பட்டினப்பாலை - மூலமும் மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்


சங்க கால நூல்கள்

Back

பட்டினப்பாலை
மூலமும் மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்



"பட்டினப்பாலை - மூலமும்
மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்"

Source
"பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்:
பட்டினப்பாலை"

இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால்
பரிசோதிது, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்

சென்னை: கேசரி அச்சுக்கூடத்திற் பதிக்கப் பெற்றன
மூன்றாம் பதிப்பு, பிரஜோத்பத்தி வருடம், ஆவணி மாதம்
1931, விலை ரூபா 5. Copyrights reserved.
---------

முகவுரை.

சென்னை யூனிவர்ஸிடியாரால் 1906 -ம் வருட பி.ஏ.பட்டப்பரீக்ஷைக்குப் பாடமாக நியமிக்கப்பட்ட பட்டினப்பாலையையும், அதை அறிந்து கொள்ளுதற்கு இன்றியமையாத மதுரை ஆசிரியர் நச்சினார்க்கினியருரையையும் வெளிப்படுத்தத் தொடங்கி, மாணாக்கர்களுக்கு அவை விளங்கும் வண்ணம் நூதனமாக எளியநடையில் எழுதிய குறிப்புக்களை உரியவிடங்களிற் சேர்த்துப் பதிப்பிக்கலானேன்.

பட்டினப்பாலையென்பது கடைச்சங்கப்புலவர்களான நக்கீரனார் முதலியோரியற்றிய பத்துப்பாட்டினுள் ஒன்பதாவது; கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் இயற்றப் பெற்றது. வேற்றுநாட்டுக்குச்செல்லத்தொடங்கிய தலைவன், தனது நெஞ்சைநோக்கி, 'நெஞ்சே, காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும் யான் தலைவியைப்பிரிந்து நின்னுடன்வாரேன்' என்று கூறுதல் முகமாகக் காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் சோழன் கரிகாற்பெருவளத்தானது வீரச்செயல்களையும் அவனது செங்கோலையும் பேரழகுபயப்பச் சிறப்பித்துப் பாராட்டிக் கூறப்பெற்றது.

இதன்முதலில் உள்ள 218. அடிகளாற் காவிரிப்பூம்பட்டினத்தின் வளமும், 220 -வது முதலிய 79 -அடிகளாற் சோழன்கரிகாற் பெருவளத்தானுடைய பெருமையும், 300 -ம் அடியால், செல்லக்கருதிய காடுகள் அவனுடைய வேலினும் வெம்மையை -யுடையனவென்பதும், 301 -ம் அடியால் தலைவியின் தோள்கள் அவனுடைய செங்கோலினும் தண்மையுடையனவாதலால், இவள் வருதற்குரியனல்லனென்பதும், 219, 220 -ம் அடிகளால், நெஞ்சே, இவள் இங்கே தனித்திருப்ப யான் நின்னொடு வருதலைச் செய்யேனென்பதும் கூறப்பட்டுள்ளன.

ஆசிரியர் நச்சினார்க்கினியர், பதங்களை அந்வயித்து இப்பாட்டிற்குப் பொருளெழுதியது, தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 211 -ம் சூத்திரமாகிய மாட்டிலக்கணத்தை மேற்கோளாகக்கொண்டென்று உணர்க. மற்ற விசேடங்கள், அங்கங்குள்ள குறிப்புரையால் விளங்கும்.

இந்நூல், பலருரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது; சீவகசிந்தாமணி முதலிய பலநூலாசிரியர்கள் இதிலுள்ளவாக்கியங்களைத் தாமியற்றும் நூல்களுள் ஆங்காங்கு அமைத்து அழகுபடுத்தியிருக்கின்றனர்; "முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும், பொன்னேபோற் போற்றுவம்" என்பது விதியன்றோ; இதனை ஆண்டாண்டுள்ள குறிப்புரைகள் ஒருவாறு விளக்கும்.

இதிற் பண்டைக்காலச்செய்திகள் பல காணப்படும். இதிலுள்ள விஷயம் ஒவ்வொன்றும் யாவரும் எப்பொழுதும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனுபவமாக உள்ளதாதலின், இந்நூல் படிப்பவர்களுக்கு மிக்க இன்பத்தை விளைவிக்குமென்பது கூறாமலே விளங்கும்; செயற்கையழகிலும் இயற்கையழகு சிறந்ததென்பது எல்லாருக்கும் தெரிந்தவிஷயமே.

விளங்க எழுதவேண்டியவைகளைப் பலகாரணங்களால் நான் எழுதாதிருத்தல் கூடும்; கல்வியறிவு ஒழுக்கங்களிற்சிறந்து கலாசாலைகளில் தமிழ்ப் பண்டிதர்களாக வீற்றிருக்கும் விவேகிகள் அக்குற்றத்தைப் பொறுக்கும் வண்ணம் நிரம்பக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இங்ஙனம்,
வே.சாமிநாதன்.
---------------------

நூல்
- - - - - - -

நக்கீரனார்முதலிய சங்கப்புலவர்களியற்றிய பத்துப்பாட்டுக்கள் இன்னவை -யென்பதைப் பின்னுள்ள வெண்பாவாலுணர்க: -

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - -மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."

அவற்றுள்: -

1. -திருமுருகாற்றுப்படை: - 317 -அடிகளையுடையது; முருகக் கடவுள்மீது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; இதில் முருகக் கடவுளுடைய ஸ்தலங்களுட்சிறந்த திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி(பழனி), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை யென்னும் ஆறுபடைவீடுகளும், அவற்றில் அவர் எழுந்தருளியிருக்கும் விதமும் முறையே பாராட்டிக் கூறப்படும்.

2. -பொருநராற்றுப்படை: - 248 - அடிகளையுடையது; இளஞ்சேட்சென்னி புதல்வனாகிய சோழன்கரிகாற்பெருவளவனை முடத்தாமக் கண்ணியார் பாடியது; இதில் கரிகாற்பெருவளன் கொடையும் அவன் வீரமும் அவனாண்ட சோழநாட்டின் வளமும் காவிரிநதியின் சிறப்பும் நன்றாகக் கூறப்படும்.

3. -சிறுபாணாற்றுப்படை: - - 269 -அடிகளையுடையது; ஏறுமாநாட்டு நல்லியக்கோட னென்பவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது; இதில் நல்லியக்கோடனது வண்மையும் அவனுடைய நகரங்களாகிய எயிற்பட்டினம் வேலூர் ஆமூர் முதலியவற்றி னியல்பும், அவற்றிலிருந்த மாந்தர்களது நற்குண நற்செய்கைகளும் தமிழ்நாட்டு மூவேந்தர்களுடைய இராஜதானிகளாகிய மதுரை வஞ்சி உறையூ ரென்னு மூன்றுநகரங்களி னிலைமையும், பேகன் பாரி காரி ஆய் அதிகன் நள்ளி ஓரியென்னும் வள்ளல்களெழுவரும் இன்னஇன்ன கொடையாற் பெயர் பெற்றார்க ளென்பதும் கூறப்படும்.

4. -பெரும்பாணாற்றுப்படை: -500 - அடிகளையுடையது; காஞ்சி நகரத்திருந்த தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது; இதில் அவனது வண்மையும், தொண்டைநாட்டிலேயுள்ள குறிஞ்சிமுதலிய ஐந்திணைவளங்களும், அவற்றில்வாழும் மாந்தருடைய தொழில் ஊண் ஒப்புரவு முதலியனவும், காஞ்சிநகரத்தின் சிறப்பும், திருமாலின் நூற்றெட்டுத்திருப்பதிகளுள் ஒன்றாகிய திருவெஃகாவென்பதும் கூறப்பட்டுள்ளன.

5. -முல்லைப் பாட்டு: - இது 103 - அடிகளையுடையது; பகைமேற் சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்தவிடத்து அவன் வந்ததனைக்கண்டு தோழி முதலியோராகிய வாயில்கள் தம்முட்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது; இது தலைவனைப்பிரிந்து தனித்திருக்கும் தலைவியின் இயல்பையும் கார்காலத்தின் தன்மையையும் படைவீட்டிற் பகைவர் துயரத்தோடிருத்தலையும் தலைவனது சௌரியத்தையும் விளங்கக்கூறும்.

6. -மதுரைக்காஞ்சி: -782 அடிகளையுடையது; தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தம் நிலையாமையைச் செவியறிவுறுத்தி மாங்குடிமருதனார் பாடியது; இதில் பாண்டி நாட்டின் ஐந்திணைவளங்களும், மதுரையம்பதியினழகும், அப்பாண்டியனது வீரமுதலியனவும், சேரராஜனது *நாளோலக்கச் சிறப்பும், அக்காலத்திருந்த‌ பலசிற்றரசர்களுடைய பெருமையும், அருச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்த பகவத்கீதையின் மேம்பாடும் இன்னும் பலவும் கூறப்பட்டுள்ளன.

7. -நெடுநல்வாடை: -188 - அடிகளையுடையது; பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரனார் பாடியது; இதில், ஐப்பசி கார்த்திகை மாதங்களாகிய‌ கூதிர் காலத்தினியல்பும் தனித்திருந்த தலைவியது வருத்தமிகுதியும் படை வீட்டில் தலைவனிருக்கும் வண்ணமும் விளங்கக் கூறப்பட்டுள்ளன.

8. -குறிஞ்சிப்பாட்டு: - 261 அடிகளையுடையது; ஆரியவரசன் பிர‌கத்தனைத் தமிழறிவுறுத்தற்குக் கபிலர் பாடியது;இதில் மலைவ்ளங்களும், இல்லறமுறையும், தலைவனும் தலைவியும் தம்முள்வைக்கத் தருமன்புடைமையும், கற்பின் இன்றியமையாமையும், பல மலர்விசேடங்களும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. இது பெருங்குறிஞ்சியென்றும் பெயர்பெறும்.

9. -பட்டினப்பாலை: -301 - அடிகளையுடையது; இந்நூல், வஞ்சிப்பா என்பதும் பெரும்பாலும் ஆசிரியவடிகளும் சிறுபான்மை வெள்ளடியும் கலியடியும் இதில்வந்துள்ளன என்பதும் ஒருசார் பழையவுரையாசிரியர்களுடைய கொள்கை; இதனை, பின்வருவனவற்றாலுணர்க. 'பட்டினப்பாலையென்னும் வஞ்சிநெடும்பாட்டினுள், (22) "நேரிழை மகளி ருணங்குணாக்கவரும்" என்றித்தொடக்கத்தன ஆசிரியவடி; (64 -65) "வயலாமைப் புழுக்குண்டும், வறளடம்பின் மலர்மலைந்தும்" என்பது கலியடி; இதனை, "வயலாமைப் புழுக்குண்டும், வறளடம்பின் மலர்மலைந்தும், கயனாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் கலந்தனரே" என உச்சரித்துக் கலியடியாமாறு கண்டுகொள்க. (23) "கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை" என்பது வெள்ளடி; இதனை, "கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை,யாழி சூழ் வையக் கணி" என உச்சரித்து, 'வெள்ளடியாமாறு கண்டுகொள்க' என்பது, யாப்பருங்கலம், அடியோத்து,*9 -ம் சூத்திரவிருத்தியுரை; இதனை, யாப்பருங்கலக்காரிகை, ஒழிபியல், 4 -ம் கலித்துறையின் விசேடவுரையாலும் உணர்க; இதன் மற்றவரலாற்றை முகவுரையிற் காண்க.

10. -மலைபடுகடாம்: 583 - அடிகளையுடையது; பல்குன்றக் கோட்டத்துச் *செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பாடியது; இதில் அவனூர்க்குச் செல்லும் வழியினியல்பும், அவ்வவ்விடத்துக்கிடைக்கும் உணவின் வகைகளும் அவனது மலை சோலை காடுகளின் வளங்களும், அவனது வள்ளன்மையும், ஆற்றலும், அவனது சுற்றத்தினொழுக்கங்களும், அவனது நாளோலக்கச் சிறப்பும், அவனது நவிர மென்னும் மலையில் காரியுண்டிக்கடவு ளென்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது மகிமையும், அவனுடைய முன்னோர்களின் பெருமையும், அவனூரினியல்பும், அவனது சேயாறென்னும் ஆறுமுதலியவற்றின் வளங்களும் விளங்கக் கூறப்பட்டுள்ளன. இது கூத்தராற்றுப்படை யெனவும் பெயர்பெறும்.
____________

நூலாசிரியர்.

இந் நூலாசிரியராகிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரென்பவர், கடைச் சங்கப்புலவர்களுள் ஒருவர். இவருடைய ஊராகிய கடியலூரென்பது இன்ன நாட்டிலுள்ளதென்று தெரியவில்லை.

இவருடைய தந்தையார்: ஐயம்தீர்தற்பொருட்டுத் தந்தையின் பெயரைப் புதல்வனுடையபெயர்க்கு விசேடணமாக்கிவழங்குதல் மரபாக இருந்தலாலும், உருத்திரங்கண்ணனாரென்னும் பெயர்த்தொகையை உருத்திரனாருடைய புதல்வராகிய கண்ணனாரென விரித்தற்கு இடமுண்டாதலாலும் ‘உருத்திரனார்’ என்பவர், இவருடைய தந்தையாராகக் கருதப்படுகிறார்; உருத்திரனாரென்னும் பெயரொன்று, குறுந்தொகையில், “புறவுப்புறத்தன்ன” என்னும் 274 -ம் செய்யுளியற்றியவர் பெயராகக் காணப்படுகின்றது.

இவர் சாதி: தொல்காப்பியம், மரபியலில், “ஊரும் பெயரும்” என்னும் 74 - ம் சூத்திரத்தின் விசேடவுரையில், ‘உறையூர் ஏணிச்சேரிமுடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன’ என்பது வரையப்பெற்றிருத்தலால், இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்.

இவரது சமயம்: பெரும்பாணாற்றுப்படையில், [அடிகள், 372 -373] “காந்தனஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப், பாம்பணைப் பள்ளி யமர்ந்தோனாங்கண்” எனக் காஞ்சிநகரத்துள்ள விஷ்ணுஸ்தலங்களுள் ஒன்றாகிய திருவெஃகாவென்னுந் திருப்பதியையும் அதிற் பள்ளிகொண்டருளிய திருமாலையும் பாராட்டிக் கூறியிருத்தலின், இவர் வைஷ்ணவசமயத்தில் அதிகப் பற்றுடையவரென்று சொல்லுவதற்கு இடமுண்டு.

இவரியற்றியவை: பத்துப்பாட்டினுள், 4 -வதாகிய பெரும்பாணாற்றுப்படையும், 9 -வதாகிய இந்நூலும், எட்டுத்தொகையுட் குறுந்தொகைக் கண்ணதாகிய, "நெடுநீராம்பல்" என்னும் 352 -ம் செய்யுளும், அகநானூற்றின் கண்ணதாகிய, "வயங்குமணிபொருத" என்னும் 166 -ம் செய்யுளுமாகிய‌ இவைகள் இவரால் இயற்றப்பெற்றவையென்று இப்பொழுது தெரிகின்றது.

இவரை ஆதரித்தபிரபுக்கள்: பெரும்பாணாற்றுப்படைத் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையனும், இந்நூற்றலைவனாகிய சோழன் கரிகாற் பெருவளத்தானும் இவரை ஆதரித்ததலைவர்கள்.

இவர் பெற்ற பரிசில்: சோழன் கரிகாற்பெருவளத்தான் இந்நூலைக் கேட்டுமகிழ்ந்து பதினாறுநூறாயிரம்பொன் இவர்க்குப் பரிசளித்தானென்று தெரிகின்றது. இதனை, கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், 22: "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தொ டாறுநூ றாயிரம்பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்டதும்" என்பதனாலுணர்க.

இவரது காலம்: கடைச்சங்கப்புலவர்களுடையகாலம், இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்டதென்று இங்கிலீஷ்பாஷையிலும் தமிழ்ப்பாஷையிலும் பயிற்சியுள்ள பலபுலவர்கள் நுணுகி ஆராய்ந்து தக்க‌ ஆதாரங்கள்காட்டியெழுதி மேன்மேலும் வெளிப்படுத்திவருதல் இக்காலத்தில் யாவருக்கும் தெரிந்ததாதலின், கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய‌ இவர்காலமும் அதுவேயென்பது கூறாமலேவிளங்கும்.
_______________

இந்நூல் உரையாசிரியராகிய‌ நச்சினார்க்கினியர் வரலாறு.

விருத்தம்.

    எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
    எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன்
    எவன்பரம வுபகாரி யெவனச்சி னார்க்கினிய னெனும்பே ராளன்
    அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ.

இந்நூலின் உரையாசிரியராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், பாண்டி வளநாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணகுலத்திற் பாரத்துவாசகோத்திரத்திற் பிறந்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ள பல்வகையான எல்லாநூல்களிலும் அதிபாண்டித்திய -முடையவர். இவரது சமயம் சைவமே. இவர் இன்ன‌ராதல், "வண்டிமிர் சோலை மதுரா புரிதனி லெண்டிசை விளங்க வந்த‌வாசான், பயின்ற கேள்விப் பாரத் துவாச, னான்மறை துணிந்த நற்பொருளாகிய, தூய ஞான நிறைந்த சிவச்சுடர், தானே யாகிய தன்மை யாளன்" என்னும் உரைச்சிறப்புப்பாயிரத்தால் விளங்கும். சிவஸ்தலங்களுட்சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய 'திருச்சிற்றம்பலம்,’ ’பெரும்பற்றப்புலியூர்' என்பவற்றை முறையே ஆறெழுத்தொருமொழிக்கும் ஏழெழுத்தொருமொழிக்கும் உதாரணமாக இவர், தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில், "ஓரெழுத்தொருமொழி" என்னுஞ் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவசமயத்துச் சிறந்தநூல்களாகிய திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் என்பவற்றினின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய விலக்கணப் பொருள்களுக்கன்றித் தத்துவப்பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டியிருத்தலாலும், அங்ஙனம் மேற்கோள்கொண்ட சில விடங்களில் எழுதியுள்ள விசேடவுரைகளாலும், நாமகளிலம்பகத்து 'மேகம் மீன்ற' என்னும் 333 -ம் செய்யுளில், 'போகம்மீன்ற புண்ணியன்' என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாற்றுப்படை யுரையிற் காட்டிய சில நயங்களாலும், உரைச்சிறப்புப்பாயிரத்தில், "தூய ஞானநிறைந்த சிவச்சுடர், தானே யாகிய தன்மை யாளன் " எனக்கூறப்பெற்றதனாலும், மற்றுஞ் செலவற்றாலும், இவர் சைவசமயியாதல் நன்குவெளியாகும்.

