பூக்களை; அக்கொடிகளையுமாம்.
47 . குடபுலம் காவலர் மருமான் -மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காத்தற்றொழிலையுடைய சேரர் குடியுலுள்ளோன்,
எருமை நீழலிலே தைவரப் பெயராக்கொள்ளும் குடபுலமென முடிக்க.
(கு -பு) குடக்கு+புலம்= குடபுலம்; குடக்கு -மேற்கு.
47 -9. ஒன்னார் வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த எழு உறழ்திணி தோள் இயல் தேர் குட்டுவன் -பகைவருடைய வடக்கின்கண் உள்ளதாகிய நிலத்திடத்தே நிற்கும் இமவானின்கண்ணே வளையும் வில்லைவைத்த கணையத்தைமாறுபடும் திணிந்ததோளினையும் நடக்கின்ற தேரினையுமுடைய குட்டநாட்டையுடைய சேரன்,
(கு -பு) ஒன்னல் -பொருந்தல். இமயம் -இமயமலை. விற்பொறித்த - வில்லை எழுதுவித்த; விற்கொடி சேரர்களுகு உரியது. சேரனொருவன், தன்னாட்டிற்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள நாட்டரசர்களாகிய பகைவரை வென்றுசென்று அம்;மலையில் வில்லைப்பொறித்தானென்பதும், அதனால் இமயவரம்பனென்று பெயர் பெற்றானென்பதும் பழையவரலாறு,. இதனை "அமைவர லருவி யிமயம் விற்பொறித், திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் , தன்கோ னிறீஇ" (பதிற்றுப்பத்து. 2 -ம்பத்து, பதிகம்) , "இமயஞ் சூட்டிய வேம விற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன்" (புறநா. 39) , விடர்ச்சிலை பொறித்த விறலோன்" (சிலப். நடுகற். 136) என்பவற்றாலுணர்க. எழு -கணையமரம். இது கோட்டைவாயிலிற் கதவின் உட்புறத்தே குறுக்காகப் போடப்படுவது; புறநாநூறு, 14 -ம் பாட்டின் குறிப்புரையைப்பார்க்க. இது யானையைத் தடுக்குமரமென்றும் கூறப்படும். இது வீரர்தோளுக்கு உவமமாகக் கூறப்படுதலை "எழுவுறழ்திணிதோள்" (புறநா, 69) என்பதனாலுமுணர்க. குட்டநாடென்பது மலைநாட்டின் உள்நாடுகளில் ஒன்று; அதனை உடையவனாதலின், சேரன் குட்டுவனென்று கூறப்படுவான்; அது, கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று; "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா" என்னும் பழையவெண்பாவாலுணர்க.
50. வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது -பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னுமூரும் தரும்பரிசில் சிறியதாயிருக்கும்.
மருமான் (47) குட்டுவன் (49) அவனுடைய வஞ்சியும் வறிதென முடிக்க.
அதாஅன்று -அவ்வூரன்றி,
(கு -பு) வஞ்சிக்குக் கீழ்த்திசைக்கண்ணே திருக்குணவாயிலென்பதோ ரூரிருந்ததென்று தெரிதலின் இங்கேயுள்ள 'வாயில் வஞ்சி' என்பதற்குக் குணவாயிலென்னும் ஊரையுடையதான வஞ்சிநகர மென்று பொருள்கூறினும் பொருந்தும்; "குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த" (சிலப்பதிகாரம்) என்பதன் உரையைப்பார்க்க. வஞ்சிக்கு மேற்கே குடவாயிலென்று ஓரூரிருந்ததென்று, புறநாநூறு, 74 -ம் பாட்டின் பின்னுள்ள பழைய வாக்கியத்தால் தெரியவருகின்றது. ஒரு கொடியின்பெயராகிய வஞ்சியென்பது அதனை மிகுதியாக உடைய ஊருக்குப் பெயராயிற்று; "பொற்கொடிப்பெயர்ப் படூஉம் பொன்னகர்", "பூங்கொடிப் பெயர்ப்படுந், திருந்திய நன்னகர்" (மணிமேகலை, 26 -ம் காதை, 92; 28 -ம் காதை; 101 -2) என்பவற்றாலறிக. வறிதென்பது சிறிதென்னும் பொருளதாதலை, "வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால்வெள்ளி" (பதிற். 24) "வறிது சிறிதாகும்" (தொல். உரிச். 38) என்பவற்றாலுமுணர்க; 'வஞ்சியும் வறிதே' என்பது, இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்தின்மேல் ஏறிநின்றது. 'அதாஅன்று' என்பதை 'அதாஅன்றென' அகரமிட்டெழுதுக; இதனை "அன்றுவரு காலை யாவாகுதலு, மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ், செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப" என்பதனான் ...முடிக்க.' (தொல். உயிர்மயங். 56. ந. உரை) என்பதனால் 'அதா அன்று என்பதை முடித்துக்கொள்க .
51 -2. நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறை வாய்குறு துணி -தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்று துளிக்கும் இளமை முதிர்ந்த நுணாமரத்தினது வெட்டின வாயையுடைய குறிய குறட்டை.,
(கு -பு) அறை -அறுத்தல்; "அறைக்கரும்பு" (பொருநராற்றுப்படை. 193) குறட்டை -கட்டையை.
52 -3. [அயிலுளி பொருத, கைபனை செப்பங் கடைந்த மார்பின்:] அயில் உளி கடைந்த கைபுனை செப்பம் பொருந மார்பின் மந்தி (56) - - கூர்மையையுடைய உளிகள் உள்ளேசென்றுகடைந்த சாதிலிங்கம் தோய்ந்த சேப்புச்சேர்ந்த மார்பின்மந்தி,
(கு -பு) செப்பம் -சிவப்பு நிறம். நுணாக்கட்டையிலிருந்து சிவப்பு வர்ணம் உண்டாதலின் இங்ஙனம் கூறினார்.
54. செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி -கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியிலே நெற்றிமாலையாகக் கட்டி,
(கு -பு) கிடேச்சை -நெட்டி.
55. நோன் பகடு உமணர் ஒழுகையொடு வந்த மந்தி (56) -வலியினையுடைத்தாகி எருத்தினையுடைய உப்புவாணிகருடைய சகடவொழுங்கோடே கூடவந்த மந்தி,
(கு -பு.) நோன்மை -வன்மை. இவ்வடியின்பொருளை, "பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருந் துமணர் பதிபோகு நெடுநெறி" (பெரும்பாணாற்றுப்படை,63 -5) என்பவற்றாலுணர்க. சகடஒழுங்கு -வண்டியொழுங்கு.
56. மகா அர் அன்ன மந்தி -அவர்கள் வளர்த்தலின் அவர்கள் பிள்ளைகளையொத்த மந்தி,
56 -8. மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி - - அவ்விடத்து மடப்பத்தையுடைய மகளிருடைய எயிற்றையொத்த செறிந்த நீர்மையையுடைய முத்தை வாள்வாய்போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றிடத்தே இட்டுப் பொதிந்து,
(கு -பு.) எயிறு -பல். முத்துக்களைக் கிளிஞ்சிற்குள்ளேவைத்து.
59 -60. [தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி, னுளரிய லைம்பர லுமட்டிய ரீன்ற.]
நுசுப்பின் நல்கூர் தோள் மறைக்கும் உமட்டியர் -நுசுப்பினது நல்கூர்ந்த புறத்தைத் தோள் மறைக்கும் உமட்டியர். என்றது: - இடை தனது நுண்மையால் நெகிழமுயங்குங்காலத்து ஊற்றின்பம் பெறாது மிடிப்பட்ட புறத்தினைத் தோள் இறுக முயங்கி அவ்வின்பத்தைக் கொடுத்தற்குக் காரணமான உமட்டியரென்றவாறு.
ஊற்றின்பம் பெற்றறியாதென்னும் புறங்கூற்றையென்றுமாம்.
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற - அசைகின்ற இயல்பினையுடைய ஐந்துபகுதியாகிய மயிரினையுடைய உப்புவாணிகத்தியர் பெற்ற,
(கு -பு, நிசுப்பு - இடை. நல்கூர்ந்த -வறுமையுற்ற, ஊற்றின்பம் - ஸ்பர்ச இன்பம். கூந்தலின் ஐந்து பகுதிகளாவன: குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சையென்பன.
61. கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் -விளங்குகின்ற பூணையுடைய பிள்ளைகளுடனே தானும் கிலுகிலுப்பைகொண்டு விளையாடும்,
(கு -பு.) கிலுகிலுப்பை -ஒருவகை விளையாட்டுக்கருவி.
62. தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் -முரிகின்ற நீரைத் தனக்கு எல்லையாகவுடைய கொற்கையென்னும் ஊர்க்கு அரசன்,
மந்தி முத்தையடக்கி உமட்டியரீன்ற புதல்வரோடே ஆடுங் கொற்கையென முடிக்க.
(கு -பு.) கொற்கை -பாண்டியர்களுடைய இராசதானிகளுள் ஒன்று. இது பாண்டிநாட்டிற் கடற்கரைக்கண் உல்ளது. இதனைச்சார்ந்த கடற்துறையிலே முத்துக்கள் அகப்படுமென்பர்; "கொற்கையம் பெருந்துறை முத்தொடு" (சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, 80) "தென்கடன் முத்தும்" (பட்டினப்பாலை, 189, சிலப்பதுகாரம், வேனிற். 19), "தென்பவ்வத்து முத்துப் பூண்டு" (புறநானூறு, 380) "கொற்கைத் துறை யிற் றுறைவாணர் குளிக்குஞ் சலாபக் குவான் முத்தும்" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்) என்பவற்றாலு முணர்க. புறத்தே சென்று உப்புவாணிகம் செய்து திரும்பும் உமணர்களுடைய வண்டியொழுங்குகளுடன் வந்த மந்தி அவர்களுடைய பிள்ளைகளுடன் முத்துக்கள் உள்ளே பெய்யப்பெற்ற கிளிஞ் சிலைக் கிலுகிலுப்பை யாகக்கொண்டு விளையாடுதற்கு இடமாகவுள்ளது கொற் கையென்றபடி.
63 தென்புலம் காவலர் மருமான் - தெற்கின்கண்ணதாகியநிலத்தைக் காத்தற் -றொழிலையுடையார் குடியிலுள்ளோன்,
63 -5 [ஒன்னார், மண்மாறுகொண்ட மாலை வெண்குடைக், கண்ணார் கண்ணிக் கடுந் தேர்ச் செழியன்:]
ஒன்னார் மண் மாறு கொண்ட செழியன் -பகைவர்நிலத்தை மாறுபாட்டாலே கைக்கொண்ட பாண்டியன்,
மாலை வெண்குடை கண்ணார் கண்ணி கடு தேர் செழியன் - முத்தமாலையையுடைய கொற்றக்குடையினையும் கண்ணிற்கு அழகுநிறைந்த கண்ணியினையும் கூடிய தேரினையுமுடைய செழியன்,
(கு -பு) முடியரசர்களுடைய குடையை வெண்கொற்றக்கொடை யென்றும் கொற்றக்குடையென்றும் கூறுதல் மரபு. கண்ணி -தலையிலணிந்து கொள்ளுமாலை.
66 -7 [தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே:] நனை மகிழ் தாங்கரு மரபின் தமிழ் நிலைபெற்ற மறுகின் மதுரையும் வறிது -தன்னிடத்துத் தோன்றிய மனமகிழ்ச்சி பொறுத்தற்கரிய முறைமையினையுடைய தமிழ் வீற்றிருந்த தெருவினையுடைய மதுரையும் வறிது,;
நனைமகிழ் -வினைத்தொகை.
கோமான் (62) மருமான் (63) செழியன் (65) அவனுடைய மறுரையும் தரும்பரிசில் சிறிதாயிருக்கும்.
