மதுரைக் காஞ்சி


சங்க கால நூல்கள்

Back

மதுரைக் காஞ்சி
மாங்குடி மருதனார்



maturaikkAnjci of mangkuTi marutanAr
(work in pattuppATTu anthologies) (in Tamil Script, TSCII format)

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான
மதுரைக் காஞ்சி

------
    பாடியவர் :: மாங்குடி மருதனார்
    பாடப்பட்டவன் :: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
    திணை :: காஞ்சி
    பாவகை :: ஆசிரியப்பா
    மொத்த அடிகள் :: 782
-----------------------

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
விய னாண்மீ னெறி யழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் . . .10

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு
கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு . . .20

நல் லூழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்
இணை யலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி . . . .30

சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு
நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின் . . .40

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந
விழுச் சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும் . . .50

வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்
பொரு தவரைச் செரு வென்றும்
இலங் கருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பே ருதவிப் . . . .60

பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின்
நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல் . . . .70

குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை
வானி யைந்த இரு முந்நீர்ப்
பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப் . . . .80

பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத்
தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்றத் . . . .90

தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும்
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்
பரதவர் மகளிர் குரவைய டொலிப்ப
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்
முழவுத் தோள் முரட் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின் . . . .100

இரு பெயர்ப் பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே!
கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை . . .110

புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும்
வியன் மேவல் விழுச் செல்வத்து . . . .120

இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கா லென்னக் கடிது ராஅய்
நாடு கெட எரி பரப்பி
ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்தே . . . .130

நட்டவர் குடி யுயர்க் குவை
செற்றவர் அரசு பெயர்க் குவை
பேரு லகத்து மேஎந் தோன்றிச்
சீரு டைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இருஞ் சேரிக்
கட் கொண்டிக் குடிப் பாக்கத்து
நற் கொற்கை யோர்நசைப் பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் . . .140

கோழூ உன்குறைக் கொழு வல்சிப்
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு
உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து . . .150

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய
நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப . . .160

அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின்
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக் . . .170

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப்
பாழா யினநின் பகைவர் தேஎம்
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையடு . . .180

முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார்ப்பப்
பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி . . .190

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . .200

பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை
தவாப் பெருக்கத் தறா யாணர் . . . .210

அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ . . .220

மறங் கலங்கத் தலைச் சென்று
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்
சூ டுற்ற சுடர்ப் பூவின்
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார் . .230

பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் . . .240

கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல் . . . .250

வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே . . .260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப்
புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச் . .270

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கட் பிணையடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து . . .280

சுரிமுகிழ் முசுண்டையடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் . . .290

தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல்
கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும்
இலங்குவெள் ளருவியடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து . . .300

அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து
அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ளி . . .310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் . . .320

விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவிய டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு
ஐம்பால் திணையுங் கவினி யமைவர
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப் . .330

பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்
கலை தாய உயர் சிமையத்து
மயி லகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின்
இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும் . . .340

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங்
கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று . . .350

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப . . .360

மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச்
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையடு .
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப் . . .370

புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து . . .380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும்
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத் தாதி போகிய . . . .390

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர்
பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் . . .400

நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்
மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை . . .410

செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் . . .420

புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பலை . . .430

வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக்
கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக் . . .440

காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை
அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்
திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப . . .450

நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்கத் . . .460

திண்கதிர் மதாணி யண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி . . .470

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து . . .490

ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அறநெறி பிழையா தாற்றி னொழுகி . . .500

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழையழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் . . .510

கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயு மாக்களும்
எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் . . .520

சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி . . .530

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர
வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம் . .540

இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த் . . .550

தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து . .560

வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப்
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து . . .570

சேயரு நணியரு நலனயந்து வந்த
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து
பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி . . .580

நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப்
பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் . .590

மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக்
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து . . .600

பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி
நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப ஒருசார் . . .610

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . .620

பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருருப் புற்ற ஆடமை விசயங்
கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் . . .630

பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொ·றேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் . . .640

நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் . . .650

கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங்
கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் . . .660

பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய
ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல . . . .670

வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப்
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த . . .680

பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப
இரவுத்தலைப் பெயரு மேம வைகறை
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக் . . .690

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ . . .700

ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற்
சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்று
இலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து
மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் . . .710

தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு
மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியடு சுடர்வரச் . .720

சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன உருவினை யாகி
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் . . .730

நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெ·கமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து . . .740

வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்
பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோருந் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென . . .750

இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந் தோறும் கள் ளரிப்ப
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய
நெய் கனிந்து வறை யார்ப்பக்
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய . . . .760

தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி
அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் . . .770

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் . . .780

மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.

----------------------

மதுரைக்காஞ்சி முற்றிற்று

.----------------------




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III