சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 1
சிறுகதைகள்
Back சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 1
சுப்ரமணிய பாரதியார்
- உள்ளடக்கம்
1. ஆறிலொரு பங்கு | 6. கொட்டையசாமி |
2. ஸ்வர்ண குமாரி | 7. சந்திரத் தீவு |
3. துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம் | 8. வேப்ப மரம் |
4. தாஸியும் செட்டியும் | 9. காந்தாமணி |
5. வேதபுரத்தின் இரகஸ்யம் | 10. கோபந்நா |
1. ஆறிலொரு பங்கு
மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள், புரசபாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களி லெல்லாம் மேல் மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காக 'காலி' செய்து விட்டுவிடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டில் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரை அவள் தனது அறையிலிருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்.
அறைக்கடுத்த வெளிப்புறத்திலே பந்தரில் அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தர ராஜூலு நாயுடு கட்டிலின் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக்கொண்டிருந்து சீக்கிரத்தில் 'குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார்.
ஆனால், - மஹாராஜன் - குறட்டைச் சத்தத்தால் வீணைச் சத்தம் கேளாதபடி செய்துவிடமாட்டார். இலேசான குறட்டைதான்.
வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது *பிரமசாரி'ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்டமாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளும் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய் விடுவாள். கீழே எனது தாயார், தகப்பனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கிவிடுவார்கள். எனது தமையனார் மனைவி வயிற்றிலே சோற்றை போட்டுக் கை கழுவிக் கொண்டிருக்கும்போதே குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள்! இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும்.
தமையனாருக்குக் கோட்டையில் ரெவின்யூ போர்டு ஆபீஸில் உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் 'ப்ரமோஷன்'
ஃ ஃ ஃ
வசந்த காலம்; நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுதும் நித்திரையி லிருக்கும். இரண்டு ஜீவன்கள்தான் விழித்திருப்பன. நான் ஒன்று; மற்றொன்று அவள்.
கந்தர்வ ஸ்திரீகள் வீணை வாசிப்பது போல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறிருக்கும். கதையை வளர்த்துக்கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தியெடுத்துக் கொண்டுபோய் அவள் வசம் ஒப்புவித்துவிட்டான்.
அடடா! அவளது இசை எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், எத்தனை நாள் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்திலே தோன்றுவதுபோல.
அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தர ராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் "ராவ்பகதூர்” என்ற பட்டம் பெற்றவர். சுதேசீயம் தொடங்கு முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டவர். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறே னென்றால், அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசீயத் தலைவர்களின் மீது “ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினால் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ் விக்கினங்களில் பெரும்பான்மையானவை என்னாலேயே உண்டாயின.
நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன். “வேதகால முதலாக, இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிக ளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாசனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்றுவரையிருந்த பாரத தேசத்தா ரனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திக ளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள்” என்பது முதலான ஆங்கிலேய ஸத்தியங்க ளெல்லாம் என்னுள்ளத்திலே குடி புகுந்து விட்டன.
ஆனால் கிறிஸ்தவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக்கொண்டு வரும்போதே அவன் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறான், மத விஷயங்களைப்பற்றி விஸ்தாரமான விவகாரங்க ளெழுதிப் படிப்பவர்களுக்கு நான் தலைநோவுண்டாக்கப் போவதில்லை, சுருக்கம், நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி - ஞானஸ்நாநம் பெறவில்லை - பிரம் ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.
சிறிது காலத்திற்கப்பால் பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கே பிரம் ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலை யொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன்: பிரம் ஸமாஜத்தாரின் உபதேசிகளி லொருவனாக வெளியேற வேண்டு மென்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாகச் சென்னப்பட்டணம் வந்து சேர்ந்தேன்.
நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னைப் பல விதங்களில் இமிசை செய்தார்கள். இந்த இமிசைகளினால் எனது சித்த வுறுதி நாளுக்குநாள் பலமடைந்ததே யல்லாமல் எனக்கு மனச் சோர்வுண்டாகவில்லை.
எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமசந்திர நாயுடு - வெளி வேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தா ரெனினும், உள்ளத்தில் பிரம ஸமாஜப் பற்றுடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாசமும், எப்போதும் உபநிஷத்துகள் படிப்பதில் சிரத்தையும் கொண்டிருப்பது கண்டு இவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகை யுண்டாயிற்று. வெளி நடிப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரே யன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸவுகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்புப் பாராட்டினன். என் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக்கொள்வது வழக்கம். 15 ரூபாய் குமாஸ்தாக்களுக் கென்று பிரத்தியேகமான அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக்கொள்ளுவதில்லை. இதுகூடத் தமையனுக்குக் கோப் முண்டாக்கும். “ரஜ புத்ருடு வீடு தொங்கவிதவா! தலலோ மஹா ஆடம்பரமுக பகடி வீடி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான்.
இப்படி யிருக்க, ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக்குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டுமென்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டுமென்றான்.
பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்தபிறகு ஸ்மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் நடத்தி முடிந்த பின்பு, நான் எனது கொள்கைப்படி பிரம் ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடுவுக்கு என்மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்துவிட்டது. ஆதலால் விவாகம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை யெப்படியேனும் சீர்திருத்தி எனக்கே தனது மகளைப் பரணிக்ரஹணம் செய்துகொடுக்க வேண்டு மென்பது அவருடைய இச்சை.
ஃ ஃ ஃ
வசந்த காலம். நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுமையும் நித்திரையி லிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே ஒன்று நான், அவள் மற்றொன்று. இன்பமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மேல்மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால், வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை. மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தனர்.
நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுள்ளத்திலோ இரண்டு எரிமலைகள் ஒன்றை யொன்று சீறி யெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே ஒன்று காதல்; மற்றொன்று பின்பு தெரியவரும். வீணைத் தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில் எனது பின்புறத்தில் ஒரு ஆள்வந்து நிற்பதுணர்ந்து திரும்பிப் பார்த்தேன். மீனாம்பாள்!
இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோ மென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமென்றும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பல முறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் தானும் மஞ்சத்தின் மீது வீற்றிருந்தாள்,
"மீனா, இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்” என்றேன்.
"எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்” என்றாள்.
"என்னது? சொல்லு.”
“நீ பிரமசரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறா யென்ற விசேஷம்."
"ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்" என்று கேட்டேன்.
"வந்தே மாதரம்” என்றாள்.
மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமேயே தெரியு மாதலால், அவள் சொல்லியதி லிருந்து அதிக வியப்புண்டாகவில்லை! அதன்பின் நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்.
“ஆம். பாரத தேசத்தை இப்பொழுது பிரமசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு. மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை யிருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைந்த ஒரு பாழுங் காடு இருப்பதுபோலாய் விட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதைப் பிரமசாரிகளே, காப்பாற்ற வேண்டும்.
“பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமஸாமி முதலியார் மகனாகவேனும் பிறக்காமல் நம் போன்ற சாதாரணக் குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்துகொண்டால் இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப்போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பதுபோல இந்த நரிக்கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது அவனுக்குக் கண் பிதுங்கிப்போய் விடுகிறது. அவனவனுடைய அற்பக் காரியங்கள் முடிவு பெறுவதே பகீரதப் பிரயத்தனமாய் விடுகிறது.
"தேசக் காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரமசாரிகள் வேண்டும். ஆத்மஞானிகள் வேண்டும். தம் பொருட்டு, உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்த சுதேசீயம் கேவலம் ஒரு லௌகிக காரியமன்று; இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மயோகத் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரமசரிய விரதத்தைக் கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்-"
மீனா "ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேனென்று சொல்லுகிறாய்.”
"பார்த்தாயா! பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய். நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை யேற்பட்டிருக்கிறது. அவ் விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன்.
அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற் புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
“நாயன்னா வந்து விட்டார்; நான் போகிறேன்" என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தனள்.
குறட்டை நாயுடு கதவை யுடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளை யெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரைநாழிகைக் கெல்லாம் தமது தொழிலாரம்பித்து விட்டார்.
இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; அவள் மற்றொன்று.
---------
இரண்டாம் அத்தியாயம்
மேலத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி நிகழ்ந்ததற் கப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்தில் பல மாறுபாடுகள் உண்டா யிருந்தன. 'வந்தே மாதரம்' மார்க்கத்தில் நான் பற்றுடையவ னென்பதை அறிந்த மாமா பகதூர் எனக்குத் தனது கன்னிகையை மணஞ்செய்து கொடுப்பதென்ற சிந்தனையை அறவே ஒழித்து விட்டார், சில மாதங்களாக அவர் தமது சாசுவத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசலாக்கத்துக்கு வருவதை முழுதும் நிறுத்திவிட்டார்.
இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரர்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் வந்து கொண்டிருந்தது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை, ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளா? பெண்களே வஞ்சனையின் வடிவமென்று சொல்லுகிறார்களே, அது மெய்தானா? "பெண்ணெனப் படுவ கேண்மோ . . , , , , , , , உள் நிறைவுடையவல்ல, ஓராயிரமனத்தவாகும்" என்று நான் ஜீவகசிந்தாமணியிலே படித்தபோது அதை எழுதியவர் மீனாம்பாளை போன்ற ஸ்திரீயைக் கண்டு, அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே! இப்போது அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால் அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!
'அட மூடா! உனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரமசரிய விரதத்திலே ஆயுள் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வருகின்றாய்: மீனா மற்றொருவனை மணஞ்செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண்மீது இல்வாழ்க்கையில் மையல் கொள்ளப்போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு, அவன் மனைவியாய் விடுவாளாயின், உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் நீயேன் வருத்த மடையவேண்டும்? என்று சில சமயங்களில் எனதுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.
மீட்டும், வேறொருவிதமான சிந்தை தோன்றும். 'அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ்செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராண னோடு ஒன்றுபட்டவ ளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி, அத் தருமத்திற்கு இடையூறுண்டாகு மென்றஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாம லிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? ஏது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் உன்னை மறக்கவே மாட்டேனென்று எத்தனை முறை என்னிடம் பிரமாணஞ் செய்து கொடுத்திருக்கின்றன. அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?"
அப்பால் ஒரு உள்ளம் .........
'அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படி யன்றோ பிள்ளைகள் வேண்டும்! பீஷ்மர் இருந்த தேசமல்லவா? இப்போது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளிக் கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே, அமிருத வெள்ளத்தை விட்டு வெற்றெலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம ஸேவை பெரிதா, ஸ்திரீ ஸேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”
பிறகு வேறொரு சிந்தை - 'எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால் அதுவே நமக்குப் பெரியதோர் பலமா யிருக்கும். 'நீ தர்ம பரிபாலனம் செய், என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸிகத் தலைவனாகக் கொண்டு நோன்புகளிழைத்துக் காலங் கழிப்பேன். ஸ்வர்க்கத்தில் நாமிருவரும் சேர்ந்து வாழலாம்' என்று அவள் உறுதி தருவாளானால் இந்த ஜன்மத்தில் ஜீவயக்ஞம்[$] வெகு சுலபமா யிருக்கும்!
---
[$] வாழ்நாள் முழுதையும் தர்மத்திற்கு அர்ப்பணம் செய்தல்
அப்பால் - . . ,
'ஒரே யடியாக அவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்து விட்டதென்று செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு இகத் தொடர்பொன்றுமே யில்லாமல், தர்ம ஸேவையே தொழிலாக நின்று விடலாம்.'
பின் மற்றொரு சிந்தை .....
'ஆ! அப்படி யொரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரிதாய் விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டதென்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கை யுண்டா ?"
அப்பால் பிறிதொரு சிந்தை ...
'அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பென்பதோர் நிலையு முண்டா? வஞ்சனை, லோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.'
இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறிமாறித் தோன்றி என தறிவைக் கலக்கின. ஆன்ம வுறுதி யில்லாதவ னுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கொப்பாகும்.
இதனைப் படிக்கின்ற தாம் ஒரு கணம் ஸாக்ஷிபோல நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பீராயின் மிகுந்த வியப்புண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏனுண்டாகின்றன?
“மறப்பு நினைப்புமாய் நின்ற - வஞ்ச - மாயா. மனத்தால் வளர்ந்தது தோழி.”
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்கு தருகின்றேன். அதைப் படித்துப் பார்த்தபோது என்னுள்ளம் என்ன பாடு பட்டிருக்கு மென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஓம்.
தஞ்சாவூர்.
உடையாய்.
இக் கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி யெழுதுகிறதென்று தெரியவில்லை . ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்திலே பார்க்கப் போவதில்லை.
நாயன்னா வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னாரு என்பவனுக்குப் பலியிடவேண்டுமென்று நிச்சயம் செய்துவிட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைக ளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேனென்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து வைத்திருக்கிறார். நீ ஒரு வேளை இச் செய்தி கேட்டு இங்கு வருவாயென்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வரமுடியாமல் செய்ய அவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அவன் நாயன்னாவின் பணத்தின்மீது கண்வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான்.
என்னுள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும் அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணை பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமே யல்லாது சுகமிராதென்றும் சொல்லி யனுப்பினேன். அதற்கு அந்த மிருகம் எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கெட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்' என்று மறுமொழி கொடுத்தனுப்பிவிட்டது.
அனேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை யென்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின் மீது கண்மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாத பொழுது கனவெப்படி வரும்? அஃது கனவுமில்லை , நனவுமில்லை , ஏதோ ஒருவகையான காட்சி, அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற செவந்த விழிகளும், கரியமேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும், கையில் சூலமுமாகக் காளி தேவி வந்து தோன்றினள். நான் நடுங்கிப் போய் 'மாதா, என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்' என்று கூறி வணங்கினேன்.
உடனே, திடீரென்று அவளுடைய உருவம் மிகவும் அழகியதாக மாறுபட்டது. அந்த சௌந்தர்யத்தை என்னால் வருணிக்கமுடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி ஸுர்யப் பிரகாசம் போன்ற ஒரு தேஜோமண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன.
அப்பொழுது தேவி எனக்கு அபயப் பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: "குழந்தாய், உனது அத்தான் கோவிந்தராஜனை எனது ஸேவையின் பொருட்டாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெறமுடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ் வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில் வடமேற்கு மூலையில் தனியாக ஓர் பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நாநம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே", மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.
காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்திலிருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டு விழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு, அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்குத் திருப்தி செய்வித்த பிறகு, அவள் உன்னை நானிருக்கு மிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்."
இக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.
---------
மூன்றாம் அத்தியாயம்
மீனாம்பாளுடைய மரணவோலை கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை யெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கத்தைச் சொல்லுகிறேன்.
அந்த ஆற்றாமையினால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாகி வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். “வந்தே மாதர” தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால், என்னை ஸர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவில்லை, ஜனங்களுக்குள் ஒற்றுமையும், பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே ஸித்தியாகு மென்பது என்னுடைய கொள்கை, காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை . அங்கங்கே சில சில பிரசங்கங்கள் செய்ததுண்டு. இதுபற்றிச் சில விடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள், இதனால் நான் ஜனங்களினிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி, பல தடைகள் ஏற்பட்டன.
ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. இதையுந் தவிர, எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும், மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு, உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.
“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் 'நான் செய்கிறேன்' என்று கருதுகின்றான்” என்ற கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன்.
இந்த வீண் கர்வம் நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்துக்கும் பயன்படாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் - எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் - சாதாரணத் தொண்டிழைப்பதற்கே என்னை மாதா வைத்திருக்கிறா ளென்பதை அறிந்து கொண்டேன்.
எனவே, பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்-கப்பால், எனக்குப் போலீஸ் சேவகர் செய்யும் உபசாரங்களும் நின்று போய்விட்டன, பாதசாரியாகவே பலவிடங்களில் சுற்றிக்கொண்டு பலபல தொழில்கள் செய்துகொண்டு லாஹோர் நகரத்துக்குப்போய்ச் சேர்ந்தேன். அங்கே லாலா லாஜ்பத்ராய் என்பவரைப் பார்க்க வேண்டுமென்ற இச்சை ஜனித்தது.
அவரைப்போய்க் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகி, கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு துணிகொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களிலிருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, "நீரும் போய் இவ் விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.
ஆ! - ஆ! ஆ! ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல் பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்க ளெல்லோரும் எனக்குத் தெய்வங்க ளல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதை யுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்?. . . . . லாலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போய்ச் சிறிது காலம் அந்தக் கடமை செய்து கொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன், கவனி.
தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி! நரகத்தைப் பற்றிக் கேள்வி யுற்றிருக்கிறாயா? சரி! தேவலோகம் நரகலோகமாக மாறி யிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது பகவான் ராமசந்திரன் ஆண்ட பூமி! நான் அங்கிருந்த கோரங்களை யெல்லாம் உன்னிடம் எதற்காக விரித்துச் சொல்ல வேண்டும்?
புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை சிறிது பாவமுண்டாகக்கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது?
உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம்! எத்தனை நாள் இப்படி உறங்கி அழியப் போகிறீர்களோ! அட, பாப ஜாதியே, பாப ஜாதியே! ......... இது நிற்க,
ஓரிரண்டு மாதங்களுக் கப்பால், லாலா லாஜ்பத்ராய் எங்களுக்குக் கடித மெழுதி இனி அந்த வேலை போதுமென்று கட்டளை பிறப்பித்து விட்டார்!
பஞ்சந் தீர்க்கும் பொருட்டாக இவர் வாலிபர்களைச் சேர்ப்பதிலிருந்து அதிகாரிகள் ஏதேனும் சமுசயங் கொண்டு மறுபடியும் தம்மைத் தீபாந்தரம் அனுப்பி விடுவார்களோ என்ற சந்தேகத்தை யாரோ அவருடைய புத்திக்குள் நுழைத்து விட்டார்கள்.
நல்லவர்தான் பாபம்; மிகுந்த பக்தி சிரத்தை யுடையவர். தர்மாபிமானத்திலே சிறந்தவர்.
ஆனால், அவரை ஸமுசயமும், பயமும் இடைக்கிடையே வந்து கெடுத்துவிடுகின்றன. என் செய்யலாம்? சாபம், சாபம், நமது ஜாதியைப் பற்றிய சாபம், இன்னும் நன்றாகத் தெரியவில்லை.
ஃ ஃ ஃ
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கெனவே என் மனதில் நெடுங்காலமாக வேரூன்றி யிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின் நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பின ரென்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்க ளென்பதை நோக்கு மிடத்து எனது உள்ளத்தில் மிகுந்த தளர்ச்சி யுண்டாயிற்று. தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் கடைசி வகுப்பின ரென்பதாகச் சிலர் கருதப் படுகின்றனர். தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழிலுடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்களாக வேண்டும்.
ஆனால், இவர்களிலே பலர் மாட்டிறைச்சி தின்பது முதலிய அனாசாரங்கள் வைத்துக்கொண்டிருப்பதால் ஹிந்து ஜாதி அவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசு மாடு மிகப் பிரதானமான வஸ்துக்களிலே யொன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது.
விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால், ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிப் பொதுமை அப் பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம். ஆனால், பஞ்சம், நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு நமது உயர்வு - தாழ்வுகளை விரித்துக்கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்.
-
“ஹிருதய மறிந்திடச் செய்திடுங் கர்மங்கள்
இகழ்ந்து பிரிந்து போமோ?”
சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்க ளென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள்.
நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினரென்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர், மஹமதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி யென்று கருதுகிறது. வகுப்புகள் உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் உண்டு, ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியைத் துர்ப்பலப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக் கெளிதாகின்றது. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'.
1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மகமதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இமிசை பொறுக்க முடியாமல் வருந்திக்கொண்டிருந்த பள்ளர், பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்துகொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்பொழுது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராம லிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள், பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப்பற்றி மேற்குலத்தார்கள் தாம் சிரத்தை செலுத்த வேண்டிய அளவு செலுத்தாம லிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக் கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும் கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.
ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதி பயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது, மடாதிபதிகளும் சந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்த மடைந்து வருகின்றனர். நமது தர்மங்களுக்குக் காவலாக நியமிக்கப்பட்டவர்கள் அதர்மங்களை வளர்த்து வருகிறார்கள், ஹிந்து ஜனங்கள்! ஜனங்கள்! ஜனங்கள்! - நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் - ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.
கோ மாமிச முண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப் படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்க ளெல்லோரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுவார்கள்.
இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்ற வரை முயற்சிகள் செய்யவேண்டு மென்ற அவா எனதுள்ளத்தில் வளரலாயிற்று. பங்காள மென்று சொல்லப்படும் வங்க நாட்டின் கிழக்குப் பிராந்தத்தில் ஸ்ரீ அசுவினி குமார தத்தர் என்ற பெயருடைய தேசபக்தர் ஒருவ ரிருப்பதாகவும், அவர் அந்தப் பிரதேசங்களில் நாமசூத்திரர் (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூஹ வரம்பி னுள்ளே சேர்த்து உயர்வு படுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.
-------------
நான்காம் அத்தியாயம்
கல்கத்தாவுக்கு வந்து சில தினங்களிலிருந்து விட்டு, பாரிஸாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு போய் வழி விசாரணை செய்து கொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாயிலில் ஒரு பெங்காளி பாபு நின்றுகொண்டிருந்தார். அவரிடம் "அசுவினி பாபு இருக்கிறாரா?" என்று கேட்டேன்.
"இல்லை. நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்" என்றார்.
"அடடா!" என்று சொல்லித் திகைத்து நின்றேன். எனது காஷாய வுடையைக் கண்ட அந்த பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய், தாகசாந்தி செய்வித்து விட்டு, "யார், எவ்விடம்” என்பதை யெல்லாம் விசாரணை செய்தார்.
நான் எனது விருத்தாந்த மெல்லாம் தெரிவித்துவிட்டு, என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும், பாபு, நம்மில் ஆறி லொரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?' என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் மிகுந்த வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பி விடும்-போலிருந்தது.
தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாப மடைகிறார் போலுமென்று நான் நினைத்து “ஐயா, உம்முடைய நெஞ்சுபோல இன்னும் நூறு பேருடைய நெஞ்சிருக்குமானால் நமது நாடு செம்மைப் பட்டு விடும்.” என்றேன்.
“ஸ்வாமீ, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணை யுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை, ஹீன ஜாதியாரைக் காக்கவேண்டு மென்ற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை யுண்டென்பது மெய்யே, அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத் திருக்கின்றேன், ஆயினும் என் முகத்திலே தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே யென்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி[#] யம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளி வரக் கேட்டிருக்கிறேன், தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து. வருத்த முண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!" என்று சொல்லித் திடுக்கென்று பேச்சை நிறுத்திவிட்டார்,
---
[#] “மந்திராஜி யம்மா' என்பது மதிராஸ் பிரதேசத்து ஸ்திரீ என்று பொருள் படும். மதிராஸ் என்பதற்கு வட நாட்டார் மந்திராஜ் என்பார்கள்.
அப்பால் என் முகத்தை ஓரிரண்டு முறை நன்றாக உற்று நோக்கினார். (அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார்.)
"ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்,
“ஸ்வாமீஜி, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாஸி, எந்த தேசத்தில் பிறந்தவ ரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்றுபோலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.
மதிராஸ் பக்கத்து யுவதி யென்று அவர் சொன்ன வுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப் புண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்தப் பதைபதைப்பு மிகுதி யுற்றது. (ஸந்யாஸி உடை தரித்திருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆசரித்து வந்திருக்கிறேன். வேஷத்தி லென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்தி லென்ன இருக்கிறது?)
“மீனாம்பாள்?... அட, போ! மீனாம்பா இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே . . . . . ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்' ......... என்பதாக, ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிர விதமான கூத்தாடிற்று.
"ஸதீச பாபு, நானும் மதிராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லும் யுவதியைப் பற்றிக் கேட்கும்போது எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே யிருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியைக் குறித்து உமக்கு வருத்த முண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்" என்றேன்.
கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு, ஒவ்வொரு வாக்கியமும் என்னுள்ளத்திலே செந் தீக்கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் இடையிட்டுக்கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விரஸமா யிருக்குமென் றஞ்சி இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊஹத்தாற் கண்டு கொள்ள வேண்டும்.
ஸதீச பாபு சொல்லலாயினர்:
"அந்த யுவதிக்குத் 'தாஞ்சோர்'', [தஞ்சாவூர்] அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்க ளெல்லோரும் அவளைத் தீன மாதா என்று பெயர் சொல்லி யழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால், அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார், அதை உம்மிடம் சொல்லுகிறேன், கேளும்.
"அவள் ஒரு போலீஸ் பென்ஷன் உத்தியோகஸ்த ருடைய குமாரியாம். தனது அத்தை மகனாகிய ஒரு மந்தராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்ற தீர்மானம் செய்யப் பட்டிருந்ததாம். அவ் வாலிபன் “வந்தே மாதரம்” கூட்டத்திலே சேர்ந்து விட்டான்.
“அதிலிருந்து தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று, ஒரு பச்சிலையைத் தின்று விடவே அவளுக்குப் பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப்போய் விட்டது. அப்பால், தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன் என்ன காரணத்தாலோ அவள் இறந்துவிட்டதாக எண்ணி ஸந்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்"......
"ஏழை மனமே, வெடித்துபோய் விடாதே. சற்றுப் பொறு என்று என்னால் கூடிய வரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை.
'ஐயோ, மீனா! மீனா!' என்று கூவினேன். *
பிறகு "ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும். சொல்லும்" என்று நெரித்தேன்.
ஸதீச சந்திரருக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. "இப்போது ஒன்றுமில்லை; செளக்கியமாகத்தா னிருக்கிறாள்” என்றார்,
"இல்லை யில்லை. என்னிடம் நீர் உண்மை பேச மயங்குகிறீர். நான் உண்மை தெரிந்தால் மிகத் துன்பப்படுவே னென்றெண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரகவேதனைக்குட்படுத்துகிறது. சொல்லி விடும். சொல்லி விடும்” என்று வற்புறுத்தினேன்.
மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
"பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத் கீதையின் மீதும் ஆணையிட்டி-ருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளியாமல் சொல்லும்" என்றேன்.
இந்த ஸத்தியம் நவீன பங்காளத்தாரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்து மென்பது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து, அவருக்குக் கொஞ்சம் கோப முண்டாயிற்று.
“போமையா, மூட ஸந்யாஸி. என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்! இதோ உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக்கொள்ளும். அந்தப் பெண் இங்கு நாம் சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில் தீராத குளிர் ஜுரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாளென்று சொல்லிவிட்டனர். அதற்கு மேல், அவள் காசியிற் போய் இறக்க விரும்பியது பற்றி அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உண்மை சொல்லி விட்டேன். போம்" என்றார்.
"காசிக்கா ?”
"ஆம்."
“காசியில் எந்தக் கட்டத்திலே?"
"அஸீ கட்டத்தில்.”
"அஸீ கட்டத்தில் எந்த இடம்?”
"அஸீக்குத் தெற்கே 'நர்வா என்ற இடமிருக்கிறது. அதில் பல தோட்டங்களும், பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கி யிருக்கிறார்” என்றனர்.
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து விசிறி யெறிந்தார்.
மானத்தைக் கண்டதார்? மரியாதையைக் கண்டதார்? அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறி விட்டேன். வழி யெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய்க் காசிக்கு வந்து சேர்ந்தேன்.
------------
ஐந்தாம் அத்தியாயம்
காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்க ளிருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசம் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்ப துண்டானால், நான் சொல்லப்போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்க ளெல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போயிறங்குவ துண்டு. அங்கு, கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிற தல்லவா? அதில் கீழ்மேற்கு மூலையி லிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்குச் சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள்.
சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நாநம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்ட பிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக் கழைத்துக் கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தாய்ப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்துப் பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது வேளை இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரைவண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந் தறுவாயி லிருக்கிறது.
வண்டியின்மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு பெங்காளி உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் சித்திரம் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால் இந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே, அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதனை நோக்கி, "யாரோ ஒரு ஸந்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் உட்காரச் சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள்ளிருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.
அசுவினி பாபு: "டாக்டர் ஸாஹப், நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டி-ருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?"
டாக்டர்: "மிகவும் துர்ப்பல நிலையிலேதா னிருக்கிறாள், இன்னும் இருபத்து நான்கு மணிநேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால், பிறகு விபத்தில்லை ” என்றார்.
காதில் விஷத் தடவிய தீ யம்புபோல இந்த வார்த்தை கேட்டது. 'மீனா! மீனா! மீனா!' என்றலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் தன்னை மீறி அலறிய சத்தம் கேட்டு அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நானிருந்த பாரிசமாக விரைந்து வந்தனர். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு எழுந்து நின்று வணங்கினேன்.
அவர், "ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன! ஏன் சத்தம் போட்டீர்கள்” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
"பாபு, நான் ஸந்யாஸி யல்ல. நான் திருடன். நான் மஹா நிர்ப்பாக்கிய முடைய பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பா ளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.
உடனே என்னை அவர் மேன்மாடத்தி லுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, "நேற்றெல்லாம் நான் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடு மென்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது" என்றார்.
பிறகு என்னிடம் “கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்” என்றார். அப்படியே உட்கார்ந்தேன். "கண்ணை மூடிக்கொள்ளும்" என்றார். இரண்டு கண் களையும் மூடிக்கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையால் தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போலிருந்தது.
'அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினு மினியாள் மரணாவஸ்தையி லிருக்கிறாள். அவளைப் பார்க்கு முன்பாக உறக்கம் வருகிறதே. இவர் என்னை ஏதோ மாய மந்திரத்துக் குட்படுத்துகிறார். எனது பிராண ரத்தத்தைப் பார்க்காதபடி கெடுத்து விட முயலுகிறார். இந்த மாயைக் குட்படலாகாது கண்விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்' என்று சங்கற்பஞ் செய்துகொண்டு எழுந்து நிற்க முயன்றேன். 'ஹும்' என்றொரு சத்தம் கேட்டது. கண்ணை விழித்துப் விழித்துப் பார்த்தேன். திறக்க முடியவில்லை, மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.
ஃ ஃ ஃ
விழித்தபிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். "மீனா எங்கே? மீனா சவுக்கியமா யிருக்கிறாளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன்.
"எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று மறுமொழி கூறினன்.
சாதாரணமாக எப்போதும்போல இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, ஓடியே மீனா ளிருக்குமிடம் போய்ப் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும் அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரம் நீங்கிப்போ யிருந்தது.
பாரிஸால் கிழவன் செய்த சூதென்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக் கெல்லாம் அசுவினி பாபு தாமே நானிருந்த அறைக்குள் வந்து என்னெதிரே ஒரு நாற்காலியின்மீது வீற்றிருந்தார். என்னை யறியாமல், எனதிரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.
"ஓம்" என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்.
“பால ஸந்யாஸி, கபட ஸந்யாஸி, அர்ஜுன ஸந்யாஸி; உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார்.
மீனா பிழைத்துவிட்டாள் என்ற தெரிந்து கொண்டேன்.
"முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?" என்று கேட்டேன்.
"பூர்ணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்கு ஸமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது" என்றார்.
"அப்படியானால், நான் போகிறேன். அவள் இறந்துபோகப் போகிறா ளென்ற எண்ணத்தினாலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து, அவளுட. னிருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை, நான் போய்வருகிறேன்” என்று சொன்னேன்.
அசுவினி பாபு கடகடவென்று சிரித்துவிட்டுப் பக்கத்தி லிருந்த சேவகனை நோக்கி “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு" என்றேவினார்.
அவன் முகம் கழுவ நீரும், அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அசுவினி குமாரர் அந்தப் பாலை விரலால் தீண்டி என்னிடம் கொடுத்தார். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நாநம் செய்து முடித்ததுபோல், எனது உடலிலிருந்த அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும், செளக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.
"இப்பொழு தென்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?" என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்,
"அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்லுகிறேன்” என்றேன்.
திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தாரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக தேவயக்ஞம் செய்ததுபோல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவுக்குப் பிரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்" என்றார்.
"காளி தேவியின் கட்டளை என்னாகிறது?" என்று கேட்டேன், இந்த ஜன்மத்திலே நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாதென்று காளி தேவி மீனாளுக்கு கூறி, அவளை விஷந் தின்னும்படியாகக் கட்டளை யிட்ட செய்தியை அவருக்கு நினைப் புறுத்தினேன்.
அதற்கவர், “அந்தச் செய்தி யெல்லாம் நானறிவேன். மஹா சக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடித மெழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டு மென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது, மீனாம்பாளுக்கு ஜ்வர முண்டாய்த் தந்தை யெண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே யாம்.
"அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. அதற் கப்பால் அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினள்; ஆனால் மீனாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிற தென்ற தாபத்தால் படப்படப் புண்டாகி, உனக் கேதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு காஷாயந் தரித்துக்கொண்டு விட்டாய். உனக்கு ஸந்யாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும், இது வெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது.
உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப் பிரிவு அவசியமா யிருந்தது. இப்பொழுது நான் போகிறேன். இன்று மாலை நான்கு மணிக்குப் பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்" என்று சொல்லிப் போய்விட்டார்.
மாலைப் பொழுதாயிற்று. நான் ஸந்யாஸி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்குரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர் ஸ்திரீ ரூபம் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கிதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது. வந்தே மாதரம்.
முற்றிற்று.
--------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
புதுச்சேரியினின்றும் 1910 ஆகஸ்டு மாதம் பிரசுரமான கதை நூல் ஆறிலொரு பங்கு என்பதாகும்.