அதாஅன்று -அவ்வூரன்றி,
(கு -பு) நனைத்தல் -உண்டாதல், அரும்புகளை நனையென்பது இது காரணம் பற்றியே. சங்கப்புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்தற்கு இடமாயிருந்ததுபற்றி, "தமழ்நிலைபெற்ற....மதுரை" என்றார். "தமிழ்கெழுகூடல்" (புறநானூறு. 58) 'தென்றமிழ் மதுரை' (மணிமேகலை, 25 -வது 139). வறிது என்பதற்கு முன் 50 -ம் அடிக்குறிப்பில் எழுதியவாறே பொருள்கொள்க.
68. [நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த:] பொய்கை நறு நீர் அடைகரை நிவந்த -பொய்கையிடத்து நறிய நீரடைகரையிலே நின்று வளர்ந்த,
(கு -பு.) இனி, சோழனுடைய இராசதானியாகிய உறையூர் கூறப்படுகின்றது. பொய்கை - ஒருவகை நீர்நிலை: மானிடரால் ஆக்கப்படாத நீர்நிலை யென்றுங் கூறுவர்: சீவகசிந்தாமணி, நாமகளிலம்பகம், 308 -ம் செய்யுளுரையைப் பார்க்க.
69. துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - நெருங்குகின்ற தன்மையையுடைய கடம்பினுடைய இணைதல் நிறைந்த மாலை, *கோதைபோலப் பூத்தலிற் கோதையென்றார்.
(கு -பு.) கடம்பு -கடப்பமரம்; என்றது நீர்க்கடம்பினை. அதன்பூமாலைபோலவே தோன்றுமாதலின், அதனைக் கோதை யென்றார்.
70 -71. [ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற், கோவத்தன்ன கொங்குசேர் புறைத்தலின்] கோவத்து அன்ன கொங்கு உறைத்தலின் சேர்பு ஓவத்து அன்ன உண் துறை மருங்கின் - தன்னிடத்து இந்திரகோபத்தையொத்த தாதை உதிர்த்தலின் அத்தாது சேர்ந்து சித்திரத்தையொத்த உண்ணும் துறையிடத்தே நின்ற,
(கு -பு.) கோவம் -இந்திரகோபம்; இது பட்டுப்பூச்சியென்று இக்காலத்து வழங்கப்படுகின்றது. தாது, மேற்கூறிய கடப்பம்பூவின் மகரந்தங்கள். உண்ணுந்துறை -பலரும்வந்து நீருண்ணுந்துறை.
72 -3. (வரு முலை அன்ன) வண் முகை உடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வம் தாமரை -(எழுகின்ற பெரியமுலையையொத்த) பெரிய முகை நெகிழ்ந்து அழகினையுடைய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மையையு டைய தாமரையிடத்து,
#”பொருளே யுவமஞ் செய்தனர்” என்னுஞ் சூத்திரத்தாற் பொருளை உவமஞ் செய்தார்.
(கு -பு) முகை -அரும்பு. பொருளே உவமஞ் செய்தன ரென்பதற்குப் பொருள்: உவமேயத்தை உவமானமாகச் செய்தனரென்பது; பொருள் - உவமேயம்.
74 -6. ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்தன்ன சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை ஏம இன் துணை தழீஇ -குற்றமில்லாத அங்கை யைச் சாதிலிங்கந் தோய்ந்தாலொத்த சிவந்த இதழ்சூழ்ந்த செம்பொன்னாற் செய்தாலொத்த பீடத்திலே தன்னுயிர்க்குக் காவலாகிய இனிய பெடையைத் தழுவித் துயில்கொண்டு,
_________________________
*”கடம்பு சூடிய கன்னி மாலைபோல்” என்றார் சிந்தாமணியிலும்; குணமாலை -யாரிலம்பகம், 140.
# தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், 9.
(கு -பு) அங்கை=அகங்கை -உள்ளங்கை. கொட்டையென்றதும் பீடமென்றதும் தாமரைப்பூவின் உட்கொட்டையை; இது பொகுட்டெனவும் வழங்கும்; இது பொன்னிறமாக இருப்பது பற்றி, செம்பொற்கொட்டை யென்றார்; பதும பீடத்தன்னகரும்" என்றது இங்கே அறியத்தக்கது. (கம்பராமாயணம், கையடை. 7) பெடை -இங்கே பெண்வண்டு.
76 -8. இறகு உளர்ந்து காமர் தும்பி காமரம் செப்பும் தண்பணை தழீஇய தளரா இருக்கை -அத்துயிலெழுந்து விருப்பமருவினதும்பி சீகா மரமென்னும் பண்ணைப்பாடும் மருதநிலஞ்சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய,
(கு -பு) இறகுளர்தல் , இங்கே துயிலெழுதலைப் புலப்படுத்தியது. தும்பி -ஒருவகை வண்டு. பணை -வயல்.
79. குணபுலம் காவலர் மருமான் -கிழக்கின்கண்ணதாகிய நிலத்தைக் காத்தற்றொழிலையுடையோர் குடியிலுள்ளோன்,
(கு -பு) குணக்கு -கிழக்கு.
79 -81. (ஒன்னார் ஓங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை:) கதவம் ஓங்கு எயில் உருமுசுவல் சொறியும் ஒன்னார் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை - கதவத்தையுடைய உயர்ந்த மதிற்றலையிலே உருமேறு தன்கழுத்தைத் தினவால் தேய்க்கும் பகைவர் தூங்கெயிலை அழித்த தொடிவிளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(கு -பு) கதவம் -கோபுரவாயிற்கதவு. உருமேறு -இடி. தூங்கு எயில் -அசையும்மதில், சோழபரம்பரையிற் பிறந்த ஓரரசன், உலகவிரோதிகளாகிய ஒருவகையார் பெற்றிருந்த அசைந்துதிரியும் மதிலொன்றை அழித்தமை பற்றி அவனுக்குத் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனென்று பெயராயிற்றென்பது பழைய வரலாறு. இதனை, புறநானூறு, 69 -ம் செய்யுளின் குறிப்புரையாலு முணர்க,. தொடி -வீரவளை.
82. நாடா நல் இசை நற்றேர் செம்பியன் -ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்ல புகழினையும் நல்ல தேரினையுமுடைய சோழனது,
(கு -பு) சிபிவம்சத்திற் பிறந்தவனெனப்பொருள்படும் சைப்பியனென்பது, செம்பியனென்று ஆயிற்றென்பர்.
83. ஓடாபூட்கை உறந்தையும் வறிது -தன்னிடத்திருந்தோர் ஓடாமைக்குக் காரணமாகிய மேற்கோளினையுடைய உறந்தையென்னும் ஊரும் தரும்பரிசில் சிறியதாயிருக்கும்;
அது, *"முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென" என்பதனானுணர்க.
அதாஅன்று -அவ்வூரன்றி,
(கு -பு) "பூட்கை யென்பது மேற்கோ ளாகும்" என்பது திவாகரம் முறஞ் செவி" என்னும் மேற்கோளுக்குப பொருள். முறம் செவி வாரணம் - முறம்போலும் காதையுடைய யானையை, முன் சமம் முருக்கிய -முன்பு போரிற் கெடுத்த, புறம் சிறை வாரணம் -புறத்தே சிறகையுடைய கோழியென்னும் பெயரைப் பெற்றதாகிய உறையூரில், புரிந்து புக்கனர் -விரும்பிப் புகுந்தார்; என, அசை. "புறஞ்சிறை" என்பது வாரணத்திற்கு அடை; குடர் தொடர் குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்" (சீவக.மண்மக.81) என்பது போலக்கொள்க. தான் ஏறி வந்த யானையை ஒரு கோழிபொருது வென்றமை கண்டு, அந்நிலவன்மையையறிந்து, அதில் நகரம் சமைப்பித்த சோழனொருவன், அந்நகரத்திற்குக் கோழி யென்று பெயர்வைத்தானென்பது பண்டைவரலாறு.
84 -5 .வானம் வாய்த்த வளமலை கவாஅன் கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய -மழை பருவம்பொய்யாமற் பெய்கையினாலே உண்டான செல்வத்தையுடைய மலைப்பக்கத்திற் காட்டிடத்தேதிரியுமயில் கூவியதற்குக் குளிர்ந்து கூவிற்றென்று அருள்மிகுதியாற் போர்வையைக்கொடுத்த
(கு -பு) இனி, பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரியென்னும் கடையெழு - வள்ளல்களும் இப்பொழுது இல்லை யென்பார், முதலிற் பேகனைக்கூறுகின்றார்: கவான், மலைப்பக்கமென்பதை "விறல்வரைக்கவாஅன்" , "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" கவானுயர் சோலையின் வாய்த்தனி யேவரக் கண்டனனே" என்பவற்றாலுமுணர்க.
86 அரு திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் -பெறுதற்கரிய வலியையுடைத்தாகிய வடிவினையுடைய ஆவியர் குடியிற்பிறந்த பெரியமகன்,
(கு -பு) பேகன், ஆவியர் குடியிற்பிறந்தவ னென்பது, "அதுமனெம் பரிசி லாவியர் கோவே" (புறநானூறு. 147) என்பதனாலும் வெளியாகின்றது.
87. † பெரு கல் நாடன் பேகனும் -பெரிய மலைநாட்டையுடைய பேகனென்னும் வள்ளலும்,
- - - - - - - - - - -
*சிலப்பதிகாரம் நாடுகாண்காதை.
† சிலபிரதிகளில், பெருங்கடனாடனென மூலத்தும் பெரிய கடனாடனென உரையிலும் வேறுபாடுண்டு.
நல்கிய பெருமகனாகிய பேகனுமெனமுடிக்க.
(கு -பு) பேகன், குளிர் மிகுதியாற் கூவியதென்று மயிலுக்குப் போர்வை கொடுத்தமையும், அவன் மலைநாட்டை ஆண்டவனென்பதும் பின்னுள்ள வற்றாலும் விளங்கும்; "உடாஅ போரா வாகுத லறிந்தும் , பாடாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்" , மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப், படாஅ மீத்த கொடாஅ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக" , "ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை, யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமையப், பெருங்க னாடன் பேகன்" (புறநானூறு,141, 145, 158); "முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையு, மெல்லைநீர் ஞாலத் திசை விளங்கத் -தொல்லை, இரவாம லீந்த விறைவர்போ னீயுங், கரவாம லீகை கடன்" என்பது புறப்பொருள்வெண்பாமாலை, பாடாண் படலம், 6. இங்ஙனங் கொடுத்தல் கொடைமட மெனப்படும். இவனுடைய ஊர் நல்லூரென்பது. இவன் பெயர் வையாவிக்கோப்பெரும்பேகனெனவும் வழங்கும். தனக்கு உரியவளாகிய கண்ணகியென்பவளைத் துறந்ததனால் அவளை அங்கீகரித்துக்கொள்ளும் வண்ணம் கபிலர் முதலிய புலவர்களால் இரந்துபாடப் பெற்றான். இது "கண்ணகிகாரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பாணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண் பாட்டு" (தொல். புறத்திணை. 35 - சூ.நச்சினார்க்கினியம்) என்பதனாலும் விளங்கும். இவனைப்பாடிய புலவர்கள்: பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூ ர்கிழாரென்பார். இன்னுமுள்ள இவனுடைய வரலாற்றைப் புறநானூறு, அச்சுப்புத்தகத்திலுள்ள "வையாவிக் கோப்பெரும்பேகன்" என்னும் பெயராலுமுணர்க.
87 -8. சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாகம் நெடுவழி -சுரும்புண்ணும்படிநறியபூத் தேனைத்துளிக்கும் சுரபுன்னையையுடைத்தாகிய நெடிய வழியினின்ற,
(கு -பு) இனி, பாரியென்னும் வள்ளலைக் கூறுவார். சுரும்பு -வண்டு.
89. சிறு வீ முல்லைக்கு பெரு தேர் நல்கிய -சிறிய பூக்களையுடைய முல்லைக்கொடி தடுத்தற்கு அது வேண்டிற்றாகக்கருதிப் பெரிய தேரைக் கொடுத்த,
(கு -பு) சிறுவீ முல்லை, பெருந்தேர் என்பன முரண்தொடை.
