வழி மாறிய பயணம்
காதல் கதைகள்
Back
பயணம் 1
பேருந்து நிலையம்… ஞாயிறு இரவென்பதால், வாரயிறுதி
நாட்களுக்காக சொந்த ஊருக்கு வந்து, மீண்டும் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் ஊருக்கு செல்வோர்
கூட்டமே அங்கு தென்பட்டது. அந்த கூட்டத்தின் சலசலப்புகளுக்கு மத்தியில் எரிச்சலாக ஒருவன்
அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.
“டேய் எரும, உனக்கு வேற ட்ராவல்ஸே கிடைக்கலையா டா..? இந்த பஸ்ஸ பேரிச்சம்பழத்துக்கு போட்டா கூட
யாரும் வாங்க மாட்டாங்க போல. சரியான தகர டப்பாவா இருக்கு. இதுல எப்படி டா பெங்களூரு வரைக்கும்
போவேன். போற வரைக்குமாவது தாங்குமா, இல்ல பாதி வழிலேயே ஒவ்வொரு பார்ட்டும் கழண்டு
விழுந்துருமான்னு தெரியலையே… ப்ச் ஏசி கூட இல்ல” என்று புலம்பினான் பாலா.
“ஆமா இவரு அம்பானியோட பையன். சாதா பஸ்லயெல்லாம் போக மாட்டாரு. ஏசி பஸ்ல தான் போவாரு. ஆளப் பாரு…
நீ குடுத்த ஐநூறு ரூவாக்கு இது தான் வரும். ஒழுங்கா போனோமா, வேலைய முடிச்சோமோ, வந்தோமான்னு
இருக்கணும்…” என்று மேலும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அலைபேசியை துண்டித்தான் பாலாவின் நண்பன்
விக்ரம்.
பாலாவோ நண்பன் கூறியவற்றைக் கேட்டு அலுத்தவன், காதிலிருந்து அலைபேசியை எடுத்துவிட்டு காதை
குடைந்தான். அப்போது எதேச்சையாக திரும்ப அவன் இவ்வளவு நேரம் குறை கூறிக் கொண்டிருந்த பேருந்தின்
நடத்துநர் அவனை முறைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன், அவரருகே
சென்று தன் வருகையை பதிவு செய்து கொண்டான்.
அவனின் ஆதார் அட்டையை அவரிடம் கொடுத்தவன், அவர் கையில் வைத்திருந்த பெயர் பட்டியலில் பார்வையை
ஓட்டினான். அவனின் இருக்கைக்கு பக்கத்து இருக்கையின் நேரே ‘ஃப்’ என்ற ஆங்கில எழுத்து இருக்க,
‘ஐ.. நமக்கு பக்கத்துல பொண்ணு போல… அப்போ இந்த ட்ராவல் ஜாலியா தான் இருக்கும்…’ என்று
மனதிற்குள் குதூகலித்தவன், அப்பெண்ணின் பெயரைக் காணும் வேளையில், அந்த நடத்துநர் அதை மறைத்து
விட, ‘ச்சே ஜஸ்ட் மிஸ்…’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனின் இருக்கையில் சென்று
அமர்ந்தான்.
அடுத்து ஐந்து நிமிடங்கள் சென்றிருக்க, ‘என்ன அந்த பொண்ண இன்னும் காணோம்.’ என்று கண்களை
சுழற்றியவாறே முகம் தெரியாத பெண்ணிற்காக காத்திருக்கலானான். அவன் காத்திருக்கும் நேரம், அவனைப்
பற்றி பார்ப்போம்.
பாலாவின் தந்தை சுந்தரேஸ்வன், அவனிற்கு பார்த்து பார்த்து வைத்த பெயர் பாலகிருஷ்ணன். ‘இந்த
காலத்துக்கு ஏத்த மாதிரி பேரு வைக்க சொன்னா அவரு அப்பா காலத்து பேரா வச்சுருக்காரு. இப்படி ஒரு
பேரு வச்சுட்டு உன் புருஷருக்கு பெருமை வேற…’ என்று வாரத்திற்கு ஒரு நாளாவது தாயிடம்
புலம்பிவிடும் ‘அம்மா செல்லம்’ தான் பாலா.
பெயரை மாற்ற அவனின் தந்தை ஒத்துக்கொள்ளாத காரணத்தினால், பெயரை சுருக்கிக் கொண்டான் நமது நாயகன்.
ஆனால் அதுவுமே அவனின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் அவர்கள் இருவருக்கிடையேயான
உரையாடல் குறைய, பாலாவின் அன்னை ஜெயந்தியே அவர்களுக்கிடையே பாலமாக மாறினார். இவ்வாறு
‘அக்மார்க்’ மத்திய தர வாழ்க்கை தான் பாலாவினுடையது.
வழக்கம் போல ஆட்டு மந்தையாக இளைஞர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் இயந்திர பொறியியல் படிப்பை
தேர்தெடுத்தவன், நான்கு வருட படிப்பை முடித்துவிட்டு படித்ததற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல்
தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்கிறான்.
ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடம்பு, பெண்களை பார்த்தவுடன் கவர்ந்துவிடும் கவர்ச்சிகரமான முகம்
என்றில்லாமல், சாதாரண தோற்றத்தில் பெண்களை ரசித்துப் பார்க்கும், பார்க்க மட்டுமே செய்யும்,
90ஸ் கிட்ஸின் பிரதிநிதி தான் நமது நாயகன், பாலா.
பேருந்தை இயக்கிய ஓட்டுநரைக் கண்ட பாலா, ‘அப்போ அந்த பொண்ணு வராதா. ஹ்ம்ம் நம்ம நேரம்.’ என்று
அவன் புலம்பியது கடவுளின் செவிகளுக்கு கேட்டதோ, அவனின் முகத்தை துணி ஒன்று மறைத்தது.
அதன் வாசனையை முகர்ந்தவன் பரவசமாகி துணியை முகத்திலிருந்து விலக்கி, காரிகையின் முகம் பார்க்க,
பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவனின் கைகளோ அனிச்சையாக கன்னத்தில் பதிந்தது.
அப்பெண்ணிற்கும் அவனை அங்கு கண்டது அதிர்ச்சி தான் என்றாலும், அவள் பேருந்தில் ஏறும்போதே அவனைக்
கண்டிருந்ததால், அவளின் அதிர்ச்சியை அவனின் முன்பு வெளிப்படுத்தவில்லை.
அப்பெண்ணின் இருக்கை ஜன்னலோரத்தில் இருக்க, பாலாவைக் கடந்து தான் அவள் உள்ளே செல்ல வேண்டும்.
பேருந்தும் கிளம்பத் தயாராக இருந்தது. அவள் பாலாவைப் பார்க்க, அவனோ இன்னமும்
அதிர்ச்சியிலிருந்தது மீளவில்லை.
‘ப்ச் இவன் இப்போதைக்கு ஷாக்லயிருந்து வெளிய வரமாட்டான் போலயே…’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
‘க்கும்’ என்று செருமினாள்.
அவளின் செருமலில் நிகழ்விற்கு வந்தவன், பேயைக் கண்டது போல முழிக்க, அவளோ சைகையாலேயே அவளின்
இருக்கைக்கு செல்ல வேண்டும் என்றாள். பாலாவோ அடுத்த நொடியே இருக்கையிலிருந்து எழுந்து அவளிற்கு
வழி விட்டான்.
“எதுக்கு டா வம்பு. எதேச்சையா கைய பிடிச்சதுக்கே கன்னம் சிவக்குற அளவுக்கு அடிச்சா. இன்னைக்கு
பஸ் குலுங்குறதுல என்மேல விழுந்து, நீ தான் பிடிச்சு இழுத்தன்னு சொல்லி அறைஞ்சாலும் அறைவா.”
என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் நகர, அது அவளிற்கு தெளிவாகவே கேட்டது.
அதில் அவனை முறைத்து விட்டே உள்ளே சென்று அமர்ந்தாள். இருவருக்குமே அவர்களின் முதல் சந்திப்பு
நினைவிற்கு வந்தது.
ஆறு மாதங்களுக்கு முன், புகழ்பெற்ற பேரங்காடியில் தன் நண்பன் விக்ரமுடன் சுற்றிக்
கொண்டிருந்தான் பாலா. அங்கிருந்த பிராண்டட் துணி கடைக்குள் நுழைந்தனர் இருவரும்.
பாலா அங்கிருந்த கொசுவு சட்டைகளை (டி-ஷிர்ட்) பார்த்தவன், அதிலிருந்து இரண்டை எடுத்து
விக்ரமிடம், “டேய் மச்சி இதுல எது நல்லா இருக்கு..?” என்று வினவினான்.
விக்ரமோ, ஏற்கனவே அலைய வைத்த கடுப்பில் இருந்தவன், “டேய் உன் தொல்ல தாங்கல டா. என்னமோ காசு
குடுத்து வாங்க போறவன் மாதிரி கேக்குற. ட்ரையல் ரூம்ல அதை போட்டு செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ்
போட்டுட்டு பிடிக்கலன்னு வரப்போற… இதுக்கு எதுக்கு டா இவ்ளோ சீன்.” என்று புலம்பினான்.
“ப்ச் போடா லூசு…” என்று விக்ரமை திட்டிய பாலா, மேலும் சில சட்டைகளை எடுத்துப் பார்த்தான்.
அதற்குள் விக்ரமிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான். அதை அறியாத
பாலாவோ, பின்னால் திரும்பிப் பார்க்காமலேயே, “மச்சி நீயும் ட்ரையல் ரூமுக்கு வா டா. எந்த சட்டை
நல்லா இருக்குன்னு பார்த்து சொல்லு, போட்டோ எடுக்க…” என்று பேசிக் கொண்டே கைபிடித்து அழைத்து
சென்றான்.
“மச்சி, என்ன டா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் கை இவ்ளோ சாஃப்டா இருக்கு… அப்படியே
பொண்ணுங்க கை மாதிரியே இருக்கு…” என்று பாலா ஆச்சரியமாகக் கேட்டான்.
“டேய் லூசு, கைய விடுடா எரும…” என்ற குரல் கேட்க, “மச்சி, மிமிக்ரி எல்லாம் பண்றடா. இந்த
எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸெல்லாம் எப்ப டா கத்துகிட்ட…” என்று கேட்டான் பாலா.
“அடேய் டப்ஸா கண்ணா… பின்னாடி திரும்பிப் பாரு டா.” என்று மீண்டும் அதே பெண்குரல் இப்போது சற்று
எரிச்சலுடன் கேட்க, “எவ அவ” என்றவாறே திரும்பினான்.
அங்கு ஐந்தடிக்கும் குறைவாக புகைவண்டிக்கு கரி அள்ளி போட்டது போல, ‘புசுபுசு’வென மூச்சுக்
காற்றிலேயே அனலடிக்க நின்றிருந்தாள் அவள்.
அந்த சூழ்நிலையிலும், “குட்டையா இருந்தாலும் கும்முன்னு இருக்கா…” என்று மனதிற்குள் சொல்வதாக
நினைத்து வாய் விட்டு சொல்லிவிட, ஏற்கனவே அவளிற்கு இருந்த கோபம் அதிகரித்தது.
அதே கோபத்துடன் அவன் கன்னம் சிவக்குமளவிற்கு சப்பென்று அறைந்திருந்தாள் அவள். அந்த சத்தத்தில்
அங்கு இருந்த ஒன்றிரண்டு பேரும் இவர்களின் புறம் திரும்பினர்.
அவளின் நண்பியும், அவனின் நண்பனும் ஓடி வர, அதற்குள் அவள் அடித்த அதிர்ச்சியிலிருந்து
வெளிவந்தவன், “ஹே லூசு எதுக்கு டி என்ன அடிச்ச..?” என்று அவளிடம் எகிறினான் பாலா.
“பின்ன நீ செஞ்சதுக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா..? யார கைபிடிச்சு இழுத்துட்டு போறன்னு பார்க்க
மாட்டியா… உனக்கு கண்ணு என்ன குருடா…” என்று அவளும் அவள் பங்கிற்கு எகிற, இவர்களை சமாதானப்
படுத்த அவர்களின் நண்பர்கள் தான் திண்டாடினர்.
“இவ்ளோ தூரம் வர வரைக்கும் மேடம் வாயில என்ன வச்சுருந்தீங்க..? கைய பிடிச்சப்போவே சொல்ல
வேண்டியதானா..?”
அவளின் தோழியை, ‘எல்லாம் உன்னால தான்’ என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பாலாவையும்
முறைத்துவிட்டு சென்று விட, அவளின் தோழியோ, “சாரி அவ இன்னைக்கு மௌன விரதம். நான் தான் அவளை
கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.” என்று விளக்க, “இட்ஸ் ஓகேங்க. நீங்க போய் அவங்களை பாருங்க.”
என்று கிடைத்த இடைவெளியில் ‘ஸ்கோர்’ செய்தான் விக்ரம்.
ஒரு நன்றியுடன் அப்பெண் அந்த இடத்தை விட்டு அகல, விக்ரமோ அப்போது தான் பாலாவைப்
பார்த்தான்.
‘நீயெல்லாம் ஒரு நண்பனா’ என்று பாலா பார்க்க, அவனின் பார்வையை சரியாக உணர்ந்த நண்பனாய், “ஹிஹி
அந்த பொண்ணு பாவம்ல டா… அதான்…” என்று சமாளித்தான்.
“ரொம்ப வழியுது தொடச்சுக்கோ… அது எப்படி டா என்னை திட்டும் போதெல்லாம் சும்மா வேடிக்க
பார்த்துட்டு, அந்த பொண்ணுக்குனா மட்டும் பாஞ்சு வர… “ என்று சரமாரியாக திட்டினான் பாலா.
“சரி சரி விடு மச்சி. பொண்ணுங்க கிட்ட திட்டு வாங்குறதெல்லாம் உனக்கு புதுசா…” என்று பாலாவை
சமாதானப் படுத்தினான் விக்ரம்.
“ஆனா மச்சி, எப்பவும் பசங்களால பொண்ணுங்களுக்கு தான் கன்னம் சிவக்கும். உன் விஷயத்துல தான் டா
அப்படியே ஆப்போசிட்டா நடந்துருக்கு…” என்று விக்ரம் பாலாவை கலாய்க்க, “அடேய் அந்த ஃபயர் என்ஜின்
என்னை அடிக்குறப்போ சும்மா இருந்துட்டு இப்போ என்னை கலாய்க்குறீயா…” என்று பாலா அவனைத் துரத்த…
அப்போது இருவரையும் அவரவர்களின் நினைவுகளிலிருந்து வெளிவரச் செய்தது ஓட்டுநர் அடித்த
‘பிரேக்’.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவளிற்கு பாலா அன்று கூறியது இப்போதும் காதில்
ஒலிக்க, வேறு இடத்திற்கு மாறலாமா என்று மற்ற இருக்கைகளை ஆராய்ந்தாள்.
ஆனால் அவளின் நேரம், அன்று பேருந்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் அப்படி அமர்ந்திருந்த
பெண்களின் அருகிலும் பெண்களே அமர்ந்திருக்க, இடம் மாற முடியாத சூழலை சபித்துக் கொண்டே அவளின்
இருக்கையில் அமர்ந்தாள்.
அவளின் செய்கையை பார்த்தவன், ‘உலக அழகின்னு நெனப்பு… எங்க பக்கத்துல உக்காந்தா அப்படியே
பாஞ்சுடுவோம்…’ என்று இம்முறை கவனமாக மனதிற்குள் மட்டுமே நினைத்துக் கொண்டு வேறு பக்கம்
திரும்பினான்.
பெங்களூருவை நோக்கிய இவர்களின் பயணம் ‘இனிதே’ ஆரம்பித்திருக்க, இவர்களின் பயணம் எப்படி வழி
மாறப்போகிறது என்பதை இவர்களுடனே பயணித்து தெரிந்து கொள்வோம்.
பயணம் தொடரும்...
பயணம் 2
பேருந்து வேகமெடுக்க, அவளோ காதில் செவிபேசியைப் (இயர் போன்)
பொருத்திக் கொண்டு கண்களை மூடி சாய்ந்து கொண்டாள். அவளின் அசைவுகளை ஓரக் கண்ணில் பார்த்த பாலா,
‘கடவுளே, சைட்டடிக்க ஏத்த மாதிரி பொண்ணு வரணும்னு வேண்டுனா, என்னையே அடிக்கிற மாதிரி ஒரு பொண்ணோட
கோர்த்து விட்டுருக்கியே…’ என்று புலம்பியவன் கண்களை மூடி தூங்கி விட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து பேருந்து நிற்க, அதன் நடத்துநர், “வண்டி பத்து நிமிஷம் தான் இங்க நிக்கும்.
அதுக்குள்ள வந்துடுங்க.” என்று கத்தவும், பாலா கண்களைத் திறந்தான்.
கைகளைத் தூக்கி கொட்டாவி விட்டவாறே அவன் திரும்ப, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளின்
முறைப்பைக் கண்டு மனதிற்குள் அலுத்தவன், ‘நான் தான் ஒன்னுமே பண்ணலையே. இப்போ எதுக்கு முறைக்குறான்னு
தெரியலையே…’ என்று நினைத்தான்.
அவனின் எண்ணம் அவளையும் எட்டியதோ, சைகையாலேயே தள்ளுமாறு கூறினாள்.
“வாயத் தொறந்து பேசுனா முத்து கொட்டிருமோ…” என்று முணுமுணுத்தவாறே அவனின் இருக்கையிலிருந்து எழ,
அவளோ எதுவும் கூறாமல் வெளியே சென்று விட்டாள்.
சிறிது நேரத்திலேயே பாலாவும் வெளியே சென்று, விக்ரமிற்கு அழைத்தான்.
“மச்சி என்ன டா பண்ற..?” என்று பாலா கேட்க, “இன்னைக்கு தான் உன் தொந்தரவு இல்லாம நிம்மதியா
சாப்பிடலாம்னு நெனச்சேன். அதையும் போன் பண்ணி கெடுத்துட்டு என்ன பண்ற, நொன்ன பண்றன்னு கேக்குற…”
என்று விக்ரம் புலம்பினான்.
“ப்ச் உன் புலம்பல முடிச்சுட்டியா…” என்று சலித்துக் கொண்ட பாலா, “மச்சி நான் அவள பார்த்தேன் டா…”
என்றான்.
“எவள டா பார்த்து தொலைஞ்ச..? இவன் பார்த்தது மட்டுமில்லாம இதையே சொல்லி இன்னைக்கு நைட் தூங்க விட
மாட்டானே…” என்று முன்னதை சத்தமாகவும் பின்னதை முணுமுணுப்பாகவும் கூறினான் விக்ரம்.
அவனின் முணுமுணுப்பு பாலாவிற்கு தெளிவாகக் கேட்டாலும், அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்
கொள்ளாமல், “அதான் டா அந்த மால்ல நம்மள அடிச்சால, அவள தான் பார்த்தேன்.” என்றான்.
“அடேய் ‘நம்மள’ன்னு என்னையும் எதுக்கு டா சேர்க்குற..? உன்னை மட்டும் தான அடிச்சா…” என்று பதறினான்
விக்ரம்.
“ரொம்ப முக்கியம்… சொல்றதை கேளு டா. அவ பஸ்ல எனக்கு பக்கத்து சீட் டா…” என்று ஆரம்பித்து நடந்தவற்றை
சொல்லி முடித்தான்.
“ஆமா ‘அவ’ன்னே சொல்லிட்டு இருக்க. இன்னுமா பேர கண்டுபிடிக்கல…” என்று நண்பனை அறிந்தவனாக விக்ரம்
கேட்க, “எங்க பேர பார்க்கலாம்னு போனப்போ தான் இந்த பாழப்போன பஸ்ஸோட கண்டக்டர் பேர மறைச்சுட்டான்…”
என்றான் பாலா.
பின் பாலாவே, “ஹே மச்சி ரெண்டாவது தடவ நான் அவள மீட் பண்றேனே… அப்போ எங்களுக்குள்ள ‘சம்திங்
சம்திங்’ இருக்குமோ…” என்று பாலா உற்சாகத்துடன் கேட்க, அவனின் பேச்சை கேட்ட விக்ரமோ தலையிலடித்துக்
கொண்டவன், “அவகிட்ட அடி வாங்காம ஊர் போய் சேர மாட்ட போல…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
‘பளார்’ என்று சத்தம் கேட்டது.
“என்ன டா சொன்னது போல அடிச்சுட்டாளா..?” என்று விக்ரம் பதட்டத்துடன் வினவ, “ஆமா மச்சி, ஆனா என்னை
இல்ல… இன்னொருத்தன போட்டு அடிச்சுட்டு இருக்கா…” என்றான் பாலா.
கழிப்பறைக்கு சென்று வந்து கொண்டிருந்தவளை ஒருவன் வேண்டுமென்றே இடித்திருக்க, தெரியாமல் இடித்தாலே
கன்னம் சிவக்குமளவிற்கு அடிப்பவள், இப்போது சும்மாவா விடுவாள்… அவன் சுதாரிக்கும் முன்பே இரு
கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவள், “இன்னொரு தடவ யாரயாச்சும் இடிக்கணும்னு நெனச்சா இந்த அறை தான்
உனக்கு ஞாபகம் வரணும்…” என்று கூறிவிட்டு பேருந்தை நோக்கி நடந்தாள்.
அவளின் செய்கையை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்க, அவளைப் பற்றி
அறிந்தவனாதலால் பாலா அவ்வளவு அதிர்ச்சியடைய வில்லை என்றாலும் மனதிற்குள், ‘நல்ல வேளை ஜஸ்ட் மிஸ்.
நான் விக்ரம் கிட்ட பேசுனது மட்டும் கேட்டுருந்தா, இன்னைக்கு அவ டார்கெட் நானா இருந்துருப்பேன்…’
என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
அதற்குள் அலைபேசி தொடர்பிலிருந்த விக்ரம், “அப்பறம் மச்சி எப்போ ப்ரொபோஸ் பண்ண போற..?” என்று
கேலியாக கேட்க, “ஆள விடு டா சாமி நமக்கு உசுரு தான் முக்கியம். இவ இல்லனா வேற யாராவது கிடைப்பாங்க
மச்சி. ஏன்னா ஐயாவோட பெர்ஸனாலிட்டி அப்படி…” என்று மேலும் சில நிமிடங்கள் பேச, பேருந்து
எடுப்பதற்கான அழைப்பு வந்ததும் அழைப்பைத் துண்டிக்க முயல, அப்போது விக்ரம், “மச்சி பார்த்து
பத்திரமா போயிட்டு வா…” என்று கூற, பாலாவும் சரியென்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பேருந்தில் வந்து அமர்ந்ததும் அவளைப் பார்க்க, அவள் மீண்டும் காதில் ஒலிக்கும் பாட்டுடன் ஐக்கியமாகி
விட்டாள். பாலாவும் ஒரு நொடி அவளைக் கண்டவன், பின் தலையை இடவலமாக ஆட்டி, ‘இனி அவளை பார்க்கவே கூடாது
டா, பாலா..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் பேருந்து நிற்க, புழுக்கத்தின் காரணமாக கண் விழித்தான்
பாலா.
“இப்போ எதுக்கு டா நிறுத்திருக்கீங்க..?” என்று தூக்கம் பறிபோன கடுப்பில் சற்று சத்தமாகவே
கேட்டிருந்தான் பாலா.
“டையர் பஞ்சராம் ப்ரோ…” என்றான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன்.
“ப்ச்…” என்று சலித்துக் கொண்டே வெளியில் சென்று பார்த்தான். அங்கு ஏற்கனவே ஓட்டுநரையும்
நடத்துநரையும் சுற்றி வளைத்திருந்தனர் சிலர். இவனும் சென்று அவர்களின் அருகில் நின்று
கொண்டான்.
“ஸ்டெப்னி கூடவா எடுத்துட்டு வராம இருப்பீங்க..? என்ன ட்ராவல்ஸ் வச்சுருக்கீங்க..? எதுவும்
சரியில்ல. இப்போ நாங்க எப்படி ஊரு போய் சேருறது..?” என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி கேட்டுக்
கொண்டிருக்க, பாலாவோ அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவர்கள், “சாரி சார். இது போல எப்பவும் நடந்தது
இல்ல. பெங்களூரு போற எங்க ட்ராவல்ஸ் பஸ்ஸே இன்னும் நாலு இப்போ வரும். உங்கள எல்லாம் அதுல ஏத்தி
விடுறோம்.” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
அதன்படி சிலரை முதல் மூன்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மீதி அங்கிருந்ததோ வயாதான ஒரு
தம்பதியர், சிறுவனும் அவனின் தாயும், பாலா மற்றும் ‘அவள்’.
அடுத்த பேருந்திற்காக காத்திருக்க, அந்த பேருந்தோ ஆடி அசைந்து வந்தது. அதைக் கண்ட பாலா, ‘என்ன இது
மாசமா இருக்க பொண்ணு மாதிரி இவ்ளோ மெதுவா வருது. இதுல போனா எப்போ ஊர் போய் சேருறது!’ என்று
மனதிற்குள் புலம்பினான்.
பேருந்து வந்து நிற்கவும், அங்கு நடந்த பிரச்சனைகளை புதிதாக வந்த பேருந்தின் நடத்துநரிடம்
விளக்கியவர்கள், பயணிகளை ஒவ்வொருவராக பேரை சொல்லிவிட்டு ஏறுமாறு கூறினர்.
அவள் தான் முதலில் நின்றாள். ஆனாலும், குளிரில் அந்த வயதானவர்கள் கஷ்டப்பட்டு நிற்பதைக் கண்டவள்,
அவர்களை முதலில் ஏறச் சொன்னாள். அப்போது அவளின் பின் நின்ருந்த பெண்ணின் கையிலிருந்த சிறுவன்
அழுவதைக் கண்டவள், சன்ன சிரிப்புடன் அவர்களுக்கும் வழி விட்டாள்.
அவளின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா, “அன்னை தெரசான்னு நெனப்பு!” என்று முணுமுணுக்க
அவனை திரும்பி முறைத்தவள், அடுத்து அப்பேருந்தில் ஏறச் சென்றாள்.
“பேரு என்ன மா..?” என்று நடத்துநர் வினவ, “தேஜஸ்வினி” என்று மென்குரலில் கூறினாள்.
யாருக்கு கேட்கக் கூடாது என்று மெல்லிய குரலில் கூறினாளோ, அவனோ அதற்காகவே செவியைத் தீட்டி
வைத்திருந்ததால், அவளின் பெயரை அறிந்து கொண்டான்.
‘தேஜஸ்வினி… ஹ்ம்ம் தேஜு… நல்லா தான் இருக்கு…’ என்று அவளின் பெயரை மனதிற்குள் உச்சரித்துப்
பார்த்தான்.
தேஜஸ்வினி உள்ளே ஏறப் போக, அப்போது அங்கு வந்த புதிய பேருந்தின் நடத்துநர், “இதுக்கு மேல இடம்
இல்ல…” என்றான்.