இவ்வுரையாசிரியர், பத்துப்பாட்டினுள் இந்நூலுக்கன்றி மற்ற நூல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும் குறுந்தொகையில் பேராசிரியர் பொருளெழுதாதொழிந்த இருபது செய்யுட்களுக்கும் உரைசெய்தருளினர். இன்னும் சிலநூல்களுக்கு இவர் உரையியற்றினரென்பர்; அவை இவையென்று புலப்படவில்லை. இக்காலத்து வழங்கும் திருக்கோவையாருரை பேராசிரியராற் செய்யப்பட்டதென்று தெரிகின்றமையாலும், இவர் அந்நூற்குச்செய்த வேறுரை கிடையாமையாலும் அதற்கும் திருக்குறள் முதலிய மற்றுஞ்சிலவற்றிற்கும் இவர் உரைசெய்திருப்பதாக இவருடைய உரைச்சிறப்புப்பாயிரத்திலேனும் வேறொன்றிலேனும் கூறப்படாமையாலும், அவைகள் இங்கே எழுதப்பட்டில.

சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் முதன்முறை ஓருரையெழுதி, அக்காலத்துப் பிரசித்திபெற்றிருந்த சைனவித்துவான்கள் சிலருக்குக்காட்ட, அவர்கள் அவ்வுரையை அங்கீகரியாமை கண்டு, பின்பு ஆருகதநூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டாமுறை ஓர்உரையை யெழுதி அவர்களுக்குக் காட்டவே, அவர்கள் உற்றுநோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக்கொண்டார்களென்று சைனர் கூறுகின்றனர்.

நாமகளிலம்பகத்தில் "கண்ணுளார் நுங்காதலர்" என்னும் 43 -ம் செய்யுளுரையில் 'ஈங்குத் தன்மையையுணர்த்துதல், "செலவினும் வரவினும்" என்னுஞ் சூத்திரத்திற் கூறினாம்' என்றும் , குணமாலையாரிலம்பகத்தில் "மங்கை நல்லவர்" என்னுஞ் செய்யுளுரையில் 'ஆசிரியர் "நண்டுந் தும்பியும்" என்று தும்பியைப்பின்வைத்தது. மேல்வருஞ் சூத்திரத்தில், "மாவு மாக்களுமையறி வென்ப" என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கின்றுணர்க; இதனை வாராததனால் வந்ததுமுடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரை கூறிப்போந்தாம்' என்றும் நச்சினார்க்கினியர் எழுதியிருத்தலால், இவர் தொல்காப்பியத்திற்கு உரையெழுதினபின்பு சீவகசிந்தாமணிக்கு உரையெழுதினரென்று விளங்குகின்றது.

தொல்காப்பியவுரை முதலியவற்றில் இவரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோள்களமைந்த நூல்களுள் இதுகாறும் விளங்கியவை வருமாறு: -
    1. அகத்தியம். 36. தொல்காப்பியம்.
    2. அகநானூறு. 37. நற்றிணைநானூறு.
    3. அணியியல். 38. நாடகநூல்.
    4. அவிநயம். 39. நாலடியார்.
    5. ஆசாரக்கோவை. 40. நெடுநல்வாடை.
    6. இராமாயண வெண்பா. 41. பட்டினப்பாலை.
    7. இறையனாரகப்பொருள். 42. பதிற்றுப்பத்து.
    8. ஏலாதி. 43. பரிபாடல்.
    9. ஐங்குறுநூறு. 44. பல்காப்பியம்.
    10. ஐந்திணையெழுபது. 45. பல்காயம்.
    11. ஐத்திணையைம்பது. 46. பழமொழி.
    12. கடகண்டு. 47. பன்னிருபடலம்.
    13. கலித்தொகை. 48. பாரதவெண்பா.
    14. களவழிநாற்பது. 49. புறநானூறு.
    15. காக்கைபாடினியம். 50. புறப்பொருள்வெண்பாமாலை.
    16. குணநாற்பது. 51. பூதபுராணம்.
    17. குறிஞ்சிப்பாட்டு. 52. பெருங்கதை.
    18. குறுந்தொகை. 53. பெரும்பாணாற்றுப்படை.
    19. கூத்தநூல். 54. பெரும்பொருள்விளக்கம்.
    20. கைந்நிலை. 55. பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி.
    21. கொன்றைவேந்தன். 56. பொருநராற்றுப்படை.
    22. சிலப்பதிகாரம். 57. மணிமேகலை.
    23. சிறுகாக்கைபாடினியம். 58. மதுரைக்காஞ்சி.
    24. சிறுபஞ்சமூலம். 59. மலைபடுகடாம்.
    25. சிறுபாணாற்றுப்படை. 60. மாபுராணம்.
    26. 61. முத்தொள்ளாயிரம்.
    27. 62. முதுமொழிக்காஞ்சி.
    28. தகடூர்யாத்திரை. 63. முல்லைப்பாட்டு.
    29. திணைமாலைநூற்றைம்பது. 64. மோதிரப்பாட்டு.
    30. திணைமொழியைம்பது. 65. யாழ்நூல்.
    31. திரிகடுகம். 66. வசைக்கடம்.
    32. திருக்குறள். 67. வஞ்சிப்பா.
    33. திருக்கோவையார். 68. வளையாபதி.
    34. திருமுருகாற்றுப்படை. 69. விளக்கத்தார்கூத்து.
    35. திருவாசகம்.

தொல்காப்பியவுரைமுதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் பல உரைகளிலிருந்தும் பற்பல அரியவிஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குவிளக்கிப்போகின்றமையின், இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவராகச் சொல்லுதற் கிடமுண்டு.

உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக்கூறப்பட்டிருத்தலின், அவர்களுக்கு இவர் காலத்தினாற்பிற்பட்டவரென்று தெரிகின்றது.

அமிழ்தினுமினிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்தருளிய இம்மகோபதாரியின் அருமைபெருமைகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டன.

இவருடைய மேம்பாட்டைப்பாராட்டி அக்காலத்து ஆன்றோராற் செய்யப்பட்ட உரைச் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் வருமாறு: -

    வெண்பா.

    பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட டுங்கலியு
    மாரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்குங் - சாரத்
    திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
    விருத்திநச்சி னார்க்கினிய மே.

    தொல்காப் பியத்திற் றொகுத்த பொருளனைத்து
    மெல்லார்க்கு மொப்ப வினிதுரைத்தான் - சொல்லார்
    மதுரைநசசி னார்க்கினியன் மாமறையோன் கல்விக்
    கதிரின் சுடரெறிப்பக் கண்டு.

    ஆசிரியப்பா.

    பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
    நூற்படு வான்பொரு ணுண்ணுதி னுணர்ந்த
    போக்கறு கேள்விப் புலவோர் புலத்தி
    னாற்பொருள் பொதிந்த தூக்கமை யாப்பினைத்
    தேக்கிய சிந்தைய னாகிப் பாற்பட
    வெழுத்துஞ் சொல்லும் பொருளுமிம் மூன்று
    மிழுக்கற வாய்ந்த வழுக்கிறொல் சீர்த்தித்
    தொல்காப் பியமெனுந் தொடுகடற் பரப்பை
    மறுவுங் குறைவு மின்றி யென்றுங்
    கலையி னிறைந்த கதிர்மதி யென்ன
    நிலையுடை கலத்தி னெடுங்கரை காணாக்
    கல்லா மாந்தர் கற்பது வேண்டியு
    நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியு
    முரையிடை யிட்ட காண்டிகை யுரைத்து
    மான்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து
    சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரிய
    லொருபது பாட்டு முணர்பவர்க் கெல்லா
    முரையற முழுதும் புரைபட வுரைத்து
    மொலித்திரைத் தலத்தி னுணர்ந்தோ ருரைக்குங்
    கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற்
    குள்ளுறை யுவமமு மேனை யுவமமுந்
    தெள்ளிதிற் றெரிந்து திணைப்பொருட் கேற்ப
    வுள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக்
    கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந் துணர்த்தி
    யிறைச்சிப் பொருளுக் கெய்தும் வகையைத்
    திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇத்
    துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி
    முறைப்பட வினையை முடித்துக் காட்டிப்
    பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப்
    பாற்பட நூலின் யாப்புற வுரைத்த
    நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப்
    போற்ற வின்னுரை பொருள்பெற விளம்பியும்
    வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
    பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
    சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம்
    வந்தா தரிப்ப வண்பெரு வஞ்சிப்
    பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
    திருத்தகு முனிவன் கருத்திது வென்னப்
    பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து
    வினையொடு முடியப் புனையுரை யுரைத்து
    நல்லறி வுடைய தொல்பே ராசான்
    கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
    பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
    கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
    விதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்துந்
    தண்டமிழ் தெரிந்த வண்புகழ் மறையோன்
    வண்டிமிர் சோலை மதுரா புரிதனி
    லெண்டிசை விளங்க வந்த வாசான்
    பயின்ற கேள்விப் பாரத் துவாச‌
    னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய‌
    தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
    தானே யாகிய தன்மை யாள‌
    னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய‌
    னிருவினை கடியு மருவியம் பொதியின்
    மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க‌
    வூழி யூழி காலம்
    வாழி வாழியிம் மண்மிசை தானே.

    விருத்தம்.

    பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற‌
    வெச்சினாற் றிசையு முண்ணு மமிழ்தென வெழுநா வெச்சின்
    மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத‌
    னச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்.
    --------


கணபதி துணை.

பத்துப்பாட்டு : 9. -பட்டினப்பாலை.

நச்சினார்க்கினியருரை.

    வசையில்புகழ் வயங்குவெண்மீன்
    றிசைதிரிந்து தெற்கேகினுந்
    தற்பாடிய தளியுணவிற்
    புட்டேம்பப் புயன்மாறி
    வான்பொய்ப்பினுந் தான்பொய்யா           5
    மலைத்தலைய கடற்காவிரி
    புனல்பரந்து பொன்கொழிக்கும்
    விளைவறா வியன்கழனிக்
    கார்க்கரும்பின் கமழாலைத்
    தீத்தெறுவிற் கவின்வாடி           10
    நீர்ச்செறுவி னீணெய்தற்
    பூச்சாம்பும் புலத்தாங்கட்
    காய்ச்செந்நெற் கதிரருந்து
    மோட்டெருமை முழுக்குழவி
    கூட்டுநிழற் றுயில்வதியுங்           15
    கோட்டெங்கிற் குலைவாழைக்
    காய்க்கமுகிற் கமழ்மஞ்ச
    ளினமாவி னிணர்ப்பெண்ணை
    முதற்சேம்பின் முளையிஞ்சி
    யக‌னகர் வியன்முற்றத்துச்           20
    சுடர்நுதன் மடநோக்கி
    னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
    கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
    பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
    முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்           25
    விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
    கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
    குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
    வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
    நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி           30
    பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங்
    கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
    பொழிற்புறவிற் பூந்தண்டலை
    மழைநீங்கிய மாவிசும்பின்
    மதிசேர்ந்த மகவெண்மீ           35
    னுருகெழுதிற லுயர்கோட்டத்து
    முருகமர்பூ முரண்கிடக்கை
    வரியணிசுடர் வான்பொய்கை
    யிருகாமத் திணையேரிப்
    புலிப்பொறிப் போர்க்கதவிற்           40
    றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
    புகழ்நிலைஇய மொழிவளர
    வறநிலைஇய வகனட்டிற்
    சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
    யாறுபோலப் பரந்தொழுகி           45
    யேறுபொரச் சேறாகித்
    தேரோடத் துகள்கெழுமி
    நீறாடிய களிறுபோல
    வேறுபட்ட வினையோவத்து
    வெண்கோயின் மாசூட்டுந்           50
    தண்கேணித் தகைமுற்றத்துப்
    பகட்டெருத்தின் பலசாலைத்
    தவப்பள்ளித் தாழ்காவி
    னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
    மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்           55
    மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
    பூதங் காக்கும் புகலருங் கடி நகர்த்
    தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
    முதுமரத்த முரண்களரி
    வரிமண லகன்றிட்டை           60
    யிருங்கிளை யினனொக்கற்
    கருந்தொழிற் கலிமாக்கள்
    கடலிறவின் சூடுதின்றும்
    வயலாமைப் புழுக்குண்டும்
    வறளடம்பின் மலர்மலைந்தும்           65
    புனலாம்பற் பூச்சூடியு
    நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
    நாண்மீன் விராய கோண்மீன் போல
    மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
    கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்           70
    பெருங்சினத்தாற் புறக்கொடாஅ
    திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர்
    கல்லெறியுங் கவண்வெரீஇப்
    புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
    பறழ்ப்பன்றிப் பல‌கோழி           75
    யுறைக்கிணற்றுப் புறச்சேரி
    மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
    கிடுகுநிரைத் தெஃகூன்றி
    நடுகல்லி ன‌ரண்போல
    நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய           80
    குறுங்கூரைக் குடிநாப்ப
    ணிலவடைந்த விருள்போல
    வலையுணங்கு மணன்முன்றில்
    வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
    வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்           85
    சினைச்சுறவின் கோடுநட்டு
    மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
    மடற்றாழை மலர்மலைந்தும்
    பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
    புன்றலை யிரும்பரதவர்           90
    பைந்தழைமா மகளிரொடு
    பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
    துவவுமடிந் துண்டாடியும்
    புலவுமணற் பூங்கானன்
    மாமலை யணைந்த கொண்மூப் போலவுந்           95
    தாய்முலை தழுவிய குழவி போலவுந்
    தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கு
    மலியோத‌த் தொலிகூடற்
    றீதுநீங்கக் கடலாடியு
    மாசுபோகப் புனல்படிந்து           100
    ம‌லவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும்
    பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
    ம‌கலாக் காதலொடு பகல்விளை யாடிப்
    பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
    பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்           105
    துணைப்புணர்ந்த மடமங்கையர்
    பட்டுநீக்கித் துகிலுடுத்து
    மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
    மைந்தர் கண்ணி மகளிர் சூடவு
    மகளிர் கோதை மைந்தர் மலையவு           110
    நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
    கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
    பாட லோர்த்து நாடக நயந்தும்
    வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
    கண்ணடைஇய கடைக்கங்குலான்           115
    மாஅகாவிரி மணங்கூட்டுந்
    தூஉவெக்கர்த் துயின்மடிந்து
    வாலிணர் மடற்றாழை
    வேலாழி வியன்றெருவி
    ன‌ல்லிறைவன் பொருள்காக்குந்           120
    தொல்லிசைத் தொழின்மாக்கள்
    காய்சினத்த கதிர்ச்செல்வன்
    றேர்பூண்ட மாபோல
    வைகறொறு ம‌சைவின்றி
    யுல்குசெயக் குறைபடாது           125
    வான்முகந்தநீர் மலைப்பொழியவு
    மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
    மாரி பெய்யும் பருவம் போல
    நீரினின்று நிலத்தேற்றவு
    நிலத்தினின்று நீர்ப்பரப்பவு           130
    ம‌ளந்தறியாப் பலபண்டம்
    வரம்பறியாமை வந்தீண்டி
    ய‌ருங்கடிப் பெருங்காப்பின்
    வலியுடை வல்லணங்கினோன்
    புலிபொறித்துப் புறம்போக்கி           135
    மதிநிறைந்த மலிபண்டம்
    பொதிமூடைப் போரேறி
    மழையாடு சி*மய மால்வரைக் கவாஅன்
    வரையாடு வருடைத் தோற்றம் போலக்
    கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை           140
    யேழகத் தகரோ டுகளு முன்றிற்
    குறுந்தொடை நெடும்படிக்காற்
    கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
    புழைவாயிற் போகிடைகழி
    மழைதோயு முயர்மாடத்துச்           145
    சேவடிச் செறிகுறங்கிற்
    பாசிழைப் பகட்டல்குற்
    றூசுடைத் துகிர்மேனி
    மயிலியன் மானோக்கிற்
    கிளிமழலை மென்சாயலோர்           150
    வளிநுழையும் வாய்பொருந்தி
    யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
    காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
    செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
    வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்           155
    குழலகவ யாழ்முரல
    முழவதிர முரசியம்ப
    விழவறா வியலாவணத்து
    மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய
    மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்           160
    வருபுன ற‌ந்த வெண்மணற் கான்யாற்
    றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
    கூழுடைக் கொழுமஞ்சிகைத்
    தாழுடைத் தண்பணியத்து
    வாலரிசிப் பலிசிதறிப்           165
    பாகுகுத்த பசுமெழுக்கிற்
    காழூன்றிய கவிகிடுகின்
    மேலூன்றிய துகிற்கொடியும்
    பல்கேள்வித் துறைபோகிய
    தொல்லாணை நல்லாசிரிய           170
    ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்
    வெளிலிளக்குங் களிறுபோலத்
    தீம்புகார்த் திரைமுன்றுறைத்
    தூங்குநாவாய் துவன்றிருக்கை
    மிசைச்கூம்பி னசைக்கொடியும்           175
    மீன்ற‌டிந்து விடக்கறுத்
    தூன்பொரிக்கு மொலிமுன்றின்
    மணற்குவைஇ மலர்சிதறிப்
    பலர்புகுமனைப் பலிப்புதவி
    ன‌றவுநொடைக் கொடியோடு           180
    பிறபிறவு நனிவிரைஇப்
    பல்வே றுருவிற் பதாகை நீழற்
    செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்
    செல்லா நல்லிசை ய‌மரர் காப்பி
    னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங்           185
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
    குடமலைப் பிறந்த வாரமு ம‌கிலுந்
    தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
    கங்கை வாரியுங் காவிரிப் பயுனு           190
    மீழத் துணவுங் காழகத் தாக்கமு
    ம‌ரியவும் பெரியவு* நெளிய வீண்டி
    - - - - - - -
    * நெரியலீண்டியென்றும் பாடம்

    வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
    னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
    மேமாப்ப வினிதுதுஞ்சிக்           195
    கிளைகலித்துப் பகைபேணாது
    வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
    விலைஞர்குரம்பை மாவீண்டவுங்
    கொலைகடிந்துங் களவுநீக்கியு
    ம‌மரர்ப் பேணியு மாவுதி ய‌ருத்தியு           200
    நல்லானொடு பகடோம்பியு
    நான்மறையோர் புகழ்பரப்பியும்
    பண்ணிய ம‌ட்டியும் பசும்பதங் கொடுத்தும்
    புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
    கொடுமேழி நசையுழவர்           205
    நெடுநுகத்துப் பகல்போல
    நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
    வடுவஞ்சி வாய்மொழிந்து
    தமவும் பிறவு மொப்ப நாடிக்
    கொள்வதூஉ மிகைகொளாது
    கொடுப்பதூஉங் குறைப‌டாது           210
    பல்பண்டம் பகர்ந்துவீசுந்
    தொல்கொண்டித் துவன்றிருக்கைப*
    பல்லாயமொடு பதிபழகி
    வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
    சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு           215
    மொழிபல பெருகிய பழிதீர் தேஎததுப்
    புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
    முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
    வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
    வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்           220
    கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்குப்
    பிறர், பிணியகத* திருந்து பீடுகாழ் முற்றி
    ய‌ருங்கரை கவியக் குத*திக் குழிகொன்று
    பெருங்கை யானை பிடிபுக் காங்கு
    நுண்ணிதி னுணர நாடி நண்ணார்           225
    செறிவுடைத் திண்காப* பேறி வாள்கழித்
    துருகெழு தாய மூழி னெய்திப்
    பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
    கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
    முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா           230
    ளுகிருடை யடிய வோங்கெழில் யானை
    வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
    பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
    தூறிவர் துறுகற் போலப்போர் வேட்டு
    வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப்           235
    பேய்க்க ண‌ன்ன பிளிறுகடி முரச
    மாக்க ண‌கலறை ய‌திர்வன முழங்க
    முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
    தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
    வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி           240
    மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
    கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
    கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
    செறுவும் வாவிய மயங்கி நீரற்
    ற‌றுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங்           245
    கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
    ய‌ந்தி மாட்டிய நந்தா விளக்கின்
    மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
    வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
    பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப்           250
    பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
    ம‌ருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
    முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
    திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்
    பெருவிழாக் கழிந்த பேமுதிர் மன்றத்துச்           255
    சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
    ய‌ழல்வா யோரி ய‌ஞ்சுவரக் கதிர்ப்பவு
    ம‌ழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
    கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
    பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங்           260
    கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
    விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
    லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
    பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
    தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக்           265
    கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
    வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
    வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
    ம‌ருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
    பெரும்பாழ் செய்து ம‌மையான் மருங்கற           270
    மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
    வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
    தான்முன்னிய துறைபோகலிற்
    பல்லொளியர் பணிபொடுங்கத்
    தொல்லருவாளர் தொழில்கேட்ப           275
    வடவர் வாடக் குடவர் கூம்பத்
    தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
    மன்னெயில் கதுவு மதனுடை நோன்றான்
    மாத்தனை மறமொய்ம்பிற்
    செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்           280
    புன்பொதுவர் வழிபொன்ற
    விருங்கோவேண் மருங்குசாயக்
    காடுகொன்று நாடாக்கிக்
    குளந்தொட்டு வளம்பெருக்கிப்
    பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்           285
    கோயிலொடு குடிநிறீஇ
    வாயிலொடு* புழையமைத்து
    ஞாயிறொறும் புதைநிறீஇப்
    பொருவேமெனப் பெயர்கொடுத்
    தொருவேமென‌ப் புறக்கொடாது           290
    திருநிலைஇய பெருமன்னெயின்
    மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
    - - - - - - -
    * வழியமைத்தென்றும் பாடம்.

    விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
    பசுமணி பொருத பரேரெறுழ‌க் *கழற்காற்
    பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு           295
    முற்றிழை மகளிர் முகிழ்....... திளைப்பவுஞ்
    செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ
    ண‌ரிமா வ‌ன்ன வ‌ணங்குடைத் துப்பிற்
    றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
    வேலினும் வெய்ய கானமவன்           300
    கோலினுந் தண்ணிய தடமென் றோளே.
    -----------



இதன் பொருள்

இந்நூல், பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப் பட்டினப்பாலையென்று பெயர் கூறினார். பாலையாவது பிரிதலும் பிரிதனிமித்தமும் கூறுவது. இப்பாட்டு, வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக்கூறியது. இது, முதலுங் கருவுங்கூறாது உரிப்பொருளே சிறப்பக் கூறியது.

(குறிப்பு.) பட்டினம் - காவிரிப்பூம் பட்டினம்: இது பண்டைக்காலத்திற் சோழர்களுடைய இராசதானியாக இருந்தது; காவிரிநதி கட‌லொடுகலக்குமிடத்து உள்ளநகரமாதலின், இஃது இப்பெயர் பெற்றது. பட்டினம் - கடற்கரையிலுள்ளவூர். யாதோரடைமொழியுமின்றிப் பட்டின‌மென்றே இந்நகரம் அக்காலத்து வழங்கப்பெற்றுவந்தது; இதனை, "ஓங்குதன முடையானோர் வணிகன் வையத் துயர்புளதோர் பட்டினத்து முன்னோர் நாளி, னீங்கரிய சுற்றமுட னிருப்ப" (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், 62 -ம் திருவிளையாடல், 1) என்பதனாலுமுணர்க. பாலைத்திணை - பாலையாகிய ஒழுக்கம். பாலையென்ற சொல்லுக்குப்பொருள், பிரிதலும், பிரிதனிமித்தமுமென்பர். பிரிதல் - தலைவியைத் தலைவன் பிரிதல்; நிமித்தம் - காரணம். இப்பாட்டு - 'வசையில்புகழ்' என்னும் இச்செய்யுள். வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்து - வேறுதேயஞ்செல்லுதற்குத் தலை
வியைப்பிரியுங்காலத்துத் தானடையும் துன்பத்தில்; விழுமம் - துன்பம்;செலவு அழுங்கி – செல்லுதல் தவிர்த்து. 'வேற்றுநாட்டகல்வயின்' என்பது, தொல்காப்பியம், கற்பியல். 5 -ம் சூத்திரத்திலுள்ளபகுதி. ஷெ சூத்திரம், தலைவனுடையசொற்கள் இன்னஇன்ன இடத்துநிகழுமென்பதைத் தெரிவிக்கவந்தது. முதலும் கருவும் கூறாது - பாலைத்திணைக்குரிய *முதற்பொருளையும் கருப்பொருளையும் சொல்லாமல். ஒவ்வொருதிணைக்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருளெனப் பொருள்கள் மூவகைப்படும்.

முதற்பொருள்களாவன: - - நிலமும், பொழுதும், கருப்பொருள்களாவன: - - தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, பறை, செய்தி, யாழ் முதலியன. உரிப்பொருள்களாவன: - -புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலென்பன. இவற்றுள் பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாவது பிரிதல். இவற்றைத் தொல்காப்பியம் அகத்திணையியல் முதலியவற்றால் விளங்க உணர்க. தலைவியைப்பிரியக்கருதியதலைவன், தனதுநெஞ்சைநோக்கி, 'நெஞ்சே! தலைவியை உடன்கொண்டுசெல்வோமெனின், வழியிலுள்ளகாடுகள் சோழன் கரிகாற்பெருவளத்தானுடைய வேலினும் வெம்மையை உடையனவாக இராநின்றன. ; இவளுடையமேனி அவனுடைய செங்கோலினும் தண்மையையுடையதாக இராநின்றது. ஆதலால் காவிரிப்பூம்பட்டினங்கிடைக்குமாயினும் இவளைப்பிரிந்து நின்னுடன்வாரேன்' என்று கூறுதன்முகமாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும் அதனையாண்ட கரிகாற்பெருவளத்தானுடைய வேற்படையையும் அவன் செங்கோலையும்சிறப்பித்துப் பாராட்டிச் செய்யப் பெற்றது இப்பாட்டெனக் கொள்க.

1 வசை இல் புகழ் - குற்றங்கூறுதலில்லாத புகழையுடைய, காவிரி(6) யென்க.

(கு -பு) காவிரிநதி மிக்க புகழுடையதென்பதை, புறநானூறு;
43 -"மிக்கு வருநீ்ர்க் காவிரி", 58 -"தண்புனற்காவிரி"
98 - "புனிறுதீர்குழவிக் கிலிற்று.......போலச், சுரந்த காவிரி",
169 - "பூவிரி புதுநீர்க்காவிரி" 393 -"கோடையாயினுங்.காவிரி புரக்கும்"
399 - "முழங்கு நீர்ப்படப்பைக் காவிரி" பொருநராற்றுப்படை:
246 -248 - "வேலி, யாயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும்", சிலப்பதிகாரம், கானல்வரி : "ஊழியுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி" பாரதம், அருச்சுனன்றவ நிலைச்சருக்கம், 24 : "காவிரியென்னத் தப்பாக் கருணையான்" என்னும் செய்யுட்களாலுமுணர்க.

1 -2 வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் - விளங்குகின்ற வெள்ளியாகியமீன் தான் நிற்றற்குரிய வடதிசையினில்லாமல் தென்றிசைக்கண்ணே போகினும்,

இதனாற் பெய்யும்பருவத்துப் பெய்யாமைக்குக் காரணங்கூறினார்.

(கு -பு) வெள்ளியாகியமீன் - சுக்கிரனாகியநக்ஷத்திரம். சுக்கிரன் தென்றிசையிற் சென்றால் க்ஷாமகாலமுண்டாகுமென்பது சோதிடநூற்றுணிபு; புறநானூறு, 117:"மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினுந், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்" என்பதனாலுமுணர்க.

3 -5 [தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினும்] தளி உணவின் தன் பாடிய புள் தேம்ப புயல் மாறி வான் பொய்ப்பினும் - துளி உணவாகையினாலே தன்னைப்பாடிய வானம்பாடி புலரும்படி மழையைப்பெய்தலைத்தவிர்ந்து மேகம்பொய்த்து வற்கடகாலமாயினும்,

(கு -பு) வானம்பாடி - ஒருவகைப்பறவை; அது மேகத்தின் துளியையேயுண்பது; சாதகப்புள்ளென்றுங் கூறப்படும்; திருவேங்கட வெண்பா, 97" "தண்டா மரைச்சுனையிற் சாதகமும் வேடுவரும், விண்டாரை நாடுகின்ற வேங்கடமே" என்பதனாலுணர்க. புலரும்படி - உலரும்படி. வற்கடகாலம் - க்ஷாமகாலம்.

5 -6 தான் பொய்யா மலை தலைய கடற் காவிரி - தான் பொய்யாமற்காலந்தோறும்வருகின்ற குடகமலையிடத்தே தலையினையுடைய. கடலிடத்தே செல்கின்ற காவிரி,

கடல், கணவன்.

(கு -பு) எந்தக்காலத்தும் காவிரி பொய்த்தலின்றிப் பெருகுமென்பதை, புறநானூறு, 35:"அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினு மிலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினு, மந்தண் காவிரி வந்து" எனவும் மணிமேகலை, பதிகம், 23 -25: "கோனிலை திரிந்து கோடை நீடினுந் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை" எனவும் பெரியோர் பாராட்டியிருத்தல் காண்க. குடகமலை - மேற்கே காவிரியுண்டாகுமிடத்தேயுள்ள மலை.
இந்நதியின் அதிதேவதை கவேரரென்னும் இராசருஷியின்புத்திரியாக அவதரித்தது பற்றி, இது காவேரியென்று பெயர்பெற்றதென்றுகூறுவர்; மணிமேகலை, 3 -ம் காதை 55 -56 "தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை கவேரன்" என்பதனாலுணர்க. அப்பெயர் காவிரியென்றுமருவியது. குடக மலையைக் காவிரியின் பிறந்தவீடென்றும் கடலை அதன்கணவனென்றும் கூறுதல் கவிமரபாதலின் கடலைக் கணவனென்றார்.

7 புனல் பரந்து பொன் கொழிக்கும் - நீர்பரந்து கரையிலே பொன்னைப்போகடும், சோழநாடு (28).

(கு -பு) காவிரியின் மெல்லியமணல் பொன்னிறமாக இருத்தல் பிரத்தியக்ஷம்; இதுபற்றியோ அல்லது வேறு எதுபற்றியோ அந்நதி, வடமொழியில் ஸுவர்ணநதியென்றும் தென்மொழியில் பொன்னியென்றும் கூறப்படும்,. 'புனல்பரந்து பொன்கொழிக்கும்' என்றது பொன்னியென்னும் அதன் பெயர்ப்பொருளை விளக்கியபடி.

8 விளைவு அறா வியல் கழனி - விளைதற்றொழின்மாறாத அகற்சியை
யுடைய கழனியிடத்தில்.

(கு -பு) கழனி - மருதநிலம்.

9 -12 கார் கரும்பின் கமழ் ஆலைத் தீ தெறுவிற் கவின் வாடி நீர் செறுவின் நீள் நெய்தற் பூ சாம்பும் புலத்து ஆங்கண் - பசிய கரும்பின் கமழும் பாகை அடுகின்ற கொட்டிலில் நெருப்பிற்புகை சுடுகையினாலே அழகு கெட்டு நீரையுடைத்தாகிய செய்யின்கணின்ற நீண்ட நெய்தற்பூ வாடும் நிலத்தையுடைய வயலிடத்து, குறும்பல்லூர். (28,)

(கு - பு.) கமழ், தீ - ஆகுபெயர்கள். கொட்டில் - பாகுகாய்ச்சுமிடம். செய் - வயல். குறும்பல்லூர் - நெருங்கிய பல ஊர்கள்.

13 - 15. காய்ச் செந்செற் கதிர் அருந்து மோடு எருமை முழுக்குழவி கூடு நிழல் துயில் வதியும் - காய்த்தலையுடைய செந்நெற்கதிரைத்தின்ற வயிற்றையுடைய எருமையீன்ற முற்பட்டகன்றுகள் நெடுங்கூட்டினுடைய நிழலிலே உறக்கத்தைக்கொள்ளும், குறும்பல்லூர் (28),

(கு - பு.) கூடு - நெற்சேர்.

16. கோள் தெங்கின் - குலைகளையுடைய தெங்கினையும்,
16. குலை வாழை - குலைகளையுடைய வாழையினையும்,
17. காய் கமுகின் - காயையுடைய கமுகினையும்,

(கு - பு.) கமுகு - பாக்குமரம்.

17. கமழ் மஞ்சள் - மனநாறும் மஞ்சளினையும்,
18. இனம் மாவின் - இனமான மாமரங்களினையும்,
18. இண பெண்ணை - குலைகளையுடைய பனையினையும்,
19. முதல் சேம்பின் - அடிபரந்த சேம்பினையும்,
19. முனை இஞ்சி - முனையினையுடைய இஞ்சியினையுமுடைய, வினைவறா
வியன் கழனி (8) யெனமுன்னேகூட்டுக.
20 - 25. [அகனகர் வியன்முற்றத்துச், சுடர்நுதன் மடநோக்கி, னேரிழை மகளி ருணங் குணாக் கவருங், கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை, பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு, முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்:]

21 - 23. சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை – ஒளியையுடைய நுதலினையும் மடப்பம்பொருந்தினநோக்கினையும் பொருந்தின பூணினையு முடையமகளிர் உலருகின்ற நெல்லைத்தின்னுங் கோழியையெறிந்த வளைந்த இடத்தையுடைய பொன்னாற்செய்த மகரக்குழை.

(கு - பு.) நுதல் - நெற்றி. மடப்பம் = மடம் - அறியாமை; ‘மடப்பம் – கொளுத்தக் கொண்டுகொண்டதுவிடாமை’ என்பர் நச்சினார்கினியர். பூண் - ஆபரணம். மகரக்குழை - மகரமீன்வடிவமாகச்செய்யப்பட்ட குண்டலம்.

24, 25,20. பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும் அகல் நகர் வியன் முற்றத்து - பூணணிந்த தாளினையுடைய சிறார் குதிரைபூட்டாமற் கையாலுருட்டும் மூன்றுருளையையுடைய சிறுதேரினது வழியின்முன்பைவிலக்கும் செல்வமகன்ற மனையினது அகன்ற முற்றத்தையுடைய, குறும்பல்லூ(28)ரென்க.

(கு - பு.) சிறார் - சிறுபிள்ளைகள். நெல்லைக்கவரவந்த கோழிகளை ஓட்டுதற்கு மகளிரெறிந்த குண்டலங்கள் சிறுவர்கள் செலுத்தும் சிறுதேரைத் தடுக்குமென்னுமிக் கருத்தை, "பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதக, நற்சிறா ரூர்தலி னங்கைமார் விரீஇ, யுற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை, மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே" (சீவக. நாமக. 62) என்பதும் "தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப், பொலந்தேர் மீமிசைப் புகார்முக வேழத், திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி" (மணிமே. 3 -ம் காதை, 141 -143) என்பதும் ' பெருவாழ்க்கையினரென்பார் குழை கொண்டு கோழி யெறியுமவரென்றார்' (நன்னூல் 408, விருத்தி) என்பதும் "கோழி விட்டெறி குழையினைக் குண்டலப் புழுவென், றாழி யின்கரை மீன்கவர் காகமங் காப்ப" (திருவானைக்காப்புராணம், திருநாட்டுச். 122) என்பதும் ஒருவகையாகத் தழுவிவந்திருத்தல் காண்க.

