ஆத்திச்சூடி வெண்பா
நீதிநெறி நூல்கள்
Back இராமபாரதி இயற்றிய
ஆத்திச்சூடி வெண்பா
Source:
இராமபாரதி செய்த "ஆத்திச்சூடி வெண்பா".
இது தெல்லிப்பழை இ.முத்துக்குமாரசுவாமிக்குருக்களால் பரிசோதித்தது.
நல்லூர் பிரமஸ்ரீ பண்டிதர். வே. கநகசபாபதியையர்
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் தெல்லிப்பழை இ. பாலசுப்பிரமணியையர்
என்பவர்களாலெழுதப்பட்ட கதைகளோடு. இ. சிவராமலிங்கையரால்
சோதிடப்பிரகாச யந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
பிலவ வருடம் ஆடி மாதம்,
-----------------------------------------------------------
உ
உபக்கிரமணிகை.
ஆத்திச்சூடி வெண்பா என்பது ஔவையாருடைய ஆத்திச்சூடியிலுள்ள "அறஞ்செய விரும்பு" முதலிய சூத்திரங்களை இறுதியாகக் கொண்டு வேண்பாயாப்பினாற் செய்யப்பட்ட காரணம்பற்றி வந்த பெயர். இது செய்தவர் இராமபாரதி என்பவர், பார்த்தசாரதி யென்பாருமுளர். இராமபாரதி என்பது
என்னும் வெண்பாவாற் பெறப்படும். பாரதியென்னும் பட்டப் பெயர் வேதியர்க்கு வழங்கப்படுதல்பற்றி இவர் ஒரு வேதியரென்று கொள்வாருமுளர். இவரைப்பற்றி வேறொன்றும் புலப்படவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு சூத்திரங்களும் ஒவ்வொரு கதைகளாக எத்தனையோ பல கதைகள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அக்கதைகளுள்ளே மிகப் பலகதைகள் பாரதராமாயண புராணங்களிலே காணப்படுவன. மிகச் சில வேறிடத்துள்ளன. சில சூத்திரங்கள் தற்காலம் அச்சிடப்பட்டிருக்கும் ஆத்திச்சூடிப் பிரதிகளோடு மாறுபடுகின்றன. அவை, "மண்பறித்துணைணேல்" "இயங்கித்திரியேல்" "நேர்கோநெறிநில்" "போற்றடிப்பிரியேல்" முதலியன். அவைகளை இருந்தவாறே விடுத்தேம்.
இது கதைகளோடும் அச்சிடப்படுமாயின்; இங்குள்ள தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு உபயோகமாகுமென்று கருதி வெகுநாட் பிரயாசத்தோடும் பல நூல்களினின்றும் அவ்வக்கதைகளை எழுதுவித்துச் சேர்த்து இப்போது இதனை அச்சிடுவித்தோம். சில கதைகள் புலப்படவில்லை.கதைகளோடும் எழுதப்பட்டிருத்தலால் மாணாக்கரன்றி மற்றையோரும் விரும்புவாரென்பது நம் கருத்து.
இதன்கண் வருங் கதைகளுள்ளே பல கதைகளைப் பிரயாசை கருதாது பரோபகாரங்கருதி நல்லூர் பண்டிதர் பிரமஸ்ரீ. வே. கனகசபாபதியையரவர்களுஞ் சுன்னாகம் ஸ்ரீ. அ. குமாரசுவாமிப் புலவரும் எழுதி உபகரித்தார்கள்.
தெல்லிப்பழை : இங்ஙனம்,
பிலவ வருஷம், ஆடி மாதம். இ. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்.

கதாநுக்கிரமணி.
உ
சிவமயம்.
காப்பு.
உலகம் புகழ்பாகை யோங்குதொண்டை நாட்டிற்
றிலகன் கணபதிமால் செல்*வன்*-நலமிகுந்த
வாழ்வாகும் புன்னை வனநாத னற்றமிழ்க்குச்
சூழாத்தி சூடி துணை.
___________
அறஞ்செயவிரும்பு.
கபிலைகதை.
உத்தரபூமியிலே குடிதாங்கினான் என்னும் பெயருடைய இடையனாலே மேய்க்கப்பட்ட பசுக்களுள்ளே கபிலை என்னும் பசு ஒன்று தனியே மேயும்படி ஒரு நாள் ஒருகாட்டிற் போயிற்று. அதனை ஒரு புலி கண்டு தனக்கு நல்லுணவு கிடைத்ததென்று தடுத்துக் கொல்ல முயன்றது. அப்போது கபிலை அப்புலியை நோக்கிப் பலதருமங்களையும் போதித்து விலகிக்கொண்டது.
___________
ஆறுவதுசினம்.
சடபரதர்கதை
பரதர் என்னும் அரசரானவர் உலகப்பற்றினை முற்றுத்துறந்து காட்டிற்பகுந்து தவஞ்செய்யும்போது ஸ்நாநஞ்செய்யும்பொருட்டுக் கண்*டகியாற்றங் கரைக்குப் போனார். அப்போது பூரணகர்ப்பமுடைய மானுமொன்று தண்ணீர் குடிக்க அங்கே வந்து ஒரு சிங்கத்தின் முழக்கங்கேட்டு அஞ்சி நடுநடுங்கித் தன்கர்ப்பத்தையும் விழவிடுத்து விரைந்தோடிற்று. கருப்பத்திலிருந்த குட்டியும் நீரிலே மிதந்து நீந்திற்று. அதுகண்ட பரதரும் அக்குட்டியின்மேலே பெரிதும் இரக்கம்வைத்து அதனை எடுத்துப் பேணி வளர்ப்பவர் தம்மைவிட யாருமில்லையென்று எண்ணினவராய் ஆதரவோடும் எடுத்துவந்து வளர்த்தார். அவர் சிந்தனையெல்லாம் அந்த மான்குட்டிமேலே இருந்தபடியால் அவருக்கு மரணகாலத்திலும் அச்சிந்தனையே மேலிட்டது. அச்சிந்தனைகாரணமாகப் பின்னர் அந்த மிருகயோனியிற் பிறந்து முன்னைச் சென்மவுணர்வு சிறிதுங் குறையாமல் அம்மிருக சென்மத்துக்குக் காரணமான கன்மநீக்கத்தை நினைத்துக்கொண்டு தம் சென்ம பூமியாகிய காலாஞ்சனம் என்னும் தேசத்தைவிட்டுச் சாளக்கிராமம் என்னும் இடத்தையடைந்தார். அங்கே மானின் சென்மம் நீங்கிவிடப் பின்னர் அங்கிராமுநிவர் மரபிற் பிறந்து யாதொரு தொழின் முயற்சியுமின்றிச் சடம்போலச் சுக துக்கமுமறியாதிருந்தமைபற்றிச் சடபரதர் எனப்பட்டுச் சுற்றத்தாரால் வயலுக்குக் காவற்காரராக நியமிக்கப்பட்டார்.
அப்போது ஒரு சூத்திரன் புத்திரப்பேற்றினைவிரும்பிக் காளிதேவிக்குப் பலிகொடுக்கும்படி ஒருவனை நியமித்துவைத்திருக்க அவனும் விதிவசத்தினாலே தப்பியோடிவிட்டான். அச்சூத்திரன் அவனைத்தேடிப் போகும்போது இப்பரதர் எதிர்ப்பட இவரையே பலியிடும்படி காளிக்குமுன்னே கொண்டுபோய் நிறுத்தினான். அப்போது காளிதேவி இப்பரதருடைய பிரமதேசசுவினாலே தகிக்கப்பட்டுக் கோரவடிவத்தோடுதோன்றி இவரைப் பலியிடத் துணிந்தோருடைய இரத்தங்களை குடித்து நடித்தாள். அக்காலத்திலே நிமி என்னும் அரசன் (இரகுகணன் என்பாருமுளர்) ஞானோபதேசம் பெறக்கருதிக் கபிலமுநிவருடைய ஆச்சிரமத்தை நோக்கிச் செல்லும்போது இப்பரதருடைய மேன்மையை அறியாது தன் சிவிகையைச் சுமக்கும்படி பிடிக்க அதற்கும் உடன்பட்டுத் தான்கொண்ட விரதமுந் தவறாது கோபமுங் கொள்ளாது மெல்லமெல்ல நடந்து ஓருயிர்க்கும் இறுதிவாராமற் காத்து அவ்வரசன் முதலிய பலரானுஞ் சீவன்முத்தா என நன்கு மதிக்கப்பட்டார்.
-----------------------
இயல்வதுகரவேல்.
அரிச்சந்திரன்கதை.
சூரியகுலத்துள்ள திரிசங்குமகாராசாவின் மகனாகிய அரிச்சந்திரன் தன் மனைவியாகிய இந்துமதியை விற்றும் புலையனுக்குத் தான் அடிமையாகப் பெற்றுந் தன்னுடைய சத்திய நிலையிலே தவறாது நடந்தான்.
-----------------------------
ஈவதுவிலக்கேல்.
மாவலிகதை.
விரோசனன் மகனாகிய மாவலி என்னும் அசுரனானவன் மூவுலகங்களுக்கும் அரசனாக வரம்பெற்று அரசுசெய்யுங்காலத்திலே தம்முலகங்களை இழந்த தேவர்கள் யாவரும் விட்டுணுமூர்த்தியையடைந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். விட்டுணுமூர்த்தியும் காசிபன் அதிதி என்னும் இருவருக்கும் மகனாகப் பிறந்து வாமனரூபத்தோடும் மாவலியிடம் போய் மூவடி மண்கேட்டார். மாவலியும் மூவடிக்கும் உடன்பட்டு நீர்விட்டுக் கொடுக்கும்போது குருவாகிய சுக்கிராசாரியர் வண்டுவடிவங்கொண்டு சென்று நீர்விடுங்கரக மூக்கிலிருந்து தடுத்து விட்டுணுமூர்த்தியின் தர்ப்பைநுனியாற் குத்துண்டு கண்ணிழந்தார்.
_____________
உடையதுவிளம்பேல்.
சடாயுகதை.
காசிபமுனிவருக்கு வினதையென்பவளிடத்திலே கருடன், அருணன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அருணனுக்குச் சமபாதி, சடாயு என இருபிள்ளைகள் பிறந்தார்கள். இந்தச்சடாயு தசரதனுக்கு நண்பனாதலாற் சீதா பிராட்டியை இராவணன் கவர்ந்துகொண்டு போனபோது தன்சிறகிலே பெலமுண்டென்று சொல்லி இராவணனோடு தடுத்துப்போராடி அவனுக்கு வருத்தத்தை யுண்டாக்கினான். உண்டாக்கியும் பின்னர் இராவணனாலேயே சிறகு வெட்டப் பட்டுப் பூமியிலே விழுந்தான்.
_________________
ஊக்கமதுகைவிடேல்.
பகன்கதை
தருமன் முதலிய பாண்டவர்கள் ஐவரும் வேதத்திரகீயநகரத்திலே போய் ஆண்டுள்ள வேதியர் வீடொன்றிலே வாசஞ்செய்தகாலத்திலே அந்நகருக்குச் சமீபமாயுள்ள ஏகசக்கிரம் என்னுங் காட்டிலிருந்துகொண்டு பகன் என்னும் இராட்சதன் குடிக்கொரு பண்டிசோறும் நரபலி ஒன்றுந் திறைவாங்கி உண்டு வந்தான். இப்படி உண்டுவருங் காலத்திலே பாண்டவர்கள் இருக்கும் வீட்டார் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. அவ்வீட்டுப் பிராமணன் மனைவி தன்னுடைய குலமுதல்வனாகிய ஒரேமகனைப் பலிகொடுப்பது எப்படி என்று வருந்தினாள். அதனை அறிந்த குந்திதேவி அவளுடைய துன்பத்தையாற்றித் தன் மகனாகிய வீமனையே பலிக்கு நியமிக்க வீமனும் உடன்பட்டு அவ்வீட்டார்கொடுத்த சோற்றினையும் வண்டியிலேற்றிக்கொண்டுபோய் அவனைச் சமீபித்தவுடன் அச்சோற்றினையுமுண்டு அதுகண்டு கோபித்து வந்தெதிர்த்த அந்தப் பகனையும் ஊக்கமுடன் கொன்றான்.
____________
எண்ணெழுத்திகழேல்.
துருவன்கதை.
சுவாயம்பு மனுவின்மகனாகிய உத்தாநபாதனுடைய மனைவியராகிய சுருதி. சுநீதி என்னும் இருவருள்ளே சுருதி என்பவளிடத்திலே உத்தமன் என்பவன் பிறந்தான். சுநீதி என்பவளிடத்திலே துருவன் என்பவன் பிறந்தான். ஒருநாள் உத்தாநபாதனாகிய பிதாச் சிங்காசநத்திலே வீற்றிருக்கும்போது அவன்மடியிலே மகனாகிய உத்தமன் என்பவன் ஏறியிருந்தான். அப்போது மற்றமகனாகிய துருவன் என்பவனும் ஏறினான். அதுகண்ட சுருதி என்பவள் அவனைநோக்கி நீ பட்டத்துகுரியையல்லை; சிங்காசநத்திலேறாதே என்று தடுத்தாள். சுருதி என்பவளிடத்தேயுள்ள காதலால் அரசனும் அதற்குடன்பாடுடையவனாயிருந்தான். அதுகண்ட துருவன் மிகவும் மனம்நொந்து நடந்த சம்பவத்தைத் தாய்க்கு வந்தறிவித்துத் தாயின் சம்மதியோடு சத்தமுனிவரையடைந்து உபதேசம் பெற்றுத் தவஞ்செய்து கிரக நட்சத்திரங்களையெல்லாம் பிணித்த திகிரியைக் கணக்கின்படி சுற்றியிழுத்து விளங்கும் உயர்பதவியை விட்டிணுவாற் பெற்று மாதாவோடு மேம்பட்டான்.
___________________
ஏற்பதிகழ்ச்சி.
இதன் கதையை "ஈவதுவிலக்கேல்" என்புழிக் காண்க.
__________________
ஐயமிட்டுண்.
_________________
ஒப்புரவொழுகு.
_________________
ஓதுவதொழியேல்.
வியாசர்கதை.
முன்னொருகாலத்திலே பராசரமுனிவர் பல சிவஸ்தலங்களைந் தரிசித்துப் பல தீர்த்தங்களிலும் ஸ்நாநஞ்செய்து பூமிப்பிரதக்கிணஞ்செய்து வருகையிலே கெளதமை (கங்கையென்பார் சிலர்) என்னும் யாற்றிலுந் தீர்த்தமாடினார். தீர்த்தமாடியபின் கவுதமையாற்றினைக் கடந்துபோக ஓடம்விடுதற்கு யாருங் கிடையாமல் அங்குள்ள வலைஞர்மகளாகிய மச்சகந்தி என்பவளை ஓடம்விட இயலுமா என்று கேட்டார். மச்சகந்தி ஆயிரம்பேருடைய பாரமமைந்தாலன்றி இந்த ஓடம்விடுதல் அரிதென்றாள். பராசரமுனிவர் ஆயிரம்பேருடைய பாரத்தையும் யானே அமைப்பேன் என்றுசொல்லி ஓடம்விடுவதற்கு அவளை உடம்படுத்தி ஏறிச் சென்றார். செல்லும்போது அந்த மச்சகந்தியிடத்திலே இச்சைமிகுந்தவாராய்ப் பனியினாலே சூரியனைமறைத்து மீன்மணம்போய் நறுமணங்கமழும்படி பரிமளங்கொடுத்துப் பரிமளகந்தியாக்கி அவளைப் புணர்ந்தார். அப்போது வியாச முனிவர் அம்மச்சகந்தியிடத்திலே அவதரித்தார். வியாசமுனிவர் மச்சகந்தியிடத்திற பிறந்தும் வேதம் முதலியவைகளை ஓதுதலினாலே ஞாநம் பெற்றுயர்ந்தார்.
_____________________
ஒளவியம்பேசேல்.
உத்தரன்கதை.
பாண்டவர்கள் விராடனுடைய மச்சநாட்டிலே அஞ்ஞாதவாசஞ் செய்யுங் காலத்திலே விராடன்மகனாகிய உத்தரன் என்பவன் தன்னகரத்திலே பசுக்கவர வந்தவர்களை இமைப்பொழுதுள்ளே வெற்றிகொள்வேன் என்று தாய்முதலிய பெண்களுக்குச் சொல்லிவந்தும் போரிலே பயந்தோடித் தேர்விட்டுவந்த அருச்சுனனாற் பிடித்துக் கட்டப்பட்டான்.
______________
அஃகஞ்சுருக்கேல்.
சிட்டுக்குருவிகதை.
ஒருகடற்கரையிலே சேவலும் பேடுமாக இரண்டு சிட்டுக்குருவிகள் வாசஞ்செய்தன. பேடு தன் முட்டைகளையெல்லாம் பலமுறையுங் கடல்வந்து கவர்ந்துகொண்டு போகக்கண்டு துக்கங்கொண்டு தன் நாயகனாகிய சேவலுக்கு முறையிட்டது. சேவல் பறைவைகளையும் அழைத்துக்கொண்டுபோய்ப் பறவை வேந்தனாகிய கருடனுக்கு முறையிட்டது. கருடன்போய் விட்டுணுமூர்த்திக்கு முறையிட்டது. விட்டுணுமூர்த்தி கடலைவருவித்து முட்டைகளைச் சிட்டுக்குருவிடங் கொடுக்கும்படி கட்டளை செய்தார்.
________________
கண்டனசொல்லேல்.
_______________
ஙப்போல்வளை.
அரிட்டம்-காகம். காகங்கள் யாதேனும் உணவைக் காணும்போது தம்மினத்தினையும் அழைத்து உண்பது வழக்கம்.
____________
சனி நீராடு.
-----------------------
ஞயம்படவுரை.
பட்டணத்துப் பிள்ளை கதை.
பட்டணத்துப் பிள்ளையார் சிவஸ்தல யாத்திரையாகப் பலநாடுகளுக்கும் போய்க் கொங்குநாட்டில் வந்தபோது ஒருநாள் அர்த்த ராத்திரியிலே பசியினால் வருந்தி மூர்க்கனான ஒரு இல்லாச்***** வாயிலிலே நின்று கையிலே* தட்டினார். அவன் இவர் ஒரு சிவயோகி என்றறியாது யாரோ காமதூர்த்தன் என்றெண்ணிக்கொண்டு விரைந்து வந்து தடியினாலே அடித்தான். அடிக்கும்போது பிள்ளையார் நின்றநிலைதானும் பெயரவில்லை. சிவ சிவ என்றார். அப்போது அடுத்த வீட்டுப் புறத்திண்ணையிற் கிடந்த கிழவன் ஒருவன் ஓடிவந்து அம்மூர்க்கனை நோக்கி ஏடா! பேதையே! இவர் ஒரு சிறந்த சிவயோகி! இவருக்கேன் இத்தீங்கு செய்தனை! என்று விலக்கிப் பிள்ளையாரை அழைத்துக்கொண்டுபோய் அன்போடும் உண்பித்துப் பெரிதும் உபசரித்தான். அப்போது பிள்ளையார் திருவருளை நினைத்துப் "பூணும்பணிக்கல்ல" "இருக்குமிடந்தேடி" என்னும் பாக்களைப் பாடினார்.
-----------------------------------
இடம்படவீடெடேல்.
-----------------------------
இணக்கமறிந்திணங்கு.
விக்ரமாதித்தன்கதை.
விக்ரமாதித்தன் கூரியபுத்தியுடைய ஓர் அரசனாயிருந்தும் விசயன் என்னுந் தட்டான் ஒருவனைத் தனக்குச் சிறந்த நட்பாளனாகக்கொண்டு நடந்தான். அவன் மந்திரியாகிய பட்டி என்பவன் இதனை அறிந்து தட்டானுறவு தப்பாது தீங்கு பயக்கும் என்று தடுத்தும் தீவினையனுபவிக்கும் ஊழ்வசத்தால் அரசன் கேட்கவில்லை. அரசன் அத்தட்டான் கற்றிருந்த இந்திரசாலம், மகேந்திரசாலம் என்னும் வித்தைகளை அவனிடத்திலே கற்றுக்கொண்டு, தான் கற்றிருந்த பரகாயப் பிரவேசவித்தையை அத்தட்டானுக்குக் கற்பித்தான். தட்டானோ அரசனை வஞ்சித்து இராச்சியபோகங்களைத் தான் அநுபவிக்க வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தான்.
இப்படியிருக்கும் நாளிலே அரசன் மந்திரியைவிடுத்துத் தனியேசென்று வேட்டையாடும்படி காட்டிற்போயிருந்தான். இதுவே சமயமென்று தட்டானும் அக்காட்டினை அடைந்தான். பின் அரசன் தட்டான் என்னும் இருவருங் கூடி வேட்டையாடிக்கொண்டு ஒரு குளக்கரையிலே நின்ற ஓர் ஆலமரத்தின் நிழலை அடைந்தார்கள். அரசன் ஆயாசத்தினாலே தட்டான் மடியிலே தலையை வைத்துப் படுத்துக்கொண்டு மேலே பார்த்தான். அவ்வாலமரத்திலே ஆணும் பெண்ணுமாக இரண்டு கிளிப்பறவைகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தன. அப்போது ஆண்கிளி சடிதியாக இறந்துவிடப் பெண்கிளி அதன் பிரிவாற்றாது மிகவருந்திற்று. அதனைச் சீவகாருண்ணியமுடைய அரசன் பார்த்துப் பெண்கிளியின் துயரைத் தீர்க்கக்கருதிப் பரகாயப்பிரவேசவித்தையினாலே தன்னுடலை விடுத்து ஆண்கிளியினுடலிற் பிரவேசித்தான். உடனே ஆண்கிளி எழுந்து பெண்கிளியை மகிழ்வித்தது. அரசனுடல் கிடந்தது. தட்டானும் சமயம் வாய்த்தது என்று தனக்கு அரசன் கற்பித்த பரகாயப்பிரவேச வித்தையைக் கொண்டு அரசனுடலிலே புகுந்து பட்டணத்தையடைந்தான். இவைகளைக் குறிப்பினால் அறிந்த மந்திரி அரசன்மனைவியர் கற்புக்குப் பங்கம்வாராது உபாயஞ்செய்து கொண்டான். கிளியுடலிற் பிரவேசித்த அரசன் மகதநாட்டிலே போய் ஒரு வேடன் வலையிலகப்பட்டு பின் ஒரு செட்டிக்கு விற்கப்பட்டு ஒருதாசியின் விகாரத்திலே வருந்திக் கிளியுருநீங்கித் தன்னுருவம் பெற்றான்.
----------------------------------------------
தந்தைதாய்ப்பேண்
கருடன்கதை.
காசிபமுனிவருடைய மனைவியர்களுள்ளே கத்திரு என்பவள் அநந்தன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடன் அருணன் என்னும் இருவரையும் பெற்றாள். ஒருநாள் இவ்வினதை கத்திரு என்னும் இருவரும் ஓரிடத்திலே இருக்கும்போது அங்கே இந்திரனுடைய உச்சைச்சிரவம் என்னுங் குதிரை வந்தது. அக்குதிரையின் வாலைக் கத்திரு பார்த்து கருமை என்ன வினதை வெணமை என்றாள். இவ்வாறு இருவரும் முரணி ஏவள் வார்த்தை மெய்ம்மையாகுமோ அவளுக்கு மற்றவள் அடியாளாகக் கடவுள் ……… ….. …… (Proof Reader: Pls include the missing characters. I can’t read from image ) எனச் சபதமுங் கூறினர். பின்னர் கத்திரு தன்மகனாகிய கார்க்கோடகன் என்னும் பாம்பினால் அவ்வாலைச் சுற்றிக் கருமையாக்குவித்துக் காண்பித்து வினதையைத் தனக்கடிமையாக்கினாள். பின்னர்க் கருடன் அமுதங் கொண்டுவந்து கத்துருவின் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தாயாகிய வினதையின் அடிமையை நீக்கினான். அந்தணன்கதை வந்துழிக் காண்க.
----------------------------
நன்றி மறவேல்.
-----------------
பருவத்தே பயிர் செய்.
------------------------------------
மண்பறித்துண்ணேல்.
-----------------------
இயங்கித் திரியேல்.
---------------------------------
அரவமாட்டேல்.
பரீக்கிதுகதை.
அருச்சுனனுடைய மகன் அபிமன்னு. அபிமன்னுவின் மகன் பரீக்கிது. அந்தப் பரீக்கிது மகாராசன் காட்டிலே வேட்டைக்குப்போய் ஒரு மானை எய்தான். அந்தமான் அம்பு பட்டுந் தப்பியோடிற்று. அதனைத் தேடிப் பார்க்கும்போது சமீகர் என்னும் முனிவர் எதிர்ப்பட்டார். அவரை நோக்கி மானை விசாரித்தான். அவர் யாதொன்றும் பேசவில்லை. அவர் பேசவில்லை என்று கோபங்கொண்டு செத்துக் கிடந்த பாம்பொன்றை எடுத்துக்கொண்டுபோய் அவருடைய தலையிலே போட்டுவிட்டுப் போனான. பின் அவருடைய மகன் அதனை அறிந்து சொல்லிய சாபப்படி தக்கன் என்னும் பாம்பினாற் கடிக்கப்பட்டிறந்தான்.
-----------------------------
இலவம்பஞ்சிற்றுயில்.
-----------------------------------------
வஞ்சகம்பேசேல்.
கண்ணன் மக்கள் கதை
துவாரகையிலே கண்ணபிரான் தருமராசனுக்கு வேள்விகளை முடித்துத் தன்பதஞ்சாருதற்கு நினைத்திருக்குங் காலத்திலே அவரைக் காண விரும்பித் துருவாசர், விசுவாமித்திரர், நாரதர்முதலிய முனிவர்கள் வந்தார்கள். அப்போது யாதவகுமாரரிற் சிலர் சாம்பவன் என்பவனை ஒரு கர்ப்பஸ்திரிபோல அலங்கரித்து அம்முனிவர்களுக்கு முன்னே நிறுத்தி "இப்பெண் என்னபிள்ளை பெறுவாள்? சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். அம்முனிவர்கள் இவர்களுடைய கபடத்தை அறிந்து கோபங்கொண்டு "இக்கருப்பத்தினின்று ஒருமுசலம் பிறக்கும். அந்தமுசலத்தாலே இந்த யாதவகுலமெல்லாம் நாசமாகும்" என்று சாபஞ் சொல்லிவிட்டுக் கண்ணபிரானையும் காணமல் வந்த வழியே திரும்பிப்போய் விட்டார்கள். மற்றைநாள் யமதண்டம்போன்ற ஓருலக்கை சாம்பன் வயிற்றினின்றும் பிறந்தது. அவ்வுலக்கையைக் கண்ட யாதவர்களெல்லாம் அஞ்சி நடுநடுங்கிக் கண்ணபிரானுடைய பிதாவாகிய வசுதேவருக்கு நடந்த காரியத்தை அறிவித்தார்கள். வசுதேவர் அவ்வுலக்கையை அரத்தால் அராவிப் பொடியாக்கி அப்பொடிகளைக் கடலிலே இடும்படிசொன்னார். யாதவர்களும் அவ்வாறே செய்துமுடித்து முனிவர்சாபத்தைக் கடலிலே கரைத்து விட்டோம் என்று நினைத்திருந்தார்கள்.