உள்ளே இரு இருக்கைகள் காலியாக இருந்ததைக் கண்டவள், அதைப் பற்றி கேட்க, இனி வரும் இடங்களில்
முன்பதிவு செய்தவர்களுக்கான இடம் என்று கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் இறங்கியவள், என்ன செய்வது என்று யோசித்தபடி நிற்க, “சாரி மா. இந்த பக்கம் இனிமே
காலைல தான் பஸ் வரும்.” என்று தலையை சொறிந்தபடி கூறினார் அந்த நடத்துநர்.
அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாலா, “அப்போ
எங்கள என்ன பண்ண சொல்றீங்க..? இப்படியே நடுரோட்டுல நிக்க சொல்றீங்களா..?” என்று கத்த
ஆரம்பித்தான்.
தேஜுவோ அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமைதியாக நின்றாள்.
“ப்ச் பொண்ணு அதுவே அமைதியா இருக்கு, உனக்கென்ன பா…” என்று சலித்துக் கொண்டார் அந்த
நடத்துநர்.
“ஹலோ என்ன இப்படி பொறுப்பே இல்லாம பேசுறீங்க..? இது தான் நீங்க பேசஞ்சரை நடத்துற முறையா..? சரி
அதெல்லாம் விடுங்க, இப்போ எப்படி நாங்க இந்த கொட்டுற பனில நிக்க முடியும்..? அப்படியே காலைல பஸ்
வந்தா அதுக்கான செலவ யாரு குடுப்பா..?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான். கிடைத்த இடைவேளையில்
தேஜுவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.
“எப்பா சாமி, என் கை காசப் போட்டு உன்ன பத்திரமா பஸ் ஏத்தி விடுறேன் ராசா…” என்று கையெடுத்துக்
கும்பிடாத குறையாக மன்றாடினார் அந்த நடத்துநர்.
‘ஹா அதான பாலானா சும்மாவா…’ என்று தன்னைத் தானே மனதிற்குள் பாராட்டிக் கொண்டவன், தேஜுவைக் காண, அவளோ
மும்முரமாக அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஹும்ம் இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு இவ்ளோ பெர்ஃபார்மன்ஸ் பண்ணிருக்கேன். இவ என்னடானா கண்டுக்க கூட
இல்ல…’ என்று மீண்டும் அவனின் புலம்பலைத் துவங்கினான்.
அப்போது நடத்துநர், “இன்னும் கொஞ்ச தூரத்துல ஒரு ஹோட்டல் இருக்கு. நாளைக்கு காலைல வரைக்கும் அங்க
தங்கிக்கோங்க…” என்று தயங்கிக் கொண்டே இருவரிடமும் கூறியவர், தேஜுவின் பார்வையை உணர்ந்து, “அது
பாதுகாப்பான ஹோட்டல் தான் மா. இந்த பக்கம் போறவங்க, ரெஸ்ட் எடுக்குறதுக்காக அங்க தான் தங்குவாங்க.”
என்றார்.
தேஜுவும், கூகுல் மேப்பில் தீவிரமாக அலசியும், அருகில் வேறு இடம் இல்லாததால், வேறு வழியில்லாமல்
சம்மதித்திருந்தாள்.
போகும் வழியில், “ஆமா இப்போ போற ஹோட்டலுக்கான செலவையும் நீங்களே குடுத்துடுவீங்களா…” என்று பாலா
நடத்துநரிடம் வினவ, அவனைக் கண்டு பல்லைக் கடித்தவர், அருகிலிருந்த ஓட்டுநரிடம், “நமக்குன்னு வந்து
சேருதுங்க…” என்று புலம்பினார்.
பெங்களூருவை நோக்கிய இவர்களின் பயணத்தில், வழியை மாற்றுவதாக இந்நிகழ்வு ஏற்பட, அடுத்த நாள் சரியான
வழியில் சென்று அவர்களின் இடத்தை அடைவார்களா, இல்லை வழி தவறி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்களா…
பயணம் தொடரும்...
பயணம் 3
சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்க, அதற்கு நடுவில் அழகாக
அமைந்திருந்தது அந்த விடுதி. சிறிதாகவோ பெரிதாகவோ அல்லாமல் மத்திம அளவில், அவ்விடத்தில் மட்டும் இருளைப்
போக்கியவாறு பல வண்ண ஒளிக்கற்றைகளை வெளியிடும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகவே இருந்தது அந்த
விடுதி.
“ஹ்ம்ம் நாட் பேட்.” என்றவாறே உள்ளே நுழைந்தான் பாலா. அவனைப் பின் தொடர்ந்த தேஜுவிற்கும் அதே எண்ணமே.
நடு வழியில் இருக்கும் விடுதி எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டே வந்தவள், அந்த விடுதியின் முகப்பைக்
கண்டதும் சிறிது ஆசுவாசம் அடைந்தாள்.
“இது தான் நான் சொன்ன ஹோட்டல். நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நாங்க ஒரு தடவ பஸ்ஸோட நிலைமைய
பார்த்துட்டு எங்க ஆபிஸுக்கு சொல்லிட்டு வரோம். ஹான் அப்பறம் நாளைக்கு காலைல ஆறரைக்கு ஒரு வண்டி இந்த
பக்கம் போகும்.” என்று அவர்களுக்கான தகவலை கூறிவிட்டு சென்றனர் அந்த பேருந்தின் நடத்துநரும்
ஓட்டுநரும்.
பாலாவும் தேஜுவும் வரவேற்பிற்கு சென்றனர். வரவேற்பில் இருந்த பணியாளனிடம் அறை பற்றி வினவினான்
பாலா.
அவனோ இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சிங்கிள் ரூமா சார்..?” என்றான்.
அதில் பதறிய பாலா, தேஜுவைப் பார்க்க, அவன் எதிர்பார்த்தது போலவே பாலாவை கண்களால் எரித்துக்
கொண்டிருந்தாள்.
“என்னை இன்னைக்கு அடி வாங்க வைக்காம விட மாட்டீங்களா டா…” என்று மெல்லிய குரலில் புலம்பிய பாலா அவனிடம்,
“ரெண்டு ரூம் வேணும்…” என்றான்.
மீண்டும் அவர்களிருவரின் முகத்தைக் கண்டவன், “அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார். ரூம் இப்போ தான் காலி
ஆச்சு. அத சுத்தம் செஞ்சுட்டு இருக்காங்க.” என்றான் அவன்.
“ம்ம்ம் சரி…” என்று கூறியவன் சற்று தள்ளி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அப்போதும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டே வந்த தேஜு அவன் அருகில் அமராமல், ஒரு இருக்கை விட்டு
அமர்ந்தாள்.
“ஹூம் சொன்னது அவன், முறைக்குறது மட்டும் என்னையா… என்ன கொடுமை இது கடவுளே…” என்று பாலா முணுமுணுக்க,
“லூசு மாதிரி ரூம்னு மொட்டையா சொன்னா, அவன் ஒரு ரூம்னு தான நினைப்பான்.” என்று அவளும் அடிக்குரலில்
பேசினாள்.
பாலாவோ அவளின் பேச்சைக் கேட்டதும் அவனிற்கு பின் பக்கம் எதையோ தேட, புருவம் சுருக்கி பார்த்தாள் தேஜு.
பின் அவனே, “ஓ என்கிட்ட தான் பேசுனியா..?” என்று கிண்டல் செய்ய, வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு
திரும்பி விட்டாள் தேஜு.
ஒரு பெருமூச்சுடன் கண்களை சுழற்றியவனின் பார்வையில் பட்டாள் அந்த பச்சைக்கிளி. கிளி பச்சை நிற சேலையும்
தூக்கிப் போட்ட கொண்டையுமே, அவள் இந்த விடுதியில் வேலை செய்யும் பெண் என்பதைக் கூற, அவள் அணிந்திருந்த
பெயர் வில்லையில் அவளின் பெயரைப் பார்க்க முயன்றான் பாலா.
‘மீ..னா.. ட்..சி… அட பச்சகிளி பேரு மீனாட்சியா. பாலா – மீனாட்சி அட அட பேரு பொருத்தம் கூட நல்லா
இருக்கு…’ என்று மனதிற்குள் சந்தோஷித்தவன், அப்பெண்ணின் பார்வையும் தன் மேல் படிவதைக் கண்டான். ‘ஹே பாலா
சிங்கிளா வந்த நீ, மிங்கில் ஆகிட்டு தான் போவ போல…’ என்று குதூகலித்தான்.
இப்போது ஓரக்கண்ணில் அப்பெண்ணைப் பார்க்க, அவளோ அருகில் வருமாறு சைகை செய்தாள். “அதுக்குள்ளவா…
பாத்தவொடனே இப்படி மயங்குற அளவுக்கா நம்ம பெர்ஸ்னாலிட்டி இருக்கு…” என்று வாய்விட்டு கூற, அது அவனருகில்
இருந்த தேஜுவிற்கும் கேட்டது.
அவளும் அவர்களின் ‘சைகை’களை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இப்போது பாலாவின் பேச்சைக் கேட்டதும்,
‘சரியான லூசா இருப்பான் போல.’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
அந்த மீனாட்சி மறுபடியும் அழைக்க, “இந்தா வந்துட்டேன் பச்சகிளி…” என்றவாறே பாலா எழவும், அவனைத் தாண்டி
ஒருவன் கையில் குழந்தையுடன் செல்லவும் சரியாக இருந்தது.
‘என்ன இவன் நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு போறான்..’ என்று யோசித்தவனை அதிர்ச்சிக்குள்ளாகியது அந்த சம்பவம்.
அவன் சற்று முன்னர் ‘பச்சைக்கிளி’ என்று வர்ணித்த பெண், அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள, அக்குழந்தையும்
“ம்மா..” என்று அழைத்து கட்டிக்கொண்டது.
அதைக் கண்டவனின் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்
தேஜு.
‘ச்சே என்ன டா இது பாலாக்கு வந்த சோதனை… அச்சோ இப்படி எழுந்து நின்னுட்டு இருக்கேனே.. யாராவது
பார்த்துருப்பாங்களோ…’ என்று நினைத்து சுற்றிலும் பார்த்தான்.
‘உஃப் யாரும் பாக்கல… அப்படியே போய் உட்காருவோம்…’ என்று மனதிற்குள் அவனிற்கு அவனே ஆறுதல் கூறியவன்,
நாற்காலியில் அமர, அப்போது தான் குனிந்திருந்த தேஜுவின் இதழ்கடையோரம் புன்னகையில் துடிப்பதைக் கண்டு,
‘ஐயோ இவ பார்த்துருப்பாளோ…’ என்று யோசித்தவன், பின் சமாளிக்கும் விதமாக, “பஸ்ல ரொம்ப நேரம்
உட்கார்ந்துட்டே வந்தது கால் வலிக்குது. அதான் ஸ்ட்ரெட்ச் பண்ணிட்டு வந்தேன்…” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒன்றும் கூறாமல் தன் அலைபேசியில் மூழ்கிப் போனாள்.
பாலாவையும் தேஜுவையும் அழைத்த அந்த பணியாளன், அவர்களின் பெயர் முகவரியை எழுதித் தருமாறு கேட்டான்.
அப்போது அந்த விடுதியினுள் இருவர் நுழைந்தனர்.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையை அணிந்திருந்தவர்கள், அந்த பிரபல கட்சியின் அடையாள சின்னத்தை சட்டைப்பையில்
குத்தியிருந்தனர். கையில் அந்த கட்சியின் கொடியை பிடித்திருந்தனர். அவர்களின் உரையாடல்களின் மூலம்,
மாநாட்டில் ஓடியாடி வேலை பார்த்து அதற்கு சரியான அங்கீகாரம் கூட கிடைக்காத அடிமட்ட தொண்டர்கள் என்பது
தெரிந்தது.
“கடைசி வரைக்கும் நாம இப்படியே தான் இருப்போம்னு நினைக்கிறேன், ராமசாமி.”
“அட நீ வேற ஏன்யா அதை ஞாபகப் படுத்துற. வீட்டுல பொண்டாட்டி கேவலமா பேசுற அளவுக்கு இருக்கு நம்ம
பொழப்பு.”
“இந்த தடவையாச்சும் தலைவரை பாத்து ஏதாவது பேசிடலாம்னு இருந்தா, நந்தி மாதிரி அவன் குறுக்க வந்து
நிக்குறான். ஹ்ம்ம்… நேத்து வந்த பொடியன் இப்போ நம்மள ஆட்டுவிக்குறான்…”
“யோவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருய்யா… எவனாவது அவன் விசுவாசி அவன்கிட்ட வத்தி வச்சுட போறான்.”
அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாலா, ‘ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரெச்சனை…’ என்று
நினைத்தவன், ‘இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல’ என்ற பாடலை சீழ்க்கை அடித்துக்
கொண்டிருந்தான்.
இவனின் நிலைக்கு அப்படியே எதிர்மறையாக நின்றிருந்தாள் தேஜு. அவளின் தகவல்களை எழுதிக் கொண்டிருக்கும்
போது தான் அந்த புதியவர்கள் உள்ளே நுழைத்திருந்தனர். அவர்களின் வரவை உணர்ந்ததும், ஒருவித பதட்டம்
அவளிற்கு தொற்றிக் கொள்ள, கைகள் லேசாக நடுங்கியது. அதற்குள் அவர்கள் இருவரும் வரவேற்பை நெருங்கி
விட்டனர்.
அப்போது தான் பாலா தேஜுவைக் கண்டான். அவளின் நடுக்கத்தில் ஏதோ உணர்ந்தவன், “ஹே தேஜு ஆர் யூ ஓகே..?”
என்று வினவினான்.
அவனின் பரபரப்பான குரலில், அந்த புதியவர்களும் இவர்களை நோக்கித் திரும்ப, தேஜுவோ குனிந்த தலை நிமிராமல்,
“ஐ’ம் ஓகே.” என்றாள்.
அவளின் இந்த மாறுபட்ட எதிர்வினையில் பாலா புருவம் சுருக்கி யோசிக்க, அந்த இருவரில் ஒருவர், “பாப்பா
உங்களை நான் எங்கயோ பார்த்துருக்கேன்னு நினைக்குறேன். உங்க முகம் நல்லா பரிச்சயமா இருக்கே…” என்று
தேஜுவைப் பார்த்து கூற, அதில் ஒருநொடி அதிர்ந்தவள், “இ..இல்ல நா.. நான் ஊருக்கு புதுசு…” என்று வாயில்
வந்ததை உளறிவிட்டு, அந்த பணியாளனிடம் சாவியை கிட்டத்தட்ட பறித்துக் கொண்டு வேகவேகமாக சென்றாள்.
அப்படி செல்லும்போது எதிர்புறத்திலிருந்து வந்தவன் மீது மோதி விட்டாள். பதட்டத்தில் அவன் முகத்தைக் கூட
பார்க்காமல், “சாரி…”என்று முணுமுணுத்துவிட்டு அவளின் அறைக்கு விரைந்தாள்.
அவளின் செய்கைகளையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கலைத்தது மற்ற இருவரின் பேச்சு.
“ஏன்யா சும்மா இருக்க மாட்டீயா..? யாரப் பார்த்தாலும் ‘உன்ன பார்த்த மாதிரி இருக்கு’ன்னு ஆரம்பிச்சுட
வேண்டியது…” என்று சற்று முன் தேஜுவிடம் கேள்வி கேட்டவரை மற்றவர் திட்ட, “இல்லய்யா நெசமாத் தான்
சொல்றேன். அந்த பாப்பாவ எங்கயோ பார்த்துருக்கேன்…” என்று யோசித்தவர், “ஹான்... ஞாபகம் வந்துடுச்சு…
உனக்கு நம்ம ரவிசங்கர் தெரியும்ல… கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் நம்ம தலைவரோட வலது கையா இருந்தாரே…
அவரோட ஜாடை தெரியதுய்யா அந்த பாப்பா கிட்ட…” என்றார்.
“உனக்கு என்ன புத்தி மழுங்கிடுச்சா… அந்த மனுஷன் தான் கல்யாணமே பண்ணிக்கலையே… எப்பவும் கட்சி தலைவருன்னு
சுத்திட்டு இருந்தாரு. கடைசில அவருக்கே ஆப்பு வச்சு கட்சிலயிருந்து தூக்கிட்டாங்க… ஹ்ம்ம் இது தான்
நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்றது… இப்போ எதுக்கு அந்த மனுஷனை இழுக்குற…”
“யோவ் எனக்கு நல்லா தெரியும்யா…” என்று அவர் ஏதோ கூறப் போக, அவரை இழுத்துக் கொண்டு போனார்
மற்றொருவர்.
அவர்களின் பேச்சினைக் கவனித்த பாலா, ‘ஆத்தி இந்த தேஜு பிள்ள பெரிய இடமா இருக்குமோ..? எதுக்கும் கொஞ்சம்
தள்ளியே இருப்போம்…’ என்று எண்ணிக் கொண்டான். ஆனால் விதியோ தேஜுவை பாலாவுடன் கோர்த்து விடுவதற்கான
வேலைகளை ஆரம்பித்து விட்டது என்று பாலாவிற்கு தெரியாமல் போனது, அவனின் துரதிர்ஷ்டமோ!
முதல் தளத்தில் அவனுடைய அறையெண்ணை தேடிக் கொண்டிருந்தவனின் கண்கள் 32ஆம் அறையில் நின்றன. அது தான்
தேஜுவின் அறை. அவள் சாவியை பிடுங்கும்போதே அதை கவனித்திருந்தான், பாலா.
‘அவ ரொம்ப பதட்டமா இருந்தாளே… கதவைத் தட்டி என்னாச்சுன்னு கேப்போமா…’ என்று யோசித்தவன், ‘அச்சோ சும்மாவே
முறைப்பா… இப்போ கதவைத் தட்டுன்னா, பட்டுன்னு மூஞ்சிலேயே கதவை சாத்துனாலும் சாத்துவா…’ என்று அவளின்
அறையைக் கடந்து செல்ல முயன்றான்.
ஆனாலும் ஏதோவொன்று அவனைத் தடுக்க, அவனின் கரமோ கதவைத் தட்டியிருந்தது. சில நொடிகள் கழித்தே கதவைத்
திறந்தவள் முகம் சோர்ந்திருக்க, முகத்தை துடைத்திருந்தாலும், அவளின் இமைப்பீலியின் ஈரம் அவள் அழுததைக்
கட்டியம் கூற, மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டிருந்தான் பாலா.
அவளும் சளைக்காமல் அதே பதிலைக் கூறியவள், “காலைல நான் எழ நேரமாகிடுச்சுன்னா கதவ தட்டுறீயா…” சிறிது
தயக்கத்துடனே கேட்டாள்.
அவனும் அவளின் அப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வேறெதுவும் கேட்காமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு
அவனிற்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஆனால் காலையில் அவள் தான் அவனின் அறைக்கதவைத் தட்டப் போகிறாள் என்றோ, அதில் சிறிதும் பாதிக்கப்படாமல்
தூக்கமே பிரதானமாகக் கொண்டு அவன் தூங்குவான் என்றோ இருவருமே அறியவில்லை!
தேஜுவின் அறைக்கு, ஒரு அறை தள்ளிய அறை தான் பாலாவினுடையது. அவன் அறைக்குள் தேஜுவைப் பற்றிய சிந்தனையுடனே
நுழைந்தான். ‘எதுக்காக அவங்களை பார்த்து அவ இவ்ளோ நர்வஸ் ஆகணும்..?’ என்று யோசித்துக் கொண்டே அங்கிருந்த
கட்டிலில் காலை நீட்டிப் படுத்தான். அப்போது தான் விக்ரமிற்கு இங்கு நடந்ததைப் பற்றிக் கூறவில்லை என்ற
நினைவு எழுந்தது.
தன் அலைபேசியை எடுத்துக் கொண்டவன், அங்கிருந்த சிறிய பால்கனியில் நின்று கொண்டான். ஜில்லென்ற காற்று
அவன் மேனியைத் தழுவ, அதை ரசித்து கொண்டே, விக்ரமிற்கு அழைத்தான்.
விக்ரமோ, அப்போது தான் கனவில் அவனின் கனவுக் கண்ணியுடன் ‘டூயட்’ ஆடத் துவங்கியிருந்தான். ‘எப்போ மாமா
ட்ரீட்டு…’ என்று ஹை டெசிபலில் ஒலித்த பாடலில், கனவு கலைந்ததோடு மட்டுமல்லாமல், அவன் கட்டிலிலிருந்து
கீழே விழுந்திருந்தான்.
ஒலித்த பாடலிலேயே யாரென்று அறிந்து கொண்டவன், “அட லூசுப் பயலே, ஒழுங்கா சாப்பிட தான் விடலன்னு பாத்தா,
நிம்மதியா தூங்கக் கூட விட மாட்டிங்குறானே…” என்று வாய்விட்டு புலம்பியவன், அழைப்பை ஏற்று, “இப்போ யார
டா பார்த்து தொலைஞ்ச… ஆவ்…” என்று கொட்டவியுடனே பேசினான்.
“என்ன டா மச்சி, நல்ல தூக்கம் போல..?” என்று பாலா கேட்டவுடன், அதுவரையிலும் தூக்கக் கலக்கத்தில் பேசிய
விக்ரம், “டேய் பக்கி, இப்போ எதுக்கு டா என்ன டிஸ்டர்ப் பண்ண..? நானே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான்
என் டார்லிங் கூட டூயட் ஆடிட்டு இருந்தேன். அது பொறுக்கலையா டா உனக்கு..?” என்று திட்டினான்.
“ஹே நிப்பாட்டு டா. எனக்கென்ன தலையெழுத்தா, நீ போக வேண்டிய வேலைக்கு நான் போயிட்டு இருக்கேன். என்
நேரம், இன்னிக்குன்னு பாத்து அந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. அப்போவே நெனச்சேன் கால் பைசாக்கு போகாத
தகர டப்பால போறோமேன்னு…” என்று பாலா புலம்ப ஆரம்பிக்க, இறுதியில் விக்ரம் தான் அவனைக் கெஞ்சி கொஞ்சி
(!!!) சமாதானப் படுத்தினான்.
பின் விக்ரம், “ஹே மச்சி, நீ கொண்டு போறது சேஃப் தான..?” என்று கேட்க, “இந்த பாலாவ நம்பி ஒரு பொறுப்பை
ஒப்படைச்சுட்டு எதுக்கு டா ஃபீல் பண்ற..?” என்றான் பாலா.
‘அதுக்கு தான ஃபீல் பண்றேன்…’ என்று மனதிற்குள் மட்டுமே நினைக்க முடிந்தது விக்ரமினால். இதை வாய்விட்டு
சொல்லிவிட்டு, பின் யார் அவனின் புலம்பல்களை கேட்டுக் கொண்டிருப்பது!
“ஹே எதுக்கும் கேர்ஃபுல்லா இரு டா.” என்று மீண்டுமொரு முறை விக்ரம் கூற, “ப்ச் அதெல்லாம் நான்
பார்த்துக்குறேன். அந்த பார்ட்டி கிட்ட நாளைக்கு மதியம் தான் டெலிவரி பண்ண முடியும்னு சொல்லிடு டா.”
என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கைகளைத் தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தவாறே, இடப்புறம் திரும்ப, அங்கு அவளின் பால்கனியில் நின்று
விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் தேஜு.
‘இந்த நேரத்துல இங்க என்ன பார்த்துட்டு இருக்கா..?’ என்று எண்ணியவாறே அவளின் பார்வையைத் தொடர்ந்தவனிற்கு
எல்லையற்று பரந்து விரிந்த நட்சத்திரங்களற்ற ஆகாயம் தான் தெரிந்தது.
அவளின் பார்வையில் ரசனையோ வேறெந்த உணர்வோ இல்லையென்று உணர்ந்ததும், மெல்ல ‘ஸ்ஸ்..’ என்று சத்தம்
எழுப்பினான். முதலில் அதைக் கண்டுகொள்ளாதவள், அவனின் இடைவிடாத முயற்சியில் திரும்பிப் பார்த்தாள்.
இன்னமும் அவளின் முகம் வாட்டமாக இருக்க, என்னவென்று சைகையாலே வினவினான். அவளும் தலையை இடவலமாக அசைத்து,
‘ஒன்றுமில்லை’ என்று கூறினாள்.
பாலாவும் விடாமல், ‘அப்போ போய் தூங்கு’ என்க, அவளும் பெருமூச்சை வெளியிட்டு, மீண்டும் ஒரு தலையசைப்புடன்
அவளின் அறைக்குள் சென்றாள்.
அவள் சென்ற பின்னும் அவளின் பால்கனியையே நோட்டமிட்டவன், பின் பின்னந்தலையைக் கோதிக் கொண்டு, கட்டிலில்
சென்று விழுந்தான்.
கட்டிலில் விழுந்தது மட்டும் தான் அவனிற்கு தெரியும். அவனை எழுப்பியதென்னவோ, வெளியே கேட்ட அவசர
ஊர்தியின் சைரன் சத்தம் தான்.
பயணம் தொடரும்...
பயணம் 4
துயில் கொண்டிருந்தவனின் காதுகளில் அவசர ஊர்தியின் சத்தம் கேட்க,
“ப்ச்… காலங்கார்த்தால தூங்கக் கூட விட மாட்டிங்குறாங்களே. டேய் ரம்மு அந்த ஜன்னல மூடு டா.” என்று
கத்தினான், பாலா.
மீண்டும் மீண்டும் அதே ஒலி கேட்டுக் கொண்டிருக்க, அதை பொறுக்க முடியாதவன், எழுந்து பார்க்க, அப்போது தான்
அவனிருக்கும் இடத்தை உணர்ந்தான்.
மணியைப் பார்க்க, அது ஐந்தே முக்கால் என்று காட்டியது. கொட்டாவி விட்டவாறே பால்கனி கதவைத் திறந்து பார்க்க,
அந்த விடுதியின் வாயிலில், சைரனை அலற விட்டுக்கொண்டு நின்றிருந்தது அந்த அவசர ஊர்தி.
மருத்துவமனை சீருடை போட்ட இருவர், தூக்கு படுக்கையில் ஒருவரை சுமந்து கொண்டு அந்த ஊர்தியை நோக்கி செல்வது
பாலாவிற்கு தெரிந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவனிற்கு, தேஜுவின் நினைவு வர, வேகமாக அறையின் கதவைத்
திறந்து கொண்டு வெளியே சென்றான்.
அங்கு அவன் அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் தேஜு. குழப்பத்துடன் அவளைக்
கண்டவன், விழிகளை சுழற்ற, அங்கு வேறு சிலரும் நின்றிருந்தனர்.
இந்த அதிகாலை வேளையில், இவர்கள் இங்கு நிற்க காரணம் என்னவென்பதை யோசித்துக் கொண்டே தேஜுவை நெருங்கினான்
பாலா.
அவளோ அவனைக் கண்டதும் முறைக்க, ‘போச்சு இவ இப்போ ஏன் முறைக்குறான்னு தெரியலையே!’ என்று புலம்பிக் கொண்டே
அவளை நோக்கி சிரித்தான்.