26 -27. [விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக், கொழும்பல் குடிச் செழும்பாக்கத்து]

இஃது இருஞ்செருவின் (72) விலங்குபகையல்லது கலங்குபகையறியாப் பாக்கமென மேலேகூட்டிற்று.

28 குறு பல் ஊர் நெடு சோணாட்டு - ஒன்றற்கொன்று அண்ணிதாய்ப் பலவாகிய ஊர்களையுடைய பெரியசோழநாட்டில், சோழநாடென்பது சோணாடென மரூஉமுடிபு.
சோழநாட்டுப்பட்டின (218) மென்க.

29 -30 வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல் வாய் பஃறி - வெள்ளிதாகிய உப்பினது விலையைச்சொல்லி விற்ற நெல்லைக் கொண்டுவந்த வலிய இடத்தையுடைய படகை.

பஃறி - ஓடமுமாம்.

31 -32 பணை நிலை புரவியின் அணு முதல் பிணிக்கும் கழி சூழ்படப்பை - பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப்பிணிக்குமாறுபோலே சார்ந்ததறிகளிலேபிணிக்கும் கழிசூழ்ந்த பக்கத்தினையும்.

அணைமுதல் - அணையிடத்துத் தறியுமாம்;. படப்பை - தோட்டமுமாம்.

(கு -பு) பந்தி - குதிரைச்சாலை. அணை - கரை

32 -33 கலி யாணர் பொழில் புறவின் பூதண்டலை - மனச்செருக் கெழுதற்குக் காரணமான புதுவருவாயினையுடைய தோப்புக்களுக்குப் புறம்பாகிய பூஞ்சோலைகளையும்.

(கு -பு) புதுவருவாய் - புதுவரும்படி

34 -38 [மழைநீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீ னுருகெழுதிற் றுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை]

34,35,36,38 மழைநீங்கிய மா விசும்பின் மதி சேர்ந்த மகவெண்மீன் உரு கெழு திறல் உயர் கோட்டத்து வான் பொய்கை - மழைமாசு நீங்கினபெரிய ஆகாயத்திடத்து மதியைச் சேர்ந்த மகமாகிய வெள்ளியமீனினது வடிவுபொருந்தின வலியையுடைய உயர்ந்த கரையையுடைய நன்றாகிய பொய்கைகளையும்,

மதியும் மீனும் பொய்கைக்கும் கரைக்கும் உவமிக்கும்பொருள்.

இனி, உயர்கோட்டத்தை, எல்லாரும் மதியைச்சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கிடமாகிய கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையுமென எண்ணுதலுமாம்.

இனிப் பொய்கைக்கரையிலே கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் மதிசேர்ந்த மகவெண்மீன்போன்றவென்றுமாம்.

(கு -பு) மகவெண்மீன் - மகநக்ஷத்திரம்; அது முடநுகம்போன்ற வடிவமுடையதாதலின், கரைக்கு உவமையாயிற்று. கோட்டமென்பதற்குக் கோயிலென்றும் பொருளுண்டு. 'எல்லாரும் மதியைச்சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயில்' என்றது சந்திரன் கோயிலை; காவிரிப்பூம்பட்டினத்திற் சந்திரனுக்குக் கோயிலிருந்ததென்பதை, சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்தகாதையிலுள்ள (13 -ம் அடி) "நிக்கந்தன் கோட்ட நிலாக்கோட்டம்புக்கு" என்பதனாலுணர்க. எல்லாரும் பார்க்கைக்கென இயைக்க.

37 -38 முருகு அமர் பூ முரண் கிடக்கை வரி அணி சுடர் பொய்கை - மணம்பொருந்தின பூக்கள் நிறத்தாற் றம்முள் மாறுபட்டபரப்பாலே பலநிறமணிந்த ஒளியினையுடைய பொய்கை.

39 இரு காமத்து இணை ஏரி - இம்மையிலும் மருமையிலுமுண்டாகிய காமவின் பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளையும். அது, "சோமகுண்டஞ் சூரிய குண்டத் துறைமூழ்கிக், காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடுந், தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்." என்றதனானுமுணர்க.; (சிலப். கனாத்திறமுரைத்தகாதை, 59 -62)

(கு -பு) இணைந்த - இரண்டாகிய. மேற்கோளுக்குப் பொருள்: சோமகுண்டம் சூரியகுண்டத்துறைமூழ்கி - சோமகுண்டம் சூரியகுண்டமென்னும் அத்தீர்த்தத்தில் ஆடி, காமவேள் கோட்டம் தொழுதார் தையலார் - மன்மதனுடைய கோயிலிற்புகுந்து அவனைத்தொழுதாராகியமகளிர், உலகத்துக் கணவரொடும் தாம் இன்புறுவர். - இவ்வுலகத்திற் பிரிவின்றியிருந்து கணவரோடும் இன்புற்றிருப்பார்கள், போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் - மறுமையிலும் போகபூமியிற்போய்ப்பிறந்து கணவரோடும் இன்புற்றிருப்பார்கள். இங்கேகூறிய சோமகுண்டம் சூரியகுண்டமும் முறையே காவிரிப்பூம்பட்டினத்தைச்சார்ந்த திருவெண்காட்டிலுள்ள சோமதீர்த்தமும்
சூரியதீர்த்தமுமாமென்று சிலபெரியோர் கூறுகின்றனர்.

40 -41 புலி பொறி போர் கதவின் திரு துஞ்சும் திண் காப்பின் - புலியாகிய அடையாளத்தினையும் பலகைகள் தம்மிற்சேருதலையுடைய கதவினையுமுடைய திருமகள்தங்கும் திண்ணிய மதிலினையும்,

(கு -பு) காவிரிப்பூம்பட்டினம் சோழர்களுக்குரிய இராசதானியாதலின், அவர்களுக்குரிய அடையாளமாகிய புலிவடிவம்கூறப்பட்டது.

42 -50 [புகழ்நிலைஇய மொழிவளர, வறநிலைஇய வகனட்டிற், சோறுவாக்கிய கொழுங்கஞ்சி, யாறுபோலப் பரந்தொழுகி, யேறுபொரச் சேறாகித், தேரோடத் துகள்கெழுமி, நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயின் மாசூட்டும்]

44 -45 சோறுவாக்கிய கொழு கஞ்சி யாறு போல பரந்து ஒழுகி - சோற்றைவடித் தொழுக்கிய கொழுவிய கஞ்சி யாறுகள்போல எங்கும்பரந் தொழுகி,

46 ஏறு பொர சீறாகி - இடங்கள் தம்மிற்பொருகையினாலே பின்பு சேறாய்,

47 தேர் ஓட துகள் கெழுமி - பலதேர்களும் ஓடுகையினாலே தூளியாய்ப்பொருந்தி,

49 -50 வேறுபட்டவினை ஓவத்து வெண் கோயில் - வேறுபட்ட தொழில்களையுடைய சித்திரங்களையுடைய வெள்ளிய கோயில்களை,

(கு -பு) கோயில்களை - அரண்மனைகளை

48, 50 நீறு ஆடிய களிறு போல மாசு ஊட்டும் - புழுதியைமேலே பூசிக்கொண்ட யானையைப்போல அழுக்கேறப்பண்ணும், கஞ்சி ஒழுகிச் சேறாகிக் கெழுமிக் கோயுலை மாசு ஊட்டுதற்குக்காரணமாகிய அட்டில் (43) எனக்கூட்டுக.

(கு -பு) அட்டில் - - மடைப்பள்ளி.

42 -43 புகழ் நிலைஇய மொழி வளர அறம நிலைஇய அகன் அட்டில் - இம்மைக்குப் புகழ் நிலைபெற்றசொல் எங்கும்பரவாநிற்க மறுமைக்கு அறம்நிலைபெற்ற அகன்ற அட்டில்,

இருமையினும் பெறும் பயனுண்டாகச் சோறிடும் சாலையென்றவாறு.

51 -52 தண் கேணி தகை முற்றத்து பகடு எருத்தின் பல சாலை - குளிர்ந்த சிறியகுளங்களை உள்ளேயடக்கின முற்றத்தினையுடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பலசாலையினையும்,

(கு -பு) முற்றத்தினையுடையசாலை.

53 தவ பள்ளி - தவஞ்செய்யும் அமண்பள்ளி பௌத்தப்பள்ளிகளையும்,

(கு -பு) அமண்பள்ளி - அமணரிருப்பிடம்; பௌத்தப்பள்ளி - பௌத்தரிருப்பிடம்.

53 -58 [தாழ்காவி, னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு. மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்., மாயிரும் பெடையோ டிரியல் போகப், பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த், தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்]

54, 55, 56. அயிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறு புகைமுனைஇ குயில் தம் மா இரு பெடையொடு இரியல் போகி – விளங்குகின்ற சடையினையுடைய இருடிகள் தீயின்கண்ணே வேட்டலைச்செய்யும் நெய்முதலியவற்றின் நறிய புகையைவெறுத்துக் குயில்கள் தம்முடைய கருமையையும் பெருமையையுமுடைய பேடைகளுடனே கெடுதலையுடையவாய் நீங்கிப்போய்,

(கு -பு) வேட்டலை - ஓமஞ்செய்தலை.

57, 58, 53 பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும் தாழ் காவின் - பூதங்கள் வாசலிலேகாத்திருக்கும் புகற்ரிய அச்சத்தையுடைய காளிகோட்டத்திடத்திற் கல்லைத்தின்னும் அழகிய புறவுகளுடனே குடியிருப்பாகத் தங்கும் இளமரக்காவினையும்,

முனிவரைத் தன்னிடத்தே கொண்டிருத்தலின், கரக காரணமாயிற்று.

(கு -பு) பாலைநிலத்துள்ள ஒருவகைப்புறாக்கள், கல்லையேதின்று காலங்கழித்திருக்கு-மென்பதை "தூதுணம் பறவைக டூதுண் டோவறக் காதலந் துணையொடு கழுமிப் புல்லுவ வேதுண வுண்ணினு மெவர்க்கும் வேள்கணை, தீர்திற மரிதெனத் தெளிப்ப போன்றன" (திருநாட்டுப்படலம். 52) என்னும் திருத்தணிகைப்புராணத்தாலுமுணர்க. கா - சோலை.

59 -77 [முதுமரத்த முரண்களரி வரிமண லகன்றிட்டை, யிருங்கிளை யினனொக்கற், கருந்தொழிற் கலிமாக்கள், கடலிறவின் சூடுதின்றும், வயலாமைப் புழுக்குண்டும், வறளடம்பின் மலர்மலைந்தும், புனலாம்பற் பூச்சூடியு, நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு, நாண்மீன் விராய கோண்மீன்போல, மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக், கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர், கல்லெறியுங் கவண்வெரீஇப், புள்ளிரியும் புகர்ப்போந்தைப், பறழ்ப்பன்றிப் பல்கோழி, யுறைக்கிணற்றுப் புறச்சேரி, மேழகத் தகரொடு சிவல்விளையாட:]

74,73 புகர் போந்தை புள் வெரீஇ இரியும் கல் எறியும் கவண் - நிறத்தையுடைய பனையிலிருக்கும் பறவைகளஞ்சிக் கெட்டுப்போதற்குக் காரணமான கல்லையெறியும் கவணையுடைய, கலிமாக்கள் (32) எனமுன்னே கூட்டுக.

(கு -பு) பனையிலிருக்கும்பறவைகள் - அன்றில்முதலியன. கலிமாக்கள். - செருக்கையுடையபிள்ளைகள்.

61 -62 இனன் ஒக்கல் கரு தொழிற் கலி மாக்கள் - ஓரினச்சுற்றத்தினையும் வலியதொழிலையுமுடைய செருக்கின பரதவர்பிள்ளைகள்.,

(கு -பு) பரதவர் - நெய்தனிலமாக்கள்.

63 கடல் இறவு இன் சூடு தின்றும் - கடலிறாக்களின் இனிய சுடப்பட்டதனைத் தின்றும்,
(கு -பு) இறாக்கள் - ஒருவகைமீன்கள். சுடப்பட்டது - இறைச்சி.

64 வயல் ஆமை புழுக்கு உண்டும் - வயலில் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத்தின்றும்,

65 வறள் அடம்பின் மலர் மலைந்தும் - மணலிலேபடர்ந்த அடப்பம் பூவைத் தலையிலேகட்டியும்.

66 புனல் ஆம்பல் பூ சூடியும் - நீரினின்ற ஆம்பற்பூவைப் பறித்துச் சூடியும்,

67 -68 நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு நாள் மீன் விராயகோள் மீன் போல - நீலநிறத்தையுடைய ஆகாயத்தே வலமாகஎழுந்து திரியும் நாள்களாகிய மீன்களோடேகலந்த கோள்களாகிய மீன்கள்போல,

(கு -பு) நாள்களாகியமீன் - இருபத்தேழுநக்ஷத்திரங்களாகிய மீன்கள். கோள்களாகிய மீன்கள். - நவக்கிரகங்களாகிய மீன்கள்.

69, 77, 69. மலர்தலை மன்றத்து மேழகம் தகரொடு சிவல் விளையாடபலர் உடன் குழீஇ - அகன்ற இடத்தையுடைய மன்றிலே மேழகக்கிடாயோடே சிவலையுங் கொண்டு பொருவித்து விளையாடும்படி பலரும் சேரத் திரண்டு,

(கு -பு) மன்;று - பொதுவிடம். மேழகக்கிடாய் - ஆட்டுக்கிடாய். சிகல் - ஒருவகைப்பறவை.

மாக்கள் தின்றும் உண்டும் மலைந்தும் சூடியும் விளையாடும்படி மீன்போற் குழீஇயென்க.

72, 71, 60, 61, 59, 71, 70, 72. இகல் மொய்ம்பினோர் பெரு சினத்தால் வரி மணல் அகன் திட்டை இரு கிளை முது மரத்த முரண் களரி புறக்கொடாது கையினும் கலத்திலும் மெய் உற தீண்டி இரு செருவின் விலங்கு பகை அல்லது (26) கொழு பல் குடி (27) கலங்குபகை அறியா(29) செழு பாக்கத்து (27) – அங்ஙனம் பொருவித்தலிற்றோன்றும் மாறுபாடுசெய்யும் வலியினையுடையராய் ஆண்டுப்பிறந்த பெரியசினத்தாலே அறவினையுடைத்தாகிய மணலினையுடைய அகன்றமேட்டில் பெரிய கிளைத்தலையுடைய பழையமரத்தையுடையவாகிய பொருதற்குச்சமைந்த போர்க்கள‌த்தேசென்று முதுகுகொடாமற் கையாற்குத்தியும் படைக்கலங்களாலே
வெட்டியும் ஒருவர்மெய்யோடு ஒருவர்மெய் உறும்படி கலந்துபொரும் பெரியபோரை விலங்குகின்ற பகையல்லது செருக்கினையுடைய பலகுடி கலங்கி எழுந்திருத்தற்குக் காரணமானபகையை அறியாத பாக்கங்களையும், பாக்கம் - கடற்கரையிலூர்கள்.
(கு -பு) பாக்கங்களில் விளையாட்டுச்சண்டைகளேயுள்ளன வென்றபடி.

75 -76 பறழ் பன்றி பல் கோழி உறை கிணறு புறச்சேரி - குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதியாகிய கோழிகளையும் உறைவைத்த கிணறுகளையுமுடைய இழிக்குலத்தோரிருக்குந்தெருவுகளையும்,

78 -79 [கிடுகுநிரைத் தெஃகூன்றி, நடுகல்லி னரண்போல:] நடுகல்லின் அரண் போல குடுகு நிரைத்து எஃகு ஊன்றி – நடுகல்லினிற்கின்ற தெய்வமாயவனும் அவனுக்குவைத்த கிடுகும் வேலும்போலக் கிடுகைநிரைத்து வேலையூன்றி, புறக்கொடாது (71) என முன்னே கூட்டுக. அரண், ஆகுபெயர்.

(கு -பு) சண்டையிற் பின்னிடாமற்போர்செய்து இறந்தவீரரைத் தெய்வமாகப்பாவித்து, அவர்பெயரை ஒருகல்லிலெழுதி, அதனைநட்டு அதன் முன்னே வேலையூன்றி அக்கல்லைச்சூழத் தட்டிகளைக்கட்டி வழிபடுதல் பண்டைக்காலவழக்கம்; அக்கல் வீரக்கல்லெனவும், அத்தெய்வம் வீரனெனவும் வழங்கும். கிடுகு - கேடகமுமாம். அரண், தெய்வத்திற்கு ஆனமையின், ஆகுபெயர்.

80 -93 [நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய குறுங்கூரைக் குடிநாப்ப, ணிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில், வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த, வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர், சினைச்சுறவின் கோடுநட்டு, மனைச்சேர்த்திய வல்லணங்கினான், மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும், புன்றலை யிரும்பரதவர், பைந்தழைமா மகளிரொடு. பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா, துவவுமடிந் துண்டாடியும்.]

90 புல் தலை இரு பரதவர் - சிவந்த தலையினையுடைய பெரியபரதவர்

93 உவவு - உவாநாளாகையினாலே

(கு -பு) உவாநாள் - பௌர்ணிமைத்திதி.

92 -93 பாய் இரு பனி கடல் வேட்டம் செல்லாது மடிந்து - பரந்த கருமையையுடைய குளிர்ந்த கடலில் மீன்பிடித்தற்குப்போகாது மன எழுச்சிதவிர்ந்து,

(கு -பு) கடல் பௌர்ணிமையிற்பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருக்குமாதலால் பரதவர் மீன்பிடித்தற்காகக் கடலிற்செல்லார்.

