நற்றிணை


சங்க கால நூல்கள்

Back

நற்றிணை


நற்றிணை

இத்தொகை தொகுப்பித்தோன் - பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் - அறியப்படவில்லை
400 பாடல்கள். சிறுமை 8 அடி உயர்வு 12 அடி
385 ம் பாடல் பிற்பகுதி மறைந்தது
234 ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது
56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை
ஏனையவற்றின் ஆசிரியர்கள் 192
திணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம், கலி,
ஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன.
எனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே.

கடவுள் வாழ்த்து

மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே

பாரதம் பாடிய பெருந்தேவனார்


நூல்

1 குறிஞ்சி - கபிலர்

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

2 பாலை - பெரும்பதுமனார்

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியப் பெருந் தலைக் குருளை மாலை
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

உடன் போகாநின்றாரை இடைச்
சுரத்துக் கண்டார் சொல்லியது

3 பாலை - இளங்கீரனார்

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

4 நெய்தல் - அம்மூவனார்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்
கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

தலைவன் சிறைப்புறத்தானாக தோழி அலர்
அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது

5 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்

நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே காதலர்ப் பிரிதல் இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து
வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது

6 குறிஞ்சி - பரணர்

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லியது

7 பாலை - நல்வெள்ளியார்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டி
இடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாய
தலைவிக்குத் தோழி சொல்லியது

8 குறிஞ்சி - (?)

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை
ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது

9 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம் ஆகலின்
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி
நிழல் காண்தோறும் நெடிய வைகி
மணல் காண்தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே

உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது

10 பாலை - (?)

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே

உடன்போக்கும் தோழி கையடுத்தது

11 நெய்தல் - உலோச்சனார்

பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே

காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு
ஆற்றாளாய தலைமகட்கு தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

12 பாலை - கயமனார்

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது

13 குறிஞ்சி - கபிலர்

எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந் தோளோயே கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே

இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை
ஞான்று தலைவியின் வேறுபாடு கண்ட தோழி
தலைவி மறைத்தற்குச் சொல்லியது

14 பாலை - மாமூலனார்

தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர்ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது
அலர் எழச் சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே

இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது

15 நெய்தல் - அறிவுடைநம்பி

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ் ஊரே

வரைவு நீட்டித்தவழி தோழி தலைமகற்குச்
சொல்லி வரைவு கடாயது

16 பாலை - சிறைக்குடி ஆந்தையார்

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக வாழிய பொருளே

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை
நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது

17 குறிஞ்சி - நொச்சிநியமங்கிழார்

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னை
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே

முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள்
தோழிக்குச்சொல்லியது

18 பாலை - பொய்கையார்

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல்அம் தொண்டிப் பொருநன் வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே

பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது

19 நெய்தல் - நக்கண்ணையார்

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே

புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

20 மருதம் - ஓரம்போகியார்

ஐய குறுமகட் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில்
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை கொடி முயங்கலளே

பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் யாரையும்
அறியேன் என்றாற்குத் தலைவி சொல்லியது
வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்

21 முல்லை - மருதன் இளநாகனார்

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உதுக் காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி
நாள் இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது

22 குறிஞ்சி - (?)

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே

வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது

23 குறிஞ்சி - கணக்காயனார்

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே

தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது

24 பாலை - கணக்காயனார்

பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும் நாம் எனச் சொல்ல சேயிழை
நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே

பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது

25 குறிஞ்சி - பேரி சாத்தனார்

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே

தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது

26 பாலை - சாத்தந்தையார்

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ் சூழ் ஓதி பெருந் தோளாட்கே

தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை
சொல்லி தோழி செலவு அழுங்குவித்தது

27 நெய்தல் - குடவாயிற் கீரத்தனார்

நீயும் யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறா தோளே

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

28 பாலை - முதுகூற்றனார்

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத்
தோழி சொல்லியது - குறை நயப்பும் ஆம்

29 பாலை - பூதனார்

நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி
யாங்கு வல்லுநள்கொல்தானே யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல் என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே

மகள் போக்கிய தாய் சொல்லியது

30 மருதம் - கொற்றனார்

கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோ
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும்
அறியேன் என்றார்க்குத் தோழி சொல்லியது

31 நெய்தல் - நக்கிரனார்

மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே 5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ் சினை புன்னை கடுஞ் சூல் வெண் குருகு 10
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே

தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிர் அழிந்தது

32 - குறிஞ்சி - கபிலர்

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் எனபது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி 5
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே

தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது

33 - பாலை - இளவேட்டனார்

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குன்றத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே 33

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு
அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது

34 - குறிஞ்சி - பிரமசாரி

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன் 5
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக 10
மடவை மன்ற வாழிய முருகே

தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது

35 - நெய்தல் - அம்மூவனார்

பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின்தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர் 10
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே

மணமகனைப் பிற்றை ஞான்று புக்க தோழி நன்கு
ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது

36 - குறிஞ்சி - சீத்தலை சாத்தனார்

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனந் தலை பெருங் களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இல் அழுங்கல் ஊரே

இரவுக்குறிச் சிறைப் புறமாகத் தோழி சொல்லியது

37 - பாலை - பேரி சாத்தனார்

பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ 5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும் 10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே

வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது

38 - நெய்தல் - உலோச்சனார்

வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென 5
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே 10

தலைவி வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

39 - குறிஞ்சி - மருதன் இளநாகனார்

சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடைய வால் அணங்கே

இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது

40 - மருதம் - (?)

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5
புனிறு நாறு செவிலியடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல 10
அகல் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே

தலைமகட்குச் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது

41 - பாலை - இளந்தேவனார்

பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ 5
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே 10

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத்
தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது

42 - முல்லை - கீரத்தனார்

மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல் அதனால் 5
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ 10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே

வினை முற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது

43 - பாலை - எயினந்தையார்

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் 10
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைவனைச் செலவு அழுங்குவித்தது

44 - குறிஞ்சி - பெருங் கௌசிகனார்

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த 5
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்
குடம் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து 10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே

இச்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன்
குறியிடத்து வந்து சொல்லியது

45 - நெய்தல் - (?)

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே 5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே 10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது

46 - பாலை - (?)

வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் 5
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து
நல் வாய் அல்லா வாழ்க்கை 10
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது

47 - குறிஞ்சி - நல்வெள்ளியார்

பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் 5
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின் 10
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே

சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

48 - பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்றை அனைய ஆகி இன்று உம் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை 5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது

49 - நெய்தல் - நெய்தல் தத்தனார்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று நாம் அறியின் எவனோ தோழி
மன்றப் புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே 10

தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்தூஉம் ஆம்

50 - மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ

அறியாமையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும் பைத் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் 5
கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர்
நாண் இலை எலுவ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன் 10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது

51 குறிஞ்சி - பேராலவாயர்

யாங்குச் செய்வாம்கொல் தோழி ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே வானம் பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெருந் தண் குளவி குழைத்த பா அடி
இருஞ் சேறு ஆடிய நுதல கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே

ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்டாள் வெறியாடலுற்ற
இடத்து சிறைப்புறமாகச் சொல்லியது

52 பாலை - பாலத்தனார்

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

தலைமகன் செலவு அழுங்கியது

53 குறிஞ்சி - நல்வேட்டனார்

யான் அ·து அஞ்சினென் கரப்பவும் தான் அ·து
அறிந்தனள்கொல்லோ அருளினள்கொல்லோ
எவன்கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடு நாள்
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப் பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே

வரைவு நீட்டிப்ப தோழி சிறைப்புறமாகச் சொல்லியது

54 நெய்தல் - சேந்தங் கண்ணனார்

வளை நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ
வாப் பறை விரும்பினைஆயினும் தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை
அது நீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே

காமம் மிக்க கழிபடர்கிளவி

55 குறிஞ்சி - பெருவழுதி

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும்
தோழி தலைவற்குச் சொல்லியது