“சும்மா சும்மா பல்ல காட்டுறத நிறுத்து…” என்று தேஜு அடிக்குரலில் சீற, ‘நம்மகிட்ட நல்லா இருக்குறதே அந்த
சார்மிங் ஸ்மைல் தான். அதையும் செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி…’ என்று பாலா தீவிரமாக சிந்திக்க, அவனின்
மனச்சாட்சியோ அவனைத் திட்டி, நடப்பதைக் கவனிக்குமாறு கூறியது.
மனச்சாட்சியின் திட்டில் சிந்தனை கலைந்தவன், “ஆமா, நீ எதுக்கு இங்க நிக்குற..?” என்று வினவினான்.
தேஜுவோ கோபமாக, “ஹான் வேண்டுதல்…” என்றாள். அவளை ஒரு மாதிரி பார்த்தவன், “இவங்களும் உன்கூட
வேண்டிக்கிட்டாங்களோ…” என்று கேட்க, கோபத்தில் அவனை அங்கிருந்து சற்று தள்ளி இழுத்து வந்தவள்,
“தூங்குமூஞ்சி. கும்பகர்ணனுக்கு தம்பியா நீ..? ஒரு தடவை கதவைத் தட்டுனா எழுந்துக்க மாட்டீயா..? எத்தனை தடவை
தான் நானும் கதவ தட்டுறது… இதுல என்னை எழுப்ப சொல்லி உன்கிட்ட சொன்னேன் பாரு…” என்று அவனிற்கு பேச அவகாசமே
கொடுக்காமல் திட்டிக் கொண்டிருக்க, ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்த பாலா முழித்துக்
கொண்டிருந்தான்.
அப்போது தான், ஒருவரை அவசர ஊர்தியில் ஏற்றியது அவனின் நினைவிற்கு வந்தது. அவளின் மனநிலையை மாற்ற வேண்டி அந்த
பேச்சை எடுக்க, கோபத்தில் இன்னும் அவனைத் திட்டினாள் பெண்ணவள்.
“அதுக்காக தான் டா உன் ரூம் கதவ இவ்ளோ நேரம் தட்டுறேன். நம்ம ரெண்டு பேரு ரூமுக்கு நடுல இருந்த அந்த 33வது
ரூம்ல இருந்தவர யாரோ கொலை செய்ய வந்துருக்காங்க. இப்போ அவரை தான் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு
போறாங்க.” என்று அவள் கூறவும், சற்று விறைப்புற்றவனாக, “என்ன ஆச்சு..? முழுசா சொல்லு…” என்று பாலா
கேட்டான்.
அவன் உடல்மொழியைக் கண்டவள், “உனக்கு ஒன்னும் அவ்ளோ சீன் இல்ல…” என்றவள், நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
அரை மணி நேரத்திற்கு முன்…
பழக்கமற்ற இடம் என்பதால் சரியான தூக்கமில்லாமல் புரண்டபடி படுத்திருந்த தேஜுவிற்கு மிக மெல்லிய ஒலி கேட்டது.
இந்த அதிகாலையில் யாராக இருக்கும் என்று யோசித்தவள், பின் விடுதி பணியாளர்களாக இருக்கும் என்று நினைத்துக்
கொண்டு, மீண்டும் கண்மூடி தூங்கும் முயற்சியில் இறங்கினாள்.
ஆனால் அவள் மனதில் ஏதோ விபரீதமாக பட, அறையின் கதவைத் திறந்தாள். அப்போது பக்கத்து அறையில் ஏதோ கீழே விழுந்து
உடையும் சத்தமும், தொடர்ந்து சிறு சிறு சத்தங்களும் கேட்க, முதலில் பதறியவள், உடனே வரவேற்பில் இருப்பவருக்கு
அழைத்து விஷயத்தைக் கூறினாள்.
அவளிற்கு வெளியே செல்லவும் பயமாக இருந்ததால், அறையினுள்ளேயே இருந்தாள். அறைக் கதவு படபடவென தட்டப்பட, சற்று
பயத்துடனே கதவைத் திறந்தாள். அங்கு, இரவு அவர்களிடம் தகவல்களை கேட்டு அறையின் சாவியினை கொடுத்தவன்
நின்றிருந்தான்.
அவனுடனே பக்கத்து அறைக்கு சென்றாள். அவ்வறையின் கதவு பூட்டப்படாமல், பாதி திறந்திருப்பதைக் கண்டு இருவருமே
சற்று அதிர்ச்சியுடனே உள்ளே செல்ல, அப்போது பால்கனி வழியாக யாரோ இறங்கி ஓடுவது தெரிந்தது.
உடனே அந்த பணியாளன் பால்கனிக்கு சென்று எட்டிப் பார்க்க, தேஜுவோ கட்டிலில் படுத்திருந்தவர் அருகே சென்றாள்.
இவ்வளவு நடக்கும் போதும் எந்த அசைவும் இல்லாமல் இருப்பவரை தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஏதோ தவறாக தெரிய,
அருகில் சென்று பார்த்தாள்.
பாதி முகத்தை போர்வை மூடியிருக்க, அவரின் தலை அருகே தலையணை இருந்த கோலத்தைக் கண்டவள், சற்று முன் ஓடியவன்
தலையணையை வைத்து முகத்தை அழுத்தியிருப்பானோ என்று எண்ண, படுத்திருந்தவரின் வயிற்றிலிருந்து வெளிவந்து
கொண்டிருந்த செங்குருதி, அவன் கத்தியால் குத்தியிருப்பதை உணர்த்தியது.
அவள் திடுக்கிட்டு கத்த, அந்நேரம் உள்ளே வந்த பணியாளனும், அதைக் கண்டு வேகவேகமாக விடுதியில் பணிபுரிவோருக்கு
தகவல் தெரிவித்தான். அடுத்தடுத்த காரியங்கள் விரைவாக நடைபெற, தேஜுவிற்கு சற்று நேரம் ஒன்றுமே விளங்கவில்லை.
ஒரு ஓரத்தில் நின்றிருந்தவளிற்கு பாலாவின் நினைவு வர, அவனின் அறைக் கதவை தட்டினாள்.
ஆனால் அதற்கெல்லாம் அசறுபவனா பாலா! கதவு தட்டும் சத்தம் தாலாட்டு சத்தம் போல் கேட்டிருக்க வேண்டும்
அவனிற்கு, நல்ல உறக்கத்தில் இருந்தான் அவன். பத்து நிமிடங்களாக கதவைத் தட்டி சலித்துப் போனவள், கோபமாக
எதிரிலுள்ள சுவரில் சாய்ந்து நின்று விட்டாள். அதன்பின்பு அந்த அவசர ஊர்தி வர, அடிப்பட்டவரை அதில் ஏற்றினர்.
அந்த அவசர ஊர்தியின் சத்தம் தான் தெய்வாதீனமாக (!!!) பாலாவின் காதுகளில் கேட்டு எழுந்திருந்தான்.
நடந்ததை சொல்லி முடித்தவள், மீண்டும் தன் வேலையான முறைத்தலைத் தொடர, ‘அச்சோ ரொம்ப உக்கிரமா இருக்காளே…’
என்று மனதிற்குள் நினைத்தவன், வெளியில் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டான்.
அவனின் ‘பாவ’ முகத்தை பார்த்தவள் என்ன நினைத்தாளோ, “நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்கயிருந்து
கிளம்பிடுவேன். நீயும் வரதுனா வா…” என்றாள்.
கையிலிருந்த கடிகாரத்தில் மணியைக் கண்டு, “ஆறு மணி தான ஆகுது… ஆறரைக்கு தான பஸ்னு அந்த கண்டக்டர் சொன்னாரு…”
என்றான் பாலா.
“இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க போலீஸ் வந்துடுவாங்க. அப்பறம் விசாரிக்க ஆரம்பிச்சா, இன்னைக்கு முழுசும்
அதுலயே போயிடும். எனக்கு இன்னைக்கு பெங்களூரு போயே ஆகணும். சோ நான் கிளம்புறேன். நீ வெட்டியா இருந்தேனா,
எல்லா விசாரணையும் முடிஞ்சதுக்கு அப்பறம் மெதுவா வா.” என்றாள்.
அப்போது தான் பாலாவிற்கு, அவன் கையில் வைத்திருந்த பொருளும், அதை இன்றே உரியவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
என்ற நினைவும் வர, அவனும் அவளுடனேயே கிளம்ப ஆயத்தமானான்.
‘கிளம்பிவிட்டு வருகிறேன்’ என்று கூறி அறைக்குள் சென்றவன், இன்னும் வராததால் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்
தேஜு. “பொண்ணு நானே கிளம்பிட்டேன். இவன் இன்னும் என்னத்த பண்றான்னு தெரியலையே..” என்று புலம்பியவளின் குரல்
பாலாவிற்கு கேட்டதோ, அவனின் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
வந்தவன் வழக்கம் போல இளிக்க, இவள் திட்ட என்று அதிலேயே கால் மணி நேரம் கடந்திருக்க, வேகமாக அவனின் கைகளைப்
பிடித்துக் கொண்டு வரவேற்பிற்கு சென்றாள். அவள் பாலாவின் கையை பிடித்துக் கொண்டு செல்லும்போது பாலாவிற்கோ,
“நம்தன.. நம்தன…” என்று பிஜிஎம் ஓடிக் கொண்டிருந்தது.
வரவேற்பிற்கு சென்றவள், அறைகளை காலி செய்வதாகக் கூறிவிட்டு, சாவியைக் கொடுக்கும் நேரத்தில், பூட்ஸ் அணிந்த
காலடி சத்தங்கள் கேட்க, இருவரும் வாயிலை நோக்கித் திரும்பினர்.
அங்கு நின்றிருந்த காவலரின் பார்வை, அந்த கூடத்தை சுற்றிலும் வலம் வந்து இவர்களிடம் நின்றது. இவர்களின்
பயணப்பொதியைக் கண்டவர், “விசாரணை முடியுற வரைக்கும் யாரும் இந்த இடத்தை விட்டு போகக் கூடாது…” என்றார்
கட்டளையாக.
அவரின் கூற்றைக் கேட்ட தேஜு, அப்போது தான் அவனின் ‘நம்தன’விலிருந்து வெளி வந்திருந்த பாலாவை முறைக்க, அவனும்
முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டான். இனி இதையே அவன் பழகிக் கொள்ள வேண்டுமோ!
பயணம் தொடரும்...
பயணம் 5
அந்த விடுதி வாயிலை அடைத்தவாறு நின்றிருந்த அந்த மூன்று காவலர்களைக் கண்ட
தேஜுவும் பாலாவும் அதிர, அந்த காவலர் கூறியதைக் கேட்டு தேஜு பாலாவை, “இதுக்கு தான் சீக்கிரம் கிளம்புன்னு
சொன்னேன்.” என்று அடிக்குரலில் திட்டினாள்.
பாலாவோ அவள் கூறுவதைக் கவனிக்காமல், அந்த காவலரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான். காதுவரை
நீண்டிருந்த மீசையும் அலட்சியமான உடல்மொழியும் அவரை பயங்கரமாக காட்ட, அதற்கு நேர்மாறாக இருந்த அவரின்
தொப்பையைக் கண்டவனிற்கு சிரிப்பு வர, அதுவரை அவனை பார்த்துக் கொண்டிருந்த தேஜு அவனின் தோளில் இடித்து
முறைத்தாள்.
அதில் சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவரைக் கண்டால் மீண்டும் சிரித்து விடுவானோ என்று பயந்து அவரை
பார்க்காமல் கீழே குனிந்து கொண்டான்.
இவர்கள் இருவரும் முணுமுணுப்பது கேட்கவில்லை என்றாலும், பாலா அவரை பார்த்து சிரித்ததைக் கண்டவர்,
அருகிலிருந்த ஏட்டிடம், “என்னய்யா அந்த பையன் என்னை பார்த்து கேலியா சிரிக்கிற மாதிரி இருக்கு..?” என்று
கேட்க, இவருடன் கோர்த்து விட்ட விதியை சபித்துக் கொண்டிருந்த அந்த ஏட்டோ, “அதெல்லாம் இல்ல சார். நீங்க
பாக்குறதுக்கு அப்படியே ‘சிங்கம்’ சூர்யா மாதிரியே இருக்கீங்க சார். அதுக்காக தான வெறும் துரைன்னு இருந்த
உங்க பேர துரைசிங்கம்னு மாத்திக்கிட்டீங்க.” என்று பொய்யென்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் கூறினார்.
ஏட்டு கூறியதைக் கேட்ட அந்த துரைசிங்கம் (!!!) மீசையை நீவிவிட்டவாறே ‘கம்பீரமாக’ அந்த விடுதிக்குள்
நுழைந்தார்.
பாலா மற்றும் தேஜு தோளிலும் கையிலும் பையை சுமந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே வரவேற்பில் நின்ற
பணியாளனிடம், “இங்க தங்கிருக்கவங்க எல்லாரையும் நான் விசாரிக்கணும்.” என்றவர், பின் பணியாளர்களின்
விபரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இங்கு தேஜுவோ புலம்பிக் கொண்டிருந்தாள். “போச்சு… இனி விசாரிக்க எவ்ளோ நேரம் ஆகுமோ..!” என்று வாய்விட்டே
புலம்பியவள், இடையிடையே ‘எல்லாம் உன்னால் தான்…’ என்று பாலாவை திட்டவும் மறக்கவில்லை.
அவளின் புலம்பல்களை தாங்க முடியாத பாலா, நேராக துரையிடம் சென்று, “சார், நீங்க சீக்கிரமா விசாரிச்சீங்கன்னா
நாங்க எங்க சொந்த வேலையை பார்க்க கிளம்புவோம்.” என்றான்.
நம் துரைசிங்கமோ, பாலாவையும் தேஜுவையும் பார்த்தவர், “யோவ் ஏட்டு, இவங்க ரெண்டு பேரையும் கடைசியா
விசாரணைக்கு கூப்பிடு…” என்று கூறிவிட்டு மீண்டும் அந்த பணியாளனிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கூறியதைக் கேட்ட ஏட்டு பாலாவிடம் மெல்லிய குரலில், “நீ எதுவும் சொல்லாம இருந்திருந்தீன்னா அந்த ஆளே
சும்மா பேருக்கு விசாரிச்சுட்டு விட்டிருப்பாரு. இப்படி தேவையில்லாம வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டீயே
தம்பி…” என்றார்.
பாலாவும் அப்போது அதை தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘கொஞ்ச நேரம் அமைதியா இருந்துருக்கலாமோ. இப்போ அந்த
ஃபயர் என்ஜின்ன எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே!’ என்று மனதிற்குள் புலம்பியவாறே தேஜுவை நோக்கித்
திரும்ப, அங்கு பாலாவின் எதிர்பார்ப்பை ஏமாற்றாதவாறு கண்களில் கனலுடன் நின்றிருந்தாள் கண்ணியவள்.
வழக்கம் போல அவளைக் கண்டு இளித்தவன், சற்று தள்ளியே நின்று கொண்டான். இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால்
கண்களாலேயே எரித்திருப்பாளோ, அவனைக் காக்கவே அவளின் அலைபேசி ஒலித்தது.
பாலாவைத் திட்டிக் கொண்டே அழைப்பை ஏற்றவள்,“ஹலோ அம்மம்மா…” என்று பேச ஆரம்பித்தாள்.
“இல்ல அம்மம்மா. இன்னும் கிளம்பல. இப்போ இந்த பக்கம் பஸ் வராதாம். எப்படியும் பத்து மணிக்கு மேல ஆகிடும்னு
நினைக்குறேன். நீங்க எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடுங்க, அம்மம்மா. நான் பஸ் ஏறிட்டு உங்களுக்கு
கூப்பிடுறேன்.”
மறுமுனையில் என்ன சொன்னாரோ, பாலாவை முறைத்து விட்டு, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், அம்மம்மா…” என்று
கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
தேஜு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட பாலா, ‘பாட்டி வீட்டுக்கு போக தான் இவ்ளோ அவசரமா..?
இன்னைக்கு ஈவ்னிங்குள்ள பொருளை சேர்க்க வேண்டிய நானே பதறாம இருக்கேன்… இவளுக்கு என்ன வந்துச்சு. பேசிட்டு
இருக்குறப்போ நம்மள வேற முறைக்குறது!’ என்று பொறுமியவனிற்கு அப்போது தான் விக்ரமிற்கு இன்னும் சொல்லாமல்
இருப்பது நினைவு வந்தது.
உடனே நண்பனை அலைபேசியில் அழைத்தான். இரவும் பாலாவின் உபயத்தால் தூக்கம் கலைந்த விக்ரம் வெகு நேரம் கழித்தே
உறங்கியிருந்தான். பாவம் அவனிற்கு அன்றைய நாள் நிம்மதியான உறக்கம் கிடையாது என்பது தான் விதி போலும்!
அலைபேசியை ஓசையின்றி வைத்திருந்தாலும், பாலாவின் அழைப்பால் உண்டான அதிர்வுகளின் மூலம் முழிப்பு வர, அவனின்
பெயரைக் கண்டவன், காலையிலேயே சில ‘நல்ல’ வார்த்தைகளால் அவனை அர்ச்சித்த பின், அழைப்பை ஏற்றான்.
அழைப்பை ஏற்றதும் பாலா கூறுவதைக் கூட கேளாமல், “ஏன் டா போன் பண்ணி தூக்கத்தை கெடுக்கிற… நேத்து தான் தூங்க
விடாம பேசிட்டு இருந்தன்னா, இப்போ காலங்கார்த்தாலேயே போன் பண்ணிருக்க.” என்று புலம்ப, பாலாவோ, “நீ உன் ஆளைப்
பார்க்க போறேன்னு சொன்னதுனால தான டா இந்த வேலைக்கே ஒத்துகிட்டேன். உனக்காக தான டா, அந்த டப்பா பஸ்ல வர
சம்மதிச்சேன். அந்த பஸ்ல வந்ததுனால தான் நேத்து நடு ரோட்டுல நின்னேன். இப்போ கூட என்னை ஊருக்கு போக விடாம
இந்த போலீஸ் விசாரணைக்கு கூப்பிட்டு தொல்லை பண்றாங்க… இதெல்லாம் யாரால… எல்லாம் உன்னால தான் டா பரதேசி…”
என்று முதலில் பாவமாக பேசியவன், முடிக்கும் போது கோபத்துடன் முடித்திருந்தான்.
பாலாவின் குரல் வேறு யாருக்கும் கேட்கவில்லை என்றாலும், அருகிலிருந்த தேஜுவிற்கு நன்றாக கேட்டது. இதுவரை
அவனின் கோமாளித்தனத்தையும் பாவ முகத்தையும் மட்டுமே கண்டவளிற்கு, அவனின் கோபம் சற்று அதிர்வை
உண்டாக்கியிருந்தது.
விக்ரமோ வாயில் கொசு போனால் கூட தெரியாதவனாக வாயைப் பிளந்து கொண்டு நண்பனின் கோபத்தை உள்வாங்கிக் கொள்ள
முயற்சித்தான்.
“டேய் மச்சான்…” – அதிர்ச்சியில் விக்ரமின் குரல் நடுங்க, “என்னடா மச்சான்.. நொச்சான்னுட்டு… நல்லா
கேட்டுக்கோ, இங்க ஒரு பிரச்சனை ஆகிடுச்சு. நான் கிளம்புறதுக்கு மதியம் ஆகிடும். ஈவினிங் தான் டெலிவரி பண்ண
முடியும்னு பார்ட்டிக்கு போன் பண்ணி சொல்லிடு.” என்று எரிச்சலான குரலில் கூறியவன், ஓரக் கண்ணில் தேஜுவைக்
கண்டான். அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஷாப்பா இவளோட திட்டுலயிருந்து தப்பிக்க என்ன ஆக்டிங் விட வேண்டியதா இருக்கு… முட்ட கண்ண வச்சுக்கிட்டு
எப்படி முழுச்சுக்கிட்டு இருக்கா… ஹ்ம்ம்... இவ்ளோ நேரம் காமெடியன் மாதிரி பார்த்தேல, இப்போ கொஞ்ச
நேரத்துக்கு டெரர் ஹீரோ மாதிரி பாரு…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன், தேஜுவைப் பார்த்து புருவம்
உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க, அவளோ மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
இப்படியே ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றி நேரத்தை கழிக்க, மணியும் யாருக்காகவும் காத்திருக்காமல் பத்தை தொட்டது.
நம் துரைசிங்கமோ விசாரணைக்கு அவ்விடுதியிலேயே ஒரு அறையை குத்தகைக்கு எடுத்ததைப் போல, அமர்ந்து கொண்டு
அவ்விடுதியில் தங்கியிருந்தவர்கள், பணியாளர்கள் அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னதைப் போல எல்லாரையும் விசாரித்து முடித்த பின்னர் தான் இவர்கள் இருவரையும் அழைத்தார்.
பாலாவும் தேஜுவும் எரிச்சலை முகத்தில் காண்பித்தவாறே அறைக்குள் நுழைய, இவர்களைக் கண்டதும், “யோவ் ஏட்டு,
இப்போ சாப்பிட்ட பொங்கல் டேஸ்ட் நல்லா இருந்துச்சுலய்யா… இதுவரைக்கும் இப்படி ஒரு பொங்கலை சாப்பிட்டதே
இல்ல…” என்று ரசனையுடன் கூறினார் துரைசிங்கம்.
அவரின் ரசனையைக் கேட்டு பாலாவிற்கும் தேஜுவிற்கும் எரிச்சல் இன்னும் கூடியது. அவர்கள் இருவரும் இன்னும்
எதுவும் சாப்பிட வில்லை. சாப்பிட போகும் நேரத்தில் விசாரணை என்று கூப்பிட்டு விடுவார்களோ என்று எண்ணியே
பசியையும் அடக்கியிருந்தனர். இப்போது மட்டும் வேறு சூழ்நிலையாய் இருந்திருந்தால், அந்த துரையை வாயில் நுரை
வருமளவிற்கு அடித்திருப்பான் பாலா. ஆனால் சூழ்நிலை அவனின் கைகளை கட்டிப்போட்டு விட்டது!
அதுவரை ஏட்டிடம் நக்கல் பேசிய துரை அப்போது தான் இவர்கள் வந்ததை கவனிப்பது போல, “அடடா ரொம்ப லேட்டாகிடுச்சோ…
உங்களுக்கு சொந்த வேலை இருக்குன்னு வேற சொன்னீங்களே…” என்று கிண்டல் செய்ய, மிகவும் முயன்றே வாயை
அடக்கியிருந்தான் பாலா.
இவர்களை பேசவிட்டால் பிரச்சனை தான் ஆகும் என்பதை உணர்ந்த தேஜு, “சார் வெளிய நடந்ததுக்கு சாரி. அவன் ஒரு லூசு
அதான் அப்படி பிஹேவ் பண்ணிட்டான். நாங்க நேத்தே ஊருக்கு போயிருக்கணும்… சோ ப்ளீஸ் சார்…” என்று கெஞ்சலில்
இறங்கினாள்.
‘எதே லூசா…’ என்று பார்த்த பாலாவை கைபிடித்து அடக்கியவள், பாவமாக துரையை நோக்க, அவளின் பாவனையில் மலை
இறங்கிய துரையும் அவரருகே நின்றிருந்த ஏட்டிடம், “அவங்க பையை செக் பண்ணுய்யா…” என்றார்.
அதுவரை தன் கைபிடித்திருந்த அவளின் ஸ்பரிசத்தை மோன நிலையில் ரசித்துக் கொண்டிருந்த பாலா, “என்னது பையை செக்
பண்ணனுமா..? அதெல்லாம் முடியாது.” என்று கத்தினான்.
அங்கிருந்த அனைவரும் அவனையே நோக்க, துரையோ இவன் தான் கொலை முயற்சி செய்தவன் என்று முடிவே செய்து
விட்டார்.
“அப்போ நீ தான அவரை கொலை செய்ய முயற்சி பண்ண… ஒழுங்கா உண்மையை ஒத்துக்கோ.” என்றார் துரை.
“நான் எதுக்கு சார் கொலை பண்ணனும்..? எனக்கு அந்த ஆளை தெரியவே தெரியாது.” என்று மறுத்தான் பாலா.
“அப்போ எதுக்கு உன் பையை செக் பண்ண வேணாம்னு சொல்ற. கொலை முயற்சி நடந்த ரூமுக்கு பக்கத்து ரூம்ல வேற
இருந்துருக்க. சோ அவரை நீ கொலை பண்ண நெறைய சான்ஸ் இருக்கு…”
“சார், இப்படி தான் விசாரிப்பீங்களா… பக்கத்து ரூம்ல இருந்தா கொலை பண்ணுவாங்களா… இதென்ன அநியாயமாக இருக்கு!
போய் ஹோட்டல் சிசிடிவிய பாருங்க சார். விட்டா எனக்கு ‘கத்திகுத்து’ பாலான்னு பேரே வச்சுடுவீங்க போல…”
“ஹோட்டல்ல சிசிடிவி இல்லன்னு தெரிஞ்சு தான தைரியமா செக் பண்ண சொல்ற…” என்று அவர் கேட்டதும், ‘இது வேறயா…’
என்று தலையிலடித்துக் கொண்டான்.
“சார் இப்போ என்ன என் பையை செக் பண்ணனும் அதான… நானே எடுத்து காட்டுறேன்…” என்றவன், தன் பையைத்
திறந்தான்.
அந்த மூன்று காவலரும் சற்று எச்சரிக்கையுடனே பாலாவைப் பார்த்திருக்க, அவனோ உள்ளிருந்து செவ்வக வடிவிலிருந்த
அட்டைப்பெட்டியை வெளியில் எடுத்தான்.
“சார் உள்ளுக்குள்ள பாம் மாதிரி ஏதாவது வச்சுருப்பானோ..?” என்று ஏட்டு துரையின் காதில் கேட்க, “சும்மா
இருய்யா. இருக்குற டென்ஷன் பத்தாதுன்னு நீ வேற.” என்று கூறிவிட்டு அந்த அட்டைப்பெட்டியில் கவனமானார்,
துரை.
பாலாவும் அந்த அட்டைப்பெட்டியை பிரிக்க, உள்ளுக்குள் பல அடுக்குகளாக தாள்கள் சுற்றியிருக்க, மெதுவாக
அனைத்தையும் பிரித்தான். அவன் ஒவ்வொரு தாளையும் பிரிக்க பிரிக்க, மற்றவர்களுக்கு பதட்டம் எகிறியது.
அனைத்தையும் பிரித்தவன், அதை அவர்களிடம் காட்டி, “இது தான் என் பைகுள்ள இருந்துச்சு.” என்றான்.
அவன் காட்டியது, வெண்ணெய்யை வாயில் வைத்து, கண்களில் குறும்புடன் இதழ்களில் சிரிப்புடனும் இருந்த குட்டி
கிருஷ்ணனின் ஓவியம் தான். கண்ணாடியில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைக் காட்டியவனை, காவலர்கள் மூவரும்
முறைத்தனர்.