பின்னர் அந்தப் பொடிகளெல்லாம் அலையினாலொதுக்கப்பட்டுக் கரையிலே வந்து வாட்கோரைப் புல்லாக முளைத்து வளர்ந்திருந்தன. அந்த இரும்புப் பொடிகளுள்ளே கடலைவிதையளவு பிரமாணமுடைய ஒருதுண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டு உலுப்தகனென்னும் வேடன்கையிலகப்பட அவன் அத்துண்டினைத் தன்னம்பொன்றின் நுனியிலே வைத்திருந்தான். பின்னர்க் கண்ணபிரானும் பலராமனும் யாதவரும் கடற்கரையிற்போய்க் கடனீரிலாடிக் கடற்றெய்வத்துக்குப் பூசையும் விழாவுநடத்தினார்கள். நடத்தியபின் பலராமனுங் கண்ணபிரானுந் தவம்புரியுமாறு காடுநோக்கினர். நைவேதித்த கள்ளினை அதிகமாக உண்டயாதவர்கள் வெறியினாலே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசிக் கோபமூள இருப்புலக்கைப் பொடியினாலே அங்கே முளைத்திருந்த அவ்வாட்கோரைகளைப் பிடுங்கி ஒருவருக்குருவர் அடிக்க எல்லோரும் இறந்தார்கள். இக்கதை மகாபாரதத்து மெளசலபருவத்திலுஞ் சீகாழிப்புராணத்திலும் அற்ப வேறுபாட்டுடன் காணப்படும். சாபஞ்சொன்னவர் கபிலர் என்றும், துருவாசர் என்றுஞ் சொல்வாருமுளர்.
_________________
அழகலாதனசெய்யேல்.
வணாசுரன்கதை.
காசிபமுனிவருக்குத் திதி என்பவளிடத்திலே இரணியகசிபு இரணியாக்கன் என்னும் இருவரும் பிறந்தார்கள். இரணியகசிபுவுடைய பிள்ளைகள் பிரகிலாதன், அநுகிலாதன் முதலிய நால்வர். பிரகிலாதன் பிள்ளைகள் ஆயுண்மான் விரோசனன் முதலிய நால்வர். விரோசனனுடைய பிள்ளை மாவலி. மாவலிக்குப் பிள்ளைகள் நூறுபேர். அவருள்ளே வாணன் என்பவனும் ஒருவன். இந்த வாணன் என்பவன் திருக்கைலாச மலையிற்சென்று சிவனுடைய திருநடனத்திற்கு மத்தளம் அடித்துச் சிவனை மகிழ்வித்துத் தான் என்றுங் கண்டு வணங்கும்படி தன்னுடைய சோணிதபுரவாயிலிலே வந்து வீற்றிருக்கும்படி செய்தான். செய்தும் அழகலாதவைகளைச் செய்து பலரோடும் போராடி இறுதியிலே விட்டுணுமூர்த்தியாலே கைகளெல்லாம் இழக்கப்பெற்றான்.
____________
இளமையிற்கல்.
காளிதாசன்கதை.
அரிகரபுரத்திலுள்ள அனந்தநாராயணன் என்னும் விப்பிரனுக்கு அரிகரன் என்னும் பெயருடைய புத்திரனெருவனிருந்தான். அப்புத்திரன் அதிக மூடனாக ஆடுமேய்க்க நியமிக்கப்பட்டு மேய்க்கும் நாள்களிலே ஒருநாள் ஆடுகளுண்ணும் குழைக்காக ஒரு மரத்திலேறி நுனிக்கொம்பிலிருந்து அடிக்கொம்பைத் தறித்தான்.
கல்வியிலே வாதுசெய்து தன்னை வெல்லுகிறவனையே விவாகஞ்செய்ய நிச்சயித்திருந்த ஓரிராசகுமாரியோடு வாதுசெய்து தோல்விபெற்ற வித்துவான்கள் சிலர், இவனை மரத்தினின்றும் இறக்கிக்கொண்டுபோய் அவ்விராசகுமாரிக்கு வித்துவான் என்று காட்டி அங்கீகரிக்கச்செய்தார்கள். அவ்விராசகுமாரி வித்துவான்கள்செய்த அமடுகளெல்லாம் அறிந்து காளிதேவியிடம்போய் வரம்பெறும்படி அவனை அனுப்பினாள். அப்படியே அவன் காளிதேவியிடம்போய் வரம்பெற்று வித்துவானாய்க் காளிதாசன் என்னும் பெயரும்பெற்றுப் போசராசனுடைய சபை வித்துவான்களுக்குத் தலைவனாக விளங்கினான்.
இப்படிப் போசராசனுடைய சபையிலே பலநாளிருந்து பின் யாதோ ஒரு காரணத்தால் அவனை வெறுத்துத் தன்னுடைய தாசிவீட்டிலேபோய் மறைந்திருந்தான். அப்போது போசராசன் காளிதாசனை வெளிப்படுத்தக் கருதி ஒரு சுலோகத்திற் பாதியைமுடித்து மற்றப்பாதி முடிப்பவனுக்கு தன்னரசாட்சியிற் பாதி கொடுக்கப்படும் என்று பிரசித்தஞ்செய்தான். இதனை அறிந்த அந்தத் தாசி காளிதாசனைக்கொண்டு மற்றைப்பாதியை முடிப்பித்து அரசாட்சியின் பாதியைத் தானே பெறக்கருதிக் காளிதாசனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுலோகப்பாதியைக் கொண்டுபோய்ப் போசராசனுக்குக் காட்டினாள்.
____________________
அறனைமறவேல.
பத்திரகிரிராசன் -கோவிந்தசாமி என்பனுடையமகன்; அரசனாயிருந்து பட்டணத்துப்பிள்ளையுடைய அருளினாலே துறவுபூண்டவன். சனகன் – துரவு போண்ட ஓரரசன். விதுரன் - வியாசனுக்கு அம்பாலிகையிடம் பிறந்தவன்.
__________________
அனந்தலாடேல்.
____________
கடிவதுமற.
இரணியன்கதை.
இரணியன் தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வரம்பெற்று மூவுலகுக்கும் அரசனாய் இரணியனேநம என யாவருந் தன்னை வணங்கும்படி கட்டளை யிட்டான். அவன் மகனாகிய பிரகிலாதன் அதனைமறுத்து ஓநமோநாராயணாய என்று சொல்லி வாதாடினான். அவனைநோக்கி உனது நாராயணன் இத்தூணிலும் இருப்பானோ என்று சொல்லி இரணியன் அத் தூணிலே தன்கையால் அடித்தான். அப்போது விட்டுணுமூர்த்தி அத்தூணிலிருந்து நரசிங்கமாகத்தோன்றி அவனைக்கொன்றார்.
_____________
காப்பதுவிரதம்.
சிலாதன்கதை.
முன்னொரு காலத்திலே திருமறைக்காட்டிலே இருந்த ஒரு பிராமணச் சிறுவர் தம்வீட்டிலே பிச்சைக்குவந்த மற்றொரு பிராமணணுடைய பிச்சையன்னத்துக்குள்ளே ஒரு சிறுகல்லையிட்டு விட்டார். அந்த பிராமணன் அவ்வன்னத்தை அக்கல்லோடுதானே கொண்டுபோய் உண்டான். பின்னர் இச்சிறுவர் வளர்ந்து சாத்திரங்களும் படித்துத் தவங்களுஞ் செய்து கோரதவசி எனப் பேரும் பெற்று அட்டசித்திகளிலும் வல்லராய் யமபுரத்திலும் போய் அங்கே செய்யுந் தண்டனைகளையும் பார்தது வருகையிலே அங்கே ஒரு பெரிய மலையைக் கண்டு இம்மலை யாதென்று வுனாவினார். அப்போது அங்கேநின்றசிலர் அவரை நோக்கிப் "பூமியிலே கோரதபசி என்றொரு பாவி பிச்சைக்குவந்த ஒரு பிராமணனுடைய அன்னத்திலே ஒருகல்லையிட அக்கல்லோடு பிராமணன் அவ்வன்னத்தையுண்டான். அக்கல்லே அக்கோரதபசி இறந்தபின் உண்டற்கு இங்கே மலையா வளர்கின்றது" என்றார்கள். அதனைக் கேட்ட கோரதபசி அஞ்சி அதுசெய்தவன் இதினின்று தப்பிக்கொள்ளும் வகையுளதோ என்று வினாவினான். "பூமியிலே இவ்வளவோர் மலையைக் கரைத்துண்பானாயின்; இம்மலைய*ம் தானாக இங்கே கரைந்துவிடும்" என்றார்கள். கோதரபசி உடனே பூமியிலேவந்து தன்னூரை அடைந்து ஒரு மலையை நியமித்துச் சிறிதுசிறிதாக நாடோறும் இடித்துப் பொடியாக்கி நீரிற்கரைத்து உண்டுவந்தார். அம்மலை உண்டொழிய இயமபுரத்திலுள்ள மலையுங் கரைந் தொழிந்தது. அக்கோரதபசி மலையைக் கரைத்துண்ட காரணத்தாற் சிலாதர் என்னும் பெயர் பெற்றார்.
இந்தச் சிலாதர் புத்திரப்பேற்றினை விரும்பித் திருவையாற்றிலே பஞ்சாக்கினி மத்தியினின்று பலவருடங்களாகத் தவஞ்செய்தார். அத்தவத்திற் கிரங்கிச் சிவபெருமானும் வெளிப்பட்டு முனிவனே! உனக்கு வேண்டும் வரம் யாதென்று வினாவச் சிலாதமுனிவர் ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டுமென்றார். சிவ பெருமான், "சகலகுணங்களும் நிறைந்த ஒரு சற்புத்திரன் பதினாறுவயதுடையவனாய் நீ செய்யும் யாகபூமியிலே உழுபடைச்சாலிலே தோன்றுவான்" எனச்சொல்லி மறைந்தார். பின்னர் யாகசாலையை உழுதபோது ஒரு மாணிக்கப்பெட்டி தோன்றிற்று. சிலாத முனிவர் அப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே நெற்றிக் கண்ணுஞ் சந்திரசடாமுடியும், சதுர்ப்புயமுமாக விளங்குஞ் சிவமூர்த்தம் இருக்கக்கண்டு துதித்து நின்றார். அப்போது "முனிவனே! பெட்டியை மூடித்திற" என்றோர் அசரீரி தோன்றிற்று. பின்னர் அந்த அசரீரிப்படி மூடித் திறந்தார். அப்பொழுது பெருமான் ஒரு குழந்தையாக அழுதார். சிலாதமுனிவர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய்ப் பிராமணர்க்குரிய கிரியைகளெல்லாஞ்செய்து செப்பீசுவரர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். வளர்த்துவருங்காலத்திலே பதினாறாம் வயசும் வந்தது. பதினாறுவயசென்னும் நியமத்தைக் குறித்துத் தந்தையார் வருந்தினர். புத்திரர் அவர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல்லி அயனரிதீர்த்தநடுவினின்று ஸ்ரீருத்திரத்தை ஓதி அருந்தவஞ் செய்தார். அப்போது சிவபிரான் வெளிப்பட்டு நித்தியமாகிய சாரூப்பியங் கொடுத்து தமது நாமமாகிய நந்தி என்னும் நாமத்தையுஞ் சூட்டி சுகேசி என்னுங் கன்னிகையையும் மணம்புணர்வித்துக் கணத்தலைமையுங் கொடுத்துத் தமது கோயில் வாயிலிலே காவல்செய்யும்படி சுரிகையும் பிரம்புங் கொடுத்து முடிசூட்டி வைத்தார்.
____________________
கிழமைப்படவாழ்.
கம்பர்கதை.
கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் ஏரெழுபதென்னும் பிரபந்தம் பாடியபோது தொண்டைமண்டலத்துள்ள வேளாளர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்று இதற்கு எங்களாலே தரத்தக்க வேறுபரிசு யாதொன்றுமில்லை எங்களையடிமையாக உமக்குத் தருவதே பரிசாகும் என்றுசொல்லிக் கம்பருக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்தார்கள்.
__________________
கீழ்மையகற்று.
________________
குணமதுகைவிடேல்.
__________________
கூடிப்பிரியேல்.
அருச்சுனன் கதை.
பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருக்கும்போது ஒரு தூதன் வந்து யாதவகுமாரர் யாவரும் கடல்விழாக் கொண்டாடிக் கள்ளுக்குடித்துத் தம்முள்ளே பகைத்துப் போராடி இறந்தார்கள் என்றும், கண்ணபிரானும் பலதேவனும் தவம் புரியுமாறு காட்டிற்புகுந்தார்கள் என்றுஞ் சொன்னான். அதுகேட்ட பாண்டவரும் பெண்களும் பெருந்துயரடைந்து புலம்பினார்கள். அவருள்ளே அருச்சுனன் மிகுவிரைவாகத் துவாரகைக்குப் போய் வசுதேவனையும் பெண்களையும் கண்டு புலம்பி அவர்களுக்கும் ஆறுதல்கூறிப் பின் காட்டிற்புகுந்து கண்ணபிரானையும் பலதேவனையுந் தேடியபோது அவர்களுடைய உடம்புகண்மாத்திரமிருக்கக் கண்டு விழுந்து புரண்டழுது கண்ணபிரானுடைய பேரனாகிய வச்சிரமேவனைக்கொண்டு அந்தியக்கர்மங்களைச் செய்வித்தான். செய்வித்தபின் ஏழுநாளுள்ளே துவாரகை கடலாற் கொள்ளப்படும் என்று முன்னரே கண்ணபிரான் சொன்னபடி நடக்குமென்றஞ்சி அங்கே இருக்கவிடாமல் கண்ணன்மனைவியரையும் நகரத்தாரையும் அழைத்துக்கொண்டு துவாரகையை நீங்கிப் பஞ்சவடம் என்னும் இடத்திலே வரப் பொழுதும்பட்டது. அப்போது அவர்கள் துவாரகையிலேயிருந்து கொண்டு வந்த திரவியங்களையும் பெண்களின் ஆபரணங்களையும் கண்டு சில வேடர்கள் அங்கே வந்து பறித்தார்கள். அப்போது தடுத்து வில்லிலே அம்புபூட்டி அருச்சுனன் பிரயோகஞ் செய்தும் கண்ணன்சார்பிழந்தமையாற் பயன்படவில்லை.
-----------------
கெடுப்பதொழி.
இராமன் கதை.
விட்டுணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமச் சந்திரன் கிட்கிந்தைமலையிலே குரங்குகளுக்குத் தலைவனாயிருந்த வாலியென்பவனை அவன்தம்பியாகிய சுக்கிரீவன் பொருட்டு மறைந்துநின்று பாணப்பிரயோகஞ் செய்து கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்ட வாலி பின்னர் உலுப்தகன் என்னும் வேடனாகப்பிறந்து விட்டுணுவின் மற்றோரவதாரமாகிய கண்ணபிரானை ஒரு காட்டிலே படுத்திருக்கும்போது உள்ளங்காலிலே பாணப்பிரயோகஞ்செய்து கொன்றான்.
-------------------------------
கேள்விமுயல்.
----------------
கைவினைகரவேல்.
முற்கலமுநிவர்கதை.
பிரம்மதேவருடைய மநத்திலே பிறந்த முநிவர் பதின்மர். அவர் மநு, மரீசி, புலத்தியன், தக்கன், புயகன், அங்கிரா, வசிட்டன், பிருகு, அத்திரி, கிருது, என்பவர். அவருள்ளே அங்கிரா என்னும் முநிவர்கணத்தோர் முப்பத்துமூவர். அவர் அங்கிரசு, மாந்தாதா, புருகுச்சன், முற்கலன் முதலியோர். அவருள்ளே முற்கலமுநிவர் தவஞ்செய்யுங்-காலத்திலே அத்தவத்தைக் கெடுக்க நினைத்த இந்திரன் வாட்படையைக் கொண்டுபோய் அம்முனிவருக்கு முன்வைத்தான். அம்முற்கலமுநிவர் அவ்வாட்படையை எடுத்து மரங்களையன்றிப் பலமிருகங்களையும் வெட்டிக் கொன்றார். வாளெடுத்து வெட்டிய காரணத்தினாலே தம்முடைய தருமமுந் தவமுமிழந்து நரகயாதனையும் பெற்றார்.
---------------------------------------------------
கொள்ளைவிரும்பேல்.
துரியோதனன்கதை.
பாண்டவர்கள் விராடபுரத்திலே வசிக்கும்போது விராடனுடைய பசுக்கவரவந்த துரியோதனன்பக்கத்தார்க்கும் விராடன்பக்கத்தார்க்கும் யுத்தம் நடந்தது. அப்போது துரியோதனனும் வந்து பேடிவடிவத்தோடும் அங்கே இருந்த அருச்சுனனாலே முடியும் பங்கப்பட்டுத் தோல்வியும் பகற்றுத் துயருமடைந்தான்.
----------------------------------
கோதாட்டொழி.
செம்பியன்கதை.
சாரமாமுனிவர் என்பவர் திரிசிராமலையையடைந்து சிவபூசைசெய்துவரும் நாள்களிலே ஒருநாள் அங்கே நாககன்னிகைகள் கொண்டுவந்து பூசித்த சுகந்தமுள்ள செவ்வந்திமலரைக்கண்டு தாமும் அம்மலர்களாற் பூசிக்கவிரும்பி அக்கன்னிகைகளோடும் பாதலத்திற்போய் அந்தச் செவ்ந்திச்செடிகளைக் கொண்டு வ வந்துந்து அங்கே உண்டாக்கி அம்மலராற் புசித்துவந்தார். அக்காலத்திலே அரசனாக உறையூரிலேயிருந்த பராந்தகன்என்னுஞ் சோழன் அம்மலர்களைப்பறித்துத் தன்னிச்சைப்படி உபயோகப்படுத்தினான். அதனைஅறிந்த அம்முனிவர் சிவபெருமானுடைய சந்நிதியையடைந்து முறையிடச் சிவபெருமான் அவனுடைய உறையூரிலே மண்மாரிபெய்யச் செய்தார். மண்மாரிபெய்து நகரழிதலைக்கண்ட அவ்வரசன் மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்னகரை விட்டோடினான். ஓடியுஞ் சிவபூசைக்குரிய பூவைக் கவர்ந்த குற்றத்தினாலே நகரோடழிந்து நரகமடைந்தான். செம்பியன் - சோழன்.
--------------------
சக்கரநெறிநில்.
தண்டகன்கதை.
மனுமரபிலே தோன்றிய தண்டகன் என்பவன் தன்னாட்டினைத் தருமமுந்தயையுமின்றி அரசுசெய்துவருநாளிலே குருவாகிய சுக்கிரன் தவஞ்செய்யுங் காட்டிலேபோய்ச் சுக்கிரன்மகளைக்கண்டு மனமயங்கி அவளை வலாற்காரமாகப் புணர்ந்தான். அவளுந் துக்கத்தோடும் போய்ப் பிதாவுக்கு முறையிட்டாள். பிதாவாகிய சுக்கிரன் மிக்க கோபமுடையவனாய் "என்மகளுக்குத் தீராவிடும்பைசெய்த தண்டகனும் அவனாடும் கிளையும் பிறவும் வெந்து பொடியாகுக" எனச் சாபஞ் சொன்னான். அச்சாபப்படியே அவனுடைய நாடுங் காடாகித் தண்டகாரணியம் என்னும் பெயாராயிற்று.
----------------------------
சான்றோரினத்திரு.
அகத்தியர் கதை.
இமயமலையிலே சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் நடந்த கல்யாணத்தைத் தெரிசிக்குமாறு பலரும் போய்ச் சேர்ந்தபோது பாரம்மிகுந்து பூமியின் வடபாகந் தாழத் தென்பாகம் உயர்ந்தது. உலகமுழுதும் நிலைகுலைந்தது. தேவரும் பிறரும் வருந்திச் சிவனேயென்றிரங்கினர். யாவரும் இரங்குதலைச் சிவபெருமானுணர்ந்து பூமியைச் சமப்படுத்தக் கருதி அகத்திய முனிவரை அழைத்துத் தெற்கேயுள்ள பொதியமலையிலே போயிருக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அகத்தியரும் பொதியமலையிலே போயிருந்து பூமியைச் சமமாக்கினார்.
-------------------------------
சித்திரம்பேசேல்.
சூர்ப்பநகிகதை.
சுமாலி என்பவனுடைய மகளாகிய கைகசி என்பவளிடத்திலே விச்சிரவா என்னும் முனிவனுக்கு இராவணன் முதலிய புத்திரர்களும் சூர்ப்பநகை என்பவளும் பறந்தார்கள். இந்தச் சூர்ப்பநகி தண்டகாரணியத்திலே இராமலக்குமணர்களையுஞ் சீதாப்பிராட்டியையுங் கண்டபோது இராமலக்குமணரை விரும்பியுந் தன்கருத்துச் சித்தியாகாது சீதாப்பிராட்டியைக் கவர்ந்துசெல்ல முயன்று இலக்குமணராலே மூக்குவெட்டப்பட்டாள். பின்னர் இராவணனிடம்போய்ச் சீதா பிராட்டியுடைய அழகு முதலியவைகளை அறிவித்தாள். இராவணன்வந்து சீதா பிராட்டியைக் கவர்ந்துபோனான். பின்னர் இராமசுவாமிபோய் இராவணன் முதலியோரைக் கொன்றார். ஆதலால் தன்குலங் கெடுதற்குச் சூர்ப்பநகியே காரணமாயினாள்.
--------------------------
சீர்மைமறவேல்.
----------------------------
சுளிக்கச்சொல்லேல்.
சகுனிகதை.
காந்தாரதேசரானாகிய சகுனியென்பவன் வஞ்சகப் புத்திகளைச் சொல்லிக் கொடுத்துத் தன் மருகனாகிய துரியோதனனைக் கெடுத்தழித்தன்றித் தானுங் கெட்டழிந்தான்.
---------------------------
சூதுவிரும்பேல்.
பாரதகதை
பாரதவீரர்களாகிய நூற்றுவர் ஐவர் என்னும் இருபாலருள்ளே தருமன் முதலிய ஐவரும் துரியோதனன்முதலிய நூற்றுவரோடுஞ் சூதாடி இராச்சியமுமிழந்து காடடைந்தார்கள். நூற்றுவரும் இராச்சியம் பெறவந்த ஐவரோடும் போராடி இறந்தார்கள்.
----------------------------
செய்வனதிருந்தச்செய்.
-------------------------
சேர்விடமறிந்துசேர்.
மார்க்கண்டேயர்கதை.
மிருகண்டுமுனிவருடைய புதல்வராகிய மார்க்கண்டேயமுனிவர் இம்மைக்கும் மறுமைக்கும் நற்றுணையென்று கருதிச் சிவனடியைச் சேர்ந்து பூசித்து யமனையும் வென்று தீர்காயுசும் பெற்றார்.
-------------------------
சையெனத்திரியேல்.
மாரீசன்கதை.
தாடகையென்பவளுடைய மகனாகிய மாரீசனைச் சீதையைக் கவரும்படி இராவணன் நினைத்து இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையைத் தனிமை யாக்கும்படி அனுப்பினான். மாரீசனும் ஒருமானின் வடிவெடுத்துப்போய்ச் சீதாபிராட்டி காணும்படி உலாவினான். மானின் சிறப்பைக்கண்ட சீதாப்பிராட்டி இம்மானை எனக்குப் பிடித்துத் தரவேண்டும் என்று இராமனை வேண்டினாள். இராமனும் வெகுதூரந் தொடர்ந்துபோயும் அகப்படாமைக்கண்டு அம்புசெலுத்த அவ்வம்பினால் விழுந்திறந்தான். விழும்போது "சீதாலக்குமணா" என்ற சொற் கேட்டு இலக்குமணனுந் தொடர்ந்தான். சீதையுந் தனியளாயினாள். அப்போது சந்நியாசியாக இராவணன் சென்று சீதையைக் கவர்ந்தான்.
-----------------
சொற்சோர்வுபடேல்.
கும்பகன்னன்கதை.
இராவணன், கும்பகன்னன், விபூடணன் என்னும் புத்திரர் மூவரும் உக்கிரமான தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வேண்டிய வரங்களைக்கேட்டார்கள். அப்போது பிரமதேவர் கும்பகன்னனை நோக்கி உனக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்கக் கும்பகன்னன் நித்தியவரங்கேட்க நினைத்திருந்தும் சொற்சோர்ந்து நித்திரையென்று குளறிக் கேட்டடைந்தான்.
-------------------------------
சோம்பித்திரியேல்.
நளன்கதை.
வீரசேனன் என்பவனுடைய மகனும் நிடததேசராசனுமாகிய நளனென்பவன் சூதாடித் தோல்வியடைந்து நாட்டினைவிட்டுத் தன்மனைவியாகிய தமயந்தியோடுங் காட்டில் வசிக்குங்காலத்திலே ஒருநாளிரவு கலியின்வசத்தினாலே அத்தமயந்தியைப் பிரிந்து அயோத்திநகரிலே போயு இருதுபன்னன் என்பவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தான். தமயந்தியும் தேடிக் காணாமற் குண்டினபுரத்திலே பிதாவாகிய வீமனுடைய வீட்டிலே போயிருந்தாள். பின்னர்ச் சயமரமென்று இருதுபன்னனுக்குத் தெரிவித்தபோது இருதுபன்னன் குண்டினபுரத்துக்கு வரப் புறப்படத் தேர்ப்பாகனாயிருந்த நளன் அவனைத் தேரிலேற்றி மூன்றுநாளைக்குள்ளே குண்டினபுரத்திலே கொண்டுவந்து சேர்த்துத் தமயந்தியும் மனமகிழும்படி நின்றான்.
-------------------------
தக்கோனெனத்திரி.
திருஞாநசம்பந்தர்கதை.
சீர்காழிப்பதியிலே திருவவதாரஞ் செய்த திருஞானசம்பந்தர் தாம்பாடியருளிய தேவாரத்தினாலும் தாஞ் செய்தருளிய அற்புதத்தினாலுஞ் சமணரோடு செய்தவாத்ததினாலுஞ் சிவனே முழுமுதற் கடவுள் எனவும், சைவமே மெய்ச் சமயம் எனவும் எங்குந் தாபித்துப் பெரும்புகழ்பெற்றார்.
____________
தானமதுவிரும்பு.
கன்னன்கதை.
சூரன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து குந்திபோசன் என்பவனுக்குத் தத்தபுத்திரியான குந்தி கன்னியாயிருக்குங் காலத்திலே சூரியனைச்சேர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றுப் பெட்டியிலடைத்துக் கடலிலே விட்டாள். அப்பிள்ளை கரையையடைந்து ஒரு தோப்பாகனால் வளர்க்கப்பட்டுத் துரியோதனனையடைந்து அங்கதேசத்துக்கு அரசனாக்கப்பட்டுக் கன்னன் என்னும் பெயரோடு விளங்கினான். இந்தக் கன்னன் பதினேழாம் நாட்போரிலே அருச்சுனனுடைய அம்பினாலே தாக்கப்பட்டுத் தளர்ந்து தேரிலே விழுந்து கிடந்தபோது கண்ணபிரான் ஒரு மாதவவேதிய வேடத்தோடு சென்று கன்னனை நோக்கி "நின் புண்ணிய முற்றுந் தருக" என்று யாசிக்கப் புண்ணியம் முற்றுங் கொடுத்துப் "பின்செய்வதுந் தருவேன்" என்றான்.
________________
திருமாலுக்கடிமைசெய்.
___________________
தீவினையகற்று.
______________
துன்பத்திற்கிடங்கொடேல்.
__________________
தூக்கிவினைசெய்.
வாலிகதை.
வினதை என்பவளுடைய மகனாகிய அருணன் சூரியனுக்குத் தேர்ப்பாகனாயிருக்குங் காலத்திலே தேவலோகத்திற் போய்ப் பெண்வடிவத்தோடு நின்ற அருணனை இந்திரன் கண்டு விரும்பித் புணர்ந்து வாலி என்பவனைப் பெற்றான். இந்த வாலியென்பவன் சிவனை வழிபட்டுத் தன்னுடனே எதிர்க்கும் எதிரிகளுடைய பெலத்திற் பாதி தன்னைச் சேருமாறு வரம்பெற்றுக் குரங்குகளுக்குத் தலைவனாய்க் கிட்கிந்தையிலே வசித்தான். அதனையறிந்த இராமர் மறைந்து நின்று பாணம் விட்டுக் கொன்றார்.
________________
தெய்வமிகழேல்.
-------------------------
தேசத்தோடொத்துவாழ்.
----------------------------
தையல்சொற்கேளேல்.
சித்திராங்கிகதை.