90 -91. பிறங்குவெள் அருவி வீழும் சாரல் பறம்பிற் கோமான் பாரியும் -மிகுகின்ற வெள்ளிய அருவிகுதிக்கும் பக்கத்தினையுடைய பறம்பென்னும் மலைக்கரசனாகிய பாரியென்னும் வள்ளலும்,
(கு -பு) பாரி, முல்லைக்குத் தேர் கொடுத்ததையும், அவன் பறம் பென்னுமலைக்குத் தலைவனென்பதையும், "இவரே, பூத்தலை யறாஅப் புனை கொடி முல்லை, நாத்தழும் பிருப்பப் பாடா தாயினுங், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த, பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்", "இவரே, யூருட னிரவலர்க் கருளித் தேருடன், முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் , பறம்பிற் கோமான் பாரி மகளிர்" (புறநானூறு, 200, 201) என்பவற்றாலும், "முல்லைக்குத் தேரும்" என்னும் வெண்பாவாலும் உணர்க; ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனாரருளிச்செய்த, "கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை" என்னும் திருப்புகலூர்த் தேவாரத்தால் இவனுடைய வள்ளன்மை நன்ககுபுலப்படும். இவன், முந்நூறுஊர்களையுடைய பறம்புநாட்டை ஆண்டவன்; அந்த முந்நூறூர்களையும் தன்னுடைய மற்றைப் பொருள்களையும் பரிசிலர்க்குக் கொடுத்தோன், மிக்க பராக்கிரமமுடையவன்; இவனை வெல்லக்கருதிய தமிழ்நாட்டுவேந்தர்மூவரும் போர்செய்து வெல்ல வொண்ணாமையின் வஞ்சித்து இவனைக்கொன்றனர். இவனுடைய பிறவரலாறுகளைப் புறநானூறு அச்சுப்புத்தகத்துள்ள பாரியென்னும் பெயராலுணர்க.
91 -3 . கறங்கும் மணி வால் உளை புரவியொடு வையகம் ஈர நன்மொழி மருள இரவலர்க்கு ஈந்த காரி (95) -ஒலிக்கும் மணியினையும் வெள்ளிய தலையாட்டத்தினை யுமுடைய குதிரையோடேதனது நாட்டினையும் அருளினையுடைய நன்றாகிய மொழியினையும் ஏனையோர் கேட்டு வியக்கும்படி இரவலர்க்குக் கொடுத்த காரி,
ஈரநன்மொழி மருளவென்று மாறுக.
94 -5. அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல் தொடி தடகை காரியும் -தன்னிடத்துறையுங் கொற்றவையுடைய கோபத்தின் மிகுதியினாலே தான் விளங்கும் அச்சந்தோன்றும் நெடியவேலினையும் உழலுந்தொடியினையணிந்த பெருமையை -யுடைய கையினையுமுடைய காரியென்னும் வள்ளலும்,
(கு -பு) அழல் -கோபம். கொற்றவை -வீரமகள். வீரலக்ஷ்மியென்றுங் கூறப்படுவள்; வீரத்தின் அதிதேவதையாதலின், வீரர்களுடைய தோள்களிலும் ஆயுதங்களிலும் இவள் இருப்பதாகச் சொல்லுவதுண்டு. தொடி -வீரவளை. இவன், வீரத்திற் சிறந்தவன். பகைவர் பலரைவென்றுமிக்க புகழ் பெற்றவன்; மலையமான் திருமுடிக்காரியென்றும் மலையனென்றும் கூறப்படுபவன்; இவன் குதிரைக்குக் காரியென்பதுபெயர்; ஓரியென்னும் வள்ளலை வென்றவன். இவற்றை பின்வரும் "காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக்குதிரை யோரியும்" என்பதனாலும், "காரி யூர்ந்து பேரமர்க் கடந்த, மாரியீகை மறப்போர் மலையன்" என்பதனாலுமுணர்க; இவனிருந்த இடம் திருக்கோவலூர்; இவனுடையமலை முள்ளூர்மலையென்று நூல்களில் வழங்கும். இவனுடைய குடித்தலைவனுக்கு மலையமானென்பது பெயராதலின் இவனாண்ட நாடு மலையமானாடென்று முதலிற் கூறப்பெற்றுப் பிற்காலத்து அது மலாடென்று மருவி வழங்குவதாயிற்று, அந்நாடு கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. இன்னுமுள்ள இவனுடைய வரலாறுகளை புறநானூற்று அச்சுப்புத்தகத்தில் "மலையமான் திருமுடிக்காரி" என்பதன்பின்னுள்ள வாக்கியங்களாலுணர்க.
95 -7. (நிழறிகழ், நீல நாக நல்கிய கலிங்க, மாமலர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த:) நாகம் நல்கிய நிழல் திகழ் நீலம் கலிங்கம் ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த ஆய் (99) -பாம்பு ஈன்றகொடுத்த ஒளி விளங்கும் நீலநிறத்தையுடைய உடையினை ஆலின்கீழிருந்த இறைவனுக்கு நெஞ்சுபொருந்திக் கொடுத்தஆய்,
(கு -பு) ஆலின் கீழிருந்த இறைவன் -சிவபெருமான்; "ஆலமர் செல்வன் புதல்வன் வரும்" (சிலப்பதிகாரம், குன்றக்குரவை) என்பதனாலு முணர்க; இவ்வள்ளல் சிவபெருமானுக்கு ஆடைகொடுத்த சரித்திரம், வேறே எங்கும் காணப்பட்டிலது,
98 -9. சாவந் தாங்கிய சாந்து புலர் திணி தோள் ஆர்வம் நன்மொழி ஆயும் -வில்லையெடுத்த சந்தனம் பூசிப்புலரும் திண்ணிய தோளினையும் கேட்டோர்க்கு விருப்பத்தைச்செய்யும் நன்றாகிய சொல்லினையுமுடைய ஆயென்னும் வள்ளலும்,
(கு -பு) சாவந்தாங்கியதோளென்க. "ஆர்வநன்மொழி"என்பதனையும் இதன் பொருளையும் "கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கோளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்" என்னுந் திருக்குறளாலும் அதன்பொருளாலும் விளங்க உணர்க. ஆயென்னும் வள்ளல், உழுவித்துண்போர்வகையினன்; அரசராற் கொடுக்கப்படும் வேளென்னும் உரிமையையடைந்தோன்; சிறந்தவீரன்; பொதியின்மலைத்தலைவன்; அம்மலையின் அருகேயுள்ள ஆய்குடியென்பது இவனுடையஊர். ஆய் அண்டிரனென்றும் அண்டிரனென்றும் இவன் பெயர் வழங்கும்; பாணர்க்கும் மற்ற இரவலர்க்கும் யானைகளையும் மற்றப் பொருள்களையும் மிகுதியாகக்கொடுத்தவன்; சுரபுன்னைப் பூமாலையையுடையவன்; கொங்குநாட்டு அரசரோடு போர்செய்து அவர்களைவென்றோன். சங்கப் புலவர்களில் இவனைப்பாடியவர்கள்: உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன்கீரனார் ; இவர்களுள் இவன் இறந்;தபின்பும் இருந்தோர்: துறையூர் ஓடைகிழாரொழிந்த மற்றையோர்,
99 - -101 மால் வரை கமழ் பூ சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி * ஔவைக்கு ஈந்த அதிகன் (103) –பெருமையையுடைய *ஔவை அதிகமானிடத்த நெல்லிக்கனி பெற்றமையைப் பின்வரும் செய்யுளாலுமுணர்க; புறநானூறு 91 -
"வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார், களம்படக் கடந்த கழறொடித் தடக்கை, யார்கலி நறவி னதிகர் கோமான், போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி, பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி, நீல மணிமிடற் றொருவன் போல, மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே."
திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அதிகமானெடுமானஞ்சியை ஔவயார் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது.
மலையிற் கமழும்பூக்களையுடையபக்கமலையிலேநின்று அழகுபெற்ற கருநெல்லியினது அமிழ்தின்தன்மை தன்னிடத்தேயுண்டான இனிய பழத்தைத் தான் நுகர்ந்து உடம்புபெறாதே ஓளவைக்குகொடுத்த அதிகன்,
(கு -பு) நெல்லிமரங்களுள் ஒருவகைநெல்லியின்கனி அமுதமயமாய் விளங்கி, உண்டவர்களை அநேகவருடங்கள் வாழ்ந்திருக்கச் செய்யுமென்பதும் இதனாலேதான், அந்தக்கனியையுண்ட ஓளவையார் அநேகவருடங்கள் சீவித்து வாழ்ந்திருந்தனரென்பதும் பண்டைவரலாறு. அமுதமயமான நெல்லிக்கனி -யுண்டென்பது, ஸ்ரீவில்லிபுத்தூரார் பாரதம், பழம்பொருந்து சருக்கத்தில், "அறுவரும்" என்னும் 22 -ம் செய்யுளில், நிறைசுவையமுத நெல்லியின்கனியும்" என்பதனாலும் அறியலாகும்; "இனிய கனிகளென்றது, ஓளவையுண்டநெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை (திருக்குறள்:100, உரை) என்று பரிமேலழகரெழுதியதும் இங்கே அறிதற்பாலது; "பூங்கமலவாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையு, மாங்கு வருபெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாழதிகா வன்கூற்றி னாவை, யறுப்பித்தா யாமலகந்தந்து" என்னும் ஓளவையார் திருவாக்கும் இதனைப் புலப்படுத்துகின்றது,
இது, தமிழ் நாவலர் சரிதையிற் கண்டசெய்யுள்.
102 -3. உரவு சினம் கனலும் ஒளிதிகழ் நெடு வேல் அரவம் கடல் தானை அதிகனும் - -தன்னிடத்துறையும் கொற்றவையது வலியினையுடைய சினம் நின்றெரியும் ஒளிவிளங்கும் நெடியவேலினையும் ஆரவாரத்தையுடைய கடல்போலும் படையினையுமுடைய அதிகமானென்னும் வள்ளலும்,
(கு -பு) உரவு வலி, இதிலுள்ள 'உரவுச்சினங் கனலு மொளி திகழ் நெடுவேல்' என்பதனுரையும், முன்னுள்ள (அடி, 94) "அழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேல்" என்றதனுரையும் ஒத்துள்ளன.
103 -5. கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த நள்ளியும் (107) - -தன்மனத்து நிகழ்கின்றனவற்றை மறையாதுகூறி நட்புச்செய்தோர் மனமகிழும்படி அவர்கள் இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருள்களை நாடோறும் கொடுத்தநள்ளியும்,
(கு -பு) கரவாது -ஒளியாமல், நடை -இல்லற ஒழுக்கம், முட்டாமல் -தட்டில்லாமல்.
105 -7. முனை விளங்கு தடக்கை துளி மழை பொழியும் வளிதுஞ்சு நெடுகோடு நளி மலைநாடன் நள்ளியும் -பகைப்புலத்தே கொலைத் தொழிலால் விளங்கும் பெருமையையுடைய கையினையுடைய துளியையுடைய மழை பருவம் பொய்யாது பெய்யும் உயர்ச்சியாற் காற்றுத்தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையுடையனாகிய நள்ளியென்னும் வள்ளலும்,
(கு -பு) முனை -போர்க்களம். தட -பெருமை. மழைபொழியுமலை நாடென்க. நளி -செறிவு. நள்ளியென்வன், கடையெழுவள்ளல்களில் ஒருவன். தோட்டி யென்னுமலைக்கும் அதனைச்சார்ந்தநாட்டிற்கும் காட்டு நாட்டிற்கும் தலைவன். இவனைப்பாடிய புலவர்கள்: வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார். இவனுடைய குணவிசேடங்கள், புறநானூற்றின், 148 -ம் செய்யுள் முதலியவற்றால் விளங்கும். இவன்பெயர் கண்டிற் கோப்பெருநள்ளி கண்டீரக் கோப்பெருநள்ளியெனவும் காணப்படுகின்றது.