“இதை காட்டவா இவ்ளோ பில்ட்-அப்பு…” என்று எரிச்சலுடன் கேட்டார் துரைசிங்கம்.
இவ்வளவு நேரம் தன்னை எரிச்சல் படுத்தியவரை பழி வாங்கிவிட்ட திருப்தியில், “ஆமா சார். இதை சேஃபா டெலிவரி
பண்ணனும்னு இத்தனை மெனக்கெட்டு பேக்கிங் பண்ணிருக்கோம். இப்போ பாருங்க எல்லாத்தையும் திரும்ப நான் பேக்
பண்ணனும்…” என்று அலுத்துக் கொண்டான்.
இங்கு இவ்வளவு அலப்பறைகள் நடக்க, அந்த அறையிலிருந்த ஒரு ஜீவனோ இதிலெல்லாம் கலந்து கொள்ளாமல் பயத்துடன்
நின்றிருந்தாள். மற்ற நால்வரும் அவளைக் கவனிக்கவே இல்லை.
இவ்வளவு நேரம் தைரியமாக இருந்த தேஜுவின் திடீர் பயத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்…
பயணம் தொடரும்...
பயணம் 6
பாலாவின் அலப்பறைகளில் நொந்து போன அந்த காவலர்களோ தங்களுக்குள் பேசிக்
கொண்டிருக்க, தன்னை வெறுப்பேற்றிய அந்த துரைசிங்கத்தின் முகம் போன போக்கைக் கண்டு துள்ளிக் குதிக்காத குறையாக
உற்சாகத்தில் இருந்தான் பாலா.
அதே உற்சாகத்துடன் தேஜுவின் முகத்தைக் காண, இரவில் இருந்த அதே பதட்ட நிலையில் இருந்தாள் அவள். அவளின் நிலை
குறித்து யோசித்தவாறே அவளை உலுக்கினான், பாலா.
பாலாவின் உலுக்கலில் நிகழ்விற்கு வந்தவள், திறுதிறுவென முழிக்க, ‘இவ முழியே சரியில்லையே…’ என்று யோசித்தான்
பாலா.
“என்னய்யா இவன் உண்மைலேயே டம்மி பீஸு தான் போல…” என்று துரை ஏட்டின் காதில் கூற, அவரும் வேறு வழியில்லாமல்
துரைக்கு ஒத்து ஊதினார்.
“சரி சரி ரெண்டு பேரையும் வெளிய அனுப்பு. ஹ்ம்ம்... இந்த கேஸ் இன்னும் எவ்ளோ நாள் நம்மள வச்சு செய்யப் போகுதோ…”
என்று புலம்பினார், துரை.
அந்த ஏட்டும், “தம்பி, நீங்க கிளம்புங்க. விசாரணை முடிஞ்சது.” என்று கூற, அதுவரையிலும் தேஜுவின் முழிப்பிற்கான
காரணத்தை சிந்தித்துக் கொண்டிருந்த பாலா, “என்னது கிளம்பவா..? என்னை மட்டும் குற்றவாளி மாதிரி செக் பண்ணிங்க..
இதோ இவ பேக்கெல்லாம் செக் பண்ண மாட்டிங்களா..?” என்றான்.
பாலாவின் கூற்றைக் கேட்ட தேஜு அவனை முறைக்க, அதை ஓரக் கண்ணில் பார்த்தவன், ‘ஹான் முறைக்குறா முறைக்குறா… நம்ம
ஆளுக்கு எதுவும் ஆகல…’ என்று மனதிற்குள் மகிழ்ந்தான், அவள் மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டிருப்பதை
அறியாதவனாக.
‘இந்த லூசு சும்மாவே இருக்க மாட்டான். அவங்களே கிளம்புன்னு சொன்னாலும், வாலண்டியரா மாட்டி விடுறான்…’ என்று தேஜு
சற்று முன்னிருந்த பதட்ட நிலையிலிருந்து கோப நிலைக்கு மாறினாள்.
அப்போது அவளைக் காக்கவே துரையின் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, வேகமாக எழுந்தவர், அவரருகே
இருந்த ஏட்டிடம், “அந்த கத்திக்குத்து பட்டவருக்கு நினைவு திரும்பிடுச்சாம். ஆனா திரும்ப எப்போ மயக்க நிலைக்கு
போவாருன்னு தெரியலையாம். ஃபர்ஸ்ட் அவர விசாரிச்சுட்டு வந்துடலாம்…” என்று கூறிக்கொண்டே வெளியே செல்ல, அவரின்
பின்னே மற்ற இருவரும் சென்றனர்.
அப்போது தான் தேஜு சிறிது ஆசுவாசமடைந்தாள், அவளின் நிம்மதியைக் கெடுக்கவே கடவுள் ஒருவனை அனுப்பி வைத்திருப்பதை
அறியாதவளாக…
“அந்த துரையை எப்படி வெறுப்பேத்துனேன் பார்த்தேல…” என்று பெருமையாக பாலா கூற, அவனை முறைத்துப் பார்த்தவள்
வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தாள்.
“க்கும்… தேங்க்ஸ் சொல்றதா இருந்தா சத்தமாவே சொல்லலாம்…” என்று அவன் கூறினான். தேஜுவோ அவனை ஒருமாதிரி பார்த்து,
“உனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..?” என்று வினவினாள்.
“எதுக்கா… என்னால தான் இப்போ நீ ஃப்ரீயா இருக்க. நான் தான அவங்களை டைவர்ட் பண்ண என்னலாமோ பண்ணேன்.” என்று அவன்
கூற, அவ்வளவு நேரம் பொறுமையை மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடன் இழுத்துக்கட்ட போராடியவள், அவனின் கூற்றில் அதை
காற்றில் பறக்க விட்டவளாக, “உன் மூஞ்சி… லூசு மாதிரி ஏதோ பண்ணிட்டு அதை பெருமையா வேற சொல்லிக்கிற… இதுல என் பையை
வேற செக் பண்ண சொல்ற… உன்னைக் கேட்டானா அவன்…” என்று அடிக்குரலில் சீறினாள்.
அவளின் கோபத்தில் ஒரு நிமிடம் திகைத்தவன், “உன் பையை தான செக் பண்ண சொன்னேன்… அதுக்கு எதுக்கு இந்த குதி
குதிக்கிற… அப்படி என்ன அதுல ஒளிச்சு வச்சுருக்க… என்னமோ பெரிய தீவிரவாதி மாதிரி சீன போடுவா…” என்று பேசிக்
கொண்டே சென்றவன், திடீரென்று பேச்சை நிறுத்தியவனாக, அவளைக் கூர்மையாக அளவிட்டுக் கொண்டே, “நீ ***** இயக்கத்தை
சேர்ந்தவ தான… உண்மைய சொல்லு அந்த பைல என்ன வச்சுருக்க…” என்று கேட்டுக் கொண்டே அவளின் பையை இழுத்தான்.
அந்த பையின் மற்றொரு முனையை தேஜு பிடித்துக் கொள்ள, இருவருக்கும் இடையே இழுபறி நடந்து கொண்டிருந்தது.
“டேய் லூசு மாதிரி பிஹேவ் பண்ணாத விடு டா…” என்று அவள் கத்த, “முடியாது டி… ஒழுங்கா உள்ள என்ன வச்சுருக்கன்னு
சொல்லிடு…” என்று அவனும் கத்தினான்.
இருவரும் பையை இழுத்துக் கொண்டே, அந்த அறையின் வாயிலை அடைந்தனர். காலையில் நடந்த கொலை முயற்சியின் காரணமாக அந்த
இடமே அமைதியாக இருக்க, இவர்களின் சத்தம் அந்த விடுதி முழுவதுமே எதிரொலித்தது.
அந்த விடுதியில் இருந்த அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, விடுதியின் வாயிலை அடைந்த
காவலர்களும் இவர்களின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தனர்.
ஏற்கனவே பாலாவின் செயலில் கடுகடுவென்றிருந்த துரைக்கு இவர்களின் சண்டையும் எரிச்சலை ஏற்படுத்த, “யோவ் என்னய்யா
இம்சை இதுங்களோட…” என்று ஏட்டிடம் புலம்பினான்.
இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த மற்றொரு காவலரோ, “சார், ஏதோ தீவிரவாதின்னு பேசிக்குறாங்க… பெரிய கேசா இருக்கும்
போல… இந்த வருஷம் இவங்கள வச்சு ப்ரொமோஷன் வாங்கிடலாம்.” என்று துரையிடம் கூற, “அப்படிங்கிற…” என்று தாடையைத்
தடவி யோசித்தவர், “ஏட்டு, அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா.. ஹாஸ்பிடல்ல விசாரிச்சுட்டு, இவங்களை
விசாரிக்கலாம்.” என்றார்.
தங்களைச் சுற்றி நடப்பது எதுவும் அறியாமல் சண்டையில் மூழ்கியிருந்தவர்களை நெருங்கியவர், “தம்பி… பாப்பா…” என்று
மரியாதையாக அழைக்க, அவரைக் கண்டு கொள்ளவேயில்லை அவர்கள் இருவரும்.
சற்று நேரம் பொறுத்து பார்த்தவர், இருவரும் அவர்களாக தன்னைத் திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து,
“டேய் நிறுத்து… ஏம்மா நீயும் நிறுத்து… அப்போயிருந்து கூப்பிட்டுட்டே இருக்கேன்… ரெண்டு பேர்ல யாராவது திரும்பி
பார்த்தீங்களா… முதல சண்டை போடுறத நிறுத்திட்டு சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க…” என்று குரலை உயர்த்தி
பேசினார்.
அப்போது தான் இருவருக்கும் அவர்கள் இருக்கும் இடம் நினைவிற்கு வர, சுற்றிலும் பார்வையை செலுத்தினர்.
அங்கிருந்தவர்களின் கண்கள் இவர்களையே வித்தியாசமாக நோக்குவதை உணர்ந்தவர்கள், ஒருவரையொருவர் பார்த்து, “நீ தான்
டா(டி) இதுக்கெல்லாம் காரணம்…” என்று மீண்டும் ஒரு சண்டையைத் துவங்க, “அடச்சே நிறுத்துங்க பா, ரெண்டு பேரும்…
எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டு… சரி சரி ரெண்டு பேரும் என்கூட வாங்க…” என்று ஏட்டு கூறினார்.
அவர் அப்படி கூறியதும், குழப்பமாக அவரைக் கண்ட இருவரும், “எங்க..?” என்று ‘கோரஸாக’ கேட்க, “ஹான் ஜெயிலுக்கு…”
என்றார் அவரும்.
“என்னாது ஜெயிலுக்கா…” என்று வாய் பிளந்த இருவரும், ‘எதுக்கு’, என்ற ரீதியில் அவரைப் பார்க்க, அதைப் புரிந்து
கொண்டவர், “அதான் நீங்களே உண்மைய ஒத்துக்கிட்டீங்களே… ரெண்டு பேரும் தீவிரவாதின்னு…” என்று கூறினார்.
அதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், “சார், நான் இல்லை… இவ தான் தீவிரவாதி. அவ பையைக் கூட செக் பண்ணி
பாருங்க…” என்று அப்ரூவராய் மாறியவன் போல பேச, ‘அடப்பாவி…’ என்று வாயை மட்டும் அசைத்தாள் தேஜு.
“அதெல்லாம் இல்ல சார்… அவன் ஒரு லூசு… அதான் உளறிட்டு இருக்கான்…” என்று தன் பங்கிற்கு அவளும் கூற, இருவரையும்
அடக்கியவர், “எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க…” என்று முன்னே நடந்தார்.
அவரின் பின்னே சென்ற இருவரும் என்ன கெஞ்சியும் சம்மதிக்காமல் அவர்களை ‘ஜீப்’பிற்கு அழைத்து வந்தார்.
துரை இருவரையும் மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, “வண்டில ஏற சொல்லுய்யா…” என்று ஏட்டிற்கு
கட்டளையிட்டார்.
‘நான் வெறுப்பேத்துனதுக்கு இப்போ நல்லா வச்சு செய்ற…’ என்று மனதிற்குள் துரையைத் திட்டிக் கொண்டே அந்த வண்டியில்
ஏற, ‘என் தலையெழுத்து உங்கூட இப்படி மாட்டிருக்கேன்…’ என்று பாலாவைத் திட்டிக் கொண்டே ஏறினாள்,
தேஜு.
அடுத்த கால் மணி நேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் நின்றது அந்த வண்டி. அந்த கால் மணி நேரமும், பாலாவும் தேஜுவும் முறைத்துக் கொண்டிருந்தனரே தவிர எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
“சார், உங்க ஸ்டேஷனை எப்போ ஹாஸ்பிடலுக்கு மாத்துனீங்க…” என்று அவ்வளவு நேரம் பேசாமல் இருந்தவன், அவனின் சந்தேகத்தை ஏட்டின் காதில் முணுமுணுக்க, ‘அடங்கவே மாட்டியா நீ’ என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்த ஏட்டு உள்ளே செல்ல, இவர்களும் அவரின் பின்னே சென்றனர்.
மருத்துவமனை வரவேற்பில் அறை எண்ணை விசாரித்துவிட்டு அங்கே செல்ல, அப்போது தான் அந்த அறையிலிருந்து மருத்துவர் வெளியே வந்தார்.
துரை அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அடிப்பட்டவரின் நிலை குறித்து வினவினார்.
“கனமான போர்வை அவர் மேல இருந்ததால, கத்தி ஆழமா இறங்கல… லேசா தோலை தான் கிழிச்சுருக்கு. இப்போ அவரு சேஃப் தான்… ஆனா குத்துறதுக்கு முன்னாடி தலகாணிய வச்சு மூச்சடைக்க முயற்சி பண்ணிருக்கான். அதுல தான் அவரு மயக்கமாகிட்டாரு.” என்று குத்துபட்டவரின் நிலையை விளக்கினார்.
“இப்போ நாங்க அவர விசாரிக்கலாமா, டாக்டர்?” என்று துரை வினவ, “என்னை கேட்டீங்கன்னா, இப்போ அவருக்கு ரெஸ்ட் தான் முக்கியம்னு சொல்லுவேன். பட் அவரை டிஸ்டர்ப் பண்ணாம சீக்கிரம் விசாரணையை முடிக்கிறதா இருந்தா யூ கேன் ப்ரோசீட்…” என்று கூறினார் அந்த மருத்துவர்.
அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு, உள்ளே சென்றனர் அம்மூன்று காவலர்களும். இவ்வளவு நேரம் நடப்பதை வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த தேஜுவும் பாலாவும் தங்களின் விதியை நொந்து கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தனர், அவர்களின் வாழ்க்கை பயணத்தையே மாற்றக்கூடிய செய்தி அவர்களுக்காக காத்திருப்பதை அறியாமல்…
அந்த அறையினுள்ளே, சோர்வாக கண்மூடி படுத்திருந்தவருக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இவர்கள் அறைக்குள் நுழையும் ஓசை கேட்டு விழித்தார் அவர்.
“ஹலோ மிஸ்டர். சந்தோஷ். சாரி டு டிஸ்டர்ப் யூ. இப்போ எப்படி இருக்கு..?” என்று துரை கூற, ‘பாரு டா… தொரை இங்கிலீஷ்லாம் பேசுது…’ என்ற ‘மைண்ட் வாய்ஸ்’ பாலாவினுடையாதாக அல்லாமல் வேறு யாருடையதாக இருக்க முடியும்.
“ஐ’ம் ஃபைன் சார். இப்போ பரவால… லேசான வலி தான் இருக்கு.” என்றார் அந்த சந்தோஷ்.
“சந்தோஷ், நீங்க எப்போயிருந்து அந்த ஹோட்டல்ல ஸ்டே பண்ணிருக்கீங்கன்னு சொல்லுங்க… அப்படியே உங்கள பத்தியும் சொல்லுங்க…” என்றார் துரை.
“சார், நான் ஒரு ஆர்கிடெக்ட். ***** கம்பெனியோட சென்னை ப்ரான்ச்ல வேலை பாக்குறேன். எங்க கம்பனியோட பெங்களூரு ப்ரான்ச்ல சின்ன பிரச்சனை. சோ நேத்தும் அதுக்கு முதல் நாளும், அங்க இருந்த பிரச்சனைய தீர்த்துட்டு, சென்னைக்கு கிளம்பிட்டு இருந்தேன். ரொம்ப ஒர்க் டென்ஷனால என்னால தொடர்ந்து வண்டியோட்ட முடியல. அதான் அந்த ஹோட்டல்ல நைட் தங்கிட்டு காலைல கிளம்பலாம்னு இருந்தேன்.” என்று தன்னைப் பற்றிக் கூறினார்.
“ஓகே சந்தோஷ். நீங்க வேலை செய்யுற கம்பெனில ஏதாவது பிரச்சனையா… அதாவது உங்க சக நண்பர்கள் கூட சண்டை… அதனால இந்த கொலை முயற்சின்னு நினைக்கிறீங்களா..? இல்ல உங்க பெர்சனல் லைஃப்ல எதுவும் பிரச்சனையா..?” என்று துரை கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, அவரை இடையில் நிறுத்திய சந்தோஷ், “சார் சார்… ஹோல்ட் ஆன். இந்த கொலை முயற்சி எனக்கானது இல்ல..” என்றவரின் பார்வை பாலாவையும் தேஜுவையும் வெறித்தது.
அதே நேரம், வேறொரு இடத்தில்… அவனின் அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, அதை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பின், நடப்பது நடக்கட்டும் என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு அந்த அழைப்பை ஏற்றான்.
அவன் அழைப்பை ஏற்றதும், மறுமுனையிலிருந்து பல கெட்ட வார்த்தைகள் சரளமாக வர, அதைக் கேட்டவனிற்கோ பயத்தில் வியர்த்து விட்டது.
“***** ஒரு வேலை சொன்னா, அத சரியா முடிக்க துப்பில்ல… இத்தனைக்கும் நான் தான எல்லா பிளானையும் போட்டுக் கொடுத்தேன். அப்படியிருந்தும் சொதப்பி வச்சுருக்க… ***** சரி ரூம் தான் மாத்தி போயிட்ட, அவன குத்துனதையாவது ஒழுங்கா செஞ்சியா… அதுவும் இல்ல. இப்போ அவன் ஹாஸ்பிடல்ல தான் இருக்கானாம். அவன் மட்டும் நம்ம திட்டத்தை வெளிய சொன்னான்… அவ்ளோ தான்… என்னோட இத்தனை வருஷக் கனவு கனவாவே போயிடும். ஹ்ம்ம் உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு ஒன்னும் ***** முடியாது.” என்று மேலும் சில கெட்ட வார்த்தைகளை உச்சரித்த பின்னர், அவராகவே அழைப்பைத் துண்டித்தார்.
அதுவரையிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவன், “ஷப்பா… இனி கொஞ்ச நாளுக்கு இவர் கண்ணுல படக்கூடாது…” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் அவன்.
பயணம் தொடரும்...
பயணம் 7
சந்தோஷ் கூறியதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுடன் இருக்க, அவர் நடந்ததை மேலும்
கூறத் துவங்கினார்.
“நான் படுக்கும்போது நைட் 11.30 மணி இருக்கும். எனக்கு எப்பவுமே போர்வையால முகத்தை மூடி தான் தூங்கிப் பழக்கம்.
நேத்தும் அப்படி தூங்கிட்டு இருந்தப்போ தான் ஏதோ சத்தம் கேட்டுச்சு. பக்கத்து ரூம்லயிருந்து சத்தம்
வந்துருக்கும்னு முதல அலட்சியமா இருந்துட்டேன். கொஞ்ச நேரத்துல யாரோ, என் முகத்தை தலகாணி வச்சு அமுக்குனாங்க.
திடீர்னு அப்படி நடக்கவும், என்னால தடுக்க முடியல. நிமிஷ நேர போராட்டத்துக்கு பின்னாடி, என் முகம் மேல இருந்த
போர்வை விலகியிருக்கும் போல. இப்போ யோசிச்சா, என்னைப் பார்த்து அவன் ஷாக்காகிருப்பான்னு தோணுது.”
“ஆனா அந்த சமயம் என்னால எதுவும் யோசிக்க முடியல. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போயிட்டேன். ஆனாலும் அவன்
யாருக்கிட்டயோ போன் பேசுற சத்தம் கேட்டுச்சு. அப்போ தான் அவன் ரூம் மாறி வந்துட்டதா சொல்லிட்டு இருந்தான். அந்த
பக்கம் என்ன சொன்னாங்களோ, அவன் கத்தி எடுத்து குத்த வந்தான். அந்த அரை மயக்க நிலைல என்னால எதுவும் செய்ய முடியல.
அவ்ளோ தான்… நான் சாக போறேன்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான், யாரோ வர சத்தம் கேட்டுச்சு. அவனும் அவசரத்துல
சரியா குத்தாம போயிட்டான்.” என்று அந்த கொடிய இரவின் நிகழ்வுகளைக் கூறினார் சந்தோஷ்.
“யாரோ வர சத்தம் கேட்டுச்சுன்னு சொன்னீங்களே, அது யாருன்னு தெரியுமா..?” என்று துரை கேட்டார். ஏற்கனவே, அந்த
விடுதி பணியாளனிடம் இதைப் பற்றி விசாரித்திருந்தார் துரை.
சந்தோஷோ, “இல்ல சார். எனக்கு அது யாருன்னு தெரியல. மேபி நான் அப்போ மயக்கத்துல இருந்துருப்பேன்…” என்று கூற,
தேஜுவோ, “நானும், அந்த ஹோட்டலோட செர்வன்ட்டும் தான் அவரோட ரூமுக்கு போனோம்.” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட அனைவரும் அவளின் பக்கம் பார்வையையைத் திருப்ப, அப்போது தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று
சிந்தித்தாள் தேஜு.
‘ஹ்ம்ம் என்மேல குத்தம் சொல்லுவா... இப்போ அவளே வாலண்டியரா மாட்டிக்கிறா…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்
பாலா.
துரையோ தாடையைத் தடவியவர், “ஹ்ம்ம்… அந்த பையன் சொன்ன பொண்ணு நீ தானா..?” என்று கேட்க, சற்று தயக்கத்துடனே
தலையாட்டினாள் தேஜு.
“ஓ… அப்போ நீ இவரைக் குத்துனவனை பார்த்தீயா..?” என்று அவர் கேட்க, “இல்ல சார். நாங்க உள்ள போனப்போ, அவன் பால்கனி
வழியா குதிச்சுட்டான் சார். அந்த செர்வன்ட் தான் அவன் பின்னாடி போனான்.” என்றாள்.
“ம்ம்ம் உனக்கு எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிஞ்சுது… ஐ மீன்… நீ தான் ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு அந்த
செர்வன்ட்டுக்கு போன் பண்ணன்னு அவன் சொன்னான்.”
“சார், இவரோட ரூம் பக்கத்து ரூம் தான் என்னோடது. நைட்ல ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு… அதான் ரிசப்ஷனுக்கு
போன் பண்ணேன். நாங்க இவரு ரூமுக்கு போனப்போ, அது பாதி திறந்து இருந்தது. ஐ திங்க், அந்த கல்ப்ரிட் ரூம்
என்ட்ரன்ஸ் வழியா வெளிய வரப்போ, எங்க சத்தம் கேட்டு வேகமா பால்கனி வழியா தப்பிச்சுருக்கணும்…” என்று தேஜு அவளின்
அனுமானத்தைக் கூறினாள்.
அதைக் கேட்டவர், “நாம இன்னொரு தடவை, அந்த ஹோட்டல் போய், நைட் யாராவது சந்தேகப்படுற மாதிரி வந்தாங்களான்னு
விசாரிக்கணும். ச்சே ஒரு சிசிடிவி கூட இல்லாம என்ன ஹோட்டல் நடத்துறாங்களோ…’ என்று அருகில் இருந்த ஏட்டிடம்
புலம்பினார்.
பின்னர், மீண்டும் சந்தோஷிடம் திரும்பியவர், “அவன் யாரைக் கொல்ல வந்தான்னு பேரு ஏதாவது சொன்னானா..?” என்று
வினவினார்.
அவரின் கேள்வியில், தேஜுவையை அரை நொடிக்கும் குறைவாக பார்த்த சந்தோஷ், “பேரு எதுவும் சொல்லல சார். ஆனா அவன்
பேசுனதுலயிருந்து, ஒரு பொண்ணு தான் அவனோட டார்கெட்னு தெரிஞ்சுது.” என்றார்.
இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை சற்று அலட்சியமாகவே பார்த்துக் கொண்டிருந்த பாலா, சந்தோஷ் கூறியதைக் கேட்டதும்
அவனருகில் நின்று கொண்டிருந்த தேஜுவைப் பார்த்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது
தான் இருந்தது.
தேஜு இதை ஏற்கனவே யூகித்திருந்தாலும், அப்போது கேட்பதற்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்த கொலையாளி அறை
மாற்றி சென்றதால், இவள் இன்று உயிருடன் இருக்கிறாள். இல்லையென்றால்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
அனைவரும் அமைதியாக நின்றிருக்க, அவர்களின் அமைதியை கலைத்தது, செவிலியின் குரல்.
“சார், அவரு ரொம்ப நேரம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.” என்று தயக்கத்துடன் அந்த செவிலி கூற,
துரையும் சந்தோஷிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் வெளியேறினர்.
தேஜு இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதைக் கண்ட பாலாவிற்கு சற்று பாவமாக இருக்க, அவளின் தோளைத்
தொட்டான். அப்போது தான் நிகழ்விற்கு வந்தாள் தேஜு. பாலா அவளிடம் ஆறுதலாக பேச நினைக்கும்போது, “இன்னும் என்ன
இங்கயே நின்னுட்டு இருக்கீங்க… உங்க ரெண்டு பேரையும் விசரிக்கணும்… ம்ம்ம் வாங்க…” என்று அவர்களை அழைத்துச்
சென்றார் துரை.
அந்த மருத்துவமனைக்கு அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றனர். பின்காலை பொழுதென்பதால், அவ்வளவாக கூட்டமில்லை. அங்கு
சென்றதும் தான், இருவருக்குமே காலையிலிருந்து சாப்பிடாதது நினைவிற்கு வந்தது.
‘ஷப்பா.. இப்போயாச்சும் இந்த தொரைக்கு சாப்பாட்டை கண்ணுல காட்டணும்னு தோணுச்சே…’ என்று மனதிற்குள் சலித்துக்
கொண்டான் பாலா.
ஆனால் துரையோ சாப்பிடும் நினைவே இல்லாதவாறு, அவர்களை அமர வைத்து விசாரணையைத் துவங்க, “சார், நாங்க காலைலயிருந்து
சாப்பிடல… ப்ளீஸ் சார். நாங்க ஃபர்ஸ்ட் எங்க வயித்தை கவனிக்குறோம். அப்பறம் நீங்க எங்களை கவனிங்க…” என்று பாலா
கூற, அவர்களின் நிலையைக் கண்டவர், “பத்து நிமிஷம் தான் டைம்…” என்று கூறிவிட்டு பக்கத்து மேஜைக்கு
சென்றார்.