சித்தாராங்கியென்பவள் இராசராசநரேந்திரன் என்னும் அரசன் மனைவி. இவள் ஒருநாள் அந்தப்புரத்தில்வந்த சக்களத்திமகனைக்கண்டு மோகங்கொண்டு புணரும்படி பிடித்திழுக்க அவன் மறுத்தோடினான். அதனால் அவன்மேற் கோபமுற்று அரசனிடம்போய் அரசனே! நின்மகன்செய்த அநீதியைப் பாரென்று வளைத் தழும்பையுங் கிழிந்த புடவையையுங் காட்டி முறையிட்டாள். அரசனும் அவள் சொல்லை நம்பி மகனுடைய கைகால்களை வெட்டுவித்துப் பின்னர் உண்மையறிந்து பெருதுந் துக்கப்பட்டான்.
--------------------------
தொன்மைமறவேல்.
யாகசேனன்கதை.
இளமைப்பருவத்திலே தன்னோடு பிரியநண்பனாகத் துரோணாச்சாரியர் நடந்த்தையுந் தான் அவருக்கு அரசனாய் வருங்காலத்திலே உலகிற் பாதி தருவேன் என்று சொன்னதையும் மறந்து துரோணாச்சாரியரை அறியேன் என்ற பாஞ்சால தேசராசனாகிய யாகசேனன் பின்னர்த் துரோணாச்சாரியராலே ஏவிவிடப்பட்ட அருச்சுன்னோடு போராடித் தோல்வியடைந்தான்.
---------------------------
தோற்பனதொடரேல்.
மகிடாசுரன்கதை.
முன்னொரு காலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரிலே தேவர்களால் அசுரர்கள் இறந்தார்கள். புத்திரரை இழந்த அசுரமாதாவாகிய திதியென்பவள் தன்மகளைநோக்கித் தேவர்களெல்லாரையும் வெல்லத்தக்க ஒரு புத்திரனைப் பெறும்படி தவஞ்செய்யவிட்டாள். அவள் அவ்வாறே தவஞ்செய்து சுபாரிசமுனிவருடைய அருளினாலே மகிடன் என்னும் புத்திரனைப் பெற்றாள். இம்மகிடாசுரன் போரிலே பலரையும் வென்று பின்னர்த் துர்க்கையோடும் போராடி வாளால் வெட்டப்பட்டான்.
-------------------------
நன்மைகடைப்பிடி.
-------------------------------
நாடேற்பனசெய்.
-------------------------
நிலையிற்பிரியேல்.
மலைகளின்கதை.
முன்னொருகாலத்திலே மலைகளெல்லாம் சிறகுடையனவாய் ஆகாயத்திலே பறந்து பட்டணங்களிலே போய்த் தங்கிப் பட்டணங்களையுஞ் சீவராசிகளையும் அழித்துப் பெருந்துயர் விளைத்தன. அதனையறிந்த இந்திரன் அம்கமலைகளின் சிறகுகளையெல்லாம் வெட்டிவிட்டான்.
------------------------
நீர்விளயாடேல்.
இதன் கதையை வஞ்சகம் பேசேல் என்புழிக் காண்க.
-----------------------------
நுண்மை நுகரேல்.
------------------------------
நூல்பலகல்.
-------------------------
நெற்பயிர்விளை.
------------------------------
நேர்கோனெறிநில்
------------------------------
நைவினைநணுகேல்.
சம்புகன் கதை.
ஸ்ரீராமச்சந்திரன் அரசுசெய்யுங்காலத்திலே சம்புகன் என்னும் பெயருடைய சூத்திரவருணத்தோன் ஒரு சோலையிலே தலைகீழுங் கால்கள் மேலுமாகத் தூங்கிக்கொண்டு தவஞ்செய்தான். அவன் தனக்குரியதல்லாத தவத்தினைச் செய்த காரணத்தினால் அந்நாட்டிலே ஒரு பிராமணச் சிறுவன் அகாலதிலே இறந்தான். இறந்த சிறுவனையும் எடுத்துக்கொண்டு தாயுந் தந்தையும் வந்து ஸ்ரீராமச்சந்திரனுக்கு முறையிட்டுப் புலம்பினார்கள். இராமச்சந்திரனும் விசாரணை செய்து சம்புகன் தவஞ்செய்தலே அகாலமரணமாக அச்சிறுவன் இறத்தற்குக் காரணமென்றறிந்து பலதிசையுந் தேடித் தவஞ்செய்யுஞ் சம்புகனைக்கண்டு வாளினால் அவன்றலையை வெட்டி வீழ்த்தினான்.
-----------------------
நொய்யவுரையேல்.
------------------------------
நோய்க்கிடங்கொடேல்
பரதன்கதை.
பரதன் என்னும் அரசன் போசநகாலஞ் சிறிதுந் தவறாமல் "அருந்தியதற்றது போற்றியுண்டு" நோய்க்கிடங்கொடாமல் நடந்து வருதலை அறிந்த ஒருவைத்தியன் அரசனுடைய வேலைக்காரனைத் தன்வசமாக்கி அரசன் தைலமிட்டிருக்கும் ஒருதினத்திலே அவனது போசனகாலத்திற்குச் சமீபமாகச் சீயாக்காயயும் வெந்நீரையும் அமைத்து வைக்கும்படி செய்தான். அரசன் ஸ்நான மண்டபம் அடைந்தவுடனே பசியுமுண்டாயிற்று. போசநமகப்படவில்லை. பின் அந்தச் சீயாக்காயையும் வெந்நீரையும் உன்டு தன் பசியைப் போக்கினான்.
-----------------------------
பழிப்பனபகரேல்.
*இதுவெண்பாப்போலிபோலும்.
கைகேயிகதை.
அயோத்திநகரராசனாகிய தசரதச்சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியருளர். கோசலையிடத்திலே ஸ்ரீராமனும், கைகேயியிடத்திலே பரதனும், சுமித்திரையிடத்திலே இலக்குமணன், சத்துருக்கினன் என்னும் இருவருமாக நான்குபுத்திரர் அச்சக்கரவர்த்திக்குப் பிறந்தார்கள். நால்வரும் வளர்ந்து சமர்த்தராய் விளங்கினர். தசரதச் சக்கரவர்த்தியும் வெகு வருடங்களாக அரசுசெய்து பின்னர் வயோதிகானாய்த் தளர்ச்சியுற்றுத் தன்னரசியலை இராமனுகுக் கொடுக்க நிச்சயித்தான். இதனை அறிந்த கூனியென்பவளாலே வப்பட்ட கைகேயி சக்கரவர்த்தியை நோக்கித் தன்மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டிற்போகவேண்டும் என்றும் இருவரங் கேட்டாள். சக்கரவர்த்தியும் முன்னொருகாரியத்திலே கைகேயிடத்திலே மகிழ்ச்சியுற்றபோது உனக்கு இரண்டு வரம் நீ கேட்டபடி தருவேன் என்று சொல்லியிருந்தபடியே கைகேயி கேட்ட இருவரத்தையுங் கொடுத்தான். இராமன் காடுசென்றான்.
---------------------------------
பாம்பொடுபழகேல்.
வாசுகிகதை.
காசிபமுனிவருடைய மனைவியர்களுள் ஒருத்தியாகிய கத்திரு என்பவளிடத்திலே அனந்தன், வாசுகி முதலிய பல பாம்புகள் பிறந்தன. அவற்றுள்ளே வாசுகி என்னும் பாம்பைத் தேவர்கள் திருபாற்கடலைக் கடைந்தபோது தாங்கள் கொண்ட மரத்திலே கயிறாகப்பூட்டி இழுத்தார்கள். அப்போது வாசுகி என்னும் பாம்பு நஞ்சினை உமிழ்ந்தது.
-----------------------------
பிழைபடச்சொல்லேல்.
-----------------------
பீடுபெறநில்.
நீலிகதை.
ஒருபெண் தன்னாயகன் நாடோறும் வேறு பெண்களிடஞ்சென்று கொண்டாடி வருதலையறிந்து கோபத்தோடும் அவனைத் தடுத்துத் தன்வசமாக்கும்படி வேண்டிய உபாயங்கள் செய்தாள். அவனோ இவள் என்கருத்திற்கு மிகவும் இடையூறாய் நிற்கிறாளென்று நினைத்த்க்கொண்டு அடுத்தவூரிலே நடக்கும் ஒரு சிறப்புக் காட்டுகிறேன் என்று சொல்லி அவளைக் கூட்டிகொண்டுபோய் ஒரு காட்டின் நடுவிலே விட்டுக் கொன்றுவிட்டான். பின் அவள் ஒரு பிசாசாய்ப் பிறந்து நீலி என்னும் பெயர் பெற்று அவனைக் கொல்லக் கருதியிருந்தாள். அவனும் பின்னரிறந்து ஒரு செட்டியாகப் பிறந்திருந்தான்.
பின்னர் அந்தச் செட்டியின் சாதகத்தை ஒரு சோதிடன் பார்த்து அந்தச் செட்டியை நோக்கி நீ வடதிசை நோக்கிச் செலவாயாயின்; ஒரு பேயினாலே நிச்சயமாய் மரணமடைவாய்; நான் ஒரு மந்திரவாள் தருகிறேன். அந்த வாள் உன்னிடமிருக்கும் வரையும் அந்தப் பேய் உன்னை அணுகமாட்டாதென்று சொல்லி வாளையுங் கொடுத்துவிட்டுச் சென்றான். அச்செட்டியும் அவ்வாளை எடுத்துக் கொண்டு வியாபாரஞ் செய்யும்படி வடதிசைநோக்கிப் போனான்.
நீலி என்னும் பேயும் அச்செட்டியின் மனைவிபோல் வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கொம்பினை ஒருகுழந்தையாக்கிக்கொண்டு அவனைத் தொடர்ந்தது. அவன் சில குறிப்பினாலே இது பேயென்றறிந்துந் தன்கையிலிருக்கும் மந்திரவாளின் வலியினாலே சிறிதும் பயப்படாமல் அங்கே எதிர்ப்பட்ட வேளாளர்களையடைந்தான். அந்தப் பேயும் அவர்களையடைந்து "இவர் என்கணவர்; வெகுநாளாக என்னோடு விரோதமாயிருக்கிறார், நான் எவ்வளவோ பணிந்து நடந்துஞ் சிறிதும் இரக்கமின்றி என்னை வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களாகிய நீங்கள் அவருக்கு என்மேலுள்ள கோபத்தை நீக்கி இம்மண்டபத்திலே அவரையும் என்னையுஞ் சில வார்த்தை பேசும்படி விடவேண்டும்" என்று வஞ்சகமாய்ச் சொல்லிற்று. செட்டியும் அவர்களை நோக்கி " இவள் என்மனைவியல்லள்; கொல்லும்படி வந்த ஒரு பேய்" என்றான். அதுகேட்ட நீலிஎன்னும் பேய் ' என்னிடுப்பிலுள்ள இக்குழந்தையை இவரிடம் விட்டால் அது இவரென்கணவர் என்பதை உங்களுக்கு நிச்சயமாய்க் காண்பிக்கும்" என்று சொல்லி அக்குழந்தையை நிலத்திலேவிட அக்குழதையும் அச்செட்டியின் மேலேறி விழுந்து விளையாடிற்று.
அது கண்ட வேளாளரெல்லாஞ் செட்டியை நோக்கிச் "செட்டியாரே! நீரேன் பொய் சொல்லுகிறீர்? இவள் உம்முடைய மனைவிதான்! இவள் வருந்தாமல் இம்மண்டப்பத்திற் புகுந்து இவளுக்குச் சமாதானஞ்சொல்லிவாரும்" என்றார்கள். தன்கையில் வாளுடனே அந்தச்செட்டி மண்டபம் நோக்கிச் சென்றான். அது கண்ட நீலி அந்த வேளாளரை நோக்கி " இந்த வாளினை வாங்கிக்கொண்டு விடுங்கள்; வாளோடு வருவாராயின் என்னைக் கொன்றுவிடுவார்" என்றது. அவர்கள் அவ்வார்த்தையை நிச்சயமென்று நம்பி வாளினை வாங்கச் செட்டி பயந்து இந்தவாளிருந்தபடியால் இதுவரையும் பிழைத்திருந்தேன். இது என்னைவிட்டு நீங்குமாயின் இந்தப் பேயினாலே இறந்துபோவேன்" என்றான். நீர் ஒருவர் இறந்து போவிராயின் நாங்கள் எழுபதின்மரும் உயிர் விடுகின்றோம் என்று தேற்றி அவர்கள் அவனை அனுப்பினார்கள்.
அவன் புகுந்த அக்கணமே அந்தப் பேயும் புகுந்து அவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவன் தாய்போல வடிவமெடுத்துவந்து அவ்வேளாளர்களை நோக்கி "உங்களிடத்திலே வந்த என்மகனை யாதுசெய்தீர்கள்?" என்று கேட்டது. அவவேளாளர்கள் வெகுநேரம் பார்த்து செட்டிவாராமையாற் போய்க் கதவைத் திறந்துபார்த்து செட்டியினுடலம் கிழிக்கப்பட்டிருத்தலைக்கண்டு தாங்கள் எழுபது பேருந் தீயிலே குதித்துச் சொன்னசொல்லுந் தவறாமல் இறந்தார்கள்.
-------------------------
புகழ்படவாழ்.
இந்திரத்துய்மன்கதை.
இந்திரத்துய்மன் என்னும் அரசன் எத்தனையோ யாகங்கள் செய்து தேவுலகம்பெற்று எண்ணிறந்த இந்திரகாலம் போகமநுவித்து வரும் நாள்களிலே தேவர்கள் அவனை நோக்கி நின்பெயர் பூமியிலே நிலைபெறாமையால் நீ பூமியிற் போய்ப் பெயர்நாட்டிவரக் கடவாய் என்று தள்ளிவிட்டார்கள். பூமியிலே விழுந்த அவ்வரசன் மார்க்கண்டேய முனிவரைக்கண்டு "முனிவரே! என்பெயர் உலகத்திலே உண்டா இல்லையா?" என்று கேட்டான். மார்க்கண்டேய முனிவர் "சிவனிடத்திலே நான் சிரஞ்சீவியாக வரம்பெற்ற நாண்முதல் இன்றுவரையும் 187 பிரமகற்பமாயிற்று; இதற்குள்ளே உன்பெயரில்லை; என்னினும் மிக்க வயதுடைய கூகையொன்று இமயமலைச்சாரலிலே தவஞ்செய்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்டு கேட்டறி" என்றார். என்றவுடனே இந்திரத்துய்மன் ஒரு வெள்ளைக் குதிரை வடிவங்கொண்டு மார்க்கண்டேயரையுஞ் சுமந்துகொண்டு போய் அக்கூகையைக் கண்டு கேட்டான். கூகை "நான் 224 பிரமகற்பங் கண்டேன். இதற்குள்ளே உன் பெயரில்லை; சரசுவதி நதி தீரத்திலே என்னினும் மூத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குரண்டதேவர். அவரைக்கண்டு கேட்டறி" என்றது. அதனையுங் கூட்டிக்கொண்டுபோய் அக்குரண்டதேவரைக் கண்டு கேட்டான். குரண்டதேவர் "நான் 350 பிரமகற்பங் கண்டுளேன். இதற்குள்ளே உன் பெயர் வரவில்லை. கோபஞ்சகத்திலிருந்து தவஞ்செய்யுங் கூர்ம தேவர் என்னினும் மூத்தவர். அவரைக் கண்டு கேட்டறி" என்றார். பின்னர் எல்லாரும் போய் அக்கூர்மதேவரைக் கண்டு கேட்டபோது கூர்மதேவர் இந்திரத் துய்மன் செய்த தர்மம் முதலியவைகளை யாவர்க்கும் புலப்படச்சொன்னார். உடனே தேவர்கள் விமானத்தோடுவந்து " அரசனே! நின்னைப் பூமியிலே விட்டது
நின் கீர்த்தியை விளக்க" என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். அரசனும் மார்க்கண்டேயர் முதலியவர்களை ஆங்காங்கு விடுத்துத் தேவர்களுடன் தேவுலகம் புகுந்தான்.
--------------------------
பூமிவிரும்பு.
----------------------
பெரியோரைத் துணைக்கொள்.
இதன் கதையைக் "கடிவதுமற" என்புழிக்காண்க.
-------------------------
பேதைமையகற்று.
திலீபராசன்கதை.
திலீபன் என்பவன் சூரியவமிசத்துள்ள ஓரரசன். இவன் பிரபல கீர்த்திமானாய் அரசியல் செய்து வருங்காலத்திலே புத்திரப்பேறின்றிப் பிதிர்கடனை எப்படித் தீர்ப்பேன் என்று மிக்க விசனமுற்றுத் தன்மனைவியோடு குலகுருவாகிய வசிட்டமுனிவரையடைந்து தன்குறையை முறையிட்டான். வசிட்டமுனிவரும் திலீபனுக்குச் சந்ததி பிறப்பதற்குத் தடையாயுள்ள காரணத்தை ஆராய்ந்து "அரசனே! நீ ஒருமுறை தேவலோகம் போய் வருகையிலே வழியிற்கிடந்த காமதேனுவை வழிபடாது புத்திரோற்பவகாலங்கருதி விரைந்து வந்தாய்! அக்காமதேனு தன்னை அவமானஞ்செய்தாய் என்று கோபித்துச் சாபங்கூறிற்று.
அக்காமதேனுவின் கன்றாகிய இந்த நந்தினியை விரதம்பூண்டு வழிபடுவாயா யின்; அச்சாபநீங்கப்பெற்றுப் புத்திரப்பேற்றினையும் அடைவாய்" என்றார். பின்னர் திலீபன் அம்முனிவரை நோக்கி இந்த நந்தினியை எப்படிவழிபட வேண்டும் என்று கேட்டான். வசிட்டமுனிவர் திலீபனை நோக்கி "அரசனே! காமம் முதலியவைகளை வெறுத்துச் சாகமூலபலாதிகளைப் புசித்துப் பரிசுத்தத்தோடும் இந்த நந்தினிக்குப் பூசை செய்தி. இந்த நந்தினி நிற்கும்போது நீயும் நிற்றி! போகும்போது நீயும் போகுதி1 நீருண்ணும்போது நீயும் உண்ணுதி! கிடக்கு்போது நீயும் இருத்தி! இது நின் வழிபாட்டிலே மனம் மகிழும்வரைக்கும் வேறொன்றை எண்ணாதே! இதற்கு யாதொரு தீங்கும் வாராது காத்தி! நின் பெருந் தேவிதானும் இது மேயச் செல்லும்போது என்னுடைய ஆச்சிரம வெல்லைவரையும் கொண்டுபோய் விடவேண்டும். அது திரும்பி வரும்போது அவ்வெல்லையிற் போய்நின்று வழிபட்டுப் பூசித்துப் பின்வரல் வேண்டும்"
என்று கட்டளையிட்டு ஆசீர்வதித்துப் பன்னசாலையில் விடுத்தார்.
பின்னர் மற்றைநாள்தொடங்கி வசிட்டமுனிவர் சொல்லியபடியே விரதம் பூண்டு நந்தினியை பூசித்து வழிபட்டு வந்தான்.அப்படியே இருபத்தொரு நாள் சென்றொழிந்தது. அவ்விருபத்தொராம் நாளிலே அந்த நந்தினி அரசனுடைய அன்பினைப் பரிசோதிக்கக் கருதி மேய்ந்து மேய்ந்து இமயமலைச்சாரலிற் போயிற்று. அரசன் இமயமலையின் சிறப்புக்களை ஒருகணம் வரையிற் பார்த்து நின்றான். நந்தினி இளம்புல்லை மேய்ந்துகொண்டு அங்குள்ள ஒரு முழைஞ்சிலே புகுந்தது. அப்போது சிங்கமொன்று நந்திநிமேலே பாய நந்தினி குளறி விழுந்தது. அரசன் பாணம்விட முயன்றுங் கைகள் பந்தமாயின. பின்னர் அரசனுஞ் சிங்கமுஞ் சம்பாஷணை செய்தபோது அரசன் இப்பசுவை விடும்படியும் அதற்காகத் தன்னுடலை யுண்ணும்படியுங் கேட்டுப் பல நியாயங்காட்டி யாசித்தான். பின்னர்ப் பசுவாகிய நந்தினி சிங்கமாய் வந்ததுந் தானே என்று சொல்லிப் புத்திரப்பேற்றிற்கும் அருள் செய்தது. இப்படியே நந்தினியின் வரத்தினாலே இத்திலீபன் இரகு என்பவனைப் பெற்றான்.
--------------------------------
பையலோடிணங்கேல்
கட்டியங்காரன்கதை.
சச்சந்தன் என்பவன் ஏமாங்கதநாட்டிலே இராசமாபுரத்திலே அரசு செய்துவந்த ஓர் அரசன். இவனுக்கு மந்திரிமார் பலர். அவருள்ளே கட்டியங்காரன் என்பவனும் ஒருவன். சச்சந்தன் ஸ்ரீதத்தன் மகளாகிய விசயை என்பவளை விவாகஞ்செய்து பேரழகுடைய அவண்மேற்கொண்ட ஆசைப்பாட்டின் மிகுதியினாலே இடையறாமல் அவளோடு சுகமநுபவிக்கக் கருதி இராச்சியபாரத்தையும் வெறுத்து மற்றை மந்திரிமார் சொல்லையுங் கொள்ளானாய்க் கட்டியங்காரனை அழைத்து "நான் மனைவியாகிய விசயைப் பிரிதலாற்றேன். நீயே அரசனாய் இந்நாட்டினைக் காத்துவருக" என்று அவனை நியமித்து மனைவியைப் பிரியாது வாழ்ந்தான். பின்னர்க் கட்டியங்காரன் சேனைகளோடும் போய் அரசனோடு போராடி அரசனைக் கொன்றுவிட்டுத் தான் கருதியபடியே இராச்சியத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டான்.
--------------------------------
பொருடனைப்போற்றிவாழ்
--------------------------
போற்றடிப்பிரியேல்.
பிருங்கிருடிகதை
வேதாந்தங்களை நன்றாகக் கற்றுணர்ந்த பிருங்கி என்னும் முனிவர் "சிவனொருவரே தியானிக்கப்படத்தக்கவர்" என்பது முதலிய சுருதிகளைக் கடைப்பிடித்துத் தேவியாகிய உமையை விலக்கிச் சிவனை மாத்திரம் வலஞ்செய்துவந்தார். இதனை அறிந்த உமாதேவியார் எம்பெருமானுடைய திருமேனியிலே தாமும் பாதியாயிருக்கக் கருதித் திருக்கேதாரத்திலே போய்ச் சிவனை நோக்கித் தவஞ்செய்து சிவனுடைய திருமேனியிலே தாமும் பாதியாயினர். பின்னர்ப் பிருங்கிருடி வண்டு வடிவங்கொண்டு தேவியுஞ்சிவனுமாயிருக்குந் திருமேனியிலே தேவியை விலக்கவெண்ணி நடுவே துளைத்தார். அதுகண்ட உமாதேவியார் அவ்வண்டின் சக்தியை இழுத்துவிட வண்டுருவங்கொண்ட பிருங்கிருடி கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அம்முனிவருக்கு முன்னொருகாலும் ஒருதண்டமுங் கொடுத்தார்.
----------------------------
மனந்தடுமாறேல்.
அரதத்தாசாரியர்கதை
இவர் கஞ்சனூரிலே இருந்த வைஷ்ணவப் பிராமணர்களுள்ளே ஒருவராகிய வாசுதேவர் என்பவருடைய புதல்வர். அதுபற்றி இவரைக் கஞ்சனூராழ்வார் எனவுஞ்சொல்வர். இவர் பிதாவாகிய வாசுதேவர் கொள்ளும் விஷ்ணுசமயத்தை இளம்பருவந் தொடங்கி மறுத்துரையாடி சைவசமயமேன்மைதளையே பாராட்டி வந்தார். வைஷ்ணவர்கள் வந்து விஷ்ணுபரத்துவம் பேசியபோது யான் ஒழுகக் காய்ச்சிய இருப்பு முக்காலியின் மேலிருந்து சிவபிரானே கடவுளென்று சாதிப்பேன் என்று சொல்லி அவ்வாறு காய்ச்சி வைக்கப்பட்ட இருப்பு முக்காலியின் மேலிருந்து சதுர்வேததாற்பரியம் முதலியவைகளைச் சொல்லிச் சைவசமயத்தைத் தாபித்தார். அப்போது சிவானுக்கிரகத்தினாலே அந்தக் காய்ச்சிய முக்காலி அவருக்குச் சீதளமாயிருந்தது.
-------------------------
மாற்றானுக்கிடங்கொடேல்.
கூகைகதை.
தென்தேசத்திலே மயிலை என்னும் நகரிலே ஓராலமரத்திலே மேகவர்ணன் என்னும் பெயருடைய காகராசன் தன்னினங்களோடும் வாசஞ்தெய்தது. அந்தக் காகங்களையெல்லாம் உருமர்த்தனன் என்னும் கூகையரசன் தன்னினங்களோடு இராக்காலங்களிலே வந்து கொல்லத் தொடங்கிற்று. இதனைக் காகராசன் அறிந்து மந்திரிகளோடும் ஆலோசித்தபோது பலரும் பலவாறு கூறினர். அவருள்ளே சிரஞ்சீவி என்னும் பெயருடைய கிழமந்திரி "அடுத்துக்கெடுத்தலே தக்க புத்தி"என்று அரசனுக்குச் சொல்லிவிட்டுக் கூகைகள் இருக்குமிடத்திலே போய் "யான் நீதிகூறி அரசனாலே தண்டிக்கப்பட்டதனாலே பிரிந்து பசித்து உங்களிடம் அடைக்கலம் வந்தேன்" என்றது. குரூரநாசன் என்னும் மந்திரி யொழிந்த கூகைகளெல்லாம் அக்காகத்தினை நம்பி உபசரித்துச் சேர்த்துக் கொண்டன. குரூரநாசன் என்னும் மந்திரி உடனே வேற்றிடம்போயிற்று. காகம் நாளுக்குநாள் கூகைகளின் கோட்டைவாயிலிலே சிறிதுசிறிதாக விறகுகளைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தன்னினங்களைக்கொண்டு நெருப்பு வைப்பித்து விடக் கூகைகளெல்லாம் எரிந்துபோயின.
-----------------------
மிகைபடச்சொல்லேல்
சங்கராசாரியர் கதை
சங்கராசாரியர் சந்நியாசம்பெறும்போது அவர்தாயாகிய ஆரியாம்பாள் அவரை நோக்கி "மகனே! என்னுடைய அந்தியகாலத்திலே உன்கையாலே கடன் கழிக்கப்பெற்றுக் கதியடையவிரும்புகிறேன்" என்றாள். சங்கராசாரியர் தாயை நோக்கி "அன்னாய்! நீ அந்தியகாலத்திலே என்னை நினைப்பாயாயின்; நான் எங்கே இருந்தாலும் நீ இருக்குமிடத்திலே வந்து உனக்குச் செயற்பாலனவாகிய கிரியைகளை யெல்லாஞ் செய்துமுடித்து நற்கதியிலே உன்னைச் சேர்ப்பேன்" என்று சொல்லித் தீர்த்தயாத்திரை போயினர். பின்னர்த் தாயின் அந்தியகாலத்தை யோகத்தினாலே உணர்ந்து வான்வழிக்கொண்டு மலைநாட்டை அடைந்து தாய்க்கு முன்னர்ச்சென்று நின்றார். தாயார் சங்கராசாரியரைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு "மகனே! எனக்குக் கடன்களைச் செய்து நற்கதியில்விடுக" என்றாள். சங்கராசாரியர் தாயார்க்கு அத்துவித உண்மையாகிய நிர்க்குணத்துவ உபாசனா மார்க்கங்கூறினார். தாயார் "மகனே! என்னறிவு இதற்கேற்றதன்று; சகுணோ பாசனையுட் சிறந்ததொன்று கூறவல்லையோ?" என்றார். அப்போது சங்கராசாரியர் எட்டுப் புயங்கப் பிரயாத விருத்தத்தினாலே சிவத்துதி செய்தார். உடனே சிவாஞ்ஞையினாலே சிவகணங்கள் தோன்றின.
