ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1
சிறுகதைகள்
Backஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1
ஆணும் பெண்ணும் (1953), உதயம் (1954), ஒரு பிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960) தேவன் வருவானா (1961), சுமை தாங்கி (1962), மாலை மயக்கம் (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969), குருபீடம் (1970), அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் (1972), சர்க்கரம் நிற்பதில்லை (1973), பபுகை நடுவினிலே (1990), ....... .
இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை திட்டத்தின் கீழ் வௌியிட உள்ளோம்.
1. யுக சந்தி - ஜெயகாந்தன்
கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.
"பாட்டி...பாட்டி' பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி."
"வண்டி வேணுங்களா அம்மா?"
"புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம்" ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:
"எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.
பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?...
அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.
மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.
அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?
தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.
வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.
அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.
எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.
"என்னப்பனே மகாதேவா" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.
பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.
பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌித் தெரிந்தது.
---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது.....
பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்.
"பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான்.
"யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.
"ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்."
"நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்....' இது மூணாவது பையனா?"
"ஆமாமுங்க" என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்
"நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?" என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.
"அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது?" என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.
"இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ" என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.
"பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்" என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.
சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.
எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.
கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள்.
பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை' தான்.
விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கௌரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.
---பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...
பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.
"அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு...." என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.
இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.
இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.
ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.
-- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.
"கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், "அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா'..." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.
கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.
கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் "ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே' " என்று குழந்தையை வைதுவிட்டு "வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? " என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.
"இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்..." என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் "நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி'... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.
"பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்..." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே... மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.
"பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு..." என்று விசிறிக்
கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.
"இருக்கட்டும்டா....கொழந்தை' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.
'இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.
ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.
"ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி.
இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர்.
"ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி.
கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப்'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்....
தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
'என்ன விபரீதம்' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்'
"என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....
இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.
என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...
என் காரியம் என் வரைக்கும் சரியானதே'
நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.
இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.
ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?
உங்கள் மீது என்றும்
மாறாத அன்பு கொண்டுள்ள
கீதா"
"என்னடா.. இப்படி ஆயிடுத்தே?" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.
"அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.
பாட்டி திகைத்தாள்'
--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.
"அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.
"வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ...' " என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.
'நான் பிறந்த யுகமே வேறேடா' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:
'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்...' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.
அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி "அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி' " என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்....
"ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம்' செய்து விட்டார்கள்?' --பாட்டிக்குச் 'சுருக்' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....
இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.
கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்'...
--அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.
வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?
ஆனால்...
கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?
அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ' என்ன இப்படி ஆய்விட்டதே'... என்ன இப்படியாய் விட்டதே' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.
பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,
"பாட்டிடீ..." என்று ரகசியமாக எச்சரித்தான்.
'எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?' என்று பின் வாங்கி நின்றாள் மீனா.
"சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா..." என்றான் அம்பி.
மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.
அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே..." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.
"எப்ப வந்தேள் பாட்டி?" என்ரு கேட்டுவிட்டு "என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா.
பாட்டியின் கண்கள் குளமாயின.
மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.
அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.
"அதை நீ படிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.
மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.
"அடி நாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.
வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.
இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.
மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.
'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி'--
'என்னடி இப்படி பண்ணிட்டியே' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.
விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.
தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.
கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.
அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி "அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு..." என்றார்.
"வாயை மூடுடா..." என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?..." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.
"என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.
"என்ன தப்பா?...... என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?" என்று கத்தினார் கணேசய்யர்.
அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.
பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படீர்' னு தௌிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு..."
"அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?" என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.
"அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே?" என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.
"சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.
"நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள்.
"ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.
"அம்மா' ஆ...." என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.
"அசடே....எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ..." என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.
"எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.
"நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.
'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.
அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....
வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......
ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. இல்லாதது எது? - ஜெயகாந்தன்
'அதை' அவன் மறந்து வெகு நாட்களாயிற்று.
இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான 'அதை' மறந்து---ஏன் அதை மறுத்தும்---இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும் அவன், வெறியும் கொண்டு, அந்த வெறியில் தன்னை மறந்து தன், பிறவியை மறந்து, தன் காரியத்தில் கண்ணாய் இருந்து கொண்டிருப்பதைக் கண்ட 'அது' தானே அவன் எதிரில் வந்து திடீரென்று பிரசன்னமாயிற்று.
அப்பொழுதும் அவன் 'அதை'க் கவனிக்கவில்லை.
அணுவைப் பிளப்பதில் வெற்றி கண்ட அவனது தீட்சண்ய மிக்க விழிகள், அண்டங்களையெல்லாம் துருவி ஆராய்வதில் முனைந்திருந்தன. அவனைச் சுற்றிலும் நவ நவமான, மிக நவீன யந்திரங்களும், வேகத்தை---தூரத்தை---காலத்தைத் துல்லியமாய் அளக்கும் கருவிகளும் இருந்தன. கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சுழலும் கிரகங்களில் என்னென்ன நிகழ்கின்றன என்று கண்முன் காட்டும் கருவி ஒன்றில், அவன் முகம் குனிந்திருந்தது. அவனது இரு செவிகளையும் அடைத்திருந்த கருவியின் வாயிலாக அவன் மற்றொரு உலகத்துச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் எதிரில் வந்து தனது பிரசன்னத்தை உணர்த்தியும் அவன் தன்னை ஏறிட்டுக் காணாதிருப்பதைக் கண்டு, 'அது' கோபம் கொள்ளும் நேரத்தில்; குனிந்திருந்த அவன் தலையும், அதில் பஞ்சாய் நரைத்திருந்த சிகையும், 'அதன்' பார்வையில் பட்டது.
'ம்.....இன்னும் இவன் இதை வெல்லக் கற்றுக்கொள்ளவில்லையே' ' என்ற நினைவில் கொஞ்சம் சமாதான முற்றது அது; மூப்பையும் மரணத்தையும் வெல்ல இயலாத இந்த மனித ராசியிடம் போய் நமது கோபத்தைக் காட்ட வேண்டாம் என்று அமைதி அடைந்தது அது.
ஒரு காலத்தில் தனது பிரசன்னத்துக்காக, வாழ்க்கையையும், மனித பந்தங்களையும் துறந்து, வனமேகி, எண்ணற்ற காலம் கண்மூடித் தவமிருந்து காணமுயன்று தோற்ற ---அல்லது வென்ற அந்த மனிதனின் வாரிசா இவன்?......
'எதிரில் வந்து---வலுவில் நிற்கும் என்னை ஏறிட்டுப் பாராத இவன் விழிகள் குருடோ?..... இல்லை..... இல்லை;..... இவன் பார்வை, இவனுக்கு எட்டாத தூரத்தில் நான் இருத்திய கிரகங்களை--- எனது திரைகளையும் விலக்கிப் பார்க்கின்றன.... அந்த விஷயத்தில் இவன் வென்றுதான் விட்டான்.....
"ஏ' ஜீவாத்மாவே என்னைப்பார்'...."
'அது' அழைத்த குரல், அவன் செவியுட் புகாதவாறு அந்தக் கருவிதான் அவன் காதை அடைத்துக் கொண்டிருக்கிறதே....'
ஔியுருவாய், ஒலியுறுவாய், உருவற்ற உருவாய் அவன் எதிரே பிரசன்னமாகியிருந்த 'அது', தன் இருப்பை அவனுக்கு உணர்த்த முயன்றது.
திடீரென்று கண்களைப் பறிக்கும் பிரகாசமும், செவிப்புலனைப் போக்கும் இடியோசையும்--- அவனது காரியத்துக்கு இடைஞ்சல் விளைவித்தன.
'அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் யந்திரங்களிலோ, அந்தக் கருவிகளிலோ ஏதேனும் கோளாறு நிகழ்ந்து விட்டிருக்குமோ' என்ற பதைபதைப்பில் அவற்றின் இயக்கத்தை அவசர அவசரமாய் நிறுத்திவிட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் கேந்திர ஸ்தானத்தைப் பரிசீலித்தான், அந்தக் கிழட்டு விஞ்ஞானி.
எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. 'பின் எங்கிருந்து வந்தன அந்தப் பெரு வௌிச்சமும், இடி முழக்கமும்' என்று அவன் தனது நரைத்த தலையை--நரம்புகள் நௌிந்து சருமம் சுருங்கிய கரத்தால் சொறிந்து கொண்டே யோசித்தான். அப்பொழுது....
"ஏ ஜீவாத்மாவே...." என்ற குரல் கேட்டுத் தனது நரைத்த சிறிய தாடியை ஒரு விரலால் நெருடிக்கொண்டே, புருவத்தைச் சுளித்தவாறு கண்களை மூடி சிரம் நிமிர்த்தி அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவில் ஒற்றை மரமாய் நின்று திகைத்தான் அவன்.
"ஏ ஜீவாத்மாவே, என்னைப்பார்' " என்ற அதன் குரல் எட்டுத் திக்குகளிலிருந்தும் பிறந்து எதிரொலியின் கனபரிமாணங்களுடன் அவ்வாராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் நின்றிருந்த அந்த மனிதனை வியூகம் அமைத்துத் தாக்குவது போல் ஒலித்தது.
"யார் நீ?...." என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல், இமைகளையும் திறக்காமல் கேட்டான்.
"நான்தான் பரமாத்மா' "
"ஓ' வழி தவறி வந்து விட்டாய்....இந்த உன் சுய அறிமுகம், அதோ பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில் ஒன்று, அங்கே ஔித்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்.....போ, என் காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே' "
"ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?"
"ஆம்; எனக்குத்தான் உன்னிடம் வேலை இருக்கிறது" என்றான் அவன். அவன் பதில் அதற்குப் புரியவில்லை.
அதன் மௌனத்தைக்கண்டு, வாய் அடைத்து நிற்கும் பரமாத்மாவின் நிலையைக் கண்டு அந்தக் கிழவன் தனக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்:
"உனக்கு தெரியாத பாஷையை-- தெரிய அவசியமில்லாத பாஷையை நீ ஏன் பேசுகிறாய்? மனிதனின் பாஷையை பேச நீ முயன்றால், அதுவும் மனிதனிடமே பேச முயன்றால், நீ தோற்றுத்தான் போவாய். உனது பாஷையையும், உனது பேச்சையும் உற்றுக் கேட்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். மலையில் தவழும் அருவியில் உன் பேச்சைக் கேட்டு, அதன் ரகசியத்தை அறிந்து, அதிலிருந்து மின்சாரம் கண்டோம். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஊதி ஊதி சுழலும் வாயு மண்டலத்தில் உன் மொழியைக் கேட்டு இருதயத்தின் துடிப்பெல்லாம் அதில் பிரதிபலிக்கும் அதிசயத்தைக் கண்டுபிடித்து வானொலியையும், அதைச் சார்ந்த எண்ணற்ற பல சாதனைகளையும் சாதித்தோம்.
புரியாதா பாஷையாய் எட்டாத் தொலைவிலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள் என்னும் உனது நயன பாஷைகளையும் புரிந்து செயல்பட முயன்று, எங்களுக்கு நீ விதித்த எல்லையையும் மீறி, உன்னால் பூட்டி வைக்கப்பட்ட கோடானு கோடி வானத்து ரகசியங்களை எல்லாம் கொண்டு வந்து, இந்த எளிய புழுதிபடிந்த பூமியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் எங்கள் பாஷையை நீ பேச முயல்வது வீண். நீ உனது பாஷையை பேசிக்கொண்டே இரு. ஒரு நாள் உன் குரலிலிருந்து நீயே சிக்கிக் கொள்வாய். உன்னைத் தேடி வந்து உன்னைச் சிறைப் பிடிப்பதோ, அல்லது நீயே இல்லை என்று உணர்த்துவதிலோதான் எனக்குப் பெருமை. உனது பிரசன்னம் எங்களுக்குத் தேவையற்றது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். உனக்கு என்னிடம் வேலையில்லை. எனக்கு உன்னிடம் வேலை இருக்கிறதென்று."
அவன் இன்னும் தன் கண்களை மூடிக்கொண்டே பேசுவது அதற்கு வியப்பளித்தது.
"என்னைப் பார், பிறகு நம்புவாய்" என்றது அது.
"முடியாது. நீ என் கண்களுக்குத் தெரிந்தால், அது வெறும் ஜாலமாகிவிடும். கண்ணும், செவியும், வாயும், மூக்கும், மெய்யுணர்வும் அல்ல உன்னை நிர்ணயிப்பது. இவற்றுக்கெல்லாம் எஜமான் என் அறிவு. அறிவின் கருவிகளே இந்தப் புலன்கள் யாவும், என் கண்ணுக்கு நீ தெரிந்தால், என் அறிவு உன்னை மறுத்து உன்னை தோலுரித்து நீ யார் என்று எனக்குச் சொல்லிவிடும்; இந்த நிமிஷம் வரை நீ, நீயல்ல; நீ எனது பிரமை."
"நீ நாஸ்திகனா?" என்று கேட்டது அது.
"இல்லை" என்றான் அவன்.
"நீ ஆஸ்திகன்தானே?" என்றது அது.
"அதுவுமில்லை" என்றான் அவன்.
அது மீண்டும் வாயடைத்து மௌனமாயிற்று.
அவன் சிரித்தவாறே சொன்னான்:
"நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். நீ போய் உனக்கு தெரிந்த உனது பாஷையில் பேசிக் கொண்டிரு. அல்லது அறிவின் பாஷையை நம்பாது அர்த்தமற்ற முணுமுணுப்புடன் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'ஆஸ்திகர்'களிடம் போய்ப் பேசு. அல்லது உன்னை மறுத்து உன்னைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்கும் 'நாஸ்திகர்'களிடம் போய்ப் பேசு---இருவரும் நம்பிவிடுவார்கள். அவர்களின் தீராத விவகாரமாவது தீர்ந்து தொலையும் ஆம்; அகண்டத்திலுள்ள கோளங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து--அந்த ஆகர்ஷணத்தில் ஸ்திதி பெற்றிருப்பது போலத்தான், இந்த ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரின் தர்க்கத்தில் மற்றொருவர் இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருப்பதால் இருக்கை கொண்டுள்ளனர். என் காரியம் அதுவல்ல, அறிவும் கரமும்தான் மனிதருக்குத் தேவை. அவற்றின் காரியங்கள் முற்றிலும் முடிந்த பிறகு, ஆத்மாவைப் பற்றி யோசிக்கலாம். நீ போ' "
"ஏ' அறிவாத்மாவே.....உன் அறிவின் வல்லமையும் கரங்களின் நுண்மையும் ஒருபுறம் இருக்கட்டும். நீ துருவித் துருவி ஆராய்வதாகவும் கண்டுபிடிப்பதாகவும் பெருமையடித்துக் கொள்கிறாயே, அந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அவற்றின் நியதிக்குட்பட்ட போக்கையும் காண உன் மனம் வியப்படைய வில்லையா? அந்த வியப்புக்கு மூல வித்தான அர்த்தமுள்ள ஓர் வஸ்துவைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், உனக்கொரு பிரமிப்பு விளையவில்லையா? அந்த பிரமிப்பால் உன் அறிவும் கரமும் குவிந்து அடக்கமுறவில்லையா? அந்தச் சக்தியின்முன் தாளத்திற்குட்பட்ட சங்கீதம்போல், பிரபஞ்ச இயக்கத்தையே ஒரு நியதிக்குட்படுத்தி, இணைத்து இயக்கும் அந்தப்பேராற்றலின் முன் நீ மிகவும் அற்பம் என்று உனது கண்டுபிடிப்பே உணர்த்தவில்லையா?"
"இல்லை, 'நான்' எனபது முன்னு மற்ற பின்னு மற்ற இடைநிலை என்று எண்ணி, தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு, தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று உன்னைத் தொழுதுகொண்டு இருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் அவ்வித பிரமிப்பு உண்டாவது சாத்தியம். ஆனால் நான், இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விஷயங்கள், எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்குப் பிரமிப்பாய்த் தோன்றி, அந்த மயக்கத்தில் உன் காலடியில் அவர்கள் வீழ்ந்தனர் என்று அறிந்தவன். ஆனால் இன்று எனக்குப் புரியாத புதிர்கள் எத்தனை கோடி இருப்பினும் அவற்றுக்காக இந்த வினாடி நான் பிரமிப்புற்ற போதிலும் இவை யாவும் தௌிவடையும், எனக்குப் பின்னால் வரும் 'நான்'களுக்கு ரொம்ப அற்பமான உண்மைகளாய் விளங்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் எவ்வித மயக்கத்துக்கும் ஆளாகாமல், உன் காலில் விழாமல் என் காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படை எங்கள் அறிவுப் புலன். ஒரு நீண்ட முடிவற்ற சங்கிலியின் ஒரு கண்ணியாக விளங்கும் நான், எனது கருமத்தை நிறைவேற்றுவதைத் தவிர மற்ற எதைப்பற்றிய பிரமைகளையும் லட்சியப்படுத்த மறுக்கிறேன். எனக்குப் பின்னால் வரும் 'நான்'என்ற கண்ணி ஒவ்வொன்றும் அவ்விதமே செயல்படும். இந்த 'நானென்னும்' கண்ணிகளில் ஏதோ ஒன்று, வரப்போகும் ஏதோ ஒரு காலத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முடித்து. பின், வழி தெரியாமல் திகைத்து நின்றுவிடுமானால், அப்போது நீ எதிர்ப்படுவாயானால், அந்த 'நான்' ஒருவேளை உன் காலில் விழலாம். ஆனால் அவ்விதம் நிகழப் போவதில்லை. ஏனெனில் அறிவு என்ற எமது மகத்தான புலன், எந்த அமைப்பிலும் சிக்கி 'இவ்வளவே' என்ற வரையறையில் நிற்கத் தகுந்தது அல்ல. இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்ததோ, அத்தகைய விரிவு மிகுந்தது அறிவு. ஆகையினால் அந்த 'நான்' என்ற அறிவின் முன் 'நீ' என்ற பிரமைதான் மண்டியிட வேண்டும்---ஆம்; மானுடம் வெல்லும். பிரமைகள் நீங்கும்; அல்லது விளக்கப்படும்."
'அது' அவனது பிரசங்கத்தைக் கேட்டு, அரை மனத்துடன் சிரித்துவிட்டு, பின்னர் கேட்டது.
"அறிவின் அடிமையே...உன் சர்வ வல்லமை பொருந்திய அறிவு, உனது ஊன் பொதிந்த உடம்புக்கு உட்பட்டதுதானே?"
"ஆம்' "
"சரி, உன் உடம்புக்கு ஏற்படும் நோய், மூப்பு, மரணம் என்ற விதியின்படி அதுவும் செத்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அந்த அறிவால் இந்த விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்றுகூட நீ நம்புகிறாயா?"
"இல்லை, நான் அவ்விதம் நம்பவில்லை; அதற்கு அவசியமுமில்லை. ஏனெனில் என்னை மட்டுமே---எனது அறிவை மட்டுமே--முன்னுமற்ற பின்னுமற்ற அனாதியாய் எண்ணித் தவிக்கும் மூடாத்மா அல்ல நான். எனக்கு நோயும், மூப்பும், மரணமும் ஏற்படலாம். அதனால் என்ன? நான் இளமை இழந்து மூப்படைவதால் மனித குலமே இளமை இழந்து மூப்படைந்து விடுகிறதா? நான் மரணமுற்று விடுவதால்--உலகமே அஸ்தமித்துவிடப் போகிறதா? என் அறிவு நைந்து போவதால், மனித குலத்தின் அறிவே நைந்துவிடப் போகிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கள் அறிவு அதற்கும் ஒரு மார்க்கம் அமைத்திருக்கும். அது அவசியமில்லை என்பதினாலேயே அந்த முயற்சியில் நாங்கள் இறங்கவில்லை. தனி மனிதன் இறந்து படலாம். அவனது அறிவும், அதன் ஆற்றலும் அழிந்துவிடுவதில்லை. மனித அறிவே ஸ்திரமாய், சிரஞ்சீவியாய் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் சக்தி பெற்றது......"
"போதும் போதும் உங்கள் அறிவின் பெருமை' விஷயத்துக்கு வருவோம்" என்று சொல்லிவிட்டு, 'அது' சில வினாடிகள் அமைதியாய் இருந்தது.
அந்த அமைதியான வினாடிகளில் 'அது' மனிதனின் அறிவின் மீது கொண்டுவிட்ட பொறாமையும், அந்த அறிவை அபகரிக்க வழி தெரியாமல் பொருமும் ஏக்கமும் வௌிப்பட்டன.
சற்று நேரத்துக்குப் பின் வஞ்சகமும், தன்னகங்காரமும் மிகுந்து கர கரக்கும் குரலில் 'அது' அவனை மிரட்டியது.
"அற்ப மனிதனே, சாகப் பிறந்தவனே இந்த நிமிஷம் உன் உயிரை நான் எடுத்துக்கொள்ள முடியும். சம்மதம்தானா?"
அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த கிழட்டு விஞ்ஞானி ஒரு வினாடி திகைத்தே போனான். தனது அனுபவத்தை நம்பவும் முடியாமல், தன் உயிரை இழக்கவும் மனமில்லாமல், குழம்பி நின்றவன் 'சரி விவகாரம் என்று வந்தாகிவிட்டது. பார்த்துவிடுவோம்' என்று எண்ணி, தௌிவான குரலில் சொன்னான்:
"நான் சாவதற்கு அஞ்சவில்லை. நான் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைக் குறித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம்; அவற்றை முடித்தபின் நான் சாகத் தயார்" என்று அவசர வேகமாய் ஓடித் தன் இருக்கையில் அமர்ந்து, 'போனை' எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கருவிகளை இயக்க ஆரம்பித்தான்.
"நில்....நில்' சாவு என்றதும் அவ்வளவு அவசரமா? அப்படி முன்னறிவிப்போடு சாவு வருவதில்லை. நான் வந்ததற்கான காரியத்தை உன்னிடம் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை....என்னை நீ கண் திறந்து பார்க்காவிட்டாலும் போகிறது. செவி திறந்து, கவனமாய்க் கேள் நான் உன் உயிரைப் பறித்துச் செல்ல வரவில்லை. உனக்கு, மனிதர்களாகிய உங்களுக்கு முன் யோசனை இல்லாமல் அதிகப்படியான புலன்களை அளித்து விட்டதாக நான் உணர்கிறேன். அதனால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். ஆகையினால் உனக்கு இருக்கும் புலன்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு விடுவது என்று தீர்மானித்து விட்டேன். என் தீர்மானத்தின்படி உனது ஆறு புலன்களாகிய கண், மூக்கு, வாய்....செவி, மெய், அறிவு ஆகியவற்றில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம். ஏனெனில் எதை நீ இழக்கப் போகிறாயோ, அது எனக்கு அவசியம் தேவை. ஆனால், ஒரு சலுகை தருகிறேன். இவற்றில் எதை நீயே இழக்கச் சம்மதிக்கிறாயோ, அதையே நான் எடுத்துக் கொள்வேன். சீக்கிரம் சொல்" என்றது 'அது'
'ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம்' என்ற அதன் குரலும், 'அது எது என்று நீ தீர்மானம் செய்' என்ற சலுகையும் அவனை வெகுவாய்ச் சிந்திக்க வைத்தன.
'அறிவை இழக்கக் கூடாது. கண்களை இழக்க முடியாது. அதைப்போலவே செவிப் புலன், மெய்யுணர்வு வாய்---ம். இவற்றில் எதை இழந்தாலும் பயனற்றுபோகும் வாழ்க்கை. வேண்டுமானால், மூக்கை இழந்து விடலாமா? மோப்ப உணர்வு இல்லாவிட்டால் உண்ண முடியாதே; உண்ணா விட்டால் உடல் நைந்து போகும்---நோய், மூப்பு, மரணம்--இவ்விதம் குழம்பிய கிழவன் 'அது' இவ்விதம் கேட்பதில் ஏதோ சூது இருக்கிறது என்று சந்தேகப்பட்டான்.
ஆம்; மனிதனின், அவன் அறிவின் மிகச் சிறப்பான அம்சமே இந்தச் சந்தேகப்படும் குணம்தான். சந்தேகம் ஆராய்ச்சிக் கருவியாய் அமைகிறது. அதிலிருந்தே யூகம் பிறக்கிறது; செயல் விளைகிறது.
ஆகையால் 'உன் சித்தத்துக்கு ஏற்ப எதையாயினும் எடுத்துக் கொள்' என்று கூறி விடலாமா, என்று யோசித்தான். அவ்விதம் சொன்னால் அடுத்த வினாடியே தான் இழக்கப் போவது தன் அறிவு என்பதையும் அவன் உணர்ந்தான்....அறிவினும் உயர்ந்த புலன் ஒன்று தனக்கு விளையலாகாதா என்று கற்பனை செய்தான்.
கிழவனின் முகத்தில் புன்னகை ஔிவீசிற்று; "ஏ பரமாத்மாவே, உனது சித்தப்படி என்னிடம் இப்போதுள்ள ஆறு புலன்களில் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால்....ஆனால்....."
"சீக்கிரம் சொல்...." என்று தன் விருப்பத்துக்கே அவன் விட்டு விட்ட மகிழ்ச்சியில், அவனது அறிவுப் புலன் மீது எண்ணம் கொண்டுவிட்ட அது, பேராசையுடன் பரபரத்தது.
அதன் பேராசையை அறிந்து கொண்ட கிழவன் மூடிய கண்களுடன், முகத்தில் விளைந்த ஏளனச் சிரிப்புடன் சொன்னான்.
"உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது. சொல்வதை முழுக்கக் கேள். மனிதன் தானடைந்ததைத் திரும்பத் தர மாட்டான். கேட்பது நீயாக இருப்பதால் சம்மதிக்கிறேன். சரி, என்னிடம் இருக்கும் புலன் ஒன்றை, எனக்கு அது தீங்கு பயக்கிறது என்பதாலும், உனக்கு வேண்டுமென்பதாலும் நீ எடுத்துக்கொள்ளப் போகிறாய். என்னையே 'எது' என்று தீர்மானித்து நான் தருவதைக் கொள்வதாகச் சலுகை தந்தாய். அந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுக்கிறேன். உன் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுப்பதால் எனது ஒரு வேண்டுகோளை நீ புறக்கணிக்காமல் இருக்கவேண்டும்" என்றான் அவன்.
'இவனுடைய சர்வ சக்தியான அறிவையே நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். இவன் வேறு எதை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப் போகிறான்' என்று எண்ணி "உனது வேண்டுகோள் என்ன?" என்றது 'அது'
கிழவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாய்ச் சொன்னான். "எனது புலனை எடுத்துக் கொள்ள வந்து விட்ட மூல சக்தியே....நான் அனுமதித்து விட்டேன். எனது வேண்டுகோளை நிறைவேறுவதற்கு முன்பே, உனது காரியத்தை நீ நடத்திக் கொள்ளலாம். எனது புலன்களில் ஒன்றை நீ எடுத்துக் கொள்வதற்கு முன், எனது வேண்டுகோளைத் தீர்க்கமாய்ப் பரிசீலித்துவிட்டுக் காரியம் செய். எனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் எடுத்துக் கொண்டதையே திருப்பித் தந்து பெரும் தோல்விக்கு உள்ளாகாதே, கேள்; இதுவே என் வேண்டுகோள்; என்னிடம் இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக் கொள்; என்னிடம் இல்லாத புலன் ஒன்றை பதிலுக்குத் தா'...."
பரமாத்மா பேரமைதியில் ஆழ்ந்து யோசித்தது: 'இல்லாத புலன்....இல்லாத புலன்....இல்லாத புலன். இல்லாததை எப்படிச் சிருஷ்டிப்பது....?'
'அறிவுப் புலனை எடுத்துக் கொண்டு பதிலுக்கு என்ன புலனைத் தருவது....தர முடியுமா? தந்தால் அறிவினும் சக்தி மிக்கதாய் அது மாறினால்?......இல்லாதது எது?....ம், மானுடன் சொல்வான்; அவன் பாஷையை நான் பேச முயன்றது சரியன்று...இருக்கிறவனிடம் இருக்கின்றதை கேட்டால், இல்லாதவனிடம் இல்லாததைக் கேட்டது சரிதான்...' என்ற என்ற கடைசி முணு முணுப்புடன் 'அது' தன் பிரசன்னத்தைக் கலைத்துக் கொண்டு, அங்கு இல்லாமலாகி எங்கும் நிறைந்து கலைந்தது.....
கிழவன் இடி போன்ற குரலில் சிரித்தான்.
"நீ சாவாய்....அதை நீ வெல்ல முடியாது" என்று பதில் குரல் எங்கிருந்தோ வந்து ஒலித்தது.
"என்னால் தான் சாக முடியும்.....உன்னால் முடியுமா? நான் செத்தால் எனக்கு சந்ததி உண்டு. உனக்கு யாரிருக்கிறார்கள்" என்று சிரித்தவாறே, திடீரென்று மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு--மரணத்திற்கு முன் ஏற்பட்ட இந்த கற்பனைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், தன் இருக்கையினின்றும் கீழே விழுந்தான் அந்தக் கிழட்டு விஞ்ஞானி. முன்னறிவிப்பு இல்லாமல் வந்த கோழை மரணம், விஞ்ஞானியின் உடலைக் குளிரத் தழுவிக் கொண்டது.
அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கரு கருவென சுருண்ட சிகையுடன் ஒரு இளைஞன்---முன்னவனின் சந்ததி--இப்பொழுது அமர்ந்திருந்தான். அவன் விழிகள் ஏகாந்த வௌியில் சுழலும் எண்ணற்ற ரகஸியங்களின் புதிய உண்மைகளைக் கண்டு கொண்டிருக்கின்றன. அவன் செவிகளை அடைத்திருந்த கருவியின் மூலம், புதிய புதிய செய்திகளை முதன் முதலில் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இதுவரை எங்கேயும் ஔியாகவோ, ஒலியாகவோ 'அது' இவன் வழியில் குறுக்கிடவில்லை.
'அது' தன் பாஷையில் தன் விதியை நொந்து கொள்கிறது. அந்த பாஷையின் அர்த்தத்தையும் இவனே கண்டு தேர்கிறான். அதன் பெருமையை தானும் அறிந்து, அதற்கும் உணர்த்துகிறான். இவனே மானுடன்'
முன்னும் பின்னும் உள்ள மனிதகுல வம்சாவளிச் சங்கிலியில் ஒரு கண்ணி இவன். இவனுக்கு இல்லாதது எது, மரணம் உட்பட?.......
---------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. இரண்டு குழந்தைகள் - ஜெயகாந்தன்
இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன.
சேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா?....
முதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி.
மழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன?....
பகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்பான்.
விறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள்.
மாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள்.
அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான்.
அந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள்.
சுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது.
திண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார்.
"அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு"
சுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார்.
"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.
அதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார்.
கஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார்.
"என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே?..." என்று புருவத்தை உயர்த்தினார்.
அம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
"காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்...." என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள்.
"ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி.
"அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு."
"எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி...." என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி.
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:
"ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு" என்று முணகியபின், உரத்த குரலில்....
"அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது...." என்று சொன்னார்.
"ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள்.
அம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும்.
ராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து "பஞ்சம் பிழைப்ப"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி.
பெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்'
ஆனால் இப்போது....
முறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை.
இடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை.
அன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது.
பிள்ளை பசியால் துடித்தான்.
அவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி.
"ஒங் ஐயா எங்கலே...." என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி.
"ஐயா...ஓ....போயித்தாரு..."
"எப்பலே வரும் ஒங்க ஐயா..." என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான்.
"ஆத்தா...ஐயா....ஊம்" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது.
"ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்...." என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.
இந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது----
"ஆத்தா...கஞ்சி....கஞ்சி..." என்று குழந்தை பறந்தான்.
மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி.
சுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார்.
"என்ன சேப்பி?..."
"இன்னக்கி விசேஸங்களா சாமி?"
---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள்.
"என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா?... அதான்...ஹி...ஹி...."
---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர்.
உள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது.
"யாரது சேப்பியா....?"
"ஆமாங்க."
"சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா...." என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து,
"இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'..." என்றார் ஐயர்.
குழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து "ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா?..." என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி.
'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்.
சந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான்.
பையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம்.
உள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன்.
"ஏண்டா கண்ணா அழறே? இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ" என்று பேரனை அழைத்தார்.
"மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை.
"அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ?....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ?" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர்.
சோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்'
---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு...
"ஏண்டா சிரிக்கிறே? அப்படியே போட்டேன்னா..." என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். "அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா?"
---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன்.
"இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின்,
"சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள்.
"என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு? இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ?..." என்று அரற்றினார் ஐயர்.
"இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...?"
"சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார்.
"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே.
---பையனுக்கு புரியவில்லை.
"மிட்டாயிடா...மிட்டாய், வேணுமா?"
மிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான்.
"அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்...." என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர்.
சோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்....
"எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். "துப்புலே.... துப்பு..." என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள்.
"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா?..." என்று முதுகில் அறைந்தாள்.
"கொழந்தேயெ அடிக்காதே சேப்பி..." என்றார் ஐயர்.
"இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து "இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' " என்று சமாதானமாய்க் கேட்டாள்.
பையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, "சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு..." என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள்.
"ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா?... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்..." என்று கோபமாய்க் கேட்டாள்.
"என்னடி அது சத்தம்?" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள்.
"நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி..." என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி.
"நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு?"
"ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா?...." என்று எழுந்து வந்தார் ஐயர்.
"எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி..." ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி.
ஐயர் அசந்து போனார்'
"ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா?... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ..." என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர்.
"இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்..." என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் "எல்லாம் என் கர்மம், என் கர்மம்' " என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி.
உள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின.
"அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு..." என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது.
மறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை.
------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன்
அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவௌி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் ரயில்வே லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் - 'இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்' என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.
அதற்கப்புறம் ஒன்றுமில்லை; வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான் தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கின்ற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஔியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது...நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஔி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வௌிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.
திண்ணையில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் அந்தத் தனிமையிலும், தகரக் குவளையில் ஊறிக் கிடந்த ரசத்து வண்டல் சோற்றிலும் லயித்துத் தன்னை மறந்த மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே ஒவ்வொரு கவளமாய்ச் சாப்பிட்டான். அவன் பார்வை நிமிர்ந்து நிலவில் பதிந்திருந்தது. வாய் நிறையச் சோறுடன் அவன் பாடுவது தௌிவாய் ஔிக்கவில்லை. கேட்கத்தான் அங்கு வேறு யாரிருக்கிறார்கள்'
தகரக் குவளையை வழித்து நக்கிச் சுற்றிலும் இறைந்து கிடந்த பருக்கைகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி விரலோடு சேர்த்து உறிஞ்சிச் சாப்பிட்டானதும் தனது--விரல்கள் குறைபட்ட--இரண்டு கைகளாலும் தகரக் குவளையை இடுக்கி எடுத்துக் கொண்டு சாலையின் குறுக்காய், குளத்தை நோக்கி நடந்தான். கால்விரல்களுக்குப் பிடிப்பு இல்லாததால் குதிகால்களை அழுந்த ஊன்றித் தாங்கி தாங்கித்தான் அவனால் நடக்க முடியும் -- குளத்தின் மேல்படியில் காலிலிருந்த கான்வாஸ்ஷஉஸ் நனையாமல் நின்றுகொண்டு, தகரக் குவளையை அலம்பி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்தான். தண்ணீரை 'மடக் மடக்' கென்று குடிக்கும்போது அவசரத்தில் குவளைக்கும் வாய்க்குமிடையே இரண்டு பக்கத்திலும் தண்ணீர் வழிந்து அவன்மேலிருந்த கோட்டின் காலரை நனைக்கவே அவசர அவசரமாகத் தண்ணீரைத் தட்டிக்கொண்டே கோட்டின் மார்புப் பையிலிருந்த பீடியையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்து வேறு பைக்கு மாற்றிக்கொண்டான். மேலேறி வந்த பிறகு தகரக் குவளையைக் கீழே வைத்துவிட்டு, நின்று ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். புகையோடு சேர்த்துத் திருப்தியுடன் ஏப்பம் விட்டவாறு அவன் முனகிக் கொண்டான்.