பசி மயக்கத்திலேயே அந்த உணவகத்தின் பணியாளரை அழைத்து ‘மெனு’வைக் கேட்டான். அவனோ, “ரெண்டே ரெண்டு ஆறிப்போன தோசை
தான் இருக்கு…” என்று கூற, “எதே ஆறிப்போன தோசையா… அதுவும் ரெண்டு தான் இருக்கா…” என்று சோகமாக கேட்டான்
பாலா.
“ஆமா சார். மணியைப் பாருங்க. இந்த நேரத்துக்கு அது இருக்குறதே பெருசு…” என்று அங்கலாய்த்தவாறே அதை எடுத்து வந்து
ஆளுக்கு ஒன்றாக வைத்தான்.
அந்த ‘ஆறிப்போன தோசை’யைப் பார்த்த பாலா எதேச்சையாக எதிரில் அமர்ந்திருந்த துரையை பார்த்தவன், “இந்த ஆளு மட்டும்
நல்லா பொங்கலை வெட்டிட்டு, என்ன இந்த தோசைய சாப்பிட வச்சுட்டான்…” என்று முணுமுணுத்தான்.
இவ்வளவு நடந்தபோதும் அதில் எதிலும் பங்கேற்காமல் ஏதோ யோசனையிலேயே இருந்தாள் தேஜு. அவளின் நிலை கண்டவன், ஏதேதோ
குரங்கு சேட்டை செய்து, அவளிடம் திட்டு வாங்கி, அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்த பின்பே ஓய்ந்தான் பாலா.
இதற்குள் அவர்கள் சாப்பிட்டு முடித்திருக்க, விசாரணையை ஆரம்பித்தார் துரை. இம்முறை தேஜுவினிடத்தில்…
“உன்னைப் பத்தி சொல்லுமா…” என்று தேஜுவைப் பார்த்து கேட்டார் துரை. ஒரு நிமிடம் தயங்கியவள், பின் அவளைப் பற்றி
கூறத் துவங்கினாள்.
“நான் தேஜஸ்வினி. சொந்த ஊர் மதுரை. எங்க அம்மா பேரு கயல்விழி. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. நான்
எம்.எஸ்.சி முடிச்சுருக்கேன். இப்போ வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று கூறினாள்.
அவள் தந்தையைப் பற்றி எதுவும் கூறாமல் இருப்பதைக் கண்ட பாலாவிற்கு ஏனோ முன்தினம் விடுதி வரவேற்பில் அந்த
தொண்டர்கள் பேசியது நினைவிற்கு வந்தது. அதே யோசனையுடன் அவளையே கூர்மையாக பார்த்தான்.
“உங்க அப்பா என்ன பண்றாரு மா..?” – தாயில்லா பிள்ளை என்ற கரிசனமோ துரையின் குரல் மென்மையானது.
“அப்.. க்கும்… அவரு பேரு ரவிசங்கர்.” என்றாள் தயக்கத்துடனே…
‘ரவிசங்கர்’ என்ற பெயரைக் கேட்டதுமே, அவ்வளவு நேரம் அலட்சியமாக அமர்ந்திருந்த துரை சுதாரித்து, “ரவிசங்கரா…
சி.எம்முக்கு வலது கையா இருந்தாரே அந்த ரவிசங்கரா…” என்று சிறிது படபடப்புடனே விசாரித்தார்.
தேஜு ‘ஆம்’ என்று தலையசைத்தாள். பாலா இதை யூகித்திருந்தான். எனினும் அமைதியாக நடப்பதைக் கவனித்தான்.
“என்னமா சொல்ற..? அவருக்கு தான் கல்யாணமே ஆகலையே… அப்பறம் எப்படி…” என்று சொல்ல வந்தவர், பின் ஏதோ புரியவும்
அமைதியானார்.
தேஜுவோ அவரின் கேள்விக்கு, “அவருக்கு தாலி கட்டின மனைவியையும், அவரோட குழந்தையையும் வெளியுலகத்துக்கு
தெரியப்படுத்தறதை விட அவரோட அரசியல் வாழ்க்கை தான் பெருசா போயிடுச்சு…” என்றாள் விரக்தியாக.
இதுவரை அவளின் கோப முகத்தையும், அத்தி பூத்தாற் போல சிரிப்பையும் கண்டிருந்த பாலாவிற்கு, அவளின் விரக்தி ஏதோ
செய்ய, ஆறுதலுக்காக அவளின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அதை உணராதவளாக தேஜு பேசிக் கொண்டிருந்தாள். “சின்ன வயசுல அவரை அப்பான்னு வெளிய சொல்ல முடியாம ரொம்ப
கஷ்டப்பட்டுருக்கேன். இதனால எத்தனையோ விதமான கேலி கிண்டல்களுக்கு ஆளாகிருக்கேன். ஆனா எப்போ எங்க அம்மா செத்தப்போ
கூட, ‘மனைவி’ங்கிற அங்கீகாரத்தை குடுக்க யோசிச்சாரோ, அப்போலயிருந்து அவர ‘அப்பா’ன்னு கூப்பிடவே அருவருப்பா
இருக்கு.” என்று தன்னை மறந்து, தானிருக்கும் சூழ்நிலை மறந்து சொல்லிக் கொண்டிருந்தவள், அப்போது தான் சுயத்திற்கு
திரும்பினாள்.
“சாரி சார். கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்... ம்ம்ம் ஆமா சார் அவரு தான் நான் பிறக்க காரணமானவர்…” என்றாள்.
அப்போதும் ‘அப்பா’ என்ற வார்த்தையைத் தவிர்த்தாள்.
அவளின் சோகம் அங்கிருந்தவர்களை ஏதோவொரு வகையில் தாக்க, சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.
பின்னர் தேஜுவே ஆரம்பித்தாள், “நான் இருக்குறது மதுரைல தான் சார். இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் அம்மா கூட
இருந்தாங்க. இப்போ பாட்டி கூட தங்கிருக்கேன். எங்க அம்மாவோட தம்பி வீடு பெங்களூருல இருக்கு. போன வாரம் ஒரு
விஷேசத்துக்கு பாட்டி அங்க போயிருந்தாங்க. இப்போ நான் கூட அங்க தான் போயிட்டு இருந்தேன்.” என்றவள், அவர்களின்
பேருந்து பழுதடைந்த கதையையும், வேறு பேருந்து இல்லாததால் அந்த விடுதியில் தங்க நேர்ந்த கதையையும்
கூறினாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த துரை, “எதுக்கு அவன் உன்னை கொல்ல வரனும்..? ரவிசங்கருக்கு நெறைய எதிரிகள்
இருந்தாலும், அவங்களுக்கு தான் நீ அவரோட பொண்ணுன்னு தெரியாதே… தனிப்பட்ட முறைல உனக்கு யாராவது எதிரிங்க
இருக்காங்களா..?” என்று குழப்பத்துடன் வினவினார்.
“எனக்கு யாரும் எதிரிங்க இல்ல சார். என் பெர்சனல் லைஃப் ரொம்பவே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு… மேபி நான் அவரோட
பொண்ணுன்னு அவரோட எதிரிங்க யாருக்காவது தெரிஞ்சுருக்கலாம். எனக்கு அவரோட அரசியல் பத்தியெல்லாம் பெருசா தெரியாது.
ஆனா, இப்போ அவரைக் கட்சிலயிருந்து நீக்குனதால, எப்படியாவது கட்சில திரும்ப சேர்ந்துடனும்னு ரொம்ப தீவிரமா
இருக்காங்க. அவரைக் கட்சிலயிருந்து தூக்குன அந்த வருணை எதிர்க்கணும்னு முயற்சி பண்ணிட்டும் இருக்காங்க. அந்த
வருணும் இவங்களுக்கு எதிரா பல வேலைகளைப் பண்ணிட்டு இருக்குறதா அவரோட ஆளுங்க பேசுனதை நான் கேட்டுருக்கேன்…” என்று
தேஜு கூறி முடித்ததும் அங்கு பெருத்த அமைதி நிலவியது.
இது பெரிய இடத்து விஷயமானதால் துரை சற்று பொறுமை காத்தார். ஏனெனில் அவருக்கு ரவிசங்கர் பற்றியும் தெரியும்,
வருண் பற்றியும் தெரியும். இருவருமே தற்போதைய ஆளுங்கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள். இதில் ரவிசங்கருக்கும்
தலைமைக்கும் சமீபத்தில் பிணக்கு ஏற்பட, மாநிலமே அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது. அதற்கு காரணம்,
கட்சியின் இளைஞரணி செயலாளர், வருண் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
வருணும் சாதாரன ஆளில்லை. கட்சியில் சேர்ந்த ஒன்றரை வருடத்தில், இப்போதைய நிலையை அவன் எட்டியிருக்க
வேண்டுமென்றால் அவன் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அரசியலில் பழம் தின்று
கொட்டை போட்டவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பல மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய பெருமையும் அவனையே சாரும்.
அதில் ஒருவர் தான், பல ஆண்டுகளாக தலைமைக்கு நெருங்கிய, சொல்லப்போனால், வலது கையாக செயல்பட்டுக் கொண்டிருந்த
ரவிசங்கர். இப்போது அவரையும் ஓரம்கட்ட, அரசியல் வாழ்விற்காக குடும்பத்தையே மறைத்தவர், சும்மா இருப்பாரா… இதன்
காரணமாக ரவிசங்கருக்கும் வருணுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருப்பதும், அனைவருக்குமே தெரிந்த ஒன்று
தான்.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த துரையைக் கலைத்தது பாலாவின் குரல். “வெல் மிஸ்டர். துரை இந்த கேஸை இவ்வளவு
தூரம் கொண்டு வந்து, எனக்கு தேவையான டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்று கூறியவாறு
ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியவாறு எழுந்து நிற்க, அவனை குழப்பத்துடன் பார்த்தனர் மற்றவர்கள்.
“ஓ சாரி... நான் என்னை இண்ட்ரோட்யூஸ் பண்ணலல. ஐ’ம் பாலகிருஷ்ணன் ஃப்ரம் சிபிஐ, இன் அண்டர்கவர் ஆப்பரேஷன்.” என்று
அவன் கூறியதும் அங்கிருந்தவர்களில் யார் அதிகம் அதிர்ந்தனர் என்று தெரியவில்லை.
பயணம் தொடரும்...
பயணம் 8
“ஐ’ம் பாலகிருஷ்ணன் ஃப்ரம் சிபிஐ, இன் அண்டர்கவர் ஆப்பரேஷன்.” என்று
திமிரான உடல்மொழியுடன், சற்றே அலட்சியத்துடன் கூறியவனைக் கண்டவர்கள் அனைவரும் வாய் பிளந்து பார்த்துக்
கொண்டிருந்தனர். நிமிடங்கள் கடந்தும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராது இருந்தவர்களைக் கண்ட பாலா, சொடக்கிட்டு
அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அப்போது தான் திறந்த வாய் மூடி நிகழ்விற்கு வந்தனர்.
“என்ன கார்ட் எடுத்து காட்டினா தான் நம்புவீங்களா…” என்று தோரணையாக கேட்க, துரையுடன் இருந்த மற்ற இரு
காவலர்களும் பதறியபடி எழுந்து, “ஐயோ சார், அப்படியெல்லாம் இல்ல…” என்று ‘கோரசாக’ கூறினர். அவர்களுடன் துரையும்
வேண்டாவெறுப்பாக எழுந்தார்.
அவர் எழுவதைக் கண்டவன், உதட்டத்தைக் கேலியாக வளைத்தவாறே எதிரில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு
அமர்ந்தான். அதில் துரையின் முகம் இன்னும் கூம்பியது.
இவையெல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, தேஜுவிற்கோ பாலா சி.பி.ஐ ஆஃபிசர் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை.
அவனையே தன் முட்டைக் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று திரும்பியவன் கண்ணாடியை லேசாகக் கழட்டி,
மற்றவர்கள் அறியாதவாறு அவளிற்கு ஒரு கண் சிமிட்டலை பரிசாகக் கொடுத்து, மீண்டும் ‘ஆஃபிசர்’ தோரணையில் அமர்ந்து
கொண்டான்.
‘இவன் இப்போ என்ன பண்ணான்…’ என்று குழம்பியவள் தேஜுவே.
மற்ற மூவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, “க்கும்… என்ன தீவிரமான டிஸ்கஷன் போல இருக்கு..?” என்றான்
பாலா.
“அதெல்லாம் ஒன்னுமில்ல சார். இந்த கேசு… இல்ல நீங்க எதுக்கு சார் இந்த கேசுல…” என்று அந்த ஏட்டு தயக்கத்துடன்
கேட்டார். இதற்கு முன் ‘தம்பி’ என்றவர் இப்போது வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட்டுக் கூப்பிட, மெல்ல விரிந்தன
பாலாவின் இதழ்கள்.
“இந்த கேசை நான் எடுக்க என்ன காரணம்..? இந்த தேஜுவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்…? – இதைத் தான கேக்க
வந்தீங்க…” என்று அந்த ஏட்டைப் பார்த்து வினவினான்.
‘நான் எப்போ டா உனக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தம்னு சொன்னேன்…’ என்ற கேள்வி அவருக்கு மட்டுமில்லை,
அங்கிருந்த அனைவரின் மனதிலும் தோன்றியது. இவ்வளவு நேரம் குழப்பத்துடன் இருந்த தேஜுவும் அவனின் கூற்றில் அவனை
முறைத்தாள். அவற்றையெல்லாம் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.
“இந்த தேஜு என்கிற தேஜஸ்வினியோட ‘அப்பா’... அதான் நம்ம ரவிசங்கருக்கும், முதல்வர் உள்ளிட்ட கட்சில பெரிய பதவி
வகிக்கிறவங்க பலருக்கும் பிரச்சனை இருக்குறது எல்லாருக்குமே தெரியும். இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி,
ரவிசங்கர் கூட இருக்குறவங்க, கட்சில இருக்க பலருக்கு கொலை மிரட்டல் விட்டதா எங்களுக்கு புகார் வந்துச்சு. இது
‘சென்சிட்டிவ்’வான விஷயங்கிறதால, எங்களை மாதிரி பல ‘சீக்ரெட்’ ஃபோர்ஸ் உருவாக்கி, ரவிசங்கருக்கு
நெருக்கமானவங்களைக் கண்காணிக்க உத்தரவிட்டாங்க… அந்த நெருக்கமானவங்க லிஸ்ட்ல இந்த ‘தேஜு’வும் ஒருத்தி.” என்று
அவளைப் பார்த்தான்.
அவளோ புருவம் சுருக்கி, “அப்போ அந்த மால்ல…” என்று இழுக்க, அதைப் புரிந்து கொண்டவனோ, “எஸ். அப்போலயிருந்து உன்ன
நாங்க.. நானும் என் பிரெண்ட் விக்ரமும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்.” என்றான்.
தேஜு ஒருபுறம் மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம், துரையின் கண்ணசைவில் அந்த ஏட்டு மறுபடியும்
திக்கித் திணறி, “சார், அப்போ இந்த கேசு…” என்று இழுத்தார்.
பாலா, அந்த இருக்கையிலிருந்து எழுந்தவாறே, “நீங்க ஒன்னும் கஷ்டப்படாதீங்க… நாங்க பார்த்துக்குறோம். நீங்க
வழக்கம் போல நெய்ல ஊறிய பொங்கலை சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோங்க…” என்று அவர்களுக்கு குட்டு வைக்கவும்
மறக்கவில்லை.
பாலா தன் நண்பனிற்கு அழைத்து, “ஹேய் விக்ரம். இங்க நம்ம பிளான் படி அந்த பொண்ணு, ரவிசங்கர் அவளோட அப்பான்னு அவ
வாயாலேயே ஒத்துகிட்டா. ஆனா அவளைக் கொலை பண்ண முயற்சி நடந்துருக்கு. இனி அவளைத் தனியா வெளிய விடுறது ரிஸ்க். சோ
அவளை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வரேன். நீ அதுக்கான ஏற்பாடெல்லாம் பார்த்துக்கோ.” என்று வேகவேகமாக திட்டம்
தீட்டினான்.
அவன் கூறியதைக் கேட்ட தேஜுவிற்கு, ‘என்னது… இவன் இடத்துக்கு கூட்டிட்டு போகப் போறானா..! இவனை நம்பலாமா… இவன்
உண்மைலேயே போலீஸா…’ என்று ஆயிரத்தெட்டு எண்ணங்கள் அவளின் மனதை அலைக்கழித்தன.
அவன் பேசுவதை ‘பே’ என்று பார்த்துக் கொண்டிருந்த காவலர்களைக் கண்ட பாலா, “இப்போ அவசரமா சென்னை போகணும்.
எங்களுக்கு ஒரு கேப் வேணும்…” என்றவன் மீண்டும் அலைபேசியில் கவனமானான்.
மற்ற இருவரும் அவனிட்ட பணியை செய்ய விரைந்து வெளியே செல்ல, துரையோ அவனை முறைத்துக் கொண்டே வெளியே
சென்றார்.
அடுத்த ஐந்து நிமிடங்கள் அவனிற்கு அலைபேசியிலேயே கழிய, தேஜுவோ இன்னும் அவனை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில்
இருந்தாள். அவன் அலைபேசியை துண்டித்தப் பின்னரும் அவளிடம் எந்தவித எதிர்வினையும் இல்லாததைக் கண்டவன், “க்கும்…
கிளம்பலாமா..?” என்றான்.
“நா.. நான் எதுக்கு உங்க கூட வரணும்… என்னால வர முடியாது…” என்று முயன்று தைரியத்தை வருவித்த குரலில் அவள் கூற,
அவளையே அழுத்தமாகப் பார்த்தவன், “ஒரு சி.பி.ஐ ஆஃபிசர் கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவீங்களா..? இப்போ என்கூட
வரலைனா, உங்களையும் அக்யூஸ்ட் லிஸ்ட்ல சேர்த்துடுவேன்…” என்று அடிக்குரலில் மிரட்டினான்.
அந்த குரல் அவளை ஏதோ செய்ய, அவன் பின் தொடர்ந்தாள், மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டே…
வெளியே, வண்டியைப் பிடித்தது மட்டுமல்லாது, அதற்கான தொகையையும் அந்த இரு காவலர்களும் கொடுக்க, அதைக் கண்ட துரை,
“யோவ் நீங்க ஏன்யா காசு குடுக்குறீங்க..?” என்று வினவ, அவர்களோ, “சும்மா இருங்க சார். நம்ம வேற அவரை
விசாரணைங்கிற பேர்ல போட்டு படுத்திருக்கோம். அவரு கோபத்துல மேலிடத்துல ஏதாவது புகார் செஞ்சுட்டா… அதான்
இப்படியாவது ‘ஐஸ்’ வைக்குறோம். ஹ்ம்ம் உங்க பங்கு நீங்க குடுத்துருக்கணும், ஆனா எங்க தலையெழுத்து அதைக் கேக்க
முடியாம நாங்களே எங்க கைக்காச போட்டு செலவு பண்றோம்.” என்று கடைசி வரியை மட்டும் முணுமுணுத்தனர்.
இவர்களின் செயல்களை பாலா கண்டாலும் எதுவும் கூறவில்லை. அவர்களிடம் ஒரு தலையசைப்பைக் கொடுத்து விட்டு, வண்டியில்
ஏறினான். அந்த வண்டி அவனையும் அவளையும் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கிப் பறந்தது.
ஜன்னலோரம் முகத்தை வைத்திருந்த தேஜு, எதிர்காற்றில் முடி கலைய, ஒவ்வொரு முறையும் அதை காதுக்கு பின் அடக்கியவாறே சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அப்போது அவளின் நாசி குப்பென்று ‘சாம்பார்’ வாசனையை நுகர, திரும்பிப் பார்த்தாள்.
அங்கு பாலாவோ, அவனின் காரியத்தில் (சாப்பிடும் வேலையில்) கண்ணாக இருந்தான். இவன் ‘சி.பி.ஐ’ என்பதை அறிந்த அந்த உணவகத்தின் பணியாளன், அவர்கள் கிளம்பும்போது அவசரமாக ஒரு பொட்டலத்தை அவனின் கையில் திணித்து, “சார் சுடச்சுட ‘நெய் ரோஸ்ட்டு’.” என்றான் பல்லிளித்தவாறே. ஒரு சிரிப்புடன் அதை வாங்கியவன், பணம் எடுக்க முயல, “ஐயோ சாரு… காசெல்லாம் வேணாம்…” என்றான் மீண்டும் அவனின் பற்களை காட்டியவாறு. அப்படி ‘உழைத்து’ வாங்கி வந்த ‘நெய் ரோஸ்ட்’டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலா.
அவனைக் கண்டவள், ‘இவனைப் பார்த்தா போலீஸ் ஃபீலே வரலையே. காணாததைக் கண்ட மாதிரி இப்படி வெட்டிட்டு இருக்கான்.’ என்று மனதிற்குள் நினைக்க, அதை அவன் மனம் உணர்ந்ததோ, “ஏன் போலீசெல்லாம் சாப்பிடக் கூடாதா..?” என்று வினவினான், கண்களை சாப்பாட்டிலிருந்து விலக்காமலேயே…
‘இவன் என்ன மனசுக்குள்ள நினைக்குறதெல்லாம் கண்டுபிடிக்குறான்…’ என்று அதிர்ச்சியில் இருந்தவளை கலைத்தது அவனின் அலைபேசி ஒலி.
“ஓய் என் மொபைல் அடிக்குது… எடுத்து யாருன்னு பாரு…” என்றான் பாலா.
“ஹான்…” என்று கண்களை விரித்தவளைக் கண்டவன், “இப்போ எதுக்கு கண்ணை உருட்டுற..? நான் தான் பிஸியா இருக்கேன்ல… ஒரு பெரிய ஆஃபிசர் சொல்றேன். கேக்க மாட்டீயா..?” என்றான் மீண்டும் அதே குரலில்.
அவனைத் திட்டிகொண்டே, சட்டைப் பையிலிருந்த அவனின் அலைபேசியை எடுத்தவளின் கைப்பட்டு, அந்த அழைப்பு ஏற்கப்பட்டது மட்டுமல்லாமல் ஸ்பீக்கரையும் உயிர்பித்திருந்தாள்.
மறுமுனையிலோ பாலாவின் ஆருயிர் நண்பன், ‘ரம்’ என்கிற விக்ரம்…
“டேய் மச்சி. அப்போ போன் பண்ணி, ஏதோ பிளான்னு… பொண்ணு… இடத்தை ரெடி பண்ணுன்னு சொன்னியே… என்ன மச்சி போன இடத்துல பொண்ணு எதுவும் உஷார் பண்ணிட்டியா… என்ன ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? அதுக்கு என் ஹெல்ப் வேணுமா… இங்க பாரு மச்சி இப்போலாம் காலம் ரொம்ப கெட்டு கிடக்கு… ஓடிப்போனவனை விட்டுட்டு உதவி செஞ்சவனை தான் வெட்டுறாங்களாம்… அதனால என்கிட்ட எந்த ஹெல்ப்பும் எதிர்பார்க்காத சொல்லிட்டேன்… என்ன மச்சி ஒன்னும் பேச மாட்டிங்குற… ஹலோ…” என்று விக்ரம் கத்திக் கொண்டிருக்கையிலேயே அழைப்பு துண்டிக்கப் பட்டது.
இங்கு பாலாவோ பாவமாக தேஜுவை பார்த்துக் கொண்டிருக்க, “எப்படி எப்படி.. சார் ‘சி.பி.ஐ ஆஃபிசர்’… இத்தனை நாளா என்ன கண்காணிச்சுட்டு இருக்காரு… இதுல அண்டர்கவர் ஆப்பரேஷன் வேற… சார் ரொம்ப பிஸியா இருந்தா, பாக்கெட்லயிருந்து மொபைல் எடுத்துத் தரனுமா…” என்று பற்களைக் கடித்தவாறே அருகிலிருந்த பை கொண்டு அவனை அடித்தாள்.
சில அடிகளைத் தாங்கியவன், அதற்கு மேல் முடியாமல் போக, “அட நிறுத்து டி. உன்னை அந்த பொங்கப் பானைகிட்டயிருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்தா என்னையவே அடிக்குறியா…” என்று ஆதங்கமாக வினவ, அவனின் கூற்றில் அர்த்தமிருந்தாலும், இத்தனை நேரம் அவன் செய்த அலப்பறைகளைத் தாங்க இயலாதவளாக மீண்டும் அவனை மொத்தினாள்.
ஒருவழியாக இருவரும் சமாதானமாக, “இப்படி பொய் சொல்லி ஏமாத்திருக்கியே… அந்த போலீஸுக்கு உண்மை தெரிஞ்சா, என்ன பண்ணுவ..?” என்று கேட்டாள்.
“எதே… என்ன பண்ணுவியா… என்ன பண்ணுவோம்னு கேளு… நீயும் தான் இந்த திட்டத்துல ஒரு பார்ட்… மறந்துறாத…” என்றான்.
“அடப்பாவி நீ மாட்டுறது மட்டுமில்லாம, என்னையும் மாட்டிவிட்டுருக்க…” என்று தேஜு புலம்ப, “ப்ச்… இப்போ எதுக்கு புலம்பிட்டே இருக்க… இப்போ அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும்…” என்றா பாலா.
தேஜுவும் அதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது பாலா அவளிடம், “ஆமா அந்த பேக்ல என்ன வச்சுருக்கன்னு இப்போயாச்சும் என்கிட்ட சொல்லலாம்ல…” என்று வினவியதும், ஜில்லென்ற காற்று வீசினாலும் தேஜுவின் முகமோ வியர்த்தது.
பயணம் தொடரும்...
பயணம் 9
அந்த பையைப் பற்றி பாலா கேட்டதும் தேஜுவிற்கு வியர்க்க ஆரம்பித்தது. ஒருவித தயக்கத்துடனே அவன் முகத்தையும்,
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரையும் பார்த்தாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவன், அந்த சாலையோரம் இருந்த
தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
பின் அந்த ஓட்டுநரிடம், “அண்ணா, இங்கயிருந்து சென்னை போக நேரம் ஆகும்ல. நீங்க வேணா இந்த டீக்கடைல டீ
குடிச்சிட்டு வாங்களேன்…” என்றான்.
அவருக்கும் அது சரியென்றே தோன்ற, “தம்பி நீங்க…” என்று தயக்கமாக இழுத்தார்.
“இல்லண்ணா நாங்க இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க போயிட்டு வாங்க.” என்றான்.
அவர் செல்லும்வரை காத்திருந்தவன், தேஜுவின் புறம் திரும்பி , “ஹ்ம்ம் இப்போ சொல்லு… அந்த பையில உங்க அப்…” என்று
கூற வந்தவன், அவளின் முறைப்பில், “அந்த ஆளு சம்மந்தப்பட்ட ஏதோ தான் இருக்கணும்…” என்று திருத்திக்
கொண்டான்.