சமூகத்தில் ஆறிலொரு பங்கு மக்களைத் தீண்டத் தகாத சாதியாக வைத்துள்ள கொடுமையை மற்றவர்கள் உணர்ந்து கொண்டு திருந்தவும், ஹரிஜன முன்னேற்றத்தில் தமக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தவும் பாரதி "ஆறில் ஒரு பங்கு" கதையைக் கருவியாகக் கொண்டார்.
சொல்லப்போனால், பிறவி மாத்திரத்திலேயே உயர்வு-தாழ்வு என்ற எண்ணம் கூடாது என்று பாரதி இந்தக் கற்பனைக் கதையிலும் அழுத்தமாக வற்புறுத்துகிறார்,
இந்தக் கதையிலும், இடைக்கிடையே தேசியத் தலைவர்களான லாலா லஜ்பத்ராய், அசுவினி குமார தத்தர் - ஆகியோரின் சிறப்பியல்புகளையும் பாரதி தெளிவுறுத்தி யுள்ளார்.
------------
2. ஸ்வர்ண குமாரி (ஓர் சிறு கதை)
அத்தியாயம் - 1
பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே சாந்த்பூர் (சந்திரபுரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்ஜன பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. இவன் கல்கத்தாவிலே போய் பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் 1904-ம் வருஷம் டிஸம்பர் மாதம் ரஜாவின் பொருட்டாகத் தனது சொந்த ஊராகிய சாந்த்பூருக்கு வந்திருந்தான்.
மனோரஞ்ஜனன் வெகு சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப் போலிருப்பான். மேலும் குழந்தைப் பிராய முதலாகவே பள்ளிக்கூடத்துப் பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலேயும், மற்றும் சிலம்பம், கர்லா முதலிய சுதேசீய தேகாப்பியாசங்களிலேயும் இவன் மிகுந்த தேர்ச்சி யுடையவனாகித் தன்னோடு ஒத்த வயதுள்ள வாலிபர்க ளெல்லாராலும் 'அர்ஜூனன்' என்றழைக்கப்பட்டு வந்தான்.
வயது இருபத்து மூன்று ஆயிருந்த போதிலும் இவனுக்கு என்ன காரணத்தினாலோ இன்னும் விவாகம் நடக்காமல் இருந்தது.
பெங்காளத்தார் மிகுந்த சொற்ப வயதிலேயே விவாகாதிகள் நடத்திவிடுவது முறைமை. இவன் விஷயத்தில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு வேறொரு உள் முகாந்திரமுண்டு.
மனோரஞ்சனனுடைய தந்தை உயிரோடிருந்திருக்கும் பக்ஷத்தில் இவனை இதற்கு முன் விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யிருப்பார். ஆனால் இவனுக்கு ஏழு வயதா யிருக்கும்போதே தந்தை இறந்து போய் விட்டார். தாய்க்கு இவன் ஒரே பிள்ளை யாதலால் அவள் இவன்மீது மிகுந்த அருமை கொண்டவளாகி, வீட்டில் இவன் சொன்னதற்கு மறுசொல் இல்லாமல் காரியங்கள் நடந்து வந்தன.
இந்தக் குடும்பத்திற்கு அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும், உள்ள நிலத்தை விற்றுப் பணம் எடுத்துக்கொண்டு தான் கல்கத்தாவுக்குப் போய் பரீக்ஷைகள் தேறி வரவேண்டுமென்று இவன் சொன்னவுடனே தாய் யாதொரு ஆக்ஷே பமும் சொல்லாமல் சரியென்று சம்மதித்து விட்டாள். இதுபோலவேதான் எல்லா விஷயங்களிலும்.
அடிக்கடி இவனுடைய தாய் இவனைக் கூப்பிட்டு "குழந்தாய் ரஞ்ஜன்! உனக்கு வயதாய் விட்டதே. விவாகம் எப்போதடா செய்து கொள்வாய்?" என்று கேட்டால், இவன் முரட்டுத்தனமாக "அம்மா! அந்தப் பேச்சை மட்டிலும் என்னிடம் பேசாதே" என்று சொல்லிவிட்டு வெளியே போய்விடுவான்.
அந்தரங்கத்திலே இவன் வடக்கு வீதி ஸுர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ண குமாரியின் மீது மோஹம் வைத்திருக்கிறா னென்ற விஷயத்தைத் தாயார் நன்றாக அறிவாள். ஆனால், இவனுக்கும் ஸ்வர்ணகுமாரிக்கும் ஒருபோதும் விவாஹம் நடப்பது சாத்தியமில்லை யென்பது அவளுக்கு நிச்சயந்தான். அப்படி ஒருவேளை அந்த விவாகம் நடப்பது ஸாத்தியமாகக் கூடுமானால் அதை இவள் கேட்டமாத்திரத்திலே இவளுக்குப் பிராணன் போய்விடும். தனது மகன் ஸுர்யகாந்த பாபுவின் பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் காட்டிலும் அப் பிள்ளை இறந்து போவது விசேஷமென்று அவளுக்குத் தோன்றும்.
தனது குல தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணபகவானைத் தியானித்து இவள், "ஸர்வஜீவ தயாபரா! எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண் மீது இருக்கும் மோஹத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?" என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.
----------
அத்தியாயம் - 2
ஸ்வர்ண குமாரியை மனோரஞ்ஜனன் மணம் புரிந்து கொள்வதிலே மனோரஞ்ஜனனுடைய தாயாருக்கு இத்தனை விரோதம் ஏன் இருக்கவேண்டு மென்பதை நமது கதாப்பிரியர்கள் அறிய ஆவலுறலாம். அதன் காரணம் பின்வருமாறு: ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய ஸுரியகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்த போதிலும், பிராமண ஆசாரங்களையும், அனுஷ்டானங்களையும், மார்க்க முறைகளையும், நம்பிக்கைகளையும் திலதர்ப்பணம் செய்துவிட்டு, "பிரம ஸமாஜம்" என்ற புதிய மார்க்கத்தைச் சேர்ந்து கொண்டு விட்டார்.
இந்த ஸமாஜத்தார் "ஜாதி பேதம் இல்லை, விக்கிரஹாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம்" என்பது போன்ற நவீனக் கோட்பாடுகள் கொண்டிருப்போர்.
ஸ்வர்ண குமாரியின் தகப்பனார் எந்த ஜாதிக் காரனுடனும் கலந்து சாப்பிடுவார். அவர்கள் வீட்டு ஸ்திரீகள், பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழை யில்லை யென்று நடப்பவர்கள். ஸ்வர்ண குமாரிக்கு வயது பதினெட்டாகியும் இன்னும் விவாகமில்லை. இதுவெல்லாம் மிகுந்த புராதன இயற்கை கொண்ட மனோரஞ்ஜனன் தாயாருக்குக் காதால் கேட்கக்கூட வெறுப்பாக இருந்தது.
இங்ஙன மிருக்க ஸ்வர்ண குமாரியின்மீது தனது மகன் அடங்காத மையல் கொண்டிருக்கிறா னென்பதையும், அதன் பொருட்டாகவே வேறு விவாகத்தில் விருப்பமில்லா திருக்கிறா னென்பதையும் இந்த அம்மை பல முகாந்தரங்கள் மூலமாக ஊஹித்தறிந்து கொண்ட நாள் முதலாக இவள் மனதிலே தோன்றிய வருத்தங்களுக்கு அளவு கிடையாது. நிற்க.
இங்கே ஸ்வர்ண குமாரியின் நிலை, எப்படி யிருக்கிற தென்பதைக் கவனிப்போம். இவள் மனதிலே மனோரஞ்ஜனனுடைய வடிவம் என்றும் அகலாத சுந்தர விக்கிரஹமாகப் பதிந்து போய் விட்டது. வரம்பில்லாத செல்வமுடைய குடும்பத்திலே பிறந்து, ஸங்கீதம், ஸாஹித்யம் முதலிய கலைகளிலே யெல்லாம் சிறந்த பழக்கம் கொண்டவளாகித் தனக்கு இசைவான கணவனைத் தவிர மற்றப்படி சாதாரண மனிதன் எவனையும் மணம் செய்து கொள்ளக்கூடாதென்று இவள் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.
இவளது ரூபலாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங்கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும், கன்னமும், நெற்றியும், ஸ்வர்ணமயமான சரீரமும், இவளை என்னென்று சொல்வோம்! சுகப்பிரம ரிஷி பார்த்தபோதிலும் மயங்கிப் போய் விடுவார்.
இவளுக்கு மனோரஞ்ஜனன் பாலிய சினேகன். பள்ளித் தோழன். தேவரூபனாகிய இவனையே கடைசிவரை பள்ளித் தோழனாகவும் கொள்ள வேண்டுமென்று இவள் ஆசை கொண்டு விட்டாள்.
இதற்கு முன் எத்தனையோ முறை இவர்கள் அடிக்கடி சந்திப்பதும், காதற் சுவையிற் கனிந்து நிற்பதுவும் உயிரென நோக்கி உள்ளம் வாடுவதும் பொருளிலாத் தெய்விக மொழி பல புகல்வதும் - என இவ்வாறு தமது மோஹ நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.
இப்போது மனோரஞ்ஜனன் மறுபடியும் சாந்த்பூருக்கு வந்தவுடனே வழக்கம் போலவே இவர்களது சந்திப்புகள் தொடங்கி விட்டன.
இதை நமது ஸ்வர்ணத்தின் தந்தையாகிய ஸூரிய காந்த பாபு அறிந்து ஒரு நாள் இவளை அழைத்து, "மகளே, நீ நான் சொன்னபடி ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்து கொள்ளச் சம்மதிக்காம லிருப்பாயானால் இனி என் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். கையிலே காசற்றவனும், விக்கிரகாராதனை செய்யும் மூட பக்திக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனுமாகிய அந்த மனோரஞ்ஜனப் பயலை நீ அடிக்கடி பார்த்துப் பேசுகிறா யென்ற வார்த்தை என் காதிலே படக்கூடாது. அடுத்த தை மாதம் உனக்கும் ஹேமசந்திர பாபுவுக்கும் விவாகம். நீ இப்போதே எனக்கு ஆகட்டுமென்ற வார்த்தை கொடுத்துத் தீரவேண்டும். நான் எத்தனையோ வருஷம் உன்னுடைய மூடத்தன்மையான பிடிவாதத்தைச் சகித்தாய்விட்டது. இனி ஒரு க்ஷணம் பொறுக்க மாட்டேன்.
"இன்று மாலை இங்கே ஹேமசந்திரர் வருவார், நீ தோட்டத்திலே யுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்குப் போயிரு. அங்கே அவரை வரச் சொல்கிறேன். நீ அப்போது அவரிடம் உன்னுடைய சம்மதம் தெரிவித்தே தீர வேண்டும். இல்லா விட்டால் உன்னைக் கையும் கப்பரையுமாக நாளைக் காலையில் வெளியே ஓட்டி விடுவேன்" என்று மஹா கோபத்துடன் படபடவென்று சொல்லிவிட்டு ஸுர்யகாந்த பாபு எழுந்து போய் விட்டார். தனது மகள் கண்ணீர் மாரிக்கிடையே தரைமீது சோர்ந்து விழுந்து விட்டதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
-----
அத்தியாயம் - 3
பகல் முழுவதும் ஸ்வர்ண குமாரி தனது தந்தையின் கொடூரத்தை நினைத்து நினைத்து மனம் தயங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இது போன்ற சமயங்களிலே தாய் இருக்கும் பக்ஷத்திலே எவ்வளவோ தைரியம் சொல்லுவாள், ஆனால், நமது ஸ்வர்ணத்திற்கோ தாயார் அதிபாலியத்திலே இறந்து போய்விட்டாள். வீட்டிலுள்ள ஸ்திரீக ளெல்லாம் தூர பந்துக்களே யல்லாமல் இவள் தன் மனதை யெல்லாம் சொல்லி முறையிடக்கூடியவாறு அத்தனை நெருங்கிய நட்புடையோர் யாரும் கிடையாது.
தனியே நெடுநேரம் யோசித்து யோசித்து இவள் பின் வருமாறு நிச்சயம் செய்து கொண்டாள்: 'தந்தையோ இரும்பு நெஞ்சுடையவர். மனோரஞ்சனனோ தனது தாயிருக்கும் வரை பிரம சமாஜத்திலே சேரப்போவது கிடையாது. நமக்கு இந்த ஹேமசந்திரனை விவாகம் செய்து கொள்ள வேண்டு மென்றே விதி யிருக்கின்றது போலும். மனோரஞ்சனனுடனேதான் வாழ்வே னென்று நான் தெய்வ சாக்ஷியாக விரதம் கொண்டாய் விட்டது. மனோரஞ்சனன் என்னை விவாகம் செய்து கொள்வதும் சாத்தியமில்லை. இனி தந்தை வீட்டிலிருந்து பிச்சைக்காரி போல வெளியே துரத்துண்டு ஏன் அவமான மடைய வேண்டும்? ஹேமசந்திரனையே விவாகம் செய்து கொள்வதாக இன்று மாலை சம்மதமளித்துவிட்டு, விவாகத்திற் கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் விஷத்தைத் தின்று உயிரை மடித்துக் கொள்கிறேன், இதற்கிடையே ஏதேனும் அகஸ்மாத்தாக அனுகூலம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் மரணமே கதி' என இவ்வாறு மனவுறுதி செய்துகொண்டு விட்டாள்.
இந்த ஹேமசந்திரன் யார்? இவன் ஒரு பணக்கார ஜமீந்தார். பிரம் ஸமாஜத்தைச் சேர்ந்தவன். ஆனால் புராதன ஆசாரங்களைக் கைவிட்ட இவன் மற்ற பிரம் ஸமாஜிகளைப் போல அத்துடன் நிறுத்திவிடாமல், மதுபானம், கோமாமிச போஜனம் முதலிய புது ஆசாரங்களும் படித்துக் கொண்டு விட்டான். பார்ப்பதற்கு எருமைபோலே கொழுத்து வெகு குரூபியாக இருப்பவன், மஹாமூடன்; குரூர சிந்தை யுடையவன்.
இவனிடம் ஸ்வர்ண குமாரியின் தந்தை செல்வம் பற்றி விருப்புக் கொண்ட போதிலும் நமது ஸ்வர்ணத்தின் கோமள நெஞ்சு காதலுறுதல் எங்ஙனம் இயலும்? நிற்க.
மாலை 6 மணி ஆயிற்று. பெரிய வனம்போல விஸ்தாரமுடைய சோலையினிடையிலே ஓர் அழகிய கொடி வீட்டின் கண் ஸ்வர்ண குமாரி தனியே உட்கார்ந்திருக்கின்றாள். ஹேமசந்திரன் வந்து சேர்ந்தான்.
"பெண்ணே ! இப்பொழுது உன் மனது எப்படி யிருக்கிறது?"
"சரிதான்! சிறிது நாற்காலியைச் சற்றே விலகிப் போட்டுக் கொண்டு பேச வேண்டும்."
"அடடா! இந்தக் குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே! ஸரிய பாபு நீ சரிப்பட்டு வந்து விட்டாயென்று சொன்னாரே."
"ஆமாம்! அவருடைய கட்டாயத்தின் பேரில் சரிப்பட்டு விட்டேன்."
"ஆனால், என்னை விவாகம் செய்து கொள்வதில் உன் மனதிற்குத் திருப்தி கிடையாதோ?
"கிடையாது."
"அது எப்படியேனும் போகட்டும். உன் தகப்பனார் பலவந்தத்தின் பேரிலாவது நீ என்னை விவாகம் செய்து கொள்ளப்போவது நிச்சயந்தானே"
"ஆமாம்."
"சபாஷ்! ஸ்வர்ணா, மெத்த சந்தோஷம், நீ இனி என் மனைவிதானே! அட்டா என்ன சௌந்தரியம்! என்ன செளந்தரியம்! உன்னைப் பெறுவதற்குப் பட்ட பாடெல்லாம் தகும்! தகும்! கண்ணே ஒரு முத்தம் தரமாட்டாயா?"
"நாற்காலியை விலகிப் போட்டுக் கொள்ளும்."
"நீ எனக்கு மனைவி யென்பதோ நிச்சயமாய் விட்டது. மூடபக்தியுள்ள ஹிந்துக்களைப்போல் நாம் விவாகச் சடங்குகளுக்குக் காத்திருப்பது அவசியமில்லை யல்லவா? விவாஹ பலனை இப்போதே ஏன் அனுபவித்துக் கொள்ளக் கூடாது? இனி உனது திவ்விய சரீரம் என்னுடையதுதானே!"
"விவாக தினத்திலேயே நான் இறந்து போய்விட்டால் எனது சரீரம் உமதாகமாட்டா தல்லவா?"
"அப்படியா யோசிக்கிறாய்? ஆனால் விவாகப் பயனை இப்பொழுதே நுகர்ந்தறிகின்றேன்" என்று சொல்லி ஹேமசந்திரன் பலவந்தமாகத் தழுவக் கையெடுக்கின்றான்.
ஸ்வர்ண குமாரி "கோகோ" என்றலறத் தொடங்கி விட்டாள்.
திடீரென்று கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்ஜனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திர பாபுவைப் பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரையிலே தந்தையாகிய ஸ்ரியகாந்த பாபுவும் வந்து விட்டார். மகள் கீழே மூர்ச்சை யுண்டு கிடக்கிறாள். வரும்போது குடித்து வந்த கள்ளின் வெறியாலும், அடிபட்ட கோபத்தாலும் ஹேமசந்திரன் ஏதோ வாய்க்கு வந்தபடி உளறினான்.
உடனே ஸுரியகாந்தர் மனோரஞ்ஜனனைப் பார்த்து "ஏதடா! பையலே நீ இங்கே ஏன் வந்தாய்? இதெல்லாம் என்ன குழப்பம்?" என்று கேட்டார்.
மனோரஞ்ஜனன் "ஐயா, உமது குமாரத்தி மூர்ச்சை யுண்டு விழுந்து கிடக்கிறாள், இன்னும் சிறிது நேரம் கவனியாம லிருந்தால் மிகவும் அபாயம் நேர்ந்துவிடும். அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யும். மற்ற விஷயங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்" என்றான்.
அதன்படியே ஸூரியகாந்தர் மகளை வீட்டிற் கெடுத்துச் சென்று வேண்டிய சிகிச்சைகள் செய்ததின் பேரில் ஸ்வர்ண குமாரிக்கு முர்ச்சை தெளிந்தது. இரண்டு மணி நேரத்திற்கப்பால் ஸுரிய பாபு வந்து மகளிடம் விசாரணை செய்தததில், அவள் உண்மையாக நடந்த விஷயங்களை யெல்லாம் தெரிவித்தாள்.
அவள் சொல்வதெல்லாம் மெய்யென்று அவருக்குப் புலப்பட்டு விட்டது. 'அடடா! நமது குடும்பத்திற்குப் பெரிய அவமான மிழைக்கத் தெரிந்த பாதகனுக்கா பெண் கொடுக்க எண்ணி யிருந்தேன்?" என்று தம்மைத் தாமே நொந்து கொண்டு ஸரியகாந்தர் சென்று விட்டார்.
மறுநாட் காலை மகளிடம் வந்து, "பெண்ணே உனது மனோரஞ்ஜனனை நான் நேற்றுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், அவன் செல்வமில்லாது வறியனா யிருந்த போதிலும் ரூபத்தினாலும் அறிவினாலும் நமக்கு மருமகனா யிருப்பதற்கு யோக்கியதை யுடையவனாகவே காணப்படுகின்றான், அவன். ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு" என்று சொல்லிச் சென்று விட்டார்.
இது முறையே மனோரஞ்சனனுக்குத் தெரிவிக்கப் பட்டது. ஆயினுமென்ன பயன்? மனோரஞ்சனன் தான் பிரம்ம ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான்.
எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பா னாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்து விட்டது. இவன் கடைசிவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலே யிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ண குமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.
--------
அத்தியாயம் - 5
இப்படி யிருக்க 1906-ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ண குமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு "ஸந்தியா" என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென்பட்டது.
"சாந்த்பூர்வாசி யாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன் பானர்ஜி நேற்று மாலை பிரம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்து விட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய் கிடக்கிறது."
மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ண குமாரிக்குப் புளகமுண்டாய் விட்டது. ஆனந்த பரவசத்திலே அமிழ்ந்து விட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்ஜனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,
"சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெரு விஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும் சிறப்புக்களும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டார். அப்படி யிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அக்கிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந் நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள்
செய்து கொண்டார்களென அறிந்து விசன மடைகிறோம்"
என்று எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்டவுடனே ஸ்வர்ண குமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தவள். இவளுக்கு மனோரஞ்ஜனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மை யுடையது.
'சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதர திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென் றெண்ணி மதி மயங்கினோம்?' என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவாளாயினாள்.
இவள் நிலைமை இங்ஙனமாக, தன் கண்போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கி விட்டானென்று கேள்வியுற்ற வுடனே மனோரஞ்ஜன னுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய் விட்டாள்.
இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளை யெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் சென்றான்.
அங்கே வீட்டில் ஸ்வர்ண குமாரி யில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஜனனிடம் கொடுத்தார்,
"எனது காதலனா யிருந்த மனோரஞ்ஜனனுக்கு,
நெடுங்காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண்விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது, இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின்மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம், நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்."
இங்ஙனம் இக் கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்சனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று.
இப்போது மனோரஞ்ஜனன் புனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறானென்று கேள்வி யுறுகின்றோம்.
-------------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
பாரதி எழுதிய சிறுகதை இதுவாகும். சொல்லப் போனால், 'பிரசார பாணியில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.
பாரதியின் இரண்டாம் சிறுகதை என்பதும் இதன் விசேஷம். - இந்தக் கதை முதன் முதலாக இந்தியா 2-2-1907ஆம் தேதியிட்ட பத்திரிகையில் பிரசுரமானது.
இதை யடுத்துப் பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றது.
இந்தக் கதை காதல் வயப்பட்ட ஸ்வர்ண குமாரி - மனோரஞ்ஜனன் ஆகிய இருவர் வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே காதலைக் காட்டிலும் சுதேசாபிமானமே மாணப் பெரிது என்பதை மிக அழகாக - ஆழமாக எடுத்துச் சொல்கிறது.
தேசபக்தி, திலகர் பக்தி - இந்த இரண்டையும் பாரதி இரு கண்களாகப் பாவித்தார் என்பதை இந்தக் கதை மூலம் நாம் அறிகிறோம்.
---------
3. துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்
அரசு புரிபவர்களாகிய துருக்கர்கள் சாதாரணமாய்க் கொடியோர்களாகவும், காமுகர்களாகவும் இருந்தமையால் கணவர்களில்லாத அநாதைப் பெண்கள் உயிர் துறத்தல் வேண்டு மெனவும், உயிர் துறவாவிடினும் சிர முண்டனம், வெள்ளாடை யுடுத்தல், ஆபரணம் களைதல் முதலிய பல செய்கைகளால் தமது சரீர லாவண்யத்தைப் போக்கடித்துக் கொள்ள வேண்டுமெனவும் நம்மவருள் ஏற்பட்டு விட்டது,
தரும் சக்ரவர்த்தியாகிய ஆக்பர் இந்த சக கமனம் (உடன்கட்டை ஏறல்) என்னும் அதி குரூரச் செய்கையை நிறுத்துவதற்கு வேண்டிய முயற்சிகள் செய்தான்.
பெண்களின் சம்மதமில்லாமல் அவர்களை எரிக்க முயலும் பந்து ஜனங்களையும், புரோகிதர்களையும் கொடிய தண்டனைக்குட்படுத்தினான். அதிசுந்தரவதிகளாகிய ரஜபுத்திரிகளோடு சம்பந்தம் செய்துகொள்ளலா மென்றும், அங்ஙனம் சம்பந்தம் செய்துகொள்வது ஹிந்து - மகமதியர்களுக்குள் நேசத்தை யுண்டாக்கி, இராச்சிய சமாதானத்தை விருத்தி செய்யுமாகையால் அவ்வித விவாகங்கள் தனக்குச் சந்தோஷம் விளைக்கு மென்றும் விளம்பரம் செய்தான்.
இந்த ஆக்பர் மன்னன் ஒரு காலத்தில் கூர்ச்சர் நாட்டை எதிர்த்துப் போர் செய்ய நேரிட்டது. அவ்வாறே அந் நாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளும் சமயத்தில் அவன் சைநியங்களோடு சேரும்பொருட்டு ராஜபுதன் (ரஜபுத்ர ஸ்தான) தேசத்தின் ஓரத்திலுள்ள ஒரு மகமதிய சிற்றரசன் மகனாகிய அப்பஸ்கான் என்பவன் ஓராயிரம் குதிரை வீரருடன் ரோகிணி நதிக்கரை வழியாகக் கூர்ச்சர் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது மேற்றிசை யிரவியின் ஒளியினால் அவரது படைக்கலங்கள் சுவர்ண காந்தி வீசின. அவரது தூள்படாத பொற் சரிகை யாடைகளையும், மலர்ந்த வதனங்களையும், ஆரவாரங்களையும் பார்க்கும்போது அவர்கள் தம் மூரினின்றும் வெளியேறி சிறிது நேரந்தான் கழிந்திருக்கு மென்பது புலப்பட்டது.
அவருட் பலர் அப்போதுதான் முதற் றடவை போர்க்குச் செல்கிறார்கள். அவர்கள் தலைவனாகிய அப்பஸ்கான் வளர்ந்த ஆகிருதி யுடையவனாகவும், அதிரூபவானாகவும் இருந்தான். அவன் முகத்திலோ செளரிய லஷ்மி நடனம் புரிந்தனள்.
இவருடைய படைக்கு 2 மைல் தூரத்துக்கு முன்பாகப் பிறிதொரு சிறுபடை போயிற்று. ஆயின், அஃது இதைப்போன்றதோர் போர்ப் படை யன்று.
ஒரு மூடு பல்லக்கில் ஓர் ரஜபுத்ர கன்னிகையைச் சுமந்து கொண்டு, முன்னும் பின்னுமாகச் சிலர் குதிரைகள் நடாத்திக் கொண்டு போகின்றனர்.
துளஸீபாயி என்ற அந்த ரஜபுத்திரீ ரத்தத்தை அவர்கள் அவளுக்கு மணஞ் செய்வதாக நிச்சயித்திருந்த ரஜபுத்திரனுடைய ஊருக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே கொண்டுபோய் அவளை மரண பரியந்தம் வெளியேற வொட்டாமல் ஓர் அந்தப்புரத்தில் அடைத்து விடுவார்கள். இப்போது கொண்டுபோகும் பொழுதுகூட, அவள் பல்லக்கினின்றும் வெளியே பார்க்கவேனும், சூழவுமிருக்கின்ற வனத்தின் அழகை அனுபவிக்கவேனும், திரைக்கு வெளியே யுள்ள சுத்த ஆகாயத்தை சுவாசிக்கவேனும் கூடாது.
இவ்வாறு இவள் சிவிகை யூர்ந்து செல்லும்போது, சூரியன் அஸ்தமித்து விட்டான். ரோகிணி நதிக்கரையிலுள்ள தனியான மயான கட்டத்தை இவர்கள் சமீபித்துப் போகுங் காலத்து ஒரு கொள்ளைக் கூட்டக்காரர் சிவிகையை வளைந்து கொண்டார்கள்.
அக் கள்வர்கள் சிவிகையுடன் வந்த குதிரை வீரர்களை எளிதில் துரத்திவிட்டு, சிவிகையைக் கைப்பற்றித் திரையைக் கிழித்து, உள்ளிருக்கும் கன்யாமணியை முரட்டுத்தனமாய் வெளியே இழுத்து, "உன் நகைகளை யெல்லாம் உடனே கழற்றிக் கொடு" என்றனர்.
துளஸீபாயி மிகவும் உள்ளம் பதறி, கைகால் நடுக்குற, அச்சத்தினால் ஒன்றுஞ் செய்ய மாட்டாதவளாய்ப் பிரமித்து நின்றாள். ஏது செய்வாள்? பாவம்! செல்வமிக்க பெற்றோர்களின் ஒரே செல்வ மகளாக வளர்ந்து இதுகாறும் தனக்குப் பிறர் மனச் சஞ்சல மிழைத்த லென்பது இன்னதென் றறியாதிருந்த மடக்கொடி இப்போது பிசாசங்கள் போன்ற வடிவினை யுடைய கருணையற்ற வழிப்பறிக்காரருக்குள் ஏகப்பட்டுத் திகைக்கின்றாள்.
ரூப சௌந்தரியத்தைக் கண்டு காட்டு மிருகங்களும் மயங்கு மென்பார்கள். ஆனால், இந்த இரண்டு காற் பைசாசப் புலிகள் சற்றேனும் அருள் காட்டாது நின்றன. இவ்வளவில் ஓர் பாதகன் அவள் நகைகளை யுரியத் தொடங்கினான். பின்னொருவன் அவளது விலை மதிக்கலாற்றாத உடைகளையுந் தீண்டியிருப்பான். ஆயின், திடீரென அவ்விடத்தில் அப்பஸ்கானும் அவன் படை யாட்களும் வந்து வழிப்பறிக்காரர் கூட்டத்தைத் தாக்கினர். அப் பெரும் படைக்கு முன்னிற்க மாட்டாமல் கொள்ளைக்காரர் பறந்து விட்டனர்.
துளசியோ தன் பசுமை வாடித் தரைமீது விழுந்து கிடக்கின்றாள். அவளை மெல்லெனத் தூக்கிக் கைப்பிடித்துப் போய்ச் சிவிகையிற் சேர்த்தான், அப்பஸ்கான் என்ற வீர சுந்தரன். யுத்த சன்னத்தனாய்ப் போர்க்கோலங் கொண்டு விளங்கிய அம் மகமதிய குமரன் தன்னை வழிப்பறிக்காரரினின்றும் காத்து விட்டா னென்பதை யுணர்ந்த சுந்தரி அவனைத் திரும்பிப் பார்த்து அன்பு மிகுதியோடு புன்னகை புரிந்தாள். அவனது மனோகர வடிவும் இளமையும் அவன் தனக்குச் செய்த நன்றியும், அவள் மனத்தே யூன்றி வேர்க்கொண்டன.
மகமதிய விஜயனோ அவள்மிசை யாங்கே அடங்காக் காதல் கொண்டான்.
"முதற் காட்சியினே மூளாக் காதலோர், எவரே காமத்தியன்றார்" ][#]என்பது அனுபவ சித்தமன்றோ?
அவளது கறையில்லாத முகச் சந்திரன் முன்னர், அப் போர் வீரன் நெஞ்சம் சந்திரகாந்தக் கல்லாயிற்று.
------------
[#] முதலில் பார்த்த வுடனே காதல் கொள்ளாமல் யாவர்தாம் பிறகு காதலுட்பட்டார்? என்பது பொருள், 'Whoever loved that loved not at first sight? - Shakespeare,
'என்ன போர்! என்ன கவுரவம்! என்ன வாழ்க்கை ! இந்த ரஜபுத்ர கன்யாமிருதத்தை மணம் புரிந்து அவளுடன் அனவரதம் ரமித்துக் கொண்டு நமது தகப்பன் வீட்டிலேயே இருப்பது நன்று. ஆக்பர் சக்ரவர்த்திக்கு நம்மைப்போ லாயிரம் துணை மன்னருண்டு. நாம் போய் என்ன ஆய்விடும்? அதனால் அவர் நமக்குக் கொடுக்கும் சிறப்பும் சன்மானமும் ஸ்தோத்திர மொழிகளும் என்ன பெறும்? இப்போது அப் போர்ப் பெருமைகளுக்காக நாம் போவோமானால் இனி இவளை எங்கே பார்ப்பது? போரில் நாம் மடியாது பிழைப்பதுதான் என்ன உறுதி?' என்று பலவாறு யோசித்தான், அப்பஸ்கான்.
'ஆகா, என்ன யோசிக்கிறோம்; ஆக்பர் பாதுஷாவின் கொடிக்கீழ் நின்று போர் புரிந்து விஜயலஷ்மியுடன் திரும்பி வருவான் மகனென்று கருதி யிருக்கும் நம் தந்தையும், நம் ஊராரும் இடைவழியில் பாதுகாப்பாளரில்லாது வருந்தி நின்ற ஓர் ரஜபுத்ர சிறுமியைத் திருடர்களினின்றும் காப்பவன் போன்று, தான் அபகரித்து வந்துவிட்டான் என்று தெரிந்தால் நம்மை எவ்வளவு இகழ்ச்சி புரிவார்கள்? ஆதலால் இக் கன்னியை அவள் போமிடம் போக்கிவிட்டு நாம் போர்க்குச் செல்வதே தகுதியா'மென மீட்டும்
அவனுளம் திரிந்தது. இவ்வாறு பலவகை கருதி கடைசியாய்ப் போர்க்குப் போவதே நன்றென நிச்சயித்துக் கொண்டான்.
அதனுள் வழிப்பறிக்காரரை யஞ்சி ஓடிய ரஜபுத்திரக் குதிரை வீரர்கள் தாம் ஒளிந்து கொண்டிருந்த இடங்களினின்றும் மீண்டு வந்து அப்பாஸுக்கு நன்றி கூறிச் சிவிகையை எடுத்துக் கொண்டு சென்றனர். துருக்க வீரன் தானும் அவ்வழியே போக வேண்டி யிருந்ததால் சிறிது தூரம் சிவிகையுடன் சென்றான். ரஜபுத்திர குலத்தவர் செய்த தவத்தின் விளைவாகிய துளசீபாயி வழிப்பறிக்காரர் திரையிலே கிழித்த துவாரத்தின் வழியாக இவனை நோக்கிக் கொண்டே போயினள்.