56 பாலை - பெருவழுதி

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா
ஒருங்கு வரல் நசையடு வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் எனப்
போயின்று கொல்லோ நோய் தலைமணந்த

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும்
தோழிக்குத் தலைவி சொல்லியது

57 குறிஞ்சி - பொதும்பில் கிழார்

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செங் கோல் கொடுங் குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

58 நெய்தல் - முதுகூற்றனார்

பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு
நோக்கி தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது

59 முல்லை - கபிலர்

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவேஅன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று உயவுமார் இனியே

வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது

60 மருதம் - தூங்கலோரியார்

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே

சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த்
தோழி செறிப்பு அறிவுறீஇயது

61 குறிஞ்சி - சிறுமோலிகனார்

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினெனாக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே

தலைவன் வரவு உணர்ந்து தலைவிக்குச்
சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது

62 பாலை - இளங்கீரனார்

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாட் திங்கள்
உரறு குரல் வெவ் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பர·து எனவே

முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து
வந்த தலைவன் பின்னும் பொருள்வலிக்கப்பட்ட
நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது

63 நெய்தல் - உலோச்சனார்

உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப
பசலை ஆகி விளிவதுகொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே

அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச்
செறிப்பு அறிவுறீஇயது

64 குறிஞ்சி - உலோச்சனார்

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே

பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக்
கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது

65 குறிஞ்சி - கபிலர்

அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது

66 பாலை

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ
கோதை மயங்கினும் குறுந் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே

மனை மருட்சி இனிசந்த நாகனார்

67 நெய்தல் - பேரி சாத்தனார்

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய் கரைய
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே
கணைக் கால் மா மலர் கரப்ப மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோதெய்ய பொங்கு பிசிர்
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது

68 குறிஞ்சி - பிரான் சாத்தனார்

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்க என விடுநள்மன்கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது

69 முல்லை - சேகம்பூதனார்

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரைச் சென்று அவண் மறைய
பறவை பார்ப்புவயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகித் தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே

வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது

70 மருதம்

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கௌ ற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

காமம் மிக்க கழிபடர்கிளவி வெள்ளி வீதியார்

71 பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார்

மன்னாப் பொருட் பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனப்
பல் மாண் இரத்திர்ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே

தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது

72 நெய்தல் - இளம்போதியார்

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே கொண்கன்
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் எற்
பிரிதல் சூழான்மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
புலர்வதுகொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே

தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

73 பாலை - மூலங்கீரனார்

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது

74 நெய்தல் - உலோச்சனார்

வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறை அருங் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே

தலைவி பாணற்கு வாயில்மறுத்தது

75 குறிஞ்சி - மாமூலனார்

நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்
தோழி கேட்பச்சொல்லியது

76 பாலை

வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால் இழைக் குறுமகள்
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே

புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத்
தலைவிக்கு உரைத்தது அம்மூவனார்

77 குறிஞ்சி

மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங் குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே நெஞ்சே செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒள் நுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே

பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது கபிலர்

78 நெய்தல்

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா
உரவு நீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே

வரைவு மலிந்தது கீரங்கீரனார்

79 பாலை - கண்ணகனார்

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே

பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது

80 மருதம் - பூதன்தேவனார்

மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்கு உரைத்தது

81 முல்லை - அகம்பன்மாலாதனார்

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்கதில் பாக நின் தேரே பூண் தாழ்
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே

வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது

82 குறிஞ்சி - அம்மூவனார்

நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நல் நடைக் கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே
போகிய நாகப் போக்கு அருங் கவலை
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசிப் படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே

தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது

83 குறிஞ்சி - பெருந்தேவனார்

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய்ப் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்
எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே

இரவுக்குறி வந்த தலைவன்
சிறைப்புறத்தானாக தோழி சொல்லியது

84 பாலை (?)

கண்ணும் தோளும் தண் நறுங்கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர் மன்னே இன்றே
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே

பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது

85 குறிஞ்சி - நல்விளக்கனார்

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்
ஆர் இருள் கடுகிய அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே

தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது

86 பாலை - நக்கீரர்

அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே

குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

87 நெய்தல் - நக்கண்ணையார்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே

வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி
கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது

88 குறிஞ்சி - நல்லந்துவனார்

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

89 முல்லை - இளம் புல்லூர்க் காவிதி

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே

பொருள் முற்றி மறுத்தந்தான் எனக்
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

90 மருதம் - அஞ்சில் அஞ்சியார்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா
நயன் இல் மாக்களடு கெழீஇ
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே

தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்
பாணனை நெருங்கி வாயில்மறுத்தது

91 நெய்தல் - பிசிராந்தையார்

நீ உணர்ந்தனையே தோழி வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே

தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது

92 பாலை (?)

உள்ளார்கொல்லோ தோழி துணையடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே

பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது

93 குறிஞ்சி = மலையனார்

பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே

வரைவு கடாயது

94 நெய்தல் - இளந்திரையனார்

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே

தலைமகன்சிறைப்புறமாக தலைவி
தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

95 குறிஞ்சி - கோட்டம்பலவனார்

கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே குழு மிளைச் சீறூர்
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே

தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து
இத்தன்மைத்து என உரைத்தது

96 நெய்தல் - கோக்குளமுற்றனார்

இதுவே நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்
துவரினர் அருளிய துறையே அதுவே
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி
பைஇப் பையப் பசந்தனை பசப்பே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய் வரைவு கடாயது

97 முல்லை - மாறன் வழுதி

அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எ·கு எறிந்தாங்கு
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது

98 குறிஞ்சி - உக்கிரப் பெருவழுதி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே

இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத்
தோழி வரைவு கடாயது

99 முல்லை - இளந்திரையனார்

நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தௌ த்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத்
தோழி பருவம் அன்று என்று வற்புறுத்தியது

100 மருதம் - பரணர்

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே

பரத்தை தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப
விறலிக்கு உடம்படச்சொல்லியது

101 நெய்தல் - வெள்ளியந்தின்னனார்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது

102 குறிஞ்சி - செம்பியனார்

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல்வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறிஆயின்
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே

காமம் மிக்க கழிபடர்கிளவி

103 பாலை - மருதன் இள நாகனார்

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து
ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது

104 குறிஞ்சி - பேரி சாத்தனார்

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல் பானாள்
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது

105 பாலை - முடத்திருமாறன்

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே

இடைச் சுரத்து மீளலுற்ற
நெஞ்சினைத் தலைமகன் கழறியது

106 நெய்தல் - தொண்டைமான் இளந்திரையன்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு
உணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய்
மீள்கின்றான் தேர்ப்பாகற்குச்சொல்லியது

107 பாலை - (?)

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி நோய்ப்பாலேனே

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

108 குறிஞ்சி

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி
தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது

109 பாலை - மீளிப் பெரும்பதுமனார்

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென கலங்கிப் பேதுற்று
அன்னவோ இந் நன்னுதல் நிலை என
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது

110 பாலை - போதனார்

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

மனைமருட்சி மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்

111 நெய்தல் - (?)

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது

112 குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்

விருந்து எவன்செய்கோ தோழி சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே

பருவ வரவின்கண்ஆற்றாளாய
தலைவியைத் தோழி வற்புறுத்தியது

113 பாலை - இளங்கீரனார்

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர
பின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்
ஆம்பல்அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது

114 குறிஞ்சி - தொல்கபிலர்

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன்மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி
மையல் மடப் பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு
உரைப்பாளாய் சிறைப்புறமாகச் சொல்லியது

115 முல்லை - (?)