அதுகண்ட தாயார் கண்களை இறுக மூடிக்கொண்டு "மகனே! மகனே! நான் இவர்களோடு செல்லமாட்டேன்" என்றார். சங்கராசாரியர் "உனக்கறும் பெரும் பேறுங்கிடையாதொழிந்ததா?" என்று கூறி விட்டுணுபுயங்க தோத்திரஞ் செய்தார். உடனே விட்டுணுவாஞ்ஞையினாலே விட்டுணுகணங்கள் தோன்றினர. உடனே தாயார் விட்டுணுபாதங்களிற் சிந்தைவைத்துத் தேகத்தை விடுத்தார். அப்போது சங்கராசாரியர் தமது முன்னையாச்சிரமத்தின் தாயுடம்பினைச் சம்ஸ்காரஞ்செய்யும்படி பிராமணர்களை வருவித்து அவர்கள் வீட்டிலுள்ள பரிசுத்தமான அக்கினியைத்தரும்படி கேட்டார். பிராமணர்கள் இவர் சந்நியாச தருமத்திற்கு மாறாக நடக்கின்றார் என்று தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி அக்கிநிகொடுக்க உடன்படாது போயினர். தாயாரைச் சுமந்துகொண்டு போய்ச் சுடலையிற் சேர்ப்பாருமில்லாமையாற் சங்கராசாரியர் இரண்டு கைகளையுந் தேய்த்து வலக்கையிலே தீயுண்டாக்கி அவ்வீட்டையே விறகாக்கித் தாயார் கிரியையைமுடித்துவிட்டுப் பிராமணர்களை நோக்கி "உங்களுக்குச் சந்நியாசி பிச்சைதருந் தகுதியில்லாது போகக்கடவது; நீவிர் வேதத்துக்குப் புறத்தராகக் கடவீர்; உங்கள் வீடுகளிலே மயானம் உண்டாகுக; உங்கள் தேசம் சந்நியாசிகள் வருவதற்கு தகுதியற்றாதாகுக" என்று சபித்துச் சென்றார்.
------------------------------
மீதூண்விரும்பேல்.
--------------------------
முனைமுகத்துநில்லேல்
நரியின் கதை.
இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றோடொன்று பகைகொண்டு உக்கிரமான கோபத்தோடும் அடிபட்டன. இரண்டுக்குங் காயமுண்டாகிச் சரீரத்தினின்றும் இரத்தம் பெருகிற்று. அதனை ஒரு நரி கண்டு இரத்தம்பொருந்திய தசையையுண்பேன் என்று விரும்பிச் சென்று அவ்விரண்டுக்கும் இடையிலே அச்சமயத்திலே போய் அகப்பட்டுத் தாக்குண்டிறந்தது.
--------------------------
மூர்க்கரோடிணங்கேல்.
--------------------
மெல்லியாடோழ்சேர்.
--------------------------------
மேன்மக்கள் சொற்கேள்
தசரதன் கதை.
சூரியகுலத்துள்ள இரகுவென்பவனுடைய புத்திரன் அயன். அயனுடைய மகன் தசரதன். இந்தத் தசரதனுக்கு புத்திரர் நால்வர். அவருள்ளே மூத்த புத்திரன் ஸ்ரீராமன். இந்த இராமன் வளர்ந்து சாமர்த்தியமுடையவனாய் விளங்குங் காலத்திலே விசுவாமித்திரமுனிவர் செய்யும் யாகங்களுக்கு இராட்சதர்கள் இடையூறு செய்து வந்தார்கள். விசுவாமித்திர் இராட்சதர்களை அடக்கித் தம்முடைய யாகத்துக்குத் துணைசெய்யத்தக்கவன் இராமனே என்று நிச்சயித்துத் தசரதனிடம் போய் இராமனைத் தமக்குத் துணையாக விடும்படி கேட்டார். குருவாகிய வசிட்டமுனிவரும் விசுவாமித்திரருடனே இராமனை விடும்படி சொன்னார். பின்னர்த் தசரதன் பெரிதும் மனவருத்தமுடையனாய் மறுத்தற்கஞ்சி இராமனை விசுவாமித்திரரோடுங் கூட்டியனுப்பினான். இராமன் விசுவாமித்திரரோடு கூடிச்சென்று கல்லாகக் கிடந்த அகலிகையை முன்போலப் பெண்ணாக்கியும், விசுவாமித்திரருடைய யாகத்துக்குத் தீங்குசெய்ய வந்த தாடகை என்பவளைக் கொன்றும், மிதிலையிலே வந்து வில்லுமுறித்துச் சீதாபிராட்டியை விவாகஞ் செய்துந் தந்தைக்குங் கீர்த்தியை உண்டாக்கினான்.
----------------------------
மைவிழியார்மனையகல்
----------------------------
மொழிவதறமொழி
புருடாமிருகத்தின் கதை.
பாண்டவருள்ளே தருமர், இராயசூயயாகஞ்செய்தபோது புருடா மிருகத்தினை அழைத்து வரும்படி வீமசேனனை அனுப்பினார். வீமசேனன் போய்ப் புருடா-மிருகத்தினை வரும்படி கேட்டான். புருடாமிருகம் வீமசேனனை நோக்கி "நீ நான்குகாதவழி முன்னே செல்லுதி; யான் பின்னே உன்னைத் தொடர்ந்து வருவேன்; நான்வரும்போது நீ என்னெல்லையுள்ளே அகப்படுவாயாயின்; உன்னை யான் உண்டுவிடுவேன். என்னெல்லையைத்தாண்டி உன்னெல்லையிற் போய்விடுவாயாயின், நான் உன்னைத் தொடர்ந்து வருவேன்" என்று சொல்லிற்று. வீமனும் அதற்குடன்பட்டவனாய் வேகமாய் வரும்போது புருடாமிருகமும் வீமனைத் தொடர்ந்து நெருங்கி வந்தது. அதுகண்ட வீமன் அப்போது ஒரு மணீயாம்பரற் கல்லைப் பூமியிலே போட்டான். அவ்விடத்திலே ஒரு சிவாலயமுந் தீர்த்தமு-முண்டாயின. புருடாமிருகம் அத்தீர்த்ததிலே ஸ்நானஞ் செய்து சிவாலயத்தையும் வழிபட்டு வருமுன் வீமசேனன் வெகுதூரம் நடந்தும் வீமசேனனை நெருங்கித் தொடர்ந்தது. நெருங்க நெருங்க அப்படியே ஒவ்வொன்றாக ஏழுமுறை பரற்கல்லிட்டான். புருடாமிருகமும் அவ்வப்போதே அங்கங்கே தோன்றிய தீர்த்தங்களிலே ஸ்நானஞ்செய்து கோயில்களையும் வழிபட்டு வழிக் கொண்டுவந்து பின்னர் வீமசேனன் தன்னெல்லையில் ஒருகாலும் மற்றையெல்லையில் ஒருகாலுமாகப் பொகும்போது அவனைப் பிடித்தது. அப்போது வீமசேனன் எல்லைதவறிப் பிடித்தாயென்னப் புருடாமிருகந் தன்னெல்லையிற் பிடித்தேனெனன இருவரும் வழக்காடித் தருமரிடம்போய் முறையிட்டார்கள். இருவர் வாய்மொழியையுந் தருமர் கேட்டுத் தம்பி என்றும் பாராமல் வீமசேனனைச் சரீரத்திற் பாதி புருடாமிருகத்திற்குக் கொடுக்கும்படி சொன்னார்.
--------------------------
மோகத்தைமுனி.
---------------------------
வல்லமைபேசேல்
பூதனைகதை
கண்ணபிரான் இடைச்சேரியிலே குழந்தையாய் வளருங்காலத்திலே கஞ்சனாகிய மாதுலனால் அவரைக்கொல்லும்படி வஞ்சகமாக அனுப்பபட்ட பூதனை என்னும் பேயானது தாய்போலச் சென்று கண்ணபிரானாகிய குழந்தைக்கு முலைப்பால் கொடுத்தது, கண்ணபிரான் இது கஞ்சனுடைய வஞ்சகமென்றுணர்ந்து முலைப்பாலோடு அப்பேயின் உயிரையும் உண்டார்.
------------------------
வாதுமுற்கூறேல்.
விசுவாமித்திரன் கதை.
தேவுலத்திலே இந்திரசபையிலே ஒருநாள் பூவுலகத்துள்ள பலமுனிவர்களும் போய்க்கூடினார்கள். அப்போது முனிவர்களையெல்லாம் இந்திரன் நோக்கி "முனிவர்களே! பூவுலகத்திலே அரசர்களுள்ளே காட்சிக்கெளியனாய்க், கடுஞ் சொல்லிலனாய், ஏகபத்தினிவிரதனாய், சத்தியவானாய், பொறுமையுடைவனாய், மநுநீதிதவறாது அரசு செய்பவன் யாவன்" என்றுவினாவினான். அப்போது வசிட்ட முனிவர் அதற்குவிடையாக அரிச்சந்திரனை வியந்துகூறினர். அதுகேட்டவிசுவா-மித்திரர் வசிட்டர் கூறியதனை மறுத்து வெய்யன், கபடன், வீணன், பொய்யன், கையன், கயவன், அரசர்க்குரிய வொழுக்கமில்லாதவன் என்று இன்னோரன்ன நிந்தைவார்த்தைகளால் அரிசந்திரனை இகழ்ந்தார். இப்படி இருவரும் வாதுபேசியபோது வசிட்டமுனிவர் "அரிச்சந்திரனிடத்திலேயுளதாக நான்கூறிய நல்லொழுக்கங்களிற் சிறிதானுந் தவறுமாயின்; நான் என்தவம் முழுவதுங் கைவிட்டுத் தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தெற்குநோக்கிச் செல்வேன்" என்று சபதங்கூறினர். விசுவாமித்திரரும் "நான் பரிசோதிக்கும்போது இவர் கூறிய நற்குணங்கள் அவ்வரிச்சந்திரனிடத்தே தவறாதிருக்குமாயின்; நான் வருந்திச் செய்த தவத்திலே பாதிகொடுப்பேன்" என்று சபதங்கூறினர். பின்னர் விசுவாமித்திரர் பலவாறு பரிசோதித்தும் அரிசந்திரன் சிறிதும் வழுவாமை கண்டு விசுவாமித்திரர் சொல்லியவாறே தவத்திலே பாதிகொடுத்துவிட்டார்.
--------------------------
வித்தைவிரும்பு.
திருவள்ளுவர்கதை.
புலைத்தொடர்புடையராயிருந்தும் வள்ளுவர் தம்மிடமிருந்த கல்வி மகத்துவத்தினாலே மதுரைச் சங்கத்திலே போய்ச் சங்கப்புலவர்களையும் வென்று சங்கப்பலகையும் பெற்றுத் தமது நூலாகிய திருக்குறளையும் அரங்கேற்றிச் சங்கப் புலவராற் பாயிரமும் பெற்றார்.
_______________
வீடுபெறநில்.
___________
உத்தமனாயிரு.
____________
ஊருடன்கூடிவாழ்.
________________
வெட்டெனப்பேசேல்.
சிசுபாலன்கதை.
சேதிதேசராசனும் தமகோஷன் மகனுமாகிய சிசுபாலன் என்பவன் தருமருடைய இராயசூயத்திலே கண்ணபிரானுக்கு அக்கிரபூசை செய்யப்பட்டதென்று கண்ணபிரானை நிந்தித்துக் கண்ணபிரானாற் கொல்லப்பட்டான்.
________________
வேண்டிவினைசெய்.
___________________
வைகறைத்துயிலெழு.
ஒன்னாரைத்தேறேல்.
வாழி.
ஆத்திச் சூடிவெண்பா முற்றிற்று.

பாரோர் புகழிராம பாரதிசெம் பாகமதாய்ச்
சீராத்தி சூடிச் செழுந்தமிழைப்-பேராக
நாகரிகன் புன்னைவன நாதமகி பன்புனைந்தான்
வாகுவினிற் கீர்த்து வர்*.
என்னும் வெண்பாவாற் பெறப்படும். பாரதியென்னும் பட்டப் பெயர் வேதியர்க்கு வழங்கப்படுதல்பற்றி இவர் ஒரு வேதியரென்று கொள்வாருமுளர். இவரைப்பற்றி வேறொன்றும் புலப்படவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு சூத்திரங்களும் ஒவ்வொரு கதைகளாக எத்தனையோ பல கதைகள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அக்கதைகளுள்ளே மிகப் பலகதைகள் பாரதராமாயண புராணங்களிலே காணப்படுவன. மிகச் சில வேறிடத்துள்ளன. சில சூத்திரங்கள் தற்காலம் அச்சிடப்பட்டிருக்கும் ஆத்திச்சூடிப் பிரதிகளோடு மாறுபடுகின்றன. அவை, "மண்பறித்துணைணேல்" "இயங்கித்திரியேல்" "நேர்கோநெறிநில்" "போற்றடிப்பிரியேல்" முதலியன். அவைகளை இருந்தவாறே விடுத்தேம்.
இது கதைகளோடும் அச்சிடப்படுமாயின்; இங்குள்ள தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு உபயோகமாகுமென்று கருதி வெகுநாட் பிரயாசத்தோடும் பல நூல்களினின்றும் அவ்வக்கதைகளை எழுதுவித்துச் சேர்த்து இப்போது இதனை அச்சிடுவித்தோம். சில கதைகள் புலப்படவில்லை.கதைகளோடும் எழுதப்பட்டிருத்தலால் மாணாக்கரன்றி மற்றையோரும் விரும்புவாரென்பது நம் கருத்து.
இதன்கண் வருங் கதைகளுள்ளே பல கதைகளைப் பிரயாசை கருதாது பரோபகாரங்கருதி நல்லூர் பண்டிதர் பிரமஸ்ரீ. வே. கனகசபாபதியையரவர்களுஞ் சுன்னாகம் ஸ்ரீ. அ. குமாரசுவாமிப் புலவரும் எழுதி உபகரித்தார்கள்.
தெல்லிப்பழை : இங்ஙனம்,
பிலவ வருஷம், ஆடி மாதம். இ. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்.
-----------------------------------------------------------
கதாநுக்கிரமணி.
1. கபிலைகதை. | 32. மாரீசன்கதை. |
2. சடபாதர்கதை.* | 33. கும்பகன்னன்கதை. |
3. அரிச்சந்திரன்கதை. | 34. நளன்கதை. |
4. மாவலிகதை. | 35. சம்பந்தர்கதை. |
5. சடாயுகதை. | 36. கன்னன்கதை. |
6. பகன்கதை. | 37. வாலிகதை. |
7. துருவன்கதை.* | 38. சித்திராங்கிகதை. |
8. வியாசன்கதை. | 39. யாகசேனன்கதை. |
9. உத்தரன்கதை. | 40. மகிடாசுரன்கதை. |
10. சிட்டுக்குருவிகதை. | 41. மலையின்கதை. |
11. பட்டணத்துப்பிள்ளைகதை.* | 42. கண்ணன்மக்கள்கதை.* |
12. விக்கிரமாதித்தன்கதை.* | 43. சம்புகன்கதை. |
13. கருடன்கதை. | 44. பரதன்கதை.* |
14. பரீக்கிதுகதை. | 45. கைகேயிகதை. |
15. துருவசன்கதை.* | 46. வாசுகிகதை. |
16. வாணன்கதை. | 47. நீலிகதை.* |
17. காளிதாசன்கதை. | 48. இந்திரத்துய்மினன்கதை.* |
18. இரணியன்கதை. | 49. பிரகிலாதன்கதை |
19. சிலாதன்கதை.* | 50. திலீபன்கதை. |
20. கம்பர்கதை. | 51. கட்டியங்காரன்கதை. |
21. அர்ச்சுநன்கதை. | 52. பிங்கிருடிகதை.* |
22. இராமன்கதை. | 53. அரதத்தாசாரியர்கதை. |
23. முற்கலன்கதை. | 54. கூகைகதை.* |
24. துரியோதனன்கதை. | 55. சங்கராசாரியர்கதை. |
25. செம்பியன்கதை.* | 56. நரியின்கதை.* |
26. தண்டகன்கதை. | 57. தசரதன்கதை.* |
27. அகத்தியர்கதை. | 58. புருடாமிருககதை. |
28. சூர்ப்பநகிகதை. | 59. பூதனைகதை. |
29. சகுனிகதை. | 60. கோசிகன்கதை.* |
30. பாரதர்கதை. | 61. வள்ளுவர்கதை. |
31. மார்க்கண்டேயர்கதை. | 62. சிசுபாலன்கதை. |
*இந்த அடையாளமுள்ள கதைகளெல்லாம் நல்லூர் பிரமஸ்ரீ. பண்டிதர்
வே. கநகசபாபதியையரவர்களாலெழுதப்பட்டன.
-----------------------------------------------------------
உ
சிவமயம்.
ஆத்திச் சூடிவெண்பா.
உலகம் புகழ்பாகை யோங்குதொண்டை நாட்டிற்
றிலகன் கணபதிமால் செல்*வன்*-நலமிகுந்த
வாழ்வாகும் புன்னை வனநாத னற்றமிழ்க்குச்
சூழாத்தி சூடி துணை.
___________
நூல்.
அறஞ்செயவிரும்பு.
அருளார் கபிலை யறமே செயமென
றிருளகல வேங்கைக் கியம்பும்-பெருமையினான்
மாவளரும் புன்னை வனநாத மெய்த்துணையா
மேவியறஞ் செய்ய விரும்பு. (1)
கபிலைகதை.
உத்தரபூமியிலே குடிதாங்கினான் என்னும் பெயருடைய இடையனாலே மேய்க்கப்பட்ட பசுக்களுள்ளே கபிலை என்னும் பசு ஒன்று தனியே மேயும்படி ஒரு நாள் ஒருகாட்டிற் போயிற்று. அதனை ஒரு புலி கண்டு தனக்கு நல்லுணவு கிடைத்ததென்று தடுத்துக் கொல்ல முயன்றது. அப்போது கபிலை அப்புலியை நோக்கிப் பலதருமங்களையும் போதித்து விலகிக்கொண்டது.
___________
ஆறுவதுசினம்.
ஆதி நிமிசிவிகைக் காளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார்-சோதிப்
புயமா வளர்கின்ற புன்னை வனநாதா
செயமா றுவது சினம். (2)
சடபரதர்கதை
பரதர் என்னும் அரசரானவர் உலகப்பற்றினை முற்றுத்துறந்து காட்டிற்பகுந்து தவஞ்செய்யும்போது ஸ்நாநஞ்செய்யும்பொருட்டுக் கண்*டகியாற்றங் கரைக்குப் போனார். அப்போது பூரணகர்ப்பமுடைய மானுமொன்று தண்ணீர் குடிக்க அங்கே வந்து ஒரு சிங்கத்தின் முழக்கங்கேட்டு அஞ்சி நடுநடுங்கித் தன்கர்ப்பத்தையும் விழவிடுத்து விரைந்தோடிற்று. கருப்பத்திலிருந்த குட்டியும் நீரிலே மிதந்து நீந்திற்று. அதுகண்ட பரதரும் அக்குட்டியின்மேலே பெரிதும் இரக்கம்வைத்து அதனை எடுத்துப் பேணி வளர்ப்பவர் தம்மைவிட யாருமில்லையென்று எண்ணினவராய் ஆதரவோடும் எடுத்துவந்து வளர்த்தார். அவர் சிந்தனையெல்லாம் அந்த மான்குட்டிமேலே இருந்தபடியால் அவருக்கு மரணகாலத்திலும் அச்சிந்தனையே மேலிட்டது. அச்சிந்தனைகாரணமாகப் பின்னர் அந்த மிருகயோனியிற் பிறந்து முன்னைச் சென்மவுணர்வு சிறிதுங் குறையாமல் அம்மிருக சென்மத்துக்குக் காரணமான கன்மநீக்கத்தை நினைத்துக்கொண்டு தம் சென்ம பூமியாகிய காலாஞ்சனம் என்னும் தேசத்தைவிட்டுச் சாளக்கிராமம் என்னும் இடத்தையடைந்தார். அங்கே மானின் சென்மம் நீங்கிவிடப் பின்னர் அங்கிராமுநிவர் மரபிற் பிறந்து யாதொரு தொழின் முயற்சியுமின்றிச் சடம்போலச் சுக துக்கமுமறியாதிருந்தமைபற்றிச் சடபரதர் எனப்பட்டுச் சுற்றத்தாரால் வயலுக்குக் காவற்காரராக நியமிக்கப்பட்டார்.
அப்போது ஒரு சூத்திரன் புத்திரப்பேற்றினைவிரும்பிக் காளிதேவிக்குப் பலிகொடுக்கும்படி ஒருவனை நியமித்துவைத்திருக்க அவனும் விதிவசத்தினாலே தப்பியோடிவிட்டான். அச்சூத்திரன் அவனைத்தேடிப் போகும்போது இப்பரதர் எதிர்ப்பட இவரையே பலியிடும்படி காளிக்குமுன்னே கொண்டுபோய் நிறுத்தினான். அப்போது காளிதேவி இப்பரதருடைய பிரமதேசசுவினாலே தகிக்கப்பட்டுக் கோரவடிவத்தோடுதோன்றி இவரைப் பலியிடத் துணிந்தோருடைய இரத்தங்களை குடித்து நடித்தாள். அக்காலத்திலே நிமி என்னும் அரசன் (இரகுகணன் என்பாருமுளர்) ஞானோபதேசம் பெறக்கருதிக் கபிலமுநிவருடைய ஆச்சிரமத்தை நோக்கிச் செல்லும்போது இப்பரதருடைய மேன்மையை அறியாது தன் சிவிகையைச் சுமக்கும்படி பிடிக்க அதற்கும் உடன்பட்டுத் தான்கொண்ட விரதமுந் தவறாது கோபமுங் கொள்ளாது மெல்லமெல்ல நடந்து ஓருயிர்க்கும் இறுதிவாராமற் காத்து அவ்வரசன் முதலிய பலரானுஞ் சீவன்முத்தா என நன்கு மதிக்கப்பட்டார்.
-----------------------
இயல்வதுகரவேல்.
இந்துமதி விற்றுமலைந் தீனனுக்கா ளாயுமரிச்
சந்திரனோ தன்னிலைமை தப்பவில்லை - நத்தம்
மநுநெறிதேர் புன்னை வனகாதா பூமி
யினிய*ல வதுகர வேல். (3)
அரிச்சந்திரன்கதை.
சூரியகுலத்துள்ள திரிசங்குமகாராசாவின் மகனாகிய அரிச்சந்திரன் தன் மனைவியாகிய இந்துமதியை விற்றும் புலையனுக்குத் தான் அடிமையாகப் பெற்றுந் தன்னுடைய சத்திய நிலையிலே தவறாது நடந்தான்.
-----------------------------
ஈவதுவிலக்கேல்.
மாவலியை மாலுக்கு மண்ணுதவா மற்றடுத்த
காவலினாற் சுக்கிரனுங் கண்ணிழந்தான் - நாவதனால்
நன்னீதிப் புன்னைவன நாதமகி பாவுலகத்
தின்னீ வதுவிலக் கேல். (4)
மாவலிகதை.
விரோசனன் மகனாகிய மாவலி என்னும் அசுரனானவன் மூவுலகங்களுக்கும் அரசனாக வரம்பெற்று அரசுசெய்யுங்காலத்திலே தம்முலகங்களை இழந்த தேவர்கள் யாவரும் விட்டுணுமூர்த்தியையடைந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். விட்டுணுமூர்த்தியும் காசிபன் அதிதி என்னும் இருவருக்கும் மகனாகப் பிறந்து வாமனரூபத்தோடும் மாவலியிடம் போய் மூவடி மண்கேட்டார். மாவலியும் மூவடிக்கும் உடன்பட்டு நீர்விட்டுக் கொடுக்கும்போது குருவாகிய சுக்கிராசாரியர் வண்டுவடிவங்கொண்டு சென்று நீர்விடுங்கரக மூக்கிலிருந்து தடுத்து விட்டுணுமூர்த்தியின் தர்ப்பைநுனியாற் குத்துண்டு கண்ணிழந்தார்.
_____________
உடையதுவிளம்பேல்.
உள்ளபடி தன்சிறகி லுண்டுபல மென்றொருசொல்
விள்ளுஞ் சடாயுமுனம் வீழ்ததுபார - வள்ளற்
றனபதியே புன்னைவனத் தாளாளா வொன்னார்க்
குனதுடைய துவவிளம் பேல். (5)
சடாயுகதை.
காசிபமுனிவருக்கு வினதையென்பவளிடத்திலே கருடன், அருணன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அருணனுக்குச் சமபாதி, சடாயு என இருபிள்ளைகள் பிறந்தார்கள். இந்தச்சடாயு தசரதனுக்கு நண்பனாதலாற் சீதா பிராட்டியை இராவணன் கவர்ந்துகொண்டு போனபோது தன்சிறகிலே பெலமுண்டென்று சொல்லி இராவணனோடு தடுத்துப்போராடி அவனுக்கு வருத்தத்தை யுண்டாக்கினான். உண்டாக்கியும் பின்னர் இராவணனாலேயே சிறகு வெட்டப் பட்டுப் பூமியிலே விழுந்தான்.
_________________
ஊக்கமதுகைவிடேல்.
ஊரி னரபலிக்கா வூர்சகட மேல்வீமன்
தீரன் பகசூரன் றீதடக்குங் - காரணம்பார்
தேக்குபுகழ்ப் புன்னைவன தீரனே யாவுறினும்
ஊக்க மதுகை விடேல்.
பகன்கதை
தருமன் முதலிய பாண்டவர்கள் ஐவரும் வேதத்திரகீயநகரத்திலே போய் ஆண்டுள்ள வேதியர் வீடொன்றிலே வாசஞ்செய்தகாலத்திலே அந்நகருக்குச் சமீபமாயுள்ள ஏகசக்கிரம் என்னுங் காட்டிலிருந்துகொண்டு பகன் என்னும் இராட்சதன் குடிக்கொரு பண்டிசோறும் நரபலி ஒன்றுந் திறைவாங்கி உண்டு வந்தான். இப்படி உண்டுவருங் காலத்திலே பாண்டவர்கள் இருக்கும் வீட்டார் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. அவ்வீட்டுப் பிராமணன் மனைவி தன்னுடைய குலமுதல்வனாகிய ஒரேமகனைப் பலிகொடுப்பது எப்படி என்று வருந்தினாள். அதனை அறிந்த குந்திதேவி அவளுடைய துன்பத்தையாற்றித் தன் மகனாகிய வீமனையே பலிக்கு நியமிக்க வீமனும் உடன்பட்டு அவ்வீட்டார்கொடுத்த சோற்றினையும் வண்டியிலேற்றிக்கொண்டுபோய் அவனைச் சமீபித்தவுடன் அச்சோற்றினையுமுண்டு அதுகண்டு கோபித்து வந்தெதிர்த்த அந்தப் பகனையும் ஊக்கமுடன் கொன்றான்.
____________
எண்ணெழுத்திகழேல்.
எண்ணரிய கோளுடுக்க ளெல்லா மொருமையாதாத்
திண்ணந் துருவர்கையிற் சேர்தலினான் - மண்ணுலகிற்
போற்றுந் தமிழ்ப்பாகைப் புன்னைவன பூபாகேள்
ஏற்றெண் ணெழுத்திகழேல். (7)
துருவன்கதை.