107 -9 . நளி சினை நறு கஞலிய நாகு முதிர் நாகத்து குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த ஓரி (111) -செறிந்த கொம்புகளிடத்தே நறிய பூக்கணெருங்கின ளமையையுடைய முதிர்ந்த சுரபுன்னையையும், குறிய மலைகளையுமுடைய நன்றாகிய நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த ஓரி,
(கு -பு -) நறுமைபோது; நறிய -நல்லமணமுள்ள. சுரபுன்னை -ஒருவகைப் புன்னை மரம். பொறை -மலை
110 -111 காரி குதிரை காரியொடு மலைந்த ஓரி குதிரை ஓரியும் - காரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையையுடைய காரியென்னும் பெயரையுடையவனுடனே போர்செய்த ஓரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையையுடைய ஓரியென்;னும் வள்ளலும்.
காரி கரியகுதிரையென்றும், ஓரி பிடரிமயிரென்றும் கூறுவாருமுளர்.
(கு -பு) கடையெழுவள்ளல்களில் ஒருவனாகிய இவன், கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன்,. இவன் பெயர் ஆதனோரி யெனவும் வல்விலோரியெனவும் வழங்கும். இவனைப்பாடியபுலவர்கள்: வன்பரணர், கழைதின்யானையார். இவனுடைய குணவிசேடங்கள், புறநானூறு , 152, 153 -ம் பாடல்களால் விளங்கும்.
111 -3 (எனவாங், கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ, ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம் :) என எழுவர் ஆங்கு பூண்ட ஈகை செந்நுகம் -என்றுசொல்லப்பட்ட
எழுவரும் அக்காலத்தே மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் -தம்மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்தோடு மாறுபடுகின்ற திணிந்த தோளினையுடைய எழுவர்,
(கு -பு) இந்த ஏழுவள்ளல்களின்வரலாறுகள், "முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு, மரசுடன்பொருத வண்ண னெடுவரைக், கறங்கு வெள் ளருவி கல்லலைத் தொழுகும், பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக், கொல்லி யாண்ட கல்வி லோரியுங், காரி யூர்ந்து பேரமர்க் கடந்த, மாரி யீகை மறப்போர் மலையனு, மூரா தேந்திய குதிரைக் கூர்வேற், கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழியினும், ஈர்ந்தண் சிலம்ப னிருடூங்கு நளிமுறை, யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமையப், பெருங்க னாடன் பேகனுந் திரந்துமொழி, மோசி பாடிய வாயு மார்வமுற், றுள்ளி வருந ருலைவு நனிதீரத், தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங், கெழுவர்" (புறநானூறு, 158) என்பதனாலும் புறநானூற்று அச்சுப் புத்தகத்துள்ள பாடப்பட்டோர் வரலாற்றாலும் விளங்கும். நுகம் -பாரம் கணையம் -யானையைத் தடுக்கு மரம்.
114 -126 (விரிகடல் வேலி வியலகம் விளங்க வொருதான் றாங்கிய வுரனுடை நோன்றா, ணறுவீ நாகமு மகிலு மாரமுந், துறையாடு மகளிர்க்குத் தோட்பணை யாகிய பொருபுன றரூஉம் போக்கரு மரபிற், றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்ன ருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா, ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன், களிற்றுத் தழும்பிருந்த கழறயங்கு.திருந்தடிப், பிடிக்கணஞ் சிதறும் பெயன் மழைத் தடக்கைப், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு:)
விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒரு தான் தாங்கிய நல்லிக்கோடனை நயந்தனிர்செலின் (269) -பரந்த கடலாகிய வேலியையுடைய உலகமெல்லாம் விளங்கும்படி ஒருவனாகிய தானே பொறுத்த நல்லியக்கோடனை விரும்பிச் செல்லின்,
மறு இன்றி விளங்கிய உரன் உடை நோன் தாள் வடு இல் வாய் வாள் உறுபுலி துப்பின் ஓவியர் பெருமகன் -குற்றமின்றி விளங்கிய அறிவையுடைத்தாகிய வலியையுடைய முயற்சியினையும் பகைவர்முகத்தினும் மார்பினும் வெட்டின வாய்த்தவாளையும் மிக்க புலிபோலும் வலியினையுமுடைய ஓவியருடைய குடியிலுள்ளோன்,
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் துறை ஆடும் மகளிர்க்கு தோட்புணை ஆகிய பொரு புனல் தரூஉம் இலங்கை -நறிய பூக்;களையுடய சரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் குளிக்குந்துறையிலே புனலாடுமகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகக் கரையைக்குத்துகின்ற நீர்தருமிலங்கை,
கருவொடு போக்கரு மரபின் இலங்கை -கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அழித்தற்கரிய முறைமையினையுடைய இலங்கை,
தொன்மா இலங்கைப் பெயரிய நன் மா இலங்கை -பழையதாகிய பெருமையினை -யுடைய இலங்கையினது பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையையுடைய இலங்கை,
மன்னருள்ளும் ஓவியர் பெருமகன் -அவ்விலங்கைக்குரிய அரசர் பலருள்ளும் ஓவியர் குடியிற் பிறந்தோன், களிறு தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி -யானையைச் செலுத்துதலாலுளதாகிய தழும்பகிடந்த வீரக்கழல் கிடந்தசையும் பிறக்கிடாத
அடியினையும்,
பிடிக்கணம் சிதறும் கை -பிடித்திரளைப் பலர்ஞக்குங் கொடுக்குங்கை,
பெயல் மழை தடக்கை -பெய்தற்றொழிலையுடைய மழைபோன்ற பயனையுடைய பெரியகையினையுமுடைய, பல்லியம் கோடியர் புரவலன் -பல வாச்சியங்களையுடைய கூத்தரைப் புரத்தலை வல்லவன், பேர்இசை நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு -பெரிய புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்டற்குவிரும்பிய கோட்பாட்டுடனே,
பெருமகன் புரவலனாகிய நல்லியக்கோடனெனமுடிக்க.
(கு -பு) முகத்திலும் மார்பிலும் ஆயுதங்களாலுண்டாகும் புண்களை 'விழுப்புண்' என்பர்; "விழுப்புண் படாதநா ளெல்லாம்" என்னுந் திருக்குறளாலுமுணர்க. கருப்பதித்த முகூர்த்தமென்றது, இந்நகரம் அமைத்தற்கு அஸ்திவாரஞ் செய்த காலத்தை. தொன்மாவிலங்கை -இராவணன் இராசதானியாகிய இலங்கா நகரம்,. இப்பாட்டுடைத் தலைவன் நகரம் மாவிலங்கையெனவும் வழங்கும்; "பெருமா விலங்கைத் தலைவன் சீறியா, ழில்லோர் சொன்மலை நல்லியக்கோடனை" (புறநானூறு,176) என்பதனாலுமுணர்க. பிறக்கிடாத -பின்னிடாத. பிடிக்கணம் -பெண்யானைக்கூட்டம்.
127. தாங்கரு மரபின் தன்னும் -பிறராற் பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்குரிய முறைமைகளையுடைய தன்னையும்,
(கு -பு) மரபு -முறைமை.
127 -8 . தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி -அவன்றந்தையுடைய தேவருலகத்தைத்தீண்டும் நெடிய மலையிற் செல்வத்தையும்பாடி,
(கு -பு) தந்தையின்வரையென்க.
129. முன் நாள் சென்றனமாக -நாலுபத்துநாகைக்குமுன்னே போனேமாக,
இந்நாள் -இற்றைநாள்,
(கு -பு) நாலுபத்துநாள் -சிலநாள்.
130 . திறவா கண்ண சாய் செவி குருளை -விழியாத கண்ணையுடையவாகிய வளைந்த செவியினையுடைய குட்டி,
* "நாயே பன்றி புலிமுய னான்கு, மாயுங் காலைக் குருளை யென்ப"
(கு -பு) பிறந்த சிலாள்வரையில் நாய்க்குட்டியின் கண்கள் மூடப்பட்டிருக்கும்.
----------
* தொல்காப்பியம்,பொருளதிகாரம், மரபியல், 8.
131. கறவா பால் முலை கவர்தல் நோனாது -பிறராற் கறக்கப்படாத பாலினையுடைய முலையை யுண்ணுதலைத் தன்பசிமிகுதியாற் பொறுத்தலாற்றாது,
( கு -பு) குருளையானது கவர்தலை,
132. புனிறு நாய் குரைக்கும் புல்லென் அட்டில் -ஈன்று அணிமையையுடைய நாய் கூப்பிடும் பொலிவழிந்த அடுக்களையில்,
(கு -பு) அடுக்களை -சமையற்கட்டு
133. காழ் சோர் அட்டில் (132) -கழிகள் ஆக்கையற்று விழுகின்ற அட்டில்,
முதுசுவர் கணம் சிதல் அரித்த அட்டில் (162) -பழைய சுவரிடத்தெழுந்த திரண்ட கறையான் தின்ற அட்டில்
(கு -பு) ஆக்கை -கழிகளைக்கட்டும் கயிறுமுதலியன.
134 (பூழி பூத்த புழற்கா ளாம்பி:) பூழி புழல் காளாம்பி பூத்த அட்டில் -(162) நனைந்தபுழுதி உட்பொய்யாகிய காளானைப் பூத்த அட்டில்
(கு -பு) காளான்பூத்த அட்டிலென்றதனால், மிக்கவறுமையைப் புலப்படுத்தினார்; "ஆடுநனி மறந்த சோடுய ரடுப்பில் ஆம்பி பூப்ப" என்றார் பெருந்தலைச் சாத்தனாரும்; (புறநானூறு 164)
135 -6. (ஒல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள்:) ஒடுங்கு பசி உழந்த ஒல்கு நுண்மருங்குல் வளை கை கிணைமகள் -ஒடுங்குதற்குக் காரணமான பசியாலே வருந்திய நுடங்கும் நுண்ணிய இடையினையும் வளையலையணிந்த கையினையுமுடைய கிணைவனுடைய மகள்,
(கு -பு) கிணைவன் -கிணையென்னும் பறையைக் கொட்டுவோன். மகள் என்றது அவன் மனைவியை, "நினக்கிவன் மகனாத்தோன்றிய தூஉம், மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம், பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்" (மணிமேகலை,21 -வது காதை, 29 -31) என்பதனாலுமுணர்க.
136 -7. வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை – பெரிய உகிராற் கிள்ளின குப்பையினின்ற வேளை உப்பின்றாய் அட்டிலிலே வெந்தவதனை,
138 -9. மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரு பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் -வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங்கூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும்,
140. அழிபசி வருத்தம் வீட -அறிவுமுதலியன அழிதற்குக் காரணமான பசியாலுளதாகிய வருத்தங்கள் விட்டுப் போம்படி,
(கு -பு) பசி அறிவுமுதலியவற்றை அழிக்குமென்றது, "தொல்வரவுத் தோலுங் கெடுக்குந் தொகையாக, நலகுர வென்னு நசை" (திருக்குறள் 1043) எனவும், "குடிபிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும், பிடித்த கல்விப் பெரும்பிணை விடூஉ, நாணணி களையு மாணெழில் சிதைக்கும்,.....பசிப்பிணி யென்னம் பாவி" (மணிமேகலை, 11 -வது காதை; 76 -80) எனவும் "மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை, தானந் தவமுயர்ச்சி தாளாண்மை......பத்தும், பசிவந் திடப்பறந்து போம்" (நல்வழி) எனவும் வருவனவற்றால் உணரப்படும்.
140 -143. பொழி கவுள் தறுகண் பூட்கை மணி தயங்கும் மருங்கின் சிறுகண் யானையொடு பெரு தேர் எய்தி யாம் அவண்நின்றும் வருதும் –மதம் வீழ்கின்ற கதுப்பினையும் கடுகக் கொல்லுதலாகிய மேற்கோோளினையும் மணியசையும் பக்கத்தினையும் சிறியகண்ணையுமுடைய யானையுடனே பெரிய தேரையும் பெற்று யாம் அவனிடத்துநின்றும் வாராநின்றேம்.,
இது நிகழ்காலத்து வருதல், * "உம்மொடு வரூஉங் கடதற" என்புழிக் கூறினாம்.