'நல்லாத்தான் இருக்கு...' என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் '--என்ன நல்லாருக்கு?' என்ற கேள்வியும் பிறந்தது.
"எல்லாம்தான். தோ... இந்த நெலா, இந்தக் குளம்... அடிக்கிற காத்து, குடிக்கிற தண்ணி...பசி,சோறு, தூக்கம்-எல்லாந்தான். வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு... பீடிச் சொகம் ஒண்ணு போதுமே' " என்று நெருப்புகனியக் கனியப் புகையை வாய் நிறைய இழுத்து ஊதினான். சிறிது நேரம் நின்று ஏதோ யோசனைக்குப்பின் சத்திரத்துத் திண்ணைக்கு வந்து ஒரு மூலையில் தகரக் குவளையைக் கவிழ்த்து வைத்து விட்டு, சுவரோரமாகக் கிடந்த கந்தல் துணியால் தரையைத் தட்டிவிட்டு உட்கார்ந்தான்.
"உலகம் இவ்வளவு அழகாயிருக்கு. இதைப் பார்க்கற எம் மனசு சந்தோஷப்படுது. ஆமா, எல்லாப்பொருளும் பார்த்தவங்க மனசை சந்தோஷப்பட வைக்கும்போது, நான்...நான் என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருத்தர் முகத்திலேயும் ஏற்படற மாற்றம் இருக்கே, வியாதியாலே மரத்துப்போன என் உடம்புக்குத் தெரியாத வேதனை, பாவம் அவங்க மனசுக்குத் தெரியுது. அன்னக்கி ஒரு நாளு, ஒரு வீட்டுக்கு முன்னாடி போயி
அம்மா தாயே' பசிக்குது'ன்னு நின்னப்ப, சாப்பிட்டுட்டு எச்சில் இலை கொண்டுவந்து வௌியே போட்ட ஒரு பொண்ணு என்னைப் பாத்துட்டு வாந்திவர்ரமாதிரி குமட்டிக்கிட்டு உள்ளே ஓடினப்புறம், ஒரு ஆளு வந்து எட்டிப் பார்த்துட்டு சொன்னானே... 'அம்மா, வௌியே ஒரு தரித்திரம்வந்து நிக்குது; ஏதாவது போட்டு அனுப்பு. இவனெல்லாம் ஏன் தான் உசிரை வெச்சுக்கிட்டு இருக்கானோ இந்தத் தீராத நோயோடே' ன்னு...
"அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அங்கே நிக்க முடியாமத் திரும்பினப்போ, 'இந்தப்பா பரதேசி' ன்னு கூப்பிட்ட அந்தக் குரல் இருக்கே, அதிலே இருந்த ஆறுதல்தான் உலகத்திலே வாழணும்னு ஆசை குடுத்திடிச்சி... ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச்செருகிக்கிட்டு கையிலே சோத்தோட எதிரே' என் பையன் கொஞ்சம் வாய்த்துடுக்கு...சாகறதும் இருக்கறதும் நம்ம கையிலா இருக்கு' ன்னு சொல்லிக்கிட்டே கொவளையிலே சோத்தைப் போட்டாங்க.. நான் அந்த அம்மா முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னேன்.
தன் மகனைப் பார்த்து, 'நீ சாகக்கூடாதா' ன்னு யாரோ கேட்டுட்ட மாதிரி அவங்க கண்ணில தண்ணி கொட்டிக்கிட்டே இருந்தது..."
--அன்றைக்குப் பிறகு அவன் பகலில் பிச்சைக்குப் போவதில்லை. இருட்டிய பிறகு யார் கண்ணிலும் படாமல் தலையில் முக்காடிட்டுக்கொண்டுதான் போவான். மூன்று வேளைக்கும் முதல் நாளிரவு ஒருவேளை எடுத்த பிச்சைதான் சில நாட்களில் அதுவே அதிகமாகி அடுத்த நாளைக்கும் இருந்துவிடுவதும் உண்டு.
தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் நிறைவாக இருந்த வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டான். "சாப்பாடு கொஞ்சம் அதிகம்தான்..." என்று மறுபடியும் ஒரு ஏப்பம் விட்டவாறு, "முருகா" என்று எழுந்தான். தரையில் விரித்த கந்தலை எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினான். மூலையில் இருந்த தடியையும் கையில் எடுத்துக்கொண்டு ஏரிக் கரையை நோக்கி நடந்தான்.
"ம்...உடம்பிலே வியாதி இருந்தா என்ன? உசிரு இருக்கறது நல்லாத்தான் இருக்கு. நாக்குக்கு ருசியா திங்கிற சொகம்; கண்ணுக்குக் குளிர்ச்சியா பாக்கற சொகம்; காதுக்கு எதமா கேட்கற சொகம்...வியாதி இருந்தால் இதெல்லாம் கெட்டுப்பூடுதா?..."
ஏரிக்கரையின் ஓரமாக ரயில்வே லைன் மேட்டுச் சரிவில் தடிக்கம்பை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் பீடிப் புகையைக் காற்றில் ஊதிவிட்டான்...
"அப்பாடா' சாப்பிட்டவுடனே வயித்திலே என்னமோ ஒரு வலி' திங்கறதிலே ஒண்ணும் சொகமில்லே: ஆனா, தின்னாத்தான் சொகம். ஒடம்பிலே சேத்துக்கறதா சொகம்? உடம்பிலேருந்து எல்லாத்தையும் போக்கிக்கறதிலேதான் சொகம். உடம்பையே போக்கிக்கிட்டா?... சொகந்தான்' ஆனா, உடம்பிலே இருக்கிற சொரணையே போயிட்டா, சொகம் ஏது? "
இப்பொழுது அவன் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். நிலவும் நட்சத்திரங்களும் அவன் கண்களுக்கும் அழகாகத்தான் தெரிந்தன.
"ம்....தோ... அதான் சப்தரிஸி மண்டலம். அந்த நாலு நச்சத்திரம் சதுரமா இருக்கு; அதுக்கு ஓரமா வாலு மாதிரி மூணு நீட்டிக்கிட்டு இருக்கே; அந்த மூணுலே நடுவாலே இருக்குதே, அதுக்குத் தள்ளி மங்கலா.. அதான் அருந்ததி நச்சத்திரம்...சர்த்தான், நமக்கு ஆயுசு கெட்டி' அருந்ததி தெரியுதே... அம்மாஞ் சுளுவா எல்லாருக்கும் தெரியுமா அது? லேசா எழுதிக் கலைச்சிட்ட மாதிரி... புள்ளி மானத்திலே இருக்கா, கண்ணுலே இருக்கான்னு கண்ணைக் கசக்கிட்டு எங்கியுமில்லேன்னு சொல்லிடுவாங்க பலபேரு... அருந்ததியைப் பாத்தவனுக்கு ஆறுமாசத்துக்குச் சாவு இல்லேம்பாங்க..."
நிலவொளியில் பளபளத்துக்கொண்டிருக்கும் ஏரி நீரில் புரண்டு எழுந்து குளுமை பெற்றுவரும் தென்றல் காற்று அந்த வியாதிக்காரனின் உடலையும் தழுவத்தான் செய்தது. நீரின் அலைகள், சின்னஞ் சிறு கால்கள் சலங்கை அணிந்து சதிராய் நடந்து வருவதுபோல் தரையில் மோதி மோதித் தளதளக்கும் இனிய நாதத்தை அவன் செவிகளும் கேட்டன. கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டுப் பூக்களின் நெடிமிக்க போதை மணம் அவனது நாசியையும் துளைக்கத்தான் செய்தது... அவன் வாழ ஆசைப்படுவதில் என்ன தவறு?
வெகு நேரத்திற்குப் பிறகு தண்ணீரிலிருந்து கரையேறி வந்து, அங்கு கழற்றிப் போட்டிருந்த கான்வாஸ் ஷஉஸை எடுத்து குனிந்து நின்று காலில் அணிந்துகொண்டான்; அப்படியே அவன் தலை நிமிரும்போது...எதிரே...
நீண்டுசெல்லும் இருப்புப் பாதையில் வளைந்து திரும்பும் அந்தக் கண்ணுக்கெட்டிய எல்லையில் வௌிச்சம் தெரிந்தது...ஒரு துண்டு வௌிச்சம்தான். அந்த ஔிக்கீற்றின் அசைவால் தரையில்செல்லும் இருப்புப்பாதையிலும், வானில் செல்லும் தந்திக் கம்பிகளிலும் ஒரு ஜொலிப்புத் துண்டம், விட்டு விட்டுத் தாவிச் செல்லுவது போலிருந்தது. தூரத்தில் ரயில் வருகின்ற ஓசை லேசாகக் கேட்டது.
"அடேயப்பா' மெயிலு வரானோ? மணி பன்னனெண்டா ஆயிடுச்சி' " என்று தண்டவாளத்தைக் கடப்பதற்காகக் கைத்தடியைச் சரிவில் ஊன்றித் தட்டுத் தடுமாறி ரயில்வே லைன் மேட்டின் மீது ஏறும்போது தூரத்தில்...
நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் கண்ணுக்கெட்டிய எல்லையில் இரண்டடி உயரத்திற்கு, வௌபுள்ளிளையாய் அசைகின்ற உருவம்...ஏதாவது மிருகமா? அல்லது...
கால்களை மண்டியிட்டு தரையில் ஊர்ந்து வந்த அந்த மனித உருவம், ரயில்வேலைன் மீது ஏறியதும் எழுந்து நின்றது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து, தன் பின்னால் பிச்சைக்காரன் வரும் திசையைப் பார்க்கத் திரும்பியபோது அதற்குள் நிற்க முடியாமல் கால்கள் நடுங்க, மெல்லக் கைகளைத் தரையில் ஊன்றித் தண்டவாளத்தின்மீது உட்கார்ந்துகொண்டது. பிறகு உறுதியுடன் இரண்டு தண்டவாளங்களுக்கும் குறுக்காக விறைத்து நீட்டிப் படுத்துக்கொண்டது.
"அடச்சே, மனுசப்பயதான் டோய்' உசிரை வெறுத்துட்டான் போல... ஐயையோ' உங்களுக்கு ஏண்டா புத்தி இப்படி போவுது? வௌிச்சம் வேகமா வருதே' " என்று பதறியவாறு, விரல்களில்லாத பாதங்களுக்குப்பாதுகாப்பாய் இருந்த கான்வாஸ் ஷஉஸ் தேயத் தேய இழுத்தவாறு தாவித் தாவி ஓடிவந்த பிச்சைக்காரனின் செவிகளில் தூரத்து ரயில் சத்தம் பேரோசையாகக் கேட்டது.
ரயிலின் ஓசை சமீபித்துவிட்டது. பிச்சைக்காரன் ஓடி வந்த வேகத்தில், கண்களை இறுக மூடித் தண்டவாளத்தின் குறுக்காக விறைத்து நீட்டிக் கிடந்தவனின் விலாவுக் கடியில் கைத்தடியைக் கொடுத்து, மயானத்தில் பிணத்தைப் புரட்டுவது போல் நெம்பித் தள்ளினான். அவனைத் தள்ளிய வேகத்தில், வியாதிக்காரன் இரண்டு உள்ளங் கைகளாலும் பற்றிப் பிடித்திருந்த கைத்தடி எகிறி விழுந்தது. தண்டவாளத்திலிருந்து உருண்டு எழுந்த அந்த இளைஞன் ஒன்றும் புரியாமல் எதிரிலிருப்பவனை வெறித்து விழித்தான். மறுபடியும் தன்னைத் தள்ளிவிட்டு அவன் ரயிலின் முன்னே போய் விழுந்துவிடுவானோ என்ற பயத்துடன் தனது கைகள் இரண்டையும் அகல் விரித்துக்கொண்டு அவன் மீது பாய்வதுபோல் நின்று, "வேணாம் ஐயா, வேணாம்' உசிரு போனா வராது..." என்று கெஞ்சினான் வியாதிக்காரன். அவன் முன்னே இரண்டு கால்களும் வெடவெடக்க உடலே நடுங்க நின்றிருந்தான் அந்த இளைஞன்.
அப்பொழுது 'ஹோ'வென்ற பேரிரைச்சலோடு வந்த மெயில்வண்டி, அந்த இருவரின் மீது தன் நிழலை ஏற்றி இழுத்தவாறு கடகடத்து ஓடியது. ரயிலின் பேரோசை அருகே அதிர்ந்து நகரும்வரை மௌனமாய் நின்றிருந்த இருவரும், ரயில் அவர்களை கடந்து போனபின் அதன் பின்புறத்தைப் பார்த்தனர். செக்கச் சிவந்த ஒற்றை விளக்கு ஓடி ஓடித் தூரத்தில் மறைந்தது. நின்றிருந்த இளைஞன் கால்கள் நிலைக்காமல் உட்கார்ந்துக்கொண்டான். வியாதிக்காரன் கையிலிருந்து எகிறிப் போன கைத்தடியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தான். "யோவ்' உன்னைச் சொல்லி குத்தமில்லை ஐயா...இந்த எடத்து ராசி அப்படி' ஆமா, இந்த எடத்துக்கு ஒரு காவு வேணுமினு இருக்கு. ஒண்ணு ரெண்டு உன்னோட மூணு ஆச்சு, நாளைக்கிப் பொழுது விடியட்டும்; ரெண்டு எலுமிச்சம் பழத்தையாவது வாங்கி வெக்கணும். முந்தாநாளு அப்படித்தான்--ஏரிக் கரையிலே யாரோ ஒரு அம்மாவும் ஐயாவும் கொழந்தையை விட்டுட்டு கட்டுச்சோத்தை அவுத்து வெச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க... அதுக்கென்னா தெரியும் --பச்சைபுள்ளை' நடந்து நடந்து வந்து தண்டவாளத்திலே ஏறிட்டுது...இந்த இடம்தான். ரயிலு வார நேரம்...அப்புறம், நான் பாத்துட்டேன்...வேற யாரையுங்காணோம். சர்த்தான், ஆபத்துக்குப் பாவமில்லேன்னு தொட்டுத் தூக்கிட்டேன்..." என்று சொல்லிவிட்டு ஒரு வநாடி மௌனமாகி நின்றான். பிறகு எதையோ நினைத்துப் பெருமூச்சுடன், ம்.....இருக்காதா...பெத்தவங்களுக்குத்தான் தெரியும் புள்ளை அருமை' " என்று தன் நினைவுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொண்டு தொடர்ந்தான்; "எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த இடத்து ராசி அப்படி இன்னக்கிக் காத்தாலே கூட ஒரு எருமை மாடு... ஆபத்துன்னு வந்தா மனுசனுக்கே புத்தி மாறிப்பூடுது. எருமை என்னா பண்ணும்? கூடுஸஉ வண்டி வந்துட்டான். இஞ்சினுக்காரன் ஊதறான்...ஊதறான்...இது என்னடான்னா, லைனைவுட்டு நவுறாம, நேரா ஓடிக்கினே இருக்குது. அவன் வந்த வேகத்திலே பிரேக் போட்டாப் புடிக்கிதா, என்னா எழவு?...ரயிலும் ஓடியாருது, எருமையும் ஓடுது. நானு ஒரு பக்கத்திலே ஓடி, கல்லுங்களை எடுத்து அடிச்சிக்கினே இருக்கேன். அப்புறம், சும்மா ஒரு மயிரிழையிலே தப்பிச்சிதுன்னு வெச்சிக்கியேன்..." என்று அந்த இடத்தின் ராசியை விவரித்தான் வியாதிக்காரன்.
அந்த இளைஞன் தலையைக் குனிந்து மௌனமாய் உட்கார்ந்திருந்தான். வியாதிக்காரன் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். "நா" ஒருத்தன் இந்தப் பக்கந்தானே சுத்திக்கிட்டிருக்கேன்' இப்ப என்னடான்னா, ஏதாவது ஆடு கீடு வந்து நிக்குதோன்னு ஓடியாந்தேன்...நல்லவேளை; ஒரு மனுஷனைச் சாவுலேருந்து தடுத்தாச்சி...ம்...நாம்பளா தடுக்கறோம்?...ஒனக்கு இன்னம் ஆயுசு இருக்கு...என்னமோ, தடுக்கணும்னு இருக்கு, தடுத்தாச்சி...இல்லாட்டி, மனுசன் தடுத்தா வர்ர சாவு நின்னுடப்போவுது?" என்று வாயில் புகையும் பீடியுடன் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டான். பிறகு, மண்ணில் தலைகுனிந்தவாறு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்திருந்த அந்த இளைஞனை மௌனமாக உற்றுப் பார்த்தான். அவன் அழகாக இருந்தான்; நல்ல நிறம். தலைமயிர் நிலா வௌிச்சத்தில் கருகருவெனப் பளபளத்தது. வௌபுள்ளிளை ஷர்ட்; எட்டுமுழ வேட்டி உடுத்தியிருந்தான். அவன் தன்னைப் போல் பரம ஏழையோ, பிச்சைக்காரனோ, வியாதிக்காரனோ அல்லவென்று தோன்றியது. 'வறுமையோ பட்டினியின் கொடுமையோ அந்த இளைஞனிடம் தெரியவில்லை. பின் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வந்தான்?' என்று தெரிந்துக்கொள்ளத் துடித்தது வியாதிக்காரனுக்கு.
"சர்த்தான், எந்திரிச்சி வாய்யா' தோ...அங்கே சத்தரத்துத் திண்ணையிலே போயிக் குந்துவோம்...இந்தச் சத்தரம் இருக்கே..." என்று பேசிக்கொண்டே நடந்து திரும்பிப் பார்த்த பிச்சைக்காரன், அவன் இன்னும் எழுந்திருக்காமல் தூரத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். 'என்னாயா, குந்திக்கினே இருக்கியே? இனிமே அடுத்த ரயிலு காத்தாலே ஆறு மணிக்கு வடக்கே போற பார்சலுதான்; வா போவோம் ஒலகத்துலே மனுசன்னு பொறந்துட்டா கஸ்டமும் இருக்கும் சொகமும் இருக்கும். கஸ்டத்துக்குப் பயந்து செத்துபூட்டா, சொகத்தை அனுபவிக்கிறது யாரு? கஸ்டத்தைப் பார்த்து சிரிக்கணுமய்யா. ஏன்னா, கஸ்டம் வருதுன்னா பின்னாடிச் சொகம் காத்துக்கிட்டு இருக்குதுன்னு அர்த்தம்...ம், எழுந்திரு, போலாம்..." என்று உற்சாகமாகப் பேசும் பிச்சைக்காரனை நிமிர்ந்து பார்த்துக் கலங்குகின்ற கண்களோடு முகத்தில் பரிதாபகரமான புன்சிரிப்போடு அந்த இளைஞன் எழுந்திருப்பதற்கு முன்னால் உதவிக்குக் கை நீட்டினான்.
"தெய்வமே'... இவன் கையை புடிச்சி நான் தூக்கறதாவது?' என்று விலகிக்கொண்டான் பிச்சைக்காரன். அந்த இளைஞன் தன் முயற்சியால் கைகளை ஊன்றி ஒருவாறு எழுந்து நின்றான். பிறகு நிதானித்து, காலைப் பதனமாக ஊன்றி மறு காலை உயர்த்தும்போது தடுமாறி விழ இருந்தவன், பிச்சைக்காரனின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவன் பிடித்த வேகத்தில் நிலைகுலைந்த பிச்சைக்காரன் சமாளித்தவாறு, அப்பொழுதுதான் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அவை பார்ப்பதற்கு ஒழுங்காக இருப்பன போன்று தோன்றின. என்றாலும் கணுக்காலில், தொடைகள் சேர்கின்ற இடம் முழுதும் -- முழங்கால் மூட்டுக்கள் உறுதியற்று நடுங்கிக் கொண்டிருந்தன. முழங்காலுக்கு கீழே நான்கு புறமும் மடங்கும் தன்மையுடன் கால்கள் தொளதொளத்துச் சூம்பிக் கிடந்தன.
சற்று நேரத்துக்குமுன் தூரத்துப் பார்வைக்கு இரண்டடி உருவமாய்க் குறுகித் தெரிந்த அந்த உருவம் நினைவுக்கு வந்தது பிச்சைக்காரனுக்கு. அந்த இளைஞன் நடக்க முடியாமல் மண்டியிட்டுத் தவழ்ந்து வந்திருக்கிறான் என்பதை யூகித்து, "இந்தாய்யா' இந்த கம்பை வச்சிக்கிட்டு நடக்கிறியா?" என்று கைத்தடியைக் கொடுத்தான்.
"ஊஹஉம், முடியாது. இப்பிடியே வர்ரேன்...நீ நடந்தா நானும் வருவேன்..." என்று அவன் தோள்களை இறுகப் பற்றியவாறு கூறினான் நொண்டி.
வியாதிக்காரன் லேசாகச் சிரித்தான். "கம்பு இல்லாம நானும் நடக்கமுடியாது...இருந்தாலும் சமாளிச்சிக்கிடலாம்னுதான் குடுத்தேன்...கையிலே கம்பு இருந்தா உன்னைத் தூக்கிக்கிட்டுகூட நடப்பேன்...வா போவோம்" என்று கைத்தடியைப் பூமியில் உறுதியாய் ஊன்றித் தாங்கித் தாங்கி நடந்த வியாதிக்காரனின் தோளில் தொங்குவதைப்போல் பிடித்துக்கொண்டு ஊனக் கால்களைத் தத்தித் தத்தி இழுத்தவாறு நகர்ந்தான் நொண்டி.
"ஐயா..."
"ம்...."
"ரொம்பப் பாரமா இருக்கேனா?....உம்....உம்...பார்த்து...."
"அதெல்லாம் ஒண்ணுமில்லே....பயப்படாம வா..."
"இப்பிடி எல்லாருக்கும் பாரமா இருக்கப் பிடிக்காமத்தான்...பிடிக்காமத்தான்..." என்று விம்மினான் நொண்டி.
---உசிரையே விட்டுடலாம்னு பாத்தியா? ஏய்யா எப்பப்பார்த்தாலும் உன்னைப் பத்தியே உனக்கு நெனப்பு?..."
"என்னாலே எல்லாருக்கும் கஷ்டம்தான்..."
அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
நொண்டியும் வியாதிக்காரனும் நிலா வௌிச்சம் இறங்கிக் கொண்டிருக்கும் திண்ணையில் படுத்திருந்தனர். வியாதிக்காரன் பாதிபடுத்தும் பாதி படுக்காமலும் தூணில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்..
"பீடி குடிக்கிறியா ஐயா?"
"வேண்டாம்; பழக்கமில்லை..." என்று குப்புறப் படுத்திருந்த நொண்டி பதில் சொன்னான். திடீரென்று குப்புறக் கிடந்த முகத்தைத் திருப்பி வியாதிக்காரனைக் கேட்டான் நொண்டி: "கஷ்டத்துக்கு அப்புறம்தான் சொகம்னு சொன்னியே...எனக்கு இனிமே ஏது சொகம்? சொகமே வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு நான் இருக்கணும்?"
"சொகமே வராதுன்னு முடிவு சொல்லறதுக்கு நீ யாரு? கஷ்டம் வரப் போவுதுன்னு நீயா முன்கூட்டியே சொன்னே? அது திடீர்னு வந்தமாதிரி இது வராதா'....அதெல்லாம் அவன் பார்த்துச் சொல்லணும்" என்று வானத்தை நோக்கிப் புகையை ஊதினான் பிச்சைக்காரன்.
வியாதிக்காரனுக்கே தான் சொன்ன பதில் நொண்டியின் மனச் சமாதானத்துக்குத்தான் என்று தெரிந்தது.
"சாகப் படாது ஐயா...அதான் ஒரு நாளைக்கு எல்லாருமே சாகப் போறமே?... அதுவரைக்கும் இருந்துதான் சாவமே..." என்று சமாதானம் கூறினான். "அது சரி; நீ பாட்டுக்குச் சாகறதுக்கு வந்துட்டியே...உனக்கு தாயி, தகப்பன், குடும்பம்னு ஒண்ணுமில்லியா? என்னை மாதிரி அநாதைதானா?" என்றான் வியாதிக்காரன்.
"அம்மா..." என்று பெருமூச்செறிந்தவாறு எழுந்து உட்கார்ந்த நொண்டி, சில விநாடிகள் மௌனமாய்த் தலை குனிந்திருந்துவிட்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
"வருத்தப்படாதே ஐயா" என்று ஆறுதல் கூறினான் பிச்சைக்காரன். முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான் இளைஞன்.
"அதோ தெரியுது பாரு" என்று ரயில்வே லைனுக்கு நேரே வரிசையாகத் தெரியும் சில வீடுகளின் கொல்லைப்புறத்தைக் காட்டி, "அங்கேதான் எனக்கு வீடு. அம்மா இருக்காங்க, தம்பி இருக்கான். தம்பிக்கிக் கல்யாணமாகிக் கொழந்தைகள்கூட இருக்கு. என்னாலேதான் யாருக்கும் உதவியுமில்லே, சந்தோஷமுமில்லே. நான் வயித்திலே ஜனித்ததிலிருந்து எங்க அம்மா என்னைச் சுமந்துகிட்டே இருக்காங்க. அம்மாவுக்கு ஒரே நம்பிக்கை--எனக்கு காலு வந்திடும்னு...எப்பப் பார்த்தாலும் தம்பிகிட்டே 'அந்த டாக்டரைப் பார்க்கணும்னு பணத்தை வாங்கிக்கிட்டு டாக்டர்களைப் பார்த்ததுதான் மிச்சம். அவன் என்ன பண்ணுவான்?...வரவரத் தம்பியும் குடும்பஸ்தனாக மாறிப் புள்ளைகளும் பெண்டாட்டியுமா ஆனப்புறமும் நான் ஒரு சொமையா இருக்கிறதா? எனக்காக அம்மாவும் தம்பியும் தினம் சண்டை போடறாங்க...தம்பி கோவத்திலே என்னை நொண்டின்னு சொல்லிட்டான். அம்மா, 'ஓ' ன்னு அழுதுட்டாங்க' என்று நொண்டி சொல்லும்போது வியாதிக்காரனின் மனசில், ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச் சொருகிக்கொண்டு 'பரதேசி' ன்னு கூப்பிடும் அந்த குரலும் முகமும் தோன்றின. நீட்டிய காலகளின் முழந்தாள் முட்டுகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் நொண்டி:
"நேத்து ஏதோ ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதிரிக் குறையெல்லாம் தீத்து வைக்கிறார்னு யாரோ சொன்னாங்க -- அம்மா கையிலே இருந்த காசை முந்தானையிலே முடிஞ்சுண்டு 'வாடா' ன்னு உசிரைவாங்கி என்னை அழைச்சிண்டு போறப்ப நான் என்ன பண்ணுவேன், சொல்லு, சரின்னு அம்மா தோள்லே தொத்திண்டு போனேன். அந்த வைத்தியன் இருக்கிற இடம் நாலு மைல் இருக்கு...பஸ்ஸிலதான் போகணும்...போனோம்...அம்மா ஆசையிலே, வழக்கம்போல இல்லாம ஒரே தடவையிலேயே மண்ணு விழுந்திட்டுது...என் காலைப் பாத்துட்டு முடியாதுன்னுட்டான் அவன். 'இவன் ஒண்ணும் நல்ல வைத்தியன் இல்லே...ஊரை ஏமாத்தறவன்' னு என்னை அழைச்சிண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்க அம்மா... பஸ்ஸிலே ஒரே கூட்டம்..."
ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திக் கண் கலங்க எங்கோ பார்த்தவாறு வெறித்த விழிகளுடன் நெஞ்சில் பெருகி, தொண்டையில் அடைத்த துயரை விழுங்கினான் நொண்டி. அவன் வாழ்வின் மீது கொண்ட வெறுப்புக்கெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சி காரணமாய் அமைந்து அவனைச் சாவின் பீடத்துக்குக் கொண்டு வந்து தள்ளியதோ -- அந்த நிகழ்ச்சி மனசில் தெரிந்தது. அதை மனசால் பார்த்துக்கொண்டே வியாதிக்காரனிடம் விவரித்தான் நொண்டி.
அந்த காட்சி --
வௌபுள்ளிளைப் புடவையுடுத்தி முக்காடிட்ட அந்த வயோதிகத் தாயின் தோளைப் பற்றி, தன்னுடலின் முழுப் பாரத்தையும் அவள் மேலே சுமத்திக்கொண்டு, "கட்டாலே போறவன்; யாராரோ சொன்னாளேன்னு நம்பி வந்தேன். இவன் ஒண்ணும் வைத்தியன் இல்லே; பில்லி சூனியம் வைக்கறவன்... நீ கவலைப்படாதேடா கண்ணா' நான் உன்னை அடுத்த மாசம் வேலூர் மிஷன் ஆஸ்பத்திரிக்கி அழைச்சிண்டு போயி..." என்று ஏதோ சொல்ல வரும்போது, அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொள்வதுபோல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னான் மகன்:--
"எனக்குக் 'காலில்லையே'ங்கற கவலைகூட இல்லேம்மா; நீ எனக்காகப்படற சிரமத்தைப் பார்த்தாத்தான் ரொம்பக் கஷ்டமா இருக்கம்மா..." என்று விம்முகின்ற குரலோடு அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே இருக்கும்போது, பஸ் வந்தது.
"கண்ணா, கெட்டியாப் பிடிச்சுக்கோ...பாத்து, பாத்து...இதோ, இப்பிடி உட்காந்துக்கோ" என்று மகனைச் சுமந்து இழுத்தவாறு பஸ்ஸில் அவள் ஏறுவதற்குள், முன்பக்கத்தில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,"ஆச்சா? எவ்வளவு நாழி?" என்று அவசரப்படுத்தினான். ஒருவாறு சிரமத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறியதும், எதிரில் இருந்த இருவர் உட்காரும் ஸீட்டில் மகனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள் அம்மா.
பஸ் போய்க்கொண்டிருக்கும்போது, அவனது தாய் சேலைத் தலைப்பிலிருந்த சில்லறையை எடுக்கும்போது, அவன் அகஸ்மாத்தாகத் திரும்பும்போது அவர்கள் ஸீட்டுக்கு மேலே எழுதியிருந்த 'பெண்கள்' என்ற வாசகம் அவன் கண்களில் பட்டது. அப்பொழுது ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றது. அழகிய இளம் பெண்ணொருத்தி பஸ்ஸில் ஏறினாள். அவளைப் பார்த்தவாறே அருகில் வந்தான் கண்டக்டர். நொண்டி ஒரு விநாடி பெண்ணைப் பார்த்தான்; அவளது இடத்தில் தான் உட்கார்ந்திருப்பதை உணரும்போது அவனது ஆண்மை உணர்ச்சி அவனுள் ரகசியமாக வதைபட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அதைக் கொல்லுவதுபோல் கண்டக்டரின் குரல் ஒலித்தது: "இந்தாய்யா ஆம்பளே' பொம்மனாட்டி நிக்கிறாங்க இல்லே?"
அந்த நொண்டி திடீரென்று கால்கள் வந்துவிட்டது போல் எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்தில் அந்தப் பெண் அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். எழுந்து நின்ற நொண்டியின் கால்கள் நடுங்கின...
"ஐயா'...ஐயா' "என்ற தாயின் பரிதாபகரமான குரல் கண்டக்டரையும், அந்த பெண்ணையும் பஸ்ஸிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்னொருவர் சொல்லித்தன் காதால் கேட்கப் பொறாத அந்த வார்த்தையை அவளே சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்... "ஐயா' அவன் நொண்டி ஐயா' நிக்க முடியாதையா'...." என்று சொல்லிக் கண்களில் வழிந்த கண்ணீருடன் எழுந்து தன் இடத்தைக்காட்டி, "கண்ணா, நீ இப்படி உக்காந்துக்கோடா" என்று சொல்லும்போது தடுமாறி விழ இருந்த மகன், தாயின் தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னான்; 'இல்லேம்மா, நான் நிப்பேன்."
"உன்னாலே முடியாது கண்ணா" என்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் மகனை உட்கார வைத்து அந்தத் தாய் நிற்கும்போது, அந்தப் பெண் எழுந்து அவன் தாயிடம் மன்னிப்புக் கேட்பதுபோல், "நீங்க உக்காருங்க அம்மா" என்று வற்புறுத்திக் கெஞ்சினாள். கண்டக்டரின் முகம் அழுவதுபோல் மாறிவிட்டது "ஸார், மன்னிச்சுக்குங்க, எனக்கு முதல்லே தெரியலை ஸார்..." என்று நொண்டியிடம் குனிந்து சொன்னான். நொண்டி யாருக்கும் ஒன்றும் பதில் சொல்லாமல், யார் முகத்தையும் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்திருந்த தாயின் பின்னால் ஒரு குழந்தையைப்போல் முகம் புதைத்து, அழுகையை அடக்கி, நெற்றியை அவள் தோளில் தேய்த்துக் கொண்டே இருந்தான்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்த எல்லோரின் அநுதாபமும் அவன் நெஞ்சில் கனமேற்றி அவன் உயிரையே அரிப்பதுபோல்...
---நொண்டி சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமாய்க் கேட்டவாறிருந்த வியாதிக்காரன் தன்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான்.
'இவனுக்கு இன்னும் வயசு இருக்கு, வாழ்க்கை இருக்கு... இவனுக்கு ஒரு கஸ்டம்னா வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவுக்காரங்க இருக்காங்க. இவன் வாழணுன்னு ஆசைப்படறதுக்கு அன்பான தாய் இருக்கா...இவன் நொண்டின்னு தெரிஞ்சு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியம்காட்ட உலகமே இருக்கு....இவன் எதுக்கு சாகணும்?' என்று ஆரம்பித்த மனம் தன்னைப்பற்றி எண்ணும்போது...
'எனக்கு யார் இருக்கா? எனக்கு ஒரு கஸ்டம்னா, வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவு இருக்கா? உறவுங்கெல்லாம் உதறித்தள்ளி எத்தனையோ காலம் ஆயிடுச்சே? நான் வாளணும்னு ஆசைப்படற ஜீவன் என்னைத் தவிர இன்னொண்ணு உண்டா? எனக்கு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியங்காட்ட யார் இருக்கா? உலகமே வெறுத்து முகம் சுளிச்சு என்னைப் பாக்குது' என்றெல்லாம் எண்ணி மௌனமாய் உட்கார்ந்திருந்தான் வியாதிக்காரன்.
நொண்டியின் இமைகளைத் தூக்கம் அழுத்த, அவன் கொட்டாவி விட்டான். அந்த சப்தம் கேட்டு வியாதிக்காரன் நொண்டியைப் பார்த்தான், "இந்தாய்யா, நீ சாகப்படாது,....சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஸ்டப்படறே, மத்தவங்களையும் கஸ்டப்படுத்தறே."
"நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே' எங்கம்மா வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை' எவ்வளவு வருத்தம்' " என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், "ஆமாய்யா, நீ சதாநேரமும் உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு இல்லாட்டிப்போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே' வாழ்றத்துக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும் சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா?
"மனுசனுக்கு ரெக்கை இருந்திருந்தா அவனும் பறந்துகிட்டிருப்பான். ரெக்கை இல்லாததனாலேதான் 'விர்ரு விர்ரு' ன்னு இப்ப ஏரோப்ளேன்லே பறக்கிறான். இன்னும் மானத்துலே எங்கெங்கேயோ போயி என்னென்னாத்தையோ புடிக்கிறான். இல்லேன்னு சாவறதா? உங்கம்மாவேதான், என் மகனுக்குக் காலு இல்லாட்டி என்னா, என்னென்னா காரியம் பண்றான்னு நெனைக்க வெச்சிட்டியினா அவுங்க ஏன் உன் தம்பிகிட்டே போயி வம்புக்கு நிக்கப் போறாங்க? நீ என்னா என்னை மாதிரி தீராத நோயாளியா? நானே வாழறப்போ நீ சாகப்போறேங்கறியே..." என்று சொல்லும்போது வியாதிக்காரனின் தொண்டை அடைத்தது. அவனது பேச்சால் வியாதிக்காரனின் நெஞ்சிலிருந்து, வாழவேண்டுமென்ற ஆசை, வாழ முடியும் என்ற நம்பிக்கை நொண்டியின் இதயத்தில் தொற்ற ஆரம்பித்தது. நொண்டி புதியதோர் நம்பிக்கையுடன் தலை நிமிர்த்தி வியாதிக்காரனைப் பார்த்தான். வியாதிக்காரன் தொடர்ந்தான்.