சுவாயம்பு மனுவின்மகனாகிய உத்தாநபாதனுடைய மனைவியராகிய சுருதி. சுநீதி என்னும் இருவருள்ளே சுருதி என்பவளிடத்திலே உத்தமன் என்பவன் பிறந்தான். சுநீதி என்பவளிடத்திலே துருவன் என்பவன் பிறந்தான். ஒருநாள் உத்தாநபாதனாகிய பிதாச் சிங்காசநத்திலே வீற்றிருக்கும்போது அவன்மடியிலே மகனாகிய உத்தமன் என்பவன் ஏறியிருந்தான். அப்போது மற்றமகனாகிய துருவன் என்பவனும் ஏறினான். அதுகண்ட சுருதி என்பவள் அவனைநோக்கி நீ பட்டத்துகுரியையல்லை; சிங்காசநத்திலேறாதே என்று தடுத்தாள். சுருதி என்பவளிடத்தேயுள்ள காதலால் அரசனும் அதற்குடன்பாடுடையவனாயிருந்தான். அதுகண்ட துருவன் மிகவும் மனம்நொந்து நடந்த சம்பவத்தைத் தாய்க்கு வந்தறிவித்துத் தாயின் சம்மதியோடு சத்தமுனிவரையடைந்து உபதேசம் பெற்றுத் தவஞ்செய்து கிரக நட்சத்திரங்களையெல்லாம் பிணித்த திகிரியைக் கணக்கின்படி சுற்றியிழுத்து விளங்கும் உயர்பதவியை விட்டிணுவாற் பெற்று மாதாவோடு மேம்பட்டான்.
___________________
ஏற்பதிகழ்ச்சி.
மாவலிபான் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
வாமென்றான் மாதவற்கஃ தாகுமோ-மூவுலகிற்
பேர்பரவும் புன்னைவனப் பேரரசே யெவ்வகையாற்
சீர்பெறினு மேற்பதிகழ்ச் சி. (8)
இதன் கதையை "ஈவதுவிலக்கேல்" என்புழிக் காண்க.
__________________
ஐயமிட்டுண்.
வன்பிரம ராக்கதன்பான் மங்கலியப் பிச்சையருள்
என்பவளுக் கேகொடுத்தீ டேறினான் - அன்பதனால்
வள்ளலெனும் புன்னை வனநாத வஞ்சமிலா
துள்ளதிலே யையமிட் டுண். (9)
_________________
ஒப்புரவொழுகு.
தாரணிபோ லெவ்வுயிருந் தாங்குந் தகைமையதாச்
சீரணிந்து நாளுஞ் சிறந்தோங்க-ஆரந்
தழைந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா யார்க்குங்
குழைந்தொப் புரவொழு கு. (10)
_________________
ஓதுவதொழியேல்.
மச்சகந்தி தன்வயிற்றில் வந்துதித்து மோதலினால்
விச்சைபெற்ற வேத வியாசனைப்பார்-நிச்சயமே
பன்னுதமிழ்ப் புன்னைவனப் பார்த்திவனே யுண்மைநூ
லின்னோ துவதொழி யேல். (11)
வியாசர்கதை.
முன்னொருகாலத்திலே பராசரமுனிவர் பல சிவஸ்தலங்களைந் தரிசித்துப் பல தீர்த்தங்களிலும் ஸ்நாநஞ்செய்து பூமிப்பிரதக்கிணஞ்செய்து வருகையிலே கெளதமை (கங்கையென்பார் சிலர்) என்னும் யாற்றிலுந் தீர்த்தமாடினார். தீர்த்தமாடியபின் கவுதமையாற்றினைக் கடந்துபோக ஓடம்விடுதற்கு யாருங் கிடையாமல் அங்குள்ள வலைஞர்மகளாகிய மச்சகந்தி என்பவளை ஓடம்விட இயலுமா என்று கேட்டார். மச்சகந்தி ஆயிரம்பேருடைய பாரமமைந்தாலன்றி இந்த ஓடம்விடுதல் அரிதென்றாள். பராசரமுனிவர் ஆயிரம்பேருடைய பாரத்தையும் யானே அமைப்பேன் என்றுசொல்லி ஓடம்விடுவதற்கு அவளை உடம்படுத்தி ஏறிச் சென்றார். செல்லும்போது அந்த மச்சகந்தியிடத்திலே இச்சைமிகுந்தவாராய்ப் பனியினாலே சூரியனைமறைத்து மீன்மணம்போய் நறுமணங்கமழும்படி பரிமளங்கொடுத்துப் பரிமளகந்தியாக்கி அவளைப் புணர்ந்தார். அப்போது வியாச முனிவர் அம்மச்சகந்தியிடத்திலே அவதரித்தார். வியாசமுனிவர் மச்சகந்தியிடத்திற பிறந்தும் வேதம் முதலியவைகளை ஓதுதலினாலே ஞாநம் பெற்றுயர்ந்தார்.
_____________________
ஒளவியம்பேசேல்.
மாதர்முன்னே யுத்தரனு மாபெலவான் போலுரைத்துக்
காதமரி லாச்சுனனாற் கட்டுண்டாண் - ஆதலினால்
வண்மைபெறு புன்னை வனநாதா சீருடைய
திண்மையுன்னி யெளவியம்பே சேல். (12)
உத்தரன்கதை.
பாண்டவர்கள் விராடனுடைய மச்சநாட்டிலே அஞ்ஞாதவாசஞ் செய்யுங் காலத்திலே விராடன்மகனாகிய உத்தரன் என்பவன் தன்னகரத்திலே பசுக்கவர வந்தவர்களை இமைப்பொழுதுள்ளே வெற்றிகொள்வேன் என்று தாய்முதலிய பெண்களுக்குச் சொல்லிவந்தும் போரிலே பயந்தோடித் தேர்விட்டுவந்த அருச்சுனனாற் பிடித்துக் கட்டப்பட்டான்.
______________
அஃகஞ்சுருக்கேல்.
மைக்கடல்கொண் முட்டைதனைவாங்குவோமென்றுசிட்டுப்
புக்கதனை வென்றதுதன் புத்தியினால்-அக்கதைபோல்
வேளாளா புன்னைவன மேகமே யுண்மையெனக்
கேளாயஃ கஞ்சுருக் கேல். (13)
சிட்டுக்குருவிகதை.
ஒருகடற்கரையிலே சேவலும் பேடுமாக இரண்டு சிட்டுக்குருவிகள் வாசஞ்செய்தன. பேடு தன் முட்டைகளையெல்லாம் பலமுறையுங் கடல்வந்து கவர்ந்துகொண்டு போகக்கண்டு துக்கங்கொண்டு தன் நாயகனாகிய சேவலுக்கு முறையிட்டது. சேவல் பறைவைகளையும் அழைத்துக்கொண்டுபோய்ப் பறவை வேந்தனாகிய கருடனுக்கு முறையிட்டது. கருடன்போய் விட்டுணுமூர்த்திக்கு முறையிட்டது. விட்டுணுமூர்த்தி கடலைவருவித்து முட்டைகளைச் சிட்டுக்குருவிடங் கொடுக்கும்படி கட்டளை செய்தார்.
________________
கண்டனசொல்லேல்.
கள்ளற் குரைத்தான் கனகத் தியவிரதன்
உள்ளபடி வேதியர்சொல் லோர்வழியைத்-தெள்ளியசீர்
மாதனதா புன்னைவன வள்ளலே மேலெண்ணா
தேதெனினுங் கண்டனசொல் லேல். (18)
_______________
ஙப்போல்வளை.
தீதி லரிட்டங்கள் செய்யவுண வைக்கொள்ள
மேதினியிற் றம்மினத்தை மேவுதலால்-நீதிநெறி
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா வுற்றாரை
மாற்றிருமெய் ஙப்போல் வளை. (19)
அரிட்டம்-காகம். காகங்கள் யாதேனும் உணவைக் காணும்போது தம்மினத்தினையும் அழைத்து உண்பது வழக்கம்.
____________
சனி நீராடு.
ஞாயிறுயிர்க் கீறுதிங்க ணம்பரருள் செய்கிலர்செவ்
வாய்பிணிதுக் கங்குருநாள் வாழ்வுபோந் - தூயவெள்ளி
போடிதெல்லாம் புன்னைவன பூபாலா மிக்கபுத
னோடுசனி நீரா டு. (16)
-----------------------
ஞயம்படவுரை.
தொட்டடித்தோ னன்றிசெய்த தூயோ னிருவருக்கும்
பட்டணத்துப் பிள்ளை பகர்ந்ததுபார் - மட்டுலவுந்
தென்பாகைப் புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட வுரை. (17)
பட்டணத்துப் பிள்ளை கதை.
பட்டணத்துப் பிள்ளையார் சிவஸ்தல யாத்திரையாகப் பலநாடுகளுக்கும் போய்க் கொங்குநாட்டில் வந்தபோது ஒருநாள் அர்த்த ராத்திரியிலே பசியினால் வருந்தி மூர்க்கனான ஒரு இல்லாச்***** வாயிலிலே நின்று கையிலே* தட்டினார். அவன் இவர் ஒரு சிவயோகி என்றறியாது யாரோ காமதூர்த்தன் என்றெண்ணிக்கொண்டு விரைந்து வந்து தடியினாலே அடித்தான். அடிக்கும்போது பிள்ளையார் நின்றநிலைதானும் பெயரவில்லை. சிவ சிவ என்றார். அப்போது அடுத்த வீட்டுப் புறத்திண்ணையிற் கிடந்த கிழவன் ஒருவன் ஓடிவந்து அம்மூர்க்கனை நோக்கி ஏடா! பேதையே! இவர் ஒரு சிறந்த சிவயோகி! இவருக்கேன் இத்தீங்கு செய்தனை! என்று விலக்கிப் பிள்ளையாரை அழைத்துக்கொண்டுபோய் அன்போடும் உண்பித்துப் பெரிதும் உபசரித்தான். அப்போது பிள்ளையார் திருவருளை நினைத்துப் "பூணும்பணிக்கல்ல" "இருக்குமிடந்தேடி" என்னும் பாக்களைப் பாடினார்.
-----------------------------------
இடம்படவீடெடேல்.
நித்தியமாம் வீட்டு நெறியிலிடம் பாடல்லாற்
பொய்த்தவின்ப வீட்டிற் பொருளடையா - தத்தம்
நடையறியும் புன்னைவன நாதனே பூமி
இடையிடம்ப டவ்வீ டெடேல். (18)
-----------------------------
இணக்கமறிந்திணங்கு.
செய்யபுகழ் விக்கிரமா தித்தனொரு தட்டாரப்
பைய லுறவுபற்றிப் பட்டதனால் - வையம்
மணக்குஞ்சீர்ப் புன்னை வனநாதா நீயும்
இணக்க மறிந்திணங் கு. (19)
விக்ரமாதித்தன்கதை.
விக்ரமாதித்தன் கூரியபுத்தியுடைய ஓர் அரசனாயிருந்தும் விசயன் என்னுந் தட்டான் ஒருவனைத் தனக்குச் சிறந்த நட்பாளனாகக்கொண்டு நடந்தான். அவன் மந்திரியாகிய பட்டி என்பவன் இதனை அறிந்து தட்டானுறவு தப்பாது தீங்கு பயக்கும் என்று தடுத்தும் தீவினையனுபவிக்கும் ஊழ்வசத்தால் அரசன் கேட்கவில்லை. அரசன் அத்தட்டான் கற்றிருந்த இந்திரசாலம், மகேந்திரசாலம் என்னும் வித்தைகளை அவனிடத்திலே கற்றுக்கொண்டு, தான் கற்றிருந்த பரகாயப் பிரவேசவித்தையை அத்தட்டானுக்குக் கற்பித்தான். தட்டானோ அரசனை வஞ்சித்து இராச்சியபோகங்களைத் தான் அநுபவிக்க வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தான்.
இப்படியிருக்கும் நாளிலே அரசன் மந்திரியைவிடுத்துத் தனியேசென்று வேட்டையாடும்படி காட்டிற்போயிருந்தான். இதுவே சமயமென்று தட்டானும் அக்காட்டினை அடைந்தான். பின் அரசன் தட்டான் என்னும் இருவருங் கூடி வேட்டையாடிக்கொண்டு ஒரு குளக்கரையிலே நின்ற ஓர் ஆலமரத்தின் நிழலை அடைந்தார்கள். அரசன் ஆயாசத்தினாலே தட்டான் மடியிலே தலையை வைத்துப் படுத்துக்கொண்டு மேலே பார்த்தான். அவ்வாலமரத்திலே ஆணும் பெண்ணுமாக இரண்டு கிளிப்பறவைகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தன. அப்போது ஆண்கிளி சடிதியாக இறந்துவிடப் பெண்கிளி அதன் பிரிவாற்றாது மிகவருந்திற்று. அதனைச் சீவகாருண்ணியமுடைய அரசன் பார்த்துப் பெண்கிளியின் துயரைத் தீர்க்கக்கருதிப் பரகாயப்பிரவேசவித்தையினாலே தன்னுடலை விடுத்து ஆண்கிளியினுடலிற் பிரவேசித்தான். உடனே ஆண்கிளி எழுந்து பெண்கிளியை மகிழ்வித்தது. அரசனுடல் கிடந்தது. தட்டானும் சமயம் வாய்த்தது என்று தனக்கு அரசன் கற்பித்த பரகாயப்பிரவேச வித்தையைக் கொண்டு அரசனுடலிலே புகுந்து பட்டணத்தையடைந்தான். இவைகளைக் குறிப்பினால் அறிந்த மந்திரி அரசன்மனைவியர் கற்புக்குப் பங்கம்வாராது உபாயஞ்செய்து கொண்டான். கிளியுடலிற் பிரவேசித்த அரசன் மகதநாட்டிலே போய் ஒரு வேடன் வலையிலகப்பட்டு பின் ஒரு செட்டிக்கு விற்கப்பட்டு ஒருதாசியின் விகாரத்திலே வருந்திக் கிளியுருநீங்கித் தன்னுருவம் பெற்றான்.
----------------------------------------------
தந்தைதாய்ப்பேண்
அணையிடர்தீர்த் தான்கருட னந்தணன் செங்கந்தை
தனையெடுத்துச் சாவு தவிர்த்தான் - இனையவர்போற்
சீராரும் புன்னைவன தீரனே நாடோறும்
பேராருந் தந்தைதாய்ப் பேண். (20)
கருடன்கதை.
காசிபமுனிவருடைய மனைவியர்களுள்ளே கத்திரு என்பவள் அநந்தன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடன் அருணன் என்னும் இருவரையும் பெற்றாள். ஒருநாள் இவ்வினதை கத்திரு என்னும் இருவரும் ஓரிடத்திலே இருக்கும்போது அங்கே இந்திரனுடைய உச்சைச்சிரவம் என்னுங் குதிரை வந்தது. அக்குதிரையின் வாலைக் கத்திரு பார்த்து கருமை என்ன வினதை வெணமை என்றாள். இவ்வாறு இருவரும் முரணி ஏவள் வார்த்தை மெய்ம்மையாகுமோ அவளுக்கு மற்றவள் அடியாளாகக் கடவுள் ……… ….. …… (Proof Reader: Pls include the missing characters. I can’t read from image ) எனச் சபதமுங் கூறினர். பின்னர் கத்திரு தன்மகனாகிய கார்க்கோடகன் என்னும் பாம்பினால் அவ்வாலைச் சுற்றிக் கருமையாக்குவித்துக் காண்பித்து வினதையைத் தனக்கடிமையாக்கினாள். பின்னர்க் கருடன் அமுதங் கொண்டுவந்து கத்துருவின் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தாயாகிய வினதையின் அடிமையை நீக்கினான். அந்தணன்கதை வந்துழிக் காண்க.
----------------------------
நன்றி மறவேல்.
உன்னாட்டா ரெல்லா முயிர்காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே யிருத்தலாற்- பன்னாளும்
பூதலத்தின் மேன்மைபெறும் புன்னைவன நாதனே
ஏதிகழ்ந்து நன்றிமற வேல். (21)
-----------------
பருவத்தே பயிர் செய்.
உன்னாட்டிற் பொற்களந்தை யூரர்நன்னாட் செய்தபயிர்
பொன்னே விளையப் புகழ்பெற்றார் - ஒன்னார்
பயந்திடுவேற் புன்னைவன பார்த்திவனே நீயுஞ்
செயும்பருவத் தேபயிர் செய். (22)
------------------------------------
மண்பறித்துண்ணேல்.
கூறவழக் கெண்ணாத கூதைசக டற்குவண்டி
ஏறமுன்போல் வாரா திருந்ததனாற் - றேறியென்றும்
மாதிலாக புன்னைவன மன்னாகேள் பூமியதில்
ஏதிலன் மண்பறித்துண் ணேல். (23)
-----------------------
இயங்கித் திரியேல்.
மன்னவனுக் குன்னாட்டார் வந்து முடிசூட்ட
முன்னனலின் மூழ்கிமுதன்மைபெற்றார்- அன்னவர்போல்
நன்றரியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றுமியங் கித்திரி யேல். (24)
---------------------------------
அரவமாட்டேல்.
இருடிமேற் செத்தபாம் பேற்றிப் பரீக்கித்
தரவினாற் பட்ட தறிந்தே - திரைகடல்சூழ்
மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்
றெண்ணி யரவமாட் டேல். (25)
பரீக்கிதுகதை.
அருச்சுனனுடைய மகன் அபிமன்னு. அபிமன்னுவின் மகன் பரீக்கிது. அந்தப் பரீக்கிது மகாராசன் காட்டிலே வேட்டைக்குப்போய் ஒரு மானை எய்தான். அந்தமான் அம்பு பட்டுந் தப்பியோடிற்று. அதனைத் தேடிப் பார்க்கும்போது சமீகர் என்னும் முனிவர் எதிர்ப்பட்டார். அவரை நோக்கி மானை விசாரித்தான். அவர் யாதொன்றும் பேசவில்லை. அவர் பேசவில்லை என்று கோபங்கொண்டு செத்துக் கிடந்த பாம்பொன்றை எடுத்துக்கொண்டுபோய் அவருடைய தலையிலே போட்டுவிட்டுப் போனான. பின் அவருடைய மகன் அதனை அறிந்து சொல்லிய சாபப்படி தக்கன் என்னும் பாம்பினாற் கடிக்கப்பட்டிறந்தான்.
-----------------------------
இலவம்பஞ்சிற்றுயில்.
அன்னத்தின் றூவிகோங் காகு மரசர்க்குப்
பன்னும் பருத்திதான் பாங்கல்ல - இன்னதனால்
வள்ளலெனும் புன்னை வனநாதா மையிரவிற்
றுள்ளிலவம் பஞ்சிற் றுயில். (26)
-----------------------------------------
வஞ்சகம்பேசேல்.
மாயனார் தம்மக்கண் மாமுனியைக் கேட்டகர்ப்ப
மேயவரைக் கொல்லு மிருப்புலக்கை - ஆயதனான்
மாரனெனும் புன்னை வனநாதா வையகத்திற்
சீருறா வஞ்சகம்பே சேல். (27)
கண்ணன் மக்கள் கதை
துவாரகையிலே கண்ணபிரான் தருமராசனுக்கு வேள்விகளை முடித்துத் தன்பதஞ்சாருதற்கு நினைத்திருக்குங் காலத்திலே அவரைக் காண விரும்பித் துருவாசர், விசுவாமித்திரர், நாரதர்முதலிய முனிவர்கள் வந்தார்கள். அப்போது யாதவகுமாரரிற் சிலர் சாம்பவன் என்பவனை ஒரு கர்ப்பஸ்திரிபோல அலங்கரித்து அம்முனிவர்களுக்கு முன்னே நிறுத்தி "இப்பெண் என்னபிள்ளை பெறுவாள்? சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். அம்முனிவர்கள் இவர்களுடைய கபடத்தை அறிந்து கோபங்கொண்டு "இக்கருப்பத்தினின்று ஒருமுசலம் பிறக்கும். அந்தமுசலத்தாலே இந்த யாதவகுலமெல்லாம் நாசமாகும்" என்று சாபஞ் சொல்லிவிட்டுக் கண்ணபிரானையும் காணமல் வந்த வழியே திரும்பிப்போய் விட்டார்கள். மற்றைநாள் யமதண்டம்போன்ற ஓருலக்கை சாம்பன் வயிற்றினின்றும் பிறந்தது. அவ்வுலக்கையைக் கண்ட யாதவர்களெல்லாம் அஞ்சி நடுநடுங்கிக் கண்ணபிரானுடைய பிதாவாகிய வசுதேவருக்கு நடந்த காரியத்தை அறிவித்தார்கள். வசுதேவர் அவ்வுலக்கையை அரத்தால் அராவிப் பொடியாக்கி அப்பொடிகளைக் கடலிலே இடும்படிசொன்னார். யாதவர்களும் அவ்வாறே செய்துமுடித்து முனிவர்சாபத்தைக் கடலிலே கரைத்து விட்டோம் என்று நினைத்திருந்தார்கள்.
பின்னர் அந்தப் பொடிகளெல்லாம் அலையினாலொதுக்கப்பட்டுக் கரையிலே வந்து வாட்கோரைப் புல்லாக முளைத்து வளர்ந்திருந்தன. அந்த இரும்புப் பொடிகளுள்ளே கடலைவிதையளவு பிரமாணமுடைய ஒருதுண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டு உலுப்தகனென்னும் வேடன்கையிலகப்பட அவன் அத்துண்டினைத் தன்னம்பொன்றின் நுனியிலே வைத்திருந்தான். பின்னர்க் கண்ணபிரானும் பலராமனும் யாதவரும் கடற்கரையிற்போய்க் கடனீரிலாடிக் கடற்றெய்வத்துக்குப் பூசையும் விழாவுநடத்தினார்கள். நடத்தியபின் பலராமனுங் கண்ணபிரானுந் தவம்புரியுமாறு காடுநோக்கினர். நைவேதித்த கள்ளினை அதிகமாக உண்டயாதவர்கள் வெறியினாலே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசிக் கோபமூள இருப்புலக்கைப் பொடியினாலே அங்கே முளைத்திருந்த அவ்வாட்கோரைகளைப் பிடுங்கி ஒருவருக்குருவர் அடிக்க எல்லோரும் இறந்தார்கள். இக்கதை மகாபாரதத்து மெளசலபருவத்திலுஞ் சீகாழிப்புராணத்திலும் அற்ப வேறுபாட்டுடன் காணப்படும். சாபஞ்சொன்னவர் கபிலர் என்றும், துருவாசர் என்றுஞ் சொல்வாருமுளர்.
_________________
அழகலாதனசெய்யேல்.
வாணன் சிவனை வணங்கிவசஞ் செய்துலகோர்
காணநின்று தன்வாயில் காக்கவைத்தும்-பாணியெல்லாம்
போனதனாற் புன்னைவன பூபாலா யாரிடத்துந்
தானழக லாதனசெ யேல். (28)
வணாசுரன்கதை.
காசிபமுனிவருக்குத் திதி என்பவளிடத்திலே இரணியகசிபு இரணியாக்கன் என்னும் இருவரும் பிறந்தார்கள். இரணியகசிபுவுடைய பிள்ளைகள் பிரகிலாதன், அநுகிலாதன் முதலிய நால்வர். பிரகிலாதன் பிள்ளைகள் ஆயுண்மான் விரோசனன் முதலிய நால்வர். விரோசனனுடைய பிள்ளை மாவலி. மாவலிக்குப் பிள்ளைகள் நூறுபேர். அவருள்ளே வாணன் என்பவனும் ஒருவன். இந்த வாணன் என்பவன் திருக்கைலாச மலையிற்சென்று சிவனுடைய திருநடனத்திற்கு மத்தளம் அடித்துச் சிவனை மகிழ்வித்துத் தான் என்றுங் கண்டு வணங்கும்படி தன்னுடைய சோணிதபுரவாயிலிலே வந்து வீற்றிருக்கும்படி செய்தான். செய்தும் அழகலாதவைகளைச் செய்து பலரோடும் போராடி இறுதியிலே விட்டுணுமூர்த்தியாலே கைகளெல்லாம் இழக்கப்பெற்றான்.
____________
இளமையிற்கல்.
கல்வியிள மைக்குளிலாக் காளிதா சன்மனையாள்
வல்வசையாற் பொல்லா மரணமுற்றுச்-செல்வதனான்
நற்றாமா புன்னைவன நாதா விதையறிந்து
கற்றா லிளமையிற் கல். (29)
காளிதாசன்கதை.
அரிகரபுரத்திலுள்ள அனந்தநாராயணன் என்னும் விப்பிரனுக்கு அரிகரன் என்னும் பெயருடைய புத்திரனெருவனிருந்தான். அப்புத்திரன் அதிக மூடனாக ஆடுமேய்க்க நியமிக்கப்பட்டு மேய்க்கும் நாள்களிலே ஒருநாள் ஆடுகளுண்ணும் குழைக்காக ஒரு மரத்திலேறி நுனிக்கொம்பிலிருந்து அடிக்கொம்பைத் தறித்தான்.
கல்வியிலே வாதுசெய்து தன்னை வெல்லுகிறவனையே விவாகஞ்செய்ய நிச்சயித்திருந்த ஓரிராசகுமாரியோடு வாதுசெய்து தோல்விபெற்ற வித்துவான்கள் சிலர், இவனை மரத்தினின்றும் இறக்கிக்கொண்டுபோய் அவ்விராசகுமாரிக்கு வித்துவான் என்று காட்டி அங்கீகரிக்கச்செய்தார்கள். அவ்விராசகுமாரி வித்துவான்கள்செய்த அமடுகளெல்லாம் அறிந்து காளிதேவியிடம்போய் வரம்பெறும்படி அவனை அனுப்பினாள். அப்படியே அவன் காளிதேவியிடம்போய் வரம்பெற்று வித்துவானாய்க் காளிதாசன் என்னும் பெயரும்பெற்றுப் போசராசனுடைய சபை வித்துவான்களுக்குத் தலைவனாக விளங்கினான்.
இப்படிப் போசராசனுடைய சபையிலே பலநாளிருந்து பின் யாதோ ஒரு காரணத்தால் அவனை வெறுத்துத் தன்னுடைய தாசிவீட்டிலேபோய் மறைந்திருந்தான். அப்போது போசராசன் காளிதாசனை வெளிப்படுத்தக் கருதி ஒரு சுலோகத்திற் பாதியைமுடித்து மற்றப்பாதி முடிப்பவனுக்கு தன்னரசாட்சியிற் பாதி கொடுக்கப்படும் என்று பிரசித்தஞ்செய்தான். இதனை அறிந்த அந்தத் தாசி காளிதாசனைக்கொண்டு மற்றைப்பாதியை முடிப்பித்து அரசாட்சியின் பாதியைத் தானே பெறக்கருதிக் காளிதாசனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுலோகப்பாதியைக் கொண்டுபோய்ப் போசராசனுக்குக் காட்டினாள்.
____________________
அறனைமறவேல.
பத்ரகிரி ராசன் பகர்சனகன மெய்விதுரன்
சித்தபரி சுத்தஞ் செலுத்துதலால்-இத்தரையில்
மன்னனெனும் புன்னை வனநாதா யாவுறினும்
என்ன வறனைமற வேல். (30)
பத்திரகிரிராசன் -கோவிந்தசாமி என்பனுடையமகன்; அரசனாயிருந்து பட்டணத்துப்பிள்ளையுடைய அருளினாலே துறவுபூண்டவன். சனகன் – துரவு போண்ட ஓரரசன். விதுரன் - வியாசனுக்கு அம்பாலிகையிடம் பிறந்தவன்.
__________________
அனந்தலாடேல்.
காலைதுயில் சீலமபோங் கண்டபக லாக்கம்போம்
மாலைதுயி னோயாம் வகையறிந்து-ஞாலமதிற்
புண்ணியகா லந்தெரிந்து புன்னைவன பூபாலா
எண்ணி யனந்தலா டேல். (31)
____________
கடிவதுமற.
இரணியனு மாங்காரத் தெண்ணா துரைத்து
நரகரியா லிற்றான்முன் னாளிற்-சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னை வனநாதா
மாலே கடிவதுமற. (32)
----------------------
இரணியன்கதை.