(கு -பு) கதுப்பு -கன்னம். மேற்கோள் -கொள்கை. அவனென்றது, நல்லியக்கோடனை. 'இது' என்றது, தும் விகுதியை. ; அது நிகழ்காலத்து வருமென்று இந்நூல் உரையாசிரியர் கூறியது; "இக்கடதறக்கள் முதனிலையை அடுத்துவருங்கால் இறப்பும் ஈற்றினை அடுத்துவருங்கால் எதிர்வும் உணர்த்தும்; இனி இவற்றுள், சிறுபான்மை நிகழ்காலம் உணர்த்து வனவுமுள; அது "சிறுகண்யானையொடு.......வருதும்" எனவரும் என்பது; (தொல்ஞகாப்பியம், வினை, 5 -ம் சூத்திரம், நச்சினார்க்கினியருரை.)
143 -5. நீயிரும் நயந்து இவண் இருந்த இரு பேர் ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிராயின் - நீங்களும் மூவேந்தர்பாற்பெறும் பரிசிலை விரும்பி இவ்விடத்திருந்த வறுமையாற் கரியவாகிய பெரிய சுற்றத்தினது தலைமையை யுடைத்தாகிய நெஞ்சுடனே அவனிடத்தே போவீராயின்,
(கு -பு) மூவேந்தர் -சேரசோழபாண்டியர். இனி நல்லியக்கோடனது எயிற்பட்டினம் கூறுவார் அதனையுடைய நெய்தனிலச் சிறப்புக் கூறுகின்றார்.
146 -150. (அலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந், தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங், கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு, நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங், கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தர:)
கடல் உலாய் நிமிர்தர அலைநீர் கானல் வெண்மணல் - கடல்பரந்து எற்றிப் பொருதலாலே அலையும்நீரையுடைய கரையில் வெள்ளிய மணலிடத்து நின்ற,
----------------
*தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல், 5
தாழை அன்னம் பூப்பவும் -தாழை அன்னம்போலப் பூக்கையினாலும், தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும் -இளவேனிற்காலம் தொடங்குகின்ற நாளிலே செருந்தி தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளப் பண்ணுகையினாலும்,
கடு சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் -முதற்சூலையுடைய கழி முள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கையினாலும்,
கன்னியாய் நின்று அரும்புதலிற் கடுஞ்சூல், கழாஅல -கழற்ற,
நெடுகால் புன்னை நித்திலம் வைப்பவும் -நெடிய தாளினையுடைய புன்னை நித்திலம்போல அரும்புகையினாலும்,
(கு -பு) செருந்தி -ஒருவகைமரம். அதன்பூ பொன்னிறமுடையது; "செருந்தி பொன் சொரிதருந் திருநெல்வேலியுறை செல்வர்தாமே" என்பது, தேவாரம். கழிமுள்ளி -கடற்கரைக்கண் தோன்றுவதோர்செடி. நித்திலம் -முத்து
151. பாடல் சான்ற நெய்தல் நெடுவழி பட்டினம் (156) - புகழ்தலமைந்த நெய்தனிலத்து நெடியவழியிற் பட்டினம்.
152. மணிநீர் வைப்பு பட்டினம் (153) -நீலமணிபோலும் கழிசூழ்ந்த ஊர்களையுடைய பட்டினம், மதிலொடு பெயரிய பட்டினம் (156) - மதிலோடே பெயர் பெற்ற பட்டினம்
என்றது எயிற்பட்டின மென்றதாம்.
(கு -பு) வைப்பு -ஊர்; மதில், எயிலென்பன ஒரு பொருளன. பட்டினம் -கடற்கரையூர்
153. பனி நீர் படுவின் பட்டினம் படரின் –குளிர்ச்சியையுடைய நீரையுடைய குளங்களையுடைத்தாகிய எயிற்பட்டினத்தே செல்வீராயின், படு -மடுவுமாம்
(கு -பு) படு -குளம் ; மடு, ஆற்றிலுண்டாவது.
154. ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன -உயர்ந்த தன்மையை யுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த
(கு -பு) ஒட்டகம் -ஒட்டகை; இஃது அலைக்கு உவமம். துயில்மடிதல் - தூங்குதல்.
155. வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் -மிகுகின்ற திரை கொண்டுவந்த மணத்தையுடைய அகிலாகிய விறகாலே,
(கு -பு) "விரைமரம்" என்றமையின், அகிலாயிற்று; விரை -வாசனை.
156. கரு புகை செந்தீ மாட்டி -கரிய3 புகையையுடைய சிவந்த நெருப்பை எரித்து,
(கு -பு) கருமை, செம்மையென்பன, முரண்,
156 -8. பெரு தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த - பெரிய தோளினையும் மதி இத்தன்மை பெற்றிலேமேயென்று விரும்புதற்குக் காரணமான மறு அறுகின்ற அமைதியினையுடைய முகத்தினையும் முனையினையுடைத்தாகிய வேல்போலும் பார்வையினையுமுடைய நுளைச்சாதியிற் பிறந்தமகள் அரிக்கப்பட்ட,
(கு -பு) "கடைக்க ணேக்கற" என்பது, சிந்தாமணி (கனக. 66) நுளைச்சாதியிற் பிறந்தவர், நுளையன், நுளைத்தியெனவழங்ஞகப்படுவர். அரிக்கப்படுதலால், கள், அரியலெனவழங்கும்.
159. பழம்படு தேறல் பரதவர் மடுப்ப - பழைதாகிய களிப்பு மிகுகின்ற கட்டெளிவைப் பரதவர் எடுத்துவந்து வாயிடத்தே வைக்க,
(கு -பு) பழமைபடு, பரதவர் -கடற்கரைமாக்கள்.
160 -161. கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி -கொத்திலெழுந்த பூக்களையுடையவாகிய தோட்டங்களையுடைய கிடஙுகிலென்னும் ஊர்க்கு அரசனாகிய அரும்புநெகிழ்ந்த மாலையினையிடைய அழகையுடையோனைப் பாடி,
(கு -பு) கிடங்கில், கிடங்காலென வழங்குகின்றது.
162. அறல் குழல் பாணி தூங்கியவரொடு -தாளவறுதியை யுடைய குழலோசையயின் தாளத்திற்கொப்ப ஆடின மகளிரோடே,
(கு -பு) அறல் -அறுதல். தூங்கல் -ஆடுதல்.
163. வறல் குழல் சூட்டின் -உலர்தலையுடைய குழன்மீனைச் சுட்டதனோடே, வயின் வயின் பெறுகுவிர் -மனைதோறும் மனைதோறும் பெறுகுவிர்;
(கு -பு) குழன்மீன் -ஒருவகைமீன்.
பட்டினம் படரிற்(153) கிடங்கிற்கோமானாகிய (160) தகையோனைப்பாடி (161) ஆடினமகளிரோடே (162) நீங்களும் சூட்டோடே (163) தேறலைப் பரதவர்மடுப்ப (159) அவற்றை வயின்வயிற் பெறுகுவிரென முடிக்க.
(கு -பு) இனி அவனுடைய வேலூர் கூறுவார், முல்லையும் குறிஞ்சியும் கலந்த இடத்தே அஃதுண்மையின், அந்நிலங்களின் சிறப்பை முறையே பாராட்டுகின்றார்.
164. பை நனை அவரை பவழம் கோப்பவும் -பசுத்த அரும்புகளையுடைய அவரை பவழம்போலப் பூக்களை முறையே தொடாநிற்கவும்,
(கு -பு) "பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக், கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்" என்பது குறுந்தொகை. தொடாநிற்க -தொடுக்க.
165. கரு நனை காயா கணம் மயில் அவிழவும் -கரிய அரும்பினையுடைய காயாக்கள் திரண் மயிலின் கழுத்துப்போலப் பூவாநிற்கவும்,
(கு -பு) காயா -ஒருவகைமரம்; "புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை, மென்மயி லெருத்திற் றோன்றும்" (குறுந்தொகை); "செறியிலைக் காயா வஞ்சன மலர" (முல்லைப்பாட்டு) "கலவ மாமயி லெருத்திற் கடிமலர விழ்ந்தன காயா" (சிந்தாமணி். கனக. 2)
166. கொழு கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் -கொழுவிய கொடியினையுடைய முசுண்டை கொட்டம்போலும் பூவைத் தன்னிடத்தே கொள்ளாநிற்கவும், கொட்டை -நூற்கின்ற கொட்டையுமாம்
(கு -பு) முசுண்டை -முசுட்டைக்கொடி. கொட்டம் -பனங்குருத்தாற் செய்விக்கப்படும் சிறியபெட்டி; "அகலிரு விசும்பினாஅல் போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை" (மலைபடுகடாம், 100)
167. செழுகுலை காந்தள் கைவிரல் பூப்பவும் -வளவிய குலையினையுடைய காந்தள் கைவிரல்போலப் பூவாநிற்கவும்,
(கு -பு) "கோடற் குவிமுகை யங்கை யவிழ" என்பது முல்லைப் பாட்டு, 95.
168. கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் -கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊராநிற்கவும்,
(கு -பு) இந்திரகோபம் -பட்டுப்பூச்சி.
இச் செயவெனெச்சமெல்லாம், ஈண்டு நிகழ்கால முணர்த்தியே நின்றன; "ஞாயிறுபட வந்தான்" என்றாற்போல,
169. முல்லை சான்ற முல்லை அம் புறவின் -இவைகாலமுணர்த்தி இங்ஙனம் நிகழ்ந்தாநிற்கவும் கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக்கொடிபடர்ந்த அழகினையுடைய காட்டிடத்து,
இது, *"மாயோன் மேய" என்னும் சூத்திரத்தானுணர்க.
(கு -பு) "இவை" என்றது, அவரைமுதலியவற்றை; அவை கார்காலத்திற் பூத்தற்குரியன. கணவன் பிரிந்தவிடத்து மனைவி தனித்திருந்து ஆற்றியிருத்தற்குரிய இடம் முல்லையென்பர்; "முல்லை" என்பதற்கு இங்கே பொருள் செய்திருத்தல்போல "முல்லை சான்ற புறவணிந்து" (மதுரைக்காஞ்சி.285)
---------
* தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 5.
என்றவிடத்தும் இப்படியே பொருள் செய்திருக்கின்றனர். "மாயோன் மேய
காடுறையுலகமும்" என்றதனால், காடு முல்லையாதல் பெறப்படும். இதுகாறும்
முல்லை நிலம் கூறப்பட்டது. இனி்க் குறிஞ்சிநிலம் கூறப்படும்.
170 -171. விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி சுடர் கால்மாறிய செவ்வி நோக்கி -முழைஞ்சுகளிலே குதிக்கும் அருவியினையுடைய பெரிய அத்தகிரியிலே ஞாயிறுமறைந்து அவன்கிரணங்கள்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
(கு -பு) முழைஞ்சு -குகை. அத்தகிரி -அஸ்தமயகிரி.
172 -3. (திறல்வேனுதியி்ற் பூத்த கேணி, விறல்வேல் வென்றி வேலூரெய்தின்:) திறல்வேல் நுதியின் கேணி பூத்த விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் -முருகன்கையில் வலியினையுடைத்தாகிய வேலினுதிபோலக் கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூரைச் சேரின், என்றது : நல்லியக்கோடன் தன்பகைமிகுதிக்குஅஞ்சி முருகனை வழி பட்டவழி அவன் இக்கேணியிற்பூவைவாங்கிப் பகைவரை எறியென்று கனவிற்கூறி அதிற்பூவைத் தன்வேலாக நிருமித்ததோர் கதைகூறிற்று. இதனானே வேலூரென்ற பெயராயிற்று,
(கு -பு) செவ்விநோக்கி எய்தினென்க.
174. உறுவெயிற் உலைஇய உருப்பு அவிர் குரம்பை -மிகுகின்ற வெயிலுக்கு உள்ளுறைகின்றோர்வருந்தப்பட்ட வெப்பம் விளங்குகின்ற குடிலிலிருக்கின்ற,
(கு -பு) உலைஇய குரம்பை; குரம்பை -குடிசை.
175. எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு –எயினக்குலத்தின் மகளிராலே அடப்பட்ட இனிய புளிங்கறியிடப்பட்ட வெவ்வியசோற்றை,
புளி -தித்திப்புமாம்.
(கு -பு) எயிற்றியர் -எயினச்சாதி மகளிர்.