"நீ என்னமோ சொல்றியே, பஸ்ஸிலே உன்னை எந்திரிக்கச் சொன்னான், அப்புறம் உட்காரச் சொன்னான்னு... அதுக்காக உன் மனசு கஸ்டப்பட்டது, நாயந்தான். தோ, என்னைப்பாரு. என்னை அந்த பஸ்ஸிலே ஏறவுடுவானாய்யா? நீ என்னைப் பகல்லே பாத்தா இப்பிடி பக்கத்திலே உக்காந்து பேசக்கூட மாட்டே, தோ... வௌிச்சத்திலே பாரு இந்தக் கையை" என்று தன் குறைபட்ட கைகளை மேலே இருந்த கோட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிலா வௌிச்சத்தில் நீட்டி விம்மினான்: "இந்தக் கை கொஞ்ச நாளைக்கு முன்னே முழுசா இருந்தது. உனக்குக் காலு இல்லே-- அவ்வளவுதான். எனக்கு இருக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமாப் போயிக்கிட்டே இருக்கு... இந்தக் கையாலே முந்தாநாளு ஒரு கொழந்தையைத் தூக்கிட்டேன். கொழந்தையைத் தூக்கணும்கிற ஆசையினாலேயா தூக்கினேன்? சீ அந்த ஆசை எனக்கு வரலாமா? தண்டவாளத்திலே வந்து நிக்குதே, ரயிலு வர்ர நேரமாச்சேன்னு பதறித்தூக்கிட்டேன். நான் வியாதிக்காரந்தான். என் உடம்பிலே சொரணைன் அத்தே போயிடுச்சி. ஆனாலும் ஒரு குழந்தையை தூக்கறோம்கிற நெனைப்பிலேயே என் மனம் சிலிர்த்துப் போச்சு... ஆனா, ஆனா.... அதுக்காக அந்தப் பெத்தவங்க என்னை அடிக்க வந்துட்டாங்க, தெரியுமாய்யா?... மனுசனாப் பொறந்தும், மனுசனுக்குள்ள எந்தச் சொகத்தையும், எந்த உரிமையையும் அநுபவிக்க முடியாம் நான் வாழறேனே... ஒரு பிசாசு மாதிரி தனியா குந்திக்கிட்டு, வாழறதா நெனச்சி என்னையே ஏமாத்திக்கிறேனே" என்று சொல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக விம்ம ஆரம்பித்து விக்கிவிக்கி அழுதான் வியாதிக்காரன்.
சற்று நேரத்திற்குப்பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு வரண்ட சிரிப்புடன் சொன்னான்: "ஆமா, பெத்தவங்களுக்குத் தெரியும் புள்ளை அருமை.... சாவைக் காட்டிலும் கொடியது இல்லையா, இந்த நோயி? அப்புறம் விஷயத்தைச் சொன்னப்புறம் ஒருமாதிரி சமாதானம் ஆனாங்க...அப்பக்கூட, 'ஒரு கொரலு, எங்களைக் கூப்பிட வேண்டியதுதானே...நீயா தூக்கறது?'ன்னு கேட்டிச்சி ---அந்த அம்மா. 'நீங்க சொல்றது நாயந்தான். தெரியாம செஞ்சிட்டே' ன்னு மன்னிப்பு கேட்டுகிட்டு வந்தேன், ஏன்னா, இது பொல்லாத நோயி, மனுசனுக்கு வரக்கூடாது; ஆரம்ப காலம்னா தீத்துடலாம். இது ரொம்ப முத்தின கேஸஉ' இனிமே கொறையாது; பரவும். மத்தவங்க ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். ஒரு தாய்க்குத் தன் குழந்தை செத்தாலும் பரவாயில்லே; இந்த நோய்வரப் பொறுக்கமாட்டா" என்று அவன் தன்னையுணர்ந்து தனக்குள் முனகுவதுபோல் பேசினான்.
சில நிமிஷ மௌனத்துக்குப் பிறகு நொண்டி இரண்டாவது முறை கொட்டாவி விட்டான்.
"தூக்கம் வருதா? படுத்துக்க, ஐயா' தூங்கர்து ரொம்பச் சொகம். செத்தாத் தூங்கமுடியாது, கேட்டுக்க, பொழுது விடிஞ்சி பெத்த மகராசிக்குப் புள்ளையாப் போய்ச் சேரு' உனக்கு நான் கடைசியாச் சொல்றது இதுதான்: காலு இல்லேன்னு நெனச்சி நீ யாருக்கும் பாரமா இருக்காதே. இப்ப யாரோட துணையுமில்லாம எப்பிடி சாக வந்தியோ, அந்த மாதிரி வாழப் போ. அதிலே ஒண்ணும் வெக்கப்படவேணாம். உன்னையே பாத்து உங்கம்மா மகிழ்ந்து போவாங்க, பாரு..." என்று, அணைந்திருந்த கடைசிப் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான் வியாதிக்காரன். படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் நொண்டி தூங்கிப் போனான். வியாதிக்காரன் தூக்கம் வராமல், கீழே கிடந்த துண்டுப் பீடிகளைப் பொறுக்கிப் பற்றவைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து வானத்தை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தான்.
"அதோ, ரொம்ப தூரம் தள்ளி வந்திருச்சே சப்தரிஸி மண்டலம்...நாலு நச்சத்திரச் சதுரத்திக்கு ஓரமா, வாலு மாதிரி இருக்கற மூணுக்கு நடுவாலே, ஓரத்திலே, ஆமாமா, அருந்ததி...அருந்ததியைப் பார்த்தவனுக்கு ஆறு மாசத்துக்குச் சாவில்லே' அடிச் செருப்பாலே' இன்னும் ஆயுசு அதிகம் வேணுமா என் கட்டைக்கி?" என்று விரக்தியும் வேதனையும் குழைய முனகிக்கொண்ட வியாதிக்காரன், கையிலிருந்த பீடியைத் தரையில் நசுக்கித் தேய்த்தான். அவன் பார்வை சப்தரிஷி மண்டலத்தை வெறித்தது.
விடிந்து ஆறு மணிக்கு வடக்கே போகும் பார்சல் வண்டியின் அவலமான கூக்குரல் கேட்டு, சத்திரத்துத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த நொண்டி கண் விழித்தான்.
அவனருகே வியாதிக்காரனின் கறை படிந்த கந்தலும், பளபளப்பான புதிய தகரக் குவளையும் தனியாகக் கிடந்தன. அங்கே ஈக்கள் மொய்த்தன.
தூரத்தில், நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் எல்லையில் புகை கக்கி அழுதவாறு பார்சல் வண்டி நின்றிருந்தது' அங்கு மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
"இங்கே சுத்திக்கினு இருப்பானே -- அந்தப் பெருவியாதிக்காரன், ரயிலு முன்னாடி போயி விழுந்துட்டான்'..."
"அவன் எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தான்; நான் அவனுக்குச் சாகக் கற்றுக் கொடுத்தேன். அவன் என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்?" --நொண்டியின் கண்கள் கலங்கின.
"அந்த இடத்தின் ராசியோ?--தன்னையே காவு தந்து இன்னொரு விபத்து ஏற்படாமல் தடுக்க முயற்சியோ? அவன் மேனியிலிருந்ததா பயங்கர தொத்து வியாதி?...இல்லை; என் மனசில் தோன்றியதே---தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் --அந்த 'வாழ்க்கையின் வெறுப்பு' த்தான் பயங்கர வியாதி...அதற்கு அவன் பலியாகிவிட்டான்."
திடீரென்று ரெயில்வே லைனுக்கு அப்பால் வரிசையாகத் தெரியும் வீடுகளின் கொல்லைப்புறக் கதவுகளைத் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரின் நடுவே இருந்து, "ஐயோ' கண்ணா' " என்ற அலறல் ரயில்வே லைனுக்கு அப்பால் வெகு தூரத்திலிருந்த நொண்டியின் வயிற்றைக் கலக்கியது.
"அம்மா' நான் இருக்கிறேன்....அம்மா' " என்று கோஷித்தவாறு வேகமாய்த் தவழ்ந்தோடினான் அவள் மகன்.
"மகனே'....மகனே'..." என்று ரயில்வே லைன் மேட்டின் மீது விழுந்து புரண்டு கொண்டிருந்த அவன் தாய் 'நான் இருக்கேன்' என்ற குரல் கேட்டு அவனைப் பார்த்து ஒன்றும் புரியாமல் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் சிரித்தாள். பிறகு, "யார் பெத்த மகனோ' " ரயில் சக்கரத்தைப் பார்த்து அழுதாள்.
அவள் அருகே வந்த அவள் மகன் அவள் தோளில் முகம் புதைத்து நெற்றியைத் தேய்த்து அழுதுகொண்டே சொன்னான்: "அம்மா' நான் இருக்கேம்மா...அது உன் மகனில்லே... அது. அந்த மனுஷன்...அவன் செத்திருக்கக் கூடாது அம்மா....ஆ'...." என்று பெருங்குரலில் கதறி அழுதான் நொண்டி.
------------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5. பொம்மை - ஜெயகாந்தன்
அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த பெரிய திண்ணைகளும் ரேழியும் உண்டு.
அந்த வீட்டுப் பெரியவரின் பேத்திக் குழந்தையாக ராணி பிறக்கும் வரை, திண்ணைகளும் ரேழியும் சுதந்திரமாகத்தான் இருந்தன. பேத்திக் குழந்தை தவழ ஆரம்பித்து, ஒருநாள் தவழ்ந்துகொண்டே வந்து வாசலில் இறங்கி விட்ட பிறகு, அதைப் பார்த்துக்கொண்டே வந்து வண்டியில் இறங்கிய பெரியவர், குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு வேலைக்காரர்களை ஒரு முறை வைது தீர்த்த பிறகு--குழந்தையின் பாதுகாப்புக்கு இந்த வேலைக்காரர்களை நம்புவது ஆபத்து என்ற தீர்மானத்துடன் வீட்டின் முன்புறம் கம்பி அழிகள் வைத்து அடைத்து, திண்ணைகளும் ரேழியும் சிறை வைக்கப்பட்டன. குழந்தை ராணி, சுதந்திரமாய்த் தவழ்ந்து திரிந்தாள்.
இப்பொழுது ராணி நடந்து திரிகிறாள், வயசு நாலு ஆகிறது. ராணிக்கு ஒரு அங்கச்சியும் பிறந்து விட்டாள்.
திண்ணை நிறைய செப்பும் பொம்மையும் இறைந்து கிடக்க, நாளெல்லாம் விளையாடிக்கொண்டிருப்பாள் ராணி. தாத்தா, ராணிக்குப் புதிசு புதிசாகப் பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ராணி ஒவ்வொன்றையும் புதுமோகம் தீரும் வரை, உண்ணும்போதும் உறங்கும்போதும் கூடக் கையிலேயே வைத்திருந்து விளையாடி உடைத்து, விளையாட்டுச் சாமான்களுக்காக வைத்திருக்கும் பிரம்புப் பெட்டியில் பத்திரமாக வைத்துவிடுவாள். அவளாக உடைக்காமல் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், தலையைப் பிய்த்துக் கொண்டு புரண்டு புரண்டு, காலையும் கையையும் உதைத்துக் கொண்டு அழுவாள். தாத்தா உடனே புதிசு வாங்கிக் கொண்டு வந்து தருவார்.
அவளுக்கென்ன---ராணி'
அந்தப் பிரம்புப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து திண்ணை மீது வைத்துவிட்டு, முக்கி முனகித்தானும் திண்ணையில் ஏறிப் பெட்டியைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிய ராணி, "ஹை.....எவ்வளவோ சொப்பு' " என்று ஆச்சரியத்தால் கூவிய குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
வௌியே---கம்பிகளுக்கிடையே பரட்டைத் தலையை அடைத்துக் கொண்டு மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பியவாறு, பிறந்த மேனியாக நின்றிருந்த ராணியின் வயதேயுள்ள ஒரு கறுப்புக் குழந்தை ராணியைப் பார்த்துச் சிரித்தாள்.
அரைஞாண்கூட இல்லாத கரியமேனியில், புழுதியில் விழுந்து புரண்டதால் அழுக்கின் திட்டுக்கள் படர்ந்திருந்தன. மூக்கிலிருந்து ஒழுகியது, வாய் எச்சிலுடன் கலந்து, மோவாயில் இறங்கி மார்பிலும் வயிற்றின் மேலும் வடிந்துகொண்டிருந்தது.
அந்தக் குழந்தையை பார்க்க ராணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்தக் குழந்தையும் முகமே இரண்டு கண்களாய் விரிய ராணியைப் பார்த்தது.
"ஐயய்யே....நீதான் தத்தையே போடல்லியே...." என்று கையை நீட்டி இளித்துக் காட்டிவிட்டு, அந்த அம்மணக் கோலத்தைப் பார்க்க வெட்கப்படுவதுபோல் முகத்தை மூடிக்கொண்டாள் ராணி.
ராணியின் வெட்கம் இரவல்தான்; ராணி சட்டையில்லாமல் திரிந்தால், தாத்தா அப்படிச் சொல்லிக்கொண்டு முகத்தை மூட்டிக்கொள்வார். ராணி அம்மாவிடம் ஓடிச் சட்டையும் ஜட்டியும் போட்டுக்கொண்டு வந்து, முகத்தில் மூடியிருக்கும் தாத்தாவின் கையை விலக்கி, தான் போட்டிருக்கும் சட்டையையும், சட்டையை தூக்கிவிட்டு ஜட்டியையும் காட்டுவாள். முகத்தைத்தான் மூடிக்கொள்ள தாத்தா கற்றுக் கொடுத்திருந்தார்; கண்ணை மூடிக்கொள்வதற்கு?....தாத்தாவும் விரல் இடுக்கு வழியாக பார்ப்பாரே' அதே போல் பார்த்த ராணி, முகத்திலிருந்த கையை எடுத்துவிட்டு கேட்டாள்:
"ஆமா, ஒனக்குத் தத்தை இல்லே?...."
"ஓ' இருக்கே....."
"எங்கே ஈக்கு?..."
"தோஓ'....அங்கே' " என்று கையைக்க் காட்டியது கறுப்புக் குழந்தை.
"எங்கே, உங்க வீத்திலேயே?...."
"ஆமா...."
"உங்க வீது எங்கே?..."
"தோ....இங்கேதான்" என்று கையைக் காட்டியது கறுப்புக் குழந்தை.
ராணி திண்ணையிலிருந்து ரொம்பப் பிரயாசைப்பட்டுக் கீழே இறங்கி வந்து கம்பி அடைப்பின் அருகே, கையில் நேற்று தாத்தா வாங்கித் தந்த புதிய வர்ணப் பொம்மையுடன் நின்று, அவள் காட்டிய திசையில் பார்க்க முயன்றாள். தலையை வௌியே தள்ளிப் பார்க்க முடியாததால் அந்தக் குழந்தையின் வீடு தெரியவில்லை. கறுப்புக் குழந்தை ராணியின் கையிலிருந்த பொம்மையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
கறுப்புக் குழந்தை காட்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. கிருஷ்ண மந்திரத்துக்குப் பக்கத்தில் நீண்டு செல்லும் சுவர் ஓரமாக, பிளாட்பாரத்தில் ஒரு பெரிய முருங்கை மரம் நிழல் பரப்பி நிற்கிறது. அதன் நிழலில் சுவரின்மீது 'முனீஸ்வரர் அபயம்' என்று பாமரர்களால் எழுதி வைத்துக் கொண்டாடப்படும் ஒரு பாமரக் கடவுள், முழுச் செங்கல் உருவத்தில் எழுந்தருளியிக்கிறார், அவருக்குப் பக்கத்தில் இரண்டு 'ட' னா ஆணிகள் அடித்து, ஒரு கோணியின் இரண்டு முனைகளை ஆணியில் மாட்டி, இன்னொரு முனையை முருங்கை மரத்தில் பிணைத்து, நாலாவது முனையை ஆதரவில்லாமல் காற்றில் திண்டாடிவிட்டு அந்த முனையை ஒரு பக்கத்து மறைப்பாகக் கொண்டு அதில் ஒரு குடும்பம் வாழ்கிறது.
கறுப்புக் குழந்தை காட்டிய அந்த இடம் ராணிக்குத் தெரியவில்லை.
"ஒனக்குத் தத்தை யாது வாங்கித் தந்தா? தாத்தாவா?"
"எனக்குத் தாத்தாத்தான் இல்லியே' "
"தாத்தா இல்லே?--பாத்தி?"
"ஊஹ்உம்."
"அம்மா?"
"ஓ...அம்மா இருக்கே' எங்கம்மா வேலைக்குப் போயிருக்கு. அப்புறமா...நாளைக்கு வரும்போது எனக்கு முறுக்கு வாங்கித் தரும். சொல்லூ"
"உங்க வீத்லே பொம்மை யீக்கா?"
கறுப்புக் குழந்தை பதில் சொல்லாமல்....ராணியின் கையிலிருந்த பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்தது. ராணி பதிலை எதிர்பார்த்தா கேள்வி கேட்டாள்? அவளுக்கு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்' பதில் வந்தாலும் வராவிட்டாலும் கேட்க வேண்டும். அதில் ஒரு லயிப்பு.
"ம்...ம்...அப்பதம்....கப்பல்----கப்பல் ஈக்கா?"
கறுப்புக் குழந்தை தலையை ஆட்டியது. அந்தத் தலையாட்டலுக்கு 'இல்லை' என்றும் கொள்ளலாம்; 'இருக்கு' என்றும் கொள்ளலாம். அதை எங்கே இவள் கவனித்தாள்? எங்கோ பார்த்துக்கொண்டு கண்களைச் செருகிச் செருகி 'ம்....ம்....ம்....ம்' என்ற சுருதியிசையோடு, 'அப்பதம்....லயில் ஈக்கா? கார் ஈக்கா, வண்டி ஈக்கா?' என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் ராணி. அவள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டினாள் கறுப்புக் குழந்தை.
வீடு இருந்தாலல்லவா வீட்டில் என்னென்ன இருக்கும் என்று தெரியும்? வீதியிலிருப்பதெல்லாம் வீட்டிலிருப்பதாகத்தான் கறுப்புக் குழந்தைக்கு நினைப்பு. வீதியே வீடாகி விட்டபின்.....
அந்தக் 'கேள்வி கேட்கும்' விளையாட்டு சலித்துப் போய்விட்டது ராணிக்கு. "நா....வௌபுள்ளிளையாதப் போதேன்" என்று கூவிக்கொண்டே திண்ணைமேல் ஏறிய ராணி, "உங்க வீத்லே பொம்மை ஈக்கா?" என்று கடைசியாக மறுபடியும் ஒரு முறை கேட்டு வைத்தாள். கறுப்புக் குழந்தை வழக்கம்போல் தலையாட்டினாள்.
திண்ணைமீது உட்கார்ந்துகொண்டே ராணி தன்னிடமிருந்த வர்ணப் பொம்மைக்குச் சட்டை போட்டாள்.
"ஹை...சின்ன சட்டை'...." என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பினாள் கறுப்புக் குழந்தை.
"போ....' நீ தான் அதது....பாப்பா கூத தத்தை போத்துக்கித்தா...பாப்பாதான் தமத்து, நா ரொம்ப தமத்து...மானம் வரைக்கும் தமத்....தூ" என்று கைகளை அகல விரித்துக் கொண்டு சொன்னாள் ராணி.
இவள் என்ன பேசுகிறாள் என்று கூட கறுப்புக் குழந்தைக்குப் புரியவில்லை. கறுப்புக் குழந்தைக்குப் புரிந்ததெல்லாம் 'தனக்கும் ஒரு பொம்மை வேண்டும், அதற்குச் சின்ன சட்டை போட்டு அழகு பார்த்துச் சிங்காரிக்க வேண்டும், தானும் ஒரு சட்டையைப் போட்டுக்கொள்ள வேண்டும்' என்பவைதான்.
உள்ளேயிருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டது. கறுப்புக் குழந்தை கால்களை எக்கிக்கொண்டு கம்பிகளின் வழியாக எட்டிப் பார்த்தது.
"அங்கச்சிப் பாப்பா அயுதா....அங்கச்சிப் பாப்பாக்குத் தலைக்கு ஊத்துதா.... உங்க வீத்திலே பாப்பா ஈக்கா?" என்று கைகளைத் தட்டிச் சிரித்தவாறு கேட்டாள் ராணி.
எதைச் சொல்ல வந்தாலும் அதைத் தொடர்ந்து ஒரு கேள்வியாகத்தான் முடிக்கத் தெரியும் ராணிக்கு.
"எனக்குத் தான் தம்பி இருக்கானே' "
"தம்பிப் பாப்பாவா.... ' உங்க பாப்பாவை இங்கே அயெச்சிண்டு வருவியா? "
வீட்டின் உள் முற்றத்தில் குழந்தைக்குத் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் லயித்திருந்த கறுப்புக்குழந்தை வழக்கம்போல் இதற்கும் தலையாட்டினாள்.
அப்பொழுது "ஏ' ....செவாமி...." என்ற குரல் கேட்டு, வலது கையால் கம்பியை பிடித்துக் கொண்டு, வலது காலைக் கம்பியில் உந்திக்கொண்டு இடது காலையும் இடது கையையும் வீசிக்கொண்டே திரும்பிய கறுப்புக் குழந்தை "இங்கேதாம்மா இருக்கேன்" என்று பதில் குரல் கொடுத்தது.
"ஏங் கொரங்கே' பாப்பாவெப் பாத்துக்காம அங்கே எங்கே போயித் தொலைஞ்சே' வாடி, அங்கேயே நின்னுகிட்டு. எனக்கு வேலைக்குப் போவணும், வந்து கொட்டிக்க' " என்று தாயின் குரல் அழைத்தது.
"பொம்மை நல்லாருக்கு' அம்மா கூப்புடுது, நா போயி 'பயேது' துன்னுட்டு வர்ரேன்" என்று சொல்லிவிட்டுத் தாயை நோக்கி ஓடினாள் சிவகாமி.
சிவகாமியின் தாய் ரங்கம்மாள் அந்தத் தெருவின் மறுகோடியில் புதிதாய்க் கட்டுகின்ற ஒரு வீட்டில் சித்தாள் கூலியாக வேலை பார்க்கிறாள். வேறு எங்காவது தொலைவில் வேலை இருந்தால் மத்தியானம் சாப்பிட வரமாட்டாள். பக்கத்திலிருப்பதால் குழந்தைக்கும் போட்டுத் தானும் சாப்பிட வந்தாள். அவளுடைய கைக்குழந்தைக்கு, பிறந்தது முதலே சீக்கு. கைப்பிள்ளை வயிற்றில் ஆறு மாதமாய் இருக்கும் போது புருஷன் க்ஷயரோகத்தால் செத்துப் போனான். அந்தத் துயரத்தை மாற்ற வந்தது போல் அவளுக்குப் பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகவும், புருஷனைப் போலவேயும் இருந்ததில் அவளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி.
பிறந்து எட்டு மாதமாகியும் சற்றும் வளர்ச்சியின்றி நரம்பும் தோலுமாய்க் கிடக்கிறது குழந்தை. நாள்தோறும் காலையில் பக்கத்திலிருக்கும் முனிசிபல் தர்ம ஆஸ்பத்திரி மருந்தை வாங்கிக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறாள்; அதுவும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ரங்கம்மாளுக்குக் கைக்குழந்தையின் மீதுதான் உயிர். சிவகாமி 'பொட்டச்சி' தானே என்ற அலட்சியம். கைக்குழந்தைதான் ஆம்பிளைச் சிங்கமாம்; அவன் வளர்ந்துதான் சம்பாதித்துப் போட்டுப் பெற்றவளுக்குக் கஞ்சி ஊற்றப் போகிறானாம். நோய் பிடித்து, நரம்பும் தோலுமாய் உருமாறி, நாளெல்லாம் சிணுங்கி அழுது, சோர்ந்து உறங்கிச் செத்துக்கொண்டோ, வாழ்ந்துகொண்டோ---எப்படி இருந்தால் தான் என்ன? ஒரு தாயின் கனவுகளை வளர்க்க ஒரு குழந்தை போதாதா?
இரண்டு நாளாகக் கைக்குழந்தைக்குக் காய்ச்சல் வேறு. வழக்கம்போல் முனிசிபல் ஆஸ்பத்திரி மருந்தை வாங்கி வந்து குழந்தைக்கு ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பைக் குழியில் தன்னையொத்த குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சிவகாமியை அழைத்து, வயிற்றுக்கு 'நீத்தண்ணி'யை வடித்துக் கொடுத்து, "பாப்பாவை பாத்துக்கோ, எங்கியும் பூடாதே' " என்று காவலுக்கு வைத்துவிட்டுப் போன ரங்கம்மாள், வரும்போது சிவகாமியை அங்கு காணாமல் கோபத்துடன் கூவியபோது---பக்கத்திலிருந்து, "இங்கேதானேம்மா இருக்கேன்" என்ற குரல் கேட்டதும் சாப்பிட அழைத்ததாக தன் கோபக் குரலை மாற்றிக் கொண்டாள் ரங்கம்மாள்.
வரும்போதே "அம்மா அம்மா...." என்று கொஞ்சிக் கொண்டே வந்தாள் சிவகாமி.
"இன்னாடி?"
"உம்....எனக்குச் சட்டை குடும்மா, சட்டை' வெக்கமா இருக்கு" என்று முழங்காலைக் கட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் சிவகாமி.
"எங்கே இருக்கு சட்டை?"
"ஐயே, பொய்யி சொல்றே, பெட்டிக்குள்ளே இருக்குது" சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் சிவகாமி.
"ஒரே ஒரு கிழிசல் இருக்கு. அதையும் போட்டுப் பொரட்டி அழுக்காக்கிப் போட்டுடுவே' "
"இல்லேம்மா' அழுக்காக்காம அப்பிடியே புதுச்சா வெச்சிக்கிறேம்மா' அம்மா, ஐய, அம்மா' சட்டை, இல்லாம எனக்கு வெக்கமா இருக்கு. அங்கே அந்த வூட்டுப் பாப்பா பூச்சட்டைப் போட்டிருக்கு' எம்மா அழகு தெரியுமா, அந்தப் பாப்பா' "
"சரி சரி, தின்னு' "
அலுமினியத் தட்டிலிருக்கும் பழைய சோற்றையும் ஊறுகாயையும் தன் சின்னஞ்சிறு விரல்களால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டாள் குழந்தை. ரங்கம்மாள் பானையில் பருக்கைகளுடன் கலந்திருந்த தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கிப் பானையோடு தூக்கிக் குடித்தாள்.
"அம்மா, அம்மா' "
"இன்னாடி?"
"எனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரியா"
"தர்ரேன்..."
"எப்ப வாங்கித் தரே?"
"நாளைக்கி...."
"அந்தப் பாப்பா நெறையச் சொப்பு வெச்சிருக்கும்மா...." என்று பொம்மையைப் பற்றியும் செப்புகளைப் பற்றியும் சட்டையைப்பற்றியும் பேசிக்கொண்டே சாப்பிட்டாள் சிவகாமி.
சாப்பிட்டு முடித்த பிறகு சுவரோரமாக வைத்திருந்த ஜாதிக்காய்ப் பெட்டியைத் திறந்து அதில் கிடந்த கந்தல்களைக் கிளறி ஒரு பழைய கிழிந்த கவுனை எடுத்துச் சிவகாமிக்கு அணிவித்தாள் ரங்கம்மாள். கவுனில்---இடுப்பிலும் தோளிலும் கிழிந்தும், கையிலிருந்த கிழிசல்கள் தைத்தும் இருந்தன. அதைப் போட்டவுடன் சிவகாமிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. 'ஹை ஹை' என்று குதித்தாள். கவுனிலிருந்த கிழிசலில் விரலை விட்டுப் பார்த்துக்கொண்டே, "அம்மா, அந்தப் பாப்பா புதுச்சட்டை போட்டிருக்கும்மா..." என்றாள்.
"அவுங்கள்ளாம் பணக்காரங்க...." என்று சொல்லிக்கொண்டே கவுனின் பொத்தானைப் போட்டுவிட்டாள் ரங்கம்மாள்.
"நாம்ப.....?"
"நாம்பல்லாம் ஏழைங்க....சரி, நீ பாப்பாவைப் பாத்துக்க; நா வேலைக்கிப் போயிட்டு வர்ரேன்....இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டுப் புறப்படும்போது, ரங்கம்மாள் கைக்குழந்தையைத் தூக்கிப் பால் கொடுத்தாள். அது கண்ணைக்கூடத் திறக்காமல், ஜ்உரவேகத்தில் பால் குடிக்க மறந்து மயங்கிக் கிடந்தது.
ரங்கம்மாளுக்கு நெஞ்சு பதைபதைத்தது. 'வேலைக்குப் போகாமல் இருந்துவிடலாமா?' என்று ஒரு விநாடி யோசித்தாள். போகாவிட்டால் ராத்திரி சோற்றுக்கு என்ன செய்வது? அரைநாள் வேலை செய்தாகிவிட்டது. இன்னும் அரை நாள் செய்தால்தானே முக்கால் ரூபா கூலி கிடைக்கும்'....என்று நினைத்தவள். "அப்பா' முனீஸ்வரனே' எங்கொழந்தையைக் காப்பாத்து" என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டாள்.
ரங்கம்மாள் புறப்படும்போது, சிவகாமி ஞாபகப்படுத்துவதுபோல் கேட்டாள்: "அம்மா, பொம்மை....."
ரங்கம்மாள் சிவகாமியின் பரட்டைத் தலையைக் கோதியவாறே சொன்னாள்: "நீ அந்தப் பணக்காரக் கொழந்தையைப் பாத்துட்டு ஒண்ணொண்ணும் கேட்டா நா எங்கேடி போவேன்?"
"உம்...அது கிட்டே பொம்மை இருக்கு....நீ பாப்பாகிட்டே வெளையாடிக்கிட்டே இரு...." என்று முரண்டினாள் சிவகாமி.
"நம்ப கிட்டே பாப்பா இருக்கு.....நீ பாப்பா கிட்டே வெளையாடிக்கிட்டே இரு...." என்று சிவகாமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓட்டமும் நடையுமாய் வேலைக்குப் போனாள் ரங்கம்மாள்.
ரங்கம்மாளின் தலை மறையும் வரை, குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவகாமி மௌபுள்ளிள எழுந்து, தான் போட்டிருக்கும் சட்டையைத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்தவாறு 'கிருஷ்ண மந்திர'த்தை நோக்கித் துள்ளித் துள்ளி ஓடினாள்.
"தோ பாத்தியா... நானும் சட்டை போட்டுக்கிட்டேன்..... எங்கம்மா போட்டுச்சி...." என்று கத்திக்கொண்டே கம்பிக் கதவருகே வந்து நின்ற சிவகாமியைப் பார்த்த ராணி "உஸ்... தத்தம் போதாதே....பாப்பா தூங்குது.... முயிச்சின்தா அயும்" என்று தன் மொம்மையை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள்.
"உன் தத்தை ஏன் கியிஞ்சி ஈக்கு?" என்றாள் ராணி.
"நாங்கல்லாம் ஏழைங்க " என்றாள் சிவகாமி. ராணிக்குப் புரியவில்லை.
"உன் பொம்மை எங்கே?" என்றாள் ராணி.
"எனக்கு பொம்மையில்லே. தம்பிப் பாப்பாதான்.... அவனோடதான் நான் வெளையாடணுமாம்...." என்றாள் சிவகாமி.
கிருஷ்ண மந்திரத்திற்குள், மத்தியான நேரமானதால் பெரியவர்கள் எல்லொரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
திண்ணையிலிருந்து இறங்கி மௌபுள்ளிள வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் ராணி. எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முற்றத்து ஓரத்தில் அண்டா நிறையத் தண்ணீர் இருக்கிறது.
அன்று காலை அந்த முற்றத்தில்தான் அங்கச்சிப் பாப்பாவுக்குத் தலைக்கு ஊற்றியது ராணியின் நினைவுக்கு வந்தது. தன் குழந்தைக்கும் தலைக்கு ஊற்ற எண்ணிய ராணி மௌபுள்ளிள உள்ளே சென்று அண்டாவுக்குப் பக்கத்திலிருந்த குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து திண்ணைமேல் வைத்தாள். இந்தக் காரியங்களின் இடையிடையே, சிவகாமியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். சிவகாமியும் ரகசியமாகச் சிரித்தாள். சத்தம் ஏதுமில்லாமல், குழந்தைக்குக் 'குளிப்பு' வைபவம் நிகழ்ந்தது.
வர்ணப் பொம்மையின் தலையில் தண்ணீரை ஊற்றித் தேய்த்ததும் பொம்மையின் கண்ணும் மூக்கும் அழிந்து போயின. மீண்டும் தண்ணீரை ஊற்றிக் கழுவியதும் வெறும் மண்ணில் பொம்மை உருவம்தான் இருந்தது. ராணி அழ ஆரம்பித்தாள்....கண்ணைக் கசக்கிக் கொண்டு விம்மல் விம்மலாய் ஆரம்பித்த அழுகை "தாத்தா" வென்ற பெருங் குரலோடு வெடித்தது. ராணி அழுவதைக் கண்டதும் பயந்துபோன சிவகாமி முருங்கைமரத்து நிழலை நோக்கி எடுத்தாள் ஓட்டம்.
முருங்கை மர நிழலில் சுவரோரமாய்ப் படுத்திருந்த தம்பிப் பாப்பாவைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் சிவகாமி. லேசாக அவன் முகத்தைத் தடவினாள்... குழந்தை சிணுங்கி அழுதான். அது அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அடிக்கொருதரம் அவனைச் சீண்டிக்கொண்டே இருந்தாள். அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தவாறு அவனுடைய சின்னஞ்சிறு கால்களையும் கையையும் தொட்டுப் பார்த்தாள். அப்புறம் கழுத்து வரை போர்த்தியிருந்த கந்தலை எடுத்துப் பார்த்துவிட்டு, வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள் சிவகாமி.
"ஐயய்யோ, தம்பிக்குத்தான் சட்டை இல்லையே' " என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்து, "ஒனக்கும் சட்டை வேணுமாடா?" என்று கேட்டாள். பிறகு எழுந்து பக்கத்திலிருந்த ஜாதிக்காய்ப் பலகைப் பெட்டியைத்திறந்து, அதிலிருக்கும் கந்தலைக் கிளறி ஒரு கிழிந்த ரவிக்கையை எடுத்துக் கொண்டு பெட்டியை மூடிவிட்டு, குழந்தையின் அருகே வந்து உட்கார்ந்தாள். போர்வையை எடுத்து விட்டுச் சட்டை அணிவிக்க முற்படும்போது, அவளுக்கு இன்னொரு விளையாட்டுத் தோன்றியது. மோதிர விரலையும் நடு விரலையும் சேர்த்து வாயிலிட்டுச் சப்பிக்கொண்டே எழுந்து 'ஹை...ஹை' என்று தோளை உயர்த்திக் கொண்டு குதித்தாள்.
சுவரோரமாக வைத்திருந்த 'மூன்று கல்' அடுப்பு மீது பானை இருந்தது. அதனுள்---பானை நிறையப் பச்சைத் தண்ணீர். பக்கத்திலிருந்த தகரக் குவளையில் ஒரு குவளைத் தண்ணீர் மொண்டு கொணர்ந்து தம்பிப் பாப்பாவின் அருகில் வைத்தாள்.
அந்த வீட்டுப் பாப்பா செய்த்ததுபோலவே குழந்தையின் அருகே இரண்டு காலையும் நீட்டிப் போட்டுக் கொண்டு, தன் சட்டை நனையாமல் இருக்க முன் பக்கத்தை எடுத்து மேலே சொருகிக் கொண்டாள். குழந்தையை, படுத்திருந்த இடத்திலிருந்து முக்கி முனகித் தூக்கிக் கால்களின் மீது கிடத்திக் கொண்டு, தண்ணீர் படாமல் பாயையும் ஒதுக்கி வைத்துவிட்டு----குழந்தையின் தலையில் ஒரு கைத் தண்ணீரை வைத்து 'எண்ணெய்' தேய்த்தாள்; பிறகு முகத்தில், மார்பில், உடம்பில் எல்லாம் எண்ணெய் தேய்ப்பதுபோல் தண்ணீரைத் தேய்த்தாள். குழந்தை ஈன சுரத்தில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான். பிறகு டப்பாவிலிருந்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தை வயிற்றை எக்கி எக்கிக் கேவியது.... 'சீ'.... இந்த பானை கைக்கு எட்டலியே' என்று முனகியவாறு காலில் கிடத்திய குழந்தையோடு இன்னும் கொஞ்சம் தள்ளி, உட்கார்ந்த இடத்திலிருந்தே கைக்குப் பானை எட்டுகின்ற தூரத்திற்கு நகர்ந்து கொண்டாள்.
----தெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ஆனால், கட்டுவதற்கு ஆணியுமில்லாமல், முருங்கை மரத்திற்கும் எட்டாமல் தொங்கிக்கொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அந்தக் கோணியின் நான்காவது முனை, குழந்தையையும் சிவகாமியையும் மறைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் குப்பைத் தொட்டி. கோணியை விலக்காமல் இவளை யாரும் பார்க்க முடியாது. பார்த்தாலும் முதுகுப்புறம்தான் தெரியும்.
இரண்டாவது குவளைத் தண்ணீரைக் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தையின் வயிறு ஒட்டி மேலேற ஒருமுறை கேவிற்று. "ரோ....ரோ....அழாதேடா கண்ணு...." என்ற கொஞ்சலுடன் தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருந்தாள்.
ஒவ்வொரு குவளைத் தண்ணீருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணற வயிறு ஒட்டி மேலேறிக் கேவிற்று. அந்தக் குழந்தையின் திணறல், இந்தக் குழந்தைக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒன்று....இரண்டு...மூன்றாவது குவளைத் தண்ணீரைச் சாந்தமாக, அமைதியாக எவ்வித சலனமும் உடலிற் காட்டாமல் ஏற்றுக் கொண்டது குழந்தை.
"தம்பி குளிச்சிட்டானே' " என்று நாக்கைத் தட்டிக் கொண்டு குழந்தையின் தலையையும் உடம்பையும் துடைத்தாள் சிவகாமி. பிறகு அந்த ரவிக்கையைச் சட்டையாக அணிவித்து முக்கி முனகித் தூக்கி வந்து பாயில் கிடத்தினாள். "இப்போது தான் நல்ல பாப்பா" என்று குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள் சிவகாமி.
"சீ, தலைமயிர் மூஞ்சியிலே விழுதே" என்று மரச்சீப்பை எடுத்துத் தலை வாரினாள். பொட்டு? அதோ செங்கல் உருவில் பக்கத்தில் எழுந்தருளியிருந்த முனீஸ்வரனின் மேலிருந்த குங்குமத்தையெல்லாம் சுரண்டி எடுத்துக் கொண்டு வந்து தம்பிக்குப் பொட்டு வைத்தாள். கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்தாள். கைகளை மார்பின் மீது குவித்து வைத்து, துவண்டு கிடந்த தலையை நிமிர்த்தி வைத்தாள்.
'தம்பி ஏன் அழலே....?' என்ற நினைவும் வந்தது. 'தம்பி தான் பட்டுப் பாப்பா....அழவே மாட்டான்.'
"தம்பி தம்பி" என்று எழுப்பினாள். குழந்தையின் உடம்பு சில்லிட்டிருந்தது.
"அப்பா' ரொம்ப 'சில்'லுனு இருக்கு. தம்பி, ஏண்டா சிரிக்கமாட்டேங்கிறே? கையை ஆட்டு... ஆட்டமாட்டியா? கண்ணைத் திற" என்று இமைகளை விலக்கிவிட்டாள்; கண்கள் வெறித்தன....
"என்னடா தம்பி, பொம்மை மாதிரி பார்க்கிறியே... நீ பொம்மை ஆயிட்டியா?" என்று கைகளைத் தட்டிக் குதித்தாள் சிவகாமி.
சாயங்காலம் ரங்கம்மாள் வேலையிலிருந்து திரும்பி வரும் போது 'கிருஷ்ண மந்திர'த்தின் அருகே வர்ணம் போன ஒரு மண் பொம்மை---தூக்கி எறிந்த வேகத்தில் கால் பகுதி மட்டும் கொஞ்சம் உடைந்து கிடந்தது---
காலில் தட்டுப்பட்டது. ரங்கம்மாள் குனிந்து அதைக் கையில் எடுத்தாள்.
'மத்தியானமெல்லாம் குழந்தை பொம்மை.... வேணும்னு அழுதாளே' என்று நினைவு வந்ததும் கையிலெடுத்ததை மடியில் கட்டிக் கொண்டாள்.
சற்றுத் தூரத்தில் சிவகாமி ஓட்டமாய் ஓடி வந்தாள்.....
"எங்கேடி ஓடியாறே? வீட்டுக்குத்தானே வர்ரேன்? இந்தா ஒனக்குப் பொம்மை...." என்று வர்ணம் போன பொம்மையைக் கொடுத்தாள்.
"இதுதான் அந்தப் பாப்பாவோட பொம்மை ஒடஞ்சி போயிடுச்சி.... அம்மா, நம்ப தம்பிப் பாப்பா இல்லே. தம்பிப் பாப்பா---- அவன் பொம்மையாயிட்டாம்மா.... வந்து பாரேன். அந்தப் பாப்பாவோட பொம்மைதான் கெட்டுப் போச்சு.... தம்பி நல்லா இருக்கான், வந்து பாரேன்..." என்று தாயை இழுத்தாள் சிவகாமி.
"என்னடி சொல்றே, பாவி' " என்று பதறி ஓடிவந்த ரங்கம்மாள்--- குளிப்பாட்டி, சட்டை போட்டு, தலைவாரி நெற்றியில் பொட்டு வைத்து நீட்டிக் கிடத்தியிருக்கும் தன் ஆசை மகனைப்பார்த்து, "ஐயோ மவனே...." என்று வீழ்ந்து புரண்டு கதறி அழுதாள்.
சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை. மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பிக்கொண்டு, முகமே கண்களாய் விரியப் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தாள். அவள் கையில் ராணி குளிப்பாட்டியதால் வர்ணம் போய், தூக்கி எறிந்த வேகத்தில் கால் உடைந்துபோன அந்த நொண்டிப் பொம்மை இருந்தது.
அம்மா எதற்கு அழுகிறாள் என்று சிவகாமிக்குப் புரியவே இல்லை. ஆனாலும் அவள் உதடுகளில் அழுகை துடிக்கிறது---- அவள் அழப் போகிறாள்.
------------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. தேவன் வருவாரா? - ஜெயகாந்தன்
பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள்' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை.
குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது.
'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா?" கிழவிக்கு நெஞ்சு படபடத்தது.
இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை.
சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது.
"அதாரு? சின்னப் பொண்ணா...ஏ, சின்னப் பொண்ணு' எங்க அழகம்மா எங்கே? உங்க கூட வரலியா?...."
"நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா.....வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ, தெரிலியே....."
குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம். எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள்.
"எங்க அழகம்மாளைப் பார்த்தீங்களா, அழகம்மாவை?"
எல்லோரும் பார்த்ததாகத்தான் சொன்னார்கள். அவள் எங்கே என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
சேரித் தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்...' அந்தக் கும்பலில் இருப்பாளோ' '--கிழவி சாயபுக் கடையை நோக்கி ஓடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம்.
"ஏ' ஐயோ, கடைக்கார ஐயா...எங்க அழகம்மா இந்தப் பக்கம் வந்தாளா, பாத்திங்களா ஐயா?..."
"அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே...நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே? எங்களுக்கு வேறே வேலையில்லியா?" என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு--அவனுக்கு வியாபார மும்முரம்.
பைத்தியம்;--அந்த வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது.
ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில், குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக் கொண்டு, 'ஆடை பாதி, ஆள் பாதி' க் கோலத்துடன் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்தவள்தான் அழகம்மாள்.
"இப்ப இல்லியே......இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தௌிஞ்சு போச்சுதே' " கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தௌிந்தது? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம்'
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதா கோயிலுக்குப் போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவௌியில் உடலை மறைத்துக்கொண்டு 'ஆயா ஆயா' என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்...அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?
"ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே?...ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்திக்கிட்டே போறியே ஆயா..." என்று கதறியழுதாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?
அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டுவந்தது.
கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும் எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு, காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லாவா?...அழகம்மாளா?...யாராயிருந்தால் என்ன? பெண்'
கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய்
அவளிடம் கொடுத்தாள். உடுத்திக் கொண்டதும் கண்கள் கலங்க, கரம்கூப்பிக் கும்பிட்டவாறு, "ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்..." என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்?
ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக்கொண்டு, "நீதான் எனக்கு மகள்..." என்று கண்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே...
"இருவர்க்கும் இருவர் துணையாகி -- நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்துக் கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம்?
'இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை' என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதாகோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள்.
அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம், பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும்--அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யும். மற்றவர் கண்ணுக்கு 'இது என்ன அழகு' என்று தோன்றும் இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அழகம்மாளுக்கும் அப்படித்தானோ? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற் குன்றுகளுக் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஒதிய மரங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள்.
அதோ.....
நிலா வௌிச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்....?
"அழகம்மா....அழகம்மா...."
---பதிலில்லை.
கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான்' கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள்' அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன.
"அழகம்மா...." கிழவி அவள் காதருகே குனிந்து மெல்ல அழைத்தாள்.
"ஆயா...." நிலவில் பதிந்த பார்வை பெயராமல் குரல் மட்டும் வந்தது; கிழவிக்கு உயிரும் வந்தது.
'தெய்வமே, அவளுக்கு புத்தி பேதலித்து விடவில்லை....' கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள்.
"ஆயா" இப்பொழுதும் பார்வை நிலவில்தான் இருந்தது.
"என்னாடி கண்ணே...."
"அதோ நெலாவிலே பாரு...." கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஔியிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன.
"அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, 'தேவன் வருவாரா'ன்னு...."--- கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்தது. பல மணி நேரம் மௌனமாய் இருந்து விட்டுத் திடீரென அவள் கேட்பாள்--- "ஆயா, தேவன் மறுபடியும் வருவாரா...." அதற்கு கிழவி பதில் சொல்வாள்; "வருவார் மகளே, வருவார்.... பெரியவங்க அப்படித்தான் சொல்லி இருக்காங்க..." என்று.
"சரி; அதற்கு இப்பொழுது என்ன வந்தது?..."
அவள் முகம் புன்னகையில் மலரக் கண்கள் ஜொலிக்கப் பேசிக்கொண்டேயிருந்தாள்.
"அதோ நெலாவிலே பாரேன்....அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்....ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்---அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு'.... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு... அதைப் பார்க்கும் போது கண்ணும் நெஞ்சும் நெறைஞ்சி எனக்கு மூச்சே நின்று போறமாதிரி இருந்தது...அவரு எனக்குப்பணம் காசெல்லாம் தர்ரேன்னாரு...நான் வேணாம்னு சொல்லிட்டேன். 'ஒனக்கு என்ன வேணும்'னு கேட்டாரு.... 'நீங்கதான் வேணும்'னு சொன்னேன்--- அந்தத்தேவனோட நெழல் என்மேலே விழுந்தது; நிலாவிலேயும் விழுந்தது --- நிலா கறுப்பாயிடுச்சி --- என் ஒடம்பும் இருண்டு போயிடுச்சு. 'நான் கண்ணை மூடிக்கிட்டேன் --- நூறு நூறா,....ஆயிரம், கோடியா மானத்திலே நட்சத்திரமில்லே, அந்த மாதிரி நிலாக் கூட்டம் என் கண்ணுக்குள்ளே சுத்திச் சுத்தி வந்தது. வௌியே ஒலகம் பூராவும் ஒரே இருட்டு. என் உடம்புக்குள்ளே மட்டும் வௌிச்சம், வௌிச்சம், ஒரே வௌிச்சம்' வௌியிலேருந்த வௌிச்சமெல்லாம் என் உள்ளே புகுந்துக்கிட்டுது. அந்த வௌிச்சம் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பு பூரா பரவிக் கிட்டிருந்தது. அப்புறம் லேசாக் கண்ணைத் தெறந்து பாத்தா, நெலாவும் இல்லே, தேவனும் இல்லே; இருட்டும் இல்லே, சூரியன் பொறப்படற நேரம்; ஆகாசம் பூரா ஒரே செவப்பு நெறம். நெருப்பு மாதிரி இருந்தது. கண்ணெல்லாம் எரிச்சல், அப்பத்தான் நான் இருந்த நெலையைப் பார்த்தப்ப எனக்கு வெக்கமா இருந்தது.... அந்தத் தூங்கு மூஞ்சி மரத்திலேருந்து ரெண்டு மூணு பூவு, முண்டக் கட்டையா கெடந்த என் உடம்பிலே உதுந்து கெடந்தது, எனக்கு 'ஓ'ன்னு அழணும் போல இருந்தது. அப்ப யாரோ ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா வந்தது....என்னைப் பாத்து 'நீ யாரு'ன்னு கேட்டுது... அது என்னா கேள்வி?.... 'நான்தான் அழகம்மா'ன்னு சொன்னேன். 'ஒனக்கு அப்பா அம்மா இல்லியா'ன்னு கேட்டுது, அந்தக் கேள்வியை யாரும் என்னைக் கேக்கக் கூடாது, தெரியுமா? கேட்டா கொன்னுப் போடலாம் போல ஒரு கோவம் வரும் எனக்கு, ஆமாம்; அப்படித்தான்... அந்தப் பொண்ணு பயந்து போயி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அதுக்கு அப்புறம் நீ வந்தே, ஆயா.... ஆயா, அந்தத் தேவன் இன்னொரு தடவை வருவாரா?....."
கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை' 'கிறுக்குக் குட்டி என்னமோ உளறி வழியுது' என்று நினைத்துக்கொண்டு "சரி சரி, வா நேரமாச்சு, போவலாம்... இந்த மாதிரி நேரத்தில் நீ தனியா இங்கெல்லாம் வரக்கூடாது, வாடி கண்ணு போவலாம்..." என்று கையைப் பிடித்திழுத்தாள். அழகம்மாள் அப்பொழுதுதான் சுயநினைவு பெற்றாள்--
"ஆயா" என்று உதடுகள் துடிக்க, பரக்கப் பரக்க விழித்து உறக்கம் கலைந்தவள் போன்று கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் அழகம்மாள்.
"ஆயா....என்னெ நீ ரொம்ப நாழி தேடினியா? என்னமோ ஒரே மயக்கமா இருந்துது---இங்கேயே உக்காந்துட்டேன்....நேரம் ரொம்ப ஆவுது இல்லே....இந்தா பணம்...." என்று தனது உழைப்பால் கிடைத்த கூலியை முந்தானை முடிச்சிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தாள் அழகம்மாள்.
கிழவி, அழகம்மாளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்தாள், 'ஒடம்புக்கு ஒண்ணுமில்லே.... பசி மயக்கமா இருக்கும்.'
"காத்தாலே பழையது சாப்பிட்டதுதானே....வா வூட்டுக்குப் போயி சோறு திங்கலாம்."
வீட்டுக்கு வந்ததும், அடுப்பில் போட்டுவிட்டுப் போயிருந்த ஒரு பானை வெந்நீரை ஊற்றி அழகம்மாளை 'மேல் கழுவ' வைத்து, வேறு உடை கொடுத்து தட்டத்துக்கு முன் உட்கார வைத்துச் சோறு பரிமாறினாள் கிழவி.
அழகம்மாள் எங்கோ கூரை முகட்டைப் பார்த்தபடி தட்டிலிருக்கும் சோற்றில் விரலால் கோலம் போட்டவாறு குந்தி இருந்தாள்.
"என்னாடி பொண்ணே.....சோறு திங்காம குந்தி இருக்கியே?" என்றாள் கிழவி.
"ஆயா, என் தேவன் வருவாரா?...."
"வருவாரம்மா, நீ சாப்பிடு...."
"எனக்குச் சோறு வாணாம் ஆயா...."
"நாள் பூராவும் எலும்பை ஒடிச்சிப் பாடுபட்டுட்டு வாரியே.... ஒருவேளைகூட நல்லா சாப்பிடல்லேன்னா இந்த ஒடம்பு என்னாத்துக்கு ஆவும்..... எங் கண்ணுல்லே, சாப்பிடு" என்று அழகம்மாளின் முகவாயைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் கிழவி.
கிழவியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் அழகம்மாள் ஒரு புன்முறுவல். "சரி, சாப்பிடறேன் ஆயா....கொஞ்சம் தண்ணி குடு....."
இரண்டு கவளம் சாப்பிட்டாள். மூன்றாவது வாய்க்கு ஒரு குவளை தண்ணீரையும் குடித்தாள். அடுத்த கவளம் வாயருகே வரும்போது குடலை முறுக்கிற்று....அழகம்மாள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு எழுந்து குடிசைக்கு வௌியே ஓடிவந்தாள். ஓடி வந்து குனிந்து நின்று 'ஓ' வென்ற ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்தாள்.
அடுத்த நாள் அழகம்மாள் வேலைக்குப் போகவில்லை; சாப்பிடவுமில்லை. மயங்கிக் கிடந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருவாறு எழுந்து நடமாடினாள்; வேலைக்குப் போனாள்.
அழகம்மாளுடன் வேலை செய்யும் பெண்கள் தனியே என்னவோ கூடிப் பேசுகிறார்களே, அது என்ன பேச்சு?....
இவளைக் கண்டவுடன் பேச்சு நின்றுவிடுகிறதே, ஏன் அப்படி?.....
அழகம்மாளுக்கு புரியாத முறையில் குறும்பாகச் சிரித்துக் கொண்டு என்னென்னவோ கேட்கிறார்களே, அதெல்லாம் என்ன கேள்விகள்?.....
இவளால் முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லையே, ஏன் அப்படி?....
இப்பொழுதெல்லாம் அழகம்மாள் வரும் வரை அவளுக்காகக் காத்திராமல் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அவள் மட்டும் கடைசியில் தனியாக வருகிறாள். அழகம்மாளுக்கும் கொஞ்ச நாளாய், இருந்த வாயும் அடைத்துப் போயிற்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை. வேலை செய்யும்போதும், சும்மாயிருக்கும்போதும் அவள் மனம் அந்த ஒரே வார்த்தையை ஜெபித்துக்கொண்டிருக்கும் ---- 'என் தேவன் வருவாரா? என் தேவன் வருவாரா?'
அன்று இரவு வழக்கம்போல் ஆரோக்கியத்திடம் கேட்டாள் அழகம்மாள்: "ஆயா, தேவன் வருவாரா?"
"போடி, புத்தி கெட்டவளே' தேவனாம் தேவன்' அவன் நாசமாப் போக' எந்தப் பாவி பயலோ ஒண்ணுந் தெரியாத பொண்ணைக் கெடுத்துட்டுப் போயிருக்கான். மானம் போவுதுடி பொண்ணே, மானம் போவுது" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கிழவி.
கிழவி கோபமாகப் பேசியதைத் தாள முடியாமல், அழகம்மாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். விம்மி விம்மி, கதறிக் கதறிக் குழந்தைப் போல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் கிழவியும் அழுதாள். கிழவியின் நினைவில் பத்து வருஷத்துக்குமுன் யாருடனோ, எங்கோ ஓடிப் போன இஸபெல்லா நின்றாள்.
"மகளே....இஸபெல்' நீயும் இப்படித்தான் ஏதாவது கெட்ட பேருக்கு ஆளாகி என் மொகத்திலே முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு ஓடிப் போனியா?...ஐயோ'.... இவளும் அந்த மாதிரி ஓடிப்போவாளோ?'----கிழவிக்கு மார்பில் பாசம் பெருகி வந்து அடைத்தது.
'என் இஸபெல் எங்கேயும் ஓடிப் போகல்லே...இதோ இருக்காளே...இதோ, இங்கேயே இருக்கா,--- கிழவியின் பார்வை அழகம்மாளின் மேல் கவிந்திருந்தது.
"மகளே...." என்று அழகம்மாளை அணைத்துக் தேற்றினாள்'
"வருத்தப்படாதே அழகம்மா...எந்திரிச்சி வந்து சாப்பிடு..."
"போ'.... நீதான்... நீதான் என் தேவனை நாசமாப் போகன்னு திட்டினியே.... நா, சாப்பிடமாட்டேன்... ஊம்ஊம்" என்று குழந்தைபோல் கேவிக் கேவி அழுது கொண்டே சொன்னாள் அழகம்மாள்.
தெரியாத் தனமாய் திட்டிட்டேன்டி கண்ணே.....வா, எந்திரிச்சி வந்து சாப்பிடு... இனிமே உன் தேவனைத் திட்டவே மாட்டேன்."
அழகம்மா அழுது சிவந்த கண்களால் கிழவியைப் பார்த்தாள். கண்ணீருடன் புன்முறுவல் காட்டி "சோறு தின்னும்மா," என்று கெஞ்சினாள் கிழவி.
"சொல்லு ஆயா.... தேவன் வருவாரா?"
"வருவான்"
"போ ஆயா, 'வருவான்'னு சொல்றியே?"
"இல்லேயில்லே, வருவாரு' "
"ஆயா எம்மேலே கோவமா?"
"இல்லேடி தங்கம்....நீ சாப்பிடு...."
"கொஞ்சம் ஊறுகாய் வெச்சாத்தான்....."
"வெக்கிறேன், உனக்கு இல்லாததா?"
"ஆயா....."
"மகளே...."
"ஆ.....யா...."
"மகளே...."
----இருவர் கண்களிலும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக்கொண்டு....அ தெ ன் ன ? அழுகையா?..... சிரிப்பா?....
அழகம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சி அல்லது துயரம் அழகம்மாளுக்கு இருந்ததோ என்னவோ, ஆரோக்கியத்திற்கு முதலில் இரண்டும் இருந்தது. பிறகு தனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் ஆனந்தம் ஏற்பட்டு, அந்த ஆனந்தத்திலேயே அவள் இப்பொழுது திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை'
ஆமாம்: இஸபெல்லுக்குப் பிறகு அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் சில மாதங்களில் ஒரு குழந்தை தவழப் போகிறதே'
கொஞ்ச நாளாய் அழகம்மாள் வேலைக்குப் போவதில்லை. எப்பாடு பட்டோ கிழவி அவளுக்கு மூன்று வேளையும் வயிறாரச் சோறு போடுகிறாள். தனக்கு ஒரு வேளைக்கு இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றுகிறாள் கிழவி.
"என் மகள் ஒரு கொறையுமில்லாமல் பெற்றுப் பிழைக்க வேண்டு" மென்று நாள்தோறும் கர்த்தரை ஜெபிக்கிறாள்.
அழகம்மாளைக் கூட்டிக்கொண்டு போய் தினசரி சர்க்கார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள். சேரியிலுள்ளவர்கள் அழகம்மாளோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பைத்தியம் என்கின்றனர். அதைப்பற்றிக் கிழவிக்கென்ன கவலை?
கிறிஸ்மஸ்உக்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி. அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது.
கிறிஸ்மஸ்உக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும்" என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று. கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன. உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின.
மாலை மணி நாலுக்கு, பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்--பக்கத்தில் இருந்த குழந்தை 'வீல் வீல்' என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள்.
ஆமாம்: விடியற்காலை நேரத்தில், கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது: ஆண் குழந்தை' கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது. அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது.
"ஏது இந்தக் குழந்தை' '
"ஏ பொம்பளே...புள்ளை கத்துது பேசாம பாத்துக்கினு இருக்கியே...பால் குடு" என்று அதட்டினாள் ஒரு கிழவி.
'இது என் குழந்தையா? எனக்கேது குழந்தை?'--அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தை வீரிட்டது'
"ஆமாம்; இது என் குழந்தைதான்...என் மகன் தான்." குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள்.
"பையனைப் பாரு, அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான்" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள். அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர்.
'அந்தக் குழந்தைக்கு அவன் அப்பனாம்; என் குழந்தைக்கு?'
'ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன், தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை' என் மகனுக்கு அப்பன் எங்கே? அவன் எப்பொழுது வருவான்?' கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள்.
குழந்தை மீண்டு அழுதது.
"ஏண்டா அழறே? உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா? இரு இரு; நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன்" என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள்.
கிறிஸ்மஸ்உக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது.
--கட்டிலின் மீது குழந்தை கிடக்கிறது. அழகம்மாளைக் காணோம். எல்லோரும் தேடுகிறார்கள்.
கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பொழுது திடீரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள்.
ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வௌியே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி. எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா?
பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்கும் அந்த மனிதரிடம் அழகம்மாள் என்ன பேசிக்கொண்டிருக்கிறாள்?
"சீ சீ, போ" என்று விரட்டுகிறாரே அந்த மனிதர்.
பிச்சையா கேட்கிறாள்? என்ன பிச்சை? கிழவி மகளை நெருங்கி ஓடினாள். அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள். அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தௌிவாகக் கேட்டது.
"என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை?.... அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க; நம்ப மகனைப் பாக்க வாங்க...." என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள். அவன் பயந்து போய் விழிக்கிறான்.
"மகளே...." என்று ஓடி வந்தாள் கிழவி.
திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள். "என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா?" அந்த ஒரே கேள்விதான்'
"நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா, உன் மகனுக்குப் புதுச்சட்டை" என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி. அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள்' "நல்லா இருக்கு; பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா?" என்றாள் புன்னகையுடன். அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது.
"போ, என் மகனுக்குச் சட்டை வேணாம்; அப்பாதான் வேணும்" என்று சிணுங்கினாள்.
"மகளே' உனக்குத் தெரியலியா? முன்னே எல்லாம் நீ சொல்லுவியே 'தேவன்'னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே' இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே' "
கிழவியின் வார்த்தைகள் அழகம்மாளுக்கு ஆறுதல் அளித்திருக்குமா? அவள் பார்வை....
அழகம்மாளின் பார்வை, உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது.
--------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7. துறவு - ஜெயகாந்தன்
"எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே....." என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள்.
அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம்.
"என்ன மரகதம்....பகலெல்லாம் காணவே இல்லியே? வேலை சாஸ்தியோ?" என்று ஆரம்பித்தாள் பங்கஜம்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி..."
அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர்.
---இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும்?
"மணி எட்டு இருக்குமா?" என்றாள் பங்கஜம்.
"இப்பத்தானே ஏழரை அடிச்சிது? வேலையெல்லாம் ஆச்சுதா?..."
"ஆச்சு.... வேலை ஆயி என்ன பண்றது? 'பொழுதோட வீட்டுக்கு வந்தமாம், சாப்பிட்டமாம்'கிற பேச்சேதான் எங்க வூட்டு ஐயாவுக்கு கெடையாதே' கோயிலும் கொளமும் சுத்திப்பிட்டு ராத்திரி மணி ஒம்பதோ, பத்தோ?---அவுக போறதுமில்லாம அந்தப் பய சோமுவையும் கூட்டிக்கிட்டுப் போயிடறாவ...."
"சோமு வீட்டிலே இல்லே?---குரல் கேட்டுதே' "
--மரகதம் பேச்சை வளர்க்கவே அப்படிக் கேட்டு வைத்தாள்.
"அவன் அடிக்கிற கூத்தை எங்கே போயிச் சொல்றதம்மா... பக்தி ரொம்ப மீந்து போச்சி...வௌக்கு வெச்சா வீட்டிலே தங்கமாட்டேங்கிறான். உபந்நியாசம் கேக்கப் போயிடறான்....போன வருசமே பெயில்...எப்பப் பார்த்தாலும் சாமியும், பாட்டும்தான்.... கறி திங்கமாட்டானாம்; முட்டைகூட வேண்டாம்கிறான்....அவுகளுக்கோ அந்த வாசமில்லாம சோறு எறங்காது. இவனோ, அதைத் தொட்ட கையைக் களுவாம, சோத்தெத் தொடாதேங்கிறான்...இந்த ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையல் பண்ண என்னால் ஆகுமா?.... கெடக்குக் களுதைன்னு வெறும் ரஸத்தோட விட்டுட்டேன் இன்னக்கி...."
"என்ன அக்கா சமையல்?"
"ஆறு மணிக்குமேலே குப்பம்மா வந்தா, கடைக்குப் போறேன்னா... ஒரு எட்டணாவெ குடுத்து அனுப்பிச்சேன், ஆறணாவுக்கு--- தோ...இத்தினி இத்தினி நீளத்துக்கு எட்டு கெளுத்தி வாங்கியாந்தா...அதோட ரெண்டு மாங்கா கெடந்தது, அதையும் போட்டுக் கொளம்பு வச்சேன்... அவனுக்குத் தொட்டுக்க என்ன பண்றதுன்னு ஒண்ணுந் தோணலே... வெறும் ரசத்தோட விட்டுட்டேன்... எனக்கு ஒண்ணுமே முடியலே... காத்தாலே இருந்து ரெண்டுத் தோளும் என்னா கொடைச்சல்' அப்படியே இத்துப் போவுது... சின்னப்பையன் ரமணி வேறே ராவிக்கெல்லாம் இருமித் தொலைக்கறான்... தூக்கமா வருது? இந்த லெட்சணத்திலே ரெண்டு கறி, ரெண்டு கொளம்பு வைக்க யாராலே முடியும்? பிள்ளையா பொறந்ததுவ, இருக்கறதைச் சாப்பிடணும்...'அது வேணாம், இது வேணாம்'...சைவமாம், சைவம்'...இவனும் இவன் சைவமும்...நான் என்னத்தைப் பண்ண...மூஞ்சியை மூணு மொளம் நீட்டிக்கிட்டு வெறும் ரசத்தை ஊத்தித்திங்கும்...ஹ்உம்...
--பங்கஜம் அம்மாள் மூச்சுவிடாமல் கொட்டி அளந்து சலித்துப்போய்ப் பெருமூச்செறிந்தாள்' மரகதம் ஆரம்பித்தாள்:
"அதை ஏன் கேக்கறீங்க அக்கா....எங்க வீட்டிலே இருக்கறவரு... மத்தியானம் அப்பிடித்தான், பாருங்க.... காலையிலே ஆபீசுக்குப் போகும்போது, 'முருங்கைக்காய் சாம்பார் வச்சி, உருளைக்கிழங்கு வறுவல் பண்ணு'ன்னு சொல்லிட்டு போனாவ....பதினோரு மணி வரைக்கும் சாம்பாரை வச்சி, சாதத்தையும் வடிச்சிட்டு உக்காந்திருந்தேன், உக்காந்திருந்தேனோ அப்பிடி உக்காந்திருந்தேன். கட்டையிலே போற காய் கறிக்காரனைக் காணவே இல்லை....மணியோ பதினொண்ணு ஆயிடுச்சி. அதுக்கு மேலே யாரைப் புடிச்சிக் கடைக்கு அனுப்ப? அவுவ பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து எலையெப் போடுன்னு பறப்பாவளேன்னு, ரெண்டு வாளக்காய் கெடந்தது; அதை வறுத்து வச்சேன்...எலை முன்னே வந்து உக்காந்ததும் மனுசனுக்கு ஏன்தான் அப்பிடி ஒரு கோவம் வருமோ, ஆண்டவனே....'எளவெடுத்த வாளைக்காய்க் கருமந்தானா?ன்னு தட்டோட வீசி, எறிஞ்சாவ பாருங்க...நா என்னக்கா பண்ணுவேன் என்று சொல்லும்போதே கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டாள், கடைசியிலே....நானும் அதெக் கையாலே தொடலே...அப்பிடியே கெடக்கு...."
மரகதம் எதையெதையோ சொல்லி வருத்தப்படவே, பங்கஜம் பேச்சைத் திருப்பினாள்:
"அது கெடக்கு...ஒன் நாத்தனார் முளுவாம இருந்து 'அபார்ஸ'னாயி ஆசுபத்திரியிலே கெடக்கான்னியே....என்னாச்சு?...காயிதம் வந்துதா..."
மரகதம் குரலின் தொனி இறங்கி ஒலிக்கப் பேசினாள்:
"பாத்தீங்களா, மறந்தே போனேனே...அபார்ஸனும் இல்லே, கிபார்ஸனும் இல்லே.... அவளுக்குத்தான் ஏழுமாசம் ஆயிடுச்சே...என்னாநடந்துதோ.... காத்தாலேருந்தே வயித்துப் புள்ளெ அசையிலியாம்---தடபுடலா போயி ஆசுபத்திரிக்கிக் கொண்டு போயிருக்காவ.... வயித்தை அறுத்து.....
----மிகவும் மும்முரமாக சம்பாஷணை 'கிளைமாக்ஸ்' அடையும் தருணத்தில் வாசற்படியில் செருப்பின் மிதியோசை கேட்டது' --சப்தத்திலிருந்தே, வருவது தன் கணவர்தான் என்பதைப் புரிந்துக்கொள்வாள் பங்கஜம்---ரெண்டு பெணகளும் எழுந்து நின்றனர்.
பங்கஜம் அம்மாளின் கணவன் சதாசிவம் பிள்ளையும், மகன் சோமுவும் திருநீறு துலங்கும் நெற்றியுடன் சிவப் பழங்களாய் உள்ளே நுழைந்தனர்.
மரகதம் குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவது போல் கூறினாள்:
"ராஜியை அனுப்புங்க அக்கா.....வாளைக்காய் குடுத்தனுப்பறேன் சோமுவுக்கு..."
"எதுக்கம்மா? என்று தயங்கினாள் பங்கஜம்.
"தம்பிக்குத்தான்...கெடக்கு, ராஜியை அனுப்புங்க அக்கா....." என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே போனாள் மரகதம்.
அடுக்களைக்கு வந்த பங்கஜம், மகனுக்கும் கணவனுக்கும் இலையிட்டு, மணைபோட்டு....
"ஏட்டி, ராஜி' அடுத்த வீட்டு அக்கா, என்னமோ தாரேன்னா...போயி வாங்கியா..." என்றாள்.
"என்னது?....என்ன வாங்கியாரச் சொல்றே, இன்னேரத்திலே...." என்று அதட்டல் குரல் போட்டார் பிள்ளை.
"அதுவா? நீங்க பெத்து வச்சிருக்கீங்களே சைவப்பளமா, ஒரு பிள்ளை, அதுக்கு, சாதத்துக்குத் தொட்டுக்க ஒண்ணுமில்லே...அதுக்காவத்தான்...இல்லாட்டி தொரை கோவிச்சிக்குவாரில்லே...." என்று இரைந்தாள் பங்கஜம்.
---அவளுக்குத் தெரியும், பிள்ளையிடம் எந்தச் சமயத்தில் எந்த ஸ்தாயியில், எந்த பாவத்தில் குரலை முடுக்கிப் பேசினால், சொன்னதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று.
முற்றத்தில் கைகால் அலம்பிக்கொண்டிருந்த சோமு இந்த அஞ்ஞானிகளுக்காக வருந்துவதுபோல் மெல்லச் சிரித்தான். பிறகு, மாடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு கூடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு கூடத்திலிருந்த படங்களின் முன் நின்று 'அருட்சோதி தெய்வமென்னை' என்று கசிந்துருக ஆரம்பித்தான்.
சோமுவுக்கு வயது பதினைந்துதான்---அதுதான் மனிதனுக்குப் 'பித்து'ப் பிடிக்கும் பருவம்.
---அது சமயப் பித்தாகவோ, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ அல்லது பெண் பித்தாகவோகூடப் பிடிக்கலாம்'
சோமுவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. முகம் குழந்தை மாதிரிதான் இருந்தது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும், வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. 'தான் புதிதாக அறிந்த விஷயங்கள் எல்லாம் புதிதாகப் பிறந்தவை' என்று நம்பி, அவற்றை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தினால், மற்றவர்களைவிடத் தன்னை உயர்த்திப் பாவித்தது. மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் ---எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் 'சிடுமூஞ்சி'யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்.... வீடே வெறுத்தது'
சோமுவுக்கு வேதாந்தப் பித்துதான்'
பொழுதோடு வீட்டுக்கு வராமல் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடக்கரைக்கும், கொய்யாத் தோப்புக்கும் போய் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ வீடு திரும்பி, ஆடிய களைப்பில் உண்ட மயக்கத்துடன் உறங்கிப் போவதையே வழக்கமாக கொண்டிருந்த சோமு போன வருஷம் எட்டாம் வகுப்பில் 'கோட்' அடித்து விட்டான்.