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும் மிகப் பேர்
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி
பருவம் காட்டி வற்புறுத்தியது

116 குறிஞ்சி - கந்தரத்தனார்

தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்பமாதோ
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு
வன்புறை எதிரழிந்து சொல்லியது

117 நெய்தல் - குன்றியனார்

பெருங் கடல் முழங்க கானல் மலர
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே

வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை
எதிரழிந்து சொல்லியது சிறைப்புறமும்ஆம்

118 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது

119 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர் கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது

120 மருதம் - மாங்குடி கிழார்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நப் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது

121 முல்லை - ஒரு சிறைப்பெரியனார்

விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே

வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குத்
தேர்ப்பாகன் சொல்லியது

122 குறிஞ்சி - செங்கண்ணனார்

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது

123 நெய்தல் - காஞ்சிப் புலவனார்

உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே

தலைவன்சிறைப்புறத்தானாக தோழி
தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

124 நெய்தல் - மோசி கண்ணத்தனார்

ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது

125.குறிஞ்சி - (?)

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நல் நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது

126 பாலை - (?)

பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்
நில்லாப் பொருட் பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன்
நெருங்கிச் செலவு அழுங்கியது

127 நெய்தல் - சீத்தலைச் சாத்தனார்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது

128 குறிஞ்சி - நற்சேந்தனார்

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக அதற்கொண்டு
அ·தே நினைந்த நெஞ்சமொடு
இ·து ஆகின்று யான் உற்ற நோயே
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்

129 குறிஞ்சி - ஒளவையார்

பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே அதன்தலை
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது

130 நெய்தல் - நெய்தல் தத்தனார்

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ
எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே விரிநீர்
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது

131 நெய்தல் - உலோச்சனார்

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத்
தலைவன் வேறுபடாமை ஆற்றுவித்தாய் பெரியை
காண் என்றாற்குத் தோழி சொல்லியது

132 நெய்தல் - (?)

பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்தலை
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்
இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளே

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய
தலைவிக்குத் தோழி சொல்லியது

133 குறிஞ்சி - நற்றமனார்

தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதல்அம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌ த்த
தோய் மடற் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே

வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய
தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது

134 குறிஞ்சி - (?)

இனிதின் இனிது தலைப்படும் என்பது
இதுகொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சி
அவ் வாய்த் தட்டையடு அவணை ஆக என
ஏயள்மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அ·து
ஒல்லேன் போல உரையாடுவலே

இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை
அ·து இலர் என்பது பட தோழி சொல்லியது

135 நெய்தல் - கதப்பிள்ளையார்

தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்
வால் உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே

வரைவு நீட்டிப்ப அலர்ஆம் எனக் கவன்ற
தோழி சிறைப்புறமாகச்சொல்லியது

136 குறிஞ்சி - நற்றங் கொற்றனார்

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது

137 பாலை - பெருங்கண்ணனார்

தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்
தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே

தலைவன் செலவு அழுங்கியது

138 நெய்தல் - அம்மூவனார்

உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே

அலர் ஆயிற்று என ஆற்றாளாய தலைமகட்குத்
தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

139 முல்லை - பெருங்கௌசிகனார்

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ பெருங் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளி
இடத்தானாக பெய்த மழையை வாழ்த்தியது

140 குறிஞ்சி - பூதங்கண்ணனார்

கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது

141 பாலை - சல்லியங்குமரனார்

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல பல உடன்
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன் நினக்கே பருந்து பட
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத்
தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது

142 முல்லை - இடைக்காடனார்

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளடு சுருக்கி
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே

வினை முற்றி மீளும்தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

143 பாலை - கண்ணகாரன் கொற்றனார்

ஐதே கம்ம யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே

மனை மருட்சி

144 குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

பெருங் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு
போது ஏர் உண் கண் கலுழவும் ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று
சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது

145 நெய்தல் - நம்பி குட்டுவன்

இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும் நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ
அம்ம வாழி தோழி அவர் தேர் மணிக் குரலே

இரவுக்குறி வந்து தலைமகன்
சிறைப்புறத்தானாக தோழி வரைவுகடாயது

146 குறிஞ்சி - கந்தரத்தனார்

வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக
தோழி கேட்பச்சொல்லியது

147 குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்

யாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள்
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது

148 பாலை - கள்ளம்பாளனார்

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அருஞ் சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே

பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது

149 நெய்தல் - உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது
சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்

150 மருதம் - கடுவன் இளமள்ளனார்

நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அ·து யாம்
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை
தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது

151 குறிஞ்சி - இளநாகனார்

நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல தோழி கடுவன்
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

152 நெய்தல் - ஆலம்பேரி சாத்தனார்

மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன்தலையும் பையென
வடந்தை துவலை தூவ குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் அளியென் யானே

மடல் வலித்த தலைவன்முன்னிலைப்
புறமொழியாக தோழி கேட்பச்சொல்லியது

153 பாலை - தனிமகனார்

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே

பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது

154 குறிஞ்சி - நல்லாவூர் கிழார்

கானமும் கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதே
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூவிலாட்டி
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது

155 நெய்தல் - பராயனார்

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்
யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ
சொல் இனி மடந்தை என்றனென் அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே

இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத்
தலைவன் சொல்லியது உணர்ப்பு வயின் வாரா
ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்

156 குறிஞ்சி - கண்ணங் கொற்றனார்

நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெருங் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும் அதனால்
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே

இரவுக்குறி மறுத்தது

157 பாலை - இளவேட்டனார்

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம்
உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது

158 குறிஞ்சி - வெள்ளைக்குடி நாகனார்

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது

159 நெய்தல் - கண்ணம் புல்லனார்

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினம்ஆயின் மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக நீ அமர்ந்த தேரே

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி வரைவு கடாயது

160 குறிஞ்சி - (?)

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்
ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே

கழற்று எதிர்மறை

161 முல்லை - (?)

இறையும் அருந் தொழில் முடித்தென பொறைய
கண் போல் நீலம் சுனைதொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயினகொல்லோ தௌ ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே

வினை முற்றிப் பெயரும்தலைவன்
தேர்ப்பாகன் கேட்ப சொல்லியது

162 பாலை - (?)

மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே

உடன் போதுவல் என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது

163 நெய்தல் - (?)

உயிர்த்தனவாகுக அளிய நாளும்
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்துமன் அளிய தாமே பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே

வரைவு மலிந்து சொல்லியது

164 பாலை - (?)

உறை துறந்திருந்த புறவில் தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச்
சொல்லின் தௌ ப்பவும் தௌ தல் செல்லாய்
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்
ஊறு இலராகுதல் உள்ளாமாறே

பொருள் முடித்து வந்தான் என்பது வாயில்கள்வாய்க்
கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

165 குறிஞ்சி - (?)

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து
கிளையடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்ப
நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிகப் பல்கின தூதே

நொதுமலர் வரையும் பருவத்து தோழி
தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச்
சொல்லியது வரைவு மலிந்ததூஉம் ஆம்

166 பாலை - (?)

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட
கிழத்திக்குத் தலைவன் சொல்லியது

167 நெய்தல் - (?)

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவற் பை தீர் பாண
நின் வாய்ப் பணி மொழி களையா பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள்
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே

தோழி பாணற்கு வாயில் மறுத்தது தூதொடு
வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்

168 குறிஞ்சி - (?)

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட பண்பு எனப் படுமோ
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்
மை படு சிறு நெறி எ·கு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே

தோழி இரவுக்குறி மறுத்தது

169 முல்லை - (?)

முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீர
படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது

170 மருதம் - (?)

மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே

தோழி விறலிக்கு வாயில் மறுத்தது

171 பாலை - (?)

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்
நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்
பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது

172 நெய்தல் - (?)

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி
வரைவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்

173 குறிஞ்சி - (?)

சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும்
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி
வெறி என உணர்ந்த அரிய அன்னையை
கண்ணினும் கனவினும் காட்டி இந் நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே

தோழி தலைவிக்கு உரைப்பாளாய் சிறைப்புறமாகச்
சொல்லியது வெறி அச்சுறீஇத் தோழி
அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்

174 பாலை - (?)

கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகும் அ·து அறியாதோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே

வினை முற்றி வந்து எய்திய காலத்து ஆற்றாளாய
தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது

175 நெய்தல் - (?)