176. தேமாமேனி சில்வளை ஆயமொடு -தேமாவின் தளிர்போலும் மேனியையும் சிலவாகிய வளையினையுமுடைய நும்மகளிருடைய திரளுடனே,
177 -ஆமான் சூட்டின் -ஆமானினத சூட்டிறைச்சியை யுடைய, அமைவரப் பெறுகுவிர் -பசிகெடப் பெறுகுவிர்.
வேலூரெய்தின் (173) சூட்டினையுடைய (177) சோற்றை (175) ஆயத்தோடே (176) அமைவரப் பெறுகுவிரெனமுடிக்க.
முல்லையும் குறிஞ்சியும் சேர்ந்திருத்தலிற் சேரக்கூறினார், இரண்டுங் கூடியல்லது பாலைத்தன்மை பிறவாமையின்.
(கு -பு) ஆமான் -காட்டுப்பசு. சூட்டிறைச்சி –சுடைதலையுடைய மாம்ஸம். அமைவர -நிறைய. இந்த இரண்டுநிலமும் கூடியவிடத்துப் பாலைத் தன்ம உண்டாமென்பதை, "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப்பதிகாரம். காடுகாண். 64 -6) என்பதனாலுணர்க. "இரண்டுங் கூடியல்லது" என்னும் வாக்கியம் இரண்டு நிலமும் கூடிய இடமுண்டென்பதைப் புலப்படுத்த வந்தது. இனி அவனுடைய ஆழர் கூறுவார், முதலிலே அதனையுடைய மருதநிலச்சிறப்புக் கூறுகின்றார்.
178 -9. (நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக், குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி:) நாள் கோதை தொடுத்த நறு பூ சினை குறு கால் காஞ்சி கொம்பர் ஏறி -நாட் காலத்தே மாலைகட்டினாற்போல இடையறாமல் தொடுத்த நறிய பூக்களையுடைய சிறிய கொம்புகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சிமரத்தின் பெரிய கொம்பரிலேயேறி,
(கு -பு) நாட்காலம் -விடியற்காலம்.
180. நிலை அரு குட்டம் நோக்கி நெடிது இருந்து -ஒருகாலத்தும் நிலைப்படுதல் அரிதாகிய ஆழத்திற்றிரிகின்ற மீன்களை எடுக்குங் காலத்தைக் கருதி நெடும் பொழுதிருந்து,
(கு -பு) குட்டம் -பள்ளம்.
181 -2. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை -புலானாற்றத்தையுடைய கயலை முழுகியெடுத்த பொன்னிறம்போலும் வாயையுடைய நீலமணிபோன்ற சிச்சிலியினது பெரிய உகிர்கிழித்த வடுவழுந்தின பசிய இலையினையுடைய,
(கு -பு) சிச்சிலி -மீன்கொத்துக்குருவி. உகிர் -நகம்
183 . முள் அரை தாமரை முகிழ் விரி நாட்போது -முள்ளையுடைத்தாகிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்பு விரிந்த நாட்காலத்திற் பூவை,
184 . கொங்குகவர் நீலம் செங்கண் சேவல் -தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு,
பூவைத் தேனையென்றது, *"தெள்ளிது" என்றதனான்முடிக்க.
185. மதிசேர் அரவின் மான தோன்றும் -திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பையொப்பத் தோன்றும்,
(கு -பு) கரும்பாம்பு -கேது. வெண்டாமரைப் பூவிற்குத் திங்களும் அதைச் சார்ந்த வண்டொழுங்கிற்குக் கரும்பாம்பும் உவமை.
-------------
* "முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை , சினைமுன் வருத றெள்ளி தென்ப" என்பது தொல்காப்பியம், சொல்லதிகாரம்,வேற்றுமை மயங்கியல், 5
186. மருதம் சான்ற மருதம் தண்பணை - -ஊடியுங்கூடியும் போகநுகருந் தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலிடத்து,
187 -8.[அந்தண ரருகா வருங்கடி வியனகர், அந்தண் கிடங்கினவனாமூ ரெய்தின்:]அம் தண் கிடங்கின் அரு கடி வியன் நகர் அந்தணர் அருகா அவன் ஆமூர் எய்தின் -அழகினையுடைய குளிர்ந்த கிடங்கினையும் அரிய காவலையும் அகற்சியையுடைய அகங்களையுமுடைய அந்தணர் சுருங்காத அவனுடைய ஆமூரைச் சேர்வீராயின்,
(கு -பு.)கிடங்கு - அகழி, அகங்கள் -வீடுகள்.
189 -190. வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி, னுரன்கெழு நோன்பகட்டுழவர் தங்கை:] வலி புணர் எருத்தின் வலம் பட நடக்கும் நோன் பகட்டு உரன் கெழும் உழவர் தங்கை -இழுத்தற்குரிய வலிபொருந்தின கழுத்தினாலே வெற்றியுண்டாக நடக்கும் மெய்வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய அறிவுபொருந்தின உழவருடைய தங்கையாகிய,
உரன் -அறிவு; * "உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்" என்றாற்போலே.
(கு - பு.) நோன்மை - வலி. எருது -காளை.
191 -2. பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து தொடி கை மகடூஉ –பிடியினது கையையொத்த பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும் தொடியணிந்த கையினையுமுடைய மகள்,
மக முறை தடுப்ப - -உழவர் தங்கையாகிய(190)மகடூஉத்(192)தான் உள்ளேயிருந்து தன்பிள்ளைகளைக்கொண்டு நும்மை அடைவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே,
இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறுபோலே உபசரித்து விலக்கவென்றுமாம்.
(கு - பு.)பிடி -பெண்யானை; தொடி -தோள்வளை; வளைந்திருப்ப தென்று பொருள். பெண்யானையின்கை மகளிருடைய பின்னிய கூந்தலுக்கு உவமை; "பிடிக்கைக் கூந்தற் பொன்னரி மாலை தாழ" (சிந்தாமணி, முத்தி. 65) மகடூஉ, சாதியொருமை. மக முறை தடுப்ப - மகவால் முறையே தடுக்க வென்க; இனி, மகவைக்கொண்டு, அண்ணன், அம்மான் என்றாற்போல் வனவாகிய முறைப்பெயர்களைச் சொல்லுவித்துத்தடுப்பவெனினும் பொருந்தும்; "மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவீர்" (மலைபடுகடாம், 185) என்பதனுரையைப்பார்க்க.
193 -4. இரு காழ் உலக்கை இருப்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு -கரிய வயிரத்தையுடைய உலக்கையினது பூணினையுடையமுகத்தைத் தேய்ப்பண்ணின குத்துதல்மாட்சிமைப்பட்ட அரிசியாலாக்கின கட்டியாகிய வெள்ளியசோற்றை,
---------
* பதிற்றுப்பத்து, எட்டாம்பத்து, 3.
(கு -பு)இருமை -கருமை, காழ் -வயிரம். இரும்பு, ஆகுபெயர். அவைத்தல் -குத்துதல். அமலை -திரளை.
195. கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் -கவைத்த காலினையுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங்கலந்த கலப்புடனே பெறுகுவிர்;
(கு -பு) கவைத்த -பிளவுபட்ட. கலவை -கலந்திருப்பது.
தண்பணையின் (186) ஆமூரெய்தின் (188) உழவர் தங்கையாகிய (190) மகடூஉத் தடுக்கையினாலே(192)சோற்றைக் (194)கலவையொடு பெறுகுவிரென முடிக்க.
196 -201. (எரிமறிந் தன்ன நாவி னிலங்கியிற்றுக், கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனு கைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப, நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்:)
எரி மறிந்து அன்ன நாவின் -மேனோக்கியெரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும்,
கரு மறி காதின் -வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும்;
*கவை அடிப் பேய் மகள் -கவைத்த அடியினையுமுடைய பேய்மகள், நிணன் உண்டு சிரித்த இலங்கு எயிறு தோற்றம் போல –நிணத்தைத் தின்று சிரித்த விளங்குகின்ற எயிற்றினது தோற்றரவு போல,
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணைத்தாள் அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப நீறு அடங்கு தெருவின் ஊர் -தாம்கொன்ற பிணங்களின் தலைகளைக் காலாலேதள்ளிச் சிவந்த பெரிய உகிரினையும் பெருமையையுடைய கால்களையுமுடைய தலைமையையுடையவாகிய யானைகளின் மதவருவி எழுந்த துகளை அவிக்கையினாலே புழுதியடங்கின தெருவினையுடைய ஊர்,
அவன் சாறு அயர் மூதூர் -அவனுடைய விழாநடக்கின்ற பழைய ஊர்,
(கு -பு) யாட்டுமறி -ஆட்டுக்குட்டி. எயிறு -பல். பேய்மகளின் பல் யானைக்கால் நகத்திற் குவமை; "முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாளுகிருடை யடிய வோங்கெழில் யானை" என்பது பட்டினப்பாலை 230 -231. துகள் -புழுதி.
202 சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே -தூரிய இடத்ததுமன்று; சிறிதாக அண்ணிய இடத்ததே. மூதூர் நணியதென்க.
(கு -பு) அண்ணிய -சமீபித்த
---------
* "இரும்பே ருவகையி னெழுந்தோர் பேய்மகள், ***கண்டொட்டுண்டு கவையடி பெயர்த்துத் தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக், கண்டனன்" என்றார் மணிமேகலையிலும்; 6 -வது சக்கரவாளக் கோட்டம்புக்க காதை.
203 -6.(பொருநர்க் காயினும் புலவர்க் காயினு, மருமறை நாவி னந்தணர்க் காயினுங் கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன, வடையா வாயிலவ னருங்கடை குறுகி:)
பொருநர்க்கு அடையாவாயினும் புலவர்க்கு அடையாவாயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு அடையாவாயினும் அரு கடைவாயில் முறுகி - கிணைப்பொருநர்க்கு அடைக்கப்படாவாயினும், அறிவுடையோர்க்கு அடைக்கப்படாவாயினும் , அரிய வேதத்தையுடைத்தாகிய நாவினையுடைய அந்தணர்க்கு அடைக்கப்படாவாயினும், ஏனையோர்க்கு உள்ளே சேறற்கரிய தலை வாயிலையணுகி, அடையாவென்றபன்மை நான்கு வாயிலையுங் கருதி.
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன அவன் வாயில் -அதுதான் தெய்வங்களிருக்கின்ற பெருமையையுடைய மேரு ஒருகண்ணை விழித்துப் பார்த்தாலொத்த அவனுடைய கோபுரவாசல்,
அன்றிப், பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறைநாவி னந்தணர்க்காயினும் அடையாவாயிலென்றாற் பொருளின்மையுணர்க.
(கு -பு). கிணைப்பொருநர் -தடாரிப்பபறை கொட்டும் பொருநர்; பொருநர் -கூத்தர்; "தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த மண்கணை முழவின் மகிழிசை யோதையும்" என்பது சிலப்பதிகாரம், நாடுகாண் காதை,138 -9. தேவர்களுக்கெல்லாம் இருப்பிடமாக இருத்தல் பற்றி மேருமலை, "கடவுண்மால்வரை" எனப்பட்டது. சுராலயமென்னும் அதன் பெயராலும் இதுவிளங்கும்.
207. செய் நன்றி அறிதலும் -பிறர் தனக்குச்செய்த நன்றியை யறிந்து அவர்க்குத் தானும் நன்மைசெய்தலையும்,
சிற்றினம் இன்மையும் -அறிவும் ஒழுக்கமுமில்லாத மாக்கடிரள் தனக்கில்லாமையையும்,
(கு -பு). "சிற்றினமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போரும், விடரும் தூர்த்தரும் நடருமுள்ளிட்ட குழு" என்பர் பரிமேலழகர். புறநானூறு, 29 -ம் பாட்டில், "நல்லத னலனுந் தீயதன் றீமையும், இல்லையென்போர்" என்றதும் இச்சிற்றினத்தவரையே. மாக்கள் -ஐம்புலவுணர்ச்சியை மட்டும் உடையவர்கள்.