அவனின் கூற்றில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருங்கே தோன்றியது தேஜுவிற்கு. அதே மனநிலையில், “உனக்கு எப்படி
தெரியும்..?” என்று வினவினாள்.
“இதைக் கண்டுபிடிக்க ஜேம்ஸ் பாண்டா வருவாங்க…” என்று கேலியாக கேட்டவன், “ஆனா எனக்கு இது மட்டும் புரியல.. அந்த
ஆளை ‘அப்பா’ன்னு சொல்லவே தயங்குறவ, எதுக்கு அவரு சம்மந்தப்பட்டதை தூக்கிட்டு அலையனும்..?” என்று தன் கூரிய
பார்வையை அவளின் மேல் படரவிட்டவனாக வினவினான் பாலா.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், “எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா தான். ஹ்ம்ம்.. என்ன சொல்றது… காதல்னு
வந்துட்டா எங்க அம்மா கோழை தான் போல… எங்க அம்மா மட்டும் அப்போவே தைரியமா அந்த ஆளை எதிர்த்து நின்னுருந்தா
இந்நேரம் எங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்துருக்காதோ என்னவோ…” என்று விரக்தியாக கூறினாள்.
அவளின் கவலை பாலாவையும் தாக்கியதோ, அவளின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டான்.
“எங்க அம்மா சாகுற நிலைமைல இருந்தப்போ, அவரு வந்து அழுது சீன் போட்டுருக்காரு… அதை உண்மைன்னு நம்புன எங்க
அம்மாவும், என்னை அவரு கூட போய் தங்க சொன்னாங்க. நானும் ரொம்ப சண்டை போட்டு முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா
அதுக்கு அப்பறம் ஒரு நாள் கூப்பிட்டு, அவரு என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடந்துக்கணும்னு சொன்னாங்க. அதுக்கும்
நான் முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன். ஆனா அவங்க கடைசி நிமிஷத்துல கேட்டத என்னால ரொம்ப மறுக்க முடியல. அதுவும்
அவங்க மேல சத்தியம் செஞ்சு கேட்டப்போ, எனக்கு ஒத்துக்குறது தவிர வேற ஒன்னும் தோணல.” என்றாள், அன்றைய நினைவில்
கண்ணோரம் எட்டிப் பார்த்த கண்ணீருடன்.
“அம்மா இறந்ததுக்கு அப்பறம் அந்த ஆளு என்னை எட்டிக்கூட பார்க்கல… ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் என் வீட்டுக்கு
வந்து இந்த பையைக் குடுத்துட்டு பாட்டி கூட ஊருலயே இருக்க சொன்னாரு…” என்றாள். இப்போது அவள் முகத்தில் கோபம்
மட்டுமே…
“அப்போ உண்மைலேயே அந்த பையில அவரோட தில்லாலங்கடி வேலைக்கான ஆதாரம் தான் ஒளிஞ்சுட்டு இருக்கோ…” என்றவன், “அப்போ
இதையெல்லாம் அந்த ஆப்போசிட் கேங் கிட்ட குடுத்தா நிறைய பணம் கிடைக்கும் போலயிருக்கே…” என்று சத்தமாகவே திட்டம்
தீட்ட, அவனின் தலையில் அடித்தவள், “புத்தி எப்படி போகுது பாரு… என்ன இருந்தாலும் எங்க அம்மாக்கு செஞ்சு குடுத்த
சத்தியத்தைக் கப்பாத்தியே ஆகணும்…” என்றாள்.
பாலா நினைத்தது போலவே, அவன் பேசியதில் அவளின் இயல்பு மீண்டிருக்க, அதைக் கண்டு மென்முறுவல் உதிர்த்தான்.
“எனக்கு தெரிஞ்சு அந்த ஆப்போசிட் கேங்… அதான் அந்த வருண் ஆளுங்க தான் உன்ன அட்டாக் பண்ணிட்டு அந்த பையைத் திருட
பிளான் பண்ணிருக்கணும். ஆனா நீ அந்த ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ணிருக்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சுருக்குன்னா அவங்க
உன்னை ஃபாலோ பண்ணிட்டே இருந்துருக்கணும். ஹ்ம்ம்... நல்லா யோசிச்சு பாரு, அந்த பஸ்ல யாராவது உன்னை வாட்ச்
பண்ணிட்டு இருந்தாங்களா…” என்று அவன் கூறவும், தேஜுவும் யோசித்தாள்.
“அப்படி எதுவும் எனக்கு தோணல… பஸ் பிரேக்-டவுன் ஆனவொடனே, மத்த எல்லாரும் வந்த பஸ்ல கிளம்பி போயிட்டாங்க… மீதி
இருந்தது நீ, நான்…” என்று கூறிக் கொண்டே வந்தவள், ஏதோ தோன்ற அவனைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக்
கொண்டிருந்தான்.
“எஸ்… நீ, நான், அப்பறம் அந்த பஸ்ஸோட ட்ரைவர் அண்ட் கண்டக்டர்…” என்று அவளின் வாக்கியத்தை அவன்
முடித்தான்.
“ஹே பாலா… அந்த ட்ரைவரையும் கண்டக்டரையும் அதுக்கு அப்பறம் நம்ம பார்க்கவே இல்ல…” என்றாள் தேஜு.
அவனும் அதையே தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். “ம்ம்ம்… அவங்களைத் தவிர இன்னும் சிலரும் இதுல
சம்மந்தப்பட்டுருக்கலாம் தேஜு… அந்த ஹோட்டல்ல வித்தியாசமா ஏதாவது நடந்துச்சான்னு யோசி…” என்றான்.
சிந்தித்தவளின் நினைவில் முதலில் வந்த காட்சியில் சற்று சத்தமாகவே நகைக்க, அவளின் சிரிப்பொலியில் குழப்பமாக அவளை
நோக்கினான் பாலா.
“ஓய் இப்போ எதுக்கு இப்படி சிரிச்சுட்டு இருக்க..?” என்றான்.
“ஹாஹா நீ உன் ‘பச்சகிளி’ கிட்ட பல்ப் வாங்குனியே அதை நெனச்சு சிரிச்சேன்…” என்றாள் இன்னும் சிரிப்புடன்.
‘ச்சே என்ன கொடுமை டா பாலா…’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன், “க்கும்… போதும் போதும் பல்லு சுழுக்கிக்க
போகுது… நீ அந்த ரெண்டு பேர பார்த்து பயந்து ஓடுன பாரு ஒரு ஓட்டம்… உசைன் போல்ட் கூட தோத்து போயிடுவான் போல…”
என்று அவளிற்கு பதிலடி தர முயன்றான்.
அவளிற்கும் அந்த நினைவு எழ, “அப்படி ஒடுனதுல யாரையோ இடிச்சுட்டேன்னு நினைக்குறேன்…” என்று அவளும் சிரித்துக்
கொண்டே கூறினாள்.
“அப்போவே ஒரு கொலை முயற்சி நடந்துருக்கு!” என்று கூறிவனின் கூற்று முதலில் விளங்காவிட்டாலும், புரிந்த பின் அவனை
மொத்தினாள்.
பின் அவள் இடித்த அந்த மனிதனைப் பற்றிய நினைவும் அவளுக்கு வர, அடுத்த நொடி அதிர்ச்சியை பிரதிபலித்தது அவளின்
முகம்.
அடித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று அடிப்பதை நிறுத்தவும், அவளின் முகம் கண்டே அவளின் நிலை உணர்ந்தவன், “ஹே
தேஜு, ஆர் யூ ஓகே..?” என்றான்.
“பாலா, நான் இடிச்சவன் ஒரு க்ரே கலர் ஹூடெட் ஜாக்கெட் போட்டுருந்தான்…. அந்த ரூம்லயிருந்து தப்பிச்சவனும் அதே
கலர் ஜாக்கெட் தான் போட்டுருந்தான். சோ… ரெண்டு பேரும் ஒருத்தர் தான்…” என்றாள்.
“ஓ…” என்றவன், தலையை அழுத்தி தேய்த்து, “ நம்ம அந்த ஹோட்டல் ரிசெப்ஷன் பக்கத்துல தான் வெயிட் பண்ணோம்… அப்போ
அந்த மாதிரி ஜாக்கெட் போட்டு யாரும் உள்ள போறதை நான் பார்க்கல… சோ… அவன் ஏற்கனவே அந்த ஹோட்டல்ல உனக்காக வெயிட்
பண்ணிருக்கணும்…” என்றான் பாலா.
“எஸ் பாலா. அந்த லாஸ்ட் பஸ்ல சீட் இருந்தும் நம்மள ஏத்தாம இருந்தப்போவே ஐ ஃபெல்ட் சம்திங் ஃபிஷி… கண்டிப்பா அந்த
ட்ரைவருக்கும் கண்டக்டருக்கும் இதுல சம்மந்தம் இருக்கு…”
“ஹ்ம்ம்… ரொம்ப தெளிவா ஸ்கெட்ச் போட்டுருக்காங்க… நம்ம இப்படி வெளிய சுத்துறது அவ்ளோ சேஃப் இல்ல…” என்றான்
பாலா.
“இப்போதைக்கு அந்த ஆளுகிட்ட தான் போகணும்…” என்றாள் தேஜு வெறுப்புடன்.
“அவரு உன்னைக் காப்பாத்துவாருன்னு நினைக்குறியா..?” என்று சற்று நக்கலாகவே கேட்டான்.
“கண்டிப்பா என்னைக் காப்பாத்த மாட்டாரு… ஆனா இதுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா மேபி காப்பாத்த யோசிக்கலாம்…” என்றாள்
அவளின் கையிலிருந்த பையை ஆட்டியபடி. “அப்படி இல்லனாலும், இதை அவருக்கிட்ட குடுத்துட்டு கிளம்பிட வேண்டியது தான்…
இதுக்காக தான என்னை டார்கெட் பண்றாங்க…” என்றாள்.
பாலா அவளிற்கு தலையாட்டினாலும், அவன் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது.
அப்போது தேஜுவின் அலைபேசிக்கு அவளின் பாட்டி அழைத்திருந்தார். அவள் அழைப்பை ஏற்கப்போகும் சமயம், அவளிடம், “நீ
சென்னைக்கு போறன்னு யாருக்கிட்டயும் சொல்ல வேண்டாம். இன்னும் அந்த ஹோட்டல்ல தான் இருக்கன்னும், இன்னிக்கு நைட்
தான் கிளம்ப முடியும்னு சொல்லு…” என்றாள்.
அவனை பொருள் விளங்கா பார்வை பார்த்தாலும் அவன் கூறியது போலவே கூறினாள். ஒருவழியாக அவளின் பாட்டியை சமாளித்து
அழைப்பைத் துண்டித்தவள் பாலாவிடம், “எதுக்கு அப்படி சொல்ல சொன்ன..?” என்று வினவினாள்.
“யாருக்கு எப்படி இன்ஃபார்மேஷன் போகுதுன்னு நமக்கு தெரியாது. நீ நேத்து பெங்களூரு போறன்னு யாரு மூலமா அந்த
கேங்குக்கு தெரியும்..? மேபி உன் ஃபேமிலிக்கே தெரியாம அவங்க போன் கால்ஸ் ட்ரேஸ் பண்ணலாம்…” என்றான்
யோசனையாக.
தேஜுவிற்கும் அவன் கூறியது சரியென்றே தோன்றியதால், வேறெதுவும் கேட்கவில்லை. வண்டியின் ஓட்டுநரும் அவரின் தேநீரை
குடித்துவிட்டு வந்துவிட்டார்.
“சாரி தம்பி… கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” என்றவாறே அவர் வண்டியை உயிர்ப்பிக்க, “பரவாலண்ணா…” என்றான் பாலா.
சென்னையை நோக்கிய அவர்களின் பயணம் தொடர்ந்தது. ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேஜு, ‘இவன் ஏன்
என்னோட வரணும்..? எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்றான்..?’ என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளருகே சற்று இடைவெளியில், இன்னொரு ஜன்னலின் வழியே தலையை வெளியே விட்டு அமர்ந்திருந்தவனிற்கும் இதே கேள்வி
மண்டையை குடைந்தது. ஆனால் விடை தான் கிடைத்த பாடில்லை.
ஒருவேளை, இருவரும் இணைய, அவர்களின் (வாழ்க்கைப்) பாதையை மாற்றிய விதியின் ‘இணைப்புத் திட்டம்’ இதுவென்று அறிய
முற்பட்டால், இவர்களின் நிலை என்னவோ…
பயணம் தொடரும்...
பயணம் 10
மதியமும் அல்லாத மாலையும் அல்லாத அந்த பொழுதில் இவர்களின் வண்டி அந்த
குறுகலான சந்தில், வழியை அடைத்துக் கொண்டு குலுக்களுடன் நின்றது. அந்த குலுக்களில் முழித்த தேஜு அந்த பகுதியையே
சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேஜுவின் செய்கைகளைக் கண்ட பாலாவின் வாய் சும்மா இருக்காமல், “என்ன மேடம், சொகுசா தூங்கிட்டு வந்தீங்க போல…”
என்று கேலி பேச, வழக்கம் போல அவனை முறைத்தவள், “என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்க..?” என்று மெல்லிய
குரலில் வினவினாள்.
“ஹான் உன்னைக் கடத்திட்டு வந்துருக்கேன்…” என்று வில்லன் குரலில் பேச, அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவள்,
“அவ்ளோ வொர்த் இல்ல நீ…” என்றவாறே வண்டியை விட்டு இறங்கினாள்.
‘தூங்கி எழுந்து ஃபுல் ஃபார்ம்ல இருப்பா போலயே…’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனும் வண்டியிலிருந்து
வெளியேறினான்.
“அண்ணா, எவ்ளோ ஆச்சு..?” என்று பாலா கேட்க, “தம்பி, அந்த போலீஸ் ரெண்டு பேரும் காசு குடுத்துட்டாங்க…”
என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட தேஜு பாலாவை மீண்டும் ஒரு பார்வை பார்க்க, ‘இப்போ நம்ம ஏதாவது ஹீரோயிசம் பண்ணனுமே…’ என்று
யோசித்த பாலா, கைலயிலிருந்த பையை பார்த்தான். அந்த பைக்குள் நம் துரைசிங்கத்தை வெறுப்பேற்றிய அதே கிருஷ்ணர் படம்
இருப்பதைக் கண்டவன், “அண்ணா, என்ன இருந்தாலும் ஓசில பயணம் பண்ண நான் விரும்பல… இந்தாங்க இதை என் பரிசா
வச்சுக்கோங்க…” என்றான்.
“இல்ல தம்பி… வேணாம்.” என்று அவர் மறுக்க, “அட இது கிருஷ்ணர் படம் தான் அண்ணா. உங்க வீட்டு சுவர்ல மாட்டி
வச்சுக்கோங்க…” என்று பாலா வற்புறுத்தினான். இடையிடையே தேஜுவையும் ஓரக் கண்ணில் பார்க்க தவறவில்லை.
“ஐயோ தம்பி. நான் இருக்குறதே ஒரு ஓட்டு வீடு. அதுல எப்படி இதை மாட்டி வைக்கிறது…” என்று அலுத்துக் கொண்டார் அந்த
ஓட்டுநர்.
தேஜுவோ அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும், இவனின் அலும்புகளையெல்லாம் கேட்டு சிரிப்பைக்
கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
‘ச்சே என்ன ஒரு இன்சல்ட்…அதுவும் இவ முன்னாடி வேற…’ என்று மனதிற்குள் நைந்து கொண்டவன், “அண்ணா இந்த தம்பி மேல
உங்களுக்கு பாசமே இல்லயா…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“அட என்ன தம்பி உன்கூட ஒரே ரோதனையா இருக்கு… இப்போ இதை வச்சு நான் என்ன செய்ய…?” என்று அந்த ஓட்டுநர் வினவ, ஓரக்
கண்ணில் தேஜுவின் கவனம் இங்கிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு, ‘சும்மா ஒரு பிட்டு போட்டு தான் பார்ப்போமே…’ என்று
நினைத்தவனாய், “ஹ்ம்ம்… இன்னும் கொஞ்ச நாள்ல எங்க கல்யாணம் வரும். அப்போ இதையே எனக்கு கிஃப்ட்டா குடுத்துருங்க…”
என்று கூறினான்.
அவனின் திருட்டு முழியிலேயே, ஏதோ வில்லங்கமாக கூறப் போகிறான் என்பதை யூகித்த தேஜு, அவன் அவ்வாறு கூறியதும் அவன்
முதுகில் அடித்தவள், “நீங்க கிளம்புங்கண்ணா..” என்று அந்த ஓட்டுநரிடம் கூறினாள்.
அந்த ஓட்டுநரும் சிரித்துக் கொண்டே, “பாசக்கார பயபுள்ளையா இருக்க பா…” என்று அவரின் வாயால் நற்சான்றிதழ்
வழங்கியவாறு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன் எதிரில் கைகளை கட்டிக்கொண்டு கோபமாக நின்றிருந்தாள் தேஜு.
’ஐயையோ இப்போ இவள வேற சமாளிக்கணுமே…’ என்று யோசித்தவன், சட்டென்று அவளிற்கு பின்னால் பார்த்து, “டேய் விக்ரம்…”
என்றான்.
தேஜுவும் யாரென்று திரும்பிப் பார்க்கும் வேளையில், அவளிற்கு போக்கு காட்டி தப்பித்து ஓடினான் பாலா.
“டேய் நில்லு டா லூசு…” என்றவாறே அவன் பின்னால் ஓடினாள் தேஜு.
இரண்டு நிமிட ஓட்டத்திற்குப் பின் ஒரு வீட்டின் முன் நின்று மூச்சு வாங்கினான் பாலா. அவன் பின்னால் வந்த தேஜு
அவன் நிற்பதைக் கண்டு, அவளும் தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
பின் அவனிடம், “ஏன்டா ஓடுன..?” என்று மூச்சு வாங்க கேட்டாள். “நீ தொரத்துன, நான் ஓடுனேன்.” என்றான் பாலா.
இதோ அவர்களின் அடுத்த சண்டை ’இனிதாக’ ஆரம்பமானது.
அப்போது அவர்கள் நின்றிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட, உள்ளிருந்து வந்தவன், “அடடடடடா… யாருய்யா அது தூங்குற
நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…” என்று கண்களைத் தேய்த்தவாறே எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தான்.
“டேய் ரம்மு..” என்று நீண்ட நாளாக பார்க்காத நண்பனைப் பார்ப்பது போல கட்டிக்கொண்டான் பாலா.
‘நைட்டு தூங்க விடல. காலைலையும் தூங்க விடல… சரி இப்பயாச்சும் இவன் தொல்லை இல்லாம நிம்மதியா தூங்கலாம்னு
பார்த்தா, அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி நேர்லயே வந்துருக்கானே… கடவுளே உன்கிட்ட என்ன கேட்டேன். உயிர் நண்பன
குடுன்னு கேட்டா, இப்படி உயிர் எடுக்குற நண்பன குடுத்து வச்சுருக்கியே…’ என்று மைண்ட் வாய்ஸில் புலம்பினான்
பாலாவின் ‘உயிர் தோழன்’ விக்ரம்.
“டேய் என்ன டா பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருக்க..? ஆஃபிஸ் போகல..?” என்று பொறுப்பின் பிரதிநிதியாய் பாலா
கேட்க, “எப்படி டா ஆஃபிஸ் போக… உன்ன போய் அந்த பெயின்டிங்க குடுத்துட்டு வான்னு சொன்னா, இல்லாத கூத்தையெல்லாம்
பண்ணி வச்சுருக்க… இதுக்கு நானே போயிருக்கலாம்… ஒரே ஒரு நாள் என் ஆளு கூட ஸ்பெண்ட் பண்ணலாம்னு பிளான்
பண்ணதுக்கு, நல்லா வச்சு செஞ்ச டா… ஆமா அந்த பெயின்ட்டிங் எங்க..?” என்று விக்ரம் கேட்டதும், அசட்டு சிரிப்பை
உதிர்த்த பாலா, விக்ரமின் சட்டை பொத்தானை இழுத்தவாறே, “அது தான் டெலிவரி குடுக்கலல… காசு தான் கிடைக்கல
புண்ணியமாவது கிடைக்கட்டும்னு தானமா குடுத்துட்டேன்…” என்றான்.
“ஆமா இவரு கர்ணன் தானமா குடுத்தாராம்… ஏற்கனவே அந்த ரவுடி ரங்கம்மா போன் மேல போன் போட்டு பெயின்ட்டிங்
குடுத்தாச்சான்னு கேட்டுட்டு இருக்கா… இதுல இந்த விஷயம் தெரிஞ்சா எப்படியெல்லாம் ஆடப்போறாளோ… அநேகமா நாளைக்கு
எங்களுக்கு பிரேக்-அப்பா தான் இருக்கும்…” என்று புலம்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.
அவனின் புலம்பல்களைக் கேட்க சகியாதவானாக, “ஹே விடு மச்சி இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு… நாளைக்கே உன் ஆளை வேற
பெயின்ட்டிங் வரைஞ்சு தர சொல்லு… அத எப்படி டெலிவரி பண்றேன்னு மட்டும் பாரு…” என்றான் பாலா.
“ஐயா சாமி, இதுவரைக்கும் நீ பண்ணதும் அதை நான் பார்த்ததும் போதும்..” என்று கைகளை தலை மேல் குவித்து கெஞ்சினான்
விக்ரம்.
அப்போது அங்கு கேட்ட சிரிப்பொலியில் தான் விக்ரமின் கவனம் தேஜுவிடம் சென்றது. தேஜுவையும் பாலாவையும் மாறி மாறி
பார்த்தவன், “டேய் மச்சி சொன்ன மாதிரியே லவ்வு சொல்லி பொண்ண கூட்டிட்டு வந்துட்டியா..?” என்று ஆரம்பித்தவன், “ஹே
உண்மையை சொல்லு.. உங்களை எத்தனை பேரு தொரத்திட்டு வராங்க… எதுக்கு டா இங்க வந்தீங்க… என் லவ்வுக்கு தான்
சங்கூதுவான்னு பார்த்தா உசுருக்கே ஆபத்து வந்துடும் போலயே…” என்று மேலும் புலம்பியவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே
சென்றான் பாலா. இதழ் விரிந்த சிரிப்புடன் அவர்களைப் பின்தொடர்ந்தாள் தேஜு.
அடுத்த அரை மணி நேரத்தில், அவர்களின் பயணத்தை ஒரு திரில்லர் படக்கதை போல, சில பல காட்சிகளை வெட்டியும் ஒட்டியும்
சொல்லி முடித்தான் பாலா.
“அப்போ உண்மையாவே உங்களைத் தொரத்திட்டு தான் வராங்களா… அடப்பாவி இப்போ எதுக்கு டா இங்க வந்து டேரா போட்டுருக்க…”
என்று அழும் குரலில் கேட்டான் விக்ரம்.
“டேய் மச்சி உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா…” என்று பாவம் போலக் கூறிய பாலாவின் பேச்சை தடுத்தவன், “என்ன வேணா
பண்ணு… ஆனா மூஞ்சிய மட்டும் இப்படி வைக்காத…” என்றான் விக்ரம்.
பின் தேஜுவைப் பார்த்தவன், “இப்போ என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணிருக்க மா…” என்று வினவினான் விக்ரம்.
“அதான் டா…” என்று ஆரம்பித்த பாலாவை தடுத்தவன், ”நீ ரொம்ப பேசிட்ட. சோ…” என்றவன் ‘வாயை மூடு’ என்று சைகையில்
சொல்லிவிட்டு தேஜுவிடம் திரும்பினான்.
பாலாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்த தேஜு, விக்ரமிடம் அவளின் திட்டத்தை கூற ஆரம்பித்தாள். இப்படி
பேசியே சிறிது நேரத்தை ஓட்டியவர்கள், மாலையானதும் ரவிசங்கரை சந்திக்க ஆயத்தமாயினர்.
அவர்கள் கிளம்பும்போது, “பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க…” என்று வழியனுப்பினான் விக்ரம்.
அவனிடம் தலையசைப்பை கொடுத்த இருவரும் ஆட்டோ ஒற்றை பிடித்து, ரவிசங்கரின் இடத்திற்கு சென்றனர்.
“ஓய்… உங்க அப்… சாரி அவரு சென்னைல தான் இருக்காருன்னு உனக்கு தெரியுமா..?” என்றான் பாலா.
அவனை முறைத்தவள், “ம்ம்ம் தெரியும்… அவரு கேங்ல ஒரு ஸ்பை வச்சுருக்கேன்… அவரு மூலமா அந்த ஆளு எங்க இருக்காருன்னு
தெரிஞ்சுப்பேன்…” என்றாள்.
‘ஸ்பை வச்சு கண்காணிக்கிற அளவுக்கு மேடமுக்கு இன்ஃப்ளூயன்ஸ் இருக்கும் போலயே…’ என்று மனதிற்குள் நினைத்துக்
கொண்டான்.
ரவிசங்கரின் இல்லத்தை சென்றடைந்ததும், அவர்கள் கண்டது வாசலில் நின்றிருந்த கும்பலைத் தான். இருவரும்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சட்டென்று நின்றவன் அவளின் கையை பிடித்து இழுத்து, “உன் துப்பட்டாவ வச்சு முகத்தை மறைச்சுக்கோ…” என்றான்.
அவள் கண்களாலேயே ‘ஏன்’ என்று கேட்க, “ஒரு சேஃப்டிக்கு தான்…” என்றவனின் மனதில் ஏதோ உறுத்தல் தோன்றிய வண்ணம்
இருந்தது.
அவளும் துப்பட்டாவை சுற்றிக்கொள்ள, இருவரும் உள்ளே நுழைந்தனர். வாசலில் நின்றவர் அவர்களை நிறுத்தி விசாரிக்க,
ஏதோ பிரச்சனை காரணமாக ரவிசங்கரை சந்திக்க வேண்டும் என்று கூறினர்.
அவர் இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி, “இப்போ இங்க ஒரு மீட்டிங் நடக்கப் போகுது… அது முடிஞ்சதும் தான் உங்க
பிரச்சனைய பார்க்க முடியும். அந்த ஓரமா நில்லுங்க…” என்று கூறிவிட்டு சென்றார்.
கூட்டம் கூடியவண்ணமே இருக்க, சற்று நேரத்திலேயே இருவரும் தோட்டத்தின் பக்கம் நகர்த்தப்பட்டனர்.
நேரம் செல்ல செல்ல இருவரும் சலிப்பின் உச்சியை அடைந்தனர். தேஜுவின் பொறுமை குறைய, “பாலா வா போலாம்… இப்போதைக்கு
இவங்க கூட்டம் ஓயாது போல… இங்க நின்னு தலை தான் வலிக்குது.” என்றாள்.
அவன் ஏதோ கூறும் சமயம் அவர்களுக்கு வெகு அருகில் ஒரு குரல் கேட்டது. அவர்கள் இருவரும் சுற்றிலும் பார்க்க, அந்த
குரலுக்கு சொந்தக்காரர் அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.