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது

176 குறிஞ்சி - (?)

எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே

பரத்தை தலைவியின் பாங்கிக்குப்
பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது

177 பாலை - (?)

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப் பட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்
பீலி சூட்டி மணி அணிபவ்வே
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே

செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது

178 நெய்தல் - (?)

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்றுமாது அவர்த் தௌ ந்த என் நெஞ்சே

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

179 பாலை - (?)

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்மன்னே இன்றே
மை அணற் காளை பொய் புகலாக
அருஞ் சுரம் இறந்தனள் என்ப தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே

மனை மருட்சி

180 மருதம் - (?)

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி
தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது

181 முல்லை - (?)

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே
உய்ந்தன்றாகும் இவள் ஆய் நுதற் கவினே

வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது

182 குறிஞ்சி - (?)

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே

வரைவு நீட்டிப்ப தலைமகள் ஆற்றாமை அறிந்த
தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது

183 நெய்தல் - (?)

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்
மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே

வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது

184 பாலை - (?)

ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மனை மருட்சி

185 குறிஞ்சி - (?)

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே

பாங்கற்குத் தலைவன் சொல்லியது சேட்படுக்கும்
தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்

186 பாலை (?)

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே

பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது

187 நெய்தல் - ஒளவையார்

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய
பல் பூங் கானலும் அல்கின்றன்றே
இன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டி
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி
தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது

188 குறிஞ்சி (?)

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே

பகற்குறி மறுத்து வரைவு கடாயது

189 பாலை (?)

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ
எவ் வினை செய்வர்கொல் தாமே வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

190 குறிஞ்சி (?)

நோ இனி வாழிய நெஞ்சே மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எ·கின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழைக் கண் குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச்
சொல்லியது அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச்
சொல்லியதூஉம் ஆம் இடைச் சுரத்துச் சென்று
தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக்
கழறியதூஉம் ஆம்

191 நெய்தல் - உலோச்சனார்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே

தோழி தலைமகன் சிறைப்புறமாக செறிப்பு
அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது

192 குறிஞ்சி (?)

குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவத் துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை
நீ நயந்து வருதல் எவன் எனப் பல புலந்து
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே

இரவுக்குறி மறுக்கப்பட்டு
ஆற்றானாய தலைமகன் சொல்லியது

193 பாலை (?)

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது

194 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட
இரும்பு கவர்கொண்ட ஏனற்
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது

195 நெய்தல் - (?)

அருளாயாகலோ கொடிதே இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே

களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக
ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது

196 நெய்தல் - வெள்ளைக்குடி நாகனார்

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே

நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த
காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள்
மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது

197 பாலை - நக்கீரர்

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தௌ ந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது

198 பாலை - கயமனார்

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை
தன் ஊர் இடவயின் தொழுவேன் நுண் பல்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்
தந்தைதன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே

பின் சென்ற செவிலி இடைச்
சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது

199 நெய்தல் - பேரி சாத்தனார்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே

வன்புறை எதிரழிந்தது

200 மருதம் - கூடலூர்ப் பல் கண்ணனார்

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முது வாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி
கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து வாயிலாகப் புக்க
பாணன் கேட்ப குயவனைக் கூவி இங்ஙனம்
சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது

201.குறிஞ்சி - பரணர்

மலை உறை குறவன் காதல் மட மகள்
பெறல் அருங்குரையள் அருங் கடிக் காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு
அவ் வெள் அருவிக் குட வரையகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது

202 பாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்
தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல
பல் பூங் கோங்கம் அணிந்த காடே

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது

203 நெய்தல் - உலோச்சனார்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கித் தாது சோர்பு
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்
உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே

தலைமகன் சிறைப்புறத்தானாக
தோழி சொல்லி வரைவு கடாயது

204 குறிஞ்சி - மள்ளனார்

தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே

பின்னின்ற தலைமகன் ஆற்றானாய் தோழி
கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

205 பாலை - இளநாகனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய் நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறிஆயின் இன்றொடு
போயின்றுகொல்லோ தானே படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்கியது
தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்

206 குறிஞ்சி - ஐயூர் முடவனார்

துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ
செவ் வாய்ப் பாசினம் கவரும் என்று அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என
எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்
நல் நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்கொல் தோழி
செல்வாள் என்றுகொல் செறிப்பல் என்றுகொல்
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல் அ·து அறிகலென் யானே

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

207 நெய்தல் - (?)

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே

நொதுமலர் வரைவுழி தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

208 பாலை - நொச்சி நியமங் கிழார்

விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதற் குறுமகள்
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்
நோன்மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர் அதன்தலை
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும் இப் பெரு மழைக் குரலே

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய
தலைமகள் உரைப்ப தோழி சொல்லியது

209 குறிஞ்சி - நொச்சி நியமங்கிழார்

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறுமகள் மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்கால் பையுள் தீரும் படாஅது
தவிரும்காலைஆயின் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன்
ஆற்றானாய் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச்
சொல்லியது தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்

210 மருதம் - மிளைகிழான் நல்வேட்டனார்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன் செய் வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே

தோழி தலைமகனை நெருங்கிச்
சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது

211 நெய்தல் - கோட்டியூர் நல்லந்தையார்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்
கொடுங் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே

வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற
தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது

212 பாலை- குடவாயிற் கீரத்தனார்

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே

பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய்
வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது

213 குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே

மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது

214 பாலை - கருவூர்க் கோசனார்

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இருங் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே

உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன்
குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது

215 நெய்தல் - மதுரைச் சுள்ளம் போதனார்

குண கடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பி
பகல் கெழு செல்வன் குடமலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோதெய்ய செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே

பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும் தன்மையள்
அல்லள் நீயிர் இங்குத் தங்கற் பாலீர் எமரும் இன்னது
ஒரு தவற்றினர் எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது
இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்

216 மருதம் - மதுரை மருதன் இளநாகனார்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார்ஆயினும்
இன்னாதுஅன்றே அவர் இல் ஊரே
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன்
தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை பாணற்கு ஆயினும்
விறலிக்குஆயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது

217 குறிஞ்சி - கபிலர்

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இருங் கேழ் வயப் புலி வெரீஇ அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே

தலைமகள் வாயில் மறுத்தது

218 நெய்தல் - கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌ த்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே

வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது

219 நெய்தல் - தாயங்கண்ணனார்

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது

220 குறிஞ்சி - குண்டுகட்பாலியாதனார்

சிறு மணி தொடர்ந்து பெருங் கச்சு நிறீஇ
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நல் மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்
பெரிதும் சான்றோர்மன்ற விசிபிணி
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது பின்னின்ற
தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம்
ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்

221 முல்லை - இடைக்காடனார்

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ
செல்க பாக நின் செய்வினை நெடுந் தேர்
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது

222 குறிஞ்சி - கபிலர்

கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே

தோழி தலைமகன் வரவு உணர்ந்து சிறைப்புறமாகச்
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

223 நெய்தல் - உலோச்சனார்

இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூங் கானல்
இன்னீர்ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள் அதனால்
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே

பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி
நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது

224 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்மினோ என்ன இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்
பிரியலம் என்று தௌ த்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள்
பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு அறிவிலாதேம்
என்னை சொல்லியும் பிரியார் ஆகாரோ என்று சொல்லியது

225 குறிஞ்சி - கபிலர்

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே

வன்புறை எதிர் அழிந்தது பரத்தை தலைமகட்குப்
பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்

226 பாலை - கணி புன்குன்றனார்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாம் தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர்மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ் உலகத்தானே

பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது

227 நெய்தல் - தேவனார்

அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக தோழி
தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது

228 குறிஞ்சி - முடத்திருமாறனார்

என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியது

229 பாலை - (?)