வீட்டில் வசவுகளும் கண்டிப்பும் அதிகமாகி இனிமேல் பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே வந்து வீட்டு வாசலைத்தான் மிதிக்கவேண்டும் என்ற கட்டளை பிறந்தது. இரவு சாப்பாடு வரை படிக்கவேண்டும் என்ற தண்டனை வேறு.
வீட்டுக் கூடத்தில் அவனது தம்பிகளான சீனாவும் ரமணியும் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, மற்ற நேரமெல்லாம் தங்கை ராஜியுடன் விளையாடிக்கொண்டிருக்க, சோமு மட்டும், துயரமும் கவலையும் தோய்ந்த முகத்துடன்
--- புத்தகத்தையும், சன்னல் வழியே வௌியுலகத்தையும் பார்த்தவாறு -- தந்தையின் உத்தரவை மீற முடியாமல் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பங்கஜம் அம்மாளுக்குப் பாவமாய் இருந்தது.
"போதும்' நீ படிச்சிக் கிளிக்கிறது. கொஞ்சம் காத்தாட வௌியிலே போயி வா....உம்..." என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தாள்.
சோமு தந்தையை எண்ணித் தயங்கி நின்றான்.
"நீ போயிட்டு வா....அவுக வந்தா நா' சொல்லிக்கிறேன், அவுக மட்டும் வீட்டிலேயேதானே இருக்காவ?.... கோயிலுக்கு போவாம அவுவளாலே, ஒரு நாளு இருக்க முடியுதா?.... நீயும் போயி அந்த நடராஜா கிட்டே 'எனக்கு நல்ல புத்தியெயும், தீர்க்காயுசையும், படிப்பையும் குடுடா ஆண்டவனே'ன்னு வேண்டிக்கிட்டுவா....அவுவ வந்தா நான் சொல்லிக்கறேன்.
அவள் சொல்லி முடிக்கும் முன் சட்டையை மாட்டிக் கொண்டு ஒரே ஓட்டம்....
"சீக்கிரம் வந்துடுடா சோமு..." என்று இரைந்து கூவிச் சொல்லும் தூரத்துக்குப் போய்விட்டான் அவன். காதில் விழுந்ததோ, என்னவோ...
எட்டு மணிக்கு, சதாசிவம் பிள்ளை வரும்போதோ, "சோமு எங்கே?...." என்று கேட்டுக்கொண்டு வந்தார்.
"ஆமா.... சோமு சோமுன்னு அவனை வறுத்துக் கொட்டிக்கிங்க.... அவனுக்கு மட்டும் வீடே கதியா?..... நான்தான் என்ன பாவம் பண்ணிப்பிட்டோ இந்த ஜெயில்லே கெடக்கேன்.... ஒரு கோயில் உண்டா, கொளம் உண்டா?.... திருநாள் உண்டா, பெருநாள் உண்டா?.... என் தலைவிதி ஒங்களுக்குகெல்லாம் உளைச்சிக் கொட்டிச் சாகணும்னு..... என் வயித்திலே பொறந்தததுக்குமா, அந்த பாவம்.... பிள்ளையப் பார்த்தா பாவமா இருக்கு.... என்ன தான் அதிகாரம்னாலும் இப்பிடியா?" என்று கண்ணைத் துடைத்து. மூக்கைச் சிந்தி, முந்தானையை மடக்கி, முன்கையை நீட்டிக்கொண்டு எழுந்து வந்தாள் பங்கஜம்.
"எங்கே சோமுன்னுதானே கேட்டேன்" என்று பம்மிப் பதில் கொடுத்தார் பிள்ளை.
----இனிமேல் விஷயத்தைத் தெரிவித்தால் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சாந்தமான குரலில் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் பங்கஜம்;
"கோயிலுக்கு போயிருக்கான்... நான் தான் அனுப்பிச்சேன். நீங்க அவனை ஒண்ணும் மூஞ்சியைக் காட்டாதீங்க. பையனைப் பார்த்தா பாவமா இருக்கு...."
முற்றத்தில் இறங்கி கால் அலம்பிக்கொண்டிருந்த பிள்ளை, "சரி, சரி, நானே நெனச்சேன்... நாளையிலேருந்து வடக்கே இருந்து ஒரு பெரிய மகான் வந்து 'லெக்சர்' பண்ணப்போறார்.... அவர் பேரு அருளானந்தராம்.... பெரிய இவுராம்...."
பங்கஜம் தந்த டவலில் முகம் துடைத்துக்கொண்டார் மாடத்திலிருந்த திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டார். "சரி, எலையெப் போடு.....என்ன வச்சிருக்கே?...." என்று சொல்லிவிட்டு, படங்களுக்கு முன்னே கரம்கூப்பி நின்றார்.
"கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு....அப்பளம்' "
---கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் ஒரு சுளிப்பு'.....
சேவிப்பு முடிந்தது; முகம் கடுகடுத்தது'
"என்னடி வச்சிருக்கேன்னே...."
"கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு; அப்பளம்' "
"சனியன்.....ரெண்டு கருவாடு கூடவா கெடைக்கலே....அதுகூடப் போட்டுக் கொதிக்க வைக்க... சீ சீ, நாளு பூரா மனிசன் கொரங்குத் தீனியா திம்பான்...." என்று சலித்துக் கொண்டார்.
----சதாசிவம் பிள்ளை சிவபக்தர்; நர மாமிசம் கேட்காமலிருக்கிறாரே போதாதா?....
மறுநாளிலிருந்து சோமு தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தான்.
'சாமி ஆண்டவனே....இந்த வருஷம் நான் பாஸாகணும்' என்று ஆரம்பித்த பக்தி, ஜீவகாருண்யமே திறவுகோல் என்று வளர்ந்து, 'வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்' என்று சோமுவின் மனத்தில் கனியலாயிற்று.
சுவாமி அருளானந்தரின் பிரசங்கம் தொடர்ந்து இருபத்தியேழு நாட்கள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது அல்லவா?....
சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.
'ஆமாம்....தாய் தந்தை, உடன்பிறந்தார், செல்வம், சுற்றம், உலகம் எல்லாம் பொய்தானே.... சாவு வரும்; அது மட்டும்தான் உண்மை. அந்த பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்'
'படிப்பு ஏன்?....சம்பாதனை எதற்கு?.....
'முடிவில் ஒருநாள் செத்துப்போவேனே.... அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று....யாராவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன?....
'தாய் அல்லது தந்தை இவர்களில் யாரேனும். யாராயிருந்தாலும் முடிவில் எல்லோரும் ஒருநாள் செத்துப் போவார்கள்...இவர்களில் யாரையாவது நான், அல்லது என் கல்வி, எனது சம்பாதனை காப்பாற்ற இயலுமா என்ன?....
'முடியாது' '
'அப்படியானால் இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு?....நான் யார்?....இவர்கள் யார்? வீடு என்பதும், பந்துக்கள் என்போரும் அந்நியர் என்போரும், இன்பம் என்பதும் துன்பம் என்பதும்.....
'எல்லாம் வெறும் பொய்' '
'மரணத்தை மனிதன் வெல்லமுடியாது. ஆனால் ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையமுடியும்.
'கடவுளை அடைவது என்றால்?.....
'கடவுளை அடைவது என்றால்--- உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இப்படிப்பட்ட பாசபந்தச் சுழலில் சிக்கி, பாவகிருத்தியங்கள் புரிந்து மீளா நரகத்தில் விழாதிருக்க, பிறவி நீத்துக் கடவுளின் பாதாரவிந்தைகளை அடைந்து.....
'ஆமாம்....ஆசைகளைத் துறக்கவேண்டும்' இந்த அற்ப வாழ்வில் ஆசைகொள்ள என்ன இருக்கிறது?....'
---அந்த இளம் உள்ளம் ஏகாந்தத்தை நாடித் தவித்தது. அவன் கற்பனையில் ஒரு தவலோகமே விரிந்தது.....
....ஹிமவானின் சிகரத்தில், பனிச் செதில்கள் பாளம் பாளமாய், அடுக்கடுக்காய் மின்னிப் பளபளக்கும் அந்தப் பாழ்வௌியில், மேகம் திரண்டு ஒழுகுவதுபோன்ற---ஹிமவானின் புத்திரி கோதிவிடும் வெண் கூந்தல் கற்றைபோல் விழும் --- நீரருவியில், அதன் அடிமடியில் ஓங்காரமாய் ஜபிக்கும் பிரணவ மந்திர உச்சாடனம் போன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சலில், சிவனின் புகழ்பாடும் எண்ணிறந்த பறவை இனங்களின் இன்னிசையில்.... எதிலுமே மனம் லயிக்காமல், பற்றாமல், உலகத்தின் அர்த்தத்தையே தேர்ந்த பெருமிதத்தில், தௌிவில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் கம்பீரத்துடன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறாரே அந்த ரிஷிக் கிழவர்.... அவர்தான் லோக குரு'
---அருளானந்த சுவாமிகள்விட்ட கவிதாநயம் மிகுந்த சரடு சோமுவைப் பின்னிப் பிடித்துக் கொண்டது.
அங்கே சென்று லோக குருவைத் தரிசித்து அவர் பாதங்களிலே வீழ்ந்து, அவருக்கு பணிவிடை செய்ய வேண்டுமாம். அதையே பிறவியின் பயனாகக் கொள்ள வேண்டுமாம். மற்றக் கருமங்கள் யாவையும் மறந்து ஆசைகளை, பந்தங்களை, தன்னை, உலகை யாவற்றையும் துறந்து.....
---துறந்துவிட்டால் லோக குருவாகப்பட்டவர் சோமுவை ஒரே தூக்காகத் தூக்கி, இமயமலைக்கு மேலே, எவரஸ்டையும் தாண்டி, கைலாயத்திற்கும் அப்பால் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடுவாரல்லவா?....
"சம்போ மஹாதேவா'....." என்றவாறு படுக்கையை விட்டு எழுந்தான் சோமு.
"ஏது, பிள்ளையாண்டான் இன்னக்கி இவ்வளவு விடிய எழுந்திரிச்சிட்டாரு. வா வா' எண்ண தேச்சுக்க...." என்று கூப்பிட்டாள் பங்கஜம்.
'இந்த கட்டைக்கு இதெல்லாம் எதற்கு?' என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. 'இன்றைக்கு ஒரு நாள்தானே' என்ற சமாதானத்தில் அவன் ஒன்றும் பேசவில்லை.
'என்ன நாளைக்கு?.... நாளைக்கு என்ன ஆய்விடப்போகிறாய்?'
அதை நினைக்கும்பொழுதே மாய வாழ்வை உதறியெறிந்த எக்களிப்பு முகத்தில் தோன்றியது.
"ஏ, மூதி' நிஜாரோட நிக்கிறதைப் பாரு... போயி கோமணத்தைக் கட்டிக்கிட்டு வா..."
"அப்பா' தலையிலே எவ்வளவு முடி?... முடி வெட்டிக்கிட்டா என்னா?..." என்று முனகிக்கொண்டே தலையில் எண்ணெயை வைத்துத் தேய்த்தாள்.
'முடி வெட்டிக் கொள்வது என்ன, மொட்டையே அடித்துக்கொள்ள வேண்டியதுதான்' ' என்று மனம் முணகியது.
--அவனுக்குத் தலைமுடி ஒரே அடர்த்தி. சுருள் சுருளாக, வளையம் வளையமாக, வாரிவிட்டால் வங்கி வங்கியாக...
"ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்த மாதிரி சுருட்டை முடி..."
--மகனின் முடிப் பெருமையைப்பற்றி அவள் அடிக்கடி பேசிக் கொள்வாள்'
'எல்லாப் பெருமையும் நாளைக்கு...'
--"சம்போ மகாதேவா" என்று சோமுவின் மனம் கோஷித்தது.
'நாளைக்கு...நாளைக்கு' என்று மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.
அந்த 'நாளை' யும் வந்தது.
மூன்று மாதங்களுக்குமுன் ஒரு 'பிளாஸ்டிக் பெல்ட்' வாங்கவேண்டுமென்ற பெரும் லட்சியத்திற்காக, பள்ளிக் கூடத்தருகே விற்கும் வேர்க்கடலை, பட்டாணி, நாவற்பழம் இத்தியாதி வகையறாக்களைத் தியாகம் செய்து கிடைத்த காசையெல்லாம் சேர்த்துவைத்த செல்வம் மேஜை டிராயரில் 'புரூக்லாக்ஸ்' டப்பியொன்றில் இருந்தது, அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். கிட்டத்தட்ட ஒரு ரூபாய்' அந்தப் 'பாப மூட்டை' யைச் சுமக்க மனமில்லாமல் தர்மம் செய்து விடுவது என்று தீர்மானத்தான் சோமு.
கொஞ்ச காலமாகவே அவன் தனது நண்பர்களை--அவர்கள் ஞானமேதுமறியா ஈனஜன்மங்கள் என்பதனால்--விட்டு விலகி ஒதுங்கி நடந்தான்.
உபாத்தியாயரோ--'மாணவர்களோடு சேர்ந்து கொச்சையாகவும் விரசமாகவும் கேலி பேசி மகிழும் அந்தத் தமிழ் வாத்தியார் இருக்கிறாரே, அவர் ரௌத்ரவாதி நரகத்துக்குத் தான் போகப்போகிறார்' என்று டிக்கட் கொடுத்த புக்கிங் கிளார்க் மாதிரி முடிவு கட்டிவிட்டான் சோமு.
'ஊனைத் தின்று ஊனை வளர்க்கும் தகப்பனார் என்ன கதி ஆகப்போகிறாரோ?' என்று வருந்தினான்.
தாயா?--அது ஒரு மூடாத்மா...
'இந்த அஞ்ஞான இருளில் அமிழ்ந்து கிடக்கும் மானிடப் பிறவிகளுக்கு மெய்ஞ்ஞான தீபத்தின் ஔி என்றுதான் கிட்டுமோ?...'
'ஸ்வாமி அருளானந்தரும், அவருக்கும் மேலாக ஹிமாலயத்தின் அடிவாரத்தில் தபஸில் லயித்திருக்கும் லோக குருவு இவ்விருவருக்கும் அடுத்தபடியாய்த் தானும் ஆகவேண்டிய பிறவி லட்சியம்...'
'சம்போ மஹாதேவா' '
அடுத்த நாள் அதிகாலை, சட்டை நிஜார் அனைத்தையும் துறந்து--இடையில் ஒரு துண்டு மட்டும் உண்டு--மடியில் தனது 'மாயா செல்' வத்தை முடிந்துகொண்டு, எல்லோரும் எழுந்திருக்கும் முன்னே சித்தார்த்தன் கிளம்பிச் சென்றது போல் நழுவினான் சோமு.
வௌியிற் கலக்க எண்ணி, வீட்டை வௌியேறிய சோமு நேரே மேலச் சந்நிதிக் கோபுரத்தடிக்குப் போனான்.
அங்கே ஒரு டஜன் பண்டாரங்கள் நின்றிருந்தன. அவர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஓரணாவாகத் தனது செல்வத்தைத் தானமிட்டுவிட்டு, தில்லைநாயகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேரே குளத்தங்கரைக்கு ஓடினான். அங்கே அரசமரத்தடியில் காலையிலிருந்து தவமிருக்கும் 'பழனிநாத' னிடம், இருந்த சில்லரையைக் கொடுத்துவிட்டுக் குரு உபதேசம் கொள்வதுபோல் குனிந்து உட்கார்ந்தான்.
'குரு' அவன் காதில் குனிந்து கேட்டார்:
"என்ன தம்பி...மொட்டையா?"
"ஆமாம்..."
வேணாம் தம்பி... கிராப்பு அளகா இருக்கே'..."
--மாயையை வென்ற ஞானிபோல் அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தான் சோமு.
'மகனே' என்றழைத்து உபதேசம் செய்யப் போவது போல் இருந்தது அவன் தோற்றம்.
"அப்பனே...முடியை இழக்க யோசனை செய்கிறோமே, முடிவில் ஒருநாள் இந்தச் சடலத்தையே வைத்து எரிப்பார்களே அதைப்பற்றிச் சிந்திக்கிறோமா?... முடிதரித்த மன்னர்கள் எல்லாம்கூட முடிவில் ஒருநாள் பிடி சாம்பராய்த்தானே போனார்கள்" என்று 'குரு உபதேசம்' செய்துவிட்டுக் குனிந்து கொண்டான்.
--அவனுக்குத் தான் பேசியதை நினைக்கும்போது, பேசியது தான்தானா என்றே ஆச்சரியமாய் இருந்தது. 'என்ன ஞானம்' என்ன ஞானம்' ' என்று தன்னையே மனசுக்குள் பாராட்டிக் கொண்டான்.
'பேசிப் பயனில்லை; ஞானம் முற்றிவிட்டது'
நினைத்த நாவிதன் அவனைப் 'பக்குவ'ப்படுத்த ஆரம்பித்தான்.
உச்சந்தலைக்குக் கீழே நாவிதனின் கத்தி 'கருகரு'வென்று வழிந்து இறங்கும்போது எதிரில் பெட்டியின்மீது சாத்தி வைத்திருந்த கண்ணாடியில் முகம் கோரமாய்த் தெரிந்தது.
அதைப் பார்த்த சோமுவின் கண்கள் ஏன் கலங்க வேண்டும்?.....
'சம்போ மகாதேவா' என்று மனசுக்குள் முனகி, தன்னை அடக்கிக் கொண்டான்.
பிறகு, குளத்தில் இறங்கி நாலு முழுக்குப்போட்டு விட்டு 'ஜெய் சம்போ' என்ற குரலுடன் கரையேறினான்.
பாசம், பந்தம், சுற்றம் சொந்தம், செல்வம், செருக்கு யாவற்றையும் இழந்த ஏகாங்கியாய் அவன் வடதிசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
----ஆமாம்; இமயமலை அங்கேதான் இருக்கிறது'
'இமயமலை இங்கிருந்து ஆயிரம் மைல் இருக்குமா?.....இருக்கலாம்' '
'ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் நடக்க முடியாது?....நிச்சயமாக முடியும்' '
'அப்படியானால் மொத்தம் நூறு நாட்கள்---அதாவது மூன்று மாதமும் பத்து நாட்களும்....'
'இரண்டாயிரம் மைலாக இருந்தால்.... அதுபோல் இரண்டு மடங்கு'.... எப்படி இருந்தாலும் போய்விட வேண்டியதுதானே'.....பிறகு, என்ன யோசனை?....'
'போகும் வழியெல்லாம் எவ்வளவு புண்ணிய ஷேத்திரங்கள்'.... எவ்வளவு தெய்வ பக்தர்கள்'.... எவ்வளவு மகான்கள்'.... எவ்வளவு முனிவர்கள்'......
சோமு தனது புனித யாத்திரையைத் துவங்கி ஆறு மணி நேரமாகி இருந்தது. போகும் வழியில்.....ஆம்; ஹிமாலயத்தை நோக்கிப் போகும் வழியில்தான்----குறுக்கிடுகிறது பரங்கிப்பேட்டை'
அந்த நகரில் அன்று சந்தை'
சோமு கடைத்தெரு வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்தான்.
கிராமத்து மக்கள் கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாய்....ஒரே சந்தடி'
மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு 'கேளிக்கை'க்கு ஆயத்தமாகிறவர்கள்--- மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே.
வாய்க்காலைத் தாண்டுவது போல் வாழ்க்கையைத் தாண்டிவிடலாம் என்று எண்ணி வந்த சோமு அந்தச் சந்தையைக் கடக்கும்போது --- வாழ்க்கையின் அந்தக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துவிட்டான்.
அதோ, அந்த மர நிழலில் --- ஓர் இளம்பெண் நாவல் பழத்தை அம்பாரமாய்க் குவித்து வைத்துக்கொண்டு விலை கூவி விற்கிறாள். நாவல் பழ நிற மேனி; அந்தக் கருமேனியில் ---அவள் முகத்தில் முத்துப் பற்ற்களும், அவற்றிற்கு வரம்பமைத்த வெற்றிலைச் சாறூரும் உதடுகளும் எல்லோரையும் வலிய அழைத்து நாவற்பழம் தருகின்றன. அவளது கண்கள் வௌபுள்ளிளை வெளேரென்று. அவற்றின் நடுவே இரண்டு நாவற்பழங்களைப் பதித்து வைத்ததுபோல் புரளும் கருவிழிகள்.....
அந்த விழிகள் சோமுவை, நாவல்பழத்தை வெறித்து நோக்கிய சோமுவின் விழிகளை நோக்கின.
"கல்கண்டு பளம்.....கருநாவப் பளம்....படி ஓரணா, படி ஓரணா...." என்று பாட்டுபாடி அவனை அழைத்தாள்.
'படி ஓரணா.... பரவாயில்லையே ...பள்ளிக்கூடத்துக்கு எதிரே வண்டியில் வைத்து நாலைந்து பழங்களைக் கூறுகட்டி கூறு காலணா என்று விற்பானே....' என்ற நினைவும் வரவே சோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
---அவனுக்கு நாவற்பழம் என்றால் உயிர்' அதுவும் உப்புப் போட்டு தின்பதென்றால்?....
அவன் வாயெல்லாம் நீர் சுரந்தது'
அதுவும் இந்தப் பழங்கள்'....
கன்னங்கறேலென்று, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு..... கனிந்து லேசாக வெடித்த பழங்கள்... வெடிப்பின் இடையே சில பழங்களில், கறுமையும் சிவப்பும் கலந்த பழச்சாறு துளித்து நின்றது, பக்கத்தில் ஒரு சிறு கூடையில் உப்பும் வைத்திருந்தாள்...
கும்பலில் இருந்தவர்கள் காலணாவும் அரையணாவும் கொடுத்துக் கைநிறைய வாங்கிச் சென்றனர். சிலர் உப்பையும் சேர்த்துக் குலுக்கித் தின்றனர்.
அதோ, ஒரு கிழவர்....
அவர் வாயைப் பார்த்ததும் சோமுவுக்குச் சிரிப்பு வந்தது, அவர் மூக்குக்கும் மோவாய்க்கும் இடையே ஒரு நீளக்கோடு அசைந்து நௌிந்துகொண்டிருந்தது. அதுதான் உதடு, வாய், பற்கள் எல்லாம்....
"அரையணாவுக்கு பளம் குடு குட்டி' " அந்தக் கிழவர் பொக்கை வாயால் 'பளம்' என்று சொல்லும்போது வௌியே தெரிந்த நாவையும் வாயின் அசைவையும் கண்ட சோமுவுக்குச் சிர்ப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
ஒரு காகிதத்தில் நாவல்பழத்தைப் பொறுக்கி வைத்து ஒரு கை உப்பையும் அள்ளித் தூவிக் கிழவரிடம் கொத்தாள் நாவற்பழக்காரி.
"ஏ, குட்டி, கௌவன்னு ஏமாத்தப் பாக்கிறியா? இன்னம் ரெண்டு பளம் போடுடி...வயசுப் புள்ளைவளுக்கு மட்டும் வாரி வாரிக் குடுக்கிறியே..." என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார் கிழவர்.
"அடி ஆத்தே....இந்தக் கெழவனுக்கு இருக்கற குறும்பைப் பாரடி அம்மா' " என்று கையைத் தட்டிக் கன்னத்தில் வைத்துக்க்கொண்ட நாவர்பழக்காரி கண்களை அகல விரித்தவாறு சிரித்தாள்.
"மீதி சில்லறை குடு குட்டி...என்னமோ ஆம்படையான் சம்பாதிச்சுக் குடுத்த காசு கணக்கா வாங்கிப் போட்டுக்கிட்டு நிக்கறியே...." என்றார் கிழவர்.
"ஏ, தாத்தா...என்னா வாய் நீளுது...." என்று கிழவர் கன்னத்தில் லேசாக இடித்தாள் பழக்காரி.
"பாத்தியா...ஒரு ஆம்பிளை கன்னெத்தெ தொட்டுட்டா...எம்மேலே அம்மாம் பிரியமா, குட்டி...? ஒங்கப்பங்கிட்டே சொல்லி நாளு பாக்கச் சொல்றேன்...எந்தப் பய கால்லேயாவது சீக்கிரம் கட்டாட்டி நீ எம்பின்னாலே வந்துடுவே போல இருக்கே..." என்று சொல்லிக் கிழவர் அனுபவித்துச் சிரித்தார். பழக்காரி வெட்கத்தினால் இரண்டு கைகளினாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.
"போ...தாத்தா' " என்று கண்டிப்பதுபோல் கிழவரைப் பார்த்தாள்.
கிழவர் சிரித்துக்கொண்டே, கையிலிருந்த பழங்களில் ஒன்றை எடுத்து--உப்பில் நன்றாக அழுத்தி எடுத்து--இரண்டு விரல்களால் வாய்க்கு நேர உயர்த்திப் போட்டுக் குதப்பிச் சப்பிக் கொட்டையைத் துப்பினார்...
'அடெ, இத்தினூண்டு கொட்டை' பழம், நல்ல பழம் தான்' --கிழவரின் வாயசைப்பையும் சுவை ரசிப்பையும் கவனித்து அனுபவித்த சோமு வாயில் சுரந்த எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
இந்த மொட்டைத்தலைச் சிறுவன் தன்னையே கவனித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்த கிழவர்.
"இந்தாடா, பையா..." என்று சோமுவிடம் ஒருகை பழத்தை அள்ளிக் கொடுத்தார்.
சோமுவுக்குச் செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது' அந்த நாவற்பழக்காரி அவனைப் பார்த்தாள். சோமு, கிழவனையும், நாவற்பழக்காரியையும் மாறி மாறிப்பார்த்தான். அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது'
"நா ஒண்ணும் எச்சப் பொறுக்கி இல்லே..." என்று அவனிடம் நீட்டிய கிழவரின் கையிலிருந்த பழத்தைத்
தட்டிவிட்டான்.
கிழவர் சிரித்தார்:
"அட, சுட்டிப்பயலே...என்னமோ ஒன்னெப் பாத்தா ஆசையா இருந்தது...எம் பேரப்பையன் மாதிரி...கோவிச்சிக்கிட்டியே...நான் ஒன் தாத்தா மாதிரி இல்லே..." என்று வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தார்.
சோமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்தமாதிரி சுருட்டை மயிர்" என்று சொல்லும் அவன் தாயின் குரல் செவிகளில் ஒலித்தது.
"இந்தாடா பையா...ஏதுக்கு அளுவுறே? நீ யாரு வூட்டுப் பையன்..." என்றார் கிழவர்.
சோமு ஒன்றும் பதில் பேசவில்லை.
"ஒனக்கு என் கிட்டே கோவம், இல்லே?...பரவாயில்லே...தாத்தாதானே...இந்தா, பழம் தின்னு..."
"ஊஹ்உம்...எனக்கு வேணாம்'
"சேச்சே... அப்பறம் எனக்கு வருத்தமா இருக்கும். ஒண்ணே ஒண்ணு' " என்று அவன் கையில் வைத்தார். அவனால் மறுக்க முடியவில்லை. அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியாமல் நகர்ந்தான்.
"பாவம்...யாரோ அனாதை' மொகத்தைப் பாத்தா பாவமா இருக்கு..."
'நான் அனாதையா?...பிச்சைக்காரனா?...' வாயிலிருந்த பழத்தைச் சுவைத்துக் கொட்டையைத் துப்பினான். 'அந்தக் கிழவனின் முகத்தில் அறைவதுபோல் நானும் ஒரு காலணாவுக்குப் பழம் வாங்கித் தின்றால்?...'
'திங்கலாம்...காசு?...'
--அவன் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே நடந்தான்.
அதோ, அந்த மரத்தடியில் வேர்க்கடலை, பட்டாணி வறுக்கிறார்கள். அப்பா'...என்ன வாசனை?...
--திடீரென அவன் மனசில் மின்னல்போல் அந்த எண்ணம் விசிறி அடித்தது.
'நாம் எங்கே போகிறோம்?...நமது லட்சியம் என்ன?
--அவனுக்கு நெஞ்சில் 'திகீல்' என்றது. அவனே தேர்ந்துகொண்ட அந்த முடிவு அவனை இப்பொழுது முதல் தடவையாக மிரட்டியது' ஒருகணம் சித்தம் கலங்கியது; உணர்வற்று நின்றான், உடலிலும் நெஞ்சிலும் ஒரு துடிப்புப் பிறந்தது. தன்னை ஏதோ ஒன்று பின்னாலிருந்து திரும்ப அழைப்பதுபோல் உணர்ந்தான். அந்த அழைப்பின் பாசம், பிடிப்பு...அதிலிருந்து பிய்த்துக்கொண்டு விலகிவிட எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாய்ச் சந்தைத் திடலைவிட்டு ஓடினான்...கடைத்தெருவைக் கடந்து சாலை வழியே வந்தபின் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வெகுதூரத்தில், வாழ்வின் கீதம்போல் ஒலிக்கும் சந்தை இரைச்சல் அவன் காதுகளில் மெல்லெனக் கேட்டுக் கொண்டே இருந்தது.
அவன் ஏன் அழுதுகொண்டே நடக்கிறான்?...
சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட, பதினைந்தாவது மைலிலுள்ள ஆலப்பாக்கத்தருகே புழுதி படிந்த உடலுடன் நடக்க முடியாமல் தளர்ந்து தள்ளாடி நடந்து வருவது--ஹிமாலயத்தை நாடிச் செல்லும் ஞானச் செம்மல் சோமுதான்.
நடக்க முடியவில்லை; வயிற்றைப் புரட்டுகிறது ஒரு சமயம், வலிக்கிறது மறுசமயம்...பசிதான்'
--சுமைகளை உதறி எறிந்துவிட்டு வந்த சோமுவுக்கு,
சோறில்லாமல் வெற்றுடல் சுமையாய்க் கனக்கிறது'
இனிமேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்ற ஸ்தம்பிப்பு' நிற்கிறான்...பார்வை வெகுதூரம் வரை ஓடி வழியை அளக்கிறது....
பார்வை மறைகிறதே.....கண்ணீரா? பசிக் கிறுகிறுப்பா?....
இமயமலைக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது'
சிரமப்பட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் காலை அசைத்தவுடன் காலில் பெருவிரலிலிருந்து அடித்தொண்டை வரைக்கும் ஒரு நரம்பு--கொரக்குப் பிடித்து சுண்டி இழுப்பது போல்....
"ஆ?....என்ன வலி'....." பல்லைக் கடித்துக்கொண்டு தரையில் மெல்ல உட்காருகிறான்.
----எத்தனை நாழி?....
எழுந்திருக்க மனமும் வரவில்லை; உடலும் வரவில்லை.
இருள் பரவ ஆரம்பித்தது;
மேற்குத் திசையில் வானம் சிவந்து கறுத்தது. அந்தச் சாலையின் நெடுகிலும் வளர்ந்து படர்ந்திருந்த ஆல விருக்ஷத்தின் விழுதுகள் சடைசடையாய் ஆடிக்கொண்டிருந்தன. இருளைக் கண்டதும்.... பாவம், பிள்ளைக்குப் பயத்தால் மனத்தில் உதறல் கண்டுவிட்டது.
அந்தச் சாலையில் விளக்குகளும் கிடையாது. 'இன்று நிலாவும் இல்லை' என்று சொல்வதுபோல் நான்காம் பிறை கடைவானில் தலைக்காட்டிவிட்டு கீழிறங்கிக் கொண்டிருந்தது. 'எங்காவது ஒரு குடிசை கண்ணுக்குத் தெரிகிறதா?' என்று பார்த்தான்....ஹஉம், இன்னும் இரண்டு மைலாவது நடக்க வேண்டும்.
'இரவு படுக்கை?.....'
---வீட்டில் படுக்கும் மெத்தையும், பஞ்சுத் தலையணையும், கம்பளிப் போர்வையும் நினைவுக்கு வந்தன.... 'இதெல்லாம் என்ன விதி'.....'
'பசிக்கிறதே'....'
'யார் வீட்டிலேயாவது போயி, சம்போ மகாதேவான்னு நிக்கிறதா என்ன?'
'யாராவது பிச்சைக்காரன்னு நெனைச்சி வெரட்டினா?....'
வீட்டில்--மெய்ஞ்ஞானம் கைவரப்பெறாத அம்மா, பாசத்தை விலக்க முடியாமல், மகனென்ற மாயையில் சிக்கி பக்கத்தில் அமர்ந்து பரிந்து பரிந்து சோறிட்டுப் பறிமாறுவாளே---அந்த அம்மா, ஆசை அம்மா---அவள் நினைவு வந்ததும்....
"அ...ம்....மா..." என்று அழுகையில் உதடுகள் விம்மித் துடித்தன'
'சீ' இதென்ன பைத்தியக்காரன்போல் ஓடிவந்தேனே' இதென்ன கிறுக்கு?....' என்று தன்னையே சினந்துகொண்டான்.
இந்நேரம் ஊரில், வீட்டில் அம்மா, தன்னைக் என்னென்ன நினைத்து, எப்படியெப்படிப் புலம்பி அழுவாள்.....
அப்பா? அவர் ஊரெல்லாம் தெருத் தெருவாய் அலைந்து திரிந்து எல்லோரிடத்திலும் 'சோமுவைப் பார்த்தீர்களா சோமுவை...' என்று விசாரித்தவாறு சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருப்பார்...
'ஐயோ' என்னால் எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்' ' என்று எண்ணிய சோமு.
"அம்மா'...நா வீட்டுக்கு வந்துட்றேன் அம்மா...ஆ...ஹ்உ...ம்..." என்று ஜன நடமாட்டமே இல்லாத அந்தச் சாலையில், திரண்டு வரும் இருளில் குரலெடுத்துக் கூவி அழுதான்.
சிறிது நேரம் மனம் குமுறி அழுது சோர்ந்தபின், மனம் தௌிந்து புத்தி செயல்பட ஆரம்பித்தது.
நேரமோ இருட்டுகிறது, நடந்துவந்த வழியை எண்ணினான். 'மீண்டும் திரும்பி நடப்பதென்றால் வீட்டுக்குப் போய்ச் சேருவது எப்போது?......எப்படியும் விடியற்காலையிலாவது வீட்டுக்குப் போயாக வேண்டுமே...இந்த இருட்டை, ராத்திரியைக் கழிப்பது எங்கே?...
அவனுக்கு அழுகை வந்தது.
'இதெல்லாம் என்ன விதி?'
"விதியல்ல கொழுப்பு' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வாய்விட்டுச் சொன்னான்.
பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் சற்றுப் பிடி தளர்ந்தன.
'பெற்றோர்க்கும் எனக்கும் என்ன பந்தம்?'
'பெற்ற பந்தம்தான்' பந்தமில்லாமலா என்னை வளர்த்தார்கள்? நான் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது...'
'பாசத்தை யாரும் வலியச் சென்று ஏற்காமலே பிறக்கிறதே...அதுதானே
பந்தம்' '
'ஆமாம் பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்.'
'பந்தமும் பாசமும் பொய்யென்றால், ஸ்வாமி அருளானந்தரின் மீதும், லோக குருவின்மீதும், பரம்பொருளின் மீதும் கொண்டுள்ள பக்தி...அதுவும் ஒரு பாசம்தானே?'
சாலையில் கவிந்திருந்த இருளில் மரத்தடியில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து பின்னிக்கொண்டிருந்த வேதாந்தச் சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்து, சிக்கறுத்துத் தள்ளித்தள்ளித் தன்நிலை உணர்ந்துகொண்டிருந்த சோமு, இருளும் நன்றாகப் பரவிவிட்டது என்று உணர்ந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் இருளின் கனம்தான் தெரிந்தது. வெகு தொலைவில் ரயில் சப்தம் கேட்டது. வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரச் சிதைவு இருளின் கருமையை மிகைப்படுத்திக் காட்டின. யாரோ ஒரு பிரம்ம ராக்ஷஸனின் வரவுக்காக 'பாரா'க் கொடுத்து திண்டுமுண்டான ராக்ஷசக் கூட்டம் அணிவகுத்து நிற்பதுபோல் அசையாமல் தோன்றும் மரங்களின் கரிய பெரிய பரட்டைத் தலைகளின் மீது ஜிகினா வேலை செய்ததுபோல் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாய் மொய்த்தன.....
திடீரென் 'சரசர'வென்ற அந்தச் சப்தம்'.....எங்கிருந்து வருகிறது?....