“அவளைப் போட்டுட்டு அந்த ஆதாரத்தை எடுத்துட்டு வர சொன்னா, அவ ரூமுக்கு பதிலா வேற ரூமுக்கு போயிட்டேன்னு கதை
விட்ட. அது தான் சொதப்பிட்டன்னு, அவளை ஃபாலோ பண்ண சொன்னா, அதையும் கோட்ட விட்டுட்டேன்னு சொல்ற… நீயெல்லாம்
எதுக்கு தான் லாயக்கு…” என்று மேலும் சில பல கெட்ட வார்த்தைகளால் எதிரிலிருப்போருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது
அந்த குரலையுடைய நபரினால்.
பாலாவிற்கு அந்த குரல் யாருடையது என்று விளங்கவில்லை என்றாலும், தேஜுவிற்கு விளங்கியது. அவளிற்கு தான் நன்கு
பரிச்சயமான குரலாகிற்றே...
பயணம் தொடரும்...
பயணம் 11
அக்குரலையும் அது கூறிய செய்தியையும் கேட்டவளின் உடல் நடுங்க, அருகில்
நின்றிருந்த பாலாவோ அவளைத் தாங்கிப் பிடித்து, “என்னாச்சு… ஏன் திடீர்னு இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்க..?”
என்றான்.
எவ்வளவு கேட்டும் பதில் கூற மறுத்தவள், உடனே அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். அவளின்
நிலையறிந்து அவனும் அவளுடன் சென்றான்.
வழியில் வந்த ஆட்டோவைப் பிடித்து மீண்டும் விக்ரம் வீட்டிற்கே சென்றனர். செல்லும் வழியில் அவள் ஏதோ தீவிர
சிந்தனையில் இருப்பதைக் கண்டவன், எதுவும் பேசவில்லை.
வாசலில் இவர்களைக் கண்ட விக்ரம், “என்னடா அதுக்குள்ள வேலை முடிஞ்சுதா..?” என்றவன் இருவரின் முகத்தைக் கண்டு
வேறெதுவும் கேட்காமல் அவர்களை உள்ளே அழைத்தான்.
அடுத்த பத்து நிமிடங்கள் அங்கு அமைதியே நிலவ, பாலா தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
“இன்னும் எவ்ளோ நேரம் தேஜு இப்படியே இருக்க போற..? திடீர்னு என்னாச்சு உனக்கு..? ஏன் அவ்ளோ டென்ஷனா இருந்த..?
எதுக்கு அங்கயிருந்து கிளம்ப சொன்ன…? இதுக்கான விடை தெரிஞ்சா தான் அடுத்து என்னன்னு பிளான் பண்ண முடியும்…”
சற்று கறாராகவே கூறினான் பாலா.
அப்போதும் எதுவும் பேசாமல் கீழே குனிந்து தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள் தேஜு.
“ப்ச் இப்போ என்ன.. உங்க ‘அப்பா’ தான் உன்ன கொல்ல பிளான் போட்டுருக்காரு. அதுக்கு தான் இப்படி இருக்கியா..?”
என்றான் கொஞ்ச கோபமாகவே கேட்டான்.
அவனின் கேள்வியில் அதிர்ச்சியுடன் பாலாவைப் பார்த்தாள் தேஜு. அவளின் அதிர்ந்த முகத்தை கண்டு அவள் அடுத்து
கேட்கவிருக்கும் கேள்வியை யூகித்தவனாக, “அது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்குறியா… அரசியலுக்காக சொந்த
பொண்ணையே கொல்லுற அளவுக்கு கேவலமா பிளான் போடுறது அந்த ஆளா தான் இருக்கணும். அண்ட் இப்படி தான் நடந்துருக்கும்னு
எனக்கு ஏற்கனவே ஒரு கெஸ் இருந்துச்சு…” என்றான் பாலா.
இன்னுமே அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, “உன் முட்ட கண்ணை இன்னும் விரிக்காம, அந்த
பையைக் குடு… அந்த ஆளு இன்னும் என்னென்ன தில்லாலங்கடி வேலை பார்த்துருக்கான்னு பார்ப்போம்…” என்றான்.
தேஜு இருந்த மனநிலையில் அவன் கூறியதை சரியாகக் கவனிக்கவில்லை. இல்லையென்றால் இந்நேரம் அதற்கு பெரிய சண்டை
ஏற்பட்டிருக்கும்.
அந்த பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு கட்டுகட்டாக ஆதாரங்கள் சிக்கின. மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட பல
உயிர்கொல்லித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ‘பணியாற்றி’யவர்களில் முக்கியஸ்தராக திகழ்ந்திருக்கிறார் மனிதர்.
பொறுக்கி தேர்ந்தெடுக்கக்கூடிய சில நல்ல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பான்மை இவரின்
முன்னிலையிலேயே கட்சியில் அரும்பாடுபட்டு உழைத்தவர்களுக்கு பகிந்தளிக்கப்பட்டிருக்கிறது!
“ப்பா… ஊழலோட மொத்த உருவமா இருந்துருக்காரு…” என்றான் விக்ரம்.
இவ்வளவிற்கும் அவர்கள் கண்டவை ஒரு பாதி காகிதங்கள் தான்!
“ம்ம்ம் இப்போ தெரியுது கட்சி ‘வளர்ச்சி’க்கு எவ்வளவு பாடுபட்டிருக்காருன்னு… இவ்ளோ பண்ண மனுஷனை ஜஸ்ட் லைக் தாட்
கட்சிய விட்டு தூக்குனா கோபம் வருமா வராதா… சரி அந்த கட்ட பிரி… இன்னும் பல அரிய திட்டங்கள் இருக்கும் போல…
சயின்டிஸ்ட்கே டஃப் குடுக்குறாங்க பா…” என்று கிண்டலாகக் கூறினான் பாலா.
இவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் அந்த காகிதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு. தந்தையின் அரசியல்
மோகம், அதற்காக எதையும் செய்ய துடிக்கும் வெறி, இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவள் தான் தேஜு. அதற்காக இப்படி
ஊழலில் புரள்பவராக அவரை நிச்சயம் கற்பனை செய்து பார்த்ததில்லை.
மக்களின் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்படுபர்களை மக்களே புறக்கணிக்கும் அளவிற்கு தங்கள் சாணக்கியத்தை
பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அவர் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்வார் என்று நினைக்கவில்லை தான்.
மறுபுறம் தன் சுயலாபத்திற்காக மக்களுக்கு கேடு விளைவிப்பதை மட்டுமே செய்வார் என்றும் யோசிக்கவில்லை. புகழிற்காக
எந்த எல்லை வரை வேண்டுமென்றாலும் செல்பவர் அல்லவா… அவரை இவ்வாறும் யோசித்திருக்க வேண்டுமோ என்ற காலம் கடந்த
சிந்தனையில் மூழ்கியிருந்தாள் தேஜு.
விக்ரம் மற்றும் பாலா மட்டுமே உரையாடிக் கொண்டிருக்க, முதலில் தேஜுவின் அமைதியை உணர்ந்தது பாலா தான். அவள்
முகத்தில் தெரிந்த கலக்கத்திலேயே அவளின் சிந்தனை செல்லும் பாதையை உணர்ந்தவனாக, அவளை உலுக்கியவன், கண்களாயே
என்னவென்று வினவினான்.
“இப்படி ஒரு சுயநலவாதிக்கு மகளா பிறந்துருப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல… வீட்டுக்கு நல்லவரா இல்லைனாலும்,
நாட்டுக்காவது கொஞ்சமே கொஞ்சம் நல்லவரா இருப்பாருன்னு நினைச்சேன். ஹ்ம்ம்… கட்சி கட்சின்னு அதுக்காகவே பார்த்து,
இன்னைக்கு வரைக்கும் எத்தனை உயிர் போகக் காரணமா இருந்துருக்காரு. எத்தனையோ திட்டங்கள், அதனால மக்கள்
பாதிக்கப்படுவாங்கன்னு தெரிஞ்சும் கூட, எப்படி இவங்களால அதை செயல்படுத்த முடியுதோ…” என்று ஒருவித இறுக்கத்துடனே
கூறினாள்.
“இதுல அவங்களை மட்டும் குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம். என்ன தான் அஞ்சு வருஷம் ஆடினாலும், எலக்ஷனுக்கு நம்மகிட்ட
தான் வராங்க. அவங்களை குறை சொல்ற அதே மக்கள் தான், காசு வாங்கிட்டு ஓட்டும் போடுறாங்க… திரும்ப அடுத்த அஞ்சு
வருஷம் நம்மகிட்ட கொடுத்த காசை அவங்க வசூல்லிக்கிறாங்க… எப்போ ஓட்டுக்கு காசு வாங்கிட்டோமோ, அப்பவே அவங்களை குறை
சொல்ற தகுதியையும் இழந்துட்டோம்…” என்றான் பாலா.
இப்படி மாறி மாறி விவாதித்துக் கொண்டே அந்த காகிதங்களை ஆராய்ந்தனர்.
“ம்ம்ம் இது தான் டா லாஸ்ட்டு… எப்பா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு…” என்று சலித்துக் கொண்டான்
விக்ரம்.
அந்த கடைசி காகிதத்தைப் படித்த பாலாவின் முகம் இறுகியது. இதுவரை அவனின் இந்த அழுத்தத்தை பார்த்திடாத தேஜுவிற்கு
சற்று பயமாகவே இருந்தது.
விக்ரம் தான் அவனின் நிலை உணர்ந்து, “டேய் என்னடா ஆச்சு… அப்படி என்ன இருக்கு..?” என்று கேட்டான்.
“எங்கெங்கயோ கைவச்சு கடைசில விவசாயத்துலயே கைவைக்குறாங்க ****” என்று அவர்களை அர்ச்சித்தான் பாலா. அவனின்
திட்டுக்களையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியாத விக்ரம் அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படித்தான்.
“ஹே இதுல பசுமைத் திட்டம்னு தான போட்டுருக்கு… குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து அங்க செடி நடப்போறாங்க…
இது நல்ல விஷயம் தான.” என்றான் விக்ரம்.
“மண்ணாங்கட்டி… அவங்க நடப்போற செடி என்ன தெரியுமா… எதுக்குமே பயன்படாத, ஆனா நிலத்தடி நீரை மட்டும் பெருமளவிற்கு
உறிஞ்சுக்குற செடி. 1950ல ஆஸ்திரேலியால இருந்து கொண்டு வந்து இங்க பயிரிடப்பட்ட சீமை கருவேல மரத்தோட வகையை
சார்ந்தது தான் இந்த செடி. இதை தான் அவங்க ‘பசுமைத் திட்டம்’ங்கிற பேர்ல நடப்போறாங்க. அதுவும் விளைநிலங்களுக்கு
பக்கத்துல இருக்க இடங்களா பார்த்து பார்த்து செலக்ட் பண்ணிருக்காங்க… இந்த திட்டம் மட்டும் செயல்படுத்துனா
இன்னும் ஒரே வருஷத்துல, இருக்க விவசாயிங்களும் பயிர் வளர்க்க தண்ணியில்லாம தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்…”
என்று கோபமாக பேசியவன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த தேஜுவிற்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதுவரை அவனின் இந்த பரிமாணத்தை
அவள் பார்த்ததில்லை அல்லவா…
ஒரு பெருமூச்சுடன் தேஜுவின் புறம் திரும்பிய விக்ரம் அவளிருக்கும் நிலையுணர்ந்து, “எப்பவும் ஜாலியா சுத்திட்டு
இருக்குறவன் சீரியஸா பேசவும் ஷாக்கா இருக்கா..?” என்று சரியாகவே கேட்டான்.
“ம்ம்ம் எதுக்கு இவ்ளோ டென்ஷன்..?” என்று குழப்பமாக கேட்டாள்.
“அவனுக்கு விவசாயம்னா அவ்ளோ பிடிக்கும். சின்ன வயசுல அவன் தாத்தாவோட நிலத்துலயே தான் இருப்பானாம். ஆனா அப்போ
ஏற்பட்ட பஞ்சத்துனால இவங்க நிலங்களையெல்லாம் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டங்களாம். உயிரா நினைச்ச நிலம்
கையவிட்டு போனதும், அவனோட தாத்தாவும் தவறிட்டாராம். அவன் அப்பா கிராமத்துல இருந்து சிட்டிக்கு வந்து கொஞ்சம்
கொஞ்சமா முன்னேறுனாராம். இவன் ஸ்கூல் படிக்கிற வரை எல்லாம் நல்லா தான் இருந்துச்சு… ஆனா காலேஜ்ல அக்ரி தான்
படிக்கணும்னு இவன் சொல்ல, இன்ஜினியரிங் படிச்சா தான் வேலை கிடைக்கும்னு (!!!) அப்பா சொல்ல, அதுலயிருந்து ரெண்டு
பேருக்கும் சண்டை தான். என்ன தான் அப்பா சொன்ன மாதிரி இன்ஜினியரிங் படிச்சாலும் அப்பப்போ விவசாயம் பத்தின
ஆர்ட்டிகிள்லாம் தேடித் தேடி படிப்பான்… ஹ்ம்ம் இவன் மட்டும் விவசாயம் படிச்சுருந்தா இந்நேரம் எவ்வளவோ
முன்னேறிருப்பான்.” என்று பாலாவைப் பற்றி கூறி முடித்தான் விக்ரம்.
அதைக் கேட்டவளிற்கு பாலாவின் மேல் சிறு மரியாதை ஏற்பட்டது. மரியாதை ஈர்ப்பாகுமோ…
‘எனக்கு இந்த சிசுவேஷன் வந்துருந்தா, வாழ்க்கையே வேஸ்ட்டான மாதிரி இருந்துருப்பேன். இவன் மாதிரியெல்லாம் ஜாலியா
கண்டிப்பா இருந்துருக்க மாட்டேன்… ஆனா இவன் மட்டும் எப்படி எல்லா சிஷுவேஷனையும் ஈஸியா ஹாண்டில் பண்றான்.’ என்று
யோசித்தவளிற்கு, சில மணி நேரங்களுக்கு முன்னால் அவளின் சோகக் கதையைக் கூறி கலக்கமாக இருந்த போது, கிண்டல் செய்தே
அவளின் மனநிலையை அவன் மாற்றியது நினைவிற்கு வந்தது.
உதட்டோரம் சிரிப்பில் நெளிய, அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில், அவளின் எண்ணத்தின் நாயகனே அங்கு
பிரசன்னமானான்.
“என்னை விட்டுட்டு ரெண்டு பேரும் தீவிரமா பிளான் போடுறீங்க போல… ஐடியா எதுவும் தேருச்சா…” என்று அவனின்
அக்மார்க் கிண்டல் குரலில் பேசினான்.
‘அதுக்குள்ள இவன் மூட் மாறிடுச்சா…’ என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, கண்ணசைவில் என்னவென்று
வினவ, ‘ஒன்றுமில்லை’ என்று தலையாட்டினாள்
“உன்னை விட்டுட்டு பிளான் பண்ணிட முடியுமா… வா வந்து உன் பிளான்னை சொல்லு…” என்று அலுத்துக் கொண்டே விக்ரம் கூற,
அவன் அருகில் வந்த பாலா அவனைத் தோளோடு அணைத்து, “நண்பேன்டா…” என்று கூற, ‘இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல…’ என்று
முணுமுணுத்தான் விக்ரம்.
“சரி இப்போ நம்ம பிளான்னை சொல்லப் போறேன் நல்லா கவனிங்க…” என்றான் பாலா.
“அடேய் சஸ்பென்ஸ் வைக்காம சொல்லித் தொலடா…” என்றான் விக்ரம். தேஜுவும் அதையே தான் மனதில் நினைத்தாள்.
இருவரையும் பார்த்தவன், தேஜுவிடம் திரும்பி, “உன்னைக் கடத்தப்போறோம்… இது தான் நம்ம பிளான்…” என்றான்.
பயணம் தொடரும்...
பயணம் 12
பாலா தேஜுவைக் கடத்துவது தான் திட்டம் என்று கூறியதைக் கேட்ட மற்ற இருவரும்
குழம்பித் தான் போயினர்.
“எதே… கடத்தனுமா… என்ன டா சொல்ற..?” என்றான் விக்ரம்.
“ஆமா டா. தேஜுவைக் கடத்திட்டாங்கன்னு வெளியுலகத்துக்கு சொல்லப் போறோம்.” என்று பாலா கூற, “அதுனால என்ன யூஸ்..?
நான் யாரு பொண்ணுன்னு கூட இந்த உலகத்துக்கு தெரியாது.” என்று விரக்தியுடன் கூறினாள் தேஜு.
“அதை அந்த ஆளு வாயிலயிருந்தே வரவைக்குறதுக்கு இது ஒரு நல்ல சான்ஸ்…” என்றவனை மற்ற இருவரும்
பார்த்திருந்தனர்.
“இப்போ உன்னைக் கடத்த பிளான் போட்டது அந்த ஆளு… ஆனா அந்த பிளான் ஒர்க்-அவுட் ஆகல… நீ எங்கே இருக்கன்னும்
இதுவரைக்கும் அவருக்கு தெரியாது. சோ இப்போ நீ கடத்தப்பட்டதா சொன்னா, அவருக்கு யாரு மேல சந்தேகம் வரும்…?” என்று
பாலா கேட்க, “அந்த வருண் மேல…” என்றான் விக்ரம்.
“எஸ் கரெக்ட். ஆனா அந்த வருணோ உன்னைக் கடத்த பிளான் போடவே இல்ல. இன்ஃபேக்ட் உன்கிட்ட அந்த ஆளுக்கு எதிரா இவ்ளோ
பெரிய ஆதாரம் இருக்குறதே அவனுக்கு தெரிய சான்ஸ் கம்மி… சோ இப்போ நம்ம என்ன பண்ண போறோம்னா, எதிரிங்க ரெண்டு
பேரையும் சண்டை போட வச்சு, அதுல கிடைக்கிற நேரத்துல வேற ஏதாவது பிளான் போட போறோம்…” என்று அவனின் திட்டத்தைக்
கூறினான்.
“இது எவ்ளோ தூரம் சரியா வரும்னு நினைக்கிற..?” என்று தேஜு வினவினாள்.
“ம்ம்ம் உங்க அப்பா ரியாக்ஷன் எப்படி இருக்குங்கிறத பொறுத்து தான் இந்த திட்டத்தோட வெற்றியும் இருக்கு. உங்க
அப்பா கிட்டயிருந்து ரெண்டு ரியாக்ஷன் எதிர்பார்க்கலாம். ஒண்ணு அந்த வருண்கிட்ட நேரடியா போய் சண்டைப் போட்டு
உன்னைப் பத்தி விசாரிக்கிறது. இல்லனா இதையே பெரிய விஷயமாக்கி பொதுமக்களோட அனுதாபத்தை அவருக்கு ஆதரவா மாத்த
முயற்சி பண்ணுறது… நான் சொன்ன முதல் ஆப்ஷனை உங்க அப்பா தேர்ந்தெடுத்தா, நம்ம திட்டம் தோல்விய தழுவ நிறைய
வாய்ப்பிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா உங்க அப்பா ரெண்டாவது ஆப்ஷனை தான் தேர்ந்தெடுப்பாரு…
இதை வச்சு எப்படி அரசியல் பண்ணலாம்னு தான் யோசிப்பாரு…” என்று பாலா விளக்கினான்.
அவன் கூறியவற்றைக் கேட்ட விக்ரமோ, “டேய் மச்சி… என்னடா இது அரசியல் விமர்சகன் மாதிரி பேசுற…” என்று ஆச்சரியமாகக்
கேட்க, “ஒரு நல்ல அரசியலுக்கு எடுத்துக்காட்டு, ஆட்சி மேல பல விமர்சனங்கள் சுமத்தப்பட்டாலும், அதையெல்லாம்
தாங்கி, தாண்டி வரது தான். ஆனா இங்க தான் விமர்சனம்னு சொன்னாலே வாயடைச்சுட்டு தான் மறுவேலை பார்க்குறாங்க.”
என்றவன், “ப்ச் வேற டாபிக்குள்ள நுழைஞ்சாச்சு… தேஜு, உனக்கு போலீஸ் யாராவது தெரியுமா..? நேர்மையான அதிகாரிங்களோட
உதவி நமக்கு தேவை.” என்றான்.
“ம்ம்ம் தெரியும். என் பிரென்ட் பூஜாவோட அப்பா தான் சென்னை கமிஷ்னர்.” என்று தேஜு கூறியதும், மற்ற இருவரும்
சற்று பயந்ததென்னவோ உண்மை தான்.
“அடேய் கமிஷ்னருக்கு வேண்டப்பட்ட பொண்ணயா டா இவ்ளோ நேரம் வம்பிழுத்த… இந்த பிரச்சனை முடிஞ்சதும் உன் பிரச்னைன்னு
தான் நினைக்கிறேன் மச்சி. எதுக்கும் ரெடியா இருந்துக்கோ.” என்று விக்ரம் கூற, “என்ன டா உயிர் நண்பனை பாதில
விடுற. எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம் டா ரம்மு…” என்று துணைக்கு ஆள் சேர்த்தான் பாலா. அவனைத்
திரும்பிப் பார்த்த விக்ரமோ, “யூ கோ மேன்… வொய் மீ..?” என்று முணுமுணுத்தான்.
அவர்கள் இருவரும் முணுமுணுப்பதைக் கண்டவளிற்கு சிரிப்பு வர, அதை அடக்கியவள், “நான் அங்கிளுக்கு கால் பண்ணி நம்ம
பிளான்ன சொல்றேன்…” என்று அறைக்குள் சென்று விட்டாள்.
இப்படியே இவர்களின் நேரம் செல்ல, தேஜு கூறிய பூஜாவின் அப்பா வெற்றிவேல் அவர்களை வீடியோ காலில்
சந்தித்தார்.
அவர்களின் அறிமுக படலம் முடிவடைந்ததும், அவர்களின் திட்டத்தை விளக்கினான் பாலா.
“ம்ம்ம் உங்க பிளான் சரியா தான் இருக்கு பாலா… அந்த ஆளை கரெக்டா எஸ்டிமேட் பண்ணிருக்கீங்க… இதுல நான் எப்படி
உங்களுக்கு உதவனும்…” என்றார் வெற்றிவேல்.
“சார், தேஜுவை கடத்திட்டோம்னு நியூஸ்ல சொல்ல ஒரு ஆதாரம் வேணும். சோ அதை ஃபேக்கா உருவாக்க போறோம். கடைசியா அவ
அந்த ஹோட்டல இருந்தது தான் அந்த ஆளுக்கு தெரியும். சோ அங்கயிருந்து பெங்களூரு போற வழில, ஏதாவது ஒரு ஏரியால
இருக்க சிசிடிவிய ஹேக் பண்ணி அவளை யாரோ கடத்துன மாதிரி செட் பண்ண போறோம்… இந்த ஹாக்கிங் வேலையெல்லாம் என்
பிரென்ட் பார்த்துப்பான். உங்க சைட்லயிருந்து… அதாவது அவங்களுக்கு கையாளா செயல்படுற போலீஸுக்கு இந்த விஷயம்
லீக்காகாம பார்த்துக்கணும் சார்.” என்றான்.
“ஓகே பாலா. அதை நான் பார்த்துக்குறேன்… ஆல் தி பெஸ்ட்… வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க…”
என்று பாலாவை பார்த்து கூறியவர், தேஜுவிடம் திரும்பி, “எதுக்கும் பயப்படாத மா. நாங்க எல்லாரும் இருக்கோம்…”
என்று ஆறுதல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அதன்பிறகான வேலைகள் வேகமெடுக்க, அடுத்த நாள் காலை தேஜு கடத்தப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
மேலும் தேஜு ரவிசங்கரின் மகள் என்றும், இதை அவர் ரகசியமாக வைத்திருந்தார் என்றும் சில தொலைக்காட்சி சேனல்கள்
தங்களின் டிஆர்பிக்காக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் விக்ரமின் வீட்டு சோஃபாவில் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்
பாலா.
“அடேய் இந்த மேட்டர் எப்படி டா லீக்காச்சு…” எபிரு விக்ரம் கேட்க, “நான் தான் நம்ம சந்தீப் கிட்ட சொல்லி இதையும்
சேர்த்து போட சொன்னேன்… செம ஹாட் நியூஸ்ஸா இருக்குல…” என்றான் பாலா. அப்போது தான் தேஜுவின் நியாபகம் வர,
விக்ரமிடம் அவளைப் பற்றி விசாரித்தான்.
“பாவம் டா அந்த பொண்ணு. நேத்துலயிருந்து முகமே சரியில்ல. என்ன தான் வெளிய காட்டிக்களைனாலும் உள்ளுக்குள்ள
வருத்தம் இருக்கத் தான செய்யும்…” என்று கூற, அதைக் காதில் வாங்கியவன், உடனே அவளைக் காண அறைக்குள் சென்று
விட்டான்.
ஜன்னலின் வெளியே நீலவானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் தேஜு. அவளின் அருகே சென்றவன், “ஓய், ஆர் யூ ஓகே..?”
என்றான்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவள், “தெரியல பாலா… நான் ஓகேவான்னு எனக்கே தெரியல. ஒரு விதத்துல எங்க அம்மாக்கு நியாயம்
கிடைக்கப் போகுதுன்னு சந்தோஷம் இருந்தாலும், இந்த விஷயத்தை மக்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு கொஞ்சம் பயமாவும்
இருக்கு. அந்த ஆளு அவரோட அரசியல் வாழ்க்கையை காப்பத்திக்க, எங்க அம்மா மேல பழியை போட்டாலும்
ஆச்சரியப்படுறதுகில்ல. இனிமே என்னோட வாழ்க்கை எப்படி இருக்கப் போகுது… இந்த விஷயம் வெளிய தெரிஞ்சதுக்கு பின்னாடி
என்னென்ன தொல்லைகள் வரப் போகுதுன்னு நினைச்சாலே பயமா இருக்கு…” என்றாள்.
“நீ எப்போயிருந்து இவ்ளோ பயப்பட ஆரம்பிச்ச தேஜு..? உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ, அதான் அந்த கடைல பளார்னு
ஒண்ணு விட்டயே, அப்போ செம போல்ட்னு நினைச்சேன்… அந்த போல்ட்னெஸ் எல்லாம் என்கிட்ட மட்டும் தானா..?” என்று
கன்னத்தில் கைவைத்தவாறே பாலா கேட்கவும், அவளின் அனுமதியின்றே விரிந்தன அவளின் இதழ்கள்.
“மத்தவங்களுக்காக நாம வாழ ஆரம்பிச்சா, நம்மளோட சின்ன சின்ன சந்தோஷத்தை கூட இழக்க வேண்டியதிருக்கும் தேஜு. இது
உன்னோட வாழ்க்கை… நீ தான் இதை முழுசா வாழப் போற. உனக்கு அட்வைஸ் பண்ற யாரும் உனக்கு பதிலா வாழப் போறதில்ல… சோ
எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸ்ட்டா இரு…” என்றான்.
