ஏப்ரல் - 1919 பஞ்சாப் படுகொலை
வரலாறு
Back
ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
வெ. சாமிநாத சர்மா
1. ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. அணிந்துரை
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. சர்மாவின் பொன்னுரைகள்…….
6. நுழையுமுன்
7. பதிப்புரை
8. ஒரு மொழி
9. முகவுரை
10. ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
11. I பாஞ்சால நாடு
12. II பஞ்சாபின் ஆட்சி முறை
13. III ரௌலட் சட்டமும் சத்தியாக்கிரகமும்
14. IV பஞ்சாப் மாகாணமும் இராணுவச் சட்டமும்
15. V சில கோரமான சாட்சியங்கள்
16. அநுபந்தம் - 1
17. கணியம் அறக்கட்டளை
ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 21
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2007
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+ 192=208
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : 130/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற் கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித் தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002, ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி
டோரதி கிருஷ்ணமூர்த்தி
சர்மாவின் பொன்னுரைகள்…….
- மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.
- பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.
- உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.
- பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.
- மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.
- தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.
- உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.
- ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.
- கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.
- ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.
- எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.
- நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.
- விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.
நுழையுமுன்
ஏப்ரல் 19 அல்லது பஞ்சாப் படுகொலை என்னும் இந்த நூலை முழுமையாகப் படித்தபிறகு என் நெஞ்சில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டது. என் கண்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இந்த நூலுக்கு தனியொரு பதிப்புரையை உயிர் உரையாக எழுதியுள்ளேன். பழமையின் இருப்பிடமாகவும், அறிவின் உறைவிடமாகவும் , வீரத்தின் விளைநிலமாகவும், வளமையின் வாழ்விடமாகவும், செங்கோலும் அறக்கோலும் அரசோச்சிய இடமாகவும், வற்றாத ஆறுகளின் பிறப்பிடமாகவும், நீர்வளமும் நிலவளமும் குறையாத இடமாகவும், இந்தியத் தேசியப் பேரியக்கத்தை போர்க்குணம் மிக்க இயக்கமாக மாற்றிய மாநிலமாகவும், ஈகத்தின் சுமையைத் தூக்கிச் சுமந்த மாநிலமாகவும் திகழ்வது பஞ்சாப் மாநிலம். இந்த மண்தான் இந்திய விடுதலையின் வெளிச்சத்தை உலகத்தின் கண்களுக்கு காட்டிய மண். இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இளம் தலைமுறைக்கு ஊற்றுக்கண்ணாக திகழ்ந்த மண். இந்த மண்தான் இந்திய வரலாற்றில் ஒரு பொன்னேடாகவும், கால ஓட்டத்தில் கரையாத பாறை ஓவியமாகவும், வீரம் பாடும் சொல்லோவியமாகவும், கற்பனைக்கெட்டாத வீரச் செயல்களின் விரிவுரையாகவும், இந்திய இளையர்களின் வீர உணர்ச்சிக்கு அழிக்க முடியாத எடுத்துக் காட்டாகப் பிறந்து, வாழ்ந்து, மடிந்த பகத்சிங் பிறந்த மண்ணாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளிய பேராற்றல் மிக்க போர் மறவனாகவும், தேடற்கரிய நாட்டுப் பற்றாளனாகவும், மக்கள் ஆற்றலை இனங்கண்டு போராட்டக் களத்தை இந்தியப் பெருநிலம் முழுதும் வளர்த்தெடுத்துப் புரட்சி இயக்க வரலாற்றை முன்னெடுத்த மாவீரன் பிறந்த மண்.
இந்நூல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை உலக மக்களுக்குக் கண்ணாடியாக காட்டும் நூல். இந்நூலின் முகவுரையில் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் குறித்துள்ள செய்திகள் படிப்பவர் கண்களைக் கண்ணீரில் மிதக்கவிடும். 1914இல் நடைபெற்ற அய்ரோப்பிய போரில் இந்தியர்கள் சிந்திய இரத்தம் ஐரோப்பிய நிலப்பரப்பைச் செம்மண் ஆகிய செய்தியும், பஞ்சாப் மக்களிடம் புகைந்துகொண்டிருந்த வெறுப்பு நெருப்பாக மாறிய வரலாறும், ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டங்கள், ஆள்தூக்கி சட்டம், அரசு எதிர்ப்புக் கூட்ட அடக்குமுறைச் சட்டம், அச்சுச் சட்டம், இந்திய பாதுகாப்புச் சட்டம், ரௌலட் சட்டம் முதலிய சட்டங்களால் இந்தியப் பெருநிலம் நிலை குலைந்த வரலாறும் இந்த நூலின் வழி அறியத் தக்கச் செய்திகளாகும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் அவலங்கள் இந்திய விடுதலையை முன்னெடுத்த இளம் போராளிகளின் உள்ளத்தில் பெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தின. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தன் உயிரினும் மேலாகக் கருதிய இளைஞர் உலகம் மற வழிப் போராட்டத்தைக் கையிலெடுத்து இந்திய விடுதலையை உந்தித் தள்ளிய வீரச் செய்திகளும் இந்த நூலில் பொதிந்து கிடக்கின்றன.
தமிழ் இளைஞர்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைப் படித்தறியும் அதே நேரத்தில் மாந்த இனமே தலைகுனியத் தக்கக் குருதிக் கறை படிந்த பஞ்சாப் படுகொலை பற்றிய இந்த நூலை வாங்கிப் படியுங்கள். உலகெங்கும் உள்ள நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் உரிமைக்காக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் இந்த நேரத்தில் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இவ்வீர வரலாற்று நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
கோ. இளவழகன்
பதிப்புரை
உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்.
சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் அரசியல் வரலாற்று நூல்கள் 14. இந்நூல்களை 6 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி
யுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
பதிப்பாளர்
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
ஒரு மொழி
இந்திய நாட்டின் வீரத்திற்கு ஊற்றுக்களமாயிருந்த சிந்து பிரதேசம், சென்ற ஆண்டு, அல்லற்பட்டதை இந்தியராகப் பிறந்த எவரும் எப்பொழுதும் மறக்கமாட்டார். சென்ற ஆண்டு நடைபெற்ற சம்பவமானது பிற்கால சரித்திரக்காரருக்குப் பெரிய வேலையை வைத்துவிட்டது. இவர், இவ்வேலையை நடுநிலை குன்றாது முடிக்கவேண்டுமென்பதே எனது வேண்டுகோள்.
ஸர் மைக்கல் ஓட்வியரின் ஆட்சி முறையும், ஜெனரல் டையரின் கொடுஞ்செயலும், கர்னல் ஜான்ஸனின் அநாகரிக உத்தரவுகளும், காப்டன் டவ்டன் போன்ற சிறு உத்தியோகதர்களின் மிருகத்தன்மையான தண்டனைகளும் நாகரிக உலகத்தை நடுக்குறச் செய்திருக்கின்றன. பஞ்சாபில் சென்ற வருடம் நடைபெற்ற சம்பவங்களையும், மேற்கூறப்பட்ட உத்தியோகதர்கள் அநுசரித்த முறைகளிற் சிலவற்றையும் நான் ஒருவாறு சுருக்கி இச்சிறு நூலில் எழுதியிருக்கின்றேன். இந்நூல் ஒருதலைச் சார்பானதன்று; ஒருவருடைய கூற்றின் மொழிபெயர்ப்பன்று. பஞ்சாப் சம்பவங்களைப் பற்றிப் பலர் பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர். ஒவ் வொருவருடைய கூற்றையும் இதில் எடுத்துக்காட்டி, என்னாலியன்ற வரை நடுநிலை வழாது எழுதியிருக்கின்றேன். கூடியவரை, இந்நூலில் என் அபிப்பிராயத்தை அதிகமாகக் கூறாமல் விடுத்திருக்கிறேன். மற்றும், காங்கிர கமிட்டியாரும், ஹண்டர் கமிட்டியாரும் இக் குழப்பங்களில் சம்பந்தப்பட்ட உத்தியோகதர்களைப் பற்றி என்ன அபிப்பிராயங் கூறு கின்றனர் என்பதை இச்சிறு புத்தகத்தில் நான் எடுத்துக்காட்டவில்லை. நடைபெற்ற விஷயங்கள் ஒருவாறு தொடர்ச்சியாகக் கூறி, படிப்பவர்கள் தங்கள் மனநிலைக்குத் தக்கவாறு இக்குழப்பங்களைப் பற்றியும் இதில் கலந்திருந்த உத்தியோகதர்களைப் பற்றியும் அபிப்பிராயம் கொள்ளட்டும் என்பதே என்னுடைய நோக்கம். மற்றும், ஒரு சரித்திரக்காரனுடைய கடமை, நடந்த விஷயங்களை விளக்கிக் கொண்டு செல்வதேயன்றி, படிப்பவருடைய அபிப்பிராயத்தைத் தன் நோக்கத்திற்கிணங் கியவாறு கட்டுபடுத்தலன்று. ஆகலின், விஷயங்களை உள்ளது உள்ளவாறு கூறிவிட்டேன். தமிழுலகம், இக்குழப்பங்களைப்பற்றியும் இதில் சம்பந்தப்பட்ட உத்தியோகதர்களைப் பற்றியும் தக்க அபிப்பிராயம் கொள்ளுமென்று எண்ணுகிறேன்.
இந்நூல் இறுதியில் ஒரு சிறு அநுபந்தம் சேர்த்துள்ளேன். இது முழுவதும் எழுதப்பட்டதே யெனினும் பல காரணங்களை முன்னிட்டு ஒரு பாகமே இதில் சேர்த்துள்ளேன். அதிகாரிகள் முதன் முதலில் தங்கள் ஆயுதபலத்தை உபயோகிப்பதற்கு முன்னர், ஜனங்கள் எவ்வளவு அமைதியுடன் கிளர்ச்சி செய்து வந்தார்கள் என்பது இதனால் நன்கு புலனாகும். மற்றும் இந்நூலில் ஹார்டல் என்பதற்கு விரதக்கொண்டாட்டம் என்றே உபயோகித்திருக்கிறேன். ஹார்டல் என்னும் மொழிக்குச் சரியான பொருள்கூற முடியவில்லையே யாயினும் கதவடைப்பு கடையடைப்பு ஹார்தால் வேலைநிறுத்தம் போன்ற பொருள்களைவிட விரதக் கொண்டாட்டம் என்பது கூடியவரையில் அம்மொழிக்குரிய பொருளைக் கொடுக்கும் என்று எண்ணுகிறேன்.
இந்நூலை, யான் முதலில் எண்ணியபடி எழுதிவெளியிட இயலாமை குறித்துப் பெரிதும் வருந்துகிறேன். எனக்கேற்பட்ட பலவித தொல்லைகளால் இந்நூலின் மேலழகையும் உள் அங்கங்களையும் குறைக்க நேரிட்டது. இஃதெனக்குப் பெரிய வருத்தத்தைத் தருகிறதெனினும், காலத்தையும் பிற சௌகரியங்களையும் முன்னிட்டு இவ்வமைப்புடன் இப்புத்தகத்தை வெளியிடத் துணிந்தேன்.
இந்நூல் என் மூலமாக வெளிவருவதற்கு ஆதிகாரணர் ஸ்ரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள். இவர்கள் எனக்கு இந்நூல் சம்பந்தமாகக் கணக்கிலடங்கா உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவை ஒன்றிரண்டாயிருப்பின் அவைகளுக்காக என் நன்றியைச் செலுத்திக் கொள்ளலாம். எவ்வித அடைமொழிகட்கும் அடங்கா அப்பெரியார், என் பால் மனமுவந்து செய்தருளிய உதவிகளுக்கு, அவரிடத்து நான் எழுமையும் கடமைப்பட்டுள்ளேன். இவர்களைப் பற்றி அதிகமாகக் கூறுவதை என் சிறிய எழுதுகோல் கொண்டுள்ள நடுக்கமும், தம்மைப் பற்றி அதிகமாகக் கூறினால் கடிந்துகொள்ளப் போகின்றனரே என்ற அச்சமும், அவரைப்பற்றி ஒன்றுக்கும் உதவாத சிறியேன் கூறுவது பொருந்துமோ என்ற ஐயமும் என்னை இத்துடன் நிறுத்துகின்றன. ஸ்ரீமான் முதலியாரவர்கள், இச்சிறு புத்தகத்திற்கு எழுதியுள்ள முகவுரையை ஒவ்வொரு தமிழரும், ஒவ்வோர் இந்தியரும், மனித உருக்கொண்ட ஒவ்வொருவரும் படிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்களுடைய சிபாரிசுக் கடிதத்திற்கிணங்கி சென்னை அட்வகேட் ஜெனரலாயிருந்த ஸ்ரீமான் எ. சீநிவாச ஐயங்கார் அவர்கள் இந்நூலுக்கென்று இருநூறு ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். அன்னாருடைய வள்ளற் றன்மைக்கும், வேண்டியவுடன் யாதொரு தடையுமின்றி உதவிய மாசற்ற மனத்திற்கும் நான் எத்தகைய கைம்மாறு செய்யவல்லேன்? என் மனமார்ந்த நன்றியையே செலுத்த நான் தற்போழ்து அருகனாயுள்ளேன்.
மற்றும் இந்நூல் இனிது முடிவதற்கு என்னுடன் எப் பொழுதும் இருந்து தம் தேகநலத்தையும் பிற சௌகரியங்களையும் பொருட்படுத்தாது உதவிய என் உயிரனைய நண்பர் ஸ்ரீமான் கீழ்வீதி பிரயாகை சேஷாத்திரி ஐயங்கார் அவர்களுக்கு யான் எத்தகைய வந்தனத்தை, எத்தகைய நன்றியைச் செலுத்த உரிமையுடையேன்? இவர்களுடைய உதவியும் முயற்சியும் இன்றேல், இந்நூல் இதுகாலை தலைகாட்டியிராதென்பது திண்ணம். இவர்களுக்கு என் நன்றியைச் செலுத்தும் இடம் இச்சிறு பக்கத்திலன்று; என் உள்ளக் கோயிலிலேயாகும். எனக்கும் இவர்களுக்கும் உள்ள நட்புரிமை இன்னும் ஏழேழு பிறப்புக்கும் விட்டு நீங்கக் கூடாதென்று யான் ஆண்டவனை வேண்டிக்கொள்வதே இவர்களுக்கு நான் செலுத்தும் நன்றியாகும். இதனை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
ரௌலட் மசோதா இரவிலேயே சட்டமாக்கப்பட்டதுபோல், இந்நூலும் இரவிலேயே எழுதப்பட்டு, இரவிலேயே அச்சாகி, இரவிலேயே பிழைதிருத்தப்பட்டு, இரவிலேயே - இல்லை - பகலிலேயே வெளிவந்தது. ஆதலின் ரௌலட் சட்டத்திலுள்ள கொடுமை இந்நூலில் இராதென்று நினைக்கின்றேன். இரவிலேயே இப்புத்தக வேலை நடை பெற்றமையாலும் என் உத்தியோக அயர்வினாலும் இதில் பல பிழைகள் பொதுளியிருப்பதை நான் நன்கறிவேன். அவைகளுக்காக என்னைப் பெரிதும் மன்னிக்கும்படி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
-வெ. சாமிநாதன்.
முகவுரை
ஏப்ரல் 1919 என்னும் இப்பெயர் வாய்ந்த இந்நூலுக்கு முகவுரை வரையுமாறு, இந்நூலையாத்த எனது நண்பர் ஸ்ரீமான் வெ. சாமிநாத சர்மாஅவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். இந்நூலின் உள்ளுறை பஞ்சாப் படுகொலையைப் பற்றியதே யாகும். பஞ்சாப் படுகொலையைப் பற்றிக் காங்கிர சப் கமிட்டியார் வெளியிட்ட அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்ப்பித்துத் தேசபக்தன் லிமிடெட் கம்பெனியார் வெளியிட்ட நூலுக்கும் நான் முகவுரை எழுதியிருக்கிறேன். அந்நூலுக்கு முகவுரை வரைந்த நான், அந்நூற் பொருளையே தாங்கியுள்ள இந்நூலுக்கும் நூன்முகம் வரைய ஒருப்பட்டதன் காரணமென்ன என்று சிலர் வினவலாம். பஞ்சாப் படுகொலையைப்பற்றி எத்துணை நூல்கள் வெளிவரினும், அத்துணை நூல்களுக்கும் நல்வரவு கூற என் மனம் எழுச்சி கொள்ளும்; அவைகளுக்கு நூன்முகம் எழுத என் கையும் சலிப்புறாது. தேசபக்தன் லிமிடெட் கம்பெனியார் வெளியிட்ட பஞ்சாப் படுகொலையைப் பற்றிய நூல் காங்கிர சப் கமிட்டியார் வெளியிட்ட அறிக்கையின் மொழி பெயர்ப்பாகும். இந்நூல் அவ்வறிக்கையின் மொழி பெயர்ப்பாக இலங்குவதன்று. இந்நூலைப் பஞ்சாப் படுகொலையைப் பற்றிய சரித்திரம் என்று கூறலாம். இந்நூலாசிரியர், காங்கிர சப் கமிட்டியார் எடுத்த சான்றுரைகள், அன்னார் அறிக்கை, ஹண்டர் கமிட்டியார் எடுத்த சான்றுரைகள், அவர் அறிக்கை ஆகிய இவைகளை நன்கு ஆய்ந்து, அவைகளின் நுண்பொருள்களை உளங்கொண்டு, படிப்போர் உள்ளத்தில் பொருள் படிப்படியாகச் செவ்வனே பதியுமாறு சரித வடிவமாகத் தெள்ளிய தீந்தமிழால் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலின் போக்கும், அந்நூலின் போக்கும் வேறுபடுவதென்பதை ஈண்டுக் குறிப்பிடு கிறேன். இந்நூல், பஞ்சாப் படுகொலைப் பொருளைக் கருத்துட்கொண்டு, சொந்தமாக எழுதப்பட்டது; மொழி பெயர்ப்பு நூலன்று. ஆதலால் இந்நூலுக்கும் முகவுரை வரைய ஒருப்பட்டேன். பஞ்சாப் படுகொலை, நாடகமாகவும், புராணமாகவும், கீர்த்தன மாகவும், பரணியாகவும், சிந்தாகவும், பெண்மணி மாலையாகவும், ஏற்றப்பாட்டாகவும், பிற வடிவாகவும் யாக்கப்பட வேண்டுமென்பது எனது கோரிக்கை.
உலகம் இருவகைப்படும். ஒன்று அறிவு உலகம். மற்றொன்று அறியாமை உலகம். இவ்விருலகமும் அநாதியாக உள்ளன. அறிவு உலகம் வளர்ந்து அறியாமை உலகம் தேய வேண்டுமென்பது கடவுளின் நோக்கம். அந்நோக்கங் கொண்டே ஆண்டவன் ஐந் தொழில் புரிந்து வருகிறான். இறைவன் தொழிலால் உலகம் அறிவு மயமாக மாறி வருகிறது. ஆனால் உலக முற்றும் அறிவு வடிவாக மாறுநாள் எந்நாளோ தெரியவில்லை.
இம்மண்ணுலகில் கீழ்நாடு அறிவை விழைந்தும், மேல்நாடு அறியாமையை நாடியும் ஓடுகின்றன. கீழ்நாட்டில் பல பெரியோர்கள் தோன்றி அறிவு உண்மையைக் கண்டு (அறிவு - சித்) தாங்கள் பெற்ற இன்பத்தை ஏனையோரும் நுகருமாறு அருளுரையாகத் தங்கள் அநுபவத்தை வெளியிட்டார்கள். அவ்வறிஞர்கள் உரைகளை வாசிப்போர் அறிவில் அன்பு கொண்டு, எவ்வுயிர்க்குங் கேடு சூழாத அருள் நெறிபற்றி நடக்கமுயல்கின்றனர். கீழ்நாட்டிற்றோன்றிய பெரியோர்கள் அறிவை ஆராய்ச்சி செய்து அறிவு நூற்கள் அருளிச் செய்திருக்கிறார்கள். கீழ்நாட்டுச் சான்றோர்கள் அறியாமை உலகத்தை (அறியாமை - சடம்) ஆராய்ந்து அறியாமை நூல்களைப் பெரிதும் எழுதவேயில்லை. கிருஷ்ணன், புத்தர், திருவள்ளுவர், கிறிது, மகம்மது முதலிய அறிஞர்கள் கீழ்நாட்டிற்றோன்றித் தங்கள் மொழியால் கீழ்நாட்டை அறிவின் கீழ்ப் படுத்திவிட்டார்கள். கீழ்நாட்டு மக்கள், தங்கள் பிறப்பு, கல்வி கற்றல், மணஞ்செய்தல், புதல்வர்ப் பெறுதல், தொழில் புரிதல் முதலிய உலக வாழ்க்கை நெறிகளைப் பேரின்ப வாழ்க்கைக்குப் படியாகக் (சோபானமாக) கொண்டு வாழ்கிறார்கள். கீழ்நாட்டவர் வாழ்க்கை முற்றும் அறிவு வாழ்க்கையாகப் பின்னப்பட்டிருக்கிறது. கீழ்நாட்டவர் முன் அறியாமை- சடம் சூந்யமாகவே கெடுகிறது. இவ்வுணர்வு கொண்டு கீழ்நாட்டவர்கள் வாழ்தலால், அவர்கட்குப் பிற நாடுகளைப் பற்றவும், அந்நாட்டிலுள்ள மக்களை வருத்தவும் விருப்ப மெழுவதில்லை. எவ்வுயிரும் பராபரன் சந்நிதியாகும், இலங்குமுயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் என்ற ஞானம் கீழ் நாட்டவர்களிடைப் பழுத்து நிற்கிறது.
கீழ்நாட்டிலும் அறியாமையுலகத்தை வளர்க்கச் சில அரக்கர்கள் முயன்றார்கள். சூரவர்மன், சிங்கமுகன், தாரகன், இரணியன், இராணியாக்கன், இராவணன், கும்பகர்ணன், துரியோதனன் முதலிய அரக்கர்கள் உலகத்தை அறியாமை வாய்ப்படுத்தி அறிவை மறைக்க ஒல்லும்வகை முயற்சி செய்தார்கள். அவர்கள் முயற்சிகள் யாவும் அறிவின் அவதார மூர்த்திகளின் முன்னர் நிலை பெறாதொழிந்தன. அறிவாற்றலின் முன்னர் அறியாமையின் ஆற்றல் பட்டேவிடும். நமது நாட்டில் பாரத யுத்தத்துக்குப் பின்னர் அறியாமை ஆராய்ச்சியே யொழிந்து அறிவாராய்ச்சியே பெருகிற்று. எல்லோரும் முகத்திற் கண் கொண்டு பார்க்கும் மூடராகாது அகத்திற் கண் கொண்டு பார்க்கும் அறிஞராயினர். மனிதர்களிடமிருந்த விலங்கின் அறிவு குணஞ் செயல் அறவே யொழிந்து, அவர்களிடம் தெய்வ அறிவு குணஞ் செயல் பொலிந்து விளங்கின. எனவே, பாரத யுத்தத்துக்குப் பின்னர்க் கீழ் நாட்டில் ஒரு பெரும் மாறுதல் உண்டாயிற்றென்று கூறலாம். அம்மாறுதலாவது மனிதர்கள் விலங்கின் நீர்மையை யிழந்து, தெய்விக நீர்மையைப் பெற்றதேயாகும். தெய்விக உணர்ச்சி பெற்ற நாட்டவர் நாட்டம், கடவுள் படைப்புக்கு உட்பட்ட சகோதர உயிர்களை வருத்தும் நெறியில் செல்லுமோ?
மேல்நாட்டு நடைமுறையைச் சிறிது ஆராய்வோம். மேல் நாட்டில் இப்பொழுது வாழும் மனிதர்களிடை, இன்னும் கீழ் நாட்டவர் மாட்டுப் பூத்துள்ள தெய்விக அறிவு குணஞ்செயல் அரும்பவில்லை. மேல் நாட்டவர்கள் அறிவு உலகத்தையே மறந்து, அறியாமை உலகத்தை ஆராய்ந்து ஆராய்ந்து, தங்கள் புறவாழ்வின் செழுமையை நாடி வருகின்றார்கள். அவர்களுக்கு, உலகத்துள்ள உயிர்கள் யாவும் தங்கள் சகோதரர்கள் என்ற உணர்ச்சி யின்னுந் தோன்றவில்லை. அவர்கள் ஆராய்ச்சி புறப்பொருளின் மாட்டுச் சிக்குண்டு கிடக்கும்வரை, அவர்களிடை உலக சகோதரத்துவ உணர்ச்சி எவ்வாறு உண்டாகும்? மேல்நாட்டவர் தாம் தாம் வாழும் தேசத்து மனிதர்களிடமே அன்பு செலுத்த வேண்டுமென்ற எண்ணங்கொண்டு வாழ்கின்றனர். அன்னார் தாம் பிறந்த தேசத்தவரிடம் அன்புகாட்ட வேண்டி மற்றைய தேசத்தாரை வருத்தி வருகின்றனர். மேல்நாட்டவர்க்கு உலகத்திலுள்ள மக்களனைவரும் தம் சகோதரர் என்ற உணர்வு இன்னும் உதயமாகவில்லை. இங்கிலாந்து தேசத்தார் தந்தேச நலத்துக்காகப் பெருமுயற்சி செய்கின்றனர்; பல தேசங்களையும் ஆண்டுவருகின்றனர். ஜெர்மானியர் தந்தேசத்தைக் கடவுளாகப் போற்றி அதன் நன்மையை நாடி உலகத்திலுள்ள ஏனைய தேசத்தவர்களை வருத்தவன்றோ ஐரோப்பா யுத்தத்தைத் தொடங்கினர்? இவ்வாறே மேல் நாட்டிலுள்ளவர் தத்தம் தேசத்தார்க்கு நலஞ்செய்ய முற்படுகின்றனர். மேல் நாட்டவர் அன்பு தத்தம் தேசத்தளவாகக் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அக் கட்டுப்பட்ட அன்பு விரிந்து பரந்து மேல்நாட்டில் வளருநாள் எந்நாளோ அந்நாளே உலக சகோதரத்துவ தருமத்துக்கு அடிகோலு நாள். கீழ் நாட்டில் உலக சகோதரத்துவ உணர்ச்சி உண்டாகியும், உலகத்தின் மற்றொரு பகுதியாக உள்ள மேல் நாட்டில் அவ்வுணர்ச்சி தோன்றாமையால், அருள்நெறி வளர்ச்சி முட்டுப் பட்டுக் கிடக்கிறது.
மேல் நாட்டில் தோன்றிய மகாயுத்தம் அந்நாட்டிற்கு நல்லறிவு கொளுத்துமென்று கீழ்நாடு எதிர்நோக்கிற்று. அவ்வெதிர் நோக்கு நிறைவேறவில்லை. மகாயுத்தத்தில் வெற்றி பெற்ற சாதியார் தம் செயலால் உலக சகோதரத்துவ நெறியைச் செப்பஞ் செய்யலாம். அவர் அத்தருமத்துக்கு முற்றும் மாறான செயலையே செய்து வருகின்றனர். ஆதலின் இந்த மகா யுத்தத்தில் அறநெறி பண்படவில்லை. இன்னும் மேல்நாடு அறியாமை உலக வழியே உழன்று கொண்டிருக்கிறது. மேல் நாட்டவருள் தோல்வியுற்றோர் வன்மமும் வெற்றி யடைந்தோர் இறுமாப்புங் கொண்டு வாழ்கின்றனர். சேனைகளைக் குறைக்கவும், ஆயுதங்களை அழிக்கவும், சண்டைக் கப்பல்களைச் சிதைக்கவும், இயற்கைக்கு மாறாகத் தாம் பற்றியுள்ள பிறர் நாடுகளை அவர் வசம் விடுக்கவும் மேல் நாட்டவர் எண்ணங் கொள்கின்றாரோ? இல்லை! இல்லை!! மேல் நாட்டவர் ஆக்கம் வலுத்து வரவர உலகத்தில் அறநெறி குன்றிப்போகும் என்பதில் ஐயமில்லை. கீழ் நாட்டவரோடு மேல் நாட்டார் கூட்டுறவு செய்து வருதலால், கீழ் நாட்டிலும் அன்புநெறி அருகிக் கொண்டு வருகிறது. இன்னுஞ் சின்னாளில் உலகம் மீண்டும் அறியாமை வாய்ப்பட்டு அல்லலுறுமோ என்ற அச்சம் எனக்கு அடிக்கடி நிகழ்வ துண்டு. மேல் நாட்டவர் விலங்கின் அறிவு குணஞ்செயல் பெற்றவராக இருந்தாலும், அன்னார் ஆக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருதலாலும், தெய்வ மணம் வீசப்பெற்ற கீழ் நாட்டிலும் அன்னார் செல்வாக்கு பெற்றிருப்பதாலும், நம் முனிவர்கள் கண்ட அன்புநெறி - அறநெறி - அருள் நெறி - உலக சகோதரத்துவம் பாழ்பட்டு விடுமோ என்ற நடுக்கம் எவருக்குத்தான் உண்டாகாது?
ஐரோப்பா யுத்தம் முடிந்த பின்னர் ஞான பூமியாகிய இந்தியாவிலும் மேல் நாட்டு மிருக சக்தி தாண்டவம் புரிந்தது. பஞ்சாப்பில் படுகொலை செய்த சக்தியை மிருக சக்தி என்று கூறாது வேறென் கூறுவது? சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவு ஒளி கண்ட இந்தியா இப்பொழுது தேகாத்மவாதிகளின் மிருக சக்தியைக் கண்டு வருந்துகிறது.
மேல் நாட்டவருள் இப்பொழுது செல்வாக்கு பெற்றுள்ள சாதியார் பிரிட்டிஷ் சாதியாரேயாவர். அவரே இப்பொழுது இந்தியாவை ஆள்கின்றனர். பிரிட்டிஷ் சாதியார் சுதந்திர நேயர் என்று சொல்லப்படுகின்றனர். சுதந்திர நேயராகிய அன்னார் பிறநாடுகளை எக்காரணம் பற்றிப் பிடித்து ஆண்டு வருகின்றனரோ தெரியவில்லை. எவருக்கும் எவ்வழி யிலுந் தீங்கு செய்யாதிருப்பதே சுதந்தர மூர்த்திகளின் கடமை. பிற தேசங் களைப்பற்றிக் கொள்ளை கொண்டு தமது நாட்டைச் செல்வ நாடாகச் செய்வோர் சுதந்திரத் தன்மை இன்ன தென்றுணர்ந்தவராவாரோ? இந்தியர் இன்ன தென்றுணர்ந்தவராகலால் அவர் எவர் நாட்டையும் பிடித்துக் கட்டி ஆளவிரும்புவதில்லை. வியாபாரஞ் செய்யவந்த பிரிட்டிஷ் சாதியாரை நல்வரவேற்று அவருக்கு எவ்வித கேடுஞ் சூழாது, நலம் புரிந்த ஒரு செயலே இந்தியர் சுதந்தர நேயர் என்பதை வலியுறுத்தும், இந்தியர் சுதந்தரத்தை விரும்புஞ் சாதியாராக இருந்தமையாலன்றோ பிரிட்டிஷ் சாதியார் இந்தியாவில் வாழ்வு பெற்றுவிட்டனர்? இந்தியர் சுதந்தரத்தை விரும்பாத சாதியராயிருப்பின், பிரிட்டிஷார் வியாபாரஞ் செய்யவந்த காலத்திலேயே அவர்நிலை பெற இடந் தந்திருக்க மாட்டார். இந்திய வியாபாரம் இங்கிலாந்தில் வேரூன்றாதவாறு செய்வித்த செய்கையை இந்தியா மறவாது. இதனால் சுதந்திரத்தை விரும்புஞ் சாதியார் எவர் என்பது ஆராயற் பாலது.
பிரிட்டிஷார் இந்தியாவைஆளத்தொடங்கிய நாள்தொட்டு இந்தியாவின் சுதந்திரம் வளர்ந்து வருகிறதா தேய்ந்து வருகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டும். கிழக்கிந்திய வியாபாரக் கூட்டத்தார் இந்தியாவில் கைத்தொழில் வியாபாரம் முதலியவற்றை அழித்து விட்டனர். அதிகாரவர்க்கக் கூட்டத்தார் இந்தியாவை அடக்குமுறைச் சட்டங்களால் கட்டி ஆண்டு வருவதை அறியாதவர் யார்? ஆள்தூக்கிச் சட்டம், ஆயுதச் சட்டம், அச்சகச் சட்டம், இந்தியப் பாதுகாப்புச் சட்டம், ரௌலட் சட்டம் முதலிய கொடுஞ் சட்டங்கள் சுதந்திர ஆயுதங்களா? சுதந்திரத்தை அழிக்குங் கருவிகளா? இவ்வினாவிற்குப் பிரிட்டிஷாரே விடையளிப்பாராக. பல் திறக்கட்டுகள் இந்தியாவின் உரிமையைப் பாழ்படுத்தி வருகின்றன. இக்கட்டுகளை அறுக்கச் சத்தியாகிரக எழுச்சி தோன்றிற்று. அவ்வெழுச்சியை ஒடுக்க மிருக எழுச்சியும் பக்கலே தோன்றிற்று. இம்மிருக எழுச்சி தோன்றி இந்தியாவில் ஐந்து நதி பாயும் அழகிய நாட்டை வதைத்த செயலை அறிவிக்கும் நூலே இந்நூல்.
இந்நூலுக்கு ஏப்ரல் 1919 என்னுஞ் சீரிய பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. இதை, 1919-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் நடந்த செய்தியை அறிவிக்கும் நூல் என்று கொள்ளலாம். 1919-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உலகத்தில் எண்ணிறந்த செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவைகளுள் சிறந்ததும், உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கதும், நாகரிக உலகத்தைப் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது திருப்ப வல்லதும், கீழ் நாட்டவர்களுக்குச் சுதந்திர தாகத்தை எழுப்பக் கூடியதும், காந்தியடிகளின் பெருமையையும், அதிகார வர்க்கத்தார் சிறுமையையும் உலகத்துக்கு அறிவுறுத்துவதுமாக உள்ளது பஞ்சாப் படுகொலையொன்றேயாகும். 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகத்தில் நிகழ்ந்த செயல்களுள், மனித வகுப்பின் கவனத்தையே கவர்ந்தது பஞ்சாப் படுகொலை யன்றிப் பிறிதொன்றில்லை. ஏப்ரல் 1919 என்று சொல்லக்கேட்போர் மனம் பஞ்சாப்பின் மீதே செல்லும். ஆதலால், பஞ்சாப் படுகொலையை விரித்துக் கூறும் இந்நூல் ஏப்ரல் 1919 என்னும் பெயர் புனையப் பெற்றுள்ளது.
ஏப்ரல் 1919-ல் நிகழ்ந்த செயல்கள் என்றும் யாண்டும் நிகழாதன. இரணியன் இராவணன் ஆட்சியிலும் இத்தகைய கொடுமைகள் நடைபெறவில்லை என்பது எனது அபிப்பிராயம். விலங்குகள் ஒன்றுகூடித் தமக்குள் ஓர் அரசாட்சி வகுத்து ஆட்சி புரியினும் பஞ்சாப்படுகொலையைப் போன்ற கொடுமைகளைச் செய்ய அவைகள் மனங்கொள்ளா. குடியர், வெறியர், கள்ளர், தூர்த்தர் முதலிய கீழ்மக்களும் வெறுக்கத்தக்க கொடுமைகள் பஞ்சாப்பில் நடந்தேறின. பஞ்சாப் படுகொலையை ஆதரிப்போரைப் பைசாச வகுப்பில் சேர்க்க வேண்டும். இரக்கம் இன்னதென்றறியா மாக்களே பஞ்சாப் படுகொலையை ஆதரிப்பர்.
பஞ்சாப் நாடு பழைமையில் மிக்கது. அதைப் பாரத நாட்டின் அறிவிற்கு உறைவிடம் என்று இந்நூலாசிரியர் கூறியதை நான் முற்றும் ஆதரிக்கிறேன். பஞ்சாப்பின் இயற்கை வளம் வருணனைக்கு எட்டாததன்றோ? அவ்வியற்கை இன்பத்தை நுகர்ந்தன்றோ நம் முனிவர்கள் உபநிடதங்கள் அருளிச் செய்தார்கள்? தருமராசன் செங்கோலும், அக்பர் அறக்கோலும் வளர்ந்த நாடு பாஞ்சால நாடேயாகும். பகவத்கீதையை யீன்ற நாடு பாஞ்சால நாடன்றோ? இத்துணைச் சிறப்புவாய்ந்த பாஞ்சால நாடு அதிகாரவர்க்க ஆட்சியில் பல வகையிலும் வருத்தமுற்று வரும் நிலையை யடைந்திருக்கின்றது. பஞ்சாப் அதிகார வர்க்க ஆட்சிமுறையால் பட்டுவருந் துன்பங்களை இந்நூல் இரண்டாம் அதிகாரம் பஞ்சாப் ஆட்சி முறையிற் காண்க.
பாஞ்சால தேசத்து மக்கள் நீண்ட காலமாக அதிகாரவர்க்க ஆட்சிமுறைக் கொடுமைக்கு இரையாகிப் புண்பட்ட மனத்தினராய் வாழுங்காலத்து, ஸர் மைக்கல் ஓட்வியர் என்னும் அரக்கன் பஞ்சாப் லெப்டினென்ட் கவர்னர் பதவியை வகித்தான். இவன் மனித உடலும் இராட்சத உள்ளமுந் தாங்கியவன். இவன் ஆட்சியில்தான் பாஞ்சால நாட்டின் மானமழிந்தது. ஸர் மைக்கல் ஓட்வியர் கற்ற வகுப்பாரிடத்துத் துவேஷங் காட்டி வந்தான். அதை இந்நூல் 16 ம் பக்கம் பார்க்க. இவன் கற்ற வகுப்பாரை இழித்துக் கூறுங் கல்லா மூடனாயிருந்தமையாலன்றோ இந்திய சட்டசபையில் வாயில் வந்ததை உளறிப் பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இவ்வறிவிலி பொது ஜனசேவை செய்வோரைச் சத்துருக்களாகப் பாவித்தான். (பக்கம் 22) அந்நிய சத்துருக்களை அழித்து உள்நாட்டுக் கலகத்தை அடக்கிய பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்தக் கிளர்ச்சிக்காரர்களை அலட்சியஞ் செய்துவிடலாம். (பக்கம் 20) என்று ஸர் மைக்கல் ஒருமுறை பேசியுள்ளான். இம்மொழியால் இவன் எத்தகைச் செருக்குடையான் என்பதை அளந்துவிடலாம். ஸர் மைக்கல் ஓட்வியர் ஆட்சியில் பொதுக் கூட்டங்கள் தடுக்கப் பட்டன. (பக்கம் 25) இவன் ஆட்சியில் நியு இந்தியா, அமிருத பஜார், இண்டிபென்டண்ட் முதலிய தேசீயப் பத்திரிகைகள் பஞ்சாப் மாகாணத்தைக் காணாதிருக்க வேண்டுமென்ற கட்டளையும் பிறந்தது; திலகர், பாலர், காந்தி முதலிய தலைவர்கள் பஞ்சாப் மாகாணத்துள் பிரவேசியாதவாறு தடுக்கப்பட்டார்கள். ஸர் மைக்கல் ஆட்சி முறையில் யுத்த காலத்தில் நிகழ்ந்த அநியாயங்களைச் சொல்லவும் வேண்டுமோ? அச்செயல்களைக் கண்டு பிரிட்டிஷ் நீதி எவ்வாறு பொறுமை பூண்டதோ தெரியவில்லை.
யுத்த காலத்தில் எவரையும் வலியுறுத்தி ஆள்சேர்க்கவாதல், பணஞ் சேர்க்கவாதல் வேண்டும் என்னும் நியதி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலில்லை. ஒருவர் மனப்போக்குக்கு மாறாக அவரைக் கொடுமையால் அச்சுறுத்தி அடிமைப்படுத்தி தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுஞ் செயலினுங் கொடிய செயல் உலகத்தில் வேறொன்றில்லை.ஸர் மைக்கல் ஆட்சிமுறையில் உத்தியோக தர்கள் பஞ்சாபில் குடிமக்களை வலியுறுத்திச் சண்டைக்கு ஆள்சேர்த்தார்கள்; பணம் பறித்தார்கள். இவ்வித கொடுஞ்செயல் செய்ய உத்தியோகதர்கள் இயல்பாகத் துணிவு கொள்ளவில்லை. ஸர் மைக்கல் உபந்நியாசம் உத்தியோகதர்கள் கொடுமைக்குத் தூண்டு கருவியாயிருந்தது. மாகாணத் தலைவர் உள்ளக் கிடக்கையைக் குறிப்பாலுணர்ந்தே உத்தியோகதர்கள் மறச்செயல் புரியத் தொடங்கினார்கள். 1918-ம் வருடம் மேமாதம் நான்காந்தேதி ஸர் மைக்கல் ஓட்வியர் ஓரிடத்தில் . . . . . அவசியமானால் கட்டாய இராணுவச் சேவக முறை அநுசரிக்கப்படும் என்று பேசியிருக்கின்றான். அவன் உரையிற் போந்த குறிப்பையுணர்ந்த உத்தியோகதர்கள் குடிமக்களை வருத்தி ஆள்சேர்த்தும் பணம் பறித்தும் ஓட்வியரை மகிழ்வித்தார்கள். கீழ் உத்தியோகதர்கள் சந்தேகிக்கப் பட்ட மனிதர்களைச் சண்டைக்கனுப்ப முயன்றும், தந்தை மார்களைத் தங்கள் பிள்ளைகளை யுத்தத்துக்கு அனுப்புமாறு வருத்தியும், யுத்தத்துக்கு ஆள் உதவ மறுப்போர் வயல்களிலுள்ள பயிர்களை, ஆடு மாடுகளை விட்டு மேய்த்தும், யுத்தத்துக்கு ஆள்சேர்க்கக் கூடும் கூட்டத்துக்கு வராத குடிமக்களுக்கு அபராதம் விதித்தும், வாலிபர்களை வரிசை வரிசையாக நிறுத்தித் தங்கள் விருப்பப்படி ஆட்களைச் சேனைக்குப் பொறுக்கியும், சிலரைச் செருப்பாலடித்தும், சிலர் தாடிகளை முளைகளில் கட்டியும், ஆட்களை விலைக்கு வாங்கியும், ஆள்சேர்க்கச் செல்லுந் தாசில்தாரைக்காணமறுத்தவர்கள் கால் நடைகளை வெயிலில் நிறுத்திவைத்தும், சேனையில் சேர மறுப்பவர்களை ஏழுவருடம் சிறை புகுத்துவோம் என்று அச்சுறுத்தியும், வேறுபல அரக்கர் செயலை நிகழ்த்தியும்யுத்தத்திற்கு ஆள் சேர்த்தார்கள். கட்டாயப் படுத்தி யுத்தத்துக்கு ஆள் சேர்ப்பதை யுணர்ந்த பெண்மணிகள் சிலவிடங்களில் தங்கள் நாயகன் மார்களைப் புதர்களில் ஒளித்து வைத்தார்களாம். காசூர் என்னும் ஒரு ஜில்லாவில் அதிகாரிகள் செய்த அநியாயங்களை அமரசிங்கன் ஹண்டர் கமிட்டி முன்னிலையில் கொடுத்த சான்றில் காண்க. சில இடங்களில் ஜனங்கள் சீறிச் சில அதிகாரிகளைக் கொலையுஞ் செய்து விட்டார்கள். ஜனங்கள் கொலைத்தொழில் மேற்கொள்ளுமாறு வருத்தப்பட்டார்களெனில், ஸர் மைக்கல் ஆட்சிமுறையில் யுத்தத்துக்கு ஆள் சேர்க்க அனுஷ்டிக்கப்பட்ட முறையின் கொடுமையை என்னென்று கூறுவது?
யுத்தத்திற்கு பணஞ் சேர்ப்பதிலும் அநியாயமுறையே அனுஷ்டிக்கப்பட்டது. யுத்த கடனுக்காக வெளியிடப்பட்ட சுற்றுக் கடிதத்தை 58ம் பக்கத்தில் பார்க்க. நீதி மன்றங்களிலும் யுத்தகடன் தலை காட்டிற்றாம். வரியுயர்த்தியும், வேறு பல தீய முறையாலும் யுத்த கடனுக்குப் பணம் பறிக்கப்பட்டது. ஆள்சேர்ப்பதிலும், யுத்த கடன் பெறுவதிலும் அதிகாரிகள் செய்த மறச் செயல்களின் விவரத்தை இந்நூல் 30-ம் பக்கம் முதல் 63-ம் பக்கம்வரை பார்க்க. குடிமக்களை வருத்திக் கட்டாயப்படுத்தி ஆள்சேர்க்கும் முறையும் பணம் பறிக்கு முறையும் அனுஷ்டிக்கப்பட்ட ஆட்சிமுறை வேறு எவ்வித கொடுமைக்கும் இடந்தராது? எல்லாவித கொடுமைக்கும் அவ்வாட்சிமுறை இடந் தருவதாகும். இத்தகைச் சிறுமை ஆட்சி முறையை ஆரம்பித்த ஸர் மைக்கல் ஓட்வியர் எத்தகையாளன் என்பதை நான் ஈண்டு விரித்துரைக்க வேண்டுவது அநாவசியம்.
அன்பின் தன்மை இன்னதென்றுணராது பாஞ்சாலத்தை ஓட்வியர் வருத்திவந்த நாளில், இந்திய சட்டசபையில் ரௌலட் சட்டம் நிறை வேறிற்று. இந்நிறைவேற்றம் ஸர் மைக்கலுக்கு அளப்பரும் இன்ப மூட்டிற்று. அதை அடக்க எழுந்த சத்தியாகிரக இயக்கம் அவனுக்கு அளவிலாத் துன்பமூட்டிற்று. சத்தியா கிரகத்தைப் பாஞ்சால நாட்டார் அனுஷ்டிப்பதைக் கண்ட ஸர் மைக்கல் ஓட்வியர் மதிமயங்கி வாயில் வந்ததை உளறிக் கொண்டிருந்தான். சத்தியாகிரக இயக்கத்தை அடக்க அப்பாவி மனதில் எண்ணிய எண்ணமே பஞ்சாப் படுகொலையாக முடிந்தது.
ஸர் மைக்கல் ஓட்வியர், டாக்டர் கிச்சனு, சத்திய பால் இவர்களைத் தேசப் பிரஷ்டஞ் செய்ததும், காந்தியடிகளை மாகாணத்துள் நுழையாத வாறு தடுத்ததும் பொதுஜனங்களுக்குச் சினமூட்டின. சினமூண்ட பொதுஜனங்களைப் போலிஸார் உதவியால் மிக எளிதாகச் சாந்தப்படுத்தி யிருக்கலாம். அதிகாரிகள் செயல் மேலுமேலும் ஜனங் களின் கோபத்தை வளர்த்தது. பொது ஜனங்களின் கொதிப்பு ஒருவாறு அடங்கி அமைதி நிலவி யிருந்த காலத்தில் ஸர் மைக்கல் ஓட்வியர் இராணுவச் சட்டத்தைப் பிரயோகஞ் செய்தான். ஸர் மைக்கல் இராணுவச் சட்டத்தைப் பிரயோகித்தது முற்றுந் தவறு. ஹண்டர் கமிட்டி முன்னிலையிலும் காங்கிர சப் கமிட்டி முன்னிலையிலும் கொடுக்கப் பட்ட சான்றுகளை ஆராய்வோர்க்கு இராணுவச் சட்டப் பிரயோகம் அநாவசியமென்பது நன்கு புலனாகும். ஸர் மைக்கல் இந்தியர்மீது ஒரு பெரும்பழியைச் சுமத்த வேண்டுமென்னும் எண்ணங் கொண்டே, அடக்கமுடியாத பெருங் கலகமென்று பொய்கூறி, இராணுவச் சட்டத்தைப் பிரயோகஞ் செய்தான். இராஜபக்தரை, நிராயுதபாணிகளை, யுத்தத்துக்கு உயிரையும், பொருளையும் உதவிய மக்களை இராணுவச் சட்டத்தால் வதைத்தது ஸர் மைக்கலின் பிரிட்டிஷ் தருமம் போலும்!
பாஞ்சாலதேசம் இராணுவ ஆட்சியால் பட்ட பாட்டை வருணிக்கவும் வேண்டுமோ? போர் வீரர்கள் தாங்கள் விரும்பியவாறு பஞ்சாப் வாசிகளை நெருக்கி இடர்ப்படுத்தினார்கள். நிராயுதபாணிகளாகிய இராஜ பக்தர்கள் மீது ஆகாய விமானங்களிலிருந்து குண்டு களெறிந்தும், பொது ஜனங்களைத் துப்பாக்கியால் சுட்டும், முக்கோணத்தில் கட்டி யடித்தும், வெள்ளைக்காரர்களைக் காணின் சலாம் செய்யுமாறு துன்புறுத்தியும், ஒரு ஹிந்துவையும் ஒரு முலீமையும் விலங்கிட்டு ஹிந்து முலீம் ஒற்றுமை என்று நகையாடியும், இளைஞர்களை இடர்ப் படுத்தியும், குறுகிய தெருவில் ஊர்ந்து செல்ல வருத்தியும், தண்ணீரை நிறுத்தியும், விளக்கை அவித்தும், வேறுபல அடாத செய்கைகளைச் செய்தும், வெறிகொண்ட போர்வீரர்கள் பாஞ்சாலத்தைச் சித்திரவதை செய்துவிட்டார்கள். ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டையர் என்னும் ஒரு பெரும் பூதம் புரிந்த திருவிளையாடல் ஒன்று சாலுமே. அம்மாபாவி அமிருதசர மக்களை வேட்டையாடியதை எழுத்துக்களால் எழுத மன மெழவில்லை. நாற்புறமும் மதிலால் சூழப்பட்டு, ஒரு வாயிலையுடைய ஜாலியன்வாலா பாக்கில் அவ்வாயில் நுழையில் ஜெனரல் டையர் நின்றுகொண்டு பீரங்கியால் தோட்டத்துள்ளிருந்த இந்தியமக்களைச் சுட்டுக் கொன்றான். என் அருமைச் சகோதரர்கள் அப்புறம் ஓட இயலாது தவித்தார்கள். மதிலைப்பற்றியேறிக் குதித்து வீடு சேர முயன்ற சிறுவர்களைக் குறிபார்த்துப் போர் வீரர்கள் சுட்டார்கள். எப்புறமும் ஓடமுடியாது ஜெனரல் டையர் குண்டுகளுக் கிரையானவர்களின் பரிதாப நிலை மனதைக் குழையச் செய்கிறது. சிலர் குண்டுகளுக்கஞ்சி தோட்டத்தின் நடுவிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து மாண்டனராம். ஜெனரல் டயரின் கொடுமை எந்தக்காலத்திலும் இந்தியர் உள்ளத்தை விட்டகலாது. அந்தோ! ஜாலியன்வாலா கொடுமையினும் சிறந்த கொடுமைகள் பல நிகழ்ந்திருக்கின்றன.
இந்தியப் பெண்மணிகள் தெய்வங்கள் போல் போற்றப்படு பவர்கள்; மேல்நாட்டுப் பெண்களைப்போல் கண்ட இடத்தில் திரியுங் கழுதைகளல்லர்; இல்லுக்கரசிகளாய் வீற்றிருக்கும் பேறு பெற்றவர்கள். இந்தியப் பெண்மக்களைத் தேவர்களுந் தீண்டுதலாகாது. இந்தியப் பெண்மக்கள், ஆண்மக்கள் வெளிப் போந்து ஊழியஞ் செய்து ஈட்டி வரும் பொருளை, இல்லறமென்னும் அரியாசனத்து வீற்றிருந்து செலவழித்துக் குடும்பமென்னும் இராஜாங்கத்தை நடாத்தும் அரசிகள். இந்தியப் பெண் மக்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்களை விடுத்துக் கண்டவர்களைக் கைகுலுக்கும் வேசிமார்களல்லர். இந்திய மக்கள் பெண்பாலரைத் தெய்வமாகப் போற்றுகிறார்கள். இத்துணைச் சிறப்பு வாய்ந்த நம் பெண்மணிகளை இராணுவ அதிகாரிகள் தங்கள் விருப்பம்போல ஆட்டிப் புடைத்தார்கள். நம் பெண் தெய்வங்களின் கூந்தலைப் பிடித்திழுத்தும், நிர்வாணிகளாக மானபங்கஞ் செய்தும் அவர்கள் உள்ளத்தை நடுக்குறச் செய்தார்கள். தேவர்களுந் தீண்டுதற்கரிய நம் பெண்மணிகள் கொடிய போர் வீரர்கள் வசப்பட்டு இடர்ப்பட நேர்ந்ததே என்று எனது உள்ளம் இரவும் பகலும் வருந்தா நிற்கிறது. ஒருதெய்வத்தின் கண்ணீர் இலங்கையை அழித்தது; மற்றொரு தெய்வத்தின் கண்ணீர் துரியோதனாதியரை அழித்தது. பெண்மக்கள் மனம் வருந்தி உகுக்குங் கண்ணீர் வீணாவதில்லை. இராணுவ ஆட்சியில் பாஞ்சாலப் பூங்கொடிகள் எவ்வாறு வருந்தினார்களோ, எவ்வாறு அழுதார்களோ, எத்துணைபேர் மனநோயால் மாண்டார்களோ தெரியவில்லை. ஸர் மைக்கேல் ஆட்சிமுறையில் பெண்மக்களையும் மானபங்கஞ் செய்யுங் கொடுமை நிகழ்ந்திருக்கிறது!!
1919-ம் வருஷம் ஏப்ரல் மாதம் நடந்தேறிய படுகொலையைப் பற்றி விசாரிக்க இரண்டு கமிட்டிகளேற்பட்டன. ஒன்று காங்கிர சப் கமிட்டி, மற்றொன்று ஹண்டர் கமிட்டி. முன்னையது வெளியிட்ட அறிக்கையில் அறவுரைகள் ததும்பிக் கிடக்கின்றன. பின்னையது வெளியிட்ட அறிக்கையில் நடுநிலைப் பிறழ்வு காணப்படுகிறது. தெய்வம் போன்ற பிரிட்டிஷ் நீதியை இந்தியா எதிர்பார்க்கிறது. இந்தியா மந்திரி பதவி யிலுள்ள மிடர் மாண்டேகு, இராஜப்பிரதிநிதி பதவியிலுள்ள லார்ட் செம்போர்ட்டுக்கு விடுத்த கடிதத்தில் டையர் செயலைக் கண்டித்து, ஸர் மைக்கல் செயலை ஒருவாறு ஆதரித்தும், லார்ட் செம்போர்ட்டு ஆட்சியைப் புகழ்ந்தும் எழுதியிருப்பது இந்தியாவின் மனதைப் புண் படுத்தியிருக்கிறது. காங்கிர சப் கமிட்டியார் செய்துள்ள சிபார்சுகள் மிகவுஞ் சாதாரணமானவை. அவைகளும் பொருட்படுத்தாது விடப்படு மேயானால், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின்மீது கொண்டுள்ள பற்றை நாளடைவில் இழந்துவிடுமென்பது நிச்சயம்.
1919 ம் வருஷம் ஏப்ரல் மாதம் நிகழ்ந்தனவற்றைத் திரட்டி இந்நூல் வடிவாகத் தமிழ்நாட்டிற்கு வழங்கவந்த ஸ்ரீமான் வெ. சாமிநாத சர்மா அவர்களுக்குத் தமிழுலகங் கடமைப்படுதல் வேண்டும். இந்நூல் எளிய இனிய தமிழ்நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலை வாசிக்குங் காலத்துப் பஞ்சாபும், அதன்கண் நிகழ்ந்தனவும் எதிரில் வந்து உலவு கின்றன. ஆசிரியர் இந்நூலை எழுதுங்காலத்து விடயத்தோடு ஒன்றுபட்டு எழுதியுள்ளார் என்பது இந்நூலை வாசிப்போர்க்குப் புலனாகும். இந்நூல் சரிதமுறையாக எழுதப்பட்டுள்ளமையால், பிற்காலத்தில் சரித பாட மாகவும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
இந்நூலை இந்தியக் குருதி பாயும் ஒவ்வொருவரும் ஆதரிக்கக் கடமைப்படல் வேண்டுமென்பதை நான் விரித்தெழுத வேண்டுவது அநாவசியம். இந்த நூல் தமிழ் நாட்டவர்க்குச் சுதந்தரதாகத்தை யெழுப்பி, அதைப் பெறத்தூண்டும் ஒரு கருவி என்பதை மட்டும் ஈண்டு எனது நாட்டவர்க்கு அறிவுறுத்துகிறேன்.
பஞ்சாப் படுகொலை, கீழ் நாட்டவர் கண்ட அறிவுலகத்தை - ஆத்ம சக்தியை - சத்தியாக்கிரககத்தை ஊறுசெய்யவே எழுந்தது. பஞ்சாபில் எழுந்த அறியாமை உலகம் மிருக சக்தி - துராக்கிரமம் வெற்றி பெற்றது என்று எவருங் கருதலானாது. பஞ்சாபில் எழுந்த மிருகசக்தி சாய்ந்து விட்டது. ஆத்ம சக்தியோ என்றும் அழியாதது. அது சாந்த மயமாக ஆமதாபாத்தில் அடங்கியிருக்கிறது. சிறிது சிறிதாகப் பரவிவருகிறது. அவ் வாத்ம சக்தியாய் மேல்நாட்டு மிருக சக்தியை அடக்கி, மேல் நாட்டவர்க்கும் அச் சக்தியில் உறுதிகொள்ளுமாறு செய்வித்து இவ்வுலகையே அறிவு மயமாகச் செய்யவேண்டிய பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்தியா தன் கடமையைச் செய்ய முற்படுங் காலத்து இடையிடையே மிருக சக்தியால் சில இடர்கள் நேரலாம். அவைகளை அஞ்சாமை, உண்மையென்னும் ஆயுதங்களால் வென்று, உலகத்துக்கு நலம் புரிய வேண்டுவது நமது கடமை.
பஞ்சாப் படுகொலையைக் கண்டவரும் கேட்டவரும் அச்சத்தை அறவே தொலைக்க வேண்டும்; இந்தியா சுதந்தரமிழந்த நாடாயுள்ளமை யாலன்றோ பஞ்சாப் படுகொலை நிகழ்ந்தது; சுதந்தரம் பெற நாம் முயலல் வேண்டும் என்ற எழுச்சி கொள்ளல் வேண்டும். பெண்மணிகள், பாஞ்சாலி துரியோதனன் சபையில் செய்துகொண்ட சபதம் போன்ற சபதத்தைச் செய்துகொள்ள வேண்டும். இவ் வுணர்ச்சியை ஊட்டுங் கருவி இந் நூலாதலால், இதைப் பொன்னேபோல் போற்றி ஏற்றுக்கொள்ளுமாறு எனது நாட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இராயப்பேட்டை
17.6.20.
- திரு. வி. கலியாணசுந்தரன்
ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
I பாஞ்சால நாடு
இந்தியாவின் பண்டைய பெருமை
அன்பின் வடிவமான இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில், நாகரிகம் என்னும் ஒளி முதல் முதல் இந்தியாவினின்றுமே தோன்றியது. அறியாமையில் ஆழ்ந்துகிடந்த உலகத்தினர்க்கு அறிவை வழங்கியது நம் பாரத நாடேயாகும். இந்தியாவின் புராதனத்தை இன்னும் எந்த சரித்திரக் காரனும் அளந்து கூறத்துணியவில்லை. இந்தியாவின் பிறப்புக்குப் பின்னால், நாகரிக உலகத்தில் நற்பெயரெடுத்த நாடுகள் பல, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டன. கிரீ தேசமும், ரோமாபுரியும், ஆசிரியா நாடும், ஈஜிப்டும் வேதகாலத்திற்குப் பின்னர்த் தோன்றியவைகளேயாகும். ஆனால் அவை அழிந்து இப்பொழுது எந்த நிலையிலிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். வேதகாலத்தில் பாரத தேசம் எல்லாத்துறைகளிலும் உச்ச தாதனத்தை அடைந்திருந்தது. சாதாரணமாக மேனாட்டுச் சரித்திரக்காரர் கிரீதேசத்தையே நாகரிகத்திற்கு ஆதிபீடமெனக் கொள்வர். இந்நாட்டில் தோன்றி, உலகத்தின் அறிவைப் பண்படுத்திய அரிடாடல் என்னும் அறிஞன், தன் மாணவனாகிய அலெக்ஸாண்டர் மூலமாக இந்தியா வினின்றும் சிறந்த வித்துவான்களையே விரும்பினான். இதனால் இந்தியாவின் அறிவிற்கும் நாகரிகத்திற்கும் அரிடாடல் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தான் என்பது நன்கு புலப்படும். இந்தியாவின் பண்டைப்புகழ் இன்னும் எல்லாருடைய செவியிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிந்து பிரதேசத்திலும் கங்காநதி தீரத்திலும் ஆரியர்கள் செய்துகொண்டிருந்த வேதகோஷமானது இப்பொழுதும் மேனாட்டாருடைய உள்ளத்தை விகசிக்கச் செய்கின்றது. கிரேக்கருடைய வீரம் விழுந்து போயிற்று; ரோமாபுரியின் கலைஞானப் பயிற்சி பாழ்பட்டுப் போய்விட்டது; ஈஜிப்ட் தேசத்தின் உயர்ந்த கோபுரங்களும் சிறந்த கல்லறைகளும் பிறவும் மண்ணில் அடைக்கலம் புகுந்தன. ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் பாடப்பட்ட வேதமானது இன்னும் உயிருடன் இருக்கிறது; இராமபிரானுடைய வீரம் இன்னும் சிறு குழந்தைகளாலும் புகழப்பட்டு வருகிறது; தருமபுத்திரருடைய தியாகம் எவனுடைய மனத்தையும் உருகச்செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக இந்தியாவில் தோன்றிய அனைவற்றிற்கும் இன்னும் ஜீவநாடி ஓடிக்கொண்டே யிருக்கிறது என்று கூறலாம்.
ஆரியா வர்த்தத்தில் தூய நாடு
இத்தகைய இந்தியாவிற்கு முகம் போலிருப்பது பாஞ்சால நாடே யாகும். பொதுவாக ஒருவனுடைய முகமே எல்லாருடைய உள்ளத்தையும் முதல் முதல் கவர்வது போல், இந்தியாவை நாடி வந்தோர் அனைவரையும் கவர்ந்தது பாஞ்சால தேசமேயாகும். சுவாமி விவேகானந்தர் பஞ்சாப் மாகாணத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:-
பரிசுத்தமான ஆரியாவர்தத்தில் தூய நாடெனக் கொண்டாடப்பட்ட பிரமவர்த்தம் இந்தப் பாஞ்சால நாடேயாகும். மனுவால் கொண்டாடப்பட்ட பிரம வர்த்தம் என்பது இந்த நாடுதான். ஆன்மப் பயிற்சிக்கு உறைவிடமாயிருந்தது இந்தப் புண்ணிய பூமியேயாகும். இந்த நாட்டில் தோன்றிய உத்தம நதிகளைப்போல், ஆன்மப் பயிற்சிக்குரிய உயர்ந்த நோக்கங்களும் இங்கிருந்தே கிளம்பி உலகத்தைச் சீர்படுத்தின. இந்தியாவின்மீது படையெடுத்து வந்தவருடைய அடியையும் உதையையும் தாங்கி நின்றது இப்பாஞ்சால நாடேயாகும். ஆரியா வர்த்தத்தின் மீது தங்கள் வீரத்தைக் காட்டவந்த எல்லாஅநாகரிக ஜாதியினர்க்கும் முதலில் தன் மார்பைக் காட்டி நின்றது இந்தநாடுதான் சொல்லொணாத் துன்பங்களை அநுபவித்த போதிலும், தன் வீரத்தையும் கீர்த்தியையும் இன்னும் தன்னிடத்தே வைத்துக் கொண்டிருப்பது இந்தத் தேசந்தான். இந்த நாட்டிலே தான், பிற்காலத்தில், நானக் என்னும் பெரிய உத்தமன் தோன்றி, உலகத்திற்கு அன்பைப் போதித்தான். நானக் என்னும் இந்தக் குரு மஹாராஜன் தன் அன்பான போதனையினால் ஹிந்துக் களையும் முஸல்மான்களையும் ஒன்றுபடச் செய்தான். இந்தப் புண்ணிய நாட்டிலேயே புகழ்பெற்ற குருகோவிந்தசிங் என்னும் பெரியான், தன் மதத்தின் பொருட்டு உற்றார் உறவினருடைய இரத்தத்தைச் சிந்தினான். பிறகு இவ்வீரன், எவர் பொருட்டுத் தன் இரத்தத்தைச் சிந்தினானோ அவர்களால் வெறுக்கப்பட்டுக் காயம்பட்ட ஒரு சிம்மம்போல் தெற்கு நோக்கிச் சென்றான்.
விவேகாநந்த மஹரிஷியால் இங்ஙனம் புகழப்பட்ட இந்தப் புண்ணிய தேசத்தின் பெருமையை யாவரால் வருணிக்க முடியும்? ஆசியா கண்டத்து மத்தியப் பிரதேசங்களிலிருந்து ஆரியர்கள் முதன் முதல் இங்கேயே வந்து குடியேறினார்களென்றும், ருக்வேதம் இந்த நாட்டிலேயே பாடப்பட்டதென்றும் மேனாட்டுச் சரித்திரக்காரர் கூறுவர். ஆனால் நம் பண்டிதர்கள் இதனை அங்கீகரிக்க மாட்டார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்குப் புறம்பாயுள்ள எந்த. . . . . நாட்டிலிருந்தும் வரவில்லை யென்றும், அநாதிகாலந் தொட்டு இந்தியாவிலேயே அவர்கள் இருந்து வருகிறார்களென்றும், வேதங்கள் மனிதர்களால் பாடப்பட்டவையல்ல வென்றும், இறைவனால் ஜனங்களுடைய நன்மைக்காக உத்கோஷிக்கப் பட்டவை என்றும், நமது பண்டிதர்கள் கூறுவார்கள். மேனாட்டுப் புலவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள இவ்வாதத்தை இந்த நூலில் இப்பொழுது நுழைக்க வேண்டாம், எப்படியிருந்த போதிலும், பாஞ்சால நாடானது வேத காலங்களில் மிக மேம்பாடடைந் திருந்ததென்பதை இருசாராரும் ஒத்துக் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் யுத்த களம்
பாஞ்சால நாட்டிலே தான் பல யுத்தங்கள் நடைபெற்றன. இந்தியாவின் யுத்தகளமெனப் பாஞ்சால நாட்டைக் கூறினும் இழுக்காகாது. நூற்றுவரும் ஐவரும் பாஞ்சால நாட்டிலேயே யுத்தம் செய்தனர். துரியோதனாதியருடைய செருக் கொழிந்ததும், பாண்டவருடைய சுயநலமற்ற குணம் விளங்கியதும் இந்த நாட்டிலேயாகும். குருக்ஷேத்திரத்தின் மத்தியிலே நின்றுதான் கண்ணன் அருச்சுனனுக்குக் கீதையைப் போதித்தான். இதனால் கீதையின் பிறப்பிடம் இந்தப் புண்ணிய பூமியேயாகும். பாலிப் அரசனின் குமாரனும், மாஸிடோனியாவின் மாணிக்கமுமாகிய அலெக்ஸாந்தர் என்னும் உத்தமவீரன், இந்தியாவுக்கு வந்து, போர என்னும் அரசனுடன் ஜீலம் நதிக்கரையில் யுத்தம் செய்து, பின்னவன் யுத்தத்தில் தோற்றுப் போயினும், அவன் வீரத்தைக் கண்டு மெச்சி அவனுக்குரிய நாடுகளைத் திருப்பி அளித்தது இந்த நாட்டிலேயாகும். போர1 என்னும் இவ்வரசன் யுத்தகளத்தில் ஒரு க்ஷத்திரியனைப் போல் தன் இரத்தத்தைச் சிந்தினான். அந்த இரத்தத்தினால் பரிசுத்தம் செய்யப்பட்டதாலேயே இந்தப் பாஞ்சால நாடு இன்னும் வீரத்திற்கு இருப்பிடமாயிருக்கிறது எனச் சொல்லலாம். மௌரிய வம்ச தாபதனாகிய சந்திரகுப்தன், அலெக்ஸாந்தரைக் கண்டு பேசியது இந்த நாட்டிலேதான். ஆரியவர்த்தத்தை ஒரு குடைக் கீழ் ஆளும் படியான சக்தியைச் சந்திரகுப்தன் இந்த நாட்டினின்றுமே பெற்றான். பாஞ்சால நாட்டின் வனங்களும், நதிகளும், நகரங்களும் பிறவுமே சந்திரகுப்தனுக்குப் புதிய வீரத்தையும் புதிய சக்தியையும் அளித்தன. சந்திரகுப்த மௌரியன், பிரதம சக்ரவர்த்தியாக விளங்கியதற்கு இந்நாடே காரணமாயிருந்தது.
பிற்காலத்தில் பாரசீகர்களும், தார்த்தாரியர்களும், உலகத்திலுள்ள எல்லா நாடுகளையும் ஆக்ரமிக்க வேண்டுமென்ற எண்ணங்கொண்டு படையெடுத்துச் செல்வதிலேயே பிரியங் கொண்ட பிறசமூகத்தினரும் இந்திய வீரத்தின் சுவையை அறிந்தது இப்பாஞ்சால நாட்டிலேயாகும். மகம்மதிய வீரர்களான சபக்திஜன், கஜினிமகம்மது, மகம்மது கோரி, பேபர் முதலாயினோருக்கு எதிர்நின்று போர் தொடுத்தது பாஞ்சால தேசமேயாகும். சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாண்டு யுத்தத்திலும் பாஞ்சால நாடே அதிக வீரர்களைத் தந்தது.
அறிவிற்கு உறைவிடம்
பாஞ்சால தேசம் அறிவிற்கும் ஊற்றுக்களமாக இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. தக்ஷசைலம் என்ற நகரம் இந்த நாட்டிலேதான் விளங்கியது. இந்நகரத்துச் சர்வகலாசாலையில் எல்லாவித கலைகளும் போதிக்கப்பட்டு வந்தன. அர்த்த சாதிர ஆசிரியனாகிய சாணக்கியன் என்பவனும், வைத்திய சாதிரத்தை ஒருவாறு உலகத்திற்கு உபகரித்தருளிய சரகர், சுருதர்போன்ற பெரியோர்களும் இந்தக் கலாசாலையிலேயே படித்து அறிஞர்களாய் விளங்கினார்கள். தக்ஷசைலத்திருந்த சர்வகலாசாலையை, அக்காலத்தில் காசி, காஞ்சி முதலிய இடங்களிலிருந்த சர்வகலா சாலைகளுக்குத் தலையாய் விளங்கியது. இந்தச் சர்வகலாசாலையின் பெருமை விரிக்கிற் பெருகும். பாஞ்சாலி தேவி தன் கற்பின் மகிமையை உலகிற்குக் காட்டியது இந்த நாட்டினின்றுமேயாகும். கண்ணபிரானின் திருவிளையாடல்கள் பல இந்த நாட்டிலேயே நடைபெற்றன. பாஞ்சால நாட்டின் பெருமையை ஒரு தனிநூலாக எழுதினும் எழுதலாம்.
பஞ்சாபின் எல்லைகளும் பிறவும்
இந்த நாட்டில் ஐந்து நதிகள் பாய்வதால் இதற்குப் பஞ்சாப் என்று பெயர் வழங்கப்பட்டது. சட்லெஜ், பியா, ராவி, சீனாப், ஜீலம் என்ற ஐந்து உபநதிகளைக் கொண்ட சிந்துநதியானது இந்த நாட்டின் ஓரமே செல்கின்றது. நீர்வளம் நிலவளம் குறைவற்றி ருப்பதால் இந்நாட்டின் ஜனங்களுக்கு விவசாயமே முக்கிய தொழிலாயிருக்கிறது. இந்தியாவின் வடமேற்கில் இருக்கும் பஞ்சாப் மாகாணம், வடக்கே ஹிமாலய மலையையும் காமீரத்தையும், கிழக்கே யமுனா நதியையும், தெற்கே சிந்து பிரதேசத்தையும் இராஜபுதனத்தையும், மேற்கே சிந்து நதியையும் எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. இம் மாகாணத்தின் விதீரணம் 135, 773 சதுர மைல்களாகும். இவைகளில் சுமார் ஒரு லக்ஷம் சதுர மைல்கள் பிரிட்டிஷாரின் நேரான ஆட்சிக்குட்பட்டிருக்கின்றன. பிற சுதேச மன்னர்களுடைய ஆட்சிக்குட்பட்டிருந்தன. இம்மாகாணத்தின் ஜனத் தொகை 24, 187, 750 ஆகும். ஜனங்களுடைய முக்கிய தொழில் விவசாயம் என்று முன்னரே கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது தொழிற்சாலை களும் பிற கைத்தொழில்களும் வருஷந்தோறும் பெருகிக்கொண்டே வருகின்றன.
பஞ்சாபின் ஆட்சிமுறை
பஞ்சாப் மாகாணம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரியதாயிருந்தது. 1901 ம் வருஷத்தில் பஞ்சாபின் வடமேற்குப் பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்று பெயரிடப்பட்டது. இவ் வெல்லைப்புற மாகாணத்தை ஒரு சீப் கமிஷனர் ஆண்டு வருகிறார். தற்போதுள்ள சீப் கமிஷனர் ஸர் ஹாமில்டன் கிராண்ட் என்பவர். வடமேற்கெல்லைப்புற மாகாணத்தைத் தவிர்த்து நின்ற பஞ்சாப் மாகாணம் மறுபடியும் 1911 ம் வருஷத்தில் பங்கிடப்பட்டது. 1911 ம் வருஷம் தலைநகரம் கல்கத்தாவினின்றும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதுகாலை, பஞ்சாப் மாகாணத்தைச் சார்ந்த சில பாகங்கள் டெல்லியுடன் சேர்க்கப்பட்டு டெல்லி மாகாணம் என்று தனியாகப் பெயரிடப்பட்டது. இந்த டெல்லி மாகாணம் தனியான ஒரு சீப் கமிஷனருடைய ஆளுகையில் இருக் கின்றது. இப்பொழுது இப்பதவியை வகிப்பவர் மிடர் எச். பி. டால்லிண்டன் என்னும் பெயரினர். பஞ்சாப் மாகாணம் ஒரு லெப்டினெண்டு கவர்னருடைய ஆளுகைக்குட்பட்டிருக் கின்றது. இப்பொழுது ஸர் எட்வர்ட் மாக்லகான் லெப்டினெண்டு கவர்னாயிருக்கின்றார். இவர் 1919 ம் வருஷத்து இடையே தம் பதவியை ஏற்றுக்கொண்டார். பஞ்சாப் மாகாணத்திற்குச் சட்டசபை ஒன்று உண்டு. இதில் ஜனப்பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகதரும் பிறரும் அங்கத் தினராயிருக்கின்றனர். பஞ்சாப் லெப்டினெண்டு கவர்னருக்கு நிருவாக சபை கிடையாது. புதிய இந்திய சீர்திருத்தத்தின்கீழ் பஞ்சாப் மாகாணம் ஒரு கவர்னருடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கும். இப்பொழுதுள்ளபடி இம்மாகாணம் அம்பாலா, ஜல்லந்தர், லாகூர், ராவல்பிண்டி, மூல்டான் என்ற ஐந்து டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு டிவிஷனும் ஒவ்வொரு கமிஷனுருடைய ஆட்சிக்குட்பட்டிருக்கிறது. இந்த ஐந்து டிவிஷன்களும் இருபத்தெட்டு ஜில்லாக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. ஜில்லாவை ஆட்சி புரிவோருக்கு டிப்டி கமிஷனர் அல்லது ஜில்லா மாஜிட்ரேட் என்று பெயர். இவர்கள் கமிஷனர்களுக்கு உட்பட்டவர்கள் என்பது கூறாமலே விளங்கும்.