சோமுவின் கண்கள் இருளைக் கிழித்து ஊடுருவின.... காதுகள் கூர்மையாயின....
'எங்கே'....என்னது?.....'
'அதோ....அதுதான்; அதுவேதான்' '
---சாலையின் வலது புறத்தில்---சோமு உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நேரே பத்தடி தூரம் தள்ளி---கடலைக் கொல்லையிலிருந்து மேலே உயரும் சாலைச் சரிவில், உதிர்ந்து நிரவிக் கிடக்கும் ஆலிலைச் சருகுக் குவியலின் நடுவே, நெல்லுக் குத்தும் மர உலக்கை ஒன்று லாகவம் பெற்று நௌிவதைப்போல நகர்ந்து வந்தது....இருளில்கூட என்ன மினுமினுப்பு'
"பாம்பு'....தப்பு....தப்பு.....சர்ப்பம்.... சர்ப்ப ராஜன்...." வாய் குழறிற்று. காலும் கையும் தன் வசமிழந்து உதறின. சாய்ந்து உட்கார்ந்திருந்த அடிமரத்தில் முதுகை ஒட்டிக் கொண்டு எழுந்தான். எழுந்திருக்கும்போது மொட்டைத் தலையில் 'நறுக்'கென்று மரத்தின் முண்டு இடித்தது.
-அந்த 'உலக்கை' மேட்டில் ஏறி, சாலையின் குறுக்கே நீண்டு நகர்ந்தது. நீளக் கிடந்து நகர்ந்த அந்த உலக்கை ஒரு துள்ளுத் துள்ளிச் சாடி நௌிந்தது.
"வ்வோ....மொ....ழொ....ழொ...." வென்று பயந்தடித்துக் குளறினான் சோமு. உலக்கையின் சாட்டத்தைத் தொடர்ந்து கிளம்பிய தவளை ஒன்றின் பரிதாப ஓலம் சில வினாடிகளில் ஓய்ந்து போயிற்று.
'ஏறுமயில்....ஏறிவிளையாடு முகம் ....ஒன்று" என்று 'பய-பக்தி'க் குரலில் முருக ஸ்தோத்திரம் செய்தான் சோமு.
அந்த 'உலக்கை' சாலையின் மறு இறக்கத்தில் 'சரசர'வென்ற ஓசையுடன் இறங்கி மறைந்தது.
திடீரென அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. 'திடீரென மரத்தின் மீதிருந்து ஒரு 'உலக்கை' சுருண்டு விழுந்து தன் மீது புரண்டு சாடி....'
"ஐயோ'...."
தலையைத் தொட்டவாறு தொங்கும் ஆல விழுது. நாக்கை நீட்டித் தலையை நக்கும் பாம்புபோல்....
இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பின் படம் மொட்டைத்தலையின் மீது கவிந்து, 'பொத்'தென அடித்து, மேலெல்லாம் புரண்டு, சுற்றி, இறுக்கி....
திடுதிடுவென இருண்ட சாலையின் நடுவே ஓடினான். கால் நரம்புகள் நொந்து வேதனை தந்தன....முழங்காலுக்குக் கீழே ஒரே பதட்டம்...ஓடிவந்த வேகத்தில் முழங்கால் மடங்க, குப்புற விழுந்தான்.
முன்காலில் அடிபட்டவுடன் கண்கள் இருண்டன....
அவன் தன் நினைவின்றி, பசி மயக்கத்தில், நடந்த களைப்பில் மிருதுவான செம்மண் புழுதியில் அசைவின்றிக் கிடந்தான்.
அடுக்கடுக்காய்த் திரண்டு வந்த இருள் திரட்சி அவன் மீது கனமாகக் கவிந்தது'
ஜல்....ஜல்....ஜல்.....ஜல்.....
'அது என்ன சப்தம்? கைலயங்கிரியில் தாண்டவமாடும் சர்வேச்வரனின் கழலொலி நாதமா?....'
'தூரத்தில், வான்முகட்டில் கேட்கிறதே...'
'ஜல்....ஜல்...'
"தா...தா...ஹேய்...."
'ஜல்...ஜல்....ஜல்....'
"ஹாவ்....ஹாவ்.....அதார்ரா அவன், நடுரோட்டிலே படுத்துக் கெடக்கிறது?...." என்ற வண்டி ஓட்டுபவனின் குரலைத் தொடர்ந்து,
"எறங்கிப் போயிப் பாரேண்டா....நில்லு, நானும் வாரேன்...." என்ற மற்றொரு குரலும் சோமுவின் செவியில் விழத்தான் செய்தன....அனால் அவை எங்கோ சந்தையில் ஒலிக்கும் தூரத்துக் குரல்கள்போல் தோன்றின.
வண்டியிலிருந்து இறங்கிய மனிதர், வண்டிக்குக் கீழே புகை மண்டி எரியும் ராந்தல் விளக்கை அவிழ்த்துக் கொண்டு அவனை நெருங்கினார்.
சோமுவின் மூடிய இமைகளினூடே வௌிச்சத்தின் சாயை படரவே, கனத்து அழுத்திக்கொண்டிருக்கும் இமைகளைத் திறந்தான்....ஔிபட்டுக் கண்கள் கூசின. இமைகள் பிரிந்து பிரிந்து ஒட்டின. அவன் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். உட்கார்ந்ததும் கண்களைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்....
"அடடே....சந்தையிலே பாத்த பையனில்லே நீ....."
சோமு அழுவதை நிறுத்திவிட்டு வௌிச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்தான்.
---ஆமாம்; சந்தையில் நாவற்பழம் தந்த பொக்கை வாய்க் கிழவர்'
"ஒனக்கு இவனைத் தெரியுமா, தாத்தா?" என்றான் வண்டி ஓட்டி வந்த வாலிபன்.
"தெரியாம என்னா? ஒன்ன மாதிரி ஒரு பேரன்' "
"நீ யாருடா, பயலே... இங்கே எப்படி வந்தே?....அதுவும் இந்நேரத்திலே...எந்த ஊரு... என்னாடா பையா, எல்லாத்துக்கும் அளுவுறே.... சேச்சே.... ஆம்பிளைப்புள்ளே அளுவறதாவது... எனக்கு வெக்கமா இருக்கு.....சரி, நீ எங்கூட வா....தோ, பக்கத்திலேதான் வூடு இருக்கு; போயிப் பேசிக்கலாம்...வவுத்தெப் பசிக்குதடா, கெழவனுக்கு...உம் வா'...." என்று அருகே இழுத்து அணைத்துக்கொண்டார் கிழவர்.
இருக்கும் சொந்தத்தை உதறிவிட எண்ணிய சோமுவும், எல்லாரிடமும் சொந்தம் பாராட்டும் கிழவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்த்துக்கொண்டனர். கிழவர் சிரித்தார்.
அந்த இரட்டை மாட்டுக் கட்டை வண்டியில் கூடைகளும், வாழையிலைச் சருகுகளும் குப்பைபோல் நிறைந்திருந்தன. உயரமான வண்டியின் சக்கரங்களில் காலை வைத்துத் தாவியேறினார் கிழவர்.
சோமுவால் ஏற முடியவில்லை; கிழவர் கைகொடுத்தார். கிழவரின் பேரன் வண்டியை ஓட்டினான். மடியிலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே சோமுவிடம் பேச்சுக் கொடுத்தார் கிழவர்:
"பையா....நீ எங்கேருந்து வாரே....எங்கே போறே....கேக்கறத்துக்குச் சொல்லு....."
"நா....நா'....வந்து....இமயமலைக்குப் போலாமின்னு...." அவனுக்குத் தொண்டை அடைத்தது.
"இமயமலையா?....அது எங்கேல'யிருக்கு?....."
"அதான் தாத்தா...நீ கைலாசம்னு சொல்லுவியே...." என்று குறுக்கிட்டான் அவர் பேரன்.
"அடெ பைத்தியக்காரப் புள்ளே....அந்த மலைக்கி இந்தச் சரீரத்தோட போவ முடியுமா'லே.... காரைக்காலம்மையாரே தலையாலே நடந்தில்லே போனாவ....நாமெல்லாம் செத்தப்புறம்தான் போவமுடியும்...நீ பசலை...இன்னம் எவ்வளவோ அனுபவிக்கக் கெடக்கு...படிச்சி, சம்பாதிச்சு, கலியாணம் காச்சின்னு கட்டிக்கிட்டு, புள்ளெக் குட்டியெல்லாம் பெத்து, என்னெ மாதிரி ஆனப்புறம் இந்தப் புத்தி வந்தா சரிதான்....இப்பவேவா?....இது என்னடா, கிறுக்குத்தனமால்லே இருக்கு....எனக்குக்கூட இல்லே அந்த மாதிரிப் புத்தி வரமாட்டேங்குது..." என்று சொல்லிக்கொண்டிருந்த கிழவர் ஏதோ பழைய நிகழ்ச்சியில் லயித்தவர்போலச் சிரித்துக் கொண்டார்.
"தாத்தா'....' என்று சோமுவின் குரல் ஒலித்தது.
"என்னலே..." என்று கிழவர் அவன் தோள்மீது கைவைத்தார்.
அவன் விம்மி விம்மி அழுதான்.
"தாத்தா இனிமே....நா' எங்கேயும் போகமாட்டேன், தாத்தா...வீட்டிலே இருந்துகிட்டே சாமியெல்லாம் கும்பிட்டுக்குவேன் தாத்தா....அம்மா அப்பாகிட்டே சொல்லிக்காம இனிமே எங்கேயும் போகமாட்டேன்... நீங்க மட்டும்....என்னெ எப்படியாச்சும் செதம்பரத்திலே கொண்டுபோய் சேர்த்திடணும்....தாத்தா....நாளைக்கே, நான் வூட்டுக்குப் போயிடணும் ஒங்களெ நா' மறக்கவே மாட்டேன் தாத்தா...." என்று கெஞ்சிக் கெஞ்சி அழுதான் சோமு.
கிழவர் சிரித்தார்.
"என்ன தாத்தா சிரிக்கிறீங்க....என்னெக் கொண்டு போயி விடமாட்டீங்களா?.... செதம்பரத்துக்கு வேண்டாம், புவனகிரியிலே விட்டாகூட போதும். அங்கேருந்து போயிடுவேன்....."
சோமுவுக்கு தான் வந்த வழியை...தூரத்தை....நினைக்கும்போது மலைப்பாய் இருந்தது. வந்ததுபோல் திரும்பி நடந்து போய்விடமுடியாது என்று தோன்றிற்று.
'கிளாஸ் டீச்சர் ராதாகிருஷ்ணய்யர் எவ்வளவு அன்பாகப் பேசுவார்.... எவ்வளவு செல்லமாகக் கொஞ்சுவார்....ஒருநாள் கூட 'ஆப்ஸன்ட்' ஆகாதவன் என்று புகழ்ந்து பேசுவாரே.... இரண்டு நாட்கள் வராவிட்டால் வீட்டிலிருந்து போய் அவரைக் கேட்கமாட்டார்களா?.... அவரும் வருத்தப்படுவாரே... ஸார், நா' இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்....'
'....ஐயோ' வண்டி இன்னும் வடக்கே போய்க்கொண்டிருக்கிறதே' யார் இந்தக் கிழவன்? என்னை கொண்டுவிடவும் மாட்டேன் என்கிறான்...இன்னும் அதிக தூரத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறானே....'
"தம்பி...வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே' மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்...அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்.... நீ போயிடலாம்...ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க... நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்....அப்புறம்தான் தெரியும் அந்த சுகம்'...." என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்.....
---அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது'
விடிவுக்கால இருள் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது.
புவனகிரியின் எல்லையில் 'கடக் கடக்' கென்று இரட்டை மாட்டுக் கட்டை வண்டியொன்று ஏற்றியிருந்த இலைக்கட்டுச் சுமையுடன் நகர்ந்துக்கொண்டிருந்தது. கழுத்து மணி 'சலசல'த்தது; சக்கரத்தின் ஓசை விட்டுவிட்டுக் கிறீச்சிட்டது.
இலைக்கட்டுகளின்மேல், குளிருக்குக் கோணிப்பையைப் போர்த்தியவாறு உறக்கமும் விழிப்புமாய் உட்கார்ந்திருந்த சோமுவுக்கு ஊர் நெருங்குவதில் பயமும் மகிழ்ச்சியும் தோன்ற உறக்கம் கலைந்தது.
'சிதம்பரம் 1 மைல்' ' ----என்ற கைக்காட்டி மரத்தைக் கண்டவுடன்,
"ஐயோ'----" என்று குதூகலிக்கும் குரலில் கூப்பிட்டான் சோமு.
வண்டிக்காரன் நுகத்தடியில் கால்களை உந்திக் கொண்டு, மாடுகளின் மூக்கணாங்கயிற்றை வலிந்திழுத்தான்; வண்டி நின்றது.
வண்டியிலிருந்து, சக்கரத்தைப் பற்றித் தொத்திக் கீழே இறங்கிய சோமு வண்டிக்காரனின் முன் கைகூப்பி நின்றான்.
"ஐயா, ஒனக்குக் கோடி நமஸ்காரம்...இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். தாத்தாகிட்ட போயி இதைச் சொல்லு....அவுரு தங்கமான தாத்தா..." சோமுவின் குரல் தழுதழுத்தது....கண்களில் கண்ணீர் மல்கியது.
வண்டிக்காரன் வாய்விட்டு, மகிழ்வோடு சிரித்தான்:
"தம்பி....வண்டி ஒறவு. வண்டியோடப் போயிடக் கூடாது...நா' வாரா வாரம் சந்தைக்கு வருவேன்....தாத்தாகூட வருவாரு....மாருகட்டுலே அந்த மேக்கால கேட்டு இருக்குல்ல.... அங்கதான்....வந்து பாக்கிறியா?...."
"அவசியம் வாரேன்...தாத்தாவுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்றியா?...நா' போயிட்டு வாரேன்" என்று வார்த்தைகளைச் சொல்லி முடிக்காமல் வைகறை வானத்தை புலர் பொழுதின் வெள்ளிிய வான்வௌியை, இருளிலிருந்து ஔியை நோக்கி ஓடி மறைந்தான் சோமு.
தெருக்களின் நடுவே வரும்போது வீடுகளின் முன்னே பெண்கள் சாணம் தௌித்துக் கொண்டிருந்தனர்.
இடையில் ஒரு முழத் துண்டு மட்டும் தரித்த சோமு, குளிருக்கு அடக்கமாய், கைகளை மார்பின் குற்க்காகத் தோளில் சேர்த்துக் கட்டியவாறு வேக வேகமாய் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
அவன் வீட்டருகே நெருங்கும்போது, பங்கஜத்தம்மாள் வாசலில் கோலமிட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். வாசலில் நின்று, கோலத்தை ஒருமுறை கவனித்துவிட்டு...உள்ளே திரும்பும்போது சோமு ஓட்டமாய் ஓடிவந்து வாசலில் நின்று "அம்மா' " என்று விக்கும் குரலில் கூப்பிட்டான்.
அந்தக் குரல் அவள் செவியில் அரைகுறையாகவே விழுந்தது.....
"போ போ....விடிஞ்சுதா--அதுக்குள்ளே.....?" என்று திரும்பினாள்'
பிரஷ்டம் செய்யப்பட்ட பாபியைப்போல் வாசலில் நின்று,
"அம்மா.... நாம்மா...சோமு" என்று கூறிய சோமு 'ஓ'வென்று அழுதுவிட்டான்.
"அடப்பாவி....இதென்னடா கோலம்'...." என்று கையிலிருந்த கோலப் பொடி டப்பாவைப் போட்டு விட்டு ஓடிவந்து பிள்ளையை வாரியணைத்துக் கொண்டாள் பங்கஜம்'
"நா'....நா'.....பண்டாரமா போயிடலாம்னு...நெனைச்சி...நெனைச்சி...போனேம்மா... போனா..போனா வழியிலே ஒன் ஞாபகம் வந்திடுச்சிம்மா...ஆ...ஆ..." என்று குரலெடுத்து அழுதவாறு தாயை இறுக அணைத்துக்கொண்டு விக்கினான் சோமு.
"பைத்தியக்காரப் புள்ளே.... என்னெ விட்டுட்டு நீ போலாமா?... 'தாயிற் சிறந்த கோயிலுமில்லே'ன்னு நீ படிச்சதில்லையா?....வா... உள்ளே வாடா...." என்று ஒரு கையில் அவனை அணைத்துக் கொண்டு, மறு கையால் கண்களைத் துடைத்துக் கொண்டான் பங்கஜம்.
உள்ளே----போகும்போதே, "பாத்தீங்களா, உங்க பிள்ளையை....அத்தை வீட்டுக்குப் போயிருப்பான்னீங்களே ----சந்நியாசம் போயிட்டுத் திரும்பி இருக்கு...." என்று கண் கலங்க சிரித்துக்கொண்டே கூவினாள் அவன் தாய்.
"ஏண்டா, ஒனக்கு நல்ல எளுத்து நடுவே இருக்கையிலே கோண எளுத்து குறுக்கே போச்சி?.... அட, பரதேசிப்பய புள்ளே.... அளகா இருந்த கிராப்பை எடுத்துப்பிட்டு....சரி சரி, அந்த மட்டிலே வந்து சேந்தியே... கண்ணும் மூஞ்சியும் பார்க்க சகிக்கலே....போ.... போயி, பல்லை வௌக்கி மூஞ்சி மொகத்தைக் களுவிப்பிட்டுச் சாப்பிடு....அடியே, வட்டிலெ எடுத்துவச்சி பழையதைப் போடு....இந்தா, நானும் வந்துட்டேன்" என்று சாமி கும்பிடக் கூடத்துக்குச் சென்றார் சதாசிவம் பிள்ளை.
அண்ணனைக் கண்டதும், அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழுந்த இரண்டு தம்பிகளும், ராஜியும் அவனிடம் ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு,
"எங்கேண்ணா போயிட்டே நேத்தெல்லாம்?...." என்று விசாரித்தனர்.
ராஜி அவன் மொட்டைத் தலையைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
அவனுக்கு வெட்கமாயும், வருத்தமாயும் இருந்தது'
"இங்கே பாரும்மா, ராஜியை...என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கறா" என்று கத்திக்கொண்டே அவனைப் பிடிப்பதற்கு ஓடினான்.....
கூடத்தில் சுவாமி படத்தருகே நின்று, நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு. கண்மூடி கரம்கூப்பி,
"ஆங்காரம் தனை அடக்கி ஆணவத்தைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்' " என்று உருகிக்கொண்டிருந்த சதாசிவம் பிள்ளையின் கால்களை ஓடிச் சென்று கட்டிக்கொண்டு, சோமுவை எட்டிப் பார்த்துப் பல்லைக் காட்டிப் பரிகாசித்தாள், ராஜி.
குழந்தையை ஒரு கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் பிள்ளை.
அதற்குள் அடுக்களையிலிருந்து தாயின் குரல் கேட்கவே சோமு சாப்பிடப் போனான்.
வட்டிலில் பழையதைப் பிழிந்துவைத்து, முதல்நாள் மீன் குழம்புச் சட்டையை அகப்பையால் துழவிக்கொண்டே,
'என்ன ஊத்தவா?' எனப்துபோல் சோமுவைப் பார்த்தாள் பங்கஜம்.
--------------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
8. பூ உதிரும் - ஜெயகாந்தன்
பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.
அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டது; அதற்குக் காரணமாகயிருந்த ஒரு சீனாக்கார நண்பன் தன் நினைவாய் அவருக்குத் தந்த --
இப்பொழுதும் கையிலிருக்கும் ஒரு பழைய மாடல் கைக் கெடியாரம்; இடுப்பில் சாவிக் கொத்துடன் தொங்கும் நீண்ட பேனாக்கத்தி; அதன் உதவியால் இரண்டு எதிரிகளைச் சாய்த்தது.... இவ்விதம் அவரோடு சம்பந்தப்பட்ட சகலமும் யுத்தத்தின் முத்திரை பெற்று விட்ட பின் அவரால் வேறு எவ்விதம் பேச இயலும்?
அரும்பு மீசைப் பிராயத்தில் முதல் மகா யுத்தத்திலும், கரு கருவென முறுக்கு மீசை வளர்ந்த நடுத்தர வயதில் இரண்டாவது மகா யுத்தத்திலும் சமராடி வந்தவர் அவர். சுதந்திரமும் அமைதியும் நிலவும் ஒரு நாட்டின் பிரஜையாய் நரைத்த மீசையுடன் தளர்ந்த உடலுடன் இப்போது வாழ்ந்த போதிலும், அவரது பட்டாளத்துக்கார மனத்துக்கு அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்வதில் ஒரு போதை இருந்தது. அதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறந்தது.
அவர், தான் சந்திக்க நேருகின்ற ஒவ்வொரு வாலிபனிடமும் முதல் தடவையாகவும், பின்னால் சந்திக்கும் சமயங்களில் அடிக்கடியும் ஒரு விஷயத்தை வற்புறுத்துவார்: "இந்த தேசத்திலே பொறந்த ஒவ்வொரு வாலிபப் புள்ளையும், இருபது வயசுக்கு மேலே ஒரு பத்து வருஷம் ---கொறஞ்சது அஞ்சு வருஷமாவது கட்டாயமா பட்டாளத்து அநுபவம் பெத்து வரணும்.....ஆமா ....மாட்டேன்னா---- சட்டம் போடணும்'......"
தன் மகனை ராணுவ வீரனாக்க வேண்டும் என்ற அவரது ஆசை பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், அவரது பேச்சையும் தீர்மானத்தையும் கண்டு பயந்த அவர் மனைவி மரகதம் உறவினர்கள் மூலம் கிழவரின் முடிவை மாற்ற முயன்றாள்.....
"எதுக்குங்க பட்டாளமும்....கிட்டாளமும்? பையன் பத்து படிச்சி பாஸ் பண்ணி இருக்கு. ஏதாவது கெவுருமெண்டு உத்தியோகம் ஒண்ணு பாத்து வெச்சி, கலியாணம் காட்சி நடத்தி பேரன் பேத்தியைக் கொஞ்சிக்கிட்டிருக்காம--- பையனைப் பட்டாளத்துக்கு அனுப்பறது சரியில்லீங்க அவ்வளவுதான்......" என்று கூறிய அந்த உறவினர்களையும், அவர்கள் அவ்விதம் வந்து யோசனை கூறக் காரணமாயிருந்த மனைவியையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு லேசாய்ச் சிரித்தார் பெரியசாமி. பிறகு அவர்கள் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தார். அதில் பொருளிருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. குறுகிய பாசம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை என்றே தோன்றியது.
அவர்களுக்கு அவர் சொன்னார்: "உங்களுக்குத் தெரியாது....ம்.... நான் வாழ்நாள் பூராவும் வௌபுள்ளிளைக்காரங்ககிட்டே அடிமைச் சிப்பாயாவே காலங் கழிச்சவன்.... அப்பல்லாம் ஒரு சாதாரண வௌபுள்ளிளைக்கார சோல்ஜருக்கு இருந்த மதிப்புக்கூட ஒரு கறுப்பு மேஜருக்கு கிடையாது, ஒரு சுதந்திர நாட்டு ராணுவத்திலே ஒரு சாதாரண சிப்பாயாக இருக்க மாட்டோமான்னு ஏங்கினது எனக்கில்லே தெரியும்? இப்ப எம்மகனுக்கு அந்தச் சான்ஸ் கெடைக்கிறதுன்னா அதெ விடலாமா? பட்டாளத்துக்குப் போனா, சாகறது தான் தலை விதின்னு நெனச்சிக்காதீங்க. பட்டாளத்துக்குப் போகாதவங்களுக்கும் சாவு உண்டு... வாழ்கையிலே ஒரு பொறுப்பு' அநுபவம், தேசம்ங்கிற உணர்வு...ம்...ஒரு 'டிஸிப்ளின்' எல்லாம் உண்டாகும் பட்டாளத்திலே..இதெல்லாமில்லாம சும்மா வெந்ததைத் தின்னுட்டு வேளை வந்தா சாகறதிலே என்னா பிரயோசனம்?... சொல்லுங்க" என்று அவர் கேட்கும் போது தந்தையின் அருகே நின்றிருந்த சோமநாதன், தந்தையின் இதயத்தையும் எண்ணத்தையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டான். அவர் உடலில் ஒரு துடிப்பும் அவர் கண்களில் 'தனக்கு வயதில்லையே' என்றொரு ஏக்கமும் பிறந்ததை அவன் மட்டுமே கண்டான்.
"அப்படிச் செத்துப் போனத்தான் என்னப்பா? பட்டாளத்துக்குப் போறவன் அரசாங்கத்துப் பணத்திலே உடம்பை வளர்த்துக்கிட்டு, ஊருக்கு லீவில் வந்து உடுப்பைக் காமிச்சுப்பிட்டு போனாப் போதுமா? சண்டைன்னு வந்தா சாகவும் தான் தயாராப் போகணும்" என்று ஒரு வீரனின் மகனுக்குரிய துணிச்சலுடன் சோமநாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, கிழவரின் சுருட்டுக் கறையேறிய கரிய உதடுகள் உணர்ச்சி மிகுந்து துடித்தன.
"சபாஷ்' "என்று பெருமிதத்தோடு அவனைப் பாராட்டுகையில் அவர் கண்களில் அதீதமானதோர் ஔி சுடர்விட்டது. இடது கை ஆள் காட்டி விரலால் முறுக்கேறி உயர்த்தியிருந்த மீசையின் வளைவை லேசாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே மகனின் தோள் மீது கை வைத்து, அவனுக்கு நேரே நின்று மகனின் கண்களைப் பார்த்துக் கேட்டார் பெரியசாமி.
"டேய் தம்பி... இவங்களுக்கு ஒண்ணும் புரியாது; நீ சொல்லு பார்ப்போம்; இந்தியா மேலே சண்டைக்கி வர்ரவன் இனிமே இந்த உலகத்திலே எவனாவது இருக்கானா?...ம் தள்ளு' பட்டாளத்துக்குப் போறதுன்னா, காக்கி உடுப்பை மாட்டிக்கினவுடனே கையிலே துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கண்ட பக்கமெல்லாம் 'படபட'ன்னு சுட்டுக்கினு நிக்கறதில்லே.... பட்டாளத்து வாழ்க்கையைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டா அறிவும் அனுபவமும் வளரும். எழுதப் படிக்கத் தெரியாதவனாத்தான் நான் மிலிட்டரிக்குப் போனேன். நானே இவ்வளவு கத்துக்கிட்டு வளர்ந்திருக்கேன்னா யாரு காரணம்? பட்டாளம் தான். இல்லாட்டி 'எங்கம்மாவை விட்டுப்பிட்டு எப்பிடிப் போவேன்'னு ஊரிலேயே குந்திக்கினு இருந்தா, வெறவு பொறுக்கிக்கினு மாடுமேய்க்கத்தான் போயிருப்பேன். நீ என்னை மாதிரி தற்குறியில்லை; படிச்சிருக்கே....போனியானா ரொம்ப விசயம் கத்துக்கலாம்; ஆபீசராகூட ஆகலாம். இங்கேயே இருந்தியானா சினிமா பார்க்கலாம்; சீட்டி அடிக்கலாம்; அதான் உங்கம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும்.... ஊர்க்காரனுவ எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பானுவ... துப்பாக்கின்னா எது போலீஸஉக்காரனுக்கு மட்டும்தான் சொந்தம்னு நெனைச்சிக்கிட்டிருக்காங்க....ம், இந்த நாட்டிலே பொறந்த ஒவ்வொருத்தனும் துப்பாக்கி பிடிக்கக் கத்துக்க வேணாமா? அப்பத்தான் இன்னக்கி இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாளு தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னா நாடே துப்பாக்கி ஏந்தி நிக்கும்....."
----தந்தை தன் சொல் வலியால், தாயின் ஆசீர்வாதத்துடனும் பத்து வருஷங்களுக்கு முன் பட்டாளத்தில் சேர்ந்தான் சோமநாதன்.
முதன்முறையாக, பட்டாளத்தில் சேர்ந்த அடுத்த ஆண்டில் அவன் லீவில் ஊருக்கு வந்திருந்தபோது... ஒரு வருஷத்தில்.....அவன் அதிகமாய் வளர்ந்திருப்பது கண்டு அவன் தாய் பூரித்துப் போனாள். அவனிடம் வெறும் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் உள வளர்ச்சியும் அறிவு விசாலமும் மிகுந்திருக்கிறதா என்பதையே சிரத்தையுடன் ஆழ்ந்து பரிசீலித்தார் பெரியசாமி. சதா நேரமும் அவனோடு பேசிக்கொண்டிருப்பதிலும் தன் அனுபவங்களைச் சொல்வதை அவன் எவ்விதம் கிரகித்து கொள்கிறான் என்று கவனிப்பதிலும் அவனை அளந்தார் அவர்.
லீவில் வீட்டுக்கு வந்திருக்கும்போதுகூட, காலையில் ஐந்தரை மணிக்கு மேல் அவனால் படுக்கையில் படுத்திருக்க முடியாது. எங்கோ நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தனது ராணுவ முகாமில் முழங்குகின்ற காலை நேர எக்காளத்தின் ஓசையைக் கேட்டவன் போன்று, அந்தப் பழக்கத்தால்---- படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து விடுவான் சோமநாதன். பின்னர், காலை நேர உலாப் போய்விட்டு, தேகப்பயிற்சி செய்து முடித்தபின் என்ன செய்வதென்று புரியாமல் நாள் முழுதும் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
இரண்டாவது முறை அவன் லீவில் வந்தபோது அதற்கொரு பரிகாரம் காண்பதுபோல் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தான். அதன் விளைவாய் அவர்கள் வீட்டை சுற்றிலும் கட்டாந்தரையாகக் கிடந்த 'தோட்டம்' சண்பகமும், ரோஜாவும், மல்லிகையும் சொரியும் நந்தவனமாக மாறி அவனது நினைவாய் இன்றும் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறது.....
இந்த பத்து வருஷ காலமாய் மகன் நினைவு வரும் போதெல்லாம் பெரியசாமிப் பிள்ளை தோட்டத்தில் போய் நின்று, அந்த மலர்ச் செடிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். மலர்ந்த புஷ்பங்களைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும். அதே போழ்தில் அங்கு உதிர்ந்த பூக்களைக் கண்டு பெருமூச்செறிந்து கொண்டிருப்பாள் அவர் மனைவி.
"ம்...சும்மாக் கெடந்த தோட்டமெல்லாம் செம்பகமும் ரோஜாவும் வெச்சிப் பூ மண்டிப் போவுது...ஊரிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போவுதுங்க... போறதுங்க சும்மா போவுதா? 'பூ இருக்கிற வீட்டிலே பொண்ணு இல்லியான்னு' பரியாசம் பண்றா ஒரு குட்டி..."
"அதாரு அந்த வாயாடி?... பொண்ணு இல்லே, நீதான் வந்து இருவேன்னு சொல்றதுதானே?..." என்று நரைத்த மீசையில் வழக்கம்போல் கை போட்டார் பெரியசாமி.
"அப்பிடித்தான் நானும் நெனச்சிக்கிட்டேன். அதை அவகிட்டே எதுக்குச் சொல்வானேன்... நேத்து கோயில்லே அவ ஆயியைப் பார்த்துச் சொன்னேன்... அவளுக்கு வாயெல்லாம் பல்லாப் போச்சு... நம்ப பயலுக்குப் பொண்ணு கொடுக்கக் கசக்குமோ, பின்னே?..." என்று மலர்களின் நடுவே மலர்ந்த முகத்தோடு, பல இரவுகளாய்த் தூங்காமல் கட்டிய மனக் கனவுகளைக் கணவனிடம் உதிர்க்கும் மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார் பெரியசாமி.
"சரி, சரி' இந்தத் தடவை நம்ப வீட்டிலே கலியாணம் தான்... நீ போயி மசிக்கூடும் காகிதமும் எடுத்து வையி... பையனுக்குக் கடுதாசி எழுதணும்" என்று உற்சாகமாய்க் கூவினார் பிள்ளை.
வாழ்க்கையில் இளம்பிராயத்தில் பெரியசாமிப் பிள்ளையின் மனைவியாகிப் பல வருஷங்கள் அவரைப் பிரிந்து ஒவ்வொரு நாளும் தாலிச் சரட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டே காலம் கழித்து, ஒருவாறு அந்தக் கவலை தீர்ந்து புருஷன் திரும்பிவந்த பின் தனக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பலகாலம் ஏங்கி, பின்னொரு நாள் சோமநாதனைப் பெற்றபோது என்ன பேருவகை கொண்டாளோ, அந்த அளவு தாங்கொணா இன்ப உணர்ச்சியினால் மெய் சிலிர்த்து ஆனந்தத்தில் கண்களிரண்டும் நீர்க் குளமாக உள்ளே சென்றாள் மரகதம்...
வழக்கமாய், தந்தையின் கடிதம் கண்ட ஓரிரு வாரங்களுக்காகவே ஊருக்கு வந்துவிடும் சோமநாதன் அந்தத் தடவை இரண்டு மாதங்களுக்குப் பிறகே வர முடிந்தது.
ஆம்; போன தடவை அவன் வந்தபோது, கோவாவில் போரிட்டு வெற்றி பெற்ற-யுத்த அனுபவம் பெற்ற--வீரனாய்த் திரும்பி இருந்தான்
அப்பனும் மகனும் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வந்து கலந்துகொள்ளத் தைரியம் இல்லாத மரகதம் தூரத்திலோ, அறைவாயிலிலோ நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.
மகனது வார்த்தைகளைச் செவிகள் கிரகித்தபோதிலும் அவரது பார்வை மரகதம் நிற்கும் திசைக்கு ஓடி அவள் கண்களையும் அடிக்கடி சந்திக்கும்...அந்த ஒவ்வொரு நிமிஷமும், பேசிக் கொண்டிருக்கும் மகனின் வார்த்தைகள் காதில் விழாமல் ஒலியிழந்து போகும்; பேசாது தூரத்தே நிற்கும் மனைவியின் மௌன வார்த்தைகள்--அவளது இதயத் துடிப்பு-- அவர் செவியையும் இதயத்தையும் வந்து மோதும்; "தோட்டம் பூரா செம்பகமும் ரோசாவும் வெச்சுப் பூ மண்டிப் போவுது..."
--அவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த நேரம்போக, தான் பேச நேர்ந்தபோதெல்லாம் மகனின் கலியாண விஷயமாகவே பேசினார் பெரியசாமிப் பிள்ளை.
சோமநாதன் தனக்கொரு கலியாணம் என்பது பற்றி அதுவரை யோசித்ததில்லை. ஆனால் தகப்பனார் பேசுகிற தோரணையைப் பார்த்தால் தனக்கு யோசிக்க அவகாசமே தரமாட்டார் போலிருந்தது. இதில் யோசிக்கத்தான் அப்படி என்ன இருக்கிறது? சமாதானச் சூழ்நிலையில் வாழும் ஒரு தேசத்தின் ராணுவ உத்தியோகஸ்தன் கல்யாணம் செய்து கொள்ளலாம்... அவ்விதம் திருமணம் புரிந்துகொண்டு எத்தனையோ பேர் குடும்பத்தோடு அங்கேயே வந்து வாழ்கிறார்களே...என்பதையெல்லாம் நினைவு கூர்ந்து 'சரி' என்று ஒப்புக்கொண்டான்.
--அந்தத் தடவை லீவிலேயே அவனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்தது.
பூப்பறிக்க வந்த கௌரி பூந்தோட்டத்தின் சொந்தக் காரியானாள். ஒரு பலனும் கருதாமல் சோமநாதன் தன் கையால் நட்டுத் தண்ணீர் பாய்ச்சியதற்குப் பிரதியாக மலர்களை மட்டுமில்லாமல் அவனுக்கொரு மனைவியையும் கொண்டுவரத் தூதாகியிருக்கும் மகிழ்ச்சியில் சண்பகமும் ரோஜாவும் பூத்துக் குலுங்கிச் சிரித்தன. அந்த மலர்ச் செடிகளின் சிரிப்பால் ஆகர்ஷிக்கப்பட்டோ, தனக்கும் அவனுக்கும் உறவு விளையக் காரணம் இந்தச் செடிகள்தான் என்ற நினைப்பாலோ கௌரி பொழுதையெல்லாம் தோட்டத்திலேயே கழித்தாள். கல்யாணத்திற்குப் பிறகு சரியாக இரண்டு மாதங்களையும் சோமநாதன் அவளுடனேயே--ஒரு மணி நேரம் கூடப் பிரிந்திராமல்--கழித்தான்.