அவன் கூறியதை உள்வாங்கியவளின் முகம் கலக்கத்தை விடுத்து தெளிவு பெற, அவளை அறையிலிருந்து வெளியே அழைத்து
வந்தான்.
“என்னய்யா நடக்குது. நமக்கு முன்னாடி தேஜுவை யாரு கடத்துனா..?” என்று கோபமாக தன்முன் நின்றிருந்தவர்களை கேட்டார் ரவிசங்கர்.
அவரின் உதவியாளரோ, “அது தெரியலங்கைய்யா… அந்த வருண் தான் கடத்திருப்பான்னு…” என்று இழுத்தார்.
“அதுவும் கன்ஃபார்மா தெரியல அப்படி தான… எதைத் தான் உருப்படியா பண்ணுவீங்களோ.. ச்சை… தேஜு என் பொண்ணுங்கிறது எப்படியா வெளிய லீக்காச்சு…” என்று சரமாரியாக கேள்விகளைத் தொடுக்க, அந்த உதவியாளரோ தலையை சொரிந்தார்.
"அவளைக் கொன்னு அந்த பழியை வருண் மேல போட்டு, கட்சில அவனுக்கு இருக்க நல்ல பேரை கெடுக்கலாம்னு பார்த்தா, அவன் முந்திக்கிட்டானா... ச்சே இதுல எனக்கெதிரான ஆதரங்களையும் அவகிட்ட கொடுத்து விட்டேனே..." என்று முணுமுணுத்த ரவிசங்கர், “உங்களையெல்லாம் இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் பார்த்துக்குறேன்…” என்றவாறே வெளியே நின்றிருந்த பத்திரிக்கையாளர்களை சந்திக்க சென்றார்.
கேமராக்களின் முன்னே சென்றதும், கைத்தேர்ந்த நடிகனைப் போல தான் முகபாவத்தை சட்டென்று மாற்றிக் கொண்டவர், அவர்களிடம் தான் முன்பே யோசித்து வைத்திருந்த கதையை புனைய ஆரம்பித்தார்.
அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பல சோக பாவங்களை காட்டியவரின் பேச்சின் சாராம்சம் இதுதான்… சிறு வயதிலேயே அரசியலின் மீது ஆர்வம் கொண்டு நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று சபதம் பூண்டதால் (!!!) அவரின் மனைவி மற்றும் குழந்தையை கிராமத்தில் பெற்றோரிடம் விட்டு வந்ததாகவும், தன் நேர்மையான நடவடிக்கைகளால் (!!!) அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்பதற்காவே அவர்களின் அடையாளத்தை வெளியுலகிலிருந்து மறைத்ததாகவும் அழகாகக் கதை கூறினார்.
“ப்பா சான்சேயில்ல… என்ன உருட்டு…” என்று சிலாகித்த பாலாவை மற்ற இருவரும் முறைத்தனர்.
ரவிசங்கரின் திட்டத்தின்படி அனுதாபம் நன்றாகவே வேலை செய்தது. “உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா…?” என்று ஒரு பத்திரிக்கையாளர் இந்த செய்தியை சென்ஷேஷனலாக மாற்ற தன்னாலான சிறு முயற்சியை மேற்கொள்ள, அவரின் முயற்சிக்கு ரவிசங்கரும் ஒத்துழைப்பு கொடுக்க, இதோ மொத்த மீடியாவும் வருணின் பெயரை இழுக்கத் துவங்கினர்.
அங்கு வருணோ கடுப்பின் உச்சத்தில் இருந்தான். ரவிசங்கருக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதே இப்போது தான் அவனிற்கு தெரிய வந்துள்ளது. இதில் அவன் தான் அவரின் மகளைக் கடத்தியுள்ளதாக செய்திகள் பரவியுள்ளதை அறிந்ததிலிருந்து கோபத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான். கட்சியிலுள்ள பலரும் அவனிற்கு அழைத்து குற்றவாளி போல் விசாரிப்பதும் அவனின் கடுப்பின் அளவை உயர்த்தியது.
அப்போது மீண்டும் அவனின் அலைபேசி ஒலிக்க, யாரென்று பாராமல் அழைப்பை ஏற்றுவிட்டான்.
“என்ன தம்பி, நியூஸ் பார்த்து ஷாக்காகிட்டீங்களா..? இந்த ரவிசங்கர் கிட்ட வச்சுக்கிட்டா இப்படி தான் அடிக்கடி ஷாக்காக வேண்டியதிருக்கும். ஒழுங்கா என் பொண்ண பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சுடு… இல்ல கட்சில நீ வாங்கி வச்சுருக்க நல்ல பேரை இந்த சம்பவத்தை வச்சே ஒன்னுமில்லாம ஆக்கிடுவேன்…” என்று மிரட்ட, ‘சரியான லூசா இருப்பான் போல… யாரு கடத்துனான்னு தெரியாம பேசிட்டு இருக்கான்… ஒரு வேளை சிம்பதிக்காக அவனே கடத்தி வச்சாலும் வச்சுருப்பான்…’ என்று யோசித்த வருண், “உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க…” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.
‘எவ்ளோ திமிரு இருக்கணும் இவனுக்கு…’ என்று கோபத்தில் முணுமுணுத்தவரை நோக்கி வந்த அவரின் உதவியாளர், “ஐயா, நியூஸ் பாருங்க…” என்று வேகமாக தொலைக்காட்சியை உயிர்பித்தார்.
அதில் ப்ரேக்கிங் நியூஸாக ரவிசங்கரின் ஊழல்களை ஆதாரங்களுடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இவையெல்லாம் பாலாவின் கைங்கர்யம் தான்.
நேர்மையான செய்திகளை மட்டுமே வெளியிடும் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் சில நிறுவனங்களுக்கும் ஆதாரங்களின் நகலை அனுப்பியிருந்தான். சாதாரண செய்தியையே ‘ஹாட் நியூஸ்’ஸாக மாற்றிவிடுபவர்களுக்கு அல்வா போல் செய்தி கிடைத்தால் சும்மாவா விடுவார்கள். இதோ அதற்கு பக்காவாக ‘பேக்கிரவுண்ட் மியூசிக்’ போட்டு செய்திகளை சுடச்சுட வழங்கி வருகின்றனர்.
செய்தியைப் பார்த்த ரவிசங்கருக்கோ பெரும் அதிர்ச்சியாக இருக்க, அவரின் மூளை கூட செயல்பட மறுத்தது. இருந்தும் கட்சியின் மேல் நம்பிக்கை வைத்தவருக்கு அடுத்த அதிர்ச்சியாக அந்த தகவல் வந்தது.
இவரின் ஊழல் வெளியான அடுத்த ஐந்தாவது நிமிடம், கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற அறிக்கை கட்சி சார்பாக வெளியிடப் பட்டிருந்தது.
அடுத்தடுத்த செய்திகளால் ஸ்தம்பித்தவரை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தார் அவன் உதவியாளர். ரவிசங்கரோ, எப்போது வேண்டுமானாலும் தான் கைது செய்யப்படலாம் என்பதால் உடனே கட்சித் தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான பெரியசாமியை சந்திக்கக் கிளம்பினார்.
கடந்த இரு மாத காலமாக முதல்வரை சந்திக்க இயலாமல் இருந்தவருக்கு இன்று உடனே அனுமதி கிடைத்தது. அவரைப் பார்த்ததும், “தலைவரே என்னதிது… அந்த வருண் தான் என் பொண்ண கடத்தி அந்த ஆதாரங்களை எல்லாம் வெளிய லீக் பண்ணிருக்கான். அவனை எதுவும் கேக்காம, கட்சிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு அறிக்கை குடுத்துருக்கீங்க… இந்த கட்சிக்காக நான் எவ்ளோ உழைச்சுருக்கேன்னு உங்களுக்கே தெரியும்…” என்று உடைந்த குரலில் கூறினார்.
“நீ நினைக்கிற மாதிரி உன் பொண்ண கடத்துனது வருண் இல்லய்யா…” என்று முதல்வர் கூற, அவரை நோக்கி புரியாத பார்வை வீசினார் ரவிசங்கர்.
“ஹ்ம்ம் உனக்கு வெளிய வேற எதிரி இருக்கான்யா. அது யாருன்னு கண்டுபிடி…” என்று கூறியவாறே அங்கிருந்து செல்ல முயன்றவர், சட்டென்று நின்று, “அப்படியே வருண் தான் கடத்தியிருந்தாலும், என்னால அவனை ஒன்னும் பண்ண முடியாது… ஏன்னா அவன் என் பையன்… அவன் என் பையன்னு வெளிய சொல்ல முடியாது... ஆனா அவனைத் தான் அரசியல் வாரிசா இன்னும் கொஞ்ச நாள்ல அறிவிக்க போறேன்…” என்று அடுத்த அதிர்ச்சியை ரவிசங்கருக்கு பரிசளித்தார்.
அதற்குள் ரவிசங்கரை கைது செய்ய காவலர்கள் முதல்வரின் உத்தரவின் பெயரில் அங்கேயே வந்திருக்க, “நீ கட்சிக்காக நிறைய உழைச்சுருக்கேல… கவலைப்படாத உன்ன விஐபி செல்ல போட சொல்லி நல்லா கவனிச்சுக்க சொல்றேன்.” என்று கூறிய முதல்வர், அந்த காவலர்களிடம் சைகை செய்ய, ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் ரவிசங்கர்.
எந்த கட்சிக்காக, மனைவி மற்றும் குழந்தையை மறைத்து, கட்சி ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தாரோ, அதே கட்சியின் சுயநலத்திற்காக இன்று அவர் பலிகெடாவாக்கப்படுகிறார்.
சுயநினைவின்றி காவலர்களுடன் சென்றவரை கூட்டத்தில் ஒருத்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு. அவள் கண்களின் கண்ணீருமில்லை, உதட்டில் சிரிப்புமில்லை… ஆனால் வெகு நாட்களுக்கு பின்னர் அவளின் மனம் நிம்மதியாக இருந்தது.
அவளின் முகமாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்த பாலா, அவளை இடித்து, “வா போகலாம்…” என்று முன்னே நடந்தான். சற்று தூரம் சென்ற பின்பே அவளின் அரவத்தை உணராதவன், திரும்பிப் பார்க்க, தேஜுவோ தன் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை விலக்கியபடி பத்திரிக்கையாளர்களின் முன் நின்று கொண்டிருந்தாள்.
பயணம் தொடரும்...
பயணம் 13
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவள் கண்முன் நிற்க, அங்கே பத்திரிக்கையாளர்கள்
இடையே சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை நோக்கி, “உங்களுக்கு என்கிட்ட கேக்க நிறைய கேள்விகள் இருக்குன்னு எனக்கு
தெரியும். உங்க கேள்விகளுக்கெல்லாம் பதிலை நானே சொல்றேன்…” என்று தைரியமாக பேச ஆரம்பித்தாள்.
அவளின் சிறு வயதிலிருந்து அனுபவித்த அவமானங்களைப் பற்றிக் கூறியவள், அவளின் தாயைப் பற்றியும் கூறினாள்.
அதன்பின்பு தாயின் மீது செய்த சத்தியத்திற்காக, ரவிசங்கர் கூறிய பணியை மேற்கொண்டதையும், அவள் சென்ற பயணத்தின்
அனுபவங்களையும் கூறினாள். தன்மேல் நடத்தப்பட்ட கொலை முயற்சியும், அதன் காரணம் அவளின் சொந்த தந்தை என்பதை
அறிந்ததையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள். அவரின் சுயரூபம் அறிந்ததும், சந்தேகத்தினால் அவர் கொடுத்த பையை
திறந்து பார்த்து அதில் இருந்தவைகளைக் கண்டு அதிர்ந்ததையும் கூறி முடித்தாள்.
அவளின் கூற்றைக் கேட்ட சிலர், ‘சொந்த மகளைக் கொன்றாவது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மனிதர்கள்
இருக்கிறார்களே…’ என்று நினைத்தனர்.
ஆனால் சிலரோ, அதிலும் ஏதாவது தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என்பதற்காக கேள்விகளை அடுக்கத் துவங்கினர்.
“இதை நிரூபிக்க இவ்ளோ பெரிய டிராமா தேவையா..?” என்று நக்கலாக ஒருவர் கேட்க, “உங்களுக்கு வேணா இந்த திட்டங்களும்
அதில் செய்யப்படுற ஊழல்களும் ஜஸ்ட் அ நியூஸா இருக்கலாம்… ஆனா பலருக்கு இது தான் அவங்க வாழ்க்கையைத் தீர்மானிக்க
கூடிய அடித்தளம்…” என்று சூடாக பதிலளித்தாள்.
மேலும், “இதுவரைக்கும் உங்க சேனல்ல வந்த ஆதாரங்கள் இதுவரைக்கும் அவர் செய்த ஊழல்கள் தான். இதோ இப்போ உங்களுக்கு
காண்பிக்க போற ஆதாரம், ‘பசுமைத் திட்டம்’ங்கிற பெயர்ல, நம்ம நாட்டோட வளங்களை அழிக்குறதுக்காகவே
செயல்படுத்தப்படப்போற திட்டத்தோட காபி. இதை பற்றிய விளக்கங்களை பாலா சொல்வாரு…” என்றவள் கண்களாலேயே பாலாவை
அழைத்தாள்.
முதலில் தயங்கினாலும், தான் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், பத்திரிக்கையாளர்களின் முன்னால் நின்றான்.
ஒரு பெருமூச்சுடன், அத்திட்டத்தை பற்றியும் அதற்காக அவர்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்போகும் செடியைப்
பற்றியும் கூறத் துவங்கினான். இடையிடையே அதைப் பற்றி இரவோடிரவாக தான் சேகரித்து வைத்த தகவல்களையும்
கூறினான்.
இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்த அதிர்ச்சிகளால், பத்திரிக்கையாளர்களே அரண்டு தான் போயினர். அதுவும் இப்போது பாலா
கூறியவற்றை வைத்து பார்த்தால், அத்திட்டம் மட்டும் செயல்படுத்தப் பட்டிருந்தால், இன்னும் இரண்டு வருடங்களில்
நாடே பஞ்சத்தில் அல்லவா வீழ்ந்திருக்கும்.
“நீங்க சொல்றதை நாங்க எப்படி நம்புறது..? நீங்க என்ன பையாலஜிஸ்ட்டா…” என்பன போன்ற கேள்விகளும் வரத்தான்
செய்தன.
அதற்கு சிரித்தவன், “நாங்க ஒன்னும், அரசியல்வாதிங்களை நம்புற மாதிரி, நாங்க சொல்றதையும் கண்மூடித்தனமா நம்ப
சொல்லல… இதைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தனும்… அந்த ஆராய்ச்சியோட எல்லா நிலைகளும், அதோட முடிவுகளும் மக்களுக்கு
காட்டப்பட்டு, பொதுமக்களோட அனுமதி இருந்தா மட்டும் தான் அதை செயல்படுத்தணும்னு தான் நாங்க சொல்ல வரோம்.”
என்றான்.
பாலா பேசப் பேச அவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. பலரும் அதை தங்களின் முகநூல், ட்விட்டர்
பக்கங்களில் பகிர்ந்தனர்.
அந்த தகவல் அங்கிருப்பவர்களுக்கும் தெரிய வர, “உங்க ஸ்பீச் தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு… நிறைய இளைஞர்கள் இதை
பகிர்ந்துட்டு வராங்க… இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க..?” என்றார் ஒருவர்.
“இதைப் பகிர்வது, நிறைய பேருக்கு இதைக் கொண்டு போய் சேர்க்குறது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா நம்மகிட்ட இருக்க
கெட்ட பழக்கம், எவ்ளோ சீக்கிரம் இதை பகிர்கிறோமோ, அவ்ளோ சீக்கிரம் மறந்தும் போயிடுவோம். எங்க, போன வாரம்
ட்ரெண்டிங்லயிருந்த சமூக சார்ந்த விஷயத்தை இப்போ யாரு பேசிட்டு இருக்கான்னு சொல்லுங்க பார்ப்போம்… பகிர்வது
மட்டும் வெற்றியை கொடுத்துடாது, அதுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கிறதுலதான் உண்மையான வெற்றி இருக்கு… இப்போ நாங்க
போட்டிருக்குறதும் தீர்வுக்கான விதையை தான். அது முளைச்சு மரமாகுறதும், மண்ணோட மக்கிப் போறதும் பொது மக்களான
உங்க கைல தான் இருக்கு…” என்றான் பாலா.
“உங்க கருத்து என்ன..?” என்று தேஜுவைக் கேட்டதும், “எந்தவொரு திட்டத்தையும் கண்மூடித்தனமா வரவேற்கவோ எதிர்க்கவோ
செய்யாதீங்க… அதைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கோங்க… ஏன்னா இன்னைக்கு செயல்படுத்தப்படுற இந்த திட்டம் உங்களோட
முடிஞ்சுபோறது இல்ல. உங்க அடுத்த தலைமுறைக்கு நீங்க கொடுக்கப்போறது. அது வரமா இல்ல சாபமான்னு முடிவு பண்ண
வேண்டிய நிலைல நீங்க இருக்கீங்கங்கிறதை புரிஞ்சுக்கோங்க…” என்றாள்.
பாலாவின் வீடு…
பாலாவின் பேச்சைக் கேட்ட அவனின் தந்தைக்கு மனதிற்குள் உறுத்தியது. அவனின் பேச்சிலேயே, விவாசயத்தை அவன் எவ்வளவு நேசிக்கிறான் என்பது அவருக்கு விளங்கியது. அவரின் முகத்தைக் கண்டே அவரின் மனநிலையை யூகித்த அவரின் மனைவி, “என்னாச்சுங்க..?” என்றார்.
“நம்ம பையனோட கனவை நானே அழிச்சுட்டேனோ…” என்றார் கவலையுடன்.
“அவன் நம்மள மாதிரி கஷ்டப்படக்கூடாதுன்னு தான விவாசயம் படிக்க வேணாம்னு சொன்னீங்க… விடுங்க அவன் புரிஞ்சுப்பான்…” என்று மனைவியாய் கணவரை தேற்றினார்.
“என் பையன் நல்லா சம்பாதிக்கிறான்னு பெருமையா சொல்ல நினைச்சேனே தவிர, அவன் நிம்மதியா இருக்கணும்னு நினைக்கலையே…” என்று வருந்தியவர், “அவனை வீட்டுக்கு வர சொல்லு… இனி அவன் விவசாயம் பார்க்குறேன்னு சொன்னாலும் சரி தான்னு சொல்லிடு… என் பையன் ஊருக்கே சோறு போடுற விவசாயின்னு சொல்லி பெருமை பட்டுக்குறேன்…” என்று சந்தோஷமாக பேசினார். “அவன் அப்படியே எங்க அப்பா மாதிரி டி…” என்ற அங்கலாய்ப்பு வேறு…
தேஜுவின் மாமா வீடு…
“என் பேத்தியை பார்த்தியா டா… அவ அம்மாக்கு நீதி வாங்கி குடுத்துட்டா…” என்று கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த தேஜுவின் பாட்டியை ஆதரவாக பிடித்துக் கொண்டார் அவளின் மாமா. நெடுநாட்களாக நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருந்ததிலிருந்து விடுபட்ட உணர்வு அக்குடும்பத்தினருக்கு… ஆவலுடன் பேத்தியின் வரவுக்காக காத்திருந்தது அக்குடும்பம்…
மாநிலத்தையே உலுக்கிய சம்பவத்தின் காரணகர்த்தாவாகிய இருவரும், பரபரப்பு சூழலிலிருந்து வெளி வந்து, அந்த ரோட்டோர தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தனர்.
இருவரும் அங்கிருந்து வந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவ்வப்போது அவர்களின் கண்கள் மட்டுமே மோதிக் கொள்ள, இதழ்கள் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டன.
சுடச்சுட தேநீரை கொடுத்த அந்த கடையின் உரிமையாளர், இவர்களை கண்டுகொண்டவராக, “தம்பி, செமயா பேசுனீங்க…” என்று ஆரம்பித்து அவருக்கு தெரிந்த அரசியல் புலமையை எடுத்து விட்டார்.
முதலில் அவர் கூறுவதை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன், சற்று நேரத்திலேயே நெளிய ஆரம்பித்தான். அவனின் செய்கைகளைக் கண்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவள், சில நிமிடங்களுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்.
ஜில்லென்ற மாலை நேரக் காற்று அவளைத் தழுவிச் செல்ல, அதற்கு தோதாய் சூடான தேநீரை விழுங்கியபடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அவளின் யோசனையை கலைப்பது போல் வந்து சேர்ந்தான் பாலா. “ஓய் என்ன அவருக்கிட்ட மாட்டிவிட்டுட்டு, இங்க வந்து என்ன சீரியஸா யோசிச்சுட்டு இருக்க…” என்றான்.
அவனை நோக்கி இதழ் மடித்து சிரித்தவள், “எங்க போனாலும், உனக்குன்னு இப்படி யாராவது மாட்டிடுறாங்க…” என்றாள்.
“அது அப்படி தான்…” என்று சமாளித்தவன், “என்ன யோசிச்சுட்டு இருந்தன்னு கேட்டேன்… அதுக்கு பதிலே காணோம்…” என்றான்.
“ஹ்ம்ம் அந்த பஸ் பயணத்தைப் பத்தி தான் யோசிச்சேன்… ஒரு வேளை அன்னைக்கு நீ அந்த பஸ்ல வரலனாலோ, எனக்கு முன்னாடியே வேற பஸ்ல ஏறி போயிருந்தாலோ, என்ன ஆகிருக்கும்னு யோசிச்சேன்… மேபி அவங்க பிளான் போட்ட மாதிரி இந்நேரம் என்னை கொன்னுருப்பாங்கல…” என்றவளின் பேச்சு செல்லும் திசையறிந்து, “ப்ச்… இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற…” என்றான் சற்று எரிச்சலுடன்.
அவனின் எரிச்சலை கண்டுகொண்டவள், “ம்ம்ம் அப்பப்போ இரிடேட் பண்ணாலும், நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கேல… அதான் தேங்க்ஸ் சொல்லலாம்னு யோசிச்சேன்…” என்றாள் சிரிப்புடன்.
அவளின் கிண்டல் புரிந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “இப்பயாச்சும் ஐயாவோட ஹெல்ப்பிங் மைண்ட் புரிஞ்சுதே…” என்று சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டான். “அப்பறம்… இனி என்ன பிளான்…” என்று மெதுவாகக் கேட்டான்.
அவன் கேட்க வருவது புரிந்தாலும், தலைவனுக்கு இணையான தலைவியாக, புரியாத மாதிரியே காட்டிக் கொண்டு, “பிளான் எதுவும் இல்ல… மாமா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் தங்கிட்டு பாட்டி கூட மதுரை போனா, திரும்ப ரொட்டின் ஒர்க் தான்…” என்றாள்.
‘புரியாத மாதிரியே பேச வேண்டியது…’ என்று மனதிற்குள் அலுத்துக் கொள்ள, அதற்குள் அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஆம் தேஜு பெங்களூரில் உள்ள அவளின் மாமா வீட்டிற்கு செல்கிறாள். அவளைப் பேருந்தில் ஏற்றி விடவே பாலா அவளுடன் வந்துள்ளான்.
‘ஐயோ அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு… இப்போ விட்டா எப்போ கேக்க…’ என்று மனதிற்குள் அலறியவன், “கல்யாணம் பத்தி என்ன பிளான்…” என்று அவசரமாக அவளிடம் கேட்டான்.
தேஜுவோ மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், “எனக்கு ஒரு பிளான்னும் இல்ல… எல்லாம் பாட்டியோட முடிவு தான்…” என்று தோளைக் குலுக்கி கூறினாள்.
“இவளைக் கரெக்ட் பண்றதுக்கு பதிலா இவ பாட்டியைக் கரெக்ட் பண்ணிருக்கலாமோ…” என்று அவன் முணுமுணுத்தது அவளிற்கும் கேட்டது.
சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியவள், பேருந்தில் அவளின் இருக்கையில் சென்று அமர, அவளின் இருக்கைக்கு அருகிலிருந்த ஜன்னலிற்கு வெளியே நின்றவனின் முகம் போன போக்கில், அவன் மீது இரக்கம் சுரந்தது தேஜுவிற்கு.
“ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு…” என்று அவன் முகம் பார்த்து நிறுத்தினாள்.
‘க்கும் கண்டிஷன் வேறயா…’ என்று நொந்து கொண்டே அவளைப் பார்த்தான் பாலா.
அவள் முகமோ புன்னகையில் விகசிக்க, “எனக்கு ஹஸ்பண்டா வரணும்னா அவன் விவசாயியா தான் இருக்கணும்…” என்று கண்ணடித்துக் கூறினாள்.
முதலில் சரியாக கவனிக்காதவன், அவளின் கூற்று மூளைக்குள் சென்று நரம்புகளை தூண்ட, ஒருவித உற்சாகத்துடன் தலை நிமிர்ந்தான். அதற்குள் அந்த பேருந்து நகர ஆரம்பிக்க, அதனுடனேயே நகர்ந்தவன், “இப்போ என்ன சொன்ன..?”என்று அவளிடமே வினவினான்.
“சீக்கிரம் வந்து பொண்ணு கேளுன்னு சொன்னேன் டா லூசு…” என்றாள் தேஜு.
“நாளைக்கே வரேன் டி…” என்று பாலா கத்த, தேஜுவோ வெட்கத்தை மறைப்பதற்காக தலையிலடித்துக் கொண்டாள்.
விதி அவர்களை ஒன்றிணைக்க, அவர்களின் பயணத்தை பகடையாக்கியது. அதில் உண்டான மாற்றங்கள் இருவருக்குமே அவர்கள் விரும்பியவாறே வாழ்க்கையை மாற்ற உதவின.
பாலா, அவனின் கனவான விவசாயத்தில் தன் முதல் படியை எடுத்து வைக்க திட்டங்களை அவனின் தந்தையின் உதவியுடன் தீட்டினான். விவசாயத் துறை, அவனின் சாதனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
‘தவறு செய்தது தந்தை என்றாலும் அவருக்கு தண்டனை பெற்று கொடுத்தாள்’ என்று பலரும் தேஜுவை பாராட்ட, இவ்வளவு நாட்கள் அவள் சந்தித்து வந்த அவமானங்கள் எல்லாம் நீங்கி, புதிதாக பிறந்தவள் போல் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழிக்கிறாள் தேஜு.
அதே பேருந்து பயணம் தான், பாலாவிற்கு தேஜுவையும், தேஜுவிற்கு பாலாவையும் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றியுள்ளது.
இதே போல் தான், நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏதோ ஒரு சிறு மாற்றம், நம் வாழ்க்கை பயணத்தின் வழியையே மாற்றும் வல்லமை படைத்தது. அம்மாற்றத்திக்காக நாமும் காத்திருப்போம்.
மாற்றம் ஒன்றே மாறாதது!
பயணம் முடிவுற்றது...
கருத்துகள்
கருத்துரையிடுக