சேறும் சேறும் என்றலின் பல புலந்து
சென்மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் எனச் செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே
அதனால் சென்மின் சென்று வினை முடிமின் சென்றாங்கு
அவண் நீடாதல் ஓம்புமின் யாமத்து
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென
ஆடிய இள மழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது
செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்

230 மருதம் - ஆலங்குடி வங்கனார்

முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை
கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு
இனிதே தெய்ய நின் காணுங்காலே

தோழி வாயில் மறுத்தது

231 நெய்தல் - இளநாகனார்

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே

சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாயது

232 குறிஞ்சி - முதுவெங்கண்ணனார்

சிறு கண் யானைப் பெருங் கை ஈர் இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட காமம் நல்கென
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது

233 குறிஞ்சி - அஞ்சில் ஆந்தையார்

கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலைமன்னே கொன் ஒன்று
கூறுவென் வாழி தோழி முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌ¢மே

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக
இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து சிறைப்
புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது

234 - மூலபாடம் மறைந்து போனது

ஆனால் நற்றிணை மறைந்த பாடல் இ·தாகலாம் என
ஐயுற்றுக் காட்டப்படும் பாடல்கள் கீழுள்ளன

களவியற் காரிகை பதிப்பித்த பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
அவர்கள் பக்கம் 129 ல் நற்றிணை ஆகலாம் என இதனை
குறித்துள்ளார். இறையனார் அகப் பொருளுரை சூத்திரம்
28 லும் இ·தே 'அறத்தொடு நிற்றலுக்கு' எடுத்துக் காட்டாக
ஆளப்படுகின்றதாம்
மேலும் 8 அடிகள் மட்டுமே உள்ளமை நோக்த்தக்கது

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அ·து ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே

அதான்று தொலங்காப்பியப் பொருளதிகார உரையில் (களவியல் 23)
நச்சினார்க்கினியர் மேற்கோளன்று நற்றிணை பாடலாக தோற்றுகிறது
அ·து வருமாறு

நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர் இறை வளைத் தோள் நின் தோழி செய்த
ஆர் உயிர் வருத்தம் களையாயோ என
எற் குறை உறுதிர் ஆயின் சொற் குறை
எம்பதத்து எளியள் அல்லள் எமக்கு ஓர்
கட் காண் கடவுள் அல்லளோ பெரும
ஆய்கொல் மிளகின் அமலை அம் கொழுங் கொடி
துஞ்சு புலி வரிப் புறம் தைவரும்
மஞ் சுசூழ் மணிவரை மன்னநன் மகளே

இவ்விரண்டில் ஏதோ ஒன்று நற்றிணை
மறைந்து போன பாடலாகலாம்

235 நெய்தல் - (?)

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணிக் கலி மாக் கடைஇ
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே

வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது

236 குறிஞ்சி - நம்பி குட்டுவன்

நோயும் கைம்மிகப் பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே

தலைமகன் சிறைப்புறமாக வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது

237 பாலை - காரிக்கண்ணனார்

நனி மிகப் பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை
உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே

தோழி உரை மாறுபட்டது

238 முல்லை - கந்தரத்தனார்

வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்று உடன்
உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல நின் இடி நவில் குரலே

தலைமகள் பருவம் கண்டு அழிந்தது

239 நெய்தல் - குன்றியனார்

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல் யாம் மற்றொன்று செயினே

தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது

240 பாலை - நப்பாலத்தனார்

ஐதே கம்ம இவ் உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும்
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு
ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்

241 பாலை - மதுரைப் பெருமருதனார்

உள்ளார்கொல்லோ தோழி கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பலவுடன்
வேந்து வீசு கவரியின் பூம் புதல் அணிய
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து
பல் இதழ் உண்கண் கலுழ
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

242 முல்லை - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன்
கார் கண்டு பாகற்குச் சொல்லியது

243 பாலை - காமக்கணிப் பசலையார்

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் என
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

244 குறிஞ்சி - கூற்றங்குமரனார்

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே

அறத்தொடுநிலை வலித்த
தோழியைத் தலைவி முகம் புக்கது

245 நெய்தல் - அல்லங்கீரனார்

நகையாகின்றே தோழி தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்
தௌ தீம் கிளவி யாரையோ என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்குற்றமை கூறி கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது

246 பாலை - காப்பியஞ் சேந்தனார்

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீக் கொன்றையடு பிடவுத் தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது

247 குறிஞ்சி - பரணர்

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எ·குறு பஞ்சிற்று ஆகி வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ
நல்காய்ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே

நீட்டியாமை வரை எனத் தோழி சொல்லியது

248 முல்லை - காசிபன் கீரனார்

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே

பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத்
தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது

249 நெய்தல் - உலோச்சனார்

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ
சென்றது அன்றோ கொண்கன் தேரே

வரைவிடை மெலிந்தது

250 மருதம் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

நகுகம் வாராய் பாண பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே

புதல்வனொடு புக்க தலைமகன்
ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது

251 குறிஞ்சி - மதுரைப் பெருமருதிள நாகனார்

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய
பலி பெறு கடவுட் பேணி கலி சிறந்து
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்
தோடு இடம் கோடாய் கிளர்ந்து
நீடினை விளைமோ வாழிய தினையே

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது

252 பாலை - அம்மெய்யன் நாகனார்

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையடு இறந்து செயின அல்லது
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே

பொருள்வயிற் பிரியும் எனக் கவன்ற
தலைமகட்குத் தோழி சொல்லியது

253 குறிஞ்சி - கபிலர்

புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்
பேர் இசை உருமொடு மாரி முற்றிய
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி
பலவு உறு குன்றம் போல
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே

செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது

254 நெய்தல் - உலோச்சனார்

வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்
துனி இல் நல்மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலின

தோழி படைத்து மொழிந்தது

255 குறிஞ்சி - ஆலம்பேரி சாத்தனார்

கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும் அன்னோ
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திருமணி அரவுத் தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே

ஆறு பார்த்து உற்றது

256 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இந் நிலை தவிர்ந்தனம் செலவே வைந் நுதிக்
களவுடன் கமழ பிடவுத் தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே

பொருள்வயிற் பிரிந்தான் என்று ஆற்றாளாகிய
தலைமகளைத் தலைமகன் ஆற்றியது

257 குறிஞ்சி - வண்ணக்கன் சோருமருங்குமரனார்

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடு நாள் வருதி நோகோ யானே

தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது

258 நெய்தல் - நக்கீரர்

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே

தோழி செறிப்பு அறிவுறீஇயது

259 குறிஞ்சி - கொற்றங் கொற்றனார்

யாங்குச் செய்வாம்கொல் தோழி பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன் விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே

தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

260 மருதம் - பரணர்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழத்
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன் யான் மறந்து அமைகலனே

ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது

261 குறிஞ்சி - சேந்தன் பூதனார்

அருளிலர்வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே

சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு
கடாயது தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்

262 பாலை - பெருந்தலைச் சாத்தனார்

தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்
ஆடு மயிற் பீலியின் வாடையடு துயல்வர
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்
பணைத் தோள் அரும்பிய சுணங்கின் கணைக் கால்
குவளை நாறும் கூந்தல் தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும்ஆயின்
அரிது மன்றம்ம இன்மையது இளிவே

தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து பிரிவிடை விலக்கியது

263 நெய்தல் - இளவெயினனார்

பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்
இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும் இரை வேட்டு
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே

சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது

264 பாலை - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈகாண் தோன்றும் எம் சிறு நல் ஊரே

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை
வற்புறீஇயது உடன்போய் மறுத்தரா
நின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம்

265 குறிஞ்சி - பரணர்

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந் தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே

பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது

266 முல்லை - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்
எம் விட்டு அகறிர்ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே

தலைமகனைச் செலவுடன்பட்டது கடிநகர்
வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி
நும்மாலே ஆயிற்று என்று சொல்லியதூஉம் ஆம்

267 நெய்தல் - கபிலர்

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணித் தௌ இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்
இவை மகன் என்னா அளவை
வய மான் தோன்றல் வந்து நின்றனனே