208. இன் முகம் உடைமையும் -நோக்கினார்க்கு இனியமுகத்தை எக்காலமும் உடையனாதலையும்,
இனியன் ஆதலும் -*முகத்தினினிய நகாஅ அகத்து இன்னாதவனாகாமல் நெஞ்சு முகத்திற்கேற்ப இனியனாதலையும்,
----------
* திருக்குறள், கூடாநட்பு, 4, "முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப்படும்"
209. செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த - எக்காலமும் தன்னுடனே செறிந்து விளங்குகின்ற தலைமையினையுடைய பலகலைகளை யுணர்ந்தோர் புகழ,
210. அஞ்சினர்க்கு அளித்தலும் - தன்வீரத்தைக்கண்டு அஞ்சிவந்து அடிவீழ்ந்தார்க்கு அருள்செய்தலையும்.
வெஞ்சினம் இன்மையும் - கொடிய சினமில்லாமையும்;
கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்.
கு -பு) வெஞ்சினம், வைரமென்று வழங்கப்படும்.
211.ஆன் அணி புகுதலும் - வீரரணி நின்ற அணியிலேசென்று அவ்வணியைக் குலைத்தலையும்,
*"ஆண்பா லெல்லா மாணெனற் குரிய" என்று கூறி, + "பெண்ணுமாணும் பிள்ளையு மவையே" என்றதனால் ஆணென்றது ஆண்பாலையே யுணர்த்துமேனும் அணிபுகுதலென்றதனால் ஈண்டு வீரரை யுணர்திற்று.
அழி படை தாங்கலும் - தனது கெட்ட படையிடத்தே தான்சென்று பகைவரைப் பொறுத்தலையும்,
(கு -பு.) ஆண்மை - வீரம். பகைவரைப் பொறுத்தல் - பகைவரோடு போர் செய்தலை ஏற்றுக்கொள்ளுதல்.
212.வாள் மீ கூற்றத்து வயவர் ஏத்த - வாள்வலியாலே மேலாகிய சொல்லையுடைய வீரர் புகழ,
213. கருதியது முடித்தலும் - தன்னெஞ்சுகருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையும்,
நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்றறாக்காற் பிறப்பறாமையிற் கருதியது முடிக்க வேண்டுமென்றார்.
காமுற படுதலும் - அங்ஙனம் தானே யின்பமுறாதே அம்மகளிருந் தம்மாலே மிக்கவின்பத்தைப் பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும்,
214.ஒருவழி படாமையும் - அவர்கள் அங்ஙனம் விரும்பினார்களென்று
அவர்கள் வசத்தனாகாமையும்' ஓடியது உணர்தலும் - தான் அவர் வசத்தனாகாமையின் அவர் வருந்திய தன்மையையுணர்ந்து அவரைப் பாதுகாத்தலையும், இனி அவர்கள் நெஞ்சில் நிகழ்ந்ததனையுணர்ந்து அவர் குறைமுடித்தலென்றுமாம்.
215.அரி ஏர் உண் கண் அரிவையர் ஏத்த - செவ்வரிபொருந்தின மையுண் கண்ணினையுடைய மகளிர் புகழ,
------------
* தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 50.
+ தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 69.
216.அறிவு மடம் படுதலும் -தான் கூறுகின்றனவற்றையுணரும் அறிவில்லாதார்-மாட்டுத் தான் அறியாமைப்பட்டிருத்தலையும்,
அறிவு நன்கு உடைமையும் -தன்னைப்போல அறிவுடையார்மாட்டு நன்றாக அறிவுடையனாயிருத்தலையும்,
*"ஒளியார்மு னொள்ளிய ராதல் வெளியார்முன், வான்சுதை வண்ணங் கொளல்" என்றார் பிறரும்.
(கு -பு.) மடம் -அறியாமை. மேற்கோளுக்குப் பொருள்: ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் -அறிவுடையவர் ஒள்ளியாருடைய அவைக்கண் தாமும் ஒள்ளியராக, வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகளுடைய அவைக்கண் தாமும் வெள்ளிய சுதையின் நிறத்தைக்கொள்க என்பதாம்.
217.வரிசை அறிதலும் - பரிசிலருடைய தரமறிந்து அவர் பெறுமுறைமையே கொடுத்தலையும், கொடுத்தல் இதற்குங் கூட்டுக.
வரையாது கொடுத்தலும் -அங்ஙனம் கல்விமிகுதியில்லாத பரிசிலர்க்குக் கொடாதிருத்தலை மேற்கொள்ளாதே அவர்களளவிற்குத் தக்கனவற்றைக் கொடுத்தலையும்,
இனித் தனக்கென ஒன்றும் வரைந்துவையாமற் கொடுத்தலென்றுமாம்.
(கு -பு.) பரிசிலர் -பரிசில் பெறுதற்குரியார்.தரம் -தகுதி.
218.பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த - பிறர்கையிலேற்ற பொருளால் இல்வாழ்க்கை நடுத்துதலையுடைய பாணர் கூத்தர் முதலியோர் புகழ,
219. பன்மீன் நடுவண் பால் மதி போல - பலமீன்களுக்கு நடுவிருந்த பால்போலும் ஒளியையுடைய கலைநிறைந்த மதிபோல,
(கு -பு.) கலை -கிரணமும், வித்தையும்.
220.இன்னகை ஆயமோடு இருந்தோன் குறுகி - இயலிசை நாடகத்தாலும், இனிய மொழிகளாலும் இனியமகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையணுகி,
கலைகள் நிறைந்திருந்தமைபற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமையாயிற்று.
(கு -பு.) இங்கே தலைவனுக்கு மதி உவமையாகக் கூறப்படிருத்தல் போலவே, "தோள்வாய் சிலையி னொலியாற் றொறு மீட்டு மீள்வான், நாள் வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்" எனக்கலைநிறைந்து விளங்கியதுபற்றிச் சீவகனுக்கு மதி உவமை கூறப்பட்டிருத்தல் காண்க; சீவகசிந்தாமணி, கோவிந்தையாரிலம்பகம், 46.
----------
*திருக்குறள், அவையறிதல், 4.
இனி யாழ் வாசித்தல் கூறுவார்.
221 -2. பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் -பசியகண்களையுடைய கரியகுரங்கு பாம்பின்தலையைப் பிடித்தகாலத்து அப்பாம்பு ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் அதன்கையைச் சுற்றுமாறுபோன்ற அழகினையுடைய தண்டிடத்தே செறியச் சுற்றின,நெகிழவேண்டுமிடத்து நெகிழ்ந்தும் இறுகவேண்டுமிடத்து இறுகியும் நரம்புதுவக்கும் வார்க்கட்டினையும்.
(கு -பு.) நரம்பு - தந்தி. துவக்கும் -கட்டும். வார்க்கட்டு -தந்தி கட்டுதற்குரிய உறுப்பு.
223. (மணிநிரைத் தன்ன வனப்பின்வா யமைத்து:)
மணி நிரைத்து அன்ன வனப்பின் -இரண்டுவிளிம்பும் சேரத்தைத்து முடுக்கின ஆணிகளாலே மணியை நிரைத்துவைத்தாலொத்த அழகினையும்,
வாயமைத்து - பொருந்தப்பண்ணி,
(கு -பு.) இரண்டு விளிம்பு - பத்தரின் இரண்டு விளிம்பு.
224. வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து -வயிறுசேர்ந்து ஒழுங்குபட்ட தொழில்வகையமைந்த பத்தரினையும்,
வயிறு -பத்தரினடுவு. தாழிபோலப் புடைபட்டிருத்தலின், அகளமென்றார்.
(கு -பு.) அகளம் -தாழி.
225 -6. கானம் குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினை பொலிந்த பச்சையொடு -காட்டிடத்துக் குமிழினுடைய பழத்தினது நிறத்தையொப்பப் புகழப்படுந் துவரூட்டின கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வையோடே,
(கு -பு.) குமிழ் -ஒருவகை மரம். துவர் -செம்மை நிறம். போர்வை - யாழ்ப்போர்வை.
226 -7. [ தேம்பெய், தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பின்:]
தேம் பெய்து புரி அடங்கு நரம்பின் -தேனொழுகுகின்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துகொண்டு முறுக்கடங்கின நரம்பினையுமுடைய, அமிழ்து பொதிந்து இலிற்றும் நரம்பு -அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும் நரம்பு,
இஃது ஓசையினிமைக்குக் கூறிற்று; * "தீந்தே.*னணிபெற வொழுகியன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்" என்றார் பிறரும்.
---------
* சீவகசிந்தாமணி, காந்தருவதத்தையாரிலம்பகம், 230;
(கு -பு) தேனொழுக்கு, முறுக்கடங்கின நரம்பிற்கு உவமை; இலிற்றல் -துளித்தல்: "இலிற்றுமும்மதம்" (சீவகசிந்தாமணி, 2521)
228. பாடுதுறை முற்றிய -நீர் பாடுந்துறைகளெல்லாம் முடியப்பாடுதற்கு,
முற்றிய -செய்யியவென்னும் வினையெச்சம்.
228 -9. பயன் தெரி கேள்வி கூடுகொள் இன்னியம் -தனது பயன் விளங்குகின்ற இசைகளைத் தான் கூடுதல்கொண்ட இனியயாழை, பச்சையோடே (226) வாயமைக்கப்பட்டு வனப்பினையும் (223) திவவினையும் (222) அகளத்தினையும் (224) நரம்பினையுமுடைய (227) இன்னியமென முடிக்க.
(கு -பு) இசை -ஸ்வரம்.
229 -230. [குரல்குரலாக, நூனெறி மரபிற் பண்ணி:] நூல் நெறி மரபின் குரல் குரலாகப் பண்ணி -இசைநூல் கூறுகின்ற முறைமையாலே செம்பாலையாக வாசித்து,
பாடுதுறை முற்றுதற்கு இன்னியத்தைக் குரல் குரலாகப் பண்ணியென முடிக்க.
(கு -பு) குரல், ஸ்தாயியென்று கூறப்படும். இங்கே கூறியயாழ் மகரயாழ்; சிந்தாமணியில் "குரல் குரலாகப்பண்ணி" என்னும் செய்யுளுரையில், "இப்பாலைத் திரிவிலே பத்தொன்பது நரம்பையுடைய மகரயாழ் குரல் குரலாமாறு காண்க" என்று இந்நூலுரையாசிரியர் எழுதியிருத்தல் காண்க.
230 -231. [ஆனாது முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவும்:] முதுவோர்க்கு ஆனாது முகிழ்த்த கையினை எனவும் -*அரசன் உவாத்தியாயன் தாய் தந்தை தம்முன்முதலியோர்க்குப் பலகாலும் குவித்த கைகளையுடையையென்றும்,
232. இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் -வீரரெறிதற்கு மன மகிழ்ந்து கொடுத்த மார்பினையுடையையென்றும், மகளிருமாம்.
†" விருந்தாயினை யெறிநீயென விரைமார்பகங் கொடுத்தாற், கரும்பூ
ணற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே" என்றார் பிறரும்.
*ஆசாரக்கோவை, 17: -
"அரசனு வாத்தியாயன் றாய்தந்தை தம்முனிகரில் குரவ ரிவரிவரைத், தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதேயாவருங் கண்ட நெறி"
† சீவகசிந்தாமணி, மண்மகளிலம்பகம், 164.
233. ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் -ஏரினையுடைய குடிமக்களுக்கு நிழல்செய்த செங்கோலையுடையையென்றும்,
234. தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் -தேரினையுடைய அரசர்க்கு வெம்மைசெய்த வேலையுடையை யென்றும்,
235. நீ சில மொழியா அளவை -நீ சில புகழினைக் கூறுதற்குமுன்னே,
235 -6. (மாசில், காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇ:) காம்பு சொலித்து அன்ன மாசு இல் அறுவை உடீஇ -மூங்கில் ஆடையையுரித்தாலொத்த மாசில்லாத உடையினை உடுக்கப்பண்ணி,
இனி மூங்கின்முனையிற் பட்டையுமாம்.
(கு -பு) மூங்கிலின் ஆடை ஆடையின் மென்மைக்கும் வெண்மைக்கும் உவமை.
237. பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி -பாம்பேறி மயக்கினாற்போல மயக்கின கட்டெளிவைத் தந்து,
(கு -பு) கட்டெளிவு -கள்ளின் தெளிவு,
238 -240. (காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் றன்முன் பனிவரை மார்பன் பயந்த:) கா எரி ஊட்டிய கணைகவர் தூணி பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த - காண்டவவனத்தை நெருப்புண்ணும்படியெய்த கணையை உள்ளடக்கின ஆவ நாழிகையினையும் பூத்தொழில் பரந்த கச்சையினையுமுடைய அருச்சுனன் தமையனாகிய இமவான்போலு மார்பனான வீமசேனன் கண்ட,
(கு -பு) ஆவநாழிகை -அம்பறாத்தூணி. கண்ட -இயற்றிய,
240 -241. நுண்பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் - கூரியபொருளையுடைய மடைநூனெறியிற்றப்பாத பலவேறுபாட்டையுடைய அடிசிலை,
(கு -பு) மடைநூல் -பாகசாஸ்திரம்; என்றது, பீமசேனனாற் செய்யப் பெற்றதான பாகசாஸ்திரத்தை; அது பீமபாகமென வழங்கும்.
242 -4. [வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்கதிர் ஞாயிறெள்ளுந் தோற்றத்து, விளங்குபொற் கலத்தில்:] விசும்பில் வாள் நிறம் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொற்கலத்தில் -ஆகாயத்தில் ஒளியை யுடைத்தாகிய நிறத்தினையுடைய கோளாகிய மீன்கள்சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய ஞாயிற்றை இகழுந் தோற்றரவையுடைய விளங்குகின்ற பொற்கலத்திடத்தே,
விரும்புவன பேணி -நீ விரும்புவனவற்றை விரும்பி உட்கொண்டு,
(கு -பு) கோண்மீன் -கோட்களாகிய மீன்கள்.
245. ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி -நும்மிடத்து மிகுகின்ற விருப்பத்தாலே தான் நின்று உண்ணப்பண்ணுவித்து,
ஆனாமரபினென்றும் பாடம்
.
நீ சிலமொழியாவளவை (235) விரும்புவன பேணி (244) உடீஇ(236) நல்கி (237) அடிசிலைக் (241) கலத்தேயிட்டுத் (244) தான்நின்று ஊட்டி யென்க.
246. திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி -வலியமைந்த வெற்றியோடே பகையைத் தத்தநிலத்தைக் கைவிட்டுப் போகப் பண்ணி,
247. விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி -வெற்றியையுடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர்மன்னும் அரண்களை யழித்து,
248. நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின் -அவ்விடங்களிற்பெற்ற பொருளாலே விரும்பிவந்தவர் புன்கண்மையையும் பாணர் புன்கண்மையையும் போக்கினபின்பு,
(கு -பு) நயம் -விருப்பம். புன்கண் -துன்பம். பகைவருடைய அரண்களை அழித்த பின்பு அங்கே கிடைத்தவற்றைப் பரிசிலர்க்குக் கொடுத்தல் மரபு.
249. வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு -தன்படைத்தலைவர் மிக்கனவாய்க் கொண்டுவந்து தந்த நன்றாகிய நிறத்தினையுடைய பொருட்டிரளுடனே,
தன்படைத்தலைவர் குறுநிலமன்னரையும், அரசரையுமழித்து, நயவர்க்கும் பாணர்க்குங்கொடுத்து மிக்குக்கொண்டுவந்த நிதியமென்க.
250 -251. (பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி, யுருவ வான்மதியூர் கொண் டாங்கு:) பருவ வானத்து உருவ வான்மதி பாற்கதிர் பரப்பிஊர் கொண்டாங்கு - கூதிர்க்காலத்தையுடைய வானிடத்தே வடிவுநிறை தலையுடைய வெள்ளிய மதி பால்போலுங் கிரணங்களைப் பரப்பிப் பரத்தலைக் கொண்டாற்போல,
(கு -பு) கூதிர்க்காலம் -சரற்காலம் மற்ற0ைக்காலங்களைக் காட்டிலும்
சரற்காலத்தில் தோன்றும் சந்திரன் மிகவும் வெள்ளிதாகப் பாராட்டப்படும்.
252 -3. கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறடு ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு -கூரிய சிற்றுளிகள் சென்று செத்தின உருக்களழுந்தின வலியினையுடைய குறட்டிடத்திற்றைத்த ஆர்களைச்சூழ்ந்த சூட்டினை யுடைய உருளையோடே,
குறடு - அச்சுக்கோக்குமிடம். அயில்வாய் - கூரியவாய்; என்றது சூட்டிற்கு ஆகுபெயர்.
(கு - பு.) குறடு, குடமெனவும், சூட்டு, வட்டையெனவும் வழங்கும்.
254 - 5. [சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத், ததர்பிணியவிழ்ந்த தோற்றம் போல;] முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் நனை சிதர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல -முருக்கினுடைய விசும்பிலே செல்ல வளர்ந்த நெடிய கொம்பிற் செறிந்த அரும்புகள் வண்டிற்குப் பிணியவிழ்ந்த தோற்றரவுபோல,
ததர் - கொத்துமாம். சிதர் - சிந்துதலுமாம்; சிச்சிலியுமாம்.
(கு - பு.) முருக்கு - முள்ளு முருங்கை.
256 - 8. [உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக், கருந்தொழில் வினைஞர் கைவினைமுற்றி, யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு.]
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி உருக்குறு அரக்கு உள் எறிந்த போர்வை பாகர் - வலிய தொழிலைச்செய்யுந் தச்சருடைய கையாற்செய்யும் உருக்களெல்லாம் முற்றுப்பெற்று உருக்கபடுஞ் சாதிலிங்கம் உள்ளே நிரம்ப வழித்த பலகையையுடைய பாகர்,
தேர்த்தட்டு வெளிமறையப் பாவின பலகையைப் போர்வையென்றார். அதன் மேலே சுற்றுச்சுவராகப் பலகையாற்செய்த சுவரைப் பாகரென்றார். பாகரையுடைய தேரைப்பாகரென்றார்; ஆகுபெயரால்.
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு -ஏறிப்பார்த்து உண்மையாக ஓட்டமுண்டென்று பெயர்பெற்ற அழகினையுடைத்தாகிய நடையினையுடைய தேரோடே,
நேமியோடே(253) போர்வையையுடைய (256) பாகரெனமுடிக்க.
259 - 260. மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் வாள்முகம் பாண்டில் -தன் கடுமையாற் குதிரையின்செலவைப் பின்னேநிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும், ஒளியினையுடைத்தாகிய முகத்தினையுமுடைய நாரையெருத்தையும்,
வலவனொடு -அதனைச் செலுத்தும் பாகனொடு,
260 - 261. [தரீஇ, யன்றே விடுக்குமவன் பரிசில்;] பரிசில் தரீஇஅவன் அன்றே விடுக்கும் -யானை குதிரை அணிகலமுதலிய பரிசில்களையுந்தந்து அவன் அன்றேவிடுக்கும்;
நிதியத்தோடே (246) பாகரோடே (258) வலவனோடே பாண்டிலையும் (260) பரிசிலையுந் (261) தரீஇ (260) அவன் அன்றேவிடுக்குமெனமுடிக்க.
261 - 3. மென் தோள் துகில் அணி ........ துளங்கு, இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மெல் கூந்தலின் -மெல்லிய தோளினையும், துகில் சூழ்ந்த ....... அசைந்த இயல்பினையுமுடைய மகளிர் அகிற்புகையை உண்ணும்படியாக விரித்த அழகையுடைய மெல்லிய கூந்தல்போலே,
264 -5 [மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித், துணிமழை தவழ்ந் துயல்கழை நெடுங்கோட்டு;]
துணி மழை மணி மயில் கலாபம் இடை மஞ்சு பரப்பி தவழும் கோடு -தெளிந்தமேகம் நீலமணிபோலும் மயிலுனுடைய விரிந்த தோகைக்கு நடுவே தனது மஞ்சைப்பரப்பித் தவழுமலை,
சிறிதுநீர் உட்கொண்டு பக்கம் வெள்ளியமாசாயிருத்தலின், மேகம் மஞ்சைப் பரப்பியென்றார்.
இனி 'மணிமயில் கலாபம்' என்று பாடமாயின், மயில் தன்கலாபத்தை மஞ்சிடையிலே பரப்புதலைச்செய்து துயல்கோடென்க. துயலல் -ஆடுதல்.
துயல் கழை நெடு கோடு -அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையிடத்தையுடைய குறிஞ்சி (267)
266. [எறிந்துரு மிறந்த வேற்றருஞ்சென்னி;] ஏற்றரும் உரும் எறிந்து இறந்த சென்னி கோடு (265) -ஏறுதற்றொழில் அரிதாகிய உருமேறுதான் ஏறுதற்காக இடித்து வழியாக்கிப்போன சிகரத்தையுடையமலை,
இக்குதிரை ஏற்றரிதென்ப.
267. குறிஞ்சி கோமான் -குறிஞ்சியாகிய ஒழுக்கத்தையுடைய நிலத்திற்கரசன்,
267 -9. கொய் தளிர் கண்ணி செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை -கொய்யப்பட்ட தளிர்விரவின மாலையினையும், பிறரிடத்து நில்லாமற் போகின்றபுகழ் தன்னிடத்தே நிற்றற்குக் காரணமான குணத்தினையுமுடைய நல்லியக்கோடனை,
நயந்தனிர்செலின் -விரும்பிச்செல்லின்,
முதுவாயிரவல்(40) பெருமகன்(122) புரவலனாகிய(125) நல்லியக் கோடனை நயந்த கொள்கையோடே(126) முன்னாட் சென்றனமாக, இந்நாள் (129), அழிபசி வருத்தம்வீட(140) யானையோடே தேரெய்தி (142) யாம் அவணின்றும் வருகின்றேம் இனி நீயிரும்(143) மூவேந்தரிடத்துச் செல்குவிராயின்(145), வஞ்சியும் வறிது; அதுவன்றி (50) மதுரையும் வறிது; அதுவன்றி(67) உறந்தையும் வறிது; அதுவன்றி(83) எழுவர்பூண்ட ஈகைச் செந்நுகம் (113) ஒருதான்றாங்கிய (115) குறிஞ்சிக் கோமானாகிய (267) நல்லியகோடனை நயந்தனிர்செலின்(269), வழியிற் பெறுமவற்றை யாவ
கூறக்கேண்மின்; பட்டினம்படரின் (156) , வயின் வயிற்பெறுகுவிர் (169);
அதன்பின்னர் வேலுரெய்தின் (173) அமைவரப் பெறுகுவிர் (177); அதன்பின்னர் அவன் ஆமூரெய்திற் (188) கலவையொடுபெறுகுவிர் (195) அவற்றைப்பெற்றபின், அவன் மூதூர் (201) சேய்த்துமன்று; சிறிது நணியது வேயாயிருக்கும் (202); ஆண்டுச்சென்று முன்னர் அவன் கடைவாயிலைக்குறுகிப் (206) பின் அறிந்தோரேத்த (209) வயவரேத்த (212) அரிவையரேத்தப் (215) பரிசிலரேத்த (218) இருந்தோனையணுகிப் (220) பாடுதுறை முற்றுதற்கு (228) இன்னியத்தைப் (229) பண்ணிக் (230) கையினை யென்றும் (231) மார்பினையென்றும் (232) கோலினையென்றும் (293) வேலினையென்றும் (234) நீசிலமொழியா அளவை (235) அவன் நீவிரும்பவனபேணி (244) உடீஇ (236) நல்கி (267) அடிசிலைக் (241)
கலத்தேயிட்டுத் (244) தான் நின்று ஊட்டி (245) நிதியத்தோடே (249) பாகரோடே (258) வலவனோடே பாண்டிலையும் (260) பரிசிலையும் (261) தரீஇ (260) அவன் அன்றேவிடுக்கும் (261) என வினைமுடிவுசெய்க.
ஏறுமாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய
சிறுபாணாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கருத்துகள்
கருத்துரையிடுக