இரணியன் தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வரம்பெற்று மூவுலகுக்கும் அரசனாய் இரணியனேநம என யாவருந் தன்னை வணங்கும்படி கட்டளை யிட்டான். அவன் மகனாகிய பிரகிலாதன் அதனைமறுத்து ஓநமோநாராயணாய என்று சொல்லி வாதாடினான். அவனைநோக்கி உனது நாராயணன் இத்தூணிலும் இருப்பானோ என்று சொல்லி இரணியன் அத் தூணிலே தன்கையால் அடித்தான். அப்போது விட்டுணுமூர்த்தி அத்தூணிலிருந்து நரசிங்கமாகத்தோன்றி அவனைக்கொன்றார்.
_____________
காப்பதுவிரதம்.
துய்ய சிலாதன்சேய் துங்கவிர தங்களெலாஞ்
செய்யநந்தி யாகச் சிறப்புற்றான்-பொய்யலவே
தேன்காண்சொற் புன்னைவன தீரனே யைம்பொறியைத்
தான்காப் பதுவிர தம். (33)
சிலாதன்கதை.
முன்னொரு காலத்திலே திருமறைக்காட்டிலே இருந்த ஒரு பிராமணச் சிறுவர் தம்வீட்டிலே பிச்சைக்குவந்த மற்றொரு பிராமணணுடைய பிச்சையன்னத்துக்குள்ளே ஒரு சிறுகல்லையிட்டு விட்டார். அந்த பிராமணன் அவ்வன்னத்தை அக்கல்லோடுதானே கொண்டுபோய் உண்டான். பின்னர் இச்சிறுவர் வளர்ந்து சாத்திரங்களும் படித்துத் தவங்களுஞ் செய்து கோரதவசி எனப் பேரும் பெற்று அட்டசித்திகளிலும் வல்லராய் யமபுரத்திலும் போய் அங்கே செய்யுந் தண்டனைகளையும் பார்தது வருகையிலே அங்கே ஒரு பெரிய மலையைக் கண்டு இம்மலை யாதென்று வுனாவினார். அப்போது அங்கேநின்றசிலர் அவரை நோக்கிப் "பூமியிலே கோரதபசி என்றொரு பாவி பிச்சைக்குவந்த ஒரு பிராமணனுடைய அன்னத்திலே ஒருகல்லையிட அக்கல்லோடு பிராமணன் அவ்வன்னத்தையுண்டான். அக்கல்லே அக்கோரதபசி இறந்தபின் உண்டற்கு இங்கே மலையா வளர்கின்றது" என்றார்கள். அதனைக் கேட்ட கோரதபசி அஞ்சி அதுசெய்தவன் இதினின்று தப்பிக்கொள்ளும் வகையுளதோ என்று வினாவினான். "பூமியிலே இவ்வளவோர் மலையைக் கரைத்துண்பானாயின்; இம்மலைய*ம் தானாக இங்கே கரைந்துவிடும்" என்றார்கள். கோதரபசி உடனே பூமியிலேவந்து தன்னூரை அடைந்து ஒரு மலையை நியமித்துச் சிறிதுசிறிதாக நாடோறும் இடித்துப் பொடியாக்கி நீரிற்கரைத்து உண்டுவந்தார். அம்மலை உண்டொழிய இயமபுரத்திலுள்ள மலையுங் கரைந் தொழிந்தது. அக்கோரதபசி மலையைக் கரைத்துண்ட காரணத்தாற் சிலாதர் என்னும் பெயர் பெற்றார்.
இந்தச் சிலாதர் புத்திரப்பேற்றினை விரும்பித் திருவையாற்றிலே பஞ்சாக்கினி மத்தியினின்று பலவருடங்களாகத் தவஞ்செய்தார். அத்தவத்திற் கிரங்கிச் சிவபெருமானும் வெளிப்பட்டு முனிவனே! உனக்கு வேண்டும் வரம் யாதென்று வினாவச் சிலாதமுனிவர் ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டுமென்றார். சிவ பெருமான், "சகலகுணங்களும் நிறைந்த ஒரு சற்புத்திரன் பதினாறுவயதுடையவனாய் நீ செய்யும் யாகபூமியிலே உழுபடைச்சாலிலே தோன்றுவான்" எனச்சொல்லி மறைந்தார். பின்னர் யாகசாலையை உழுதபோது ஒரு மாணிக்கப்பெட்டி தோன்றிற்று. சிலாத முனிவர் அப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே நெற்றிக் கண்ணுஞ் சந்திரசடாமுடியும், சதுர்ப்புயமுமாக விளங்குஞ் சிவமூர்த்தம் இருக்கக்கண்டு துதித்து நின்றார். அப்போது "முனிவனே! பெட்டியை மூடித்திற" என்றோர் அசரீரி தோன்றிற்று. பின்னர் அந்த அசரீரிப்படி மூடித் திறந்தார். அப்பொழுது பெருமான் ஒரு குழந்தையாக அழுதார். சிலாதமுனிவர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய்ப் பிராமணர்க்குரிய கிரியைகளெல்லாஞ்செய்து செப்பீசுவரர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். வளர்த்துவருங்காலத்திலே பதினாறாம் வயசும் வந்தது. பதினாறுவயசென்னும் நியமத்தைக் குறித்துத் தந்தையார் வருந்தினர். புத்திரர் அவர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல்லி அயனரிதீர்த்தநடுவினின்று ஸ்ரீருத்திரத்தை ஓதி அருந்தவஞ் செய்தார். அப்போது சிவபிரான் வெளிப்பட்டு நித்தியமாகிய சாரூப்பியங் கொடுத்து தமது நாமமாகிய நந்தி என்னும் நாமத்தையுஞ் சூட்டி சுகேசி என்னுங் கன்னிகையையும் மணம்புணர்வித்துக் கணத்தலைமையுங் கொடுத்துத் தமது கோயில் வாயிலிலே காவல்செய்யும்படி சுரிகையும் பிரம்புங் கொடுத்து முடிசூட்டி வைத்தார்.
____________________
கிழமைப்படவாழ்.
தண்டமிழ்க்காக் கம்பருக்குத் தாமடிமை யென்றுதொண்டை
மண்டலத்தா ரேட்டில் வரைந்ததுபோல்-எண்டிசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென்பாகை
மன்னா கிழமைபட வாழ். 34)
கம்பர்கதை.
கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் ஏரெழுபதென்னும் பிரபந்தம் பாடியபோது தொண்டைமண்டலத்துள்ள வேளாளர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்று இதற்கு எங்களாலே தரத்தக்க வேறுபரிசு யாதொன்றுமில்லை எங்களையடிமையாக உமக்குத் தருவதே பரிசாகும் என்றுசொல்லிக் கம்பருக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்தார்கள்.
__________________
கீழ்மையகற்று.
பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தரிலே
கண்காண நின்குலத்தார் கட்டிவைத்த-பண்பதுபார்
நன்பாகைப் புன்னைவன நாதனே யப்படிப்போல்
அன்பான கீழ்மை யகற்று. (35)
________________
குணமதுகைவிடேல்.
நீர்கலந்த பாலையன்ன நீர்பிரித்துக் கொள்வதுபோற்
சீர்கலந்தார் நற்குணமே சேர்ந்துகொள்வார்-ஏர்கொள்
புகழாளா புன்னைவன பூபால னேமிக்
ககுண மதுகை விடேல். (36)
__________________
கூடிப்பிரியேல்.
அர்ச்சுனன்மால் சார்பிழந்த வன்றே கருதலர்*முன்
கைச்சிலைவெற் பாக்கனத்துக் கைதளர்ந்தான் - நிச்சயமே
மன்றலர்சூழ் புன்னை வனநாதா தக்கோரை
என்றுங்கூ டிப்பிரி யேல். (37)
அருச்சுனன் கதை.
பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருக்கும்போது ஒரு தூதன் வந்து யாதவகுமாரர் யாவரும் கடல்விழாக் கொண்டாடிக் கள்ளுக்குடித்துத் தம்முள்ளே பகைத்துப் போராடி இறந்தார்கள் என்றும், கண்ணபிரானும் பலதேவனும் தவம் புரியுமாறு காட்டிற்புகுந்தார்கள் என்றுஞ் சொன்னான். அதுகேட்ட பாண்டவரும் பெண்களும் பெருந்துயரடைந்து புலம்பினார்கள். அவருள்ளே அருச்சுனன் மிகுவிரைவாகத் துவாரகைக்குப் போய் வசுதேவனையும் பெண்களையும் கண்டு புலம்பி அவர்களுக்கும் ஆறுதல்கூறிப் பின் காட்டிற்புகுந்து கண்ணபிரானையும் பலதேவனையுந் தேடியபோது அவர்களுடைய உடம்புகண்மாத்திரமிருக்கக் கண்டு விழுந்து புரண்டழுது கண்ணபிரானுடைய பேரனாகிய வச்சிரமேவனைக்கொண்டு அந்தியக்கர்மங்களைச் செய்வித்தான். செய்வித்தபின் ஏழுநாளுள்ளே துவாரகை கடலாற் கொள்ளப்படும் என்று முன்னரே கண்ணபிரான் சொன்னபடி நடக்குமென்றஞ்சி அங்கே இருக்கவிடாமல் கண்ணன்மனைவியரையும் நகரத்தாரையும் அழைத்துக்கொண்டு துவாரகையை நீங்கிப் பஞ்சவடம் என்னும் இடத்திலே வரப் பொழுதும்பட்டது. அப்போது அவர்கள் துவாரகையிலேயிருந்து கொண்டு வந்த திரவியங்களையும் பெண்களின் ஆபரணங்களையும் கண்டு சில வேடர்கள் அங்கே வந்து பறித்தார்கள். அப்போது தடுத்து வில்லிலே அம்புபூட்டி அருச்சுனன் பிரயோகஞ் செய்தும் கண்ணன்சார்பிழந்தமையாற் பயன்படவில்லை.
-----------------
கெடுப்பதொழி.
வாலிகெட ராமனொரு வாளிதொட்ட வெம்பழியை
மேலொருசென் மத்திலன்னோன் மீண்டுகொன்றான் - ஞாலமதில்
வல்லவனே புன்னை வனநாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்ப தொழி. (38)
இராமன் கதை.
விட்டுணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமச் சந்திரன் கிட்கிந்தைமலையிலே குரங்குகளுக்குத் தலைவனாயிருந்த வாலியென்பவனை அவன்தம்பியாகிய சுக்கிரீவன் பொருட்டு மறைந்துநின்று பாணப்பிரயோகஞ் செய்து கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்ட வாலி பின்னர் உலுப்தகன் என்னும் வேடனாகப்பிறந்து விட்டுணுவின் மற்றோரவதாரமாகிய கண்ணபிரானை ஒரு காட்டிலே படுத்திருக்கும்போது உள்ளங்காலிலே பாணப்பிரயோகஞ்செய்து கொன்றான்.
-------------------------------
கேள்விமுயல்.
முன்பகவற் கீதை முனியுரைக்கக் கன்னிமரந்
தன்படியே கேட்டுலகிற் றார்வேந்தர் - அன்புறல்போல்
மாதவனே புன்னை வனநாதா நன்மையுற
மூதறிவோர் கேள்வி முயல். (39)
----------------
கைவினைகரவேல்.
இந்திரன்வாள் வைக்க வெடுத்துமுன முற்கலனார்
தந்தருமம விட்டுத் தவமிழந்தார் - சந்ததமும்
பாகையில்வாழ் புன்னைவன பார்த்திவா வாகையினா
லேகை வினைகர வேல். (40)
முற்கலமுநிவர்கதை.
பிரம்மதேவருடைய மநத்திலே பிறந்த முநிவர் பதின்மர். அவர் மநு, மரீசி, புலத்தியன், தக்கன், புயகன், அங்கிரா, வசிட்டன், பிருகு, அத்திரி, கிருது, என்பவர். அவருள்ளே அங்கிரா என்னும் முநிவர்கணத்தோர் முப்பத்துமூவர். அவர் அங்கிரசு, மாந்தாதா, புருகுச்சன், முற்கலன் முதலியோர். அவருள்ளே முற்கலமுநிவர் தவஞ்செய்யுங்-காலத்திலே அத்தவத்தைக் கெடுக்க நினைத்த இந்திரன் வாட்படையைக் கொண்டுபோய் அம்முனிவருக்கு முன்வைத்தான். அம்முற்கலமுநிவர் அவ்வாட்படையை எடுத்து மரங்களையன்றிப் பலமிருகங்களையும் வெட்டிக் கொன்றார். வாளெடுத்து வெட்டிய காரணத்தினாலே தம்முடைய தருமமுந் தவமுமிழந்து நரகயாதனையும் பெற்றார்.
---------------------------------------------------
கொள்ளைவிரும்பேல்.
கொட்டமிட்டே யுத்தரத்திற் கோக்கொள்ளை யாடவந்த
துட்டனர வக்கொடியோன் றோற்றிடுக்கண் - பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே யேதெனினும்
பேதைமையாக் கொள்ளைவிரும் பேல். (41)
துரியோதனன்கதை.
பாண்டவர்கள் விராடபுரத்திலே வசிக்கும்போது விராடனுடைய பசுக்கவரவந்த துரியோதனன்பக்கத்தார்க்கும் விராடன்பக்கத்தார்க்கும் யுத்தம் நடந்தது. அப்போது துரியோதனனும் வந்து பேடிவடிவத்தோடும் அங்கே இருந்த அருச்சுனனாலே முடியும் பங்கப்பட்டுத் தோல்வியும் பகற்றுத் துயருமடைந்தான்.
----------------------------------
கோதாட்டொழி.
நம்பனுக்காஞ் செவ்வந்தி நன்மலர்வே சிக்களித்த
செம்பியனு மணமழையாற் சீரழிந்தான் - அம்புவியில்
எவ்வாறும் புன்னைவன மென்னுமுகி லேநீதிக்
கொவ்வாத கோதாட் டொழி. (42)
செம்பியன்கதை.
சாரமாமுனிவர் என்பவர் திரிசிராமலையையடைந்து சிவபூசைசெய்துவரும் நாள்களிலே ஒருநாள் அங்கே நாககன்னிகைகள் கொண்டுவந்து பூசித்த சுகந்தமுள்ள செவ்வந்திமலரைக்கண்டு தாமும் அம்மலர்களாற் பூசிக்கவிரும்பி அக்கன்னிகைகளோடும் பாதலத்திற்போய் அந்தச் செவ்ந்திச்செடிகளைக் கொண்டு வ வந்துந்து அங்கே உண்டாக்கி அம்மலராற் புசித்துவந்தார். அக்காலத்திலே அரசனாக உறையூரிலேயிருந்த பராந்தகன்என்னுஞ் சோழன் அம்மலர்களைப்பறித்துத் தன்னிச்சைப்படி உபயோகப்படுத்தினான். அதனைஅறிந்த அம்முனிவர் சிவபெருமானுடைய சந்நிதியையடைந்து முறையிடச் சிவபெருமான் அவனுடைய உறையூரிலே மண்மாரிபெய்யச் செய்தார். மண்மாரிபெய்து நகரழிதலைக்கண்ட அவ்வரசன் மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்னகரை விட்டோடினான். ஓடியுஞ் சிவபூசைக்குரிய பூவைக் கவர்ந்த குற்றத்தினாலே நகரோடழிந்து நரகமடைந்தான். செம்பியன் - சோழன்.
--------------------
சக்கரநெறிநில்.
மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமற்
றண்டகனென னும்மொருவன் றான்மடியக் - கண்டதனால்
வேள்புரையும் புன்னைவன வித்தகா வெந்நாளும்
நீழ்சக் கரநெறு நில். (43)
தண்டகன்கதை.
மனுமரபிலே தோன்றிய தண்டகன் என்பவன் தன்னாட்டினைத் தருமமுந்தயையுமின்றி அரசுசெய்துவருநாளிலே குருவாகிய சுக்கிரன் தவஞ்செய்யுங் காட்டிலேபோய்ச் சுக்கிரன்மகளைக்கண்டு மனமயங்கி அவளை வலாற்காரமாகப் புணர்ந்தான். அவளுந் துக்கத்தோடும் போய்ப் பிதாவுக்கு முறையிட்டாள். பிதாவாகிய சுக்கிரன் மிக்க கோபமுடையவனாய் "என்மகளுக்குத் தீராவிடும்பைசெய்த தண்டகனும் அவனாடும் கிளையும் பிறவும் வெந்து பொடியாகுக" எனச் சாபஞ் சொன்னான். அச்சாபப்படியே அவனுடைய நாடுங் காடாகித் தண்டகாரணியம் என்னும் பெயாராயிற்று.
----------------------------
சான்றோரினத்திரு.
ஈச னுமைமணத்தி லேவடதிக் காழ்ந்ததெனக்
காசினிசீ ராக்கக் கலசமுனி-வாசமுற்றுச்
செய்ததுபார் புன்னைவன தீரனே யப்படிச்சீர்
எய்துஞ்சான் றோரினத்தி ரு. (44)
அகத்தியர் கதை.
இமயமலையிலே சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் நடந்த கல்யாணத்தைத் தெரிசிக்குமாறு பலரும் போய்ச் சேர்ந்தபோது பாரம்மிகுந்து பூமியின் வடபாகந் தாழத் தென்பாகம் உயர்ந்தது. உலகமுழுதும் நிலைகுலைந்தது. தேவரும் பிறரும் வருந்திச் சிவனேயென்றிரங்கினர். யாவரும் இரங்குதலைச் சிவபெருமானுணர்ந்து பூமியைச் சமப்படுத்தக் கருதி அகத்திய முனிவரை அழைத்துத் தெற்கேயுள்ள பொதியமலையிலே போயிருக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அகத்தியரும் பொதியமலையிலே போயிருந்து பூமியைச் சமமாக்கினார்.
-------------------------------
சித்திரம்பேசேல்.
சீதைபண்பி ராவணற்குச் செப்பிக் குலங்கெடுத்த
பாதகிமூக் கன்றிழந்த பங்கம்பார் - ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாளாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம்பே சேல். (45)
சூர்ப்பநகிகதை.
சுமாலி என்பவனுடைய மகளாகிய கைகசி என்பவளிடத்திலே விச்சிரவா என்னும் முனிவனுக்கு இராவணன் முதலிய புத்திரர்களும் சூர்ப்பநகை என்பவளும் பறந்தார்கள். இந்தச் சூர்ப்பநகி தண்டகாரணியத்திலே இராமலக்குமணர்களையுஞ் சீதாப்பிராட்டியையுங் கண்டபோது இராமலக்குமணரை விரும்பியுந் தன்கருத்துச் சித்தியாகாது சீதாப்பிராட்டியைக் கவர்ந்துசெல்ல முயன்று இலக்குமணராலே மூக்குவெட்டப்பட்டாள். பின்னர் இராவணனிடம்போய்ச் சீதா பிராட்டியுடைய அழகு முதலியவைகளை அறிவித்தாள். இராவணன்வந்து சீதா பிராட்டியைக் கவர்ந்துபோனான். பின்னர் இராமசுவாமிபோய் இராவணன் முதலியோரைக் கொன்றார். ஆதலால் தன்குலங் கெடுதற்குச் சூர்ப்பநகியே காரணமாயினாள்.
--------------------------
சீர்மைமறவேல்.
உற்றதொடைப்* புண்ணுக் குடைகீறிக் காட்டிநின்றான்
கொற்றவன்மு னுன்கங்கை கோத்திரத்தான்-வெற்றிபுனை
மன்னான புன்னைவன வள்ளலே யாதலினால்
எந்நாளுஞ் சீர்மைமற வேல். (46)
----------------------------
சுளிக்கச்சொல்லேல்.
சகுனிதுரி யோதனற்குச் சர்ப்பனையாக் கேடு
மிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த- நகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
ரெனினுஞ் சுளிக்கச்சொல் லேல். (47)
சகுனிகதை.
காந்தாரதேசரானாகிய சகுனியென்பவன் வஞ்சகப் புத்திகளைச் சொல்லிக் கொடுத்துத் தன் மருகனாகிய துரியோதனனைக் கெடுத்தழித்தன்றித் தானுங் கெட்டழிந்தான்.
---------------------------
சூதுவிரும்பேல்.
தோராத நூற்றுவருந் தோற்றபஞ்ச பாண்டவரும்
பாரே யகன்றுபட்ட பாரதம்பார் - பேராண்மை
வற்றாத புன்னைவன மாகடலே மிக்கசெல்வம்
பெற்றாலுஞ் சூதுவிரிம் பேல். (48)
பாரதகதை
பாரதவீரர்களாகிய நூற்றுவர் ஐவர் என்னும் இருபாலருள்ளே தருமன் முதலிய ஐவரும் துரியோதனன்முதலிய நூற்றுவரோடுஞ் சூதாடி இராச்சியமுமிழந்து காடடைந்தார்கள். நூற்றுவரும் இராச்சியம் பெறவந்த ஐவரோடும் போராடி இறந்தார்கள்.
----------------------------
செய்வனதிருந்தச்செய்.
வேள்விக்கு மூவருமே வேண்டுமென் றெண்ணாமற்
றாழ்வுசெய்து தக்கன் றலையிழந்தான் - ஏழுலகும்
வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா செய்கையறிந்
தேசெய் வனதிருந்தச் செய். (49)
-------------------------
சேர்விடமறிந்துசேர்.
இருமைக்கு மெய்த்துணையா மென்றுமார்க் கண்டன்
அரனடியைச் சேர்ந்தா னவன்போல-அருள்பெருகும்
பூசா பலாபாகைப் புன்னைவன மேமனமொத்
தேசேர் விடமறிந்து சேர். (50)
மார்க்கண்டேயர்கதை.
மிருகண்டுமுனிவருடைய புதல்வராகிய மார்க்கண்டேயமுனிவர் இம்மைக்கும் மறுமைக்கும் நற்றுணையென்று கருதிச் சிவனடியைச் சேர்ந்து பூசித்து யமனையும் வென்று தீர்காயுசும் பெற்றார்.
-------------------------
சையெனத்திரியேல்.
தூயரகு ராமனபாற் சோரமுன்னி மாரீசன்
மாயமா னாய்த்திரிந்து மாய்ந்ததுபார்- ஞாயமன்றோ
வீசுபுகழ்ப் புன்னைவன மேகமே யித்தலத்தி
லேசை யெனத்திரி யேல். (51)
மாரீசன்கதை.
தாடகையென்பவளுடைய மகனாகிய மாரீசனைச் சீதையைக் கவரும்படி இராவணன் நினைத்து இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையைத் தனிமை யாக்கும்படி அனுப்பினான். மாரீசனும் ஒருமானின் வடிவெடுத்துப்போய்ச் சீதாபிராட்டி காணும்படி உலாவினான். மானின் சிறப்பைக்கண்ட சீதாப்பிராட்டி இம்மானை எனக்குப் பிடித்துத் தரவேண்டும் என்று இராமனை வேண்டினாள். இராமனும் வெகுதூரந் தொடர்ந்துபோயும் அகப்படாமைக்கண்டு அம்புசெலுத்த அவ்வம்பினால் விழுந்திறந்தான். விழும்போது "சீதாலக்குமணா" என்ற சொற் கேட்டு இலக்குமணனுந் தொடர்ந்தான். சீதையுந் தனியளாயினாள். அப்போது சந்நியாசியாக இராவணன் சென்று சீதையைக் கவர்ந்தான்.
-----------------
சொற்சோர்வுபடேல்.
நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
புத்தியற்ற கும்பகன்னன் பொன்றினன்பார் - மத்தமத
குன்றநிகர் புன்னைவனக் கொற்றவா பாகைமன்னா
என்றுஞ்சொற் சோர்வுப டேல். (52)
கும்பகன்னன்கதை.
இராவணன், கும்பகன்னன், விபூடணன் என்னும் புத்திரர் மூவரும் உக்கிரமான தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வேண்டிய வரங்களைக்கேட்டார்கள். அப்போது பிரமதேவர் கும்பகன்னனை நோக்கி உனக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்கக் கும்பகன்னன் நித்தியவரங்கேட்க நினைத்திருந்தும் சொற்சோர்ந்து நித்திரையென்று குளறிக் கேட்டடைந்தான்.
-------------------------------
சோம்பித்திரியேல்.
நளனிருது பன்னன்றோ நாண்மூன்றில் வீமன்
வளநகரி சேர்த்து மனையா-ளுளமகிழ
நின்றதுபார் புன்னைவன நேயனே தன்முயற்சி
என்றுஞ்சோம் பித்திரி யேல். (53)
நளன்கதை.
வீரசேனன் என்பவனுடைய மகனும் நிடததேசராசனுமாகிய நளனென்பவன் சூதாடித் தோல்வியடைந்து நாட்டினைவிட்டுத் தன்மனைவியாகிய தமயந்தியோடுங் காட்டில் வசிக்குங்காலத்திலே ஒருநாளிரவு கலியின்வசத்தினாலே அத்தமயந்தியைப் பிரிந்து அயோத்திநகரிலே போயு இருதுபன்னன் என்பவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தான். தமயந்தியும் தேடிக் காணாமற் குண்டினபுரத்திலே பிதாவாகிய வீமனுடைய வீட்டிலே போயிருந்தாள். பின்னர்ச் சயமரமென்று இருதுபன்னனுக்குத் தெரிவித்தபோது இருதுபன்னன் குண்டினபுரத்துக்கு வரப் புறப்படத் தேர்ப்பாகனாயிருந்த நளன் அவனைத் தேரிலேற்றி மூன்றுநாளைக்குள்ளே குண்டினபுரத்திலே கொண்டுவந்து சேர்த்துத் தமயந்தியும் மனமகிழும்படி நின்றான்.
-------------------------
தக்கோனெனத்திரி.
சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர்
செய்துலகில் யாண்டுஞ் சிறப்புற்றார்-வையமிசைப்
பொங்குபுகழ்ப் புன்னைவன பூபாலா பாகைமன்னா
எங்குந்தக் கோனெனத்தி ரி. (54)
திருஞாநசம்பந்தர்கதை.
சீர்காழிப்பதியிலே திருவவதாரஞ் செய்த திருஞானசம்பந்தர் தாம்பாடியருளிய தேவாரத்தினாலும் தாஞ் செய்தருளிய அற்புதத்தினாலுஞ் சமணரோடு செய்தவாத்ததினாலுஞ் சிவனே முழுமுதற் கடவுள் எனவும், சைவமே மெய்ச் சமயம் எனவும் எங்குந் தாபித்துப் பெரும்புகழ்பெற்றார்.
____________
தானமதுவிரும்பு.
முன்செ யறத்தை முகுந்தற் களித்தகன்னன்
பின்செயலு மீவனென்றே பேர்பெற்றான் - தன்செயல்போல்
தாதாவே புன்னைவனத் தாளாளா பூமியின்மேல்
ஏதா மைதுவிரும் பு. (55)
கன்னன்கதை.
சூரன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து குந்திபோசன் என்பவனுக்குத் தத்தபுத்திரியான குந்தி கன்னியாயிருக்குங் காலத்திலே சூரியனைச்சேர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றுப் பெட்டியிலடைத்துக் கடலிலே விட்டாள். அப்பிள்ளை கரையையடைந்து ஒரு தோப்பாகனால் வளர்க்கப்பட்டுத் துரியோதனனையடைந்து அங்கதேசத்துக்கு அரசனாக்கப்பட்டுக் கன்னன் என்னும் பெயரோடு விளங்கினான். இந்தக் கன்னன் பதினேழாம் நாட்போரிலே அருச்சுனனுடைய அம்பினாலே தாக்கப்பட்டுத் தளர்ந்து தேரிலே விழுந்து கிடந்தபோது கண்ணபிரான் ஒரு மாதவவேதிய வேடத்தோடு சென்று கன்னனை நோக்கி "நின் புண்ணிய முற்றுந் தருக" என்று யாசிக்கப் புண்ணியம் முற்றுங் கொடுத்துப் "பின்செய்வதுந் தருவேன்" என்றான்.
________________
திருமாலுக்கடிமைசெய்.