சற்று நேரத்தில் அப்பஸ்கான் பிரிந்து செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. ததும்பித் தத்தளித்துத் தடுமாறுகின்ற குரலுடன் "ரஜபுத்ர குலவிளக்கே! யான் போய் வருகின்றேன்" என அப்பஸ்கான் கூறலும், துளசி தனது ஜாதியாசாரத்துக்கு விரோதமாகத் திரையை நீக்கிக் கொண்டு அற்புத ஒளி வீசிய விழிகளுடன் அவனை நோக்கித் தன் விரலிலிருந்த ஓர் வயிரக் கணையாழியை எடுத்து "இதைக் கருணை புரிந்து வாங்கிப் போவீராக" என்றாள்.
அவனும் அதை மிகவும் பத்தியுடன் வாங்கி அதிலே பதித்திருக்கும் மணிகளுடன் தனது உயிரையும் பதிப்பான் போல முத்தமிட்டுத் தன் விரலிலணிந்து கொண்டான்.
இதைப் படிப்பவர்களே! அளவு கடந்த காதலுடைய ஸ்திரீ புருஷர்கள் தாம் இனிமேல் ஒருவரை யொருவர் எப்போதும் பார்க்கப் போவதில்லை யென்ற நிச்சயத்துடன் பிரியுங் காலத்து அவர்கள் கண்ணோடு கண்பொருந்தி நோக்குவதை யான் உங்களுக்கு வருணித்துக் காட்ட வல்லனல்லேன்.
சரீர வீட்டிலிருக்கும் சீவன் தன் வடிவை வெளியே காட்டுவதற்குரிய சன்னல்களென்று கண்களைச் சொல்வார்கள். ஆயின் இப்போது இந்த அப்பஸ்கானும் துளசியும் ஒருவரை யொருவர் நோக்கும்போது அச் சன்னல்களின் வழியாக அவர்களிருவரின் உயிர்களும் கீழே குதித்துவிடத் தெரிந்தன. அவ்வண்ணம் சற்று நேரம் பார்த்திருந்த பின்பு அவர்கள் பிரிந்து விட்டனர்.
அப்பஸ்கான் தன் படைகளுடன் போரின் மாண்புகளைக் கவரும் பொருட் டேகினான். துளசியோ தான் இதுவரை கண்டறியாத ஓர் சிறுவனை மணந்து அவனுக்கு மனைவியாக இருந்து தன் வாழ்நாள் கழிப்பச் சென்றாள். ஆனால், இந்த நாள் அவளது உயிரைக் காத்து நெஞ்சைக் கொள்ளை கொண்ட போர் வீரனை ஒருபோதும் மறக்க மாட்டா ளென்பது திண்ணம். அக் குமரனோ தான் பிறந்தது தொடங்கி முதன் முதற் காதலித்த ரஜபுத்ர ஜோதியைச் சுகத்திலும் துக்கத்திலும் தன் மனக்கோயிலிலிருந்து நீக்க மாட்டான்.
(அடுத்த முறையில் இச் சிறுகதை முடிவு செய்யப்படும்)
-------------
அத்தியாயம் இரண்டு
முதலத்தியாயத்திலே விஸ்தரிக்கப்பட்ட விஷயங்கள் நடந்து ஒரு வருஷத்திற்கு மேலாய் விட்டது. அதே ரோஹிணி நதிக்கரையிலே காட்டின் வழியாக ஓர் மகமதிய இளைஞன் குதிரை யேறி வருகின்றான். சூரிய பகவானே தனக்குள்ள ஏழு குதிரைகளில் முதற் சிறப்புடையதாகிய குதிரை சகிதமாக வானத்தினின்றும் இறங்கி, சீதளத்தின் பொருட்டு இந்த வனத்தின் வழியாக வருகிறானோ என்று கண்டோர் சந்தேகமுறும்படியாக, பேரொளி வீசும் வதனத்தோடு வரும் இக் குமரன் நமது அப்பஸ்கானே யாவன். வரும்போதே பின்வருமாறு ஆலோசனை செய்கிறான் :
"அடடா! சென்ற வருஷம் இந்த இடத்திற்கு அனேகமாய் சமீபத்திலேதான் அந்த ரஜபுத்திரப் பசுங்கிளியைப் பார்த்தேன். (கையிலே தரித்திருந்த மோதிரத்தை முத்தமிட்டுக் கொள்கிறான்) இந்த அழகிய மோதிரத்தைத் தனது ஞாபகக் குறியாக எனக்குக் கொடுத்தாள் பேதை! அவளது ஞாபகம் எனக்கு எந்நாளும் இருப்பதற்கு ஓர் அடையாளமும் வேண்டுமா? எனது நெஞ்சத்திலே துளஸீரத்தினம் பதிக்கப்பட்டிருக்கிற தென்றும், நான் இறந்தாலொழிய அவளை மறப்பது அசாத்திய மென்றும் அவளுக்குத் தோன்றவில்லை! கண்டநாள் முதலாக இந்த நிமிஷம் வரை அவள் நினைப்பு வராத ஒரு நாளுண்டா? சோலைகளையும் நீரோடைகளையும் பார்க்கும் போதெல்லாம் அவள் ஞாபகம் வரவில்லையா? (பாடுகிறான்)
-
மந்த மாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
கான நல்லமு துண்ணுறும் போதினும்
சந்த மார்கவி கற்றிடு போதினும்
தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினு மின்புறு போதெலாம்
என்ற னெஞ்சகம் ஏந்திழை பாலதே."
ரோஹிணி நதிக்கரை மயானம் - ரஜபுத்திரக் கூட்டம் - சில பிராமணர்கள் - ஓர் பெண் கதறுதல் - அருகே நெருப்பு வளர்த்தல் - ஒரு பாடை - இவை யனைத்தும் காணப்பட்டன. உடனே விஷய மின்னதென்பது மகமதியக் குமாரனுக்குத் தெரிந்துவிட்டது.
'ஓஹோ ! யாரோ ஒரு ரஜபுத்திரன் இறந்து போயிருக்கிறான், அவனுடைய மனைவியாகிய பெண்ணையும் கூடவைத்து எரித்துவிடப் போகிறார்கள்' என்று தெரிந்துகொண்டான். பெண்ணுக்குச் சம்மதி யில்லாமல் அவளைக் கணவனுடைய பிணத்துடன் வைத்தெரிப்பது சட்ட விரோதமென்று ஆக்பர் சக்ரவர்த்தி விதி ஏற்படுத்தி யிருந்தார். ஆகவே, 'இந்த இடத்திற்குச் சென்று மேற்படி 'சதி தகனம்' நடப்பதைத் தடுத்து விடுவோமானால் நமக்கு ஆக்பர் சக்ரவர்த்தியின் மதிப்பும் சன்மானமும் கிடைக்கு' மென்று அப்பஸ்கானுக்கு எண்ணமுண்டாயிற்று. "ஆனால் எதிரே ரஜபுத்திரர்கள் 4, 5 பேர் வாள் சகிதமாக இருக்கிறார்கள். பிராமணர்களைப் பற்றி பயம் கிடையாது. அவர்கள் நம்மைக் கண்டவுடனே ஓடிவிடுவார்கள். இந்த ரஜபுத்திரர்கள் வசமிருந்து அப் பெண்ணை மீட்பதுதான் கஷ்டம். எல்லாவற்றிற்கும் அல்லா இருக்கிறார். துணைபுரிவார்"- என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தை நெருங்கி வந்தான்.
சமீபத்தில் வரும்போதே இவனுக்கு மனப் பதைப் புண்டாயிற்று. அச்சத்தினாலன்று. அப்பஸ்கான் பயமின்னதென் றறியவே மாட்டான். ஆனால், 'இந்த முகம் எனக்குத் தெரியுமே, இது எனது எனது எனது துளசி யல்லவா? அரே அல்லா மேரீ குலாப்கோ ஜலாவேங்கே! ப-த்! எனது காதல் ரோஜாவையா இப் பாதகர் சாம்பலாக்கப் போகிறார்கள்? இதோ! அவர்க ளத்தனை பேரையும் ஹதம் செய்து விடுகிறேன்' என்று வெகு கோபத்துடன் கிளம்பினான்.
பிறகு திடீரென்று ஓர் யோசனை உண்டாயிற்று. அதன்பேரில் மிகவும் அமைதியாக மெல்லக் குதிரையை நடத்திக்கொண்டு வந்தான். அந்த யோசனை இன்னதென்பது பின்பு அவனுடைய செய்கைகளால் விளங்கும்.
மகமதிய வாலிபன் பையப் பைய நெருங்கி அந்த ஹிந்துக் கூட்டத்தினிடையே வந்து சேர்ந்தான், இவன் வழியே போய் விடுவானென்று கருதி யிருந்த ரஜபுத்திரர்கள் இவன் தம்மருகே வந்து நின்று கொண்டதைப் பார்த்தவுடனே பெருங் கோபங் கொண்டார்கள். அவர்களின் வீர ரத்தம் பொங்கத் தொடங்கிற்று; விழிகள் சிவந்தன, புரோகிதப் பிராமணர்களோ மனதிற்குள்ளே நடுங்கத் தொடங்கினர். இங்ஙனமாக, ரஜபுத்திரர்களிலே வயதேறிய ஒருவன் அப்பஸ்கானை நோக்கி, "ஏனையா, இங்கு வந்து நிற்கிறீர்? மதக் கிரியைகள் நடக்கும் இடத்தில் தாம் வந்திருப்பது சரியில்லை . தாம் போகலாம்" என்றனன்.
அப்பஸ்கான் மறுமொழி கூறுவதன் முன்பாக மற்றொரு ரஜபுத்திரன் "நீ யாரடா மகமதியன்? இந்தக் கணமே போய்விடும். இல்லாவிடில் உன் தலை இரண்டு துண்டாய் விடும்" என்றான். இதற்குள்ளே அங்கு வந்திருந்த 4, 5 ரஜபுத்திரர்களும் வாள் சகிதமாக அப்பஸ்கானை வந்து சூழ்ந்துகொண்டார்கள். ஒரு ரஜபுத்திரன் வாளைத் தூக்கிவிட்டான். உடனே அப்பஸ்கான் வாளை யோங்கும் ரஜபுத்திர இளைஞனை நோக்கி, "சகோதரா, நான் ஆக்பர் சக்ரவர்த்தியின் படைத் தலைவன் என்பதை அறிவாயாக!" என்றான்.
ரஜபுத்திரர்களுக்குள்ளே முதியவனா யிருந்தவன் மேற்படி சொல்லைக் கேட்டவுடனே அவன் முகத்திலே சிறிது அச்சக்குறி புலப்பட்டது. ஆனால், அதனை உடனே மாற்றிக் கொண்டுவிட்டான். எனினும், மற்ற வாலிப ரஜபுத்திரர்களுக்குக் கோபம் மேலிட்டதே யொழிய வேறொன்றுமில்லை. எனினும் வாளோங்கிய வீரன் தனது கையை இறக்கி விட்டான்.
இனி அப்பஸ்கான் சொல்கிறான் : "எனது கையிலும் ஓர் வாளிருக்கிறது. இதுவும் கொஞ்சம் சண்டை பார்த்திருக்கிறது. நான் குதிரை மேலிருக்கிறேன். நீங்கள் கீழே நிற்கிறீர்கள். கையைத் தூக்க வேண்டாம்! பத்திரம்! நான் சொல்வதை மட்டிலும் அமைதியுடன் கேளுங்கள்" என்று கூறினன்.
ரஜபுத்திரர்கள் "சொல்!" என்றனர்.
அப்பஸ்கான் "பெண்ணுடைய சம்மதி யில்லாமல் சதி தகனம் செய்யக் கூடாதென்பது ஆக்பர் சக்ரவர்த்தியின் ஆக்கினை. அந்த இளங் கன்னியை நீங்கள் எரிக்கப் போகிறீர்கள்! அவள் அழுது கூக்குரலிடுவதைப் பார்த்தால் அவளுக்குச் சம்மதமில்லை யென்று தெரிகிறது. ஆதலால் நீங்கள் இந்தக் குரூரச் செய்கையை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் ராஜ கோபத்திற் குள்ளாவீர்கள்" என்றான்.
வயது முதிர்ந்த ரஜபுத்திரன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளே நமது கோபக்கார ரஜபுத்திர இளைஞன், "சிச்சீ! மிலேச்ச நாயே! ராஜ கோபத்துக்குப் பாத்திரப்படுவோ மென்கிறான்! யாரடா ராஜா? பாரத பூமிக்கு மிலேச்சனாடா அரசன்?" என்று வாளால் ஒரு வீச்சு வீசினான். அந்த வெட்டு தன்மீது விழாதபடி அதிசதுரனாகிய அப்பஸ்கான் திடீரென்று தனது குதிரையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு தனது பெரிய வாளை யோங்கி ஒரு வெட்டு வெட்டினான். ரஜபுத்திரத் தலை யொன்று துண்டாய் விழுந்து விட்டது. உடனே சண்டை வெகு பலமாய் விட்டது.
கீழே நின்ற ரஜபுத்திரர்களும் குதிரைமேலிருந்த மகமதியனும் இங்ஙனம் ஒருவரை யொருவர் கத்திகளால் வெட்டி ரத்தம் பெருகிக் கொண்டிருக்க, நெருப்பிற் கிரையாகும்படி வைக்கப்பட்டிருந்த பெண்மணியின் நிலைமை யாதாயிற் றென்பதைக் கவனிப்போம். பிராமணர்கள் மந்திர கோஷத்தை நிறுத்திவிட்டார்கள். இவர்கள் அங்கிருந்து எழுந்து ஓடவேண்டுமென்ற ஆசை இருந்த போதிலும் அதற்குக்கூட மனோ தைரியமில்லாமல் ஸ்தம்பிதமாக நின்று போயினர்.
அப்பஸ்கான் வருவதன் முன்பாக 'கோ! கோ!' வென்று அலறிக்கொண்டிருந்த துளசி, அவன் வந்ததைப் பார்த்தவுடனே தனது அழுகையை நிறுத்திக் கொண்டு விட்டாள். அவனைக் கண்டவுடனேயே அவளுக்கு இனம் தெரிந்துவிட்டது. எப்படியேனும் தனது பிராணனை அந்த ராக்ஷதர்கள் வசத்திலிருந்து காப்பதற்குரிய ஜீவரக்ஷகன் வந்துவிட்டானென்று அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. எனவே, மகமதியனும் ராஜபுத்திரர்களும் வாய்த் தருக்கம் செய்துகொண்டிருந்த பொழுதெல்லாம் இவள் கூச்ச லில்லாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். அவர்கள் வாள் யுத்தம் தொடங்கிய உடனே மறுபடியும் அலறத் தொடங்கிவிட்டாள்.
இப்பொழுது முன்போல தன்னுயிரின் பொருட்டுக் கதறுகின்றவ ளல்லள். தன்னை முன்னாள் திருடர்கள் வசத்திலிருந்து காத்தவனும், இப்போது கொலையாளிகள் வசமிருந்து காக்க வந்திருப்பவனும் ஆகிய மகமதிய விஜயனுடைய இன்னுயிரின் பொருட்டு அலறுகிறாள், "ஈசா! ஈசா! அவனை வெட்டுகிறார்களே! ஐயோ, எனது ராஜா! பாதகியாகிய என் பொருட்டு நீயும் உயிர் விடவா வந்திருக்கிறாய்? என்னைக் கொல்லப் போகிற பாவிகள் உன்னையும் கொல்லுகிறார்களே! ஐயோ! ஐயோ!" என்று கூக்குரலிட்டாள். முகத்திலேயும் மார்பிலேயும் கைகளால் புடைத்துக்கொண்டாள். தரையிலே விழுந்து புரண்டாள். தனது பரிமள முயர்ந்த, நீண்ட கருங்கூந்தலைப் பிய்த்துக் கொண்டாள், ஐயோ, அந்தப் பசுந் துளசி மான் அன்று பட்ட துன்பங்களை நினைக்கும்போது எமக்கு, மனங் கன்றுகிறது,
இப்படி யிருக்கும்போது ஓர் ரஜபுத்திரன் பின்புறமாக வந்து பாய்ந்து அப்பஸ்கானுடைய பிடரியின்மீது ஓர் பலமான வெட்டு வெட்டியதையும், அதிலிருந்து இரத்தம் சரேலென்று வெளியேறியதையும் பார்த்தாள். உடனே "ஐயோ" என்று வான் கலங்குமாறு கதறி விட்டு மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள். இதற்குமுன் புரோகிதப் பிராமணர்களுக்கு எப்படியோ தைரியமுண்டாகி ஓடத் தலைப்பட்டு விட்டார்கள். தனியாக மூர்ச்சித்து விழுந்து கிடக்கும் ஸ்திரீ ரத்தினத்துக்கு உதவிபுரிய வேண்டுமே யென்பதுகூட அந்தப் புரோஹிதப் பேடிகளுக்குத் தோன்றவில்லை.
இடுகாட்டிலே மூர்ச்சித்து விழுந்த துளஸீதேவி அதற்கப்பால் நடந்த விஷயங்க ளெவற்றையு மறிய மாட்டாள். மறுநாள் இவளுக்குச் சித்த சுயாதீனம் சிறிதேற்பட்டு கண்விழித்துப் பார்க்கும்போது தான் ஒரு மாடத்திலே யிருப்பதாகக் கண்டாள். தன்னைச் சுற்றி மகமதியச் சேடிப் பெண்கள் விசிறியிட்டு வீசுதல் முதலிய உபசரணைகள் செய்துகொண்டிருக்கக் கண்டாள். இவள் கண் விழித்ததைப் பார்த்தவுடனே மகமதிய ஸ்திரி யொருத்தி இவளுக்குப் பலமுண்டாகும்படியாக ஏதோ ஒரு மருந்தையோ அல்லது உணவையோ கொண்டுவந்து வாய்க்குள்ளே அருள முயன்றாள்.
துளஸீதேவி அந்த உணவைத் தனக்கு வேண்டாமென்று கையால் விலக்கி விட்டாள். பிறகு திடீரென்று ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலகத்தே சென்ற உயிர் திகைப்பதுபோலத் திகைப்பாளாகி, "அம்மா! நான் எங்கே யிருக்கிறேன்?" என்று கேட்டாள்.
"தேவி! தாம் சிறிதேனும் பயமடைய வேண்டாம். தமக்கு இங்கே எவரும் எவ்விதமான இடையூறும் செய்யப் போவதில்லை. எங்கள் எஜமான் உங்களை எங்கேயோ மரணத்திலிருந்து சம்ரக்ஷணை புரிந்து இங்கே கொணர்ந்து வைத்ததாக எம்மிடம் கூறினார். அவர் இன்னும் சிறிது நேரத்திற் கெல்லாம் இங்கே வருவார்" என்று ஒரு மகமதியப் பெண் கூறினாள். துளஸிக்கு எல்லாம் கனவைப்போலவே யிருந்தது. இன்ன இடத்திலிருக்கிறோ மென்பது அவளுக்கு நன்கு விளங்கவில்லை. எனினும் மிகுந்த சிரமத்துடன் "அம்மா, உங்கள் எஜமான் யாவர்?" என்று கேட்டாள்.
"எங்கள் எஜமான் பெயர் அப்பஸ்கான்" என்று சேடி யொருத்தி மறுமொழி கூறினாள்.
உடனே சென்ற காலத்தின் விஷயங்களனைத்தும் துளஸியின் கருத்துக்குத் தெளிவெனத் தெரிந்து விட்டது. இவள் மனத்திலே ஒருவிதமான பயம் ஜனிக்கத் தொடங்கிவிட்டது. அப்பஸ்கானிடம் தனக்கிருந்த காதலைக்கூட மறந்துவிட்டாள். 'மகமதியனுடைய வீட்டில் நாம் சிறைப்பட்டிருக்கிறோமே. இதனால் என்ன நேருமோ? என்ற பயம் மாத்திரம் இருந்தது.
ரஜபுத்திர கன்னிகை யாதலால், மனத்திலிருந்த பயம் சற்று நேரத்திற்கெல்லாம் நீங்கிப் போய்க் கோபமுண்டாகி விட்டது. உடனே இவளுக்கிருந்த களைப்பெல்லாம் போய்ப் பலங் கொண்டவளாகித் தன்னைச் சுற்றியிருந்த மகமதியப் பெண்களை நோக்கி, "சகோதரிகளே, நான் ஹிந்து வாதலால் உங்கள் ஜாதியாரைத் தொடுவது எனது குல தர்மத்திற்கு விரோதமான விஷயம். தாங்கள் தயவுசெய்து எட்டி நிற்க வேண்டுமே" என்று சொல்லி மஞ்சத்திலிருந்து இறங்கிக் கீழே சென்று உட்கார்ந்து கொண்டாள்.
மகமதியப் பெண்கள் ஆச்சரியத்தையும் கோபத்தையும் அடைந்தவர்களாகி, ஏதோ மறுமொழி சொல்ல விரும்பிய போதிலும், தங்கள் எஜமான் கட்டளையை எண்ணி வாயை மூடிக்கொண்டிருந்து விட்டார்கள். எனினும் இவள் ஏதோ மிகப் பிரமாதமான நடிப்பு நடிக்கிறாளென்று குறிப்புத் தோன்றுமாறு தமக்குள்ளே கண் சமிக்கினை செய்து கொண்டார்கள். இதைக் கண்ட துளஸிக்கு மிகுந்த உக்கிரமுண்டான போதிலும், அதனை மனதிலே யடக்கிக் கொண்டு சும்மா இருந்து விட்டாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பஸ்கான் வந்து சேர்ந்தான். சேடிகள் தாமே விலகிவிட்டனர்.
இன்னும் மூர்ச்சை மயக்கம் தெளிந்திருக்க மாட்டா ளென்று யெண்ணி வந்த அப்பஸ்கான் எதிரே மிகுந்த சோர்வும் சிறிது கோபமும் துலங்கிய முகத்தினளாகி உட்கார்ந்து கொண்டிருக்கும் துளஸிதேவியைப் பார்த்தவுடனே ஒருவிதமான ஆச்சரியம் எய்தினான்.
தனது குலாசாரப்படி தூர இருந்து ஸலாம் செய்துவிட்டு அருகே போய் "அம்மே, இன்னம் யாதொரு சிரம் பரிகாரமும் செய்து கொள்ளவில்லைபோல் தோன்றுகிறதே!" என்றான்.
உடனே மிகுதியான கோபம் மேலிட்டவளாகி ஆக்கிரகம் ததும்புகின்ற குரலுடன், "ஏ, மகமதியா, நான் ராஜபுத்திர கன்னிகை யென்று அறியக் கடவாயாக! அவமானம் அடைவதற்கு முன்பு உயிரைத் துறந்து கொள்வதில் எங்கள் ஜாதிப் பெண்கள் என்றும் பெயர் வாங்கியவர்கள். வழியிலே பார்க்கப்பட்ட கன்னிகையை மரணத்திலிருந்து சம்ரட்சிப்பவன்போல் பாவனை செய்துவிட்டு முறைப்படி யெனது தந்தை தாயாரிடம் கொண்டு சேர்க்காமல், மகமதிய அந்தப்புரத்துக்குக் கொண்டுவந்து விட்ட உனது கண்முன்பாக இதோ இன்னம் சிறிது நேரத்துக்கெல்லாம் உயிரை விட்டு விடுகிறேன், பார்" என்று சொல்லி, மாடத்தின் மீதிருந்து கீழே குதித்து இறந்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்து சென்றாள்.
உடனே மிகுந்த சோகத்தையும் மனப் பதற்றத்தையும் அடைந்தவனாகிய மகமதிய குமாரன், "அல்லாவின் மேலாணையிட்டுச் சொல்கிறேன், உனது கருத்துக்கு விரோதமாக உன்னை எவ்விதமான தீங்குக்கேனும் உட்படுத்தவேண்டு மென்ற ஞாபகம் எனக்குக் கனவிலேகூடக் கிடையாது. காமப் பிசாசுபற்றிய அநேக மகமதிய மூட வாலிபர்களைப்போல நீ என்னையும் நினைத்து விடவேண்டாம். உன் தந்தையின் வீட்டுக்கு உன்னைக் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லுகிறாயே. உனது தந்தை யின்னார் என்பதைப் பற்றியாவது இன்ன ஊரைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றியாவது, எனக்கு யாதொன்றும் தெரியாது என்பதைச் சிறிதேனும் ஆலோசிக்கவில்லை அல்லவா? உன்னைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலா மென்றால் நீ மூர்ச்சை நிலையி லல்லவா யிருந்தாய்!
மேலும் அந்த ஸ்திதியில் உன்னை அருகிலுள்ள ஏதாவது ராஜபுத்திரக் கிராமங்களுக்குக் கொண்டு சென்றால் என்னையும் கொலை புரிந்து உன்னையும் எரித்திருப்பார்கள் அல்லவா? என் மனத்திலிருந்த காதலை யெல்லாம் அடக்கிக்கொண்டு, மெய்ம்மறந்திருக்கும் பெண்ணைக் கையாலே தொடுவதுகூட நியாயமில்லை யென்று எண்ணி, உன்னை என் ஆயுதங்களினால் எடுத்து, குதிரை மீது வைத்துக் கொண்டு வந்திருக்கும் என்மீது நீ தப்பிதமான எண்ணங்கள் கொள்ளுதல் உனக்கு நியாயமாகுமா?" என்று விம்மிக் கூறினன்.
இதை யெல்லாம் கேட்டவுடனே, "மகமதிய இளவரசே, என்னை க்ஷமித்து அருளுவீராக!" என்று கூறி, துளஸி கண்ணீர் ததும்பி விட்டாள்.
"எனக்கு எத்தனையோ முறை கைம்மா றளிக்கக்கூடாத பெரு நன்மைகள் செய்திருக்கும் தமது மீது பெண்புத்தியினால் தப்பிதம் எண்ணி விட்டேன். மேலும் - மேலும் .... " என்று ஏதோ கூற வந்தவள் வாய் குழறிப்போய், கைகளால் முகத்தை மூடிக் கொண்டு தேம்பத் தொடங்கி விட்டாள்.
அதைப் பார்த்து மனஞ் சகியாதவனாகிய மகமதிய வீரன், "அம்மே, உன் மனநிலை இப்போது நேரில்லை. நான் சிறிது நேரத்திற்கப்பால் வருகிறேன். அதற்கிடையே ஓர் ஹிந்து ஸ்திரீயின் மூலமாக உண்டு, சிரம் பரிஹாரத்துக்குரிய சாமான்க ளனுப்புகிறேன். அவற்றை உபயோகித்துக்கொண்டு சிறிது நித்திரை புரிந்தெழுவாயாக! ஸலாம்!'' என்று சொல்லி மாடத்தினின்றும் கீழே இறங்கி வந்துவிட்டான்.
மறுநாட் காலை துளஸீபாயி அரண்மனை மாடத்திலே ஒரு நேர்த்தியான அறையில் ஒரு ஸோபாவின்மீது சாய்ந்து கொண்டிருந்தாள். இவள் முகத்திலே ஒரு புதிய தெளிவும் அற்புதமான சவுந்தரியமும் விளங்கி நின்றன. இவளது கண்கள் மலர்ச்சி பெற்றிருந்தன. ஏதோ ஆச்சரியமான மாறுபாடுகள் இவள் மனதிலே ஏற்பட்டிருக்கின்றன வென்பது முகத்தைப் பார்த்த வுடனேயே விளங்கிற்று. இம் மாறுபாடுகள் யாவை யென்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
முதலாவது, ராஜபுத்திர ஸ்திரீயாகிய துளஸிக்கு மகமதிய குலத்தார் மீதிருந்த இயற்கை விரோதமானது நீங்கிப் போய் விட்டது.
ஆரம்பத்திலே வயிரக் கணையாழி மாற்றிய காலத்தில் மகமதிய சுந்தரன்மீது ஒருவிதமான காதல் நெஞ்சிலே வேரூன்றிய போதிலும் பின்னிட்டு நெடுநாள் அது மறைந்தே கிடந்ததல்லவா? அதிலும் இதற்கு முந்தின நாள் மாலையில் தான் கன்னி விரதத்திலேயே நாள் கழிக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் எப்படியேனும் தற்கொலை செய்து உயிர் துறந்து கொள்ள வேண்டுமென்றும் நிச்சயித்துக் கொண்டா ளல்லவா? இந்த நிச்சய மெல்லாம் சிதறுண்டு போய்விட்டது. விரித்து விரித்தெழுதி பிரயோஜன மென்ன?
மகமதிய வீரன் மீது மறுபடியும் அடங்காத காதல் பெற்றவளாகி அவனை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ண மேற்பட்டால் எத்தனை மாறுபாடுகள் தோன்றுமோ அத்தனை மாறுபாடுகளும் அவளிடத்தே தோன்றிவிட்டன.
இந்தச் சிறு கதையைப் படிப்போர்களுக்கு இது சிறிது ஆச்சரியமாகத் தோன்றக்கூடும்.
பரம்பரையாக மகமதிய துவேஷிகளான மஹாவீரர்களின் குலத்திலே ஜனித்த துளஸி தேவிக்கு அவளது ரத்தத்திலேயே மகமதிய வெறுப்பு கலந்திருந்தது. உறக்கத்திலேகூட மகமதிய னொருவனைக் கொலை புரிவதாகக் கனவு காணக்கூடிய ஜாதியிலே பிறந்த இந்த வீர கன்னிகை மகமதியனை விவாகம் செய்து கொள்ளலாமென்று நிச்சயிப்பது அசம்பாவிதமென்று நினைக்கக்கூடும்.
ஆனால், அப்படி நினைப்பவர்கள் காதலின் இயற்கையை அறியாதவர்கள். காதல் குலப் பகைமையை அறிய மாட்டாது, காதல் மத விரோதங்களை அறியமாட்டாது. காதல் ஜாதி பேதத்தை மறந்துவிடும். காம் தெய்வத்தின் உபாஸகர்கள் "அத்வைதி"களே யல்லாமல் "துவைதி"களல்ல.
தன்னை ஒருமுறை கொள்ளைக்காரர்களிடமிருந்தும், மற்றொரு முறை கொலைகாரர்களிடமிருந்தும் காப்பாற்றி அதற்கப்பாலும்கூடத் தன்னைப் பலவந்தமாக அபஹரித்துக் கொள்ளவேண்டு மென்ற நோக்கம் சிறிதேனுமற்று விளங்குபவனாகிய மகமதிய குமாரனது வாலிபத்தையும், வீரத் தன்மையையும், லாவணியத்தையும் பெருந்தன்மையையும் நினைக்க நினைக்க அவளது மனம் உருகிப் போய்விட்டது. ஜாதியாசாரம், மத துவேஷம் - என்பவை யெல்லாம் அழிந்து போய்விட்டன.
மேலும் டெல்லி நகரத்தில் ஆக்பர் சக்ரவர்த்திக்கும் அவரது முக்கியப் படைத்தலைவர்களுக்கும் அனேக ராஜபுத்திர முடிமன்னர்கள் தமது பெண்களை விவாகம் செய்து கொடுத்திருக்கிறார்க ளென்ற வதந்திகள் அவள் காதிலே விழுந்திருக்கின்றன. அதெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
சமயத்திற்குத் தக்கபடி அனுகூலமான காரியங்களும், அனுகூலமான விவகாரங்களும் நினைப்பிற்கு வருவது ஸஹஜந்தா னல்லவா?
# # #
பலவித ஆலோசனைகளுக்கிடையே முழுகி, இடையிடையே பெருமூச்செறிந்துகொண்டும், புன்னகை புரிந்துகொண்டும் சாய்ந்திருந்தவளாகிய துளஸிதேவி சிறிது நேரத்திற்கப்பால் திடுக்கென்று எழுந்து நின்றாள்.
எதிரே மகமதிய வீரன் வந்தான். மஹா சவுந்தரியம் திகழுமாறு பால்போலப் பரந்து விளங்கும் வதனமும், அதிவிசாலத்துடன் வீரலக்ஷ்மியின் வாசஸ்தானமென்று தோன்றிய மார்பும், தேவஸ்திரீகளும் கண்டு அறிவு கலங்குமாறு ஒளிவீசிய கண்களும், பரந்த நெற்றியும் உடையோனாகிய அப்பஸ்கான் வருவதைக் கண்டவுடனே துள்ஸியின் உடலில் ஒருவிதமான ரோமாங்கிதமும், அவள் முகத்திலே ஒருவிதமான நாணக் குறியும் தோன்றின.
அப்பஸ்கான் : ஸலாம் பாயீஜீ!
துளஸி : ராம் ராம்!
அப்பஸ்கான் : தமது ஊரும், தந்தை தாய்களின் பேரும்
தெரிவிக்கும் பக்ஷத்தில் அவர்களுடன் தாம் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இப்பொழுதே செய்கின்றேன்.
துளஸி : எனது தாய் - தந்தையர்கள் நான் ஒரு மகமதியருடன் ஊருக்கு வந்தால், என்னை அங்கீகாரம் செய்து கொள்வார்களோ, என்னவோ தெரியாது. ஆதலால் அவர்களையே இங்கே தருவித்து விடலாமென்று நினைக்கிறேன். ஆனால், ஒருவேளை அதுவரை நான் இங்கே யிருப்பது தமக்குக் கஷ்டமா
யிருக்கக்கூடும். அப்படியானால் –
அப்பஸ்கான் : பிரிய ஸுந்தரீ! நான் இங்கு வரும்போது இதுமுதல் உன்னைச் சகோதரியாகவே பாவிக்க வேண்டுமென்று என் மனதைக் கல்லாக்கித் தயார் செய்து கொண்டு வந்தேன். ஆனால், இப்போது உன் முக ஜ்யோதியின் முன்பு என் நெஞ்சம் பனி கரைவதுபோலே கரைகின்றது. உனது கண்கள் என் மனதில் பலவிதமான நம்பிக்கைகளை உண்டுபண்ணுகின்றன. ஏழையாகிய என்னை இன்னுமொரு முறை ரக்ஷிப்பது போல் பாவனை செய்துவிட்டு, மறுபடியும் வெறுப்புக் காட்டினால் அதை என்னால் சகிக்க முடியாது. திருவுளத்தை இப்போதே நன்கு தெரிவித்து விடவேண்டும்."