91 பைந்தழை மா மகளிரொடு - பசிய தழையினையுடைய கரிய நிறத்தினையுடைய தம்மகளிரோடேகூடி,

(கு -பு) தழை - மலர்கள். தளிர்கள், தழைகள் இவற்றாலாகிய உடைவிசேடம் [புறநானூறு 116, 248 -ம் செய்யுட்களைப் பார்க்க]

80 -81 நெடு தூண்டிலில் காழ் சேர்த்திய குறு கூரை குடி நாப்பண் – நெடிய தூண்டிலிற் காம்புகள் சார்த்திவைத்த குறிய இறப்பினையுடைய குடியிருப்பு நடுவில்

82, 83, 87. நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கு மணல் முன்றில் மனை - நிலவுநடுவேசேர்ந்த இருளைப்போலே வலைகிடந்து உலரும் மணலையுடைத்தாகிய முன்றிலினையுடைய மனையிடத்தே

(கு -பு) நிலவு மணலுக்கும் இருள் வலைக்குமுவமை.

86 -87 சினை சுறவின் கோடு நட்டு சேர்த்திய வல் அணங்கினால் - சினையையுடைய சுறவின் கொம்பைநட்டு அதனிடத்தேயேற்றிய வலிய தெய்வம்காரணமாக

84 -85 வீழ் தாழை தாள் தாழ்ந்த வென்கூதாளத்து தண் பூ கோதையர் - விழுதையுடைய தாழையின்அடியிடத்தேநின்ற வெண்டாளியினது தண்ியபூவாற்செய்த மாலையினையுடையராய்,

88 மடல் தாழை மலர் மலைந்தும் - மடலையுடைய தாழையினது மலரைச்சூடியும்.

89 பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – சருக்கரையையுடைய பனையிற் கள்ளை-யுண்டும்.

93 உண்டு ஆடியும் - நெற்கள்ளையுண்டு விளையாடியும்

(கு -பு) நெய்தனிலத்தில் வலைவளம் தப்பினால் நுனைச்சாதிமகளிர் சுறாமீன் கொம்பைநாட்டி வழிபட அதனினின்றும் வருணன் வெளிப்பட்டு அவர்களுக்கு வரங்கொடுப்பானென்பது மரபு. ; இதனை "சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்" (பெரியபுராணம் திருக்குறிப்பு. 7) எனவும் "புறவுக் கோட்டஞ் செயும்வனப்பிற் பூவை மொழியார் விழி தான்வா, ழிறவுக் கோட்டுக் கடல்பணிக்கு மெழிலா லவர்நாட் டினரிறைஞ்சுஞ், சுறவுக் கோட்டுட் கடலரசன் றோன்றி வரங்க னினிதருளு நறவக்
கோட்டு மலர்ப்புன்னை ஞாழற் பொதும்ப ரெவ்விடனும்" (திருவானைக்கப் புராணம் திருநாட்டுச்சிறப்பு 96) எனவும் வருவனவற்றாலுணர்க. வெண்டாளி - ஒருவகைச்செடி

94 புலவு மணல் பூ கானல் - புலானாற்றத்தையுடைய மணலிடத்தே பூக்களையுடைய கடற்கரையில், குடி (81) யென்க.

95 மா மலை அணைந்த கொண்மூ போலவும் – கரியமலையைச் சேர்ந்த செக்கர் மேகம் போலவும்

இது கரிய உயர்ந்த திரையின்மீதே சிவந்த யாற்றுநீர் பரந்ததற்குவமை.
(கு -பு) செக்கர்மேகம் - செம்மேகம். திரை - அலை.

96. தாய்.............தழுவிய குழவி போலவும் - தாயுடைய (மார்பைத்) தழுவிய பிள்ளையைப் போலவும்,

இஃது ஒன்றுபடுதற்கு உவமை.

(கு -பு.) இங்கேகூறிய உவமையையே "தாய்...தழுவிய குழவி போலவு, மாமலை தழுவிய மஞ்சு போலவும்" (சீவக. நாம. 71) எனத் திருத்தக்கதேவரும் கூறியிருக்கின்றனர்.

97. தேறு நேர் புணரியொடு யாறு தலைமணக்கும் - தெளிந்த கடலிற்றிரையோடே காவிரி தலைகரக்கும்,

(கு -பு.) கரக்கும் - ஒளிக்கும்.

98. [மலியோதத் தொலிகூடல்:] ஓதத்து ஒலி மலி கூடல் - ஓதத்தினால் ஒலிமலிந்த புகார்முகத்தே,

(கு -பு) புகார்முகம் - சங்கமுகத்துறை.

99. தீது நீங்க கடலாடியும் - தீவினைபோகக் கடலாடியும்,

100. மாசு போக புனல் படிந்தும் - உப்புப்போக நீரிலேகுளித்தும்,

(கு -பு.) நீர் - உப்பில்லாத நல்லநீர்.

101. அலவன் ஆட்டியும் - ஞெண்டுகளையாட்டியும்,
(கு -பு.) ஞெண்டுகள் - நண்டுகள்.

101. உரவு திரை உழக்கியும் - பரக்கின்றதிரையிலே விளையாடியும்,

102. பாவை சூழ்ந்தும் - பாவைகளைப்பண்ணியும்,

(கு -பு.) தண்டான் கோரையாற்செய்யப்படும் பாவையைவைத்துக் கொண்டு விளையாடல் நெய்தனிலத்து மகளிர்தொழில்; "பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே" (ஐங்குறுநூறு, 155) என்பதனாலுமுணர்க.

102. பல் பொறி மருண்டும் - ஐம்பொறிகளால் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்கியும்,

103. அகலாக் காதலொடு பகல் விளையாடி - நீங்காத விருப்பத்துடனே பகற்பொழுதெல்லாம் விளையாடி,

பரதவர் (90) உவவுமடிந்து (96) மகளிரோடேகூடிக் (91) குடிநாப்பண் (81) மனையிடத்தேசேர்த்திய அணங்கினாற் (87) கோதையராய் (85) மலைந்தும் (88) மாந்தியும் (86) ஆடியும் (96) பின்னர்க் கூடலிலே (98) தீதுநீங்க ஆடியும் (99) படிந்தும் (100) ஆட்டியும் உழக்கியும் (101) சூழ்ந்தும் மருண்டும் (102) காதலொடு பகல்விளையாடி (109) யெனமுடிக்க.

104 -117. [பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும், பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்து, மட்டுநீக்கி மதுமகிழ்ந்து மைந்தர் கண்ணி மகளிர் குடவு மகளிர்கோதைமைந்தர் மலையவு, நெடுங்கான்மாடத் தொள்ளெரி நோக்கிக், கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும், பாட லோர்த்து நாடக நயந்தும், வெண்ணிலவின் பயன்றுய்த்துங், கண்ணடைஇய கடைக்கங்குலான், மாஅகாவிரி மணங்கூட்டுந், தூஉவெக்கர்த் துயின்மடிந்து:]

104, 111. பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் நெடு கால் மாடத்து - பெறுதற்கரிய பழைய தலைமையினையுடைய சுவர்க்கத்தையொக்கும் நெடிய கால்களையுடைய மாடத்திடத்தேயிருந்து.

113 -114. பாடல் ஓர்த்து நாடகம் நயந்தும் வெள் நிலவின் பயன் துய்த்தும் - பாட்டைக்கேட்டு நாடகங்களைவிரும்பிக்கண்டும் வெள்ளிய நிலவிற் பெரும்பயனை நுகர்ந்தும்.

108 மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் - கள்ளுண்டலைக்கைவிட்டுக் காமபானத்தை யுண்டு மகிழ்ந்தும்,
(கு -பு) காமபானம் - காமவின்பநுகர்ச்சிக்காகப் பருகுவது.

107 பட்டு நீக்கி துகில் உடுத்தும் - பட்டுடுத்தவற்றைநீக்கி நொய்யவாகிய வெள்ளியவற்றையுடுத்தும்.

106, 115 துணை புணர்ந்த மடமங்கையர் கண் அடை இய கடை கங்குலான் - கணவரைக்கூடின மடப்பத்தையுடையமகளிர் பின்புகண்டுயின்ற பிற்பட்டசாமத்தையுடைய இராக்காலத்தே மாடத்தேயிருந்து நயந்தும் துய்த்தும் மகிழ்ந்தும் உடுத்தும் துணைப்புணர்ந்த மடமங்கையர் கண்டுயின்ற கங்குலென்று கங்குற்கு அடைகூறினார்.

109 -110 மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் - மாடத்தேயிருந்து நுகர்ந்து அனந்தர்மிக்கமையால் கணவர் சூடிய கண்ணியைத் தமதுகோதையாகநினைத்து மகளிர்சூடிக்கொள்ளும் படியாகவும் மகளிர் சூடியகோதையைத் தமது கண்ணியாகநினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும் கண்டுயின்றகங்குலென இதுவும் கங்குற்கு அடைகூறினார்.

(கு -பு) அனந்தர் - கள்ளின்மயக்கம். கண்ணி, கோதை – மாலை விசேடங்கள்.

111, 112, 115. நெடுகால் மாடத்து குரூஉ சுடர் ஒள் ஏரி நோக்கி கொடு திமில் பரதவர் எண்ணவும் கண்அடை இய கடைகங்குல் – அம்மாடத் திட்ட நிறவிய விளக்குக்களால் விடியற்காலத்து அவியாமல் ஒள்ளியவாய் எரிகின்ற அவையிற்றைப்பார்த்து இராக்காலத்தே வளைந்த திமிலைக்கொண்டு கடலிலேபோன பரதவரெண்ணும்-படியாகவும் கண்டுயின்ற கடைக்கங்குலென்றும் கங்குற்கு அடைகூறினார்.

விளக்குக்களிலே எண்ணெயைவார்த்துத் தூண்டுவாரின்றி எல்லாரும்
துயில்கோடலிற் சில எரிந்தவற்றையெண்ணினார்.

(கு -பு) அவையிற்றை - அவற்றை. திமில் - மீன்பிடித்தற்குரியபடகு.

105, 116, 105, 116, 117. பொய்யா மரபின் மா காவிரி பூ மலி பெருந்துறை மணம் கூட்டும் தூ எக்கர் துயில் மடிந்து - பொய்யாமல் நீர்வருமுறைமையினையுடைய பெரிய காவிரி பூமிக்க பெரியதுறைகளிற் பூமணங்களைக் கொண்டுவந்துதிரட்டும் தூய இடுமணலிலே துயில்கொண்டுகிடந்து,

பரதவர்(90), பகல்விளையாடி*(106) மாடத்திலிருப்பாரெல்லாரும் கண்ணடைஇய கடைக்கங்குலிலே (115) தூவெக்கர்த் துயின்மடிந்து (117) மற்றைநாள் மகளிரொடு செறிய (155) எடுத்த விழவறா வியலாவணம் (158) எனக்கூட்டுக.

118 -141. [வாலிணர் மடற்றாழை, வேலாழி வியன்றெருவி, னல்லிறைவன் பொருள்காக்குந், தொல்லிசைத் தொழின்மாக்கள், காய்சினத்த கதிர்ச்செல்வன், றேர்பூண்ட மாஅபோல, வைகறொறு மசைவின்றி, யுல்குசெயக் குறைபடாது, வான்முகந்தநீர் மலைப்பொழியவு, மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு, மாரிபெய்யும் பருவம்போல, நீரினின்று நிலத்தேறவு, நிலத்தினின்று நீர்ப்பரப்பவு, மலந்தறியாப் பலபண்டம், வரம்பறியாமை வந்தீண்டி, யருங்கடிப் பெருங்காப்பின், வலியுடை வல்லணங்கினோன், புலிபொறித்துப் புறம்போக்கி, மதிநிறைந்த மணிமண்டபம், பொதுமூடைப் போரேறி. மழையாடு சிமய மால்வரைக் கவாஅன், வரையாடு வருடைத் தோற்றம் போலக், கூருகிர் ஞமலிக் கொடுந்தா னேற்றை, யேழகத் தகரோ டுகளு முன்றில்:]

126 -128. வான் முகந்த நீர் மலை பொழியவும் மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் மாரி பெய்யும் பருவம் போல - மேகம் தான்முகந்தநீரை மலையிடத்தே சொரிதற்காகவும் மலையிற்சொரிந்தநீரை மீண்டு கடலிலே பரப்புதற்காகவும் மாரிக்காலத்தே பெய்கின்றசெவ்விபோல, வான், எழுவாயாகப் பெய்யுமென்னும் பயனிலைகொண்டது.

118 - 119, 133. வால் இணர் மடல் தாழை வேலாழி வியல் தெருவில் அரு கடி பெரு காப்பின் - வெள்ளிய பூங்கொத்துக்களையும் மடலினையுமுடைய தாழையையுடைய கரையினையுடைத்தாகிய கடலருகின்கண் இருக்கும் பரதவருடைய அகன்ற தெருவிடத்து அகன்ற காவலையுடைய பண்ட சாலையின்கண்ணே,

132, 130. வரம்பு அறியாமை வந்து ஈண்டி நிலத்தினின்றும் நீர் பரப்பவும் - எல்லையறியாதபடி வந்துதிரண்டு பின்னர் அப்பண்ட சாலையிலே நின்றும் கடலிலே ஏற்றுதற்காகவும்,

134, 135, 125, 136. வல் அணங்கின் நோன் வலி உடை புலி பொறித்து புறம் போக்கி உல்கு செய மதி நிறைந்த மலி பண்டம் - வலிய வருத்துந்தன்மையையுடைய அச்சடையாளமாகிய வலியையுடைய புலியை அடையாளமாகவிட்டுப் பண்டசாலைக்குப் புறம்பே *புறப்படவிட்டுச் சுங்கம் கொள்ளுதற்கு மதித்தற்றொழிலிற் குறையற்ற மிக்கபண்டங்களையும்,
(கு -பு) அச்சு அடையாளம் - அச்சாகிய அடையாளம்.

129, 135, 125, 131, 136, 131. நீரினின்று நிலத்தேறவும் புலி பொறித்து புறம்போக்கி உல்குசெய அளந்து அறியா மதி நிறைந்த பல பண்டம் – கடலினின்றும் பண்டசாலையிலே இறக்குதற்காகவும் புலிபொறித்து மரக்கலத்திற்குப்புறம்பே புறப்படவிட்டுச் சுங்கங்கொள்ளுதற்கு நெஞ்சாலேஅளந்தறிந்து மதித்தல் நிறைந்த பலபண்டங்களையும், பரப்பவும் ஏறவுமென்னுமெச்சங்கள் புலிபொறித்தென்னும் வினையொடுமுடிந்தன.

137 பொது மூடை போர் எறி - பொதிந்த பொதிகளடுக்கின போரிலேயேறி,
(கு -பு) மூடை - மூட்டை. 'நீர் கடற்பரப்பவும்' (127) என்ற உவமைக்கு நிலத்தினின்றும் நீர்ப் பரப்பவும் (130) 'நீர் மலைப்பொழியவும்' (126) என்ற உவமைக்கு நீரினின்று நிலத்தேறவும் (129) பொருளாகக்கொள்க.

(கு -பு) பொருள் - உவமேயம்.

120 -125 நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசை தொழில் மாக்கள் காய் சினத்த கதிர் செல்வன் தேர் பூண்ட மா போல வைகல் தொறும் அசைவு இன்றி குறைபடாது உல்கு செய - நல்ல அரசனுடையபொருளைப் பிறர் கொள்ளாமற்காக்கும் பழைய புகழினையுடைய சுங்கங்கொள்வோர் எரிகின்ற சினத்தையுடைய கிரணங்களையுடைய பகலவன் தேர்பூண்ட குதிரைகளைப்போல ஒருபொழுதும் மடிந்திராது நாடோறும் இளைப்பின்றித் தாழ்வின்றாகச் சுங்கங்கொள்ள,

இதனை இருவகைப்பண்டங்களுக்குங் கூட்டியுரைப்ப.

(கு -பு) மடிந்திராது - சோம்புதலுற்றிராமல். உல்கு - சுங்கம். இருவகைப் பண்டங்களாவன, பண்டசாலையிலிருந்து கப்பலிலேற்றப்படுவனவும், கப்பலிலிருந்து பண்டசாலையில் இறக்கப்படுவனவும்.

138 -139 மழை ஆடு சிமய மால் வரை கவாஅன் வரை ஆடு வருடை தோற்றம் போல - மழையுலாவும் சிகரத்தையுடையவாகிய, பெரிய மூங்கிலையும் பக்கமலையினையுமுடைய மலையிடத்தேயுலாவும் வருடைமானின் தோற்றரவுபோல,

(கு -பு) தோற்றரவு - தோன்றுதல்.

140 -141 கூர் உகிர் ஞமலி கொடு தான் ஏற்றை எழகம் தகரோடு உகளும் முன்றில் - கூரிய உகிரையுடைய நாயில வளைந்த காலையுடைய ஏறானவை மேழகக் கிடாயோடே குதிக்கும் பண்டசாலையின் முற்றத்தினையும் ஏற்றை தகரோடு இருவகைப்பண்டங்களையும்பொதிந்த மூடைப்போரேறி உகளுமுற்றமென்க.

(கு -பு) உகிர் - நகம். ஏறு - ஆண். மேழகக்கிடாய் - ஆட்டுக்கிடாய்; இஃது, ஏழகமெனவும் வழங்கும்.

142 -143. குறு தொடை நெடு படிக்காற் கொடுந்திண்ணை - அணுகின படிகளையுடைய நெடிய ஏணிகள்சார்த்தின சுற்றுத்திண்ணையினையும்,

(கு -பு.) படிக்கால் - ஏணி; படிகளையுடையகால்களென்றபடி.

143. பல் தகைப்பின் - பலகட்டுக்களையும்,

144. புழை - சிறுவாசலையும்,
144. வாயில் - பெரியவாசலையும்,
144. போகு இடைகழி - பெரிய இடைகழிகளையுமுடைய,

(கு -பு.) இடைகழியென்பது இக்காலத்து 'ரேழி' என வழங்கும்.