அண்டர் முனிவர்க் கவதாரம் பத்தெடுத்து
மிண்டரைவெட் டித்தரும மேபுரக்கக்-கண்டதனால்
மந்தரனே புன்னைவன வள்ளலே யெந்நாளுஞ்
செந்திருமா லுக்கடிமை செய். (56)
___________________
தீவினையகற்று.
ஈசர்வர முஞ்சிதைந்தே யெய்தியபோ ராக்கமும்போய்த்
தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற்-காசினியில்
வாழ்பாகைப் புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
சூழ்தீ வினையகற் று. (57)
______________
துன்பத்திற்கிடங்கொடேல்.
தூயரா மன்பகையாற் றுன்பமுற்றுந் தஞ்சமென்றே
சேயினையுந் தேவேந் திரனிழந்த-ஞாயம்பார்
மாதுங்கா புன்னைவன மன்னவா வஃதறிந்
தேதுன்பத் திற்கிடங்கொ டேல். (58)
__________________
தூக்கிவினைசெய்.
எதிரிபலம் பாதிகொள்வ னென்றறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து-துதிபெறல்பார்
பாரளந்த புன்னைவனப் பார்த்திவா வப்படியே
சீரறிந்து தூக்கிவினை செய். (59)
வாலிகதை.
வினதை என்பவளுடைய மகனாகிய அருணன் சூரியனுக்குத் தேர்ப்பாகனாயிருக்குங் காலத்திலே தேவலோகத்திற் போய்ப் பெண்வடிவத்தோடு நின்ற அருணனை இந்திரன் கண்டு விரும்பித் புணர்ந்து வாலி என்பவனைப் பெற்றான். இந்த வாலியென்பவன் சிவனை வழிபட்டுத் தன்னுடனே எதிர்க்கும் எதிரிகளுடைய பெலத்திற் பாதி தன்னைச் சேருமாறு வரம்பெற்றுக் குரங்குகளுக்குத் தலைவனாய்க் கிட்கிந்தையிலே வசித்தான். அதனையறிந்த இராமர் மறைந்து நின்று பாணம் விட்டுக் கொன்றார்.
________________
தெய்வமிகழேல்.
தாருகத்தார் மூவரையுந் தாழ்வுசெய்து தங்கடங்கள்
காரியத்தால் வேறு கதியளித்தார்-தாரணிக்கண்
மாதவனே புன்னை வனநாத மீதிடுக்கண்
ஏதெனினுந் தெய்வமிக ழேல். (60)
-------------------------
தேசத்தோடொத்துவாழ்.
எல்லா மதத்திற்கு மெவ்வுயிர்க்கு நீர்நிழல்போல்
நல்லா தரவை நயந்தருளி-வல்லாண்மை
சூழ்தேசு புன்னைவனத் தோன்றலே நீயுமென்றும்
வாழ்தேசத் தோடொத்து வாழ். (61)
----------------------------
தையல்சொற்கேளேல்.
மாதுசித்தி ராங்கிசொல்லான் மைந்தனைக்கை கால்களைந்
தேதுபெற்றா னோர்மன்ன னிப்புவியில்-நீதிநெறி
மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
ஏதெனினுந் தையல்சொற்கே ளேல். (62)
சித்திராங்கிகதை.
சித்தாராங்கியென்பவள் இராசராசநரேந்திரன் என்னும் அரசன் மனைவி. இவள் ஒருநாள் அந்தப்புரத்தில்வந்த சக்களத்திமகனைக்கண்டு மோகங்கொண்டு புணரும்படி பிடித்திழுக்க அவன் மறுத்தோடினான். அதனால் அவன்மேற் கோபமுற்று அரசனிடம்போய் அரசனே! நின்மகன்செய்த அநீதியைப் பாரென்று வளைத் தழும்பையுங் கிழிந்த புடவையையுங் காட்டி முறையிட்டாள். அரசனும் அவள் சொல்லை நம்பி மகனுடைய கைகால்களை வெட்டுவித்துப் பின்னர் உண்மையறிந்து பெருதுந் துக்கப்பட்டான்.
--------------------------
தொன்மைமறவேல்.
பண்டு துரோணன் பழமையெண்ணாப் பாஞ்சாலன்
மிண்டமரி லர்ச்சுனனால் வீறழிந்தான்-கண்டதன்றோ
பொன்னாளும் புன்னைவன பூபாலா தன்னையிறந்
தெந்நாளுந் தொன்மைமற வேல். (63)
யாகசேனன்கதை.
இளமைப்பருவத்திலே தன்னோடு பிரியநண்பனாகத் துரோணாச்சாரியர் நடந்த்தையுந் தான் அவருக்கு அரசனாய் வருங்காலத்திலே உலகிற் பாதி தருவேன் என்று சொன்னதையும் மறந்து துரோணாச்சாரியரை அறியேன் என்ற பாஞ்சால தேசராசனாகிய யாகசேனன் பின்னர்த் துரோணாச்சாரியராலே ஏவிவிடப்பட்ட அருச்சுன்னோடு போராடித் தோல்வியடைந்தான்.
---------------------------
தோற்பனதொடரேல்.
சண்டனொடு மிண்டன் றனைவென்ற சங்கரிபால்
மிண்டுமகு டன்பொருது வெட்டுண்டான்-புண்டரிக
மாதாரும் புன்னை வனநாதா நீணிலத்தி
லேதோற் பனதொட ரேல். (64)
மகிடாசுரன்கதை.
முன்னொரு காலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரிலே தேவர்களால் அசுரர்கள் இறந்தார்கள். புத்திரரை இழந்த அசுரமாதாவாகிய திதியென்பவள் தன்மகளைநோக்கித் தேவர்களெல்லாரையும் வெல்லத்தக்க ஒரு புத்திரனைப் பெறும்படி தவஞ்செய்யவிட்டாள். அவள் அவ்வாறே தவஞ்செய்து சுபாரிசமுனிவருடைய அருளினாலே மகிடன் என்னும் புத்திரனைப் பெற்றாள். இம்மகிடாசுரன் போரிலே பலரையும் வென்று பின்னர்த் துர்க்கையோடும் போராடி வாளால் வெட்டப்பட்டான்.
-------------------------
நன்மைகடைப்பிடி.
அரசமரந் தொல்கடனீந் தந்தணனைக் கால
புரவழியிற் காத்த புகழின் - பெருமையைப்பார்
மன்றலந்தார்ப் புன்னைவன வள்ளலே யார்க்கும்
என்றுநன் மைகடைப்பி டி. (65)
-------------------------------
நாடேற்பனசெய்.
நடோடும் போது நடுவோட வேண்டுமென்று
தேடுந் தருமர்சொன்ன சீரதனால் - நீடு
பொருந்துபுகழ்ப் புன்னைவன பூபாலா நன்றாய்த்
தெரிந்து நாடேற்பன செய். (66)
-------------------------
நிலையிற்பிரியேல்.
சஞ்சரித்து நின்ற சைலங் களையெல்லாம்
வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலாற் - செஞ்சரணால்
மண்ணளந்த புன்னை வனநாதா வென்றுநன்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல். (67)
மலைகளின்கதை.
முன்னொருகாலத்திலே மலைகளெல்லாம் சிறகுடையனவாய் ஆகாயத்திலே பறந்து பட்டணங்களிலே போய்த் தங்கிப் பட்டணங்களையுஞ் சீவராசிகளையும் அழித்துப் பெருந்துயர் விளைத்தன. அதனையறிந்த இந்திரன் அம்கமலைகளின் சிறகுகளையெல்லாம் வெட்டிவிட்டான்.
------------------------
நீர்விளயாடேல்.
கண்ணனருண மைந்தர் கருங்கடனீராடி
எண்ணரும்வாட் கோரையினா லிற்றனரால் - புண்ணியத்தின்
கண்ணான் புன்னைவனக் காராளா மேல்வருஞ்சீர்
எண்மையினா னீர்விளையா டேல். (68)
இதன் கதையை வஞ்சகம் பேசேல் என்புழிக் காண்க.
-----------------------------
நுண்மை நுகரேல்.
கோசிகனார் மாணக்கர் கூறரிய நாய்நிணத்தைப்
போசனஞ்செய் தேபுலையாய்ப் போயினார் - வீசுபுகழ்த்
தென்பாகைப் புன்னைவன தீரனே யெள்ளளவும்
இன்பான நுண்மைநுக ரேல். (69)
------------------------------
நூல்பலகல்.
கற்றதனா லுங்கள் கவிவீர ராகவமால்
வெற்றிபர ராசசிங்க மேன்மைசெயப் - பெற்றதனால்
ஞாலமதிற் புன்னைவன நாதனே நற்பருவ
காலமதி னூல்பல கல். (70)
-------------------------
நெற்பயிர்விளை.
அண்டா முதலோர்க் கமிர்தமய மாவடிவு
கொண்டறமே முத்திக்குங் கொள்கருவாக் - கண்டதனால்
தக்கபுகழ்ப் புன்னைவனத் தாளாளா வெப்பயிர்க்கும்
மிக்ககுண நெற்பயிர்வி ளை. (71)
------------------------------
நேர்கோனெறிநில்
வேத நெறிநின்ற வேதியர்போ னின்மரபோர்
ஆதிமுத லாப்புகழை யாண்டதுபார் - ஆதுலர்க்குத்
தாயான புன்னைவனத் தாளாளா பாகைமன்னா
நீயுநேர் கோனெறி நில். (72)
------------------------------
நைவினைநணுகேல்.
செய்தவமும் பாராமற் சீராமன் சம்புகனை
நைதலின்றிச் சென்னிகொண்ட ஞாயம்பார் - உய்தரும
வானான புன்னை வனநாதா துட்டர்பங்கி
லேநை வினைநணு கேல். (73)
சம்புகன் கதை.
ஸ்ரீராமச்சந்திரன் அரசுசெய்யுங்காலத்திலே சம்புகன் என்னும் பெயருடைய சூத்திரவருணத்தோன் ஒரு சோலையிலே தலைகீழுங் கால்கள் மேலுமாகத் தூங்கிக்கொண்டு தவஞ்செய்தான். அவன் தனக்குரியதல்லாத தவத்தினைச் செய்த காரணத்தினால் அந்நாட்டிலே ஒரு பிராமணச் சிறுவன் அகாலதிலே இறந்தான். இறந்த சிறுவனையும் எடுத்துக்கொண்டு தாயுந் தந்தையும் வந்து ஸ்ரீராமச்சந்திரனுக்கு முறையிட்டுப் புலம்பினார்கள். இராமச்சந்திரனும் விசாரணை செய்து சம்புகன் தவஞ்செய்தலே அகாலமரணமாக அச்சிறுவன் இறத்தற்குக் காரணமென்றறிந்து பலதிசையுந் தேடித் தவஞ்செய்யுஞ் சம்புகனைக்கண்டு வாளினால் அவன்றலையை வெட்டி வீழ்த்தினான்.
-----------------------
நொய்யவுரையேல்.
கந்தருவன் றஞ்செமன்ற காலையின்மா யோன்பகையைச்
சிந்தையில்வைத் தெண்ணினனோ தேர்விசயன் - பைந்தமிழ்தேர்
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
ஏற்றதற்பி னொய்யவுரை யேல். (74)
------------------------------
நோய்க்கிடங்கொடேல்
பசியூண் விலக்கினர்முன் பார்த்திவன் சீயாக்காய்
பிசைபுனலுண் டப்பசியைப் பேர்த்தான் - இசைபெறவே
பொன்னாளும் புன்னைவன பூபாலா வப்படியே
எந்நாளு நோய்க்கிடங்கொ டேல். (75)
பரதன்கதை.
பரதன் என்னும் அரசன் போசநகாலஞ் சிறிதுந் தவறாமல் "அருந்தியதற்றது போற்றியுண்டு" நோய்க்கிடங்கொடாமல் நடந்து வருதலை அறிந்த ஒருவைத்தியன் அரசனுடைய வேலைக்காரனைத் தன்வசமாக்கி அரசன் தைலமிட்டிருக்கும் ஒருதினத்திலே அவனது போசனகாலத்திற்குச் சமீபமாகச் சீயாக்காயயும் வெந்நீரையும் அமைத்து வைக்கும்படி செய்தான். அரசன் ஸ்நான மண்டபம் அடைந்தவுடனே பசியுமுண்டாயிற்று. போசநமகப்படவில்லை. பின் அந்தச் சீயாக்காயையும் வெந்நீரையும் உன்டு தன் பசியைப் போக்கினான்.
-----------------------------
பழிப்பனபகரேல்.
சூடுமுடி ராகவனார் சூடாமற் கைகேயி
கேடுசொன்ன வார்த்தை கிடைப்பதனால் - நீடுபுகழ்க்
காராளா புன்னைவன்க் கற்பகமே யாரிடத்தும்
*ஏரா பழிப்பனபக ரேல். (76)
*இதுவெண்பாப்போலிபோலும்.
கைகேயிகதை.
அயோத்திநகரராசனாகிய தசரதச்சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியருளர். கோசலையிடத்திலே ஸ்ரீராமனும், கைகேயியிடத்திலே பரதனும், சுமித்திரையிடத்திலே இலக்குமணன், சத்துருக்கினன் என்னும் இருவருமாக நான்குபுத்திரர் அச்சக்கரவர்த்திக்குப் பிறந்தார்கள். நால்வரும் வளர்ந்து சமர்த்தராய் விளங்கினர். தசரதச் சக்கரவர்த்தியும் வெகு வருடங்களாக அரசுசெய்து பின்னர் வயோதிகானாய்த் தளர்ச்சியுற்றுத் தன்னரசியலை இராமனுகுக் கொடுக்க நிச்சயித்தான். இதனை அறிந்த கூனியென்பவளாலே வப்பட்ட கைகேயி சக்கரவர்த்தியை நோக்கித் தன்மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டிற்போகவேண்டும் என்றும் இருவரங் கேட்டாள். சக்கரவர்த்தியும் முன்னொருகாரியத்திலே கைகேயிடத்திலே மகிழ்ச்சியுற்றபோது உனக்கு இரண்டு வரம் நீ கேட்டபடி தருவேன் என்று சொல்லியிருந்தபடியே கைகேயி கேட்ட இருவரத்தையுங் கொடுத்தான். இராமன் காடுசென்றான்.
---------------------------------
பாம்பொடுபழகேல்.
வாசுகிமுன் னாட்பழகும் வானோர்க் கமுதெழுமுன்
மோசமுற நஞ்சுமிழ்ந்த மூர்க்கம்பார் - காசினியில்
நன்றறியும் புன்னைவன நாதா விஃதறிந்தே
என்றும்பாம் பொடுபழ கேல். (77)
வாசுகிகதை.
காசிபமுனிவருடைய மனைவியர்களுள் ஒருத்தியாகிய கத்திரு என்பவளிடத்திலே அனந்தன், வாசுகி முதலிய பல பாம்புகள் பிறந்தன. அவற்றுள்ளே வாசுகி என்னும் பாம்பைத் தேவர்கள் திருபாற்கடலைக் கடைந்தபோது தாங்கள் கொண்ட மரத்திலே கயிறாகப்பூட்டி இழுத்தார்கள். அப்போது வாசுகி என்னும் பாம்பு நஞ்சினை உமிழ்ந்தது.
-----------------------------
பிழைபடச்சொல்லேல்.
சாபால ராமன் சபையிலோர் சொற்பிழைத்துக்
கோபால னஞ்சுடாமெய் குன்றியே - சோகமுற்றான்
ஆதலினாற் புன்னைவனத் தையனே யாவரிடத்
தேதும் பிழைபடச்சொல் லேல். (78)
-----------------------
பீடுபெறநில்.
நீலிபழி யைக்களைந்து நின்மரபில் வேளாளர்
சூலிமுது கிற்சூடச் சோறிட்டு - மேலான
ஞாயம்பார் புன்னைவன நாதனே யப்படியே
நீயுமிகப் பீடுபெற நில். (79)
நீலிகதை.
ஒருபெண் தன்னாயகன் நாடோறும் வேறு பெண்களிடஞ்சென்று கொண்டாடி வருதலையறிந்து கோபத்தோடும் அவனைத் தடுத்துத் தன்வசமாக்கும்படி வேண்டிய உபாயங்கள் செய்தாள். அவனோ இவள் என்கருத்திற்கு மிகவும் இடையூறாய் நிற்கிறாளென்று நினைத்த்க்கொண்டு அடுத்தவூரிலே நடக்கும் ஒரு சிறப்புக் காட்டுகிறேன் என்று சொல்லி அவளைக் கூட்டிகொண்டுபோய் ஒரு காட்டின் நடுவிலே விட்டுக் கொன்றுவிட்டான். பின் அவள் ஒரு பிசாசாய்ப் பிறந்து நீலி என்னும் பெயர் பெற்று அவனைக் கொல்லக் கருதியிருந்தாள். அவனும் பின்னரிறந்து ஒரு செட்டியாகப் பிறந்திருந்தான்.
பின்னர் அந்தச் செட்டியின் சாதகத்தை ஒரு சோதிடன் பார்த்து அந்தச் செட்டியை நோக்கி நீ வடதிசை நோக்கிச் செலவாயாயின்; ஒரு பேயினாலே நிச்சயமாய் மரணமடைவாய்; நான் ஒரு மந்திரவாள் தருகிறேன். அந்த வாள் உன்னிடமிருக்கும் வரையும் அந்தப் பேய் உன்னை அணுகமாட்டாதென்று சொல்லி வாளையுங் கொடுத்துவிட்டுச் சென்றான். அச்செட்டியும் அவ்வாளை எடுத்துக் கொண்டு வியாபாரஞ் செய்யும்படி வடதிசைநோக்கிப் போனான்.
நீலி என்னும் பேயும் அச்செட்டியின் மனைவிபோல் வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கொம்பினை ஒருகுழந்தையாக்கிக்கொண்டு அவனைத் தொடர்ந்தது. அவன் சில குறிப்பினாலே இது பேயென்றறிந்துந் தன்கையிலிருக்கும் மந்திரவாளின் வலியினாலே சிறிதும் பயப்படாமல் அங்கே எதிர்ப்பட்ட வேளாளர்களையடைந்தான். அந்தப் பேயும் அவர்களையடைந்து "இவர் என்கணவர்; வெகுநாளாக என்னோடு விரோதமாயிருக்கிறார், நான் எவ்வளவோ பணிந்து நடந்துஞ் சிறிதும் இரக்கமின்றி என்னை வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களாகிய நீங்கள் அவருக்கு என்மேலுள்ள கோபத்தை நீக்கி இம்மண்டபத்திலே அவரையும் என்னையுஞ் சில வார்த்தை பேசும்படி விடவேண்டும்" என்று வஞ்சகமாய்ச் சொல்லிற்று. செட்டியும் அவர்களை நோக்கி " இவள் என்மனைவியல்லள்; கொல்லும்படி வந்த ஒரு பேய்" என்றான். அதுகேட்ட நீலிஎன்னும் பேய் ' என்னிடுப்பிலுள்ள இக்குழந்தையை இவரிடம் விட்டால் அது இவரென்கணவர் என்பதை உங்களுக்கு நிச்சயமாய்க் காண்பிக்கும்" என்று சொல்லி அக்குழந்தையை நிலத்திலேவிட அக்குழதையும் அச்செட்டியின் மேலேறி விழுந்து விளையாடிற்று.
அது கண்ட வேளாளரெல்லாஞ் செட்டியை நோக்கிச் "செட்டியாரே! நீரேன் பொய் சொல்லுகிறீர்? இவள் உம்முடைய மனைவிதான்! இவள் வருந்தாமல் இம்மண்டப்பத்திற் புகுந்து இவளுக்குச் சமாதானஞ்சொல்லிவாரும்" என்றார்கள். தன்கையில் வாளுடனே அந்தச்செட்டி மண்டபம் நோக்கிச் சென்றான். அது கண்ட நீலி அந்த வேளாளரை நோக்கி " இந்த வாளினை வாங்கிக்கொண்டு விடுங்கள்; வாளோடு வருவாராயின் என்னைக் கொன்றுவிடுவார்" என்றது. அவர்கள் அவ்வார்த்தையை நிச்சயமென்று நம்பி வாளினை வாங்கச் செட்டி பயந்து இந்தவாளிருந்தபடியால் இதுவரையும் பிழைத்திருந்தேன். இது என்னைவிட்டு நீங்குமாயின் இந்தப் பேயினாலே இறந்துபோவேன்" என்றான். நீர் ஒருவர் இறந்து போவிராயின் நாங்கள் எழுபதின்மரும் உயிர் விடுகின்றோம் என்று தேற்றி அவர்கள் அவனை அனுப்பினார்கள்.
அவன் புகுந்த அக்கணமே அந்தப் பேயும் புகுந்து அவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவன் தாய்போல வடிவமெடுத்துவந்து அவ்வேளாளர்களை நோக்கி "உங்களிடத்திலே வந்த என்மகனை யாதுசெய்தீர்கள்?" என்று கேட்டது. அவவேளாளர்கள் வெகுநேரம் பார்த்து செட்டிவாராமையாற் போய்க் கதவைத் திறந்துபார்த்து செட்டியினுடலம் கிழிக்கப்பட்டிருத்தலைக்கண்டு தாங்கள் எழுபது பேருந் தீயிலே குதித்துச் சொன்னசொல்லுந் தவறாமல் இறந்தார்கள்.
-------------------------
புகழ்படவாழ்.
விழுமிந் திரத்துய்மன் மிக்கபுகழ் சொல்லிக்
கழறமுன்போ னாடடைந்த காதை - பழமையன்றோ
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயுமிந்த
வையம் புகழ்பட வாழ். (80)
இந்திரத்துய்மன்கதை.
இந்திரத்துய்மன் என்னும் அரசன் எத்தனையோ யாகங்கள் செய்து தேவுலகம்பெற்று எண்ணிறந்த இந்திரகாலம் போகமநுவித்து வரும் நாள்களிலே தேவர்கள் அவனை நோக்கி நின்பெயர் பூமியிலே நிலைபெறாமையால் நீ பூமியிற் போய்ப் பெயர்நாட்டிவரக் கடவாய் என்று தள்ளிவிட்டார்கள். பூமியிலே விழுந்த அவ்வரசன் மார்க்கண்டேய முனிவரைக்கண்டு "முனிவரே! என்பெயர் உலகத்திலே உண்டா இல்லையா?" என்று கேட்டான். மார்க்கண்டேய முனிவர் "சிவனிடத்திலே நான் சிரஞ்சீவியாக வரம்பெற்ற நாண்முதல் இன்றுவரையும் 187 பிரமகற்பமாயிற்று; இதற்குள்ளே உன்பெயரில்லை; என்னினும் மிக்க வயதுடைய கூகையொன்று இமயமலைச்சாரலிலே தவஞ்செய்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்டு கேட்டறி" என்றார். என்றவுடனே இந்திரத்துய்மன் ஒரு வெள்ளைக் குதிரை வடிவங்கொண்டு மார்க்கண்டேயரையுஞ் சுமந்துகொண்டு போய் அக்கூகையைக் கண்டு கேட்டான். கூகை "நான் 224 பிரமகற்பங் கண்டேன். இதற்குள்ளே உன் பெயரில்லை; சரசுவதி நதி தீரத்திலே என்னினும் மூத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குரண்டதேவர். அவரைக்கண்டு கேட்டறி" என்றது. அதனையுங் கூட்டிக்கொண்டுபோய் அக்குரண்டதேவரைக் கண்டு கேட்டான். குரண்டதேவர் "நான் 350 பிரமகற்பங் கண்டுளேன். இதற்குள்ளே உன் பெயர் வரவில்லை. கோபஞ்சகத்திலிருந்து தவஞ்செய்யுங் கூர்ம தேவர் என்னினும் மூத்தவர். அவரைக் கண்டு கேட்டறி" என்றார். பின்னர் எல்லாரும் போய் அக்கூர்மதேவரைக் கண்டு கேட்டபோது கூர்மதேவர் இந்திரத் துய்மன் செய்த தர்மம் முதலியவைகளை யாவர்க்கும் புலப்படச்சொன்னார். உடனே தேவர்கள் விமானத்தோடுவந்து " அரசனே! நின்னைப் பூமியிலே விட்டது
நின் கீர்த்தியை விளக்க" என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். அரசனும் மார்க்கண்டேயர் முதலியவர்களை ஆங்காங்கு விடுத்துத் தேவர்களுடன் தேவுலகம் புகுந்தான்.
--------------------------
பூமிவிரும்பு.
தலந்தீர்த்தந் தானந் தவஞ்சேய்சந் தானம்
நலம்பெறலாற் றேவரெலா நாடி - நிலந்துதிப்பார்
மந்திரியே புன்னை வனநாதா வாதலினாற்
புந்தியினிற் பூமி விரும்பு. (81)
----------------------
பெரியோரைத் துணைக்கொள்.
தந்தை யிரணியனைத் தள்ளிப் பிரகிலாதன்
சிந்தையின்மா யன்றுணையே தேடினாந்--சந்ததமும்
நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
குட்பெரியோ ரைத்துணைக் கொள். (82)
இதன் கதையைக் "கடிவதுமற" என்புழிக்காண்க.
-------------------------
பேதைமையகற்று.
கோவதைசெய் யப்பிடித்த கோளரிக்குத் தன்னுடலை
ஈவனென்றா னேதிலீப னென்னுமன்னன்--ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாதமன்னா வெப்போதும்
உட்பேதை மையகற் று. (83)
திலீபராசன்கதை.
திலீபன் என்பவன் சூரியவமிசத்துள்ள ஓரரசன். இவன் பிரபல கீர்த்திமானாய் அரசியல் செய்து வருங்காலத்திலே புத்திரப்பேறின்றிப் பிதிர்கடனை எப்படித் தீர்ப்பேன் என்று மிக்க விசனமுற்றுத் தன்மனைவியோடு குலகுருவாகிய வசிட்டமுனிவரையடைந்து தன்குறையை முறையிட்டான். வசிட்டமுனிவரும் திலீபனுக்குச் சந்ததி பிறப்பதற்குத் தடையாயுள்ள காரணத்தை ஆராய்ந்து "அரசனே! நீ ஒருமுறை தேவலோகம் போய் வருகையிலே வழியிற்கிடந்த காமதேனுவை வழிபடாது புத்திரோற்பவகாலங்கருதி விரைந்து வந்தாய்! அக்காமதேனு தன்னை அவமானஞ்செய்தாய் என்று கோபித்துச் சாபங்கூறிற்று.
அக்காமதேனுவின் கன்றாகிய இந்த நந்தினியை விரதம்பூண்டு வழிபடுவாயா யின்; அச்சாபநீங்கப்பெற்றுப் புத்திரப்பேற்றினையும் அடைவாய்" என்றார். பின்னர் திலீபன் அம்முனிவரை நோக்கி இந்த நந்தினியை எப்படிவழிபட வேண்டும் என்று கேட்டான். வசிட்டமுனிவர் திலீபனை நோக்கி "அரசனே! காமம் முதலியவைகளை வெறுத்துச் சாகமூலபலாதிகளைப் புசித்துப் பரிசுத்தத்தோடும் இந்த நந்தினிக்குப் பூசை செய்தி. இந்த நந்தினி நிற்கும்போது நீயும் நிற்றி! போகும்போது நீயும் போகுதி1 நீருண்ணும்போது நீயும் உண்ணுதி! கிடக்கு்போது நீயும் இருத்தி! இது நின் வழிபாட்டிலே மனம் மகிழும்வரைக்கும் வேறொன்றை எண்ணாதே! இதற்கு யாதொரு தீங்கும் வாராது காத்தி! நின் பெருந் தேவிதானும் இது மேயச் செல்லும்போது என்னுடைய ஆச்சிரம வெல்லைவரையும் கொண்டுபோய் விடவேண்டும். அது திரும்பி வரும்போது அவ்வெல்லையிற் போய்நின்று வழிபட்டுப் பூசித்துப் பின்வரல் வேண்டும்"
என்று கட்டளையிட்டு ஆசீர்வதித்துப் பன்னசாலையில் விடுத்தார்.