அதன்பின்பு தம்மை யறியாமலே ஏதோ ஒருவிதமான சக்தியின் செய்கையால் இவ் வாலிபனும் கன்யா ரத்னமும் ஒரே மஞ்சத்தின்மீது வீற்றிருக்குமாறு நேர்ந்துவிட்டது.
துளஸியமுது தலைகுனிந்து புன்னகை பூத்து நின்றனள்.
----------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
பாரதி எழுதிய முதல் குறுங்கதை இதுவாகும். இந்தக் கதையைச் சக்ரவர்த்தினியில் 1905 நவம்பர் மாதம் தொடங்கியபோது அவர் இரு இதழ்களிலேயே முடிக்கக் கருதினார் என்பதை 'அடுத்த முறையில் இச் சிறுகதை முடிவு செய்யப்படும்' என்ற குறிப்புடன் முதல் அத்தியாயத்தின் இறுதியிலே எழுதியதால் உணர்கிறோம்.
இச் சிறுகதையின் தலைப்பைப் பின்னிட்டு வந்த இதழ்களில் துளஸீபாயி சரித்திரம் என்றே பாரதி சுருக்கித் தந்து விட்டார்.
அந்த நாளில் வெளிப்பட்ட கதை நாவல்கள் யாவும் சரித்திரம் என்ற பெயராலேயே பிரசுரமாயின.
உதாரணமாக, வேதநாயகம் பிள்ளை தாம் எழுதிய கதைக்குப் பிரதாப முதலியார் சரித்திரம் என்றும், ராஜம் அய்யர் தாம் எழுதிய கதைக்குக் கமலாம்பாள் சரித்திரம் என்றும் பெயர் சூட்டினர்.
இதன் தாக்கம் பாரதிக்கும் ஏற்பட்டது போலும்!
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியம் இல்லாதது என்பதை உணர்த்திக் காட்டுவதுடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும் பாரதி பிரசார நோக்கோடு இந்தக் கதையை எழுதினார் என்று கொள்ளலாம்.
ஷெல்லிதாஸ் என்ற புனைபெயரில் இச் சிறுகதையைப் பாரதி எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கதை முதன்முதலாக நூலாக்கம் பெற்ற கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதியில் பதிப்பிக்கப்பெற்றது.
------------
4. தாஸியும் செட்டியும் (ஒரு சிறு கதை)
கலிங்க ராஜ்யத்திலே
முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வல்லப் ராஜன் என்ற வேந்த னொருவன் அரசு செலுத்தி வந்தான். அவன் தனக்கு வரும் அரசிறையில் ஒரு பகுதியைத் "தாஸி நிதி" என்றொரு தனி நிதியாகப் பகுத்து வைத்தான், கோயில் நிதி, கல்வி நிதி, ராணுவ நிதி, விவசாய நிதி, தொழில் நிதி முதலிய மற்றெல்லா நிதிகளைக் காட்டிலும் அவ்வரசன் அந்த தாஸி நிதிக்கு அதிகத் தொகை ஏற்படுத்தினான். அந்த நிதிக்குத்தான் செலவும் அதிகம்.
வருஷத்துக்கு சுமார் நூறு, நூற்றிருபது தாஸிகளுக்குக் குறையாமல் அந்த ராஜா விலைக்கு வாங்குவது வழக்கம். அவர்களுக்குத் தன் அந்தப்புரத்தில் தனித் தனி வஸதிகள் செய்து கொடுத்தான். அவன் பட்டத்துக்கு வந்து பதினாறு வருஷங்களாயின. இது வரை சுமார் ஆயிரத்தெண்ணூறு தாஸிகள் அவன் அந்தப்புரத்தில் சேர்த்து விட்டான். தசரதன் அறுபதினாயிரம் ஸ்திரீகளை மணம் புரிந்து கொண்டதாகவும், துருக்கி ஸுல்தான்களில் பலரும். இந்தியாவில் பல நவாபுகள், ராஜாக்கள், நிஜாம்கள், திவான்கள் முதலியோர்களும் ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரங்களில் சேர்த்து வைத்திருந்த தாகவும், புராணங்களிலும், சரித்திரங்களிலும், நவீன நடைகளிலும் அறிகிறோம்.
இதென்னடா சுத்த மோசமான வேடிக்கை! ஆயிரம் பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் எப்படிக் குடித்தனம் பண்ணுவான் என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெரிய வியப்புண்டாகிறது.
ஒரு பெண்டாட்டியை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது பெரும்பான்மையான ஜனங்களுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அப்படி யிருக்க, நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் மனைவியரை ஒருவன் கட்டியாளத் துணிவு கொண்டதை எண்ணுமிடத்தே, எனக்கு நகைப்பும் துயரமும் கலந்து விளைகின்றன. இது நிற்க..
ஒருநாள், மேற்கூறிய வல்லபராஜன் கொலுவில் ஒரு கிழப் பிராமணன் இரண்டு அழகிய, இளமை யுடைய தாஸிப் பெண்களை அழைத்துக் கொண்டு வந்தான். இது வரை அந்த ராஜா விலைக்கு வாங்கிய பெண்களை யெல்லாம் ஸாதாரண வயிரங்களுக்கும், மற்ற மணிகளுக்கும் ஒப்பிடலாமெனில், இவ்விரண்டு பெண்களையும் கீர்த்தி பெற்ற 'கோஹினூர்' (ஒளிக்குன்று) என்ற ராஜ வயிரத்துக் கொப்பிடலாம். இவர்களை நோக்கி அவ்வரசன் அளவில்லாத மகிழ்ச்சி படைத்தவனாய், "இவர்களுக்கு விலை யென்ன சொல்லுகிறீர்?" என்று மேற்படி பிராமணனிடம் கேட்டான்,
"மூத்த பெண் மோஹனாங்கிக்கு விலை ஒன்பதினாயிரம் பொன், இளையவளாகிய லலிதாங்கிக்கு விலை பத்தாயிரம் பொன்" என்று பார்ப்பான் சொன்னான்.
இக்காலத்தில் சிலர் பல தேசத்துத் தபால் முத்திரைகள் சேகரித்து வைப்பதுபோல், அந்த ராஜா தாஸிகளைச் சேர்த்து வைத்துப் பழகி, அந்தத் தொழிலில் கை தேறியவனாய் விட்டபடியால் தாஸிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுவதில் அவன் மஹா நிபுணனாயினன். ஆதலால், இப் பெண்களுடைய உண்மையான அருமை யுணராமல், அந்த நாட்டுப்புறத்துப் பார்ப்பான் இத்தனை ஸுந்தரமான மாதருக்கு இத்தனை குறைந்த விலை சொல்வதைக் கேட்டுக் களிப் பெய்தியவனாய்த் தன் கார்யஸ்த னொருவன் மூலமாகப் பொக்கிஷத்தினின்றும் அந்த க்ஷணமே இருபதினாயிரம் பொன் கொண்டு வரும்படி செய்து பிராமணன் கேட்டபடி விலை பத்தொன்பதினாயிரம் பொன்னும், அவனுக்கு இனாமாக ஆயிரம் பொன்னும் கொடுத்து, மேலே ஜோடி சால்வை, வயிரக் கடுக்கன், வயிர மோதிரம் முதலிய வரிசைகளும் கொடுத்து, அந்தப் பிராமணனை மரியாதை பண்ணி அனுப்பி விட்டு, தாஸிப்பெண்க ளிருவரையும், அந்தப்புரத்திலே சேர்ப்பித்து விட்டான்.
பிறகு, அந்தப் பார்ப்பான் அரசனிடமிருந்து வாங்கிய இருபதினாயிரம் பொன்னையுங் கொண்டு, தன் பிறப்பிடமாகிய நாகபுரத்துக்கு ஸமீபத்திலுள்ள கிராம் மொன்றுக்குத் திரும்பிப்போய் அங்கு, மேற்கூறிய வேசைப் பெண்களை விலைப்படுத்தி வரும்படி தன்னிடம் ஒப்புவித்த தாய்க் கிழவியிடம், "உன் பெண்களைத் தலைக்கு மூவாயிரம் பொன் வீதம் விற்றேன். ஆறாயிரம் பொன் கிடைத்தது. அதில் ஆயிரம் பொன் எனக்குத் தர கெடுத்துக்கொண்டேன். மிச்சம் ஐயாயிரம் பொன்னை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொய் சொல்லி அவளிடம் ஐயாயிரம் பொன்னைக் கொடுத்து, மிஞ்சிய பதினையாயிரம் பொன்னையும் தன் கையில் அழுத்திக் கொண்டான்.
கலிங்க நாட்டு நிலை யறியாதவளாகிய அந்தத் தாய்க் கிழவியும், தன் பெண்களுக்கு இத்தனை உயர்ந்த விலை கொண்டு வந்த பிராமணனிடம் மிக நன்றியுணர் வுடையவளாய், அவனுக்கு ஒரு பசு மாடும், இரண்டு பட்டுக்கரை வேஷ்டிகளும், ஒரு பொற் கிண்ணமும் தானம் பண்ணினாள். இது நிற்க.
கலிங்க தேசத்தில் வல்லப ராஜன் தன் அந்தப் புரத்திலுள்ள ஆயிரத் தெண்ணூறே சில்லரை மாதர்களைக் காட்டிலும் லலிதாங்கியிடம் அதிக மோஹப் பைத்தியங் கொண்டு விட்டான். அரசன் இங்ஙனம் லலிதாங்கிக்கு அடிமையாய் விட்டதினின்றும், ராஜ்யத்தில் லலிதாங்கி இட்டதே சட்டமாய் விட்டது.
இதினின்றும் அந்த வேசைமகள் பொருள் சேர்ப்பதையே பெரிய வெறியாகக் கொண்டு ராஜ்யத்தைச் சூறாவளிக் கொள்ளை யிடத் தொடங்கி விட்டாள். மந்திரி உத்யோக முதல் வீதி பெருக்கும் சக்கிலி உத்யோகம் வரை, ராஜ்யம் முழுதிலும், யாருக்கு எந்த வேலை வேண்டுமானாலும், லலிதாங்கிக்கு லஞ்சம் கொடுக்காத வரை, அந்த வேலை கிடைக்காது.
பாடகர், நாட்டியக்காரர், வாத்யக்காரர், குஸ்தி செய்வோர், கவிராயர், நாடகக்காரர், மந்திரவாதிகள், வித்வான்கள், விகடகவிகள், கனபாடிகள், கூத்தாடிகள் - ராஜாவிடம் ஸம்மானம் வாங்கும் பொருட்டு யார் வந்தாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஸம்மானத் தொகைகளில் மூன்றிலொரு பங்கு லலிதாங்கிக்குக் கொடுப்பதாக முதலாவது ஒப்புக்கொண்டா லொழிய, அரண்மனையில் அவர்களுக்கு மூன்று காசுகூடக் கிடைக்க வழி யில்லாமல் போய்விட்டது.
வியாபாரிகளிடமும் தொழிலாளிகளிடமும் அவள் கொள்ளை யிட்ட திரவியங்களுக்குக் கணக்கே யில்லை. மேலும், ராஜாங்கத்தின் ஸாமான்யத் தீர்வைப் பணத்திலும் பாதிக்குக் குறையாமல் அவள் தனக்குப் புதிய புதிய ஆபரணங்கள் பண்ணுவதில் செலவிட்டுக் கொண்டு வந்தாள்.
அந்த வல்லப ராஜனுக்கு நீதி சிகாமணி என்ற மந்திரி யொருவன் இருந்தான். அவன் அரசனுடைய நடைகளை யெல்லாம் கண்டு, மிகவும் மனம் நொந்து, பலமுறை கெஞ்சியும் இடித்துச் சொல்லியும் அரசனைச் சீர்திருத்த முயன்றான். ஆனால், மஹா மூடனாகிய வல்லப ராஜன் தன் மந்திரியின் உயர்ந்த சற்போதனைகளைச் செவி கொடுத்துக் கேட்கவே யில்லை.
இதினின்றும், அந்த மந்திரி நிராசை கொண்டவனாய்ப் பின்வருமாறு தன் மனதுக்குள்ளே யோசிக்கலானான்:
"ஆஹா, இந்த அரசு நிச்சயமாகவே அழிந்து போய்விடும். அது உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், பசுமரத் தாணி போலவும் விளங்குகிறது. மூடனாகிய வல்லபன் நாம் எவ்வளவோ இடித் திடித்துச் சொல்லியும் கேளாமல், லலிதாங்கியின் மோஹ வலையில் வீழ்ந்து நாட்டைப் பெரும் பாழாக்குகிறான்.
நாட்டிலே பஞ்சமும், பிணிகளும், கொள்ளைகளும் தலைவிரி கோலமாகக் கூத்தாடுகின்றன. எந்தத் திசையிலும் நமக்குக் கடன் கொடுப்பாரில்லை. நாட்டுப் பொக்கிஷத்திலே காசென்ற லேசமே கிடையாது. தேசத்தை லலிதாங்கி யொருத்தி யிருந்து அட்டை உறிஞ்சுவதுபோலே உறிஞ்சுகிறாள். ஜனங்களைப் பஞ்சத்தின் வாயினின்று மீட்க வழியே இல்லை. சோறில்லாதவர்கள் கலகந் தொடங்குவார்கள்.
சென்ற சில மாஸங்களாக உள்நாட்டுப் போர் தொடங்குவதற்குரிய சூழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதுவரை வெளிப்படாத சூழ்ச்சிகள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ, கடவுளுக்குத்தான் தெரியும். இந்த ராஜ்யத்தைக் கவிழ்க்கும் பொருட்டாகச் செய்யப்படும் வேறு சில சூழ்ச்சிகளைப் பற்றி நமக்கு உளவுகள் தெரிந்தாலும், நம்மால் அடக்க முடியாதபடி அவை அத்தனை வலியவரால் நடத்தப்படுகின்றன. இந்த அரசனுடைய நெருங்கிய சுற்றத்தார்களிலேயே சிலர் இவனுக்கு நாசந் தேடுகிறார்கள். நாமென்ன செய்யலாம்?
நாமே இந்த அரசனுக்கு முக்ய பலமாக இருப்பதை யுணர்ந்து இவனுடைய விரோதிகளிற் பலர் முதலாவது நம் உயிரைப் போக்கிவிட ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி, இந்த நாட்டில் இருந்தால் நமதுயிருக்குச் சேதம் விளைவது திண்ணம்.
இந்த நாட்டின் பல திசைகளிலும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாக நமக்குக் கிளைத்து வரும் சத்துருக்க ளனைவரிலும் அதி பயங்கரமான சத்துரு லலிதாங்கி, லலிதாங்கியின் பகை யென்றால் பிசாச லோகம் முழுதும் பகையாவதற் கொப்பாகும்.
இவளுடைய கையாட்கள் எந்த இடத்தில் நம்முடைய விழிகளில் அக்னித் திராவகத்தை ஊற்றுவார்களோ? எந்த இடத்தில் நம்முடைய செவிகளை விஷந் தோய்த்த கத்தியால் அறுப்பார்களோ? எந்த நிமிஷத்தில், எங்கே, நம்முடைய சிரம் துண்டிக்கப்படுமோ? எங்கே, எந்த ஸபையில், எந்த விருந்தில், எந்த நேரத்தில் நம்மை விலங்கிட்டுக் கொண்டு போக ஏற்பாடு செய்வாளோ? எங்கே, நம்மைச் சித்திரவதை புரிய ஏற்பாடு செய்வாளோ? என்று பலவிதமாக யோசனை பண்ணி, ஓரிரண்டு தினங்களுக்குள்ளே தனக்குரிமையான நகைகளையும் பணங்களையும் எடுத்துக்கொண்டு, ரஹஸ்யமாக இரவிலேயே புறப்பட்டுத் தன் குடும்பத்தாருடன் காசிக்குப் போய்விட்டான்.
காசிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, தைர்ய மடைந்தவனாய்த் தான் புறப்பட்டு வந்ததற்குரிய காரணங்களை யெல்லாம் விஸ்தாரமாக எழுதி வல்லப் ராஜனுக்கோர் ஓலை விடுத்தான்.
வல்லப ராஜனுக்கு மேற்படி நீதி சிகாமணி யென்ற மந்திரி ஒருவனே முக்கிய பலமாக இருந்தான். அவனைத் தவிர ஓருயிர் கூட வல்லப ராஜன் மீது இரக்கஞ் செலுத்தவில்லை. நாட்டார் அனைவரும் அவனையும் லலிதாங்கியையும் ஒழித்து விடவேண்டுமென்ற எண்ணங் கொண்டிருந்தார்கள்.
எனவே, மந்திரி நாட்டை விட்டோடிய பின் ஒரு வாரத்துக்குள் தேசத்தில் பெருங் கலகம் விளைந்தது. ஜனங்கள் வல்லப் ராஜனை ராஜ்யத்தினின்றும் நீக்கி அவனுடைய தாய் பாகஸ்தனாகிய மற்றொருவனைப் பட்டத்துக்கு வைத்தார்கள். அப்போது வல்லப ராஜன் ஒரு வாளால் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு மாய்ந்தான்.
குலத் தொழிலிலே சித்தம் இயல்பாகப் பாயும். ஆதலால் வல்லப ராஜன் மடிந்தவுடன் மோஹனாங்கியும் லலிதாங்கியும் தத்தம் உடைமைகளை யெடுத்துக் கொண்டு கலிங்க ராஜ்யத்தினின்றும் தப்பியோடிப் போய் பிற நாடுகளுக்குச் சென்று, அங்கு தம்முடைய பரம்பரைத் தொழிலாகிய வேசைத் தொழிலையே நடத்த வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
மோஹனாங்கியிடம் லக்ஷக்கணக்காகவும், லலிதாங்கியிடம் கோடிக் கணக்காகவும் திரவியங்கள் இருந்தன. கலிங்க நாடு பஞ்சத்தினால் அழிய, அதன் செல்வத்தின் பெரும் பகுதியை இவ்விரண்டு தாசிகளும் வாரிக்கொண்டு போயினர்.
மோஹனாங்கி காசிக்குப்போய் அங்கு ஹரிச்சந்திர மஹாராஜன் சந்திரமதியை விலை கூறிய கடைத்தெருவில் ஒரு பெரிய மாளிகை கட்டிக் கொண்டு, அங்கு வேசைத் தொழில் புரிந்து வந்தாள்.
இளையவளாகிய லலிதாங்கியின் சரிதையை அடுத்த அத்யாயத்தில் விஸ்தாரமாகச் சொல்லுகிறோம்.
--------
இரண்டாம் அத்தியாயம்
லலிதாங்கி அமிர்த நகரத்தில் குடியேறியது
தெற்குக் கடலினிடையே சந்திரோதயத் தீவு என்றொரு விடமிருக்கிறது. அதற்கு இக்காலத்தில் மலேய பாஷையில் "பூலோ பூலாங்" என்று பெயர் - சொல்லுகிறார்கள். அந்தத் தீவின் ராஜதானிக்கு அக்காலத்தில் அமிர்த நகரம் என்று பெயர். அங்கு நமது கதை நடைபெற்ற காலத்தில் சந்திர வர்மன் என்ற தமிழ்வேந்தன் அரசு செலுத்தி வந்தான். சுற்றி, ஆயிரம் தீவுகள் அவனுடைய ஆட்சியின் கீழே யிருந்தன. எல்லாப் பக்கத்து மன்னர்களிடமிருந்தும் அவனுக்குக் காணிக்கைகள் வந்தன, "தென் கடல் தலைவன்" என்ற விருதுடன் வாழ்ந்தான். பூமண்டலத்தில் வியாபாரக் கப்பல் வீதிக்கு அவனே தனிப் பெருங் காவலனாக விளங்கினான்.
அக்காலத்தில், கலிங்க ராஜ்யத்தினின்றும் கப்பலேறி, லலிதாங்கி நேரே சந்திரோதயத் தீவில் அமிர்த நகரத்தில் வந்திறங்கினாள். கப்பலை விட்டிறங்கி அந் நகரத்தில் ஒரு தர்மசாலைக்குப் போய், அங்கே தனக்கென்று சில அறைகள் வாங்கிக்கொண்டு குடி புகுந்தாள்.
நகரத்தின் விசேஷங்களையும் வியாபாரப் பாங்குகளையும், அங்குள்ள விசேஷச் செல்வர்களின் குணம், நடை முதலிய விவரங்களையும் பற்றி விசாரணை செய்துகொண்டு, அந்த தர்மசாலையிலேயே சிறிது காலந் தங்கி யிருந்தாள். அப்பால், மாதம் முந்நூறு பொன் சம்பளம் கொடுத்து விதுரப்பிள்ளை யென்ற வேளாளன் ஒருவனைத் தனக்குக் கார்யஸ்தனாக நியமனம் செய்தாள்.
அப்பால் அவள் விதுரனைக் கொண்டு சில உயர்ந்த வியாபாரிகளைத் தருவித்துத் தன்னிடமிருந்த நகைகள், பொன், மணி, ரொக்க நாணயம் - எல்லாவற்றுக்கும் மொத்த மதிப்புப் போடுவித்தாள். கலிங்க நாட்டிலிருந்து அவள் கொள்ளை யிட்டுக்கொண்டு வந்த செல்வத்துக்கு மொத்த மதிப்பு முந்நூறு கோடிப் பொன் விழுந்தது.
முதலாவது, ஐந்து கோடிப் பொன் செலவிட்டு நகர் நடுவிலே அந் நாட்டரசனுடைய மாளிகையைக் காட்டிலும் மிகவும் அற்புதமான காட்சி யுடைய பெரிய மாளிகை யொன்று கூட கோபுரங்கள், ஏழு விஸ்தாரமான மாடிகள் - அதாவது, உப்பரிகைகளுடன் கட்டுவித்தாள்.
அந்த மாளிகை கட்டும் பொருட்டு, யவன தேசத்தினின்றும் கைதேர்ந்த சிற்ப சாஸ்திரி யொருவனை வரவழைத்தாள், மாளிகை முழுதும் பளிங்கு வேலை, உச்சத்திலே ஏழாம் உப்பரிகையிலிருந்த லீலா மண்டபத்தில் மாத்திரம் விதானத்திலும், தூண்களிலும், பொன்னும் விலையுயர்ந்த ரத்தினங்களும் இழைக்கப்பட்டிருந்தன.
எல்லா உப்பரிகைகளிலும் பல லீலா மண்டபங்களும், விருந்துக் கூடங்களும், நாடகசாலைகளும், சித்திர சாலைகளும் மிகவும் அழகாக நிர்மிக்கப்பட்டிருந்தன. மாளிகையைச் சுற்றிச் சதுரமாக, மிக விஸ்தாரமான தொரு பூஞ்சோலை செய்வித்தாள். அதில் பல நீரோடைகளும், சுனைகளும், பளிங்குத் தடாகங்களும், அருவிகளும், புஷ்பமாரி போலே நீர் தூவும் பொறிகளும் சமைப்பித்தாள்.
உலக முழுதிலுமுள்ள பல பல தேசங்களினின்றும் இனிய கனிதரு மரங்களும், அருமையான மருந்துப் பூண்டுகளும், மூலிகைகளும், பூச்செடிகளும், கொடிகளும் வரவழைத்து அத் தோட்டத்தில் வைத்தாள். அது தேவேந்திரனுடைய நந்தவனத்தைப் போல் விளங்கிற்று, அதற்கு "நந்தனம்" என்றே பெயருமிட்டாள்.
அப்பால், லலிதாங்கி தன் கார்யஸ்தனாகிய விதுரனை அழைத்து, "இந்தத் தீவு முழுமையிலும் தனக்கு நிகரில்லாத திறமை கொண்ட வைத்யன் ஒருவனை மாஸம் ஐந்நூறு பொன் சம்பளத்தில் நம்மிடம் வேலை பார்க்கும்படி திட்டம் பண்ணிக் கொண்டுவா" என்றாள்.
விதுரனும் அங்ஙனமே ஸாக்ஷாத் தன்வந்திரி முனிவருக்கு நிகரான லங்காபுத்ரன் என்ற மருத்துவனைத் திட்டம் பண்ணிக் கொடுத்தான்.
பிறகு, லலிதாங்கி விதுரனை நோக்கி, "ஆளுக்குப் பதினாறு பொன் மாஸச் சம்பளமாக, மாளிகை வாயில் காப்பதற்குப் பன்னிரண்டு வாட் சேவகரைத் திட்டம் பண்ணிக் கொடு" என்றாள்.
அவனும் அங்ஙனமே சுத்த வீரராகிய பன்னிரண்டு காவலாளர் திட்டம் பண்ணினான்.
அதன்பின் லலிதாங்கி, விதுரனை நோக்கி, "இருபது தாஸிப் பெண்களைத் தயார் செய்து கொண்டு வா. எல்லாருக்கும் ஏறக்குறையப் பதினான்கு அல்லது பதினைந்து மட்டத்தில் ஸம் வயதாக இருக்கவேண்டும்,
ஏறக்குறைய ஸமான உயரமும் அகலமும் உடையோராய், ஒரே சாயலுடையோராக இருக்க வேண்டும். ஒவ்வொருத்தியும் அருமையான அழகுடையவளாகவும் ஸங்கீதம், பரதம், எழுத்துப் படிப்பு முதலியவற்றில் மிக்க தேர்ச்சி யுடையவளாகவும் இருக்க வேண்டும். தலைக்கு நூறு பொன் சம்பளம் கொடுப்போம்" என்றாள்,
இது கேட்டு விதுரனும் அவள் சொல்லிய லக்ஷணங்க ளெல்லாம் பொருந்திய இருபது தாசிப் பெண்களைத் தயார் செய்து கொடுத்தான்.
அப்பால் லலிதாங்கி ஒரு பொற் பலகையில் வயிர எழுத்துக்களாலே பின்வருமாறு விளம்பரம் பெரிதாக எழுதுவித்து, வீதியிலே போவோருக் கெல்லாம் நன்றாகத் தெரியும்படி தன் மாளிகையின் வெளிப்புறத்திலே தொங்கவிட்டாள்.
--------
"பூலோக ரம்பை" விளம்பரம்
கலிங்க தேசத்து ராணியும், பூமண்டல முழுமையிலும் அழகிலே நிகரற்றவளுமாகிய ஸ்ரீமதி லலிதாங்கி தேவி இந்த மாளிகையில் வந்து தாஸியாக வசிக்கிறாள், இங்கே இந்திர போகங்களுக் கிணையான பலவகை இன்பங்கள் பெறலாம். இரவொன்றுக்குக் கூலி ஆயிரம் பொன்.
இங்ஙனம் விளம்பரம் நாட்டித் தன் குலத்துக்குரிய வியாபாரம் தொடங்கினாள்.
அவளுடைய செல்வம் நாளுக்கு நாள் காட்டுத் தீயைப்போலே மிகுதிப்பட்டுக் கொண்டு வந்தது.
சொக்கநாதன் செட்டி தாஸி வீட்டிலே பட்ட பாடு
அப்போது, தமிழ் நாட்டிலிருந்து சந்திரோதயத் தீவுக்குப் போய் வியாபாரம் செய்துகொண்டிருந்த சொக்கநாதன் செட்டி என்ற தனவைசிய னொருவன் லலிதாங்கியின் வீட்டுக்குப் போக வேண்டுமென்று நிச்சயித்து, ஒரு நாள் மாலையில், ஆயிரம் பொன் முடிப்புக் கட்டி யெடுத்துக்கொண்டு, மிகவும் டம்பமாக உடை உடுத்துக்கொண்டு, அதிக படோபமான குதிரை வண்டியிலேறிப் போய், அவள் மாளிகையின் வாயிலுக் கெதிரே இறங்கினான்.
அங்கே காவல் காத்துக் கொண்டு நின்ற வாட் சேவக னொருவனை நோக்கிச் சொக்கநாதன் செட்டி, "ஆரங்கே? சேவகா, இப்படி வா. உள்ளே லலிதாங்கியிடம் போய்ச் சொக்கநாதன் செட்டியார் விஜயம் செய்திருப்பதாகத் தெரிவி" என்றான்.
சேவகன் உள்ளே போய், விதுரனிடந் தெரிவித்தான். உடனே கார்யஸ்தனாகிய விதுரப் பிள்ளை வெளியே வந்து, செட்டியை மிகவும் மரியாதையுடன் மாளிகைக்குள் அழைத்துச் சென்றான்; செட்டியிடம் ஆயிரம் பொன்னை வாங்கிப் பணப் பெட்டியில் வைத்துக் கொண்டான்; லலிதாங்கியின் உருவம் மிகவும் அழகாகவும், நுட்பமாகவும் வரையப்பட்டிருந்த மோதிர மொன்றைச் செட்டியிடம் கொடுத்தான்.
"இது எனக்கு இனாமா?" என்று செட்டி கேட்டான்.
அதற்கு விதுரன், "அப்படி யன்று; செட்டியாரே இந்த மோதிரம் தங்களிட மிருந்து நான் ஆயிரம் பொன் பெற்றுக் கொண்டதின் அடையாளம். இதை உள்ளே ஒவ்வொரு அறையிலும் காண்பிக்க வேண்டும்" என்று சொல்லி விட்டு ஒரு கைம்மணியைக் குலுக்கினான்.
அந்த வெள்ளி மணியின் ஒலி சன்னமாக இருந்தாலும், அந்த மாளிகை முற்றிலும் கேட்கும். அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்திலே, லலிதாங்கியின் இருபது சேடியர்களில் ஒருத்தியாகிய ரமா என்பவள் வந்து தோன்றினாள், இவள் செம்பட்டுப் புடவையும், செவந்த பட்டு ரவிக்கையும், மாணிக்க பூஷணங்களும், செந்நிற மலர்களும் அணிந்தவளாய் அக்கினிதேவனுடைய சக்திபோலே வந்து நின்றாள்.
அவளைக் கண்டவுடனே சொக்கநாதன் செட்டி இவள்தான் லலிதாங்கி யென்ற தவறெண்ணத்தால் "அடீ, லலிதாங்கி" என்று பெருங் குரலிட்டுக் கூவி அவள் மேலே போய் விழுந்தான். விதுரன் "கூ., கூ," என்று கத்தினான், அந்தப் பெண் கலீரென்று நகைத்தாள். செட்டிஆந்தையைப்போல் விழித்தான்.
அப்போது விதுரன் சொல்லுகிறான்: "பொறும், ஐயா, செட்டியாரே; பொறுத்திரும். இவள் லலிதாங்கி யில்லை, இவளுடைய பெயர் ரமா. இவள் சேடிகளில் ஒருத்தி, இவளுடன் உள்ளே போம். மேல் நடக்க வேண்டிய விஷயங்களை இவள் தெரிவிப்பாள்" என்றான்.
இதைக் கேட்டுச் செட்டி, "ஏன்? லலிதாங்கி இந்த ஊரில் இருக்கிறாளோ? இல்லையோ?" என்று வினவினான்.
ரமா மீண்டும் நகைத்தாள். அப்போது விதுரன், "பயப்படாதேயும் செட்டியாரே, லலிதாங்கி இங்கேதான் இருக்கிறாள். ஆனால், நீர் அவளைப் பார்க்கு முன்பு பல கார்யங்கள் நடந்தாக வேண்டும்; நேரத்தை வீண்போக்காதேயும். இவளுடனே போம். நடக்க வேண்டிய கார்யங்களை யெல்லாம் இவள் அறிவிப்பாள்" என்றான்.
நல்லதென்று சொல்லிச் சொக்கநாதன் செட்டி ரமாவுடன் உள்ளே சென்றான். ரமா இவனைப் பல அறைகளின் வழியே கடத்திச் சென்று கடைசியில் ஸ்நாந அறையிலே கொண்டு சேர்த்தாள். அங்கு பொன்னால் செய்த ஒரு பெரிய கைம்மணியை எடுத்துக் குலுக்கினாள்.
உடனே, இரண்டு புதிய பெண்கள் வந்தனர். இவ்விருவரும் பச்சைப் பட்டுடுத்து பச்சை ரவிக்கையும், பச்சை அணிகளும், பசுந்துழாய், மருக்கொழுந்தும் புனைந்திருந்தனர். இவர்களைப் பார்த்தவுடனே செட்டி இவ்விருவரில் யார் லலிதாங்கி என்று தெரிந்துகொள்ள முடியாதவனாய், ரமாவை நோக்கி, "லலி-லலி-லலிதாங்கி யார்?" என்று கேட்டுப் பைத்தியம் பிடித்த ஆந்தையைப் போல் விழித்தான்.
அப்போது ரமா, "உளறாதேயும். இவ்விருவரும் என்னைப்போலே சேடிகள். விதுரன் கொடுத்த மோதிரத்தை இவர்களிடம் காண்பியும்" என்றாள். செட்டி மோதிரத்தைக் காண்பித்தான். அவ்விருவரும் அதைக் கண்டு ஸலாம் செய்து விட்டு "ஸ்நாநம் செய்ய வாருங்கள்" என்றனர்.
இதைக் கேட்டவுடன் செட்டி அவ்விருவரையும் நோக்கி, "உங்கள் பெயரென்ன?" என்று வினவினான். அவ்விருவரில் ஒருத்தி சொல்லுகிறாள்: "என் பெயர் மரகதவல்லி; இவள் பெயர் மரகதமாலை" என்றாள். "அட! பெயருக்கேற்ற அலங்காரமா" என்று சொல்லிச் செட்டி வியப்பெய்தினான்.
ரமா அந்த அறையினின்றும் வெளியேறிச் சென்றாள், பச்சை மகளிர் இருவரும் மறுபடி செட்டியை நோக்கி "ஸ்நாநத்துக்கு வாரும்" என்று கூப்பிட்டார்கள்.