எத்தனை காலைகள் எத்தனை மாலைகள், எத்தனை இரவுகள் இவர்கள் இருவரும் அங்கேயே கழித்து, என்னென்ன பேசி, என்னென்ன கனவுகளை வளர்த்தார்கள் என்று அந்தச் சண்பகத்துக்குத் தெரியும்; அந்த ரோஜாவும் மல்லிகையும் அறியும்.
கடைசியில் ஒரு நாள்......
இரண்டு மாதங்கள் அவள் உடலோடும், இதயத்தோடும் இணைந்திருந்து, கனவோடும் கற்பனையோடும் கலந்து உடலால் மட்டும் விலகும்போது 'அடுத்த தடவை லீவுக்கு வந்து திரும்பும்போது உன்னை என்னோட அழைச்சுக்கிட்டுப் போவேன்' என்று வாக்குறுதி தந்து அவன் அவளைப் பிரிந்து சென்றான்.
கௌரியை பிரிந்து சென்ற பதினைந்தாம் நாள் அவளுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
அவனிடமிருந்து மறு கடிதம் வரும்வரை, தனது தனியறையின் ஏகாந்தத்தில்.... அவனே வந்து எட்டிப் பார்ப்பது போல், ஜன்னலருகே வளைந்திருக்கும் சண்பக மரக் கிளையில் பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த ரகசியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் கௌரி.
சண்பகத்துக்குப் பக்கத்தில், மலர்ச்சியின் ரகசியத்தை மறைத்துக்கொண்டு,....முற்றாக மறைக்க முடியாமல்.... தாங்கொணாத் தவிப்புடன், கனத்துக் கிடக்கும் மொட்டுக்களைத் தாங்கி நிற்கும் ரோஜாவைப் பார்த்து அவள் சிரிக்கும் போது 'உன் கதை இன்னும் ஒரு மாதத்தில் தெரியும்? என்று 'பளீரென'ச் சிரித்துச் சிதறிய முல்லைக் கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்த ரகசியம் அவளுக்கு அப்போது புரியவில்லை.
இரண்டு மாதங்களுக்குப் பின், சண்பகத்தையும் ரோஜாவையும் மடி கனக்கக் கட்டிக்கொண்டிருக்கும் உணர்வுடன் மனமும் உடலும் கூசிச் சிலிர்க்க அந்த விஷயத்தை அவனுக்கு அவள் எழுதும்போது.....அவனுக்கும் அவளுக்கும் விளைந்த உறவுக்குப் பின் சில இரவுகளே சேர்ந்து கிடந்து சிலிர்த்த அந்தப் படுக்கையின் தலைமாட்டில், சுவரில் தொங்கும் சோமுவின் படம் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் படத்தைக்கூட பார்க்கமுடியாமல் அவள் முகத்தை மூடிக்கொண்டாள். முகத்தை மூடிய கரங்களையும் மீறி வழிந்த நாணம் அவள் காதோரத்தில் சிவந்து விளிம்பு கட்டி நின்றது.
அவள் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, அந்தப் படத்தைக் கையிலெடுத்தாள். அருகே இருத்திப் பார்க்கப் பார்க்க விகசிப்பதுபோல் வடிவாயமைந்த உதட்டில் ஊர்ந்த அவனது மாயப் புன்னகை, அவள் இதயத்தை ஊடுருவியது.
திடீரென்று அவளுக்கு உடல் சிலிர்த்தது. நெஞ்சில் நிலைத்த அவன் நினைவு வயிற்றில் புரண்டது போலிருந்தது.....
"நீங்க எப்ப வருவீங்க?" என்று அந்தப் படத்தை முகத்தோடு அணைத்துக்கொண்டு அமைதியாய், சப்தமில்லாமல் தொண்டை அடைத்துக் கரகரக்க அவள் கேட்டபோது, தன் விழிகளில் சுரந்த கண்ணீரை அவளால் அடக்க முடியவில்லை.
"எப்ப வருவீங்க....எப்ப வருவீங்க?" என்று துடித்துக் கொண்டிருந்த அவள் இதயத்திற்கு அவனிடமிருந்து பதில் வந்தது.
இதயம் என்று ஒன்றிருந்தால், துடிப்பு என்ற ஒன்றும் உண்டு. அந்த இதயம் அவனுக்கும் இருந்ததால் அவன் கடிதமே அவனது இதயமாய் அவள் கரத்தில் விரிந்து துடித்தது.....
"........ஏழாம் மாதம் பூச்சூட்டலுக்கு வருவேன். மூன்று மாதம் லீவு கிடைக்கும். உன்னோடயே இருந்து குழந்தை பிறந்த பிறகு, என் மகனின் பூமாதிரி இருக்கிற பாதத்திலே முத்தமிடணும்னு என் உதடுகள் துடிக்கிற துடிப்பு....' என்று தன் கணவன் தனக்கெழுதிய கடிதத்தைப் பெரியசாமிப் பிள்ளைக்கும் மரகதத்துக்கும் படித்துக் காட்டிக்கொண்டிருந்த கௌரி "அவ்வளவுதான் முக்கிய விஷயம்" என்று கடிதத்தை மடித்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள்.
அறைக்கு வந்ததும் அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் கிடந்தும் இருந்தும் அந்தக் கடிதத்தின் வாசகங்களை அவனை அனுபவித்ததே போன்று ரகசியமாகவும் தன்னிச்சையாகவும் அனுபவித்து மகிழ்ந்தாள் கௌரி.
அதில் தான் அவன் என்ன வெல்லாம் எழுதியிருந்தான்'
புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள், உணர்ந்து கொள்ளத்தக்க அந்தரங்கமாய் அக்கடிதத்தில் பதிந்திருந்தன. அந்தக் கடிதத்தை எத்தனையோ முறை படித்து, இன்னும் எத்தனையோ முறை படிக்கப்போகும் கௌரி இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறாள்.......
'.....மகன்தான் என்று அவ்வளவு நிச்சயமாக எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்கிறாயா?.....எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்? நீ கர்ப்பமுற்றிருப்பதாக எழுதியிருந்ததை படித்த பின் , நேற்றுத்தான் நான் வேடிக்கையான கனவு ஒன்று கண்டேன்---அந்தக் கனவில் திடீரென்று எங்கள் 'கேம்ப்'பில் என்னைக் காணோம். எல்லோரும் என்னைத் தேடுகிறார்கள்.....எனக்கே தெரியவில்லை நான் எங்கிருக்கிறேன் என்று உடம்புக்குச் சுகமான வெதுவெதுப்பும், உள்ளத்திற்கு இதமான குளிர்ச்சியும் உள்ள ஓரிடத்தில் மிருதுவான பூக்கள் குவிந்திருக்க அதன் மத்தியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தேடுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. "இதோ இங்கே இருக்கிறேன்.....தெரியலையா" என்று கத்தினாலும் அவர்களுக்கு என் குரல் கேட்கவில்லை. அப்போ, என் முகத்தின் மேலே..... இல்லை----என்னைச் சுற்றிலும்தான் கண்ணாடிக் கூட்டால் மூடியிருப்பதுபோல் இருக்கே---அதன்மேலே அழகான ஒரு கை பதிந்து தெரியுது..... எனக்குத் தெரிந்த அழகான கை; தங்க வளையல்களும், 'அன்னிக்கி ராத்திரி' நான் போட்ட மோதிரமும் அணிந்த விரலோடு கூடிய உன் கை தெரியுது---இவ்வளவுதான் அந்தக் கனவிலே எனக்கு நினைவு இருக்கு. என் கூட ஒரு சர்தார் இருக்காரு; வயசானவரு; அவருகிட்டே இந்தக் கனவை சொன்னேன்....... 'ஒனக்கு ஆம்பிளைக் குழந்தை பொறக்கப் போகுது'ன்னு சொல்லி என்னைத் தூக்கிக்கிட்டுக் குதிச்சாரு அவர்....ஆமா, கௌரி....கௌரி.....ரொம்ப ஆச்சரியமா இல்லே? நமக்கு ஒரு குழந்தை பொறக்கப் போவுது.....' இப்பவே உன்கிட்டே ஓடி வரணும்னு மனசு துடிக்குது, கௌரி. வந்து....வந்து---இப்ப நான் எழுதறதை 'அசிங்கம்'னு நெனச்சிக்காதே.... ஓர் உயிரைத் தரப் போற, ஒரு பிறவியைத் தாங்கி இருக்கிற தாய்மைக் கோயிலான உன் அழகான வயித்தைத் தடவிப் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..... உள்ளே குழந்தை ஓடுமாமே....அதுக்கு நூறு முத்தம் குடுக்கணும்....இது தாய்மைக்கு செய்கிற மரியாதைன்னு நான் நினைக்கிறேன்....சரி, சரி ஏழாம் மாதம் தான் நான் வரப் போறேனே; தாய்மைக் குரிய காணிக்கைகளைத் தராமலா விடுவேன்....?'
--ஒவ்வொரு வரியும் இரண்டு உடல்களை, இரண்டு ஹிருதயங்களைச் சிலிர்க்க வைக்கும் சக்தி-- சிலிர்த்ததின் விளைவு அல்லவா?
ஏழாம் மாதம் வந்துவிட்டது. பெரியசாமிப் பிள்ளை எதிர்பார்த்ததுபோல் அந்தக் கடிதம் வந்தது.
'...எல்லையில் ஏற்பட்டிருக்கும் யுத்தமும் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். போர் வீரனுக்குரிய கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் நான் வரமுடியாது. வர விரும்புவது சரியுமில்லை. அதனாலென்ன? நம் வீட்டில் தான் கொள்ளை கொள்ளைப் பூ இருக்கின்றது. பூ முடித்துக் கொள்ளப் பெண்ணும் இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் சுபகாரியங்களைச் சிறப்பாகச் செய்யவும். நான் வராததற்காக வருந்தாதீர்கள். அங்கு நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சியுடனிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இங்கு நான் உற்சாகமாக இருப்பேன் என்று எண்ணிக் குதூகலமாய் இருக்கவும்...'
தந்தைக்கு எழுதிய கடிதத்தோடு கூட மனைவிக்குத் தனியாய் இன்னொரு கடிதம் எழுதியிருந்தான் அவன். அந்தக் கடிதம் பொய்மைகலந்த குதூகலத்தோடும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில் உற்சாகம் மிகுந்திருப்பது போல் காட்டிக் கொள்ளும் வகையிலும் எழுதப் பட்டிருந்ததால்--சிற்சில இடங்களில் 'விரசம்' போலும் வெறியுற்றது போலும் அமைந்திருந்தது.
சில மாத பந்தத்திலேயே அவனை நன்கு புரிந்து கொண்டவளாகையால், எந்தச் சூழ்நிலையில், எவ்வித மனோ நிலையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கும் என்பதை கௌரி உணர்ந்தாள். இதன் மூலம் அவள் மனம் ஆறுதலடையும் என்று நம்பி அவனால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு--அவனது சிறுபிள்ளைத் தனமான வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் சிரிக்க முயன்று, அதில் மறைந்திருக்கும் துயரத்தின் கனத்தைத் தாங்க மாட்டாதவளாய்--மனம் பொருமி அழுதாள் கௌரி..
சில நாட்களுக்குப் பின் அவனுடைய வேண்டுகோளின்படி அவர்கள் குதூகலமாகவே இருக்க முயன்று, அப்படி இருந்தும் வந்தார்கள்.
பெரியசாமிப் பிள்ளை 'யுத்தம்' என்று தெரிவித்த அன்றிலிருந்தே மிகவும் துடிப்புடன் காணப்பட்டார். பக்கத்திலிருப்போரிடம் காலையிலும் மாலையிலும் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு ஒரு கையால் மீசையை முறுக்கியவாறே செய்தி விளக்கம் கூற ஆரம்பித்து, இரண்டாவது அல்லது முதல் மகா யுத்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதையாகச் சொல்லத்தான் அவரால் முடிந்தது.
அவர் கொஞ்சங்கூடக் கவலை இல்லாமல் இப்படி இருப்பது கண்டு முணுமுணுத்துக் கொண்ட மரகதத்தின் குரல் அவர் காதில் விழுந்தது.
அவர் மனைவியைப்பார்த்துச் சிரித்தார்; "போடி...போ' போர் வீரனின் சங்கீதமே பீரங்கி முழக்கம் தான்' உனக்கெங்கே அது தெரியும்...உன்வசமே தொடை நடுங்கிக் கும்பல், உன் பையன் வருவான் சிங்கம் மாதிரி, அவனைக் கேளு, சொல்லுவான்..."என்று அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறு அங்கு வந்த கௌரி, "அவங்க மகன் சிங்கமா இருந்தா, அந்தப் பெருமை அவங்களுக்கு இல்லையா?" என்றாள்.
"ம்...ம்... பெருமை இல்லேன்னு யாரு சொன்னா? அந்தப் பெருமைக்குக் காரணம் எங்க வம்சம்னேன்... நீ நாளைக்குப் பெத்துக்கப் போறியே அந்தப் பயலுக்காகவும் தான் சொல்றேன்...வீரன் மகன் வீரனாகத்தான் இருப்பான்"என்று அவர் சொன்னபோது, அவளுக்கு வயிற்றில் என்னவோ செய்தது... அந்த இன்பக் கிளு கிளுப்பில் தலை குனிந்தவாறு தன் அறைக்குப் போனாள் கௌரி.
நேற்று கௌரிக்குப் பூச்சூட்டல் என்றால் பிள்ளைச் சுமை போதாதென்று பூச்சுமையும் ஏற்றுவதுதானோ?
அடர்ந்து நீண்ட கூந்தலில் சண்பகத்தை அடுக்கடுக்காக வைத்துத் தைத்து, இடையிடையே மல்லிகையை விரவி ரோஜாவைப் பதித்து -- 'இந்த அலங்காரத்தில் கௌரியைப் பார்க்க அவன் இல்லையே' என்ற குறை ஒவ்வொருவர் மனத்திலும் ஏதோ ஒரு விநாடியில் நெருடி மறைந்து கொண்டு தானிருந்தது.
பூவுக்கும் வாழ்க்கை ஒரு நாள் தானே? நேற்று மலர்ந்து குலுங்கி ஜொலித்தவை யெல்லாம்.... இதோ வாடி வதங்கிக் கசங்கி, மணமிழந்து தலைக்குக் கனமாகிவிட்டன.
......தனியறையில் அமர்ந்து, தலையில் கசங்கிப் போன மலர்களைக் களைந்து கொண்டிருக்கிறாள் கௌரி.
அப்பொழுது ஜன்னலுக்கு வௌியே அவனே வந்து எட்டிப் பார்ப்பதுபோல் சண்பகமரக் கிளையின் பூ வடர்ந்த கொப்பொன்று அவளுக்கு எதிரே தெரிந்து கொண்டு தானிருந்தது...
'நேற்று இந்நேரம் இதே போல் செடியிலும் மரத்திலும் மலர்ந்திருந்த பூக்கள் தானே இவையும்?...' என்ற எண்ணம் தொடர்பின்றி அவள் மனத்தில் முகிழ்த்தபோதிலும், அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பிறந்த அடுத்த விநாடியே சில மாதங்களுக்கு முன்பு சோமநாதன் தோட்டத்தில் அவளிடம் சொன்ன வார்த்தைகளின் தொடர்ச்சியே இது என்று அவளுக்கு விளங்கியது.
அன்று...
சோமநாதன் கோவாவில் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அவளிடம் வீரரசம் மிகுந்த கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தக் கதைக்குப் பின்னால் உள்ள எத்தனையோ தாய்மார்களின் கண்ணீரும், இளம் பெண்களின் சோகங்களும் அவளுக்குப் புலனாயின.
அவள் கெஞ்சுகின்ற குரலில் அவனிடம் கேட்டாள்: "இந்தப் பட்டாளத்து உத்தியோகத்தை நீங்க விட்டுட்டா என்ன? கோரமான சண்டையிலே பொன்னான உயிரையும், இன்பமான வாழ்க்கையையும் எதுக்குப் பலியிடணும்? ஜெயிக்கறது ஒரு பக்கம் இருந்தாலும், துப்பாக்கிக்குப் பலியாகிச் செத்தவனும் ஒரு மனுசனில்லியா?... சண்டை போட்டுச் சாகறதுதானா மனுசனுக்கு அழகு?..."
அவள் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமான யோசனையுடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு பக்கத்திலிருந்த ரோஜாச் செடியிலிருந்து ஒரு பெரிய பூவைப் பறித்தவாறே அவன் சொன்னான்: "சண்டை வேண்டாம்கிறதுதான் நம்மோட கொள்கை. ஆனா சண்டைன்னு வந்துட்டா, சண்டை போடாமே உயிருக்குப் பயந்து சமாதானம் பேசறது கோழைத்தனம்.சண்டைக்கு எப்படி ரெண்டு பேரும் காரணமோ...ரெண்டு பேரும் அவசியமோ...அதே மாதிரி சமாதானத்துக்கும் ரெண்டு பேருமே காரணமாகவும், அவசியமாகவும் இருக்கணும். ஆனா, நீ கேக்கறது இந்த சண்டையிலே எதுக்குப் பொன்னான உயிரை இழக்கணும்கறது தானே?..." என்று கேட்டுவிட்டுக் கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும்பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; "இதோ இந்தப்பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப்பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்...நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே... அதிலேதான் அந்தப் பூவுக்கு... உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு... இல்லியா?... அது மாதிரிதான், மனுஷன்னுபொறந்தா..பூத்திருக்கிறமலர் உதிர்ந்து போகிறமாதிரி... மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்... அப்படி விதிமுடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல... கௌரி, பூ...உதிரும்...மனுஷனும் சாவான்..." என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தானும் தன் எதிரே நிற்கும் கணவனும், தங்களைச் சுற்றிலும் பூத்துச் சிரிக்கும் மலர்களும்... எல்லாமே ஒவ்வொரு சோகமாய் அவள் நெஞ்சில் கனத்தன...
கௌரியின் கண்கள் கலங்குவதையும் உதடுகள் சிவந்து துடிப்பதையும் கண்ட சோமநாதன் 'பூ-உதிரும்' என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை என்று கூறிவிட்டுப் பேச்சை வேறு விஷயங்களில் திருப்பினான்.
'ஐயோ இதை ஏன் இப்போது நான் நினைக்கிறேன்... அவர் போர் முனையில் இருக்கும் இந்த நேரத்திலா எனக்கு அந்த நினைவு வரவேண்டும்' என்று ஒரு விநாடி துணுக்குற்று, கட்டிலின் தலை மாட்டில் தொங்கும் கணவனின் படத்தைப் பார்க்கப் பார்க்க விகஸிக்கும் அந்த மாயப் புன்னகையைப் பார்ப்பதற்காகப் படத்தருகே போய் நின்றாள் கௌரி.
அப்போது அறைக்கு வௌியே...
"சொல்லுங்க, கடுதாசியிலே என்ன சேதி?.... பேச மாட்டீங்களா? ஐயோ தெய்வமே'..... கௌரி....ஈ....." என்று தாய்மையின் சோகம் வெடித்துக் கிளம்பிய பேரோசை கேட்டுக் கௌரி அறைக் கதவை திறந்தாள்..... அப்படியே விழி பிதுங்கிச் சிலையாய் நின்றாள்.....
வராந்தா ஈஸிசேரில் கையில் பிரித்த கடிதத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கும் பெரியசாமிப் பிள்ளையின் காலடியில், தரையில் நெற்றியை 'மடார் மடா'ரென முட்டிக்கொண்டு கதறுகிறாளே மரகதம்.
செம்பில் வார்த்து விட்ட சிலை மாதிரி உணர்ச்சி மிகுதியால் உப்பிக் கனத்து இறுகிச் சிவந்த அவர் முகத்தில் சருமம் துடித்தது. மூடிய இமைகளின் வழியே கோடாய் வழிந்த கண்ணீர் நரைத்துப்போன மீசையின் மேல் வடிந்து நின்றது.....
"மகனே, சோமு----" என்று வானத்தை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு எழுந்தார். வராந்தாவில் சுவரில் தொங்கும் மகனின் போட்டோவை நோக்கி நடந்தார்.
"ஐயோ, நீ வீரனய்யா'...." என்று ஒற்றை மரமாய் மகனின் படத்தின் முன் நிமிர்ந்து நின்று ராணுவ முறையில் 'சல்யூட்' வைத்தார்.
விறைத்து நின்று வீர வணக்கம் செய்த கரத்தைக் கீழிறக்கிய போது முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடீரென அனுபவித்த உணர்வுடன் தளர்ந்து உட்கார்ந்தார் பெரியசாமி.
"எனக்கு வேறொரு மகன் கூட இல்லையே...." என்று வாய்விட்டுப் புலம்பினார்....அந்த வார்த்தைகளைக்கேட்டு எரித்து விடுவது போல் பெரியசாமியைப் பார்த்த மரகதம், அவரைச் சபிப்பதுபோல் ஆங்காரத்துடன் இரண்டு கைகளையும் அவரை நோக்கி நீட்டியவாறு விரித்த கூந்தலும் வெறித்த விழிகளுமாய் அலறினாள்: "பாவி'....வேறே மகன் நமக்கு கிடையாது--வேண்டாம் பட்டாளத்துக்குன்னு அடிச்சிக்கிட்டேனே கேட்டீங்களா? பட்டாளம் பட்டாளம்ன்னு நின்னு என் அருமைப் புள்ளையெக் கொன்னுட்டீங்களே.... ஐயோ' உங்க பாவத்துக்கு வேறே ஒரு மகன் வேணுமா? பட்டாளத்துக்கு அனுப்பி வாரிக் குடுக்கறத்துக்குத் தானே இன்னொரு மகன் இல்லேன்னு அழறீங்க?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவர் இதயத்தில் குத்துவது போல் கேட்டாள்.
"ஆமாம்' அதற்குத்தான்...." என்று பெரியசாமி, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய மீசையை முறுக்கிக் கொண்டே மரகதத்தின் கண்களுக்குள் பார்த்தவாறு சொன்னார். அவர் கண்களில் சுரந்த கண்ணீர் இமை விளிம்பில் பாத ரசம்போல் ஜொலித்தது....
அப்போது அறை வாசலில் 'தடா'லெனச் சப்தம் கேட்கவே திரும்பப் பார்த்து மயங்கி விழுந்த கௌரியைத் தூக்குவதற்காக ஓடினார் பெரியசாமி.
மரகதத்தின் அலறல் தெருவையே திரட்டியது'
பூவின் மேல் ஆசைப்பட்டுப் பூப்பறிக்க வந்த கௌரி, பூவிழந்து விட்டாள்....
ஆனால் சோமுவின் கைகளால் நட்டு வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளும் மரங்களும் அவன் நினைவாய் இப்போதும் மலர்களைச் சொரிந்து கொண்டு நிற்கின்றன.
அவற்றைப் பறித்து ஆரமாய்த் தொடுக்கவும், சோமுவின் படத்திற்கு அழகாய்ச் சூட்டவும், அவனது நினைவையே வழிபட்டு நிற்கவும் அவளிருக்கிறாள்.....
சோமுவின் படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றி வணங்கிக் கொண்டிருந்தாள் கௌரி..... மாலை மாலையாய்க் கண்ணீர் வழிந்து அவள் உடலை நனைக்கிறது.
"நான் வழிபடும் உங்கள் நினைவுக்கு அஞ்சலியாய் சமர்ப்பித்த இந்தப் பூக்களுக்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், உங்கள் மரணத்திற்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், இரண்டு மாதங்களேயானாலும் வீர புருஷனோடு வாழ்ந்த எனது சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு மகத்தான அர்த்தம் காண்கிறேன் நான்...... நாளைப் பிறக்கப் போகும் நம் மகன் வாழ்க்கையும் அர்த்தம் நிறைந்திருக்கும்----அவன் ஒரு வீரனின் மகன்' உங்கள் தகப்பனார் இன்னொரு மகன் இல்லையே என்று வருந்துகிறார். அந்தச் சிங்கம் குகைக்குள் இருந்து இன்னும் வௌியே வரவில்லை...... இந்த நாட்டின் பெண் குலம் உள்ளவரை வீரருக்கா பஞ்சம்'..... உங்கள் அம்மாவின் கண்ணீருக்குத்தான் மாற்றே இல்லை.....அவர்கள் எவ்வளவு பாக்கியசாலி...." என்று எவ்வளவு விஷயங்களை அவனோடு அவள் மௌனமாய் பேசுகிறாள்........
திடீரென்று அடிவயிற்றில், விலாப் புறத்தில் சுருக்கெனக் குத்தி வலிக்க கணவனின் படத்தின் முன் கைகூப்பி நின்றிருந்த கௌரிக் கட்டிலின் மீது சாய்ந்து படுத்தாள்......
அவள் கண் முன்னே நூறு வண்ணங்களில் ஆயிரக் கணக்கான பூக்கள் மலர்ந்து ஜொலிக்கின்றன.
----வௌியே திண்ணையிலிருந்து மீசையை முறுக்கியவாறு பெரியசாமிப் பிள்ளை, தன் மகன் யுத்த களத்தில், மறைந்திருந்து குழியிலிருந்து மேலேறி வந்து, முன்னேறி வந்து கொண்டிருக்கும் எதிரிகளில் ஆறுபேரை ஒரே கணத்தில் சுட்டுக் கொன்றதையும், அப்போது தூரத்திலிருந்து வந்த குண்டொன்று அவன் உயிரைப் பறித்துச் சென்றதையும் பத்திரிக்கையில் படித்து யாருக்கோ விளக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆம்; ஒரு வீரனின் மரணத்தில் உள்ள சோகம் பனிப்படலம் போல் மறைந்து போகும். அவன் வாழ்ந்தபோது புரிந்த வீர சாகசமே, காலம் காலமாய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
-------------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
9. குறைப் பிறவி - ஜெயகாந்தன்
"சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்" என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம்.
பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த நோய் அவளை நித்திய நோயாளியாக்கி இருந்தது. கலியாணம் ஆகி இந்த ஐந்து வருஷங்களில் நான்கு குழந்தைகள் பெற்றாள். வயிற்றில் ஒன்று தரித்ததும், கையிலிருக்கும் மற்றொன்று குழியை அடையும்...இப்படியே மூன்று குழந்தைகளும் இறந்தன. இப்பொழுது வயிற்றில் ஏழுமாதம்.
திடீரென்று போனவாரம் கைக்குழந்தை பாலுவுக்கு இரண்டு நாள் ஜ்உரம் கண்டிருந்தது; மறுநாள் நெற்றியிலும் முகவாயிலும் ஓரிரு முத்துக்கள் தோன்றின. நான்காம் அவை பெருகின; ஒரு வாரத்திற்குள், அம்மைக் கொப்புளங்கள் இல்லா இடமே தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் பரந்து....
பங்கஜத்துக்கும் அவள் கணவன் ராஜாரமனுக்கும் 'குழந்தை பிழைக்காது' என்ற எண்ணம் வலுவடைந்தது. பங்கஜத்துக்கோ எழுந்து நடமாட முடியாத பலஹீனம்..... அவளுக்கு டி.பி. இருக்கலாமோ என்று வேறு டாக்டர் சந்தேகிக்கிறார்....
பாலு ஸ்மரணையற்றுக் கிடக்கிறான், அவனைப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரோரமாக அமைந்திருக்கும் 'அவுட் ஹவுஸி'ல் கட்டிலில் கிடத்தி இருக்கிறார்கள். அவனருகே கூட, பங்கஜம் வரக்கூடாதாம். இது டாக்டரின் யோசனை.
சமையல்காரனோ, அவன் ஒரு மாயாவி' அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது சமைப்பான் என்று யாருக்கும் தெரியாது. காலையில் காப்பி குடிக்கப் போகும்போது 'இன்று என்ன சமைப்பது?' என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண்டு விட்டால் போதும். அதன்பின் சாப்பாட்டு நேரத்தில் அங்கு எல்லாம் தயாராயிருக்கும். மற்ற நேரத்தில் அவன் கண்ணில் படமாட்டான்.
குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகவே ரஞ்சிதம் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். தன் குழந்தையைத் தானே கவனித்துக்கொள்ள பங்கஜத்திற்குக் கொள்ளை ஆசையிருந்தும் சக்தி இல்லை' வைத்திய சாஸ்திரமும் வாய்த்திருக்கும் கணவனும் அதற்கு அனுமதிக்கவில்லை.
'இப்பொழுதுதான் ரஞ்சிதம் இல்லையே, அவள் வரும் வரை நான் போய்ப் பார்த்துக் கொண்டால்...'
பங்கஜம் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு, பாலு படுத்துக்கிடக்கும் அந்தத் தனி வீட்டில் நுழைந்தாள். வேப்பிலை சயனத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் பாலு. கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அதன் விதியைக் கணக்கிடுவதுபோல்--குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பங்கஜம்.
மணி ஒன்றாயிற்று.
இன்னும் ரஞ்சிதத்தைக் காணோம்; குழந்தைக்குப் பங்கஜமே மருந்து கொடுத்தாள். கஞ்சி கொடுத்தாள். வேப்பிலைக் கொடுத்தால் விசிறிக்கொண்டு ரஞ்சிதத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
ரஞ்சிதத்தைக் காணோம். பங்கஜத்தின் கணவன் ராஜாராமன் மூன்று மணிக்கு வந்தான். பங்கஜம் பாலுவின் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.
"பங்கஜம், என்ன இது' ஏன் இங்கே வந்தே?"
"வீட்டுக்குப் போன ரஞ்சிதத்தைக் காணோம்... குழந்தைக்கு யாரு கஞ்சி குடுக்கறது, மருந்து குடுக்கறது...?"
சரி சரி, நீ உள்ளே போ, நான் பார்த்துக்கறேன்...." என்று கோட்டையும் 'டை'யையும் கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவன் போய் பாலுவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.
ரஞ்சிதமும் செல்லியும் சகோதரிகள். தங்கையின் குடிசையில்தான் செல்லியும் வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் புருஷன் கொத்தனார் வேலை செய்கிறான். மூத்தவளாய்ப் பிறந்தும் செல்லிக்குக் கலியாணம் ஆகவில்லை; ஆகாது.
செல்லிக்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது என்றாலும் வளர்ச்சி பன்னிரண்டு வயதோடு நின்றுவிட்டது. முகமோ முப்பதுக்கு மேலே முதுமை காட்டியது...நரங்கிப் போன உருவம்; நாலடிக்கும் குறைவான உயரம்; கறுப்புமல்லாத சிவப்புமல்லாத சோகை பிடித்து வௌிறிப்போன சருமம். தலை முடியெல்லாம் ஒன்று சேர்ந்து சிக்குப் பிடித்து, எலிவால் மாதிரி பின்புறம் தொங்கும். முன் பற்கள் இரண்டும் உதட்டைக் கிழித்துக்கொண்டு வௌித்தெரியும்...அவளை யாரும் மணக்க முன்வராததற்குக் காரணம் இந்த அங்க அவலட்சணங்கள் மாத்திரமேயன்று. அவள் முழுமை பெறாத மனித ராசி; குறைப் பிறவி'
குடிசை வாசலில் உட்கார்ந்து முறத்தில் கொட்டிய அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் செல்லி.
தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், அப்படியே உறங்கிப் போவதும் அவளுக்குத் தினசரிப் பழக்கம். ரஞ்சிதத்துக்குத் தன் தமக்கையின் மீது உயிர். செல்லிக்கோ மனிதர்கள் என்றாலே பாசம்தான். மனிதர்கள் என்ன, நாயும் பூனையும்கூட அவளது எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமாகிவிடும். சொல்லப் போனால் அவைதான் அவளது அன்பை ஏற்றுக் கொண்டன. மனிதர்கள்-- அவள் தங்கையைத் தவிர--மற்றவர்கள் அவளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கி நடந்தார்கள். இப்பொழுதும் கூட அவள் அருகே சொறி பிடித்த ஒரு கறுப்பு நாய்க்குட்டி வாஞ்சையுடன் நின்று வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவளுக்கும் அதற்கும் அத்யந்த நட்பு.
மணி ஐந்தாகியும் ரஞ்சிதம் வேலைக்குப் போகாததைக் கண்டசெல்லி குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள்,
"ரஞ்சிதம், நீ வேலைக்குப் போகலியா'..."
"இல்லே....நான் போகமாட்டேன்." "ஏண்டி....என்னா நடந்திச்சு?"
"அந்த புள்ளைக்கி மாரியாத்தா வாத்திருக்கு...பாத்தாவே பயமா இருக்கு...ஸ்...அப்பா" என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள் ரஞ்சிதம்.
"யாருக்கு...பாலுவுக்கா?"
"டாக்டரு வந்து, அந்த வௌிவூடு இருக்கு பாரு அதிலே கொண்டு போயிப் போடச் சொல்லிட்டாரு புள்ளையெ.....பெத்தவகூட கிட்டப் போகக் கூடாதாம்...என்னெப் பாத்துக்கச் சொன்னாங்க புள்ளையெ...வீட்லே போயிச் சொல்லிட்டு வர்ரேன்னு வந்துட்டேன். நான் போக மாட்டேண்டி அம்மா...எனக்குப் பயமாயிருக்கு...." என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தலையை உசுப்பினாள் ரஞ்சிதம்.
"இம்மா நேரம் புள்ளை எப்படித் துடிக்கிறானோ? பெத்தவளும் கிட்ட இல்லாம அந்த ஐயா எப்படித் தவிக்கிறாரோ" என்று சொல்லித் தவித்தாள்.
அவளது குனிந்த பார்வையில், பாலுவின் சிரித்த முகம் தெரிந்தது. அவனது பிஞ்சுக் கரங்கள் அவள் முகத்தில் ஊர்வதுபோல் இருந்தது.
"நான் போய்ப் பாலுவைப் பார்த்துக்கிட்டா....சம்மதிப்பாங்களா?....அந்த ஐயா என்ன சொல்லுவாரோ?...."
இந்த யோசனைகள் தோன்றியதும் அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பாலுவைப் பார்த்துக்கொள்ளும் 'ஆயா' உத்தியோகம் முதலில் செல்லிக்குத்தான் கிடைத்தது.
முதல் நாள் அவள் வேலைக்குப் போகும்பொழுது ராஜாராமன் வீட்டில் இல்லை. பங்கஜம் மட்டுமே இருந்தாள். அவளே சம்பளம், வேலை நேரம் எல்லாம் பேசினாள்.
பங்கஜம் சொன்னது எதுவும் செல்லியின் காதுகளில் விழவில்லை. பங்கஜத்தின் மடியில் உட்கார்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கன்னங்கள் குழியச் சிரித்து வரவேற்ற அந்தக் குழந்தையிடம் லயித்தவாறே, அவள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டினாள் செல்லி.
குழந்தை செல்லியிடம் தாவினான்.
செல்லி குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள்.
இத்தனை நேரம் குழந்தையைத் தூக்கி வைத்திருந்ததனால் களைத்துப்போன பங்கஜம், அறைக்குள் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
செல்லி பாலுவைத் தூக்கி கொண்டு தோட்டமெல்லாம், வீடெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்தாள். பொம்மைகளையும், சொப்புகளையும் வைத்துக்கொண்டு குழந்தையோடு விளையாடினாள்.
குழந்தைக்குச் சோறூட்டும்போதும் காலில் கிடத்தித் தாலாட்டும்போதும் அந்தக் குறைப் பிறவிக்கும் கூட நெஞ்சில் நிறைவு பிறந்தது.
அன்று மத்தியானம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை 'ஆயா' என்று அழைத்துக் கொண்டே விழித்தான்.
கூடத்துத் தூண் ஓரத்தில் கவிழ்ந்த பார்வையுடன் குந்தி உறங்கிக் கொண்டிருந்த செல்லி, தலை நிமிர்ந்து பார்த்தாள். தொட்டிலின் விளிம்பைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலையை மட்டும் வௌியே நீட்டி அவளைக் கூப்பிட்டுச் சிரித்த குழந்தையின் தோற்றம் அவளை உள்ளும் புறமும் சிலிர்க்க வைத்தது. ஓடிவந்து குழந்தையைக் கைநிறைய வாரிக் கொண்டாள். குழந்தையை மடிமீது இருத்திக் கொஞ்சினாள்.