பின்னர் மற்றைநாள்தொடங்கி வசிட்டமுனிவர் சொல்லியபடியே விரதம் பூண்டு நந்தினியை பூசித்து வழிபட்டு வந்தான்.அப்படியே இருபத்தொரு நாள் சென்றொழிந்தது. அவ்விருபத்தொராம் நாளிலே அந்த நந்தினி அரசனுடைய அன்பினைப் பரிசோதிக்கக் கருதி மேய்ந்து மேய்ந்து இமயமலைச்சாரலிற் போயிற்று. அரசன் இமயமலையின் சிறப்புக்களை ஒருகணம் வரையிற் பார்த்து நின்றான். நந்தினி இளம்புல்லை மேய்ந்துகொண்டு அங்குள்ள ஒரு முழைஞ்சிலே புகுந்தது. அப்போது சிங்கமொன்று நந்திநிமேலே பாய நந்தினி குளறி விழுந்தது. அரசன் பாணம்விட முயன்றுங் கைகள் பந்தமாயின. பின்னர் அரசனுஞ் சிங்கமுஞ் சம்பாஷணை செய்தபோது அரசன் இப்பசுவை விடும்படியும் அதற்காகத் தன்னுடலை யுண்ணும்படியுங் கேட்டுப் பல நியாயங்காட்டி யாசித்தான். பின்னர்ப் பசுவாகிய நந்தினி சிங்கமாய் வந்ததுந் தானே என்று சொல்லிப் புத்திரப்பேற்றிற்கும் அருள் செய்தது. இப்படியே நந்தினியின் வரத்தினாலே இத்திலீபன் இரகு என்பவனைப் பெற்றான்.
--------------------------------
பையலோடிணங்கேல்
சச்சந் தனைமுன் சதிகட்டி யங்காரன்
நிச்சயமாய்ச் செய்த நிறைபிழைபார் - பொற்சிகர
தீபமென்னும் புன்னைவன தீரனே யானதுகண்
டேபைய லோடிணங் கேல். (84)
கட்டியங்காரன்கதை.
சச்சந்தன் என்பவன் ஏமாங்கதநாட்டிலே இராசமாபுரத்திலே அரசு செய்துவந்த ஓர் அரசன். இவனுக்கு மந்திரிமார் பலர். அவருள்ளே கட்டியங்காரன் என்பவனும் ஒருவன். சச்சந்தன் ஸ்ரீதத்தன் மகளாகிய விசயை என்பவளை விவாகஞ்செய்து பேரழகுடைய அவண்மேற்கொண்ட ஆசைப்பாட்டின் மிகுதியினாலே இடையறாமல் அவளோடு சுகமநுபவிக்கக் கருதி இராச்சியபாரத்தையும் வெறுத்து மற்றை மந்திரிமார் சொல்லையுங் கொள்ளானாய்க் கட்டியங்காரனை அழைத்து "நான் மனைவியாகிய விசயைப் பிரிதலாற்றேன். நீயே அரசனாய் இந்நாட்டினைக் காத்துவருக" என்று அவனை நியமித்து மனைவியைப் பிரியாது வாழ்ந்தான். பின்னர்க் கட்டியங்காரன் சேனைகளோடும் போய் அரசனோடு போராடி அரசனைக் கொன்றுவிட்டுத் தான் கருதியபடியே இராச்சியத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டான்.
--------------------------------
பொருடனைப்போற்றிவாழ்
நவநிதி பெற்றுந்தன் னம்பாரு ளில்லார்க்
கவிழுநல்கான் காப்பா னவன்போற் - புவிதழையத்
தேன்பொழியும் புன்னைவன தீரனே நீயென்றும்
வான்பொரு டனைப்போற்றி வாழ். (85)
--------------------------
போற்றடிப்பிரியேல்.
சங்கரனை யன்றியுமை தன்னைவலஞ் செய்யாமற்
பிங்கிருடி மூன்றுகால் பெற்றதனாற் - றுங்க
மனந்தளராப் புன்னை வனநாதா தொண்டர்
இனம்போற் றடிப்பிரி யேல். (86)
பிருங்கிருடிகதை
வேதாந்தங்களை நன்றாகக் கற்றுணர்ந்த பிருங்கி என்னும் முனிவர் "சிவனொருவரே தியானிக்கப்படத்தக்கவர்" என்பது முதலிய சுருதிகளைக் கடைப்பிடித்துத் தேவியாகிய உமையை விலக்கிச் சிவனை மாத்திரம் வலஞ்செய்துவந்தார். இதனை அறிந்த உமாதேவியார் எம்பெருமானுடைய திருமேனியிலே தாமும் பாதியாயிருக்கக் கருதித் திருக்கேதாரத்திலே போய்ச் சிவனை நோக்கித் தவஞ்செய்து சிவனுடைய திருமேனியிலே தாமும் பாதியாயினர். பின்னர்ப் பிருங்கிருடி வண்டு வடிவங்கொண்டு தேவியுஞ்சிவனுமாயிருக்குந் திருமேனியிலே தேவியை விலக்கவெண்ணி நடுவே துளைத்தார். அதுகண்ட உமாதேவியார் அவ்வண்டின் சக்தியை இழுத்துவிட வண்டுருவங்கொண்ட பிருங்கிருடி கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அம்முனிவருக்கு முன்னொருகாலும் ஒருதண்டமுங் கொடுத்தார்.
----------------------------
மனந்தடுமாறேல்.
கஞ்சனூ ராழ்வார் கனன்முக்கா லிக்குளிருந்
தஞ்சாமற் சைவநிலை யாக்கினர்*பார்--தஞ்சமென்பார்
புண்ணியமே மெய்த்துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனந்தடுமா றேல். (87)
அரதத்தாசாரியர்கதை
இவர் கஞ்சனூரிலே இருந்த வைஷ்ணவப் பிராமணர்களுள்ளே ஒருவராகிய வாசுதேவர் என்பவருடைய புதல்வர். அதுபற்றி இவரைக் கஞ்சனூராழ்வார் எனவுஞ்சொல்வர். இவர் பிதாவாகிய வாசுதேவர் கொள்ளும் விஷ்ணுசமயத்தை இளம்பருவந் தொடங்கி மறுத்துரையாடி சைவசமயமேன்மைதளையே பாராட்டி வந்தார். வைஷ்ணவர்கள் வந்து விஷ்ணுபரத்துவம் பேசியபோது யான் ஒழுகக் காய்ச்சிய இருப்பு முக்காலியின் மேலிருந்து சிவபிரானே கடவுளென்று சாதிப்பேன் என்று சொல்லி அவ்வாறு காய்ச்சி வைக்கப்பட்ட இருப்பு முக்காலியின் மேலிருந்து சதுர்வேததாற்பரியம் முதலியவைகளைச் சொல்லிச் சைவசமயத்தைத் தாபித்தார். அப்போது சிவானுக்கிரகத்தினாலே அந்தக் காய்ச்சிய முக்காலி அவருக்குச் சீதளமாயிருந்தது.
-------------------------
மாற்றானுக்கிடங்கொடேல்.
காகம் பசித்துவரக் காரிருளி னன்மைசெய்த
கூகை பகற்பட்ட கொடுமையினால்---வாகு
புனைதாமா புன்னைவன பூபாலா மோச
மெனமாற்றா னுக்கிடங்கொ டேல். (88)
கூகைகதை.
தென்தேசத்திலே மயிலை என்னும் நகரிலே ஓராலமரத்திலே மேகவர்ணன் என்னும் பெயருடைய காகராசன் தன்னினங்களோடும் வாசஞ்தெய்தது. அந்தக் காகங்களையெல்லாம் உருமர்த்தனன் என்னும் கூகையரசன் தன்னினங்களோடு இராக்காலங்களிலே வந்து கொல்லத் தொடங்கிற்று. இதனைக் காகராசன் அறிந்து மந்திரிகளோடும் ஆலோசித்தபோது பலரும் பலவாறு கூறினர். அவருள்ளே சிரஞ்சீவி என்னும் பெயருடைய கிழமந்திரி "அடுத்துக்கெடுத்தலே தக்க புத்தி"என்று அரசனுக்குச் சொல்லிவிட்டுக் கூகைகள் இருக்குமிடத்திலே போய் "யான் நீதிகூறி அரசனாலே தண்டிக்கப்பட்டதனாலே பிரிந்து பசித்து உங்களிடம் அடைக்கலம் வந்தேன்" என்றது. குரூரநாசன் என்னும் மந்திரி யொழிந்த கூகைகளெல்லாம் அக்காகத்தினை நம்பி உபசரித்துச் சேர்த்துக் கொண்டன. குரூரநாசன் என்னும் மந்திரி உடனே வேற்றிடம்போயிற்று. காகம் நாளுக்குநாள் கூகைகளின் கோட்டைவாயிலிலே சிறிதுசிறிதாக விறகுகளைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தன்னினங்களைக்கொண்டு நெருப்பு வைப்பித்து விடக் கூகைகளெல்லாம் எரிந்துபோயின.
-----------------------
மிகைபடச்சொல்லேல்
சங்கரா சாரியனார் தாயை யிகழ்குலத்தார்
தங்கணமனை யேசுடலை தானாகிப்--பங்கமுற்றார்
ஆதலினாற் புன்னைவன வையனே யாரிடத்தும்
ஏது மிகைபடச்சொல்லேல் (89)
சங்கராசாரியர் கதை
சங்கராசாரியர் சந்நியாசம்பெறும்போது அவர்தாயாகிய ஆரியாம்பாள் அவரை நோக்கி "மகனே! என்னுடைய அந்தியகாலத்திலே உன்கையாலே கடன் கழிக்கப்பெற்றுக் கதியடையவிரும்புகிறேன்" என்றாள். சங்கராசாரியர் தாயை நோக்கி "அன்னாய்! நீ அந்தியகாலத்திலே என்னை நினைப்பாயாயின்; நான் எங்கே இருந்தாலும் நீ இருக்குமிடத்திலே வந்து உனக்குச் செயற்பாலனவாகிய கிரியைகளை யெல்லாஞ் செய்துமுடித்து நற்கதியிலே உன்னைச் சேர்ப்பேன்" என்று சொல்லித் தீர்த்தயாத்திரை போயினர். பின்னர்த் தாயின் அந்தியகாலத்தை யோகத்தினாலே உணர்ந்து வான்வழிக்கொண்டு மலைநாட்டை அடைந்து தாய்க்கு முன்னர்ச்சென்று நின்றார். தாயார் சங்கராசாரியரைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு "மகனே! எனக்குக் கடன்களைச் செய்து நற்கதியில்விடுக" என்றாள். சங்கராசாரியர் தாயார்க்கு அத்துவித உண்மையாகிய நிர்க்குணத்துவ உபாசனா மார்க்கங்கூறினார். தாயார் "மகனே! என்னறிவு இதற்கேற்றதன்று; சகுணோ பாசனையுட் சிறந்ததொன்று கூறவல்லையோ?" என்றார். அப்போது சங்கராசாரியர் எட்டுப் புயங்கப் பிரயாத விருத்தத்தினாலே சிவத்துதி செய்தார். உடனே சிவாஞ்ஞையினாலே சிவகணங்கள் தோன்றின.
அதுகண்ட தாயார் கண்களை இறுக மூடிக்கொண்டு "மகனே! மகனே! நான் இவர்களோடு செல்லமாட்டேன்" என்றார். சங்கராசாரியர் "உனக்கறும் பெரும் பேறுங்கிடையாதொழிந்ததா?" என்று கூறி விட்டுணுபுயங்க தோத்திரஞ் செய்தார். உடனே விட்டுணுவாஞ்ஞையினாலே விட்டுணுகணங்கள் தோன்றினர. உடனே தாயார் விட்டுணுபாதங்களிற் சிந்தைவைத்துத் தேகத்தை விடுத்தார். அப்போது சங்கராசாரியர் தமது முன்னையாச்சிரமத்தின் தாயுடம்பினைச் சம்ஸ்காரஞ்செய்யும்படி பிராமணர்களை வருவித்து அவர்கள் வீட்டிலுள்ள பரிசுத்தமான அக்கினியைத்தரும்படி கேட்டார். பிராமணர்கள் இவர் சந்நியாச தருமத்திற்கு மாறாக நடக்கின்றார் என்று தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி அக்கிநிகொடுக்க உடன்படாது போயினர். தாயாரைச் சுமந்துகொண்டு போய்ச் சுடலையிற் சேர்ப்பாருமில்லாமையாற் சங்கராசாரியர் இரண்டு கைகளையுந் தேய்த்து வலக்கையிலே தீயுண்டாக்கி அவ்வீட்டையே விறகாக்கித் தாயார் கிரியையைமுடித்துவிட்டுப் பிராமணர்களை நோக்கி "உங்களுக்குச் சந்நியாசி பிச்சைதருந் தகுதியில்லாது போகக்கடவது; நீவிர் வேதத்துக்குப் புறத்தராகக் கடவீர்; உங்கள் வீடுகளிலே மயானம் உண்டாகுக; உங்கள் தேசம் சந்நியாசிகள் வருவதற்கு தகுதியற்றாதாகுக" என்று சபித்துச் சென்றார்.
------------------------------
மீதூண்விரும்பேல்.
இழிவறிந் துண்பான்க னின்பம்போ னிற்குங்
கழிபோ ரிரையான்க ணோயென்---றுளமுதுநூல்
வாக்கியத்தாற் புன்னை வனநாதா முன்னயிறல்
போக்கிமீ தூண் விரும்பேல் (90)
--------------------------
முனைமுகத்துநில்லேல்
ஆட்டுக் கடாப்போரி லன்றுதசை நாடிநரி
மாட்டிக்கொண் டேயுயிரு மாய்ந்ததுபார்---தோட்டுமலர்
மாமருவும் புன்னைவனநாதா வீணாக
வேமுனைமு கத்துநில் லேல் (91)
நரியின் கதை.
இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றோடொன்று பகைகொண்டு உக்கிரமான கோபத்தோடும் அடிபட்டன. இரண்டுக்குங் காயமுண்டாகிச் சரீரத்தினின்றும் இரத்தம் பெருகிற்று. அதனை ஒரு நரி கண்டு இரத்தம்பொருந்திய தசையையுண்பேன் என்று விரும்பிச் சென்று அவ்விரண்டுக்கும் இடையிலே அச்சமயத்திலே போய் அகப்பட்டுத் தாக்குண்டிறந்தது.
--------------------------
மூர்க்கரோடிணங்கேல்.
வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகரியென்
றோங்கு மவ்வை சொன்ன வுரைப்பொருள்பார்--பாங்குடைய
காமாற்றும் புன்னைவனக் காராளா வானதனால்
ஏமூர்க்க ரோடிணங்கேல் (92)
--------------------
மெல்லியாடோழ்சேர்.
போதவே நற்குணங்கள் போந்துந் தனைமூத்த
மாதரின்பந் தீதே மனுநெறியார்----ஆதலினால்
துய்யபுகழ்ப் புன்னைவனச் சோமா விளையாளாஞ்
செய்யகுண மெல்லியாடோள் சேர் (93)
--------------------------------
மேன்மக்கள் சொற்கேள்
ஆசிரியன் சொற்கேட்ட வன்றே தசரதனார்
கோசிகன் பாலிராகவனைக் கூட்டிமிக்க--தேசுபெற்றார்
நாட்கமலப் புன்னைவன நாதமகி பாதருமங்
கேட்கின்மேன் மக்கள் சொற் கேள் (94)
தசரதன் கதை.
சூரியகுலத்துள்ள இரகுவென்பவனுடைய புத்திரன் அயன். அயனுடைய மகன் தசரதன். இந்தத் தசரதனுக்கு புத்திரர் நால்வர். அவருள்ளே மூத்த புத்திரன் ஸ்ரீராமன். இந்த இராமன் வளர்ந்து சாமர்த்தியமுடையவனாய் விளங்குங் காலத்திலே விசுவாமித்திரமுனிவர் செய்யும் யாகங்களுக்கு இராட்சதர்கள் இடையூறு செய்து வந்தார்கள். விசுவாமித்திர் இராட்சதர்களை அடக்கித் தம்முடைய யாகத்துக்குத் துணைசெய்யத்தக்கவன் இராமனே என்று நிச்சயித்துத் தசரதனிடம் போய் இராமனைத் தமக்குத் துணையாக விடும்படி கேட்டார். குருவாகிய வசிட்டமுனிவரும் விசுவாமித்திரருடனே இராமனை விடும்படி சொன்னார். பின்னர்த் தசரதன் பெரிதும் மனவருத்தமுடையனாய் மறுத்தற்கஞ்சி இராமனை விசுவாமித்திரரோடுங் கூட்டியனுப்பினான். இராமன் விசுவாமித்திரரோடு கூடிச்சென்று கல்லாகக் கிடந்த அகலிகையை முன்போலப் பெண்ணாக்கியும், விசுவாமித்திரருடைய யாகத்துக்குத் தீங்குசெய்ய வந்த தாடகை என்பவளைக் கொன்றும், மிதிலையிலே வந்து வில்லுமுறித்துச் சீதாபிராட்டியை விவாகஞ் செய்துந் தந்தைக்குங் கீர்த்தியை உண்டாக்கினான்.
----------------------------
மைவிழியார்மனையகல்
விப்பிரநா ராயணன்முன் வேசிதன்மே லாசையினால்
இப்புவியிற் கட்டுண் டிழுக்குற்றான்--தப்பலவே
சைவநெறிப் புன்னைவனத் தாளாளா வெந்நாளும்
மைவிழியார் மனைய கல் (95)
----------------------------
மொழிவதறமொழி
வீமனுட லிற்பாதி மெய்வழக்கிற் றேர்ந்தபுரு
டாமிருகத் தின்பங்கென் றார்தருமர்---ஆமவர்போல்
பூமியெலாங் கொண்டாடும பொய்யாத புன்னைவன
மேமொழிவ தறமொ ழி. (96)
புருடாமிருகத்தின் கதை.
பாண்டவருள்ளே தருமர், இராயசூயயாகஞ்செய்தபோது புருடா மிருகத்தினை அழைத்து வரும்படி வீமசேனனை அனுப்பினார். வீமசேனன் போய்ப் புருடா-மிருகத்தினை வரும்படி கேட்டான். புருடாமிருகம் வீமசேனனை நோக்கி "நீ நான்குகாதவழி முன்னே செல்லுதி; யான் பின்னே உன்னைத் தொடர்ந்து வருவேன்; நான்வரும்போது நீ என்னெல்லையுள்ளே அகப்படுவாயாயின்; உன்னை யான் உண்டுவிடுவேன். என்னெல்லையைத்தாண்டி உன்னெல்லையிற் போய்விடுவாயாயின், நான் உன்னைத் தொடர்ந்து வருவேன்" என்று சொல்லிற்று. வீமனும் அதற்குடன்பட்டவனாய் வேகமாய் வரும்போது புருடாமிருகமும் வீமனைத் தொடர்ந்து நெருங்கி வந்தது. அதுகண்ட வீமன் அப்போது ஒரு மணீயாம்பரற் கல்லைப் பூமியிலே போட்டான். அவ்விடத்திலே ஒரு சிவாலயமுந் தீர்த்தமு-முண்டாயின. புருடாமிருகம் அத்தீர்த்ததிலே ஸ்நானஞ் செய்து சிவாலயத்தையும் வழிபட்டு வருமுன் வீமசேனன் வெகுதூரம் நடந்தும் வீமசேனனை நெருங்கித் தொடர்ந்தது. நெருங்க நெருங்க அப்படியே ஒவ்வொன்றாக ஏழுமுறை பரற்கல்லிட்டான். புருடாமிருகமும் அவ்வப்போதே அங்கங்கே தோன்றிய தீர்த்தங்களிலே ஸ்நானஞ்செய்து கோயில்களையும் வழிபட்டு வழிக் கொண்டுவந்து பின்னர் வீமசேனன் தன்னெல்லையில் ஒருகாலும் மற்றையெல்லையில் ஒருகாலுமாகப் பொகும்போது அவனைப் பிடித்தது. அப்போது வீமசேனன் எல்லைதவறிப் பிடித்தாயென்னப் புருடாமிருகந் தன்னெல்லையிற் பிடித்தேனெனன இருவரும் வழக்காடித் தருமரிடம்போய் முறையிட்டார்கள். இருவர் வாய்மொழியையுந் தருமர் கேட்டுத் தம்பி என்றும் பாராமல் வீமசேனனைச் சரீரத்திற் பாதி புருடாமிருகத்திற்குக் கொடுக்கும்படி சொன்னார்.
--------------------------
மோகத்தைமுனி.
தேவா முனிவர்மண்ணோர் தென்புலத் தார்க்குமோகம்
பாவவித் தென்றோதும் பழமறைகள்---ஆவதனால்
வேளாளா புன்னைவன வித்தகா வித்தரையின்
மூளுமோ கத்தை முனி. (97)
---------------------------
வல்லமைபேசேல்
குழந்தையென்று மாயனைப்பேய் கொல்லமுலைப் பாலீந்
திழந்ததுயி ரென்பதுல கெங்கும்---முழங்குதலால்
வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
மாறான வல்லமைபே சேல் (98)
பூதனைகதை
கண்ணபிரான் இடைச்சேரியிலே குழந்தையாய் வளருங்காலத்திலே கஞ்சனாகிய மாதுலனால் அவரைக்கொல்லும்படி வஞ்சகமாக அனுப்பபட்ட பூதனை என்னும் பேயானது தாய்போலச் சென்று கண்ணபிரானாகிய குழந்தைக்கு முலைப்பால் கொடுத்தது, கண்ணபிரான் இது கஞ்சனுடைய வஞ்சகமென்றுணர்ந்து முலைப்பாலோடு அப்பேயின் உயிரையும் உண்டார்.
------------------------
வாதுமுற்கூறேல்.
இந்திரன்முன் கோசிகன்வ சிட்டனுடன் வாதிலரிச்
சந்திரனைப் பொய்யனென்ற தப்பதனால்---வந்ததுபார்
மாதனே புன்னை வனநாதா வாயிடும்பால்
ஏதெனினும் வாதுமுற்கூ றேல். (99)
விசுவாமித்திரன் கதை.
தேவுலத்திலே இந்திரசபையிலே ஒருநாள் பூவுலகத்துள்ள பலமுனிவர்களும் போய்க்கூடினார்கள். அப்போது முனிவர்களையெல்லாம் இந்திரன் நோக்கி "முனிவர்களே! பூவுலகத்திலே அரசர்களுள்ளே காட்சிக்கெளியனாய்க், கடுஞ் சொல்லிலனாய், ஏகபத்தினிவிரதனாய், சத்தியவானாய், பொறுமையுடைவனாய், மநுநீதிதவறாது அரசு செய்பவன் யாவன்" என்றுவினாவினான். அப்போது வசிட்ட முனிவர் அதற்குவிடையாக அரிச்சந்திரனை வியந்துகூறினர். அதுகேட்டவிசுவா-மித்திரர் வசிட்டர் கூறியதனை மறுத்து வெய்யன், கபடன், வீணன், பொய்யன், கையன், கயவன், அரசர்க்குரிய வொழுக்கமில்லாதவன் என்று இன்னோரன்ன நிந்தைவார்த்தைகளால் அரிசந்திரனை இகழ்ந்தார். இப்படி இருவரும் வாதுபேசியபோது வசிட்டமுனிவர் "அரிச்சந்திரனிடத்திலேயுளதாக நான்கூறிய நல்லொழுக்கங்களிற் சிறிதானுந் தவறுமாயின்; நான் என்தவம் முழுவதுங் கைவிட்டுத் தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தெற்குநோக்கிச் செல்வேன்" என்று சபதங்கூறினர். விசுவாமித்திரரும் "நான் பரிசோதிக்கும்போது இவர் கூறிய நற்குணங்கள் அவ்வரிச்சந்திரனிடத்தே தவறாதிருக்குமாயின்; நான் வருந்திச் செய்த தவத்திலே பாதிகொடுப்பேன்" என்று சபதங்கூறினர். பின்னர் விசுவாமித்திரர் பலவாறு பரிசோதித்தும் அரிசந்திரன் சிறிதும் வழுவாமை கண்டு விசுவாமித்திரர் சொல்லியவாறே தவத்திலே பாதிகொடுத்துவிட்டார்.
--------------------------
வித்தைவிரும்பு.
வள்ளுவரைக் கல்வியன்றோ வண்டமிழ்ச்சங் கஞ்சயிக்கத்
தெள்ளுதமிழ் நூலுதவி செய்ததெல்லாம்--உள்ளதன்றோ
சந்திரனே புன்னைவனத் தாளாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தைவிரும் பு (100)
திருவள்ளுவர்கதை.
புலைத்தொடர்புடையராயிருந்தும் வள்ளுவர் தம்மிடமிருந்த கல்வி மகத்துவத்தினாலே மதுரைச் சங்கத்திலே போய்ச் சங்கப்புலவர்களையும் வென்று சங்கப்பலகையும் பெற்றுத் தமது நூலாகிய திருக்குறளையும் அரங்கேற்றிச் சங்கப் புலவராற் பாயிரமும் பெற்றார்.
_______________
வீடுபெறநில்.
நிலையா வுடல்பொரு ணீரி னிறைகஞ்சம்
மலரிலைபோ லெத்தனைநாள் வாழ்த்தும்-இலகுபொருள்
பக்தியெனும் புன்னைவனப் பார்த்திவா சனகனைப்போல்
நித்தியமாம் வீடுபெற நில். (101)
___________
உத்தமனாயிரு.
வேத வியாசன் விதுர னுருப்பசிதன்
காதன்மைந்த னான கனவசிட்ட-னீதியைப்பார்
நேயத்தாற் புன்னைவன நீதிபா தாரணியி
லேயுத் தமனா யிரு. (102)
____________
ஊருடன்கூடிவாழ்.
ஊருந்தா யுஞ்சரியே யூரையன்றி யேதனிவாழ்ந்
தாருந்தா யைத்தளிவாழ்ந் தாருமொப்பர்-பாரின்பால்
பொன்னூரும் புன்னைவன பூபாலா நீயிதெண்ணி
மன்னூ ருடன்கூடி வாழ். (103)
________________
வெட்டெனப்பேசேல்.
தருமருயர் வெள்வி தனிற்சிசுபா லன்பார்த்
தரியைநிந்தை சொல்லி யழிந்தான் - தெரிவதன்றோ
பார்புகழும் புன்னைவன பார்த்திபா மேலோரைச்
சீர்மைதப்பி வெட்டெனப்பே சேல் (104)
சிசுபாலன்கதை.
சேதிதேசராசனும் தமகோஷன் மகனுமாகிய சிசுபாலன் என்பவன் தருமருடைய இராயசூயத்திலே கண்ணபிரானுக்கு அக்கிரபூசை செய்யப்பட்டதென்று கண்ணபிரானை நிந்தித்துக் கண்ணபிரானாற் கொல்லப்பட்டான்.
________________
வேண்டிவினைசெய்.
ஆடாசாய் வேந்தாடா யாற்றுரும் வாசமதாய்த்
தேடுமிடைக் காடருரை செய்ததுபார்-நீடழகு
சார்ந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டிவினை செய். (105)
___________________
வைகறைத்துயிலெழு.
செய்யமுகம் வாய்கைகாற் றேகசுத்தி செய்துமெய்யிற்
றுய்யவெண்ணீ றிட்டரனைத் தோத்திரஞ்செய்-துய்யும்வகை
மாவெய்தும் புன்னைவன மன்னவா மையிரவி
லேவைக றைத்துயிலெ ழு. (106)
ஒன்னாரைத்தேறேல்.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரு மனைத்தென்-றெழுசொலைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல். (107)
வாழி.
அந்தணர்கள் வாழி யறம்வாழி கீர்த்திநிலை
தந்தவர்கள் வாழி தவம்வாழி-சந்ததமும்
மானஞ் செறிபுன்னை வனாநாதா விவ்வகையே
தானோ துவது தவம். (108)
ஆத்திச் சூடிவெண்பா முற்றிற்று.
கருத்துகள்
கருத்துரையிடுக