அப்போது செட்டி "ரமா, மரகதவல்லி, மரகதமாலை, ரமா, மரகதவல்லி, மரகதமாலை. . ." என்று அந்தச் சேடிகளின் பெயரை யெல்லாம் உருப்போட்டுக் கொண்டிருந்தான். பின்னர் தன்னுடைய நண்பர்களிடம் தான் லலிதாங்கி வீட்டுக்குப் போன வைபவங்களைச் சொல்லும்படி நேர்ந்தால், அப்போது சேடிகளின் பெயர்கள் மறந்து போகாமலிருக்க வேண்டு மென்பதை உத்தேசித்துச் செட்டி அங்ஙனம் ஜபம் பண்ணினான்.
"ஸ்நானம் பண்ண வருவீரா, மாட்டீரா?" என்று பச்சை மகளிர் செட்டியை மறுபடி கேட்டார்கள்.
அப்போது செட்டி மஹா கோபாவேச மெய்தியவனாய், "அவள் ஊரில் இருக்கிறாளா, இல்லையா, அந்த லலிதாங்கி? ஒரே வார்த்தையில் உண்மை சொல்லி விடுங்கள். நான் வந்த நோக்க மென்ன? எனக்காவது ஸ்நாநம் பண்ணி வைப்பதாவது? எங்கள் வீட்டிலே கிணறில்லையா? தொட்டி யில்லையா? எனக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கப் பெண்டாட்டி யில்லையா?" என்றான்.
அந்தப் பச்சை மகளிர் இருவரும் கணீரென்று நகைத்தார்கள்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று சொக்கநாதன் செட்டி வினவினான்.
அதற்கு மரகதவல்லி, "வீட்டில் பெண்டாட்டிக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கும் உத்யோகந்தான் வைத்திருக்கிறீர் போலும்! நீர் இப்படி எங்களிடம் வந்து சொல்வதை உம்முடைய மனைவி கேட்டால் உம்மை என்ன பாடு படுத்துவாளோ என்பதை யெண்ணிச் சிரிக்கிறோம்" என்று சொன்னாள்.
"சரி; அதெல்லாம் போகட்டும். நான் இப்போ ஸ்நாநம் செய்ய மாட்டேன். என்னை நேரே லலிதாங்கி யிருக்கு மிடத்திலே கொண்டு விடுங்கள்" என்றான் செட்டி.
பச்சை மகளிருவரும் மறுபடி திசைகளி லெல்லாம் எதிரொலி யெழும்படி நகைத்தார்கள்.
செட்டி மஹா கோபத்துடன், "என்ன! நான் பேசுவது உங்களுக்குக் கேலியாய் விட்டதா? என்னை யாரென்று நினைத்தீர்கள்? என் பெயர் சொக்கநாதன் செட்டியார். எங்கள் சிறிய தகப்பனாருடைய மைத்துனராகிய பெரியண்ண செட்டியாருடைய மாமனாருக்குத் தம்பிதான் கோடிக்க கரையில் கோடிசுரராக இருக்கும் ஆநா, ஆவந்நா ஆண்டியப்ப செட்டியார். என்னை இந்த அமிர்த நகரத்துக் கடைத் தெருவில் அறியாதார் யாருமில்லை. பணம் வட்டிக்கு விடுவது நம்முடைய வியாபாரம். அதிலே நமக்கு கனலாபம். அப்படிப்பட்ட நானாகிய சொக்கநாதன் செட்டியார் பேசிக்கொண்டிருக்கையிலே நீங்கள் மூடத்தனமாக நகைக்கிறீர்களே, நான் பணங் கொடுக்க வில்லையா? இதோ, பாருங்கள், மோதிரம் - அடையாளம். என்னை லலிதாங்கி இருக்கு மிடத்தில் கொண்டு விடுங்கள். எனக்கு இப்போது ஸ்நாநம் அவசியமில்லை" என்று செட்டி ஒரே ஸாதனையாக ஸாதித்தான்.
அந்தப் பெண்கள் மறுமொழி சொல்லாமல் நின்றார்கள்.
அப்போது செட்டி, "என்ன, சும்மா, மறுமொழி சொல்லாமல் நிற்கிறீர்களே; இதெல்லாம் ஏதோ ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏதோ ஏமாற்று; ஏதோ சூது; ஏதோ வஞ்சனை யிருக்கிறது! லலிதாங்கியை உடனே எனக்குக் காட்டுங்கள். அல்லது மறுபடி விதுரப்பிள்ளை இருக்கு மிடத்திலே என்னைக்கொண்டு விடுங்கள். என் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்கிறேன். ஐயோ! அருமையான பணம்; மிகவும் கஷ்டப் பட்டு ஸம்பாதித்தது. ஆயிரம் பொன்; ஆயிரம் பொன்னென்றால் தெருவிலே கிடக்கிறதா? ஆயிரம்பொன்! ஆயிரம் பொன்! ஆயிரம் பொன்! ஆயிரம் பொன் கொடுத்து 'நான் இங்கு ஸ்நாநம் பண்ணவா வந்தேன்?" என்று சொல்லிப் பெருமூச்செறிந்தான்.
அப்போது மரகதமாலை சொல்லுகிறாள்: "செட்டியாரே, காலத்தை வீணாகக் கழிக்கிறீர். இப்படி வீண் பேச்சில் நேரம் போக்கிக் கொண்டிருந்தால், கடைசியாக இன்றிரவு நீர் லலிதாங்கியைப் பார்ப்பதே துர்லபமாய் விடும். இங்கு வந்தால், இவ்விடத்து விதிகளுக் கெல்லாம் உட்பட்டுத் தீரவேண்டும். இவ் விதிகள் எவர் பொருட்டாகவும் மாற்றப்பட மாட்டா. முதலாவது, இங்கே ஸ்நாநம் பண்ணவேண்டும். அப்பால் இரண்டாம் மாடிக்குப் போய் போஜனம் முடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் மாடியிலே புதிய வஸ்திரங்கள் காண்பிக்கப்படும்; அவற்றுள் இஷ்டமானதை தரித்துக் கொள்ள வேண்டும். நான்காம் மாடியில் சந்தனம், தாம்பூலம், ஸ்கந்தங்கள் முதலிய உபசாரங்கள் நடக்கும். ஐந்தாம் உப்பரிகையில் நாட்டியம், ஸங்கீதம் இவற்றை ரமித் தின்புற வேண்டும். ஆறாம் உப்பரிகையில் அரமனை வைத்தியர் உம்முடைய தேக ஸ்திதியைப் பரிசோதனை செய்து தக்க மருந்துகள் கொடுப்பார். ஏழாம் உப்பரிகையிலே லலிதாங்கியைக் காணலாம்.
இரவில் மூன்று ஜாமங்களையும் ஆறு உப்பரிகைகளில் கழித்துக் கொண்டு, நான்காம் ஜாமத் தொடக்கத்திலேதான் லலிதாங்கி யிருக்கு மிடம் போய்ச் சேரலாம். இவ்விடத்து விதிகளை ஹரிஹரப் ப்ரஹ்மாதிகளுக்காகக்கூட மாற்றுவதில்லை. வாயை மூடிக்கொண்டு நடப்பதை யெல்லாம் கண்டு ஸ்கிக்க வேண்டும். ஸ்நாநம் பண்ணுவித்தால் பண்ண வேண்டும்" என்றாள்.
"தடியைக் கொண்டடித்தாலோ?" என்று செட்டி கேட்டான்.
"பட வேண்டும்" என்று மரகதவல்லி சொன்னாள்.
இத்தனைக் கப்பால் செட்டி ஸ்நாநம் பண்ணுவதாக ஒப்புக்கொண்டான். வேஷ்டியை அவிழ்த்து வைத்து, அரையில் ஒரு சிறு துணியைக் கட்டிக்கொண்டு, ஒரு பலகையின் மேல் உட்காரச் சொன்னார்கள் "முருகன் துணை" என்று சொல்லிச் செட்டி பலகைமீதேறி யுட்கார்ந்து கொண்டான்.
மரகதவல்லி செட்டி தலையில் எண்ணெயை வைத்தாள்
"எண்ணெய்க் குளியா?" என்று சொக்கநாதன் செட்டி கேட்டான்.
"ஆம்" என்றாள் மரகதவல்லி.
செட்டி பெரு மூச்செறிந்தான். ஒரு மணிநேரம் பலவிதமான ஸம்பாஷணைகள் செய்து செட்டி ஸ்நாநம் பண்ணி முடித்தான். பிறகு போஜனசாலைக்குச் சென்றான். அங்கு நளபாக மென்றால் ஸாக்ஷாத் நளபாகமாக ஆறுவிதச் சுவைகளிலும் சுமார் நூறு வகைப் பக்குவங்களும், பக்ஷணங்களும் செய்து வைக்கப் பட்டிருந்தன.
செட்டி இத்தனை ருசியான பக்குவங்களை இதுவரை எப்போதும் உண்டது கிடையாது. கண்ணால் கண்ட தில்லை, காதால் கேட்டதில்லை; கற்பனையால் எட்டியது மில்லை. எனவே, இரண்டாம் உப்பரிகையிலும் நெடும் பொழுது கழித்து விட்டான்.
சமையலின் ருசியிலும், பரிமாற வந்த புதிய பெண்களாகிய நீலலோசனி என்பவளும், நீலமணி என்பவளும் நீலப் பட்டுடுத்து, நீல அணி தரித்து, நீலப் பொட்டிட்டு, நீல மலர் சூட்டி நின்ற அழகிலும் மயங்கிப்போய்ச் செட்டி பொழுது போவதைக்கூடக் கவனியாமல் இருந்துவிட்டான். இவர்களுடைய பெயர்களையும் செட்டி விசாரித்துக் கொண்டான்.
போஜனம் முடிந்த வுடனே வஜ்ரரேகை, வஜ்ராங்கி என்ற இரண்டு புதிய மாதர் வந்து தோன்றினர். இவர்கள் முழுமையும் வெள்ளையிலே அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்தனர்.
செட்டி இவர்களுடைய பெயர்களையும் விசாரித்து வைத்துக் கொண்டான்.
இவர்கள் அவனை மூன்றாம் உப்பரிகைக்கு அழைத்துச் சென்றார்கள்,
போகும் வழியில் செட்டி "ரமா, மரகதவல்லி, மரகதமாலை, நீலலோசனி, நீலமணி, வஜ்ரரேகை, வஜ்ராங்கி, வஜ்ராங்கி, ரமா, ரமா, மரகதவல்லி, மரகதவல்லி, மரகதமாலை, மரகதமாலை, நீலலோசனி, நீலலோசனி, நீலமணி, நீலமணி, வஜ்ரரேகை, வஜ்ரரேகை, வஜ்ராங்கி, வஜ்ராங்கி, ரமா, ரமா, ரமா, . . என்று ஜபம் பண்ணிக் கொண்டே போனான்.
மூன்றாம் மாடியிலே பட்டுக்களிலும், ஜரிகைகளிலும், ரத்னங்களிழைத்தனவும், பூக்கள் சித்திரித்தனவுமான வேஷ்டிகள், உத்தரீயங்கள், பாகைகள், நிஜார்கள், சட்டைகள், துண்டுகள், பதினாயிர விதமென்றால் பதினாயிரம் விதம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று கண்ணைப் பறிக்கும்படியான அழகுடையனவாய், வரிசை வரிசைாக வெள்ளிக் கம்பிகளால் செய்த கொடிகளின் மீது தொங்க விட்டிருந்தன.
திரும்பிப் பார்த்த பக்க மெல்லாம் நிலைக் கண்ணாடி! அந்த நிலைக் கண்ணாடிகளை நிறுத்தி யிருந்த மாதிரியில் இந்த வஸ்த்ரங்களின் பிரதி பிம்பங்கள் ஒன்று, பத்து, நூறாகத் தெரிந்தன.
செட்டி போய்ப் பார்த்தான். அவனுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. மயங்கிப் போய் விட்டான், மயங்கி! தேடித் தேடிப் பார்த்து, ஒரு பாகை மிகவும் அழகிய தென்று கருதித் தலையில் அணிவான். பிறகு அதோ, அந்த மூலையில் மற்றொன்று இதைக் காட்டிலும் அழகாகத் தோன்றும். தூரத்துப் பார்வை கண்ணுக் கழகு. அங்கே போய் அதை எடுத்து வைப்பான். பிறகு மற்றொன்று அதைக் காட்டிலும் அழகாகத் தென்படும். நிஜார், சட்டை , கைத்துண்டு, எல்லாம் இப்படியே.
நெடுநேரம், நெடுநேரம் போட்டுப் போட்டு மாற்றிய பின் கடைசியாகச் செட்டி ஒரு பால் வெளுத்த சரிகை வேஷ்டி, வஜ்ர மணிகளிழைத்த அங்கி, பொன் மலர்கள் உத்தரீயம், மாணிக்கச் சரங்கள் தொங்கவிட்ட மஸ்லின் தலைப்பாகை இத்தனையையும் தரித்துக் கொண்டான்.
"உடைகள் உடுத்தாய் விட்டதா?" என்று வஜ்ரரேகை கேட்டாள். "ஆயிற்று" என்றான் செட்டி.
அப்பால், அங்கிருந்து, அவனை அடுத்த தாம்பூலாதிகள் வழங்கும் மாடிக்குக் கொண்டு செல்லும் பொருட்டாக ஸுவர்ணாம்பாள், ஸுவர்ணமாலை என்ற புதிய சேடிகள் இருவர் வந்தனர். செட்டி, இவர்களுடைய பெயரையுங் கேட்டுத் தெரிந்துகொண்டு, உருப்போட்டு உருப்போட்டு நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டான்.
இதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. அவ்விரண்டு பெண்களும் செட்டியை நான்காம் உப்பரிகைக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துக் கொண்டு போய் விதுரப் பிள்ளை யிருந்த இடத்தில் கொண்டு விட்டார்கள்.
போகும் வழியில் செட்டி, "ஏன் என்னை நான்காம் மாடிக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துச் செல்கிறீர்களே, விஷயமென்ன?" என்று கேட்டான்.
"பொழுது விடிந்துவிட்டது. இனி இரவில்தான் வரலாம்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.
"இன்றிரவு நான் லலிதாங்கியைப் பார்க்க முடியாதோ?" என்று செட்டி கேட்டான்.
"இன்றிரவு பொழுதுதான் விடிந்து விட்டதே. நேற்றிரவு என்று சொல்லும். இப்போது வீட்டுக்குப் போய் மறுபடி இன்றைக்கிரவில் வரலாம்" என்றாள் ஸுவர்னமாலை.
"பணம்" என்று செட்டி கேட்டான்.
"அதெல்லாம் விதுரப் பிள்ளையிடங் கேட்டுக் கொள்ளும்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.
விதுரனிடம் வந்தவுடன் புதிய உடைமைகளைக் களைந்து விட்டுச் செட்டிக்கு அவன் அணிந்து கொண்டு வந்த அவனுடைய சொந்த உடைகளைத் கொடுத்தனர்.
"என் பணத்தைத் திரும்பக் கொடும்" என்று செட்டி விதுரனிடம் கேட்டான்.
விதுரன் ஸுவர்ணமாலையை நோக்கி, "என்ன - விஷயம்?" என்று விசாரித்தான்.
அவள் நடந்த வரலாற்றை யெல்லாம் சொல்லச் செட்டி மண்டபத்திலும் போஜனசாலையிலும் வஸ்த்ர சாலையிலும் வீணாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தா னென்றும், அதற்குள் பொழுது விடிந்து விட்டதென்றும், ஆதலால் அவன் லலிதாங்கியைப் பார்க்க இடமில்லாமல் போய்விட்டதென்றும் தெரிவித்தாள்.
இதைக் கேட்டு விதுரன், "நேற்றிரவு உம்முடைய பிழையால் லலிதாங்கியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இன்று மறுபடி ஆயிரம் பொன் கொண்டு வாரும்" என்றான்.
செட்டி பணம் வேண்டுமென்று கட்டாயப்படுத்திக் கூச்சல் போடத் தொடங்கினான், அப்போது விதுரன் வாட் சேவகரை அழைத்தான்.
ஆறு சேவகர் உருவிய கத்தியுடன் வந்து நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடன் செட்டி புத்தி தெளிந்து ஒரு வார்த்தையும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாள் செட்டி, மறுபடியும் ஆயிரம் பொன்னெடுத்துக் கொண்டு லலிதாங்கியின் வீட்டுக்குப் போனான். 'இன்றைக்கு நாம் யாரிடத்திலும் அநாவசிய வார்த்தை பேசவே கூடாது. மெளனமாக மூன்று ஜாமங்களையும் கழித்து, நான்காம் ஜாமத்தில் அவசியம் லலிதாங்கியைப் பார்த்தே தீரவேண்டும்' என்று செட்டி நிச்சயம் பண்ணிக் கொண்டு போனாள்.
ஆனால், நேற்றைப்போலே, எண்ணெய் ஸ்நாந கட்டத்திற்குப் போனவுடன் கலகந் தொடங்கி விட்டது. "நேற்றுத்தான் எண்ணெய் ஸ்நாநம் பண்ணியாய் விட்டதே; இன்று வெறுமே குளித்தால் போதாதா? சேர்ந்தபடியாக இரவுதோறும் எண்ணெய்க் குளித்தால் உடம்புக் காகுமா?" என்று செட்டி வாதாடினான்.
அந்தப் பெண்கள் இணங்கவில்லை. செட்டிக்குக் கோபம் வந்தது. அவர்கள் சிரித்தார்கள். மற்றதெல்லாம் நேற்றைக் கதை மாதிரி தான், செட்டி போஜனாதிகளைக் கண்டவுடன், மயங்கிப் போய் பொழுது கழிவதுணராமல் தாமஸப் பட்டது முதல், விதுரனிடம் வந்து சண்டை போட்டது, விதுரன் வாட் சேவகரை யழைத்தது என்ற கட்டம் வரை முதல் நாள் மாதிரியாகவே ஆயிற்று. லலிதாங்கியின் தரிசனம் கிடைக்கவில்லை.
மூன்றாம் நாட் காலையில் சொக்கநாதன் செட்டி கடையில் மாதாந்தரக் கணக்கு வரவு சிலவு பார்த்தார்கள்,
"பெட்டியில் இரண்டு ஆயிரம் பொன் குறைகிறதே அதை எந்தக் கணக்கில் எழுதுவது?" என்று செட்டியை நோக்கி குமாஸ்தா கேட்டான்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் செட்டியின் கண்ணிலிருந்து ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிற்று.
தன்னை மறந்து வாய் விட்டு, "ஐயோ, இரண்டாயிரம் பொன் தொலைந்து விட்டதே" என்று சொக்கநாத செட்டி விம்மி அழுதான்.
குமாஸ்தா இங்ஙனம் அபூர்வமாக செட்டி அழுவதைக் கண்டு வியப்பெய்தி, "என்ன செட்டியாரே, புத்தி ஸ்வாதீனமில்லையா? எவ்வளவோ போகிறது; எவ்வளவோ வருகிறது. இரண்டாயிரம் பொன்னுக்கு அழலாமோ! பெரிய பெரிய நஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அழமாட்டீர்களே? இந்த இரண்டாயிரம் பொன் மலையா! இதற்கேன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான்.
செட்டி குமாஸ்தாவிடம் கைத் தொகையை ஒரு பையிலே கட்டித் தன் வீட்டு வாயில் திண்ணையில் பக்கத்திலே வைத்துக்கொண்டிருந்ததாகவும், வீட்டுக்குள் ஏதோ அவஸர நிமித்தமாகப் போக நேர்ந்ததில் மறதியினால் அதை வாயிலிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் திரும்பிவந்து பார்க்கு முன்னே அந்தப் பணம் களவு போய்விட்டதாகவும் ஏதோ பொய்க் கதை சொல்லி விட்டு, அழுகையை நிறுத்திக் கொண்டான்.
அது முதல் லலிதாங்கியை மறந்து விட்டது மட்டுமே யன்றி, சொக்கநாதன் செட்டி எங்கேனும் தாஸி வீடென்று பெயர் கேட்ட அளவிலே உடம்பெல்லாம் நடுங்கலானான்.
வேசையர் யமனுடைய தூதரென்றும், அவர்களைக் கோயிற் பணி முதலியவற்றில் வைத்திருப்பதே குற்றமென்றும், கலியாண காலங்களில் தாஸிகளை அழைத்து நாட்டியம் பார்ப்பது பெருந்தீமைக் கிடமென்றும் தன்னுடைய நண்பர்களுக் கெல்லாம் உபதேசஞ் செய்யத் தொடங்கினான். தாஸிகளைப் பழித்து யாரேனும் புலவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான ஸம்மானங்கள் செய்யத் தொடங்கினான், லலிதாங்கி யிருந்த தெருவழியாகப் போவதையே நிறுத்தி விட்டான்.
அப்பால் அந்தச் செட்டி வியாபாரத்தில் ஏராளமான திரவியங்கள் சேர்த்து ஏழைகளுக்கும் கோயில்களுக்கும் கொடுத்துப் பெரிய புண்யவா னென்றும், தர்மிஷ்ட னென்றும் பெயர் பெற்று வாழ்ந்தான்.
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது.
இந்தக் கதை "சுதேச மித்திரன்" காரியாலயமே நடத்தி வந்த கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.
-----------
5. வேதபுரத்தின் இரகஸ்யம்
அவர், அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் - இத்தனை பேருமாக வேதபுரத்தில் மாரியம்மன் கோயில் தெருவில், மாஸம் நான்கு ரூபாய் வாடகை கொடுத்து ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார்கள்.
1909 ஆம் வருஷத்திலே மருதப் பிள்ளைக்கு வயது முப்பத்தாறாயிருந்தது. செவப்பு நிறம்; உறுதியும், பலமும், அழகுமுடைய அங்கங்கள்; மூக்கும், விழியும் மிகவும் அழகாக, மாசு மறு, தழும்பு - ஒன்றுமில்லாமல் பள பள வென்று சந்திரன் மாசின்றி யிருந்தாற் போன்ற முகம்; அதிலே பட்டை நாமம்; கன்னங் கரேலென்று, அம்பட்டன் கத்தியே படாமல், செழிப்புற வளர்ந்து கிடந்த மீசை, தாடிகள்; தலையிலே ஜரிகைக் கரை போட்ட செம்பட்டு லேஞ்சி; டாஸர் பட்டுக்கோட்; அரையிலே கிளாஸ்கோ மல் வேஷ்டி; இத்தனையும் சேர்ந்து மருதப் பிள்ளையின் பொதுத் தோற்றம் மிகவும் வீரமுடையதாகவும் கண்ணுக் கினிதாகவும் விளங்கிற்று.
இவரைத் தெருவிலே பார்த்தால், யாரோ ஜமீன்தாரென்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால், இவருடைய வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் மூதேவி "ததிக்கிடத்தோம்” என்று நர்த்தனம் செய்து கொண்டிருப்பாள்.
இவருடைய பெண்டாட்டி கரி நிறமும், அம்மைத் தழும்பு மூஞ்சியும், எண்ணெய் பார்த்தறியாதது போன்ற பரட்டைத் தலையும், தண்ணீர் கண்டறியாதது போன்ற அழுக்குடம்பும், கந்தைச் சேலையும், தன் யதார்த்த வயதுக்கு மேலே முப்பது பிராயம் அதிகமாகத் தோன்றும் மேனிக் கோலமும்; . . , கழுதை வாகனமொன்று தான் குறை; மற்றப்படி இவளை வர்ணிப்பதைக் காட்டிலும், ஸாக்ஷாத் மூதேவியையே வர்ணித்தால், அந்த வர்ணனை இவளுக்கும் பொருந்தும்.
குழந்தைக ளிரண்டும் ஆண். ஒன்றுக்கு ஐந்து வயது; மற்றொன்றுக்கு மூன்று வயது. தாரித்திரியத்தின் சித்திரப் பதுமைகளே இவ்விரண்டு பிள்ளைகள்.
வீட்டில் ஒரு நாற்காலி, மேஜை, ஒரு பெரிய வஸ்த்ரப் பெட்டி - (மருதப் பிள்ளையின் துணிகளடங்கியது); இவருடைய கைப்பெட்டி; - சில ஓட்டைப் பானைகள், இவ்வளவுதான் ஸாமான். பெண்டாட்டிக்குத் துணி யிருந்தா லன்றோ பெட்டி வேண்டும்?
வீட்டை இத்தனை அலங்கோலமாக வைத்திருந்தாலும், மருதப் பிள்ளை ஊரில் வெகு டாம்பீகமாகவே சுற்றிக்கொண்டிருந்தார். இவருக்குச் சென்னப்பட்டணத்தில் சில அச்சுக்கூட வியாபாரிகள் ஸ்நேஹ மென்றும், அவர்களுக்கு உதவியாகத் தாம் வேதபுரத்தில் ஏதோ கார்யங்கள் செய்வதாகவும் சொல்லிக் கொள்வார்.
வேதபுரத்திலுள்ள சில அச்சுக்கூடங்களுக்குச் சென்னையிலிருந்து யந்திரங்கள், எழுத்துக்கள், காயிதங்கள் முதலியன தருவித்துக் கொடுப்பார். ஆனால், இந்த உத்யோகங்களிலிருந்து வரும் பணம் அவருக்கு மூக்குப் பொடிச் செலவுக்குக்கூடக் காணாது. எனவே, வாரக் கணக்காக, மாஸக் கணக்காக, வருஷக் கணக்காக, மேன்மேலும் வாய்த் தந்திரத்தினால் கடன்கள் வாங்கியே ஜீவனம் பண்ணிக் கொண்டு வந்தார்.
வாங்கின கடன் திரும்பக் கொடுக்கும் வழக்கமே அவரிடம் கிடையாதாகையால், அவருக்கு ஒரு முறை கடன் கொடுத்தவன் இரண்டாந்தரம் கொடுக்க மாட்டான். ஆகையால், ஒவ்வொரு தரமும் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்துக் கடன் வாங்க வேண்டும். ஒரே ஊருக்குள் அப்படி ஓயாமல் புது ஆட்கள் கண்டுபிடிப்பது ஸாமான்ய வித்தை யன்று. இந்தியா முழுதிலும் இவ்விதமான ஜீவனம் பண்ணுவோர் ஒவ்வோரூரிலும் மலிந்து கிடக்கிறார்கள். துரதிர்ஷ்ட தேசம்! இது நிற்க.
இங்ஙனம் குடித்தனம் பண்ணிக்கொண்டு வந்த மருதப் பிள்ளைக்கு மேற்படி 1909ஆம் வருஷம், ஜூன் மாஸம் முதல் தேதி யன்று, திடீரென்று நல்ல காலம் பிறந்தது. வேதபுரத்தில் வில்ஸன் துரை என்ற யூரேஷ்யர் ஒருவர் புதிதாகப் பெரிய அச்சுக்கூட மொன்று திறந்தார். அந்த அச்சுக்கூடத்து வேலையாட்களுக்குத் தலைவராக மருதப் பிள்ளை மாஸம் 60 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்குக் கடன் வாங்கும் உபத்திரவம் கொஞ்சம் குறையலாயிற்று. அவருடைய மனைவியும் புதிய மதுரைச் சுங்கடிச் சேலை யுடுத்துப் புது மண் குடங் கொண்டு தண்ணீரெடுத்து வரத் தலைப்பட்டாள்.
இங்ஙனம் இரண்டு மாஸங்கள் கழிந்தன. ஸெப்டம்பர் மாஸம் முதல் தேதி காலை ஊர் முழுதும் பயங்கரமான வதந்தி உலாவிற்று. ஊருக்கு மேற்கே, ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஸமீபத்திலுள்ள 'முஜாபர் கானா' என்ற பிரயாணிகளின் சாவடியிலே மருதப் பிள்ளை கொலையுண்டு கிடப்பதாகச் செய்தி பரவலாயிற்று.
ஜனங்கள் ஆயிரக் கணக்காகத் திரண்டு பிரேதத்தைப் பார்க்கப் போனார்கள். மருதப் பிள்ளை தன் முறைப்படி பாஸர் பட்டுக் கோட், ஜரிகைக்கரை போட்ட செம்பட்டு லேஞ்ஜி, கிளாஸ்கோ மல் வேஷ்டியுடன் கிடக்கிறார். துணி முழுதும் இரத்தத்தில் ஊறி யிருந்தது. பக்கத்தி லெல்லாம் இரத்தம் சிந்திக் கிடந்தது. பார்ப்பதற்கே முடியவில்லை. அத்தனை கொடூரமான காட்சி! தொடையில் இரண்டு வெட்டு; மார்பில் வெட்டு; தோளில் வெட்டு; கழுத்து இலேசாக ஒட்டிக் கொண்டிருந்தது. அத்தனை கோரமான வெட்டு. கழுத்திலே, மண்டையில் இரண்டு மூன்று வெட்டுக்கள்.
பொருளாசையால் அவரைக் கள்வர் வெட்டிக் கொன்றிருக்கலாமென்று நினைக்க ஹேதுவில்லை!
இத்தனை பரம ஏழையைக் கொன்று பொருள் பறிப்ப தெப்படி? விரோதத்தி-னாலேதான் யாரோ அவரைக் கொலை செய்திருக்க வேண்டுமென்று ஜனங்கள் உடனே நிச்சயித்து விட்டார்கள். அப்பால் அவருக்கு யார், யார் விரோதிக ளென்பதைப் பற்றிய ஆராய்ச்சி நடந்தது. ஜனங்கள் இந்த மாதிரி ஸமயங்களில் வெகு ஸுலபமாகக் கட்டுக் கதைகள் கட்டிவிடுவார்கள். இலேசான துப்புத் தெரிந்தால் போதும்; அதற்குக் கால், கை, கொம்பு வைத்துக் கதை கட்டுவதில் பாமர ஜனங்களைப் போன்ற திறமை யுடையோர் என்போலே கதை கட்டுவதையே தொழிலாக உடைய ஆசிரியர்-களிடையேகூட அகப்படுவது துர்லபம்.
ஆனால், இந்த ஸந்தர்ப்பத்தில் அங்ஙனம் கதை கட்டுதல் பொது ஜனங்களுக்குக்கூட மிகவும் சிரமமாய் விட்டது. ஏனென்றால், மருதப் பிள்ளைக்கு விரோதிகள் இன்னாரென்பது யாருக்குத் தெரியாது. அவருக்கு விரோதிகளே கிடையாதென்று ஊரார் நினைத்திருந்தார்கள். வாங்கின கடன் அதாவது 5 ரூபாய்; 10 ரூபாய்; 1 ரூபாய்; 2 ரூபாய் திரும்பக் கொடுப்பதில்லை யென்ற ஒரு துர்க்குணத்தைத் தவிர மருதப் பிள்ளையிடம் வேறு துர்க்குணமே கிடையாது.
எல்லாரிடமும் குளிர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் இனிய வசனங்கள் பேசுவதும் கூழைக் கும்பிடு போடுவதும் வழக்கமாகக் கொண்ட மருதப் பிள்ளையிடம் யாருக்கும் நல்லெண்ணமுண்டே யன்றி விரோதம் ஏற்பட நியாயமில்லை .
சில்லரைக் கடன்காரருக்கு இவர் உயிரோடிருந்தால் தாங்கள் கொடுத்த சொற்பத் தொகைகள் திரும்பக் கிடைக்கலாமென்று நம்பவேனும் வழியுண்டு. ஆதலால், அவர் மேற்படி சில்லரைக் கடன்காரர்களால் கொலை யுண்டிருப்பாரென்று நினைக்க ஹேதுவில்லை. தவிரவும், சில்லரைக் கடன்களுக்காக ஒருவனைக் கடன்காரர் கொலை செய்யும் வழக்கம் எங்கேனுமுண்டா? எனவே, ஜனங்கள் கொலையாளி விஷயமாக இலேசில்கூடத் துப்புக் கண்டுபிடிக்க வழி யில்லாமல் திகைப் பெய்தி நின்றார்கள்.
போலீஸ் கூட்டம் கூடிவிட்டது. பெரிய துரை, நடுத்துரை, சின்னத் துரை, மாஜிஸ்ட்ரேட் முதல் சேவகர் வரை, சுமார் இருபது முப்பது நகரக் காவலர் வந்து சூழ்ந்து நின்றார்கள். ஜனங்கள் பிரேதத்தை நெருங்கி வந்து விடாமல் தடுப்பதே போலீஸாருடைய முக்ய வேலையாக இருந்தது. அங்கு பலரிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதேதோ விசாரணை செய்து பார்த்தார்கள். ஒன்றும் துலங்கவில்லை .
இப்படி யிருக்கையிலே ஒரு போலீஸ் சேவகன் ஒரு பறையனைப் பிடித்து அவ்விடத்திற்குக் கொணர்ந்தான். அந்தப் பறையனுடைய வேஷ்டியில் இரத்தக் காயம் (கறை) பட்டிருந்தது. அவன் மேலே சொல்லப்பட்ட அச்சுக்கூடத்தின் அதிபதியாகிய வில்ஸன் துரை வீட்டில் சமையல் வேலை செய்பவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதெல்லாமோ கேட்டார்கள். அவன் மறுமொழி சொல்லியதினின்றும், அவன் மீது ஸம்சயமேற்பட்டு அவனைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போய்-விட்டார்கள்.
பிறகு கூட்டங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கலைந்தன. பிரேதத்தையும் அதிகாரிகள் தூக்கிக் கொண்டுபோய் ஒருநாள் வைத்திருந்து மறுநாள் தகனம் பண்ணிவிட்டார்கள். மறுநாளே வில்ஸன் துரை வீட்டுப் பறையனையும் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து விட்டார்கள்.
அந்தப் பறையன் முதல்நாள் கோழி யறுத்தபோது கைதவறி இரத்தம் அவனுடைய வேஷ்டியில் பட்டு விட்டதாகவும், ஆதலால், அவன் வேஷ்டியிலே யிருந்த கறை கோழி இரத்தத்தால் நேர்ந்ததே யன்றி, மனுஷ்ய ரத்தத்தால் நேர்ந்ததில்லை யென்றும், அவனுடைய ' பந்துக்களும், துரை வீட்டு வேலையாட்களிலே சிலரும் ஸாக்ஷி சொன்னதினின்றும், அந்தப் பறையன் மீது குற்றமில்லை யென்று தெளிந்து, அவனுக்கு விடுதலை கொடுத்து விட்டார்கள். பிறகு வேறு குற்றவாளி அகப்படவுமில்லை. ஓரிரண்டு மாஸங்களுக்குள் ஜனங்கள் இந்த ஸம்பவ முழுதையும் ஏறக்குறைய மறந்து போய்விட்டார்கள்.