145 -151. [மழைதோயு முயர்மாடத்துச், சேவடிச் செறிகுறங்கிற், பாசிழைப் பகட்டல்குற், றூசுடைத் துகிர்மேனி, மயிலியன் மானோக்கிற், கிளிமழலை மென்சாயலோர் வளிநுழையும் வாய்பொருந்தி:]

145, 151. மழை தோயும் உயர் மாடத்து வளி நுழையும் வாய் பொருந்தி - மேகஞ்செறியும் உயர்ந்த மாடத்தில் தென்காற்றுவரும் சாளரங்களைச்சேர்ந்தென்க.

(கு -பு.) தென்காற்று - தென்றல். சாளரம் - பல்கணி.

146. சேவடி - சிவந்த அடியினையும்,

146. செறி குறங்கின் - செறிந்த குறங்கினையும்,

(கு -பு.) குறங்கு - துடை.

147. பாசிழை - பசிய பூணினையும்,

(கு -பு.) பசிய - பளபளப்புள்ள.

147. ...................................................

148. தூசு உடை - தூசாகிய உடையினையும்,

148. துகிர் மேனி - பவளம்போலுநிறத்தினையும்,

149. மான் நோக்கின் - மான்போலும் பார்வையினையும்,

150. கிளி மென் மழலை - கிளிபோலும் மெல்லிய மழலைவார்த்தையினையும்,

149 -150. மயில் இயல் சாயலோர் - மயிலினது இயல்போலும் மென்மையினையுமுடைய மகளிர்,

(கு -பு) இயல் - மென்மை.

152 -154. ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன செறி தொடி முன்கை கூப்பி - உயராநின்ற மலைப்பக்கத்தே மெல்லியதேன்றுளிக்கும் செங்காந்தளினதுஅழகிய கண்ணிடத்து இணைந்த குலையையொத்த செறிந்த தொடியினையுடைய முன்கை குவிக்க, கூப்பி, கூப்ப வெனத்திரிக்க. இரண்டுகாந்தண்முகை சேர்ந்தாலொத்த கையென்க. கவிதல் - ஒன்றோடொன்று சேர்தல்.

(கு -பு) தொடி - வளையல். முகை - அரும்பு.

154 -155 [செவ்வேள், வெறியாடு] வெறியாடு செவ்வேள் - வெறியாடுதற்குரிய முருகனுக்கும்.,
(கு -பு) வெறியாடல் - ஆவேசமுற்றுஆடுதல்.

155 -160 [மகளிரொடு செறியத் தாஅய்க், குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழவறா வியலாவணத்து, மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்:]

159, 160, 159. மை அறு சிறப்பின் சேர்த்திய பலர் தொழு தெய்வம் – பிறப்பறுதற்குக் காரணமான தலைமையையுடைமையாற் கோயில்களிடத்தே உண்டாக்கின பலருந்தொழுந்தெய்வங்களுக்கும்,

155 -158 மகளிரொடு செறிய தாஅய் குழல் அகவ யாழ்முரல முழவு அதிர முரசு இயம்ப விழவு அறா வியல் ஆவணத்து – பாடுமகளிரோடே பொருந்தப் பரந்து வங்கியம் இசையையுண்டாக்க யாழ் வாசிக்க முழவு முழங்க முரசு ஒலிப்ப எடுத்த திருநாள் நீங்காத அகன்ற அங்காடித்தெருவினையும், மகளிரொடு செறிய எடுத்த விழவென்க.
(கு -பு) வங்கியம் - புல்லாங்குழல். யாழ் - வீணை. முழவு - மத்தளம். அங்காடித்தெரு - கடைத்தெரு.

சேவடிமுதலியவற்றையுடைய சாயலோர் மாடங்களிற் சாரளங்களிற் பொருந்தி முன்கைகூப்பப் பலருந் தொழும் முருகவேளுக்கும் ஏனைத் தெய்வங்களுக்குமெடுத்த விழவறா வியலாவணமெனக்கூட்டுக.

160 மலர் அணி வாயில் கொடியும் - இல்லுறைதெய்வமகிழ மலரணிந்த மனைவாசலிற் கட்டின கொடிகளும்,
(கு -பு) இல்லுறைதெய்வம் - வீட்டுத்தெய்வம்.

161 -162 [வருபுன றந்த வெண்மணற் கான்யாற், றுருகெழு கரும்பினொண்பூப் போல] வருபுனல் தந்த வெண்மணல் கான்யாறு உரு கெழு கரும்பின் ஒண் பூபோல மேல் ஊன்றிய துகிற்கொடியும் (168) -வருகின்ற நீர் கொண்டுவந்த வெள்ளிய மணலையுடைய காட்டாற்றுக்கரையினின்ற அழகு பொருந்தின கரும்பினது ஒள்ளிய பூவையொக்க மேலூன்றின துகிற்கொடியும், கான் - மணமுமாம். கடைத்தெருவிற்கு இரண்டுபுறத்திலுமெடுத்த கொடிக்கு யாற்றங்கரையும் கருப்பம்பூவும் உவமை கூறினார்.

163 -168 [கூழுடைக் கொழுமஞ்சிகைக் தாழுடைத் தண்பணியத்து வாலரிசிப் பலிசிதறிப் பாகுகுத்த பசுமெழுக்கிற், காழூன்றிய கவிகிடுகின், மேலூன்றிய துகிற்கொடியம்.]

163. கூழ்உடை கொழு மஞ்சிகை - நெல்லையும் அரிசியையுமுடைய அழகிய மஞ்சிகை,

மஞ்சிகை - கொட்டகாரமுமாம்.

(கு -பு.) மஞ்சிகை - ஒருவகைமூங்கிற்பெட்டி.

164, 163. தாழ் உடை தண் பணியத்து மஞ்சிகை - தாழிடுதலையுடைய, தண்ணிய பண்டங்களையுடைய மஞ்சிகை.

நெல்லுப்போல ஏனைப்பண்டங்கள் சிறந்தனவன்மையின், தண்ணிய பண்டமென்றார். பண்டமெனவெ உலகில்விற்கும் பண்டங்களெல்லாம் அடங்கின.

(கு -பு.) தாழ் - தாழ்ப்பாள்.

166, 163. பாகு உகுத்த மஞ்சிகை - பாக்குவெற்றிலை சொரிந்த மஞ்சிகை, இனி, உகுத்தபாகெனமாறி, சிந்தினபாகினையுடைய மஞ்சிகையென்றுமாம்.
என்றது கண்டு சர்க்கரைக் கட்டுப்பாகினை.

(கு -பு.) கண்டுசர்க்கரை - கற்கண்டு.

166, 163. பசுமெழுக்கின் மஞ்சிகை - புதுமெழுக்கினையுடைய மஞ்சிகையிடத்தே,
(கு -பு.) பேழையைச் சாணத்தால் மெழுகுவதுண்டாதலின், மெழுக்கு, கூறப்பட்டது.

165. வால் அரிசி பலி சிதறி - வெள்ளிய அரிசியாகிய பலிகளைத்தூவி,
(கு -பு) பலி - தேவருணவு.

167 -168. காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல் ஊன்றிய துகில்கொடியும் - கால்கள் நட்டுவைத்த கவிந்தசட்டங்களின்மேலே நட்டுவைத்த வெள்ளிய துகிற்கொடிகளும்,
கால்கள் - சட்டங்களைத்தாங்குவன. சிதறி ஊன்றிய மஞ்சிகையிற்கவிந்த கிடுகென்க.

169 -171. பல் கேள்வி துறை போகிய தொவ் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் - பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையையுடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக்கட்டின அச்சம்பொருந்தின கொடிகளும்,

172. வெனில் இளக்கும் களிறு போல - அசையாத கம்பத்தினை அசைக்கும் யானைபோலநின்று, தூங்குநாவாய் (174),

173 -175. [தீம்புகார்த் திரைமுன்றுறைத், தூங்குநாவாய் துவன்றிருக்கை, மிசைக்கூம்பினசைக்கொடியும்:]

173. தீ புகார் திரை முன் துறை - கண்ணுக்குஇனிதாகிய புகாரிடத்துத் திரையினையுடைய துறையின் முன்னே,

174 -175 துவன்று இருக்கை தூங்கு நாவாய் மிசை கூம்பின் நசை கொடியும் - நிறைந்த இருப்பினையுடைய அசைகின்ற நாவாயின் மேல்நட்ட பாய்மரத்தின்மேலெடுத்த விரும்புதலையுடைய கொடிகளும்

176 - 178 [மீன்றடிந்து விடக்கறுத் தூன்பொரிக்கு மொலிமுன்றின் மணற்குவைஇ மலர்சிதறி]

178 மணல் குவைஇ மலர்சிதறி - மணலை மிகப்பரப்பிச் செம்பூக்களையுஞ்சிதறி

176 - 177 மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில் - மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும்பொரிக்கும் ஆரவாரத்தினையுடைய முற்றத்தினையும்,

179 -181 [பலர்புகுமனைப் பலிப்புதவி, னறவுநொடைக் கொடியோடு, பிறபிறவு நனிவிரைஇ]

179 பலி புதவின் - தெய்வத்திற்குக்கொடுக்கும் பலியினையுடைய வாசலினையுமுடைய

179 -181 பலர் புகும் மனை நறவு நொடை கொடியோடு பிறபிறவும் நனி விரைஇ - கள்ளுண்பார்பலருஞ்செல்லும் மனைகளிற் சிறப்புடைக் கள்ளின்விலைக்குக் கட்டின கொடியோடே ஏனையவற்றிற்குக் கட்டினகொடிகளும் மிகக்கலக்கையினாலே செல்கதிர்நுழையா (183) வென்க.

182 பல் வேறு உருவின் பதாகை - பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளும்
182 நீழல் - நறவுகொடைக்கொடியோடே முற்கூறியகொடிகளும் பிறகொடிகளும் பதாகைகளும் விரவுகையினாலே இவற்றினிழலில்,

183 செல் கதிர் நுழையா செழுநகர் வரைப்பின் - செல்கின்ற ஞாயிற்றின்கிரணங்கள் நுழையப்படாத வளவிய ஊரெல்லையிடத்து மறுகு (193)எனக்கூட்டுக.

184 செல்லா நல் இசை அமரர் காப்பின் - கெடாத நல்ல புகழினையுடைய தேவர்கள் பாதுகாவலினாலே

185 -186 [நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங், காலின் வந்த கருங்கறிமூடையும்]

185 நீரில் காலின் வந்த நிமிர் பரி புரவியும் - கடலிலே காற்றான் வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும்

185 -186 நீரில் காலின் வந்த கருங்கறி மூடையும் - கடலிலே காற்றான்வந்த கரிய மிளகுபொதிகளும்

187 வடமலை பிறந்த மணியும் பொன்னும் - மேருவிலேபிறந்த மாணிக்கமும் சாம்பூந‌தமென்னும்பொன்னும்
(கு -பு) சாம்பூந‌தம் - மேருமலையின் தென்பாலுள்ள நாவன்மரத்தின் கனிச் சாற்றிலிருந்து உண்டாயபொன்; சம்பு நாவன்மரம்

188 குடமலை பிறந்த ஆரமும் அகிலும் - பொதியின்மலையிலேபிறந்த
சந்தனமும் அகிலும், புகார்க்குத் தென்மேற்காதலிற் குடமலையென்றார். பொதியின்மலையை; அன்றி மேற்குள்ளமலையென்றுமாம்.
189 தென்கடல்முத்தும் - தென்றிசைக்கடலிற்பிறந்த முத்தும்,
(கு -பு) தென்கடலென்றது தாம்பிரபன்னிநதி கலக்கப்பெற்றகடலை; அந்தப்பாகம் கொற்கைத்துறையென்று வழங்கும்.

189 குணகடல் துகிரும் - கீழ்த்திசைக்கடலிற்படர்ந்த பவளமும்,

190 கங்கை வாரியும் - கங்கையாற்றிலுண்டாகிய பொருளும். அவை யானையும் மாணிக்கமும் முத்தும் பொன்னுமுதலியனவும் பிறவுமாம்.

189 -191 * [காவிரிப் பயனு மீழத் துணவும்]
(கு -பு) காவிரி பயனும் - காவிரிநதியிலிருந்து உண்டாகியபொருளும், ஈழத்து உணவும் - சிங்களதேசத்திலுண்டாகிய நுகரும்பொருள்களும்
--------
* இதற்குப் பழைய உரை கிடைத்திலது.

191 காழகத்து ஆக்கமும் - கடாரத்திலுண்டான நுகரும்பொருள்களும், ஆக்கம், ஆகுபெயர்.

(கு -பு) பர்ம்மாத்தேயம் பண்டைக்காலத்தில் கடாரமென்று வழங்கப் பெற்று வந்ததென்பர்.

192 அரியவும் - சீனமுதலிய இடங்களினின்றும்வந்த கருப்பூரம் பனிநீர் குங்குமமுதலியனவும்.

(கு -பு) சீனம் -சீனதேசம்.

192 பெரியவும் - இவையொழியப் பெரியவையாகிய பலபொருள்களும்,
192 நெளிய ஈண்டி - நிலத்தின்முதுகு நெளியும்படி திரண்டு

193 -195 [வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி, னீர்நாப் பண்ணு நிலத்தின் மேறு, மேமாப்ப வினிதுதுஞ்சி:]

195, 194 ஏமாப்ப நீர் நாப்பணும் நிலத்தின் மேலும் இனிது துஞ்சி. ஏமாப்பினாலே புகாரின்நடுவிடத்தும் கரையினிடத்தும் அழிவின்றி இனிதாகத் தங்குகையினாலே,
(கு -பு) ஏமாத்தல் - இறுமாப்புற்றிருத்தல்.

193 வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின் - செல்வம் தலைதெரியாத அகன்ற இடங்களையுடைய தெருவுகளையும், செழுநகர்வரைப்பிற் (183) புரவிமுதலியனஈண்டித் (192) துஞ்சி (195) மயங்கிய மறுகு (193) என்க.

இனி, இனிது துஞ்சி மீன்பிறழவும் (197) மா ஈண்டவும் (198) என மேலே கூட்டுவாருமுளர்.

196 -217. [கிளைகலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றின் மீன்பிறழவும் விலைஞர் குரம்பை மாவீண்டவுங், கொலைகடிந்துங் களவுநீக்கியு, மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு, நல்லானொடு பகடோம்பியு, நான்மறையோர் புகழ்பரப்பியும், பண்ணிய மட்டியும் பசும்பதங்கொடுத்தும், புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக், கொடுமேழிநசையுழவர், நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவு மொப்ப நாடிக், கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது, பல்பண்டம் பகர்ந்துவீசுந், தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி, வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் ,
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு, மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப், புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்:]

216, 214, 215. பழி தீர் *தேஎத்து முது வாய் ஒக்கல் சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு - குற்றமற்ற பிறதேசங்களிலே அறிவு வாய்த்த சுற்றத்தினையுடைய விழாக்களைநிகழ்த்தின பழையவூரிலுள்ளார் ஈண்டுவந்து குடியேறினாற்போல,

*"செலவினும் வரவினும்" என்னுஞ்சூத்திரத்தால், 'சென்று' என்பது வாதென்னும்பொருடந்தது.
(கு -பு.) விழா - உத்ஸவம்.

214, 217. வேறு வேறு உயர்ந்த புலம் பெயர் மாக்கள் - பலபலசாதிகளாயுயர்ந்த தத்தம்நிலத்தைக் கைவிட்டுப்போந்த மாக்கள்,

216,217. பலமொழி பெருகிய மாக்கள் - பலபாஷைமிக்க மாக்கள், மாக்களென்றார், ஐயறிவேயுடையராதலின். என்றது சோனகர் சீனர் முதலியோரை.

(கு -பு.) ஐயறிவு - ஐம்பொறியுணர்வு. மாக்கள் - மனவுணர்வின்றி
ஐம்பொறியுணர்வையேயுடைய விலங்குபோல்வார். இதனை "மாவு மாக்களுமையறி வினவே", "மக்க டாமே யாறறி வுயிரே" என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானுணர்க; "*பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" என்னும் முல்லைப்பாட்டிலும், "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்" எனவும், "கொலைவினைய ராகிய மாக்கள்" எனவும் வருந்திருக்குறள்களிலும், 'கையறியாமாக்கட்கன்றி நூலியற்றும் அறிவினையுடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தியென்னும் புலவர்பெருமான் புகழ்போல விளங்கிநிற்றலான்' (நன்னூல், "கடலாமடிசீ" என்னுஞ் சூத்திரவுரை) என்னும் சங்கரநமச்சிவாயருடைய உரையிலும் 'மாக்கள்' என்பது இப்பொருள்பட வந்திருத்தல்காண்க.
------------
* தொல்காப்பியம்,. சொல்லதிகாரம், கிளவியாக்கம், 28

217, 213, 217. மாக்கள் பல் ஆயமொடு பதி பழகி கலந்து இனிது உறையும் மறுகின் (193) - இம்மாக்கள் பலதிரளோடே இவ்வூரிடத்தே பழகி ஈண்டைநன்மக்களோடே கூடி நன்றாகவிருக்கும், மறுகெனமுன்னே கூட்டுக.