காலமெல்லாம், ஆயுள் முழுவதும் இப்படியே ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கழித்துவிட்டால்?...
அந்த பாக்கியம் யாருக்குக் கிட்டும்? செல்லிக்குக் கிட்டும்'
பாலு அவன் மடிமீது கிடந்தே வளர்வான்; பள்ளிக்கூடம் போய் வருவான்; பிறகு பெரியவனாகி ஆபீசுக்குப் போவான்....அப்புறம் கலியாணமாகி, அவனும் ஒரு குழந்தையைப் பெற்று அவள் மடிமீது தவழவிடுவான்....
ஒரு தாய்க்கே உரிய அர்த்தமற்ற சிந்தனைகளில் அவன் மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரிலிருந்த ஒரு போட்டோ அவள் கண்ணில் பட்டது.
"பாலு...அதாரு....?" என்று போட்டோவைக் காட்டினாள் செல்லி.
"அம்மா அப்பா...." கைகளைத் தட்டிக் கொண்டு உற்சாகமாகக் கூவினான் பாலு.
"அம்மா மூஞ்சி எப்படியிருக்கு?" என்றாள் செல்லி.
பையன் முகத்தைச் சுளித்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் காட்டினான்.
"போதும் போதும்..." என்று சொல்லி சிரித்தாள் செல்லி. குழந்தையும் சிரித்தான்'
"அப்பா மூஞ்சி எப்படியிருக்கு?..."
மறுபடியும் முகத்தைச் சுளித்து மூக்கை உறிஞ்சி...
செல்லி சிரித்தாள்' குழந்தையும்தான்.
"பாலு மூஞ்சி எப்படியிருக்கு?"
கண்களை அகலத் திறந்து முகம் முழுதும் விகசிக்கப் புன்முறுவல் காட்டினான் குழந்தை.
"என் ராஜா' " என்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் செல்லி.
"ஆயா மூஞ்சி...."
முகம் விகசிக்கக் கண்கள் மலரச் சிரித்துக் கொண்டே செல்லியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் குழந்தை.
அப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்த ராஜாராமன் அவர்களின் பின்னால் வந்து நின்று புது 'ஆயா' வும் குழந்தையும் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.
குழந்தையின் முத்தத்தை ஏற்றுக் கொண்டவுடன், ஏற்றுப் பிறந்த சாபமே தீர்ந்ததுபோல் அவள் தேகாந்தமும் புளகமுற்றது. குழந்தையை முகத்தோடு அணைத்து முத்தமிட்டாள் செல்லி.
ராஜாராமன் அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவன் முகம் அருவருப்பால் நௌிந்தது; மனம் குமட்டியது. தனது அழகுச் செல்லம் இந்த அசிங்கத்தின் மடியில் அமர்ந்து...
அவன் கண்கள் இறுக மூடிக்கொண்டு திரும்பி விட்டான். அப்பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தாள்.
ராஜாராமன் விடுவிடென்று தன் மனைவியின் அறைக்குச் சென்றான். குழந்தையின் தொந்தரவோ, அழுகைக் குரலோ இல்லாததால் பங்கஜம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
"இந்த கோர சொரூபத்தை யாரு பிடிச்சிட்டு வந்தது?" என்று இரைந்தான் ராஜாராமன். பங்கஜம் திடுக்கிட்டு எழுந்தாள்.
"யாரைச் சொல்றீங்க?"
"குழந்தையைப் பாத்துக்க இந்தக் குட்டிச்சாத்தான் தானா கிடைச்சுது?"
"யாரு, ஆயாவைச் சொல்றீங்களா?"
"ஆமா.....ஆயாவாம் ஆயா....கர்மம், கர்மம்.....பாக்கச் சகிக்கல்லே' கொழந்தை பயப்படலியா?...மூஞ்சியெப் பார்த்தா வாந்தி வருது..."
"கொழந்தை ஒண்ணும் பயப்படலே....நீங்கதான் பயப்படுறீங்க..." என்றாள் சிரித்துக்கொண்டே பங்கஜம்.
--வௌியா குழந்தை அழும் குரல் கேட்டது:
"ஆயா...ஹம்ம்...ஆயா....ஆ...' குழந்தையின் குரல் வீறிட்டது.
ராஜாராமன் அறையிலிருந்து வௌியே ஓடி வந்தான்.
பங்களாவின் கேட்டைத் திறந்துகொண்டு வௌியேறிய செல்லி கதவுகளை மூடிவிட்டுத் தெருவிலிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அந்தக் 'குட்டிச்சாத்தா'னை நோக்கி, இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு, அவள் போகும் திக்கைப் பார்த்து வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான் பாலு.
ராஜாராமன் குழந்தையை தூக்கிக்கொண்டபின், அவள் போவதையே பார்த்தவாறு நின்றான்.
'நான் சொன்னதைக் கேட்டிருப்பாளோ?....அவள் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படிப் போவாள்'....சீ' நான் என்ன மனிதன்....?'
குழந்தை அழுதது.
அதன் பிறகு செல்லி அந்தப் பக்கம்கூட வந்தது கிடையாது. மறுநாள் முதல் அவள் தங்கை ரஞ்சிதம், பாலுவுக்கு ஆயாவானாள்'
செல்லிக்கும் மீண்டும் சொறி நாயே துணையாயிற்று'
முறமும் கையுமாய்க் குனிந்திருந்த செல்லி, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்...குடிசைக்குப் பின்புறம் சென்றாள். அவளைத் தொடர்ந்து நாயும் ஓடிற்று. குழந்தையின் அருகில் உட்கார்ந்து வேப்பிலைக் கொத்தால் விசிறிக்கொண்டிருந்தான் ராஜாராமன்.
குழந்தை அடிக்கொருதரம் வேதனை தாங்கமாட்டாமல் அழத் தெம்பில்லாமல் ஈனமான குரலில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான்.
தாயின் அருகே இருக்கக்கூடாத நிலையில், நிராதரவாய்க் கிடந்து நோயில் துடிக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது ராஜாராமனின் கண்கள் கலங்கின. இறந்து போன குழந்தைகளின் பயங்கரக் காட்சி அடிக்கடி மனசில் திரை விரித்தது.
'சீ' காசும் பணமும் இருந்து பயன் என்ன?' அவனுக்கு வாழ்கையே அர்த்தமற்றுத் தோன்றியது.
மணி ஆறு அடித்தது.
இன்னும் ஆயாவைக் காணோம்.
வாழ்வே இருண்டதுபோல் கைகளில் முகம் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்: இருள் படரும் நேரத்தில் அவள் வந்தாள்.
"சாமீ..."
'யாரது? வாசற்படியில் கூனிக் குறுகிக்கொண்டு நிற்கும் அது...யாரது, செல்லியா?'
"செல்லி..."
"சாமீ....நான்தானுங்க செல்லி வந்திருக்கேன்...."
அவள், உடம்பெல்லாம் மஞ்சள் பூசிக் குளித்து, தலை வாரி முடித்து, நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டு--இயன்ற அளவு தன்னை அலங்கரித்துத் தன் குரூபத் தோற்றத்தை மறைக்க முயலும் புன்னகையோடு எதையோ அவனிடம் யாசிப்பவள் போல் நின்றிருந்தாள்.
கொளந்தைக்கி ஒடம்பு சரியில்லேன்னு இப்பத்தான் சொன்னா ரஞ்சிதம்...அவளுக்குப் பயமா இருக்காம். எனக்கு மனசு கேக்கலே...பார்க்கலாம்னு வந்தேனுங்க...நீங்க கோவிச்சிக்காமெ...இருந்தா கொளந்தையை ஒடம்பு கொணமாகற வரைக்கும் நானே பாத்துக்கிட்டுமுங்களா..." அவள் தயங்கித் தயங்கித் தொடர்பில்லாமல், மனசில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் பேசினாள்.
கட்டிலில் கிடந்த குழந்தை புரண்டான்; சிணுங்கி அழுதான். செல்லி உள்ளே ஓடி வந்து அவன் அருகே நின்று விசிறினாள், ராஜாராமன் மீண்டும் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டான்.
"அவன் உன் குழந்தை'...அவன் உன் குழந்தை'....என்று முனகிக்கொண்டே வௌியேறினான்.
இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைப் பாதுகாத்தாள் செல்லி, அந்தக் குழந்தையின் அருகே தனித்திருந்து தானே அதன் தாய்போலப் பணிவிடை புரிவதில் வாழ்வே நிறைவுற்றது போன்ற திருப்தி பிறந்தது அவளுக்கு.
குழந்தைக்கு தண்ணீர் விடப்போகிறார்கள். செல்லியின் இடைவிடாத கண்காணிப்பினாலும், பரிவு மிக்க பணி விடைகளினாலும் பாலு நோய் தீர்ந்தான். பெற்றவள் கலி தீர்ந்தாள்.
ஆனால் குழந்தையின் முகமெல்லாம் அம்மையின் குரூர வடுக்கள் முத்திரை பதித்து அழகைக் கெடுத்திருந்தன; கரிந்து போன மரப்பாச்சி போலிருந்தது குழந்தை. தனது அழகுச் செல்வத்தைக் கண்டு யாரேனும் 'காணச் சகியாத கோரச் சொரூபம்; குட்டிச்சாத்தான்' என்று முகம் சுளிப்பார்களோ என்று எண்ணியபோது ராஜாராமன் மனம் குமுறினான்.
செல்லியின் கண்களுக்குப் பாலு அழகாய்த்தான் இருந்தான். பிள்ளை தேறினானே, அதுவே பெரும் பாக்கியம் என்று எண்ணி அவள் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
மாலையில் செல்லிக்குத் தலைவலித்தது; உடம்பெல்லாம் வலித்தது. இரவில் காய்ச்சல் வருவது போல் அனத்தியது. பங்களாவின் காம்பவுண்ட் சுவரருகே இருந்த அந்தச் சிறு வீட்டின் வராந்தாவில் கோணியை விரித்து, பழம் புடவையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.
மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் செல்லி எழுந்து வரக்காணோம்.
தோட்டத்தில் உலாவ வந்த ராஜாராமன் வராந்தாவில் செல்லி படுத்துக் கிடப்பதை பார்த்தான். அருகில் வந்து நின்று "செல்லி.... செல்லி....." என்று அழைத்தான்.
பதில் குரலைக் காணோம்.
முகத்தில் மூடியிருந்தத் துணியை மெல்ல விலக்கினான்----
அவள் முகமெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் முகிழ்ந்திருந்தன. கண்ணிமைகளும், உதடுகளும் துடித்துச் சிவந்து பார்க்கும்போதே அவனுக்கு உடல் சிலிர்த்தது.
அவள் மெல்லக் கண் திறந்து ஏதோ முனகினாள். செல்லிக்கு அம்மை கண்டுவிட்டது என்று தெரிந்தவுடன் பங்கஜம் கூட எழுந்து ஓடி வந்தாள்.
"ஐயோ, நீங்க ஏம்மா வந்தீங்க..... போங்கம்மா.... உள்ளே போங்கம்மா.... " என்று செல்லி கெஞ்சினாள்.
டாக்டர் வந்தார்; டாக்டரைக் கண்டதும் பங்கஜம் வீட்டுக்குள் நுழைந்தாள். டாக்டர் செல்லிக்கு மருந்து கொடுத்தார். அவள் டாக்டரிடம் வேண்டிக் கொண்டாள்:
"சாமி.... நான் ஆசுபத்திரிக்கிப் போயிடுறேனுங்க..... அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...."
"வேண்டாம் செல்லி, வேண்டாம்" என்று ராஜாராமன் இடைமறித்தான்.
"மிஸ்டர் ராஜாராமன். அந்தப் பொண்ணு சொல்வதுதான் சரி. ஒடம்பு நல்லாகணும்னா, ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சுடறதுதான் நல்லது" என்றார் டாக்டர்.
அதன் பிறகு ரஞ்சிதத்துக்குச் சொல்லியனுப்பப்பட்டது.
"அடி எம் பொறவி அக்காவே.... நா அப்பவே சொன்னேனே கேட்டியாடி...." என்று அழுது புழம்பிக் கொண்டே ஓடி வந்தாள் ரஞ்சிதம்.
ராஜாராமன் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தங்கியிருந்தான். ரஞ்சிதம் தான் செல்லியைப் பார்த்துக் கொண்டாள். பாசம் இருந்தா பயம் அற்று போகாதா, என்ன?
சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு ஆசுபத்திரியிலிருந்து, செல்லியைக் கொண்டு செல்ல 'வான்' வந்து வாசலில் நிற்கிறது'
ராஜாராமனும் பங்கஜமும் சவம் போல் வௌிறிப் போய் நிற்கிறார்கள்; ரஞ்சிதம் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுகிறாள். செல்லி காம்பவுண்ட் சுவரருகே வந்து நின்றாள்'
--என்ன பயங்கரத் தோற்றம்'
ரஞ்சிதம் ஓடிச் சென்று அவளைக் கைத்தாங்கலாய் அழைத்து வருகிறாள். காரின் அருகே வந்ததும் செல்லி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவளருகே ராஜாராமனும் ரஞ்சிதமும் நிற்கின்றனர். காரிலேற முடியாமல் செல்லி தவிக்கிறாள்; பார்வை கலைகிறது'
"என்ன வேணும் செல்லி, என்ன வேணும்?.... பயப்படாமல் கேள்.....' " என்கிறான் ராஜாராமன்.
"பாலு..... பாலுவை ஒருதடவை பாத்திட்டு...." அவள் குரல் அடைத்தது; கண்கள் கலங்கின.
"இதோ....உனக்கில்லாத பாலுவா...." என்று உள்ளே ஓடினான்....
கன்னங்கரேலென்று நிறம் மாறி, இளைத்துத் துரும்பாய் உருமாறிப் போன குழந்தையுடன் வந்து அவளருகே நின்றான்.
"பாலு...."
"ஆயா"... குழந்தை சிரித்தான்.
"பாலு, அப்பா மூஞ்சி எப்படி இருக்கு?"
குழந்தை முகத்தைச் சுளித்து வலிப்புக் காட்டினான்.
"அம்மா மூஞ்சி?"
---மறுபடியும் அதே சுளிப்பு; வலிப்புக் காட்டினான்.
"பாலு மூஞ்சி எப்படி?" கண்கள் மலரச் சிரித்தான் குழந்தை.
"ஆயா மூஞ்சி?"
சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடத் தாவினான் குழந்தை. அம்மைக் கொப்புளங்கள் நிறைந்த முகத்தை மூடிக்கொண்டு விலகிக்கொண்டாள் செல்லி.
"ரஞ்சிதம், கொளந்தையைக் கவனமாப் பாத்துக்க. நான் போய் வரேன் சாமி...வரேன் அம்மா" என்று கரம் கூப்பி வணங்கினாள். ராஜாராமன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.
"போய் வா'..." என்று கூவினாள் பங்கஜம். அவள் உதடுகள் துடித்தன; அழுகை வெடித்தது.
ஆசுபத்திரி கார் அவளை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது.... கார்மறையும் வரை அவர்கள் எல்லோரும் தெரு வாசலிலேயே நின்றிருந்தனர்.
எங்கிருந்தோ ஓடிவந்த அந்தக் கறுப்புச் சொறி நாய், ஆசுபத்திரிக் காரைத் தொடர்ந்து ஓடியது'
------------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
10. யந்திரம் - ஜெயகாந்தன்
முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும்.
நீ தெரிந்துவைத்திருக்கிறாயே என்கிறீர்களா? அது வேறு விஷயம். எனக்குக் கூடுவிட்டுக் கூடுபாயத் தெரியும். அதன்படி, நான்--குழந்தை, பெண், தாய், கிழவன், கிழவி, மிருகம், பறவை, அசுரன், தேவன்'...
அதுபோகட்டும்? அப்படி முத்தாயி என்ன தேவேந்திரப் பெண்ணா என்று கேட்காதீர்கள்.
அவளை என்னவென்று சொல்வேன்' பாசமும் கனிவும் அன்பும் ஆதரவும் மிக்க ஒரு பாட்டி என்று கூறலாமா?...
அல்ல; அவள் ஒரு யந்திரம்.
எங்கள் காலனியில் முப்பது வீடுகளுக்குக் குறைவில்லை. சராசரி கணக்கெடுத்தால் அவளது துணையுடன் பள்ளி செல்லவேண்டிய பருவத்தில் உள்ள பிள்ளைகள் வீட்டுக்கு ஒன்று தேறும்.
இது என் மானசிகக் கணிப்புத்தான். தவறாக இடமில்லை. ஏனென்றால் குழந்தைகளை என்னைப்போல் கவனிக்க யாராலும் முடியாது....--எனக்குத்தான் வேறு வேலை'... நாளெல்லாம் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டு--அங்கு நின்று பார்த்தால் எங்கள் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் கவனிக்க முடியும்...காய்கறிக்கரிகளை, பிச்சைக்காரர்களை, பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை, சமயா சமயங்களில் குறிப்பாகப் பெண்களைக் கவனித்தவாறு நிற்பது எனக்கு ஓர் அருமையான பொழுதுபோக்கு. சிலர் சில சமயங்களில் என்னைப் பார்ப்பார்கள்...நானும் பார்ப்பேன்.
பார்த்துப் பார்த்துப் பழகிய சிநேகிதிகள் எனக்கு ஏராளம்' பேசவோ பழகவோ நான் விரும்பியதில்லை. அவர்களில் சிலராவது விரும்பினார்களா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் நிச்சயமாக அந்த வட்டாரத்தில் நடமாடும் பெண்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவர்கள் எல்லோரையும் தெரியும்.
ஆனால்?...
நான் பார்த்தும் என்னைப் பார்க்காத, நான் ஒருவன் அங்கு நின்று விழி வட்டம் போடுவதை அறியாத ஒரு பிறவி அங்கு உண்டு என்றால், அறுபதையும் கடந்த அந்த முதுகிழவி முத்தாயி ஒருத்திதான்'
நான் அந்தக் காலனிக்குக் குடிவந்த ஏழு ஆண்டுகளாய் முத்தாயியை அறிவேன்.
பஞ்சுபோல் நரைத்த சிகை; பழுத்து வதங்கிய சருமம்; குழி விழுந்த தொங்கிய கன்னங்கள்; இன்னும் பற்கள் இருக்கின்றன; நல்ல உயரமானவளாய் இருந்திருக்க வேண்டும்.
--இப்பொழுது, வாழ்ந்த வாழ்வின் சுமையால் வளைந்து போயிருக்கிறாள்.
அவள் கண்கள்...
அவற்றைத்தான் நான் பார்த்ததில்லையே...
எங்கள் காலனியின் நடுவே இருக்கும் மணிக்கூண்டு காலை ஒன்பது மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும்போது அவள் வருவாள். அவள் நடையில் சதா ஒரு வேகம்; அவசரம்.
--வாழ்வைக் கடக்கப் பறந்தோடும் அவதியா, என்ன?...அவளது இயல்பே அப்படித்தான்'
--வாழ்வு நடக்க நடக்க மாளாதது. ஏனென்றால் தனிப்பட்ட ஒருவருடையதா வாழ்க்கை? அது மனித சமூகத்தின் ஆதி அந்தமற்ற சரிதை'
அதைப்பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதில்லை...ஏன், நேரமில்லையா? நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தனை' அதன் முழு அர்த்தத்தோடும் சொல்கிறேன்...அது விளக்க முடியாதது...சிந்தனை ஒரு வரப் பிரசாதம்' சிந்தனையின் ஆதியும் அந்தமும்...சிந்திக்கச் சிந்திக்க வியப்பாகத்தான் இருக்கிறது'
அவளைப் பார்த்தால் எதைப்பற்றியும் சிந்திப்பவளாகத் தெரியவில்லை.
என்ன சொன்னேன்'...ஆமாம்; முத்தாயியைப்பற்றி...அவள் தினசரி காலை ஒன்பது மணிக்கு வருவாள். அவசரம் அவசரமாக வருவாள். வரும்போதே...
"பாலா...பாலா...நாழியாச்சே....பொறப்படலியா..." என்ற குரல் நாலு வீடுகளுக்குக் கேட்கும். பாலா என்ற இளஞ் சிறுவன் அந்த வீட்டிலிருந்து தோளில் தொங்கும் பையுடன் அவசரம் அவசரமாக ஒரு காலில் மேஜோடும் மற்றொரு காலில் ஷ்ஊஸ்உமாக நிற்பான்...அதையெல்லாம் அவள் கவனிக்கமாட்டாள்.
ஒரு காலில் மேஜோடும் ஒரு கையில் ஷ்ஊஸ்உமாக அவனைத் தூக்கிக்கொண்டு, அதை சரியாகவோ சரியில்லாமலோ அவன் காலில் மாட்டியவாறே, அடுத்த வீட்டு வாசலில் நின்று, "சங்கர்...சங்கர்" என்று அவள் கூவுவாள்.
சங்கர் அப்பொழுதுதான் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.
"சீக்கிரம்...சீக்கிரம்" என்று முத்தாயி குரல் கொடுப்பாள். சாப்பிட்ட வாயைக் கழுவாமல்கூட அவன் ஓடி வருவான். அவனையும் அழைத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்று, "கௌரி...ராமு..." என்று அவள் கூச்சலிடுவாள்.
இப்படியாக இருபது முப்பது பிள்ளைகள் புடைசூழ அரைமணி நேரத்தில் காலனியைக் காலி செய்துவிட்டுப் போய்விடுவாள் முத்தாயி.
அந்தச் சில நிமிஷங்களில், அந்தத் தெருவில் வானத்து மோகினியே கீழிறங்கி வந்தாலும் என் பார்வை அவள் பக்கம் திரும்பாது.
குழந்தைகள்--ஆம்; அந்தக் கொத்துமலர்ப் பூங்கொடிகள்--கும்பல் கும்பலாகப் பவனி செல்வதைப் பார்த்துக்கொண்டே நிற்கும்போது துன்பத்திலும் விரக்தியிலும் காய்ப்பேறிய எனது நெஞ்சத்தில் வாழ்வின்மீது நம்பிக்கை சுரக்கும். நெஞ்சத்தில் காய்த்துப்போன திரடுகள் இளகிக் கனிவு பெறும்.
ஆமாம்: குழந்தைகள்' அவற்றின் அங்கங்களை, பவள அதரங்களை, பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம், கவிஞனின் கற்பனைகளையெல்லாம் தோற்றோடச் செய்யும் மானிடச் சாதியின் பிஞ்சுப் பருவக் கனவுகள் மின்னும் அந்தக் குழந்தைக் கண்களை நீங்கள் கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா?
நீங்கள் பேசும் அறிவாற்றலும் பிரதாபங்களும் அந்தக் கண்ணொளியின் முன்னே மண்டியிடத்தான் வேண்டும்.
இல்லையா?... இல்லாவிட்டால்...அட சீ' நீ என்ன மனிதன்'...
--எனக்கு அந்த முத்தாயியின்மீது அளவு கடந்த வெறுப்பு' ஆம்; வெறுப்புத்தான்' அவள் என்ன மனுஷியா?...பெண்ணா?...தாயா?...சே' யந்திரம்'
அந்தக் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை அவள் பார்த்திருப்பாளா? கனிவு ததும்ப ஒருமுறை பேசி இருப்பாளா' சற்றே கனிவுடன் நயமாக அழைத்துச் செல்கிறாளா? அந்தக் குழந்தைகளை, ஆட்டு மந்தைபோல் ஓட்டிச் செல்கிறாள். அதே மாதிரி கொண்டுவந்து வீடு சேர்க்கிறாள். அவர்களை அலங்கோலமாக, அவர்களின் அழகுத் தோற்றங்களை எல்லாம் கெடுத்து இழுத்துக்கொண்டு போகிறாளே...
இவளை நம்பி, இவள் குரல் கேட்டவுடன் தங்களது குலக் கொழுந்துகளை அலங்க மலங்கக் கூட்டியனுப்புகிறார்களே, என்ன பெற்றோர்கள்'
ஆமாம்; முத்தாயி ஒரு யந்திரம். அந்த யந்திரம் காலை ஒன்பது மணிக்குப் பிள்ளைகளை அள்ளிக்கொண்டு போகும்; மாலை நாலரை மணிக்கு அத்தனை குழந்தைகளையும் கொண்டு வந்து கொட்டும்'
எங்கள் காலனிக்கு அடுத்த தெருவில் இருக்கும் 'கான்வென்'டில் அதற்காக அந்த யந்திரத்திற்குப் பதினைந்து ரூபாய் மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள்.
ஆயாள் என்ற பட்டம் பெற்ற அந்த யந்திரம்தான் முத்தாயி.
அன்று வழக்கம்போல் நான் வராந்தாவில் நின்றிருந்தேன். அதோ, ஒரு வானவில் வருகிறது. அது ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறது...
(நான் அந்தக் காலனியில் உள்ள குமரிகளுக்கெல்லாம் மானசிகமாகப் பெயர்கள் வைத்திருக்கிறேன். இவள் எப்பொழுதும் வர்ண பேதங்கள் நிறைந்த ஆடைகளையே அணிவாள்.)
என்னைக் கடந்து செல்லும்போது அவள் நடையில் செயற்கையாக வருவித்துக்கொண்ட ஒரு வேகமும் 'படபட'ப்பும்'
என்னை நெருங்க நெருங்க அவள் தலை தாழ்ந்து தாழ்ந்து குனிந்து போகும்.
அவளை எட்டிப் பிடிக்க வருவதுபோல் வருகிறாளே, இவள் தான் 'லைட் ஐஸ்'.
--இவள் என்னைப் பார்க்காத மாதிரியே மார்பில் அடுக்கிய புத்தகக் குவியலைப் பார்த்தமாதிரி வருவாள். அருகே வந்தவுடன் நேருக்கு நேராய் ஒருமுறை விழிகளை உயர்த்திப் 'பளிச்' சென்ற பார்வையால் தாக்கி மீண்டும் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு போவாள்...
--இருளில், சாலையில் வரும் ஒரு கார்...'திடும்' என ஒரு சிறு பள்ளத்தில் இறங்கி ஏறினால் எப்படி நம்மீது காரின் வௌிச்சம் விழுந்து தாழும்--அது போன்ற பார்வை--அத்தனை பெரிய கண்கள்'
அதோ, அந்த எதிர்வீட்டுச் சன்னலில் கையிலொரு பத்திரிகையுடன் படிக்கும் பாவனையில் அமர்ந்து, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறதே--ஓர் அகலக்கண்--அதுதான் 'போக்கஸ் லைட்' '
நடன அரங்கில் ஆடுபவளைச் சுற்றி விழுந்துகொண்டு இருக்குமே ஓர் ஔி வட்டம், அதுபோல இவளுடைய கண்கள் என்னையே துரத்திக் கொண்டிருக்கும்.
"பாலா...பாலா...நாழியாச்சு. பொறப்படலியா?..." என்ற முத்தாயியின் வறண்ட குரல் கேட்கிறது'
இனிமேல் நான் ஏன் இந்தப் பெண்களைப் பார்க்கப் போகிறேன்?
இதோ, இப்பொழுது ஓடி வரப்போகிறான் அந்த இளம் மதலை'
எனது பார்வை முத்தாயி நின்றிருக்கும் வீட்டு வாசலையே நோக்கி நிற்கிறது'
"பாலா, பாலா..."
--உள்ளிருந்து பாலனின் தாய் வருகிறாள்.
"ஆயா, அவனுக்கு உடம்பு சரியில்லை; இன்னிக்கு வர மாட்டான்..."
அவள் சொல்லி முடிக்கவில்லை; "சங்கர்...சங்கர்..."என்று கூப்பிட்டவாறு அடுத்த வீட்டுக்குப் போய்விட்டாள்.
--சீ, இவள் என்ன ஜன்மமோ' 'குழந்தைக்கு என்ன' என்று உள்ளே போய்ப் பார்க்கமாட்டாளோ?...பார்க்க வேண்டாம், 'உடம்புக்கு என்ன?' என்று கேட்கவாவது வேண்டாமோ'
'ஐயோ பாவம்' பாலனுக்கு உடம்புக்கு என்னவோ' என்று என் மனம் பதைத்தது.
முத்தாயி வழக்கம்போல் மற்றப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போனாள்.
மறுநாள்...
முத்தாயி வந்தாள்.
"பாலா..பாலா..."
"இன்னிக்கு வரமாட்டான்..."
முத்தாயியின் குரல் அடுத்த வீட்டில் ஒலிக்கிறது.
"சங்கர்...நாழியாச்சு..."
"மணி' "
"கௌரி...ராமு..."
முத்தாயி போய்விட்டாள்.
மூன்றாம் நாள்.
முத்தாயி வந்தாள்...
"பாலா...பாலா..."
"இன்னிக்கும் ஒடம்பு ரொம்ப மோசமாக இருக்கு ஆயா'..."
--பெற்றவளின் குரல் அடைத்தது.
"சங்கர்...பொறப்படலியா?..."
"மணி..."
"கௌரி, ராமு..உம், சீக்கிரம்..."
--அந்த யந்திரம் நகர்ந்தது'
இப்படியே, நான்கு, ஐந்து, ஆறு நாட்களும் ஓடின...
ஆறாம் நாள் இரவு. நான் ஒரு கனவு கண்டே. பொழுதெல்லாம் மழை பெய்துகொண்டே இருக்கிறது...
மழையென்றால்...பிரளய கால வருண வர்ஷம்'...
வீதியெல்லாம் வெள்ளத்தின் நீர் அலைகள் சுருண்டு மடிந்து புரள்கின்றன.
அந்த வெள்ளத்தில் தலைவிரிகோலமாய் முத்தாயி வருகிறாள். முத்தாயியின் கோலம் முதுமைக் கோலமாக இல்லை. நடுத்தர வயதுள்ள ஸ்தீரியாக முத்தாயி வருகிறாள்...
"ராசா...ராசா..." என்று திக்குகளையெல்லாம் நோக்கிக் கதறுகிறாள். வெற்றிடங்களை யெல்லாம் நோக்கிப் புலம்புகிறாள்...
"ராசா...ராசா..." என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு நீரில் விழுந்து புரண்டு எங்கோ ஓடுகிறாள்.
வெள்ளம் சுருண்டு புரண்டு அலைகொழித்து மேலேறிச் சீறிப் பெருகுகிறது'
அதோ. முத்தாயி ஓடுகிறாள்...இடுப்பளவு நீர் மார்பளவு உயர்கிறது...கைகளை அகட்டி வீசிப் போட்டுப் பாய்ந்து பாய்ந்து செல்கிறாள்...வெள்ளப் பெருக்கில் மூழ்கி மூழ்கிப் போகிறாள்...
சற்று நேரம் ஒரே நிசப்தம்...பெருகி வந்த வெள்ளம், மாயம் போல், இந்திரமாசாலம்போல் வடிந்து மறைகின்றது...
நீரோடி ஈரம் பரந்து வரிவரியாய், அலை அலையாய் வெள்ளத்தின் சுவடு படிந்த மணல் வௌியில், ஓர் இளம் சிறுவனை மார்புற அணைத்தவாறு பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருக்கிறாள் முத்தாயி...
அவள் மடியில் கிடக்கும் சிறுவன் அடுத்த வீட்டுப் பாலனைப்போலவே இருக்கிறான்...நீரில் விறைத்த அச்சிறுவனின் கையில் ஒரு தூண்டில்' ஆமாம்; அவன் மீன் பிடிக்கச் சென்றானாம்.
"தண்ணியிலே போவாதே என்
தங்கத்தொரெ ராசாவே
பன்னிப் பன்னிச் சொன்னேனே இந்தப்
பாவி சொல்லக் கேட்டாயோ...ஓ...ஓ..."
என்ற முத்தாயியின் ஓலம் வயிற்றைக் கலக்கியது...
திடுக்கிட்டு விழித்தேன்' கனவு கலைந்தது...எழுந்தேன்; உடல் நடுங்கியது. சன்னலைத் திறந்தேன்...
இருள் விலகாத விடிவு நேரம்...
பாலன் வீட்டு வாசலில் முகமறியாத மனிதர் பலர் வீற்றிருக்கக் கண்டேன்...தெருவெல்லாம் ஏதோ ஒரு சோக இருள் கப்பிக் கவிந்து அழுதுகொண்டிருந்தது.
"பல் விளக்கப் போனாயோ
பல் விளக்கப் போகயிலே--என் பாலாவே
பழவப்படி சறுக்கிச்சோ
பழவப்படி சறுக்கையிலே
பாவி எமன் வந்தானோ?...
மொகம் கழுவப் போனாயோ
மொகம் கழுவப் போகயிலே--என் பாலாவே
முத்துப்படி சறுக்கிச்சோ
முத்துப்படி சறுக்கையிலே
மூர்க்க எமன் வந்தானோ?"
என்ற பாலனின் தாயின் குரல் என் நெஞ்சை அறைந்து உலுக்கியது...
எனக்கு ஒன்றும் புரியவில்லை...இதுவும் கனவாக இருக்கக்கூடாதா என்று மனம் தவித்தது.
மண்டையைச் சன்னலில் மோதினேன்...வலித்தது--ஆம்; இது கனவல்ல'
"ஐயோ' பாலா'..."
எங்கள் காலனியின் நடுவே உள்ள மணிக்கூண்டு ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது.
தெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். மயானச் சங்கின் ஓலமும், சேகண்டியின் கால நாடியும் சங்கமித்துக் குழம்பி அடங்கின.
பாலன் வீட்டில் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.
ஆம்; சாவு விரித்த வலையிலே நடந்தவாறே, வாழ்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள்'
முத்தாயி வந்தாள்'...பாலன் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
--'பாலா' என்று கூப்பிடவில்லை.
--அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்'
முத்தாயியைக் கண்டவுடன் "ஐயோ...ஆயா'...பாலா போயிட்டானே'...நம்ம பாலா போயிட்டாண்டி'..."...அலறியவாறு பூமியில் விழுந்து புரண்டு கதறினாள் பாலனின் தாய்'
முத்தாயி நின்றுகொண்டே இருந்தாள்'
சித்த வௌியில் எத்தனை மேகங்கள் கவிந்தனவோ?... கண்களில் கண்ணீர் மழை பெருகிக்கொண்டே இருந்தது.
அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மரமாய் நின்றாள்;
..நின்று கொண்டே இருந்தாள்'
மழை பெய்து கொண்டிருந்தது...கொட்டுகின்ற மழையில் முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்...
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நான் குமுறும் இதயத்துடன் உள்ளே போய்ப் படுக்கையில் வீழ்ந்தேன். பாலாவுக்காக, அவன் மரணத்திற்காக வருந்தினேன். எனக்கு அன்று முழுவதும் ஒன்றும் ஓடவில்லை.
ஒரு சமயம் அழுகை பலமாக ஒலித்ததை உள்ளிருந்தவாறே கேட்டேன்...
ஆம்; அவனைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்...நான் அதைக் காண விரும்பவில்லை...
வெகுநேரம் கழித்துச் சன்னல் வழியாக வௌியே எட்டிப் பார்த்தேன். முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்.
அவளை யாருமே கவனிக்கவில்லை; நான்தான் கவனித்தேன். அது அவளுக்கு எப்படித் தெரிந்ததோ' 'சடக்'கென்று அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
அவள் கண்களை நான் அன்றுதான் பார்த்தேன்.
குழந்தையின் கண்கள், கண்ணீர் நிரம்பித் தளும்பிற்று.
"பாலா..." என்று என் உதடுகள் முணு முணுத்ததை அவள் எப்படித் தெரிந்து கொண்டாளோ?
"பாலா மீன் பிடிக்கப் போயிருக்கான்" என்று என்னைப் பார்த்துக் கூறினாள்; நான் திடுக்கிட்டேன். அந்த வார்த்தையைக் கூறிவிட்டு அவள் அடுத்த வீட்டை நோக்கி நடந்தாள்.
"சங்கர்...சங்கர்...நாழியாயிடுச்சி; பொறப்படலியா?" என்ற அவளது குரலோசை கேட்கும்போது காலனி மணிக்கூண்டு நான்கு முறை ஒலித்தது...
ஆம்? மாலை மணி நான்கு'
எனக்கு ஒன்றுமே புரியவில்லை...அந்த மணிக் கூண்டின் மணியோசை மட்டும் நன்றாகப் புரிந்தது:
"அவள் யந்திரமல்ல; யந்திரமல்ல, யந்திரமல்ல, யந்திரமல்ல' "
-------
கருத்துகள்
கருத்துரையிடுக