இப்படி யிருக்கையில், 1910ஆம் வருஷம் ஜனவரி மாஸத்தில் வேதபுரத்துக்கு ஒரு புதிய
ஸப்-இன்ஸ்பெக்டர் வந்தார். இவர் பெரிய கைக்காரர்; மஹா தந்திரசாலி. இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கார், மருதப் பிள்ளையின் கொலை நடந்து நான்கு மாஸங்களாய் விட்டன. எனினும், இவர் வந்தவுடனே மேற்படி கொலையைப் பற்றிய செய்திகள் இவருக்குத் தெரிந்தன. அதன் விஷயமான பழைய பதிவுகளை யெல்லாம் படித்துப் பார்த்தார். 'இந்த மருதப் பிள்ளையைக் கொலை செய்த ஆட்களை நான் கண்டுபிடித்தே தீர்ப்பேன், வாஸுதேவன் துணை' என்று இவர் தம் மனதுக்குள்ளே பிரமாணம் பண்ணிக் கொண்டார். இது நிற்க.
மேலே கூறப்பட்ட அச்சுக்கூடத் தலைவராகிய வில்ஸன் துரைக்கு ஒரு தங்கை யுண்டு. அவள் பெயர் இஸபெல்லா. அவளுக்குச் சுமார் 30 வயதிருக்கும். ஆனால், விவாகமில்லை. போர்த்துகேசீய ஐரோப்பிய னொருவனுக்கும் தமிழ் நாட்டுப் பறைச்சி யொருத்திக்கும் பிறந்த வம்சத்தா ராதலால் மேற்படி வில்ஸன் குடும்பத்தார் தாங்கள் எப்படியேனும் ஐரோப்பியருடன் ஸம்பந்தம் பண்ணிக்கொண்டு ஐரோப்பியராய் விடவேண்டு மென்ற நோக்கத்தோ டிருந்தார்கள்.
வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கல் மூலமாகவும் அந்தக் குடும்பத்தாருக்கு ஏராளமான சொத்து சேர்ந்திருந்தது. பூர்வம் வில்ஸன் துரை ஒருவர்; அவருடைய தம்பி ஜோஸப் வில்ஸன் ஒருவர்; தங்கை இஸபெல்லா ஒருத்தி - இத்தனை பேர்தான் அந்தக் குடும்பத்தி லிருந்தார்கள். பின் ஐரோப்பியப் பட்டாளத்தில் வேலை செய்து பென்ஷன் பெற்று வந்த ரிச்சார்ட்ஸன் என்ற ஒரு கிழவன் மிகவும் ஏழையாய் அந்த ஊரில் வந்து குடியிருந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த ரிச்சார்ட்ஸ ன் பரம் ஏழையானாலும் சுத்தமான ஐரோப்பிய ஸந்ததியிலே பிறந்தவ னென்று தெரிந்தபடியால், வில்ஸன் துரை அவனுடைய மகளை விவாகம் செய்து கொள்ள முயன்றார்.
அந்த மகள் கண்ணுக்கு மிகவும் விகாரமாய்ச் சுருங்கிய மூஞ்சியும், வற்றலுடம்பும் உடையவளாய்த் தன்னை மணம் செய்து கொள்ள யாரு மகப்படாமல் பிதாவுடன் குடியிருந்தாள். அவள் நமது வில்ஸன் துரையைக் காட்டிலும் ஏழு வயது மூத்தவள், எப்படியிருந்த போதிலும் சுத்தமான ஐரோப்பிய குலத்து ஸம்பந்தம் கிடைப்பதையே மோக்ஷ மாகக் கருதித் தவஞ்செய்து கொண்டிருந்த வில்ஸன் துரை அவளை மணம் புரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிந்தவுடனே அவளும், அவளுடைய பிதாவும் மிக ஸுலபமாக உடன்பட்டு விட்டனர்.
இங்ஙனம் தமக்கோர் ஐரோப்பிய ஸ்திரீ மனைவியாகக் கிடைத்ததிலிருந்து வில்ஸன் துரை அங்ஙனமே தம்முடைய தங்கைக்கும் தம்பிக்கும் சுத்தமான ஐரோப்பிய ஸம்பந்தம் பண்ண வேண்டுமென்று கருதி, பகீரதப் பிரயத்தனங்கள் செய்துகொண்டு வந்தார். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதி பேதத்தைப் பற்றிய கஷ்டங்கள் அதிகமென்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.
ஆனால், ஐரோப்பியருக்கும் நீகிரோவ ஜாதியாருக்கும் ஸம்பந்த மேற்பட்ட அமெரிக்கா முதலிய இடங்களிலும், ஐரோப்பியருக்கும் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்கும் கலப்பேற்பட்ட - இந்தியாவில் சில பகுதியிலும் மேற்படி கலப்பு ஜாதியார்கள் தமக்குள்ளே மாற்று வித்யாஸங்கள் கவனிப்பதை ஒப்பிடும்போது, ஹிந்துக்கள் பாராட்டும் ஜாதி பேதங்கள் மிகவும் இலேசாகத் தோன்றும்.
சுத்தமான ஐரோப்பியனுக்கும், சுதேச ஸ்த்ரீக்கும் பிறந்தவன் ஒரு ஜாதி; அப்படி ஒரு ஐரோப்பிய ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் வேறு ஜாதி; அவனே மீளவும் ஒரு சுதேச ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் மற்றொரு ஜாதி; இப்படி இரண்டு மூன்று தலைமுறைகளிலே யேற்படும் பலவிதக் கலப்புக்களில் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது ஜாதிகள் கிளைத்து விடுகின்றன. இந்த நூற்றைம்பது பிரிவுகளும் ஒன்றுக்கொன்று விரலாலேகூடத் தீண்டுவது கிடையாது. இவை யெல்லாம் தனக்குத் தனக்கு வெவ்வேறான முத்திரைகள் போட்டுக்கொண்டு பிரிந்து வாழ்கின்றன. இது நிற்க.
நம்முடைய வில்ஸன் துரையும் அவருடைய தங்கையும், எத்தனை ஏழையானாலும், எத்தனை குரூபியானாலும், வேறு எவ்விதமான குறைவுக ளுடையோனாயினும், ஒரு சுத்தமான ஐரோப்பியனை மாப்பிள்ளையாக அடைய வேண்டுமென்று செய்த முயற்சிகளுக்குக் கணக்கே யில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் விரயப்படுத்தின பணத்துக்கும் கணக்கில்லை,
ஐரோப்பிய வாலிபன் - சிப்பாயோ, போலீஸ்காரனோ, குமாஸ்தாவோ - எவனாவது விவாக மாகாத நிலையில் வேதபுரத்துக்கு வந்தால் உடனே அவனை வில்ஸன் துரை எப்படியாவது அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வீட்டில் அவனுக்கு யதேஷ்டமான விருந்துகள் நடத்துவார். அவன் கேட்ட கைக்கெல்லாம் பணங் கொடுத்துதவி செய்வார், கடிகாரம் வாங்கிக் கொடுப்பார், பைசிகிள் வண்டி வாங்கிக் கொடுப்பார்.
ஆனால், இம்முயற்சிக ளெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டன. யாதொரு பயனுந் தரவில்லை. உள்ளூரில் எத்தனையோ எளிய யூரேஷியப் பிள்ளைகள் வில்ஸன் துரை வீட்டு சொத்துக் காசைப்பட்டு இஸபெல்லாவை மணஞ் செய்துகொள்ள ஆவலோடிருந்தனர். ஆனால், இஸபெல்லா இந்த யூரேஷ்யப் பிள்ளைகளைத் தன். பாத விரலால்கூடத் தீண்டமாட்டே னென்று, சொல்லி விட்டாள்.
எனவே, முப்பது வயதாகித் தன் யெளவனமும் அதற்குரிய சௌந்தர்யங்களும் பெரும்பாலும் நீங்கி விட்ட பின்னரும் நமது இஸபெல்லா விவாகமாகாமல் கன்னிப் பெண்ணாகவே விளங்கினாள்.
இவளுக்கும் நம்முடைய ஸப் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் பின்வருமாறு ஸ்நேஹ முண்டாயிற்று. ராஜகோபாலய்யங்கார் விவாகமாய் மனைவியை இழந்தவர். இவருக்கு வயது முப்பத்திரண்டிருக்கும். கிருதா மீசை; ஆறரை அடி உயரம்; ஆஜானுபாஹு; ஸாண்டோ குண்டுகள் பழகுவதிலே ஸாண்டோவைக் காட்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்; வீராதி வீரர்; பேய் பிசாசுக்குப் பயப்படமாட்டார்; பாம்பு புலி கரடிகளுக்குப் பயப்படமாட்டார்; கள்வருக்கும் கொலைஞருக்கும் அஞ்ச மாட்டார்; பகைவருக் கஞ்ச மாட்டார்; பொய் சொல்ல மாட்டார்; களவு செய்ய மாட்டார்; லஞ்சம் வாங்க மாட்டார்; மஹா தீரர்; மஹா வீரபுருஷர்; மஹா யோக்யர்; அதி ஸுந்தர புருஷருங்கூட.
அவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை ஸம்பந்தமான விசாரணைக ளடங்கிய பழைய புஸ்தகங்களையும், பதிவுகளையும் சோதனை செய்து பார்த்தவுடனே, அதில் அடிக்கடி வில்ஸன் துரையின் விஷயம் முக்யமாக வந்தபடியால், அந்த வில்ஸன் துரையைப் போய்ப் பார்த்து அவருடைய சமையற்காரப் பறையனையும் கண்டு பேசி வரவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டார்.
ஆனால், புத்திமானாகையால், இந்தக் கொலை ஸம்பந்தமான விசாரணைக்குத் தாம் வந்ததாகத் தெரிவித்துக் கொண்டால், அதினின்றும் வில்ஸன் துரை மேற்படி கொலையில் தாம் எவ்விதத்திலும் ஸம்பந்தப்படாதவராக இருந்தபோதிலும், அவருக்குத் தம்மிடம் விரயம் ஏற்படுதல் திண்ணமென்று நிச்சயித்து ஆரம்பத்திலேயே அந்தக் கொலைப் பேச்சை யெடுக்காமல், வேறேதேனும் முகாந்தரத்தை வைத்துக்கொண்டு போய் அவரை ஸந்தித்து, அப்பால் ஸம்பாஷணைக்கிடையே, வெறுமே யதிர்ச்சையாக நேர்ந்தமாதிரியாக இந்த மருதப் பிள்ளை விஷயத்தை யெடுத்து அப்போது வில்ஸன் துரை சொல்லும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மன இயல்பை அறிந்துகொள்ள வேண்டுமென்று ராஜகோபாலய்யங்கார் தீர்மானித்தார்.
அன்று ஸாயங்காலம் ஐந்து மணியானவுடன் பைஸிகிள் போட்டுக்கொண்டு, வில்ஸன் துரை வீட்டு வாயிலிலே போலீஸ் உடுப்புடன் இறங்கி, அங்கிருந்த வாயில் காப்போனிடம் "உள்ளே துரை இருக்கிறாரா?” என்று கேட்டார்.
"இரிக்காங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான். அவன் சென்னப்பட்டணத்து மஹமதியன். 'இருக்கிறார்கள்' என்பதை "இரிக்காங்கோ" என்று சிதைத்துச் சொன்னான். “என்ன செய்கிறார்?” என்று அய்யங்கார் கேட்டார்.
"ஹும்மா இரிக்காங்கோ. பேபர் படிக்கிறாங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான்.
“சரி; அப்படியானால் இந்தச் சீட்டை அவரிடம் கொண்டு கொடு” என்று சொல்லித் தமது பெயரும் உத்தியோகமும் குறிக்கப்பட்டிருந்த சீட்டை நீட்டினார்.
அய்யங்காருக்கு ஸலாம் போட்டு அந்தச் சீட்டை வாங்கிக்கொண்டு வாயில் காப்போன் உள்ளே சென்று வில்ஸன் துரையிடம் சீட்டைக் கொடுத்தான்.
அவர் “வரச் சொல்லு" என்று கட்டளை யிட்டார். ஸப் இன்ஸ்பெக்டர் உள்ளே போய் நாற்காலியில் இருந்து க்ஷேம் விசாரணைகள் செய்து முடிந்தவுடனே வில்ஸன் துரை ஸப் இன்ஸ்பெக்டரை நோக்கித் “தாங்கள் இங்கு வந்ததன் நோக்கமென்ன” என்று கேட்டார்.
"ஊரெல்லாம் தொழிலாளிகளின் சச்சரவு மிகுதிப்பட்டு வருகிறதென்று கேள்வி யுற்றேன். அச்சுக் கூடத் தொழிலாளிகளே விசேஷமாக முதலாளிகளை அல்லற்படுத்துவதாகவும் அறிந்தேன். இது விஷயமான விசாரணைகள் செய்யும்படி எனக்கு மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். நான் தங்கள் மூலமாக இதன் விவரங்க ளேதேனும் எழுதிக்கொண்டு போகலாமென்று வந்தேன். தங்களைப்போல் முக்கியமான வியாபாரிகளின் எண்ணங்களைத் தெரிந்தெழுதும்படி எனக்கு அதிகாரிகள் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள்; ஏதேனும் தகவல்கள் கொடுக்க செளகர்யப்பட்டால் அங்ஙனமே தயவு செய்ய வேண்டும்" என்று ராஜகோபாலய்யங்கார் மிக வினயத்தோடு சொன்னார்.
ராஜகோபாலய்யங்கார் இங்கிலீஷ் பாஷை பேசுவதிலே மஹா ஸமர்த்தர். அவர் இங்கிலீஷ் பாஷையில் எண்ணிறந்த புஸ்தகங்களும், மதிப்பிறந்த காவியங்களும் படித்துத் தேர்ந்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அத்தனையும் அவருக்குக் கரதல பாடம். பைரனுடைய பாட்டுக்களைப் பாராமல் சொல்லுவார். ஷெல்லி பாட்டுக்கள் குட்டியுரு. எனவே, அந்த பாஷையில் அவருக்குச் சிறந்த வாக்குண்டாய் விட்டது. இவர் பேசிய நேர்த்தியையும், மேனியழகையுங் கண்டு பூரித்து வில்ஸன் துரை, “நீங்கள்தானா இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டார்.
"ஆம்" என்றார் அய்யங்கார்.
வில்ஸன் துரை பெரிய வாயாடி. வந்தவர்களிடம் தொளைத்துத் தொளைத்து மாரிக் காலத்து மழை போல் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதும் அல்லது கேள்விகள் பல ஓயாமல் கேட்டுக் கொண்டிருப்பதும் அவருடைய வழக்கம். அதிலும் கவர்ன்மெண்டாருக்குத் தம்முடைய அபிப்ராயங்களை மதிப்புடையனவாகத் தெரிந்தனுப்ப வந்திருக்கும் அய்யங்காரிடம் அவருக்கு அதிகமாக மன மிளகி நாவு பொழியலாயிற்று. "உங்களுக்கு வயதென்ன?” என்று துரை கேட்டார். “முப்பத் திரண்டு வருஷம் மூன்று மாஸம்" என்றார் அய்யங்கார்.
“பெண்டாட்டி இருக்கிறாளா?” என்று துரை கேட்டார்.
“இல்லை ” என்றார் அய்யங்கார்.
துரை கேட்டார்: "இன்னும் விவாகமே நடக்கவில்லையா?” என, “ஒரு மனைவி கட்டி, அவள் இறந்து போய் இரண்டு வருஷங்களாயின. பிறகு இரண்டாந்தாரம் கட்டவில்லை” என்றார் ஐயங்கார்.
"ஏன்? முதல் தாரத்துக்குக் குழந்தைகள் அதிகமோ?" என்றார் துரை.
“இறந்த மனைவிக்குக் குழந்தை யில்லை” என்றார் அய்யங்கார்,
"தொழிலாளிகளின் விஷயம் பிறகு பேசிக் கொள்வோம். நடைப் பக்கத்துக்குப் போய்க் கொஞ்சம் பிஸ்கோட், டீ சாப்பிடலாமா?” என்று துரை அழைத்தார்.
ஐயங்கார் சாப்பிட உடன்பட்டார். தங்கையாகிய இஸபெல்லாவைக் கூப்பிட்டுத் தம் மிருவருக்கும் “டிபன்” தயார் பண்ணச் சொன்னார். அவள் சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து, மேஜை மேலே பழம், பலகாரம், டீ தயார் செய்து வைத்தாய் விட்டதென்று சொன்னாள்.
இதனிடையே அய்யங்கார் வில்ஸனை நோக்கி "எனக்கு மேற்படி தொழிலாளிகளுள் சச்சரவு ஸம்பந்தமான விவரங்களைத் தாங்கள் மிகவும் விரைவாகக் கோர்வைப் படுத்தித் தெரிவிக்க எத்தனை தினங்களுக்குள்ளே முடியும்? ஏனென்றால், கவர்ன்மெண்டார் என்னிடம் மிகவும் அவஸரமான அறிக்கையை எதிர்பார்க்கிறார்-களென்று தோன்றுகிறது" என்று ராஜகோபாலய்யங்கார் கேட்டார்.
“ஓ, நாளைக் காலை பத்து மணிக்குள் எழுதி ஒரு வேலையாள் மூலமாக உங்கள் கச்சேரிக் கனுப்பி விடுகிறேன்" என்று வில்ஸன் துரை வாக்களித்தார்.
ஐயங்காரும், வில்ஸன் துரையும், இஸபெல்லாவும் உட்கார்ந்து சிற்றுண்டி புசித்தனர். சமையற்காரப் பறையன் பறிமாறிக் கொண்டிருந்தான்.
"இந்த ஐயங்காரைப் பார்த்தால் மருதப் பிள்ளை முகச் சாயை கொஞ்சம் தென்படுகிறது” என்று இஸபெல்லா சொன்னாள்.
"உளறாதே! அவனுடைய மூஞ்சி, சூனியக்காரனுடைய மூஞ்சியைப் போலிருக்கும். இவரைப் பார்த்தால் ராஜாவைப் போல் இருக்கிறார். இவரோடு அவனை ஒப்பிடுகிறாயே?" என்றார் வில்ஸன் துரை.
சமையற்காரனைப் பார்த்து, இஸபெல்லா, "ஏனடா ஜான்? இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ஸாமி முகமும் அந்த மருதப் பிள்ளையின் முகமும் இலேசாக ஒருவிதச் சாய லொற்றுமை உடையன அல்லவா?" என்று வினவினாள்.
"எனக்குத் தெரியாது; மிஸ்ஸம்மா! நான் அந்த மருதப் பிள்ளை யென்ற மனிதனைப் பார்த்ததே கிடையாது" என்றான் சமையற்காரன்.
இதனுடன் அந்த ஸம்பாஷணையை நிறுத்தி விட்டார்கள்.
இதற்கிடையே மேற்படி மருதப் பிள்ளையின் பேச்சு நடக்கையிலே எவரெவர் என்ன குரலில் பேசினார்கள், எவரெவருடைய முகப்பார்வை என்னென்ன நிலைமையி லிருந்தது என்ற செய்தியை யெல்லாம் கவனித்து வந்த ராஜகோபாலய்யங்கார் - போடகிராப் - நிழற் படம் - பிடிக்கும் கருவிபோலே தமது சித்தத்தை நிறுத்திக் கொண்டு அவர்களுடைய சொற் கிரியைகளையும் தோற்றங்களையும் அப்படியே தமக்குள் சித்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.
இவர் அந்த ஸம்பாஷணையை இத்தனை கவனத்துடன் கவனித்தா ரென்பதை இஸபெல்லா உணர்ந்து கொண்டாள். பிறகு வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சிற்றுண்டி முடிவு பெற்றது.
ஐயங்கார் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டார், அவர் வெளியே போன வுடன், சமையற்காரனும் போய்விட்ட பின்பு, வில்ஸன் துரை.
"உனக்கு அந்த இடைப் பயல் மேலிருந்த மோஹம் இன்னும் தீரவில்லையோ?" என்று இஸபெல்லாவை நோக்கிக் கேட்டார்.
"என்னை வையாதே, உன் நாக்கு அழுகிப் போகப் போகிறது” என்றாள் இஸபெல்லா.
“அப்படியானால், இன்று மாலை அவனைப் பற்றிய வார்த்தையை நீ யேன் எடுத்தாய்? அவன் பெயரை ஏன் உச்சரித்தாய்?” என்று துரை கேட்டார்.
"மருதப் பிள்ளை என்ற பெயர் சொன்னால் தோஷமா? அவனுடைய மூஞ்சியும் அந்த ஸப் இன்ஸ்பெக்டர் மூஞ்சியும் ஒரே சாய லுடையன போலே தோன்றிற்று. அதற்காகக் கேட்டேன். கேட்டதில் என்ன குற்றம்? கேட்டது குற்றமென் றுனக்குத் தோன்றி, அதனால் நீ என்னை மிருகத்தனமாக இழித்துப் பேசக் கூடுமென்பதை இப்போ தறிந்தேன். இனிமேல், அவனுடைய பெயரை உச்சரிக்கமாட்டேன். நீ கஷ்டப்படாதே, போ" என்றாள் இஸபெல்லா.
"வந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்ட ரென்பதை மறந்தாயோ?" என்று வில்ஸன் துரை கேட்டார்.
அதற்கு இஸபெல்லா, "அது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் வாயிலில் வந்திறங்கும்போதே, என் பக்கத்திலிருந்த தையற்காரனிடம் இந்தப் போலீஸ் உத்யோகஸ்தர் யாரென்று விசாரித்தேன், 'இவர்தான் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் என்றும், இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கா ரென்றும், இவர் ரஹஸ்யப் போலீஸ் தந்திரங்களிலே மிகவும் கீர்த்தி பெற்று ராஜாங்கத்தாரிடம் பல மெடல்கள் வாங்கி யிருப்பதாகவும் தையற்காரன் சொன்னான்" என்றாள்.
"அப்படித் தெரிந்திருந்துமா, அவனிருக்கும்போது அந்தப் பாழ்த்த படுபாவியின் நாமத்தை உச்சரித்தாய்? அடி, போ, மூடமே!" என்று சொல்லி வில்ஸன் துரை பெரு மூச்செறிந்தார்.
அப்போது, அந்த வார்த்தை கேட்டு, இஸபெல்லா, “நீ மூடனா, நான் மூடையா என்பது பின்னிட்டுத் தெரியும். இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்கார் மேற்படி மருதப் பிள்ளை கொலை விஷயமாக நம்மிடமிருந்து ஏதேனும் துப்புக்கள் தெரிந்துகொண்டு போகவேண்டு மென்ற நோக்கத்துடனேயே நம்முடைய வீட்டுக்கு வந்தார். அந்த மர்மத்தை அறிந்தே நான் பேசினேன். பேசும்போது அவருடைய முகக் குறிப்பிருந்த நிலைமையை உத்தேசிக்கு மிடத்தே இவர் நம்மீது பரிபூர்ண ஸந்தேஹ முடையவராகவே தெரிந்தது. நான் சொல்லுகிறேன், கேட்கிறாயா? இந்த அய்யங்கார் இங்கு வந்த வுடனேயே இவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலையைப்பற்றி (ஊர் ஜனங்கள்) அவரிடம் அவசியம் பேசி யிருப்பார்கள். அவர் மேற்படி கொலையின் ஸம்பந்தமாக வுள்ள பழைய காயிதங்களையும் பார்வை யிட்டிருப்பார். அதினின்றும் தாம் ரஹஸ்ய ஆராய்ச்சிகளில் கீர்த்திபெற்றிருக்கும் ஸம்ஸ்காரத்தால் இந்த அதிமர்மமான கொலையின் உளவைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நிச்சயத்துடன் முதலாவது நம்மீதேற்பட்ட ஸம்சயத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாமென்று இங்கு வந்தார். அண்ணா, இந்தச் சலசலப்புக் கெல்லாம் நீ ஏன் ஓயாமல் பயப்படுகிறாய்? நாம் குற்றவாளிக ளல்லோ மென்பதை நாம் அறிவோம். தெய்வம் அறியும், நமக்கேது பயம்? நம்மைத் தெய்வம் காப்பாற்றும்" என்றாள்.
இது கேட்டு வில்ஸன் துரை சொல்லுகிறார்; "நீ கேவலம் பெண் பிள்ளை யாதலால் இங்ஙனம் பிதற்றுகிறாய்? முதலாவது விஷயம் கடவுளும் கிடையாது, கிடவுளும் கிடையாது. அதெல்லாம் பழங்காலத்துப் புரளி. இந்த உலகம் இயற்கையால் உண்டானது. இதை அறிவுடைய ஆத்மா ஒன்று யோசனை செய்து படைத்ததென்று தீர்மானிக்க ஒரு லவலேசம் - துண்டு, துணுக்கு, அணுகூட ருஜு கிடையாது” என்றார்.
இந்தப் பேச்சை இடையே நிறுத்தி இஸபெல்லா “நாம் தான் மருதப் பிள்ளையைக் கொன்றோ மென்பதற்கு ருஜு இருக்கிறதா? இப்போது அதைக் குறித்துப் பேசுவோம். நான் பெண் பிள்ளை; எனக்குப் புத்தி கிடையாது, விவகாரம், ஞானம் சிறிதேனும் கிடையாது. மூடத்தனமாகக் கடவுளை நம்புகிறேன். ஆனால், யதார்த்தத்திலே கடவுளும் கிடையாது; கிடவுளும் கிடையாது. அந்த விஷயம் உனக்கு நன்றாக ருஜுக்களுடன் நிச்சயப்பட்டிருக்கிறது,
நீ ஆண் பிள்ளை ; படித்தவன், மேதாவி, விவகார ஞானத்திலே சிறந்தவன், இதெல்லாம் வாஸ்தவந்தான். எனினும் இப்போது விவகாரத்திலிருப்பது மருதப் பிள்ளையின் கொலையைப் பற்றிய விஷயமே யாதலாலும் கடவுளின் கொலையைப் பற்றிய விஷயமில்லை யாதலாலும், நாம் கடவுளை நிந்திப்பதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, மருதப் பிள்ளையின் விஷயத்தைக் குறித்துப் பேசுதல் அதிகப் பொருத்தமுடைய தாகுமென்று அபிப்ராயப்படுகிறேன்" என்றாள்.
வில்ஸன் துரை மீட்டும் சொன்னார்: “நீ பெண் பிள்ளை ஆதலால் உனக்கு லெளகீக ஞானம் குறைவு. ஆதலால், நாம் ஒரு கொலை உண்மையிலே செய்திருந்தா லொழிய அதற்குரிய தண்டனையைக் குறித்து நாம் அஞ்ச வேண்டுவதில்லை யென்று நினைக்கிறாய். உலகத்திலே ஒருவன் மீது தகுந்த ஸாக்ஷிகளுடன் பொய்க் குற்றம் ஜோடிப்பது எத்தனை ஸுலப் மென்பதை நீ அறியவில்லை, கோயில் பாதிரியார் உனக்கு இந்த விஷயம் கற்றுக்கொடுக்கவில்லை. நாம் கொல்லவில்லை யென்பது வாஸ்தவந்தான். இருந்தாலும் இது நமக்கு மிகவும் பயந் தரக்கூடிய விஷயம்" என்றார்.
இதைக் கேட்டவுடன் இஸபெல்லா, “எனக்கு வேலை யிருக்கிறது. நான் போகிறேன். எதற்கும் நான் பயப்படுவதாக உத்தேசம் கிடையாது” என்று சொல்லிப் போய்விட்டாள்.
ஊரில் தொழிலாளர் சச்சரவு அதிகப்பட்டது. பிரமாண்டமான, மஹாமேருகிரியின் உச்சிக்கு மேலே யுள்ள ஒரு கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர் நேரே வில்ஸன் துரையைக் கண்டு பேசி அந்தச் சச்சரவு சம்பந்தமான வாக்குமூலம் வாங்கிக்கொண்டு போனார்.
இந்த மஹிமை வில்ஸன் துரைக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால அய்யங்காரே விசேஷ காரண பூதராக இருந்தார். அதினின்றும் அய்யங்காருக்கும் வில்ஸன் துரைக்கும் ஸ்நேகம் அதிகப்பட்டது.
அய்யங்கார் மாலைதோறும் வில்ஸன் துரையின் வீட்டுக்கு வருவதை ஒரு விரதம்போலே நடத்திவந்தார். இதினின்றும் அய்யங்காருக்கும் துரையினுடைய தங்கை இஸபெல்லாவுக்கும் அடிக்கடி ஸந்தித்துப் பழக இடமுண்டாயிற்று. அந்த வழக்கம் சில வாரங்களில் ஸ்நேகமாக மாறிற்று. அந்த ஸ்நேகம் சில மாஸங்களில் காதலாகப் பரிணமித்தது.
வில்ஸன் துரையிடம் விவாகத்தைக் குறித்து ஸம்மதம் கேட்டார்கள். அவர் கூடாதென்று சொல்லிவிட்டார். அதினின்றும் இஸபெல்லா தன் தமயனுடைய வீட்டை விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே ஸப் இன்ஸ்பெக்டர் வாஸம் செய்துகொண்டிருந்த பங்களாவுக்கு வந்து விட்டாள். அங்கு ஸர்க்கார் பதிவுச் சட்டப்படிக்கும், கிறிஸ்தவ மாதாகோயில் சடங்குகளின் படிக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் இஸபெல்லாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று.
இஸபெல்லாவினுடைய இளமையும் வனப்பும் சற்றே மங்கத் தொடங்கின பிராயத்தி லிருந்தாளென்று மேலே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த விவாகம் நடந்த ஸந்தோஷத்திலே அவள் இளமையிலிருந்த அழகையும் கவர்ச்சியையும் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான புதிய வனப்பையும் கவர்ச்சியையும் பெற்றுத் தேறிவிட்டாள்.
பின்னிட்டு வில்ஸன் துரையும் ஸமாதானத்துக்கு வந்துவிட்டார். "ஒரு கேடுகெட்ட வெள்ளைக்காரனுக்கு என் தங்கையை மணம் புரிவதைக் காட்டிலும் சுத்தமான பிராமணனுக்குக் கொடுத்தது, எனக்கு நூறுமடங்கு மேன்மையாயிற்று. ஸர்க்கார் உத்தியோகஸ்தர் ஐரோப்பிய மேலதிகாரிகளுக்குக் கண்மணிபோலே இருக்கிறார். மாப்பிள்ளையின் அழகுக்கே கொடுக்கலாமே ஆயிரத்தெட்டு ராஜகுமாரத்திகளை" என்று வில்ஸன் துரையே தம்முடைய ஸ்நேகிதர்களிடம் சொல்லத் தொடங்கி விட்டார்.
ஒரு நாள் மாலை இஸபெல்லாவும் அவளுடைய கணவனாகிய ராஜகோபாலய்-யங்காரும் தனியிடத்திருந்து ஸம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் அய்யங்கார் தன் காதலியை நோக்கி, “இஸபெல்லா, என் காதலி, மருதப் பிள்ளையை யார் கொன்றார்கள்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"அவருடைய மனைவி கொன்றாள்” என்றாள் இஸபெல்லா.
"ஏன்"? என்று அய்யங்கார் கேட்டார், "அவளை மற்றொருவனுக்குப் பெண்டிருக்கும்படி, வற்புறுத்தினார். அதற்காகக் கொன்றாள்" என்றாள் இஸபெல்லா.
“பறையன் மீதிருந்த கோழி ரத்தக் கறையின் செய்தி என்ன?" என்று அய்யங்கார் கேட்டார்.
“அது கோழி ரத்தந்தான்! கொலை நடந்தபோது மருதப் பிள்ளையும் அவனுடைய மனைவியைச் சில இடங்களில் காயப்படுத்தி விட்டான். அவன்தான் முதலாவது குத்தினான். எனவே, அவள் குற்றுயிரோடிருந்தாள். அவள்மீது ஸம்சயந் தோன்றாமல் மாற்றும் பொருட்டு நான் அவளைப் பத்திரமாக மறைத்து வைத்து முதல் ஸம்சயத்தை வீணுக்காவது பறையன் மேலே திருப்பி விட்டுப் பின் அவளை வேறுபாயங்களால் மீட்டுக் கொள்ளலா மென்று கருதி நான் தான் அவனுடைய துணியில் கோழி யிரத்தம் பூசுவித்தேன்” என்றாள் இஸபெல்லா.
அப்பால் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை சம்பந்தமான பதிவுகளை அய்யங்கார் மீட்டும் கட்டி வைத்து விட்டார். அந்த விவகாரத்தை மறந்து போய்விட்டார்.
------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
இக் கதை கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. இதன் பின்னர், நூலாக்கம் பெற்ற கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதியில் இடம்பெற்றது.
பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எந்த மாதிரி மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது.
