மலைபடுகடாம்


சங்க கால நூல்கள்

Back

மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்



malaipaTukaTAm of perungkaucikanAr
(work in pattuppATTu anthologies) (in Tamil Script, TSCII format)

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் பத்தாவதான
மலைபடுகடாம்

    -----------------------
    பாடியவர் :: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
    பாடப்பட்டவன் :: நன்னன் வேண்மான்
    திணை :: பாடாண்திணை
    துறை :: ஆற்றுப்படை
    பாவகை :: ஆசிரியப்பா
    மொத்த அடிகள் :: 583
    -----------------------

திருமழை தலைஇய இருணிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி ...10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித் ... 20

தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச்
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் ... 30

மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்
அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு ... 40

உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி நன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ ... 50

தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளின மானப்
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோ ள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் ... 60

புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த
புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப் ... 70

பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் ... 80

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கட வுள தியற்கையும்
பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொடு ... 90

திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
கேளினி வேளைநீ முன்னிய திசையே
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பி னாஅல் போல ... 100

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை ... 110

மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்
வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்று
ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவின் ... 120

அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக்
காயங் கொண்டன இஞ்சிமா விருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் ... 130

துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் ... 140

குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே
தீயி னன்ன ஒண்செங் காந்தள்
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் ...150

மணஇல் கமழு மாமலைச் சாரல்
தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்
சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
தூவொடு மலிந்த காய கானவர்
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்
அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி ... 160

அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாள்
மான விறல்வேள் வயிரிய மெனினே
நும்மில் போல நில்லாது புக்குக்
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்
ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு ... 170

வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து ... 180

வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
வரையர மகளிர் இருக்கை காணினும் ... 190

உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப்
புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
அரும்பொறி உடைய வாறே நள்ளிருள்
அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்
நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் ... 200

செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப்
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் ... 210

உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப்
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா ... 220

வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்
உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணிற் ... 230

தொழாஅநிர் கழியின் அல்லது வறிது
நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று ... 240

நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
கழுதிற் சேணோன் ஏவொடு போகி
இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள்துணிந் தன்ன ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் ... 250

குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி
மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர்
புட்கை போகிய புன்றலை மகாரோடு
அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
இல்புக் கன்ன கல்லளை வதிமின்
அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும் ... 260

துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசேட் கமழும் பூவும் உண்டோ ர்
மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்
இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறியறிக் தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்
நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் ... 270

மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்
தேஎ மருளும் அமைய மாயினும்
இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரு மருளுங் குன்றத்துப் படினே
அகன்கட் பாறை துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்
பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக்
காடுகாத் துறையுங் கானவர் உளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் ... 280

புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
உண்டற் கினிய பழனுங் கண்டோ ர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற
நும்மி னெஞ்சத் தவலம் வீட
இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் ... 290

பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் ... 300

எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் ... 310

கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
கலைகை யற்ற காண்பின் நெடுவரை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு ... 320

மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு ... 330

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் ... 340

கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்
என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி
அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த
மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்
குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் ... 350

விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங்
உண்டற் கினிய பலபா ராட்டியும்
இன்னும் வருவ தாக நமக்கெனத்
தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்
செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்
உருமுரறு கருவிய பெருமலை பிற்பட
இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் ... 360

மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை தூற்றலின்
தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற்
கூவல் அன்ன விடரகம் புகுமின்
இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது
குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு ... 370

தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே
அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்
கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின்
உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல் ... 380

இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல்
தளிபொழி கானந் தலைதவப் பலவே
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே
இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத் ... 390

தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து
கடவு ளோங்கிய காடேசு கவலை
ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே ... 400

மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் ... 410

பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்
பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் ... 420

கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே
தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி ... 430

திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி ... 440

வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை
தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையங் கொழித்த பூழி யன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் ... 450

பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே
கண்புமலி பழனங் கமழத் துழைஇ
வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த ... 460

விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்
முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக்
கண்டோ ர் மருளக் கடும்புடன் அருந்தி
எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் ... 470

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்
செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும்
துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும்
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்
நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து ... 480

யாறெனக் கிடந்த செருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்
கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் ... 490

அருங்கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி
வந்தோர் மன்ற அளியர் தாமெனக்
கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி
விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப்
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
மடநடை ஆமான் கயமுனிக் குழவி ... 500

ஊமை எண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை
வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல் ... 510

கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்
இடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்
தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
நாகந் திலக நறுங்காழ் ஆரம் ... 520

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்
உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி
வானத் தன்ன வளமலி யானைத் ... 530

தாதெருத் ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்
கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் ... 540

இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
சென்றது நொடியவும் விடாஅன் நசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்
பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து ... 550

அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது
உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி ... 560

இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய .... 570

நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்
கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும்
இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுரந் தன்ன ஈகை நல்கித்

தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே. 583

----------------------------
மலைபடுகடாம் முற்றிற்று.
----------------------------


This page was first put up on June 22, 2000


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III