பஞ்சாபின் தலைநகரம்
பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர் என்பது. இங்கேயே லெப்டினெண்டு கவர்னர் வசிக்கிறார். பஞ்சாப் அரசாங்கத்தின் கோடை கால வாசதலம் சிம்லாவாகும். லாகூர் என்பது மிகப்பெரிய நகரம். இதன் ஜனத்தொகை சுமார் இரண்டு லக்ஷத்து ஐம்பதினாயிரமாகும். இந்நகரத்தில் உயர்தர நீதிமன்றமும், ஆண்பிள்ளைகளுக்கென்று பத்து காலேஜ்களும், பெண்களுக் கென்று இரண்டு காலேஜ்களும் வேறுபல ஹைகூல்களும் இருக்கின்றன. லாகூர் ஒரு பெரிய ரெயில்வே டேஷன். இங்கு ரெயில்வே பாதைகள் பல சந்திக்கின்றன. லாகூர், டெல்லிக்கு 298 மைல் தூரத்திலும், கல்கத்தாவிற்கு 1200 மைல் தூரத்திலும், பம்பாய்க்கு 1162 மைல் தூரத்திலும், கராச்சிக்கு 784 மைல் தூரத்திலும் இருக்கின்றது. லாகூரில் இப்பொழுது சிவில் அண்ட் மில்டெரி கெஜட் என்ற ஓர் ஆங்கிலோ இந்தியப் பத்திரிக்கையும் டிரிப்யூன் என்ற ஓர் இந்தியப் பத்திரிகையும் உலாவிவருகின்றன. இவை தவிர பல தேசபாஷா பத்திரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சென்ற வருஷத்து இராணுவச் சட்ட காலத்தில் பல பத்திரிக்கைகள் இறந்து போயின.
II பஞ்சாபின் ஆட்சி முறை
ஜன விருப்பத்துக் கிணங்கிய ஆட்சி
குடிதழீஇக் கோலோச்சுமா நிலமன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு
என்னும் குறளை ஆசிரியர் திருவள்ளுவர் அறியாமற் கூறவில்லை. ஒரு நாட்டை ஓர்அரசன் தன் மனம்போனபடி ஆண்டுவரின் அவனுக்கும் அவனால் ஆளப்பட்ட நாட்டுக்கும் அவன் ஆட்சி காலத்திலாவது பிற்காலத்திலாவது எண்ணிறந்த துன்பங்கள் உண்டாகும். அரசனுடைய ஆட்சியானது எப்பொழுதும் குடிகளுடைய விருப்பத்தைத் தழுவியே இருத்தல் வேண்டும். ஜனங்களுடைய விருப்பத்திற்கிணங்கா ஆட்சி முறை முதலில் நன்மையைத் தருவதாகக் காணப்பட்டபோதிலும் கடைசியில் அது தீமையையே விளைவிக்கும் என்பது நிச்சயம். பிரிட்டிஷார் ஜனநாயகக் கொள்கையை அநுசரித்து ஆட்சி புரிவதில் பெயர் படைத்தவர். இவர்களுடைய வழிபற்றியே உலகத்திலுள்ள பிற நாடுகள் இம்முறையை அநுசரிக்கத் தொடங்கினவென்று அறிஞர் கூறுவர். நாகரிகம் முதிர முதிர இந்த ஜனநாயகக் கொள்கை உலகத்தில் வலுத்து வருவதை அன்பர்கள் எளிதில் உணரலாம். சுயாதிபத்திய முறையைக் கைக்கொண்டு ஆண்டுவந்த ஜெர்மனியும் ரஷ்யாவும் ஆடிரியாவும் எந்நிலையடைந்தன? இதனையறிந்திருந்தும், இந்த இருபதாம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கொடியின் கீழ், பிரிட்டிஷ் தருமத்தைக் கைப்பற்றாது, பஞ்சாப் மாகாணத்தில் அசுர ஆட்சி புரிந்துவந்த ஸர் மைக்கல் ஓட்வியரைக் கண்டு எவரும் ஆச்சரியப்படாமலிரார்.
ஸர் மைக்கல் பிரான்சி ஓட்வியர்
ஸர் மைக்கல் ஓட்வியர் ஓர் ஐ. சி. எ. உத்தியோகதர். இவர் இந்தியாவில் சுமார் முப்பத்து நான்கு ஆண்டுகள் உத்தியோகம் பார்த்தவர். இவர் தம் உத்தியோகத்தின் பெரும்பாகத்தைப் பஞ்சாபிலேயே கழித்தார். இவர் பஞ்சாப் மாகாணத்திலேயே சிறிய உத்தியோகங்களை வகித்துப் படிப்படியாகப் பெரும் பதவிக்கு வந்தவர். ஸர் மைக்கல் பிரான்சி ஓட்வியர் 1913-ம் வருஷம் பஞ்சாப் மாகாணத்து லெப்டினெண்டு கவர்னர் பதவியை ஏற்றுக்கொண்டு, தாம் இத்தகையர் என்பதை உலகிற்கும், முக்கியமாக பஞ்சாப் வாசிகளுக்கும் காட்டிக்கொண்டார். ஸர் மைக்கேல் ஓட்வியர் உண்மையிலேயே இராணுவ பலத்தைக் கொண்டு ஆட்சிபுரிவதில் விருப்பமுள்ளவரோ, அல்லது பஞ்சாப் மாகாணத்து லெப்டி னெண்டு கவர்னர் பதவியை வகித்த பிறகே அவருக்கு அத்தகைய எண்ணம் உண்டானதோ என்பதை ஈண்டுக் கூறுதல் முடியாத செயலாகும். இங்ஙனம் நாம் சந்தேகிக்க வேண்டியதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் வடமேற்கில் இருக்கும் இம்மாகாணத்தைப் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் தாம் கைக் கொண்டது முதல் சிறிது அடக்கியே யாண்டு வருகின்றனர் என்பது அம்மாகாண சரித்திரத்தை அறிந்தவர்களுக்கு நன்கு புலனாகும். இதற்குக் காரணங்கள் பல. அவைகளுக்குள் இப்பொழுது புகுந்தால், நாம் எடுத்துக் கொண்ட காரியத்தை எளிதில் நிறைவேற்ற முடியாது. பஞ்சாபின் ஆட்சிமுறை என்பதாகத் தனிநூலொன்று எழுதினும் எழுதலாம். அவ்வேலையைப் பிற்கால சரித்திரக்காரர்கள் எடுத்துச் செய்வார்களென்று நம்புகிறோம்.
ஏப்ரல் - 1919
பஞ்சாப் மாகாணத்தில் சென்ற ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் உண்டான குழப்பத்திற்குக் காரணம் யாதென்பதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். மஹாத்மா காந்தியின் சத்தியாகிரக இயக்கத்தினாலேயே பஞ்சாபில் அமைதியின்மை ஏற்பட்டதென்று சிலர் கூறுவர். ஆனால் இக்கூற்றில் உண்மையில்லை. பஞ்சாப் மாகாணத்தில் பல்லாண்டுகளாக ஜனங்களுக்குள் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
அதிகார வர்க்கத்தாருக்கு அஞ்சி, பஞ்சாப் ஜனங்கள் பல வருஷ காலம் தங்கள் குறைகளையும், தங்களுக்குள்ள மனக் கசப்பையும் வெளிக்காட்டாமலிருந்தார்கள். ஆனால் ஒரு சமூகத்தாரை, அல்லது ஒரு வகுப்பாரை என்றும் அடக்கியாளுதல் முடியாத காரியம். ஜனங்களுக் குள்ளிருக்கும் அதிருப்தி என்றேனும் ஒருநாள் கிளம்பும் என்பது நிச்சயம். காந்தியடிகள், சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கு முன்னரேயே பஞ்சாபில் அமைதியின்மை வேரூன்றி இருந்தது. ரௌலட் சட்டம் இந்தியச் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டதற்கு முன்னேயே ஜனங் களுடைய உள்ளமானது அதிருப்தி என்னும் வேப்பெண்ணெயால் நிரப்பப் பட்டிருந்தது. யுத்தந் தோன்றுவதற்கு முன்னரேயே பஞ்சாப் வாசிகள் மனக்கசப்பை அடைந்திருந்தார்கள். ஆனால் யுத்தமும், யுத்தத்தின் காரணமாக ஸர் மைக்கல் ஓட்வியர் அநுசரித்த நூதன முறைகளும், ரௌலட் சட்டமும் பஞ்சாப் வாசிகளின் அதிருப்தியை உரம்பெறச் செய்தன. ஆகலின், பஞ்சாப் குழப்பத்திற்கு அம்மாகாண அரசாங்கத்தாரின் ஆட்சி முறையே காரணமன்றி வேறெதுவுமில்லை என்பதை முதலில் தெளிவாகக் கூறிவிட்டு, குழப்பங்களினுட் புகுவோம்.
இராமபஜ தத்தரின் கூற்று
லாகூரில் உள்ள உயர்தர நீதிமன்றத்து நியாயவாதியும், உண்மைத் தேசபக்தரும், இராணுவச் சட்டம் என்னும் பேய் வாய்ப்பட்டுத்தவித்தவருமான ஸ்ரீமான் இராமபஜ தத்த சௌதரி என்பவர், காங்கிர சப் கமிட்டியார் முன் கொடுத்துள்ள சாட்சியத்தில், பஞ்சாபில் ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணங்களைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அதனை ஈண்டு எடுத்துக் காட்டுகின்றோம். அவருடைய சாட்சியத்து ஒரு பாகத்தின் சாராம்சம் வருமாறு:-
இந்தியச் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட நிலப்பிரிவுச் சட்டத்துடனில்லாமல், பஞ்சாப் சட்ட சபையில் நிலப்பிரிவுச் சட்ட திருத்த மசோதா ஒன்று 1907-ம் வருஷந் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தினால் ஒரு விவசாயி தன் நிலத்தை மத விஷயங் களுக்காகவும் தரும விஷயங்களுக்காகவும் வேறொருவனுக்கு மாற்று வதில் பெற்றிருந்த சுதந்திரம் குறைக்கப்பட்டது. இன்னும், சிவில் கோர்ட்டுகளுக்கு நில சம்பந்தமாக உள்ள அதிகாரத்தைக் குறைத்துக் கலெக்டருடைய அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவினால் குடிகளுக்குப் பல அசௌகரியங்கள் ஏற்பட்டன. இந்த மசோதாவைக் கண்டிக்க லாகூரில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. இந்த மசோதா கொண்டுவரப்பட்ட காலை, ரூபாயினுடைய மதிப்புக் குறைந்து போயிருந்தது. ஆகவே இச்சட்டத்தின்படி நிலத்தின் விலை குறைந்து போயது. ஜமீன்தார்கள் தங்கள் வாழ்க்கைக்குரிய பொருள்களுக்கு வேண்டிய பணத்தைக்கூட பெறமுடியாது போயினார்கள். ஏற்கனவே அதிகாரங்களை அதிகமாக வகித்துள்ள கலெக்டர் இந்தப் புதிய மசோதாவின் கீழ் இன்னும் அதிகமாகப் பெற்றுள்ள அதிகாரங்களைக் கண்டு ஜனங்கள் அஞ்சினார்கள். இந்த மசோதா பல பொதுக் கூட்டங்களிலும் பத்திரிக்கைகளிலும் கண்டிக்கப்பட்டது.
குடியேற்ற மசோதா
பிறகு குடியேற்ற மசோதா (Colonization Bill) அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. சீனாப், ஜீலம் நதிப்பிரதேசங்களில் குடியேறினவர்கள், குறித்த ஓர் அளவு நிலத்தில் இவ்வளவு மரங்கள் பயிரிடவேண்டுமென்று கலெக்டரால் உத்தரவிடப்பட்டால், அங்ஙனமே அந்த விவசாயிகள் பயிரிட வேண்டும். ஆனால் அந்த விவசாயிகள் அந்த மரத்திலிருந்து ஒரு பற்குச்சியும் எடுக்கக்கூடாது. அங்ஙனம் செய்தால் மூன்றுமாதம் தண்டனை ஏற்படும். இவைபோன்ற சில நிபந்தனைகள் இந்தக் குடியேற்ற மசோதாவில் இருந்தன. இந்த மசோதாவைப் பஞ்சாப் வாசிகள் ஒரு முகமாக எதிர்த்து நின்றார்கள். பஞ்சாப் சட்ட சபையில் இம்மசோதா கொண்டு வரப்படும்போது, சட்டசபையிலிருந்து மூன்று இந்தியரும் இதனை எதிர்த்து நின்றனர்.
தண்ணீர்த் தீர்வையை உயர்த்தும் மசோதா
இந்த மசோதாக்கள் போதாமல் தண்ணீர்த் தீர்வையை உயர்த்துவதற்கென்று ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. முன்னிருந்ததைவிட இந்தப் புதிய மசோதாவின் கீழ் நூற்றுக்கு முந்நூறுவீதம் தண்ணீர்த் தீர்வை உயர்த்தப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அதிக கஷ்டம் ஏற்பட்டது. லாகூரிலிருந்த பல்லாயிரம் விவசாயிகள் ஒன்றுகூடி வாய்க்கால் தண்ணீரைத் தங்கள் நிலங்களுக்கு உபயோகிப்ப தில்லை யென்று தீர்மானித்தார்கள். இந்தியா அரசாங்கத்தாரும் இந்தியா மந்திரி யாரும் இதைப்பற்றி அறிவிக்கப்பட்டனர். இந்தத் தண்ணீர்த் தீர்வை உயர்வைப்பற்றிக் கண்டிக்க, பஞ்சாப் வாசிகளின் பெரிய பொதுக் கூட்டமொன்று லாகூரில் கூடியது. அக்கூட்டத்தில் யாவரும் மிக்க அமைதி யுடனேயே பேசினர். பிறகு இந்த மசோதாவைக் கண்டித்து ஒரு மகஜர் தயார் செய்யப்பட்டு அரசாங்கத்தாருக்கு அனுப்பப்பட்டது.
பஞ்சாபி வழக்கு
இந்த மசோதாக்கள் ஜனங்களுடைய உள்ளக் கவலையைச் சூழ்ந்து கொண்டிருந்தபோது, பஞ்சாபி பத்திரிக்கையின் வழக்கு நடைபெற்றது. சில இளைஞர்கள், இந்த பஞ்சாபி வழக்குச் சம்பந்தமாக நடைபெற்ற சில சம்பவங்களில் கலந்துகொண்டார்கள். இவர்கள் ஒருநாள் லாகூரிலுள்ள அநார்கலி மூலமாக அப்பர் மால் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது போலீசாரால் தடுக்கப்பட்டுப் பின்தள்ளப்பட்டனர். பஞ்சாபி பத்திரிக்கை அதிகார வர்க்கத்தாருடைய செயலைக் கண்டித்ததற்காகவே தண்டிக்கப் பட்டது என்று ஜனங்கள் எண்ணினார்கள்.
ராவல் பிண்டி வக்கீல்கள்
ராவல் பிண்டி வக்கீல்களான லாலா ஹண்ராஜ், லாலா குருதா ராம், லாலா ஆமலகராம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, பிரதம நீதிதலத் திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் இவர்களை ஜாமீன்பேரில் விடுதலை செய்ய முடியாதென்று நீதி தலத்தார் மறுத்துவிட்டனர். கடைசியில் இவர்கள் ராவல்பிண்டி ஜில்லா நீதிபதியால் விடுதலை செய்யப்படும் வரை சிறையில் வருந்தினார்கள். இது பஞ்சாப் வாசிகளின் உள்ளத்தைப் புண்படுத்தியது. மேற்கூறப்பட்ட மூன்று கனவான்களும் அக் காலத்து ராவல்பிண்டி டிப்டி கமிஷனராயிருந்த மிடர் அக்னியு என்பவரால் மிக்க இழிவாக நடத்தப்பட்டதைக் கேட்டு ஜனங்களுக்கு ஒருவித அருவருப்பு உண்டாயிற்று. சிவில் அண்ட் மில்டெரி கெஜட் போன்ற ஆங்கிலோ இந்தியப் பத்திரிக்கைகள் வகுப்புத் துவேஷத்தை உண்டு பண்ணத்தக்க வாசகங்களை எழுதிவந்தன.
அடக்குமுறைப் பிரயோகங்கள்
பிறகு லாலா லஜபதிராயும் அஜீத் சிங்கும் தேசப்பிரஷ்டம் செய்யப் பட்டார்கள். இராஜத் துரோகக் கூட்ட அடக்குமுறைச் சட்டம் போன்ற பல கொடிய அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதனால் பஞ்சாப் மாகாணத்தின் அரசியலுணர்ச்சியே அற்றுப்போயிற்று. இவைகள் யாவும் 1906 - 1907-ம் வருஷங்களில் நடைபெற்றவை யாகும்.
பிறகு 1914-ம் வருஷம் ஆகடு மாதம் நான்காந் தேதி பெரிய யுத்தம் தொடங்கியது. இந்தியப் பாதுகாப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் பஞ்சாப் மாகாணத்திலும் தலைவிரித்தாடியது போல் வேறெந்த மாகாணத்திலும் தலை விரித்தாடியதில்லை. இவைகள் தவிர, கோமகாடமாரு சம்பவமும் காதர் கூட்டத்தார் மிகக் கடுமையாக அடக்கப்பட்டமையும் ஜனங்களுடைய அதிருப்திக்குக் காரணங்களாகச் சேர்ந்துகொண்டன.
ஓட்வியரின் முறைகள்
இதுகாறும் கூறியவாற்றான், பஞ்சாப் மாகாணத்தில் சென்ற ஆண்டு ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம் அம் மாகாணத்து அதிகார வர்க்கத்தினர் கையாண்டு வந்த ஆட்சிமுறையே என்பது நன்கு புலனாகும். ஸர் மைக்கல் ஓட்வியரின் ஆட்சிக் காலத்தில், பஞ்சாப் மாகாணம் பலவித கட்டுகளுக்கு உட்பட்டது. ஸர் மைக்கலின் காலத்தில் நடைபெற்ற செயல்களில் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.
படித்த வகுப்பாரிடத்தில் பற்றுள்ளம்
ஸர் மைக்கல் பிரான்சி ஓட்வியர், படித்த வகுப்பாரிடத்தில் அதிக பற்றுள்ளம் கொண்டிருந்தார். இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் கிளர்ச்சிகளுக்கெல்லாம் படித்த வகுப்பாரே காரணர் என்றும், பாமர ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் இவர் எண்ணியிருந்தார். படித்த வகுப்பார் எனின், ஸர் மைக்கல் ஓட்வியர் என்ன பொருள் கொண்டிருந்தார் என்பதை நாமறியோம். ஸர் மைக்கல் பஞ்சாப் மாகாணாதிபதி பதவி யினின்று விலகு முன்னர், அவருக்குச் சில பட்டவேடரும் அதிகாரவர்க்கத்தார் ஆதரவை நாடி நிற்போரும் சேர்ந்து ஓர் உபசாரப் பத்திரம் அளித்தார்கள். அதுகாலை, ஸர் ஓட்வியர் பதிலிறுக்கும் வாயிலாகப் படித்த வகுப்பாரை, கல்வியறிவு உடையோர் என்றும் ஆவேசம் கொண்டவர் என்றும் ஆபத்தை விளைவிப்பவர் என்றும் இராஜபக்தியில்லாதவர் என்றும் கலகக்காரர் என்றும் தீமையை உண்டாக்குவோர் என்றும் ஆவேசந் தரத்தக்க பிரசங்கங்களைச் செய்வோர் என்றும் பொய் வதந்திகளைப் பரப்புவோர்என்றும் ஐரோப்பியர் மீது துவேஷத்தை உண்டாக்குவோர்என்றும் அடைமொழிகள் கொடுத்துப் பேசினார். படித்த வகுப்பார் என்னும் மொழிக்கு இவ்வளவு பொருள்கள் இருக்கின்றன என்று, அகராதிகள் தொகுத்த எவரும் கூறினாரில்லை. ஸர் மைக்கல் ஓட்வியர் இந்த அரிய பொருள்களை வெளியிட்டமைக்கு இந்த உலகம் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இந்தப் படித்த வகுப்பார் என்ன செய்தனர்? ஸர் மைக்கலின் கூற்றுப்படி இவர் சில மகம்மதியர்களைக் கலகச் சூழ்ச்சிகளில் சேரும்படி தூண்டினர்; தவறான செய்திகளைப் பரப்பி சீக்கியர்கள் அரசாங்கத்துக்கு விரோதமாக எழுப்பிவிட்டனர். அராஜகம் மிகுந்த பிரசார வேலைகளினால் மாணவர்களைக் கொடுமைச் செயல்கள் செய்யும்படி தூண்டினர். மேற்கூறப்பட்ட வாக்கியத்தினால், ஸர் மைக்கல், ஹிந்துக்களையே கிளர்ச்சிக்காரர் என்று கொண்டி ருக்கிறார் என்பது நன்கு புலப்படும். படித்த வகுப்பார் மகம்மதியரையும் சீக்கியரையும் தீமை செய்யுமாறு தூண்டினார். ஆனால் ஹிந்துக்களை ஏன் தூண்டவில்லை? ஆகவே படித்த வகுப்பார் அல்லது கிளர்ச்சிக்காரர் என்பவர் ஹிந்து சமூகத்திலேயே இருக்கின்றனர் என்று ஸர் ஓட்வியர் எண்ணியிருந்ததாகத் தெரியவருகிறது. தம்முடைய பதிலில், இவர் முலீம்கள் யுத்த காலத்தில் செய்த உதவிக்காக நன்றி பாராட்டுகிறார். சீக்கியர்கள் தங்கள் இராஜபக்தி குறையாமல் இருந்துவந்ததைப் புகழ்ந்து பேசுகிறார். ஆனால் ஹிந்து சமூகத்தினரைப் பற்றிச் சரியாகக் குறிப்பிடவில்லை. இதனால் அறியக்கிடப்பதென்ன? ஹிந்து சமூகத்தினரைப் பார்த்து, ஸர் மைக்கல் உங்களுடைய சமூகம், வியாபாரத்திலும் கைத்தொழிலிலும் பிற உத்தியோகங்களிலும் பணம் சம்பாதித்தவரையே பெரும்பாலோராகக் கொண்டிருக்கிறது என்று கூறினார். எனவே, படித்த வகுப்பார், அல்லது கிளர்ச்சிக்காரர் என்பவர், மேற்கூறப்பட்ட வாக்கியத்தில் கூறப்பட்டவருள் அடங்கினவர் என்று எண்ணியிருந்தார் போலும். உபசாரப் பத்திரத்திற்கு ஸர் மைக்கல் ஓட்வியர் அளித்த பதில் முழுவதையும் சிவில் அண்ட் மில்டெரி கெஜட் பத்திரிக்கை பல உப தலையங்கங்களுடன் வெளியிட்டது. அந்த உபதலையங்கங்கள் வருமாறு:- மகம்மதியர்களின் இராஜபக்திக் குறிப்பு மகம்மதியர்களுடைய இராஜபக்தியில் நம்பிக்கை சீக்கிய சமூகம் சீக்கியருடைய இராஜபக்தியும் குழப்பமும் ஹிந்து சமூகம் ஹிந்து மாணவர்களும் குழப்பமும். இவைகளில் ஹிந்து சமூகத்தின்இராஜபக்தி என்பது காணப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன? ஹிந்து சமூகத்தினரின் இராஜபக்தி பலருக்கும் தெரிந்துள்ளமையால் ஸர் மைக்கல் அதனைப் பற்றிக் கூறாமலிருந்தார் என்பதற்கும் இல்லை. ஓரிடத்தில், நகரத்திலுள்ள ஹிந்துக்கள், யுத்தகாலத்தில் உதவி செய்யும் படி வேண்டப்பட்டார்களென்றும், ஆனால் அவர்கள் அவ்வேண்டுகோளுக்கிணங்கவில்லையென்றும் கூறப்பட்டிருக்கிறார்கள். மற்றோரிடத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் அடையும் நன்மையை நோக்கி அவர்கள், உள் குழப்பங்களையும் வெளிக்குழப்பங்களையும் அடக்குவதில் அரசாங்கத்தாருடன் ஒத்துழைக்க வேண்டியது நியாயமே யாகும் என்று ஹிந்துக்கள் தங்கள் கடமையை நினைவூட்டப்பட்டிருக் கிறார்கள். எனவே, ஹிந்துக்களிலேயே கிளர்ச்சிக்காரர் அடங்கியிருக் கின்றனர் என்று ஸர் மைக்கல் எண்ணியிருந்ததாக நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஓட்வியர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்
ஸர் மைக்கல் ஓட்வியர் படித்த வகுப்பாரைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் தூற்றி வந்தார். 1917 ம் வருஷம் செப்டம்பர் மாதம் பதின்மூன்றாந் தேதி நடந்த இந்தியச் சட்ட சபையில் கனம் மஹம்மது மியான் ஷாபி (இவர் இதுகாலை, இராஜப்பிரதிநிதி நிருவாக சபையில் ஓர் அங்கத்தினராயிருக்கிறார்.) பீஹார் ஒரிஸா மாகாணத்தைப்போல் பஞ்சாப் மாகாணமும் சட்ட நிரூபண முறையிலும் ஆட்சி முறையிலும் வைக்கப்படவேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். இதை ஸர் மைக்கலே ஆதரித்து ஓருபந்நியாசம் செய்தார். ஆனால் இந்த உபந்நியாசத்தில், முன்னுக்குப்பின் முரண்பட்ட விஷயங்கள் பல கிடந்தன. இவர் தம் பிரசங்கத்தில், படித்த வகுப்பாரைத் தூற்றுவதைக் கண்டு சகியாமல் பண்டித மதன்மோஹன் மாளவியா எழுந்து இவரை மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். லார்ட் செம்போர்ட் விருப்பப்படி படித்த வகுப்பாரைத் தூற்றியதற்காக ஸர் மைக்கல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இவருடைய உபந்நியாசத்தில் சில மணிகளை எடுத்துக் காட்டுகின்றோம்.
என்னுடைய மாகாணத்தைப் பொறுத்தமட்டில் (அரசியல்) முன்னேற்றத்திற்கு நான் நல்வரவு கூறுகிறேன். ஆனால் மில் என்னும் நிபுணரால் கூறப்பட்ட (சுய ஆட்சிக்கு அவசியமாகவேண்டிய மூன்று) நிபந்தனைகள் நிறைவேற்றுவதற்கு நீண்ட நாள் செல்லும் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவின் இராஜபக்தியையும், இந்தியர்களும் இந்திய இராணுவமும் (இதை பஞ்சாப் இராணுவம் என்றே கூற வேண்டும்) செய்துள்ள தியாகத்தையும் அடிப்படை யாகக் கொண்டு அரசியல் சுதந்திரம் வேண்டுமென்று விரும்புவோர், தங்கள் இராஜபக்தியையும் தியாகத்தின் சுமையை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த மாகாணத்துக்குத் தங்கள் அநுதாபத்தையும் எழுச்சி பொருந்திய வார்த்தைகளால் காட்டாமல் வேறு அநுபவ முறையில் காட்டுவாராக. உதாரணமாக. பிற மாகாணங்களில் யுத்தத்திற்கு ஆள்சேர்ப்பாராக. அரசியல் உபந்நியாசங்கள் நம் காதுகள் செவிடு படும்படியான ஆபத்தில் அகப் பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில், அரசியற் குறிப்புகளின் பொழிவால் நம் கண்கள் குருடாய்ப் போயிருக்கும் இக்காலத்தில் நம் உள்ளங் களிலுள்ள மயக்கத்தையும் வீண் எண்ணங்களையும் போக்கிக் கொள்ளப் பூமிதேவியைப் பார்ப்போமாக. அங்ஙனம் பார்த்து இந்தக் கூச்சலும் பேச்சும் கலப்பையைத் தாங்கிக்கொண்டிருக்கும் உழவனுக்கு என்ன பயனைத் தரும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோமாக.
முரண்பட்ட மொழிகளாலாய இவ்வுபந்நியாசம் இந்தியாவில் பலருடைய உள்ளத்தைப் புண்படுத்தியது என்பதைக் கூற வேண்டுவதில்லை. சீர்திருத்தத்தைப்பற்றி இந்தியா அரசாங்கத்தாருக்கு எழுதிய ஒரு குறிப்பில் இவர், படித்த வகுப்பாரைப் பலவாறாக இழித்துப் பேசியிருக்கிறார். அவைகளை ஈண்டு விரிப்பதற்கு இடமில்லையென வருந்துகின்றோம்.
பஞ்சாப் சபையில் பேசினார்
ரௌலட் சட்ட சம்பந்தமாக இந்தியாவெங்கும் கிளர்ச்சி எழுந்ததைப் போல் பஞ்சாப் மாகாணத்திலும் எழுந்தது. இக்கிளர்ச்சியுடன் ஸர் மைக்கலின் கோபமும் பொங்கி யெழுந்ததென்று கூறலாம். ரௌலட் கிளர்ச்சிக்குக் காரணர் படித்த வகுப்பாரே என்று ஸர் மைக்கல் இறுதியாக நம்பினார். சென்ற வருஷம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாகாணச் சட்டசபைக் கூட்டத்தில் ஸர் மைக்கல், கிளர்ச்சிக் காரரை அடக்குவதில் தமக்கிருக்கும் சக்தியை மிகக் கம்பீரமாகக் காட்டிக்கொண்டார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
யுத்த காலத்தில் இந்த மாகாணத்தின் பொது அமைதியை மிகவும் நன்றாய்ப் பாதுகாத்த இந்த அரசாங்கத்தார், சமாதான காலத்தில் அது கலக்கமடையக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறார். எனவே, இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி, லாகூர், அமிர்தசர ஆகிய இரண்டிடங்களிலுமுள்ள சில நபர்களின் மீது முன்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய நோக்கம் எதுவாயிருந்த போதிலும் அவர்கள் ஜனங்களின் உணர்ச்சிகளை அரசாங்கத்திற்கு விரோதமாக எழுப்பப் பகிரங்கமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்நிய சத்துருக்களை அழித்து, உள்நாட்டுக் கலகத்தை அடக்கிய பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்தக் கிளர்ச்சிக்காரர்களை அலட்சியம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் தனியே இருந்துகொண்டு வாலிபர்களையும் பாமரர்களையும் தீச்செயல்களைச் செய்யும்படி தூண்டிவிடுவார்கள். வாலிபர்களையும் பாமரர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆகையால் பொதுக்கூட்டங்களில் கிரமமாக நடைபெறுவதற்கும் அங்குப் பேசப்படும் பேச்சுக்களின் நிதானத்திற்கும் அரசியல் முயற்சிகளில் சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பாளிகளாவார்கள் என்பதை அவர்களுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் எச்சரிக்கை செய்கிறேன். இந்த நிபந்தனையின் மேல் பொதுக்கூட்டங்கள் கூட்டும் பாத்தியதையைத் தடுக்க அரசாங்கத்தாருக்கு விருப்பமில்லை. ஆனால் கிரமமான நோக்கங்களுடன் பொதுக்கூட்டங் களைக் கூட்டுபவர்களுக்கும், கடுமையாகப் பேசக்கூடியவர்களைத் தடுக்க மனோபலமில்லை யென்பது தெரிந்த விஷயம். இப்படியிருப்பதால் நிதானமும் கௌரவமும் உள்ள சிலர், இத்தகைய கூட்டங்களுக்கு வருவதில்லை. இதனால் தான் எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியமாயிற்று.
இங்ஙனமே இந்தியா வெங்கணும் சத்தியாகிரக விரதக் கொண்டாட்டம் நடைபெற்ற மறுநாள், ஸர் ஓட்வியர், ரௌலட் சட்டத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு, உண்மைச் செய்திகளைத் திரித்துக்கூறும் கூச்சலிடுவோரான ஒரு சிறிய கூட்டத்தார் என்று ஒரு சன்மானப்பத்திரம் அளித்தார். இவர் ரௌலட் சட்டம் மிகவும் நல்ல சட்டமென்றும் அதனால் ஒருவரும் பாதிக்கப்படமாட்டார் என்றும் அடிக்கடி கூறிவந்தார். கிளர்ச்சிக்காரர்கள் ரௌலட் சட்டத்தைத் தவறாகப் பாமர ஜனங்களுக்கு அறிவித்து அவர்களிடத்து ஒரு விரோத உணர்ச்சியை உண்டாக்கி வருகின்றார் என்று கூறிவந்த ஸர் மைக்கலே, ரௌலட் சட்டம் பொதுஜன அமைதியைக் காக்கவே ஏற்பட்டதென்றும், அதனை எதிர்த்துப் பேசுவோர் விஷயங்கள்அறியாதவர் என்றும் பன்முறை பேசியுள்ளார். இது, விஷயங்களைத் திரித்துக் கூறிய தாகாதோ?
பஞ்சாப் குபேரன் குன்றிப் போனார்
ஸர் மைக்கல் ஓட்வியர், அரசியல் இயக்கங்களில் தலையிட்டுழைப்போரையும், உழைக்க முற்படுவோரையும் எந்தெந்த வழிகளில் அடக்கலாமோ அந்தந்த வழிகளில் அடக்கி வந்தார். அவருடைய ஆட்சியில் அரசியற்றலைவர்கள் அடைந்த அநுபவங்களை ஈண்டு விரித்தெழுத முடியாதெனினும் சிலருடைய அநுபவத்தை மாத்திரம் அவருடைய வாக்குமூலங்களைக் கொண்டே குறிப்பிடுகின்றோம். பஞ்சாப் மாகாணத்துக் குபேரன் எனத்தகும் லாலா ஹரிகிஷன்லால் காங்கிர சப் கமிட்டியார் முன்கொடுத்த சாட்சியத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:-
பஞ்சாப் மாகாணத்தின் ஆட்சிமுறையானது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகக் குறுகிய நோக்கமுடைய உத்தியோகதர் வசப்பட்டிருக்கிறது. அதிகாரத்திலுள்ளவருக்கும் ஜனங்களுக்கும் உள்ள சம்பந்தம் செயற்கையாக இருந்ததன்றி இயற்கையாக இல்லை. பொதுஜனக் கிளர்ச்சியில் ஏதேனும் ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விரோதியென்று அதிகாரிகளால் எண்ணப் பட்டு வந்தார். 1907 ம் வருஷம் லாலா லஜபதிராய் மாண்டலேவுக்குத் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட காலை, அதிகாரிகளுக்கும் ஜனங்களுக்கும் ஒருவித ஒற்றுமையை உண்டாக்க நான் பல முயற்சிகள் செய்தேன். ஸர் லூயிடேன், லெப்டினெண்டு கவர்னராயிருந்து விலகும் காலம்வரை ஜனங்களும் அதிகாரிகளும் ஒற்றுயைகவே இருந்தார்கள் என்று கூற வேண்டும். ஜனப்பிரதிநிதி களாயுள்ள பெரிய மனிதரிடத்து உத்தியோகதர்கள் வெறுப்புக் கொண்டிருக்கும் காரணத்தினால் தம் கை எங்ஙனம் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்ற தென்பதைப்பற்றி ஸர் லூயிடேன் அடிக்கடி கூறுவதுண்டு. நான் பல ஐரோப்பிய உத்தியோகதர் களுடைய வெறுப்பைப் பெற்றேன். நாட்டிலுள்ள உண்மையான பெரிய சுதேசி என்று ஸர் கார்டன் வாக்கர் (இவர் பஞ்சாப் மாகாணத்திற்கு இரண்டு முறை லெப்டினெண்டு கவர்னர் வேலையைச் சிறிதுகாலம் பார்த்தவர்) என்னைக் கூறினார். 1913-ம் வருஷத்திற்கு முன் நான் ஏறக்குறைய எல்லாத்துறைகளிலும் இறங்கி உழைத்திருக்கிறேன். ஓரு சித்திரக் கலாசாலைக்கும், ஒரு புத்தகசாலைக்கும், டிரிப்யூன் பத்திரிக்கைக்கும் நான் டிரடியாக இருந்தேன். சுமார் ஆறு வியாபாரக் கம்பெனிகளுக்கு நிருவாக டைரக்டராகவும் ஏஜண்டாகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவில் சுமார் எழுபத்திரண்டு கிளைச்சாலைகளுடைய பீபில் பாங்கிக்கு நிருவாக டைரக்டராக இருந்திருக்கிறேன். அமிருதசர பாங்கும், பணமாற்றல் வியாபாரமும் என்னுடைய நிருவாகத்திலேயே இருந்தன என்று கூறலாம். முதன் முதலாக ஏற்பட்ட ஓர் இந்தியன் இன்ஷியூரன் கம்பெனிக்கு நான் தலைமை வகித்திருந்தேன். பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மூன்று காங்கிரசுகளை நடத்தி வைத்திருக்கிறேன். இரண்டு அரசியற் சங்கங்களுக்கு அக்கிரா சனாதிபதியாயிருந்திருக்கிறேன். ஆசாரச் சீர்திருத்தத்தைப் பற்றி நான் மிகவும் முற்போக்கான அபிப்பிராயங்களையே கொண்டிருந்தேன். ஆகையால், நான் அமைதியுள்ள மனிதனாகவே கருதப்பட்டேன். இச்சமயத்தில் ஸர் மைக்கல் ஓட்வியர் லெப்டினெண்டு கவர்னராக வந்தார்.
பேட்டி மறுத்துவிட்டார்
ஸர் மைக்கல் ஓட்வியரைப் பேட்டிகாண மும்முறை முயற்சி செய்தேன். ஆனால் ஸர் மைக்கல் என்னைக் காண மறுத்துவிட்டார். பீபில் பாங்கின் லிக்விடேடரான மிடர் மியூஜன் என் பொருட்டு வேண்டிக் கொண்டும் என்னைக்காண அவர் ஒருப்படவில்லை. 1913 ம் வருஷத்து நாணயக் கமிட்டி முன்னர் சாட்சியங் கொடுக்குமாறு இங்கிலாந்து செல்லவேண்டுமென்று ஸர் லூயிடேன் எனக்குக் கட்டளையிட்டார். ஆகவே நான் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க, ஸர் மைக்கல் ஓட்வியர் லெப்டினெண்டு கவர்னராக வந்து விட்டார். அவர் நான் சாட்சியாகச் செல்லக்கூடாதென்று என் பெயரை அடித்துவிட்டார். என் வியாபாரக் கம்பெனிகளுக்கு - முக்கியமாக பீபில் பாங்கிக்கு - விரோதமாக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு அவர் அப்பொழுது பஞ்சாப் மாகாணத்து வரவு செலவு இலாகா கமிஷனராக இருந்த மிடர் பெண்டன் மூலமாகவும் ஜாயிண்ட் டாக் கம்பெனி ரிஜிடர் மூலமாகவும் ஆதரவு கொடுத்து வந்தார். பீபில் பாங்கிக்கு விரோதமாக ஏற்பட்ட கிளர்ச்சியானது அதிகார வர்க்கத்தாருடைய ஆதரவைப் பெற்றிருந்தமையால், அந்தப் பாங்கி எந்த வழியிலும் எவ்விதமான உதவியையும் பெறமுடியாமற் போய்விட்டது. எனவே, அதனை 1913 ம் வருஷம் செப்டம்பர் மாதம் ஒன்பதாந்தேதி மூட வேண்டியதாயிற்று. இது சம்பந்தமாக என்னை எவ்வித தொந்தரவுக்குள்ளேனும் உட்படுத்த வேண்டுமென்று ஜாயிண்ட் டாக் ரிஜிட்ரார் பெருமுயற்சிகள் செய்தார். இந்தப் பாங்கிக்கென்று தனியான ஒரு லிக்விடேடர் வங்காளத்திலிருந்து வரவழைக்கப்பட்டார். இந்தப் பாங்கின் வேலைகளை முடிவுசெய்வதெற்கென்று தனியான ஒரு ஜில்லா நியாயாதிபதி நியமிக்கப்பட்டார்.
இந்த பாங்கைத் திருப்பியமைப்பதற்குச் செய்யப்பட்ட எல்லா முயற்சிகளும் பழுதுறும் படி செய்யப்பட்டன. பீபில் பாங்கி ஒன்று கட்டாயத்தினால் மூடப்பட்டதன் பேரில் பல பாங்குகள் மூடுண்டன, பல வியாபாரச் சாலைகள் மூடுண்டமையும் என்னையும் இன்னும் சிலரையும் துன்பத்திற்குள்ளாக்கியதும் இவை சம்பந்தமான செயல்களும் பஞ்சாப் மாகாணத்துச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
மனச்சான்றுக்கு மாறாக வற்புறுத்தப்பட்டேன்
என்னுடைய மனச்சான்றுக்கு மாறாகக் கைத்தொழிற் கமிஷன்முன் சாட்சியங் கொடுக்கும்படி நான் பஞ்சாப் அரசாங்கத்தாரால் வற்புறுத்தப்பட்டேன். அங்ஙனம் செய்தும் நான் பஞ்சாப் மாகாணாதிபதியின் கருணைக்குப் பாத்திரனாகவில்லை. 1919 ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் காங்கிர பிரதிநிதிக்கூட்டத்தில் ஓர் அங்கத்தினனாக இங்கிலாந்துக்குச் செல்லத் தெரிந்தெடுக்கப்பட்டமையும் 1919 ம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினெட்டு பத்தொன்பது தேதிகளில் ஜல்லந்தரில் நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் மாகாண மாநாட்டிற்கு அக்கிராசனராக நான் தெரிந் தெடுக்கப்பட்டமையும், ஸர் மைக்கல் ஓட்வியருக்கு என் மீதுள்ள கோபத்தை அதிகமாக்கின.
லாலா தூனிசந்திரர்
இங்ஙனமே லாலா தூனிசந்திரர் கொடுத்த சாட்சியத்தில் பின் வருமாறு கூறுகிறார்:- லாகூர் இந்தியன் அசோசியேஷன் காரியதரிசி என்ற முறையில் நான் பல பொதுக்கூட்டங்களைக் கூட்ட வேண்டியிருந்தது. இது சம்பந்தமாக அறிக்கைகளை வெளியிட்டதும், நான் பஞ்சாப் அரசாங்கத்தின் பிரதம காரியதரிசியாலாவது, லாகூர் கமிஷனராலாவது அழைக்கப் படுவேன். அவர்கள் நான் பொதுக்கூட்டங்கள் கூட்டாமலிருப்பதற்கு என்னென்ன தடைகள் உண்டோ அவைகளை யெல்லாம் செய்து வந்தார்கள். ஸர் மைக்கல் ஓட்வியரின் பொருட்டு, அரசாங்கத்தின் பிரதம காரியதரிசியும், கமிஷனரும் வெளி மாகாணங்களிலிருந்து பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இன்னாரை வரவழைக்கலாம்; இன்னாரை வரவழைக்கக் கூடாதென்று எத்தனையோ முறை கூறியிருக்கின்றனர். இது மாத்திரமல்ல லாகூரில் நடைபெற்ற பஞ்சாப் மாகாண மகாநாட்டிற்குப் பஞ்சாப் சட்டசபை அங்கத்தினரிற் சிலர் சென்றிருந்தனர். இவர், அரசாங்கத்தின் பிரதம காரியதரிசியால் வரவழைக்கப்பட்டுப் பலமாகக் கண்டிக்கப்பட்டார்.
இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் வேகம்
இவைகளினால் அரசியல் உர்ச்சி கொண்டிருந்தார்மீது ஸர் மைக்கல் ஓட்வியர் எத்தகைய உணர்ச்சி கொண்டிருந்தார் என்பது தெள்ளிதிற் புலனாகும். இன்னும் இவர், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு லோகமான்ய பாலகங்காதர திலகரையும், விபின சந்திரபாலரையும் பஞ்சாப் மாகாணத்திற்குள் வர வொட்டாது தடுத்தனர். நியு இந்தியா, அமிருதபஜார் பத்திரிக்கை, இண்டிபெண்டெண்டு போன்ற தேசீயப் பத்திரிக்கைகளும் இங்ஙனமே தடுக்கப்பட்டன.1 இன்னும் பலவற்றிற்கும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் உபயோகப்படுத்தப்பட்டது. அவைகளைச் சமயம் வந்துழிக் கூறுவோம். அச்சுச் சட்டமும் ஸர் மைக்கலின் கையில் அகப்பட்டுக் கொண்டு விழித்தது என்று கூறலாம். அச்சுச் சட்டத்தை ஆதரவாகக் கொண்டு, பல பத்திரிக்கைகளால் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஈடுகாணத் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பாக்கியத்தைப் பெற்றிராத பத்திரிக்கைகள் புதிதாக ஈடுகாணத் தொகை செலுத்தும்படி வற்புறுத்தப் பட்டன. பொதுவாகக் கூறுமிடத்து பஞ்சாப் மாகாணத்தின் சுதந்திர நாடியானது ஸர் மைக்கல் ஓட்வியர் காலத்தில் அற்றிருந்தது என்னலாம்.
யுத்தமும் இந்தியாவும்
இனி ஸர் மைக்கல் ஓட்வியர், யுத்த சம்பந்தமாகச் செய்த தீவிர முயற்சிகளைப் பற்றிச் சிறிது கவனிப்போம். 1914 ம் வருஷம் தொடங்கிச் சுமார் நாலரைஆண்டுகள் நடைபெற்ற பெரிய ஐரோப்பிய யுத்தத்திற்கு இந்தியா பல்லாற்றானும் உதவி செய்தது என்பதை உலகத்தாரனைவரும் அங்கீகரித்திருக்கின்றனர். இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்காகச் செய்த உதவியைத் தன் கடமையாகக் கொண்டதேயன்றி வேறொன்று மில்லை. இந்தியாவின் இரத்தம் ஐரோப்பிய யுத்தகளத்தில் தாராளமாகச் சிந்தப்பட்டது; இந்தியாவின் பணம், யுத்தச்செலவில் ஒரு பங்கெடுத்துக் கொண்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் இராஜபக்தியைக் காட்ட நற்சமயம் வாய்ந்ததைக் குறித்து இந்தியர்கள் சந்தோஷப்பட்டார்கள். கிரேட் பிரிட்டனானது, தருமத்திற்கும் சத்தியத் திற்கும் கட்டுப்பட்டே ஐரோப்பிய யுத்தத்தில் தலையிட்டதாகக் கூறப் பட்டது. அந்தத் தருமத்திலும் சத்தியத்திலும் தனக்கு எவ்வளவு பற்றுள்ளம் இருக்கிறதென்பதை யுத்தகாலத்தில் இந்தியா காட்டிக் கொண்டது. தன் வீரத்தையும் வள்ளற்றன்மையும் காட்டிக்கொள்ள இடங்கொடுத்தமைக்கு இங்கிலாந்திடத்தில் இந்தியா நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருப்பது போல் தக்க சமயத்தில் பின்னடையாமல் பல வழிகளிலும் உதவிசெய்ய முன்வந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்து கடமைப்படல் வேண்டும். இது நிற்க.
பஞ்சாபின் யுத்த உதவி
ஐரோப்பிய யுத்தத்திற்கு பஞ்சாப் மாகாணமே எல்லா வழிகளிலும் அதிகமான உதவி செய்திருக்கிறதென்று ஸர் மைக்கல் ஓட்வியர் சமயம் வாய்த்தபோது சொல்லிக்கொள்வது வழக்கம். இங்ஙனம் கூறிக்கொண்டது பலருக்கு வெறுப்பையே தந்தது. பஞ்சாப் மாகாணம், ஸர் மைக்கலின் ஆட்சியின் கீழ் அநுசரிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆள் சேர்க்கும் முறையிலும், யுத்தக் கடனுக்குப் பணம் வசூலிக்கப்பட்ட முறையிலும் பலவித துன்பங்களை யடைந்தது. ஸர் ஓட்வியர் யுத்தத்திற்கு ஆட்களையும் பணத்தையும் சேகரித்து அனுப்புவதிலேயே தம் கருத்தைச் செலுத்தினாரன்றி, இந்த அசாதாரணமான சுமையை வகிக்கப் பஞ்சாப் மாகாணம் போதிய ஆற்றலைப் பெற்றிருக்கின்றதா என்பதைச் சிறிதும் கவனிக்கவேயில்லை. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யுத்த களத்திற்குச் சென்ற சேனையில் அதிகபாகம் பஞ்சாப் மாகாணத்திலிருந்தே சென்ற தென்பதுண்மை. ஆனால், இந்தச் சேனை எங்ஙனம் அனுப்பப் பட்டது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி உள்ளத்திற்கு வருத்தத்தைக் கொடுக்கும். பஞ்சாப் மாகாணம், யுத்தத்திற்கென்று எவ்வளவு ஆட்களை அனுப்பி யிருக்கிற தென்பதை ஸர் மைக்கல் மூலமாகவே கவனிப்போம். ஸர் மைக்கல் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றனர்:-
பஞ்சாப் மாகாணம் (யுத்த காலத்தில்) சேர்த்தனுப்பிய தொகை சுமார் 355, 000 ஆகும். யுத்தத்திற்கு அனுப்பிய மதத்தினரும் அவர் அனுப்பிய ஆட்களின் தொகையும் பின்வருமாறு:-
மகம்மதியர் 170,000
பட்டாணியர் 5,000
பஞ்சாபி மகம்மதியர் என்றுவழங்கப் பெறிவோரான பஞ்சாபின் வட பாகத்திலும் மத்திய பாகத்தி லும் உள்ளோர் 136000
தென்பஞ்சாப் மகம்மதியர் 25,000
காஷ்மீர நாட்டினர் 1,500
இதர மகம்மதியர் 2,500
சீக்கியர் 90,000
ஹிந்துக்கள் 90,000
ஜாட் வகுப்பினர் 30,000
டோக்ரா வகுப்பினர் 24,000
பிற ராஜபுத்ரர் 10,000
அஹிர் வகுப்பினர் 10,000
கூஜரர் 6,000
கௌர் பிராமணர் 5,000
பிறர் 5,000
பஞ்சாபி கிறிதுவர் 4,000
ஜனத்தொகையில் 9 ல் 5 பாகத்தினரான மகம்மதியரில் 100 க்கு 48 பேரும், ஜனத்தொகையில் 9 ல் 3 பாகத்தினரான ஹிந்துக்களில் 100 க்கு 25 பேரும், ஜனத்தொகையில் ஒன்பதில் ஒரு பாகத்தினரான சீக்கியரில் 100 க்கு 25 பேரும் சேனையில் சேர்ந்திருக்கின்றனர்.
டெல்லியில் கூடிய மகா நாட்டிற்குப் பிறகு 1918 ம் வருஷம் மே மாதம் நான்காந்தேதி ஸர் மைக்கல் ஓட்வியர் ஓரிடத்தில் நமக்கு இரண்டு லக்ஷம்பேர் வேண்டும். கூடுமானால் சேனையில் சேர விரும்புவோரைச் சேர்த்துக் கொள்ளும் முறை அநுஷ்டிக்கப்படும். அவசியமானால் கட்டாய இராணுவச் சேவக முறை அநுசரிக்கப்படும் என்று கூறினார். இதே சமயத்தில் கர்னல் பாப்ஹாம்யங் என்பவர் நம்முடைய முயற்சியை எங்ஙனம் பங்கிடுவது என்பதைப் பற்றி நாம் தீர்மானிக்குங் காலத்தில் நாம் பலர்க்கு வழிகாட்ட வேண்டும். விருப்பமுள்ளவர்களையே சேனையில் சேர்த்துக் கொள்வதென்ற முறையை அநுசரித்தே நாம் வேலைசெய்வோம். ஒவ்வொரு ஜில்லாவும், ஒவ்வொரு தாசிலும், ஒவ்வொரு கிராமமும், அவைகளின் சக்தியை அநுசரித்து எவ்வளவு பேரைச் சேனைக்கு உதவ வேண்டுமென்று நிர்ணயிப்போம். அநேகமாகக் கட்டாயப்படுத்தாமல், நாம் பலரைச் சேகரிப்போம். ஆனால், தம் கடமையைச் செய்ய முன்வராத வரிடத்தும் நாம் நியாயமாக இருக்கவேண்டி அவர்களுடைய கடமையை வற்புறுத்த நமக்கு அதிகாரம் வேண்டும். ஜனங்கள், தங்கள் எல்லைக்குள் வேண்டிய பேரை அனுப்பாவிட்டால் அரசாங்கத்தாரே தலையிட்டு, தங்களுக்கு வேண்டியபேரைத் தெரிந்தெடுத்துக்கொள்வர் என்று கூறினார். மாகாணாதிபதியான ஸர் மைக்கல் ஓட்வியர் சேனைக்கு அதிக ஆள் சேர்த்தனுப்ப வேண்டுமென்று முனைந்திருக்கிறார் என்பதை அறிந்து கீழ்த்தர உத்தியோகதர்களும், தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இவ்விஷயத்தில் உபயோகிக்க லானார்கள். சேனைக்கு ஆள் சேர்க்க யார் முயற்சி செய்த போதிலும் அவருடைய முன் வரலாறு களைக் கவனியாமல் அவர் நன்கு வரவேற்கப்பட்டார். சேனைக்கு ஆள் சேர்க்கப் பாதிரிமார்களுடைய உதவியும் நாடப்பட்டது. (பஞ்சாப் மாகாணத் திலுள்ள) ஆண்பாலரிற் பாதிபேர், மற்ற பாதிபேரைச் சேனையில் சேரும் படி செய்தனர் என்று கூறலாம்.. இதைவிட, வெளிப்படையாகவே கட்டாய இராணுவச் சேவகம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தால் நலமா யிருந்திருக்கும். இங்ஙனம் மிடர் ஆல்ப்ரெட் நந்தி தம் நூலில் எழுதியுள்ளார்.
ஆள் சேர்க்கும் முறைகள்
சேனைக்கு ஆள் சேர்க்கும் விஷயமாகப் பலவித முறைகள் பஞ்சாப் மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டன. இந்தியன் பினல்கோட் 109 அல்லது 110 வது பிரிவுப்படி சிலரிடத்தில் நன்னடக்கை ஜாமீன் கேட்கப்பட்டது. சேனையில் சேர விருப்பமில்லாதவரை, நன்னடத்தை இல்லாதவர் என்று கருதி இங்ஙனம் ஜாமீன் கேட்கப்பட்டது. 1917-ம் வருஷத்திய பஞ்சாப் மாகாணத்துக் கிரிமினல் விவகார இலாகா அறிக்கையில் பின்வரும் வாக்கியங்கள் காணப்படுகின்றன. இவ்வாண்டு, ஜில்லா மாஜிட்ரேட்டுகள் சேனைக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் அதிகமாகக் காலங்கழித்தார்கள். இந்தியன் பினல்கோட் 110 வது பிரிவுப்படி நன்னடத்தை ஜாமீன் கட்டு வோரின் தொகை குறைவுபட்டிருப்பதற்குக் காரணம் சேனைக்கு அதிக மான பேர் சேர்க்கப்பட்டமையேயாகும். மிடர் ஆல்ப்ரெட் நந்தி தாம் எழுதியுள்ள ஒரு நூலில் பின்வருமாறு கூறுகிறார்:- சந்தேகிக்கப் பட்ட நபர்களின் நன்னடத்தைக்காக நிருவாக அதிகாரிகள் கிரிமினல் புரோசீஜர் கோட்டிலுள்ள பினல் பிரிவுகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இதற்குப் போலீஸார் தங்களுடைய அர்த்தத்தைச் செய்து கொண்டனர். இவர்கள் சந்தேகிக்கப்பட்ட நபர்களைக் குறித்து, சேனையில் சேரவாவது, அல்லது சிறைச்சாலைக்குச் சென்று கற்கள் உடைக்கவாவது செய்ய வேண்டு மென்று கூறினார்கள். ஆனால் அவர் யுத்தத்திற்கு செல்வதே நல்லதென்று சேனையில் சேர்ந்து கொண்டார். இதனால் நாட்டிலுள்ள கீழ்மக்கள் தொந்தரவு நீங்கியது. சிறையிலிருப்போர், சேனையில் சேர்த்துக் கொள்ள விருப்பப்பட்டால், அவர்களுடைய தண்டனை குறைக்கப்பட்டது. இங்ஙனமே ஒரு பெரிய சேனை சேர்க்கப்பட்டது.
யாரா கிராமத்து அநுபவம்
பஞ்சாப் மாகாணத்திலுள்ள கீழ்த்தர உத்தியோகதர்கள், தங்களுடைய மேலதிகாரிகளைக் களிப்பிக்க வேண்டி, தங்களுடைய அதிகார எல்லைக்குள் சேனைக்கு ஆள் சேர்க்கும் வழியாக பல முறை களை அநுசரித்தார்கள். கர்நால் ஜில்லாவில் உள்ள யாரா என்னும் கிராமத்திற்கு ஓர் அரசாங்க உத்தியோகதர் (மாஜிட்ரேட்) சென்று அங்குள்ள இளைஞர்களைச் சேனையில் சேரும்படி தூண்டினார். இந்த இளைஞரில் ஒருவருடைய தகப்பனார் தனது ஒரே மகனைச் சேனைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டாமென்று மாஜிட்ரேட்டை வேண்டினார். ஆனால் மாஜிட்ரேட் அதைக் கவனிக்கவில்லை. உடனே ஒரு கலவரம் ஏற்பட்டது. பிறகு இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி சிலர் கொண்டுவரப்பட்டு அவரில் ஐந்து பேர் தண்டிக்கப்பட்டனர். அப்பீல் வழக்கில் இந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. தண்டனை செய்த கீழ்க்கோர்ட்டாரின் தீர்ப்பினின்றும் அவர் ஜில்லா மாஜிட்ரேட்டின் உத்தரவு பிரகாரமே இந்தத் தண்டனை விதித்தனரெனத் தெரிகிறது. அப்பீல் கோர்ட்டார் தம்முடைய தீர்ப்பில், ஜில்லா மாஜிட்ரேட் அவ்வப்பொழுது செய்து வந்த உத்தரவு களினால் தெரிவதென்னவென்றால், இந்த அப்பீல் வாதிகள் தங்கள் உற்றார் உறவினரிடமிருந்து சேனைக்கு ஆள் அனுப்பியிருந்தாலும், அல்லது தாங்களே சேனையில் சேர்ந்தி ருந்தாலும், தண்டனைக்கு உட்படாமலிருப்பார்கள் என்பதே யாகும்.
ஒரு தாசீல்தாரின் கொலை
ஷாபீர் ஜில்லாவிலிருந்த சையத்நாதர் ஹீசேன் என்பவர் சேனைக்கு ஆள் சேர்க்கும் விஷயத்தில் பல கொடிய முறைகளைக் கையாண்டார் என்றும் இவர் இது சம்பந்தமாகவே கொலை செய்யப்பட்டாரென்றும் சொல்லப்படுகின்றன. இவருடைய கொலை சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு ஒரு பிரத்தியேக நீதிதலம் ஏற்படுத்தப்பட்டது. நாற்பத்தாறு பேர் குற்றஞ் சாட்டப்பட்டனர். இவர்களில் நால்வர் மரணதண்டனை யடைந்தனர்; பன்னிருவர் ஆயுள்பரியந்தம் தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டனர். ஸர் மைக்கல் ஓட்வியர் இவ்வழக்குச் சம்பந்தமாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:- காலஞ்சென்ற சையத்நாதர் ஹீசேன் ஜனங்களை இம்சை செய்தாரென்று கூறப்பட்டது. நீதிதலத்தார் அவர் செய்த குற்றங்களுக்கு ருஜீ காண்பிப்பதற்கு டிபன் தரப்பாருக்குப் பலவித சௌகரியங்கள் கொடுத்தனர். ஆனால் அவர் சேனைக்கு ஆள் சேர்க்கும் முறையானது ஏறக்குறைய கட்டாய இராணுவச்சேவக முறையை அநுசரித்திருந்ததே யொழிய அவர் எவ்வித இழிசெயலும் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இதனால் தெரிவதென்ன? சையத் நாதர் ஹீசேன் ஜனங்களைச் சேனையில் சேரும்படி கட்டாயம் செய்தார் என்பது நன்கு புலனாகவில்லையா?
சையத் நாதர் ஹீசேன் கொலைவழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் கான் அஹமத் ஹீசேன்கான் என்பவர் பின்வருமாறு சாட்சியங் கூறினார்:- தாசீல்தார் சேனைக்கு ஆள் சேர்க்கும் விஷயத்தில் அநுசரித்த முறையா தெனில், ராமத் தலைவரால் தயாரிக்கப்பட்ட அந்தந்த கிராமத்திலுள்ள ஆண்களின் பெயரடங்கிய ஒரு குறிப்பை வைத்துக் கொள்வார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு அவர் கிராமத்திற்குச் சென்று, சேனைக்கு ஆள் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் எவருக்கேனும் தடையுண்டா வென்று கேட்பார். மூன்று அல்லது நான்கு சகோதரர் அடங்கிய ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இருவரைச் சேனைக்கு அனுப்பும்படி கேட்பது அவருடைய வழக்கம். தாசீல்தார் செல்லும் கிராமத்தில் உள்ள ஜமீன்தார்கள் அவருடைய வருகையைக் கேட்டு ஓடிப்போய்விடுவார்கள்.
புதர்களிடை புருஷர்கள் வைக்கப்பட்டார்கள்
ரெவினியு அசிடெண்டு என்ற உத்தியோகத்தைப் பார்த்துவந்த கான்அஹமது ஹீசேன்கான் என்பவர் இந்தத் தாசீல்தாரின் முறைகளைப் பின்வருமாறு மேற்கூறப்பட்ட கோர்ட்டார் முன் சொன்னார்:- அவர், புருஷர்களை அவர்களுடைய திரீகளுக்கு எதிரிலேயே நிர்வாணமாக நிற்கவைத்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். திரீகள் முட்களினால் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்த உதாரணத்தையும் நான் கேட்கவில்லை. ஆனால் முட்கள் நிறைந்த புதர்களிடையே புருஷர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக்கேள்வியுற்றிருக்கிறேன். ஜூன் மாதத்திய இச்சம்பவங்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருக் கிறேனேயன்றிக் கண்ணால் பார்த்ததில்லை. நான் கூறுவனவெல்லாம் ஜெயில்தார்களிடமிருந்தும் ஜமீன்தார் களிடமிருந்தும் கேட்டவை களேயாகும். ஹாஸராமியானி என்ற இடத்தைச் சேர்ந்த குலாம் மஹம்மது என்பவர் கௌரா கோட் என்னுமிடத்தில் சில திரீகள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று என்னிடத்தில் கூறியிருக்கிறார். ஒரு பட்டாணிய கிராமத்திலும் இங்ஙனமே செய்யப்பட்டதென்று கேள்வி. இவர், சில திரீகள், மிட்ரஞ்சிஹா என்னுமிடத்திற்கும் தங்கள் உறவினரைச் சேனையிற் சேரும்படி தூண்ட அழைத்துச் செல்லப் பட்டார்கள் என்று என்னிடத்தில் கூறினார். தாசீல்தாரைப் பின்பற்றி வந்தவர்கள், சேனையில் சேர விருப்பமில்லாமல் தப்பித்துச் சென்றவர் களுடைய பயிர்கள், கால்நடைகளைக் கொண்டு மேய்த்தும், அவர் களுடைய சொத்துக்களைக் கொள்ளையிட்டும் நாசம் செய்தார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். புச்சாகலன் என்னுமிடத்தைச் சார்ந்த ஷெர் அலி என்பவர், தாசீல்தாரால் சேகரிக்கப்பட்டிருந்த பதினையாயிரம் அல்லது பதினேழாயிரம் ரூபாயை வைத்திருந்தாரென்றும், இந்தப் பணம் அவ்வளவும் சேனைக்கு ஆள் சேர்க்கும் விஷயமாக லஞ்சம் வாங்கப் பட்டது என்றும் கேள்விப்பட்டேன். பிறகு ஷெர்அலி இந்தப் பணத்தை மோசம் செய்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். கிராம வாசிகளுடைய குறைகள் யாவும் சேனைக்கு ஆள் சேர்க்கும் விஷயத்தைப் பற்றியதே யாகும். குல்லாபூர் என்ற கிராமத்தில் ஜூன் மாதத்தில் இரண்டு திரீகள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று நான் பிறகு கேள்விப்பட்டேன். பலர் தப்பித்து ஓடிப்போவதைக் கண்டு அவர்களுடைய பயிர்களை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டதாகவும் உடனே அவர்கள் திரும்பி வந்துவிட்டதாகவும் தாசீல்தார் என்னிடத்தில் கூறியிருக்கிறார்.
சில இடங்களில் சேனைக்கு ஆட்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. அம்பாலா டிவிஷன் கமிஷனர், தம் அறிக்கையொன்றில் ஜனங்கள் தங்கள் எல்லைக்கு ஏற்பட்ட ஆட்களை உதவுவதற்கு, ஒவ்வொரு வாலிபருக்கும் ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். காங்கிர சப் கமிட்டியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பணம் கொடுத்து சேனைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் காட்டியிருக்கின்றனர். காங்கிர சப் கமிட்டியார் முன் குஜரன் வாலா ஜில்லாவைச் சேர்ந்த சர்தார்கான் என்பவர் கூறிய சாட்சியத்தை ஈண்டு எடுத்து விரிக்கின்றோம். நேயர்கள் அதனைக்கண்டு மருளாதிருப்பார்களாக.
சர்தார்கானின் சாட்சியம்
வைகாசி மாதத்தில் ஒரு நாள் தாசீல்தார் எங்களுடைய கிராமத்திற்கு வந்தார். அன்றிரவு, கிராமத்திலுள்ளோர் அனைவரும் மறுநாள் கிராமச் சாவடியண்டை வந்திருக்க வேண்டுமென்று பறையறைவிக்கப்பட்டது. அப்பொழுது அறுவடை காலமாயிருந்த படியாலும், தங்களைக் கட்டாயமாகச் சேனையில் சேரும்படி அதிகாரிகள் வற்புறுத்துவார்களோ என்ற பயம் ஜனங்களுக்கு இருந்தமையாலும் கொஞ்சம் பேரே மறுநாள் காலை வந்திருந்தனர். ஆகையால் தாசீல்தார் சுமார் அறுபது அல்லது எழுபது பேருக்கு அபராதம் விதித்தார். அபராதம் விதிக்கப்பட்ட தொகையின் மொத்தம் ஆயிரத்து அறுநூறு ரூபாயாகும் . எங்கள் கிராம வாசிகள் மறுபடியும் குஜரன்வாலாவில் பிரசன்னமாயிருக்கும்படி உத்தரவு செய்யப்பட்டார்கள். எங்கள் கிராமத்திற்கும் குஜரன் வாலாவுக்கும் இடைப் பட்ட தூரம் பதிமூன்று மைல்களாகும்.
குறிப்பிட்ட நாளில் என் கிராம வாசிகள் அங்குச் சென்றதும் அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, அவர்களிலிருந்து சுமார் ஏழு வாலிபர்கள் பொறுக்கியெடுக்கப்பட்டார்கள்.
தாசீல்தாரான பதாகானே இங்ஙனம் வாலிபர்களைப் பொறுக்கியெடுத்தார். மற்றவர்கள், அதிகமான பேரைக் கொண்டு வரும்படி அடிக்கப்பட்டார்கள்; திட்டப்பட்டார்கள்.
இவர்கள் செருப்புகளால் அடிக்கப்பட்டார்கள். இவர்களுடைய தாடிகள் இழுக்கப்பட்டன. இவர்கள், வளைந்துகொண்டு தங்கள் கைகளை இரண்டு கால்களின் வெளிப்புறமாகக் கொண்டு வந்து, அந்தக் கைகளால் இரண்டு காதுகளையும் பிடித்துக் கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டார்கள்.
செருப்பால் அடிக்கப்பட்டார்
சில நாட்கள் கழித்து தாசீல்தாரான பதாகான் என்பவர் மஜீசாக் என்ற கிராமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களைத் தம் முன் ஆஜராகும்படி ஆக்ஞாபித்தார். சுமார் இருபது அல்லது இருபத்தைந்துபேர் பிரசன்ன மாயிருந்தார்கள். உடனே அலிகுஹார் என்பவர், சேனைக்கு ஆள் உதவும்படி கேட்கப்பட்டார். அவர் தமக்கு வயதாய் விட்டதென்றும், தமக்குப் புத்திரனில்லையென்றும், தம்முடைய சகோதரனின் புத்திரன் இருப்பதாகவும் அவனை வேண்டுமானால் சேனையில் சேர்த்துக்கொள்ளலாமென்றும் கூறினார். ஆகையால் அலிகுஹார், அடிக்கப்பட்டார். அவர் பகல் முதற் கொண்டு இரவு ஒன்பது மணிவரை செருப்புகளால் அடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நடந்த பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு, தாசீல் தாரான பதாகான் எங்களுடைய கிராமத்திற்கு வந்து அங்கேயே முகாம் செய்தார். அவரை வந்து காணாதவருடைய ஆடுமாடுகள், அவைகளின் இருப்பிடங்களிலிருந்து கொண்டுவரப் பட்டு, நல்ல வெயிலில் எவ்வித ஆகாரமுமின்றிக் கட்டப்பட்டன. அவைகளுக்கு யாரேனும் தண்ணீர், வைக்கோல் முதலியன கொண்டுவந்தாலும்அவைகளும் மறுக்கப் பட்டன.
பிறகு தாசீல்தார் இரண்டு கிழவர்களை வரவழைத்து அவர்களுடைய குமாரர்களைச் சேனைக்கு அனுப்பும்படி கேட்டார். அவர்கள், தங்களுடைய புத்திரர்கள் , சேனையில் சேருவதற்கு யோக்கியதை யில்லையென்று கூறினார்கள். எனவே, இந்த இரண்டு கிழவர்களுடைய தாடிகளை ஒன்றாக முடிந்து அங்குப் பூமியில் அடிக்கப்பட்டிருந்த ஒரு முளையில் கட்டும்படி தாசீல்தார் உத்தரவு செய்தார். இவர்கள் இந்த நிலைமையில் பகல் பன்னிரண்டு மணிமுதல் இரண்டு மணிவரை நல்ல முறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். பிறகு இவர்களுடைய முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வீடுதோறும் பிச்சையெடுக்கும்படி ஒரு கான்டேபில் வசம் விடப்பட்டார்கள்.
தாசீல்தார் முன் பிரசன்னமாகாதிருந்தவர்கள், தங்களுடைய கால் நடைகள் உணவின்றித் தவிப்பதை யறிந்து, உடனே அவர்முன் ஆஜரானார்கள். இத்தகைய குரூரங்களைக் கண்டு அஞ்சிய ஜனங்கள் இருபத்தாறுபேரைச் சேனைக்கு உதவினர். நான் என்னுடைய இரண்டு சகோதரர்களையும் கொடுத்தேன்.
தாசீல்தார் பிறகு இரண்டு மூன்று திரீகளையும் வர வழைத்து, அவர்கள் தங்கள் புருஷர்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று கூறினார். கிராமத்திலுள்ள எல்லா திரீகளையும் வரவழைத்து அவர்களை அவமானப்படுத்துவதாகத் தாசீல்தார் பயமுறுத்தினார். தம்மிடத்தில் வந்த திரீகளிடத்தில் அவர் மிகவும் இழிவான சொற்களை உபயோகப்படுத்தினார். பிறகு கிராம வாசிகளும் இங்ஙனமே நடத்தப்பட்டார்கள். ஹார்போக், கோட்லி புலன் வாலா என்ற கிராமங்களில் எனக்குநேரான அனுபவம் உண்டு. கோட்லிபுலன் வாலா கிராமத்திய கால்நடைகள் போலீ பவுண்டில் பதினைந்து நாட்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஹண்டர் கமிட்டி முன் அமரசிங்கின் சாட்சியம்
இந்திய ஜனங்களின் வேண்டுகோளுக் கிணங்கி இந்தியா அராசாங்கத்தார், 1919-ம் வருஷம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற குழப்பங்களைப் பற்றி விசாரிக்க ஒருகமிட்டியை நியமித்தனர் . இக்கமிட்டிக்கு லார்ட் ஹண்டர் தலைவராயிருந்தமையால் இதற்கு ஹண்டர் கமிட்டி என்ற பெயர் வழங்கலாயிற்று. இக்கமிட்டியில், கல்கத்தா உயர்தர நீதி மன்றத்து நீதிபதியான ஜடிராங்கின், கனம் மிடர் ரை, ஸர் ஜார்ஜ் பாரோ, மிடர் மித், ஸர் சிமென்லால் சேதால் வாட், கனம் பண்டித ஜகத் நாராயணர், ஷாஹிப் ஸாடா சுல்தான் ஆகிய எழுவர் அங்கத்தினராயிருந்தனர். இக்கமிட்டி முன்னர்க் காசூர் பிளீடரான அமரசிங்க் என்பவர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். இவருக்கும் ஹண்டர் கமிட்டி அங்கத்தினர் ஒருவருக்கும் நடந்த சம்பாஷணையின் ஒரு பாகத்தைக் கீழ் வெளியிடுகின்றோம்.
ஹண்டர் கமிட்டி அங்கத்தினர் வினாவும் விடையும்
ஹண்டர் கமிட்டி அங்கத்தினர் வினா : ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி விரதம் கொண்டாடப்படக்கூடாதென்று நீங்கள் உறுதிசெய்தது அதிகாரிகளிடத்தில் கொண்ட அச்சத்தினாலா?
அமரசிங்கின் விடை : நான் அப்படித்தான் நினைக்கின்றேன்.
வினா : அதிகாரிகளுடைய அச்சம் உங்களுடைய மனதில் இராவிட்டால் நீங்கள் விரதம் கொண்டாடியிருப்பீர்களா?
விடை : ஆம்! அங்ஙனமே செய்திருப்போம். ஏனென்றால் அஃதொரு சாதாரண விஷயந்தானே!
வினா : ஆனால் அங்ஙனம் செய்ய உங்களுக்குத் தைரிய மில்லையா?
விடை : ஆம்; எங்களுக்குத் தைரியமில்லை. நாங்கள் முன்னமே அச்சப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்பொழுதும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
வினா : எந்த அதிகாரி என்று குறிப்பிட முடியுமா?
விடை : எல்லா அதிகாரிகளும் அதற்கு விரோதமாகவேயிருந்தார்கள். எந்த அதிகாரியும் விரதக் கொண்டாடத்திற்குச் சாதகமாயிருக்கவில்லை. மிடர் பைசன் இதற்கு விரோதமாகவே இருந்தார்.
வினா : அதிகாரிகள் விரதக் கொண்டாட்டத்திற்குச் சாதக மாயிருப்பார்கள் என்று எவரும் கூறவில்லை. எங்கும் அதிகாரிகள் விரதக் கொண்டாட்டத்திற்கு விரோதமாகவே இருந்தார்கள். ஆயினும், நாட்டின் பிற பாகங்களில் ஜனங்கள் விரதக் கொண்டாட்டம் கொண்டாடினார்கள். காசூரில் மாத்திரம் நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?
விடை : காசூரில் பொதுஜன அபிப்ராயம் என்பது கிடையாது. இஃதொன்றினாலேயே அதிகாரிகளிடத்தில் நாங்கள் அச்சப்படவேண்டியிருந்தது. என்னைப்பற்றி மாத்திரம் சில வார்த்தைகள் கூறுகிறேன். நான் மார்ச்சு மாதம் இருபத்தொன்பதாந் தேதி ஜில்லா மாஜிட்ரேட்டான மிடர் பைசனைக் காணச் சென்றேன். ஏப்ரல் மாதம் ஆறாந் தேதி விரதக் கொண்டாட்டம் நடைபெறப்போகின்றதாவென்று அவர் என்னைக் கேட்டார். இந்த விரதக் கொண்டாட்டம் நடைபெறுவதற் குரிய ஏற்பாடுகளைச் செய்வோர்மீது அவர் நடவடிக்கை எடுத்துக் கொள்வாரென்று அவருடைய மனநிலையால் தெரியவந்தது. இதனால் அவர் விரதக் கொண்டாட்டத்திற்கு விரோதமாயிருக்கிறார் என்று நான் தெரிந்து கொண்டேன். அவர் எங்களுடைய ஜில்லா மாஜிட்ரேட் அதனால் நான் அச்சப்பட்டேன்.
வினா: எனவே, மார்ச்சு மாதம் முப்பதாந்தேதி நீங்கள் விரதங் கொண்டாடவில்லையா?
விடை: காசூரில் முப்பதாந்தேதி விரதங் கொண்டாட வேண்டுமென்று ஒருவரும் நினைக்கவில்லை.
வினா : குழப்பம் உண்டானதற்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிப்பீர்களா?
விடை : பொருளாதார நிலைமையினாலும், அரசியல் நிலைமையினாலும், யுத்தக் கடன், சேனைக்கு ஆள் சேர்த்தல் இவைகள் சம்பந்தமாகவும் ஜனங்களுக்குள் ஒருவித அதிருப்தி உணர்ச்சி இருந்தது. அரசாங்கத்தாருக்கு விரோதமாக ஜனங்களுக்கு எவ்வளவோ குறைகள் இருக்கின்றன. ஜனங்கள் பட்டினி கிடந்து இறக்கிறார்கள். தங்களுடைய எண்ணத்துக்கு விரோதமாகச் சேனைக்கு ஆள் சேர்க்கும்படி ஜனங்கள் கேட்கப்பட்டார்கள்.
வினா: தங்களுடைய அபிப்பிராயத்திற்கு விரோதமாகக் காசூரில் யாரேனும் சேனையில் சேர்க்கப்பட்டனரா?
விடை: காசூர் ஜனங்களைப்பற்றி எனக்குத் தெரியாது. சுற்றுப் புறமுள்ள கிராமங்களைப் பற்றியே எனக்குத் தெரியும். சேனைக்கு ஆள் சேர்க்கும் வேலையில் நானும் கலந்துகொண்டேன். இவ் விஷயத்தில் மிடர் பைசனுக்கு நான் உதவி செய்தேன்.
வினா: ஜனங்களை அவர்களுடைய விருப்பத்திற்கு விரோதமாகச் சேனையில் சேரும்படி நீங்கள் வற்புறுத்தினீர்களா?
விடை: என்னைப்பற்றின மட்டில் நான் ஒருவரையும் வற்புறுத்தவில்லை.
வினா: உத்தியோகதராவது உத்தியோகதரல்லாதவராவது அங்ஙனம் செய்துகொண்டிருந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்களா?
விடை : நான் மன்னிக்கப்பட்டால் இந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியும்.
வினா: நீங்கள் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?
விடை: நானாக சாட்சியங் கொடுக்க வேண்டுமென்று இங்கு வரவில்லை யென்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். மிடர் மார்டன் என்னைச் சாட்சியங் கொடுக்கும்படி வேண்டினார். மிடர் மார்டனின் வேண்டுகோளுக்கிணங்கி நான் இங்குச் சாட்சியங் கொடுக்கிறேன். (நாற்காலியை விட்டு எழுந்திருக்கிறார்.)
வினா : ஆசனத்தில் அமருக; ஆசனத்தில் அமருக. நீங்கள் மிடர் மார்டனால் சாட்சியங் கொடுக்கும்படி கேட்கப் பட்டீர்களா?
விடை : ஆம்.
வினா : எப்பொழுது உங்களை அவர் கேட்டார்?
விடை : அவருடைய கடிதத்தை வேண்டுமாயின் காட்டுறேன். ஹண்டர் கமிட்டி அங்கத்தினரான ஸர் சிமன்லால் மிடர் மார்டன் கடிதத்தை எடுத்துப் பின்வருமாறு படித்தார்:- பகல் பன்னிரண்டு மணிக்குமேல் இரண்டு மணிக்குள்ளாகத் தாங்கள் என்னை வந்து பார்த்தால் நான் மிகவும் சந்தோஷமாயிருப்பேன்.
வினா : இதில் சாட்சியங் கூறும் விஷயத்தைப் பற்றி ஒன்றும் காணப்படவில்லையே?
விடை : அந்தக் கடிதத்தின் படியே நானிங்கு வந்தேன். சாட்சியப் பெட்டியில்நான் ஏறியது இதுவே முதல் தடவைஸர் சிமன்லால்: ஒருவரை சாட்சியாக விசாரிப்பதற்கும் தாமே சாட்சியாக விசாரிப்படுவதற்கும் உள்ள வேற்றுமையை இப்பொழுதேனும் உணர்ந்தீர்களா? (அனைவரும் சிரிக்கின்றனர்.)
வினா : அவர் (மிடர் மார்டன்) உங்களிடத்தில் என்ன கூறினார்?
விடை: நான் அவருடன் பேசச்சென்றிருந்த போது வேறு இரண்டு கனவான்கள் இருந்தார்கள். மிடர் அநந்தராம் அங்கிருந்தார். காசூரில் நடந்த குழப்பங்களைப் பற்றியும், இராணுவச் சட்டம் முதலியவைகளைப் பற்றியும் சாட்சியங் கொடுக்கும்படி நான் கேட்கப்பட்டேன்.
வினா: நீங்கள் அதற்குச் சம்மதப்படவில்லை யென்பதைத் தெரிவித்தீர்களா?
விடை: காங்கிர கமிட்டியார் என்னை சாட்சியங் கொடுக்கும்படி கேட்டனரென்னும் அதற்கு மறுத்துவிட்டே னென்றும் கூறினேன். ஆனால், இதை மறுக்க முடியாதென்று அவர் கூறினார். அச்சமயத்தில், நான் சாட்சியங் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவுமில்லை. மறுக்கவுமில்லை. பிறகு சிறிது நேரம் யோசனை செய்து என்னுடைய சாட்சியத்தை எழுதி அனுப்புவதாகத் தீர்மானித்தேன்.
வினா : உங்களுடைய தீர்மானத்தை அவருக்குத் தெரிவித்தீர்களா?
விடை: சில நாள் வரை, நான் என்னுடைய சாட்சியத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. நவம்பர் மாதம் முதல் அல்லது இரண்டாந் தேதி அவர் என்னைக் கோர்ட்டில் சந்தித்து, என்னுடைய சாட்சியம் இன்னும் அனுப்பப்படவில்லையென்று கூறினார். நான், சாட்சியாக ஆஜராவதற்கு விருப்பப்படவில்லை. ஆனால் அவர் குறுக்கு விசாரணை இராதென்று கூறினார்.
வினா : குறுக்கு விசாரணை இராதென்று அவர் கூறினாரா ?
விடை : ஆம் நான் சாட்சியங் கொடுப்பதற்கு அவ்வளவு ஆவலுடையவனாக இல்லை.
வினா : மிடர் மார்டன் குறுக்கு விசாரணை இராதென்று உங்களிடத்தில் கூறினாரா?
விடை : ஆம்; முதல் பேட்டியில் அங்ஙனமே கூறினார். நான் அவரிடத்தில், லார்ட் ஹண்டர் இங்கு வந்துவிட்டதாகப் பத்திரிக்கைகளில் படித்ததாகவும் என்னை மன்னித்துவிட்டால் நலமாயிருக்கும் என்றும் கூறினேன்.
வினா : நீங்கள் குறுக்கு விசாரணை செய்யப்படுவீர்கள் என்ற காரணத்தினால் இங்ஙனம் கூறினார்களா?
விடை : எந்தக் கட்சியாருக்கும் அதிருப்தியுண்டாகுமாறு ஒன்றும் சொல்லக் கூடாதென்பதே என் கோரிக்கை. குறுக்கு விசாரணை செய்யப்பட்டால் உண்மையைக் கூறவேண்டியிருக்கும் என்றும் அஃது அவருக்கு அருவருப்பை யுண்டாக்குமென்றும் நான் அவரிடத்தில் கூறினேன். எனவே, நான் ஆஜராகப் பிரியப்படவில்லை.
வினா : கட்சிகள் என்று எவைகளைக் குறிப்பிட்டீர்கள்?
விடை : இரண்டு கட்சிகள்; காங்கிர கமிட்டியாருடையது ஒன்று; அரசாங்கத்தாருடையது ஒன்று. மிடர் மார்டனும் இன்னும் சிலரும் நான் என் சாட்சியத்தை அனுப்பியே தீரவேண்டுமென்று கூறினார்கள்.
வினா: மிடர் மார்டன் இன்னும் உங்களை வற்புறுத்தினாரா?
விடை : வற்புறுத்தினார் என்று சொல்ல முடியாது. சாட்சியங் கொடுக்கும்படி என்னைத் தூண்டினார்.
வினா : கடைசியில் அவருடைய தூண்டுதலுக்கு நீங்கள் உட்பட்டீர்களா?
விடை : அவர் சப் டிவிஷனல் ஆபீஸரானமையாலும், தினந்தோறும் கோர்ட்டில் அவர் முன் ஆஜராக வேண்டி யிருக்கின்றமையாலும் எனக்கு வேறு வழியில்லை.
வினா : இதனால் வற்புறுத்தப்பட்டீர்கள் என்பது உங்களுடைய அபிப்பிராயமா?
விடை : அஃதில்லை. ஆனால் நான் சாட்சியங் கொடுக்க ஆவலுள்ளவனாயில்லை.
வினா: உண்மையைச் சொல்லவேண்டிவரும் என்று நீங்களாக சாட்சியங்கொடுக்க முன்வரவில்லையா?
விடை: நான் எதுகூறிய போதிலும் அஃதுண்மையாகவே இருக்கும். நீங்கள் சில உண்மைகளை வேண்டுகிறீர்கள். அவைகளை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால் அதனால் எனக்குத் தொந்தரவு உண்டாகும்.
வினா : அந்த விஷயங்கள் யாவை?
விடை: அவைகளை வெளியிட நான் பிரியப்படவில்லை. சேனைக்கு ஆள் சேர்த்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்னைக் குறுக்கு விசாரணை செய்கிறீர்கள். நான் ஒருவரையும் கட்டாயப்படுத்தவில்லை.
வினா : உங்களுடன் இருந்து வேலை செய்வோர்?
விடை : சில ஜமீன்தார்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.
வினா : காசூரிலா? அல்லது வெளியிடங்களிலா?
விடை : நீங்கள் என் உள்ளத்தில் உள்ளதை வெளியிட அனுமதி கொடுப்பீர்களா?
வினா : நன்றாகக் கூறுங்கள். எல்லா உண்மைகளையும் நன்றாக எடுத்துரையுங்கள்.
விடை : எப்பொழுது இங்கு வந்தேனோ அப்பொழுதே எல்லா உண்மையையும் சொல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.
வினா : இதுகாறும் நீங்கள் கூறியது உண்மைதானா?
விடை : இதுவரை கூறியது உண்மைதான். (அனைவரும் சிரிக்கின்றனர்.) இவர்கள் ஏன் என்னைப் பார்த்து நகைக்கின்றனர்?
ஸர் சிமன்லால் : அதைப் பற்றி நீங்கள் கவனியாதீர்கள். எல்லா விஷயங்களையும் எங்களுக்கு எடுத்துக் கூறுங்கள்?
விடை : நீங்கள் ஏதேனும் சொல்லச் சொன்னாலன்றி நான் சொல்வதற் கொன்றுமில்லை.
வினா : கட்டாயப்படுத்திச் சேனைக்கு ஆள் சேர்க்கப் பட்டமையே அதிருப்திக்குக் காரணம் என்று கூறினீர்கள். அதை நான் பரிசோதிக்க வேண்டும்? யார் கட்டாயப்படுத்தினர்?
விடை : உங்களிடத்திலிருந்து நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?
ஸர் சிமன்லால் : அஃதென்ன?
சாட்சியின் விடை: நான் எல்லாவற்றையும் தெரிவித்து விட்டால் எனக்கு எவ்விதமான தொந்தரவும் வராதென்று உறுதியாவது கொடுப்பீர் களா? (தம்முடைய ஆசனத்தினின்றும் எழுந்திருந்து) தொந்தரவு என்ன வென்றால், நீங்கள் இன்னும் சில நாட்களுக்குள் இங்குகிருந்து விட்டுச் சென்று விடுவீர்கள். நான் அரசாங்கத்தின் கீழ் வசிக்க வேண்டியவனா யிருக்கிறேன். அரசாங் கத்துக்கு விரோதமாக ஒன்றும் சொல்ல வேண்டா மென்பதே என் கோரிக்கை.
வினா: நீங்கள் அனுப்பியுள்ள குறிப்பு (டேட்மெண்டு) உண்மையாயிருந்தால் ஏன் அஞ்ச வேண்டும்?
விடை: அதை நீங்கள் வேண்டுமானால் பரிசீலனை செய்து கொள்ளலாம். என்னைக் கேட்க வேண்டிய அவசியமில்லை.
வினா : உண்மை இதுவென்று எங்களுக்கு எப்படித் தெரியும்?
விடை : சேனைக்கு ஆள் சேர்க்கப்பட்ட விஷயத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும்.
வினா: அதிருப்திக்குக் காரணம், ஜனங்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் சேனைக்கு ஆள் சேர்க்கப்பட்டமையே யாகும் என்று கூறினீர்களல்லவா?
விடை : ஆம்.
வினா : பல சம்பவங்கள் நடைபெற்றன வென்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அந்த உண்மைகளை யெல்லாம் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமையெனத் தோற்றவில்லையா?
விடை : அஃதென்கடமையே. ஆனால் நான் ஒருவருடைய அதிருப்திக்கும் உட்பட வேண்டாமென்றுதான் பார்க்கிறேன்.
வினா : உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டு போனால், இந்த உலகத்திலுள்ள எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது.
விடை : ஆனால் இந்த உலகத்தில் நான் வாழ வேண்டுமே. எனக்காக, நானே தொந்தரவை உண்டாக்கிக்கொள்ள வேண்டா மென்றுதான் பார்க்கிறேன். சேனைக்கு ஆள் சேர்க்கப்பட்ட விஷயத்தைப் பற்றி நான் கொடுத்துள்ள குறிப்பினால் எனக்கு எவ்வித தொந்தரவும் உண்டாகாதென்று நீங்கள் உறுதிமொழி கொடுத்தாலன்றி, நான் ஒன்றும் சொல்லமுடியாது.
வினா : நீங்கள் நேராக இவைகளைப் பற்றி அறிவீர்களா?
விடை : காசூர் சப் டிவிஷனில் எனக்கு நேரான அநுபவம் உண்டு.
வினா : நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்களா?
விடை: இவைகள் சம்பந்தமாகச் சில ததவேஜுகளும் என்னிடத்தில் இருக்கின்றன. நான் மிடர் பைசனுடன் வேலை செய்துகொண்டிருந்தேன்.
வினா : உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு உண்டாகுமானால் அதனை ஏற்கனவே நீங்கள் வரவழைத்துக் கொண்டுவிட்டீர்கள்: இனியேன் எங்களிடத்தில் எல்லா உண்மைகளையும் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடாது? மிக வெளிப்படையாயிருந்து எல்லா உண்மை களையும் எங்களிடத்தில் கூறும்.
விடை : நல்லது. சில அநாவசியமான முறைகள் கையாளப்பட்டன.
வினா : யாரால்?
விடை : ஆள் சேர்க்கும் உத்தியோகதர் அனைவராலேயுந்தான். 107, 110 பிரிவுப்படி கிராமங்களிலிருந்து ஜாட் ஜாதியாரைப் பிடித்து அனுப்பும்படி ஒரு சப் இன்பெக்டர் உத்தரவு செய்யப்பட்டார்.
வினா : சப் - மாஜிட்ரேட் முன்அனுப்பும்படியா?
விடை : ஆம்.
வினா : நன்னடத்தை ஜாமீன் வாங்கும்பொருட்டு?
விடை : ஆம்.
வினா : சப் - இன்பெக்டருக்கு இங்ஙனம் செய்யும்படி யார் உத்தரவு கொடுத்தது?
விடை: அதைத்தான் சொல்லக் கூடாதென்றும் அதனை அடியோடு விட்டுவிட வேண்டுமென்றும் நான் கூறுகிறேன்.
வினா: சில விஷயங்களைச் சொல்லிவிட்டீர்கள். இனி எல்லாவற்றையும் சொல்லிவிடலாமே.
விடை : இவைகள் யாவும் லெப்டினெண்டு கவர்னர் வந்து போன பிறகு நடைபெற்றன. அவ்வளவே தான் கூறமுடியும்.
வினா : இங்ஙனமெல்லாம் செய்ய வேண்டுமென்று யாரேனும் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் கேட்டீர்களா?
விடை: இவர் அனைவரும் ஒரு தனி அறையில் கூடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
வினா : யார் கூடிக்கொண்டிருப்பதைப் பார்த்தீர்கள்?
விடை : போலீ அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் கூடியிருப்பதைப் பார்த்தேன். சில நாட்கள் கழித்து. ஒரு பொழுதும் சந்தேகிக்கப்படாத நபர்களின் மீது குறிப்பேடுகள் (challans) இருப்பதைக் கண்டேன்.
வினா : ஜாட்களில் அநேகம் பேரைப் பார்த்தீர்களா?
விடை : ஆம்.
வினா : எத்தனை பேரை?
விடை: என்னால் தொகையைக் கூறமுடியாது. குறிப்பேடுகள் விஷயமாகத் தாணாவில் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டுவந்தது. அதிகாரிகள் தாணாதார், லம்பர்தார், ஜெயில்தார் இவர்களைத் தூண்டிவிட்டார்கள். குறிப்பேடுகள் வெளியில் அனுப்பப்பட்டன. நான் குறிப்பேடுகளின் அமைப்புகளைப் (challan forms) பார்த்திருக்கிறேன்.
வினா: சுமார் எவ்வளவு பார்த்திருப்பீர்கள்?
விடை: சப் டிவிஷனல் ஆபீசர் கோர்டில் சுமார் நூறு குறிப்பேடுகளைப் பார்த்தேன்.
வினா: சப் டிவிஷனல் மாஜிட்ரேட் யார்?
விடை: முதலில் கான் சாஹிப் இருந்தார்; பிறகு கான் பஹதூர் இருந்தார்.
வினா: சேனைக்கு ஆட்கள் எந்தெந்த கிராமங்களிலிருந்து கொண்டுவரப் பட்டார்கள்?
விடை: அநேக தாணாக்களிலிருந்து கொண்டு வரப்பட்டார்கள். நான் குறிப்பேடுகளைப் பார்த்தேன்.
வினா : அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
விடை: அவர்கள் முதலில் தூண்டப்பட்டார்கள். பிறகு அவர்களிடத்தில் பலவித தந்திரங்கள் உபயோகிக்கப்பட்டன. அவர்கள் தாமாகச் சேனையில் சேர்ந்ததாகப் பிறர் எண்ண என்னென்னமுறைகள் உண்டோ அவைகள் யாவும் கையாளப் பட்டன. சில சமயங் களில் இங்ஙனம் கொண்டுவரப்பட்டவர்கள் ஓடிப்போய்விடுவது முண்டு. இவர்கள் திரும்பவும் கைவிலங்கிட்டு அழைத்துவரப்படுவார்கள். உடனே இவர்களைப் பற்றிப் போலீஸார் தெரிவித்ததும், இவர்களுக்கு ஜாமீனில்லாத வாரண்ட் வழங்கப்படும்.
வினா : 107, 110 பிரிவுப்படி இவர்கள்மீது என்ன செய்யப்படும்?
விடை: எத்தனை சாட்சிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஜனங்கள் முன் வந்து ஒருவனைக் குறித்து அவன் திருடனென்றும் அவன் கொள்ளைக் காரனென்றும் கூறுவார்கள். கடைசியில் அவனை அரசாங்க ஊழியத்தில் சேர்த்து விடுவது நல்லதென்றும் அதனால் அவன் நாட்டிற்கும் பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் கொண்டு வரலாம் என்றும் பலர் கூறுவர். ஏழையாயிருப்போர் சேனையில் சேருவதாகச் சொல்வார்கள்; அல்லது தங்களுடைய பிள்ளையையாவது சகோதரனையாவது அனுப்புவதாகக் கூறுவார்கள். இங்ஙனம் ஒருவன் கூறிவிட்டால் அவன் தன் உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். அவன் சிறிது பிடிவாதமாயிருந்தால் காப்பில் வைக்கப்பட்டிருப்பான். சிறிது பணமுடையவனாயிருந்தால் நாலாயிரம் அல்லது ஐயாயிரம் ரூபாயை ஜாமீனாகக் கட்டும்படி வற்புறுத்தப்படுவான். ஜாமீனாக ஒரு சிறு தொகை கொடுத்தால், அதற்குச் சில காரணங்கள்கூறி மறுத்துவிடுவார்கள். கடைசியில் அவன் சிறிது காலத்திற்கு ஜெயிலுக்கு அனுப்பப்படுவான்.
வினா : சேனையில் சேருவதற்குச் சம்மதப்படும்வரையில் அவன் இங்ஙனம் கஷ்டப்படுத்தப் படுவானா?
விடை: சம்மதப்படும் வரையிலாவது ஜெயிலுக்குப் போகும் வரையிலாவது.
வினா: ஒருவன் ஜெயிலுக்காவது போக வேண்டும்; அல்லது சேனையிலாவது சேரவேண்டும். இவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யவேண்டுமா?
விடை : ஆம்; அவனுக்கு இரண்டு மூன்று வழிகள் சொல்லப்பட்டன. இதனைப் பற்றி ஆலோசனை செய்யவும் தன் நண்பர்களுடன் கலந்து பேசவும் அவன் காலங் கொடுக்கப்பட்டான்.
வினா : எல்லா ஜனங்களும் இதே மாதிரி நடத்தப் பட்டார்களா?
விடை : நான் ஒரு கிராமத்தைப் பற்றி மாத்திரம் கூறவில்லையே. ஆரம்ப காலத்தில் இங்ஙனம் செய்யப்பட்டது. பிறகு 325, 326 பிரிவுப்படி நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மாஜிட்ரேட்டுகள், கோர்டில் இது சம்பந்தமாகக் குறிப்பு வைத்துக் கொள்வார்கள். கோர்டில் ஆஜரானவர்களைச் சேனையில் சேருவதற்கு இஷ்டமா என்று மாஜிட்ரேட்டுகள் கேட்பது வழக்கம். சாதாரணமாக மாஜிட்ரேட்டுகளுக்கு ஆறுமாதத்திற்கு அதிகமாகத் தண்டனை விதிக்க அதிகாரமில்லை. ஆனால் ஐந்து வருஷம் அல்லது ஆறுவருஷம் கடுங்காவல் தண்டனை விதித்துவிடுவதாக அவர்கள் பயமுறுத்துவது வழக்கம். இங்ஙனம் ஏறக்குறைய எல்லா மாஜிட்ரேட்டுகளும் செய்து வந்தார்கள்.
வினா : காசூரில் இந்தமுறை அதிகமாக அநுஷ்டிக்கப்பட்டு வந்ததா?
விடை : லெப்டினெண்டு கவர்னர் அங்கு வந்து சென்ற பிறகு இந்தமுறை அதிகமாகவே அநுஷ்டிக்கப்பட்டதென்று கூற வேண்டும். அதற்கு முன்னர் அங்குச் சேனைக்கு ஆள் சேர்த்தல்அதிகமாக இல்லை யென்றே சொல்லலாம்.
வினா : லெப்டினெண்டு கவர்னர் அங்கு எப்பொழுது விஜயஞ்செய்தார்?
விடை: 1917-ம் வருஷம் ஆகடு மாதம். அதற்குப் பிறகு, சேனைக்கு ஆள் சேர்ப்பதானது அதிக மும்முரமாக நடைபெற்றது.
வினா : இந்த முறையைக் கொண்டா?
விடை : ஆம்; தூண்டுதலும் மேற்கூறப்பட்ட முறையும் இன்னும் எந்தெந்த முறைகள் அநுஷ்டிக்கப்படலாமோ அவைகள் யாவும் உபயோகப்படுத்தப்பட்டன. மாஜிட்ரேட் சில சமயங்களில் சேனையில் நீ சேராவிட்டால் உன்னை ஏழுவருஷம் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன் என்று பயமுறுத்துவதுண்டு.
வினா : இந்த வார்த்தைகளை உங்கள் காதுகளினால் கேட்டீர்களா?
விடை : ஆம்.
வினா : இம்மொழிகள் உங்கள் முன்னிலையில் கூறப் பட்டனவா?
விடை : ஆம். அந்தச் சமயத்தில், நாங்களும் ஜனங்களைச் சேனையில் சேரும்படி கூறினோம். இங்ஙனம் அநேகமுறை நடை பெற்றிருக்கின்றது. நான் வக்கீலாக ஆஜராகி இருந்தபோதும், வேறு விதமாகச் சென்றிருந்த போதும் மேற்குறிப்பிட்டவாறு மாஜிட்ரேட் சொன்னார்.
வினா : யாருடைய கோர்டில் இங்ஙனம் நடைபெற்றது?
விடை: ஏறக்குறைய எல்லா மாஜிட்ரேட் கோர்ட்டுகளிலேயும் இங்ஙனமே நடைபெற்றது.
வினா : தாங்கள் ஓர் உதாரணம் கூறமுடியுமா?
விடை : அநேக கோர்ட்டுகளில் சுமார் இருபது அல்லது முப்பது சந்தர்ப்பங்களில் இங்ஙனம் நடைபெற்றது.
வினா : காசூரிலேயா இங்ஙனம் நடந்தது?
விடை: நான் காசூரைப்பற்றியே பேசுகிறேன். சில, (மாஜிட்ரேட்) வெளியிடங்களில் முகாம் செய்திருந்தபோது நடைபெற்றதுண்டு. குற்றஞ் செய்ததாக மாஜிட்ரேட்டுகள் முன்னிலையில் கொண்டு வரப்படு வோருடைய டேட் மெண்டுகளை மாஜிட்ரேட்டுகளின் ததவேஜுகளில் காணலாம். ஒரு குற்றவாளி தானாவது, தன் சகோதரனாவது சேனையில் சேரக்கூடும் என்று கூறினால் அஃது உடனே ததவேஜுகளில் குறிக்கப்பட்டது.
வினா : இங்ஙனம் குறிக்கப்பட்ட இரண்டொரு வழக்குகளை எங்களுக்கு உதாரணங்களாக எடுத்துக் கூறுவீர்களா?
விடை : நீங்கள் ததவேஜுகளைக் காணலாம். முதல் வகுப்பு மாஜிட்ரேட்டுகளின் ததவேஜுகளை நீங்கள் எடுத்துப் பார்த்தால் நூற்றுக்குச் சுமார் முப்பது வழக்குகளில் இங்ஙனமே காணலாம். இஃதுண்மையா இல்லையா வென்பதை ததவேஜுகளை வரவழைத்துப் பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எவருடைய பெயரும் ஞாபகமில்லை. காசூரிலுள்ள வேறு பிளீடர்களைக் கேட்டால் அவர்கள் பெயரைச் சொல்லுவார்கள். என்னுடைய தினசரிக் குறிப்பில் என் கட்சிக்காரர் சிலருடைய பெயரைக் குறித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அக்குறிப்பை நான் இங்குக் கொண்டுவரவில்லை.
வினா: நீங்கள் எந்தெந்த வழக்குகளில் ஆஜரானீர்கள் என்பதையும், எந்தெந்த குற்றவாளி சேனையில் சேர்ந்தாரென்று மாஜிட்ரேட் கூறினார் என்பதையும் உங்கள் தினசரிக் குறிப்பில் வைத்துக் கொண்டிருக்
கிறீர்களா?
விடை : அவ்வளவு விவரமான செய்தி என்னிடத்தில் இல்லை.
வினா : வழக்குகளின் ததவேஜுகளில் அவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா?
விடை : (குற்றவாளி, சேனையில் சேராவிட்டால்) கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்பது குறிப்பிடப்பட்டிராது.
வினா: குற்றவாளி, தானாவது, தன் சகோதரனையாவது சேனைக்கு அனுப்புகிறேன் என்று சொன்னதாகக் குறிப்பிடப் பட்டிருக்குமா?
விடை : ஆம்; இதனைப்பற்றி என் தினசரிக் குறிப்பில் சுமாராக எழுதியிருக்கிறேன். நான் வேண்டுமானால் ஒரு குறிப்பை அனுப்புகிறேன். மிடர் பைசன் கிராமங்கள் தோறும் சென்று ஜனங்களைச் சேனையில் சேரும்படி கோரிக்கொண்டார். இவர் புதுமாதிரியான ஒரு முறையை அநுசரித்தார்.
வினா : கட்டாயப்படுத்தினாரா?
விடை : அங்ஙனமே நீங்கள் அதனை எடுத்துக் கொள்ளலாம். கட்டாயப்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும். டெல்லியில் நடைபெற்ற யுத்த மகாநாட்டிற்குப் பிறகு, லாகூரில் ஒரு கூட்டம் கூட்டப் பட்டது. அதில் பஞ்சாப் மாகாணம் இரண்டு லக்ஷம் பேரைச் சேனைக்கு உதவவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அளவுக்குட்பட்டு ஒவ்வொரு ஜில்லாவில் ஆட்கள் உதவ வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. எங்களுடைய சப் - டிவிஷன் எட்டுநூறு அல்லது ஒன்பது நூறு ஆட்கள் அனுப்ப வேண்டியிருந்தது. மிடர் பைசன், ஒவ்வொரு கிராமத்தின் ஜனசங்கியைக் கணக்கெடுத்து, அதன்மேல் ஒவ்வொரு கிராமமும் இத்தனைப் பேரைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு குறிப்பை அந்தந்த கிராமத்திற்கு அனுப்பினார். பிறகு பெரோஸபூரில் அநுஷ்டிக்கப்
பட்ட முறை இங்கும் அநுசரிக்கப்பட்டது.
வினா : பெரோஸபூரில் அநுஷ்டிக்கப்பட்ட முறை என்ன?
விடை : பணங்கொடுத்து ஆட்களைச் சேர்ப்பது போன்ற ஒரு முறையாகும்.
வினா : அது நியாய விரோதமென்று நீங்கள் கருதுகிறீர்களா?
விடை : நான் எந்தெந்த முறைகள் அநுஷ்டிக்கப்பட்டன வென்பதைப் பற்றிக் கூறினேனேயன்றி, என் அபிப்பிராயத்தைக் கூறவில்லை. சேனைக்கு ஆள்சேர்க்கும் விஷயத்தில் அநுஷ்டிக்கப் பட்ட வேறு சில முறைகளையும் கூறுகிறேன். யாராவது ஒருவர் தம் சொத்தின் மீது அடமானமாகப் பணம் வாங்கியிருந்தால், அந்தப் பணத்தைக் கொடுத்து அவர்களையாவது அவர்களைச் சார்ந்தோரையாவது சேனைக்குச் சேர்த்துக் கொள்ளுதல். ஒருவன் அதிக ஆட்களைச் சேர்த்துக் கொடுத் தால், அவனுக்குச் சன்னது கிடைக்கும். பஞ்சாயத்து முறை என்று ஒன்று அநுஷ்டிக்கப்பட்டது. இரண்டு பஞ்சாயத்துக்காரர் ஏற்படுத்தப்பட்டனர். எந்தக் கிராமமாவது. தனக்குரிய ஆட்களைக் கொடாவிட்டால், இந்தப் பஞ்சாயத்தார் அந்தக் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள ஆட்களைச் சேகரிப்பர். இராஜகஞ்ச் என்னுமிடத்தில் மிடர் பைசனால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அந்தக் கிராமத்தார் கொடுத்ததுபோக இன்னும் பத்தொன்பதுபேர் கொடுக்கவேண்டும். எனவே, பத்தொன்பதுபேர் பிடிக்கப்பட்டு மிடர் பைசன் முன் கொண்டு வரப்பட்டார். நான் அப்பொழுது இல்லை. ஆனால் சாயந்திரம் நான் ரெயில்வே டேஷனுக்குப் போயிருந்தேன். (சேனையில் சேர்ப்பதற்கு)க் கொண்டுவரப் பட்டவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இவர்களில் அநேகர் இஷ்ட மில்லாதவர்களாயிருந்தார்கள். நான், அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அரசர் பெருமானுக்கும் நாட்டுக்கும் நன்மையைச் செய்யவே சொல்கிறார்கள் என்றும் கூறினேன்.
வினா : அவர்கள் தங்களுக்கு இஷ்டமில்லையென்று கூறினார்களா?
விடை: அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
வினா : அஃதிருக்கலாம். ஆனால் அவர்களே சேனையில் சேர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் பிரிந்து போகிறோமே என்ற காரணத்தினால் அழலாம்.
விடை : எங்களுடைய மனிதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அழைத்துக் கொண்டு போகப்படுகிறார்கள் என்று அவர்கள் கதறிக் கொண்டிருந்தார்கள். சேனைக்குச் சேர்ந்தவர்களே நாங்கள் கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று கூறினார்கள்.
வினா : நீங்கள் என்ன கூறினீர்கள்?
விடை : இவர்கள் தங்களுக்கு ஒரு சிறிதும் இஷ்டமில்லையென்று கூறினார்கள். ஒரு மூன்றாவது வகுப்பு வண்டி காலி செய்யப்பட்டு இவர்கள் அதில் உட்கார வைக்கப்பட்டார்கள். ஜெயில்தார்களின் வேலைக்காரர்கள் துப்பாக்கியுடன் இவர்களைப் பாதுகாத்து நின்றார்கள். இவர்கள் லாகூருக்கு அனுப்பப் பட்டார்கள். மறுநாள் காலை, இங்ஙனம் கொண்டுபோகப் பட்டவர்களுடைய உறவினர்கள் மிடர் டால்லிங்டனிடம் சென்று முறையிட்டார்கள். அவர் இவர்களை விடுதலை செய்து கிராமத்திற்கு அனுப்பிவிட்டார். இந்த முறைகள் சரியானவை அல்ல வென்று மிடர் டால்லிங்டன் மிடர் பைசனுக்கு எழுதினார்.
அமரசிங்க் என்ற இந்தக் கனவான் பிறகு மிடர் சுல்தான் அஹமத் அவர்களால் விசாரிக்கப்பட்டார். அவருக்கும் இவருக்கும் நடந்த சம்பாஷனை வருமாறு:-
வினா : சாட்சியங் கொடுப்பதற்கு நீங்கள் அஞ்சுவதாகவும், ஏனென்றால் குறுக்கு விசாரணை செய்யப்படுங் காலத்து உண்மையைச் சொல்ல வேண்டிவரும் என்றும் கூறினீர்களே. நீங்கள் குறுக்கு விசாரணை செய்யப்படா விட்டால், உண்மையைச் சொல்ல
மாட்டீர்கள் என்பது இதனால் அறிந்து கொள்ளலாமா?
விடை : இல்லை. என்னுடைய டெட்மெண்டில் நான் உண்மையையே சொல்ல வேண்டியிருந்தது.
வினா : எந்த விதத்தினாலும் உண்மையைச் சொல்ல நீங்கள் ஏன் அஞ்சவேண்டும்?
விடை : உங்களுக்கு எங்களுடைய மாகாணத்து அநுபவம் இல்லை. இந்த மாகாணத்தில் உத்தியோகதர்கள் அதிருப்தி செய்யக்கூடாது.
வினா : உங்களுக்குத் தொந்தரவு ஏற்படும் என்று அஞ்சுவதனால் உத்தியோகதர்கள் ஒருவரையும் அதிருப்தி செய்யக்கூடா தென்பது உங்களுடைய நோக்கமா?
விடை : ஏதேனும் ஒரு விஷயம் அவர்களுக்கு பிடியாவிட்டால், அவர்களுக்கு அதிருப்தி உண்டாகும்.
வினா: அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் தாங்கள் செலுத்தும் அதிகாரத்தைச் செலுத்துவார்களென்ற ஓர் அச்சம் உங்கள் மனதில் இருக்கிறதென்று நான் கொள்ளட்டுமா?
விடை : ஆம்; எனக்கு இது விஷயதாக அநுபவமும் உண்டு. ரௌலட் மசோதாவைத் தள்ளி வைக்கவேண்டுமென்று இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள இங்கு (லாகூரில்) ஒரு பொதுக்கூட்டம் கூடியது. நான் அங்கு யதேச்சையாய் வந்திருந்தேன். ஸ்ரீமான் தூனி சந்திரரும் இன்னும் சிலரும் ஒரு தீர்மானத்தை ஆமோதிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். ரௌலட் மசோதாவை இன்னும் சிலகாலம் தள்ளி வைக்கவேண்டுமென்று இராஜப் பிரதிநிதியைக் கேட்டுக் கொள்வதே இத்தீர்மானத்தின் சாராம்சம். இதுவே நான் செய்த உபந்நியாசமாகும். இதை நான் மறுக்கவில்லை. பிறகு மிடர் பைசனை நான் பார்த்த போது, அவர் நான் பேசிய பேச்சைக் கொண்டு அதிருப்தியடைந்தார்.
வினா : ஒரு விஷயம் அதிகாரிகளுக்கு அதிருப்தியாயிருக்கின்ற தென்ற காரணத்தினால் நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லாமலிருக்க வேண்டும்? அவர்கள் தங்களுடைய அதிகாரங்களைத் தவறாக உபயோகிப்பார்கள் என்று நீங்கள் அச்சப்படுகிறீர்களா?
விடை : அவர்கள் உபயோகிக்கலாம்.
வினா : தவறான வழியில்?
விடை : அது மிகவும் வெளிப்படையாகவே இருக்கிறது. நீங்கள் என்னிடத்தில் அதிருப்தி கொண்டால் உங்களிடமுள்ள அதிகாரத்தை நீங்கள் உபயோகிக்கலாமல்லவா? உங்களிடத்தில் அதிகாரம் இருக்கிறது. நான் கீழ்படியில் இருப்பவன்தானே.
வினா : நான் கொண்டுள்ள அதிருப்தியினால் என் அதிகாரத்தை உபயோகிப்பேனா?
விடை : உபயோகிக்கலாம். மேற்கூறியவற்றால் பஞ்சாப் வாசிகள் அதிகாரிகளிடத்தில் எங்ஙனம் பயப்பட்டுக் கொண்டிருந்தார்களென்பதும் சேனைக்கு ஆள் சேர்க்க அநுஷ்டிக்கப்பட்டமுறைகள் யாவையென்பதும் நன்கு புலனாகும். இவைகளைத் தவிர நமக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
யுத்தக்கடன்
இனி யுத்தக்கடன் வாங்கப்பட்ட முறைகளைப்பற்றிச் சிறிது கவனிப்போம். யுத்தக்கடன்கள் எந்தெந்த விதமாக வாங்கப்பட வேண்டுமென்று கீழ்த்தர உத்தியோகதர்களுக்கு, பஞ்சாப் அரசாங்கத்தார் ஒரு சுற்றுக்கடிதம் விடுத்தனர். அந்தக் கடிதத்தின் ஒருபாகம் வருமாறு:-
ஒவ்வொரு நகரத்திலிருந்தும் எவ்வளவு பணம் எதிர் பார்க்கலாம் என்று கணக்குத் தயாரிக்கும் வழியில் டிப்டி கமிஷனர்கள் உதவி செய்யலாம். அந்தந்த ஊருக்கென்றேற் பட்டுள்ள வருமானவரி ததவேஜு களை இவர்கள் உதவியாக எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாகச் சமீபத்தில் அசெமென்டுகள் பரிசீலனை செய்யப்பட்டவைகளைக் கவனிக்கலாம். வருமானவரி ததவேஜைக் கொண்டு ஒவ்வொரு நபரின் வருமானத்தையும் அவர்களிடமிருந்து எவ்வளவு பணம் எதிர்பார்க்கலா மென்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்த முறை இப்பொழுது சில ஜில்லாக்களில் அநுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் எவ்வளவு வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறாரோ அந்த வருமானத்தில் பாதிபாகம் முதற்கொண்டு கால்பாகம் வரை யுத்தக்கடனாக அவரிட மிருந்து எதிர்பார்ப்பது அநியாயமான முறையாகாது. அந்தந்த பாகத்தின் நிலைமையை அநுசரித்து டிப்டி கமிஷனர்கள், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நகரங்களும், கிராமங்களும், தனி நபர்களும் அவைகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையைச் செய்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
பிறகு டிப்டி கமிஷனர்கள், பிரத்தியேகக் கூட்டங்கள் கூட்டியும், சௌகார்களடங்கிய கமிட்டிகள் ஏற்படுத்தியும், வேறுவித வழிகளாலும் அந்தந்த எல்லையிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணத்தைக் குறைந்த அளவு தொகையாகப் பெற முயற்சி செய்ய வேண்டும். நீதி இலாகா உத்தியோகதர் களையாவது, தனி அசிடென்டு கமிஷனகளையாவது, தாசீல்தார்களையாவது தலைவராகக் கொண்டதும். வியாபாரிகளும் பிறரும் அடங்கியதுமான கமிட்டிகள் அந்தந்த ஊருக்கென்று ஏற்பட்ட தொகையைச் சமமாகப் பங்கிட்டு வாங்கும். ஒரு நகரத்திற்கும் மற்றொரு நகரத்திற்கும் போட்டியுண்டாக்குவதும், ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் போட்டி யுண்டாக்குவதும், பல நகரங்கள் கொடுத்த தொகையை ஒப்பிட்டு அவ்வப்பொழுது வெளியிடுவதும் இது போன்ற முறைகளும் அநுஷ்டிக்கப்படலாம். அதிகமாகப் பணம் கொடுத்தவர்களுக்கு சன்னதுகள் அளிக்கப் படுமென்று உறுதிமொழி கொடுக்கப்படலாம். (உத்தியோகதர்களைக் காணச் செல்லும்போது) நாற்காலிகள் அளிக்கப்படும் மரியாதையும் பிரத்தியேக சன்மானப் பத்திரங்களும், அதிகமாகப் பணம் உதவியவர் களுக்கு அளிக்கப்படும் என்று சொல்லலாம். ஆனால், பணமுள்ளவர்கள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையைச் செய்யத் தவறினால், முனிசிபல் கமிட்டி அங்கத்தினர் நியமனத்திற்கும், கௌரவ மாஜிட்ரேட்டுகளின் நியமனத்திற்கும், வேறுவிதமான அரசாங்க மதிப்புக்கும் பாத்திரர்களாக மாட்டார்கள் என்றும் இந்தக் கௌரவங்கள் யாவும் அரசாங்கத்தாருக்கு உதவி செய்வோருக்கே பிரத்தியேகப்படுத்தப் பட்டிருக்கின்றனவென்றும் நன்றாக வற்புறுத்தப்படவேண்டும்.
இந்தச் சுற்றுக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு கீழ்த்தர உத்தியோகதர்கள் தங்கள் அதிகாரத்தைப் பல வழிகளிலும் உபயோகப்படுத்தினார்கள். அம்பாலா ஜில்லாவிலுள்ள ஒருவர் யுத்தகடனுக்கு எவ்வளவு தொகை கொடுக்கச் சித்தமாயிருக்கிறார் என்பதை அவ்வூர் சப் ஜட்ஜ் மூலமாக டிப்டி கமிஷனருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று கடித மூலமாகக் கேட்கப்பட்டார். இதனால் விளங்குவதென்ன?
அக்நிஹோத்ரியின் சாட்சியம்
நீதிதலங்களில் வரும் வழக்குகள் மூலமாகவும் யுத்த கடனுக்குப் பணம் வசூலிக்கப்பட்டது. சாக்வாலில் உள்ள முதல் கிளா மாஜிட்ரேட், ஒரு குற்றவாளியை அவரும் அவர் சகோதரரும் சேர்ந்து நமது நாள் நிதிக்கு நூற்றுப்பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார் என்ற காரணத்தினால் விடுதலை செய்தார். மேஹர் சிங்க் என்ற ஒருவர் தமக்கு விதிக்கப்பட்டிருந்த வருமான வரியை விலக்கவேண்டுமென்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த காலத்தில் மாஜிட் ரேட் பின் வருமாறு கூறினார்:- யுத்தங் காரணமாக கோவேறு கழுதைகளினால் அதிக இலாபம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நபர் யுத்த நிதிக்காவது யுத்த கடனுக்காவது ஒரு பைசாவும் கொடுக்கவில்லை. இவருக்குள்ள ஒரு மகனும் யுத்தத்திற்கு அனுப்பப்படவில்லை. இத்தகைய உதாரணங்கள் பல எடுத்துக்காட்டலாம். ஹண்டர் கமிட்டி முன்னர் அக்நிஹோத்ரி என்ற வியாபாரி, யுத்தக்கடனுக்குப் பணம் வசூலிக்கப்பட்ட முறையைப்பற்றி விவரமாகக் கூறியிருக்கிறார். அவருடைய சாட்சியம் வருமாறு:- யுத்தத்திற்குப் பணம் வசூலிக்கப்படும் பொழுது நானும் என்னாலானதை உதவி செய்தேன். ஒருநாள் மாலை நான் என் வியாபார தலத்தில் இருக்கும்போது ஒரு சாயபுவும் இரண்டு மூன்று வியாபாரி களும் ஒரு தாசீல்தாரும் வந்து யுத்தத்திற்குப் பணம் கொடுக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் முன்னமே கொடுத்துவிட்டதாகவும் மறுபடியும் என்னைக் கேட்கவேண்டாமென்றும் கூறினேன். அவர்கள் என்னைப் பயமுறுத்தினார்கள். நான் தாசில்தாரால் அழைக்கப்படுவேன் என்று கூறப்பட்டேன். நான் உடனே சத்தியமாக ஏற்கனவே பணம் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் இதைக் கவனிக்க வில்லை. மறுநாள் தாசீல்தார் முன் பிரசன்னாமா யிருக்கும்படி எனக்கு ஒரு சீட்டுக் கிடைத்தது. ஆனால் நான் போகவில்லை. பிறகு என்னுடைய வருமான வரி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.
வினா : அதிக வருமான வரி கொடுக்க வேண்டிவந்ததைக் குறித்து யாரிடத்திலேனும் முறையிட்டுக் கொண்டீர்களா?
விடை : ஆம். நான் அப்பீல் செய்து கொண்டேன். ஆனால் என்னுடைய அப்பீல், கமிஷனரால் தள்ளப்பட்டது. அரசாங்கத் தாரால் குறிக்கப்பட்ட ஓர் அமைப்பு வழியாக என்னுடைய அப்பீல் இல்லையென்ற காரணத்தால் அது தள்ளப்பட்டது.
வினா : உங்கள் வருமானத்தின்மீது நீங்கள் வரிவிதிக்கப் படுகிறீர்கள். அதற்காக உங்களுடைய ததவேஜுகளை அனுப்பினீர்களா?
விடை : ஆம்; அனுப்பினேன்.
வினா : யுத்தத்திற்குப் பணம் கொடுக்கவில்லை யென்ற காரணத்தினால் உங்களுடைய வருமான வரியை அதிகாரிகள் அதிகப்படுத்திவிட்டார்கள், என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?
விடை : நான் ரிவினியு உத்தியோகதரிடத்து அடிக்கடி செல்வது வழக்கம். அப்பொழுது ஓ! நீங்கள் வந்தீர்களா? யுத்தத்திற்குப் பணம் கொடுக்க நீங்கள் மறுத்துவிட்டதை ஞாபகத்தில் வைத்துக்
கொண்டிருக்கிறீர்களா? என்ற சொற்கள் கிளம்பும். இதனால், இதனை மனதில் வைத்துக்கொண்டு அதிகாரிகள் என்னுடைய வருமான வரியை உயர்த்தினார்கள் என்று நான் எண்ணியிருக்கிறேன்.
வினா : இதைப்பற்றி உங்கள் அப்பீலில் நீங்கள் குறிப்பிட்டீர்களா?
விடை : இதை நான் அப்பீலில் குறிக்கவில்லை. ஏனென்றால் சட்ட சம்பந்தமாக அது செல்லாது.
வினா : யுத்தநிதிக்காகப் பணம் கொடுக்கப்படவில்லை யென்ற காரணத்தினால் வேறு எவருடைய வருமான வரியேனும் உயர்த்தப் பட்டதாக உங்களுக்குத் தெரியுமா?
விடை : அஃதெனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அருகாமை யிலிருப்போர் தங்களுடைய வருமான வரி உயர்த்தப்பட்டதாகவும் தாசீல்தாரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்றும் கூறிக் கொண்டிருந்
தார்கள். ஆகையால் இவர்களும் தொந்தரவு செய்யப் பட்டார்கள்.
வினா : இங்கிலாந்திலும் காட்லாண்டிலும் கூட ஜனங்கள் தொந்தரவுக்குட்பட்டார்கள்.
விடை : அங்ஙனமாயின் அவர்கள் அங்ஙனம் செய்யப்பட்டிருக்கக் கூடாதென்றே கூறுகிறேன். என் விருப்பப்படி யுத்தக் கடனுக்குப் பணமுதவுகிறேன். ஆனால் நான் கட்டாயப் படுத்தப்பட்டால் அஃதெனக்கு வெறுப்பாகவே தோன்றுகிறது.
இந்த யுத்தக்கடன் சம்பந்தமாக ஹண்டர் கமிட்டி முன் பிரசன்னமான மற்றொரு சாட்சிக்கும், அங்கத்தினர் ஒருவருக்கும் நடந்த சம்பாஷணை வருமாறு:-
வினா : யுத்தக்கடனுக்கும் வருமானவரிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
விடை : யுத்தக்கடன் சம்பந்தமான விஷயங்களைக் கவனிப்பதற்கென்று ஒரு பிரத்தியேக அசிடென்டு கமிஷனர் நியமிக்கப்பட்டார். அவர்தம் செல்வாக்கினாலும் தூண்டுதல் செய்வதினாலும் தம்மால் கூடியவளவு யுத்தகடனுக்குப் பணம் சேர்த்து வந்தார். சிலர் இவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்; சிலர் மறுத்துவிட்டனர். பிறகு வருமான வரி கலெக்டர் வந்து, மேற்குறிப்பிட்ட பிரத்தியேக அசிடென்டு கமிஷனருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாத சில வியாபாரி களுடைய வருமான வரியை உயர்த்தினார். இதனால் வியாபாரிகள், தங்கள் வரி உயர்த்தப்பட்டதற்குக் காரணம் யுத்தக் கடனுக்கு அதிகமாக உதவாமையே என்று கூறிக்கொண்டார்கள்.
வினா : இங்ஙனம் அநுபவித்தவர்களில் நேராக யாரேனும் உங்களுக்குத் தெரியுமா?
விடை : சிலர் தங்களுடைய வருமான வரி அதிகமாக உயர்த்தப் பட்டதாக என்னிடத்தில் முறையிட்டுக் கொண்டனர். ஒருவன் இருநூறு ரூபாய் வருமான வரியாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வருமான வரியானது மூவாயிர ரூபாய்க்கு உயர்த்தப் பட்டது.
வினா : அதிகாரிகளின் விருப்பத்திற்கிணங்கி யுத்தக் கடனுக்கு உதவி செய்யாததினாலேயே வருமான வரி இங்ஙனம் உயர்த்தப் பட்டதென்று அவர்கள் கூறினார்களா?
விடை : ஆம்.
கட்டாயத்தின் பேரில் உதவினோம்
எனவே, அதிகாரிகள், யுத்தக்கடனுக்கு எந்தெந்த வழிகளில் பணம் சேர்க்கலாமோ அந்தந்த வழிகளையெல்லாம் உபயோகித்து வந்தார்கள். யுத்தக்கடனுக்குப் பணம் உதவக்கூடாதென்று எவரும் மறுக்கவில்லை. அவரவர் தத்தம்மாலான உதவியைச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார். ஆனால், அதிகாரிகள், ஜனங்களை வற்புறுத்தியும், பலவித தந்திரங்களை உபயோகப்படுத்தியும் பணம் வசூலிக்க முயன்றமையே வருத்தந் தரத் தக்கதாகும். ஜனங்கள் தங்களுடைய விருப்பத்துக்கிணங்கியவாறு உதவி செய்வார்களே யானால் அதனைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கும் கொடுத்த ஜனங்களுக்கும் எவ்வித தொந்தரவும் உண்டாகாது. ஆனால், பஞ்சாப் அதிகாரிகள் வேறுவித முறைகளை அநுசரித்து ஜனங்களை அதிருப்திக்குள்ளாக்கினார்கள். குஜரன்வாலா ஜில்லாவிலுள்ள சுஹர்கானா மண்டி என்னுமிடத்தில் இருக்கும் கன்ஷிராம் என்னும் ஓர் அந்தணர் காங்கிர சப் - கமிட்டியார் முன் கூறிய சாட்சியத்தில் பின் வரும் விஷயங்கள் காணப்படுகின்றன:-
யுத்தக் கடனுக்குப் பணமுதவும்படி போலீஸார் எங்களைத் தொந்தரவு செய்தனர். ஆகவே, ஐம்பது ரூபாய் பெறுமான போடல் காஷ் சர்டிபிகேட் ஒன்றை நாங்கள் வாங்கினோம். இதன் பிறகு மறுபடியும் யுத்தக் கடனுக்குப் பணமுதவும்படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். யுத்தக் கடனுக்குப் பணமுதவாதவர் அனைவரும் இந்த மண்டி என்னும் இடத்தைவிட்டு வெளியே சென்று வசிக்கவேண்டும் என்று சப் டிவிஷனல் ஆபீசர் கூறினார். இதனைக் கேட்ட நாங்கள் அச்சமுற்று அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டோம்.
யுத்தக் கடனுக்கென்று நாங்கள் ஐந்நூறு ரூபாய் உதவி அதற்குரித்தான பாண்டுகளை இப்பொழுது எங்களிடத்தில் வைத்திருக் கிறோம். பிறகு ஓட்வியர் ஞாபகத்திற்குக் கட்டாயத்தின் பேரில் நூறு ரூபாய் உதவினோம். சப் டிவிஷனல் ஆபீசருடைய உத்தரவின்படி இந்தத் தொகையை முனிசிபல் கமிஷனரான ஜீவன் சிங்கனிடத்தில் கொடுத்தோம். இராணுவச் சட்டம் அமுலுக்கு வந்ததும் எங்களுடைய மண்டிகளில் சோல்ஜர்கள் காவலாக வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய செலவுக்காக எங்களுடைய பங்குப்படி நூறு ரூபாய் கொடுத்தோம். இந்தத் தொகையும் ஜீவன்சிங்கின் மூலமாகவே கொடுக்கப்பட்டது. மண்டிக் காரர்கள் இராணுவச் சட்ட அமுல் ஒழிந்த பிறகு நஷ்ட ஈடுத்தொகை யாக ஐயாயிரம் ரூபாய் கொடுக்கவேண்டுமென்று உத்தரவு செய்யப் பட்டார்கள். இதற்காக எங்களுடைய பங்குப்படி நூற்றுப்பதினான்கு ரூபாய் கொடுத்தோம்.
ஓட்வியர் நிதி
பஞ்சாப் அதிகாரிகள், யுத்தக் கடனுக்கென்றும் யுத்த நிதிக்கென்றும் ஜனங்களிடமிருந்து பணம் வசூலித்தது போதாமல் ஓட்வியர் ஞாபகச் சின்ன நிதிக்காகவும் பணம் வசூலித்தார்கள். போலீசாருடைய தொந்தரவுக்கும், அதிகாரிகளுடைய கட்டளைக்கும் அஞ்சி ஜனங்கள் ஓட்வியர் நிதிக்குப் பணம் உதவினார்கள் என்று தெரியவருகிறது. ஆனால் வெளியுலகம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது? ஸர் மைக்கல் ஓட்வியர் மீது வைத்த அன்பினால் ஜனங்கள் அவருடைய ஞாபகச் சின்ன நிதிக்குப் பணம் உதவினார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. இது தவறாகும் ஈனால் ஸர் மைக்கலிடத்தில் அன்பு பூண்டு ஒழுகினர் எவருமில்லை யென்று சொல்லுதற்குமில்லை. ஜனங்களிற் பெரும் பாலோர் அவரை அன்புடனும் ஆதரவுடனும் நோக்க வில்லை யென்பது நிச்சயம். ஸர் மைக்கலின் ஞாபகச் சின்னத்திற் கென்று சேர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு இப்பொழுது என்ன செய்யப் பட்டிருக்கிறது? இதுகாறும் அவருக்கென்று ஓர் உருவச்சிலை ஏற்பட்டதாக நாம் கேள்விப் படவில்லை. அல்லது வேறுவித ஞாபகக் குறிகளும் இல்லையெனத் தெரிகிறது. ஓட்வியர் நிதிக்கென்று பணம் உதவிய பஞ்சாப் வாசிகள் அப்பணம் என்னவாயது என்பதை அறிய ஆவலுடன் இருக்க மாட்டார்களா?
குமாதாக்களும் யுத்தக் கடனும்
யுத்தக் கடனுக்குப் பணமுதவும்படி பாமர ஜனங்கள் மாத்திரம் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் என்று அன்பர்கள் எண்ண வேண்டாம். அரசாங்க ஊழியர்களும் இவர் நிலையிலுள்ள பிறரும் இங்ஙனமே யுத்தக் கடனுக்குப் பணம் உதவும்படி செய்யப் பட்டார்கள் என்று கூறலாம். மிடர் ஆல்ப்ரெட் நந்தி என்பவர் தம் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
ஒரு ஜில்லாவில் தலைநகரத்திலுள்ள ஓர் உத்தியோக சாலைக்கு நான் சென்று அங்குள்ள தலைமை குமாதாவுடன் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது சம்பளப்பட்டி அவருடைய கையெழுத்துக்கென்று அங்கு வந்தது. அதனுடன் சிலருடைய பெயரும் அப்பெயருக்கு நேராகச் சில தொகைகளும் அடங்கிய ஒரு காகிதக் குறிப்பு இருந்தது. இந்தக் குறிப்பை அவர் பரிசீலனை செய்ய ஆரம்பித்தார். அஃதென்ன வென்று நான் அவரைக் கேட்டேன். அவர் உத்தியோக சாலையிலுள்ளோர் ரூபாய்க்கு அரையணா வீதம் தங்களுடைய சம்பளத்துக்குரிய தொகையை யுத்தக் கடனுக்குக் கொடுப்பதாகவும், அவரவர்களுடைய சம்பளத்திற்குச் சரியாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தாம் பரிசீலனை செய்வதாகவும் கூறினார். இந்தமுறை சுமார் மூன்று மாதகாலமாக அநுசரிக்கப்பட்டு வருகிறதென்று நான் அறிந்து கொண்டேன். குப்பை கூளங்களை அப்புறப்படுத்துவோரும், சேவகர்களும், குறைந்த சம்பளம்பெறும் குமாதாக்களும் தாங்கள் கொண்டுள்ள இராஜபக்திக்குத் தகுந்த சன்மானமேயாகும்! யுத்தக் கடனுக்கென்று பணம் வசூலிப்பதற்காக எல்லாவித தந்திரங்களும் உபயோகிக்கப் பட்டன வென்று கூறலாம்.
பஞ்சாப்வாசிகளின் அதிருப்தி
இதுகாறும் கூறியவாற்றான், ஸர் மைக்கல் ஓட்வியருடைய ஆட்சியின்கீழ், பஞ்சாப் மாகாணத்தில் யுத்த காலத்தில் என்னென்ன முறைகள் அநுசரிக்கப்பட்டன என்பது வெள்ளிடை விலங்கலெனத் தெரிகிறது. ஜனங்களை எவ்வளவு தூரம் அதிருப்திக்குட்படுத்தி வைக்கலாமோ அவ்வளவு தூரம் அவர் அதிருப்திக்குரிய செயல்களைச் செய்துவந்தார். பஞ்சாப்வாசிகள் மிகவும் உறுதிப் பட்ட உள்ளமுடையவர்களாதலின், ஸர் மைக்கல் ஓட்வியருடைய முறைகளை ஆண்டுகள் கணக்கில் பொறுத்து வந்தார்கள் என்று கூறுதல் வேண்டும்.
பஞ்சாப்வாசிகளுடைய மனத்தில் அதிருப்தி என்னும் புகையானது நெடுநாட்களாகப் புகைந்து கொண்டிருந்தது. இது நெருப்பாக மாற ஒரு பொறியே வேண்டியிருந்தது.
ஸர் மைக்கல் தம் ஆட்சிக்காலத்தில் மிகவும் கடுமையாக இருந்ததன் நோக்கம் நமக்கு நன்கு புலனாகவில்லை. பிற மாகாணாதி பதிகளுக்குத் தாம் ஓர் இலக்கியமென இருத்தல் வேண்டும் என்பது அவருடைய எண்ணம் போலும். அஃதவர் எண்ணமாயின் அவர் தவறாக எண்ணினார் என்று நாம் கூறுவோம்.
III ரௌலட் சட்டமும் சத்தியாக்கிரகமும்
பிரிட்டிஷ் ஆட்சி
இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டுச் சுமார் நூற்றம்பது ஆண்டு களாகின்றன. இந்த நுற்றைம்பது வருஷங்களுக்குள் இந்தியா, பிரிட்டிஷாரல் அடைந்த நன்மைகள் எண்ணிறந்தன. பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் படிக்கும் சரித்திர நூல்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா அடைந்த நன்மைகள் என்ற தனி அத்தியாயம் காணப்படும். பிரிட்டிஷார் செய்த நன்மைகளை எவரும் மறுப்பாரில்லை. அவர் செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி என்னும் நினைவு தோன்றுமளவில், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்தியாவுக்கென்று அவ்வப்பொழுது உண்டாக்கப்பட்ட அடக்கு முறைச் சட்டங்களும் எம் உள்ளத்தில் பரிணமிக்கின்றன. பிரிட்டிஷார் சுதந்திரத்திற்கு வழிகாட்டிகள் என்றும், சமத்துவத்தின் சகோதரர்கள் என்றும், சகோதரத்துவமே உருக்கொண்டு எழுந்தவர் களென்றும் உலகம் கூறுகின்றது. சமீபத்தில் முடிவுபெற்ற ஐரோப்பிய யுத்தத்தில் பிரிட்டிஷார் எதற்காக இறங்கினார் என்பதை உற்று நோக்கினால் அவருடைய பெருமை புலப்படும். ஆனால் இந்தியாவில் தற்போழ்துள்ள அடக்குமுறைச் சட்டங்களை நோக்கின் அவைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் உண்டாக்கப் பட்டனவோ என்ற ஐயம் நடுநிலை கொண்டார்க்கு உண்டாகும். ஒரு நாட்டின் அமைதிக்குச் சட்டங்கள் இன்றியமையாதன என்பதை நாம் மறுக்கவில்லை. ஓர் அரசாங்கம் நீடித்து வாழ்வதற்கும், யாதொரு முட்டின்றி நடைபெறு வதற்கும் சட்டங்கள் அவசியமே யாம். ஆனால் இந்தியாவில் தோன்றி யுள்ள சட்டங்கள் விநோத உருக்கொண்டு நிற்கின்றன. 1804 -ம் வருஷத்து ஆள்தூக்கிச் சட்டம், இராஜத் துரோகக் கூட்ட அடக்குமுறைச் சட்டம், அச்சுச் சட்டம், இந்தியப் பாதுகாப்புச் சட்டம், ரௌலட் சட்டம் முதலிய சட்டங்களை நோக்கின் எந்த இந்தியனுடைய உள்ளமும் நடுங்காம லிராது. இந்தச் சட்டங்கள் எந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டன என்பதைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போமாயின் நமக்கு ஆச்சரியம் உண்டாகும்.
ஆட்சிமுறையும், அடக்குமுறையும்
இந்தியாவின் ஆட்சி முறையைச் சீர்படுத்துவதற்கென்று அவ்வப்பொழுது அளிக்கப்படும் சீர்த்திருத்தங்களுடன் அடக்கு முறைகளும் வழங்கப்படுகின்றன. இஃது இந்தியாவின் நீண்ட நாள் அநுபவமாகவே இருக்கிறது. சீர்திருத்தம் வழங்கப்படுவதற்கு முன்னும், வழங்கப் பட்டதற்குப் பின்னும் இந்தியாவிலுள்ள அதிகாரவர்க்கத்தார் தம்மிடத்தி லுள்ள அடக்குமுறை ஆயுதங்களை பிரயோகியாமல் இருப்பதில்லை. மிண்டோ - மார்லி சீர்திருத்தம் வழங்கப்பட்ட காலை, இந்தியர் இதனை அநுபவரூபமாகக் கண்டு கொண்டனர். மாண்டேகு செம்பர்ட் அறிக்கை தலைகாட்டிய காலத்தும் இந்தியா முழுவதும் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டனவென்பதைப் பலருமறிவர். இதுகாறும், சட்ட புத்தகத்திலிருக்கும் அடக்குமுறைச் சட்டங்கள் போதாவென ரௌலட் சட்டமொன்றை சென்ற ஆண்டு மார்ச்சு மாதம் 18 - ந்தேதி இந்தியா அரசாங்கத்தார் நிறைவேற்றிக் கொண்டனர். ஏற்கனவே, யுத்த காலத்தில் இந்தியா பலவித துன்பங்களை அநுபவித்தது. யுத்த காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டே 1917 - ம் வருஷம் ஜுன் மாதம் சென்னையில், பெண்ட்லண்ட் துரைமகனார் சுய ஆட்சிக் கிளர்ச்சியை எழுப்பிய ஒரு காரணத்தினால் பெசண்டம்மையாரையும், மிடர் அருண்டேலையும், ஸ்ரீமான் வாடியாவையும் காப்பில் வைத்தார். போலீஸாருடைய சந்தேகத்திற்குட்பட்டவர்கள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இரையானார்கள் என்று பொதுப்படையாகக் கூறலாம். இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்ப்பட்ட முறையை ஜனங்கள் வெறுத்தார்கள். இந்தச் சமயத்தில் ரௌலட் மசோதா இந்திய சட்ட சபையில் ஆலோசனைக்குக் கொண்டுவரப்பட்டது.
ரௌலட் மசோதா
இந்தியாவிலுள்ள அராஜகச் சூழ்ச்சிகளின் நிலையை அறிந்துகூற 1917 - ம் வருஷம் டிசம்பர் மாதம் பத்தாந் தேதி ஒரு கமிட்டி நியமிக்கப் பட்டது. இக் கமிட்டிக்கு ஜடி ரௌலட் என்னும் ஒரு சட்ட நிபுணர் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்கமிட்டியார் அந்தரங்கமாகவே விசாரணையைச் செய்து 1918 - ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். இந்தக் கமிட்டியாருடைய அறிக்கையின் பயனாகவே ரௌலட் மசோதாக்கள் தோன்றின. இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்று தொலையும் எனக் காத்திருந்த இந்தியர் ரௌலட் மசோதாக் களின் தோற்றத்தைக் கண்டு பெரிதும் அதிருப்தி யடைந்தார். லார்ட் செம்பர்ட் இந்தியச்சட்ட சபையில் இம்மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன் பேசிய பேச்சை நோக்கின், புதிய சீர்திருத்தத்தின்கீழ்த் தங்களுடைய நிலைமைக்குப் பங்கம் ஏற்படுமோ என்று அஞ்சியிருந்த இந்தியன் சிவில் சர்வி வருகத்தாருக்கு ஆறுதல் அளிக்கவே இது கொண்டு வரப்பட்டதோ என்ற ஐயம் பலருடைய உள்ளத்தில் தோன்றும்.
சட்டமாக்கப்பட்டது
இம்மசோதா இந்தியச் சட்டசபையில் கொண்டு வரப்பட்டதும் இதனை இந்திய அங்கத்தினரனைவரும் ஒருமுகமாக எதிர்த்து நின்றனர். இந்த மசோதா பிரத்தியேகக் கமிட்டியாருடைய ஆலோசனைக்கு விடப் படக் கூடாதென்றும், இதனைப்பற்றி ஆறுமாதம் கழித்து ஆலோசிக்கலா மென்றும் இந்திய அங்கத்தினர் கூறினர். ஆனால் இவர்களுடைய முறைபாடுகள் பயனின்றிப் போயின. இந்த மசோதா பிரத்தியேகக் கமிட்டியாரின் ஆலோசனைக்குட்பட்டு மறுபடியும் சட்டசபையில் வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய அங்கத்தினர் இதில் பல திருத்த பிரேரேபணைகள் கொண்டு வந்தனர். ஆனால் ஏறக்குறைய எல்லாம் அடிபட்டுப் போயின. கடைசியில் 1919-ம் வருஷம் மார்ச்சு மாதம் பதினெட்டாந் தேதி இது சட்ட மாக்கப்பட்டது. இந்த மசோதா சட்டமாக்கப் பட்ட முறையை நோக்கினால் ஒருபக்கம் வியப்பும் ஒரு பக்கம் ஆச்சரியமும் உண்டாகும். இந்தியா அரசாங்கத்தார் இரவெல்லாம் கூட்டம் கூடி இம்மசோதாவைச் சட்டமாக்கினர். லார்ட் செம்பர்ட்டும் அவருடைய நிருவாக சபை அங்கத்தினரும் பலநாட்கள், இச்சட்டத்திற் கென்று கண்விழித்திருந்தமை குறித்து நாம் பெரிதும் இரங்குகின்றோம். இரவில் கூடி ஒரு மசோதாவைச் சட்டமாக்கினால் அஃது எத்தன்மைத் தாயிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவ தில்லை. இம்மசோதாவை கறுப்பு மசோதா என்றும் இருட்டு மசோதா வென்றும் சிலர் கூறலாயினர். இம்மசோதா அராஜகச் சூழ்ச்சிகளை அவசரமுறையில் அடக்குவதற்கென்று ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இஃது அநாவசியமான காரணங்களுக்கு, அசாதாரணமான காலத்தில் உண்டாக்கப்பட்டது என்பது இந்தியாவின் பொது ஜன அபிப்பிராயமாகும்.
இங்கிலாந்தே! உன்னை மறந்து விடாதே!
ரௌலட் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடாதென்று பம்பாயில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பெசண்டம்மையார் பின்வரும் அரிய உரைகளை வழங்கினார்.
தன் பழைய கொள்கைகளையெல்லாம் மறந்துவிட்டு ஓர் உறக்கத்தில் இருக்கும் இங்கிலாந்தை, இப்பொழுது இந்தியா தட்டி யெழுப்பக் கூடாதா? அதனை எழுப்பி, இந்தியா அதற்குப் பின்வரும் செய்தியை அனுப்பக் கூடாதா? ஓ! இங்கிலாந்தே! சுதந்தரத்திற்கே ஓர் இருப்பிடமாயிருந்த இங்கிலாந்தே! ஆசியாக் கண்டத்தில் நீ மாத்திரம் சுயேச்சாதிபத்திய முறையைக் கைக்கொண்டு ஆள வேண்டுமோ? உன் பழைய துக்கங்களை நீ மறந்துவிட்டனையோ? சுதந்தரத்தின் பொருட்டு நீ பாடுபட்டதை அறியவில்லையோ? உலகத்திலுள்ள எல்லா இனங்களிலும் நீ மேன்மை பெற்று வாழ்ந்ததற்குக் காரணமாயிருந்த உன் பழைய கௌரவங்கள் எங்குப் போயின? ஒவ்வொரு கலகக்காரனுக்கும் நீ அடைக்கலம் கொடுத்ததை மறந்து விட்டனையோ? ஒவ்வொரு சூழ்ச்சிக்காரனையும் நீ காப்பாற்றியது உன் ஞாபகத்திற்கு வரவில்லையோ? ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு கொடுங் கோலர சாங்கத்தையும் கண்டு உங்கள் அரசாங்கத்தைச் சரியாக நடத்துங்கள்; ஜனங்கள் உங்கள் மீது கலகம் செய்யமாட்டார்கள் என்று நீ கூறியதை மறந்தனையோ? ஆனால், இப்பொழுதோ, எந்தக் கொள்கை களை நீ வெறுத்தனையோ, அவைகளையே நீ பின்பற்றுகிறாய். நீ யாராரை வெறுத்தனையோ, அவர், இப்பொழுது உன்னைக் கண்டு நகைக்கமாட்டாரோ? நீ செய்தவற்றை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள். உன் வழிகளை நீ மாற்றிக்கொள்ள விரும்பினால், சுதந்தரத்தைக் கொடுப்பதற்குப் பதில், அதற்கு மாறானதைக் கொடுக்க விரும்பினால், உன் பழைய சரித்திரத்தை மூடிக்கொள்; உன் பழைய செய்கைகளையும் கொள்கைகளையும் மறந்து விடு. ஏனெனில் அவை உன் எதிர்காலத்தில் அவமானத்தை யுண்டாக்கும். நீ (ரௌலட் சட்டங்களைப் போன்ற) சட்டங்களை யெல்லாம் அமுலுக்குக் கொண்டு வந்தால், முதலில் செய்ய வேண்டுவது, உன் உதரத்தில் உதித்த பெரிய மனிதர்களின் சவக்குழி களைக் கலைத்துவிட வேண்டும். ப்ரௌனிங், வின்பர்ன் முதலிய பெரிய மனிதர்கள் எழுதிய புதகங்களையெல்லாம் எரித்துவிடு. சிட்னி மித், பெயின், பர்க், ப்ரைட் முதலிய தேசாபிமானிகளின் நூல்களைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்து விட வேண்டும். இந்த நூல்களை இங்ஙனம் செய்ய உனக்கு மனமில்லையானால், இந்தச் சட்டத்தைத் துண்டு துண்டாகக் கிழித்துவிடு
அரசாங்கத்தாரின் மனப்போக்கு
இவ்வாக்கியங்களைப் பொன்னெழுத்துக்களால் செதுக்கி ஒவ்வொரு பிரிட்டிஷ் குடிமகனும் தன் உள்ளத்தில் பதித்துக் கொள்ளவேண்டுமென்பது எமது விருப்பம். ரௌலட் மசோதா சட்டமாக்கப்பட்ட காலத்து, இந்தியாவில் ஒரு பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. இதற்கு முன் இத்தகைய கிளர்ச்சி எழுந்ததேயில்லை. ரௌலட் மசோதாவை எதிர்க்கும் விஷயத்தில் மிதவாதி என்றும் தேசீயவாதி என்றும், ஹிந்துவென்றும் முலீம் என்றும் வேற்றுமையின்றி அனைவரும் ஒற்றுமையாயிருந்து கிளர்ச்சி செய்தனர். மற்றும் இந்தியச் சட்டசபையில் உள்ள ஜனப்பிரதிநிதிகளும் அரசாங்கத்தாரால் நியமனம் செய்யப்பட்டவரும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்தையோ ஒரு மசோதாவையோ இது காறும் எதிர்த்து நின்றதில்லை. ஆனால் ரௌலட் மசோதா விஷயத்தில் எல்லா இந்திய அங்கத்தினரும்m ஒற்றுமையுடனிருந்து எதிர்த்தனர். ரௌலட் மசோதா நிறைவேற்றத்திற்குச் சாதகமாக ஓட் கொடுத்த இந்தியர் இராஜப் பிரதிநிதி நிருவாக சபையினுள் ஒருவரே யாவார். ஆனால், அவர் வேறு விதமாக ஓட்கொடுக்க முடியாது. ரௌலட் மசோதாவை, இந்தியரிற் பெரும்பாலோர் எதிர்த்து நிற்கின்றனர் என்பதை அறிந்தும் அரசாங்கத்தார் இதனை நிறைவேற்ற முயன்றது அவருடைய மனப்போக்கை நன்கு புலப்படுத்தும்.
காந்தியடிகளின் தோற்றம்
இந்திய இனத்தின் பெருமையைப் பாழ்படுத்துவது போன்று, ரௌலட் மசோதா தோன்றியதும், காந்தியடிகளார் சத்தியம் அஞ்சாமை என்னும் ஆயுதந் தாங்கி அதனை எதிர்க்கப் புறப்பட்டார். சத்தியாக்கிரக மொன்றினாலேயே இந்தச் சட்டத்தைத் தொலைக்கலாமென்றும் இந்தச் சத்தியாக்கிரக விரதத்தை இந்தியர்கள் நீடித்து அநுஷ்டித்து வருவார் களேயானால், இந்தியா விரைவில் முன்னேற்றமடையும் என்றும் அவர் உறுதி கொண்டார். எனவே, சத்தியாக்கிரக இயக்கத்தைத் தென்னாப்பிரிக் காவில் தொடங்கியதுபோல் இந்தியாவிலும் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்தனர். உடனே பத்திரிகைகளுக்குப் பின்வரும் கடிதத்தை எழுதினார்.
இந்திய தேச சரித்திரத்தில் இது (நாங்கள் அநுஷ்டிக்கப்போகும் பொறுமை எதிர்ப்பு) முக்கியமானதாகும். இக்காரியம் யோசனை செய்யப் படாமலில்லை. நான் பல நாளிரவு தூக்கமின்றி இதைப்பற்றியே யோசித்தேன். நான் கவர்ன் மெண்டாரின் நிலைமையைப் பற்றியும் யோசியாமலில்லை. ஆனால் அவர் இம்மசோதாக்களைச் சட்டமாக்கு வதற்குரிய நியாயத்தை நான் அறிய முடியவில்லை. ரௌலட் கமிட்டி ரிபோர்ட்டை நான் படித்துப் பார்த்தேன். கடைசியில் அக்கமிட்டியாரின் அபிப்பிராயத்திற்கு மாறான அபிப்பிராயத்தையே நான் வகிக்கலானேன். அராஜகக் கூட்டங்கள் இந்தியாவில் ஏதோசில பாகங்களிலிருக் கின்றன வென்றும் ஒரு சிறு தொகையினருக்குள்ளேயே அராஜகம் பரவியிருக் கிறதென்றும் ரிபோர்ட்டி னின்றும் அறிந்து கொண்டேன். இத்தகைய மனிதர்களிருப்பதால் உண்மையாகவே சமூகத்துக்கு அபாயமென்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் ரௌலட் மசோதாக்கள் இந்தியா முழுவதும் அமுலுக்கு வரக்கூடியதாகவும் அளவுக்கு மிஞ்சி கவர்ன்மெண்டாருக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கக் கூடியனவாகவு மிருக்கின்றன. இம்மசோதாக்கள் இந்தியாவுக்குப் பெரிய தீமைகளை விளைவிக்கும். ரௌலட் கமிட்டியார், உலகத்திலுள்ளவர்களைக் காட்டிலும் இந்தியர்கள் பொறுமை யுள்ளவர்கள் என்பதை அடியோடு அலட்சியம் செய்துவிட்டனர். இம்மசோதாக்கள் பிரேரேபிக்கப்படும் காலத்தில் சிவில் சர்விஸைப் பற்றியும் பிரிட்டிஷ் வியாபாரிகளின் விஷயத்தைப் பற்றியும் இராஜப்பிரதிநிதி அவர்கள் சில உறுதி மொழிகளை வெளியிட்டார்கள். எங்களில் பலருக்கு இராஜப்பிரதி நிதியவர்களின் பேச்சு பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது. இந்தப் பேச்சின் கருத்தும் நோக்கமும் எனக்கு நன்கு விளங்கவில்லை. ஒரு கால், இந்தியர்களுடைய க்ஷேமத்தைக் காட்டிலும் சிவில் சர்விஸினுடையவும் பிரிட்டிஷ் வியாபாரிகளினுடையவும் க்ஷேமங்கள் உயர்வாக மதிக்கப்படுமென்று சொல்லப்படுமாகில் அதை எந்த இந்தியனும் ஒப்புக் கொள்ள மாட்டான். அஃது ஏகாதிபத்தியத்துக்குள் போராட்டம் செய்வதனாலேயே ஒழியும். சீர்திருத்தம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இப்போது தான் உள்ள விஷயத்தை அறிந்துகொள்வதற்குக் காலம். பசப்பு வார்த்தை யினால் ஒருவருக்கும் திருப்தியுண்டாகாது. அதிகாரவர்க்கத்தினர் டிரடி களாகவும், வேலைக்காரர்களாகவும், பேச்சில் மாத்திரமல்ல, செய்கை யிலும் இருக்கக் கூடுமென்பதை அறிவார்களாக அப்படியே பிரிட்டிஷ் வியாபாரிகளும் இந்தியாவின் தேவைகளுக்கு உதவியாக இருக்கலாமே யன்றி இந்தியாவில் தொன்றுதொட்டிருக்கும் கலையையும் வியாபாரத்தையும் தொழில்களையும் அழிக்கக் கூடாதென்பதை அறிவார்களாக.
ஸர் ஜார்ஜ் லவுண்ட, ரௌலட் மசோதாக்களை ஆதரித்துப் பேசும்போது, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாப் போல் இந்தியப் பொது ஜன அபிப்பிராயத்தை அலட்சியம் செய்து பேசினார். இவர் இந்தியச் சரித்திரத்தை மறந்துவிட்டனர் போலும் அல்லது இவர் பிரதிநிதித்துவம் வகிக்கும் கவர்ன்மெண்டார் பொதுஜன அபிப்பிராயத்துக்கு இணங்கியிருக் கின்றனரென்பதை அறியாததேனோ?
இம்மசோதாக்களினின்று கவர்ன்மெண்டின் அமைப்பு ஊழலாயிருக் கிறதென்றும் ஆகவே இஃது அடியோடு மாற்றப்படவேண்டு மென்றும் வெளியாகின்றன. இம்மசோதாக்கள் சட்டமானால், அவைகளினால் வாலிபர்களின் வெறுப்பும் விரோதமும் அரசாங்கத்தாரின்மீது அதிகமாகு மேயன்றி குறையா வென்பதைக் கவர்ன்மெண்டார் அறிவாராக. பொறுமை எதிர்ப்பைக் கைக்கொண்டவர்கள் எல்லாவிதமான கஷ்டங் களையும் அநுபவிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். இவர்களுக்குக் கவர்ன் மெண்டாரிடத்தில் விரோதம் கிடையாது. முரட்டுக்காரியங்களால் குறைகளை நிவர்த்தித்துக் கொள்ளலாமென்று நம்புவோர்களுக்கும் ஒரு பரிகார முறையிருக்கிறது. இம்முறையை (பொறுமை எதிர்ப்பு) உபயோகிப்பவர்களுக்கும் இஃது எவர் மீது உபயோகிக்கப் படுகிறதோ அவர்களுக்கும் நன்மையை உண்டாக்கும். விரோதம் எடுத்துக் கொள்வோர்கள் பொறுமை எதிர்ப்பை உபயோகிக்கும் முறையை அறிவார்களானால் அதனின்றும் ஒரு கெடுதலு முண்டாகாது. அவர்களுடைய திறமையைப் பற்றியும் நான் சந்தேகிக்கமாட்டேன். பொறுமை எதிர்ப்பைக் கையாள்வதற்குரிய காலம் வந்துவிட்டதா, இன்னும் இதைக் காட்டிலும் வேறு பரிகார முறைகள் கையாளப்பட்டு விட்டனவாவென்று கேட்கலாம். இதற்கு விடையாவது பொறுமை எதிர்ப்பைக் கைக்கொள்ளுவதற்குக் காலம் இதுவே யென்றும், வேறு பரிகாரமுறைகள் கையாளப்பட்டு விட்டனவென்றும் பொறுமை எதிர்ப்பை அநுஷ்டிக்கப் போகிறவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
(ஒப்பம்) எம். கே. காந்தி
சத்தியாக்கிரகம்
சத்தியாக்கிரகம் என்பதற்கு உண்மையைக் கடைப்பிடி என்று பொருள் கூறலாம். இதனையே ஆன்மசக்தி என்று சொல்வதுண்டு. மேற் காட்டப்பட்ட கடிதத்தினால் காந்தியடிகள் எந்நோக்கங் கொண்டு சத்தியாக்கிரக விரதத்தைக் கைக்கொண்டார்கள் என்பது தெரியவரும். சத்தியாக்கிரக விரதத்தைக் கைக்கொண்டவர்கள் பின்வரும் உறுதி மொழியில் கையெழுத்திடும்படி செய்யப் பட்டார்கள்.
இப்போது இராஜப்பிரதிநிதி சட்டசபையில் சட்டமாக்கப் படவிருக்கும் ரௌலட் மசோதாக்கள் அநியாயமானவைக ளென்றும், சுதந்தரத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமானவை களென்றும் நாங்கள் கருதுகிறோம். பின்னும், ஜனசமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் முக்கியமானவைகள் மனிதர்களின் பிரதம சுதந்தரங்களென்றும், ஆகவே, இச்சுதந்தரங்களை இம்மசோதாக்கள் அழிக்கக் கூடியனவென்றும் நாங்கள் அபிப்பிராயப்படுவதால், இவைகள் சட்டமாக்கப்பட்டால், இந்தச் சட்டங்களையும் இன்னும் என்னென்ன சட்டங்கள் அநீதியானவை களென்றும் தீர்மானிக்கப் படுகின்றனவோ அவைகளையும் மீறி நடப்போம். மேலும், இந்தப் போராட்டத்தில் நாங்கள் உண்மையைக் கடைப்பிடித்து உயிருக்கும், மனிதர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து விளைவிக்காமல் நடந்து கொள்வோம்.
காந்தியடிகளின் தலைமையின் கீழ் இந்தச் சத்தியாக்கிரக இயக்கம் நடைபெறுவதை அறிந்து இந்தியாவில் பல்லாயிரம் பேர் இவ்வுறுதி மொழியில் கையொப்பமிட்டனர். காந்தியடிகளும் அவரைச் சார்ந்த சிலரும் வேறு சட்டங்களை மீறி நடத்தல் என்னும் முறையை முதலில் அநுஷ்டித்துக் காண்பித்தனர். அதாவது ரிஜிடர் செய்யாமல் பத்திரிகை களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார்கள். காந்தியடிகளாரின் தலைமையின் கீழ் சத்தியாகிரஹி என்னும் ரிஜிடர் செய்யப் படாத ஒரு வாரப் பத்திரிகை (கையெழுத்துப் பிரதி) வெளியாயது. அங்ஙனமே சென்னையிலும் ஸ்ரீமான்கள் ஜார்ஜ் ஜோசப், டி. வி. வேங்கடராமய்யர், கோண்டா வேங்கடப்பைய பந்துலு என்ற மூன்று கனவான்களை ஆசிரியராகவும் ஸ்ரீமான் எ. கதூரிரங்கய்யங் காரைப் பிரசுர கர்த்தராகவும் கொண்ட சத்தியாக்கிரஹி என்னும் வாரப் பத்திரிகை (கையெழுத்துப் பிரதி) இங்கிலீஷிலும் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. நாடெங்கும் ஒரே கிளர்ச்சி மயமாக இருந்தது. 1919 -ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி இந்தியாவெங்கும் விரதம் கொண்டாடப்பட வேண்டுமென்று காந்தியடிகள் உத்தரவு செய்தார்கள்.
விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது
அங்ஙனமே இந்தியாவெங்கணும் ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி விரத தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் சத்தியாக்கிரக விரதங் கொண்டாடப்பட்டு அதனால் புதிய உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயது. சத்தியாக்கிரகத்தின் அருமை பெருமைகளை அறியாத அதிகாரவர்க்கத்தார் அதனை இழிவுபடுத்திக் கூறினாரேயன்றி இந்தியரனைவரும் அவ்விரதத்தை ஏகமனதாய்க் கொண்டாடினார். ஆனால் சில இடங்களில் 1919 -ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முப்பதாந் தேதியன்றே சத்தியாக்கிரக விரதம் கொண்டாடப்பட்டது.
குழப்பத்திற்குக் காரணம் சத்தியாக்கிரகமோ?
சென்ற ஆண்டு ஏற்பட்ட குழப்பங்களுக்குச் சத்தியாக்கிரக இயக்கமே காரணமென்று சிலர் கூறுகின்றனர். காங்கிர சப் கமிட்டியார் இக்கூற்றுக்குத் தக்கவாறு விடையளித்திருக்கின்றனர். அது வருமாறு
பஞ்சாபில் நடைபெற்ற கொலைகளுக்கும் களவுகளுக்கும் சத்தியாக் கிரகம் காரணமா என்பதைப் பற்றியே ஆராயவேண்டும். எவ்விதத்திலும் கொடுமைச் செயல்களை ஒழிக்கவே சத்தியாக்கிரக உபதேசம் செய்யப்படுகிறது. சத்தியாக்கிரகத்தின்ஓர் அம்சமாகிய சட்டங்களை மீறி நடத்தல் என்னும் முறையானது தவறாக உபயோகிக்கப்படலாம். ஆதலால் இந்த முறையை ஜாக்கிரதையுடன் கைக் கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி நடத்தல் என்னும் முறையைப் பரப்புவதற்கு அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஒரு சட்டத்திற்கு மரியாதை கொடாமல் நடப்பது சுலப மாகும். ஆனால் அம்முறையினால் ஏற்படும் கஷ்டங்களைப் பிறருக்குத் தீங்கிழை யாமல் அநுபவிப்பது மாத்திரம் கஷ்டம். தன்னலத்தை மறுத்துத் தியாகம் செய்யச் சித்தமாயிருப் போரிடத்திலேயே சட்டங்களை மீறி நடத்தல் என்னும் முறையை அநுஷ்டிக்கத் தொடங்கலாம். பாமர ஜனங்களுடைய இந்த முறையை தற்போழ்து பரவவிட்டது தவறென்பதை மிடர் காந்தி மிகவெளிப்படையாகவும் சரியாகவும் ஒத்துக்கொண்டா ரென்று நாங்கள் நினைக்கிறோம். பஞ்சாபில் சத்தியாக்கிரகத்தின் ஓர் அம்சமாகிய சட்டங்களை மீறி நடத்தல் என்னும் முறையானது நன்றாக அறிந்து கொள்ளப் படவில்லை. அனுஷ்டிக்கப்படவுமில்லை. ஆகையால் விரதக் கொண்டாட்டத்திற்கும் சட்டங்களை மீறி நடக்கும் முறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. தவறு செய்தவர்களின் செயல்களை எவ்வித கொடுமையுமின்றிக் கண்டிக்கப்பட்டால் அது சத்தியாக்கிரகத்தின் ஓர் அம்சமென்று கூறலாம். மேலும் விரதக் கொண்டாட்டமானது இந்தியாவில் நீண்ட நாட்களாக அநுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாபில் எந்த முறையில் இந்த விரதக் கொண்டாட்டம் அநுஷ்டிக்கப்பட்டதோ அதே முறையில் இந்தியாவில் நெடுங்காலமாக அநுசரிக்கப்பட்டு வந்தது. ஆகையால் பாமர ஜனங்கள் செய்த கொடுமைச் செயல்களுக்கும் சத்தியாக்கிரக விரதக் கொண்டாட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
IV பஞ்சாப் மாகாணமும் இராணுவச் சட்டமும்
அநுபந்தத்தைக் கவனிக்க
சென்ற ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற குழப்பங்களைப் பற்றி முதலில் கவனிப்போம். பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் கடைசி வரை பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வோர் ஊரிலும் நடைபெற்ற சம்பவங்களைத் தேதி வாரியாக அநுபந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அதனை நேயர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அவ் வநுபந்தத்தை உற்று நோக்குவார்க்கு பஞ்சாப் மாகாண அதிகாரிகள் அநாவசியமான சந்தேகங்களை ஜனங்கள்மீது கொண்டிருந்தார்களென்பது, ஜனங்கள் சாதாரணமாகச் சட்ட வரம்பு மீறிக் கிளர்ச்சி செய்யவில்லையென்பதும் புலனாகும்.
பஞ்சாபில் விரதக் கொண்டாட்டம்
முன்னர்க் கூறியபடி சென்ற வருஷம் ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி இந்தியா வெங்கணும் விரதங் கொண்டாடப்பட்டது போல் பஞ்சாப் மாகாணத்திலும் கொண்டாடப்பட்டது. அன்று ஜனங்களும் ஜனத்தலைவர்களும் மிகவும் ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஹிந்துக்களும் முலீம்களும் சகோதரர்கள் போல் நடந்து கொண்டார்கள். விரதக் கொண்டாட்டமாகிய அன்று யாவரும் தத்தமக்குரிய வேலையினின்றும் விலகி உண்ணாவிரதம் பூண்டு கடவுளைத் தொழுதிருந்தனர். மாலையில் நடைபெற்ற கூட்டங்களில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டன. பொதுவாக அன்று நடந்த சம்பவங்களை நோக்கின் ஜனங்களின் உறுதி. நன்கு வெளிப்பட்டதென்று கூறலாம். ஆனால், அன்று நடந்தவைகள் அதிகாரிகளுக்கு மனக்கசப்பை உண்டு பண்ணியது என்பதையும் ஈண்டுக் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை.
ஸர் மைக்கலின் ஆத்திரம்
ஜனங்களுடைய உறுதியும் ஹிந்துமுலீம் ஒற்றுமையும் ஸர் மைக்கலின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டன. அவருடைய ஆத்திரம் கிளம்பவே, அவரைச் சார்ந்த அதிகாரவர்க்க தேவதைகளும் தம் வீரத்தைக் காட்ட எழுந்தன. மேற்கண்ட சம்பவங்கள் யாவும் பிரிட்டிஷாருக்கு விரோதமாக நடைபெற்றன என்று ஸர் மைக்கல் ஓட்வியர் எண்ணி விட்டார். சத்தியாக்கிரகக் கொண்டாட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏற்பட்ட முயற்சி என்று கருதும் ஒரு மாகாணாதிபதியின் அறிவு விசாலத்தை நாம் எங்ஙனம் வியப்பது? இந்தியாவிலுள்ள எந்த மாகாணாதிபதியும் சத்தியாக்கிரகத்தின் சம்பவங்கள் மேற்கண்ட முறையில் கொண்டனரில்லை. ஸர் மைக்கல் ஓட்வியர் ஒருவரே இங்ஙனம் புதிய வழியொன்றைக் கண்டு பிடித்து அவ்வழியே நடந்தார். அவர் இத்தகைய எண்ணங் கொண்டிருந்தமையால் அவர் கீழுள்ள அதிகாரிகளும் இதே எண்ணங்கொண்டிருந்தார்களென்பது கீழ்வருவன வற்றால் நன்கு தெரியவரும். லாகூர் குழுப்ப விசாரணை சம்பந்தமான ஒரு ததவேஜில் பின்வரும் வாக்கியங்கள் காணப்படுகின்றன.
அரசர் பெருமான் மீது யுத்தம்
ரௌலட் மசோதா என்று சாதாரணமாக வழங்கப்படும் மசோதா வானது 1919 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினெட்டாந்தேதி இந்தியச் சட்டசபையில் நிறைவேறியது. பிறகு பஞ்சாப் மாகாணத்திற்கு வெளியேயிருப்பவரால் ஒரு சூழ்ச்சிக்கூட்டம் ஏற்பட்டது. ஆடம்பரமான கூட்டங்கள் கூட்டவும் அரசாங்கத்தாருக்கு விரோதமாக ஜனங்களுக்கு உணர்ச்சி உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலைநிறுத்தம் செய்யவும், இதனால் இந்த மசோதாவை ரத்து செய்யும் படி அரசாங்கத் தாருக்கு ஒருவித அச்சத்தையுண்டு பண்ணவும் குற்றவாளிகள் இந்தச் சூழ்ச்சிக் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார்கள். அங்ஙனமே இந்தியா முழுவதும் முக்கியமாகப் பஞ்சாப் மாகாணம் முழுவதும் மேற்கூறப்பட்ட சூழ்ச்சிக்காரர்கள் குற்றவாளிகள் உட்பட, அமைதியின்மையை யுண்டாக்கவும், நாட்டின் பொருளாதார வாழ்க்கையைக் குலைத்துவிடவும், அரசாங்கத்தின் மீது விரோத உணர்ச்சி கிளப்பிவிடவும், விரதக் கொண்டாட்டம் என்று சொல்லத்தக்க வேலை நிறுத்தமொன்று மார்ச்சுமாதம் முப்பதாந்தேதி நடைபெறும்படி ஏற்பாடு செய்தார்கள். ஏப்ரல் மாதம் ஒன்பதாந்தேதி அரசாங்கத்தின் மீது விரோத உணர்ச்சியை எழுப்பவேண்டுமென்ற ஏற்பாட்டின்படி குற்றவாளிகளும் இன்னும் பிறரும் அரசாங்கத்திற்கு விரோதமாக ஹிந்து முலீம் ஒற்றுமையை ஆதரித்தார்கள். ஏப்ரல் மாதம் பத்தாந்தேதி, தம் மாகாணத்தில் அமைதியையுண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மேற்படி சூழ்ச்சிக் காரருள் ஒருவரான காந்தி என்னும் பெயரினரைத் தம் மாகாணத்திற்குள் வரவொட்டாமல் பஞ்சாப் அரசாங்கத்தார் தடுத்தனர். அதே நாளில் கிச்சுலு, சத்திய பாலர் என்னும் வேறிரண்டு சூழ்ச்சிக்காரரைப் பிரஷ்டம் செய்ய உத்தரவு கொடுத்தனர். அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த அரசாங்கத்தாரால் கையாளப்பட்ட முறைகளை, சூழ்ச்சிக்காரர்கள் அரசர் பெருமான்மீது யுத்தம் செய்வதற்கு ஆதாரமாகக் கொண்டனர்.
எந்த உலகத்தில் நின்று ஆச்சரியப்படுவது?
இந்த வாக்கியங்களைப் படித்தவர்கள் எந்த உலகத்தில் நின்று ஆச்சரியப்படுவதென்பது தெரியவில்லை. அரசர் பெருமான்மீது யுத்தம் செய்ய என்னும் சொற்றொடரை, பஞ்சாப் மாகாணத்து அதிகாரிகளின் ததா வேஜுகளில் அதிகமாகக் காணலாம். மேற் கூறப்பட்ட வாக்கியங் களினின்றும் பஞ்சாப் மாகாண அரசாங்கத்தார் ஹிந்து முலீம் ஒற்றுமையையும், விரதக் கொண்டாட்டத்தையும், அரசாங்கத்திற்கு விரோதமான சூழ்ச்சிகளென எண்ணினார் என்பது நன்கு புலப்படும். எனவே, இவைகளை அடக்கி விடுவதென்று பஞ்சாப் அரசாங்கத்தார் கங்கணம் கட்டிக் கொண்டாரென்று தெரியவருகிறது. இஃதெங்கனம் தெரிய வருகிறதென்றால் சென்ற வருஷத்து ஏப்ரல் மாதம் ஏழாந்தேதி நடைபெற்ற பஞ்சாப் மாகாணச் சட்டசபைக் கூட்டத்திற்குப் பிறகு என்ன நடந்ததென்பதைப் பற்றி ஜல்லந்தர் பிளீடரான கனம் ரெய்ஸாடா பகத்ராம் காங்கிர சப் கமிட்டியின் முன், பின் வருமாறு கூறினார்.
ஆமை சக்தியினும் உயர்ந்த சக்தி
பஞ்சாப் சட்டசபைக் கூட்டம் நடைபெற்ற தன் பிறகு நான் லெப்டி னெண்டு கவர்னரை ஓர் அறையில் சந்தித்தேன். அவர், ஜல்லந்தரில் எத்தகைய விரதக் கொண்டாட்டம் நடைபெற்றதென்பதைப் பற்றி என்னைக் கேட்டார். விரதக் கொண்டாட்டம் நன்கு கொண்டாடப்பட்டதென்றும், எங்கும் குழப்பம் உண்டாகவில்லையென்றும் நான் கூறினேன். எதனால் இங்ஙனம் ஏற்பட்டதென்று ஸர் மைக்கல் ஓட்வியர் என்னைக் கேட்டார். மிடர் காந்தியின் ஆன்மசக்தியினாலேயே இங்ஙனம் ஏற்பட்டதென்று நான் கூறினேன். உடனே ஸர் மைக்கல் தம் கையைத் தூக்கி, ரெய்ஸாடா சாஹிப், ஞாபகமிருக்கட்டும்; காந்தியின் ஆன்ம சக்தியைக் காட்டிலும் வேறு ஓர் உயர்ந்த சக்தி இருக்கிறது என்று கூறினார். இதனால் பஞ்சாப் மாகாணாதிபதி அரசியல் உணர்ச்சியை அடியோடு அடக்கிவிடுவதென்று தீர்மானித்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இவர் கீழிருந்த உத்தியோகதர்களும் இவ்விஷயத்தில் இவரையே பின்பற்றி நடந்தார்கள். ஜல்லந்தர் ஜில்லாடிப்டி கமிஷனரான மிடர் ஹாமில்டன் அரசியல்வாதிகளிடத்தில் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். அவர் அநுஷ்டித்த முறைகளிற் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுகிறோம். மெஸர் தேருமால் பைஜ் நாத் என்ற கம்பெனியின் சொந்தக்காரரும் 1905-ம் வருஷ முதல் டாண்டர்ட் ஆயில் கம்பெனியின் ஏஜெண்டுமான லாலா பைஜ் நாதர் 1918-ம் வருஷம் ஏப்ரல்மாதம் பதினெட்டு பத்தொன்பது தேதிகளில் ஜல்லந்தரில் நடைபெறுவதாயிருந்த பஞ்சாப் மாகாண மகா நாட்டின் வரவேற்புக் கூட்டத்தில் ஓர் அங்கத்தினராயிருந்தார். டிப்டி கமிஷனரான மிடர் ஹாமில்டன் என்பவர் இவருக்கு ஒன்றும் தெரியவியாமல் 1919-ம் வருஷம் ஜூன் மாதம் ஐந்தாந்தேதி மேற்படி கம்பெனிக்கு, லாலாபைஜ் நாதருக்குப் பதில் வேறொருவரை ஏஜெண்டாக நியமிக்கவேண்டுமென்றும், அவர் அரசியல் விஷயங்களில் அமிதவாதியாயிருக்கிறாரென்றும் மண்ணெண்ணெய் விற்பனையை அவர் வசம் ஒப்புவிக்கக் கூடாதென்றும் எழுதினார். கம்பெனியார் இதனைப் பலமாகக் கண்டித்தனர். கடைசியில், பைஜ்நாதருடைய லைசென்சு பிடுங்கப்பட்டது. இவருக்குப் பதில் வேறொருவர் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டார். டிப்டி கமிஷனர் கூறிய வண்ணம் லாலா பைஜ் நாதர் ஓர் அமிதவாதியல்லர். அவர், இது காறும் எந்த காங்கிரஸுக்கேனும் கான்பரென்ஸுக்கேனும் சென்றதில்லை. அவர் மிகவும் இராஜபக்தியுடன் கூடியிருந்தார். ஆள் சேர்க்கும் மத்திய சபையிலும் மத்திய யுத்தநிதிக் கமிட்டியிலும் ஓர் அங்கத்தினராயிருந்தார் அவர் யுத்தக் கடனுக்கென்று ஐயாயிரத்து ஐந்நூறு ரூபாயும் பிரிட்டிஷ் வெற்றிக்கடனுக்கு நாற்பத்தையாயிரம் ரூபாயும் உதவினார். அவர் பதினேழாயிரம் ரூபாய் வருமான வரியாகக் கட்டவேண்டுமென்று உத்தரவு செய்யப்பட்டார். இதனால் அவருக்குண்டான நஷ்டம் அளவிடற் பாலதன்று. அவர் அமிதவாதியென்ற போலிக்காரணத்தினாலும், மாகாண மகாநாட்டின் உபசாரணைக் கூட்டத்தில் ஓர் அங்கத்தினராயிருந்த காரணத்தினாலும் இத்துன்பத்திற்குள்ளாக்கப்பட்டார். இங்ஙனமே லாலா பிந்திரபன் என்பவரும் ஸர்தார் சிங்க் என்பவரும், மாகாண மகாநாட்டின் உபசரனைக் கூட்டத்தில் அங்கத்தினராயிருந்த காரணத்தினால் தத்தமக்குரிய வருவாயை இழந்து தவிக்கலானார். இங்ஙனமே, பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒவ்வொரு ஜில்லாவிலிருந்தும் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். இது நிற்க. இனி இராணுவச் சட்டத்திற்கு இரையான ஒவ்வொரு ஜில்லாவிலும் நடைபெற்ற சம்பவங்களைக் குறித்துக்கொண்டு செல்வோம்.
அமிருதசர
முதலில் அமிருதசரஸை எடுத்துக்கொள்ளலாம். பஞ்சாப் அரசாங்கத்தாரும் முதலில் இதனைப் பற்றியே கூறியிருக்கின்றனர். மேலும், இராணுவச் சட்டமென்னும் பேயானது இங்கேயே அதிமாகத் தலைவிரித்தாடியது. குழப்பகாலங்களில் எமனடியைச் சேர்ந்தாரின் தொகை இங்கேயே அதிகம். மேலும் ஜெனரல் டையர் என்னும் வெள்ளைவீரர் இங்கேயே தம் வீரத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். ஆகலின் இதனையே முதலில் எடுத்துக் கொள்வோம்.
குழப்பத்திற்குக் காரணம்
அமிருதசரஸில் ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம் என்ன வென்பதைப் பஞ்சாப் அரசாங்கத்தார் தம் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றனர்:-
யுத்தங் காரணமாக ஏற்பட்ட கஷ்டங்களினால் ஜவுளி வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்கள். இராணுவப் போக்கு வரவுக்காக ரெயில்வேக்கள் கட்டுப்படுத்தப்பட்டமையால் ஜவுளி வியாபாரம் அதிகமாகத் தடைப்பட்டது. இதனால் விலைகள் உயர்ந்து போயிருந்தன. அமிருதசர சிலுள்ள ஜவுளி வியாபாரிகள் வெளியிடங்களிலிருந்த மார்வாரி களிடத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டிருந்தார்கள். பம்பாய், டெல்லி, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்த மார்வாரிகள் சென்ற இரண்டு வருஷகாலமாக அரசியல் கிளர்ச்சியில் அநுதாபம் காட்டிவருகிறார்கள். பஞ்சாப் மாகாணத்திலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யக் கூடாதென்று அரசாங்காத்தார் உத்தரவு செய்தமையும், 1918-ம் வருஷம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அரசாங்கத்தார் பொதுஜனக்கணக்கில் தானியங்கள் வாங்கினமையும், அமிருதசரசிலுள்ள தானியவியாபாரி களைப் பாதிக்கச் செய்தன. புதிய வருமானவரிச் சட்டத்தினால் உண்டாகும் பலாபலன்களாலும், வருமானங்கள் சம்பந்தமாய் உள்ள ததவேஜுகளை மிக நுணுக்கமாகப் பரிசீலனை செய்ததாலும் வியாபாரி களிடத்தில் ஒரு விதமான அதிருப்தி குடிகொண்டிருந்தது. மேற் கூறியவை களை, செல்வமுடையவர்களின் குறைகள் எனக்கூறலாம், இனிக்கீழ்வகுப்பாரின் குறைகள் சில இருந்தன. அமிருதசர நகரத்தில் காஷ்மீர் மகம்மதியர்கள் அநேகர் இருந்தனர். துருக்கியினிடம் அநுதாபம் காட்டும் விஷயத்திலும், மகம்மதியர்களின் புண்ணியதலங்களைப் பாதுகாக்கப் பிரசாரவேலை செய்யும் விஷயத்திலும் இவர்கள் அமிருதசரசி லுள்ள மகம்மதியர்களின் உணர்ச்சியை எழுப்பி வந்தார்கள். 1919-ம் வருஷம் ஜனவரி மாதம் அமிருதசர முனிசிபல் எலெக்ஷன் நடைபெற்றது. இதில் போட்டி மிகவும் அதிகமாயிருந்தது. முனிசி பாலிடியில் அங்கத்தினராக விரும்பியவர், நகரத்திலுள்ள இழிமக்களிற் சிலரை ஒருங்கு சேர்த்துத் தம் கீழ் வைத்துக் கொண்டார். இந்த இழிமக்களின் தலைவர்களே, ஏப்ரல்மாதம் பத்தாந்தேதி நடைபெற்ற குழப்பங்களில் கலந்திருந்தார்கள்.
எவ்விதப் பொருளும் கொள்ளலாம்
இஃது அரசாங்கத்தாரின் கூற்றாகும். இவர் அமிருதசரசில் உள்ள ஜனங்கள் அதிருப்தியடைந்ததற்குக் காரணங்கள் இன்னவை யென்று பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்வதை நேயர்கள் கவனிக்க வேண்டும். வருமான வரிக்கென்று வியாபாரிகளின் ததவேஜுகள் நுணுக்கமாகப் பரிசோதிக்கப்பட்டன என்ற வாக்கியத்தைக் கொண்டு நாம் எவ்விதமான பொருளும் கொள்ளலாம். வெளிப் படையான கலகத்திற்கு மேற்கூறப்பட்ட வைகள் காரணங்கள் என்று சொல்லப்படுவது நமக்குப் பெருநகைப்பை யூட்டுகிறது அமிருதசர அதிகாரிகள் ஐனத்தலைவர்கள் மீது பெருங்கோபம் கொண்டிருந்தார்கள். 1919-ம் வருஷம் ஜனவரிமாதம் தொடங்கியே கான்டான்டி நோபிளின் நிலையைப் பற்றியும் ரௌலட் சட்டங்களைப்பற்றியும் பொது ஜனங்கள் கூட்டம் கூடித் தீர்மானங்கள் செய்து வந்தமை அதிகாரிகளுக்குச் சிறிதேனும் பிடிக்க வில்லை. இதையும் இங்கு நேயர்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். ஜனங்கள் ரௌலட் சட்டத்தைக் கண்டிக்கக் கூட்டங்கள் கூடியது போல் சத்தியாக்கிரக இயக்கத்தை ஆதரிக்கவும் செய்தார்கள். இது பஞ்சாப் அரசாங்கத்தாருககுப் பெருத்த கவலையை உண்டு பண்ணிவிட்டது. இந்தக்கூட்டங்களில் செய்யப்பட்ட உபந்நியாசங்கள் மிகக்கடுமையாக இருந்தன வென்று பஞ்சாப் அரசாங்க அறிக்கை கூறுகிறது. டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்தியபாலர் ஆகிய இவ்விருவருடைய வழக்கை விசாரனை செய்த இராணுவச் சட்டக் கமிஷனர், மேற்கூறப்பட்ட இரண்டு டாக்டர்களும் சட்டப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் தாபிக்கப் பட்ட அரசாங்கத்தின்மீது விரோதம் உண்டாக்கும்படியாகவும், விரோதம் உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்துடனும் பேசினார்கள் என்று கூறு கின்றனர், இஃதெவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பின்னர்க் காட்டுவோம்.
டாக்டர் சத்தியபாலர்
பஞ்சாப் அரசாங்கத்தார், டாக்டர் சத்தியபாலர் மீதும் டாக்டர் கிச்சலு மீதும் எப்பொழுதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருந்தனர். அரசாங்கத் தாருடைய செயல்கள் வெளிப் படையாகவும், தைரியமாகவும், உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசாமலும் கண்டிப்பவர்கள் அவருடைய அதிருப்திக்கு உட்படவேண்டியவர்களே இவர்கள் மீது, அரசாங்கத்தார் கொண்ட அதிருப்திக்குக் காரணம் இன்னதென்று நாம் ஆராயு முன்னர், இவர்கள் யாரென்பதை நேயர்களுக்கு அறிவித்து விடுவோம். டாக்டர் சத்தியபாலர் ஒரு ஹிந்துக் காத்ரி ஜாதியைச் சேர்ந்தவர். பஞ்சாப் யூனிவர்சிடியில் பி. ஏ; எம். பி. பட்டம் பெற்றவர். இவர் யுத்த காலத்தில் இந்தியன் மெடிகல் சர்விஸில் சேர்ந்து லெப்டினெண்டு பதவியை வகித்து ஏடனில் சுமார் ஒரு வருஷகாலம் ஊழியஞ் செய்தார். இதனால் இவருடைய இராஜபக்தியைப் பற்றி நாம் ஒன்றுங் கூறுவதற்கில்லை. அரசாங்க ஊழியஞ் செய்து இராணுவத்தில் வைத்திய வேலை பார்த்த இவர், பிறகு, பஞ்சாப் அரசாங்கத்தாரால் பலவித கொடுமைகளுக்குட் படுத்தப்பட்டார்!
டாக்டர் கிச்சலு
டாக்டர் சைபுதின் கிச்சலு என்பவர் மகம்மதியர்; அலிகார் காலேஜில் படித்தவர்; கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடியில் பி. ஏ. பட்டம் பெற்றவர். பாரிடர் பரீக்ஷையில் தேறியவர். பி. எச். டி. பட்டமும் பெற்றவர். இவர் இங்கிலாந்தில் ஐந்து வருஷகாலம் வாசம் செய்தார். அப்பொழுது இவர் அரசியல் விஷயங்களில் தலையிட்டுக் கொள்வதுண்டு. இவர், முதலில் ராவல்பிண்டியில் பாரிடர் வேலை பார்த்துவந்தார். 1915-ம் வருஷத்தில் அமிருதசர நகரத்திற்கு வந்து அங்கே தம் வேலையைப் பார்த்துக்கொண்டு வந்தார். 1916-ம் வருஷம் முதல், இவர் இந்திய அரசியல் விஷயங்களில் தலையிட்டு அதிக ஊக்கமாக உழைக்க ஆரம்பித்தார். அது முதல் இவர் காங்கிரகூட்டங்களுக்கும் எல்லா இந்தியா முலீம் லீக் கூட்டங்களுக்கும் பிரசன்னமாயிருந்து வந்தார். 1918-ம் வருஷம் டிசம்பர் மாதம் டெல்லியில் பண்டித மதன்மோஹன மாளவியா அவர்களுடைய அக்கிரா சனத்தின் கீழ்க்கூடிய காங்கிரசில், இவர் 1920-ம் வருஷத்துக் காங்கிர அமிருதசரசில் கூடவேண்டுமென்று காங்கிரஸை வரவழைத்தார். ஹிந்துக்களையும் முலீம்களையும் ஒன்று சேர்த்து வைப்பதில் இவர் மிகவும் உழைத்தார், இவரும் டாக்டர் சத்தியபாலரும் சகோதரர்கள் போலிருந்து வந்தார்கள்.
பிளாட்பாரம் டிக்கட்டு கிளர்ச்சி
இவ்விருவரும் செய்த குற்றங்கள் யாவை என்பதைக் கவனிப்போம். அமிருதசர ரெயில்வே டேஷனுக்கு இந்தியர்கள் பிளாட்பாரம் டிக்கட்டு பெற்றுச் செல்ல மறுக்கப் பட்டார்கள். ரெயில்வே அதிகாரிகளால் ஏற்பட்ட இந்த ஒழுங்கற்ற முறையை இவ்விருவரும் கண்டித்தனர். கூட்டங்கள் கூட்டிக் கண்டனம் செய்வித்தனர். கடைசியில் இந்த உத்தரவு நீக்கப்பட்டது, யாவரும் பிளாட்பாரம் டிக்கட்டு பெற்றுக்கொண்டு செல்லலாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இஃது அதிகாரிகளுக்குப் பெரிய கோபத்தை யுண்டுபண்ணியது. பஞ்சாப் அரசாங்கத்தார் தம்மறிக்கையில் இவ்விஷயத்தைப்பற்றிப் பின் வருமாறு கூறுகின்றனர். அமிருதசர ரெயில்வே டேஷனில் பிளாட்பாரம் டிக்கட்டுகள் ரெயில்வே அதிகாரிகளால் மறுக்கப்பட்டதையே ஆதார மாகக் கொண்டு எழுந்த கிளர்ச்சியில் டாக்டர் கிச்சுலுவும் டாக்டர் சத்தியபாலரும் வெற்றிபெற்றார்கள்; அல்லது வெற்றிபெற்றதாக எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (காங்கிர கமிட்டியின்) சாதாரண தலைவர்கள் பிளாட்பாரம் டிக்கட்டு விஷயத்தைப் பற்றிக் குறைகூறினார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை. இவ்விருவரும் வெளிப்படையாகச் செய்த கிளர்ச்சியினாலேயே இந்த பிளாட்பாரம் டிக்கட்டு நிபந்தனை நீங்கியது என்று நகரத்தார் கூறினர். ஆனால் ஜில்லா அதிகாரிகளுடைய யோசனையின் பேரிலும், இந்த விஷயத்தின் தன்மையைப் பொறுத்தும், (ரெயில்வே அதிகாரிகள்) இந்த உத்தரவை நீக்கினார்கள். இவ்விரு கனவான்களும் செய்த கிளர்ச்சியின் பயனாகவே, இந்த உத்தரவு நீங்கியதென்று அமிருதசர வாசிகள் கூறுகிறார்கள். என்றேனும் அரசாங்கத்தார் ஒத்துக் கொண்டதைக் குறித்து நாம் அவருக்கு நன்றி பாராட்டுகிறோம். இது சம்பந்தமாக டாக்டர் சத்தியபாலர், காங்கிர சப்கமிட்டி முன் தாம் கூறிய சாட்சியத்தில் பின்வருமாறு கூறுகிறார்:- இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் நூற்றைம்பது வருஷங்களாகியும், ஐரோப்பியர்களேனும் ஆங்கிலோ இந்தியர்களேனும் இலவசமாக ரெயில்வே பிளாட்பாரத்திற்குச் செல்லலாமென்றிருந்ததும் இந்தியர்கள் கட்டணம் கட்டியும் பிளாட்பாரத்திற்கு செல்லக் கூடாதென்றுள்ள ஓர் உத்தரவைக் கண்டிக்கக் கிளர்ச்சி செய்ய நேர்ந்தது ஓர் அவமானமாகும் என்பதை நான் அங்கீகரிக் கிறேன். இந்தியர்கள் எவ்வளவு பணக்காரர்களாகவும், எவ்வளவு செல்வாக்குடையவர்களாகவும் இருந்தபோதிலும், தங்கள் மனைவி மக்களை ரெயிலில் ஏற்றித் திரும்பி வர இயலாமல் இருந்தது. இந்தக் குறை உண்மையுள்ளதாகும். இஃது இந்தியர்களுடைய உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தியது, இந்தக்குறை அங்ஙனமே நீடிக்கவைத்து, நாம் தூர விலகி நிற்பது முடியாத காரியம். எனவே இந்த விஷயத்தைப் பற்றி நான் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஐரோப்பியருக்கு விரோதமாக வேனும் அரசாங்கத்தாருக்கு விரோதமாகவேனும் கிளர்ச்சி எழுப்பப்பட வில்லை என்பதை நான் கூறவேண்டுவது அநாவசியம், ரெயில்வே அதிகாரிகளிற் சிலருடைய அதிக்கிரமச் செயலைக் கண்டிக்கவே இக்கிளர்ச்சி ஏற்பட்டது. அதுவும், சாதாரணமான எல்லா முறைகளும் தவறிப்போன பிறகே தோன்றியது. அதிருஷ்டவசத்தால் இந்த விஷயம் அமைதியாக முடிவு பெற்றது. ரெயில்வே அதிகாரிகளும் ஜனங்களும் முன்போல் ஒற்றுமையாயிருந்தார்கள். இந்தக் கிளர்ச்சியை இராஜத்துரோக சம்பந்தமானதென்றும், டேஷன் சூப்பிரண்டெண்டெண்ட் இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே கொலைசெய்யப்பட்டாரென்றும், வெளிப்படையான கலகத்திற்கு இக்கிளர்ச்சி ஓர் அறிகுறியென்றும் கூறுவது யோசனை யின்றிக் கூறும் கூற்றாம். இதற்குமேல் நாம் அதிகமாகக் கூறவேண்டுவதில்லை. இதனால் டாக்டர் சத்தியபாலர் அரசாங்கத்திற்கு ஆகாதவராகி விட்டார்.
டாக்டர் கிச்சுலுவின் குற்றம்
இனி டாக்டர் கிச்சுலுசெய்த குற்றங்களை அவர் வாய்மொழியினாலேயே கவனிப்போம். சென்ற முனிசிபல் எலக்ஷனில் நான் ஒரு கமிஷனராகத் தெரிந்தெடுக்கப்பட்டேன். வரி செலுத்துவோர் தங்களுடைய கடமை இன்னதென்பதை நன்கு உணர்ந்து கொண்டு விட்டாற் போலிருக்கிறது. இம்முறை முனிசிபாலிடிக்குத் தெரிந்தெடுக்கப்பட்டோர் அனைவரும் உண்மையான ஜனப்பிரதிகளாகவே இருந்தார்கள். முனிசிபல் போர்டின் முதற்கூட்டத்தில், ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு ஹிந்து கமிஷனர் அக்கிராசனாதிபதியாக இருக்கவேண்டுமென்று பிரரேபணை செய்தேன். அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட ஓர் அங்கத்தினர், டிப்டி கமிஷனரே அக்கிராசனாதியாக இருக்கவேண்டுமென்று பிரரேபணை செய்தார். கடைசியில் டிப்டி கமிஷனரே மூன்று ஓட்டுகள் அதிகமாகப் பெற்று அக்கிராசனாதிபதியானார். அமிருதசர முனிசிபாலிடியில் ஓர் உத்தியோகதரல்லாதார் அக்கிராசனாதிபதியாக இருக்கவேண்டு மென்று பிரரேபணை செய்தது இதுவே முதன் முறையாகும். இஃது அதிகாரிகளுக்கு வெறுப்பைத் தந்தது. அமிருதசரசில் சில பட்டதாரிகளாலும், உத்தியோகத்தை விரும்புவோராலும், சில பட்டவேடராலும் நடத்திக்கொண்டு வரப்படும் அஞ்சு மான் இலாமியர் என்றொரு சங்கம் இருக்கிறது. இச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இலாமிய சமூகத்தைக் கெடுத்துக் கொண்டு வருவதாக எனக்குத் தென்பட்டது. நான் அஞ்சுமானில் ஓர் அங்கத்தினனாயினேன். பிறகு நிருவாக சபைக்குச் செல்ல முயன்றேன். ஆனால் மேற்கூறப்பட்ட கனவான்கள் என்னைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இலாமியா பள்ளிக்கூடத்துப் பழைய மாணவர்களால் நிருவாக சபை அங்கத்தினராகத் தெரிந்தெடுக்கப்பட்டேன். அஞ்சுமானைச் சீர்சிருத்த நான் பலவழிகளிலும் முயன்றேன். ஆனால் என் முயற்சிகள் வீணாயின. கடைசியில் இந்த அஞ்சுமானின் அங்கத்தினர்களின் சுயநல முயற்சிகளை நான் பொதுக்கூட்டங்களில் பகிரங்கம் செய்தேன். அச்சங்கத்து நிருவாக சபையார், என்னுடைய உபந்நியாசங்களைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் நிருவாக சபையினின்று என்னை விலக்க அவர்களால் முடிய வில்லை. அஞ்சுமான் அங்கத்தினரிற் சிலர் எனக்குத் தொந்தரவு உண்டாக்க வேண்டுமென்று ஒரு சூழ்ச்சி செய்தனர். சங்கத்தின் அங்கத்தினரான ஒரு மூன்றுபேர், மற்றோர் அங்கத்தினரையும் அவருடைய சிறிய குமாரனையும் சேர்த்து அமிருதசர போலீ டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் நான் இங்கிலீஷ்காரரை இந்தியாவினின்றும் துரத்திவிட முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கு வெடிகுண்டுகள் எங்ஙனம் செய்வதென்பதைக் கற்றுக்கொடுத்ததாகவும் அச்சிறு பையனைச் சொல்லும்படி செய்வித்தனர். நான் பிறகு ஒருநாள் போலீ சூப்பிரண்டெண்டெண்டைச் சந்தித்தபோது அவர் நடந்த விருத்தாந்தங் களைக் கூறித் தாம் அவைகளை நம்பவில்லை யென்றுசொன்னார். 1918-ம் வருஷம் ஆகட் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டாக்டர் கிச்சலு இந்தியர்கள் உத்தரவின்றி இங்கிலீஷ்காரரும் இந்தியாவில் வந்திறங்க இடங்கொடுக்கப்பட மாட்டாது. என்று கூறியதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. இந்த வாக்கியங்கள் எந்த சந்தர்ப்பத்தை ஒட்டிக்கூறப்பட்டன வென்பது தெரியவில்லை. இந்த ஒரு வாக்கியத்தைக் கொண்டே நாம் அவருடைய கொள்கைகளை அளந்தறிய வேண்டுமானாலுங்கூட அது முடியாத காரியமென்றே நாம் நினைக்கிறோம். மேற்காணப்பட்ட வாக்கியத்தைக் கொண்டு, டாக்டர் கிச்சுலுவுக்கு இங்கிலீஷ்காரர் மீது விரோதம் இருக்கிறதென்று எங்ஙனம் ருஜுப் படுத்த முடியும்? இதனால் இவரைக் கலகக்காரர் என்றாவது சதியாலோசனைக்காரர் என்றாவது எப்படிக் கூறிவிடலாம்? ஆயினும், மேற்கூறப் பட்டவைகளை ஆதாரமாகக் கொண்டு, அரசாங்கத்தார் இவர்மீது சிறிது கண்ணோக்கம் செலுத்திவந்தார் என்று கூறலாம்.
கிளர்ச்சியின் தோற்றம்
இனி நடந்த சம்பவங்களைக் குறியிட்டுக் கொண்டு செல்வோம். மார்ச்சு மாதம் - இருபத்து மூன்றாந்தேதி சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க அமிருதசரசில் ஒரு பொதுக் கூட்டம் கூடியது. பிறகு இருபத்தொன்பதாந் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஹாத்மா காந்தி, விரதக் கொண்டாட்டத்தன்று அநுசரிக்க வேண்டிக் கட்டளையிட்டிருந்த முறைகள் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டன. கடைசியில் மார்ச்சு மாதம் முப்பதாந்தேதி அமிருதசரசில் விரதங் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதுபோல இந்தியாவில் வேறுசில இடங்களிலும் விரதக்கொண்டாட்டம் நடைபெற்றது. முன்னாள் தீர்மானித்தபடியே அமிருதசரசில் மறு நாள் (30-3-1919) விரதங் கொண்டாடப்பட்டது. எல்லாக் கடைகளும் மூடப்பட்டன. அமிருதசரசிலுள்ளோர் அனைவரும் உண்ணா விரதம் பூண்டிருந்தனர். திரீகளும் விரதம் அநுஷ்டித்தார்கள். எங்கும் அமைதியே குடிகொண்டிருந்தது. விரதக் கொண்டாட்டம் எதிர்பாராத விதமாய் வெற்றிபெற்றது என்று அரசாங்க அறிக்கையே கூறும் போது நாம் அதிகமாக ஏன் கூறவேண்டும்? மாலை பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்குச் சுமார் முப்பதினாயிரம் பேர் முதல் முப்பத்தையாயிரம் பேர்வரை வந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. இக்கூட்டத்திற்கு டாக்டர் கிச்சுலு அக்கிராசனம் வகித்தார். பண்டிதர் கோதுமால், சுவாமி அநுபவாநந்தர், தீன நாதர் முதலியோர் பேசினர். இக் கூட்டத்தில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டன. இக்கூட்டம் அமைதியுடன் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசியவர் அனைவரும் சட்ட வரம்புக்குட்பட்டே பேசினர். டாக்டர் கிச்சுலு செய்த உபந்நியாசத்தின் கடைசி பாகம் வருமாறு:- தேச நன்மைக்காக நமது சொந்த நன்மைகளைத் தியாகம் செய்ய நாம் எப்பொழுதும் சித்த மாயிருப்போம் மஹாத்மாகாந்தியின் செய்தி உங்களுக்குப் படித்துக் காட்டப்பட்டது. நாட்டிலுள்ளவர் அனைவரும் (பொறுமை) எதிர்ப்புக்குச் சித்தமாயிருக்க வேண்டும். இங்ஙனம் நான் கூறுவதனால் இந்தப் புண்ணிய நகரத்தில் இரத்தவெள்ளம் பாய வேண்டுமென்று பொருள் கொள்ளக் கூடாது. நம்முடைய எதிர்ப்பு, பொறுமை எதிர்ப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய மனச்சாட்சிக்கு விரோத மில்லாமல் நடப்பதற்குச் சித்தமாயிருங்கள். இங்ஙனம் நடப்பதனால் நீங்கள் சிறைக்குச் சென்றாலும் செல்வீர்கள்; காப்பில் வைக்கப்பட்டாலும் வைக்கப் படுவீர்கள். எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள்; ஒருவருக்கும் மனவருத்தமுண்டு பண்ணாதீர்கள். மிக்க அமைதி யுடன் வீட்டிற்குச் செல்லுங்கள், சென்று உங்களுடைய தோட்டத்தில் உலாவுங்கள். ஒரு போலீகாரனைக் கண்டாவது, நன்றிகெட்ட ஒருவனைப் பார்த்தாவது அவனுடைய மனம் புண்படும் படியாகக் கடுமையான வார்த்தைகளைக் கூறாதீர்கள். இதனால் கூட்டத்தை நடத்திவைத்தவர் களுடைய மனநிலை எத்தன்மைத்தாயிருந்தது என்பதை நேயர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
வாயடைக்கப்பட்டார்கள்
இதற்குப் பிறகு நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறுவதன்முன், மார்ச்சு மாதம் இருபத்தொன்பதாந் தேதி நடைபெற்ற சம்பவ மொன்றை ஈண்டுக் குறிப்பிடுவது அவசியமாகிறது. மார்ச்சு மாதம் இருபத்தொன்பதாந் தேதி இரவு பதினோரு மணிக்கு, டாக்டர் சத்தியபாலர் மீது ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவினால் அவர் எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாதென்றும். பத்திரிகைகளுக்கு எவ்வித வியாசங் களும் எழுதக் கூடாதென்றும் தாம் செல்லுமிடங்களை அவ்வப்பொழுது போலீஸாருக்குத் தெரிவிக்கவேண்டுமென்றும் கட்டுப்படுத்தப்பட்டார். எனவே டாக்டர் சத்திய பாலர் முப்பதாந் தேதி கூடிய கூட்டத்தில் பேச முடியாதவரானார். இவர் இங்ஙனம் கட்டுப்படுத்தப்பட்டமை ஜனங்களுக்குப் பெரிதும் அதிருப்தியை விளைவிக்கும் என்றும், அரசாங்கத்தார்மீது எவருக்கும் கெட்ட எண்ணம் உண்டாக்கக் கூடா தென்றும் கருதி முப்பதாந்தேதி கூட்டத்தில் இவ்விஷயம் தெரிவிக்கப் படவில்லை. பிறகு ஏப்ரல் மாதம் நான்காந்தேதி டாக்டர் கிச்சுலு, பண்டிதர்கோதுமால், சுவாமி அநுபவாநந்தர், தீன நாதர் ஆகிய நால்வரும் டாக்டர் சத்தியபாலருடைய கதியையடைந்தார்கள். பலரால் நேசிக்கப் பட்ட ஐந்து கனவான்கள் இங்ஙனம் கட்டுப்படுத்தப்பட்டமை ஜனங்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது என்பதை நாம்கூறவேண்டுவதில்லை. ஆயினும் அவர்கள் மிக்க அமைதியுடனேயே இருந்தார்கள்.
ஆறாந்தேதி விரதக் கொண்டாட்டம்
முன்னர்க் கூறியபடி இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் கொண்டாடப்பட்டது போல் ஏப்ரல் மாதம் ஆறாந் தேதியும் மஹாத்மாகாந்தியின் ஆணையின்படி அமிருதசர நகரில் விரதங் கொண்டாடப்பட்டது. இதுவும் மிக்க அமைதியுடனேயே நடைபெற்றது. அன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்குச் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வந்திருந்தனர். என்று சொல்லப்படுகிறது. அமிருதசர பாரிடர்களுள் ஒருவரான மிடர் பத்ருல் இலாம்கான் என்பவர் அக்கிராசனம் வகித்தார். அன்றும் ரௌலட் சட்டத்தை அரசாங்கத்தார் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், டாக்டர் சத்தியபாலர் முதலியோர் மீது விடுத்திருக்கப் பட்ட உத்தரவுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானங்கள் செய்யப்பட்டன. அக்கிராசனாதிபதியான மிடர் பத்ருல் இலாம்கான் தம் முடிவுரையில் பின் வருமாறு கூறினார்:- சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தைவிட இன்று நடைபெற்ற கூட்டம் மிக்கவெற்றியுடன் முடிவுபெற்றது. உங்களுடைய அபிப்பிராயத்தை வெளிப் படையாகத் தெரிவிக்கவேண்டுமென்று நீங்கள் கோரிய எண்ணம் ஈடேறிவிட்டது. இச்சமயத்தில் ஜனங்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்குக் காட்டிக்கொள்ளக் கூடாது. நீங்கள் மிக்க பொறுமையுடன் இருக்கவேண்டும். இச்சமயத்தில் துக்கத்தையும் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு கொடுமையினின்றும் நாம் தப்பித்துக் கொள்ளவேண்டுமென்பதே மஹாத்மா காந்தியின் புத்திமதி யாகும். பொய் தோற்கும்; சத்தியம் வெல்லும். நீங்கள் உங்கள் மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டு, பொறுமையுடனிருப்பீர் களானால், இந்தக் கூட்டத்தினால் அதிக பயன் விளையும். ஆனால் ஒரு சிறுகுழப்பம் ஏற்பட்டாலும், இரண்டுபேர் சச்சரவிட்டுக் கொண்டாலும், இந்தக் கூட்டத்தினால் எவ்விதப் பயனும் உண்டாகாது. அதனால் கெடுதியே விளையும். இந்த இடத்தைவிட்டு ஜனங்கள் மிக்க அமைதியுடன் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அக்கிராசனாதிபதியின் விருப்பப்படியே ஜனங்கள் மிக்க அமைதியுடன் சென்றார்கள், இதனால் ஜனத்தலைவர்கள் பொதுஜன அமைதியைத் தங்கள் மனத்தில் கொண்டு எவ்வளவு ஜாக்கிரதையாயிருந்தார்கள் என்பது தெரியவரும். ஆறாந்தேதி எவ்விதக்குறைவுமின்றி விரதக் கொண்டாட்டம் நன்கு நிறைவேறியது. ஆனால் அமிருதசர கிளாக்டவர், என்னுமிடத்தில் அமிருதசர ஜனங்கள் இறக்க வேண்டும்; அல்லது கொல்லவேண்டும் என்று பொருள்படத்தக்க ஒரு பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது என்று அரசாங்க அறிக்கையில் காணப்படுகிறது.
இராம நவமி விழா
பிறகு ஏப்ரல் மாதம் ஏழு, எட்டு தேதிகள் மிக்க அமைதியுடனேயே சென்றன. ஆனால் அரசாங்கத்தார் சிறிது கவலையுடனேயே இருந்தனர் என்று அவருடைய அறிக்கையால் விளங்குகின்றது. பிறகு ஏப்ரல் மாதம் ஒன்பதாந்தேதி இராமநவமி வந்தது. இது ஹிந்துக்களின் விழாவாகும். ஆனால் இச்சமயத்தில், ஹிந்து முலீம் ஒற்றுமை அதிகமாக வேண்டுமென்று அதற்கான முயற்சிகளைச் சில தலைவர்கள் செய்தனர். இராம நவமி தினத்தன்று ஓர் ஊர்வலம் வருவது வழக்கம். அங்ஙனமே ஓர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் எண்ணிறந்த மகம்மதியர்கள் கலந்து கொண்டார்கள். மஹாத்மா காந்திக் ஜெய் ஹிந்து முஸல்மான்கி ஜெய் என்ற சப்தமே எங்கும் நிறைந்திருந்தது. டாக்டர் கிச்சுலுவும் டாக்டர் சத்தியபாலரும் இந்த ஊர்வலத்தைப் பல இடங்களில் தரிசித்துச் சந்தோஷமடைந்தார்கள். இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, அமிருதசர டிப்டி கமிஷனரான மிடர் மைல் கிர்விங், அலஹாபாத் பாங்கியின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ஜனங்கள் மிக்க அமைதியுடன் நின்று இராஜவாழ்த்துப் பாடினார்கள். இராமநவமி தினத்தன்றும் எங்கும் அமைதியின்மையே கிடையாது. ஹிந்து முலீம் களடங்கிய ஊர்வலத்தின் போதுமகம்மதியர்களுடைய பாத்திரத்தில் ஹிந்துக்கள் நீரருந்தினார்கள் என்று சொல்லப்படு கிறது. ஸ்ரீராமநவமி தினத்தன்று ஹிந்து முலீம் ஒற்றுமை எங்ஙனமிருந்ததென்பதற்கு ஈண்டு ஓர் உதாரணம் காட்டுகின்றோம். காங்கிர சப்கமிட்டி முன் சாட்சியங்கூறிய ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-
ஏப்ரல் மாதம் ஒன்பதாந்தேதி ஸ்ரீராமநவமி தினமாகும். ஹிந்து முலீம் ஒற்றுமையைக் காட்டும்பொருட்டு அமிருதசரசிலுள்ள மகம்மதியர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். நான் ஒரு முக்கியதனாக இருந்தேன். நான் சிறிது பணம் சேகரித்தேன். பிறகு பதினைந்து இளைஞர்களை ஒருங்கு சேர்த்து அவர்களுக்குச் சொக்காயும் நிஜாரும் கொடுத்து தலையில் ஒரு துருக்கிக் குல்லாயை அணிந்துகொள்ளும்படிச் செய்தேன். இந்த இளைஞர்களைக் கண்டு, இஃதொரு மகம்மதியர் கூட்டம் என்று பிறர் எண்ணும்படி செய்வித்தேன். மாலை நான்கு மணிக்கு இந்தக்கூட்டத்துடன் நான் சௌக்சிந்தபூர்னி என்னுமிடத்திலிருந்து புறப்பட்டு நாமக் மண்டியி லிருந்த இராமநவமி ஊர்வலத்துடன் சேர்ந்து கொண்டேன். ஊர்வலம் முடியும்வரை நான் கூடவே இருந்தேன். இதனால் ஹிந்துக்கள் முலீம்களுடைய சந்தோஷத்திலும் முலீம்கள் ஹிந்துக்களுடைய சந்தோஷத்திலும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்பது நன்கு தெரியவரும்.
டாக்டர்கள் பிரஷ்டம் செய்யப்பட்டார்கள்
அமிருதசரசில் ஜனங்கள் இராம நவமி தினத்தை மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் லாகூரிலுள்ள அரசாங்கக் காரியதலத்தில் டாக்டர் கிச்சுலுவையும் டாக்டர் சத்தியபாலரையும் பிரஷ்டம் செய்ய உத்தரவு வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது. டாக்டர் கிச்சுலுவையும் டாக்டர் சத்தியபாலரையும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காப்பில் வைக்கும்படி அமிருதசர டிப்டி கமிஷனர் பஞ்சாப் அரசாங்கத்தாரிடமிருந்து ஓர் உத்தரவை இராம நவமி தினத்தன்று இரவு வரப்பெற்றனர். எனவே, மறுநாள் பத்தாந்தேதி காலை சுமார் பத்து மணிக்கு டிப்டி கமிஷனருடைய வீட்டிற்கு டாக்டர் கிச்சுலுவும் டாக்டர் சத்தியபாலரும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் டிப்டி கமிஷனரைப் பார்க்கச் சென்றதும், பஞ்சாப் அரசாங்கத்தாருடைய உத்தரவு அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே இரு கனவான்களும் போலீ சூப்பிரண்டெண்டான மிடர் ரெஹில் வசம் ஒப்புவிக்கப்பட்டு, அமிருதசரசிற்கு நூறு மைலுக்கப்பாலுள்ள தர்ம சாலைக்கு மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தச்செய்தியானது உடனே அமிருதசர நகரமெங்கும் பரவிவிட்டது. ஜனங்கள் கும்பல் கும்பலாய்க் கூட வாரம்பித்தார்கள். டாக்டர்கள் இருவரையும் அமிருதசரசினின்றும் அப்புறப்படுத்தினால் ஜனங்களுக்குள் அதிருப்தியுண்டாகும் என்பதை அரசாங்கத்
தார் முன்னரே அறிந்து, ஆங்காங்கு இராணுவ வீரரைப் பாதுகாவல் செய்ய வைத்திருந்தனர். தங்களுடைய தலைவர்கள் தம்மினின்றும் பிரிந்தார்கள் என்பதைக் கேட்ட ஜனங்கள் மிகவும் துக்கமுடையவர்களாய் டிப்டி கமிஷனர் பங்களாவை நோக்கிச் சென்றார்கள். டாக்டர்கள் ஏன் அப்புறப் படுத்தப் பட்டார்கள் என்பதை அறியவும், தகுந்த காரணம் இன்றேல், அவர்களை விடுதலைசெய்யும்படி கேட்கவுமே இவர்கள் டிப்டி கமிஷனருடைய வீட்டிற்குச் சென்றார்கள், இவர்கள் கையில் எவ்வித ஆயுதமுமின்றி வெறுங்கையராய்ச் சென்றார்கள். இவர்கள் செல்லும் போது எந்தெந்த இடங்களைப் பின்னர்த் தீக்கிரையாக்கினார்களோ அந்தந்த இடங்களைக் கடந்துகொண்டே சென்றார்கள். ஆனால் வழியில் எவருக்கும் எவ்விதமான தீங்கும் இக்கூட்டத்தார் செய்யவில்லை. வெள்ளையர்மீது இக்கூட்டத்திற்கு விரோதமில்லை யென்று பலவித ஆதாரங்களினால் தெரியவருகின்றது. இக்கூட்டம் வழியில் பல ஐரோப்பியர்களைச் சந்தித்ததென்றும் ஆனால் அவர்களை ஒன்றும் செய்யவில்லை யென்றும் அரசாங்க அறிக்கையே கூறுகின்றது. இக்கூட்டத்தார் வழியில் எவ்விதமான கடுமொழிகளையும் உபயோகிக்க வில்லை. பிறகு என்ன நடந்ததென்பதை, காங்கிர சப் கமிட்டிமுன் சாட்சியங் கூறிய மிடர் மியான் அட்டா மகமத் என்பவர் மூலமாகவே தெரிந்து கொள்வோம்.
வாட்களுடன் வீரர்கள்
பதினைந்து இந்திய சிப்பாய்களும் நான்கு ஐரோப்பிய இராணுவ உத்தியோகதர்களும் உருவிய வாட்களுடன் பகல் பன்னிரண்டு மணிக்கு ரெயில்வே வண்டிமேல் வாராவதி யண்டை (Railway carriage Over Bridge) வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரம் கழித்து, ஓர் ஐரோப்பியர் சிவில் லைன் (Civil lines) என்ற இடத்திற்குச் சென்றார். மற்றவர் வாராவதியின் உச்சியில் ஒரு விளக்குத் தூணண்டை நின்று கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிஷம் கழித்து டெலிகிராப் ஆபீரோட்டண்டை ஒரு கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டத்தில் ஒருவன் ஒரு கறுப்புக் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தான். மற்றவர் தங்கள் தலைப்பாகைகளையும் குல்லாய் களையும் கையில் வைத்துக்கொண்டிருந்தார்கள் ஒருவர் கையிலும் தடி இல்லை. இக் கூட்டத்தைக் கண்டதும் சிப்பாய்கள் குதிரைகள் மீதேறிக்கொண்டு இக்கூட்டத்தைத் தடுத்தார்கள். இந்தச் சிப்பாய்களின் முன்னணியில் இருந்த ஓர் ஐரோப்பியர் இந்தக் கூட்டத்தை நோக்கித் திரும்பச் செல்லும்படி கூறினார். கூட்டத்திலிருந்த ஒருவர், அனைவரையும் உட்காரச் சொன்னார். கூட்டத்திலுள்ள சுமார் நானூறுபேர் உட்கார்ந்துகொண்டு, டாக்டர் கிச்சுலுவையும் டாக்டர் சத்தியபாலரையும் விடும்படி டிப்டி கமிஷனரிடம் தாங்கள் விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டுமென்று சொன்னார்கள். குதிரை மேலிருந்த ஐரோப்பியர், தம் குதிரையைத் திருப்பிக் கொண்டு பின் சென்றதும், கூட்டத்தார் எழுந்து முன் சென்றனர். சிப்பாய்கள் பின்னடைந்தார்கள், எனவே ஜனங்கள் முன்சென்று, கடைசியில் பாதை வாராவதியண்டை (Fort - Bridge)” வந்து சேர்ந்தார்கள். உடனே இரண்டு வெடிகள் கேட்டன. யார் சுட்டனர் என்பதை நான் பார்க்கவில்லை. கூட்டத்தில் இருந்த இரண்டு பேர் இறந்துபோயினர். இந்த இரண்டு வெடிகள் உண்டானதும் ஜனங்கள் பின்னடையாமல், பாதையின் வலது பக்கமும் இடது பக்கமும் பரவி நின்றார்கள். சிலர் ரெயில்வே பாதையை நோக்கிச் சென்றார்கள். சிலர் அதற்கு எதிர்ப்புறமாக நின்றுகொண்டிருந்தார்கள். ரெயில்வே பாதையிலிருந்த சிலர் கற்களைப் பொறுக்கி சோல்ஜர்கள் மீது எறிந்தார்கள். சிப்பாய்கள் சிவில் லைன்சை நோக்கிச் சென்றார்கள். பாதை வாராவதி யண்டையிருந்த கூட்டத்தை நோக்கி மற்றொரு முறை சுடப்பட்டது. பல குண்டுகள் சுடப்பட்டன. சிலர் இறந்துபோயினர்; சிலர் காய மடைந்தனர். கூட்டத்தின் ஒரு பாகம் பாதை வாராவதியண்டை சென்றது; மற்றொரு பாகம் இறந்தவர்களையும் காயம் பட்டவர் களையும் தூக்கிக்கொண்டு ரெயில்வே வாராவதியை நோக்கிச் சென்றது. உடனே சத்தாஹாஸன் என்ற ஒரு பாரிடர் பாதை வாராவதி யண்டை தோன்றி ஜனங்களைத் திரும்பிச் செல்லும்படி சொன்னார். அங்ஙனமே இக் கூட்டமும், ரெயில்வே வாராவதி யண்டையிருந்த கூட்டமும் திரும்பிச் சென்றன. பாதை வாராவதி யண்டையிருந்த ஜனங்கள் திரும்பிச் சென்றதும் பத்து ஐரோப்பிய சோல்ஜர்களும் சில இந்திய சோல்ஜர்களும் அங்குவந்து நகரத்தை நோக்கி நின்று தங்கள் நிலைமையைச் சரிப்படுத்திக் கொண்டார்கள். பாதை வாராவதி யினின்றும் சில வெடிகுண்டுகள் செல்வதை நான் கண்டேன். இந்தக் குண்டுகளைக் கேட்டதும், கூட்டமானது ஹால்கேட்டுக்குச் செல்லும் பாதையை நோக்கிப் பின்னடைந்தது. பிறகு சில குதிரைவீரர் ரெயில்வே வாராவதியண்டைவந்து தாங்கள் முன்னின்றதைப்போல் நின்று கொண்டனர். இங்கு சுமார் பதினைந்து ஐரோப்பிய வீரரும் நாற்பது இந்திய வீரரும் இருந்தனர். ஹால் கேட்டினின்று வரும்வழியாக ஜனங்கள் ரெயில்வே வாராவதியண்டை வந்து சேர்ந்தார்கள். இம்முறை கூட்டத்தி லிருந்த சிலருக்குக் கையில் தடியிருந்தது. குதிரை மீதேறியிருந்த ஒரு சீக்கிய வீரர், ஜனங்களுக்கும், வாராவதிக்கு மேலிருந்த வீரர்களின் தலைவருக்கும் இடையே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பிறகு இந்தச் சீக்கிய வீரர் தம் குதிரையைத் திருப்பினார். ஜனங்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். உடனே வாராவதிமேல் நின்ற இராணுவத் தலைவர், ஜனங்களை நோக்கிச் சுடும்படி சோல்ஜர்களுக்கு உத்தரவு செய்தார். தந்தி ஆபீ ரோட்டில் இரண்டு பேர் விழுந்தனர். இன்னும் பிற இடங்களில் எத்தனை பேர் விழுந்தனர் என்பதை நான் கூறமுடிய வில்லை
ஜனத் தலைவர்களின் ஒத்துழைப்பு
மிடர் மாக்பூல் மாமூது என்னும் பிளீடர் இது விஷயமாக என்ன கூறுகின்றனர் என்பதைக் கவனிப்போம். ஏப்ரல் மாதம் பத்தாந் தேதி பகல் நாங்கள் நீதி தலத்தில் இருக்கும்போது டாக்டர் சத்தியபாலரும் டாக்டர் கிச்சுலுவும் பிரஷ்டம் செய்யப்பட்டார்கள் என்றும், இதனால் ஜனங்கள் அதிக பிரமை கொண்டிருக்கிறார் களென்றும், சிலர் இராணுவக்காரரால் சுடப்பட்டார் என்றும் கேள்விப் பட்டோம். உடனே வக்கீல்களிற் சிலர் ஒருங்கு சேர்ந்து, இச்சமயத்தில் அமைதியை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எவ்வித சச்சரவும் உண்டாகாமற் பார்த்துக்கொள்ள நியாயவாதிகள் தீர்மானித்திருக் கின்றார்கள் என்றும் இதற்கான உதவிகளைச் செய்ய அவர்கள் சித்தமாயிருக்கிறார்கள் என்றும் டிப்டி கமிஷனரிடம் அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன். உடனே நானும் வேறு நால்வரும் ஒரு மோட்டார் காரில் ஏறிச் சென்றோம். மதன் ஷாப்பண்டை மிடர் பிளோமரையும் வேறுசில இராணுவ வீரரையும் சந்தித்தோம். ஜனங்கள் எங்கள் வண்டியைச் சுற்றிக்கொண்டு டாக்டர் சத்திய பாலரையும் டாக்டர் கிச்சுலுவையும் விடுதலை செய்யும்படி டிப்டி கமிஷனரைக் கேட்கச் சென்று கொண்டிருந்ததாகவும் அப்பொழுது ஆயுதமின்றி யிருந்தவர் களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதென்றும் கூறினார்கள். நாங்கள் பொறுமை யுடனிருக்கும் படி சொன்னோம். பாதை வாராவதியைத் தாண்டிச் சென்று, தந்தி ஆபீசைப் பாதுகாத்துக் கொள்ளும் படி மிடர் ப்ளோமர் எனக்குக் கட்டளையிட்டார். என்னுடன் வந்த நண்பர்கள் டேஷன் பக்கமாகச் செல்லும்படி கட்டளையிடப்பட்டார்கள். நான் சென்றதும், தந்தியாபீசண்டை ஒரு பெரிய கூட்டம் இருக்கக் கண்டேன். எய்சஸன் பார்க்கிலும் ஏராளமான ஜனங்கள் இருந்தார்கள். ஜனங்களிற் பலர் கையில் தடி இருக்கக் கண்டேன். சிலர் தந்திக் கம்பிகள் அறுப்பதையும் பார்த்தேன். நான் அவர்களிடையே சென்று அமைதியா யிருக்கும்படி வேண்டிக் கொண்டேன். இச்சமயத்தில் ரெயில்வேகிடங்கில் வெடிகுண்டு சப்தம் கேட்பதாகச் சொல்லப்பட்டது. ஜனங்கள் அப்பக்க மாகச் செல்லப் பார்த்தார்கள். அவர்களைச் சாந்தப்படுத்தி நானே நேரிற் சென்று பார்த்து வருவதாகக் கூறினேன். நான் அங்ஙனமே சென்று அங்கு ஒன்றுமில்லாததைக் கண்டு திரும்பி வந்து ஜனங்கள் அமைதியாயிருக்க வேண்டுமென்றும் வேண்டுமானால் ஜலியன் வாலாபாக்கிற்குச் சென்று ஒரு கூட்டம் கூடலாமென்றும் சொன்னேன். இச்சமயத்தில் தந்தி ஆபீ பக்கத்தினின்று ஒரு வெடிகுண்டு சப்தம் கேட்டது. ஜனங்கள் மிகப் பிரமை கொண்டார்கள். ஆயினும் அவர்களுக்கு அமைதியுண்டாக்கி, நானும் மிடர் தோடர்மாலும் ஜனங்கள் ஹால் கேட்டு வழியாக அழைத்துச் சென்றோம். இச்சமயத்தில் ரெயில்வே வாராவதியில், புதிய ஒரு பட்டாளம் வந்திருக் கிறதென்ற செய்தி பரவியது. உடனே ஜனங்கள் ஒருமுகமாகத் திரண்டு ரெயில்வே வாராவதியின் உச்சியை நோக்கிச் சென்றார்கள். இச்சமயத்தில் மிடர் குருதயால் சிங் சலேரியா என்னுடன் வந்து சேர்ந்து கொண்டார். சோல்ஜர்களின் மத்தியில் டிப்டி கமிஷனர் குதிரை மீதிருந்தார். ஜனங்களைத் திருப்பி நாங்கள் அழைத்துச் சென்று வருவ தாகவும், ஜனங்களை நோக்கிச் சுட வேண்டாமென்றும் நானும் சலேரி யாவும், டிப்டி கமிஷனரையும் இராணுவ உத்தியோகதரையும் பார்த்துக் கூச்சலிட்டோம். கூட்டத்திலிருந்த சிலர் சோல்ஜர்களின்மீது கற்களையும் மரத் துண்டுகளையும் எறிந்தார்கள். உடனே சோல்ஜர்கள் எவ்வித எச்சரிக்கையுமின்றித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். சுமார் இருபது அல்லது இருபத்தைந்து பேர் இறந்தும் காயப்பட்டும் போனார்கள். துப்பாக்கிப் பிரயோகம் நின்றதும் நான் சோல்ஜர்களிடம் சென்று வைத்திய சிகிச்சை வண்டிகள் இருக்கின்றனவா என்று கேட்டேன். ஆனால் சோல்ஜர்கள் எனக்கு இடங்கொடுக்கவில்லை. ஆனால் மிடர் செய்மர் என்பவருடைய உதவியின்பேரில் டாக்டர் கணபதிராயை அழைத்து வந்தேன். முதலில் சில குண்டுகள் சுட்டதும், ஜனங்களிற் சிலர் திரும்பிச் சென்றனர். திரும்பி ஓடியவர்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது; அநேகருக்கு இடுப்புக்கு மேலேயே காயம் பட்டது. துப்பாக்கிப் பிரயோகமின்றியே கூட்டத்தைக் கலைத்திருக்கலாம். இச்சம்பவத்தில் நான் பல துக்ககரமான காட்சிகளைக் கண்டேன். பதினாறு அல்லது பதினேழு வயதுள்ள ஒரு சிறுவன், வயிற்றில் காயம்பட்டு, குடல் பிதுங்கப் படுத்துக் கிடந்தான். டாக்டர் கணபதிராயும் சலேரியாவும் நானும் அவனருகிற் சென்று பார்த்ததும் அவன் இறந்து போகின்றேன். என் சகோதரர்களைக் கவனியுங்கள். ஹிந்து முஸல்மான்கி ஜெய் என்று அலறினான். உடனே அவன் இறந்துபோயினான். இத்தகைய கோரக் காட்சிகள் பலவற்றை நான் கண்டேன்.
சுட்டது நியாயமாகாது
இந்த உரைகளினால் ஜனங்கள்மீது தவறோ இராணுவ வீரர்கள் மீது தவறோ வென்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஹண்டர் கமிட்டியின் முன் சாட்சியங் கூறிய உத்தியோகதராலும் பஞ்சாப் அரசாங்க அறிக்கையாலும், ஜனங்கள் இராணுவ வீரரால் தடுக்கப் பட்டதைச் சகியாமல் கற்கள் எறிந்தார்களென்றும் பிறகே இராணுவ வீரர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றன. எங்ஙன மிருந்த போதிலும் மிக்க அமைதியுடன் சென்றுகொண்டிருந்த ஒரு கூட்டத்தை இராணுவ வீரர் தடுத்தது நியாயமாகாது. டிப்டி கமிஷனரிடம் தங்கள் குறைகளை நேரே சென்று முறையிடுவது பழைய வழக்கமே யாகும். அங்ஙனமிருக்க ஜனங்கள், டிப்டி கமிஷனரின் இடத்தை நோக்கிக் கெட்ட எண்ணங்கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுவதற்குத் தக்க ஆதாரம் கிடையாது. ஏனென்றால் ஜனங்கள் இராணுவ வீரரால் தடுக்கப்பட்டவரை மிக்க அமைதியுடனிருந்தார்களென்றும் வழியில் சந்தித்த ஐரோப்பியர்களையும் ஒன்றும் செய்யவில்லை யென்றும் எல்லா ஆதாரங்களும் அங்கீகரிக்கின்றன. அங்ஙனமிருக்க ஜனங்களை சிவில் லைசன்சுக்குள்ளே விட்டிருந்தால் இரத்த வெள்ளம் பெருகியிருக்கும் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்?
ஈடன் அம்மையின் திருவிளையாடல்
மேற்கூறப்பட்ட வண்ணம் காயமடைந்தவரைச் சிலர் டாக்டர் கேதாரநாதர் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு சென்றனர். இவர் கோஷா ஆபத்திரிக்கு அருகாமையில் வசித்துவந்தார். காயம் பட்டவர்களைத் தூக்கிச் சென்று கொண்டிருப்போரைப் பார்த்து. கோஷா ஆபத்திரியில் வேலைசெய்யும் மிஸ ஈடன் என்னும் ஐரோப்பிய மாது நகைத்தனர் என்றும் வேறு சில அநாவசியமான மொழிகளை உபயோகித்தனர் என்றும் சொல்லப்படுகின்றன. இது சம்பந்தமாக அதே ஆபத்திரியில் வேலை பார்க்கும் மிஸ நெல்லிபெஞ்சமின் என்ன கூறுகின்றனர் என்பதைக் கவனிப்போம். டாக்டர் கேதார நாதர் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது நானும் மிஸ ஈடனும் ஆபத்திரியின் கூரை மீது நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். மிஸ ஈடன் கூட்டத்தைப் பார்த்து, உங்களிற் சிலரை யார் காயப்படுத்தினர் என்று கேட்டார். இங்கிலீஷ்காரர் தங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்று சிலர் கூறினர். மிஸ ஈடன் சுதேசிகளுக்கு இது வேண்டியது தானென்றும் அவர்கள் தக்க பலனையே பெற்றார்களென்றும் கூறினார். 1 டாக்டர் கேதாரநாதர் வேறொருவனுடைய காயத்தைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது மிஸ ஈடன் அந்த முட்டாள் செய்யும் காரியத்தைப் பார்; அந்தக் காலை அடியோடு எடுத்துவிடவேண்டும். அவன் தன் ஆயுள் முழுவதும் முடவனாயிருக்க வேண்டியவனே என்று சொன்னார். டாக்டர் கேதாரநாதரை நோக்கி முட்டாள் என்ற பதத்தை அவர் உபயோகப் படுத்தினார். இச்சமயத்தில் மிடர் லூயி வந்து, ஜனங்கள் அதிக கோபமா யிருக்கிறார்களென்றும் நாங்கள் இரண்டுபேரும் உள்ளே போக வேண்டுமென்றும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் மாடியினின்றும் இறங்கிக் கீழே சென்று விட்டோம். இச்சமயத்தில் ஜனங்களிடத்தில் தடியை நான் காணவில்லை. பிறகு அரை மணிநேரம் கழித்து, நான் கம்பவுண்டர் அறையில் இருந்தபோது, மிஸ ஈடன் எங்கிருக்கின்றார். என்று கம்பவுண்டரை ஜனங்கள் கடிந்து கேட்டுக் கொண்டிருப்பதை நான் செவியுற்றேன். நான் உடனே மிஸ ஈடன், என் வீட்டுப் பக்கத்திலேயுள்ள மெத்தைப் படிக்கட்டின் கீழிருக்கும் அறையில் ஒளிந்துக் கொள்ளும் படி சொன்னேன். அவர் அங்ஙனமே செய்தனர். நான் என்னுடைய வீட்டு முற்றத்தில் இருந்தேன். சிலர் வீட்டுக் கதவைத் தகர்க்க ஆரம்பித்தனர். ஒரு பையன் வெளிப்புறத்தி லிருந்து சுவரேறி குதித்து உள்பக்கத்துத் தாழ்ப்பாளைத் திறந்தான். உடனே சுமார் பதினைந்து அல்லது பதினாறு பேர் கையில் தடியும் மரத்துண்டுகளையும் கொண்டவர்களாய் உள்ளே நுழைந்தனர். அவர்கள் மிஸ ஈடன் எங்கே என்று என்னைக் கேட்டார்கள். நான் சொல்லாவிட்டால் அவர்கள் என்னைக்கொன்று விடுவார்கள். போலிருந்தது. மிஸ ஈடன் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றிருக்கிறார் என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை நம்பாதவர்களாய் வீடுமுழுவதும் பரிசோதனை செய்தார்கள். கடைசியில் காணாதவர் களாய்த் திரும்பிச் சென்றுவிட்டார்கள். கூட்டத்தார் திரும்பிச் சென்றதும், நான் ஒரு வேலையாளைக் கொண்டு, ஓர் இந்திய திரி அணிவதாயுள்ள சில அழுக்கு உடைகளைக் கொண்டுவரச் செய்தேன். அந்த உடைகளைக் கொண்டு அவரை மறைத்து, மகம்மத் ஷரீப் என்னும் கான்டேபில் வீட்டுக்கு அனுப்பினேன்
ஜனங்களின் கொடுமைச் செயல்கள்
அநாவசியமாகச் சுடப்பட்டதினால் ஆவேசங் கொண்ட ஜனங்களில் ஒரு பாகத்தார் தந்தி ஆபீசுக்குள் நுழைந்து ஆங்கிருந்த டெலிபோன் இயந்திரத்தை நாசமாக்கினர். அதிகமான சேதம் விளைவிப்பதற்குள் ரெயில்வே டேஷனிலிருந்த இராணுவ வீரர் வந்து தடுத்தனர். இக்கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்ட தந்தி ஆபீ தலைவர் ஐம்பத்து நான்காவது சீக்கிய படையைச் சார்ந்த ஜமேதரால் விடுவிக்கப் பட்டார். கூட்டத்தின் மற்றொரு பாகத்தார் டேஷனில் சாமான்கள் இருக்கும் சாலைக்குச் சென்று அங்கு அதிகமான சேதம் விளைவித்தனர். அங்கு இருந்த மிடர் ராபின்சன் என்பவவரைக் கொலை செய்தனர். மற்றும் டேஷன் சூப்பிரண்டெண்டெண்டைத் துரத்திக்கொண்டு சென்றனர். ஆனால் டேஷன் காவலாளர்களால் திருப்பியடிக்கப்பட்டனர். இரண்டு ஹிந்துக்களால் நடத்தப்பட்ட கூட்டத்தின் மற்றொரு பாகத்தார் நெஷனல் பாங்கிற்குச் சென்று பாங்கின் மானேஜரான மிடர் டூவர்ட் என்பவரையும் உதவி மானேஜரான மிடர் காட்டையும் கொலைசெய்தனர். ஆங்குள்ள கிடங்கினுள் சென்று அநேக லக்ஷம் ரூபாய் மதிக்கத்தக்க சாமான்களை நாசமாக்கினர். இந்த பாங்கின் மானேஜரும் உதவி மானேஜரும் தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள மரச்சாமான்களின்மீது எண்ணெய் ஊற்றி, அச் சாமான்களுடன் பிணங்களும் சேர்த்துக் கொளுத்தப்பட்டன. பிறகு சார்டர்ட் பாங்க் தாக்கப்பட்டது. இங்குள்ள ஜன்னல்களும் கதவுகளும் நெருப்புக்கிரையாயின.ஆனால் இந்தப் பாங்கின் ஐரோப்பிய மானேஜரும் அவருக்கு உதவியாக இருப்போரும் ஓரிடத்தில் ஒளிந்துக்கொண்டு பிறகு போலீஸாரால் மீட்கப்பட்டனர். பிறகு அலையன் பாங்க் தாக்கப்பட்டது. இந்த பாங்கின் மானேஜரான மிடர் தாம்ஸன் ஒரு துப்பாக்கியைக் கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் இவர் மிகக் கொடுமையாகக் கொலைசெய்யப்
பட்டார். இவரைக் கொலை செய்தவர்கள், ஒருமுறை அவர் அடிபட்ட பிறகு இன்னும் மூச்சி விட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து இரண்டாமுறையும் அவரைத் தாக்க, அவருடைய தேகத்தை மேன் மாடியிலிருந்து கீழே எறிந்தார்கள். பிறகு கிரோசின் எண்ணெயால் நனைக்கப்பட்ட மரச் சாமான்களுடன் இவருடைய தேகம் சேர்த்துக் கொளுத்தப்பட்டது. சார்ஜண்ட் ரௌலாண்ட் என்பவர் ரிதோ வாராவதியண்டை கொலைசெய்யப்பட்டார். மதநூல் சங்க புத்தகசாலை மண்டபம் கொளுத்தப்பட்டது. இங்குள்ள சுதேச சிறிதுவர்கள் தப்பித்துக்கொண்டு சென்று விட்டார்கள். டௌன்ஹாலும் தபாலாபீஸும் தீக்கிரையாகின. தங்கக்கோயில், மஜுத் மண்டி. தாப்பதிராம் என்ற இடங்களிலுள்ள தபாலாபீஸுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மி ஷெர்வுட் தாக்கப்பட்ட விவரம்
அமிருதசர நகரில் பல காலம் பலரால் மதிக்கப்பட்டுவந்த மி ஷெர்வுட் என்னும் மாதரசியார் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவர் தம் பள்ளிக்கூடங்ளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் சென்று கொண்டிருந்தார். அவளைக் கொல், அவள் இங்கிலீஷ்காரி என்று சப்த மிட்டுக்கொண்டுவந்த ஒரு கூட்டத்தை அவர் எதிரில் பார்த்தார். அதனின்றும் தப்பித்துக்கொண்டு செல்ல முயன்றார். ஆனால் அது முடியாமல் தாம் வந்த வழியே திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசியில் அவர் நன்கு மதிக்கப்பட்டுவந்த ஒரு சந்தில் நுழைந்து அங்குத் தாம் பத்திரமாக இருக்கலாமென்று எண்ணினர். ஆனால் இக்கூட்ட மானது அவருக்கு முன் சென்று அவரை எதிரிலும் தாக்கியது. அந்த மாதரசியார் தலைமீது தடிகளால் தாக்கப்பட்டுக் கீழ் விழுந்தார். ஆயினும் சிறிது சமாளித்துக்கொண்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். ஆனால் இரண்டாம் முறையும் அடிக்கப்பட்டார். அவர் தரையில் வீழ்ந்து கிடந்த போதே தடிகளால் தாக்கப்பட்டார். மறுபடியும் எழுந்து ஒரு வீட்டிற்குள் நுழைய வாரம்பித்தார். ஆனால் அவ்வீட்டுக் கதவு அவர் முகத்தில் சாத்தப்பட்டது. களைப்பினால் கீழ் வீழ்ந்த அவர் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார். ஆனால் ஒன்றும் முடியாமல் அவர் கண்கள் பஞ்சடைந்து போயின. அவரைத் துரத்திக்கொண்டு சென்றபோது கடைசியில் ஆமத்தீன் என்பவர் அவருடைய உடையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளினார். ஆமத்தீன் என்பவருடைய சகோதரர் ஜில்லா என்பவர் அவருடைய தொப்பியைப் பிடித்திழுத்தார். மாங்க்டூ, மேளா, கிட்டர், லால்சந்த் ஆகிய இவர்கள் தங்கள் முஷ்டிகளால் அடித்தார்கள். அவர் மறுபடியும் எழுந்து நிற்பதற்குள் விலாயதி என்பவர் அவருடைய தலை மயிரைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளி தன் செருப்பால் அவரை ஐந்தாறுமுறை அடித்தார். மறுபடியும் மி ஷெர்வுட் என்னும் மாதரசியார் எழுந்து சமாளித்துக்கொண்டிருக்கையில் சுந்தர் சிங்க் என்பவர் அவருடைய தலையில் நன்கு அடித்தார். இதற்குமேல் காந்திக்குஜெய் கிச்சுலுகுஜெய் என்று சப்தித்துக்கொண்டிருந்த கூட்டமானது, அவள் இறந்துவிட்டாள் என்று கூறிக்கொண்டே சென்றது. மி ஷெர்வுட் என்னும் அணங்கு பின்னார், பிறகு சில கடைக்காரர்களால் காப்பாற்றப்பட்டார். மி ஷெர்வுட்டைப் பற்றிய இவ் விவரங்கள் அரசாங்க அறிக்கையில் காணப்படுகின்றன.
மி ஷெர்வுட்டைத் தாக்கிய கூட்டத்தார் ஒரு புறமிருக்க மற்றொரு கூட்டத்தார் பகல் இரண்டு மணிக்குச் சிவில் லைன்சுக்குச் செல்லப் பிரயத்தனப்பட்டதாகவும் அவர்கள் ஹால்கேட் என்னுமிடத்தில் சுடப்பட்ட தாகவும், அச்சமயத்தில் சுமார் இருபது அல்லது முப்பதுபேர் சேதமடைந் திருப்பாரென்றும் அரசாங்க அறிக்கையால் தெரிகிறது. இக்கூட்டத்தின் மீது சுமார் எழுபது குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. மற்றும் கூட்டத்தின் வேறொரு சாரார் பொற்கோயிலுக்கு ஒருமைல் தூரத்திலுள்ள பக்தன் வாலா ரெயில்வே டேஷனை நெருப்புக்கிரையாக்கினர். ஆங்குள்ள கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டது. இரவில் சில கிராமத்தார்கள். சேர்ந்து சேஹார்த்தா ரெயில்வே டேஷனைத் தாக்க முயன்றார்கள். ஆனால் டேஷனிலுள்ள விளக்குகளை உடைக்கவே இவர்களால்முடிந்தது. பொதுவாகக் கூறுமிடத்து ஏப்ரல் மாதம் பத்தாந் தேதி மாலை ஐந்து மணிக்குள் ஜனங்களின் கொடுமைச் செயல்கள் முடிந்துபோயின என்று கூறலாம்.
போலீஸாரின் மௌனம்
ஜனங்களுடைய செயலைப்பற்றிக் கூறிக் கொண்டு வரும்போது மற்றொரு விஷயத்தைப் பற்றியும் ஈண்டுக் கூறாமலிருக்க முடிய வில்லை, ஜனங்கள் டவுன்ஹாலை எரித்ததாக முன்னர்ச் சொல்லப் பட்டது. டவுன்ஹால் எந்த மைதானத்தில் இருக்கிறதோ அதற்குள்ளே போலீ டேஷனும் இருக்கிறது. ஏப்ரல் மாதம் பத்தாந்தேதி போலீ டேஷனில் அதிகமான போலீ வீரர்கள் இருந்தார்கள். டவுன்ஹாலைச் சுட்டெரித்த ஜனங்கள் போலீ டேஷன் அருகாமையிலும் செல்ல வில்லை. அநேகமாகக் கொளுத்தப்பட்ட கட்டிடங்கள் யாவும் போலீ டேஷனுக்கு மிகவும் சமீபத்திலேயே இருந்தன. பாங்கிகள் நெருப்புக்கிரையாக்கப் படுகின்றன. என்பதும் போலீஸாருக்குத் தெரியும். அங்ஙனமிருந்தும் போலீஸார் ஏன் மௌனம் சாதித்து நின்றனர்? டவுன்ஹால் முதலிய இடங்கள் கொளுத்தப்படும்படி ஏன் விடப்பட்டன? அலையன் பாங்கி தாக்கப்பட்ட காலத்திலேயே அந்தப் பாங்கியைச் சார்ந்தவர்களைத் தப்பு விக்கப் போலீஸார் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இராணுவ அதிகாரத்தின் தோற்றம்
அமிருதசரசில் நடைபெற்ற இச் சம்பவங்கள் உடனே லாகூரிலிருந்த லெப்டினெண்டு கவர்னருக்குத் தெரிவிக்கப்பட்டன. உடனே லாகூரிலிருந்து மிடர் கிச்சன் என்பவர் அனுப்பப்பட்டார். லாகூரிலிருந்து அமிருதசரசிற்கு வந்த முப்பத்தைந்து மைல் தூரத்திலும் இவர் எங்கும் தாக்கப்படவில்லை. இவர் அன்று பிற்பகல் நான்கு மணிக்கு அமிருதசரசிற்கு வந்தார். அன்றிரவு சுமார் பதினொரு மணிக்கு மேஜர் மக்டோனால்ட் என்பவருடைய தலைமையின் கீழ் ஒரு துருப்புப் பட்டாளம் வந்து சேர்ந்தது. மேஜர் மக்டோனால்டிடம் மிடர் கிச்சன் சிவில் அதிகாரம் இனிப் பயன்படாதென்றும் அமிருதசர நகரம் முழுவதும் இராணுவ அதிகாரிகளிடத்தில் விட்டு விட்டதாகவும் அமைதியை உண்டாக்க என்னென்ன வழிகள் உண்டோ அவைகளையெல்லாம் செய்யலாம் என்றும் கூறினதாகத் தெரிகிறது. இவருடைய செயலை மறுநாள் லெப்டினெண்டு கவர்னர் ஆதரித்ததாகவும் தெரிகிறது. எனவே, ஏப்ரல் மாதம் பத்தாந்தேதி இரவுமுதல் அமிருதசர நகரம் இராணுவ அதிகாரத்தின் கீழ் வந்து விட்டது என்று கூறலாம்.
பிணங்களைப் புதைக்கப் போராட்டம்
பத்தாந்தேதி இரவு முழுவதும் நகரத்தில் எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. ஜனங்கள் எவ்வித தீச்செயலையும் செய்யவில்லை. மறுநாள் பதினோராந் தேதி காலை முன்னாள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குச் சிலர் முயன்றனர். ஆனால் இராணுவ அதிகாரிகள் ஒவ்வொரு பிரேதத்துடனும் நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாதென்று உத்தரவு செய்துவிட்டார்கள். இதனால் ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாயிற்று. ஜனப் பிரதிநிதிகளிற் சிலர் அதிகாரிகளிடத்துச் சென்று ஜனங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று மன்றாடினர். கடைசியில் பிரேதங்கள் ஊர்வலத்துடன் கொண்டுபோகப் படலாமென்றும் ஆனால் பகல் இரண்டு மணிக்குள்ளாக எல்லாம் முடிந்து விடவேண்டுமென்றும் அதிகாரிகள் உத்தரவு செய்தார்கள். அங்ஙனமே ஜனங்கள் நிறைவேற்றினார்கள். பதினோராந்தேதி முழுவதும் அமிருதசரசில் அமைதி நிரம்பியிருந்தது. ஆனால் இராணுவ வீரர் ஆங்காங்கு காவல் புரிந்துவந்தனர். ஜனங்கள் மிகவும் அச்ச முற்றிருந்தார்கள். பதினோராந்தேதி முதல் தண்ணீர்க்குழாய் வசதிகளும் மின்சார சக்தியால் உண்டாகும் வசதிகளும் நிறுத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் பதினெட்டாந்தேதிவரை இந்த வசதிகள் இராமல் இருந்தன என்று லாலா கிரிதரால் கூறுகிறார். ஹண்டர் கமிட்டிமுன் சாட்சியங்கூறிய மிடர் மைல் இர்விங் பின்வருமாறு குறிப்பிட்டார்:- தண்ணீரில் விஷம் கலந்திருக்கிறதென்று ஒரு வதந்தி பரவியது. ஜனங்களிற் சிலர் தண்ணீர் ஏந்தும் இடங்களை உடைத்துப் போட்டனர் என்ற வதந்தியும் பரவியது. எனவே இவைகளை ஆதமாரமாகக் கொண்டு ஏரளமான ஜலம் வீணாக்கப்பட்டது. எனவே ஜலசப்ளை நிறுத்தப்பட்டது. ஜனங்கள் இரவில் திரியாமலிருக்கும் பொருட்டு, மின்சார விளக்குகள் நிறுத்தப்பட்டன. இவை இரண்டும் இராணுவ அதிகாரியின் செயல்களாகும். குடிப்பதற்குத் தண்ணீரும், இரவில் காலங்கழிப்பதற்கு மின்சார விளக்குகள் முதலானவைகளும் நிறுத்தப்பட்டால் ஜனங்களுக்கு எவ்வித தொந்தரவு உண்டாயிருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
டையர் வந்து சேர்ந்தார்
ப்ரிகேடியர் ஜெனரல் ஆர். இ. எச். டையர் பதினோராந்தேதி இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு அமிருதசர வந்து இராணுவ ஆட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அவர் வந்தபோது இராணுவ அதிகாரிகளின் தலைமை தானம் ரெயில்வே டேஷனாக இருந்தது. ஜெனரல் டையர் வந்ததும் சிவில் அதிகாரிகளுடன் கலந்து பேசி, அவர்கள் இராணுவ ஆட்சியால்தான் அமைதியுண்டாகுமென்று கூற, அங்ஙனமே தாம் அப்பதவியை ஏற்றுக் கொண்டதாக ஹண்டர் கமிட்டிமுன் கூறினார். அன்றிரவே அவர் போலீ டேஷனுக்குச் சென்று அங்கிருந்த போலீ இன்பெக்டருடன் கலந்து பேசி வேண்டியவாறு இராணுவத்தை அமைத்துக் கொண்டார். மறுநாளாகிய பன்னிரண்டாந் தேதி ஜெனரல் டையர் தம் தலைமைதானத்தை ராம்பாக் என்னுமிடத்திற்கு மாற்றிக் கொண்டார். அன்று அவர் போலீஸாருடன் சேர்ந்து பன்னிரண்டு பேரைக் கைதுசெய்தார். அவர் கைது செய்த போது எவரும் எதிர்த்தனரில்லை. அன்றும் எல்லாம் அமைதியாகவே இருந்ததென்று கூறலாம். மற்றும் நூற்றிருபது பிரிட்டிஷ் சோல்ஜர்களுடனும் முன்னூற்றிருபது சிப்பாய்களுடனும் இரண்டு பீரங்கி வண்டிகளுடனும் ஜெனரல் டையர் நகரமுழுவதும் சுற்றிவந்தார். தாம் சென்ற வழிகளில் ஜனங்கள் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்ததாகவும் அவர்களைக் கலைக்கத் தாம் பெருமுயற்சிகள் செய்ததாகவும் ஓரிடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பிரயத்தனப்பட்டதாகவும் ஆனால் முதலில் எச்சரிக்கை செய்தால் போதுமானது என்று பேசாதிருந்து விட்டதாகவும் ஜனங்கள் வழியில் ‘ஹிந்து முஸல்மான்கி ஜெய்! என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகவும், துருப்புகள் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் எச்சில் உமிழ்ந்து கொண்டிருந்ததாகவும் ஆயினும் அவர்கள் கொடுமைச் செயல்கள் ஒன்றையும் செய்யவில்லை யென்றும் ஹண்டர் கமிட்டி முன் டையர் வீரர் கூறினார் பன்னிரண்டாந் தேதியாகிய அன்று மாலை சொத்துக்களுக்கு எவ்விதமான நாசமும் செய்யப்படக்கூடாதென்றும் நான்கு பேருக்குமேல் சேர்ந்து எவரும் இருக்கக்கூடாதென்றும் போலீசார் மூலமாக நகரமெங்கும் அறிக்கையிடப்பட்டது.
ஏப்ரல் பதின்மூன்றாந்தேதி
மறுநாள் ஏப்ரல் மாதம் பதின்மூன்றாந் தேதி சூரியன் உதயமாயினான். அந்தோ! அன்று நடந்த சம்பவங்களை எழுதவும் எம் கை நடுங்குகின்றது. அன்று காலை இயமதர்மராஜன் நரிமுகத்தில் விழித் திருக்க வேண்டும். அன்று பஞ்சாப் வாசிகளின் புதிய ஆண்டு தினமாகும். அத்தினத்திற்கு வைசாக தினம் என்று பெயர். அமிருத சரசில் அன்று பெரிய சந்தை ஒன்று கூடும். இதற்கு வெளியிடங்களிலிருந்து எண்ணிறந்தபேர் வருவதுண்டு. வழக்கம்போல் 1919-ம் வருஷம் ஏப்ரல் மாதம் பதின்மூன்றாந்தேதியும் வெளியூர்களிலிருந்து அநேகம்பேர் வந்த கொண்டிருந்தனர்.
அறிக்கையை வெளியிட்டார்
அன்றுகாலை சுமார் ஒன்பதரை மணிக்கு ஜெனரல் டையர் சில வீரருடன் நகரத்துக்குச் சென்று ஓர் அறிக்கை வெளியிட்டார். இவர் சென்றுகொண்டிருக்கும்போது ஓரிடத்தில் நின்று கொண்டு தண்டோரா போட, ஜனங்கள்வந்து கூடுவார்கள். அப்போது இந்த அறிக்கை, பஞ்சாபி பாஷையிலும் உருது பாஷையிலும் பதேகான் என்னும் ஒரு தாசீல் தாரால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எந்தவிதமான ஊர்வலமும், நகரத்திலாவது, நகரத்தின் ஒரு பாகத்திலாவது நகரத்திற்கு வெளியிலாவது செல்லுதல் கூடாது. அத்தகைய எந்த ஊர்வலமும் அல்லது நான்கு பேராகிய கூட்டமும் சட்டத்துக்கு விரோதமான கூட்ட மென்று கருதப்பட்டு அவசியமானால் ஆயுதங்களைக் கொண்டு கலைக்கப்படும். இதுவே அறிக்கையின் சாரமாகும். இங்ஙனம் ஆங்காங்கு அறிவித்துக் கொண்டு செல்வதில் சுமார் இரண்டு அல்லது மூன்றுமணி நேரம் சென்றது. ஜெனரல் டையர் ஜனங்களுக்கு அறிக்கை செய்வதில் இரண்டு மணி நேரத்திற்குமேல் கழித்தபோதிலும் நகரத்தின் பல பாகங்களிலுள்ள ஜனங்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமலிருக்கலாம் என்பதை அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அமிருதசரசில் மொத்தம் பன்னிரண்டு பகுதிகள் (Wards) இருக்கின்றன. ஜெனரல் டையருடன் சென்று அறிக்கைகளை மொழி பெயர்த்துக் கூறிய தாசீல்தார், மேற்கூறப்பட்ட பன்னிரண்டு பகுதிகளும் தமக்குத் தெரியாதென்றும் அவைகள் அனைத்தையும் தாம் சென்று பார்த்ததில்லை என்றும் ஹண்டர் கமிட்டி முன் ஒத்துக்கொண்டார். ஜெனரல் டையருடன் அமிருதசர ஜில்லா மாஜிட்ரேட்டும் கூடச் சென்றார். என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சுமார் பத்தொன்பது இடங்களில் இந்த அறிக்கை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. முன்னர்க் குறிப்பிட்டப்படி அன்று வைசாக தினமாகலின், ஜெனரல் டையர் நகரத்தின் சில பாகங்களில் பிரதக்ஷிணம் செய்துவிட்டுச் சென்ற பிறகு வெளியூர்களிலிருந்து ஏராளமான ஜனங்கள் கூட்டங்கூட்டமாக வந்துகொண்டிருந் தார்கள். அவர்களுக்கு இந்த விஷயம் ஒன்றுமே தெரியாது. இதனை ஹண்டர் கமிட்டிமுன் சாட்சியங் கூறிய உத்தியோக தர்களே ஒத்துக்கொள்ளுகிறார்கள். ஜெனரல் டையரால் பதின்மூன்றாந் தேதி வெளியிடப்பட்ட அறிக்கைகளுள் வேறிரண்டை அங்ஙனமே கீழ் வெளியிடுகின்றோம்.
முதல் அறிக்கை
அமிருதசர ஜனங்கள் சொத்துக்களுக்கு ஏதேனும் நஷ்டம் செய்வித் தார்களேயானால் அமிருதசர நகருக்குப் புறம்பாயுள்ள இடங்களில் கொடுமைச் செயல்கள் எவையேனும் செய்தார்களேயானால், அவை அமிருதசர நகரினின்று தூண்டப்பட்டே நடைபெற்றன. என்று கருதப்படும் என்பதையும், அதற்காக இராணுவச் சட்டப்படி அமிருதசர வாசிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும், இவ்வறிக்கையினால் எல்லாப் பெருங்கூட்டங்களும் எல்லாச் சிறு கூட்டங்களும் தடுக்கப்பட்டிருக் கின்றன வென்பதையும், இந்தக்கூட்டங்களைக் கலைப்பதற்கு நாம் இராணுவச் சட்டப்படி நடந்து கொள்வோம் என்பதையும், இந்த அறிக்கை யினால் அமிருதசர வாசிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
(ஒப்பம்) ஆர். இ. டையர். சி. பி.
ப்ரிகேரியர் ஜெனரல் கமாண்டிங் ஜல்லந்தர் ப்ரிகேட்.
இரண்டாவது அறிக்கை
1. அமிருதசர வாசிகள் எவரும் சொந்த வண்டியிலாவது, சத்த வண்டியிலாவது. கால்நடையாகவாவது கீழ்கண்ட உத்தியோகதர்களில் ஒருவரிடம் அநுமதிச்சீட்டுப் பெற்றுக்கொண்டல்லாமல்நகரத்திற்கு வெளியே செல்லக்கூடாதென்று இதனால் அறிவிக்கப்படுகின்றது:-
2. அமிருதசர டிப்டிகமிஷனர்.
3. மிடர் ஜே. எப். ரெஹில், போலி சூப்பிரண்டெண்ட், அமிருதசர.
4. மிடர் பெக்கட், அசிடெண்டு கமிஷனர், அமிருதசர.
5. மிடர் கான்னர், மாஜிட்ரேட், அமிருதசர.
6. மிடர்செய்மர், மாஜிட்ரேட், அமிருதசர.
7. ஆகா மகம்மது உசேன், மாஜிட்ரேட், அமிருதசர.
8. மியான் இல்டாப் உசேன், மாஜிட்ரேட் அமிருதசர
9. மிடர் ஆர். ப்ளோமர், போலீ டிப்டி சூப்பிரண்டெண்டெண்ட், அமிருதசர.
10. அமிருதசர போலி டேஷனில் இருக்கும் தலைமை உத்தியோகதர்.
11. நகரவாசிகளில் எவரும் இரவு எட்டு மணிக்கு மேல் தம் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அங்ஙனம் வீட்டைவிட்டு எட்டு மணிக்கு மேல் செல்வோர் சுடப்படுவார்.
12. கடைத் தெருக்களிலாவது, நகரத்தின் எந்த பாகத்திலாவது, நகரத்தின் வெளியேயுள்ள எந்த பாகத்திலாவது எவ்வித ஊர்வலமும் செல்லக் கூடாது, இத்தகைய ஊர்வலமும் அல்லது கூட்டமும் சட்ட விரோதமானதென்று கருதப்படும். அவை சட்டப்படி தண்டிக்கப்படும். அவசியமானால் அவை ஆயுதங்களினால் கலைக்கப்படும்.
(ஒப்பம்)ஆர். இ. டையர்
ப்ரிகேடியர் ஜெனரல்,
காமண்டிங் 45 -வது ப்ரிகேட்
அமிருதசர
13-4-20
ஜெனரல் டையர், தம் அறிக்கைகளை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஜனங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார் களென்றும், அறிக்கைகள் பயனற்றவையென்றும், அவர்கள் தம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்களென்றும் ஹண்டர் கமிட்டிமுன் கூறினார்.
ஹன்ராஜ் என்னும் அப்ரூவர் செயல்
எனவே ஜெனரல் டையர், தம் அறிக்கைகள் யாவும் அமிருதசர வாசிகளுக்குத் தெரிந்து விட்டன. என்பதாக நிர்ணயித்துக்கொண்டு தம் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டார். ஆனால் ஜனங்களிற் பெரும்பாலோர்க்கு அவ்விஷயம் தெரியாது. ஏப்ரல் மாதம் பன்னிரண்டாந் தேதி தாப்காதிகான் என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு சிறு கூட்டத்தில், அமிருதசர குழப்பவழக்கில் அப்ரூவராகத் திரும்பிவிட்ட லாலா ஹன்ராஜ் என்பவர் அடுத்த நாளாகிய பதின்மூன்றாந் தேதி ஜலியன் வாலாபாக்கில் லாலா கன்யாலால் என்பவருடைய அக்கிராசனத்தின் கீழ் ஒரு பொதுக் கூட்டம் நடைபெறுமென்று தெரிவித்தார். பதின்மூன்றாந்தேதி முற்பகல் ஜெனரல் டையர் தம் அறிக்கைகளை விளம்பரப்படுத்திச் செல்வதற்கு முன் அமிருதசர தெருக்களில் ஒரு பையன் தகரடப்பியை எடுத்து அடித்துக் கொண்டு அன்று மாலை நான்குமணிக்கு ஜலியன் வாலா பாக்கில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுமென்று தெரிவித்துக்கொண்டு சென்றான். லாலா கன்யாலால், தாம் இக்கூட்டத்திற்கு அக்கிராசனராக இருக்கும்படி கேட்கப்படவில்லையென்றும், அதிகமான கூட்டத்தை வரவழைப்பதற்கே தம் பெயர் தம்மை அறியாமலே போடப்பட்டதென்றும் காங்கிர சப்கமிட்டிமுன் கூறுகிறார். 1 லாலா ஹன்ராஜ் என்பவர் சி. ஐ. டி போலீசாருடன் அதிக நட்புரிமை பூண்டிருந்தாரென்றும், ஜலியன் வாலாபாக்கில் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னருங்கூட இவரும் சில சி. ஐ. டி. போலீ உத்தியோகதர்களும் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்களென்றும் காங்கிர சப்கமிட்டி முன் கூறப்பட்ட சாட்சியங்களினால் தெரியவருகின்றது. பொதுவாகவே சி. ஐ. டி. உத்தியோகதர்களுடைய தூண்டுதலினாலேயே இக்கூட்டம் கூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1920-ம் வருஷம் ஏப்ரல் மாதம் ஜல்லந்தரில் கூடிய பஞ்சாப் மாகாண மகாநாட்டில் அக்கிராசனம் வகுத்த லாலா ஹரிகிஷன்லாலும் இதனையே கூறுகின்றார்.
டையரின் யோசனை
பதின்மூன்றாந் தேதி பகல் சுமார் பன்னிரண்டே முக்கால் மணிக்கு, அன்று மாலை ஜலியன் வாலாபாக்கில் கூட்டம் நடைபெறும் என்று ஜெனரல் டையருக்குத் தெரிந்தது. கூட்டம் நடைபெறாமலிருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்ய அவர் அப்பொழுது ஒன்றும் செய்யவில்லை. உள்ள நிலைமையைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிருந்தது. என்ன செய்வ தென்பதைப் பற்றியும் நான் என் மனதைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. நான் எவ்வளவு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்து விட்டதாக நினைத்தேன். நான் காலையில் செய்துவந்த பிறகு, ஜனங்கள் கூட்டமாகக் கூடுவார்களென்று நான் நம்பவில்லை. இங்ஙனம் இவரால் ஹண்டர் கமிட்டிமுன் கூறப்பட்டது. மாலை நான்கு மணிக்குத்தான், ஜலியன் வாலாபாக்கில் கூட்டம் நடைபெறுமென்று ஜெனரல் டையருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அன்று மாலை நான்கு மணிக்கு இராஜத்துரோகக் கூட்ட அடக்குமுறைச் சட்டம் அமிருதசரசில் அமுலுக்கு வந்ததென்று அரசாங்க அறிக்கை கூறுகிறது.
ஜலியன் வாலாபாக்
ஜெனரல் டையர் ஜலியன் வாலாபாக்கிற்குச் சென்ற பிறகு நடைபெற்ற சம்பவங்களைக் கூறுமுன்னர் ஜலியன்வாலாபாக்கைப் பற்றிச் சிலவிஷயங்கள் கூறவேண்டியிருக்கிறது. ஜலியன் வாலாபாக் என்பது ஒரு பெரிய மைதானம். இந்தத் தோட்டத்தின் ஆதி சொந்தக்காரர் ஜலே என்னும் ஜாதியைச் சேர்ந்தவர். வாலா என்பது ஒரு மரியாதையைக் குறிக்கும் அடைமொழி. பாக் என்பதற்குத் தோட்டம் என்று ஒருவாறு பொருள் கொள்ளலாம். இம்மூன்றும் சேர்ந்தே ஜலியன் வாலா பாக் என்று ஆயிற்று.
பாக் என்ற சொல்லானது பலருக்குத் தவறான அர்த்தத்தைத் தருகிறது. ஜலியன் வாலாபாக்கானது ஒரு தோட்டத்தை எவ்விதத்திலும் ஒத்திருக்கவில்லை. இதனை ஒரு மைதானம் என்று கூறலாம். இந்த மைதானம் இருநூற்றைம்பது கஜநீளத்தையும் இருநூறு கஜ அகலத்தையும் கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தின் வடக்குப் புறத்தில் மண்ணாலாக்கப்பட்ட ஒரு மேடை இருக்கிறது. இந்த மேடை யினின்றுதான் ஸோல்ஜர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். மற்ற மூன்று பக்கங்களிலும் வீடுகள் நிரம்பியிருக்கின்றன. வீடுகள் இல்லாத ஒரு சிறிய பாகம் ஐந்தடி உயரங்களைக் கொண்ட வேலியால் மூடப் பட்டிருக்கிறது. சோல்ஜர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது இந்த வேலி வழியாகத் தப்பித்துக்கொண்டு செல்ல முயன்றார்கள், இந்த மைதானத்திற்கு மொத்தம் ஐந்து குறுகிய நுழைவாயில்கள் இருக் கின்றன. ஒரே வரிசையில் ஆறுபேரைக் கொள்ளத்தக்க ஒரு வழி மாத்திரம் இத்தோட்டத்திற்கு இருக்கிறது. ஆனால் இந்த வழியையே சோல்ஜர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இந்த மைதானத்தின் ஒரு பாகத்தில் ஒரு சமாதி இருக்கிறது. துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் படும்போது, இது சிலபேரைக் காப்பாற்றியது, மற்றொருபாகத்தில் இரண்டு ஆலவிருக்ஷங்களிடையே ஒரு பெரியகிணறு இருக்கிறது. குண்டுகள் வந்து விழுந்தகாலை, இந்தக் கிணற்றில் பலர் வந்து வீழ்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.
ஒப்ப முடிந்த ஓர் உண்மை
ஜலியன் வாலாபாக்கில் நடைபெற்ற இக்கூட்டமானது டாக்டர் மகம்மது பஷிர் என்பவரால் கூட்டப்பட்டதென்றும் இக்கூட்டத்தில் டாக்டர் குருபஷிராய், அப்துல் அஜி, பிரிஜகோபி நாதர் ஆகிய இவர்கள் பேசினார் களென்றும் அரசாங்க அறிக்கை கூறுகிறது, காங்கிர சப்கமிட்டிக்குக் கிடைத்துள்ள சாட்சியத்தினால் ஜெனரல் டையர் அங்குச் செல்வதற்கு முன் லாலா ஹன்ராஜ் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாரென்றும் அக்கூட்டத்தில் சுமார் இருபதினாயிரம் ஜனங்கள் இருந்தார்களென்றும் தெரிகிறது. துருப்புகள் அங்குவந்து சேர்வதற்குமுன் ஓர் ஆகாய விமானம் பாக்கிற்குமேலே சுற்றிக் கொண்டிருந்தது. ஜனங்கள் இதனைக் கண்டு சிறிது அச்சமுற்றார்கள். ஆனால் லாலா ஹன்ராஜ் ஒன்றுக்கும் பயப்படவேண்டாமென்று ஜனங்களுக்கு ஆறுதல் சொன்னார். முன்னர்க் கூறியபடி அன்று வைசாக தினமாதலின், வெளியூர்களிலிருந்து பலர் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அன்று காலை ஜெனரல் டையரால் விளம்பரப்படுத்தப்பட்ட அறிக்கைகளை அறியாதவர்கள் அங்கு அநேகர் இருந்தனர். சிறு குழந்தைகளும், இளைஞர்களும், வயோதிகர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள், எவ்வித கெட்ட எண்ணத்துடன் இல்லாத வர்களும், ஜெனரலின் அறிக்கைகளை அறியாதவர்கள் பலரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்பதை அரசாங்கத்தாரும் ஜெனரல் டையரும் ஒத்துக்கொள்கின்றனர். எனவே, அரசியல் உணர்ச்சி இல்லாதார் பலரும் அக்கூட்டத்தில் இருந்தனர் என்பது ஒப்பமுடிந்த உண்மையாகும்.
டையருடன் துருப்புகள்
ஜலியன் வாலாபாக்கில் கூட்டம் நிச்சயமாக நடைபெறுமென்பதை அறிந்த ஜெனரல் டையர் துப்பாக்கிகளைக்கொண்ட இருபத்தைந்து பிரிட்டிஷ் துருப்புகளுடனும், துப்பாக்கிகளைக் கொண்ட இருபத்தைந்து இந்தியத் துருப்புகளுடனும், குக்ரி என்னும் சிறிய ஈட்டி ஆயுதத்தைக் கொண்ட நாற்பது கூர்க்கர்களுடனும் ஜலியன்வாலாபாக்கிற்குச் சென்றார்.1 இவருடன் ஓர் ஐரோப்பிய போலீ சூப்பிரண்டெண்டெண்டும் ஐரோப்பிய போலீ அசிடெண்டு சூப்பிரண்டெண்டெண்டும் சென்றார்கள் என்று சொல்லப்படுகிறது.
வீரத்தை வெளிப்படுத்தினார்
ஜெனரல் டையர் தம் துருப்புகளுடன் ஜலியன் வாலாபாக்கிற்கு மாலை சுமார் ஐந்தேகால் மணிக்கு வந்து சேர்ந்தார். அத்தோட்டத்தின் விசாலமான வழியில் இவர் நின்றுகொண்டு அவ்வழியின் வலது பக்கத்தில் இருபத்தைந்து பேரையும் இடது பக்கத்தில இருபத்தைந்து பேரையும் நிற்க வைத்து உடனே துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படி உத்தரவு கொடுத்தார். ஆனால் பீரங்கி வண்டிகளிலிருந்து குண்டுகள் பிரயோகிக்கப் படவில்லை. பீரங்கி வண்டிகளை பாக்கிற்குள் கொண்டு வரப் போதிய வழியின்மையால் அவைகளை ஒன்றுக்கும் உபயோகப் படுத்தவில்லை. இல்லாவிட்டால் ஜெனரல் டையர் அவைகளையும் உபயோகப்படுத்தியிருப்பார். காங்கிர சப் கமிட்டியார்முன் பிரதாபசிங் என்பவர் கூறிய சாட்சியத்தினின்றும் பின்வரும் விஷயங்கள் காணப்படுகின்றன:- நான் ஜலியன் வாலாபாக்கிற்குச் சுமார் மூன்றரை மணிக்குச் சென்றேன் ஹால்பஜார் பக்கமாயுள்ள வழியில் நின்று கொண்டிருந்தேன். எனவே துருப்புகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான் அங்கிருந்தேனென்றே கூறலாம். சோல்ஜர்கள் வருவதை நான் கண்டதும் வலது பக்கமாகச் சிறிது ஒதுங்கி நின்றேன். சிறிது நேரங் கழித்து, அதே இடத்தில் ஐரோப்பிய உத்தியோகதர்களுக்குப் பின்னால் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் பாக்கிற்கு வந்த ஒருமணி நேரங் கழித்து துப்பாக்கிகளைக் கொண்ட சில கூர்க்கர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து நுழைவாயிலின் இடதுப் புறத்தில் இரண்டு வரிசையாக நின்றுகொண்டார்கள். அங்கே சுமார் ஐம்பது கூர்க்கர்களும் ஐந்தாறு ஐரோப்பியர்களும் இருந்தார்கள். போலீ இன்பெக்டர் ஒருவரும் மிட்சிங்க் என்ற சப் இன்பெக்டரும் அங்கே இருந்தார்கள். தோட்டத்தில் சுமார் பதினையாயிரம்பேர் இருந்தார்கள். சோல்ஜர்கள், வந்தவுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள், முதலில் எவ்வித எச்சரிக்கையும் செய்யப் படவில்லை. முதல் வரிசைக் குண்டுகள் உயரநோக்கியே சுடப்பட்டன. இதனைக் கண்டு ஓர் உத்தியோகதர் கூர்க்க வீரர்களைக் கடிந்துகொண்டார். அவர்களுக்கு நேராக ஒரு சிறு துப்பாக்கியை வைத்துக் கொண்டு அந்த ஐரோப்பிய வீரர் சில இழிமொழிகளை உபயோகப் படுத்தினார். அவ்வளவு உயர ஏன் சுடுகிறீர்கள்? கீழே நோக்கிச் சுடுங்கள், இதைத் தவிர நீங்கள் இங்கு எதற்காக அழைத்து வரப்பட்டீர்கள்? என்பன போன்றவார்த்தைகளை அந்த உத்தியோகதர் கூறினார். இதற்குப் பிறகு, ஜனங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. முக்கிய மாக ஜனங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் நுழைவாயில்களை நோக்கியே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இங்ஙனம் சுமார் பதினைந்து நிமிஷம் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சோல்ஜர்கள், துப்பாக்கிப் பிரயோகம் முடிந்ததும் அவ்விடத்தைவிட்டுச் சென்று விட்டார்கள். நான் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே ஆகாய விமானத்தைக் கண்டேன். தோட்ட முழுவதிலும் காயமடைந்தவர்களும் இறந்தவர்களுமே காணப்பட்டார்கள். சேதமடைந்தவர் சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்திருநூறுபேர் இருக்கலாம். ஹான்லாலி கேட் வழியில் சுமார் இருபது பேர் பிணமாக வீழ்ந்து கிடந்தார்கள். பர்ஜ் என்னுமிடத்திற்கு அருகாமையிலுள்ள மூலையில் அதிகமான பேர் இறந்து கிடந்தனர். கிணற்றுக்குச் சமீபமாயுள்ள மூலையில் பலர் பிணமாயிருந்தனர். சமாதியின் பின்புறத்திலும் பிணங்கள் கிடந்தன. நான் நின்றிருந்த இடத்தில் சுமார் நூறுபேர் இருந்தனர். அவர்கள் ஹான்லி கேட் வழியாக ஓடிப்போனபோது சுடப்பட்டார்கள். பொதுவாகவே எங்கு ஜனக்கூட்டம் அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் ஜலியன்வாலாபாக் இருந்த நிலையை வருணிக்க மற்றொரு கம்பரே வரவேண்டும்.
ஈர்க்கப் பட்டனர் சிலர்சில ரிடியுண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர்சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர்சில ரடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர்சிலர் பயமுண்டு பட்டார்.
- கம்பராமாயணம்.
என்ற அப்பெரியவருடைய வாக்கே இச்சமயத்தில் எமக்கு ஞாபகம் வருகிறது.
சுவர் மீதேறி தப்பித்துச் செல்ல முயன்றவர் அங்ஙனமே குண்டுகளினால் கீழ் வீழ்த்தப்பட்டனர். மண்டையுடைந்தவரும், கரம் போனவரும் உரம் இழந்தவரும், ஐந்துபொறிகளையும் ஈசனுக்கு அர்ப்பனம் செய்தவரும் கணக்கிலர்.
1650 குண்டுகள்
ஜெனரல் டையர் இப்படுகொலைக்கென்று ஆயிரத்தறுநூற்றைம்பது குண்டுகள் பிரயோகம் செய்தார். இன்னும் அதிகமான குண்டுகள் அவரிடமிருந்தால் எண்ணிறந்த பேர் அவர் மூலமாக இயமனடி சேர்ந்திருப்பார். என்னிடத்தில் குண்டுகள் இருக்கும்வரை நான் சுட்டுத் தீர்த்தேன் என்று மிகக் கம்பீரமாக லார்ட் ஹண்டர் முன் கூறிய இந்த வெள்ளை வீரர் முன்னெச்சரிக்கையுமின்றி, நிராயுதபாணிகளாயும் எவ்வித குற்றத்திற்கும் உட்படாதவர்களாயுமுள்ள ஜனங்களை நோக்கிச் சுடுதல் மானிட தருமத்துக்கு ஏற்றதோவென்பதைச் சிறிது ஆலோசித் திருப் பாரானால் அவர் இக் கொடிய செயலுக்கு உட்பட்டிருக்கமாட்டார். ஒரிடத்தில் என்னை பற்றி அரசாங்கத்தார் ஓராண்டாக யோசனை செய்து வருகிறார். நான் முப்பது வினாடியில் அமிருதசரசில் காரியத்தை முடித்து விட்டேன் என்று கூறினார். இவர் எந்நோக்கம் கொண்டு இங்ஙனம் கூறினார் என்பது நமக்கு விளங்கவில்லை.
கண்டதில்லை; கேட்டதுமில்லை
ஜெனரல் டையர் ஜலியன் வாலாபாக்கில் தம் கைத்திறத்தைக் காட்டிவிட்டு உடனே துருப்புகளை அழைத்துக்கொண்டு, தம்மிருப்பிடத்திற்குச் சென்றுவிட்டார். காயம்பட்ட வீரர்கள் எதிரிகளாயிருந்த
போதிலும் அவருக்குச் சிகிச்சை செய்வது யுத்த வீரருடைய முக்கிய கடமையாகும். இதுவே யுத்த தருமம். ஆனால் ஜெனரல் டையர் காயம் பட்டவரைக் கவனிப்பது தம் கடமையல்ல வென்று ஹண்டர் கமிட்டி முன்னர்க் கூறினார். இவருடைய கருணைக்கு நாம் எதனை ஒப்பிடுவதென்பது தெரியவில்லை. சுடுவது மாத்திரம் தம் கடமையாயிருக்க சுடப்பட்டவர்களைக் கவனிப்பது தம் கடமையல்லவென்று கூறும் இத்தகைய வீரரை நாம் இதுகாறும் கண்டதில்லை; கேட்டது மில்லை.
நாதனையிழந்த நங்கையர் திலகம்
துப்பாக்கிப் பிரயோகம் யாவும் முடிந்ததும் ஜலியன் வாலாபாக் எந்த நிலையில் இருந்ததென்பதையும் ஆங்குள்ளவர் எத்தகைய துன்பத்தை அநுபவித்தார்களென்பதையும் கேட்டால் மானிட உள்ளம் கொண்டுள்ளோர் அலமருவர் என்பது திண்ணம். இச்சமயத்தில்
பாடுகின்றன பேய்க்கணம் பல்விதத்
தாடுகின்ற வறு குறையாழ் கடற்
கோடுகின்ற வுதிரம் புகுந்துடல்
நாடுகின்றனர் கற்புடை நங்கைமார்
-கம்பராமாயணம்*
என்ற கவிச் சக்ரவர்த்தியின் செய்யுள் கவனிக்கத் தக்கது. ஜலியன் வாலாபாக் கொலையில் தம் கணவனையிழந்து பரிதவித்த இரத்தின தேவி என்றும் ஒரு பத்தினியாரின் கூற்றை ஈண்டு விவரிக்கின்றோம். அது வருமாறு:-
ஜலியன் வாலாபாக்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறும்போது நான் அத்தோட்டத்தின் அருகாமையிலுள்ள என் வீட்டில் இருந்தேன். படுத்துக்கொண்டிருந்த யான், என் கணவர் பாக்கிற்குச் சென்றிருந்தமையால் உடனே ஆவலுடன் எழுந்து அழுதுகொண்டே இரண்டு திரீகளைத் துணையாகக்கொண்டு அத்தோட்டத்திற்குச் சென்றேன்.ஆங்குப் பிணக்குவியல்களைக் கண்டு திடுக்கிட்ட நான் என் கணவரைத் தேட ஆரம்பித்துக் கடைசியில் ஓரிடத்தில் என் பிராண நாதருடைய சவத்தைக் கண்டேன். என் நாயகருடைய பிரேதத்தைக் காண்பதற்கு நான் இரத்த வெள்ளத்தையும் பிணக்குவியல்களையும் கடந்தே சென்றேன். சிறிது நேரங்கழித்து லாலா சுந்தரதாஸரின் இரு குமாரர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். என் அன்பரைத் தூக்கிக் கொண்டு செல்வதற்கு சார்பாய் என்று சொல்லப்படும் கட்டில் போன்றதொன்றைக் கொண்டு வரச்சொன்னேன். எனவே அவ்விரு இளைஞரும் வீட்டிற்குச் சென்றனர். என்னுடன் வந்த இரண்டு திரீகளையும் அனுப்பித்துவிட்டேன். இதற்குள் இரவு எட்டு மணி ஆகிவிட்டது. இரவு எட்டு மணிக்குமேல் ஒருவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாதென்று உத்தரவு இருந்தமையால் எவரும் தம் வீட்டைவிட்டு நகரவில்லை. நான் அழுதுகொண்டே என் நாதர் அருகாமையில் நின்று கொண்டிருந்தேன். எட்டரைமணிக்கு ஒரு சீக்கிய கனவான் அங்கு வந்தார். இறந்தவர் களிடையே ஏதேனும் அகப்படுமோ என்று அங்குப் பலர் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரையும் எனக்குத் தெரியாது. என் புருஷர் இரத்த வெள்ளத்தில் உழன்று கொண்டிருந்தமையால் அவரை ஓர் உலர்ந்த இடத்திற்குக் கொண்டுவிட உதவி செய்ய வேண்டுமென்று நான் அந்தச் சீக்கிய கனவானைக் கேட்டுக் கொண்டேன். அவர், என் கணவருடைய தலையையும், நான், காலையும் பிடித்து ஓர் உலர்ந்த இடத்திற்குச் கொண்டு வந்து மரப்பலகையொன்றின்மீது கிடத்தினோம். நான் பத்து மணிவரை காத்துக்கொண்டிருந்தேன். ஒருவரும் என் உதவிக்காக வரவில்லை. நான் உடனே அப்ளோவா காத்ரா என்னுமிடத்தை நோக்கிப் புறப்பட்டேன். என் பிராணநாதரைத் தூக்கிக்கொண்டு செல்லும் விஷயத்தில் உதவி செய்யும்படி தாகூர்த்தாவாராவலுள்ள மாணவர் எவரையேனும் வேண்டிக்கொள்ளலாமென்று நான் எண்ணினேன். இங்ஙனம் எண்ணிக் கொண்டே சிறிது தூரம் சென்றதும் அருகாமையிலள்ள ஒரு வீட்டின் பலகணியில் உட்கார்ந்திருக்கும் ஒருவர், இந்த இராத்திரியில் எங்குச் செல்கிறீர் என்று என்னைக் கேட்டார். என் ஆத்மப் பிரியரைத் தூக்கிக்கொண்டு செல்லச் சிலருடைய உதவி வேண்டுமென்று நான் கூறினேன். அவர், தாம் ஒரு காயம்பட்ட மனிதருக்குச் சிகிச்சை செய்துகொண்டிருப்பதாகவும் இரவு எட்டு மணிக்கு மேலாய் விட்டமையால் வீட்டைவிட்டு வெளியே வந்து எனக்கு உதவி செய்ய முடியாதென்றும் கூறினார். பிறகு நான் காத்ரா என்னுமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது முன்னவர் கேட்ட கேள்வியையே வேறொருவரும் கேட்டார். நான் முன் சொன்ன குறைகளையே விண்ணப்பித்துக் கொள்ள அவரும் முன்னவர் அளித்த பதிலையே மொழிந்தார். பிறகு இரண்டு மூன்றடி எடுத்து வைத்ததும் சுருட்டிப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு வயோதிகரைக் கண்டேன். அவர் அருகில் சிலர் தூங்கிக்கொணடிருப்பதையும் பார்த்தேன். நான் அந்த வயோதிகரிடத்தில் கூப்பிய கையளாய், என் துக்கமயமான கதையைக் கூறினேன். அவர் மிக்க அநுதாபப்பட்டு, அண்டையில் உறங்கியிருந்த வரை எழுப்பி என்னுடன் செல்லும்படி சொன்னார். ஆனால் அவர்கள் மணிபத்தாய் விட்டதென்றும், வெளியே வந்தால் கொல்லப்பட்டு விடுவோமென்றும் கூறினார்கள். அச்சமயம் எவரும் வெளிக்கிளம்ப முடியாத சமயம். ஆதலின் யாவரே எனக்குத் துணை வருவார்? எனவே? நான் திரும்பி என் கணவர் அருகாமையில் உட்கார்ந்திருந்தேன். நல்ல காலத்திற்கறி குறியால் என் கையில் ஒரு மூங்கில்தடி அகப்பட்டது. அதனை வைத்துக்கொண்டு நாய்கள் வந்தணுகா வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தேன். மூவர், என் கணவருக்கருகாமையில் துன்ப வாரிதியில் உழல்வதைப் பார்த்தேன். ஓர் எருமை மிக்க துன்பப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டேன் பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுபையன் அவதைப் பட்டுக்கொண்டு என்னை அவ்விடத்தினின்றும் விட்டுச் செல்லாமல் இருக்கும்படி பிரார்த்திக்கொண்டான். என் கணவரை விட்டு நான் எங்கும் செல்லமுடியாதென்று கூறினேன். அவனுக்கு மேற் போர்வை ஏதேனும் வேண்டுமோ என்று நான் கேட்டேன். குடிக்கச் சிறிது தண்ணீர் வேண்டுமென அவன் கெஞ்சினான். ஆனால் அந்த இடத்தில் ஒரு சிறிது தண்ணீரும் இல்லை.
ஒவ்வொரு மணியும், கடியாரம் அடித்துக் கொண்டிருப்பதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணிக்கு சுல்தான் கிராமத்தைச் சார்ந்த ஜாட் ஜாதியர் ஒருவர் சுவரோடு சுவராய் ஓரிடத்தில் இருந்தார். அவர்தம் காலைச்சிறிது உயரத்தூக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். தோய்ந்திருந்த அவர் துணியை ஒரு புறமாகப் பிடித்துக் கொண்டு அவருடைய காலைச் சிறிது உயரத் தூக்கினேன். அதன் பிறகு காலை ஐந்தரை மணி வரைக்கும் ஒருவரும் வரவில்லை. காலை ஆறு மணிக்கு லாலா சுந்தரதாஸரும் அவருடைய குமாரரும் என் தெருவிலுள்ள வேறு சிலரும் சார்பாயை எடுத்துக்கொண்டு அங்கு வந்தார்கள். உடனே என் நாதரைத் தூக்கிக்கொண்டு சென்றோம். அநேகர் தங்கள் பந்துக்களை அத்தோட்டத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாளிரவு முழுவதும் நான் அத்தோட்டத்திலேயே கழித்தேன். நான் அப்பொழுது எந்த நிலையில் இருந்தேனென்பதை வருணிக்கமுடியாது பிணங்கள் குவியல் குவியலாக அங்கு இருந்தன. பல சிறுகுழந்தைகள் அங்குக் காணப்பட்டன. அந்தக் கோரக்காட்சியை நான் என்றும் மறவேன். அந்த ஏகாந்தமான வனத்தில் நான் தமியளாய் அவ்விரவு முழுவதையும் கழித்தேன். நாய்கள் குலைப்பதையும் கழுதைகள் கத்துவதையுமன்றி நான் வேறொன்றையும் அங்குக் கேட்கவில்லை. நூற்றுக்கணக்கான பிணங்களிடையே நான் தன்னந்தனியே அழுதுகொண்டு என்துணைவருடைய சவத்தைப் பாதுகாத்து வந்தேன். அன்றிரவு நான் அநுபவித்த துன்பம் எனக்கும் ஈசனுக்குமே தெரியும்.
இதற்குமேல் பதின்மூன்றாந்தேதி மாலை நடந்த சம்பவத்தைப் பற்றி அதிகமாக வருணிக்க எமக்குப் பிரியமில்லை.
இறந்து போனவர் தொகை
ஜலியன்வாலா பாக் வதையில் இறந்துவிட்டவர் தொகை இருநூற்றுத் தொண்ணூற்றொன்று என்றும் காயம்பட்டவர் பலர் என்றும் அரசாங்க அறிக்கை கூறுகிறது. இந்தியச் சட்ட சபையில் பஞ்சாப் அரசாங்கத்தின் பிரதம காரிய தரிசியாயிருந்த மிடர் தாம்ஸனும் இதையே வற்புறுத்திப் பேசினார். சேவசமிதியாரின் கணக்குப்படி ஐந்நூற்று முப்பதுபேர் கொல்லப்பட்டனர்; சுமார் இருநூறுபேர் காயமடைந்தனர். லாலா கிரிதரலால் சுமார் ஆயிரம்பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று கூறுகிறார். ஹண்டர் கமிட்டியார் முந்நூற்று எழுபத்தொன்பதுபேர் இறந்துவிட்டனரென்றும் இவரில் எண்பத்தேழு பேர் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் என்றும் இறந்து போனவரை விட மூன்று மடங்குபேர் காயம் பட்டவர் என்றும் கூறுகின்றனர்.
கல்னல் வெட்ஜ்வுட்
ஆனால் இச்சம்பவத்தைக் குறித்து உண்மையான பிரிட்டிஷார் எத்தகைய அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு ஈண்டு ஓர் உதாரணம் கொடுக்கிறோம். 1919-ம் வருஷம் டிசம்பர் மாதம் இருபத் திரண்டாந் தேதி காமன் சபையில் கர்னல் வெட்ஜ்வுட் பின்வருமாறு பேசினார்:-
அமிருதசர படுகொலையைப்பற்றியும் இது சம்பந்தமாக இங்கிலாந்து செய்யவேண்டிய கடமையைப் பற்றியும் நான் சிறிது பேச விரும்புகின்றேன். துரதிர்ஷ்டவசத்தினால், இந்தப் படுகொலையின் விவரங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். இங்கிலாந்திலுள்ள சில பத்திரிகைகள் தவிர, ஏறக் குறைய எல்லாப் பத்திரிகைகளும் இங்கிலீஷ் காரருக்குரிய அபிப்பிராயத்தையே கொண்டன. அங்கு நடந்த விஷயங் களைக் கேட்டு இந்நாடு முழுவதும் நடுங்கிக் கிடக்கின்றது. அமிருதசரசில் என்ன நடந்தது? அதை வெளிப்படையாகக் கூறுகின்றேன். மத சம்பந்தமான ஒருவிழா நடந்தது. அதற்காகப் பல்லாயிரம் பஞ்சாபியர்கள் அமிருதசரசிற்குச் சென்றார்கள். பிரிட்டிஷ் உத்தியோகதர்கள் மிகக் கவலையுடனிருந்தார்கள். ஏப்ரல் மாதம் ஒன்பதாந் தேதி டிப்டி கமிஷனர் டாக்டர் சத்தியபாலரையும் டாக்டர் கிச்சுலுவையும் எங்கோ தூக்கிக்கொண்டுபோய் விட்டனர். இச்செய்தி எங்கும் பரவ, அவ்விருவரைப் பின் பற்றுவோர் பலரும், தங்கள் தலைவரை விடு தலை செய்யவேண்டு
மென்று வேண்டிக்கொள்ள டிப்டி கமஷனரிடத்தில் ஒரு பிரதிநிதிக் கூட்டத்தை அனுப்பினார்.
இந்தக் கூட்டமானது இடையே துருப்புகளால் தடுக்கப்பட்டது. இக்கூட்டத்திலிருந்தவர் கையில் தடி மாத்திரம் வைத்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்டு துருப்புகள் இக்கூட்டத்தின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தன. இறந்துபோனவர்களுக்காக உபந்நியாசங்கள் செய்யப்பட்டன. உடனே இந்தப் பாமர ஜனக்கூட்டமானது மூன்று இங்கிலீஷ்காரரைக் கொலைசெய்தது. ஓர் இங்கிலீஷ் திரீயை நன்கு அடித்தது. இத்தகைய குழப்பங்களை எவரும் மன்னிக்கமுடியாது. பத்தாந்தேதி இரவு ஜெனரல் டையர் அமிருதசர வந்துசேர்ந்தார். டிப்டி கமிஷனர் இவரிடத்தில் எல்லாச் சிவில் அதிகாரங்களையும் ஒப்புவித்துவிட்டார். அவர் (ஜெனரல் டையர்) எவ்விதக் கூட்டமும் நடைபெறக் கூடாதென்று வாயால் ஓர் அறிக்கை வெளியிட்டார். இரண்டு நாட்கள் கழித்து, எவ்வித கொலையும் எவ்வித கலகமும் நடைபெறாதிருக்குங்கான், ஜலியன் வாலாபாக்கில் ஒரு கூட்டம் கூடுவதாக ஜெனரல் டையர் கேள்விப்பட்டார். உடனே அவர் ஐம்பது துருப்புகளுடன் அங்குச் சென்றார். ஜலியன் வாலாபாக் என்பது அரைமைல் சதுரமுள்ள ஒரு வெளிப்படையான மைதானம்; மூன்றுபேர் ஒரே சமயத்தில் நுழையும்படியான ஒரு நுழைவாயிலே இதற்கு இருக்கின்றது. ஜெனரல் டையருடைய துருப்புகள் வந்து ஓர் உயர்ந்த மேடையில் நின்றுகொண்டன. இந்த மைதானத்தைச் சுற்றி ஏழடி உயரமுள்ள சுவர்களும் வீடுகளும் நிரம்பியிருந்தன. ஜனங்கள் செல்வதற்கு இரண்டு மூன்று சிறிய சந்துகள் இந்த இடங்களில் இருந்தன. துருப்புகள் வந்து நுழைந்த முப்பது விநாடிகளுக்குள், ஜெனரல் டையர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவு கொடுத்தார். சுமார் ஐயாயிரம்பேர் முதல் இருபதினாயிரம் பேர்வரை கொண்ட மானது உபந்நியாசத்தை மிக்க அமைதியுடன் செவிமடுத்துக் கொண்டிருந்த கூட்டமானது – சுடப் பட்டது. பத்து நிமிஷ நேரம் விடாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் பயனாகச் சுமார் நானூறு முதல் ஐந்நூறுபேர் வரை இறந்திருப்பர் என்றும் ஆயிரத்தைந்நூறுபேர் காயம் பட்டிருப்பரென்றும் ஜெனரல் டையரே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஜனங்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் தப்பித்துக்கொள்ள வழியில்லை. ஜனங்கள் எதிர்த்து நிற்கவுமில்லை எச்சரிக்கை செய்யப்படவுமில்லை, இத்தகைய ஜனங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டார்கள். பத்து நிமிஷங்கழித்து, குண்டுகள் யாவும் செலவாய்ப் போய் விட்டமை யால், ஆயிரத்தைந்நூறு பேரைக் காயமாக்கிவிட்டுத் துருப்புகள் சென்றுவிட்டன. இரண்டு நாட்கள் ஜனங்கள் அங்குப் பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். தாகவிடாய் தீராமல் இறந்தவர் எத்தனைபேர்? மண்ணைத் தின்று மாண்டவர் எத்தனைபேர்? இரத்தம் கக்கிச் செத்தவர் எத்தனைபேர்? இவர்களைப் பாதுகாக்க ஒருவருமில்லை. அருகாமையில் வசித்துக் கொண்டிருந்த இறந்து போனவர்களுடைய உறவினர்கள், பிணக்குவியல்களிடையே கிடக்கும் தம்மைச் சேர்ந்தவரை எடுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் காயத்தினால் மிகக் கோரத்துடன் இறந்துபோனார்கள். 1919-ம் வருஷத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன தேகப் பயிற்சியில் பிரியமுள்ள ஓர் இங்கிலிஷ்காரன் காயப்படுத்தப்பட்ட ஒரு பட்சியைத் துன்பத்தினின்றும் நீக்க எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்வான். ஆனால் காயப்படுத்தப்பட்ட இந்த இந்தியர்கள் இரண்டு நாட்கள் அந்த இடத்திலேயே வீழ்ந்து கிடந்தார்கள்; மெதுவாக இறந்துபோனார்கள். இஃதென்ன வென்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். இங்கிலீஷ் சரித்திரத்தில் இத்தகைய சம்பவம் எப்பொழுதும் நடைபெற்றதில்லை. இத்தகைய நிகழ்ச்சி, நாம் இந்தியாவுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டது முதல் நடைபெற வில்லை. பிரிட்டிஷ் கீர்த்திக்கு அழிவு உண்டாகும்படியான இத்தகைய சம்பவத்தைப்போல் வேறோர் உதாரணம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்ச் சென்று பார்க்க வேண்டும். கல்கத்தாவின் இருட்டறையும் கான்பூர் படுகொலையும் இங்கிலீஷ்காரன் இந்தியாவில் ஆட்சி ஏற்றுக்கொண்டதன்பின் நடைபெற்றன வென்று சாதாரண புத்தகங்களில் காணப்படும். கான்பூரிலிருந்த ஒரு கிணற்றில் பிணங்கள் குவிந்து கிடந்தன என்று சொல்லப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு அப்புறம், இந்திய மாணவர்கள், இப்பொழுது கான்பூருக்கு அழைத்துக் காட்டப் படுவதுபோல் இந்த ஜலியன் வாலாபாக்கிற்கு அழைத்துச்செல்லப் படுவார்கள். அப்பொழுது அவர்களுடைய உணர்ச்சி எங்ஙனமிருக்கும் என்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். இந்த இடத்தில் (ஜலியன் வாலா பாக்கில்) ஒரு கோயில் கட்டப்படும். அங்கு வருஷந்தோறும் இந்தியர் களடங்கிய ஊர்வலங்கள் நடைபெறும். இங்கிலீஷ்காரர் அங்கு வெறுந் தலையராய் இந்தக்கோயில்களின் முன்னர் நிற்பார்கள். இந்தச் சம்பவத்தினால், அன்பு கொண்டிருக்க வேண்டிய இரண்டு சமூகங்கள் வேற்றுமையாக்கப்பட்டன.
இந்தச் சம்பவமானது, உலகத்தில் நாம் பெற்றிருந்த கீர்த்தியையே கெடுத்துவிட்டது. இனி என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அமெரிக்காவிலுள்ள சில கொடியர்கள் நீங்கள் இந்தியாவில் இங்ஙனமே செய்தீர்கள் என்று கூறுவார்கள், ரஷ்யாவில் கொலைகள் நடைபெறும் போது இந்தியாவில் நீங்கள் செய்ததைப்போல் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவார்கள் இங்ஙனமே துருக்கியர்களும் கூறுவார்கள். இச் சம்பவம் இத்தகைய நல்வரவையே பெறும் அமிருத சரசில் நடைபெற்றனயாவும் இங்கிலாந்துக்குச் சம்மதமாயிருக்கிற தென்று உலகத்திலுள்ளவர்கள் கருதுவார்கள். இதுகாறும் நடைபெற்ற ப்ரஷ்ய முறைகளில் இதுவே சிறந்த ப்ரஷ்ய முறை என்பதை நாமறிவோம், ஜர்மானியர் பெல்ஜியத்தில் இதைவிட கேவலமாக ஒன்றும் செய்யவில்லை. இச்சம்பவம் நம்மை என்றுங் கெடுத்துவிட்டது. மனித தருமத்தை என்றேனும் நாம் எடுத்துக் கூறுவோமானால், இந்த விஷயம் நமக்கு உலகத்தாரால் சொல்லப்படும்.
எதற்கும் சித்தமா யிருக்கிறோம்
மறுநாளாகிய பதினான்காந் தேதியன்று ஜனங்கள் தங்கள் விருப்பப் படி இறந்தவர்களைப் புதைக்கலாம்; அல்லது எரிக்கலாம். ஆனால் எவ்வித கோலாகலமும் கூடா தென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்ஙனமே ஜனங்கள் தங்கள் சவங்களைச் சுடுகாட்டில் சேர்ப்பித்தார்கள். பதினான்காந் தேதியன்று நகரமெங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. தம்முடைய உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதைப்பார்க்க ஜெனரல் டையர் நகரமெங்கும் ஒரு முறை சுற்றி வந்தார். பதினான்காந் தேதியன்று என்ன நடந்ததென்பதை லாலா கிரிதரலால் பின் வருமாறு சுருக்கமாகக் கூறுகின்றார்:- பதினான்காந் தேதி காலை ஜலியன் வாலா பாக்கிற்குச் சென்று பார்த்து வருவோம் என்று எண்ணி என் தொழிற் சாலையை விட்டுப் புறப்பட்டேன். அங்கு ஹான்லிகேட் வழியாக நான் சென்றபோது ஆங்கு இன்னும் ஏழெட்டு பிணங்கள் இருக்கக் கண்டேன்; இதைப்பார்த்ததும் அத்தோட்டத்திற்குள்செல்ல எனக்கு மனம் வர வில்லை. மறுபடியும் என் தொழிற்சாலைக்கு வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும்போது முனிசிபல் கமிஷனர்கள், மாஜிட்ரேட்டுகள், பிரபல வியாபாரிகள் ஆகிய இவர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை டிப்டி கமிஷனர் பகல் இரண்டு மணிக்குக் கூட்டுவித்தார் என்று தெரிந்து கொண்டேன். இக்கூட்டம் போலீ டேஷனில் நடைபெற்றது, அக்கூட்டத்தில் அமிருதசர கமிஷனரான மிடர் கிச்சென் அங்குள்ளவர்களைப் பார்த்துப் பின்வருமாறு பேசினார்:- உங்களுக்குச் சமாதானம் வேண்டுமா? யுத்தம் வேண்டுமா? நாங்கள் எதற்கும் சித்தமாயிருக்கிறோம், அரசாங்கத்தாருக்கு எல்லாவித பலமும் இருக்கிறது. ஜெர்மனியை ஜெயித்த சர்க்கார் எதைச் செய்யவும் வல்லதாயிருக்கிறது. ஜெனரல் இப்பொழுது சில உத்தரவுகளை வெளி யிடுவார். அமிருதசர நகரம் இப்பொழுது அவர் வசத்தில் இருக்கிறது, நான் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். மிடர் கிச்சென் அதிக நேரம் பேசவில்லை. அவர் இரண்டு நிமிஷமே பேசினார். ஜெனரல் டையர், மெஸர் மைல் இர்விங், ரெஹில் ப்ளோமர் முதலியவர்களுடன் மாலை ஐந்து மணிக்கு அங்கு வந்து சேர்ந்தார். அவர் உள்ளுக்குள் மிக்க அவசரமாக நுழைந்து மிகக்கோபத்துடன் உருது பாஷையில் சில வார்த்தைகள் பேசினார். அவர் நின்றுகொண்டு பேசினமையால் அங்குள்ளார் அனைவரும் நின்று கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஜெனரல் டையர் பேசியதாவது:- நான் ஒரு சோல்ஜர் என்பதையும் இராணுவ வீரன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமா? சண்டை வேண்டுமா? நீங்கள் யுத்தத்தை விரும்பினால் அரசாங்கத்தார் அதற்குச் சித்தமாயிருக் கின்றனர். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் என் உத்தரவு களுக்குக் கீழ்ப்படியுங்கள்; கடைகளைத் திறவுங்கள். இல்லாவிட்டால் நான் சுட்டுவிடுவேன். என்னைப் பொறுத்தமட்டில் பிரான் யுத்தகளமும் அமிருதசர யுத்தகளமும் ஒன்றேயாகும். நான் ஓர் இராணுவவீரன். ஆதலில் நான் நேராகவே செல்வேன். வலதுபக்கமும் திரும்பமாட்டேன்; இடது பக்கமும் திரும்ப மாட்டேன். நீங்கள் விரும்புவது யுத்தமானால் அதைச் சொல்லிவிடுங்கள். சமாதானம் வேண்டுமென்றால் கடைகளைத் திறக்க வேண்டுமென்பது என் உத்தரவாகும். நீங்கள் அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசுகிறீர்கள். ஜர்மனியிலும் வங்காளத்திலும் படித்து வந்தவர் இராஜத் துரோகமான விஷயங்களைப் பேசு கிறார்கள். நான் இவைகளை வேரோடு களைந்து விடுவேன். என் உத்தரவு களுக்குக் கீழ்ப் படியுங்கள். நான் வேறொன்றையும் கேட்கவிரும்ப வில்லை. நான் முப்பது வருஷ காலமாக இராணுவத்தில் ஊழியம் செய் திருக்கிறேன். இந்தியச் சிப்பாயையும் சீக்கியர்களையும் நான் நன்கறிவேன். நீங்கள் சமாதானத்தை நாடவேண்டும். இல்லா விட்டால் துப்பாக்கிகளைக் கொண்டு கடைகள் திறக்கப்படும். போக்கிரித்தனம் செய்பவர் யாவரென்பதை நீங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும். அவர் களை நான் சுட்டுவிடுகிறேன். என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து கடைகளைத் திறவுங்கள். அல்லது நீங்கள் யுத்தத்தை விரும்புகிறீர்களா என்பதைக் கூறுங்கள். ஏறக்குறைய இவருடைய பேச்சு முழுவதும் இத்தன்மைத் தாகவே இருந்தது. இவருக்குப் பின் மிடர் மைல் இர்விங் பின் வருமாறு பேசினார்:- ஜெனரல் செய்த உத்தரவுகளை நீங்கள் கேட்டீர்கள் இந்நகரம் முழுவதும் அவர் வசத்தில் இருக்கிறது. கடைகளைத் திறக்க வேண்டு மென்பது அவருடைய உத்தரவாகும். அவருடைய உத்தரவைக் கீழ்ப்படிய வேண்டியது அவசியமென்று நான் நினைக்கிறேன். யாருக்கேனும் தொந்தரவு உண்டானால் அவைகளைக் கூறுங்கள்; நான் கவனிக்கிறேன் இங்கிலீஷ்காரரைக் கொலை செய்துவிட்டமையால் நீங்கள் ஒரு கெட்ட காரியத்தைச் செய்தவர்களாவீர்கள். அதற்கு நஷ்ட ஈடாக நீங்களும் உங்கள் மக்களும் துன்பம் அனுபவிக்க வேண்டியவர்களே. நீங்கள் உடனே கடைகளைத் திறக்கவேண்டும். அரசாங்கத்தார் உங்களிடத்தில் அதிக கோபமாயிருக்கின்றனர். அரசாங்கத்தாருடன் நீங்கள் எதிர்த்து நிற்க. முடியாது. அரசாங்கத்தாருக்கு விரோதமாகப் பேசுவோரை நான் அதிக கடுமையாகத் தண்டிக்கப் போகிறேன்.
அதிகாரிகளின் மனப்பான்மை
மேற்காணப்பட்ட பேச்சுகளினால் அமிருதசர அதிகாரிகளின் உள்ளநிலை நன்கு புலனாகும். பொதுவாகவே பத்தாந்தேதி நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு அதிகாரிகள் அதிக கோபமடைந்திருந்தார்கள் என்று தெரியவருகிறது. ஜலியன் வாலாபாக்கின் பெருவதைக்கும் இவ்வதிகாரிகளின் கோபமும் ஒரு காரணமாகும். அதிகாரிகளின் ஆதரவை நாடி நிற்கும் இந்தியர்களிடத்தும், அச்சமயத்தில், அவர்கள் கோபமாயிருந்தார்கள். பதினோராந்தேதி பிணங்களுடன் ஊர்வலம் செல்ல அனுமதி பெறவேண்டிய விஷயமாக லாலா தோலன்தா என்பவர் அதிகாரிகளைக் காண அமிருதசர ரெயில்வே டேஷனுக்குச் சென்றார். அப்பொழுது ரெயில்வே டேஷனிலுள்ள போஜன சாலையில் மிடர் செய்மரும், கமிஷனரும் டிப்டி கமிஷனரும் போலீ இலாகா தலைவரும் இருந்தார்கள். எல்லாரும் மிக்க பிரமைகொண்டிருந்தார்கள். ஓர் ஐரோப்பியருக்கு ஆயிரம் இந்தியர் கொல்லப்படுவர் என்று மிடர் செய்மர் கூறினதாகச் சொல்லப்படுகிறது. ஒருவர் நகரத்தைக் கொளுத்தி விடுவதாகக் கூறினார். லாலா தோலன்தா, பொற்கோயிலுக்கு ஏதேனும் சேதம் உண்டானால் குழப்பத்திற்கு முடிவே கிடையாதென்று சொன்ன தாகவும் தெரிகிறது. அமிருதசர ஆபத்திரியின் சிவில் சர்ஜனான கர்னல் மித் தம் கீழிருந்த சப் அசிடெண்டு சர்ஜனான டாக்டர் பால முகுந்தரை நோக்கி ஜெனரல் டையர் வருகிறார். அவர் நகரத்தைச் சுட்டெரித்து விடுவார் என்று கூறினார். இன்னும் அவர் எந்தெந்த இடங்களிலிருந்து குண்டுகள் போட்டால் அரை மணிநேரத்திற்குள் நகரம் தரையோடு தரையாய் விடும் என்பதை விளக்கிக் காட்டினார் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கர்னல் மித், மேற் கூறப்பட்ட பால முகுந்தரைப் பார்த்து ரெயில்வே ஆபத்திரிக்குச் சென்று அடுத்த உத்தரவு வரைக்கும் அங்கேயே இரவும் பகலும் இருக்கவேண்டும் ஐந்து நிமிஷமாவது நீங்கள் அங்கு இல்லாவிட்டால் ராம்பாக் (ஜெனரல் டையருடைய தலைமை தானம்) கிலுள்ள ஒரு மரத்தில் பிறபோக்கிரிகளோடு உங்களையும் சேர்த்துக் கட்டிச் சவுக்காலடிப்பேன் என்று கூறினார். இதனால் அரசாங்க உத்தியோகதர்களாயுள்ள இந்தியர்களிடத்தும் ஐரோப்பிய அதிகாரிகள் எவ்வளவு இழிவாக நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரியவரும்.
இராணுவச் சட்டத் தோற்றம்
பதினைந்தாம்தேதி எல்லாக் கடைகளும் திறக்கப் பட்டன. ஏறக்குறைய எங்கும் அமைதி ஏற்பட்டிருந்தது. அன்றுமுதல் சிவில் அதிகாரிகளின் நிருவாகம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அன்றே இராணுவச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் மாதம் பதினைந்தாந்தேதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் ஜூன் மாதம் ஒன்பதாந் தேதிவரை இருந்தது. இந்த இராணுவச்சட்ட காலத்தில் ஜனங்கள் அநுபவித்த துன்பம் ஒன்றிரண்டாயிருந்தால் நாம் விவரித்து எழுதலாம். ஏட்டிற் கடங்காமலிருப்பதால் எல்லாவற்றையும் சுருக்கி எழுதுகின்றோம். நேயர்கள் மன்னிக்க வேண்டும். இராணுவச்சட்ட காலத்தில் செய்யப்பட்ட அநியாயங்களைப்பற்றி லாலாகிரிதரலால் பின்வருமாறு கூறுகிறார்:- ஜனங்களுடைய மனத்தில் பயமுண்டாகும்படி அதிகாரிகள் பலவித முறைகளை அநுசரித்தார்கள். அமிருதசர நகரத்து நியாயவாதிகள் அனைவரும் பிரத்தியேக கான்டேபில்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள்; இழிமொழிகளால் அலங்கரிக்கப்பட்டார்கள்; பொது தலங்களில் சவுக்கடி கொடுப்பதைப் பார்க்கும்படி வற்புறுத்தப் பட்டார்கள்; சாதாரண கூலிகள் போல் மரச்சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்லக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள்; நகரத்திலுள்ளார் அனைவரும் ஐரோப்பியரைக் கண்டு சலாம் செய்யும்படி வற்புறுத்தப் பட்டார்கள். இந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் சிறையில் வைக்கப் பட்டார்கள். மிகவும் வெப்பமான இக்காலத்தில் நல்ல பகல் வேளையில் சிலர் மணிக்கணக்காக வெயிலில் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். சலாம் செய்வது எப்படி என்பது சிலருக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டது. கௌரவமுள்ள மனிதர்களை விலங்கிட்டு அழைத்துச் செல்வது இராணுவச் சட்ட காலத்தில் சாதாரண வழக்கமாயிருந்தது. அநாகரிக மானதும் மனிதத்தன்மை வாய்க்கப் பெறாததுமான ஊர்ந்து செல்லும் உத்தரவு பலநாட்களுக்கு அமுலில் இருந்தது. ஒரு குருடனும் இவ்வுத் தரவை அநுசரிக்கும்படி வற்புறுத்தப்பட்டு, சரியாகச் செல்லாமையினால் உதைக்கப் பட்டான். போலீஸார் அநுசரித்த முறை மிருகத் தன்மை பொருந்தியதாய் இருந்தது. இரண்டு கைகளையும் உயரத்தூக்கிக் கட்டிவிட்டுச் சவுக்காலடிக்கும் வழக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. (கைது செய்யப்பட்டு போலீஸாருடைய விருப்பப்படி சாட்சியங் கொடுக்காத) மனிதர்களுடைய கைகள் கட்டிற் கால்களின் கீழ் வைக்கப் பட்டு அதன்மேல் பலர் உட்கார்ந்து கொண்டனர். காப்பில் வைக்கப் பட்டவர்கள், இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்கும் இடங்கொடுக்கப் பட்டார்களில்லை. திட்டுவதும் கன்னத்தில் அறைவதும் மீசைகளையும் தாடிகளையும் பிடித்திழுப்பதும் மிகச்சிறிய தண்டனைகளாகக் கருதப் பட்டன. போலீஸார் விரும்பியவாறு சாட்சியஞ் சொல்ல வேண்டுமென்று வறுபுறுத்துவதற்கு ஒருவனுடைய உள்ளங்கையில் எரிந்து கொண்டிருக்கும் நிலக்கரி வைக்கப்பட்டது. ஒருவனுடைய கையில் ஆணி அடிக்கப்பட்டது. ஒருவன் தன் சிறுநீரைக் குடிக்கும்படி வற்புறுத்தப் பட்டான். சிலருடைய மலத்துவாரத்தில் சிறுகம்புகளும் செருகப்பட்டன. இவைகள் இந்த இருபதாம் நூற்றாண்டில் நாகரிகம் மிகுந்த இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெற்றன வென்பதை நேயர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ஊர்ந்து செல்லும் உத்தரவு
இராணுவச் சட்ட காலத்தில் கீழ்த்தர உத்தியோகதர்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து வந்தார்கள். ஊர்ந்து செல்லும் உத்தரவைக் குறித்துச் சிறிது பேசுவோம். குச்சா கௌரியன் வாலா என்னும் சந்தில் இந்த உத்தரவு அமுலில் இருந்தது. இந்தச் சந்து மிகவும் நெருக்கமானது. இதன் இரண்டு பக்கங்களிலும் மாடிவீடுகள் நெருக்கமாக இருக்கின்றன. இந்தச் சந்தின் குறுக்கே பல சிறிய சந்துகள் செல்கின்றன. இவைகளில் வசிப்போர் இந்த குச்சா கௌரியன் வாலா என்னும் சந்தின் வழியாகச் செல்லா மலிருக்க முடியாது. இந்தச் சந்தில் சுமார் நூற்றைம்பது கஜதூரம்வரை ஊர்ந்து செல்லும் உத்தரவு அமுலில் இருந்தது. இந்தச் சந்தின் நடுவில் சவுக்கடி மேடை வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்து மிகவும் நெருக்கமாக இருந்தமையால் அசுத்தத்திற்கு இருப்பிடமாயிருந்தது. மி ஷெர்வுட் என்னும் பெண்மணி இங்குத் துன்புறுத்தப் பட்டமையால் இந்தச் சந்து மிகவும் பரிசுத்தமானதென்று கருதும் வண்ணம், இதில் செல்வோர் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் பூமியில் பதித்துக் கொண்டு செல்ல வேண்டுமென்று உத்தரவிட்டதாக ஜெனரல் டையர் ஹண்டர் கமிட்டிமுன் கூறினார். இந்தச் சந்தின் இரண்டு கோடியிலும் காலை ஆறுமணி முதல் மாலை பத்துமணி வரை இராணுவ வீரர் பாதுகாவலாக வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தெருவழியாகச் செல்ல வேண்டியவர் ஊர்ந்து செல்லும்படி இவ்வீரர்களால் வற்புறுத்தப் பட்டனர். இந்தத் தெருவிலேயே வாசம் செய்வோர் வெளியே செல்ல வேண்டுமென்றால் என்ன செய்வது என்று ஹண்டர் கமிட்டிமுன் ஜெனரல் டையர் கேட்கப்பட, அவர் காலை ஆறுமணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்குப் பின்னும் செல்லலாமென்றும் அல்லது வீட்டுக்கூரைகளின் மீதேறிச் செல்லலாமென்றும் கூறினார்! ஆனால் காலை ஆறு மணிக்கு முன்னாலும் இரவு பத்து மணிக்கு பின்னாலும் எவரும் வெளியே செல்லக்கூடாதென்ற உத்தரவு அமுலில் இருந்த தென்பதை இவர் மறுந்துவிட்டனர் போலும். இந்த ஊர்ந்து செல்லும் உத்தரவானது ஏப்ரல் மாதம் பத்தொன்பதாந் தேதிமுதல் இருபத்தாறாந் தேதி வரை அமுலில் இருந்தது. சுமார் ஐம்பது பேர் இந்த அநாகரிகமான முறைக்கு உட்படுத்தப் பட்டார் என்று தெரிகிறது. இந்த முறை எங்ஙனம் அநுசரிக்கப்பட்டது. என்பதற்குச் சில உதாரணங்கள் ஈண்டடெடுத்துக் காட்டுகிறோம். குருடரும், அம்பட்டரும், ஐம்பத்தைந்து வயதுடைய வருமான கஹன்சந்த் என்பவர் காங்கிர சப் கமிட்டி முன் கொடுத்த சாட்சியம் வருமாறு:- நான் இருபது வருடங்களாகக் குருடனாயிருக்கிறேன். நான் குச்சா குரிச்சானில் சில சமயங்களில் சாப்பாட்டுக்குச் செல்வதுண்டு. ஏப்ரல் மாதம் பதினெட்டாந் தேதி வழக்கமாக நான் எடுத்துச் செல்லும் ஒரு தடியை ஊன்றிக்கொண்டு செல்லும்போது ஒரு போலீகாரன் என்னை நிற்கும்படி கூறினான். என்னைப் போக விடவேண்டுமென்று நான் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அந்தத் தெரு முழுவதும் ஊர்ந்து செல்வ தானால் என்னை விடுவதாக அவன் கூறினான். இரண்டு நாட்களாகப் பட்டினி கிடக்கிறேனென்று நான் கூறினேன். ஆனால் அவன் விடமுடியா தென்று கூறிவிட்டான். வேறு வழியில்லாமல் சிறிதுதூரம் ஊர்ந்து சென்றேன். திடீரென்று என் முதுகில் ஓர் உதை கிடைத்தது. அதனால் என் தடி தவறிப்போயிற்று. பிறகு சமாளித்துக் கொண்டு அத்தெரு வாசிகளிடம் பிச்சைகேட்டு வந்தேன். ஆனால் அப்பொழுது காலம் கஷ்டமாயிருந்த படியால் ஒருவரும் எனக்கு உணவு அளிக்கச் சித்தமாயில்லை. பிறகு மிகக் கஷ்டத்துடன் கௌரியன் வாலா சந்துவழியாகத் திரும்பி வந்துவிட்டேன். இங்ஙனமே கௌரவமுள்ள மனிதரிற் பலர் வற்புறுத்தப்பட்டனர். இங்குக் காவல் புரிந்த சோல்ஜர்கள், தெருக்களில் வளர்க்கப் பட்ட புறாக்களைப் பிடித்துச் சுட்டுத் தின்றார்கள். இவர்கள் தங்கள் இயற்கைக் கடன்களையெல்லாம் அங்கேயே செலுத்தி அத்தெருவைப் பாழ் படுத்தினார்கள். ஜெனரல் டையரும் மிடர் ப்ளோமர் என்ற போலீ சூப்பிரண்டெண்டெண்டும் அடிக்கடி தெருவுக்கு வந்து ஜன்னல்களில் உட்கார்ந்தவர்களையும் நுழைவாயில்களில் நின்று கொண்டிருந்தவர் களையும் தம் சிறு சவுக்காலடிப்பதும், தமக்கு எழுந்து நின்று சலாம் செய்ய வேண்டுமென்று கூறுவதும் இவைபோன்ற அநாகரிகச் செயல் களைச் செய்துவந்தார் என்று சொல்லப்படுகிறது. ஊர்ந்து செல்ல வேண்டு மென்ற அச்சத்தில் இத்தெருவில் குடியுள்ளபலர் தங்கள் வீட்டுக்கே வராமல் இருந்தார்கள். தெருவிலுள்ளோர் தங்கள் வீட்டுக் கதவுகளைத் திறவாமல் பயத்தினால் உள்ளேயே இருந்தனர். இந்தத் தெருவிலுள்ள ஸ்ரீமான் லாப்சந்த் என்பவருடைய வீட்டின் ஒரு பாகம் சோல்ஜர்களின் தங்குமிடமாகக் கொள்ளப்பட்டது. இந்தத் தெருவில் சென்ற எவரும் அவர் இளைஞரோ, வயோதிகரோ, வியாதியதரோ, யாராயிருந்தாலும் அவர் எவ்வேலையாகச் சென்ற போதிலும் ஊர்ந்து செல்லும்படி வற்புறுத்தப் பட்டனர். இந்தத் தெருவில் மிருகசம்ரக்ஷனை சாலையொன் றிருந்தது. அதை சோல்ஜர்கள் அசுத்தப்படுத்தினார்கள். இந்தத் தெருவில் சவுக்கடிமேடை ஏற்படுத்தப்பட்டிருந்தமையால், இங்கு அடிக்கப்படுவதை வீட்டினுள்ளிருக்கும் திரீகள் கேட்டு நடுக்குற்றார்கள். சிறுவர்களும் வயோதிகர்களும் இத்தண்டனைக்கு உட்பட்டார்கள். சவுக்கடி தண்டனை எங்ஙனம் நிறைவேற்றப்பட்ட தென்பதைப் பற்றி அத்தெரு வாசியான கேம்கௌர் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:- சிறுபிள்ளைகள் சவுக்கடி தண்டனை பெறும்போது நான் என் பலகணியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் இச்சிறுவர்களுடைய துணிகள் அவிழ்க்கப்பட்டு முக்கோணத்தில் கட்டப்பட்டு அடிகொடுக்கப் பட்டது. தாயே! நான் இறந்து போய் விட்டேன். சாயபுவே! என்னை விட்டுவிடுங்கள் என்று சிறு பிள்ளை களிடமிருந்து எழுந்த கூக்குரல் என் மனதைக் கலங்கச் செய்துவிட்டது. ஒருவன் பத்து அடி அடித்ததற்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, சிறிது தண்ணீர் கொடுக்கப்பட்டான். மறுபடியும். முன்போலவே கட்டப்பட்டு அடி கொடுக்கப்பட்டான். முதற்பையனுடைய தண்டனை இங்ஙனம் நிறை வேறி யானதும் இரண்டாவது பையன் முன்போலவே அடி கொடுக்கப் பட்டான். சிறிது நேரங் கழிந்ததும் இவன் மூர்ச்சையாகப் போய்விட்டான். யாராவது இவனுக்குத் தண்ணீர் கொடுப்பாரா? என்று அங்குள்ள ஓர் உத்தியோகதர் கூறினார். நான் சிறிது தண்ணீர் கொடுத்தேன். அவன் தேகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சிறிது மருந்துபோட்டு அவன் இழுத்துச் செல்லப்பட்டான்1
நியாயவாதிகளின் அவமானம்
அமிருதசரசிலுள்ள நியாயவாதிகள் பிரத்தியேக கான்டேபில்களாக நியமிக்கப்பட்டுப் பலவித இழிசெயல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள். நல்ல வெயிலில் ஊர் சுற்றி வரும்படி செய்யப்பட்டார்கள். ஐரோப்பியர்களுடைய மேஜை நாற்காலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுபோகும்படி செய்யப்பட்டார்கள். கீழ்த்தர ஐரோப்பிய உத்தியோகதர்களால் பலவிதமான வசை மொழிகளால் அலங்கரிக்கப்பட்டார்கள். சில சமயங்களில் நியாய வாதிகள் அனைவரும் ஒரு வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இரண்டுபேர் சவுக்கடி படுவதைக் கவனிக்கும்படி வற்புறுத்தப்பட்டார்கள். ஒரு சமயம் ஓர் ஐரோப்பிய உத்தியோகதர் இங்ஙனம் வரிசையாக நிற்கப்பட்ட நியாயவாதிகளுள் ஒருவரைக் கண்டு உதைப்பதாகவும் பயமுறுத்தினார். இங்ஙனம் அமிருதசரசில் தொண்ணூற்றுமூன்று நியாயவாதிகள் அவமானப் படுத்தப் பட்டார்கள்.
போலீஸாரின் பெருந்தகைமை
இராணுவச் சட்டகாலத்தில் போலீஸார் செய்த அக்கிரமச் செயல்கள் எண்ணிறந்தன. தங்கள் வழக்குகள் சித்தி பெறுவதற்கு ஆதாரமாகப் பலரைப் பொய் சாட்சியங் கூறும்படி வற்புறுத்தினார்கள். அங்ஙனம் கூறாதவர்கள் பலவித கொடுமைச் செயல்களுக் குட்படுத்தப் பட்டார்கள். போலீஸார் விருப்பப் படி சாட்சியங் கூறாதவர் எத்தகைய துன்பத்திற்கு ஆளானார் என்பதற்கு குலாம் ஜிலானி என்பவர் காங்கிர சப் கமிட்டிமுன் கூறிய சாட்சியத்தை ஈண்டு எடுத்துக் காட்டு கிறோம். அவருடைய சாட்சியத்தின் சாராம்சமாவது:- . போலீ டேஷனுக்குச் சென்றதும் நான் என்ன குற்றஞ் செய்தேனென்றும் எதற்காக அரெடு செய்யப்பட்டேன். என்றும் அப்துல்லா என்ற சப் இன்பெக்டரைக் கேட்டேன். அவர் என்னைத் திட்டினார். பகவான் சிங்க் என்ற ஹெட் கான்டேபிள் என் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தார். ஏப்ரல் மாதம் பதினாறாந் தேதி முதல் நான்கு நாட்கள் இரவும் பகலும் போலீகாப்பிலேயே இருந்தேன். நான்காவது நாள் மாலை ஒரு பிராமண கான்டேபில் நேஷனல் பாங்குக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பலர் அரெடு செய்யப்பட்டிருந்தனர். அங்குச் சென்றதும் இன்பெக்டர் அப்துல்லா என்னை விடுதலைசெய்துவிட்டதாகவும் ஆனால் பணக்காரர்களையும் செல்வாக்குடையவர்களையும் அரெடு செய்துதர வேண்டுமென்றும் கூறினார். பிறகு நான் வீட்டுக்குச் செல்ல உத்தரவு கொடுக்கப்பட்டேன். மூன்றாவது நாள் மறுபடியும் அரெடு செய்யப்பட்டு ஜவஹரிலால் என்னும் இன்பெக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். ஜவஹரிலால் என்னைக் காப்பில் வைக்கும்படி உத்தரவு செய்தார். இங்ஙனம் ஐந்து நாளிருந்தேன். பிறகு சௌதரி அலிகோஹரின் முயற்சியின்பேரில் விடுதலை செய்யப்பட்டேன். நான் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றவன்றே பகவான் சிங்க் என்ற ஹெட்கான்டேபில் வேறு சில கான்டேபில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். அங்கு என்னைக் காணாது கோபமுற்று என் மனைவியைக் கண்டபடி திட்டிவிட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் போது இவர்களை நடுவழியில் கண்டேன். அங்கேயே என்னை அரெடு செய்து போலீ டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது மாலைக்காலம். போலீ டேஷனிலிருந்த ஜவஹரிலால் என்னைக் கண்டதும் திட்டிவிட்டு, காப்பில் வைக்கும்படி உத்தரவுசெய்து மறுநாள் காலை பார்ப்பதாகக் கூறினார்.
இங்ஙனம் இரண்டு நாட்கள் கழிந்தன. நான் காப்பிலேயே இருந்தேன். மூன்றாவது நாள் நான் ஜவஹரிலால் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து கில்வாலி போலீ லைன் என்னுமிடத்திற்கு அழைத்துச்செல்லப் பட்டேன். ஜவஹரிலால் ஒரு பீடன் வண்டியில் வந்தார். இரண்டு கான்டேபில்கள் என்னை அழைத்துக்கொண்டு மற்றொரு வண்டியில் வந்தார்கள். அவர்கள் என்னிடத்தில் ஒன்றும் சொல்லாமல் அடிக்க ஆரம்பித்தார்கள். நான் சிறுநீர் விடும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். பிறகு என் நிஜாரை அவிழ்த்து அப்புறம் வைக்கச் சொல்லிவிட்டு செருப்பாலும் பிரம்பாலும் நன்றாக அடித்தார்கள். நான் அடி பொறுக்கமாட்டாமல், அழுதுகொண்டு எதை விரும்பி என்னை இங்ஙனம் அடிக்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்டேன். உடனே என்னைத் திட்டினார்கள்; அடித்தார்கள். சரியாகப் போய்விடும்படி சொன்னார்கள். என்னை என்ன கேட்கிறீர்கள் என்று நான் அவர்களைக் கேட்டேன். கேசரி சிங்கும் சப் இன்பெக்டரும் என் தாடியைப் பிடித்து இழுத்து விட்டு, சைபுதீன் கிச்சலு, பஷீர் டாக்டர் சத்திய பாலர் பத்ருல் இலாம் முதலியவர்களின் பேரைச் சொல்லவேண்டுமென்றும் அப்பொழுது என்னை விடுதலை செய்துவிடுவதாகவும் கூறினார்கள். அவர்களில் ஒருவரையும் எனக்கு நேராகத் தெரியாதென்றும், ஆனால் சிலரைக் கண்ணால் பார்த்திருக்கிறேனென்றும் சொன்னேன். உடனே அவர்கள் மூர்ச்சையாகும் வரை என்னை அடித்தார்கள். சிறிது நேரம் கழித்து நான் மூர்ச்சை தெளிந்ததும் போலீ டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அன்று மாலை நான்கு மணிவரை இருந்தேன். மறுபடியும் கேசரி சிங்கில் வாலிகேட்டுக்கு என்னை அழைத்துப்போனார், சிறிது நேரங்கழித்து அங்கு ஜவஹரிலால் என்னும் இன்பெக்டரும் முன் என்னைத் துன்புறுத்திய சப் இன்பெக்டரும் வந்து சேர்ந்தார்கள். இவர்களுடன் இராமநவமி தினத்தன்று துருக்கி கான்டேபில்கள் மாதிரி வேஷம் போடப்பட்ட சிறுவர்களும் வந்தார்கள். இவர்களுக்குப் பணம் உதவினதுண்டா இல்லையா என்று என்னைக் கேட்டார்கள். நான் இல்லையென்று கூறினேன். உடனே கேசரிசிங் என்னும் கான்டேபில் என்னைத் தனியான ஓர் அறைக்கு அழைத்துச்சென்று பலமாக அடித்தார். இதனுடன் நில்லாமல் என்னுடைய மலத் துவாரத்தில் ஒரு சிறுதடியைச் செருகினார். இது செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஹாஜி ஷம் சுத்தீன், கலிக்ஷா, மஹம்மதுசூபி, ஹபீ குலாம் ஹாஸன், குலாம் ஹாஸன் பீர் ஆமத்ஷா முதலியோர் பிரசன்னமாயிருந்தனர். இந்தத் தொந்தரவைப் பொறுக்கமுடியாமல் நான் மூர்ச்சையாகி விட்டேன். நான் மூர்ச்சை தெளிந்ததும் இத் துன்பத்தினின்று என்னை விடுதலை செய்யவேண்டுமென்றும் அவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வதாகவும் போலீசாரிடத்தில் கூறினேன். அப்பொழுது இராத்திரி காலமானதால், உணவு உட்கொள்ள வீட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டு மென்று கேட்டேன். உடனே இரண்டு கான்டேபில்களுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். நான் போஜனம் முடித்துக்கொண்டதும் மறுபடியும் போலீ டேஷனுக்குச் சென்றேன் சென்றதும், சர்தார் சுக்காசிங் என்பவருடைய அறைக்கு வெளிப்புறத்தே உட்கார வைக்கப் பட்டேன். எனக்கு ஒரு போலீகாரர் காவல் புரிந்துகொண்டிருந்தார். நான் மகம் மதுமசூதிக்குச் சென்று கடவுளைத் தொழுவதற்கு உத்தரவு கொடுக்கப் பட்டேன். இரவு டவுன்ஹாலிலுள்ள தாழ்வாரத்தில் இரண்டு கட்டில்களுக் கிடையேயுள்ள நெருக்கடியான இடத்தில் வெறுந்தரையில் படுத் திருந்தேன். மறுநாள் காலை முன்னாள் சம்பாஷணை ஞாபகமிருக்கிறதா வென்று கேட்கப் பட்டேன். நான் ஞாபகமிருக்கிறதென்றும் ஆனால் பொய் டேட்மெண்டு கொடுக்க முடியாதென்றும் கூறினேன். உடனே சப் இன்பெக்டர் என் மீது வசைமாரி பொழிந்தார். சிறிது நேரங்கழித்து என்னை மறுபடியும் போலீ டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். கேசரிங் என்னிடத்தில் வந்து நீ ஏழை மனிதன். தூக்கு தண்டனைக்குட் படாமலிருக்க வேண்டுமென்பது என் விருப்பம் என்று மிக்க அமைதியுடன் கூறினார். இன்னும் அவர் நாங்கள் சொல்கிறபடி நீ சொல்லவேண்டும். நாங்கள் சொல்கிறபடி நீ ஒரு டேட்மெண்டு எழுதித்தரவேண்டும். அப்படிச் செய்தால் நீ விடுதலை செய்யப்படுவாய். வேண்டுமானால் உன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகங்கள் பண்ணித்தருகிறேன். நீ மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கிறாய். நாங்கள் சொல்கிற படி செய்தால், உன் ஆயுள்முழுவதும் கௌரவத்துடனும் மதிப்புடனும் வாழலாம். இல்லா விட்டால் தூக்குதண்டனைக்குள்ளாவாய் என்று கூறினார். போலீஸார் அக்காலத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பது எனக்குத் தெரியும். அடிக்கடி தூக்கிலிடப் படுவதாகப் பயமுறுத்தப்பட்டதால் நான் அவர்களுடைய விருப்பத்துக் கிணங்குவதாகக் கூறினேன். என்னைத் தூக்கிலிட வேண்டுமென்று போலீஸார் விரும்பினாராயின் ஒரு துண்டு மலின் துணியை என்வீட்டில் கொண்டுவைத்து விட்டால் போதுமானது என்று அவர் சொன்னார். கடைசியில் என்னை ஒரு சாட்சியாகப் போடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. சௌதரி பீர்பக்ஷ் என்பவர் சைபுதீன் கிச்சிலு, டாக்டர் சத்திய பாலர், டாக்டர் பஷீர் அஹமத், கோதுமால், பத்ருல் இலாம் முதலியவர்களைப்பற்றி நாங்கள் என்ன கூறுகிறோமோ அங்ஙனமே ஒரு டேட்மெண்டு கொடுத்துவிடு என்று கூறினார். உடனே நான் போலீ டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கேயிருந்து ஜவஹரிலால் சுக்கா சிங்குடன் சிறிது நேரம் இரகசியமாகப் பேசி விட்டு, சரியாகத் திரும்பிவிட்டீர்கள்! என்று என்னைக் கேட்டுக்கொண்டே ஒரு காகிதத்தை எடுத்து அதில் எழுத ஆரம்பித்தார். தாம் எழுதுவதெல்லாம் என்னால் உறுதிசெய்யப் பட்டவை என்ற எண்ணத்துடன் அவர் இரண்டு மூன்று காகிதம் வரை ஏப்ரல் மாதத்து ஏழு எட்டு தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றியும் மார்ச்சு மாதம் முப்பதாந்தேதி, ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி ஆகிய இந்நாட்களில் நடைபெற்ற விரதக் கொண்டாட்டத்தைப் பற்றியும் எழுதிக்கொண்டார். சிறுநேரம் கழித்து கறுப்புச்சட்டை யணிந்துகொண்டு மூக்குக் கண்ணாடியுடன் கூடிய ஒருவர் அந்த அறைக்குள் நுழைந்து ஓர் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் இந்தக் காகிதத் துண்டுகளைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு என்னைப்பார்த்து இவைகள் உன்னுடைய டெட்மெண்டுகளா வென்று கேட்டார். இல்லை ஐயா என்று நான் பதில் கூறினேன். இவை உன்னுடைய டேட்மெண்டுகளா? என்று மறுபடியும் என்னைக் கேட்டார். ஆம் என்று பதில் கூறினேன். உடனே அவர் நீ முன்னரே டெட்மெண்டு கொடுத்துவிட்டு இப்பொழுது அதை மறைக்கப் பார்க்கிறாய். உடனே நான் உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன் என்று கடிந்து கூறினார். அதுவரை அவர் இன்னாரென்று எனக்குத் தெரியாது. அச்சமயத்தில் ஜவஹரிலால் அங்கு வந்தார். கேசரி சிங் என்னிடத்தில், இந்தக் கனவான் மாஜிட்ரேட் என்றும் நான் முன்னர்க் கூறிய டேட் மெண்டையே இவரிடத்தில் கூறவேண்டும் என்றும் கூறினார். நான் சிறிது தயங்கினேன். ஜவஹரிலால் என்னைத் திட்ட ஆரம்பித்தார்; மாஜிட் ரேட்டும் என்னைத் திட்டினார். அதுவுமன்றி கிச்சுலுவைப் போன்றவர் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் கூறினார். டேட்மெண்டில் கையெழுத்திட நான் மறுத்ததும் ஜவஹரிலால் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போய் டேட்மெண்டில் கையெழுத்திடா விட்டால் பாய்ங்க் கொலை வழக்கில் என்னைச் சம்பந்தப் படுத்துவதாகக் கூறினார். நான் பயந்து அவருடைய விருப்பத்துக் கிணங்கினேன். போலீ உத்தியோகதர்கள் சந்தோஷப்பட்டு என்னிடத்தில் மிகவும் அன்புடன் நடந்து கொண்டார்கள். டேட்மெண்டில் நான் கையெழுத்திட்டதும் என் பிள்ளை களிடத்திருந்து உணவு உட்கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டேன். சிறிது நேரங்கழித்து, போலீ டேஷனில் தினந்தோறும் ஆஜராயிருக்க வேண்டு மென்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டேன். பிறகு நான் வீட்டிற்குச் சென்றேன்.
டெட்மெண்டில் நான் கையெழுத்து செய்தானதும் மிடர் குலாம்யசீன் என்னும் பாரிடரைப் பார்த்து போலீஸார் என்னை எவ்வாறு தொந்தரவு செய்தார்கள். என்பதைச் சொல்லி என் காயங்களையும் காண்பித்தேன். தினந்தோறும் போலீ டேஷனில் ஆஜராயிருக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் நான் விடுவிக்கப்பட இரண்டொருநாள் கழித்து கௌரவ மாஜிட்ரேட்டான மியான் பிரோடின் என்பவரிடத்திலும் மியான் கமருத்தீன் என்பவரிடத்திலும் மியான்ஷமசுத்தீன் கான்சாயப் என்பவரிடத்திலும் என் கொடுமைகளைச் சொல்லிக் கொண்டேன். இவர்களில் ஒருவரேனும் எனக்கு உதவி செய்யக்கூடிய நிலையி லில்லை. இப்பொழுது கூட நான்பட்ட துன்பத்தை நினைத்துக்கொண்டால், என்னுடைய சத்துருவும் அதுபோல் அனுபவிக்கக் கூடாதென்று நான் கடவுளை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். நான் டெட்மெண்டு கொடுத்த மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு அதிக நோயுடன் படுத்துக் கொண்டேன். வாயிலிருந்து இரத்தம் வந்துகொண்டிருந்தது. என் உடம்பெல்லாம் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது. எனக்கு ஜுரம் மிக அதிகமாயிருந்தது. சில சமயங்களில் நான் மயக்கத்திலும் கிடந்தேன். என் உடம்பு சௌக்கியமான பிறகு நான் பிழைக்கமாட்டேனென்றே என்னுடைய பந்துக்கள் நினைத்திருந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் ஜுரத்துடன் படுத்துக் கொண்டிருந்த இருபது நாட்களில் பதினைந்து நாட்கள் நான் மரணை யற்றும் கிடந்தேன். இருபது நாட்கள் கழித்து சிறிது சௌக்கியத்தை அடைந்து இரண்டு பேருடைய உதவியைக்கொண்டு கட்டிலின்பேரில் உட்காரும் சக்திபெற்றேன். ஒரு நாள் ஒரு போலீ கான்டேபில் வந்து ஜவஹரிலால் என்னை அழைத்துக் கொண்டு வரும்படி சொன்னார் என்று கூறினார். என்னால் ஒன்றும் பதில்கூற முடியவில்லை. என் நிலைமையைப் பார்த்து மனமிரங்கி அவரே சென்றுவிட்டார். இரண்டு நாள் கழித்து ஒரு போலீ கான்டேபில் என்னைப் போலீ டேஷனுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்தார். நான் நடக்க முடியாத நிலைமையி லிருந்தமையால் அவர் என்னை விட்டு விட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு கான்டேபில் என் வீட்டுக்கு வந்து என்பெயரை உரக்கக் கூப்பிட்டார். என் வீட்டிலுள்ளவர் நான் அதிக உடம்புடன் படுத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். அவர் ஒரு ததவேஜில் என் கையெழுத்தை வாங்கிச் செல்வதற்காகவே வந்ததாகக் கூறினார். அவர் என்னிருப்பிடத்திற்கு வந்து அந்தத் ததவேஜில் என் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்றார். அதில் இன்னும் பலருடன் லாகூருக்குச் செல்லவேண்டி ஜூன் மாதம் பதினோராந்தேதி போலீ டேஷனில் பிரசன்ன மாயிருக்க வேண்டுமென்று காணப்பட்டிருந்தது. மறுநாள் அதே கான்டேபில், லாகூருக்கு மே மாதம் பத்தாந்தேதியே எல்லாரும் செல்ல வேண்டியிருப்பதால் மேமாதம் ஒன்பதாந்தேதி மாலை நான்கு மணிக்குப் போலீ டேஷனில் ஆஜராகி யிருக்கவேண்டுமென்று குறிப்புகள் உள்ள ஒரு பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதில் நான் கையெழுத்திட்டேன். ஒன்பதாந்தேதி பிற்பகல் பதினோரு வயதுள்ள குலாம் ஷுசேன் என்னும் மகனுடன் போலீ டேஷனுக்குச் சென்று அங்குள்ள ஒரு தோட்டத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். நான்கு மணிக்கு என் மகனுடைய உதவியைக்கொண்டு போலீ டேஷனுக்குச் சென்றேன். சென்றதும் அமீர்கான் என்னும் சப் இன்பெக்டருக்குச் சலாம் செய்தேன்; அவர், நான் அதிக நேரங் கழித்து வந்ததாகவும் மற்றவர்கள் ரெயில்வே டேஷனுக்குச் போய்விட்டார்களென்றும் கூறி என்னைத் திட்ட வாரம்பித்தார். உடனே நான் என் சொந்தச் செலவில் சத்த வண்டி வைத்துக்கொண்டு டேஷனுக்குச் சென்று அங்குள்ள சப் இன்பெக்டருக்குச் சலாம் செய்தேன். நான் என் பணத்தைக்கொண்டு டிக்கட்டை வாங்கவேண்டி யிருந்தது. ஆனால் என் மகன் எனக்காக டிக்கட்டு வாங்கிக்கொண்டு வருவதற்குள் ரெயில் புறப்பட்டுப் போய்விட்டது.
போலீஸாருடைய கட்டளைப்படி சாட்சியங் கொடுக்க நான் மேமாதம் பத்தாந்தேதி லாகூருக்குச் சென்றேன். லாகூருக்குச் சென்றதும் ஜவஹரிலால் என்னிடம்வந்து அன்று கோர்ட்டில் என்னை ஆஜர்ப் படுத்தப் போவதில்லை யென்றும் அங்கேயே இருக்கும் படிக்கும் கூறினார். மறுநாள் விடுமுறை யாதலின், மே மாதம் பன்னிரண்டாந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டியவன். ஆனால் நான் அதிக நோயுடன் இருந்தமையாலும், லாகூரிலிருந்து என்னால் வரமுடியாத காரியமான தாலும் அமிருதசரசிற்குச் சென்று பன்னிரண்டாந்தேதி மறுபடியும் லாகூரில் ஆஜராவதற்கு அநுமதி கேட்டேன். உடனே சி. ஐ. டி. போலீசாரிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள், நான் முன் கூறிய டேட்மெண்டு ஞாபகமிருக்கிறதாவென்று என்னைக் கேட்டனர். ஆம் என்று கூறினேன். பன்னிரண்டாந்தேதி தவறாமல் லாகூர் கோர்ட்டில் ஆஜராவதாக என்னிடத்தில் ஓர் உறுதிமொழி பெற்றுக் கொண்டு எனக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. பிறகு மே மாதம் பன்னிரண்டாந் தேதி முதல் பதினெட்டாந் தேதிவரை கோர்ட்டில் தவறாமல் ஆஜராயிருந்தேன். என் டேட்மெண்டை மனப்பாடம் செய்துகொள்ளும்படி அப்பொழுது நான் வற்புறுத்தப்பட்டேன். இன்று நீ கோர்டில் ஆஜர்படுத்தப்படுவாய் என்று ஒவ்வொரு நாளும் எனக்குக் கூறி வரப்பட்டது. மே மாதம் பதினெட்டாந் தேதி ஜவஹரிலாலும் சுக்காசிங்கும் என்னிடத்தில் வந்து உன்னுடைய உறுதிமொழி ஞாபக மிருக்கிறதா? வேறொன்றும் கோர்டில் சொல்லாத வாறு பார்த்துக்கொல்! என்று என்னிடத்தில் கூறினார்கள். நான் சரியென்று கூறினேன். சிறிது நேரம் கழித்து என் பெயர் கூப்பிடப்பட்டது. நான் நியாயாதிபதிகளின்முன் ஆஜர்படுத்தப்பட்டேன். சத்தியம் செய்துவிட்டு, உண்மையான செய்திகளைச் சொல்ல வாரம்பித்தேன். ஆனால் நான் சொன்னவற்றை நியாயாதிபதிகள் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் என்னைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். நான் எதைச் சொன்னபோதிலும் அவர்கள் காதுகொடுத்துக் கேட்கவுமில்லை; குறித்துக்கொள்ளவுமில்லை. என் பேச்சை முடித்ததும், அவர்கள் என்னை வெளியே போகும் படியும் மறுநாள் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்கள். கோர்ட் அறையிலிருந்து நான் வெளியே வந்ததும் ஜவஹரிலாலும் சுக்காசிங்கும், ஒரு கான்டேபிலைக் கூப்பிட்டு என்னைப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள். உடனே அந்த கான்டேபில் என்னைப் பிடிக்க ஓடிவந்தார். அவர் என்னைப் பிடிக்க வருவதைக் கண்டு நான் ஓடினேன். ஆனால் அவர் என்னைப் பிடித்துக்கொண்டு ஜவஹரிலால் சுக்காசிங் இவர்கள்முன் நிறுத்தினார். இவ்விருவர்களும் என்னைப் பலவிதமாகத் திட்டி என் உயிரை வாங்கிவிடுவதாகக் கூறினார்கள். நான் மௌன மாயிருந்தேன். உடனே ஜவஹரிலால் என் கன்னத்தில் ஓர் அறை கொடுத்து மறுநாள் சரியாகப் பார்த்துக் கொள்ளப்படுவேனென்று சொல்லி என்னைப் போகும்படி கூறினார். முன்னாள் உத்தரவுப்படி மறு நாள் கோர்ட்டில் ஆஜரானேன். நான் கோர்ட்டில் ஆஜராவதற்குமுன், முதலில் யாரிடத்தில் கட்டாயத்தின்பேரில் டேட்மெண்டு கொடுத்தேனோ அவரைக் கண்டேன். அவருக்குப் பின்னால் நிற்கும்படி நான் கட்டளையிடப்பட்டேன். சிறிது நேரங்கழித்து, நான் ஐந்நூறு ரூபாய் ஜாமீனாகக் கட்ட வேண்டு மென்று உத்தரவு செய்து போலீஸாரிடத்தில் என்னை ஒப்புவிக்கும்படி செய்தார்கள். உடனே போலீஸார் என்னைப் போலீ டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் மிக முரட்டுத்தனமாக நடத்தினார்கள்; கண்டபடி திட்டினார்கள்; பலவிதமாகப் பயமுறுத்தினார்கள். நான் ஜாமின் தொகையைக் கட்டிவிட்டு அமிருதசரசிற்குத் திரும்பினேன். அதுமுதல் போலீஸார் என்னைச் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவருடைய தொந்தரவினின்றும் நான் நீங்கவில்லை.
இதனால் இராணுவச்சட்ட காலத்தில் போலீ அமுல் எங்ஙனம் நடைபெற்று வந்ததென்பது நன்கு புலப்படும்
இலஞ்சம் வாங்கினரோ?
இராணுவச்சட்ட காலத்தில் போலீஸார் இலஞ்சம் வாங்கினர் என்ற ஒரு வதந்தி பலமாகப் பரவியது. இது சம்பந்தமாக அரசாங்க அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:- இராணுவச்சட்ட அமுல் காலத்தில் போலீஸாரும் சோல்ஜர்களும் இலஞ்சம் வாங்கினர் என்று சொல்லப் படுகிறது. போலீஸார் விஷயத்தில் இஃது இல்லவே இல்லை யென்று சொல்லமுடியாது. விசாரணைகள் யாவும் ஐரோப்பிய உத்தியோசதர்கள் வசமே இருந்தன. ஆனால் விசாரணை காலத்திலும் இலஞ்சம் வாங்குவதுமில்லை; வாங்கப் படுவதுமில்லை. அரெடு செய்யப்படாமல் தடுக்கவே இலஞ்சம் கொடுக்கப்படுவது வழக்கம். இதனாலேயே, இராணுவச் சட்ட காலத்திற்குள்ளேயே கூடிய சீக்கிரத்தில் விசாரணை செய்து முடிவு செய்துவிட அவசியம் ஏற்பட்டது. இலஞ்சம் வாங்கினதாக இரண்டு பேரே குற்றஞ் சாட்டப்பட்டனர். ஒரு மாஜி சிப்பாய் போலீ ஊழியத்தில் சேர்ந்துகொண்டார். இவர் முதலில் தண்டிக்கப் பட்டார். ஆனால் தகுந்த ருஜுவில்லாமல் ப்ரோவட் மார்ஷல் என்னும் உத்தியோகதர் இவரை விடுதலை செய்துவிட்டார். ஆயினும் அந்த சிப்பாய் போலீ ஊழியத்தினின்றும் விடுதலை செய்யப்பட்டார். ஒரு குற்றவாளியின் சகோதரரிடத்திலிருந்து, ஒரு ஹெட் கான்டேபில் ஐந்நூறு ரூபாய் அக்குற்றவாளியின் விடுதலைக்காக வாங்கினதாகச் சொல்லப்பட்டது. இதையறிந்ததும் அந்த ஹெட் கான்டேபில் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டார்.
தண்டனைகள்
இராணுவச் சட்டக் கமிஷன்களால் மொத்தம் இருநூற்றுப் பதினெட்டு பேர் விசாரிக்கப்பட்டனர். இவரில் ஐம்பத்தோரு பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். நாற்பத்தாறுபேர் ஆயுள் பரியந்தம் தீவாந்திர வாசமும், இரண்டு பேருக்குப் பத்து வருஷக் கடுங்காவலும், எழுபத் தொன்பது பேருக்கு ஏழு வருஷங் கடுங்காவலும், பத்து பேருக்கு ஐந்து வருஷக் கடுங்காவலும், பதிமூன்று பேர் மூன்று வருஷக் கடுங்காவலும், பதினோரு பேர் குறைந்த காலத்தையும் தண்டனையாகப் பெற்றார்கள்.
இராணுவச் சட்டம் அமுலுக்கு வாராமுன், அதாவது மார்ச்சு மாதம் முப்பதாந் தேதி முதல். இராணுவச் சட்டம் அமுலுக்கு வந்த நாள் வரை நூற்று நாற்பத்து மூன்று பேர் சம்மரி கோட்டுகளால் தண்டிக்கப் பெற்றார்கள். இவர்களில் இருபத்து நான்கு பேர் இரண்டு வருஷக் கடுங்காவல் தண்டனையும் அறுபத்தொன்பது பேர் ஒரு வருஷமும் அதற்கு மேற்பட்ட காலக் கடுங்காவலும் ஏழு பேர் ஆறுமாதத் தண்டனையும் ஐந்து பேர் குறைந்த காலச் சிறைவாசமும் தண்டனையாகப் பெற்றார்கள்.
சவுக்கடி தண்டனை
சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படுவதற்கென்று பொது ஜனங்களுடைய பார்வையிலும் பொது இடத்திலும் ஒரு மேடை அமைக்கப்பட்டதென்றும் இது மிகவும் அநாகரிகமான முறை யென்றும் பலர் கூறிவந்தனர். இது சம்பந்தமாக அரசாங்க அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: இத்தகைய பொதுமேடை ஒன்று கோட்டைக்கருகில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இஃது உபயோகப்படுத்தப் படவில்லை. அமிருதசர நகரத்தின் பல பாகங்களில் பல முக்கோணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சம்மரி கோர்ட்டுகள் மூலமாக இருபத்தாறு பேரே சவுக்கடி தண்டனை பெற்றார்கள். பொது இடங்களில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது கீழ்க்கண்ட சமயங்களிலேயாம். மி ஹெர்வுட் எந்தத் தெருவில் தாக்கப்பட்டாரோ அந்தத் தெருவில் ஆறு பேர் பகிரங்கமாக இத்தண்டனைக்குள்ளானார். . . . . . சிடி போலீ டேஷனில் நான்கு பேரும், மூன்றுபேர் இராணுவ அதிகாரியின் தலைமை தானத் திலும் சவுக்கடி தண்டனை பெற்றனர். ஆனால் பின்னது பொது இடமாகக் கருதப்படக் கூடாது. மற்ற தண்டனைகள் யாவும் தனி இடங்களிலேயே நிறைவேற்றப்பட்டன. எனவே சவுக்கடி தண்டனை பகிரங்கமான இடங்களில் நிறைவேற்றப்பட்டன வென்பதை அரசாங்கத்தாரும் மறுக்கவில்லை.
இராணுவச் சட்ட உத்தரவுகள்
இராணுவச் சட்ட காலத்தில் அமிருதசரசில் இராணுவ உத்தியோக தராயிருந்த ஜெனரல் டையர் செய்த உத்தரவுகள் வருமாறு:
அமிருதசர ஜில்லாவில் இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றமையாலும்,
துருப்புகளுக்குத் தலைமை வகிக்கவும், மேற்படி ஜில்லாவில் இராணுவச் சட்ட அமுல் நடத்தவும் நான் நியமிக்கப்பட்டிருக் கின்றமை யாலும்,
சட்டம், அமைதி, ஒழுங்கு அவைகளுக்காக இராணுவத் தலைவர் விருப்பப்படி உத்தரவுகள் செய்வதே இராணுவச் சட்டத்தின் சாரமாதலாலும்,
இராணுவச் சட்டப்படி எனக்குள்ள அதிகாரங்களினால் நான் கீழ்க்கண்ட உத்தரவுகளைச் செய்கிறேன்.
1. இரவு பத்து மணிமுதல் மறுநாள் காலை ஐந்து மணிவரை, ஐரோப்பியர், என்றால் அல்லது என் உத்தரவு பெற்றவரால் கையெழுத்திடப்பட்ட ஒரு குறிப்புச்சீட்டைப் பெற்றவர் ஆகிய இவர்கள் தவிர, மற்றவர்கள் தங்கள் வீட்டைவிட்டு, அல்லது வீட்டெல்லையைவிட்டு அல்லது ஒரு கட்டிடத்தைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மேற்குறிப்பிட்டவாறு தடுக்கப்பட்ட நேரங்களில், மேற்கூறப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்கள் எந்தத் தெருவையும்அல்லது பாதையையும் உபயோகித்துக் கொள்ளக்கூடாது. இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர் அரெடு செய்யப்படுவார். அங்ஙனம் அரெடு செய்யப்படுவோர் எதிர்த்து நின்றாரேயானால் அவர் சுடப்படுவதற்குரியராவார்.
2. என்னுடைய அதிகாரத்தின் கீழிருக்கும் சோல்ஜர்களையும் போலீஸாரையும் காப்பாற்ற வேண்டி நான் பின்வருமாறு அறிவிக்கிறேன். மேற்கூறப்பட்டவர்மீது எவ்வித ஆயுதமாவது, வெடிகுண்டாவது உபயோகிக்கப்பட்டால், எந்த இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதோ அந்த இடத்தைச் சுற்றிலுமுள்ள சொத்துக்கள் யாவும் நாசம் செய்யப்படும். ஆகையால் இராஜபக்தியுள்ளவர் எவரும் தங்களுடைய இடத்தில், கெட்ட எண்ணங்கொண்ட கிளர்ச்சிக்காரரை விடாமல் இருப்பாராக.
3. இராணுவச் சட்ட காலத்தில், என்னுடைய எழுத்து மூலமான உத்தரவின்றி எவ்வித ஊர்வலமும், கூட்டமும், அல்லது பத்துபேருக்கு மேலடங்கிய கூட்டமும் நடைபெறக் கூடாதென்று நான் தடுக்கிறேன். என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் அத்தகைய கூட்டங்களாவது ஊர்வலமாவது நடைபெற்றால், அஃது எவ்வித எச்சரிக்கையுமின்றி ஆயுதம் முலமாகக் கலைக்கப்படும்.
4. தம் கடையைத் திறக்க விரும்புவோரிடத்திலாவது, தம் வியாபாரத்தை நடத்த உத்தேசிப்பவரிடத்திலாவது, அல்லது தம் வியாபார தலத்திற்குச் செல்லுவோரிடத்திலாவது எவரும் கொடுமைச் செயல் களைக் காட்டக்கூடாதென்று நான் தடுக்கிறேன். இந்த உத்தரவை மீறி நடக்கும் எவரும் உடனே கைது செய்யப்பட்டு, ஒரு சம்மரிகோர்ட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டு, வேண்டுமானால் சுடப்படுவார்.
5. ஐரோப்பியர்களுடன் பிரயாணம் செய்யும் வேலைக்காரரும், அரசாங்க ஊழியத்தில் இருக்கும் பிறரும், என்னாலாவது என் உத்தரவு பெற்றவராலாவது அநுமதிச் சீட்டு அளிக்கப் பெற்றவருக்கும், தவிர மற்றவருக்கு என் அதிகார எல்லைக்குள்ளிருக்கும் ரெயில்வே டேஷன்களில் மூன்றாவது அல்லது இண்டர்மீடியட் வகுப்பு டிக்கெட்டுகள் அளிக்கப்படக் கூடாதென்று நான் உத்தரவு செய்கிறேன்.
6. ஜனங்கள் தெரிந்து கொள்வதற்காகவும் என் அதிகார எல்லைக்குள் நல்லரசாட்சி நடைபெறுவதற்காகவும் நான் அவ்வப்பொழுது பகிரங்க இடங்களில் ஒட்டும் அறிக்கைகளைக் கெடுதியான எண்ணமுடைய எவரும் கிழித்துப் போடக்கூடாதென்று நான் நினைப்பதால் இராணுவச் சட்டத்தின்கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் யாவும், என்னால் தெரிந்தெடுக்கப்படும் சிலருடைய வீடுகளில் ஒட்டப்படும். இந்த அறிக்கைகள் சேதப்படாமல் எப்பொழுதும் பகிரங்கமாக வைத்திருப்பது அந்த வீட்டுக்காரருடைய வேலையாகும்.
ஆகையால் இந்த அறிக்கைகளைக் காப்பாற்றுவது வீட்டுச் சொந்தக்காரருடைய கடமையாகிவிட்டமையால், இந்த அறிக்கைகளைச் சரியாகக் காப்பாற்ற முடியாது போனாலும் அல்லது அவைகளைப் பகிரங்கப்படுத்தாமற் போனாலும் அவர்கள் கடுந்தண்டனைக் குள்ளாவார்கள்.
இங்ஙனமே இராஜத் துரோக சம்பந்தமானவோ அல்லது என்னால் அங்கீகரிக்கப்படாத வேறு விதமாகவோ அறிக்கைகள் எவருடைய வீட்டிலேனும் ஓட்டப்பட்டிருந்தால் அவ்வீட்டுச் சொந்தக்காரரையே நான் பொறுப்பாளியாக்குவேன்.
7. கொடுமைச் செயல்கள் நடைபெறாவண்ணம் தடுக்கவும், அமைதியுண்டாக்கவும், முக்கிய சோல்ஜர்களுக்கும் போலீஸாருக்கும் தீங்குண்டாகா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், இன்னும் என் அதிகார எல்லையிலுள்ள ஜனங்களைக் காப்பாற்ற வேண்டியிருப்பதாலும் நான் கீழ்க்கண்ட உத்தரவைச் செய்கிறேன்:-
இந்த உத்தரவுக்கப்புறம் எவரேனும் தடி என்று சொல்லப்பட்ட ஆயுதத்தை வைத்திருப்பாரேயானால், அங்ஙனம் வைத்திருப்பது சட்ட விரோதமென்று கருதப்படும்.
இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர்கள் கைது செய்யப்பட்டு சம்மரிகோர்ட்டுகளால் விசாரிக்கப்பட்டு இராணுவச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
8. கொடுமைச் செயல்கள் நடவா வண்ணம் தடுப்பதற்கும், என் அதிகார எல்லைக்குள் அமைதியை உண்டாக்கவும் இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று நினைப்பதால் நான் கீழ்க்கண்ட உத்தரவைச் செய்கிறேன்:- என் அதிகார எல்லைக்குள்ளிருக்கும் எந்த செப்பனிட்ட ரதாவிலேனும் ஒற்றைப் பாதையிலேனும் இரண்டுபேர் ஒன்றாக சேர்ந்து நடத்தல் கூடாது. இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர் இராணுவச் சட்டப்படி எனக்குள்ள பிரத்தியேக அதிகாரங்களினால் தண்டிக்கப்படுவர்.
9. என்னுடைய அதிகார எல்லைக்குள்ளிருக்கும் ஏறக்குறைய எல்லாக் கடைகளும் பிற வியாபார தலங்களும் அரசர் பெருமானுக்கு விரோதமாக மூடப்பட்டிருப்பதாலும்,
மேற்கூறப்பட்ட விரதக்கொண்டாட்டம் என்று சொல்லப்படும் கடைகள் மூடும் விஷயம் முடிவடைய வேண்டுமென்று நான் விரும்பு வதாலும்,
இராணுவச் சட்டத்தின்கீழ் எனக்குள்ள அதிகாரப்படி கீழ்க்கண்ட உத்தரவைச் செய்கிறேன்:-
இந்த உத்தரவுக்குப் பிறகு என் அதிகார எல்லைக்குள்ளிருக்கும் ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு வியாபார தலமும் வழக்கம்போல தன் வியாபாரத்தை நடத்த வேண்டும். இங்ஙனம் இரவு பத்து மணிக்கு மேலில்லாமல் வியாபாரத்தை நடத்தவேண்டும். விரதக் கொண்டாட்டத் திற்கு முன் வியாபாரம் எங்ஙனம் நடந்து வந்ததோ அங்ஙனம் நடைபெறவேண்டும்.
இதேமாதிரி ஒவ்வொரு தொழிலாளியும் தன் வழக்கமான தொழிலைச் செய்து வரவேண்டுமென்று நான் உத்தரவு செய்கிறேன்.
இந்த உத்தரவு தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்டால் அங்ஙனம் நிராகரிப்போர் இராணுவச் சட்டப்படி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள். மூடப்பட்டிருக்கும் கடைகள் ஆயுதபலத்தினால் திறக்கப்படும். இங்ஙனம் செய்வதனால் ஏற்படும் நஷ்டங்களுக்கு கடையின் சொந்தக்காரரோ, அல்லது கடையின் தற்கால பாத்தியக் காரரோ பொறுப்பாளியாவார்.
மற்றும் இந்த உத்தரவுக்கு எழுத்தால் மாத்திரமின்றி பொருளாலும் எல்லாரும் கீழ்ப்படிய வேண்டுமென்று நான் எச்சரிக்கை செய்கிறேன். அதாவது கடையைத் திறந்து வைத்துவிட்டு, சாமான்களை விற்க முடியா தென்று மறுப்பதும் அல்லது அதிகமான விலை கூறுவதும் இந்த உத்தரவை நிராகரித்தது போலவே எண்ணப்படும். அவ்வப்பொழுது சாமான்களின் விலை தகுந்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும்.
10. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையுடன் தவறான, பொய்யான வதந்திகளைச் சிலர் பரப்புவதாக எனக்குத் தெரிவதால்,
இராணுவச் சட்டத்தின்கீழ் எனக்குள்ள அதிகாரத்தின்படி, இராணுவ நிலைமையைப் பற்றியாவது அரசியல் நிலைமையைப்பற்றி யாவது யாரேனும் தவறான அல்லது பொய்யான அல்லது அதிகப்படுத்திய செய்திகளைப் பிரசுரம் செய்வாரானாலும் அல்லது எங்கும் பரப்பு வாரானாலும் அல்லது அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாரானாலும் அவர் இராணுவச் சட்டப்படி கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
11. இராஜ பக்தியுடையவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப் போருமானவர் இராணுவச் சட்ட அமுலைக் குறித்து அஞ்ச வேண்டுவ தில்லை. ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட உத்தரவுகளுக்கும், இன்னும் இராணுவச் சட்டத்தின்படி அவ்வப்பொழுது செய்யும் உத்தரவுகளுக்கும் கீழ்ப்படியாதவர் இராணுவச் சட்டத்தின்படி மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார் என்பதை நான் அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறேன்.
12. என் அதிகார எல்லைக்குள்ளிருக்கும் அநேகர், லைசென் பெற்றோ அல்லது வேறுவிதமாகவோ துப்பாக்கி முதலானவைகள் வைத்திருப்ப தாக எனக்குத் தெரிவதாலும்,
துருப்புகளுக்கும் போலீஸாருக்கும் ஆபத்துண்டாகாமலிருப்ப தற்கும், அமைதியின்மை அல்லது கொடுமைச் செயல்கள் இவைகளைத் தடுப்பதற்கும் மேற்கூறப்பட்ட ஆயுயதங்கள், அவைகளைச் சட்ட விரோதமாக உபயோகப்படுத்துவோர் கையில் இருக்கக் கூடாதென்பது என் விருப்பமாதலாலும்,
இராணுவச் சட்டத்தின்படி எனக்குள்ள அதிகாரத்தினால் நான் கீழ்க்கண்ட உத்தரவைச் செய்கிறேன்:-
மேற்கூறப்பட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டிருப்போர், என்னாலாவது, என் உத்தரவு பெற்றவராலாவது, மாஜிட்ரேட்டாலாவது, (சோல்ஜராலாவது), போலீஸாராலாவது அந்த ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்று உத்தரவு செய்யப்பட்டால் அங்ஙனமே ஆயுதங்களை வைத்துக் கொண்டிருப்போர் தம் ஆயுதங்களை என்னிடத்தில் நான் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஒப்பு வித்துவிடவேண்டும்.
இந்த உத்தரவுக்காக ஒவ்வொரு போலீ உத்தியோகதரும், இராணுவ உத்தியோகதரும், மாஜிட்ரேட்டும், சோல்ஜரும், போலீகாரரும் என் பொருட்டு உத்தரவு செய்யலாம் என்று இதனால் தெரிவிக்கிறேன்.
இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர் இராணுவச் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்பதையும் இதனால் எச்சரிக்கை செய்கிறேன்
13. இராணுவச் சட்டத்தின்படி எனக்குள்ள அதிகாரத்தினால் நான் கீழ்கண்டவாறு உத்தரவு செய்கிறேன்:-
அரசாங்கத்தார், ஐரோப்பியர் இவர்களுக்குச் சொந்தமல்லாத மற்றவருடைய பெடல் இருக்கும் துவிசக்ரவண்டிகள் யாவும் கோட்டையில் என்னால் நியமிக்கப்பட்ட உத்தியோகதரிடம் 1919 - ம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தேழாந்தேதி காலை ஒன்பது மணிக்குமேல் மாலை நான்கு மணிக்குள் ஒப்புவிக்கப்பட வேண்டும்.
எனவே என்னாலாவது, என் உத்தரவு பெற்றவராலாவது கையெழுத் திடப்பட்டு அநுமதிச் சீட்டின்றி எவரேனும் துவிசக்ர வண்டிகள் வைத்திருந்தால் அவர் இராணுவச் சட்டத்துக்கு விரோதமாக நடந்ததாக எண்ணப்படுவர்.
ஆனால், அரசாங்க உத்தியோகதர்களாவது அரசாங்க ஊழியர் களாவது வேலை நிமித்தமாக உபயோகப் படுத்தப்படும் துவிசக்ர வண்டிகள் இந்த உத்தரவினால் பாதிக்கப்படமாட்டார் என்பதையும் இதனால் தெரிவிக்கிறேன்.
என் அதிகாரத்துக்குள்ளிருக்கும் எல்லைக்கு சிடி என்று பெயர்.
(ஒப்பம்)
ஆர். இ. எச். டையர் சி. பி.
ப்ரிகேடியர் ஜெனரல்,
அமிருதசர எல்லை அதிகாரி.
தலைமை தானம்
ராம்பாக் அமிருதசர
25 ஏப்ரல் 1919.
லாகூர்
இனி லாகூரில் நடந்த குழப்பங்களைக் கவனிப்போம். ரௌலட் மசோதா தோன்றியது முதல் 1919 - ம் வருஷம் ஏப்ரல் மாதம் ஆறாந் தேதிவரை லாகூரில் நடந்த சம்பவங்களை அநுபந்தத்தில் காணலாம். ஆறாந்தேதி இந்தியாவெங்கணும் விரதங் கொண்டாடப்பட்டதைப் போல் லாகூரிலும் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான திரீகளும் குழந்தை களும் விரதத்தை அநுசரித்தார்கள். காலையில் நகரத்தார் அனைவரும் நதிக்குச் சென்று நாநம் செய்து ஊர்வலமாய்த் திரும்பி வந்தார்கள். ஏப்ரல் மாதம் நான்காந்தேதி முதல் எந்த ஊர்வலமும் செல்லக்கூடாதென்று போலீ அதிகாரி உத்தரவு செய்திருந்தபோதிலும் இந்த ஊர்வலத்தில் போலீஸார் தலையிடவேயில்லை. இந்த ஊர்வலமானது மால் என்னும் இடத்திற்குச் சென்றபோது அங்கே போலீஸாரால் தடுக்கப்பட்டது. லாலாதுனி சந்திரரும் டாக்டர் கோகுல சந்திரநாரங்கும் இவ்வூர் வலத்தைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஆறாந்தேதி விரதக் கொண்டாட்டம் லாகூரில் செவ்வனே நிறை வேறியதையறிந்த ஸர் மைக்கல் ஓட்வியர் திடுக்கிட்டார். பஞ்சாபில் விரதக் கொண்டாட்டமே நடைபெறாதென்று அவர் நம்பியிருந்தார். மேலும் தம் மாகாணம் இத்தகைய அரசியல் போராட்டத்தில் தலையிடா தென்றும் அவர் பலரிடத்தில் பெருமை பேசி வந்தார். கடைசியில் தமதிருப்பிடமாகிய லாகூரிலேயே விரதக் கொண்டாட்டம் நிறைவேறியதைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இத்தகைய விரதக் கொண்டாட்டம் நன்கு நிறைவேறியதற்குக் காரணமாயிருந்த தலைவர் களுக்குத் தக்க தண்டனை விதிக்கப்போவதாக அவர் கூறினாரென்று தெரிகிறது. ஆறாந்தேதியில், பிராட்லாஹாலில் ஒரு பெருங்கூட்டம் கூடியது. இதற்குப் பல்லாயிரம் ஜனங்கள் வந்திருந்தார்கள். இதற்கு முன் இத்தகைய கூட்டம் லாகூரில் நடைபெற்றதில்லை என்று சொல்லப் படுகிறது. இந்தக் கூட்டத்திற்கென்று சி. ஐ. டி. இலாகாவின் தலைவரையே ஸர் மைக்கல் ஓட்வியர் அனுப்பியதாகச் சொல்லப் படுகிறது. இக்கூட்டத்தில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்துப் பலர் உபந்நியாசம் புரிந்தனர். சட்ட வரம்பு மீறி ஒருவரும் பேசவில்லை. எனவே ஆறாந் தேதி மிக்க அமைதியுடன் கழிந்தது. 1 இங்ஙனமே ஏழாந்தேதியும் எட்டாந்தேதியும் சென்றன. ஒன்பதாந் தேதி இராமநவமி தினமாதலின் அன்று அமிருதசரசில் நடைபெற்றறது போல் இங்கும் ஹிந்து மகம்மதிய ஒற்றுமை கொண்டாடப்பட்டது. இராம நவமி ஊர்வலத்துடன் பல உத்தியோகதர்களும் வந்தார்கள். இவர்களைக் கண்டு ஜனங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள்.
இராமநவமி தினமும் மிக்க அமைதியுடன் கழிந்தது. இதுஸர் மைக்கல் ஓட்வியருக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இது நிற்க. டாக்டர் சத்திய பாலர் மஹாத்மா காந்தியை அமிரதசரசிற்கு சத்தியாகிரக இயக்கத்தைப் பற்றிப் போதிக்க வேண்டுமென்று வர வழைத்திருந்தார். டெல்லிக்கு வரும்படி சுவாமி சிரத்தாநந்தர் காந்தியடிகளை அழைத் திருந்தார். இவ்வேண்டுகோட்கிணங்கிய மஹாத்மா பம்பாயினின்றும் ஏப்ரல் மாதம் 8 ந்தேதி புறப்பட்டார். இச்செய்தி, ஸர் மைக்கெல் கொண்டிருந்த ஆச்சரியத்தையும் விசனத்தையும் அதிகப்படுத்தியது. காந்தியடிகள் பஞ்சாப் மாகாண எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று உத்தரவு செய்வதற்கு இந்திய அரசாங்கத்தாருடைய அநுமதியைக் கேட்டார். லார்டு செம்பர்டை தலைவராகக் கொண்ட இந்திய அரசாங்கத் தார் உடனே அநுமதி தந்தனர். எனவே காந்தியடிகள் பஞ்சாப் மாகாண எல்லைக்குள் வருமுன்னர், அரசாங்க உத்தரவை ஆதராவாகக் கொண்ட போலீஸாரால் தடுக்கப்பட்டனர். காந்தியடிகளார் அரசாங்கக் கட்டளைக்குத் தாம் இணங்கமுடியாதென்றும் தாம் பஞ்சாப் மாகாண எல்லைக்குள் செல்ல நிச்சயித்திருப்பதாகவும் கூறினார். எனவே அதிகாரிகள் அவரைத் தனியான ஒரு ரெயில் வண்டியில் ஏற்றி பம்பாய்க்கு அனுப்பிவிட்டனர். காந்தியடிகள் அரசாங்கத்தாரால் தடுக்கப் பட்டதும் இந்திய நாட்டினருக்கு பின்வரும் செய்தியை அனுப்பினர்.
எனது நாட்டினரே, பஞ்சாப் எல்லைக்குள் நான் பிரவேசிக்கக் கூடாதென்ற பஞ்சாப் அரசாங்க உத்தரவொன்றும், டில்லியில் பிரவேசிக்கக் கூடாதென்ற டில்லி அரசாங்க உத்தரவொன்றும், பம்பாயிலே இருக்கவேண்டுமென்ற இந்தியா அரசாங்கத்தாரின் உத்தர வொன்றும், எனக்குக் கிடைத்திருப்பதற்காக நான் சந்தோஷப்படுவது போலவே நீங்களும் சந்தோஷப்படுவீர்களென நம்புகிறேன். நான் விரதத்தை மேற்கொண்டுள்ளபடியால் உத்தரவுக்குக் கீழ்படிய முடியா தென்று உத்தரவைக் கொண்டுவந்த உத்தியோகதரிடம் தெரிவித்து விட்டேன். அதிகாரிகள் இன்னும் சற்று நேரத்திற்குள் என் தேசத்தைச் சிறைப்படுத்திக் கொண்டாலும் நான் சுயேச்சையுள்ள
வனாகவே இருப்பேன்.
ரௌலட் சட்டம் சட்ட புத்தகத்தின் பொலிவைக் கெடுத்துக் கொண்டிருக்கும்பொழுது நான் சுயேச்சையாயிருத்தல் எனக்குப் பிடிக்க வில்லை.
நான் பிடிக்கப்பட்டதனாலேயே சுயேச்சையுள்ளவனானேன். இப்பொழுது சத்தியாகிரஹ விரதத்திற்கிணங்க உங்கள் கடமையைச் செய்ய முன் வரவேண்டும்.அதன்படி நடப்பீர்களாயின் நீங்கள் அதனைக் காமதேனுவெனக் கொள்வீர்கள்.
நான் பிடிக்கப்பட்டதற்காக ஒருவரும் தங்கள் வெறுப்பைக் காட்ட மாட்டாரென நம்புகிறேன். நான் விரும்பியதையே இப்பொழுது பெற்றுள்ளேன். ரௌலட் சட்டமானது விலக்கப்படவேண்டும். நானாவது சிறைபுக வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உண்மையினின்றும் மயிரிழை விலகிச் சென்றாலும், ஆங்கிலேயர் இந்தியர் இருதிறத் தாருள்ளும் எவருக்கேனும் தீங்கிழைத்தாலும், சத்தியாகிரஹிகள் மேற் கொண்டுள்ள அரிய வேலைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடும்.
இப்பொழுது வேரூன்றியுள்ள ஹிந்து முலீம் ஒற்றுமை உண்மையாக நிலைத்திருக்குமென்று நான் நம்புகிறேன். நான் பத்திரிக்கைகளுக்குத் தெரிவிக்கும் செய்தியைக் கடைப்பிடித்து ஒழுகினாலொழிய அவ்வொற்றுமை உண்மையாக இராது. இவ்விஷயத்தில் மகமதியரைக் காட்டிலும் ஹிந்துக்களே மிக்க பொறுப்பை யுடையவர்களாவார்கள். ஏனெனில் மகமதியர் சிறு பாலராகவேயிருக்கின்றனர். ஹிந்துக்கள் தங்கள் நாட்டின் பெருமைக்கு ஏற்றவாறு தங்கள் கடமையைச் செய்து முடிப்பாரென நம்புகிறேன்.
சுதேசியத்தைப் பற்றியும் நான் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் சத்தியாகிரகத்தைப் பற்றிக் கொண்டுள்ள கொள்கைகள் முதிர முதிர, ஹிந்து முலீம் ஒற்றுமை சத்தியாகிரஹத்தில் ஒரு பாகமென்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
கடைகியாக, நாம் கஷ்டப்படுவதனாலேயே நமக்கு விமோசன முண்டாகுமேயன்றி, எவ்வளவுதான் தாராளமாக வழங்கப்படினும் இங்கிலாந்திலிருந்து வழங்கப்படும் சீர்திருத்தத்தினால் அஃது உண்டாகாதென்பது எனது துணிபு. ஆங்கிலேயர் ஒரு பெருஞ்சாதியார். அவர்களுடைய சம்பந்தம் ஏற்படுவதன் பயனாக, பலவீனமுள்ள சாதியாரும் பலம் பெறுகின்றனர். அவர்கள் தைரியமாயிருக்கும்போது அளவற்று அனுபவித்திருக்கிறார்கள். தைரியமுள்ளவர்களையும் கஷ்டத்தைத் தாங்கக் கூடியவர்களையுந்தான் அவர்கள் பராட்டுவார் களாகலின், நாம் தைரியத்தையும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அதிகமாக விருத்திசெய்து கொள்ளவேண்டும். அவர் களுடைய நாகரிகத்திற்கும் நம்முடைய நாகரிகத்திற்கும் மிக்க வித்தியாசமுளது. பிறர்க்குத் தீங்கு செய்யும் மிருக பலத்தை அவர்கள் தங்களுடைய கடைசி ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாகரிகத்தை நாம் அறிந்துகொண்டுள்ள வரையில், ஆத்மசக்தியையே நாம் பற்றுக்கோடாகக் கொள்ள வேண்டுமென்பதை உறுதியாக நம்பி யிருக்கிறேன். ஆத்ம சக்தியே சத்தியாகிரஹமெனப்படுவது. நாம் நம்முடைய பண்டை நாகரிக நெறி பிறழ்ந்து நடந்ததன் பயனாகவே இப்பொழுது அனுபவித்து வரும் கஷ்டங்களினின்றும் தப்பித்துக் கொள்ளச் சக்தியின்றி வருந்துகிறோம்.
ஹிந்துக்களும், மகமதியரும், சீக்கியரும், பார்ஸிகளும், கிறித வரும், யூதருமாகிய இந்தியாவிற் பிறந்த எல்லோரும் இந்தியாவைத் தம் நாடாகக் கொண்டுள்ள பிறரும் இத்தேசீய விரதங்களை அனுஷ்டிப்பார்களென்றும், திரீகளும் புருஷர்களைப்போல் அவைகளில் மிக்க ஊக்கங் காட்டுவார்களென்றும் நம்புகிறேன்.
இதனால் ஆன்ம சக்தியுடையார் வானம் துளங்கினும் மண் கலங்கினும் இடியே தலைமேல் வீழினும் மனங்கலங்கார் என்ற ஆன்றோர் மொழி உறுதிப்படும்.
காந்தியடிகளார் அரசாங்கத்தாரால் தடுக்கப்பட்ட செய்தி லாகூருக்கு பத்தாந்தேதியன்று மாலை கிடைத்தது. இச்செய்தியைக் கேட்டதும் ஜனங்கள் அதிக துன்பமடைந்தார்கள். கடைகள் யாவும் மூடப்பட்டன. ஜனங்களிற் சிலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மால் என்னுமிடத்தை நோக்கிச் சென்றனர். அநர்கள்ளி என்னுமிடத்தைச் சேர்ந்ததும் இக்கூட்டம் பெருகிவிட்டது. ஆனால் கூட்டத்திற் பெரும்பாலோர் பார்மன கிறிதுவ காலேஜின் அருகாமையிலேயே நின்றுவிட்டனர். ஆனால் சிறுவர்களும் மாணவர்களும் அடங்கிய சுமார் முந்நூறு அல்லது நானூறு பேர் அரசாங்க மாளிகைக்குச் சென்று மஹாத்மா காந்தியின்மீது பிறப்பித்த உத்தரவு நீக்கப்பட வேண்டுமென்று லெப்டினெண்டு கவர்னரைக் கேட்டுக் கொள்ளச் சென்றார்கள். பிறகு என்ன நடந்ததென்பதை ஸ்ரீமான் சந்தானம் என்னும் லாகூர் நியாயவாதி பின்வருமாறு கூறுகிறார்:- . . . . . நான் என் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சிறிது தூரத்தில் ஒரு பெருங் கூச்சலைக் கேட்டேன். அஃதென்ன வென்பதைக் கவனிக்க பேன் ரோட்டுக்கும் மாலுக்கும் சென்றேன். அங்கோரிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது சிறு பிள்ளைகளும் குழந்தைகளும் அடங்கிய கூட்டமொன்று மாலை நோக்கி வருவதைக் கண்டேன். இக்கூட்டத்திலுள்ளவர்கள் வெறுந்தலையராகவும் வெறுங்காலராகவும் வந்தனர். இக்கூட்டத்தில் வந்தவருக்கு இருபத்திரண்டு வயதுக்கு மேல் இருக்கும் என்று சொல்ல முடியாது. பதினான்கு பதினைந்து வயதுடைய பிள்ளைகள் பலர் இருந்தனர். மொத்தம் இக்கூட்டத்தில் நானூறு பேர் இருந்தனர் என்று சொல்லலாம். இவர்கள் ஒரு கறுப்புக் கொடியைப் பிடித்துக்கொண்டு மஹாத்மா காந்திக்கு ஜேய் ரௌலட் சட்டத்துக்கு ஜே ஜே! என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இக்கூட்டத்தை எவ்விதத் திலும் அபாயமான கூட்டமென்று சொல்ல முடியாது. கூட்டம் நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக வந்தபோது ஐரோப்பிய கனவான் களையும் மாதர்களையும் கொண்ட பல வண்டிகள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தன. இவ்வண்டிகளுக்குக் கூட்டம் வழிவிட்டு விலகியே நின்றது. இவர்களுக்கு எவ்விதமான தடையும் இக்கூட்டம் செய்ய வில்லை. பல ஐரோப்பிய கனவான்களும் மாதர்களும் அதே பாதையில் நடந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.
லாரன் உருவச்சிலையைத் தாண்டி சுமார் ஐம்பது கஜதூரம் இக்கூட்டம் சென்றது. அப்பொழுது ஆயுதங்கள் தரித்த போலீஸார் ஹைகோர்ட் மைதானம் வழியாக வருவதைக் கண்டேன். போலீஸார் இக்கூட்டத்திற்கு எதிரிடையாக வருவதைக் கண்டேன். போலீஸார் இக்கூட்டத்திற்கு எதிரிடையாக வந்து நிற்க முயன்று பக்கத்து வழிகளால் வேகமாக வந்து கொண்டிருந்தனர். இதற்குள் கூட்டமானது ஓட்வியர் சோல்ஜர் கிளப்புக்கு அருகாமையில் சென்றுவிட்டது. அங்கு வந்ததும் கூட்டம் நிறுத்தப்பட்டுச் சுடப்பட்டது. கூட்டமானது சோல்ஜர் கிளப்பை வந்து சேர்ந்த இரண்டு மூன்று நிமிஷத்திற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் கூட்டமானது பின்னடையத் தலைப்பட்டது. போலீஸார் காயமடைந்த இரண்டு மூன்று பேரை ஒரு மூங்கில் வண்டியில் போட்டுக் கொண்டு சென்றனர். அச்சமயத்தில் டாக்டர் பிரேம நாதரும் டாக்டர் அரோசாவும் அவ்வழியாகச் சென்று காயம்பட்டவர் களுக்குச் சிகிச்சை செய்வதாகக் கூறினார்கள். ஆனால் போலீ டிப்டி சூப்பிரண்டெண்டானவர். அவர்களுடைய உதவி வேண்டாமென்றும் காயம்பட்டவர்களை நேரே போலீ டாணாவுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்றே தாம் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். காயம்பட்டவர்கள் மிகவும் பரிதபிக்கத்தக்க நிலையில் இருந்தார்கள். அங்ஙனமிருந்தும் அவர்கள் போலீ டேஷனுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். இந்த இடத்தில் இறந்துபோனவர் ஒருவரென்றும் காயம் பட்டவர் ஒருவரென்றும் தெரிகின்றது. இங்ஙனம் கலைந்துபோன கூட்டத்தைப் போலீஸார் லோதாரி கேட்வரை தள்ளிக் கொண்டு சென்றனர். இந்த இடத்திலும் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் முயற்சி செய்தனர். பிறகு என்ன நடந்ததென்பதைப் பற்றி பண்டித ராம பஜதத்த சௌதாரி பின்வருமாறு கூறுகிறார்:- நான் லோதாரி கேட்டுக்குச் சென்றதும் அங்கு இருநூறு அல்லது முந்நூறு பேரடங்கிய ஒரு கூட்டத்தைக் கண்டேன். கலைந்து போகவேண்டுமென்று ஜனங்களை நோக்கி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது மிடர் பிராட்வேயும் சில போலீஸாரும் வந்தனர். மிடர் பிராட்வே வந்ததும் சுடும்படி நான் உத்தரவு பெற்றிருக்கிறேன் என்று கூறினார். நான் தலையிட்டு ஜனங்களைப் போகச் சொல்வதாகவும் அதற்காகச் சிறிது நேரம் கொடுக்க வேண்டு மென்றும் ஜனங்களை நோக்கிப் பேசுவதற்கு 3 குதிரை வேண்டுமென்றும் கேட்டேன். குதிரை மீதேறிக் கொண்டு உடனே நான் ஜனங்களை உபந்நியாசம் செய்ய வாரம்பித்தேன். பிறகு லாலா பகவான் தா பலகணி மீது நின்று பேசமுயன்றேன். ஆனால் அங்கு நின்றுபேச எனக்கு இடங்கொடுக்கப் படவில்லை. பிறகு மின்சார மேடை யின்று பேச ஆரம்பித்தேன். முதலில் ஜனங்கள் உட்காரச் சொன்னேன். அச்சமயத்தில் மொத்தம் ஆயிரம் ஜனங்களை இருப்பார்கள். ஜனங்கள் உட்கார்ந்த சமயத்தில் குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன.
உடனே நான் மிடர் ப்ராட்வேயிடம் சென்று ஏன் இக்காரியத்தைச் செய்கிறீர்களென்று கேட்டுப் பிறகு நீங்கள் ஆகாயத்தை நோக்கிச் சுட்டமையால், ஜனங்களை அப்புறப்படுத்துவதற்கு அது சுலபமாயிருக்கும் என்று கூறினேன். அவர் தாம் ஆகாயத்தில் சுடவில்லையென்றும் தம் மீது ஏதோஓர் அடிபட்ட தென்றும் அதற்காகச் சிறிது உயர நோக்கிச் சுட்டதாகவும் கூறினார். நான் காயம்பட்ட இடத்தைக் காண்பிக்கும்படி அவரைக் கேட்டேன். அவர் தம் மணிக்கட்டைக் காண்பித்தார். ஆனால் அங்குக் காயம்பட்ட அடையாளம் ஒன்றுமே இல்லை. அற்பகாயம் தமக்குண்டானதாக அவர் கூறினார். துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாமென்று அவரிடத்தில் நான் வற்புறுத்திக் கூறியபோது, அவர் மிடர் பைசன் வருகிறார்; அவர் வருவதற்குள் நீங்கள் கூட்டத்தைக் கலைத்துவிட வேண்டும். அப்படி ஜனங்கள் கலையா விட்டால் மிடர் பைசன் வந்தவுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம் என்று கூறினார். நான் திரும்பிக் கூட்டத்தினிடையே வந்து ஜனங்களை உட்காரச் சொல்லி, அமைதியாக வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறிக்கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து கூட்டம் கலையாவிட்டால் சுடப்போவதாக மிடர் பைசன் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று என்னிடம் கூறினார். உடனே நான் மிடர் பைசனிடம் ஓடி இன்னும் சிறிது நேரம் கொடுக்க வேண்டுமென்று மன்றாடினேன். அவர் இரண்டு நிமிஷநேரம் கொடுத்தார். உடனே நான் கூட்டத்திடையே சென்று மிடர் பைசனுடைய உத்தரவைத் தெரிவித்து ஜனங்களை அமைதியாகச் செல்லும்படி சொல்லிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. பலர் முதுகில் காயமடைந்தனர். இந்த இடத்தில் இறந்தவர் மூவரென்றும் காயமடைந்தவர் பன்னிருவரென்றும் அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.1 பத்தாந்தேதி இரவு நகரமெங்கும் அமைதி குடிகொண்டுவிட்டது.
அதிகாரிகள் மறுப்பு
பதினோராந் தேதி காலை சூரியன் உதயமாயினான். மாலை இறந்து போனவர்களையும் காயம்பட்டடவர்களையும் அவர்கள் உறவினர்கள் வசம் ஒப்புவிக்க முடியாதென்று அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இதனால் ஜனங்களுக்கு அதிக அதிருப்தி உண்டாயிற்று. ஆதலின், பதினோராந் தேதியன்றும் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. காயம் பட்டவர்களையும் இறந்துபோனவர் களையும் திருப்பிக்கொடுத்து விடும்படி ஜனப்பிரதிநிதிகள் பன்முறை அதிகாரிகளிடம் மன்றாடினார்கள். ஆனால் பயன் ஒன்றும் விளையவில்லை. ஜனங்களுடைய மனதைச் சாந்தப்படுத்தாமல், கடைகளையெல்லாம் திறக்க அதிகாரிகள் பிரயத்தனப்பட்டார்கள். அதிகாரிகள் இறந்தவர்களையும் காயம் பட்டவர்களையும் திருப்பிக்கொடாமற் போனபோதிலும், கடைகளைத் திறக்கும்படி தலைவர்கள் ஜனங்களிடம் சென்று சொன்னார்கள். அதனாலும் பயன் ஒன்றும் விளையவில்லை. கடைகளையெல்லாம் திறக்க வேண்டுமென்று முயற்சி செய்ய பாட்ஷை மசூதியில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தினால் ஒன்றும் நன்மை உண்டாகவில்லை. பிறகு ஜனங்களுக்கு நன்றாக மனதில் பதியும்படி சொல்வதற்கென்று இரண்டாம்முறை பாட்ஷை மசூதியில் கூட்டம் கூட்டப்போவதாகவும் அப்பொழுது கூட்டம் நடைபெறுமிடத்தில் இராணுவப் பாதுகாப்புக் கூடாதென்றும் பண்டித ராமபஜகத்தர் டிப்டி கமிஷனரான மிடர் பைசனைக் கேட்டுக்கொண்டார். 2 அங்ஙனமே பாட்ஷை மசூதியில் ஒரு பெரிய கூட்டம் கூட்டபட்டது. அங்கிருந்த ஜனங்கள் அதிக அதிருப்தியடைந்திருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. பண்டித ராமபஜதத்தர் ஒருவருடைய உபந்நியாசமே அங்கு நன்றாகக் கேட்கப்பட்டது. எந்த விதமான முடிவுமின்றிக் கூட்டம் கலைந்துபோய் விட்டது. கூட்டத்திலிருந்து ஜனங்கள் சென்று கொண்டிருக்கும்போது இராணுவக்காரர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்தக் கூட்டத்திலே சௌதரி அலிகௌஹர் என்னும் ஒரு சி.ஐ.டி. இன்பெக்டர் நன்கு தாக்கப்பட்டார். இவர் தம் தலைப்பாகையை விட்டோடிப் போய்விட்டார். இவருடைய தலைப்பாகை பிறகு மசூதியில் கொளுத்தப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு இராணுவக்காரரால் இருபது குண்டுகள் பிரயோகிக்கப் பட்டனவென்றும் இதன் பலனாக ஒரு மாணவன் கொல்லப்பட்டானென்றும். . . . இருபத்தெட்டு பேர் காயம்பட்டா ரென்றும் சொல்லப்படுகின்றன. காயம்பட்டவரில் ஒருவர் சில காலங்கழித்து இறந்து போய்விட்டார். இந்த இடத்தில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் ஜனங்களுக் குண்டான அதிருப்தி சொல்லிமுடியாது. அதிகாரிகள் அடக்கு முறையைக் கையாள ஆரம்பித்துவிட்டார்கள்.
கைது செய்யப்பட்டார்கள்
ஏப்ரல் மாதம் பதினான்காந்தேதி திங்கட் கிழமை லாலா ஹரி கிருஷ்ணலால், ராமபஜதத்தர், சௌதரி, லாலா தூனி சந்திரர் ஆகிய இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பதினைந்தாந் தேதி செவ்வாய்க் கிழமை இராணுவச் சட்டம் லாகூரில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. பதினேழாந்தேதி வியாழக்கிழமை டிரிபூன் பத்திரிக்கை ஆசிரியரான பாபு காளிநாத்ராயும் பிரதாப் பத்திரிக்கையின் ஆசிரியரும் நிருவாகதரும் பெரிய அறிஞருமான டாக்டர் மனோகர லால் உள்பட இருபத்தேழு பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் மாதம் இருபதாந் தேதி வெளியான ஓர் அரசாங்க அறிக்கை சமீப குழப்பத்தில் சம்பந்தப்பட்ட சுமார் அறுபது பிரபல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறுகிறது. மே மாதம் ஆறாந்தேதி பாரிடர்களான டாக்டர் கோகுல சந்திர நாரங், க்வாஜாபிரோல் தீனரும், சர்தார் ஹபிபுல்லாவும், தர்மதால் சூரி என்ற பாரிடரும் கைது செய்யப்
பட்டார்கள்.
எனவே இராணுவச் சட்டம் 1919 - ம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினைந்தாந் தேதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. கல்னல் பிராங்க் ஜான்ஸன் இராணுவ அதிகாரியாயிருந்தார். இராணுவச் சட்ட காலத்தில் இங்கு நடந்த சம்பவங்களை விரித்துக் கூறுதல் முடியாத காரியம். சிலவற்றையே ஈண்டுக் குறிக்கிறோம். இராணுவச் சட்ட காலத்தில் கல்னல் ஜான்ஸனால் விடுக்கப்பட்ட உத்தரவுகளின் சாராம்சம் வருமாறு:-
லாகூரில் லைசென் பெற்றோ அல்லது லைசென் வாங்குவதிலிருந்து விலக்கப்பட்டோ ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் தேச நலத்தை உத்தேசித்தும் கலவரங்கள் நடவாதிருக்கும் பொருட்டும் கலவரங்களை அடக்குவதில் போலீசாருக்கும் இராணுவக்காரர்களுக்கும், ஆபத்துகள் வராதிருக்கவும், ஆயுதங்கள் வேறு ஒருவரின் கையிற் போகாமலும், திருடப்படாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். தவிரவும் இராணுவச் சட்டப்படி இராணுவ உத்தியோகதரோ, மாஜிட்ரேட்டோ, போலீஸாரோ, அல்லது எனது உத்தரவு பெற்ற சோல் ஜர்களோ ஆயுதங்களைக் கேட்டால் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் என்னிடத்திலோ, அல்லது என்னால் குறிக்கப்பட்டவிடத்திலோ கொடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறியவர்கள் இராணுவச் சட்டப்படி நடத்தப்படுவார்கள்.
லாகூரில் என் தலைமையிலுள்ள ஜனங்களுக்குத் தெரிவதற்காகவும் அவர்களின் நல்லரசாட்சிக்காகவும் ஒட்டப்பட்ட விளம்பரங்களையும் உத்தரவுகளையும் கெட்ட எண்ணமுள்ள சிலர் கிழித்தெறிந்தோ கெடுத்தோ விட்டனர்.
இனிமேல் அத்தகைய உத்தரவுகளெல்லாம், நான் செய்யும் சில குறிப்பிட்ட வீட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்படும். அவற்றை அவர்கள் நான் குறிப்பிடும் இடத்தில் ஒட்டி, அவை கேடுறாதபடி பாதுகாத்து நன்றாக வைத்திருக்க வேண்டும்.
எனவே, அத்தகைய உத்தரவுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் கடமை வீட்டுச் சொந்தக்காரர்களைச் சேர்ந்தது. எனது உத்தரவுகளைச் சரியானபடி பாதுகாவாமலும் கிரமமாக ஜனங்களுக்குத் தெரியும் படி வையாமலும் இருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
அதுபோலவே, என் உத்தரவைப் பெறாத, இராஜத் துவேஷமான அல்லது வேறுவிதமான விளம்பரங்கள், அறிக்கைகள் முதலியன ஒட்டப்பட்டுள்ள இடங்களின் சொந்தக்காரர்கள் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாளியாகக் கருதித் தண்டிக்கப்படுவார்கள்.
லாகூர் பவல்பூர் ரதாவிலுள்ள சநாதன தர்மக் கல்லூரி (ஆடல்) விடுதியில் எனது உத்தரவின்மீது ஒட்டப்பட்டிருந்த ஓர் இராணுவச் சட்ட விளம்பரம், எனது இராணுவச் சட்ட எட்டாவது விளம்பரத்தை மீறிக் கிழிக்கப் பட்டோ, கெடுக்கப்பட்டோ இருக்கிறது.
எனவே இராணுவச் சட்டத்தினால் எனக்குள்ள அதிகாரத்தின்படி, மேற்படி விடுதியில் வசிக்கும் சகல ஆண்பிள்ளைகளையும் உடனே கைது செய்து, அவர்கள் விசாரணையைப் பற்றியோ, அவர்களை என்ன செய்வது என்பது பற்றியோ எனது பிந்திய உத்தரவுகளை எதிர்பார்த்து அவர்களை லாகூர்க் கோட்டையில் பந்தோபதில் வைக்கும்படி உத்தரவு செய்கிறேன்.
எனது அதிகாரத்தின் கீழுள்ள பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கடையும், காரியதலமும், இராஜாங்கத்துக்கு விரோதமாக அடைக்கப்பட்டிருப்பதாலும், அவ்வாறு அடைத்திருப்பது மேற்படி பிரதேசத்தின் ஒழுங்குக்கும் ஆளுகைக்கும் பாதகமாயிருப்பதாலும் அவ்வித ஹார்ட்டல் (கடையடைப்பு) முற்றிலும் தீரவேண்டுமென்று நான் கருதுவதாலும் நான் பின்வருமாறு உத்தரவு செய்கிறேன்:-
நாளைய தினம், (ஏப்ரல் மாதம் 16 ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் ஒவ்வொரு கடையையும் காரியதலத்தையும் திறந்து வியாபாரமும் வேலையும் தொடங்கவேண்டும். அதற்குப் பின்னர், வழக்கம்போல இரவு 8 மணி வரை வியாபாரமும் வேலையும் நடத்த வேண்டும்.
அதுபோலவே ஒவ்வொருதொழிலாளியும் வேலைக்காரனும் நாளை காலை 10 மணிமுதல் வேலை தொடங்கி வழக்கம்போலத் தனது வேலையையோ வியாபாரத்தையோ நடத்தவேண்டும்.
கிரமமான காரணமின்றி, இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவச் சட்டப்படி விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள். திறக்கப் படாத கடைகள் அதிகாரிகளால் திறக்கப்பட்டு வைக்கப்படும். அவ்வாறு செய்வதால் ஏற்படும் நஷ்டங்களை கடைக்காரர்களும் சொந்தக்காரர் களுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த உத்தரவுக்குச் சொல்லில் மட்டுமின்றிப் பொருளிலும் கீழ்ப்படிய வேண்டுமென்று நான் எச்சரிக்கை செய்கிறேன். அதாவது கடையைத் திறந்து வைத்துக்கொண்டு சரக்குகளை விற்க மறுப்பது அல்லது அதிகமான விலை கூறுவது, இவை எனது உத்தரவை மீறி நடந்ததாகும்.
பொய்ச் சமாசாரங்களையும் தவறான விஷயங்களையும் பரப்பு வதாலும் விஷயங்களை அதிகப்படுத்திச் சொல்வதாலும் தற்காலமுள்ள குழப்பமான நிலைமை வளர்ந்து வருகிறதென்று எனக்குத் தெரிய வருகிறது.
எனவே இராணுவம் அல்லது இராஜாங்க சம்பந்தமாகப் பொய்யான தவறான அல்லது அதிகப்படுத்திய சமாசாரங்களைப் பிரசுரிக்கும், பரப்பும் அல்லது சொல்லும் எந்த மனிதரும் கைது செய்யப்பட்டு, இராணுவச் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
லாகூர் டி. ஏ. வி. காலேஜ், கிங் எட்வர்ட் மெடிகல் காலெஜ், தயாளசிங் காலேஜ் ஆகிய இவைகளிலுள்ள சில மாணவர்கள், இராஜாங்கத்துக்கு விரோதமாக இராஜத் துவேஷத்தைப் பரப்பும் முயற்சியில் சம்பந்தப் பட்டிருக்கிறார்களென்று நம்பக் காரணம் இருக்கிறது. எனவே, நீதியையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொருட்டு அத்தகைய மாணவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் தகுதியென்று கருதிப் பின்வருமாறு உத்தரவு செய்கிறேன்:-
எனது அதிகார எல்லையில் இப்பொழுதுள்ள மேற்படி காலேஜ் மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் தந்தியாபீசி லுள்ள இராணுவ அதிகாரியிடம் அடியிற் குறிப்பிட்ட நேரங்களில் ஆஜராகி, தலைமை உபாத்தியாயர், அல்லது அவருக்காக என்னால் அங்கீகரிக்கப்பட்ட வேறு அதிகாரி, அவர்களை அழைக்கும் வரையும், மேற்கூறிய இராணுவ அதிகாரி உத்தரவு கொடுக்கும் வரையும் அங்கேயே இருக்கவேண்டும்.
காலை 7 மணி,
முற்பகல் 11 மணி,
பிற்பகல் 3 மணி,
இரவு 7 மணி,
ஏப்ரல் மாதம் 19 ந்தேதி முற்பகல் 11 மணிக்கு முதலில் ஆஜராக வேண்டும்.
எனது அதிகாரப் பிரதேசத்திலுள்ள துருப்புகளின் சரியான போக்கு வரவுகளுக்கு வசதிகள் செய்ய வேண்டியது அவசியமாயிருப்பதால் நான் பின்வருமாறு உத்தரவு செய்கிறேன்.
1. இன்று முதல், எனது அதிகார எல்லையைவிட்டு எனது உத்தர வில்லாமல் ஒரு மோட்டார் வண்டியும் காலால் நடத்தும் ஸைக்கில் களும் வெளியே போகக்கூடாது.
2. நான் அவர்களுக்கு நேராக நோட்டீ வாயிலாகவோ, ஒரு பகுதியாருக்குப் பொதுவான நோட்டீ வாயிலாகவோ அல்லது வேறு வாயிலாகவோ, உத்தரவு செய்யும்பொழுது, மோட்டார் வண்டி, ஸைக்கில் வண்டி இவற்றின் சொந்தக்காரர்கள் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அதிகாரியிடம் அவற்றை ஒப்புவித்துவிட வேண்டும். அதுபற்றியே விளம்பரங்கள் மற்ற இடங்களில் சிவில் அண்ட் மில்டெரி கெஜட்டிலும் பிரசுரிக்கப்படும்.
3. எனது அதிகாரப் பிரதேசத்திலுள்ள சர்க்காருக்கு அல்லது ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானவற்றைத் தவிர மற்ற மோட்டார் சைக்கில்களெல்லாம் ஏப்ரல் மாதம் 21 - ந்தேதி திங்கட் கிழமை காலை 8 மணி முதல், பிற்பகல் 1 மணிக்குள் மாக்லீட் ரதாவிலுள்ள சினிமாவில் என்னிடம் அல்லது என்னால் நியமிக்கப்பட்ட அதிகாரி
களிடம் ஒப்புவிக்கப்படவேண்டும். அதற்குப்பின், மேற்கண்ட விலக்கப் பட்டவர்கள், அல்லது விலக்குச் சீட்டுள்ளவர்களைத் தவிர யாரேனும் மோட்டார் சைக்கில் வைத்திருந்தால் அஃது இராணுவச்சட்டத்தை மீறி நடந்ததாகும்.
4. லாகூர், தயாநந்தர் ஆரிய சமாஜவைதிக சநாதன தர்ம காலேஜ், தயாளசிங் காலேஜ் இவற்றின் மாணவர்களிடமுள்ள சகல சைக்கில்களும் ஏப்ரல் மாதம் 21 - ந்தேதி திங்கட் கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் பிராட்லா ஹாலில் என்னால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியிடம் ஒப்புவிக்கப்படவேண்டும். அதற்குப் பின், மேற்படி காலெஜுகளின் மாணாக்கர் யாராவது ஸைக்கிலில் ஏறிச் செல்லுதலும், ஸைக்கிலை வைத்திருத்தலும் இராணுவச் சட்டத்தை மீறி நடந்ததாகும்.
யாராவது இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தவறினாலும், உடனே உபயோகப்படுத்த முடியாத படி ஸைக்கிலை (கெட்ட எண்ணத்துடன்) பழுதாய்ச் செய்தாலும், இராணுவச் சட்டப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமென்று எச்சரிக்கை செய்கிறேன்.
இராணுவச் சட்ட எல்லைக்குள், பாதைக்குப் பக்கமாயுள்ள ஒற்றையடிப் பாதையில் இரண்டுபேர் ஒன்றாகச் சேர்ந்து சேல்லுதல் கூடாதென்று நான் உத்தரவு செய்கிறேன்.
எந்த காலேஜுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஹாடலுக்கும், ஹோட்டலுக்கும், தனியான கட்டிடத்திற்கும் என்னால் உத்தரவு கொடுக்கப்பட்ட உத்தியோகதர் சென்று வேண்டியளவு மின்சார விளக்குகளையும் மின்சார விசிறிகளையும் எடுத்துக் கொண்டு வரலாம். ஆனால் ஒரு திரீயினால் வழக்கமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்
அறையில் உள்ள விசிறியையோ விளக்கையோ எடுத்துச் செல்ல இந்த உத்தரவு இடங்கொடுக்க வில்லை.
மாணவர்கள் அடைந்த தண்டனைகள்
கல்னல் ஜான்சன் லாகூர் மாணவர்களிடத்து மிகக் கருணையுடன் நடந்து கொண்டார். இவர் செய்த காரியம் நியாயமா என்பதை இவர் ஹண்டர் கமிட்டி முன் கூறிய சாட்சியத்தினால் நேயர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். நாம் அதிகமாகக் கூற வேண்டுவதில்லை. இராணுவச் சட்ட காலத்தில் கல்னல் ஜான்ஸன் ஆட்சியில் கஷ்டப்பட்ட மாணவர்களின் தொகையும் அவர்கள் வாசித்த கல்லூரிகள் பெயர்களும் எத்தகைய தண்டனையை அவர்கள் பெற்றார்கள் என்பதும் கீழ்க்காணப்படும் ஒரு குறிப்பால் நன்கு புலனாகும்:-
ஐரோப்பியரின் மனப்பான்மை
இராணுவச் சட்டகாலத்தில் ஐரோப்பியர் எத்தகைய மனநிலை கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுக்கிறோம். லாலா லால் சந்த் என்பவர் காங்கிர சப் கமிட்டி முன் பின்வருமாறு கூறினார்:- இராணுவச் சட்டம் அமுலுக்கு வந்த பத்து பதினைந்து நாட்களுக்கப்புறம் நான் என் கடையில் உட்கார்ந்திருக்கும்போது இரண்டு ஐரோப்பிய திரீகள் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் மலின் துணிகள் வேண்டுமென்று கேட்டார்கள். அவர்கள் தங்கள் வண்டியில் உட்கார்ந்திருந்தார்கள். நான் என் கடையினுட் சென்று இரண்டு மூன்று விதமான மலின் துணிகளைக் கொண்டுவந்து காண்பித்தேன். ஆனால் அவர்கள் இவைகளில் எதனையும் விரும்பவில்லை. வேறுவிதமான துணிகள் கேட்டார்கள். பிறகு என் கடையிலிருக்கும் எல்லா மலின் துணிகளையும் கொண்டு காண்பித்தேன். அப்பொழுதும் அவர்கள் திருப்தியடையவில்லை. ஆனால் என்னிடத்தில் இல்லாத ஒரு மலின் துணி வேண்டுமென்று கேட்டார்கள். அதை விற்று விட்டதாகவும் கடைக்குள் வந்து எல்லாத் துணிகளையும் பார்க்கலாம் என்றும் நான் கூறினேன். ஆயினும் அவர்கள் கேட்டது அங்கு இல்லை. இதற்குள் காப்டின் புல்டன் அங்கு வந்து என் கடைக்குள் நுழைந்தார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு திரீகளில் ஒருவர் காப்டின் புல்டனின் மனைவி என்று எனக்குத் தெரியவந்தது. அவர் என் கடை முழுவதையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டார்கள். பிறகு காப்டின் புல்டனிடம் அவர் மனைவியார் தாம் விரும்பிய துணி என் கடைக்குள் இருக்கிறதென்றும், ஆனால் எனக்கு ஓர் அடி கொடுத்தால் நான் கொடுப்பேன் என்றும் இங்கிலீஷில் கூறினார். உடனே காப்டின் புல்டன் தம் சவுக்கால் என்னை அடிக்க ஆரம்பித்தார். இங்ஙனம் அடித்து விட்டு அவர்கள் வெளியே போய்விட்டார்கள். இதனால் நாம் அறியக்கிடப்பதென்ன?
வழக்குகள் எங்ஙனம் நடைபெற்றன?
இராணுவச்சட்டத்தின் கீழ் ஏற்பட்ட நீதி தலங்களில் வழக்குகள் நடத்தப்பட்ட முறையைப் பற்றி கூறவேண்டியதேயில்லை. போலீஸாருக்குச் சாதகமான சாட்சியங்கள் மாத்திரம் கேட்கப்படும். குற்றவாளிகள் தங்கள் கட்சிவாதத்தை எடுத்துச் சொல்ல முடியா மலிருப்பதற்கு என்னென்ன தடைகள் உண்டோ அவைகள் யாவும் செய்யப்பட்டனவென்று கூறலாம்.
சிறைச்சாலையில் வைக்கப்பட்டவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாயிருந்த போதிலும் மிகக் கேவலமாகவே நடத்தபட்டு வந்தார்கள். அவர்கள்பட்ட கஷ்டங்களையெல்லாம் கோவை செய்து ஒரு தனி நூலாக யாரேனும் ஒருவர் எழுதினால் அவருக்குத் தமிழுலகம் பெரிதும் நன்றி பாராட்டும்.
குஜரன்வாலா
ஆரம்பக்கிளர்ச்சி
லாகூருக்குச் சுமார் நாற்பது மைல் தூரத்திலிருக்கும் குஜரன்வாலா என்பது மஹாராஜா ரஞ்சிட்சிங்கின் பிறப்பிடமாகும். இந்நகரமும் இராணுவச் சட்டத்திற்கு இரையாய் நின்றது. 1919 - ம் வருஷம் மார்ச்சு மாதம் முப்பதாந்தேதி இங்கு விரதம் கொண்டாடப்படவில்லை. ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி எங்கும் நடைபெற்றதுபோல் இங்கும் விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. பிறகு ஏப்ரல் மாதம் பன்னிரண்டாந்தேதி வரையில் அமைதியே குடி கொண்டிருந்தது. பன்னிரண்டாந் தேதியன்று மஹாத்மா காந்தி பிடிக்கப்பட்ட செய்தியும் டாக்டர் சத்தியபாலர் டாக்டர் கிச்சலு ஆகிய இவர்கள் பிரஷ்டம் செய்யப்பட்ட செய்தியும் குஜரன்வாலாவுக்கு எட்டின. எனவே ஜனங்கள் அதிருப்தியடைந்தார்கள். ஆதலின் ஏப்ரல் மாதம் பதிமூன்றாந்தேதியும் பதினான்காந்தேதியும் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. பதின்மூன்றாந்தேதி வைசாக தினமாதலினாலும் அன்று முதல் சில நாட்கள் ஓய்வானமையாலும் வெளிக் கிராமங்களிலிருந்து ஜனங்கள் குஜரன்வாலாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
குழப்பமும் கன்றுக்குட்டியும்
பதினான்காந்தேதி காலை ரெயில்வே டேஷனுக்கு அருகாமையிலுள்ள ஒரு வாராவதியில் செத்த கன்றுக்குட்டி ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறதென்று ஒரு வதந்தி குஜரன்வாலாவுக்குள் பரவியது. செத்த கன்றுக்குட்டியைத் தொங்கவிட்டது யாருடைய செயலென்பது தெரியவில்லை. ஹிந்துக்களுக்கும் மகம்மதியர்களுக்கும் வேற்றுமையுண்டு பண்ணவேண்டுமென்றே போலீஸார் இங்ஙனம் செய்தனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இஃது எவருடைய வேலையென்பது நிச்சய மாகத் தெரியவில்லை. இதனைக் காண ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ரெயில்வே டேஷனுக்குச் சென்றார்கள். அப்பொழுது ரெயில்வே டேஷனுக்கு வந்திருந்த ஒரு ரெயில் வண்டிமீது சிலர் கல்லெறிந்தனர். எனவே அவ்வண்டி அப்புறம் செல்லாமல் நின்று போயிற்று. பிறகு ஜனங்கள் குருகுல வாராவதிக்கு நெருப்பு வைத்தனர். இதனைச் சில தலைவர்கள் பின்னர் அணைத்தார்கள். நெருப்பெரியும் இடத்தி லிருந்த போலீ சூப்பிரண்டெண்டெண்ட் நெருப்பையவிப்பது தமது கடமையல்ல வென்றும் சொத்துக்கள் நாசமாகாமலிருக்கும் படி பார்த்துக்கொள்வதே தமது வேலையென்றும் கூறினதாகத் தெரியவருகிறது. பிறகு இக்கூட்டமானது டேஷனுக்கு மற்றொரு புறத்திலிருப்பதான கச்சிவாராவதியை நோக்கிச் சென்றது. இங்கு ஜனங்களை நோக்கிப் போலீஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இவைகளைச் சகியாதவர்
களாய் ஜனங்கள் சிறிது நேரங்கழித்து மாதா கோயில், தபாலாபீ, தாசீல்தாரின் உத்தியோக சாலை, ஜில்லாகோர்ட், புதிய ரெயில்வே டேஷன் முதலிய இடங்களை அங்கியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்து விட்டார்கள். இந்த இடங்கள் பாழ்படுத்தப்பட்ட பொழுது போலீஸார் சாவதானமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரென்றும், கூட்டத்தைக் கலைக்கவாவது, மேற்கூறப்பட்ட இடங்கள் சேதப் படாம லிருக்கவாவது எவ்வித முயற்சியும் செய்யவில்லையென்று சொல்லப் படுவதாகவும் 1 இன்னும் போலீஸாரே ஜனங்களைக் கொடுமைச் செயல் களைச் செய்யத் தூண்டியதாகவும்2 சொல்லப்படுகின்றன.
ஆகாய விமானங்கள்
இந்தச்சம்பவங்கள் நடைபெற்றதும் எங்கும் அமைதி குடிகொண்டுவிட்டது. ஆனால் குஜரன்வாலா டிப்டி கமிஷனரான கல்னல் ஓப்ரையன், குழப்பங்களை அடக்கும் பொருட்டுத் தமக்கு உதவி வேண்டுமென்றும் இந்த நெருக்கடியான சமயத்தில் தாம் ஏதேனும் வரம்பு மீறிய செயல் களைச் செய்த போதிலும் அவைகள் நியாயமாகக் கருதப்பட வேண்டுமென்றும் லாகூருக்கு டெலிபோன் செய்தார். இவர் கேட்ட வண்ணம் உதவி செய்ய லாகூரிலிருந்து ஆகாய விமானங்கள் வந்தன. இந்த ஆகாய விமானங்கள் வந்து என்ன செய்தன என்பதை அரசாங்க அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:- மாலை மூன்றடித்து பத்து நிமிஷத்திற்கு முதல் ஆகாயவிமானம் வந்து சேர்ந்தது. இந்த விமானம் வந்து சேரும் போதும் ரெயில்வே டேஷனும் அதன்கண்ணிருக்கும் சாமான் சாலையும் மாதா கோயிலும் பற்றி எரிந்து கொண்டிருந்தன. அதிகமான சேதம் உண்டாகாதவாறு போலீஸார் மிக்க சுறுசுறுப் பாயிருந்தனர்.
திருவிளையாடல்கள்
போலீஸார் திரும்பிச் சென்றதும், ஜனங்கள் கூட்டமாகக் கூடி மறுபடியும் கொடுமைச் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கலானார்கள். 1 ஆகாய விமானங்களில் ஒன்றே வெடிகுண்டுகளை எறிந்தது. முதற் குண்டு மூன்றடித்து இருபது நிமிஷத்திற்குப் போடப்பட்டது. குஜரன்வாலாவுக்குப் புறம்பாயுள்ள ஒரு கிராமத்திலிருந்த ஒரு பெரிய (?) கூட்டத்தாரை நோக்கி இரண்டு வெடிகுண்டுகள் போடப்பட்டன. இக்கூட்டத்தார் குஜரன்வாலாவுக்கு வந்து கொண்டாவது இருக்கிறார்கள் அல்லது அதனின்று போய்க் கொண்டாவது இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடனும் இவர்கள் கலகக்காரர்கள் என்ற எண்ணத்துடனும் வெடிகுண்டுகள் எறியப்பட்டன என்பதில் ஐயமில்லை. ஒரு குண்டு வீட்டுக்கூரையின் மேல் விழுந்தது. ஆனால் அது வெடிக்கவில்லை. மற்றொன்று மேற்கூறப்பட்ட கூட்டத்திடையே விழுந்தது. இதனால் ஒரு திரீயும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டார்கள். இரண்டு பேர் காயமடைந்தனர். இக் கூட்டத்திடையே மெஷின் பீரங்கியிலிருந்து 50 குண்டுகள் பிரயோகிக்ப்பட்டன. சிறிது நேரங்கழித்து இந்த இடத்திற்குத் தெற்கே சுமார் ஒரு மைல் தூரத்தில் மற்றொரு கூட்டம் காணப்பட்டு அதன்மீது ஒரு வெடிகுண்டு பிரயோகிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குண்டானது வறண்ட குட்டையில் விழவே வெடிக்கவில்லை. எனவே, இக்கூட்டத்தை நோக்கி மெஷின் பீரங்கியிலிருந்து இருபத்தைந்து குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆனால் ஒரு வருக்கும் சேதம் உண்டாகவில்லை.
பிறகு மூன்றடித்து முப்பத்தைந்து நிமிஷத்திற்கு கால்ஸா ஹைகூல், அதனைச் சேர்ந்த போர்டிங் ஹெள இவைகளுக்கருகாமையிலிருந்த ஒரு கூட்டத்தை இந்த ஆகாய விமான உத்தியோகதர் தாக்கினார். ஒரு வெடிகுண்டு எறியப்பட்டது. மெஷின் பீரங்கியிலிருந்து முப்பது குண்டு பிரயோகிக்கப்பட்டன. இதனால் ஒரு மாணவனுக்குக் குண்டினால் காயம்பட்டது. மற்றொருவனுக்கும் காய முண்டாயது. வேறொரு மாணவன் பிரமை கொண்டுவிட்டான். மூன்றடித்து நாற்பது நிமிஷத்திற்கு நகரத்திலிருக்கும் ஒரு மசூதியில் இரண்டு வெடிகுண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. இவையிரண்டும் வெடிக்க வில்லை. பிறகு, இந்த ஆகாய விமானமானது குழப்பங்கள் நடந்த இடத்திற்கு நேராகச் சென்றது. தெருக்களிலிருந்து கூட்டத்தை நோக்கி மெஷின் பீரங்கியிலிருந்து நூற்றைம்பது குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. ரெயில்வே டேஷனிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் சாமான் சாலையினருகிலிருந்த கூட்டத்தை நோக்கி ஒரு வெடிகுண்டு பிரயோகிக்கப்பட்டது. இதனால் நான்கு பேர் கொல்லப்பட்டும் ஐந்துபேர் காயம்பட்டும் போயினர். ரெயில்வே டேஷனுக்கு எதிரிலிருந்த கூட்டத்தை நோக்கி ஒரு வெடிகுண்டு எறியப்பட்டது. இதனால் இரண்டு பேர் இறந்தனர்; ஆறுபேர் காயமடைந்தனர். இந்த ஆகாய விமானம் மூன்றடித்து ஐம்பது நிமிஷத்திற்கு குஜரன்வாலாவை விட்டுச் சென்றது. மூன்றடித்து இருபத்தைந்து நிமிஷத்திற்கு இரண்டாவது ஆகாய விமானம், தன் மெஷின் பீரங்கியிலிருந்து மொத்தம் எழுநூறு குண்டு களை பிரயோகித்தது. ஆனால் எவ்வித வெடிகுண்டையும் இஃது எறிய வில்லை. மூன்றாவதாக வந்த ஆகாய விமானமானது, எவ்வித பீரங்கிப் பிரயோகமாவது, வெடிகுண்டுப் பிரயோகமாவது செய்யவில்லை.
ஆகாய விமானத்திலிருந்து குண்டுகள் ஒன்றுமறியாத பாலர் மீதும் திரீகள் மீதும் குற்றத்தைச் செய்யாதவர் மீதும் விழுந்தன. இந்த ஆகாய விமானங்களில் ஒன்று ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் உழவன் தன் கலப்பையைத் தோள்மீது வைத்துக்கொண்டு தன் வீடுநோக்கி வந்தான். இவன் வரவை இவன் மனைவியும் சிறு குழந்தையும் தம் வீட்டு வாயிலினின்றும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆகாய விமானத்திலிருந்த உத்தியோகதர் இந்தக் கலப்பையை ஒரு துப்பாக்கியென நினைத்து இந்த உழவன்மீது குண்டுப் பிரயோகம் செய்ய, இவனும் இவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறு குழந்தையும் இறந்து போயினர்.
ஆகாய விமானங்கள் நடத்திய உத்தியோகதரில் ஒருவர் ஹண்டர் கமிட்டிமுன் சாட்சியங் கூறும்போது அதிகமான சேதம் உண்டாகாம லிருக்கும் வண்ணம் வெடிகுண்டுப் பிரயோகமும் பீரங்கிப் பிரயோகமும் செய்யப்பட்டதாகக் கூறினார். மற்றொருவர், ஜனங்களிற் பெரும் பாலோருக்குச் சேதம் விளைவிப்பதே தம்முடைய நோக்கமென்றும் அங்ஙனம் செய்தது அவர்களுடைய தன்மையைக் குறித்தே என்றும் கூறினார். எத்தகைய பொருத்தமான வார்த்தைகள்!1 ஆகாய விமானத்திலிருந்து பொழியப்பட்ட குண்டுகளினால் பன்னிருவர் கொல்லப்பட்டனர்; இருபத்து நான்கு பேர் காயமடைந்தனர்.
மறுநாளாகிய பதினைந்தாந்தேதி குஜரன்வாலா டிப்டி கமிஷனர் கல்னல் ஓப்ரையன் சிலருடன் நகர முழுவதும் சுற்றிவந்து பலபேரைக் கைதிசெய்தனர். இவருக்கு உதவியாக ஓர் ஆகாயவிமானமும் வந்து கொண்டிருந்தது. இந்த ஆகாய விமானம், இங்ஙனம் டிப்டி கமிஷனருக்குதவியாக வந்து கொண்டிருந்த போது ஒரு சிறு கூட்டத்தை நோக்கி வெடிகுண்டெறிந்தது. ஆனால் இந்தக் குண்டானது ஒரு வீட்டின் மேல் விழுந்தது. தெய்வாதீனமாக எவ்வித உயிர்ச்சேதமும் உண்டாகவில்லை. அன்று மாலை என்ன நடந்ததென்பதைப் பற்றிக் குஜரன்வாலா பிளீடரான ராய் சாஹிப் சர்தாரி லால் பின்வருமாறு கூறுகிறார்:-
கல்னலின் கடுமொழிகள்
. . . . ஏப்ரல் மாதம் பதினைந்தாந்தேதி கல்னல் ஓப்ரையன், மாலை மூன்றுமணிக்குக் கோர்ட் ஹவுசில் ஆஜராக வேண்டுமென்று முனிசிபல் கமிஷனர்களுக்கு ஓர் அறிக்கை விடுத்தார். முனிசிபல் கமிட்டி அங்கத்தினர்கள் அங்ஙனமே ஆஜரானதும், அனைவரும் ரெயில்வே டேஷனுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்கள். அவர்கள் அங்ஙனமே செய்தார்கள். சிறிது நேரங்கழித்து கல்னல் ஓப்ரையனும் போலீ இலாகா தலைவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். கல்னல் ஓப்ரையன் என்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப் போகிறாரென்பதை முனிசிபல் கமிஷனர்கள் அறியாதவர்களாயிருந்தார்கள். பிறகு லாலா மேளாராம், லாப்சிங்க், மங்களசேனர், ஹகீம்ராய், அமரநாதர் முதலியவர்கள் கைதி செய்யப்பட்டு இரு கையிலும் விலங்கிடப்பட்டு முனிசிபல் கமிஷனர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப் பட்டார்கள். கல்னல் ஓப்ரையன், தம்மோட்டார் வண்டியினின்றும் வந்திரங்கியதும், ஸ்ரீமான் நாராயண சிங்கை பார்த்துப் பின்வருமாறு கூறினார்:- நாராயண சிங்க்! உம்முடைய தாடி அழுக்குப் படிந்துவிட்டது. உமது முகம் கறுப்பாகப் போய்விட்டது. (நீங்கள் அவமானப்படுத்தப்பட்டீர்கள் என்பது இதன் பொருள்.)
ஸ்ரீமான் நாராயண சிங்க், இதற்குப் பதில் அளிக்க முயன்றதும் கல்னல் ஓப்ரையன் பேசாதீர்! சொல்வதைக் கேட்டுக் கொண்டிருங்கள். வாதாடவேண்டாம் என்று கூறினார். உடனே, அருகே நின்று கொண்டிருந்த லாலா ரல்லா ராமும், அவருடைய குமாரரும் அசிடெண்ட் டிராபிக் சூப்பிரண்டெண்டுமான ஸ்ரீமான் பிரதாபரும் கைதி செய்யப்பட்டார்கள். பிறகு, முனிசிபல் கமிஷனர்களைப் பார்த்து, கல்னல் ஓப்ரையன் ஆரியசமாஜத்தைச் சேர்ந்த இந்தப் புழுக்கள், பூச்சிகள், அரசாங்கத்தை எதிர்க்க முன் வருகின்றன! என்று இழிவாகக் கூறினார்.
தூக்கிலிடப்படுவான்
பிறகு நகரத்திற்குள் சென்று பலரைக் கைதி செய்வதற்காகச் செல்லும் ஊர்வலத்தை எவரும் இடையே மறிக்கக் கூடாதென்று ஜனங்களுக்கு அறிவிக்குமாறு முன்னே செல்லும்படி தீன் மகம்மது என்பவருக்கும் சௌதரி மூல்ராஜ் என்பவருக்கும் கல்னல் ஓப்ரையன் உத்தரவிட்டார். ஊர்வலமாவது, போலீஸார், ஐரோப்பிய சோல்ஜர்கள், போலீ இலாகா தலைவர். போலீ சூப்பிரண்டெண்டெண்ட், கல்னல் ஓப்ரையன், முனிசிபல் கமிஷனர்கள் முதலியவர்கள் அடங்கிய கூட்டமே யாகும். கைதி செய்யப்பட்டவர்கள், கையில் விலங்கு பூட்டப்பட்டவர் களாய் இந்த ஊர்வலத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு, இந்த ஊர்வலமானது நகரத்திற்குள் சென்று பல பிளீடர்களையும் பெரிய மனிதர்களையும் கைதி செய்துகொண்டு, தான் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வந்து சேர்ந்தது. உடனே, போலீ இலாகா தலைவர், பொது ஜனங்களைப் பார்த்து போக்கிரிகளான இவர்கள் அனைவரும் கைதி செய்யப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். இதற்குப் பிறகும், எவனேனும் கிளர்ச்சி செய்யத் தொடங்குவானானாயின், அவனும் தூக்கிலிடப்படுவான். செல்லுங்கள்! உங்களுடைய கடைகளைத் திறவுங்கள்! அமைதியுடனிருங்கள்! . . . . . என்று கூறினார். இஃதொன்றினாலேயே கல்னல் ஓப்ரையனுடைய ஆட்சித்திறன் எவ்வாறாயிருந்தது என்பது தெள்ளிதிற் புலனாகும்.
இராணுவச் சட்ட தோற்றம்
மறுநாளாகிய பதினாறாந்தேதி இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இராஜத் துரோகக் கூட்ட அடக்குமுறைச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. ரெயில்வே டேஷனுக்கெதிரிலுள்ள வண்டிகள் தங்கும் கொட்டகையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதன் முன்னர் கல்னல் ஓப்ரையனால் இராணுவச் சட்ட அறிக்கையானது, இங்கிலீஷ் பாஷையில் வாசிக்கப்பட்டது. முன்ஷி டாஜ் - உட் - டீன் என்பவர் இதனைச் சுதேச பாஷையில் மொழிபெயர்த்துக் கூறினார்.
சாக்கடைகளின் சுத்தம்
இந்த இராணுவச் சட்டத்தினால் குஜரன்வாலா வாசிகள் அனுபவித்த துன்பம் அதிகம். இராணுவச் சட்டத்தின் கீழ், ஐரோப்பியருக்கு மரியாதை செய்ய வேண்டுமென்ற ஓர் உத்தரவு செய்யப்பட்டது. அந்த உத்தரவை ஆதாரமாகக் கொண்டு, சாதாரணமான சோல்ஜர்களைச் சலாம் செய்யாதவர்களுங் கூட சவுக்காலடிக்கப்பட்டார்கள். கௌரவமுள்ள பலர் கடைத்தெருவிலுள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்படி உத்தரவிடப் பட்டார்கள். நியாய வாதிகளும், பெரிய வியாபாரிகளும், அரசாங்கத் தாருக்குப் பல தடவைகளில் பலவழியாக உதவி செய்தவர்களும் பலவித துன்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள் என்று பொதுப்படையாகக் கூறவேண்டு மேயன்றி தனித்தனியாக எடுத்து இயம்புதல் முடியாத காரியமாகும்.
காசூர்
காரணம் என்ன?
காசூரில்தான் இராணுவச் சட்ட காலத்தில் பல விநோதமான தண்டனைகள் இராணுவ அதிகாரிகளால் விதிக்கப்பட்டன. ஆதலின், இவ்வூரைப்பற்றி மாத்திரம் சிறிது கூறிவிடுவோம். 1919 - ம் வருஷம் ஏப்ரல் மாதம் பன்னிரண்டாந் தேதிவரை காசூரில் எல்லாம் அமைதியாக இருந்தன. அன்று லாகூர் அமிருதசர முதலிய இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட செய்தி ஜனங்களுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டதும், சில பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டமாகக் கூடி ஹை ஹை ரௌலட் மசோதா என்று கத்திக்கொண்டு சென்றார்கள். இவர்கள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் சில கடைக்காரர்களும் வேறு சிலரும் சேர்ந்துகொண்டார்கள். இங்ஙனம் சுமார் இருநூறு பேரடங்கிய இக்கூட்டம் ரெயில்வே டேஷன் நோக்கிச் சென்றது. இவர்கள் அங்குச் சென்றதும் ரெயில்வே டேஷனுக்கு நெருப்பு வைக்கவில்லை. இச்சமயத்தில் பெரோபூரிலிருந்து ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது. சிலர் அவ்வண்டியை நிறுத்திவிட வேண்டுமென்று விரும்பினர். சிலர் அதைக் கண்டித்தனர். கடைசியில் பெரோபூரிலிருந்து வந்த வண்டியானது நிறுத்தப்பட்டது. உடனே ஜனங்கள் ஹை ஹை ரௌலட் மசோதா என்று கத்தினார்கள். இந்த வண்டியில் நான்கு ஐரோப்பிய பிரயாணிகள் இருந்தார்கள். கூட்டத்திலிருந்த சிலர், இந்த ஐரோப்பியர்கள் முன்னிலையில் நின்று தங்கள் உணர்ச்சியைக் காட்ட வேண்டுமென்று விரும்பினர். ஆனால் அந்த ஐரோப்பியருக்குத் தொந்தரவு உண்டாக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்கள் உள்ளத்தில் இல்லையென்று சொல்லப்படுகிறது. மேற்கூறப்பட்டவாறு ஐரோப்பியர்களை நோக்கிச் சென்ற இக்கூட்டமானது, ஐரோப்பியரில் இருவரான சேனாவீரர்களால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. உடனே ஜனங்களுக்குக் கோபமூண்டு அவ்விருவரையும் தாக்கிக் கொன்றார்கள். பிறகு வேறு இரு ஐரோப்பியரான மிடர் ஷெர்போர்ன் என்பவரையும் அவருடைய மனைவியையும் எதிர்க்கச் சென்றார்கள். அக்கூட்டத்திலிருந்த சிலர் இதனைப் பலமாகக் கண்டித்தனர். பிறகு ஒரு மாணவன் அவ்விரு வரையும் தாக்கா வண்ணம் ஜனங்களைத் தடுத்தான். கடைசியில் அவ்விருவரும் அவர்களுடைய குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.
படித்த வகுப்பாரின் உதவி
இச்சமயத்தில், படித்த வகுப்பாரிற் சிலர் வந்து கூட்டத்தைக் கலைத்து விட்டனர். ஆயினும் கூட்டத்தாரிற் சிலர் தபாலாபீஸை கொளுத்தி விட்டனர்; தாசீலைத் தாக்கினர். இச்சமயத்தில் அதிகாரிகளால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இங்குச் சில உயிர்ச் சேதங்கள் உண்டாயின. அன்று மாலை நகரம் முழுவதும் அமைதி யுண்டாய்விட்டது. அதற்குப் பிறகு நகரத்தில் எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை. பிறகு பதினைந்தாந் தேதி இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஐரோப்பியரைச் சுற்றி ஆட்டம்
இராணுவச் சட்ட காலத்தில் காசூரிலிருந்த ஆண்கள் அனைவரும் ரெயில்வே டேஷனுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நல்ல வெயிலில் மணிக்கணக்காக நிற்கவைக்கப்பட்டார்கள். ஐரோப்பியர் உட்கார்ந்து கொண்டிருக்கும்படியான இடத்தைச் சுற்றி அனைவரும் கூத்தாடும்படியாக வற்புறுத்தப்பட்டனர். கௌரவமுள்ள பலர் எவ்வித காரணமுமின்றிச் சிறையில் வைக்கப்பட்டுப் பிறகு விடுதலை செய்யப் பட்டார்கள்.
V சில கோரமான சாட்சியங்கள்
இராணுவச் சட்ட காலத்தில் பஞ்சாபில் நடைபெற்ற அக்கிரமச் செயல்களை, காங்கிர சப் கமிட்டியார் முன் கூறிய சாட்சியங்களின் மூலமாக நேயர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம். சாட்சியங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டுமென்பது எமது விருப்பமாயினும், பல காரணங்களினால் சிலவற்றையே ஈண்டு வெளியிடு கின்றோம்.
பாலோசன் என்னும் பெண்மணியின் சாட்சியம்
(இவர் அமிருதசரசிலுள்ள ராம் பாக் கேட் என்னுமிடத்தில் வசிக்கும் சத்ராயி நாத் பேரணி என்பவருடைய குமாரத்தியாவார்.)
இராணுவச் சட்ட காலத்தில், நானும் வேறு சிலரும் கைதி செய்யப்பட்டு போலீ டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பாங்கில் கொள்ளையடிக்கப்பட்ட சாமான்களைக் கொடுக்கும்படி போலீஸார் எங்களைக் கேட்டனர். பண்ணா, ரக்கி, ராணி ஆகிய இவரும் இங்ஙனமே சொல்லப்பட்டனர். நாங்கள் அனைவரும் மிகக் கேவலமாக நடத்தப் பட்டோம். போலீஸாருடைய கட்டாயத்தின் பேரில் நாங்கள் எங்கள் நிஜார்களை அவிழ்க்கும்படி வற்புறுத்தப் பட்டோம். இங்ஙனமே என் சகோதரியான இக்பாலனும் வற்புறுத்தப்பட்டாள். எங்களை இங்ஙனம் செய்துவிட்டு போலீஸார் அனைவரும் இக்காட்சியைக் கண்டு நகைத்துக் கொண்டிருந்தனர். இரவில் பத்து மணிக்கு நாங்கள் வீட்டிற்கு போகச் சொல்லப்பட்டு மறுநாள் காலை ஆறு மணிக்குப் போலீ டேஷனுக்கு வரும்படி உத்தரவு செய்யப்படுவது வழக்கம். இங்ஙனமே சுமார் ஐந்து நாட்கள் நடைபெற்றன. சில சமயங்களில் எங்களுடைய மர்ம தானங்களில் கம்புகள் செருகப்பட்டன. நாங்கள் பன்முறை பிரம்புகளால் அடிக்கப்பட்டோம். திட்டப்பட்டோம். நான் நாற்பது ரூபாயும், ராணி இருபது ரூபாயும், இக்பாலன், பண்ணா என்னுடைய சகோதரி, பிரோஸன் இவர்கள் முறையே நாற்பது ரூபாயும் கொடுத்த பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். எங்கள் மாதிரியே பல சிறிய பெண்களும் அபராதம் விதிக்கப்பட்டார்கள். எங்களுடைய அபராதங்களை சுந்தர் என்னும் கான்டேபில் வசமும் பஸல் என்னும் ஹவல்தார் வசமும் கொடுத்தோம்.
குறிப்பு : மேற்கூறப்பட்ட டேட்மெண்டு பண்ணா, ரக்கி, ராணி இவர்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் இதில் கூறப்பட்ட யாவும் சரியென்று கூறி அதற்கு அறிகுறியாகத் தங்கள் விரல் அடையாளங்களை இதில் பொறித்திருக்கின்றனர்.
அராசிங்கின் சாட்சியம்
(இவர் மணியன் வாலா என்னும் இடத்தில் உள்ள அதர்சிங் என்பவரின் குமாரர்.)
நான் ஒரு ஜமீன்தார். எனக்கு வயது நாற்பத்தைந்து. என்னுடைய தகப்பனாருக்குச் சுமார் நூற்றுப்பதினைந்து வயது இருக்கும். அவர் சுமார் முப்பது வருஷ காலமாய் லம்பர்தார் என்னும் உத்தியோகத்தை வகித்து வந்திருக்கிறார். அவரே மணியன் வாலா என்னும் இடத்தைக் கண்டு பிடித்து அதனை ஒரு கிராமமாக ஆக்கினார். . . . . . ஏப்ரல் மாதம் பத்தொன்பதாம் தேதி பிரிட்டிஷ் துருப்புகளைக் கொண்ட ஒரு ரயில் வண்டியானது மணியன் வாலாவுக்கு வந்தது. அதன்மீது நான்கு பீரங்கிகள் இருந்தன. இவை மணியன் வாலா கிராமத்தை நோக்கி வைக்கப் பட்டிருந்தன. ஆனால் எவ்வித குண்டுப் பிரயோகமும் நடைபெறவில்லை. மேற்கூறப்பட்ட ரயில் வண்டியிலிருந்து பிரிட்டிஷ் சோல்ஜர்கள் இறங்கி மணியன்வாலாவுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டே வந்தனர். கண்ணுக்கு அகப்பட்டவர்களை எல்லாம் அவர்கள் சுட்டுக் கொண்டே போனார்கள். அல்லா டிட்டா என்பவர் மூன்று அல்லது நான்கு முறை சுடப்பட்டு அங்கேயே இறந்துபோனார். ஜண்டா சாட் என்பவருடைய குமாரர் மண்டா என்பவர் தம்முடைய நிலத்துக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுக் கீழ்விழுந்தார். இதனால் அவருடைய கை ஒன்று போய்விட்டது. துப்பாக்கிப் பிரயோகம் இங்ஙனம் நடைபெறுவதைக் கண்ட பலர், தங்களுடைய கைக் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். கர்ப்பமுள்ள திரீகள் பயத்தினால் ஓடி வயல்களில் ஒளிந்து கொண்டார்கள். நூற்றுப்பதினைந்து வயதுள்ள என்னுடைய தகப்பனார் தாழ்வாரத்தில் கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது அவர்மீது ஐந்தாறு குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. இரண்டு குண்டுகள் அவர் தலைப்பாகை மீது பட்டன. உடனே சோல்ஜர்கள் வீட்டுக்குள் நுழைந்து சில சாமான்களை நாசமாக்கினார்கள்; பணங்களையெடுத்துச் சென்றுவிட்டார்கள். ஷேகு புரத்தைச் சார்ந்த பதேசிங் அவர்கள் தலை யிடாவிட்டால் சோல்ஜர்கள் பல வீடுகளுக்கு நெருப்பு வைத்திருப்பார்கள். பிறகு இந்திரசிங்க் என்பவரும் என் தகப்பனாரும் கைதி செய்யப் பட்டார்கள். என் தகப்பனார் நடக்கமுடியாத நிலைமையில் இருந்தமை யால் ஒரு குதிரை மீதேற்றிக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு இரும் பாலாக்கப்பட்ட ஒரு ரெயில்வே வாகனில் அவர்கள் வைக்கப்பட்டு, நல்ல வெயில் நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். என்னுடைய தகப்பனாரும் இந்திரசிங்கும் இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப் பட்டனர். இரண்டுநாள் கழித்து சில சோல்ஜர்களுடன் மிடர் பாவொர்த் மித் மணியன்வாலா கிராமத்திற்கு வந்தார். சுமார் எட்டு வயதுக்கு மேற்பட்ட கிராமத்திலுள்ள அனைவரையும் கனால் பங்களாவுக்கு அழைத்தார். அங்கு வந்தவர் எவரும் தங்கள் வயல்களுக்குச் செல்லக் கூடாதென்று அவர் உத்தரவிட்டார். மற்றும் சுமார் ஏழெட்டு பேர் கைதி செய்யப் பட்டார்கள். இரண்டா முறை என்னுடைய தகப்பனார் கைதி செய்யப்பட்டு கையில் விலங்கிடப்பட்டார். இங்ஙனம் இவரை ஜனங்களிடையே அழைத்துச் சென்று இதோ குரங்கு இருக்கிறது; பாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் மிடர் பாவொர்த் மித்தினால் அடிக்கப் பட்டேன். அடுத்த கிராமத்துக் கௌரவமுள்ள ஒரு மனிதர் ஒரு மரத்துடன் கட்டப்பட்டு சுமார் பதினெட்டு அடிகள் அடிக்கப்பட்டார். மறுநாள் நான்கு போலீ சப் இன்பெக்டர்களும் பல கான்டேபில்களும் பல சோல்ஜர்களும் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களைத்தேட எங்கள் வீட்டில் நுழைந் தார்கள். இவர்கள் கிராமத்திலுள்ள ஆண்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி இந்தச் சொத்துக்களைக் கொடுத்துவிட வேண்டுமென்று கூறினர். பதேசிங்க் என்பவர் நன்றாக அடிக்கப்பட்டார். மற்றும் அவருடைய அரைத்துணி எடுக்கப்பட்டது. கிராமத்திலுள்ள அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு நல்ல வெயிலில் சுமார் மூன்றுமணி நேரம் எங்களுடைய வயிற்றைப் பூமியில் பதித்துப் படுத்துக் கொண்டிருக்கும்படி வற்புறுத்தப் பட்டோம். கடைகளிலிருந்து கிரோசின் எண்ணெயும் கத்திகளும் வீடு களை அழிக்க ஒன்றாகச் சேர்க்கப்பட்டன. ஆனால் பிறகு இங்ஙனம் செய்யப்படவில்லை. மே மாதம் எட்டாந்தேதி மிடர் பாவொர்த் மித் எங்களுடைய கிராமத்திலுள்ள எல்லா திரீகளையும் (சுமார் அறுபது பேர் இருப்பர்) ஒரு வெளி மைதானத்தில் வரவழைத்து அவர்களுடைய முகமூடிகளை எடுத்துவிடும்படி சொன்னார். அவர்களுடைய முகத்தில் எச்சில் உமிழ்ந்தார்; தடிகளால் அடித்தார்; மிக இழிவான சொற்களால் திட்டினார். அரசாங்கத்திற்கு விரோதமாகப் பேசிய பாய் மூல்சிங் என்பவரைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டார். தாபன்சிங்க் என்னு மிடத்தில் பிரத்யேக போலீஸார் வைக்கப்பட்டனர். நகரத்திலுள்ள எல்லா ஆண்பிள்ளைகளும் தினந்தோறும் இரண்டு முறை அங்கு ஆஜராக வேண்டியவராயினர். இதனால் அவர்கள் எவ்வித வேலையையும் கவனிக்க முடியவில்லை. என்னுடைய தகப்பனார் எவ்வித விசாரணையு மின்றிச் சுமார் பதினைந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டார். என்னுடைய தகப்பனார் வகித்திருந்த லம்பர் தாரி என்னும் கௌரவமும் அவருடைய ஆதிக்கத்திலிருந்த முப்பது ஏக்ரா நிலங்களும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டன.
பாக் சிங்க் என்பவருடைய சாட்சியம்
(இவர் குஜரன்வாலாவைச் சேர்ந்த மணியன்வாலா கிராமத்திலிருக்கும் ஜாட் ஜாதியைச் சேர்ந்த காரக் சிங்க் என்பவருடைய புத்திரர்; 75 வயதுடையவர்.)
என் கிராமத்திலிருக்கும் எல்லா ஆண்களுடன் நானும் வரவழைக்கப்பட்டு மைதானத்தில் நல்ல வெயிலில் சில மணிநேரம் படுத்துக் கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். இன்னும் பலவிதங்களிலும் திட்டப்பட்டேன். இதில் மிக்க அவமானமான காரியமாவது என் பின்புறத் துணிகள் அவிழ்க்கப்பட்டன. மற்றும் என் அரைத்துணிகள் அவிழ்க்கப் பட்டன. டேஷன் சொத்துக்கள் யாவும் திருப்பிக்கொண்டு வரப்படா விட்டால் எங்களுடைய திரீகளும் அழைத்துவரப்பட்டு எங்கள் பக்கத்தில் நிர்வாணமாகப் படுத்து வைக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.
குருதேவியின் சாட்சியம்
(இவர் மணியன்வாலா கிராமத்திலிருந்த மங்கள ஜாட் என்பவருடைய மனைவி; விதவை; நாற்பது வயதுடையவர்.)
இராணுவச் சட்ட காலத்தில் ஒரு நாள் மிடர் பாவொர்த்மித் எட்டு வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களையும் பக்காடல்லா பங்களாவுக்கு வரவழைத்தார். கிராமத்திலுள்ள ஆண்கள் பங்களாவில் இருக்கும்போது மிடர் பாவொர்த்மித் கிராமத்திற்குள் நுழைந்து எல்லா திரீகளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவர் ஒவ்வொரு சந்திலும் நுழைந்து எல்லா திரீகளையும் கட்டாயப்படுத்தி வெளியே வரும்படி செய்தார். திரீகள் அனைவரும் அவருடைய எதிரில் கூப்பிய கையர்களாய் இருந்தார்கள். அவர் சிலரை அடித்தார்; சிலருடைய முகத்தில் எச்சில் உமிழ்ந்தார். எங்களிடத்தில் சொல்லமுடியாத வார்த்தைகளை உபயோகப் படுத்தினார். அவர், திரீகள் அணிந்திருந்த முகமூடிகளையெல்லாம் தடியினால் எடுத்தார். அவர் எங்களை நோக்கி கழுதைகள் என்றும், ஈக்கள் என்றும், வேசையர் என்றும் பலவிதமான கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். உங்கள் கணவர்கள் படுத்திருந்த படுக்கை யிலேயே நீங்களும் படுத்துக் கொண்டிருந்தீர்கள். அங்ஙனமிருக்க அவர்கள் போக்கிரித்தனம் செய்யாமல் நீங்கள் ஏன் தடுக்கக் கூடாது? இப்பொழுது உங்களுடைய ரவிக்கைகள் போலீ கான்டேபில்களால் பரிசோதிக்கப்படும் என்று எங்களைப் பார்த்து அவர் கூறினார். அவர் எனக்கு ஓர் உதையும் கொடுத்தார். மற்றும் நாங்கள், எங்கள் கைகளை எங்கள் கால்களின் வெளிப்புறமாகக் கொண்டுவந்து, அவைகளால் இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு நிற்கும்படி வற்புறுத்தப்பட்டோம். எங்களுடைய புருஷர்கள் இல்லாதிருக்கப் பட்ட சமயத்திலேயே நாங்கள் இங்ஙனம் செய்யப்பட்டோம்.
குறிப்பு : இங்ஙனமே சுமார் எட்டு திரீகள் சாட்சியம் கொடுத்திருக்கின்றனர்.
தேஜசிங்கின் சாட்சியம்
(இவர் மணியன்வாலா கிராமத்திலிருக்கும் அமீர்சிங்க் என்பவருடைய குமாரர்; 55 வயதுடையவர்.)
. . . . மிடர் பாவொர்த்மித் திரீகளிடத்துச் சென்று அவர்களுடைய முக மூடிகளை எடுக்கும்படி சொன்னார். அவர்களைக் கண்டபடி திட்டினார். அவர்களை ஈக்களென்றும், விபசாரிகளென்றும் பலவாறாகத் திட்டினார். அவர் திரீகளைப் பார்த்து உங்களுடைய ரவிக்கைகள் போலீ கான்டே பில் களால் பரிசோதிக்கப்படும். நீங்கள் உங்கள் புருஷர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவர்கள் எழுந்து போகும்படி ஏன்விட்டீர்கள்? என்று பேசினார். திரீகள் முகத்திலும் அவர் எச்சில் உமிழ்ந்தார்.
பஸல் என்பவருடைய சாட்சியம்
(இவர் குஜரன்வாலா ஜில்லாவைச் சார்ந்த ஜாங் என்னுமிடத்தில் இருக்கும் லால் என்னும் நாவிதருடைய புத்திரர்.)
நாங்கள் நான்கு சகோதரர்கள். நாங்கள் இருபது ரூபாய் கொடுக்கும்படி (போலீஸாரால்) கேட்கப்பட்டோம். எங்களிடத்தில் பணம் இல்லை. எங்களிடத்தில் ஒரு பசு இருந்தது. அஃது ஈனும் சமயத்தில் இருந்தது. அதை மேற்படி தொகையை கொடுப்பதற்காகப் பட்டாணியர் களுக்கு விற்றோம். அவர்கள் அதனைக் கொலை செய்வதற்காக வாங்கிக் கொண்டு சென்றார்கள். இதற்காக அந்தப் பசுவை விற்றது எங்களுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
அநுபந்தம் - 1
பஞ்சாப் மாகாண அரசாங்கத்தார் சென்ற வருஷத்துக் குழப்பங்கள் சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒவ்வோர் ஊரிலும் நடந்த சம்பவங்களைத் தேதி வாரியாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். நேயர்களின் சௌகரியத்தின் பொருட்டு அவைகளை அங்ஙனமே கீழ் வெளியிட்டிருக்கின்றோம்.
2. 2. 1919
லாகூர் ஜில்லா
லாகூர் - ரௌலட் மசோதாவைக் கண்டிக்க இந்தியன் அசோசியேஷனார் ஒரு கூட்டங் கூடினர்.
4. 2. 1919
லாகூர் ஜில்லா
லாகூர் - ரௌலட் மசோதாவைக் கண்டிக்கப் பிராட்லாஹாலில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
5. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ரௌலட் மசோதாவைப் பற்றிய ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
9. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - லாகூரிலிருந்த டாக்டர் கோகுல சந்திர நாரங் வந்து ரௌலட் மசோதாவைப் பற்றிப் பேசினார்.
11. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - பிளாட்பாரம் டிக்கெட்டுகளைப் பற்றிப் பொதுக் கூட்டம் கூடியது.
13. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - மகம்மதியர்களடங்கிய ஒரு தேசீயக் கூட்டத்தில் டாக்டர் கிச்சலு பேசினார்.
16. 2. 1919
லியல்பூர் ஜில்லா
லியல்பூர் - ரௌலட் மசோதாவைக் கண்டிக்க காங்கிர கமிட்டியார் ஒரு கூட்டங் கூடினர்.
19 . 2. 1919
பெரோஸபூர் ஜில்லா
பெரோஸபூர் - சேவசமிதியின் கிளைச்சங்கமொன்று தாபிக்கப்பட்டது.
21 . 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - முலீம்களின் புண்ணிய தலங்களைப் பற்றியும் காப்பில் வைக்கப்பட்டுள்ள மகம்மதியர்களைப் பற்றியும் யோசிக்க ஒரு முலீம் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் டாக்டர் சத்யபாலர் பேசினார்.
22. 2. 1919
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஜில்லா காங்கிர கமிட்டி ஆதரவில் கூப்ராப்ஸி மண்டி என்ற இடத்தில் ரௌலட் மசோதாவைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூடியது. இக்கூட்டத்திற்குப் பெரும்பாலும் வியாபாரிகளே பிரசன்னமாயிருந்தார்கள். சிந்து பிரதேசத்தைச் சார்ந்த டாக்டர் சேதுராமர் ஓருபந்நியாசம் புரிந்தார்.
22 - 23. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - அஞ்சுமானி தரக்கி தலீம் வருஷாந்தக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசியல் உபந்நியாசங்கள் செய்யப்
பட்டன. டாக்டர் சத்தியபாலரும் பேசினார்.
23 . 2. 1919
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ரௌலட் மசோதாவைக் கண்டிக்க கூப்சாப்ஸிமண்டி என்னுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. டாக்டர் சேதுராமர் மறுபடியும் பேசினார்.
24. 2. 1919
மூல்டான் ஜில்லா
மூல்டான் - காலாமண்டி என்னுமிடத்தில் சிந்து பிரதேசவாசி யொருவருடைய அக்கிராசனத்தின் கீழ் ஒரு கூட்டம் கூடியது. டாக்டர் சேதுராமர் மறுபடியும் பேசினார். சுய ஆட்சியின் அவசியத்தைப் பற்றியும் ரௌலட் மசோதாவைக் கண்டித்தும் இவர் கடுமையாகப் பேசினார்.
26 . 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - நயமான விலையில் தானியங்களை விற்பதற்குக் கடைகளை ஏற்படுத்தும் விஷயமாக யோசிக்க ஒரு பொதுக்கூட்டம் கூடியது. தானியங்களின் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தாரே காரணர் என்றும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்த் தானியங்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன வென்றும் டாக்டர் கிச்சலு இக்கூட்டத்தில் பேசினார்.
28. 2. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ரௌலட் மசோதாவைக் கண்டிக்க மற்றொரு பொதுக்கூட்டம் கூடியது.
லாகூர் ஜில்லா
லாகூர் - தூனிசந்திரலால் பஞ்சாப் நேஷனல் வாலண்டியர்கோர் (Punjab National Volunteer Corps) ஆரம்பிக்கப்பட்டது.
1. 3. 1919
லியல்பூர் ஜில்லா
லியல்பூர் - சேவசமிதியின் கிளைச்சங்கமொன்று தாபிக்கப்பட்டது.
9. 3. 1919
லாகூர் ஜில்லா
லாகூர் - கனம் மியான் பஸிஹுசேன் அக்கிராசனத்தின் கீழ் பிராட்லா ஹாலில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. காசூரிலிருந்து வந்திருந்த எம். குலாம் முஹைதீன் என்ற ஒரு பிளீடரும் வேறுசிலரும் மிகக்கடுமையாகப் பேசினர். கல்கத்தாவிலிருந்து வந்திருந்த ஒரு பத்திரிகாசிரியரான ஸையத் ஹபிப் ஷா என்பவரும் கடுமையாகப் பேசினார்.
15. 3. 1919
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஜில்லா காங்கிர கமிட்டி ஆதரவில், டெல்லி கேட்டுக்கு வெளிப்புறத்தில் பௌலி சேது குமாரதா என்னுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. அமிருத சரசிலிருந்து வந்திருந்த டாக்டர் சைபுதீன் கிச்சலுவும், லாகூரிலிருந்து வந்திருந்த ஸ்ரீமான் தூனிசந்திரரும் ஸ்ரீமான் மோஸன் ஷாவும் சுய ஆட்சி வேண்டுமென்றும் ரௌலட் மசோதாவைக் கண்டித்தும் பேசினார்கள்.
16. 3. 1919
மூல்டான் ஜில்லா
மூல்டான் - காலாமண்டி என்னுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. டாக்டர் கிச்சலு, ஸ்ரீமான் தூனிசந்திரர், ஸ்ரீமான் மோஸன் ஷா ஆகிய இவர்கள் பேசினார்கள்.
18. 3. 1919
ரௌலட் மசோதா சட்டமாக்கப்பட்டது.
20. 3. 1919
லியல்பூர் ஜில்லா
லியல்பூர் - தற்கால நிலைமையைப் பற்றி யோசிக்க காங்கிர கமிட்டியின் அந்தரங்கக் கூட்டமொன்று நடைபெற்றது.
21. 3. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ரௌலட் சட்ட சம்பந்தமாக வாக்த் என்னும் பத்திரிக்கையில் முதற்படம் வெளியாயிற்று.
23. 3. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர சத்தியாகிரக இயக்கத்தை ஆதரிக்க ஒரு பொதுக் கூட்டம் கூடியது.
29. 3. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ஒரு பொதுக்கூட்டம் கூடியது. இதில், அடுத்த நாள் விரதம் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் சத்தியபாலர் பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாதென்று உத்தரவிடப்பட்டார். இதற்குக் காரணம் இவர் 23 ந்தேதி செய்த உபந்நியாசமே யாகும்.
பெரோஸபூர் ஜில்லா
பசில்கா - ஓர் உள்ளூர் பிளீடரும், ஓர் ஆரிய சாதுவும், சுவாமி பரமானந்தரும் சில ஆரிய சமாஜத்தவர்களுடைய உதவியைக் கொண்டு ஒரு கூட்டங் கூட்டினர். அதில் மறுநாள் விரதம் கொண்டாட வேண்டுமென்றும் சத்தியாகிரக புதக சாலைக்கு நிதி எழுப்ப வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டன.
ஜில்லா
ஜாங் - மக்யானா - மறுநாள் விரதம் கொண்டாட வேண்டு மென்பதை ஆதரிக்க, ஒரு பிளீடருடைய வீட்டில் தனிக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. பிறகு ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு மறுநாள் விரதம் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இந்த விஷயம் பின்னர்ப் பறைசாற்றப்பட்டது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஹிந்து மகம்மதிய பஞ்சாயத்து ஆதரவின் கீழ் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. அப்பொழுது, மிடர் காந்தியின் ஆணைக்குட்பட்டு ரௌலட் மசோதாவின் கண்டனமாக மறுநாள் விரதம் கொண்டாடப் படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
அன்றே ஜில்லா காங்கிர கமிட்டியின் கூட்டுக்காரியதரிசிகளின் கையெழுத்தைக் கொண்ட ஓர் அச்சிட்ட அறிக்கை வெளியாயது; அதில், ஜனங்கள் மறுநாள் விரதம் கொண்டாட வேண்டுமென்று காணப்பட்டிருந்தது.
30. 3. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - எங்கும் விரதம் கொண்டாடப்பட்டது. ஆனால் போலீஸாருடன் எங்கும் சச்சரவு நேரவில்லை. பொதுக்
கூட்டம் நடைபெற்றது.
பெரோஸபூர் ஜில்லா
பசில்கா - விரதம் கொண்டாடப்பட்டது. ஆனால் பிற்பகலில் கடைகள் திறக்கப்பட்டன.
ஹோஷியர்பூர் ஜில்லா
முகேரியான் - எங்கும் விரதம் கொண்டாடும்படி ஆரிய சமாஜத்தார் செய்வித்தனர்.
ஜாங் ஜில்லா
ஜாங் - மாக்யானா - விரதம் கொண்டாட வேண்டுமென்று முன்னால் தீர்மானிக்கப்பட்ட போதிலும் தலைவர்கள் டிப்டி கமிஷனருடைய உத்தரவின் பேரில் இந்த யோசனையை நிறுத்திவிட்டார்கள்.
கர்நால் ஜில்லா
கர்நால் - 30 ந்தேதி மார்ச்சு மாதம் விரதநாள்; துக்கத்தைக் குறிக்குநாள் என்ற தலைப் பெயருடன் கையெழுத்தாலாய ஓர் அறிக்கை கடைத் தெருவில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில், துக்கம் கொண்டாட வேண்டுமென்றும், சத்தியாகிரக வெற்றிக்கு தோத்திரம் செய்ய வேண்டுமென்றும், ரௌலட் சட்டத்தை எதிர்ப்
பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன வென்றும், ஒன்று கலகம் என்றும், மற்றொன்று சத்தியாகிரகமென்றும், ஆனால் முன்னதற்கு ஆயுதங்கள் வேண்டியிருப்பதால் பின்னதே அனுசரிக்கப்படவேண்டுமென்றும் காணப் பட்டிருந்தன.
பானிப்பட்டு - சில இடங்களில் விரதம் கொண்டாடப்பட்டது. சத்தயாகிரகத்தை ஆதரித்து ஒரு கூட்டம் நடைபெற்றது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - எங்கும் விரதம் கொண்டாடப்பட்டது. ஹிந்துக்கள் மகம்மதியர்கள் இவர்களுடைய கடைகள் மூடப்பட்டன. நரசிங்கபுரி கோயிலில் காலை 11 மணிக்கும் பிரஹலாதபுரி கோயிலில் பகல் 1 மணிக்கும் கூப் வங்கி கரணம் என்னுமிடத்தில் மாலை 4 மணிக்கும் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்களில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்தே பேசப்பட்டன.
முஸபர்கார் ஜில்லா
கோட் ஆது - ஆரிய சமாஜத்தவரால் ஒரு கூட்டம் நடைபெற்றது. ரௌலட் சட்டத்தைக் கண்டித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன.
31. 3. 1919
சியால் கோட் ஜில்லா
சியால் கோட் - ஏப்ரல் மாதம் 6 - ந்தேதி விரதம் கொண்டாடு வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தனிக்கூட்டம் நடைபெற்றது.
ஜல்லந்தர் ஜில்லா
ஜல்லந்தர் - (பஞ்சாப்)மாகாண மகாநாடு சம்பந்தமாகப் பொதுக்கூட்டங்கள் கூடின. டாக்டர் கிச்சுலும் தீனநாதரும் பேசினார்கள்.
லூடியானா ஜில்லா
லூடியானா - ஆரிய சமாஜக் கோயிலில் ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க திரீகளின் பொதுக்கூட்டமொன்று கூடியது. டெல்லியைச் சார்ந்த முனிஷிராம் அவர்களின் புத்திரி ரௌலட் சட்டத்தைக் கண்டித்துப் பேசினார்.
2. 4. 1919
அம்பாலா ஜில்லா
அம்பாலா - ஒரு பொதுக்கூட்டம் கூடியது. 6 - ந்தேதி விரதம் கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
அமிருதசர ஜில்லா
அமிருதசர - காந்தியின் சீடர்களில் ஒருவரான சுவாமி சத்திய தேவர் ஆத்ம சக்தி என்பதைப் பற்றி ஓருபந்நியாசம் புரிந்தார். இவர் கொடுமைச் செயல்களைச் செய்யக் கூடாதென்றும் காந்தியின் அறிக்கை வெளியாகும் வரை பொதுக்கூட்டங்கள் கூட வேண்டாமென்றும் ஜனங்களுக்குக் கூறினார்.
ஹோஷியர்பூர் ஜில்லா
ஹோஷியர்பூர் - ஜல்லந்தரிலிருந்த டாக்டர் கிச்சுலுவை அழைக்கவேண்டுமென்று முதலில் யோசனை செய்யப்பட்டது. பிறகு அந்த யோசனை நிறைவேற்றப்படவில்லை.
ஜல்லந்தர் ஜில்லா
ஜல்லந்தர் - (பஞ்சாப்) மாகாண மகாநாடு சம்பந்தமாகப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. டாக்டர் கிச்சுலுவும் தீனநாதரும் இக்கூட்டங்களில் பேசினார்கள்.
லாகூர் ஜில்லா
லாகூர் - போலீ சட்டத்தின்படி ஒரு மாத காலம் தெருக்களில் பொது ஊர்வலங்கள் செல்லக் கூடாதென்று போலீ சூப்பிரண்டெண்டெண்ட் கட்டளையிட்டார்.
மாண்ட்கோமரி ஜில்லா
மாண்ட்கோமரி - விரதம் கொண்டாட வேண்டுமென்பதைப் பற்றி வக்கீல்கள் சங்கத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
3. 4. 1919
அம்பாலா ஜில்லா
ரூபர் - ரௌலட் சட்டத்தைக் கண்டித்தும் டெல்லியில் குழப்பங்கள் நடந்ததைக் குறித்து விசனப்படுவதாகவும் தீர்மானங்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்குப் பிறகு
6 -ந்தேதி விரதம் கொண்டாடத் தீவிர முயற்சிகள் செய்யப்பட்டன.
குருதாபூர் ஜில்லா
படாலா - விரதம் கொண்டாடுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்துவதற்கு வக்கீல்கள் சங்கத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
குருதாபூர் - ஆறாந்தேதி விரதங் கொண்டாடுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய ஒரு கமிட்டி -ஏற்படுத்தப்பட்டது.
கர்கான் ஜில்லா
ரீவாரி - டெல்லியிலிருந்து சிலர் வந்து விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்ற எண்ணத்தைப் பரப்பினார்கள்.
ஹோஷியர்பூர் ஜில்லா
ஹோஷியர்பூர் - ஜல்லந்தரிலிருந்து வந்த யோசனையைக் கொண்டு ஒரு பிரபல ஆரிய சமாஜியும் சில பிளீடர்களும் சில வியாபாரிகளும் 6 - ந்தேதி விரதங் கொண்டாடுவதைப் பற்றி யோசனை செய்தார்கள். மாலையில் இரண்டு கிளர்ச்சிக்காரர்கள் (இவரில் ஒருவர் லாகூரில் கைது செய்யப்பட்டார்) முனிசிபல் விஷயங்களைக் கவனிப்பதற்கு என்று மகம்மதியர்களடங்கிய பொதுக் கூட்டம் ஒன்று கூட்டி அதில் விரதங் கொண்டாடும் விஷயத்தைப் பற்றி வாதம் செய்தார்கள். ஒரு பிரபலமான மகம்மதியர் இதற்குத் தலைவராக இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
லூடியானா ஜில்லா
லூடியானா - ரௌலட் சட்டத்தைக் கண்டிப்பதற்கும் விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்பதை யோசிப்பதற்கும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டம் சைகர்கஞ்ச் தானி மார்க்கெட்டில் நடைபெற்றது.
சியால்கோட் ஜில்லா
சியால்கோட் - கடைகள் தோறும் சென்று கடைகளை மூடும்படி சிலர் வற்புறுத்தி வந்தனர். இதே விஷயத்திற்காக ஒரு தனிக்கூட்டமும் கூட்டப்பட்டது.
4. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - டாக்டர் கிச்சுலு, பண்டித கோதுமால், தீனநாதர், சுவாமி அனுபவாநந்தர் ஆகிய இவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாதென்று உத்தரவிடப் பட்டார்கள்.
ஹோஷியர்பூர் ஜில்லா
ஹோஷியர்பூர் - சில பிரபல பிளீடர்களும் வியாபாரிகளும்6-ந்தேதி விரதங் கொண்டாட வேண்டுமென்று கூட்டங்கூடித் தீர்மானித்தார்கள். கடைசியில் 6 - ந்தேதி விரதங் கொண்டாடுவதென்றும் அன்று ஒரு கூட்டம் கூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
லாகூர் ஜில்லா
லாகூர் - முனிசிபல் அங்கத்தினர்களும், கௌரவ மாஜிட்ரேட்டுகளும் பெரிய வியாபாரிகளும் 6 - ந்தேதி விரதங் கொண்டாடுவதையும் அதனால் ஏற்படும் குழப்பங்களையும் தடுக்கும்படி வற்புறுத்தப்
பட்டார்கள். இக்கூட்டத்தில் லாலா தூனி சந்திரரும் சௌதாரி ஷாஹப் தீனரும் ரௌலட் சட்டத்திற்கு விரோதமாகப் பேசினார்கள். விரதக் கொண்டாட்டத்திற்குக் காரணமாயிருந்தவர்கள், அத்தேதியில் (6 - ந்தேதியில்) ஏதேனும் குழப்பம் உண்டானால் அவர்களே பொறுப்பாளிகளாவார்கள் என்று டிப்டி கமிஷனரால் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஈஜிப்டிலிருந்தும் பாலதீனத்திலிருந்தும் சமீபத்தில் திரும்பிவந்த 2/30 பிரிவு பஞ்சாப் படையினரை நல்வரவேற்பதென்று முனிசிபல் கமிட்டியார் செய்த தீர்மானத்தைக் கண்டிக்க ஹிந்து மகம்மதிய பஞ்சாயத்துக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இந்தக் கண்டன ஏற்பாட்டைக் கண்டித்து முனிசிபல் உப அக்கிராசனாதி
பதிகள் எவ்வளவுதூரம் கூறியும் பயனில்லாமற் போய்விட்டது.
கர்நால் ஜில்லா
கர்நால் - 6 - ந்தேதி விரதங் கொண்டாட வேண்டுமென்று ஒரு கூட்டத்தில் நிச்சயிக்கப்பட்டது.
சியால்கோட் ஜில்லா
சியால்கோட் - 6 - ந்தேதி விரதங் கொண்டாட வேண்டு மென்று துண்டுப்பத்திரங்கள் வழங்கபட்டன.
5. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - இவ்வூர்க் காங்கிர சப் கமிட்டியார் டெல்லிக் குழப்பங்களைக் கேட்டு அஞ்சியவராய் 6 - ந்தேதி விரதங் கொண்டாடக் கூடாதென்று தீர்மானித்தார்கள். சில பிரபல கனவான்கள் டிப்டி கமிஷனர் வீட்டருகில் கூடி விரதங் கொண்டாடப்பட மாட்டாதென்று உறுதி கூறினார்கள். ஆனால் மாலை 5 மணிக்கு டாக்டர் சத்தியபாலரும் டாக்டர் கிச்சுலுவும் மறுநாள் விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று தனிக்கூட்டங்களில் தீர்மானித்தார்கள்.
டேரோகாஸிகான் ஜில்லா
ஜாம்பூர்; விரதங் கொண்டாட வேண்டுமென்று சில மகம்மதியர்கள் ஒரு தனிக்கூட்டட்ததில் தீர்மானம் செய்தார்கள்.
பெரோஸபூர் ஜில்லா
பெரோஸபூர் - ஏப்ரல் மாதம் முதல் தேதி விரதங் கொண்டாடும் விஷயத்தைப் பற்றி வாதங்கள் நடைபெற்றிருந்தன. கடைசியில் 5 - ந்தேதி மாலை மறுநாள் விரதங் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
குஜரன்வாலா ஜில்லா
குஜரன்வாலா - சில பாரிடர்களும் பிளீடர்களும் ஒருங்கு சேர்ந்து ஒரு கூட்டம் கூட்டினார்கள். இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாக ஏற்பட்ட அறிக்கை மிக்க அவசரத்துடன் அச்சிடப்பட்டு ஜனங்களுக்கு வழங்கப்
பட்டது. பிற்பகலில் டிப்டி கமிஷனர் சில தலைவர்களை வரவழைத்து நகரத்தில் ஏதேனும் குழப்பம் உண்டானால் அதற்கு அவர்களே பொறுப்பாளிகளாவார்கள் என்று எச்சரிக்கை செய்தார். மாலையில் ஒரு பெரிய கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஹிந்துக்களே பெரும்பாலோராக வந்திருந்தார்கள். இக்கூட்டத்தில் இந்தியா காட்டியுள்ள இராஜபக்திக்குப் பிரதியாக ரௌலட் சட்டங்கள் வழங்கப்பட்டன என்று சிலர் பேசினர். டெல்லியில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஒருவர். அக்கூட்டத்தில், டெல்லிக் குழப்பங்களைப் பற்றி வெளியான அரசாங்க அறிக்கை தவறென்று பேசினார்.
ஹாபிசாபாட் - சத்தியாகிரகத்தைப் பற்றி யோசிக்க உள்ளூர் கிளர்ச்சிக்காரர்கள் இரகசியமாக ஒரு கூட்டங் கூடினார்கள். ஒரு பிரத்தியேகமான பிரதிநிதி தக்க ஏற்பாடுகளைச் செய்ய லாகூருக்கு அனுப்பப்பட்டார்.
ஹோஷியர்பூர் ஜில்லா
ஹோஷியர்பூர் - 6 - ந்தேதி விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று 53 பேர் கையெழுத்திட்ட ஒரு துண்டுப் பத்திரம் ஜனங்களுக்கு வெளியிடப்பட்டது. விரதங் கொண்டாடப்படக் கூடாதென்று அரசாங்கத்தாரால் புத்திமதி கூறப்பட்ட சில முக்கியதர்கள் முன் அறிக்கைக்கு மாறாக விரதங் கொண்டாடப்படக் கூடாதென்று ஓர் அறிக்கை வெளியிட்டும் பயனில்லாமற் போய்விட்டது.
ஜீலம் ஜில்லா
ஜீலம் - 6 - ந்தேதி விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று சிலர் ஒரு தனிக்கூட்டத்தில் தீர்மானித்தனர்.
லாகூர் ஜில்லா
லாகூர் - போலீசார் எதிலும் தலையிடாமலிருந்தால் நகரத்தின் முழுப்பொறுப்பையும் தாங்கள் வகிப்பதாக விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்ற முயற்சியில் ஊக்கமுள்ளவர்கள் கூறினார்கள். கடைகளை மூடும் விஷயத்திலாவது கடைகளைத் திறக்கும் விஷயத்திலாவது அரசாங்கத்தார் தலையிடமாட்டார் என்ந உறுதிமொழியை அவர்கள் பெற்று, விரதக் கொண்டாட்டம் நன்கு நடைபெற ஏற்பாடுகள் செய்தார்கள். துண்டுப் பத்திரங்களும் பெரிய அறிக்கைகளும் ஆங்காங்கு வழங்கப்பட்டன. கோட்டைத் தெருவிலும் இன்னும் சில இடங்களிலும் இராணுவக்காரர் சுற்றிவர (அரசாங்கத்தாரால்) ஏற்பாடு செய்யப்பட்டது.
லூடியானா ஜில்லா
லூடியானா - கைசர் கஞ்ச் தானிய மார்க்கெட்டில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்தும் விரதங் கொண்டாட வேண்டுமென்பதைப் பற்றியும் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.
லியல்பூர் ஜில்லா
லியல்பூர் - ஜில்லா காங்கிர கமிட்டி ஆதரவில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. மறுநாள் விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
மாண்ட்கோமரி ஜில்லா
மாண்ட்கோமரி - ரௌலட் சட்டத்தைக் கண்டித்து ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டப்பட வேண்டுமென்று லாகூரிலிருந்து கொண்டுவரப்பட்ட அறிக்கைகள் நகரமெங்கும் சுவர்களில் ஒட்டப்பட்டன.
கர்நால் ஜில்லா
கர்நால் - விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று ஒரு பொதுக் கூட்டம் கூடியது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஹிந்து மகம்மதியர் பஞ்சாயத்தில் சேர்ந்த பிரபலமானவருள் பதினைந்து பேரை டிப்டி கமிஷனர் வரவழைத்து விரதக் கொண்டாட்டத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாதென்றும் அங்ஙனம் செய்தால் அது கிரிமினல் குற்றமாகுமென்றும் எச்சரிக்கை செய்தார். இந்த எச்சரிக்கை மிக்க அமைதியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பஞ்சாப் படையைச் சார்ந்த 2/30 வகுப்பார் இவ்வூருக்கு வரும் விஷயம் நிறுத்தி வைக்கப்பட்டது.
முஸபர்கார் ஜில்லா
கோட்ஆது - லாகூர் ஆரிய சமாஜத்தைச்சார்ந்த பண்டித லோக நாதர் என்பவர் ரௌலட் சட்டத்தைக் கண்டித்து ஓர் உபந்நியாசம் புரிந்தார்.
முஸபர்கார் நகரம் - மாலையில் புதிய முலீம் லீக்கின் காரியதரிசியானவர் 6 - ந்தேதி காலை தம் வீட்டில் ஒரு கூட்டம் கூடுமென்று அறிக்கை செய்தார்.
ராவல்பிண்டி ஜில்லா
ராவல்பிண்டி - ரௌலட் சட்டத்தைக் கண்டிப்பதாயும் மறுநாள் விரதங் கொண்டாடப் படவேண்டுமென்றும் பொதுக்கூட்டமொன்றில் தீர்மானங்கள் செய்யப்பட்டன.
ரோடாக் ஜில்லா
பஹதூர்கார் - ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அலிகாரைச் சார்ந்த பண்டித தோடாரம் என்பவர் உபந்நியாசம் புரிந்தார்.
சியால்கோட் ஜில்லா
சியால்கோட் - ராம் தலப் என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மறுநாள் விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. ஹிந்து மகம்மதிய ஒற்றுயைப் பற்றி இக்கூட்டத்தில் பேசப்பட்டது. மறுநாள் ஏதேனும் கொடுமைச் செயல்கள் நடைபெறின், இராணுவ உதவியைக் கொண்டு அடக்கப்படும் என்று சில தலைவர்கள் டிப்டி கமிஷனரால் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.
6. 4. 1919
அம்பாலா ஜில்லா
அம்பாலா - விரதம் சரியாகக் கொண்டாடப் படவில்லை. மாலையில் ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூடியது.
ரூபர் - விரதக் கொண்டாட்டம் சரியாக நடைபெறவில்லை. ரௌலட் சட்டத்தைப் பொது ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டுமென்று சப் - டிவிஷனல் ஆபீசர் செய்த முயற்சியை ஆரிய சமாஜத்தைச் சார்ந்த சிலர் தடுத்தார்.
அமிருதசர ஜில்லா
அமிருதசர - (பிறரைக்) கொன்றுவிட்டு இறப்பாய் என்ற வாக்கியத்தைக் கொண்ட கையெழுத்தாலாய ஓர் அறிக்கைகிளாக்டவரில் ஒட்டப்பட்டிருந்தது. எங்கும் விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. போலீசாருடன் (ஜனங்களால்) எவ்விதமான சச்சரவும் ஏற்படவில்லை. போலீசார் பிரவேசிப்பற்கு எவ்வித நியாயமும் இல்லா வண்ணம் விரதக் கொண்டாட்டத்திற்குக் காரணமாயிருந்தவர் நடந்து கொண்டனர்
டேராகாஸிகான் ஜில்லா
ஜாம்பூர் - ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஹிந்துக்களும் மகம்மதியர்களும் வந்திருந்தார்கள்.
பெரோபூர் ஜில்லா
பெரோஸபூர் நகரமும் கண்டோன்மென்டும் - விரதக்கொண்டாட்டம் நடைபெற்றது. காலையில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப் பட்டது. அதுகாலை ரௌலட் சட்டத்தைக் கண்டித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன.
அபோஹார் கிதிர்பஹா - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. அபோஹாரில் ஒரு பொது கூட்டம் கூட்டப்பட்டது.
குஜரன்வாலா ஜில்லா
அகல்கார் - திவால் குடும்பத்தைச் சார்ந்த சிலரும் மூல்டான் கலகக்காரரான திவான் மூல்ராஜின் வமிசத்தாரும் சில ஹிந்துக்களுடன் கடைத்தெருக்களில் சென்று கடைகளை மூடும்படி கடைக்காரர்
களைத் தூண்டினார்கள். மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்குச் செய்யப்பட்ட உபந்நியாசங்கள் மிக்க அமைதியாகவே இருந்தன. (The speeches were moderate).
குஜரன்வாலா - விரதக் கொண்டாட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது; நடைபெற்ற கூட்டங்களில் ரௌலட் சட்டத்தின் அம்சங்கள் திரித்துக் கூறப்பட்டன.
ஹாபிஸாபாட் - விரதக் கொண்டாட்டம் ஒரு மாதிரியாக நடைபெற்றது. மாலை நடைபெற்ற கூட்டத்தில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன.
ராம் நகர் - விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.
ஷேக்குபுரம் - விரதக் கொண்டாட்டமும் ஹிந்துக்கள் மகம்மதியர்கள் அடங்கிய பொதுக்கூட்டமும் நடைபெற்றன.
வாஸிராபாட் - விரதங் கொண்டாடவேண்டுமென்று ஹிந்துக்களிற் சிலர் செய்த முயற்சி சில பிரபல மகம்மதியர்களால் பாழ்படுத்தப்பட்டுப் போயிற்று.
குருதாபூர் ஜில்லா
படாலா
தாரிவால்
தீனநகரம் விரதக் கொண்டாட்டம் செவ்வனே குருதாபூர் நடைபெற்றது.
பதன்கோட்டை
சுஜனபுரம்
அலிவால் கேதியான் விரதக் கொண்டாட்டம் ஒரு மாதிரியாக சோஹல் நடைபெற்றது.
கர்கான் ஜில்லா
வல்லபகரம் - டெல்லியிலிருந்து வந்த செய்தியைக் கொண்டு விரதக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மணிநேரம் கழித்து இம்முயற்சி பயன்படாமற் போயிற்று.
பரிடாபாட் - இரண்டு நாட்கள் விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது.
பல்வால் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒரு கூட்டமும் நடைபெற்றது. விரதக் கொண்டாட்டம் சம்பந்தமாக யாரேனும் கைது செய்யப்பட்டால் அவருக்கு உதவ நிதி சேர்க்கப்பட்டது.
ரீவாரி - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. பொது ஜனங்கள் அமைதியுடனிராமல் கூட்டங் கூட்டமாக அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். இக்கூட்டங்களில் ஒன்று ரெயில்வே டேஷனுக்கு ஒரு முறை வந்து போயிற்று. (ரெயில்வே டேஷனிலுள்ள?) போஜன சாலை மூடும்படி வற்புறுத்தப்பட்டது.
ஹிஸார் ஜில்லா
பிவானிநகரம் - விரதக் கொண்டாட்டம் முழுமையும் கொண்டாடப்பட்டது. சிலர் கறுப்புக் கொடியைப் பிடித்துக்கொண்டு துக்க உடையுடன் அங்கும் இங்கும் சென்றனர்.
ஹிஸார் நகரம் - நகரமுழுவதும் விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க காலையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ரௌலட் சட்டம் (அரசாங்கத்தாரால்) வாபீ செய்து கொள்ளப்படவேண்டுமென்று கடவுளைத் தோத்திரம் செய்ய மாலையிலும் ஒரு கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் உபந்நியாசங்கள் செய்யப்பட்டன.
ஹான்சி நகரம் - விரதங் கொண்டாடப் பலர் முயற்சி செய்தும் பயனில்லாமற் போயிற்று.
ஹோஷியர்பூர் ஜில்லா
ஹோஷியர்பூர் - பொதுவாக விரதங் கொண்டாடப்பட்டது. ஆனால் சில கடைக்காரர்கள் தங்களிடத்தில் வழக்கமாக வாங்கிச் செல்வோருக்குச் சாமான்கள் கொடுத்து வந்தார்கள். மாலையில் ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத் திற்கு ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். ரௌலட் சட்டத்தைத் திரித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன. டெல்லிக்குழப்ப சம்பந்தமாக ஓர் உபந்நியாசகர் மிக்க கடுமையாகப் பேசினார். ஜனங்கள் மிக்க அமைதியுடனிருந்தார்கள். நகரத்தின் பல பாகங்களிலும் பெரிய கிராமங்களிலும் விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது.
ஜாங் ஜில்லா
சினியாட் - விரதக் கொண்டாட்ட சம்பந்தமாகச் சில முயற்சிகள் செய்யப்பட்டன.
ஷார்கோட் - விரதங் கொண்டாடப்பட வேண்டுமென்று செய்யப்பட்ட முயற்சிகள் வீணாயின.
ஜீலம் ஜில்லா
ஜீலம் நகரம் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. மாலையில் ஒரு கண்டனக் கூட்டம் கூட்டப்பட்டது.
ஜல்லந்தர் ஜில்லா
ஜல்லந்தர் விரதங் கொண்டாடப்பட்டது. ரௌலட் ரவன்ஷார சட்டத்தைக் கண்டனம் செய்யக் பங்கா கூட்டங்கள் நடைபெற்றன. ராஹோன்
கர்நால் ஜில்லா
கர்நால் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது.
பானிப்பட்டு - விரதக் கொண்டாட்டம் நடைபெற வேண்டுமென்று செய்யப்பட்ட முயற்சிகள் வீணாயின.
லாகூர் ஜில்லா
லாகூர் - காலையில் ஜனங்கள் ரவி என்னுமிடத்தில் கூட்டமாகக் கூடி நகரத்தில் வந்தார்கள். பகலில், காந்தியின் உருவத்தைக் கொண்ட கறுப்புக் கொடியைத் தாங்கிக் கொண்டு அநார்கலி கடைத்தெரு வழியாக ஓர் ஊர்வலம் வந்தார்கள். நீலாகும்பா சௌக்கில் இக்கூட்டம் ஒரு போலீ படையைத் தள்ளிக்கொண்டு சென்று இரண்டாகப் பிரிந்து ஒரு கூட்டம் கொடியைத் தாங்கி பிளீடர்களாலும் படித்த வகுப்பாராலும் அழைத்துச் செல்லப்பட்டது. நடுவில் போலீ படையாலும் குதிரைப் படையாலும் தடுக்கப்பட்டு கடைசியில் பிராட்லாஹாலுக்கு டாக்டர் கோகுல சந்திர நாரங்கரால் இக்கூட்டம் அழைத்துச் செல்லப்பட்டது. கூட்டத்தின் மற்றொரு பாகம் மார்க்கட்டு சௌக்கில் குதிரைப் படையால் தடுக்கப்பட்டது. இங்கே கொடுமைச் செயல்கள் செய்ததாகச் சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். இக்கூட்டத்தையும் விடுதலை செய்து வெளியே அழைத்துப் போவதற்கு டாக்டர் கோகுல நாரங்கர் உதவியாயிருந்தார். அநார்கலி கடைத்தெரு முதல் நீலாகும்பா வரையிருந்த கூட்டத்தைக் குதிரைப் படையானது விலக்க முயற்சி செய்தது. பிராட்லாஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகும், இரவில் இராணுவப் படையானது நகர்க்காவலினின்றும் செல்வதற்கு முன்னரும் எவ்விதமான ஊர்வலமும் நடைபெறவில்லை. இராணுவப் பாதுகாவல் நீங்கியதும் ஒரு கூட்டமானது, முனிசிபல் கமிஷனர் வீடுகளிலும், கௌரவ மாஜிட்ரேட்டுகள் வீடுகளிலும் கற்கள் எறிந்துகொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் சென்றன. இந்நாள் முழுவதும் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. எல்லா வேலைகளும் நிறுத்தப்பட்டுப் போயின.
லூடியானா ஜில்லா
லூடியானா - பொதுவாக விரதங் கொண்டாடப்பட்டது. புத்தநள கட்டத்தில் மாலையில் ஒரு கூட்டம் கூடியது. கன்னாவிலும் ஷானி வாலிலும் விரதங் கொண்டாடப்பட்டது.
லியல்பூர் ஜில்லா
கோஜ்ரா - லியல்பூரிலிருந்து வந்த ஒரு பிளீடரும் ஆரிய சமாஜத்தைச் சார்ந்த சிலரும் விரதங் கொண்டாட முயற்சிகள் செய்த போதிலும் பயனின்றிப் போய்விட்டன.
ஜரன்வாலா - விரதங் கொண்டாடப்படுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. டெல்லிக் குழப்பத்தில் இறந்தவருடைய குடும்பத்திற்கு உதவி செய்யப் பணம் வசூலிக்கப்பட்டது.
லியல்பூர் - நாள் முழுவதும் பொதுவாக விரதங் கொண்டாடப்பட்டது. ஜில்லா காங்கிர கமிட்டியார், மாலையில் ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூட்டினர்.. ஜனங்கள் மிக்க அமைதியுடன் நடந்துகொண்டார்கள். அதிகமான ஆவேசம் ஜனங்களுக்கு இல்லை. ஆனால் ரௌலட் சட்டத்தின் நோக்கங்கள் திரித்துக் கூறப்பட்டன.
தண்டிலியன்வாலா - காலை எட்டு மணிக்கு ரெயில் வண்டி வந்ததும் விரதக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதமனம் வரை கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் லாகூரிலிருந்து வந்த வியாபாரிகளின் (இவர்களில் முக்கியமானவர்கள் ஆரிய சமாஜத்தைச் சார்ந்தவர்கள்) தூண்டுதலின் பேரில் நடைபெற்றது.
டோபோ டேக்சிங்க் - ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு பிளீடர்களுடைய முயற்சியின் பேரில் விரதக் கொண்டாட்டம் சிறிது நேரம் கொண்டாடப்பட்டது.
மாண்ட்கோமரி ஜில்லா
சிச்சவத்னி - பருத்தியந்திர சாலையும் மற்றொரு தொழிற்சாலையும் வேலை தொடங்காமலிருந்தன.
கமேலியா - விரதக் கொண்டாட்டமும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றன.
மாண்ட்கோமரி நகரம் - விரதங் கொண்டாடப்பட்டது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஹிந்து மகம்மதிய பஞ்சாயத்தாரின் தூண்டுதலின் பேரில் விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. டெல்லி கேட்டுக்கு வெளிப்புறத்தில் மாலை ஒரு பொதுக்கூட்டம் கூடியது. இங்கு ரௌலட் சட்டத்தைக் கண்டித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன.
முஸபர்கார் ஜில்லா
கோட்ஆது - ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூடியது. ஹிந்துக்களின் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. ஹிந்துக் களில் அநேகர் உண்ணாவிரதமிருந்தனர்.
முஸபர்கார் நகரம் - முலீம் லீக்கின் காரியதரிசியால் கூட்டப்பட்ட கூட்டத்திற்குச் சுமார் முன்னூறுபேர் வந்திருந்தனர். ரௌலட் சட்டத்தைக் கண்டித்து உபந்நியாசங்கள் செய்யப்பட்டன. ஏறக்குறைய எல்லாக்கடை களும் மூடப்பட்டிருந்தன. ஆனால் ஊர்வலமாவது வேறுவிதமான சம்பவமாவது நடைபெறவில்லை.
ராவல்பிண்டி ஜில்லா
ராவல்பிண்டி நகரம் - ரௌலட் சட்டத்தைக் கண்டித்து கால்ஸாயாங் மென் இந்தியன் அசோசியேஷனின் தனிக்கூட்டமொன்று நடைபெற்றது.
ரோடாக் ஜில்லா
பஹதூர் கார் - ஒரு கூட்டம் நடைபெற்றது. அலிகாரைச் சேர்ந்த பண்டித தோடாராம் ஓர் உபந்நியாசம் புரிந்தார்.
ரோடாக் - விரதக் கொண்டாட்டமும் ஒரு கூட்டமும் நடைபெற்றன. அன்று காலை இறந்து போன ரெவரெண்ட் மிடர் காரிலானைப் புதைப்பதற்குக் குழிதோண்டுவதைச் சிலர் எதிர்த்தனர்.
சோன்பேட்டை - நாள் முழுவதும் விரதங் கொண்டாடப்பட்டடது. சிடி மண்டி என்னுமிடத்தில் ஒரு கூட்டம் கூடியது.
சியால்கோட் ஜில்லா
சியால்கோட் நகரம் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. கடைகள் மூடப்பட்டன. வண்டிகளின் போக்குவரவு நிறுத்தப்பட்டது. ஆனால் யாவும் அமைதியுடன் நடைபெற்றன. மாலையில் ஒரு பொதுக் கூட்டம் கூடியது.
சிம்லா ஜில்லா
சிம்லா - விரதக் கொண்டாட்டமும் ஒரு பொதுக்கூட்டமும் நடைபெற்றன.
7. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - விரதக் கொண்டாட்ட ஊக்கமும் உற்சாகமும் அதிக நாள் நீடித்திருக்க வேண்டுமென்று ஆலோசிக்கத் தனிக்கூட்டம் கூடியது.
ஹிஸார் ஜில்லா
பிவானி நகரம் - வைசிய சபையின் ஆதரவில் ஒரு கூட்டம் கூடியது. அதுகாலை ஆலோசிக்கப்பட்ட மற்ற விஷயங்களோடு ஹிந்து மகம்மதிய ஒற்றுமை என்பதைப் பற்றி உபந்நியாசமும் நடைபெற்றது. ரௌலட் சட்டத்தைப் பற்றிய உணர்ச்சிகள் வெளியிடப்பட்டன.
மாண்ட்கோமரி ஜில்லா
சத்கிருகம் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - ஆறாந் தேதியன்று ஆரம்பித்த விரதக்கொண்டாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
8. 4. 1919
ஹிஸார் ஜில்லா
பிவானி நகரம் - ஹிந்து மகம்மதிய ஒற்றுமையுள்ள ஒரு கூட்டம் கூடியது.
சிர்ஸா - ரௌலட் சட்டத்தைக் கண்டிக்க ஹிந்துக்களும் மகம்மதியர்களும் சேர்ந்து ஒரு கூட்டங் கூடினார்கள்.
ஜாங் ஜில்லா
சினியாட் - விரதக் கொண்டாட்டம் மற்றொன்று ஏற்படுத்த எடுத்துக் கொண்ட பிரயாசை வீணாயிற்று.
மூல்டான் ஜில்லா
மூல்டான் நகரம் - ஆறாந்தேதியன்று ஆரம்பித்த விரதக் கொண்டாட்டம் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வந்தது. பஞ்சாயத்து மூலமாக எல்லா விஷயங்களும் சரிப்படுத்த ஏற்பாடு செய்ய ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
9. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ஹிந்துக்களின் உற்சவமான ஸ்ரீராம நவமி, ஹிந்துக்களாலும் மகம்மதியர்களாலும் செம்மையாகக் கொண்டாடப்பட்டது. ஊர்வலம் வருங்காலையில் ஜனங்கள் யாவரும் பகவன் நாம சங்கீர்த்தனஞ் செய்வதைவிட்டு ஹிந்து முஸல்மான் கீஜெய் என்றும், மகாத்மா காந்தி கீ ஜெய் என்றும் கூச்சலிட்டுக் கொண்டு சென்றனர். இப்படி கோஷித்துக் கொண்டு நகர்வலம் வரும் சமயத்தில் கவர்ன்மெண்டுக்கு விரோதமான காரியங்கள் ஒன்றையேனும் அவர்கள் செய்ய வில்லை. ஆனால், மகம்மதியர்களில் ஒரு சிலர் துருக்கி சிப்பாய்கள் போல் உடை முதலியன தரித்துச் சென்றனர். மாலையில் கவர்ன் மெண்டாரிடமிருந்து டிப்டி கமிஷனர் அவர்களுக்கு ஓர் உத்தரவு வந்தது. அவ்வுத்தரவு டாக்டர் கிச்சுலு அவர்களையும் டாக்டர் சத்தியபாலர் அவர்களையும் வெளியூருக்கு அனுப்பப்பட வேண்டுமென்பதே.
குருதாபூர் ஜில்லா
படாலா - ஸ்ரீராம நவமி உற்சவகாலத்தில் ஹிந்துக்களும், மகம் மதியர்களும் சேர்ந்து ஒற்றுமையுடன் க்ஷ உற்சவத்தைக் கொண்டாடினார்கள். அக்காலத்தில் காந்தி நாம சங்கீர்த்தனம் பல முறைகளில் செய்யப்பட்டது. மற்ற சமயங்களில், ஹிந்துக்களும் மகம்மதியர்களும் ஒற்றுமையாக இருப்பதற்கு அறிகுறியாகக் கொடிகளில் அல்லா, ஸ்ரீராம், ஓம்: என்றே தேவ நாமங்கள் எழுதப்பட்டிருந்தன.
கர்நால் ஜில்லா
பானிப்பட்டு - ராத ஜாத்திரை என்ற மகோற்சவம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது ஹிந்துக்களும், மகம்மதியர்களும் ஒற்றுமையாக அக் கொண்டாட்டத்தை நடத்தினார்கள்.
லாகூர் ஜில்லா
லாகூர் - ஸ்ரீராம நவமி ஊர்வலம் ஜனத் தலைவர்களினால் ராஜ நிந்தனை உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஊர்வலமாக உபயோகிக்கப்பட்டது . அதில் ஹிந்துக்களும் மகம்மதியர்களும் மிகவும் ஒற்றுமை யுடன் கலந்தார்கள். இவ்வூர்வலத்தை, லாலா தூனிசந்திரர் குதிரைமீது சவாரி செய்துகொண்டு நடத்திச் சென்றார்.
கர்கான் ஜில்லா
பல்வால் - மிடர் காந்தியவர்கள் பஞ்சாப் எல்லைக்குள் வரக்கூடாதென்றும் பம்பாய் ராஜதானியின் எல்லைக்குள்ளேயே இருக்கவேண்டும் என்றும் ஓர் உத்தரவு அவருக்கு அளிக்கப்பட்டது. அதனால் மிடர் காந்தி பஞ்சாப் மாகாணத்திற்குள் வராமல் தடுக்கப்பட்டார்.
10. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - டாக்டர் சத்தியபாலரும், டாக்டர் கிச்சுலுவும் காலை 10 - 30 மணிக்கு வெளியூருக்கு அனுப்பப்பட்டார்கள். சிறிது நேரத்துக் கெல்லாம் திரள் திரளாக ஜனங்கள் நகரத்திலும், எய்ட்சிஸன் தோட்டத்திலும் கூடினார்கள். இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை செய்தார்கள். கோபாவேசங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஆயுதபாணிகளாயிருந்த ஒரு சிறு இராணுவ கூட்டத்தை துரத்திக்கொண்டு ஹால் கேட் பாலத்தைக் கடந்து சிவில் லைன்சுக்குள் பிரவேசிக்கலானார்கள். அங்கிருந்த இராணுவ வீரர்களுக்குத் துப்பாக்கியினால் சுட உத்தர
வளிக்கப் பட்டது. கலகக் காரர்களில் சிலர் கொல்லப்பட்டனர்; சிலர் காயம் பட்டனர். இச்சம்பவம் பகல் ஒரு மணிக்கு நடந்தது. பிரிட்டிஷ் காலாட்படைத் தலைவரின் உத்தரவின் பேரில் இராணுவ வீரர்கள் மறு படியும் துப்பாக்கியினால் சுட்டுக் கூட்டத்தாரை இருப்புப் பாதைக்கப்புறம் துரத்தியடித்தார்கள். பிறகு கூட்டம் கலைந்தது. அடிபட்டுக் கலைந்த கூட்டத்தின் ஒரு பகுதி டெலிபோன் ஆபீஸைத் தாக்கிப் பாழாக்கியது. மற்றொரு பகுதியார் ரெயில்வே டேஷனிலுள்ள குட்ஷெட்டில் புகுந்து சாமான்களையெல்லாம் தீக்கிரையாக்கினர்; தந்திக் கம்பிகளை அறுத்தெறிந்தனர்; ரெயில்வே கார்டு ராபின்ஸன் என்பவரைக் கொன்றனர்; டேஷன் சூபரின்டெண்டெண்டைத் துரத்திச் சென்றனர். ஆனால் இவர் ரெயில்வே டேஷன் இராணுவ வீரர்களினால் திருப்பி யடிக்கப்பட்டனர். கூர்கா சேனா வீரர்கள் அதிருஷ்ட வசத்தினால் நல்ல சமயத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். கடைசியாக ரெயில்வே டேஷன் பாதுகாக்கப்பட்டது.
நகரத்தில், ஐரோப்பயர்களுடையவும், கவர்ன்மெண்டாருடையவும் சொத்துக்கள் எல்லாம் தாக்கப்பட்டன. நேஷனல் பாங்கிலுள்ள சகல சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அந்தப் பாங்கின் ஏஜெண்டான மிடர் டூவர்ட்டும் உதவி ஏஜெண்டான மிடர் காட்டும் கொலை செய்யப்பட்டனர். அலையன் பாங்கும் எதிர்க்கப்பட்டது; அதன் ஏஜெண்டான மிடர் தாம்ஸன் கொல்லப்பட்டார். சார்டர்ட் பாங்கும் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாங்கின் ஏஜெண்டு மிடர் ஜெ. என். தாம்ஸனும் உதவி ஏஜெண்டு மிடர் ராஸும் போலீஸாரால் காப்பாற்றப் பட்டனர். மத விஷயமான புத்தக சங்கத்தின் புத்தக சாலையிலும், அதன் மண்டபமும், டௌன் ஹாலும், அதைச் சேர்ந்த சப்போட் ஆபீசும் கொளுத்தப்பட்டன. சொர்ணாலயத்தினருகேயுள்ள சப்போட் ஆபீ, மஜீத் மண்டி, தாப்ப தி ராம் இவைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கோஷா ஆபத்திரியின் திரீ டாக்டரான ஈடன் அம்மையார் கொலை செய்யப்படுவதிலேயே தப்பித்துக் கொண்டார். கிறிதவ மத பிரசாரணியான மி ஷெர்வுட் என்னும் மாது படுகாயம் செய்யப்பட்டாள். இந்திய கிறிதவர் களின் மாதா கோயில் கொளுத்தப்பட்டது. ஸி. எம். எ, உபாத்தினி பாட சாலையைத் தீக்கிரையாக்கப் பிரயத்தனமும் செய்யப்பட்டது. எயிட்ஸின் தோட்டத்தினருகே மில்டெரி வொர்க் எலக்ட்ரிஷனான சார்ஜண்ட் ரோலான்ட கொலை செய்யப்பட்டார். நகர் முழுமையும் அதையடுத்த பிரதேசத்திலுமுள்ள தந்தி கம்பிகளும், டெலிபோன் கம்பிகளும் துண்டு துண்டாக அறுத்தெறியப்பட்டன.
கிளர்ச்சிக் கூட்டத்தார் பகல் இரண்டு மணி சுமாருக்கு இராணுவ விடுதியினுள் பிரவேசிக்கப் பிரயத்தனப்பட்டனர். அப்பொழுது அவர்கள் ஹால்கேட் பாலத்தினின்று சுடப்பட்டனர். அதில் இருபது அல்லது முப்பது பேர் இறந்தனர். மாலையில் கமிஷனர் வந்ததும் அந்த இடத்தை இராணுவ அதிகாரிகளின் வசம் ஒப்புவித்தார். இரவு 10 மணி சுமாருக்கு 400 புதிய இராணுவ வீரர் லாகூரினின்றும் வந்து சேர்ந்தனர்.
பகவான் வாலா ரெயில் டேஷன்
தார்ன் தாரன் லைன் கொளுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப் பட்டது. தந்திக் கம்புகள் யாவும் அறுக்கப்பட்டன. கலகக்காரர் இதன் பிறகு லாகூர் மார்க்கம் பெரிய லைனில் இந்தக் காரியங்களைச் செய்யப் பிரயத்தனப்பட்டனர். ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டனர். கல்கத்தா மெயில் வண்டியில் பிரயாணஞ் செய்யும் ரெயில்வே போலீ வீரர்கள் துப்பாக்கிகளினால் அவர்களைச் சுட்டனர்.
சீஹார்டா ரெயில்வே டேஷன்
கிராமக் கூட்டத்தார்கள் இரவில் எதிர்த்து, டேஷன் ஜன்னல்களை உடைத்து, கூட் ஷெட்டிலிருந்த ஒரு கூட் வண்டியைத் தாக்கி அதிலிருந்த சாமான்களைக் கொள்ளையடித்தார்கள்.
கர்கான் ஜில்லா
கர்கான் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. இரவில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. அதில் மறுநாள் விரதக் கொண்டாட்டம் செம்மையாக நடைபெற வேண்டுமென்றும் பிரதி மாதமும் கடைசி சனிக்கிழமை தோறும் ரௌலட் சட்டம் ரத்து செய்யப்படும் வரையில் விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்படவேண்டும் என்றும் தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் பிரதி கடைசி சனியன்று விரதங் கொண்டாடப் படவேண்டுமென்ற அபிப்பிராயம் முற்றிலும்அங்கீகரிக்கப் படவில்லை.
பல்வால் - விரதக் கொண்டாட்டம் மறுபடியும் கொண்டாடப்பட்டது.
ஹிஸார் ஜில்லா
பிவானி நகரம் - மற்றொரு விரதக் கொண்டாட்டம் செம்மையாக நடைபெறுவதற்குச் செய்த பிரயத்தனங்கள் பிரயோஜனமற்றுப்போயின.
ஜல்லந்தர் ஜில்லா
ஜல்லந்தர் - அமிருதசரஸில் நடந்த கலவர சமாசாரங்கள் மாலையில் எட்டின. கொஞ்சம் கலக்கத்தையும் ஆவேசத்தையும் உண்டாக்கின.
லாகூர் ஜில்லா
லாகூர் - காந்தியவர்கள் அரெடு செய்யப்பட்ட சங்கதியும், அமிருதசர கலவர சமாசாரமும் பகலில் எட்டின. மாலையில் சுமார் ஆறுமணிக்கு ஆயிரக் கணக்கான ஜனங்கள் கூட்டங் கூட்டமாக மால் என்ற இடத்தில் கூடினார்கள். இப்படிக் கூடும்பொழுது. அவர்கள்மேல் செல்வதைத் தடுக்க ஒரு சிறு போலீ வீரர்கள் கூட்டம் காவலாக வைக்கப்பட்டிருந்தது. அச்சிறு போலீ கூட்டத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு கூட்டத்தார் மேல் சென்று கொண்டிருந்தனர். பிறகு டிப்டி கமிஷனர் அவ்விடத்திற்கு வந்தார். போலீ வீரர்கள் கூட்டத்தாரால் சூழப்பட்டிருந்ததைக் கண்டு அவர்களைச் சுடும்படிக்குக் கட்டளையிட்டார். சுட்டதின் பேரில் தான் கூட்டம் கலைய ஆரம்பித்தது. லாகூர் கேட் என்ற இடத்தில் ஒரு பெரிய கூட்டத்தார் போலீ சூபரிண்டெண்டெண்டையும் போலீ வீரர்களையும் கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். டிப்டி கமிஷனர் அவ்விடத்திற்கு வந்தும் கல்லால் அடிப்பது நின்றபாடில்லை. ஆகவே மறுபடியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியது அவசியமாகிவிட்டது. அதில் பதினைந்து பேர் படுகாயம் செய்யப்பட்டனர்; பிறகு அவர்கள், கையில் தடி கொண்டு வரும் சில கிளர்ச்சிக்காரர்கள் தாங்கள் பிடிபட்டு விடுவதாகப் பயந்து கலைந்து விட்டார்கள்.
லூடியானா ஜில்லா
லூடியானா - கெயிஸர்கஞ்ச் மார்க்கெட்டில் ஹிந்து மகம்மதிய ஒற்றுமை பின்னும் அதிகரிக்க வேண்டும் என்றும், லூடியானாவில் ஒரு தேசீய மண்டபம் (National Hall) கட்டப்பட வேண்டும் என்றும் 1920 - ம் வருஷத்து மாகாணக் கான்பிரன் லூடியானாவில் கூட வேண்டும் என்றும் ஆலோசனை செய்ய ஒரு பெரிய பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.
சியால்கோட் ஜில்லா
சியால்கோட் - லாகூர் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான அப்துல் ஹேய் என்பவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பிரசங்கம் செய்தார்.
11. 4. 1919
அம்பாலா ஜில்லா
அம்பாலா - மற்றொரு விரதக் கொண்டாட்டம் நடைபெற எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீணாயின . மாலையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ஜல்லந்தரிலிருந்து புதிய சேனை வந்த பத்தாந் தேதி யன்று, முன் கொல்லப்பட்ட குடிகளின் பிரேதங்கள் புதைக்கப்பட்டன. அப்போது பெரிய கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. நகர் முழுவதிலும் இராணுவ வீரர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
குஜரன்வாலா ஜில்லா
சுஹர்கானா - மண்டி மசூதியில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஹிந்துக்களும், மகம்மதியர்களும் விஜயம் செய்தார்கள். அக்கூட்டத்தில் விரதக் கொண்டாட்டம் விரைவில் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சங்காலா - ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அடுத்த நாளே விரதங் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
குருதாபூர் ஜில்லா
குருதாபூர் - டிப்டி கமிஷனர் அவர்கள் அந்த ஊரிலுள்ள பிரதான வக்கீல்களையும் பிளீடர்களையும் காலையில் தன்னுடைய கோர்ட்டில் கூட்டினார். தற்காலத்தின் நிலைமையை உத்தேசித்து நியாய மார்க்கத்தில் நடக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். இவரது வேண்டுகோளுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சிலர் இதை உல்லங்கனம் செய்தனர். மாலையில் அரியன் வாலி (Arainwali) மசூதியில் ஹிந்து மகம்மதியர் கூட்டம் ஒன்று கூடியது.
கர்கான் ஜில்லா
கர்கான் - விரதக் கொண்டாட்டம் செம்மையாக நடைபெற்றது. அரியன் வாலி மசூதியில் ஹிந்து மகம்மதிய கூட்டம் கூட்டப்பட்டது.
ஹாஸன்பூர் - விரதக் கொண்டாட்டம் ஒரு நாள் நடைபெற்றது.
ஹோதால் - விரதக் கொண்டாட்டம் ஒருநாள் மாத்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்று ஏற்படுத்தக் காரணமாயிருந்த ஒரு பொதுக்கூட்டத்தை டில்லி வாசியான சுரேந்திர நாத்சர்மா கூட்டினார்.
பல்வால் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்று வந்தது.
ஹிஸார் ஜில்லா
பிவானி நகரம் - பதின்மூன்றாந் தேதியன்றும் விரதக் கொண்டாட்டம் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு வியாபாரி ஒரு கறுப்புக் கொடியைக் கையிற் பிடித்து இதைப் பகிரங்கப்படுத்தச் சென்றார். ஆனால் இது பிரயோஜனப் படவில்லை.
ஜல்லந்தர் ஜில்லா
ஜல்லந்தர் - காலையில் மகாத்மா காந்தியவர்கள் அரெட் செய்யப் பட்ட சங்கதி கிடைத்தது. நகரத்தில் விரதக் கொண்டாட்டம் செம்மையாக நடைபெற்றது. ரெயில்வே டேஷனுக்கும் சைன்ய விடுதிக்கும் கலவரம் நடவாதபடிக்கு யுத்த வீரர்கள் அனுப்பப்பட்டார்கள்.
கர்நால் ஜில்லா
பானிப்பட்டு - ஸ்ரீமான் காந்தியவர்கள் அரெட் செய்யப்பட்டதன் பேரில் விரதக் கொண்டாட்டம் செம்மையாக நடைபெற்றது. டெல்லி கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான பகவான்ஜி என்பவர் இராஜத் துரோகமான உபந்நியாசங்கள் செய்தார். அவரை அரெட் செய்வதற்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படிக்கு ஒரு வாரண்டு அந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டது.
லாகூர் ஜில்லா
காசூர் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது. நாடார் அலிஷா நடத்திச் சென்ற கூட்டத்தார் நகர் முழுவதிலும் சென்று பலவந்தமாகக் கடைகளை மூடி வந்தார்கள். பிறகு கூட்டத்தவர்கள் ஹரி ஹர மந்திரத்
தினருகே கூட, அங்கே அநேகர் ஊக்கத்தோடு உபந்நியசித்தார்கள். அங்கே நடந்த உபந்நியாசங்கள் மொத்தத்தில் மிகவும் அமைதியாகவிருந்தன. ஆனால் அதில் ஒரு தலைவர் ரௌலட் சட்டத்தைக் கண்டித்துக் கோபாவேசங்கொண்டு உபந்நியாசித்தார்.
லாகூர் - இரவும் பகலும் நகரம், கலகக்காரர் வசமிருந்தது. முந்திய நாள் சாயங்காலம் மூடிய கடைகள் அனேக நாட்கள் வரை திறக்கப்படாமலிருந்தன. அதிகாலையில், கிளர்ச்சிக் கூட்டத்தார்களுடன் போலீகாரர்களையும் கலக்கும்படி மோதிராம் என்பவர் பலமுறை சொல்லிப் பார்த்தார். பாட்ஷை மசூதியில் திரள் திரளாக ஜனங்கள் கூடினார்கள். அந்தக் கூட்டத்தில் ஹிந்துக்கள் உபந்நியாசம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டார்கள். கையில் தடிபிடித்துக் கொண்டு சில கூட்டத்தாரும் மசூதியினுள் நுழைவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டனர். ரெயில்வே ஒர்க்ஷாப் தொழிலாளிகள் காலை உணவு கொள்ளப் போகும் சமயத்தில் இரண்டு சீக்கிய மாணவர்கள், சத்தியாகிரக பிரசுரங்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள். இதற்குப்பின், அங்கே யிருந்த டைம் ஆபீஸை சிலர் எதிர்த்தார்கள்; சிறுவர்கள் கல்லெடுத்து எறிந்தார்கள். அந்த ஆபீஸின் சூபரிண்டெண்டெண்டு கல்லால் அடிக்கப்பட்டார். குதிரை வீரர்களினுதவியாலும், போலீ படையினுதவியாலும் கூட்டம் கலைக்கப் பட்டது. உபகாரச் சம்பளம் பெற்ற பலவந்த சிங் என்ற சிப்பாய், நகரத்திலும் பாட்ஷாஹி மசூதியிலும், இந்தியப் படைகள் லாகூர் கண்டோன் மெண்டில் கலவரத்தை யுண்டாக்கிவிட்டு அமிருத சரசுக்கும் லாகூருக்கும் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் 200 அல்லது 250 பிரிட்டிஷ் யுத்த வீரர்களைக் கொன்றுவிட்டனர் என்றும் தான் மாத்திரம் ஆறுபேர்களைக் கொன்றதாகவும் விளம்பரப்படுத்தினான். கூட்டம் முடிந்தவுடன் கூட்டத்தார்கள் நகரின் மூலமாகச் சென்று கொண்டிருந்தார்கள். செல்லுங்கால் மாட்சிமை தங்கிய அரசர் பெருமானின் உருவப் படத்தை நாசமாக்கிக் கொண்டே சென்றார்கள்.
லியல்பூர் ஜில்லா
அமிருதசரஸிலும், லாகூரிலும் நடந்த கலகத்தின் சமாசாரமும் மிடர் காந்தி பஞ்சாப் எல்லைக்குள் வரக்கூடாதென்று தடுக்கப் பட்ட சமாசாரமும் எட்டின. இது பொதுஜனங்களுக்குப் பெரிய வருத்தத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கியது. ஆனால் ஒருவித சம்பவமும் நடவாத வண்ணம் தடுக்கப்பட்டது.
மூல்டான் ஜில்லா
மூல்டான் - அதிகாலையில் அமிருதசரஸில் நடந்த கலவரத்தின் சமாசாரம் எட்டிற்று. காலை 9 மணி சுமாருக்குக் கடைகள் யாவும் மூடுவதற்கு ஆரம்பித்தன. டிப்டி கமிஷனர் விரதக் கொண்டாட்டத் தலைவர்களை வரவழைத்துக் கொண்டாட்டத்தை நடவாதபடி நிறுத்தும் படிக்கும், அப்படி நிறுத்தபடாவிட்டால் பின்னால் நேரும் கஷ்டங் களுக்க்குத் தாம் உத்தரவாதமில்லை என்றும் எச்சரிக்கை செய்தார். போலீ சட்டத்தின் 30 செக்ஷன் 2 - ம் பிரிவின் படிக்கு நகரத்தில் யாதொரு விதமான ஊர்வலமாவது, கூட்டமாவது கூடக் கூடாதென்று ஓர் உத்தரவை போலீ சூபரிண்டெண்டெண்டு பிறப்பித்தார். நகரத்தில் இராணுவ வீரர்களும், போலீ வீரர்களும் பந்தோபதுக்காக வைக்கப் பட்டிருந்தார்கள்.
ராவல்பிண்டி ஜில்லா
ராவல்பிண்டி நகரம் - டெல்லியில் கொல்லப்பட்டு உயிர் துறந்தவர்களுக்குத் தங்கள் அநுதாபத்தைக் காட்ட ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது.
ரோடாக் ஜில்லா
பஹதூர் ஜஜ்ஜார் - விரதக் கொண்டாட்டம் நடைபெற்றது.
ரோடாக் - ஒரு பெரிய பொது ஜனக்கூட்டம் நடைபெற்றது. அதில் இராஜாங்கத்தாரால் நிராகரிக்கப்பட்ட புத்தகங்கள் விற்கப் பட்டன. ஹிந்து மகம்மதியர்கள் ஒன்று சேர்ந்த கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அவ்வூரிலுள்ள பிளீடர்களில் சிலர் ஆவேசத்துடன் பிரசங்கங்கள் செய்தார்கள்.
சியால்கோட் ஜில்லா
பரூர் - ஒரு பாரிடருடைய வீட்டில் இரகசியக் கூட்டம் கூட்டப்பட்டது.
12. 4. 1919
அமிருதசர ஜில்லா
அமிருதசர - ஒரு கலவரம் நடக்கும் போலிருந்தது. ஆனால் இராணுவப் படை வீரர்களினால் அக்கலவரம் நடைபெறாவிதம் தணிக்கப் பட்டது. கலகக்காரர்களில் முக்கியமானவர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
சீஹார்டர் - இவ்விடத்திலிருந்து அமிருதசர வரையில் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன.
தார்ன்தாரன் - கலவரம் ஒன்று உண்டாகும் போலிருந்ததனால் ஒரு சிறு சேனை ஆயுதத்துடன் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது. ஆனால் சில காரணங்களின் நிமித்தம் இந்தச் சிறுபடை இவ்விடத்தில் தங்கவில்லை. இந்தச் சேனை சென்ற பிறகு சில கிராமக் கூட்டத்தார்கள் சேர்ந்து தாசீலைக் கொள்ளையிட ஆரம்பித்தார்கள். ஆனால் அக்கூட்டத் தார் போலீ இன்பெக்டர் அஜீஸுடீன் அவர்களாலும் பின்னும் சிலராலும் கலைக்கப் பட்டார்கள். மறுநாட் காலையில் மற்றொரு சேனை அவ்விடத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வந்து இறங்கிற்று.
ஆசியாப்பூர் - கிறிதவ பாதிரிகளின் கட்டிடங்கள் எதிர்க்கப் படும் போலிருந்தன. சில சேனைகள் இங்கு அனுப்பப்பட்டன.
காஸா குருஸார் - இவ்விடங்களுக்கிடையிலுள்ள தந்திக் கம்பிகள் அறுத்தெறியப்பட்டன.
அம்பாலா ஜில்லா
அம்பாலா நகரம் - ஸ்ரீமான் காந்தி தேச பிரஷ்டம் செய்யப் பட்டதைக் கண்டிப்பதற்காக ஒரு பொது ஜனக்கூட்டம் கூட்டப் பட்டது.
பெரோஸபூர் ஜில்லா
பெரோஸபூர் - காசூருக்கு யுத்த வீரர்கள் அனுப்பப்பட்டனர். பெரோஸபூருக்குக் கலவரம் பரவாதிருக்க வேண்டிய ஏற்பாடுகளைப் போலீ படைகளும், இராணுவப் படைகளும் செய்து வந்தன.
குருதாபூர் ஜில்லா
படாலா - மற்றொரு விரதக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. அவ்வூரிலுள்ள பிரதான கிளர்ச்சிக்காரர்கள் எச்சரிக்கை செய்யப் பட்டபோது அவர்கள் பின் சென்ற கூட்டத்தவர்கள் தங்கள் தலைவர்கள் கைது செய்யப்படுவார்களானால் தாங்கள் கலகத்தையும் கலவரத்தையும் கட்டாயம் உண்டாக்குவோம் என்று பயப் படுத்தினார்கள்.
குருதாபூர் - மற்றொரு விரதக் கொண்டாட்டம் நடை பெற்றது. அவ்விடத்திய நிலைமை கஷ்டமாக விருந்தபடியால் ஓர் அதிகாரியின் கீழ் 50 வீரர்களடங்கிய ஒரு சிறு இராணுவப் படை பன்கோட்டையிலிருந்து போலீ படைக்கு உதவியாக இருப்பதற் காக வந்து சேர்ந்தது. இரவில் ஜம்மா மசூதியில் ஹிந்துக்களும், மகம்மதியர்களும் கூட்டங் கூடினர்.
குஜரன் வாலா ஜில்லா
கருத்துகள்
கருத்துரையிடுக