----------------------
6. கொட்டையசாமி
அந்த ஊரில் மிகவும் கீர்த்தியுடைய சிவன் கோவில் ஒன்றிருக்கிறது. ஆனித் திருவிழாவின்போது அக் கோவிலில் தேரோட்டம் மிகவும் அற்புதமாக நடக்கும். சூழ்ந்துள்ள கிராமங்களினின்றும் நாயக்கர்களும், நாயக்கச்சிகளும், ரெட்டிகளும், ரெட்டிச்சிகளும், பறையர் பறைச்சிகளும் பெருங்கூட்டமாகத் தேர் சேவிக்கும் பொருட்டு வந்து கூடுவார்கள்,
கொண்டையெல்லாம் செவ்வந்திப் பூ வீதியெல்லாம் கரும்பு சுவைத்துத் துப்பிய சக்கை. அவர்களுடைய குழந்தைகள் ஆணும் பெண்ணும், பெரும் பகுதி நிர்வாணமாகவும், சிறு பகுதி இடுப்பில் மாத்திரம் ஒரு சிறு துணியை வளைத்து கட்டிக்கொண்டும் வரும். துணி உடுத்திய குழந்தைகளுக்குள்ளே ஆண் பெண் வேற்றுமை கண்டுபிடிப்பது சிரமம் ஏனென்றால், ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் முன் குடுமி சிரைக்கும் விநோதமான வழக்கம் அந்த ஜாதியார்களுக்குள்ளே காணப்படுகிறது.
மேற்படி நெட்டையபுரத்தில் ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவருக்கு இப்போது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும். செக்கச்செவேலென்று எலுமிச்சம் பழம்போலே பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அவருடைய நடை யுடை பாவனைகளில் உடை மாத்திரம் இங்கிலீஷ் மாதிரி, நடையும். பாவனைகளும் முற்காலத்துப் பாளையக்காரரைப் போலேயாம். பூட்ஸ் முதல் தொப்பி வரை அம் மனிதருடைய உடுப்பைப் பார்த்தால் லண்டன் நகரத்து லார்டு மக்களின் அச்சு சரியாக இருக்கும். இவர் மூன்று தரம் இங்கிலாந்துக்குப் போய் வந்திருக்கிறார். இங்கிலீஷ் பாஷை பேசினால், திக்காமலும் தட்டாமலும் சர சர சரவென்று மழை வீசுவது போல் வீசுவார். இவருக்குக் குதிரை யேற்றத்திலும் வேட்டையிலும் பிரியம் அதிகம். நானூறு வேட்டை நாய்கள் வளர்க்கிறார். இவருடைய அந்தப்புரத்தில் பன்னிரண்டு தாலிகட்டிய பெண்டாட்டிகளும் வேறுபல காதல் மகளிரும் இருக்கிறார்கள்.
இந்த ஜமீன்தார் சிவபக்தியில் சிறந்தவர். விபூதி ருத்திராக்ஷங்களை மிகவும் ஏராளமாகத் தரிக்கிறார். தினம் இரண்டு வேளை அரண்மனையில் தாமே சிவபூஜை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை தோறும் தவறாமல் மாலையிலே சிவன் கோவிலுக்குப்போய் ஸ்வாமி தரிசனம் பண்ணி வருகிறார். திருவிழாக் காலங்களில் முதலாவது வந்து நின்று முக்கால்வாசிப் பொழுதையும் கோவிலிலே செலவிடுவார். தேரோட்டத்தின்போது வடத்தை மற்ற ஜனங்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போவார். அப்பால் கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு ஜனங்களை உற்சாகப் படுத்தினபடியாகவே, தேர் மீட்டும் நிலைக்கு வந்து நிற்க எவ்வளவு நேரமான போதிலும் கூடவே வருவார்.
கோவிலுக்கு வரும் சமயங்களில் மாத்திரம் இவர் ஐரோப்பிய உடையை மாற்றித் தமிழ் உடை தரித்துக் கொண்டு வருவார். பலாச்சுளைகளைப்போல் மஞ்சளாகக் கொழுக் கொழுக்கென்ற உடம்பும், பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஒரு ஜரிகைப் பட்டுத் துண்டும், கை நிறைய வயிர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார் சென்ற ஆனித் திருவிழாவின்போது, ஒரு நாட்காலையில் மேற்படி சிவன் கோவிலுக்கெதிரே, வெளி மண்டபத்தில் கல்யாண ஜமக்காளத்தின் மீது பட்டுத் தலையணைகளில் சாய்ந்துகொண்டு, வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த வெள்ளிக் காளாம்பியில் சவைத்துச் சவைத்துத் துப்பிக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில், மேற்படி ஜமீன்தாரின் முன்னே கன்னங் கரேலென்ற நிறமும், மலர் போலத் திறந்த அழகிய இளைய முகமும், நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக, ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய இளைஞ னொருவன் வந்து தோன்றினான். இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இவன் யோகி யென்று அந்த ஊரில் சிலர் சொல்லுகிறார்கள். ஞானப் பயித்தியங் கொண்டவனென்று சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவனுக்குக் கொட்டைய சாமியார் என்ற பெயர் வழங்குகிறார்கள்.
இவனைக் கண்டவுடனே ஜமீன்தார் "வாடா, கொட்டையா” என்றார்.
“சாமி, புத்தி” என்றான் கொட்டையன்.
“காவி வேஷ்டி உடுத்திக் கொண்டிருக்கிறாயே! என்ன விஷயம்?” என்று ஜமீன்தார் கேட்டார்.
கொட்டையன் மறுமொழி சொல்லவில்லை. சும்மா நின்றான்.
"சந்நியாசம் வாங்கிக் கொண்டாயா?" என்று ஜமீன்தார் கேட்டார்.
“ஆமாம்; பாண்டியா, ஊரார் வீட்டு ஸ்த்ரீகளை யெல்லாம் சந்யாசம் பண்ணிவிட்டேன்" என்று கொட்டையன் சொன்னான்.
“சாப்பாட்டுக்கென்ன செய்கிறாய்?” என்று ஜமீன்தார் கேட்டார்.
"என்னுடைய பெண்டாட்டிக்கு அரண்மனையில் சமையலறையில் வேலையா யிருக்கிறது. அவள் அங்கிருந்து பேஷான நெய், தயிர், சாதம், கறி எல்லாம் மஹாராஜா போஜனம் பண்ணு முன்னாகவே எனக்குக் கொணர்ந்து தருகிறாள். ஆதலால், பரமசிவனுடைய கிருபையாலும், மஹாராஜாவின் கிருபையாலும் மேற்படி பெண்டாட்டி கிருபையாலும் சாப்பாட்டுக்கு யாதொரு கஷ்டமுமில்லை" என்று கொட்டையன் சொன்னான்.
"துணிமணிகளுக்கு என்ன செய்கிறாய்?” என்று ஜமீன்தார் கேட்டார்.
கொட்டையன் மறுமொழி யொன்றுஞ் சொல்ல வில்லை. சும்மா நின்றான்.
அப்பொழுது ஜமீன்தார் அவனை நோக்கி “நாலா நாள் இரவில் நீ கீழவாயிலோ-ரத்திலுள்ள பாம்பலம்மன் கோவிலிலிருந்து சில கற்சிலைகளையும், ஒரு வேலாயுதத்தையும் வேஷ்டிகளையுந் திருடிக்கொண்டு வந்தாயாமே, அது மெய்தானா?” என்று கேட்டார்.
"இல்லை, பாண்டியா, திருடிக்கொண்டு வரவில்லை. சும்மா எடுத்துக்கொண்டு வந்தேன்” என்று கொட்டையன் சொன்னான்.
இதைக் கேட்டவுடனே ஜமீன்தார் கலகலவென்று சிரித்தார். பக்கத்திலிருந்த மற்றப் பரிவாரத்தாரும் சிரித்தார்கள்.
அப்போது ஜமீன்தார் கேட்கிறார்: “சரி கொட்டையா, நீ திருடவில்லை; சும்மா எடுத்துக்கொண்டு வந்தாயாக்கும். சரி, அப்பாலே என்ன நடந்தது?” என்றார்.
“கோயிற் பூசாரி சில தடியர்களுடன் என் வீட்டுக்கு வந்து சாமான்களைக் கேட்டான். சிலைகளையும் துணிகளையும் திரும்பக் கொடுத்து விட்டேன், வேலாயுதத்தை மாத்திரம் கொடுக்கவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.
"ஏன்?" என்று ஜமீன்தார் கேட்டார்.
"அந்த 'வேலை' எங்கள் வீட்டுக் கொல்லையில் மந்திரஞ் சொல்லி ஊன்றி வைத்திருக்கிறேன். அத்தனை பயல்களுங் கூடி அதை அசைத்து அசைத்துப் பார்த்தார்கள். அது அணுவளவுகூட அசையவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.
'அவ்வளவு பலமாக ஊன்றி விட்டாயா?" என்று ஜமீன்தார் கேட்டார்.
"இல்லை, பாண்டியா, அதை ஒரு பூதம் காப்பாற்றுகிறது. ஆதலால் அசைக்க முடியவில்லை " என்று கொட்டையன் சொன்னான்.
இதைக் கேட்டவுடன் ஜமீன்தார் கலகல வென்று சிரித்தார். சபையாரும் நகைத்தனர்.
அப்போது, ஜமீன்தார் கொட்டையனை நோக்கி, “ஏதேனும் பாட்டுப் பாடு; கேட்போம்” என்றார்.
“உத்தரவு பாண்டியா” என்று சொல்லிக் கொட்டையன் கண்ணனைப் போலே கூத்தாடிக் கொண்டு பின்வரும் பொம்பப் பாட்டுக்கன் பாடலானான்:
பாட்டு
-
வண்டிக்கார மெட்டு
1. கால் துட்டுக்குக் கடலை வாங்கிக்
காலை நீட்டித் தின்கையிலே
என்னை யவன் கூப்பிட்டே
இழுத்தடித்தான் சந்தையிலே.
“தண்டை , சிலம்பு சல லென;
வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென."
2. சந்தையிலே மருக்கொழுந்து
சரம் சரமா விற்கையிலே
எங்க ளிடம் காசில்லாமல்
எங்கோ முகம் வாடிப் போச்சே!
"தண்டை சிலம்பு சல சலென்;
வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென.”
கொட்டையன் தொடங்கி விட்டான்:
பாட்டு
-
“காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்”
எப்போ எப்போ கலியாணம்?
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக் கு
ழைய லிட்டே தாலி கட்டிக்
காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்:
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்."
கொட்டையன் உடனே ஆட்டமும் பாட்டுந் தொடங்கி விட்டான்:
பாட்டு
-
"வெற்றிலை வேண்டுமா கிழவிகளே?"
“வேண்டாம், வேண்டாம், போடா!"
“பாக்கு வேண்டுமா, கிழவிகளே?"
“வேண்டாம், வேண்டாம், போடா!"
“புகையிலை வேண்டுமா, கிழவிகளே?"
“வேண்டாம், வேண்டாம், போடா!”
"ஆமக்கன் வேண்டுமா கிழவிகளே?"
“எங்கே? எங்கே? கொண்டுவா, கொண்டுவா”
கொட்டையன் ஆட்டத்தையும் பாட்டையும் உடனே நிறுத்தி விட்டான்.
இப் பாட்டுக்களை மிகவும் அற்புதமான நாட்டியத்துடன் கொட்டையன் பாடியது பற்றி ஜமீன்தார் மிகவும் சந்தோஷ மெய்திக் கொட்டையனுக்கு ஒரு பட்டுத் துண்டு இனாம் கொடுத்தார்.
நான் அந்தச் சமயத்தில் அந்தக் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்காகப் போயிருந்தேன். அங்கே இந்தச் செய்திகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
# # #
அன்று சாயங்காலம் நான் மறுபடி அந்த கோயிலுக்குப் போனேன். அங்கு வெளி மண்டபத்துக் கெதிரே கொட்டையன் நின்றான். காலையில் தனக்கு ஜமீன்தார் இனாம் கொடுத்த பட்டுத் துண்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து இரண்டு கைகளிலும் நாலி நாபியாகக் கட்டிக் கொண்டிருந்தான்.
நான் அவனை நோக்கி, "ஏன், கொட்டைய சாமியாரே, பட்டை ஏன் கிழித்தாய்?” என்று கேட்டேன்.
இதைக் கேட்டுக் கொட்டையன்,
-
“பட்டைக் கிழித்தவன் பட்டாணி - அதைப்
பார்த்திருந்தவள் கொங்கணச்சி –
துட்டுக் கொடுத்தவன் ஆசாரி - இந்தச்
சூழ்ச்சியை விண்டு சொல், ஞானப் பெண்ணே”
“இதற்கென்ன அர்த்தம்?” என்று கேட்டேன். கொட்டையன் சிரித்துக் கொண்டு மறுமொழி சொல்லாமல் ஓடிப்போய் விட்டான்.
காலையில் ஜமீன்தாரிடம் பாட்டுக்கு மேலே இவன் கொஞ்சம் பணம் கேட்டதாகவும், அவர் கொடுக்க முடியாதென்று சொன்னதாகவும், அந்தக் கோபத்தால் இவன் பட்டைக் கிழித்துக் கைகளில் நாலி நாலியாகத் தொங்கவிட்டுக் கொண்டதாகவும், பின்னாலே பிறரிடமிருந்து கேள்விப்பட்டேன்.
-------------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
இக் கதை பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியுள் இடம் பெற்றதாகும்.
அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பொதுவான குணாதிசயங்களை விளக்க எழுதிய இந்தக் கதையில் கொட்டையசாமி என்பவன் ஜமீன் சபையில் நிகழ்த்திய ஆட்ட - பாட்டங்களைப் படித்து ரசிக்கலாம்.
பொழுது போக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. கட்டுரைத் தொகுதியில் இக் கதை இடம்பெற்றதால், கதைத் தொகுதியைப் பதிப்பித்தவர்கள் இதைத் தம் பதிப்புகளில் சேர்க்கவில்லை.
-------------
7. சந்திரத் தீவு
அவனுக்கு ஆண் மகவு கிடையாது. பல விதமான தவங்களும், வேள்விகளும் புரிந்த பின் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சந்திரிகை என்ற பெயரிட்டு வளர்த்தான்.
அந்தப் பெண்ணினுடைய அழகும் கல்வியும் வர்ணிப்பதற்கு அரியன. கப்பல் வியாபாரிகளின் மூலமாக அப் பெண்ணினுடைய கீர்த்தி பூமண்டல முழுதிலும் பரவி விட்ட து.
அப்போது காசி நகரத்தில் அரசு செலுத்தின வித்யாபுத்ரன் என்ற பிராம்மண ராஜன், அந்தப் பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்பி, சண்டிகை என்ற தன் பெரிய தாயையும் ஸுதாமன் என்ற தன் மந்திரியையும் சந்திரத் தீவுக்கு அனுப்பினான்.
அவ்விருவரும் பல ஸம்மானப் பொருள்களுடனும் பரிவாரங்களுடனும் சந்திரத் தீவிலே போயிறங்கி கங்காபுத்ரனைக் கண்டு வரிசைகளை யெல்லாம் கொடுத்துக் காசிராஜன் கருத்தை அறிவித்தார்கள்.
சந்திரிகைக்கு வயது பதினேழு. நடுப் பகலில் அவள் ஓரிடத்துக்கு வந்தால் அங்கு பகலொளி மங்கி நிலவொளி வீசும்.
அவள் முகம் முழுமதி போன்றிருந்தது. அவள் நெற்றி, பிறை போன்றது. அவள் விழிகள் நிலவு கொப்பளித்தன. அவள் புன்னகை நிலவு வீசிற்று. அவள் மேனியும் நிலவையே தெறித்தது.
இத்தகைய அழகுடைய பெண் பூமண்டலத்தில் எங்கும் கிடையாதபடியால், அவளைத் தகுதியற்ற வரனுக்குக் கொடுக்கக் கூடாதென்று கங்காபுத்ரன், வந்த வரன்களை யெல்லாம் விலக்கி, மிகப் பொறுமையுடன் காத்திருந்தான்.
காசிராஜன் படத்தைப் பார்த்தவுடனே, அவனைத் தன் மகள் மணம் புரியலாமென்ற எண்ணம் கங்காபுத்ரனுக் குண்டாயிற்று. அவன் ராணியும் இணங்கினாள், ஆனால் அந்தப் பெண்ணுக்குச் சம்மதமில்லை. பெண் சந்திரிகை, காசியிலிருந்து வந்த மந்திரி ஸுதாமனுடைய அழகையும் அவன் சொல் நயத்தையும், நடை மேன்மையையும் கண்டு மயங்கியவளாய் அவனையே மணம் புரிந்து கொள்வேனென்று ஒரே சாதனையாகச் சாதித்தாள்; அதாவது, முரண்டு பண்ணினாள்.
மறுநாள் கங்காபுத்ரன் தனது மந்திரியாகிய ராஜ கோவிந்தனையும் காசி தேசத்து மந்திரியான ஸுதாமனையும் பல வேடர் பரிவாரங்களையுஞ் சேர்த்துக் கொண்டு யானை வேட்டைக்குச் சென்றான். வேட்டையில் இரண்டு ஆண் யானைகள் பட்டன. அப்பால் வனத்திலேயே ஸ்நான போஜனங்கள் முடித்துக் கொண்டு சிரம் பரிஹாரத்தின் பொருட்டாக ஆங்கோர் ஆலமர நிழலிலே கங்காபுத்ரன், ராஜ-கோவிந்தன், ஸுதாமன் மூவருமிருந்து பலவிதமான சாஸ்த்ர சம்பாஷணைகள் செய்யலாயினர்.
அந்த சம்பாஷணையினிடையே சந்திரத் தீவின் ராஜா கேட்கிறான்: “இன்று காலையில் இரண்டு யானைகளைக் கொன்றோமே? அது பெரிய பாவமன்றோ? ஆஹா! என்ன நேர்த்தியான மிருகங்கள்! ஆஹா! எத்தனை அழகு. எத்தனை ஆண்மை , எத்தனை வீரம், எத்தனை பெருந்தன்மை, அவற்றைக் கொன்றோமே, இது கொடிய பாவமன்றோ?" என்றான்.
அதற்குக் காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்: "ஆர்ய புத்திர, யானையைக் கொல்வது மாத்திரந்தானா பாவம்? ஆடு, மாடு, கோழிகளைத் தின்கிறோமே, அது பாவ மில்லையா?" என்றான்.
சந்திரத் தீவின் அரசன் "அதுவும் பாவந்தான்" என்றான்.
அப்போது ஸுதாமன் சொல்லுகிறான்: “மாம்ஸ போஜனம் ஜந்துக்களுடைய இயற்கை. ஆதலால், பாவமாகாது. மனிதன் மாத்திரம்தானா மாம்சம் தின்னுகிறான்? மனிதனைப் புலி தின்னவில்லையா? சிங்கம், புலி, கரடி, நாய், நரி முதலிய மிருகங்க ளெல்லாம் அஹிம்சா விரதத்தைக் கைக்கொண்டிருக்கின்றனவா? கொக்கு மீனைத் தின்னவில்லையா? பெரிய மீன் சிறிய மீனை விழுங்கவில்லையா? காக்கை பூச்சிகளைத் தின்னவில்லையா? குருவி புழுக்களை யுண்ணவில்லையா? புழுக்கள் ஒன்றையொன்று பலிக்கவில்லையா?" என்றான்.
அதற்குச் சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொல்லுகிறான்: “ஜீவஹிம்சை பொது நியாயமென்று சொல்லுதல் தவறு. யானை மாம்ஸந் தின்னாது. மாடு தின்னாது, மான் தின்னாது, குரங்கு தின்னாது, ஒட்டகை தின்னாது, குதிரை தின்னாது, கழுதை தின்னாது" என்றான்.
அப்போது கங்காபுத்ரன் நகைத்துக் கொண்டு, "சிங்கம் புலி நம்மைத் தின்னுமென்றால், நாம் வேட்டையாடி அவற்றைத் தின்பது நியாயமென்று விளையாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். சிங்கம் புலிகளை வேட்டையாடித் தின்போர் யாரையுங் காணோம். யாதொரு சூது மறியாத, எவ் வுயிருக்கும் எவ் வகைத் தீமையும் செய்யாத ஆட்டையும், மானையும், பசுவையும் மனிதன் தின்பது நியாயமா?" என்றான்.
அப்போது மந்திரி ராஜகோவிந்தன் சொல்லுகிறான்: “சிற்சில ஜந்துக்கள் - பெரும்பான்மையான ஜந்துக்கள் - இதர உயிர்களைக் கொன்றுதான் ஜீவிக்கின்றன. ஆனால், மனிதனைத் திருத்தினால் பிறகு காக்கை, குருவி முதலிய அனேக ஜந்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாம்ஸம் தின்னாதபடி திருத்தி விடுதல் சாத்தியமென்று தோன்றுகிறது; போதுமான தானியங்களும் பழங்களும் கிடைத்தால் காக்கை, குருவி, கிளி - இவை பூச்சி புழுக்களைத் தின்னாதபடி பயிற்சி செய்விக்கலாம். மனிதன் உயிர்குலத்தின் ராஜா. "அரசனெப்படி அப்படி மன்னுயிர்.” மனிதன் கருணா தர்மத்தையும் ஸமத்வ தர்மத்தையும் கைக்கொண்டால், பிற உயிர்களும் நாளடைவிலே கைக்கொள்ளும்” என்றான்.
அப்போது காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்: "இதர ஜீவ ஜந்துக்களின் மீது கருணை செலுத்து முன்னே மனிதர் ஒருவருக் கொருவர் கருணை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்தல் நல்லது. போர்களில் மனிதர் ஒருவரை யொருவர் கொல்ல வில்லையா? ஆட்டை மாட்டைக் கொன்றாலும் தின்ன உபயோகப்படுகிறது. மனிதரை மனிதர் தின்னும் வழக்கம் சிற்சில தீவினருக்குள்ளே காணப்படுகிற தெனினும், நம்மைப் போன்ற நாகரிக ஜாதியார்களுக்குள்ளே அவ்வித வழக்கமில்லை. மனிதரை மனிதர் தின்னப் பயன்படா விடினும் அநாவசியமாகக் கொன்று தள்ளுகிறார்கள்.
மேலும் பிற உயிர்களை அடிமைப்படுத்தும் வழக்கம் மிருகங்களுக்கில்லை. சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. ஒரு நாய், ஒரு கழுதை, ஒரு நரி, ஒரு பன்றிகூடச் சிங்கத்தின் கீழே அடிமையில்லை . முயல்கூடக் கிடையாது. மிருகங்களும், பக்ஷிகளும் பிற ஜாதி மிருக பக்ஷிகளை அடிமைப் படுத்துவதில்லை. ஸ்வஜாதிகளையும் அடிமையாக்குவதில்லை.
மனிதரோ, ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகை, யானை முதலிய அன்னிய ஜாதி ஜந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மட்டுமே யல்லாது, பிற மனிதர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப்போல் பாவம் வேறேதேனு முண்டோ ? பிற உயிரொன்றை ஆயுள் முழுவதும் தன் கீழே வைத்துச் சிறிது சிறிதாக மனமுடையச் செய்து அடிமை நிலையிலே வருந்தி வருந்தி வாணாள் தொலைக்கும்படி செய்வதைக் காட்டிலும் ஒரே யடியாக அவற்றைக் கொன்று விடுதல் எத்தனையோ மடங்கு சிறந்த தன்றோ? மனிதர் கீழே மனிதர் இருப்பதைக் காட்டிலும் சாதல் சிறந்தது.”
ஆணுக்கு ஆண் அடிமைப் பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப் பட்டிருக்கும் அநியாயம் மிக மிகப் பெரிது” என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொன்னான்.
"ஆணுக்கு ஆணும் ஆணுக்குப் பெண்ணும் அடிமைப் படாதிருத்தல் ஸாத்யமென்று தோன்றவில்லை” என்று ராஜா கங்காபுத்ரன் சொன்னான்.
“எங்ஙனம்?" என்று காசி மந்திரி ஸுதாமன் கேட்டான்.
"ஆண்களில் பெரும்பாலோர் செல்வமில்லாதவர்கள், சிலர் செல்வ முடையவர்கள். ஆதலால் செல்வமுடைய சிலருக்கு அஃதில்லாத பலர் அடிமைப்படுதல் அவசியம்” என்று ராஜா சொன்னான்.
"பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?” என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் கேட்டான்.
அதற்கு ராஜா கங்கா புத்ரன் சொல்லுகிறான்: "பெண் சரீர பலத்தில் ஆணைக் காட்டிலும் குறைந்தவள். அவளாலே ஸ்வாதீனமாக வாழ முடியாது, தனிவழி நடக்கையிலே துஷ்டர் வந்து கொடுமை செய்தால், தன்னைக் காத்துக் கொள்ள வலி இல்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம் முதலிய அவசியங்களாலே, உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து ஜீவனம் செய்வதில் இயற்கையிலேயே பெண்ணுக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள் ஆஹார நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல் அவசியமாகிறது. பிறன் கைச்சோற்றை எதிர்பார்த்தால், அவனுக்கடிமைப் படாமல் தீருமா?” என்றான்.
அப்போது காசி மந்திரியாகிய ஸ்தாமன் சொல்லுகிறான்: “பெண்கள் உழவு முதலிய தொழில் அனைத்திலும் ஆண் மக்களுக்கு ஸமானமான திறமை காட்டுகிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆண் மக்கள் ஸம்பாத்தியம் பண்ணிப் போடாமல், அவர்கள் ஸம்பாதித்து ஆண் மக்களுக்குச் சோறு போடும் நாடுகளிலேகூட, ஆண் மக்கள் பெண்களை அடிமை நிலையிலேதான் வைத்திருக்கிறார்கள். சரீர பலத்தில் ஸ்திரீகள் ஆண்களைவிட இயற்கையிலே குறைந்தவர்கள் என்பது மாத்திரம் மெய்.
இது மனிதருக்குள் மட்டுமன்று, எல்லா ஜந்துக்களுள்ளும் அப்படியே. ஆண் சிங்கத்தைக் காட்டிலும் பெண் சிங்கம் பலம் குறைந்தது; வடிவில் சிறியது. காளை மாட்டைக் காட்டிலும் பசுமாடு பலங் குறைந்தது. வடிவத்திலே சிறியது. ஆண் நாயைக் காட்டிலும் பெண் நாய் பலம் குறைந்தது. சேவலைக் காட்டிலும் கோழி சிறிது. ஆண் குருவியைக் காட்டிலும் பெண் குருவி சிறிது. அநேகமாக எல்லா ஜந்துக்களின் விஷயத்திலும் இதுவே விதி. இக்காரணம் பற்றியே மிருகங்கள், பக்ஷிகள், மனிதர், பூச்சிகள் முதலிய சகல ஜந்துக்களிலும் பெண்ணை ஆண் தாழ்வாக நடத்தும் வழக்க மிருக்கிறது. .
"மனிதன் நாகரிக ஜந்துவாதலால் மற்றைய ஜந்துக்களைப்போல் அத் தாழ்வு நிலையைப் புறக்கணித்து விடாமல், அதைச் சாசுவதமாக்கி, சாஸ்த்ர மேற்படுத்தி வைத்திருக்கிறான். மனித ஜாதியில் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருப்பதுபோல் இதர ஜந்துக்களுக்குள்ளே கிடையாது. மனிதரிலே கொடுமை அதிகம். இதற்கெல்லாம் ஆதி காரணம் ஒன்றே. பலங் குறைந்த உயிரை பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்று விதி சகல பிராணிகளி னிடையேயுங் காணப்படுகிறது. மனிதர் அதை எல்லை யில்லாமல் செய்கிறார்கள்” என்றான்.
அப்போது ராஜா கங்காபுத்ரன் ஸுதாமனை நோக்கி, "ஒரு ஸ்த்ரீயைப் புருஷன் அடிமையாக நடத்துவதும், மானைப் புலி தின்பதும், ஆட்டை மனிதன் தின்பதும், பள்ளனை அரசன் சொற்பக் கோபத்தால் சிரச்சேதம் செய்வதும் இவை அத்தனைக்கும் ஒரே பேர் என்று சொல்லுகிறாயா?" என்றான்.
அதற்கு ஸுதாமன்: "ஆம். ஜந்துக்கள் பரஸ்பரம் துன்பப்படுத்தப்படாமல் தடுப்பது நமக்கு ஸாத்யமில்லை. நாட்டிலுள்ள காக்கை குருவிகளை ஒருவேளை திருத்தினாலும் திருத்தலாம். வனத்திலுள்ள துஷ்ட மிருகங்களையும், கோடானுகோடி ஜந்துக்களையும், மண்ணுக்குள் பூச்சி புழுக்களையும், கடலில் மீன்களையும் திருத்த மனிதனால் ஆகாது.
"மேலும் சிங்கம் புலிக்கு வாழைப்பழங்களும், மீன் புழுக்களுக்கெல்லாம் கீரையும், பூச்சி புழுக்களத்தனைக்கும் அரிசியும் தயார் பண்ணிக் கொடுக்க மனிதனால் முடியுமா? அதாவது ஒருவேளை அவை எல்லாம் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டே போதிலும், நாம் அவற்றைச் சாக பக்ஷணிகள் ஆக்க வழியில்லை.
"ஆனால், மனிதருக்குள்ளே பரஸ்பரம் அடிமைப்படுத்தினாலும், முக்கியமாக ஆண் பெண்ணை அடிமைப்படுத்தாமலும் மனிதர் ஸமத்வமாகவும் நியாயமாகவும் வாழ வழியுண்டு” என்றான்.
“மனிதர் பிற வுயிர்களைத் தின்னாதபடி செய்யும் வழியுண்டு” என்று ராஜகோவிந்தன் சொன்னான்.
“எப்படி?” என்று சந்திரத் தீவின் ராஜாவாகிய கங்கா புத்ரன் கேட்டான்.
அப்போது ஸதாமன் சொல்லுகிறான்: “அரனெப்படி அப்படி மன்னுயிர், ராஜா ஸ்திரீகளையும், மற்ற மனிதரையும் அடிமையாகக் கருதாமலிருந்தால் நாட்டில் ஸமத்வ முண்டாகும். ஒரு நாட்டில் நிலையுற்றால், எல்லா நாடுகளிலும் சீக்கிரத்தில் பரவிவிடும். கெட்ட வழக்கங்கள் போலவே நல்ல வழக்கங்களையும் பூமண்டலத்து ஜனங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கைக்கொள்ளுதல் மரபே” என்றான்.
அப்போது மந்திரி ராஜகோவிந்தன் சொல்லுகிறான்: “நாட்டில் அரசன் எவ்விதமான ஆஹார முண்கிறானோ, அதுபோன்ற ஆஹாரமே சகல ஜனங்களுக்கும் என்று ஏற்பாடு செய்யவேண்டும். அங்ஙனம் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நீங்கிப்போம்” என்றான்.
அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான்: “நமது சந்திரத் தீவை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள மனிதர் அத்தனை பேரும் மாம்சம் தின்பதில்லை யென்று வைப்போம்; இத்தனை பேருக்கும் தின்ன சாக பதார்த்தங்கள் நம் தீவிலில்லையே!” என்றான்.
"வருஷந்தோறும் இரண்டு லட்சம் சாக்குத் தேங்காய்களும், மூன்று லட்சம் சாக்கு மற்றப் பழ வகைகளும் பாரத தேசத்துக்கு நம் நாட்டினின்றும் ஏற்றுமதி செய்யப்-படுகின்றன." என்று மந்திரி சொன்னான்.
அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான்: “சரி, நான் தீர்மானம் செய்துவிட்டேன். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இன்றைக் கிருப்பவர் நாளைக் கிருப்பார்களென்று நிச்சயமாகச் சொல்ல இடமில்லை. எனக்கு முன் கோடானுகோடி அரசர் உலகத்திலே பிறந்து மாண்டுபோயினர். மனு மாந்தாதா, தசரத ராமாதிகளெல்லாம் மண்ணிலே கலந்து விட்டனர்; என் காலத்தில் ஒரு புதிய தர்மம் நிலைப்படும்படி செய்கிறேன்.
"மந்திரி ராஜகோவிந்தா, கேள்! நம்முடைய ப்ரஜைகள் எத்தனை பேர்? மொத்தம் 2 லட்சம் பேர். சரி, இங்கு விளைகிற நெல், புல், கிழங்கு, காய், கனி ஒன்றும் வெளியே போகக்கூடாது. பதினெட்டு வயதுக்குமேல் அறுபது வயது வரையுள்ள எல்லாரும் உழுதல், பயிரிடுதல், தோட்டஞ் செய்தல், துணி நெய்தல், மனை கட்டுதல், ஊர் துடைத்தல் முதலிய அவசியமான தொழில்களிலே சமமான பாகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
"வீடு விளக்கலும், குழந்தை வளர்த்தலும் சோறாக்கலும் பெண்களுடைய தொழிலாதலால், அவர்கள் பயிர்த்தொழில் முதலியவற்றிலே துணை புரிதல் வேண்டாம்.
"சரி. மொத்த விளைவை இந்த இரண்டு லக்ஷம் ப்ரஜைகளும் சமமாகப் பகுத்துக் கொள்வோம். எனக்கும் என் பத்தினிக்கும் என் குழந்தைகளுக்கும் - எத்தனை தானியம், எத்தனை கனி, எத்தனை கிழங்குண்டோ அப்படியே ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் - சமபாகமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிட ஏற்பாடு செய்வோம். பெண்களை அடிமைப்படுத்தவும் வேண்டாம்.
“காசிராஜன் பெரிய தாயாராகிய சண்டிகையை அவள் கொண்டு வந்த வரிசைகளுடன் ஒற்றைக் கிரட்டையாக வரிசை கொடுத்துப் பரிவாரங்களுடன் அடுத்த கப்பலில் பாரத தேசத்துக்கனுப்பி விடுவோம். நமது மகள் சந்திரிகையின் இஷ்டப்படி அவளை ஸுதாமனுக்கே மணம் புரிந்து கொடுத்து விடுவோம். நீ என்ன சொல்லுகிறாய்? ஸுதாமா, இங்கேயே இருப்பாயா? காசிக்குப் போனால் நான் உன்னுடன் என் மகளை அனுப்ப முடியாது” என்றான்.