தோழி காப்புக் கைமிக்குக் காமம்
பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச்
சொல்லியது வரைவு கடாயதூஉம் ஆம்

268 குறிஞ்சி - வெறி பாடிய காமக்கண்ணியார்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற்கொல்லோ தோழி வினவுகம்
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே

தலைமகட்குச் சொல்லியது தலைமகன் வந்தொழுகவும்
வேறுபாடு கண்டாள் அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய்
வெறி எடுத்துக் கொள்ளும் வகையான் என்றதூஉம் ஆம்

269 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்
மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே

தோழி வாயில் மறுத்தது செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்

270 நெய்தல் - பரணர்

தடந் தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந் தோட் செல்வத்து இவளினும் எல்லா
எற் பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே

தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை
நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது
உடனிலைக் கிளவி வகையால்

271 பாலை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று
வீ சுனைச் சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு
மா இருந் தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே

மனை மருண்டு சொல்லியது

272 நெய்தல் - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ் சேற்று அயிரை தேரிய தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுதாக
பெருங் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே

வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய
தலைமகள் சொல்லியது தோழி தலைமகளுக்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்

273 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இ·து எவன்கொல்லோ தோழி மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்
நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படரே

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு
உரைப்பாளாய் நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள்
வேலனைக் கூவி வெறி அயரும் என்பது படச் சொல்லியது

274 பாலை - காவன் முல்லைப் பூதனார்

நெடு வான் மின்னி குறுந் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழை படு மான் பிணை தீண்டலின் இழை மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்
எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி எனக்
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே

தோழி பருவம் மாறுபட்டது

275 நெய்தல் - அம்மூவனார்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென பூவே
படையடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக நோய் இகந்து
அறனிலாளன் புகழ எற்
பெறினும் வல்லேன்மன் தோழி யானே

சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து
வற்புறுப்ப வன்புறை எதிர்மொழிந்தது

276 குறிஞ்சி - தொல் கபிலர்

கோடு துவையா கோள் வாய் நாயடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர் என்றிஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
சேந்தனை சென்மதி நீயே பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே

பகற்குறி வந்து பெயரும்
தலைமகனை உலகியல் சொல்லியது

277 பாலை - தும்பி சேர் கீரனார்

கொடியை வாழி தும்பி இந் நோய்
படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக்
கழிந்து பொருள்வயிற் பிரியஆற்றளாகிய
தலைமகள் தும்பிக்குச் சொல்லியது

278 நெய்தல் - உலோச்சனார்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே

தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது

279 பாலை - கயமனார்

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினைதொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையடு
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதர் உழந்து அசையினகொல்லோ ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே

மகட் போக்கிய தாய் சொல்லியது

280 மருதம் - பரணர்

கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன்
பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள்
மறுத்து மொழிந்தது தலைமகனை ஏற்றுக்கொண்டு
வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

281 பாலை - கழார்க் கீரன் எயிற்றியார்

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியடு தூங்கி
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்
தாம் நம் உழையராகவும் நாம் நம்
பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழி நம் காதலோரே

வன்பொறை எதிர் அழிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது ஆற்றாள் எனக்
கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்

282 குறிஞ்சி - நல்லூர்ச் சிறு மேதாவியார்

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட
நல் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின் நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு
அறிவுறீஇ வரைவு கடாயது

283 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்

ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு
கடாயது. கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று
வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்

284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே

பொருள் முடியாநின்ற தலைமகன்
ஆற்றானாகிச் சொல்லியது

285 குறிஞ்சி - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையடு
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்ப அம்பலும்
அலரும் ஆயிற்று என்று சொல்லியது

286 பாலை - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார

ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது

287 நெய்தல் - உலோச்சனார்

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்
தேர் மணித் தௌ இசைகொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது

288 குறிஞ்சி - குளம்பனார்

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும்ஆயின் வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும் இந்
நெடு வேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு
உரைப்பாளாய் வெறி அறிவுறீஇ வரைவு கடாயது

289 முல்லை - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து கடுங் குரல் பயிற்றி
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே

பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது

290 மருதம் - மதுரை மருதன் இளநாகனார்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெ·கினை ஆயின் என் சொல்
கொள்ளல்மாதோ முள் எயிற்றோயே
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே

பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை
நெருங்கிச் சொல்லியது பரத்தையிற்பிரிய வாயிலாய்ப்
புக்க பாணன் கேட்ப தோழி சொல்லியதூஉம் ஆம்

291 நெய்தல் - கபிலர்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு நீயும்
கண்டாங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே

வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது
குறிப்பு அறிந்து நெருங்கிச் சொல்லியது

292 குறிஞ்சி - நல்வேட்டனார்

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே

இரவுக்குறி மறுத்தது

293 பாலை - கயமனார்

மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும் எம்போல்
பெரு விதுப்புறுகமாதோ எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே

தாய் மனை மருண்டு சொல்லியது
அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்

294 குறிஞ்சி - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே

மணமனையுள் புக்க தோழி தலைமகளது
கவின் கண்டு சொல்லியது

295 நெய்தல் - ஒளவையார்

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அ·து அறிந்தனள்
அருங் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே

தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது சிறைப்புறமும் ஆம்

296 பாலை - குதிரைத் தறியனார்

என் ஆவதுகொல் தோழி மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது

297 குறிஞ்சி - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்
தலைமகன் கேட்பச் சொல்லி யது தோழி தலைமகளை
அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்

298 பாலை - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை அஞ்சுவரு நனந்தலைப்
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும் ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோமற்றே

தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை
எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச்
சொல்லி தலைமகன் செலவு அழுங்கியது

299 நெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ
தயங்கு இருங் கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்காண்
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே

தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது

300 மருதம் - பரணர்

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெருங் களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே

வாயில் மறுத்தது வரைவு கடாயதூஉம் ஆம் மாற்றோர்
நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு

301 குறிஞ்சி - பாண்டியன் மாறன் வழுதி

நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்
மயில் ஓரன்ன சாயல் செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி பணைத் தோள்
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே

சேட்படுத்து பிரிவின்கண் அன்பின்
இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான்
என்று தோழி தன்னுள்ளே சொல்லியது

302 பாலை - மதுரை மருதன் இளநாகனார்

இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும் நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே

பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது

303 நெய்தல் - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

ஒலி அவிந்து அடங்கி யாமம்
நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல் வாழி தோழி தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே

வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்

304 குறிஞ்சி - மாறோக்கத்து நப்பசலையார்

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே

வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய
தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது

305 பாலை - கயமனார்

வரி அணி பந்தும் வாடிய வயலையும்
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே

நற்றாய் தோழிக்குச் சொல்லியது மனை மருட்சியும் ஆம்

306 குறிஞ்சி - உரோடோகத்துக் கந்தரத்தனார்

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர் கொடுங் குரல்
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு
அறிவுறீஇயது சிறைப்புறமும் ஆம்

307 நெய்தல் - அம்மூவனார்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணற் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே

குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

308 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்

செல விரைவுற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆயிழை
யாம் தற் கரையவும் நாணினள் வருவோள்
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து
ஆகம் அடைதந்தோளே அது கண்டு
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட
தலைமகன் தலைமகளை எய்தி ஆற்றானாய்
நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது

309 குறிஞ்சி - கபிலர்

நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று என
கூறுவைமன்னோ நீயே
தேறுவன்மன் யான் அவருடை நட்பே

வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று தான் ஆற்றாளாகிய
தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது

310 மருதம் - பரணர்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே வல்லை
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது

விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்

311 நெய்தல் - உலோச்சனார்

பெயினே விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி
இருங் கதிர் நெல்லின் யாணர·தே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே
ஒன்றே தோழி நம் கானலது பழியே
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி
இருங் களிப் பிரசம் ஊத அவர்
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது

312 பாலை - கழார்க் கீரன் எயிற்றியார்

நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்தருள
மாரி நின்ற மையல் அற்சிரம்
யாம் தன் உழையம் ஆகவும் தானே
எதிர்த்த தித்தி முற்றா முலையள்
கோடைத் திங்களும் பனிப்போள்
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல் எனவே

பொருள் வலித்த தலைமகன்
நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது

313 குறிஞ்சி - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்புற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்கொல் தோழி காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா
கொய்பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்
புனம் அழிவு உரைத்துசெறிப்பு அறிவுறீஇயது

314 பாலை - முப்பேர் நாகனார்

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

315 நெய்தல் - அம்மூவனார்

ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென
பார்த் துறைப் புணரி அலைத்தலின் புடை கொண்டு
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி
நல் எருது நடை வளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய்ஆயின் எம் போல்
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்
மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது

316 முல்லை - இடைக்காடனார்

மடவது அம்ம மணி நிற எழிலி
மலரின் மௌவல் நலம் வரக் காட்டி
கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது

317 குறிஞ்சி - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

நீடு இருஞ் சிலம்பின் பிடியடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள்ஆயின் பனி கலந்து
என் ஆகுவகொல்தானே எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே

தோழி தலைமகனை வரைவு கடாயது

318 பாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக
நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தடக்கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது

319 நெய்தல் - வினைத்தொழில் சோகீரனார்

ஓதமும் ஒலி ஓவின்றே ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலோடு ஏறி
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடு நாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணைத் தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி
மீன் கண் துஞ்சும் பொழுதும்
யான் கண் துஞ்சேன் யாதுகொல் நிலையே

காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன்
தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது

320 மருதம் - கபிலர்

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே

பரத்தை தனக்குப் பாங்காயினார்
கேட்ப நெருங்கிச் சொல்லியது

321 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்கொல்லோ திருந்துஇழை அரிவை
வல்லைக் கடவுமதி தேரே சென்றிக
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது

322 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

ஆங்கனம் தணிகுவதுஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை
வாய்கொல் வாழி தோழி வேய் உயர்ந்து
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி வேலன்
இன் இயம் கறங்கப் பாடி
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
தலைமகள் பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்

323 நெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே

தோழி இரவுக்குறி நேர்ந்தது

324 குறிஞ்சி - கயமனார்

அந்தோ தானே அளியள் தாயே
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்
கோடு முற்று யானை காடுடன் நிறைதர
நெய் பட்டன்ன நோன் காழ் எ·கின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே

தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்

325 பாலை - மதுரைக் காருலவியங் கூத்தனார்

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
ஊக்கு அருங் கவலை நீந்தி மற்று இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய
வீங்கு நீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே

தோழி செலவு அழுங்குவித்தது

326 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்

கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது
துய்த் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண
வண்டு எனும் உணராவாகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே

தோழி தலைமகனை வரைவுகடாயது

327 நெய்தல் - அம்மூவனார்

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல்அம் தோழி
அந் நிலை அல்லஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே

வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

328 குறிஞ்சி - தொல் கபிலர்

கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால்
அது இனி வாழி தோழி ஒரு நாள்
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே

தோழி வரைவிடை ஆற்றாளாகிய
தலைமகளை வற்புறுத்தது

329 பாலை - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நத் துறந்து
அல்கலர் வாழி தோழி உதுக் காண்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத்
தோழி பருவம் காட்டி வற்புறுத்தது

330 மருதம் - ஆலங்குடி வங்கனார்

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து
மட நடை நாரைப் பல் இனம் இரிய
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து
நாட் தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும் அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே

தோழி தலைமகனை வாயில் மறுத்தது

331 நெய்தல் - உலோச்சனார்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவற் குப்பை
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப
இனிதேதெய்ய எம் முனிவு இல் நல் ஊர்
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே

தோழி இரவுக்குறி நேர்ந்தது

332 குறிஞ்சி - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

இகுளை தோழி இ·து என் எனப்படுமோ
குவளை குறுநர் நீர் வேட்டாங்கு
நாளும்நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி
தலைநாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
களவுக் காலத்து வற்புறுப்பதலைவி கூறியது
வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்

333 பாலை - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்
நீங்குகமாதோ நின் அவலம் ஓங்குமிசை
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே

பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தது

334 குறிஞ்சி

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப
கலையடு திளைக்கும் வரைஅக நாடன்
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
மின்னு வசி விளக்கத்து வருமெனின்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே

தோழி இரவுக்குறி முகம் புக்கது

335 நெய்தல் - வெள்ளிவீதியார்

திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே

காமம் மிக்க கழிபடர்கிளவி
மிதூர்ந்து தலைமகள் சொல்லியது

336 குறிஞ்சி - கபிலர்

பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே

ஆறு பார்த்துற்றுச்சொல்லியது

337 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே

தோழி தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது
குறிப்பறிந்து விலக்கியது தோழி உலகியல்
கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்

338 நெய்தல்-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார்

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா பைதல்அம் குருகே

ஒருவழித் தணந்த காலை ஆற்றாத
தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது

339 குறிஞ்சி - சீத்தலைச் சாத்தனார்

தோலாக் காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்றுகொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும் அன்னை சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ
மின் நேர் ஓதி இவளடு நாளை
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்
தெண் நீர் மணிச் சுனை ஆடின்
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே

சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது

340 மருதம் - நக்கீரர்

புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத்
தலைமகள் நொந்து சொல்லியது

341 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென
நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது

342 நெய்தல் - மோசி கீரனார்

மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்
யானே எல்வளை யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்
என் எனப் படுமோ என்றலும் உண்டே

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க
தன் சொல் கேளாது விடலின் இறப்ப ஆற்றான்
ஆயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த்
தன்னுள்ளே சொல்லியது தலைமகனுக்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கலளாய்
ஆற்றாது தன்னுள்ளே சொல்லியதூஉம் ஆம்

343 பாலை - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய
படையடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி தோழி நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே

தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது

344 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் ஆயிழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்கொல் தானே உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து
செந் தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே

தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது

345 நெய்தல் - நம்பி குட்டுவனார்

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ என்றும்
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தௌ வே

தௌ¢விடை விலங்கியது

346 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனைமன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது

347 குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் புலையன்
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய
காண வீடுமோ தோழி என் நலனே

வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய
தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது

348 நெய்தல் - வெள்ளி வீதியார்

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலி வரும் சும்மையடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ் உலகம்
உலகமொடு பொரும்கொல் என் அவலம் உறு நெஞ்சே

வேட்கை பெருகத் தாங்கலளாய்
ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது

349 நெய்தல் - மிளை கிழான் நல்வேட்டனார்

கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும்
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார்ப்
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல
பின்னிலை முனியா நம்வயின்
என் என நினையும்கொல் பரதவர் மகளே

தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது

350 மருதம் - பரணர்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார
விடேஎன் விடுக்குவென்ஆயின் கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆசு இல் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே

தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது

351 குறிஞ்சி - மதுரைக் கண்ணத்தனார்

இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அருங்கடிப் படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து
சிறு தினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே

தோழி அருகு அடுத்தது

352 பாலை - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமைத் தோள்
மாண்புடைக் குறுமகள் நீங்கி
யாங்கு வந்தனள்கொல் அளியள் தானே

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண்
ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது

353 குறிஞ்சி - கபிலர்

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்
வான் தோய் வெற்ப சான்றோய்அல்லை எம்
காமம் கனிவதுஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே

தோழி ஆற்றது அருமை அஞ்சி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது

354 நெய்தல் - உலோச்சனார்

தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே

தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
மனைவயின் தோழியைத் தலைமகன்
புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்

355 குறிஞ்சி - (?)

புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளிமதி
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே

தோழி அருகு அடுத்தது தோழி தலைமகளது
ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்

356 குறிஞ்சி - பரணர்

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல செல வர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையளாக
குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே

வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

357 குறிஞ்சி - குறமகள் குறியெயினி

நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே

தலைமகன் வரைவு நீடிய இடத்து ஆற்றுவல் என்பது
படச் சொல்லியது மனை மருண்டு வேறுபாடாயினாய்
என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

358 நெய்தல் - நக்கீரர்

பெருந் தோள் நெகிழ அவ் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக எற் கண்டு நாணி
நின்னொடு தௌ த்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்புமதி வாழிய நீ என
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே

பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து
தோழி இவள் ஆற்றா ளாயினாள் இவளை இழந்தேன்
எனக் கவன்றாள் வற்புறுத்தது அக்காலத்து ஆற்றாளாய்
நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்

359 குறிஞ்சி - கபிலர்

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அ·து
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்
கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடலகொல்லோ தாமே அவன் மலைப்
போருடை வருடையும் பாயா
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே

தோழி தழையேற்றுக் கொண்டு நின்று
தலைமகன் குறிப்பின் ஓடியது

360 மருதம் - ஓரம்போகியார்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்
மற்றும் கூடும் மனை மடி துயிலே

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி
தலைமகள் குறிப்பறிந்து வாயில் மறுத்தது
தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்

361 முல்லை - மதுரைப் பேராலவாயர்

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்துஇழையோளே

வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது

362 பாலை - மதுரை மருதன் இள நாகனார்

வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே

உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது

363 நெய்தல் - உலோச்சனார்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப
பைந் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி
தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ
எம்பெருமான் கவலாது செல்வது யான் ஆற்றுவிக்குமிடத்துக்
கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது கையுறை நேர்ந்த
தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்

364 முல்லை - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியடு ஒருங்கு தலைவரினே

தலைமகள் பிரிவிடை மெலிந்தது

365 குறிஞ்சி - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

அருங் கடி அன்னை காவல் நீவி
பெருங் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே

தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக தலைமகட்கு உரைப்பாளாய்
இயற்பழித்துஇன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது

366 பாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல் பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ் உலகத்தானே

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய
வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

367 முல்லை - நக்கீரர்

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியடு கவரிய குறுங் கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இருங் கதுப்பின்
குவளையடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்
விரி உளை நன் மாக் கடைஇ
பரியாது வருவர் இப் பனி படு நாளே

வரவு மலிந்தது

368 குறிஞ்சி - கபிலர்

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே

தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது

369 நெய்தல் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபயக் கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்துமாறே

பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

370 மருதம் - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ் வரித்
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி என
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே

ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது
முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்

371 முல்லை - ஒளவையார்

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே

வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது

372 நெய்தல் - உலோச்சனார்

அழிதக்கன்றே தோழி கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே

மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற
தலைமகள் ஆற்ற வேண்டி உலகியல் மேல் வைத்துச்
சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது

373 குறிஞ்சி - கபிலர்

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய
புணர்வதுகொல்லோ நாளையும் நமக்கே

செறிப்பு அறிவுறீஇயது

374 முல்லை - வன் பரணர்

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை அரிவைத் தேமொழி நிலையே

வினை முற்றி மீள்வான் இடைச்
சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது

375 நெய்தல் - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப
வருவைஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே

வரையாது நெடுங்காலம் வந்தொழுக தலைமகளது
நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது

376 குறிஞ்சி - கபிலர்

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே

தோழி கிளிமேல் வைத்துச்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது

377 குறிஞ்சி - மடல் பாடிய மாதங்கீரனார்

மடல் மா ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலமாகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்கொல்லோ
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்
தோழி கேட்ப தன்னுள்ளே சொல்லியது

378 நெய்தல் - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை
வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்

379 குறிஞ்சி - குடவாயிற் கீரத்தனார்

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின் கொடிச்சி
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே

தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை
கூறியது காப்புக் கைம்மிக்க காலத்துத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்

380 மருதம் - கூடலூர்ப் பல்கண்ணனார்

நெய்யும் குய்யும் ஆடி மெய்யடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப்
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது

381 முல்லை - ஒளவையார்

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள்
பருவ வரவின்கண் சொல்லியது

382 நெய்தல் - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

கானல் மாலைக் கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆர் உயிர் அழிவதுஆயினும் நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே

ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி
நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள்
ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது

383 குறிஞ்சி - கோளியூர்கிழார் மகனார் செழியனார்

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடு நாள்
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே

தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது

384 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே

உடன் போகாநின்றான் மலிந்து
தன் நெஞ்சிற்குச் சொல்லியது

385 நெய்தல் - (?)

எல்லை சென்றபின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையடு வதிந்தன அதனால்
பொழுதன்றுஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழைக்க - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - -

386 குறிஞ்சி - தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்
அணங்குடை அருஞ் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில்
நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல்
என முற்பட்டாள் தலைமகள் மாட்டு நின்ற
பொறாமை நீங்காமை அறிந்து பிறிது ஒன்றன்மேல்
வைத்து பாவியேன் இன்று பேதைமை செய்தேன்
எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து
வழிபடுவேனாவேன்மன்னோ எனச்சொல்லியது

387 பாலை - பொதும்பில் கிழார் மகனார்

நெறி இருங் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உதுக்காண்
நெடும் பெருங் குன்றம் முற்றி
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத்
தோழி பருவம் காட்டி வற்புறீஇயது

388 நெய்தல் - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

அம்ம வாழி தோழி நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே

வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன்
சிறைப்புறமாகச் சொல்லியது மனையுள் வேறுபடாது
ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

389 குறிஞ்சி - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என்னையும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென
சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே

பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத்
தலைமகன் கேட்பச் சொல்லியது

390 மருதம் - ஒளவையார்

வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ
யாணர் ஊரன் காணுநன்ஆயின்
வரையாமைஓ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி தொலையுந பலவே

பாங்கு ஆயின வாயில் கேட்ப நெருங்கிச் சொல்லியது
தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய் வாயிலாகப்
புக்கார் கேட்ப சொல்லியதூஉம் ஆம்

391 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்
பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத்
தோழி வற்புறுத்தியது வரைவு உணர்த்தியதூஉம் ஆம்

392 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நல் மனை அறியின் நன்றுமன்தில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப
நனி பேர் அன்பினர் காதலோரே

இரவுக்குறி முகம்புக்கது வரைவு நீட
ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு
உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்

393 குறிஞ்சி - கோவூர் கிழார்

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின் அவருடன்
நேர்வர்கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே

வரைவு மலிந்தது

394 முல்லை - ஒளவையார்

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தௌ ர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர
சென்றிசின் வாழியோ பனிக் கடு நாளே
இடைச் சுரத்து எழிலி உறைத்தென மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல் நோகோ யானே

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச்
சுரத்துக் கண்டார் சொல்லியது வன்சொல்லால் குறை
நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்

395 நெய்தல் - அம்மூவனார்

யாரை எலுவ யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம்மிடையே நினைப்பின்
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே

நலம் தொலைந்தது எனத் தலைவனைத்
தோழி கூறி வரைவு கடாயது

396 குறிஞ்சி - (?)

பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே

தோழி தலைமகனை வரைவு கடாயது
வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச்
சொல்லியதூஉம் ஆம் இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்

397 பாலை - அம்மூவனார்

தோளும் அழியும் நாளும் சென்றென
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே

பிரிவிடை ஆற்றாளாகி நின்ற
தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு
ஆற்றுவல் என்பது படச் சொல்லியது

398 நெய்தல் - உலோச்சனார்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே
பல் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சேயிழை என்றனம் அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே

முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை
நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது

399 குறிஞ்சி - (?)

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே

நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட
நின்ற தலைமகளைத் தோழி எம்பெருமான்
இதற்காய நல்லது புரியும் என்று தலைமகன்
சிறைப்புறத்தானாகச் சொல்லியது இதற்காய
நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்
என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

400 மருதம் - ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
நினின்று அமைகுவென்ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாதாங்கு சிறந்த
கேண்மையடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது முன்பு நின்று
யாதோ புகழ்ந்தவாறு எனின் நின் இன்று
அமையாம் என்று சொன்னமையான் என்பது

நற்றிணை முற்றும்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III