இவர்களிருத்தலின் வளந்தலைமயங்கிய மறுகுகளாயின.
196 -199 கிளை கலித்து பகை பேணாது வலைஞர் முன்றில் மீன் பிறழவும் விலைஞர் குரம்பை மா ஈண்டவும் கொலை கடிந்தும் களவு நீக்கியும் - மீன்றிரளும் விலங்கின்றிரளும் செருக்கி வலையாற் பிடிப்பாரையும் கொன்று இறைச்சி விற்பாரையும் தமக்குப் பகையாகக்கருதியஞ்சாதே வலைஞர் முற்றத்தே மீன்பிறழ்ந்து திரியும்படியாகவும் விலைஞர் குடிலிலே விலங்குகள் கிடக்கும்படியாகவும் முற்படக் கொலைத்தொழிலை அவர்களிடத்தினின்றும் போக்கியும் பின்னர்க் களவுகாண்பாரிடத்துக் களவுத்தொழிலைப்போக்கியும்,
(கு -பு) விலங்கு - மிருகம். குடில் - குடிசை

200 அமரர்பேணியும் - தேவர்களை வழிபட்டும்

200 ஆவுதி அருத்தியும் - யாகங்களைப்பண்ணி அவற்றான் ஆகுதிகளை அவர் நுகரப்பண்ணியும்,

201 நல் ஆனொடு பகடு ஓம்பியும் - நல்ல பசுக்களோடு எருதுகளைப் பரிகரித்தும்
(கு -பு) பரிகரித்தல் - பாதுகாத்தல்

* "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" † "மெய்தெரி வகையிளெண்வகை யுணவின் செய்தியும் வரையா ரப்பா லான" என்பவற்றால் வாணிகர்க்கு உழவுத் தொழிலுரித்தாகலின் பகடோம்பியுமென்றார். யாகத்திற்குப் பசுவை ஓம்பியுமென்றார்.
(கு -பு) எண்வகையுணவாவன: பயறு, உழுந்து, கடுகு, கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரையென்பன.
--------
* தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 77.
† தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 78

202 நான்மறையோர் புகழ் பரப்பியும் - அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் அவர்க்கு நிலைபெறுத்தியும்,

204, 203 புண்ணியம் பண்ணி அட்டியும் - பெரியதாகிய புண்ணியங்களைத் தாங்கள் பண்ணி அவற்றைச் செய்யமாட்டாதார்க்குத் தானம் பண்ணியும், அம் - அசை. பண்ணிய மட்டியுமென்றதற்குச் சோற்றை ஆக்கியிட்டு மென்பாருமுளர்.
(கு -பு.) அம் 'பண்ணியம்' என்பதிலுள்ளது.

203 பசு பதம் கொடுத்தும் - விளைந்தநெல்லையும் பறிக்குங்கமுகையும் உணவாகக் கொடுத்தும், இதற்கு அரிசியும் கறியும் கொடுத்துமென்பாருமுளர்.

204 முட்டா தண் நிழல் வாழ்க்கை - இங்ஙனஞ்செய்யும் அறத் தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனேவாழும் இல்வாழ்க்கையை யுடைய, நன்னெஞ்சினோ (207) ரென்க.
(கு -பு) முட்டுப்படாத - குறைவுபடாத,

205 - 207 கொடு மேழி நசை உழவர் நெடு நுகத்து பகல் போல நடுவு நின்ற நல் நெஞ்சினோர் - வளைந்தமேழியால் உழவுத்தொழிலை நச்சு தலையுடைய உழவரது நெடிய நுகத்திற்றைத்த பகலாணிபோல நடுவுநிலை யென்னுங்குணம் நிலைபெற்ற நன்றாகிய நெஞ்சினையுடையோர், என்றது ஆண்டுறையும் வேதவாணிகரை.

(கு -பு) மேழி - கலப்பையின் ஓருறுப்பு. பகலாணி – நடுவேயுள்ள ஆணி; "நுகத்திற் பகலனையாய்" என்றார் தஞ்சைவாணன்கோவையிலும்.

209, 211 தம் பல் பண்டமும் பிற பல் பண்டமும் ஒப்ப நாடி - தம்முடையவாகிய பலசரக்குக்களையும் பிறவாகிய பலசரக்குக்களையும் பொருளொப்ப ஆராய்ந்து

208 வடு அஞ்சி வாய்மொழிந்து - தங்குடிக்கு வடுவாமென்றஞ்சி மெய்யேசொல்லி
(கு -பு) பொய்சொல்லுதல் வடு.

210 கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூவும் குறைபடாது - தாங்கொள்ளுஞ் சரக்கையும் தாங்கொடுக்கும்பொருட்டு மிகையாகக்கொள்ளாது தாங்கொடுக்குஞ் சரக்கையும் தாம்வாங்கும்பொருட்குக் குறையக் கொடாமல்

211 பகர்ந்து வீசும் - இலாபத்தை வெளியாகச் சொல்லிக் கொடுக்கும்,
211 தொல் கொண்டி - பழையதாகியகொள்ளையினையும் கொள்ளையென்றார், இந்நெறியை நடத்தினாரிடத்தல்லது பொருட்டிரளுண்டாகாதென்றற்கு.
(கு -பு) கொள்ளை - மிகுதி.

தண்ணிழல் வாழ்க்கையினையும் (204) தொல்கொண்டியினையு (212)முடைய நன்னெஞ்சினோ (207) ரென்க.

212 துவன்று இருக்கை - நெருங்கின குடியிருப்பினையும், காவிரி (6) புனல்பரந்து பொன்கொழிக்கும் (7) பல்லூர் நெடுஞ்சோணாட்டிற் (28) கழிசூழ்படப்பையினையும் (32) தண்டலையினையும் (33) பொய்கையினையும் (38) ஏரியினையும் (39) திண்காப்பினையும் (41) கோயிலை மரசூட்டுவதற்குக் காரணமான(50) அட்டிலினையும்(43) சாலையினையும் (52) பள்ளியினையும்(53) குயில்(55) துச்சிற் சேக்கைக்குக் காரணமான(58) தாழ்காவினையும்(53) பாக்கங்களையும்(27) புறச்சேரியினையும்(76) முன்றிலினையும்(141) விழவறா ஆவணத்தையும் (158) மாக்கள் கலந்து இனிதுறையும் (217) வனந்தலைமயங்கிய மறுகுகளையும்(193) நன்னெஞ்சினோர்(207) துவன்றிருக்கை(218) யினையுமுடைய பட்டின(218) மெ
னவினைமுடிக்க.

218. முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும் -குறைவுபடாத தலைமையினையுடைய பட்டினத்தை எனக்கு உரித்தாகப் பெறுவேனாயினும்,
(கு -பு.)பட்டினம் -காவிரிப்பூம்பட்டினம்.

219. வார் இரு கூந்தல் வயங்கு இழை ஒழிய -நீண்ட கரிய கூந்தலையுடைய விளங்குகின்ற பூணினையுடையாள் ஆண்டுப் பிரிந்திருப்ப,

220. வாரேன் வாழிய நெஞ்சே -யான் நின்னோடுகூடவாரேன்; நெஞ்சே, போய்வாழ்வாயாக;

* "அளிநிலை பெறாஅது" என்னும் அகப்பாட்டால், போக்கிற்ரு ஒருப்படாமல் நிற்குங் குறிப்புணர்க.

220 -221. கூர் உகிர் கொடு வரிகுருளை கூட்டுள் வளர்ந்தாங்கு - கூரிய உகிரினையும் வளைந்த வரிகளையுமுடைய புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து வளர்ந்தாற்போல,
(கு -பு.) உகிர் -நகம். வரி -கோடு.

222. பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி -பகைவர்காவலிடத்தேயிருந்து தனக்குப்பெருமை வயிரமாக முற்றி,
----------
* அகநானூறு, களிற்றியானைநிரை, 5: - "அளிநிலை பெறாஅ தமரிய முகத்தள், விளிநிலை கொளாஅ டமியண் மென்மெல, நலமிகு சேவடி நிலம் வடுக்கொளாஅக், குறுகவந்துதன் கூரெயிறு தோன்ற, வறிதகத் தெழுந்த வாயின் முறுவலன், கண்ணிய துணரா வளவை யொண்ணுதல், வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன், முனிந்த வோமை முதையலங் காட்டுப், பனிங்கத்தன்ன பல்காய் நெல்லி, மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப, வுகிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன், மாய்த்த போல மழுகுநுனைத் தோற்றிப், பாத்தியன்ன பகுதி கூர்ங்கல், விரனுதி சிதைக்கு நிரைநிலை யதரயிற், பரன்முரம் பாகிய பயமில் கான, மிறப்ப வெண்ணுதி ராயி னறத்தா, றன்
றென மொழிந்த தொன்றுபடு கிளவி, யன்ன வாக வென்றுநள் போல, முன்னங் காட்டி முகத்தி னுறையா, வோவச் செய்தியி னொன்றுநினைந்தொற்றிப், பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ, டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத், தூநீர் பயந்த துணையமை பிணையன், மோயின ளுயிர்த்த காலை மாமலர், மணியுரு விழந்த வணியிழை தோற்றங், கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி, யுழைய மாகவு மினைவோள், பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே." என்றது: பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; பாலைபாடிய பெருங்கடுங்கோ.

223 - 225. {அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று, பெருங்கையானை பிடிபுக் காங்கு, நுண்ணிதி னுணர நாடி:}

225. நுண்ணிதின் உணர நாடி - தன்னுணர்வு கூரிதாகவுணரும்படி இதுவேகாரியமென்று ஆராய்ந்து,

224, 223, 224. பெரு கை யானை அரு கரை கவிய குத்தி குழி கொன்று பிடி புக்காங்கு - பெரிய கையினையுடைய யானை தான் அகப்படப்பண்ணின குழியில் ஏறுதற்கரிய கரைகளை இடியும்படி கோட்டாலே குத்திக் குழியைத் தூர்த்துப் பிடியிடத்தே சென்றாற்போல,

(கு - பு.) கோடு - கொம்பு. பிடி - பெண்யானை. 'பிறர்பிணியகத் திருந்து' என்றதனால், இளமைப்பருவத்தில், இவன் பகைவருடைய காவலிலிருந்தானென்று தெரிகின்றது.

225 - 226. {கண்ணார், செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து:} கண்ணார் செறிவுடை திண் காப்பு வாள் கழித்து எறி - அப்பகைவருடைய நெருங்கின திண்ணிய காவலாகிய வாட்படையை ஓட்டி அவ்விடத்தினின்றும் போந்து,

இனி, திண்காப்பிடத்தே வாளை உறைகழித்து வெட்டிப்போந்தென்றுமாம்.

(கு - பு.) வாட்படை - வாளாயுதத்தையுடைய காலாட்படை.

227. உழு கெழு தாயம் ஊழின் எய்தி - பகைவர் அச்சம் பொருந்துதற்குக் காரணமான தன் அரசுரிமையை முறையாலேபெற்று,

228. பெற்றவை மகிழ்தல் செய்யான் - தான் இறையாகப்பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சிபொருந்துதல் செய்யானாய், மேலும் ஆசைமிக்கு,
(கு - பு.) இறை - கப்பம்.

228 - 238. {செற்றோர், கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின், முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா, ளுகிருடை யடிய வோங்கெழில யானை, வடிமணிப் புரவியொடு வயவர் வீழப், பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத், தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு, வேறுபல்பூனையொ டுழிஞை குடிப், பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச, மாக்க ணகல * யதிர்வன முழங்க, முனைகெடச் சென்று முன்சம முருக்கி.}

230 -231. முடி உடை கரு தலை புரட்டும் முன்தான் உகிர் உடை அடிய - முடியையுடைய கரியதலைகளையுருட்டும் முன்காலில் உகிருடைய அடிகளையுடையவாய்,

234, 235, 228, 229, 231, 232, தூறு இவர் துறு கல் போல உழிஞை சூடி செற்றோர் கடி அரண் தொலைத்த யானையொடு - தூறிபடர்ந்த நெருங்குன மலைகள்போல உழிஞையைச்சூடித் தம்மரசராற் போர்பெற்றாருடைய காவலையுடைய அரண்களையிடித்த யானைகளோடும்,
(கு - பு.) உழிஞை - பகைவருடைய மதிலைவளைத்தற்கு அறிகுறியாக அணியப்படுமாலை; "எயில்காத்த னொச்சி, யதுவளைத்த லாகு முழிஞை" என்பதனாலுணர்க. புறத்திணைமாலைகளை வீரர்களுக்கேயன்றி யானை குதி
ரைகளுக்கும் ஆயுதங்களுக்கும் சூட்டுதல்மரபு. அரண் - கோட்டை

229, 231 கதவு கொல் மருப்பின் ஓங்கு எழில் யானை – கதவை முறிக்கும் கொம்பினையும் உயர்ந்த அழகினையுமுடைய யானையென்க.

232 வடி மணி புரவியொடு - வடித்த மணிகட்டின குதிரைகளோடும்,

234 போர்வேட்டு - போரைவிரும்பி,

236 -237 பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் மா கண் அகல் அறை அதிர்வன முழங்க - பேயின்கண்ணையொத்த முழங்குகின்ற காவலை யுடையமுரசம் பெருமையை உடைத்தாகிய இடத்தையுடைய பாசறையிலே நடுங்குவனவாய் முழங்க.அகலறை - மலைப்பக்கமுமாம்.
(கு -பு) பேய்க்கண் - வட்டவடிவமுள்ளதாக நூல்கள் கூறும்.

238 முனைகெடசென்று - பகைப்புலங் கெடும்படி சென்று

233, 232, 238 பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப வயவர் வீழ முன் சமம் முருக்கி - பெரிய நல்லவானிடத்தே பருந்து உலாவித்திரியும் படியாக வீரர்படும்படி முற்பட்ட தூசியைக்கெடுத்து. யானைகளோடும் புரவிகளோடும் போர்வேட்டு முரசு முழங்கச்சென்று பருந்து உலாய்நடப்ப வயவர்வீழ முருக்கியென்க.
(கு -பு) தூசி - முற்படை

239 தலை தவ சென்று - அப்பகைவர் அரணிடத்தே மிகநடந்து
(கு -பு) தலை - இடம்

239 -242 [தண்பணை யெடுப்பி வெண்பூக் கரும்பொடு செந்நெனீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை] வெண்பூ கரும்பொடு செந்நெல் நீடி குவளையொடு மாஇதழ் நெய்தலும் மயங்கி காரம் கலித்த கண் அகல் பொய்கை தண்பணை எடுப்பி - வெள்ளிய பூக்களையுடைய கரும்புகளுடனே செந்நெல்லும்வளர்ந்து குவளையோடே பெருமையையுடைய இதழ்களையுடைய நெய்தலுமயங்கப்பட்டு முதலைகள் செருக்கித் திரிந்த இடமகன்ற பொய்கைகளையுடைய தண்ணியமருதநிலத்துள்ள குடிகளையோட்டி,

243 -244 [கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிர், செறுவும் வாவியு மயங்கி நீரற்று:] செறுவும் வாவியும் நீரற்று மயங்கி வேறு பல் பூளை (235) யொடு கொழு கால் புதவமொடு செருந்தி நீடி - செய்களும் வாவிகளும் நீரற்றுத் தம்மில் ஒன்றாய் இருவகைப்பட்ட பலவாகிய பூளைகளோடே கொழுவிய தண்டுகளையுடைய அறுகோடே கோரைகளும் வளரப்பட்டு, வேறுபல்பூளை, இங்கேகூட்டிற்று. சிறுபூளையும் பெரும்பூளையுமுண்மையின், 'வேறுபல்பூளை' என்றார்.
(கு -பு ) செய் - வயல்

245.அறு கோடு இரலையொடு மான்பிணை உகளவும் - அறல்பட்ட‌ கொம்பினையுடைய புல்வாய்க்ககலையொடு மான்பிணை துள்ளி விளையாடும்படியாகவும்,
(கு -பு.) புல்வாய் -ஒருவகைமான். கலை -ஆண்மான். தலைதவச்சென்று தண்பணையெடுப்பி (239) நீடி (240) உகளவு(245) மென்க.

246 -249.[கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி, ய‌ந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ; வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்:]

கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி மெழுக்கம் அந்தி மாட்டிய நந்தாவிளக்கின் மலரணி கந்து உடை பொதியில் - பகைவர்மனையோராய்ப் பிடித்துவந்த மகளிர் பலரும் நீருண்ணுந்துறையிலே சென்றுமுழுகி மெழுகுமெழுக்கத்தினையும் அவர்கள் அந்திக்காலத்தேகொளுத்தின அவியாத விள‌க்கினையுமுடைய பூக்களைச்சூட்டின தறியினையுடைய அம்பலம்,
கந்து -தெய்வம் உறையுந் தறி.

பொதியிலைமெழுகி விள‌க்குமிட்டிருக்க பகைவர்மகளிரைவைத்தார். அத‌னால் தமக்குப் புகழுளதாமென்றுகருதி.

(கு -.பு.) 'மெழுகும்' என்பது வருவிக்கப்பட்டது. கொண்டி -கொள்ளுதல். தறி -தூண். அம்பலம் -பொதுவிடம்.

249,248,249. வம்பலர் பலர் ஏறி தொழ சேக்கும் பொதியில் - புதியவர்கள் பலருமேறித் தொழுதற்குத்தங்கும் பொதியில்,

250 -251. பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டி பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் - அத்தெயவமுறையும் அமபலத்தினின்ற பருத்த‌ நிலைமையினையுடைய நெடிய‌தூண் சாயும்படி தம்புடம்புரிஞ்சிப் பெரிய‌ நல்ல களிறுகளுடனே பிடிகள் கூடித்தங்கும்படியாகவும்,
(கு -பு.) களிறு -ஆண்யானை.

'252 -255. [அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின், முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த, திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும், பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து:] தெருவில் அருவிலை நறு பூ தூஉய் முதுவாய் கோடியர் முழவொடு புணர்ந்த திரி புரி நரம்பின் தீ தொடை ஓர்க்கும் பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து - ஆண்டுள்ள தெருவின்கண்ணே விலைகூறுதற்கரிய நறியபூக்களைச்சிதறி அறிவுவாய்த்தலையுடைய கூத்தருடைய மத்தளத்தில் தாளத்தோடேகூடின முறுக்குதல்
புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடைய யாழைக்கேட்கும் பெரிய‌ திருநாளின்றாகிய அச்சமுதிர்ந்த மன்ற‌த்திடத்தே, தூஉய் ஓர்க்குமென்க. தொடை, ஆகுபெயர்.
(கு.பு.) தொடை - கட்டு; யாழிசைக்கானமையின், ஆகுபெயர்.

256 -257.*[சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி, ய‌ழல்வா யோரி ய‌ஞ்சுவரக் கதிர்ப்பவும்:]

(கு -பு.)சிறு பூ நெருஞ்சியோடு - சிறிய பூக்களையுடைய நெருஞ்சிக‌ளோடு, அறுகை பம்பி - அறுகம்புற்கள் பரப்பப்பெற்று. அழல் வாய் ஓரி - கொடிய வாயையுடைய நரிகள், அஞ்சு வர கதிர்ப்பவும் - பிறர்க்கு அச்சம் தோன்ற மிக்குமுழங்கவும்.

258. அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் - இசைக்கு வருந்திக் கூப்பிடுகின்ற குரலையுடைய கூகைகளுடனே கூடி ஆண்டலைப்புள் கூப்பிடும்படியாகவும்,

(கு -பு.) கூகை - கோட்டான். ஆண்டலைப்புள் - ஆண்மக்களுடைய‌ தலைகளைப்போன்ற வடிவமுடைய ஒருவகைப்பறவை.

259 -260. கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ பிணம் தின் யாக்கை பேய்மகள் துவன்றவும் - திரட்சிகொண்ட ஆண்பேய்க‌ளுடனே மயிரைத்தாழ்த்து இனைத்துப் பிண‌த்தைத்தின்னும் வடிவையுடைய‌ பேய்மகள் நெருங்கும்படியாகவும்,

261. கொடு கால் - வளைந்த கால்களையுடைய, பேய்மகள் (260) என முன்னேகூட்டுக.

262,261,262. விருந்து மாடத்து நெடு கடை துவன்றி உண்டு ஆனா பெரு சோறு அட்டில் - விருந்தினர் மாடத்திடத்து நெடிய தலை வாசலிலே முற்பட நெருங்கியிருந்து பின்பு உள்ளேசென்று உண்டு மிக்குக்கிடக்கின்ற‌ பெரியசோற்றையுடைய அடுக்களை,

(கு -பு.) விருந்தினர் - புதியராய்வந்தவர், அடுக்களை - மடைப் பள்ளி.

263 -264. ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் - சாந்திட்ட சுவர்களையுடைய நன்றாகிய‌ அகங்களின் உயர் திண்ணைகளிலேயிருந்து பசியகிளி வார்த்தை சொல்லுதற்குக் காரணமாகிய பால்நிறைந்த வளவியவூர், திண்ணை, விகாரம். இனி உய‌ர்திணை, உய‌ர்ந்த மேனிலமென்றுமாம்.

(கு -பு.) அகம் - வீடு, 'திண்ணை' என்பது 'திணை' என்று ஆன‌மையின், விகாரம்; இடைக்குறை.

265 -267. [தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக், கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட, வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து:] கொடு வில் எயினர் தொடுதோல் அடியர் துடி பட குழீஇ கொள்ளை உண்ட உணவு இல்வறு கூடு உள்ளகத்து இருந்து - கொடிய வில்லினையுடைய வேடர் செருப்புத் தொட்ட அடியினையுடையராய்த் துடியொலிப்பத் திரண்டு கொள்ளை யாகக் கொண்டுண்ட நெல் பின் இல்லையான வறுவிய கூட்டினுடைய உள்ளாகிய இடத்தேயிருந்து,
(கு -பு) துடி - உடுக்கை. கூடு - தானியச்சேர்
---------
* இதற்குப் பழைய உரை கிடைக்கவில்லை.

268 வளைவாய் கூகை நன்பகல் குழறவும் - வளைந்த வாயினையுடைய கூகை அடியொத்தகாலத்தே கூப்பிடும்படியாகவும் செழுநகர் (264) அட்டிலிடத்துக் (262) கூட்டினுள்ளேயிருந்து (267) கூகை குழறவு (268) மென்க.

269 -279 [அருங்;கடி வரைப்பி னூர்கவி னழியப் பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற] அரு கடி வரைப்பின் ஊர் கவின் அழிய மருங்கு அற பெரு பாழ் செய்தும் அமையான் - அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவர்படைவீடுகள் அழகழிய அவர்கள்குலமின்றாகப் பெரிய பாழாகப்பண்ணியதனாலும் செற்றம் ஆறானாய்.

*(கு -பு) செற்றம் - தணியாக்கோபம்.
பெற்றவை மகிழ்தல்செய்யானாய் - (228) மேலும் ஆசைமிக்கு யானைகளோடும் (231) புரவிகளோடும் (232) போர்வேட்டு (234) முரச (236) முழங்கச் (237) சென்று முன்சமமுருக்கித் (238) தலைதவச்சென்று எடுப்பி (239) உகளவும் (245) உறையவும் (251) கதிர்ப்பவும் (257) விளிப்பவும் (258) குழறவும் (268) துவன்றவும் (260) பாழ்செய்தும் (270) ஊர்கவினழியப் (269) பாழ்செய்தும் அமையானா (270) யென வினைமுடிக்க.

பாழ்செய்தல் இரண்டிடத்தும் கூட்டுக.

271 -272 மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என - இவன் தெய்வத்தன்மையுடையனாதலின் இம்மலைகளையெல்லாம் அகழ்தலைச்செய்வன்; கடல்களையெல்லாம் தூதலைச்செய்வன். தேவருலகைக் கீழ்வீழ்த்தலைச்செய்வன்; காற்றை இயங்காமல் விலக்குவனின்று உலகத்தார் மேற்கூறும்படியாக துறைபோகலின் (273) என்க.

பெரும்பாழ்செய்தும் அமையானாய் இங்ஙனம் பாழ்செய்தவன் மேல் இவையுஞ்செய்வனென்று கூறும்படியாகத் துறைபோனானென்றவாறு.

(கு -பு) அகழ்தல் - தோண்டுதல்.

273 தான் முன்னிய துறை போகலின் - தான்கருதிய போர்த்துறை களெல்லாம் பொருதுமுடித்தானாகலின்,

274 பல் ஒளியர் பணிபு ஒடுங்க - பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து தம் வீரம் குறைய,
ஒளியராவார் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரியவேளாளர்

275 தொல் அருவாளர் தொழில் கேட்ப - பழைய அருவாளநாட்டிலரசரும் தாங்கள் செய்யுந்தொழிலை வநந்துகேட்ப
(கு -பு) அருவாளநாடு - கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று.

276. வடவர் வாட - அதற்கு வடக்குநாட்டிலுள்ள அரசர் குறைய,
(கு -பு.) அதற்கு வடக்குள்ளநாடு - அருவாள் வடதலை.

276. குடவர் கூம்ப - குடநாட்டிலுள்ளார் மனவெழுச்சி குறைய,

277 - 291. [தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர், மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் புன்பொதுவர் வழிபொன்ற விருங்கோவேண் மருங்குசாயக், காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப், பிறங்கு நிலை மாடத் துறந்தை போக்கிக், கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇப், பொருவேமெனப் பெயர் கொடுத், தொருவேமெனப் புறக்கொடாது, திருநிலைஇய பெருமன்னெயில்:]

281. புன் பொதுவர் வழி பொன்ற - புல்லிய இடையராய் அரசாள்வோர் கிளைமுழுதுங் கெட்டுப்போக,

(கு -பு.) கழுவுனென்னும் அரசனொருவன் இடையர்களுக்குத் தலைவனாக இருந்தானென்றும் அவனைத் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையென்னும் சேரராசன் வென்றானென்றும் தெரிகின்றது; "ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமயங்க", "பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று" என்பவற்றாலும் இவற்றின் உரையாலுமுணர்க; (பதிற். 71, 88).

282. இருங்கோவேள் மருங்கு சாய - ஐம்பெருவேளிர் குலமுழுதுங் குறைய,

(கு -பு.) வேளிர் - குறுநிலமன்னர்; ஐம்பெருவேளிராவார்; திதியன், எழுனி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநனென்பார்; "சினங்கெழுதிதியன், போர்வே லியானைப் பொலம்பூ ணெழினி, நாரரி நறவி னெருமை யூரன், றேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தி, னிருங்கோ வேண்மா னியறேர்ப் பொருநன்" என்னும் அகப்பாட்டானுணர்க; 36.

283. காடு கொன்று - சோழமண்டலத்திற் காடாகிய இடங்களை வெட்டிப்போகட்டு,

283. நாடு ஆக்கி - பண்டுபோலக் குடியிருந்து விளையப்பண்ணி,

284. குளம் தொட்டு - தூர்ந்தகுளங்களைக் கல்லி,

284. வளம் பெருக்கி - நாட்டிற்குச் செல்வத்தைமிகுத்து,

285. பிறங்கு நிலை மாடத்து உறந்தைபோக்கி - பெரிய நிலைகளையுடைய மாடங்களையுடைய உறந்தையென்னுந் தன்னூரைப்போக்கி,
(கு -பு) உறந்தை - உறையூர். போக்கி - விருவுறச்செய்து.

286. கோயுலொடு குடி நிறீஇ - கோயில்களோடே பழைய குடிகளையும் பண்டுபோல நிலைநிறுத்தி,

291. திரு நிலைஇய பெரு மன் எயில் - திருமகணிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தையின் மதிலிடத்தே,

287. வாயிலொடு புழை அமைத்து - பெரிய வாசல்களோடே சிறிய‌
வாசல்களையுமுண்டாக்கி,

288. ஞாயில் தொறும் புதை நிறீஇ - அதன்றலையில் எய்துமறையும் சூட்டுத்தோறும் அம்புக்கட்டுக்களையும் கட்டிவைத்து,

290,289,277,278,280,277. ஒரு வேம் என‌ப் புறக்கொடாது பொருவேமெனப் பெயர்கொடுத்து மன்னர் மன் எயில் கதுவும் மதன்உடை நோன் தாள் மாத் தானை மற மொய்ம்பின் தென்னவன் திறல்கெடச் செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிச் சீறி - யாம் தமியேமென்றுகருதிப் பல‌வரசர்கள்வந்தால் முதுகிடாது அவர்களுடன் பொரக்கடவேமென வஞ்சினத்தைச்சொல்லி அரசருடைய பெரிய அரண்களைக் கோபித்தழிக்கும் செருக்கினையுடைய வலிய முயற்சியினையும் பெருமையினை-யுடைய நாற்படையினையும் மறத்தையுடைத்தாகிய வலியினையுமுடைய பாண்டியனது வலிகெடும்படி தன் செய்யகண்ணாலே குற்றத்தைச்செய்துபார்த்துக் கோபித்து, பெற்றவை மகிழ்தல் செய்யான் (228) என முன்னே கூட்டுக.

"கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக், குடிபழி தூற்றுங் கோலே னாகுக" * என்றுகூறும் வஞ்சினத்தாற் றனக்கு ஓர் பெயர்பெறுத‌லின் வஞ்சினத்தைப் பெயரென்றார்.

(கு -பு.) வஞ்சினம் - சபதம்.

292 -294. [மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி, விசிபிணி முழவின் வேந்தர் சூடிய, பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்கால்:]

293,292,293,294. விசி பிணி முழவின் வேந்தர் தம் ஒளி மழுங்கி மின் ஒளி எறிப்பத் சூடிய கழல் கால் - இறுகவலித்த வார்க்கட்டினையுடைய‌ முரசுகளையுடைய வழிபாடில்லாத வேந்தர் தம்மரசிழத்தலிற் றமக்கு முன்புள்ள விளக்கங்கெட்டு பின்பு அவ்விளங்குகின்ற விள‌க்கம் தோன்றும்படியாகத் தம் முடிமேலேசூடின வீரக்கழலையுடைய காலினையும்,

(கு -பு.) வலித்த - கட்டின.

294. பசுமணி பொருத பரேர் எறுழ்க் கழல் *** மணிகளோடே மாறுபட்ட பெரிய அழகிய வலியினையுடைய கழலென்க.

295 -297. பொற்றொடி புதல்வர் ஒடி ஆடவும் முற்றிழை மகளிர் ................ திளைப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பின் - பொன்னாற் செய்த தொடியினையுடைய புதல்வர் ஓடிவந்து ஏறி விளையாடுகையினாலும் மெய்ம்முழுதுமணிந்த அணிகலங்களையுடைய மகளிர்.......................... சேர்தலாலும் சிவந்தசந்தனமழிந்த மார்பினையும்,

297. ஒண்பூண் - ஒள்ளிய பேரணிகலங்களையும்,

298. அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் - சிங்கவேற்றையொத்த வருத்தத்தையுடைய வலியினையுமுடைய,
--------
* புறநானூறு, 72.

299. திரு மா வளவன் - திருவின் பெருமையையுடைய கரிகாற் பெருவளத்தான்,

திண்காப்பு வாள்கழித்தேறிக் (226) காடுகொன்று நாடாக்கிக் (283) குளந்தொட்டு வளம்பெருக்கி (284) உறந்தைபோக்கிக் (285) குடிநிறீஇப் (286) பெருமன்னெயிலிலே (291) வாயிலொடு புழையமைத்து (287) ஞாயிறொரும் புதை நிறீஇ (288) இங்ஙனம் உருகெழுதாயம் ஊழினெய் தித் (227) தென்னவன்றிறல்கெடச்சீறி (277) அவன் திறையாகத்தந்த அரசவுரிமைகளாற் பெற்றவையில்தான் மகிழ்தல் செய்யானாய் (228) மேலுமாசைமிக்கு இவன் மலையகழ்க்குவன், தூர்க்குவன்(271), வீழ்க்குவன், மாற்றுவனென்று உலகம் கூறும்படியாக (272) உழிஞைசூடி (235), யானையோடும் (231) புரவியடும் (232) சென்று முருக்கி (238) எடுப்பிப் (239) பெரும்பாழ்செய்தும் அமையானாய்ப் (270) பணிபொடுங்கக் (274) கேட்ப (275) வாடக் கூம்பப் (276) பொன்றச் (281) சாயத் (282) தான் முன்னியதுறைபோகையினாலே (273) வழிபடா ஏனைவேந்தர் (293) தம்மொளிமழுங்கி மின்னொளியெறிப்பச் (292) சூடிய (293) காலினையும் (294) மார்பினையும் பூணினையும் (297) துப்பினையு (298) முடைய
கரிகாற்பெருவளத்தா (299) னென வினைமுடிக்க.

299 -300. தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம் - பகை வரைக்கொல்லுதற்கு அறுதியிட்டுவைத்த வேலினும் கடியவாயிருந்தனகாடு;
(கு -பு.) அறுதியிட்டு - முடிவுசெய்து.

300 -301. அவன் கோலினும் தண்ணிய தட மெல் தோளே - அவன் செங்கோலினும் குளிர்ந்திருந்தன பெரிய மெல்லிய தோள்கள்.

நெஞ்சே, (220) இவனை நேசமுடன் கொண்டு செல்வோமென்னின், கானம் அவன் (300) ஓக்கிய (299) வேலினும் வெய்யவாயிராநின்றன (300) இவடோள் (30*) அவன் (300) கோலினும் தண்ணிய (301); இவளைப் பிரியாதுறைதலி* யான்போதற்கு ஆற்றாவாயிராநின்ற; ஆதலால், பட்டினம்பெறினும் (2**) வ**கிழை ஈண்டுப்பிரிந்திருப்ப (219) யான் நின்னுடன்வாரேன்; இனி ஆண்டுப்போய் வாழ்வாயாக (220) வென வினைமுடிக்க.

'வாரேன்' என்றான் அவளை ஆற்றுவித்துப் பின்பு பிரிதல்கருதி; அது, *"செலவிடை யழுங்கல்செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சியாகும்" என்பதனாலுணர்க.

(கு -பு.) "செலவிடை" என்னும் சூத்திரத்திற்குப் பொருள்: செலவு இடை அழுங்கல் - தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல், செல்லாமை அன்று - பிரிந்துபோதலாற்றாமைக்கன்று; வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும் - தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்ததவிர்ச்சியாகும். எ -று.
---------
* தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல், 44.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலைக்கு மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
--------

வெண்பா.

    முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
    இச்சக் கரமே யளந்ததால் - செச்செய்
    அரிகான்மேற் றேனெறொடுக்கு மாய்புனனீர் நாடன்
    கரிகாலன் கானேருப் புற்று.

(கு -பு.) மு சக்கரமும் - மூன்று உலகங்களையும், அளப்பதிற்கு நீட்டிய கால் - அளத்தற்பொருட்டு நீட்டப்பெற்ற காலானது, இ சக்கரமே அளந்தது - இந்த மண்ணுலகத்தைமட்டும் அளந்தது, செ செய் - செம்மையையுடைய வயலின் கண்ணுள்ள, அரிகால் மேல் - நெற்கதிர் அரிந்த தாளின் மேலே, தேன் தொடுக்கும் - வண்டுகள் தேனடைவைக்கப்பெற்ற, ஆய்புனல் நீர்நாடன் - அழகிய புனலையுடைய காவிரி பாயப்பெற்ற நாட்டையுடையவனான, கரிகாலன் - கரிகாற்பெருவளத்தானது, கால் நெருப்பு உற்று - பாதம் நெருப்புத் தீண்டப்பெற்றமையின். எ -று. மூன்றுலகத்தையும் அளத்தற்குரிய பெருமை வாய்ந்த கரிகாற்பெருவளத்தானுடைய பாதமானது நெருப்புத் தீண்டப்பெற்றமையின் இப்பூவுலகத்தை மட்டும் அளந்தது; இதனால், இவன் திருமாலைப்போலவானென்று கூறியபடி. இளமைப்பருவத்தில் நெருப்பில் வீழ்ந்தமையின், இவனுடைய கால் கரிந்துபோயிற்றென்றும், அதனாலேதான் இவன் கரிகாலனென்று பெயர் பெற்றானென்றுங் கூறுவர்; இதனை, "சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும், பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்காற், செயிரறு செங்கோல் செலீஇயினா னில்லை, யுயிருடையாரெய்தா வினை" (105) என்னும் பழமொழி வெண்பாவாலும், 'இளமைப் பருவத்துப் பிறராற்சுடப்பட்டு உயிருய்ந்துபோகிய கரிகாலனும் இரும்பிடர்த்தலையாரென்னும் பெயருடைய தன்மாமனைத் தனக்குத் துணையாகப் பகறுதாலால், பின்னொருகாலத்தின்கண் தன்னுரிமையரசுபெற்றுக் குற்றமற்ற செங்கோலை நடாத்தினான்; ஆதலால், உயிருடையார் எய்தாத்தொருநல் வினைப் பயனில்லை' என்றும் அதனுரையாலும் உணர்க.
-----------



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்