அதற்கு ஸுதாமன், “நான் இங்கேயே இருக்கிறேன். பயமில்லை. விஷயத்தை யெல்லாம் தெளிவாகச் சொல்லி யனுப்பினால் காசிராஜர் கோபம் கொள்ளமாட்டார். என்னுடைய தம்பியை அவருக்கு மந்திரியாக நியமித்துக்கொள்ள ஏற்பாடு செய்து விடுகிறேன். நான் இங்கே இருப்பேன். இந்தத் தீவும் அழகியது. இதிலுள்ள ஜனங்களும் நல்லவர்கள். இதன் அரசனாகிய நீயும் நல்லவன். நின் மகளோ என் நெஞ்சில் தெய்வம். ஆதலால் இங்கிருப்பேன்” என்றான்.
விவாகம் நடந்தது. அங்கு மன்னனும் குடிகளும் அண்ணன் தம்பிகள் போல - யாருக்கும் பசி யில்லாமல் யாருக்கும் நோயில்லாமல் யாருக்கும் வறுமை யில்லாமல் யாருக்கும் குறைவில்லாமல், யாருக்கும் பகை யில்லாமல் - எவ்விதமான துன்பமுமில்லாமல், ஸுதாமன் - ராஜகோவிந்தன் என்ற இரண்டு மந்திரிகளுடன் கங்காபுத்ரராஜன் நெடுங்காலம் சுகத்துடன் வாழ்ந்தான்.
---------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
'ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வற்புறுத்த எழுதப்பட்ட இந்தக் கதை பாரதி பிரசுராலயத்தார் பதிப்பித்த கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. |
'ஜீவகாருண்ய ஒழுக்க' விஷயத்தில் பாரதி மனித குலத்தை மட்டுமே சீர்திருத்த எண்ண வில்லை. மிருக-பட்சி ஜாதிகளையும் சீர்திருத்தம் செய்ய விரும்பினார்.
தம்முடைய தரும் போதனையை இக் கதையில் வரும் கதாபாத்திரங்களான கங்காபுத்திரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் ஆகியவர்களுடைய உரையாடல்கள் மூலம் விளக்குகிறார், பாரதி.
பிரசார முறையில் அமைந்த கதைகளுள் இதுவும் ஒன்று எனலாம். கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்ற காரணத்தால் இக் கதை மற்றவர்கள் வெளியிட்ட கதைத் தொகுதிகளில் பிரசுரம் செய்யாமல் விட்டுவிட்டனர்.
------------
8. வேப்ப மரம்
நான் தூங்கிக் கொண்டிருக்கையில் "ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு; எழுந்திரு” என்று அமானுஷிகமாக ஒலி யொன்று கேட்டது.
இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவது, விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன்.
விழித்து, “யார் கூப்பிட்டது?" என்று கேட்டேன்.
“நான்தான் வேப்ப மரம்; நான்தான் கூப்பிட்டேன். எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.
உடனே நான் யோசிக்கலானேன். 'ஓஹோ, ஓஹோ! இது பேயோ, பிசாசோ, யக்ஷர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியாரோ, வன தேவதைகளோ - யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்ப மரம் எங்கேனும் பேசுவதுண்டோ ? அட, போடா, பேபாவது? அதெல்லாம் சுத்தக் கட்டுக் கதை யன்றோ? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலை யடையவில்லை. இன்னும் கனவு நிலையிலேதானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனை யொலி:
இங்ஙனம் நான் யோசனை செய்து கொண்டிருக்கையில், "ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று.
“நீ யார்?" என்று பின்னுங்கேட்டேன்.
"நான் வேப்ப மரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்" என்று மறுமொழி வந்தது.
அப்போது நான் 'சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ் விஷயம் நமக்கு இதுவரை தெரியாம லிருக்கலாம். ஆதலால், இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்' என்றெண்ணிக் கண்ணைத் திறந்து கொண்டெழுந்து நின்றேன். (உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)
எழுந்து நின்று கொண்டு, "வேப்ப மரமே, உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிதரைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை , அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாதபோது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே! எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர் களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே, அடி நாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிறார்களே. அப்படி யிருக்க, நீ மனித சரீரமே யில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன்.
அப்போது வேப்ப மரம் சொல்லுகிறது: “கேளாய், மானுடா, மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு, எனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக் கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மரமில்லை , நான் அகஸ்திய முனிவரின் சிஷ்யன். தமிழ்ப் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது."
வேப்ப மரம் பின்னுஞ் சொல்லுகிறது:
"நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானாகிறது. நான் இள மரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒருநாள் வஸந்த காலத்தின்போது, இரா வேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக் கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இரவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக் கொண்டு பிரமாநந்தத்தில் முழுகி யிருந்தேன்.
“அப்போது பதினாறு வயதுடைய மிகவும் அழகான மனித ஆண் பிள்ளை யொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனித ரில்லை யென்பது எனக்குத் தெளிவாய் விட்டது. சிறகுக ளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக் கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில், அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும்.
"அகஸ்த்யர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால், அவர் காம ரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணி யம்மனும் அப்படியே. ஆதலால், அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந் தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்து விட்டாள்.”
வேப்ப மரம் சொல்லுகிறது: "கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். தாம்ரபர்ணி யம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள். அகஸ்த்யர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில், இப்போது நீ நிற்குமிடத்திலே படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர்.
"எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திக ளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கிறா ரென்பதை அறியாமல் ஜலக் கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையி லிருக்கிறா ரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று.
"அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் --அந்த மரத்தின் கீழே யுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு 'ஜூஸ்' என்று சீத்காரம் செய்து கொண்டு அகஸ்த்யர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன்.
“ 'ஐயோ! இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால், தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கி விடுவார் என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர்மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பு அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று.
"அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையச் சுற்றிக் கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம் ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறிப்போய் சாதாரணத் தோலாய் விட்டது.
- “இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்ய மடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதை யில்லாமல், ஊமை மரமாய் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி, அவர் காலின்மீது சில மலர்களையும், இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்து என்னை நோக்கி, "வேப்ப மரமே' என்று கூப்பிட்டார்.
வேப்ப மரம் பின்னுங் கதை சொல்லுகிறது. "கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னை யறியாமலே என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், 'ஏன் முனிவரே என்ற தமிழ்ச் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகை யறிந்து கொண்டேன்.
“வேப்ப மரப் பிறவிபோய் எனக்கு மனிதப் பிறவி யுண்டாயிற் றென்று தெரிந்து கொண்டேன்: உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்ன, மாறாவிட்டா லென்ன? நான் உடம்பில்லை. நான் ஆத்மா, நான் போதம், நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சித்தம் மாறிப் போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்து விட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார்.
"எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல் அவருடைய பாதத்தின்மீது வர்ஷித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி பூத்தவராய், 'ஏ, வேப்ப மரமே, நேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராமநதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்துப் பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான் ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால், சிறிது நேரத்திற்கு முன்பு நான் யோக ஸமாதியிலிருந்தபோது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி, என்னை எழுப்பும் பொருட்டாக என்மீது நின் இலைகளையும் பூக்களையும் சொரிந்தாய்.
"இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷி போதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும், ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்” என்றார்.
"அது முதல் நான் அவர் கூறிய சக்திக ளெல்லாம் பெற்று, யாதொரு கவலையு மில்லாமல், யாதொரு பயமுமில்லாமல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்ப மரம் சொல்லிற்று?
உடனே நான் அந்த வேப்ப மரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன்.
“உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது.
அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி, "உனக்கெப்படி அகஸ்த்யர் குருவோ, அப்படியே நீ எனக்குக் குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை எனக்கு நீ எனக்கருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தேன்.
“கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்.
இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூக்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்து நின்றேன்; எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் குருவிகளும், வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும், ஓந்திகளும் ஆடியோடிக் கொண்டிருந்தன.
காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக் கடலிலே களித் தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன.
கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும், ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தன.
ஆண் குயில் பாடுகிறது:
“துஹு, துஹு, துஹு
துஹு, துஹு, துஹு
ராதா ரே"
(இதன் பொருள்: நி, நீ, நீ நீ, நீ, நீ ராதை யடீ)
பெண் குயில் பாடுகிறது:
“துஹு, துஹு, துஹு
ராதா க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண”
வேப்ப மரம் தனது பசிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது.
'என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்' என்றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று.
வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
---
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
இக் கதையை முதன் முதலாகக் கண்டறிந்து தமது பாரதி தமிழ் நூலில் திரு. பெ. தூரன் அவர்கள் பதிப்பித்தார்.
------------
9. காந்தாமணி
எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன.
ஆனால், காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சம் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப்போது உலகம் மிகவும் ஸந்தோஷகரமான காட்சி யுடையதாகிறது.
தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத் தோட்டத்தில் சில அரளிப் பூச்செடிகள்; சில மல்லிகைப் பூச்செடிகள்; சில ரோஜாப் பூச்செடிகள், அந்தக் கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியிலுள்ள பெண்க ளெல்லாரும் ஜலமெடுத்துக் கொண்டு போவார்கள்.
இந்தக் கதை தொடங்குகிற அன்று காலையில் அங்கு காந்தாமணியையும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜல மிறைத்து ஸ்நாநத்தை பண்ணிக்கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்தி லிருந்து தள்ளுபடியாகி அதிலிருந்தும் அந்தக் கிராமத்துக்கு வந்து தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தஸாரதி அய்யங்கார் அங்கு பக்கத்திலே நின்று கிழவியைக் குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச் சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல நல்ல மூலிகைக ளிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி யுண்டாக்கு மென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னார். அதுகொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் "கா" "கா" என்று உபதேசம் புரிகின்றன, வான வெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று.
"உங்கப்பா பெயரென்ன?" என்று பாட்டி காந்தாமணியிடம் கேட்டாள்.
"எங்கப்பா பெயர் பார்த்தஸாரதி அய்யங்கார்” என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னாள்.
கிழவி போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தாள். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போனார். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணூறு வயதுக் கிழவனைப் போலே தோன்றினாலும், உடம்பு நல்ல கட்டுமஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆனை, புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சி யுடைவரென்று கேள்வி, பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்பட மாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லி யிருக்கிறார்.
அப்படிப்பட்ட சூராதி சூரனாகிய பார்த்தஸாரதி அய்யங்கார் கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ஙனம் கைகால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி நிற்பதைக் கண்டு வியப்புற்றேன்.
அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைச் சுட்டிக் காட்டி, "இதோ நிற்கிறாரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?" என்று கேட்டாள்.
அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளையும் வானத்திலே போட்டு முகத்திலே வானொளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச, “ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னங் கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிறாரே! எங்கப்பா செக்கச் செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலே யிருப்பார். இவர் நரைத்த கிழவரன்றோ ? எங்கப்பா சின்னப் பிள்ளை" என்று காந்தாமணி உரைத்தாள்.
அப்போது போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் காந்தாமணியை நோக்கி: “உங்கப்பாவுக்கு எந்த ஊரில் வேலை?" என்று கேட்டார்.
"எங்கப்பா சங்கர நாதன் கோயில் ஸப் இன்ஸ்பெக்டர்” என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்ந்து கொண்டார். அவருக்கு "ஸப்-இன்ஸ்பெக்டர்” என்ற பெயர் பாம்புக்கு இடிபோல்.
அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்கு மிடையே பின்வரும் ஸம்பாஷணை நிகழலாயிற்று.
"நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்?" என்று பாட்டி கேட்டாள்.
அப்போது காந்தாமணி சொல்லுகிறாள்: “எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; ஸ்ரீவைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக் குழந்தை யில்லை யென்று தீராத மனக்கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணினாலன்றோ தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக்கொண்டு இந்த அறுதலி - பிராமணர் (எங்கப்பா) அடுத்த மாஸம் மன்னார்கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார். முகூர்த்த மெல்லாம் வைத்தாய்விட்டது." என்றாள்.
"மன்னார்கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போகிற மாமனாருடைய பெயரென்ன?" என்று அந்தப் பாட்டி கேட்டாள்.
அதற்குக் காந்தாமணி, "அவர் பெயர் கோவிந்தராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானாம். கால் முதல் தலை வரையில் அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவரம்பையைப் போல் அழகாம் அந்தப் பெண்” என்றாள்.
"அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?" என்று பாட்டி கேட்டாள்.
"அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்து போய்விட்டாள். அதன் நடையுடை பாவனைக ளெல்லாம் ஐரோப்பிய மாதிரி. ஆதலால், இதுவரை அதற்கு கலியாணத்துக்கு யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தை யெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப்பட்டுவிட்டார். மேலும், இவருக்கு மனதுக்குள்ளே ஸந்தோஷந்தான். தமக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி இன்றைக்குக் காலையிலேகூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கி யிருக்கிறோம். எங்கப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிந்தபோது அம்மா சொன்னாள்: மன்னார்கோவில் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலேகூட பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லாரும் ஒரே வாக்காகச் சொல்லுகிறார்கள்?" என்றாள். அப்பா அதற்கு 'நெவர் மைண்ட் அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை ஸந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண்பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் ஏடேம் எபௌட் சாஸ்த்ரங்கள், நாம் சாஸ்திரங்களைப் புல்லாக மதிக்கிறோம்' என்றார்..." என்று காந்தாமணி சொல்லினாள்.
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுதும் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்கார் மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது.
அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தஸாரதி ஐயங்காரையுந் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரச்சி யில்லை; ஸ்மார்த்தச்சி, அந்த ஊர் கிராம் முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காருக்கும் மேற்படி கிராம முன்புக்கும் பல முறை யுத்தங்கள் நடந்தன வென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின் போதுதான் பார்த்தஸாரதி ஐயங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம் பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப்பட்ட துண்டு.
அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக்கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸம்பாஷணையின் போது மேற்படி ஐயங்காரின் முகத்தில் தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின்வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று.
கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாறாமல் இன்னும் தழல் வீசிக் கொண்டிருக்கிற தென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிறா ரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகளின் அருகேகூடத் தனக்கு அக் கிழவியின் வடிவே அதிக ரம்யமாகத் தோன்றுகிறதென்று உணர்த்த விரும்புகிறா ரென்றும் தெரியலாயிற்று.
ஆனால், அவருடைய முகக் குறிப்புகளிலே பாதி பொய் நடிப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது.
ஏனென்றால், காந்தாமணியையும், அக் கிழவியையும் ஒருங்கே தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதாவாகிய பிரமதேவன்கூடக் காந்தாமணியின் ஸந்நிதியில் அந்தக் கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான்,
அப்படி யிருக்கக் கிழவி மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்தஸாரதி ஐயங்காரின் முயற்சி மிகவும் நம்பக்கூடாத மாதிரியில் நடைபெற்று வந்தது.
இந்த ஸங்கதியில் மற்றொரு விசேஷ மென்னவென்றால், மேற்படி ஐயங்காரை நான் விருக்ஷ மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததுபோலவே காந்தாமணியும் கிழவியும் அவரை அடிக்கடி கடைக் கண்ணால் கவனித்துக் கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது; பருந்தைக் காட்டிலும் கூர்மையான கண்.
எனவே, பார்த்தசாரதி ஐயங்காருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரீகளும் கண்டுகொண்டன ரென்பதை அவர்களுடைய முகக் குறிகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.
என்னை மாத்திரம் அம் மூவரில் யாரும் கவனிக்கவில்லை. நான் செடி கொடிகளின் மறைவில் நின்று பார்த்தபடியால் என்னை அவர்களால் கவனிக்க முடியவில்லை.
இப்படி யிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லரையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில். இவன் பலமுறை அந்தக் கிராமத்துக்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப் பற்றி வேறொன்றும் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்மதனைப் போலிருந்தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான படர்ந்த உச்சிக் குடுமியும் அவனைக் கண்டபோது எனக்கே அவன் மேல் மோஹமுண்டாயிற்று.
அந்த மலையாளி கிணற்றருகே வந்துட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒரு முறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு நழுவவிட்டு விட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து “ஐயோ, நான் என்ன செய்வேனம்மா? குடம் ஆறங்குலம் ஆழம் அதுங்கிப் போய் விட்டதே? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே? நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.
மார்புத் துணியை நெகிழ விட்டாள். பொதியைமலைத் தொடரை நோக்கினாள்.
இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவளென்பதை நான் தொலையிலிருந்தே தெரிந்து கொண்டேன். பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி ஐயங்கார் பூர்வம் நெடுநாள் மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தா ரென்றும், அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தாமணிக்கும் அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிற தென்றும் வெளிப்பட்டது. ஸப் இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்து, காந்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும் கூந்தலாபுரம் ஜமீன் திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாஸாசார்யர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். அந்த ஸ்ரீநிவாஸாசார்யருடன் வாழக் காந்தாமணிக்குச் சம்மத மில்லை. இந்தச் செய்தி யெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரியவந்தது.
அன்று கிணற்றங் கரையில் என் கண்முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன்.
காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு “எங்கம்மா வைவாளே, நான் என்ன செய்வேனம்மா?" என்று அழுதுகொண்டே போனாள். ஆனால் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்திற்குப் போகவில்லை. நேரே அந்த ஊருக்கு மேற்கே யுள்ள மாரந்திக்குப் போனாள், தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங் கரையை நோக்கிச் சென்றான். இதற்குள்ளே எனக்கு ஸந்த்யாவந்தன காலம் நெடுந்தூரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று, "கேட்டீர்களோ, விஷயத்தை! வெகு ஆச்சர்யம், வெகு ஆச்சர்யம்!” என்று கூக்குரலிட்டார்.
"என்ன ஒய் ஆச்சர்யம்? நடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் ஸௌகர்யமாக இருக்கும்" என்றேன்.
“சத்திரத்திலே ஸப் இன்ஸ்பெக்டர் பார்த்தஸாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கி யிருக்கிறாரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையுங் கூட்டிக் கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம், திலோர்த்தமை, ரம்பை தினுசுகளை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜலம் சொட்டுகிறது. காந்தாமணி ... காந்தாமணி, என்ன நேர்த்தியான நாமம். ரஸம் ஒழுகுகிறது .....”
இங்ஙனம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து, "மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும்" என்றேன்.
"அந்தக் காந்தாமணியைக் காணவில்லை யென்று விடியற்கால மெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார் ........
சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தஸாரதி அய்யங்காரும் அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக் கிலக்கா யிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஓடிப்போய் விட்டார்கள். பின்னிட்டு, அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும், பார்த்தஸாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்கிறார்களென்றும், அய்யங்கார் அங்கொரு நாட்டுக் கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு க்ஷேமமாக வாழ்கிறாரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.
------------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
இக் கதை முதன் முதலாகச் சுதேச மித்திரன் 14-9-1919ஆம் தேதிய இதழில் பிரசுரமானது.
இதை யடுத்து திரு. பெ. தூரன் அவர்கள் தொகுத்தளித்த பாரதி தமிழ் நூலில் இடம் பெற்றது.
பாரதி இக் கதையைத் தம் சொந்த பெயரில் எழுதினார்,
--------------
10. கோபந்நா
அந்த ஸமயத்தில் தெருவிலே ஒரு தென்னை மரத்தில் ஒரு வண்ணான் இரண்டு கழுதைகளைக் கொண்டு கட்டினான். தென்னை மரத்தின் மேலிருந்து மைநா பக்ஷி ஆச்சரியமாகக் கூவிக் கொண்டிருந்தது. இதைக் கேட்ட கழுதைகள் தாமும் ஊளையிடத் தொடங்கின. இதைக் கேட்டு வீதி வழியே போய்க் கொண்டிருந்த பாலர் இருவர் மேற்படி கழுதைகளின் ஒலியை அனுசாரணம் பண்ணித் தாமும் ஊளை யிடலாயினர்.
இதைக் கேட்ட கழுதைகளில் ஒன்றுக்கு மிகவும் ஸந்தோஷமுண்டாய், ஸாதாரணக் கழுதைகள்போல் "வாள்!" "வாள்!" என்று கத்தாமல் ஹ, ஹ, ஹு என்று வெற்றிச் சங்கூதுவதுபோலே கோஷிக்கலாயிற்று.
இந்த வேடிக்கையை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது அஸாதாரண அப்ராக்ருத ஒலியொன்று காதில் விழுந்தது.
ஒரு குருடன் பிச்சைக்கு வந்தான். அவனை ஐந்து வயதுள்ள ஆண் குழந்தை யொன்று கோலைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்தது. அவனுடன் ஒரு ஸ்த்ரீயும் வந்தாள்.
அந்தக் குருடனுக்குக் கண் தெரியுமோ, அதாவது அவன் மெய்க் குருடில்லையோ, வேஷக் குருடுதானோ என்று எனக்கொரு சந்தேகம். அவனுடைய கண்ணைத் திறந்து கொண்டு தானிருந்தான். அதாவது, விழி கண் குருடு என்ற வகுப்பைச் சேர்ந்தவன்-போலே யிருந்தான். அந்தக் கண்களை நான் பார்த்தேன். அவற்றில் புத்திக் குறிப்பு தக தகவென்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது.
ஐம்பத்தைந்து வயதுள்ள கிழவன். சுக்குப்போலே, பனங்கிழங்கு போலே, ஒற்றை நாடியான, மிகவும் உறுதி கொண்ட உடம்பு, இடுப்புக்கு மேலே ஒட்டகத்தில் பாதிப் பங்கு கோணல் காணப்பட்டது. ஆனால், இயற்கையிலேயே கோணலோ அல்லது அந்த மனிதன் வேண்டுமென்று தன்னுடம்பைக் கோணலாகச் செய்து கொண்டானோ, என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. செம்பட்டை மயிர். நெற்றியிலே பட்டை நாமம்.
ஆஹா! அவன் முகத்தின் அழகை - அதாவது குழிகள் விழுந்த, மேடு பள்ளமான, வெயிலில் மழையில் காற்றில் அடிபட்டு முதிர்ந்து, சதைப்பற்றுக் கொஞ்சமேனும் இல்லாமல், ஆனாலும் சக்திக் களஞ்சியமாக விளங்கிய அவன் முகத்தின் அழகை - நான் எப்படி வர்ணிப்பேன்? நான் சித்திரமெழுதிப் பழகாதது பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். ஹா! ஹிந்துஸ்தானத்து ஏழை, பரதேசி, பண்டாரம், யோகி, பிச்சைக்கார வகுப்புக்களில் சில அற்புதமான முகங்கள் - எத்தனையோ அற்புதமான முகங்கள் நாள்தோறும் என் கண்ணில் படுகின்றன. அளவிறந்த துயரத்தாலோ, கஷ்டங்களாலோ, தவத்தாலோ, யோக சித்திகளாலோ - இவர்களிலே பல்லோர் அழுக்குப் படிந்த தேவ விக்ரகங்களின் முகங்களை யுடையோராக விளங்குகின்றனர். அதையெல்லாம் பார்த் தெழுதி வைக்க எனக்குச் சித்திரத் திறமை யில்லை. புகைப்படம் பிடித்து வைக்கலாமா என்று யோசனை பண்ணுகிறேன். இது நிற்க.
மேற்படி குருடன் போட்ட சத்தத்தைத்தான் மேலே அப்ராக்ருத மென்றும், அஸாதாரண மென்றும் சொன்னேன். இந்த ஸம்ஸ்கிருத பதங்களின் பொருள் என்ன வென்றால், அந்த மாதிரிச் சத்தம் நான் இதற்கு முன்பு கேட்டதே கிடையாது. ஆனால், அந்தக் குரல் எந்த ஜாதி யென்பதைக் கூற முடியும், கல்லுளி மங்கான், தெருப் புழுதியிலே உருண்டுருண்டு ஏழு மலையானென்று கூவிக் கையில் உண்டியல் செம்பு கொண்டு பணம் சேர்க்கும் ஏழுமலையாண்டி முதலியவர்களின் குரலைப் போன்றது. ஆனால், ஒரு மூன்று மாஸத்துப் பச்சைக் குழந்தையின் சத்தத்தைக் காட்டிலும், முப்பது வருஷத்துத் தேர்ச்சி கொண்ட கல்லுளி மங்கானுடைய சத்தம் எத்தனை மடங்கு கடினமாக இருக்குமோ, அத்தனை மடங்கு அந்தக் கல்லுளி மங்கானுடைய சத்தத்தைக் காட்டிலும் நமது கதாநாயகனாகிய சந்தேகக் குருடனுடைய குரல் கடினமானது.
எனவே, முப்பத்திரண்டு மூங்கிற் கழிகளைச் சேர்ந்தபடியால் அறுக்கும் சத்தத்தைப்போலே, மேற்படி குருடனுடைய சத்தம் உன்னுடைய காதைத் தொளைத்து விடவில்லையோ என்று என்னிடம் கேட்பீர்களானால், அப்படித் தொளைக்கவில்லை. அதாவது அவனுடைய சத்தம் கர்ண கடூரமில்லை . சிங்கத்தின் ஒலி கடினமாக இருந்தாலும், பயங்கரமாக இருந்தாலும் கல்லுளி மங்கானுடைய சத்தத்தைப்போல் அருவருப்புக் கிடமாகாது. நெஞ்சிலே மூச்சுபலம் இருந்தால் எவ்வளவு கடினமான சத்தமும் காதுக்குச் சுகமாகவே கேட்கும்.
மேற்படி குருடனுடைய அதாவது, ஸம்சயக் குருடனுடைய சத்தம் என் காதுக்குச் சுகமாகத்தானிருந்தது. காலம்சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் முத்தையா பாகவதருடைய பாட்டைத் தமிழ் நாட்டிலே பலர் கேட்டிருக்க மாட்டார்கள். கொப்பூழிலிருந்து, ஹகார், ஹும் காரங்கள் கொண்டு வருவதில் அந்த பாகவதர் மஹா ஸமர்த்தர். ஆகாச வாணம் ஏறும்போது “ஹ்விஸ்” என்று கம்பீரமாக ஒரு சத்தம் உண்டாகிறதே, அந்தச் சத்தம் மேற்படி பாகவதர் பாட்டில் எப்போதுமே யிருக்கும்.
அவர் பெரிய குஸ்திக்காரரும்கூட. மூச்சை யடக்கி வேலை செய்வதில் பெரிய பெரிய ஹைதராபாது பஹல்வான்கள்கூட அவருக்கு சமானமாக மாட்டார்கள். அந்த பாகவதர் செத்த பிறகு, அந்த மாதிரிக் குரலிலே ஹகாரம் பேசுவது மேற்படி குருடனிடத்திலே-தான் கண்டேன். ஆனால், இந்தக் குருடன் பாடவில்லை; கூவினான். அந்தக் கூவுதலுக்கும் சந்தமிருந்தது. இவனுடைய சத்தத்தின் கனமோ என்றால் மேற்படி பாகவதர் தொண்டையைவிடத் தொண்ணூறு மடங்கு வலிமை யுடையது. குழந்தைப் பிராயத்திலே இவன் சங்கீதப் பயிற்சி செய்யாமல் பிச்சைத் தொழிலைக் கைக்கொண்டானே என்றெண்ணி வருத்தப்பட்டேன்.
அந்தக் குருடன் கூவுகிறான்: “தீராத வினை தீர்த்து வைப்பேன், கோபந்நோ!"
அவனுடன் பிச்சைத் தகரப்போகணி யெடுத்துக் கொண்டு வந்த ஸ்திரீ எதிர்மொழி சொல்லுகிறாள்: "கோவிந்தா!”
அந்தக் குருடன் கூவுகிறான்: "ஆறாத புண்ணை ஆற்றி வைப்பேன், கோபந்நோ!"
ஸ்த்ரீ: “கோவிந்தா”
குருடன்: “சனிக்கிழமை, கோபந்நோ !”
ஸ்த்ரீ: “கோவிந்தா”
குருடன்: “நல்ல நாள் கோபந்நோ!
ஸ்த்ரீ: “கோவிந்தா”
குருடன்: "திருப்பதி வேங்கடாசலத்தைப் பார்த்து வந்தேன், கோபந்நோ!”
ஸ்த்ரீ: “கோவிந்தா!"
குருடன்: "ஏழுமலையான் தீர்த்து வைப்பான், கோபந்நோ !"
ஸ்த்ரீ: “கோவிந்தா!"
குருடன்: “ஹா! ஹா! மாறாத் தலைவலி மாற்றி வைப்பேன், கோபந்நோ!"
ஸ்த்ரீ: “கோவிந்தா!"
குருடன்: “ஹா! ஹோ! கண்ணில்லாதவருக்குக் கண் கொடுப்பேன், கோபந்நோ!”
ஸ்த்ரீ: “கோவிந்தா!”
கடைசி வாக்கியத்தைக் கேட்டவுடன் எனக்கு விநோதமாகத் தோன்றிற்று. கண்ணில்லாக் குருடன் பிறருக்குக் கண் கொடுப்பேன் என்று சொன்னால் யாருக்குமே வேடிக்கையாகப் புலப்படாதா?
அப்போது என்னுடன் குள்ளச்சாமி என்ற யோகீசுரர் இருந்தார். அவர் என் மன நிலைமையை நான் சொல்லாமலே தெரிந்து கொண்டு பின்வருமாறு சொல்லலாயினர்:
"இதோ, போகிறானே, இவன் போன ஜன்மத்தில் திரிதராஷ்ட்ர ராஜனாக இருந்தான். இவனுடன் போகிறாளே, அவள் காந்தாரியாக இருந்தவள்.
"போன ஜன்மத்தில், தம்பி மக்களுடைய சொத்தைத் தன் பிள்ளைகள் சூதினால் அபஹரிக்கையிலே தான் ஒன்றும் தடுத்துச் சொல்லாமல் பிள்ளை துரியோதனன் பக்கம் சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த குற்றத்துக்காக விதி இவனை இந்த ஜன்மத்தில் பிச்சைக்காரனாகவும், பிறவிக் குருடனாகவும் செய்தது. காந்தாரி பதிவிரதை யாகையாலே தானும் கூடவந்தாள். ஐந்து வயதுக் குழந்தை கோலைப் பிடித்துக்கொண்டு போகிறானே அவன்தான் விகர்ணன்" என்றார்.
அப்போது நான், “ஐயோ, திருதராஷ்ட்ரன் மஹாவித்வானாயிற்றே! அவனுக்கிந்த கதி வரலாமா?" என்று சொல்லி வருத்தப்பட்டேன்.
அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: “போன ஜன்மத்தில் ராஜாவாகவும், பண்டிதனாகவும் இருந்தான். ஆனால், இந்த ஜன்மத்தில் ஏழையாகப் பிறந்து பலவிதங்களில் கஷ்டப்பட்டுப் பிறகு பூர்வ புண்ய சேஷத்தால், சதுரகிரியில் ஒரு மஹரிஷியிடம் பகவந்நாமத்தின் மஹிமையைத் தெரிந்து கொண்டு, உண்மையான பக்தி மார்க்கத்தில் சேர்ந்தபடியால் இவன் இப்போது ஜீவன் முக்தனாய் விட்டான்.
"அவனுடன் தகரப் போகணி தூக்கிக் கொண்டு போகிற காந்தாரி “கோவிந்தா”, “கோவிந்தா!” என்று கத்துகிறாளே அதன் பொருள் தெரியுமா?... சொல்லுகிறேன், கேள். தன்னுடைய கணவன் பரமபதத்தைக் கண்டு கோவிந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டா னென்பதை அவள் உலக மறிய முழங்குகிறாள். அவளுடைய பாதிவ்ரத்ய மஹிமையினால் இவன் இந்தப் பதவி யடைந்தான்” என்று சொன்னார்.
நான் அப்போது குள்ளச்சாமியிடம், “ஜீவன் முக்தி பெற்றும் பிச்சைத் தொழில் ஏன் செய்கிறான்?” என்று தவறுதலாகக் கேட்டேன்.
அவர் அதற்கு நேரே மறுமொழி கூறாமல் தாம் முன்பு கூறி வந்ததற்குத் தொடர்ச்சி சொல்வது போலே, “ஆகையால், இவன் போன ஜன்மத்திலிருந்ததைக் காட்டிலும் இப்போது கோடி மடங்கு மேலான நிலைமையி லிருக்கிறான். இவனைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
அப்போது நான் குள்ளச்சாமியை நோக்கி, “எனக்குப் பூர்வ ஜன்ம விஷயத்தில் இன்னும் நிச்சயமான நம்பிக்கை ஏற்படவில்லை ” என்றேன்.
இதைக் கேட்டவுடன், அந்த யோகீசுரர் எனக்கு மறுமொழி கொடுக்காமல், "அரே! ராம், ராம்" என்று சொல்லி நகைப்புக் காட்டி ஓடிப்போய் விட்டார்.
பின்பு, குருடன் போன திசையிலே திரும்பினேன்.
மறுபடி குருடன் கத்துகிறான்: “தென்னை மரத்திலே கிளி பறக்குது, கோபந்நோ !"
ஸ்த்ரீ: “கோவிந்தா”
குருடன்: "சிதம்பரத்திலே கொடி பறக்குது, கோபந்நோ !”
ஸ்த்ரீ: “கோவிந்தா!"
குருடன்: “தென்னை மரத்திலே கிளி பறக்குது, கோபந்நோ !”
ஸ்த்ரீ: “கோவிந்தா!"
குருடன்: "திருப்பதி மலையிலே கருடன் பறக்குது, கோபந்நோ !"
ஸ்த்ரீ: "கோவிந்தா!"
இங்ஙனம் உருவங்களும் ஒலியும் எனது புலனெல்லையைக் கடந்து சென்று விட்டன.
-----
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
இக் கதை சுதேச மித்திரன் 20-2-1918ஆம் தேதியிட்ட இதழில் காளிதாஸன் என்கிற புனைபெயர் சூட்டிக்கொண்டு பாரதி எழுதியது, முதன்முறையாகப் பிரசுரமானது.
இதன் பின்னர் திரு. பெ. தூரன் அவர்கள் தொகுத்துள்ள பாரதி தமிழ் நூலில் இடம்பெற்றது.
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக